தொல்காப்பிய உரைத்தொகை - 11 பொருளதிகாரம் இளம்பூரணம் -1 வ.உ. சிதம்பரனார் (பதிப்பு - 1921,1933,1935) மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 11 பொருளதிகாரம் - இளம்பூரணம்-1 முதற்பதிப்பு(1921,1933,1935) வ.உ. சிதம்பரனார் பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 32+408 = 440 விலை : 685/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. .: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் :440  கட்டமைப்பு: இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் அறிமுகவுரை வ.உ. சிதம்பரனார் வள்ளி நாயக - உலகநாத - சிதம்பரனார், `வ.உ.சி.’ என மூன்றெழுத்தில் முத்தமிழ்ப் புகழும் கொண்டவர் அவர்! “நாடும் மொழியும் நம்மிரு கண்கள் என்று கொண்ட பெருமக்களை விரல் விட்டு மடக்கக எண்ணின் - அவற்றுக்கே தம்மை ஈகம் செய்தவரை எண்ணின் - அடுத்த விரலைல மடக்க - ஆழமாக எண்ணித் தானே ஆக வேண்டும்! ஓட்டப்பிடாரத்தில், உலகநாதர் - பரமாயியர் மகனாராக 05.09.1892 இல் பிறந்தவர் வ.உ.சி. தந்தையார் வழக்கறிஞர்: தாம்பிறந்த ஊரி இருந்த `வீரப் பெருமாள் அண்ணாவி’ என்பாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்கரளைக் கற்றார். தூத்துக்குடி கிறித்தவ உயர்பள்ளி, திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி உயர்பள்ளி ஆயவற்றில் கற்றார். தந்தையார் கால்டுவெல் கல்லூரியில் சேர்த்துப் பயிலச் செய்தும், கல்வி நாட்டம் இல்லாராய் ஊர்க்கு வந்து வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி செய்தார். அதுவும் ஏற்காமல் சட்டம் படிக்கத் திருச்சிராப்பள்ளி வந்து சட்டக் கல்லூரியில் பயின்று கி.பி. 1895இல் வழக்கறிஞரானார். படிக்கும் போதே 1894இல் திருமணமும் ஆயது. மணமகனார் வள்ளியம்மை. வறியவர்க்கு வாதாடலும், காவலரைத் திணறவைக்க வினாவலும் கொண்ட வ.உ.சி.யின்மேல், அரசின்பகை மளையிடத் தொடங்கிவிட்டது. தந்தையார் தூத்துக்குடிக்குச் செல்ல வைத்தார். வள்ளியம்மை 1900இல் இயற்கை எய்த, அவர் உறவினராய மீனாட்சியம்மையை மணக்கவும் நேர்ந்தது. சிதம்பரனார் தூத்துக்குடிக்குச் சென்றால் என்ன? அவர் ஈகமும் துணிவும் அவருடன் தானே இருக்கும்! தூத்துக்குடி பெருநகர்! தொண்டுக்கும் வாய்ப்பு! எகிப்து கொலை வழக்கு! விடுவிடுப்பு முடிபு! ஏழைமையர் தோழமை யரானார்! தமிழில் தொய்வும், சைவ சமய ஈடுபாடும் பெருகப் பெருவாய்ப்பு ஏற்பட `விவேகபானு’ என்னும் இதழ் நடத்தினார். இது மாதிகை இதழ். சென்னைக்குச் சென்று திரும்பும் ஒரு சூழல் ஏற்பட்டது. அப்பொழுது சிதம்பர்க்கு ஓர் எழுச்சி உண்டாயது; வணிகத்தால் நேர்ந்த அயலாராட்சியை ஒழிக்க, அவ்வணிகமே வழி என்று திட்டம் தோன்றிக் கப்பல் இயக்குதலில் முனைந்தாதர். மும்பை சென்று கப்பல் வாங்கி, தூத்துக்குடிக்கும் கெழும்புக்கும் இடையே செலுத்தினார். `சுதேசிக் கப்பல்’ ஆங்கிலரைக் கொதிக்க வைக்காதா? சுதேசி பண்டசாலை, நெய்தல் சாலை, என்பவற்றை நிறுவினார். ஆலைப் போராட்டங்களில் முன்னின்றார். திலகரைத் தலைவராகக் கொண்டார். சூரத்தில் நிகழ்ந்த மாநாட்டில் பங்குகொண்டு (1907) மீண்டு மேடைகளில் அரசியல் முழக்கமிட்டார். சுப்பிரமணியே சிவா உடனானார்! மாவட்ட ஆட்சியர் விஞ்சு என்பார் சிதம்பரனார், சிவா இருவர் மீதும் குற்றங்கள் பல சாற்றி, நாடுகடத்தவும் திட்டமிட்டார். முறைமன்றம் 20 ஆண்டு, கடுங்காவல் தண்டம் விதிக்க, அதனை `இறைவன் அருள்’ என்றா. மேல் முறையீடுகளால், ஆறாண்டுகள் ஆகிக் கணல்பொறி இயக்கி, செக்கிழுத்து 1912இல் விடுதலை பெற்றார். சிறையில் சேம்சு ஆலன் நூல்களை மொழி பெயர்த்தார். விடுதலைக்குப்பின் தமிழ்த் தொண்டில் ஆழமாக இறங்கினார். தொல்காப்பிய இளம்பூரணர் உரையை 1936இல் பதிப்பித்தார். திருக்குறள் அறத்துப்பால் விரிவுரை 1935இல் வெளியிடப்பட்டது. அவர்தம் ஆய்வும் துணிவும் திருக்குறள் உரையில் வெளிப்பட்டது. அவர் எண்ணியவாறு முழுதுரை கண்டும் முழுதுற வெளிப்படவில்லை! சிறையில் அவர் எழுதிய `சுயசரிதை’யின் அருமை படிப்பார் நெஞ்சை உருக்கும்! அச்சரிதை 1946இல் பாரி நிலையத்தினரால் வெளியிடப்பட்டுப் பல பதிப்புகள் கண்டது. திருக்குறள் அறத்துப்பால் உரை, சிங்கப்பூர் தமிழ்த்திரு. கோவலங் கண்ணனாரால் வெளியிடப்பட்டு குறள் கூறிய ஒவ்வொருவருக்கும் இலவயமாக வழங்கியது. வ.உ.சி. யின் வண்மைக் கதிரெihளி எனத் தோன்றியது. 14ஆம் மாடியில் வெளியிட்டு அவ்வுரை நயம் எளியேன் கூற, அவ்வுரைப் பெருமை அவையைத் திளைக்கச் செய்தது! கப்பரேலாட்டிய தமிழர் - தமிழ்க் கப்பலும் ஓட்டிய தோன்றல் - தம் நிலைகுறித்து ஒருவெண்பாவில் தாமே ஓடுகிறார்; ஓட்டப்பிடாரத்தார் அல்லரோ! “வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும் தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று- சந்தமிழ் வெண் பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான் நாச் சொல்லும் தோலும் நலிந்து” “ஏ! தாழ்ந்த தமிழகமே! என்றது மெய்தானே! இரா. இளங்குமரன். தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் உள்ளடக்கம் தொல்காப்பியம் .... 1 இயலமைதி .... 23 வாழ்வியல் விளக்கம் .... 26 இளம்பூரணர்- உரையாசிரியர் ... 156 இளம்பூரணம் - பொருளதிகாரம் .... 181 1. அகத்திணையியல் .... 185 2. புறத்திணையியல் .... 282 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம்’ “தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி” என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் ‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’ என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும்,‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப்பட்டது’ என்னும் கருத்தால், “பழைய காப்பியக்குடியில் உள்ளான்” என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு ‘விருத்த காவ்யக்குடி’ என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கின ராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் ‘பல்காயம்’ என்பதும் பல்காயனார் - என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்” ஆய்ந்து, தமிழியற்படி “எழுத்தும் சொல்லும் பொருளும்” ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்” (1006) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்” - (1336) “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (385) எனத் தமிழமைதியையும், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண்டனுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் - திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் - பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் ‘எத்துணையோ பரிபாடல்களின்’ அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதியாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவேயன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரைபசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசைகளையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசைகளும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதே - - யாம். யாப்பருங்கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் ‘சேமமட நடைப் பாட்டி’ என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் “பாட்டி என்பது பன்றியும் நாயும்” என்றும் “நரியும் அற்றே நாடினர் கொளினே” என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ ‘பாட்டி’ என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல் காப்பியம், மிகு - நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமை யால் உரையாசிரியர்கள் “இலக்கணம் உண்மையால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது” என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவாராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! “கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் ‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும் கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. “தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. “தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. “வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. “கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. “சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல்காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது.” இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச்சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’ என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப் பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு - - - - - - முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் ‘அறம்’ என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ‘ஹோரா’ என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ இவண் வந்ததும், அது ‘பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)’ பெயர்ந்ததும், ‘யவன வீரர் அரண்மனை காத்ததும்’ முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை’ ‘அரி’ முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை’ என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா’ என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக்கால்’ என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?’ என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - ‘நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது’ என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே” என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து ‘மாலியரோ’ எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பி யத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லையளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமைகளை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என ‘உலகம் நிலையாமை பொருந்தியது’ என்ற அளவிலேயே அமைகிறார். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் ‘புரைதீர்காமம்’ என்றும் (1027) ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ என்றும் (1029) கூறியிரார். “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்” என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்துவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதிகாரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்றும் (1034), புறநிலை வாழ்த்து, “வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்” என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே” என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை’, ‘அருளொடு புணர்ந்த அகற்சி’, ‘காமம் நீத்தபால்’ என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப்பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்ட மாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் ‘முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த’தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். “ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்” என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூலநூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏன்றவாறுக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப் பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல் காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். “உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே” (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை “கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்” (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. “அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்” (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்த வாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற் களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” “மழவும் குழவும் இளமைப் பொருள” “ஓதல் பகையே தூதிவை பிரிவே” “வண்ணந் தானே நாலைந் தென்ப” ஓரியல் யாப்புரவு ‘ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்’ என்பது தொல்காப்பியர் வழக்கம். “வல்லெழுத் தென்ப கசட தபற” “மெல்லெழுத் தென்ப ஙஞண நமன” “இடையெழுத் தென்ப யரல வழள” சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற் காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். “அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே” என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங் களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். “அளபெடைப் பெயரே அளபெடை இயல” “தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல் காப்பியர். “வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”. “ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”. இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்”. இவை அடி எதுகைகள். “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”. முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. “வயவலி யாகும்” “வாள்ஒளி யாகும்” “உயாவே உயங்கல்” “உசாவே சூழ்ச்சி” இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “இழுமென் மொழியால் விழுமியது பயிலல்” “எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்” இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” “ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்” என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” “அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல் காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். “தாமென் கிளவி பன்மைக் குரித்தே” “தானென் கிளவி ஒருமைக் குரித்தே” “ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை” இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற்குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா ‘கைக்கிளை முதலா’ எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. “ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். ‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. ‘உண்டாட்டு’ என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. ‘தேரோர் களவழி’ களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி’ என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்” என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ‘ஒலியன்’ ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பி யன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல் காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, ‘யாப்பருங்கலம்’ முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்க ணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. “தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே” என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத் திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம்முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ் செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல் காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. “இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத்தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமையுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!’ அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ‘ஐந்திரம்’ என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாத னுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம் ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் - இடமில்லையாம். இனி ‘ஐந்திறம்’ என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ‘ஐந்திரம்’ எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. “உருவுட் காகும்; புரைஉயர் வாகும்” “மல்லல் வளனே; ஏபெற் றாகும்” “உகப்பே உயர்தல்; உவப்பே உவகை” என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி “நன்று பெரிதாகும்” என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர். (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை) இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்றுகளும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே” என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே “ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான” என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், ‘மரபியல்’ செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பா வியலில் தோய்ந்தார் கூறார். “வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண்டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் ‘கிழமை’ என்னும் வகையால் ஒருமை யுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடையோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த ‘புறக்காழ்’ ‘அகக்காழ்’ ‘இலை முறி’ ‘காய்பழம்’ இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள ‘நூலின் மரபு’ பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. “அவற்றுள், சூத்திரந்தானே” என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) “சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்” என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் ‘வாழ்வியல் விளக்க’த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19 - தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது பொருளதிகாரம் இயலமைதி எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என்பவற்றைப் போலவே பொரு ளதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் உயரிய கட்டுமுறை யாகும். எழுத்து, சொல் ஆகியவற்றைக் கருவியாகக் கொண்டது பொருள். உலகத்துக் காணப்படும் பொருள்களைக் காட்சிப் பொருள் கருத்துப் பொருள் என இருவகைப் படுத்துவர். அவற்றை வாழ்வியல் முறைக்குத் தக முதல், கரு, உரி என மூவகைப்படுத்திக் காண்பது பொருளியல் கண்ட தமிழ் மேலோர் முறையாகும். அவற்றை முறையே கூறி, அகவொழுக்க நெறிமுறைகள் ஏழனையும் அதன் சார்புகளையும் அகத்திணை இயல் என்னும் முதல் இயலில் கூறுகிறார். கைக்கிளை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன அத்திணைகள். அகத்திணை ஏழானாற் போல அமைந்த புறத்திணை ஏழனையும் புறத்திணை இயல் என்னும் அடுத்த இயலில் கூறுகிறார். அவ்வேழு திணைகளும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாம். மூன்றாம் இயலாகக் களவியல் வைக்கிறார். அது அகத்திணைக் கைகோள் இரண்டனுள் முற்பட்டதாம். களவுக் காதல் விளக்கம் கள வொழுக்கம், இயற்கைப் புணர்ச்சி, களவொழுக்கத்தில் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலோர் நிலை, இடந்தலைப்பாடு, வரைவு (திருமணம்) என்பவை கூறப்படுகின்றன. நான்காவதாம் இயல், கற்பியல். அதில், மணவாழ்வு, மணமக்கள் கூற்று, பிறர் கூற்று, அலர், பிரிவு, அறநிலை என்பவை முறையே கூறப்பட்டுள. கைகோள் ஆகிய களவு, கற்பு என்னும் இரண்டன் தொடர்பாகவும் பிறவாகவும் சொல்ல வேண்டுவனவற்றைச் சொல்லும் பொருளியல் ஐந்தாவதாக இடம்பெறுகிறது. அறத்தொடு நிலை, வரைவுகடாதல், புலனெறி வழக்குகள், தலைவி தோழி முதலோர் பற்றிய சில குறிப்புகள் இதில் உரைக்கப்பட்டுள்ளன. ஆறாவதாக அமைந்தது மெய்ப்பாட்டியல். மெய்ப்பாடு என்பதன் பொருள், மெய்ப்பாடுகளின் வகை, அவை தோன்றும் நிலைக்களங்கள், அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், கைக்கிளை பெருந்திணை மெய்ப்பாடுகள், வாழ்நலத்திற்கு ஆகாக் குறிப்புகள், மெய்ப்பாட்டு நுட்பம் என்பவை முறையே இதில் கூறப்பட்டுள. பொருள் விளக்கச் சிறப்பமைந்த உவமை இயல் ஏழாவதாக இடம் பெறுகிறது. உவமையின் வகை, உவம உருபு, உவமையை உணருமுறை, உள்ளுறை உவமம், உவமை பற்றிய புறனடை என்பவை இவ்வியலில் பேசப்படுகின்றன. எட்டாம் இயல் தொல்காப்பியத்துவரும் இயல்கள் இருபத்து ஏழிலும் விரிவுடையதாகிய செய்யுள் இயல். ஈதொன்று மட்டுமே 240 நூற்பாக்களைக் கொண்டது. நூலில் ஏன்றவாறுத்தாழ ஏழில் ஒரு பங்காக அமைந்தது. இதனை அடுத்ததாக 112 நூற்பாக்களை யுடையது இதனை அடுத்த மரபியல் ஆகும். இச் செய்யுளியல், “மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ” எனத் தொடங்கி முப்பத்து நான்கு வகையில் செய்யுள் உறுப்புகள் அமைதலை முதல் நூற்பாவிலேயே தொகுத்துக் கூறி, அவற்றை முறையே கூறி முடிக்கிறார். எல்லா இயல்களிலும் வைப்பு முறைச் சிறப்புண்டு எனினும் இவ்வியல் கொண்ட வைப்புமுறை நனிபெரும் சிறப்புடையதாம். பொருள் வைப்புமுறை மாத்திரை, எழுத்தியல், அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களம், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பவை அவை. தொல்காப்பிய நிறைவில் வருவது மரபியல். தொல்காப்பியர் முறை திறம்பா வைப்புமுறை, முறை மாற்றி வைக்கப்பட்டதில் தலைமை கொண்டது இவ்வியலாயிற்று. மாற்றரும் சிறப்பின் மரபு என மரபுமாண்பு கிளப்பதுடன் தொடங்குவது இது (1500). இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் இவை இவை எனச் சுட்டி முறைமுறையே கூறி, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே” என்று நிறைவு செய்கிறார் (1525). பின்னர் உயிர்களை ஓரறிவுமுதல் ஆறறிவு ஈறாகப் பகுத்துரைத்து, ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என்பவற்றைக் கூறி, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என முடிபும் கூறுகிறார் (1568). இது காறும் நூற்பா இடமாற்றச் சிக்கல் ஏற்பட்டமையன்றி, இடைச் செருகல் ஏற்படவில்லை. ‘இது கூறுவேம்’ என்று தொடங்கி, ‘இது கூறினேம்’ என முடித்தபின், அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்பார் இயல்புகள் பற்றி (1570 - 1584) பதினைந்து நூற்பாக்கள் வந்து, ஓரறிவுயிரிகளின் சில சிறப்பியல்களைக் (1585 - 1588) கூறி, “இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்” என இயல் நிறைவாகக் காட்டிய பின்னரும் நூல்வகை, சூத்திரம், உரை, நூற்சிதைவுகள், நூல் உத்திகள் என்பவை (1590 - 1610) இடம் பெற்று நூல் நிறைகின்றது. ஓரறிவு உயிரிபற்றிக் கூறிய இடத்தொடு (1526) தொடர்புடைய அகக் காழ், புறக்காழ், தோடு மடல் இலை முறி காய்பழம் என்பவை நெட்டிடை தள்ளப்பட்டுக் (1585) கூறப்படுதலும், இடையே “நூலே கரகம்” முதலாக மரபொடு பொருந்தாப் பொருள் இடம்பெறலும் சேர்ப்பு என்பதை விளக்க வேண்டுவது இல்லை. மரபு இயற்கை தழுவியது; இளமை, ஆண்மை பெண்மை எனக் கூறப்பட்டது. நூலும் கரகமும் குடையும் கொடியும் ஏரும் பிறவும் பிறப்பொடு தொடர்புடையவையா? இயற்கைத் தொடர்பு உடையவையா? ‘கவச குண்டலத் தொடு பிறத்தல் கதைக்க உதவும்’ நடைக்கு ஆகுமா? மரபியலில் உரையாசிரியர்கள் காலத்திற்கு முன்னரே, பல்வேறு திணிப்புகளும் மாற்றங்களும் செய்யப்பட்டுள என்பதை அறிந்து கொள்ளல் இப்பகுதிக்குச் சாலும். பொருளதிகாரம் வாழ்வியல் விளக்கம் தமிழினம் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு தொல்காப்பி யத்தைப் பெற்றபேறு ஆகும். ஏனெனில், தொல்காப்பியர்க்கு முன்னரே இலக்கிய இலக்கணக் கலைவள மெய்யியல் நூல்கள் பலப்பல இருந்தன எனினும் அவற்றைக் காணற்கியலாக் காலநிலையில் அவற்றின் முழுமை யான எச்சமாக நமக்குக் கிடைத்தது தொல்காப்பியமே ஆதலால்! இப் பேற்றினுள்ளும் தனிப்பெரும் பேறு, தொல்காப்பியப் பொருளதிகாரம் பெற்ற பேறு. மூவதிகாரங்களையுடைய தொல்காப்பியம் எழுத்து சொல் அளவில் பயிலப்பட்டு, பொருள் மறைக்கப்பட்டிருந்த காலமும் உண்டு. பொருளின் சிறப்பு அக் காலத்தையே, “எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப் பதிகாரமும் வவ்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, ‘பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம்’ என்று வந்தார்; வர, அரசனும் புடைபடக் கவன்று ‘என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமே எனின் இவை பெற்றும் பெற்றிலேம்’ என்று சொல்லா நிற்ப” என்னும் இறையனார் களவியல். அவ்வுரையால் பொருளதிகாரப் பயிற்சி நாட்டில் குன்றியமையும் அதில் வல்லார் இல்லாமையும், பொருளதிகாரம் மறைவுண்டமையும் விளக்கமாம். வெளிப்பாடு இந் நிலையிலிருந்த தொல்காப்பியம், தமிழே வாழ்வாகிய புலமைச் செல்வர்கள் சிலர் தண்ணருளால் ஏட்டுப் படியாகக் காக்கப்பட்டன; அக் காவலுக்கு அரண்போல உரை வல்ல பெருமக்கள் சிலர் உரைகண்டு உயிரூட்டினர்; அதனை அரிதின் முயன்று தேடிப் பெருமக்களில் சிலர் அச்சிட்டு நடமாட விட்டனர். இவ்வாறு வழிவழியாகப் பெற்ற பேறே, நம் வாழ்வியல் களஞ்சியமாம் தொல்காப்பியத்தை நாம் பெற வாய்ப்பாகிய தாம். பொருள் வளம் இலக்கணம் என்பது எழுத்து சொல் அளவில் அமைவதே, இந் நாள்வரை உலகம் கண்டது. ஆனால், தொல் பழ நாளிலேயே வாழ்வியல் இலக்கணமாம் பொருள் இலக்கணமும், மொழி இலக்கணத்துடன் இணைத்துத் தமிழில் கூறப்பட்டமை பெருமிதமும் விந்தையும் உடையதாம். தொல்காப்பியக் கொடைவளத்திற்குப் பாரிய சான்றாக விளங்குவன திருக்குறள், பாட்டு, தொகை என்னும் பழமை சான்றவை. தொல்காப்பியர் வகுத்தருளிய அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் விளக்கமாகத் திகழ்வது திருக்குறள். பாட்டு தொகைகளில் அமைந்த பாடல்கள் அனைத்தும் தொல்காப்பிய அகம், புறம் ஆகிய பொருள் விளக்கமாய்த் திணை, துறை கொண்டு அமைந்தவை. பின்வர வாகிய நூல்களும், தொல்காப்பியப் பெருமணி மாலையில் ஒன்றும் பலவுமாய் எடுத்துக் கொண்டு கோக்கப் பெற்றவையே. இனித் தொல்காப்பியம் போல விரிவிலக்கணமோ முழுதுறு இலக்கணமோ கொள்ளாத நூல்களும், தொல்காப்பியச் சார்பாய், சார்பின் சார்பாய் வெளிப்பட்டவையே. தமிழ் நெறிக்கு அயலாகவும் மாறாகவும் தோன்றியன தாமும், தொல்காப்பியத்தை வேண்டுமாற்றால் பயன்படுத்திக் கொண்டு புற்றீச லாய்ப் புறப்பட்டவையேயாம். ஆகையால், தமிழர் வாழ்வியல் அளவுகோல் என அமைந்த தொல்காப்பியப் பொருளியல் வாழ்வு விரிவு மிக்கதாம். பொருளதிகாரத் தொடக்கம் அகவாழ்வில் கிளர்கின்றது. ‘அகத் திணை இயல்’ என்பது அது. அக வொழுக்கம் பற்றிக் கூறுவது என்பதே அதன் பொருளாம். அகம் அக வாழ்வு என்பது, இல்வாழ்வு, இல்லற வாழ்வு, உள்ளத்தால் வாழும் உணர்வு வாழ்வு! புற வாழ்வு என்பது, அக வாழ்வில் இருந்து கிளர்ந்து விரிவாக்க முற்று உலக வாழ்வாகத் திகழ்வது. அக வாழ்வு - என ஒன்று இல்லாக்கால் புற வாழ்வு என ஒன்று அரும்பியிருக்கவே இயலாது! அகம், புறம் என்பது ஆட்சியே அன்றிப் புறம், அகம் என ஆட்சி இல்லையாம். அறம் அறம் என்பதன் தோற்றமே, அகவாழ்வின் தோற்றமாம்! தக்காள் ஒருத்தி தக்கான் ஒருவன் உள்ளத்திலோ, தக்கான் ஒருவன் தக்காள் ஒருத்தி உள்ளத்திலோ பதிவாகும் நிலைக்கு ‘அறம்’ எனப் பெயர் சூட்டியவர் தமிழ் மூதறிவாளர். அதனைப் போற்றி உரைத்தவர் தொல் காப்பியர் (1152). தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றல் முதலாகச் சொல்லப்படுவன அவை. அதனாலேயே வள்ளுவம் “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என இல்வாழ்வில் முழங்கியது. அக வொழுக்கம் பற்றிக் கூறப்புகும் ஆசிரியர் நல்ல சூழலை முதற்கண் உருவாக்கிக் கொள்கிறார். தமிழர் கண்ட அகவொழுக்கம் ‘கைகோள்’ எனப்பட்டது. கை என்பதன் பொருள், ஒழுக்கம். கோள், கொள்ளுதல்; அக் கைகோள் களவு, கற்பு என இரண்டாம். களவில் தொடங்கிக் கற்பில் நிறைவுறல் அன்றி வழுவுதல் ஆகாது என்னும் வரையறை உடையது அக் கைகோள். கைகோள் தோன்றுமிடம் அல்லது தொடங்குநிலை, ‘கைக்கிளை’ எனப்பட்டது. ஒழுக்கம் கிளைக்கும் நிலையே கைக்கிளை என்க. (கணவனை இழந்த தாபத நிலை, பின்னாளில் ‘கைம்மை’ என வழங்கியமை கட்டமை ஒழுக்கப் பொருளிலேயே என்பது எண்ணத் தக்கது.) ஏழு திணை கைக்கிளையில் தொடங்கும் காதல் வாழ்வு, மேலே ஐந்திணை (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை) பெருந்திணை என ஏழு திணைகளாக வகுத்துக் கூறப்படுவதை முதல் இயல் முதல் நூற்பாவில் சுட்டுகிறார். அது, “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப” (947) என்பது. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் என்றமையால், ‘நடுவணைந்திணை’ உண்மையைக் குறிக்கிறார் (948). நிலம் தமிழ் நிலம் ‘நானிலம்’ என்னும் பகுப்புடையது. அந் நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பன. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்படும் நிலைத்திணை (தாவரம்) வளமாக வளரும் இடத்தை அந் நிலைத்திணையின் பெயராலேயே வழங்கினர்! நிலைத்திணைகளில் பொலிவுமிக்கதும் உள்ளம் கவர்வதும் பூ. ஆதலால் நிலைத்திணைப் பூப் பெயரே அகம், புறம் இரண்டற்கும் அடையாளம் ஆயின. நடுவணைந்திணையுள் நடுவண் திணையாகப் பாலையைக் கொள்கிறார் தொல்காப்பியர். அதனால், அத்திணை ஒழிந்த திணைகள் நான்கற்கும் நானிலங்களை வழங்குகிறார். பாலை என்பது பால்மரம். அது மழையற்று வறண்ட நிலத்தும் வளர்வது. அதனால், அப் பெயரால் பாலை நிலம் வழங்கப் பட்டது. மலையும் காடும் வளமற்று வறண்ட நிலையில் அதனைப் பாலையாகக் கொள்வது தமிழக வழக்காயிற்று. இதனையே, “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியப்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்றார் இளங்கோவடிகள். ஆனால், குமரிக்கண்டத்திருந்த ஏழ்முன் பாலை, ஏழ்பின்பாலை என்னும் நாடுகள் நம் கருத்தில் தோன்றி, ஐந்திணை நிலமும் இயல்பாக இருந்ததை விளக்கும். நானிலத்து ஒழுக்கங்களும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்பட்டவை போலவே, பாலை நில ஒழுக்கமும் பாலை எனப்பட்டது. முறையே இவ்வைந்திணை ஒழுக்கங்களும் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் எனப்பட்டன. பல்வேறு வகையாகக் கூறப்படுவது பொருள். அதனை அகத்திணை அமைவு கருதி, முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என மூவகைப் படுத்திக் கூறினர் (950). முதற்பொருள் என்பது, நிலமும் பொழுதும். கருப்பொருள் என்பது, முதற்பொருள் வழியாகக் கருக்கொண்ட பொருள். உரிப்பொருள் என்பது, உயரிய மாந்தப் பிறப்பின் உரிமையாய் அமைந்த ஒழுக்கப் பொருள். இம் முப் பொருள்களுள் மூன்றாவதாகிய ஒழுக்கப் பொருளே - உரிப்பொருளே - ஆசிரியர் கூறுதற்கு எடுத்துக்கொண்ட பொருளாகும். முதற் பொருளாகிய நிலமும் பொழுதும், உரிப்பொருள் நிகழ்தற்கு அமைந்த இடமும் காலமும் பற்றியவை. உரிப்பொருள் விளக்கத்திற்கு அமைந்தது கருப்பொருள். ஆதலால், அவற்றைக் கூறும் ஆசிரியர் முதற்பொருளினும் கருப்பொருளும் கருப்பொருளினும் உரிப்பொருளும் ஒன்றில் ஒன்று சிறந்தது என்கிறார். ஏனெனில், இடம் காலம் சூழல் எனப் பேசுவன எல்லாம் வாழ்வுக்காகவே ஆதலால். - இம் முறை வகுப்புத் தாமே கண்டு படைத்து வைத்தது இல்லை என்பதை உறுதியுடன் கூறுகிறார். அது, “பாடலுள் பயின்றவை நாடுங் காலை” என்பது (949). நிலத்தைக் கூறும் போது நிலத்தின் பெயரை வாளா கூறாமல், அவ்வந் நிலத்தவர் வழிபட்டு வந்த தெய்வப் பெயரையும் சேர்த்தே சுட்டுகிறார். கருப்பொருள் கூறத் தொடங்கும்போதும், தெய்வம் என்பது மக்கள் உள்ளத்தே கருக்கொண்டு விளங்கிய பொருள் என்பதைச் சொல்லியே பிற கருப்பொருள்களைக் கூறுகிறார் (964). மேல், கீழ் கடல் கொண்ட குமரிக் கண்டமும் சரி, எஞ்சியுள்ள தமிழகமும் சரி, இவை மேல் மலைதொட்டுக் கீழ் கடல் எனப் படிப்படியே அமைந்த வையே. மலை நிலம் உயர்ந்தது ஆதலால், மேல், மேற்கு என உயரப் பொருளால் அத் திசை குறிக்கப்பட்டது. கடல் நிலம் தாழ்வுடையது ஆதலால், கீழ், கிழக்கு எனத் தணிவுப் பொருளால் அத்திசை குறிக்கப்பட்டது. முல்லை முதல் இந் நிலையில், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என அமையும் நில அமைப்பின் படியே திணை வைப்புச் செய்யாமல், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என முறைப்படுத்திக் கூறுகிறார். அம் முறையே பலரும் சொல்லிய முறை எனவும் உறுதி மொழிகிறார். அது, “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்பது (951). இனிக் காலம் சொல்லும் போதும், “காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்” (952) “பனிஎதிர் பருவமும் உரித்தென மொழிப” (953) “வைகறை விடியல் மருதம்; எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்” (954) “நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (955) “பின்பனி தானும் உரித்தென மொழிப” (956) என்றே வரிசைப் படுத்துகிறார். இருத்தல் “உணவின் சுவை நாவிலே இல்லை; வயிற்றிலே இருக்கிறது” என்றால், மறுதலையாகத் தோன்றும் அல்லவா. ஆனால், உண்மை அது தானே! பசித்துக் கிடந்து உண்ணக் காத்திருப்பவன் விரும்பி உண்ணும் உணர்வுக்கும், பசியின்றி ‘உண்ண வேண்டுமே’ என்பதற்காக உண்பவன் உணர்வுக்கும் எவ்வளவு இடைவெளி! அக இன்பம், கூடுதலில் இல்லை; கூடுவதை எதிர்பார்த்து இருத்தலிலேயே இருக்கிறது! இத் தெளிவின் தீர்ப்பாகவே முல்லை, குறிஞ்சி என முறை வைத்தனர். நில அமைப்புப் பற்றிக் கூறல் தொல்காப்பியர் நோக்கு இல்லை. ஒழுக்க அமைதிபற்றிக் கூறுதலே அவர் நோக்கு. தொல் காப்பிய உரிப்பொருள் விளக்கமாகவே காமத்துப்பால் இயற்றியவர் திருவள்ளுவர். அவர் இறுதிக் குறளாக, “ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்” என்றமை விளக்கமாக்கும். இதன் மேல்விளக்கமாக, “உணலினும் உண்டது அறல் இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது” என்பதும் (1326) எண்ணி மகிழத்தக்கது. நிலம், பொழுது வாழும் இடம், காலம், சூழல் ஆகியவைக்கும் வாழ்வார்க்கும் தொடர்பு உண்டா? உண்டு என்பது வெளிப்படை. மலைவாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும், கடல் வாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும் ஓர் ஒப்பானவையா? முல்லை ஆயர் தொழிலும் குடிநலம் பேணலும், மருத உழவர் தொழிலும் குடிநலம் பேணலும், ஓர் ஒப்புமை அமைந்தவையா? பனிநாள் மழைநாள் இளவேனில் நாள் மாறுதல், மக்கள் ஊண் உடை உறை நிலை மாற்றங்களை ஆக்க வில்லையா? இனிய விடியற் பொழுதும், கொடிய நண்பகல் வேளையும், மஞ்சள் மாலையும், காரிருள் கப்பிய யாமமும் என்னென்ன மாற்றங்களை யெல்லாம் ஏற்படுத்திவிடுகின்றன! குளிர் தூங்கும் அருவிச் சூழலும், கொதிக்கும் பாலைச் சூழலும் தனித்தனிப் பதிவுகளை உருவாக்கி விட வில்லையா? இவற்றை எண்ணுவார், வாழ்வுக்கு நிலமும் பொழுதும் சூழலும் உடனாகி நிற்றலை உணரத் தவறார். நாடக உயிர்ப்பு, உரையாட்டு நடிப்பு தோற்றம் என்பவற்றில் இருந்தாலும், மேடையும் திரையும் ஒளியும் பிறவும் அவற்றை மேம்படுத்துதல் நாம் அறியாதது இல்லையே! கருப்பொருள் ‘கரு’ என்பது ‘கர்’ என்னும் வேர்வழிச் சொல். கருமம் கருவி கருத்தன் என்பவற்றின் மூலமும் கர் என்பதே. கர் என்பது கார், கால், காள், காழ் என்றாகியும் விரிவாக்கம் பெறும். கருமை, கருமுகில் வழிப்பட்ட வான் சிறப்பாய், வையகச் சிறப்பு ஆக்குவதாம். அம் மழை இன்றிப் புல்லும் கருக் கொள்ளா என்னின், பிறவற்றைச் சொல்ல என்ன உண்டு? “மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை” என்பது குறிப்பு. “நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு” என்பது வள்ளுவ வான்சிறப்பின் நிறைவு. வான் ஒழுக்கே (மழையே), வையக ஒழுக்கு (ஒழுக்கம்) மூலம் என்பதை உரைத்தது அது. ஆறு ஒழுக்கு நெறி வழி என்பன வெல்லாம் ஆற்று நடைக்கும் ஆள் நடைக்கும் உரியவையாக இருத்தலைக் கருதுக. அன்றியும் நீரின் தன்மையே நீர்மை என்பதையும் நீர்மையாவது பண்புடைமை என்பதை யும் உணர்தல் இனிதாம். இனித் தொல்காப்பியர், “தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப” எனக் கருப்பொருள் வகைகளைக் கூறுகிறார் (மா = விலங்கு; புள் = பறவை; செய்தி = தொழில்). இவ்வாறு கொள்ளப்படுவன பிறவும் உள; அவற்றையும் கொள்க என்கிறார். ‘பிறவும்’ என்றதனால், தலைமகன் பெயர், தலைமகள் பெயர், நீர், ஊர், பூ, மக்கள் என்பனவற்றை இணைத்துக் கொள்கிறார் களவியல் உரைகாரர். வாழ்வியல் ஆசான் ஒருவன் ஞால நூல், கால நூல், திணை நூல் வல்லானாகவும் திகழ்தல் வேண்டும் என்பதைக் கூறாமல் கூறுவது இப்பகுதி என்க. தெய்வத்தை நினைந்து உயிர்க்கமுதாம் உணவு உண்ணுதல் வழக்கத்தை வெளிப்படுத்துதல் போலத் “தெய்வம் உணாவே” என்றார் என்பதும் எண்ணத்தக்கது. இஃது உலகந் தழுவிய நெறியாதல் அறிக. இதனைச் சுட்டுவார் பேரா. சி. இலக்குவனார். உரிப்பொருள் முல்லை நிலமும், முல்லைக்குரிய கார் காலமும் முன்வைத்த ஆசிரியர், உரிப்பொருள் சொல்லும் போது குறிஞ்சியை முதற்கண் வைத்துள்ளார். அது “புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே” என்பது (960). முல்லைக்குத் தந்த நில கால முதன்மையை, உரிப் பொருளுக்கும் தருதல் ஆகாது என்பது ஆராய்வார் எவர்க்கும் புலப்படும். ஏனெனில், முல்லை என்பது புணர்தலின் பின்னாக ஏற்படும், எதிப்பார்த்திருக்கும் ‘இருத்தல்’ ஒழுக்கம்; அது கூடுதல் இல்லாமல் நிகழாது; ஆதலால், குறிஞ்சி முல்லை என முறை வைத்தல் மேற் கொள்ளப்பட்டது என்பதற்காகவே, “தேருங் காலை” என்றார். தேருங் காலையாவது ஆராயும் பொழுது. கண்டாராகிய ஆடவரும் பெண்டிரும் காட்சியால் ஒருப்பட்டுக் கருத்தாலும் ஒருப்பட்டு ‘ஒருவரை இன்றி ஒருவர் இல்லை’ என்னும் அறவுணர்வு ஓங்கிய நிலையிலேயே ஒருவரை ஒருவர் மீளவும் காண எதிர்பார்த்திருத்தல் இயற்கை. ஆதலின், நடைமுறை வாழ்வறிந்த நன்முறை மாற்றமே குறிஞ்சி (புணர்தல்) முல்லை (இருத்தல்) என்னும் வைப்பு முறையாம். பிரிதல் கூடினார் இருவர் எதிர்பார்த்து இருப்பார் என்னின், நிகழ்ந்தது என்ன என எண்ணின் தெளிவு கிட்டும். அது ‘பிரிதல்’ என்பது. ஆதலால், குறிஞ்சி முல்லை என்னும் இரண்டன் இடையே பாலையை (பிரிவை) வைத்தல் முறைமையாயிற்றாம். பிரிவு என்பது வேளைப் பிரிவும், நாளைப் பிரிவும், திங்கள் முதலாம் பிரிவும் எனப் பலவகைத்தாம். இவற்றுள் வேளைப் பிரிவே முல்லைப் பிரிவு ஆகும். கூடு துறந்து செல்லும் பறவை போலவும் தொழுவம் பிரிந்து செல்லும் கால்நடை போலவும் வீடு துறந்து சென்று, வேலை முடித்து மாலையில் மீளும் வேளைப் பிரிவே இம் முல்லைப் பிரிவு. “கணவன் பிரிந்து சென்றால் அவன் மீள வரும் வரை மனைவிக்குக் கதவே காது” என்னும் பாவேந்தர் படைப்பு முல்லைப் பிரிவாகும். இந் நாளில் வேலை நிமித்தமாக வெளியே சென்று மாலையில் திரும்பி வரும் மனைவியைக் கணவன் நோக்கியிருத்தலும் இருவரும் காலையில் பிரிந்து மாலையில் திரும்பும் கடமையுடையராய் ‘ஒருவரை ஒருவர் நினைந்திருத்தலும் இருத்தல்’ எனத் தகும். “ஓதல் பகையே தூது இவை பிரிவே” என்னும் பிரிவுகள், நெடிய பிரிவுகள் ஆகலின் அவை இல்லத்தின் எல்லை கடந்து, கடற் பரப்பு வரை நீண்டு ‘நெய்தல்’ எனப்பட்டது. நெய்தல் ஒழுக்கம் இரங்கல். வெப்பத்தால் வெண்ணெய் உருகும் உருக்கம் போல உருகும் நிலை அது. கடலும் அலையும் கானலும் காற்றும் அமைந்த சூழல் பிரிந்தார்க்குத் துயரைப் பெருக்குதலின் இரங்கல் நெய்தல் ஆயது. கொஞ்சம் என்பது சிறிது என்னும் பொருளது. சிறிதளவும் சிறிது நேரமும் கொஞ்சம் எனப்படுதல் வழக்கம். கொஞ்சுதல் என்பது மகிழ்வுப் பொருளும் தரும். “கெஞ்சும் கொஞ்சும்” என்பது திருப்புகழ். கொஞ்சுத லாம் மகிழ்தல், அளவால் குறைந்திருத்தலே நெஞ்ச நிறைவாழ்வு என்பதை வெளிப்படுத்தும். இச் சொல் வழக்கு ஆழமிக்க அகப் பொருள் இலக்கண வழிப்பட்டதாகும். கூடியிருத்தலுக்குக் குளிர்கால யாமப் பொழுதை மட்டுமே குறித்து, எஞ்சிய காலமும் பொழுது மெல்லாம் பிரிதலும், பிரிதல் நிமித்தமுமாக அமைத்துக் கொண்ட நலவாழ்வு முறை நானிலம் போற்றத்தக்கதும், கொண்டு ஒழுகத் தக்கதுமாம். ஊடல் இனி ஊடல் என்னும் மருதத்தின் பொருள் தான் என்ன? உடலுக்கு ஒரு பெயர் ‘கூடு’ என்பது. “கூடு விட்டு இங்கு ஆவிதான் போன பின்பு” என்பதில் வரும் கூடு உடல் இல்லையா? குடம்பை தனித் தொழியப் புள் பறந்தற்றே என்பதில் வரும் குடம்பையும் கூடு தானே! கூடும் கூடும் (உடலும் உடலும்) ஒன்றுதல் கூடல். கூடும் கூடும் கூடாமல் ஓர் எண்ணம் ஊடு தடுத்திருத்தல் ஊடல். ஆதலால் உடனிருந்தும் பிரிதல் ஊடல் ஆகின்றது. ஆகவே அகவாழ்வில் நம் முந்தையர் கொண்டிருந்த தெளிந்த கருத்தும் அறிவுறுத்தமும் பாராட்டுக்கு உரியவையாம். இவ் வகையால், உரிப் பொருள் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என முறைப்படுத்தப்பட்டன. நிமித்தம் புணர்தல் எனின் வருதல், காணல், உரையாடல், பிரிதல் என்பனவும் நிகழ்வன தாமே. இவை, புணர்தல் நிமித்தம் எனப்பட்டன. இவ்வாறே பிரிதல் முதலியனவும் நிமித்தம் உடையவையாய்ப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்பவை முதலாகப் பெயரீடு பெற்றன. நிமித்தம் என்பது சார்பாவது. பெயர் இனி உரிப் பொருளுக்கு உரியார் எவர்? அவர் பெயர் என்ன? தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் சோழன் கரிகால் பெருவளத்தான் கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் வல்வில் ஓரி வையாவிக் கோப் பெரும் பேகன் பெருங்கோப் பெண்டு கண்ணகி -இவ்வாறெல்லாம் வருவன பாடுபுகழ் பெற்ற பெயர்கள். இன்னாரை இன்னார் பாடியது என்னும் குறிப்பும் திணையும் துறையும் உடையவை. தொண்டைமானுழைத் தூது சென்ற ஒளவையார் பாட்டு, சேரமான் கணைக்கால் இரும் பொறை உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்னும் இன்ன வரலாறும் உடையவை. இப்படிப் பெயர்களோ ஊர்க் குறிப்போ இல்லாத பாடல்கள் அகப் பாடல்கள். பாடும் பொருளோ, உள்ளத்தே கொண்டொழுகும் உணர்வுப் பொருள். அதனை உடையார் இவரெனக் கூறின் என்னாம்; புறப்பொருள் ஆகிவிடுமே! ஆதலால், “மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்” என்பது ஆணை மொழியாயிற்று (1000). அவர் பெயரை எங்கே கூறலாம்? எனின், “புறத்திணை மருங்கின் பொருந்துதல் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே” என்பது வரையறையான விடையாயிற்று (1001). இவ்வாறு பெயர் கூறல் ஆகாது என்பது மட்டுமில்லை. மறைமுக மாகவோ குறிப்பாகவோ கூட இன்னார் என அறிதற்குரியவை அகப் பாடலில் இடம்பெறல் ஆகாது. அப்படி ஒரு பாட்டுடைத் தலைவன் இன்னார் என அறியப்படுவன் ஆயின், அவனைப் பற்றிய அப் பாடலை, அகப்பாடல் வகையில் இருந்து நீக்கிப் புறப்பாடல் வகையில் சேர்ப்பதைத் தொகுப்பாளர் கொண்டனர் என்பதை அறியும் போது, அந் நெறி வழிவழியாகப் போற்றப்பட்டமை விளங்கும். இனி, அகப் பொருளில் இடம் பெறுவார்க்கு என்ன பெயர்தான் வைப்பது எனின், தலைவன் தலைவி, கிழவன் கிழத்தி, ஒருவன் ஒருத்தி, தோழன் தோழி, செவிலி நற்றாய் இன்னவான உரிமைப் பெயர்களே வரும். - அன்றியும் ஆயர், வேட்டுவர், கோவலர், எயினர், உழவர், கிழார், நுளையர், பரதவர் என்னும் வினைநிலைப் பெயர்களும் வரும் “பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே” எனச் சுட்டுகிறார் (966). அகனைந்திணைக்கும் உரிமைப் பட்டவரே கிழவன், கிழத்தி என்றும், தலைவன் தலைவி என்றும் வழங்கப்பட்டனர். இக் கிழமை பின்னே நிலவுரிமைக்கும் குடிமைத் தலைமைக்கும் பெயராயிற்று. கோவூர் கிழார், முதிரத்துக் கிழவன், நிலக் கிழார், பெருநிலக் கிழார் என்னும் பெயர்கள் ஏட்டிலும் நாட்டிலும் காண்பவையும் கேட்பவையும். “செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்” என்பது மனைக் கிழமை, நிலக் கிழமை என்பவற்றின் இணைப்பாகும். ஆகார் சிலர் அகனைந்திணைக்குத் தக்கவர் அல்லர் எனச் சிலர் அந் நாளில் ஒதுக்கப்பட்டும் இருந்தனர். தம் முரிமைப்பட்டு வாழ முடியாதவராய்ப் பிறர்க்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர் அவருள் ஒருவர். அடிமைப்பட்டுக் கிடப்பானுக்கு உரிமை இன்பவாழ்வு கொள்ள வாயாது; வாய்ப்பி னும் தன்னோடு தன்னையடுத்தவரையும் அடிமையில் கிடக்கவே வைப்பன். ஆதலால் அவரைப் பாடுதற் பொருளாகப் புலமையர் கொண்டிலர். ஒருத்தி ஒருவனை விரும்புகிறாள், அவனிடம் தன் விருப்பையும் கூறுகிறாள். அவனோ, நீங்கள் உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கலாம். ஆனால் நானோ எனக்குச் சம்பளம் தருபவர் சொற்படியே என் வாழ்வை அமைக்க முடியும் என்கிறான். அவன் வாழுரிமையனா? ஏவுவார் ஏவுவதை அன்றித் தாமே எண்ணிச் செய்யாதவரும் உண்டு. அவர் செயல்புரிதலில் வல்லவராக இருப்பினும், எண்ணிச் செய்யும் திறம் இல்லாதராதலின் அவரும் உரிமை இன்ப வாழ்வுக்கு உரியவர் ஆகார் ஆயினர். இனி, ஏவுவதைச் செய்தலும் இல்லாராய்ப் பிறரைத் தாம் ஏவித் தம் கடனைத் தட்டிக் கழிப்பாரும் உளர். அத்தகையரும் அன்பின் ஐந்திணையைப் பேணிக் கொள்வார் அல்லர். ஆதலால், இத்தகையர் அகத்திணைத் தலைமைக்கு உரியவர் அல்லர். தள்ளத் தக்கவர் ஆவர் எனப்பட்டனர். ஏனெனில் பாடு பொருட் சிறப்புப் போலவே, பாடப்படுவார் சிறப்பும் கருதியதே அகப்பாட்டு. அகத்திணைக்குத் தக்காராகக் கருதப்படாத இவர் அன்பின் ஐந்திணைகளுக்கு முன்னாம் கைக்கிளைக்கும் பின்னாம் பெருந்திணைக் கும் உரியர் என்று கூறுவதும் உரைமரபாக உள்ளது. இத்தகையர் இன்ப வாழ்வைப் புறத்திணைக்கண் சார்த்திக் காண்பதை அன்றி, அகத் திணைக்கண் சார்த்திக் காணக் கூடாது எனல் பொருந்துமோ என எண்ண வேண்டியுளது. “அடியோர் பாங்கிலும் வினைவலர் பாங்கிலும் கடிவரை இலபுறத்து என்மனார் புலவர்” என்பது நூற்பா (969). கடிவரை இல - நீக்குதல் இல்லை. இதனை, “புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே” என்பதனொடு இணைத்து நோக்கலாம் (1001). பிரிவார் தகவு இன்பத்தை மேம்படுத்துவதாகிய பிரிவு எவ்வெவ் வகையால் ஏற்படும், அப் பிரிவிற் குரியவர் தகுதி என்ன என்பதை அடுத்தே குறிப்பிடு கிறார் ஆசிரியர். கற்பியலில் மேல்விளக்கமும் தருகிறார் (1133 - 1137). பாடு புகழ் பெறுவோர் தக்கோர் ஆதலின், அவர்தம் அறக்கடமை நாட்டுக்கடமை பொருட்கடமை புலப்படும் வகையால், அவர்கள் பிரிவு வகைகள் இவையெனக் கூறுகிறார். “ஓதல் பகையே தூதிவை பிரிவே” என்றும் (971) “பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே” என்றும் (979) வருவன அவை. ஓதல் பிரிவு என்பது, இளமைக் கல்வி பெறுவாரை அன்று; கற்றுத் துறை வல்லாராய் மேனிலைக் கல்வி பெறச் செல்வாரைக் குறித்தது. பகைப் பிரிவாவது, நாட்டுக்குப் பகைவரால் உண்டாகிய கேட்டை ஒழிக்கக் களஞ் செல்லும் பிரிவு. தூதாவது, வழிமொழிதல்; ஆள்வோரால் சொல்லப்பட்டது எதுவோ அதனை மறவாது மாறாது சொல்லும் வகையால் சொல்லி நலம் செய்தலாகும். பொருள் வயின் பிரிதல், குடிமை நலம் காக்கவும், அறப்பணி புரியவும் வேண்டும் ஆக்கம் தேடற்குப் பிரிதலாகும். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னைத் தமிழர் கொண்ட இப் பிரிவு வகைகளை அறிவியல் வளர்ந்த இந் நாளின் பிரிவுகளொடு எண்ணிப் பார்ப்பின் புதுமை ஏதேனும் உண்டோ? அயல் மாநிலம் செல்வாரும், அயல் நாடு செல்வாரும் எண்ணிப் பார்க்கலாமே! தெரிவு இந் நாளில் அயலகம் செல்வதற்குத் தக்கார் எனத் தெரிவு செய்யப்படுவார் இலரா? இவ்வாறே இப்பிரிவுகளுக்குத் தக்காராகத் தெரிவு செய்தமை அறிய வாய்க்கின்றது. பகைதணி வினைக்குச் செல்வார் அரசின் ஆணை வழிதானே செல்வர்! தூது என்பதும் அரசின் ஆணை வழி நிகழ்வதுதானே! அவ்வாறே ஓதல் என்பதும் அரசின் ஆணை வழிப்பட்டது; ஆகலின், உடன் எண்ணினார். இம் மூவருள், ஓதற்குச் செல்வாரையும் தூதிற்குச் செல்வாரையும் தனித்து நோக்கி விடுத்தலை ஆள்வோர் கடமையாகக் கொண்டனர். “மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்” ஆதலாலும், “அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்” ஆதலாலும், ஆள்வோன் அத் துறைகளில் மேம்பட்டு நிற்பாரைக் கண்டு அத்தொழிற்கு ஏவுவான். அவ்வாறு காண்பனோ எனின், “வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்” (665) என்பது வள்ளுவம். ஆதலால் தக்கோனைத் தெரிந்து ஏவுதல் அவற்கு இயல்பாகும். மற்றும், “ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்” என்பதால் ஒற்றறிதல் வகையாலும் காண்பானாம் (581). ஓதற் சிறப்பாலும் தூதுத்திற மாண்பாலும் உயர்ந்து விளங்குவார் எவரோ அவரே அதற்குரியராக விடுக்கப்படுவர். இதனால் தொல்காப்பியர், “அவற்றுள், ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (972) என்றார். இனிப் பகைதணிவினையாம் படைக்குத் தெரிவும் பயிற்சியும் முதன்மையாகக் கருதிப் பேணப்பட்டமையாலும், அவர் அணி அணியாகச் செல்வார் ஆதலாலும், அவரை இவரோடு எண்ணினார் அல்லர். அன்றியும் அவர் செல்லுதலும், தான் தேர்ந்த தலைவரொடு அவர் செல்லுதலும் தான் செல்வதாகவே ஆகும் ஆதலால் அவரைத் தனித்துக் கூறினார் அல்லர் (978). இனிப் பொருட் பிரிவுக்குரியர் இருவகையார். அவர் அரசின் சார்பில் பொருட் பொறுப்பினராய் வரிதண்டுவாரும் அறங்காப்பாருமாக இருப்பார் ஒருவகையர். மற்றொரு வகையர் குடிமை நலம் காத்தற்குப் பொருட் பிரிவு மேற்கொள்வார் வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலும் குடிமை நலம் காக்கும் பொருட் பிரிவேயாம். இவருள் முன்னவர் முல்லை குறிஞ்சி முதலாகிய நானிலத் தலைவரும் ஆவர். ஆதலால், “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே” (975) என்றார். அவர் மன்னர் கடமை என்னவோ அதனை அவர் சார்பாக இருந்து செய்கின்ற செயல் வீறு உடையவராம். அதனால் அவர், “மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப” எனச் சொல்லப்பட்டார் (976). “ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாடைங்காப் பேதையிற் பேதையார் இல்” எனப்படுபவர் போன்றாராக இல்லாமல் ஓதி உணர்ந்து ஓதவல்லாராகத் திகழ்ந்த உயர்ந்தவர் வழியிலே நெறிமுறைகள் வகுத்துப் பரப்பப்பட்டன. அதனால் “உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான” (977) என்றார் தொல்காப்பியர். “வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான” (1592) என்று மரபியலில் கூறுவது இவண் நோக்கத்தக்கதாகும். கடற்பிரிவு இவண் குறிக்கப்பட்டோர் கடல் கடந்து அயல் நாட்டுக்குப் பிரிதலும் உண்டு. அவர் பிரிந்து செல்லுங்கால் தம்மொடு மகளிரை அழைத்துச் சென்றனரோ எனின் இல்லை என்பதை, “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” (980) என்று உரைத்தார். முந்நீர்வழக்கம் = கடற்செலவு. ஆடவர் மகளிரோடு கடல் கடந்து சென்றால், சென்ற நாட்டி லேயே தங்கிவிடக் கூடும் என்றும், மகளிர் இவண் இருப்பின் அவரை நாடி ஆடவர் மீள்வர் என்றும், மண்ணை மறவா நிலையைப் போற்றும் வகையால் இம் முறையை வகுத்தனர் என்றும் கொள்ளலாம். மடலேறுதல் உயிராகக் காதலித்த ஒருத்தியை மணக்க, அவள் பெற்றோர் தடையாக இருத்தலும் ஏற்பட்டுளது. தலைவியால் விரும்பப்படாத ஒருவனின் உற்றார் உறவினர் மணம்பேச வருதலும் நேர்ந்துளது. அந் நிலையில், காதலித்தவன் தன் காதலை ஊரறியச் செய்தேனும் ஊரவர் வழியாக மணமுடிக்க எண்ணுதலும் வழக்கம். அவ் வெண்ண முதிர்வே ‘மடலேறுதல்’ என்னும் முறையாயிற்று. பனங்கருக்கினை எடுத்துக் குதிரைபோல் செய்து அதில் ஏறி அமர்ந்து, உண்ணாதும் பருகாதும் பாடுகிடந்து, காதலித்த தலைவியை அடையும் முயற்சியே இஃதாகும். அரம்பம் போன்ற பனங்கருக்கால் உடலைக் கிழித்துக் குருதி சொட்ட உயிரையும் பொருட்டாக எண்ணாமல் மணக்க விரும்புவானைக் கண்டு, தலைவியின் பெற்றோர் உற்றோர் இரக்கம் கொள்ளலும், சான்றோர் எடுத்துரைத்தலும் மணம் கூடலும் நேரும். இவ்வாறு ஆடவர் மடலேறல் உண்டு எனினும், மகளிர் மடலேறும் வழக்கம் இல்லை. இதனை, “எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மை யான” என்கிறார் (981). எத்திணை மருங்கினும் என்பது எந் நிலத்தும். “கடலன்ன காம முழந்தும் மடலேறாப் - பெண்ணிற் பெருந்தக்க தில்” என்பதை இவண் எண்ணலாம் (குறள். 1137). ஆடவரினும் மகளிர் அடக்கமும் அறிவும் அமைவுமிக்காராக இருத்தலால், அவர் மடலேறுதல் அளவும் செல்லார் என்பதை, “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான” என்று ஆசிரியர் கூறுவதால் அறியலாம் (1155). எண்ணிப் பார்ப்பின், கால இட தொழில் நிலைகள் மாறுபட்ட இக் கால நிலையிலும், இவ்வுளவியல் மாறிற்றில்லை என்பதை உணர முடியும். ஆடவர் வலிந்து மணங் கோடலை அன்றி, மகளிர் வலிந்து மணங்கோடல் செய்தி நடைமுறையில் இல்லாமை எவரும் அறிந்ததே. கூற்று அகவாழ்வில் இடம்பெறுவார் பேசும் இடம், பேச்சு என்பவற்றை முறையாகக் கூறும் ஆசிரியர், நற்றாய், செவிலித்தாய், தோழி, கண்டோர், தலைவன், பிறர் என வகுத்துக் கொள்கிறார். அவர்கள் பேசுவது கூற்று எனப்படும். கூற்று = கூறுவது. கூற்று நிகழம் சூழல் ஒன்று வேண்டுமே. அச் சூழல், ‘கொண்டு தலைக்கழிதல்’, ‘உடன் போக்கு’ எனப்படுகிறது. அது இந் நாளில், ‘கூட்டிக் கொண்டு போதல்’ எனப்படுகிறது. ‘ஓடிப்போதல்’ எனப் பழிக்கவும் படுகிறது. முன்னாள் வாழ்வொடு எண்ணின், பழித்தற்கு இடமில்லை என்பதொடு, அந் நாள் மாந்தர் இதனை ஏற்றுப் போற்றிய சிறப்பும் படிப்பினையாக நமக்கு அமையும். ஒரு தலைவனும் தலைவியும் உடன்போக்குக் கொண்ட நிலையில், தலைவியைப் பெற்றவளாகிய நற்றாய் தனித்து வருந்துதலும் பேசுதலும் முதன்மை இடம் பெறுகின்றன. தாய் தலைவனும் தலைவியும் உடன்போக்குக் கொள்ளும் போது, நற்றாய், தன்னையும் தலைவனையும் தன் மகளையும் எண்ணிப் புலம்பு வாள், குறிபார்த்தல் தெய்வம் வேண்டல் என்பன புரிவாள், நன்மையாவதும், தீமையாவதும் அஞ்சத்தக்கதும் ஆகியவற்றைக் கூறிவருந்துவாள். தோழி யிடத்திலும் கண்டோர் இடத்திலும் வினாவுவாள் (982). செவிலி தாய் ஊரின் எல்லை வரை சென்று தேடுவாள். செவிலித் தாய் ஊரைத் தாண்டியும், வழிநடந்தும் தேடுவாள் (983). ஊரைவிட்டுத் தலைவன் தலைவியர் போகிவிடாமல் ஊரின் அயலிடத்தே இருப்பினும், அதுவும் பிரிவாகவே கொள்ளப்படும். இதனையும் இவ்விடத்தே குறிப்பிடுகிறார் (984) ஆசிரியர். தோழி தான் வேறு தலைவி வேறு என்றில்லாமல் ஒன்றியவள் தோழி. தலைவியைத் தலைவன் உடன் கொண்டு போதலே நலம் என்பதைத் தான் உணர்தலால் தலைவனிடம் எடுத்துரைப்பாள்; உடன்போக்கு ஏற்ற போது தலைவிக்கு நல்லுரை சொல்லுவாள்; உறவைப் பிரிதலால் உண்டாகும் தன் வருத்தமும் உரைப்பாள்; உடன் போக்கினரை மீட்டு அழைக்கச் செல்லும் தன் தாயைத் தடுத்து மீளுமாறு சொல்வாள்; மகளின் பிரிவை அறிந்து வருந்தும் பெற்ற தாய்க்குத், தலைவி மாறா அன்பால் பிரிந்தமை உரைத்துத் தேற்றுவாள் (985). இவை அவள் கூற்று நிகழும் இடங்கள். கண்டோர் வழிச் செல்வாரைக் ‘கண்டோர்’, வாளா பார்த்துக் கொண்டு செல்லாமல் உரையாடும் வகையையும் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். பொழுது போனமை, வழியின் தொலைவு, இடையே உண்டாம் அச்சம் என்பவற்றைக் கண்டோர், உடன் போக்கினர்க்கு உரைப்பர்; செல்லும் ஊர்த் தொலைவும் தம் ஊர் நெருக்கமும் கூறித் தம் ஊர்க்கு அழைப்பர்; உடன் போவோர் நிலைக்காக வருந்தியுரைத்து அவரூர்க்குத் திரும்பிச் செல்லுமாறும் சொல்லுவர்; அவரைத் தேடிவரும் செவிலியைக் கண்டு தேற்றித் திரும்புமாறு வேண்டுவர்; இவ்வாறு கண்டோர் உரை அமையும் (986). தலைவன் கூற்றுகளை மேலும் விரிவாகச் சொல்கிறார் (987). உள்பொருள் நிகழ்ச்சி; அந் நிகழ்ச்சி உறுப்பினர்; உறுப்பினர் உரைக்கும் உரை - இவற்றை இவ்வகத்திணையியலில் மட்டுமன்றிப் பின்னே வரும் களவியல், கற்பியல் ஆகியவற்றிலும் விரிவாகக் கூறுகிறார். இவை நாடகக் காட்சிகள் போன்றவை அல்லவா! நாடகம் என்பது நாட்டில் நிகழாததா? நிகழாத ஒன்று அல்லது இட்டுக் கட்டிய ஒன்று ஏற்றுக் கொள்ளவும் படாது; பயன் படவும் படாது. ஓரிடத்து ஒருகாலத்து ஒருசிலரிடத்து நிகழப் பெறுவனவே ஏற்ற புனைவுவகையால் நாடகமாகவும் காப்பியமாகவும் அமை கின்றனவாம். எங்கும் என்றும் எவரிடத்தும் காணலாகாப் பொருள் பற்றிப் பேசின், இல்பொருளாக ஏற்பாரின்றி ஒழியும். தொல்காப்பியர்க்கு முற்பட விளங்கிய இலக்கிய இலக்கண நூல் வழக்குகளும், அவர் கண்ட உலகியல் வழக்குகளும், ஒருங்கே தொகுக்கப் பட்டுத் தொகையாக்கியதே அவர் வழங்கிய வாழ்வியல் இலக்கணமாகும். சான்றுகள் உடன்போக்கு, அறமே என நினைந்த ஒரு தாயுள்ளம் கூறுகின்றது. “மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி இனிய ஆகுக தில்ல; அறநெறி இதுவெனத் தெளிந்தஎன், பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே” (ஐங். 371) “மழைபொழிந்து வழிகுளிரட்டும்; அறம் இதுவெனத் தெளிந்த என்மகள் சென்ற இடம்” என்னும் இது, பெற்றவள் உள்ளம் பேசுவது இல்லையா? தலைவியைத் தலைவனொடு விடுக்கும் தோழி, “இவளே நின்னலது இலளே; யாயும் குவளை உண்கண் இவளலது இலளே; யானும் ஆயிடை யேனே; மாமலை நாட மறவா தீமே!” என்பது, குறிய தொடர்களில், எத்துணைப் பெரிய நேய உரை! “இதுநும் ஊரே; யாவரும் கேளிர்; பொதுவறு சிறப்பின் வதுவையும் காண்டும்; ஈன்றோர் எய்தாச் செய்தவம் யாம் பெற் றனமால்; மீண்டனை சென்மே” கண்டோர், தலைவன் தலைவியர்க்கு உரைக்கும் இவ்வுரை, எத்தகு கனிவும் பெருமிதமும் தாங்குதலும் உடையதாகத் திகழ்கின்றது! “இது உங்கள் ஊர்; இருப்பவர் எல்லாம் உம் உறவினர்; சிறப்புற மணம் நிகழ்த்துவேம்; உங்கள் பெற்றவர் பெறாப் பேறு எங்களுக்கு வாய்த்தது; வருக” என்னும் இவ்வுரை தாய்மையுள்ளம் தெய்வவுள்ள மாகிச் சுரந்த சுரப்பு அல்லவோ! உடன்போக்குக்கு ஓர் உள்ளம் உடன்வந்து வழிகாட்டுகின்றதே: “எங்களூர் இவ்வூர்; இதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர்; வேறில்லை தாமுமூர் - திங்களூர் நானும் ஒருதுணையா நாளைப்போ தும்மிந்த மானும் நடைமெலிந்தாள் வந்து” (கிளவித்தெளிவு) தொல்காப்பியர் வழங்கிய கூற்றுவகை வெள்ளப் பெருக்கே, சங்கத்தார் அகப்பாடல்களும், பிற்காலக் கோவை முதலிய பாடல் களுமாம். அகவலும் வெண்பாவும் கட்டளைக் கலியும் பாவினமும் இக் கூற்றுவகையை விளக்குவனவாகப் பிற்காலத்தில் விளங்கினும், தொல் காப்பியர் நாளில் கலிப்பாவும் பரிபாவும் பெருவரவாகக் கொண்டிருந்தன. இவற்றை யெல்லாம் வடித்தெடுத்த பாகாக, “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர்” என நூற்பா கிளர்ந்ததாம் (999). நினைத்தல் பிரிவு, பிரிவு வகைக் கூற்று என்பவற்றை உரைத்த ஆசிரியர் அது தொடர்பான வேறு சில குறிப்புகளையும் வழங்குகிறார். நினைத்தலும் செய்தலொடு ஒக்கும் என்பது ஓர் உயர்ந்த உளவியல் ஒழுக்கம். அவ் வொழுக்கம் விளங்கும் வகையால், “நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்” என்று கூறி, “நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே” என்கிறார். “பிரிவுக்காலத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள், தலைவன் தலைவியால் நினைத்தற்கு உரியவையும் ஆகும்” என்பதுடன், “நிகழ்ந்த அது நெஞ்சில் நிலைபெற்றிருத்தலும் அப் பிரிவாகிய பாலைத் திணையே ஆகும்” என்பதும் இவற்றின் பொருள். இவ்வகத்திணையில் இணைக்கத் தக்கவை எவையும் இல்லையோ எனின், மரபு நிலை நீங்கா மாட்சியொடு இணைக்கும் பொருளை இணைத்தலும் ஏற்கக் கூடியதே என்கிறார் (991). உள்ளுறை சிந்திக்க வைக்கும் செய்தி எதுவோ அது செயலூக்கியாகத் திகழுதல் உறுதி. அதனால், அகத்திணை உரையாடல்களில் ஓர் அரிய உத்தியை வகுத்து, நூன் மரபாகப் போற்றினர். அஃது உள்ளுறை உவமை என்பது. இயல்பாக வழங்கும் உவமையொடு, இவ்வுள்ளுறை உவமையும் வரச் செய்யுள் இயற்றல் சிறக்கும் அகப்பொருளுக்கு என்று கூறும் அவர், அதன் இலக்கணத்தை, “உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள்முடிகென உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமை” என்கிறார் (994). “அலை கொழித்துத் திரட்டிய மணல் மேட்டை அசையும் துகிலைப் போலக் காற்றுத் தூற்றும் கடற்கரைத் தலைவனே” என்று குறிப்பிடுவதன் வாயிலாகத் தலைவன் தலைவியர் சந்திப்பு ஊரவர் அறிந்து தூற்றப்படு பொருளாகியமையைத் தோழி உணர்த்துகிறாள் தலைவனுக்கு. இதன் உட்கருத்து ‘காலம் நீட்டாது உடனே மணந்து கொள்’ என்று ஏவுதலாகும். இதனை, “முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர் நுணங்குதுகில் நுடக்கம் போலக் கணங்கொள ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப” என்கிறாள் (நற். 15). உள்ளகத்துப் பொருளாகிய அகம், உவமை வழியால்கூட வெளிப்படல் சிறப்பன்று என்று கொண்ட உயர்நெறியே இவ் வுள்ளுறை எனல் சாலும். இதன்மேல் இறைச்சி என்பதொன்றும் உண்டு. அதனை உவமையியல் முதலியவற்றில் விரியக் கூறுகிறார் ஆசிரியர். கருப்பொருளை அடியாகக் கொண்டு உள்ளுறை தோன்றும் என்னும் ஆசிரியர் ‘தெய்வம்’ என்னும் கருப்பொருள் உள்ளுறையில் இடம் பெறக் கூடாது என்று வரம்பு காட்டுகிறார். புலப்பாடு இல்லாத ஒன்றைக் காட்சியளவால் விளக்கிப் புலப்படுத்தலே முறை. அவ்வாறு காட்சி வகையால் காட்டமுடியாத ஒன்றால், புலப்படுத்த எண்ணல் புலப்பாடாக்காது என்பதால் விலக்கினார் எனத் தெளியலாம். எழுதிணை ஏழுதிணைகளாகக் கூற எடுத்துக் கொண்டவற்றுள் முந்து நிற்கும் கைக்கிளை இலக்கணமும், பிந்து நிற்கும் பெருந்திணை இலக்கணமும் இயல் நிறைவில் கூறி அமைகிறார். மக்கள் எழுவர் என்றால், மூத்தாரும் இளையாரும் ஒப்ப ‘மக்கள்’ எனவே படுவர். அது போல், அகத்திணை ஏழு எனின், முன்னும் பின்னுமாகிய இவையும் அகத்திணைகளேயாம். புறத் திணையொடு பொருந்துவன ஆகா. அகம் புறம் எனல் இரண்டே யன்றி அகப்புறம் புறப்புறம் என்பன பொருந்தாப் பிற் பிரிவாயவை. இளையராய் இருப்பார் விளையாட்டுக் காதலும், வேட்கை மிக அமைந்தார் அளவொடும் அமையாராய்க் கொள்ளும் பெருவிருப்பும், முறையே இக் கைக்கிளை, பெருந்திணை எனலாம். கைக்கிளை “காமம் சாலா இளமை யோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச் சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” என்பது முன்னதன் இலக்கணம் (996). “பருவம் அடையாத ஒருத்தி; அவள் பருவம் அடைந்தவளா அடையாதவளா என்பதை அறிந்து கொள்ளாத இளையவன் ஒருவன்; ஆனால், அவளால் தாங்காத் துயர் தான் கொள்வதாகக் கூறுகிறான். தன்னைப் புரிந்து கொண்டு நடத்தலால் தனக்கும் அவளுக்கும் ஏற்படும் இன்பத்தையும் இல்லாக்கால் இருவர்க்கும் ஏற்படும் துன்பத்தையும் தானே பெருமிதமாகக் கூறுகிறான்; அவளிடமிருந்து மறுமொழி என எதுவும் அவன் பெற்றான் அல்லன்; எனினும், தானே சொல்லி அதனால் இன்பப் பட்டுக் கொள்கிறான்; இதுவே கைக்கிளை எனப்படுவது” என்பது இதன்பொருள். இந் நிலை, பால் பிரிவு இல்லாமல் பயிலும் இளம் பள்ளிகளிலும், இளையோர் பணிபுரியும் தொழிலகங்களிலும், நெருங்கி உறையும் குடியிருப்புகளிலும் பெருக நிகழ்தலும் சொல்லுறவாகத் தொடங்கி நல்லுறவாகப் பின்னே திகழ்தலும் காண்பார் கைக்கிளையாவது காதல் தொடக்கம் எனவே உளவியற்படி கொள்வர். உரிய வழிகாட்ட லால் உயரிய வாழ்வுக்கு அடித்தளம் ஆக்குவர். பெருந்திணை இனிப் பெருந்திணை என்பதை எண்ணுவோம். ஆசிரியர் பெருந்திணையை, “ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” என்கிறார். மடலேறுதல், இளமை நீங்கியபின் விரும்புதல், தெளிவற்ற காமமிகை, மிக்க காமத்தால் செய்யும் துணிவுச் செயல் ஆகிய நான்கும் பெருந்திணை எனப்படுபவை என்பது இதன் பொருளாம். இத் - திணையை அகத்தொடு முரணா வகையில் ஆய்ந்த அறிஞர் வ. சுப. மாணிக்கனார், “ஐந்திணையாவது அளவுக் காதல்; பெருந் திணையாவது மிகுதிக்காதல். பெரும் என்ற அடை அளவினும் மிகுதிப்பாட்டை மிகையைக் குறிக்கின்றது. பெருமூச்சு, பெருங்காற்று, பெருமழை, பெருமிதம், பெரும்பேச்சு, பெருங்காஞ்சி, பெருவஞ்சி என்ற தொடர்களை உடன் நோக்குக” என்பது இவண் கொள்ளத் தக்கது. “களவை நாணின்றி வெளிப்படுத்திக் கற்பு ஆக்கினமையின் (ஏறியமடல் திறம்) - ஐந்திணைப் படாது பெருந்திணைப்பட்டது” என்றும், “இல்வாழ்க்கையில் காதல் நுகர்ச்சிக்கு ஒத்த மதிப்புக் கொடாது, இளமையை வேண்டுமளவு நுகராது, பொருள் முதலாயவற்றில் நாட்டம் கொண்டு ஒழுகுவது மிகையாதலின் இளமைதீர்திறம் பெருந்திணை யாயிற்று” என்றும், “கற்பு போய்வரும் பொருளில்லை. நாணோ ஒழுக் கத்தை விடாது அரிதில் போய்வரும் தன்மையது. நாண்விட்டமையால், காமத்து மிகுதிறத்தால் பெருந்திணையாயிற்று” என்றும், “களவுத் தலைவி மன்னரின் விழாவிற்கும் மகளிரின் துணங்கைக்கும் இல்லங் கடந்து புறப்பட்டே போய் விட்டாள். எண்ணம் சொல் அளவில் அமையாது இயங்கிய இச் செய்கை மிக்க காமத்து மிடல்” எனப்படும் என்றும் இவற்றின் முடிபையும் கூறுவார் மாணிக்கர். (தமிழ்க் காதல் - 234 - 257). அகத்திணையை அடுத்து ஆசிரியர் புறத்திணை இயல் கூறினார். “முற்படக் கிளந்த எழுதிணை” (947) என்றவர், அவ்வெழுதிணைகளுக்கும் அமைந்த புறத்திணைகள் ஏழனையும் கூறுதலை நூன் முறையாகக் கொண்டார். நாம் எடுத்துக் கூறிய அகத்திணை தொடர்பான களவு, கற்பு எனக் கைகோள் இரண்டனையும், அவற்றின் தொடர்பான எஞ்சுதல் பொருள் கூறிய ‘பொருளிய’லையும் கண்டு, புறத்திணை இயலைக் காணலாம். பொருள் தொடர்ச்சி நோக்கியது இவ்வமைப்பாகும். களவு ஒருவர்க்கு உரிமையாம் பொருளை ஒருவர் கவர்ந்து கொள்ளுதல், உலகியலில் சொல்லப்படும் களவாகும். அக் களவைக் கடிந்து ‘கள்ளாமை’ (களவு செய்யக் கருதாமை) கூறும் வள்ளுவர், “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” என்பார். “உள்ளத்தால் உள்ளலும் (நினைத்தலும்) செய்தலோடு ஒக்கு” மென, உளமொன்றிய உரைவகுத்து ஆசிரியர் உளப் பாங்கை வெளிப்படுத்து வார் உரையாசிரியர் பரிமேலழகர். அத்தகைய பழிக் களவல்லாமல் ‘உயிர் தளிர்க்கச் செய்யும்’ உள்ளங் கவர் களவு ஈதாகும். ஆதலால், வாழ்வியல் நெறிவகுத்த சான்றோர், ஒருவரை ஒருவர் உள்ளத்தால் கவர்ந்து ஒன்றுபடும் இயற்கை இயைபை, இயற்கைப் புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சி, கடவுட் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, ஒன்றிய பாலது ஆணை, காமக் கூட்டம், ஊழால் கூடும் கூட்டம் என்றெல்லாம் பெயரீடு செய்து பாராட்டினர். அன்றியும் களவு பிறர் அறியாவகையில் நிகழும் நிகழ்வு ஆதலால் ‘மறை’ எனவும், ‘மறைநெறி’ எனவும், ‘மறையோர் ஆறு’ எனவும் குறியீடு செய்து நம் முந்தையர் வழங்கினர். இக் களவின் முதல் நிலையாம் காட்சியை, “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையில் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே” என்கிறார் தொல்காப்பியர் (1039). “உலகியலில் ஒருவரோடு ஒருவரை இணைக்கின்ற சூழல் என ஒன்று உண்டு. அன்றி அவரை அவ்வாறு இணையச் செய்யாத சூழல் என்பதொன்றும் உண்டு. இவ் விரண்டனுள் இணையச் செய்யும் உயர்ந்த சூழல் வலிமையால், ஒத்த ஒருவனும் ஒருத்தியும் ஒருவரை ஒருவர் காணுதற்கு வாய்க்கும். அக் காட்சியால் ஏற்படும் உள்ளப் பதிவே, ‘பால்’ ஒன்றுதலாகிச் சிறக்கும். ஒத்த என்னும் நிலையில், சற்றே மிக்கோன் கிழவன் எனினும் நீக்குதற் குரியது இல்லை; ஏற்கத் தக்கதேயாம்” என்கிறார் (1039). ஒத்த கிழவனும் கிழத்தியும் என்பதன் ஒப்பு எவை எனின், “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” என்னும் பத்துவகை ஒப்புமாம் (1219). இவ் வொப்புகளின் அருமை போற்றின் இல்லற வாழ்வு இனிதின் அமையும். உள்ளப் பொருத்தம் இருவருக்கும் உண்டா என்பதை முதற்கண் காண வேண்டியிருக்க, இறுதிவரைகூடக் காண்பதும் கேட்பதும் இல்லை! ஆனால், பெயர் என்றும் நாள் கோள் என்றும் பார்க்க வேண்டாதன பொருத்தமெனப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பெற்றோர் அறியாமல் தாமே மணந்து கொள்ளலும், வேற்றிடம் சென்று விடலும், தம்மைத் தாமே முடித்துக் கொள்ளலும் பெருக்கமாகி வருதல் கண்கூடு. மணப்பெண் பார்க்க வருவார்; வீடு பார்க்கின்றனர்; வளம் பார்க்கின்றனர்; பெற்றோர் தமக்குள் பெண் ஆண் பிடித்தம் பற்றிப் பேசிக் கொள்கின்றனர்; உற்றார் உறவினர் பிடித்தமும் கருதுகின்றனர். தப்பித் தவறி ஆணின் விருப்பைக் கேட்பாரும் பெண்ணின் விருப்பைக் கேட்டு நடத்தல் அருமையே! இந் நிலையில், இருமனம் ஒன்றி விட்டாரையும், சாதி சமய செல்வ நிலைகாட்டி ஒன்றிவிடாது தடுக்க முந்துவாரே பலராகின்றனர். போராடிப் பெற முடியாராய் அவர் ‘முடிந்த பின்னர்’ இவர் முட்டி என்ன? மோதி என்ன? சாதி சமயம் செல்வம் கணியம் கண்மூடி வெறி இவை இறந்தவரை மீட்டுத் தருமா? தொல்காப்பியர் கூறிய பத்துப் பொருத்தம் பற்றி எண்ணிப் பாராமல், சோதிடன் சொல்லும் பத்துப் பொருத்தமும் பார்த்துப் பொருத்தமென முடித்து, மனப்பொருத்தம் இல்லாதார் வாழ்வு, வீட்டிலேயே விரும்பி உண்டாக்கி வைக்கப்பட்ட நிரய (நரக) வாழ்வு என எண்ணுவார் பெருகினால் அல்லாமல், இதற்குத் தீர்வு வாயாதாம். களவியலைக் கூறத் தொடங்கும் ஆசிரியர், “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணும் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” என்கிறார் (1038) இதற்கு, “உயிர்களுக் கெல்லாம் பொதுவாகிய இன்பமும், அவ்வின்பத் துய்ப்பிற்குத் தேவையாம் பொருளும், அப் பொருள் தேடுதற்காம் அறமும் என்பவற்றை ஒருங்கே கொள்ளும் வகையில் அன்பொடு கூடும் கூட்டத்தின் தொடக்கமாகியது களவு எனப்படும் காமக் கூட்டம். அக் கூட்டத்தை ஆராயும் போது அது, மறையோர் மணமாகச் சொல்லப்படும் மணம் எட்டனுள் இசைத் துறை வல்லோராம் யாழோர் (கந்தவர்) மணத்தினை ஒப்பதாம்” எனல் பொருளாம். களவு என்பதை விளக்க உவமை கூறுவார், அயல் நெறியாளர் மணவகையுள் ஒன்றனைச் சுட்டினார் என்பதும், அச் சுட்டுதலும் கண்முன் காணற்கியலாக் கற்பனைப் படைப்பராம் கந்தருவரைக் காட்டினார் என்பதும் உரிய பொருள் விளக்கத்திற்கோ, உரிய தமிழ் நெறிக்கோ உதவாததாம். தமிழ் கூறு நல்லுலக வழக்கும் செய்யுளும் நோக்கிக் கூறும் குறிக்கோள் உடையவர், விண்ணுலாவுவாராக அயலார் இட்டுக் கட்டிக் கூறுவாரை, உவமை காட்டுதல் ஏற்புடையதன்றாம். “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்” என்னும் தம் உவமை இலக்கணத்திற்கு மாறாம். மேலும் கண்டறியா ஒன்றைக் காட்டுதற்குக் கண்டறிந்த ஒன்றை ஒப்புக் காட்டுதலை யன்றிக் கண்டறிந்த ஒன்றை விளக்கக் காணா ஒன்றைக் காட்டுதல், “ஆகாயப் பூ நாறிற்று என்புழிச் சூடக் கருதுவாரும் இன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்னும் உரைக்கே அது எடுத்துக்காட்டாகிவிடும். அயல்நெறி ஒன்றனை விளக்குவார், தமிழ் நெறியுள் இன்னது போல்வது என்பதே நூன்முறையாம். இந்நூற்பாவின் நான்காம் அடியாகிய, “மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்” என்னும் ஓரடியை விலக்கிக் காணின், எப்பொருள் குறைதலும் இன்றிக் கண்ணேர் சான்றும் வாய்த்துச் சிறத்தல் கண் கூடு. ஆதலால், இவ் வோரடி உரைகண்டார் காலத்திற்கு முற்படவே மூலத்தின் இடையே சேர்க்கப்பட்ட பொருந்தாச் சேர்ப்பு என்பது புலப்படும். இப்படிச் சேர்ப்பு உண்டோ எனின், இடைச் சேர்ப்பு, இடமாற்றம், நூற்பாச் செறிப்பு, நூற்பா விடுப்பு என்பனவும் தொல்காப்பியத்துள் உளவாதல் ஆய்வார் இயல்பாகக் காணக் கூடியவையாம். ‘வைசியன்’ என்னும் ஒரு சொல் பழந்தமிழ் நூல்கள் எவற்றிலும் இடம் பெறாதது. பின்னூலார் தாமும் அயற் சொல்லென வெளிப்பட அறிந்தது. அச் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளமை (1578) மேற்போக்காக நோக்குவார்க்கும் சேர்மானத்தைக் காட்டிவிடத் தவறாது. இவ்வாறாயின் இவ்வடி நீக்கிய நூற்பாவின் பொருள் என்ன? பொருந்தும் வகை என்ன? என்பவை தெளிவு பெறல் வேண்டும். “காமக் கூட்டம் என்பது, பாடுதுறைவல்லாரும் யாழ்த்திற வோருமாகிய பாணர்தம் இணைப்பை ஒப்பது. அது பிரிவு என்பது அறியா வாழ்வினது என்பதாம். பாணர் கூட்டம் என்றும் பிரிவறியாப் பெருமையது என்பது, பாணன் பாடினி அவர்தம் சுற்றம் என்பவை மண் குடிசையில் இருப்பினும் காடுகரைகளில் திரியினும் மன்னர் மாளிகைக்குச் செல்லினும் ஒன்றாகவே இருந்ததைச் சங்கச் சான்றோர் பாடல்கள் தவறாமல் சொல்கின்றன. எந்தப் புலவரும் அப்படித் துணையொடும் சுற்றத்தொடும் சென்றமை அறியுமாறு இல்லை. தள்ளமுடியாச் சான்றைத் தள்ளி, இல்லாத அயற்சான்றைத் தேடி அலைதல் தேவை அற்றதாம். தலைவன் தலைவியை ‘யாழ’ என்று விளிக்கும் வழக்கு பண்டு முதலே இன்று வரை தொடர்தல் (யாழ, ஏழ, ஏழா என வழங்கப் படுதல்) இதனொடும் எண்ணத் தக்கது. இனி இவ் வடியை விடுதலால் ஏதேனும் நூற்பாவிற்குப் பொருள் இடரோ விடுபாடோ ஏற்படுமோ எனின் அவையும் இல்லையாம். அன்றியும் இரண்டு நூற்பாக்களுக்குப் பொருந்தவுரைத்த உரைகள் திருந்தும் வகையும் உண்டாகின்றதாம். அதனை மேலே காணலாம். இனி இன்பமும் பொருளும் அறமும் என்னும் இம்முறை முறையோ; அன்றிச் செய்யுளியலில் “அறம் முதலாகிய மும்முதற் பொருள்” என்பது முறையோ எனின், இரண்டும் முறையே ஆகலின் ஆசிரியர் கூறினார் என்க. மேலும், “வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும் நடுவணது எய்தாதான் வாழ்க்கை உலைப்பெய்து அடுவது போலும் துயர்” என வருதலால், பொருள் முன்வைப்பு அறியலாம். இம் மூவகையும் ஆசிரியன் ஆணை வழியவே என்பது “மும்முதல்” என்ற குறியீட்டால் விளங்கும். சொல்லும் இடம் குறித்து எதுவும் முதற் பொருளாகக் கொண்டுரைக்கும் உரிமையினது என்பதால் தான் ‘மும் முதல்’ என மூன்றற்கும் முதன்மை கூறப்பட்டதாம். காட்சி தலைவன் தலைவியருள் எவர்முற்காண்பரோ எனின், அவ் வினாவுதலுக்கு இடம் வைக்காமல், “ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” என இருவரும் ஒத்துப் பார்க்கும் ஒருமிப்புப் பார்வையே அது என்றார். ‘தகவிலார் மாட்டு எம் பார்வை பதிந்திராது’ ஆகலின், ‘இவர் தக்காரே’ என இருவரும் எண்ணுதல் ஐயம் ஆகும்; தெளிவும் ஆகும் (1040). இருவர் கண்ணும் கருத்தும் ஒன்றுபட்டமையால், அது நெஞ்சக் கலப்பாகிச் சிறக்கும் (1042). இவை இயற்கையாக நிகழ்ந்தவை ஆதலால் ‘இயற்கைப் புணர்ச்சி’ எனப்படுவதாயிற்று. இயல்பாக நடைபெற்றது இயற்கை. இத் தலைவனும் தலைவியும் முன்னரே அறிந்தவராகவும் இருக்க லாம். ஆனால், அறிந்த அந் நாள் ஏற்படாமல் ஓரிடத்து ஒருவேளையில் ஒரு சூழலில் ஒருவரும் எண்ணாமல் நிகழ்வதே இஃதெனத் தெளிய லாம். பிரிவு நெஞ்சங்கலந்த அவர்கள் பிரிந்த பின் ஏற்படும் உளப்பாடுகளை ஒன்பதாக எண்ணுகிறார் தொல்காப்பியர்: இடையீடு படாது விரும்புதல், அவ்வாறே இடையீடு இல்லாமல் எண்ணுதல், இவற்றால் உடல் மெலிவடைதல், எண்ணம் நிறைவேறுதற்கு என்ன செய்யலாம் எனக் கூறுதல், அடங்கிக்கிடந்த நாணம் எல்லை கடத்தல், நினைப்பவை - காண்பவை - எல்லாமும் தம் எண்ண வெளிப்பாடாகவே தோன்றல், தம்மை மறத்தல், மயக்கம் கொள்ளல், வாழ்வை வெறுத்துக் கூறல் என்பவை தலைவன் தலைவியர் இருவர் பாலும் நிகழ்வன (1046). இடம் தலைப்படல் அழைத்துப் பேசாதவற்றை அழைத்துப் பேசுதல், பேசாதன பேசுவனவாகக் கொள்ளுதல், அவற்றின் நலம் உரைத்துப் பாராட்டல், தலைவன் தான் மகிழ்வுறாமை காட்டித் தலைவி இருக்கும் நிலை அறிதல், தலைவன் தனக்குப் பிரிவால் உண்டாகும் மெலிவினை விளக்குதல், தம் இருவர்க்கும் உண்டாகிய தொடர்புநிலை உரைத்தல், தன்னைப் பற்றிய தெளிவு தலைவிக்கு உண்டாகுமாறு தலைவன் கூறுதல் என்பவை இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தோன்றுவன (1047). தலைவன், தன் குடிவரவால் அமைந்த பெருமையும் தன் அறிவாற்ற லும் பெருகி நிற்றலாலும், தலைவி, தன் குடிவரவாய பெருமையுடன் இயல்பான அச்சம் நாணம் உறுதிப்பாடு ஆயவை கொண்டு இருத்தலாலும் இருவர் தகுதியும் பேணிக் காக்கும் வகையில் உள்ளுறுதி காத்து நிற்பார் (1044, 1045). தாம் முந்துறக் கண்ட இடத்துக் காணற்கும் முந்துவர். கண்ட அவ் விடத்தில் மீளக் காணுதல் ‘இடந்தலைப்பாடு’ எனப்படும். தலைப்பாடாவது கூடுதல். ஏதாவது ஒன்றை முன்னிட்டுத் தலைவியின் உடலைத் தொடுதல், புனைந்துரை வகையால் பாராட்டுதல், தக்க இடம் பார்த்து நெருங்குதல், தலைவி நழுவிச் செல்லுதல் கண்டு வருந்துதல், அதுபற்றி நெடிது நினைத்து நைதல், நெருங்குதல், தொடுதலுறப் பெறுதல், பெற்றபின் ‘உன்னை எவ் வகையாலும் மறவேன்’ என உறுதி கூறுதல் என்பவை இடந்தலைப் பாட்டில் நிகழ்வன. “மெய்தொட்டுப் பயிறல்; பொய்பா ராட்டல்; இடம் பெற்றுத் தழாஅல்; இடையூறு கிளத்தல்; நீடு நினைந் திரங்கல்; கூடுதல் உறுதல்; சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம்; உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்” என்பது இதன் தொல்காப்பிய நடை (1048). மெய் தொடல் இதில், மெய் தொட்டுப் பயிறல் முதலியவை வறிதே கூறுவனவா? வாழ்வில் நடைபெறுவனவா? காதல் உரிமையர் சந்திக்கும் படம் - கதை - காட்சி இன்னவற்றை மின்வெட்டென நொடிப் பொழுது இதுகால் நாம் பார்ப்பினும், இவற்றுள் ஒன்று புலப்படுதல் தவறாதே! மெய் தொட்டுப் பயிறல், கூடுதல், நுகர்ச்சி, புணர்ச்சி என்பன வெல்லாம், பழிப்புக்குரியவையாகவோ உடல் கலக்கும் கூட்டமாகவோ கொள்ளக் கூடியவை அல்ல. தலைவி கூந்தலில் பூ இருக்க, அப்பூவை அடுத்துவரும் வண்டை ஓட்டுதல் வழியாகத் தொடுதல் ‘வண்டோச்சி மருங்கணைதல்’ என்னும் மெய்தொட்டுப் பயிறல். இந் நாளில் இக் காட்சி அருமை அல்லது புனைவு எனத் தோன்றின், ஆலையில் வேலை பார்த்துவரும் ஒருத்தி தலையில், பஞ்சுத் துகளோ நூலோ இருப்பதாக மெய் தொட்டுப் பயிறல் கண்கூடு. புணர்ச்சி ஈராறுகள் கூடுதல் கூடுதுறை; கடலொடு ஆறு கூடுதல் கொண்டு புணரி; இரண்டு சொற்கள் கூடல் புணர்ச்சி; பூவை மணத்தல் என்பது முகர்தல்; நுகர்தல். இன்னவகையில், மெய்தொட்டுப் பயிறல் முதலிய வற்றைக் கொள்ளவே பண்டை அகப்பொருள் புலனெறி வழக்காகும். காதலித்தான் ஒருவன் ஊரறிய மனங்கொண்டு வாழாக்கால் சென்ற ஊரே முன்னின்று அறங்காட்டிய நெறி, அந்நெறி. பெற்றோரால் கரணம் முடித்தோ கரணம் பிறரால் முடிக்கப்பட்டோ ஓரிற்படுத்தல் என்னும் நிகழ்வு நேரிட்ட பின்னன்றிக் கூடுதலை ஒப்பாதது புலனெறி வழக்கம். அத்தகு மெய்யுறு கூட்டம் முன்னுற நிகழ்தலும் மகப்பேறு பெறுதலும் என்பவை, சங்கப் பாடல்களில் சான்றுக்கும் இல்லாதவை. அகப் பொரு ளும் சரி, புறப் பொருளும் சரி கறையிலாத் தூயதாகக் கொள்ளப்பட்ட தன் விளக்கமே பொருளதிகாரச் சுருக்கச் செய்தியாம். உதவலும் தடையும் தலைவியைக் கண்டு மகிழ்ந்தவன், பிரிந்த போது கவலைப்படுத லுடன் அமையான். தலைவியை மீளவும் கண்டு அவளைத் துணையாகக் கொண்டு மனையறம் நடத்தும் வேட்கையனாக இருப்பான். தலைவியைக் காணற்கு வாயிலாக, அவள் உயிர்த் தோழியின் உதவியைப் பலவகையாலும் நாடுவான். தன் உயிர்த் தோழனாக இருப்பான் துணையையும் கொள்வான். தலைவன் தலைவியர் உறுதிப் பாட்டைப் பெருக்கும் வகையால் தலைவன் தலைவியர் இருவரும் காணத் தடையாகியும், காண வாய்ப்பு உண்டாக்கித் தந்தும் பங்களிப்புச் செய்வர். இரவில் சந்தித்தல், பகலில் சந்தித்தல், சந்திப்புக்கு இடையூறு என்பனவும் நிகழும். தோழி, தலைமகள் இளமைப் பருவம் உரைப்பாள்; அவள் அறியாள் என்பாள்; அரியன் என்பாள்; தலைவனை நெருங்கா வகையில் அகற்றுவாள்; அவன், தோழியிடம் மன்றாடிக் கேட்கவும் ஆவன்; அவள் இசைவைப் பெறுதலுமாவன்; பெற வாயா நிலையில் மடலேறுதல் கூறவும் ஆவன். பாங்கன் நிமித்தம் தோழனால் உண்டாகும் கூட்டத்தைப், “பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப” என்பார் தொல்காப்பியர் (1050). அவை: காட்சி, ஐயம், துணிவு, வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன. இவற்றுள் முதல் மூன்றும் கைக்கிளை; அடுத்த ஐந்தும் அன்பின் ஐந்திணை; இறுதி நான்கும் பெருந்திணை. இவற்றை, “முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே” (1051) என்றும், “முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே” (1052) என்றும் கூறுவனவற்றால் தெளிவிப்பார். “மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்” என்னும் நெறியைப் பழைய உரையாசிரியர்கள் கொண்டமையால், முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே என்பதற்கு, அசுரம் பைசாசம் இராக்கதம் என்னும் மூன்று மணங்களையும், ‘பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே’ என்பதற்கு, பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்னும் நான்கு மணங்களையும் பொருளாகக் கொண்டனர் (இளம். நச்.). “பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப” என்னும் முன்னை நூற்பாவை (1050) அடுத்து வருதலை விட்டுப் (1051-2) பொருந்தா மணத்தைப் பொருத்திக் காட்டினர் (1038). மறையோர் மணவகை இவண், மறையோர் தேஎத்து மன்றல் எட்டும் பற்றிய குறிப்பை அறிதலும் வேண்டுவதாம். தள்ளத் தக்கதா கொள்ளத் தக்கதா என்பதற்கு உரிய பொருள் வேண்டுமே. பிரமம்: நாற்பத்தெட்டு ஆண்டு பிரமசரியம் காத்தவனுக்குப் பன்னீராண்டுக் கன்னியை அணிகலம் அணிந்து கொடுப்பது. பிரசாபத்தியம்: மைத்துன முறையான் மகள் வேண்டிச் செல்ல மறுக்காமல் கொடுத்தல். ஆரிடம்: தக்கான் ஒருவனுக்குப் பொன்னாற் பசுவும் காளையும் செய்து அவற்றினிடையே பெண்ணை நிறுத்தி அணிகலம் பூட்டி ‘இவற்றைப் போல் நீங்கள் பொலிவுடன் வாழ்க’ என வாழ்த்திக் கொடுப்பது. தெய்வம்: வேள்வி ஆசிரியனுக்கு வேள்வித் தீயின் முன் கன்னியைத் தட்சிணையாகக் கொடுப்பது. கந்தருவம்: கந்தருவ குமரனும் கன்னியரும் தன்முன் தான்கண்டு கூடினாற் போல, ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் கூடி மணப்பது. அசுரம்: ‘கொல்லேற்றினை அடக்கியவன் இவளை மணத்தற் குரியன்;’ ‘வில்லேற்றினான் இவளை மணத்தற்குரியன்’ எனக் கூறி வைத்து, அதன்படி செய்தாற்குக் கொடுப்பது. இராக்கதம்: தான் விரும்பிய பெண்ணை அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக வலிந்து கவர்ந்து செல்வது. பைசாசம்: மூப்புடையாள், உறங்குவாள், மதுமயக்கம் உடையாள் ஆயோரைக் கூடுதல். - இவை தமிழர் மணமல்ல என்பது, ‘மறையோர் தேஎத்து மன்றல்’ என்பதால் புலப்படும். மக்கட்சட்டம், அரசியல் சட்டம் என்பவற்றால் குற்றமாகக் கொள்ளப்படுவனவும் - பட வேண்டுவனவும் எவையோ, அவையே இப் பட்டியலாக அமைகின்றதாம். ‘பெண்ணடிமை’ என்று பேசுவார் கண்ணுக்கு இவையெல்லாம் தட்டுப்படா போலும்! ‘காதல்’ அறம்! என்னும் ஒளவையுரைக்கு இவ்வெண்வகை மணங்களுள் ஒன்றற் கேனும் இடமுண்டோ? கந்தருவம் இடம் பெறாதோ எனின், ‘கண்டதும் கூடுதல்’ என்பது கந்தருவம். அவரை மணத்தல் வேண்டுவதுமன்று; ஏற்றதுமன்று; ஆதலால், களவு கற்பாதல் உயிரான தமிழ் மணத்தொடு எதுவும் ஒவ்வாததாம். தலைவன் கூற்று பகலில் சந்திக்கும் இடம் இரவில் சந்திக்கும் இடம் என்னும் ஈரிடங்களிலும் சந்திக்கத் தவறிவிட்ட போதும், பார்க்க முடியாத வகையில் நெடும் பொழுது கடந்த போதும், காணவேண்டி நின்று காணா நிலையில் வேட்கை மிகுந்து மயங்கிய போதும், தான் புகுதற்குக் கூடாத காலத்துப் புகுதலால் விருந்தினனாகிய போதும், தலைவியே விரும்பி ஏற்கும் விருந்தின் போதும், முயற்சியை முன்னிட்டுப் பிரிய நேரும் போதும், நாணத்தால் தலைவி விலக்கி நிற்கும் போதும், வரைந்து (மணந்து) கொள்ளுமாறு தோழி சொல்லும் உயர்ந்த சொல்லைக் கேட்கும் போதும், வரைதலை உடம்பட்டு ஏற்கும் போதும், வரைதலை அவர்கள் மறுக்கும் போதும், தலைவன் கூற்று உண்டாகும். இந்நூற்பாவைத் தலைவி கூற்று வகையாகக் கொண்டார் நச்சினார்க்கினியர். இளம்பூரணர், தலைவன் கூற்று வகையாகக், கொண்டார். தலைவியைப் பற்றிய சில குறிப்புகளை அடுத்துக் கூறி, அவள் கூற்றுகள் எவை என அடைவு மேலே செய்தலால், இது தலைவன் கூற்றெனலே தகுதியாம் (1055). தலைவி இயல்பு இன்ப ஒழுக்கில் நிலை பெற்றுவரும் நாணம் மடம் என்னும் உயரிய பண்புகள் தலைவிக்கு உரியவை; ஆதலால், குறிப்பினால் கருத்தை வெளிப் படுத்துவாள்; தக்க இடத்தில் மட்டுமே சொல்லால் வெளிப்படுத்துவாள்; அல்லாமல் அவள் விருப்பை வெளிப்பட உணர்த்தமாட்டாள் (1054). விருப்பத்தை வெளியிடாத கண் இல்லாமையால், அதுவே கருத்தை வெளிப்படுத்திவிடும் (1055). தலைவன் விருப்பினை ஏற்றுக் கொள்ளும் தலைவியே எனினும், (உடம்பாட்டினள் எனினும்) உடம்பாடில்லாள் போலக் கூறுதலும் உண்டு (1056). - என்பவை, ஆசிரியர் தலைவியின் நாணம் மடம் குறித்த இயற்கைச் செய்தி அறிந்து கூறும் தெளிவினவையாம். இந்நாளிலும், அன்பின் ஐந்திணைப் படும் வாழ்வினர் இத்தகையராகவே இருத்தல் வெளிப்படை. நாணம் மகளிர் நாணுதல் நயம் ‘திருநுதல் நாணு’ என்னும் இயற்கையான நாணமாகும். கற்பித்துவருவது அன்று; ‘நாணுதல் ஆகாது’ எனத் தம் முனைப்புக் கொண்டாரும், நாணாமல் இருக்க முடியாத இயற்கை நாணுதல் அஃதாதலின், “கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற” என்பது வள்ளுவம். மடம் மடம் என்பது இளமையொடு கூடிய உயரிய ஓர் இயற்கை. கற்றவை கேட்டவை என்பவற்றுள் தக்கவற்றை விடாப்பிடியாகக் கொள்ளும் கொள்கை வீறு ஆகும் அது. துறவர் நிலைப் பயிற்றிடம் ‘மடம்’ எனப் பெயர் கொள்ளப்பட்டது இக் கொள்கைக் கடைப்பிடி கருதியேயாம். அங்கே இப் பண்பியல் அருகியமையே, இப் பொருளை மறுக்கவும், ‘சமையல் கூடம் - சாப்பாடு’ என்பவை தழுவிய ‘மடைப்பள்ளி’ நிலை யத்து வாழ்வினர் என்னும் பொருளுக்கு அவர்களை இடமாக்கியதாம். எம்துயர் தாங்குவதுடன் பிறர் துயரும் யாம் தாங்குவேம் என்னும் கொள்கைத் தவவீறு காவி ஆகும். காவுதல் - தாங்குதல். காவு தடி காவடி. “காவினேம் கலமே” புறம். இக்காவி உடையளவில் நிற்கும் இடமும் உண்டுதானே! அதுபோல். கூற்று தலைவனை மறைத்து நின்று காணுதல் முதலாகத் தலைவி கூற்று நிகழும் இடங்களையும் புதுவதோர் மணம், புதுவதோர் பொலிவு முதலாயவை கண்டு தோழி கூற்று நிகழுமிடங்களையும், களவு ஊரவர் அறிய வெளிப்படு நிலை முதலாகச் செவிலி கூற்று நிகழுமிடங்களையும் நாடக உத்தியில் நயமுற உரைக்கிறார் தொல்காப்பியர் (1057, 1060, 1061). இடையிடையே களவொழுக்கம் குறித்த நுணுக்கச் செய்திகள் சிலவற்றையும் குறிப்பிடுகிறார். தலைவி கூற்று தலைவி தானாகக் கூறும் இடங்களும் உண்டு என்பதைக் கூறு கின்றார். ஆதலால், வினாவிய வழியே தலைவி பிற இடங்களில் கூறுவாள் என்பதைப் புலப்படுத்துகிறார். திருமணம் செய்யும் காலத்தைத் தள்ளிவைத்துத் தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரியும் போதும், திருமணம் செய்யாமல் தேடிவந்து நீங்கும் தலைவனைக் கண்டபோதும், அயலார் மணம் வேண்டி நிற்றலைத் தலைவனுக்கு உரையெனத் தோழிக்கு உரைக்கும் போதும் தலைவி தானே கூறுதல் உண்டு (1058). “உயிரைப் பார்க்கிலும் உயர்ந்தது நாணம்; அந் நாணத்தினும் குற்றமற்ற அறிவான் அமைந்த கற்பு உயர்ந்தது”; என்று முன்னோர் சொல்லிய சொல்லை ஏற்றுக் கொண்ட மனத்துடன், தலைவன் இருக்குமிடம் தேடிச் செல்லுதலும், தன்துயர் வெளிப்படுத்தாத நல்ல சொற்களைச் சொல்லுதலும் ஆகிய நிலையிலும் தலைவி கூற்று நிகழ்தல் உண்டு (1059). குறிப்புகள் சில அகவாழ்வியல் அறியார் போலத் தான் கொண்ட வேட்கையைத் தலைவன் முன் கூறுதல் பெரிதும் தலைவிக்கு உண்டாதல் இல்லை; புதிய மண்கலத்தில் ஊற்றப்பட்ட நீர் புறத்தே பொசிவது போல அவள் மெய்ப்பாட்டால் புலப்பட்டுவிடும் (1064). இயற்கைப் புணர்ச்சி, தாமே கொண்டது ஆதலால் தோழன், தோழி என்பார் தூதர்களாக இருத்தல் அன்றித், தமக்குத் தாமே தூதாதலும் தலைவன் தலைவியர்க்கு உண்டு (1065). தலைவி தலைவனைச் சந்திக்கக் கூடும் இடத்தை அவளே கூறுவாள். அவள் வருதற்குத் தக்க இடமாக அமைய வேண்டும் ஆதலால் (1066). தலைவியை அன்றித் தான் வேறாக இல்லாத தோழி குறிக்கும் இடமும் உண்டு (1067). தலைவியைக் காணவரும் தலைவனுக்குத் தோழன் மூன்றுநாள் அளவே உடனாவன் (1068). தலைவனைப் பற்றித் தெளிந்த கருத்து வேண்டுதலால் அவன் தோழனைச் சுட்டிக் கேட்கும் முறையைத் தலைவி கொள்வாள். அவள் கேட்டல் ‘துணைச் சுட்டுக் கிளவி’ எனப்படும் (1069). தலைவி அறிந்துகொள்ள வேண்டிய நற்பொருள் பலவற்றையும் அறியச் செய்பவள் தாய் ஆவாள். தாய் எனப்படுவாள் செவிலி ஆவள் (1070). தலைவிக்குத் தோழியாக இருப்பவள் அச் செவிலியின் மகளே ஆவள். அத் தலைவியின் தாய்க்குத் தோழியாயவள், தோழியின் தாயாகிய தன் செவிலித்தாயே என்பதால் அவள் வழிவழி உரிமை புலப்படும் (1071). தலைவிக்கு வழிகாட்டும் அறிவுத் துணையாகத் தோழி இருத்தலால், அவள் தலைவியை நன்கு ஆராய்தலும் சிறப்பேயாம் (1072). தலைவியை அடைவதற்குத் தலைவன் தன்னிடம் வேண்டி நிற்றலாலும், தலைவியின் குறிப்புணர்ந்து கொள்ளலாலும், இருவரும் ஓரிடத்து இருத்தலை அறிதலாலும் அவர்கள் இருவருக்கும் உள்ள அன்புணர்வைத் தோழி உணர்ந்து கொள்வாள். இதற்கு, ‘மதியுடம் படுதல்’ என்பது பெயர் (1073). தோழி மதியுடம் பட்டு உணர்ந்தால் அல்லாமல், அதன்பின் நிகழ்தற்குரிய கடமைகள் நடைபெற மாட்டா என்பர் (1074). தலைவன் தலைவியர் கூடுதல் முயற்சிக்கும் வரைதல் நிகழ்வுக்கும் அவளே பொறுப்பாளியாக இருத்தலால், அவர்களைப் பற்றி அறிந்திருத்தல் கட்டாயமாம் (1075). தலைவன் தலைவியர் சந்திக்கும் இடம் ‘குறி’ எனப்படும். அது இரவுக் குறி, பகற்குறி என இரண்டாம் (1076). ‘இரவுக் குறி’ மனைக்கண் உள்ளார் ‘பேசும் ஒலி கேட்கும்’ அளவுள்ள மலை சார்ந்த இடமாகும். ஆனால், அது மனைக்குள்ளிடம் ஆகாது (1077). மனைக்கு அப்பாலானதாகவும் தலைவி அறிந்த இடமாகவும் இருப்பதே ‘பகற்குறி’ இடமாகும் (1078). தலைவன் தான் குறியிடம் வந்ததைக் குறியால் அறிவிக்க, அக் குறியிடம் இல்லாத வேறு இடத்திற்குத் தலைவி சென்று அவனைத் தேடிக் காணாமல் வருதற்கும் நேரும் (1079). மிக அமைந்த சிறப்பான இடம் வாய்க்குமெனில் ஆங்காங்குச் சென்று சந்தித்தலும் உண்டு (1080). களவொழுக்கத்தின் போது நேரமும் நாளும் தவறிய நிலை தலைவனுக்கு இல்லை (1081). வரும் வழியின் அருமை, நேரும் கேடு, அச்சம், இடையூறு என்ப வற்றைப் பற்றியவற்றால் நேரமும் நாளும் தவறுவதும் தலைவனுக்கு இல்லை (1082). தலைவி காதலறம் கொள்ளுதலை அவள் தந்தை முதலியோர் அவள் குறிப்பாலேயே அறிவர் (1083). தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலி அறிந்து கொண்டவாறு நற்றாயும் அறிவாள் (1084). களவொழுக்கம் அரும்பிய நிலையில் இருந்து விரிந்து ஊரறியும் செய்தியாவது தலைவனாலேயே ஆம் (அம்பல் - அகத்து ஒடுங்கியிருந்த நிலை; அலர் = மலர்ந்து மணம் பரவுதல் போன்ற நிலை) (1085). களவு வெளிப்பட்டபின் மணம் கொள்ளல், களவு வெளிப்படுமுன் மணம் கொள்ளல் என மணங்கொள்ளும் (வரைவு) வகை இரண்டாகும் (1086). வெளிப்பட்டபின் மணங் கொள்ளல் கற்புமணம் போன்றது. எனினும், முன்னே கூறிய ‘ஓதல் தூது பகை’ வகைப் பிரிவுகளை மணம் கொள்ளுமுன் கொள்ளல் தலைவனுக்கு இல்லை. ஆனால், திருமணத்தை இடையே வைத்துப் பொருள் தேடுதற்காகப் பிரியும் பிரிவு ஒன்று மட்டும் அவனுக்கு உண்டு. இவையெல்லாம் களவியல் ஒழுக்கச் செய்திகள். சிறு விளக்கம் ‘கண்டதும் காதல்’ என்பது அவ்வளவில் ஒழியாமல் இருப்பதற்காக இத்தனை வகைக் கட்டொழுங்குகளை நம் முந்தையர் விதித்திருந்தனர் என்பது, எண்ணி எண்ணிப் பாராட்டத்தக்க ஒழுகலாறாகும். “கண்டதும் காதல், கலைந்ததும் மறத்தல்” என்பதற்கு இடமில்லா நெறிமுறைகள் இவையாம். தலைவியும் தலைவனும் தாமே கண்டு ஒருமித்தனர். ஆனால், தலைவன் தோழனோ, தலைவி தோழியோ அறியாமல் அடுத்த நாள் அவர்கள் தாமே கண்டிலர். தோழன் ஆய்வு - இடிப்பு - கண்டிப்பு - தடை என்பவற்றுக்கு ஈடு தந்தே தலைவன் தலைவியைக் காண முடிந்தது. தோழியின் ஆய்வு - மறைப்பு - மறுப்பு - புறக்கணிப்பு என்பவற்றுக்கு ஈடுதந்தே தலைவி தலைவனைக் காணமுடிந்தது. தலைவற்குத் தோழன் ‘இடிக்கும் கேளி’ராகவே இருந்தான். தலைவிக்குத் தோழி இணையில்லா ‘அறிவுத் துணை’யாகவே திகழ்ந்தாள். அவளே, களவுக்கு இசைவு தந்து, கற்பு வாழ்வுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட துணிவாட்டி. அந் நிலையை அமைவாய்ச் செய்யமுடியா நிலையில், தாய்க்கு அறிவித்து உடன் போக்குக்கு வழிகாட்டி உரிமையறம் நிலை நாட்டுபவளும் அவள். இத் தகு கட்டொழுங்கு இல்லாமல் இருவராகவே காதலித்திருப்பின் அக்காதல் நீள்வதற்கும் நிலைப்பதற்கும் பொறுப்பாவார் எவர்? நிழல்போல் தொடர்ந்து நீங்கா நெறிகாட்டும் நேயப் பிறவியர் இவர்கள். தோழன், தோழியர் என்னும் இவருள்ளும், தோழியின் பங்களிப்போ கற்பு வாழ்விலும் அருவியாய் ஆறாய்த் திகழும் நீர்மையது. தோழி தோழன் என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் நான்கே நான்கு இடங்களில் மட்டுமே இடம் பெறுகிறது. ஆனால் தோழி என்னும் சொல்லோ 550 இடங்களில் வருகிறது. தோழி என்னும் சொல்லின் ஆட்சிப் பெருக்கம், அக வாழ்வில் அவள் ஆட்சிப் பெருக்கம் உணர்த்துவதேயாம். அகத்திணை இலக்கியமே பெண்ணிலக்கியம் என்பர். “ஆங்குவரும் மாந்தர்களுள் பலர் பெண்பாலாரே; பாங்கன் ஒரு துறையளவில் வந்து போய் விடுகிறான்; பாணன் சிலபொழுது வருகிறான்,, தேர்ப்பாகன் கூற்றுக்குப் பெரிய இடமில்லை. தலைவனது தந்தை உடன்பிறந்தார் பற்றி ஒன்றும் சொல்வதாகாது; தலைவியது தந்தையும் அண்ணன்மாரும் கூற்றுக்கு உரியவர் அல்லர். கற்பினில் வரும் மழலைமகன் இளந்தூதுவனே அன்றி உரையாடான்; தோழியும் செவிலியும் அன்னையும் பரத்தையும் அக இலக்கியத்தில் கொள்ளும் வாய்ப்பு மிகப் பெரிது” என்கிறது தமிழ்க் காதல். மேலும் சங்க இலக்கியத்தில் 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 842 பாடல்கள் தோழியிற் கூட்டம் என்னும் ஒரு துறைக்கே வருவன. இதனால் அக இலக்கியத்திற்குத் தோழி என்னும் ஆள், இன்றியமையாதவள் என்பதும் தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம்” என விளக்குகின்றது. தோழி சொல்லாடும் இடங்கள் களவுப்பகுதியில் நாற்பத்து ஏழு; கற்புப்பகுதியில் இருபத்தொன்று; ஆக அறுபத்தெட்டு எனக் குறிப்பிடு கிறார் ஆசிரியர் தொல்காப்பியர். அவள் உரையாடும் இடங்களையும் திறங்களையும் நோக்கும் போது, பெண்ணியல்பு என்று சொல்லப்படும் பெருமைக் குணங்கள் எல்லாமும் ஓருருக் கொண்டு விளங்கும் உயரிய படைப்பே அவள் என்பது விளக்கமாகும். தலைவிக்கும் தோழிக்கும் உரிய உரிமை, உயிர் உரிமை. அதனால் பிறருக்கெல்லாம் தலைவியாக இருப்பவள் தோழிக்குத் தோழியாகவே விளங்குகிறாள். அவள், இவளைத் தோழி என்கிறாள். இவள், அவளைத் தோழி என்கிறாள். இத்தகைய ஒத்த உரிமையே தோழமையின் நிலைக் களம். இன்னும் ஒருபடி மேலே செல்கிறது அவர்கள் தோழமை. தோழி தலைவியை ‘அன்னை’ என்பாள். தலைவி தோழியை ‘அன்னை’ என்று உரிமையாய் அழைப்பாள். நம் தாய், நம் தலைவர், நம் வாழ்வு, நம் உயிர் என்று இருவரும் ஒப்பிதமாகக் கூறுவர். தங்கள் உயிர்கலந்து ஒன்றிய தோழமையை, ஒரு தோழி சொல்கிறாள்: “தாயோ, தன் கண்ணைவிட மேலாக இவளை விரும்புகிறாள். தந்தையோ, இவள் கால் நிலத்தில் படுவதையும் பொறுக்காதவனாய் ‘உன் சிற்றடி சிவக்க எங்கே செல்கிறாய்’ என்று தடுப்பான். நானும் இவளுமோ, பிரிவு இல்லாமல் அமைந்த நட்பால் இரண்டு தலைகளையுடைய ஓருயிர்ப் பறவை போல உள்ளோம்!” என்கிறாள். எத்தகைய அரிய உவமை! தலைவன் தன் தலைவிக்கு வாய்த்த தோழியைப் பற்றிச் சொல்கிறான்: “தோழி எதைச் செய்கிறாளோ, அதையே செய்கிறாள் தலைவி. மிதப்பின் தலைப்பக்கத்தைத் தோழி பிடித்தால், தலைவியும் அத் தலைப்பக்கத்தையே பிடிக்கிறாள். மிதப்பின் அடிப்பக்கத்தைத் தோழி பிடித்தால், அவ் வடிப்பக்கத்தையே தலைவியும் பிடிக்கிறாள். மிதப்பை விட்டு விட்டுத் தோழி வெள்ளத்திலே போனால், தலைவியும் போவாள் போலும்” என்பது அவன் நெஞ்சார்ந்த உரை. இன்ன சிறப்பால் தான் தோழியைக் கூறும் தொல்காப்பியர், “தாங்கரும் சிறப்பின் தோழி” என்றார் போலும் (1060) ! கற்புமணம் கற்பு மணம் என்பது என்ன? எனின், “கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” என்பது (1088). கரணமாவது சடங்கு; மணச் சடங்கு. கிழவற்குக் கொடுத்தற்குரிய முறைமையர் கொடுக்க, கிழத்தியைக் கொள்வதற்குரிய முறைமையர் கொள்வதே திருமணக் கொடையாகும். கிழவன் கிழத்தியரின் பெற் றோரைப் பெற்றவர்கள், இக் கொடையைச் செய்வராதலால் ‘தாதா’ எனப்பட்டனர். தாதா = கொடையாளர். அப் பெயர் ஆண்பால் அளவில் சுருங்கி, முறைப் பெயராக இன்று வழங்குகிறது. ‘தாத்தா’ என்பது அது. முழுத்தம் திருமணச் சடங்கு முழுமதி நாளில் இரவுப்பொழுதில் நடந்தமை யால் அதனை ‘முழுத்தம்’ என வழங்கினர். அதன் அடையாளமே முழுத்தம் பார்த்தல், முழுத்தக்கால் நடுதல் என்பனவும், வளர்பிறை நாளில் மணவிழா நடத்திவருவதுமாம். திருமணக்கரணம் மணமக்களை நீராட்டி, புத்துடை உடுத்தச் செய்து, மக்களைப் பெற்ற மங்கையர் நால்வர் மங்கலவிழா நிகழ்த்தி, “கற்பினில் வழாஅ நற்பல உதவிப் பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு” என்று வாழ்த்தியமை அகநானூற்றில் 86ஆம் பாடலாகத் திகழ்கின்றது. அதன் 136ஆம் பாட்டும் அதனைச் சுட்டுகிறது. இம் முழுத்தமே ‘முகூர்த்தம்’ எனப்பட்டு, 24 மணித் துளி அளவு குறிக்கும் குறுங்காலமாகியும், அயன் மொழி வழியில் ஆகாச் சடங்கு நெறியாகியும் இந் நாள் நிகழ்வதாயிற்று. திருமணப் போது இரவாக இருந்ததால் முழு நிலவு ஒளி இருப்பினும் விளக்கேற்றினர். ‘ஓமத்தீ’ வளர்த்திலர்; வந்தவர்க்கு உணவு வழங்கினரே அன்றி, வாளா எரியில் படைத்திலர். அம்மி மிதிக்கும் இழிமை ஏற்படவில்லை. மணமகள் கற்போடு இருந்தால், அருந்ததி விண்மீன் போல் விளங்குவாள். இல்லையானால், அகலியை கல்லானால் போலக் கெட்டு மிதிபடுவாள் என்னும் அடையாளமாம் ‘அரை கல்’லை (அம்மியை) மிதித்தல் அறிவுப் பிறப்பினர் ஏற்கத் தக்கதா? மணமேடைக்கு வந்து சடங்குகள் பலவும் முடித்தபின், மணமகன், ‘மணமகளை மணக்க மாட்டேன்’ எனக் காசிச் செலவு மேற்கொள்ள லும், பெண்ணைப் பெற்றவன் அவன் பின்னே போய் அவனை வணங்கி, நன்மொழியுரைத்து மணமேடைக்கு அழைத்து வந்து மணம் செய்வித்த லும், சிந்தனை சிறிதேனும் உள்ளவர் ஒப்பும் செயலாகுமா? காசிக்குப் போகின்றவன் மேடைக்கு வந்து ஊடே எழுந்து போவது விழாவுக்கு வந்தோர் அனைவரையும், ‘மூக்கறுத்துப் புள்ளி குத்துவது’ அல்லவா! ‘உலகம் தட்டை என்பதே இறைமொழி’ என்ற உறுதிப் போக்கின ரும் அஃது உருண்டை என ஒப்புக் கொள்ளும் அளவில், அறிவியல் வளர்ந்துள்ள போதிலும் கண்மூடித்தனத்தில் உருண்டு புரளல்தான் ‘கனமதிப்பு’ என எண்ணுவாரும், எண்ணுவார் வழியில் நிற்பாரும் என்றுதான் சிந்திப்பாரோ? தமிழன் தன்மானங் கெட்டுப் போன முதல் நாள், வடமொழி வழிச் சடங்கை ஏற்றுக் கொண்ட நாளேயாம்! அதன் விளைவு என்ன? தொல்காப்பியத் தூய தமிழ் நெறிகளையும் வடவர் நெறிப் பொருள்காட்ட உரையாசிரியர்களுக்கு இடம் ஆயிற்றாம். அதனைப் பின்னே காண்போம். ‘உடன்போக்கு’ என்பது, தலைவன் தலைவியரின் பெற்றோர் உற்றார் தொடர்பு இல்லாமல் அகன்று போன அயலிடத்து நிகழ்ச்சி. ஆங்கேயும் மணச் சடங்கு இல்லாமல் மணமக்கள் உடனுறைதல் இல்லை. அதனால், “கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான” என்றார் தொல்காப்பியர் (1089). “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே” என அக் கரணம் இல்லாக் காலமும், அக் கரணம் முன்னர்க் கொண்டாரும் அதன் பின்னர்க் கொண்டவரும் பற்றிய நூற்பா இஃது (1090). மூவர் மூவர் என்பார் முடியுடைய மூவேந்தர் என்பவர். ‘போந்தை, வேம்பே, ஆர் என வரூஉம் மாபெருந்தானையர்’ என ஆசிரியரால் கூறப் பட்டவர். ‘முத்தமிழ்’, ‘முப்பால்’ என்பவை போல, ‘மூவர்’ என்றால் எவராலும் அறியப்பட்டவர். அவர்கள் மூவர் குடியிலும் திருமணக் கரணம் முதற்கண் நிகழ்ந்தது. அக் கரணம் பின்னர் அவர்க்கு உட்பட்ட நானிலத் தலைவர், அரசியல் அலுவலர், ஊர்த் தலைமையர், ஊரவர் என்பார்க்கும் படிப்படியே நிகழலாயிற்று. மன்னர் குடியில் உண்டாகிய மரபுகளே பிறந்தநாள் விழா, சிறந்த நாள் விழா, பள்ளி எழுச்சி, திருவுலா, திருநீராட்டு, திருவூசல் முதலியன வாகக் கோயில் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் வழங்கின என்பதை அறியின், அடிப்படை விளங்கும். “மன்னன் எப்படி மக்கள் அப்படி” என்பது இதன் சுருக்கக் குறிப்பு. இம் மூவரை வருணப் பிரிவிற்குத் தொடர்புபடுத்திக் கீழோர் என்பதற்கு ‘வேளாண்’குடியினர் எனப் பொருள் காணற்கு இடமில்லை! பொருள், பதவி, தலைமை எனச் சிக்கல் ஏற்படும் இடங்களிலேதான், சிக்கல் தீர்வுக்கு வழியும் காணப்படும் என்பது எண்ணத்தக்கது. பல மனைவியருள் முதன் மனைவியே ஆளுரிமை வாய்ந்தவள் ‘கோப்பெருந் தேவி’ எனப்படுவதும், அவள் மக்களே ஆளுரிமையர் என்பதும் எண்ணின் இது தெளிவாம். ஐயர் இனி, “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்பது அடுத்த நூற்பா (1091). ஐயர் யாத்தனர் என்னும் சொல் வந்ததும் இந் நாள் ‘ஐயர்’ அந் நாளே யாம் தாம் அறநெறி அமைத்துத் தந்த மூலவர் என்று மேடையில் மட்டுமல்லாமல் நூலிலும் முழக்கமிடுகின்றனர். சாதிமைக் கொடி பிடித்தலை, மேற்கொண்டவர்கள் ‘வெறி’யை அன்றி, இந் நூற்பாவில் எள்ளளவும் அப் பொருளுக்கு இடமில்லை. சங்கப் புலவர்கள் பாடல்களில் இன்னாரை இன்னார் பாடியது என்னும் குறிப்பு உண்டு. அப் பெயர்களில் ஒன்றில் தானும் ‘இன்ன ஐயர்’ என ஒரு பெயரைக் காட்ட முடியுமா? ஐயர் என்பது சாதிப் பெயராயின், வேடர் கண்ணப்பரும், பாணர் திருநீலகண்டரும் உழவர் நந்தனாரும் சேக்கிழாரால் ‘ஐயர்’ எனப்பட்டிருப்பரா? போப்பையர், கால்டுவெல் ஐயர் ஐயர்சாதியினரா? இக் குடி எனப்பார்த்தலில்லா வீரசைவர் ‘ஐயர்’ என்பது சாதியா? ஐயன் - ஐயர் - ஐயா - ஐயை - ஐயாம்மா - ஐயாப்பா என்னும் முறைப் பெயர்கள் எக் குடியினர்க்காவது தனியுரிமைப் பட்டயம் கொண்டதா? தம் ஐயன் என்பதுதானே ‘தமையன்’. தமையன் என்பாரெல்லாம் ‘ஐயன்’ சாதிதானா? ‘இளமாஎயிற்றி இவைகாண் நின்ஐயர்’ என எயிற்றிக்குச் சுட்டுதல் ‘அப்பா’வா, சாதிப் பெயரா? ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் வரும் ‘ஆசறு காட்சி ஐயர்’ சாதிப் பெயரா? களவுமணம் ஒப்பாத எண்மணப் பேறுடையார்க்கு, “அறத்தொடு நின்றேனைக் கண்டு திறற்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்” என்னும் குறிஞ்சிக்கலி பொருந்துவதா? ‘இவர் அவர்’ எனப் பகுக்கும் சாதிப்பிரிவு அல்லாத சால்புப் பெருமக்கள், எக்குடிப் பிறப்பினும் அவரெல்லாம் கரணம் வகுத்து வழிநடத்திய ஐயரே ஆவர் என்க. களவுக் காதல் கற்பு அறமாகாதவகையில், ஓரீர் இடங்களில் உண்டாகிய பொய்யும் வழுவும் கண்ட குடிமைப் பெருமக்கள், அறமன்றச் சான்றோர்கள் ஆயோர் திருமணக் கரணம் செய்வித்து, ஊரறிய ஒப்புக்கொள்ள வைத்த பட்டயப் பதிவே ‘கரணம்’ ஆகும். “பொய்யாவது, செய்ததனை மறைத்தல். வழுவாவது, செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையில் அவையிரண்டும் நிகழாவாம் ஆதலால் கரணம் வேண்டுவதாயிற்று” என்பது இளம்பூரணர் உரை. நச்சினார்க்கினியரோ வேதமுறை மணமே பொருளாக்கினார். ஆனால், பொதுச் சடங்கு செய்தே தழும்பேறிப் போகிய செம்முது பெண்டிர் நடத்திய அகநானூற்றுப் பாடலையே எடுத்துக் காட்டினார் (136). எடுத்துக் காட்டிய அளவில் மனத்தில் தடை ஒன்று ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா! நாம் எழுதும் உரை என்ன? எடுத்துக்காட்டும் மேற்கோள் என்ன? முழந்தாளுக்கும் மொட்டைத் தலைக்கும் போடும் முடிப்பு எனச் ‘சிறிதளவேனும் சிந்திப்பானும் உண்மை அறிவானே’ எனத் தோன்றியிராமல் போகியிருக்குமா? அவரே அறிவார்! “கரணம் என்ப”, என்னும் தொடர்க்கு, “ஈண்டு ‘என்ப’ என்றது முதனூலாசிரியரையன்று; வடநூலோரைக் கருதியது” என, ‘ஆடுகளம் அமைத்துக் கொண்டு’ ஆட்டத்தில் தெளிவாக இறங்குகிறார் நச்சி னார்க்கினியர். “ஒருவர் சுட்டாமல் தாமே தோன்றிய கரணம், வேத நூற்கே உளதென்பது பெற்றாம்” என்று மேற்குறிப்பும் காட்டுகிறார். நெஞ்சுதளை “கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சுதளைஅவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்” என்பது தலைவன் கூற்றுவகையுள் முற்பட நிற்பது (1092). “கட்டிப் போடப்பட்டிருந்த நெஞ்சம் அக் கட்டினை நீங்கியது எதனால்? கரணம் முடிந்த உரிமை நிலையால்!” என்பது இதற்கு வெளிப் படையான பொருள். திருமணம் முடிந்து விட்டமையால் மனம் திறந்த மகிழ்வுடையன் ஆனான் தலைவன் என்பது தானே குறிப்பு. “இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி வேட்கை தணியாது வரைந்தெய்துங்காறும் இருவர் மாட்டும் கட்டுண்டு நின்ற நெஞ்சம் கட்டுவிடப்படுதல்” என உரை கூறுகிறார் இளம்பூரணர். “ஆதிக் கரணமும் ஐயர் யாத்த கரணமும் என்னும் இருவகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையால் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகலெல்லை முடிந்த காலத்து, ஆன்றோராவார், மதியும் கந்தருவரும் அங்கியும். களவிற் புணர்ச்சி போலும் கற்பினும் மூன்று நாளும் கூட்ட மின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக் கூடிய கூட்டத்தின் கண்ணும்: அது நாலாம் நாளை இரவின் கண்ணதாம்” என உரை வரைந்து, குறுந்தொகை 101 ஆம் பாடலை எடுத்துக்காட்டி, ‘இது நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி’ என்கிறார். கற்பவர்தாம் முடிவு செய்து கொள்ளவேண்டும்! “ஆசிரியன் சொல் எப்படி யிருந்தாலும், இப்படித்தான் உரை எழுதுவேன்” என உறுதி கொண்டமை தானே, இத்தகு இடங்களில் வெளிப்படுகிறது! எத்தகைய பேரறிஞர்! ‘அவர் அறியாத் தமிழ்நூற் கடற்பரப்பு ஏதேனும் இருந்திருக்க முடியுமா?’ என ஆர்வ நெஞ்சத்தை ஆட்கொள்கிறாரே! ‘இவரைப் போல உரை காணற் கெனவே பிறந்தார் எவரே?’ என ஏங்க வைக்கும் அவர் ஏன், இப்படி எழுதுகிறார். இது தான் சார்ந்ததன் வண்ணமாதல் போலும்! அல்லது ‘இன்னான் எனப்படும் சொல்’ என்பது போலும்! கற்பில் கூற்றுவகை கற்புக் காலத்தில் தலைவன் கூற்றுவகை முப்பத்தொன்றனைக் காட்டுகிறார். அவ்வாறே தலைவி, தோழி முதலியோர் கூற்று வகைகளை யும் கூறுகிறார் (1092 - 1101). “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென”த் தலைவன் தலைவியைப் பாராட்டலும், “அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும்” எனக் குறையுணர்ந்து பணிதலும், குடிவாழ்வுக்கு இன்றியமையாதவை. இவை தலைவன் கூற்றுள் இரண்டு (1092). “உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையில் திரியா அன்பின் கண்ணும்” என உரிமை உணர்ந்து தலைவி பெருமை போற்றுதல், உரிமை வேட்கைக் காலத்தும் போற்றத்தக்கது. இது தலைவி கூற்றுள் ஒன்று (1093). “பிரியும் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்” என்பது தோழி கூற்றுள் ஒன்று. தோழிக்கு இருந்த உரிமை, உறுதி, காவல் கடன் என்பவற்றைக் காட்டுவது இது (1096). காமக் கிழத்தி என்பாளுக்கும் அகவாழ்வில் இடமிருந்ததால் அவள் கூற்றும் உண்டு. செவிலி, அறிவர் ஆயோர் கூற்றும் இடம்பெறும். வாயிலோர் தலைவன் தலைவியர் ஊடற்கண் அதனை நீக்குவார் வாயிலோர் எனப்படுவர். அவர்கள் பாணர் கூத்தர் என்பவர். அவர்கள், உரிமையுடன் சென்று பழகும் இயல்பினர் ஆதலால் “அகம்புகல் மரபின் வாயில்” எனப்படுவர் (1098). இனிய ஓரியல் இல்வாழ்க்கையில் தலைவி வழியில் தலைவனும், தலைவன் வழியில் தலைவியும் நிற்றல் சிறப்பாதலால், “காமக் கடப்பினுள் பணிந்த கிளவி காணும் காலை கிழவோற் குரித்தே வழிபடு கிழமை அவட்கிய லான” என்றும் (1100) “அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே” என்றும் (1101) கூறினார். அலர் முதலியன களவுக் காலம் கற்புக் காலம் இரண்டிலும் ‘அலர்’ உண்டு (1108). அவ் வலரில் தான் அன்புப் பெருக்கம் உருவாகும் (1109). தலைவன் விளையாட்டும் அவ்வாறே பெருக்கும் (1110). தலைவனுக்குச் சொல்லவிரும்புவனவற்றைப் பிறருக்குக் கூறுவது போல வாயில்கள் கூறல் உண்டு. அது ‘முன்னிலைப் புறமொழி’ எனப்படும் (1113). வேற்று இடத்திற்குச் சென்று தலைவி நிலையைத் தலைவனுக்கு உரைத்தலும், தலைவியிடம் வந்து வேற்றிடத்தில் இருக்கும் தலைவன் நிலையைக் கூறுதலும் பாணர்க்கு உண்டு (1115) தாய் போல் கண்டித்தலும் தழுவிக் கொள்ளலும் தலைவிக்கு உரிய மனைக் கிழமையாம் (1119). பிறவற்றை எண்ணுதற்கும் கூடாத பாசறைக்குப், பெண்ணொடு செல்லுதல் இல்லை (1121). புறப்பணி புரிவார்க்கு அக் கட்டளை இல்லை (1122). தன்னைப் புகழ்ந்து கூறும் சொற்களைத் தலைவன் முன் தலைவி மேற்கொள்ள மாட்டாள் (1126). ஆனால், அவன் அயன்மனை சார்ந்து பின் இரந்து நிற்றலும் தெளித்தலும் ஆகிய இடங்களில் அவள் தற்புகழ்தலும் கொள்வாள் (987). தலைவன் சொல்லை மறுத்துக் கூறுதல் பாங்கனுக்கு உண்டு (1127). ஆனால் அம் மறுத்துக் கூறல் மிகுதியாக இராது (1129). பிரிவுக்குத் தலைவி வருந்தும் இடத்தெல்லாம் அவளை வற்புறுத்தித் தேற்றிச் செல்வதே தலைவன் வழக்கம் (1130). பிரிந்து செல்லுதற்கு ஏற்படும் இடைத்தடை, செலவைத்தடுத்தல் இல்லை. தேற்றிச் செல்வதற்கே உதவும் (1131). தலைவன் மேற் கொண்ட வினைப்பொழுதில், தலைவி நிலைபற்றி எவரும் உரையார். அவன் வினைமுடித்த போது, தலைவி நிலை அவனுக்குத் தானே தோன்றும் (1132). பூப்புண்டாகிய நாளில் இருந்து பன்னிரண்டு நாள்கள் தலைவன் தலைவியைப் பிரியான். ஏனெனில், அந் நாள் கருவுறும் நாள் ஆதலின் (1133). ஓதல் பிரிவு மூன்றாண்டுக்கு மேற்படாது (1134). காவல் பிரிவு, தூதுப் பிரிவு பொருள் தேடும் பிரிவு என்பவை எல்லாம் ஓராண்டிற்கு மேல் ஆகாது (1135, 1136) தலைவன் தலைவியுடன் ஊரைக் கடந்து ஆறு குளம் கா என்பவற்றுக்குச் சென்று மகிழ்தலும் உரியவை என்பர் (1137). வினை கருதிப் பிரிந்த தலைவன், அவ்வினை முடித்ததும் இடை வழியில் தங்குதல் இல்லை; மனம் போல உரிய இடத்து உதவும் குதிரையாகிய பறக்கும் விலங்கைக் கொண்டிருத்தலால் (1140). இன்ன செய்திகளை அடைவு செய்து கற்பியலை முடிக்கும் ஆசிரியர் தமிழர் அறநெறியை அருமைப்பட மொழிகிறார். அது, “காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்பது (1138). சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன் = முதுமையடைந்ததன் பயன். இறத்தல் = கடத்தல். அளவிறந்த, வரை இறந்த என்பவற்றில் வரும் இறந்த என்பதைக் கருதுக. குடிநலம் சிறக்க வாழ்ந்த முதுமையின் பயன் யாதாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவிப்பது இந் நூற்பா. அப்பயன் ‘சிறந்தது பயிற்றல்’ என்பதாம். ‘கமம் நிறைந்து இயலும்’ என்பது, ‘கமம்’ என்னும் சொல்லின் பொருள். பிறைமதி எனத் திகழ்வது கமம். பிறைமதி - வளர் மதியாய் - நிறைமதியாய் விளங்குவது போலக் கமம் என்னும் ‘காமம்’ விளக்கமுறும். இன்பம் என்பது, எல்லா உயிர்க்கும் பொதுமையது என்பது ஆசிரியன் உரை (1169). ஆனால், காமம் மாந்தர்க்கே சிறப்பின் அமைந்த உணர்வு - அதனாலேயே வள்ளுவ மூன்றாம் பால், இன்பத்துப் பால் எனக் குறியீடு பெறாமல் ‘காமத்துப்பால்’ எனக்குறியீடு பெற்றதும் அச் சொல்லையே 39 இடங்களில் பயன்படுத்தியதுமாம். காமம் வரும் ஈரிடங்களில் மட்டுமே இன்பமும் வந்து, அமைவுற்றமையும் அறிக. இக் காமம் நிறைவுற்ற முதுமைக் காலம், ‘காமம் சான்ற கடைக் கோட்காலை’ ஆகும். அக் காலத்தில் அவர்களுக்கும் குடிவழிக்கும் பாதுகாப்பான நன்மக்கள் தோன்றிச் சிறந்து விளங்குவர்; அவர்களை அன்றி இல்லறச் சுற்றமாகவும் உரிமை உறவுச் சுற்றமாகவும் பலர் இருப்பர்; குடும்பத் தலைவர்களால் அறவாழ்வின் அருமை அவர்கள் அறிந்து திகழ்வர்; மக்கள், சுற்றம் ஆகிய இவர்களுக்குத் தம் பிறவிப்பயனாகச் சிறக்கும் மேல் நெறிகளைக் காட்டி அந் நெறியில் அவர்கள் நிற்குமாறு பயிற்றுதல் கடமையாம் (1138). சிறந்தது பயிற்றல் என்பது சுட்டும் சிறப்பு - ‘செம்பொருள்’ என்பதாம். “பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் ‘சிறப்பென்னும்’ செம்பொருள் காண்ப தறிவு” என்று வாய்மொழி கூறுதல் காண்க. இச் சிறப்பு வளர்நிலையே வாழும்போதே பெறும் வீடுபேறு ஆகிய அவாவறுத்தல். “வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில்” என்பது வீடுறு வழியும், “ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்” என்பது வீடுபேறுமாம். தமிழ் நெறியில் இல்லறம் துறவறம் என அறம் இரண்டன்று. இல்லறம் ஒன்றே அறம். அவ்வறம் மேற்கொண்டார் அனைவரும் தம் இல்லறக் கடமைகளை இனிது நிறைவேற்றித் தம் மக்களுக்கும் தம் சுற்றத்திற்கும் பயிற்ற வேண்டுவ எல்லாம் பயிற்றி அவர்களும் அவ்வழியில் தொடருமாறு பற்றற்ற வாழ்வு மேற்கொள்வதே அவ்வறத்தின் நிறைவாகும். இதனாலேயே அறத்தை இரண்டு ஆக்காமல் ஒன்றாக்கியது வள்ளுவம் என்பதும், துறவுப் பகுதியில் ‘அறம்’ என்னும் சொல் ஒன்றுதானும் இல்லாது அமைந்தது என்பதுமாம். மணிவிழா இனி, ‘மணிவிழா’ என்பது முதுவர்கள் தம் குடும்பப் பொறுப்பை மக்களிடம் ஒப்படைத்து அவர்கள் பேணலொடும் உதவியொடும் அறப்பணி - அருட்பணி ஆற்றுவதை மேற்கொள்வதற்கென்றே அமைக்கப்பட்டது என அறியின் ‘இரண்டாம் திருமணம்’ ‘அறுபதாம் கலியாணம்’ என்னும் பெயர்களைக் கொள்ளாதாம். ‘பொலிவுச் சடங்கு போலிச் சடங்காகியமை’ அறிவர் வழிகாட்டத் தவறியமையாலேயே எனக் கருதின் மீட்சி கிட்டுதற்கு வாய்க்கும்! ஏனெனில், அடங்கு கொள்கை சடங்காகிவிட்டதல்லவா! பொருளியல் இனி, அகத்திணை இயல், புறத்திணை இயல், களவியல், கற்பியல் ஆயவற்றில் சொல்லாதனவும், சொல்ல வேண்டுவன உண்டு என்று ஆசிரியர் கருதுவனவும் பொருளியலில் இடம் பெற்றுள ஆதலால், ‘எச்ச இயல்’ என ஆசிரியர் ஆளுதல் ஒத்த குறியீடு ஆம். அசைமாறல் ஒரு தொடர் மொழியில், ஒலிமாறி ஒலிப்பினும் பொருள் பொருந்தியே வரும்; ஆனால் அசை மாறுபடுதல் கூடாது; அது வழுவாகி விடும். “ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்ப ஆய்ந்தவர் கோள்” என்னும் குறள் ஊறொமை உற்றபின் ஒல்காமை என வருதல் வேண்டும். அவ்வாறு வாராக்காலும் பொருள் அவ்வாறே கொள்ளுதல் வேண்டும். ஆனால் அசையாகிய உறுப்பு மாறின் யாப்பு வழுவாகவே அமைந்து விடும். முன்னது பொருள்காண் நெறி; பின்னது இலக்கண நெறி. முன்னதில் பொருள் போற்றுதலும் பின்னதில் யாப்புப் போற்றுதலும் வேண்டும் என்பதாம் (1141). தனிமொழி நாடக உத்தியில் தனிமொழி என்பதொன்று உண்டு. தானே பேசும் பேச்சு அது. பக்கச் சொல், பாற்கிளவி, தனிமொழி என்பவை அது. நெஞ்சொடு கிளத்தல் என்னும் வகையால் தன்நெஞ்சுக்குத் தானே கூறுவது, இதில் ஒருவகை. உறுப்பு உடையது போலவும், உணர்வு உடையது போலவும், மறுத்துக் கூறுவது போலவும் கற்பித்துக் கொண்டு கூறுதல் இது. இனிச் சொல்லாடுதல் இல்லாதவற்றைச் சுட்டி அவை செய்யாதனவற்றைச் செய்தனவாகக் கூறுதலும், பிறர் கொண்ட துயரைத் தான் கொண்ட பிணிபோலச் சார்த்திக் கூறுதலும் தலைவன் தலைவியர் ஒருபாற்சொற்களாகும் (1142). நற்றாய் செவிலித்தாய் ஆயோர்க்கும் தனிச்சொல் வழக்குண்டு (1145). தலைவன் தலைவியர் காணுதற்கு அரிய நிலை உண்டாகிய காலத்து அவர்களுக்குள் கனவுக் காட்சியும் உண்டு. உடன்போக்கு நேரிட்ட காலத்து நற்றாய் செவிலித்தாய், கனவு காணலும் உண்டு (1143, 1144). வாழ்வின் உயிர் நிலையாம் அன்பு நாணம் மடம் ஆகிய மூன்றும் தலைவன் தலைவி நற்றாய் செவிலி என்னும் நால்வர்க்கும் உரியவை (1147). தன் தலைவனைப் பிரிந்த தலைவி பசலையடைந்து வருந்தும் போது தன் உறுப்புகளும் தலைவன் பிரிந்ததை அறிந்தன போலக் கூறலும் வழக்கம் (1148). பிரிவால் மெலிந்த போதும் இவற்றுக்கு என்ன ஆயின என்பாளே அன்றித் தலைவன் இருக்கும் இடத்தைத் தலைவி தேடி அடைவது இல்லை (1149). தலைவன் ஒரு பக்கமாக வருங்கால் தன் நெஞ்சுக்குக் கூறுவது போல் தலைவன் கேட்கக் கூறுவதும் உண்டு (1150). தலைவன் உண்மையை மறைக்கும் போதும், தலைவிக்கு விருப்பு மிகுந்த போதும் அல்லாமல் மற்றைப் போதுகளில், கண்டு கொள்ளாதவ ளாகவே தலைவி அமைவாள் (1151). தலைவன் தலைவியர் காதலை உணர்த்தத் தக்க பொழுது இது என அறிந்த பின்னரே, தோழி அறத்தொடு நிற்றலை (காதல் வெளிப்படுத் துதலை) மேற்கொள்வாள் (1152). தலைவனுக்குள்ள எளிமை, பெருமை, விருப்பமிகுதி ஆகியவற்றை உரைத்தல், பிறர் கூறுவது கேட்டு அது பற்றிக் கருத்துரைத்தல், இடையூறு உண்டாகிய போது இடைவந்து தீர்த்தல், தாமே எதிர்ப்பட்டுக் காணல், மெய்யாக நிகழ்ந்தது இதுவெனல் என்னும் ஏழுவகையாலும் தோழி களவொழுக்கத்தை வெளிப்படுத்துவாள் என்று புலமையர் கூறுவர் என்பார் தொல்காப்பியர் (1153). தக்க இடம் வாய்த்தால் அல்லாமல் தோழி சொல்லமாட்டாள் ஆதலால், செவிலி, தலைவி நிலையை உணர்ந்து கொள்ளலும் உண்டு. ஏனெனில், அடக்கம், நிலைப்பாடு, நேர்மை, கூறுவது கூறல், அறிவு, அரியதன்மை என்பவை பெண்டிர்க்கு இயல்பு என்பதால் (1154, 1155). தலைவன் தலைவியர் களவொழுக்கத்திற்கு இசைந்த தோழி, அதனைக் கற்பொழுக்கமாக்கத் திட்டமிட்டே துணிவான சில செயல் களைச் செய்வாள். தலைமகன் வரும்பொழுது, வழி, காவல்மிகுதி ஆகியவற்றைக் கூறி அவற்றால் நேரும் தீமையைச் சுட்டுவாள்; அவற்றை நோக்கித் தான் மனங்கலங்கி வருந்துதலை உரைப்பாள்; சந்திக்கும் இடத்தில் உண்டாகும் இடையூற்றை உரைப்பாள்; இரவில் வருக என்பாள்; பகலில் வருக என்பாள்; இரவிலும் பகலிலும் வருக என்பாள்; இரவிலும் பகலிலும் வாராதே என்றும் கூறுவாள்; நன்மையாகவும் தீமையாகவும் புலப்படப் பிறிதொன்றனைக் கூறுவாள்; இவையெல்லாம் தலைவன் மேல் கொண்ட வெறுப்பாலோ காதலைத் தடுக்க வேண்டும் என்னும் எண்ணத் தாலோ செய்வன அல்ல! காதல் வேட்கையைப் பெருக்கிக் கடிமணத்தை விரைந்து முடிக்குமாறு தூண்டுதல் குறிப்புகளேயாம் (1156). தேர் யானை குதிரை முதலியவற்றில் ஊர்ந்து வந்து தலைவன் தலைவியைக் காணலும் உண்டு (1158). உண்ணுதல் இல்லாத ஒன்று உண்டதாகக் கூறுதலும் அகத் தொழுக்க வழக்கமாகும். அது, பசலை பரவுதலைப் பசலை உண்டது என்பது போல்வது (1159). தலைவி வீட்டை விட்டு வெளியேற முடியாத காவல் மிக்க பொழுதில் (இற்சிறை) தலைவனிடம் தோழி, எங்கள் இல்லத்தார் பெரும்பொருளைப் பரிசமாக வேண்டியுளர் என்பது உண்டு. ஏனெனில், அவன் அவளைத் தேடி வராமல் இருக்கவும், மணமுடித்து மனையறம் காக்க வேண்டும் பொருள் தேடி வருதற்குத் தூண்டுதலாக இருக்கவும் ஆகும் (1160). ஆனால் தலைவன் பொருள் தேடச் செல்லும் வழித்துயர் பற்றிச் சொல்லவும் தவறாள் (1162). வீட்டுக் காவற்பட்ட தலைவி உயிர்நிலையாகிய அன்பு, அன்பு வழிப்பட்ட அறம், அறத்தால் அடையும் இன்பம், பெண்மைக்கு இயல் பாகிய நாணம் என்பவற்றை நீங்கி ஒடுங்கிய நிலை பழிக்கப்படுவதில்லை. ஏனெனில், அவள் செயலும் உணர்வும் ஒடுக்கப்பட்டுள்ள சூழல் அஃதாதலால் அவ்வக் காலத்து வாழும் சான்றோர் தக்கநெறி என ஏற்றுக் கொண்ட(1161)வற்றைத் தழுவிச் செய்யுள் செய்தல் முறையையாம் (1163). உலக வழக்கில் பொருந்தாதது போல் தோன்றும் ஒன்று, அகப் பொருட்கு அமைவுடையதாக இருப்பின் அதனை வழக்காக ஏற்றுக் கொள்ளல் பழியாகாது (1164). ஆனால் அப் பொருள் நாணத்தக்கதாக இல்லாத நற்பொருளாக அமைதல் வேண்டும் (1165). முற்பட்ட இலக்கிய இலக்கணங்களிலும் ‘கைம்மை’ ‘கைம்மைத் துயர்’ என்பவை இடம் பெற்றுள. மகளிராகவே விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்டதாகவும் போற்றப்பட்டது. கடுவனாம் ஆண்குரங்கு இறந்ததாக அதனைத் தாங்காத மந்தி, தன் இளங்குட்டியைச் சுற்றத்திடையே விட்டுவந்து பாறையில் மோதி இறக்க அதனைக் “கைம்மை உய்யாக் காமர் மந்தி” என்று புனைவு வகையாற் பாராட்டியதும் உண்டு. ஆனால், இந் நாளில் கைம்மை மணம் வரவேற்புக் குரியதாயிற்று. மனைவியை இழந்தான் கணவனை இழந்தாளை மணமுடித்துக் கொண்டு ‘வாழ்வு தருதல்’ ‘உயரறம்’ எனப் பாராட்டப்படுத லாயிற்று. இது காலங்கண்ட அறநெறி. இதனைப் போற்றுதல் - செய்யுள் செய்தல் (புலனெறி வழக்கம் ஆக்குதல்) புலமையாளர் கடன்! இவ் வகையில் பாவேந்தர் படைப்பும், அதன் பின்வரவாம் படைப்புகளும் பெருக்கமிக்கவை அல்லவா! ஆசிரியர் தொல்காப்பியர் வாழ்வியல் காப்புள்ளம் இத்தகைய எதிரது போற்றுதலை ஆணை யாக்கிச் சிறப்பிக்கின்றது என்க. அன்புப்பெருக்கால் அழைக்கும் சொல் ‘எல்லா’ என்பது. அச் சொல் ஆண்பால் பெண்பால் ஆகிய இருபாலுக்கும் உரிய பொதுச் சொல் ஆகும். இச் சொல்லே ஏலா, ஏலே, ஏழா, ஏடா என வழங்குவதாம். “எல்லே இளங்கிளியே” எனப் பறவைக்கும் ஆயது! ‘எல்லா’ ஒப்புரிமை இதுகால் பெரிதும் ஆண்பால் தழுவி நிற்கின்றது. ‘யாழ’ என்னும் சொல் இருபாற் குரியதாக இருந்து ‘ஏழா’ ஆயது என்பதும் கருதத்தக்கது (1166). பங்குரிமைச் சொத்தாக வாராதது; கொடை புரிந்தாலும் கொடுத்த வரை விட்டுச் செல்லாதது; செயல் திறனால் தங்கவைக்க முடியாதது; பிறரால் கையகப் படுத்திக் கொள்ளவும் முடியாதது; அத்தகு பொருளை ஒருவர் உரிமைப் பொருளாகக் கொள்வது போன்றது, தலைவியின் உறுப்புகளைத் தோழி தன் உறுப்புகளாகக் கொண்டு உரைப்பது; உரிமையில்லாதது அது எனினும், பொருந்திவருதல் அக நூல்களில் உண்டு. ஆதலால், அதனைப் போற்றிக் கொள்ளல் கடன் என்கிறார் (1167). “என்தோள் எழுதிய தொய்யில்” என்பது தலைவி தோளைத் தன் தோளாகக் கருதித் தோழி சொல்வதாம் (கலித். 18). ஓரிடத்துக் கூறும் தலைவி தலைவன் என்னும் சொற்கள், அவ்விடத்துள்ளாரை அன்றி, எவ்விடத்துள்ளார்க்கும் உரியவையாய் வருதலே வழக்கமாகும். இன்னான்தான், இன்னாள்தான் என்று குறித்துக் கூறப்படாமல் உலகத்துள்ள ஒருவன் ஒருத்தி என்பார் எவர்க்கும் உரிமையுடையது எனத் தெளிவித்தார் (1168). உயிர்க்கெல்லாம் பொதுப் பொருளாய் அமைந்தது இன்பம் என்பதை, “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்” என்கிறார் (1169). அமர்தல் = தங்குதல்; நெஞ்சத்துத் தங்குதல்; மேவற்று = விருப்பமுடையது. இதனால் இன்பம் உயிர்ப்பொது என்றார். ஏனை அறம் பொருள் என்பவை மாந்தர்க்குரியவை என்பது குறிப்பாகக் கூறப்பட்டது. மற்றும் காதல் காமம் என்பவையோ எனின் உயிர்ப் பொதுமை விலக்கி ஆடவர் பெண்டிர்க்கே உரிமைப்படுத்தப்பட்டது. குறிஞ்சி புணர்தல்; முல்லை இருத்தல் என்பன முதலாக ஒழுக்கம் சொல்லப்படும் என்றாலும், அவை அந் நிலத்திற்குச் சிறப்பே யன்றி, மற்றை நிலத்து நிகழாதவை அல்ல. நானிலத்திற்கும் பொதுவாக அமைந்தவையே யாம். ஆதலால், ஊடல் என்னும் உரிப்பொருள் மருதம் ஒன்றனுக்கே அமைந்தது இல்லை; மற்றை நிலத்தவர்க்கும் உண்டு; அவ்வூடல் தீர்ப்பாரும் அவண் உண்டு என்பாராய், “பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே நிலத்திரி பின்றஃது என்மனார் புலவர்” என்றார். நால்வர் = நானிலத்தவர். ‘நால் வருணத்தவர்க்கும்’ என்று வழக்கம் போல உரைகண்டனர் பழைய உரையாசிரியர்கள் (1170). நிலமக்கள், தலைமக்கள், அடியோர், வினைவலர் ஆகிய நால் வகையார்க்கும் எனக் குறிப்பு எழுதுவார் இளவழகனார். தலைவிக்கு உடன்போக்குக் கொள்ளவேண்டும் என்றும், திருமணம் நிகழ்தல் வேண்டும் என்றும் ஏற்படும் உந்துதல்களை “ஒருதலை உரிமை வேண்டியும்” என்னும் நூற்பாவில் கூறுகிறார் ஆசிரியர் (1171). உறுதியாக இல்லற வாழ்வு மேற்கொள்ளல் வேண்டும் என்னும் நிலையிலும், ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ ஆதலால், அது குறித்துப் பிரிவு நேரும் என்னும் அச்சம் ஏற்பட்ட நிலையிலும், அம்பல் அலர் என்பவற் றால் களவொழுக்கம் வெளிப்பட்டுப் போகும் என்னும் அஞ்சுதல் உண்டாகிய நிலையிலும், தன்னைத் தலைவன் காண வருங்கால் ஏற்படும் இடையூறு பற்றி எண்ணிய நிலையிலும் தலைவிக்கு உடன்போக்குப் பற்றியும் மணங்கொள்ளல் பற்றியும் உந்துதல் உண்டாகும். சூழலால் உண்டாம் எண்ணங்கள் செயலூக்கியாகத் திகழும் அடிப்படையை விளக்கியது இது. எவ்வொரு வினைப்பாட்டுக்கும் சூழலும் எண்ணமும் தூண்டலாய் அமைந்து துலங்கச் செய்யும் என்னும் வரையறை நல்ல தெளிவுறுப்புச் செய்தி. வாழ்வுக்குத் தேவையான இரக்கம் எப்பொழுது உண்டாகும் எனின் ஒருவர் கொண்ட வருத்தத்தைத் தானும் உணரும் போதேயாம். நோவற்க நொந்தது அறியார்க்கு என்பது வள்ளுவம். “துயரத்தை அறிந்து கொள்ளாதவர்க்குத் துயரை உரையாதே” என்பது அது. இரக்கம் உண்டாக்கும் அருள் வாழ்வு துயரம் கண்டபோது ஏற்படுவது ஆகலின், “வருத்த மிகுதி சுட்டும் காலை உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்” என்றார் தொல்காப்பியர் (1172). வாழ்வின் வளர்நிலை இன்புரை கேட்ட லினும் துன்புரை கேட்டு அருள்வதிலேயே உள்ளது என்பது அருமை மிக்கது. ஊடற் போதில் தலைவி உயர்வு விளக்கமாம். அதேபொழுதில் தலைவன் பணிவும் விளக்கமாம் (1173). அவ்வூடற் பணிவு இல்லையேல் கூடலின்பம் கொள்ளான்! “மகளிர் ஊடல் தணிக்கவும் பணியேன்” என்பது இல்லறத்திற்கு ஏற்காத செயல். கற்பொழுக்கத்தின் போது தலைவன் தலைவியர் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்வதை விலக்கார்; புகழ்தல் இல்லறம் சிறக்க வாய்ப் பாம் என்றது இது (1174). முன்னே உரைத்த உள்ளுறை உவமம் போல இறைச்சி என்ப தொன்றும் அகப்பொருளில் இடம் பெறும். இறைச்சி என்பது கூறும் பொருளுக்கு அப்பாலாய் அமைவது. “இறைச்சி தானே பொருட்புறத் ததுவே” என்பது அதன் இலக்கணம். சொல்ல வேண்டிய கருத்துக்கு வேறாக அடைமொழி அமைவில் நின்று பயன்செய்வது. ‘பொருட்புறத்ததுவே’ என்பதற்கு ‘உரிப்புறத் ததுவே’ என்பது இளம்பூரணர் பாடம். பொருட் புறத்ததுவே என்பது நச்சினார்க்கினியர் பாடம். இறைச்சியை ஆராய்ந்து பார்த்தவர்க்கு வெளிப்படக் கூறும் பொருளுக்குப் புறத்ததாகிய பொருள் உள்ளமை புலப்படும் என்பதை, “இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே” என்பார் (1176). அன்பு கொள்ளத் தக்க கருத்துகளைக் கருப்பொருள்களின் உரைப் பொருளாகக் காட்டித், தலைவி வருந்தும் போது வற்புறுத்தித் (தோழி) தெளிவு செய்தல் ‘வன்புறை’ எனப்படும் (1177). தலைவியைத் தலைவன் பாராட்டின் அவளுக்கு இருவகையில் அச்சம் உண்டாகும். ஒன்று, பொருள் தேடுதற்குப் புறப்படுவனோ என்னும் அச்சம். மற்றொன்று, செயல் மேற்கொண்டு பிரிவனோ என்னும் அச்சம். இரண்டுமே பிரிவச்சமாம் (1178). தலைவி அயலாள் ஒருத்தியைப் பாராட்டினால் உள்ளே ஊடல் உண்டு என்பதன் வெளிப்பாடு அது என்பர் (1179). பிறள் ஒருத்தி இத்தகையள் எனத் தலைவி பாராட்டின், அது பற்றித் தலைவன் குறிப்பறிவதற்குரிய வழியுமாகும் (1180). தலைவன் குறையை அயல் பெண்டிர் உரைக்கும் போதும் தானே உணரும் போதும் உடனே இடித்துரைக்காமல் அவன் அன்பு கெழும நிற்கும் போதும் ஊடி நிற்கும் போதுமே கூறுவள். கூறுவதைக் கூறினாலும் கூறுதற்கு இடமும் காலமும் அறிந்து கூறுதலே கூறுதல் பயன் செய்யும் என்னும் உளநிலை உரைத்தது இது. இடித்துரை கூறுவாரும் அறிவுரை கூறுவாரும் எண்ணிப் போற்ற வேண்டிய குறிப்பு ஈதாம் (1181). குறித்த காலம் கடக்கு முன்னரே அக்காலம் கடந்து விட்டதாகக் கூறுதல் மடமை, வருத்தம், மயக்கம், மிகுதி என்னும் இந் நான்கனாலும் ஏற்படும். தன்னிடம் மன்றாடி நின்ற தலைவனைத் தோழி அப்பால் படுத்துதல் அன்றி மெய்யுரைத்தல், பொய்யுரைத்தல், நயந்துரைத்தல் எனப் பலவகைப் ‘படைத்து மொழி’களாலும் நலம் பேணிக் காப்பாள் (1183). புகழ்ந்து கூறுதலை மறுத்துக் கூறுதலும், ஐயுற்றுக் கூறுதலும் தலைவனுக்கு உண்டு. (அதனைத் தலைவி கொள்ளாள்) (1184). துன்பம் எதுவும் நேராமல் காத்தல் தன் கடமை ஆதலால் தோழிக்குத் துணிந்துரைக்கும் உரை உண்டு (1185) தலைவன் தலைவியரைப் புகழ்ந்துரைக்கும் நிலையும் உண்டு (1186). ஊடல் தீர்க்கும் வாயிலாக இருப்பவர் தம் சொல்லைக் குற்றமற்றதாய் வெளிப்படக் கூறுவர் (1187). முன்னே கூறிய உள்ளுறை என்பது, உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐவகைப்படும் (1188). இவையன்றி இன்பப் பொருளாகவும் உள்ளுறை வரும் (1189). மங்கலச் சொல், வசைச் சொல், மாறுபாடில்லாத ஆளுமையால் சொல்லிய சொல் என்பனவும் உள்ளுறையுள் அடங்கும் (1190) (இவற்றின் விளக்கம் உவமைப் பகுதியில் காணலாம்) தலைமக்கட்கு ஆகாக் குணங்களாம் சினம் அறியாமை பொறாமை வறுமை என்னும் நான்கும் ஏதேனுமொரு காரணத்தால் அவர்களொடு தொடர்பு படுத்திக் கூறுதல் உண்டு (1191). தோழி தலைவியை ‘அன்னை’ எனலும், தலைவி தோழியை ‘அன்னை’ எனலும் இருவரும் தலைவனை ‘என்னை’ எனலும் பழமை யான மரபினதாம். சொல்லாலும் எழுத்தாலும் வெளிப்படாத உலகியல் முறை என்பர் புலமையர் (1192). ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு என்பவை இத்தகையவை என்பது கொண்டு மனத்தால் கொள்ளுவதை அல்லாமல் வேறுவகையால் வெளிப்படக் காட்ட இயலாதவையாகும். “நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்ட லாகாப் பொருள என்ப” என்பது இதன் முடிநிலை (1193). இமையவர் உலகம், கடலொலிக்கும் உலகம் என எவ்வுலகம் எனினும், ஒப்பு உரு முதலியவை இல்லாத காலம் இல்லாமையால் சொல்லைச் சொல்லிய வகையாலே பொருள் அறிந்து கொள்வர் என்பதாம். மக்கள் மொழி சொற்களாக இவை இருப்பதால் எவரும் தாம் கேட்டுணர்ந்த வகையால் பொருள் கண்டு கொள்வர். வழக்குச் சொல்லாக இருப்பவற்றை விளக்க வேண்டுவதில்லை என்பதால் ஒரு சொல் வழக்கிழந்தால் பொருள் விளக்கமும் இழந்துபோம் என்னும் மொழியியல் முறையால் இப்பொருளியலை நிறைவித்தார் ஆசிரியர். அது, “இமையோர் தேஎத்தும் எறிகடல் வைப்பினும் அவையில் காலம் இன்மை யான” என்பது (1194). புறத்திணை அகத்திணையை அடுத்து ஆசிரியரால் வைக்கப்பட்ட புறத்திணை பற்றி நாம் கருதலாம். அகம் புறம் என்பவை முரண்பட்டவை அல்ல. வாழ்வின் இருபக்கங்கள் அவை. “அகங்கை ஏழு எனின், புறங்கையும் ஏழு” என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் நற்கிழமை காட்டி உரைத்த விளக்கம் இதனைத் தெளிவாக்கும். பிறவிப் பேறு அக வாழ்வால் அமைந்தது; அதனைச் சிறப்பிக்கவே இல்வாழ்வு கொண்டது; அவ் வாழ்வுக்கு, இன்றியமையாத் துணைப் பொருளாக அமைவது புறவாழ்வு. இன்னும் எண்ணினால், அகவாழ்வு அமைந்து திகழ, அவ்வப்போது மேற் கொள்ளும் முயற்சி வாழ்வே, புறவாழ்வாகும் என்னலாம். அகவாழ்வு சிறக்க வேண்டுவதாம் பொருள் தேடல், அறம்புரிதல், காவல் கடன்புரிதல், சந்து செய்தல், கலைமேம்படுதல், துறவுமேற்கொள்ளல் என்பன வெல்லாம் புறவாழ்வுப் பகுதியேயாம். போரும் கொடையும் புகழும் போற்றலும் எதற்காக, அகவாழ்வு சிறக்கவே. அகச் சிறப்பே பாரகச் சிறப்பின் அடிமூலம் - நிலைக்களம் - எனக் கண்ட நம் முந்தையர் வகுப்பு இது. அகத்திற்கு, (வெளிப்பட அறியும் வகையில்) நான்கியல்களை (அகத்திணை களவு கற்பு பொருள்) வகுத்த ஆசிரியர், புறத்திணை என ஒன்றனை வகுத்ததை எண்ணல் சாலும். மேலும், மெய்ப்பாடு, உவமை, செய்யுள், மரபு என்னும் நான்கியல்களும், அகம், புறம் ஆகிய இரு பொருள்களுக்கும் பொதுமையாயவையே என்பதையும் எண்ணலாம். ஏழுதிணை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை பெருந்திணை கைக்கிளை என்னும் அகத்திணை ஏழுக்கும் முறையே, வெட்சி வஞ்சி உழிஞை தும்பை வாகை காஞ்சி பாடாண் என்னும் ஏழும் புறத்திணைகளாகும். குறிஞ்சி முல்லை என்பவை எவ்வாறு மலர்ப் பெயர்களோ, அவ்வாறே வெட்சி முதல் காஞ்சிவரை மலர்ப்பெயர்களே. ‘பாடாண்’ என்னும் ஒன்று மட்டுமே, பாடு புகழ் கருதிய திணைப் பெயராம். தமிழர் வாழ்வாகிய அகம் புறம் என்னும் இரண்டும் பூவால் குறியீடு பெற்றமை, இயற்கையொடு தழுவிய சீர்மை வெளிப்படுத்தும். ஒரு பெண் பருவம் உறுதல் ‘பூப்பு’ எனவும், ஓர் ஆண் பருவமுறுதல் ‘அரும்புதல்’ எனவும் வழங்கும் மாறாவழக்குக் கொண்டும் உணரலாம். “மலரினும் மெல்லிது காமம்” என்பதும், “மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்பதும் வள்ளுவங்கள். அகக் காதல் எவ்வாறு அறத்தொடக்கம் உடையதோ அதுபோல், புறவாழ்வும் அறத்தொடக்கம் உடையது என்பது காட்டுவது வெட்சித் திணை. அது வெட்சி என்னும் வெண்ணிறப் பூவை அடையாளமாகக் கொண்டது. வெட்சி பகைவரொடு போரிடத் தொடக்கம் செய்வதே வெட்சித் திணை. அது, பகைவர் ஆக்களைக் கவர்ந்து வருதல் வழியாகப் போர்த் தொடக்கம் செய்வதாகும். அஃது, அறத்து வழி நிகழும் என்பதை, ‘ஆதந்து ஓம்பல்’ என்பார். வெட்சியின் இலக்கணம், “வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்” என்பது (1003). வீரர்தாமே வேற்றவர் இடத்திற்குச் சென்று, ஆக்களைக் கவர்ந்து வருவராயின் அது கூடா ஒழுக்கமாகிய களவாகிவிடும். அக் களவன்று என்பாராய், ‘வேந்து விடு முனைஞர்’ என வேந்தன் ஏவல் வழிச் செல்லும் வீரர் என்றார். அவர் செய்யும் செய்கை கொடுமைப்பட்டது அன்று என்பாராய், ‘ஆதந்து ஓம்பல்’ என்றார். ஆக்களைக் கவர்ந்து வருங்கால் புல் கண்ட இடத்து மேயவிட்டு, நீர் கண்ட இடத்துக் குடிக்க விட்டு, நிழல் கண்ட இடத்துப் படுக்க விட்டு, ஓட்டி அலைக்காமல் மெல்லென நடத்திவருதல் என்பது விளங்க, ‘ஆதந்து ஓம்பல்’ என்றார். உயிரோம்பல், உடலோம்பல், விருந்தோம்பல் முதலாம் ஓம்பல்களை எண்ணுக. “ஆவிற்கு நீரூட்டுவதை, அயலாரை ஏவிச் செய்யாமல், தாமே செய்தல்தான் தகவு” என்னும் வள்ளுவம். வீடு கட்டியவர், தம் கண்காணிப் புக்கு மட்டுமன்றி, வளமாகவும் வாழ்வாகவும் காக்கத்தக்க ஆவைக் காக்கவே, பக்கத்தே மாட்டுத் தொழுவம் அமைத்தனர். ‘மாடு’ என்பது, பக்கம் என்னும் பொருளொடு, செல்வம், பொன் என்னும் பொருளும் கொண்டமை இதனாலேயே ஆம். ‘தொழுகை’க்கு உரியதாக இருந் தமையால்தான், ஆன் உறைவிடம் தொழு ‘தொழுவம்’ என்னும் பெயர் களையும் கொண்டதாம். தமிழர் வாழ்வொடு இரண்டறக் கலந்த அப்பண்பாடே ‘பொங்கல் விழா’வெனப் பொலிவுற்றுப் போற்றப்படுவதாம் ‘மாட்டுப் பொங்கல்’ என்பது நாடறி செய்தி. ஆக்கள் உடலை உராய்வதற்காகவே, வழியில் “ஆவுருஞ்சு குற்றி” நட்ட செய்தி நயமிக்கது! ஆக்களைக் கவர்ந்து வருதல் போர்க்கு அடையாளமாவதொடு, அதனைப் பேணும் அறமுமாம் என்பதனால், போர்க்களத்தில் இருந்து அகற்றப்படுவனவற்றுள் தலையிடம் பெற்றது ஆவேயாம் (புறம். 9). ஆநிரை கவரச் செல்லும் படைகள் ஆரவாரித்தல், புறப்பட்டவர் ஊர்ப் பக்கத்தே கேட்ட விரிச்சி என்னும் சொல், பகைநாட்டு ஒற்றர் அறியாவாறு புகுதல், அயலார் அறியாவாறு அவர் நாட்டு நிலையைத் தம் ஒற்றரால் அறிதல், பகைவர் ஊரைச் சுற்றி வளைத்துத் தங்குதல், தம்மைத் தடுக்கவந்த பகைவரை அழித்தல், ஆநிரையைக் கவர்தல், அதனைத் தடுத்ததற்கு வந்தாரை விலக்கி மீள்தல், கவர்ந்த ஆக்களைக் கவலையின்றிக் கொண்டு வருதல், தம்மை எதிர்பார்த்திருக்கும் தம்மவர் மகிழத் தோன்றுதல், ஆக்களை ஊர்க்குக் கொண்டு சென்று நிறுத்துதல், அப் பணியில் ஈடுபட்டவர்க்குப் பங்களிப்புச் செய்தல், செயல்முடித்த மகிழ்வில் களிப்புறுதல், கலைவல்லார்க்குப் பரிசு வழங்குதல் என்னும் பதினான்கு துறைகளை உடையது வெட்சித் திணை என்பார் ஆசிரியர் (1004). மேலும் எடுத்த செயலை முடிக்கவல்ல வீரர்தம் குடிச் சிறப்பு, வெற்றித் தெய்வமாகப் போற்றப்படும் கொற்றவை வழிபாடு என்பனவும் வெட்சி சார்ந்தனவே. வேலன் வேடம் பூண்டு ஆடும் மருளாடி, காந்தள் மாலை சூடி ஆடும் வெறியாடல், இன்னாரைச் சேர்ந்த வீரர் இவர் என அறிதற்குப் பனை, வேம்பு, ஆத்தி என்னும் (சேரர் பாண்டியர் சோழர்) மாலை சூடி ஆடிய கூத்து, வள்ளி என்னும் கூத்து, புகழ்மிக்க வீரக் கழல் அணிதல், எதிரிட்டு நின்று போரிடும் வேந்தனை உன்னமரத்தொடு ஒப்பிட்டுக் கூறும் உன்னநிலை, மன்னனை மாயோனொடு ஒப்பிட்டுச் சொல்லும் பூவை நிலை, போரில் பகைவரை ஓட்டல், பசுக்களை மீட்டித்தருதல், வேந்தன் சிறப்பு உரைத்தல், தன்வீறு தோன்ற வஞ்சினம் கூறல் என்பவை பசுக்களை மீட்டிச் செல்வார் செயல்கள். மற்றும், வரும் படையைத் தடுத்தல், வாட்புண்பட்டு வீழ்தல் எனப்படும் பிள்ளை நிலை; வாட் போரிட்டு வென்றவனுக்குப் பறை முழங்கப் பரிசு வழங்கிய பிள்ளையாட்டு, களப்போரில் இறந்துபட் டார்க்கு நினைவாகக் கல்லெடுத்தல், அதனை நீராட்டுதல், கல் நடுதல், அதனைச் சூழக் கோயில் எடுத்தல், வழிபடுதல் என்று சொல்லப்பட்ட கற்கோள் நிலை என்பனவும் வெட்சியே. பசுக்களைக் கவர்தல் போன்றதே, மீட்டுக் கவர்ந்து செல்லலும் ஆதலால், இரண்டையும் வெட்சியாகக் கொண்டார் தொல்காப்பியர். ஆனால், பசுக்களை மீட்டுச் செல்லுதலைக் ‘கரந்தை’ எனத் தனித் திணை ஆக்கி மொழிந்தனர் பின் நூலினர் (பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை). “வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்” எனக் கொண்டனர் அவர். ஆனால், எழுதிணை என்னும் வரம்புகடத்தலும், அகப்புறம், புறப்புறம் எனப் பொருந்தாப் பிரிவுவகை காட்டலும் நேரிட்டனவாம். நிரை கவர்வார்க்கும் மீட்டுவார்க்கும் அடையாளம் வேறு காட்டவே முன்னவர் வெட்சியும், பின்னவர் கரந்தையும் (கருநிறப் பூ) - சூடியதென்க. காதல் ஒழுக்கம் அனைத்திற்கும் குறிஞ்சி முதலாதல் போலப் புறத்திணைக் கெல்லாம் முதலாவது வெட்சி என்றும், இரண்டு திணைகளும் களவில் நிகழ்வன என்றும், “வெட்சி தானே குறிஞ்சியது புறனே” என்பதற்கு ஒப்புக் காட்டுவார் நாவலர் பாரதியார். இப் பகுதியில் கூறப்பட்ட வெட்சிப் போரில் இறந்து சிறப்புற்றவர் நடுகல் இந்நாளும் பலவாகக் காணலும், அவற்றில் அவர் பெயரும் பெருமையுமாகிய எழுத்துப் பொறித்திருத்தலும், ‘ஆவட்டி’ என ஊர்ப் பெயர் இருத்தலும் எண்ணத் தக்கவை. இதில் வரும் “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல்” என்பனவே காட்சிக் காதை, கால்கோட்காதை, நீர்ப்படைக்காதை, நடுகற்காதை, வாழ்த்துக் காதை, வரந்தரு காதை எனச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டமாக உருக்கொண்டதாம். வஞ்சி முல்லை என்னும் அகத்திணைக்குப் புறமாக அமைந்தது வஞ்சித் திணையாகும். ஆடவர் பிரிதலும், மகளிர் அவரை எதிர் நோக்கி இல்லில் இருத்தலும் இரு திணைக்கும் பொதுவாதலால், முல்லைக்கு வஞ்சி புறனாயிற்றாம் (1007). மண்ணைக் கவரும் எண்ணமிக்குடைய வேந்தன் ஒருவனை, அவன் அஞ்சுமாறு மற்றொரு வேந்தன் படையெடுத்துச் சென்று வென்றடக்கு வதே வஞ்சித்திணையாகும். “எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே” என்பது நூற்பா (1008). துறை போரிடச் செல்லும் படையின் எழுச்சி, பகைவர் நாட்டைச் சூழ்ந்து தீயிடல், விளங்கிய படையின் பெருமை, வேந்தன் கொடுக்கும் கொடைச் சிறப்பு, பகையை நெருங்கி அழித்த வெற்றி, பெற்ற பரிசு விருது (மாராயம்) பற்றிய பெருமை, தம்மைப் பொருட்டாக எண்ணாமல் போரிட்ட திறம், பெருகிவரும் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் கற்சிறைபோல (அணை போல) எதிரிட்டு வரும் படையைத் தனித்து நின்று தடுக்கும் பெருமிதம், படைஞர்க்கு விரும்பும் வகையால் உணவு வழங்கும் பெருஞ்சோற்று நிலை, வெற்றி பெற்றவரிடத்துத் தோன்றும் பொலிவு, தோற்றவர்க்கு உண்டாகிய அழிவு, பகைவர் நாட்டின் அழிவுக்கு வருந்திப்பாடும் சிறந்த வள்ளைப் பாட்டு, அழிக்க வரும் படையைத் தடுத்து நிறுத்திய வீரரைத் தழுவுதல் ஆகிய தழிஞ்சி என்னும் பதின் மூன்று துறைகளையுடையது வஞ்சித் திணை (1009). குறிப்பு காலம் மாறியது; கருவி மாறியது; கருத்தும் மாறியது; எனினும், இற்றைப் போர்களிலும் இத்துறைகள் சொல்லும் முறைகள் நிகழவே செய்கின்றன. மாராயம் என்பது வேந்தனால் பெற்ற விருது. அவ்விருதுப் பெயரே பெயராக விளங்கும் குடும்பங்கள் இன்றும் உண்டு. கற்சிறையாவது அணை. கல்லால் தடுத்து நிறுத்துதல் வழக்கமே அணைக்கட்டு; ‘கல்லணை’ கரிகாலன் வைத்துச் சென்ற புகழ் எச்சம். வள்ளை என்பது உலக்கைப் பாட்டு. வேந்தனைப் பாடும் புகழ்ப்பாட்டு; மகளிர் பாடிக் கொண்டு உலக்கை குற்றும் பாடல்; சிலம்பில் வள்ளைப் பாட்டு உண்டு. தழுஞ்சி என்பது தழுவுதல். நல்லதும் அல்லதும் நேர்ந்தபோதில் உரிமையுடையார் தழுவிக் கொள்ளுதல், ஆடல் களத்தில் வெற்றி பெற்ற வீரர்களைப் பார்வையர், ஓடிவந்து தழுவுதல் என்பன எண்ணலாம். உழிஞை உழிஞை என்னும் புறத்திணை மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாகும் (1012). அரணை முற்றுகை இடுதலும் பற்றுதலும் என்பவை உழிஞைத் திணை. ஊடல் கொண்ட இல்லாள் கதவடைத்து ஊடியிருத்தலும், வாயில்கள் வேண்டிநின்று கதவைத் திறக்கச் செய்து உட்புகுதலும் ஆகியவை உழிஞையொடு ஒப்பதாகலின் உழிஞை மருதத்திற்குப் புறனாயது. உழிஞைத் திணை எட்டுவகை யுடையது. பகைவர் நாட்டைப் பற்றிக் கொள்ளுமுன்னரே வெற்றியுறுதியால் விரும்பியவர்க்கு விரும்பியதைத் தருதல், சொல்லிய வண்ணமே செய்து முடிக்கும் வேந்தன் திறம், வலிய மதில்மேல் ஏறிப் போரிடல், பகைவர் ஏவும் அம்புகளைத் தடுக்கும் தோற்படை (கேடயம்) மிகுதி, அரணின் உள்ளே உள்ளவன் செல்வச் சிறப்பு, அதனால் தன்னொடு போரிட வந்த புறத்தோனை வருந்தச் செய்தல், தான் ஒருவனாக வெளிப்பட்டு வந்து போர் அடர்த்தல், புறத்தோன் தாக்குதற்குக் கலங்க வேண்டாத மதில் வன்மை என்பவை அவை (1013). இவ்வெட்டனுள் முன்னவை நான்கும் மதிலை முற்றுவோன் பற்றியவை. பின்னவை நான்கும் மதிலைக் காப்போன் பெற்றியவை. முற்றுவோனும் காப்போனும் கொள்ளும் போர் நிலை பன்னிரு துறைகளாகக் கூறுவார் ஆசிரியர் (1014). தும்பை தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாகும் (1015). இரங்குதல் இருதிணைக்கும் பொதுமையானது. களப் போர் அழிவு அத்தகையது ஆகும். வீரத்தை வெளிப்படுத்துதலே நோக்கமாகக் கொண்டு போரிட வந்தவன் திறத்தை அழிக்கும் சிறப்பினது தும்பை (1016). நிலம் கவர்தலோ, மதில் பற்றுதலோ கருத்தாகக் கொள்ளாமல் வீரத்தை வெளிப்படுத்தும் ஒன்றே நோக்கமெனக் கொண்டு போரிட வந்தவன் ஆதலின் அவனை, “மைந்து பொருளாக வந்த வேந்தன்” என்றார் ஆசிரியர் (1016). மகனுக்கு ‘மைந்தன்’ எனப் பெயரிட்ட நோக்கு நாம் எண்ணத்தக்கது. மைந்து = வீரம். நெருங்கிச் செல்ல இயலாத வீரன்மேல் பகைவர் அயலேநின்று ஏவிய கணைகளும் வேல்களும் உடலைச் சூழ்ந்து மொய்த்துக் கிடத்தலும், உயிர் பிரிந்த பின்னரும் அவ்வுடல் நிலத்தில் படாமல் துள்ளி நிற்றலும் என்னும் இரு திறப்பட்ட சிறப்புகளையுடையது தும்பை (1017). தும்பைத் திணை பன்னிரு துறைகளை உடையது. இவற்றுள், தாக்குவானும் தாக்கப்படுவானுமாகிய தலைவர் இருவரும் களத்தில் ஒருங்கே இறந்து படுதல் என்பது ஒருதுறை. அது, ‘இருவர் தபுதி’. ‘எருமை மறம்’ என்பது ஒருதுறை. அது, மறவன் ஒருவன், தன் தலைவன் படை உடைந்து பின்னிடும் நிலையில் உள்ளே புகுந்து தான் ஒருவனாகத் தடுத்துக் காப்பது. அவன் செயல் அஞ்சாத் தறுகண் அமைந்த எருமையின் இயலை ஒத்திருத்தலால் ‘எருமை மறம்’ எனப்பட்டது. அவன் எருமை மறவன் எனப்பட்டான். எருமை விருது பெற்றான் ஒருவன் பெற்ற ஊர் எருமையூர். அது, மகிச ஊர் என அயன்மொழியாளரால் மாற்றி மறைக்கப்பட்டு, இன்று கருநாடக மண்ணில் மைசூராக உள்ளது. ஒருவனை எருமை எனல் பழநாளில் பெறற்கரிய பெருமை. இன்றோ எள்ளல் பொருள்! ஏன்? வழக் கொழிவே காரணமாம். இத்துறையை, “ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமை” என்கிறார். கூழையாவது பின்னணிப்படை. தும்பையின் இன்னொரு துறை, தொகைநிலை. அது, “இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலை” எனப்படுகிறது. “எவரும் வாழாமல் ஒழிவது தான் வாழப் பிறந்ததன் நோக்கமா?” என அசைக்கும் துறை இது! போர் முடிவு சிந்திக்கவே வைக்கிறது; ஆனால், அச் சிந்தனை களத்தில் இருந்து கழிந்த உடனே கழிந்து போவதுதான் மீளமீளப் போராட்டத் தொடர்! வாகை வாகை என்னும் புறத்திணை பாலை என்னும் அகத்திணைக்குப் புறனாவது (1019). அகத்திணையில் நிலமிலாப் பாலை பொதுவாக இருத்தல் போலப் புறத்திணையில் எல்லாத் திணைக்கும் பொதுமை யானது வாகையாகும். தாம் கொண்ட குறைவிலா அறிவு ஆற்றல் முதலியவற்றைப் பிறரினும் மிகுத்துக் காட்டிக் கூறுவது வாகைத்திணை என்பர். அது, “தாவில் கொள்கை தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப” என்பது. தாவுஇல் = தாழ்வு - குறைவு இல்லாத. பாகுபட - மிகுதிப்பட. தமிழ்நெறி கூறவந்தவர் தொல்காப்பியர். அவர் அயல்நெறி கூற நூல் செய்தார் அல்லர் என்னும் அடிப்படையை உணர்ந்தே தொல்காப்பியத் திற்கு உரை, உரை விளக்கம் புரிதல் வேண்டும். வாகைத் திணையில் வரும் ஒரு நூற்பா பெரிதும் எண்ணத்தக்கதாக அமைந்துளது. அது, “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும், மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும், நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும், பாலறி மரபின் பொருநர் கண்ணும், அனைநிலை வகையொடு ஆங்கெழு வகையின் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்” என்பது (1012). “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்பதற்கு ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும். அவையாவன ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன” என்றார் இளம்பூரணர். வேட்டல் வேட்பித்தல் என்னும் இரண்டையன்றி அவரால் சான்று காட்டப் ‘பார்ப்பனப் பக்கம்’ இடம் தரவில்லை. ஓதலாவது ‘கல்வி’ என்று கூறி, கல்வி விழுப்பம், கற்றோர் விழுப்பம், கற்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவெல்லாம் மாந்தப் பொதுநிலை அறம் கூறும் பாடல்களையே காட்டினார். எண்பொருளவாகச் செலச்சொல்லல், நுண்பொருள் காண்டல் (குறள். 424) இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் (குறள். 222) இவை பார்ப்பனப் பக்கம் என்னின், என்னதான் நாம் சொல்வது? ‘இரவலர் புரவலை நீயும் அல்லை’ என்ற புறப்பாட்டைப் ‘பார்ப்பன பக்கம்’ என்ன இளம்பூரணர்க்கு எப்படித் துணிவு வந்ததோ? ஆனால், நச்சினார்க்கினியரையோ சொல்ல வேண்டா! பார்ப்பனர் என்றதும், பருந்தெனப் பாய்ந்து எடுத்துக்கொண்டு எழுதுவதற்கே பிறந்தவர், என விரிவாக எழுதினார்: “ஆறு கூற்றினுட் பட்ட பார்ப்பியற் கூறும். ஆறு பார்ப்பியல் என்னாது வகையென்றதனால் அவை தலை இடை கடையென ஒன்று மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க. அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஓத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப் படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமும் தருமநூலும் இடையாய ஓத்து. அதர்வம் வேள்வி முதலிய சடங்கு கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமே யன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின், அவற்றோடு கூறப்படா தாயிற்று. ஆறங்கமாவன, உலகியற் சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும் அவ் விரண்டையும் உடனாயும் ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம், பார்த்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரையம் முதலிய கற்பங்களும், நாராயணீயம், வாராகம் முதலிய கணிதங்களும் எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சத்தமுமாம். தரும நூலாவன உலகியல் பற்றிவரும் மனுமுதலிய பதினெட்டும். இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின. இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சி நூலும், அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் கடையாய ஓத்து. எழுத்தும் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன் தருதலின் அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களும் இடையாய ஓத்தாம் என்றுணர்க. இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம். இனித் தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையும், கடைச் சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க. இங்ஙனம் ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது, அவற்றின் சிறப்பும் சிறப்பின்மையும் அறிவித்தற்கு” ‘பார்ப்பனப்பக்கத்து’ ஓதுதலுக்குத்தான், இவையெல்லாம் எழுதி னார். மேலும், “இனிப் பார்ப்பனப் பக்கத்து வகையாவன பார்ப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்தே கற்பு நிகழ்வதற்கு முன்னே, களவில் தோன்றினானும், அவள் பிறர்க்கு உரியவள் ஆகிய காலத்துக் களவில் தோன்றினானும், அவள் கணவனை இழந்து இருந்துழித் தோன்றினா னும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும் இவ்வாறே தோன்றினாரும் அவரவர் மக்கட்கண் அவ்வாறே பிறழத் தோன்றினா ருமாகிய சாதிகளாம். இன்னோரும் தத்தம் தொழில் வகையால் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத் திணையாம். பார்ப்பனர் என்பதை வசைச் சொல்லாகவும், பழிச் சொல்லாகவும் கருதி அச் சொல்லைப் பிறர் சொன்னால் வெறுப்பவர், அப்பழஞ் சொல்லுக்கு உரிமை கொண்டாடல் பொருந்துமா? பார்ப்பனர், அந்தணர் என்பன வெல்லாம் பிராமணர்களாகிய எங்களையே என்பவர்க்கு இப் பகுதியை ‘இனியர்’ வழங்கிய படையலாக்கல் தகும்தானே! இவ் வெழுத்தின்படி, எச்சாதியேனும் தூயது எனப்பெருமை கொண்டாட முடியுமா? சாதி கெட்டதற்குப் பெயர் சாதி எனச் சாதித்தல் அறமாகுமா? சாதி என்பது விலங்குக்கும் பறவைக்கும் மீனுக்கும் உரிய ‘இனப் பிரிவு’ என்பது ‘மரபியல்’ செய்தி. இல்லாச் சாதியை உருவாக்கி, இழிவாக்கிக் காட்டியமை எச்சாதியர் சாதனை? எண்ணுவார் அறிவர். பார்ப்பனர், அந்தணர், அறிவர், அறவர், அரசர், வணிகர், வேளாளர், கொல்லர், தச்சர், மறவர், பறையர், பள்ளர், முதலி, பிள்ளை, செட்டி என்னும் எப்பெயரும் சாதிப் பெயர் இல்லை. புலவர் ஆசிரியர் கணியர் எனச் சாதியர் இல்லாமைபோல், பார்ப்பார் என்பதும் சாதிப் பெயர் இல்லை. பிராமணர் அவர் என்னின், அவர் தூய தமிழ்ப் பெயரைக் கொள்ளார். தூய தமிழ்க் கடவுள் பெயர் சொல்லவும் சொல்லார்; சூட்டவும் சூட்டார்; சூட்டியிருப்பினும் மாற்றி வைப்பதையே வழிவழியாகப் போற்றுவார். செம்பொருட் சிவம் ‘ருத்ரா’ ஆவர். அம்மை ‘அம்பா’ ஆவார். முருகன் ‘சுப்பிரமணியன்’ ஆவான்; (சுப்பிரமணியன் - பிராமணனுக்கு நன்மை செய்பவன்) முருகனைச் சுப்பிரமணியனாக்கி, இருவரும் ஒருவரே என்று கூறினாலும், சுப்பிரமணியனின் மனைவி தேவயானையையும் வள்ளிக் குறத்தியையும் ஒன்றாக்க மாட்டார். ஏன்? கீழ் சாதி என இணைக்க உடன் பாடில்லை! விழிப்புடையவர்கள், பிறர் விழிக்கக் கடமை செய்தல் வேண்டும்! அஃதறம்! அந்தண்மை! ஆனால், ‘விழித்தலே ஆகாது’ எனத் திட்டமிட்டுத் ‘தமிழே தீட்டு’ ‘தமிழினம் தீண்டக் கூடாத இனம்’ என்று கண்மூடித் தனத்தைக் கால மெல்லாம் பெருக்கித் தமிழினமே தமிழினப் பகையாக இருக்கச் செய்துவருதல், இன்றில்லை எனினும், விரைவில் தமிழரை எண்ணிப் பார்க்கச் செய்தல் உறுதி! ஒப்பநோக்கும் உயர்குணத்தர் இவருள் இருந்திலரோ எனின், இருந்தவரும் இருப்பவரும் இக் குறைக்கு ஆட் படாத வணங்கத்தக்க பெருமையர்! அவர் என்றும் தமிழரால் போற்றப் படுபவரே அன்றிப் புறக்கணிக்கப்பட்டார் அல்லர் என்பது வரலாற் றுண்மை. இனிப் ‘பார்ப்பனப் பக்கம்’ யாதெனப் பார்க்கலாம். பார்ப்பனர் என்னும் பெயரை எண்ணுதல் வேண்டும். பார்த்தார் - பார்க்கிறார் - பார்ப்பார். பார்த்தனர் - பார்க்கின்றனர் - பார்ப்பனர். பார்த்தல் வழியாக ஏற்பட்ட முக்காலப் பெயர்கள் இவை. இவற்றுள் பார்ப்பார், பார்ப்பனர் பெயர்களாக வழக்கூன்றின. கணியம் பார்ப்பார், குறிபார்ப்பார், ஏடு பார்ப்பார், ஐந்திரம் (பஞ்சாங்கம்) பார்ப்பார், நாடி பார்ப்பார், கணக்குப் பார்ப்பார், சகுனம் பார்ப்பார் எனப்படுவார் வழக்கில் இல்லாமல் போய்விடவில்லையே! இப் பார்ப்பார், அறுவகைத் தொழில் பார்ப்பாராகத் தொல் காப்பியர் காலம் தொட்டே வாழ்ந்த தமிழர். அவர்கள் குருக்கள், ஓதுவார், பூசகர் (பூசாரி) பண்டாரம், பூக்கட்டி, வேளார் என்பார். குருக்கள், பூசகர் - வழிபாட்டாளர். ஓதுவார் - தேவபாணி இசைப்பார். பண்டாரம் - கோயில் பொருட்காவலர். பூக்கட்டி - நந்தவனம் பேணி, மலர் பறித்துத் தருவார்; மாலை தொடுப்பார். வேளார் - தெய்வப் படிவம் செய்வார், மண்ணீட்டாளர்; குயவர் என்பாரும் அவர். குயவர் - பார்ப்பார்; குயம் - குசம் ஆகிப் புல்லாகி, பார்ப்பாரும் ஆகியது. குசம் - தருப்பைப்புல் (அறுகு) தருப்பைப் புல்லால் வந்தவன் குசன் (லவன் குசன்). இனி, இவரையன்றித் தலைவன் களவுக்குத் துணையாய பார்ப்பனப் பாங்கன், வேள்வி செய்யாத வேளாப்பார்ப்பான், வானியல் நுணுக்கம் அறிந்த முதுகண்ணன் அல்லது கணியன் என்பாரும் அறிய வருகின்றனர். இவர்கள் எத் தொழில் செய்தாரோ, அத் தொழில் செய்த பார்ப்பார். இவருள் தொல்காப்பியர் நாளில் வாழ்ந்தவர் அறுவகைப் பார்ப்பார் ஆகலின் அவர்தம் தொழில் கருதி எண்ணினார். ஆசாரிய (கம்ம)த் தொழிலர் ஐவர் பகுப்பு இன்னும் உளதாதல் ஒப்பிட்டுக் காணத்தக்கது. ‘ஐவகை மரபின் அரசர் பக்கம்’ என்பது ஐவகைக் குடிவழியினராகிய அரசர் பகுதி என்பது. சேரர் சோழர் பாணடியர் என்பார் மூவேந்தரும், வேளிரும், குறுநில மன்னரும் என்பார்போல் தொல்காப்பியர் காலத்தில் அறியப்பட்ட ஐவர், தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியனை எதிரிட்டார் பல்வகையர் ஆதல் போல், அந் நாளில் ஐந்து வகை அரச குடியினர் இருந்தமையால் அவரைக் குறித்தார். ஒரே காலத்தில் சேரர் சிலரும், சோழர் சிலரும், பாண்டியர் சிலரும் ஆட்சிக் கட்டிலில் இருந்தமை அறியவரினும், அவர் ஒருகுடியினர் ஆதலின் ஒருவராகவே எண்ணப்பட்டனர். வேளிர் போல்வாரும் அவ்வாறேயாம், ‘பதினெண்குடி வேளிர்’ எனல் அறிக. “இரு மூன்று மரபின் ஏனோர் பக்கம்” என்பது இவ்விரு வகையினரையும் அல்லாமல், அறுவகைப்பட்ட பிற குடியினர் பகுதி. அவர் “அறுதொழிலோர்” எனத் திருக்குறளில் குறிக்கப் பட்டவராகலாம். அவ்வறு தொழிலோர், “உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை சிற்பம் என்றித் திறத்தறு தொழில் கற்ப நடையது கரும பூமி” (கரும பூமி = தொழில் உலகம்) என்று கூறும் திவாகர நிகண்டு. மேலே குறித்த மூன்று பகுதிகளுடன், குற்றமற்ற செயற்பாடுடைய வரும், இறப்பு நிகழ்வு என்னும் கால அறிவால் எதிரது உணரவல்லவரும், வாழும் நெறிகளை வகுத்துக் காட்டியவரும் ஆகிய அறிவர் பகுதியும், எண்வகை வழக்குடைய துறவர் பகுதியும் (நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல் எரியோம்பல், ஊரடையாமை, காட்டுணவு கோடல், வழிபாடு என்பவை துறவர் எண்வழக்கு என்பார் இளம்பூரணர். உண்ணாமை, உறங்காமை, போர்த்தாமை, வெயிலில் இருத்தல், நீரில் நிற்றல், காமம் கடிதல், வறுமை பொறுத்தல், வாய்மையால் வருந்தல் போல்வன என்பார் நாவலர் பாரதியார்) அறவியல் அறிந்து மறத்திறம் புரியும் போர்வீரர் பகுதியும், அத்தகையதாகிய ஒப்பற்ற பெருமிதப் பகுதியும் கூடிய எழுவகைச் சிறப்பினது வாகைத்திணை என்கிறார் தொல்காப்பியர் (1021) இவை வாகைத் திணையின் வகை. வாகைத்திணையின் துறைகளைக் ‘கூதிர் வேனில் என்றிரு பாசறை’ எனத் தொடங்கும் அடுத்த நூற்பாவில் கூறுகிறார் (1022). அத்துறைகளை மற வகை அறவகை என இரண்டாகப் பகுத்து இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே (9+9=18) எனக் கூறுகிறார். அவற்றுள், எட்டுவகை நுதலிய அவையம் என்பதொரு துறை. அத்தகு அவையமே திருவள்ளுவர் கூறும், பெற்றோர் தம் மக்களை முந்தியிருக்கச் செய்யும் அவையமாகும். “குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காதல்இன் பத்துள் தங்கித் தீதறு நடுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாவின்மை என்றாங்கு இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை” என்று அவ்வவையத்தைக் கூறும் ஆசிரியமாலை. அவ்வவையில் ஒருநாள் அளவேனும் தங்குதற்கு வாய்ப்பின், பலப்பல பிறப்புத் துயர்களையும் படலாம் என்பதை, “உடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின் பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்ப இம் மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே” என்று கூறி முடிக்கின்றது. குடிப்பிறப்பு, உடை; நூல் சூடும்பூ; ஒழுக்கம், அணிகலம்; வாய்மை, ஊண்; தூயகாதல், உறைவிடம்; நடுவுநிலை, நகர்; அழுக்காறு இல்லாமை, அவா இல்லாமை, செல்வம்; இவற்றையுடையவர் தோலா (தோல்வியுறாத, பொய்க்காத) நாவின் மேலோர். இத்தகும் அவையம் ஒன்றை எண்ணிய அளவிலேயே எத்தகைய பெருமிதம் உண்டாகின்றது! அவர்கள், தகுதி இல்லார் வரினும் அவரைத் தகுதியராக்கிக் கொள்ளுதல் இன்றித் தள்ளுதல் இல்லார் என்னும் சிறப்பினர் ஆதலால்தான், எந் நிலத்தாரும் எக் குடியாரும் எத் தொழிலாரும் ஆடவர் பெண்டிர் என்னும் பால்வேறுபாடும் இல்லாமல் புலமைச் செல்வராகத் திகழ்ந்தனர் என்பது சங்கச் சான்றோர் பெயர்ப்பட்டியலைப் புரட்டிய அளவானே புலப்படும். இந்நிலை தாழ்ந்து தடம் புரண்டமை, தன்மகன், ஆசான்மகன், பொருட் கொடையன் முதலோர்க்குக் கற்பித்தலும், களி, மடி, மானி, கள்வன், பிணியன், ஏழை, பிணக்கன், சினத்தன், தொன்னூற் கஞ்சித் தடுமாறுளத்தன், தறுகணன் பாவி, படிறன், இன்னோர்க்குக் கற்பித்தல் ஆகாமையும், கற்பிப்போன் கருத்தாகி விட்டதை வெளிப்படுத்தும் நன்னூல் கொண்டு தெளியலாம். நோயுள்ளவனுக்குத் தானே மருத்துவன் உதவி வேண்டும்! நோயனை நெருங்க விடேன் என்பான், மருத்துவன் என்னும் பெயர்க் குத் தானும் உரிமையன் ஆவனா? இதில் கூறப்படும் இன்னொருதுறை, “கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை” என்பது. கட்டாவது உறுதிப்பாடு. உரன் என்பதும் அது. “உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்” “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்னும் வள்ளுவங்கள் கட்டமை ஒழுக்கம் பற்றியவை. கண்ணுமை = பொருந்தி நிற்கும் தன்மை. இதற்கு அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை என்பவற்றை எடுத்துக் கூறுவார் இளம்பூரணர். வாகைத் திணையின் நிறைவுத் துறைகளாக வருவன, அருளொடு புணர்ந்த அகற்சி என்பதும் காமம் நீத்த பால் என்பதுமாம். வாகையாவது வெற்றி: வாழ்வின் வெற்றியாவது அருள்கலந்த துறவும் (அருட்பணி புரிவதற்காகவே கொள்ளும் பற்றறுதலும்) காமம் நீங்கிய தூய்மையும் ஆகும் என்கிறார். இவ்விடத்தே, நாம் முன்னர்க் கண்ட, “காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்னும் கற்பியல் நிறைவு விளக்கத்தை எண்ணல் வேண்டும். “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” என்னும் களவியல் தொடக்கமும் நோக்குதல் வேண்டும். மேலும், ஆரா இயற்கை அவா நீத்துப் பேரா இயற்கைப் பெற்றியுறுதல் கூறும் வள்ளுவ மும் எண்ணல் வேண்டும். காஞ்சி காஞ்சி என்னும் புறத்திணை, பெருந்திணை என்னும் அகத் திணைக்குப் புறனாகும். பலவகைச் சிறப்புகளும் உடையதுதான் உலகம்; எனினும் அது நிலை பெறாத் தன்மையும் பொருந்தியதாகும் என்பது காஞ்சித் திணையின் பொருள். “பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என்பது நூற்பா (1024). புல்லுதல் பொருந்துதல். நில்லா உலகம் என்றது, அழுது அரற்றுதற்குக் கூறியதா? உலகியல் உண்மை புரிந்து, உரமாகக் கடனாற்றுதற்கும், நில்லா உலகில் நிலைபெற வாழமுடியும் என்பதைப் புகழால் நிலை நாட்டுதற் குமேயாம். “மன்னா (நிலையா) உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந் தனரே” என்னும் புறமும், “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்” என்னும் அறமும் தெளிவிக்கும். காஞ்சி, உலகியல் அறிவு முதிர்நிலை என்பதும், பெருந்திணை காமமுதிர்நிலை என்பதும் எண்ணின் புறனாதல் புலப்படும். மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை என்பது முதலாகக் காடு வாழ்த்து ஈறாகக் காஞ்சித்திணை இருபது துறைகளையுடையது. முன்னவை பத்தும் ஒப்பிலாச் சிறப்பும், பின்னவை பத்தும் நிலையாமைக் குறிப்பும் கூறுவன. மாற்றுதற்கு அரியது இறப்பு. அதனைச் சிறப்பு ஆக்குதற்குக் கூடும். அதனாலேயே இறப்பு என்பதற்குச் ‘சிறப்பு’ என்னும் பொருளும் நம் முந்தையர் கண்டனர். மாண்டார் என்பதும் அப் பொருளதே. சிறப்புடன் இறக்கும் இறப்பே இறப்பு (மற்றவை சாவு) என்றனர். இதனை, “மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை” என்றார் ஆசிரியர். அமர்க்களம் சென்றான் ஒருவன், அருங்கடனாற்றி அமர்க்களத்தே அமரன் ஆகின்றான். குடிமையராலும் நாட்டவராலும் தெய்வமாகக் கல்நட்டு, பீடும் பெயரும் எழுதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகின்றான். வானுறையும் தெய்வ நிலையை வையகத்தே பெற்றுவிடுகிறான். இது பெருமை; பிறர் பெறாப் பெருமை; கூற்றுக்கும் அஞ்சாத பெருமை என்பதன் வழி மொழிதலாக, “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு” எனவரும் குறளை எண்ணினால் ‘பெருமை’ ஆளப்பட்ட வகை தெரிந்து பொருள் புலப்பாடும் ஆகும். நிலையாமை போலிமையாகத் திணிக்கப் படாமல், அவரவரே அறிவு முதிர்வு, அகவை முதிர்வு. பட்டறிவு என்பவற்றால் தாமே உணர்ந்து போற்றும் வகையில் அமைந்தமை, தமிழியல் நெறியாம். அதனாலேயே போர்க்களம், இறப்பு, அழிவு, வெற்றி என்பவை யமைந்த புறத்திணையின் முடிநிலையாகிய காஞ்சித் திணையின் திரட்டு என நிலையாமை வைக்கப் பட்டதாம். நாலடியார், இளமை நிலையாமை யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை என்னும் நிலையாமைகளை முதற்கண் கூற, திருக்குறளோ படிமான வளர் முறையில் தொல்காப்பிய நெறி போற்றி இல்லற முதிர்வில் அருளுடைமை தொடங்கி வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல் லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் என வரிசைப் படுத்தியமை உணர்ந்து போற்றத்தக்கது. கணவன் இறக்க மனைவியும் உணர்வொன்றி இறத்தல் ‘மூதானந்தம்’. காதலியை இழந்தமை ‘தபுதாரம்’ காதலனை இழந்தமை ‘தாபதம்’ கணவனொடு மனைவி தீப்புகுதல் ‘முதுபாலை’ அமர் மேம்பட்டு அமரனாகிய மகனொடு முடியும் தாய் நிலை ‘தலைப்பெயல் நிலை’ எவரெவர் முடிந்து சென்றாலும் முடிந்து போகாமல் கிடக்கும் சுடு - இடுகாட்டினை வாழ்த்தும் வாழ்த்து ‘காடு வாழ்த்து’ இன்னவை காஞ்சித் திணைத் துறைகளுள் சில. பாடாண் திணை பாடாண் திணை என்னும் புறத்திணை, கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாகும். கைக்கிளையின் ஒருபாற் கூற்றுப் போண்றதே, புரவலர்ப்புகழும் புகழ்ச்சி ஆதலின், அதன் புறன் ஆயிற்று. “அமரர்கண் முடியும் அறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப” என்பது பாடாண் பற்றிய இலக்கணத்தின் ஒருபகுதி. அமரர்கண் என்றதும் பழைய உரைகாரர்கள் விண்ணேறித் தேடினர். மண்ணின் மக்களுக்கு மண்ணின் மைந்தரால் தந்த மண்வள நூல் என்பதை மறந்து விட்டனர். எனினும் எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல் மிதக்கும் என்பதுபோல் நாவலர் பாரதியார் வழியாக உண்மை கண்டது தமிழ் உலகம். தொடர்ந்து குழப்புவதே குறியாகி எழுதினாரும் உளர் எனினும் தகவுரையை ஏற்றுப் போற்றினாரும் உளர் என்பது தொல்காப்பியத் தோன்றல் பேரா. இலக்குவனார், பேரா. வெள்ளை வாரணனார் முதலியவர்களால் வெளிப்பட்டது. “அமரர் என்னும் சொல் அமர் என்பதன் அடியாகப்பிறந்த பெயராய்ப் போர் செய்தலையே தமக்குரிய தொழிலாகக் கொண்டு வாழும் வீரரைக் குறித்து வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாம்” “போர் மறவர்பாற் சென்று அமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சி யீறான புறத்திணை வகைபற்றிய ஆறுமே அமரர்கண் முடியும் அறுவகை எனப்பட்டன என்பார் நாவலர் சோம சுந்தர பாரதியார். இக் கருத்தே ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றுக்கும் சங்கத்தொகை நூல்களாகிய தமிழ்ச் செய்யுட்களின் அமைப்புக்கும் ஏற்றதாகும்” என்பார் வெள்ளைவாரணர் (தொல் காப்பியம்; தமிழிலக்கிய வரலாறு பக். 108-9). பாடாண் துறையில் இயற்பாவொடு இசைப்பாவும் (வண்ணமும்) வரப்பெறல் உண்டு. தலைவனை முற்படுத்திப் பாடாண்பாடும் புலவர் தம்மைச் சார்ந்தாரை உட்படுத்தி, ‘வண்ணம் பாடுவம்’ என்பது கண்கூடு. மக்கட் காதல் பாட்டு, தெய்வக் காதல் பாட்டாகவும் வரும் என்பதை, “காமப் பகுதி கடவுளும் வரையார்” என்பதன் வழியே சுட்டுவார் ஆசிரியர் (1029). தேவார, திருவாசக, திருவாய் மொழி முதலாம் இறைநூல்களிலும் கோவை நூல்களிலும் இக் காதல் பாக்களைக் காணலாம். குழந்தைகள் மீது கொண்ட பேரன்பால் பாடுதலும் உண்டு. ஆழ்வாரின் கண்ணன் பிள்ளைத் தமிழும், பாரதியாரின் கண்ணன் பாட்டும், பிள்ளைத் தமிழ் நூல்களும் இதன் விரிவாக்கமாம். காதல் தழுவிய இப் பாடல்களில் ஊரும் பேரும் பிறசிறப்பும் கூறுதல் உண்டு. ஏனெனில் அகப் பாடலில் அவ்வுரிமை இல்லை ஆதலால், இதனைக் குறிப்பிட்டுக் காட்டினார் (1031). இவையெல்லாம் வழக்கொடு கூடியவை என்பதை, “வழக்கொடு சிவணிய வகைமை யான” என்றார் (1032, 1033). கடவுள் வாழ்த்துப் பாடும் வழக்கம் பண்டே இருந்தமையாலும், அவ் வாழ்த்துடன் தொடர்புடையவை சில வாழ்த்தப் பெற்றமையாலும் அவற்றைத் தொகுத்து வாழ்த்தினை நான்காக்கிக் கூறினார். “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்பது அது (1034). கொடிநிலை கந்தழி வள்ளி என்பவை குற்றமற்ற சிறப்பினவை. இவை மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வருவன என்பது இதன் பொருள். கொடி என்பது வளைவுப் பொருளது. ஆதலால், படர்கொடி, ஆடு கொடி, பாம்பு, மின்னல் முதலிய பொருள்களைத் தரும். கந்தழி என்பது கந்து அழி என்னும் இருசொல் இணைவு. கந்தாவது கட்டுத்தறி. கட்டுத் தறி, நெய்வார் கருவிக்கு அமைந்த நிலைத் தூண்; மாடு கட்டுதற்கு அன்றி யானை கட்டுதற்கும் தறியுண்டு; கட்டிவைக்கும் இடம் கட்டுத் துறை; கட்டிவைக்கப் பயன்படும் தூண் கட்டுத்தறி. அழி என்பது அழிப்பது. கட்டினை அழிப்பது (அ) கட்டற்றது கந்தழி. வள்ளி என்பது வளம், வளமை. கொடி ஒன்று வள்ளி; கொடை யாளர் வள்ளியோர்; வள்ளி, வளத்தக்காள் ஆகிய இல்லாள். கடவுள் வாழ்த்து என நூலொடு பாடப்பட்டுக் கிளர்ந்த நூல் நாமறி அளவில் முற்படக் கிடைத்தது திருக்குறளே. அதில் கடவுள் என்னும் சொல் ஆளப்பட வில்லை எனினும், கடவுள் வாழ்த்தென அதிகாரப் பெயர் உண்டு. அதிகாரப் பெயர் தவறாமல் மூலப்படி, உரைப்படி எல்லாவற்றிலும் இருந்துள்ளமை அறிதலால் நூலொடு கூடியமைந்ததேயாம். தொகைநூல் கடவுள் வாழ்த்தோ பாட்டின் கடவுள் வாழ்த்தாகிய திருமுருகாற்றுப்படையோ தொகுத்தார் அடைவில் அமைந்தவை. இவ் வகையால் திருக்குறளை முன்வைத்து, கடவுள்வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத் தல் என்னும் நான்கு அதிகார வரிசையொடு ஒப்பிட்டுக் காணின் பொருந்த லாம் எனத் தக்க தெளிவு உண்டாகின்றது. கொடி நிலை என்பது மின்னுக் கொடி என்னும் இளங்கோவடிகள் ஆட்சியால் மழையொடு தொடர்புறுதல் அறியலாம். ஆகலின், வான் சிறப்பு எனலாம். கந்தழி என்பது பற்றற்றது என்னும் பொருள் தருதலால் பற்றற்ற நீத்தார் பெருமை அக் கந்தழி ஆகலாம். வள்ளி, வளமிக்க தன்மையொடு, உளமிக்க தன்மையும் ஒன்றிய அறன் வலியுறுத்தலாகக் கொள்ளலாம். இவ் வகையால் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கும் முறையே, தொல்காப்பியர் கூறிய கடவுள் வாழ்த்து, கொடி நிலை, கந்தழி, வள்ளி என்பவற்றை உட்கொண்ட அமைப்பு ஆகலாம் என்பது. இதனை அருமையாக எடுத்துக் காட்டியவர் பேரா. மு. இராகவ ஐயங்கார் (பொருளதிகார ஆராய்ச்சி. பக். 143). இவ்வாறு அமைதி கொள்ளல் தகுமோ எனின், ‘தொல்காப்பியர் வழியில் திருவள்ளுவர்’ என்னும் விரி கட்டுரை காணல் தெளிவாம். ‘நூல்: திருக்குறளுக்கு உரை திருக்குறளே’ என்பது; எம் நூல். ஒரே ஒரு குறிப்புச் சான்று ‘அறம் முதலாகிய மும்முதற்பொருள்’ என்னும் தொல்காப்பியமே, ‘முப்பால்’ - முன்னோடி. ஒரு தெளிவு புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் உரிப்பொருள் வைப்பு முறை, தொல்காப்பியர் உரைத்தது (960). திருக்குறள் காமத்துப்பால் இவ்வைந்து உரிப்பொருள்களையே மாறா வரிசையில் வைத்து, ஒன்றற்கு ஐந்து அதிகாரங்களாக, ஐந்தற்கும் இருபத்து ஐந்து அதிகாரங்களைக் கொண்டு அமைகின்றது. ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காண்க. உறக்கம் கொள்வதற்குப் பாடும் பாட்டு, கண்படைநிலை. உறக்கம் நீங்குவதற்குப் பாடும் பாட்டு, துயிலெடை நிலை. பிறந்தநாள் கொண்டாடுதல், பெருமங்கலம். முடிபுனைவிழா, மண்ணுமங்கலம். பரிசில் பெற்று விடை பெறுதல், பரிசில் விடை. வாழ்த்துக் கூறுதல், ஓம்படை. பாடாண் திணையின் துறைகளுள் சில இவை. மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட இவ் வழக்கங்கள் புதுப் பொலிவுடன் இன்றும் நிகழ்தலை எண்ணிப்பார்க்கலாமே. மேலும் வாயுறை வாழ்த்து செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து என்பனவும் பாடாண் துறைகளே. அவற்றைச் செய்யுளியலில் காணலாம். யாம் பெற்ற பேற்றை நீவிரும் பெறுக என வழிகாட்டும் ‘ஆற்றுப் படை’ என்பதும் இப் பாடாண் துறைகளுள் ஒன்றேயாம். அது, “ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம்” என்பது (1037). செல்லும் வழியில் தம் எதிரேவரும் பாணர் கூத்தர் முதலோர்க்கு அப் பாணர் கூத்தர் முதலோர், யாம் இவரைக் கண்டு இவ்வளம் பெற்றேம்; நீவிரும் சென்று பெறலாம்; செல்லும் வழி ஈது; சென்று பயன் கொள்க என வழிப்படுத்துவது ஆற்றுப்படை யாகும். பத்துப் பாட்டுள் செம்பாதி ஆற்றுப்படை என்பதால் அது போற்றப் பட்ட வகை புலப்படும். அந் நாள் நிலநூல், சுற்றுலா நூல், வரலாற்று நூல், வழிகாட்டி நூல், மக்கள் தொடர்பு நூல், மாந்த நேய நூல் என்பனவாக ஆற்றுப் படை விளங்கியமை புலப்படும். மேலும் கலையே வாழ்வாக இருந்தவர் நிலை, அவர்தம் கருவி அமைப்பு, கலைத் திறம், வளம்பெற்றபின் வைத்து வாழத் தெரி யாமை, நிலைப்பிலா வாழ்விலும் நிலைத்த குடும்பமும் சுற்றமுமாக வாழ்ந்த வாழ்வு என்பனவும் புலப்படும். சான்றாகத் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடு கடாம்) என்பவற்றை நோக்குக. பாடுபுகழ்பெற்ற மன்னரும் தாம் பாணரும் கூத்தருமாகப் பாடினர் எனின், அவ் வாற்றுப் படையின் செல்வாக்கு தானே விளங்கும். “போக்குக் கற்றவன் ‘போலீசுக்’காரன் (போக்கற்றவன்) வாக்குக் கற்றவன் வாத்தியாயன்” (வக்கற்றவன்) என்பது புது வழங்குமொழி. இப் போக்குக் கற்றவனும் வாக்குக் கற்றவனுமாகத் திகழ்ந்தவன் ஆற்றுப்படைக் கலைவல்லான் எனல் சாலும்! மெய்ப்பாடு மெய்யின்கண் உண்டாகிய உணர்வு, பிறர்க்குப் புலப்படும் வகையால் வெளிப்படுவது, மெய்ப்பாடு ஆகும். “மெய்ப்பாடாவது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல்” என்பார் பேராசிரியர். உள்ளத்து நிகழ்வது, கருத்துப் பொருள்; அது முகம், கண், காது, கால், கை, வாய், மெய் (உடல்) முதலியவற்றின் அசைவு, துடிப்பு, நடுக்கம், நிறமாற்றம், தடுமாற்றம், மயக்கம், மகிழ்வு, கிளர்ச்சி, துள்ளல் - இன்ன வற்றால் பிறர் அறியத் தோன்றும். இத் தோற்றமே அகவுணர்வின் வெளிப்பாடு ஆகும். குறிப்பறிதல், குறிப்புணர்தல், குறி கூறுதல், கோள் தாங்கி (கோடாங்கி) கூறல் என்பன வெல்லாம், மெய்ப்பாடு உணரவல்லார் தம் தேர்ச்சியினால், பிறரை ஒப்புக்கொள்ள வைப்பனவாம். காப்பியக் கவின், மெய்ப்பாட்டில் தங்கியுளது எனலாம். இயலினும் இசையும், இசையினும் கூத்தும், பொது மக்களை யன்றிப் புல மக்களையும், இளையர் முதுவர் ஆகியோரையும் ஒருங்கே கவர்தல் மெய்ப்படக் காட்டும் சிறப்பாலேயாம். ‘நாடகமே உலகம்’ என்பது மாறித் ‘திரையே உலகம்’ ‘காட்சியே உலகம்’ என ஆகிய காலம் இது. ‘ஆடுநர்க் கழியும் உலகம்’ என மெய்யியல் காட்டியது பழந்தமிழ்ப் புறநானூறு. ஆடிச் செல்வாரைப் போல-வேடமிட்டு ஆடிச் செல்வாரைப் போல-போவது உலகியல் என்பது அது. கூனியாக நடித்தவன் மீது, செருப்பை எடுத்து எறிந்தான் பார்வை யன் ஒருவன். “இதுவரை எனக்குக் கிடைத்த எப் பரிசும், இப் பரிசு போலாகாது” என்று பாராட்டி, அடையாளப் பொருளாக்கிக் கொண் டான் கூனியாக நடித்தவன். அவன் மெய்யாக உணர்ந்து நடித்ததுமன்றிப் பார்ப்பவன் தன்னையும் தன்னை மறந்துபோகச் செய்து விட்டான் அல்லவா! மெய்ம் மறந்து நோக்கச் செய்து விடுவது, மெய்ப்பாடு ஆகும் நிலை இது. மெய்ப்பாடு கலையாக இல்லாமல், வாழ்வாகி விடும் போது, எத்தனை பேரை நம்பி ஏமாறச் செய்ய - இழப்புக்கு ஆளாக்க முடிகின்றது என்பதை நாம் கேளாமலும் காணாமலும் இல்லையே. துறவர் போலிமை, கூடா ஒழுக்கமாவது இது. மெய்ப்பாட்டு விளக்கம், உயர்கலை விளக்கம்! ஆனால், அவன் வாழ்வில் மெய்யனாக இல்லாவிடில், பெருந் தீமையாம் என்க. தொல்காப்பியர், மெய்ப்பாடுகள், அவை தோன்றும் நிலைக் களங்கள், அகவாழ்வு புறவாழ்வு இரண்டிலும் மெய்ப்பாட்டின் பங்களிப்பு, ஆகாதமெய்ப்பாடுகள் இன்னவை பற்றி ஆழமாக எண்ணிக் கூறுகிறார். அவர்தம் நுண்மாண்நுழைபுலமும், கலைத்துறைக் கவினும், கட்டமை கோப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இயற்றியுள்ளார். சுவைப் பொருள், அதனை நுகரும் பொறியுணர்வு, அது உள்ளத் துப்பட்ட போது தோன்றும் குறிப்பு, அக் குறிப்பு மெய்யில் தோற்றமுறும் காட்சி என ஒரு மெய்ப்பாடு நான்காகும். மெய்ப்பாடு நூலோரால் எண்வகையாக உரைக்கப்படும். அவை, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. இவ் வெட்டையும், மெய்ப்பாட்டு நிலைக்களம் நான்கொடும் பெருக்கிக் காணின் முப்பத்து இரண்டாம்; இவற்றைச் சுவையும் சுவைப் பொருளும் ஒன்றாக்கிப் பதினாறு எனவும், உள்ளக் குறிப்பும் உடற் குறிப்பும் ஒன்றாக்கி எட்டு எனவும் கொள்வதும் உண்டு. இவற்றைக் கூறி மெய்ப்பாட்டியலை விளக்குகிறார் தொல்காப்பியர் (1195 - 1197). முதல் மெய்ப்பாடாக நகைச்சுவையையும் இறுதி மெய்ப்பாடாக உவகைச் சுவையையும் தொல்காப்பியர் கூறுதல், அவரின் பழுத்த உளவியல் தேர்ச்சி காட்டும். இத் தேர்ச்சியின் வயப்பாடே, திருவள்ளுவர் ‘நகையும் உவகையும் கொல்லும் சினம்’ என முதலும் முடிவுமாகியவை இணைத்த இணைப்பாம். ஒவ்வொரு மெய்ப்பாடும் தோன்றும் காரணங்களை நான்கு நான்காகக் கூறுகிறார் தொல்காப்பியர். “எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப் பட்ட நகை நான்கு என்ப” என்பது நகைச்சுவைக்குக் காரணமானவற்றைக் கூறியது (1198). எள்ளலாவது இகழ்தல்; எள்போல் சிறிதாக எண்ணிக் கூறுதல். இருவர் இருந்தனர் ஓர் இருக்கையில், இடையே இருந்த இடத்தில் ஒருவன் வந்து அமர்ந்தான். அவன் அழுக்குடை கண்டு “நீ முட்டாளா, மடையனா?” என்றான் இருந்த ஒருவன். “இருவருக்கும் இடையே இருப்பவன் யான்” என்றான். எள்ளல், மீட்டோர் எள்ளலும் ஆகியது இது. நடக்க முடியாமல் தத்திப்பித்தி நடக்கும் குழந்தை நடை, அக் குழந்தை பேசும் மழலை நகைச்சுவைக்கு இடமாகி இன்பம் பயத்தல் கண்கூடு. ஆரியர் கூறும் தமிழ் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாதலைக் கூறும் செயிற்றியம். அதனை உரையில் காட்டுவார் பேராசிரியர். ஆங்கிலர் பேசும் தமிழும் அத்தகையதே. மொழிநிலையில் அவர்கள் இளமையராகத் தோன்றுதலே நகைக்கு இடம் தந்தது என்க. பேதைமை பேதைமைத் தன்மை; அறியாத்தனம். அதனைக் காணும்போது நகைச் சுவை உண்டாகும். ஒருத்தி கைக்குழந்தை வைத்திருந்தாள்; அவள் கூந்தல் அவிழ்ந்து விட்டது. முன்னே அவள் அக்கை இருந்தாள். அவர்களுக்கு இடையே ஒருதூண்! தூணின் ஒருபக்கம் இருந்து கொண்டு குழந்தையை நீட்டினாள் தங்கை. அக்கை, தூணின் இருபக்கமும் இரண்டு கைகளையும் நீட்டிக் குழந்தையை வாங்கினாள். இந்தக் காட்சியை எண்ணின் நகைப்பு வராமல் போகுமா? நேரிலே கண்டால்... ‘யான் கண்டது இது’. மூன்றாமவர் குழந்தையை வாங்கியபின், ‘ஏதோ தோன்றியதுபோல்’ மூவரும் நகைத்தனர்.. மடமை மடமை என்பது அறிவுறுத்தக் கேட்டாலும், தான் கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ளாமல், அறிவுறுத்துவானையும் அறியாத வனாகக் கருதுதல், “காணாதாற் காட்டுவான் தான்காணான்; காணா தான், கண்டா னாம் தான்கண்ட வாறு” என்பது போன்ற தன்மை (குறள். 849) அறிவுறுத்தியதைக் கேட்டு அதை விடாப்பிடியாகக் கொள்ளும் ‘மடம்’ ஓர் உயரிய பண்பியல். மகளிர்க்கு உரியதாகவும், துறவர்க்கு உரியதாகவும் அமைந்த மடம் அது. முன்னது தன்மை, பின்னது அத் தன்மையர் - உறையும் இடம். இம் மெய்ப்பாடுகளுக்கெல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டு வழங்குகின்றனர் இளம்பூரணரும் பேராசிரியரும். சங்க இலக்கியம் வாழ்வியல் இலக்கணமாக இருப்பதன் சான்று அது. அதன் இலக்கணம் தொல்காப்பியத்தில் உண்டு என்றால், அதன் பொருள் என்ன? தொல்காப்பியர்க்கு முன்னரே பரவிக் கிடந்த வழக்காறும் இலக்கியங் களும் இலக்கணங்களுமே அவர் தொகை நூலுக்கு மூலப்பொருள்களாக இருந்தன என்பதை நோக்கத் தமிழ்மாந்தர் தொன்மையும் கலைச் சிறப்பும் பண்பாட்டு முதிர்வும் புலப்படும். செயிற்றியத்தில் இருந்து இளம்பூரணர் காட்டும் பாட்டு அதனை இழந்து விட்ட நம்மை வாட்டவே செய்யும். நகைக்கு மூலமாம் எள்ளல் முதலியவற்றைத் தம் எள்ளல் அடியாக வும், பிறர் எள்ளல் அடியாகவும் ஒன்று இரண்டாதலை விளக்குவர் உரையாசிரியர்கள். அவ்வாறே தம் இளமை, பிறரிளமை எனக் கூறி எள்ளல் முதலிய நான்கையும் எட்டாக்குவர். உரிய சான்றும் காட்டுவர். அழுகை அழுகைச் சுவை, இளிவு (இழிவு), இழவு, அசைவு (முன்னிருந்த நிலையில் தாழ்தல்), வறுமை என்பவற்றின் வழியாகத் தோன்றும் (1199). இழிவு - இகழ்ந்து பேசுதலால் உண்டாவது; இழிவு - இழப்பின் வழிவரு வது; அசைவு - பழம் பெருமை, மதிப்பு ஆயவை குன்றல்; நிலைதாழ்தல்; வறுமை, துய்ப்புக்கு வழியில்லாமை; “பட்ட இழிவும் பழித்த இழிவும் பக்கம் பக்கம் எண்ணின் எண்ணுவார்க்கு ‘இளி’வின் அழுகை புலப்படும். இழவின் அழுகையே, ‘ஒப்பாரி’; ‘கையறுநிலை’ப் பாடல்கள். அசைவின் பாடே, பாரிமகளிரை வருத்திக் கிளர்ந்த பாட்டு! “அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே” என்பது அது (புறம். 112). வறுமை அழுகைப்பிழிவு, “இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு” என்பது (குறள். 1048). அசைவு என ஒன்று இருந்தாலும் நான்கும் அசைப்பனவேயாம். விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்து அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்ததும், அழுகையொடு ஒத்ததாகலின் இளிவரலையும், தான் இளிவந்து பிறிதோர் பொருளை வியக்குமாதலின் இளிவரலின் பின் வியப்பையும், வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்தலின் அதனை அடுத்து அச்சத்தையும், அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன் பின்னும், அவ் வீரத்தின் பயனாகிப் பிறர்க்குவரும் வெகுளியை அதன்பின்னும், வெகுளிக்கு மறுதலையாகவும் ஓதுதற்குச் சிறந்ததாகவும் முதலாவது சொல்லிய நகைக்கு இயைபானதாகவும் அமைந்த உவகையை இறுதியிலும் வைத்தார் என வைப்பு முறை காட்டுவார் பேராசிரியர். நகை போலவே அழுகை முதலியனவும் தன்னிடத்துத் தோன்று தலும் பிறரிடத்துத் தோன்றுதலும் என எட்டாக்குவார் பேராசிரியர். இளிவு - பிறர் இகழ்விற் பிறக்கும் அவலம். ‘இழிவே’ என்னும் பாடம் சிறக்கும் என்பார் நாவலர் பாரதியார். இளிவரல், மானம் குன்ற வருவது. “இளிவரின் வாழாத மானமுடையார்” எனவும் “இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார்” எனவும் வருதலான் இப் பொருட்டாதலை அவர் விளக்குவார். இளிவு, பழிபடு குற்றமின்றியும் வரும் ஆதலால் தன்னெஞ்சு சுடுதல் இன்மையால் வாழ்வு வெறுப்பு விளையாது. இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் குன்றவரும் நிலையிழிவைக் குறிக்கும் என வேறுபாடும் காட்டுவார். இளிவரல், மூப்பு பிணி வருத்தம் மென்மை என்பவற்றால் உண்டாகும் (1200). முற்றத் தளவும் போக முடியாத முதுமையின் வாழ்வை வெறுக்கும் தாய் நிலையும், பசிப்பிணிக் கொடுமையில் மனைவியும் மக்களும் வருந்தும் வருத்தமும் தம் நொய்ய வாழ்வும் எடுத்துக்காட்டும் ஒரு பாட்டு (புறம். 159). இளிவரல் விளைவு விளக்கம்: “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணும் அளவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே” என்னும் சேரமான் கணைக்கால் இரும்பொறை பாட்டும் (புறம். 74). “சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சியபாட்டு” என்னும் குறிப்புமாம். மருட்கை “புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே” என்பது மருட்கைச் சுவை தோன்றும் நிலைக்களங்கள் பற்றியது (1201). மருட்கையாவது மயக்கம். பாராதன ஒன்றைப் பார்த்தல் மயக்கமாக்கும். என்றவாறும்பு ஒன்று எட்டடி நீளம் ஈரடி உயரத்தில் வரக்கண்டால், பூனை வடிவில் யானை ஒன்று நம் முன்வந்தால், இறந்து போனான் எனப்பட்ட ஒருவன் நம்முன் நடந்து வரக்கண்டால் மருட்கை தோன்றாமல் இராதே. “பறழுக்கு (குட்டிக்கு) வயிற்றில் பையையுடைய கங்காரு, பறக்கு மீன், சிற்றுயிர் உற்றக்கால் பற்றிப் பிசைந்துண்ணும் பூச்செடி, இருதலை, முக்கண் ஐங்கால் அறுவிரல் முதலிய வழக்கிறந்த உறுப்புடைய உயிர்கள் போல்வன” என்பார் நாவலர். அச்சம் அணங்கு விலங்கு கள்வர் தம் இறை என்பன நான்கும் அச்சச் சுவை நிலைக் களங்கள் (1202). ஒரு மரத்தில் ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்துவிட அதனை அறிந்தான், அவ்விடத்தை இரவில் போய்க்காண அஞ்சுதலும், சுடுகாட்டுக்குத் தனியே இரவில் சென்று மீள்வதற்கு அஞ்சுதலும், பேய் பிசாசு என்று கற்பிக்கப்பட்டவற்றை நினைத்து அஞ்சுதலும் அணங்குவழி அச்சம். மயக்கும் பெண்பேய் பற்றிய புனைவு பழமை மிக்கது; நீலி கதையோ நெடுங்கதை. இவை நூல்வல்லார் சுட்டும் அளவுக்கும் பெருக்கமாக மக்கள் வழக்கில் இருந்தமை புலப்படும். பேய் பிடித்தல் பேயோட்டல் உடுக்கடி என்பன இன்றும் மறைந்து விடவில்லையே! புலி விலங்கு ஒன்று நம்முன் நிற்பதாகக் கனவில் காணினும் உண்டாகும் அச்சத்தை நோக்கும் போது நேரில் கண்டால்! கள்வர் அச்சம் தந்த பாதுகாப்பே கதவு, பூட்டு, அரண், அகழ், காவல், இன்னவை. கள்வன் வலியனா காப்பு வலியதா என்பது முடிவுக்கு வராத பொருளாகவே என்றும் உள்ளது. இறை - கடவுள், ஆள்வோன், ஆட்சி அலுவலன், தலைவன் ஆய பல பொருள் ஒரு சொல். “கடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று” என்பது அரசன் அதிவீரராம பாண்டியன் பாடியது. ஆசிரியரைக் கண்டு ஓட்டமெடுத்த மாணவர் ஒளிந்தது மட்டு மில்லை; ‘கழிந்ததும்’ உண்டு. எழுத்தறி வித்தவன் இறைவன் எனப்பட்ட காலம் இருந்தது முதியர்க் கேனும் நினைவில் நிற்கும். பெருமிதம் பெருமிதம் வேறு செருக்கு (தலைக்கனம்) வேறு. பெருமிதப் பேறும் தலைக்கனத் தாழ்வும் எதிரிடைகள். “பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்” என்னும் குறள் (979) விளக்கம் இரண்டும். பெருமிதச் சுவைக்களம், “கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” என்பது (1203). கல்விச் சிறப்பு, போரில் காட்டியவீறு, வழிவழிப் புகழ், இணையிலா ஈகை என்பவை அவர்க்கே யன்றி அவர் பெற்றோர்க்கும் சார்ந்தோர்க்கும் பெருமிதம் தரும். கற்றவன் கொண்ட பெருமை கற்பித்தவனையும் உயர்த்திப் பிடிக்கிறதே! ஆயிரத்தில் ஒரே ஒருவன் பெற்ற கல்விச் சிறப்பு, அவ் வாசிரியன் மதிப்பை நாடறிபொருளாக்கி விடுகின்றதே! ஏனாதி என்னும் பட்டம் தறுகண் வழியாகப் பெற்றமை வரலாறு. மார்பு கொண்ட வேல் மறு பக்கம் துளைத்துச் செல்ல, புறப்புண் எனக் கொள்ளவும் நேருமே என வடக்கிருந்து உயிர் துறந்த புகழாளன் புகழ், வென்றவனையும் வென்றவன் ஆக்கிற்றே. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களியியல் யானைக் கரிகால் வளவ! சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந் தோனே” என்னும் புறப்பாட்டு (66). வ. உ. சிதம்பரனார், வீரபாண்டியக் கட்டபொம்மன் போர்வீறு நாடறிய லாயது, மெய்ப்பாட்டுத் திறத்தாலேயே! அவர்களைப் பற்றிய நூலைக் கற்றார் ஆயிரத்தில் ஒருவரும் அருமையே! கொடைப் பெருமிதம் என்ன, முல்லை பல்லைக் காட்டிப் பாடியா பாரியிடம் தேர்ப்பரிசு பெற்றது! உடுத்தாது போர்த்தாது என அறிந்தும் மயிலுக்குப் ‘படாம்’ வழங்கினானே பேகன்! ஏன்? “வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய” எனப் பாடுபுகழ் பெற்றானே குமணன்! இவை பெருமித மாதல் இவர் வேடமிட்டு நடிப்பார்க்கும் கிட்டுகின்றதே! வெகுளி “உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே” என்பது வெகுளிச் சுவை நூற்பா (1204). காலை வெட்டுதல் கையை வெட்டுதல் கண்ணைத் தோண்டுதல் உறுப்பறை. குடிகோள் ஒருகுடியையே முற்றாக அழித்தல். ஒருவன் செய்த குற்றத்திற்கு அவனைச் சார்ந்தாரையெல்லாம் கெடுத்தல். அலை - அலைக் களித்தல். அலைத்தலோடு அமையாமல் அதற்கு மகிழ்தல். பிறர்துயர்ப்படுதல் கண்டு களிப்புறுதல். கொலை: நன்றிமறத்தலையும் கொலையாகக் கண்ட தமிழ் மண்ணில், “கொள்ளும் பொருளிலர் எனினும் தலை துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வெளவுதல்” கலித்தொகைச் செய்தி. உவகை உவகைச் சுவை நான்கும், “செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென்று அல்லல் நீத்த உவகை நான்கே” என்பது (1205) “உனக்கு உவகை வந்தால் என்முதுகுக்கு ஒட்டுப் போட வேண்டும்” என்று வருந்திக் கூறினான் தன் நண்பனிடம். ‘அவன் உவகை இவன் அல்லல்’ ஆதல் ஆகாது என்பாராய் உவகையை ‘அல்லல் நீத்த உவகை’ என்றார். உவகை இருபாலும் இல்லை யேல் அஃது உவகையன்றாம். பாலியல் உவகைக்கும் இவ் விருபால் ஒப்பும் இருத்தலைக் கருதியே “உருவு, நிறுத்த காமவாயில்” என்றவர் தொல் காப்பியர் என்பதை எண்ணின் விளக்கமாம். இந் நாள் மருத்துவ அறிவியல் இதனை வலியுறுத்தி ஆய்வு மேற்கொள்ளச் சொல்லுதல் தொல்காப்பிய அறிவர்தம் மேம்பாட்டு விளக்கம் (1219). செல்வ உவகை பரம்பரை உடல் நிறத்தையே மாற்றிவிடுதல் கண்கூடு. புலன் என்பது புலமை அன்று; கல்விப்புலமை பெருமிதச் சுவைக் களங்களுள் ஒன்று. இப் புலன் “காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்” என்பது போல அறிவு வழியாகத் துய்க்கும் பேறு. அது, அதன் வண்ணமாக அமைந்து மாறிப்புகும் இன்பம். அறிதோறும் அறியாமை கண்டு மகிழும் புலனுகர்வே இவண் புலன் எனப்பட்ட தாம். புணர்வு உயிர்பகுத்தன்ன இருவர் ஒருவராகித் துய்க்கும் இன்பம். “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு?” என ஐயவினா எழுப்பி அமைந்த விடை காட்டியது குறள் (1103). “உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு, அமிழ்தின் இயன்றன தோள்” என்று உவந்து வினாவியதும் அது (குறள். 1106). உவத்தல் என்னும் சொல்வழியாகப் பிறந்தவையே ‘புணர்வு’ தொடர்பான மக்கள் வழக்குச் சொற்கள் என்பதை எண்ணிப் பார்ப்பின் உண்மை புலப்படும். புணர்வு நட்புப் பொருளதேனும் இதன்பாற்படுத்தல் கூடாதாம். “ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே உள” என்பது வள்ளுவம். விளையாட்டும் இருபாற் பொது. கடலாட்டு, புனலாட்டு, சோலைக் காட்சி, மலைச் செலவு, சிலம்பாட்டம், கும்மி, கோல், குரவை, பந்து என்பன வெல்லாம் உவகைப் பொருளவே ஆம். அல்லல் தொடராது அமைந்த இன்பங்களே இவை என்பதை இந் நாள் விளையாட்டுக் குழுவினர் எண்ணிப் பார்க்க இதனை அவர்க்குப் படையல் ஆக்கலாம். சிற்பி கட்டும் கட்டுமானச் சீர்மை தொல்காப்பியர் கைப்பொ ருளாக இருத்தல் இவற்றாலும் மேல் வருவனவற்றாலும் புலப்படும். மேலும், இலக்கண வறட்சி என்பதற்கு இடம் தராமல், “உள்ளப் பட்ட நகைநான் கென்ப” “விளிவில் கொள்கை அழுகை நான்கே” “யாப்புற வந்த இளிவரல் நான்கே” “மதிமை சாலா மருட்கை நான்கே” “பிணங்கல் சாலா அச்சம் நான்கே” “சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” “வெறுப்ப வந்த வெகுளி நான்கே” “அல்லல் நீத்த உவகை நான்கே” என முதலடியோடு எதுகை வருவது கருதியது அன்றி, அப் பொருள்களின் உயிர்நாடியாம் அடைமொழிகளை நடைப்படுத்தியுள்ள நயம், நினைப்பவர் நெஞ்சம் நிலைக்கவைக்கும் நீர்மை யுடையதாம். மேலும் 32 மெய்ப்பாடு மெய்ப்பாட்டு நிலைக்களங்கள் முப்பத்திரண்டு கூறிய அவர், அவை அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பானவை என வைத்து, அகத்துக்கே அவ்வாறு முப்பத்திரண்டு நிலைக்களங்கள் உண்மையைத் தொகுத்துச் சொல்கிறார். “ஆங்கவை ஒருபா லாக ஒருபால்” எனத் தொடர்கிறார். உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு என்றும், கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு என்றும், முனிதல், நினைதல், வெருவுதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு என்றும், கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்றும், நாலெட்டாகப் பகுத்து உரைக்கும் அவற்றை முறையே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற் புணர்வு மெய்ப்பாடுகள் என்று கூறுவார் நாவலர். களவு மெய்ப்பாடு களவிற்குச் சிறந்த மெய்ப்பாடுகள் இவை என்பதை நான்கு நான்காக அறுவகைப் படுத்தி முறையாக அடுத்து ஓதுவார் ஆசிரியர். தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் விரும்பி நோக்குதல், தலைவிக்கு நெற்றியில் வியர்வை உண்டாதல், காட்சி இன்பத்தைப் பிறர் அறியாதவாறு மறைத்தல், தமக்கு உண்டாகிய மாற்றத்தைப் பிறர்க்குப் புலப்படாவாறு மறைத்தல் என்பவை நான்கும் முதற்பகுதி. இவைமுறையே புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நடுநயம் மறைத்தல், சிதைவு பிறர்க்கு இன்மை எனப்படும். உள்ளத்து உணர்வைப் புலப்படாது மறைக்க முயன்றாலும் அவ்வுணர்வு ஓங்கிக் கூந்தலை விரிக்கவும், காதணியைத் திருகிக் கழற்றவும், மற்றை அணிகளைத் தடவவும், உடையை மாற்றி உடுத்தவும் ஆகிய மெய்ப்பாடுகள் நான்கும் இரண்டாம் பகுதியாம். இவற்றை, முறையே கூழைவிரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடைபெயர்த்து உடுத்தல் என்பார் ஆசிரியர். ஒடுங்கிய இடையைத் தடவுதல், அணிந்த அணிகளை மீளவும் திருத்தமாக அணிதல், தன் உளத்தில் இல்லாத வலிமையை இருப்பதாகக் காட்டிக் கொள்ளல், கைகள் இரண்டையும் தலைமேல் வைத்து ஆர்வம் காட்டல் என்பவை மூன்றாம் பகுதி. இவை முறையே, அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல்வலியுறுத்தல், இருகையும் எடுத்தல் என்பனவாம். தலைமகன் சிறப்பியல்பைப் பாராட்டுதல், அறியாமை நீங்கி அறிவு மேம்படக் கூறுதல், அலர் எனப்படும் இரக்கமில்லாச் சொல்லை ஏற்று நாணுதல், தலைவன் வழங்கும் உடைமுதலியன கொள்ளுதல் என்பவை நான்கும் நான்காம் பகுதி. இவை முறையே, பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்பன. நெஞ்சங் கலந்த நிலையை இனி மறையாமல் தோழிக்கு வெளிப் படுத்துதலே நலம் எனத் தலைவி எண்ணுதலும், தலைவனைக் கண்டு மகிழ்ந்த மகிழ்வை வளர்க்கும் வகையால் மறுத்தலும், அவன் காணா வகையில் மறைந்து கொள்ளுதலும், ஒருகால் காணுமாயின் மகிழ்தலும் ஆகியவை நான்கும் ஐந்தாம்பகுதி. - இவை முறையே, தெரிந்துடம்படுதல், திளைப்பு வினைமறுத்தல், கரந்திடத் தொழிதல், கண்டவழி உவத்தல் என்பன. தன்னை அழகுறுத்துவார் செயல் கண்டு மனம் வருந்துதல், தலைவனைப் பிரிந்திருக்கும் தனிமையால் வருந்துதல், வருத்தத்தால் கலக்கமிக உரையாடுதல், எதுவும் செய்யமாட்டாத தன்நிலையை உரைத்தல் என்பவை நான்கும் ஆறாம் பகுதி. இவை முறையே, புறஞ் செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையறவுரைத்தல் என்பன. அன்பின் ஐந்தணையின் எல்லை கையற வுரைத்தல் என்பதே. தனிமை மெய்ப்பாடு தலைவனைப் பிரிந்த தனிமையில் தலைவியின் மெய்ப்பாடுகளாக இருபதை எண்ணுவார் ஆசிரியர். இன்பம் தருவன வெல்லாம் துன்பம் தருவனவாகத் தோன்றுதலால் அதனை வெறுத்தல், தனிமைத் துன்பம் தாங்காமல் புலம்புதல், உருவெளித் தோற்றம் கண்டு வருந்துதல், கூட்டத்திற்கு இடையூறானவற்றை எண்ணுதல், பசி வருத்தினும் தாங்கியிருத்தல், வண்ணம் மாறுதல், உணவு குறைதல், உடம்புமெலிதல், உறக்கம் கொள்ளாமை, கனவு கண்டு மயங்குதல், மெய்யையும் பொய்யாகக் கொள்ளல், பொய்யையும் மெய்யாகக் கொள்ளுதல், ஐயமுறுதல், தலைவன் உறவினரை விரும்புதல், அறத்தைப் பழித்துரைத்தல், உள்ளகம் உளைதல், எப்பொருளைக் காணினும் அப் பொருளைத் தலைவனொடு ஒப்பிட்டுக் காணல், ஒப்பிய வகையால் உவப்புறல், தலைவன் பெயர்கேட்க அவாவுதல், கலக்கமுறல் என்பவை அவை (1216). இவை யெல்லாம் களவு நிலை மெய்ப்பாடுகள். கற்பு மெய்ப்பாடு கற்புநிலை மெய்ப்பாடுகளை அடுத்தே கூறுகிறார் ஆசிரியர் (1217, 1218). களவு வழித்தே கற்பு ஆகலின் அவற்றின் இறுதியும் முதலும் இணைத்துக் காண வேண்டியவையாம். களவுக் கூட்டத்திற்குத் தடையுண்டாய போது இடித்துரைத்தல் வெறுப்பை மனத்தில் நிலைநிறுத்தல், தமர்க்கும் பிறர்க்கும் அஞ்சுதலால் தலைவனைக் காணாது விலகல், அவன் குறிவருதலை மறுத்தல், தூது சொல்லுமாறு தான் விரும்புவன நோக்கிக் கூறுதல், உறக்கமும் சோர்வு மாக இருத்தல், காதல் மிகுதல், உரையாடாமை என்பவை மனம் அழியாத கூட்டத்திற்குரிய மெய்ப்பாடுகள். மேலும், தெய்வத்திற்கு அஞ்சுதல், உயர்ந்த அறம் ஈதெனத் தெளிதல், இல்லாததையும் இட்டுச் சொல்லிச் சினம் கொள்ளல், உள்ளதாம் உயர்வையும் வெறுத்துரைத்தல், இரவு பகலெனக் கூடியிருந்ததை எண்ணி மகிழ்தல், அவற்றை மறுத்திருத்தல், அருள்மிகக் கொள்ளல், அன்புப் பெருக்காதல், பிரிவு தாங்காமை, தலைவனைப் பற்றிப் பிறர் கூறிய பழிச் சொல் கேட்டு வருந்தல் என்பனவும் அவற்றொடு கூடிய மெய்ப்பாடுகளாம். காதலிருவர்க்கும் வேண்டிய ஒப்புமை பத்தும் முன்னே அகத்திணை இயலில் கூறப்பட்டன. அவை, “பிறப்பே குடிமை” முதலியன. ஆகாமெய்ப்பாடு காதலுக்கு ஆகாத மெய்ப்பாடுகள் இவை என்பதை, “நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி, வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை இன்புறல், ஏழைமை மறப்போடு, ஒப்புமை, என்றிவை இன்மை என்மனார் புலவர்” என்றார் (1220). நிம்பிரி - பிழையைப் பொறுத்துக் கொள்ளாமை; கொடுமை அறனெறி அழிப்பு. வியப்பு - தன்னைப் பெருமையாகப் பாராட்டல்; புறமொழி - புறங்கூறுதல்; வன்சொல் - வடுவாக்கும் சொல்; பொச்சாப்பு - மறதி; மடிமை - சோம்பல்; குடிமை இன்புறல் - குடிப் பெருமை பேசி இன்புறுதல்; ஏழைமை மறப்பு - நிலையில் தாழ்வெனக் கருதாமை; ஒப்புமை - ஒப்பிட்டுக் காட்டிக் கூறுதல்; இன்மை என்பது இவையெல் லாம் இல்லாமை என்னும் பொருளதாம். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்காது வீம்பு காட்டும் குடும்பம் கெட்டுத் தொலைதல் மிகுதியாதலால் அது தலைப்பட வைக்கப்பட்டது போலும். அவ்வொன்று கைவரின் மற்ற தீயவை பலவும் ஒழிதல் உண்மையாம். தற்பெருமை கொள்வார், தம்மைச் சிறுமைப்படுத்தத் தாமே கட்டியங் கூறுபவர் ஆவர். பொதுவாழ்வுக்கே தற்பெருமை ஆகாது எனின் குடும்ப வாழ்வுக்கு அதன் வாடையும் அடித்தல் ஆகாது. புறமொழியாவது புறங் கூறுதல் இழிவுமிக்கது. குடும்ப இழிவை ஊரிழிவாக ஆக்கும் கொடுமைப் பழிவழியது அது. அதனைத் “துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு” என வினாவும் குறள் (188). வன்சொல் சுடுசொல், நாகாத்தல்; குடும்ப நலங்காத்தல். தீயினால் சுட்டது ஆறினும் ஆறாதது வாயினால் சுட்டது! குடிப் பெருமை கூறுவது - பிறந்த குடிப்பெருமை கூறுவது, புகுந்த குடிப் பழியாகக் கொள்ளப்பட்டுக் கேடாதல் பெருவழக்கு. பிறந்த குடிப்பெருமை, புகுந்த குடியில் நடந்து கொள்ளும் நடையாலேயே சிறக்கப் பெற வேண்டுமேயன்றித் தான் கூறுதலால் இல்லை என்பதை உணர்தல் இல்லறச் சீர்மை. ஏழைமையாகிய நிலை சூழலால் ஏற்படுவது. நிலையில் தாழ்வு வறுமை ஏற்படல் பொதுவானது. அது குறித்து எங்கள் குடும்பம் இப்படிப் பட்டது எனத் தாழ்த்திக் கொண்டு ஒடுங்கி இருப்பதும் ஒப்புரிமை இல்லறச் சிறப்புக்கு உதவாது. மனைவியைக் கணவன் இன்னவள் போல என்று ஒப்புக்காட்டி உரைப்பதோ, கணவனை மனைவி இன்னவன் போல என ஒப்புமை காட்டி உரைப்பதோ தீமையைத்தாமே கை கூப்பி வரவேற்பது ஒப்பதாம். இவையெல்லாம் நீங்கிய ஒத்த உரிமை வாழ்வே உயர்வாழ்வு, வாழ்வாங்கு வாழும் வாழ்வு எனத் தெளிவித்தாராம். ஆகாக் குணங்களை அடுக்கி வைத்துள்ள இந் நூற்பாவினை உணர்ந்து பாராமல் எத்தனை குடும்பங்கள் கெட்டுள்ளன; கெட்டு வருகின்றன! கெடுப்பவற்றைக் கூறியது கதைப் படைப்புக் கருவுக்காகவா? கெடாத வாழ்வு சுரக்கட்டும் என்னும் பேரருள் குறிப்பு என உணர்வார், உணர்ந்த பின்னரேனும் வாழ்வில் போற்றி உய்வார்! தொல்காப்பியர் வேட்கை, தம் அறிவைப் பாராட்டுவர் கற்பார் என்பது அன்று. கற்பார் நிற்பாராதல் வேண்டும் என்பதே. அதனை மெய்ப்பாட்டியல் நிறைவு நூற்பாவான் உணர்த்துகிறார்: “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே” என்பது (1221). உணர்வுடை மாந்தர் உணர்வர்; பிறர் எண்ணி அறிதல் அரிது. ஆதலால், உணர்ந்து போற்றுக என்றார். “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்பதும் அவர் உரை (876). “உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று” என்பது வள்ளுவர் உரை (குறள். 718). உவமை முதிய மாடு ஒன்று புல்லைக் கடித்தது; புல்லைக் கடிக்க முடியாமல் நாவால் தடவி வளைத்தது;அகப்பட்ட அளவில் குதப்பியது. அதனைக் கண்ட ஒரு முதியவர், “பல்போனவன் பக்காவடை தின்பது போலத் தின்கிறது” என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன்; அவர்க்குப் பல் இல்லை. அவர் பட்டறிவு அப் ‘பழமொழி’யாக வெளிப்பட்டது என உணர்ந்தேன். அது புதுமொழியே. அவரே சொன்னதாகக் கூட இருக்கலாம். ஆனால், பழமொழி, உவமை, விடுகதை போன்றவை தோன்றும் பட்டறிவு நன்கு புலப்பட்டது. மாநிறம், கிளிப்பச்சை, மயில் கழுத்துச் சீலை, காக்கைக் கறுப்பு - இப்படிப் படைக்கப்பட்டவை பொதுமக்கள் கொடையே. புலிப்பாய்ச்சல், ஆமைநடை, குதிரை ஓட்டம், மாடுபோல உழைத்தல் - இன்னவையும் அப்படியே. குதிரைவாலி, காடைக்கண்ணி, வாளவரை - இவையெல்லாம் பொதுமக்கள் வழங்கியவையே. அலைபோல, சூறாவளிபோல, காற்றாடி போல, பம்பரம் போல - என்பன வெல்லாம் பெரிய இலக்கிய வாணர் படைப்பு இல்லை. மக்கள் வாழ்வில் காணப்படும் உவமைகள் இவை. உள்ளதை உள்ளவாறு மட்டும் சொல்லாமல், அதனை ஒத்த ஒன்று காட்டிப் பொருள் விளங்கவும் பொலிவு ஏற்படவும் செய்யும் உவமை மக்கள் பொது வளமாகப் புலமையர் கண்டு கொண்டு பாராட்டி ஒழுங்குபடுத்தியதேயாகும். கிளிப்பச்சையில் வண்ணம் உவமை. குதிரை வாலியில் வடிவு உவமை. புலிப்பாய்ச்சலில் வினை உவமை. மழைக் கொடையில் பயன் உவமை. சோழன் யானை, பகை வேந்தர் குடையை எற்றி எற்றித் தள்ளியது. யானை எற்றுதல், கொற்றக் குடையின் வடிவம், நிறம் ஆயவை ஆ உதைக்கும் காளாம்பியைக் (காளானைக்) கண்முன் கொண்டு வந்தது. அதன் பொருளும் ஒப்பும் விளக்கமும் அவரை வயப்படுத்தின. அதனால், “ஓஒ உமன் உறழ் வின்றி ஒத்ததே” எனத் தொடங்கினார். உவமை எத்தகைய வேறுபாடும் இல்லாமல் ஒப்பாகி விட்டது என்பது அவர் வியப்பு. புலவர் பொய்கையார். நூல் களவழி நாற்பது. சிவந்ததும் கூர்மையானது மாகிய நாரையின் அலகைப் புலவர், “பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவழக் கூர்வாய் செங்கால் நாராய்” என்றார். அதனைக் கேட்ட வேந்தன், பூரித்துப் போய்ப் புலவனை அழைத்துப் பரிசு வழங்கினான். உவமைப் பெருமை அல்லவா இது. புலவர் சத்திமுற்றப் புலவர்! கிழங்கைப் பிளந்து பார்த்தால் நாரையின் நாவும் தோற்றம் தருகிறதே. வண்ணமும் வடிவும் ஒத்த உவமை இது. மழைபோலக் கொடையைக் கூறுவர். ஆனால், மழைப் பொழிவு போன்றது சொற்பொழிவு எனக் கண்டார் ஒருவர். ‘பிரசங்கம்’ என்றும், ‘பெருஞ்சொல் விளக்கம்’ என்றும் வழங்கி வந்தவரிடையே ‘சொற் பொழிவு’ என ஒரு சொல்லைத்தந்தது மன்றிச், ‘சொற்பொழிவாற்றுப் படை’ என்னும் நூலும் தந்தார். அவர் நெல்லை பால்வண்ணர் என்பார். வினையும் பயனும் அமைந்த உவமை. உவமை வகை “வினை பயன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம்” என உவமை வகைகள் இவை எனக் கூறுவார் (1222). உவமை ஒவ்வொன்றும் தனித்தனியே வரும் என்பது இல்லை. இரண்டு மூன்று சேர்ந்து வருதலும் உண்டு. வினையும் பயனும் ஓர் உவமையில் இருக்கலாம். ஓர் உவமையில் வண்ணமும் வடிவும் பொருந்தியிருக்கலாம். உவமையாகக் கூறுவது உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியர் ஆணை (1224). பெருமை நன்மை காதல் வலிமை என்பவற்றை நிலைக்களமாகக் கொண்டுவரும். தாழ்ந்த பொருள் உவமையாவதை ஏற்கும் இடமும் உண்டு என்றும் கூறுவார் (1226). ஆனால் அத் தாழ்ந்ததி லும் உயர்ந்த தன்மையே உவமையாக்கப்படும் என்பது குறிப்பு. நன்றியறி தலுக்கு, “நாயனையார் கேண்மை கெழீஇக் கொள வேண்டும்” என்று உவமைப்படுத்துவது இல்லையா! அதுபோல். முழுமையான பொருள் முதல்; முதற் பொருளின் உறுப்பாக அமைந்தது சினை. முதற் பொருளுக்கு முதற்பொருளும், முதற் பொரு ளுக்குச் சினைப்பொருளும், சினைப் பொருளுக்கு முதற் பொருளும், சினைப் பொருளுக்குச் சினைப் பொருளும் உவமையாதல் உண்டு. “மலை போன்ற யானை” -முதலுக்கு முதல் உவமை “தாமரை அன்ன தண்குடை” -முதலுக்குச் சினை உவமை “பனை நெடுங்கை” -சினைக்கு முதல் உவமை “ஆடுகை கடுப்பத் திரிமருப்பு” (கடுப்ப - போல; மருப்பு - கொம்பு) சினைக்குச் சினை உவமை “பவழச் செவ்வாய்” என்பது பவழத்தை வாய்க்கு உவமை காட்டியது. எதனால் உவமையாயிற்று எனின், செம்மை என்னும் நிறத்தால் உவமையாகியது. பவழ நிறமும் வாயின் நிறமும் சிவப்பு ஆதலால் உவமையாம். இதில் செம்மை என்பது வெளிப்படத் தெரிய உவமை அமைந்துள்ளது. இவ்வாறு வெளிப்படத் தெரியா வகையில் ‘பவழவாய்’ எனினும் உவமையே. இரண்டும் உவமையே எனினும் முன்னதில் செம்மை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பின்னதில் அப்படிக் காட்டப்படாமல் மறைந் துள்ளது. ஆதலால் முன்னது சுட்டிக் கூறிய உவமை; பின்னது சுட்டிக் கூறா உவமை என்கிறார் ஆசிரியர். “சுட்டிக் கூறா உவமை யாயின் பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே” என்பது அது (1228). புணர்த்து - பொருத்தி; புணர்ந்தன - பொருந்துவன. எடுத்துக் கொண்டது எதுவோ அது, பொருள். அதற்கு ஒப்புமை காட்டப்படுவது எதுவோ அது, உவமை. இரண்டும் பொருந்த அமைதல் வேண்டும். (1229). பொருள் என்பதைப் பிற்காலத்தார் உவமேயம் என்றனர். உவமை என்பதை உவமானம் என்றனர்; ஒப்பினைப் பொதுத் தன்மை என்றனர். இரண்டற்கும் அமைந்த இணைப்புச் சொல்லை உவம உருபு என்றனர். அவ்வுருபு வெளிப்பட இருந்தால் உவம விரி என்றும், மறைந்திருந்தால் உவமத் தொகை என்றும் வழங்கினர். முத்துப்பல் என்பது முத்துப் போன்ற பல் என உவமை ஆகும். இதில், ‘பல்’ பொருள்; - ‘முத்து’ உவமை. ஆனால், இவ்வாறு அன்றிப் ‘பல் முத்து’ எனினும் உவமையாகும் என்றார் ஆசிரியர். அதனை, “பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்” என்பது (1230). இதனை உருவகம் என்பது பிற்கால வழக்கு. பொருளினும் உவமை பெரியதாகவும் சிறியதாகவும் இருத்தலும் உண்டு. அலைக் கூந்தல் - அலைபோலும் கூந்தல் (பெரியது); ஊசிக் கோபுரம் - ஊசிபோலும் கோபுரம் (சிறியது) (1231). உவமை என்பதை உணர்த்தும் சொற்கள் இவையென அடுக்கிக் கூறுகிறார் ஆசிரியர். அப் பட்டியைப் பார்த்த அளவிலேயே வாழ்வுக்கும் உவமைக்கும் உள்ள நெருக்கம் புலப்படும். அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய என்பன ஆசிரியர் கூறுவன. முப்பத்தாறு உருபுகளைக் குறித்து விட்டு ‘அன்னவை பிறவும்’ எனச் சேர்த்துக் கொள்ளக் கூறுகிறார். அப்படிச் சேர்ந்தவை பல (1232). “அவன் ‘கணக்காக’ இவன் உள்ளான்” “அவள் ‘கணக்காக’ இவள் பேசுகிறாள்” இவண் ‘கணக்காக’ என்னும் பொருள்தரும் உவமை உருபு. இயல்பாக இறந்து கிடப்பவனுக்கும் உறங்கிக் கிடப்பவனுக்கும் வெளித் தோற்றத்தில் வேறுபாடு இல்லை. ஆதலால் ‘செத்து’ என்பது உவமை உருபாயிற்று. ‘புலி செத்து’ என்றால் புலிபோல என்பதே பொருள். செத்து ழூ செத்திரம் ழூ - சித்திரம் ஆயது ஒவ்வியம் ழூ - ஓவியம் ஆயது; ஒவ்வ உவம உருபு. செத்து என்பது பழந்தமிழ்ச்சொல்; ஆயினும் உவம உருபுப் பட்டியில் இடம் பெற்றிலது. சாயல், பார்வை என்பவையும் வழக்கில் காணும் உவமை உருபுகளே. இன்னவாறு மக்கள் வழக்கில் மறைந்து கிடப்பன பலவும் இன்னும் இடம் பெற்றில. புது நூல் ஒரு மொழியின் வளர்ச்சி, காலந்தோறும் வழங்கும் சொற்களை யெல்லாம் தொகுத்து அடைவு செய்தலும் பயன்படுத்தலும் இலக்கண விரிவாக்கம் செய்தலும் ஆகும் என்பதைக் குறித்துக் காட்டுகின்றன. இன்னவை, மூவாயிர ஆண்டுக்கு முற்படு தொல்காப்பியத்தில் பின்னை மூவாயிர ஆண்டு மொழிவளர்ச்சி சேர வேண்டின், காலந் தோறும் அப்பணி நிகழவேண்டும் என்பதாம். இவ் வுவமை உருபுகளையும் இன்ன இன்ன பொருளில் வரும் என வகுத்துக் காட்டிய பெருமை தொல்காப்பியர்க்கு உண்டு. அம் மரபு படிப்படியே அருகிப் போயிற்று. இரண்டாக வரும் பொருளுக்கு, உவமையும் இரண்டாக வரும். “இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே” (1243) என்கிறார். “இணை மாலை போலும் மணமக்கள்” “திருக்குறள் ஈரடி என்னிருமக்கள்” “பொன்காண் கட்டளை போன்ற சுண்ணம் பூசிய மார்பு” உள்ளுறை முன்னே அகத்திணையில் சொல்லப்பட்ட உள்ளுறை பற்றியும் அதனோடு சிறப்புடைய இறைச்சி பற்றியும் இவ் வுவமைப் பகுதியில் ஆசிரியர் சில கூறுகிறார். (உள்ளுறை: அகத்திணை இயல் 46-48; இறைச்சி: பொருளியல் 35-37; உள்ளுறை வகை ஐந்து பொருளியல்: 48) உவமை இயலில் உள்ளுறை ‘உவமைப் போலி’ எனவும், இறைச்சி ‘உடனுறை’ எனவும் கூறும் வழக்குண்மையைக் குறிப்பிடுகிறார் (உவமை. 24, பொருளியல் 48). இப் பெயர்கள் இவற்றின் பொருள் புரிதற்கு உதவுகின்றன. உள்ளுறை இறைச்சி என்பவை இன்றும் வழங்குமொழிகளாக உள. ஆனால், தொல்காப்பியர் வழங்கிய பொருளில் வழங்கப்படவில்லை. ஒருநூலின் உள்ளே வருவன இவை என முற்படக் குறிப்பதை உள்ளுறை என்றும் உள்ளடக்கம் என்றும் கூறுதல் நாம் அறிந்தது. புலாலை இறைச்சி என்பதும் மக்கள் வழக்கே. உள்ளுறை இறைச்சிகள் சொல் அளவில் நின்று பொருள் நிலையில் இழப்புற்றது போலவே இவற்றை இந் நாளில் பாவலர்தம் பாடு பொருளில் கொள்ளும் திறம் இல்லாராகிவிட்டனர். ஏனெனில் இவற்றைத் தெளிவாகப் பொருள் புரிந்து ஓதி, ஓதியதைப் பயன்படுத்தித் தமிழ் வளமாக்கும் நிலை அற்றுப் போகியது. உள்ளுறையும் இறைச்சியும் பழந்தமிழர் ஆழங்கால் பட்ட ஆய்வு வழியே கண்டெடுத்த வயிரக் கட்டியும் பவழப் பாறையுமாம். உள்ளுறை என்பது என்ன? 1. உள்ளுறை உவமை சார்ந்தது. 2. உவமை போலப் பொருள் உவமை உருபு என்ற அமைவு இல்லாதது. 3. உவமைப் போலி எனவும் வழங்கப்படுவது. 4. வினை பயன் உறுப்பு உருவு பிறப்பு என்னும் ஐவகையில் வரும். 5. தெய்வம் தவிர்ந்த கருப் பொருள்களை இடமாகக் கொண்டு வரும். 6. இதன் இலக்கணம்; “உள்ளுறுத் திதனோடு ஒத்துப் பொருள்முடிகஎன உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்” என்பது (எடுத்துக் கொண்ட பொருளை உள்ளே செறிய வைத்து அமைக் கப்படும் உவமை என்பது இதன் சுருக்க இலக்கணம்). அகப் பொருளில் பயிலும் இவ்வுள்ளுறை தலைவி, தோழி, தலைவன், செவிலி ஆயோர் கூறுதற்கு உரியர். தலைவி, அவள் அறிந்த இடம், பொருள் கொண்டு சொல்வாள். தோழி, அவள் வாழும் நிலப்பரப்பளவும் கொண்டு சொல்வாள். தலைவன், அவன் அறிந்த விரிவாலும் அறிவாலும் சொல்வான். மற்றவர்க்கு இன்ன இடமென்னும் வரையறை இல்லை. உள்ளுறை இன்பந்தழுவியதாகவும் துன்பந்தழுவியதாகவும் உவமை வழியில் வெளிப்படும். உள்ளுறை கருப்பொருள் என்னும் இயற்கைச் சூழலில் இருந்து முகிழ்ப்பது. வெளிப் பார்வைக்குச் செடி கொடி மரம் பறவை விலங்குகளின் இயல் செயல்களைப் புனைவதுபோல் தோன்றும். இவற்றைக் கூறுவது தாம் கூறப்புகுந்த அகப் பொருளுக்கு நயமும் நலனும் சேர்ப்பதற்கே என்பதை உட்கொண்டே துய்க்க வேண்டும். பொருளும் காணவேண்டும். இல்லாக்கால் இயற்கைப் புனைவு என்று மட்டுமே கொள்ளலாகி விடும். அது பாடுபுலவன் கருதிய பொருளுணர்ந்து ஓதுவதாக அமையாமல் ‘வாளா’ அமைந்துவிடும். “உள் ஒன்று வைத்து அதற்கு இணையான புறம் ஒன்று கூறுவர். கூறினும் அத் தொடர்பான உட்கருத்து மெய்யுள் உயிர் போல விளங்கிக் கிடக்கும்” என்பார் வ. சுப. மாணிக்கனார். “உடம்போ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையோ டெம்மிடை நட்பு” என்னும் உடலுயிர்க் காதல் (குறள். 1122) உள்ளுறையாக, உள்ளுறை இலக்கணம் அமைந்தது என்க. பொதுமக்கள் வழக்குப் போல நேரிடையாக இடித்துக் கூறாமல், அறவோர் உரைபோல் வலியுறுத்து நேராகக் கூறாமல், கனிவொடு கூறிக் காதலும் கற்பும் வாழ்வும் வளமும் சிறக்கக் கூறுவது உள்ளுறை அடிப்படையாம். ஒரு சான்று: “யாரினும் இனியன்; பேரன் பினனே; உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்; சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன் பாணன் வாயே.” இது, குறுந்தொகை 85. தலைவனுக்குப் பரிந்து கூறவந்த பாணனை நோக்கித் தோழி கூறியது இது. “இனியவருள் எல்லாம் இனியன்; அன்பருள் சிறந்த அன்பன்; பாணனே நீ பரிந்து பேசும் தலைவன் தான் எத்தகையன்? ஊரனாகிய அவன் ஊர்க்குருவியைக் கண்டவன் தானே! பெட்டைக் குருவி கருக்கொண்டு முட்டையிடப் போகிறது என்பதை முன்னுணர்ந்து இனிய கரும்பின் வெண்பூவைக் கொய்து வந்து முட்டை இட்டு வைத்தற்குரிய ஈன்இல் ஆகிய கூட்டைக் கட்டி முடித்தது” என்பது இப்பாடல் திரட்டுப் பொருள். முட்டையிடும் பெட்டை என்று, ஆண்குருவி கூடு கட்டும் ஊரன், கருக் கொண்ட மனைவியை விட்டு விட்டு அயலே போய் விட்டானே ஊர்க் குருவியைக் கண்டேனும் ஊரன் புரிந்து கொள்ளக் கூடாதா? என்பது இதன் உள்ளுறை. குருவிக் குடும்பத்தைத் தோழி எடுத்துக் கூறியது இயற்கைப் புனைவு மட்டுமே கருதியதா! உட்பொருள் வைத்த உரை கருதியதே அல்லவோ! இறைச்சி இறைச்சி பற்றிக் காணலாம்: “இறைச்சி தானே பொருட்புறத் ததுவே” “இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே” என்பவை இறைச்சி இலக்கணம் (1175, 1176). பொருளியலில் உள்ள இந்நூற்பா விளக்கம், உள்ளுறையின் தொடர்பு கருதி இவண் கூறப்படுகிறது. இறை கூர்தல், இறைகொண்ட, இறைகொள்ளும் என்பன சங்க நூல்களில் பெருக வழங்குவன. இறை என்பது தங்குதல். இறை என்னும் அரசுவழிப் பெயரும், கடவுள் வழிப் பெயரும் தங்குதல் பொருளவே. ஒன்றில் ஒன்று ஒன்றியிருத்தல் இறைச்சியாம். இதனை ‘உடனுறை’ என்றது அறிந்தோம். மலருள் மணம் போலவும் தேனுள் சுவைபோலவும் ஒன்றி உடனாகி இருப்பது இறைச்சி. கொழுமை தங்கியிருப்பது என்னும் பொருளிலேயே ஊனாகிய இறைச்சியும் பெயர் பெற்றதாகலாம். உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் வேறுபாடு என்ன எனின், உள்ளுறை, உவமையைக் கூறிப் பொருந்திய பிறிதொரு பொருளைப் பெற வைப்பது. அவ்வாறன்றிச் சொல்லிய பொருளிலேயே அதன் குறிப்பாகப் பிறிதொரு பொருளைக் கொள்ள வைப்பது இறைச்சி. “குறிப்புப் பொருளே இறைச்சியாகும்; உள்ளுறை உவமைபோல ஒன்றற்கு ஒன்று என்று ஒப்புமைப் படுத்திப் பார்ப்ப தெல்லாம் இங்குக் கூடாது; இயலாது” என்பார் பெருமுனைவர் தமிழண்ணல். “இறைச்சி தானே உரிப்புறத் ததுவே” என்பது இளம்பூரணர் பாடம். “இறைச்சிப் பொருள் என்பது உரிப்பொருளின் புறத்ததாகித் தோன்றும் பொருள்” என்பது அவர் உரை. “ஓரறிவு உயிர்முதல் ஐயறிவு உயிரி ஈறாகிய கருப்பொருள் இயக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு மாந்தர்தம் காதல் கற்பு ஆகிய பாலுணர்வு வாழ்வைக் குறிப்பால் உணர்த்துவது இறைச்சி” எனத் தெளியலாம். “அம்ம வாழி தோழி, யாவதும் வல்லா கொல்லோ தாமே; அவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோடு யாஅம் துணைபுணர்ந்து உறைதும் யாங்குபிரிந் துறைதி என்னா தவ்வே” என்னும் இது, ஐங்குறுநூறு (333). பறவைகளை நொந்து சொல்லியது என்னும் குறிப்புடைய இப்பாட்டு, “பறவைக் கூட்டமாம் யாம், துணை துணையாக வாழுகிறோம். இது கண்டும் நீதுணை பிரிந்து எவ்வாறு வாழ்கிறாய் என்று கேட்கமாட் டாவோ?” என்று தலைவி கூறிய இறைச்சி. இத்தகைய உள்ளுறை இறைச்சி ஆகியவை அகப் பொருளின் அகப் பொருளாக அமைதல் தமிழர்தம் நாகரிகக் கொள்கலங்கள் எனத் தக்கவை. கதையர் இந் நாள் கதைப்புனைவர் கருத்தில் கருக்கொள்ளுமா இவ் வக நாகரிகம்! குப்பை வாரிக் கொட்டும் எழுத்தாளர் தம் குடும்பத்து உறுப்பினரும் படிப்பரே என்று துளியளவேனும் எண்ணியேனும் எழுதக் கூடாதா? “இன்னும் இப்படி எழுதினால், உன் மனைவியையும் மகளையும் உன் எழுத்துப்படி செய்வோம் என்று கண்டித்து எழுதினர். அவன் எழுதினான் ‘அவருள் எவர் என்னவர்’ என்பதை என்னாலேயே கண்டு கொள்ள முடியாத போது நீதானா கண்டு கொள்வாய்” என்று மறுமொழி எழுதும் அயல் நாட்டு நிலை இந் நாட்டுக்கு எய்துதலைத் தவிர்க்க வேனும் எழுதுக என்பதே எம் உள்ளுறை, இறைச்சிகளாம். வேறுவகை உவமை “பாரியே ஒருநீதானா கொடையன்; மாரியும் உண்டே” என்பது மறுப்பது போன்ற உவமை அல்லவா. விரைந்து செல்லும் கதிரே, வரம்பிட்டுச் செல்கிறாய்; மறைகிறாய்; வருகிறாய்; விண்ணிலேயும் பகலில் மட்டும் விளங்குகிறாய்; நீ எப்படிச் சேரலாதனுக்கு ஒப்பாவாய் என்பதும் உவமையே (புறம். 8). அது ஓரீஇ (விலக்கி)க் கூறல் உவமை (1254). கொடியோ இடையோ என ஐயுற்றுத் தடுமாறுவதாகக் கூறுவது தடுமாறு உவமம் (1256). தடுமாறல் என்பது இன்றும் வழக்குச் சொல் இல்லையா! ‘தட்டுத் தடுமாறி’ என்னும் இணைச் சொல்லும் வழக்கில் உண்டே. அற்றைக் கலைச் சொல், இற்றைவழக்குச் சொல்லாவது இது. “மதியத் தன்ன வாள்முகம் போலும் தாமரைப் புதுப்பூ” என இரண்டு முதலிய உவமைகளை அடுக்குதல் ஆகாது. ஆதலால் “அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே” என்றார். இனி, “கலகவான் விழி வேலோ சேலோ மதுரவாய் மொழி தேனோ பாலோ” (திருப்புகழ்) என்பது அடுக்கியது ஆகாது. ஐய உவமை யாகிவிடும். உவமை வழிப்பட்டவையே அணிகள் அனைத்தும் என்னும் துணிவால் ‘மயங்கா மரபின்’ நூல் யாத்த தொல்காப்பியர், ‘உவமை இயல்’ என்றே வகுத்தார். பின்னூல்கள் பிறபிற விரித்துப் பெருக்கி, பொருள் விளக்குதல் என்னும் வகையால் பொருள் தகுதி இழந்து போயின; போகின்றன. அகம் புறம் ஆகிய பொருள்களுக்கு இடமாகியதும், மெய்ப்பாடு உவமை என்பவற்றின் உறைவிட மாகியதும், செய்யுள். ஆதலால், அதனைச் ‘செய்யுளியல்’ என்று வகுத்தார் ஆசிரியர். செய்யுள் உறுப்பு செய்யுள் உறுப்புகள் என முப்பத்து நான்கினை எண்ணி, அவற்றை முறையே, விரிக்கிறார். செய்யுள், பா, தூக்கு, பனுவல், தொடை, யாப்பு என்பன வெல்லாம் ஒருபொருள் குறித்த, பொருள் பொதிந்த சொற்கள். பொதுமக்கள் வழக்கில் பண்டு தொட்டு இன்று வரை வழங்கிவரப் பெறுவன. செய்யுள் செய் - விளைநிலம்: செய்தற்கு இடமாகியது; செம்மை செய்யப்பட்டது; புன் செய்; நன் செய்; செயல், செய்கை என்பனவற்றின் மூலமாய சொல். பா - பரவுதல், விரிதல் பொருளது. பார், பாரி, பாய், பாய்தல், பாய்ச்சுதல் இன்னவற்றின் அடிச்சொல். தூக்கு - தூக்கிப் பார்க்கும் எடை, எடைக்கல், ஆராய்தல், உயர்த்துதல், எடுத்தல் இன்னவற்றின் ஏவல். பனுவல் - பன் - பருத்தி; பன்னல் - பருத்தி, கூறுதல்; பனுவல் - பாடல்; நூல். “பஞ்சிதன் சொல்லா பனுவல் இழை யாக” -நன். தொடை - தொடுக்கப்படுவது, இணைப்பது, இசைப்பது; மாலை - தொடையல்; எதுகை மோனை முதலியன தொடுத்தல்; தொடுப்பு, தொடர்பு - நட்பு; தொடுக்கும் - தொடர்பு. ஒன்றோடு ஒன்று ஒன்றுவது தொடை. யாப்பு - யா - கட்டு; யாமரம் கட்டுதற்குரிய பட்டையும் வளாரும் உடையது; யாக்கை - உடல்; யாத்தல் - கட்டுதல்; ஆக்கை - கட்டும் நார், வளார்; யாப்பு - பாத்தி, பாத்தி கட்டுதல்; கட்டுதல் அமைந்த பாட்டு. செய்யுள் குறித்த சொற்கள் அனைத்தும் மக்கள் வழக்கில் உள்ளதால், அவற்றுக்குள்ள இடம் புலப்படும். நாட்டுப் பாட்டு பழமொழி பன்னீராயிரம் கொண்ட தொகுதி உண்டு. பழமொழி பதின்மூவாயிரம் தொகுத்தார் பாவாணர். பழமொழிகள் பொதுமக்கள் வழக்கில் உள்ளவை. ‘முது மொழி’ என்பதும் அது. செய்யுள் வகையுள் அது ஒன்று. “ஆடிப் பட்டம் தேடி விதை” “சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்” இவற்றைப் பாருங்கள். ஆடி, தேடி; எதுகைத் தொடை இது. முதல் எழுத்து மாத்திரை ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து அவ் வெழுத்தாகவோ அதன் இன எழுத்தாகவோ வருவது ‘எதுகை’! “தைப்பனி தரையைப் பிளக்கும்” “மாசிப்பனி மச்சைப் பிளக்கும்” இவற்றில், தை, த என்றும், மா, ம என்றும் முதல் எழுத்து ஒத்திருத்தலால் யாப்பியற்படி இவை ‘மோனை’ எனப்படும். “முதலெழுத்து ஒத்தல் மோனை” “முதல் எழுத்து அளவால் ஒத்து, இரண்டாம் எழுத்து ஒத்தல் எதுகை” எதுகை மோனையை வெறுக்கும் ஒருவர் கூறினாராம்! “மோனை பார்ப்பவர் முழுமூடர்; எதுகை பார்ப்பவர் ஏதுமறியார்” இவ் விரண்டிலும் மோனை ஒட்டிக் கொண்டனவே! ‘மோனை எதுகை வெறுப்பரும், விலக்க முடியாதவை அவை என்பது, இதன் குறிப்பாம். ஏனெனில், இம் மண்ணில் வளம் இம் மண்ணின் மைந்தரை விடாமல் ஒட்டும் என்பதே’. இனித் தாலாட்டு என்ன? ஒப்பாரி என்ன? விடுகதை என்ன? மாமி அடித்தாளோ மல்லிகைப்பூச் செண்டாலே! பாட்டி அடித்தாளோ பால் போட்டும் கையாலே! - துள்ளி வருகின்றனவே மோனை! இது தாலாட்டு! கத்தரிக் காய் எங்களுக்குக் கயிலாசம் உங்களுக்கு பூசணிக்காய் எங்களுக்கு பூலோகம் உங்களுக்கு. - இவ் வொப்பாரியில் மோனை மட்டுமா; இறுதி இயைபும் அமைந்துளதே. தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! - இறுதியில் இவ்வாறு பொருந்திய இசைவருவது ‘இயைபு.’ பின்னே வரும் பெட்டியும் குட்டியும் இயைபே! நாலு மூலைப் பெட்டி நந்த வனத்துப் பெட்டி ஓடும் குதிரைக் குட்டி வீசும் புளிய ஆக்கை இது விடுகதை; கிணறு - கமலை - ஏற்றம் இறைக்கும் மாடு, சாட்டைக் கோல் பற்றியது. ஓ, வீ என்பன நெட்டெழுத்து ஒன்றுதல் மோனை (நெடிலொன்று மோனை). கணவன் பொய் சொல்கிறான்; மனைவி சொல்கிறாள்: “வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம் கத்தாழ முள்ளு கொத்தோட குத்திச்சாம்” இதில், எதுகை மோனை மட்டுமா? மேற்கதுவாய் எதுகை வந்துளது; இரண்டாம் அடியில் இரண்டாம் சீர் ஒன்றுதானே எதுகை பெறவில்லை. இப்படி வருவது, ‘மேற் கதுவாய்’, ‘கதுவாய்’ இப்பொழுது எப்படி வழங்குகின்றது. ‘கொறுவாய்’, உடைந்து போனது என்னும் பொருளில் வழங்குகின்றது. கதுவாய், இல்லாமல் போனது என்னும் பொருள் தருவது. இன்னும் பாருங்களேன்: “பள்ளம் மேடு பார்த்துப்போ”, “அவனுக்கு நல்லது கெட்டது புரியாது”, “எப்படியும் உள்ளதும் இல்லதும் வெளியாகிவிடும்”, “பெரியவர் சிறியவர் அறியாமல் பேசாதே” இவையெல்லாம் முரண்கள்; எதிரிடையாயவை. இவ் விலக்கணம் முரண் தொடை. ‘ஆ’ ‘ஓ’ என்று சொல்வது இல்லையா? நீட்டிச் சொன்னால் ஆஅ, ஓஒ என வரும். ‘பாலோ ஒஒ பால்’ ‘தயிரோ ஒஒ தயிர்’ இப்படி நீட்டிச் சொல்வது, நாள்தோறும் நாம் கேட்பவை தானே. ஒலி அளவில் மிகுவதால் அளபெடை என்பது பெயர். இசை பாடும் போது, நீட்டி நீட்டிப் பாடுவதைக் கேட்கிறோமே! அவையெல்லாம் அளபெடை. இயலுக்கு ஒருமாத்திரை அளவுதான் கூட்டல் உண்டு. சில இடங்களில் இரண்டு மாத்திரை கூட்டலும் உண்டு. ஆனால், இசைக்கு அளவு அவரவர் தொண்டை தான் போலும்! “காயாத கானகத்தே”-எவ்வளவு நீட்டி இசைக்கக் கேட்டது! ‘எல்லாம் பாட்டு! எங்கும் பாட்டு! எவரும் பாட்டு! என்ற தமிழ்மண், பாட்டுப் பாடி இசைக்கும் பாணன் துணைவிக்குப் ‘பாட்டி’ என்று பெயரிட்டது. பாட்டன், பாட்டி என முறைப் பெயரும் கண்டது. ‘பாட்டாங்கால்’ எனப் பாடுபட்டுப் பண்படுத்திய தோட்டப் பெயர் கொண்டது. பாட்டியர் திட்டுதல் ஆகாது! ஏனெனில், பழங்காலத்தில் பன்றி, நாய், நரி என்பவற்றுக்கும் பாட்டி என்பது பெயராக இருந்துள்ளது (1165). ‘உள்ளதைச் சொல்லப் பொல்லாப்பு வேண்டாவே’ -பாருங்களேன் இப் பழமொழியில் எதுகை கொஞ்சுதல்! இன்னொரு செய்தி; உரை யாசிரியர் காலத்துக்கு முன்னரே பாட்டி பற்றிய இவ் வழக்கு அழிந்து விட்டது. அதனால், எடுத்துக்காட்டுத்தர அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. பாட்டு அளவு பாட்டு என்றால் பெரிதாக - நீளமாக - இருக்க வேண்டுமா? அரும்பாடு பட்டு அமைக்க வேண்டுமா? இல்லை! இல்லை! என்கிறார் தொல்காப்பியர். ஓர் அடி சிறப்பாக அமைந்தால் போதும்; அது பாட்டு! சரி, அடி என்றால் 16-சீர், 32-சீர், 64-சீர் என நீண்டிருக்க வேண்டுமா? வேண்டாவே! இருசீர் அடி குறளடி; குறளடி ஒன்று அருமையாக அமைந்து விட்டால் அது பாட்டுத்தான். குறள் அடி என்றால் இரண்டடியுடைய குறட்பாவை அன்று; இரண்டு சீர்களையுடையது. அதனை உலகறியக் காட்டிய பாட்டி ஒளவையார்: “அறஞ்செய விரும்பு” “ஆறுவது சினம்” என்றார். அரிய பாட்டுகள்தாமே இவை. செய்யுள் இனிச் செய்யுள் பற்றித் தொல்காப்பியர் சொல்வதை அறியலாம். செய்யுள் முதல் உறுப்பு மாத்திரை; அடுத்தது எழுத்து. மாத்தல் என்பது அளத்தல். மாத்தம் அளவு. ‘பா’ என்றால், அளவுக்கு முதலிடம் தருதல் வேண்டும். அவ், அளவும் எழுத்திலேயே தொடக்கமாகிவிட வேண்டும். மற்றை மற்றை உறுப்புகளிலும் அளவு பேணப்பட வேண்டும் என்னும் முற் குறிப்பினது மாத்திரை என்பதாம். அளவுடன் அமைந்தனவே எழுத்தொலிகள். ‘நா’ எழுந்து ஒலி செய்ய வேண்டும் எனின், அசையாமல் இயலாது. நா, இதழ், வாய் இன்னவை அசையும். அசையின், இசையாம். அவ் வசைகள் சில சீராக அமைவது சீர்; அச் சீர்களைக் கொண்டு அல்லது சீர்களால் அமைவது அடி; அடி தனித்து நிற்பினும் பிற அடிகளொடு கட்டுற்று நிற்பினும் யாப்பு ஆகும். இதுவரை சொல்லப்பட்ட மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு என்னும் ஆறும் செய்யுள் மாளிகையின் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களாவன. பா - பாவு ஆடை நெய்யும் தறியைப் பாருங்கள்; அங்கே அசை, சீர், அடி, பா என்பவையும் தளை, தொடை என்பவையும் உண்டு. அவர்கள் நெய்வதும், இவர்கள் செய்வதும் ஒப்பது! ‘நூற்றல்’ என்பது நூல் இழைத்தலையும் நூல் இயற்றலையும் குறிக்கும் சொல்லாயிற்று. இவை, தமிழர் வாழ்வியல் தொழிலொடு கலையுணர்வும் ஒன்றிச் செல்லுதல் காட்டும். ‘கலை’ என்பது ஆடைக்கும், பாடல் முதலிய கலைகளுக்கும் பொதுப் பெயராதல் அறிக. அடி ஒன்றன் அடியாக இருப்பது அடி. தேக்கடி, தேரடி, மரத்தடி மட்டுமா? ‘இரயிலடி’ எனத் தொடர்வண்டி நிலையம், பெயர் கொண்டதே. அடி ஒன்று கொண்டது, இயற்கை அல்லது நிலைத்திணை. ஆயிரம் அடி ஆல மரமும் ஓரடியின் வளர்ச்சியே. அடி ஒன்றுடையது இயக்கமின்றி நின்றது. இயக்கமாக இரண்டு அடி வேண்டியதாயிற்று. ஆம்! ஊன்று நிலை, இயக்க நிலை யாக - இரண்டு அடிகள் தேவைப்பட்டன. பறவைகள் ஈரடி பெற்றன. விலங்குகள் குறுக்கில் இயங்குவன. அதற்கு வாய்ப்பாக நான்கு அடிகள் கொண்டன. பூனை என்ன யானை என்ன; எலி என்ன புலி என்ன; நான்கு அடிகள் கொண்டன. மாந்தனும் ஒருகாலம் நான்கு அடிகள் கொண்டிருந்தே நிமிர்ந்தான். முன்னிரண்டு அடிகளும் கைகள் ஆயின. இக் காலம் வரை அந் நிலையைக் காட்டும் சான்றாகக் குழந்தை தவழ்ந்து பின் நிமிர்கிறது. முழுதுறு சான்றாக இருப்பது குரங்கு. நடக்கக் காலாக இருப்பவை, பற்றிப் பிடிக்கக் கையாகவும் இருத்தலைக் கண்டு எண்ணலாம்! வாற் குரங்கு, வாலில்லாக் குரங்கு என்னும் வகையையும் நோக்கலாம். அடி இரண்டு - முழந்தாள் இரண்டு - தொடை இரண்டு; தொடை இரண்டும் தொடுத்தது இடை அல்லது இடுப்பு, இடுப்பின் மேலே, தொடை தொடையாக இணை இணையாக - அமைந்த முள்ளந்தண்டு முதுகெலும்பு எத்தகைய அரிய இயற்கைக் கொடை! ஈரடி ஈரடிப் பெருமை என்ன? தனித்தனியே நின்றால் - தொடுக்கப்படாமல் நின்றால், ஊன்று நிலை மட்டுமே இருக்கும்; இயக்கநிலை எய்தாது. இயக்கத்திற்குத் தொடை வேண்டும். ஆதலால், தொடை - தொடையல் என்பவை தொடுத்தல், தொடர்ச்சி, தொடர்பு, தொடரி எனத் தொடர்ந்தன. இயங்கா மலையும் இடையீடு இன்றி இருந்தால், மலைத் தொடர் எனப்பட்டது. ஈரடி எவ்வளவு நடக்கும்? கடக்கும். மண்ணையும் கடக்கும்; விண்ணையும் கடக்கும். இக் கற்பனையே, ஈரடியால் உலகளந்த ‘கதை.’ வள்ளுவர் காலத்திலேயே இக் கதை கிளர்ந்தமையால் அவர், மெய்ம்மை காட்ட வேண்டி, “மடியில்லாத முயற்சியாளி எவனாக இருந்தாலும் அவன் மண்ணையும் விண்ணையும் எட்டலாம்” என்றார். பாரடி யெல்லாம் சுற்றிவரப் படர்ந்த அடிகள் எத்தனை? -குழந்தாய்! படர்ந்த அடிகள் எத்தனை? ஈரடி தானே குழந்தாய் - திருக்குறள், ஈரடி தானே குழந்தாய்! என ஈரடியால் உலகளந்த - அளக்கும் - விளக்கம் அறியலாம். இவை யெல்லாம் அடியும் தொடையும் ‘பா’வியக்கமாகும் வாழ்வியல் அடிக் களங்களாம். சும்மா என்ன வேலை செய்கிறாய்?-சும்மா இருக்கிறேன். எதற்குப் போகிறாய்?-சும்மா போகிறேன்! என்ன பேசுகிறீர்?-சும்மா பேசுகிறோம்! உயர் பொருட் ‘சும்மா’, உற்ற தாழ்நிலை இது. ‘சும்மா’ என்றால், நோக்க மற்ற - குறிக் கோளற்ற - ஒரு நிலையை வெளிப்படுத்தலாக இந் நாள் விளங்குகின்றது. ஆனால், செய்யுள் ஒன்று கிளம்ப வேண்டும் என்றால், ‘சும்மா’ கிளம்பக் கூடாது. நோக்கு நோக்கு ஒன்று கொண்டே செய்யுள் கிளம்ப வேண்டும். “குறிக்கோள் இலாது கெட்டேன்” என்று வாழ்வு அமைதல் ஆகாது; அவ்வாறு, “குறிக்கோள் இலாது கெட்டது” என வாக்கும் அமைதல் ஆகாது. நோக்கு ஓரிடத்து மட்டும் இல்லை எல்லா உறுப்புகளும் பொருந்த நோக்குவதாக அமைவது நோக்கு. நோக்கு மட்டும் செவ்விதாக அமைந்தால் போதுமா? நோக்கை அடையும் வழியும் செவ்விதாக அமைதல் வேண்டும். “பெற்றவள் பசியைத் தீர்த்தல் பிள்ளையின் கடமை என்றாலும், அப் பசியை எப்படியும் தீர்க்கலாம் எனின், அப் பெற்றவளே ஒப்பாள்” என்பது, தமிழ் மண்ணின் கொள்கை. ஆதலால், “நோக்குடன், நோக்கை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும்” என்பதை ஆசிரியர் தொல்காப்பியர் ‘மரபு’ என்றார். மரபு ஓரிடத்தை அடைதல் நோக்குடன் புறப்பட்டார், போகும் வழி, போகும் முறை என்பவற்றைக் கட்டாயம் கருதவேண்டும் என்பதால், வழி நடைக்குச் ‘சாலை விதி’கள் சட்டமாக்கப் பட்டமை உலகளாவிய முறை. பாட்டைக்குக் கண்டதைப் பாட்டுக்கும் கண்டது நம் பண்டையர் முறை. அதுவே, ‘மாற்றருஞ் சிறப்பின் மரபு’ என்பது. அதனைத் தெள்ளிதில் உணரச் செய்வதே தொல்காப்பிய மரபியல். மரபு பேணி அமைத்தல், நோக்குடையதாதல் என்ற அளவில் பா அமையின் ‘பாடுவோன்’ அறிவு நிலை சார்ந்தோ உணர்வு நிலை சார்ந்தோ மட்டும் அமைந்து விடும்! தூக்கு பாடுவோன், - தானே துய்க்கவோ பாடல் இயற்றினான்? இல்லையே! அவன், படிப்பானைக் கருத்தில் கொள்ளாமல் பாடினால், அப் பாட்டு அவனைத் தொடாமலே போகிவிடுமே! ஆதலால், படிப்பான் எண்ணத் தைத் தான் நுண்ணிதின் உணர்ந்தவனாய் அல்லது பயில்வான் எவ்வெவ் வகையால் எல்லாம் ஆய்வான் - தடைவிடை கிளத்துவான் - என்பவற்றை யெல்லாம் எண்ணி அப் படிப்பாளியாகத் தான் இருந்து கொண்டு பாவைப் படைக்க வேண்டும். அதற்குத் தான் ‘தூக்கு’ என்பது பெயர். தூக்குக்கு ஒத்துவராதது ‘தூக்கு’ என்னும் பெயர் கொள்ளத் தகுவது ஆகாதே (தூக்கு = பாட்டு). தொடை சொல்லும் பொருள் தெளிவு திட்பம் மரபு இன்னவற்றை உடையது எனினும், சுவையுடையதாகச் சொல்லப்பட்டால்தான், கேட்பார் விரும்ப அமையும். ஆதலால், பாவலன் கேட்பான் செவியைத் தன் செவியாகக் கொள்ளலும் கடப்பாடாம். கேட்கும் சுவை “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்” எனப் பாராட்டப்படும். “அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” எனவும் போற்றப்படும். தன் வயப்படுத்திக் கொள்ளாமல் ஒருவனுக்குச் சொல்லப்படும் செய்தி உட்புக வாய்ப்பே இல்லாமல், வாளா போகிவிடும். இன்னது கொண்டே பாவின் நயத்திற்குத் ‘தொடை’ என்னும் ஒன்றையும் கண்டனர். அத் தொடைகளே மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, செந்தொடை என்பனவாம். அளவு எத்தகு சுவையது எனினும் - பொருள் பொதிவு உடையது எனினும் - அளவோடு அமைதலும் வேண்டும் என்பதும் தொல்காப்பியர் தெளிவு. ஆதலால், ‘அளவியல்’ என்றோர் உறுப்பையும் கொண்டார். இவற்றை முறையே தொல்காப்பியர் மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவியல் என வரிசைப்படுத்துகிறார். கட்டடக் கட்டுமானப் பொருள்களாக நாம் முன்னர்க் கண்ட ஆறு உறுப்புகளையும் கொண்டு, கட்டப்பட்ட கட்டுமான உறுப்புகள் இந்த ஆறும் எனலாம். யாப்பு மாளிகைக்குக் கட்டுமானப் பொருள், கட்டுமானப் பணி என்பவை மட்டுந்தாமா உண்டு? தளமென்ன, பூச்சு என்ன, வண்ணமென்ன, வனப்பு என்ன, ஏந்து என்ன, இயைவு என்ன - எல்லாமும் - கருதப்பட வேண்டுமே! எல்லாமும் கூடும் போதுதானே ‘ஏராரு மாளிகை’யாய் ஏற்றம் பெறும்! இவற்றைக் கருத்தில் கொண்டே, பிற உறுப்புகளை வகுத்தும் தொகுத்தும் கூறுகிறார் ஆசிரியர். திணை எனப்பட்ட அகப் பொருள் (அகத்திணை) புறப் பொருள் (புறத்திணை) என்னும் இரண்டும், பாடுபொருளாக இருக்க வேண்டும். களவு கற்பு என்னும் கைகோள் (ஒழுக்க நெறி) இடம் பெற வேண்டும். அவற்றைக் கூற்று வகையால் கூற வேண்டும். கூறினால் அதனைக் கேட்போர், கேட்கப்படும் இடம், கேட்கும் காலம் என்பனவும் பொதுள வேண்டும். கேட்டல் பயன். கேட்டலால் உண்டாகும் மெய்ப்பாடு, இன்னும் சேர்க்கத் தக்கனவாம் பிற (எச்சம்) என்பவும் இணைய வேண்டும். கூறுவார் இவர், கேட்பார் இவர் என்னும் குறிப்பும் (முன்னம்), கேட்பார்க்குப் பயனுண்டாகப் புலவனால் படைக்கப்படும் புதுமைப் பொருள், - கூறப்படும் பொருளின் துறை, ஒன்றனோடு ஒன்று பொருந்தி நிற்கும் வகை (மாட்டு), ஓசை இன்பமாம் வண்ணம் என்பனவும் ஒன்ற வேண்டும். இவையெல்லாம் எண்ணின், உறுப்புகள் இருபத்து ஆறாம், செய்யுள் ‘வனப்பு’ எனப்படுவன எட்டு. அவை: அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பன (அவற்றின் விளக்கம் மேலேவரும்). பாடுவது எளிது “இவ்வளவும் பார்த்துப் பாடுவதுதான் பாவா? அப்பாடா! நடக்கும் செயலா? பாடல் இயற்றுவது எளிமை இல்லை” என்கிறீர் களா? இல்லை! இல்லவே இல்லை! “முடியாது என்னும் எண்ணத் தடை ஒன்றே தடை! பாடல் இயற்றுவது தடையில்லை! யாப்புத் தடையும் இல்லை! யார் தடையும் இல்லை! இதனை முதற்கண் தெளிவித்து விட வேண்டும்” என்பதற்காகவே, பழமொழி, தாலாட்டு, விடுகதை முதலிய வற்றில் எல்லாம் ‘யாப்பியல்’ இயல்பாக அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டப்பட்டது. இதற்காகவே எம்மால் எழுதப்பட்ட நூல் ஒன்று ‘எளிதாகப் பாடலாம்’ என்னும் யாப்பியல் நூல். மிக எளிது மூச்சுவிடுமுன்னே முன்னூறு பாடுவாராம்! நானூறும் பாடுவாராம்! ‘ஆச்சு’ என்று தும்மல் அடிக்குமுன்னே, ஆயிரம் பாடிவிடுவாராம்! ஒரு புலவர் கூறியது இது. இன்னொரு புலவர் கூறுகிறார்: “ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த விரகன் இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவிவீர ராகவன்” என்று தம்மைக் குறிப்பிடுகிறார். இன்னொரு வேந்தன் - பின்னாளை வேந்தன், “கன்னல் பாகில் கோல்தேனில் கனியில் கனிந்த கவிபாட” என்கிறான். “தென்னுண் தேனின் செஞ்சொற் கவியின்பம்” என்கிறான் ஒரு பெரும்புலவன். “சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் மன்னிய இன்குறள்வெண் பா” என்பது வள்ளுவ மாலையுள் ஒன்று. வண்ணம் பாடல் அரிதுதான் - ஆனால்! அருணகிரியார்க்கு? ஒலியல் அந்தாதி பாடலும் அரிதே - ஆனால்! வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளுக்கு? ஏகபாதம் என்னும் ‘ஓரடி’ பாடல், அருமையே - ஆனால்! சோழ வந்தான் அரசஞ்சண்முகனார்க்கு? பண் சுமந்த பாடல் எவ்வளவு எளிமையாகப் பாடியுளர் தேவார மூவர்! பாரதியாரும் பாவேந்தரும், பாவாலே நிலைத்து விடவில்லையா? செந்தமிழும் நாப்பழக்கம்! பாடிப்பாடித் தழும்பேறினால் அரியதும் எளியதாம்! வளையக் காட்சியைப் (சர்க்கசைப்) பார்த்தால் அருமையெல்லாம், எவ்வளவு எளிமை! ஆர்வம் வருக! அதிலே ஊன்றுக! அதன் வடிவே ஆகுக! ஆக்குவ வெல்லாம் ஆக்கமிக்க பாடலேயாம்! அசையும் இசையும் அசையும் சீரும் அடுக்குவதா பாட்டு? இல்லை! “அசையும் சீரும் இசையொடு சேர்த்தி” இனிக்கப்பாடுக என்கிறார் (1268) ஆசிரியர். அசைவகை, சீர்வகை, அடிவகை, தளைவகை, பாடலாகும் வகை என்பவற்றை எல்லாம் விரிவாகக் கூறுகிறார். புதுப்பா இந்நாளில் புதுக்கவிதை எனப்படுகிறது; உரைவீச்சு எனப்படுகிறது. ‘ஐக்கூ’ எனப்படுகிறது. ‘வசனகவிதை’ எனவும் தோன்றியது. இளங்கோ வடிகள் உரைப்பாட்டு மடை இயற்றினார். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் சிலப்பதிகாரம் வழங்கலாயிற்று. பாட்டும் உரையுமாக நடந்த பெருந்தேவனார் பாரதமும் கிளர்ந்தது. இவற்றை யெல்லாம் தொல்காப்பியம் கொள்ளுமா? தள்ளுமா? தொல்காப்பிய அளவுகோல், கொள்ளுவது, தமிழ்வழக்கு; தள்ளுவது அயல்வழக்கு; தொல்காப்பியம் கொள்ளுவது மொழிக்காவல் - பண்பாட்டுக் காவல். தொல்காப்பியம் தள்ளுவது மொழிக்கேடு, பண்பாட்டுக்கேடு. தொல்காப்பியம் கொள்ளுவது மொழித் தூய்மை. தொல்காப்பியம் தள்ளுவது மொழிக் கலப்பு. ஒரோ ஒருகால் ஒருவேற்றுச் சொல்லை ஏற்பினும், அது தமிழியல்பு கொண்டு அமைக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அதற்கு மாறாக அமைத்தல் ஆகாது. வேற்றுச் சொல்லை மாற்றித் தமிழியல்பில் வழங்கினும் கட்டாயம் வேற்று எழுத்து வடிவத்தை எந்த வகை கொண்டும் புக விடுதல் ஆகாது என்பனவேயாம். இவை மீண்டும் இங்கு வலியுறுத்தித் தொகுத்துக் கூறியது, பழமரபு காக்கும் இலக்கண நூல் - மறைநூல் - தொல்காப்பியம் என்பதை உறுதிப்படுத்தவேயாம். எத்தகைய பெருமையர் - அருமையர் - பதவியர் - ஆட்சியர் - எனினும், அவர் தொல்காப்பிய நோக்கைப் பாதுகாத்துப் போற்ற உரிமையரே அன்றி, அழிக்க உரிமைப்பட்டவர் அல்லர் என்பதே, அவரை (தொல்காப்பியரை) அடுத்து வந்த நூலாசிரியர் ஒருவர் கட்டளை அது, தொல்காப்பியன் தன் ஆணை என்பது. அது வருமாறு: “கூறிய குன்றினும் முதல்நூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்தன் ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே” பெருந்தொகை. 1368) தோம் இன்று = குற்றம் இன்றி. தடையா? மொழிவளர்ச்சிக்கு இவ்வாணை தடை இல்லையா? மொழிக் காவல், மொழி வளர்ச்சித் தடையாகாது. வளர்ச்சிக்குரிய ஆக்கங் களை யெல்லாம் இயல்தோறும் அதிகாரம் தோறும் புறநடையாக ஆசிரியர் சொல்லிச் செல்வதையும், நூற்பாக்களில் சுட்டுதலையும் எண்ணிப்பார்ப்போர் இவ்வாறு கூற எண்ணியும் பாரார் என்க. உரைப்பா செய்யுள் ஒன்றே யாப்பு எனப் பின்னூல்கள் கொண்டிருக்கவும், தொல்காப்பிய முந்து நூலோ, எழுவகை யாப்புக்களைக் குறிக்கிறது. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பவை அவை. அவற்றைக் கூறும் நூற்பாவிலேயே, “வண்புகழ் மூவர் தண்பொழில் உரைப்பின் நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர்” என்றார் (1336). பாட்டு யாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழி யாப்பு, பிசியாப்பு, அங்கத யாப்பு, முதுசொல்யாப்பு என இவற்றை விரித்துக் கொண்டால் தெளிவாகும். பிசியாவது புதிர் (விடுகதை). அங்கதம் வசையும் இசையும் அமைந்த பா. முதுசொல் - பழமொழி. இவற்றின் விளக்கம் மேலேகாண்போம். சொல்மரபு சொல்லின் மரபு சொல்லும் ஆசிரியர், “மரபே தானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று” என்கிறார் (1337). நாற் சொல்லாவது, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனச் சொல்லதிகாரத்துச் சொல்லப்பட்டவற்றை. ஓசைவகை அகவல் என்பது என்ன எனின், மயில் அகவுதல் போல்வது. அந்த யாப்பினை ஆசிரியர் கற்பித்தற்கும் நூல் இயற்றுதற்கும் பெரிதும் பயன்படுத்தியமையால் ‘ஆசிரியப்பா’ எனவும் பட்டது. நூல் இயற்றப் பயன்படுத்தியமையால் ‘நூற்பா’ எனப்பட்டது. இரண்டற்கும் வேறுபாடு, அகவற் பாவிற்குரிய அடிவரையறை, முடிநிலை என்பவை நூற்பாவிற்குக் கொள்ளுதல் வேண்டுவது இல்லை. ஓர் அடியாலும் வரலாம்; குறைந்தும் வரலாம். மிக்குப் பெருகிவரினும் அகவல் முடிவுபோல் முடியவேண்டும் என்பது இல்லை என்பவை இவற்றின் வேறுபாடாம். ஆசான், நுவல்வது ழூ நூல் ஆயது; அதன்பா, நூற்பா எனப்பட்டது. நூல், மறை என்பன இலக்கணம் குறித்துநின்று பின்னர்ப் பொருள் விரிவும், திரிபும் கொண்டன. மறை என்பதன் பழம்பொருள் பாதுகாப்பு, களவு என்பவையாம். எ-டு: மெய்ம்மறை (கவசம்) ; மறையோர் - களவொழுக்கக் காதலர் (1442). அகவல் ஓசை இருவகையாம். அவை நேர் ஒன்றல், நிரை ஒன்றல் மா முன் நேர், விளமுன் நிரை என்பன. செப்பல் ஆசிரியர் உரைப்பது போல் ஒரு போக்காக இல்லாமல், கூற்றும் மாற்றமும் - செப்பும் வினாவும் - போல வரும் யாப்பு வெண்பா யாப்பு. “அஃதான் றென்ப வெண்பா யாப்பே” (அஃது + அன்று = அஃதான்று) வெண்பா ஓசை செப்பல். காய்முன் நேர்வரல் செப்பல். துள்ளல் கலிப்பாவின் ஓசை துள்ளல். நின்று மேலேறிக் கீழேவீழ்தல் துள்ளல் ‘துள்ளல் ஆட்டம்’ (துள்ளாட்டம்) ஆட்டங்களுள் ஒன்று. தத்து வாய்மடை, கலிங்கல் என்பவை நீர் துள்ளிவீழும் இடங்களாம். துள்ளி வீழும் நீர் துள்ளி ழூ துளி ஆயது. மீன் துள்ளி, துள்ளம் என்பவை ஊர்ப் பெயர்கள். “தனதனனா தனதனனா தனதனனா தனதனனா” நீர் துள்ளி வீழ்தல்போல் சீர் இறுதி நெடிலாகவும் அடுத்த சீர்முதல் குறிலாகவும் இருத்தல் காண்க. “காய்முன் நிரைவரல் கலித்தளை” என்க. எ-டு : “அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்” தூங்கல் இனி “தனதனதன தனதனதன” என்னும் ஓசையுடன் வரின் வஞ்சித் தளை. அது தூங்கல் ஓசை எனப்படும். தூங்கல் என்பது யானை. அதன் கையை இப்பாலும் அப்பாலும் அசைப்பது போலவும், தொங்கும் ஊசல், காதணி, கடிகையாரத் தொங்கல் என்பன இயங்கும் இயக்கம் போலவும் இப்பாலும் அப்பாலும் செல்வது. தூங்கல் ஓசை வஞ்சிப்பாவின் ஓசை. கனிமுன் நிரையும், கனிமுன் நேரும் வருதல். முன்னது ஒன்றிய வஞ்சி; பின்னது ஒன்றா வஞ்சி. எ-டு : “முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலவெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தது” என்பது சிலப்பதிகார மங்கல வாழ்த்து. இவை முழுவதும் ஒன்றிய வஞ்சி. மருட்பா இந்நாற்பாவுடன் மருட்பா என ஒன்று உண்டு. அதனை ‘அம்மையப்பன்’ போலவும் ‘நரமடங்கல்’ (நரசிம்மம்) போலவும் என்பார் யாப்பருங்கல விருத்தியார். யானைக் கையும், அரிமா உடலும் கொண்ட ‘யாளி’ என்னும் உருவம் கோயிற் சிலைகளில் உண்டே அது போல் என்பது. மருளாவது மயக்கம். இதுவும் அதுவும் கலந்த ஒன்று. வெண்பா முன்னாக அகவல் பின்னாக அமையும் யாப்பு அது (1342). செந்தொடை தொடை பற்றி முன்னரே கண்டோம் தொடை எதுவும் வாராமல் தொடுப்பதும் தொடையே! அது பொருளே போற்றிவரும் ‘செந்தொடை’ என்பது (1357). செம்மையாவது இயல்பு. இருபா அகவல் வெண்பா கலிப்பா வஞ்சிப்பா எனப் பாவகை நான்கெனக் கூறினும், அகவலுள் வஞ்சியும், வெண்பாவுள் கலியும் அடங்குதலின் ஆசிரியப்பா, வெண்பா என்னும் இரண்டு பாவினுள் அடங்கும் என்பார். (வஞ்சி நெடும் பாட்டு என்னும் பட்டினப்பாலையும், வெண்கலிப்பா, கலிவெண்பா என்னும் யாப்பும் இவண் நோக்கத் தக்கவை) வாழ்த்து ‘ஐங்குறு நூல்’ வாழ்த்துதலையே முதலடியாகக் கொண்ட முதற் பத்து உடையது. “வாழி யாதன் வாழி யவினி” என்பதே அம் முதலடி பத்தும். சிலப்பதிகாரக் காப்பியம், ஒருவரைக் காணும் காலும், அவரிடம் விடை பெறும் காலும் வாழ்த்துடன் வந்து வாழ்த்துடன் விடை பெறு தலைக் காட்டும். கடவுள் வாழ்த்திலேயே, திருவள்ளுவர் நீடு வாழ்தலைச் சுட்டினார் இருமுறை. இன்பத்துப் பாலில் நீடு வாழ்க என்பாக்குத் தும்முதலைச் சுட்டினார். வாழ்த்துதல் என்னும் பண்பு நம்மவர் உயர்பண்பு. இதன் மூல வைப் பகம் தொல்காப்பியம். அது, “வாழ்த்தியல் வகைநாற் பாவிற்கும் உரித்தே” (1366) என்று எங்கெங்கும் வாழ்த்துக்கு வழி கூறியுள்ளது. புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியறிவுறூஉ என்பவற்றை அறம் முதலாகிய மும்முதற் பொருளையும் காக்கும் வகையால் கூறுகின்றது (1363). புறநிலை வாழ்த்து நீ வழிபடுகின்ற தெய்வம் உன்னைக் காப்பதாக! பழியற்ற வகையில் செல்வம் சேர்வதாக! வழிவழியாகக் குடிநலம் பெருகி வாழ்வாயாக! - என்று வாழ்த்துவது புறநிலை வாழ்த்து (1367). “எவ்விடத்தாயினும் தெய்வம் உறைதலின், திருக்கோயில் வளாகமே யன்றி எங்கும் வழிபாடு செய்யலாம்; வாழ்த்துக் கூறலாம்” என்பதை உணர்த்தும் வகையால் புறநிலை வாழ்த்து என்றார். நீ வழிபடு தெய்வம் ‘நிற்புறம் காப்ப’ என்பது இறை உடனாகி ஒன்றாகிக் காக்கும் என்பது. “புறம் புறம் திரிந்த செல்வமே” என்னும் மணிவாசகத்தால் இது புலப்படும். மற்றும், “குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்” என்னும் குறள் (1023) முயற்சியாளனுக்குத் தெய்வம் ஓடிவந்து உதவும் என்பதும் எண்ணத் தக்கது. “தெய்வம் நின்புறம் நிற்பதாக” என்று வாழ்த்துதலால் புறநிலை வாழ்த்தாம். வாயுறை வாழ்த்து வேம்புபோல் கசப்பும், நஞ்சுபோல் அழிப்பும் உடைய கொடிய சொற்கள் இடம் பெறல் இல்லாமல், வாழ்த்துதலும், நீ எடுக்கும் முயற்சி களும் செல்லும் செலவுகளும் மேலும் மேலும் நலமாக அமைவதாக என்று வாழ்த்துதலும் வாயுறை வாழ்த்தாம். வாயுறை வாயில் இருந்து பொழியும் அமிழ்து. வானில் இருந்து பொழியும் அமிழ்துபோல் வாயில் இருந்து பொழியும் அமிழ்து வாயுறை ஆயிற்று. உறை = மழை, அமிழ்து. இன்பத்து அமிழ்த்துவது ஆதலாலும் வாய்க்கண் இருந்து அவ்வின்பச் சுரப்பு வெளிப்படுதலாலும் வாயுறை ஆயிற்று. “வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே” என்னும் இந் நூற்பாவிற்கு (1369), “முற்பருவத்துக் கைத்தும் பிற்பருவத்து உறுதிபயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாயின சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்கு மெனக் கருதிப் பாதுகாத்துக் கிளக்கும் கிளப்பினான் மெய்யாக அறிவுறுத் துவது வாயுறை வாழ்த்து எனப்படும்” என்பது பேராசிரியர் உரை. அவையடக்கியல் தேர்ச்சியில்லாத சொற்களைச் சொல்லும் வகை தெரியாமல் யான் சொன்னாலும் உங்கள் தேர்ச்சியால் அமைத்துக் கொண்டு அருள்வீராக என அவையோரை வேண்டிக் கொள்ளுதல் அவையடக்கியலாகும். அவையை அடக்குதல் தகுமோ எனின், அவைக்குந் தான் அடங்கியமை உரைத்து வேண்டுதலால் அவர்தம் தகவால் அடங்குவர் ஆதலால் அவரை, அடங்குதல் வகையால் அடக்குதல் ஆயிற்று என்க. “என்றும் பணியுமாம் பெருமை” என்பது கூறுவார்க்கும் கூறக் கேட்பார்க் கும் பொதுமையது ஆகலின். ‘அடங்கிப் போதல், அடக்கும் கருவி’ என்பது அரிய வாழ்வியல் வளச் செய்தியாம். செவியுறை செவியை உறுத்தும் வகையில் இடித்துக் கூறி இன்பம் சேர்ப்பது செவியுறை ஆகும். உறுத்தும் உரை உறை ஆயது. இடிக்கும் துணையாரை இல்லாதவர் வாழ்க்கை கெடுப்பவர் இல்லாமலும் கெடும் என்பது வாய்மொழி யாதலும், “இடிக்கும் கேளிர்” என்பது நட்பியலாதலும் அறிந்து போற்றத் தக்கவை. “செவியுறை தானே பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே” என்பது நூற்பா (1371). பொங்குதல் = செருக்குதல்; புரையோர் = உயர்ந்தோர்; அவிதல் = அடங்கி நடத்தல். “எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்வில்லை பெரியார்ப் பிழைத்தொழுகு வார்” என்பது வள்ளுவம் (896). புறநிலை வாழ்த்துக் கூறும்போது அவ் வாழ்த்து, கலிப்பாவும் வஞ்சிப்பாவும் கொள்ளாது என்றார் ஆசிரியர். ஏன்? வாழ்த்து அளவுடையதாக அமைதல் வேண்டும். வரம்பிலா வாழ்த்து இயல்பிலாததாகிவிடும். ஈரடி, மூவடி, நாலடி அளவில் அமையும் வெண்பாவும் அகவலும். ஆனால், கலியும் வஞ்சியும் அவ்வாறு அமையா. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம், கொச்சகம் என்ன அமையும் கலியும், அதன் இளையோன் போன்ற வஞ்சியும் வாழ்த்துக்கு வேண்டா என்று ஒதுக்கிய வகை இதுவாம் (1367, 1417). சிலர் மேடையில் வாழ்த்தும் வாழ்த்துதல் அவையோர்க்கு மட்டுமன்றி, வாழ்த்துப் பெறுவோரையும் நெளிய வைத்தல் கண்கூடு. அம்மட்டோ! அம் மேடை விட்டு இறங்கியதும் எவ்வளவு வாழ்த்திப் பேசினாரோ அதனினும் மிகப் பழிப்பதும் கேட்க, ‘சீ! சீ! என்ன பிறவி இது’ என்று பழி கொள்வாராக்கும், இவ் வாழ்த்து வேண்டுவது தானா? இதற்கு மாறானவரும் உண்டு. மனையில் புகழ்வார்; மன்றில் பழிப்பார் அவர். ஆதலால், “கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு” “எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு” என்றார் வள்ளுவர் (819, 820). வண்ணம் வளமான இசையமைந்த பா, வண்ணப்பா, வள் ழூ வண். - வண் + அம் = வண்ணம். வண்ணம் எழுத்தின் தோற்றத்திலேயே தோன்றியது. மெய்யியல் தோற்றம் எப்படி எழுத்தொடு கொண்டதோ, அப்படிக் கொண்டது வண்ணமும். ஓசை நயம் கொண்டு வண்ணங்களை இருபது எனக் குறித்தார் தொல்காப்பியர். அதனை நூறாக்கினர் பின்னவர்; பன்னூறாகப் பாடிய வரும் உளர். பாஅ வண்ணம்: அசையா சீரா தளையா பார்க்க வேண்டா வண்ணம் பாஅ வண்ணம். அவ் வண்ணம் இலக்கணம் கூறும் நூலுள் பயில (நிரம்ப) வரும். அதற்குச் சொல்லே சீராய் அமையும். நூற்பா வண்ணம் என்பதும் இதற்கு ஒரு பெயர். “அவற்றுள், பாஅ வண்ணம் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்” என்னும் இந் நூற்பாவே, பாஅ வண்ணச் சான்று (1470) தாஅ வண்ணம்: இடையிட்டு வரும் எதுகை யுடையது தாஅ வண்ணம். எ-டு : “உரிச் சொற் கிளவி விரிக்கும் காலை” (782) வல்லிசை வண்ணம்: வல்லெழுத்துப் பலவாக அமைந்தால் அது வல்லிசைவண்ணம். எ-டு : “மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை” (1025) மெல்லிசை வண்ணம்: மெல்லெழுத்துப் பலவாக அமைதல் மெல்லிசை வண்ணம். எ-டு : “வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்” (420) இயைபு வண்ணம்: இடையெழுத்துப் பலவாக வருதல் இயைபு வண்ணம். எ-டு : “தலைவரு விழும நிலையெடுத் துரைப்பினும்” (985) அளபெடை வண்ணம்: உயிரள பெடை, ஒற்றளபெடை என்னும் அளபெடை இரண்டும் மிகுந்து வருவது அளபெடை வண்ணம். எ-டு : “ஓரூஉ வண்ணம் ஒரீஇத் தோன்றும்” 1483) “கண்ண் டண்ண் எனக் கண்டும் கேட்டும்” நெடுஞ்சீர் வண்ணம்: நெட்டெழுத்து மிகுந்து வருவது நெடுஞ்சீர் வண்ணம். எ-டு : “கேடும் பீடும் கூறலும் தோழி” (1048) குறுஞ்சீர் வண்ணம்: குற்றெழுத்து மிகுந்து வருவது குறுஞ்சீர் வண்ணம். எ-டு: “புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ” (1053) சித்திரவண்ணம்: நெடிலும் குறிலும் ஒப்ப வருவது சித்திரவண்ணம். எ-டு: “காமம் நீத்த பாலி னானும்” (1022) நலிவு வண்ணம்: ஆய்த எழுத்து மிகுந்து வரின் அது நலிபு வண்ணம். எ-டு: “னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு” (123) அகப்பாட்டு வண்ணம்: இறுதியடி இடையே வரும் அடிபோல் நிற்பது.அதாவது முடியாத் தன்மையான் முடிந்ததாய் அமையும். எ-டு: “மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின்” (1593) (நுதலிய நெறியின இருவகை இயல எனமுடிக்க) புறப்பாட்டு வண்ணம்: முடிந்தது போல் தோன்றி முடியாததாய் வருவது புறப்பாட்டு வண்ணம். “இன்னா வைகல் வாரா முன்னே செய்நீ முன்னிய வினையே முந்நீர் வைப்பகம் முழுதுடன் துறந்தே” -ஈற்றயலடி முடிந்தது போன்று முடியாத தாயிற்று (பேரா). ஒழுகு வண்ணம்: ஒழுகிய இனிய ஓசையால் வருவது ஒழுகு வண்ணம். “உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும் மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியும்”... (106) ஒரூஉ வண்ணம்: கூறப்பட்ட வண்ண வகையுள் எதனையும் சாராது வண்ணம் நீங்கிச் செந்தொடையாக வருவது. “சிறப்பொடு வருவழி யியற்கை யாகும்” (349) எண்ணுவண்ணம்: ஒன்று இரண்டு என்பன முதலாக எண்ணுவகை பொருந்தி வருவது எண்ணுவண்ணம். எ-டு : “நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்” (1589) அகைப்பு வண்ணம்: அறுத்து அறுத்து வருவது அகைப்பு வண்ணம். அகைத்தல் = அறுத்தல். “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே.....” (1526) தூங்கல்வண்ணம்: வஞ்சியுரிச் சீராகிய கனிச்சீர் மிகுந்து வருவது தூங்கல் வண்ணம். தூங்கல் = அசைநடையது. “முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலவெண்குடை” (சிலம்பு) ஏந்தல் வண்ணம்: சொல்லிய சொல்லினாலே சொல்லப்பட்டது சிறக்க வருவது ஏந்தல் வண்ணம். “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்” (குறள். 751) உருட்டு வண்ணம்: உருளை ஓடும் ஓட்டம் போலச் சொல் ஓட வருவது உருட்டு வண்ணம். உருளற்கு ஏற்ப நெடிலும் வல்லொற்றும் பெரிதும் வாராது தொடுத்தல் வேண்டும். எ-டு: “எரியுரு வுறழ விலவ மலர” (கலி.33) முடுகு வண்ணம்: உருட்டு வண்ணம் போன்று, நாற்சீரடியின் மிக்க அடியில் வருவது முடுகுவண்ணம். எ-டு: “நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ” (கலித். 39) வண்ணங்கள் இவை என எண்ணி அவற்றை நிரற்பட உரைத்து - நிறைவில், “வண்ணந் தாமே இவையென மொழிப” என முடித்தார் (1490). வண்ண இயற்கை: வண்ணங்கள் இருபதும் குறுங்கணக்கு, நெடுங் கணக்கு என்னும் ‘அரிவரி’ வரிசையிலேயே இயல்பாக அமைத்துக் கொண்ட அருமை வியக்கத்தக்கதாம். பெயர்களைப் பாருங்களேன்: பா அ வண்ணம், நூற்பா வண்ணம், தாஅ வண்ணம் - இடையிடல்தானே தாவுதல்; வல்லிசை, மெல்லிசை, இயைபு ஆகிய மூன்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் வருதல் தானே. இனி, அளபெடை வண்ணம் சீரிய ஓசை நீட்டம் கருதியது அல்லவோ! நெடுஞ்சீர் குறுஞ்சீர், சித்திரம் நலிபு என்பவை முறையே நெடில், குறில், நெடிலும் குறிலும், ஆய்தம் என்பவை மிகுந்தவைதாமே. அகப்பாட்டு புறப்பாட்டு வண்ணங்கள் முடிநிலை பற்றியவை. ஒழுகு வண்ணம் ஆற்றுநீர் ஓட்டம் போல்வது; ஒரூஉ, வண்ணமில்லா வனப் பினது; எண்ணுவண்ணம் எண்ணிக்கை சுட்டிவருவது. தூங்கல், ஏந்தல், உருட்டு, முடுகு என்பவை முறையே அசைந்துவருதல், பல்கால் வருதல், உருண்டுவருதல் ஆகிய நடைகுறித்தவை. இவையெல்லாம் செயற்கை யில்லா இயற்கை யமைந்தவை. இனி, இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் எங்கிருந்து காட்டப்பட்டன என்பதைப் பாருங்கள். 14 வண்ணங்களுக்குத் தொல்காப்பியத்தில் இருந்தே எடுத்துக்காட்டுகள் காட்டப்பட்டுள. ஏந்தல் வண்ணத்திற்கு “இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு, இன்னென் சாரியை இன்மை வேண்டும்” என்பதும் (131) உருட்டு வண்ணத்திற்கு, “உளவென மொழிப இசையொடு சிவணிய” என்பதும் (33) எடுத்துக்காட்டு ஆகலாம். அவ்வா றாயின், நான்கு வண்ணங்களுக்கு மட்டுமே எடுத்துக்காட்டுக் காட்ட இயலாதாயிற்று. ஏன்? ஒற்றளபெடை வருதல் இலக்கிய வழக்கிலும் அரிதானது. புறப்பாட்டு வண்ணம் நூற்பாவிற்கு ஏலாதது. தூங்கல் வண்ணம் வஞ்சியடி யுடையது; நூற்பாவோ அகவலடி யுடையது. இனி முடுகு வண்ணமோ நாற்சீர் அடியின் மிக்க அடிக்கண் வருவது; நூற்பா அடிக்குப் பொருந்தாதது. இன்னவற்றாலேயே, இவ்வண்ணங்களுக்கு இலக்கணம் கூறிய தொல்காப்பியத்திலே இலக்கியமும் காட்ட இயலாததாயிற்று. வண்ணம் பாடிய இசை நூலும் அன்று; காப்பியமும் அன்று; தொல்காப்பியம். இலக்கணம் கூற வந்தநூல் இவ்வளவும் கூறியது செயற்கரிய சீர்மையது அன்றோ! ஓர் இலக்கணத்தை இத்தகு சுவையும் நயமும் கமழ இயற்றல் எளிமையாமா என்பதை உணர்ந்து போற்றுவதற்கே நாம் எடுத்துக் கூறுவதிதுவாம். தொல்காப்பியர் அரிய படைப்பாளி மட்டுமல்லர்; மிக இனிய துய்ப்பாளியுமாவர் என்பதன் சான்றுகளுள் ஈதொன்று என்க. வனப்பு வனப்பு எனச் சொல்லப்பட்ட செய்யுள் உறுப்புக் கூறும் ஆசிரியர், அம்மை முதலாகக் கூறுகிறார். வனப்பு = இயற்கை எழில் (வனம் ழூ வனப்பு). “கைபுனைந் தியற்றாக் கவின்பெரு வனப்பு” என்பது முருகு. அம்மை: “அம்மை தானே அடிநிமிர்வு இன்றே” (1491) என்கிறார். நிமிர்தல் = மிகுதல். அடிமிகாமல் சுருங்கச் சொல்வதே அம்மை என்னும் அழகாகும். பத்துவகை அழகுகளில் சுருங்கச் சொல்லல் என்பதே முதல் அழகு (நன்). “அம்ம கேட்பிக்கும்” (61) என்பது போதுமே. அழகு : செய்யுட் சொல்லாகிய உரிச்சொல் மிகுதியாக வர இயற்றுவது அழகு என்னும் வனப்பாகும். எ-டு : “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” - (813) தொன்மை : இடை இடையே உரைநடை வரப் பழமையாக வழங்கிவரும் பொருளைக் கூறும் செய்யுள்களை யுடையது தொன்மை. இதற்குத் ‘தகடூர் யாத்திரை’யைக் கூறுவர். சில பாடல்களை யன்றி நூல் எய்திற்றில்லை. எய்திய பாடல்கள் எம்மால் உரைகண்டு நூலாக்கம் பெற்றுளது. பெருந்தேவனார் பாரதம் உரையிடை இட்டது. தோல் : ‘இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் பரந்தமொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர்” என்னும் இந் நூற்பாவின் முதல் இலக்கணத்திற்கு இம் முதல் அடியே எடுத்துக்காட்டு. பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகுவதற்குச் சான்று பத்துப்பாட்டு. விருந்து : விருந்து என்பது புதிதாகப் பாடும் நூல் வகையைக் குறிக்கும். புதுயாப்பினது என்பதுமாம். முத்தொள்ளாயிரம், அந்தாதி, கலம்பகம் என்பவற்றை எடுத்துக்காட்டுவார் பேராசிரியர். இயைபு: ‘ஞ்’ என்னும் எழுத்து முதல் ‘ன்’ என்னும் எழுத்து ஈறாக வரும் புள்ளி எழுத்துக்களைக் கொண்டு முடியும் பாடல்களையுடைய நூல் இயைபு இலக்கணம் உடையதாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை என்பன இவ்வகையின. ‘என்’ என முடிந்தவை. புலன் : எளிய வழக்குச் சொற்களைக் கொண்டு ஓடிய ஓட்டத்தில் பொருள் புரியுமாறு பாடப்படுவது புலன் என்னும் வனப்பாகும். எ-டு : குடும்ப விளக்கு; இருண்ட வீடு; பாஞ்சாலி சபதம். இழைபு : வல்லொற்று வாராது குறளடி முதலாக ஏறிய அடிகள் பலவும் வரத்தொடுப்பது இழைபு வனப்பு எனப்படும். இதுவும் புலன் போன்ற பொருள் புலப்பாடு உடையதாதல் வேண்டும். எ-டு : கலியும், பரிபாடலும் என்பார் பேராசிரியர். வனப்பு அமைக. இனிப் ‘பா’ பற்றிச் சில காணலாம். பா, உரைப்பா பா = பாட்டு. இப் பாட்டினைத் தொல்காப்பியத்தை உள்வாங்கி, ஏட்டுப்பாட்டு எனவும் நாட்டுப்பாட்டு எனவும் இரு வகையாகக் காணலாம். ஏட்டுப்பாட்டு என்பது அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபா, அங்கதப்பா, தேவபாணி என்பனவாம். நாட்டுப்பாட்டு என்பது, உரைப்பாட்டு, பிசிப்பாட்டு, முதுமொழிப் பாட்டு, மந்திரப்பாட்டு, குறிப்புப்பாட்டு, பண்ணத்தி என்பவை. அகவல் : அகவல் முதலாகிய பாக்கள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளும் கூறுவனவாக வரும். அவற்றுக்குச் சீர் வரை யறை அடிவரையறை முடிநிலை வரையறை என்பவையும் உண்டு. ஆசிரியப்பா நால்வகைப்படும். அவை நேரிசை, நிலைமண்டிலம், அடிமறிமண்டலம், இணைக்குறள் என்பன. இறுதியடிக்கு முன்னடி முச்சீராய் வருவது நேரிசை. எல்லா அடிகளும் நாற் சீராய் வருவது, நிலைமண்டிலம். எந்த அடியை எந்த அடியாக மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாதது, அடிமறி மண்டிலம். முதலடியும், இறுதியடியும் நாற்சீரடியாய் இருக்க இடையடிகள் சில இருசீர் முச்சீர் அடிகளாகவும் வருதல், இணைக்குறள். ஆசிரியப்பா இது சங்கநாளில் பெருஞ் செல்வாக்குடையதாக விளங்கியது. மேற்கணக்கு எனப்படும் பாட்டு, தொகையாகிய பதினெட்டு நூல்களில் கலித்தொகை, பரிபாடல் என்னும் இரண்டும் தவிர்ந்த பதினாறு நூல்களும் அகவலால் அமைந்தவையே. இந் நாள்வரை அதன் செல்வாக்குப் பெருகியே உள்ளது. மூன்றடிச் சிறுமை ஆயிரம் அடிப்பெருமை எனப்பட்ட அப் பா ஆயிரம் அடியைத் தாண்டியும் வள்ளலாரால் பாடப்பட்டது. வெண்பா : வெண்பா ஈரடிச் சிறுமையும் பாடுவோர் எண்ணத் திற்குத் தகுந்த பெருமையும் உடையது. கலித்தொகையில் கலிவெண்பாவும் உண்டு. குறள்வெண்பா, குறுவெண்பாட்டு எனப்படும். அதனின் நீண்ட வெண்பா நெடுவெண்பாட்டு எனப்படும். குறுவெண்பாவுக்குக் குறள் நூலும், மற்றை வெண்பாவுக்குப் புறப்பொருள் வெண்பாமாலையும் நமக்குக் கிடைத்த தனி நூல்கள். பாரத வெண்பா பெருந்தேவனார் பெயரால் விளங்குகிறது. உரையிடையிட்ட வெண்பாவுடையது. 830 பாடல்கள் அளவில் முன்னும் பின்னும் இல்லாமல் கிடைத்து வெளிப்பட் டுளது. அது பிற்காலத்தே உரையிடையிட்ட தோற்றமுடையது ஆயிற்றுப் போலும்! வெண்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா எனப் பல வகைகளை யுடையது. வெண்பாப் பாடுதலில் பின்னாளில் பெரும் புகழோடு விளங்கியவர் புகழேந்தியார். அவர் கொண்டவை நேரிசை வெண்பா. நான்கடியான் வருவது அது. மூவடியால் வருவது சிந்தியல். இரண்டாமடியில் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை; பன்னீரடி வரையுடையது பஃறொடை (பல தொடை); அதனின் நீண்டது கலிவெண்பா. கலிப்பா : கலிப்பா பல உறுப்புகளையுடையது. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம், கொச்சகம், வண்ணகம் என்பன அதன் உறுப்புகள். கொச்சகம் சிலவாகவும், பலவாகவும் வரும். பின்வந்த தாழிசை, துறை, விருத்தம் என்னும் இனப்பாவிற்குத் ‘தாய்ப்பா’ கலிப்பா. தரவு - முற்படத் தந்து நிறுத்துவது. தாழிசை-தாழமமைந்த ஓசையுடையது; ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது. சுரிதகம் - முடிநிலை. அம்போத ரங்கம் - நீரலை போல்வது; கரைசாரச்சாரச் சுருங்கி வரும் அலைபோலச் சுருங்கிவரும் அடிகளையுடையது. கொச்சகம் என்பது கொய்சகம். மகளிர் உடுத்தும் உடை இடையில் மடிப்புடன் வருவதுபோல் வருவது. இன்றும் ‘கொசுவம்’ என வழங்கப்படுவது. விரிவுமிக்கதும் கூற்றும் மாற்றமுமாகத் தொடர வாய்த்ததும், இசை கூட்டிப் பாட வாய்ப்பதும் இது. காலப்போக் கில் அருகி வருவது இப்பா. வண்ணகம் இசை நலம்மிக்கது. வஞ்சிப்பா : வஞ்சிப்பா குறளடி வஞ்சி, சிந்தியல் வஞ்சி என இருவகையது. முன்னது இரு சீராலும் பின்னது முச்சீராலும் வருவது. வஞ்சிப்பாவும் பாடுதல் அரிதாயிற்று. அன்றியும் அப் பாவால் அமைந்த நூல் ஒன்றுதானும் இல்லை. கிடைத்தவை தனித்த பாடல்களேயாம். பரிபா : பரிபா என்பது கலிப்பாவைப் போல் பல உறுப்புகளை யுடையது (1377). 140 அடி வரை நீள்வது; 25 அடிச் சிறுமையது; அருவியும் ஆறும் பரியும் கரியும் கீரியும் முயலும் நடையிடுவது போன்ற நடையது. பண்வகுத்துப் பாடப்பட்ட பெருமைக்குரியது. இந் நாளில் அதனைப் பாடுவார் அரியர் ஆயினர். அந் நாளில் ஒரு நூலாவது கிளர்ந்தது. அதன் பெயர் பரிபாடல். 70 பரிபாடல்களில் முற்றாகக் கிடைத்தவை 22 மட்டுமே. மருட்பா : மருட்பா வெண்பாமுன்னாகவும் அகவல் பின்னாகவும் கொண்ட மயக்கப்பா என்பது முன்னரே கண்டுளோம். தனிநூலாக்கம் மருட்பா பெற்றதில்லை. அங்கதம் : அங்கதப்பாவும், தேவபாணிப் பாவும் பொருள் வழியால் பெயர் பெற்றவை. தனியாப்புப் பெற்றவை அல்ல. அங்கு = வளைவு. சொல்வதை உள்ளது உள்ளபடி நேருக்குநேர் உள்ளவாறு கூறாமல், புகழாகவும் வசையாகவும் பாடுவது அங்கதமாகும். அங்கதம், செம்பொருள் பழிகரப்பு (பழியை மறைத்துக் கூறல்) என இருவகைப்படும் (1381). செம்பொருள் என்பது வசையை வெளிப்படக் கூறும். வசையை மறைத்துக் கூறுதல் பழிகரப்பு. தேவபாணி என்பது, இறை வழுத்துப் பாடல். அது பாடல் அளவால் பெருந்தேவபாணி, சிறு தேவபாணி என இருவகைப்படும் (1395) கலி வகையைச் சேர்ந்தது. பாடுபுகழ் : சங்க நாளில் “இன்னது பாட இவர்” என்னும் புகழ் பெற்றார் இருந்தனர். குறிஞ்சிக்குக் கபிலன்; முல்லைக்கு நப்பூதன்; மருதம் மருதனிலநாகன்; நெய்தல் நல்லந்துவன்; பாலை பெருங்கடுங்கோ. இவர் இத் திணைகளைப் பாடுதலில் வல்லார். பரணன் வரலாறு பாடுதலில் வல்லான். பின்னாளிலும் ‘இது பாட இவர் வல்லார்’ எனப் புகழ் மரபு ஒன்றும் கிளர்ந்தது. இனி, அடி வரையறை இல்லாத உரை முதலியவற்றை எண்ணு வோம். இவை பொதுமக்கள் புலமக்களாய்த் தமிழுக்கு வழங்கிய கொடையாகும். உரைப்பா : உரைப்பா நான்கு வகை என்பதை, “பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பா இன்று எழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் உரைவகை நடையே நான்கென மொழிப” என்பார் ஆசிரியர் (1429). இதில் வரும் உரைவகை நடை என்பதே ‘உரைநடை’ என்னும் வழக்குக்கு மூலமாகும். பாட்டின் இடையே வைக்கப்பட்ட பொருட்குறிப்பு உரை, பாடல் இல்லாமலே சொல்லப்பட்ட உரை, பொருளொடு பொருந்தாத பொய் (புனைவு) உரை, பொருளொடு பொருந்திய நகைச்சுவை உரை என நால்வகை உரைநடைகளும் பண்டுதொட்டே வழங்குதலைக் குறிக்கிறார் ஆசிரியர். ஆதலால், பண்டை உரைநடை வழக்குக்குன்றி மீட்டெடுப்புச் செய்யப்பட்டது பின்னே என்பதை உணரலாம். மெய்ப்பாடுகளுள் முதற்கண் வைக்கப்பட்டது ‘நகைச்’சுவை. அச் சுவை மிக ஆக்கப்பட்ட உரைநடை நூல்கள், அந் நாளே இருந்தன என்பதையும் இந் நூற்பாவால் உணரலாம். பிசி : பிசி என்பது ‘புதிர்’ என இந் நாளில் வழங்குகின்றது. ‘விடுகதை’ எனவும் படுகிறது. ஒப்பமைந்த உவமை, ஒன்று சொல்ல ஒன்று தோன்றுவதாம் குறிப்பு என இருவகையாகப் பிசிவரும். “அச்சுப் போலே பூப்பூக்கும் அமலே என்னக் காய்காய்க்கும்.” இது, உவமை பற்றி வந்தது என்பார் இளம்பூரணர். ‘பிறை கவ்வி மலை நடக்கும்’ என்றுரைத்து யானையைச் சுட்டுவார் பேராசிரியர். “நீராடான், பார்ப்பான் நிறம் செய்யான் நீராடின் ஊராடு நீரிற்காக் கை” என்று பின்னதற்கு எடுத்துக்காட்டும் தருவார் அவர். இது நெருப்பு. முதுமொழி : நுண்மை - சுருக்கம் - விளக்கம் - எளிமை என்பவை விளங்கக் கருதிய பொருளைத் தருவது முதுமொழியாகும். “கன்றுக் குட்டிமேயக் கழுதைக் குட்டியைக் காதறுத்தான்” என்பதும் “பழிஓரிடம்; பாவம் ஓரிடம்” என்னும் பழமொழியும் அறிக. மந்திரம் : “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்பது இதன் இலக்கணம் (1434). சொல்லிய சொல், வெல்லும் சொல்லாக அமையவல்லார் ஆணை மொழியே மந்திரம் ஆகும். ‘தானே’ என்று பிரித்தான், இவை தமிழ் மந்திரம் என்பதற்கு என்றார் பேராசிரியர். இதற்கு அவர் காட்டும் பாட்டுகளும் விளக்கமும்: “ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தால் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையால் செந்தமிழே தீர்க்க சுவா” எனவும், “முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - அரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தம் - சேர்க சுவா” எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம் என்பது. குறிப்பு : குறிப்பு என்பது எழுத்தொடும் சொல்லொடும் பொருந் தாது, புறத்தால் பொருள் அறியுமாறு பாவால் கூறுவது. பிசிக்கும் இதற்கும் வேறுபாடு அது உரைப்பாட்டாய் வருவது; இது பாவாய் வருவது என்பது. “குடத்தலையார் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையின் அடக்கிய மூக்கின ராம்” என்பது பேராசிரியர் காட்டும் எடுத்துக்காட்டு. இது, யானை. பண்ணத்தி : பாட்டிடையே அமைந்ததாய்ப் பாட்டாகி வருவது பண்ணத்தி (1436). நத்துதல் விரும்புதல். பண் நத்தி என்பது பண்ணத்தி. சிலம்பில் பாட்டின் இடையே பாட்டென எதுகை மோனை இயைய நடையிடும் உரைப்பாட்டு மடை இஃதாகும். இசைநய எடுப்பொடும் பாடற்கும் ஏற்றதாம். நிறைவு “சொல்லப்பட்ட இலக்கணம் பிழைத்தது போலத் தோன்றினும், தோன்றக்கூடும். அதனை வந்ததொன்றைக் கொண்டு மாறுபாடு இல்லாமல் அமைத்துக் கொள்ளுதல் தெளிந்த அறிவினர் கடமை” என்று இச் செய்யுளியலை நிறைவிக்கிறார் ஆசிரியர் (1499). மரபியல் வழக்கு : “வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லானே” (1592) என வழக்கு என்பதைக் கூறுகிறார். “பண்புடையார்ப் பட்டுண் டுலகம்” என்பது இது. சட்டத்தின் ஆளுகையினும் சான்றோர் காட்டும் சால்பு ஆளுகையே உலகை - உலகியலைக் காக்கும் என்பதன் குறிப்பு இதுவாம். மரபு : சான்றோரும் அறிவரும் கண்ட வழக்குகளே மரபு ஆகும். மரபு மாற்றருஞ் சிறப்பினது என்கிறார். ஏனெனில், மரபுமாறின் பிறிது பிறிதாகிப் போகும் (1500, 1591). மரபு என்னும் சொல்லே, அதன் பொருள் விளக்கமாக உள்ளது. ஒரு மரத்தின் வித்து மீண்டும் மரமாகி வித்துத் தந்து, வழிவழி மாறாமை போல, மரபு என்பது மாறாதது; மாற்றக் கூடாதது; மாற்றின் பொருட்கேடாகும் என்பவற்றை எண்ணல் நலம். இளமை : மரபியலில் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என்பவற்றைக் குறிப்பிட்டு முறையே அவற்றை விளக்குகிறார். தொல்காப்பியர் கூறும் இளமைப் பெயர்கள் பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்பவை. ஆண்மை : ஆண்பாற் பெயர்களாக ஏன்றுகூழறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பவற்றைக் குறிக்கிறார். பெண்மை : பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பவை பெண்பாற் பெயர் என்கிறார். இளமைப் பெயர்களும், அவற்றைப் பெறுவனவும் பார்ப்பு - பறவை, தவழ்பவை, குரங்கு. பறழ் - மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. குட்டி - மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. குருளை - நாய், பன்றி, புலி, முயல், நரி. கன்று - யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). பிள்ளை - பறவை, தவழ்பவை, மூங்கா, வெருகு, எலி, அணில், பன்றி, புலி, முயல், குரங்கு, ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). மக - குரங்கு, மக்கள். மறி - ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய். குழவி - குஞ்சரம், ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம், மக்கள், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). போத்து - ஓரறிவு (நெல் புல் அல்லாதவை). இவ் விளமைப் பெயர் முதல் அடங்கலில் சுட்டப்படாதது : ஆண்பாற் பெயர்களுள் அமைந்தது. “குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே” என மக்கள் இளமைப் பெயர் இரண்டே குறிக்கிறார். ‘இரண்டு அல்லவை கிளவ (சொல்ல) அல்ல’ என்றும் கூறுகிறார். ஆய்வு பிள்ளை என்னும் பெயர் பெருவழக்காக இந் நாள் உள்ளது. ஆண்பிள்ளை, பெண்பிள்ளை, ஆண்பிள்ளைப்பிள்ளை (ஆம்பிளப் பிள்ளை), பெண்பிள்ளைப் பிள்ளை (பொம்பிளப் பிள்ளை) எனவும் வழங்குகின்றன. ‘பிள்ளைத்தமிழ்’ இலக்கியம் பெருவரவினது. ‘பிள்ளை யாண்டான்’ என்பதும் வழக்கு. இவ்வாறு வழக்கு உள்ளமையால், “முடிய வந்த அவ்வழக்கு உண்மையின் கடிய லாகா கடனறிந் தோர்க்கே” என்னும் ஆணை கொண்டு நாம் இணைத்துக்கொள்ள வேண்டும் (1568). குழந்தை என்னும் பொருளில் ‘பாப்பா’ என்பது பெருவழக்காக உள்ளது. பார்ப்பு, பறவை இளமைப் பெயர். அப் பெயர் பாப்பு - பாப்பா என ஆயது. பெண் குழந்தை கண்‘பாவை’ எனப் பெற்றோரால் பேணப் படுவதால் ‘பாவை’ எனப்பட்டது. பார்வை ழூ பாவை. பாவை நோன்பு, பாவை ஆட்டம் என்பன வழக்கில் உள்ளன. இஞ்சி, மஞ்சள் முளைகள் பழநாள் தொட்டுப் ‘பாவை’ என வழங்கப்பட்டன. அப் பெயர், இப் பட்டியில் இடம்பெறவில்லை. குருளை ‘சிங்கக் குருளை’ எனக் கம்பரால் ஆளப்படுகின்றது. சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது அது. ‘குட்டி’ என்னும் பெயர் பெண் மக்கள் இளமைப் பெயராக வழங்கப்படுதல் எவரும் அறிந்தது. அது போல் ‘குட்டன்’ ஆண்பாலுக்கு வழங்கப்படுதல் நாலாயிரப் பனுவலில் உண்டு. ‘என் மாணிக்கக் குட்டன்’ என்பது அது. இப் பெயர்கள் சேரலத்தில் பெருவழக்காக உள்ளவை. குட்டியப்பா சிற்றப்பா; குட்டிப்பல் சிறியபல்; குட்டி சிறுமை ஒட்டு. இவ்வாறு இவ் வியலை ஆய்தல் பெரும் பயன் செய்யும். இவ் வியலில் விடுபாடு உண்டு; இடைப்பாடு உண்டு; முன்பின் தள்ளல் உண்டு; பொருந்தாச் சேர்ப்பும் உண்டு. மரபு காக்கவென்றே ஆக்கப் பட்ட அருமையமைந்த இவ் வியலில் உள்ள மரபுக் கேடுகள் பலப்பல. அவை தனியே ஆயப்பட்டுத் தனி நூலாக்கம் பெறுகின்றன, இங்கு இவ் வாழ்வியல் நோக்குக்கு ஏற்ற அளவில், குறிப்புகள் இடம்பெறு கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி மேலே செல்லலாம். “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையலது இலவே” என்று முடித்த ஆசிரியர், ஓரறிவு முதல் ஆறறிவு வரை அமைந்த உயிரிகளைப் பற்றிக் கூறுகிறார். இருபதாம் நூற்றாண்டில், ‘செடி கொடிகளுக்கு உயிர் உண்டு’ என்பதை ஆய்ந்து உலகப் புகழ் பெற்றார் சர் சகதீச சந்திரபோசு. ஆனால், அவர்க்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியரால் காணப்பட்ட அவ் வுண்மை, தமிழரால் அறிவிக்கப்படாமலும், ஆராய்ந்து நிறுவப்படாமலும் அடங்கிக் கிடப்பதாயிற்று. அறிவியல் விளக்கமாக அமைந்த இப் பகுதியை இன்றேனும் தமிழ அறிவியலார் பயன்கொள்ளல் கட்டாயத் தேவை. தமிழில் அறிவியல் சிறந்து விளங்கியமையை உலகுக்கு எடுத்துக்காட்டலும், தமிழ் மரபில் அறிவியல் நூல் யாத்தலும் அவர்தம் கடமையாம். இதற்கு ஓர் அறிமுகமாக எம்மால் ‘தமிழில் அறிவியல்’ என்றோர் சுவடி வெளிப்படுத்தப்பட்டுளதாம். அறிவுவகை அறிவியல் எவ்வளவு எளிமையாய் இனிமையாய் உயிரோட்டம் பெறுகிறது என்பதை இந் நூற்பாக்களைக் கொண்டு தெளிக. ‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே; இரண்டறி வதுவே அதனொடு நாவே; மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே; நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே; ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே; ஆறறி வதுவே அவற்றொடு மனனே; நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” (1526) இவ்வாறு அறிவு வகை கூறியவர், அவ் வறிவு உயிர்களை எடுத்துக் காட்டுகிறார். “புல்லும் மரனும் ஓரறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” “நந்தும் முரளும் ஈரறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” “சிதலும் என்றவாறும்பும் மூவறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” “நண்டும் தும்பியும் நான்கறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” “மாவும் மாக்களும் ஐயறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” “மக்கள் தாமே ஆறறி வுயிரே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (1527 - 1532) எமக்கு முன்னரே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்று முந்தை அறிவரைச் சுட்டினார் ஆசிரியர். புல்லும் மரனும் என்றால் பூண்டு, செடி, கொடி என்பன அக் கிளைப் பிறப்பு. அவ்வாறே பிறவும் கொள்க. ஆய்வு ஐந்து வகை, உயிரிகளையும் சுட்டும் நூற்பாக்களின் அமைதி கண்டு, ஆறாம் அறிவு உயிரியைச் சுட்டும் நூற்பாவை மீண்டும் காண்க. “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்னும் இந் நூற்பா, இவ் வோரடியால் முடிந்து விடவில்லையா? ஐந்து நூற்பாக்களிலும் ‘பிறவும் உளவே’ என்பதைப் படியெடுத்த கை, ஆறாவதும் அப்படியே எடுத்துவிட்டது என்பது புலப்படவில்லையா? மக்களைச் சுட்டிய அவர் மக்கள் தாமே என்று உறுதிப்படுத்தி யமை புலப்படவில்லையா. பிறரைச் சுட்டவேண்டிக் கூறினார் எனின், அடுத்த அடியைப் ‘பிறரும் உளரே அக்கிளைப் பிறப்பர்’ என்றல்லவோ யாத்திருப்பார்? இதன் விளைவு என்ன? “மக்கள் தேவர் நரகர் உயர்திணை” என நன்னூலாரை நூற்பா யாக்க வைத்ததென்க. ‘தேவரும் நரகரும்’ வடவேங்கடம் தென்குமரி ஆயிடை வாழ்நரா? செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தரா? காழ் : ஓரறிவு முதலாகக் கூறிய ஆசிரியர் புறக்காழ், அகக்காழ் (வயிரம்), தோடு, இலை, காய் இன்னவற்றைக் கூறவேண்டுமானால் எங்கே கூறுவார்? கூறியிருப்பார்! இவ் வுயிரிகளைத் தொடர்ந்து தானே கூறி யிருப்பார். வைப்பு முறை தவறா வன்பிடியராகிய அவர் தம் ‘கட்டமைதி’ அறிந்தார், இவ் விட்டமைதியைத் தெளிவாக அறிவர். 1532ஆம் நூற்பாவில் இருந்து 1585ஆம் நூற்பா வரை ‘இடைப் பிற வர’ நூல் யாப்பாரா? அவர் வரன்முறைப்படியே ஆண்பாற் பெயர் பெண்பாற் பெயர் இவற்றை முடித்து, அந்தணர், அரசர், வைசியர், வேளாளர், மாந்தர் என்பார் பற்றி 1570 முதல் 1584 வரை கூறுகிறார். பின்னர் ஓரறிவுயிர் பற்றித் தொடர்கிறார். இவை அவர் வைப்பு முறை எனலாமா? “எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல்மிதக்கும்” என்பது பழமொழி. இடைச்சேர்ப்பின் உண்மை வெளிப்பாடு இஃதென்க. இதனைப் பற்றி அப் பகுதியில் காணலாம். ஆண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும் ஏன்றுகூழறு - பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம், சுறா. ஏற்றை - எல்லா ஆணுக்கும் பொது. ஒருத்தல் - புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை. களிறு - வேழம், கேழல். சே - எருது. சேவல் - மயிலலாப் பறவை, குதிரை. இரலை - புல்வாய். கலை - புல்வாய், உழை, முசு. மோத்தை - ஆடு. தகர் - ஆடு. உதன் - ஆடு. அப்பர் - ஆடு. போத்து - பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ்வன, மயில், எழால். கண்டி - எருமை. கடுவன் - குரங்கு. பெண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும் பேடை - கோழி பெடை - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை. பெட்டை - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை. பெண் - மக்கள். பிணா - மக்கள். மூடு - ஆடு. நாகு - எருமை, மரை, பெற்றம், நந்து. கடமை - ஆடு. அளகு - கோழி, கூகை, மயில். மந்தி - குரங்கு, முசு, ஊகம். பாட்டி - பன்றி, நாய், நரி. பிணை - புல்வாய், நவ்வி, உழை, கவரி. பிணவு - பன்றி, புல்வாய், நாய். பிணவல் - பன்றி, புல்வாய், நாய். பிடி - யானை. ஆ - பெற்றம், எருமை, மரை. இவற்றைக் கூறிய ஆசிரியர், கூகையைக் கோட்டான் என்பதும், கிளியைத் தத்தை என்பதும், வெருகைப் பூசை என்பதும், பன்றியை ஏனம் என்பதும் பிறவும் சுட்டுகின்றார். இவ்வளவும் கூறியபின், “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என எடுத்த பொருளை முடித்ததைக் கூறுகிறார் (1569) ஒட்டுவேலை இதன் மேலே தொடர்கிறது நூற்பா: “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” (1570) மேலே அரசர்க்குரியவை. வைசிகற்குரியவை, வேளாண் மாந்தர்க் குரியவை இவை இவை எனக் கூறுகிறார். ‘இழிந்தோர்’ என்று நாலா மவரைச் சுட்டுகிறார். இவற்றை முடித்து, ‘புறக்காழ்’ தொடங்குகிறார். இவ்வாறு தொல்காப்பியர் அமைத்திருத்தல் இயலாது என்பதை அவர்தம் ஓரியல் ஓதினாரும் அறிவர். இவ் வியலிலேயே ‘மாற்றருஞ் சிறப்பின் மரபு’ என்று தொடங்கி இளமைப் பெயர், ஆண்பாற்பெயர். பெண்பாற் பெயர் இன்னவை எனக் கூறினார். இளமைப் பெயர் இவை இவை பெறுமென (1503 - 1524) உரைத்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையலது இலவே” என முடித்தார் (1525). அதன்மேல் ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்களை ஓதினார் (1526 - 1532). அந் நூற்பாவில், ‘மக்கள் தாமே ஆறறிவுயிரே’ என்று கூறி ஆண்பாற் பெயரை (1533 - 1549) நிறைத்து, “ஆண்பால் எல்லாம் ஆண் எனற் குரிய; பெண்பால் எல்லாம் பெண் எனற் குரிய; காண்ப அவைஅவை அப்பா லான” என்றார் (1550). அதன்மேல் பெண்பாற் பெயரைக் கூறத் தொடங்கி, “பிடியென் பெண்பெயர் யானை மேற்றே” (1551) எனக்கொண்டு “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என முடித்தார் (1569). கூறிய இவை ‘மாற்றருஞ் சிறப்பின் மரபு’கள் என்பதில் தடையில்லை. ஆனால், நூலே கரகம், படையும் கொடியும், கண்ணி யும் தாரும், வாணிகம் வேளாண் என்பவை மாற்றருஞ் சிறப்பினவா? மாறுவது மரபா? இளமை, ஆண்மை, பெண்மை என்பவை தற்கிழமை - தன் பிறப்புரிமை - கொண்டவை. பின்னே கூறியவையோ ‘எடுத்தால் உண்டு. விடுத்தால் இல்லை. இவை பிறவியுரிமை எனின், இளமை போலவோ, ஆண்மை போலவோ, பெண்மை போலவோ பிறவியொடு வந்தவையா? எங்கேனும், பிறந்த பிறவி நூலொடும், படையொடும், குடை யொடும் ஏரொடும் பிறவொடும் பிறந்ததுண்டா? ஏன்? மானங்காக்கும் உடையொடு தானும் பிறந்ததுண்டா? மேல் தோல் - தற்கிழமை. உடை - பிறிதின் கிழமை. (கிழமை = உரிமை). கதை கட்ட வேண்டுமானால், கவசகுண்டலப் பிறப்புக் கூறிப்பொய்ப்பிக்கலாம். நடைமுறை ஆகுமா? இருதலை ஒட்டல், ஈருடல் ஒட்டல் நேரலாம். அவை பிறப்பொடு நேர்ந்தவை. இயற்கை இணைப்பு. செய்பொருள் தாய் வயிற்றினின்று வரும்போதே இருந்ததென்றால், சொல்பவர் சொன்னாலும் கேட்பவர்க்கு மதிவேண்டும் அல்லவோ! மரபொடு பொருந்தாத ஒட்டு ஒன்றை ஒட்டவே இயற்கையாய் அமைந்திருந்த தொடர்ச்சியை வெட்டி ஊடே தம் விருப்பத்தை ஒட்டி, வெட்டிய இயற்கைத் தொடர்பை மீண்டும் ஒட்டி வைத்தமை புலப்படுகின்றது. இவ்வொட்டு வேலை உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்பட்டது என்பது அவர்கள் உரை இப்பகுதிக்கும் உள்ளமையால் தெளிவாகும். அவர்கள் காலத்தில் வருணப்பிரிவுச் சிறுமை செய்தலும் ஏற்றலும் உணராவகையில் பழகிப்போய் விட்டன ஆகவேண்டும் அல்லது அவர்கள் ஒப்புக் கொண்டவை ஆகவேண்டும். ஏனெனில், அப் பிரிவை வலுவாக்கி உள்நாட்டிலும், மொழியாக்கம் செய்து வெளிநாட்டிலும் பரப்பிய ஆய்வுத் தோன்றல்கள், இருபதாம் நூற்றாண்டிலும் இருந் துள்ளமை கண்கூடாம் அல்லவோ! இனி, இடையொட்டுப் போகக் கடையொட்டையும் விட்டுவிட வில்லை. நூலின் மரபாக, “மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான” “மரபுநிலை திரியின் பிறிதுபிறி தாகும்” “வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான” “மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின” “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்” “வழிஎனப் படுவது அதன்வழித் தாகும்” “வழியின் நெறியே நால்வகைத் தாகும்” “தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே” இவ்வளவுடன் நூலை நிறைத்துப் புறனடை கூறல் முறைமை. ஆனால், சூத்திரம் காண்டிகை நூற்குற்றம் உத்தி என்பவை தொடர்கின்றன. வழிநூல் முதனூல் என்பவும் ஊடு புகுகின்றன. நூற் புறனடை என்னத்தக்க நூற்பா ஊடு கிடந்து பாடிழந்து நிற்கின்றது. அது, “நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிபில் சொல்லொடு தழாஅல் வேண்டும்” என்பதாகும் (1589). ஐம்பூதக் கலப்பே உலகம் என்பதை இந் நாள் அறிவியல் அறிஞர் மெய்ப்பிப்பதை அந்நாளே கூறிய அறிவர் தொல் காப்பியர் எனின் எத்தகைய நுண்ணியர் அவர். பின்னொட்டு இனி, இம் மரபியல் ஒட்டுப்பகுதியெனக் கருதும் நூற்பாக்களில் வரும் சொற்கள் மூன்று, சுட்டத் தக்கவை. ஒன்று : உத்தி. இரண்டு : காண்டிகை. மூன்று : வைசியன். உத்தியும் காண்டிகையும் இவ் வொட்டில் அன்றித் தொல் காப்பியத்தில் இடம்பெறாதவை வைசியனோ, மிகப்பிற்படு சொல். தொகை, பாட்டு, கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம் வரை இடம்பெறாதது. அச் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றமை இயல்பில்லை. செய்யுளியலில் நூல், சூத்திரம், இயல் முதலியவை இடம் பெற் றுள்ளன. அங்கே இடம் பெற்றிருக்க வேண்டும் மரபியலில் வரும் நூல், உரை முதலியன. தொல்காப்பியர் கூறும் சூத்திர இலக்கணம் : “சூத்திரம் தானே, ஆடி நிழலில் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே” என்பது (1425). இது செய்யுளியலில் உள்ளது. இனி, மரபியலில் வருவது, “மேற்கிளந் தெடுத்த யாப்பின் பொருளொடு சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை உரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகி துளக்கல் ஆகாத் துணைமை எய்தி அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப் பல்வகையானும் பயன்தெரி வுடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர்” என்பது (1600). இரண்டு நூற்பாக்களும் ஒருவர் நூற்றவை தாமா? முன்னே கூறியதைப் பின்னேயும் கூறியதும் ஏன்? கூறவேண்டியிருப்பின், ‘மேற் கிளந்தன்ன’, ‘முற்கிளந்தன்ன’ என்று கூறுதல் அன்றோ, ‘அவர் நூன் முறை’. ஆய்ஞர் முடிபு இத் தொல்காப்பிய ஆய்வில் தலைப்பட்ட புலமைச் செல்வர் இருவர் கருத்துகளை நாம் அறிதல் இம் மரபியல் ஒட்டின் தெளிவுக்கு உதவும். “மக்களை நிலத்தாற் பிரித்துரைப்பதன்றி நிறத்தால் (வருணத்தால்) பிரித்துப் பேசுதல் பழந்தமிழ் மரபன்றாம். அயலாரால் இந் நாட்டில் பிற்றை நாளில் புகுத்தப்பட்ட நால்வகைச் சாதிப்பிரிவு, தொன்மை வாய்ந்த தொல்காப்பிய மரபியலிலும் பிற்காலத்தவரால் நுழைத்து உரைக்கப்பட்டுள்ளது. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாக உயிர்களுக்கு வழங்கும் மரபுப் பெயர்களை விரித்துரைக்கும் இவ்வியலில் 1 முதல் 70 வரை அமைந்த நூற்பாக்கள் முற்கூறிய மரபினையே விரித்துரைப்பனவாம். இவற்றின் பின் 86 முதல் 90 வரையுள்ள நூற்பாக்களும் இம் மரபினையே தொடர்ந்து பேசுவன. ஒன்றற்கு ஒன்று நீங்காத தொடர்புடையனவாய் அமைந்த இச் சூத்திரங்களின் இடையே, “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதல், “அந்த ணாளர்க் கரசுவரை வின்றே” என்பது முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும், சிறிதும் தொடர்பற்ற நிலையிற் பின்வந்தவர் ஒருவரால் நுழைக்கப்பட்ட இடைச் செருகலாகும். இவை தொல்காப்பியனாரால் இயற்றப்பட்டன அல்ல என்பது சிறிது நூற் பயிற்சியுடையார்க்கும் தெளிவாகத் தோன்றும். இவ்வாறே இவ் வியலில் சேர்க்கப்பட்டனவாக ஐயுறுதற் குரியனவும் சில உள” என்பது முதுநூற் புலமையர் க. வெள்ளைவாரணனார் எழுத்து (தொல்காப்பியம் - தமிழிலக்கிய வரலாறு பக். 16). தமிழ்நெறிக் காவல் நூலாக எழுந்த தொல்காப்பியத்தை, ஆரிய வழி நூலாகக் காட்டி மாசு ஏற்றினோர் தம், மாசு துடைக்க என்றே தொல் காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்த்தும், விரிந்த ஆய்வுரை வரைந்தும், அதனாலேயே முனைவர் பட்டம் பெற்றும் தமிழ்ப் பெருங்காவலராகத் திகழ்ந்த பேராசிரியர் சி. இலக்குவனார், “மரபுகளை விளக்கும் இம் மரபியல், ஆசிரியர் கூறிப்போந்தவாறு நமக்குக் கிடைத்திலது என்று எண்ண வேண்டியுள்ளது. தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கட்டுக் கோப்புக்கு உட்படுத்திச் சொல்லும் ஆற்றல் பெற்றுள்ள ஆசிரியர் போக்குக்கேற்ப மரபியல் அமைந்திலது. முறைபிறழ்ந்து கிடக்கின்றது. ஆசிரியர் கருத்துக்குப் பொருந்தாத செய்திகள் கூறப்பட்டுள்ளன. இடைச்செருகல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு நிற்கின்றது” என்கிறார் (தொல்காப்பிய ஆராய்ச்சி. 249). மெய்ம்மை காண இப் பெருமக்கள் மேலாய்வு துணையாம் என்பதால் இவண் எடுத்துக்காட்டலாயிற்று. தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் தமிழர் வாழ்வியலே யன்றி அயலவர் வாழ்வியல் பற்றியதுமன்று; ஒட்டியதுமன்று என உறுதிப்படுத்துவோமாக. - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது இளம்பூரணர் உரையாசிரியர் உரையாசிரியர் என்ற அளவானே, `இளம்பூரணர்' என அறியப் பெறும் பெருமையுடையவர் இவர். - தொல்காப்பியத்திற்கு முதற்கண் உரை கண்டவராதலுடன், முதன்மையான உரை கண்டவரும் இவரே. - மற்றொரு சிறப்பு இவருரையே நூன் முழுமைக்கும் கிடைத்துள்ளமை. - உரை யாசிரியர் புலமை நலத்தையும், பேரருள் பேருள்ளத்தையும், உரையெழுது தற்கே தம் தவவாழ்வைச் செலவிட்ட தமிழ்ப்பற்றையும் எத்துணை - விரித்துச் சொல்லினும் குறைவுடையதாகவே அமையும். - அத்தகும் உயர்வற உயர்ந்த உயர்வர் இவர். “சென்னபட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருடத்தின் முன்னிருந்த வரதப்ப முதலியாரின் பின், எழுத்துஞ் சொல்லுமேயன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரை உதாரணங்களோடு பாடங் கேட்டவர்கள் மிக அருமை. - முற்றாய் இல்லை என்றே சொல்லலாம். - வரதப்ப முதலியார் காலத்திலும் தொல்காப்பியம் கற்றவர்கள் அருமை என்பது, அவர் தந்தையார் வேங்கடாசலம் முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடையராயின பொழுது பறையூரில் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறார் என்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிகத் திரவியச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருடமிருந்து பாடங்கேட்டு வந்தமையாலும் வரதப்ப முதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவர் என்பதனாலும் அது காரணமாக அவருக்குத் தொல்காப்பியம் வரதப்ப முதலியார் என்று பெயர் வந்தமையாலும் பின்பு அவர் காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கணச் சமுச்சயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையாலும் நிச்சயிக்கலாம்.” - என்பது தொல். பொருள். நச்சினார்க்கினியப் பதிப்பில் (1885) சி. வை. - தாமோதரம்பிள்ளை எழுதியுள்ள பதிப்புரை. - பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் வந்த இப்பதிப்பில் - தொல்காப்பியப் பின்னான்கியல் உரைகளே உள. - இவை நச்சினார்க்கினியம் அன்று, பேராசிரியம் எனச் செந்தமிழ்த் தொகுதி 1. பகுதி 1; தொகுதி 2 பகுதி 11 ஆகியவற்றிலும், தொல். - செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரையுடன் வெளிவந்த தமிழ்ச் சங்கப் பதிப்பிலும் பெரும்புலவர் இரா. இராகவ ஐயங்கார் எழுதினார். தொல்காப்பியம் வரதப்பர் வரலாறும், தாமோதரனாரின் நச்சினார்க்கினியர் உரைப்பதிப்புக் குறிப்பும் மேல் ஆய்வும் நமக்கு என்ன சொல்கின்றன? - இளம்பூரணரும் பிறரும் உரை வரைந்து நூலைப் பொருளுடன் காத்த பின்னரும் அஃதறிஞரும் அறியா நிலையில் இருந்தது என்றால், இளம்பூரணர் உரை வரைதலை மேற்கொள்ளா திருந்திருந்தால் தொல்காப்பியத்தின் நிலைமை என்ன ஆகியிருக்கும், என்பதே! தொல். பொருள். இளம்பூரணத்தை 1920இல் வெளியிட்ட கா. நமச் சிவாய முதலியார் 1924இல் தொல். பொருள். மூலத்தை முதற்கண் வெளியிட் டுள்ளார், - உரையொடு கூடிய மூலத்தில் இருந்து தனியே மூலத்தைப் பெயர்த்துப் பதிப்பித்த பதிப்பே மூலப்பதிப்பு என்பதை எண்ணிப் பார்த் தால், நாம் இளம்பூரணர்க்குப் பட்டுள்ள நன்றிக் கடனுக்கு அளவுண்டோ? இவர்தம் உரைச்சுவடி இல்லாக்கால், மற்றையர் உரைவரையும் வாய்ப்பும் ஏற்பட்டிராதே! தொல்காப்பியம் நமக்குக் கிட்டியமை இளம்பூரணர் உரைகொண்ட - நலத்தாலேயே என்பதை எண்ணும் போதே இவர் தொண்டு மலை விளக்கென இலங்குவதாம். இளம்பூரணர் இளம்பூரணர் என்னும் பெயரால், “இவர் இளமையிலேயே முழுதறிவு பெற்றுச் சிறந்தமை கண்ட சான்றோர் இச்சிறப்புப் பெயரால் இவரை வழங்கினர்” என்பது விளங்கும். - இஃதவர் இயற்பெயராக இருத்தற்கு இயலாது. - கண்ணகியார் `சிறுமுதுக்குறைவி' எனப்பட்டதும், நம்மாழ்வார் `சிறுப்பெரியார்' எனப்பட்டதும் அறிவார் இதனைத் தெளிவார். `இளங்கோ வேந்தர்' `இளங்கோவடிகளா'ராகப் பெயர் பெற்றமை போல் இளம்பூரணரும் தம் துறவினால் `இளம்பூரணவடிகளார்' - எனப் பட்டார் என்பது விளங்குகின்றது. இவர் துறவோர் என்பதை நமக்கு வெளிப்படக் கூறுபவர் நன்னூல் முதலுரையாசிரியர் மயிலைநாதர். - அவர் எச்சங்களின் வகையை எடுத்துக் காட்டுங்கால்(359) இளம்பூரணர் உரையை உரைத்து “இஃது ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர் கேள்வி இளம்பூரண ரென்னும் ஏதமில் மாதவர் ஓதியவுரையென் றுணர்க” என்கிறார். இதில் இளம்பூரணரை `ஏதமில் மாதவர்' என்ற செய்தி, - இவர் துறவோர் என்பதைக் காட்டும் புறச்சான்றாம். - அகச்சான்று உண்டோ எனின் உண்டு என்பது மறுமொழியாம். “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப” என்னும் நூற்பா அகத்திணையின் முதற்கண் உள்ளது. - இதில் - அகத்திணை ஏழும் முறை பெற நிற்கும் வகையைக் கூறுகிறார் ஆசிரியர். இதற்கு உரைவிளக்கம் வரையும் இளம்பூரணர், “இந்நூலகத்து ஒருவனும் ஒருத்தியும் நுகரும் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி இன்பம் உளதாம் எனவும், கைக்கிளை ஒருதலை வேட்கை எனவும், பெருந்திணை ஒவ்வாக் கூட்ட மாய் இன்பம் பயத்தல் அரிது எனவும் கூறுதலான் இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்து கொள்க” என்கிறார். `காமம் நீத்தபால்', `கட்டில் நீத்தபால்', `தாபத நிலை', `தபுதாரநிலை', `சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன்' எனவரும் இடங்களில் இத்தகு கருத்து உரைக்கப் பெறின் பருந்தும் நிழலுமென நூலாசிரியர் சொல்லொடு பொருள் பொருந்திச் செல்வதாகக் கொள்ள வாய்க்கும். - இவ்விடத்தில் அக்குறிப்பு இல்லையாகவும் `இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு' என்பது இளம்பூரணர் உட்கோளேயாம் என்பதை வெளிப்படுத்தும். இவரையன்றி இப்பகுதிக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர் நச்சினார்க்கினியரே. - அவர் தாமும் இவர்க்குப் பின் உரை கண்டவர். - இவரை ஏற்றும் மறுத்தும் உரைப்பவர். - அவர் பொருளதிகாரத்தில், “இல்லறம் உணர்த்திப் பின் துறவறமும் சிறுபான்மை கூறுப” என்றும், “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னும் சூத்திரத்தான் இல்லறமும் துறவறமும் கூறினார். - இந்நிலையானும் பிறவாற்றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார்” என்றாரே யன்றிக் காமத்துப் பயனின்மை உய்த்துணரவைத்தாரெனக் கூறினாரல்லர். - அவ்வாறு ஆசிரியர் கூறக் கருதியிருந்தால் உய்த்துணர்வில் லாமலே வெளிப்பட விளங்க உரைப்பார் என்பது இளம்பூரணரோ அறியார்? இவர் கொண்டிருந்த துறவுநிலை உந்துதலால் வந்த மொழி ஈதெனக் கொள்ளல் தகும். - “இனி மாறுகொளக் கூறல்,” என்பதற்குத் “தவம் நன்று என்றவன் தான்தவம் தீதென்று கூறல்” என்பதும் (பொ.654) குறிப்பாகலாம். - இவர் துறவர் என்பது `இளம்பூரண அடிகள்' என்னும் அடியார்க்கு நல்லார் குறிப்பாலும் (சிலப். 11 : 18 -20) புலப்படும். மயிலைநாதர் வரைந்த தொடரிலே இளம்பூரணர்க்குரிய தனிப் பெருஞ் சிறப்பொன்றைச் சுட்டுதலறிந்தோம். - அஃது, `உளங்கூர் கேள்வி' என்பது. “செவி வாயாக நெஞ்சு களனாகப்” பாடம் கேட்பதும் கேட்ட வற்றை உளத்தமைத்துக் கொள்வதும் பண்டைப் பயின்முறை. அம்முறை யில் பல்கால் பலரிடைச் சென்று கேட்டுக் - கருவூலமெனத் தேக்கி வைத்துக் கொண்ட முழுதறிவாளர் இளம்பூரணர் என்பதை நாம் அறிய வைக்கிறது. - இதற்கு அகச்சான்று என்னை எனின், பலப்பலவாம்; முதல் உரையாசிரிய ராகிய இவர் பலரிடைக் கேட்ட உரைகளைக் கொண்டே, ‘ஒரு சார் ஆசிரியர் உரைப்பர்’ என்றும், ‘உரையன் றென்பார்’ என்றும், ‘ஒருவன் சொல்லுவது’ என்றும் கூறிச் செல்கிறார் என்பது கொள்ளக் கிடக்கின்றது என்க. இளம்பூரணர் தொல்காப்பியர்மேல் கொண்டிருந்த பேரன்பும், பெருமதிப்பும் அவரைத் தொல்காப்பியரெனவே மதிக்கத் தூண்டுகின்ற தாம். அகத்திணை ஏழாதல் போலப் புறத்திணையும் ஏழே என்பதை வலியுறுத்திக் கூறும் இளம்பூரணர், புறப்பொருள் பன்னிரண்டு என்பாரை மறுத்து அவ்வாறு கொள்வது, “முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க” என்கிறார். - ஆசிரியர் தொல்காப்பியனார், “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்” என்றதை உளங் கூர்ந்து, அதனை அவர்க்கே ஆக்கி வழிபட்ட சான்றாண்மை இளம்பூரணர் வழியே புலப்படுதல் கண்டு கொள்க. “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்பதன் விளக்கத்தில் (எழுத்.33), “இசை நூலாசிரியரும் முதனூலாசிரியர் தாமே யெனினும், ‘மொழிப’ என வேறொருவர் போலக் கூறியது, அதுவும் வேறொரு நூலாகச் செய்யப்படும் நிலைமை நோக்கிப் போலும்” என்று வரைகின்றார். - தொல்காப்பியரை இளம்பூரணர் முதனூலாசிரியராகக் கொண்டார் என்பது இதனால் விளங்கும். முன்னிலையாக்கல் எனவரும் பொருளதிகார நூற்பா விளக்கத்தில் (98),“உலகத்துள்ளார் இலக்கணமெல்லாம் உரைக்கின்றாராகலின் இவ்வாசிரியர் உரைக்கின்றவாற்றான் நிகழ்தல் பெரும்பான்மை” எனத் தொடர்கின்றார். - தொல்காப்பியர் பற்றி இளம்பூரணர் குறித்த மதிப்பீடு எத்தகு பெருமைக்குரியது! பொருளதிகாரத் தொடக்கத்திலே, “பிற நூலாசிரியர் விரித்துக் கூறினாற்போல அறமும் பொருளும் விரித்துக் கூறாதது என்னையோ எனின், உலகத்தில் நூல் செய்வார் செய்கின்றது அறிவிலாதாரை அறிவு கொளுத்த வேண்டியன்றே; யாதானும் ஒரு நூல் விரித்தோதிய பொருளைத் தாமும் விரித்து ஓதுவாராயின் ஓதுகின்றதனாற் பயன் இன்றாமாதலால் முதனூலாசிரியர் விரித்துக் கூறின பொருளைத் தொகுத்துக் கூறலும் தொகுத்துக் கூறின பொருளை விரித்துக் கூறலும் நூல் செய்வார் செய்யும் மரபு என்றுணர்க. - அஃதேல் இந்நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின் காமப்பகுதியும் வீரப்பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும் பொருளானே அறஞ் செய்யும் ஆகலானும் இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க,” என்று வரையும் எழுத்தால் தொல்காப்பிய நூலோட்ட நுணுக்கத்தை நுவல்கிறார். உழிஞைத் துறையை, “அதுவே தானும் இருநால் வகைத்தே” என்னும் ஆசிரியர் (பொ.67) அடுத்த நூற்பாவில் அத்துறைகளைக் கூறி “நாலிரு வகைத்தே” (பொ.68) என்றும் கூறுகிறார். - இதனைக் கூறியது - கூறல் என எவரும் எண்ணி விடுவரோ - என்னும் எண்ணம் “கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை” இளம்பூரணர்க்குத் தோன்றிற்றுப் போலும். - அதனால், “பதினெட்டு இருபத்தொன்பது என்பார் - மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந் தொகை கூறினார். - இது கூறியது கூறலன்று; தொகை” என்றார். ‘ஆசிரியன் ஓதினான்’ என்பது போலக் கூறுதலே பண்டை உரை யாசிரியர் மரபு (எழுத்.469). - “குறிப்பு - என்றார்”, “கூறினார்” (பொருள்.104) என இளம்பூரணத்துள் வருதல் பதிப்பாசிரியர் கருத்துப்போலும்! மிகைபடக் கூறல் என்னும் நூற்குற்றம் விளக்கும் இளம்பூரணர், “மிகைபடக் கூறலாவது அதிகாரப் பொருளன்றிப் பிறபொருளும் கூறுதல். - அஃதாவது தமிழிலக்கணஞ் சொல்லுவான் எடுத்துக்கொண்டான் வடமொழி இலக்கணமும் கூறல்” என்கிறார். - இக்குற்றம் செய்யாத சீருரை யாளர் செந்தமிழ் இளம்பூரணர். - இக்குற்றம் செய்தார், ‘இவர் வடமொழி யறியார்’ என்பர். - எழுத்து. 42, 45, 75, சொல். 443, பொருள். 30, 151, 656 ஆகிய நூற்பாக்களின் உரைகளைக் காண்போர் இவர் வடமொழி அறியார் எனக் கருதார். இளம்பூரணர் சமணர் என்றும் சைவர் என்றும் கூறுவாருளர். படிமையோன் என்பதற்குத் ‘தவவொழுக்கத்தையுடையோன்’ என உரைவரைந்ததையும் (பாயிரம்) படிமை என்பது சமண சமயத் துறவிகளின் தவவொழுக்கத்தைக் குறிக்கும் சொல் என்பதையும் குறித்துச் சமணர் - - என்பர். - படிமை என்பது கட்டமை ஒழுக்கத்தைச் சுட்டுவது என்பதைப் பதிற்றுப்பத்துள் கண்டு கொள்க (74). - படிவம் என்பதும் அப்பாடல் ஆட்சியில் உண்டு என்பதும் அறிக. “னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது” (எழுத். 1) என்று இவர் எழுதுவது கொண்டு சமணர் என்பர். - முற்பட வைக்கப்பட்ட அகரத்தின் சிறப்புக் கூறியவர் பிற்பட வைக்கப்பட்ட னகரத்தின் சிறப்புக் கூறுவாராய் இது கூறினர். - முற்படக் கூறலும் சிறப்பே; பிற்படக் கூறலும் சிறப்பே என்பது நூன்முறை. - அம்முறைக்கேற்ப னகரச் சிறப்பாகக் கூற இதனைக் கூறினாரேயன்றி `மகளிர் வீடு பேறு எய்தார்' என்னும் குறிப்பு அதில் இல்லை எனக் கொள்க. இனிச் சமணர் அல்லர் என்பதற்கு, “நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும், கலந்த மயக்கம் உலகம்” எனவரும் தொல்காப்பிய (பொ.635) நூற்பாவில் விசும்பும் ஒரு பூதமெனக் கொண்டதைக் காட்டுவர். நூற்பாவிற் கிடந்தாங்கு உரை விரிக்கும் மரபுடைய இளம்பூரணரை அதனைக் காட்டி ஒரு சார்பிற் கூட்டல் சாலாது. “குமர கோட்டம் குமரக்கோட்டம், பிரமகோட்டம் பிரமக் கோட்டம்” என்பவர் “அருக கோட்டம் அருகக் கோட்டம்” எனக் காட்டாமையால் சமணச் சார்பினர் அல்லர் என்பர். காட்டாமையால் அச்சார்பினர் அல்லர் என்பது ஏற்காமை போல, காட்டியமையால் அச் சார்பினர் என்பதும் ஆகாதாம். - எடுத்துக்கொண்ட பொருளுக்கு எடுத்துக்காட்டுப் பொருந்துவதா என்பதே உரை நோக்கு. குமரகோட்டம் காட்டியதற்கு முற்றொடரிலேயே ‘ஆசீவகப்பள்ளி’ என்பதைக் காட்டுகிறாரே; அவர் அருகக் கோட்டம் காட்டாமையால் சமணர் அல்லர் என்று கொண்டால், ஆசீவகப் பள்ளியை முற்படக் காட்டல் கொண்டு சமணர் எனக் கொள்ள வேண்டுமன்றோ! ஆகலின் - பொருளில என்க. இனி, ‘இளம்பூரணர்’ என்பது முருகன் பெயர்களுள் ஒன்றாகலின் சைவர் என்பர். ‘இளையாய்’ என்பதிலும் ‘இளம்’ என்பதிலும் கண்ட சொல்லொப்புமையன்றிப் பொருளொப்புமை காட்ட முடியாக் குறிப்பு ஈதெனல் தெளிவு. “ஆறு சூடி நீறு பூசி ஏன்றுகூழறும் ஏன்றுகூழறும் இறைவனைக் கூறு நெஞ்சே குறையிலை நினக்கே” என்பதை `இவர் திருவுள்ளத் தூறிய பெரும் பொருட் சிறுபாடல் எனக் கூறிச் சைவராக்கினால், அடுத்தாற் போலவே (தொ.பொ. 359), “போது சாந்தம் பொற்ப வேந்தி ஆதி நாதர்ச் சேர்வோர் சோதி வானந் துன்னு வோரே” என்பது கொண்டு சமணரெனக் கொண்டாடல் தவிர்க்க முடியாததாகி விடும். “தன்தோள் நான்கின்” எனவரும் பாடலை இளம்பூரணர் மேற்கோள் காட்டுகிறார் (தொல். பொருள். 50). - இதனைச் சேனாவரையர் தம் நூலில் முதற்காப்புப் பாடலாக அமைத்துக் கொள்கிறார். - இதனால் இவர் சிவச் சார்பினர் எனின், சேனாவரையர் போலவே தாமும் காப்புச் செய்யுளாக வைத்திருப்பார். - சேனாவரையர் சிவநெறியர் என்பதற்கு இது சான்றாமேயன்றி இளம்பூரணரைச் சாராதாம் என்க. “இசை திரிந்திசைப்பினும்” என்னும் பொருளியல் முதல் நூற்பா உரையில் மேற்கோளாகக் “கார்விரிகொன்றை” என்னும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலைக் காட்டும் இளம்பூரணர், ‘சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று’ என்று உரையெழுதுவது கொண்டு இவரைச் சிவநெறியர் என உறுதிப்படுத்துவர். - அஃதாயின், அப்பாடல் தொடரொடு தொடர்பிலாத அச்செறிப்பும், ‘தாவில்தாள் நிழல்’ என்பதன் பொருள் விடுப்பும் கொண்டு ஐயுறவு கொள்ளற்கு இடமுண்டு! பாடல் தொடரையே இசைத்துத் தொடர்புறுத்தும் அவ்வுரையில் அஃதொன்று மட்டும் ஒட்டா ஒட்டாக இருத்தலும், தாவில்தாள் நிழல் விடுபாடும் பிறிதொருவர் கைச்சரக்கோ என எண்ணவே வைக்கின்றது. இளம்பூரணர் வள்ளுவர் வாய்மையில் நெஞ்சம் பறிகொடுத்த தோன்றல் என்பது இவர் எடுத்துக்காட்டும் மேற்கோள் விளக்கப் பெருக்கத்தானே நன்கு புலப்படும். - அதிகாரங்கள் பலவற்றை அடுக்கிக் கூறுதலாலும் விளங்கும். - இத்தகையர் வள்ளுவரைப் போலச் சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத சமனிலைச் சால்பினர் என்பதே தெளிவாம். சமயச் சார்பினர் வெளிப்படக் காட்டும் வலிந்த பொருளாட்சி, மேற்கோள் ஆயவை இவரிடத்துக் காணற்கில்லாமல் எச்சமயமும் ஒப்பநினைத்துப் போற்றும் ஒரு பெருந்தகைமையே காணப்படுகின்றது என்க. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரும் திருக்குறள் உரையாசிரியர் மணக்குடவரும் ஒருவரே என்பர். ஒருவர் ஒரு நூற்கு ஒரு பெயரும், மற்றொரு நூற்கு ஒரு பெயரும் கொண்டு உரை வரைந்தனர் என்றல் மரபு நிலைப்படாது. - ஒருவர், இருவர், மூவர் பெயர் கொண் டெழுதிப் பிழைக்கும் ‘வணிக நோக்கர்’ அச்சடிப்புக் காலத்தே காண லாமே யன்றிப் பயில்வார் பயன்பாடு என்னும் ஒன்றே குறியாக் கொண்ட ஏட்டுக்காலத்துத் தூயரை அக்கூட்டிற் சேர்க்க வேண்டுவதில்லையாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பல நூல்களுக்கு உரை கண்டவர். - அவர் தம் பன்னூல் உரையொப்பைச் சுட்டிச் செல்கிறார். - அத்தகு குறிப்பொன்றும் இளம்பூரணர் உரையில் இன்மை, இக்கருத்தின் அகச்சான்றின்மைச் சான்றே. - ஒரு தனிப்பாடல் செய்தி கொண்டு இம் முடிவுக்கு வருதல் சாலாது. - `மணக் குடி புரியான்' என்பது `மணக்குடவர்' பெயராகலாம். - ஆனால் `மணக்குடி புரியராம் அவரே இளம்பூரணர்' என்பதற்கு அப்பாடல் சான்றாகாது. - மற்றும் உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள் எனக் கூறும் அடியார்க்கு நல்லார் மணக்குடவ ராகிய இளம்பூரண அடிகள் என்று கூறத் தவறார். ஏனெனில் உரையாசிரி யர் என்னும் பொதுப்பெயரினும் அவர் குடிப்பெயர் விளக்கமானதன்றோ! தொல்காப்பிய இளம்பூரணருரை முற்றாகக் கிடைத்துளது. - அதில் அச்சிறப்புப் பாயிரம் இல்லை. - திருக்குறள் மணக்குடவருரையும் முற்றாக வாய்த்துளது. - அதிலும் அச்சிறப்புப் பாயிரம் இல்லை. - சிதைவுற்ற நூலாயின் தனித்துக் கிடைக்க - பிறர் உரைக்கண் கண்டெடுக்க - முறை யுண்டு. - அன்னவகை எதுவும் இல்லாச் - சிறப்புப் பாயிரங் கொண்டு முடிவுக்கு வருதல் தகுவது அன்று. இளம்பூரணர் திருக்குறள் அதிகாரத் தலைப்புக்குத் தரும் பொருளுரை மணக்குடவ ருரையொடும் பொருந்தி நிற்பதைக் காட்டி ஈருரையும் அவருரையே என்பர். ஈருரையும் பொருந்தாவுரையும் உண்மை யால் வேறுரையாம் என்பார்க்கு மறுமொழி இல்லாமை கண்கூடு. துறவாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல் என்பது தொல்காப்பியம் (பொ. 75). துறவாவது ஒருவன் தவம் பண்ணாநின்ற காலத்து யாதாயினும் ஒரு தொடர்ப்பாடு உளதாயினும் அதனைப் பற்றறத் துறத்தல் என்பது திருக்குறள் மணக்குடவருரை (அதி.துறவு). ஒப்பியவுரையை அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு போற்றுவ தும், ஒப்பா இடத்து மட்டும் தம் உரையும் விளக்கமும் தருதலும் உரை மரபு ஆகலின் இளம்பூரணத்தைக் கற்ற மணக்குடவர் தம் உரையில் அவ்வுரையைப் போற்றிக் கொண்டார் என்பது பொருந்துவதாம். இளம்பூரணர் உரையில் காணும் எடுத்துக்காட்டுகளைத் தொகை யிட்டுக் காண்பவர் திருக்குறள் மணக்குடவர் உரையை இவருரையெனக் கொள்ளார் என்பது தெளிவு. இளம்பூரணர் உரை வழியே நன்னூலார் பலப்பல நூற்பாக்களை இயற்றியுள்ளார். - ஆகுபெயர் என்ற அளவானே குறித்தார் தொல்காப் பியர்(சொ.110). - அதனை - “ஆகுபெயர் என்ற பொருண்மை என்னையெனின் ஒன்றன்பெயர் ஒன்றற்காய் நிற்றல் என்றவாறு” என்றார் இளம்பூரணர். - அதனையே நன்னூலார் “ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன ஆகு பெயரே” என நூற்பாவாக்கிக் கொண்டார் (பெயர். 33). இவ்வாறு இளம்பூரணக் கொடை மிகக் கொண்டு விளங்கியது நன்னூலாகலின், அந்நூலார் காலத்துக்கு முன்னவர் இளம்பூரணராவர். - நன்னூலாரைப் புரந்த சீயகங்கன் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு என்பர். - எனவே அக்காலத்திற்கு முற்பட்டவர் இளம்பூரணர் என்க. புறப்பொருள் வெண்பா மாலையில் இருந்து இளம்பூரணர் மேற்கோள் காட்டியுள்ளார். - ஆகலின் அம்மாலை தோன்றிய 9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் ஆகிறார் இளம்பூரணர். - மேலும் பரணியாற் கொண்டான், (எழுத். 125, 248) என வருவது கொண்டு கூடல் சங்கமத்துப் பரணி கொண்ட வீரராசேந் திரன் காலத்திற்குப் பிற்பட்டவர் எனத் தேர்ந்து 11ஆம் நூற்றாண்டு என்பர். இளம்பூரணர் சோணாட்டைச் சேர்ந்தவர் என்றும், வேளாண் குடியினர் என்றும் கூறுவர். - இவர் சோணாட்டைச் சொல்வதுடன் மலாடு மழநாடு முதலிய நாடுகளையும் சேரமான் மலையமான் பாண்டியன் சேரன் செங்குட்டுவன் முதலிய வேந்தர்களையும் குறிக்கிறார். உறையூரைக் - கூறும் இவர் கருவூர், மருவூர், குழிப்பாடி, பொதியில் என்பவற்றையும் குறிக்கிறார். - இவர் பார்வை தமிழகப் பார்வையாக இருந்தது மிகத் தெளிவாக உள்ளது. கைவாய்க்கால் என்பது சோணாட்டு வழக்கு; இன்றும் வழங்குவது என்பர். - அது பாண்டிநாட்டும் இன்றும் வழக்கில் உள்ளதே. - ‘கோடின்று செவியின்று’ என்பது கொண்டு இந்நாளிலும் அங்கு அவ்வழக் குண்மையைக் குறிப்பர். - ஆனால் அதனைக் கூறுமிடத்தேயே (சொல். 216) ‘கோடின்று செவியின்று’ ‘கோடில செவியில’ ‘கோடுடைய செவியுடைய’ ‘கோடுடைத்து செவியுடைத்து’ என உண்மையும் இன்மையும் அடுக்கிக் கூறுவர். - இவரை உண்மைப் பாற்படுத்துவதும், இன்மைப்பாற்படுத்துவதும் வேண்டிற்றன்று. - தமிழ்நாட்டு வழக்கு முழுதுற அறிந்த இவர்க்கு எவ்வெடுத்துக்காட்டு முந்து நிற்கிறதோ அதனைக் கூறுவர் எனக் கொள்ளலாம். ‘நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்’ எனச் செப்பும் வினாவும் வழுவாது வருவதற்குக் கூறுவதும் (சொல். 13) ‘தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்’ என்பதும் (சொல். 33) ‘தமிழ்நாட்டு மூவரும் வந்தார்’ என்பதும் (சொ.250) ‘புலிவிற் கெண்டை’ என்பதும்(சொல். 411) இளம் பூரணரின் தமிழ் நில முழுதுறு பார்வையையே சுட்டுகின்றன. - மேலும், “நாயை ஞமலி என்ப பூழி நாட்டார் என்றக்கால் அச்சொல் எல்லா நாட்டாரும் பட்டாங் குணரார்; நாய் என்பதனையாயின் எவ்வெத் திசை நாட்டாரும் உணர்ப என்பது”, என்று கூறும் இவர் உரையால் (சொல். 392) நாடு தழுவிப் பட்டாங்குணரச் செய்தலே இவர் பெரும் பார்வை என்க. இளம்பூரணர் உரைநயங்கள் அருஞ்சொல்லுக்குப் பொருள் கூறுதல் : ‘குயின் என்பது மேகம்’ (எ. 336), ‘மின் என்பது ஓர் தொழிலுமுண்டு பொருளுமுண்டு’ (எ. 346), ‘அழனென்பது பிணம்’ (எ. 355) ‘மூங்கா என்பது கீரி’ (பொ. 550) நவ்வி என்பது புள்ளிமான் (பொ. 556) ‘கராகமென்பது கரடி’ (பொ. 56) இவ்வாறு அருஞ்சொற்பொருள் வேண்டுமிடத்துரைக் கின்றார். கோயில் என்பதா? கோவில் என்பதா? எனின் இரண்டும் சரியே என்பார் உளர். அவற்றுள் `கோயில்' என்பதே சரியானது என்பதை ‘இல்லொடு - கிளப்பின் இயற்கையாகும்’ என்னும் நூற்பாவில் (எ. 294) தெளிவாக்குகிறார். ‘கஃறு’ என்பது உருவு. ‘சுஃறு’ என்பது இசை என்பதைத் தேர்ந்து சொல்கிறார் (எ. 40). ‘தபு’ என்பது படுத்துச் சொல்ல `நீசா' எனத் தன்வினையாம் எனவும், அதனை எடுத்துச் சொல்ல `நீ ஒன்றனைச் சாவி' எனப் பிறவினையாம் எனவும் அசையழுத்தம் (யஉஉநவே) காட்டி விளக்குகிறார் (எ. 76). அஃறிணை என்பது அல்திணை. அல்லதும் அதுவே, திணையும் அதுவே எனப் பிரித்துக் காட்டி விளக்குகிறார் (சொ. 2). சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும் ஆண்டுச் சில பார்ப்பனக்குடி உளவேல் அதனைப் பார்ப்பனச்சேரி என்பது; இஃது உயர்திணைக்கண் தலைமை பற்றி வந்தது என்கிறார் (சொ. 49). “பல பொத்தகம் கிடந்த வழி ஒருவன் ஏவலாளனைப் பார்த்து, பொத்தகங் கொண்டு வா’ என்றால், அவன் ஒரு பொத்தகங் கொண்டு வந்த விடத்துத் தான் கருதிய பொத்தகம் அன்றெனில் ‘மற்றையது கொணா’ என்னும்; என்றக்கால் இக் கொணர்ந்ததனை ஒழிக்கும் சொல் இக் கொணர்ந்த பொத்தகம் சுட்டிற்றாகலான் கொணர்ந்ததனை ஒழிக்குஞ் சுட்டு நிலை அதனை ஒழித்து ஒழிந்ததென்று அவ்வினத் தல்லது பிறிதொன்று குறித்தது கொல்லோ எனிற் குறியா; மற்று அப் பொத்த கத்துள் ஒன்றே பின்னும் குறித்தது எனப்படும்” என்பதன் வழியாக ஓரிலக்கணம் கூறுவதுடன் புத்தகம் என்பதன் - செவ்விய வடிவத்தையும் நிலைப்படுத்துகிறார். சங்கத்தார் நாளில் ‘உளறுதல்’ என்பது கூந்தலை உலர்த்துதல் பொருள் தந்தது. அப்பொருளை இளம்பூரணர் காலத்தில் ‘உலறுதல்’ என்பது தரலாயிற்று என்பதை, “உலற்றத் திறமின்றிப் பயின்றார் ஒரு சான்றார் மயிர் நீட்டி உலறி நின்றாரைக் கண்டு ஒருவன், எம்பெருமான் உலறி நின்றீரால் என்றக்கால் வாளாதே உலறினேன் என்னற்க, இது காரணத்தால் உலறினேன் என்க. இது தனக்கு உற்றதுரைத்தது” என்பதன் வழியாக அறிய வைக்கிறார் (சொ. 56). பிறரொடு தொடர்பு இல்லானைக் ‘கெழீஇயிலி’ என்பதும் - - - - - - (சொ. 57) தொழில் செய்யும் ஏவலாட்டியைத் ‘தொழீஇ’ என்பதும் - - - - - (சொ. 122) அரிய சொல்லாட்சியாம். ‘அண்ணாத்தேரி’ என்பதை இவர் எடுத்துக்காட்டுவதைத் திருவண்ணாமலையகத்து ஏரி எனக் கருத்துரைத்தார் உளர். அது ‘வானம் பார்த்த ஏரி’ என்பதாம். ஆறு, கால் ஆயவற்றின் நீர் வரத்தின்றி வானம் பார்த்து இருக்கும் ஏரியே அப்பெயரியதாம் (எ. 134). ‘அண்ணாத்தல்’ - ‘அண்ணாந்து நீர் குடித்தல்’ என்னும் வழக்குகளைக் கொண்டு அறிக. “அண்ணாத்தல் செய்யா தளறு” என்றார் வள்ளுவர். திட்டாத்துக்குளம் என்று பிறர் கூறுவது மேடுபட்ட குளம் என்றாதல் கருதுக. “காமப்புணர்ச்சி எனினும், இயற்கைப்புணர்ச்சி எனினும், முன்னுறு புணர்ச்சி எனினும் தெய்வப்புணர்ச்சி எனினும் ஒக்குமென” ஒரு பொருட் பலபெயரைச் சுட்டி ஐயமகற்றுகிறார் (களவியல் முன்னுரை). செங்கடுமொழி என்பதைக் “கொடிய கடுமொழியேயன்றி மனத்தினால் இனியளாகிக் கூறும் கடுமொழி” என நயமுற விளக்குகிறார் (பொ. 112). ஒத்ததெனப் பொதுவில் தோன்றும் இரண்டன் நுண்ணிய வேறுபாட்டையும் அரிதாக விளக்கிச் செல்கிறார். “மடம் என்பதற்கும் பேதைமை என்பதற்கும் வேறுபாடு என்னை எனின் மடம் என்பது பொருண்மை அறியாது திரியக்கோடல்; பேதைமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாக் கோடல்” (பொ. 248). ‘ஐவகை யடியும்’ (செய். 48) என்பது ஆசிரியப்பாவிற்குரிய இலக்கண முடைத்தாயினும் ஓசையின்மையான் ஆசிரியம் எனப்படாது நூலெனப் படும் என்று கொள்க (பொ. 391). “கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றாதல் போறல்” என்பவற்றைக் காண்க. எடுத்துக்கொண்ட ஒன்றை உவமையால் விளக்கும் நயத்தையும் அரிதாக மேற்கொள்கிறார் இளம்பூரணர். சிறப்புப் பாயிரத்தில் “பாயிரமென்பது புறவுரை. அறநூற்குப் புறவுரையேல் அது கேட்டு என்னை பயனெனின் கற்று வல்ல கணவற்குக் கற்புடையாள் போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும் திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலானும் பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனில் குறிச்சி புக்கமான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும் பாயிரம் கேட்டல் பயனுடைத்தாயிற்று” என ஓரிடத்தே மூன்றுவமைகள் வைத்து விளக்குகிறார். இகர உகரங்களுக்கும் குற்றியலிகர குற்றியலுகரங்களுக்கும் ஒலியளவையால் வேறுபாடு உண்டாயினும் உயிர் என்னும் பெயரீட்டில் வேறுபாடு இல்லை என்பாராய், “சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது. அதுபோல இகர உகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிர் ஆகற்பாலன” என்கிறார் (எ. 2). உயிர்மெய் ஒலிக்கும் வகையை விளக்கும்போது “மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால் அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தன அல்ல என்பது பெறுதும்” என்கிறார் (எ. 18). ‘இதழ் போறலான் வாய் இதழ் எனப்பட்டது’ என வாய்க்கு இதழ் எனப் பெயர் வந்த பொருத்தத்தை உவமையால் விளக்குகிறார் (எ. 83). கலிப்பாவிற்குரிய துள்ளலோசை பற்றிக் கூறும்போது, “துள்ளுத லாவது ஒழுகுநடைத்தன்றி இடையிடையுயர்ந்து வருதல்; கன்று துள்ளிற் றென்றாற்போலக் கொள்க” என்கிறார் (பொ. 387). இவ்வாறே பிறவும் வரும் உவமைகளும் உள. உவமையின் பயன், “புலன் அல்லாதன புலனாதலும், அலங்கார மாகிக் கேட்டார்க்கின்பம் பயத்தலும்”, என்று உவமையியல் முகப்பில் கூறும் அவர்தம் உவமைகளால் தம் கருத்தை மெய்ப்பிக்கிறார் என்க. உரைவளம் இளம்பூரணர் உரைவளம், வேண்டுமிடத்து வேண்டுமளவான் விளங்கி நலம் சேர்க்கின்றது. எழுத்தை எட்டுவகையாலும் எட்டிறந்த பலவகையாலும் உணர்த்தி னார் என அவற்றைக் குறிப்பதும் (எ. முகப்பு) செப்புவகை ஆறு என்பதும், வினாவகை ஐந்து என்பதும் (சொ. 13) தகுதி, வழக்கு ஆகியவற்றைப் பற்றிப் பகுத்துரைப்பதும் (சொ. 17) முதலியவை நன்னூலார் முதலிய பின்னூ லோர்க்கு உதவிய உரைவளங்களாம். “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்னும் நூற்பாவுக்கு (சொ. 152) “பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும் பொருள் குறியாது நில்லா” என உரை கூறுகின்றார். ‘பொருள் குறித்து நிற்கும்’ என்னாமல், பொருள் குறியாது நில்லா என்று ஈரெதிர் மறைகளால் உடன் பாட்டுக் கருத்தை வலியுறுத்துவது, “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே; அவ்வாறு குறியாதது சொல்லன்று” என்பதை உறுதிபடக் கூறுவதற்கேயாம். முக்காலங்களையும் சுட்டும் இளம்பூரணர், “இறப்பாவது தொழிலது கழிவு; நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை; எதிர்வாவது தொழில் பிறவாமை” என்கிறார். எளிமையும் அருமையும் மிக்க குறிப்புகள் இவை. கைக்கிளை ‘சிறுமை உறவு’ என்று கூறவேண்டுமெனக் கருதுகிறார் உரையாசிரியர். அதனை, “கை என்பது சிறுமை பற்றி வரும்; அது தத்தம் குறிப்பிற் பொருள் செய்வதோர் இடைச்சொல்; கிளை என்பது உறவு; பெருமையில்லாத தலைமக்கள் உறவு என்றவாறு, கைக்குடை, கையேடு, கைவாள், கைஒலியல், கைவாய்க்கால் எனப் பெருமையில்லாதவற்றை வழங்குபவாகலின்” என விளக்கியமைகிறார் (பொ. 1). கை சிறுமைப் பொருட்டாதலை நிறுவுதற்கு நடைமுறைச் சான்றுகள் பலவற்றை அடுக்குகிறாரே! பொருள் விளக்கம் செய்தலிலும் அவர்க்கிருந்த பற்றுதலின் விளைவு தானே இது! பிரிவு என்னும் உரிப்பொருளைக் கூறும் தொல்காப்பியர், ‘கொண்டு தலைக் கழிதலும், பிரிந்தவண் இரங்கலும்’ என இரண்டாகப் பகுத்துக் கூறுகின்றார். இதனை, “கொண்டுதலைக் கழிதலாவது உடன் கொண்டு பெயர்தல். அது, நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமை யானும், உடன் கொண்டு பெயர்தலின் பிரிதலின் அடங்காமையானும் வேறு ஓதப்பட்டது” என நூலாசிரியர் கருத்தைத் தெளிவு செய்கிறார் (பொ. 17). “இளமை தீர் திறம்” என ஆசிரியர் கூறினாராயினும் அதனை, “இளமை தீர் திறமாவது; இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது. அது மூவகைப்படும்: தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும், தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கிய வழி அறத்தின்மேல் மனம் நிகழ்தலின்றிக் காமத்தின் மேல் மனம் நிகழ்தலும் என” என்கிறார். “எண்ணி உரைகாரர் ஈவார்” என்பதை மெய்ப்பிப்பவை இத்தகையவை (பொ. 54). “கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்” என்பதன் விளக்கமும் காண்க (பொ. 87). ‘ஏறிய மடற்றிறம்’ முதலாக ஆசிரியர் சொல்லும் உடன்பாடுகளை ‘ஏன்றவாறுh மடற்றிறம்’ முதலாக எதிர்மறையாக்கிக் கொண்டு இளம்பூரணர் கூறுவது வியப்பு மிக்கது (பொ. 55). “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” என்பதற்கு, “குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்” எனப் பொருள் வரைந்து, “இறந்த காலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ எனின், அது முழுதுணர்ந்தோர்க்கல்லது புலப்படாமையின் அது பொருளன் றென்க” என விளக்குகிறார். தாம் சுட்டிய பொருளே பொருளெனப் பன்னிருபடலச் சான்று காட்டுகிறார். “அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது பகலும் இரவும் இடை விடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன் வீழ்வும் கோள் நிலையும் மழை நிலையும் பிறவும் பார்த்துப் பயன்கூறல்” என மேல் விளக்கம் செய்கிறார் (பொ. 74). எத்தகு நாகரிகமாக மறுக்கிறார். அவருரை முதலுரையாகலின் மறுப் புரை மிகக் கூறவேண்டும் நிலையில்லை. எனினும் பல்வேறு பாடங் களும் உரைகளும் பற்பலரிடத்துக் கேட்டிருக்கக்கூடும். அவற்றை உட்கொண்டு ஒரு விளக்கம் கூறுகிறார். “பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சிலதுறைகள் கூறினாராதலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின் அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக் கூறலு மாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் குன்றக் கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாதலின் உய்த்துணர்ந்து கண்டு கொள்க” என அமைதி காட்டுகின்றார். ஆகலின் மறுப்புக் கூறுதலில் இளம்பூரணர் பெரிதும் மனங் கொண்டிலர் என்பதும், கற்பார் தம் ‘நுண்மாண் நுழைபுலத்தால்’ கண்டுகொள்வார் என அமைந்தார் என்பதும் விளங்கும். தலைவிக்குக் களவில் கூற்று நிகழுமிடங்கள் என்பது குறிக்கும் துறைகளுள் ஒன்று ‘கட்டுரை இன்மை’ என்பது. அதற்குச் சான்று வேண்டுமோ? ‘கட்டுரை இன்மைக்குக் கூற்று நிகழாது’ என்பதும் கூறுகின்றார். எவரேனும் அதற்குச் சான்று இல்லையே என ஐயுறுவரோ என்பதை உன்னித்த குறிப்பு இது (பொ. 109). ‘சிற்றாறு பாய்ந்தாடும்’ எனப் பன்னீரடிப் பஃறொடை வெண்பா ஒன்றைக் காட்டுகிறார் இளம்பூரணர் (பொ. 123). அதில், “இது பன்னிரண் டடியான் பெருவல்லத்தைக் கூற வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பா” என்று குறிப்பு வரைகிறார். ‘பெருவல்லம்’ என்ற பெயர் இல்லாக்கால் இப் பாடற் பொருள் எவ்வாற்றானும் காணற்கரிது. ஆதலால் ‘திறவு’ வேண் டுங்கால் தந்து செல்லும் `திறம்' இளம்பூரணர் உடைமையாக இருந்துளது எனலாம். அவரே, ‘சூத்திரத்தாற் பொருள் விளங்கும்’ எனவும் (பொ. 585) விடுத்துச் செல்கிறார். சில வழக்காறுகள் இளம்பூரணர் காலத்து வழக்காறுகள் சில அவர் உரை வழியே அறிய வாய்க்கின்றன. எட்டி, காவிதி என்னும் பட்டங்கள் வழங்குவதுபோல் ‘நம்பி’ என்னும் பட்டம் வழங்குதல் (எ. 155), மகப்பாலுக்காக ஆடு வளர்த்தல் - - - - - (எ. 220), புளிச்சோறு ஆக்குதல் (எ. 247), பேயோட்டுதல் (சொ. 312), வெள்ளாடை மகளிர் உடுத்தல் (சொ. 412), தைந்நீராடல் (சொ. 50), குறித்ததொரு நாளில் கறந்தபால் முழுவதையும் அறத்திற்கென ஆக்குதல் (சொ. 50), ஆடு மாடுகள் தினவுதீரத் தேய்த்துக் கொள்ள `ஆதீண்டு குற்றி' நடுதல் (சொ. 50), சேவற் சண்டை நடத்துதல் (சொ. 61), ஒற்றிக்கலம் (ஆவணம்) எழுதுதல் (சொ. 76), நெல்லடித்துத் தூற்றும் களத்திற்குத் ‘தட்டுப்புடை’ எனப்பெயர் வழங்குதல் (சொ. 77), வெற்றிலையும் பூஞ்செடியும் நடுதல் (சொ. 110), பொழுதின் ஒரு பகுதியைக் கூறு எனக் கூறுதல் (பொ. 9) முதலிய வழக்காறுகள் ஆங்காங்கு அறிய வருகின்றன. பல்துறைப் புலமை நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல் தேங்கமுகந்தளத்தல், சாத்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகை அளவைகளைக் கூறுவதும் (எ. 7), “கடுவும் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ஆயின” என்றும், “எருப்பெய்து இளங்களை கட்டு நீர் கால் யாத்தமையால் பைங்கூழ் நல்ல” என்றும் கூறுவதும் - (சொ. 21, 22) “விலங்கும் மரனும் புள்ளும் உள்ள நோய் உற்றாற்கு மனக்குறைக்கு மறுதலை மாற்றம் கூறுவன போலும் குறிப்பின” எனலும் (சொ. 416) வாளானும் தோளானும் வேறலன்றி, “சொல்லான் வேறலும் பாட்டான் வேறலும் கூத்தான் வேறலும் சூதான் வேறலும் தகர்ப்போர் பூழ்ப்போர் என்பனவற்றான் வேறலும்” எனப் போர்வகை அடுக்குதலும் (பொ. 74) (அடியர்) “அகத்திணைக்கு உரியரல்லரோ எனின், அகத்திணை யாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும், இன்பத்தின் வழாமலும், இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடைய ராகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக்கருதுவராகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார்” என்பதனானும் - “இவர் புறப் பொருட் குரியராயினார் என்க” என்பதனானும் பிறவற்றாலும் இளம்பூரணர் பல்துறைப் புலமை நன்கறிய வருகின்றது. “சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தன் ஆசிரியன் உவக்கும்; தந்தை உவக்கும்” என்பதால் உரையாசிரியர் கையெழுத்தழகை எவ்வளவு விரும்பினார் என்பது விளங்கும் (சொ. 40). “மனைவியைக் காதலிக்கும்; தாயை உவக்கும்” என்பவற்றால் வாழ்வியல் நுணுக்கத்தை எவ்வளவு தேர்ந்திருந்தார் இளம்பூரணர் என்பது விளங்கும் (சொ. 72). மணந்தபின்னரும் மனைவியைக் காதலிக்கலாம் எனவும், ஒருத்தியை மணந்த பின்னரும் தன் - தாயை உவந்து பாராட்டலாம் எனவும் கூறல் அத்தகைய தூய துறவர் இல்லறம் நல்லறமாகத் திகழ வழிகாட்டவும் வல்லார் என்பதை மெய்ப்பிப்பதாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது பொருளதிகாரம் இளம்பூரணம்-1 அகத்திணையியல் - புறத்திணையியல் வ.உ.சிதம்பரம்பிள்ளை (1921, 1933, 1935) Publisher’s Foreword I had the pleasure of meeting Sriman V.O. Chidambaram Pillai for the first time when i was introduced to him by Lokamanya Bal Gangadhar Tilak and this acquaintance spedily developed into friendship. Sriman V.O. Chidambaram Pillai retired on active politcs after his long incarceration and he has since engaged himself in an intensive and critical study of the ancient Tamil Classics which had claimed his attention even during his political preoccupation and during his professional activities as a prayer. This book represent the fruitful results of his arduous colours in this field carried on for more than three decades. Sriman Pillai set himself to the difficult task of editing the celebrated Tamil Grammer “Tolkapiyam”, Whose antiquity and authority admitted by all. The age of “Tolkappiyam” has been made ently a matter of controversy among Tamil scholars, but it is later than the third or fourth century B.C. When therefore asked me to undertake the publication of the work, I readily represented to do so. The publication of the work has been greatly litated by the active help and co-operation of Mr. S. Vaiyapuri Pilai, Editor of the “Tamil Lexicon”. He has read in proof everyday of this great work and edited it with thoroughness and the Assistance of an eminent scholar like him cannot be too commended. - V. Venkateswara Sastrulu, of. V. Ramaswamy Sastrulu & Sons. பிரசுரிப்போரின் முன்னுரை லோகமான்ய பாலகங்காதர திலகரவர்கள் என்னை ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தபோதுதான் யான் முதல் முதல் பிள்ளையவர்களைக் கண்டு களிப்புற்றேன். ஸ்ரீமான் பிள்ளையவர்கள் தமது நீண்டகாலச் சிறைவாஸத்திற்குப்பின் (மஹாத்மா காந்தியவர்கள் இராஜீய விஷயங்களில் தலைமைபூண்ட நாள் தொடங்கி) அவ்விஷயங்களினின்று விலகித் தாம் முன் வக்கீல் வேலை பார்த்துக்கொண்டிருந்த காலத்திலும், இராஜீயத்துறையில் வேலைசெய்துகொண்டிருந்த காலத்திலும் தமது கவனத்தைக் கவர்ந்து கொண்டிருந்த தொன்மைத் தமிழ் நூல்களை ஊக்கத் தோடு ஆராய்ச்சிச் செய்து கொண்டுவந்தனர். இத்துறையில் பிள்ளையவர்கள் சென்ற சுமார் முப்பது வருஷம் உழைத்ததன் பயனாகும் இந்நூலின் வெளிவரவு. தொன்மையானதென்றும் தலைமையானதென்றும் யாவராலும் ஒப்புக் கொள்ளப் பட்டதும், தமிழ்நாட்டிலும் அதற்கு அப்பாலும் பெரும்புகழ் பெற்றதுமான தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் இயற்றிய உரையைப் பிள்ளையவர்கள் ஆராய்ச்சிசெய்து, ஏடுபெயர்த்து எழுதியோர்களால் நேர்ந்தபிழைகளைக் களைந்து சீர்திருத்தம் செய்தார்கள். தொல்காப்பியத்தின் காலத்தைப்பற்றிச் சென்ற சிலவருஷங்களாகத் தமிழ்ப்பண்டிதர்களுள் அபிப்பிராயபேதம் ஏற்பட்டிருக்கிறது; ஆனாலும், அந்நூல் கிறிஸ்து பிறந்ததற்கு முந்நூறு வருஷங்களுக்கு முற்பட்டதென்பதில் ஐயமேயில்லை. இத்தகையநூலை அச்சிட்டுப் பிரசுரிக்கும்படியாக ஸ்ரீமான். பிள்ளையவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டபோது நான் உவகையுடன் உடனே ஒப்புக் கொண்டேன். தமிழ் லெக்ஸிக்கன் ஆசிரியர் ஸ்ரீமான் எஸ். வையாபுரிப்பிள்ளை உதவியும் ஒத்துழைப்பும் இந்நூலை எளிதில் வெளிவரச்செய்தன. அவர்கள் மிகக் கவனத்தோடும், ஊக்கத்தோடும் இப்பதிப்பினைப் பரிசோதித்திருக்கிறார்கள். அவர்களைப்போன்ற ஒரு பெருங் கல்வியாளருடைய உதவி இவ்வளவினதென்று அளவிடற் பாலதன்று. இந்நூல் இவ்வுலகின்கண் இனிது நிலவுவதாக! தண்டையார்ப்பேட்டை சென்னை வா. வெங்கடேஸ்வர சாஸ்த்ருலு, 1935, வா. இராமஸ்வாமி சாஸ்த்ருலு ஜூலை மாதம் 18. அண்டு ஸன்ஸ். பதிப்புரை - 1936 தொல்காப்பியத்தைப் படிக்கும் பாக்கியம் 1910ஆம் வருடம் கிடைத்தது. அதன் பொருளதிகாரத்தை யான் படித்தபோது, அதில் வேறு எம்மொழி இலக்கணத்திலும் காணப்படாத நிலப்பாகுபாடு, நிலங்களின் மக்கள், ஏனைய உயிர்கள், மரங்கள், செடிகள், மலர்கள், மக்களது ஒழுக்கங்கள், பழக்க வழக்கங்கள் முதலியன கூறப்பட்டிருக்கக் கண்டேன். இவ்வொப்புயர்வற்ற நூலைத் தமிழ்மக்கள் படியாததற்கு ஒருகாரணம் இந்நூலிற்கு ஆன்றோர் இயற்றியுள்ள உரைகளின் கடின நடையென்று உணர்ந்தேன். இந்நூலைத் தமிழ் மக்கள் யாவரும் கற்கும்படி எளியநடையில் ஓர் உரை எழுதவேண்டுமென்று நினைத்தேன்; உடனே எழுத்ததிகாரத்தின் முதற்சில இயல்களுக்கு உரையும் எழுதினேன். பின்னர், யான் சென்னை - பிரம்பூரில் வசித்தகாலத்தில் என் உரையைப் பூர்த்திசெய்யக் கருதி முன் எழுதியிருந்த எழுத்ததிகார இயல்களின் உரையைத் திரு. தி. செல்வக்கேசவ வராய முதலியார் (எம்.ஏ.,) அவர்களும் யானும் சரிபார்த்தோம். அப்போது தொல்காப்பிய இளம்பூரண எழுத்ததிகார அச்சுப் புத்தகமும், சொல்லதிகார ஏட்டுப்பிரதிகள் சிலவும் பொருளதி கார ஏட்டுப்பிரதி யொன்றும் திரு. த. கனகசுந்தரம்பிள்ளை (பி.ஏ.,) அவர்களிடமிருந்து கிடைத்தன. இளம்பூரணத்தை யான் படித்தபோது அதன் உயர்வும், சிறப்பும், எளிய நடையும் தொல்காப்பியத்திற்கு யான் உரை எழுதுவது மிகையென்று நினைக்கச் செய்தன. பின்னர் என் உரையைப் பூர்த்திசெய்யும் எண்ணத்தை விடுத்து, இளம் பூரணத்தை அச்சிட்டு வெளிப்படுத்த எண்ணினேன். முதலில் எழுத்ததிகாரத்தை ஒருபுத்தகமாகவும், பின்னர்ப் பொருளதிகாரத்தின் அகத்திணையியலையும், புறத்திணையியலையும் ஒரு புத்தகமாகவும் அச்சிட்டு வெளிப்படுத்தினேன். அச்சமயம் யான் சென்னையை விட்டுக் கோயமுத்தூர் முதலிய வெளியூர்களுக்குச் சென்று அவ்வூர்களில் வசிக்கநேர்ந்தது. அதனால் இளம்பூரணப் பொருளதிகாரத்தின் பிந்திய இயல்களை அச்சிட்டு முடிக்க இயலாமற் போய்விட்டது. சிலவருடங்களுக்குப்பின், தமிழ்த் தொன்னூல்களின் ஏட்டுப் பிரதிகளைப் பலவிடங்களில் தேடிப்பெற்றுப் பரிசோதித்துக் கொண்டுவருந் தமிழ்ப் பேரகராதி (கூயஅடை டுநஒiஉடிn) ஆசிரியர் திரு.எஸ். வையாபுரிப்பிள்ளை (பி.ஏ., பி.எல்..,) அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது. அவர்களிடம் இளம்பூரணப் பொருளதிகாரத்தின் பிந்திய இயல்களை அச்சிட இயலாமலிருக்கிற நிலைமையைத் தெரியப்படுத்தினேன். என் உண்மைத் தேசாபிமானத்தையும் பாஷாபிமானத்தையும் கண்டு, அவ்வியல்களை அச்சிடுதல் சம்பந்தமான ஆசிரியர் வேலைகளைத் தாமே செய்வதாகப் பிள்ளையவர்கள் வாக்களித்தார்கள். மேற்கூறிய இயல்களின் காயிதக் கையெழுத்துப் பிரதிகளையும், திரு. த. கனகசுந்தரம்பிள்ளை யவர்களின் பொருளதிகார ஏட்டுப்பிரதியையும் திரு. வையாபுரிப்பிள்ளை யவர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் காயிதப் பிதிகளை ஏட்டுப்பிரதிகளோடு ஒப்பு நோக்கிக் காயிதப் பிரதியிற்கண்ட வழுக்கள் முதலியவற்றைக் களைந்தும், அச்சுத் தாள் (புரூவ்) களைச் சரிபார்த்துத் திருத்தியும், மேற்கோட் செய்யுள்களின் நூற்பெயர் முதலியவற்றைத் துலக்கியும், முதலில் களவியல், கற்பியல், பொருளியல் இம்மூன்றையும் அச்சிடுவித்து ஒரு புத்தகமாக்கித் தந்தார்கள். இப்போது ஏனைய இயல்களையும் புத்தகவடிவில் வெளிவரச் செய்தார்கள். இவ் வேழு இயல்களுக்கும் பெயரளவில் பதிப்பாசிரியன் யான். உண்மையிற் பதிப்பாசிரியர். திரு. வையாபுரிப்பிள்ளை யவர்களே. அவர்கள் செய்த நன்றி என்னால் என்றும் உள்ளற்பாலது. யான் அனுப்பிய ஏட்டுப்பிரதியும் கடிதப்பிரகளுந் தவிர, வேறு ஏட்டுப்பிரதிகளும் இப்பதிப்பிற்கு உபகாரப்பட்டன. செய்யுளியற் பிரதி யொன்றும், மரபியற் பிரதியொன்றும் இப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சி செய்துவரும் ஸேதுஸம்ஸ்தான மகாவித்துவான் ஸ்ரீ. ரா. ராகவையங்காரவர்கள் மிக்க அன்புடன் உதவினார்கள். செய்யுளியற் செய்திப் பிரதி யொன்று மயிலாப்பூர். பி. எஸ். ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீ. எம். வி. துரைசாமி ஐயரவர்கள் அன்புகூர்ந்து கொடுத்தார்கள். இவ்விருவர்க்கும் எனது மனப்பூர்வமான நன்றி யுரியதாகின்றது. இடையிடையே சிலபாரங்கள் தமிழ்லெக்ஸிகன் ஆபீஸ் தலைமைத் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீ. ரா. ராகவையங்கா ரவர்களாலும், ஸ்ரீ துரைசாமியையரவர்களாலும் பார்வையிடப் பட்டன. இங்ஙனம் உதவிய நண்பர்களுக்கு எனது நன்றியைச் செலுத்துதல்லது யான் யாது கைம்மாறு செய்யவல்லேன்! தமிழ்நாடு முழுவதிலும் பொருளதிகார இளம்பூரணருரை முற்றுமட பிரதி ஒன்றேயுள்ளது. இப்போது அங்கங்கே ஒருசிலரிடத்துள்ள பிரதிகளனைத்தும் இவ்வேட்டுப் பிரதியைப் பார்த்தெழுதிக் கொண்ட கடிதப் பிரதிகளேயாம். இக்கடிதப் பிரதிகள் சிலவற்றில் ஒரு சிலவிடங்களில் ஏட்டுப் பிரதியிற் காட்டப் பெறாத விஷயங்கள் ஆதாரமின்றி நுழைத் தெழுதப் பட்டன. அவ்வாறு நூலெழுதியவற்றை யெல்லாம் களைந்து ஏட்டுப் பிரதியிலுள்ளவாறே இப்படி எனது நண்பர் வையாபுரிப் பிள்ளையவர்களாற் சித்தஞ் செய்யப்பட்டுள்ளது. இங்ஙனம் பதிப்பிக்கப்பெற்ற இவ்வுரை இளம்பூரண ருடையதே யென்பதற்குத் தக்க சான்றுகள் இருந்தபோதிலும், என் வசமிருந்த ஏட்டுப் பிரதியிலே ஸ்ரீ.ரா. ராகவையங்காரவர்கள் உதவிய ஏட்டுப் பிரதிகளிலேனும் (செய்யுளியல் மரபியல் அடங்கியன) இன்னாரியற்றிய வுரையென்பது எழுதப்பெற வேண்டி இறுதியிதழ் காணப்படவில்லை. இதனைத் தமிழுலகிற்குத் தெரிவிக்குங் கடமை யுடையேன். மேற்குறித்த ஏழு இயல்களையும் தமது செலவில் அச்சிட்டு வெளிப்பட வேண்டுமென்று சென்னை ஸ்ரீ. இராமசுவாமி சாஸ்துருலு அண்டு சன்ஸ் சொந்தக்காரரான எனது நண்பர் ஸ்ரீமான். வாவிள்ள வெங்கடேஸ்வர சாஸ்துருலுகளுக்கு எழுதினேன். அவ் வேண்டுகோளுக்கு இணங்கி ஏழு இயல்களை அச்சிட்டுப் பிரசுரித்துத் தந்த எனது நண்பர் சாஸ்திரியா ரவர்களின் உதவியை என்னால் என்றும் நினைக்கற்பாலது. எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிக. தூத்துக்குடி. வ.உ. சிதம்பரம்பிள்ளை, 15.1.1936 பதிப் பாசிரியன். இளம்பூரணம் பொருளதிகாரம் இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின், பொருளதிகாரம் என்னும் பெயர்த்து. இது, பொருள் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். நிறுத்த முறையானே எழுத்தும் சொல்லும் உணர்த்தினார்; இனிப்பொருள் உணர்த்த வேண்டுதலின், இவ்வதிகாரம் பிற் கூறப்பட்டது. பொருளென்பது யாதோ வெனின், மேற்சொல்லப்பட்ட சொல்லின் உணரப்படுவது. அது, முதல் கரு உரிப்பொருள் என மூவகைப்படும்; “முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே, நுவலுங் காலை முறைசிறந் தனவே, பாடலுட் பயின்றவை நாடுங் காலை” (அகத். 3) என்றா ராகலின். முதற்பொருளாவது, நிலமும் காலமும் என இருவகைப்படும்; “முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டின், இயல்பென மொழிப வியல்புணர்ந் தோரே” (அகத். 4) என்றா ராகலின். நிலமெனவே, நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரணமாகிய தீயும், தீயிற்குக் காரணமாகிய காற்றும், காற்றிற்குக் காரணமாகிய ஆகாயமும் பெறுதும். காலமாவது, மாத்திரை முதலாக நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அயநம், ஆண்டு, உகம் எனப் பலவகைப்படும். கருப்பொருளாவது, இடத்தினும் காலத்தினும் தோற்றும் பொருள். அது, தேவர் மக்கள் விலங்கு முதலாயினவும், உணவு செயல் முதலாயினவும், பறையாழ் முதலாயினவும், இன்னவான பிறவுமாகிப் பலவகைப்படும். “தெய்வ முணாவே மாமரம் புட்பறை, செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ, அவ்வகை பிறவுங் கருவென மொழிப” (அகத். 20) என்றாராகலின். உரிப்பொருளாவது, மக்கட் குரிய பொருள். அஃது, அகம் புறம் என இருவகைப்படும். அகமாவது, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனவும், கைக்கிளை பெருந்திணை எனவும் எழுவகைப்படும்; “புணர்தல் பிரிதலிருத்த லிரங்கல், ஊடலிவற்றி னிமித்த மென்றிவை, தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே” (அகத். 16) எனவும், “காமஞ் சாலா விளமை யோள்வயின், ஏமஞ் சாரா விடும்பை யெய்தி, நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தால், தன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல், புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே” (அகத். 53) எனவும், “ஏறிய மடற்றிற மிளமை தீர்திறம், தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடலொடு தொகைஇச், செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” (அகத். 54) எனவும் ஓதினா ராகலின். அஃதேல், கைக்களை பெருந்திணை யென்பனவற்றை உரிப்பொருள் என ஓதியது யாதினா லெனின், எடுத்துக்கொண்டகண்ணே “கைக்ளை முதலாப் பெருந்திணை யிறுவாய்” என ஓதி, அவற்றுள் நடுவண் ஐந்திணைக்குரியன இவையெனப் புணர்தல் முதலாக வகுக்கப்படுதலின், முன் வகுக்கப்படாத கைக்கிளை பெருந்திணையும் உரிப்பொருளா மென்றுணர்க. புறமாவது, நிரைகோடற்பகுதியும், பகைவயிற் சேறலும், எயில் வளைத்தலும், இரு பெருவேந்தரும் ஒரு களத்துப்பொருதலும், வென்றி வகையும், நிலையாமை வகையும், புகழ்ச்சி வகையும் என எழுவகைப்படும். அஃதேல், புறப்பொருளை உரிப்பொருளென ஓதிற்றிலரா லெனின், “வெட்சி தானே குறிஞ்சியது புறனே” (புறத். 59) எனவும், பிறவும் இவ்வாறு மாட்டேறு பெற ஓதலின் அவையும் உரிப்பொருளாம் என்க. அகம் புறம் என்பன காரணப்பெயர். அகப்பொருளாவது போக நுகர்ச்சியாகலான் அதனா னாயபயன் தானே யறிதலின் அகம் என்றார். புறப்பொருளாவது மறஞ்செய்தலும் அறஞ்செய்தலு மாகலான் அவற்றா னாய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறமென்றார். அஃதற்றாக, அறம் பொருள் இன்பம் வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்கும் எனின், அவையும் உரிப்பொருளினுள் அடங்கும். என்னை? வாகைத்திணையுள் “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபி னரசர் பக்கமும், இருமூன்று மரபி னேனோர் பக்கமும்’ (புறத். 16) என இல்லத்திற்கு குரியவும், “காமஞ் சான்ற கடைக்கோட் காலை, ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியும், சிறந்தது பயிற்ற லிறந்ததன்பயனே” (கற்பு. 51) என நான்கு வருணத்தா ரியல்பும், “நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்’ (புறத். 16) எனவும், “காம நீத்த பாலின் கண்ணும்’ (புறத். 17) எனவும் புறமாகிய வீடு பேற்றிற்குரிய வானப்பிரத்த சந்நியாசிக ளியல்பும் கூறுதலின், அறமும் வீடும் அடங்கின. வெட்சி முதலாகத் தும்பை ஈறாகக் கூறப்பட்ட பொருண்மையும், வாகையிற் கூறப்பட்ட ஒரு சாரனவும், காஞ்சிப்படலத்து நிலையாமையும், பாடாண் பகுதியிற் கூறப்பட்ட பொருண்மையுமாகிய இவையெல்லாம் பொருளின் பகுதியாதலின் அப்பொருள் கூறினாராம். அகத் திணையியலானும் களவியலானும் கற்பியலானும் இன்பப்பகுதி கூறினாராம். அஃதேல், பிறநூலாசிரியர் விரித்துக் கூறினாற் போல அறமும் பொருளும் விரித்துக் கூறாதது என்னையோ வெனின், உலகத்தில் நூல் செய்வார் செய்கின்றது அறிவிலா தாரை அறிவுகொளுத்த வேண்டியன்றே; யாதானும் ஒரு நூல் விரித்தோதிய பொருளைத் தாமும் விரித்தோதுவராயின் ஓதுகின்றதனாற் பயனின்றா மாதலால், முன்னூலாசிரியர் விரித்துக்கூறின பொருளைத் தொகுத்துக்கூறலும், தொகுத்துக் கூறின பொருளை விரித்துக்கூறலும் நூல்செய்வார் செய்யும் மரபென் றுணர்க. அஃதேல், இந்நூலகத்து விரித்துக்கூறிய பொருள் யாதெனின், காமப்பகுதியும் வீரப்பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடு மாதலானும், பொருளானே அறஞ் செய்யு மாகலானும், இன்பமும் பொருளும் ஏற்றமென ஓதினார் என வுணர்க. அஃதற்றாக, இது பொருளதிகாரமாயின் உலகத்துப் பொருளெல்லாம் உணர்த்தல் வேண்டுமெனின், அது முதல் கரு உரிப் பொருளெனத் தொகைநிலையான் அடங்கும். அவ்வாறு வகுக்கப்பட்ட பொருளை உறுப்பினாலும் தொழிலினாலும் பண்பினாலும் பாகுபடுத்தி நோக்க வரம்பிலவாய் விரியும். இக்கருத்தினானே இவ்வாசிரியர் உலகத்துப் பொருளெல்லா வற்றையும் முதல் கரு உரிப் பொருளென ஓதினார் என வுணர்க. அஃதற்றாக, இவ்வதிகாரத்துள் உரைக்கின்ற பொருளை யாங்ஙனம் உணர்த்தினாரோ வெனின், முற்பட இன்பப்பகுதி யாகிய கைக்கிளை முதலாகப் பெருந்திணை ஈறாக அகப் பொருளிலக்கண முணர்த்தி, அதன்பின் புறப்பொருட்பகுதி யாகிய வெட்சி முதலாகப் பாடாண்டினை ஈறாகப் புறப் பொருளிலக்கண முணர்த்தி, அதன்பின் அகப்பொருட்பகுதி யாகிய களவியல் கற்பியல் என இரண்டு வகைக் கைகோளு முணர்த்தி, அதன்பின் அகம் புறம் என இரண்டினையும் பற்றிவரும் பொருளியல் புணர்த்தி, அதன்பின் அவ்விருபொருட் கண்ணும் குறிப்புப்பற்றி நிகழும் மெய்ப்பா டுணர்த்தி, அதன்பின் வடிவும் தொழிலும் பண்பும் பயனும் பற்றி உவமிக்கப்படும் உவமவிய லுணர்த்தி, அதன்பின் எல்லாப் பொருட்கும் இடமாகிய செய்யுளிய லுணர்த்தி, அதன்பின் வழக்கிலக்கண மாகிய மரபிய லுணர்த்தினா ரென்றுகொள்க. இவ்வகை யினானே அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என ஓத்து ஒன்பதாயின. - வ.உ. சிதம்பரம் பிள்ளை அகத்திணையியல் அகத்திணைக்கொல்லாம் பொதுவிலக்கண முணர்த்துதலின் அகத்திணையியலென்னும் பெயர்த்தாயிற்று. ஒத்த அன்பினால் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்த தெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகமென்றார். அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயர், இதனையொழிந்தன அன்புடையார் தாமேயன்றி எல்லார்க்குந் துய்த்துணரப் படுதலானும் இவை இவ்வாறிருந்தவெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவே படும் என்பர் நச்சினார்க்கினியர். இவ்வகத்திணையியற் சூத்திரங்களை 58-ஆக இளம்பூரணரும் 54-ஆக நச்சினார்க்கினிரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். எழுவகை அகத்திணையுள் உரிமை வகையான் நிலம்பெறு வன முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன. அந்நிலத்திடைப் பொதுவகையான் நிகழ்வன கைக்கிளை, பெருந்திணை, பாலை யென்பன. அவற்றுட் பாலைத்திணை நடுவணது எனப்பட்டு நால்வகை யொழுக்கமும் நிகழுங்கால் அந்நான்கனுள்ளும் பிரிதற்பொருட்டாய் நிற்கும். முதல், கரு, உரிப் பொருளும் உவமங்களும் மரபும் இத்தன்மையவென்பதும் இவைபோன்ற அகத்திணைக்குரிய பொதுப் பொருண்மைகளும் இவ்வியலில் உணர்த்தப்படுகின்றன. அகத்திணைக்குரிய சிறப்பிலக்கணம் களவியல், கற்பியல், பொருளியல் முதலாகப் பின்வரும் இயல்களில் விரித்துரைக்கப்படும். கைக்கிளை முதலாகப் பெருந்திணை யிறுதியாகச் சொல்லப்படும் அகத்திணை யேழனுள் நடுவே வைத்து எண்ணப்பட்ட முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தலென்னும் ஐந்தையும் ஐந்திணையென ஒன்றாக அடக்கி, கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணையென மூவகையாகப் பகுத்து விளக்குவர் ஆசிரியர். ஒருவன் ஒருத்தியென்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பினாற் கூடி வாழ்தலில் அளவிறந்த வேட்கை யுடையராயொழுக, மற்றவர் அவரது அன்பின் திறத்தை யுணர்ந்து கொள்ள முடியாத நிலை ஒருபக்கத்து உறவு. ஆதலின் கைக்கிளையெனப்படும். கை-பக்கம். கிளை-உறவு. கைக்கிளை யென்பது ஒருதலைக் காமம். ஒருவன் ஒருத்தியாகிய இருவருள் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் நிலை பெருந்திணையெனப்படும். இத்தகைய உளம் பொருந்தா வாழ்க்கை உலகியலிற் பெரும்பான்மையாகக் காணப்படுதலால் இதற்குப் பெருந்திணையெனப் பெயரிட்டனர் முன்னையோர். பெருந்திணை - உலகிற் பெரும்பான்மையாக நிகழும் ஒழுகலாறு. பல பிறவிகள் தோறும் கணவனும் மனைவியுமாக ஒன்றி வாழ்ந்தமையால் நிரம்பிய அன்புடையாரிருவர் வேறுவேறிடங்களிற் பிறந்து வளர்ந்தராயினும் நல்லூழின் செயலால் ஒரிடத்தெதிர்ப் பட்டு நெஞ்சு கலந்து அன்பினால் அளவளாவுதலும், அவ்விருவருள் கணவன் உலகியற் கடமை கருதிச் சிலநாள் மனைவியைப் பிரிந்து சேறலும், மனைவி அப்பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து ஆற்றியிருத்தலும் பிரிந்த கணவன் குறித்த நாளில் வரத் தாமதிப்பின் அவள் ஆற்றாமை மிக்கு இரங்குதலும், பின் அவன் வந்தபோது அன்பினாற் பிணங்குதலும் என ஐந்து பகுதியாக ஒத்த அன்புடையா ரிருவரது ஒழுகலாறு விரித்து விளக்கப் பெறுதலின் அஃது ஐந்திணையெனப் பெயர் பெறுவதாயிற்று. இவ்வைந்திணையொழுகலாறுகள் எல்லா நிலத்தும் எல்லாக் காலத்தும் பொதுவாக நிகழ்தற்குரியனவே, எனினும் இவை ஒவ்வொன்றுக்கும் சிறப்புரிமையுடைய நிலமும் பொழுதும் இவையெனப் பண்டைத் தமிழாசிரியர் வரம்பு செய்து இலக்கணம் வகுத்துள்ளார்கள். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி. செவ்வேள் எழுந்தருளிய மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிர்ப்பருவமும் மார்கழியுந் தையுமாகிய பின்பனிப் பருவமும் இவற்றின் நள்ளிரவும் இதற்குரிய காலமாகும். இந்நிலமுங் காலமுமாகிய முதற் பொருள் காரணமாக, இவற்றிற் கருக்கொண்டு தோன்றிய கருப்பொருள் நிகழ்ச்சிகள் துணையாக, ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவருள்ளத்திலும் புணர்தலுணர்வு தோன்றுமென்ப. இவ்வாறே மாயோன் எழுந்தருளிய காடுறை யுலகமும் கார்காலமும் அவற்றின்கண் தோன்றிய கருப்பொருள்களும் ஏதுவாக இருத்தலுணர்வும், வருணன்மேய பெருமணற் பகுதியாகிய கடற்பரப்பும் ஞாயிறு மறையும் பொழுதாகிய எற்பாடும் அங்குத் தோன்றுங் கருப்பொருளும் ஏதுவாக இரங்கலுணர்வும், வேந்தன் ஆட்சிபுரியும் வயல் சார்ந்த நிலமும் வைகறை விடியலும் அங்குள்ள கருப்பொருள்களும் காரணமாக ஊடலுணர்வும், வேனிற் காலத்து நண்பகற் பொழுதில் ஞாயிற்றின் வெப்பத்தால் நல்லியல்பிழந்து பாலையாய் மாறிய நடத்தற்கரிய வழிகளும் அங்குள்ள கருப்பொருள்களுந் துணையாகப் பிரிதலுணர்வும் மேற்பட்டுத் தோன்றுமெனத் தமிழ்ப்பொருளிலக்கண ஆசிரியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமது கூர்ந்த நுண்ணுணர்வால் ஆராய்ந்து அறிவுறுத்தியுள்ளார்கள். இவ்வாறு தொல்லாசிரியர் கண்டுணர்த்திய முதற்பொருள் கருப்பொருள்-உரிப்பொருள் என்பவற்றின் இயல்புகள், நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளின் சார்பாலும் அச்சூழலிற் றொன்றிய கருப்பொருள்களின் துணையாலும் மக்களின் மனவுணர்வாகிய உரிப்பொருளொழுகலாறுகள் மாண்புற்றுச் சிறத்தலை இனிது விளக்குவனவாம். மக்களது உணர்வு அவர்கள் பிறந்து வாழும் இடத்தின் வன்மை மென்மை வெப்பதட்பம் முதலிய நிலத்தியல்புக் கேற்பவும் காலவியல்புக் கேற்பவும் வேறுபடும் நீர்மையதென்பதனை இக்கால அறிவியல் நூலாரும் ஏற்று வற்புறுத்துவர். நீரானது தான் சேர்ந்த நிலத்தின் தன்மையினாலே நிறம் சுவை முதலிய பண்புகள் மாறுபடுதலை தாம் வெளிப்படையாக அறிகின்றோம். நீரேயன்றி மக்களது மன நீர்மையும் நிலத்திற்கும் காலத்திற்கும் அவற்றின்கண் தோன்றிய கருப்பொருளாகிய சுற்றுச்சார்பிற்கும் ஏற்ப மாறுபடுமென்பதனைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் மன நூற் பயிற்சியால் நன்கு தெளிந்திருந்தார்கள். நிலத்தியல்பால் மக்களது மனநீர்மை திரிதலும் மக்களது மனத்தியல்பால் நிலத்தியல்பு மாறுபடுதலும் வித்தும் மரமும்போன்று ஒன்றற்கொன்று காரணகாரியங்களாம். நிலம் முதலிய புறப்பொருள்களின் தொடர்பால் மக்களது மனத்தகத்தே அன்பென்னும் உயிர்ப்பண்பு வளர்ந்து சிறத்தல் அகத்திணை வளர்ச்சியாகும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் வாய்மொழிக்கேற்ப அமைந்த மக்களது மனத்தின் ஆற்றலால், புறப்பொருளாகிய நிலத்தியல்பு வளர்ந்து சிறத்தல் புறத்திணை வளர்ச்சியாகும். இவ்விருவகை வளர்ச்சியினையும் முறையே அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பவற்றிலும் புறத்திணையியலிலும் ஆசிரியர் தொல்காப்பியனார் உய்த்துணர வைத்துள்ளார். முதல், கரு, உரி யென்னும் மூவகைப் பொருளையுந் திணை யென்ற சொல்லால் வழங்குவர் ஆசிரியர். காட்டில் முல்லையும் மலையிற் குறிஞ்சியும் வயலருகே மருதமும் கடலருகே நெய்தலும் பெருக வளர்தல்பற்றி அந்நிலங்களை முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் பூக்களாற் பெயரிட்டு வழங்கினர். பாலை யென்பதற்கு நிலமில்லையாயினும் வேனிலாகிய காலம்பற்றி வருதலின், அக்காலத்துத் தளிரும் சினையும் வாடாமல் நிற்கும் பாலையென்னும் பெயருடைய மரம் உண்டாகலின் அச்சிறப்பு நோக்கிப் பாலையென்று பெயரிட்டார். கைக்கிளை பெருந்திணை யென்பனவற்றுக்கு நிலமும் காலமும் பகுத்தோதா மையின் பிறிதோர் காரணம்பற்றிப் பெயரிட்டார். காடும் மலையும் ஊருங் கடலுமாகிய நானிலப் பகுதிகளும் அவற்றின் திரிபாகிய பாலையும், தம்பாற் சிறந்து வளரும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை யென்னும் பூக்களாற் பெயர் பெறுதலால் அவ்வந் நிலத்திற்குச் சிறந்தியைந்த இருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் அகவொழுக்கங்களும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என அவ்வந் நிலத்திற்குரிய பூவின்பெயர்களே கொள்வனவாயின. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன முறையே இருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல் என்னும் ஒழுக்கத்தைக் குறித்த பெயர்களென்றும் இவ்வொழுக்கத்தின் பெயர்களே இவைநிகழும் நிலத்திற்மாயின வென்றுங் கருதுவர் நச்சினார்க்கினியர். அவ்வந்நிலங்களிற் சிறப்பாக வளரும் பூவின் பெயர்களே அவை தோன்றி வளரும் நிலத்திற்கும் அந்நிலத்திற் சிறப்புரிமையுடையதாய் நிகழும் ஒழுக்கத்திற்கும் ஆகு பெயராய் வழங்கின எனக் கொள்வதே பொருத்தமுடையதாகும். இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றியனவாதலாலும் மகளிர், கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல் லிருந்து நல்லறஞ் செய்தலே முல்லையாதலாலும் அது முற்கூறப் பட்டது. புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின் புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். புணர்ச்சிப் பின் ஊடல் நிகழ்தலின் அதன்பின் மருதத்தை வைத்தார். மருதத்திற்குரிய பரத்தையிற் பிரிவுபோலப் பிரிவின்கண் நிகழ்வது இரங்கலாகிய நெய்தலாதலின் நெய்தலை ஈற்றின்கண் வைத்தார். என இவ்வாறு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறைக்குக் காரணங் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வாறே முல்லைக்குக் காரும் மாலையும் குறிஞ்சிக்குக் கூதிர்யாமமும், மருதத்திற்கு வைகறை விடியலும், நெய்தலுக்கு எற்பாடும், பாலைக்கு நண்பகலும் வேனிலும் சிறந்தனவாதற்கு அவ்வாசிரியர் உய்த்துணர்ந்து கூறுங் காரணங்கள் உணர்ந்து மகிழத்தக்கனவாம். குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே வேனில் வெப்பத் தால் வளங்குறைந்து நடத்தற்கரியதாய் மாறிய காலத்துப் பாலையென வழங்கப்படும். “முல்லையுங் குறிஞ்சியும் முறைமை யிற்றிரிந்து, நல்லியில்பிழந்து, நடுங்குதுயருத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங்காலை” என இளங்கோவடிகள் கூறுதலால் இவ்வழக்கின் உண்மை துணியப்படும். இளங்கோ வடிகளுக்கு நெடுங்காலம் முற்பட்டவராகிய ஆசிரியர் தொல் காப்பியனார் காலத்துப் பாலையென்னுஞ்சொல் பிரிவொழுக்க மாகிய திணையைக் குறித்து வழங்கியதேயன்றி நிலத்தைக்குறித்து வழங்கவில்லை. அவர் காலத்துக் காடுறையுலகமும் மைவரை யுலகமும் தீம்புனலுலகமும் பெருமணலுலகமும் என இவ்வுலகத்தை நான்கு நிலமாகப் பிரித்துரைக்கும் வழக்கமே நிலவியதென்பது இவ்வியல் 5-ஆம் சூத்திரத்தால் இனிது புலனாம். “தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர்; வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர் பகவதியையும் ஆதித்தனையும் தெய்வமென்று வேண்டுவர்’ எனக் களவியலுரையாசிரியர் கூறுங் கூற்று இதனை வலியுறுத்தல் காணலாம். காலிற்பிரிவு கலத்திற்பிரிவு என்னும் இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றுதலும் பாலைத் திணைக்கு ஏற்புடையதாகும். ஐந்திணையொழுக்கங்கள் தத்தமக்குச் சிறப்புரிமையுடைய நிலத்தினுங் காலத்தினும் நிகழ்வதுடன் பிற நிலங்களிலும் காலங்களிலும் கலந்து நிற்றல் விலக்கப்படாது. அங்ஙனம் கலக்குங்கால் இரண்டு நிலம் ஒருங்கு நிற்றலில்லை. உரிப்பொருளல்லாத கருப்பொருளும் காலமுதற் பொருளும் மற்றைத் திணைகளிற் சேர நிற்றலுண்டு. தலைவன் தலைவியை உடன்போக்கில் அழைத்துக் கொண்டு பெயர்தலும், தலைமகளுடைய சுற்றத்தார் இடைச்சுரத்திலே தடுத்து நிறுத்துதலால் தலைவனைப் பிரிந்த தலைவி இரங்குதலுமாகிய இருவகை யொழுக்கங்களும் இடைச்சுரமாகிய ஓரிடத்திலேயே நிகழ்தலுண்டு. இவ்வாறே தலைவன் தலைவியை யெதிர்ப்படும் முதற்காட்சியும் அக்காட்சிக்குப்பின் தலைமகளுளக் குறிப்பறிந்து கூடும் உள்ளப்புணர்ச்சியும் ஓரிடத்தே நிகழ்வனவாம். முதற்பொருள் நிலமுங் காலமுமாகிய இவ்விருவகையாலும் உரிப்பொருளுக்கு இடனாய் நிற்பதாகும். தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, யாழ்வகை என்பவற்றுடன் அத்தன்மைய பிறவும் கருப்பொருள்களெனப்படும். ஒரு நிலத்திற்குரிய கருப்பொருளாகிய பூவும் பறவையும் அந்நிலத்தொடும் பொழுதொடும் வந்திலவாயினும் வந்த நிலத்தின் தன்மையுடைய னவாகக் கொள்ளப்படும், என இவ்வியல் 13-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களாற் கூறுவர் ஆசிரியர். ஒருதிணைக்கண்ணே நிலத்துவாழும் மக்கட்பெயர் நிலப் பெயரும் தொழிற்பெயரும் என இருவகைப்படும். ஆயர் என்பது முல்லை நிலத்தில் வாழ்வாரைக் குறித்து வழங்கும் நிலப்பெயராகும். வேட்டுவரென்பது வேட்டைத் தொழில் செய்வாரைக் குறித்து வழங்குந் தொழிற் பெயராகும். ஆயர் வேட்டுவர் எனவரும் இப்பெயர்கள் ஆண்மக்களைப்பற்றி வருந் திணைப் பெயர்களாகும். இவர்களுள் அகத்திணை யொழுகலாற்றிற்குரியராய் வரும் தலைவரும் உளர். இவ்வாறே ஏனை நிலங்களில் வாழும் மக்கள் பாலும் அகவொழுக்கத்திற்குரியராய் வழங்கு பெயர்கள் நீக்கப்படாவாம்; என நானில மக்களும் அகவொழுக்கத்திற் குரியராதலை 22, 23, 24-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். தாமே பொருளீட்டி வாழ்க்கை நடத்துதற்குரிய வினைத் திறமின்றிப் பிறர்பால் தாழ்ந்து தம்முணர்வின்றித் தொண்டு செய்தொழுகுவோர் அடியோர். தம் உணர்வு மிகுதியால் தாமே ஒரு தொழிலைச் செய்து முடிக்கவல்லவர் வினைவலர். தாமாக ஒன்றைச் செய்யாது பிறர் இத்தொழிலை இவ்வாறு செய்க என ஏவினால் அவர் ஏவியவண்ணம் செய்யுமியல்புடையோர் ஏவல் மரபின் ஏனோர். இவரனைவரும் பிறர்க்கு அடங்கி அவர் சொல்வழியொழுகு மியல்பினராதலின், அறம்பொருளின் பங்களில் வழுவா தொழுகும் அகனைந்திணையொழுகலாற்றிற்கு உரியரல்லரென்றும் அவற்றின் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்கேயுரிய ரென்றும் கூறுவர் தொல்காப்பியர் (அகத்-25, 26) ஓதல், பகை, தூது என்பன பிரிவுக்குரிய நிமித்தங்களாம். ஓதற்குப் பிரியும் பிரிவும் தூதாகிப் பிரியும் பிரிவும் ஒழுக்கத்தாலும் பண்பினாலும் உணர்வு மிகுதியாலும் ஏனையோரினும் உயர்வுடையார்க்கே யுரியனவாம். பகைவரை வெல்லுதற் பொருட்டு வேந்தன் தானே படையொடு செல்லுதலும் அவனொடு பொருந்திய ஏனைக் குறுநிலத் தலைவர் படையொடு செல்லுதலும் வேந்தனது ஆணைவழி நிகழ்தற்குரியனவேயாம். வேந்தனாற் சிறப்பளித்துப் பாராட்டப்பெற்ற ஏனையோர், முல்லை முதலாகச் சொல்லிய நிலப்பகுதிகளுள் அலைத்தல் பெற்றுச் சிதைவுற்றதனைச் சிதைவு நீக்கிக் காத்தல் வேண்டியும், அரசிறையாக இயற்றப்பெற்ற பொருளை ஈட்டுதல் கருதியும் பிரிந்து செல்வர். மலர்தலையுலகிற்கு உயிரெனச் சிறத்தலின் எல்லா மக்களினும் மேலோராகிய வேந்தர்க்குரிய முறை செய்தற்றன்மை நானிலத் தலைவர்க்கும் ஒப்பவுரியதாகும். மன்னர்க்குரிய ஆட்சியுரிமையில் அவரது குடியிற் பிறந்த பின்னோர்கள் இயல்பாக உரிமையுடையராவர்; அவ்வுரிமை உயர்ந்தோர்க் குரியதாக நூலிற் சொல்லப்பட்ட முறைமையான் வந்தெய்தும். முடிவேந்தர்க்கு இயல்பாகவுரிய ஆட்சியுரிமை, அவர் குடியிற் பிறந்தோர்க்கேயன்றி, வேந்தர்குடியின் வேறுபட்ட ஏனையோர் பாலும் எய்துமிடமுடைத்து. வேந்து வினையியற்கை யெய்திய ஏனோர்க்குப் பொருள்வயிற் பிரிவும் உரியதாகும். அங்ஙனம் அவர் சென்று ஈட்டும் பொருள் உயர்ந்தோரால் மதிக்கப்படும் சிறப்புடைய ஒழுக்கத்தோடு பொருந்தியதாதல் வேண்டும். அன்பினைந்திணையே யன்றிக் கைக்கிளை பெருந்திணையாகிய எத்திணைக் கண்ணும் பெண்ணொருத்தி நாணிறந்து மடலேறினாள் என்றல் பொலிவுமிக்க வாழ்க்கை நெறியன்று; ஆதலால் தலைவன் தலைமகளையுடன்கொண்டு கடல்கடந்து செல்லும் வழக்கம் இல்லை. என 27-முதல் 38-வரையுள்ள சூத்திரங்களால் அகவொழுக்கங்களிற் பெருவர விற்றாய பாலைத்திணைக்குரிய நோக்கமும் செயல்முறைகளும் அவற்றுக்கு உரிமையுடையோர் இன்னின்னாரென்பதும் உணர்த்துவர் ஆசிரியர். தலைமகள் தலைவனுடன் போகியவழி நற்றாய் கூறவனவும், செவிலிக்குரிய திறமும், தலைமகளைத் தலைவனுடன் அனுப்புங்கால் தோழி கூறுவனவும், உடன்போக்கிற் கண்டோர்க்குக் கூற்று நிகழுமிடங்களும், பிரிவின்கண் தலைமகற்குக் கூற்றுநிகழுமிடங்களும், ஏனையோர் கூற்றிற்கு உரியராதலும் 39-முதல் 45-வரையுள்ள சூத்திரங்களால் உணர்த்தப்பட்டன. முன்னர் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர் நினைத்தற்குரிய நிமித்தமாதலும், முன்பு நிகழ்ந்ததொன்றினைக் கூறி நிற்றல் ஒருதிணையாயடங்குதலும், அகத்திணை மரபு மாறுபடாதனவாய்க் கலத்தற்குரிய பொருள் நிகழ்ச்சிகள் கலத்தலுண்டென்பதும் முறையே 46, 47, 48-ஆம் சூத்திரங்களிற் சொல்லப்பட்டன. அகப்பொருளொழுகளாற்றில் சொல்லால் வெளியிட்டுக் கூறுதற்குரியவல்லாத எண்ணங்களை நாகரிகமாக மறைத்துக் கூறுதற்பொருட்டு அமைத்துக்கொண்ட உரையாடல் முறையே உள்ளுறையுவமமாகும். பொருள் புலப்பாட்டிற்கு இன்றியமையாத ஏனையுவமம் போன்று அகப்பொருளை யுணர்த்தும் நிலையில் தள்ளாது கருதுதற்குரியது இவ்வுள்ளுறை யுவமமாகும். தெய்வமல்லாத ஏனைக் கருப்பொருள்களின் நிகழ்ச்சியினை வெளியிட்டுரைக்கு முகத்தால் அந்நிகழ்ச்சியினை யுவமையாகக் கொண்டு தலைவன் தலைவியாகிய அகத்திணை மக்களின் ஒழுகலாறுகளை உய்த்துணர்ந்துகொள்ளச் செய்தல் உள்ளுறையின் நோக்கமாகும். யான் புலப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியாகிய இவ்வுவமத்தோடு புலப்படக் கூறாத உவமிக்கப்படும் பொருளும் ஒத்த முடிவதாகவெனத் தன்னுள்ளத்தே கருதி, அக்கருத்தினைக் கருதியுணர்தற்கேற்ற சொல்லெல்லாம் தன்னகத்தே யமையக்கொண்டு கூறப்படுவதே உள்ளுறை யுவம மெனப்படும். வண்ணம், வடிவு, பயன், தொழில் என்னும் இவற்றால் உவமிக்கப்படும் பொருளோடு எடுத்துக் கூறப்பட்டு வெளிப்படையாகப் பொருள் விளக்குவது ஏனையுவமமாகும். இவ்விரு வகையுவமைகளும் அகத்திணைப் பொருளுணர்ச்சிக்கு உபகாரப்படு மியல்பினை 49-முதல் 52-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விளக்கியுள்ளார். காமக் குறிப்பிற்கு அமைதியில்லாத இளம்பருவப் பெண்ணைக் கண்டு அவளை மனைக்கிழத்தியாகப் பெறவேண்டு மென விரும்பிய ஒருவன், மருந்து பிறிதில்லாப் பெருந்துயரெய்தித் தான் அவள்பாற்செலுத்தும் அன்பின் திறமாகிய நன்மையும் அவள் அதனையுணராமையால் தனக்கிழைக்குந் தீமையும் என்னும் இருதிறத்தால் மிகப்பெருக்கிய சொற்களைத் தன்னோடும் அவளோடுங் கூட்டிச் சொல்லி, அச்சொற்களுக்கு அவளிடமிருந்து எதிர் மொழி பெறாது தானே தனக்குள் சொல்லி யின்புறும் நிலை கைக்கிளையாதற்குப் பொருந்தித் தோன்றுங் குறிப்பாம் என 53 ஆம் சூத்திரம் கூறும். எனவே, இத்தகைய கைக்கிளைக் குறிப்பு ஆடவர்க்கன்றி மகளிர்க்கு ஏலாதென்பது ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். மடலேறுவேனெனக் கூறுதலோடமையாது மடலேறுதலும், இளமை நீங்கிய பருவத்தும் மெய்யுறுதலில் விருப்பமுடையவ ராதலும், தெளிவிக்கத் தெளியாத காமவுணர்வால் அறவழிந்து மயங்குதலும், கரைகடந்த காமத்தால் விரும்பாதவரை வலிந்து புணரும் வன்கண்மையும் ஆக இங்குச் சொல்லப்பட்ட நான்கும் பொருந்தாவொழுக்கமாகிய பெருந்திணைக் குறிப்புக்களாம் என 54-ஆம் சூத்திரம் கூறும் மேற்கூறிய பெருந்திணைக் குறிப்புக்கள் நான்கின் முற்பட்ட நிலைகளாகிய ஏறாமடற்றிறமும், இளமை நீங்காத் திறமும், தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறமும், மிக்க காமத்தின் மாறகாத்திறமும் ஆகிய நான்கும் முன்னர்க் கூறப்பட்ட கைக்கிளைக்குரியன வென்பது 55-ஆம் சூத்திரத்தாற் கூறப்பட்டது. இங்குக் கைக்கிளைக்குரியனவாகக் கூறப்பட்ட நான்கினையும் முறையே வெளிப்பட இரத்தல், நலம் பாராட்டல், புணரா விரக்கம், நயப்புறுத்தல் என விளக்குவர் இளம்பூரணர். நாடக வழக்காகிய புனைந்துரை வகையாலும் உண்மையான் நிகழும் உலகியல் வழக்காலும் புலவராற் பாடுதற் கமைந்த அகத்திணை யொழுகலாறாகிய புலனெறி வழக்கம், கலியும் பரிபாடலுமாகிய இருவகைப் பாவினும் நடத்தற்குரிமை யுடையது என 56-ஆம் சூத்திரம் கூறும். உலகியலில் அன்பினால் நிகழும் அகத்திணை யொழுகலாற்றினைச் சொல்லோவியமாகப் புனைந்து காட்ட எண்ணிய நல்லிசைப் புலவர்கள், அவ்வொழுக்கவுணர்வுகள் மக்களுள்ளத்தே தோன்றுதற்குரிய சார்பாகப் புறத்தே தோன்றும் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை முதலிய கருப்பொருள்களையும் அவற்றுக்கு நிலைக் களனாய் விளங்கும் நிலமுங் காலமுமாகிய முதற்பொருள்களையும் புனைந்து காட்டி, அவை சார்பாகத் தாம் அறிவுறுத்த எண்ணிய இன்ப துன்ப வுணர்வுகளைத் தெளிய விளக்குவர். மனத்தால் எண்ணியுணர்தற்குரிய வாழ்க்கை யுணர்வுகளைச் சொல்லாற் புனைந்துரைத்து ஐம்பொறி வாயிலாகக் காணும் உருவாக்கிக் காட்டுதல் நாடக வழக்கின் பாற்பட்டதாம். பல்வேறிடங்களிலும் பல்வேறு காலத்தும் நிகழ்பவற்றையெல்லாம் ஓரிடத்து ஒரு காலத்துத்தொகுத்துத் தொடர்புபட்ட கதையாக நிகழ்த்திக் காட்டுதல் நாடகத்தின் இயல்பாகும். இதன்கண் புனைந்து காட்டப்படுவனவும் நிகழாதன அல்ல, உலகியலில் நிகழும் உண்மை நிகழ்ச்சியே யென்பது நாடகம் என்னாது நாடகவழக்கு என்றதனாற் புலனாம். செய்யும் செய்யும் புலவன் உலகில் வழங்கும் உண்மை நிகழ்ச்சியையே தான்கூறக் கருதினானெனினும், அதனை இனிது விளக்குதற்குரிய இடமுங் காலமுந் தந்து புனைந்துரைத்தால்தான் அப்பொருள் கேட் போருணர்வில் நன்கு பதியும். இவ்வுண்மை கருதியே ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலநெறி வழக்கம் எனத் தொல்காப்பியனார் இச்செய்யுள் வழக்கிற்கு இலக்கணங் கூறுவாராயினர். சொல்லாலும் செயலாலும் விளங்கித் தோன்றுதற்குரிய புறப் பொருட்பாடலைக் காட்டிலும் மனத் தாலுணரத்தக்க அகப்பொருட் பாடலுக்கே இப்புனைந்துரை மரபு பெரிதும் இன்றியமையாததாகும். ஒருவரையொருவர் காணும் முதற் காட்சியிலேயே தொன்மையன்பின் தொடர்புணர்ந்து கணவனும் மனைவியுமாக இன்றியமை யாதொழுகும் இயல்புடையார் உலகத்து மிகவும் அரியர். ஆகலின் உலகில் அருகித் தோன்றும் சிறப்புடைய அவர்களை நல்வாழ்விற் சிறந்த தலைமக்கள் எனப் பண்டைத் தமிழியல் நூலார் பாராட்டிப் போற்றினர். அத் தலைமக்கள் வாழ்வில் மிக்குத்தோன்றும் பேரன்பின் செயலை வெளிப்படுத் துணர்த்து முகத்தால் ஏனைப் பொதுமக்கள் வாழ்க்கையினையும் அன்பு நெறியிற் பயிற்றுதல் கூடுமெனக் கருதினர். மேற்காட்டிய தலைமக்கள் வாழ்க்கையினைப் பொருளாகக் கொண்டு செய்யுள் செய்வாராயினர். தலைமக்க ளாதற்குரிய முழுப் பெற்றியும் அமைந்தார் சிலரைக் கண்ட பின்னரே இத்தகைய செய்யுளைப் பாடுதல் வேண்டுமென்னும் வரையறையில்லை. அவ்வியல்புடையார் தம் காலத்திற் காணப்படாது போயினும் பொதுமக்கள் வாழ்க்கையில் தலைமக்களுக் குரிய இயல்புகளாக ஒவ்வொருவர்பால் தனித்தனியமைந்து விளங்குந் தலைமைப் பண்புகளெல்லாம் தம்மாற் கூறப்படுந் தலைமக்களிடத்து உள்ளனவாக ஒருங்கு தொகுத்து இவ்வியல்புடையார் இத்தலைவனுந் தலைவியும் என இவ்வாறு செய்யுள் செய்தலும் இல்லதெனப்படாது உண்மையான் நிகழும் உலகியல் வழக்கேயாம் என்பது பண்டைத் தமிழாசிரியர் துணிபாகும். இக் கருத்திற்கு மாறாக இவ்வகத்திணை யொழுகலாற்றை ‘இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டது’ எனக் கூறினார் களவியலுரையாசிரியர். இல்லாத ஒன்றினை நாட்டிச் செய்யுள் செய்தல் ஆகாயப்பூ நாறிற்றென்பது போல மயங்கக் கூறியதாக இகழப்படுமாதலாலும், இல்லதென்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பஞ் செய்யாதாகலானும் ஆசிரியர் தொல்காப்பியனார் இப்புலனெறி வழக்கத்திற்கு அடிப்படை யாயமைவது உலகியல் வழக்கம் என இச்சூத்திரத்துக் கூறினமையானும் ஐந்திணையாகிய இவ்வொழுக்கம் மக்கள் வாழ்க்கையாகிய உலகியல் நிகழ்ச்சியையே பொருளாகக் கொண்டதென்பதனை “மக்கள் நுதலிய அகனைந்திணையும்” என்ற தொடரால் ஆசிரியர் அறிவுறுத்தலானும் இல்லதென்பது தொல்லாசிரியர் தமிழ் வழக்கன்றென மறுக்கவென்று மறுத்தார் நச்சினார்க்கினியர். மக்களைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் அகனைந் திணைச் செய்யுளின்கண்ணே அவ்வொழுக்கத்திற்குரியராகச் சொல்லப்படும் தலைமக்கள், நிலப்பெயரும் தொழிற்பெயருமாகிய திணைநிலைப் பெயராற் கூறப்படுதவதல்லது இயற்பெயராற் சுட்டிக் கூறப்பெறாரென்றும், புறத்திணை யொழுகலாற்றில் அதற்குரிய தலைமக்களது இயற்பெயர் கூறப்படுவதல்லது அகத்திணைக்கண் கூறப்படுதலில்லையென்றும் 57, 58-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். - க. வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 10, பக். 228-239 முதலாவது அகத்திணையியல் இவ்வதிகாரத்துள், இம்முதற்கண் ஓத்து அகப்பொருள் இலக்கணம் நுதலிற்று. 1. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த வெழுதிணை யென்ப. இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், அகப்பொருள் இத்துணை என வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்: கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுவாய் (ஆக) - கைக்கிளை என்று சொல்லப்படும் பொருள் முதலாகப் பெருந்திணை என்று சொல்லப்படும் பொருள் ஈறாக, எழுதிணை முற்படக் கிளந்த என்ப - எழு பொருள் முற்படக் கூறப்பட்டன என்று சொல்வர். முதலா என்பது முதலாக என்னும் பொருள்பட நின்றது; விகாரம் எனினும் அமையும். ‘இறுவாயாக’ என்பதன்கண் ஆக என்பது எஞ்சி நின்றது. ‘எழுதிணையும் முற்படக் கிளந்த’ எனற்பாலது மொழிமாறி நின்றது. கிளந்த என்பது கிளக்கப் பட்டன என்னும் பொருள்பட வந்த முற்றுச்சொல். முற்படக் கிளந்த எழுதிணை கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதிய எனினும் இழுக்காது. “முற்படக் கிளந்த’’ என்றமை யான், அவை யேழும் அகப்பொருள் என்று கூறினாருமாம். அகம் புறம் எனப் பொருளை வரையறுத்தல் இவர் கருத்தாகலின் அன்னதாதல், “அகத்திணை மருங்கி னரிற வுணர்ந்தோர், புறத்திணை இலக்கணந் திறப்படக் கிளப்பின்’’ (புறத். 1) என்பதனாற் கொள்க. ‘முற்படக் கிளந்த எழுதிணை’ யெனவே, பிற்படக் கிளக்கப்படுவன எழுதிணை உள என்பது பெறுதும். அவையாவன, வெட்சி முதலாகப் பாடாண்டிணை ஈறாகக் கிடந்த எழுதிணையும். இவ்வகையினான் இவ்வதிகாரத்திற் கூறப்பட்ட பொருள் பதினான் கென்பதூஉம், அவையும், “வெட்சி தானே குறிஞ்சியது புறனே’’ (புறத். 1) எனவும், “வஞ்சி தானே முல்லையது புறனே’’ (புறத். 6) எனவும், இவ்வாறு கூறுதலின் ஏழாகி அடங்கு மென்பதூஉம் கொள்க. அஃதேல், மெய்ப்பாட்டியலானும் உவமவியலானும் செய்யுளியலானும் மரபியலானும் கூறப்பட்ட பொருள் யாதனுள் அடங்கு மெனின், அவை கருப்பொருளும் அப் பொருளாற் செய்யப்பட்டனவும் அப்பொருளின் குணம் முதலியனவும் அப்பொருளின் குறிப்பு நிகழ்ச்சியு மாதலின், அவையும் கருப்பொருளின்பால் நடுவணைந்திணையுள் அடங்கும் என்ப. அவை சிறுபான்மை கைக்கிளை பெருந்திணை யினும் வரும். அவ்வெழு திணையுமாவன: கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை. கைக்கிளை என்ற பொருண்மை யாதோ வெனின், கை என்பது சிறுமை பற்றி வரும். அது தத்தங் குறிப்பிற் பொருள்செய்வதோர் இடைச் சொல். கிளை என்பது உறவு; பெருமையில்லாத தலைமக்கள் உறவு என்றவாறு. கைக்குடை, கையேடு, கைவாள், கையொலியல், கைவாய்க்கால் எனப் பெருமையில்லாதவற்றை வழங்குபவாதலின். நடுவணைந்திணைக்கண் நிலமும் காலமும் கருப்பொருளும் அடுத்துப் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனச் சொல்லப்பட்ட அவ்வுரிப்பொருள், ஒத்த அன்பும் ஒத்த குலனும் ஒத்த வடிவும் ஒத்த குணனும் ஒத்த செல்வமும் ஒத்த இளமையும் உளவழி நிகழுமாதலின், அது பெருங்கிளைமை யாயிற்று. முல்லை முதலாகிய ஐந்தும் முன்னர்க் கூறப்படும். பெருந்திணை, நடுவணைந்திணையாகிய ஒத்த காமத்தின் மிக்கும் குறைந்தும் வருதலானும், எண்வகை மணத்தினும் பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்பன அத்திணைப்பாற் படுதலானும், இந்நான்கு மணமும் மேன்மக்கள்மாட்டு நிகழ்தலானும், இவை உலகினுள் பெரு வழக்குகெனப் பயின்று வருதலானும், அது பெருந்திணை எனக் கூறப்பட்டது. அஃதேல், நடுவணைந்திணை யாகிய ஒத்த கூட்டம் பெருவழக்கிற்றன்றோ வெனின், அஃது அன்பும் குலனும் முதலாயின ஒத்துவருவது உலகினுள் அரிதாகலின் அருகியல்லது வாராதென்க. இந்நூலகத்து ஒருவனும் ஒருத்தியும் நுகருங் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி இன்பம் உளதாமெனவும், கைக்கிளை ஒருதலை வேட்கை யெனவும், பெருந்திணை ஒவ்வாக் கூட்டமாய் இன்பம் பயத்தல் அரிதெனவும் கூறுதலான், இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்துகொள்க. (1) 2. அவற்றுள், நடுவ ணைந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே. இது, மேற்சொல்லப்பட்ட எழுதிணையுள், நிலம் பெறுவன வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அவற்றுள் - மேற்சொல்லப்பட்ட எழுதிணையுள், நடுவணது ஒழிய - நடு வெனப்பட்ட பாலை யொழிய, நடுவணைந்திணை - (கைக்கிளை பெருந்திணைக்கு) நடுவணவாகி நின்ற ஐந்திணை, படுதிரை வையம் பாத்திய பண்பு - ஒலிக்கின்ற திரைக்கடல் சூழ்ந்த உலகம் பகுக்கப்பட்ட இயல்பு. இதனாற் சொல்லியது, எழுவகைத் திணையினும் நிலம் பெறுவன நான்கென்றவாறாயிற்று. ‘நடுவணது’ பாலை என்று எற்றாற் பெறுதுமெனின், வருகின்ற சூத்திரத்துள், “முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’’ (அகத். 5) என நிலம் பகுத்தோ தினமையின், நடுவணது பாலை எனக் கொள்ளப்படும். நடுவுநிலைத்திணை யெனினும் பாலை எனினும் ஒக்கும். பாலை என்னும் குறியீடு எற்றாற் பெறுது மெனின், “வாகை தானே பாலையது புறனே’’ (புறத். 15) என்பதனாற் பெறுதும். இச்சூத்திரத்துள் ஒழிய என்னும் வினையெச்சம் எவ்வாறு முடிந்ததெனின், அது ‘பாத்திய’ என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. அப் பெயரெச்சம் ‘பண்பு’ என்னும் பெயர் கொண்டு, ஐந்திணை என்னும் எழுவாய்க்குப் பயனிலையாகி நின்றதென உரைப்ப. இவ்வா றுரைப்பவே, ஐந்திணை பண்பென வரூஉங் காலத்துப் பயன்பட நில்லாமையின் அஃது உரையன்றென்பார் உரைக்குமாறு: ஒழிய என்பதனை எச்சப்படுத்தாது முற்றுப்படக் கூறி, “படுதிரை வையம் பகுத்தி பண்பு நடுவண தொழிய’’ எனப் பொருளுரைப்ப, அஃதேல் வினையெச்ச வாய்பாட்டால் வரும் முற்றுளவோ வெனின், “வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய” (எச்ச. 59) என்று முற்றுவாய்பாட்டால் வினையெச்சம் வருதலின் வினையெச்ச வாய்பாட்டால் முற்று வருமென்பதும் அச் சூத்திரத்தின் அமைத்துக்கொள்ளப்படும் என்ப. இவ்வுரை இரண்டினுள் ஏற்ப மறிந்து கொள்க. “நடுவணைந்திணை,’’ என்பன யாவை யெனின், முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பனவாம். எற்றுக்கு? இந் நூலகத்து அகமும் புறமும் ஆகிய உரிப்பொருள் கூறுகின்றாராதலான் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என அமையுமே யெனின், புறப் பொருட்கண் நிரைகோடலை வெட்சி எனக் குறியிட்டா ளுமாகலான் ஈண்டு இப்பொருளையும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என ஆளும் என்க. இதனாற் பயன் என்னை யெனின், உரிப்பொருளே திணையென உணர்த்துவாராயின் முதற் பொருளும் கருப்பொருளும் திணையாதல் தோன்றாதாம். அவையெல்லாம் அடங்குதற்பொருட்டு முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என்றார் என்பது. அவை யாமாறு வருகின்ற சூத்திரங்களான் விளங்கும். (ஏகாரம் ஈற்றசை). (2) 3. முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை. இது, மேற்சொல்லப்பட்ட நடுவணைந்திணை யாமாறும், ஒரு வகையான் உலகத்துப் பொருளெல்லாம் மூவகையாகி அடங்கு மென்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: பாடலுள் பயின்றவை நாடும் காலை - சான்றோர் செய்யுளகத்துப் பயின்ற பொருளை ஆராயுங்கால், முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே - முதற்பொருளெனவும் கருப்பொரு ளெனவும் உரிப் பொருளெனவும் சொல்லப்பட்ட மூன்று பொருண்மையுமே (காணப்படும்), நுவலும்காலை முறை சிறந்தன அவை சொல்லும் காலத்து முறைமையாற் சிறந்தன. இச் சூத்திரத்துள் பாடலுட் பயின்ற பொருள் மூன்றென ஓதி அவற்றுள் உரிப்பொருள் என ஒன்றை ஓதினமையால், புறப்பொருளும் உரிப்பொருளாகியவாறு கண்டு கொள்க. முறைமையாற் சிறத்தலாவது: யாதானும் ஒரு செய்யுட்கண் முதற் பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் வரின், முதற் பொருளால் திணையாகு மென்பதூஉம், முதற்பொரு ளொழிய ஏனையிரண்டும் வரின் கருப்பொருளால் திணையாகு மென்பதூஉம், உரிப்பொருள் தானேவரின், அதனால் திணை யாகுமென்பதூஉம் ஆம். அவை யாமாறு முன்னர்க் காணப்படும். அஃதேல், ஒரு பொருட்கு ஒரு காரணம் கூறாது மூன்று காரணம் கூறியது என்னை யெனின், உயர்ந்தோர் என்றவழிக் குலத்தினான் உயர்ந்தாரையும் காட்டும்; கல்வியான் உயர்ந் தாரையும் காட்டும்; செல்வத்தான் உயர்ந்தாரையும் காட்டும்; அதுபோலக் கொள்க. (முதல் ஏகாரம் பிரிநிலையாகவும், இரண்டாம் ஏகாரம் அசைநிலை யாகவும் வந்தன.) (3) 4. முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப வியல்புணர்ந் தோரே. இது, மேற்சொல்லப்பட்ட மூன்று வகைப் பொருளினும் முதற்பொருளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு - முதல் என்று சொல்லப்படுவது நிலமும் காலமுமாகிய அவ்விரண்டினது இயற்கை, என மொழிப இயல்பு உணர்ந்தோர் - என்று சொல்லுவர் உலகினியல் உணர்ந்தோர். ‘இயற்கை’ என்பதனால் செய்துகோடல் பெறாமை அறிந்து கொள்க. ‘நிலம்’ என்பதனால் பொருள் தோற்றுதற்கு இடமாகிய ஐம் பெரும் பூதமும் கொள்க. (ஏகாரம் ஈற்றசை). (4) 5. மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. இது, நிறுத்தமுறையானே நிலத்தால் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மாயோன் மேய காடு உறை உலகமும் - மாயவன் மேவிய காடு பொருந்திய உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும் - முருகவேள் மேவிய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும் - இந்திரன் மேவிய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும் - வருணன் மேவிய பெருமணல் உலகமும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும்படும் - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையினானே சொல்லவும்படும். நிரனிறை. உம்மை எதிர்மறையாகலான் இம்முறையன்றிப் பிற வாய்பாட்டாற் சொல்லவும்படு மென்றவாறு. காடு நாடு மலை கடல் என்பதே பெருவழக்கு. இன்னும் “சொல்லிய முறையாற் சொல்லவும்படும்’’ என்றதனான், இம்முறையன்றிச் சொல்லவும் படும் என்று கொள்க. அஃதாவது, அவற்றுள் யாதானும் ஒன்றை முன்னும் பின்னுமாக வைத்துக் கூறுதல். அது சான்றோர் செய்யுட் கோவையினும் பிற நூலகத்தும் கண்டுகொள்க. இச் சூத்திரத்துள் காடுறை நில மென்னாது உலக மென்றதனான் ஐவகைப் பூதத்தானும் ஐந்து இடம் என்பது உய்த்துணர வைத்தவாறு கண்டு கொள்க. முல்லை குறிஞ்சி என்பன இடுகுறியோ, காரணக்குறியோ எனின், ஏகதேச காரணம்பற்றி முதனூலாசிரியர் இட்டதோர் குறி யென்று கொள்ளப்படும். என்னை காரண மெனின், ``நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை, யரும்பவிழலரி தூஉய்’’ (முல்லை. 8- 10) என்றமை யால், காடுறை யுலகிற்கு முல்லைப்பூ சிறந்த தாகலானும், ``கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு, பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பே’’ (குறுந். 3) என்றவழி மைவரை யுலகிற்குக் குறிஞ்சிப்பூச் சிறந்த தாதலானும், ``ஆர ருந்திய சிறுசிரல் மருதின், தாழ்சினை உறங்குந் தண்துறை யூரன்’’ (அகம். 286) என்றவழி, தீம்புனல் உலகிற்கு மருது சிறந்தமையானும், ``பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் இனமீ னிருங்கழி யோத மல்குதொறுங், கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்’’ (குறுந். 9) என்றவழிப் பெருமணல் உலகிற்கு நெய்தல் சிறந்தமையானும் இந் நிலங்களை இவ்வாறு குறியிட்டா ரென்று கொள்ளப்படும். பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற்காலம் பற்றி வருதலின் அக்காலத்துத் தளிரும் சினையும் வாடுதலின்றி நிற்பது பாலை யென்பதோர் மரம் உண்டாகலின், அச்சிறப்பு நோக்கிப் பாலை யென்று குறியிட்டார். கைக்கிளை பெருந்திணை யென்பன வற்றிற்கு நிலமும் காலமும், பகுத்து ஓதாமையின் இவ்வாறன்றிப் பிறிதோர் காரணத்தினாற் குறியிட்டார். (ஏகாரம் ஈற்றசை). (5) 6. காரு மாலையு முல்லை. இனிக் காலத்தான் திணையாமாறு உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். இஃது அவற்றுள் முல்லைத் திணைக்குக் காலம் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: காரும் மாலையும் முல்லை கார்காலமும் மாலைப் பொழுதும் முல்லைத் திணைக்குக் காலமாம். காராவது மழை பெய்யுங்காலம். அஃது ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களும். மாலையாவது இராப்பொழுதின் முற்கூறு. (6) 7. குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர். இது, குறிஞ்சித் திணைக்குக் காலம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: குறிஞ்சி - குறிஞ்சித் திணைக்குக் காலமாவது, கூதிர்யாமம் என்மனார் புலவர் - கூதிர்க்காலமும் யாமப் பொழுதும் என்று கூறுவர் புலவர். கூதிராவது ஐப்பசித் திங்களும் கார்த்திகைத் திங்களும். யாமமாவது இராப்பொழுதின் நடுக்கூறு. (7) 8. பனியெதிர் பருவமு முரித்தென மொழிப. இஃது, எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. இ-ள்: பனிஎதிர் பருவமும் உரித்து என மொழிப - (குறிஞ்சித் திணைக்கு) முன்பனிக்காலமும் உரித்தென்று சொல்லுவர். இதனைக் கூதிர்க் காலத்தோடு ஒருங்கு கூறாமையின், அத்துணைச் சிறப்பிற்று அன்றெனக் கொள்க. குறிஞ்சி என்றது அதிகாரத்தான் வந்தது. முன்பனிக் காலமாவது மார்கழித் திங்களும் தைத் திங்களும். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. (8) 9. வைகறை விடியன் மருதம். இது, மருதத் திணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வைகறை விடியல் மருதம் - வைகறையும் விடியலும் மருதத்திற்குக் காலமாம். வைகறையாவது இராப்பொழுதின் பிற்கூறு. விடியலாவது, பகற்பொழுதின் முற்கூறு. பருவம் வரைந்தோதாமையின், அறு வகைப் பருவமும் கொள்ளப்படும். இது நெய்தற்கும் ஒக்கும். (9) 10. எற்பாடு, நெய்த லாதன் மெய்பெறத் தோன்றும். இது நெய்தற் றிணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: எற்பாடு - எற்படுபொழுது, நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் - நெய்தற்றிணைக்குக் காலமாதல் பொருண்மை பெறத் தோன்றும். ஏற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு. (10) 11. நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே. இது, பாலைக்குக் காலமும் இடனும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: நடுவு நிலைத்திணை - நடுவு நிலைத்திணையாகிய பாலையாவது, நண்பகல் வேனிலொடு முடிவுநிலைமருங்கின் முன்னிய நெறித்து - நண்பகற் பொழுது வேனிற் காலத்தொடு புணர்ந்து நின்றவழிக் கருதிய நெறியை உடைத்து. இஃது, இளவேனில் முதுவேனில் என்னும் இருவகைப் பருவத்தின்கண்ணும் வரும் நண்பகற் பொழுது காலமா மென்பதூஉம் ஆண்டு இயங்கும் நெறி நிலமா மென்பதூஉம், உணர்த்தியவாறு. இளவேனிலாவது சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும். முதுவேனிலாவது ஆனித் திங்களும் ஆடித் திங்களும். நண்பகலாவது பகற்பொழுதின் நடுக்கூறு. (முதல் ஏகாரம் பிரிநிலை; இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.) (11) 12. பின்பனி தானு முரித்தென மொழிப. இஃது, எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. இ-ள்: பின்பனியும் உரித்து என மொழிப - பின்பனிக் காலமும் உரித்து என்று கூறுப (பாலைக்கு). இது வேறோதினமையான், வேனில் போலச் சிறப்பி ன்றெனக் கொள்க. பின்பனியாவது மாசித் திங்களும் பங்குனித் திங்களும். அஃதற்றாக, இவ்வறுவகைப் பருவமும் அறுவகைப் பொழுதும் இவ்வைந்திணைக்குரியவா றென்னை யெனின், சிறப்பு நோக்கி என்க. என்னை சிறந்தவாறு எனின், முல்லையாகிய நிலனும், வேனிற் காலத்து வெப்பம் உழந்து மரனும் புதலும் கொடியும் கவினழிந்து கிடந்தன, புயல்கள் முழங்கக் கவின்பெறு ஆகலின், அதற்கு அது சிறந்ததாம். மாலைப்பொழுது இந் நிலத்திற்கு இன்றியமையாத முல்லை மலருங் காலம் ஆதலானும், அந்நிலத்துக் கருப்பொருளாகிய ஆனிரை வருங்கால மாதலானும், ஆண்டுத் தனியிருப்பார்க்கு இவை கண்டுழி வருத்தம் மிகுதலின், அதுவும் சிறந்த தாயிற்று. குறிஞ்சிக்குப் பெரும்பான்மையும் களவிற் புணர்ச்சி பொருளாதலின், அப்புணர்ச்சிக்குத் தனி யிடம் வேண்டுமன்றே? அது கூதிர்க் காலத்துப் பகலும் இரவும் நுண்துளி சிதறி இயங்குவார் இலராமாதலான், ஆண்டுத் தனிப்படல் எளிதாகலின், அதற்கது சிறந்தது. நடுநாள் யாமமும் அவ்வாறாகலின் அதுவும் சிறந்தது. மருதத்திற்கு நிலன் பழனஞ் சார்ந்த இடமாதலான், ஆண்டு உறைவார் மேன்மக்க ளாதலின், அவர் பரத்தையிற் பிரிவுழி அம்மனையகத்து உறைந்தமை பிறர் அறியாமை மறைத்தல் வேண்டி வைகறை கண் தம்மனை யகத்துப் பெயரும்வழி, ஆண்டு மனைவி ஊடலுற்றுச் சார்கில்லாளா மாதலான், அவை அந்நிலத்திற்குச் சிறந்தன. நெய்தற்குப் பெரும்பான்மையும் இரக்கம் பொருளாதலின், தனிமை யுற்று இரங்குவார்க்குப் பகற்பொழுதினும் இராப் பொழுது மிகுமாதலின், அப்பொழுது வருதற்கேதுவாகிய எற்பாடு கண்டார் இனி வருவது மாலையென வருத்தமுறுதலின், அதற்கது சிறந்தது என்க. பாலைப் பொருளாவது, பிரிவு. அப்பிரிவின்கண் தலைமகற்கு வருத்தமுறு மென்று தலைமகள் கவலுங்கால், நிழலும் நீரும் இல்லாத வழி ஏகினார் எனக் கவலுமாகலின், அதற்கது சிறந்தது என்க. (தான் என்பது அசை.) (12) 13. இருவகைப் பிரிவு நிலைபெறத் தோன்றலும் உரிய தாகு மென்மனார் புலவர். இது, பாலைக்குரிய பொருளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இருவகைப் பிரிவும் - (இருவகைப் பிரிவான) தலைமக ளைப் பிரிதலும் தலைமகளை உடன்கொண்டு தமர்வரைப் பிரிதலும், நிலைபெறத் தோன்றலும் - நிலைபெறத் தோன்றலும், உரியது ஆகும் என்மனார் புலவர் பாலைக்குரிய பொருளாம் என்று கூறுவர் புலவர். (தமரவரை - தமரை மட்டும்) உம்மை எச்ச வும்மையாதலான், நிலைபெறத் தோன்றாது பிரிதற் குறிப்பு நிகழ்ந்துழியும் பாலைக்குரிய பொருளாமென்று கொள்க. அதிகாரப்பட்டு வருகின்றது பாலையாகலின், இருவகைப் பிரிவும் பாலைக்குரிய பொருளாயின. (13) 14. திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே நிலனொருங்கு மயங்குத லில்லென மொழிப புலனன் குணர்ந்த புலமை யோரே. இது மேல் அதிகரிக்கப்பட்ட நிலத்தினானும் காலத் தினானும் ஆகிய திணை மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: திணை மயக்குறுதலும் கடிநிலை இல - ஒரு திணைக்குரிய முதற்பொருள் மற்றோர் திணைக்குரிய முதற் பொருளொடு சேர நிற்றலும் கடியப்படாது, நிலன் ஒருங்கு மயங்குதல் இல் என மொழிப - ஆண்டு நிலம் சேர நிற்றல் இல்லை என்று சொல்லுவர், புலன் நன்கு உணர்ந்த புலமையோர் - புலன் நன்கு உணர்ந்த புலமையோர். எனவே, காலம் மயங்கு மென்றவாறாயிற்று. அதற்குச் செய்யுள்: ``தொல்லூழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தாற் பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போல் எல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய நல்லற நெறிநிறீஇ யுலகாண்ட வரசன்பின் அல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம்போன் மயங்கிருள் தலைவர எல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை; பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் தூவறத் துறந்தனன் றுறைவனென் றவன்றிறம் நோய்தெற வுழப்பார்க ணிமிழ்தியோ வெம்போலக் காதல்செய் தகன்றாரை யுடையையோ நீ; மன்றிரும் பெண்ணை மடல்சே றன்றில் நன்றறை கொன்றன ரவரெனக் கலங்கிய என்றுய ரறிந்தனை நரறியோ வெம்போல இன்றுணைப் பிரிந்தாரை யுடையையோ நீ; பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல் இனிவரி னுயருமற் பழியெனக் கலங்கிய தனியவ ரிடும்பைகண் டினைதியோ வெம்போல இனியசெய் தகன்றாரை யுடையையோ நீ; எனவாங்கு, அழிந்தய லறிந்த வெவ்வ மேற்படப் பெரும்பே துறுதல் களைமதி பெரும! வருந்திய செல்லறீர் திறனறி யொருவன் மருந்தறை கோடலிற் கொடிதே யாழநின் அருந்தியோர் நெஞ்ச மழிந்துக விடினே’’ (கலி.நெய். 12) (முதல் ஏகாரம் அசைநிலை; இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.) (14) 15. உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே. இஃது, எய்தாத தெய்துவித்தல் நுதலிற்று. இ-ள்: உரிப்பொருள் அல்லன - உரிப்பொரு ளல்லாத கருப் பொருளும் முதற்பொருளும், மயங்கவும் பெறும் - மற்றொரு திணையொடு சேர நிற்கவும் பெறும். உம்மை எதிர்மறை யாகலான் மயங்காமை பெரும்பான்மை. எனவே, ``உய்த்துக்கொண்டுணர்தல்’’ (மரபு. 112) என்னும் தந்திர உத்தியான் எடுத்தோதிய காலமாகிய முதற்பொருளும், பூவும் புள்ளுமாகிய கருப்பொருளும் மயங்கியும் மயங்காமையும் வரும் எனவே, உரிப்பொருள் மயங்கி வாரா தென்றவாறு. மயங்கி வருதல் கலி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டுகொள்க. ``ஒண்செங் கழுநீர்த் தண்போ லாயிதழ் மூசி போகிய சூழ்செய் மாலையன் பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குய்மண் டாகஞ் செஞ்சாந்து நீவி’’ (அகம். 48) என்றவழி, மருதத்தின் கருப்பொருளாகிய கழுநீரும் குறிஞ்சிக் குரிய வெட்சிப் பூவும் அணிந்தோன் என்றமையாற் கருப்பொருள் மயக்க மாயிற்று. பிறவும் அன்ன. (15) 16. புணர்தல் பிரித லிருத்த லிரங்கல் ஊட லவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே. இஃது, உரிப்பொருளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தம் என்று இவை - புணர்தலும், பிரிதலும், இருத்தலும், இரங்கலும், ஊடலும் அவற்றின் நிமித்தமும் என்று சொல்லப்பட்ட இவை, தேரும் காலை திணைக்கு உரிப்பொருள் ஆராயுங்காலத்து ஐந்திணைக்கும் உரிப்பொருளாம். பிரிவு பாலைக்கு உரித்தாமாறு மேற்சொல்லப்பட்டது. ஏனைய “மொழிந்த பொருளோ டொன்றவைத்தல்’ (மரபு. 112) என்னுந் தந்திர உத்தியால், புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது முல்லைக்கும், இரங்கல் என்பது நெய்தற்கும், ஊடல் என்பது மருதத்திற்கும் பெரும்பான்மையும் உரித்தாகவும், சிறுபான்மை எல்லாப் பொருளும், எல்லாத் திணைக்கும் உரியவாகவும் கொள்ளப்படும். இருத்தலாவது, தலைமகன் வருந்துணையும் ஆற்றியிருத்தல். இரங்கலாவது, ஆற்றாமை, (என்று என்பது எண்ணிடைச்சொல்; ஏகாரம் ஈற்றசை). (16) 17. கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவ ணிரங்கலும் உண்டென மொழிப வோரிடத் தான. இதுவும், ஒருசார் உரிப்பொருள் ஆமாறு உணர்துதல் நுதலிற்று. இ-ள்: கொண்டு தலைக்கழிதலும் (உண்டு) பிரிந்து அவண் இரங்கலும் உண்டு - கொண்டுதலைக் கழிதலும் உண்டு, பிரிந்தவண் இரங்கலும் உண்டு, ஓர் இடத்தான் என மொழிப - ஒரோ இடத்துக்கண் என்று கூறுப. ‘உண்டு’ என்பதை இரண்டிடத்தும் கூட்டுக. அன்றியும் உண்டென்பதனை இல்லென்பதன் மாறாக்கி விரவுத்தினை யாக்கிப் பொதுப்பட நின்ற தெனவுமாம். ‘ஓரிடத்’ தென்றமையான், மேற் சொல்லப்பட்ட ஐவகை உரிப்பொருளும் போல் எல்லாத் திணைக்கும் பொதுவாகி வருதலின்றி, கொண்டு தலைக்கழிதல் பாலைக்கண்ணும், பிரிந்தவணிரங்கல் பெருந்திணைக்கண்ணும் வருமென்று கொள்க. கொண்டு தலைக்கழிதலாவது உடன்கொண்டு பெயர்தல். அது, நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமையானும், உடன்கொண்டு பெயர்தலின் பிரிதலின் அடங்காமையானும், வேறு ஓதப்பட்டது. பிரிந்தவணிரங்கலாவது, ஒருவரை ஒருவர் பிரிந்தவிடத்து இரங்கல். அது, நெட்டாறு சென்றவழி இரங்குத லின்மையானும், ஒருவழித் தணந்தவழி ஆற்றுதலின்றி வேட்கை மிகுதியால் இரங்குதலானும், வேறு ஓதப்பட்டது. (இதற்கு) ஏறிய மடற்றிறமும், தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமும் முதலாயின பொருள். இது பெருந்திணைக்கு உரித்து. (இடத்தான் என்பது வேற்றுமை மயக்கம்; ஈற்றகரம் சாரியை). (17) 18. கலந்த பொழுதுங் காட்சியு மன்ன. இதுவும் அது. இ-ள்: (கலந்த பொழுதும் - தலைமகளைக் கண்ணுற்றவழி மன நிகழ்ச்சி உளதாங்காலமும், (அதன்) பின்னர்க் குறிப்பறியுந் துணையும் நிகழும் நிகழ்ச்சியும், காட்சியும் - தலைவியை எதிர்ப்படுதலும், அன்ன ஓரிடத்து நிகழும் உரிப்பொருள்.) கலந்த பொழுதென்பது, தலைமகளைக் கண்ணுற்றவழி மன நிகழ்ச்சியுளதாங் காலம். அக் காட்சிப் பின்னர்க் குறிப்பறியுந் துணையும் நிகழும் நிகழ்ச்சி. காட்சியாவது, தலைவியை எதிர்ப்படுதல். குறிப்பறிந்த பின்னர்ப் புணருந் துணையும் நிகழும் முன்னிலை யாக்கல் முதலாயின புணர்தல் நிமித்தம். இவை அந்நிகரனவன்றிப் பொதுப்பட நிற்றலின் வேறு ஓதப்பட்டன. அன்ன வென்பது (இவையும்) ஓர் இடத்து நிகழும் உரிப்பொரு ளென்றவாறு. ஓரிடமாவது கைக்கிளை. அஃதேல், இவையும் புணர்தல் நிமித்தமாயினால் வரும் குற்றம் என்னை எனின், ஒருவன் ஒருத்தியை எதிர்ப்பட்டுழிப் புணர்ச்சி வேட்கை தோற்றலும் தோற்றாமையும் உண்மையின், காட்சி பொதுப்பட நின்றது. ஐயம் முதலாகக் குறிப்பறிதல் ஈறாக நிகழும் மனநிகழ்ச்சி தலைமகள் மாட்டுக் காமக்குறிப்பு இல்வழிக் காமக்குறிப்பு உணராது கூறுதலின் புணர்தல் நிமித்தம் அன்றாயிற்று. (18) 19. முதலெனப் படுவ தாயிரு வகைத்தே. இதுவும், ஐயம் அறுத்தலை நுதலிற்று. இ-ள்: முதல் எனப்படுவது - மேல் எடுத்தோதப்பட்டவற்றில் முதல் என்று சொல்லப்படுவது, ஆ இருவகைத்து - நிலமும் காலமும் ஆகிய அவ்விரு வகையை உடையது. எனவே, ஏனையவெல்லாம் உரிப்பொருள் என்றவாறாம். இதனாற் பெற்றதென்னை யெனின், முதல் கரு உரிப்பொருள் என அதிகரித்து வைத்தார்; இனிக் கருப்பொருள் கூறுகின்றார்; உரிப்பொருள் யாண்டுக் கூறினார் என ஐயம் நிகழும்; அது விடுத்தல் என்க. (சுட்டு நீண்டு நின்றது). (19) 20. தெய்வ முணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப. இது கருப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: தெய்வம் உணா மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ - தெய்வம் முதலாகச் சொல்லப் பட்டனவும், அவ்வகை பிறவும் கரு என மொழிப - அத்தன்மைய பிறவும் கருப் பொருள் என்று கூறுப. அவையாவன முதற்பொருட்கண் தோன்றும் பொருள்கள். ``மாயோன் மேய காடுறை யுலகம்’’ (அகத். 5) என்றதனான், முல்லைக்குத் தெய்வம் கண்ணன். ``காடுறை உலகம்’’ என்ற தனானும், ``காரும் மாலையும் முல்லை’’ (அகத். 6) என்றதனானும் காட்டினும் கார்காலத்தினும் மாலைப் பொழுதினும் நிகழ்பவை கொள்க. ``எந்நில மருங்கிற் பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்’’ (அகத். 21) என்றதனானும், நிலமும் காலமும் பற்றி வருவன கருப்பொருள் என்பது உணர்க. உணவு - வரகும் முதிரையும். மா - மானும் முயலும். மரம் - கொன்றையும், குருந்தும் புதலும். புள் - கானாங்கோழி. பறை ஏன்றுகூழறு கோட்பறை. செய்தி - நிரை மேய்த்தல். யாழின் பகுதி யென்பது பண். அது சாதாரி. பிறவும் என்றதனால், பூ - முல்லையும் பிடவும் தளவும்; நீர் - கான்யாறு. பிறவும் இந்நிகரன கொள்க. குறிஞ்சிக்குத் தெய்வம் முருகவேள். மைவரை யுலகமும் கூதிர்க் காலமும் நள்ளிருளும் கூறினமையான், அந்நிலத்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க. உணவு - தினையும் ஐவனமும் வெதிர்நெல்லும். மா - யானையும் புலியும் பன்றியும் கரடியும். மரம் வேங்கையும் கோங்கும். புள் - மயிலும் கிளியும். பறை - வெறியாட்டுப் பறையும் தொண்டகப் பறையும். செய்தி - தேனழித்தல். பண் - குறிஞ்சி. பிறவும் என்றதனால், பூ - வேங்கைப்பூவும், காந்தட்பூவும், குறிஞ்சிப் பூவும்; நீர் - சுனை நீரும், அருவி நீரும். பிறவும் அன்ன. பாலைக்கு நிலம் ஓதாது வேனிற்காலமும் நண்பகலும் ஓதினமையானும், ``முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து, நல்லியல் பிழந்து நடுங்குதுயருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்’’ (சிலப். காடுகாண். 64-66) எனப் பிற சான்றோர் செய்யுளகத்து வருதலானும், இந்நிலங்களில் வேனிற் காலத்து நிகழ்வன கருப்பொருளாகக் கொள்ளப்படும். தெய்வம் - கொற்றவை. உணவு - ஆறலைத்தலான் வரும் பொருள். மா - வலியழிந்த யானையும், வலியழிந்த புலியும், வலியழிந்த செந்நாயும். மரம் - பாலை, இருப்பை, கள்ளி, சூரை. புள் - எருவையும், பருந்தும். பறை ஆறலைப் பறையும், சூறைகொண்ட பறையும். செய்தி - ஆறலைத்தல். பண் - பாலை. பிறவும் என்றதனால், பூ - மராம்பூ; நீர் - அறுநீர்க் கூவலும் அறுநீர்ச் சுனையும். பிறவும் இந்நிகரன கொள்க. மருதத்திற்குத் தெய்வம் இந்திரன். ‘தீம்புனலுலகம்’ (அகத். 5) எனவும், ‘வைகறை விடியல்’ (அகத். 6) எனவும் ஓதினமையால், அவ்விடத்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க. உணவு - நெல். மா - எருமையும், நீர்நாயும். மரம் - மருதும், காஞ்சியும். புள் - அன்னமும், அன்றிலும். பறை - நெல்லரி பறை. செய்தி - உழவு. பண் - மருதம். பிறவும் என்றதனால், பூ - தாமரையும் கழுநீரும். நீர் - ஆற்றுநீரும் பொய்கை நீரும். பிறவும் அன்ன. நெய்தற்குத் தெய்வம் வருணன். ‘மணலுலகம்’ (அகத். 5) என்றதனானும், ‘எற்பாடு’ (அகத். 10) என்றதனானும், ஆண்டு நிகழ்பவை கொள்க. உணவு - உப்பு விலையும் மீன் விலையும். மா - கராமும் சுறவும். மரம் - புன்னையும் கைதையும். புள் - கடற்காக்கை. பறை - நாவாய்ப் பறை. செய்தி - மீன்படுத்தலும் உப்பு விளைத்துலும். பண் - செவ்வழி. பிறவும் என்றதனால், பூ - நெய்தல்; நீர் - கேணி நீரும் கடல்நீரும். பிறவும் அன்ன. (20) 21. எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும். இது, மேலதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: எ நிலமருங்கின் பூவும் புள்ளும் - யாதானும் - ஓர் நிலத் திற்குரிய பூவும் புள்ளும், அ நிலம் பொழுதொடு வாராவாயினும் - அந் நிலத்தொடும் பொழுதொடும் வந்தில வாயினும், வந்த நிலத்தின் பயத்த வாகும் - வந்த நிலத்தின் பயத்தவாகும். ‘வந்தது கொண்டு வாராதது முடித்தல்’ (மரபு. 112) என்பதனால், சிறுபான்மை ஏனையவும் வந்தவழிக் கண்டு கொள்க: இவ்வாறு வருவன திணை மயக்கம் அன்றென்றவாறு. (21) 22. பெயரும் வினையுமென் றாயிரு வகைய திணைதொறு மரீஇய திணைநிலைப் பெயரே. இதுவும் கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கட்டிறம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: பெயரும் வினையும் என்று இருவகைய - குலப் பெயரும் தொழிற் பெயரும் என அவ்விருவகைப்படும், திணைதொறும் மரீஇய திணைநிலைப்பெயர் - திணைதொறும் மருவிப் போந்த திணைநிலைப் பெயர். ‘திணைநிலைப்பெயர்’ என்றதனான் அப்பெயருடையார் பிற நிலத்து இலர் என்று கொள்ளப்படும். அதனானே எல்லா நிலத்திற்கும் உரியராகிய மேன்மக்களை ஒழித்து, நிலம்பற்றி வாழும் கீழ்மக்களையே குறித்து ஓதினார் என்று கொள்க. பெயர் என்றதனால் பெற்ற தென்னை? மக்கள் என அமையாதோ? எனின், மக்களாவார் புள்ளும் மாவும் போல வேறு பகுக்கப்படார், ஒரு நீர்மைய ராதலின். அவரை வேறுபடுக்குங்கால் திணை நிலைப் பெயரானல்லது வேறுபடுத்தல் அருமையின், பெயர் என்றார். (சுட்டு நீண்டு நின்றது. ஏகாரம் ஈற்றசை. திணை நிலப்பெயர் எனவும் பாடம்.) (22) 23. ஆயர் வேட்டுவ ராடூஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉங் கிழவரு முளரே. இது, நிறுத்துமுறையானே முல்லைக்குரிய மக்கட்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஆடூஉ திணைப்பெயர் ஆயர் வேட்டுவர் - ஆண் மக் களைப்பற்றி வரும் திணைப்பெயர் ஆயர் எனவும் வேட்டுவர் எனவும் வரும். ஆவயின் வரும் கிழவரும் உளர் - அவ்விடத்து வரும் கிழவரும் உளர். ஆயர் என்பார் நிரை மேய்ப்பார். வேட்டுவர் என்பவர் வேட்டைத் தொழில் செய்வார். அஃது எயினர் என்னும் குலப்பெயருடையார் மேல் தொழிற்பெயராகி வந்தது. ‘வந்தது கொண்டு வாராதது முடித்தல்’ (மரபு. 112) என்பதனான், ஆய்ச்சியர் எனவும் கொள்க. அவ்விரு திறத்தாரும் காடுபற்றி வாழ்தலின் அந்நிலத்தின் மக்களாயினார். அவ்வயின் வரூஉம் கிழவர் இருவகையர், அந்நிலத்தை ஆட்சி பெற்றோரும், அந்நிலத்து உள்ளோரும் என. ‘குறும்பொறைநாடன்’ என்பது போல்வன ஆட்சி பற்றி வரும். ‘பொதுவன், ஆயன்’ என்பன குலம் பற்றி வரும். (சுட்டு நீண்டிசைத்தது. ஏகாரம் ஈற்றசை) (23) 24. ஏனோர் மருங்கினு மெண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே. இது, குறிஞ்சி முதலாய திணைக்கண் வரும் திணைநிலைப் பெயர் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை - ஏனை நிலத்துள்ள மக்கண்மாட்டும் ஆராயுங் காலத்து, ஆன் அ வகைய திணை நிலைப் பெயர் - அவ்விடத்து அவ்வகைய திணைநிலைப் பெயர். என்றது, திணைதொறும் குலப்பெயரும் தொழிற்பெயரும் கிழவர் பெயரும் வரும் என்றவாறு. ஆன் என்பது அவ்விடம்; அ என்னும் சுட்டு நீண்டிசைத்துது. அவை வருமாறு: குறிஞ்சிக்கு மக்கட்பெயர் குறவன் குறத்தி என்பன; தலைமக்கட் பெயர், மலைநாடன் வெற்பன் என்பன. பாலைக்கு மக்கட்பெயர். எயினர் எயிற்றியர் என்பன; தலைமக்கட் பெயர், மீளி விடலை என்பன. மருதத்திற்கு மக்கட் பெயர், உழவர் உழத்தியர் என்பன; தலைமக்கட் பெயர் ஊரன் மகிழ்நன் என்பன. நெய்தற்கு மக்கட்பெயர், நுளையர் நுளைச்சியர் என்பன; தலைமக்கட் பெயர் சேர்ப்பன் துறைவன் கொண்கன் என்பன; பிறவும் அன்ன. (ஏகாரம் ஈற்றசை). ‘கைக்கிளை முதலா’ (அகத். 1) என்னும் சூத்திரம் முதலாக இத்துணையும் கூறப்பட்டது: நடுவணைந்திணை நிலத்தானும் காலத்தானும் கருப்பொருளானும் உரிப்பொருளானும் நிலமக்களானும் தலைமக்களானும் வரும் எனவும், அவை இலக்கண நெறியானும் வழக்கு நெறியானும் வரும் எனவும், கைக்கிளை பெருந்திணை உரிப்பொருளான் வரும் எனவும், அகத்திணை ஏழிற்கும் இலக்கணம் ஓதியவாறு, முல்லைத் திணைக்குச் செய்யுள் ``முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானம் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரிய பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேரின உதுக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத்து மன்ற காந்தட் போதவி ழலரி நாறும் ஆய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே.’’ (அகம். 4) இதனுள், முல்லைக் குரித்தாகிய நிலமும் காலமும் கருப்பொருளும் இருத்தலாகிய உரிப்பொருளும் வந்தவாறு கண்டுகொள்க. ``இல்லொடு மிடைந்த கொல்லை முல்லைப் பல்லான் கோவலர் பையு ளாம்பல் புலம்புகொண் மாலை கேட்டொறுங் கலங்குங்கொ லளியணங் காத லோளே’’ என்பதும் அது. ``திருநகர் விளங்கு மாசில் கற்பின் அரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு நின்னுடைக் கேண்மை யென்னோ முல்லை இரும்பல் கூந்த னாற்றமு முருந்தேர் வெண்பல் லொளியுநீ பெறவே.’’ இது, முதற்பொருள் வாராது கருப்பொருளானும் உரிப்பொருளானும் முல்லையாயினவாறு. ``கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி இளைய ரேவ வியங்குபரி கடைஇப் பகைமுனை வலிக்குந் தேரொடு வினைமுடித் தனர்நங் காத லோரே.’’ இது, முதலும் கருவும் இன்றி உரிப்பொருளான் முல்லை யாயிற்று. ``கதிர்கை யாக வாங்கி ஞாயிறு பைதறத் தெறுதலிற் பயங்கண் மாறி விடுவாய்ப் பட்ட வியங்கண் மாநிலம் காடுகவி னெய்தக் கணமழை பொழிதலிற் பொறிவரி யினவண் டார்ப்பப் பலவுடன் நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற வெறிவென் றன்றே வீகமழ் கானம் எவன்கொன் மற்றவ னிலையென மயங்கி இரும்பனி யுறைக்குங் கண்ணோ டினைபாங் கின்னாஅ விறைவி தொன்னலம் பெறூஉம் இதுமற் காலங் கண்டிசிற் பகைவர் மதின்மூடு கதவ முருக்கிய மருப்பிற் கந்துகா லொசிக்கும் யானை வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே.’’ (அகம். 164) இது, பிரிதற் பகுதியாகிய பாசறைப் புலம்ப லெனினும் நிலம் பற்றி முல்லையாயிற்று. ‘மலிதிரை யூர்ந்துதண் மண்கடல் வெளவலின்’ (கலி. முல்லை. 4) என்னும் முல்லைக்கலி, புணர்தற் பொருண்மைத் தாயினும் முல்லைக்குரிய கருப்பொருளான் வருதலின் முல்லையாயிற்று. பிறவும் அன்ன. குறிஞ்சித் திணைக்குச் செய்யுள் ``விடிந்த ஞாலம் கவின்பெறத் தலைஇ இடிந்த வாய வெவ்வங் கூர நிலமலி தண்டுளி தவிராது புலந்தாய் நீர்மலி கடாஅஞ் செருக்கிக் கார்மலைந்து கனைபெயல் பொழிந்த நள்ளென் யாமத்து மண்புரை மாசுணம் விலங்கிய நெறிய மலைஇ மணந்த மயங்கரி லாரலிற் றிலைபொலிந் திலங்கு வைவே லேந்தி இரும்பிடி புணர்ந்த செம்மல் பலவுடன் பெருங்களிற்றுத் தொழுதியோ டெண்குநிரை யிரிய நிரம்பா நெடுவரை தத்திக் குரம்பமைந் தீண்டுபயி லெறும்பி னிழிதரு மருவிக் குண்டுநீர் மறுசுழி நீந்தி யொண்டொடி அலமரல் மழைக்க ணல்லோள் பண்புநயந்து சுரன்முத லாரிடை நீந்தித் தந்தை வளமனை யொருசிறை நின்றனே மாகத் தலைமனைப் படலைத் தண்கமழ் நறுநதா தூதுவண் டிமிரிசை யுணர்ந்தனள் சீறடி அரிச்சிலம் படக்கிச் சேக்கையி னியலிச் செறிநினை நல்லி லெறிகத வுயவிக் காவலர் மடிபத நோக்கி யோவியர் பொறிசெய் பாவையி னறிவுதளர் பொல்கி அளக்க ரன்ன வாரிரு டுமிய விளக்குநிமிர் பனைய மின்னிப் பாம்பு படவரைச் சிமையக் கழலுறு மேறோ டிணைப்பெய லின்னலங் கங்குலும் வருபவோ வென்றுதன் மெல்லிரல் சேப்ப நொடியின ணல்யாழ் வடியுறு நரம்பிற் றீவிய மிழற்றித் திருகுபு முயங்கி யோளே வென்வேற் களிறுகெழு தானைக் கழறொடி மலையன் ஒளிறுநீ ரடுக்கங் கவைஇய காந்தள் மணங்கமழ் முள்ளூர் மீமிசை யணங்குகடி கொண்ட மலரினுங் கமழ்ந்தே.’’ இது, முதலும் கருவும் புணர்தலாகிய உரிப்பொருளும் வந்த குறிஞ் சிப் பாட்டு. ``நறைபாந்த சாந்த மறவெறிந்து நாளால் உறையெதிர்ந்து வித்தியனோ ழேனற் பிறையெதிர்ந்து தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ ஏமரை போந்தன வீண்டு.’’ (திணைமாலை நூற். 1) இது, முதற்பொருள் இன்றிக் கருப்பொருளும் உரிப் பொருளும் வந்தமையாற் குறிஞ்சிட் திணையாயிற்று. ``முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலைய னொள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே.’’ இஃது, உரிப்பொருள் ஒன்றுமே வந்த குறிஞ்சிப்பாட்டு. ``பருவ மென்றினை பாலும் பெய்தன கருவிரற் கிள்ளை கடியவும் போகா பசுமூ தந்திக் கடைவன வாடப் பாசிப் பக்கப் பனிநீர்ப் பைஞ்சுனை விரியிதழ்க் குவளை போல வில்லிட் டெரிசுடர் விசும்பி னேறெழுந்து முழங்கக் குன்றுபனி கொள்ளுஞ் சாரல் இன்றுகொ றோழி யவர்சென்ற நாட்டே’’ இஃது இருத்தற் பொருண்மைக்கண் வந்ததேனும், முதற் பொருளானும் கருப்பொருளானும் குறிஞ்சியாயிற்று. ``வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுப்பி னல்லது கோடா எழிலு முலையு மிரண்டிற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து.’’ (திணைமாலை. நூற். 15) இது கற்பிற் புணர்வு; பொருளாற் குறிஞ்சியாயிற்று. ``படாஅ தோழி யெங்கண்ணே கொடுவரி கொன்முரண யானை கனவு நன்மலை நாட னசையி னானே’’ இஃது இரங்கற்பொருண்மையேனும் முதற்பொருளானும் கருப்பொருளானும் குறிஞ்சியாயிற்று. பிறவும் அன்ன. பாலைத் திணைக்குச் செய்யுள் ``அறியாய் வாழி தோழி யிருளற விசும்புடன் விளக்கும் விரைசெலற் றிகிரிக் கடுங்கதி ரெறித்து விடுவாய் நிறைய நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய் நீரற வறந்த நிரம்பா நீளிடை வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு கள்ளியங் காட்ட கடத்திடை வுழிஞ்சில் உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை பொரியரை புதைத்த புலம்புகொ ளியவின் விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர் எழுத்துடை நடுக லின்னிழல் வதியும் அருஞ்சுரக் கவலை நீந்தி யென்றும் இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல் அருளே காதல ரென்றி நீயே.’’ (அகம். 53) இதனுள் பாலைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் பிரிவும் வந்தவாறு கண்டு கொள்க. ``வளங்கெழு திருநகர்ப் பந்துசிறி தெறியினும் இளந்துணை யாயமொடு கழங்குட னாடினும் உயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ மயங்கு வியர்பொறித்த நுதல டண்ணென முயங்கினள் வதியு முன்னே யினியே தொடிமாண் சுற்றமு மெம்மு முள்ளாள் நெடுமொழித் தந்தை யருங்கடி நீவி நொதும லாள னெஞ்சுறப் பெற்றவென் சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி வல்லகொல் செல்லத் தாமே கல்லென ஊரெழுந் தன்ன வுருகெழு செலவின் நீரி லத்தத் தாரிடை மடுத்த கொடுங்கோ லுமணர் பகடுதெழி தெள்விளி நெடும்பெருங் குன்றத் திமிழ்கொள வியம்புங் கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கற் பெருங்களி றுரிஞ்சிய மண்ணரை யாஅத் தருஞ்சுரக் கவலை யதர்படு மருங்கின் ஈளரை யிலவத் தூழழி பன்மலர் விழவுத் தலைக்கொண்ட பழவிறன் மூதூர் நெய்யுமிழ் சுடரிற் கால்பொரச் சில்கி வைகுறு மீனிற் றோன்றும் மைபடு மால்வரை விலங்கிய சுரனே.’’ (அகம். 17) இஃது உடன்போக்கின்கண் வந்தது. ``நாளு நாளு மாள்வினை யழுங்க இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென ஒண்பொருட் ககல்வர்நங் காதலர் கண்பனி துடையினித் தோழி நீயே.’’ (சிற்றட்டகம்) இது பிரிவுப் பொருளாற் பாலையாயிற்று. ``உயர்கரைக் கானியாற் றவிரற லகன்றுறை வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத் தொடலை தைஇய மடவரன் மகளே கண்ணினுங் கதவநின் முலையே முலையினுங் கதவநின் றடமென் றோளே.’’ (ஐங்குறு. 361) இது புணர்தற்பொருளாயினும் கருப்பொருளாற் பாலையாயிற்று. ‘சிலைவிற் பகழிச் செந்துவ ராடை’ (ஐங்குறு. 363) என்னும் பாட்டினுள் புணர்தற் பொருண்மை வந்ததாயினும் ‘கொலைவி லெயினர் தங்கை’ எனப் பாலைக்குரிய மக்கட்பெயர் கூறுதலிற் பாலையாயிற்று. பிறவும் அன்ன. மருதத் திணைக்குச் செய்யுள் ``சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் ஊர்மடி கங்குலி னொண்டளை பரீஇக் கூர்முள் வேலி கோட்டி னீக்கி நீர்முதிர் பழனத்து மீனுட னிரிய அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டூது பனிமல ராரு மூர யாரை யோநிற் புலக்கேம் வாருற் றுறையிறந் தொளிருந் தாழிருங் கூந்தற் பிறளு மொருத்தியை யெம்மனைத் தந்து வதுவை ளயர்ந்தனை யென்ப வஃதியாங் கூறேம் வாழிய ரெந்தை செறுநர் களிறுடை யருஞ்சமந் ததைய நூறும் ஒளிறுவாட் டானைக் கொற்கைச் செழியன் பிண்ட நெல்லி னள்ளூ ரன்னவெம் ஒண்டொடி நெகிழினு நெகிழ்க சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே.’’ (அகம். 46) இதனுள் மருதத்திற்கு ஓதிய நிலனும் பொழுதும் கருப்பொருளும் ஊடற் பொருண்மையும் வந்தன. ‘தாமரை வண்டூது பனிமலராரு மூர’ என்றமையான் வைகறை வந்தமை அறிக. ``பூங்கொடி மருங்கி னெங்கை கேண்மை முன்னும் பின்னு மாகி இன்னும் பாண னெம்வயி னானே.’’ இஃது உரிப்பொருளால் மருதமாயிற்று. ``ஓரை யாய மறிய வூரன் நல்கினன் றந்த நறும்பூந் தண்டழை மாறுபடி னெவனோ தோழி வீறுசிறந்து நெடுமொழி விளங்குந் தொல்குடி வடுநாம் படுத லஞ்சுது மெனவே.’’ இது புணர்தற் பொருண்மையேனும், திணைநிலைப் பெயரால் மருதமாயிற்று. பிறவும் அன்ன. நெய்தல் திணைக்குச் செய்யுள் ``கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப மீனார் குருகின் மென்பறைத் தொழுதி குவையிரும் புன்னைக் குடம்பை சேர அசைவண் டார்க்கு மல்குறு காலைத் தாழை தளரத் தூங்கி மாலை அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க் காமர் நெஞ்சங் கையறு பினையத் துயரஞ் செய்துநம் மருளா ராயினும் அறாஅ லியரோ வவருடைக் கேண்மை அளியின் மையி னவணுறை முனைஇ வாரற்க தில்ல தோழி கழனி வெண்ணெல் லரிஞர் பின்றைத் ததும்புந் தண்ணுமை வெரீஇய தடந்தா ணாரை செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை அகமடற் சேக்குந் துறைவன் இன்றுயின் மார்பிற் சென்றவென் னெஞ்சே.’’ (அகம். 40) இது முதலும் கருவும் இரங்குதற் பொருண்மையும் வந்த நெய்தற் பாட்டு. ``அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப் பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி ஏதின் மாக்களு நோவர் தோழி என்று நோவா ரில்லைத் தெண்கடற் சேர்ப்ப ணுண்டவென் னலக்கே.’’ இது திணைநிலைப் பெயரானும் இரங்கற் பொருண்மை யானும் நெய்தலாயிற்று. ``கங்குலும் பகலுங் கலந்துக வொன்றி வன்புறை சொல்லி நீத்தோ ரன்புறு செய்தி யுடையரோ மற்றே.’’ இஃது இரங்கற் பொருண்மையான் நெய்தலாயிற்று. ``சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி வைகலு மிரவுக்குறிக் கொண்கனும் வந்தனன் விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே.’’ (சிற்றட்டகம்) இது புணர்தற்பொருளாயினும் நிலத்தான் நெய்தலாயிற்று. ``கோட்டக மலர்ந்த கொழுங்கொடி யடம்பி னற்றுறை யணிநீர்ச் சேர்ப்பவிப் பொற்றொடி யரிவையைப் போற்றினை யளிமே.’’ இது பாலைக்குரித்தாகிய பிரிவுநிமித்தமாயினும் நிலத்தான் நெய்த லாயிற்று. (24) 25. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங் கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர். இது, நடுவணைந்திணைக்குரிய தலைமக்களைக் கூறி, அதன் புறத்துவாகிய கைக்கிளை பெருந்திணைக்குரிய மக்களை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் - அடித்தொழில் செய்வார் பக்கத்தினும் வினைசெய்வார் பக்கத்தினும், கடிவரைஇல - (மேற் சொல்லப்பட்ட புணர்தல் முதலான பொருளைக் கூறல்) கடிந்து நீக்கும் நிலைமையில்லை, புறத்து என்மனார் புலவர் - ஐந்திணைப் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்கண் என்று சொல்வர் புலவர். ‘புணர்தல் முதலான பொருள்’ என்பது அதிகாரத்தான் வந்தது. ‘வினை செய்வார்’ என்பதனால் அடியரல்லாதார் என்பது கொள்க. இவர் அகத்திணைக்கு உரியரல்லரோ வெனின், அகத்திணையாவது அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயலல் வேண்டும்; அவை யெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடைய ராகலானும், குறிப்பறியாது வேட்கைவழியே சாரக் கருதுவராகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார் என்பதனானும், இவர் புறப்பொருட் குரியராயினார் என்க. எனவே, இவ்வெழுவகைத் திணையும் அகம் புறம் என இருவகையாயின. ``என்னோற் றனைகொல்லோ, நீரு ணிழல்போ னுடங்கிய மென்சாயல் ஈங்குருச் சுருங்கி, இயலுவாய் நின்னொ டுசாவுவெ னின்றீத்தை; அன்னையோ, காண்டகை யில்லாக் குறணாழிப் போழ்தினான் ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை வேண்டுவ லென்று விலக்கினை நின்போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று; மாண்ட, எறித்த படைபோன் முடங்கி மடங்கி நெறித்துவிட் டன்ன நிறையேரா லென்னைப் பொறுக்கல்லா நோய்செய்தாய் பொறி நிறுக்கல்லேன் நீநல்கி னுண்டென் னுயிர்; குறிப்புக்காண், வல்லுப் பலகை யெடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறளெ கடும்பகல் வந்தெம்மை இல்லத்து வாவென மெய்கொளிய வெல்லாநின் பெண்டி ருளர்மன்னோ கூறு; நல்லாய்கேள், உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான புக்ககலம் புல்லினெ னெஞ்சூன்றும் புறம்புல்லி னக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ பக்கத்துப் புல்லச் சிறிது; போசீத்தை, மக்கண் முரியேநீ மாறினித் தொக்க மரக்கோட்டஞ் சேர்ந்தெழுந்த பூங்கொடிபோல நிரப்பமில் யாக்கை தழீஇயின ரெம்மைப் புரப்பேமென் பாரும் பலராற் பரத்தையென் பக்கத்துப் புல்லீயா யென்னுமாற் றொக்க உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு; கழிந்தாங்கே, யாம்வீழ்து மென்றுதன் பின்செலவு முற்றீயாக் கூனி குழையுங் குழைவுகாண்; யாமை, எடுத்து நிறுத்தற்றாற் றோளிரண்டும் வீசி, யாம்வேண்டே மென்று விலக்கவு மெம்வீழுங் காமர் நடக்கு நடைகாண் கவர்கணைச் சாமனார் தம்முன் செலவு காண் ஓஒகாண், நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணாம் உசாவுவங் கோனடி தொட்டேன்; ஆங்காக, சாயலின் மார்ப வடங்கினேன் ஏஎ பேயும் பேயுந் துள்ள லுறுமெனக் கோயிலுட் கண்டார் நகாஅமை வேண்டுவல் தண்டாத் தகடுருவ வேறாகக் காவின்கீழ்ப் போத ரகடாரப் புல்லி முயங்குவேம் துகடீர்பு காட்சி யவையத்தா ரோலை முகடுகாப் பியாத்துவிட் டாங்கு.’’ (கலி. 94) இதனுள் ஒருவரையொருவர் இழித்துக் கூறினமையான் அடியார் என்பதூஉம் மிக்க காமத்தின் வேறுபட்டு வருதலாற் பெருந்திணைப் பாற்படும் என்பதூஉம் கண்டுகொள்க; இதுதானே கைக்கிளைக்கும் உதாரணமாம். வினைவலர் மாட்டு வருவன வந்தவழிக் கண்டுகொள்க. (25) 26. ஏவன் மரபி னேனோரு முரியர் ஆகிய நிலைமை யவரு மன்னர். இதுவும், கைக்கிளை பெருந்திணைக்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஏவல் மரபின் ஏனோரும் உரியர் - (மேற்சொல்லப் பட்ட அடியோரும், வினைவலரும்) ஏவுதல் மரபையுடைய ஏனையோரும் (கைக்கிளை பெருந்திணைக்கு) உரியர்; அவரும் ஆகிய நிலைமை அன்னர் - அவரும் உரியராகிய நிலைமை அத்தன்மைய ராகலான். அவருமாகிய நிலைமை என மொழி மாற்றுக. கைக்கிளை பெருந்திணை என்பது அதிகாரத்தான் வந்தது. இதனாற் சொல்லியது தலைமக்களும் கைக்கிளை பெருந்திணைக்கு உரியராவர் என்பதாம். உரியராயினவாறு, அறம்பொருள் இன்பங்கள் வழுவ மகளிரைக் காதலித்தலான் என்றவாறாயிற்று. ``ஏஏ யிஃதொத்த னாணிலன் றன்னொடு மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்றும் மேவினு மேவாக் கடையு மஃதெல்லா நீயறிதி யானஃ தறிகல்லேன் பூவமன்ற மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான் புல்லினி தாகலிற் புல்லினே னெல்லா தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று; (கலி: 62) சுடர்த்தொடீ,போற்றாய், களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள் வேட்டார்க் கினிதாயி னல்லது நீர்க்கினிதென் றுண்பவோ நீருண் பவர்; செய்வ தறிகல்லேன் யாதுசெய் வேன்கொலோ ஐவா யரவி னிடைப்பட்டு நைவாரா மையின் மதியின் விளங்கு முகத்தாரை வெளவிக் கொளலு மறனெனக் கண்டன்று; அறனு மதுகண் டற்றாயிற் றிறனின்றிக் கூறுஞ்சொற் கேளா னலிதரும் பண்டுநாம் வேறல்ல மென்பதொன் றுண்டா லவனொடு மாறுண்டோ நெஞ்சே நமக்கு.’’ (கலி. 26) இதனுள் ‘வெளவிக் கொளலு மறனெனக் கண்டன்று’ எனவும், ‘நீர்க்கினி தென்றுண்பவோ நீருண்பவர்’ எனவும் தலை மகன் கூறுதலானும், தலைமகள் முன் இழித்துரைத்தலானும், ஊடியுணர்வாள் போல உடன்பட்டமையானும்,இஃது உயர்ந் தோர் மாட்டு வந்த கைக்கிளை; பெருந்திணை வந்தவழிக் கண்டு கொள்க. (26) 27. ஓதல் பகையே தூதிவை பிரிவே. மேல் கைக்கிளை முதலாக எழுதிணையு முணர்த்தினார், அவற் றுள் நிலம் பகுக்கப்பட்ட முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும் நான்கு திணையும் களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழ்தலின் அவற்றை யொழித்து நிலம் பகுக்கப்படாத கைக்கிளை பெருந்திணையும் பாலையும் இவ்வோத்தினுள் உணர்த்துகின்றன ராதலின், அவற்றுள் பாலைக் குரித்தாகிய பிரிவு உணர்த்துவான் பிரிவுக்கு நிமித்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஓதல் பகை தூது இவை பிரிவு - ஓதலும் பகையும் தூதும் என்று சொல்லப்பட்ட இத்தன்மைய பிரிவிற்கு நிமித்தமாம். ‘இவை’ என்பது இத்துன்மைய என்னும் பொருள்பட நின்றது. நிமித்தம் என்பது உய்த்துணர்ந்து கொள்ளக் கிடந்தது. ஓதற்குப் பிரிதலாவது, தமது நாட்டகத்து வழங்காது பிற நாட்டகத்து வழங்கும் நூல் உளவன்றே? அவற்றினைக் கற்றல் வேண்டிப் பிரிதல். பகைவயிற் பிரிதலாவது மாற்று வேந்தரொடு போர் கருதிப் பிரிதல். தூதிற்குப் பிரதிலாவது இருபெரு வேந்தரைச் சந்துசெய்தற்பொருட்டுப் பிரிதல். (முதல் ஏகாரம் அசைநிலை. இரண்டாம் ஏகாரம் ஈற்றசை). (27) 28. அவற்றுள் ஓதலுந் தூது முயர்ந்தோர் மேன. இது மேற்கூறப்பட்டவற்றுள் ஓதற்கும் தூதுபோதற்கும் உரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அவற்றுள் - மேற் கூறப்பட்டவற்றுள், ஓதலும் தூதும் ஓதல் காரணமாகப் பிரியும் பிரிவும் தூதாகிப் பிரியும் பிரிவும் உயர்ந்தோர்மேன நால்வகை வருணத்தினும் உயர்ந்த அந்தணர்க்கும் அரசர்க்கும் உரிய. இவர் ஒழுக்கத்தானும் குணத்தானும் செல்வத்தானும் ஏனையரினும் உயர்புடையராதலின் ‘உயர்ந்தோர்’ என்றார். அரசர்தாம் தூதாகி யவாறு வாசுதேவனால் உணர்க. (மேல என்பது ஈறு திரிந்து ‘மேன’ என நின்றது.) ``வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லுச் சிலவே யதற்கே ஏணியுஞ் சீப்பும் மாற்றி மாண்வினை யானையு மணிகளைந் தனனே.’’ (புறம். 305) இதனுள் பார்ப்பார் தூதாகியவாறு கண்டுகொள்க. (28) 29. தானே சேறலுந் தன்னொடு சிவணி ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. இது, பகைவயிற் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: தானே சேறலும் - (பகைவர் காரணமாகி அரசன்) தானே சேறலும், தன்னொடு சிவணி ஏனோர் சேறலும் - அவனொடு கூடி ஒழிந்தோர் சேறலும், வேந்தன் மேற்று - வேந்தன்கண்ணது. பகை யென்றது மேனின்ற அதிகாரத்தான் உய்த்துணர்ந்து கொள்ளக் கிடந்தது. ‘தானே’ என்பதன் ஏகாரம் பிரிநிலை; படையை யொழிய என்றவாறு. போரைக் குறித்துப் பிரிதலும் அரசர்க்கு உரித்தென்று கொள்க. இதனுள் அரசன் தலைமகனாயுழிப் பகைதணிவினைப் பிரிவு எனவும், அவனொடு சிவணி ஏனோர் தலைவராயுழி வேந்தற் குற்றுழிப் பிரிவு எனவும் இதனை இருவகையாகக் கொள்க. (ஏகாரம் ஈற்றசை) (29) 30. மேவிய சிறப்பி னேனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த வொண்பொருண் முடியவும் பிரிவே. இது, மேற்சொல்லப்பட்ட மூவகை நிமித்தமுமன்றி வருவன உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய - நால்வகை நிலத்தினும் மேவிய சிறப்பையுடைய மக்களை யல்லாத தேவரது பூசையும் விழவும் முதலாயினவும், முல்லை முதலாக சொல்லிய - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய நிலத்தின் மக்களும், முறையால் பிழைத்தது பிழையாது ஆரல் வேண்டியும் - முறைமையில் தப்பியவழி தப்பாது அறம் நிறுத்தல் காரணமாகவும், இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவு - செய்யப்பட்ட ஒள்ளிய பொருள் ஆக்குதல் காரணமாகவும் பிரிவு உளதாம்.) மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய என்பது நால்வகை நிலத்தினும் மேவிய சிறப்பையுடைய மக்களையல்லாத தேவருடைய படிமையவாகிய பொருள்கள் என்றவாறு. முல்லை முதலாச் சொல்லிய என்பது முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய நிலத்தின் மக்கள் என்றவாறு. முறையால் பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் பிரிவே என்பது மேற்சொல்லப் பட்டன முறைமையில் தப்பியவழி தப்பாது அறம் நிறுத்தற் பொருட்டும் பிரிவுளதாம் என்றவாறு. இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே என்பது செய்யப்பட்ட பொருள் முடிய வேண்டியும் பிரிவு உளதாம் என்றவாறு. (இதன் பொழிப்பு, தேவரது பூசை முதலாயினவும் மக்களும் முறைமை தப்பியவழி தப்பாது அறம் நிறுத்துல் காரணமாகவும், பொருளாக்குதல் காரணமாகவும், பிரிவு உளதாம் என்றவாறு). காவல், பொருட்பிரிவு எனப் பிற நூலகத்து ஓதப்பட்ட இரு வகைப் பிரிவும் ஈண்டு ஓதப்பட்டதென்று கொள்க. ‘மேவிய’ என்பது ‘மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும்’ (அகத். 5) என்பதனால் நால்வகை நிலத்தினும் மேவிய எனப் பொருளாயிற்று. ‘சிறப்பினேனோர்’ என்றதனால் சிறப்புடையார் மக்களும் தேவரு மாகலின், மக்களல்லாதாரே தேவர் என்று பொருளாயிற்று. ‘படிமை’ என்பது ப்ரதிமா என்னும் வடமொழித் திரிபு. அது தேவர்க்கு ஒப்புமையாக நிலத்தின்கண் செய்து அமைத்த தேவர்மேல் வந்தது. அவருடைய பொருளாவன பூசையும் விழாவும் முதலாயின. ‘முல்லை முதலாச் சொல்லிய’ என்பது ‘பிறந்தவழிக் கூறல்’ (சொல். 114) என்னும் ஆகுபெயரான் அந்நிலத்தின் மக்களை நோக்கிற்று. ‘பிரிவு’ என்பதனை, பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் பிரிவுளதாம், இழைத்த வொண்பொருண் முடியவும் பிரிவுளதாம் என இரண்டிடத்துங் கூட்டுக. ஆம் என்பது எஞ்சி நின்றது. தேவர் காரணமாகப் பிரியும் பிரிவுக்குச் செய்யுள் ``அரம்போ ழவ்வளை தோணிலை ஞெகிழ நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி ஈர்ங்கா ழன்ன வரும்புமுதி ரீங்கை ஆலி யன்ன வால்வீ தாஅய் வைவா லோதி மையண லேய்ப்பத் தாதுறு குவளைப் போதுபிணி யவிழப் படாஅப் பைங்கட் பாவடிக் கயவாய்க் கடாஅ மாறிய யானை போலப் பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ மைதோய் விசும்பின் மாதிரத் திழிதரப் பனிபட நின்ற பானாட் கங்குல் தமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய வலைத்தி முரணில் காலைக் கைதொழு மரபிற் கடவுள் சான்ற செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின் விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த பெருவளக் கரிகான் முன்னிலைச் செல்லார் சூடா வாகைப் பறந்தலை யாடுபெற ஒன்பது குடையும் நன்பக லொழித்த பீடின் மன்னர் போல ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே.’’ (அகம். 125) சேரன் செங்குட்டுவனார் கண்ணகியைக் கடவுள்மங்கலம் செய்தற்குப் பிரிந்த பிரிவு சிலப்பதிகாரத்திற் கண்டுகொள்க. இத்துணையும் பிரிவு அறுவகைப்படும் என்றவாறாயிற்று. அஃதேல் பரத்தையிற் பிரிவு என்பதோ எனின், அது நிலம் பெயர்ந்து உறையாமையானும், இவை போற் சிறக்காமை யானும், அறமுறைமை செய்யப் பிரிதலும் பொருள் காரணமாகப் பிரிதலுமின்றிப் பிரிதலினானும், கற்பியலுள் கூறப்படும் என்க. ஈண்டும் சிறுபான்மை கூறுப. (30) 31. மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே. இது, நிறுத்த முறையானே அறம் காரணமாகப் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்து - மேலோ ராகிய தேவரது முறைமையை நிறுத்தற்குப் பிரியும் பிரிவு நான்கு வருணத்தார்க்கும் உரித்து. (ஏகாரம் ஈற்றசை). (31) 32. மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப. இது, காவற்பகுதியாகிய முறை செய்வித்தற்கு உரிய மக்களை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மன்னர் பாங்கின் - மன்னர்க்குரிய பக்கத்திற்கு, பின்னோர் ஆகுப - (அவ்வாறு முறை செய்தற்கு அரசன் தான் சேறல் வேண்டாமையின், அதற்குரியராய் அவனது ஏவல்வழி வரும்) வணிகரும் வேளாளரும் உரியர் ஆகுப. மன்னர்க்குரிய பக்கமாவது காவல்; அஃதாவது நெறியின் ஒழுகாதாரை நெறியின் ஒழுகப் பண்ணுதல். (32) 33. உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான. இது, வணிகர்க்கு உரியதோர் பிரிவு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உயர்ந்தோர்க்கு - மேல் அதிகரிக்கப்பட்ட பின்னோராகிய இருவகையோரிலும் உயர்ந்தோராகிய வணிகர்க்கு, ஓத்தினான உரிய - ஓதுதல் நிமித்துமாகப் பிரிதலும் உரித்து. ஓத்துப் பலவாதலின் ‘உரிய’ என்றார். ஈண்டு ஓத்து என்பது வேதம். அது நால்வகை வருணத்தினும் மூவர்க்கு உரித்தென்பது இத்துணையெனக் கூறப்பட்டது. (33) 34. வேந்துவினை யியற்கை வேந்த னொரீஇய ஏனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே. இது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியதோர் பிரிவு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வேந்து வினை இயற்கை - வேந்தனது வினை இயற்கை யாகிய தூது, வேந்தன் ஒரீஇய ஏனோர் மருங்கினும் - வேந்தனை ஒழிந்த வணிகர்க்கும் வேளாளர்க்கும், எய்து இடன் உடைத்து - ஆகுமிடன் உடைத்து. வேந்தனது வினை - வேந்தற்குரிய வினை. ‘இடனுடைத்து’ என்றதனான் அவர் தூதாங்காலம் அமைச்சராகியவழியே நிகழும் என்று கொள்க. (ஏகாரம் ஈற்றசை.) (34) 35. பொருள்வயிற் பிரிதலு மவர்வயி னுரித்தே. இதுவும் அது. இ-ள்: பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்து - பொருள்வயிற் பிரிவும் மேற்சொல்லப்பட்ட வணிகர் வேளாள ரிடத்தில் உரியதாகும். (ஏகாரம் ஈற்றசை.) (35) 36. உயர்ந்தோர் பொருள்வயி னொழுக்கத் தான. இஃது, அந்தணர் பொருட்குப் பிரியுந்திறன் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான் - உயர்ந்தோராகிய அந்தணர் பொருள்வயிற் பிரியுங்காலத்து ஒழுக்கத்தானே பிரிப. இதனாற் சொல்லியது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் வாணிகம் முதலாயின பொருணிமித்தம் ஆகியவாறு போல, அந்தணர்க்கு இவை பொருணிமித்தம் ஆகா என்பதூஉம், அவர்க்கு இயற்கை யொழுக்கமாகிய ஆசாரமும், செயற்கை யொழுக்கமாகிய கல்வியுமே பொருட்குக் காரணமாம் என்பதூ உம் கண்டவாறு (ஈற்றகரம் சாரியை.) (36) 37. முந்நீர் வழக்க மகடூஉவோ டில்லை. இதுவும், பொருள்வயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை - (ஈண்டு அதி கரிக்கப்பட்ட பிரிவு காலிற்பிரிவும் கலத்திற்பிரிவும் என இருவகைப்படும்; அவற்றுள்) கலத்திற் பிரிவு தலைமகளுடன் இல்லை. எனவே, காலிற்பிரிவு தலைமகளை உடன்கொண்டு பிரியவும் பெறும் என்றவாறாம். கலத்திற் பிரிவு, தலைமகளை ஒழியப் பிரிந்தமைக்குச் செய்யுள் ``உலகுகிளர்ந் தன்ன வுருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கட னீரிடை போழ இரவு மெல்லையு மசைவின் றாகி விரைசெல வியற்கை வங்கூ ழாட்டக் கோடுயர் திணிமண லகன்றுறை நீகான் மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய ஆள்வினை புரிந்த காதலர் நாள்பல கழியா மையி னழிபட ரகல வருவர் மன்னாற் றோழி தண்பணைப் பொருபுனல் வைப்பி னம்மூ ராங்கட் கருவிளை முரணிய தண்புதற் பகன்றைப் பெருவன மலர வல்லி தீண்டிப் பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல் கூதழை மூதிலைக் கொடிநிறைத் தூங்க அறனின் றலைக்கு மானா வாடை கடிமனை மாடத்துக் கங்குல் வீசத் திருந்திழை ஞெகிழ்ந்து பெருங்கவின் சாஅய நிரைவளை யூருந் தோளென உரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே’’ (அகம். 254) என வரும். காலிற் பிரிவுக்கு உதாரணம் வந்துழிக் காண்க. (37) 38. எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேற் பொற்புடை நெறிமை யின்மை யான. இத்துணையும் பாலைக்குரித்தாகிய பிரிவிலக்கணம் கூறினார். இது கைக்கிளை பெருந்திணைக்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: எத்திணை மருங்கினும் - எல்லாக் குலத்தினிடத்தினும், மகடூஉ மடல்மேல் (இல்லை) - பெண்பால் மடலேறுதல் இல்லை; பொற்புடை நெறிமை இன்மையான் - பொலிவுபெறு நெறிமை இல்லாமையான். ‘மடன்மேல்’ என்பது மடலேறுதல் என்னும் பொருள் குறித்தது. இல்லை என்பது மேலைச் சூத்திரத்தினின்று தந்துரைக்கப்பட்டது. ‘பொற்புடை நெறிமை’ என்பது பெண்பாற்கு இன்றியமையாத நாணம் முதலாயின. மகடூஉ மடலேறுதல் இல்லை எனவே ஆடூஉ மடலேறுதல் உண்டு என்பது பெற்றாம். இது, ‘புணரா விரக்க’மாகிய கைக்கிளைக்கும், ‘தேறுதலொழிந்த காமத்து மிகுதிறன்’ (அகத். 51) ஆகிய பெருந்திணைக்கும் உரித்தாகியவாறு கண்டு கொள்க. (ஈற்றகரம் சாரியை). (38) 39. தன்னு மவனு மவளுஞ் சுட்டி மன்னு நிமித்த மொழிப்பொரு டெய்வம் நன்மை தீமை யச்சஞ் சார்தலென் றன்ன பிறவு மவற்றொடு தொகைஇ முன்னிய கால மூன்றொடு விளக்கித் தோழி தேஎத்துங் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியு மவ்வழி யுரிய. இது, மேற்கூறப்பட்ட இருவகைப் பிரிவினுள் (அகத். 13) தமரைப் பிரிதலாகிய உடன்போக்கில் நிகழ்ந்த நற்றாய்மாட் டுளதாய கிளவி உணர்த்துதல் நுதலிற்று. தன்னும் அவனும் அவளும் சுட்டியென்பது, தன்னையும் தலைமகனையும் தலைமகளையும் குறித்து என்றவாறு. மன்னு நிமித்தமாவது, ஆட்சி பெற்ற நிமித்தம்; அது பல்லி முதலாயினவாம். மொழிப்பொருளாவது, பிறர் தம்முள் கூறும் மொழிப்பொருளை நிமித்தமாகக் கோடல்; அதனை நற்சொல் என்ப. தெய்வம் என்பது, உலகினுள் வாழும் இயக்கர் முதலாயினார் ஆலேசித்துக் கூறும் சொல். நன்மை தீமை அச்சம் என்பது, தனக்கும் அவர்க்கும் உளவாகிய நன்மையும் தீமையும் அச்சமும் என்றவாறு. சார்தல் என்பது, அவர் தன்னை வந்து சார்தல். என்று என்பது இடைச்சொல். அன்ன பிறவும் என்பது, அத்தன்மைய பிறவும் என்றவாறு. அவற்றொடு தொகைஇ என்பது, மேற்சொல்லப்பட்ட நிமித்தம் முதலாயினவற்றோடு கூட்டி என்றவாறு. அவ்வழியாகிய கிளவியும் உரிய என்பது, அவ்விடத்தாகும் கூற்றும் உரிய என்றவாறு. இ-ள்: (போகிய திறத்து நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டி - தலைமகள் உடன்போகியவழி நற்றாய் தன்னையும் அவனையும் அவளையும் சுட்டி, மன்னும் நிமித்தம் - நிலைபெற்ற நிமித்தம், மொழிப் பொருள் தெய்வம் அவற்றொடு - மொழிப்பொருள் தெய்வம் என்பனவற்றொடு, நன்மை தீமை அச்சம் சார்தல் - தனக்கும் அவர்க்கும் உளதாகிய நன்மை தீமை அச்சம் சார்தல் என்பனவும், அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ அத்தன்மைய பிறவும் அவற்றோடு கூட்டி, முன்னிய காலம் மூன்றொடு விளக்கி - குறித்த காலம் மூன்றும் ஒருங்கு தோற்றுவித்து, தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் புலம்பலும் - தோழிமாட்டும் கண்டோர்மாட்டும் புலம்புதலும், அவ்வழி ஆகிய கிளவியும் உரிய - அவ்வழி நிகழும் கூற்றும் உரிய. ‘போகிய திறத்து நற்றாய்’ என்றதனை முன்னே கூட்டுக. ‘அவற்றொடு’ என்பதனைத் தெய்வம் என்பதனொடும் கூட்டுக. முன்னிய காலம் மூன்றுடன் விளக்குதலாவது, முன்பு இத்துன்மையளாயினாள்; இப்பொழுது இத்துன்மையளாகா நின்றாள்; மேல் இன்ன ளாகுவள் என மூன்றுகாலமும் ஒருங்கு தோற்றுவித்துப் புலம்புதல். அவ்வழி ஆகிய கிளவியும் என மொழிமாற்றுக. அவற்றிற்குச் சில உதாரணங்கள். ``தோழியர் சூழத் துறைமுன்றி லாடுங்கால் வீழ்பவள் போலத் தளருங்கா றாழாது கல்லத ரத்தத்தைக் காதலன் பின்போதல் வல்லவோ மாதர் நடை.’’ (ஐந்திணை ஐம்பது. 37) என்பது தலைமகள் உடன்போயவழி நற்றாய் கவன்றுரைத்துது. ``மறுவி றூவிச் சிறுகருங் காக்கை அன்புடை மரபினின் கிளையோ டாரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ வெஞ்சின விறல்வேற் காளையோ டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே.’’ (ஐங்குறு. 39) என்பது நற்றாய் உடன்போய தலைமகள் பொருட்டாகக் காகத்திற்குப் பராய்க்கடன் உரைத்தது. ``வேறாக நின்னை வினவுவேன் றெய்வத்தாற் கூறாயோ கூறுங் குணத்தினனாய் வேறாக என்மனைக் கேறக் கொணருமோ வெல்வளையைத் தன்மனைக்கே யுய்க்குமோ தான்’’ (திணைமாலை நூற். 90) என்பது நற்றாய் தலைமகளின் உடன்போக் கெண்ணிப் படிமத்தாளை வினாஅயது. பிறவும் அன்ன. ‘ஈன்றவள் புலம்பலும்’ என்ற உம்மையால் செவிலி புலம்பலும் கொள்ளப்படும். உதாரணம்: ``பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றனள் இனியறிந் தேனது துனியா குதலே கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் வேங்கையுங் காந்தளு நாறி ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே’’ (குறுந். 84) என்பது, உடன்போக்கிய செவிலி கவன்றுரைத்தது. ``என்னு முள்ளினள் கொல்லோ தன்னை நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையோ டழுங்கன் மூதூ ரலரெழச் செழும்பல் குன்ற மிறந்தவென் மகளே’’ (ஐங்குறு. 372) என்பது, தலைமகள் கொடுமை நினைந்து கூறியது. ``ஈன்றுபுறந் தந்த வெம்மு முள்ளாள் வான்றோ யிஞ்சி நன்னகர் புலம்பத் தனிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர் முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல்லரண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலி சூட்டித் துடிப்படத் தொப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந் துணிந்துபிற ளாயின ளாயினு மணிந்தணிந் தார்வ நெஞ்சமோ டாய்நல னளைஇத்தன் மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல துஞ்சா முழவிற் கோவற் கோமான் நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையம் பேர்யாற்று நுண்ணறல் கடுக்கும் நெறியிருங் கதுப்பினென் பேதைக் கறியாத் தேஎத் தாற்றிய துணையே.’’ (அகம். 35) என்பது செவிலி தெய்வம் பராஅயது. பிறவும் அன்ன. (39) 40. ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந் தாமே செல்லுந் தாயரு முளரே. இது, தலைமகள் உடன்போகியவழிச் செவிலிக்கு உரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஏமம் பேர் ஊர் சேரியும் ஏமம் பொருந்திய பெரிய ஊரகத்துச் சேரியின்கண்ணும், சுரத்தும் - ஊரினின்றும் நீங்கிய சுரத்தின் கண்ணும், தாமே செல்லும் தாயரும் உளர் - தாமே செல்லுந் தாயரும் உளர். ‘தாமேசெல்லுந் தாயர்’ என்பதனால் செவிலி என்பது பெற்றாம். ‘தாயரும்’ என்றதனால் கைத்தாயர் பலர் என்று கொள்ளப்படும். அவ்வழிச் சேரியோரை வினாதலும், சுரத்திற் கண்டோரை வினாதலும் உளவாம். சேரியிற் பிரிதலும் பாலையாகுமோ எனின், அது வருகின்ற சூத்திரத்தினால் விளங்கும். (ஈற்றேகாரம் அசை). சேரியோரை வினாஅயதற்குச் செய்யுள் ``இதுவென் பாவைக் கினியநன் பாவை இதுவென் பைங்கிளி யெடுத்த பைங்கிளி இதுவென் பூவைக் கினியசொற் பூவையென் றலம்வரு நோக்கி னலம்வரு சுடர்நுதல் காண்டொறுங் காண்டொறுங் கலங்கி நீங்கின ளோவென் பூங்க ணோளே’’ (ஐங்குறு. 375) என வரும். சுரத்திடை வினாஅயதற்குச் செய்யுள் ``எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல் உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர் வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை என்மக ளொருத்தியும் பிறண்மக னொருவனுந் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர் அன்னா ரிருவரைக் காணிரோ பெரும.’’ (கலி. 8) ``செய்வினைப் பொலிந்த செறிகழ னோன்றாள் மையணற் காளையொடு பைய வியலிப் பாவை யன்னவென் னாய்தொடி மடந்தை சென்ற ளென்றி ரைய ஒன்றின வோவவ ளஞ்சிலம் படியே.’’ (ஐங்குறு. 389) என வருவதும் அது. ``காலே பரிதப் பினவென் கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.’’ (குறுந். 44) என வருவது, சுரத்திடை வினாஅயது நிகழ்ந்தபின்னர்க் கூறியது. (40) 41. அயலோ ராயினு மகற்சி மேற்றே. இதுவும், பாலைக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அயலோராயினும் - (சேரியினும் சுரத்தினும் பிரித லின்றித்) தமது மனையயற்கண் பிரிந்தாராயினும், அகற்சிமேற்றே - பிரிவின் கண்ணதே. எனவே, ஓர் ஊரகத்து மனையயற்கண்ணும் பரத்தையிற் பிரிவு பாலையாம் என்பதூஉம் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். (41) 42. தலைவரு விழும நிலையெடுத் துரைப்பினும் போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும் நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் வாய்மையும் பொய்ம்மையுங் கண்டோற் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் நோய்மிகப் பெருகித் தன்னெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களையென மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் றிறத்தோ டென்றிவை யெல்லா மியல்புற நாடின் ஒன்றித் தோன்றுந் தோழி மேன. இது, பிரிவின்கண் தோழிக்குக் கூற்று நிகழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: தலைவரு விழும... தோழிமேன - தலைவரு விழும நிலையெடுத்துரைத்தல் முதலாகச் சொல்லப்பட்டன தோழிமாட்டுப் பொருந்தித் தோன்றும். தலைவரும் விழுமநிலை எடுத்துரைத்துலாவது பின்பு வரும் நோய் நிலையை எடுத்துக் கூறுதல் என்றவாறு. உதாரணம்: ``பாஅ லஞ்செவிப் பணைத்தாள் மாநிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறதர்ப் பட்ட வாறுமயங் கருஞ்சுரம் இறந்துநீர் செய்யும் பொருளினும் யாநுமக்குச் சிறந்தன மாத லறிந்தனி ராயின் நீளிரு முந்நீர் வளிகலன் வெளவலின் ஆள்வினைக் கழிந்தோர் போற லல்லதைக் கேள்பெருந் தகையோ டேவன்பல மொழிகுவ நாளுங் கொண்மீன் றகைத்துலுந் தகைமே; கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபிற் புல்லென்ற களம்போலப் புலம்புகொண் டமைவாளோ; ஆள்பவர் கலக்குற வலைபெற்ற நாடுபோற் பாழ்பட்ட முகத்தொடு பைதல்கொண் டமைவாளோ; ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையுள் நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ; எனவாங்கு, பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட் டெந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வ தந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே.’’ (கலி. பாலை. 5) என வரும். இதனுள் ‘யாம் நுமக்குச் சிறந்தனமாத லறிந்தனிராயின்’ என்றமையானும், ‘பொய்ந் நல்கல் புரிந்தனை’ என்றமையாலும் வரைவதன் முன்பென்று கொள்ளப்படும். இவள் இறந்துபடும் என்றமையான் உடன்கொண்டு போவது குறிப்பு. ‘போக்கற்கண்ணும் என்பது ‘உடன்கொண்டு பெயர்’ என்று கூறுதற் கண்ணும் என்றவாறு. உதாரணம்: ``மரையா மரல்கவர மாரி வறப்ப வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம் உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால் என்னீ ரறியாதீர் போல விவைகூறல் நின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையும் அன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு.’’ (கலி. 6) என வரும். விடுத்தற்கண்ணும் என்பது தலைமகன் உடன்போக் கொருப்பட்டமை தலைமகளுக்குக் கூறி அவளை விடுத்தற் கண்ணும் என்றவாறு. உதாரணம்: ``உன்னங் கொள்கையொ டுளங்கரந் துறையும் அன்னை சொல்லு முய்க வென்னதூஉம் ஈரஞ் சேரா வியல்பில் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கவ்வையு மொழிக நாடுக ணகற்றிய வுதியஞ் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல உவவினி வாழி தோழி யவரோ பொம்ம லோதி நம்மொ டொராங்குச் செலவயர்ந் தனரா லின்றே பரந்தெழு மலைதொறு மால்கழை மிசைந்த நால்வாய் கூரெரி மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர் வான்றோய் புணரி மிசைக் கண்டாங்கு மேவரத் தோன்றும் யாவுயர் நனந்தலை உயவல் யானை வெரிநுச்சென் றன்ன கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறிக் காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல் ஆறுகடி கொள்ளு மருஞ்சுரம் பணைத்தோள் நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை நிரையித ழுண்கண் மகளிர்க் கரிய வாலென வழுங்கிய செலவே.’’ (அகம். 65) என வரும். இஃது உடன்போக்கு நயப்பித்தது. ``வேலும் விளங்கின வினையரு மியன்றனர் தாருந் ததையின தழையுந் தொடுத்தன நிலநீ ரற்ற வெம்மை நீங்கப் பெயனீர் தலைஇய வுலவையிலை நீத்துக் குறுமுறி யீன்றன மரனே நறுமலர் வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன் தேம்படப் பொதுளின பொழிலே கானமும் நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாட் பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப் போதுவந் தன்றாற் றூதே நீயும் கலங்கா மனத்தை யாகி யென்சொல் நயந்தனை கேண்மோ நெஞ்ச மாக்குவி தெற்றி யுலறினும் வயலை வாடினும் நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும் நின்னினு மடவ ணனிநீ நயந்த அன்னை யல்ல றாங்கிநின் னையர் புலிமருள் செம்ம னோக்கி வலிமா வின்னுந் தோய்கநின் முலையே.’’ (அகம். 259) என வரும். இது விடுத்தவழிக் கூறியது. நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் என்பது, தமரை நீக்குதலான் தமக்குற்ற நோயின்கண்ணும் என்றவாறு. உதாரணம்: ``விளம்பழங் கமழும் கமஞ்சூற் குழிசிப் பாசந் தின்ற தேய்கான் மத்த நெய்தெரி யியக்கம் வெளின்முதன் முழங்கும் வைகுபுலர் விடியன் மெய்கரந்து தன்கால் அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள் இவைகாண் டோறு நோவர் மாதோ அளியரோ வளியரென் னாயத் தோரென நும்மொடு வரவுதா னயரவுந் தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே.’’ (நற். 12) என வரும். இஃது உடன்போக்குத்தவிர்தற்பொருட்டுக் கூறியது. இன்னும் ‘நீக்கலின் வந்த தம்முறு விழுமம்’ என்றதனால் தலைமகட்குக் கூறினவும் கொள்க. உதாரணம்: ``நாளு நாளு மாள்வினை யழுங்க இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென ஒண்பொருட் ககல்வர்நங் காதலர் கண்பனி துடையினித் தோழி நீயே.’’ (சிற்றட்டகம்) என வரும். வாய்மையும் பொய்ம்மையும் கண்டோற் சுட்டித் தாய்நிலை நோக்கித்தலைப்பெயர்த்துக் கொளினும் என்பது, மெய்ம்மையும் பொய்ம்மையும் காணப்பட்ட அவனைச் சுட்டித்தாய்நிலை நோக்கி மீட்டுக் கொள்ளுதற்கண்ணும் என்றவாறு. உதாரணம்: ``பான்மருண் மருப்பி னுரல்புரை பாவடி ஈர்நறுங் கமழ்கடாஅத் தினம்பிரி யொருத்தல் ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து பொருள்வயிற் பிரிதல் வேண்டு மென்னும் அருளில் சொல்லு நீசொல் லினையே நன்னர் நறுநுத னயந்தெமை நீவி நின்னிற் பிரியலே னஞ்சலோம் பென்னும் நன்னர் மொழியு நீமொழிந் தனையே அவற்றுள், யாவோ வாயின மாஅன் மகனே கிழவ ரின்னோ ரென்னாது பொருடான் பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையும் அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின் றிமைப்புவரை வாழாண் மடவோள் அமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே’’ (கலி. பாலை. 20) என வரும். இது தலைமகனைச் சுட்டிக் கூறியது. தாய்நிலை நோக்கித் தலைப் பெயர்த்துக் கொண்டதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க. ‘நோய் மிகப் பெருகித்தன் நெஞ்சு சுலுழ்ந்தோளை அழிந்தது களையென மொழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு, என்றிவை எல்லாம் இயல்புற நாடின், ஒன்றித் தோன்றும் தோழி மேன என்பது, தலைமகன் பிரிதலான் வந்துற்ற நோய் மிகவும் பெருகித்தன் நெஞ்சு கலங்கியோளை அழிந்தது களைதல் வேண்டுமெனத் தலைமகன் சொன்ன மாற்றத்தைக் கூறி வன்புறையின் பொருட்டு நெருங்கி வந்ததன் திறத்தோடு இத்தன்மைய வெல்லாம் இயல்புற ஆராயின் தலைமகளொடு பொருந்தித் தோன்றும் தோழிமேலன என்றவாறு. ‘ஒன்றித் தோன்றுந் தோழி’ என்றதனால் தோழிமார் பலருள்ளும் இன்றியமையாதாள் என்று கொள்க. ‘தோழி தானே செவிலி மகளே’ (களவியல் 35) என்றதனான், அவள் செவிலிமகள் என்று கொள்ளப்படும். மொழிந்தது கூறி வன்புறை நெருங்குதலாவது, தலைமகன் மொழிந்தது கூறி வற்புறுத்தலாம். ``அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்துலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாஅய் காடென்றா ரக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்துனரே;’’ எனவும், ``இன்பத்தி னிகந்தொரீஇ யிலைதீந்த வுலவையாற் றுன்புறூஉந் தகையவே காடென்றா ரக்காட்டுள் அன்புகொண் மடப்பெடை யசைஇய வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே;’’ எனவும், ``கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலாற் றுன்னரூஉந் தகையவே காடென்றா ரக்காட்டுள் இன்னிழ லின்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே;’’ எனவும் அவன் மொழிந்தது கூறி, ``என வாங்கு; இனை நலமுடைய கானஞ் சென்றோர் புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற் பல்லியும் பாங்கொத் திசைத்தன நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே’’ (கலி. பாலை11) என வற்புறுத்தியவாறு கண்டுகொள்க. ‘என்றிவை யெல்லா மியல்புற நாடின்’ என்றதனான், பருவம் வந்தது எனவும் பருவம் அன்று எனவும் வருவன கொள்க. ``வல்வருவர் காணாய் வயங்கி முருக்கெல்லாஞ் செல்வச் சிறார்க்குப்பொற் கொல்லர்போ னல்ல பவளக் கொழுந்தின்மேற் பொற்றாலி பாய்த்தித் திவளக்கான் றிட்டன தேர்ந்து.’’ (திணைமாலை நூற். 66) இது பருவம் வந்தது என்றது. ``மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா வளவை நெறிதரக் கொம்புசேர் கொடியிண ரூழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே.’’ (குறுந். 66) இது பருவம் அன்று என்றது. இன்னும் ‘என்றிவை யெல்லாம்’ என்றதனால், பிரியுங் காலத்துத் தலைமகட்கு உணர்த்துகின்றேன் எனத்தலைமகற்கு உரைத்தலும், தலைமகட்கு அவர் பிரியார் எனக் கூறுதலும் கொள்க. ``முளவுமா வல்சி யெயினர் தங்கை இளமா வெயிற்றிக்கு நின்னிலை யறியச் சொல்லினே னிரக்கு மளவை வெல்வேற் காளை விரையா தீமே.’’ (ஐங்குறு. 364) இது விலக்கிற்று. ``விளங்கிழாஅய் செல்வாரோ வல்ல ரழற்பட் டசைந்த பிடியை யெழிற்களிறு கற்றடைச் செற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண் டுச்சி யொழுக்குஞ் சுரம்’’ (ஐந்திணை ஐம்: 32) இது தலைமகட்குக் கூறியது. (42) 43. பொழுது மாறு முட்குவரத் தோன்றி வழுவி னாகிய குற்றங் காட்டலும் ஊரது சார்புஞ் செல்லுந் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும் புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமோ டழிந்தெதிர் கூறி விடுப்பினு மாங்கத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினுஞ் சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினுங் கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. இது கண்டோர் கூற்று நிகழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் ஊரது சார்பும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும் என்பது, காலமும் நெறியும் அச்சம் வருமாறு தோன்றி வழுவுதலினாகிய குற்றம் காட்டலும் ஊரது அணிமையும் செல்லும் தேயத்தின் சேய்மையும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய பக்கத்தினும் என்றவாறு. உதாரணம்: ``எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேந்தனை சேன்மோ பூந்தார் மார்ப இளையண் மெல்லியண் மடந்தை அரிய சேய பெருங்க லாறே’’ (சிற்றட்டகம்) எனவரும். ``புணர்ந்தோர் பாங்கில் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்து எதிர் கூறி விடுப்பினும் என்பது, புணர்ந்து செல்கின்றோர் பக்கத்து விரும்பின நெஞ்சத்தொடு மனன் அழிந்து எதிர்மொழி கூறி விடுத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத் தொலிவ லீந்தி னுலவை யங்காட் டாறு சென்மாக்கள் சென்னி யெறிந்த செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை மரனோக்கு மிண்டிவ ரீங்கைய சுரனே வையெயிற் றையண் மடந்தை முன்னுற் றெல்லிடை நீங்கு மிளையோ னுள்ளங் காலொடு பட்ட மாரி மால்வரை மிளிர்க்கு முருமினுங் கொடிதே.’’ (நற். 2) என வரும். ஆங்கு அத்தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் என்பது, ஆண்டுப் பின் சென்ற அச் செவிலித்தாயது நிலைமையைக் கண்டு போகாமல் தடுத்தற்கண்ணும் போக விடுத்தற்கண்ணும் என்றவாறு. உதாரணம்: ``அறம்புரி யருமறை நவின்ற நாவிற் றிறம்புரி கொள்கை யந்தணிர் தொழுவலென் றொண்டொடி வினவும் பேதையம் பெண்டே கண்டனெ மம்ம சுரத்திடை யவளே இன்றுணை யினிதுபா ராட்டக் குன்றுயர் பிறங்கன் மலையிறந் தோளே’’ (ஐங்குறு. 387) எனவரும். இது செவிலி வினாஅயவழிக் கூறியது. ``பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி சிலம்புகெழு சீறடி சிவப்ப இலங்குவேற் காளையோ டிறந்தனள் சுரனே.’’ இது தடுத்தற்கண் வந்தது. ``நெருப்பவிர் கனலி யுருப்புச்சினந் தணியக் கருங்கால் யாத்து வரிநிழ லரீஇச் சிறுவரை யிறப்பிற் காண்குவை செறிதொடிப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்மேல் விடலை முன்னிய சுரனே.’’ (ஐங்குறு. 388) இது விடுத்தற்கண் வந்தது. சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும் என்பது, சேய்மைக்கண் அகன்றோர் செல்லுதற்கண்ணும் வரவின் கண்ணும் என்றவாறு. உதாரணம்: ``வில்லோன் காலன கழலே தொடியோண் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொ லளியர் தாமே யாரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயி வழுவ முன்னி யோரே’’ (குறுந். 7) என வரும். ‘கண்டோர் மொழிதல் கண்டது என்ப’ என்பது, இவ்விவ்விடங்களில் கண்டோர் சொல்லுதல் வழக்கிற் காணப் பட்ட தென்ப என்றவாறு. (43) 44. ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்தும் ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும் இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக் கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞ ரெய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட அப்பாற் பட்ட வொருதிறத் தானும் நாளது சின்மையு மிளமைய தருமையுந் தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியும் இன்மைய திளிவு முடைமைய துயர்ச்சியும் அன்பின தகலமு மகற்சிய தருமையும் ஒன்றாப் பொருள்வயி னூக்கிய பாலினும் வாயினுங் கையினும் வகுத்த பக்கமோ டூதியங் கருதிய வொருதிறத் தானும் புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலுந் தூதிடை யிட்ட வகையி னானும் ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியு மண்டிலத் தருமையுந் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பாசறைப் புலம்பலு முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் காவற் பாங்கி னாங்கோர் பக்கமும் பரத்தையி னகற்சியிற் பிரிந்தோட் குறுகி இரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோ டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன. இது பிரிவின்கண் தலைமகற்குக் கூற்று நிகழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒன்றாத்தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும் என்பது, வரைவு உடன்படாத தமர்கண்ணும் பருவத்தின்கண்ணும் சுரத்தின் கண்ணும் பொருந்திய சொல்லொடு தலைமகளை உடன்கொண்டு போகத்துணியினும் விடுத்துப்போகினும் கிழவோர்க்குக் கூற்று நிகழும் என்றவாறு. ‘உரைத்திற நாட்டம் உளவாம் கிழவோற்கு’ என்பதை ஏனைய பகுதிக்கும் ஒட்டுக. வலித்தற்குச் செய்யுள்: ``ஆறுசெல் வருத்தஞ் சீறடி சிவப்பவுஞ் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான்வர றுணிந்த விவளினு மிவளுடன் வேய்பயி லழுவ முவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே.’’ எனவும், ``வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த வழுகற் சின்னீர் வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇய வருகதில் லம்ம தானே அளியளோ வளியளென் னெஞ்சமர்ந் தோளே’’ (குறுந். 56) எனவும் வரும். அவ்வழி இடைச்சுரத்திற் கூறியதற்குச் செய்யுள்: ``அழிவில முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் நலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறு நெடிய வைகி மணல்காண் டோறும் வண்ட றைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாநனை கொழுதி மகிழ்குயி லாலு நறுந்தண் பொழில கானங் குறும்ப லூர யாஞ்செல்லு மாறே.’’ (நற்.9) என வரும். விடுத்தற்குச் செய்யுள்: ``இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம் ஆநிலைப் பள்ளி யல்க நம்மொடு மானுண் கண்ணியும் வருமெனின் வாரா ராயரோ பெருங்க லாறே.’’ எனவரும். இஃது உடன்கொண்டு பெயர்தல் வேண்டு மென்ற தோழிக்குக் காட்டது கடுமை கூறி விடுத்தது. ``கிளிபுரை கிளவியா யெம்மொடு நீவரிற் றளிபொழி தளிரன்ன வெழின்மேனி கவின்வாட முளியரில் பொத்திய முழங்கழ லிடைபோழ்ந்த வளியுறி னவ்வெழில் வாடுவை யல்லவோ’’ (கலி. பாலை. 12) என்பது தலைவிக்குக் காட்டது கடுமை கூறி விடுத்தது. இடைச்சுரம் மருங்கின் அவள் தமர் எய்திக் கடைக் கொண்டு பெயர்தலில் கலங்கு அஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட அப்பால் பட்ட ஒரு திறத்தானும் என்பது, தலைமகள் செல்கின்ற இடைச்சுரத்திடைத் தலைமகள்தமர் எய்தி மீட்டுக்கொண்டு பெயர்தல் மரபாதலின் அங்ஙனம் பெயர்வர் எனக் கலங்கி வருத்த முற்றுக் கற்பொடு புணர்ந்த அலர் உளப்பட அப்பகுதிப்பட்ட உடன்போக்கின்கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. அவ்வழி, வருவரெனக் கூறலும் வந்தவழிக் கூறலும் உளவாம். உதாரணம்: ``வினையமை பாவையி னியலி நுந்தை மனைவரை யிறந்து வந்தனை யாயிற் றலைநாட் கெதிரிய தண்பெய லெழிலி யணிமிகு கானத் தகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும் நீவிளை யாடுக சிறிதே யானே மழகளி றுரிஞ்சிய பராஅரை வேங்கை மணலிடு மருங்கி னிரும்புறம் பொருந்தி அமர்வரி னஞ்சேன் பெயர்க்குவன் நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.’’ (நற். 362) இது வருவர் என ஐயுற்றுக் கூறியது. ‘கற்பொடு புணர்ந்த கௌவை’க்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும் என்பது, நாளது சின்மை முதலாகச் சொல்லப்பட்ட எட்டனையும் பொருந்தாத பொருட்கண் ஊக்கிய பக்கத்தினும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. ‘ஒன்றா’ என்னும் பெயரெச்சம் ‘பால்’ என்னும் பெயர் கொண்டு முடிந்தது. அது ‘பொருள்வயி னூக்கிய பால்’ என அடையடுத்து நின்றது. நாளது சின்மையை ஒன்றாமையாவது, யாக்கை நிலையாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. இளமையது அருமையை ஒன்றாமையாவது, பெறுதற்கரிய இளமை நிலையாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. தாளாண் பக்கத்தை ஒன்றாமையாவது, முயற்சியான் வரும் வருத்தத்தை உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. தகுதியது அமைதியை ஒன்றாமையாவது, பொருண்மேற் காதல் உணர்ந்தோர்க்குத்தகாது எனஉணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. இன்மையது இளிவை ஒன்றாமையாவது, இன்மையான் வரும் இளிவரவினைப் பொருந்தாமை. உடைமையது உயர்ச்சியை ஒன்றாமையாவது, பொருள் உடையார்க்கு அமைவு வேண்டுமன்றே, அவ்வமைவினைப் பொருந்தாமை; அஃதாவது மேன்மேலும் ஆசை செலுத்துதல். அன்பினது அகலத்தை ஒன்றாமையாவது, சிறந்தார் மாட்டுச் செல்லும் அன்பினைப் பொருந்தாமை. அகற்சியது அருமையை ஒன்றாமையாவது, பிரிதலருமையைப் பொருந்தாமை. பொருள் தேடுவார் இத்தன்மைய ராதல் வேண்டுமென ஒருவாற்றான் அதற்கு இலக்கணங் கூறியவாறு. வாயினும் கையினும் வகுத்து பக்கமோடு ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் என்பது, வாயான் வகுத்த பக்கமோடும் கையான் வகுத்து பக்கமோடும் பயன் கருதிய ஒரு கூற்றானும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. வாயான் வகுத்த பக்கமாவது - ஓதுதல். கையான் வகுத்த பக்கமாவது - படைக்கலம் பயிற்றலும் சிற்பங் கற்றலும். ஊதியங் கருதிய ஒருதிறனாவது - மேற்சொல்லப்பட்ட பொருள்வயிற் பிரித லன்றி அறத்திறங் காரணமாகப் பிரியும் பிரிவு. இது, மறுமைக்கண் பயன் தருதலின் ‘ஊதியம்’ ஆயிற்று. ``அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை மறத்தலி னூங்கில்லை கேடு.’’ (குறள். 32) என்பதனானும் அறிக. புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் என்பது, பிரிந்ததனான் வரும் புகழும் பிரியாமையான் வரும் குற்றமும் குறித்துத் தலைமகளை யான் வருந்துணையும் ஆற்றியிருத்தல் வேண்டுமெனக் கூறுதற்கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. பொருள்வயின் ஊக்கிய பாலினும் ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் வற்புறுத்தல் எனக் கூட்டுக. உதாரணம்: ``அறனு மீகையு மன்புங் கிளையும் புகழு மின்புந் தருதலிற் புறம்பெயர்ந்து தருவது துணிந்தமை பெரிதே விரிபூங் கோதை விளங்கிழை பொருளே.’’ என வரும். தூதிடை இட்ட வகையினானும் என்பது, இரு பெரு வேந்தர் இகலியவழிச் சந்து செய்தற்குத் தூதாகிச் செல்லும் வகையின்கண்ணும் அவற்குக் கூற்று நிகழும். ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் என்பது, தனக்குப் பாங்காகித் தோன்றுவார் பக்கத்துப் பிரியும்வழியும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. அதுவும் வேந்தற்கு உற்றுழிப் பிரியும் பிரிவு. மூன்றன் பகுதியாவன, நால்வகை வலியினும் தன்வலியும் துணைவலியும் வினைவலியும் என்பன. அவை பகைவர்மாட் டுள்ளன. மண்டிலத்து அருமையாவது, பகைவர் மண்டிலங் கொண்ட அருமை என்றவாறு. தோன்றல் சான்ற என்பது, (இவை) மிகுதல் சான்ற என்றவாறு. மாற்றோர் மேன்மையாவது, மாற்றோரது உயர்ச்சியானும் என்றவாறு. ஆறன் உருபு எஞ்சி நின்றது. மூன்றன் பகுதியானும் மண்டிலத்தருமையானும் தோன்றல் சான்ற மாற்றோர் எனக் கூட்டுக. பாசறைப் புலம்பல் என்பது, பாசறைக்கண் தலைமகன் தனிமை யுரைத்தல் என்றவாறு. தூதிடை வகையினானும், வேந்தற்கு உற்றுழியினானும், மாற்றோர் மேன்மையினானும் பாசறைக்கட் புலம்பல் எனக் கூட்டுக. அஃதாவது, தூதினும் வேந்தற் குற்றுழியினும் பகைதணி வினையினும் பாசறைக்கட் புலம்பல் உளதாகும் எனக் கொள்க. உதாரணம்: ``வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளைகளைந் தொழிந்த கொழுந்தி னன்ன தளைபிணி யவிழாச் சுரிமுகப் பகன்றை சிதரலந் துவலை தூவலின் மலருந் தைஇ நின்ற தண்பெயற் கடைநாள் வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குன் மாமழை தென்புலம் படரும் பனியிருங் கங்குலுந் தமிய ணீந்தித் தன்னூ ரோளே நன்னுதல் யாமே கடிமதிற் கதவம் பாய்தலிற் றொடிபிளந்து நுதிமுக மழுங்கிய மண்ணைவெண் கோட்டுச் சிறுகண் யானை நெடுநா வொண்மணி கழிப்பிணிக் கறைத்தோற் பொழிகணை புதைப்பத் தாங்குகுரன் முரசமொடு மயங்கும் யாமத்துக் கழித்துறைச் செறியா வாளுடை யெறுழ்த்தோள் இரவுத்துயின் மடிந்த தானை உரவுச்சின வேந்தன் பாசறை யோமே.’’ (அகம். 24) இது வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் கூற்று. ``வைகுபுலர் விடியல் மைபுலம் பரக்கக் கருநனை யவிழ்ந்த வூழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை யினச்சித ரார்ப்ப நெடுநெ லடக்கிய கழனியேர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட் டுழவர் ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக் கோழிண ரெதிரிய மரத்த கவினிக் காடணி கொண்ட காண்டகு பொழுதின் நாம்பிரி புலம்பி னலஞ்செலச் சாஅய் நம்பிரி பறியா நலனொடு சிறந்த நற்றோ ணெகிழ வருந்தினள் கொல்லோ மென்சிறை வண்டின் றண்கமழ் பூந்துணர்த் தாதின் றுவலை தளிர்வார்ந் தன்ன அங்கலுழ் மாமைக் கிளைஇய நுண்பஃ றித்தி மாஅ யோளே.’’ (அகம். 41) என்பது பகையிற் பிரியும் தலைமகன் கூற்று. பிறவும் அன்ன. இவ்வாறு வருவன குறித்த பருவம் பிழைத்துழி என்று கொள்க. முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் என்பது, வினை முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பப்பட்ட வினைத் திறத்தினது வகையின்கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. அது பாசறைக்கட் கூறலும், மீண்டு இடைச்சுரத்துக் கூறலும் என இருவகைப்படும். இன்னும், ‘வகை’ என்றதனான் நெஞ்சிற்குக் கூறியனவுங் கொள்க. உதாரணம்: ``வந்துவினை முடித்த வேந்தனும் பகைவருந் தந்திறை கொடுத்துத் தமரா யினரே முரண்செறிந் திருந்த சேனை யிரண்டும் ஒன்றென வறைந்தன பணையே ரின்றேர் முன்னியங் கூதிர் பின்னிலை யீயா தூர்க பாக வொருவினை கழிய நன்ன னேற்றை நறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி பொன்னணி வல்விற் புன்றுறை யென்றாங் கன்றவர் குழீஇய வளப்பருங் கட்டூர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது நோனா னாகித் திண்டேர்க் கணைய னகப்படக் கழுமலந் தந்த பிணையலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி அழும்பி லன்ன வறாஅ யாணர்ப் பழம்பன் னெல்லின் பல்குடிப் பரவைப் பொங்கடி கடிகய மண்டிய மடிமிளைத் தண்குட வாயி லன்னோள் பண்புடை யாகத் தின்றுயில் பெறவே.’’ (அகம். 44) எனவும், ``கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங் கேளல் கேளீர் கெழிஇயின ரொழுகவும் ஆள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந் தாரங் கண்ணி படுபோர்ச் சோழர் அறங்கெழு நல்லவை புறந்தை யன்ன பெறலரு நன்கல மெய்தி நாடுஞ் செயலருஞ் செய்வினை முற்றின மாயின் அரண்பல கடந்த முரண்கொ டானை வாடா வேம்பின் வழுதி கூடல் நாளங் காடி நாறு நறுநுதல் நீளிருங் கூந்தன் மாஅ யோளொடு வரைகுயின் றன்ன வான்றோய் நெடுநகர் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து நலங்கே ழாகம் பூண்வடுப் பொறிப்ப முயங்குகஞ் சென்மோ நெஞ்சே வரிநுதல் வயந்திகழ்பு பிமிழ்தரும் வாய்புகு கடாஅத்து மீளி முன்பொடு நிலனெறியாக் குறுகி ஆள்கோட் பிழையா வஞ்சுவரு தடக்கைக் கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதை திருவமர் வியனகர்க் கருவூர் முன்றுறைத் தெண்ணீ ருயர்கரைக் குவைஇய தண்ணான் பொருநை மணலினும் பலவே’’ (அகம். 93) எனவும் வருவன நெஞ்சிற்குக் கூறியன. ``கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் பெஃகின் வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்புநுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச் செப்பட ரன்ன செங்குழை யகந்தோ றிழுதி னன்ன தீம்புழற் றுய்வாய் உழுதுகாண் டுளைய வாகி யார்கழல் பாலி வானிற் காலொடு பாறித் துப்பி னன்ன செங்கோட் டியவின் நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும் அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்க் கொடுநுண் ணோதி மகளி ரோச்சிய தொடிமா ணுலக்கைத் தூண்டுரற் பாணி நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங் குன்றுபின் னொழியப் போகி யுரந்துரந்து ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவின் எம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மாண் ஓங்குயர் நல்லி லொருசிறை நிலைஇப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக் கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறநசைஇச் சென்றவென் னெஞ்சே.’’ (அகம். 9) இஃது இடைச்சுரத்துச் சொல்லியது. காவல் பாங்கின் ஆங்கு ஓர் பக்கம் என்பது, காவற்பக்கத்தின்கண் ஒரு பிரிவினும் கூற்று நிகழும் என்றவாறு. ‘ஆங்கு’ என்பது இடங்குறித்து நின்றது; ‘நின்னாங்கு வரூஉ மென்னெஞ்சினை’ (கலி.பாலை. 22) என்றாற் போலக் கொள்க. இது வாரியுள் யானை காணவும், நாடு காணவும், புனலாடவும், கடவுளரை வழிபடவும் பிரியும் பிரிவு. ஒரு பக்கம் நாட்டெல்லை யிலிருந்து பகைவரை போக்க வேண்டிப் பிரிவது பகைவயிற் பிரிவின் அடங்குதலின், அஃதன் உண்மைக்கண் பிரியும் பிரிவு என்று ஓதப்பட்டது. பரத்தையின் அகற்சியின் என்பது, பரத்தையரிற் பிரியும் பிரிவின் கண்ணும் என்றவாறு. உம்மை எஞ்சி நின்றது. பிரிந்தோட் குறுகி இரத்தலும் தெளித்தலும் என இருவகையோடு என்பது, பிரியப்பட்ட தலைமகளைக் குறுகி, இரத்தலும் தெளித்தலும் ஆகிய இரண்டு வகையோடே கூட என்றவாறு. காவற் பாங்கின் ஆங்கோர் பக்கத்தினும் பரத்தையின் அகற் சியினும் பிரியப்பட்டார் எனக் கூட்டுக. அஃதேல் பரத்தையின் அகற்சி ஊடலாகாதோ வெனின், ஊடலின் மிக்க நிலையே ஈண்டுக் கூறுகின்றதெனக் கொள்க. கடவுள்மாட்டுப் பிரிந்துவந்த தலைமகனைத் தலைமகள் புணர்ச்சி மறுத்துற்குச் செய்யுள்: மருதக்கலியுள் கடவுட் பாட்டினுள், (கலி. மரு. 28) ``வண்டூது சாந்தம் வடுக்கொள நீவிய தண்டாத்தீஞ் சாயற் பரத்தை வியன்மார்ப பண்டின்னை யல்லைமன் னீங்கெல்லி வந்தீயக் கண்ட தெவன்மற் றுரை; நன்றும், தடைஇய மென்றோளாய் கேட்டீவா யாயின் உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங் கடவுளர் கட்டங்கி னேன்; சோலை, மலர்வேய்ந்த மான்பிணை யன்னார் பலர்நீ கடவுண்மை கொண்டொழுகு வார்’’ எனவும், ``சிறுவரைத் தங்கின் வெகுள்வர் செறுத்தக்காய் தேறினென் சென்றீநீ செல்லாய் விடுவாயேல் நற்றா ரகலத்துக் கொருசார் மேவிய நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கு முட்டுப்பா டாகலு முண்டு.’’ (கலி. 93) எனவும் புணர்ச்சிக்கு உடன்படாது கூறுதலானும், குறும்பூழ்ப்பாட்டி னுள் (கலி. மரு. 30), ``விடலைநீ நீத்தலி னோய்பெரி தேய்க்கும் நடலைப்பட் டெல்லாநின் பூழ்’’ என்றவழி மருதநிலத்தின் தலைமகனை விடலை என்றமையானும், இதனுள், ``பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தே னருளினி.’’ என இரந்தமையானும் கண்டுகொள்க. ``ஒரூஊக் கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடீஇய வெமக்குநீ யாரை பெரியார்க் கடியரோ ஆற்றா தவர்; கடியதமக் கியார் சொல்லத்தக்கரா மாற்று, வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது, சென்றீநின் மாய மருள்வா ரகத்து; ஆயிழாய், நின்கண் பெறினல்லா லின்னுயிர் வாழ்கல்லா என்க ணெனோ தவறு; இஃதொத்தன், புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்போல் வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவும் ஒள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியு நல்லார் சிரறுபு சீறச் சிவந்தநின் மார்பும் தவறாதல் சாலாவோ கூறு; அதுதக்கது, வேற்றுமை யென்கண்ணோ வோராதி தீதின்மை தேற்றக்கண் டீயாய் தெளிக்கு; இனித் தேற்றேம் யாம், தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீகூறும் பொய்ச்சூ ளணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு.’’ (கலி. மரு. 23) இதனுள் இரத்தலும் தெளித்தலும் வந்தவாறு கண்டுகொள்க. கலித்தொகையிற் கடவுட் பாட்டினுள் உரிப்பொருண்மை பற்றி வரும் பாட்டுக்களும் மருதநிலத்துத்தலைமகன் பெயர் கூறாது பிறபெயர் படக் கோத்தமையானும் ஊடற் பொருண்மை யின் வேறுபாடுண்மை அறிக. ‘உரைத்திறம் நாட்டம் கிழவோன் மேன’ என்பது, இவ்விவ் விடங்கள் பற்றி உரையாடுங் குறிப்புத்தலைமகன் மேலன என்றவாறு. (44) 45. எஞ்சி யோர்க்கு மெஞ்சுத லிலவே. இதுகாறும் பிரிவின்கண் கூறுதலுரியார் பலருள்ளும் நற்றாயும் செவிலியும் கண்டோரும் தோழியும் தலைமகனும் கூறுங் கூற்றுக் கூறினார். இஃது அவரை யொழிந்த தலைமகட்கும் பாங்கற்கும் பார்ப்பார்க்கும் பாணர்க்கும் கூத்தர்க்கும் உழையோர்க்கும் கூற்று நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இல - முன்னர்க் கூறாது எஞ்சி நின்றார்க்கும் கூற்று ஒழிதல் இல. `பாங்கர் முதலாயினாரை இச்சூத்திரத்தாற் கூறுப. தலைமகள் கூற்றுத்தனித்துக் கூறல் வேண்டும், இவரோடு ஒரு நிகரன்மையின்’ எனின், ஒக்கும். தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப் பழமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினார் போலும். ஆசிரியர் இச்சூத்திரத்தானும் பொருள் கொள்ள வைத்தமையின், தலைமகள் கூற்று வருமாறு: தலைமகள் பிரிதலுற்ற தலைமகன் குறிப்புக் கண்டு கூறுதலும், பிரிவுணர்ந்து கூறுதலும், பிரிவுணர்த்திய தோழிக்குக் கூறுதலும், உடன் போவல் எனக் கூறுதலும், இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லிவிட்டனவும், தமர் வந்துற்றவழிக் கூறுதலும், மீளலுற்றவழி ஆயத்தார்க்குக் கூறிவிட்டனவும், பிரிவாற்றாமையும், ஆற்றுவல் என்பது படக் கூறுதலும், தெய்வம் பராவலும், பருவங் கண்டு கூறுதலும், வன்புறை எதிரழிந்து கூறுதலும் இவை யெல்லாம் கூறப்படும். பிரியலுற்ற தலைமகன் குறிப்புக் கண்டு கூறியதற்குச் செய்யுள்: ``நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தாம் அஞ்சிய தெல்லா மணங்காகு மென்னுஞ்சொல் இன்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானும் இதுவொன் றுடைத்தென எண்ணி யதுதேர மாசில்வாண் சேக்கை மணந்த புணர்ச்சியுட் பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோல் தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ இடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெஞ் செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய் தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி யாமுயிர் வாழு மதுகை யிலேமாயில் தொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயின் நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு போயின்று சொல்லென் னுயிர்.’’ (கலி. பாலை. 23) பிரிவுணர்ந்த தலைமகள் தலைமகனுடன் கூறியதற்குச் செய்யுள் : ``செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோ மற்றைய அகனகர் கொள்ளா வலர்தலைத் தந்து பகன்முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன் மகனல்லை மன்ற வினி; செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி அன்பற மாறியா முள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை என்றிறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாம லாண்டோர் அவலம் படுதலு முண்டு.’’ (கலி. பாலை. 18) பிரிவுணர்த்திய தோழிக்குக் கூறியதற்குச் செய்யுள்: ``அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின் உரவோ ருரவோ ராக மடவ மாக மடந்தை நாமே.’’ (குறுந். 20) ``செல்லாமை யுண்டே லெமக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.’’ (குறள். 1151) என்பதும் அது. உடன்போக்கு ஒருப்பட்டதற்குச் செய்யுள்: ``சிலரும் பலருங் கடைக்க ணோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டி ரம்ப றூற்றச் சிறுகோல் வலந்தன ளன்னை யலைப்ப அலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற் கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே.’’ (நற். 149-1) இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லிவிட்டதற்குச் செய்யுள்: ``சேட்புல முன்னிய விரைநடை யந்தணிர் நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர் யாய்நயந் தெடுத்த வாய்நலங் கவின ஆரிடை யிறந்தன ளென்மின் நேரிறை முன்கையென் னாயத் தோர்க்கே.’’ (ஐங்குறு. 384) ``கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக் கோள்வல் வேங்கைய மலைபிறக் கொழிய வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக் கூறுமின் வாழியோ வாறுசென் மாக்கள் நற்றோ ணயந்துபா ராட்டி எற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே.’’ (ஐங்குறு. 385) தமர் வந்துற்றவழிக் கூறியதற்குச் செய்யுள்: ``அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ வறனுண் டாயினு மறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற வருவிக் கோள்வ லென்னையை மறைத்த குன்றே.’’ (ஐங்குறு. 312) மீண்டு வருவாள் ஆயத்தார்க்குக் கூறிவிட்டதற்குச் செய்யுள்: ``கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரநனி வாரா நின்றன ளென்பது முன்னுற விரைந்தநீ ருரைமின் இன்னகை முறுவலென் னாயத் தோர்க்கே.’’ (ஐங்குறு. 397) பிரிவாற்றாமைக்குச் செய்யுள்: ``அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான்.’’ (குறள். 1153) ``அஞ்சுவல் வாழி தோழி சென்றவர் நெஞ்சுணத் தெளித்த நம்வயின் வஞ்சஞ் செய்தல் வல்லின வாறே.’’ ``அரும்பெறற் காதல ரகலா மாத்திரம் இரும்புத லீங்கை யிளந்தளிர் நடுங்க அலங்குகதிர் வாடையும் வந்தன்று கலங்கஞ ரெவ்வந் தோழிநா முறவே.’’ இவை பிரிந்தார் என்றவழிக் கூறியன. ஆற்றுவல் என்பதுபடக் கூறியதற்குச் செய்யுள்: ``தோளுந் தொடியு நெகிழ்ந்தன நுதலும் நெய்யுகு பள்ளி யாகுக தில்ல யானஃ தவலங் கொள்ளேன் றானஃ தஞ்சுவரு கான மென்றதற் கஞ்சுவ றோழி நெஞ்சத் தானே.’’ தெய்வம் பராஅயதற்குச் செய்யுள்: ``புனையிழா யீங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி முனையென்னார் காதலர் முன்னிய வாற்றிடைச் சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக் கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ.’’ (கலி. பாலை. 15) பருவங் கண்டு கூறியதற்குச் செய்யுள்: ``என்னொடு புலந்தனர் கொல்லோ காதலர் மின்னொடு முழங்குதூ வானம் நின்னொடு வருது மெனத்தெளித் தோரே.’’ வன்புறை எதிரழிந்து கூறியதற்குச் செய்யுள்: ``வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய் தோன்றார் பொறுக்கவென் றாற்பொறுக்க லாமோ ஒறுப்பபோற் பொன்னு ளுறுபவளம் போன்ற புணர்முருக்கம் என்னு ளுறுநோய் பெரிது.’’ (திணைமாலை. 67) தூதுவிடக் கூறியதற்குச் செய்யுள்: ``காண்மதி பாணநீ யுரைத்தற் குரியை துறைகெழு கொண்கன் பிரிந்தென இறைகே ழெல்வளை நீங்கிய நிலையே.’’ (ஐங்குறு. 140) ஆயத்தார் கூறியதற்குச் செய்யுள்: ``மாந்தர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி தான்வரு மென்ப தடமென் றோளி அஞ்சின ளஞ்சின ளொதுங்கிப் பஞ்சி மெல்லடிப் பரல்வடுக் கொளவே.’’ பாணர் கூறியதற்குச் செய்யுள்: ``நினக்கியாம் பாணரு மல்லே மெமக்கு நீயுங் குருசிலை யல்லை மாதோ நின்வெங் காதலி நன்மனைப் புலம்பி ஈரித ழுண்க ணுகுத்த பூசல் கேட்டு மருளா தோயே.’’ (ஐங்குறு. 480) பார்ப்பார் கூறியதற்குச் செய்யுள்: ``துறந்ததற் கொண்டு துயரடச் சாஅய் அறம்புலந்து பழிக்கு மளைக ணாட்டி எவ்வ நெஞ்சிற் கேம மாக வந்தன ளேநின் மடமகள் வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே.’’ (ஐங்குறு. 393) (45) 46. நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும். இதுவும் பாலைக்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் முன்பு நிகழ்ந்தது பின்பு விசாரித்தற்கு ஏதுவும் ஆகும். (உம்மை எதிர்மறை). உதாரணம்: ``வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை கந்துபிணி யானை யயாவுயிர்த் தன்ன என்றூழ் நீடிய வேய்பயி லழுவத்துக் குன்றூர் மதிய நோக்கி நின்றுநினைந் துள்ளினே னல்லனோ யன்முள் ளெயிற்றுத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல் எமது முண்டோர் மதிநாட் டிங்கள் உரறுகுரல் வெவ்வளி யெடுப்ப நிழற்பல உலவையாகிய மரத்த கல்பிறங்கு மாமலை யும்பரஃ தெனவே.’’ (நற். 62) (46) 47. நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே. இதுவும் அது. இ-ள்: நிகழ்ந்தது கூறி நிலையலும் திணை - முன்பு நிகழ்ந்த தனைக் கூறிப் போகாதொழிதலும் பாலைத் திணையாம். உதாரணம்: ``ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப் பொரியரை வேம்பின் புள்ளி நீழற் கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும் வில்லே ருழவர் வெம்முனைச் சீறூர்ச் சுரன்முதல் வந்த வுரன்மாய் மாலை உள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய வினைமுடித் தன்ன வினியோள் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே.’’ (நற். 3) (47) 48. மரபுநிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவு மென்ப. இதுவும் அது. இ-ள்: மரபு நிலை திரியா மாட்சிய ஆகி விரவும் பொருளும் விரவும் என்ப - மரபுநிலை திரியாத மாட்சிமையுடையவாகி விரவும் பொருளும் விரவும் என்ப. அஃதாவது பாலைக்கு ஓதிய பாசறைப் புலம்பற்கண்ணும், தேர்ப்பாகற்குக் கூறுதற்கண்ணும் முல்லைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் விரவுதலாம். இந்நிகரன பிறவுங் கொள்க. மரபுநிலை திரியாமையாவது, பாசறைக்கண் வினை முடித்தவழிக் கார்காலம் வந்ததாயின் ஆண்டுக் கூறும் கூற்று. அஃது அக்காலத்தைப் பற்றி வருதலின் மரபு நிலை திரியாதாயிற்று. உதாரணம்: ‘வேந்து வினை முடித்தது’ என்னும் அகப்பாட்டினுள் (104) கண்டு கொள்க. இன்னும் ‘மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவும்’ என்றதனால் பாசறைக்கண் தூது கண்டு கூறுதலும் தலைமகளை இடைச்சுரத்து நினைத்துக் கூறுதலும் கொள்க. உதாரணம்: ``நீடின மென்று கொடுமை தூற்றி வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந் தியாம்வெங் காதலி நோய்மிகச் சாஅய்ச் சொல்லிய துரைமதி நீயே முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே.’’ (ஐங்குறு. 478) இது தூது கண்டு கூறியது. ``பனிமலர் நெடுங்கண் பசலை பாயத் துனிமலி துயரமோ டரும்பட ருழப்போள் கையறு நெஞ்சிற் குசாஅத்துணை யாகச் சிறுவரைத்துங்குவை யாயிற் காண்குவை மன்னாற் பாணவெந் தேரே.’’ (ஐங்குறு. 477) இது தூது விடும் தலைமகன் கூறியது. ``நெடுங்கழை முளிய வேனி னீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய வாயின முன்னே யினியே ஒண்ணுத லரிவையை யுள்ளுதொறுந் தண்ணிய வாயின சுரத்திடை யாறே.’’ (ஐங்குறு. 322) இஃது இடைச்சுரத்துக் கூறியது. (48) 49. உள்ளுறை யுவம மேனை யுவமமெனத் தள்ளா தாகுந் திணையுணர் வகையே. இஃது, உவமவகையான் ஐந்திணைக்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உள்ளுறை உவமம் ஏனை உவமம் என - உள்ளுறைக்கண் வரும் உவமமும் ஒழிந்த உவமமும் என இரு வகையாலும், திணை உணர்வகை தள்ளாது ஆகும் - திணை உணரும் வகை தப்பாதாகும். (ஏகாரம் ஈற்றசை). உதாரணம் முன்னர்க் காட்டுதும். (49) 50. உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலமெனக் கொள்ளு மென்ப குறியறிந் தோரே. இஃது, உள்ளுறை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை - உள்ளுறையாவது கருப்பொருட்டெய்வம் ஒழிந்த பொருளை, நிலம் எனக் கொள்ளும் என்ப குறி அறிந்தோர் - இடமாகக் கொண்டுவரும் என்று சொல்லுவர் இலக்கணம் அறிந்தோர். குறி இலக்கணம். (50) 51. உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருண் முடிகென உள்ளுறுத் துரைப்பதே யுள்ளுறை யுவமம். இஃது, உள்ளுறை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உள்ளுறுத்து பொருள் இதனோடு ஒத்து முடிக என (உள்ளுறுத்தப்பட்ட கருப்பொருளை) உள்ளுறுத்துக் கருதிய பொருள் இதனொடு ஒத்து முடிக என, உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம் - உள்ளுறுத்துக் கூறுவதே உள்ளுறை உவமம். எனவே, உவமையாற் கொள்ளும் வினை பயன் மெய் உருவன்றிப் பொருளுவமையாற் கொள்ளப்படுவது. உதாரணம்: ``வெறிகொ ளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுதேன் வேட்டுங் குறுகும் நிறைமதுசேர்ந் துண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதோர் வண்டா மரைபிரிந்த வண்டு.’’ இது வண்டோரனையர் மாந்தர் எனக் கூறுதலான் உவமிக்கப்படும் பொருள் புலப்படாமையின் உள்ளுறையுவம மாயிற்று. இதனுட் காவியும் தாமரையும் கூறுதலான் மருதமாயிற்று. (51) 52. ஏனை யுவமந் தானுணர் வகைத்தே. இஃது, ஏனை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஏனை உவமம் தான் உணர் வகைத்து - உள்ளுறை யொழிந்த உவமம் தான் உணரும் வகையான் வரும். தான் உணரும் வகையாவது, வண்ணத்தானாதல் வடிவானாதல் பயனானாதல் தொழிலானாதல் உவமிக்கப்படும் பொருளொடு எடுத்துக் கூறுதல். (ஏகாரம் ஈற்றசை). அது வருமாறு உவமவியலுட் கூறப்படும். இதனால் திணை உணருமாறு: ``வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழின் முளைநிரை முறுவ லொருத்தியொடு நெருநற் குறிநீ செய்தனை யென்ப வலரே குரவ நீள்சினை யுறையும் பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே.’’ (ஐங்குறு. 369) இஃது ஊடற் பொருண்மைத்தேனும், வேனிற்காலத்து நிகழும் குயிற்குரலை உவமித்தலிற் பாலைத் திணையாயிற்று. குரவம் - குராமரம். ``உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே துருக்கங் கமழு மென்றோள் துறப்ப வென்றி யிறீஇயரென் னுயிரே.’’ (சிற்றட்டகம்) இது துருக்கம் என உவமை கூறுதலாற் குறிஞ்சியாயிற்று. (52) 53. காமஞ் சாலா விளமை யோள்வயின் ஏமஞ் சாலா விடும்பை யெய்தி நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தாற் றன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல் புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே. மேல் நடுவணைந்திணைக்குரிய பொருண்மையெல்லாம் கூறினார். இது கைக்கிளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: காமம் சாலா இளமையோள்வயின் - காமம் அமையாத இளையாள்மாட்டு, ஏமம் சாலா இடும்பை எய்தி - ஏமம் அமையாத இடும்பை எய்தி, நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான் - புகழ்தலும் பழித்தலுமாகிய இரு திறத்தால், தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து தனக்கும் அவட்கும் ஒத்தன புணர்த்து, சொல் எதிர்பெறான் சொல்லி இன்புறல் - சொல் எதிர் பெறானாய்த்தானே சொல்லி இன்புறுதல், புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு -பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு. ‘பொருந்தித் தோன்றும்’ என்றதனால் அகத்தொடு பொருந்துதல் கொள்க. என்னை? ‘காமஞ்சாலா’ என்றதனால் தலைமைக்குக் குற்றம் வாராதாயிற்று. ‘புல்லித்தோன்றும்’ என்றதனால், புல்லாமற் றோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும். அஃதாவது காமஞ் சான்ற தலைமகள் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி. அது களவியலுள் கூறப்படுகின்றது. (‘என்று’ என்பது எண்ணிடைச் சொல். ஏகாரம் ஈற்றசை). காமம் சாலா இளமையோள்வயிற் கூறியதற்குச் செய்யுள்: ``ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்காற் கொழுநிழன் ஞாழன் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை சுவன்மிசைத் தாதொடு தாழ வகன்மதி தீங்கதிர் விட்டது போல முகனமர்ந் தீங்கே வருவா ளிவள்யார்கொ லாங்கேயோர் வல்லவன் றைஇய பாவைகொ னல்லார் உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால் வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொ லாண்டார் கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற் பல்கலைச் சில்பூங் கலிங்கதக ளீங்கிதோர் நல்கூர்ந்தார் செல்வ மகள். இவளைச் சொல்லாடிக் காண்பென் றகைத்து; நல்லாய்கேள், ஆய்தூவி யனமென வணிமயிற் பெடையெனத் தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம் மாதர்கொண் மானோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப் பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ? நுணங்கமைத் திரளென நுண்ணிழை யணையென முழங்குநீர்ப் புணையென வமைந்தநின் றடமென்றோள் வணங்கிறை வாலெயிற் றந்நல்லாய் நிற்கண்டார்க் கணங்காகு மென்பதை யறிதியோ வறியாயோ? முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப் பெயறுளி முகிழெனப் பெருத்தநின் னிளமுலை மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டார் உயிர்வாங்கு மென்பதை யுணர்தியோ வுணராயோ? என வாங்கு, பேதுற்றாய் போலப் பிறரெவ்வ நீயறியாய் யாதொன்றும் வாளா திறந்தீவாய் கேளினி நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமருந் தவறிலர் நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப் பறையறைந் தல்லது செல்லற்க வென்னா இறையே தவறுடை யான்.’’ (கலி. குறிஞ். 20) 54. ஏறிய மடற்றிற மிளமை தீர்திறந் தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. இது பெருந்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஏறிய மடல் திறம் - ஏறிய மடற்றிறமும், இளமை தீர்திறம் - இளமை தீர்திறமும், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் - தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமும், மிக்க காமத்து மிடலொடு தொகைஇ - மிக்க காமத்து மாறாய திறனொடு கூட்டி, செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பு சொல்லப்பட்ட நான்கு திறமும் பெருந்திணைக் கருத்து. கைக்கிளை புணராது நிகழும் என்றமையால், இது புணர்ந்தபின் நிகழும் என்று கொள்க. ஏறிய மடற்றிறம் தலைமகற்கே உரித்து. அது வருமாறு: ``எழின்மருப் பெழில்வேழ மிகுதரு கடாத்தான் தொழின்மாறித் தலைவைத்த தோட்டிகை நிமிர்ந்தாங் கறிவுநம் மறிவாய்ந்த வடக்கமும் நாணொடு வறிதாகப் பிறரென்னை நகுபவும் நகுபுடன் மின்னவிர் நுடக்கமுங் கனவும்போல் மெய்காட்டி என்னெஞ்ச மென்னொடு நில்லாமை நனிவெளவித் தன்னலங் கரந்தாளைத் தலைப்படுமா றெவன்கொலோ மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை அணிப்பூளை யாவிரை யெருக்கொடு பிணித்தியாத்து மல்லலூர் மறுகின்க ணிவட்பாடு மிவனொருத்தன் எல்லீருங் கேட்டீமீ னென்று; படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை நல்கியா ணல்கி யவை; பொறையென் வரைத்தன்றிப் பூநுத லீத்து நிறையழி காமநோய்நீந்தி யறையுற்ற உப்பியல் பாவை யுறையுற் றதுபோல உக்கு விடுமென் னுயிர்; பூளை பொலமல ராவிரை வேய்வென்ற தோளா ளெமக்கீத்து பூ; உரித்தென் வரைத்துன்றி யொள்ளிழை தந்த பரிசழி பைதனோய் மூழ்கி யெரிபரந்த நெய்யுண் மெழுகி னிலையாது பைபயத் தேயு மளித்தென் னுயிர்; இளையாரு மேதி லவரு முளையயான் உற்ற துசாவுந் துணை; என்றியான் பாடக் கேட்டு வன்புறு கிளவியா ளருளிவந் தளித்தலிற் துன்பத்திற் றுணையாய மடலினி யிவட்பெற இன்பத்து ளிடம்படலென் றிரங்கின ளன்புற் றடங்கருந் தோற்றத் தருந்தவ முயன்றோர்தம் உடம் பொழித் துயருல கினிதுபெற் றாங்கே.’’ (கலி. நெய். 21) இளமை தீர் திறமாவது, இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது. அது மூவகைப்படும்; தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும் தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கியவழி அறத்தின்மேல் மனம் நிகழ்தலன்றிக் காமத்தின்மேல் மனம் நிகழ்தலும் என. உதாரணம்: ``உளைத்துவர் கூறு முரையெல்லா நிற்க முளைத்த முறுவலார்க் கெல்லாம் விளைத்த பழங்க ளனைத்தாய்ப் படுகளி செய்யு முழங்கு புனலூரன் மூப்பு.’’ (புறப். இருபாற்பெருந்திணை.14) இதனுள் தலைமகன் இளமை தீர்திறம் வந்தவாறு காண்க. ``அரும்பிற்கு முண்டோ வலரது நாற்றம் பெருந்தோள் விறலி பிணங்கல் சுரும்போ டதிரும் புனலூரற் காரமிழ்த மன்றோ முதிரு முலையார் முயக்கு.’’ (புறப். இருபாற்பெருந்திணை.19) இதனுள் தலைமகள் இளமை தீர்திறம் வந்தவாறு காண்க. ``ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை வேண்டுவ லென்று விலக்கினை நின்போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று’’ (கலித். 94) எனவும், ``உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான் புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லின் அக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ பக்கத்துப் புல்லல் சிறிது’’ (கலித். மருதம். 26) எனவும், முறையே தலைமகன் தலைமகள் ஆவார் இருவர் இளமை தீர்திறம் வந்தவாறு காண்க. தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறமாவது, தெளிவு ஒழிந்த காமத்தின் கண்ணே மிகுதலும் என்றவாறு. இது பெரும்பான்மை தலைமகட்கே உரித்து. உதாரணம்: ``புரிவுண்ட புணர்ச்சியுட் புல்லாரா மாத்திரை அருகுவித் தொருவரை யகற்றலிற் றெரிவார்கட் செயநின்ற பண்ணினுட் செவிசுவை கொள்ளாமை நயனின்ற பொருள்கெடப் புரியறு நரம்பினும் பயனின்று மன்றம்ம காம மிவண்மன்னும் ஒண்ணுத லாயத்தா ரோராங்குத் திளைப்பினும் முண்ணுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன் கண்ணினு முகத்தினு நகுபவள் பெண்ணின்றி யாவருந் தண்குரல் கேட்ப நிரைவெண்பன் மீயுயர் தோன்ற நகாஅ நக்காங்கே பூவுயிர்த் தன்ன புகழ்சா லெழிலுண்கண் ஆயிதழ் மல்க வழும்; ஓஒ! அழிதகப் பாராதே யல்லல் குறுகினங் காண்பாங் கனங்குழை பண்பு; என்று, எல்லீரு மென் செய்தீ ரென்னை நகுதிரோ நல்ல நகாஅலிர் மற்கொலோ யானுற்ற அல்ல லுறீஇயான் மாய மலர்மார்பு புல்லிப் புணரப் பெறின்; எல்லாநீ, உற்ற தெவனோமற் றென்றிரே லெற்சிதை செய்தா னிவனென வுற்ற திதுவென எய்த வுரைக்கு முரனகத் துண்டாயிற் பைதல வாகிப் பசக்குவ மன்னோவென் நெய்தன் மலரன்ன கண்; கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே ஆடையான் மூஉ யகப்படுப்பேன் சூடிய காணான் றிரிதருங் கொல்லோ மணிமிடற்று மாண்மலர்க் கொன்றை யவன்; தெள்ளியே மென்றுரைத்துத் தேரா தொருநிலையே வள்ளியை யாகென நெஞ்சை வலியுறீஇ உள்ளி வருகுவர் கொல்லோ வுளைந்தியான் எள்ளி யிருக்குவென் மற்கொலோ நள்ளிருண் மாந்தர் கடிகொண்ட கங்குற் கனவினாற் தோன்றின னாகத் தொடுத்தேன்மன் யான்றளைஇப் பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய கையளே மாய்ந்தான் கரந்து; கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயின் அவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை யாயிற் றவிருமென் னெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ; மையில் சுடரே மலைசேர்தி யாயிற் பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்திரை கைவிளக் காகக் கதிர்சில தாராயென் தொய்யில் சிதைத்தானைத் தேர்கு; சிதைத்தானைச் செய்வ தெவன்கொலோ வெம்மை நயந்து நலஞ்சிதைத் தான்; மன்றப் பனைமேல் மலைமாந் தளிரேநீ தொன்றிவ் வுலகத்துக் கேட்டு மறிதியோ மென்றோண் ஞெகிழ்த்தான் றகையல்லால் யான்காணேன் நன்றுதீ தென்று பிற; நோயெரி யாகச் சுடினுஞ் சுழற்றியென் ஆயித ழுள்ளே கரப்பன் கரந்தாங்கே நோயுறு வெந்நீர் தெளிப்பிற் றலைக்கொண்டு வேவ தளித்திவ் வுலகு மெலியப் பொறுத்தென் களைந்தீமின் சான்றீர் நலிதருங் காமமுங் கௌவையு மென்றிவ் வலிதி னுயிர்காவாத் தூங்கியாங் கென்னை நலியும் விழும மிரண்டு; எனப்பாடி, இனைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தனள் எல்லையு மிரவுங் கழிந்தவென் றெண்ணி யெல்லிரா நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல மணியுட் பரந்தநீர் போலத் துணிபாங் கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றாள் நல்லெழின் மார்பனைச் சார்ந்து.’’ (கலி. நெய். 25) மிக்க காமத்து மிடலாவது, ஐந்திணைக்கண் நிகழும் காமத்தின் மாறுபட்டு வருவது. அஃதாவது, வற்புறுத்துந் துணையின்றிச் செலஷவழுங்குதலும், ஆற்றருமை கூறுதலும், இழிந்திரந்து கூறுதலும், இடையூறு கிளத்தலும், அஞ்சிக் கூறுதலும், மனைவி விடுத்தலிற் பிறள்வயிற் சேறலும், இன்னோரன்ன ஆண்பாற் கிளவியும், முன்னுறச் செப்பலும், பின்னிலை முயறலும், கணவனுள்வழி இரவுத்துலைச்சேறலும், பருவம் மயங்கலும், இன்னோரன்ன பெண்பாற் கிளவியும், குற்றிசையும், குறுங்கலியும் இன்னோரன்ன பிறவுமாகி ஒத்த அன்பின் மாறுபட்டு வருவன வெல்லாம் கொள்ளப்படும். அவற் றுட் சில வருமாறு: ``நடுங்கி நறுநுதலா ணன்னலம்பீர் பூப்ப ஒடுங்கி யுயங்க லொழியக் கடுங்கணை வில்லே ருழவர் விடரோங்கு மாமலைச் செல்லே மொழிக செலவு.’’ (புறப். இருபாற்பெருந்திணை.1) இது செலவழுங்குதல். ``பணையா யறைமுழங்கும் பாயருவி நாடன் பிணையார மார்பம் பிணையத் துணையாய்க் கழிகாம முய்ப்பக் கனையிருட்கட் செல்வேன் வழிகாண மின்னுக வான்.’’ (புறப். பெருந்திணை. 6) இஃது இரவுத்தலைச்சேறல். ``பெரும்பணை மென்றோள் பிரிந்தாரெம் முள்ளி வரும்பருவ மன்றுகொ லாங்கொல் சுரும்பிமிரும் பூமலி கொன்றை புறவெலாம் பொன்மலரும் மாமயிலு மாலு மலை.’’ (புறப். இருபாற் பெருந்திணை.6) இது பருவ மயங்கல். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. மெய்ப்பாட்டியலுள் ‘இன்பத்தை வெறுத்தல்’ (மெய்ப்பாடு. 22) முதலாக நிகழ்பவை பொருளாக வருங்கிளவியும் இதன் பகுதியாகக் கொள்க. (54) 55. முன்னைய நான்கு முன்னதற் கென்ப. இது கைக்கிளைக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: முன்னைய நான்கும் - மேற்சொல்லப்பட்ட நான்கினும் முந்துற்ற நிலைமை நான்கும், முன்னதற்கு என்ப முற்கூறப்பட்ட கைக்கிளைக்காம் என்ப. அவையாவன: ஏன்றவாறுh மடற்றிறம், இளமை தீராத்திறம், தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம், மிக்க காமத்தின் மாறாகாத்திறம் என்பன. ஏன்றவாறுh மடற்றிறம் வெளிப்பட இரத்தலாம். இளமை தீராத்திறம், நலம் பாராட்டலாம். தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம், புணரா விரக்கமாம். மிக்க காமத்தின் மாறாகாத் திறம் நயப்புறுத்தலாம். இவை ஒருவாற்றான் உணர்த்தியவாறு. ``கைக்கிளை செந்திறம் பெருந்திணை நோந்திறம் அத்திற மிரண்டு மகத்திணை மயங்கா தத்திணை யானே யாத்தனர் புலவர்.’’ இதனானே கைக்கிளை இன்பம் பயப்ப வருமென்பதூஉம், பெருந்திணை துன்பம் பயப்ப வருமென்பதூஉம் அறிந்துகொள்க. (55) 56. நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கங் கலியே பரிபாட் டாயிரு பாவினும் உரிய தாகு மென்மனார் புலவர். இதுவும், அகத்திணைக்கு இன்றியமையாத செய்யுளை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: நாடக வழக்காவது, சுவைபட வருவனவெல்லாம் ஓரி டத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது செல்வத் தானும், குலத்தானும், ஒழுக்கத்தானும், அன்பினானும் ஒத்தார் இருவராய்த்தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போரு மின்றி அடுப்போரு மின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந் தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவன வெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல். உலகியல் வழக்காவது, உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது. பாடல் சான்ற புலன் நெறி வழக்கமாவது, இவ்விரு வகையானும் பாடல் சான்ற கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்க் கூறப்படுகின்ற அகப்பொருள். கலியே பரிபாட்டு அ இரு பாவினும் உரியது ஆகும் என்மனார் புலவர் என்றது, கலியும் பரிபாடலும் என்னும் இரண்டு பாவினும் உரிமையுடைத்தாம் என்று உரைப்பர் புலவர் என்றவாறு. எனவே, இவை இன்றியமையாதன என்றவாறு., ஒழிந்த பாக்கள் இத்துணை அகப்பொருட்கு உரியவாய் வருதலின்றிப் புறப் பொருட்கும் உரியவாய் வருதலின் ஓதாராயினர். புறப்பொருள் உலகியல்பானன்றி வாராமையின், அது நாடகவழக்கம் அன்றாயிற்று. (56) 57. மக்க ணுதலிய வகனைந் திணையுஞ் சுட்டி யொருவர்ப் பெயர்கொளப் பெறாஅர். இது, நடுவணைந்திணைக்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அகன் மக்கள் நுதலிய ஐந்திணையும் - அகத்திணையுள் கைக்கிளை பெருந்திணை ஒழிந்த ஐந்திற்கும் உரியவாகிய நிலமும் காலமும் கருப்பொருளுமன்றி மக்களைப்பற்றி வரும் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் என்று சொல்லப்பட்ட ஐந்து பொருண்மையும், சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் (அவ்வைந் திணைக்கண்ணும் தலைமகனாகப் புலனெறி வழக்கம் செய்ய வேண்டின்), நாடன் ஊரன் சேர்ப்பன் என்னும் பொதுப் பெயரானன்றி ஒருவர்க்கு உரித்தாகி வரும் பெயர் கொள்ளப்பெறார் புலவர். (57) 58. புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்ல தகத்திணை மருங்கி னளவுத லிலவே. இஃது, எய்தாதது எய்துவித்துல் நுதலிற்று. இ-ள்: புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது - ஒருவர் பெயர் புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது, அகத்திணை மருங்கின் அளவுதல் இல - அகத்திணை மருங்கின் வருதல் இல்லை. (ஏகாரம் ஈற்றசை). இதனாற் சொல்லியது, ஒருவர்க்குரித்தாகி வரும்பெயர் அகத்திணை பற்றி வரும் கைக்கிளை பெருந்திணையினும் வரப்பெறாது என்பதூஉம், புறத்திணையுள் வரும் என்பதூஉம், ஆண்டும் பாடாண் பாட்டுக் காமம் பொருளாக வரின் அவ்வழி வரூஉம் என்பதூஉம் கூறியவாறு. இதனான் அகப்பொருள் ஒருவரைச் சாராது பொதுப்பட வருமென்பது கொள்க. (58) முதலாவது அகத்திணையியல் முற்றிற்று. புறத்திணையியல் புறப்பொருளுணர்த்துதலால் புறத்திணை யியலென்னும் பெயர்த்தாயிற்று புறமாவது அகம்போல ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாராலும் உய்த்துணரப்படுவதும் இஃது இவ் வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுவதுமாகிய ஓழுகலாறாம். அறமும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கத்தைப் புற மென்றது ஆகுபெயர். அன்பினால் நிகழும் அகத்திணை யொழுகலாற்றை எழுதிணையாகப் பகுத்தாற் போன்று, அன்பின் வழிப்பட்டனவாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழுஞ் செயல் முறைகளையும் எழுதிணையாகப் பகுத்துரைத்தல் பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாகும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் இவ்வேழும் புறத்திணைகளாம். இவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என வரும் அகத்திணையேழிற்கும் புறமாவன. அகத்திணை யொழுகலாறுகள் தத்தம் நலத்திற்குச் சிறப்புரிமையுடைய குறிஞ்சி முல்லை முதலிய பூக்களாற் பெயர் பெற்றாற் போன்று, அவற்றின் புறத்தவாகிய புறத்திணை யொழுகலாறுகளும் அவற்றை மேற்கொள்வோர் அடையாளமாகச் சூடுதற்குரிய வெட்சி, வஞ்சி முதலிய பூக்களாற் பெயர்பெறு வனவாயின. அகத்திணைகளின் இயல் புணர்ந்தார்க்கன்றி அவற்றின் புறத்தவாகிய புறத்திணைகளும் அவற்றின் துறை வகைகளும் இனிது விளங்காவாதலின் அகத்திணைகளின் பொது விலக்கண முணர்த்திய பின்னர்ப் புறத்திணை யிலக்கணம் உணர்த்துகின்றார். அதனால் இஃது அகத்திணை யியலின் பின் வைக்கப்பட்டது. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை முப்பதாக இளம்பூரணரும் முப்பத்தாறாக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். பகைவரது நாட்டின்மேற் படையொடு சென்று போர் செய்யக் கருதிய வேந்தன், அந்நாட்டில் வாழும் அறவோராகிய அந்தணர், மகளிர், பிணியாளர் முதலிய தீங்கு செய்யத் தகாத மக்களைப் போரால் விளையுந் துன்பங்களினின்றும் விலக்கி உய்வித்தல் வேண்டி, “யாம் போர் கருதி நுமது நாட்டிற் புகுகின்றோம், நீவிர் நுமக்குப் பாதுகாவலான இடங்களை நாடிச் செல்லுமின்” என இவ்வாறு அவர்களுக்கு அறிவித்தலும், அவ்வறிவிப்பினை யுணர்ந்து வெளிச்செல்லும் பகுத்துணர் வில்லாத பசுக்கூட்டங்களை ஒருவரும் அறியாதபடி நள்ளிரவில் தன் படை வீரார்களையனுப்பிக் களவிற் கவர்ந்து வரச்செய்து பாதுகாத்தலும் அறநெறி வழாது மேற்கொள்ளுதற்குரிய பண்டைத் தமிழர் போர்முறையாகும். அம்முறைப்படி வேந்தனால் அனுப்பப்பட்ட படை மறவர்கள், பகைவர் நாட்டிற் புகுந்து அங்குள்ள ஆனிரைகளைக் களவிற் கவர்ந்து வந்து பாதுகாக்குஞ் செயல் வெட்சியென்னும் புறத்திணையாகும். ஆனிரைகளைக் கவர்தலை மேற்கொண்ட வீரர் தமது போர் முறையைப் பகை வேந்தர்க்கு அறிவிக்கும் அடையாளமாக வெட்சிப்பூவைச் சூடிச்செல்லுதல் மரபு. அதனால் இச்செயல் வெட்சியெனப் பெயர் பெறுவதாயிற்று. வெட்சித்திணை குறிஞ்சியென்னும் அகத்திணைக்குப் புறனாகும். “வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைநிலத்தன்கண் நிகழ்தலானும், அந்நிலத்தில் மக்களாயின் பிறநாட்டு ஆனிரையைக் களவிற்கோடல் ஒருபுடை குறிஞ்சிக்குரித்தாகிய களவோடு ஒத்தலானும் அதற்கு அது புறனாயிற்றென்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறமாம்” என இளம்பூரணரும், “களவொழுக்கமும் கங்குற்காலமும் காவலர் கடுகினுந் தாம் செய்யக் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார்” என நச்சினார்க்கினியரும் வெட்சி குறிஞ்சிக்குப் புறனாதற்குரிய இயைபினை விளக்கினர். நிரை கவர்தலாகிய வெட்சியொழுக்கம் வேந்தனது ஆணை வழியே நிகழ்தற்குரியதென்பதும, அரசனது, ஆணையின்றி அவனுடைய படைவீரர் முதலியோர் தனித்துச் செய்தற்குரிய தன்றென்பதும் “வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்தோம்பல்” என ஆசிரியர் கூறுதலாற் புலனாம். வேந்துறு தொழிலாய் நிகழ்தற்குரிய நிரைகவர்தலை வேந்தன் ஆணையின்றிப் படைவீரர் தன்னுறு தொழிலாய் நிகழ்த்துதற்கும் உரியர் என்பது பன்னிரு படல நூற்கருத்தாகும். “தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென், றன்னவிருவகைத்தே வெட்சி” யென்பது பன்னிரு படலம். அரசனது ஆணையின்றிப் படைவீரர் தாமே தன்னாட்டிலும் பிறநாட்டிலும் ஆனிரைகளைக் கவர்ந்து கொள்ளுதற்குரியர் என அரசியல் நெறிக்கு மாறுபட்ட கருத்தினைக் கூறுவது பன்னிரு படலமாதலின் ‘பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது’ என்றர் இளம்பூரணர். நிரைகோடல் கருதிப் படைகள் புறப்படும் ஆரவாரமும், புறப்பட்ட படைவீரர் ஊர்ப்புறத்தே நற்சொற் கேட்டலும், பகைவர் பக்கத்து ஒற்றர் முதலியோர் அறியாதபடி போதலும், பகைவரறியாதபடி அவர் நாட்டின் நிலைமைகளை ஒற்றரால் ஆராய்ந்தறிதலும், பின்னர்ப் பகைவரது ஊர்ப் புறத்தே சூழ்ந்து தங்குதலும் தம்மை வளைத்துக்கொண்ட மறவர்களைக் கொல்லுதலும், அங்குள்ள ஆனிரையைக் கைப்பற்றிக் கொள்ளுதலும், அந்நிரையை மீட்டற்கு வந்தவர்கள் செய்யும் போர்த் தொழிலை விலக்கி மீளுதலும், தாம் கவர்ந்த பசு நிரையை வருந்தாமற் செலுத்துதலும், வழியிடையே எதிர்பார்த்து நிற்கும் தம்மவர் உளமகிழத் தோன்றுதலும், பசுக்களைத் தம்மூரிற் கொண்டு நிறுத்துதலும், அவற்றைக் கொணர்தலில் ஈடுபட்ட வீரர்களுக்குப் பகுத்திடுதலும் வினைமுடிந்த மகிழ்ச்சியாற் கள்ளுண்டு களித்தலும், இரவலர்க் குரிய பரிசிலாகப் பசுக்களைக் கொடுத்தலும் என வெட்சித்திணை பதினான்கு துறைகளை யுடையதாகும். இப்பதினான்கிற்கும் நிரை கோடல் நிரை மீட்டல் என்னும் இரண்டிற்கும் பொருந்தப் பொருள் கொண்டு இருபத்தெட்டுத் துறைகளாக விரிப்பர் நச்சினார்க்கினியர். மறத்தொழிலை முடிக்கவல்ல வீரக்குடியிற் பிறந்தாரது நிலைமையைக் கூறுதலும், அவர்களது தறுகண்மையினை வளர்க்குந் தெய்வமாகிய வெற்றி வேற்றடக்கைக் கொற்றவையின் அருள் நிலையைக் கூறுதலும் ஆகிய இவை மேற்கூறிய குறிஞ்சித் திணையின் புறனாகிய வெட்சித் திணையின் பாற்படும். தெய்வத்திற்குச் செய்யும் வெறியென்னும் வழிபாட்டினை யறிந்த வேலனென்பான் தன் வேந்தற்கு வெற்றி வேண்டித் தெய்வத்தைப் பரவிய காந்தளும், மாறுகொண்டு பொரும் போர்க்களத்திலே பகைவேந்தர் இன்னவேந்தன் படையாளர் இவர் எனத் தம்மை அடையாளந் தெரிந்து பொருதற்கு வாய்ப்பாகப் படைவீரர் சூடுதற்குரிய அடையாளப் பூவாகிய சேரரதுபனை, பாண்டியரது வேம்பு, சோழரது ஆத்தி யென்னும் உயர்ந்த புகழினையுடைய மூவகைப் பூக்களும், தம் நாட்டில் வெற்றி வேண்டி மகளிர் முருகனைப் பரவியாடும் வள்ளிக்கூத்தும், புற முதுகிட்டு ஓடாமைக்குக் காரணமாக வீரர் அணியும் கழலின் சிறப்பும், பின்னிடாது போர் செய்யவல்ல சினமிக்க வேந்தனது வெற்றியை யுளத்தெண்ணி நன்மையுந் தீமையுங் காட்டுமியல்புடைய உன்னம் என்னும் மரத்தோடு நிமித்தங் கொள்ளுதலும், காயாம்பூ மலர்ச்சியைக் கண்டோர் பூவைப்பூ மேனியானாகிய மாயோனைப்போன்று தம் நாட்டினைக் காக்கவல்ல மன்னனது பெருஞ் சிறப்பினைப் புகழ்ந்து போற்றுதலும், நிரைகவர்ந்த படை மறவரைப் போரிற் புறங்கொடுத்தோடச் செய்தலும், அவராற் கொள்ளப்பட்ட பசுக்களை மீட்டுத் தன்னாட்டிற் கொண்டு வந்து தருதலும், இவ்வாறு மீட்டுக் கொணர்தற்குரிய தறுகண்மையாலுளவாம் புகழமைந்த தம் வேந்தனது சிறப்பைப் படைமறவர் எடுத்துரைத்துப் பாராட்டுதலும், தன்பாலமைந்த தறு கண்மையினாலே தன்னோடு சார்த்தி வஞ்சினங் கூறுதலும், நிரைமீட்டலை மேற்கொள்வோர் போர்ப்பூவாக அணிதற்குரிய கரந்தையின் சிறப்புரைதலும், எதிர்த்துவரும் படையின் முன்னணியைத் தானெருவனுமே தனித்து நின்று தடுத்தலும் பகைவரது வாளாற்பட்டு வீழ்தலும் ஆகப் பின்விளைவறியாது மேற் கொள்ளும் போர்ச் செயல்களாகிய இருவகைப்பட்ட பிள்ளை நிலையும், வாளாற் பொருது பகைவரைவென்று திரும்பிய இளைஞனை அந்நாட்டவர் கண்டு மகிழ்ந்து முரசு முழங்க அவனுக்கு நாட்டைப் பரிசிலாக வழங்கும் பிள்ளையாட்டும், போர்க்களத்து இறந்த வீரரைக் கல்லில் நிறுத்தி வழிபடுதற் பொருட்டு அதற்குரிய கல்லைக் காணுதலும், அக்கல்லினைக் கைக்கொள்ளுதலும், அங்ஙனம் எடுத்த கல்லினை நீர்ப்படுத்திக் தூய்மை செய்தலும், அதனை நடுதலும், அங்ஙனம் நட்ட கல்லிற்குக் கோயிலெடுத்தலும், அக்கல்லைத் தெய்வமாக்கி வாழ்த்துதலும் என்று சொல்லப்பட்ட கற்கோள்நிலை ஆறும் ஆக இங்குச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைகளும் போர்த் தொடக்கமாகிய வெட்சித்திணையுள் அடங்குவனவாம். தனது நாட்டிலுள்ள பசுக்களைப் பகைவேந்தன் படைமறவர் களவிற் கவர்ந்து சென்றதையறிந்த மன்னன், தன் படைவீரர்களையனுப்பி அப்பசுக்களை மீட்டுவருதற்குரிய செயல் முறைகள் வெட்சித்திணையின் இடையே நிகழ்வனவாதலின், அவற்றை வேறுதிணை யாக்காமல் வெட்சித் திணைக்குரிய துறைகளாகவே கொண்டார் தொல்காப்பியனார். நிரை மீட்டலைக் கருதிய வீரர்கள் தமது செயலுக்கு அடையாளமாகக் கரந்தைப் பூவினைச் சூடிச்செல்லும் வழக்கமுண்டென்பது ‘அனைக்குரிமரபினது கரந்தை’ எனவரும் தொல்காப்பியத் தொடராலும், “நாகுமுலையன்ன நறும்பூங்கரந்தை, விரகறியாளர் மரபிற் சூட்ட, நிரையிவட்டந்து” (புறநா-261) என வரும் புறப்பாட்டடிகளாலும் நன்கு விளங்கும். குறிஞ்சித் திணைப்புறம் நிரைகோடலும் நிரைமீட்டலு மாகிய வேறுபாடு குறித்து வெட்சியெனவும் கரந்தையெனவும் இரண்டு குறிபெறுமென்றும் ‘வெறியறி சிறப்பின்’ எனத் தொடங்கும் புறத்திணையியற் சூத்திரம் வெட்சித்திணைக்கு மாறாகிய கரந்தைத் திணையாமாறு உணர்த்துகின்றதென்றும் அதுவும் ஆநிரை மீட்டல் காரணமாக அந்நிலத்தின்கண் நிகழ்வதாதலின் வெட்சிப்பாற்பட்டுச் குறிஞ்சிப் புறனாயிற் றென்றும் கூறுவர் இளம்பூரணர். முன் இருபெருவேந்தர்க்கும் போர் செயத் தொடங்குதற்குரிய பொதுநிலைமை வறிய அதிகாரத்தானே புறத்திணைக்கொல்லாம் பொதுவாகிய வழுவேழுமுணர்த்துவது இச்சூத்திரமெனக் கொண்டு அக்கருத்திற்கேற்ப வலிந்தும் நலிந்தும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மண்ணாசையால் பிறரது சோர்வு நோக்கியிருக்கும் வேந்த னொருவன் தன்மேற் படையெடுத்து வருதற்கு முன்பே தான் அவனை வெல்லுதற்கேற்ற காலம், இடம், வலி முதலியவற்றை யெண்ணி அவனது நாட்டின்மேற் போர் கருதிப் புறப்பட்டுச் சேறல் நாடாள் வேந்தனது கடமையாகும். இக்கடமையினை உளத்துட்கொண்டு, ஒழியாத மண்ணாசையுடைய பகை வேந்தனைப் பொருதழித்தல் கருதி அவன் அஞ்சும்படி படையுடன் மேற்சேறல் வஞ்சித்திணையாகும். அது முல்லையாகிய அகத்திணைக்கும் புறனாகும். காடுறையுலகாகிய முல்லை நிலமும் கார் காலமும் ஆகிய முதற்பொருளும், அந்நிலத்திற்கேற்ற கருப்பொருளும், வேந்தன் பாசறைக்கண் தலைவியைப் பிரிந்திருத்தலும் தலைவி அவனைப் பிரிந்திருத்தலுமாகிய உரிப்பொருளும் ஒத்தலால் வஞ்சியென்னும் புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறனாயிற்று. “முல்லைப்புறம் மண்ணசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான் அவ்விரு பெருவேந்தரும் ஒருவினையாகிய செலவு புரிதலின் வஞ்சி என ஒரு குறிபெறும்” என இளம்பூரணரும், “ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மண்ணசையால் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்த ராவரென்றுணர்க” என நச்சினார்க்கினியரும் கூறுங் கொள்கை தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. வஞ்சித்திணைக்கு ஆசிரியர் கூறிய இலக்கணத்தினை நோக்குங்கால் இருபெருவேந்தருள் ஒருவனே மேற்சேறற்குரியா னென்பது நன்கு விளங்கும். வஞ்சித்திணையை இயங்குபடையரவம் முதலாகத் தழிஞ்சியீறாகப் பதின்மூன்று துறைகளாக விரித்துரைப்பர் ஆசிரியர். படையெடுத்துவந்த வேந்தன் பகைவனது அரணைச்சுற்றி வளைத்துக்கொள்ளுதலும் உள்ளேயிருந்த வேந்தன் அவ்வரணை நெகிழவிடாது பாதுகாத்துலுமாகிய அவ்வியல்பினையுடையது உழிஞைத்திணையாம். இது மருதமென்னும் அகத்திணைக்குப் புறனாகும். இருபெருவேந்தர் தம்முள் மாறுகொண்டவழி எதிர்த்துச் செல்லும் ஆற்றலின்றி மதிலகத்தே அடைத்துக் கொண்டிருந்த அரசனது அரண் பெரும்பாலும் மருதநிலத்தில் அமைந்திருப்பதாதலாலும் அம்மதிலை வளைத்துக்கொள்ளுதற்கு வந்த வேந்தனும் அந்நிலத்தில் இருத்தலாலும், தலைவன் வாயில் வேண்டத் தலைவி அதற்குடம்பாடது கதவடைத்துக்கொண்டு வீட்டினுள்ளே யிருத்தலாகிய மருதத்திணை யொழுகலாற்றைப் போன்று புறத்தே மதிலை வளைத்துக்கொண்ட வேந்தன் அரணுள் நுழைதலை விரும்ப உள்ளிருந்த வேந்தன் அதற்குடம்படாது அரண் கதவினையடைத் திருத்தலாலும், மருதம்போல் இதற்கும் பெரும்பொழுது வரை வின்மையாலும், அதற்குரிய விடியற்காலமே போர் செய்தற்குக் காலமாதலாலும், புலத்தலும் ஊடலும் மருதத்திணையாதல்போல அரணை முற்றியும் விடாது பற்றியும் அகப்புறப்படைகள் தம்முட் பொருதலே உழிஞைத்திணையாதலாலும் உழிஞை மருதமாகிய அகத்திணைக்குப் புறனாயிற்று. ‘மருதத்துப்புறம் எயிலழித்தலும் எயில்காத்தலுமென்னும் வேறுபாடு குறித்து உழிஞையெனவும் நொச்சி யெனவும் இரண்டு குறிபெறும்’ என்பர் இளம்பூரணர். உழிஞைத்துறை வகைகளுள் அகத்தோன் வீழ்ந்த நொச்சியையும் ஒரு துறையாகத் தொல் காப்பியர் அடக்கிக் கூறுதலால், நொச்சியைத் தனித்ததொரு திணையாகக்கொள்ளுதல் அவர் கருத்தன்றென்பது நன்கு விளங்கும். “நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங்கொள்க... இக் கருத்தானே ‘நொச்சி வேலித்தித்தன் உறந்தை’ (அகநா-122) என்றார் சான்றோரும்” எனவரும் நச்சினார்க்கினியர் உரைக்குறிப்பு இங்கு நினைக்கத்தகுவதாம். உழிஞைத்திணைக்குரிய செயல்முறைகள் எட்டுவகைப்படும். அவையாவன: பகைவரது தேயத்தைத் தான் கொள்வதற்கு முன்னமேயே தான் விரும்பிய வண்ணம் வேண்டியவர்களுக்குக் கொடுத்தலையெண்ணிய வெற்றித்திறமும், அங்ஙனம் தான் நினைத்தது முடிக்கவல்ல வேந்தனது வலியின் சிறப்பும், அழிவில்லாத மதில்மேலேறிப் போர் செய்தலும், மாற்றார் எய்யும் அம்புகளைத் தடுத்தற்குரிய தோற்படையின் மிகுதியும், அரணகத்துள்ள வேந்தனது செல்வமிகுதியும், அம்மிகுதியால் தன்னொடு மாறுபட்ட புறத்தோனைப் பொருதுவருத்திய கூறுபாடும், வலி மிக்குத்தானொருவனுமேயாகிப் புறத்தேபோந்து போர் செய்யும் குற்றுழிஞையும், வெகுண்டு வரும் புறத்தோரது படையினைப் பொருட்படுத்தாது இகழ்ந்திருத்தற்கேற்ற அரிய மதிலின் வன்மையும் ஆகிய இவையாம். இவற்றுள் முன்னைய நான்கும் மதிலை வளைத்துக்கொண்ட வேந்தனாகிய புறத்தோனுக்குரியன; பின்னுள்ள நான்கும் மதிலழியாமற் காக்கும் அகத்தோனுக்குரிய செயல் முறைகளாம். குடைநாட்கோள் முதல் தொகைநிலையீறாகச் சொல்லப்பட்ட பன்னிரண்டும் உழிஞைத்திணைக்குரிய துறைகளாகும். தனது வலியினை உலகம் உயர்த்துப் புகழ்தலையே பொருளாகக்கருதிப் போர்மேற்கொண்டுவந்த வேந்தனை மாற்று வேந்தன் எதிர்த்துச் சென்று அவனது தலைமையினைச் சிதைக்கும் நிலையில் அவ்விருபெருவேந்தரும் ஒரு களத்துப் போர்செய்தல் தும்பைத்திணை யெனப்படும். தும்பையென்னும் இத்திணை நெய்தலென்னும் அகத்திணைக்குப் புறனாகும். தும்பையென்பது சூடும் பூவினாற்பெற்ற பெயர். நெய்தற் குரிய பெருமணலுலகம்போலக் காடும் மலையும் கழனியுமல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும் பொழுது வரைவின்மையானும், எற்பாடு போர்த்தொழில் முடியுங் காலமாதலானும், இரக்கமும் தலைமகட்கே பெரும்பான்மை யுளதாயவாறுபோலக் கணவனையிழந்தார்க் கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ்வீரக் குறிப்பின் அருள்பற்றி ஒருவரையொருவர் நோக்கிப் போரின்கண் இரங்குபவாக லானும், ஒருவரும் ஒழியாமற்பட்டுழிக் கண்டோர் இரங்குபவாகலானும், பிற காரணங்களாலும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். போர் வீரரது உளத்திண்மையைப் பலரும் அறிய விளக்குஞ் சிறப்புடையது இத்தும்பைத்திணையாம். பலரும் ஒரு வீரனை நெருங்கிப் பொருதற்கு அஞ்சிச் சேய்மையின் நின்று அம்பினால் எய்தும் வேலால் எறிந்தும் போர்செய்ய, அவர்கள் செலுத்தும் அம்பும் வேலும் அவ்வீரனது உடம்பில் செறிவாகத் தைத்தமையால் உயிர் நீங்கிய அவனது உடம்பு, நிலத்திற் சாயாது நேர் நிற்றலும், வாள்முதலியவற்றால் வெட்டுண்டு வீழும் அவ்வீரனது தறுகண்மை விளங்கும் தலையேயாயினும் உடலேயாயினும் நிலத்தைத் தீண்டாது எழுந்து ஆடுதலும் ஆக இவ்வாறு வியந்து போற்றுதற்குரிய இருவகைப்பட்ட சிறப்பியல்பினையுடையது தும் பைத்திணையென இதன் சிறப்பினை விரித்துரைப்பர் ஆசிரியர். இத்தும்பைத்திணைக் குரியனவாகத் தானைநிலை முதலாக நூழில் ஈறாகப் பன்னிரண்டு துறைகள் கூறப்பட்டுள்ளன. இத்துறைகள் யாவும் ஒரு களத்துப் பொருது நிற்கும் இருதிறத்துப் படையாளர்க்கும் பொதுவாக அமைந்தவை. குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்குரிய அறிவு, ஆண்மை, பெருமை முதலிய ஆற்றற் கூறுபாடுகளை ஏனையோரினும் வேறு பட மிகுத்து மேம்படுதல் வாகைத் திணையாகிய ஒழுகலாறாம். வாகைத்திணை பாலை யென்னும் அகத்திணைக்குப் புறனாகும். பாலையாவது தனக்கென ஒரு நிலனுமின்றி எல்லா நிலத்தினும் காலம்பற்றிப் பிறப்பதுபோல, இதுவும் எல்லா நிலத்தினும் எல்லாக் குலத்தினங் காலம்பற்றி நிகழ்வதாதலினாலும், ஒத்தார் இருவர் புணர்ச்சியினின்றும் புகழ்ச்சி காரணமாகப் பிரியுமாறு போலத் தன்னோடு ஒத்தாரினின்றும் நீங்கிப் புகழ்ப்படுதலானும் பாலைக்கு வாகை புறனாயிற்று என்பர் இளம்பூரணர். அவரவர்க்குரிய துறையில் ஒப்புடைய பிறரோடு உறழ்ந்து மேம்படுதலும், தமக்குரிய துறையில் எதிர்ப்பின்றி இயல்பாக மேம்பட்டு விளங்குதலும் ஆகிய இரு திறமும் வாகைத்திணை யேயாம். இவற்றுள் உறழ்ச்சி வகையாற்பெற்ற வென்றியை வாகை யெனவும் இயல்பாகப்பெற்ற வென்றியை முல்லையெனவும் வேறுபடுத்து வழங்குதல் பிற்கால வழக்காகும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழிலுடையோராகிய பார்ப்பார்க்குரிய பகுதியும், ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் என்னும் ஐவகைத் தொழிலினராகிய அரசர் பகுதியும், ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல் என்னும் அறுவகைத் தொழிலினராகிய ஏனை நிலமக்கள் பகுதியும், குற்றமற்ற ஒழுகலாற்றினை இறப்பு நிகழ்வு எதிர் வென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியாலமைந்த முழுதுணர் வுடைய அறிவர் பகுதியும், நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ள உணவு கோடல், கடவுள் வழிபாடு, விருந்தோம்பால் என எட்டு வகைப்பட்ட தவஞ்செய்வார் கூறுபாடும், முன்னர்ப் பல கூறுபாடுகளாகப் பகுத்துரைத்த போர்த் துறைகளை யறிந்த பொருநராகிய வீரர்க்குரிய கூறுபாடும், அத்தன்மைத்தாகிய நிலைமையையுடைய பிறதொழில் வகையானுளவாகும் வென்றிவகையுடன் சேர்த்து வாகைத் திணையை எழுவகையாகப் பகுத்துரைப்பர் ஆசிரியர். இவ்வெழுவகையுள் இறுதியிற் கூறப்பட்ட அனைநிலை வகையென்பது, முற்கூறிய ஆறுவகையினும் அடங்காத எவ்வகை வென்றியையும் உள்ளடக்கிய தொகப்பாகும். ஈண்டு இரு மூன்று மரபின் ஏனோர் எனக் குறிக்கப்பட்டோர் இச்சூத்திரத்து விதந் துரைக்கப்பட்ட பார்ப்பாரும் அரசரும் அறிவரும் தாபதரும் பொருநரும் அல்லாத ஏனை நிலமக்களாவர். இத்தொடரிற் குறிக்கப்பட்ட ஏனோராவார் வணிகரும் வேளாளரும் என இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் உரை கூறியுள்ளார்கள். நால்வகை வருணப் பிரிவு ஆரியர்களிடையிலன்றிப் பண்டைத் தமிழ் மக்களிடையே தோன்றியதில்லை. வண்புகழ் மூவர் தண்பொழிலிடையே வழங்குந் தமிழ் வழக்கே நுதலிய தொல்காப்பியச் சூத்திரங்களுக்குப் பிற்காலத்தாரால் மேற் கொள்ளப்பட்ட வடநூல் மரபினைத் தழுவிப் பொருள் கூறுதல் ஒரு சிறிதும் பொருந்தாது. உரையாசிரியர்கள் கருதுமாறு வணிகரையும் வேளாளரையும் ஏனேரென அடக்குதல் ஆசிரியர் கருத்தாயின், அவ்விரு திறத்தார்க்கும் இங்குச் சொல்லப்பட்ட அறுவகைத் தொழில்களும் ஒப்புவுரியவாதலின்றி அவ்விருவ ரிடையே அவ்வாறாய் வேறு படுதற்கு இடமில்லை. மேற்கூறிய வாகைத்திணை கூதிர்ப்பாசறை முதல் காமம் நீத்தபால் ஈறாகப் பதினெட்டுத் துறைகளையுடையதாகும். அவற்றுள் முன்னர்க் கூறப்பட்ட ஒன்பது துறைகளும் மறத்துறை பற்றியும் பிற்கூறிய ஒன்பதும் அறத்துறை பற்றியும் நிகழ்வன என்பார், ‘இருபாற்பட்ட ஒன்பதின்றுறைத்தே’ என்றார் ஆசிரியர். காஞ்சித்திணையாவது, தனக்கு ஒப்பில்லாத சிறப்பென்னுஞ் செம்பொருளைப் பெறுதல் காரணமாக யாக்கை, இளமை, செல்வம் என்பவற்றால் நிலைபேறில்லாத இவ்வுலகியலைப் பற்றிக் கொண்டு அதனால் உளவாம் பலவகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றலாகிய ஒழுகலாறாம். நில்லாதவற்றால் நிலையுடையதனை அடையும் முயற்சியே காஞ்சித்திணை யென்பது தொல்காப்பியனார் கருத்தாகும். காஞ்சியென்னும் திணை பெருந்திணையென்னும் அகத் திணைக்குப் புறனாகும். ‘ஏறியமடற்றிறம்’ முதலாகிய நோந்திறக் காமப்பகுதி அகத்திணை ஐந்தற்கும் புறனாயவாறுபோல, இக் காஞ்சித் திணையும் பல்வேறு நிலையாமையாகிய நோந்திறம்பற்றி வருதலால் அதற்கு இது புறனாயிற்றென்பர் இளம்பூரணர். உலகியலில் நேரும் பலவகைத் துன்பங்களையும் எதிர்த்து நிற்றல் காஞ்சி என்னும் இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டே ‘எதிரூன்றல் காஞ்சி’ யென்னுங் கொள்கையும் பிற்காலத்து உருப்பெருவதாயிற்று. எல்லாப் பொருளினுஞ் சிறந்த சிறப் பென்னுஞ் செம்பொருளைப் பெறுதல் வேண்டி நில்லாத உலகியல்பில் நேரும் பல்வகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றல் காஞ்சித்திணை யாதல்பேல, ஒன்றாவுலகத்துயர்ந்த புகழைப்பெற விரும்பிப் பலவகையின்னல்களுக்கிடையே பகைவர் சேனையைத் தடுத்து நிறுத்தலாகிய போர்ச் செயலும் காஞ்சித்திணையெனவே கொள்ளத் தக்கதாகும். இவ்வாறு வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறுபட்ட இருவேறு போர்ச் செயல்களாகப் பண்டைநாளிற் கொள்ளப்பட்ட செய்தி ‘வஞ்சியுங் காஞ்சியுந் தம்முள் மாறே’ எனவரும் பன்னிரு படலச் சூத்திரத்தாலும் “தென்றிசை யென்றன்வஞ்சியொடு வடதிசை, நின்றெதிரூன்றிய நீள்பெருங்காஞ்சியும்” எனச் செங்குட்டுவன் கூற்றாக இளங்கோவடிகள் கூறந் தொடராலும் இனிது விளங்கும். இங்ஙனமாகவும் காஞ்சித்திணையென்பதற்குப் பல்வேறு நிலையாமையினைக் கூறுங் குறிப்பு எனத் தொல்காப்பிய வுரையாசிரியர்கள் கூறும் விளக்கம், ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்திற்கும் அவர்க்குப் பின்வந்த இளங்கோவடிகள் முதலியோர் கருத்திற்கும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையென்னும் பெருங் காஞ்சி முதலாகக் கொண்டோன் தலையொடு முடிந்தநிலை யென்பதீறாகவுள்ள பத்துத் துறைகளும் பாங்கருஞ் சிறப்பினைப் பெறுதல் வேண்டுமென்னும் விருப்பத்தைப் புலப்படுத்துவன. மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற மாய்ந்த பூசல் மயக்கம் முதலாகக் காடுவாழ்த்தென்பதீறாகச் சொல்லப்பட்ட பத்துத் துறைகளும் நில்லாத வுலகியல்பைப் பல்லாற்றானும் பற்றியொழுகும் துன்பியலைப் புலப்படுத்துவன. இங்ஙனம் காஞ்சித்திணைத் துறைகள் இருவகை நிலைகளைக் குறித்தலால் ‘நிறையருஞ் சிறப்பிற்றுறையிரண்டுடைத்து’ என்றார் ஆசிரியர். இவற்றுள் முற்கூறிய பத்தும் ஆண்பாற்றுறை. பிற்கூறிய பத்தும் பெண்பாற்றுறை எனப் பகுத்துரைத்தார் நச்சினார்க்கினியர். இவ்விருவகைத் துறைகளையும் விழுப்பவகை யெனவும் விழுமவகை யெனவும் இருதிறமாகப் பகுத்துரைப்பாருமுளர். புறத்திணையுள் ஏழாவதாகச் சொல்லப்படும் பாடாண் என்பது, புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவராற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர் பாடும் புகழினை விரும்பிய தலைவர் தம்முடைய அறிவு, திரு, ஆற்றல் ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற்றன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னுஞ் சொல்லாகும். இச்சொல் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய்ப் புலவராற் பாடப்பெறும் தலைமக்களது ஒழுகலாறாகிய பண்புடைமையினை யுணர்த்திற்றென்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். பாடாண் திணைப்பகுதி கைக்கிளை யென்னும் அகத் திணைக்குப் புறனாகும். ஒருநிலத்திற்குரித்தன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக்கிளையாகிய அகத்திணை. அதுபோல ஒருபாற் குரித்தன்றி ஒருவனையொருவன் யாதானுமோர் பயன் கருதியவழி மொழிந்து நிற்பது பாடாண். இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரிரக்கமல்லாத செந்திறத்தால் வருதலும் இரண்டற்கும் ஒக்கும். தலைவன், பரவலும் புகழ்ச்சியும் வேண்டப், புலவன் பரிசில் வேண்டுதலின், ஒருதலைக் காமமாகிய கைக்கிளையொடொத்தலால் பாடாண்திணை iக்கிளைக்குப் புறனாயிற்று. குடும்ப வாழ்விலே மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயலாகிய அகவொழுக்கமும் அரசியல் வாழ்விலே மேற் கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி யென்னும் அறுவகைப் புறவொழுக்கங்களும் ஆகிய இவ் வொழுக்கங்களை யடிப்படையாகக்கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை யொழுகாலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத் துணர்வுகளும் பாட்டுடைத் தலைவன்பால் நிகழ்வன. பாடாண் திணையிலோபாடுதல் வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காரணமாகிய குணஞ் செயல்கள் பாட்டுடைத் தலைவன்பாலும் நிகழ்வனவாம். வெட்சி முதலிய ஆறும் தலைமகனுக்குரிய பண்புகளை நிலைக்களனாகக்கொண்டு தோன்றும் தனிநிலைத் திணைகள். பாடாண்திணையோ தலைமகன்பால் நிகழும் மேற்கூறியதிணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களன்களாகக்கொண்டு தோற்றும் சார்பு நிலைத்திணையாம். எனவே போர்மறவர்பால் அமைவனவாகிய வெட்சி முதலிய புறத்திணைகளிலும் குற்றமற்ற மனை வாழ்க்கை யாகிய அகத்திணையிலும் அமைந்த செயல்களாய்த் தலை மக்களுக்குரிய கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற் கமைந்த ஒழுகலாறு பாடாண்திணை யென்பது பெறப்படும். பாடாணல்லாத பிறவும் புலவராற் பாடப்படுவன வாயினும் புலவராற் பாடப்பெறுதல் வேண்டு மென்னும் மனக்குறிப்பின்றி ஒருவன்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச் செயல் முதலியவற்றைத் தெரிவிக்கும் வகையால் அவை வெட்சி முதலிய திணைகளின்பாற்படுவனவென்றும், அச்செயல்களைக் கருவாகக் கொண்டு புலவன் பாடும்போது அவற்றாலுளவாம் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவன்பால் தோற்றும் உயர்ந்த உள்ளக் குறிப்பு பாடாண்திணை யென்றும் பகுத்துணர்தல் வேண்டும். நல்லறிவுடைய புலமைச் செல்வர் பலரும் உரையினாலும் பாட்டினாலும் உயர்த்துப் புகழும் வண்ணம் ஆற்றல் மிக்க போர்த் துறையிலும் அன்பின்மிக்க மனை வாழ்க்கையிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்புடைமையே பாடாண்திணை யெனப்படும். அமரகத்து அஞ்சாது போர்புரியம் வீரர்களின் தொழிலாய்ப் பொருந்தும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி யென்பவற்றைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் அறுவகைப் பகுதிகளும், குற்றமற்ற அகத்திணை யொழுகலாற்றைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் காமப்பகுதியும் உலகியலிற் பல்வேறு செயல்வகையினை யுளத்துட்கொண்டு ஒருவரைப் படர்க்கைக்கண் புகழ்தலும் முன்னிலைக்கண் பரவிப் போற்றுதலும் முன்னோர் தம் உள்ளத்தே சிந்தித்துணர்த்திய நற்பொருள்களை யறிவுறுத்தலும் என இங்ஙனம் இயல்பு வகையாற் பாடப்பெறும் செந்துறை வண்ணப்பகுதியும் ஆகிய இவையெட்டும் பாடாண்திணையின் வகைகளாம். கடவுள் வாழ்த்து வகை, வாழ்த்தியல் வகை, மங்கல வகை, செவியறிவுறுத்தல், ஆற்றுப்படை வகை, பரிசிற்றுறை வகை, கைக்கிளை வகை, வசை வகை எனவரும் எட்டும் பாடாண்டிணை வகையென இளம்பூரணரும், பாடாண்திணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவுங் கூட்டி ஒன்றும் நிரை கவர்தல் நிரை ட்டல் என்னும் வெட்சி வகை இரண்டும், பொதுவியல், வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பனவும் ஆக இவ்வெட்டும் பாடாண்திணை வகையென நச்சினார்க்கினியரும் வேறுவேறு வகுத்துக் காட்டியுள்ளார்கள். இனிப் புறத்திணை ஆறும் அன்பினைந்திணை கைக்கிளையாகிய அகத்திணை இரண்டும் ஆக இவ்வெட்டும் பாடாண்டிணையின் வகையென்பாருமுளர். அமரர் என்னும் சொல் அமர் என்பதன் அடியாகப் பிறந்த பெயராய்ப் போர்செய்தலையே தமக்குரிய தொழிலாகக்கொண்டு வாழும் வீரரைக் குறித்து வழங்குந் தனித் தமிழ்ச் சொல்லாம். இச்சொல்லுக்குத் தேவர் எனப் பொருள்கொண்டு, அமரர்கண் முடியும் அறுவகையாவன: கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை புகழ்தல், பரவல் எனப் புறப்பொருள் வெண்பா மாலை நூலாசிரியராகிய ஐயனாரிதனாரும் இளம்பூரணரும், பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய முனிவர், பார்ப்பார், ஆநிரை, மழை, முடியுடைவேந்தர், உலகு என்னும் பொருள் பற்றிய அறுமுறை வாழ்த்தென நச்சினார்க்கினியரும், வானவர், அந்தணர், ஆனினம் மழை, அரசன், உலகம் என்னும் இவ்வாறு பொருளையும் வாழ்த்துதல் எனப் பிறரும் விளக்கங் கூறுவர். போர்மறவர்பாற் சென்றமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சியீறான புறத்திணை வகைபற்றிய ஆறுமே அமரர்கண் முடியும் அறுவகை யெனப்பட்டன என்பர் நாவலர் சோமசுந்தர பாரதியார். இக்கருத்தே ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றுக்கும் சங்கத் தொகை நூல்களாகிய தமிழ்ச் செய்யுட்களின் அமைப்புக்கும் ஏற்றதாகும். மக்களைப் பொருளாகக்கொண்டு பாடுதற்குரிய காமப் பகுதியினைக் கடவுளைப் பொருளாகக்கொண்டு பாடினும் நீக்காது ஏற்றுக்கொள்வர். கடவுளை ஏனைமக்கள் விரும்பியதாகச் செய்யுள் செய்தலும் நீக்கப்படாது. இவ்விரு வகையினையும் முறையே கடவுள்மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்தபக்கம் எனவும் கடவுள் மாட்டு மானிடப்பெண்டிர் நயந்தபக்கம் எனவும் வழங்குவர் இளம்பூரணர். இவற்றுடன் கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் அமைத்துக்கொள்வர் நச்சினார்க்கினியர். மக்கள் குழந்தைகளாக வளரும் பருவத்தும் அவர்களைக் காமுற்றதாகச் செய்யுள் செய்தலும் உண்டு. இப்பாடாண்திணையில் உலகியல் வழக்கத்தை யொட்டித் தலைமக்களுடைய ஊரும் உயர்குடிப் பிறப்பும் இயற்பெயரும் குறித்துப் பாராட்டப் பெறுதலுண்டு. வேந்தரது கொடியின் வெற்றியைப் பாராட்டிப் போற்றும் கொடிநிலையும், பகைவேந்தர்க்குப் பற்றுக்கோடாயுள்ள அரணையழித்தலாகிய கந்தழியும், வேந்தற்கு, வெற்றிவேண்டி யாடும் வள்ளிக்கூத்தும் எனப் போர்த்துறையிலே முதலிற் சொல்லத்தக்க குற்றமற்ற சிறப்பினையுடைய இம்மூன்று செயல்களும் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தி வருங்காலத்து முன்னர்க் குறித்த செந்துறை வண்ணப் பகுதியாகிய கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வருமென்பர் ஆசிரியர். கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் எனத் தொல்காப் பியனார் கூறியது கொண்டு, அரி, அயன், அரன் என்னும் முத்தேவர் கொடிகளுள் ஒன்றோடு உவமித்து அரசன் கொடியைப் புகழ்வது கொடிநிலை யெனவும், திருமால் சோவென்னும் அரணத்தையழித்த வெற்றியைச் சிறப்பித்தது கந்தழியெனவும், மகளிர் முருகனை வழிபட்டு வெறியாடுவது வள்ளியெனவும் துறை விளக்கங்கூறினார் ஐயனாரிதனார். இம்மூன்றனுள் முதலிரண்டு துறைகளுக்கும் அவர் பாடிய வெண்பாமாலைப் பாடல்களை உதாரணமாகக் காட்டுவர் இளம்பூரணர். கொடிநிலை யென்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலமாகிய ஞாயிறென்றும், கந்தழியென்பது ஒரு பற்றுக்கோடுமின்றித் தானே நிற்குந்தத்துவங்கடந்த பொருளென்றும், வள்ளியென்பது தேவர்க்கு அமிர்தம் வழங்கும் தண்கதிர் மண்டிலமாகிய திங்களென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். இம்மூன்றனுள் கந்தழியென்பதற்கு அவர்கூறும் இலக்கணம் கடவுளுக்கேயுரிய சிறப்புடையதாதலால் அது கடவுள் வாழ்த்தாவதன்றிக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் வேறொரு துறையெனக் கொள்ளுதற்கில்லை. ஞாயிறுந் திங்களுமே ஆசிரியரது கருத்தாயின் அவற்றை ஞாயிறு திங்கள் என எல்லார்க்கும் விளங்கும் இயற்சொல்லால் வழங்குவதன்றிக் கொடிநிலை, வள்ளி யென வருங்சொற்களால் மறைத்துக் கூறமாட்டார். நச்சினார்க்கினியர் பொருள் கூறிய முறையினை யொட்டிக் கொடிநிலை யென்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெறு தலுடைய மேகத்தையுணர்த்து மென்றும் கந்தழி யென்பது பற்றழிந்தாராகிய நீத்தார் தன்மையைக் குறிக்கு மென்றும் வள்ளி யென்பது வண்மைபற்றி நிகழும் அறத்தைக் குறிக்குமென்னும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் மூன்றும் திருக்குறளில் கடவுள் வாழ்த்தையடுத்து வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் என வரும் மூன்றதிகாரங்களில் முறையே கூறப்பட்டுள்ளன. வென்றும் விளக்கங் கூறவாரும், கொடிநிலை யென்பது ஞாயிறு; கந்தழியென்பது தீ; வள்ளியென்பது திங்கள்; இம்முத்தீ வழிபாடு கடவுள்வாழ்த்தொடு பொருந்தி வருமெனக் கூறுவாரும், கந்தழியென்னுஞ்சொல் இத்தொல்காப்பியத்தில் கொடிநிலை வள்ளியென்பவற்றையடுத்து முதலில் கூறப்படாமையாலும் இச்சொல் வேறு பழைய தமிழ் நூல்களில் யாண்டும் குறிக்கப்படாமையாலும், ‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள்’ என ஆசிரியர் முன்னர் வெட்சித்திணையிற் குறித்த காந்தள் என்னும் சொல்லே ஏடெழுது வோரால் கந்தழியெனத் தவறாகத் திரித்தெழுதப்பட்டதென் பாரும் எனப் பல திறத்தர் உரைகொள்வோர். இங்கெடுத்துக் காட்டிய விளக்கங்கள் அவரவரது அறிவின் திறத்தால் நலிந்தும் வலிந்தும் திரித்துங் கூறப்பட்டனவாதலின் இவை தொல் காப்பியனார் கருதிய பொருளை விளக்குவனவெனக் கொள்ளு தற்கில்லை. ‘குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை’ யென முன் வஞ்சித்திணைக் குரியதாகச் சொல்லப்பட்ட கொற்றவள்ளை யென்னுந் துறையும் ஒரோவழிக் கடவுள் வாழ்த்தொடு பொருந்திப் பாடாண்பாட்டாய் வருதலுண்டு. கொடுப்போரேத்திக் கொடார்ப்பழித்தல் முதலாக வேலை நோக்கிய விளக்குநிலை யீறாகச் சொல்லப்பட்டனவும், வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து கைக்கிளைவகை என்பனவும் துயிலெடை நிலை முதலாகப் பரிசில்விடையீறாகச் சொல்லப்பட்டனவும், நாளும் புள்ளும் நிமித்தமும் ஓம்படையும் உட்பட உலக வழக்கின்கண்ணே மூன்றுகாலமும் பற்றி வருவனவும் பாடாண்திணைக்குரிய துறைகளாமென இவ்வியல் 29, 30-ஆம் சூத்திரங்களில் தொகுத்துரைத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார். இங்ஙனம் அகத்திணையேழற்கும் புறமாய் நிகழும் புறத்திணைகள் வெட்சி முதல் பாடாண் இறுதியாக ஏழெனக் கூறியிருக்கவும், பன்னிருபடலம் புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களையியற்றிய பிற்காலத்து ஆசிரியர்கள் பகைவருடைய பசுக்களைக் கவர்தல் வெட்சி, அங்ஙனம் கவரப்பட்ட பசுக்களை மீட்டல் கரந்தை, பகைவர் நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சி, அங்ஙனம் தம்நாட்டை நோக்கிவரும் படையை எதிர் சென்று தடுத்து நிறுத்துதல் காஞ்சி, தம்முடைய மதிலைக் காத்தல் நொச்சி, பகைவருடைய மதிலைவளைத்தல் உழிஞை, பகைவரொடு பொருதல் தும்பை, பகைவரை வெல்லுதல் வாகை, ஒருவனுடைய புகழ், கொடை, தண்ணளி முதலியவற்றைப் புகழ்ந்து பாடுதல் பாடாண், மேற்கூறிய புறத்திணைக் கெல்லாம் பொதுவாயுள்ள செயல் முறைகள் பொதுவியல், ஒருதலைக் காமம் கைக்கிளை, ஒவ்வாக்காமம் பெருந்திணை எனப் பன்னிரண்டு திணைகளாகப் பகுத்தும், இவற்றுள் முதலன ஏழும் புறம் எனவும் இறுதியிலுள்ள கைக்கிளை பெருந்திணை அகப்புற மெனவும் இடையிலுள்ள மூன்றும் புறப்புறமெனவும் வகைப்படுத்தியும், இலக்கணங் கூறியுள்ளார்கள். இப்பகுப்பு முறையினைத் தொல்காப்பிய வுரையாசிரியர்களாகிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் புறத்திணையியலுரைப் பகுதிகளில் ஆங்காங்கே மறுத்துள்ளார்கள். எனினும் இத்தகைய வேறுபாடுகளை முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்தலும் திரிபு வேறுடைத்தாதலும் என இருவேறு வகைப்பட நிகழும் வழிநூல் சார்பு நூல்களில் மரபு நிலை திரியாது விரவும் பொருள்களாக அமைத்துக்கொள்ளுதலே முறையாகும். “அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்தலும், வெட்சித்திணை, உழிஞைத்திணைகளின் மறுதலை வினையை வீற்று வினையாதலும் வேற்றுப்பூச் சூடுதலுமாகிய வேறுபாடுபற்றி வேறுதிணையாக வைத்தெண்ணுதலும் இன்னோரன்னவை பிறவும் திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன” எனவும் “இவ்வுண்மையுணராதார் பன்னிருபடல முதலிய நூல்களை வழீஇ யினவென்றிகழ்ந்து....தமக்கு வேண்டியவாறே கூறுப” எனவும் வரும் சிவஞானமுனிவர் கூற்று இக்கருத்தினைப் புலப்படுத்துவதாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் கைக்கிளை முதலாகப் பெருந்திணை யிறுதியாகவுள்ள எழுதிணைகளையும் அகமெனக் கொண்டாராயினும் அவற்றுள் அகமெனச் சிறப்பித்தற்குரியன நடுவே எண்ணப்பட்ட ஐந்திணைகளுமே எனவும், அவ்வைந்தின் முன்னும் பின்னுமாக அடுத்தெண்ணப்பட்ட கைக்கிளை பெருந்திணையென்பன ஒருவாற்றான் அவற்றின் புறத்தவாகக் கொள்ளதக்கன எனவுங் கருதினாரென்பதற்கு, “மக்கள் நுதலிய அகனைந்திணையுஞ், சுட்டியொருவர் பெயர் கொளப்பெறார்”, “புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது, அகத்திணை மருங்கின் அளவுதலிலவே” எனவரும் அகத்திணையியற் சூத்திரங்களே சான்றாதலின் அவ்விருதிணைகளையும் அகப்புறமெனப் பின்னுள்ளோர் பகுத்தமை தொல்லாசிரியர் கருத்துக்கு முரணாகாமை காண்க. - க. வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 10, பக். 239-257 இரண்டாவது புறத்திணையியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், புறத்திணையியல் என்னும் பெயர்த்து. இது புறப்பொரு ளுணர்த்துதலாற் பெற்ற பெயர். அஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ வெனின், மேல் அகத்திணையாகிய எழுதிணையும் சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழு திணை உணர்த்தினாரென்று கொள்க. அவை, மலையாகிய குறிஞ்சித்திணைப்புறம் நிரைகோடலும் நிரை மீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறி பெறுதலும், காடுறையுலகாகிய முல்லைப் புறம் மண்ணசை வேட்கையால் எடுத்துச்செலவு புரிந்த வேந்தன் மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான், அவ்விரு பெருவேந்தரும் ஒரு வினையாகிய செலவு புரிதலின் அது வஞ்சி என ஒரு குறி பெறுதலும், புனலுலகாகிய மருதத்துப்புறம் எயில் அழித்தலும் எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு குறி பெறுதலும், மணலுலகாகிய நெய்தற்புறம் இரு பெருவேந்தரும் பொருதலாகிய ஒரு தொழிலே புரிதலால் அது தும்பை என ஒரு குறி பெறுதலும், நடுவுநிலைத் திணையாகிய பாலைப்புறம் வேந்தரேயாயினும் ஏனையோ ராயினும் தமது மிகுதியாகிய வெற்றியைக் குறித்தலால் அது வாகை என ஒரு குறி பெறுதலும், பெருந்திணைப்புறம் நிலையாமையாகிய நோந்திறப் பொருளே குறித்து வருதலின் காஞ்சி என ஒரு குறி பெறுதலும், கைக்கிளைப்புறம் செந்திறமாகிய ஒரு பொருளே குறித்து வருதலின் பாடாண் என ஒரு குறி பெறுதலும் உணர்த்தியவாறு கண்டு கொள்க. மேலை ஓத்தினுள், ``புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்ல, தகத்திணை மருங்கி னளவுத லிலவே.’’ (அகத். 58) என அகத்திணைச் செய்யுள் இயற்பெயர் கூறப்பெறா தென்றமையானும், புறத்திணை மருங்கிற் பொருந்தும் என்றமையானும் உலகியலோடு ஒத்துவரும் காமப் பொருளாகப் பாடாண் பாட்டின்கண் இன்பம் இயற்பெயர் சார்த்தி வரப்பெறும் என்று கொள்க. `ஆன்ற சிறப்பி னறம்பொரு ளின்பமென மூன்றுவகை நுதலிய துலக மவற்றுள் அறமு மின்பமு மகலா தாகிப் புறனெனப் படுவது பொருள்குறித் தன்றே.’’ என்னும் பன்னிருபடலச் செய்யுளுள் புறப்பொருள் ‘அறமும் இன்பமும் அகலாதாகி’ எனக் கூறினார்; அவர் கூறுதல் வாகைத் திணைக்கண் ‘கட்டில் நீத்த பால்’ முதலாகக் ‘காமம் நீத்த பால்’ ஈறாக அறங்கூறுதலில் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறுதலாம். ``ஆங்ஙன முரைப்பி னவற்றது வகையால் பாங்குறக் கிளந்தன ரென்ப வவைதாம் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உட்குவரு சிறப்பி னுழிஞை நொச்சி முரண்மிகு சிறப்பிற் றும்பையுள் ளிட்ட மறனுடை மரபி னேழே யேனை அமர்கொண் மரபின் வாகையுஞ் சிறந்த பாடாண் பாட்டொடு பொதுவிய லென்ப.’’ எனவும், ``கைக்கிளை யேனைப் பெருந்திணை யென்றாங் கத்திணை யிரண்டு மகத்திணைப் புறனே.’’ எனவும் புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல்வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில், ``மொழிந்த பொருளோ ஒன்ற வைத்தல்’’ (மரபு. 110) என்னுந் தந்திர வுத்திக்கும் பொருந்தாதாகி ``மிகைபடக் கூறல்’ ‘தன்னானொரு பொருள் கருதிக் கூறல்’ (மரபு. 108) என்னுங் குற்றமும் பயக்கு மென்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமை யாதலானும், பொதுவியலென்பது, ``பல்லமர் செய்து படையுட் டப்பிய நல்லாண் மாக்க ளெல்லாரும் பெறுதலின் திறப்பட மொழிந்து தெரிய விரித்து முதற்பட வெண்ணிய வெழுதிணைக்கு முரித்தே.’’ எனத்தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சி யின் எடுத்துக் கோடற்கண் கூறாமையானும், கைக்கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்தெனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப் பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை யொழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாதென்க. 59. அகத்திணை மருங்கி னரிறப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரத் தோன்று மீரேழ் துறைத்தே. இத்தலைச் சூத்திரம் என் நுதலிற்றோவெனின், வெட்சித் திணைக்கு இடமும் துறையும் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இதனானே திணையும் துறையும் என்று வரும் புறப்பொருள் என்று கொள்க. இ-ள்: அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத் திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் - அகத்திணையிடத்து மயக்கம் கெட உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் வகைப்படக் கூறின், அகத்திணை மருங்கின் மயக்கம் கெட உணர்தலாவது, மேல் ஓதிய இலக்கணத்தால் மயக்கம் கெட உணர்தல். வெட்சிதானே குறிஞ்சியது புறனே - வெட்சி என்னும் திணை குறிஞ்சி என்னும் திணைக்குப் புறனாம். வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரை கோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்த லானும், அந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆன்நிரையைக் களவிற் கோடல் ஒருபுடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும், அதற்கு அது புறனாயிற் றென்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறமாம். உட்குவரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே - வெட்சித்துறை உட்குவரத் தோன்றும் பதினான்கு துறையை உடைத்து. துறை பதினான்கும் வருகின்ற சூத்திரத்துள் காட்டுதும். (1) 60. வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பன் மேவற் றாகும். இது, வெட்சித் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின் ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும் - வேந்தனால் விடப்பட்ட முனை ஊரகத்துள்ளார் வேற்று நாட்டின்கண் களவினானே ஆவைக் கொண்டு பெயர்ந்து பாதுகாக்கும் மேவலை உடைத்து. ஓம்புதலாவது, மீளாமல் காத்துல். புறப்பொருட் பாகுபாடாகிய பொருளினும் அறத்தினும் பொருள் தேடுதற்குரிய நால்வகை வருணத்தாரினும் சிறப்புடையார் அரசராதலானும், அவர்க்கு மாற்றரசர்பால் திறைகொண்ட பொருள் மிகவும் சிறந்ததாகலானும், அப் பொருள் எய்துங்கால் அவரைப் போரில் வென்று கோடல் வேண்டுதலானும், போர்க்கு முந்துற நிரைகோடல் சிறந்த தாகலானும், இப் பொருள் முன் கூறப்பட்டது. பன்னிரு படலத்துள் ‘தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென், றன்ன விருவகைத்தே வெட்சி’ என இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின எடுத்துச் செலவு, எயில்காத்தல், போர்செய்தல் என்பன அரசர்மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழிலெனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்நிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர். ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினா ரென்றல் பொருந்தாது. என்னை? ``ஒத்த சூத்திர முரைப்பின் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்.’’ எனவும், ``சிதைவெனப் படுமவை வசையற நாடின் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில கூறல் மயங்கக் கூறல் கேட்டோர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியா னிழுக்கக் கூறல் தன்னா னொருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினு மனங்கோ ளின்மை அன்ன பிறவு மவற்றுவிரி வாகும்.’’ எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகை படக் கூறல், பொருளில கூறல், மயங்கக் கூறல், தன்னானொரு பொருள் கருதிக் கூறல் என்னும் குற்றம் பயப்பக் கூறினாரென வருமாகலான். (2) 61. படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி புடைகெடப் போகிய செலவே புடைகெட ஒற்றி னாகிய வேயே வேய்ப்புறம் முற்றி னாகிய புறத்திறை முற்றிய ஊர்கொலை யாகோள் பூசன் மாற்றே நோயின் றுய்த்த னுவல்வழித் தோற்றந் தந்துநிரை பாதீ டுண்டாட்டுக் கொடையென வந்த வீரேழ் வகையிற் றாகும். இது, வெட்சித் துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: படையியங்கரவம் முதலாகக் கொடை ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு துறையை யுடைத்து வெட்சித்திணை. வெட்சியென்பது அதிகாரத்தான் வந்தது. படை இயங்கு அரவம் - (நிரைகோடல் கருதிப்) படையெழும் அரவம். உதாரணம்: ``நெடிபடு கானத்து நீள்வேன் மறவர் அடிபடுத் தாரதர் செல்வான் துடிபடுத்து வெட்சி மலைய விரவார் மணிநிரைக் கட்சியுட் காரி யெழும்’’ (புறப். வெட்சி. 3) பாக்கத்து விரிச்சி - (குறித்த பொருளின் பயன் அறிதற்குப்) பாக்கத்துக்கண் நற்சொல் ஆய்தல். உதாரணம்: ``எழுவணி சீறூ ரிருண்மாலை முன்றிற் குழுவினங் கைகூப்பி நிற்பத் தொழுவிற் குடக்கள்ளுக் கொண்டுவா வென்றாள் குனிவில் தடக்கையாய் வென்றி தரும்.’’ (புறப். வெட்சி. 4) புடை கெடப்போகிய செலவு - பக்கம் கெடப் போகிய செலவு. பக்கங் கெடுதலாவது, மாற்றரசர் பக்கத்தாராகித் தம்மாட்டு ஒற்றொடு நிற்பார் அறியாமல் போதல். பக்கத்தினுள் ளாரைப் பக்கமென்றார். உதாரணம்: ``கூற்றினத் தன்னார் கொடுவி லிடனேந்திப் பாற்றினம் பின்படர முன்படர்ந்து தேற்றின நின்ற நிலைகருதி யேகினார் நீள்கழைய குன்றங் கொடுவில் லவர்.’’ (புறப். வெட்சி. 5) புடை கெட ஒற்றின் ஆகிய வேயே - மாற்றரசர் பக்கத்துள்ளார் அறியாதவகை ஒற்றரால் ஆகிய ஒற்றுதலும். ஒற்று என்பது எவ்விடத்தும் வேண்டுமாயினும், ஆதி விளக்காக இவ்வோத்தின் முதற்கண் வைத்தாரென்று கொள்க. உதாரணம்: ``நிலையும் நிரையும் நிரைப்புறத்து நின்ற சிலையுஞ் செருமுனையுள் வைகி இலைபுனைந்த கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து நள்ளிருட்கண் வந்தார் நமர்’’ (புறப். வெட்சி. 6) வேய் புறம் முற்றின் ஆகிய புறத்து இறை - (அவ்வாறு) வேய்க்கப்பட்ட இடத்தின் புறத்தினைச் சூழ்தலான் ஆகிய புறத்திருக்கை. ‘வேய்’ என்பது ஆகுபெயராய் அவ்விடத்தின்மேல் நின்றது. உதாரணம்: ``உய்ந்தொழிவா ரீங்கில்லை யூழிக்கட் டீயேபோல் முந்தமரு ளேற்றார் முரண்முருங்கத் தந்தமின் ஒற்றினா னொற்றி யுரவோர் குறும்பினைச் சுற்றினார் போகாமற் சூழ்ந்து.’’ (புறப். வெட்சி. 7) முற்றிய ஊர் கொலை - (அவ்வாறு) சூழப்பட்ட ஊரை அழித்தல். உதாரணம்: ``இகலே துணையா வெரிதவழச் சீறிப் புகலே யரிதென்னார் புக்குப் பகலே தொலைவில்லார் வீழத் தொடுகழ லார்ப்பக் கொலைவில்லார் கொண்டார் குறும்பு.’’ (புறப். வெட்சி. 8) ஆ கோள் - (ஆண்டுளதாகிய) நிரையைக் கோடல். உதாரணம்: ``கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தால் நெடுவரை நீள்வேய் நரலு நடுவூர்க் கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற நிணநிரை வேலார் நிலை.’’ (புறப். வெட்சி. 9) பூசல் மாற்று - (அவ்வாறு கொண்ட நிரையை மீட்டற்கு வந்தார் பொரும்) பூசல் மாற்றிப் பெயர்தல். உதாரணம்: ``சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார் வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணிய தாழ்ந்த குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையா ரெய்த புலவுக் கணைவழிபோய்ப் புள்.’’ (புறப். வெட்சி. 10) நோய் இன்று உய்த்தல் (அவ்வாறு கொண்ட நிரையை) வருந்தாமல் உய்த்தல். உதாரணம்: ``செருப்பிடைச் சிறுபர லன்ன கணைக்கால் அவ்வயிற் றகன்ற மார்பிற் பைங்கட் குச்சி னிரைத்தன குரூஉமயிர் மோவாய் செவியிறந்து தாழ்தருங் கவுளன் வில்லோ டியார்கொலோ வளியன் தானே தேரின் ஊர்பெரி திகந்தன்று மிலனே யரணெனக் காடுகைக் கொண்டன்று மிலனே காலைப் புல்லா ரினநிரை செல்புற நோக்கிக் கையிற் சுட்டிப் பையென வெண்ணிச் சிலையின் மாற்றி யோனே யவைதாம் மிகப்பல வாயினு மென்னா மெனைத்தும் வெண்கோ டோன்றாக் குழிசியொடு நாளுறை மத்தொலி கேளா தோனே.’’ (புறம். 257) நுவல்வழித் தோற்றம் - தமர் கவன்று (சொல்லியவ)ழித் தோன்றுதல். உதாரணம்: ``நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின் பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப் புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின் ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று நிரையொடு வரூஉ மென்னைக் குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.’’ (புறம். 262) தந்து நிறை (கொள்ளப்பட்ட நிரையைத்) தம்ஊரகத்துக் கொணர்ந்து நிறுத்துல். உதாரணம்: ``தண்டா விருப்பின டன்னை தலைமலைந்த வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று கண்டாள் அணிநிரை வாண்முறுவ லம்மா வெயிற்றி மணிநிரை மல்கிய மன்று.’’ (புறப். வெட்சி. 13) பாதீடு - (அந்நிரையைக்) கூறிடுதல். உதாரணம்: ``ஒள்வாள் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும் புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் விள்வாரை மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற் கூறிட்டார் கொண்ட நிரை.’’ (புறப். வெட்சி. 14) உண்ட ஆட்டு - (நிரைபகுத்து மறவர்) களிப்பினால் அயரும் விளையாட்டு. உதாரணம்: ``இளிகொண்ட தீஞ்சொ லிளமா வெயிற்றி களிகொண்ட நோக்கங் கவற்றத் தெளிகொண்ட வெங்கண் மலிய விளிவதுகொல் வேற்றார்மேல் செங்கண் மறவர் சினம்.’’ (புறப். வெட்சி. 15) கொடை - (பகுத்த நிரையை வேண்டி இரப்பார்க்குக்) கொடுத்தல். உதாரணம்: ``இளமா வெயிற்றி யிவைகாணின் னையர் தலைநாளை வேட்டகத்துத் தந்த நிரைகள் கொல்லன் றுடியன் கொளைபுணர்சீர் வல்ல நல்லியாழ்ப் பாணர்தம் முன்றி னிறைந்தன. முருந்தே ரிளநகை காணாய்நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த நிரைகள் கள்விலை யாட்டிநல் வேய்திரி கானவன் புள்வாய்ப்பச் சொல்கணி முன்றி னிறைந்தன. கயமல ருண்கணாய் காணாய்நின் னையர் அயலூ ரலற வெறிந்தநல் லாக்கள் நயனின் மொழியர் நரைமுதிர் தாடி எயின ரெயிற்றியர் முன்றி னிறைந்தன.’’ (சிலப். வேட்டுவவரி)(3) 62. மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையு மத்திணைப் புறனே. இதுவும் அது. இ-ள்: மறம் கடை கூட்டிய குடி நிலை - மறத்தொழில் முடித்தலையுடைய குடியினது நிலைமையைக் கூறலும், சிறந்த கொற்றவை நிலையும் சிறந்த - கொற்றவையது நிலைமையைக் கூறலும், அ திணை புறன் - குறிஞ்சித் திணைப் புறனாகிய வெட்சித் திணையாம். ‘குடிநிலை’ என்றதனால் மைந்தர்க்கும் மகளிர்க்கும் பொதுவாதல் அறிக. உதாரணம்: ``யானை தாக்கினு மாவுமேற் செலினும் நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் சூழ்மகள் மாறா மறம்பூண் வாட்கை வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த புலிப்போத் தன்ன புல்லணற் காளை செந்நா யன்ன கருவிற் சுற்றமொடு கேளா மன்னர் கடிபுலம் புக்கு நாளா தந்து நறவுநொடை தொலைச்சி இல்லக் கள்ளின் றொப்பிப் பருகி மல்லன் மன்றத்து மழவிடை கெண்டி மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்பச் சிலைவி லெறுழ்த்தோ ளோச்சி வலன்வளையூப் பகன்மகிழ் தூங்குந தூங்கா விருக்கை’’ (பெரும்பாண். 134) (146) ``முளிதலை களித்துவ ருள்ளுங் காதலிற் றனக்குமுகந் தேந்திய பசும்பொன் மண்டை இவற்கி தென்னா ததற்குமன் றிசினே கேட்டியோ வாழி பாண பாசறைப் பூக்கோ ளின்றென் றறையும் மடிவாய்த் தண்ணுமை யிழிசினன் குரலே’’ (புறம். 289) ``கெடுக சிந்தை கடிதிவ டுணிவே மூதின் மகளி ராத றகுமே மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை யானை யெறிந்து களத்தொழிந் தனனே; நெருந லுற்ற செருவிற் கிவள்கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே; இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று முயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமக னல்ல தில்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே.’’ (புறம். 279) இவற்றுள் ஆண்பால் பற்றிவந்ததனை இல்லாண்முல்லை யெனவும், பெண்பால் பற்றிவந்தனை மூதின்முல்லை யெனவும் கூறுப. ‘கொற்றவை’ நிலை என்றதனானே, குறிஞ்சித் திணைக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம். உதாரணம்: ``ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக் கூளி மலிபடைக் கொற்றவை மீளி அரண்முருங்க வாகோள் கருதி னடையார் முரண்முருங்கத் தான்முந் துறும்’’ (புறப்.வெட்சி. 20) (4) 63. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளு முறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழ்ப் போந்தை வேம்பே யாரென வரூஉ மாபெருந் தானையர் மலைந்த பூவும் வாடா வள்ளி வயவ ரேத்திய ஓடாக் கழனிலை யுளப்பட வோடா உடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையும் மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் ஆரம ரோட்டலு மாபெயர்த்துத் தருதலுஞ் சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலும் தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும் மனைக்குரி மரபினது கரந்தை யன்றியும் வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென் றிருவகைப் பட்ட பிள்ளை நிலையும் வாண்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க நாடவற் கருளிய பிள்ளை யாட்டும் காட்சி கல்கோ ணீர்ப்படை நடுதல் சீர்த்த மரபிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபிற் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே. வேலன் முதலாக வெட்சித்திணைக்குரிய துறை கூறினார். இனி அதற்கு மாறாகிய கரந்தைத்திணை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அதுவும் ஆநிரை மீட்டல் காரணமாக அந்நிலத்தின் கண் நிகழ்வதாகலின் வெட்சிப்பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனாயிற்று. இ-ள்: வெறியாட்டயர்ந்த காந்தளு மென்பது முதலாகத்தலைத் தாணெடுமொழி தன்னொடு புணர்த்தலும் என்பது ஈறாகச் சொல்லப்பட்ட பதின்மூன்று துறையும் காட்சி முதலாக வாழ்த்தல் ஈறாகக் கல்லொடு புணர்த்துக் கூறும் துறையொடுங் கூடச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைத்து. வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - வெறியாடுதலை அறியும் சிறப்பினையுடைய வெவ்விய வாயினையுடைய வேலன் வெறியாடிய காந்தளும், காந்த ளென்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவாருளராகலின், வெறியாட் டயர்ந்த காந்த ளென்றார். அன்றியும், காந்தள் என்பது மடலேறுதலான் அத்துணை யாற்றாளாகிய பெண்பால்மாட்டு நிகழும் வெறி ‘காந்தள்’ எனவும் பெயராம். இதனானே காமவேட்கையின் ஆற்றாளாகிய பெண்பாற் பக்கமாகிய வெறியும் அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ்வெறி இந்நிலத்திற்குச் சிறந்தமை அறிக. இது வெட்சிப் பின்னர் வைத்தார், பெரும்பான்மையும் குறிஞ்சி பற்றி நிகழுமாகலின். உதாரணம்: ``வெய்ய நெடிதுயிரா வெற்ப னளிநினையா ஐய நனிநீங்க வாடினாள் மையல் அயன்மனைப் பெண்டிரோ டன்னைசொ லஞ்சி வியன்மனையு யாடும் வெறி.’’ (வெண்பா. இருபாற்பெருந்திணை.10) இது காமவேட்கை தோற்றாமல் தலைமகள்தானே முருகு மேல்நிறீஇ யாடியது. வென்றி வேண்டியாடுதற்குச் செய்யுள் சிலப்பதிகாரத்து வேட்டுவவரியுட் கண்டுகொள்க. இனி வேலன் தானே ஆடியதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. உறு பகை வேந்து இடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தை வேம்பு ஆர் என வரும் மா பெருந் தானையர் மலைந்த பூவும் - மிக்கபகை வேந்தன் வேறுபாடு தெரிதல் வேண்டி உயர்ந்த புகழையுடைய போந்தை யெனவும் வேம்பெனவும் ஆரெனவும் தமிழ்நாட்டு நிலவேந்தர் சூடிய பூவும், உதாரணம்: ``குடையலர் காந்தட்டன் கொல்லிச் சுனைவாய்த் தொடையவிழ் தண்குவளை சூடான் புடைதிகழுந் தேரதிரப் பொங்குந் திருந்துவேல் வானவன் போரெதிரிற் போந்தையாம் பூ.’’ (புறப். பொது. 1) இது சேரன் பூ. ``தொடியணிதோள் ளாடவர் தும்பை புனையக் கொடியணிதேர் கூட்டணங்கும் போழ்தின் முடியணியும் காத்தல்சால் செங்கோற் கடுமா னெடுவழுதி ஏத்தல்சால் வேம்பி னிணர்.’’ (புறப். பொது. 2) இது பாண்டியன் பூ. ``கொல்களி றூர்வர் கொலைமலி வாண்மறவர் வெல்கழல் வீக்குவர் வேலிளைஞர் மல்குங் கலங்க லொலிபுனற் காவிரி நாடன் அலங்க லமரழுவத் தார்.’’ (புறப். பொது. 9) இது சோழன் பூ. நிரைகோள் கேட்டவழி நெடுநில வேந்தரும் கதுமென எழுவராதலின், நிரை மீட்டலின்கண் பூப் புகழப்பட்டது. வாடா வள்ளி - வாடுதல் இல்லாத வள்ளி, ‘வள்ளி’ என்பது ஒரு கூத்து; அஃது அந்நிலத்தின் நிகழ்தலின் ‘வாடா வள்ளி’ என்றார். உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. வயவர் ஏத்திய ஓடா கழல் நிலை - வீரராற் புகழப்பட்ட கெடாத கழல் நிலை, உதாரணம்: ``வாளமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ கேளலார் நீக்கிய கிண்கிணிக்காற் காளை கலங்கழல் வாயிற் கடுத்தீற்றி யாற்றாற் பொலங்கழல் கான்மேற் புனைவு.’’ (புறப். பொது. 7) ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும் - ஓடாத வெகுண்ட வேந்தரைச் சாத்திய உன்ன நிலையும், ‘உன்னம்’ என்பது மரம். அது தன் நாட்டகத்துக் கேடுவருங்கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் நிற்கும். உதாரணம்: ``துன்னருந் தானைத் தொடுகழலான் றுப்பெதிர்ந்து முன்னர் வணங்கார் முரண்முருங்க மன்னரும் ஈடெலாந் தாங்கி யிகலவிந்தார் நீயுநின் கோடெலா முன்னங் குழை.’’ (புறப். பொது. 4) பிறவும் நிமித்தமாகி வருவன வெல்லாவற்றிற்கும் இதுவே துறையாகக் கொள்க. மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின் தாவா விழுப் புகழ் பூவை நிலையும் - மாயோனைப் பொருந்திய நிலைபெற்ற பெருஞ் சிறப்பினையுடைய கெடாத விழுப்புகழைப் பொருந்திய பூவை நிலையைக் கூறுதலும், பூவை மலர்ச்சியைக் கண்டு மாயோன் நிறத்தை யொத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின், அக்காட்டிடைச் செல்வோர் அப் பூவையைக் கண்டு கூறுதல். உன்னம் கண்டு கூறினாற் போல இதுவும் ஒரு வழக்கு. உதாரணம்: ``பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோய் யாவை விழுமிய யாமுணரேம் மேவார் மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை நிறத்தொடு நேர்தருத லான்.’’ (புறப். பாடாண். 4) இஃது உரையன்றென்பார், மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவைநிலை யென்ப. உதாரணம்: ``இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த அந்தரத்தா னென்னிற் பிறையில்லை அந்தரத்திற் கோழியா னென்னின் முகனொன்றே கோதையை யாழியா னென்றுணரற் பாற்று.’’ வேறு கடவுளரை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவை நிலையாகக் கொள்க. என்னை? ``ஏற்றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனும் ஆற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே கூற்றக் கணிச்சியான் கண்மூன் றிரண்டேயாம் ஆற்றல்சால் வானவன் கண்.’’ என முத்தொள்ளாயிரத்து வந்தவாறு காண்க. பிறவும் அன்ன. பூவை நிலையும் அந்நிலத்தின் தெய்வமாகிய கருப்பொரு ளாதலின், அதன் மேல் வந்தது. ஆர் அமர் ஓட்டலும் - அரிய அமரைப் போக்குதலும், உதாரணம்: ``புலிக்கணமுஞ் சீயமும் போர்க்களிறும் போல்வார் வலிச்சினமு மானமுந் தேசும் ஒலிக்கும் அருமுனை வெஞ்சுரத் தான்பூசற் கோடிச் செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து.’’ (புறப். கரந்தை. 4) ஆ பெயர்த்துத்தருதல் - நிரை மீட்டல், உதாரணம்: ``அழுங்கனீர் வையகத் தாருயிரைக் கூற்றம் விழுங்கியபின் வீடுகொண் டாற்றாற் செழுங்குடிகள் தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கொண்டார் நேரார்கைக் கொண்ட நிரை.’’ (புறப். கரந்தை 1) எனவும், ``ஏன்றுகூழறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணாய் செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ளம் முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத் தாவுபு செறிதரு மான்மேற் புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே.’’ (புறம். 259) எனவும் வரும். சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்துலும் - சீர்மை பொருந்திய வேந்தனது மிகுதியை எடுத்துக் கூறலும், உதாரணம்: ``அங்கையு ணெல்லி யதன்பய மாதலாற் கொங்கலர் தாரான் குடைநிழற்கீழ்த் தங்கிச் செயிர்வழங்கும் வாளமருட் சென்றடையார் வேல்வாய் உயிர்வழங்கும் வாழ்க்கை யுறும்.’’ (புறப். கரந்தை. 13) இது மற்றுள்ள திணைக்கும் பொது. தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்துலும் - தன் மாட்டுள்ள போர்வலி முயற்சியினாலே கொடுஞ்சொற்களைத் தன்னொடு புணர்த்திக் கூறுதலும், உதாரணம்: ``ஆளமர் வெள்ளம் பெருகி னதுவிலக்கி வாளொடு வைகுவேம் யாமாக நாளுங் கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோ யீயப் பிழிமது வுண்பார் பிறர்.’’ (புறப். கரந்தை. 11) இது மற்றுள்ள திணைக்கும் பொது. வரு தார் தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலையும் - மேல்வருகின்ற கொடிப் படையைத்தாங்கலும் வாள் வாய்த்துலாற் படுதலும் என இரண்டு வகைப்பட்ட பிள்ளை நிலையும், உதாரணம்: ``பிள்ளை கடுப்பப் பிணம்பிறங்க வாளெறிந்து கொள்ளைகொ ளாயந் தலைக்கொண்டார் எள்ளிப் பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான் ஒருதனியே நின்றா னுளன்.’’ (புறப். கரந்தை. 7) இது வருதார் தாங்கல். ``உரைப்பி னதுவியப்போ வொன்னார்கைக் கொண்ட நிரைப்பி னெடுந்தகை சென்றான் புரைப்பின் றுளப்பட்ட வாயெல்லா மொள்வாள் கொளவே களப்பட்டான் சென்றான் கரந்து.’’ (புறப். கரந்தை. 6) இது வாள் வாய்த்துக் கவிழ்தல். வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும் - வாளான் மாறுபட்டு எழுந்தவனை மகிழ்ந்து பறை ஒலிப்ப அவற்குத் துறக்கமாகிய நாட்டை அளித்த பிள்ளையாட்டும், உதாரணம்: ``மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து கூட்டிய வெஃகங் குடர்மாலை சூட்டியபின் மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட வேறிரிய விம்முந் துடி.’’ (புறப். கரந்தை. 9) காட்சி - (போர்க்களத்துப்பட்ட வீரரைக் கல் நிறுத்தற் பொருட்டுக்) கற் காண்டல், உதாரணம்: ``மிகையணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர் புகையணங்கப் பூமாரி சிந்திப் பகையணங்கும் வீளைக் கடுங்கணையால் வேறாகி விண்படர்ந்த காளைக்குக் கண்டமைத்தார் கல்.’’ (புறப். பொது. 8) கல்கோள் - (அவ்வாறு காணப்பட்ட) கல்லைக் கைக்கோடல், உதாரணம்: ``பூவொடு நீர்தூவிப் பொங்க விரைபுகைத்து நாவுடை நன்மணி நன்கியம்ப மேவார் அழன்மறங் காற்றி யவிந்தாற்கென் றேத்திக் கழன்மறவர் கைக்கொண்டார் கல்.’’ (புறப். பொது. 9) நீர்ப்படை - (அக்கல்லை) நீர்ப்படுத்தல், உதாரணம்: ``காடு கனற்றக் கதிரோன் சினஞ்சொரியக் கூடிய வெம்மை குளிர்கொள்ளப் பாடி நயத்தக மண்ணி நறுவிரைகொண் டாட்டிக் கயத்தகத் துய்த்திட்டார் கல்.’’ (புறப். பொது. 10) நடுதல் - (அக்கல்லை) நடுதல், உதாரணம்: ``மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப் பீலி மணிந்து பெயர்பொறித்து வேலமருள் ஆண்டக நின்ற வமர்வெய்யோற் கிஃதென்று காண்டக நாட்டினார் கல்.’’ (புறப். பொது. 12) சீர் தகு மரபின் பெரும்படை - மிகவுந் தக்க மரபினையுடைய பெரும்படையினும், அஃதாவது, நாட்டிய கல்லிற்குக் கோட்டஞ் செய்தல். அஃது இற்கொண்டு புகுதலென உரைத்த துறை. (கோட்டம் - கோயில். படை - படைத்தல்). உதாரணம்: ``வாட்புகா வூட்டி வடிமணி நின்றியம்பக் கோட்புலி யன்ன குரிசில்க லாட்கடிந்து விற்கொண்ட வென்றி விறன்மறவ ரெல்லாரும் இற்கொண்டு புக்கா ரியைந்து.’’ வாழ்த்து - (அக்கல்லைப்) பழிச்சுதல், உதாரணம்: ``அடும்புகழ் பாடி யழுதழு தாற்றா திடும்பையுள் வைகி யிருந்த கடும்பொடு கைவண் குரிசில்கற் கைதொழுது செல்பாண தெய்வமாய் நின்றான் றிசைக்கு.’’ (புறப். பொது. 13) இவையெல்லாம் கரந்தைக்கு உரித்தாக ஓதப்பட்டன வேனும், ‘ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும், வருவகை தானே வழக்கென மொழிப’ (பொருளியல் 28) என்றதனான், மறத்துறை ஏழிற்கும் கொள்ளப்படும். ஈண்டு ஓதப்பட்ட இருபத்தொரு துறையினும் நிரை மீட்டற் பொருண்மைத்தாகிக் கரந்தையென ஓதப்பட்டன ஏழாயின. கரந்தையாயினவாறு என்னையெனின், வெறியாட்டும் வள்ளிக் கூத்தும் மலைசார்ந்த இடத்து வழங்குதலின், வந்த நிலத்திற்கு உரிய பொருளாகி வந்தன. பூவை நிலையும் அந்நிலத்தைச் சார்ந்து வருவதோர் தெய்வ மாதலின், அந்நிலத்தின் கருப்பொருளாகி வந்தது. கற்கோள் நிலையாறும் உன்ன நிலையும் முடியுடை வேந்தர் சூடும் பூவும் கழல்நிலையும் ஏனையவற்றிற்கும் பொதுவாகலான், எடுத்துக்கொண்ட கண்ணே கூறுதல் இலக்கணமாதலின் ஈண்டு ஓதப்பட்டவென வுணர்க. பன்னிருபடலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சிலதுறை கூறினாராகலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின், அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் குன்றக் கூறலும் மிகைபடக் கூறலு மாயவாறு எடுத்துக் காட்டின் பெருகுமாதலான், உய்த்துணர்ந்து கண்டு கொள்க. இத்துணையும் கூறப்பட்டது வெட்சித்திணை. (5) 64. வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. இது, வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வஞ்சி முல்லையது புறன் - வஞ்சியாகிய புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறனாம். எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தன்று - அஃது, ஒழியாத மண்ணை நச்சுதலையுடைய வேந்தனை மற்றொரு வேந்தன் அஞ்சுதகத்தலைச்சென்று அடல் குறித்தது. ஒழியாத மண்ணை நச்சுதலாவது, வேண்டிய அரசர்க்குக் கொடாமை. ‘அகத்திணை மருங்கின் அரிறப உணர்ந்தோர், புறத்திணை யிலக்கணம் திறப்படக் கிளப்பின்’ (புறத். 1) என்பதனைக் கொணர்ந்து உரைத்துக் கொள்க. இவ்வுரை இனி வருகின்ற திணைக்கும் ஒக்கும். அதற்கு இது புறனாகியவாறு என்னையெனின், ‘மாயோன் மேய காடுறை யுலகமும்’ (அகத். 5) கார்காலமும் முல்லைக்கு முதற்பொருளாதலானும், பகைவயிற் சேறலாகிய வஞ்சிக்கு நிழலும் நீருமுள்ள காலம் வேண்டுத லானும், பருமரக் காடாகிய மலைசார்ந்த இடம் ஆகாமையானும் அதற்கு இது சிறந்ததென்க. அன்னதாகல் முல்லைப் பாட்டினுள், ``கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி வேட்டுப் புழையருப்ப மாட்டிக் காட்ட இடுமுட் புரிசை யேமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி.’’ (முல்லைப். 24 - 28) என்பதனானும் அறிக. (6) 65. இயங்குபடை யரவ மெரிபரந் தெடுத்தல் வயங்க லெய்திய பெருமை யானுங் கொடுத்த லெய்திய கொடைமை யானும் அடுத்தூர்ந் தட்ட கொற்றத் தானும் மாராயம் பெற்ற நெடுமொழி யானும் பொருளின் றுய்த்த பேராண் பக்கமும் வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் றாங்கிய பெருமை யானும் பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வுங் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே. இது, வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இயங்குபடை யரவம் முதலாகத் தழிஞ்சியொடு கூடச் சொல்லப்பட்ட பதின்மூன்றும் வஞ்சித்துறையாம் என்றவாறு. ‘பெருமையானும்’ என்பது முதலாக வந்த ‘ஆன்’ எல்லாம் இடைச்சொல்லாகி வந்தன. ‘இயங்குபடை யரவம் மெரிபரந் தெடுத்தல்’ என்பதன்கண் உம்மை தொக்கு நின்றது. படை இயங்கு அரவம் - படையெழும் அரவம், உதாரணம்: ``சிறப்புடை மரபின் பொருளு மின்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை உருகெழு மதியி னிவந்துசேண் விளங்க நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல் லாயே நுதிமுக மழுங்க மண்டி யொன்னார் கடிமதில் பாயுநின் களிறடங் கலவே போரெனிற் புகலும் புனைகழன் மறவர் காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய செல்வே மல்லே மென்னார் கல்லென் விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக் குணகடல் பின்ன தாகக் குடகடல் வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப வலமுறை வருவது முண்டென் றலமந்து நெஞ்சுநடுங் கவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே.’’ (புறம். 31) எரி பரந்தெடுத்தல் - (பகைவரது நாடு) எரி பரந்து கிளர்தல், உதாரணம்: ``வினைமாட்சிய விரை புரவியொடு மழையுருவின தோல்பரப்பி முனைமுருங்கத் தலைச்சென்றவர் விளைவயல் கவர்பூட்டி மனைமரம் விறகாகக் கடிதுறைநீர்க் களிறுபடீஇ எல்லுப் படவிட்ட சுடுதீ விளக்கஞ் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப் புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத் துணைவேண்டாச் செருவென்றிப் புலவுவாட் புலர்சாந்தின் முருகற் சீற்றத் துருகெழு குரிசில் மயங்குவள்ளை மலராம்பற் பனிப்பகன்றைக் கனிப்பாகற் கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணை பாழாக ஏம நன்னா டொள்ளெரி யூட்டி நாம நல்லமர் செய்ய ஓராங்கு மலைந்தன பெருமைநின் களிறே.’’ (புறம். 16) வயங்கல் எய்திய பெருமையும் - விளக்கம் எய்திய பெருமையும், உதாரணம்: ``இருங்கண்ணி யானையொ டருங்கலந் தெறுத்துப் பணிந்துகுறை மொழிவ தல்லது பகைவர் வணங்கா ராதல் யாவதோ மற்றே உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்கு கண்ணதிர்பு முழங்குங் கடுங்குரன் முரசம் கால்கிளர்ந் தன்ன வூர்தி கான்முளை எதிர்நிகழ்ந் தன்ன சிறையருஞ் சீற்றத்து நளியிரும் பரப்பின் மாக்கடல் முந்நீர் நீர்துனைந் தன்ன செலவின் நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே.’’ (பதிற்றுப்பத்து) கொடுத்தல் எய்திய கொடைமையும் - கொடுத்தலைப் பொருந்திய கொடைமையும், உதாரணம்: ``பாணர் தாமரை மலையவும் புலவர் பூணுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் மறனோ மற்றிது விறல்மாண் குடுமி இன்னா வாகப் பிறர்மண் கொண் டினிய செய்திநின் னாவலர் முகத்தே.’’ (புறம். 12) அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றமும் - பகைவர் பலரையும் அடுத்து மேலிட்டுக் கொன்ற கொற்றமும், உதாரணம்: ``திண்பிணி முரச மிழுமென முழங்கச் சென்றமர் கடத்தல் யாவது வந்தோர் தார்தாங் குதலு மாற்றார் வெடிபட் டோடன் மரீஇய பீடின் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்து தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழன் மன்னர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் மாதோ வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத் தண்ணல் யானை யடுகளத் தொழிய வருஞ்சமந் ததைய நூறிநீ பெருந்தகை விழுப்புண் பட்ட வாறே.’’ (புறம். 93) மாராயம் பெற்ற நெடுமொழியும் - மாராயமாகிய உவகை பெற்ற நெடிய மொழியும், உதாரணம்: ``துடியெறியும் புலைய வெறிகோல்கொள்ளு மிழிசின கால மாரியி னம்பு தைப்பினும் வயற்கெண்டையின் வேல்பிறழினும் பொலம்புனை யோடை யண்ணல் யானை இலங்குவாண் மருப்பி னுதிமடுத் தூன்றினும் ஓடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளுந் தண்ணடை பெறுதல் யாவது படினே மாசின் மகளிர் மண்ண நன்றும் உயர்நிலை யுலகத்து நுகர்ப வதனால் வம்ப வேந்தன் றானை இம்பர் நின்றுங் காண்டிரோ வரவே.’’ (புறம். 287) பொருள் இன்று உய்த்த பேர் ஆண் பக்கமும் - பகைவரைப் பொருளாக மதியாது செலுத்தின பேர் ஆண் பக்கமும், உதாரணம்: ``ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.’’ (புறம். 9) விசை வரு புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையும் - விசை கொண்டுவரும் புனலைக் கற்சிறை தாங்கினாற் போல ஒருவன் தாங்கிய பெருமையும், உதாரணம்: ``வீடுணர்ந் தார்க்கும் வியப்பாமா லிந்நின்ற வாடன் முதியாள் வயிற்றிடங் - கூடார் பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரா இரும்புலி சேர்ந்த இடம்.’’ (புறப். வஞ்சி. 19) எனவும், ``வேந்துடைத்தானை முனைகெட நெரிதர ஏந்துவாள் வலத்த னொருவ னாகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற் காழி யனையன் மாதோ வென்றும் பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப் புரவிற் காற்றாச் சீறூர்த் தொன்மை சுட்டிய வண்மை யோனே.’’ (புறம். 330) எனவும் வரும். பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் - திரட்சி பொருந்தின பெருஞ்சோற்று நிலையும், உதாரணம்: ``இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளும் மல்குறு கான லோங்குமண லடைகரை தாழடம்பு மலைந்த புணரி வளைஞரல விலங்குகதிர் முத்தமொடு வார்துகி ரெடுக்குந் தண்கடற் படப்பை மென்பா லனவும் காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் செங்கோட் டாமா னூனொடு காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்குங் குன்றுதலை மணந்தவன்புல வைப்பும் கால மன்றியுங் கரும்புய்த் தொழியா தரிகா லவித்துப் பல்பூ வுழவர் தேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும் பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாய முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயருஞ் செழும்பல் வைப்பிற் பழனப் பாலும் ஏன லுழவர் வரகுமீ திட்ட கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும் புன்புலந் தழீஇய புறவணி வைப்பும் பல்பூஞ் செம்மற் காடுபய மாறி அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண் டொண்ணுதன் மகளிர் கழலொடு மறுகும் விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் பணைகெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக் கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத் தருந்திறல் மரபிற் கடவுட் பேணி உயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி என்றவாறும்பு மூசா விறும்பூது மரபிற் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற் பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர் உருமுநில னதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியுங் கடுஞ்சின வேந்துசேண் டழங்குகுரன் முரசே.’’ (பதிற்றுப். 30) வென்றோர் விளக்கமும் - வென்றோர் மாட்டு உளதாகிய விளக்கமும், ``அறாஅ யாண ரகன்கட் செறுவின் அருவி யாம்ப னெய்தலொ டரிந்து செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப் பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின் அம்பண வளவை யுறைகுவித் தாங்குக் கடுந்தே னுறுகிளை மொசிந்தன துஞ்சுஞ் செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாரின் அலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே ஊரெரி கவர உருத்தெழுந் துரைஇப் போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர் குண்டுக ணகழிய குறுந்தாண ஞாயில் ஆரெயிற் றோட்டி வவ்வினை யேறொடு கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ வான்பயம் வாழுநர் கழுவுடலை மடங்கப் பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென அருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற் பெருங்களிற் றியானையோ டருங்கலந் தராஅர் மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற் பலிகொண்டு பெயரும் பசாசம் போலத் திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி அறிந்தனை யருளா யாயின் யாரிவ ணெடுந்தகை வாழு மோரே.’’ (பதிற்றுப். 71) தோற்றார் தேய்வும் - தோற்றோர் தேய்வு கூறுதலும், உதாரணம்: ``வான்மருப்பிற் களிற்றியானை மாமலையிற் கணங்கொண்டவர் எடுத்தெறிந்த விறன்முரசங் கார்மழையிற் கடிதுமுழங்கச் சாந்துபுலர்ந்த வியன்மார்பிற் றொடிசுடர்வரும் வலிமுன்கைப் புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்காற் பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வாள் ஒடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென அம்புடை வலத்தர் ருயர்ந்தோர் பரவ அனையை யாகன் மாறே பகைவர் கால்கிளர்ந்து தன்ன கதழ்பரிப் புரவிக் கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசைத் தொலையாக் கற்பநின் றெம்முனை யானே.’’ (பதிற்றுப். 80) குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளையும் - குறைவுறுதலைச் செய்யாத வென்றிச் சிறப்பினையுடைய கொற்றவள்ளையும், கொற்றவள்ளை - தோற்ற கொற்றவன் அளிக்கும் திறை. உதாரணம் வந்துழிக் காண்க. அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ - மாற்றார் விடு படைக்கலன் முதலியவற்றைத்தம்மாட்டுத்தடுத்து உளன் அழிந்தோர்ப் பேணித்தழுவிக்கோடலொடு தொகுத்து எண்ணின், உதாரணம்: ``வருகதில் வல்லே வருகதில் வல்லென வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப நூலரி மாலை சூடிக் காலிற் றமியன் வந்த மூதி லாளன் அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த ஒருகை யிரும்பிணத் தெயிறுமிறை யாகத் திரிந்த வாய்வா டிருத்தாத் தனக்கிரிந் தானைப் பெயர்புற நகுமே.’’ (புறம். 284) இத்துணையும் கூறப்பட்டது வஞ்சி. ``உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி அறிந்தனை யருளா ராயின் யாரிவ ணெடுந்தகை வாழு மோரே’’ (பதிற்றுப். 71) என்பதும் இதன்கண் அடங்கும். இது முதுமொழி வஞ்சி. கழி பெருஞ் சிறப்பின் பதின்மூன்று துறை - மிகப் பெருஞ் சிறப்பையுடைய பதின்மூன்று துறைத்தாம். வென்றோர் விளக்கம் முதலிய மூன்று மொழிந்த ஏனையவெல்லாம் இரு திறத்தினர்க்கும் பொதுவாக நிற்றலின் கழிபெருஞ் சிறப்பெனக் கூறினார். இன்னும் ‘கழிபெருஞ் சிறப்பின்’ என்றமையின், பேரரசர் துணையாக வந்த குறுநில மன்னரும் தாமும் பொலிவெய்திப் பாசறை நிலை உரைத்தலும் பிறவும் கொள்க. இவைபற்றியன துணைவஞ்சி. ‘நீயே புறவி னல்லல்’ (புறம். 46) ‘வள்ளியோர்ப் படர்ந்து’ (புறம். 47) என்னும் புறப்பாட்டுக்களில் காண்க. பிறவும் அன்ன. (7) 66. உழிஞை தானே மருதத்துப் புறனே முழுமுத லரண முற்றலுங் கோடலும் அனைநெறி மரபிற் றாகு மென்ப. இஃது, உழிஞைத்திணை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உழிஞை மருதத்துப் புறன் - உழிஞை என்னும் புறத்திணை மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாம். முழு முதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற்று ஆகும் - அது முழுமுதல் அரணம் முற்றுதலும் அழித்தலுமாய் வருந்தன்மைத்தாகிய நெறியை மரபாக உடைத்து. ‘முதல் அரணம்’ என்றதனான், தலையும் இடையும் கடையும் என மூவகைப் படுமவற்றுள் தலையரண். அஃதாவது, அரணிற்குக் கூறுகின்ற இலக்கணம் பலவும் உடைத்தாதல். மருதத்திற்கு இது புறனாயவாறு என்னையெனின், வஞ்சியிற் சென்ற வேந்தனொடு போர்செய்த லாற்றாது உடைந்து மாற்றுவேந்தன் அரண் வலியாகப் போர் செய்யுமாகலானும், அவர் நாட்டகத்தாகலானும், அவ்வழிப் பொருவார்க்கு விடியற்பொழுது காலமாகலானும், அதற்கு இது புறனாயிற்று. நாட்டெல்லையின் அழிப்பு உழிஞையாகுமோ வெனின், அது பெரிதாயின் அதன்பாற்படும்; சிறிதாயின் வெட்சியுள் ஓதின ஊர்க்கொலை (புறத்திணை. 3) யுள் அடங்கும். (8) 67. அதுவே தானு மிருநால் வகைத்தே. இஃது, உழிஞைத் திணையை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அதுதான் இருநால் வகைத்து - உழிஞைத்துறைதான் எட்டு வகைத்து. அவையாமாறு முன்னர்க் காணப்படும். (ஏகாரமும் உம்மையும் அசைகள்). (9) 68. கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்புந் தொல்லெயிற் றிவர்தலுந் தோலது பெருக்கமும் அகத்தோன் செல்வமு மன்றி முரணிய புறத்தோ னணங்கிய பக்கமுந் திறற்பட ஒருதான் மண்டிய குறுமையு முடன்றோர் வருபகை பேணார் வாரெயி லுளப்படச் சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே. இதுவும் உழிஞை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் முதலாகச் சொல்லப்பட்டன உழிஞைத்துறையாம். கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் பகைவரது தேயத்தைக் கொள்ளக் குறித்த கொற்றமும். (கொள்ளார் - தன்னை இறையெனக் கொள்ளாரும் தன் ஆணையைக் கொள்ளாரும்). உதாரணம்: ``ஆனா வீகை அடுபோ ரண்ணனின் யானையு மலையிற் றோன்றும் பெருமநின் றானையுங் கடலி னொலிக்கும் வைநுனுதி வேலு மின்னின் விளங்கு ஞாலத் தரசுதலை பனிக்கு மாற்றலை யாதலிற் புரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே தண்புனற்பூச லல்லது நொந்து களைக வாழி வளவ வென்றுநின் முனைதரு பூசல் கனவினு மறியாது புலிபுறங் காக்குங் குருளை போல மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப் பெருவிறல் யாணர்த் தாகி யரிநர் கீழ்மடைக் கொண்ட வாளையு முழவர் படைமிளிர்ந் திட்ட யாமையு மறைநர் கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை நீர்தரு மகளிர் குற்ற குவளையும் வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தமரும் மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந மலையி னிழிந்து மாக்கட னோக்கி நிலவரை யிழிதரும் பல்யாறு போலப் புலவ ரெல்லா நின்னோக் கினரே நீயே, மருந்தில் கணிச்சி வருந்தவட் டித்துக் கூற்று வெகுண்டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே.’’ (புறம். 42) உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் - நினைத்தது முடிக்கலாகும் வேந்தனது சிறப்பும், உதாரணம்: ``அடுநை யாயினும் விடுநை யாயினும் நீயளந்து தறிவை நின்புரைமை வார்கோற் செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடுந் தண்ணான் பொருநை வெண்மணற் சிதையக் கருங்கைக் கொல்ல னரஞ்செய் யவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறுங் கடிமரந் தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப ஆங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின் சிலைத்தார் முரசங் கறங்க மலைத்தனை யென்பது நாணுத்த வுடைத்தே.’’ (புறம். 36) இன்னும் ‘உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு’ மென்றதனால் அகத்தரசனை யழித்தது கூறலும் கொள்க. உதாரணம்: ``இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிகல் பெறாஅ திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி நிலமிசைப் புரளுங் கையவெய் துயிர்த் தலமரல் யானை யுருமென முழங்கவும் பாலில் குழவி யலறவு மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில் வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும் இன்னா தம்ம வீண்டினி திருத்தல் துன்னருந் துப்பின் வயமான் றோன்றல் அறவை யாயி னினதெனத் திறத்தல் மறவை யாயிற் போரொடு திறத்தல் அறவையும் மறவையு மல்லை யாயின் திறவா தடைத்து திண்ணிலைக் கதவின் நீண்மதி லொருசிறை யொடுங்குதல் நாணுத்துக வுடைத்திது காணுங் காலே.’’ (புறம். 44) தொல் எயிற்று இவர்தலும் - தொல் எயிலின்கண் பரத்தலும், உதாரணம்: ``புல்லார் புகலொடு போக்கொழியப் பொங்கினனாய்ப் பல்லார் மருளப் படைபரப்பி யொல்லார் நிறத்திறுத்த வாட்டானை நேரார் மதிலின் புறத்திறுத்தான் பூங்கழலி னான்.’’ (புறப். உழிஞை. 10) தோலது பெருக்கமும் - தோற்படையினது பெருமையும், உதாரணம்: ``நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி இன்றுநாம் வைக லிழிவாகும் வென்றொளிரும் பாண்டி னிரைதோற் பணியார் பகையரணம் வேண்டி லெளிதென்றான் வேந்து.’’ (புறப். உழிஞை. 12) அகத்தோன் செல்வமும் - அகத்தரசனது செல்வமும், உதாரணம்: ``அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரசின் மூவிரு முற்றினும் உழவ ருழாதன நான்குபய னுடைத்தே ஒன்றே, செறியிலை வெதிரி னெல்விளை யும்மே இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே வான்க ணற்றவன் மலையே வானத்து மீன்க ணற்றதன் சுனையே யாங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந் தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன் யானறி குவெனது கொள்ளு மாறே சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினர் செலினே நாடுங் குன்று மொருங்கீ யும்மே.’’ (புறம். 109) அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் - அன்றியும் பகைத்த புறத்தரசன் வருந்திய பக்கமும், உதாரணம்: ``நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த வேக வெந்திற னாகம் புக்கென விசும்புதீப் பிறப்பத் திருகப் பசுங்கொடிப் பெருமலை விடரகத் துருமெறிந் தாங்குப் புள்ளுறு புன்கண் டிர்த்த வெள்வேற் சினங்கெழு தானைச் செம்பியன் மருக கராஅங் கலித்த குண்டுகண் ணகழி இடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉங் கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச் செம்புறழ் புரிசைச் செம்மல் மூதூர் வம்பணி யானை வேந்தகத் துண்மையின் நல்லஎன் னாது சிதைத்தல் வல்லையா னெடுந்தகை செருவத் தானே.’’ (புறம். 37) திறற்பட ஒருதான் மண்டிய குறுமையும் - வலிபட ஒரு தானாகிச் சென்ற குற்றுழிஞையும், உதாரணம்: ``கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டுக் குடுமி களைந்த வேம்பி னொண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மலைந்து குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் யார்கொல் வாழ்கவண் கண்ணிதார் பூண்டு தாலிகளைந் தன்று மிலனே பால்விட் டயினியு மின்றயின் றனனே வயின்வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்று மிழிந்தன்று மிலனே யவரை அழுந்தப் பற்றி யகல்விசும் பார்ப்பெழக் கவிழ்ந்துநிலஞ் சேர வட்டதை மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே.’’ (புறம். 77) உடன்றோர் வருபகை பேணார் வாரெயில் - வெகுண்டு வருகின்ற படையைப் பேணார் வாரெயில் உழிஞையும். உதாரணம்: ``மயிற்கணத் தன்னார் மகிழ்தேற லூட்டக் கயிற்கழலார் கண்கனல் பூப்ப வெயிற்கண்ணார் வீயப்போர் செய்தாலும் வென்றி யரிதரோ மாயப்போர் மன்னன் மதில்.’’ (புறப். உழிஞை. 11) உளப்படச் சொல்லப்பட்ட நாலிரு வகைத்து - உட்படக் கூறப்பட்ட எட்டு வகைத்து. பதினெட்டு, இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந் தொகை கூறினார். இது கூறியது கூறலன்று; தொகை. (10) 69. குடையும் வாளு நாள்கோ ளன்றி மடையமை யேணிமிசை மயக்கமுங் கடைஇச் சுற்றம ரொழிய வென்றுகைக் கொண்டு முற்றிய முதிர்வு மன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியு மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும் நீர்ச்செரு வீழ்ந்த பாசியு மதாஅன் றூர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் மதின்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும் இகன்மதிற் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும் வென்ற வாளின் மண்ணோ டொன்றத் தொகைநிலை யென்னுந் துறையொடு தொகைஇ வகைநான் மூன்றே துறையென மொழிப. இதுவும் அது. இ-ள்: குடை நாட்கோள் முதலாகச் சொல்லப்பட்டுள்ள பன்னிரண்டு துறையும் உழிஞைக்குரிய துறை. மேற்சொல்லப் பட்டவற்றின் விரியும் பன்னிரண்டு உள என்றவாறு. குடையும் வாளும் நாள்கோள் - குடைநாட்கோள் வாள்நாட் கோள் என வருவனவும், உதாரணம்: ``நெய்யணிக செவ்வே னெடுந்தேர் நிலைபுகுக கொய்யுளைமா கொல்களிறு பண்விடுக வையகத்து முற்றக் கடியரண மெல்லா முரணவிந்த கொற்றக் குடைநாட் கொள.’’ (புறப். உழிஞை. 2) இது குடைநாட்கோள். ``வாணாட் கொளலும் வழிமொழிந்து வந்தடையாப் பேணார் பிறைதொடூஉம் பேர்மதிற் பூணார் அணிகொள் வனமுலையா ராடரங்க மேறிப் பிணிகொள்பே யாடும் பெயர்த்து.’’ (புறப். உழிஞை. 3) இது வாள்நாட்கோள். மடைஅமை ஏணி மிசை மயக்கமும் - மதிலிடத்து மடுத்தல் அமைந்த ஏணி சார்த்தி அதன்மேல் பொரும் போர்மயக்கமும். உதாரணம்: ``சுடுமண் ணெடுமதில் சுற்றிப் பிரியார் கடுமுர ணெஃகங் கழிய வடுமுரண் ஆறினா ரன்றி யரவு முடும்பும்போல் ஏறினா ரேணி பலர்.’’ (புறப். உழிஞை. 19) கடைஇச் சுற்றமர் ஒழிய என்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும் செலுத்திச் சுற்றமர் ஒழிக என்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும். உதாரணம்: ``காலை முரச மதிலியம்பக் கண்கனன்று வேலை விறல்வெய்யோ னோக்குதலும் மாலை அடுது மடிசிலென் றம்மதிலு ளிட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு.’’ (புறப். உழிஞை. 23) முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் - முற்று அகப்பட்ட அகத்தினுள்ளான் வீழ்ந்த நொச்சியும். உதாரணம்: ``நீரற வறியா நிலமுதற் கழித்த கருங்கா னொச்சிக் கண்ணார் குரூஉத்தழை மெல்லியன் மகளிர்க் கல்குற் டொடலை யாகவுங் கண்டன மினியே வெருவரு குருதியொடு மயங்கி யுருவு கரந்து தெறுவாய்ப் பட்ட தெரிலூரன் செத்து பருந்துகொண் டுக்கவுங் கண்டனம் மறம்புகன் மைந்தன் மலைந்த வாறே.’’ (புறம். 271) அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையும் - நொச்சியின் புறத்தாகிய உழிஞையான் வீழ்ந்த புதுமையும், (‘மற்று’ என்பது அசை. ‘ஆன்’ என்பது இடைச்சொல்). உதாரணம்: ``கோடுயர் வெற்பி னிலங்கண் டிரைகருதுந் தோடுகொள் புள்ளின் றொகையொப்பக் கூடார் முரணகத்துப் பாற முழவுத்தோண் மள்ளர் அரணகத்துப் பாய்ந்திழிந்தா ரார்த்து.’’ (புறப். உழிஞை. 20) நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் - கிடங்கின் உளதாய போரின் கண்ணே வீழ்ந்த பாசி. உதாரணம்: ``நாவாயுந் தோணியு மேல்கொண்டு நண்ணாதார் ஓவார் விலங்கி யுடலவும் பூவார் அகழி பரந்தொழுகு மங்குருதிச் சேற்றுப் பகழிவாய் வீழ்ந்தார் பலர்.’’ (புறப். உழிஞை. 17) அஃது அன்று ஊர்ச்செரு வீழ்ந்த அதன் மறனும் - அஃது ஒழிய ஊர்ச்செருவின்கண் வீழ்ந்த பாசிமறனும், (‘மற்று’ என்பது அசை.) உதாரணம்: ``பாயினார் மாயும் வகையாற் பலகாப்பு மேயினா ரேய விகன்மறவர் ராயினார் ஒன்றி யவரற வூர்ப்புறத்துத் தார்தாங்கி வென்றி யமரர் விருந்து.’’ (புறப். நொச்சி. 2) மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும் - மதின்மேற் கோடற்குப் பரந்த மதிலோர் பக்கமும், உதாரணம்: ``அகத்துன வார்கழ னோன்றா ளரணின் புறத்தன போரெழிற் றிண்தோள் உறத்துழீஇத் தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட வாட்குரிசில் வானுலகி னான்.’’ (புறப். நொச்சி. 7) இகல் மதில் குடுமி கொண்ட மண்ணும் மங்கலமும் தம்முடன் இகலி மதில்மேல் நின்றானை அட்டு அவன் முடிக்கலம் கொண்ட மண்ணும் மங்கலமும், உதாரணம்: ``எங்கண் மலர வெயிற்குமரி கூடிய மங்கல நாள்யாம் மகிழ்தாங்கக் கொங்கலர்தார்ச் செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி.’’ (புறப். உழிஞை. 28) வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற - வென்ற வாளின் மண்ணும் மங்கலமும் பொருந்த, உதாரணம்: ``தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கக் கூர்த்தவாண் மண்ணிக் கொடித்தேரான் பேர்த்து மிஇடியார் பணைதுவைப்ப விம்மதிலுள் வேட்டான் புடையா ரறையப் புகழ்.’’ (புறப். உழிஞை. 27) தொகைநிலை - அம் மதிலழித்தமையான் மற்றுள்ள மதில்கள் வரைப்பில் மாறுபட்ட வேந்தரும் முரண் அவிந்தபடி யடைதல். உதாரணம்: ``வென்றுலந்த திரிய வேண்டுபுலத் திறுத்துவர் வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப நல்கினை யாகுமதி யெம்மென் றருளிக் கலம்பிறங்கு வைப்பிற் கடறரை யாத்தநின் றொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயிற் செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும் எந்திரத் தகைப்பி னம்புடை வாயிற் கோள்வல் முதலைய குண்டுகண் ணகழி வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி நின்னிற் றந்த மன்னெயி லல்லது முன்னும் பின்னுநின் முன்னோ ரோம்பிய எயில்முகப் படுத்தல் யாவது வளையினும் பிறிதாறு சென்மதி சினங்கெழு குருசில் பூஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகைக் குழூஉநிலைப் புதவிற் கதவமே காணில் தேம்பாய் கடாமொடு காழ்கை நீவி வேங்கை வென்ற பொறிகிளர் வுகர் நுதல் ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி மேம்படு வெல்கொடி நுடங்கத் தாங்க லாகா வாங்குநின் களிறே.’’ (பதிற்றுப். 53) என்னும் துறையொடு தொகைஇ வகை நால்மூன்று என மொழிப - என்னும் துறையொடு கூடி உழிஞை வகை பன்னிரண்டு என்று கூறுவர். (11) 70. தும்பை தானே நெய்தலது புறனே மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப. இது, தும்பைத்திணை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: தும்பை நெய்தலது புறன் - தும்பை என்னும் திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாம், மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலையழிக்கும் சிறப்பிற்று - அது வலி பொருளாகப் போர்கருதி வந்த அரசன்கண் சென்று அவனைத்தலையழிக்கும் சிறப்பினையுடைத்து. இதனானே ‘எதிரூன்றல் காஞ்சி’ (பிங்க. அநுபோக. 1474) என்பாரை மறுத்தவாறு அறிக. அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், இருபெரு வேந்தரும் ஒருகளத்துப் பொருதலின், அதற்கு இடம் காடும் மலையும் கழனியும் ஆகாமையானும், களரும் மணலும் பரந்த வெளி நிலத்துப் பொருதல் வேண்டு தலானும். அந்நிலம் கடல்சார்ந்த வழியல்லது இன்மையானும், நெய்தற்கு ஓதிய எற்பாடு போர்த்தொழிற்கு முடிவாதலானும் நெய்தற்குப் புறனாயிற்று. (‘என்ப’ அசை. ) (12) 71. கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற் சென்ற வுயிரி னின்ற யாக்கை இருநிலந் தீண்டா வருநிலை வகையோ டிருபாற் பட்ட வொருசிறப் பின்றே. இது, தும்பைத் திணையின் சிறப்பியல் உணர்த்துதல் நுதலிற்று. இது மேலனபோல ஒருபாற்கு மிகுதலின்றி இருவகை யார்க்கும் ஒத்து இயல்பிற்றாம்; ஒருவர்மாட்டும் மிகுதல் இல்லை. இ-ள்: கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை கணையும் வேலும் படைத்துணையாக் கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்ற யாக்கை, இருநிலம் தீண்டா அருநிலை வகையொடு - நீர் அட்டை காலவயப்பட்டு உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு, இருபால் பட்ட ஒரு சிறப்பின்று - இருபாற் படுக்கப்படும் அற்ற துண்டம் இணைந்தது போன்று ஆடலொத்த பண்பினை யுடையது. (இருநிலம் தீண்டா அரு - நீருட் கிடக்கும் அட்டை). (13) 72. தானை யானை குதிரை யென்ற நோனா ருட்கு மூவகை நிலையும் வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன் தான்மீண் டெறிந்த தார்நிலை யன்றியும் இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் ஒருவ னொருவனை யுடைபடை புக்குக் கூழை தாங்கிய பெருமையும் படையறுத்துப் பாழி கொள்ளு மேமத் தானுங் களிறெறிந் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு பட்ட வேந்தனை யட்ட வேந்தன் வாளோ ரோடு மமலையும் வாள்வாய்த் திருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரு மொழியாத் தொகைநிலைக் கண்ணுஞ் செருவகத் திறைவன் வீழ்வுறச் சினைஇ ஒருவனை மண்டிய நல்லிசை நிலையும் பல்படை யொருவற் குடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலு முளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. இது, தும்பைத்திணை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: நோனார் உட்கும் தானை யானை குதிரை என்ற மூவகை நிலையும் - பகைவரால் உட்கப்படுகின்ற தானையும் யானையும் குதிரையுமாகிய மூவகைப்பட்டவற்றினது நிலையும், தானை நிலை வருமாறு: ``வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக் கண்கூ டிறுத்த கடன்மருள் பாசறைக் குமரிப்படை தழீஇக் கூற்றுவினை யாடவர் தமர்பிற ரறியா வமர்மயங் கழுவத் திறையும் பெயருந் தோற்றி னுமருள் நாண்முறை தபுத்தீர் வம்மி னீங்கெனப் போர்மலைந் தொருசிறை நிற்ப யாவரும் அரவுமிழ் மணியிற் குறுகார் நிறைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே.’’ (புறம். 294) ``கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.’’ (குறள். 774) ``நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல் ஈர்ங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன் குடப்பாற் சில்லுறை போலப் படைக்குநோ யெல்லாந் தானா யினனே.’’ (புறம். 276) ``தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற் கொற்கத் துலந்தானு மாகுமாற் பிற்பிற் பலர்புகழ் செல்வந் தரூஉம்பற் பலர்தொழ வானக வாழ்க்கையு மீயுமா லன்னதோர் மேன்மை யிழப்பப் பழிவருவ செய்பவோ தானேயும் போகு முயிர்க்கு.’’ இஃது ஓர் வீரன் கூற்று. யானை நிலை வருமாறு: ``கையொடு கையோ டொருதுணி கோட்டது மொய்யிலைவேன் மன்னர் முடித்தலை பைய உயர்பொய்கை நீராட்டிச் செல்லுமே யங்கோர் வயவெம்போர் மாண்ட களிறு.’’ குதிரை நிலை வருமாறு: ``நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூ உள்ள மழிக்குங் கொட்பின் மான்மேல் எள்ளுநர்ச் செகுக்குங் காளை கூர்த்த நெடுவே லெஃக நெஞ்சுவடு விளைப்ப வாட்டிக் காணிய வருமே நெருநை உரைசால் சிறப்பின் வேந்தன் முன்னர்க் கரைபொரு முன்னீர்த் திரையிற் போழ்ந்தவர் கயந்தலை மடப்பிடி புலம்ப இருமருப் பியானை யெறிந்த வெற்கே.’’ (புறம். 303) வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான்மீண்டு எறிந்த தார் நிலையும் - வேல்வென்றி மிகலையே கண்ணோக் குடையனாய்க் களத்து முகப்பிற் சென்ற வேந்தனை மாற்றார் சூழ்ந்தவிடத்து வேந்தன் பாலினனாய மற்றோர் தலைவன் தன்னிலை விட்டுத்தன் வேந்துமாட் டடுத்துத்துணையாய் மாற்றாரை எறிந்த தார்நிலையும், உதாரணம்: ``நிரப்பாது கொடுக்குஞ் செல்வமு மிலனே இல்லென மறுக்குஞ் சிறுமையு மிலனே இறையுறு விழுமந் தாங்கி யமரகத் திரும்புசுவைக் கொண்ட விழுப்புணோய் தீர்ந்து மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்று வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந் தீரந்தை யோனே பாண்பசிப் பகைஞன்.’’ (புறம். 180) எனப் பாணன் அது தோன்றப் புகழ்ந்தவாறு காண்க. அன்றி இருவர் தலைவர் தபுதி பக்கமும் - அஃதல்லாமல் படைநின்று பொராநின்ற இருவரும் தம்முட் பொருது படுதலும், உதாரணம்: ``காய்ந்து கடுங்களிறு கண்கனலக் கைகூடி வேந்த ரிருவரும் விண்படர ஏந்து பொருபடை மின்னப் புறக்கொடா பொங்கி இருபடையு நீங்கா விகல்.’’ (புறப். தும்பை. 12) ஒருவன் ஒருவனை உடைபடைபுக்கு கூழை தாங்கிய பெருமையும் - ஒருவன் ஒருவனைக் கெடுபடையின்கண் புக்குக் கூழை தாங்கிய பெருமையும், உதாரணம்: ``கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும் வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்துலும் ஒத்துன்று மாதோ விவற்கே செற்றிய திணிநிலை யலறக் கூழை போழ்ந்துதன் வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி ஓம்புமி னோம்புமி னிவணென வோம்பாது தொடர்கொள் யானையிற் குடர்கா றட்பக் கன்றமர் கறவை மான முன்சமத் தொழிந்ததன் றோழற்கு வருமே.’’ (புறம். 275) படை அறுத்து பாழிகொள்ளும் ஏமமும் - கருவியை அறுத்து மல்லினால் கொள்ளும் ஏமமும், (அத்தும் ஆனும் சாரியை.) உதாரணம்: ``நீலக் கச்சைப் பூவா ராடைப் பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே தன்னுந் துரக்குநன் போலு மொன்னலர் எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக் கையின் வாங்கித் தழீஇ மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே.’’ (புறம். 274) களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் - களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும். உதாரணம்: ``அரசா கெந்தை யாண்டுளன் கொல்லோ குன்றத் தன்ன களிற்றொடு பட்டோன் வம்பலன் போலத் தோன்று முதுக்காண் வேனில் வரியணில் வாலத் தன்ன கான வூகின் கழன்று குமுது விரியல் வான்குழற் சுரியற் றங்க நீரும் புல்லு மீயா துமணர் யாதுமில் லொருசிறை முடத்தொடு துறந்த வாழா வாள்பக டேய்ப்பத் தெவ்வர்ப் பேருயிர் கொள்ளு மாதோ வதுகண்டு வெஞ்சின யானை வேந்தனு மிக்களத் தெஞ்சலிற் சிறந்தது பிறிதொன் றில்லெனப் பண்கொளற் கருமை நோக்கி நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.’’ (புறம். 307) களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் - களிற்றுடன் போந்து மலைந்துபட்ட இறைவனை மிக்க வேந்தன் படையாளர் நெருங்கி மற்றவனைப் பாடும் பாட்டும், அமல் - நெருங்கல். அதனாலாய பாட்டுக்கு ஏற்புடைத் தாயிற்று. உதாரணம்: ``விழவுவீற் றிருந்த வியலூ ராங்கண் கோடியர் முழவின் முன்ன ராடல் வல்லா னல்லன் வாழ்கவன் கண்ணி வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த் திலங்கு பூணன் பொலங்கொடி யுழிஞையன் மடம்பெரு மையி னுடன்றுமேல் வந்த வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே.’’ (பதிற்றுப். 56) உதாரணம்: வாள் வாய்த்து இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியா தொகைநிலையும் - வாள்தொழில் முற்றி இரு பெருவேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாமல் பட்டபாடும், (‘கண்’ என்பது இடைச் சொல்.) ``வருதார் தாங்கி யமர்மிகல் யாவது பொருதாண் டொழிந்த மைந்தர்புண் டொட்டுக் குருதிச் செங்கைக் கூந்த றீட்டி நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டிர் எடுத்தெறி யனந்தற் பறைச்சீர் தூங்கப் பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந் தறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே உரைசால் சிறப்பின் முரசொழிந் தனவே பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக் களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர உடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும் பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்ற வுணவி னோரு மாற்ற அரும்பெற லுலக நிறைய விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே.’’ (புறம். 62) செரு அகத்து இறைவன் வீழ்வுறச் சினைஇ ஒருவனை மண்டிய நல்லிசை நிலையும் - பொருகளத்துத்தன்வேந்தன் பட, அது கண்டு கறுத்தெழுந்து படைத்தலைவன் வீரனொருவனை நெருங்கிப் பொருத ஒரு நற்புகழ் நிலைமையும், உதாரணம்: ``வான மிறைவன் படர்ந்தென வாடுடுப்பா மானமே நெய்யா மறம்விறகாத் தேனிமிருங் கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர் ஒள்ளழலுள் வேட்டா னுயிர்.’’ (புறப். தும்பை. 26) பல படை ஒருவற்கு உடைதலின் அவன் ஒள்வாள் வீசிய நூழிலும் - பல படை ஒருவற்குக் கெடுதலின் அவன் ஒள்ளிய வாள் வீசிய நூழிலும், அது பலரைக் கொல்லுதல். (‘மற்று’ அசை). உதாரணம்: ``ஒருவனை யொருவ னடுதலுந் தொலைதலும் புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை இன்றி னூங்கோ கேளலந் திரளரை மன்ற வேம்பின் மாச்சினை நுண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து செறியத் தொடுத்து தேம்பாய் தெரியல் ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப் பாடின் றெண்கிணை கறங்கக் காண்டக நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன் பீடுஞ் செம்மலு மறியார் கூடிப் பொருது மென்று தன்றலை வந்த புனைகழ லெழுவர் நல்வல மடங்க ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே.’’ (புறம். 76) எனவும், ``வள்ளை நீக்கி வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் வேழப் பழனத்து நூழி லாட்டு.’’ (மதுரைக்காஞ்சி. 255-257) எனவும் பல உயிரை ஒருவன் கொன்றதனை நூழில் என்றவாறு அறிக. உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்து - உட்படப் பொருந்தித் தோன்றும் பன்னிரு துறைகளையுடைத்து. (ஏகாரம் ஈற்றசை.) (14) 73. வாகை தானே பாலையது புறனே தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப. இ-ள்: வாகை பாலையது புறன் இது வாகைத் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வாகைத்திணை பாலை என்னும் அகத்திணையினது புறனாம்; தாவில் கொள்கை தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப - அது கேடில்லாத கோட்பாட்டினை யுடைய தத்தமக்குள்ள இயல்பை வேறுபட மிகுதிப் படுத்துல் என்பர். அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், பாலை யாவது தனக்கென ஒருநிலமின்றி எல்லா நிலத்தினும் காலம் பற்றிப் பிறப்பது போல இதுவும் எல்லா நிலத்தினும் எல்லாக் குலத்தினும் காலம்பற்றி நிகழ்வதாதலினாலும், ஒத்தார் இருவர் புணர்ச்சியினின்றும் புகழ்ச்சி காரணமாகப் பிரியுமாறு போலத்தன்னோடு ஒத்தாரினின்றும் நீங்கிப் புகழப்படுதலாலும் அதற்கிது புறனாயிற்று. அஃது ஆமாறு வருகின்ற சூத்திரங் களானும் விளங்கும். (15) 74. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபி னரசர் பக்கமும் இருமூன்று மரபி னேனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியி னாற்றிய வறிவன் றேயமும் நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணும் அனைநிலை வகையோ டாங்கெழு வகையால் தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர். இது, வாகைத்திணை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. பார்ப்பனப் பக்கம் முதலாகப் பொருநர் பக்கம் ஈறாகச் சொல்லப் பட்ட அத்தன்மைத்தாகிய நிலைவகையோடே ஏழ்வகையால் தொகை நிலைபெற்றது (வாகைத்திணை). எனவே தொகைநிலை பல வென்பது பெறுதும். இ-ள்: அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் - ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும், அறுவகைப்பட்ட பக்கம் எனக் கூட்டுக. அவையாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. இவ் வொழுக்கத்தால் மிகுதல் வாகையாம் என்பது. பார்ப்பனப் பக்கமும் என்றதனான் அப்பொருளின் மிகுதி கூறலும் இதன்பாற் படும். இது மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும். ஓதலாவது கல்வி. ஓதல் வருமாறு: ``இம்மை பயக்குமா லீயக் குறைவின்றால் தம்மை விளக்குமாற் றாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோல் மம்ம ரறுக்கு மருந்து.’’ (நாலடி. கல்வி. 2) இது கல்வியின் விழுப்பம் கூறிற்று. ``ஆற்றவுங் கற்றா ரறிவுடையா ரஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு வேற்றுநா டாகா தமவேயா மாதலால் ஆற்றுணா வேண்டுவ தில்.’’ (பழமொழி 116) இது கற்றோர்க்கு உளதாகும் விழுப்பம் கூறிற்று. இஃது ஏனைய மூன்று வருணத்தார்க்கும் ஒக்கும். ஓதுவித்தலாவது கற்பித்தல். ஓதுவித்தல் வருமாறு ``எண்பொருள வாகச் செலச்சொல்லித் தானபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு.’’ (குறள். 424) வேட்டலாவது வேள்வி செய்தல். வேட்டல் வருமாறு: ``நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த வீரிரண்டின ஆறுணர்ந்த வொருமுதுநூல் இகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ் துறையு முட்டின்று போகிய உரைசால் சிறப்பி னுரவோர் மருக வினைக்குவேண்டி நீபூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சை சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய மறங்கடிந்த வருங்கற்பின் அறம்பகாந்த வலைசூடிச் சிறுநுதற்பே ரகலலகுற் சிலசொல்லிற் பலகூந்தனின நிலைக்கொத்தநின் மனைத்துணைவியர் தமக்கமைந்த தொழில்கேட்பா காடென்றா நாடென்றாங் கீரேழி னிடமுட்டாது நீர்நாண நெய்வழங்கியும் எண்ணாணப் பலவேட்டும் மண்ணாணப் புகழ்பரப்பியும் அருங்கடிப் பெருங்காலை விருந்துற்றநின் றிருந்தேந்துநிலை என்றும், காண்கதில் லம்ம யாமே குடாஅது பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந் தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண் உண்டுந் தின்று மூர்ந்து மாடுகஞ் செல்வ லத்தை யானே செல்லாது மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவள ரிமயம் போல நிலீஇய ரத்தைநீ நிலமிசை யானே.’’ (புறம். 166) வேட்பித்தலாவது, வேள்வி செய்வித்தல். ``நளிகடலிருங் குட்டத்து’’ என்னும் புறப்பாட்டினுள், ``ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்ற மாக மன்ன ரேவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாள்வாய் வேந்தே.’’ (புறம். 26) என அரசன் வேட்பித்தவாறும், பார்ப்பார் வேட்டவாறும் கண்டு கொள்க. ஈதலாவது, இல்லென இரந்தோர்க்குக் கொடுத்தல். உதாரணம்: ``இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள.’’ (குறள். 223) ஏற்றலாவது, கோடல்; கொள்வோன் தனது சிறப்பிற் குன்றாமல் கோடல். உதாரணம்: ``இரவலர் புரவலை நீயு மல்லை புரவல ரிரவலர்க் கில்லையு மல்லர் இரவல ருண்மையுங் காணினி யிரவலர்க் கீவோ ருண்மையுங் காணினி நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் றோன்றல் செல்வல் யானே.’’ (புறம். 162) ஐவகை மரபின் அரசர் பக்கமும் - ஐவகைப்பட்ட அரசர் பக்கமும். அவையாவன: ஓதலும் வேட்டலும் ஈதலும் படை வழங்குதலும் குடியோம்புதலுமாம். இவற்றுள் முந்துற்ற மூன்றும் மேற்சொல்லப்பட்டன. ஏனைய இரண்டும் இனிக் கூறப்படுகின்றன. படை வழங்குதல் வருமாறு ``கடுங்கண்ண கொல்களிற்றாற் காப்புடைய வெழுமுருக்கிப் பொன்னியற் புனைதோட்டியான் முன்புதுரந்து சமந்தாங்கவும் பாருடைத்த குண்டகழி நீரழுவ நிவப்புக்குறித்து நிமிர்பரிய மாதாங்கவும் ஆவஞ் சேர்ந்த புறத்தைத் தேர்மிசைச் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில் வலிய வாகுநின் றாடோய் தடக்கை புலவுநாற் றத்து பைந்தடி பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது பிறிதுதொழி லறியா வாகலி னன்று மெல்லிய பெரும தாமே நல்லவர்க் காரணங் காகிய மார்பிற் பொருநர்க் கிருநிலத் தன்ன நோன்மைச் செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே.’’ (புறம். 14) குடியோம்புதல் வருமாறு ``இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத் தகலமும் வளிவழங்கு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றாங்கு, அவையளந் தறியினு மளத்தற் கரியை அறிவு மீரமும் பெருங்க ணோட்டமுஞ் சோறுபடுக்குந் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே திருவி லல்லது கொலைவில் லறியார் நாஞ்சி லல்லது படையு மறியார் திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவ ருண்ணா வருமண் ணினையே அம்புதுஞ்சுங் கடியரணால் அறந்துஞ்சுஞ் செங்கோலையே புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை அனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே.’’ (புறம். 20) ‘பக்கம்’ என்றதனான் அரசரைப்பற்றி வருவனவற்றிற் கெல்லாம் இதுவே ஓத்தாகக் கொள்க. இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் ஆறு மரபினை யுடைய வணிகர் வேளாளர் பக்கமும். வணிகர்க்குரிய ஆறு பக்கமாவன - ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல். உதாரணம்: ``உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து முழுதுணர ஓதி யழல்வழிபட் டோம்பாத வீகையான் ஆதி வணிகர்க் கரசு.’’ (வெண்பா. வாகை. 10) வேளாண் மாந்தர்க்குரிய ஆறு மரபாவன - உழவு, உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழிந்த கல்வி. உதாரணம்: ``சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனால் உழன்று முழவே தலை.’’ (குறள். 1031) ``கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும் பெருமையிற் பீடுடைய தில்.’’ (குறள். 1021) ``இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்.’’ (குறள். 1035) ``பகடு புறந்தருநர் பார மோம்பி’’ (புறம். 35) ``இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை விடுப்ப வொழிதலோ டின்ன குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ டொன்றா வுணரற் பாற் றன்று.’’ (நாலடி. குடிப்பிறப்பு. 4) ``வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே.’’ (புறம். 183) இவை ஆறும் வந்தவாறு காண்க. மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் - குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்து அறிவன் பக்கமும், இறந்த காலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ வெனின், அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிருபடலத்துள், ``பனியும் வெயிலுங் கூதிரும் யாவும், துனியில் கொள்கையொடு நோன்மை யெய்திய, தணிவுற் றறிந்த கணிவன் முல்லை’’ எனவும் ஓதுதலின் மேலதே பொருளாகக் கொள்க. அறிவன் என்றது கணிவனை. மூவகைக் காலமும் நெறியினா றற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் மழைநிலையும் பிறவும் பார்த்துப் பயன்கூறல். ஆதலான் ‘மூவகைக் காலமும்நெறியின் ஆற்றிய அறிவன்’ என்றார். உதாரணம்: ``புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப் பரிவின்றிப் பட்டாங் கறியத் திரிவின்றி விண்ணிவ் வுலகம் விளைக்கும் விளைவெல்லாங் கண்ணி யுரைப்பான் கணி.’’ (வெண்பா. வாகை. 20) நால் இருவழக்கின் தாபத பக்கமும் - எட்டுவகைப்பட்ட வழக்கினை யுடைய தாபதர் பக்கமும், அவையாவன - நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ள உணவுகோடல், தெய்வபூசையும் அதிதி பூசையும் செய்தல். உதாரணம்: ``நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி ஊரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி.’’ (வெண்பா. வாகை. 14) ``ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன குறுந்தொடி மகளிர் இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும் கழைக்க ணெடுவரை யருவி யாடிக் கான யானை தந்த விறகிற் கடுந்தெறற் செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே.’’ (புறம். 251) ``கறங்குவெள் ளருவி யேற்றலி னிறம்பெயர்ந்து தில்லை யன்ன புல்லென் சடையோ டள்ளிலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்குஞ் சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே.’’ (புறம். 252) இவற்றுள்ளும் சில வந்தவாறு காண்க. பால் அறி மரபின் பொருநர்கண்ணும் - பாகுபாடு அறிந்த மரபினை யுடைய பொருநர் பக்கமும், அஃதாவது, வாளானும் தோளானும் பொருதலும் வென்றி கூறலும் வாகையாம் என்றவாறு. வாளால் மிகுதல் வருமாறு: ``ஏந்துவாட் டானை யிரிய வுறைகழித்துப் போந்துவாண் மின்னும் பொருசமத்து வேந்தர் இருங்களி யானை யினமிரிந் தோடக் கருங்கழலான் கொண்டான் களம்.’’ (வெண்பா. வாகை. 26) மல்வென்றி வருமாறு: ``இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகான் மார்பொதுங் கின்றே யொருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே நல்கினு நல்காஅ னாயினும் வெல்போர்ப் போரலருந் தித்தன் காண்கதில் லம்ம பசித்துப் பணைமுயலும் யானை போல இருதலை யொசிய வொற்றிக் களம்புகு மல்லற் கடந்தடு நிலையே.’’ (புறம். 80) அனைநிலைவகையொடு வாளானும் தோளானும் பொருது வேறலன்றி அத்தன்மைத்தாகிய நிலைவகையான் வேறலொடு, அஃதாவது, சொல்லான் வேறலும் பாட்டான் வேறலும் கூத்தான் வேறலும் சூதான் வேறலும் தகர்ப்போர் பூழ்ப்போர் என்பனவற்றான் வேறலும். பிறவும் அன்ன. ``விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.’’ (குறள். 641) இது சொல் வென்றி. ``வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள் வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் கண்டறியக் கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ் அந்நரம்பு மச்சுவையு மாய்ந்து.’’ (வெண்பா. பெருந்திணை. 18) இது பாடல் வென்றி. ``கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடுந் தொடுகழன் மன்னன் றுடி.’’ (வெண்பா. பெருந்திணை. 17) இஃது ஆடல் வென்றி. ``கழகத் தியலுங் கவற்று நிலையும் அளகத் திருநுதலா ளாய்ந்து கழகத்திற் பாய வகையாற் பணிதம் பலவென்றாள் ஆய நிலய மறிந்து.’’ (வெண்பா. பெருந்திணை. 16) இது சூது வென்றி. பிறவும் வந்தவழிக் காண்க. எழுவகையான் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்- ஏழ்வகையான் தொகைநிலை பெற்றதென்று கூறுவர் புலவர். (ஆங்கு என்பது அசை.) (16) 75. கூதிர் வேனி லென்றிரு பாசறைக் காதலி னொன்றிக் கண்ணிய வகையினும் ஏரோர் களவழி யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவையும் ஒன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும் பெரும்பகை தாங்கும் வேலி னானும் அரும்பகை தாங்கு மாற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையி னொன்றொடு புணர்த்துத் தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யானும் ஒல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும் பகட்டி னானு மாவி னானுந் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும் கடிமனை நீத்த பாலின் கண்ணும் எட்டுவகை நுதலிய வவையகத் தானுங் கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும் இடையில் வண்புகழ்க் கொடையி னானும் பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும், பொருளொடு புணர்ந்த பக்கத் தானும், அருளொடு புணர்ந்த வகற்சி யானும் காம நீத்த பாலி னானுமென் றிருபாற் பட்ட வொன்பதின் றுறைத்தே. இது, வாகைத்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: கூதிர்ப்பாசறை முதலாகச் சொல்லப்பட்ட பதினெட்டுத்துறையும் வாகைத்துறையாம். எனவே, மேற் சொல்லப்பட்ட ஏழ் வகையும் திணையென்று கொள்க. கூதிர் வேனில் என்று இரு பாசறை காதலின் ஒன்றிக் கண்ணிய வகையும் - கூதிர்ப்பாசறையும் வேனிற்பாசறையும் என்று சொல்லப் பட்ட இருவகைப் பாசறைகளையும் போரின்மீது கொண்ட காதலாற் பொருந்திக் கருதிய போர்நிலை வகையும், இவை இரண்டும் ஒரு வகை. (இச்சூத்திரத்தில் வரும் இன்னும் ஆனும் இடைச்சொற்கள்.) உதாரணம்: ``கவலை மறுகிற் கடுங்கண் மறவர் உவலைசெய் கூரை யொடுங்கத் துவலைசெய் கூதிர் நலியவு முள்ளான் கொடித்தேரான் மூதின் மடவாண் முயக்கு.’’ (வெண்பா-வாகை. 15) பிறவும் அன்ன. ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் - ஏரோர் களவழி கூறுதலும் அன்றிப் போரோர் களவழி தேரோர் தோற்றுவித்த வென்றியும், அது களம்பாடுதலும் களவேள்வி பாடுதலுமாம். (களவழி - களத்தில் நிகழும் செயல்கள்.) உதாரணம்: ``இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற் பெருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த வாண்மின் னாக வயங்குகடிப் படைந்த குருதிப் பல்லிய முரசுமுழக் காக அரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநா ணுதைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை ஈரச் செறுவிற் றேரே ராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்ந்த திருத்துறு செஞ்சாற் பிடித்தெறி வைவேற் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப் பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்க் கான நரியொடு கழுகுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப் பாடுநர்க் கிருந்த பீடுடை யாள தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி வேய்வை காணா விருந்திற் போர்வை அரிக்கு ரற்றடாரி யுருப்ப வொற்றிப் பாடி வந்திசிற் பெரும பாடான் றெழிலி தோயு மிமிழிசை யருவிப் பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன ஓடை நுதல வொல்குநிலை யறியாத் துடியடிக் குழவிப் பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி தாழா வீகைத் தகைவெய் யோயே.’’ (புறம். 369) இஃது ஏரோர் களவழி. ``ஓஒ வுவமை யுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலாய் ஆவுதை காளாம்பி போன்ற புனனாhடன் மேவாரை யட்ட களத்து.’’ (களவழி. 36) இது போரோர் களவழி. ``நளிகட விருங்குட்டத்து வளியுடைத்த கலம்போலக் களிறுசென்று களனகற்றவுங் களனகற்றிய வியலாங்கண் ஒளிறிலைய வெஃகேந்தி அரசுபட வமருழக்கி உரைசெல முரசுவெளவி முடித்தலை யடுப்பாகப் புன ற்குருதி யுலைக்கொளீஇத் தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்ற மாக மன்ன ரேவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாள்வாய் வேந்தே நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு மாற்றா ரென்னும் பெயர்பெற் றாற்றா ராயினு மாண்டு வாழ்வோரே.’’ (புறம். 26) இது களவேள்வி. தேரோர் வென்ற கோமான் தேர்முன் குரவையும் - தேரோரைப் பொருது வென்ற அரசன் தேர்முன் ஆடு குரவையும், உதாரணம்: ``களிற்றுக்கோட் டன்ன வாலெயி றழுத்தி விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் குடர்த்தலை துயல்வரத் துள்ளி யுணத்தின ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து வயங்குபன் மீனினும் வாழிய பலவென உருகெழு பேய்மக ளயரக் குருதித்துக ளாடிய களங்கிழ வோயே.’’ (புறம். 371) ஒன்றிய மரபின் தேர்ப்பின் குரவையும் - பொருந்திய மரபின் தேர்ப்பின் ஆடு குரவையும், உதாரணம்: ``வஞ்சமில் கோலானை வாழ்த்தி வயவரும் அஞ்சொல் விறலியரு மாடுபவே வெஞ்சமத்துக் குன்றேர் மழகளிறுங் கூந்தற் பிடியும்போற் பின்றேர்க் குரவை பிணைந்து.’’ (புறப். வாகை. 8) பெரும்பகை தாங்கும் வேலும் - பெரிய பகையினைத் தாங்கும் வேலினைப் புகழுமிடமும், உதாரணம்: ``இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும் உண்டாயி ற் பதங்கொடுத் தில்லாயி னுடனுண்ணும் இல்லோ ரொக்கற் றலைவன் அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே’’. (புறம். 95) ``நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச் சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய’’ (புறம். 25) என்பதும் அது. அரும்பகை தாங்கும் ஆற்றலும் - பொருதற்கரிய பகையைப் பொறுக்கும் ஆற்றலும், உதாரணம்: ``களம்புக லோம்புமின் றெவ்விர் போரெதிர்ந் தெம்முளு முளனொரு பொருநன் வைகல் எண்டேர் செய்யுந தச்சன் திங்கள் வலித்த காலன் னோனே.’’ (புறம். 87) எனவும், ``என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர்.’’ (குறள். 771) எனவும் வரும். புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் பொருந்தாத வாழ்க்கை யினையுடைய வல்லாண் பக்கமும், உதாரணம்: ``எருது காலுறாஅ திளையர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாண ருண்டுகடை தப்பலின் ஒக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச் சிறுபுல் லாளர் முகத்தவை கூறி வரகுகட னிரக்கும் பெருந்தகை அரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே.’’ (புறம். 327) ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணி சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்த்து தொல் உயிர் வழங்கிய அவிப்பலியும் பொருந்தாதார் நாணுமாறு தலைவரைக் குறித்து முன்பு சொன்ன வஞ்சின மரபின் ஒன்றொடு பொருந்தித் தொன்று தொட்டு வருகின்ற உயிரை வழங்கிய அவிப்பலியும், உதாரணம்: ``சிறந்த திதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப மறந்தரு வாளம ரென்னும் - பிறங்கழலுள் ஆருயி ரென்னு மவிவேட்டா ராங்கஃதால் வீரியரெய் தற்பால வீடு.’’ (வெண்பா - வாகை. 30) எனவும், ``இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர்’’ (குறள். 776) எனவும் வரும். ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கும் பொருந்தாதார் இடத்தின்கண் பொருந்திய பக்கமும், அஃதாவது, போரில்வழி நாடு கைத்தென்று கொண்டு உவத்துல். (கைத்து - கையகப்பட்டது. உவத்தல் - வெகுளி விட்டிருத்தல்.) உதாரணம்: ``மாண்டனை பலவே போர்மிகு குருசினீ மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும் முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று துப்புத்துவர் போகப் பெருங்கிளை யுவப்ப ஈத்தான் றானா விடனுடை வளனும் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் எல்லா மெண்ணி னிடுகழங்கு தபுந கொன்னொன்று மருண்டனெ னடுபோர்க் கொற்றவ நெடுமிடல் சாயக் கொடுமிட றுமியப் பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத் தடந்தா ணாரை படிந்திரை கவரும் முடந்தை நெல்லின் கழையமல் கழனிப் பிழையா விளையு ணாடகப் படுத்து வையா மாலையர் வசையுநர்க் கறுத்த பகைவர் தேஎத் தாயினுஞ் சினவா மாகுத லிறும்பூதாற் பெரிதே.’’ (பதிற்று. 32) என்பதனுள் பகைவர் நாடு கைக்கொண்டிருந்தவாறு அறிக. பகட்டினானும் ஆவினானும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் - பகட்டினானும் ஆவினானும் குற்றம் தீர்ந்த சிறப்பினை யுடைய சான்றோர் பக்கமும். பகட்டால் புரை தீர்ந்தார் வேளாளர். ஆவால் குற்றம் தீர்ந்தார் வணிகர். இவ்விரு குலத்தினும் அமைந்தார் பக்கமும். அவர் குலத்தினுள் அளவால் மிக்க நீர்மையராதலின் வேறு ஓதப்பட்டது. உதாரணம்: ``உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர் அமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர் அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுந் ருண்மை யானே.’’ (புறம். 182) கடிமனை நீத்த பாலும் கடிமனை நீத்த பக்கமும், அஃதாவது, பிறர்மனை நயவாமை. மேல் ‘காம நீத்த பாலினானும்’ என்று ஓதுகின்றா ராகலின், இது மனையறத்தின் நின்றோரை நோக்க வரும். உதாரணம்: ``பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு.’’ (குறள். 148) எட்டுவகை நுதலிய அவையகமும் - எட்டுப் பாகுபாட்டைக் குறித்த அவையகமும், எட்டுவகை குறித்த அவையகம் என்றமையான், ஏனைய அவையின் இவ்வவை மிகுதி உடைத்தென்றவாறு. அவையாவன: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை என்பன. அவை எட்டினானும் அவை வருமாறு ``குடிப்பிறப் படுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காத லின்பத்துட் டங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை யவாஅ வின்மையென இருபெரு நிதியமு மொருதா மீட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை உடனம ரிருக்கை யொருநாட் பெறுமெனின் பெறுகதில் லம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பவிம் மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே.’’ (ஆசிரியமாலை) கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையும் கட்டுதல் அமைந்த ஒழுக்கத்தினைக் குறித்த நிலையினும், அஃதாவது, இல்லறத்திற்கு உரித்தாக நான்கு வருணத் தார்க்கும் சொல்லப்பட்ட அறத்தின்கண் நிற்றல். அவையாவன: அடக்கமு டைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை என்பன. மிகுதி யாகலின், வாகை யாயின. அடக்கமுடைமையாவது, பொறிகள் ஐம்புலன்கள்மேல் செல்லாமை அடக்குதல். உதாரணம்: ``ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின் எழுமையு மேமாப் புடைத்து.’’ (குறள். 126) ஒழுக்கமுடைமையாவது, தங்குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஒத்து ஒழுக்கமுடையராதல். உதாரணம்: ``ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்கம் உயிரினு மோம்பப் படும்.’’ (குறள். 131) நடுவுநிலைமையாவது, பகைவர்மாட்டும் நட்டார் மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை. உதாரணம்: ``சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.’’ (குறள். 118) வெஃகாமையாவது, பிறர்பொருளை விரும்பாமை. உதாரணம்: ``படுபயன் வெஃகிப் பழிப்பன செய்யார் நடுவின்மை நாணு பவர்.’’ (குறள். 172) புறங்கூறாமையாவது, ஒருவரை அவர் புறத்துரையாமை. உதாரணம்: ``அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது.’’ (குறள். 181) தீவினையச்சமாவது, தீவினையைப் பிறர்க்குச் செய்தலை அஞ்சுதல். உதாரணம்: ``தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு.’’ (குறள். 208) அழுக்காறாமையாவது, பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொறாமையால் வரும் மனக்கோட்டத்தைச் செய்யாமை. உதாரணம்: ``ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் நெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு.’’ (குறள். 161) பொறையுடைமையாவது, பிறர் தமக்கு மிகுதியாகச் செய்தவழி வெகுளாமை. உதாரணம்: ``மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியால் வென்று விடல்.’’ (குறள். 158) பிறவும் இந்நிகரனவெல்லாம் கொள்க. இடையில் வண்புகழ்க்கொடையும் - இடைதலில்லாத வளவிய புகழினைத் தரும் கொடையும், அஃதாவது, கொடுத்தற்கு அரியன கொடுத்தல். இதுவும் பாகுபாடு மிகுதிப்படுத்தலின் வாகையாயிற்று. உதாரணம்: ``மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வர் இன்மையி னிரப்போர்க் கீயா மரபின் தொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே தாடாழ் படுமணி யிரட்டும் பூநுதல் ஆடியல் யானை பாடுநர்க் கருகாக் கேடி னல்லிசை வயமான் றோன்றலைப் பாடி நின்றனெ னாகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் நாடிழந் ததனினு நனியின் னாதென வாடந் தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் ஆடுமலி யுவகையின் வருவல் ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே.’’ (புறம். 165) பிழைத்தோர்த் தாங்கும் காவலும் - தம்மாட்டுப் பிழைத் தோரைப் பொறுக்கும் ஏமமும், உதாரணம்: ``தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று பரிவதூஉஞ் சான்றோர் கடன்.’’ (நாலடி. துறவு. 8) எனவும், ``அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்த றலை.’’ (குறள். 151) எனவும் வரும். பொருளொடு புணர்ந்த பக்கமும் - மெய்ப்பொருள் உணர்ந்த பக்கமும், உதாரணம்: ``ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயனின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு’’ (குறள். 354) எனவும், ``சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்.’’ (குறள். 351) எனவும் வரும், இன்னும் பொருளொடு புணர்ந்த பக்கமும் என்றது, அறம் பொருள் இன்பம் மூன்றினும் அறனும் இன்பமும் அன்றி ஒழிந்த பொருளொடு பொருந்திய பக்கமும் என்றுமாம். பொருளாவது நாடும் அரணும் பொருளும் அமைச்சும் நட்பும் படையும். ``படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையா னரசரு ளேறு’’ (குறள். 381) என்பதனானும் கொள்க. அவையிற்றின் மிகுதி கூறலும் வாகையாம். நாடாவது, ``தள்ளா விளையுளுந் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு.’’ (குறள். 731) அரணாவது, ``கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார் நிலைக்கெளிதா நீர தரண்.’’ (குறள். 745) பொருளாவது, ``உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்.’’ (குறள். 756) அமைச்சாவது, ``வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு.’’ (குறள். 632) நட்பாவது, ``அழிவின் னவைநீக்கி யாறுய்த் தழிவின்கண் அல்ல லுழப்பதா நட்பு.’’ (குறள். 787) படையாவது, ``அழிவி றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.’’ (குறள். 764) பக்கம் என்றதனான் ஒற்று, தூது, வினைசெயல்வகை, குடிமை, மானம் என வருவனவெல்லாம் கொள்க. அவற்றுட் சில வருமாறு: ``கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகாஅமை வல்லதே யொற்று.’’ (குறள். 585) ``கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்க தறிவதாந தூது.’’ (குறள். 686) பிறவும் அன்ன. ‘இன்னும் பொருளொடு புணர்ந்த பக்கம்’ என்றதனாற் புதல்வர்ப்பேறுங் கொள்க. உதாரணம்: ``படைப்புப் பலபடைத்துப் பல்லாரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைதாம் வாழு நாளே.’’ (புறம். 188) அருளொடு புணர்ந்த அகற்சியும் - அருளொடு பொருந்தின துறவும், அஃதாவது, அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி விழையாமை, கள்ளுண்ணாமை, துறவு என்பன வற்றைப் பொருந்துதலாம். அவற்றுள், அருளுடைமை யொழிந்த எல்லாம் விடுதலான் ‘அகற்சி’ என்றார். அருளுடைமையாவது யாதானும் ஓர் உயிர் இடர்ப் படுமிடத்துத் தன்னுயிர் வருந்தினாற்போல வருந்தும் ஈரமுடைமை. ``அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள.’’ (குறள். 241) கொல்லாமையாவது, யாதொன்றையும் கொல்லாமை. ``அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாந் தரும்.’’ (குறள். 321) பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை. ``வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல்.’’ (குறள். 291) கள்ளாமையாவது, பிறர்க்குரிய பொருளைக் களவினாற் கொள்ளாராதல். ``களவென்னுங் காரறி வாண்மை யளவென்னும் ஆற்றல் புரிந்தார்க ணில்.’’ (குறள். 287) புணர்ச்சி விழையாமையாவது, பிரமசரியம் காத்தல். ``மாக்கேழ் மடநல்லா யென்றரற்றுஞ் சான்றவர் நோக்கார்கொ னொய்யதோர் புக்கில்லை யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்.’’ (நாலடி. தூய்தன்மை. 1) கள்ளுண்ணாமையாவது கள்உண்டலைத்தவிர்தல். ``களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும்.’’ (குறள். 928) துறவாவது, தன்னுடைய பொருளைப் பற்றறத்துறத்தல். ``யாதனின் யாதனி னீங்கியா னோதல் அதனி னதனி னிலன்.’’ (குறள். 341) காமம் நீத்து பாலும் - ஆசையை நீத்து பக்கமும். உதாரணம்: ``காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் நாமங் கெடக்கெடு நோய்.’’ (குறள். 360) என்று இரு பால்பட்ட ஒன்பதின் துறைத்து - என்று இரு கூறுபட்ட ஒன்பது துறைத்து. (17) 76. காஞ்சி தானே பெருந்திணைப் புறனே பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே. இது, காஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: காஞ்சி பெருந்திணை புறன் - காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம்; பாங்கு அருஞ் சிறப்பின் பல் நெறியானும் நில்லா உலகம் புல்லிய நெறித்து - அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பலநெறியாயினும் நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியை யுடைத்து. பாங்கருமையாவது, ஒருவற்கு ஒரு துணையாகாமை. நிலை யாமை மூவகைப்படும், இளமை நிலையாமை செல்வம் நிலையாமை யாக்கை நிலையாமை என. இவற்றுள், இளமைநிலையாமை யாவது, ``பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம் கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை நனிபெரிதும் வேற்கண்ண ளென்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோற்கண்ண ளாகுங் குனிந்து.’’ (நாலடி. இளமை. 7) செல்வம் நிலையாமையாவது, ``அறுசுவை யுண்டி யமர்ந்தில்லா ளூட்ட மறுசிகை நீக்கி யுண்டாரும் வறிஞராய்ச் சென்றிரப்ப ரோரிடத்திற் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று.’’ (நாலடி. செல்வம். 1) யாக்கை நிலையாமையாவது முன்னர்க் காட்டுதும். அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், ``ஏறிய மடற் றிறம்’’ (அகத். 54) முதலாகிய நோந்திறக் காமப் பகுதி அகத்திணை ஐந்தற்கும் புறனாயவாறு போல இது புறத்திணை ஐந்தற்கும் புறனாகலானும், இதுபோல அதுவும் நிலையாமை நோந்திறம் பற்றியும் வருதலானும், அதற்கு இது புறனாயிற்று. (18) 77. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும் கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியு மறத்தி னானும் ஏமச் சுற்ற மின்றிப் புண்ணோற் பேஎ யோம்பிய பேஎய்ப் பக்கமும் இன்னனென் றிரங்கிய மன்னை யானும் இன்னது பிழைப்பி னிதுவா கியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும் மின்னகை மனைவி பேஎய் புண்ணோன் துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் நீத்த கணவற் றீர்த்த வேலிற் பெயர்த்த மனைவி வஞ்சி யானும் நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானும் முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டான் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந் தாகு மென்ப பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசன் மயக்கத் தானும் தாமே யெய்திய தாங்கரும் பையுளும் கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமும் நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும் கழிந்தோர் தேஎத்துக் கழிபட ருறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் காதலி யிழந்த தபுதார நிலையும் காதல னிழந்த தாபத நிலையும் நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச் சொல்லிடை யிட்ட மாலை நிலையும் அரும்பெருஞ் சிறப்பிற் புதல்வற் பயந்த தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையும் மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு நிறையருஞ் சிறப்பிற் றுறையிரண் டுடைத்தே. இது காஞ்சித்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ‘மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை’ முதலாகத் ‘தலையொடு முடிந்த நிலையொடு’ கூடப் பத்தாகும் என்பர் சிலர். ‘பூசல் மயக்கம்’ முதலாகக் ‘காடுவாழ்த்து’ உட்பட வருவன வற்றொடும் இருவகைப்பட்ட துறையை உடைத்து. (எனவே, முற்கூறிய பத்தும் ஒருவகையென்பதும் பிற்கூறிய பத்தும் மற்றொரு வகையென்பதும் பெறப்பட்டன.) மாற்று அருங் கூற்றம் சாற்றிய பெருமையும் மாற்றுதற்கு அரிய கூற்றம் வருமெனச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சியும், உதாரணம்: ``இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநில துடையிலை நடுவணத் திடைபிறர்க் கின்றித் தாமே யாண்ட வேமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற வுயிரு மில்லை மடங்க லுண்மை மாயமோ வன்றே முள்ளி கள்ளி நள்ளிருஞ் சுடலை வெள்ளில் போகிய வியலு ளாங்கண் உப்பிலாஅ வவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோ னீயப்பெற்று நிலங்கல னாக விலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பகம் முழுதுடன் றுறந்தே.’’ (புறம். 363) கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் - அறிவான் மிக்கோர் அல்லாதார்க்குச் சொன்ன முதுகாஞ்சியும், உதாரணம்: ``பல்சான் றீரே பல்சான் றீரே கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் றீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமி னதுதான் எல்லாரு முவப்ப தன்றியும் நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.’’ (புறம். 195) பண்பு உற வரூஉம் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியும் மறனும் இயல்புற வரும் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியும் மறக்காஞ்சியும், உதாரணம்: ``நகையம ராய நடுங்க நடுங்கான் தொகையம ரோட்டிய துப்பிற் பகைவர்முன் நுங்கிச் சினவுத னோனா னுதிவேலாற் பொங்கிப் பரிந்திட்டான் புண்.’’ (வெண்பா. காஞ்சி. 15) ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன் பேஏய் ஓம்பிய பேஏய்ப் பக்கமும் - ஓம்பும் சுற்றம் இன்மையாற் புண்ணோனைப் பேய் ஓம்பிய பேய்ப் பக்கமும். உதாரணம்: ``ஆயு மடுதிறலாற் கன்பிலா ரில்போலும் தோயுங் கதழ்குருதி தோள்புடைப்பப் பேயும் களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான் உளம்புகல வோம்ப லுறும்.’’ (வெண்பா. காஞ்சி. 106) இன்னன் என்று இரங்கிய மன்னையும் - இத்தன்மையான் என உலகத்தார் இரங்கிய மன்னைக் காஞ்சியும், உதாரணம்: ``சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே என்பொடு தடிபடு வழியெல்லா மெக்கீயு மன்னே அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே நரந்த நாறுந் தன்கையாற் புலவுநாறு மென்றலை தைவரு மன்னே அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பார்வை சோர அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற் சென்றுவீழ்ந் தன்றவன் றிருநிறத் தியங்கிய வேலே ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ இனிப்பா டுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு மில்லைப் பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர் சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன் றீயாது வீயு முயிர்தவப் பலவே.’’ (புறம். 235) இன்னது பிழைப்பின் இது ஆகியன் எனதுன் அருஞ் சிறப்பின் வஞ்சினமும் இன்னவாறு செய்தலைப் பிழைத் தேனாயின் இன்னேன் ஆகக் கடவேன் எனக் கூறிய துன்னற்கு அரிய சிறப்பினை யுடைய வஞ்சினக்காஞ்சியும்? (துணிவு பற்றி ‘ஆகியன்’ என இறந்த காலத்தாற் கூறினர்.) உதாரணம்: ``நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளைய னிவனென வுளையக் கூறிப் படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையுந் தேரு மாவும் படையமை மறவரு முடையம் யாமென் றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமோ டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் றலைவ னாக உலகொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர்பா டாது வரைகவென் னிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா வின்மையா னுறவே.’’ (புறம். 72) இன் நகை மனைவி பேஎய் புண்ணோன் துன்னுதல் கடிந்த தொடாக் காஞ்சியும் இனிய நகையார்ந்த மனைவி பேய் புண்ணோனைக் கிட்டுதலைக் காத்த தொடாக்காஞ்சியும், உதாரணம்: ``தீங்கனிப் புறவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியானையொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு தெழுதி ஐயவி சிதறி யாம்ப லூதி இசைமணி யெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்க வம்மோ காதலந் தோழி வேந்துறு விழுமந் தாங்கிப் பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.’’ (புறம். 281) நீத்த கணவன் தீர்த்த வேலின் பேர்த்த மனைவி ஆஞ்சியும் - தன்னை நீத்த கணவன் விடுத்த வேலினானே மனைவி தன் உயிரையும் பெயர்த்த ஆஞ்சியும், உதாரணம்: ``கௌவைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன் அவ்வேலே அம்பிற் பிறழுந் தடங்க ணவன்காதற் கொம்பிற்கு மாயிற்றே கூற்று.’’ (வெண்பா. காஞ்சி. 23) நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முது குடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலும் ஒத்து மாறுபட்டுத்தன்மேல் வந்த வேந்தனொடு தன் தொல்குலத்து மகட்கொடை அஞ்சிய மகட்பாற்காஞ்சியும். உதாரணம்: ``நுதிவேல் கொண்டு றுதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையும் நெடிய வல்லது பணிந்துமொழி யலனே இஃதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மரம்படு சிறுதீப் போல அணங்கா யினடான் பிறந்த வூர்க்கே.’’ (புறம். 349) கொண்டோன் தலையொடு முலையும் முகனும் சேர்த்தி முடிந்த நிலையொடு தொகைஇ ஈர் ஐந்து ஆகும் என்ப - தன்னைக் கொண்டான் தலையொடு தனது முலைகளையும் முகத்தையும் சேர்த்தி இறந்த நிலையும் கூடிப் பத்தாகும் என்பர் சிலர். உதாரணம்: ``கொலையானாக் கூற்றே கொடிதே கொழுநன் தலையானா டையலாள் கண்டே முலையான் முயங்கினாள் வாண்முகமுஞ் சேர்த்தினா ளாங்கே உயங்கினா ளோங்கிற் றுயிர்.’’ (வெண்பா. காஞ்சி. 43) பேர்இசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசல் மயக்கமும் பெரிய இசையையுடையனாய் மாய்ந்தவனைச் சுற்றிய சுற்றத்தார் அவன் மாய்ந்தமைக்கு அழுத மயக்கமும், (மகன் - ஆண்மகன்) உதாரணம்: ``மீனுண் கொக்கின் றூவி யன்ன வானரைக் கூந்தன் முதியோள் சிறுவன் களிறெறிந்து பட்டன னென்னு முவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன்கழை யலமரும் வெதிரத்து வான்பெய றூங்கிய சிதரினும் பலவே.’’ (புறம். 277) தாம் எய்திய தாங்கு அரும் பையுளும் - சிறைப்பட்டார் தாம் உற்ற பொறுத்தற்கு அரிய துன்பத்தினைக் கூறுங் கூற்றும், உதாரணம்: ``குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ வுலகத் தானே.’’ (புறம். 74) கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும் - கணவனொடு இறந்த செலவை நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும், உதாரணம்: ``ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க் கீருயி ரென்ப ரிடைதெரியார் போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும் உடனே யுலந்த துயிர்.’’ (வெண்பா. சிறப்பிற்பொதுவியல். 9) நனி மிகு சுரத்திடை கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முது பாலையும் - மிகுதி மிக்க சுரத்திடைக் கணவனை யிழந்து தனியளாய்த்துலைமகள் வருந்திய முதுபாலையும், உதாரணம்: ``ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே எடுத்தனன் கொளினகன் மார்பெடுக் கல்லேன் என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை இன்னா செய்த வறனில் கூற்றே நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே.’’ (புறம். 255) கழிந்தோர் தேத்துக் கழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் - செத்தோர்மாட்டுச் சாவாதார் வருத்தமுற்றுப் புலம்பிய கையறு நிலையும், உதாரணம்: ``செற்றன் றாயினுஞ் செயிர்த்துன் றாயினும் உற்றன் றாயினு முய்வின்று மாதோ பாடுநர் போலக் கைதொழு தேத்தி இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார் மண்டமர்க் கடக்குந் தானைத் திண்டேர் வளவற் கொண்ட கூற்றே.’’ (புறம். 226) காதலி இழந்த தபுதாரநிலையும் - காதலியை இழந்த கணவனது தபுதார நிலையும், உதாரணம்: ``யாங்குப் பெரிதாயினு நோயள வெனைத்தே உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையின் கள்ளி போகிய களரி மருங்கின் வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத் தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந் தனண் மடந்தை இன்னும் வாழ்வ லென்னிதன் பண்பே.’’ (புறம். 245) காதலன் இழந்த தாபத நிலையும் - காதலனை இழந்தவள் நிற்கும் தாபத நிலையும், உதாரணம்: ``அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையா யினவே இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும் அல்லிப் படூஉம் புல்லா யினவே.’’ (புறம். 248) நல்லோள் கணவனொடு நனி அழல் புகீஇ இடையிட்ட மாலை சொல் நிலையும் - கணவனொடு கிழத்தி பெரிய அழற் புகுவழி இடை யிட்ட மாலைக்காலத்துக் கூறும் கூற்றும், உதாரணம்: ``பல்சான் றீரே பல்சான் றீரே செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா தடகிடை மிடைந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரே மல்லே மாதோ பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீம நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே.’’ (புறம். 246) அரும்பெருஞ் சிறப்பின் புதல்வன் பயந்ததாய் தப வரூஉம் தலைப் பெயல் நிலையும் - அரும்பெருஞ் சிறப்பினையுடைய மகற்பெற்ற தாய் சாதற்கண் அவனைத் தலைப்பெயல் நிலையும், (தலைப்பெயல் சேர்தல்). உதாரணம்: ``இடம்படு ஞாலத் தியல்போ கொடிதே தடம்பெருங்கட் பாலக னென்னுங் கடன்கழித்து முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காண் முரணவியா வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய்.’’ (புறப்.சிறப்பிற் பொதுவியல். 5) மலர்தலை உலகத்து மரபு நன்கு அறிய பலர் செல செல்லாக் காடு வாழ்த்தொடும் - இடம் அகன்ற உலகத்தின் மரபு நன்கு விளங்கப் பலரும் மாயத்தான் மாயாத புறங்காடு வாழ்த்துதலும், உதாரணம்: ``களரி பரந்து கள்ளி பொங்கிப் பகலுங் கூவுங் கூகையொடு பிறழ்வர வீம விளக்கிற் பேஎய் மகளிரொ டஞ்சுவந் தன்றி மஞ்சுபடு முதுகாடு நெஞ்சமர் காதல ரழுத கண்ணீர் என்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து மன்பதைக் கெல்லாந் தானாய்த் தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே.’’ (புறம். 356) நிறை அருஞ்சிறப்பின் இரண்டு துறை உடைத்து - ஆக நிறையும் அருஞ்சிறப்பினையுடைய இரண்டு துறைகளை யுடைத்து. (இச்சூத்திரத்தில் வந்த அத்தும் ஆனும் முறையே சாரியையும் இடைச் சொல்லுமாம்). (19) 78. பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே. இது, பாடாண்டிணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: பாடாண் பகுதி கைக்கிளைப் புறன் - பாடாண் திணைப் பகுதி கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாம்; நாடும் காலை நால் இரண்டு உடைத்து - அஃது ஆராயும் காலத்து எட்டுவகையினை உடைத்து. அவையாவன: கடவுள் வாழ்த்துவகை, வாழ்த்தியல்வகை, மங்கல வகை, செவியறிவுறுத்துல், ஆற்றுப்படைவகை, பரிசிற்றுறை வகை, கைக்கிளைவகை, வசைவகை என்பன. அவையாமாறு முன்னர்க் காட்டுதும். அதற்கு இது புறனாயவாறு என்னை யெனின், கைக்கிளை யாவது ஒரு நிலத்திற்கு உரித்தன்றி ஒருதலைக் காமமாகி வருமன்றே; அது போல இஃதும் ஒருபாற்கு உரித்தன்றி ஒருவனை ஒருவன் யாதானும் ஓர் பயன் கருதியவழி மொழிந்து நிற்பது ஆகலானும், கைக்கிளையாகிய காமப்பகுதிக்கண் மெய்ப்பெயர் பற்றிக் கூறுதலானும், கைக்கிளை போலச் செந்திறத்தாற் கூறுதலானும், அதற்கு இது புறனாயிற்று. நோந்திறமாவது கழிபேரிரக்கம்; செந்திறமாவன அஃது அல்லாதன. (20) 79. அமரர்கண் முடியு மறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி யொன்று மென்ப. இது, பாடாண் பாட்டிற்கு உரியதொரு பொருண்மை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அமரர்கண் முடியும் அறுவகையானும் அமரர்கண் முடியும் கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப் படை புகழ்தல் பரவல் என்பனவற்றினும், புரைதீர் காமம் புல்லிய வகையினும் - குற்றந் தீர்ந்த காமத்தைப் பொருந்திய வகையினும், அஃதாவது, ஐந்திணை தழுவிய அகம். ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப - அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் திணையாதற்குப் பொருந்தும் என்பர் புலவர். அஃதாவது, கொடிநிலை முதலிய ஆறும் கடவுட் புகழ்ச்சியின்றிப் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருதல், காமப் பகுதியிற் பாடும் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருதல் என்ற இவ்விருவகையானும் ஒருவனைப் புகழ்தலாற் பாடாண்பாட்டு ஆயிற்று. இன்னும் ‘புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி’ என்றவதனான், ஐவகைப் பொருளினும் ஊடற் பொருண்மை பாடாண் பகுதிக்கு ஒன்றும் என்றவாறாம். இன்னும் இதனானே, இயற்பெயர் சார்த்தி வாராது நாடும் ஊரும் இதுவென விளங்கவரும் ஊரன் சேர்ப்பன் என்னும் பெயரினான் ஒரு கூறு குறிப்புப்பற்றி வரும் பகுதியும் பாடாண் பாட்டாம் என்று கொள்க. (21) 80. வழக்கியன் மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே. இது, சில பொருட்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇ பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் - மேற் சொல்லப்பட்டன வழக்கு இயலும் பக்கத்து வகைபெற நிறுத்திப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பக்கத்தினும், முன்னோர் கூறிய குறிப்பினும் - முதலாசிரியர் கூறிய காமக்குறிப்பினும், செந்துறை வண்ணம் பகுதி வரைவு இன்று ஆங்கு - செந்துறைப்பாட்டின்கண் வரும் வண்ணப்பகுதி வரைதல் இல்லை அவ்விடத்து. குறிப்பு என்பது காமமாமாறு வருகின்ற சூத்திரத்துள் ``காமப் பகுதி கடவுளும் வரையார்’’ (புறத்திணை 39) என ஒட்டி எழுந்தமையான் உணர்க. இதனாற் சொல்லியது, தேவபாணியும் அகப்பொருள் பாடும் பாட்டும் இசைத்தமிழில் வரைந்து ஓதினாற்போலச் செந்துறைப் பாட்டிற்கு உரிய செய்யுள் இவை என்று உரைத்தல் இல்லை, பாடாண் பாட்டின் கண் வருங் காலத்தென்பது. எனவே எல்லாச் செய்யுளும் ஆம் என்றவாறு. இனி, புகழ்தல் படர்க்கைக் கண்ணும், பரவல் முன்னிலைக் கண்ணும் வருமாறு: ``கண்ணகன் ஞால மளந்ததூஉங் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தஞ் சாய்த்ததூஉம் நண்ணிய மாயச் சகட முதைத்ததூஉ மிம்மூன்றும் பூவைப்பூ வண்ண னடி.’’ (திரிகடுகம்-கடவுள் வாழ்த்து) இது புகழ்தல். ``வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தார் உய்ய வுருவம் வெளிப்படுத்தாய் வெய்ய அடுந்திற லாழி யரவணையா யென்னும் நெடுந்தகை நின்னையே யாம்.’’ (வெண்பா- பாடாண். 3) இது பரவல். ``வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் சேறி நெறிகொள் படிவத்தோய் நீயும் பொறிகட் கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க அருளீயு மாழி யவன்.’’ (வெண்பா- பாடாண். 42) இது புலவராற்றுப்படை. ``மாயவன் மாய மதுவான் மணிநிரையுள் ஆயனா வெண்ண லவனருளான் காயக கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச் சுழலழலுள் வைகின்று சோ.’’ (வெண்பா-பாடாண். 40) இது கந்தழி. வள்ளி என்பது ஈண்டு வெறியாட்டு. ``வேண்டுதியா னீயும் விழைவோ விழுமிதே ஈண்டியம் விம்ம வினவளையார் பூண்டயங்கச் சூலமோ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு வேலனோ டாடும் வெறி.’’ (வெண்பா-பாடாண். 41) இது வள்ளி. கொடிநிலை வந்த வழிக்காண்க. இனி, அவை சார்ந்து வருமாறு முன்னர்க் காட்டுதும். இனிக் காமப்பகுதி வருமாறு: ``மலைபடு சாந்த மலர்மார்ப யாநின் பலர்படி செல்வம் படியேம் புலர்விடியல் வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற் கண்டனங் காண்டற் கரிது.’’ (வெண்பா-பாடாண். 47) இஃது ஊடற்பொருண்மைக்கண் வந்தது. இனி, இயற்பெயர் சார்த்தியும் வரும். ``வையைதன் நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்.’’ (கலி.மருதம்.2) என்பது குறிப்பினாற் பாட்டுடைத்தலைமகனே கிளவித்தலை மகனாக வந்தது. ``பூந்தண்டார்ப் புலர்சாந்திற் றென்னவ னுயர்கூடல் தேம்பாய வவிழ்நீலத் தலர்வென்ற வமருண்கண் ஏந்துகோட் டெழில்யானை யொன்னாதார்க் கவன்வேலிற் சேந்துநீ யினையையா லொத்ததோ சின்மொழி.’’ (கலி-குறிஞ்சி-21) இது காமத்தின்கண் வந்தது. (22) 81. காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினு மென்மனார் புலவர். இது, கடவுள்மாட்டு வருவதோர் பாடாண்பக்கம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: காமப்பகுதி கடவுளும் வரையார் - காமப்பகுதி கடவுள்மாட்டும் வரையார், ஏனோர்பாங்கினும் (வரையார்) என்மனார் புலவர் - ஏனோர்மாட்டும் வரையார் என்பர் புலவர். என்றது, கடவுள்மாட்டுத் தெய்வப்பெண்டிர் நயந்த பக்கமும், மானிடப்பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்றவாறு. உதாரணம்: ``நல்கினு நாமிசையா ணோமென்னுஞ் சேவடிமேல் ஒல்கினு முச்சியா ணோமென்னும் மல்கிருள் ஆட லயர்ந்தாற் கரிதா லுமையாளை ஊட லுணர்த்துவதோ ராறு.’’ (வெண்பா-பாடாண். 48) இது தெய்வப்பெண்டிர் நயந்த பக்கம். ``அரிகொண்ட கண்சிவப்ப வல்லினென் னாகம் புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி வரிவண்டு பண்ணலங்கூட் டுண்ணும் பனிமலர்ப் பாசூரென் உண்ணலங் கூட்டுண்டா னூர்.’’ புறப். பாடாண். 49) இது மாடப் பெண்டிர் நயந்த பக்கம். (23) 82. குழவி மருங்கினுங் கிழவ தாகும். இது, குழவிப் பருவத்தும் காமப்பகுதி பாடப்பெறும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: குழவி மருங்கினும் கிழவது ஆகும் - குழவிப் பருவத்தும் காமப்பகுதி கூறல்பெறும், (அவர் விளையாட்டு மகளிரொடு பொருந்தியக்கண்.) உதாரணம்: ``வரிப்பந்து கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா அரிக்கண்ணி யஞ்சி யலற எரிக்கதிர்வேற் செங்கோல னுங்கோச் சினக்களிற்றின் மேல்வரினும் எங்கோலந் தீண்ட லினிது.’’ (வெண்பா-பாடாண். 50) (24) 83. ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான. இதுவும் அது. இ-ள்: ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப ஊரின்கண் காமப்பகுதி நிகழ்த்தலும் உரித்து என்று சொல்வர் புலவர், வழக்கொடு சிவணிய வகைமையான் - அது நிகழுங் காலத்து வழக்கொடு பொருந்தி நடக்கும் வகைமையின்கண். ‘ஊரொடு தோற்றம்’ என்பது பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக வருவது. ‘வழக்கு’ என்பது சொல்லுதற்கு ஏற்ற நிலைமை. ‘வகை’ என்பது அவரவர் பருவத்திற்கு ஏற்கக் கூறும் வகைச்செய்யுள். உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. (25) 84. மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. இதுவும், பாடாண்பாட்டிற்கு உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே மேற்சொல்லப்பட்டனவும் இனிக் கூறுகின்றனவும் ஒருவற்குக் காரணமாகி மெய்ப்பெயராகி வரும் பொதுப்பெயரான் அன்றி இயற்பெயரின் பக்கத்து வைத்தனர் நெறிப்பட. (26) 85. கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. இது, சார்ந்துவருமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வடு நீங்கு சிறப்பின் கொடிநிலை கந்தழி வள்ளி என்ற முதலன மூன்றும் - குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய கொடிநிலை முதலாகச் சொல்லப்பட்ட முற்பட்ட மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் - பாட்டுடைத்தலைமகனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும். உதாரணம்: ``பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான் பாம்புண் பறவைக் கொடிபோல ஓங்குக பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி.’’ (வெண்பா-பாடாண். 39) இது கொடிநிலை. ``அன்றெறிந் தானு மிவனா லரண்வலித் தின்றிவன் மாறா யெதிர்வார்யார் கன்றும் அடையார் மணிப்பூ ணடையாதார் மார்பிற் சுடராழி நின்றெரியச் சோ.’’ (வெண்பா-உழிஞை. 7) இது கந்தழி. வள்ளியிற் சார்ந்து வருமாறு வந்தவழிக் கண்டு கொள்க. ``வந்தது கொண்டு வாராது முடித்தல்’’ (தொல். மரபி. 110) என்பதனால் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்தி வருமெனவும் கொள்க. முருகாற்றுப்படையுள், ``மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ்சி.’’ (திருமுருகு. 71-73) என்றவழி, ஒரு முகத்தாற் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காண்க. இனிப் பரவற்குச் சார்ந்து வருமாறு: ``கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன்’’ என்னுங் கலிப்பாட்டினுள், ``அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் தொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன் ஒன்று முதுகட லுலக முழுவதும் ஒன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே.’’ (யாப். விரு. 83. மேற்கோள்) என்பதனுட் பாட்டுடைத்தலைமகனைச் சார்த்தியவாறு காண்க. பிறவும் அன்ன. (27) 86. கொற்ற வள்ளையோரிடத் தான. இதுவும், பாடாண்டிணைக்கு உரியதோர் பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: கொற்றவள்ளை ஓர் இடத்து ஆன கொற்ற வள்ளையும் ஓர் இடத்துப் பாடாண்பாட்டாம். என்றது, துறைகூறுதல் கருத்தாயின் வஞ்சியாம்; புகழ்தல் கருத்தாயின் பாடாண்டிணையாம் என்றவாறு. உதாரணம்: ``வல்லா ராயினும் வல்லுந ராயினும் புகழ்தலுற் றோர்க்கு மாயோ னன்ன உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற நின்னொன்று கூறுவ துடையே னீயே பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட் டிறங்குகதிர்க் கழனிநின் னிளைஞருங் கவர்க நனந்தலைப் பேரூ ரெரியு நக்க மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க என்னதூஉங் கடிமரந் தடித லோம்புநின் நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.’’ (புறம். 57) (28) 87. கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தலும் அடுத்தூர்ந் தேத்திய வியன்மொழி வாழ்த்தும் சேய்வரல் வருத்தும் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானும் கண்படை கண்ணிய கண்படை நிலையும் கபிலை கண்ணிய வேள்வி நிலையும் வேலை நோக்கிய விளக்கு நிலையும் வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறூஉவும் ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத் தொக்க நான்கு முளவென மொழிப. இது, பாடாண்டிணைக்குத்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ‘கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தல்’ முதலாக ‘வேலை நோக்கிய விளக்கு நிலை’ ஈறாகச் சொல்லப் பட்டனவும், ‘வாயுறை வாழ்த்து’ முதலாகக் ‘கைக்கிளை’ உளப்பட்ட நால்வகையும் பாடாண்டிணைக்குத்துறையாம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் என்றது, கொடுப்போர் ஏத்தல் எனவும், கொடார்ப் பழித்தல் எனவும், கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் எனவும் மூவகைப்படும். இதனாற் பெற்றது, ஈவோரைப் புகழ்தலும், ஈயாதோரைப் பழித்தலும், ஈவோரைப் புகழ்ந்து ஈயாதோரைப் பழித்தலும் என்றவாறு. கொடுப்போர் ஏத்தல் வருமாறு: ``தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர் வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை யாக யாஞ்சில அரிசி வேண்டினே மாகத் தான்பிற வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர் தேற்றா வீகையு முளதுகொல் போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே.’’ (புறம். 140) ``பாரி பாரி யென்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டிவ் வுலகுபுரப் பதுவே.’’ (புறம். 107) கொடார்ப் பழித்துல் வருமாறு: ``ஒல்லுவ தொல்லு மென்றலும் யாவர்க்கும் ஒல்லா தில்லென மறுத்துலு மிரண்டும் மாண்வினை மருங்கிற் கேண்மைப் பாலே ஒல்லா தொல்லு மென்றலு மொல்லுவ தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே இரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயி லத்தை அனைத்தா கியவினி யிதுவே யெனைத்தும் செய்துகா ணாதது கண்டன மதனான் நோயில ராகநின் புதல்வர் யானும் வெயிலென முனியேன் பனியென மடியேன் கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை நாணல தில்லாக் கற்பின் வாணுதல் மெல்லியற் குறுமக ளுள்ளிச் செல்வ லத்தை சிறக்கநின் னாளே.’’ (புறம். 196) கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் வருமாறு: ``களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாட்டின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணனொடு சேப்ப ஈகை யரிய விழையணி மகளிரொடு சாயின் றென்ப வாஅய் கோயில் சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி உரைசா லோங்குபுக ழொரீஇய முரசுகெழு செல்வர் நகர்போ லாதே.’’ (புறம். 127) இதனுள் ஏத்தப்பட்டவன் ஆய், பழிக்கப்பட்டவர் செல்வர். அடுத்து ஊர்ந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும் - வென்றியும் குணனும் அடுத்துப் பரந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும், அஃது, இயல்மொழி எனவும், வாழ்த்து எனவும், இயல்மொழி வாழ்த்து எனவும் மூவகைப்படும். உதாரணம்: ``ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும வெமக்கே மற்றதன் துன்னருங் கடாஅம் போல இன்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே.’’ (புறம். 94) இஃது இயல்மொழி. ``ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருவுசிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவே நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டின்றே யாயிழை கணவ காலை யந்தியு மாலை யந்தியும் புறவுக் கருவன்ன புன்புல வரகின் பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக் குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலோ டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக் கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க் ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன் எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின் பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற் படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன் யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண் டாயின் இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக் கொண்டன் மாமழை பொழிந்த நுண்பஃ றுளியினும் வாழிய பலவே.’’ (புறம். 34) இது வாழ்த்து. ``ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென றறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.’’ (புறம். 9) இஃது இயல்மொழி வாழ்த்து. ``பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே பணியா வுள்ளமோ டணிவரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம் மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலை யாயினும் கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக் கொண்டு மிகைபடத் தண்டமிழ் செறித்துக் குன்றுநிலை தளர்க்கு முருமிற் சீறி ஒருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட் செருமிகு தானை வெல்போ ரோயே ஆடுபெற் றழிந்த மள்ளர் மாறி நீகண் டனையே மென்றனர் நீயும் நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற் செல்வக் கோவே சேரலர் மருக காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி நனந்தலை யலகஞ் செய்தநன் றுண்டெனின் அடையடுப் பறியா வருவி யாம்பல் ஆயிர வெள்ள வூழி வாழி யாத வாழிய பலவே.’’ (பதிற்றுப். 63) என்பதும் அது. பிறவும் அன்ன. சேய்வரல் வருத்தும் வீட வாயில் காவலர்க்கு உரைத்த கடை நிலையும் - சேய்மைக்கண்ணின்று வருகின்ற வருத்தும் தீர வாயில் காவலர்க்கு உரைத்த வாயில் நிலையும், உதாரணம்: ``வாயி லோயே வாயி லோயே வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி விதைத்ததுத்தாம் உள்ளியது விளைக்கு முரனுடை யுள்ளத்து வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க் கடையா வாயி லோயே கடுமான் றோன்ற னெடுமா னஞ்சி தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொல் அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென வறுந்தலை யுலகமு மன்றே யதனாற் காவினேங் கலனே சுருக்கினேங் கலப்பை மரங்கொ றச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத் தற்றே எத்திசைச் செல்லினு மத்திசைச் சோறே.’’ (புறம். 206) கண்படை கண்ணிய கண்படை நிலையும் - இறைவன் கண்படை நிலையைக் குறித்த கண்படை நிலையும், என்றது, அரசன் இனிது துயின்றது கூறல் என்றவாறாம். உதாரணம்: ``மேலா ரிறையமருண் மின்னார் சினஞ்சொரியும் வேலான் விறன்முனை வென்றடக்கிக் கோலாற் கொடிய வுலகிற் குறுகாமை யெங்கோன் கடியத் துயிலேற்ற கண்.’’ (வெண்பா-பாடாண். 8) கபிலை கண்ணிய வேள்விநிலையும் - கபிலையைக் குறித்த வேள்வி நிலையும், உதாரணம்: ``பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக் குருக்கட் கபிலை கொடுத்தான் செருக்கோ டிடிமுரசத் தானை யிகலிரிய வெங்கோன் கடிமுரசங் காலைச்செய் வித்து.’’ (வெண்பா-பாடாண். 14) வேலை நோக்கிய விளக்குநிலையும் - வேலினைக் குறித்த விளக்கு நிலையும்; நோக்குதலாவது, விளக்கு ஏதுவாக வேலின் வெற்றியைக் காட்டுதல். உதாரணம்: ``வளிதுரந்தக் கண்ணும் வலந்திரியாப் பொங்கி ஒளிசிறந்தாங் கோங்கி வரலால் அளிசிறந்து நன்னெறியே காட்டு நலந்தெரி கோலாற்கு வென்னெறியே காட்டும் விளக்கு.’’ (வெண்பா-பாடாண். 12) வாயுறை வாழ்த்தும் - வெஞ்சொல்லைப் பிரித்துலின்றிப் பிற்பயக்கு மென்று வேம்பும் கடுவும்போல ஓம்படைக் கிளவியானே மெய்யுறக் கூறுதலும், வாயுறை வாழ்த்தின் இலக்கணம்: ``வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குத லின்றி வழிநனி பயக்குமென் றோம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.’’ (தொல். செய்யு. 118) உதாரணம்: ``காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும் நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் யானை புக்க புலம்போல் தானு முண்ணா னுலகமுங் கெடுமே.’’ (புறம். 184) செவியறிவுறுவும் - உயர்ந்தோர்மாட்டு அவிந்து ஒழுகுதல் வேண்டும் எனச் செவியறிவுறுத்துக் கூறுதலும், செவியுறையின் இலக்கணம்: ``செவியுறை தானே பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தற்றே.’’ (தொல். செய்யு. 110) உதாரணம்: ``அந்தணர் சான்றோ ரருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே முந்தை வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி மொழிநின்று கேட்டன் முறை.’’ (வெண்பா-பாடாண். 33) ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் - மன்னன் இடத்ததாகி வரும் புறநிலை வாழ்த்தும்; அது, ``வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமி னென்னும் புறநிலை வாழ்த்தே’’ (தொல். செய்யு. 113) என்பதனால், இனிது வாழ்மின் என்னும் பொருள்மேல் வரும். உதாரணம்: ``தென்ற லிடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை முன்றின் முகைவிரியு முத்தநீர்த் தண்கோளூர்க் குன்றமர்ந்த கோல்லேற்றா னிற்காப்ப வென்றுந் தீரா நண்பிதற் றேவர் சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே.’’ (யா. விரு. 55. மேற்கோள்) கைக்கிளை வகையொடு ஆண்பாற் கூற்றுக் கைக்கிளையும் பெண்பாற் கூற்றுக் கைக்கிளையும். இவையும் பாடாண் பாட்டாம் என்றவாறு. உதாரணம்: ``துடியுடீத் தோற்செவித் தூங்குகை நால்வாய்ப் பிடியேயா னின்னை யிரப்பல் கடிகமழ்தார்ச் சேலேக வண்ணனெஞ் சேரி புகுதலுங்காற் சாலேகஞ் சார நட.’’ (முத்தொள். 45) எனவும், ``அணியாய செம்பழுக்காய் வெள்ளிலையோ டேந்திப் பணியாயோ வெம்பெருமா னென்று கணியார்வாய்க் கோணலங் கேட்பதூஉங் கொங்கர் பெருமானார் தோணலஞ் சேர்தற் பொருட்டு.’’ எனவும் வரும். பிறவும் அன்ன. உளப்படத் தொகைஇ தொக்க நான்கும் உள என மொழிப - உளப்படத் தொகைஇத் தொக்க நான்கும் (முன்னையவும் இத்திணைக்கு) உள என மொழிப. (29) 88. தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூத ரேத்திய துயிலெடை நிலையும் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும் சிறந்த நாளினிற் செற்ற நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும் சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும் நடைமிகுத் தேத்திய குடைநிழன் மரபும் மாணார்ச் சுட்டிய வாண்மங் கலமும் மன்னெயி லழித்த மண்ணுமங் கலமும் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பெற்ற பின்னரும் பெருவள னேத்தி நடைவயிற் றோன்றிய விருவகை விடையும் அச்சமு முவகையு மெச்ச மின்றி நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும் காலங் கண்ணிய வோம்படை யுளப்பட ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே. இதுவும் அது. இ-ள்: ‘துயிலெடைநிலை’ முதலாகப் `பரிசில் விடை’ ஈறாகச் சொல்லப்பட்டனவும், நாளும் புள்ளும் நிமித்தமும் ஓம்படையும் உட்பட்ட, உலக வழக்கின் அறியும் மூன்று காலமும் பற்றி வரும் பாடாண்டிணை என்றவாறு. கிடந்தோர்க்குத் தாவில் நல் இசை கருதிய சூதர் ஏத்திய துயில் எடை நிலையும் கிடந்தோர்க்குக் கேடு இல்லாத நற்புகழைப் பொருந்த வேண்டிச் சூதர் ஏத்திய துயில் எடைநிலையும், உதாரணம்: ``அளந்த திறையா ரகலிடத்து மன்னர் வளந்தரும் வேலோய் வணங்கக் - களந்தயங்கப் பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்கைசூழ் தாமரைத் தூமலர்க்க ணேர்க துயில்.’’ (வெண்பா-பாடாண். 9) கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇ சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் - கூத்தராயினும் பாணராயினும் பொருந ராயினும் விறலியாயினும் நெறியிடைக் காட்சிக்கண்ணே எதிர்ந்தோர் உறழ்ச்சியால் தாம் பெற்ற பெருவளன் நுமக்குப் பெறலாகும் எனச் சொன்ன பக்கமும், ‘பக்கமும்’ என்றதினான், ஆற்றினது அருமையும் அவன் ஊரது பண்பும் கூறப்படும். அவற்றுள், கூத்தராற்றுப்படை வருமாறு: ``திருமழை தலைஇய’’ (மலைபடு. 1) என்னும் பாட்டுட் காண்க. பாணாற்றுப்படை வருமாறு: ``பாணன் சூடிய பசும்பொற் றாமரை மாணிழை விறலி மாலையொடு விளங்கக் கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தீர் யாரீ ரோவென வினவ லானாக் காரெ னொக்கற் கடும்பசி யிரவல வென்வே லண்ணற் காணா வூங்கே நின்னினும் புல்லியே மன்னே யினியே இன்னே மாயினே மன்னே யென்றும் உடாஅ போரா வாகுத லறிந்தும் படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன் எத்துணை யாயினு மீத்த னன்றென மறுமை நோக்கின்றோ வன்றே,பிறர் வறுமைநோக் கின்றவன் கைவண் மையே.’’ (புறம். 141) பொருநராற்றுப்படை வருமாறு: ``சிலையுலா நிமிர்ந்த சாந்துபடு மார்பின் ஒலிகதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன் வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன் வள்ளிய னாதல் வையகம் புகழினும் உள்ள லோம்புமி னுயர்மொழிப் புலவீர் யானும், இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப் பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினே னாக அகமலி யுவகையோ டணுகல் வேண்டிக் கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழ நல்கின னஞ்சி யானது பெயர்த்தனெ னாகத் தானது சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர் பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண் டிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினுந் துன்னரும் பரிசி றருமென என்றுஞ்செல் லேனவன் குன்றுகெழு நாட்டே.’’ (புறம். 364) விறலியாற்றுப்படை வருமாறு: ``மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற் கேட்பி னல்லது காண்பறி யலையே காண்டல் வேண்டினை யாயின் மாண்டநின் யிரைவளர் கூந்தல் வரைவளி யுயரக் கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி மாரி யன்ன வண்மைத் தேர்வே ளாயைக் காணிய சென்மே.’’ (புறம். 133) சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயின் பெருமங் கலமும் - சிறந்த நாட்கண் உண்டாகிய செற்றத்தை நீக்கிப் பிறந்த நாட்கண் உளதாகிய பெருமங்கலமும், உதாரணம்: ``அந்தண ராவொடு பொன்பெற்றார் பாவலர் மந்தரம்போன் மாண்ட களிறூர்ந்தார் - எந்தை இலங்கிலைவேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு.’’ (முத்தொள். 40) சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும் - ஆண்டுதோறும் முடி புனையும் வழி நிகழும் மிகப்புண்ணிய நீராட்டு மங்கலமும். இதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் - ஒழுக்கத்தை மிகுத்து ஏத்தப்பட்ட குடை நிழல் மரபு கூறுதலும், உதாரணம்: ``திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் அங்க ணுலகளித்த லான்.’’ (சிலப். மங்கல. 1) மாணார்ச் சுட்டிய வாள் மங்கலமும் - பகைவரைக் கருதிய வாள் மங்கலமும், உதாரணம்: ``பிறர்வேல் போலா தாக விவ்வூர் மறவன் வேலோ பெருந்தக வுடைத்தே இரும்புற நீறு மாடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும் மங்கல மகளிரொடு மாலை சூடி இன்குர லிகும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினுந் தெருவினுந் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங் கிருங்கடற் றானை வேந்தர் பெருங்களிற்று முகத்துஞ் செலவா னாதே.’’ (புறம். 332) மன் எயில் அழித்து மண்ணு மங்கலமும் - நிலைபெற்ற எயிலை அழித்த மண்ணு நீராடு மங்கலமும், இஃது உழிஞைப் படலத்துக் கூறப்பட்டதாயினும், மண்ணு நீராடுதலின் இதற்கும் துறையாயிற்று. இவ்வாறு செய்தனை எனப் புகழ்ச்சிக்கண் வருவது பாடாண்திணையாம். இவ்வுரை மறத்துறை ஏழற்கும் ஒக்கும். உதாரணம் வந்தவழிக் காண்க. பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் - பரிசில் கடாவுதலாகிய கடைக்கூட்டு நிலையும், உதாரணம்: ``ஆடெரி மறந்த கோடுய ரடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத் தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணார் முழவின் வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே.’’ (புறம். 164) இன்னும் இதனானே, பரிசில்பெறப் போகல் வேண்டு மென்னும் குறிப்பும் கொள்க. உதாரணம்: ``நல்லியா ழாகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசும்பா டெருவை பசுந்தடி தடுப்பப் பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே.’’ (புறம். 64) பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றிய இருவகை விடையும் - பரிசில் பெற்ற பின்னரும் அவன் கொடுத்து மிக்க வளனை ஏத்தி வழக்கின்கண் தோன்றிய இருவகை விடையும்; அவையாவன, தான் போதல் வேண்டும் எனக் கூறுதலும் அரசன் விடுப்பப் போதலும், வளன் ஏத்தியதற்குச் செய்யுள்: ``தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டிய தொடியமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற் புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப் பனிக்கயத் தன்ன நீணகர் நின்றேன் அரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி எஞ்சா மரபின் வஞ்சி பாட எமக்கென வகுத்த வல்ல மிகப்பல மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே யதுகண் டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின வரைக்கியாக் குநரும் கடுந்தே ரிராம னுடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மதாணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை யிழையணிப்பொலிந்தாங் கறாஅ வருநகை யினிது பெற்றிகுமே இருங்கிளைத் தலைமை யெய்தி அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே.’’ (புறம். 378) தான் பிரிதல் வேண்டிக் கூறியதற்குச் செய்யுள்: ``ஊனு மூணு முனையி னினிதெனப் பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும் அளவுபு கலந்து மெல்லிது பருகி விருந்துறுத் தாற்றி யிருந்தனே மாகச் சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென யாந்தன் னறிய வினவின மாத் தான்பெரி, தன்புடை மையி னெம்பிரி வஞ்சித் துணரி யதுகொளா வாகிப் பழமூழ்த்துப் பயம்பகர்ப் பறியா மயங்கரின் முதுபாழ்ப் பெயல்பெய் தன்ன செல்வத் தாங்கண் ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச் சிதாஅர் வன்பிற் சிதர்ப்புறத் தடாரி ஊனுகிர் வலந்த தெண்க ணொற்றி விரல்விசை தவிர்க்கு மரலை பாணியின் இலம்பா டகற்றல் யாவது புலம்பொடு தெருமர லுயக்கமுந் தீர்க்குவோ மதனால் இருநிலங் கூலம் பாறக் கோடை வருமழை முழக்கிடைக் கோடிய பின்றைச் சேயை யாயினு மிவணை யாயினும் இதற்கொண் டறிவை வாழியோ கிணைவ சுனைநனி, யொருவழிப் படர்கென்றோ னேயெந்தை ஒலிவெள் ளருவி வேங்கட நாடன் உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும் அறத்துறை யம்பியின் மான மறப்பின் றிருங்கோ ளீராப் பூட்கைக் கரும்ப னூரன் காதல் மகனே.’’ (புறம். 381) அரசன் விடை கொடுப்பப் போந்தவன் கூற்று: ``நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும் எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமண னல்கிய வளனே.’’ (புறம். 163) ‘இருவகை விடையும்’ என்றதனால், பரிசில் பெற்றவழிக் கூறுதலும் பெயர்ந்தவழிக் கூறுதலும் ஆம். அச்சமும் உவகையும் எச்சம் இன்றி நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் காலம் கண்ணிய ஓம்படை - அச்சமும் உவகையும் ஒழிவு இன்றி நாளானும் புள்ளானும் பிற நிமித்தத்தானும் காலத்தைக் குறித்த ஓம்படையும், அச்சமாவது, தீமை வரும் என்று அஞ்சுதல். உவகையாவது நன்மை வரும் என்று மகிழ்தல். நாளாவது, நன்னாள் தீநாள். புள்ளாவன, ஆந்தை முதலியன. பிற நிமித்தமாவன, அலகு முதலாயின. காலங் கண்ணுதலாவது, வருங்காலங் குறித்தல். உதாரணம்: ``ஆடிய லழற் குட்டத் தாரிரு ளரையிரவின் முடப்பனையத்து வேர்முதலாக் கடைக்குளத்துக் கயங்காயப் பங்குனியுய ரிழுவத்துத் தலைநாண்மீ னிலைதிரிய நிலைநாண்மீ னெதிரேர்தரத் தொன்னாண்மீன் றுறைபடியப் பாசிச் செல்லா தூசி முன்னா தளக்கர்த்திணை விளக்காகக் கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி ஒருமீன் வீழ்ந்தன்றால் விசும்பி னானே அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர் பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன் நோயில னாயி னன்றுமற் றில்லென வழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப அஞ்சினம்’’ (புறம். 229) என்பது பிறவாறு நிமித்தம் கண்டு அஞ்சியது. ``புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற லறியா வேமக் காப்பினை அனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே.’’ (புறம். 20) என்பது புட்பற்றி வந்தது. ``காலனுங் காலம் பார்க்கும்.’’ (புறம். 41) என்னும் புறப்பாட்டு, நிமித்தம் பற்றி வந்தது. ``நல்லவை செய்த லாற்றீ ராயினும் அல்லவை செய்த லோம்புமின்.’’ (புறம். 195) என்பது ஓம்படை பற்றி வந்தது. உளப்பட ஞாலத்து வரும் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றொடு கண்ணிய வருமே - இவை உளப்படத் தோன்றும் வழக்கினது கருத்தினானே காலம் மூன்றனொடும் பொருந்தக் கருதுமாற்றான் வரும் மேற்கூறி வருகின்ற பாடாண்டிணை. (30) இரண்டாவது புறத்திணையியல் முற்றிற்று