செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் 5 கு முதல் ங வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் -5 கு முதல் ங வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2018 பக்கம் : 20+284= 304 விலை : 380/- தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 456  f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000   கணினி & நூலாக்கம் : நல்லதம்பி, கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  கொடையாளர் வித்யாசாகர் (கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர்) வித்யாசாகர் புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வளர்ந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்க் கவிஞர். வெங்கடாசலம் எனும் இயற்பெயருடைய இவர் முதுகலை இயந்திரப் பொறியாளர். குவைத்தில் எண்ணெய் சார்ந்த நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டுத் துறையில் மேலாளராகவும், தரமேலாண்மை துறையில் சர்வதேச கூடுதல் ஆய்வாளராகவும், அமெரிக்கா இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் பணி புரிந்து வரும் இவர் கடந்த இருபதாண்டு காலமாக சமூக அக்கறையும் எழுத்தார்வமும் கொண்டு அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் சிறுகதை, கவிதை நாவல் மற்றும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவருகிறார். திரைகடல் ஓடியும் திரவியம் தேடச்சென்ற மண்ணில் இருந்து கொண்டு தாய் மொழியாம் தமிழின் மேல் வற்றாத பற்றுக்கொண்டு வாழும் தமிழ் உள்ளங்களை முதலில் வணங்குகிறேன். இவ்வருந்தமிழ்க் களஞ்சியம் நான்காம் தொகுதி வெளிவருவதற்கு உதவிய குவைத்து கொடையாளர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. கடப்பாட்டு உரை தமிழ் இயற்கை இயங்கியல் வழிப்பட்ட ஒலி, வரி, வடிவுகளையும் இயற்கை இயங்கியல், மெய்யியல், வாழ்வியல், படைப்பியல் என்பவற்றை அடிமனையாகவும் கொண்ட மொழி. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் மூல முழக்கத்தை முழுவதாகக் கொண்டது நம்மொழி என்பதை ஓராற்றான் விளக்குவதாக அமைந்தது இக் களஞ்சியம். ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என்பவை இல்லாமல், வெளிப்பட எவரும் அறிந்து கொண்டுள்ள வழக்கு, செய்யுள் என்பவை கொண்டே விளக்குவது இக்களஞ்சியம். இதனை, ஊன்றியும் விரும்பியும் கற்பார் தாமும் இவ்வாய்வு செய்ய வியலும் என்பதைத் தூண்ட வல்ல ஆய்வும் இது! ஆதலால், படிப்பாளியைப் படைப்பாளி ஆக்கவல்லது என்பதை என் பட்டறிவுத் தெளிவாகக் கண்டு வருகிறேன்! எளிமையாய் - ஆழ்ந்த நுணுக்கங்களை - ஓரளவு கற்றாரும், கொள்ள வழிகாட்டும் `கைவிளக்கு அன்னது இது. இதனை முதல் - இடை - நிறைவு என்னும் மூன்று நிலை களிலும் உற்ற பெறலரும் உதவுநராக இருந்து முற்றுவித்ததுடன், தமிழ் உலகப் பயன்பாட்டுக்கும் வழியமைத்துத் தந்த `கலங்கரை விளக்கம் செம்மொழிச் செம்மல் முனைவர் திருத்தகு க. இராமசாமி அவர்களே ஆவர். ஆதலால், அவர்களை நெஞ்சாரப் போற்றுவது என் தலைக்கடனாம்! திருவள்ளுவர் தவச்சாலை நிறுவன வழியே இப்பணி செய்ய வாய்த்த அளவில் சொற்றிரட்டியும் மெய்ப்புப் பார்த்தும உதவிய பெருந்தகு கேண்மையும் உழுவலன்பும் உடைய முனைவர் பெருந்தகை கு. ருமாறனார் அவர்களுக்கும் எம் எழுத்துப்பணியைத் தம் பணியாக் கொண்டு தொடர்ந்து செய்துவரும் தொய்விலாத் தொண்டர் மெய்ப்புப் பார்த்தலில் வல்லார் முனைவர் பி. தமிழகனார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். என் எழுத்தைப் படியெடுத்தும், கொங்கு வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்தும் உதவிய புலவர் கலைமணியார் அவர்களுக்கும், இப்பணியில் இல்லை எனினும் உழுவ லன்பாலும் உரிமைப் பேற்றாலும் என் எழுத்துகளைப் படியெடுத்து உதவிய திருக்குறள் செம்மல் பெரும்புலவர் மு. படிக்கராமு அவர்களுக்கும் பெருநன்றியும் வாழ்த்தும் உடையேன். இத்தொகை அனைத்தையும் கணினிப்படுத்தியும், மெய்ப்புப் பார்த்தும், வரவு செலவு கணக்கைத் தக்க வகைத் தணிக்கைக்கு உரியவையாகச் செய்தும், பணிநிறைவை ஒப்படைத்தும் பெருநன்றாற்றிய கவனகச் செம்மல் முனைவர் கலை. செழியனார் அருந்தொண்டைப் பாராட்டி நன்றி பெரிதுடையேன். பணி நிறைவுப்பயன், தமிழ் கூறு நல்லுலகப் பயன்பாடு ஆதல் வேண்டும் என்பது தானே! இல்லாக்கால் செய்த பணியால் ஆவதென்ன? செய்யாமை ஒப்பது தானே! அவ்வாறு ஆகாமல் தாய்த்தமிழக ஆர்வலர்களுடன், அயலகத் தமிழ்ப் பெருமக்களாக விளங்கினும் தாய்த்தமிழக ஆர்வலர்களிலும் மேம்பட்ட ஆர்வலர்களாகக் குவையத்து, அமெரிக்கா, கனடா, மலையகம், சிங்கபுரி, ஈழம் முதலாக வாழ்வார் ஆர்வத் தளிர்ப்பும் தூண்டலும் முன்னிற்கும் பேறு வியப்புக்கும் பெருநன்றிக்கும் உரியதாம்; இப்பெருமக்கள் அனைவர் உள்ளமும் ஓருருவாக வாய்த்து, கருவி நூற்பணியைத் தொகை தொகையாக வகைப்படுத்தி வான் பெருந்தொண்டாகச் செய்தலே எம் பிறவிக் கடன் எனக் கொண்ட தமிழ்ப் போராளி திருமிகு கோ. இளவழகனார் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயற்கரிய செய்வார் பெரியர் என்பதை நிலைநாட்டியதைப் போற்றுவதன்றி என் சொல்வேன்? களஞ்சியம் கணினிப்படுத்திய அளவில் நிறைவுறுமா? பத்துத் தொகுதிகளையும் ஒருமுறைக்கு மும்முறையாய் முழுதுற மெய்ப்புப் பார்த்தல், எளிமைப் பாடா? கண்புரை வளர்ந்தாலும் இடைத்தடை நேர்ந்தாலும் இத்தொண்டு தமிழன்னை தளிர்க்கும் தொண்டு என்று இமைப் பொழுதும் சோராது கடனாற்றிய கடப்பாட்டாளர் மெய்ப்புச்செம்மல் முனைவர் பி. தமிழகனார்க்குப் பெருங்கடப்பாடு உடையேன்; பதிப்புச் சுமையை ஏற்றமை என் சுமை ஏற்றமையாம்! வாழிய நலனே! வாழிய நலனே! இரா. இளங்குமரன் களஞ்சியம் வளமான வீடுகள் கட்டி வாழும் நிலக்கிழார் பெருநிலக்கிழார் ஆகிய உழவர்கள், தங்கள் வீட்டின் உட்பகுதியில் களஞ்சியங்கள் அமைத்திருப்பர். களஞ்சியம் இருக்கும் வீடு என்றால் வளமிக்க உழவர்வீடு என்பது பொருள். களத்தில் வரும் தவசங்கள் பயறு வகைகள் ஆகியவற்றை அங்கே பூச்சியரிப்பு, மட்குதல் ஏற்படாவகையில் தளத்தின்மேல் உயர்த்தியும் புன்கு வேம்பு ஆகியவற்றின் தழைகளைப் பரப்பியும், பாதுகாப்பர். அவ்வாண்டு முழுமைக்கும் பயன்படும். அடுத்த ஆண்டு விளைவு குறைந்தாலும் களஞ்சியப் பொருள் கவலையின்றி வாழ உதவும். ஏருழவர் போலச் சொல்லேர் உழவராம் சான்றோர் நூல்கள், அக்காலத்தார்க்கே அன்றி எக்காலத்தார்க்கும் பயன்படும் வகையில் பாதுகாத்துப் பயன் கொள்ளச் செய்வது நூல் களஞ்சியமாகும். இந்தியப் பரப்பில் தமிழ் மொழியில் தான் முதன்முதல் `கலைக் களஞ்சியம் உருவானது என்பது பெருமிதப்படத்தக்கதாம். இப்பொழுது தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்படும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் செவ்வியல் மொழிக் கொடையாக வந்து, தமிழ்மண் பதிப்பக வெளியீட்டால், தமிழ்கூறு நல்லுலகப் பொருளாவது, செம்மொழிச் செம்மல் முனைவர் திருமிகு க. இராமசாமி அவர்கள் தூண்டல் வழியாகத் துலங்கிய துலக்கமாகும். ஆதலால் படைப்பாளன் என்ற நிலையில் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். தமிழ்க் களஞ்சியம் மொழியின் வளம், அம்மொழியைப் பேசுவோர் பயன்படுத்தும் சொற்களாலும், அம் மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய வகைகளாலும் அறியப்படும். தமிழின் வளம் இலக்கியங்களிலும் மக்கள் வழக்குகளிலும் நிறைந்துள்ளது. சொற்களின் வளமும், பெருக்கமும் மொழியின் சிறப்பைக் காட்டும். சொற்களின் பெருக்கைக் காட்ட எத்தனையோ நிகண்டுகளும், அகராதிகளும், களஞ்சியங்களும் தமிழில் வந்துள்ளன. இவற்றுள் பல பிறமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்களாய்க் கருதிப் பொருள் தந்துள்ளன. பிற மொழிகளில் ஏறிய தமிழ்ச் சொற்களும் வேற்றாடை உடுத்தியுள்ளன. அவற்றை அறிந்து தமிழெனக் காட்ட, மொழி உணர்வும், இலக்கிய இலக்கணப் புலமையும், தமிழ் முழுதறி தகுதியும், மக்கள் வழக்குகளை வழங்கும் சூழலில் கேட்டறிதலும், சொற் பொருளாய்வும், சொல்லியல் நெறிமுறைகளும், வேர்ச் சொல்லாய்வும், கூர் மதியும் நிறைந்திருக்க வேண்டும். இத்தமிழ்ச் சொற் களஞ்சியம் சொற்களின் பொருளை மட்டுமா தருகின்றன? சொற்களின் வேரும், அதன் விரிவும், அவற்றின் விளக்கமும், சான்றுகளும், மக்களின் பொது வழக்கும், வட்டார வழக்கும், யாழ்ப்பாணத் தமிழ் வழக்கும் செறிந்துள்ள தமிழ்க் களஞ்சியமாம். ஒரு வினைச் சொற்கள் தொகை தொகையாகிய தொகை இக்களஞ்சியம். `அடித்தல் சொல்லடியாக 145 சொற்கள் உண்ணல் வகைகள், ஊர்ப் பெயர் ஈறுகள் (504) நோய் வகைகள் (229), நோய் வினைகள் (216), மதில் பொறி வகைகள் (28) மலை வகைகள் (25) முதலிய எத்தனையோ வகைகளும் தொகைகளும் அடங்கியுள்ளன. இவற்றின் தொகுப்பு கற்பாரை வியக்க வைக்கும்! இக் களஞ்சியத் தொகுதிகளுள் நூற்றுக்கணக்கில் மரபுத் தொடர்கள், இணை மொழிகள், ஒலிக்குறிப்புகள், அவற்றின் விளக்கங்கள் அடங்கியுள்ளன. சொற்கள் விளக்கத்திற்கு அன்றாடச் செய்திகளும் (செய்தித்தாள்கள்) சான்றாகின்றன. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்பர். ஆனால், பற்பல நூறுவகைகள் உள்ளமையை இக்களஞ்சியம் காட்டும். மேனாட்டு உடைகளை மாட்டியதால் தமிழர் மேனாட்டார் ஆகாரன்றோ? பஜ்ஜி ஏதோ பிறமொழி என்றே மயங்கி நிற்பர். அது பச்சைக் காய்கறிகளால் செய்யப்படுவது. தேவநேயப் பாவாணர் உடன் பழகியமையாலும், அவர் நூல்களைத் தோய்ந்து தோய்ந்து கற்றமையாலும், அவரே பாராட்டியமையாலும் ஐயா, பல சொற்களுக்கு வேர்ச்சொல் வழி மூலமும் கிளையும் காட்டியுள்ளார். புழுதி, பூழ்தி, பூதி. பல சொற்களின் பொருள் வேறுபாடுகளும் காட்டப்பட்டுள்ளன: விரைப்பு- விரைப்பு; விறைப்பு - தொய்வின்மை; இக்களஞ்சியம் தவசங்களாம் சொற்கள் கொட்டப்பட்டு நிறைந்துள்ளது. படிப்பார் தத்தமக்குத் தேவையான தவசங்களை அள்ளி அள்ளிப் பயன் கொள்ளலாம். எவ்வளவு அள்ளினும் என்றும் குறையாது இக்களஞ்சியம். தமிழரின், மொழி, இன, இலக்கிய, இலக்கணம் ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு, நாகரிகங்களின் அடங்கல்களைப் படை படையாகத் திரட்டித் தொகுத்து வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஐயா முதுமுனைவர், இளமை முதல் தொகுத்த சொற்களஞ்சியங்களைச் சேர்த்துச் சேர்மானமாக்கித் திரட்டித் தந்துள்ளார்கள். தமிழர்களே! இங்கே வம்மின்! களஞ்சியம் கொண்மின்!! தமிழை வளர்மின்!!! பி. தமிழகன். அணிந்துரை செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் என்னும் இந்நூல் இன்று நம்மிடையே வாழும் தொல்காப்பியராக விளங்கும் மூத்த தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஏறத்தாழ 8000 தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் விளக்கத்தினை மேற்கோள் சான்றுகளுடன் வழங்கும் இந்நூல் தோராயமாக 3254 பக்கங்களில் பத்துத் தொகுதிகளாக வெளிவந்து தன்னேரிலாத தமிழ் மொழிக்குத் தனிப்பெருமை சேர்க்கும் முன்னோடிப் பணியாக அமைந்துள்ளது. அகரமுதலிகளில் இடம்பெறாத சொற்கள், மரபுச்சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள் போன்றவை இக்களஞ்சியத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க தாகும். இசை, மருத்துவம், கல்வெட்டு, அறிவியல் ஆகிய துறைகள் சார்ந்த இன்றியமையாத சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. அகரத்தில் தொடங்கும் சொற்களுக் கான பொருள் விளக்கங்கள் மட்டுமே 276 பக்கங்களில் முதல் தொகுதியாகவும் தனித் தொகுதியாகவும் அமைந்திருப்பது நூலின் செறிவையும் விரிவையும் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அயன் மொழிச் சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். சொற்பொருட் களஞ்சியப் பணியை நிறைவேற்றும் வகையில் நூலாசிரியருக்குத் தூண்டுதலாக அமைந்தது ஒல்காப் புகழ் தொல்காப்பியமே. குறிப்பாக, எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே (தொல். 640) என்னும் நூற்பா. இந் நூற்பாவினை மூல முழக்கமாகக் கொண்டது தமிழ்மொழி என்பதை விளக்கும் பொருட்டே இக்களஞ்சியம் உருவாக்கப் பட்டதென நூலாசியிர் குறிப்பிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டியவாறு ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் எனக் காணாமல் வெளிப்படையாக அறியக்கூடிய சொற்களுக்கு மட்டுமே அமைதியும் திரிபும் பொருள் விளக்கமும் காட்டுவது இக்களஞ்சியம் என்பதும் நூலாசிரியர் கூற்றாகும். பொருள் விளக்கங்களினூடே கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாக்களின் பயன்பாட்டினையும் உணரலாம். பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர். (தொல். 641) தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. (தொல். 642) பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே. (தொல். 874) பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் (தொல். 875) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (தொல். 877) ஒரு பொருள் பல சொற்கள் மிகவும் நுட்பமாய் ஆராயப் பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. `அழகு பொருண்மையைக் குறிக்கும் 67 தனித்தமிழ்ச் சொற்களை அடையாளங்கண்டு அவற்றிற்கு நுட்பமான விளக்கங்களைத் தந்திருப்பது ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் வளமான பட்டறிவிற்கும் சான்றாக விளங்குகிறது. பெருமதிப்பிற்குரிய ஐயா இளங்குமரானாரின் நெடுங்கால அவா இந்நூல் வெளியீட்டின் வழி நிறைவேறியுள்ளமை மகிழ்வளிக்கிறது. இது காலத்தை வென்றுநிற்கும் நிலைத்த பணி. தமிழ் ஆய்வாளர்களுக்குக் கிட்டியுள்ள தலைசிறந்த நோக்கீட்டு நூல். உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் இந்நூலினை வரவேற்றுப் போற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களஞ்சியப் பணி ஒரு தொடர் பணி. இப்பத்துத் தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொகுதிகள் வெளிவந்து தமிழிற்கு வளம்சேர்க்க வேண்டும் என்பது என் அவா. தனித்தமிழ்ப் பற்றாளராகவும் அரிய தமிழ் நூல்களின் பதிப்புச் செம்மலாகவும் விளங்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ. இளவழகனார் இக்களஞ்சியத்தை அருமுயற்சியுடன் சிறப்புற வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டிற்குரியதாகும். முனைவர் க. இராமசாமி முன்னாள் பேராசிரியர் - துணை இயக்குநர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் முன்னாள் பொறுப்பு அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை நுழைவுரை தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் புதைந்து கிடக்கும் அறிவுச் செல்வங்களைத் தனக்கே உரிய நடையில் இருந்து தமிழின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் அய்யா இளங்குமரனாரின் நினைவாற்றலை நினைந்து நினைந்து மகிழ்பவன். அவர் அருகில் இருக்கவும், அவருடன் உரையாடவும், வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகவும் கருதுகிறேன். மொழிஞாயிறு பாவாணர், செந்தமிழ் அறிஞர் இலக்குவனார், மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் முதலான பெருமக்களை எட்டி இருந்து பார்த்தவன். அவர்களின் அறிவு நலன்களைக் படித்துச் சுவைத்தவன். இப் பெருமக்களின் மொத்த உருவமாக அய்யா இளங்குமரனாரைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்பவன். அய்யா அவர்களின் அறிவுச் செல்வங்களைக் கடந்த காலத்தில் பேரளவில் எம் பதிப்பகம் வெளியிட்டு அவரின் உழைப்பை தமிழ் கூறும் உலகுக்கு அளித்ததில் நிறைவு அடைகிறேன். இன்று உங்கள் கைகளில் தவழும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் எனும் இவ்வருந்தமிழ்த் தொகுப்பை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் உழைத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வியந்து போகிறேன். இச்செந்தமிழ்த் தொகுப்பு தமிழ் அகராதி வரலாற்றில் தமிழுக்குப் புது வரவாகும். இதுவரை யாரும் செய்ய முன்வராத பெரும்பணி யாகும். அய்யாவின் இலக்கிய, இலக்கணப் பெரும்பரப்பைத் தாங்கிவரும் இப்பொற் குவியலை உலகத் தமிழர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாவாணர் போல் வேர்காட்டி, வளம் கொடுக்கும் சொற்கடலாய் வாழும் அய்யாவின் பேருழைப்பால் விழைந்த இலக்கிய இலக்கணக் களஞ்சியத்தை வெளியிடுவதன் மூலம் என்னையே நான் பெருமைப் படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். அய்யாவின் 75ஆம் (30.01.2005) அகவை நிறைவை திருச்சித் திருநகரில் தமிழர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வில் புலமைக்குத் தலைவணக்கம் எனும் நிறைவுமலரினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு மகிழ்ந்தது. அந்த மலரில் மலேசியப் பாவரசு சு.ஐ.உலகநாதன் எழுதிய பாடலினை கீழே சுட்டியுள்ளேன். வாய்த்திருக்கும் அகவையெலாம் வரலாறு படைக்கின்றார் வையகமே வந்து போற்று நம் முன் சான்றாக வாழும் `ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட இக்களஞ்சியத்தை தமிழ் உலகுக்கு வழங்குவதில் பெருமையும், பூரிப்பும் அடைகிறேன். கோ. இளவழகன் ஆசிரியர் விவரம் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூரில் நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர் ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டு பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழ் அமைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. பதிப்பாசிரியர் விவரம் முனைவர் பி. தமிழகன் பிறப்பு : 5. 10. 1946 பெற்றோர் : பிச்சை - மீனாட்சி (வேளாண்குடி) ஊர் : இலால்குடி வட்டம், குமுளூர் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர் நடுநிலைக் கல்வி - இருங்கலூர் உயர்நிலைக் கல்வி - பூவாளூர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளி புலவர் - கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் தமிழியல் இலக்கிய இளைஞர், முதுகலை, கல்வியியல் முதுகலை, தனித் தேர்வர் ஆய்வு : தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள் ஆசிரியர்கள் : முதுபெரும்புலவர் அடிகளாசிரியர், பாவலரேறு பாலசுந்தரனார் ஈடுபாடு : சங்க இலக்கியம், பத்தி இலக்கியங்கள், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், நாட்டுப்புறவியல் ஆசிரியப் பணி : திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 33 ஆண்டுகள் தமிழாசிரியர், பணி நிறைவுக்குப்பின் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் பேராசிரியர் பணி தொடர்தல். இயக்கப் பணி : தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், திருவள்ளுவர் தவச்சாலை நூல்கள் : தமிழகத் தொல்பொருள் ஆய்வு (வ்ட்பீது கீகுநூழ்ஙூ) வழக்குச் சொல் அகராதி (ர்மயூரூயுகுயிகீஞ்ணூ நிகுபீய்நூக்ஷி) பதிப்புப் பணி : முதுமுனைவர் இரா. இளங்குமரனாரோடு இணைந்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட முதுமொழிக் களஞ்சியம், சங்க இலக்கியம். பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்கு உதவியோர் ஆசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் பதிப்பாசிரியர்: முனைவர் பி. தமிழகன் கணினி மற்றும் நூல்வடிவமைப்பு: திரு. நல்லதம்பி (யாழினி கணினி) திருமதி. கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: முனைவர் பி. தமிழகன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் 1. கு வரிசைச் சொற்கள் 2 2. கூ 96 3. கெ கே கை 118 4. கே 127 5. கை 134 6. கொ 156 7. கோ 226 8. கெள 274 9. ங 277 கு முதல் ங வரை கு வரிசைச் சொற்கள் கு: ககர உகரக் குறில். குகரம் என்பதும் இது குஎன்பது குக்கு, குக்கூஎன ஒலிக்குறிப்புக்கு முன்வரலுண்டு. குக்கிராமம் என்பது இருபிறப்பி. கு (த). கிராமம்(வ). குக்குடம் என்பது உருண்டு திரண்ட கோழி; இலக்கிய வழக்கு. இவ்வழியால் குக்குடம் உருண்டைப் பொருள் கொண்டு கு என்பதே உலகம்எனப் பின்னாளில் வழக்கில் வந்தது. நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி என்னும் தொல்லோன் ஆணைக்கு மாறாக வந்த பின்வழக்கு இது. * நொ, து காண்க குகரம்: குகரம்:1 கு + கரம் =குகரம். கரம் - சாரியை குகரம்:2 நான்காம் வேற்றுமை உருபு. அது என் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அது என் உருபுகெடக் குகரம் வருமே -தொல். 578 குகரம்:3 குடவரை, மலைக்குகை(வெ.வி.பே) குகு: குகு = கூகைக்குரல். குக்குக் குகு குகு -திருப்.கட. குகை: குழை > குகை. ஒ. நோ.: குழை - முகை(வ.வர.121) குடை, புடை முதலியவும் உட்டுளைத்தல் பொருளில் மக்கள் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் உள்ளமை எண்ணலாம். எ-டு: குடைவரை, புடைக்கிணறு. இயற்கையால் பாறை அல்லது மலையில் குடைவு அமைதலும் செயற்கையால் கருவி கொண்டு குடைவு செய்தலும் எனக் குடைவு இருவகையாம். குகைச்சி: நிலத்தை அகழ்ந்து மேலே மூடுபோட்டு உள்ளே உறையும் கறையான் சேர்த்து வைத்த புற்றாஞ்சோற்றைக் குகைச்சி என்கிறது வெ.வி.பே. குடைந்த .இடத்துச் சேர்த்தலால் குகைச்சி எனக் குறித்தது. * குகை காண்க. குக்கல்: குக்கல்:1 குக்கு + அல் = குக்கல் =குறுகல், குறுகிப் போதல். கோழிக்கு வரும் தொற்று நோய்களுள் ஒன்று குக்கல். குக்கல்நோய் உடனே தொற்றலும் நீரும் தீனியும் கொள்ளாமல் கிடத்தலும், அதனை இறைச்சி உண்பாரும் உண்ணாது எறிதலும் முந்தை நிலை. இதுகால் ஊசி மருந்தால் தடுக்கும் நிலை உண்டாயிற்று. குக்கல்:2 குக்கல் = நாய். உயர்ந்து நெடிது வளர்ந்த நாயும் படுக்குங்கால் குறுகிப் போய்க் கிடத்தல் கண்டு குக்கல் என்றனர். இனி குரைத்தல் என்பதன் குறுக்கம் சிதைந்து குக்கல் எனப்பட்டது என்பதுமாம். குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்திட்ட டாலும் குக்கலே குக்கல் அல்லால் குலந்தனில் பெரிய தாமோ? என்பது விவேக சிந்தாமணி. குக்குதல் என்பதும் இது. குக்கு: உட்கார் என்பதைக் குந்து என்பதும் குத்தவை என்பதும் வழக்கு. முன்னது பெருவழக்கு. பின்னது நெல்லை முகவை வழக்கு. குக்கு என்பது குந்துதல் பொருளில் வருவது கொங்கு நாட்டு வழக்காகும். குக்குக் குகு: குக்குக் குகு என்பது கூகையின் குரல். குக்குக் குகு குக்குக் குகு என முதுகூகை -திருப்.கட பகல்வெல்லும் கூகையைக் காக்கை -திருக். 481 கூகை இரவிலேயே வெளிப்பட்டு இரை தேடும்; பகலில் ஒடுங்கிக் கிடக்கும்; கதிரொளி அதற்குக்கண்ணொளி குன்ற வைக்கும் என்பதால்! பூனையின் கண்ணும் இரவில் நல்லொளி யுடையதாம். பகலொளியில் அதன் பார்வை குன்றி விடும். குக்குடம்: குக்குடம் =கோழி. கு = சிறியது; குடம் = வளைவுடையது; உருண்டையானது. முட்டைக்கு அடைகாக்கும் நிலையில் பந்து போல் சிறகொடுக்கிக் கால் மடக்கிக் கிடப்பதாம் இயல்பால் பெற்ற பெயர் குக்குடம் என்பது. குக்கூ: குக்கு குக்கு > குக்கூ. கோழி கத்தும் குரல் குக்கூ என்பதாம். குக்கூ என்றது கோழி -குறுந். 157 குங்கல்: குணங்கல் > குங்கல். குணங்கல் = வாடுதல், மெலிதல், சோர்தல். பிள்ளை குணங்கி விட்டது -(ம.வ) குங்கல் = குறைதல் (வெ.வி.பே) குங்குமம்: கொங்கு > குங்கு > குங்குமம். கொங்கு = பொன், பூம்பொடி அல்லது பூம்பராகம் (மகரந்தம்) செம்பொன் நிறத்தது குங்குமமாம். மங்கலச் செம்பில் மாண ஏந்திய குங்குமம் -பெருங். 1:46: 255-256 குசல்: குசல் என்பது கோள் என்னும் பொருளில் வட்டாரச் சொல்லாகக் குமரிப் பகுதியில் வழங்குகிறது. கோள் கூறுதல் அல்லது கோள் சொல்லுதலைக் குசலம் என்பது திருச்சிராப் பள்ளி, கருவூர் வட்டார வழக்கு. என்ன குசலம் பேசுகிறீர்கள் என்பர். குசலம் என்பது மறைப்புச் செய்தி என்னும் பொருளில் வழங்குதல் முகவை வழக்கு. மறையாவது, கரவு. குசும்பு: குறும்பு > குசும்பு (கொச்சை வழக்கு). சிறுதனமான செயல் குறும்பு ஆகும். மக்களின் கொச்சை வழக்கு குசும்பு என்பது. அவன் குசும்பன், குசும்புக்காரன்; உன் குசும்பை என்னிடம் வைத்துக் கொள்ளாதே என்பவை மக்கள் வழக்குகள். குச்சரி: கு என்பது குறுமைப் பொருள் முன்னொட்டு. எ-டு: குக்கிராமம் (இருபிறப்பி). குக்கல் முடங்கிக் கிடக்கும் நாய்க்கும், கோழிக்கு வரும் ஒடுக்க நோய்க்கும் பெயர். குச்சரி என்பது நொய்யரிசி நொறுங்கு அரிசி என்னும் பொருளில் தக்கலை வட்டார வழக்காக உள்ளது. குச்சு அரி, குச்சரி. குச்சு =சிறியது; அரி =அரிசி . குச்சு வீடு என்பது காண்பது குச்சுக்காரி என்பது வறுமை மட்டுமன்றி இழிமைச் சொல்லுமாயிற்று. குச்சன்: கரியன் எனவும், நோய்முகன் எனவும் கூறப்படும் சனியன் குச்சன் எனப்படுவான். ஆகா வறுமையும் சிறுமையும் ஆக்குபவன் அவன் என்பர். அதனால் குச்சன் எனப்பட்டான். குச்சன் கோயில் கொண்ட ஊர் குச்சனூர். முற்கேடு செய்யினும் பின்னர் நலன் விளைப்பான் என்பர். முன் ஏழு பின் ஏழு எனப் பிரித்துப் பதினான்காண்டுச் சனி என்பர். சனியால்தான் நளன் சூதனாய், மனை இழந்தோனாய், காடனாய் தேர்ப்பாகனாய் மடைத் தொழிலனாய்,மாறு கோலத்தனாய் வாழ்ந்தான் என்பது அவன் கதை. சனி தொடர் காண்டம், சனி நீங்கு காண்டம் என விரிப்பது. அதைச் சூதாடற் கேடாகக் கொண்டால் நல்ல படிப் பினையாம். அதனைச் சனியின் தலையில் போட்டது சனித்தனமாம்! குச்சி: மரத்தின் சிறுகிளை குச்சு, குச்சி என வழங்கும். அக்குச்சியை முகடாக அமைத்துக் கூரை வேயப்பட்ட சிற்றில் குச்சில் எனப்படும். அக்குச்சியைக் கோலாகக் கொண்டு விளையாடுதல் சில்லாங்குச்சி எனப்படும். கல் மாவினைத் திரட்டிக் குச்சி போல் ஆக்கி எழுதப் பயன்படுத்துவது கற்பலகைக் குச்சியாம். கட்டை வண்டியில் முளைக்குச்சியுண்டு; அதனை ஓட்டுவோர் கையில் தார்க்குச்சி யுண்டு. இவை முளைக்கோல் , தார்க்கோல் எனவும் முளைக்கம்பு தார்க்கம்பு எனவும் வழங்கப்படும். மெலிந்த ஆளைக் குச்சியாள் என்பர். குச்சி போல் தோன்றும் ஒருவகைப் பூச்சி குச்சிப் பூச்சியாம். வறுமையர் வாழ்விடம் பெரிதும் குச்சிலாக இருத்தலால் கரிமுகனாம் சனியன் கோயில் கொண்ட இடம் குச்சனூர் என வழங்குகின்றது. குச்சும் மச்சாகும் குளிர்க்கு என்பது ஔவையார் தனிப்பாடல். குச்சிக் காலி: குச்சிக் கால், நாரைக்கும் கொக்குக்கும் உண்டு. குச்சிபோல் நீண்ட காலைக் குறிப்பது அது. இக்குச்சிக் காலி, காவல் கடமையுடையவர்(போலீசுக் காரர்)பெயராகத் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. குச்சி(தடி)யைக் கொண்டு சுற்றி வருவதால் அவர் பெற்ற வட்டார வழக்குச் சொல் இது . தடியான காவல்காரர் இதனைக் கேட்டு நகைப்பார். தடியுடைய காவல்காரர் கேட்டால் பகைப்பார். குச்சில்: குச்சு + இல் = குச்சில். குச்சிகள் கொண்டு அமைக்கப்படும் குறுங்காலச் சிறுசாலை. பூப்பு அடைந்த பெண்களை நீராட்டு விழா நிகழும் காலம்வரை இருக்கச் செய்யும் சிறிய சாலையே குச்சில் என்பதாம். அண்மைக் காலம் வரை குச்சில் இருப்பு இருந்தமை உண்டு. நீராட்டின்பின் அக்குச்சில் எரியூட்டப்படுதல் வழக்கு அக்குச் சிலைத் தாய்மாமன் கட்டித் தருதல் வழக்கும்உண்டு. குற்றில் வேறு. அது குறுமை + இல். குச்சும் மச்சும்: குச்சு = குடிசை வீடு மச்சு = மாடி வீடு. குச்சு = குச்சில் என்றும் கூறப்படும் ஓலைக் கொட்டகையோ, கூரைக் குடிசையோ குச்சுஆகும். குச்சிலுக்குள் இருக்கிறாள் எனப் பூப்பானவளைக் குறிப்பது (ம.வ). மச்சு மெச்சு என்றும், மெத்து என்றும், மெத்தை என்றும் வழங்கப்படும் கழுதை கிடப்பது தெருப் புழுதி கனாக் காண்பது மச்சுமாளி என்பது பழமொழி. குஞ்சப்பா: குஞ்சப்பா, குஞ்சையா என்பவை சிற்றப்பா , சின்னையா என்னும் பொருளவை. குஞ்சு சிறிது என்னும் பொருளது. சிறு பல்லைக் குஞ்சிப்பல் என்பதும் உண்டு. இவை யாழ்ப்பாண வழக்காகும். குஞ்சப்பா குஞ்சியப்பா எனவும் வழங்கும். குஞ்சம்: குஞ்சம் = நூல் பஞ்சு ஆயவற்றை உருட்டித் திரட்டித் தொங்கலாக விடுதலும், மணிகள் கோத்தலுமாகிய அழகுடையது அது. குஞ்சம்புற் கதிர் போல்வது(ம.வ) குறுமை, நாழி, கோட் சொல்லல் என்பவற்றைக் குஞ்சப் பொருளாகத் தருகிறது பிங்கல நிகண்டு (3379) குஞ்சாலம்: குஞ்சம் என்பது தொங்குவது, தொங்கி ஆடுவது என்னும் பொருளது. இக் குஞ்சாலம், ஊஞ்சல் என்னும் பொருளில் திருநயினார் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது. குஞ்சம் ஆடுதல் பொருள் அமைந்த ஊஞ்சலைக் குறிப்பதாயிற்று. அஞ்சல குஞ்சலம் என்பது தமிழ்நாட்டு விளையாட்டுகளில் ஒன்று (த. நா. வி). குஞ்சி: குஞ்சி = குடுமி, கூந்தல். குஞ்சப்புல்லின் கதிர்போலப் பகுப்பும் தொங்கலும் உடையதாகையால் குடுமி, கூந்தல் ஆயவை குஞ்சி எனப்பட்டன. குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் -நாலடி. 131 கூந்தல் பெண்பாலினர் முடியும், குடுமி ஆண்பாலினர் முடியு மாதல் மக்கள் வழக்கு. குன்றிக் கொடியையும் ஆண்பால் மயிரையும் குஞ்சி என்கிறது பிங்கல நிகண்டு (3380) மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சி குறிஞ் -112. குஞ்சி இடக்கரடக்கு. பைதல் பருவ ஆண்குறி. குஞ்சு: சிறியதும் மெல்லியதுமாகியது குஞ்சு எனப்படும். எ-டு: அணிற்குஞ்சு, கோழிக்குஞ்சு கிளிக்குஞ்சு, எலிக்குஞ்சு. தொல்காப்பியர் குறிப்பிடும் இளமைப்பெயர்களுள் இடம் பெறாத பிற்காலச் சொல் இது. பெரிதும் மக்கள் வழக்குச் சொல் குஞ்சப்பா,குஞ்சம்மா என்பவை ஆண் பெண் பெயர்களாக உள்ளன. குடகு: குடம்போல் அமைந்ததொரு நாடு. துளு நாடு என்பது அது பேசும் மொழி துளுவம். தமிழ்நாட்டுப் பகுதியாகப் பண்டு இருந்தது. ஆங்கிருந்து வந்து இற்றைத் தமிழகத்தில் வாழும் தமிழர் துளுவ வேளாளர். குடகு மேற்கே இருத்தலால் குடகம் மேற்கு என்னும் பொருளும் தந்தது. குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும்நான் கெல்லையில் இருந்தமிழ்க் கடலுள் -நன்.பாயி குடக்கு: குடம்போன்ற அமைப்புடைய- நிலத்தைக் கொண்ட - நாடு குடகு. அது மேல்பால் அமைந்தது அதனால் குடகு > குடக்கு - மேற்கு எனப்பட்டது குடம்-வட்டம். நில வரைபடம் காண்க. குடநாடு, குட நாட்டவர். * குடம் காண்க. குடங்கர்: குடம் > குடங்கு > குடங்கர் = குடிசை. குடம் = வளைவுப் பொருளது. உடம்பா டிலாதவர்வாழ்க்கை குடங்கருள் பாம்போ டுடனுறைந் தற்று -திருக். 890 குடங்கை: குடங்கை:1 குடும் + கை = குடங்கை = உள்ளங்கை. வளைந்து குழிவான கை. குடங்கையில் வாரிதி அணைத்துக் கொண்டவன் - கம் உயுத். 4200 குடங்கை:2 மக்கள் வழக்கில் குடங்கை கொடங்கை என வழங்குகின்றது. ஒரு கொடங்கை வைக்கோல் அள்ளிக் கொண்டு வா என்பது மக்கள் வழக்கு. தோட்பட்டையில் இருந்து கை நீட்டி வைக் கோலை அள்ளி முன்கையை இடுப்பில் வைத்து உள்ளடக்கிக் கொண்டு வருதல் கொடங்கையாம். குடத்தி: இளையர் விளையாட்டு வகையுள் ஒன்று குடத்தி. குடு குடு எனப் பாடிக் கொண்டு தொட்டுப் பிடிக்கும் விளையாட்டு அது. சிற்றூர்களில் மிக்கு விளையாடப் பட்ட இவ்விளையாட்டு மறைந்து கொண்டே வருகின்றது. வடவர் திணிப்பால் கபடி எனப்பட்டு ஆடலாக்கப் பட்டது. குடு குடுஎன்பதன் ஒலி எளிமையும் கபடி கபடி என் பதன் முயற்சி மிகையும் எண்ணின் குடுகுடுவின் இயற்கை விளங்கும். குடமாடல்: குடம் + ஆடல் = குடமாடல். தலையில் குடம் கொண்டு ஆடுதல் குடமாடலாம். குடக் கூத்து என்பதும் இது. இறைமைத்தொடர்பொடு மக்கள் ஆடும் இவ்வாட்டம் தன் பழம் பெயர் இழந்து கரகாட்டமாக உள்ளது. ஒரு குடத்தைக் கொண்டு சுற்றியும் கவிழ்த்தும் நிமிர்த்தும் கீழே வீழாமல் ஆடும் அருமை ஆடல் இது. ஒரு குடத்தின்மேல் மூன்று, ஐந்து என வைத்துக் கவிழாமல் ஆடும் ஆடல் திறவர் இன்றும் உளர். பெண் வேடமிட்டு ஆடிய நிலை மாறிப் பெண்டிரே ஆடும் விளக்கமும் இன்று காணலாம். ஆட்டத்திற்கு ஏற்பக் கொட்டும் குரவையும் நிகழும். பண்டு நிகழ்ந்ததாகக் கூறப்படும் பதினோராடல்களுள் ஒன்று குடமாடல். குடக்கூத்து என்பதும் இது. குடமாடல் பற்றிய சிலம்புச் செய்தி: வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோன்ஆடிய குடமும் -சிலப். 6: 54-55 பொருள்: காமன் மகன் அநிருத்தனைத் தன்மகன் உழை காரணமாக வாணன் சிறை வைத்தலின், அவனுடைய சோ என்னும் நகர வீதியில் சென்று நிலங்கடந்த நீனிற வண்ணன் குடங்கொண்டாடிய குடக்கூத்து இது. பஞ்சலோகங்களாலும் மண்ணாலும் குடங்கொண்டாடினது. (அடியார்க்). குடமுழுக்கு: திருக்கோயில் திருப்பணி நிறைவேறிய பின் எல்லாமும் தூய்தாய் மங்கலமாய்ச் செய்யப்பட்டன என்பதன் நிறைவால் எடுக்கப்படுவது குட முழுக்கு விழா ஆகும். இதன்தொல்பெயர் கடவுள் மங்கலம் என்பதாம். கோயில் கோபுரக் கலயமாம் உச்சிக் குடங்களைப் புனித நீராட்டுதலே இவ்விழா வாகும். திருப்பணிக்கு ஆய செலவினும் குட முழுக்குச் செலவு மிகவாகச் செய்யப்படுதல் பயன்செயல் ஆகாது. மக்கள் மொழியில் செய்யப்பட்ட கடவுள் மங்கலம் புரியாமொழியில், கும்பாபிசேகம் ஆக்கப்பட்டமை நாட்டு மக்கள் விழிப்பின்மைச் சான்றாம். கடவுண் மங்கலம் செய்கென ஏவினள் -சிலப். 28: 233 குடம்: குடம்:1 வட்டமாகக் குடைந்து ஆக்கப்பட்ட கலம் குடம் எனப்பட்டது. குடைதல் சான்று குடைவரை! வளைய வளைய வந்து நீராடுதல், குடைதல். வட்ட வடிவப் பூ குடசம். மலை மல்லிகை, வெப்பாலை என்பவை அது (வெ.வி.பே). குடம்:2 குடம் = மேற்கு, வளைவானது, வனைகலம். கதிர் மேலேறி வளைந்து குடைந்து போகும் தோற்றம் கண்டு குடம் என மேற்குத் திசை குறிக்கப்பட்டது. குணம் + கு =குணக்கு ஆயது போல், குடம் + கு =குடக்கு ஆயது. மேற்குத் திக்கில் அமைந்த நாடு குடம். குடகு எனவும் வழங்கப்பட்டது. குணம், குடம் என்பவையும் பழஞ்சொற்களே. குணகடல் குமரி குடகம் வேங்கடம்; குணக்கும் குடக்கும்; குணவாயில் குடவாயில் என்பவை பழந்தமிழ் ஆட்சிகள். குணகோளார்த்தம் குடகோளார்த்தம் என்பவை பிற்காலத்து வந்த இருபிறப்பிச் சொற்கள். குடம்பை: குடம் > குடம்பை. குடம் வளைவுப் பொருளது. குடம்பை முட்டையும் கூடு மாகும் -பிங். 3382 முட்டை வடிவும் கூட்டின் வடிவும் வட்டமாதலால் குடம்பை எனப்பட்டது. குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு -திருக். 338 பராரை, அலங்க லஞ்சினைக் குடம்பை புல்லெனப் புலம்பெயர் மருங்கிற் புள்ளெழுந் தாங்கு மெய்யிவண் ஒழியப் போகியவர் செய்வினை மருங்கிற் செலீஇயர்என் உயிரே -அகம்.113 குடம்பை என்பது கூடுதான் என்பதை அருமையாய் நிலைப்படுத்தும் சான்று இது. சேக்கை மரனொழியச் சேணீங்கு புள் -நாலடி. 30 என்பதையும் எண்ணுக. குடலும் குந்தாணியும்: குடல் = சிறுகுடல், பெருங்குடல் முதலியவை. குந்தாமணி = குடலின் மேல் மூடி(உதரவிதானம்) . குத்திய குத்தில் குடலும் குந்தாணியும் தள்ளிவிட்டன என்பது வழக்கு. குடல் என்பதற்குக் குழல் போல்வது என்பது பொருள். உட்டுளையுடையவை குடல், குழல், புடல், புழல், முதலியவை என்க. குந்தாணி என்பது உரல் மேல் வளையமாக இருக்கும் வளை தகடு என்பதை அறிவது, மேல் மூடி என்னும் பொருளுக்கு உதவும். குடலை: குடலை = பூக்குடலை. பூவைப் பறித்துக் கொண்டு வருவதற்காக ஓலையால் வளைவாகப் பின்னிக் கைப்பிடியும் உடையதாய்ச் செய்யப்படுவது குடலையாகும். குடலை = வளைவான வடிவினது. நந்தவனம் பூந்தோட்டம் ஆயவற்றில் பூவைப் பறித்துக் கசங்காமல் கொண்டுவரப் பயன்படுத்தப் படுவது வழிபாட்டுக்கு உரியது அப்பூ. குடலை உருவல்: குடலை உருவல் = படாத்துயர் படுத்தல், வசையால் வாட்டல். நீ சொல்வதோ செய்வதோ பெரியவருக்குத் தெரிந்தால் போதும், குடலை உருவி மாலை போட்டு விடுவார் என்பதில் உள்ள குடலை உருவல் அச்செயல் செய்வதைக் குறிப்பதில்லை. குடலை உருவுவது போலக் கொடுமை படுத்துவார் என்றும், தன்குடலைத் தானே உருவுமாறு வசை பொழிவர் என்றும் கொள்ள வேண்டிய. வழக்காம். குடலை உருவுதல் புலவூணியர் செய்வன. இக்குடலை உருவுதலோ சீற்றமிக்கார் எவரும் செய்வன. குடல்காய்ச்சல்: இது நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொல் டைபாய்டு என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அருமையாக மண்ணின் மணத்தொடு வாய்த்த வழக்குச் சொல் இது. இதனைப் பாவாணர் வழக்கில் கொண்டு வந்து பொதுமைப் படுத்தினார். வட்டார வழக்குச் சொற்களைப் பொதுப்பயன்படுத்தமாக ஆக்கும்போது அது மொழிவளம் ஆகின்றது. குடவோலை: குடம் + ஓலை = குடவோலை. ஒப்போலை அல்லது வாக்குச் சீட்டுகளை மக்களாட்சியில் பெட்டியில் இடுவது போலச் சோழராட்சி காலத்தில் ஊரவை களைத் தேர்த்தெடுக்க ஏற்படுத்தப்பட்ட தேர்தல் முறை குடவோலை முறையாம். வாக்களிக்கத் தக்கார் ஊர்மன்றில் கூடி அவரவர் விருப்பின்படி தேர்ந்தெடுக்கத் தக்கார் பெயரை எழுதி, எழுதிய ஓலைச் சீட்டைக் குடத்துள் போட்டுக் குலுக்கிச் சிறுவன் ஒருவனைக் கொண்டு சீட்டை எடுத்துத் தேர்வு செய்த முறை இது. இதுபற்றிய விரிந்த செய்தியை அறிதல் இக்கால மக்களாட்சி முறைக்கு முன்னோடித் திட்டமாக இருப்பதுடன் அவைக்குத் தேர்ந்தெடுப்பார் அறத்தகுதியையும் அவைத் தேர்தலுக்கு நிற்கத் தகவிலர் இவரென்னும் திட்டமும் புலப்படுத்துதலால் அறிந்து கொள்ளத் தக்கதாம். பறிப்பொப்புக் கருதாமையும் இக் குடவோலைத் தகுதியுள் இருந்தமை வெளிப்படுகின்றது. வேதியம் கற்றார் ஊராளல் மிகப் பெற்றார் என்பது அது. குடவோலை: சோழர் காலத்தில் குடத்தினுள் ஓலையிட்டுக் கிராமசபைத் தேர்தல் நிகழ்ந்ததால் அத்தேர்தல் குடவோலை என்று பெயர் பெற்றது. இக்குடவோலைத் தேர்தல் எவ்வாறு நிகழ்ந்த தென்பதனைச் செங்கற்பட்டு மாவட்டம் உத்தரமேரூரிலுள்ள இரண்டு கல் வெட்டுகள் விரிவாக உரைக்கின்றன. குடவோலைத் தேர்தல் முறை: (அ) செங்கற்பட்டு மாவட்டம் உத்தரமேரூரிலுள்ள முதல் இராசராசன் காலத்துக் கல்வெட்டு குடவோலை(கிராமசபைத் தேர்தல்) முறைகளை மிகத் தெளிவாக அறிவிக்கின்றது. தேர்தல் விதிமுறைகளையும் அக்கல்வெட்டில் அறுதியிட்டுக் கூறி யுள்ளமை வியக்கத் தக்கதாகும். உறுப்பினராதற்கமைந்த தகுதிகள்: 1 கால்காணி நிலத்துக்கு மேல் அரைக்காணி நிலமுடையவன். 2 தனக்கு உரிமையுடைய மனையிலமைந்த இல்லத்தில் வாழ்பவன். 3 முப்பத்தைந்து வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதிற்கு உட்பட்டவன். 4 வேத சாத்திரமறிந்த பிராம்மணம் வல்லவன். 5 வேதாகமவிருத்திகளை ஓதுவிக்கும் பயிற்சியுடையவன். 6 அரைக்கால் காணி நிலமுடையானாயினும், நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் முழுமையாக அறிந்தவன். 7 நிர்வாகச் செயல்திறம் மிக்கவன். 8 ஒழுக்கமும் ஆசாரமும் உடையவன். 9 பழியற்ற வழியில் பொருளீட்டிய தூய்மையும் மனத் தூய்மையும் உடையவன். 10 மூவாண்டிற்குள் கிராமசபை வாரிய உறுப்பினனாக இல்லாதவன். இத்தகைய தகுதிகளைக் குறைவின்றிப் பெற்ற பெருமக் களையே குடும்பு மக்கள் தேர்ந்து அவர்களின் பெயர்களைத் தனித்தனி ஓலைகளில் எழுதி அவ்வோலைகளைக் குடத்தினுள் இடுவர். குடும்பு என்பது இக்காலத்தில் வட்டம் தொகுதி என்பதனை ஒக்கும். உறுப்பினராகத் தகுதி அற்றவர்: 1 ஊர்ச்சபையிலமைந்த வாரியங்களில் முன்னரிருந்து கணக்கு காட்டாது பிழைத்தவன். 2 தேர்தலில் நிற்பவரின் சிற்றன்னை பெரியதாய் ஆகி யோரின் மக்கள்; அத்தை மாமன் மக்கள்; தாயோடு உடன்பிறந்தான்; இவர்கட்கும் தனக்கும் பிள்ளை கொடுத்த மாமன்; இவர்கள் மனைவியோடு உடன் பிறந்தாளை மணந்தவன்; உடன்பிறந்தாள் மக்கள்; தன் மருமகன்; தன் தகப்பன்; தன்மகன் ஆகிய உறவின் முறையார்கள். 3 தானென்ற அகம்பாவத்திலும், பெரிய பழிக்குற்றத்திலும் முன்னர்ச் செய்தபடி, மகாபாதகம் என்ற கிராமக் குற்றக் குறிப்பில் பெயரெழுதப்பட்டவன். 4 சிற்றின்பத்தால் கெட்டவர்க்குப் பிராயச்சித்தம் செய்யும் ஆளாக உள்ளவன். 5 பிடிவாத குணம் பெற்றிருப்பவன். 6 பிறர் பொருளைக் கைப்பற்றி வாழ்பவன். 7 கையூட்டுப் பெற்றவன்(கையூட்டு = லஞ்சம்). 8 முன்பு பரத்தையர் கூட்டுறவால் தூய்மையற்றவனாக விருந்து நெய்யால் செய்யப்பெறும் பிராமண பிராய சித்தம் செய்து கொண்டவன். 9 பழிகள் பலசெய்து அவற்றிற்குக் கழுவாயாக பிராயச் சித்தம் செய்து கொண்டவன். 10 கிராம துரோகியாய் இருந்து தண்டனை செலுத்திப் பிராயச்சித்தம் பெற்றவன். ஆக இத்தகைய குற்றங்கட்குட் பட்டாரை நீக்கிவிட்டு தகுதியுடையார் பெயர்களை மட்டும் குடும்பு மக்கள் குறித்துக் குடம் புகவிடுவர். குடமும் ஓலையும்: உத்தரமேரூரில் முப்பது குடும்பு அமைந்திருந்தது. ஒவ்வொரு குடும்பில் உள்ளவர்களும் தாமே கூட்டம் நடத்தி நிறைவேற்றுக் கழகத்தில் உறுப்பினராக இருத்தற்குரிய தகுதி யுடையாரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் பெயர்களைத் தனித்தனி ஓலைத் துண்டுகளில் எழுதி அப்பெயர் எழுதிய ஓலைகளை ஒன்றாகச் சேர்த்து அவை எக்குடும்பிற்கு உரியவை என்பது புலப்படுமாறு, அக்குடும்பின் பெயர் வரையப் பெற்ற வரையோலை ஒன்றைச் சேர்த்துக் கட்டி ஒரு குடத்திலிட்டு வைப்பர். இவ்வாறே எல்லாக் குடும்புகட்கும் தேர்வோலை செய்து தனித்தனியே கட்டிக் குடத்திலிடுவர். பொதுமக்கள் சபை: உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குக் குறிப்பிட்ட நாளில், மகாசபைக்குரிய பொதுமக்களாகிய ஊரிலுள்ள இளையர் முதல் முதியோர் வரை சபை நிரம்ப உட்புகக் கொண்டு, அன்று உள்ளூரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியாமே மகாசபையிலே உள் மண்டபத்திலே இருத்திக் கொண்டு, சபையின் நடுவே ஓலைக் கட்டுகளிட்ட குடத்தினை வைப்பர். அது போது, அரசனின், ஆணை பெற்ற அதிகாரியொருவர் அச்சபைக்கு வந்திருந்து தேர்தலை முறையாக நிகழ்த்தி வைப்பார். தேர்தலின் முதல்நிலை: நம்பிமாரில் முதியராய் இருப்பாரொருவர், குடும்புகளின் ஓலைக்கட்டுகள் போடப்பட்டிருந்த குடங்களிலொன்றினை எல்லா மக்களும் காணும் வகையாக, இருகைகளாலும் மேல் நோக்கி எடுத்துக் கொண்டு நிற்பார். உறுப்பினர் தேர்வு: அதுபோது, பகற்போதிலேயே வினாத் தெரியாத பாலன் ஒருவனைக் கொண்டு, அக்குடத்திலிருந்து ஒரு குடும்பிற்குரிய ஓலைக்கட்டை எடுப்பித்து, அதனை அவிழ்த்து வேறொரு குடத்திலிட்டுக் குலுக்கி, அக்குடத்தில் ஓர் ஓலையை அப்பாலனைக் கொண்டே எடுக்கச் செய்து, அவ்வோலையை ஊர்க்கணக்கன் மத்யதன் கையிற் கொடுப்பர். அக்குடத்து ஓலையை (மத்யதன்) வாங்கும்போது, ஐந்து விரலாலும் அகல வைத்து, உள்ளங் கையிலே ஏற்றுக் கொள்ளுவான். பெயர்ப்பதிவு: சபையிலுள்ளோர் யாவரும் கேட்குமாறு மத்யதன் வாசித்த அவ்வோலையை, அம்மண்டபத்தே இருந்த நம்பியர் எல்லோரும் வாங்கி வாசிப்பார்கள். வாசிக்கப்பட்ட அப்பெயர் கிராமசபை உறுப்பினர் பட்டியலில் தீட்டப்பெறும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்றவர், அக்குடும்பிற்குரிய முறையில் நிறைவேற்றுக் கழகத்தின் உறுப்பினராக இடம் பெறுவர். மகாசபையில் வாரிய அமைப்பு: இவ்வாறு முப்பது குடும்பிலும் குடும்பிற்கு ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது பேரிலும் முன்னர்த் தோட்ட வாரியமும், ஏரிவாரியமும், செய்து அனுபவப் பட்டாரையும், கல்வி கேள்விகளில் சிறந்த முதியவர்களையும், வயதாலும் அனுபவத்தாலும் மிக்காரையும் கொண்டு சம்வத்ஸர வாரியம் (நீதி விசாரணைக் குழு) அமைத்துக் கொள்வார்கள். இவ்வாரியத் தில் பன்னிருவர் இடம்பெறுவர். மிக்கு நின்றாருள் பன்னிருவரை, தோட்ட வாரியமாக ஆக்கிக் கொள்வர். எஞ்சி நின்ற அறுவரையும் ஏரி வாரியமாகக் கொள்வார்கள். இவ்விரண்டு தரத்து வாரியமும் வாரியங்கள் செயல்படுதற் குரிய பணியாளரையும் தொழிலாளரையும் அன்றே கூட்டிக் கொள்ளுவர். பதவிக் காலமும் நீக்கமும்: இவ்வாறாக அமைந்து வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும், முந்நூற்று அறுபது நாளும் நிரம்பப் பணி செய்து (ஓராண்டின் இறுதியில்) விலகுவர். வாரியம் செய்யும் உறுப்பினருள் ஒருவர் தவறு செய்வாராயின், அப்பொழுதே அவரை வாரியத்திலிருந்து நீக்கி விசாரணை செய்து, தண்டனையோ அபராதமோ அளித்து, கிராமக் குற்றப் பதிவிலும் அவரது பெயரைப் பதிவு செய்வர். இவ்வாறான வரையறைகளுடன் குடவோலைத் தேர்வு முறைகள் சோழர் ஆட்சியில் நிகழ்ந்துள்ளன என்பதனை, உத்தரமேரூர்க் கல்வெட்டு விளக்கமாகப் புலப்படுத்துகின்றது. தஞ்சை மாவட்டம் திருச்சேய் நல்லூரில் உள்ள கல் வெட்டொன்று ஊர்ச்சபையார் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றி விரிவாகக் கூறுகின்றது. பிறவாரியங்கள்: இவ்வாறாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதின்மரைக் கொண்டு, சம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம் ஆகிய தலைமையான வாரியங்கள் அமைத்துக் கொண்ட பின்னர், மேற்குறித்த முப்பது குடும்புகளிலிருந்து எஞ்சி நின்ற ஓலைக் கட்டுகளை முறையே குடவோலை வாயிலாக மீண்டும் பன்னிரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பெறுவர். அவர்களுள் அறுவர் பஞ்சவார வாரியராகவும், அறுவர் பொன் வாரியராகவும் இருப்பர். இவ்வாறே கிராமத்தின் வளர்ச்சிக்கும் தேவைகட்குமேற்ப, கழனி வாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம், தடிவழி வாரியம், குடும்பு வாரியம், நகர வாரியம் என்ற வாரியங்களும், முறையே வாரியத்திற்கு அறுவராக உறுப்பினர் அமைக்கப் பெறுதல் வழக்காகும். சில வாரியங்கள் நால்வரைக் கொண்ட தாகவும் அமைந்துள்ளதனைக் கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. குடவோலைக் கல்வெட்டுகள்: இத்தகைய உயர்ந்த முறையில் தமிழகத்தில் குடவோலை வழியே தேர்தல் நிகழ்த்தப் பெற்று உறுப்பினர் வழியே தேர்தல் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பெற்றதையும், வாரியங்கள் அமைக்கப் பெற்றதையும், கூறுவதுடன், உறுப்பினர்களின் பணிகளையும், நிர்வாக முறைகளுடன் விதிகளையும், கிராம சபையாரின் பல்வேறு பட்ட செயல்களையும் சீர்திருத்தங்களை யும் உத்தரமேரூர், திருநின்றவூர், தலைஞாயிறு, நன்னிலத்து அய்யம் பேட்டை, காமரசவல்லி, செம்பியன் மாதேவி, சேய்ஞலூர் ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் தெளிவுடன் விளக்குவனவாக அமைந்துள்ளன. (க.க.சொ.அ.) குடாது: குடாது > குடாஅது = மேல் கண்ணது. குடம் = மேற்கு. குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் - புறம். 6 பொருள்: மேல்கண்ணது பழைதாய் முதிர்ந்த கடலின் மேற்கும் (ப.உ.) * குடம் காண்க. குடாப்பு: வளைவாக அமைந்த குடில். ஆட்டுக் குட்டிகளை அடைக்க அமைந்த குட்டாப்பு அல்லது குடில். குட்டாப்பு > குடாப்பு. ஆயர் வழக்கு. குடாவடி: குடம் + அடி = குடவடி > குடாவடி = குடம் போன்ற வளைந்த அடியை உடையது. அடி = கால். குடாவடி யுளியமும் - சிலப். 25:50 குடாவடி யுளியம் = பிள்ளைக் கரடி; திசைச்சொல்; கரடிக்குட்டி. (அரும்.) உளியம் = கரடி. உளிபோலும் நகத்தை உடையது உளியம். * உளியம் காண்க. குடி: குடி > குடில் > குடிசை. குடியிருக்கும் இடமும், அவ்விடத்து ஊரும் குடி என வழங்கப்பட்டன. ஊர்ப்பெயர் ஈறுகளுள் குடி என முடிவன பலவாதல் அறிக. எ-டு: காரைக்குடி, குன்றக்குடி, மாங்குடி. குடி இருக்க அமைத்த சிற்றில் குடில் எனப்பட்டது. பின்னர் அக்குடில் ஆட்டுக் குட்டிகளை அடைக்கும் இடமாயிற்று. மக்கள் குடியிருந்த வீடு, குடிசை எனப் பெயர் கொண்டது. குடிசை வாழ் வறுமையர் வாழ்வில் உணவு நீர் எனினும், சோறு எனினும் குடியாகவே இருந்தது. கஞ்சியாகக் குடித்தல், கூழாகக் குடித்தல், கரைத்துக் குடித்தல் எனக் குடித்தல் உணவுண்ணல் பொருட்டாகவே அமைந்தமை நோக்கி யறியத் தக்கதாம். மண் நீரையும் உரத்தையும் உள்ளாகக் கொள்ளுதல் உட்கொளல் ஆயிற்று. உட்கொளல் உண்ணல், உணவு, ஊண் என்றாயின, உயிரிகளும் உணவையும் நீரையும் உடலின் உள்ளே கொள்வன ஆதலால்! குடிசெயல்வகை: ஒருவன் தான் பிறந்த குடியை உயரச் செய்யும் வகை, குடிசெயல்வகை என்பது (திருக். அதி. 103). குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும் - திருக். 1028 கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையில் பீடுடைய தில் - திருக். 1021 குடித்தல்: நீர்வகை உணவுகளைப் பொதுவகையாக உட்கொள்ளுதல் குடித்தல் ஆகும். அந்தீந் தண்ணீர் குடித்தலின் என்பது குறிஞ்சிப் பாட்டு (211). அண்ணாந்து குடித்தல், கவ்விக் குடித்தல், மண்டியிட்டுக் குடித்தல், அள்ளிக் குடித்தல் எல்லாம் குடித்தல் வகைகளே. பண்டைக் குடிநீர்க் குளமே, ஊருணி என்பதையும் எண்ணுக. குடிநீர் வாரியத் துறையையும், மதுக்குடிக் கேட்டையும் கருதின் குடிப்பெருமை சிறுமை ஒருங்கு விளங்கும். குடிநீங்காக் காராண்மை: நிலத்தில் குடியிருப்பதொடு அந்நிலத்தில் பயிரிடும் உரிமையும் நிலையாகப் பெற்று ஆண்டுதோறும் உரிமை யாளருக்குரிய தவசத்தை முறைப்படி செலுத்துபவராகவும் இருப்பது குடிநீங்காக் காராண்மை. குடியிருப்புடன் நிலையாகப் பாடுபடுதலும் கொண்ட முறைமை குடிநீங்காக் காராண்மை (வேளாண்மை). ஆண்டாண்டு தோறும் இரண்டாயிரத் தறுநூற்றுக் கலநெல் அட்டுவார்களாகவும், இப்பரிசு இந்நிலம் விற்றும் ஒற்றி வைச்சும் கொள்ளப் பெறுவார்களாகவும், இப்பரிசு நீங்காக் காராண்மையாகக் கல்மேல் வெட்டுவிச்சு (க.க.சொ.அ.) குடிபடை: வள்ளுவர் காலத்திலும் சரி, பிற்பட்ட ஆங்கிலர் ஆட்சிக் காலம் வரையிலும் கூடச்சரி, குடிகள் அனைவரும் படைஞராயும், படைஞர் அனைவரும் குடிகளாகவும் இருந்தனர். போர் என்றவுடன் எத்தொழில் செய்நரும் தம் தொழிலை விடுத்துப் போர்த்தொழில் மேல் போன வரலாறு தெளிவாக அறிந்தது. அதனால் குடிபடை என்னும் வழக்காறே இருந்தது. குடிகள் அனைவரும் படைஞர் என்பதும், படைஞர் அனைவரும் குடிகள் என்பதும் குறிப்பது அது. வள்ளுவர் பொருட்பால் முதலதிகாரமாகிய இறைமாட்சியின் முதற் பாடலில் படைகுடி என்று தொடங்கிய முறைமை எண்ணின், உண்மை புலனாம். இப் படைகுடி போலவே அந்நாளில் கற்றார் அனைவரும் கற்பிக்கும் கடமையையும் மேற்கொண்டிருந்தனர். வேறு வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் கற்றவர் தம் கடமைகளுள் ஒன்றாகக் கற்பித்தல் கடமையையும் மேற்கொண்டிருந்தனர். ஆதலால், கற்றோரைப் பற்றிக் கூறிய வள்ளுவர் கற்பிப்போர் எனத் தனிப்படுத்திக் கூறினார் அல்லர்! வள்ளுவர் வழியிலேயே கற்போர் அனைவரும் கற்பிக்கும் கடப்பாட்டாளராகவும் இருந்திருந்தால், இம்மண்ணில் கல்லார் எவரும் இல்லார் என்னும் நிலை கட்டாயம் நெடுங் காலத்திற்கு முன்னரே இருந்திருக்கும். இந்நாள் வரை தொடர்ந்திருக்கவும் படைப்பாளர்கள் பெருகியிருக்கவும் வாய்த்திருக்கும். குடிமை: குடி > குடிமை. குடிமை:1 குடிமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரி. இறைகுடிமை அந்தராயம் நாடென்ற வரி - புதுக். கல். 260 குடிமை:2 நல்ல குடிவழியினர் தன்மை. திருக். அதி. 61 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் - திருக். 608 குடிமை:3 குமுகாயம் பற்றிய பாடம், உயர் தொடக்கப் பள்ளிப் பாடங்களுள் ஒன்றாக இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்தது. அதற்குக் குடிமைப் பயிற்சி என்பது பெயர். குடியரசு வந்தபின் குடிமைப் பயிற்சி ஒழிந்து போயிற்று. குடியர்: குடியர் = மதுக்குடியர். குடிப்பது எல்லாம் குடியே எனினும், குடி என்பது மதுக்குடியையே குறிப்பது வழக்காயிற்று. குடித்தல் என்னும் பொதுமையை விலக்கி மது என்னும் சிறப்பைக் குறிப்பதாகக் குடி என்பது வழக்கத்தில் உள்ளதாம். குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு என்னும் பழமொழியில் வரும் குடிகாரன் குடியனாதல் அறிக. குடியிருப்பவன் என்னும் பொருளை விலக்கிக் குடிப்பவன் என்னும் பொருளில் வருதல் அறிக. குடியாண்மை: குடி + ஆண்மை = குடியாண்மை = தாம் பிறந்த குடும்பத்தை ஆளும் தன்மை. குடியாண்மை இல்லாத குடி மடியும் என்பது திருக்குறள். மடியால் குடிகெடும் என்பதும் அது. குடியாண்மையுள் குற்றம் உண்டாயினும் மடியொழிந்த ஆண்மையால் மாற்றி உயர்த்தி விடலாம் என்பதே குடிசெயல்வகை அதிகாரம். ஆள்மை > ஆண்மை (ஆளின் தன்மை) ஆதலால் ஆண்பால் பட்டதன்று; இருபால் பட்டதாம். பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு என்னும் தொல்காப்பியத்தால் (1219) ஆண்மை இருபாற் பொதுவாதல் விளங்கும். ஆண்மையாவது ஆளுமை, ஆளும் தன்மை. குடிவரவு: பாட்டுடைத் தலைவன் பிறந்த குடிவரவினை நயமுற விரித்துக் கூறுதல் குலோதய மாலை எனப்படும் குடிவரவு மாலையாம். கலிங்கத்துப் பரணி கூறும் இராசபாரம்பரியம் குலோதயச் செய்தியாம். கல்வெட்டுகளில் வரும் மெய்க் கீர்த்திகளும், குடிவரவுரைப்பதுடன் அவர்கள் செய்த செயல் களையும் தலைவன் செய்தவையாகச் சிறப்பித்துக் கூறுவதுண்டு. வளிதொழி லாண்ட உரவோன் மருக என்பன போலப் புறப்பாடல்களில் (66) வருவன குலோதய மாலைக்கு முன்னணியவாம். மானக் குலோதய மாலைகுலந் தான்விரித்தல் என்பது பிரபந்தத் திரட்டு (8). குடுத்தல்: கொடுத்தல் > குடுத்தல். இது வழுவழக்கே எனினும் கல்வெட்டில் பல இடங்களில் கொடுத்தல் குடுத்தலாகவே இடம்பெற்றுள. எ-டு: ஒற்றியிட்ட நிலத்தை விசையரையன் முப்பதின் காடி நெல்லும் ஐங்கழஞ்சு பொன்னும் குடுத்து மீட்டு தனதாக்கி (க.க.சொ.அ.). * கொடுத்தல் காண்க. குடுமிப்பிடி: குடுமிப்பிடி = கெடுபிடி. என்னைக் குடுமிப் பிடியாகப் பிடித்துவிட்டான் என்ன செய்வேன்? விற்காததை விற்றாவது கொடுத்துத் தானே ஆக வேண்டும்? என்பது கடன் நெருக்கடிப் பட்டார் சொல்லும் வழக்கு. குடுமியைப் பிடித்துவிட்டால் தப்புவது அரிது. சிக்கம் என்பது குடுமி. சிக்கெனப் பிடித்தல் என்பதும் அது. குடுமியில் சிக்கு உண்டாகும். அதனை விலக்குவது பக்குவமாகச் செய்தாலேயே துன்பின்றி இயலும். இல்லாக்கால் வலி உண்டாம், அழிவும் உண்டாம். ஆதலால், குடுமிப்பிடி, நெருக்கடி செய்து வைத்துவிட்டுப் போ என்ற நிலையில் அமைவதாம். குடுமியைப் பிடித்தல்: குடுமியைப் பிடித்தல் = அகப்படுத்தல். சண்டையில் ஒன்று குடுமிப்பிடிச் சண்டை. வளர்ந்த குடுமியைப் பற்றிப் பிடித்துக் கொண்டால், படாதபாடு படுத்திவிட முடியும். ஆதலால், குடுமியைப் பிடிக்க இடந்தருதல் இல்லை. குடுமியைப் பிடித்தல் ஆகாது என்பதும், குடுமி அவிழ்த்தவன் அதனைக் கட்டும் வரை அவனொடு போரிடக் கூடாது என்பதும் முன்னையோர் போர் முறை. குடுமியைப் பிடித்துக் கொண்டவன் விரும்பியபடி எல்லாம் ஆட்டி அலைக்கழிப்பது போலச் சிலவகை எழுத்துகள், கமுக்கச் செய்திகள் கிடைத்துவிட்டால் அவற்றைக் கொண்டு அலைக்கழிக்கும் கொடுமை நிகழ்த்துவர். அத்தகையர், உன் குடுமி என் கையில் இருக்கிறது; அங்கே, இங்கே திமிர முடியாது என்பர். குடுமை: சண்டை, பெண்களிடம் உண்டாகிவிட்டால் இயல்பாகப் பற்றிக் கொண்டு அலைக்கழிக்க வாய்ப்பது கூந்தல் ஆகும். கூந்தல் பெண்களுக்குரியது. ஆண்கள் குடுமிக்குரியர். குடுமி பொதுமை குறித்து வருவதுடன் மதில் முதலியவற்றின் உச்சியும் குடுமியாகக் கூறப்படும். குடுமி கொண்ட மண்ணு மங்கலம் என்பது ஒரு புறத்துறை. குடுமி பற்றிச் செய்யும் சண்டை குடுமை எனப்பட்டு, பொதுவில் சண்டை என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்கில் உள்ளது. குடும்பம்: இச்சொல், குடி, குடிமை, குடிசெயல்வகை என்பவற்றை வைத்த வள்ளுவர் ஒரோ ஓர் இடத்தில் மட்டும் ஆளும் சொல். தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் கையாளாச் சொல். குடி - குடும்பம் என்னும் பொருளில், இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - திருக். 1029 குடும்பம், குடும்ப அட்டை, குடும்பக் கட்டுப்பாடு, குடும்ப உறவு, குடும்பச் சொத்து முதலியவற்றுக்கெல்லாம் முதல் படைப்பாளி வள்ளுவராகவே வீற்றிருக்கிறார்! குடும்பு: குடுவை - குடம் - குடை என்பவை போல், வட்ட வடிவமாக அமைந்த குடியிருக்கும் இடம், குடில். வீடு, கல், மனை என ஆயபின் குடில் என்பது ஆட்டுக் குட்டி அடைக்கும் இடமாயிற்று. குடில், குடிசையாய் மக்கள் குடியிருக்கும் இடமாயிற்று. குடிகள் பலவற்றைக் கொண்ட பகுதி - வீட்டின் தொகுதி - குடும்பு எனப்பட்டது. இடைக்காலச் சோழர் காலத்தில் ஊர் பல குடும்புகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பின் சார்பிலும் ஆளும் கணத்தர் இருந்தனர். அக்காலத்தில் குடும்புகளால் ஊராட்சி கட்டமைதி யுடையதாக விளங்கிற்று. குடும்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே வாரியத்தவர்கள் ஆயினர். குடும்புத் தேர்தல் குடவோலை வழியாகச் செய்யப்பட்டது. சந்திரலேகை சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி ஸபையோம் இவ்வூர் ஐம்பத்து மூன்றாம் குடும்பில் பாரத பங்கு கோயிலாந் நாகனற்றி விற்ற பங்கு - க (தெ.க.தொ. 6:12) * வாரியம், குடவோலை காண்க. குடுவை: குறுகிய வாயையுடைய கலம் குடுவை எனப்படும். குடுவை என்பது வயிறு என்னும் பொருளில் கன்னியாகுமரி மாவட்டம் புதூர் வட்டார வழக்காக உள்ளது. குறுகிய குடல் வழியாகப் பெருங்குடல், வயிறு என உணவு செல்வதால் குடுவைப் பொருள் கொள்ள வாய்த்துள்ளது. வைப்புழி (வைக்கும் இடம்) என்னும் வள்ளுவத்தை எண்ணலாம். இனி, குடுவை என்பதற்குப் பதனீர்ப்பெட்டி என்னும் நெல்லை வழக்கும், பூக்குடலை, செப்புக்குடம் என்பனவும் கருதலாம். தேநீர், குளம்பி முதலியவை வெப்பம் காக்கப் பயன்படுவது சேமக்கலம், சேமக்குப்பி எனப்படுதல் பழவழக்கு வழியது. இதனை, வெந்நீர்க் குப்பி எனத் தமிழகத்தில் அரிதாக வழங்கல் உண்டு. ஈழத்தில் தேநீர்க் குடுவை என இதனை வழங்குகின்றனர். குடை: பனையோலையால் செய்யப்படுவது. இரும்பனங்குடையின் மிசையும் - புறம். 177 பனங்குடை இந்நாள் குடலை என வழங்கப்படுகின்றது. பனங்குடை நுங்கு, ஊன் முதலியவை கொண்டு செல்லவும், பதனீர், கள் முதலியவை பருகவும் பயன்படுவது. தாழங்குடை மழை வெயிலுக்கு ஆவது. மலையில் குடைந்து படுக்கை (பள்ளி) அமைத்த குடைவரைகள் தமிழகத்தில் காணக்கூடியன. இக்குடை, உள்ளே தோண்டுதல் பொருளது. மலையாள நாட்டில் குடை என்பது குன்று, மலை என்னும் பொருளில் உள்ளது. வடிவம் கருதியது அது. வட்டமலை சேலம் மாவட்டத்தது. நீராடலில் குடைதல் என்பது வளைய வளைய நீந்தி வந்து நீர்ஆடுதல் ஆகும். இது, இலக்கிய வழக்கு. குடைசாய்தல்: குடை காற்றில் உருள்வது போல் வண்டி பள்ளத்தில் உருண்டு புரண்டு விடுவது குடைசாய்தல் எனப்படும். பெருஞ் செல்வமுடையவர் திடுமென வறுமைப்பட்டால் குடைசாய்ந்து போனார் என்பது மக்கள் வழக்கு. வண்டி குடைசாயும், மலையே குடை சாய்ந்தது போலாயிற்றே என மிகப் பெருஞ்செல்வர் வறுமையையும் மிகப் பெருவீரர் தோல்வியையும் குறிப்பர். குடைவண்டி: மூடு வண்டியைக் குடை வண்டி என்பது தென்தமிழக வழக்கு. பரிய தொந்தியுடைவர்களைக் குடை வண்டி என்பது கல்குளம் வட்டார வழக்காகும். வண்டி தலைகீழாகச் சாய்தலைக் குடை வண்டி என்பது நெல்லை வழக்கு. குடைவரை: குடைவரை என்பது மலைக்குடைவு (குகை) பற்றியது. ஆனால் மேலூர் வட்டார வழக்காகக் குடவரை என்பது தவசக் களஞ்சியத்தைக் குறிப்பதாக உள்ளது. தொல்பழ வாழ்வுக் குறிப்பினது அது. குடைவிருத்தம்: வேந்தர் வெண்கொற்றக் குடையைக் குறித்து ஆசிரிய விருத்தம் பத்துப் பாடுவது குடை விருத்தமாகும். (நவநீதப். 41) குடைவிருத்தம் போன்றவற்றைத் தானை பெற்ற தலைமை யோரை யன்றி ஏனை முன்னோரைச் சொல்லுதலும் உண்டு என்று இப்பாட்டியல் கூறும். குட்டம்: குட்டம்:1 தொழுநோய் என்றும் பெருநோய் என்றும் வழங்கப் பெறுவது குட்ட நோயாகும். அங்கமெல்லாம் குறைந்து அழுகு தொழுநோய் என்றார் அப்பரடிகள் (6.95.10) குட்ட நோய் நரகந் தம்முள் குளிப்பவர் இவர் என்றார் திருத்தக்க தேவர் (சீவக. 263). உடம்பின் குறுக்கு நெடுக்காய் ஓடும் சிரைகளில் புகுந்து நாடி நரம்பு சவ்வு முதலியவைகளைத் தாக்குவதும் அல்லாமல் எலும்பு இரத்தம் ஊன் இவைகளைச் சிதைவுறச் செய்து பிறகு வெளிப்புறத்துத் தோலில் விரைந்து பரவி உடம்பில் பல வகையான தழும்புகளை எழுப்பித் தீரா வலியை உண்டாக்கும். இதனால் காது உதடு மூக்கு விரல்கள் முதலியன தடித்து, உடல் மினுமினுத்துத் தோல் கடினமாகிச் சிவந்தும், வெளிர் மஞ்சளாகியும் கொப்புளங்கள் ஏற்பட்டுத் தினவு எரிச்சலுடன் புண்ணாகி ஆறாமல் குழி விழுந்து கடைசியாக முகம் வேறுபட்டு விரல்களும் குறையும் எனக் குட்ட நோய் பற்றிச் சாம்பசிவம் பிள்ளை அகராதி கூறும். நீர்க்குட்டம், வெண்குட்டம், சொறிகுட்டம், கருங்குட்டம், பெருங்குட்டம், செங்குட்டம், விரிகுட்டம், எரிகுட்டம், விரற்குறைக் குட்டம், சடைக் குட்டம், யானைக் குட்டம், திமிர்குட்டம் விரணக்குட்டம், காய்க்குட்டம், அழிக்குட்டம் கிருமிக் குட்டம், ஆறாக் குட்டம் எனத் தமிழ்மருத்துவ நூலோர் குறிப்பிடும் பதினெண் வகைக் குட்டங்களையும் அவ்வ கராதியால் அறிந்து கொள்ளலாம். குட்டம் என்பதை அகராதிகளும் சரி, பொதுமக்களும் சரி, எழுத்தாளர்களும் சரி, குஷ்டம் என்று வழங்கி வருதல் வெளிப்படை. . மிக அரிதாகச் சிலர் குட்டம் எனக் கூறுவதும் எழுதுவதும் வழக்கமாக உள்ளது. குட்டம் என்பது குஷ்டமாக வழங்கப் பெறுகிறதா? குஷ்டம் என்பது தமிழ் மரபுப்படி குட்டமாகக் கொள்ளப் பெறுகிறதா? மூலச்சொல்லாய்வுதான் இதற்கு முடிவு காட்ட வல்லது! ஒரு சொல்லின் வேரும், அதன் மூலமும் தமிழில் காணப் பெறுமாயினும் ஏனைத் திரவிட மொழிகளில் காணப் பெறுமாயினும் அது தமிழ்ச் சொல்லே என்று தெளிதல் வேண்டும். இவற்றுடன் பழகு தமிழிலேயே அழுத்தமான சான்றுகள் முறையாகக் கிடைப்பின் அதனைத் தமிழ்ச் சொல்லென ஏற்றுப் போற்ற அறிவுடையார் சிறிதும் தயங்கார். மயங்கித் தாம் முன்னர் வழங்கியிருப்பினும், உண்மை உணரும் பொழுதில் அறிவுடையார் உவந்து வரவேற்றுப் போற்றுவர் என்பதிலும் ஐயமில்லையாம். இக்குறிப்புடன், குட்டம் என்னும் சொல்லை நோக்குவோம். குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை என்று புலவர் ஒருவர் பாடினார். குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்பதும், குட்டக் குட்டக் குனிபவனும் மடையன்; குனியக் குனியக் குட்டுபவனும் மடையன் என்பதும், குட்டின குட்டும் குண்டிற் பாய்ந்த தண்ணீரும் வருமா? என்பதும் பிறவும் பழமொழிகள். குட்டுங் கையைக் கருதுவோம்; வளமாக வளர்ந்து வாளமாய் அமைந்த விரல்களும் எப்படிக் கூனிக் குறுகிப் போகின்றன? குட்டும் கைவடிவு குட்டத்தின் இயல்பைக் குறித்துக் காட்டவில்லையா? கையைக் குறுக்கித் தாக்குவது குட்டு; கையைக் காலைக் குறுக்கி வைக்கும் நோய் குட்டம், குட்டுங் கையும் குட்டக் கையும் சொன் மூலத்தால் ஒன்றுபடும் இடம் இது. கட்டு குட்டான ஆள் என்பதில் குட்டு என்பது குறுமைப் பொருள் நேரே வழங்குதல் தெளிவு. குட்டுங்கையும், குட்டக்கையும் குட்டையாகிப் போகின்றன. அதனால் சிறுமைப் பொருள் குட்டைக்கு ஏற்பட்டது. கட்டை, குட்டை என்பது மரபுமொழி. குட்டைப்பலா, குறும்பலா எனப்பெறும். குறும்பலாவின் பெருமை குற்றாலத் தேவாரத்தில் விளங்குகிறது. குட்டையும் குழியுமோ குளங்குட்டையுமோ நாம் கேளாதன அல்ல. கைக்குட்டை என்னும் புதுச்சொல்லும் நாகரிக உலகம் படைத்துக் கொண்டதே! குட்டையனும் குட்டைச்சியும் ஊரூர்க்கு இல்லாமலா போய்விட்டனர். பட்டப் பெயர்களால் பரிமளிப்பவர்கள் அவர்கள் அல்லரோ! வளையக் காட்சியில் (Circus) குட்டையர் வரவை எதிர்பாரார் எவர்? குட்டை மட்டுமோ சிறியது என்னும் பொருளில் நின்றது? குட்டி என்பதும் அப் பொருள் தருகின்றது அன்றோ! ஆட்டுக் குட்டி, கன்றுக்குட்டி, மான்குட்டி, முயல்குட்டி, எலிக்குட்டி முதலிய குட்டிப் பெயர்கள் - ஏன்? யானைக் குட்டியும் கூட, தாயை நோக்கச் சிறியது தானே! அக்குட்டிப் பெயர் எத்தனை எத்தனை குட்டிகளைப் போட்டுள்ளது? குட்டிச் சாக்கு, குட்டிப்பை, குட்டிக் கிழங்கு, குட்டிச் சுவர், குட்டிச் சாத்தான், குட்டிப்பல், குட்டிநரை, குட்டிப் பானை, குட்டி விரல், குட்டியப்பன், குட்டிக் கலகம், குட்டித் திருவாசகம், குட்டித் தொல்காப்பியம் இப்படி எண்ணிக் கொள்ளலாமே! விலங்கின் குட்டிதானா குட்டி? மக்களிலும் குட்டிப் பெயர் உண்டே. குழந்தை குட்டி எத்தனை? என்பதிலும், குட்டி குறுமான் என்பதிலும் குட்டி பெண்மகளைக் குறிக்க வில்லையா? கால் தடம் ஒன்றைக் கொண்டே மகளிர், ஆடவரில் குட்டியர் என்பதைக் கண்டுவிடலாமே! மகன் மானாதல், பெருமகன் (பெருமான்) என்பதாலே அறிய வருமே! குட்டி பெண்பால் பெயராயின், ஆண்பால் பெயர் ஒன்று இருத்தலும் பொருந்துவதுதானே! அது குட்டன் என்பதாம். குட்ட நாடாம் மலையாள நாட்டிலே குட்டன் பெயருடையார் மிகப் பலர். இங்கே, பெரியாழ்வார் குட்டனொடு மிக மிகக் கொஞ்சுகிறார். என் குட்டன் வந்தென்னைப் புறம் புல்குவான் என்கிறார் (1. 9 : 1). கருங்குழற் குட்டனே சப்பாணி என்கிறார் (1.6:1). கோவலக் குட்டற்கு என்கிறார் (1.2:13). என்சிறுக் குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான் என்கிறார் (1.4:2). குட்டம் என்பது மிகப் பழஞ்சொல். சங்கச் சான்றோர் வாக்கிலும் பயின்ற சொல். நெடுநீர்க் குட்டம் (புறம். 243); இருமுந்நீர்க் குட்டம் (புறம். 20); நளிகடல் இருங்குட்டம் (புறம். 26) என்று பயில வழங்கப் பெறுகின்றது. இக்குட்டச் சொல்லிற்கு ஆழம் என்பது பொருளாம். குறுகிய இடத்தில் அமைந்த நீர் நிலையைக் குறித்த குட்டம் என்னும் சொல் அதன்பின் அதன் ஆழத்திற்கு ஆகிப் பின்னே அதனினும் விரிந்து அவ்வாழப் பெருக்குடைய கடலளவுக்கு விரிந்ததாதல் வேண்டும். இதனை நோக்க இச்சொல்லின் தொல்பழமை மிகத் துலங்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் யாப்பியல் கூறுங்கால், குட்டச் சொல்லைக் குறித்தார் (1372 - 74). குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப என்று கூறிக் குட்டம் அளவடியில் குறுகிய அடி என்பதைக் குறித்தார். உன் குட்டை உடைக்கிறேன் பார் என்பதில் குட்டு என்பது கரவான செய்தியைக் குறிக்கிறது. குறுகி ஆழ்ந்த நீர்நிலை இருள் படிந்து புலப்படாவாறு கிடப்பதன் வழியே, கரவுப் பொருள் குறித்ததாதல் வேண்டும். குள் என்னும் வேரில் இருந்து பிறந்த சொற்களுள் ஒன்று குட்டம். அது குறுமைப் பொருளது. அப்பொருள் மாறா வகையிலேயே ஆசிரியர் தொல்காப்பியர் காலமுதல் வழங்கி வருகின்றது. அவருக்கு முன்னரும் வழங்கியது என்பதை அவர் மறவாமல் (1372) என்ப (1374) என்மனார் புலவர் எனக் குறிப்பிடுகிறார். இத்தகு தொல் வழக்கும், பொருள் பொருந்திய நெறிமுறை வழக்கும், சான்றுகளும் பல்கி யிருத்தலின், குட்டம் என்னும் தமிழ்ச்சொல்லே குஷ்டம் என ஆய்வின்றி எழுதப் பெறுகிறது எனக் கொள்க! வடமொழி பயிலச் சென்ற ஒருவன் வடமொழி ஷ் தமிழில் ட் ஆகும் எனத் தெரிந்த அளவில், வடமொழி பயின்றதாகத் திரும்பினானாம். ஆட்டுக் குட்டி ஒன்று வேட்டியைத் தின்னக் கண்டானாம். தன்மொழிப் புலமையைக் காட்டுவானாய் ஆஷ்டுக் குஷ்டி வேஷ்டியை திஷ்ட்றது. ஓஷ்டு! ஓஷ்டு! என்றானாம். இவ்வாறு என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்த தவற்றின் விளைவே குஷ்டம் என்று நகைக்கவே தோன்றுகிறது. அதே பொழுதில் நம்மவர் செய்கை நலிவுறுத்தக் கூடியது என்பதைக் கூறாமல் விடுவதும் முறையில்லை என்றே தோன்றுகிறது. குட்டம்:2 நிலைக்கால் ஊன்றுதற்குரிய பள்ளத்தைக் குட்டம் என்பது கொற்றர் வழக்கம். கொற்றர் = கொத்தர். குட்டம் = சிறு பள்ளம்; குளம் குட்டை இணைச்சொல். நீர்நிலைக் குட்டம் (ஆழநீர்) பழமையான ஆட்சியுடையது. குட்டாப்பு: ஆயர் தம் ஆட்டுக் குட்டிகளை அடைத்து வைக்கும் குடிலைக் குட்டாப்பு என வழங்குவர். குட்டி அடைப்பு குட்டாப்பு என ஆகியது அது. அன்றியும் குட்டிகளை ஆர்த்து (அடைத்து) வைக்கும் இடம் என்னும் பொருளுக்கும் உரியதாய் அமைகின்றது. ஆர்த்தல், கட்டுதல். குட்டி குறுமான்: குட்டி= பெண்பிள்ளை. குறுமான்= ஆண்பிள்ளை; குறுமகன் > குறுமான். “c§fS¡F¡ F£o FWkh‹ v¤jid?”; குட்டி குறுமான் எல்லாம் நலமா? என வினவுதல் வழக்கு. குட்டி என்பது பெண் பிள்ளையைக் குறித்தல் இன்றும் மலையாள நாட்டில் பெருவழக்காம். அதன் ஆண்பால் குட்டன் என்பது. அது நாலாயிரப் பனுவலில் பெருக வழங்குகின்றது. பெருமகன் பெருமான் ஆவது போலக் குறுமகன் குறுமான் ஆனான் என்க. குட்டியின் சிறுமைப் பொருளைக் குட்டிச் சாக்கு, குட்டிப்பை, குட்டியப்பா இவற்றில் காண்க. குட்டியைத் தூக்கி ஆட்டில் போடல்: குட்டியைத் தூக்கி ஆட்டில் போடல் = முறைமாற்றிச் செலவிடல். * ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல் காண்க. குட்டு நட்டு: குட்டு = உள்ளத்துள்ள மறைவுச் செய்தி. நட்டு = வெளிப்பட்ட விளக்கச் செய்தி. உன் குட்டு நட்டு எனக்குத் தெரியாதா? என்னிடமே அவிழ்க்கிறாயே என்பது வழக்கு. உன் குட்டை உடைக்கட்டுமா? என்னும் வினாவில் குட்டு என்பது மறைவுச் செய்தியாதல் புலப்படும். நட்டு என்பது நட்டப்பட்டது, வெளிப்பட்டது என்னும் பொருளதாம். நுண்ணறிவு படைத்தவனைக் குட்டு நட்டுத் தெரிந்தவன் என்பது நாட்டுப்புற வழக்கு. நட்டு என்பது நெட்டு என்றும் வழங்கப்படும். குட்டு நெட்டு: குட்டு = குறுகிய செய்தி அல்லது குறுஞ்செய்தி. நெட்டு = நெடிய அல்லது விரிந்த செய்தி. உன் குட்டு நெட்டை நான் உடைத்துவிடுவேன் சும்மா இரு என்பது அடங்காரை அடக்குவாய்களுள் ஒன்று. குட்டு - குட்டை; நெட்டு - நெட்டை. செய்திகளின் அளவுக்கு ஆகியது. * குட்டு நட்டுக் காண்க. குட்டுப்படுதல்: குட்டுப்படுதல் = தோல்வியுறல், இழிவுறல். தவறுக்குத் தரும் தண்டனையாகப் பள்ளிகளில் தரப்படுவது குட்டு. ஆசிரியர் குட்டுதல், பிற மாணவர் குட்டுதல், தானே குட்டிக் கொள்ளுதல் என மூவகையால் நிகழ்வதுண்டு. குட்டுப்படுதல் குறைவு என எண்ணம் உண்டாகி, அதனைத் தவிர்க்க முயல வேண்டும் என்பதே அதன் நோக்கு. குட்டுபவன் தகுதியுடையவனாக இருத்தலாவது வேண்டும் என்னும் நினைவால் குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்னும் பழமொழி எழுந்தது. இது தோல்விப் பொருளது. இனிக் குட்டுதல் இப்பொருளில் இருந்து இழிவுபடுத்துல் என்னும் பொருளுக்கு மாறிய போது குட்டக் குட்ட குனிபவனும் கோழை; குனியக் குனியக் குட்டுபவனும் கோழை எனப் பழமொழி எழுந்தது. குட்டுதல் என்பது குட்டுதலால் உண்டாகும் இழிவுப் பொருளுக்கு உண்டாயிற்று. குட்டை: குட்டை:1 குட்டை = சிறிய நீர்நிலை, உயரத் தணிவு, கைத்துணி. குளத்தில் சிறிது குட்டை. அதனால், குளம் குட்டை என இணைமொழி உண்டாயது. குட்டைகள் பெரிதும் ஆழமற்றதும் திட்டை சார்ந்ததுமாக இருக்கும். அதனால் கீற்று, மட்டை, விதைநெல் முதலியவற்றை ஊறவைக்கப் பயன்படுத்துவது வழக்கம். குட்டையில் ஊறிய மட்டை என்னும் பழமொழி இதனைத் தெளிவிக்கும். பெரும்பாலும் வழிந்தோடும் வழியின்றித் தேங்கிக் கிடக்கும் நீரே குட்டைநீர். ஆதலால் போட்டவை நீரோட்டத்தில் போக வாய்ப்பில்லையாம். உலர வைத்தற்குத் திட்டை பயன்படும். குட்டை:2 குட்டையானது, சிறியது, உயரம் தணிந்தது என்னும் பொருளுடைய இப்பொதுச் சொல் நெல்லை மாவட்டத்தில் சிறுகூடை என்னும் பொருளில் வழங்குகின்றது. கொட்டான் என்பது ஓலைப் பின்னலுடைய சிறுபெட்டி என்பதை எண்ணலாம். கொட்டு மண்வெட்டி, தேய்ந்த சிறு மண்வெட்டி. குட்டை உடைத்தல்: குட்டை உடைத்தல் = கமுக்கத்தை வெளிப்படுத்தல். குட்டு என்பது கையை மூடிக் கொண்டு முட்டியால் இடித்தலாகும். குட்டும் கையைப் பார்க்க. அவ்வாறு மூடிய கைக்குள் ஒரு பொருள் இருப்பின் வெளியே தெரியாது. ஆதலால், குட்டு என்பது மூடி வைத்தலைக் குறித்துப் பின்னர் மூடி வைக்கப்பட்ட அல்லது கமுக்கமான செய்தியைக் குறிப்பதாக வளர்ந்தது. இருவர் நட்பாக இருந்த காலையில் உரிமையால் என்னென்னவோ பேசியிருப்பர்; செய்திருப்பர் அவர்களுக்குள் ஒரு பகைமை உண்டாகிவிட்டால் பழைய பேச்சு செய்கை ஆகியவற்றில் உள்ள கேடுகளைச் சுட்டிக் காட்டப் போவதாக அச்சுறுத்தும் முகத்தான் உன் குட்டை உடைத்து விடுவேன்; ஒழுங்காக இரு என்பர். உன் குட்டு என்கைக்குள் இருக்கிறது; பார்த்துக் கொள்கிறேன் என்பதும் உண்டு. குட்டை கட்டை: குட்டை = நெட்டைக்கு மாறானது குட்டை. கட்டை = குட்டை யானதும் பருத்ததும் கட்டை. குட்டைப் பிள்ளை கட்டைப் பிள்ளை என்பதில் முன்னது குள்ளமானது என்றும், பின்னது குள்ளமானதும் கனமானதும் என்றும் பொருளாம். குளம் குட்டை என்பதில் வரும் குட்டையையும் கைக்குட்டையையும் கருதுக. கட்டைவிரல், பெருவிரல் என்பதை எண்ணுக. நெடுமரத்தைக் குறுகக் குறுக வெட்டியது கட்டை எனப்படுவதையும் கருதுக. குணக்கு: குணங்கு > குணக்கு. குணங்குதல் = சரிதல், வாடுதல். குணக்கு = கிழக்கு. குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லை - நன். பாயி. மேற்கு x கிழக்கு; மேல் x கீழ்; மேக்கு x கீழ்க்கு. மேற்கு = மலைநிலம். கிழக்கு = சரிந்து சென்று கடலாம் நிலம். ஏன் குணக்கமாய் இருக்கிறாய்? மாடு குணங்கிவிட்டது! என்பவை வழங்கு மொழிகள். எழுச்சி குன்றல், தணிதல் பொருளது. குணக்கும் கிழக்கும் ஒருபொருட் சொல்லே. குணம்: குணம்:1 குணம் = கிழக்கு, தன்மை. குள் > குண் > குணம். குணங்குதல் = வளைதல். சுருண்டு கிடத்தலால் நாயின் பெயர்களுள் ஒன்று குணங்கன். கதிரோன் சுழன்று வெளிப்பட்டு வரும் திக்கு, குணம் ஆயது. கீழ் + கு = கிழக்கு ஆவது போல, குணம் என்னும் கிழக்குத் திசைப்பெயர் (குணம் + கு) குணக்கு எனவும் வழங்கும். குணவாயில் குடவாயில் என்பவை இடப்பெயர்கள் (சிலப். 30:179 அரும்.). ஒட்ட ஒழுகுதல், ஒத்ததறிந்து வாழ்தல் என்பவை வளைந்து இணங்கிப் போதலால் குணம் ஆயதாம். குள்ளம் - தணிவு - உயரக் குறைவு. மேற்கிற்குக் கிழக்குத் தாழ்வாகத் தமிழக நிலவமைப்பிருப்பதால் அதனைக் கொண்டு குணம், குணதிசை எனப்பட்டன. குணகடற் குமரி வேங்கடம் குணம்:2 கீழ்ப்படியும் தன்மையும் அதனைச் சார்ந்து விளங்கும் உயர்ந்த பண்புகளுமாம். பணிவுடையன் இன்சொல னாதல் ஒருவர்க்கு அணி - திருக். 95 பணியுமாம் என்றும் பெருமை - திருக். 978 பண்பு நல்லியல்பே குறிப்பதாக விளங்கினும் அதற்கு எதிரிடையாம் பண்பும் உண்டாயது. அது தீப்பண்பு. அதனால் நல்லது சிறக்க அல்லது கெடுக என்பது இருவகை வழக்கும் ஆயது. தணிதல், பணிதல், உயர்தல் படிப்படியே மேலேறுதல் என்பன குணமென்னும் குன்றேறலாம் (திருக். 29). * குணக்கு காண்க. குணாது: குணாஅது = கீழ்க்கண்ணது. குணம் = கிழக்கு. குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் - புறம். 6 பொருள்: கீழ்க்கண்ணது கரையைப் பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும் (ப.உ.). * குணம் காண்க. குண்டக்கா மண்டக்கா: குண்டக்காக = இடுப்புப் பகுதியாக. மண்டக்காக = தலைப் பகுதியாக. சிறுவர்கள், கால்மாடு தலைமாடு தெரியாமல் (கால்பக்கம் தலைப்பக்கம் பாராமல்) படுத்திருப்பதைக் காணும் பெரியவர்கள் இப்படியா குண்டக்கா மண்டக்காவாகப் படுப்பது? என இடித்துக் கூறுவது வழக்கம். பொருத்தமில்லாமல் கிடக்கும் பொருள் களைக் குண்டக்கா மண்டக்காக் கிடப்பதெனக் கூறுவதும் வழக்கமேயாம். காலும் தலையும் மாறிக் கிடத்தல் போல் பொருள்கள் மாறியும் சிதறியும் கிடத்தலைக் குறிப்பதாம். குண்டலம்: குண்டு + அலம் = குண்டலம். குண்டு = உருண்டை; அலம் = ஆடுதல், சுழல்தல். அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி - தொல். 794 உருண்டைத் தொங்கலாய் ஊசல் போல் ஆடி அசைவதாகி யதும், செவியில் அணிவதுமாகிய அணிகலம் குண்டலமாகும். காதொளிரும் குண்டலமும் கைக்குவளை யாபதியும் -தமிழ்வாழ். யோகி சுத். குதம்பை என்பதும் இது. குடம்பை > குதம்பை. வட்ட வடிவினது. அரைவடங்கள் கட்டிச் சதங்கை இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை - திருப். கருவடைந்து குண்டானும் பொண்டானும்: குண்டான் = உருண்டு திரண்ட எலி. பொண்டான் = பேரெலி அல்லது பெருச்சாளி. குண்டு என்பது திரண்டது என்னும் பொருள் தருவது. கோலிக் குண்டு முதலியவற்றைப் பார்க்கும் போது உருண்டு திரண்டுள்ள அமைப்பு விளங்கும். பொண்டான், பொந்தான் என்பவை வயிறு பருத்த தோற்றத்தைக் குறிப்பதாம். சுண்டானும் பொண்டானும் என்பதைக் காண்க. குண்டிகை: குண்டு > குண்டி > குண்டிகை. உருண்டை வடிவில் அமைந்த குடுவை. மாழையால் (உலோகத்தால்) செய்யப்பட்டது. பருத்திக் குண்டிகை (நன். பொ. பா). இக்காசு இருபதினாயிரமும் குண்டிகையில் இவன் தண்டம் ஒடுக்கித் தரவு கொள்ளவும் (க.க.சொ.அ.) குண்டு: குர், குல், குள், குண் முதலாம் வேர்களின் வழியாகப் பிறக்கும் சொற்கள் வட்டம், வளையம், உருட்சி, திரட்சி முதலிய பொருள்களைத் தரும். கோலிக் குண்டையும் துமுக்கிக் குண்டையும் (துமுக்கி = துப்பாக்கி) பார்த்த அளவான் குண்டின் அமைப்புப் புலப்படுமே. குண்டு மல்லிகை குண்டின் வடிவமும் மணமும் பரப்புவதன்றோ! குண்டு எறிதல் என்னும் விளையாட்டுக் கருவி நாம் அறியாததா? அணுக்குண்டுக் கொடுமை சொல்ல வேண்டுமா? அக் குண்டுமாரி பொழியவும் துடிக்கும் வெறியர் உண்டென்பது உலகம் காணாததா? குண்டின் வழியாகக் குண்டடித்தல் விளையாட்டு மட்டுமா வெளிப்படுகிறது? குண்டடித்தல் என்பதற்குத் தோல்விப் பொருளும் தந்து விட்டதே! கொடுமைக்குக் களமாகக் குண்டு போடும் தீமை, வரவேற்புக்கும் மகிழ்வுக்கும் கூட உலகளாவிய சான்றாக விளக்குகின்றதே! குண்டு குண்டாக எழுதுதல் பாராட்டுக் குரியதன்றோ! குண்டு சட்டி, குண்டு செம்பு (உருண்டைச் செம்பு, உருளி என்பதும் அது) குண்டா, குண்டான், குண்டாச் சட்டி, குண்டு வட்டில் (கும்பா) என்பன வழக்கில் உள்ள உண்கல வகைகள். குண்டாவின் பருமை, அண்டா குண்டா என்பதால் புலப்படும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டல் என்பது பழமொழி. குண்டிகை என்பது கமண்டலம். குண்டி, குண்டிக்காய் என்பன உறுப்புகள். குண்டூசியும் குண்டாணியும் வழக்கில் உள்ள செய்பொருள்கள். குண்டெழுத்தாணி பண்டு வழக்கில் இருந்த எழுத் தாணிகளுள் ஒன்று; அதன் தலையில் குண்டு அமைப்பு இருக்கும். குண்டு அரமும் உண்டு. அதன் பெயர் குண்டரம். கட்டட வேலைக்குப் பயன்படுவது நூல்குண்டு, குண்டுமணி என்பது உருண்டு திரண்ட மணி; குன்றி மணியைக் குண்டுமணி குண்டுமுத்து என்பது பிழை வழக்கு. வளைந்து சுருளும் சுருட்டைப் பாம்புக்குக் குண்டலி என்பது பெயர்; ஆல வட்டமெனத் தோகை விரித்தாடும் மயிலுக்குக் குண்டலிப் பெயர் உண்டு. உருண்டு திரண்ட குதிரை, காளை ஆகியவற்றைக் குண்டை எனப்படுதல் இலக்கிய வழக்கு. உருண்டு திரண்ட குறும்பூதம் குண்டைப் பூதம் எனப்படும். குண்டோதரன் புகழ், திருவிளையாடல் கண்டது. குண்டம் = பெருந்தாழி, ஆழ்குழி. உதரம் = வயிறு. பெருங்குழி எப்படிப் போட்ட பொருள்களை யெல்லாம் வாங்கிக் கொள்ளுமோ அப்படி வாங்கிக் கொள்ளும் பெருவயிறன்! இது பொருந்தப் புனைந்த புனைவுப் பெயர். குண்டலம் அண்மைக் காலம் வரை வழக்கில் இருந்த காதணி. குண்டலகேசி என்பாள் சுருட்டைக் கூந்தலள் அல்லது சுரிகுழலி! அவள் பெயர் அவளைப் பற்றிய நூற்பெயராகித் தமிழன்னையின் குண்டலம் எனவும் புனைந்துரைக்கப் படுவதாயிற்று. காதொளிரும் குண்டலமும் கைக்குவளை யாபதியும் என்பது அப்பாட்டின் தொடக்கம். குண்டுக் கடுக்கன் அல்லது கடுக்கன் குண்டு சிறுவர் காதணியாக இன்றுமுண்டு! குண்டுகட்டு, குறுந்தாட்டு என்பன இலக்கண மேற்கோள். கட்டு=கண்ணையுடையது; தாட்டு = தாளை (காலை) உடையது; உருண்டைக் கண்ணையும் குட்டைக் காலையும் உடையதைக் குறிப்பது இத்தொடர். குண்டுகட்பாலியாதனார் என்பார் சங்கப் புலவருள் ஒருவர். குண்டு என்பது ஆழம் என்றும், குழி என்றும், நன்செய் நிலம் என்றும் பொருள் தரும். மேலைக்குண்டு, கீழைக்குண்டு என வயல் நிலம் சுட்டப்படுவதும், குண்டும் குழியுமாகக் கிடக்கிறது எனக் கூறப்படுவதும் அறியத் தக்கன. குண்டம் பாய்தல் என்பது பூக்குழியில் இறங்குதல். கதிரோன் பெயரானும் திங்களின் பெயரானும் விளங்கிய நீர்த்துறைகள் முறையே சூரிய குண்டம், சோம குண்டம் என வழங்கப்பட்டமை சிலம்பால் அறிய வரும் செய்தி. குண்டு நீர் இலஞ்சி, குண்டுகண் அகழி, குண்டுநீர், குண்டகழ், குண்டு கயம் என்பன சங்கத்தார் ஆட்சிகள். எருமை மேல் இருக்கும் சிறுவன் ஒருவனைக் குண்டுக்கல் மேல் குந்தியிருக்கும் குரங்குக் காட்சி யாக்குகிறது சங்கப் பாட்டொன்று. குண்டையூர் கிழார் புகழைத் திருத்தொண்டர் புராணம் விரித்துரைக்கிறது. குண்டூர்க் கூற்றம் பண்டைச் சேர நாட்டின் ஒரு பகுதி. குண்டக்கல், குண்டாழஞ்சேரி என்னும் பெயர்களையும் கடமலைக் குண்டு, கூத்தியார் குண்டு, வெற்றிலை (வத்தல)க் குண்டு, குண்டத்தூர் முதலாக வழங்கும் பெயர்களையும் எண்ணுக! குண்டெல்லாம் மருதநில ஊர்களாகவும் பள்ளத்தாக்கினவாகவும் இருத்தல் பெயரீட்டுச் சிறப்பை நன்கு விளக்குவதாம். குண்டு கட்டாகத் தூக்குதல் என்பது காலையும் கையையும் மடக்கித் திரட்டித் தூக்குதல்; சிறைப்படுத்துதல் போல்வது, குண்டக்க மண்டக்கப்படுத்தல் என்பது பொதுமக்கள் வழக்கு. கால்மாறித் தலைமாறி உருண்டு புரண்டு கிடக்கும் படுக்கை நிலை அது. வம்பப் பரத்தை என்னும் தொடருக்கு இடங்கழி காமத்தளாகிய குண்டக் கணிகை என்று பொருள் எழுதுகிறார் அடியார்க்கு நல்லார் (சிலப். 10.219). ஓடியாடும் சிறுவர்களைக் குண்டை என வழங்குவதையும் சிலப்பதிகாரம் குறிக்கிறது (2.88). குண்டன் என்பதற்கு இவற்றையெல்லாம் திரட்டி உருட்டிய பொருள் போல் அடிமை, அடித்தொண்டு செய்பவன், முறைகேடாம் வழியில் பிறந்தவன், முறைகேடன், சிறுகுணத்தன், முரடன், கொடியன், கொடுமைக்கு அஞ்சாதவன், வன்பன், தடியன் எனப்பல பொருள்களை அகராதிகள் வழங்குகின்றன. குண்டர் தடைச் சட்டம் என ஒரு சட்டம் உண்மை நாடறிந்த செய்திதானே! குண்டர் அல்லாரும் மாட்டுதலும் உண்டு! உழவர் வழக்கில் நான்கு வரப்புகளுக்கு இடைப்பட்டு நீரை நிறுத்தும் வகையில் அமைக்கப்படுவது குண்டு ஆகும். தெற்குக் குண்டு, வடக்குக் குண்டு என வழங்குவது நெல்லை முகவை வழக்கு. தொண்டை மண்டலத்தும் இவ்வழக்கு உண்டாம் (க.க.சொ.அ.). சோழ நாட்டில் குண்டு என்பதைத் தாக்கு என்பர் என்பதும் அது. தக்கு > தாக்கு. தக்கு = பள்ளம். * தக்கணம் காண்க. குண்டு குழி: குண்டு = ஆழ்ந்த நீர்நிலை. குழி = பள்ளம். குண்டு மிக ஆழத்தைக் குறித்துப் பழநாளில் வழங்கியது. குண்டுகண் அகழி என்பது புறநானூறு (21). பின்னே குண்டு, குளத்தையும் வயலையும் குறிப்பதாயிற்று. சாலையில் பெரும் பள்ளமாக இருப்பதைக் குண்டு என்பதும், சிறு பள்ளமாக இருப்பதைக் குழி என்பதும் உண்டு. மேட்டு நிலங்களைக் குண்டும் குழியுமாக்கி வயல்நிலப் படுத்துதல் வழக்கமாதலின் குண்டு குழி என்பவை வயலுக்கு ஆயிற்றாம். குண்டு குழி பார்த்து வண்டியை ஓட்டு என்பது வழக்கு. குண்டை: குண்டை = கோழி. உருண்டு திரண்டது. சிறகை ஒடுக்கி இறுக்கிப்படுத்துக் கிடக்கும் கோழியின் தோற்றம் உருண்டைக் கல்லென இருத்தலால் இப்பெயர் பெற்றது. குதட்டுதல்: கால்நடைகள் அசை போட்டு வேண்டியதை உட்கொண்டு வேண்டாத வற்றை வெளியே தள்ளுதல் குதட்டுதலாம். கன்று முதலியன பால்குடித்து வாயுதப்புதலைக் குதட்டுதல் என்றும் கூறுவர் (தமிழ்ப் பேரகராதி). குதப்புதல்: எச்சில் தெறிக்கச் சப்புக் கொட்டி மென்று உண்ணல் குதப்புதல் எனப்படும். உதப்புதல் உணவு வாயில் மிகுதியாக இருத்தலால் நிகழ்வது. குதப்புதல் வாய்ச்செய்கை மிகுதியால் நிகழ்வது. இவை, இவற்றின் வேறுபாடு. குதம்பி: சேவு ஓமப்பொடி ஆயவை தேய்க்கும் கரண்டியைக் கண் கரண்டி என்பது பொது வழக்கு. அக்கரண்டியில் மாவை வைத்துக் குதப்புவது போல் இங்கும் அங்கும் தேய்த்து எண்ணெய் காயும் எரிசட்டியில் விடுவதால் அக்கரண்டிக்குக் குதம்பி என்பது திருப்பாச்சேத்தி வட்டார வழக்காகும். குதம்பை: தேங்காய் நாரைக் குதம்பை என்பது நெல்லை வட்டார வழக்கு. குதம்பை, காதணி எனப்படுவது பொதுவழக்கு. காதணி அணிந்தவளை விளித்துப் பாடிய சித்தர் குதம்பைச் சித்தர். வெப்பத் தன்மையுடைமையால் தேங்காய் நார் குதம்பை ஆயதாம். குதுகுதுப்பு = குளிர்காய்ச்சல். கதம்பை என்னும் நாஞ்சில் நாட்டு வழக்கைக் காண்க. குதம்பையின் மூலச் சொல் குடம்பை என்பதாம். குடம்பை = கூடு, குடிசை, முட்டை. குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு - திருக். 338 இவண், குடம்பை = கூடு. குதிரை: குதிரையைக் குறியாமல் உயரமான கால்களையுடைய கோக்காலியைக் குறிப்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. இது கொற்றர் (கொத்தர்) வழக்காகும். குதிரையின் கால்கள் உயர மிக்கவை. ஓட்டத்திற்கு வாய்ப்பானவை. குதிரையில் வருதல்: குதிரையில் வருதல் = குடி மயக்கில் தள்ளாடி வருதல். கள் வெண்ணிறமானது. அதனால் வெள்ளை எனப்படும். அது தண்ணீர் போல்வது. அதனால் வெள்ளைத் தண்ணீர் என்றும் வழங்கப்படும். குடித்தவன் தள்ளாடித் தள்ளாடி நடப்பான். அந்நிலையில் உயர்ந்தும் தாழ்ந்தும் அவன் வரும் தோற்றம் குதிரை மேல் வருபவன் தோற்றத்தை விளக்கும். ஆதலால் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வருபவனை, வெள்ளைக் குதிரையில் வருகிறான் என்றோ குதிரையில் வருகிறான் என்றோ கூறுவது வழக்காயிற்று. குதிரையில் வருதல், தள்ளாடிக் குலுங்கி வருதல் என்னும் பொருளுக்கு உரியதாகியது. குதிரை விருத்தம்: குதிரையைப் பற்றி ஆசிரிய விருத்தம் பத்துப் பாடுவது குதிரை விருத்தம் ஆகும் (நவநீதப். 41). குதிரையைப் பற்றி வெண்பாவினால் பாடப்படின் அது குதிரைப் பா எனப்படும் என்று கூறும் பிரபந்தத் திரட்டு (1.15). குதிர்: குதிர் = சுற்றுப் பருத்தல். குதிர் என்பது தவசம் போட்டு வைக்கும் குலுக்கை ஆகும். இதனைப் பழங்காலத்தவர் கூடு என வழங்கினர். தவசம் போட்டு வைக்கும் குதிர் அடி சிறுத்து இடை பெருத்து முடி சிறுத்துத் தோன்றும். அதுபோல் இடை சுருங்க வேண்டிய பெண்டிர் இடை பெருத்திருந்தால் குதிர் போல இருக்கிறாள் என்றும், குந்தாணி போல இருக்கிறாள் என்றும் உவமைச் சுட்டால் சொல்வது வழக்காம். குதிர் என்பது இவண் இடுப்பு விரிவைக் குறித்ததென்க. குதிர்தல்: குதிர்தல் = ஆளாகியிருத்தல். குதிர் ஓரிடத்திலேயே இருக்கும். அதனை வேறிடத்திற்கு அகற்றி வைப்பதோ மாற்றி வைப்பதோ இல்லை. அது போல் வீட்டின் ஒரு பகுதியில் அதற்கென அமைக்கப்பட்ட ஓரிடத்தில் பூப்பு அடைந்த பெண்ணை வைத்திருப்பது அண்மைக் காலம் வரை நிகழ்ந்த வழக்கம். அதனால் அவ்வோரிடத்திலேயே நீராட்டு நிறைவு வரை வைக்கப்பட்டிருத்தல் குதிர்தல் எனப் பட்டது. குதிர்ந் திருந்தாள் எனின் ஆளாகி இருக்கிறாள் என்பது பொருளாம். குதை: வில்லின் நாணைப் பூட்டுமிடமும், கழுத்தில் அணியும் சங்கிலியின் பூட்டுவாயும் குதை என வழங்குதல் இலக்கிய வழக்கு. பூட்டுவாய் என்னும் அப்பொருளில் தச்சநல்லூர் வட்டார வழக்காக இன்றும் உள்ளது. குத்தடி: சாயாமல் நேரே ஊன்றப் படுவதாகிய நட்டுக்குத்து என்பது இறையூர் வட்டாரத்தில் குத்தடி என வழங்கப்படுகின்றது. குத்தப்பட்ட அடிநேராக இருந்தால் அன்றி, அதில் ஊன்றப் படுவதும் நேராக இராது. ஆதலால் இப்பொருள் கொண்டது. தானம் = இடம். குத்தானம் = நேர். இது கொற்றர் வழக்கு. குத்தல் குடைச்சல்: குத்தல் = விட்டு விட்டு ஓரிடத்து வலித்தல். குடைச்சல் = இடைவிடாது குடைந்து அல்லது சுழன்று வலித்தல். நோவு வகையுள் குத்தல் குடைச்சல் என்பவற்றைக் குறிப்பிடுவர். உலக்கை, கம்பி முதலியவை குத்துதலையும், வண்டு குடைதல் அல்லது துளைத்தலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் குத்தல் குடைச்சல் பொருள் தெளிவாம். தலைக்குத்து, மூச்சுக் குத்து என்பவை குத்துகள். காது குடைதல் கால் குடைதல் என்பவை குடைவுகள். வட்டமிட்டு நீந்துதலைக் குடைதல் என்பது இலக்கிய வழக்கு. குத்திக் காட்டல்: குத்திக் காட்டல் = பழங்குறையை எடுத்துக் கூறல். குத்துக்குக் கத்தி வேண்டும். இக்குத்து கத்தியில்லாக் குத்து. கத்தி குத்தினும் கடுவலியும் காலமெல்லாம் மாறாத் தன்மையும் உடையது. எப்பொழுதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கும். அதனைக் காலங்காலமாகச் சொல்லிச் சொல்லிப் புண்படுத்துதல் குத்திக் காட்டலாம். அதன் கொடுமையைக் காட்ட ஒரு பக்கம் குத்தி ஒரு பக்கம் வாங்குவான் என்பர். இடித்துரைத்தல் என்பதற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு! * இடித்துரைத்தல் காண்க. குத்து: குறுதல் > குற்றுதல் > குத்துதல். றகர வல்லினத்தினும் தகர வல்லினம் மெல்லொலியது. ஆதலால் மக்கள் வழக்கில் குற்றுதல், குத்துதலாய் ஆகியது. ஒ. நோ.: முற்றுதல் > முத்துதல்; நாற்று > நாத்து தவள முத்தம் குறுவாள் - சிலப். 7:20 குற்றுவாள் குறுவாள் ஆகியது. குற்றுதலின் தொகுத்தல் குறுதல். தவசத்தைக் குத்துதல், முள் குத்துதல், கத்தியால் குத்துதல் எனக் குத்துதல் விரிவுற்றது. தான் செய்த தவறு தன்னைக் குற்றும் படியாகவோ பிறரைக் குற்றும் படியாகவோ அமைந்தது குற்றம் (குத்தம்) என வழங்கலா யிற்று. குற்றம், குத்தம் எனப்படுவது போல் குற்று குத்து ஆயது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது பழமொழி. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய்ச் சுற்றும் உலகு - திருக். 1025 உழவில் நிலத்தை அகழ்வது கலப்பைக் குத்தி. மூக்கில் குத்தும் அணி மூக்குத்தி. மூக்குத்திப்பூச் செடி என ஒன்று அதன் பூவைக் கொண்டு பெயர் பெற்றது. மீன் குத்தி எடுக்கும் பறவை மீன்குத்தி > மீன்கொத்தி யாயது. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - திருக். 490 கொத்துப் பறை குத்தக் களமிசை - திருப். கட. * குற்று காண்க. குத்துதல்: குத்தி எடுத்துத் தின்னுதல் குத்துதலாம். உரலில் குத்துதல் புறஞ்செலல் ஆயினும், முள் குத்துதல் அகஞ் செலல் ஆதல் அறிக. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து - திருக். 490 என்பதில் வரும் குத்துதல், குத்தியெடுத்துத் தின்னுதல் ஆதலை அறிக. குத்து விளக்கு: தமிழர் வாழ்வில் குத்து விளக்குக்குத் தனிச் சிறப்பாம் இடம் உண்டு. ஒளியேற்றும் பயன் பொருளாக இருப்பதுடன், மங்கலப் பொருளாகவும், கலைப்பொருளாகவும், தெய்வப் பொருளாகவும் திகழ்கின்றது குத்து விளக்கு! அழைப்பிதழில் குத்துவிளக்குப் படம் போட்டுவிட்டால் திருமண விழா என்றோ, புதுமனை புகுவிழா என்றோ எவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் பழகிப் போய்விட்டது. குடும்பம் ஒரு குத்துவிளக்கு என்பது நம்மவர் பழமொழி. குத்துவிளக் கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி என்பது பாவை பாடிய பாவைப் பாட்டு (19). குத்துவிளக்கு என்பதிலுள்ள குத்துக்குப் பொருளென்ன? குத்துக்கும் விளக்குக்கும் உள்ள நேரடித் தொடர்பு விளக்கமாக வில்லையே! குத்தைப் பற்றி ஆய்ந்தே முடிவுக்கு வர வேண்டும். குத்துதலால் பெயர் பெற்றது குத்தூசி. முள் குத்தினால் முள்ளால் குத்தி அதை எடுப்பது காட்டுப் புறத்தில் இந்நாளிலும் காணும் நிகழ்வு! வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம் கற்றாளை முள்ளுகொத்தோடு குத்திற்றாம் என்பது பெருக வழங்கும் பழமொழி. மேல்மண் கீழ்மண் கலக்குமாறு உழும் கலப்பையில் குத்தி உண்டு! அதற்குக் கலப்பைக் குத்தி என்பது பெயர். குத்தி உழுதலால் பெற்ற பெயர் அது. களையைக் குத்தி எடுப்பதற்குக் கூர்ப்புடைய குச்சியையோ கம்பியையோ பயன்படுத்துவர். அதற்குக் களைக்குத்தி என்பது பெயர். மண்ணை ஆழமாகத் தோண்டுவார், குத்துக் கம்பியாம் கடப்பாறையைப் பயன் படுத்துவர். கிணற்றில் நீர் இறைப்பதற்குக் கருவிகள் சில வேண்டும். அவற்றுள், கீழ்க் குத்துக்கால் பத்தற் கல்லில் உள்ள துளைகளில் ஊன்றப்படும். மேற்குத்துக்கால் பட்டடைச் சட்டத்தில் உள்ள துளைகளில் ஊன்றப்படும். கூனை அல்லது சால் சுவரில் தட்டாமல் வருவதற்குரிய உள்வளைவை ஆக்கி உதவுவவை அவ்விருவகைக் குத்துக் கால்களே! குத்துக் கால்கள் போல் ஊன்றி உட்காருதலே குத்துக் காலில் உட்காருதல் என்பதாம். தேங்காய் நெற்றை உரிப்பதற்குரிய கருவி குத்துத் தரம் என்பது. ஒரு கட்டையில் ஊன்றி இறுக்கி வைக்கப்பட்ட கூர்நுனைக் கம்பியே குத்தி உரிப்பதற்குப் பயன்படுவது. யானைப் பாகர்கள் கையில் குத்துக் கோல் வைத்திருப்பர். கன்னம் போடுதற்கெனவும் குத்துக் கோல் உண்டு. பாம்பு பிடிப்பவர் குத்துத் தடி கொண்டிருப்பர். போர்க் கருவியாகவும் குத்துத் தடி பயன்பட்டதுண்டு. குத்துக் கருவி இல்லாமலே கைவிரல்களை மடக்கிக் குத்துச் சண்டை செய்வதும் உண்டு. அச்சண்டை செய்பவர் குத்திப் பயில்வான் எனப் பட்டனர். ஓதுவது ஒழியாத ஓதுவார் போலக் குத்துப் பயிற்சியை விடாப் பயிற்சியர், குத்திப் பயில்வான் எனப்பட்டனர். அவர்கள் குதிப் பயில்வான் எனப்படுகின்றனர். அவர்கள் குதிப் பைல்வான் என்னும் பெயரால் இக்கால் உலா வருகின்றனர். மூக்கில் குத்தி அணியப் பெறும் அணிகலம் மூக்குத்தி! (மூக்குக் குத்தி) காது குத்து வைத்துப் பல பேர் காது குத்துதல் சில குடிவழிகளில் பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது. காதணி அணியாவிட்டாலும், குத்துவாய் காது குத்தைக் காட்டிக் கொண்டிருத்தல் ஆடவர் பலரிடத்தும் இன்றும் காணலாகும். புலிகுத்தி யானை குத்தி என்பவை பழங்காலத்தில் வீரர்கள் பெற்ற பாராட்டுகள் பட்ட கல்லில் புலிகுத்திச் செய்தியுண்டு! பட்ட கல் நட்ட கல்லாய் வீர வழிபாடு ஏற்பட்டமை தொல்பழ வழக்கு. மீனைக் குத்தி எடுக்கும் பறவை மீன்குத்தி (மீன் கொத்தி), மரத்தைக் குத்தி மகிழும் பறவை மரக்குத்தி (மரங்கொத்தி). குத்துதலால் குத்திப் பெயர் பெற்ற பறவைகள் இவை. ஓரிடத்து ஊன்றுகையாகிய குத்துகையே குத்தகையாக வழங்கப்படுகின்றது. குத்தகைக் கால எல்லைக்கு முன்னர் ஒருவரை வெளியேற்றி விட முடியாதே! இப்படிக் குத்துச் சொல் பெருக வழங்குகின்றது. ஆனால், குத்து விளக்கில் குத்துக்கு என்ன பொருள்? அங்கே குத்து இல்லையே! ஊர்ப்புறக் கோயில், பெருங்கோயில் ஆகியவற்றில் விளக்குகள் எப்படியுள்ளன என்பதைக் கூர்ந்து பார்த்தால் உண்மை விளங்கும். ஊன்றிய கற்றூணின் உச்சியில் உள்ள குழியில் எண்ணெயும் திரியும் இட்டு எரியும் விளக்காக இருக்கும்; அல்லது, ஊன்றிய கம்பியின் மேல் உள்ள தகட்டுச் சிட்டிகளில் எண்ணெயும் திரியும் இட்டு எரியும் விளக்காக இருக்கும். அவ்விளக்குகள் நிலத்தில் குத்தி வைக்கப் பட்டமையால் குத்து விளக்கு எனப்பட்டன. பின்னர், வெண்கலம், பித்தளை, வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட நிலைவிளக்கு குத்து விளக்கு எனப்பெயர் பெற்றது. தகட்டால் அளவைக் கருவி ஆய பின்னரும் மரக்கால் எனவும், தங்கத்தால் காதணி ஆய பின்னரும் தோடு எனவும் வழங்குகின்றன அல்லவா! அவற்றைப் போல் என்க! குடும்பம் குத்து விளக்கு எனக் கூறும் தமிழகம், வாழ்க்கைக் துணைவியை விளக்கேற்ற வந்தவள் என்பது, மரபு கருதிய வழக்காம்! சொன் மரபு, வாழ்வியல் மரபு காட்டும் என்பதற்குச் சீரிய எடுத்துக்காட்டு குத்துவிளக்கு என்க! குந்தகம்: குந்து + அகம் = குந்தகம் = கேடு. எழுந்திருக்கவும் நடமாடவும் இயலா வகையில் கிடக்க வைக்கின்ற பழிச்சொல்லும் செயலும் குந்தகமாகும். எனக்குக் குந்தகம் செய்தவர் விளங்கமாட்டார் (ம.வ.). செயலற்றுக் குந்தியிருக்க வைத்துவிடும் கேடு, குந்தகமாகும். குந்தம்: குத்து கருவியுள் ஒன்று குந்தம். குந்தம் வாள் ஈட்டி என்பார் கவிமணி. குந்தம் என்னும் சொல் குவியல் என்னும் பொருளில் முதுகுளத்தூர் வட்டார வழக்கில் உள்ளது. உப்புக் குந்தம் எனக் கூறப்படும் விளையாட்டும் உண்டு. கும்பல், குப்பை என்பவை போலக் குந்தம் என்பதும் குவியல் பொருள் தருதல் சொல்லியல் நெறியதாம். குந்தாணி: குந்து + ஆணி = குந்தாணி, பேருரல். குந்து = நிலத்தை அகழ்ந்து இருக்கச் செய்தல். ஆணி = அகணி - உள்ளே - பதிக்கப்பட்டது. இருந்த இருப்பில் அசையாமல் இருக்கும் உரல் குந்தாணி எனப்படும். கட்டை, கல் முதலியவற்றால் ஆயது. அதனை விரிவாக்கப் போடும் உறைப் பெட்டியாக வட்டமும் உண்டு. அதற்குக் குந்தாணி உறை என்பது பெயர். சிற்றூர் வழக்கில் இருந்த அது சிறிது சிறிதாக மறைந்து வருகின்றது. அரைவை ஆலைகள் அரைவைப் பொறிகள் வந்தபின் குந்தாணி, உரல், ஆட்டுக்கல், செக்கு முதலியவை காட்சிப் பொருளாகிவிட்டன. உடல்பருத்து அசையாமல் உட்கார்ந்திருப்பாரைக் குந்தாணி என்பது சிற்றூர் வழக்கு. உவமையாகு பெயர் இயல்பாக வெளிப்பாடாகிறது. குந்தாணி வேர்விடல்: குந்தாணி வேர்விடல் = நடவாதது நடத்தல். குந்தாணி என்பது தகரத்தால் செய்யப்பட்டது. ஒரு கல்லின் மேல் அதை வைத்துத் தவசம் போட்டு இடிக்கப் பயன்படுத்துவர். உரலின் மேல் வைத்தும் இடிக்கப் பயன்படுத்துவர். குந்தாணி சிந்தாமல், சிதறாமல் இடிக்கப் பயன்படும் இரும்பால் ஆகியது அது. கல்லின் மேல் இருந்து இடிபட அமைந்த அது வேர்விட்டுத் தளிர்த்தல் உண்டோ? ஈயாக் கருமி ஒருவன் ஏதோ ஒன்றைத் தன்னை மறந்து கொடுப்பானெனின் அவன் கொடை குந்தாணி வேர்விட்டது போல என்பர். நடவாதது நடத்தல் குறியாம் அது. குந்துணி: குந்துதற்குரியது என்னும் பொருளில் குந்துணி என்பது நாற்காலியைக் குறிப்பதாகத் திட்டுவிளை வட்டார வழக்கில் உள்ளது. குந்தாணி என்பது உரலில் மேல்வாய் வைக்கும் சுற்றுச் சுவர்போன்ற வட்டத் தகடாகும். குடலும் குந்தாணியும் என்பது இணைமொழி. குப்பம்: குப்பம், ஊர்ப் பெயர்ப் பின்னொட்டாக வருதல் பெரு வழக்கும் பொது வழக்குமாம். புகழ்மிக்க மேட்டுக் குப்பம் முதலாக எண்ணிலாக் குப்பங்கள் உண்டு. இக் குப்பம் உழவர் வழக்குச் சொல்லாகும். நாற்றுமுடி நூறு கொண்டது ஒரு குப்பம் என்பது அது. முடிகளை ஒருங்கே கூட்டி அடுக்கி வைத்தலால் பெற்ற பெயர். குப்பா: காதில் அணியும் திருகு என்னும் அணிகலத்தைக் குப்பா என்பது திருப்பரங்குன்றம், சின்னமனூர் வட்டார வழக்குகள் ஆகும். குவிந்து தொங்கும் வட்டவடிவால் பெற்ற பெயர் அது. கும்பா என்னும் உண்கலம் எண்ணத் தக்கது. குப்பாயம்: சட்டைக்கு மேல் போட்டுக் கொள்ளும் மூடுசட்டை குப்பாயம் (கோட்டு) ஆகும். இதனைத் தென்தமிழக வழக்கில் கேட்கலாம். குப்பி என்பது கொம்புப் பூண் கூந்தல் இறுக்கி. இவற்றைப் போல் உடலை இறுக்கிப் பிடித்து மூடுவது குப்பாயம் ஆகும். முன்னாளில் நாடக உடையாகப் பயன்படுத்தினர் நம்மவர். குப்பாயம் என்பது மகளிர் அணியும் சட்டைப் பெயராக ஒட்டன் சத்திர வட்டார வழக்கில் உள்ளது. குப்பை கூளம்: குப்பை = குவியலாகப் போடப்பட்ட உரமும் கழிவுப் பொருள்களும். கூளம் = மாடு தின்று எஞ்சிய வைக்கோல் தட்டை முதலியவற்றின் துண்டு துணுக்குகள். குப்பை கூளம் சேரவிடாதே; பூச்சி பொட்டை சேர்ந்து விடும் என உழவர் வீடுகளில் கூறுவது வழக்கம். குப்பைக்குப் போவதைக் குப்பை என்கின்றனர் என்க. கூளம் என்பது செத்தை செதும்பு என்பவையாம். கீரையில் கிடக்கும் புல் முதலியவற்றை எடுத்தலைக் கூளம் பார்த்தல் என்பது நடைமுறை. கூளம் என்பது மாட்டுத் தீனியாம்; தட்டை தாளைக் குறித்தலும் உண்டு. கூலம், தவசத்தையும் கூழ் உணவையும் குறித்தல் இவண் அறிக. குப்பை கொட்டல்: குப்பை கொட்டல் = சங்கடத்தோடு அல்லது சலிப்போடு வாழ்தல். உன்னோடு இவ்வளவு காலமாகக் குப்பை கொட்டி என்ன கண்டேன் என்று சலித்துப் பேசுவது கேட்கப்படும் செய்தி. குப்பை கொட்டல் என்பது உரம்போடல். பயிர் ஊட்டமாக வளர்தற்கு வேண்டியது குப்பை. அக்குப்பை கொட்டாக்கால் பயிர் வளமாக வளராது; வாய்த்த பயன் தராது. அப்படியே, நான் இக்குடும்பத்துக்கு உரமாகவும் ஊட்டமாகவும் இருந்து பாடுபட்டேன். அதற்குப் பயன் என்ன? உன் வசையும் திட்டும் அடியும் தடியும் அல்லாமல் கண்டதென்ன? என்னும் உவர்ப்பின் வழி வந்த வழக்குச் சொல் குப்பை கொட்டலாம். குமரி இருட்டு: கும்மிருட்டு என்பது நள்ளிருட்டு ஆகும். அது விடியுங்கால் சற்றே இருட் செறிவு நீங்கும் நிலையைக் குமரி இருட்டு என்பது சீர்காழி வட்டார மீனவர் வழக்காகும். கடலுள் சென்றவர் மீண்டுவிட்டதும், கடலில் செல்வார் புகாததும் ஆகிய கருக்கல் அல்லது வைகறைப் பொழுதின் இருட்டே குமரி இருட்டு. கன்னிமதில், மதில் குமரி என்பவை பகைவரால் தீண்டப்படாத மதில் என்பதைக் கருதுக. கும்பல்: கும்பு + அல் = கும்பல். அல் = சொல்லீறு. கூடிச் சேர்ந்த பெருங்கூட்டத்தைக் கும்பல் என்றும், கூட்டம் கூட்டமாய்ப் போதலைக் கும்பல் கும்பலாய் என்பதும் மக்கள் வழக்கு. அந்தக் கும்பலுக்குள் எப்படிப் போக முடியும்; தேடிப் பார்க்க முடியும் ம.வ. கும்பா: கூம்பு வடிவம் ஒன்றைத் தலைகீழ் மாற்றி வைத்தது போல் அடிசிறுத்து வாய் அகன்று அமைந்த உண்கலம் - வெண்கலத் தால் ஆயது - கும்பா எனப்படுதல் நெல்லை முகவை வழக்கு. சந்தனக்கும்பா என்பதும் உண்டு. கும்பு x கும்பா. கும்புக்கு மாறு, கும்பா. கும்பாட்டம் (கும்ப ஆட்டம்): கும்பம் = குடம். குடம் கொண்டு ஆடிய ஆட்டம் குடமாடல் சிலப்பதிகாரத்தில் வரும் பதினோராடல்களில் ஒன்று. அது, இந்நாளில் கரகாட்டம் எனப்படுகிறது. அதனைக் கும்பாட்டம் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு ஆகும். கும்பி: கும்பி = வயிறு. கும் > கும்பு > கும்பி. சோறு, நீர், காய், கறி, களி, சாறு, எனப் பலவும் கூடிச் செறிதலாலும் வெப்புற்றுப் பிரிப்பன பிரித்து, எடுப்பன எடுத்து, விடுப்பன விடுத்தலாலும் வயிறு கும்பி எனப்பட்டது. சில செய்திகள் அல்லவையும் தொல்லை மிக்கவையுமாக இருக்குமாயின் கும்பி கொதிக்கிறது என்றும் வயிறு எரிகிறது என்றும், வயிற்றெரிச்சல் என்றும் சொல்வது மக்கள் வழக்கு. கொலைகாரப் பாவியை நினைத்தால் கும்பி கொதிக்கிறது என்பர். கும்பிடு சுவர்: கூரை, ஓடு வேயப்பட்ட கட்டடங்களின் குறுஞ் சுவர்கள் இரண்டும் முகடுவரை முக்கோண வடிவில் எழுப்பப்படுவது. ஆதலால் அச்சுவர் அமைதியும் கும்பிடுவார் கை அமைதியும் ஒப்பு நோக்கிக் கும்பிடு சுவர் என்பது கொற்றர் வழக்காகும். கும்பிடுதல்: கூம்பு > கும்பு + இடுதல் = கும்பிடுதல். இரு கைகளையும் இணைத்துக் கூம்பு வடிவில் தோற்றம் தரப் பணிதல் கும்பிடுதல் எனப்படும். சாமி கும்பிடுதல், சாமி கும்பிடப் போகிறோம் என்பதும் (ம.வ.) ஊளைக் கும்பிடு என்பது உள்ளெண்ணம்- நல்லெண்ணம் - இல்லாமல் போலியாக வளைந்து நெளிந்து கும்பிடு போடு தலாகும். ஊளைச் சதை என்பது உள்ளாற்றல் இல்லாத் தசை. ஊளைக் கும்பிடு என்பது உள்மை (உண்மை) இல்லாத கும்பிடு. கும்பிட்ட கையால் அம்பிட்ட பயல் மக்கள் பழிப்பு. தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் வள்ளுவம் (828). கும்புதல்: கும்புதல் = அடிப்பிடித்தல். சோறு கறி வேகுங்கால் நீர் இன்மையாலும் கிண்டி விடாமையாலும் அடிப்பிடித்து விடுவது உண்டு. அடிப் பிடித்தலைக் கும்புதல் என்பர். அதனால் ஏற்படும் நெடியைக் கும்பி மணக்கிறது எனக் கூறுவர். கும்பிப் போய்விட்டது; கும்பிக்கு ஆகாது என்பர். பின்வரும் கும்பியாவது வயிறு. உடலுக்கு ஒவ்வாதது என்பதாம். குப்பல், குப்புதல், குப்பை, குப்பென்று முளைத்தல், குப்பென்று வியர்த்தல் என்பன வெல்லாம் செறிவுப் பொருளன. ஓரிடத்துத் திரண்டு பற்றிக் கொண்டது கும்புதலாம். கும்பிய கருப்புக் கட்டி இனிப்பும் கெட்டு, சுவையும் கெட்டுச் சேர்ந்ததையும் கெடுத்துவிடும் கும்மாங்குத்து: கையைப் பந்துபோல் திரட்டிக் குத்துதல் - பெரும்பாலும் கன்னத்தில் குத்துதல் - கும்மாங்குத்து என நெல்லை வழக்காக உள்ளது. திரட்டி உருட்டிய மாப்பண்டம் கும்மாயம் எனப்படுதல் பண்டே உண்டு. கும்மி, கும்பல், குப்பை முதலியவும் திரட்டிக் கூட்டியது உணர்த்துவதே. கும்மாயம்: உருட்டித் திரட்டிய உளுந்தங்களியைக் கும்மாயம் என்பது செட்டிநாட்டு வழக்கு. கும்முதல் திரட்டுதல். துணியைச் சலவை செய்ய அடிப்பவர், அதனைப் பின்னர்க் கும்முவர்; கும்முதல் திரட்டுதல் பொருளது ஆகும். கும்மாயத்துக்குப் பயிற்றுப் பருப்பு இருநாழி -(தெ.க.தொ 14.13:16) கும்மி: கும்மி:1 கும்மி தமிழக விளையாட்டு ஆகும். ஆடவரும் மகளிரும் தனித்தனியேயும் இணைந்தும் கும்மியடிப்பர். கும்முதல் கூடிச் சேர்தலாகும். ஒயில் கும்மி, கும்மி கோலாட்டம் முதலாகக் கும்மியடிப்பர். இதனைக் கொம்மி என்றார் வள்ளலார். கொம்மியடி பெண்கள் கொம்மியடி எனத் தொடங்கும் பாடலும் ஆடலும் உடையது. கும்முதல் பொருள் கொம்முதல் என்பதற்குமுண்டு. கொம்மை என்பது மகளிர்தம் திரண்ட மார்பு. கொம்மை என்பது உழவர் களத்தில் தூற்றப்பட்ட மணியற்ற பதரின் குவியல். கொம்மை, கொழுமை, திரட்சி, கூடிச் சேர்தல் என்னும் பொருளன. கும்மி:2 வெண்டளையான் அமைந்த ஓரெதுகை யுடைய எழுசீர்க் கழிநெடிலடிகள் இரண்டு வரப் பாடப்பெறும் பாடல்களைக் கொண்டது கும்மி என்பதாகும். பல பேர் கூடி நின்று ஆடிப் பாடுதலால் கும்மி என்று பெயர் பெற்றது. கும்பல், கும்மிருட்டு, குப்பல், குப்பை முதலியவாகத் தொகுதி குறிக்கும் சொற்கள் பல உளவாதல் அறிக. ஒவ்வோர் அடியின் நான்காஞ் சீரையும் தனிச் சொல்லாக அமைத்துப் பாடுவதும் கும்மியில் உண்டு. கொங்கண நாயனார் அருளிய வாலைக்கும்மி, மதுரை வாலை சாமி அருளிய ஞானக்கும்மி முதலியவற்றைக் காண்க. கும்மியைக் கொம்மி என்பார் வள்ளலார். நடேசர் கொம்மி காண்க. கும்மிகள் சந்தம் பலப்பல கொண்டு இயலும் என்பது சாக்கோட்டை உமையாண்டவள் சந்தக் கும்மியால் விளங்கும். கல்லைக் கனிவிக்கும் சித்தனடி - முடி கங்கைக் கருளிய கர்த்தனடி தில்லைச் சிதம்பர சித்தனடி - தேவ சிங்க மடியுயர் தங்கமடி என்பது நடேசர் கொம்மியில் ஒரு பாட்டு. செந்தமிழ் நாடெனும் போதினிலே எனவரும் பாரதியார் பாடல் கும்மிப் பாட்டேயாம். கும்மி கோலாட்டம்: கும்மி = பலர் குழுமி கைகொட்டி ஆடும் ஆட்டம். கோலாட்டம் = பலர் குழுமி கோல்கொட்டி ஆடும் ஆட்டம். பெரும்பாலும் கும்மியும் கோலும் மகளிர் ஆட்டங்களாம். கும்முதல் - கூடுதல். கொம்முதல் கொம்மி எனவும் படும். கொம்முதலும் கூடுதலேயாம். கோலாட்டத்திற்கெனத் தனிக் கோல்களும் கோல்களில் சலங்கை இணைப்பும் உண்டு. ஒன்பான் இரவு விழாக்களிலும் ஊர் விழாக்களிலும் கும்மி கோலாட்டம் நிகழ்த்தப்படுவது உண்டு. கும்மிருட்டு: கும்மு + இருட்டு = கும்மிருட்டு. கும்முதல் = செறிதல்; குழுமிச் செறிந்த இருள். இயல்பாக இருள், ஒளி குன்றி மறைந்தது. கும்மிருட்டு என்பதோ இருட்டோடு விண்மீன் மதி முதலியனவும் வெளிப்படாமல் கருமுகிலால் மறைக்கப் பட்டுவிட்ட இருளாம். கும்மிருட்டுப் போதில் வெளியே எவரும் உலவார். குடும்ப விளக்குப் பாடிய பாரதிதாசனார் இருண்ட வீடு பாடியது எண்ணத்தக்கது. இருள் கப்பிக் கொண்டது என்பதும் கும்மிருட்டாம். கும்முதல்: துணி துவைக்கும் போது பந்து போல் திரட்டி உருட்டி அமுக்கித் தேய்த்தலைக் கும்முதல் என்பர். கும்பல், கும்மி, குப்பல், குப்பை என்பனவெல்லாம் திரளல் கூடுதல் பொருளவேயாம். கும்முதல் நெல்லைச் சொல்வழக்கு. கும்மித் தப்பினால் அழுக்குப் போகும் என்பர். குயவரி: குயம் + வரி = குயவரி. குயம் = வளைவு; அரிவாள். வளைந்த வரிகளையுடைய புலி குயவரியாகும். குயவர்: மண்கலம் வனைபவர்; வனைதல் = வளைதல். குயம் = வளைவு. மண்கலங்களை எல்லாம் சுழல் ஆழியின்மேல் (சக்கரத்தின் மேல்) இட்டு வனைதலால் குயவர் எனப்பட்டனர். அக்கலங்கள், குயக்கலம் எனப்பட்டன. குரக்கன்: குரங்கின் கை போன்ற கதிர் உடையது கேழ்வரகு. அக் கதிரையும் அத்தவசத்தையும் குரக்கன் என்பது யாழ்ப்பாண வழக்காகும். குரக்குவலி: குரக்கு = வளைவு. குரக்கு > குரக்கை. நரம்பு வெட்டி இழுப்பதைக் குரக்குவலி என்பர். குரக்கை வலி என்பதும் அது. குரங்கன் என்பது பிறை நிலா. வளைவுப் பொருளில் வருவதே. நரம்பு வளைந்து சுண்டி இழுப்பதால் குரக்கைவலி எனப்பட்டதாம். விரல் குரக்கை பிடித்துக் கொண்டது என்றால் சுடக்குப் போட்டு நீவுவதை மக்கள் வழக்கில் காணலாம். இனி. கெண்டை வலி என்பதும் கெண்டை புரட்டல் என்பதும் நரம்பு சுண்டி இழுப்பதாம். குரங்கு மட்டை: மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்கு மட்டை என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. இருபக்கமும் பற்றிப் பிடித்த கைபோல் தோன்றிய தோற்றத்தின் வழியாக ஏற்பட்ட வட்டார வழக்குச் சொல் இது. எனினும் அகரமுதலிகளிலும் இவ்வாட்சி பொது வழக்காகி யுள்ளது. குரம்பை: குரம்பை = குடிசை. அது புல்லால் வேயப்பட்டமை, புல்வேய் குரம்பை (புறம். 120; குறுந். 235) என்பதாலும், அது குறுகிய உயரத்ததாயும் சிறியதாயும் இருந்தமை, குறியிறைக் குரம்பை (புறம். 129) என்பதாலும் புலப்படும். அதில் பட்ட நீர் ஒழுகுதலைக் கூறுவார் போல, வால்வெள் ளருவி கொன்இலைக் குரம்பையின் இழிதரும் - குறுந். 284 என்னும் நயம் சுட்டத் தக்கதாம். குரம் என்பது கோரைப் புல்; புல்லால் வேயப்பட்டதால் குரம்பை எனப்பட்டது. பின்னை மற்றையவை கொண்டு வேயப்பட்ட குடிசைப் பொதுப் பெயராயது. குரவை: குலவு > குலவை > குரவை. மகளிர் எழுவர் அல்லது மிகப்பலர் கூடி வளைய வந்து குரலெழுப்பி ஆடிப்பாடல் குரவை எனப்படும். பொதுவகையில் நானிலங்களுக்கும் உரியது எனினும் முல்லைக்குத் தனி உரிமையதாம். எ-டு: ஆய்ச்சியர் குரவை எனப்படும். குன்றக் குரவை (சிலப். 24). குரால்: ஈனாததும் ஈனும் பருவம் வந்ததும் ஆகிய ஆட்டைக் குரால் என்பது ஆயர் வழக்கம். வெடிப்பாகவும் எடுப்பாகவும் துள்ளித் திரிதல் குறித்த பெயர் இது. குர் > குரு > குருத்து > குருவி இவற்றை எண்ணினால் இதன் அடிப்பொருள் விளக்கமாம். இது தென்தமிழகப் பொதுவழக்கு. கபிலம் குரால் நிறம்;புகர் புற்கு மாமே - சேந். தி. பண்பு. குரால் என்பதும் புகர் கபிலம் என்பவும் வெண்ணிறமற்ற அழுங்கல் வெண்ணிறமாம். புகர் மக்களால் போர் என்றும் புல்லை என்றும் வழங்கும். புற்கெனும் நிறம், புல்லை என்பதாம். புல்லை, மயிலை, வெள்ளை, செவலை, காரி என்பவை (ம.வ). குரு: பெரிய அம்மையைக் குரு என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். வெப்பும் குருவும் தொடர என்பது சிலப்பதிகாரத் தொடர் (உரைபெறு கட்டுரை). நீர் கோத்த பெரிய அம்மைக் கட்டி வெண்ணிறமாகத் தோற்றம் தருதலால் இப்பெயர் பெற்றது. குருவும் கெழுவும் நிறனா கும்மே என்பது தொல்காப்பியம் (786). குருக்கள்: உள்ளொளி பெருக்க வல்ல ஆசிரியர் குரு எனப்பட்டார். இறைநிலைகளுள் ஒன்று குருவர் நிலை. இவற்றை எண்ணினால் தாய், தந்தை, குரு, இறை, என்பதன் வரிசை விளக்கமாம். குருவின் தன்மையும் இறைமைச் சிறப்பும் உடையார் குருக்கள் எனப்பட்டார். அவர்கள் என்பதில் வரும் பன்மை போல் அவர் ஒருவர் எனினும் பன்முகத் தெளிவு மாண்பர் என்பதன் சான்று அது. அப்பொருளறியவும் மாட்டார் குருக்களாகத் தோற்றம் தருவது தம்நல இறக்கச் சான்று! இரங்கத்தக்க நிலையும் அது. குருச்சி: குரு, குருவன், குருத்துவம் என்னும் வழியில் இலக்கிய ஆட்சி பெறும் சொல்லன்று குருச்சி. இது, தக்கலை வட்டாரத்தில் விதை என்னும் பொருளில் வழங்குகின்றது. ஒளி என்னும் பொருள் தருவது குரு. அது தொல்காப்பிய வழியது (786). விதையை முளைக்க வைத்தால் முளை ஒளியொடு வெளிப்படுதல் கண்கூடு. இதனைக் கொண்டு குருச்சி எனப் பெயரீடு செய்துள்ள வட்டார வழக்கு. பொது மக்களும் புலமைப் பெருமக்களை ஒப்பவர் என்னும் எண்ணத்தை உண்டாக்கத் தவறாது. முளையைப் பாவை என்னும் பழந்தமிழ் ஆட்சியும் பாவை என்பது பார்வை வழி வந்தது என்பதும் கருதுக. குருமால்: கட்டடம் கட்டும் கொத்து வேலையில் தளத்தை ஒளிவிடச் செய்யும் தேய்ப்புத் தகட்டின் பெயர் குருமால் என்பது. கன்மாக் கரைசலாம் பாலைக் குருமால் தகட்டால் அழுத்தி அழுத்தித் தேய்க்கத் தளம் பளிச்சிடும். அத் தகட்டுக்குக் குருமால் என்று பெயர் அமைந்தது. குருவும் கெழுவும் நிறனா கும்மே என்னும் தொல்காப்பிய வழியதாம் (786). கலந்தேய்த்துப் பளிச்சிடச் செய்யும் மண் குருமண் எனப்படுவதும் அவ்வழிப்பட்டதே. குருமுத்து: குரு = சிவப்பு. சிவந்த புள்ளிகளையுடைய முத்து, குருமுத்து. வெண்ணிறப் பொலிவுடைய முத்தில் செந்நிறப் புள்ளி விழுதல் முத்துக் குற்ற வகைகளுள் ஒன்றாம். சந்திர குரு = வெண்முத்து; அங்காரகன் = செந்நீர் முத்து (முத்துக்குற்றம்)(சிலப். 14:195). குரும்பை: தென்னையின் இளங்காய் குரும்பை. நல்ல வெண்ணிறத்தது அது; வழவழப்பாம் தன்மையது; ஒளிபட்டால் எதிரொளி செய்வது. குருவும் கெழுவும் நிறனா கும்மே என்பது தொல்காப்பியம் (786). குரு = ஒளி, விளக்கம். குருவித் திருக்கை: குருவி + திருக்கை = குருவித்திருக்கை. குரு > குருவி = ஒளியுடையது; திருக்கை = வாலால் சுழற்றி அடிப்பது. இவ்வியல்பமைந்ததும் இருபாலும் சிறகு போலும் அமைப்புடையதுமான மீன் குருவித் திருக்கையாம். இது திருக்கை வகையைச் சேர்ந்த அழகிய மீன். கோடியக்கரைக் கடற்பகுதியில் கிடைப்பது இது. குருளை: குருள் > குருளை = குட்டி. குருளை = புலி, முயல், பன்றி, நாய், நரி முதலியவற்றின் குட்டி. இவ்விலங்கின் குட்டிகளெல்லாம் பிறந்த சில நாள் வரை கண்திறவாமல் குருடாய் இருப்பது பற்றியே குருளை என்ற பெயர் அக்குட்டிகளுக்கு வந்ததென அறிய வேண்டும் புன்புற மயிரும் பூவாக் கட்புலம் புறத்து நாறா வன்பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ என்னும் கம்பரின் இயற்கை தழுவிய வருணனை இங்கு ஊன்றி நோக்கத்தக்கது (சி.த.சொ.ஆ. 34) குலம்: குல் + அம் = குலம். குல் = கூட்டம், பெருக்கம். குலை என்பது பல காய்கள் பல கனிகள் ஆதல் அறிக. குடி ஒரு குடும்பம் சார்ந்தது. பல குடும்பம் சார்ந்தது குலம் எனப் பட்டது. குலமும் ஒன்றே குடியும் ஒன்றே - கபி. அக. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமந். 2104 தென்னிந்திய குலமும் குடிகளும் என்பது தர்சுதன் என்பார் எழுதிய பல தொகுதி நூல்கள். குலவுதல்: குல் > குலவு > குலவுதல். குலவுதல் = மனங்கலந்து கூடி மகிழ்தல், கலந்துரையாடி மகிழ்தல், சூழ்ந்திருந்து மகிழ்தல், வட்டமிடல் (ம.வ.). குலுங்காமல்: குலுங்காமல் = நாணமில்லாமல். மானங் கெடுமாறு ஒரு சொல்லைச் சொன்னால் உடனே தலை தாழும்; மனம் நடுங்கும்; கால்கைகள் உதறும்; இது, தாங்கிக் கொள்ள முடியாமல், இப்படி ஆகிவிட்டதே என்னும் மானவுணர்வால் ஏற்படும் நிலை. இன்னும் சிலர்க்கு இத்தகு மானக் கேடாம் நிலை உண்டாகும் போது, தாங்கிக் கொள்ள மாட்டாத சீற்றம் உண்டாம். என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தானும் அறியாமல் ஏதேதோ செய்துவிடுவர். இவ்விரு நிலைகளிலும் உடல் குலுங்கும். மானம் கெடுக்கும் போதும் குலுங்காமல் ஒருவர் இருந்தால் வெட்கங் கெட்டவன் எனப் பழிப்பர். இவ்வளவு பேசினேன்; குலுங்காமல் இருக்கிறான். மானம் வெட்கம் இருந்தால் அப்படி இருப்பானா? என்பர். ஆதலால் குலுங்குதலுக்கு நாணுதல் பொருள் உண்மை விளங்கும். குல்லம்: வஞ்சகம் அல்லது சூது கருதுதல் குல்லம் எனப்படும். பழகிக் கொண்டே பாழும் எண்ணம் வைத்து வீழ்த்துதற்குக் காலம் நோக்கியிருப்பவர் குல்லகமானவர் எனப்படுதல் பொது வழக்காகும். எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு என்பது வள்ளுவம் (820, 819). குல்லை: குல்லை என்பது ஒரு குறுஞ்செடி. அதனைக் கஞ்சங் குல்லை கஞ்சா வாகும் என்கிறது திவாகர நிகண்டு (மரப்). குல்லையின் இலையும் பூவும் நறுமணமுடையவை. முடித்த குல்லை இலையுடை நறும்பூ என்பது திருமுருகாற்றுப் படை (201). குல்லை, முல்லை நிலம் சார்ந்தது என்பதைச், குல்லையம் புறவு என்னும் சிறுபாண் (29). குர், குல், குள் என்பவை குறுகுதல், குறுமை, வளைதல் அடிச்சொற்களாம். கஞ்சம் என்பது கரியது. குல்லை கரியதும் குறியதுமாம் செடி என்க. குவளை: குவளை நீர்வாழ் கொடிவகையுள் ஒன்று. குவவு, குவை, குவி, குவிவு, குவிப்பு என்பவை திரளலும் வளைதலும் சார்ந்த சொற்கள். குவளையும் திரண்டு குவிந்த நீள்வட்ட அமைப்பினது. குவிந்து மலர்தல் நீர்ப்பூக்கள் அனைத்தின் பொது இயல்பு. எனினும் அப்பொருளை இதற்குச் சிறப்பாகக் கொண்டனர். மற்றவற்றிற்குப் பிறிது பொருள் கொண்டு பெயர் வழங்கினர். குவிந்து மலரும் எல்லாமும் குவளை எனப்படின் மயக்கம் உண்டாம் அல்லவோ! குவிநிலையில் கண்ணே போல் தோற்றம் தருவது குவளை. குவளை கண்விழித்து நோக்க என்பார் கம்பர். காணிற் குவளை என்பார் வள்ளுவர். கண்ணிமைத்து மூடல் சிறப்பு குவளைக்கு வடிவொடும் பொருந்துவதும் அறிக. குவளை விரிநிலையில் முகவாய் அகல்வட்டமாய் அடி நீண்டதாய்த் தோன்றும் தோற்றம் பருகு நீர்க் குவளை போல் தோன்றுவதால் அவ்வடிவச் செயற்கைப் போகுணிக்கு ஆயது. போகுணி = தம்ளர். போகணி என்பது (ம.வ). குவளைக் கண், உவமை. குவளைக் கண்ணன், பெயர். குவளைக் கண்ணி, ஊர்ப்பெயர். குவளை கருங்குவளை, செங்குவளை என இருவகைய. கண்ணகி கருங்கணும், மாதவி செங்கணும் என்பதில் இருவகைக் குவளையும் அரியதும் இனியதுமாம் உவமைகளாம் (சிலப். 5:237). அதனை அடியார்க்கு நல்லார் நயமாகச் சுட்டுவார். கருங்கண் செங்கண் என்றார் இருவர்க்கும் கூட்டமின்மையும் உண்மையும் உணர்த்தற்கு * கழுநீர், போகுணி காண்க. குவிபா ஒருபது: இதழ் குவிதலால் பிறக்கும் எழுத்துகளே வரப் பாடப் பெறும் பத்துப் பாடல்களைக் கொண்ட ஒரு சிறுநூல் குவிபா ஒருபதாகும். இதழ் ஒட்டப் பிறக்கும் எழுத்துகளும் இதழ் குவிதல் வழியே தோன்றுதலால் அவ்வெழுத்துகளும் இதழ்குவி எழுத்து களாகவே கொள்ளப் பெறும். உ, ஊ, ஒ, ஓ, ஔ இதழ் குவிவே (நன். 78) என்பதனால் இதழ் குவிதலால் பிறக்கும் உயிரெழுத்துகள் இவை என்பது விளங்கும். ப், ம், வ் என்னும் மூன்று எழுத்துகளும், அவற்றின் உயிர்மெய் வரிசை 36 எழுத்துகளும் அம்மூன்று வரிசையும் நீங்கிய 15 மெய்களின் வரிசையில் வரிசைக்கு ஐந்தெழுத்தாய்க் கூடிய 75 எழுத்துகளும், உயிர் ஐந்து எழுத்துகளும் ஆக 119 எழுத்துகளும் குவிபாவுக்கு உரிய எழுத்துகளாம். இக் குவியெழுத்துகளை விலக்கிப் பாடுவது இதழகல்பா என்னும் நிரொட்டகம் ஆகும். குவிபா ஒருபது தண்டபாணி அடிகளாரால் இயற்றப் பெற்றதாம். * இதழகல்பா, இதழ் குவிபா காண்க. குழகு: குழகுக்கு இளமை, குழந்தை, அழகு என்னும் பொருள்கள் உண்டு. மழவும் குழவும் இளமைப் பொருள என்பார் தொல்காப்பியர் (795). குளகு இளந்தளிராகும். இளமை அழகுக் குரியது என்பது, கழுதை, குட்டியாக இருக்கும் போது எட்டுப் பங்கு என்னும் பழமொழி காட்டும். குழகன் அழகன், முருகன் என்க. குழந்தை: குழவி குழந்தை எனவும் வழங்கும். குழந்தை குட்டி என்பது இணைச்சொல். குழந்தை ஆண்பாலையும் குட்டி பெண்பாலையும் சுட்டுவன. குழந்தை வேலன், குழந்தை இயேசு இறைமைப் பெயர்கள். குழந்தை வேல், குழந்தையம்மாள் என்பவை போல்வன இருபாற் பெயர்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது (ம.வ.) குழந்தை யுள்ளம் கள்ளம் களங்கமில்லாதது. அதனால் அவ்வுள்ளத்தைத் துறவரும் தமக்கருள இறையை வேண்டினர். குழமகன்: குழமகன் = இளமகன். கலிவெண்பாவினால் மகளிர் தம் கையிற் கண்ட, இளமைத் தன்மையுடைய குழமகனைப் புகழ்ந்து பாடுவது குழமகனாகும். கலிவெண் பாவாற் கையினிற் கண்ட குழமக னைச்சொலிற் குழமக னாகும் - இலக். பாட். 110 மழவும் குழவும் இளமைப் பொருள என்பது தொல். மரபியல் (795). இளங்கன்றைக் குழக்கன்று என்பது வழக்காறு. பெண்மகவானால் குழமகன் மூன்றாம் ஆண்டில் மொழியப் பெறும் என்பர். பேணுதகு சிறப்பிற் பெண்மக வாயின் மூன்றாம் ஆண்டின் மொழிகுவ குழமகன் - நவநீத. 45 உரை மேற். குழமகன் உலாவரக் கண்டு புகழ்தல் உண்டு என்பது பவனிவரு குழமகன் என்னும் பிரபந்தத் திரட்டால் (14) அறியவரும். குழமகன், மகவைப் புகழ்வதாக அமைந்தது. பாலனைப் பழித்தல் என்னும் துறை இதற்கு எதிரிடைப்பட்டது. பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றிய, கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக் குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண்டளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் எனவரும் இடைக்குன்றூர் கிழார் பாட்டு (புறம். 77), குழமகன் சிறப்பை அழகுற விளக்கும். குழம்பு: குழைய வேக வைத்து ஒன்றோடு ஒன்று கலந்து உசிலை எனப்படும் மசாலை சேர்த்து, உணவுக்கு விடுகறியாய்ப் பயன்படுத்துவது குழம்பு ஆகும். பருப்பு மட்டுமோ பருப்புடன் காய் சேர்த்தோ ஆக்குவது பருப்புக் குழம்பு. புளி மிகுதியாகப் பிறகாய்கள் சேர்த்துக் குழம்பு ஆக்குவது புளிக்குழம்பு. காரம் சற்றே மிகவாகவும் கெட்டியாகவும் சுண்டக் காய்ச்சியது காரக் குழம்பு அல்லது சுண்டக் குழம்பு. மோரொடும் தயிரொடும் வெண்டைக்காய் முருங்கைக் காய் சேர்த்து ஆக்கப்பட்டது மோர்க்குழம்பு அல்லது தயிர்க்குழம்பு. வற்றல் வகையாய சுண்டை, வெண்டை, கத்திரி, கொத்தவரை, மாவடு, மிதுக்கு, பாகல் முதலியவை கொண்டு ஆக்கப்பட்டது வற்றல் குழம்பு. பூண்டு, வெங்காயம் முதலியவையே கொண்டு மசாலை சேர்த்து ஆக்கப்படுவது பூண்டுக்குழம்பு, வெங்காயக் குழம்பு. புலவொடு சேர்த்துச் சமைத்த விடுகறி ஆக்குவது கறிக்குழம்பு. குழல்: உள் துளையுடையது குழல். மூங்கில் குழல் ஊதும் இசைக்கருவி யாயிற்று. மூங்கில் குழல் வீடுதோறும் அண்மைக் காலம்வரை அட்டில் பொருள்களுள் ஒன்றாகி இருந்தது. குழலும் யாழும் என்னும் கருவிகளுள் முந்திசை குழலிசை யாயிற்று. குழலிசை தும்பி கொழுத்திக் காட்ட - மணிமே. 4:3 குழல் கொல்லு, தட்டு ஆகிய தொழிற்கூடக் கருவிகளாக விளங்குவன வாயின. குழவி: குழ > குழவி. மழவும் குழவும் இளமைப் பொருள - தொல். 795 மக்கட் குழவியை அன்றி மற்றை உயிரிகளின் குட்டிகளை யும் குழவி என்ற பெருந்தகைமை தமிழர் ஆன்மீகப் பெருமையாம். துடியடிக் குழவி - புறம். 369 என்பது யானைக் கன்றையாம். குழி: குழி:1 குழி = தோண்டப்பட்ட பள்ளம். குழி:2 குழி = இயற்கையாக அமைந்த பள்ளமான இடம். குழி:3 குழி = கன்னத்து உண்டாகும் குழி. குழியிருந்தால் குறையா வளம் பழ. குழி:4 குழி = தொலைக்குழி அல்லது கமலைக்குழி. கிணற்றின் உள்ளாகத் தோண்டப்பட்ட குழி. கிணற்றின் உட்கிணறு. குழி:5 குழி = நில அளவு. இந்நான்கு எல்லைக்கும் உட்பட்ட புன்செய் குழி 300 (தெ.க.தொ. 7:141). பன்னிரண்டு அடிச் சதுரப் பரப்புடைய நிலம் ஒருகுழி (க.க.). ஒரு குழி நிலத்து எடுக்கப்பட்ட மண்ணும் குழியாம். கட்டுமானத் தொழிலாளர் வழக்கில் அளவையாகப் பயில்கிறது இது. குறுக்குச் சுவர் கட்டுவதற்குப் பத்துக் குழி மண் தேவைப் படும் என்பர். குழி:6 ஊர்ப்பெயர். கல்லுக்குழி, ஊற்று (ஊத்து)க் குழி. குழிசை: மருந்தாகப் பயன்படும் மாத்திரைகளைக் குழிசை என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. மாத்திரை பெரிதும் உருண்டை வடிவில் இருப்பது. அதனால் முகிழம் என்பார் பாவாணர். முகிழ் என்பது மலரின் மொக்கு (மொட்டு) நிலை. மருந்து இடிக்கும் கல் குழியுள்ளது. அதில் இடித்துச் செய்வதால் - குழிக்கல்லில் இடித்துச் செய்வதால் - குழிசை எனப்பட்டது. குழிமாடு: குழிமாடு என்பது சுடுகாடு என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்கில் உள்ளது. இறந்தாரை அடக்கம் செய்ய, குழி தோண்டுவர். ஆதலால் அது புதைகுழி எனப்படும். இடுகாடு என்பதும் அது. மாடு என்பது பக்கம் என்னும் பொருளது இலக்கிய வழக்கிலும், மக்கள் வழக்கிலும் இடப்பொருள் அதற்கு உண்டு. மாடு நின்ற மணிமலர்ச் சோலை (கம். சுந். 330) - இலக்கிய வழக்கு. கால்மாடு, தலைமாடு - மக்கள் வழக்கு. குழிவாசல் என இடுகாட்டை வழங்குதல் ஆண்டிபட்டி வட்டார வழக்கு. குழியல்: உண்கலங்களில் ஒன்றாகிய கும்பா என்பதைக் குழியல் என நாகர்கோயில் வட்டாரத்தார் வழங்குவர். கும்பாவின் வட்ட வடிவும், அது குழிவாக இருப்பதும் எண்ணியமைக்கப் பட்ட வட்டார வழக்கு இது. குழிவு குவிவு: குழிவு = பக்கங்கள் உயர்ந்து நடுவே குழிவானது குழிவு ஆகும். குவிவு = நடுவுயர்ந்து பக்கங்கள் குழிவானது குவிவு ஆகும். முன்னதற்குக் குழிவையும் பின்னதற்குக் குவிவையும் கண்டு அறிக. கிட்டப் பார்வை எட்டப் பார்வைகளுக்குக் குழிவு ஆடி, குவிவு ஆடிகளைப் பயன்படுத்துதல் நடைமுறைச் செய்தியாம். குழியைக் குண்டு குழி என்பதிலும், குவிவை மலர்க் குவிதலிலும் கண்டு கொள்ளலாம். தாமரை குவிதல் போல் கைகுவிதலையும் (கூப்புதலையும்) ஒப்பிட்டுக் கைம்மலர் என்பதன் அருமையை உணரலாம். குழு: கும் > குமு > குழு குழுமுதல் கூடுதல். குழுமுவது கூட்டம். குழுக் குழுவாகப் பிரித்துப் போட்டியிடுவது ஆட்டம். இலை பலவானால் குழை; முடி பலவானால் குழல்; வீடுகள் பலவானால் குழும்பு, குடும்பு. ஆளுங்கணங்களுள் ஒன்று > ஐம்பெருங்குழு. முகில்கள் கூடுதல் குழுமுதல் ஆகும். கும்முதல், கும்பல், குப்பை முதலியவற்றை எண்ணுக. * கும்மி காண்க. குழை: சிறுமியர் காதணி வகைகளுள் ஒன்று குழை. மரம் செடிகளில் இருந்து தாழ்ந்து தொங்கும் குழைபோலத் தொங்கும் அணி ஆதலால் அப்பெயர் பெற்றது. குழைக்காதர் என்று ஆண்பால் தெய்வப் பெயர் வழங்கலால் ஆண்குழந்தைகளும் குழை அணிவதுண்டு என்க. தேன்கூடு போலவும், மலர்கள் போலவும் குழைகள் உண்டு. குழைவது; பணிவது; குழையின் தாழ்ந்து வீழும் தன்மையால் பெற்ற பொருளாம். குழை எறிந்து கோழி வெருட்டலைப் பட்டினப்பாலை கூறுகின்றது. கனமும் திரட்சியும் உடைய குழை கனங்குழை எனவும், கணங்குழை எனவும் வழங்கும். குழல், குழை என்பவை தழைந்து வீழும் கூந்தல் பெயராகவும் வழங்கும். குழைதல்: குழைதல் = அன்புளது போல் நடித்தல். சோறு குழைதல் மண்குழைத்தல் என்பவை வழக்கில் உள்ளவை. நாய் வாலைக் குழைத்தல் கண்கூடு. மரத்தில் குழைகள் எழுந்தும், வீழ்ந்தும், பிரிந்தும், சேர்ந்தும் ஆடும். அவ்வாறு கூத்து ஆடுதல் குழைந்தாடுதல் எனப்படும். இளக்கமாதல், நெகிழ்தல், வளைதல், தழுவி ஆடுதல் என்பனவெல்லாம் குழைதல் பொருளாக அமைந்தன. என்ன குழைவு பெரிதாக இருக்கிறது; ஏதோ ஆக வேண்டும் போல் இருக்கிறது எனக் குழைபவரைக் கண்டு அதனைப் புரிந்தவர்கள் கூறுவதுண்டு. குழைதல் மெய்யன்பால் நிகழ்வது அன்று. பொய்யான நடிப்பு என்பதால்தான் இகழ்ச்சிக்கு உரியதாயிற்று. குழையடித்தல்: குழையடித்தல் = ஏமாற்றுதல். நோய் நொடி என்று ஒருவர்க்கு ஏற்பட்டால் அவர்களுக்கு மந்திரிப்பவர்கள் வேப்பங் குழையை எடுத்து வீசித் தண்ணீர் தெளிப்பதுண்டு. நம்பிக்கையால் நோய் நீங்கியதாகச் சொல்வதும் உண்டு. ஆனால், எல்லார்க்கும் அம்மந்திரிப்பு பயன்படுவதில்லை. அதனால் பயன்படாதவர் அம்மந்திரிப்பை அல்லது குழையடிப்பை ஏமாற்றுதல் எனக் கூறினர். அதிலிருந்து அப் பொருள் தருவதாயிற்று. பனிக்கட்டி வைத்தல், குளிப்பாட்டல், தலைதடவல் என்பன வெல்லாம் குழையடித்தல் போன்ற ஏமாற்றே எனினும், நுண்ணிய வேறுபாடு உள்ளவை என்பதை ஆங்காங்கு அறிக. குளக்கரை: குளம் + கரை = குளக்கரை. கோடு எனப்படும் சொல் குளக்கரையைச் சுட்டுதல் இலக்கிய வழக்கு. குளவளாக் கோடு இன்றி நீர்நிறைந்தற்று என்பது வள்ளுவம் (523). குளக்கரைக்குப் போதல் என்பது வெளியே போதல், வெளிக்குப் போதல் என்னும் பொருளில் சிற்றூர் வழக்காக அண்மைக் காலம் வரை இருந்தது. வெளியே வந்தால் உள்ளே போதல் என்பது ஆய பின்னும், வெளியே போதல், குளத்துக்குப் போதல் ஆற்றுக்குப் போதல், கொல்லைக்குப் போதல், என்பவை முற்றாக ஒழியவில்லை. அதிலும் குறிப்பாக ஆடவர்களிடம். பழநாளில் குளத்துக்குப் போதல் முதலியவற்றை மங்கல வழக்கு என்றார். குளம்: குளம் = நீர் நிலைகளுள் ஒன்று. குள் என்னும் வேர் வழியது இது. குள் + அம் = குளம். வளைவு - வட்டம் என்னும் பொருள் கொண்டது. ஏரி குளம் என்பவை இணைச்சொல். ஏர்த்தொழிலுக்குப் பயன்படுவன இவை. எனினும் ஏரியினும் சிறியது குளம். இதனினும் சிறியது குட்டை. ஆதலால் குளம் குட்டை என்னும் இணைச்சொல் வழக்கும் உண்டு. குளங்களுள் குடிநீர்க்குளம், குளிநீர்க்குளம் எனத் தனித்தனியேயும் குளங்கள் உண்டு. குளம் சார்ந்த ஊர் குளத்தூர். பின்னொட்டாகவும் குளம் வரல் மிகுதி. எ-டு: கரிசல்குளம், வேப்பங்குளம், வாகைக்குளம். குளவகை குளம் = குளிக்கும் நீர்நிலை. தெப்பக்குளம் = தேரோடும் குளம்.(சுற்றிலும்) ஊருணி = ஊராரால் உண்ணப்படும் அல்லது ஊர் நடுவிலுள்ள குளம். ஏரி = ஏர்த்தொழிலுக்கு நீர்ப்பாய்ச்சும் குளம். கண்வாய் = சிறு கால்வாயால் நீர்நிரப்பும் குளம். தடம், தடாகம் = அகன்ற அல்லது பெரிய குளம். கயம் = ஆழமான குளம். குட்டம் = குளத்தின் ஆழமான இடம். குட்டை = சிறுகுளம். குண்டு = வற்றிய குளத்தின் நீர்நிறைந்த கிடங்கு. பொய்கை = மலையடுத்த இயற்கையான குளம். சுனை = நீர்சுரக்கும் மலைக்குண்டு. கிணறு = வெட்டப்பட்ட ஆழமான சிறு நீர்நிலை. கேணி = மணற்கிணறு. கூவல் = சிறு கிணறு. துரவு = சுற்றுக் கட்டில்லாத பெருங்கிணறு. மடு = அருவி விழும் கிடங்கு. (சொல்.ஆ. 49) குளம்பி: குளம்பு > குளம்பி. ஆன் ஆகிய பசுவின் குளம்பு வட்டமாய் ஊடுபிளவு உடையதாய் அமைந்தது. அதன் வடிவில் அமைந்த கொட்டையை அவ் வான் குளம்பு வடிவு ஒப்பக் கொண்டு இலத்தீன் மொழியில் காபி (காப் = கன்றுக்குட்டி) என்று பெயரிட்டனர். அப்பெயரை அவ்வியற்கையொடு பொருந்தப் பாவாணரால் அமைக்கப் பட்ட அருமைக் கலைச்சொல் குளம்பி ஆகும். அதன் பொரு ளுணராமல் பால், இனிப்பு, காபித்தூள் குழம்பியதால் (கலந்ததால்) குழம்பி எனச்சிலர் குழம்புவது வழுவாம். குளம்பி என்பதே செவ்விய பொருளுணர் சொல்லாம். குளிக்கப் போய்ச் சேறு பூசல்: புறந்தூய்மை நீரான் அமையும் என்பதும் (298), மாண்டார் நீராடி என்பதும் (278) வள்ளுவத் தொடர்கள். கங்கை யாடிலென் காவிரி யாடிலென் - தேவா. திருநா. தூய்மை அழுக்குப் போக்கச் செய்தல். அழுக்கைப் போக்காமல் மேலும் அழுக்குச் சேற்றில் வீழ்தல், ஒற்றைக்குப் பன்மடங்கு அழுக்காம். கூட்டித் துப்புரவு செய்து கொண்டுவந்த குப்பையை முற்றத்தில் கொட்டுவது போன்றது இது. நல்லவை செய்யப் போய் அல்லவை செய்தலைக் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசுதல் என்பது இது. குளித்தல்: குளத்து நீரில் தலை நனையாமல் உடலை நனைய வைத்து அழுக்குத் தேய்த்தல் குளித்தல் எனப்பட்டது. குடிநீர்க்குளம், குளிப்புக்குளம், ஊரூர்தோறும் முன்னர் இருந்தன. பின்னர்த் தலைக்கீழ் நீராடல் பொதுமையாயிற்று. குளித்தல் வகை தலையில் நீர்விடாமல் கழுத்துக்குக் கீழ் நீர்விட்டுத் துடைத்தல் குளித்தல் ஆகும். தலைமுதல் உடல் முழுமையும் நீராடுதல் முழுகுதல் எனப்படும். ஆற்றில், கிணற்றில், குளத்தில், கடலில் நீரை வளைய வருதல் நீந்துதல் ஆகும். வளைய வந்து நீராடுதல் துழாவுதல் ஆகும். நீரில் அசையாமல் நிற்றல் நிலைநீத்து ஆகும். மூச்சடக்கி நீருள் நெடுநேரம் இருத்தல் மூழ்குதல் ஆகும். மேலிருந்து நீருள் துடுமென ஒலியெழ வீழ்தல் பாய்தல் ஆகும். குளிப்பாட்டல்: குளிப்பாட்டல் = வயப்படுத்துதல், புகழ்தல். நீரால் குளிப்பாட்டல் காணக்கூடியது. குழந்தை, முதியர், நோயர் ஆகியோரைக் குளிப்பாட்டல் என்பது இல்லாமல், செல்வர்களையும் குளிப்பாட்ட ஆள்கள் உண்டு. இக் குளிப்பாட்டுதல் மகிழ்வளிப்பது. குழந்தைகள் குளிப்பாட்டலை வெறுத்தாலும் தானே குளிக்க விரும்புவது வெளிப்படை. குளிப்பாட்டலிலும் மிகுந்த இன்பந் தருவது புகழ்க்குளிப் பாட்டல். அத்தகையர், இத்தகையர் என்று வாய் குளிரப் பாராட்டினால் மனங்குளிர்ந்து போகின்றவர்கள் உண்டு. அத்தகையவர்களை அறிந்து கொண்டவர்கள், தங்களுக்கு வேண்டுவதை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் புகழ்க் குளிப்பாட்டுதலில் கை தேர்ந்த கலைவல்லராக விளங்குகின்றனர். குளிப்பாட்டல் மனம் கிளுகிளுக்கப் பாராட்டுதலாகப் பொருள் படுவதாயிற்று. குளுவ நாடகம்: குளுவ நாடகம் என்னும் பெயர், இது கூத்து வகையைச் சேர்ந்ததொரு நூல் என்பதை வெளிப்படுத்தும். கூத்து வகை நூல் எனின் இசையும் இயலும் இசையாமல் இயலாமை விளங்கலாம். காப்பு, தோடையம், மங்கலம், தலைவன் புகழ்பாடல், குளுவன் தோற்றம், சித்துவித்தை கூறல், சிங்கன் வருதல், பறவைகள் வருதல், கண்ணி குத்தி வேட்டை யாடல், பறவை களைப் பங்கிடல், பரிசு பெறல், சிங்கன் சிங்கியைச் சந்தித்தல், வாழ்த்துதல் என்னும் பகுதிகளையுடையதாகக் குளுவ நாடகம் இயல்கின்றது. தமிழ்க் கோயிலாகத் தம் குடியிருப்பைக் கொண்டிருந்த அழகிய சிற்றம்பலக் கவிராயரின் மிதிலைப் பட்டித் தலைவனாக இருந்தவன் சின்ன மகிபன் என்பான். அவன்மேல் எழுந்தது சின்ன மகிபன் குளுவ நாடகமாகும். கல்லிடும் பச்சி பல்லைக் காட்டுதடா தமிழருமை யறியா மல்சல சலென்று கல்வி பண்ணுவோ ருடையபேச் சைக்கேளான் காண்டீபன் சின்னன் என வரும் பகுதியால் பாடிய புலவன் தகுதியும், பாட்டுடையான் தகுதியும் விளங்கும். குறவஞ்சியில் இடம்பெறும் சிங்கன் சிங்கியர் குளுவ நாடகத்திலும் இடம்பெறுகின்றனர். ஆயின், அவர்களுக்குத் தலையிடம் இல்லை; துணையிடமே யுண்டு. குளுவ நாடகத்தில் குளுவனுக்கன்றோ முதலிடம்! சிங்கனுக்குச் சிங்கியை இணைக்கும் இந்நாடகத்தில் தலைவன் குளுவனின், குளுவச்சியைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. அவன்தான், ஏகாந்த யோகக் குளுவன் நானே (11) என்று ஆடிப்பாடுகிறானே! இனிக் குளுவச்சியைத் தலைகாட்ட விடலாமா? குறடு: வளைவாகவும் பற்றிப் பிடிப்பதாகவும் இருப்பதைக் குறடு என்பர். பற்றுக் குறடு, பாதக்குறடு என்பவை எடுத்துக்காட்டு. சுருண்டு ஒலிக்கும் வகையால் பெயர்பெற்றது குறட்டை .. குறண்டி முள் வளைவினது. இவ்வட்டார வழக்குக் குறடு கடன் என்னும் பொருள்தருவது. கடன் கொடுத்தவர் படுத்தும்பாடும், கடன் கொண்டவர் படும்பாடும், அதிலிருந்து மீளமுடியா இறுக்கமும் நெருக்கலும் நோக்கினால் கடனைக் குறடு என்று வழங்கிய படைப்பாளியைப் பாராட்டலாம். சொல்லாலேயே வாழ்வியல் காட்டிய பண்பாடு இது. நெல்லை வட்டார வழக்காகும். குறத்தியர் பாட்டு: இது குறம், குறவஞ்சி, குறத்திப் பாட்டு எனவும் படும். குறம் பாடல் என்னும் வழக்கு குறத்தியர் பாட்டின் வழியே வந்ததாம். குறி கூறுதல் என்பது குறத்தின் வழி வந்த ஆட்சியே. குறிஞ்சி நிலவாணர் குறவர் என்பதும் அவர்கள் வெறி யாட்ட யர்ந்து வேலனை வேண்டலும், கட்டு, கழங்கு, குறி எனப் பார்த்தலும் இலக்கியப் பழமை வாய்ந்தவை. குற்றாலக் குறவஞ்சி இவ்வகை நூல்களில் முதற்பட்டதும் முதன்மை யுற்றதுமாம். பிற சமயவாணரையும் இக்குறவஞ்சி கவர்ந்தமை, வேத நாயக சாத்திரியார் இயற்றிய பெத்தலேம் குறவஞ்சியால் அறியப்படும். புதிய பெத்தலேம் குறவஞ்சியும் கிளர்ந்துள்ளது. வெண்ணிலாவின் தலைமேல் மாந்தன் அடி வைத்த இந்நாளிலும், கோல் எடுத்துக் குறி சொல்லும் குறிஞ்சி நிலவாணர் உண்மை குறவஞ்சியின் எச்சம் எனலாம். தலைவன் உலா வரவு, மகளிர் காமுறுதல், மோகினி வரவு, உலாப்போந்த தலைவனைக் கண்டு மயங்கல், திங்கள், தென்றல் முதலிய உவலாம்பனம் (வகை) பாங்கி உற்றது என்ன என்று வினாதல், தலைவி பாங்கியோடு உற்றது உரைத்தல், பாங்கி தலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியொடு தலைவன் அடையாளங் கூறல், குறத்தி வரவு, தலைவி குறத்தியை மலைவளம் முதலியன வினவல், குறத்தி மலைவளம் நாட்டுவளம் முதலிய கூறல், தலைவன் தல வளம் கிளைவளம் முதலிய கூறல், குறி சொல்லி வந்தமை கூறல், தலைவி குறி வினவல், குறத்தி தெய்வம் பராவல், குறி தேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவி விடுத்தல், குறவன் வரவு, புள்வரவு கூறல் கண்ணி குத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனோடு குறத்தி அடையாளம் கூறல், குறவன் குறத்தியைக் கண்ணுறல், குறவன் அணி முதலிய கண்டு ஐயுற்று வினவலும், குறத்தி விடை கூறலுமாகக் கூறல், பெரும்பாலும் இவ்வகை உறுப்புகளால் அகவல், வெண்பா, தரவு கொச்சகம், கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம் ஆகிய செய்யுள் இடைக்கிடை கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழாற் பாடுவது குறத்திப் பாட்டு எனப்படும். இனி, இறப்பு நிகழ்பெதிர் பென்னுமுக் காலமும் திறம்பட உரைப்பது குறத்திப் பாட்டே முக்காலமும் உணர்ந்த குறத்தி குறி சொல்லுவதாக அமைந்ததே குறத்திப் பாட்டு என்பர் பன்னிரு பாட்டியலார் (336). பிரபந்த தீபம் (72) குறத்திப் பாட்டின் இலக்கணத்தை விரிவுற இயம்புகின்றது. குறத்திப் பாட்டே கூறும் இலக்கணம் தலைவன் உலாவரத் தையலர் காமுறல் மோகினி வரவு மொழிதல் உலாவந்த தலைவனைக் கண்டு தான்மயங் குறுதல் உவாமதி முதலிய உவாலம் பனத்தைப் பாங்கி உற்ற தென்னென வினாவல் தலைவி பாங்கியோ டுற்ற துரைத்தல் பாங்கி தலைவனைப் பழித்துக் கூறல் தலைவி பாங்கியைத் தூது வேண்டல் தலைவி சகியொடு தலைவன் குறிகூறல் குறத்தி வரவு கூறல் தலைவி குறத்தியை மலைவளம் முதலிய வினாவல் குறத்தி நிலவளம் மலைவளம் கூறல் தலைவன் குலவளம் நிலவளம் சாற்றல் குலமகள் குறத்தியைக் குறிதேற வினாவல் குறத்தி தெய்வம் பராவலங் குறிதேர்ந்து நல்வரவு நவிலல் தலைவி பொருள் நல்குதல் குறவன் வரவு புள்வரவு கூறுதல் கண்ணி குத்தல் கான்பறவை படுத்தல் குறத்தியைத் தேடல் குறவன் பாங்கனோடு குறத்தி குறிகூறல் குறத்தியைக் கண்ணுறல் குறவன் குறத்தியை ஐயுற்று வினாவல் வினாவிற் குறுவிடை குறத்தி விடுதல் இவ்வகை உறுப்பெலாம் இயையப் பொருந்திக் கலித்துறை அகவல் கழிநெடில் விருத்தம் கலிவிருத்தம் வெண்பா தரவு கொச்சகம் பதமுதல் சிந்து பாடுதல் பண்பே குறவஞ்சி வகையுள் ஞானக் குறவஞ்சி என்பதொரு வகை. அது சிங்கன் சிங்கி உரையாகச் செல்லும் என்பது பீருமுகம்மது அருளிச் செய்த ஞானரத்தினக் குறவஞ்சியால் விளங்கும். “ஆதிக்கு முன்னம் அநாதியும் என்னடி சிங்கி!அஃது அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா! ஆதியால் வந்த அரும்பொருள் ஏதடி சிங்கி - அது சோதியில் ஆதி சொரூபாய் எழுந்தது சிங்கா! இக்குறவஞ்சி 63 கண்ணிகளை யுடையது. குறம்: குறம் என்பது குறி சொல்லுதல் என்னும் பொருளது. பாட்டுடைத் தலைவனைக் காமுற்ற தலைவி ஒருத்தியைக் கண்டு குறத்தி குறி கூறுவதாக வருவது குறமாகும். குறம் என்னும் நூலில் குறத்தியின் கூற்று மட்டுமே வரும். ஆனால், குறவஞ்சி என்னும் நூலில் குறத்தி கூற்றுடன் பிறர் பிறர் கூற்றும் பிற பிற செய்திகளும் உண்டாம். குறம் என்னும் வகையுள் குறிப்பிடத்தக்க ஒன்று மீனாட்சியம்மை குறம். அது காப்புத் தொடங்கி வாழ்த்துடன் 52 பாடல்களால் முடிகின்றது. கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், சிந்து கொச்சகக் கலி ஆகிய பாவகைகளைக் கொண்டுள்ளது. முந்நாழி முச்சிறங்கை நெல்வளந்து கொடுவா; முறத்தில் ஒருபடி நெல்லை முன்னேவை அம்மே; இந்நாழி நெல்லையும் முக் கூறுசெய்தோர் கூற்றை இரட்டைப்பட எண்ணினபோ தொற்றைபட்ட தம்மே; உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையார்வந் துதித்தார்; உனக்கினி யெண்ணின கருமம் இமைப்பினில் கைகூடும்; என்னாணை எங்கள்குலக் கன்னிமார் அறிய எக்குறிதப் பினும்தப்பா திக்குறிகாண் அம்மே எனவரும் பாடல் நெற்குறி கூறுமுறையைக் கூறுவதாம். கைக்குறி, நிமித்தக் குறி என்பனவும் இக்குறத்தில் விரித்துரைக்கப் பெற்றுள. * குறத்தியர் பாடல் காண்க. குறவை: வரால் என்பது நெடிய பெரிய மீன். அம்மீன் போன்ற அமைப்பினதாய்க் குறுகியதாய் அமைந்த மீன் குறவை என்பது. குறு > குற > குறவை. குறள்: குறள் வெண்பா யாப்பில் அமைந்த நூல் குறள் எனப் படுகின்றது. திருக்குறள் முப்பாலைக் கூற வீட்டுப்பால் கூறுவதாக ஔவைக் குறள் விளங்குகின்றது. அட்டாங்க யோகக் குறள், கிறித்துமொழிக் குறள், அருட்குறள், புதுமைக் குறள் என்பனவும் குறள் யாப்பால் அமைந்த நூல்கள். ஆளுடைய பிள்ளையார் பாடும் திருவிருக்குக் குறள், எழுத்தெண்ணிப் பாடும் இருசீரடிச் சிறுமையால் அமைந்த பெயராக உள்ளது. நீல மாமிடற் றால வாயிலான் பால தாயினார் ஞாலம் ஆள்வரே இஃது ஆலவாய்த் திருவிருக்குக் குறள். * திருக்குறள் காண்க. குறி: குறி:1 வருபவர் குறிப்பறிந்தும் ஏட்டுக் குறிப்பறிந்தும் குறி கூறுவது, குறி. குறிப்பறிதல் என்பது திருக்குறளில் உள்ள இரண்டு அதிகாரங்கள். பொருட்பாலில் உள்ளது ஒன்று. காமத்துப் பாலில் உள்ளது ஒன்று. குறிப்பறிவுறுத்தல் என்பதோர் அதிகாரமும் உண்டு; அது காமத்துப் பாலில் இடம்பெற்றது. குறி:2 ஒன்றைப் பற்றிக் குறித்தெழுதப்பட்ட நூல். ஒருகுறி கேட்போன் நன். 42 குறி:3 குறித்த இலக்கு. குறிப்பாகப் பார்த்து அடி என்பது ம.வ. குறி:4 குறித்த இடத்து, குறித்த காலத்து, குறித்தவர், குறிப்பாகக் கூடிச் செயலாற்றும் ஊரவை. குறியுள்ளிருந்து குறிகேட்டு எழுதினேன் தெ.க.தொ. 19:141 குறி:5 அடையாளம். வண்டிவரும் குறியே இல்லையே என்பது (ம.வ.) குறி:6 ஆண்பால், பெண்பால் பிறப்பொடு வந்து இறப்பு வரையிலுள்ள பால் உறுப்பு. குறிச்சி: அமர்வு இருக்கையாகிய நாற்காலியைக் குறிச்சி என்பது நெல்லை வட்டார வழக்காகும். குறிஞ்சியில் இருந்து வந்த பெயரீடு இது. குறிச்சி புக்கமான் என்பது இலக்கிய ஆட்சி. குறிச்சி வேட்டுவர் குடியிருப்பு. மூங்கில் பிளாச்சு, தப்பை ஆயவற்றால் பெரும்பாலும் இருக்கை செய்யப்பட்டமையால், அம்மூங்கில் தோன்றிய குறிஞ்சி நிலத்தின் வழியாக ஏற்பட்ட பெயர் ஆகும். குறி, குறம், குறவஞ்சி என்பவை கருதுக. மதம் கொண்ட யானையையும் மயக்கும் பண் குறிஞ்சிப்பண் என்பது அகப்பாடல். குறிஞ்சியைக் குறிச்சி என்பதும் உண்டு. குறிச்சிப் பெயர் ஊர்கள் பல; பாஞ்சாலங்குறிச்சி, கல்லிடைக் குறிச்சி. குறிஞ்சி: மலையும் மலைசார்ந்த இடமும் ஆங்குச் சிறந்து விளங்கிய குறிஞ்சிச் செடியின் பெயரால் குறிஞ்சி என்றே வழங்கப்பட்டது. அந்நிலத்து ஒழுக்கமும் குறிஞ்சி எனவே கூறப்பட்டது. தலைவன் தலைவியர் முதற்கண் சந்தித்துக் குறிப்புணர்தல், அக்குறிப்பு வகையால் குறியிடம் கூறி மீளக் கூடல், குறியிடம் தவறிக் காதல் முறுகுதல், தலைவியின் தோற்றம் கூற்று மாற்றங்களால் குறிகேட்டல், குறிஞ்சி முருகின் வெறியாடல் என்பன வெல்லாம் குறிவழிப்பட்டவையே. ஆதலால் காதலர் கூடும் புணர்வு ஒழுக்கம் குறிஞ்சி எனப்பட்டதாம். குறியிடம் கூறல், குறியிடம் கூடல், குறியிடத் துய்த்தல், அல்ல குறிப்படுதல், குறிப்பறிதல், குறிப்பறிவுறுத்தல், குறிகேட்டல் என்னும் துறைகளைக் கருதுக. மேலும் குறிஞ்சி மலர்தல் காலம் பன்னீராண்டுக்கு ஒருமுறை என்று கொண்டு அகவை கணித்த குன்றவாணர் வழக்கும், மகளிர்க்குப் பன்னீராண்டு மண அகவை என்பதும் எண்ண வேண்டும். குறிஞ்சி பாடவே வாய்த்தவர் குறிஞ்சிக் கபிலர் புணர்தல் நறுங்குறிஞ்சி - பழம்பாடல். குறிபிழைத்தல்: தலைவன் தலைவியைக் காணவந்து தான் வந்ததை அறிவிக்கும் அடையாளம் இயல்பாக வேறொரு வகையால் ஏற்பட்டுக் காண வர அவன் வாராமையும், அவன் வந்து தரும் குறி கேளாமையும் இற்கடந்து வெளிவர இயலா அன்னை விழிப்பு முதலாம் தடையும் எனச் சந்திக்காமல் ஆவது குறி பிழைத்தலாம். கணியர் கூறுவதில் பத்தில் ஒன்று வாய்த்து, மற்றவை பொய்த்தாலும் அதனைக் குறிபிழைத்தலாகக் கூறா மயக்கம் குறி நம்பிக்கையர்க்கு உண்டு. அதுவே குறிகாரர்க்கு வாய்த்த பேறு. குறிப்பொலிகளும் குறிப்புச் சொற்களும்: ஒற்றைக் கிளவி. எ-டு: சடார், வெள்ளென, சரட்டென்று, பொதுக்கென்று. இரட்டைக் கிளவி. எ-டு: கலகல, கருகரு, மடமட. எதுகைக் கிளவி. எ-டு: பட்டுப்பட்டு (பட்பட்), கதக்குத் கதக்கு, கணீர் கணீர். இரட்டித்த கிளவி. எ-டு: செக்கச்செவேர், கன்னங்கரிய. குறிப்பு: இங்குக் கூறிய கிளவிகளெல்லாம் எனவென் எச்சமும், என்றென் எச்சமுமாகும். வெள்ளென கருக்கு முதலிய சொற்கள் சுட்டடித் தோன்றியவை. சடார் கலகல முதலியவை ஒலியடித் தோன்றியவை தேவநே.). குறிப்புணர்த்தல்: குறிப்புணர்தல் மாந்தப் பிறவிச் சான்று மட்டுமன்று மாந்தர் நல்வாழ்வுக்கு இன்றியமையாத அறிபுலப் பண்பு. குறிப்பு மட்டுமன்று; குறிப்பிற் குறிப்பும் உணர்வதே கண் என்பது வள்ளுவம். குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் - திருக். 705 என்பது அது. குறிப்பிற் குறிப்பு அறிவார் துணையை உறுப்பினுள் எதனைக் கொடுத்தாயினும் கொள்ள வேண்டும் என்பதும் அது (குறள். 703). குறிப்பறிதல் இரண்டு அதிகாரங்கள், குறிப்பறிவுறுத்தல் என ஓர் அதிகாரம் என மூன்று அதிகாரம் வகுத்தமையே வள்ளுவர் உள்ளம் குறிப்பறி திறம் மாந்தர்க்கு இன்றியமையாத தென்பது காட்டும். அதுவும் அகவாழ்வுக் குறிப்பு, புறவாழ்வுக் குறிப்பு என இருவகைப்படலும் அறியத் தக்கவை. ஒன்றன் ஒன்று முரணா வகை இது. அவை நடுவே, குறிப்பறிய மாட்டாதவன் மாந்தன் அல்லன் மரம் என்றவர் ஔவையார். குறிப்பறிதல் மக்கட்பண்பு; அஃதில்லார், அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர் என்பதும் வள்ளுவமாயிற்று (குறள். 997). குறிப்பேடு: காணும் காட்சி - கேட்கும் செய்தி ஆயவற்றின் நினைவுக் குறிப்பாக அதனை விரிவாக்கம் செய்து கொள்ளும் வகையில் குறித்து வைக்கும் சுருக்க எழுத்து அல்லது சுருக்கச் செய்தி ஏடு, குறிப்பேடு எனப்படும். ஒருவர் பெருவாழ்வின் முழுமையை எழுதாமல் குறிப்பாகச் சிலவற்றை எழுதுவது குறிப்பு எனப்படல் உண்டு. திரு.வி.க.வின், வாழ்க்கைக் குறிப்பு ஏறத்தாழ எழுநூறுபக்கம். அவர் விரித்து எழுதாமை எவ்வளவு தமிழ் இழப்பு, தமிழர் இழப்பு, தமிழக இழப்பு என்பதை அதனை மேலோட்டமாகத் திருப்புவாரும் அறிவர். ஆனால் அப்படித் திருப்புவாரையும் திருப்ப விடாத அரிய செய்திப் பெட்டகம் அது. ந.சி.கந்தையா அவர்கள் எழுதிய காலக் குறிப்பு அகராதி என்பது கடுகு கருமலையாவது. பிறப்பியக் குறிப்பேடும் (சாதகம்) குறிப்பேடு எனவும், பயில்வோர் எழுதும் பயிற்சி ஏடும் குறிப்பேடு எனவும் வழங்கும். குறியமுண்டு: முண்டு என்பது துண்டு. முண்டும் முடிச்சுமாகக் கட்டை இருக்கிறது உடைப்பது அரிது என்பது வழக்கம். முண்டு என்பது சிறிய துணியைக் குறிப்பது சேரல வழக்கு. குறி என்பது மறைப்பிடம். அதனை மறைக்கக் கட்டும் துணியைக் குறிய முண்டு (கோவணம்) என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். குறிய என்பதும் சிறிய என்னும் பொருள் தருவதாயின் ஒருபொருள் பன்மொழியாம். சின்னஞ் சிறுதுணி என்னும் பொருளில் வரும். குறியறி சிந்து: உலாப் புறத்துக் கண்ட நங்கை ஒருத்தியின் இருப்பிடத்தைக் கேட்டு அறிதலும், ஆங்குச் சேர்ந்து அவளைக் கண்டு மகிழ்தலும் சிந்துப் பாவால் பாடப் பெறுவது குறியறி சிந்து என்னும் பெயர் பெறும். குறியகவல் நாடுபிற சேறல் குறியறி சிந்து என்பது பிரபந்தத் திரட்டு (17). குறியிடம்: குறி + இடம் = குறியிடம். தலைவன் தலைவியர் களவுக் காலத்தில் தாம் கூடிச் சந்திக்கக் குறித்துக் கூறும் இடம். பெரிதும் தலைவியும் தோழியும் குறிக்கும் இடம் குறியிடம். குறியிடம் போலவே காலக் குறியும் உண்டு. அது பகற்குறி இரவுக்குறி என்பவை. பகற்குறி இல்லத்தைக் கடந்தது. இரவுக்குறி இல்லத்தைக் கடவாதது. அதாவது தலைவன் வந்தமை அறிவிக்கும் குறி ஒலி (ஓசை) கேட்கும்படியான இடம். பகற்குறி இரவுக் குறியெனும் பான்மைய புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சிநிக ழிடமே - நம்பி. 37 இல்வரை இகந்தது பகற்குறி இரவுக்குறி இல்வரை இகவா இயல்பிற் றாகும் - நம்பி. 38 குறியெதிர்ப்பு: குறித்த அளவு ஒரு பொருளை ஒருவரிடம் பெற்றுப் பின்பு அப்பொருளை அவரிடம் மீள ஒப்படைப்பது குறி எதிர்ப்பு எனப்படும். குறியாவது குறிப்பிட்ட அளவு. எதிர்ப்பு, மீளத்தருதல். புறநானூற்றுக் கால ஆட்சியது இது. இச்சொல் இப்பொருளில் அச்சுமாறாமல் கொங்குநாட்டு வழக்காக உள்ளமை, பயில வழங்கினால் மக்கள் வழக்கு இலக்கிய வழக்கு என இரண்டு இல்லை, ஒன்றே என்பதை மெய்ப்பிக்கும். இது, வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து - திருக். 221 என ஆளப்பட்டுள்ளது. குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும் என்பது புறநானூறு (163). குறி எதிர்ப்பு மக்கள் வழக்கில் குறியாப்பாக உள்ளது. * கைம்மாற்று காண்க. குறு கூலி: குற்று > குறு + கூலி = குறுகூலி. குறுதல் = குற்றுதல். நெல்லைக் குற்றி அரிசியாக்குவதற்குரிய கூலி. குறுகூலி நெல் நாடுரியும் (தெ.க.தொ. 5.642). பவள உலக்கை கையால் பற்றித் தவள முத்தம் குறுவாள் செங்கண் தவள முத்தம் குறுவாள் செங்கண் குவளை அல்ல கொடிய கொடிய - சிலப். 7:20 குறுக்கம்: நீண்டும் அகன்றும் கிடக்கும் நிலப்பரப்பை அளந்து நீளத்திலும் அகலத்திலும் குறுகத் தறித்து வைக்கப்பட்ட ஓரளவான நிலப்பகுதி குறுக்கம் எனப்படும். அது முன்பு ஏக்கர் என வழங்கப்பட்டது. 100 செண்டு ஓர் ஏக்கர் என்பது நில அளவைக் கணக்கு. எ-டு: எனக்கு நன்செயும் புன்செயுமாக என்தந்தையார் பத்துக் குறுக்கம் (ஏக்கர்) வைத்துள்ளார். என்பது மக்கள் வழக்கு. இடுப்பைக் குறுக்கு என்பதை எண்ணினால் தெளிவாம். குறுக்கும் மறுக்கும் என்பது இணைமொழி. சிலுவையை(க்) குறுக்கை என்றார் பாவாணர். குறுக்கு: நெடுக்கு என்பதன் எதிர்ச்சொல் குறுக்கு. மாந்தர் உயரத்தின் நடுவிடமாம் இடுப்புக்கு குறுக்கு என்பது ஒருபெயர். இடுப்பு என்பது அளவால் இடுங்கியது சுருங்கியது. அப்பொருளதே - குறுகியது என்பதே - குறுக்கு. அவ்வூர்க்குக் குறுக்கு வழி இது; நீங்கள் சொல்வது சுற்றுவழி என்பது ம.வ. குறுக்கு என்பதற்குச் சுருக்கு என்பதும் பொருளாம். ஏன் பேச்சை விரிக்கிறாய்; பேச்சைக் குறுக்கு என்பதும் ம.வ. சுருங்கச் சொல்லல் என்பது நூலின் பத்து அழகுகளுள் முதலழகு (நன்.13). குறுக்குத் துறை - பொருநையாற்றின் வடபால் நெல்லைப் பகுதியில் திருமுருகன் கோயில் கொண்ட இடம். குறுக்கும் மறுக்கும்: குறுக்கு = குறுக்காகச் செல்வது குறுக்கு. மறுக்கு = குறுக்காகச் செல்வதற்கு எதிரிடையாகச் செல்வது மறுக்கு. மறுத்துச் செல்வது மறுக்கு. இது குறுக்கா மறுக்கா எனவும் வழங்கும். குறுக்காக மறுக்காக என்பவற்றின் தொகுத்தல் ஆகும். நெடிய உடலின் குறுக்காக அமைந்தது குறுக்கு எனப்படுவதையும், குறுக்கு வழி என்பதையும் நினைக. மறுத்தல், மறுக்கம், மறுமொழி மறுமாற்றம் இவற்றால் மறுக்கு எதிரிடையாதல் கொள்க. குறுக்கும் மறுக்கும் ஓடுதல் குறுக்கு மறுக்குமாக உழுதல் என்பவை வழக்கங்கள். குறுக்கு வழி சுருக்குவழி: குறுக்கு வழி = நெடிதாகச் செல்லும் சாலை வழி, வண்டிப் பாதை என்பவை தவிர்த்துக் குறுகலாக அமைந்த நடைவழி. அது நெடுவழியினும் அளவில் குறுகுதலுடன் தொலையும் குறுகியதாகவே இருக்கும். சுருக்கு வழி = குறுக்கு வழியிலும் தடம் உண்டு. தடத்தைப் பற்றியும் கருதாமல் மிகச் சுருக்கமாகச் செல்லுதற்கு ஏற்படுத்திக் கொண்ட வழி. அது போகுமிடத்தை நேர் வைத்துத் தடமும் வழியும் கருதாமல் செல்லுதல். முன்னதில் குறுகுதல் மூலம்; பின்னதில் சுருங்குதல் மூலம். குறுக்கே விழுதல்: குறுக்கே விழுதல் = தடுத்தல். ஒருவர் ஒரு செயல் மேற்கொண்டு புறப்படுங்கால் அவர் போக்கைத் தடுத்து என் வழக்கைக் கேட்டு விட்டுப்போ என்பதற்கு அடையாளமாக நிறுத்துவதற்குக் குறுக்கே விழுதல் என்பது வழக்கம். பேருந்து நிறுத்தம், தொடரி நிறுத்தம், சாலை மறிப்பு, தொழிலக மறிப்பு எல்லாம் இவ்வகைப் படுவனவே. இவ்வழக்கம், குறுக்கே வந்து விழாமலும் ஆள் கூட நேரே வராமலும் கூட, எழுத்து வகையாலோ, சொல்வகையாலோ, ஏற்படும் குறுக்கீட்டையும் குறுக்கே விழுதலாகக் குறித்தல் வழக்கில் உள்ளது. குறுக்கே விழுந்து தடுக்காதே; தடுத்தால் பிறகு பார் என வஞ்சினம் கூறலும் உண்டு. குறுங்கட்டு: நாகர்கோயில் வட்டாரத்தில் குறுங்கட்டு என்பது அமர் பலகை (பெஞ்சு) என்னும் பொருளிலும், பெருவிளை வட்டாரத்தில் நாற்காலி என்னும் பொருளிலும் வழங்குகின்றது. கட்டுதல் அமைந்தது கட்டு, குறுங்கட்டு என்பது குறுங்கட்டி எனப்படுவதும் உண்டு. கட்டில் அளவில் சிறியது என்பது குறிப்பது, குறுமை ஒட்டு. குறுந்தொகை: குறளடிச் செய்யுள் குறுந்தொகை யாமே என்பது குறுந்தொகை இலக்கணம் (பிரபந்த தீபம் 53). குறளடி என்பது நான்கு முதல் ஆறெழுத்துள்ள நாற்சீரடி என்பது தொல்காப்பிய நெறி. ஆயின் அந்நெறி சங்கத்தார் காலத்திற்குப் பின்னே போற்றப் பெறவில்லை. இருசீரடி குறளடி எனச் சீரெண்ணிக்கை கொண்டு அடி அளவிடப் படுவதாயிற்று. ஆகலின் குறளடி அல்லது இருசீரடி கொண்டு பாடப்பட்ட நூல்வகை குறுந்தொகை எனப்பட்டதாம். அறம்செய விரும்பு ஆறுவது சினம் என்பன போல இயல்வனவும் குறளடி வஞ்சிப்பா நடையினவும், குறுந்தொகை யாவதாம். இனிச் சங்கத்தார் குறுந்தொகை என்னும் தொகை நூலோ, நெடுந்தொகை என்னும் அகநானூற்றடி யளவை நோக்கக் குறுந்தொகை ஆயிற்றாம். ஐங்குறுநூறு என்பதும் அத்தகையதே. குறும்பு: மலையும் காடும் வறண்டு பாலை நிலையை அடையும் போது வாழ்வியல் தேவையாம் ஊன் உடைத் தட்டுப்பாடு ஏற்படும். விளைவற்ற நிலம், நீரற்ற குளம் குட்டை, பட்ட மரம் என்னும் நிலையில் வாழ்வார் வழிப்பறி செய்து வாழ்தலுக்கு ஆட்படுகின்றனர். குறும்பு என்பது வளமற்ற பாலை - பாறை - நிலம். அந்நிலத்து வாழ்வார் குறும்பர். அவர் செயல் குறும்பு எனப்பட்டது. பின்னர்ப் பொதுநிலையில் சிறுதனமான - சிறுமையான - குற்றங்கள் என்பவை எல்லாம் குறித்தது. பொதுமக்கள் வழக்கில் குறும்பு ,குசும்பு என ஆயதுடன், கேளி(லி), கிண்டல், நகையாண்டி (நையாண்டி) செய்தல் என்பவை எல்லாம் குறிப்பனவாயின. குறும்பை: குட்டையான ஓர் ஆட்டு வகை குறும்பை என வழங்கப்படுதல் பொது வழக்கு. ஆனால் உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆட்டுக் குட்டியைக் குறும்பை என வழங்கு கின்றனர். குறுமை, சிறுமைப் பொருள் முன்னொட்டு; குட்டி குறுமான்; குறுநொய். குறுவை: குறு > குறுவை. நெல்வகையுள் ஒன்று; குறுங்காலப் பயிர் ஆதலால் குறுவை எனப்பட்டது. நீர்வளம் இல்லாத இடத்தில் பெரிதும் பயிரிடப்படுவது. நீர்வளப் பகுதியிலும் நீர்த்தட்டு ஏற்படும் நிலையறிந்து பயிரிடப்படுவதும் அது. நெடுங்காலப் பயிர்க்குத் தடை வராவகையில் குறுகிய காலத்தில் பயன்கொள்ளும் வகையிலும் பயிரிடப்படுவது (வே.வ). குறை: குறு > குறை. இருக்க வேண்டும் அளவில் - முறையில் - இல்லாமை குறை ஆகும். பொருட்குறை, உறுப்புக்குறை, ஒழுங்குக்குறை, அளவுக்குறை, அறிவுக்குறை, செயற்குறை எனப்பல வகைக் குறைகள் உலகியற்கை. அவற்றுள் தண்டிக்கத்தக்க குறை என்பது குற்றமாம். குறை தன்னைச் சார்ந்தமைவது. குற்றம் பிறர்க்குத் தீமை ஆக்குவது. ஆதலால் குற்றத் தண்டம் (Criminal) குற்ற வழக்காக முறைமன்றத் தீர்ப்புக்கு உரியதாகின்றது. குறையாடல்: குறை = தலையற்ற - தலைவெட்டுண்டு குறைந்த - உடல். குறைத்தலை மிறைத்துக் கூத்துநின் றாடின - கம். பால. 472 தலையற்ற உடல் - குறை எனப்பட்டது. முண்டம் என்பது அது. குற்றம்: குறு > குற்று > குற்றம். குறுதல் = குற்றுதல். பவள உலக்கை கையால் பற்றித் தவள முத்தம் குறுவாள் செங்கண் - சிலப். 7:20 உலக்கையால் இடித்தல் குற்றுதல்; அது போல் சொல்லால் செயலால் பிறரைக் குற்றுவது குற்றமாம். தனக்கு மனச்சான்று என்று ஒன்று இல்லாதவன் பிறரைக் குற்றுதல் குற்றம். தன்மனச்சான்று உடையானைத் தன்மனச்சான்றே குற்றும்; அதுவே கொல்லவும் செய்யும். வழக்குவகை இரண்டு: ஒன்று குற்ற வழக்கு (Criminal) மற்றொன்று உரிமை வழக்கு (Civil). தன்குற்றம் உணர்வான், பிறர்க்குக் குற்றம் செய்ய எண்ணான். தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு - திருக். 436 இறையாவான் ஆளும் தலைவன். ஆளும் தலைவன் அப்படி இருந்தால்தான் அவன் கீழ்வாழும் மாந்தரும் அப்படி இருப்பர். குற்றம் கடிதல் ஓரதிகாரப் பெயர் (திருக்.) அதிகாரிக்கும் அதிகாரி யாம் அதிகாரம் அது. குற்ற வகை அரில் = பொருள்கள் ஒழுங்கின்றி மடங்கிக்கிடக்கும் குற்றம். அழுக்கு = உடம்பிலும் உடையிலும் படியும் தீநாற்ற மாசு. ஆசு = சக்கையும் மக்கும் வைத்து ஒட்டியது போன்ற குற்றம். இழுக்கு = ஒழுக்கக் கேடு. ஏதம் = உறுப்பறை, உயிர்க்கேடு. கசடு = மண்டி போன்ற குற்றம். கரிசு = பாவம் (Sin). கரில் = கொடுமை. களங்கம் = கருத்து ஒளிப்பு. கறை = வாழை முதலியவற்றின் சாற்றால் உண்டாகும் சாயம். குற்றம் = சட்டத்திற்கு மாறான செயல் Fault, Guilt. குறை = தேவை அல்லது ஊனம். தப்பு (தப்பிதம்)= சரியில்லாதது (Wrong Mess). தவறு = ஒரு கடமையைச் செய்யாக் குற்றம் (Failure). தீங்கு = இன்னல் (Harm). தீமை = நன்மை யில்லாதது (Evil). துகள் = புழுதி போன்ற குற்றம். பழுது = பழைமையால் வந்த கெடுதல். பிழை = ஒன்றிற்கு இன்னொன்றைச்சொல்லும் அல்லது கொள்ளுகுற்றம் (Mistake). புகர் = புள்ளி போன்ற குற்றம். போக்கு = சேதம் அல்லது கழிவு. மயல் = மயக்கத்திற் கிடமான குற்றம். மறு = மேனியில் உள்ள கரும்புள்ளி (Mole) போன்ற குற்றம். மாசு = பொருளின்மேல் படியும் சிறு தூசி. மை = கருமை. வழு = இலக்கண நெறியினின்று விலகும் குற்றம் (Error) வழுவாய் = பாவம். வடு = தழும்பு போன்ற குற்றம். வசை = பழிப்பாகிய குற்றம்.(சொல். ஆ. 45) குற்றம் எனப் பொருள்தரும் சொற்கள்: அரி, அரிப்பு, அரில், ஆசு, இழிவு, ஏசு, ஏதம், கசடு, கடவை, கரில், கழிப்பு, களங்கம், களை, கறை, காசு, குறை, கொழிப்பு, கோது, சழக்கு, செயிர், தட்டு, தப்பு, தவறு, தீங்கு, தீது, துகள், தோம், நவை, நறை, பழி, பழுது, பிழை, புகர், புரை, பூதி, போக்கு, மறு, மாசு, மிறை, மை, வசை, வடு, விண்டு, விடல் (வெ.வி.பே.). குற்றாலம்: நீர்ப்பொருள் தரும் ஆலம் என்னும் சொல்லுக்குக் குறு என்பது அடையாய்க் குற்றாலமாகியது. நெல்லை மாவட்டத்துக் குற்றாலமும், தஞ்சை மாவட்டத்துக் குற்றாலமும் நாடறிந்தவை. இவற்றுள் முன்னது தன் செஞ்சொற் செவ்வி மாறாமல் குற்றாலமாகவே திகழப் பின்னது குத்தாலமாகியது. அன்றியும் குற்றாலம் என்பது பிழைவழக்கு என்றும் குத்தாலம் என்பதே செவ்விய வழக்கு என்றும் ஆராய்ச்சி யாளரும் கூறுவாராயினர். குறுதல் என்பது குற்றுதல். குறுதல் அமைந்த நீர்ப் பெருக்குடைய இடம் குற்றாலம் என்க. குற்றுதலாவது இடித்தல், மோதுதல், சாடுதல், பொங்குதல், வீங்குதல், தாவுதல், சவட்டுதல் முதலிய பொருள்களைத் தரும். நீர் கரையில் மோதுதலால் அதனை இடிகரை என்பர். ஆதலால், நீரின் தன்மை குறுதல் என்பது தெளிக. குற்றாலத்திற்கு வந்த ஆளுடைய பிள்ளையார், குற்றால நாதர்க்கும், அத்திருக்கோயில் மரமான குறும்பலாவுக்கும் தனித் தனிப் பதிகம் பாடினார். குற்றாலம் என்பதைச் சொற்பொருள் விளங்கும் வகையில், போதும் பொன்னும் உந்தி அருவி புடைசூழக் கூதன் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம் என்றார். இதனையும் பொதுமக்களும் புலமை மக்களும் குத்தாலம் ஆக்கிவிடா வண்ணம், நல்ல வேளையாகக் கல்லிலும் பொறித்துள்ளனர். வாழ்க குற்றாலம். குற்றி: குறு > குற்று > குற்றி. நிலத்தைக் குற்றி (இடித்துத்) தோண்டி ஊன்றப்பட்ட கல், மரம் முதலியவை குற்றி எனப்படும். ஊன்றப்பட்ட மரம் அல்லது தூண் தொலைவில் இருந்து பார்ப்பவர்க்கு ஆள்போல் தோன்றலால் ‘குற்றியோ மகனோ? என ஐயம் விளக்க உவமையாக்கினர் இலக்கண உரைகாரர். குற்றிக்கல், குத்திக்கல், குத்துக்கல் என வழங்கலாயிற்று. நடுதறி என்பதும் அது. * குத்துவிளக்கு நடுதறி காண்க. குற்றில்: குறுமை + இல் = குற்றில். குறியது, குறுமை; சிறியது. குடியிருப்பளவு இன்றிச் சிறு தொழிற் களமாய் அமைக்கப் பட்டது குற்றில். கொற்றுறைக் குற்றில - புறம். 95 கொல் + துறை = கொற்றுறை. கொல்லுத்துறை என்பது அது. அவர் கருங்கைக் கொல்லர் என்பார் (புறம். 21). கருமையாவது வலிமை. குற்றுயிரும் குலையுயிரும்: குற்றுயிர்= மூச்சு உள்ளே போகிறதோ வெளியே வருகிறதோ என்பது தெரியாமல் அரைகுறை உயிராகக் கிடக்கும் நிலை. குலையுயிர்= நெஞ்சாங்குலையில் மட்டும் உயிர்த் துடிப்பு இருக்கும் நிலை. குறுமை = சிறுமை; வெளிப்பட அறிய முடியாமல் மெல்லெனச் செல்லும் மூச்சு நிலையை இவண் குறித்தது. குலை என்பது நெஞ்சாங் குலையாம் நுரையீரலைக் குறித்தது. அங்கே ஒடுங்கிய பின்னரே உயிர் பிரிந்தது என்று கொள்ளப்படுகின்றதாம். குலையை ஈரற்குலை என்பதும் வழக்கு. குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார் என்பது நடைமுறைச் செய்தி. குனித்தல்: குனித்தல் வளைதல் பொருளது. குனிதல் வழியாக அமைந்தது கூன். கூனி என்பதொரு பட்டப் பெயர். நீர்வாழி ஒன்றும் கூனி எனப்படும். கல்குளம் வட்டாரத்தில் குனித்தல் என்பது நடமிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. குனித்த புருவமும் என்பது அப்பரடிகள் தேவாரம். குன்றம்: குன்று > குன்றம். உயரமும் வளமும் குன்றிய கரடு, பாறை, பொற்றை ஆயவற்றினும் உயரமானதாய், மலைவளம் உயரம் என்பவற்றில் சிறுத்ததாய் உள்ள சிறுமலை குன்றம் ஆகும். குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே - புறம். 110 திருப்பரங்குன்றம்; குன்றுதோறாடல். குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் குன்று, குன்றி, குன்றுதல் என்பவற்றை ஒருங்கே விளக்கும் குறள் (965) இது. குன்றம் மக்கள் வழக்கில் பலவகைச் சிதைவுகளை அடைந்தன. எ-டு: நெற்குன்றம்(நெற்குணம்) குன்றக்குடி(குன்னக்குடி) குன்றூர்(குன்னூர்) குன்றம்(குன்னம்) குன்றூர்(குன்னியூர்) குன்றி: பக்கமெல்லாம் சிவப்பும் முகப்பில் கறுப்பும் உடைய குன்றிமணியைத் தரும் குறுந்தூறு அல்லது முட்செடி குன்றி ஆகும். குன்றிமணி தங்க எடைக்கு நிறுவை அலகு ஆயிற்று. கூடா ஒழுக்கம் கொண்ட துறவர் உடையும் உள்ளமும் காட்டும் உவமையாக வள்ளுவம் கொண்டது. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கில் கரியார் உடைத்து - திருக். 277 குன்று: குறு > குன்று. சிறு அல்லது குறு மலை குன்று ஆகும். குன்றம் எனின் குன்றினும் சற்றே பெரியது. அம் பெருமை ஒட்டு. x.neh.: கூடு > கூடம். மன்று > மன்றம். குன்று மலை காடு நாடு - புறம். 17 * குன்றி காண்க. குன்னி: குன்னி என்பது சிறியது என்னும் பொருளது. குன்னியும் நன்னியும் என்பது இணைச்சொல். மலையில் சிறியது குன்று. குன்னி என்பது பேனின் முட்டையாகிய ஈர் என்பதைக் குறித்தல் தூத்துக்குடி வட்டார வழக்காகும். ஈர் சிறிதாதல் வெளிப்படை. ஈரத்தில் உருவாவதும், ஈர்த்து ஈர்வலி (ஈர் கொல்லி)யால் எடுக்கப் படுவதும் ஈர் என்பதன் பொருளாம்.  கூ வரிசை சொற்கள் கூ கூ:1 கூ = கூவு. சேவல் கூவி எழுப்பும். வல்லாண்மையாய்க் கூவிக் கூறுதல் அறை கூவுதல். அறை = அடித்தல். பறையறைதல் போல் கூறுதல். கூ:2 கூ = கூச்சல். பலர் பலவகையாகவும், பலப்பல வகையாகவும் ஒலித்தல். கூச்சல் குழப்பம் என்பது இணைச்சொல். கூப்பாடு = ஏற்பட்ட இழப்பை இரைந்து ஒலித்துக் கூறி அழைத்தல். கூப்பீடு = கூப்பிடுதல், அழைத்தல். கூத்து = குரலெழுப்பி ஆடிப்பாடல், காட்சி காட்டல். பாவைக்கூத்து; கழைக்கூத்து; கூத்தாட்டு. கூகம்: கூகம் = மறைவு. கூகை என்பதொரு பறவை. அப்பறவை பகலில் வெளிப்படுவதில்லை. இரவுப் பொழுதிலேயே வெளியே வரும்; இரை தேடித் தின்னும். ஆதலால், கூகை பகலில் மறைந்தே இருப்பதை அறிந்தவர்கள் மறைத்து வைக்கும் அல்லது மறைவான செய்தியைக் கூகம் என்றனர். கூகை போல் மறைந்து கிடக்கும் செய்தி என்பது பொருள். சிலர் தங்கள் மனக்கருத்தை வெளியிடவே மாட்டார்கள். அத்தகையவரைக் கூகமானவர் என்பர். நான் சொல்வது கூகமாக இருக்கட்டும் என்று எச்சரிப்பதும் உண்டு. கூகமாக இருந்து ஊரைக் கெடுத்துவிட்டான் என்பது ஒரு சிலர்க்கு ஊரவர் கொடை. கூகை = மறைவு. கூகம் மறைவாகியது. கூகூ: கூகூ = ஒலிக்குறிப்பு. கூகூ எனக் கூவும் பறவை கூகை. கூகையின் குரல்போல் ஒலித்தல் கூக்குரல்; கூப்பாடு. கூசுதல்: கூசுதல்:1 நாணுதல், ஒதுங்குதல். தாழ்வு மனப்பான்மையாலும் குற்றமென ஒன்றை உணர்ந்தமையாலும் ஏற்படும் உணர்வு. கூசுதல்:2 புளிப்புமிகை, ஒளிமிகை ஆயவற்றால் பல், கண் ஆயவை தம் நிலை விதிர்ப்பு ஆதல். கூச்சம் என்பதும் இது. கூச்சம்: கூர்ச்சம் > கூச்சம். கூர்தல் = மிகுதல், உள்ளது சிறத்தல். ஒருவர்தம் சிறப்பி யலை ஒருவர் கூறும் போது உண்டாகும் நாணுதல் கூச்சமாகும். தம்புகழ் கேட்டார் போல் தலைநாணி இலைகூம்ப - கலித். 119 அன்புகூர்ந்து, அருள்கூர்ந்து, கூர்ந்த கேள்வி என்பவை மிகுதிப் பொருள் தருதல் அறிக. கூச்சலும் கும்மாளமும்: கூச்சல் = துன்புறுவார் ஓலம். கும்மாளம் = துன்புறுத்துவார் கொண்டாட்டம். இதனைக் கூச்சல் கும்மரிச்சல் என்றும் கூறுவதுண்டு. அதற்கும் இதே பொருளாம். இக்கூச்சல் அவலத்தில் இருந்து உண்டாவது. கும்மாளம் அல்லது கும்மரிச்சல் என்பது எக்காளத்தில் இருந்து எழும்புவது. கும்முதல், அடித்தல் பொருள் தரும். அடித்து ஆரவாரித்தலால் கும்மாளம் ஆயிற்றாம். இஃது, எருதுக்கு இரணவலி, காக்கைக்குக் கொண்டாட்டம் என்ற பழமொழிதான். கூச்சலும் குழப்பமும்: கூச்சல் = துயருக்கு ஆட்பட்டோர் போடும் ஓலம். குழப்பம் = துயருற்றோர் ஓலம் கேட்டு வந்தவர் போடும் இரைச்சல். கூ (கூவுதல்); கூகூ (அச்சக் குறிப்பு); கூப்பாடு இவற்றையும் கூக்குரல் என்பதையும் கருதுக. குழப்புதல் குழப்பமாம். இது அது என்று கண்டுபிடிக்க முடியாமல் எதுவும் புரியாமல் எதுவும் செய்யமுடியாமல் இருக்கும் நிலைமையே குழப்பமாம். நேரிடைப் பகையினும் குழப்புவாரால் ஏற்படும் கேடே பெருங்கேடாம். அங்கே என்ன ஒரே கூச்சலும் குழப்பமும் என வினாவுதல் நாடறிந்த நிகழ்ச்சி. கூச்சுக் கூச்சு: நாயை அழைக்கும் (கூப்பிடும்) குறிப்பொலி கூச்சுக் கூச்சு என்பதாம். அதனை உசுக்காட்டுதல் என்றும் கூறுவர். ஒன்றைப் பற்றிப் பிடிக்குமாறு குரல் கொடுத்தலே உசுக்காட்டுதலாம். உசுப்புதல் என்பது உறங்குபவரை எழுப்புதல் என்னும் வழக்குள்ளமை அறியத் தக்கது. கூடக் குறைய: கூட = சற்றே மிகுதியாக. குறைய = சற்றே குறைதலாக. ஏறக்குறைய, ஏறத்தாழ, ஏற இறங்க என்பவை போன்ற இணைச்சொல் கூடக்குறைய என்பதாம். கிட்டத்தட்ட என்பதும் இவ்வகையினதே. தோராயமாக என்பாரும் உளர். கூட்டிக் குறைக்க நெடும் பகை என்னும் பழமொழி தாராளமாக இருந்து பின்னர் அத் தாராளம் குறையுமாயின் ஏற்படும் விளைவைச் சுட்டுவதாம். கூட மாடப் (போதல்): கூட = ஆள் துணையாகப் போதல். மாட = பேச்சுத் துணையாகப் போதல். துணைகளில் வழித்துணையாக வருவாருள் வலுத்துணை யும் உண்டு; வாய்த்துணையும் உண்டு. முன்னது வலுத்துணை; பின்னது வாய்த்துணை. கூட மாட வேலை செய்தல் என்பதில் கூட என்பது கூடி யிருந்து வேலை செய்தலையும், மாட என்பது பேச்சுத் துணையாக இருந்து வேலை செய்தலையும் குறிக்கும். மாற்றம் = சொல்; மாட்டாடுதல் பேசுதல் என்னும் பொருள் தரும் தெலுங்குச் சொல். ஒருவர் சொல்வதற்கு மறுமொழியாகச் சொல்வது மாற்றமாம். மறுமாற்றம் என்பதும் இது. கூடம்: கூடு + அம் = கூடம். கூடு சிறியது; கூடம் பெரியது. பறவைகள் கட்டும் கூடு இயற்கை தழுவியது. உயிர்ப்பறவை தங்கும் உடலாம் கூடும் இயற்கைக் கொடை. ஓர் உயிர்க்காக ஓர் உயிர் பரிவு காட்டி உதவுதல் கூடுவிட்டுக் கூடு பாய்தல். இரண்டு கூடுகள் (உடல்கள்) கூடுதல், கூடல்; பிரிந்து சென்றவர் வருவாரா என மகளிர் நிலத்தில் கண்ணை மூடிக் கொண்டு கைவிரலால் வட்டமிட்டுப் பார்த்தல் கூடல் இழைத்தல். மாந்தர் செயற்கை வகையில் செய்த கூடுகள் பலவாம். பறவைகள் விலங்குகள் ஆயவற்றைப் பற்றிப் பிடித்து அடைக்கக் கூடு செய்தான். கூடு கூண்டு எனவும் வழங்கியது. நெல் முதலாம் தவசம் போடும் இடமும் கூடு எனப்பட்டது. மாட்டின் உணவாம் வைக்கோல் முதலியனவற்றின் படைப்பும் கூடு எனப்பட்டது. மாந்தன் தன் குடியிருப்புக்குப் பெரிதாக அமைத்துக் கொண்டதைக் கூடம் என்றான். மாட கூடமும் ஆயது! இதுகால் புறாக் கூடுகள் போல நகரங்களில் அடுக்கு மாடிகள் அமைந் துள்ளன! பக்கம் வளர்வதை விட்டு மேலே விண்ணேறு வகையில் நூறு இருநூறு மாடிகள் ஓங்குகின்றன. ஏராரும் மாட கூட மதுரை என்றார் அருணகிரியார் (திருப்.). மாடக் கோயில்கள் போலக் கூடக் கோயில்கள் பல! ஊர்ப்பெயரிலும் கூடக்கோயில் உண்டு! பலகோயில்கள் அமைந்த ஒரு கோயில் அது. கூடம் என்பது சதரம்; சதரம் என்பது இடுப்புக்கு மேல் தோள்பட்டை வரையுள்ள உடற்பகுதியைக் குறிப்பதாம். அவ்வடிவை அறிக. கூடி யுறையும் குடியிருப்பு கூடல்பட்டி; கூடங்குளம். பல குடியிருப்புகள் கூடிய ஊர் கூடலூர். ஈராறுகள், மூவாறுகள் கூடுமிடங்கள் கூடல், முக்கூடல். மலைகள் அடுத்தடுத்து அமைந்த ஒருமலை கூடல்மலை. ஆறு கூடுமிடத்து அமைந்த ஊர் கூடலை ஆற்றூர். ஒருவரோடு ஒருவர் உதவியாகச் செல்லுதல் கூடமாடச் செல்லுதல். கூடுபோல் அமைந்த தட்டு கூடை; தட்டுக் கூடை என்பதும் அது. கூடைதட்டி மலை என்பதொரு மலை. திருப்பரங்குன்றம் சார்ந்தது. கூடுவது கூட்டு; பலபொருள் கூட்டியதொரு கறி, கூட்டுக்கறி; கூடியிருக்கும் நட்புடையவர் கூட்டாளி; கூடமாட்டாத மாறுபட்டவர் கூடார்; மக்கள் கூடுவது கூட்டம்; மரங்களின் ஒரு வகை கூட்டமாக இருப்பின் கூட்டப்புளி கூட்டப்பனை என்றாம். பல இசைக்கருவிகள் கூடியிசைத்தல் கூட்டியம்; பல்லியம் என்பதும் அது. பலர் கூடிச்செய்யும் வழிபாடு கூட்டு வழிபாடு; பலர் கூடிய தொழில் வணிக அமைப்பு கூட்டுறவு. பலர் கூடி உண்பது கூட்டாஞ்சோறு; ஈரேரி கூடியமைந்தது கூட்டேரி; ஊரவர் கூடுவது ஊர்க்கூட்டம். பல கருவிகள் கூடிக்கிடக்கும் தொழிலகம், தொழிற்கூடம். தொழிற்கூடக் கருவிகளுள் சிறப்புடையது கூடம்; கூடிப் பயிலும் இடம் பள்ளிக்கூடம். கூடு அமைந்த குடியிருப்பு கூடாரம்; கூடாரம் போல் அமைந்த வண்டி கூடார வண்டி; பழங்காலத்தில் கூடகாரம் எனப்பட்டது; பின்னே கூடாரம் ஆயிற்று. கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்பது பாண்டியன் ஒருவன் பெயர் (புறம். 51). கூடல்: கூடு + அல் = கூடல். கூடு = உடல்; கூடும் கூடும் கூடல், கூடலாம். ஒன்றோடு ஒன்றும் பலவும் கூடுதல் கூடலாம். மக்கள் பலர் கூடி ஆய்ந்த இடம் கூடல் எனப்பட்டது. கூடல் > கூட்டல், கூட்டம் என்பவை ஆயின. இருபால் இணைதல் குறிஞ்சித் திணையாம் கூடல் என உரிப்பொருள் ஆயிற்று. ஈராறுகள் மூவாறுகள் கூடுதல் கூடல், கூடுதுறை, முக்கூடல் எனப்பெற்றன. கூடல், கணக்கு வகையில் கூட்டல் கணக்காயிற்று. கூட்டி விடுதல், கூட்டிக் கொடுத்தல் இடக்கரடக்கு. கூடல் மாலை: கூடல், கூட்டம், புணர்ச்சி கலவி இன்னவெலாம் ஒரு பொருள. மகளொருத்திதானே விரும்பி வந்து தலைவனைக் கூடுதல் கூடல் மாலைப் பெயரமைந்த நூற்பொருளாம். மான்வலிய மேவரல் கூடல் மாலையாம் - பிரப. திர. மான் = மான்போலும் மங்கை. கூடற் சதுக்கம்: நான்கு திருவிடங்கள் ஒரே பாடலில் வருமாறு ஞானசம்பந்தர் பாடிய ஒரு பதிகம், கூடற்சதுக்கம் எனப் படுகின்றது. சதுக்கம் = நான்கு; கூடல் = இணைந்திருத்தல். திருக்கயிலாயம், திருவானைக்கா, திருமயேந்திரம், திருவாரூர் என்னும் நான்கு இடங்களிலும் கோயில் கொண்ட இறைவரைப் பத்துப் பாடல்களில் பாடியுள்ளார். மண்ணது வுண்டரி மலரோன் காணா வெண்ணாவல் விரும்பும யேந்திரரும் கண்ணது வோங்கிய கயிலை யாரும் அண்ணல் ஆரூ ராதியானைக் காவே கூடற் சதுக்க முதற்பாட்டு இது. இனிக் கூட சதுர்த்தம் என்னும் மிறைப்பா (சித்திரக் கவி) இதனின் வேறுபட்டதாம். அஃது ஒரு பாடலின் நான்காம் அடியில் உள்ள எழுத்துகள், மற்றை மூன்று அடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு இயற்றப்படுவதாம். இதில் கூடம் என்பது மறைவு என்னும் பொருட்டது. கூடாரம்: வளைவு வடிவும் கூரையும் அமைந்தது கூடாரம். அவ் வமைப்புடைய வண்டி, கூடார வண்டி. வளைவுடையதாய் முன்னும் பின்னும் மூடுடையதாய் அமைந்த வண்டி கூண்டு வண்டி. சங்க நாளில் இது கூடகாரம் என வழங்கப்பட்டது. இதனை, கூடகாரத்துத் துஞ்சிய பாண்டியன் மாறன் வழுதி எனும் தொடர் மூலம் அறியலாம். (புறம். 51, 52) கூடு = பறவை கட்டும் கூடு; நெல் சேமித்து வைக்கும் கூடு; உடலுக்கும் கூடு என்னும் பெயருண்டு. கூடு விட்டு இங்கு ஆவிதான் போனபின் என்பது அறிக. கூடார வண்டிகள் உண்டு. கூண்டு வண்டி என்பதும் அது. வளைவுகளும் மாடங்களும் கூடங்களும் அமைந்தது ஆதலால் கூடகாரம் என்னப்பட்டது. கூடு + அகம் + ஆரம் என்னும் முச்சொற் புணர்ப்பினது அது. கூடாரம் போடல்: கூடாரம் போடல் = தங்கிவிடுதல். கூடாரம் அடித்தல் என்பதும் இதுவே. ஆடுமாடுகளை, மேய்ச்சல் புலம் தேடி ஓட்டி வருபவர் ஆங்காங்கு கூடாரம் அடித்தல் உண்டு. ஊசி பாசி விற்பவர்கள், கூத்து நிகழ்த்துபவர், சர்க்கசு எனப்படும் வளைய ஆட்டம் நிகழ்த்துநர், படை வீரர், பாடி தங்காளர் ஆகியோர் கூடாரம் அடித்துத் தங்குதல் இதுகால் பெருகிவரும் காட்சியாம். புறம்போக்கு நிலத்தில் திடுமெனக் கூடாரங்கள் தோன்றிப் பின்னர் வீடாதலும் புற்றீசலென நகர்ப்புறங்களில் காண்பதே. கூடாரம் அடித்தவர்கள் ஆங்கே தங்குதல் உண்மையால், பலநாள் தங்கும் விருந்தாளரைக் கூடாரம் போட்டுவிட்டதாகக் கூறுவது வழக்கமாயிற்று. என்ன, உங்கள் வீட்டில் கூடாரம் போட்டு விட்டார்களா? என விருந்தாளிகள் தங்கிவிடக் கண்ட பக்கத்து வீட்டார் கேட்பது வழக்கம். கூடு: ஓர் ஊர்ப் பெயர்ப் பின் ஒட்டு. கிளிகள் கூடிச் சேர்ந்து பெருகத் தங்கிய வளமான ஊர் கிளிக்கூடு ஆகும். கொள்ளிட தென்கரை ஊர்களுள் ஒன்று. கூடும் குச்சும்: கூடு = குடில். குச்சு = குடிசை. ஆட்டுக் குட்டிகளை அடைத்து வைக்கும் கூடு குடில் ஆகும். அதனைக் குட்டாப்பு என்பதும் உண்டு. காடு நாடு என்று தேடி ஆடு மேய்த்துத் திரிவார் மழைக்கு ஒதுங்குமிடம் குடிலாகவே இருக்கும். குடிலினும் நிலையானது குச்சு எனப்படும் குடிசை. இவற்றுக்கும் வகையில்லாதவர் தம்மை நொந்து, வீடு வாசல் வேண்டாம்; கூடும் குச்சுமாவது வேண்டாவா? என்று ஏங்குவர். கூடும் குடும்பமும்: கூடு = வீடு. குடும்பம் = மக்கள். கூடும் குடும்பமுமாக இருக்கிறார்கள் என்பர். மக்கள் பங்கு பிரித்து அயல்அயலே தனி வீட்டுக்குப் போகாமல் ஓரிடத்தில் அமைந்து வாழ்தலையும் ஒரு சமையலில் உண்பதையும் கூடும் குடும்பமும் என்றும், கூடும் குடித்தனமும் என்றும் கூறுவர். கூடும் குடித்தனமும் பற்றிக் கருதுவதற்கு நத்தை சான்றாம். கூண்டு வண்டி போலச் செல்லும் அதன் செலவும், இணைந்து சேருங்கால் ஒன்றாய்க் கோலி உருண்டை போல் உருண்டு திரளலும் கூடும் குடித்தனமும் என்பதற்குச் சீரிய ஒப்புமை. கூட்டக்குரல்: கூவுதல், கூவிளி, கூக்குரல், கூப்பாடு என்பனவெல்லாம் கூவுதல் குரலெடுத்தல் வழியாக வழங்கும் வழக்குச் சொற்கள். நாகர்கோயில் வட்டாரத்தில் கூக்குரல் பொருளில் கூட்டக் குரல் என்பது வழங்குகின்றது. கூக்குரல் கேட்ட அளவில் கூட்டம் கூடிவிடல் கண்டு ஏற்பட்ட வழக்குச் சொல் இது. கூட்டம்: கூடுதல் > கூட்டம். சேர்தல், செறிதல், இணைதல், இயைதல் வகையால் பலவாதல் கூட்டமாம். கூட்டுறவு, ஓர் அரிய இயக்கம். கூட்டல், கணக்குவகையுள் ஒன்று. கூட்டுதல் தெரு, வீடு பெருக்குதல்; கூட்டுமாறு பெருக்குமாறு. கூட்டாஞ்சோறு, பல பிள்ளைகள் கூடி உண்ணும் நிலவுச் சாப்பாடு. கூட்டப்புளி, புளிமரத்தோப்பு. ஓர் ஊர்ப்பெயர். கூட்டுக்கறி, பலவகைக் காய்களைக் கொண்டு ஆக்கியது. தலைவன் தலைவியர் சந்திப்பு, அறிஞர் ஆய்வுக்களம், பொதுக்கூட்டம், ஊர்க்கூட்டம், பறவைக் கூட்டம் எனக் கூடுவவெல்லாம் கூட்டமாம். கூட்டாஞ்சோறு: முழுநிலவுப் பொழுதில் அவரவர் வீட்டில் இருந்து சோறு குழம்பு தொடுகறி தண்ணீர் கொண்டு வந்து உடனாக இருந்து சிறுவர்கள் உண்பது கூட்டாஞ்சோறு எனப்படும். நிலாச்சோறு என்பதும் இது (ம.வ.). கூட்டான்: கூட்டான், கூட்டாளி என்பவை நட்புப் பொருளில் பொது வழக்காகும். தஞ்சை வட்டாரத்தில் சமையலறையைக் கூட்டான் என்கின்றனர். பலவகைப் பொருள்களையும் கூட்டி உணவாக்கும் இடமாதலால் அப்பெயர்க்கு உரியது ஆயிற்று. கூட்டிக் குறைக்க: கூட்டி = மிகுதியாகத் தந்து. குறைக்க = குறைவாகத் தர. மிகுதியாகத் தந்த ஒருவர் பின்னே குறைத்துத் தரும் நிலைக்கு வந்தால் கூட்டிக் குறைக்கக் கொடும் பகையாம். இப்படிப் பழமொழியும் உண்டு. என்றும் தராமல் இருந்தால் புதிது இல்லையே! கிடைக்கும் என எதிர்பார்த்த இடத்தில் கிடையாமைதானே ஏமாற்றம்! அதுவே பகைக்குக் காரணமாம். நீட்டிக் குறைக்க நெடும்பகை என்பதும் உண்டு. * நீட்டிக் குறைக்க நெடும்பகை காண்க. கூட்டிக் கொடுத்தல்: கூட்டிக் கொடுத்தல் = இணைசேர்த்து விடல். களத்தில் பொலி போடும் போதும், தவசம் அளக்கும் போதும் அள்ளுபவர்க்கு வாய்ப்பாகத் தவசத்தைக் கூட்டிக் கொடுப்பது நடைமுறை. கணவன், மனைவியர் மனத்தாங்கல் கொண்டு பிரிந்துவிட்டால் அவர்கள் வாழ்வில் அக்கறையுடைய வர்கள் அவர்களைக் கூட்டி வைத்தல் உண்டு. ஆனால் இக் கூட்டிக் கொடுத்தல் அவற்றில் வேறுபட்டதும் இழிவுடையது மாம். ஒருவன் பாலுணர்வுக்கு இரையாக ஒருத்தியைத் தம் பயன் கருதிக் கூட்டிக் கொடுத்து இன்பப்படுத்துவது கூட்டிக் கொடுத்தலாகப் பழிக்கப்படும். இத்தொழிலால் பொருள் ஈட்டி அப்பொருளால் பழியை மறைக்கத் தேர்ந்தாரும் உளர். கூட்டிக் கொண்டு போதல்: கூட்டிக் கொண்டு போதல் = உடன்போக்கு. குழந்தைகளைக் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போதல் வழக்கம். பார்வை இல்லாதவரையும் அப்படிக் கூட்டிப் போதல் உண்டு. கண்டறிந்தவர்கள் கண்டறியாதவர்க்கு வழி காட்டியாக இருந்து சுற்றுலாவாகக் கூட்டிக் கொண்டு போதலும் உண்டு. இவற்றை எல்லாம் கூட்டிக் கொண்டு போதல் என்னும் அளவால் கருதுவது இல்லை. ஒரு காதலன் தன் காதலியைப் பெற்றவரும் மற்றவரும் அறியா வகையில் வேறிடத்திற்கு அழைத்துக் கொண்டு போதலே கூட்டிக் கொண்டு போதலாகச் சொல்லப்படுகிறது. இதனைப் பழங்கால இலக்கண இலக்கியங்கள் உடன்போக்கு என்று கூறும். கூட்டுக்கறி: கூடு > கூட்டு + கறி = கூட்டுக்கறி. பலவகைக் காய்களை ஒன்றாகப் போட்டு அவித்துத் தொடுகறியாகப் பயன்படுத்துவது கூட்டுக்கறி எனப்படும் (ம.வ.). கூட்டுக்காரி: தலைவி, தலைவன் சந்திப்பு கூட்டம் எனப்படுதல் இலக்கிய இலக்கண வழக்கு. அக்கூட்டத்துள் ஒருவகை, தோழியில் கூட்டம் என்பது. அவ்வழக்கத்தை நினைவில் கொள்ளுமாறு தோழியைக் கூட்டுக்காரி என்பது குமரி வட்டார வழக்காகும். கூட்டுக்கை: ஒருகையுடன் ஒருகையைக் கூட்டி அள்ளும் அளவு, கூட்டுக்கை அளவாகும். கூட்டுக்கை அளவில் அரிசி பருப்புக் கைமாற்றுப் பெறுதல் சிற்றூர் வழக்கு. * பூட்டுக்கை காண்க. கூட்டுதல்: கூட்டுதல் = திருமண முடித்தல். உனக்குக் கூட்டி வைத்தால்தான் வீட்டில் தங்குவாய் என்பது ஊர் சுற்றிக்கு வீட்டார் சொல்லும் வாய்ச்சொல். இங்கே கூட்டி வைத்தல் அல்லது கூட்டுதல் என்பது திருமண முடித் தலைக் குறிக்கும். முதலாவது மணமகன் மேடைக்கு வருவான். அதன்பின் பெண்ணை மணமேடைக்கு அழைத்துக் கொண்டு வந்து அவனுக்குப் பக்கத்தில் அமர்த்தித் திருமணம் நிகழ்த்துவது நடை முறை. அதனால், ஆண்மகனொடு பெண்மகளைக் கூட இருக்கச் செய்யும் நிகழ்ச்சி கூட்டுதல் எனப்பட்டதாம். இக்கூட்டுதல் முறைவழி; நிறைவழி. ஆனால் கூட்டிக் கொடுத்தல் என்பது முறைகேட்டு வழி; இழிவழி. கூதறை: குளிர்வாட்டல் கூதல் எனப்படும். கூர்தல் அறம் உள்ளது சிறத்தல் ஆகும். குளிர் மிகுந்தால் மூடிக்கிடந்து கிளர்ச்சியற்றும் செயலற்றும் இருப்பாரைக் கூறு கெட்ட கூதறை என்பது நெல்லை, முகவை வழக்கு. அறை = அற்றுப் போதல். கூத்தாட்டு: கூத்து + ஆட்டு = கூத்தாட்டு. குதித்து ஆடுதல், கூத்தாடல்; அது கூத்தாட்டு, கூத்தாட்டம் என்பதாயிற்று; கூத்து எனச் சுருங்கவும் நின்றது. நாடகக்கலை கூத்துக்கலை. முத்தமிழுள் மூன்றாவது கூத்து. இறையையே கூத்தப் பிரானாகக் கொண்டது தமிழுலகம். 108 கூத்துவகைகளைக் கண்டதுடன் சிற்பமாகவும் செதுக்கி வைத்த சீர்மையும் உண்டு. பாவைக் கூத்து, கழைக் கூத்து என்பவை மக்கள் வழக்கில் இன்றும் காணலாம். பதினொரு வகைக் கூத்து விளக்கம் சிலம்பில் காண்பது. கூத்தராற்றுப்படை என்பது மலைபடுகடாத்தின் ஒரு பெயர். கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று - திருக். 332 கூந்தல்: கூந்தல் = மகளிர் முடி. குடுமி = ஆடவர் முடி. கூந்தல் பனை என்பது சடைசடையாகப் பாளை தொங்கும் பனையாகும். நுங்குக் காயைச் சீவித் தள்ளும் சிதறு சிப்பியைக் கூந்தல் என்பது பனைத்தொழிலர் வழக்கு. சீவுதல் வழியாக ஏற்பட்ட பெயர் இது. தலை சீவுதல் போல! கூப்பாடு: அப்பா அம்மா எனக் கூப்பிட்டுக் கூப்பிட்டு அழுவது கூப்பாடு. கூ = கூவுதல். கூக்குரல் என்பது பலபேர் கூடிச் சேர்ந்து பல்வேறு வகையாகக் கூவி அழுவது. கூமாச்சி: கூம்பு வடிவாக உயர்ந்து கூராகத் தோன்றும் முகடுடைய மலையைக் கூமாச்சி என்பது சேற்றூர் வட்டார வழக்கு. ஆங்குள்ள உயரமான மலைக்குப் பெயர் கூமாச்சி என்பது. கூரக் காய்தல்: குமரி மாவட்டக் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் குளிர்காய்தல் என்னும் பொருளில் கூரக் காய்தல் என்னும் சொல் வழக்கு உள்ளது. காலங்கள் காரே, கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில் எனப் பகுக்கப்பட்டன. அவற்றுள் கூதிர் காலம் குளிர் நடுக்கக் காலமாகும். அக்கூதிர் என்பது தொகுத்துக் கூர் என்று நின்று குளிர் என்னும் பொருள் தந்தது. கூர் > கூரம். கூராப்பு: மேகம் திரண்டு கூடிக் கவிந்து நிற்றலைக் கூராப்பு என்பது முகவை, நெல்லை வழக்கு. கூர் ஆர்ப்பு கூராப்பு ஆயது. கூர்தல் என்பது மிகுதிப் பொருள் தரும் உரிச்சொல். ஆர்த்தல், கட்டுதல். எ-டு: மாரார்ப்பு (மாராப்பு). செறிந்து நிற்கும் மழைமுகிலைக் கூராப்பு என்பது இலக்கிய நயமுடையது. கூரை வேய்தலையும் எண்ணலாம். கூராப்பாக உள்ளது, மழைவரும் என்பது ம.வ. கூரை: கூர் + ஐ = கூரை. கூர்மையான முகடமைந்த குடியிருப்பு கூரை என்றும், கூரை வீடு என்றும் சொல்லப்பட்டது. காரை, கன்மா, தகடு, ஓடு என வளர்நிலையிலும் முகடுகள் பண்டைக் கூரை யமைப்பையே கொண்டமை தெளிவு. ஏனெனில் மழை பெய்தால் நீர் தங்கிவிடாமல் உடன் வழிந்தோடும் அமைப்பினது கூரையாகும். குரங்கென மரக் கிளையிலும், விலங்கெனக் குகையிலும் மாந்தர் வாழ்ந்த நிலைமையில் கூர்மையான முகடுபோட்டு வெயிலும் மழையும் காற்றும் தாக்காவண்ணம் காப்பரணமாகச் செய்யப் பட்ட குடியிருப்பு அமைப்பு தொல்பழநாளில் எவ்வளவு மேம்பட்டதாக எண்ணப்பட்டிருக்கும்! பவழக் கூர்வாய் என நாரையின் அலகு கூறப்பட்டமை அறிக. அவ்வமைப்பு உடையது கூரையாம். கூர்வேல், கூர்ங்கணை என்பவற்றின் கூர் > கூரை ஆயிற்றாம். ஆய்கரும்பின் கொடிக்கூரை - புறம். 22 குரம்பைக் கூரை - புறம். 332 கதிரோனை முகில் மறைத்து மழைபெய்யும் தோற்றம் காணும் பொதுமக்கள் வானம் கூராப்பாக இருக்கிறது என்பர். கூர்மை, குளுமையும், மறைப்பும், குவிதலும் ஆகிய பொருள் களைத் தரும் சொல். உள்ள தன்மை மேலும் சிறத்தல் கூர்மையாம். பரிணாமம் என்னும் தார்வினாரின் கொள்கையைக் கூர்தல் அறம்; உள்ளது சிறத்தல் என்பார் திரு.வி.க. கூரமைந்த கூரை குடி யிருப்பார்க்குச் செய்யும் நலங்கள் எண்ணத் தக்கவையாம். கூர்ப்பு: அன்புகூர்ந்து உதவுக; அருள்கூர்ந்து செய்க எனக் கூர்ந்து என்பது மக்கள் பொதுவழக்கிலும், புலமையாளர் வழக்கிலும் உள்ளன. கூர்ப்பு என்னும் உரிச்சொல் உள்ளது சிறத்தல் என்னும் பொருளில் வரும். கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் என்கிறது தொல்காப்பியம் (791). உள்ளது எதுவோ அது மேலும் அளவில் பெருகலும் சிறத்தலும் கூர்மை யாதலும் காட்டும் அருஞ்சொல் கூர்ப்பு ஆகும். இதனால் நன்னூலார், சால உறுதவ நனிகூர் கழிமிகல் என்றார் (456). ஏனெனில் மிகுதிப் பொருள் தரும் என்பதால். கூர்மை: கூர் > கூர்மை. கூர்மை = கூர்மையாம் தன்மை. கூர்தல் மிகுதல் பொருளது. இயல்பாக உள்ளது ஒன்று மேலும் சிறத்தல் கூர்ப்பு அல்லது கூர்தலாம். கூர்தலை உள்ளது சிறத்தல் என்பர். கருவிகளைக் கூர்மையாகச் சாணை பிடிப்பர்; தீட்டுவர்; அனலில் காயவிட்டு அடித்துக் கூர்மைப்படுத்துவர். அப்பருமைப் பொருள் நுண் பொருளாய் அறிவுக் கூர்மையையும் குறிப்பதாயிற்று. சினம் மிகுதலைக் கூர்த்துநாய் கௌவிக் கொளல் என்னும் நாலடி (70). கூரம்பாயினும் வீரியம் பேசேல் - வெற்றி. கூலம்: குலம் > கூலம். குலம் = தொகுதி, கற்றை, கூட்டம். குல் - குள் - என்பவை வட்ட வடிவ அடிச்சொற்கள். தவசமணிகள் அனைத்தும் பயறு வகைகள் அனைத்தும் வட்ட வடிவமாகவே அமைந்தமையால் அவை குல் > கூல் > கூலம் எனப்பட்டன. நெல், சோளம், கம்பு, தினை, வரகு, குதிரைவாலி, சாமை, காடைக் கண்ணி, எள்ளு, கொள்ளு, உழுந்து, அவரை, துவரை முதலியவை கதிர், குலை, கொத்து எனத் தொகுதி தொகுதியாக இருப்பன. ஆதலால் கூலம் எனப்பட்டன. பதினெண் வகை எனவும், ஒன்பான் வகை எனவும் அவற்றை எண்ணுவர். தவசம் முதலியவை விற்கும் வணிக நிலையம் கூலக்கடைகள் எனப்பட்டன. கூலவாணிகம் செய்த சாத்தனார் மணிமேகலை இயற்றித் தமிழ்வளம் செய்ததோடு இளங்கோவடிகள் சிலப்பதிகாரச் செழுந்தமிழ்ச் செல்வம் வழங்கத் தூண்டலா கியவரும் ஆவர். கூலம் வழங்கி வேலை வாங்கியமையால் அது கூலி எனப்பட்டது என்பதை அறிக. கூலி: கூலம் = தவசம். வேலைக்குத் ஈடாகத் தந்த முன்மைக் காலப் பொருள் தவசமாகிய கூலம் அதனால் கூலி எனப்பட்டது. கூலமாகத் தந்தது கூலி. வேலைக்குப் பெயர், கூலி வேலை. அதனைச் செய்வார், கூலி வேலையாள். கூலியுள் நாட்கூலி, மாதக்கூலி, ஆண்டுக்கூலி என்பனவும் இருந்தன. ஆண்டுக் கூலியாள் ஒப்பந்தம் ஆவணி தொடங்கி ஆடியில் நிறைவு பெறுவது வழக்கம். எழுத்து வழியாக அதனை எழுதுவதும், ஆண்டு ஒப்பந்தம் செய்து உழவடைக்கு விட்டு எழுதுவதும் ஆவணியாம். ஆவணப் பதிவுக் காலம் அஃதாதலின் ஆவணி எனப்பட்டதாம். ஆவணம் > ஆவணி. கூழன்: குட்டையான பலாமரத்தைக் குறும்பலா என்பர். கூழைப் பலா என்றார் ஔவையார். இக்குறும் பலாவைக் குமரி மாவட்டத்தார் கூழன் என்பர். கூழையன் = குட்டையானவன்; கூழி என்பது இந்நாள் வழக்கு. கூழாங்கல்: கூழ் + ஆம் + கல் = கூழாங்கல். கல் கெட்டித் தன்மையது; அக்கெட்டித் தன்மை இல்லாத மாக்கல்களும் உண்டு. அவை எளிதில் பிதிர்ந்து மாவு போல் ஆகும் தன்மையின. அவற்றில் நீர்விட்டு அரைத்தால் கூழ்போல் ஆகிவிடும். ஆதலால், அக்கல் கூழாங்கல் எனப்பட்டது. நீரில் எளிதில் புரண்டு வழுவழுப்பாக அமைந்த கல்லும் கூழாங் கல்லாம். கூழ்முட்டை: முட்டையின் உள்ளீடாம் வெண்கரு மஞ்சள்கரு நீர் என்பவை அழன்று நிலைமாறிக் கூழாகி விடுவது கூழ் முட்டையாம். அம்முட்டையை உண்ணார்; அடைக்கும் (குஞ்சு பொரிக்க) ஆகாது. உடைத்தால் முடைநாற்றம் அடிக்கும். கூழாகிப் போன அம்முட்டை மக்கள் வழக்கில் கூமுட்டை யாகியுள்ளது. அறிவின்றிச் செயல்படுபவரைக் கூமுட்டை என்பது மக்கள் வசைமொழி. அம்முட்டையை வீசி ஒருவர் மேல் எறிதல் வெறுப்பின் அடையாளமாம். கூளம்: குறுந்தூறு தட்டை தாள் என்பவையும், கதிர் அறுவடை செய்த வைக்கோல், தவசப்பயிர் ஆயவையும் கூளம் எனப்படும். நெடிய தட்டை எனின் குறுகத் தரித்து மாட்டுக்குப் போடுவர். அக்குறுமையால் கூளம் எனப்பட்டது. மாட்டுக்குக் கூளம் போடு என்பது ம.வ. கூளி: கூளி:1 குள் > கூள் > கூளி = குட்டையான பேய்; குறும்பேய். கூளி மலிபடைக் கொற்றவை - பு.வெ. 10 கூளி:2 கூளிவண்டி = குட்டை வண்டி. கூளிச் சுடலையாண்டி (பெயர்). கூறாடாயம்: கூறு + ஆடு + ஆயம் = கூறாடாயம். கூறு கூறாகப் பிரிந்து நின்று எதிர் எதிர் விளையாடும் மகளிர் கூட்டம். (பெருங். 2:11:34) கூறியர்: கட்டியம் கூறுபவரைக் கூறியர் என்பது யாழ்ப்பாண வழக்கு. அரசவை, அறமன்றம் ஆயவற்றில் அரசர் வருவதையும் அறவர் வருவதையும் எடுத்துக் கூறி அவர்கள் வருகைக்கு அமைந்து வழியிட்டிருக்கச் செய்பவர் கட்டியங்காரர் எனப்படுவர். அவர் கூறுபவராக இருப்பதால் கூறியர் என வழங்கப்பட்டார். கூறீடு: கூறு + ஈடு = கூறீடு = கூறு செய்து தருதல் அல்லது பங்கிட்டுத் தருதல். கூறு = பங்கு; ஈடு = இடுதல். அரியலூர் பதிற்று வேலியில் நான்மா கூறீட்டில் அளந்து காற்செய் விற்றுக் குடுத்ததற்கு (தெ.க.தொ. 2:319) கூறு: கூறு:1 சொல்லுக என்னும் ஏவல். கூறு:2 ஒன்றன் பகுதி கூறு ஆகும். ஒன்றன்கூ றாடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை - கலித். 18 கூறு:3 கூறு செய்வது கூற்றம். கூற்றுடன்று மேல்வரினும் தாங்கி - திருக். 765 கூறு:4 கூறும் சொல், கூற்றுவகை; அகப்பொருள். தலைவன் கூற்று, தலைவி கூற்று எனக் கூற்றுவகையால் அமைந்தமை தொல்காப்பியம். பின்னை அகப்பொருள் கோவைகளுக்கு முன்னை வழிகாட்டி கூற்றுவகையே ஆகும். கூற்றுவகை நாடக அமைதி கொண்டவை. கூற்று, கூற்றுவன் போல் கொடுமை செய்தலும் உண்டு என்பதன் விளக்கம். கல்லா ஒருவர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம் - நான்மணி. 82 கூறை: கூறை = சீலை அல்லது புடவை. நெடும்பாவில் இருந்து அறுத்து எடுப்பதால் அறுவை எனப்படுவது போல், கூறு வைப்பதால் ஏற்பட்ட பெயர் கூறை எனப்பட்டது. திருமணப் புடவை கூறைப் புடவை என வழங்கலாயிற்று. திருமணச் சிறப்புடை நெய்த ஊர்ப்பெயர் அக்கூறைப் பெயராலே கூறை நாடு எனவும் வழங்கலாயிற்று. கூறு போடல், கூறு வைத்தல் என்பனவும், மணிக்கூறு என்னும் வழக்கும், கூற்றுவன், கூற்று என்பனவும் கூறு வழிப்பட்டவை. கூறை நாடு: கூறை நாடு என்பது ஊர்ப்பெயர். கொரநாடு என வழங்குகின்றது. கூறை என்பது மணமகளிர் கட்டும் சீலையுடை. அதனை நெய்தலைத் தொழிலாகக் கொண்ட ஊர் கூறை நாடு எனப்பட்டது. இவ்வூர் மயிலாடுதுறை அருகில் உள்ளது. ஊருக்கு நாடு என்னும் பெயரும் உண்டு. எ-டு: ஆண்மறைநாடு என்பது ஊர்ப்பெயர். கூறை நாட்டுப் புடவை திருமணத்திற்குச் சிறப்பாகக் கொள்ளப்பட்டதால் கூறைப்புடவை என்பது கூறை நாட்டுப் புடவை என்பதுடன் திருமணப் புடவை என்னும் பொருளும் தருவதாயிற்று. கூறைச் சீலை என்பதும் அது. கூறோடி: நெல்லறுவடைக் காலத்தில் அறுக்கும் பரப்பை அளவிட்டு (கூறுவைத்து)த் தந்து அறுவடையை மேற்பார்க்கும் கண்காணியைக் கூறோடி என்பது தூத்துக்குடி வட்டார வழக்காகும். கூறுவைத்தல் பிரித்துத் தருதல். அங்கும் இங்கும் சென்று கண்காணிப்பதால் ஓடி எனப்பட்டார். ஆளோடி, பாம்போடி என்பவை கிணற்றுச் சுற்றின் உள்வாய்த் திட்டு ஆகும். கூற்றம்: நாட்டின் பகுதி கூற்றம், கோட்டம், மண்டலம் என அளவை வகையால் அறுதியிட்டு அமைக்கப்பட்டமை இடைக்காலச் சோழர் வழக்காகத் தெளிவாகின்றது. கூறு வைக்கப்பட்ட இடம், கூற்றம் எனப்பட்டது. உடலில் இருந்து உயிரைப் பிரிக்கும் காலக்கோளைக் கூற்று, கூற்றம் எனல் பண்டே இருந்தது. மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை - தொல். 1025 கூற்றுடன்று மேல்வரினும் - திருக். 765 கூற்றத் தன்ன மாற்றரு முன்பு - புறம். 362 பண்டமாற்றுக் காலத்தில் பருத்தி முதலியவற்றைக் கூறுவைத்துக் கூலியாகத் தரும் வழக்கம் இருந்தது. சங்கில் முத்து உண்டாதலும், வாழையில் காய் உண்டாதலும் அவற்றுக்குக் கூற்றம் என்பர் (நான்மணி. 82). ஏனெனில் அவற்றை அழிக்கச் செய்தலால். கூற்று: உடலில் இருந்து உயிர் பிரிவது ஓர் இயற்கை ஒழுங்கு; ஒன்றைப் பகுத்தல், கூறு வைத்தல், கூறு போடல் எனப்படும். உடலில் இருந்து உயிர் பகுத்து அல்லது பிரிந்து செல்லும் நிலையைக் கூற்று எனல் மரபு; அதனை உருவக வகையால் கூற்றுவன் எனலும் வழக்கே. அவ்வழக்கு திருவள்ளுவரால் போற்றப்படுகிறது. மருந்தில் அப்பால் நாற்கூற்றே மருந்து என்பதில் (950) பகுப்பு என்னும் முதற் பொருளும், வேறிடங்களில் (269, 326, 765, 894, 1083, 1085) கூற்றுவன் என்னும் பொருளும் இடம்பெற்றுள. கூற்றமும் அஞ்சும், கூற்றமும் ஓடும் என்று அவர் கூறுதலும் உறக்கத்திற்கு ஒப்பாக இறப்பையும், கூட்டிலிருந்து பறவை பறப்பதற்கு ஒப்பாக உயிர் பிரிதலையும் கூறுவது கொண்டும் அவர் எத்தகு தெளிந்து தேர்ந்த மீமிசை மாந்தர் என்பதைத் தெரியலாம். கூனல் குறுகல்: கூனல் = வளைவானது. குறுகல் = வளைவுடன் குட்டையும் ஆகிப் போனது. வயது செல்லச் செல்லக் கூனல் குறுகல் வரும். அதுவும் வளர்த்தி மிக்கவர்க்கே கூனலும் குறுகலும் மிகுதி. முதற்கண் முதுகு வளையும். பின்னர் அவ்வளைவு மிகுந்து உடல் குறுகிப் போகும் நிலையுண்டாம். இடுப்பு மட்டத்திற்கு மார்பு குனிந்து தலை நிமிர்த்தப் பாடுபட்டு நடப்பார் உண்மை கண்கூடு. கூனி என்பதோர் உயிரி; நீர்ப்பூச்சி வகையுள் ஒன்று. அதன் உடலமைப்பே அப்பெயரிடச் செய்தது. இறைவைச் சாலைக் கூனை என்பதும் உண்டு. கூனை குடம் குண்டு சட்டி முதலியவை ஒட்டக்கூத்தர் கதையில் வரும். கூனிப்பானை: கூனுதல் வளைதல். பெரியதாய் வளைந்ததாய் வனையப்பட்ட குதிர் (நெற்கூடு) என்பதைக் கூனிப் பானை என்பது பெருவிளை வட்டார வழக்கு. பெரிய பானையை மிடாப் பானை என்பதை நோக்கலாம். கூன்: கூனல், கூனுதல், குனிதலாம். உள்ளதாம் நெடுமை வளைந்து குறுகுதல் கூன் ஆகும். கூனன், கூனி என்பவை கூனலால் உண்டாய பெயர்கள். யாப்பு உறுப்பில் ஒன்று கூன் ஆகும். ஒருசீரோ, ஓரசையோ தனித்து வருதல் கூன். அசைகூ னாகும் அவ்வயி னான - தொல். 1305 மொழிபெயர் தேயக் கூனும் குறளும் அரண்மனை வாயில் காவலராக இருந்தது உண்டு. கூனி மந்தரை இராமன் காடேகத் தூண்டலாயினாள். கூனன் செய்தி நகைப்பு கலித்தொகைக் (65) காட்சி. கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பது ஔவையார் மொழி (தனிப்.). முதுகுக்கூன் குறைபாடாகாது; உளத்துக் கூனே உலகக்கேடு எனல் உண்மை. கூன் வளைவுப் பொருளாதல் கூன்கை என்பதால் தெளிவாம் (திருக். 1077).  கெ கே கை வரிசைச் சொற்கள் கெ கெக்கெலி: கெக்கெலி என்பது மகிழ்வு ஆரவாரத்தைக் குறிப்பதாக மக்கள் வழக்கில் உள்ளது. கெக்கெலி கொட்டல் என்பது வெற்றியைக் கைதட்டி வரவேற்றலாகவும் வழங்குகின்றது. கலித்தல், பெருகுதல் வழியாக ஏற்பட்ட வழக்குச் சொல்லா கலாம். * கெலித்தல் காண்க. கெஞ்சுதல்: மன்றாடுதல், வேண்டுதல் என்னும் பொருளில் மக்கள் வழக்கில் உள்ளது. கெஞ்சும் கொஞ்சும் வஞ்சம் செஞ்சும் என்பது திருப்புகழ். கெஞ்சிக் கேட்டேன்; கொஞ்சமும் இரக்கம் காட்டாத கல்லாக இருந்தான் என்பது, தணிந்தும், பணிந்தும், பலப்பல, சொல்லியும் இரத்தலைக் குறிப்பது கெஞ்சுதல் ஆகும். கெடவரல்: கெடல் + வரல் = கெடவரல். தொலைந்து போன ஒன்றைக் கண்டு பிடிக்கும் விளையாட்டு. கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு - தொல். 802 ஓர் இளங்கன்னிக்குக் களிறு புலி முதலிய விலங்குகளாலும், ஆழ்நீராலும் நேரவிருந்த கேட்டைத் தற்செயலாக அவ்வழி வந்த காளைப் பருவத்தான் ஒருவன் நீக்கிய செய்தியைச் சிறார் நடித்தாடுவது கெடவரல். தேவநே. கெடி: கெடு + இ = கெடி. தொடர்வண்டி நிற்கும் இடத்தைக் கெடி என்பது தென்தமிழக வழக்கு. தீர்மானிக்கப்பட்ட நிற்கும் இடம் கெடி. இருபிறப்பியாக இரயில் கெடி என்பதும் உண்டு. கெடிலம்: கெடிலம் = ஈராறு சந்திக்கும் சந்திப்பு அல்லது கூடல். இரண்டு ஆறுகள் கூடும் இடமாகிய ஊர் கூடலூர். பெண்ணையாறும் கெடில ஆறும் கூடுமிடம். இரண்டு ஆறும் பெருகி வரும் வேளையில் ஊர்மக்களுக்குப் பேரச்சம் உண்டாகும் என்கிறது வாழ். கள. * கெடி காண்க. கெடிறு: கெடு + இறு = கெடிறு. கையால் பற்றினாரைத் தன் முள்ளால் குத்தித் துயர் செய்யும் மீன் கெடிறு. ஒளியமைந்த நிறத்தையும் வலிய முள்ளையும் உடையது. குரூஉக் கெடிற்ற குண்டகழி - புறம். 18 குரு > குரூஉ = நிறம், வண்ணம். கெளிறு என்பதும் இது. மக்கள் வழக்கில் அன்றிச் செய்யுள் வழக்கிலும், சினைக் கெளிற்றார்கை - நற். 70 எனப்படுகின்றது. கெடு: கெடு = தவணை. ஒரு வழக்கு ஊரில் நடந்து முடிவு சொன்னால் இன்ன கெடுவுக்குள் இவ்வாறு செய்ய வேண்டும் என்பர். பணம் வாங்கினால் இன்ன நாளில் தருவதெனக் கெடு வைப்பர். கெடுத் தவறினால் தண்டம் உண்டு. கெடுதி: கெடுதி:1 கெடு + தி = கெடுதி. பிறர் வாழ்வைக் கெடுக்க எண்ணும் எண்ணமும் சொல்லும் செயலும் கெடுதியாம். கெடு > கேடு. கெடுதி நினைப்பான் கேடுறுவான் என்பதால். கெடுவான் கேடு நினைப்பான் என்பர். கெடுதி:2 வறுமை. உள்ள பொருளும் இல்லாமல் போதல் அது. கெடுவாக வையாது உலகம் நடுவின்றி நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - திருக். 117 கெடுதி:3 கொண்டு வந்த அல்லது தேடிவந்த ஒன்று தப்பிப் போதல். அகத்துறையில் கெடுதி வினாதல் என்பது அது. தலைவியும் தோழியும் கூடியிருக்கும் போது தலைவன் தன் அம்புக்குத் தப்பிய மான் அல்லது வேலுக்குத் தப்பிய யானை வந்ததுண்டோ என வினாவுதல். (தொல். 1048) கெடுதி:4 கெடுக (அ) கெடுவாயாக என்னும் பழிப்புரை. கெடுத்து: வீசி எறிந்து, போகவிட்டு, தப்பவிட்டு என்னும் பொருளில் கெடுத்து என்பது வழங்குகின்றது. ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடுகிறான் - நாலா. 2069 கெடுத்துக் கரைசேர்ந்தாற் போலே - நாலா. 2912 கெடுத்து = வழிதப்பி. கெடுபாதை: கெடுபாதை = கேடுடைய பாதை. கள்வரால் தீங்கு நேரும் வழிக்காவலுக்கு அரசு பெறும் வரி. (க.க.சொ.அ.) கெடுபிடி: கெடுபிடி = நெருக்குதல். கெடுவாவது தவணை; இன்ன காலம் என வரையறுக் கப்பட்ட, நாளில் செலுத்த வேண்டியதைச் செலுத்தா விட்டாலும், வந்து சேர வேண்டிய ஆணையை நடைமுறைப் படுத்தத் தவறிவிட்டாலும், பிடிப்பாணை பிறப்பிப்பது அரசாணை; நடுமன்ற ஆணையுமாம். அவ்வாணையே கெடுபிடி எனப்பட்டு, அங்கும் இங்கும் நகராமல் கட்டாயம் உட்பட்டே தீர வேண்டிய நெருக்குதலைக் குறிப்பதாகப் பொதுமக்களால் குறிக்கப்படுவது கெடுபிடியாகும். அவன் கெடுபிடியைத் தப்பமுடியாது; இந்தக் கெடுபிடி செய்தால் என் செய்வது என்பவை மக்கள் வழக்குகள். கெடும்பு: குறுநொய் அரிசி என்னும் பொருளில் கெடும்பு என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. கெட்டுப் போன கரிய அரிசியைக் குறித்துப், பின்னர் நொறுங்குக்குப் பொதுப் பெயராகி யிருக்கும். கெடுவழி: கெடுவழி:1 கெட்டுப் போகத் தக்கவழி என்னும் பொதுப் பொருளதா கியது இச்சொல் (ம.வ.) கெடுவழி:2 நீங்கும் போது, நீங்கும் வழி என்னும் பொருள்களில் புலமையர் வழக்கில் உண்டு. தொல். 300, 350. கெடுவிகாள்: கெடுவிகாள் = கெடுப்பவர்களே, கேடர்களே. கெடுவாய் என்பதும் இது. (நாலா. 3047) கெடுவிகாள் = விளி; கெடுவாய் = முன்னிலை. கெட்டகாலை: வறுமையும் துயரும் நோயும் அலைக்கழிவும் அடைந்த பொழுது. கெட்ட காலை விட்டனர் என்னாது நட்டோர் என்பது நாட்டினை நன்று - பெருங். 2:9:118-9 கெடுங்காலை என்பதும் இது. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் - திருக். 799 கெட்டி: கட்டி > கெட்டி. வலுவானது, உறுதியானது என்னும் பொருளது. பருப்பொருள் திண்மையும் நுண்பொருளாம் கருத்துப் பொருள் திண்மையையும் குறிக்கும். வேலையில் கெட்டி; கெட்டிக்காரன் என்பவை பாராட்டு. சாப்பாட்டில் கெட்டி என்பது எள்ளல். கெட்டி மேளம்: திருமணப் போதில் தாலி கட்டும் பொழுது இடையீடின்றிக் கொட்டும் மேளத்தைக் கெட்டிமேளம் என்பர். இது, தாலிகட்டும் போது கொட்டும் மேளம்! மணமக்கள் வாழ்வில் என்றும் மணவொலியே திகழ வேண்டும் என்னும் பொருளில் அமைந்தது இது! கெட்டிமேளம் கெட்டி மேளம் என்று குரல் எழும்! மேளமும் குரல் எழுப்பும். கெண்டி: கெண்டி:1 மதவிடை கெண்டி - பெரும். 143 பொருள்: வலிமையுடைய ஏற்றினை அறுத்துத் தின்று நச். கெண்டி > கிண்டி, கிளறி என ஆயது போலும். கெண்டி:2 குழந்தைக்குப் பாலூட்டும் வளைவாய்க் குவளை, கெண்டி யில் இருக்கும் பாலை எடுத்துக் குழந்தைக்குப் புகட்டு (போட்டு) ம.வ. கெண்டி:3 தூம்புக் குழாயுடன் அமைக்கப்படும் குவளை. இறை வழிபாட்டிற்கு ஆகம முறைப்படி நீர்வார்க்கப் பயன்படுவது. பொன்னின் கெண்டி ஒன்று - தெ.கல். 2:1 கெண்டை: கெண்டை = ஒருவகை மீன். மின்னும் வண்ணமுடைமையாலும் பிறழ்ந்து ஒளி செய்தலாலும் கெண்டை எனப்பட்டது. பட்டுக்கரை வேட்டியைக் கெண்டை வேட்டி என்பது மக்கள் வழக்கு. மகளிர் கண்ணுக்கு உவமை கூறப்படுவது. ஒளிகிளர் உண்கண் கெண்டை - பரி.பா. 16 கயல்மீன் என்பதும் இது. உறழ்வேல் அன்ன ஒண்கயல் - புறம். 249 கயற்கண்ணி, அங்கயற்கண்ணி பெயர்கள். கெண்டைவலி: குரக்கை வலி என்பதைக் கெண்டைவலி என்பர் (ம.வ.). காலில் உள்ள நரம்பு வெட்டி இழுத்தலையே கெண்டை வலி என்பர். கெண்டைமீன் துள்ளல் போன்றது என்ற கருத்து மாகலாம். கெத்து: கெத்து:1 கத்துதல் பொது வழக்குச் சொல். ஒலிக்குறிப்புடையது. கோழி முட்டையிடக் கத்துதல் கெத்துதல் எனப்படும். கேறுதல் என்பதும் உண்டு. முட்டைக்குக் கெத்துகிறது என்றும், முட்டைக்குக் கேறுகிறது என்றும் கூறுவர். இது முகவை, நெல்லை வழக்கு. அடைக்கத்துக் கத்துதல் என்பது தென்தமிழக வழக்காம். கேறு = ஒலிக்குறிப்பு. கெத்து:2 கெத்து = தற்பெருமை. என்ன ஆனாலும் தன் கெத்து (கெத்தை) விடமாட்டான். கூழைக் குடித்தாலும் பட்டினி கிடந்தாலும் கெத்துவிடாமல் நடந்து கொள்வான் என்னும் மக்கள் வழக்கில் பெருமை, தற்பெருமை இரண்டன் தொடர்பும் விளங்குகின்றது. கெத்தை: தலையணையாக வைக்கும் திண்டு மெத்தையைக் கெத்தை என்பது செட்டிநாட்டு வழக்கு. கெத்துவிடாமல் பேசுதல் என்பது விட்டுத் தராமல், பெருமை குறையாமல் பேசுவது அல்லது ஒட்டியும் ஒட்டாமலும் பேசுவது. அதுபோல் ஒட்டியும் ஒட்டாமல் மெத்தைமேல் கிடக்கும் சிறுமெத்தை கெத்தை என வழக்குப் பெற்றிருக்கலாம். * கெத்து காண்க. கெம்பு: செம்பு > கெம்பு. வல்லொற்றுத் திரிபு இது. ஒருவகை மணிக்கல். செம்பு போலும் நிறமுடைய மணிக்கல் கெம்பு ஆகும். பொன்னில் இக்கல்லைப் பதித்து அணிகலம் செய்வர். கெலித்தல்: வெற்றி பெறுதலைக் கெலித்துவிட்டான் என்பது மக்கள் வழக்கு. கலியோசை துள்ளலோசை. துள்ளலும், எழும்பலும், ஆர்த்தலும், கூடியது கலித்துள்ளல். * ஆர்கலி காண்க. கெழுதகைமை: கெழுவுதல் = பொருந்துதல். கெழீஇய நட்பு, பாராட்டுப் பெறும். கெழுதகைமை = பலரும் பாராட்டும் உயரிய பண்பாகும். கெழுதகைப் பொதுச் சொல்; அன்புரிமையோடு கூறும் பொதுவகை மொழி, எல்லா என்பது. (தொல். 1167 இளவழ.) பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் - திருக். 700 * கேண்மை காண்க. கெழுமல்: கெழுமுதல் > கெழுமல். கெழும் + அல் = கெழுமல். உள்ளம் ஒரு நிலைப்படப் பொருந்தி நில்லா மயக்க நிலை. வேட்கையிற் கெழுமி - பெருங். 2:17:128  கே வரிசைச் சொற்கள் கே கேடு: கெடு > கேடு. கெடுதலாம் கேடு வறுமைப் பொருளதாதல். கேடும் பெருக்கமும் இல்லல்ல என்பதால் (திருக். 115) விளக்கமாம். கேடும் பெருக்கமும் ஒப்ப நோக்குவார் (திருட்தொண். பாயிரம்) உயர் தொண்டர். கேடு = கெடுதல். கெடுவான் கேடு நினைப்பான் என்பது பழ. கேடு கெட்டவன் என்பது, கேடு செய்தலால், தான் கெட்டுப் போனவன் என்பதன் தொகையாம். கேட்டல்: கேள் > கேட்டல். ஒருவர் கூறுவதைச் செவிகொடுத்துக் கேட்டல். கேள்வி என்பதும் அதுவாம். உறுபெயர் கேட்டல் - தொல். 1216 பொருள்: தலைமகன் ஊரும் பேரும் கேட்டு மகிழ்தல் கேட்டை: கேட்டனை என முன்னிலைப்படுத்திச் சொல்லும் சொல். கேட்டை என்றா நின்றை என்றா - தொல். 909 மக்கள் வழக்கில் நான் கெட்ட கேட்டையும் பட்ட பாட்டையும் சொல்லி மாளாது எனவரும். இது பலவகைகளால் பலரால் அடைந்த துயரைக் கூறுவது. கேட்பா (சமுத்தி): இன்ன வகையாய்ப் பாடுக என்றதும் அன்ன வகையாய்ப் பாடும் பாடல் சமுத்தி எனப்படும். கேட்டவாறு பாடப்படுவது ஆகலின் கேள்பா (கேட்பா) எனத் தக்கதாம். அகப்பொருள் புறப்பொருள் ஆகிய இருபொருள் வழியிலும் இப்பாப் பாடப்படும். சொன்ன எழுத்தினும் சொன்ன மொழியினும் அந்நிலை தன்னில் இருவகைப் பொருட்கும் முன்னிய கருத்து முடிவுறப் பாடல் சமுத்தி என்று சாற்றுவர்; அதுவே கொடுத்த பொருளெலாம் குறைபா டின்றித் தொடுத்தயாப் பிற்றாய்த் துணிந்து நிற்றலே என்பது பிரபந்த தீபம் (97). யாப்பிற்றாய்ந்து... நிற்றலே என்ற அளவில் சுவடிச் சிதைவு. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கையைப் பற்றி மெல்லியவாமால் நுங்கை என, அவர் பாடிய புறப் பாட்டும் (14), சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளி வளவன் எம்முள்ளீர் எந்நாட்டீர் என்று வினாவியதற்கு ஆவூர் மூலங்கிழார் பாடிய புறப்பாட்டும் (38) இனையவும் சமுத்திக்குத் தோன்றாத் துணையாய்த் திகழ்பவை. காளமேகப் புலவரும், மாம்பழக் கவிச்சிங்க நாவலரும் சமுத்தி பாடுதலில் கொடிகட்டிப் பறந்தவர்கள். இரட்டைப் புலவர்களும் இத்துறையில் வல்லவர்களே. எழுத்துச் சொற்பொருள் அணியாப் பிவையின் விழுத்தக ஒருவன் விளம்பிய உள்ளுறை அப்பொழு துரைப்ப தாசு கவியே - இலக். பா. 4 என வரும் ஆசு கவி இச்சமுத்தி பாடுவோன் என்க. ஆசு கவி = கடும்பா (பாவா.). * வினாவிடைப் பாடல் காண்க. கேட்போர்: கேட்போர்:1 கேட்போர் = கேட்பவர். கேட்போர்:2 கேட்போர் = மாணவர். ஒருகுறி கேட்போன் (நன். 42). கேட்போர்:3 அகப்பொருள் துறைகளுள் ஒன்று. அது, கேட்போர் கூற்று என்பது. கேட்போர் களனே காலவகை எனாஅ - தொல். 1259 கேணி: கேணி என்பது நீர்நிலை. கேணி பூவா எரிமருள் தாமரை - புறம். 364 ஊருண் கேணி - புறம். 392 ஊருண் கேணி, ஊருணியாம். ஊருணி நீர்நிறைந் தற்றே - திருக். 215 கீ > கீழ் > கீண் > கீண்டு - கிழித்து. அகடுகீண் டொழுகிய தன்றே - நைட. 6 நிலத்தை அறுத்தோடும் ஆறு போல், நிலத்தைக் கிழித்தமைத்தது கேணியாம். கேண்மை: கேள் > கேண் > கேண்மை. கேள் = உறவு, நட்பு. கேளிர் x கேளார். யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - நாலடி. 213 ஒருவர் சொல்லைக் காது கொடுத்துக் கருத்தூன்றிக் கேட்பவர் எவராயினும் அவர் கேளிர் என்பது கேட்கும் தன்மை என்னும் கேண்மைச் சொல்லால் புலப்படும். காது கொடுத்தும் சொல்வதைக் கேளாதவர் கனிவுடைய உறவினராவரா? கேதம்: ஏதம் என்பது இடையூறு, இறப்பு என்னும் பொருள் தருவது இலக்கிய வழக்கு. ஏதம் என்பது ககர ஒற்றுப் பெற்று கேதம் என்றாகி இறப்பைக் குறிப்பது பொதுவழக்காக உள்ளது. பொதுவழக்கு என்பது மாவட்டம் வட்டம் தழுவி நில்லாமல் தமிழ் வழங்கும் பரப்பெல்லாம் தழுவி நிற்பதாகும். கேழல்: பன்றியின் பெயர்களுள் ஒன்று கேழல். கேழ் என்பதும் கெழு என்பதும் ஒளிப்பொருளதாகும். குருவும் கெழுவும் நிறனா கும்மே என்பது தொல்காப்பியம் (786). கெழு > கேழ். ஒளி இல்லாக் கரு நிறத்தது ஆதலால் (கேழ் + அல்) கேழல் எனப்பட்டது. சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ் அலரி - புறம். 27 கேழற் பன்றி - புறம். 152 கேழ்: கேழ் என்பது வண்ணமாம். வண்ணத்தில் அழகு பொதுளி நிற்பதாகலின் அழகு கேழ் எனப் பெற்றதாம். கேழ்வரகு: கூல வகைகளுள் ஒன்று இது. வரகு வகை சார்ந்தது. வரகு போலவே கரிய அல்லது கருஞ்சிவப்பு நிறத்தது. வரகின் நிறத்தினும் பளிச்சிட்டுத் தோன்றுவது. ஆதலால் கேழ்வரகு என்றனர். குருவும் கெழுவும் நிறனா கும்மே என்பது தொல்காப்பியம் (786). கெழு = பளிச்சிட்ட நிறம். கெழு > கேழ் ஆயது. * வரகு காண்க. கேளார்: கேள் + ஆ + ஆர் = கேளார். கேளாதார் என்னும் பொருளது. சொன்னதைக் கேளாதவர் என்பதனொடு பகைவர் என்னும் பொருளும் தரும். கேளிர் x கேளார். உறுப்புக் குறையால் கேளார் ஆதல் குறையன்று. செவிப் புலன் செவ்வையாக அமைந்தும் நல்லவை கேளாரே மரத்துப் போன செவியராம். கேளிக்கை: விளையாட்டாக - எள்ளலாக - ஒருவரைப் பேசுதல் கேளிக்கையாகும். கேள் என்பது உறவு என்னும் பொருளது. அது, கொண்டு கொடுக்கும் உரிமைப்பட்ட குடும்பத்து இளமையரை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் பேசுதல் வழியால் கேளி என்றாகிக் கேளிக்கை எனப் பின்னொட்டுச் சேர்ந்தது. இக்கேளி என்னும் சொல் மேலும் சிதைந்து கேலி எனவும் ஆய்விட்டது. இது உறவுப் பொருள்விட்டு, பொதுவாகவும் ஆயிற்று. கேளும் கிளையும்: கேள் = உடன்பிறந்தாரும், கொண்டவர் கொடுத்தவரும் கேள் ஆவர். கிளை = உடன்பிறந்தவர்க்கும்,கொண்டவர் கொடுத்தவர்க்கும் கேள்ஆகியவர் கிளையாவர். அடிமரமும், அடி மரத்தில் இருந்து பிரியும் கவடுகளும் கவட்டில் இருந்து பிரியும் கிளையும், கொப்பும், வளாரும், மிலாரும், போல்வன கேளும், கிளையுமாம். * ஒட்டுறவு காண்க. கேள்: ஒருவர் கூறும் இன்ப துன்பங்களைக் கேட்கும் பரிவுடைய செவியினர் எவர் எனினும் அவர் கேளிர் (உறவினர்). அவ்வாறு கேளாதவர், கேளார் (பகைவர்). கேளிர் என்பதன் எதிர்ச்சொல் கேளார். கேள்வி: செவியால் கேட்கும் செய்தி கேள்வியாகும். அது வினா என்னும் பொருளில் வழங்குதல் வழுவாம். செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - திருக். 411 எனப்படும் செல்வம். கற்றலில் கேட்டலே நன்று என்பது பழமொழி. சுருக்கமில் கேள்வி யா.கா. உளங்கூர் கேள்வி இளம்பூரணர் என்பது ஒரு சிறப் பியல். அரசர் ஆணை மொழி கேட்டு எழுதுபவர் திருவாய்க் கேள்வி. கல்வியறிவு போலவே கேள்வி யறிவும் சிறப்புடையதாம். கேள்வி முறை: கேள்வி = நிகழ்ந்ததைக் கேட்டல். முறை = அறமுறை இதுவெனக் கூறல். கேள்வி முறை இல்லையா என்று முறைகேடான துயருக்கு ஆட்பட்டவர் கூறுதல் உண்டு. என்ன நடந்தது எனக் கேட்பது (உசாவுவது) கேள்வி. இந்தக் குற்றத்திற்கு இதுவே தண்டனை என்று நீதி வழங்குவது முறை. கேள்வியும் இல்லை; முறையும் இல்லை என்றால் அந்நாடு விலங்குறையும் காடேயாம். கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று என்பது ஒரு காவலன் உரை. கேறுதல்: கோழி முட்டை இடுவதற்குக் கத்துதல், கேறுதல் எனப்படும். இதுவும், பொதுவழக்கே ஆகும். கூவுதல், கத்துதல் என்பது விலக்கிய ஒலி, கேறுதல் ஆகும்.  கை வரிசைச் சொற்கள் கை: கை:1 உறுப்பின் பெயர். கை:2 செய்தல் என்னும் பொருளில் வருவது. செய்கை என்பது அதன்விரி. கை:3 ஒழுக்கப் பொருளது கைகோள். கைந்நிலை என்பதும் ஒழுக்கப் பொருள் தருவது. கை:4 சிறுமைப் பொருளது. எ-டு: கை வாய்க்கால், கைக்குட்டை. கை:5 கடைப்பிடி வகை அல்லது நோன்பு. எ-டு: கைம்மை. கை:6 உழைப்பு. எ-டு: கைசெய்தூண் மாலை யவர் - திருக். 1035 கை:7 எண்ணலளவை. கை என்பது ஐந்து என்னும் பொருளில் தரகுத் தொழில் வழக்காக உள்ளது. ஐந்து விரல் கருதியது அது. பூட்டு என்பதும் இலை விற்பாரிடம் ஐந்து என்னும் பொருளில் வழங்குகின்றது. கை என்பது இரண்டு என்னும் பொருளில் செட்டிநாட்டில் வழங்குகின்றது. அது, கைவிரல் கருதாமல் கையிரண்டு கருதிய வழக்கு ஆகும். கை:8 வஞ்சகம் என்னும் பொருளது. எ-டு: அவன் பெரிய கைகாரன். கை:9 கை = ஆள். ஆட்டத்திற்கு ஒரு கை குறைகிறதுஎன்பது ம.வ. கை:10 வெறுப்புச் சுவை. கைப்பு; மனவெறுப்பு. எ-டு: உன் உறவு கைத்துப் போனது கை:11 இடப்பொருள் பின்னொட்டு. எ-டு: கடிகை, பொதிகை. கைகழுவல்: உண்டபின் கைகழுவுதல் நம் வழக்கு. இவ்வழக்கு உறவைத் துண்டித்து விடுதல், தீர்த்து விடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. அவர் நடக்கின்ற வகை நமக்கு ஆகாது; அவரைக் கைகழுவி விடுவதுதான் நமக்கு மதிப்பு என்பர். உணவை முடித்துக் கைகழுவும் வழக்கு, உறவை முடித்து விடுவதற்கு ஆகின்றது. கைகாரன்: கைகாரன் = திறமையாளன், சூழ்ச்சியாளன், ஏமாற்றாளன். அவன் பெரிய கைகாரன் என்றால் திறமையாளன் என்பது பொருள். ஆனால் அத்திறமை பாராட்டுக்குரிய பொதுநலத் திறமையைக் குறியாமல் தன்னலச் சூழ்ச்சியைக் குறிக்கும். அவன் பின்னால் போகாதே; அவன் பெரிய கைகாரன்; உன்னை ஐயோ என்று விட்டு விடுவான் என்பதில் அவன் சூழ்ச்சித் திறமும் செயல் விளைவும் விளங்கும். கைகாரன் முதல் வேலை, நம்ப வைத்தல்; அடுத்து நம்பியவனே சுற்றி வளையவரச் செய்தல்; அதன்பின் வலையுள் படும் மான் போலவும், மீன் போலவும், அவனே வந்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வைத்தல், இவையெல்லாம் கைகாரன் வேலை. கை என்பது செயல் திறம் என்னும் பொருளது. அதன் எதிர்மறையாவது இது. கைகூடும்: எடுத்த செயல் நிறைவேறும் என்பதைக் கைகூடும் என்பது மக்கள் வழக்கு. கைசேரும், கையேறும் என்பனவும் அது. கைகொடுத்தல்: கைகொடுத்தல் = உதவுதல். ஏற மாட்டாதவரைக் கை தந்து மேடேற உதவுதல் உண்டு. வெள்ளத்துள் வீழ்வாரைக் கை கொடுத்துக் கரையேற்றுதல் உண்டு. அக் கைகொடுத்துத் துயர் தீர்க்கும் நடைமுறையில் இருந்து கைகொடுத்தல் என்பது உதவுதல் பொருள் தருவதாயிற்று. நீங்கள் கொஞ்சம் கைகொடுத்தால் மேடேறி விடுவேன் என்பதில் கைகொடுத்தல் என்பதன் உதவிப் பொருளும், மேடேறி விடுவேன் என்பதன் உதவிப் பேற்றின் விளைவும் வெளிப்படும். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கை கொடுத்தால் நூலெழுதுதற்கே பொழுதெலாம் செலவிடுவேன் என்று பாவாணர் குறிப்பிடுகிறார் (பாவா. கடி.). கைகோள்: கை = ஒழுக்கம். கோள் = கொள்ளுதல். ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் என்னும் அகப்பொருள் ஆட்சி இது. களவு, கற்பு எனப்படும் இருவகைக் கைகோள். திணையே கைகோள் கூற்றுவகை எனாஅ - தொல். 1259 கைக்கிளை: இலக்கிய வகை. ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தப் பாக்களால் கூறுவது கைக்கிளை எனப்பெறும். ஒருதலைக் காமம் ஓரைந்து விருத்தம் கருத உரைத்தல் கைக்கிளை யாகும் - இலக். பாட். 67 கைக்கிளை தானே மூன்று பாட்டாய் வருதலாம் என்றும், இவையிற்றை (வெண்பா, கலித்துறை)த் தனித் தனியே முப்பது முப்பதாக ஒருதலைக் காமமாகப் பாடுவது கைக்கிளை என்று வழங்கப்படும் என்றும் நவநீதப் பாட்டியல் உரையாளர் கூறுவர் (42). செய்யுள் வகைமையுடையார், கைக்கிளை தானே கருதும் விருத்தம் ஐந்தும் மூன்றும் ஆகவும் பெறுமே - நவநீத. 42 மேற் என்பார். ஐந்து விருத்தத் தாலே ஒருதலைக் காமத்தைக் கூறுவது கைக்கிளை - முத்துவீ. 1109 அன்றியும் வெண்பா ஆறைந் திரண்டு பாடுவ ததன்பாற் படுமென மொழிப - முத்துவீ. 1110 என்பார் முத்துவீரியமுடையார். 32 பாடல்களால் பாடப்படுவது கைக்கிளை என்பதை, கைக்கிளை என்ப தொருதலைக் காமத்தை நாலெட்டுச் செய்யுளில் நவில்வர் புலவர் என்று கூறும் பிரபந்த தீபம் (74). கைக்கிளையாவது ஒருதலைக் காமம் எனப்படும். திரையுலா வந்த ஒருதலை ராகம் கைக்கிளைப் பொருளதே. கைக்கிளை வெண்பா யாப்பிலும் மருட்பா யாப்பிலும் வருமெனத் தொல்காப்பியர் குறிப்பார். கலிப்பா வகையும் கைக்கிளைப் பொருளில் வருதல் கலித்தொகையால் அறியவரும். கை சிறுமைப் பொருட்டெனக் கொண்டு கைக்குட்டை, கைவாய்க்கால் முதலியவற்றை எடுத்துக் காட்டி விளக்குவார் இளம்பூரணர். கைக்கிளை ஆண்பால் ஒருமைத்தாகத் தொல்காப்பியம் குறித்தும், அதனை ஆண்பாற் கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை எனப் பங்கிட்டுக் கொண்டு பலபட விரித்துரைத்தன பிற்பட்ட நூல்கள். முத்தொள்ளாயிரப் பாடல்களாகக் கிடைத்தனவற்றுள் பெரும்பாலன பெண்பாற் கைக்கிளைப் பாடல்களேயாம். சங்கச் சான்றோர் பாடிய கலித்தொகையில் இடம்பெற்ற கைக்கிளைப் பாடல்கள் ஆண்பாற் பட்டனவே என்றறிதல் தெளிவிக்கும். கைக்கிளை மாலை: ஒருதலைக் காதலால் வருந்துவது பற்றி அந்தாதியாகப் பாடப்பெறுவது கைக்கிளை மாலை எனப்பெறும். வருந்தச் செய்வன இவை என்பதையும் வருத்தும் மன்மதன் அம்புகள் இவை என்பதையும் பன்னிரு பாட்டியல் விரித்துரைக்கும். இரங்க வருவது மயங்கிய ஒருதலை இயைந்த நெறியது கைக்கிளை மாலை தாயர் சேரியர் ஆயர் தீங்குழல் தென்றல் சேமணி அன்றில் திங்கள் வேலை வீணை மாலை கங்குல் காமன் ஐங்கணை கண்வளர் கனவென எஞ்சிய நன்னிற வேனில் குயிலே கொஞ்சிய கிள்ளை கொய்தளிர்ச் சேக்கை பயில்தரு நன்னலம் பாங்கர் பாங்கியர் இயன்ற பருவரல் என்மனார் புலவர் - பன்னிரு. 295 முல்லை அசோகு மாந்தளிர் தாமரை யல்லி நீலம் ஐங்கணை யாகும் - பன்னிரு. 297 தாமரை யல்லி = தாமரையாகிய அல்லி என்க. கைக்கிளைக்கும் கைக்கிளை மாலைக்கும் பொருளொப் புடையதேனும் முடிமுதல் தொடையாகப் பாடுதல் மாலைக் குரியதென வேறுபாடறிக. இனிப் பாடல் எண்ணிக்கை பகராமை யும் கருதுக. இனிக் கைக்கிளை மாலை மருட்பாவாற் பாடப்படும். அல்லாத வழி ஆசிரியம் வஞ்சி ஒழிந்த பாக்களாலும் இனங் களாலும் பாடப்பெறும். சிறுபான்மை ஆசிரியப் பாவானும் பாடப்படும் என்றும் கூறுவர் (பன்னிரு 295, 297 உரை). கைசெய்தல்: கையால் வினைசெய்தல் என்னும் பொருளதாம். கைசெய்தல் பொதுவில் தொழில் செய்தல், கடமை யாற்றல் என்னும் பொருளில் வழங்குகின்றது. கைசெய்தூண் மாலை யவர் - திருக். 1035 கை தலை வைத்தல்: கை தலை வைத்தல் = துயரமுறல். தம் தலைமேல் கைவைத்தல் துயரமுறுதல் அடை யாளமாம். தலையில் கையால் அடித்துக் கொள்வதும் கண்கூடு. கறைகெழு குடிகள் கைதலை வைப்ப - சிலப். 4:9 கைது: இதனை, வேற்றுச் சொல்லாக எண்ணிச் சிறைப்படுத்தல், தளையிடுதல், கொட்டடியில் மாட்டல் என வழங்கினர். பன்முறை சிறை வந்து செல்வார் மாமியார் வீடு என்றனர். கையது வேலே (புறம். 100), கைத்து உண்டாம் போழ்தே (நாலடி. 19), கையகத்தது அது (புறம். 101) இம்மூன்றும் பழந்தமிழ் ஆட்சிகள். தீமை செய்தான் ஒருவன் திருத்தம் பெறவும், திருத்தம் பெற்றாலும் தீயவன் என்பானைப் பொதுமக்களே தண்டிக்காமல் காக்கவும், அரசுதன் கையகத்ததாகக் கொள்வதே கைது என்பதன் பொருளாம். கையகத்தது > கையது > கைத்து > கைது. நீரோட்டத்தில் கல் தேய்வது போலக் காலவோட்டத்தில் சொல் தேய்ந்தது இது. கைதூக்கல்: கைதூக்கல் = உதவுதல், ஒப்புகை தருதல். கைகொடுத்தல் போல்வதே கைதூக்கலுமாம். கைதூக்கி விடுதல் என்பது பள்ளத்துள் இருப்பாரை மேட்டில் சேர்த்தல். அதுபோல், கடன்துயர், வறுமை வாட்டல் முதலியவற்றுக்கு ஆட்பட்டு இடர்ப்படுவார்க்கு உதவுதலால் அவர்கள் அவ்விடர் நீங்குவர். அந்நிலையில் நீங்கள் கைதூக்கி விட்டதால்தான் கவலை யில்லாமல் வாழ்கிறேன் என நன்றி பாராட்டுதல் உண்டு. இனிக், கை தூக்கல் என்பது ஒப்புகை தருதலையும் குறிக்கும். கை தூக்கச் சொல்லி வாக்கெடுப்பு நடத்துவதும் நடை முறையே. என் கருத்தைச் சரி என்று ஏற்பவர்கள் கைதூக்குங்கள் என்பதில் ஒப்புகைப் பொருள் உள்ளமை தெளிவாம். கைதூக்கி: கைதூக்கி = சொன்னபடி கேட்டல். கைதூக்கல் என்பது ஒப்புகைப் பொருளும் தருவது. ஆனால், அது உண்மையென்று தோன்றுமானால்தான் கைதூக்கல் நிகழும், இல்லையானால், கைதூக்காமல் கருத்துக்கு ஒப்பளிக்காமல் இருத்தலுண்டு. இக் கைதூக்கி அத்தகைத்தன்று. சரியானது, தவறானது என்று பார்த்துக் கைதூக்காமல் என்ன சொன்னாலும் சொன்னவர் கருத்தை ஏற்பதாகத் தூக்குவதாம். தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை என்பது இலக்கியக் காட்சி. அதற்கு உலகியல் காட்சி கைதூக்கியாம். முன்னால் இருப்பவன் கையைத் தூக்கிக் காட்டினால் கண்ணாடி அப்படியே காட்டு மன்றோ; அதற்கு மாறாகக் காட்டாதே. அத்தகையனே கைதூக்கி என்க. ஆடிப் பாவை போல மேவன செய்யும் புதல்வன் தாய்க்கே - குறுந். 8 கைதை: கானல் பகுதியாம் கழிமுகப் பகுதியிலே தாழை மிகவுண்டு. வேலியாய் அடர்ந்து செறிந்து உட்புகாவாறும் இருக்கும். புகுவார் அவ்வேலியை வெட்டியழித்தே புகவேண்டும். இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து - திருக். 879 என்பது வலுவாக வயிரமேறிய முள்மரம் பற்றியது. இக் கைதை இயல்பாக - வெட்டாமல் - தொட்ட அளவாலேயே - ஊறு செய்வது. அதனால் கைதை என்றனர். காளமேகப் புலவர் தனிப்பாடலுள் ஒன்று, பாணர்க்குச் சொல்வது என்பது. பாணர் என்பார் பழம்பாண் குடியினர் அல்லர். பிற்காலத்தில் தோல் தையலும் துணித்தையலும் கொண்டவர். அவர்க்கு, இதைத் தை; அதைத் தை என்பதைப் பாணர்க்குச் சொல்லுவதாய்க் குறித்தார். உட்புகாவாறு தகைத்து நிறுத்துவதும் தைக்கும் முள்ளுடையதும், கைதையாம். கைதையம் படப்பை - அகம். 100 கைதை வேலிக் கழிவாய் என்பது சிலப்பதிகாரம் (7:43). கைத்தரவு: கை + தரவு = கைத்தரவு. ஒன்றைப் பெற்றுக் கொண்டதற்குச் சான்றாகக் கையொப்ப மிட்டுத் தருதல் கைத்தரவு ஆகும். கார்தோறும் குடுத்து இவர் கையால் தரவு கொள் வோமாகவும் (தெ.க.தொ. 5:415) கைத் தாய்: குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் தாய் கைத்தாய் எனப்பட்டாள். செல்வக் குடிகளில் பழநாளில் பிள்ளை தூக்க என அமர்த்தப்பட்ட பெண்டுக்குக் கைத் தாய் என்பது பெயர். கை + தாய் = கைத் தாய். இதனை ஒரே சொல்லாகக் கொண்டால் வெறுத்தாய் எனப்பொருள் தந்து விடும். கைத்தீட்டு: கை + தீட்டு = கைத்தீட்டு = கையால் தீட்டிய (எழுதிய) சீட்டு (எழுத்துமுரி). மதுராந்தக வளநாட்டு பெண்ணை வடகரைத் திரு வண்ணாமலை உடையார் தேவகன்மிகளுக்குத் திருவண்ணா மலை வியாபாரி வயிரி அரயனும், அடைக்கலவன் படியனும் உள்ளிட்ட நகரத்தோம் ஒட்டி கைத்தீட்டுக் கொடுத்த பரிசாவது (தெ.இ.க. 8:68). கைத்துப் போதல்: ஈயம் இல்லாக் கலத்தில் வைக்கப்பட்ட புளிப்புப் பொருள் கைத்துப் போகும். கைத்தல் பதன் கெட்டுப் போதல் என்னும் பொருளில் கோவை, முகவை, மதுரை எனப் பல மாவட்ட வழக்குகளில் உண்டு. செவி கைப்பச் சொற்பொறுக்கும் என்பது வள்ளுவம் (389). கைத்தூய்மை: கைத்தூய்மை = களவு திருட்டுச் செய்யாமை. கை சுத்தம் என்பர். கைத் தூய்மை நீரால் கழுவுவதால் ஏற்படும். இது, களவு, திருட்டு என எதையும் கொள்ளாமையால் ஏற்படுவது. கையும் வாயும் தூய்மையாக இருந்தால் எங்கும் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்பர். கைத்தூய்மை, வாய்த் தூய்மை ஆளா எனப் பலரிடம் கேட்டுப் பார்க்காமல் எடுபிடி வேலை, வீட்டு வேலைக்குக் கூட அமர்த்துவது இல்லை. நம்பி வீட்டை விட வேண்டும் அன்றோ! சிலர் செய்கின்ற கருமித் தனத்தால் கையும் வாயும் தூயதாக இருக்க வேண்டும் என எண்ணுபவரும் தந்நிலை மாறிப் போக இடமாவதும் கண்கூடு. கைநனைத்தல்: வந்தவர்கள் கைநனைக்காமல் போனால் நம் உறவுக்கு அடையாளம் என்ன? என்பது மக்கள் வழக்கு. கையை நனைத்தல் என்பது உண்ணல், பருகல், உரையாடி மகிழ்தல் என்பவற்றை யெல்லாம் உள்ளடக்கிய பொருளதாம். உண்ணுமுன் கைநனைக்கும் வழக்கத்தைக் கருதுக. கைநீளல்: கைநீளல் = தாராளம்; அடித்தல்; திருடல். கைந்நீட்டல் = கொடை என வழங்கப்படுகின்றது. அவன் கைந்நீட்ட மாட்டான் என்பது கொடான் என்னும் குறிப்பினதாம். கைந்நீளம் என்பது கையின் நெடுமையைக் குறியாமல், நீட்டிக் கொடுக்கும் கொடையைக் குறிப்பதாயிற்று. தருகை நீண்ட தயரதன் என்றார் கம்பர் (இராமா. பாயி.). கை நீட்டல் என்பது அடித்தல் பொருள் தரும். இனிக் கண்டபடி கையை நீட்டாதே என்று கண்டிப்பது உண்டு. தன்னிற் சிறுவனை அடிக்கும் சிறுவனை இவ்வாறு கண்டிப்பதைப் பார்த்தால் கைநீட்டலுக்கு அடித்தல் பொருள் உண்மை விளங்கும். கைநீளல் = திருடுதல் பொருளில் வழங்குவதும் உண்டு. நீட்டி எடுப்பதுதானே திருட்டு. கைந்நாட்டு: கைந்நாட்டு = கையெழுத்துப் போடத் தெரியாதவர். விரல்வரியைச் சான்றாக நாட்டுவது கைந்நாட்டு. படியாதவர் என்பதன் பொருள் அது. அவன் கைந்நாட்டுப் பேர்வளி கையை நட்டுவது - நாட்டுவது - கைந்நாட்டு. கைந்நூல் ஆடை: கையால் நூற்று நெய்யப்பட்ட ஆடை கைந்நூலாடை யாகும். ஆலையில் நூற்கப்பட்ட நூல் கைத்தறிக்குப் பயன்படுத்தினால் அது கைத்தறி ஆடை. ஆலையில் நூற்கப்பட்ட நூலை ஆலையில் நெய்தால் அஃது ஆலைத் துணி அல்லது ஆலை ஆடை. கைப்பின்னலால் உள்ளாடைகள் பின்னப் படுவதும் உண்டு. அது பின்னலாடை, பின்னலாடையும் தறியிலும் ஆலையிலும் நெய்யப்படினும் பின்னலாடை என்பதே பெயராம். பேராய இயக்கம் தன் அடையாளத் தொழிலாகவும் உடையாகவும் கொண்டது கைந்நூலாடை. கைபோடல்: கைபோடல்:1 கைபோடல் = தழுவுதல். உரிமையல்லா ஒருத்தியைத் தழுவுதல் கைபோடலாகக் குறிக்கும் வழக்குண்டு. கைபோடுதல் என்பது பாலுறவைச் சுட்டலும் வழக்கே. உரிமையிலா இழிவுப் பொருளில் அன்றி, உரிமையாம் உயர் பொருளில் இது வழங்குமாறு இல்லை. என் மேல் கைபோட்டு விட்டாய்; அந்தக் கையை ஒடிக்கவில்லை பிறகு பார் என்பது ஒவ்வாக் கைபோடலை ஒழித்துக் கட்டவெழும் வஞ்சினம். கைபோடல்:2 மாடு ஆடு விற்று வாங்கும் தரகுத் தொழிலில் கைபோடுங்கள்; கைபோட்டுப் பேசுங்கள் என்னும் வழக்கம் உண்டு. அது விலைபேசுதல் என்னும் பொருளில் வருவது. கையின் மேல் துணியைப் போட்டுப் பிறர் அறியாவாறு விரல்குறி வழியாகக் குழூஉக் குறியாகப் பேசுவர். அவர்கள் விலைத் தொகையாகக் குறிப்பவை அவர்கள் மட்டுமே அறிந்து கொள்வதாக இருக்கும். பச்சை நோட்டு, கடுவாய் நோட்டு என்றால் இன்று அவர்கள் வழக்கில் நூறு உருபா ஆகும். இன்று நூறு என்பது ஒருவேளை உணவு. அன்று ஒரு நல்ல மாட்டின் விலை. கைப்பாணி: கைப்பணி செய்வதற்கு உதவும் பூச்சுப் பலகையைக் கைப்பாணி என்பது கொற்றர் வழக்காகும். மட்டப் பலகை என்பது நெடியது; பூச்சுப் பலகை வட்ட வடிவில் சுவர், ஆயவை தேய்க்கப் பயன்படுவது. கைப்பிடி: கைப்பிடி:1 திருமணச் சடங்கு நிறைவில் பெண்ணின் கையைப் பிடித்து ஆணின் கையில் இணைத்தல் கைப்பிடி எனப்படும். கைப்பிடி என்பது திருமணம் என்னும் பொருளில் செட்டி நாட்டு வழக்காக உள்ளது. நாகர்கோயில் வட்டாரத்திலும் இவ்வழக்குச் சொல் உண்டு. மணமகளை மணமகனுக்குக் கொடையாகத் தரும் அடையாளம் இது. அதனால் திருமணத்தைக் கொடை விழா என்றார். கொடையே திருமணம் என்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது. கொடுப்பவர் மணமகளின் தாதா; அல்லது அம்முறையினர். கொடுப்பக் கோடல் கைப்பிடியாம். கைப்பிடி:2 மாடி மேல் கட்டும் காப்புச் சுவரைக் கைப்பிடிச் சுவர் என்பது பொதுவழக்கு. கைப்பிடித்தல்: கைப்பிடித்தல் = மணமுடித்தல். கையைப் பிடித்தல் என்னும் பொருளை விடுத்துத் திருமணம் என்னும் பொருளைத் தருவது கைப்பிடித்தலாம். திருமண நிறைவேற்றத்தின் பின்னர்ப் பெண்ணைப் பெற்றவர் மாப்பிள்ளையின் கையில் பெண் கையைப் பிடித்துத் தருவது சிறப்பான நிகழ்ச்சியாகும். மணமேடையை விடுத்துச் செல்லும் கணவன் பின்னே அவன் கையைப் பற்றிக் கொண்டே மனைவியும் செல்லுதல் வழக்கம். கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் என்பது ஆண்டாளார் மொழி. அகத்திட்ட கையை அகலாதே என்பதாகக் கவவுக்கை நெகிழாமல் வாழ்க வென்னும் வாழ்த்து சிலம்பில் இடம்பெற்றுள்ளது (1:61). கைப்பிழைபாடு: கை + பிழை + பாடு = கைப்பிழைபாடு. ஒரு செயலைச் செய்யுங்கால் அறியாமல் கைத்தவறாக நிகழ்ந்து விட்ட குற்றம். செய்ய வேண்டும் என்று எண்ணாமல் அறியாமல் செய்துவிட்ட பிழை கைப்பிழைபாடு ஆகும். சம்புபுரத்திருக்கும் பள்ளிச் செல்வன் இவ்வூரிலிருக்கும் பள்ளி வேணாட்டரையனைக் கைப்பிழையாலெய்து செத்த மையில் கைப்பிழை புகுந்தது. இதுக்குத் தூணாண்டார் கோயிலிலே அரை விளக்கு வைக்கச் சொல்ல. (தெ.க.தொ. 7:68) கைப்பு: அறுசுவைகளுள் ஒன்று கைப்பு. கரிப்பு என்பதும் இது. உப்புக் கைக்கிறது என்றும் உப்புக் கரிக்கிறது என்றும் வழங்கும். உப்பு சற்றே மிகுமானால் உண்ண ஒவ்வாததாம். ஆதலால் வெறுப்புப் பொருளும் தருவதாயிற்று. புளிப்புப் பண்டம், ஈயம் பூசாத பித்தளைக் கலத்தில் வைக்கப் பட்டால் உண்ண ஆகாததாய் நச்சுத்தன்மை உடையதாகிவிடும். கைத்துப் போயது உண்ண - பருக - ஆகாததாகிவிடும். ஆதலால் கைப்பு - வெறுப்பு என்னும் பொருளதாயிற்று. கைப்பேசி: இப்பொழுது தொலைப்பேசி நிலைப்பேசி நிலையில் இருந்து அலைப்பேசி என்றும், கைப்பேசி என்றும் வந்துவிட்டது! அலைபேசி, கைபேசி என்பவை சரியா? நிலைப்பேசி போலவே அலைப்பேசி ஆகியிருக்க வேண்டும். கைப்பொருள் போலவே கைப்பேசி ஆகியிருக்க வேண்டும். கையில் இருப்பது, கையில் எடுத்துச் செல்வது என்பது மட்டும் அன்றி, அதனை முறை தவறிப் பயன்படுத்தக் கூடாது என்றும் கொள்ள உதவுவது கைப்பேசி! கைபேசி என்றால் வெறுக்கத் தக்க பேசியாகிவிடும்! இதுகால் வெறுக்கத் தக்க வகையில் பண்பிலார் பேசிக் கெடவும் கெடுக்கவும் ஆகின்ற நிலையைப் பார்க்கிறோம்! இந்நேரம் - இச்சூழல் என்று இல்லாமல் காதில் சொரி வந்தது போல வேலை எதுவாயினும் வேளை எதுவாயினும் விட்டுக் கெட்டுப் போகச் செய்வது கண்ணராவி! கற்கும் மாணவரும் கல்லூரிக்குள் பாடம் கேட்பதை விடுத்துக் காதில் கைவைத்துக் கொண்டிருக்கும் உரிமை வேண்டும் என்பது எதிர்கால மக்கள் நிலைபற்றி எண்ணி நையவே வைக்கின்றது கையூட்டு! கைப்பேசியாக இருக்கட்டும்! கைபேசி வேண்டா! கைமடக்கு: கையூட்டு என்பது வெளிப்படு பொதுவழக்கு. வாயில் ஊட்டுவது போல் கையில் ஊட்டுவது (இலஞ்சம்); இஞ்சக்கம் என்பது முகவை மாவட்ட வழக்கு. கோட்டாறு வட்டாரத்தில் கைமடக்கு என்றும், திண்டுக்கல் வட்டாரத்தில் கையரிப்பு என்றும் வழங்குகின்றது. கைமதிப்பு: எடைபோடுதல் அளத்தல் என்பவை இல்லாமல் கையால் அளவிட்டு ஒரு பொருளைத் தருவதைக் கைமதிப்பு என்பர். சும்மா கைம்மதிப்பாகக் கொடுங்கள்; கொஞ்சம் கூடிக் குறைந்தால் என்ன என உரிமையுடன் வாங்குதல் விற்றல் சிற்றூர் வழக்கு. கைக்கணிசம் எனவும்படும். கைம்மா: கையையுடைய மா (விலங்கு) யானை. கைமான் என்பதும் இது. கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே அந்தகக்கவி வீரராகவர் தனிப்பாடல். கைமாவும், கைமானும் பழவழக்குச் சொற்களே. கைம்மாறு: கை + மாறு = கைம்மாறு. ஒருவர் கையில் இருந்து ஒருவர் கைக்கு ஒரு பொருள் மாறிச் செல்லுதல் கைம்மாறு ஆகும். கைம்மாற்று என்பதும் அது. ஒருநூறு உருபா கைம்மாற்று வேண்டும் ஒருமாதத்துள் தந்து விடுகிறேன் என்பது மக்கள் வழக்கு. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிஎன்பது திருக்குறள் (211). * குறியெதிர்ப்பு காண்க. கைம்மாற்று: ஒருவருக்குக் கட்டாயமாகத் தேவைப் படுகிறது ஒருபொருள். அப்பொருள் அவரிடம் இல்லை. தமக்கு உதவும் ஒருவரிடம் அதனைக் கேட்டுப் பெறுகிறார்; பயன்படுத்துகிறார் அப்பொருள் தமக்கு மீளக் கிடைக்கும் அளவில் சொல்லிய தவணையில் வட்டியில்லாமல் முன்வாங்கியவரிடம் அப்பொருளை ஒப்படைக்கிறார். இது கைம்மாற்று, கைம்மாறல் எனப்படும். பழநாளில் இது குறியெதிர்ப்பு என வழங்கப்பட்டது. கைம்மிகல்: கைக்கொண்ட குணமோ குற்றமோ மிகுதிப்படுதல் கைம்மிகல் ஆகும். கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் - தொல். 1206 கைம்மை: கை = ஒழுக்கம். கைம்மை = கட்டமை ஒழுக்கக் கடைப்பிடி. கணவனை இழந்தார் அக்கணவன் நினைவால் தம் பொறி புல வேட்கைகளை வலுவுற அடக்கி நோன்பு கொள்ளல் இக் கைம்மையாம். உணவுக்கட்டு, உடைக்கட்டு, ஒப்பனை இன்மை, அணிகலம் நாடாமை, மங்கல விழவு கொள்ளாமை முதலியன மேற்கொள்ளலாக உள்ளன. கணவனை இழந்த உடனேயே வளையல் உடைத்தல், பொட்டழித்தல், பூச்சூடாமை முதலன கொள்ளலாயினர். பழநாளில் கணவனை இழந்த மகளிர் நோன்பு, தாபதம் எனப்பட்டது. புறப்பாடல்களில், கலங்கழி மகளிர், ஆளில் பெண்டு எனப்பட்டனர். மனைவியை இழந்த கணவன் கொண்ட நோன்பு தபுதாரம் எனப்பட்டது. தபுதாரம், தாபதம் தொல்காப்பியம் சுட்டுவன. காதலி இழந்த தபுதார நிலையும் காதலன் இழந்த தாபத நிலையும் - தொல். 1025 * தீப்பாய் அம்மை காண்க. கையடித்தல்: கையடித்தல் = உறுதி செய்தல். ஒன்றை ஒப்புக் கொண்டு உறுதி சொல்பவரும், ஒன்றைத் தந்ததாக வாக்களிப்பவரும் கையடித்துத் தருதல் உண்டு. ஒருவர் கைமேல் ஒருவர் கையை வைத்து எடுப்பதே கையடித்தலாம். உறுதி (உண்மை) சொல்வார் தலையில் கைவைத்தல், துணிமேல் கைவைத்தல், புத்தகத்தின் மேல் கைவைத்தல், தாங்கள் மதிக்கும் பொருள்மேல் கைவைத்தல் எனப் பலவகையால் சொல்வதுண்டு, பரங்குன்றம் அடி தொட்டேன் என மலையின் தாழ்வரையைத் தொட்டு உறுதி மொழிந்ததைப் பரிபாடல் சொல்லும் (8). மாடு பிடிப்பவர் கையடித்தல் உண்டு. வைக்கோல் சக்கை வைத்தல், நீர் வார்த்தல் என்பனவும் கையடித்தல் போல்வனவே. கையடை: ஒருவர் பொறுப்பில் ஒருவரையோ ஒரு பொருளையோ ஒப்படைப்பது கையடையாம். அடைக்கலம் என்பதும் அது. இராமாயணத்தில் கோசிகனிடம் இராம லக்குவரை ஒப்ப டைக்கும் பகுதி கையடைப் படலம் எனப்படும். கவுந்தியடிகள் கண்ணகி கோவலரை மாதரியிடம் ஒப் படைப்பது அடைக்கலக் காதை எனப்படும். வீட்டின் இறைப்பில் மாடக்குழியில் தங்கும் குருவி அடைக்கலான் குருவி எனப்படும். இவ்வடைக் காத்தார் இப்பேறு பெறுவார் என்றும், இவ் வடைக்கலம் அழித்தார் இக்கேடுறுவார் என்றும் ஆவணம் கல் வெட்டுகளில் எழுதப்படும் வழக்கு உண்டு. அடையாவது ஒப்படை. கையமர்த்துதல்: கையசைத்தல் வழியனுப்புவார் வழக்கமாக உள்ளது. நிலக்கோட்டை வட்டாரத்தில் கையமர்த்துதல் என்பது வழியனுப்புதல் குறிக்கும் வட்டார வழக்காக உள்ளது. அமர்த்துதல்; பசியமர்த்துதல் (பசியாறச் செய்தல்) என்பது போன்றது கையமர்த்துதல். கையர்: கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்பர் என்பது நன்னூல் உரை (273). கையறுதல், கையறுநிலை என்பவை அகத்துறை. கையறு மாக்கள் எனவும் துன்புறு மக்களைச் சுட்டுவர். கையறு துன்பம் காட்டினும் காட்டும் என்பது சிலம்பு (10:71). கையறு நிலையை ஆக்குபவர் கையர் வஞ்சர் கொடியர் என்பது தமிழ் வழக்குக்குத் தகுவதே. கையளித்தல்: கொடுத்தல் என்னும் பொருளில் ஈழவழக்காகக் கையளித்தல் உள்ளது. அளித்தல் என்பதும் கொடுத்தல் பொருளதே. கையில் கொடுத்தலைக் குறித்த அது பின்னர் கொடுத்தல் அளவில் பொருள் விரிவானது. கையடை என்பதும் அது. கையறு நிலை: கையறுதல் = செயலற்று ஒழிதல், செயலொழிந்து போகத் தக்க கவல்வினை யூட்டுவது கையறு நிலையாம். வெற்றி வேந்தர் விண்ணுலகு புக்க போழ்தில் புலவர்கள் ஆற்றாது இரங்கிப் பாடுதல் கையறு நிலை என்னும் நூலின் பாற்படும். கையறு நிலை கலிப்பா, வஞ்சிப்பா என்னும் இரண்டு வகைப் பாக்களும் ஒழிந்த வெண்பா, அகவற் பாக்களால் பாடப்பெறும். வலங்கெழு வேந்தர் வான்புகக் கவிஞர் கலங்கித் தொடுப்பது கையறு நிலையே - பன்னிரு. 357 வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின் கற்றோர் உரைப்பது கையறு நிலையே - பன்னிரு. 358 கலியொடு வஞ்சியிற் கையற வுரையார் - பன்னிரு. 359 இனிக் கையறு நிலையினைக் கணவனொடு மனைவி கழிந்துழி அவர்கட்பட்ட அழிவுப் பொருளெல்லாம் பிறர்க் கறிவுறுத்தித் தாமிறந்து படாதொழிந்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலியரும் தனிப்படர் உழந்து செயலறு நிலையைக் கூறுவது என்பர். கணவனொடு மனைவி கழிந்துழி அவர்கட் பட்ட அழிவுப் பாக்கிய மெல்லாம் பிறருக் கெடுத்தறி வுறுத்தித் தாமும் இறந்துபடா தொழிந்த ஆயத் தாரும் வேண்டு வனபெறும் விறலியர் குழாமும் தனிப்படர் உழந்த செயலறு நிலையை நிகழ்த்துவது கையறு நிலையா கும்மே - முத்துவீ. 1100 புறநானூற்றில் இடம் பெற்றுள்ள கையறு நிலைப் பாடல்கள் காலமும் இடமும் சூழலும் எட்டா நிலைக்கு மாறிய இந்நாளிலும், கண்ணீர் பனிக்கச் செய்யும் திறத்தை, உணர்ந்த கற்றோர் அறிவர். கல்லறைப் பாடலை எடுத்தோதி என்னே! என்னே! என்னும் ஆங்கிலத் தேர்ச்சியர் கண்ணோட்டம், கன்னித் தமிழ்க் கண்ணீர்க் குறையுளாம் கையறு நிலைப்பாடலின் பக்கம் கண்ணோட்டம் கொண்டு கூடக் கண்ணோட விடுவது இல்லை என்பதும் ஒரு கையறு நிலையே. கையாலாகாதவன்: கையாலாகாதவன் = செயலற்றவன். கையிருக்கும் எடுப்பான்; கொடுப்பான்; கைவேலை செய்வான். எனினும் கையாலாகாதவன் எனப் பெயரும் பெறுவான். எப்படி? வீட்டுக்கோ அலுவலகத்திற்கோ, தொழிற்சாலைக்கோ பொறுப்பாளனாக இருப்பான். தான் திட்டவட்டமாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் சொல்வார் சொற்படி செய்வான்; அதிலும் நாளும் பொழுதும் புதுப்புது ஆள்களை நம்பி நிலைப்படாச் செயல் செய்வான். இத்தகையனைக் கையாலாகாதவன் என்பர். தன் மூப்பாகச் செய்ய மாட்டாதவனே கையாலாகாதவன் என்க. அவனை நம்ப வேண்டா; அவன் கையாலாகாதவன் என்பது வழக்கு. கை என்பது செயல் என்னும் பொருளதாம். கையால்: கை என்பது ஒழுக்கம் என்னும் பொருளது. அது கட்டமை ஒழுக்கம் எனப்படும். அக்கட்டுதல் நிலத்திற்கு அமைக்கப்படும் வேலியைக் கட்டார்ப்பு (கட்டாப்பு) என்பது தென்தமிழக வழக்கு. கட்டுதல் ஆர்த்தல் ஒருபொருள் பன்மொழி. கட்டார்ப்பு என்பது கையால் என விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. வேலி, சுவர் என்னும் பொருளில் வழங்குகின்றது. கையாள்: கையாள் = குறிப்பறிந்து செய்பவன். கைகாரனாக இருப்பவன் தனக்குக் கையாள் வைத்திருப்பது வழக்கம். கைகாரன் என்ன நினைக்கிறானோ அந்நினைப்பைக் குறிப்பாலேயே அறிந்து செயலாற்றுவதில் தேர்ந்தவன் கையாள் ஆவான். அவன் எதிர் காலத்தில் கைகாரனாக விளங்கத் தக்கவனாவான். கையாள் ஏவலன் அல்லன், அவன் ஏவிச் செய்பவன், முறையான பணியாளன். இவன் சூழ்ச்சியாளனுக்கும், வன்படியாளனுக்கும் துணையாக நிற்பவன். எச்சிறு செயலும், எத்தீச் செயலும் செய்தற்கு உடன்படும் உள்ளத்தவனே, இக்கையாலாகாதவன். கையாறு: கையறு > கையாறு. கையாறு, பழந்தமிழ்ச் சொல். மெய்ப்பாடுகளுள் ஒன்று (தொல். 1212). கையறுதல் = செயலற்றுப் போதல். அவ்வாறு போகும் அளவு துயர் வறுமை நோய் நெருக்கடி ஏற்படல் உண்டு. அத்துயரை ஆற்றும் வலிமையும் அறிவும் வாய்த்தலும் ஆற்றித் தேற்றுவார்தாமும் அருகில் இல்லாது ஒழிதலும் தம்மைத் தாமே ஒறுத்துக் கொள்ளும் சூழலை ஆக்குதல் உண்டு. கையிகத்தல்: கை = இடம்; இகத்தல் = கடத்தல். கையில் இருந்து அல்லது உள்ள இடத்தில் இருந்து அகன்று போதல். கையிகந்து பெயர்த்து உள்ளி அழியும் - தொல். 1092 கையூட்டு: கையூட்டு பிறர் அறியாவண்ணம் தம் கரவாம் செயலை நிறைவேற்றிக் கொள்ளத் துணை நிற்பவர்க்கு வாயில் சோறு ஊட்டுவது போலக் கையில் பணத்தைத் திணிப்பது - ஊட்டுவது - கையூட்டு எனப்படுகின்றது. சோழர் காலக் குடவோலை முறையிலேயே இக்கையூட்டு கடியப்படுவதால் அதன் பழவழக்குப் புலப்படும். இந்நாள் கையூட்டோ பட்டப்பகல் வெட்ட வெளிச்சக் கைம்மாற்றுப் போலவே ஆகி உலா வருகிறது. கையூட்டுத் தராமல் எந்த வேலையும் அரசில் நிகழாது என்னும் நிலையை மக்களாட்சி உருவாக்கிவிட்டது. கீழே நூறு இருநூறு கையூட்டு என்றால் மேலே மேலே நூறு கோடி, ஆயிரங் கோடி! யார் யாரைக் கேட்கும் தகவு உடையர் எனத் தலையைப் பிய்த்துக் கொள்ளத்தான் வேண்டும்! கையேடு: கையேடு என்பது கையில் உள்ள ஏடு என்பதைக் குறியாமல், கையில் ஏடு வைத்துப் படிப்பாரைக் குறிப்பதாகும். சில அரிய பெரிய நூல்களை விரிவுரை சொல்லியும் கதையுரைத்தும் பாராயணம் செய்தல் அண்மை வரை சிற்றூர்களில் நிகழ்ந்தன. பெரிய புலவர் உரைவிளக்கம் செய்வார். அவர்க்குத் துணையாக வந்தவர் இசையோடு நூலைப் பார்த்துப் படிப்பார். அவரைக் கையேடு என்பது வழக்கு. கையேடு படிப்பவர் பழகிப் பழகி விரிவுரை கூறுபவராகி விடுவது வழக்கம். இந்நிகழ்ச்சி இரவில் ஊர்ப்பொது இடங்களில் நிகழும். கையேறல்: ஒருவர் கையில் இருந்த பொருள் மற்றொருவர் கையில் ஏறுதல் கையேறல் ஆகும். கையேற ஏற அதனைப் பெறுவார் வளமிக்கவர் ஆகிவிடுதல் கூடும். மக்கள் பார்வையில் முந்தை நிலையும் பிந்தை நிலையும் வியப்பாகிவிடும். அவர்க்கு என்ன ஏறுகாலம் என்பர். விளைவு முதலியவை பெருகுதலும் வருவாய் பெருகலும் புகழ்மிகலும் பொதுமக்களால் ஏறுகாலம் எனவே படும். கையொடிதல்: கை = செயல். நீ இல்லை; எனக்கு ஒன்றும் ஓடவில்லை; கையொடிந்தது போலாயிற்று என்பது மக்கள் வழக்கு. கையோங்குதல்: கையோங்குதல் = வெற்றி, செல்வம் ஆகியவை மிகுதல். கை என்பது பக்கம் என்னும் பொருளும் தருவது. இரு பக்கத்தார் விளையாட்டு, போர், பொருளீட்டல் முதலியவற்றில் ஈடுபடுங்கால் அந்தக் கையிலும் இந்தக் கை ஓங்கி விட்டது என்பது வெற்றி முகத்தைக் குறிப்பதாம். ஒருவன் செல்வப் பெருக்கு அடைந்தால் அவன் கை ஓங்கிவிட்டதாகக் கூறுவதும் வழக்கு. ஓங்குதல் = தூக்குதல். அப்பொருளில் இருந்து ஆட்டம், போர், பொருள் முதலியவற்றின் வெற்றிக்கும் உயர்ச்சிக்கும் இடமாகச் சொல்லப்படுவதால் வழக்குச் சொல் ஆயிற்றாம்.  கொ வரிசைச் சொற்கள் கொ: ககர ஒகரம்; ககர வரிசையில் பத்தாம் உயிர்மெய் எழுத்து. கொள், கொள்ளை, கொட்பு முதலாம் சொற்களின் வளைவுப் பொருளுக்குரிய அடியாக அமைந்தது. கொகுடி: கொக்கு > கொகு > கொகுடி. கொக்கின் கழுத்துப் போல் வளைவும் வெண்ணிறமும் அமைந்த ஒருவகை முல்லை மலர் கொகுடியாகும். குறிஞ்சிப்பாட்டில் (81) இடம்பெறும் மலர் இது. நறுந்தண் கொகுடி கொக்கணை: கொக்கு, கொக்கி என்பவை வளைவுப் பொருளவை. கொக்கணை என்பது பேராவூரணி வட்டார வழக்கில் தொரட்டி என்பதையும், கருங்கல் வட்டாரத்தில் கழுத்து என்பதையும் குறிக்கின்றது. இச்சொல் கருவூர் வட்டாரத்தில் கருமித்தனம் என்னும் பொருளில் வழங்குகின்றது. வளைத்துப் பறித்தது போல் பறித்துச் செலவிடாமல் வைத்துக் கொள்ளல் குறிப்பாக இவ்வாட்சி ஏற்பட்டிருக்கக் கூடும். கொக்காணி: சிரிப்பு, சிரிப்பாணி என வழங்கப்படுதல் நெல்லை, முகவை வழக்கு. கொக்காணி என்பது கேலி, கேலிச் சிரிப்பு என்னும் பொருளில் ஒட்டன்சத்திர வட்டார வழக்காக உள்ளது. கெக்கலி என்பது கேலிச் சிரிப்புப் பொருளிலும் வெற்றி மகிழ்ச்சிப் பொருளிலும் (கைகொட்டிச் சிரித்தல்) முகவை மாவட்டத்தில் வழங்குவதை எண்ணலாம். கொக்கி: கழுத்துச் சங்கிலி, திறவுகோல் (சாவிக்) கொத்து ஆய வற்றுக்கு உள்ள கொக்கி பொதுவழக்கு. நெடுவிளை வட்டாரத்தில் கொக்கி என்பது தொரட்டியைக் குறிக்கிறது. கொக்கிக் கழை என்பது சென்னை வழக்கு. கொக்கியும் கழையும் ஆகிய அவ்வழக்கு தொரட்டிக்கழை என்பது போன்றது. கொக்கு: பறவைகள் சில ஒன்று கூடுகின்றன; மகிழ்ச்சியாகக் கூச்சலிடுகின்றன; எதற்காகவோ சண்டையும் போடுகின்றன; அந்நிலைகளில் அவற்றின் ஒலியைக் குழந்தை நிலையில் இருந்த மாந்தன் காதால் கேட்கின்றான். அவ்வொலி கொக் கொக் என்பதாக அவனுக்குப் படுகின்றது. அவ்வொலியால் அப் பறவைக்குக் கொக்கு எனப் பெயர் வைக்கின்றான். பின்னர் அப்பெயரை அவனும் தொடர்ந்து வழங்கினான். அதனைக் கேட்ட பிறகும் தொடர்ந்து வழங்கினர். ஒலி வழியால் வந்த அச்சொற் செல்வம் இந்நாள் வரை தொடர்கின்றது. கொக் கொக் என ஒலிக்கும் ஒலியால் வந்த அப்பெயர், கொக்கைக் காணாத இடத்தில் சொன்னாலும் அதன் வடிவத்தை நினைவூட்டுவதாக நிலைபெற்றது. அதனால் அச்சொல் வளர்ந்தது; மொழி வளத்திற்கும் உதவியது. கொல்லு வேலை செய்பவர், ஒரு கம்பியை எடுத்து வளைவாகச் செய்தனர். அவர்க்குக் கொக்கின் வடிவம் நினைவில் நின்றது. கொக்குப் போல வளைத்துள்ள அக்கம்பியைக் கொக்கி என்றார். கொக்கியில், கொக்கு வடிவம் அமைந்த அளவில் நில்லாமல், அதன் பெயரும் இணைந்த சிறப்பு இந்நாள் வரை மாறாமல் உள்ளதை நாம் அறிகிறோம். பொன்னால் ஒரு தொடர் (சங்கிலி) செய்தார் ஒருவர். ஒரு முனையை மறுமுனையில் பூட்டிக் கழற்றப் பூட்டுவாய் அமைத்தார். அப்பூட்டுவாய் அமைப்புக்குக் கொக்கின் கழுத்தும் வாய் அமைப்பும் துணையாயின. அமைப்புக்குத் துணையாய அது, பெயர்க்கும் துணையாயது. அதனால் கொக்குவாய் என்னும் பெயர் அமைந்தது. தொடர்ந்து நிலைபெற்றது. கொக்குவாய் கொக்கில் எனவும் வழக்கில் நின்றது. ஒரு புழு நெளிந்து வளைந்து சென்றது. அதன் வளைவை அறிந்த ஒருவன் அப்புழுவின் வளைவுடன் கொக்கின் வளைவை ஒப்பிட்டுப் பார்த்தான். அதன் விளைவாகக் கொக்கிப் புழு எனப் பெயரிட்டான். தமிழுலகம் அப்பெயரைப் போற்றி ஏற்றுக் கொண்டது. ஒரு கொக்கு ஒலி எழுப்பிக் கொண்டும், தலையைத் தூக்கிக் கொண்டும் மற்றொரு கொக்குடன் மோதச் செல்லும் காட்சியை ஒருவன் உற்றுக் கண்டும் கேட்டும் சிந்தித்தான். அதன் ஒலியும் எடுத்த தோற்றமும் அவனை வயப்படுத்தின. அதனால், அவன் எண்ணத்தில் கொக்கரிப்பு அப்பறவைகளின் செருக்கிய செயலுக்கு ஆகி, அதன் பின்னே மாந்தர் செருக்கைச் சுட்டு வதாயும் வளர்ந்தது. உன் கொக்கரிப்புக்கு நான் அஞ்சிய ஆளா என்று எதிரிட்டுக் கொக்கரிக்கும் காட்சி நாம் அறியாததன்றே! கோழி கொக்கரிக்கும் என்பதும் நாம் கேளாததன்றே! கொக்கு + அரி = கொக்கரி; அரி என்பதன் பொருள் ஒலி, சிலம்பு முதலியவற்றில் ஒலியுண்டாகப் போடப்படும் முத்து, மணி, கல் முதலியவை அரி எனப்படும். பாண்டியன் முத்துடை அரியே என்றதும், கண்ணகியார் மணியுடை அரியே என்றதும் சிலம்புச் செய்தி. அரிக்குரல் கிண்கிணி என்பது மழலையர் காலணி, அரிக்கூடு இன்னியம் என்பது இசைக்கருவி. கொக்கின் ஒலிபோல் ஒலிக்க ஓர் இசைக்கருவி படைத்தான் இசை வல்லான் ஒருவன். அதற்கு அவன், கொக்கரி என்றும் கொக்கரை என்றும் பெயரிட்டான். கரடி போல் ஒலிப்பதைக் கரடிகை என்றும், சல்சல் என ஒலிப்பதை சல்லிகை என்றும் பெயர் வைத்தவன் அவன். ஆதலால், கொக்கரி அமைத்தல் அவனுக்கு இயல்பாயிற்று. கொக்கின் உயரமான காலில் ஒருவன் உள்ளம் தோய்ந்தது. அதன் உடலுக்கும் காலுக்கும் உள்ள பொருந்தாப் பொருத்தம் அவனை வயப்படுத்திற்று; ஒல்கி (ஒல்லி)யாய் நெடிதுயர்ந்த நெடுங்காலனை நெட்டைக் கொக்கன் என்றும், கொக்கன் என்றும், கொக்குக் காலன் என்றும் பட்டப்பெயர் சூட்ட ஏவிற்று. அப்பட்டப் பெயரே பெயராய் அமைந்தாரும் நாம் அறியாதவர் அல்லரே! அக் கால் அவ்வளவுடன் நின்றதா? மூன்று கால் இருக்கை முக்காலியாய், நான்கு கால் இருக்கை நாற்காலியாய் அமைந்தது வெளிப்படை. அவ்வாறு இருக்கை ஆகாமல் கால் நீண்டதாய் ஒட்டடை தட்டவும், அட்டளைப் பொருள் எடுக்கவும், கட்டட வேலைக்குப் பயன்படுத்தவும் அமைந்த நெடுங்காலியாம் செய்பொருளுக்குக் கொக்குக் காலி எனப் பெயரிடச் செய்தது. கொக்குக் காலியே, கோக்காலியாய் வழக்கில் உள்ளதாம். கொக்கின் வளைவெனக் கொக்குச் சொல்லாய்வும் வளையமிடுவதைத் தொடர்வோம். கொக்கின் தோற்றம் பழம் புலவர்களை மிகக் கவர்ந் துள்ளது. அதனால், அவர்கள் பாடல்களில் அது நிரம்ப இடம் பெற்றுள்ளது. கொக்கின் வெண்ணிறம், மழையில் நனைந்த சுண்ணாம்புச் சுவர் போன்றது என்கிறார் புலவர் ஒருவர் (அகம். 346) இன்னொரு புலவர், அக்கொக்கின் வெண்ணிற இறகை, முழுதுற நரைத்த முதியவள் ஒருத்தியின் தலைக்கு ஒப்பிடுகிறார் (புறம். 277). மீனைக் கவர்வதற்காகக் கொக்கு நீர்நிலை அருகே நிற்கும் காட்சி, திருவள்ளுவரைக் கவர்ந்தது. அவர், ஒருவர் எடுத்துக் கொண்ட செயல் நிறைவேறாது என்னும் பொழுதில் கொக்கைப் போல் அமைதியாகப் பொழுதை எதிர்பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்; செயல் நிறைவேறத் தக்க பொழுது வாய்த்துவிட்டால், கொக்கு மீனைக் குத்தி எடுப்பது போல் விரைவாகச் செய்து முடித்துவிட வேண்டும் என்கிறார் (490). கொக்கு தலைசாய்த்து அமைதியாக நிற்கும் நிலையை மழைப் பொழுதில் குவிந்துள்ள ஆம்பல் (அல்லி) மலருக்கு ஒப்பாகப் புலவர் பலர் கூறியுள்ளனர் (நற். 280; குறுந். 117, 122) கொக்கின் கால்கள் நீண்டவை; குச்சி போன்றவை; அவற்றின் நெடுமையைக் கருதிப் பைங்காற் கொக்கு என்று புலவர்கள் உரைத்துள்ளனர் (நெடுநல். 15; சிலப். 10: 115; புறம். 342). கொக்கு, கூட்டம் கூட்டமாகப் போகும். இதனைக் கண்ட புலவர்கள், மான் கூட்டத்தைக் கணக்கலை என்றும், பசுக் கூட்டத்தைக் கணநிரை என்றும் வழங்குவது போலக் கணக் கொக்கு (நற். 230) என்றனர். கணமாவது கூட்டம், தொகுதி எனப் பொருள் தரும். தொழுதி என்னும் சொல்லாலும் பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி (நெடுநல். 15) எனக் குறித்தனர். இனிக், கொக்கின் பார்வை, கூர்மையும் வன்மையும் மிக்கது என்பதை நுண்ணிதின் நோக்கிய புலவர் ஒருவர் பார்வல் கொக்கு என்றார் (பதிற். 21). கொக்கின் பெயரால், கொக்குக்குளம், கொக்குறை குளம், கொக்கலாஞ்சேரி என ஊர்ப்பெயர்கள் அமைந்தன. கொக்கு உறையும் தென்னை மட்டை, பனைமட்டை ஆயவற்றை எண்ணி அவற்றைக் கொக்குறை எனப் பெயர் சூட்டினர். கொக்கின் ஒலிவழியே தமிழர் கொண்ட வளம் பெரிது. அது பற்றிய பாடல்களும் மிகப் பலவாம். கொக்கு முக்காடு: முக்காடு, முடக்கம் என்பவையெல்லாம் சோர்ந்து கிடத்தல் பொருளவை. மூதேவி எனப்படும் பொதுமக்கள் வழக்குக்கு முற்பட வள்ளுவரால் முகடி எனப்பட்டது; மூடிக்கிடப்பவள் முகடி ஆவள். கொக்கு, வளைதல், தலைகவிழ்தல் பொருளில் வரும். ஆதலால் கூனிக் குறுகி மூடிக் கிடத்தல் என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. கொங்கர்: கொங்கு + அர் = கொங்கர் = கொங்கு நாட்டவர். கொங்கர் குடகடல் ஓட்டிய ஞான்றை - புறம். 130 கொங்கர் தலைவன் கொங்கர்கோ எனப்பட்டான். நாரரி நறவிற் கொங்கர் கோவே - பதிற். 88 கொங்கர் நாடு, கொங்குநாடு எனப்பட்டது. ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த - பதிற். 22 கொங்கு: கொங்கு என்பது பொன், பொன்போன்ற தாது (மகரந்தப் பொடி), தேன் என்னும் பொருளிலும் வரும். கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி - குறுந். 2 கொங்குண் வண்டிற் பெயர்ந்து - ஐங். 226 இது கொங்குநாடு என்னும் பெயரீட்டிலும் பெருக வழக் குடையது. கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே - புறம். 273 குமரிப் பெண் என்னும் பொருளில் ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் உள்ளது. பூப்பெய்திக் கருவுறத் தக்காளாம் பருவத்தள் என்பதன் குறியீடாம். கொங்குரை: கொங்கு + உரை = கொங்குரை. கொங்கு நாட்டில் கிடைத்த உரையாணி யிடத்தக்க மாற்றுக் குறையாப் பொன் (மதுரைக். 74). உரை = உரையாணி, உரையாணி இடப்பட்ட பொன். ஆணிப்பொன் என்பது உரையாணி யிடப்பட்ட பொன்னாம். கொங்கை: மரத்தின் தாழ்கிளை கொங்கை எனப்படும். ஆயர்கள் மரத்தின் கொங்கையை வளைத்து ஆடுதின்னச் செய்வது வழக்கம். கொங்கை என்பது மகளிர் நிமிர்ந்த மார்பகம் தாழ்ந்து கவிதலாகச் சொல்லப்படும். கொங்கு என்னும் நாட்டையும் கொங்கை என வழங்கல் உண்டு. கொசுக்கை: கொசு ஒரு சிற்றுயிரி. அதனால் மெலியவை, சிறியவை, எளியவை என்பவற்றைக் கொசுவுக்கு ஒப்பிடல் உண்டு. அவ்வகையில் கொசுக்கை என்பது சிறிது என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்காக உள்ளது. கை என்பது சொல்லீறு. எ-டு: காண்கை, வேட்கை. கொசுவம்: கொய்சகம் > கொசுவம். மகளிர்தம் இடுப்பு உடையைப் பலபடியாய் மடித்துக் கட்டுதல் கொய்சகம் ஆகும். அதன் வழியாகப் பலவகை அடிகளையும் பாவின வகைகளையும் கொண்டுவரும் கலி கொய்சகக் கலி > கொச்சகக்கலி எனப்பட்டது. மகளிர் கொய்சகம், கொசுவம் என வழங்குகின்றது. அவளுக்கு இன்னும் கொசுவம் வைத்துக் கட்டத் தெரியாது என்பது மக்கள் வழக்கு. கொசுவிரட்டல்: கொசு வெருட்டல் > கொசு விரட்டல். கொசுவிரட்டல் = வணிகம் படுத்துவிடுதல். ஈ விரட்டுதல் போன்றது இக்கொசு விரட்டுதலும். வெருட்டுதல் = அஞ்சி ஓடச் செய்தல். இது விரட்டுதலாக வழக்கில் உள்ளது. கொச்சி: கொச்சி என்பது, கொச்சி என்னும் ஊரைக் குறிப்பது பொதுவழக்கு. குழந்தை என்னும் பொருளில் முஞ்சிறை வட்டாரத்தில் வழங்குகின்றது. ஊரின் பெயரிலுள்ள பற்றாலும் அங்குக் கோயில் கொண்ட தெய்வப் பெயராலும் பெயரிடுதல் வழக்கு ஆதலால், கொச்சி என்னும் பெயர் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இது ஒரு குழந்தை பெயராக இல்லாமல் பொதுவில் குழந்தை என்னும் பொருளில் வருதலால் வேறு பொருள் இருத்தல் கூடும். கொஞ்சுதல் வழியாகவோ, கொச்சி மஞ்சள் வழியா கவோ ஏற்பட்டதோ வேறோ எண்ண வேண்டும். இனி, ஆட்டுக்கு எனவும், பாலுக்கு எனவும் ஒரு வாடை உண்டு. அது கொச்சை எனப்படும். குழந்தைக்கென அமைந்த தனி வாடை கருதியதாகுமோ எனவும் எண்ணலாம். உச்சிதனை முகந்தால் - கருவம் ஓங்கி வளருதடி! கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ - பாரதியார். கொச்சிக்காய்: நாம் வழங்கும் மிளகாய் வருமுன், அச்சுவை தருவதாக இருந்தது மிளகு. அது சுக்கு மிளகு திப்பிலி என்னும் மும்மருந்து களுள் ஒன்றாகச் சிறப்புற்றது. மிளகுச் சுவையுடைய காய், மிளகாய் எனப்பட்டது. இது வெளிநாட்டில் இருந்து கொச்சி வழியாக இறக்குமதியாகியது போலும். அதனால் கொச்சிக்காய் என்பது மிளகாயைக் குறிக்கும் வட்டார வழக்காகக் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. கொஞ்ச நஞ்சம்: கொஞ்சம் = சிறிது. நஞ்சம் = மூலை முடங்கியாய் அமைந்த நன்செய் நிலத்துண்டு. கொஞ்ச நஞ்சமாக இருந்த வயலையும் விற்றுவிட நேர்ந்தது. கொஞ்சும் பொழுது அளவாம் சிறிய பொழுது கொஞ்சம்; துண்டு துணுக்கு நிலம் என்பது அது. நன்செய் நஞ்சையாய் நஞ்சமும் ஆகியது. பின்னர்க் கொஞ்ச நஞ்சம் என்பது சிறிது என்னும் பொதுமைப் பொருள் உற்றது. கொஞ்சம்: கொஞ்சுதற்கு ஆகின்ற ஒரு சிறு பொழுது கொஞ்சமாம். அது நீடுதல் ஆகாது. கால அளவாகிய அது பொருள் அளவாகக் கொஞ்சம் தந்தால் போதும் எனவும், இட அளவாகக் கொஞ்சம் விலகி நில் எனவும் வழங்குகின்றது. கெஞ்சும் கொஞ்சும் - திருப்புகழ் கொடி: கொடி:1 கொடு > கொடி. கொடு = வளைவு. இயற்கை வகையுள் ஓரறிவுயிரி கொடி. வளைவுடையதும் இறங்கியும் ஏறியும் படர்வதால் படர்கொடி எனப்படும். செடி கொடி என்பவை இணைச்சொல். கொடி:2 மூவேந்தரும் வில், கயல், புலிக் கொடிகளைக் கொண்டிருந் தனர். பனைக் கொடி பற்றித் தொல்காப்பியர் சுட்டுகிறார் (285). பனைவரைந்த கொடி பலராமனுடையது. சிற்றரசர்களும் கொடியும் குடையும் கோலும் கொண்டிருந்தனர். கொடி:3 மின்னல். மின்வெட்டுங்கால் அதன் வளைவு மின்னுக் கொடி எனப்பட்டது (சிலப். 29:9). மின்னல் கொடி = பெண்பாற் பெயர். கொடி:4 நீளம். பழன வெதிரின் கொடிப்பிணை யலளே - ஐங். 91 கொடி:5 பாம்பு. கொடிபோல் வளைந்து செல்வது பாம்பு. அது கடித்துவிட்டது என்பதைக் கொடித்தடுக்கி விட்டது என்பர் (ம.வ.). கொடி:6 கிழக்கு. கொடிமிசை = கிழக்குத் திசை (கலி. 141 நச்.) கொடி:7 அவரை, சுரை, மல்லிகை எனக் கொடிகளை எண்ணினாலும் இந்நாள் கட்சி, சாதி, சமயக் கொடிகளை எண்ணிவிட முடியாது. வணிகர்கள் தம் வணிக விளம்பரமாகக் கொடி கொண்டி ருந்தமை சிலம்பால் அறியலாம். தொடர்வண்டி நிலையங்களில் பச்சை சிவப்பு விளக்குகளே அன்றிக் கொடியும் உண்டு. பச்சை காட்டினால் வண்டி செல்லலாம் என்பதால் ஒரு செயலைச் செய்ய ஒப்புகை தந்தால் பச்சை காட்டி விட்டார் என்பர். கொடி:8 படர்கொடியை அல்லாமல் செய்பொருள்கள் சில கொடி என வழங்கப்படுகின்றன. வளையமாய் - சங்கிலியாய்த் தொடரும் கொடியும் உண்டு. அவை தாலிக் கொடி, அரைஞாண் கொடி என்பன. கொடி என்பது சங்கிலி என்னும் பொருளில் நெல்லை, முகவை வட்டார வழக்காகும். கொடிச்சி: கொடிபோலும் இடையை யுடைய பெண் என்பது இதன் பொதுப் பொருள். ஆனால் இதன் சிறப்புப்பொருள் மலை வாணர் பெண் என்பதாம். நாறிருங் கூந்தல் கொடிச்சி தோளே - குறுந். 272 கொடிஞ்சி: கொடு > கொடுஞ்சி > கொடிஞ்சி. தேர்த்தட்டின் முன் தாமரைப் பூவடிவில் அமைக்கப் பெறும் தேர் உறுப்பு. கொடுஞ்சி நெடுந்தேர் - அகம். 230, 320, 334 கொடிது: கொடியதாம் அது > கொடியது > கொடிது. கொடிது கொடிது வறுமை கொடிது - ஔவை. தனிப். கொடிது கடிந்து கோல் திருத்தி - புறம். 17 கொடியன், கொடியர், கொடியவர், கொடியோர் முதலனவெல்லாம் கொடிது கொடுமை வழிப்பட்ட சொற்கள். கொடித்தடுக்கல்: கொடித்தடுக்கல் = பாம்பு தீண்டல். கொடி என்பது கொடிபோல் சுருண்ட பாம்பைக் குறித்தது. பாம்பு தீண்டியது என்று சொல்லவும் கூடாது என்னும் கருத்தால் அதனைக் கொடித் தடுக்கியது என்பது நாட்டுப்புற வழக்காகும். பாம்பு நெளிந்து செல்வதும், கொடிபோல் சுருண்டு கிடப்பதும் கொடியென உவமைப்படுத்தத் தூண்டியதாம். கொடு, கொடுக்கு என்பன வளைவு என்னும் பொருள் தருவன என்பதையும் கருதுக. கொடித் தடுக்கியது என்பது மங்கல வழக்காகக் கருதப் படுகிறது. கொடித் தடுக்கியவர்க்கு மஞ்சள்நீர் (தீர்த்தம்) மந்திரித்துத் தருவார் வழிவழியாக உளர். கொடிமங்கலம்: ஓரூர். கோடிமங்கலம் > கொடிமங்கலம் (அபி. சிந்.). கொடிமங்கலத்து. வாதுளி நற்சேந்தனார் அவ்வூரினர். இவர் பாடல்கள் அகம். 179, 232. கொடியர்: கொடியர்:1 கொடி போலும் இடையை உடையவர் மகளிர். அன்றியும் கொடி போல் விரைந்து வளர்பவர் என்றும் கூறுவர். கொடியை யும் கொடிபோலும் மகளிரையும் இரட்டுறலாய்க் கொடியார்க்கும் உண்டோ குணம் என்பதொரு பாட்டு (தண்டி. 47 மேற்.). கொடியார் கொடியார் மதில்மூன்றும். இவை சொல்லணி (தண்டி. 94 மேற்.) கொடியர்:2 கொடுமை செய்யும் குணத்தினர். கொடியர்:3 கொடியைப் பிடித்துச் செல்லும் தூசிப்படைஞர். கொடியர்:4 கொடிபிடித்துச் செல்பவர். கொடிவகை: இவர் கொடி = ஏறிப்படர்வது (Climber) படர் கொடி = நிலத்தில் படர்வது (Creeper) இவர்கொடி வகைகள்: வலந்திரி = வலமாகச் சுற்றி ஏறுவது. இடந்திரி = இடமாகச் சுற்றி ஏறுவது. கொடி = சிறியது பதாகை அல்லது படாகை = பெரியது. (சொல். 41) கொடி வழி: காட்டில் வளைந்து வளைந்து செல்லும் பாதையைக் கொடிவழி எனல் மக்கள் வழக்கு. ஓரிடத்தை அடைய நேராகச் செல்லும் வழியிருக்க அவ்வழியினும் குறுகிய தொலைவில் நேரத்தில் செல்லும் நடைவழி கொடிவழி எனப்படும். தாய்வழிப் பிறந்தவரைக் கொடிவழியினர் என்பதும் மக்கள் வழக்கு. குடிவழியினர் என்பார் தந்தை வழியர். கொடிறு: கொடிறு:1 பற்றுக் கொடிறு போலப் பல்லால் கவ்வுதலால் கன்னம் கொடிறு எனப்பட்டது. கொடிறு உடைக்கும் கூன்கை - திருக். 1077 கொடிறு:2 பற்றிக் கொண்டு அகலவிடாக் கொடிறு போலத்தான் கொண்டுள்ள பொருளைத் தனக்கோ பிறர்க்கோ செலவிடாக் கருமி கொடிறு எனப்படுவான். கொடு: கொடு:1 கொடு = வளைவு. வளைந்த கை, கொடுங்கை எனப்பட்டது. கொடுமுடி, கொடுங்கையூர் என ஊர்ப்பெயர்கள் ஆறு, இட வளைவு நோக்கிப் பெயர் கொண்டன. தேளின் வளைவாம் கைகள் கொடுக்கு எனப்பட்டது. ஏற்றத்தில் நீர் கொண்டு வந்து கொட்டும் சாலொடு வளைத்துக் கட்டப்பட்ட தோற்பை உழவர்களால் கொடுக்கு எனப்படும். முறைமைக்கு மாறான வழியில் துன்புறுத்துதல் கொடுமை எனப்பட்டது. கொடுமை செய்தல் கொடுங்கோல் எனப்பட்டது. வளைந்த கம்பு கொடுங்கோல் என முல்லைப் பாட்டில் இடங்கொண்டது (15). கொடுங்கோல் கோவலர் என்பது அது. சிவந்த நிறமும் வளைவும் நறுமணமும் அமைந்ததொரு கொடி செங்கொடுவேரி என வழங்கப்பட்டது. குறிஞ்சிப் பாட்டில் வருவது அது (64). வளைந்த காயையும், புளி போல் உள்ள அமைவையும் நோக்கிய பொதுமக்கள் வெளிநாட்டு மரம் ஒன்றைக் கொடுக்காய்ப் புளி என வழங்கினர். சுருண்டு வளைந்த காயினது அது. * கொடுகாப்புளி காண்க. கொடு:2 கொடு என்பது ஏவல். தருமாறு ஏவுவது அது. கொடுக்கல் வாங்கல், கொள்வினை, கொடுப்பு வினை, கொடுப்போர் கொள்வோர் என இணைச்சொற்கள் வழங்குதல் பழமை யானவை. கொடுக்கும் கையின் அமைப்பு வளைவாக இருத்தலைக் குறித்த ஆட்சி அது. கொடுகாப்புளி: புளியங்காய் புளிப்புடையது; முதிர்ந்து பழம் ஆனாலும் புளிப்பாகவே இருக்கும். அப்புளியை வாயில் இட்டால் கொடுகும். கொடுகுதல் = புளித்தல். அப்படிக் கொடுகாப்புளி வகை சீமைப்புளி என வழங்குகின்றது. அதனை மக்கள் கொடுக்காப் புளி என்கின்றனர். கொடுக்கன்: கொடுக்கு என்பது வளைவுப் பொருளது. தேளின் கடிவாய் கொடுக்கு எனப்படும். தேளுக்கு வாய்த்த விடம் கொடுக்கில் என்பது தனிப்பாடல். கொடுக்கு உடைய தேளைக் கொடுக்கன் என்பது குமரி மாவட்ட வழக்கு. விருச்சிகம் என்பது விரிந்து சுருங்கும் கைகளால் (கொடுக்குகளால்) ஏற்பட்ட பெயர். விரிசிகை என்பாள் விரிந்து கட்டாத தலைமுடியினள் (பெருங்.) பெயர். கொடுக்கு: கொடுக்கு:1 கொடு > கொடுக்கு. கொடு = வளைவு; வளைவாக அமைந்தது. தேளுக்கு வாய்த்த விடம் கொடுக்கிலே வாழுமே - தனிப். ஔவை. கொடுக்கு:2 வளைந்துள்ள இறைவைக் கூனையில் கட்டிக் கிணற்றில் இருந்து நீரள்ளிக் கொண்டு வரப் பயன்படும் தோலைக் கொடுக்கு என்பது முகவை, நெல்லை வழக்கு. தேளின் கொடுக்கு வளைவாக இருப்பது போன்ற அமைப்பினது அது. கொடு, கொடி, கோடு, குவடு, கொடுமை என்பனவெல்லாம் வளைவு வழிச் சொற்களாம். கொடுக்கு:3 தொடர்வண்டி விளையாட்டில் சிறுவர் சிறுமியர் ஒருவர் இடுப்பு உடையைப் பற்றிக் கொண்டு செல்லுதல் கொடுக்கு எனப்படும். கொடுக்கைப் பற்றாமல் விட்டால் வட்டத்துள்ளே இருப்பவர் ஊடு பாய்ந்து வெற்றி பெற்றவர். ஆதலால் கொடுக்கை விடாது பற்றுவர். கொடுக்கு = இடுப்புடையைக் கையால் வளைத்துப் பற்றுதல். கொடுங்கை: பொதுவகையில் கொடுங்கை என்பது வளைந்த கை என்னும் பொருளது. கொல்லும் கொடிய கையைக் கொடுங்கை எனல் உண்டு. ஓர் ஊர்ப்பெயர் கொடுங்கை. அவ்வூர்ப் புலவர் ஒருவர், கொடுங்கையாண்டான். கொடுமை = வளைவு. மேல்தளத்தில் பெய்த மழைநீர் குழாய் வழியே கீழிறங்குதலைக் கொடுங்கை வழி இறங்குவதாகக் கூறுவர். கொடுங்கை கூன் (வளைந்த) கை எனப்படலுண்டு. கொடிறுடைக்கும் கூன்கை என்பது வள்ளுவம். (1077) தோளில் இருந்து முன்கைவரை வளைத்து அள்ளுதலைக் கொடுங்கை - குடங்கை - என்பது தென்தமிழக வழக்கு. ஒரு கொடங்கை வைக்கோல் அள்ளிக் கொண்டு வா என்பர். கொடுத்தல் அளவு வகை: ஒரு கையளவு தருதல் அள்ளிக் கொடுத்தல். இரண்டு விரல்களின் அளவாய்த் தருதல் கிள்ளிக் கொடுத்தல். நகத்தின் அளவாகக் கொடுத்தல் முள்ளிக் கொடுத்தல். அதனினும் சிறிதாகக் கொடுத்தல் நுள்ளிக் கொடுத்தல். கொடுத்தான் வீடு: இதன்பொருள் வெளிப்படை. மணப்பெண்ணைக் கொடுத்தவன் வீடு, கொடுத்தான் வீடு எனப்படுதல் திருப்பூர் வட்டார வழக்காகும். ஆகவே மணமகளைக் கொண்டவன் வீடு, கொண்டான் வீடு எனப்படுவதும் வழக்கே. கொடுத்து வைத்தல்: கொடுத்து வைத்தல் = எதிர்பாராத வாய்ப்புப் பெறுதல். அரும்பாடு படும் சிலர் எதிர்பார்த்ததை அடைய முடியாமல் தவிப்பர். ஆனால், சிலர் சில வாய்ப்புகளால் எளிமையாக அதனை வரப்பெற்றுவிடுவர். அத்தகையரைக் கொடுத்து வைத்தவர் என்பது பெற முடியாதவர் பேசும் உரை. கொடுக்க மாட்டாதவனும் சில வேளைகளில் கொடுத்து விடுவான். தகுதியில்லாதவனுக்கும் சில வேளைகளில் எதிர்பார்த்தது கிடைத்துவிடும். அத்தகையவனும் கொடுத்து வைத்தவன் எனப்படுவான். முன்னமே கொடுத்து வைத்திருக் கிறான். இப்பொழுது மீளப் பெறுகிறான், என்பது பொருளாம். பெறுவான் தவம் என்னும் திருக்குறள் குறிப்பு நோக்கத் தக்கதாம் (842)! கொடுப்போர்: எப்பொருளையேனும் கொடுப்பது கொடுத்தல் எனினும் கொடை கொடுத்தலே கொடுத்தல் எனினும் பொதுப் பொருளே. இதன் சிறப்புப் பொருள் ஒரு பெண் மகளை ஓர் ஆடவனுக்கு அவன்தரும் கையுறை ஏற்று மனைவியாகக் கொடுப்பவரே கொடுப்போர் என்பதாம். கொடுமை: கொடுமை = கொடிய தன்மை என்னும் பண்பு. செம்மை, சிறுமை, சேய்மை, தீமை என்னும் பண்புகளின் எதிரிடை கொடுமை, பெருமை, அண்மை, நன்மை (நன். 135). கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா - திருக். 1169 கோரம் சண்டம் கடினம் கடுமை கூரம் கொடுமை ஆகக் கூறுவர் - திவா. பண்பு. கொடுமரம்: கொடுமரம் = வளந்த மரமாகிய வில். கொடுமை = வளைவு. வார்கோல், கொடுமர மறவர் பெரும - புறம். 43 கொடும்பாவி: நல்லவர் பொருட்டு மழைபொழிந்து நாடு செழிக்கிற தென்றும் தீயவரையிட்டு மழை பொய்த்துப் பஞ்சமுண்டாகிற தென்றும் பண்டையோர் கருதினர். மழைபொய்த்த காலத்தில் அதற்குக் காரணம் ஒரு கொடும்பாவி என்று கருதி ஊருக்குள் மிகத் தீயவன் என்று பேர்பெற்ற ஒருவனைக் கட்டி ஊருக்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் உயிரோடு எரித்துவிடுவது முதுபண்டை வழக்கம். இதற்குக் கொடும்பாவி கட்டி இழுத்தல் என்று பெயர். நாகரிகம் மிக்க இக்காலத்தில் கொடும்பாவி கட்டி இழுப்பதற்குப் பதிலாகச் சூந்து கட்டித் தெருத் தெருவாக இழுத்து ஊருக்கு வெளியே கொண்டுபோய்க் கொளுத்தி விடுகின்றனர் (சொல். 26). கட்சி, சமயம், சாதி ஆய வகைகளில் தங்களுக்கு மாறானவர்களாகக் கருதப் படுபவர் போல் ஒரு பொ(ய்)ம்மை செய்து தெருத்தெருவாக இழுத்துப் பழியை முழக்கித் தீமூட்டித் தம் எதிர்ப்பைக் காட்டுகின்றனர். எதிர்ப்பைக் காட்டும் இந்நெறியை, முறையெனக் கொண்டால் பெரும்பாலோர் கொடும்பாவி எரிக்கவே நேர்ந்துவிடும்! எரிப்பார்க்கு எதிரிடை எதிர்ப்பார் எனப் பெருகாமல் போகாரல்லவா! கொடும்புரி: முறுக்கடைந்த நூல், சரடு, கயிறு. கழைபா டிரங்கப் பல்லியம் கறங்க ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிறு - நற். 95 கயிற்றைக் கொடும்புரி விழாமல் திரி என்பது ம.வ. கொடும்புறம்: கொடும்புறம் = வளைவான முதுகு. கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத் தொடுங்கினள் - அகம். 86 கொடும்பூண்: வளைந்த அணிகலன்கள்; பூண - அணியப் படுவது பூண். கொடும்பூண் எழினி எனப்பட்டான் ஒருவன். அவன் அதியமான்; அவன்மகன் பொகுட்டெழினியும் ஆய் அண்டிரனும் கொடும் பூண் அணிந்தவர் எனப் பாடு புகழ் பெற்றனர் (புறம். 130, 158, 392). கொடுவரி: கொடு + வரி = கொடுவரி. கொடு(மை) = வளைவு. வரி = கோடு. வளைந்த கோடுகளையுடைய புலி கொடுவரி எனப்பட்ட தாம். குயவரி என்பதும் இது. குயம் = வளைவு. கொடுவழி: கொடு = கொடுமை, வளைவு, நேரற்றது. கொடுவழி:1 கொடுமை மிக்க நடைவழிப் பாதை. கொடுவழி:2 கொடுமை மிக்க நடத்தை முறை. கொடுவாள்: வாள் வகைகள் பல. சுரிவாள், உருவுவாள், உடைவாள், அரிவாள், அறுவாள், பல்லறிவாள், குத்துவாள், குடைவாள் எனப்பல அவை. கொடு என்பது வளைவு; அதன் செயற்பாடு குத்து கொலை வெட்டு துண்டாக்கல் என்பன. ஆதலால் வளைவும் கொடுமையும் உடனாகக் கொடுவாள் எனப்பட்டது. கொடேறு: கொடேறு:1 கொடு + ஏறு = கொடேறு. கொடுமை = வளைவு. நேற்று முழுவதும் சரியான உணவில்லை. பிள்ளை வயிறு கொடேறு என்று கிடக்கிறது. உணவு இல்லாமையால் வயிறு ஒட்டி ஏறிக்கிடக்கிறது என்பது பொருள். இது நெல்லை, முகவை வழக்கு. கொடேறு:2 கொண்டு > கொடு + ஏறு = கொடேறு. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு - திருக். 1264 கோடு பற்றிக் கொண்டு ஏறுதல் பொருளது. கொடை: கொடை:1 பொருட்கொடை. கொடைமேந் தோன்றல் - புறம். 388 கொடை வள்ளல் எழுவர் பாடுபுகழ் பெற்றனர். கொடையாளன், கொடை யாளி, கொடைஞர் என்பாரும் அவர். படையாண்மை போலக் கொடையாண்மை யும் பாராட்டப்படும். கொடை வகை: ஐயம் = இரப்போர்க்கிடுவது. கைந்நீட்டல் = வேலைக்காரர்க்கு விழாநாளில் கொடுப்பது. ஈவு = இறைவன் பிறப்பில் ஒருவனுக்களித்தலாம். பரிசு அல்லது பரிசில் = திறமை கண்டளிப்பது. கொடை = உயர்ந்தோர்க்கும் சிறு தெய்வங்களுக்கும் கொடுப்பது. நன்கொடை (மானியம்) = விளைவை உண்ணும்படி கொடுக்கும் நிலம். கட்டளை = கோயிற்குக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு விடும் நிபந்தம். உறாவரை (முற்றூட்டு) = முழு உரிமையாக அளிக்கும் நிலம். தானம் = அடியார்க்கும் பார்ப்பார்க்கும் அளிப்பது. பரிசம் = மணப்பெண்ணுக்கு அளிப்பது. வண்மை = வரையாதளிப்பது. குருபூசை = அடியார்க்குப் படைக்கும் விருந்து. (சொல். 46) கொடை:2 மணக்கொடை. எந்தையும் எதிர்ந்தனன் கொடையே - அகம். 282 கொடை:3 வணிகம். கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் - பட்டி. 210-211 கொடை:4 கொடை என்பதற்குப் பெருவிழா என்னும் பொருள், கன்னங்குறிச்சி வட்டார வழக்காக உள்ளது. பெருவளமாகத் தெய்வத்திற்குப் படையல் செய்யும் வழக்காலும் உற்றார் உறவு விருந்தினர்க்குக் கொடை புரிதல் வழக்காலும் இப்பெயர் ஏற்பட்டது. மேலும் பலி (நீர், சோறு, பூ, ஊன் முதலியவை) தருதலும் கொடை என வழங்கப்பட்டதை நினைவு கொள்ளலாம். கொடை:5 ஒருவரை ஒருவர் கடுமையாக ஏசிப் பழித்தலை நல்ல கொடை கொடுத்தாய்; இல்லையானால் அடங்கமாட்டான்(ள்) என்பர். கொடைப் பெருமை வசையாகிவிட்ட சிறுமை இது. கொடை கல்: குடைகல் என்பது கொடைகல் என உகர ஒகரத் திரிபாக வழங்குகின்றது. குடைகல் என்பதற்கு உரல் என்னும் பொருள் திருப்பூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. குடைதல் = துளைத்தல், குழியாக்கல். கொடைமடம்: கொடை என்பது மிக்குயர்ந்த பண்பு. கொடையும் தயையும் பிறவிக்குணம் - தனிப். ஔவை. கொள்பவர் வேண்டலை நோக்காது மிக்கும், வேண்டிக் கேட்ட ஒன்றை விடுத்து இரவலர் வேண்டாத உயர்பொருள் வழங்கியும் தம் கொடைச் சீர் காட்டுவாரைக் கொடைமடம் உடையர் என்பர். கடாஅ யானைக் கழற்காற் பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே - புறம். 142 கொடைமடம் பட்டாலும் படைமடம் படாமை இரட்டைச் சிறப்பாகப் பாராட்டப் பட்டார் உளர். கீரைக் கறிக்கு மேலிடுதற்கு அரிசி வேண்டிய போது, இருங்கடறு வளைஇய குன்றத்தன்னதோர் யானை வழங்கிய நாஞ்சில் வள்ளுவனை ஔவையார், மடவன் மன்ற என்று புகழாப் புகழ்ச்சியாகப் பாடினார் (புறம். 140). கொடைமானம்: கொடைமானம் = பழித்தல். கொடையும் மானமும் நற்பொருள் தரும் சொற்களே. எனினும் சில இடங்களில் இவ்விரண்டையும் சேர்த்துச் சொன்னால் வசைப் பொருளாக வருதலுண்டாம். அவள் கொடுத்த கொடைமானத்தை அள்ளி முடியாது என்பதில் கொடைமானம் வசவு (வசை) ஆகின்றது. கொடை பெருமையுடையது எனினும் நேர் எதிரிடைப் பொருளில் வழங்குகின்றது. தப்பு இல்லாதவன் என்னும் பொருள் தரும் சொல் தப்பிலி அது தப்புச் செய்பவரைக் குறித்து நிற்றல் போன்ற வழக்கு இது. கொட்டகாரம்: கொட்டகாரம்:1 நெல்லைக் கொட்டி வைக்கும் களஞ்சியம் கொட்டகாரம் மக்கள் வழக்கில் கொட்டாரம் எனப்படும். பண்டம் குவித்து வைக்கும் இடமாதலால் பண்டாரம் என்பதும் அது. அரமனைக் கொட்டகாரத்தே எடுத்து அளக்க (க.க.இ.சொ.) கொட்டகாரம்:2 கொட்டகை = வளைவு; வளைவான இடம். ஊரிருக்கையும் கொட்டகாரமும் மாதேவர் இருந்த திடலும் என்பதால் ஊரவர் கூடும் இடமாகக் கொட்டகாரம் வழங்கப்பட்டமையும் அறியலாம். (தெ.க.தொ. 2:5) கொட்டகை: உழவர்தம் காட்டுத் தோட்டங்களில் அமைக்கப்பட்ட கூரைக்கட்டடம் கொட்டகை எனப்பட்டது; கொட்டாய் எனவும் மக்கள் வழங்கினர். பெரிய வளமிக்கவர் தம் விளை பொருள்களைப் போட்டு வைக்க அமைக்கப்பட்ட கட்டடம், கொட்டாரம் எனப்பட்டதை எண்ணின் கொட்டகை கொட்டாய் என்பவற்றின் பொருள் விளங்கும். காட்டில் விளைந்த பொருள்களை அங்கேயே மழைக்கும் வெயிலுக்கும் காப்பாகக் கொட்டி வைக்கப்பட்ட கூரை வேய் கட்டடமே கொட்டகை என்பதாம். குழந்தைகள் தம் பொம்மையைப் போட்டு வைக்கும் சிறிய நார்ப்பெட்டியும் - ஓலைப்பெட்டியும் - கொட்டான் எனப்பட்டன. கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்- சிறுபாண். 166 தேள் கொட்டுதல், மழை கொட்டுதல் என்பனவெல்லாம் மக்கள் வழக்கில் உள்ளனவே. தேள் நஞ்சைக் கொட்டுகிறது; மழை நீரைக் கொட்டுகிறது. கொட்டிக் குவிக்கப்பட்ட எப்பொருளும் வட்டமாய் அமைந்து குவிந்து கிடக்கக் காணலாம். கொட்பு வளைவுப் பொருள் தருதல் ஊடகமாக இருத்தலும் தெளிவாம். கொட்டடித்தல்: ஒரு செய்தியை அறிந்தால் அதனை உடனே ஊரெல்லாம் பரப்புவார் உளர். அவர் செயலைத் தமுக்கடித்தல் என்பர். திருவள்ளுவர் அறைபறை அன்னர் என்பார் (திருக். 1076). அதனைக், கொட்டடித்தல் என்பது நெல்லை வழக்காகும். கொட்டம்:கொட்டம்:1 ஓலைப்பின்னலால் அமைந்த சிறிய பெட்டி. மூடி போடப்பட்ட பெட்டியும், மூடி போடப்படாப் பெட்டியும் உண்டு. கொட்டான் பெட்டி என்பது கருப்புக் கட்டி வெல்லம் முதலியவை போட்டுச் சிப்பமாக அனுப்பப் பயன்படுவது. ம.வ. கொடுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் - சிறுபாண். 166 பொருள்: முசுண்டைப்பூ, கொட்டான் போல் பூத்தது கொட்டான் என்பது ம.வ. கொட்டம்:2 வைக்கோல், சாணம், விறகு முதலியவை கொட்டி வைக்கும் மனைப்பகுதி கொட்டம் எனப்பட்டது. அங்கே மாடு கட்டும் வழக்கத்தால் மாட்டுக் கொட்டம் என்றும் வழங்கும். இனி, மாடுகள் சில தண்ணீர் குடிக்கமாட்டா. அவற்றுக்குத் தண்ணீரைப் புகட்டும் ஏனத்திற்கு (தகரத்தால் ஆயது) கொட்டம் என்பது பெயர். கொட்டுவதால் பெற்ற பெயரே அது. போகணி என்பது மக்கள் குடிநீர்க் குவளை. இவை தென்தமிழக வழக்குகள். போகு + உணி = போகுணி > போகணி. கொட்டாட்டுப் பாட்டு: கொட்டு + ஆட்டு + பாட்டு = கொட்டாட்டுப் பாட்டு. கொட்டடித்தலும் அதற்குத்தக ஆடலும், அவற்றுக்கேற்ற பாடலும் ஆகிய மூன்றும் கூடிய கூத்து கொட்டாட்டுப் பாட்டு எனப்படும். இம்முச்சொற் கூட்டு தமிழ்ப் புணர்ப்பு அருமை சுட்டுவதாம். கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானை (தே.) கொட்டாட்டுப் பாட்டொலி யோவாத் துறையூர் பொருந. நச். உரை; 55, உ.வே.சா. அடிக். கொட்டாய்: காடுகளில் கூரை, கீற்று வேய்ந்த வீடுகளைக் கொங்குப் பகுதியில் காணலாம். மற்றை மாவட்டங்களில் கொட்டகை எனப்படும் குடிசை வீடுகள், கொங்கு நாட்டில் கொட்டாய் என வழங்குகின்றது. கொட்டுதல் விளைநிலத்தில் இருந்து வந்த வற்றைக் கொட்டுவதற்கு இடமாக இருந்த அது, பின்னே குடியிருப்புக்கும் ஆகியது என்னும் அதன் வரலாற்றை விளக்கும் சொல்லாகியது. கொட்டாரம்: கொட்டு + ஆரம் = கொட்டாரம் = பொருள்களைக் கொட்டிவைக்கும் மேல் வளை கூடு அமைந்த சேமிப்பிடம். ஆரம் = வளைவு; வட்டம். கொட்டும் இடமாகவும் வளைவு உடையதாகவும் அமைந்த இடம், கொட்டாரம் எனப்பட்டது. கொட்டாரங்கள் தமிழகத்தில் மட்டுமன்றிப் பழஞ்சேரலமாகிய கேரளத்திலும் உள்ளதற்குச் சான்று கொட்டாரக்கரை என்னும் பேரூர். ஆரம் வளைவாதல், கூடாரத்தால் அறிக. அதன்பழம் பெயர் கூடகாரம் என்பது. கொட்டாவி: கொட்பு > கொட்டு + ஆவி = கொட்டாவி. உறக்கக் குறையானும் அயர்வு மிகையானும் உண்டாகும் உட்சுழல் காற்று வெளிப்படுதல் பொதுமக்களால் கொட்டாவி எனப்படுகின்றது. கொட்பு = சுழற்சி. கொட்புற்றெழு நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டு - திருப். கட. கொட்டி: கிழங்கு வகையுள் ஒன்று. வேரில் கொட்டிக் கிடப்பது போல் பண்ணையாகப் பல கொட்டிக் கிடக்கும் கிழங்கு. சிறு கிழங்கு வகையது. கடலைக்காய் குலை குலையாய்க் கொத்துக் கொத்தாய்க் காய்ப்பது போன்றது. கொட்டிக் கிழங்கோ கிழங்கென்பாள் - தனிப். கொட்டியும் ஆம்பலும் அல்லியும் போலுமே ஒட்டி உறுவார் உறவு - தனிப். கொட்டில்: கொட்டு + இல் = கொட்டில். பொருள்களைப் போட்டு (கொட்டி) வைக்கும் வீட்டின் ஒரு பகுதி கொட்டில்; பண்டை இலக்கிய ஆட்சியில் வழங்கிய அச்சொல் அப்பொருளிலேயே மக்கள் வழக்கிலும் உள்ளது. குறுஞ்சாட் டுருளையொடு கலப்பை சார்த்தி நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டில் - பெரும். 188-189 இக்கொட்டில் தொழு, தொழுவம் எனவும் மக்களால் வழங்கப்படும். கொட்டு: கொட்டுதல் = அடித்தல்; தோற்பறை. கொட்டு = கொட்டப்படும் பறை; கொட்டடித்தல் என்பதும் அது. மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் - ஐங். 371 * தோற்பறை காண்க. கொட்டுதல்: கொட்டுதல்:1 நீரைக் கொட்டுதல்; எண்ணெய் முதலாம் நீர்மம் கொட்டுதல். கொட்டுதல்:2 மழை பொழிதல் ;கொட்டோ கொட்டென்று கொட்டியது. கொட்டுதல்:3 தேள், தேனீ கொட்டியது (கடித்தது). கொட்டுதல்:4 கொட்டு - பறைவகை - கொட்டியது. கொட்டுதல்:5 வசை பொழிதல் கொட்டித் தீர்த்து விட்டான் ம.வ. கொட்டுதல்:6 வில் நாண் கொண்டு பஞ்சு கொட்டுதல். கொட்டுதல்:7 மெல்லாமலும் அரைக்காமலும் உணவை அப்படி அப்படியே விழுங்குதலைக் கொட்டுதல் என்பர். இந்தா இதையும் கொட்டிக் கொள் என்று பெருந்தீனியர்க்குத் தருவது வழக்கு. கொட்டுப்பிடி: தச்சுக் கருவிகளுள் ஒன்று கொட்டுப்பிடி. அது புளிய வயிரக் கட்டையால் செய்யப்படுவது. கொட்டுவதற்கும் (அடிப்பதற்கும்) கையால் பிடிப்பதற்கும் உரிய அமைப்புடைமை யால் கொட்டுப்பிடி எனப்பட்டது. மக்கள் வழக்கில் கொட்டாப்புளி என வழுவாக வழங்குகிறது. கொட்டும் குரவையும்: கொட்டு = கொட்டுக் கொட்டுதல். குரவை= நாவை யசைத்து லல்லல்ல என ஒலித்தல். இறந்தவரைக் கொட்டும் குலவையுமாகக் கொண்டு போய்ச் சேர்த்தலைப் பெருமையாகச் சுட்டுவது நாட்டுப்புற வழக்கு. அவ்வாறு செய்யாமல் கொண்டு போய்ச் சேர்த்தவரை தேடி என்ன செய்ய? ஒரு கொட்டு உண்டா? ஒரு குலவை யுண்டா? என்று பழித்துரைப்பதும் உண்டு. குரவை என்னும் சொல் பழைய குரவைக் கூத்தை நினைவுபடுத்தும். அதன் எச்சம் குலவை யாகலாம். கொட்டை: கெட்டிமிக்கதும் வட்ட வடிவானதுமாகிய வித்து கொட்டை எனப்படும். பலாக்கொட்டை, பருத்திக் கொட்டை, புளியங் கொட்டை வேப்பங்கொட்டை, வேலங்கொட்டை முதலியன. இவற்றுள் பின்னை இரண்டும் புளியமுத்து, வேப்பமுத்து எனவும் வழங்கும். கொட்டை இடக்கரடக்குச் சொல்லாகவும் வழங்குகின்றது. தாமரைக் கொட்டை என்பது அதன் பொகுட்டை ஆகும். தெய்வத் தாமரை... சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை - சிறுபாண். 73-76 கொட்டை நூற்றல்: கொட்டை, வில்லால் கொட்டி எடுக்கப்பட்ட பஞ்சு. அதன் விதை கொட்டை எனப்படும். பருத்திக் கொட்டை என்பது அது. நூல் நூற்றல் என்பது வில்லால் கொட்டித் தூய்மை செய்த பஞ்சு கொண்டு நூற்றல். ஆதலால், கொட்டை நூற்றல் எனப்பட்டது. கொட்டைப் பாக்கு: கொட்டை = கெட்டியான வித்து. பாக்கு = துவர்ப்பொருள். கமுகங்காய் முற்றிய நிலையில் பறித்துக் கொட்டையை எடுத்துப் பிளந்து - பக்குவிடச் செய்து - பாக்கு ஆக்குவர். கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும் - திருக். 1068 புண் பக்கு விட்டுவிட்டது; ஆறிப் போயது - ம.வ. பாக்கில் மிகக் கெட்டியாய்ப் பிளக்க அரிதாகவும், மெல்ல அரிதாகவும், மென்றாலும் சக்கை சக்கையாகவும் இருக்கும் பாக்கு கொட்டைப்பாக்கு எனப்படும். பாக்கு பிளத்தலால் ஆவதால் பிளவை என்பதும் மக்கள் வழக்கு. * பிளவை காண்க. கொட்டை முத்து: ஆமணக்கு விதை, முத்து எனப்படும். அதன் எண்ணெய் முத்தெண்ணெய், ஆமணக் கெண்ணெய், விளக்கெண்ணைய், கழிப்பெண்ணெய் (கழிப்பு = பேதி) எனவும் வழங்கும். முத்துக் கொட்டை என்பதும் இது. கொண்கன்: கொள்நன் > கொண்கன் = கணவன்; தலைவன். கொண்கற் கண்டன மன்எம் கண்ணே; அவன்சொற் கேட்டன மன்எம் செவியே - குறுந். 299 கொண்கானம்: கொள் > கொண் + கானம் = கொண்கானம். பலவகை வளங்களைக் கொண்ட மலைக்காடு. இஃது, ஒருமலையின் பெயர்; ஏழிற்குன்றம் எனவழங்கப்பட்டது. கொண்கானம் என்பதும் அதன்பெயர் (நற். 391). பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு ஏழிற் குன்றம் என்பது அது. சேலம் கோவைப் பகுதிகளின் கிழக்கில் அமைந்தது; இதனை ஆட்சி புரிந்தவன் கொண்கானங்கிழான் என்பான். இவனைப் பாடியவர் மோசிகீரனார் (புறம். 154-156). கொண்கானம் என்பது கொங்கணம் எனப்பின்னே வழங்கலாயிற்று. கொங்கன் வந்து பொங்கினான் கொழியல் அரிசிச் சோற்றினை என ஒரு தனிப்பாடலும் உண்டு; சிவஞான முனிவர் பாடியது (தனிப்). ஒரு முனிவர் பெயர் கொங்கணர் என்பது. கொங்கணை யன் என்பது வசைப்பெயரும் ஆயிற்று (ம.வ.). கொண்டல்: நீரை அள்ளிக் கொண்டு சென்று பொழியும் முகில் கொண்டல் எனப்படும். அது பயிர்களுக்கும் உயிர்களுக்கும் இன்றியமையாப் பொழிவுக் காலம் ஆதலின் அதற்குக் காலம் என்பதே பெயர்; கார்காலம் என்பதும் அது. கால் என்பது ஊன்றுதல் பொருளது. வான்முகில் ஊன்றிப் பொழிதல் காலூன்றல் எனப்படும். அக் காலப் பயிர்கள் காலச் சோளம், காலப்பருத்தி எனப்படும். கொண்டல் என்பது கீழ்காற்று, காலமழை, கொண்டல் மழை எனப்படும். மழை பொழிவது போல் சொற்பொழிவு செய்வாரைக் கொண்டல் என்றும் சொற்கொண்டல் என்றும் செஞ்சொற் கொண்டல் என்றும் பாராட்டுவதும் இவற்றை விருதாக வழங்கிப் போற்றுவதும் இருபதாம் நூற்றாண்டு தொட்ட வழக்கம். முன்னே சொற்கோ என்றும் நாவுக்கரசர் என்றும் மணி வாசகர் என்றும் பாராட்டப்பட்ட பெருமக்களை நினைவு கூர்க. கொண்டாட்டம்: கொண்டு + ஆட்டம் = கொண்டாட்டம். குழந்தைகளைத் தோளில் தூக்கிக் கொண்டு; ஆட்டம் போடுதல் வழியாக ஏற்பட்டது கொண்டாட்டம். பின்னே, காவுதடி (காவடி) வேல் முதலியவைகளைத் தூக்கிக் கொண்டு முறையே கோயில் வழிபாட்டிலும், போர் வெற்றியிலும் ஆடியது கொண்டாட்டம் எனப்பட்டது. அதன் பின்னர் மகிழ்வான குடும்ப நிகழ்வு, பொது நிகழ்வு ஆயவை கொண்டாட்டம் எனப்பட்டன. கொண்டி: கொள் > கொண்டு > கொண்டி. கொண்டு இணைப்பதும் கொண்டு வைப்பதும் கொண்டி ஆகும். கதவின் ஒருபக்கத்தையும் மற்றொரு பக்கத்தையும் இணைக்கும் இணைப்புக் கம்பி கொண்டி ஆகும். கொண்டிக் கதவு என்பது அது. பகைவர் நாட்டில் இருந்து கொண்டுவந்து மகளிரை வைத்துள்ள இடத்திற்கும் கொண்டி என்பது பெயர். ஆடுமாடு கள் தொழுவம் நீங்கித் தாமே அயலார் காட்டில் புகுந்து அழிவு செய்தால், அவற்றைக் கொண்டு வந்து அடைக்கும் ஊர்காவல் இடம் கொண்டி எனவும், கொண்டித் தொழு எனவும் வழங்கப் பட்டது. முன்னே ஊரூர்க்குக் கொண்டித் தொழுவங்கள் இருந்தன. கொண்டி = கொண்ட பொருள்; கொள்ளை யிட்டோ, திறை கொண்டோ பெற்ற பொருள். கடற்படை அடற் கொண்டி - புறம். 382 கொண்டு மாறி: ஆண்டு மாறி என்பது வசைச் சொல். வாய்ப்பாக இருந்து கெட்டுப் போவது ஆண்டுமாறி. கொண்டு மாறி என்பது பெண் கொண்டு அவ்வீட்டுக்குப் பெண் கொடுப்பது கொண்டுமாறி என்பதாம். பெண் கொடுத்து, பெண் எடுப்பது என்பது அது. இது முகவை வழக்கு. கொண்டை: ஒன்றொன்றாகத் தனித்துக் கிடந்த பலவற்றைக் கொண்டு ஒன்றாக அடுக்கி அவை பிதிர்தல் இல்லாவாறு திரட்டி முடி போடுவது கொண்டை ஆகும். மகளிர் கூந்தல் கொண்டை எனப்படும். கூட்டுமாறுக்கும் கொண்டை வைத்துக் கட்டுவதுண்டு. அதுவும் கொண்டை என வழங்கும். கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர் - புறம். 61 கூட்டிக் கட்டுதல் இல்லாமல் இயற்கையாகவே மயிலுக்கும், சேவலுக்கும், கிளிக்கும், தலையில் கொண்டை உண்டு. ஆண்பால் அடையாளம் அக்கொண்டையாம். நீர் திரண்டன்ன கோதை வியல் விசும்பு கமழப் பிறக்கிட்டு - நீர் திரண்டாற் போன்ற வெள்ளிய பூக்களால் செய்த மாலைகளை அகற்சியையுடைய விசும்பிலே சென்று நாறும்படி கொண்டையிலே முடித்து மதுரைக். 562 நச். கூந்தலாம் கொண்டை இறுக்கம் தளராமல் இருக்கச் செறித்து வைக்கப் பயன்படுவது கொண்டை ஊசியாம். ஆண் களும் கொண்டை போட்டதுண்டு. கொண்டையன் கோட்டை என்பதில் கொண்டையுடையவன் என்றிருத்தல் காண்க. கொண்டை போடுதல்: கொண்டை போடுதல் = நாகரிகமின்மை. மகளிர் கொண்டை போடுதல் நம்நாட்டில் கண்கூடு. முன்னர் ஆடவரும் கொண்டை போட்டனர். கல்வியறிவு பெற்றவரும், நகர நாகரிகம் வாய்ந்தவரும் கொண்டை போடுவதை நாட்டுப் புறத்தாரின் நாகரிகமில்லாச் செயலாகக் கருதினர். அதனால், எவராவது ஏதாவது இடக்காகச் சொன்னாலும் குறைத்து மதிப்பிட்டாலும், கொண்டை போட்ட ஆளைப் பார்த்துக் கொள் என்று தலையைத் தட்டிக் காட்டுவர். இவ்வழக்கால் கொண்டை போடுதல் என்பது அறியாமை, நாகரிகமின்மை என அவர்கள் கருதும் பொருள் தருவதாயிற்றாம். கொண்மூ: கொண்மு > கொண்மூ = நீர் அள்ளிக் கொண்ட கருமுகில்; காளமுகில். ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ - புறம். 35 பொருள்: ஞாயிற்றைத் தன்மேற் கொண்ட பக்கந் திரண்ட முகில் (ப.உ.) கொதி: கொதி என்பதற்கு ஆசை என்னும் பொருள் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. அனலில் கொதித்து எழும் உலைநீர் மேலும் மேலும் எழுவது போல மேலே மேலே எழும் ஆசையைக் கொதி என்றது எண்ணச் சிறப்பின் இயல்பான விளைவாம். கொதுக்கு: இலாமிச்சை, புளி முதலியவற்றைக் கரைத்து வடித்த பின் எஞ்சும் எச்சத்தைக் கொதக்கு என்பர். கொதுக்கு என்பது நெல்லை மாவட்ட வழக்காக உள்ளது. இலக்கிய வழக்கில் பிழிந்து எடுக்கப்பட்ட எச்சத்தைக் கோது எனல் உண்டு. திப்பி என்பதும் தென்தமிழக வட்டார வழக்கே. கொத்தல் கொதுக்கல்: கொத்தல் = சதைப்பற்று இல்லாமல் காய்ந்து சுண்டிப்போன புளி; எளிதில் கரையாதது. கொதுக்கல் = கரைத்த பின்னர்க் கரைபடாமல் எஞ்சும் சக்கை. புளியைக் கரைத்துக் குழம்பு வைப்பார், புளி நன்றாகக் கரையாததாக இருப்பின் கொத்தலும் கொதுக்கலுமாக இருக்கிறது எனக் குறைப்பட்டுக் கொள்ளும் வழக்கில் இருந்து வந்தது இக்கொத்தல் கொதுக்கல். கொத்து: கொத்து:1 கொத்துக் கொத்தாகப் பூ உள்ளது; கொத்துக் கொத்தாகக் கொத்தவரை காய்த்துள்ளது என்பவை மக்கள் வழக்கு. கொத்து:2 ஒரு குடும்பமாக அமைந்து கூடிப் பணி செய்தல் கொத்து ஆகும் என்பது கல்வெட்டுச் செய்தி. கோயில் தானத்தோம் கோயில் பெண்டுகள் மக்களும் புத்திர புத்திரமும் இவர்கள் பெறும்படி இக்கோயிலுக்கு முன்னாக நாண்முறைமை மணி மங்கல மாணிக்கத்தின் கொத்து வாணராயனும் அபிமான பூஷணமான அவதரையனும் (தெ.க.தொ. 8:55). கொத்து:3 ஒரு குலத்துப் பிறந்த ஒரு குடியினர் கொத்து எனப்படுதல் சேற்றூர் வட்டார வழக்கு. கொத்து:4 என்ன வேலை பார்க்கிறீர்கள் என்றால் சிலர் அத்தக் கொத்து வேலை என்பது நாட்டுப்புற வழக்கு. கூலி வேலை என்பது அது. அன்றன்று வேலைக்கு அன்றன்று சம்பளம் வாங்குவது கூலி வேலையாம். அற்றைக் கொற்று என்பதன் வழுவழக்கு இது. * கூலி, கொற்று, சம்பளம் காண்க. கொத்து குலை: கொத்து = அவரை, துவரை முதலியவற்றின் காய்த்திரள். குலை = முந்திரி, வாழை முதலியவற்றின் காய்த்திரள். கொத்துமுரி என்பது கொத்துமல்லியாம். கொத்து நிமிர்ந்தோ பக்கவாட்டிலோ இருப்பதையும், குலை கீழே தொங்குவதையும் எண்ணுக. கொத்துமுரி என்பது கொத்தினைக் குறிக்கும். கொத்து கூலி: கொத்து = அன்றன்று தவசந் தந்து பெறும் வேலை. கூலி = ஆண்டுக்கணக்காக ஒப்பந்தஞ் செய்து தவசந் தந்து பெறும் வேலை. கொத்தும் கூலியும் தவசந் தந்து பெறும் வேலையே எனினும் முன்னது அற்றைக் கொத்து எனப்படும். பின்னது ஆண்டுக்கூலி எனப்படும். வேலை செய்து விட்டு வீட்டுக்குப் போகும் போதே அதற்குரிய தவசத்தைப் பெற்றுக் கொள்வதால் அற்றைக் கொத்து என்பதே வழக்கமாயிற்று. கூலிக்கு ஆண்டுப் பிறப்பு என்றும், ஆடிக் கணக்கு என்றும் இருவகை யுண்டு. இப்பொழுது காசு பணம் தருவதும் கூலியா யிற்று. கூலி ஆங்கிலத்திற்கும் சென்று ஒட்டிக் கொண்டது. கொத்துதல்: கொத்தி எடுத்துத் தின்னுதல் கொத்துதலாகும். குத்துதல் கொத்துதல் ஆயிற்று. கொத்தித் திரியும் அந்தக் கோழி என்றார் பாரதியார். இனிக் களை குத்தியும், களை கொத்தியும் வெவ் வேறாதல் போல் குத்துதலும், கொத்துதலும் வேறுபடுவனவு மாம். கொக்கு மீனைக் குத்தி எடுப்பதற்கும், கோழி புழுவைக் கிண்டிக் கிளைத்துக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு அறிக. கொத்தை கொசுறு: கொத்தை = பழுதுபட்ட அல்லது கெட்டுப் போன பொருள். கொசுறு = காசு இல்லாமல் தருவது; இலவயம். கொத்தை, சொத்தை எனவும் சூத்தை எனவும், சூன் எனவும் வழங்கும். கொசுறு, கொசறு எனவும் வழங்கும். கொத்தை வாங்கு பவர் கொசுறும் கேட்கும் போது கொத்தை கொசுறு வாங்காமல் போகமாட்டாயே என்பர். கொந்தல்: குமரி மாவட்டத்தில் மேல்காற்றைக் கொந்தல் என வழங்கு கின்றனர். கொண்டல் என்பது நீர்கொண்டு வரும் கீழ்காற்றைக் குறிப்பது பொதுவழக்கு. இது மாவட்ட வழக்காக உள்ளது. ஆனி ஆடிமாதக் கொந்தலிலே, குளிர் ஆடுகள் போல் கொடுகி நிற்போம் என்பது நாஞ்சில் கவிமணி பாடல் அடி. கொந்துதல்: பனங்காய் முதலியவற்றை அரிவாளால் வெட்டிக் கொந்திக் குதறி (குறுக்கு மறுக்குமாக வெட்டி)த் தின்னுதல் கொந்துதலாகும். அணில் முதலியவை குதறிக் கடித்து உண்ணுதலைக் கொந்துதல் என்றும் கூறுவர் (பேரகராதி). துன்புறுத்தல் பொருளில் கொந்துதல் என்னும் சொல் வருதலை நான்மணிக் கடிகை குறிக்கும். கொந்தி இரும்பிற் பிணிப்பர் கயத்தை என்பது அது (10). கொந்துதல் குதறுதல்: கொந்துதல் = பறவை தன் அலகால் ஒன்றைக் குத்திக் கிழித்தல் கொந்துதலாம். குதறுதல் = கிழித்ததைக் குடைந்து அலகால் எடுத்து உதறுதல் குதறுதலாம். கொத்தி அல்லது குத்திக் குதறுதல் என்பதும் இது. பறவை, இறந்து போன ஒன்றைக் கொந்திக் குதறுதலும் அதனைத் தின்னுதலும் காணக் கூடியது. பறவை எனினும், காகம், கழுகு, பருந்து என்பவை குறிப்பிடத் தக்கவையாம். கொப்பாடு: செம்மறியாட்டுக் கடாவிற்குக் கொம்பு உண்டு. பெண் ஆட்டுக்குக் கொம்பு இல்லை. அரிதாக, கொம்பு பெண் ஆட்டுக்கு இருந்தால் அதனைக் கொப்பு (கொம்பு) ஆடு என்பது ஆயர் வழக்கு. கொப்பி: பிடியாகப் பிடித்து (பிண்டித்து) உருட்டி வைத்த சாண உருண்டையைக் கொப்பி என்பது செட்டி நாட்டு வழக்கு. கொம்மை = திரட்சி. கொப்பி, குப்பி இன்னவும் கொம்மி, கும்மி, கும்பல், குப்பல் இன்னவும் ஒருவழிப்பட்ட திரட்சிப் பொருளவை. கொப்பும் குழையும்: கொப்பு = மரக்கிளை. கிளை = கொப்பில் உள்ள இலை தழை. கொப்பும் குழையுமாகவா மரத்தை வெட்டுவது? நிழலைக் கெடுத்துவிட்டாயே என்பது வழக்கு. இலை என்பது தனித்ததாம். தழையென்பது குச்சி வளார் முதலியவற்றில் உள்ள இலைத் தொகுதியாம். ஆடு மேய்ப்பாரும், தொளியில் (சேற்றில்) தழையிட்டு மிதிப்பாரும் கொப்பும் குழையுமாக வெட்டுவர். நெல் நடவில் தொளி நடவு என்பது கருதத் தக்கது. கொப்பூழ்: கொட்பு > கொப்பு + ஊழ் = கொப்பூழ். கொப்பு= வளைவு. கொப்பூழ் = உந்திச்சுழி. தொப்புள் கொடியை அறுத்து எடுக்கப்பட்ட வயிற்றின் வட்ட வடிவக் குழி கொப்பூழ் எனப்படும். தாமரை உந்தி என்பதும் அது. நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ் - பொருந. 37 ஊழ் = ஊழ்த்தல்; இயற்கையாய் அமைந்த தொடர்பு. கொம்படி: வடகிழக்குத் திசை, மழைக்குறி காணும் திசையாம். அத்திசையைக் கொம்படி என்பது தலைக்குளம் வட்டாரச் செங்கல் சூளையர் வழக்குச் சொல்லாகும். ஆற்றுவெள்ளம் என்னும் முக்கூடற் பள்ளுப் பாடலில் நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி என்னும் ஆட்சி உண்டு. காற்று இயல்பாகச் சூளையில் மூட்டப்பட்ட தீயைத் தள்ளிக் கொண்டு செல்ல வாய்க்கும் தலைக்கால் அது ஆதலால் கொம்படி எனப்பட்டதாம். கொம்பன், கொம்பி: இவை ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்பவற்றைக் குறிக்கும் தக்கலை வட்டார வழக்குச் சொல்லாகும். கொம்பன் என்பது கொம்புடைய யானை போன்றவன் என்னும் உவமை வழியாக வந்த பெயராகும். கொம்பன் என்பதற்கு ஏற்பப் பெண்பால் கொம்பி ஆயதாம். இனி, கொம்பு என்பது கிளை; அக்கிளை போன்றவன் ஆண் என்றும், கிளையில் படரும் கொடியாக இருப்பவள் கொம்பி என்றும் கொள்ள வாய்க்கும். பெண் கொடி என்பது திருமந்திரம். கொம்பில்லா வெண்பா: கொம்பு எழுத்து வாராமல் பாடப்படுவதொரு வெண்பா (அந்தாதி) இது. கொம்பு ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு என்பவை. இவ்வெழுத்துகள் பாடலில் இடம் பெறாவண்ணம் பாடப்படுவதாயிற்று. இது ஒலியமைதி நோக்கிய பனுவல் பிரிவாம். இதழகல்பா, இதழ் குவிபா என்பன போலக் கொள்க. திருச்சுழியல் கொம்பில்லா வெண்பா வந்தாதி இவ்வகைக்கு எடுத்துக்காட்டாம். கொம்பு: மரத்தின் கிளையின் பிரிவு கொம்பு ஆகும். கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் மரத்தைச் சுட்டுவார் ஔவையார். ஆடுமாடு முதலியவற்றுக்கும் கொம்பு உண்டு. கொம்பு போன்றதாதலின் அப்பெயர் பெற்றது. கொம்பு கொப்பு எனவும் வழங்கும். காதணியுள் ஒன்று கொப்பு. எழுத்துகளில் ஒற்றைக் கொம்பு இரட்டைக் கொம்பு உண்டு. கொம்பு சுழி கோணாமல் எழுதுக என்பது ஓர் ஆணைமொழி. விலங்கின் கொம்பு மருப்பு, கோடு எனவும் வழங்கும். திரிமருப்பு இரலை - குறுந். 338 திரிமருப்பு எருமை - குறுந். 279 கோட்டினில் குத்தி - மணிமே. 13:47 கொம்பு சீவல்: கொம்பு சீவல் = சினமுண்டாக்கி விடல். மாடுகளின் கொம்புகளைச் சீவுதல் வழக்கம். அதிலும் முட்டும் மாடுகளின் கொம்பைச் சீவி அதன்மீது குப்பி மாட்டி, அக்குப்பியில் சதங்கையும் போட்டிருப்பர். மாடு வருகிறது; தலையசைக்கிறது என்பவை, அறியாமல் நெருங்கிச் செல்ல நேர்பவர்க்கும் அச்சுறுத்தித் தீமையிலிருந்து அது விலக்கும். ஆனால் அம்மாட்டின் கொம்பைச் சீவிவிட்ட அளவில் நின்றுவிட்டால் என்ன நிகழும்? மழுக்கைக் கொம்பிலும் கூரான கொம்பால் கொடுமையாகக் குத்திக் கொலைப் பழியும் புரியும். அவ்வாறே சிலர், சிலர்க்குச் சில செய்திகளைச் சொல்லிச் சூடேற்றிக் குத்து வெட்டு கொலைப் பழிகளுக்கும் ஆளாக்கி விடுவர். அது கொம்பு சீவிவிட்டது போன்றதாகும். கொம்பேறி: கொம்பு + ஏறி = கொம்பேறி. கொம்பேறி என்பது பாம்பு வகையுள் ஒன்று. கொடும் சீற்றம் உடையது எனக் கொண்டு, கொம்பேறி மூர்க்கன் என்றனர். மரக்கிளைகளில் இயல்பாக ஏறி இறங்குதலாலும் மரங்களில் கட்டிய கூடுகளில் முட்டை, குஞ்சு ஆயவற்றைக் குடித்தும் கடித்தும் திரிதலாலும் கொம்பேறி மூர்க்கன் என்றனர். நுனிக்கொம்பர் ஏறினார் - திருக். 476 எனப்படுபவர் மக்கள். கொம்மட்டிக்காய்: கொம்மட்டிக்காய்:1 கொம் + அட்டி + காய் = கொம்மட்டிக்காய். கொம்மை = உருண்டு திரண்டது; அட்டி = செறிவுடையது. கசப்பு மிக்கதும் உருண்டு திரண்டதுமாம் (ஒருவகைக் கொடியின்) காய் கொம்மட்டிக்காய் ஆகும். கொம்முட்டிக்காய் என்பதும் அது. உடலில் உண்டாம் அரிப்பு, பொரிதல் நோய்களுக்கு அதன்சாறு தடவல் நலம் செய்யும். பசுமையும் வெள்வரிகளும் உடையது. பழுத்தால் மஞ்சள் நிறமாம். கொம்மட்டிக்காய்:2 தற்பூசுணை என்னும் தண்ணீர்ப் பூசுணையைப் புதுவை மாநிலத்தார் கொம்மட்டிக்காய் என்பர். வடிவும் நிறமும் ஒப்ப அமைந்தவை இவை எனினும் சிறிது பெரிது என்பதில் பெருத்த வேறுபாடு உண்டு. பயன்பாட்டிலும் அப்படியே வேறுபாடு உண்டாம். * தற்காலம் காண்க. கொம்மை: கொம்மையாவது திரட்சி. எங்குக் கொழுமையும் வளமையும் திரண்டிருக்கிறதோ, அங்கு அழகும் உண்டாம். கொம்மை மகளிர் மார்பகத்தைக் குறிப்பது. அவர்தம் அழகு நலச் செறிவு ஆங்கு உண்மையால், கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் என்றார் திருவள்ளுவர் (திருக். 1087). கொய்தல்: கொய்தல் = பறித்தல். எ-டு: பூக்கொய்தல். கொய்ய வேண்டாது தானே உதிரும் பழம் கொய்யாப் பழம். கொய்தல் இன்றும் மக்கள் வழக்குச் சொல். கீரை கொய்தல்; கீரை அரிதல், பறித்தல். அவரை கொய்யுநர் - புறம். 215 பூக்கொய் படலம் கம்பராமாயணத்தில் உண்டு (பால. 15). கொலை: கொல் + ஐ = கொலை = கொல்லுதல், உயிரைப் போக்குதல். காடழித்து நாடாக்கியதைக் காடு கொன்று நாடாக்கி என்பதும், முள்முடல்களை அழித்த இடத்தைக் கொல்லை என்பதும், களைப் பயிரை அழித்தலைக் களை கொல்லல் என்பதும், அதனை வெட்டு கருவியைக் களை கொல்லி என்பதும், நன்றி மறப்பதை நன்றி கொல்லல் என்பதும் இன்ன பிறவும் எண்ணின் உயிரைப் போக்கல் கொலை என்பது தெளிவாம். சினம் கொள்ளலைச் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர் (306). உயிர் கொல்லி நோய்களைக் கொல்ல வல்ல அரிய பாவையாம் மூலிகைகளையுடைய மலையைக் கொல்லி எனப் பெயரிட்ட அருமை, கொல்லிப் பாவை என ஒன்றிருந்து அழிசெயல் புரியுமெனப் பண்டே புனையப் பெற்றமை, இன்றும் நம்பும் செய்தியாகவே இலக்கியத்தில் இடங்கொண்டது. கொலைக்களக் காதை சிலம்பு கண்டது. பண்புக் கொலை அன்றி எழுத்துக் கொலை, தற்கொலை என்பவை அறியாதவை இல்லையே! அருட்கொலை (கருணைக் கொலை) என வேண்டுவாரும் உளர். கொல்: கொல்லே ஐயம் - தொல். 753 இயல்பாக இறந்து கிடப்பார்க்கும் உறங்குவார்க்கும் வேறுபாடு காணாமையின் உண்டாய ஐயம், கொல்லே ஐயம் எனத் தூண்டலாயிற்றுப் போலும். இறந்தார் எனப் பொதுமக்களால் எண்ணப்படுவாரும் மருத்துவர் உறுதி செய்த பின்னரே இறந்தார் எனச் சான்று வழங்குதல் இந்நாள் நிலை. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு - திருக். 1081 கொல்லர்: மரத்தை வெட்டி வேண்டும் பொருள் செய்வார், மரங்கொல் தச்சர் எனப்பட்டார். அதன் பின் இரும்பு, வெண்கலம், வெள்ளி, பொன் முதலாம் மாழை செய்வாரும் கொல்லர் எனப்பட்டனர். கொல்லு வேலை என்பது கொல்லர் வேலை. கொல்லுத் தொழில் என்பதும் அது. கொல்லுத் தொழில் கொற்றொழில், கொல்லர் துறை கொற்றுறை என வழங்கும். லகரம் றகரமாகத் திரிந்து புணரும். கொலைத் தொழில் எனின், கொலைத் தொழில் என்றே வழங்கும். கொற்கை பழநாளில் காசு அடிக்கப்பட்ட (நாணயம் அடிக்கப்பட்ட) இடமாம். அதனைக் கொல்புலி போலக் கொல்கை எனப்பிரித்தலும் பொருள்காணலும் பொருட் கொலையாம். * கொற்கை காண்க. கொல்லியும் ஓரியும்: கொல் + இ = கொல்லி. கொல்லிமலை பழைய இலக்கியங்களில் பாடுபுகழ் பெற்ற தமிழ்மலை, அதன் தலைவனாகத் திகழ்ந்த வல்வில் ஓரியின் வீரமும் கொடையும் புறநானூற்றில் பொலிவாகத் திகழ்கின்றது. வன்பரணர்க்கு ஊரும் பேரும் உரையாமல் உதவிய வள்ளல் கொல்லிமலை யாண்ட வல்வில் ஓரி. அவன் அம்பு, யானை, புலி, மான், பன்றி, உடும்பு என்பவற்றை உருவிப் புற்றில் தங்கியதைப் புறப்பாடல் (152) கூறுகிறது. வில்லில் வல்லான் ஓரி என்பதைத் தமிழ்மண் மறந்ததால் வில்லில் வல்லார் எவர் எவர் கதையோ தமிழுலகில் உலாக் கொள்கின்றன! * ஓரி காண்க. கொல்லை: முள், முடல், தூறு, செடி, முதலியவற்றை எரியூட்டி யழித்தும், மேடு பள்ளம் திருத்தியும் செய்யப்பட்ட தோட்டமும், முல்லைக் காடும் கொல்லை எனப்பட்டன. காடு திருத்தி அமைக்கப்பட்டதே - ஆகாச் செடிகொடி களைக் கொன்றே ஆக்கப்பட்டதால் கொல்லை எனப்பட்டதாம். வீட்டின் பின்னே தோட்டம் துரவு இருந்தமையால் அது கொல்லைப் புறம் என்றும், பின்வாயில் கொல்லை வாயில் என்றும் வழங்கப்பட்டது. ஆங்கே வெளிக்குப் போதலால் கொல்லைக்குப் போதல் என்பதும் உண்டாயது. தினைக் கொல்லை என்பது காடு சார்ந்தது. தினை, எள், கொள், வரகு முதலியவை கொல்லைப் பயிர்களாம். கொழு: கொழு = உள்ளே துளைப்பது. நிலத்தை உழும் ஏர் அல்லது கலப்பை மரத்தால் செய்யப்பட்டது. அம்மரம் நிலத்தைக் கிழித்து அகழ ஆகாமை கண்டு அதன் உழுகுத்தியின் நுனையில் வலிய இரும்புக் கொழுவைக் கொண்டி வைத்து உட்புறம் செறித்தனர். அதற்குக் கொழு என்பது பெயர். தோல் தையல் செய்வார் தோலைத் துளையிடக் குத்தூசி ஒன்று வைத்திருப்பர். முதற்கண் அதனைக் கொண்டு குத்தி அத்துளையில் நூலொடு அல்லது வாரொடு கூடிய ஊசியைச் செறித்துத் தைப்பர். இதற்கு உதவும் குத்தூசிக்குக் கொழு என்பது பெயர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க நாளில் பெரும்பெரும் புலவர்கள் ஈடுபட்டு ஆய்ந்து மறுப்பும் மறுப்புக்கு மறுப்புமாக எழுதிய கட்டுரைகள் இந்நாள் தொட்டு அந்நாள்வரை நடந்துவரும் செந்தமிழ் இதழில், கொழுத் துன்னூசி விளக்கம் என வெளிவந்தது. அயின்ற காலைப் பயின்றினி திருந்து கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே ... ... மழுங்கி - பொருந. 116- 118 மீன் வகையுள் ஒன்று கொழுமீன். கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் கொழுமீன் - புறம். 13 கொழுஞ்சி: குறுஞ்செடி வகையுள் ஒன்று கொழுஞ்சி. இயற்கைப் பசுந்தாள் உரமாக இயற்கை வழங்கிய கொழுங்கொடை கொழுஞ்சியாம். அதன் கொழுமையும் உரமும் கொண்டே ஆய்வுத் திறத்தால் பெயரிட்ட பெரியோர் பெருமையை உணராமல் செயற்கை எரிம உரங்களால் மண்புழுவைக் கெடுத்து மண்வளத்தையும் கெடுத்தோம். கொழுஞ்சி, நிலத்திற்கு நல்லுரமாக இருத்தலால் அதனை ஆடு மாடுகளும் தீனியாகக் கொள்ளாப் பெருந்தகைமை கொண்டுள! இயற்கை வியத்தகு செயன்மை இஃதாம்! வித்தும் கனியும் தரும் எம்மலரையும் கோயிலுக்குக் கொண்டு செல்வது உண்டா? அருளாளர் திட்டம் அறக்காப்புரிமை என்றால் ஆடு மாடுகளின் வளக்காப்புரிமை கொழுஞ்சி, ஆவிரை போல்வன வற்றைத் தின்று அழியாமையாம் ஆக்கச் செயலாம். கொழுத்தவன்: கொழுத்தவன் = பணக்காரன், அடங்காதவன். கொழுப்பு என்பது கொழுமைப் பொருள்; ஊட்டம் தேங்கியுள்ள பொருள்; கொழுப்பு என்னும் இச்சொல் அக்கொழுப்பைக் குறியாமல், பணப்பெருக்கத்தைக் குறிப்ப தாகவும் வழங்கும். அதனை விளக்கமாகக் கொழுத்த பணம் என்றும், கொழுத்த பணக்காரன் என்றும் கூறுவதுண்டு. உடல் வலிமை காட்டி அடிதடிகளில் முறைகேடாக ஈடுபடுபவனைக் கொழுத்தவன் என்பதும் வழக்கே. கொழுப்பு அடங்கினால்தான் சரிக்கு வருவான் என்பதால் கொழுப்பு தடிச் செயலுக்கு இடமாக இருத்தல் அறிக. கொழுத்தவன் எல்லாம் ஒருநாள் புழுத்து நாறும் போதுதான் உணர்வான் என்பதன் கொழுப்பு அடாவடித்தனத்தைக் குறிப்பதே. ஆனால், இயற்கைக் கொழுமையே உலகின் வளமையாம். கொழுநர்: ஒரு மனைவியின் கருத்துக்கும் கண்ணுக்கும் கொழுமை யானவராகவும் தம் வளத்துக்கும் வாழ்வுக்கும் உரியவராகவும் உரியவர் கொழுநர் ஆவர். கொள்கொம்பு, கொள்நன் என்ற இருபெயர்களும் கொள் என்னும் சொல்லையே முதனிலையாகக் கொண்டிருப்பதும் முறையே கொழுகொம்பு, கொழுநன் என மருவித் திரிவதும் கவனிக்கத் தக்கன. கொள்கொம்பு என்பதில் கொள்ளுதல் தொழில் கொடியினதாகவும், கொள்நன் என்பதில் கணவனதாகவும் கொள்ளப்படும் (சொல். 3). கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின் நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென - மலை. 302-303 கொழுந்து: கொழுமையான இளம்பருவ அல்லது தளிரிலை கொழுந்து எனப்படும். மருக்கொழுந்து எனவும் கொழுந்து வெற்றிலை எனவும் மக்கள் வழக்கில் உண்டு. கொழுநன் உடன்பிறந்தானைக் கொழுந்தன் கொழுந்து என்பன உறவுமுறை. கொழுந்தனார் என்பதும் அது. கொழுந்தி பெண்பால். கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே - நற். 224 கொழுந்து வகை: துளிர் அல்லது தளி = நெல் புல் முதலியவற்றின் கொழுந்து. முறி அல்லது கொழுந்து = புளி வேம்பு முதலிய வற்றின் கொழுந்து. குருத்து = சோளம் பனை முதலிய வற்றின் கொழுந்து. கொழுந்தாடை = கரும்பின் நுனிப்பகுதி. (சொல்.66) கொழுப்பு: கொழுமையானது கொழுப்பு. மேல்தோலை ஒட்டி உள்ளே அமைந்த கொழுமைப் பொருளே கொழுப்பாம். உடல்தோற்றம், உடல்வளம் என்பவற்றின் அடிப்பொருளாக இருப்பது கொழுப்பு ஆகும். ஒழுகை உய்த்த கொழுவில் பைந்துணி வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை - பதிற். 44 கொழுப்பு அளவோடு இருத்தலே நல்லுடம்புக் குறி என்பது மருத்துவம். கொழுப்பைக் குறைக்கப் பல்வேறு பயிற்றகங்களும் பயிற்சிக் கருவிகளும் உருவாகிப் பெருகி வருதல் நகரங்களில் கண்கூடு. உழைப்பைப் போற்றிச் செய்வார்க்கு அத்துயரோ பயிற்சியோ வேண்டுவதில்லை! கொளஞ்சி: பரம்பர் வழக்கில், கொளஞ்சி என்பது துண்டுத் தோல் என்னும் பொருளில் வழங்குகின்றது. ஒன்றோடு ஒன்று இணைத்துக் கொள்ளத் தக்கதான தோல். இதனை இணைத்து மூட்டும் வார் கொளஞ்சி வார் என்பது பரம்பர் (தோல் தையலர், துன்னகாரர்) வழக்கில் உள்ளது. கொளீஇ: கொள் > கொளி > கொளீஇ = கொளச் செய்து, கொளுத்தி, பற்ற வைத்து. இரும்புசெய் விளக்கில் ஈர்ந்திரிக் கொளீஇ - நெடுநல். 42 தீக்கொளுத்துதல் - என்பது ம.வ. கொளுத்திக் கொடுத்தல்: தூண்டுதல் என்னும் பொருளில் இச்சொல்லாட்சி திருப்பாச்சேத்தி வட்டார வழக்கில் உள்ளது. எரியும் விளக்கில் எண்ணெய் திரி இருந்தாலும் சுடர் குறையும் போது திரியைச் சற்றே தூண்டி (மேலேற்றி) விட்டால் பளிச்சிட்டு எரியும். அதுபோல் சிலர்தாமே செயலாற்ற மாட்டார். அவரைத் தூண்டிவிட்டால் சிறந்த பணி செய்வார். இதனைச் சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்னும் பழமொழி விளக்கும். கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்பது மடம் என்பதன் பொருளாக உரையாசிரியர்கள் கூறுவர். கொளுத்து: சங்கிலியின் பூட்டுவாயைக் கொளுத்து என்பது திருநயினார் குறிச்சி வட்டார வழக்கு ஆகும். கொக்கியை வளையத்துள் மாட்டுதலே பூட்டுதல் ஆகும். ஒன்றோடு ஒன்று பொருந்திக் கொள்ளுமாறு வைப்பது கொளுத்து ஆயிற்று. தீயும் திரியும் அல்லது பற்று பொருளும் ஒன்றை ஒன்று பற்றிக் கொள்ள வைப்பதே கொளுத்துதல் என்பதை ஒப்பிட்டுக் காணலாம். கொள்ளி, கொள்ளை என்பனவும் கொள்ளுதல் வகையால் அமைந்தவையே. கொளுத்தோட்டி: வளைந்த தோட்டியும் கழையும் இணைந்ததே தோட்டி (தொரட்டி) என்னும் கருவியாகும். கொக்கி அல்லது அரிவாளைக் கொண்ட கழையைக் கொளுத்தோட்டி என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். கொளை: கொளை:1 பண்ணோடு இசையும் ஒருங்கே கொண்ட இசைப்பா. புரிநரம் பின்கொளைப் புகல்பாலை ஏழும் - பரி. 7 கொளை:2 கொண்ட கொள்கை. கொளைதவ றாதவர் தீமை மறைப்பென்மன் - கலி. 34 கொள்: கொள்:1 கூலவகையுள் ஒன்று கொள்; எள்ளும், கொள்ளும் புன்செய்ப் பயிர்கள். கொள் என்பது பெருவழக்குச் சொல் எனினும் நெல்லைப் பகுதியில் அது காணம் என வழங்கப்படும். எள்ளுக்கு ஏழுழவு கொள்ளுக்கு ஓருழவு; எள்ளும் கொள்ளும் வெடித்தாற் போல என்பவை பழமொழிகள். கொள் = வளைவு. வளைவமைந்த காயையுடையது கொள் எனப்பட்டது. கொள் + பு = கொட்பு = வளைவு, சுழற்சி. கொட்புற் றெழு - திருப். கொள்:2 பெண்ணுறுப்புகளுள் ஒன்று கொள். அதன் அமைப்பும் கொள்ளும் தன்மையும் பொருந்திய சொல்லாகும். கொள்:3 கொள் என்பது ஏவல் பொருளில் வழங்குதல் வெளிப்படை. பெற்றுக் கொள்ளுதல் பொருளது. கொள்கை: கொள்கை:1 கொள்கை = கோட்பாடு. ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் - புறம். 191 கொள்கை:2 கொள்கை = நோன்பு. வடுவில் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடுவில் கேள்வியுள் நடுவா குதலும் - பரி. 2 கொள்கை:3 கொள்கை = கற்பு. செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி - புறம். 210 கொள்கை:4 கொள்கை = இயல்பு. துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர் - மதுரைக். 644 கொள்கை:5 கொள்கை = கொள்ளுதல். கொடுந்திமில் பரதவர், கொழுமீன் கொள்கை - நற். 175(ச.இ.க) கொள்முதல்: ஒரு பொருளைக் கொண்டு இன்னொரு பொருளை வாங்குதல் வேண்டுமானால் கொள்வதற்கு முதல் வேண்டும். இல்லையானால் கொள்ளவோ அதனால் ஊதியம் கொள்ளவோ இயலாது. ஆதலால் வணிகர் பொருளீட்டுதற்கு வழி கொள் முதல் ஆகும். கொள்முதல் செய்ததை இருப்பு வைத்து வேண்டு மிடத்து வேண்டுங்காலத்து விற்று ஊதியம் பெறுவதற்கு அடிப் படை கொள்முதல் ஆகும். கொண்டுள்ள முதலே கொள்முதல். முதலிலார்க்கு ஊதியம் இல்லை - திருக். 449 கொள்வனவு: ஒரு பொருளை வாங்கிக் கொள்ளுதல் கொள்வனவு எனல் ஈழத் தமிழர் வழக்காக உள்ளது. கொள்வினை கொடுப்பு வினை என மணக்கொடை பற்றிய சொல்லாகத் தமிழக வழக்கில் உள்ளது. கொள்வது பற்றிய பொதுமைக் குறியோடு ஈழ வழக்குள்ளது. கொள்வினை கொடுப்புவினை: கொள்வினை = மணமகளை மணமகன் மணம் கொள்ளுதல். கொடுப்புவினை = மணமகனுக்கு மணமகளை மணமகள் வீட்டார் கொடுத்தல். மணப்பெண் எடுத்தல் கொடுத்தல் ஆகிய சடங்குகளைக் கொள்வினை கொடுப்புவினை என்பர். கொள்ளுதல் கொடுத்தல் என்பவை மிகப் பழங்காலச் செய்தியாம். பெண் கொடுத்தல் பெண் எடுத்தல் என்னும் வழக்கமே இக்காலம் வரை உள்ளது. மாப்பிள்ளை எடுத்தல் கொடுத்தல் என்னும் வழக்கு இல்லாமையைக் கொண்டும் தெளிக. கொள்வோன்: ஒருவர் ஒன்றைத் தர அதனைப் பெற்றுக் கொள்பவன் கொள்வோன் ஆவான். கொள்ளும் கையும் கொடுக்கும் கையும் வளைவாக இருக்கும் அமைவை நினைக்க. கொள் என்னும் வளைவுப் பொருளும் விளங்கும். பொருளைக் கொள்வோன் போல அறிவைப் பெற்றுக் கொள்வோனும் கொள்வோனே. அவன் மாணவன் ஆவன். ஆசானிடம் கற்றுக் கொள்ளும் செயலால் பெற்ற பெயர் அது. கொடுப்பவர் ஆசிரியர். ஆதலால், கொள்வோன் கொள்வகை அறிந்தவன் உளம்கொளக் கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்கிறது நன்னூல் (36). கொள்ளாம்: கொள்ளாம் என்பது கொள்ளத் தக்க நல்லது என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. கொள்ள ஆம் என்பதன் புணர்ப்பு கொள்ளாம் ஆயது. கொள்ளாம் என்னும் எதிர்மறை வழக்குக்கு மாறான உடன்பாட்டுப் பொருள் வழக்கு இது. கொள்ளார்: கொள்ளார்:1 கொள்ளார் = எதையும் ஏற்றுக் கொள்ளார். ஒப்புக் கொள்ளார் எனக் கொள்ளார் பலர். ஆனால் சீரிய கொள்ளாரும் உளர். அவர், கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று - புறம். 204 என்பவர். இத்தகையர், வேண்டாமை கொண்ட விழுச்செல்வர் (திருக். 363); அவா வறுத்த துறவர். கொள்ளார்:2 கொள்ளார் = பகைவர். கொள்ளார் ஓட்டிய நள்ளி - புறம். 158 கொள்ளி: கொள்ளி:1 இறந்தோர்க்குக் கொள்ளிக் கடன் செய்தல் ஆண்பிள்ளை கடமையாகக் கொண்டமையால் கொள்ளி என்பது ஆண் பிள்ளையைக் குறிப்பதாகத் தென்தமிழ கவழக்கு உள்ளது. பிள்ளையும் இல்லை; கொள்ளியும் இல்லை என்னும் மரபுத் தொடரில் பிள்ளை, ஆண்பிள்ளையையும், கொள்ளி எரி மூட்டலையும் குறித்தன. கொள்ளி:2 கொள்ளி = எரிவிறகு. கொள்வது, கொள்ளி. எதைக் கொள்கிறது என்றால், தீயை அல்லது எரியைக் கொள்கிறது. கல்லைத் தேய்த்தோ. தீக்கடை கோலால் கடைந்தோ உண்டாக்கப்பட்ட எரியைத் தான் கொண்டு எரிவதால் கொள்ளி எனப்பட்டது. கொள்ளி பற்றிய கட்டை கொள்ளிக்கட்டை. நிலத்தடியில் இருந்து மேலே எழும் வெப்பொளியைக் கண்டு அஞ்சியவர் அத்தோற்றம் கண்டு அதனைக் கொள்ளி வாய்ப் பேய் என்று அச்சப் பொருள் ஆக்கினர். தீமை செய்வதைக் குறியாகக் கொண்டவனைக் கொள்ளி (தீ) முடிவான் எனப் பழித்தனர். அது வசைமொழி வழக்கில் ஊன்றியது. கொள்ளி முடிவான்: கொள்ளி முடிவான் = ஓயாது தீமையாக்குபவன். கொள்ளி = நெருப்பு; முடிவான் = முடிந்து வைப்பவன், தனக்கு முடிந்து வைப்பவன். சில பேர் எப்போதும் ஏதாவது தீமையைக் குடும்பத்துக்கு ஆக்கிக் கொண்டே இருப்பர். அவரைக் கண்டாலே பெற்றவர், உடன் பிறந்தவர், கொண்டவர், கொடுத்தவர் ஆகிய அனைவருக்கும் என்ன செய்வாரோ என்னும் அச்சம் உண்டாகும். அத்தகையரைக் கொள்ளி முடிவான் என்பர். கொள்ளி முடிவானுக்கு எப்போது போக்காடு வருமோ, நமக்கு நிம்மதி வருமோ எனப் பெற்றவர்களையும் படுத்தும் பேய்ப் பிறப்பனே, கொள்ளி முடிவானாம். கொள்ளுதல்: பெற்றுக் கொள்ளல், எடுத்துக் கொள்ளல், வாங்கிக் கொள்ளல், கொடுத்துக் கொள்ளல், கெடுத்துக் கொள்ளல் எனக் கொள்ளல் பெருவழக்காம். வணிகம், கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைபடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல் கொண்டித் துவன்றிருக்கை என்று பட்டினப்பாலையில் சொல்லப்படும் (210 - 212). தினற்பொருட்டால் கொள்ளா துலகெனின் யார்யார்க்கும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் என்னும் திருக்குறள் (256). கொள்ளுதல் என்பது மிகுதியானால் கொள்ளை எனப்படும். பயறுவகை, பலசரக்கு வகை என்ன, காய்வகை கனிவகை எல்லாமும் கொள்ளை விலையாகிவிட்டது என்பதும், இந்த ஆண்டு நல்ல மழை கொள்ளை விளைச்சல் சந்தையில் கொள்ளையாய்ப் பொருள்கள் குவிந்து கிடக்கின்றன என்பதும் மக்கள் வழக்குகள். வாங்கிக் கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல் போல உட்கொள்ளுதலும் கொள்ளுதல் எனப்பெறும். உண்டைகொள் மதவேழம் என்றார் கம்பர் (பால. 1071). கொள், கொள்ளையாகி எவர் பொருளையும் எப் பொருளையும் வன்முறை தீ வைப்பு என்றும் கொலை என்றும் செய்து உள்ளவற்றை யெல்லாம் கொள்ளை யடிப்பது பகைவென்று பாழ்படுத்துவார் செயலாகப் பழநாள் வழக்கு தனிப்பட்டவர்கள் வீடு புகுந்து கொள்ளையடிப்பதும், பள்ளிக்கூடம் கல்லூரி பல்கலைக்கழகமென வள்ளலாகத் தம்மைக் காட்டிக் கொள்ளையடிப்பதும் இந்நாள் வழக்காகி விட்டது. கொள்ளையா போகின்றது இப்படிக் கத்துகிறாய் என்பதில் கொள்ளை என்பது கூச்சல் குழப்பம் பரபரப்பு என்பவை எல்லாம் சேர்ந்து கிடத்தல் புலப்படுகின்றது. கொள்ளை ஆசை, கொள்ளை அழகு என உள்ள மிகுதி, கவர்ச்சி மிகுதி என்பவை கேட்கப்படுகின்றன. மிகுதியாம் நீர்ப் பெருக்கைக் கொள்ளும் ஆறு, கொள்ளிடம். தீயைக் கொண்டு எரியும் கொள்ளிக் கட்டை; இறுதியில் உடலாம் கட்டைக்குக் கொள்ளி வைத்தல் சடங்கு. நிலத்தில் இருந்து கிளம்பும் தீப்பிழம்பைக் கொள்ளிவாய்ப் பேய் என்பதும் சினந்து சீறிக் கொதிப்பாரைக் கொள்ளிவாய்ப் பேய் என்பதும் நாடளாவிய செய்திகளே. கொள், கொண் என ளகரம் ணகரமாகத் திரிந்து நீர் கொண்ட கீழ்காற்றைக் கொண்டல் என்பதும், ஒருங்கு திரண்ட முடியையும், ஒருங்கு கட்டிய விளக்கு மாற்றினையும், மயில் தலைமேல் எழுந்த தூவியையும் கொண்டை என்பதும் அறியலாம். கொள் முதனிலை நீண்டு கோள் ஆகியது நாள் கோள். குறிக்கோள், கோள் கூறல் என விரிவாவதும் எண்ணலாம். * கொண்டல், கொண்டி, கோள் காண்க. கொள்ளுதல் கொடுத்தல்: கொள்ளுதல் = பெண் கொள்ளுதல். கொடுத்தல் = பெண் கொடுத்தல். இதனைக் கொள்வினை கொடுப்புவினை என்றும், கொண்டவர் கொடுத்தவர் என்றும் கூறுவதுண்டு. கொள்ளுதல் கொடுத்தல் என்பவை பெறுதலும் தருதலும் பற்றிய பொதுமையிலிருந்து பெண்ணை மணத்தலும் மணக்கக் கொடுத்தலும் ஆகிய நல்வினையைக் குறித்து நின்றது. கொள்வோர் கொடுப்போர் என்னும் குறியீடு தொல்காப்பியப் பழமையுடையதாம் (1088). கொள்ளை: பிறர்க்கு உரிமையாம் பொருளை வல்லாண்மையால் ஒரு சேரக் கொள்வதும் அழிவு செய்வதும் கொள்ளை ஆகும். கொள்வதால் பெற்ற பெயர் எனினும், கொள்ளும் போது கொள்ளி வைத்து ஊரையே அழிப்பதும் செய்தனர். பகைவர் நாட்டை அழிப்பதில் அவ்வளவு கொடுமை. ஆங்குள்ள பொருள் களைக் கவர்வதுடன் பெண்டுகளையும் கொண்டு வந்தனர். கொண்டு வந்த மகளிர் கொண்டி மகளிர் எனப்பட்டனர். அவர்கள் வைக்கப்பட்ட வளாகம் கொண்டி எனவும், வேளம் எனவும் வழங்கப்பட்டன. கொள்ளை நோய்: தொற்றுநோய் ஒருவர்க்கு வந்தால் அவரையும் அவர் பயன்படுத்தியவற்றையும் நெருங்கியவர்க்கும் தொற்றித் துயர் ஊட்டும். ஆனால் இக்கொள்ளை நோய் அதனினும் கொடிது. கொள்ளை நோய் உயிர் கொல்லி நோய்; ஒருவர்க்கு அது வந்தால் அவரை நெருங்கியவரை யெல்லாம் உயிர் வாங்கும் கொடியது. பொருளைப் பகைவர் ஒரே பொழுதில் கொள்ளையடித்து அள்ளிக் கொண்டு போவது போல் கொள்ளை நோய்ப் பட்டார் உயிரையெல்லாம் அள்ளி பிணக்கொள்ளை யாக்கும். பெருவாரி நோய். எலியால் ஏற்படும் இந்நோய் அருமுயற்சியால் அழிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கழிச்சல் (காலரா) நோய் என்னும் பெயரால் ஆங்காங்குத் தோன்றி நான் அழிந்திலேன் என அடையாளம் காட்டாமல் இல்லை. பெரிய அம்மை நாட்டில் ஒழிக்கப்பட்டாலும் தலைகாட்டவில்லை என்று சொல்ல முடியாமை போன்றது இது. கொள்ளையில் போதல்: கொள்ளையில் போதல் = கொள்ளை நோயில் இறத்தல். கொள்ளை என்பது பெருங்களவை - ஊரெல்லாம் திரட்டியடித்துக் கொண்டு போன பெருங்களவை = க் குறிக்கும். கொள்ளை என்பது மிகுதிப் பொருளது. கொள்ளை விலை கொள்ளை கொள்ளையாய் விளையும் என்பவற்றில் கொள்ளை மிகுதிப் பொருளதாதல் அறிக. அதுபோல் பலரை ஒருங்கே கொல்லும் கொடிய கழிச்சல் நோய் (காலரா) கொள்ளை நோய் எனப்படும். பெரியம்மை நோயும் ஒரு காலத்தில் கொள்ளை நோயாக இருந்தது. எலி வழியே பற்றும் பிளேக் என்பதோ பெருங்கொள்ளை நோய். இந்நோய்கள் மக்களைப் பெரிய அளவில் வாட்டிய நாளில் கொள்ளையில் போதல் என்னும் வழக்கு எழுந்தது என்க. கொள்ளையும் கொலையும்: கொள்ளையர்கள் வல்லடியாகப் புகுந்து நாடு நகர்களைக் கொள்ளை யடிப்பதும், கொள்ளையடிக்கத் தடையாக இருப்பாரை அல்லது தடையாக இருப்பார் எனப்படுவாரைக் கொன்றொழித்துக் கொள்ளையடித்தலும் ஆகிய இணைப்பை மொழிவது கொள்ளையும் கொலையும் என்னும் இணைமொழி. களமலி குப்பை காப்பில வைகவும் - புறம். 230 அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும் - கம்பர். தனிப். கள்வார் இலாமைப் பொருட்காவலும் இல்லை - கம். பால. 73 என்பவை போல்வன கற்பனையோ இட்டுக்கட்டலோ எதிர்கால எதிர்பார்ப்போ என்று எண்ண வைக்கின்றன. கொறி: கொறிப்பு என்பது மெல்லுதல்; சற்றே கடுமையாக மெல்லுதலே கொறித்தல் எனப்படும். மெல்லுதல் போல அழியச் செய்யும் கண்ணேறு என்னும் நம்பிக்கையால் கொறி என்பதைக் கண்ணேறு என்னும் பொருளில் தூத்துக்குடி வட்டாரத்தார் வழங்குகின்றனர். கொறித்தல்: மணி, கொட்டை, தவசம், பருப்பு முதலியவற்றை அணில் தின்னல் போல் நுனிப் பல்லால் கடித்துத் தின்னல் கொறித்தலாகும். குளிருக்குக் கொறி என்று பயறு, கடலைகளை வறுத்துத் தருவது இன்றும் சிற்றூர் வழக்கமாம். கடித்தலுக்குக் கடைவாய்ப் பல்லும், கொறித்தலுக்கு முன்வாய்ப் பல்லும் பயன்படல் வேறுபாடாம். கொற்கை: கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியனைச் சிலம்பு பாடுகின்றது. வெற்றி வேற்கை வீரராமன் கொற்கையாளி குலசேகரன் புகல் நூல், இளஞ் சிறுவரும் அறிந்தது! பழங்கொற்கை, பரவை அலைப்பால் பட்டழிந்தாலும், அக்கொற்கைச் சிறப்பும், கொற்கைப் பெயர் தாங்கியுள்ள ஓர் ஊரும், ஏட்டு வழக்கிலும் நாட்டு வழக்கிலும் இன்றும் விளங்கி வருகின்றன. கொற்கையின் சிறப்பை முதற்கண் ஆய்வின் வழியே உலகுக்கு உணர்த்தியவர் முனைவர் கால்டுவெல்! கோநகர் - கொற்கை என்னும் நூல் வழியே கொற்கையைத் தடம்பதித்துக் காட்டியவர் நுண்கலைச் செல்வர் அ.இராகவன். அறிஞர்கள் கொற்கையின் இடமும் தடமும் கண்டு தெளிந்துள்ளனர்; ஊர்ப் பெயர்க் கரணியம் பற்றியும் அறியத் தலைப்பட்டுள்ளனர். கொற்கை என்பது, கொல்கே, கொல்கீ என்று கிரேக்க நாட்டவராலும் உரோம நாட்டவராலும் குறிக்கப் பெற்றுள்ள தாம்! திருச்செந்தூர் கல்வெட்டு ஒன்றில் கொல்கை என்ற குறிப்புள்ளதாம். ஆதலால் கொல்கை என்னும் பெயரே கொற்கை ஆகியிருக்க வேண்டும் என்று அறிஞர் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வந்தார். கொல்கை என்பதைக் கொல் - கை எனப் பிரித்துக் கொலை செய்யும் கை போன்றது என்று பொருள் கண்டார். தொன்முது மாந்தன் கொல் கருவி கையாகவே இருந்ததாகலின் அப்பெயர்ப் பொருத்தத்தால் கொற்கையாகி இருக்க வேண்டும் என்று விளக்கினார்! கொற்கையில் இருந்தவர் மட்டுமோ கொல்கையர்? இக்கொடுமைப் பெயரையோ தம் ஊர்க்குச் சுட்டி உவகையுறுவர்? முனைவர் கால்டுவெல் வரைந்த திருநெல்வேலி வரலாற்று நூலை மொழி பெயர்த்தவர் முனைவர் திரு.ந.சஞ்சீவி. அவர் இவ்வாய்வுக்கு ஒரு மேல் விளக்கக் குறிப்புக் காட்டினார். கடற்கரைப் பட்டினமாகிய அந்நகர்க்கும் கடல் அலைப்புக்கும் உள்ள தொடர்பை உன்னி, அலைகள் கொல்லும் (தாக்கும், தகர்க்கும்) இடம் என்று பொருள் கண்டார். அதற்குக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாறு என்னும் சிலம்பின் அடியையும் மேற்கோள் காட்டினார். இஃது அலைத் தாக்குதலை நிறுவும் சான்றே யன்றி ஊர்ப் பெயர் அமைதிக்கு உரிய சான்றாகாது என்பது வெளிப்படை. கால்டுவெல் காட்டிய கொல் என்னும் சொல்லுக்கு வேறு நயம் காட்டி விளக்கிய விளக்கமே இஃது என்ற அளவில் அமையலாம்; அவ்வளவே! பொருளோடு பொருந்துவது அன்றாம். கை என்பது இடப்பொருட்சொல் என்று முனைவர் சஞ்சீவியார் கூறுவது ஏற்கும் இனிய குறிப்பு, குறுக்கை, திருவதிகை, திருக்கடிகை, வேளுக்கை, திருத்தணிகை என்னும் இன்ன ஊர்கள் பலவும் இவ்வியலால் அமைந்தனவேயாம். ஆனால், கொல் என்னும் சொல் பற்றி ஆய்ந்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்! கொல் என்பதன் பொருள் கொலைத் தொழிலொடு தொடர்பு கொண்டதோ? கொல்லுத் தொழிலொடு தொடர்பு கொண்டதோ? முதற்கண் ஆய்வுக்குரிய செய்தி ஈதே. ஒரே சொல் மூலத்தின் வழியே அமையும் பலபொருட் புணர்ச்சியை முட்டுறா வகையில் அமைத்தலே சங்கச் சான்றோர் வழக்கு. அவ்வழக்கினைக் கொண்டு ஆய்தலே முட்டறுத்து முடிவுறுத்த வல்லதாம்! கொல்லுதல் தொழில் சுட்டும் புணர்ச்சிகள் எல்லாம் இயல்பு வழிப்பட்டன. கொல்குறும்பு, கொல்படை, கொல்பிணி, கொல்புனம், கொல்களிறு என்றே பழ நூல்களில் பயின்றுள. கொற்குறும்பு, கொற்படை, கொற்பிணி, கொற்புனம், கொற்களிறு என எங்கும் லகரப் புள்ளி, றகரப் புள்ளியாய்த் திரிந்தன அல்ல. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு - திருக். 735 சொல்லுறழ் மறவர்தம் கொல்படைத் தரீஇயர் - பதிற். 58 கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க - பதிற். 67 கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கம் - பதிற். 50 கொல்புனக் குருந்தொடு கல்லறைத் தாஅம் - அகம். 133 இருஞ்சே றாடிய நுதல கொல்களிறு - நற். 51 கொல்களிற்று ஒருத்தல் - நற். 92 கொண்டி மறவர் கொல்களிறு பெறுக - பதிற். 43 கொல்களிற்று உரவுத்திரை பிறழ - பதிற். 50 கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து - பதிற். 52 கொல்களிறு மிடைந்த பஃறோல் தொழுதி - பதிற். 83 கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் - புறம். 9 கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் - புறம். 55 உயர்ந்தோங்கு மருப்பிற் கொல்களிறு - புறம். 153 கொல் எனும் இவையெல்லாம், கொலைத் தொழிற் பாற்பட்டு, வல்லின வருமொழி முன் இயல்பாய் நின்றன. இனிக், கொல்லுத் தொழில் தொடர்பினவற்றைக் காண்போம். தொண்டைமானுழைத் தூது சென்ற ஔவையார் பாடிய புறப்பாட்டில் (95) படைக்கலங்களைச் சுட்டிக் காட்டி, இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்டிரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே; அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ என்பதில் கொல்லுத்துறை கொற்றுறை யாதல் அறிக. கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொற்சேரி என்னும் ஐந்திணை ஐம்பதும் (21), கொற்சேரித், துன்னூசி விற்பவர் இல் என்னும் பழமொழியும் (5) கொல்லுச் சேரியைக் கொற்சேரி என்றது அறிக. கொற்பழுத் தெறியும் வேலார் என்று வேலும் (435), கொற்புனைந்தியற்றிய கொலையமை கூர்வாள் என்று வாளும் (1:46:89) சிந்தாமணியிலும் பெருங்கதையிலும் வந்தமை அறிக. இனி, ஆசிரியர் தொல்காப்பியனார், நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல என்றும் (371), பவணந்தியார், நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்வழி யானும் றகர மாகும் என்றும் (232) விதி வகுத்தலையும், இவற்றுக்கு உரை கண்டோர் காட்டிய எடுத்துக்காட்டுகளையும் நோக்குக. கொல் என்பது சூர் என்றாற் போலக், கொல்லன் என்னும் உயர்திணைப் பொருளைக் காட்டி நின்ற அஃறிணைச் சொல் என்று சங்கர நமச்சிவாயரும், முகவை இராமாநுசக் கவிராயரும் நன்னூலின் உரைக்கண் விளக்கியதை உன்னுக. இவற்றால், கொலைத் தொழில் கொண்டு கொற்கைப் பெயர் பெற்றிருக்க இயலாது என்றும், கொல்லுத் தொழில் கொண்டே கொற்கைப் பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் துணிக. கொல்லுத் தொழில், பயில வழங்கும் தொழிலாயிற்றே, அதன் பெயராலே ஓர் ஊர்ப்பெயர் அமைதல் சாலுமோ எனின், ஆய்ந்து கொள்ளத் தக்கதேயாம். அலைவாய்க் கரையில் அமைந்த ஊரெல்லாம் அலைவாய் என்னும் பெயர்க்கு உரியவையாயினும் திருச்சீரலைவாய் எனத் திருச்செந்திலும், அலைக்கரை வாயெல்லாம் ஒலியெழுப்புதல் உண்டு எனினும், தரங்கம்பாடி என ஓர் ஊரும், கடல் முனைக்கோடியெல்லாம் கோடிக்கரை எனினும், கோடிக்கரை என ஓர் இடமும் உளவாதல் போலப் பலப்பல இடங்களிலும் கொல்லுத் தொழில் நிகழுமாயினும் யாதானும் ஒரு தனிச் சிறப்பு உண்மையால் அத்தொழில் தொடர்பாக ஊரின் பெயர் இடப்பெற்றிருத்தல் வேண்டும் என்க. அவ்வாறு தனிச் சிறப்பாகக் கொல்லுத் தொழில் நடந்ததே யாமாயின், அதுதான் யாது என்பதை அறிவதே நிறுவும் சான்றாகும். பொன்வகை ஐந்தென முந்தையோர் கண்டனர். அவை இரும்பு, ஈயம், செம்பு, வெள்ளி, தங்கம், என்பன. அவற்றைக் கொண்டு பணிசெய்வோர் பொற்கொல்லர் எனப் பெற்றனர். பொன் செய்கொல்லர்(ன்) எனச் சிலம்பு கூறும் (5:31; 20:74) கொல்லுத் தொழில் செய்து கொண்டு கொழுந்தமிழும் வளர்த்த சான்றோர்கள் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், மதுரைக் கொல்லன் புல்லன், மதுரைக் கொல்லன் வெண்ணாகனார், மதுரைப் பெருங்கொல்லன் என்பார் என்பது பெயரளவானே புலப்படும். படைக்கலம் முதலாம் கருவிகள் செய்தல், அணிகலம் உண்கலம் முதலாம் கலங்கள் செய்தல், தெய்வத் திருவுருச் செய்தல் என்பவை சீறூர் பேரூர் இடங்களிலெல்லாம் நடைபெறும், கொல்லு நீங்கிய தனிமைக் கொல்லு ஒன்று உண்டு. அது காசு என்னும் நாணயம் செய்யும் கொல்லுத் தொழிலாம். காவலரால் நிறுவப் பெற்றுக் கட்டுக் காவலுடன் செய்யப் பெறுவது அத்தொழில். அரசர் இருந்து கோன்மை செலுத்தும் கோநகர்க் கண்ணே செய்யப் பெறுவதாம் தொழில் அதுவேயாம். இதனை எந்நாட்டு வரலாறும் தெள்ளிதிற் காட்டுதல் அறிந்ததே! ஆங்கிலர் ஆட்சிக் காலத்தில் பொற்காசு அடித்த இடம் தங்கசாலைத் தெருவாக இன்றும், சென்னையில் விளங்குதல் கண்கூடு. பண்டை நாளில் தங்க சாலையை அக்கசாலை (அஃகசாலை) என வழங்கினர். இந்நாளில் இரும்பாலை, செக்காலை, நூற்பாலை, என்று விளங்குவன போலத் தங்கசாலை விளங்கியது. தங்க வேலை நடைபெறும் இடத்தை அக்கசாலை என்பது முந்தையோர் வழக்கு. கோவலன் பொற்கொல்லனை முதற்கண் கண்ட இடத்தைக் குறிக்கும் இளங்கோவடிகளார், கோவலன் சென்றக் குறுமகன் இருக்கையோர் தேவகோட்டச் சிறையகம் புக்கபின் என்றார். இதனை அக்கசாலை என்றார் அரும்பதவுரையார். அக்கசாலைப் பள்ளி என்றார் அடியார்க்கு நல்லார் (19-125-6). கொற்கை என்பது கொல்லுத் தொழில் சிறக்க நடைபெற்ற இடம் என்பதைச் சுட்டும் என அறிந்தோம். பொற்கொல்லர் வாழும் தெருவும், பொன்வேலை நடைபெறும் தெருவும், அக்கசாலை எனப் பெயர் பெறும் என்பதையும் அறிந்தோம். கொற்கையில் கொல்லுத் தொழில் சிறப்பாக நடைபெற்றது என்பதை இச்சொல்லைக் கொண்டு மட்டுமே முடிவு செய்து விடுதலினும், பிற பிற சான்றுகளும் உண்டாயின் வலுவாம் அன்றோ! ஆம்; இதனை நிலைப்படுத்துதற்கு மறுக்கொண்ணாச் சான்றுகள் கொற்கைப் பழநகரில் ஒன்றிரண்டல்ல; பல இன்றும் உண்மை ஆய்வார்க்குத் தனிப்பெரு மகிழ்வு ஊட்டுவதாம். அவற்றை முறை முறையாய் முழுதுறக் காண்போம். கொல்லுத் தொழில் வழியாகப் பெற்ற பெயரே கொற்கை என்பதை முன்னர்க் கண்டோம். அதனை நிறுவத்தக்க சான்றுகளைக் காண்போம். கொற்கையில் விநாயகர் கோயில் ஒன்றுள்ளது. அதனைச் சுந்தர விநாயகர் கோயில் என்று வழங்குகின்றனர். அக்கசாலை ஈசுவரர் கோயில் என்னும் பெயரும் அதற்கு உண்டாம்! குளக்கரையில் வளமான வயல்வெளியின் ஊடே அமைந்துள்ள அப்பழங்கோயில் எண்ணற்ற கல்வெட்டுகளைத் தன்னிடத்தே கொண்டு உள்ளது. பழைய இலிங்கத்தைப் புறந்தள்ளி பிள்ளையார் சிலையைப் பின்னே வைத்தமை புலப்படுகின்றது. அக்கசாலை ஈசுவரர் என்பதல்லவா பெயர்! திங்களூரில் அப்பூதியடிகள் அமைத்த தண்ணீர்ப் பந்தலில் திருநாவுக்கரசு எனும் பேர், சந்தமுற வரைந்ததனை எம்மருங்கும் தாம் கண்டார் என்று சேக்கிழாரடிகள் குறிப்பது போல அக்கசாலைப் பிள்ளையார் கோயிலின் எம்மருங்கும் கல்வெட்டுகள்! முகப்புப் பக்கமா? பின்பக்கமா? இடப்பால் வலப்பால் பக்கங்களா? சுவரின் எழுதப் பகுதியா? எப்பகுதியும் உள்ளன கல்வெட்டுகள்? இவை யெல்லாம் படிக்கப் பெற்றவனா? படியெடுக்கப் பெற்றனவா? பதிப்பிக்கப் பெற்றனவா? வரலாற்றுக்கு வளமான குறிப்புகள் இக்கல்வெட்டுகளில் இருக்கும் என்பது உறுதி. கோயில் வாயிலில் நிற்கிறோம். இதோ... ஒரு கல் பளிச்சிடு கிறது. தெளிவாகப் படிக்குமாறு தீந்தமிழில் அமைந்த கல்வெட்டு; மதுரோதைய நல்லூர் அக்கசாலை ஈசுவரமுடையார் கோயில் தானத்திற்காக கல்வெட்டுத் தொடர்கிறது. கல்லெழுத்தைக் காணும் நாம் அக்கசாலை விநாயகர் என்று வழங்கும் பெயரைக் கேட்டுத் திகைக்கிறோம். கல்வெட்டில் ஈசுவரர் என்று இருக்க விநாயகர் பெயரைக் கேட்டு, விநாயகரே வீற்றிருக்கவும் கண்டால் திகைப்படையாமல் இருக்க முடியுமா? பிள்ளையாரை ஈசுவரர் என்று வழங்கும் வழக்கம் இல்லையே! கருவறைக்குள் எழுந்தருளியுள்ள பிள்ளையாரைக் குனிந்து வணங்கிய அளவில் அசையாமல் நிமிர்ந்து பார்க்கிறோம். நிலைவாயிலின் மேற்கல்லில் அக்கசாலை ஈசுவரமுடையார் என்னும் கல்லெழுத்து விளங்குகிறது; மீண்டும் திகைத்துப் பார்க்கிறோம். திகைப்புடன் பார்க்கிறீர்களே! என்ன? என்கிறார் அக்கோயில் அறக்காவலர் திரு.சண்முக சுந்தரனார். இது முன்னே ஈசுவரன் கோயிலாக இருந்திருக்க வேண்டும். பின்னே பிள்ளையார் கோயிலாக மாறியிருக்க வேண்டும் என்கிறோம். சண்முக சுந்தரனார் வியப்படைந்து இதோ ஈசுவரர் இருக்கிறார் என்று காட்டுகிறார். மூலவரைக் கருவறைக்கு வெளியே தள்ளி, மூத்த பிள்ளையாருக்கு இடந்தந்தவர்கள் மூலவரைக் கோயிலுக்கு வெளியேயே தள்ளிவிடாமல், கருவறைக்கு முன்னே இடப்பக்கத்தில் முருகன் வள்ளி தேவயானை ஆகியோர் வரிசையிலேயாவது வைத்தார்களே என்று அமைதி யடைகிறோம். அக்கசாலை ஈசுவரர் கோயில் என்பதன் உண்மை உணர்ந்த உணர்வால் அவ்வீசுவரர் பொன்னார் திருவருளை வியந்து வாழ்த்துகிறோம். கோயிலின் முன்னே பெரும் பரப்புடைய குளம் ஒன்று காட்சி வழங்குகிறது. அது கொடுங்கணி, கொற்கை நிலங்களைப் புரக்கின்றது. நீர் நிரம்பி வழியும் காலத்தே அதனைப் பார்க்க வேண்டும்! பச்சைப் பசேல் என நெல்லும் வாழையும், தென்னையும் இடைவெளியறச் சூழ்ந்து விளங்கும் சூழலின் இடையே, பரந்து கிடக்கும் நீல நீர்ப் பரப்பு எத்தகு எழிற்காட்சி வழங்கும். கரைமேல் நின்று காண்கிறோம். குளத்தின் இடையே ஒரு கோயில்! நம் குறிப்பை அறிந்து அன்பர் ஐயாத்துரை செழிய நங்கை கோயில் என்கின்றார். இது செழிய நங்கை கோயில் வெற்றிவேல் அம்மை என்று வழங்குவதும் உண்டு என்கிறார். சிலம்பின் மெல்லொலி நம் செவிக்குள் பட்டுச் சிந்தையுள் அள்ளூறி மகிழ்கிறோம்! ஆம்! ஆம்! கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் பெயர் விளக்கும் அம்மை என்பதை எண்ணி இளங்கோவடிகளார் பொன்னடிகளைப் பூரிப்புடன் நினைந்தேத்துகிறோம். கோயிலின் முன்னர் உடைந்து கிடக்கும் சிலைகளைக் காண்கிறோம் கடற்பாசியும் சங்கும் பிறவும் கல்லாகிப் போக அக்கல்லைக் கொண்டே வடித்த சிலைகள், உடைந்து கிடக்கின்றன. அவை பேணுவாரற்றுக் கோயிலின் உள்ளேயும் இருக்க வகையற்று, வெளியில் கிடப்பதைப் பார்த்துத் துன்புறுகிறோம். ஒரு முலை இழந்த திருமா பத்தினி சிலையொன்று முன்னே உடைந்து கிடந்த செய்தியை உள்ளூர் அன்பர்கள் உரைக்கின்றனர். நெக்குருகுகின்றனர். படைக்கத் திறம்கெட்ட கைகள், உடைத்துக் கெடுக்கின்றனவே! இவற்றைத் தடுத்துப் போற்றிக் காக்கவும் நாடு திறனற்றுப் போயிற்றே என்று நோகின்றோம். கோயில் சூழலைப் பார்க்கிறோம், சூழலெல்லாம் பழங்கட்டடப் பகுதிகள்! கட்டடச் சான்றுகள்; பெரிய பெரிய செங்கல் தளங்கள்! ஆழத்தில் பதிந்து கிடக்கும் சுவர்கள்! இவையெல்லாம் அக்கசாலைத் தெருக்கள், பதின்மூன்று தெருக்கள் இங்கு இருந்தனவென்று செவிவழிச் செய்தி என்கிறார் அன்பர் சண்முக சுந்தரம். அக்கசாலை ஈசுவரர் கோயிலுக்கு முன்னுள்ள பரப்பைப் பார்த்து இருக்கலாம் இருக்கலாம் என ஏற்கிறோம். அப்பொழுது குளத்தின் வடபாற் கரையோரம் உள்ள ஊரைக் காண்கிறோம். அதன் பெயரை வினாவுகிறோம். அக்காசாலை என்கிறார்கள். அக்கசாலை அக்காசாலை ஆகியதை உணர்கிறோம். தமக்குப் பட்டொளி வீசிப் பறப்பது போல உணர்வு ஏற்படுகின்றது. அந்தோ! பழந்தமிழ்க் கொற்கையே, பாராண்ட கொற்கையே! முத்துப்படு பரப்பின் கொற்கையே, முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையாய் மூத்த கொற்கையே! உலக நாகரிகத்தின் உயர் பெருந்தொட்டிலே! கடல்மகள் கவின் முகமே! வாணிகத்தின் வைப்பகமே! காலத்தின் கோலத்தால் உன் நிலைமை இருந்தவாறு என்னே! என்னே! இந்நாட்டவர் நிலைமைதான் இருந்தவாறு என்னே! என்னே! என ஏங்குகிறோம். ஏக்கம் மாறாத நிலையில் நாம் நிற்க நம் கையை அன்பர் நாராயணர் பற்றுகிறார். தென்பக்கம் அழைத்துச் செல்கிறார். குளத்தின் தெற்குக் கோடிக்கே கொண்டு செல்கிறாரே! அங்கே கோயில் ஒன்று இருந்த சான்றைக் காண்கிறோம்; ஈசுவரர் பீடம் கிடக்கிறது; கோயிலும் அதன் சுற்றும் இல்லை! ஆனால் அவற்றின் அடித்தளம் புதையுண்ட சான்றாகப் புலப்படுகின்றது. இதன் பெயர் என்னுமுன், தென்னகேசர் கோயில் என்கிறார் நாராயணர். நம் உள்ளத்தில் ஒண்டமிழ் ஒளியூட்டுகின்றது. தென் அக்க ஈசுவரர் கோயில் என்பது புரிகிறதா? என்கிறது, தென்னகேசுவரர் கோயில். மேற்கே அக்கசாலை ஈசுவரர் கோயில்; வடக்கே அக்கசாலை என்னும் ஊர்; தெற்கே தென்னகேசுவரர் கோயில்; ஊடே அக்கசாலைத் தெருக்களின் அடித்தளம்; கிழக்கே செழிய நங்கை என்னும் வெற்றிவேலம்மை கோயில்! இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்ததும் இன்னும் ஐயம் என்ன எனத் தெளிவு பெறுகிறோம். பழங்காலப் பாண்டியர்கள் நாணயம் அடித்த அக்கசாலை இதுவே என்றும், அக்கொல்லுந் தொழிலால் சிறப்புற்ற கொற்கை இதுவே என்றும் முடிவு செய்கின்றோம். நம் முன்னோர் ஊர்களுக்குப் பெயர் வைத்த பெருமையும், அப்பெயர்க் கரணியமும் அறிய முடியாமல் தடம் மறைந்து போன காலக்கேட்டையும் எண்ணுகிறோம். இப்பொழுதில் அக்கசாலை ஈசுவரர் கோயிலில் பொற்கொல்லரே வழிவழியாக அறங்காவலராக இருந்து வருகின்றனர் என்னும் செய்தியையும் கேள்விப்பட்டு அறங்காவலர் சண்முக சுந்தரத்தைப் பார்க்கிறோம். ஆம் உண்மைதான்! நான் பொற்கொல்லர் குடிவழியைச் சேர்ந்தவனே; ஏரலில் காசுக்கடை வைத்துள்ளேன் என்கிறார். அதே மூச்சில், இவ்வக்கசாலையில் இருந்து திருநெல்வேலிக்குக் குடிபெயர்ந்து போயுள்ள பொற்கொல்லர்கள், தம் பண்டையரை மறவாராய் அக்கசாலைத் தெரு என ஒரு தெருவைத் திருநெல்வேலியில் அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர்; அத்தெரு தொண்டை நாயனார் கோயிலின் வடக்கில் உள்ளது என்று மொழிகிறார். வள்ளிக் கிழங்கு எடுக்கப்போன ஒருவன் கையில், வயிரமும் மணியும் முத்தும் வளமாகக் கிடைத்தது போல மகிழ்கின்றோம். அறிஞர் அ.இராகவன் அவர்கள் எழுதிய கோநகர் - கொற்கை என்னும் நூலைத் திருப்புகிறோம். (கொற்கை) அஃகசாலையின் பொன் வெள்ளி செம்புக் காசுகள் பல அச்சிடப்பட்டு வந்தன. இந்த அஃகசாலையில் உருவாக்கப்பட்ட காசுகள் பல என்னிடம் உள்ளன என்று உரைப்பதுடன் 91 காசுகளை இருபக்கமும் புலப்பட அச்சிட்டும் காட்டியுள்ள அருமையையும் காண்கிறோம். கைம்மேல் கிடைத்த கனியெனச் சான்றுண்மை கண்டு களிகூர்கின்றோம்! தத்துநீர் வரைப்பிற் கொற்கை முத்துப்படு பரப்பிற் கொற்கை பாண்டியன் புகழ்மலி சிறப்பிற் கொற்கை நற்றேர் வழுதி கொற்கை மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கை பேரிசைக் கொற்கை கலிகெழு கொற்கை எனச் சங்கச் சான்றோரொடும் கூடி நின்று பாடுகிறோம். கொற்கையில் ஒரு வன்னிமரத்தைக் காண்கிறோம். மதுரையில், புகழ் வாய்ந்த வன்னிமரம் உண்டு! வன்னியடி விநாயகர் ஆங்கு வீற்றிருக்கின்றார். வன்னியும் கிணறும் இலிங்கமும் வரவழைத்த திருவிளையாடலொடு அதனைத் தொடர்புபடுத்திக் கூறுகின்றனர். ஆனால், கொற்கை வன்னியின் பழைமையை அறுதியிட்டுரைக்க மரநூல் வல்லார்க்கே இயல்வதாம். கொற்கை வன்னி, சில ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சீர்மை, அதன் தோற்றத்திலேயே புலப்படுகிறது. நிலத்தொடு நிலமாய்ப் படிந்து நெடுமுடி யண்ணலெனக் கிடந்து, நிமிர்ந்தோங்கிப் பசுமைக் கோலம் காட்டும் அதன் அருமை, பார்ப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்! உள்ளீடற்ற கூடென அடிமரம் பட்டையொடு கிடப்பினும் அது வழங்கும் வளமைக் காட்சி காண்பாரை வயப்படுத்த வல்லதாம்! கொற்கை வன்னி, குரங்கணி ஆல், ஆழ்வார் திருநகரிப் புளி என வழங்கும் பழமொழியைக் கொற்கை அன்பர்கள் கூறுகின்றனர். மேலைத் தொடர் சார்ந்த குரங்கணியோ என நாம் நினைக்க இடம் வைக்காமல், குரங்கணி, கொற்கை சார்ந்ததோர் ஊர் என்பதையும் சுட்டுகின்றனர். வன்னிமரச் சூழலைப் பார்க்கிறோம். அதன் அருகில் 6க்கு 6 அடி அளவில் ஒரு செங்கல் தளம் தன் பழைமை காட்டிக் கொண்டு உள்ளது. அதன் பக்கத்தில் கொற்கைக் காசுகளில் காணப்படுகின்ற காவடி தூக்கும் வானர வடிவச் சிலை ஒன்றுள்ளது! அதுவும் பீடமின்றி நிலத்தின் மட்டத்திலேயே உள்ளது. கொற்கை வன்னிக்கு நேர் வடக்கில், 7, 8 மாத்தத் (மீட்டர்) தொலைவில் முழுமதி முக்குடை அச்சுதன் அமர்ந்த கோலத்தில் அருமையாய்க் காட்சி வழங்குகிறார். இதுகாறும் ஏற்பட்டுள்ள சிதைவுகளுக்கெல்லாம் ஈடுதந்து, சிதையாத சீரிளமையுடன் செம்மாந்து வீற்றிருக்கும்அப்பெருமகனார் திருவுருவம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது! அப்படியே அவர் அழகை அள்ளிப் பழகுவார் போல அமைந்து நிற்கிறோம்! சிற்பத் திறனை வியப்பதா? அதன் பழைமையை வியப்பதா? அறிவர் அமர்ந்துள்ள அழகுக்கோலம் நிலத்தின் மட்டத்தில் உள்ளது. அவர் அமர்ந்துள்ள பீடத்தை அகழ்ந்து தான் காண வேண்டும். அது, புதைந்து மண்மேடிட்டுப் போயுள்ளது நன்கு தெரிகின்றது! 1971 இல் அங்கு அகழ்வு செய்யப்பெற்றது என்பதையும், அசோகர் காலத்துப் பிராமி எழுத்து அமைந்த தாழி ஒன்று அகப்பட்டது என்பதையும் அன்பர்கள் உரைக்கின்றனர். கொற்கைப் பழமைக்கு இவ்வன்னியும் இம் முக்குடைச் செல்வரும் செவ்விய சான்றுகள் என்று நாம் நினைக்கும் போதே கொற்கைத் தமிழ்மன்றத் தலைவர் திரு.சிவசங்கு அவர்களும் செயலாளர் புலவர் திரு.ஐயாத்துரை அவர்களும் அச்சிடப்பெற்ற அறிக்கை ஒன்றை நம் கையில் சேர்க்கின்றனர். கொற்கை மண்ணின் கொழுமணம் அவர்கள் கொடுத்த அறிக்கையில் மிளிர்கின்றது. இலக்கியத்தாலும், வரலாற்றாலும், உலகவலம் வந்த பெருமக்கள் குறித்து வைத்த குறிப்புகளாலும் அறியப் பெறும் செய்திகளை யெல்லாம் ஒருங்கு தொகுத் துரைக்கும் அவ்வறிக்கையைக் கண்டு களிப்படைகிறோம். தொல் பொருள் ஆய்வாளர் செய்த அகழ்வு ஆய்வு, கொற்கையைச் சூழ்ந்துள்ள ஊர்கள் ஆகியவற்றையும் அறிகிறோம். கொற்கைத்துறையின் காவல் கடவுளராக விளங்கிய துறையப்பர் கோயில் கொண்டுள்ள அகரம்! அறிவன் அமர்ந்து அருளுரை வழங்கிய அறிவன் புரமாகிய அரியபுரம்! இத்தாலி நாட்டில் இருந்து சுற்றுலாக் கொண்டுவந்த மார்க்கபோலோ இறங்கிய பழைய காயல்! சங்கப் பெண்பாற் புலவருள் ஒருவராகிய நப்பசலையார் தோன்றிய மாறோகம் ஆகிய மாறன் மங்கலம்! தொல்காப்பிய உரையாசிரியராகிய சேனாவரையர் விளங்கிய ஆற்றூர்! பழங்காலக் காட்டரணமாக விளங்கிய இடைக்காடு, காவற்காடு, கோவன்காடு, குமரிக்காடு, தெக்காடு கோட்டைக் காடு ! ஏமமாக (பாதுகாப்பாக) அமைந்த ஏமராசன் கோயில்! ஊர்காவல் கடனேற்ற ஊர்காத்த பெருமாள் கோயில்! கோட்டைக் காவல் கடனேற்ற கோட்டாளமுத்து கோயில்! தென்னெல்லைக் கோட்டையாக விளங்கிய தென்பேரெயில் என்னும் தென்திருப்பேரை! பாண்டியனின் சிறுபடைப் பிரிவின் தங்கலாக இருந்த சிறுத்தண்ட நல்லூர் என்னும் சிறுத்தொண்ட நல்லூர்! அவன் பெரும்படைப்பிரிவின் தங்கலாக இருந்த பெரும்கடை, பெரும்படைச் சாத்தன் கோயில்! தவசக் கிடங்காக (கொட்டாரமாக) இருந்த கொட்டாரக்குறிச்சி! குற்றவாளிகளைக் கழுவில் ஏற்றுதற்கு இடமாக இருந்த கழுவன் திரடு! சங்கு - கிளிஞ்சில் - என்னும் பெயரே தன்பெயராய் எழிலுடன் விளங்கும் ஏரல்! இத்தகு பெயரிய பெருமைமிக்க ஊர்களை நினைத்து வியப்படைகிறோம்! கொற்கைப் பழைமைக்கு இன்னும் சான்று வேண்டுமோ எனப் பூரிக்கிறோம்! அப்பூரிப்பின் இடையே எண்ணற்ற எண்ணங்கள் பொங்கி வழிகின்றன! உலகறிந்த கொற்கையை ஊரும் அறியாமல் செய்து கொண்டிருப்பது எத்தகைய கொடுமை! நேற்றை நிகழ்ச்சியை வாணம் விட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் வையகத்தில், தொன்முது நாகரிகத் தொட்டிலைப்பற்றி நாம் சொல்லளவில் கூட வெளிப்படுத்த வில்லையே! சுற்றுலாத்துறையும் அகழ்வாய்வுத் துறையும் தொல் பொருள் ஆய்ஞரும் இருந்தும் - இப்பழங் கொற்கையைப் புறக்கணித்துக் கொண்டிருக்க இந்த இருபதாம் நூற்றாண்டிலும் எப்படித்தான் எண்ணம் வருகின்றதோ? அக்கசாலை ஈசுவரர் கோயிலுக்கு முன்னே இருக்கும் வளமான குளத்தில் படகுத்துறை யமைத்துச் செழிய நங்கை கோயிலைச் சூழ நீராழி மண்டபம் அமைத்துச் சுற்றுலா மையமாக்கிவிட்டால் முழுமதி எழிலுற விளங்கும் நாளில் அவ்வெள்ளி நீர் உருக்கின் மேல் ஓடம்விட்டால், போட்ட தொகையையும் கூடப் போகவிடாமல் ஒன்றுக்கு இரண்டாய் அள்ளிக் கொண்டிருக்கலாமே! பூம்புகார்ப் பெருமையைப் புதிய அமைப்பாய் உருவாக்கிப் புகழ்செய்த அரசு, பழங்கொற்கைப் பகுதியை எளிய முயற்சியால் பெரிய பயன் கொள்ளக் கருதவில்லையே! அறிவனார் அழகுத் திருமேனியைக் கண்ணாரக் கண்டும் அகழ்வாய்வு மேற் கொண்டும், பழந்தடயங்கள் பற்பல எடுத்தும் தொல் பொருள் துறை அயர்ந்து போய் அமைந்து விட்டதே! பழங்கொற்கை புதுப் பொலிவு பெறுவதாக! கொற்றம்: கொல் + து = கொற்று > கொற்றம். போர்க்களத்துப் பகையழித்தல் கொற்றம். அது பின்னர் மற்றை வெற்றிகளையும் குறித்தது. அரசர் பிடித்த குடையின் அடையாளப் பெயரே கொற்றக் குடையாம்; அக்குடைபிடித் தவன் கொற்றவன்; பின்னே புலன்களை வென்றவனும் - அவித்தவனும் - கொற்றவன் எனப்பட்டான். சான்று: கொற்றவன் குடி, கொற்றம் தந்த தெய்வம் கொற்றவ்வை (கொற்றம் + அவ்வை) எனப்பட்டாள். அவள் வெற்றித் தெய்வம் எனப் பாடப்பட்டாள். பரணி நூலைக் கொற்றவை நூல் எனல் தகும். கொற்றவை கொற்றி (கலி. 89) எனவும் ஆவாள். கொற்றன் என்பான் பிட்டங்கொற்றன் எனப் பாடுபுகழ் பெற்றான் (புறம். 171). கொற்றவை கோலங் கொண்டோர் பெண் - பரி. 11 கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவரா - கம். தனிப். கொற்று: கொல் + து = கொற்று. கொல்லு வேலை என்பது கொற்று வேலை. கொற்றுறை என்பது கொல்லர் பணிக்களம். கொற்றுறைக் குற்றில என்பது புறம். (95). கொல்லு வேலைக்குக் கூலியாகத் தந்ததும் கொற்று எனப்பட்டது. அது பின்னே கொத்து என வழக்குப் பட்டது. அன்றன்று வேலை செய்து அதற்குக் கூலியாகப் பெறுவது அற்றைக் கொற்று (அத்தக் கொத்து) என்றும், கொற்று வேலை என்பது (கொத்து வேலை) என்றும் மக்கள் வழக்கில் ஆகியது. ஒரு தொழிலுக்கு அமைந்த சிறப்புப் பெயர், பல தொழிலுக்கும் அமைந்த பொதுப் பெயர் ஆதற்குச் சான்றுகளுள் கொற்றும் ஒன்றாம். கல்கொற்று கட்டட வேலை செய்வார் கொத்தனார் என்பதும்; அம்மி கொத்தலையோ திருகை கொத்தலையோ எனக் கூவி வருவார் குரலும் எண்ணத் தக்கவை. கொற்றுறை: கொல் + துறை = கொற்றுறை = கொல்லு வேலை செய்யப் படும் தொழிற்கூடம். படைக் கருவிகளை ஆக்கவும் பழுது பார்க்கவும் அமைக்கப் பட்ட தொழிலகம் கொற்றுறை எனப்பட்ட வழக்கத்தை, இவ்வே பீலியணிந்து என்னும் பாட்டில், அவ்வே கொற்றுறைக் குற்றில மாதோ என்றார் ஔவையார் (புறம். 95). தொழில் வகையால் கொற்றன்; கொற்றி, கொற்றனார் கொற்றியார், கொல்லர் என்பவை சங்கக் காலப் பெயர்களாக விளங்கின. கொன்: அச்சம், பயனில்லாமை, காலம், பெருமை, என்னும் பொருளில் கொன் என்னும் இடைச்சொல் வரும் என்றார் தொல்காப்பியர் (739). அச்சம் பயமிலி காலம் பெருமையென்று அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே கொன்முனை இரவூர் போலச் சிலவா குகநீ துஞ்சும் நாளே - குறுந். 91 என்புழி அஞ்சி வாழுமூர் எனவும், கொன்னே கழிந்தன் றிளமை - நாலடி. 55 என்புழிப் பயமின்றிக் கழிந்தது எனவும், கொன்வரல் வாடை நினதெனக் கொண்டெனோ என்புழிக் காதலர் நீங்கிய காலமறிந்து வந்த வாடை எனவும், கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே - குறுந். 138 என நான்கு பொருளும் பாடவந்தவாறு கண்டு கொள்க. (தொல். சொல். 254 சேனா.) கொன்றை: கொன்றை கொத்துக் கொத்தாக மலர்ந்து தோன்றும் பூ. கொத்து > கொந்து > கொந்தை > கொன்றை. கண்ணிகார் நறுங்கொன்றை வண்ண மார்பில் தாரும் கொன்றை - அகம். கட. கொன்றையந் தீங்குழல், கொன்றைத் தீங்குழல் என இசைக்கருவி இருந்தமை, கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி - சிலப். 17:19 என்பதாலும், கொன்றையந் தீங்குழல் மன்றுதோ றியம்ப - நற். 364 என்பதாலும் அறியலாம். இக்குழல் கொன்றைப் பழத்தால் அமைந்த குழல் என்பர். கொன்னுதல்: கொன்னுதல் = திக்குதல். இயல்பாகப் பேசமுடியாமல் திக்கித் திக்கிப் பேசுபவர் சிலரை நாம் காண்கிறோம். அவர் பேசும் போது அவர்படும் இடரால் நாம் வருந்தவும் செய்கிறோம். அவர் திக்குதல் நகைப்பை உண்டாக்குவதில்லை. அவர்மேல் பரிவையே உண்டாக்குகிறது. அவ்வாறு திக்குதலைக் கொன்னுதல் என்பதிலுள்ள முதற்சொல் கொன் என்பதாம். கொன்னுதல், உறுப்புக் குறைவால் ஏற்படுவது ஒருவகை; அச்சத்தால் ஏற்படுவதும் ஒருவகை. அஞ்சும் நிலையில் கொன்னைச் சொல் இடைநிலையாகப் பயன்படுதலைக் குறிப்பார் தொல்காப்பியர் (739). முன்னோர் அதனை அப்பொருளில் வழங்கியுள்ளமை வியப்பாம்.  கோ வரிசைச் சொற்கள் கோ: ககர ஓகாரம். ககர வரிசையில் பதினொன்றாம் உயிர்மெய் எழுத்து, ஓரெழுத்து ஒருமொழி உயர்வு, பெருமை, தலைமை முதலிய பொருள்களைத் தருவது. 1. உயர்ந்தது, உயரமானது. எ-டு: கோபுரம். 2. உயர் செங்கோலன்; அரசன். எ-டு: கோச்சோழன், இளங்கோ (இளவரசன்). 3. உயர்ந்த செல்வர், வணிகர்கள். எ-டு: இளங்கோக்கள். 4. உயர்வமைந்த குணனும் பயனும் கொடையும் அமைந்த ஆன் (பசு). 5. கோக்க என்னும் ஏவல். எ-டு: நூல் கோக்க, மாலை கோக்க. எடுக்கவோ கோக்கவோ? 6. கோமகன் > கோமான். அரசன் மகன், பெருஞ்செல்வன். 7 .தலைமை. கோநகர் கொற்கை 8 .இறைவன், கடவுள். கோ இல் > கோயில். * கோயிலா கோவிலா காண்க. 9. தும்பி வகையுள் ஒன்று; கோத்தும்பி (திருவா.) கோஒய்: கோல் > கோய் > கோஒய். கள் கோலும் கலம். நல்மரங் குழீஇய நனைமுதிர் சாடி பல்நாள் அரித்த கோஒய் - அகம். 166 பொருள்: நல்ல மரங்கள் சூழ்ந்த கள்விற்கும் இல்லில் உள்ள பலநாளும் வடிக்கப் பெற்ற கள் நிறைந்த சாடியை முகக்கும் கலம் (வே.வி). கோகிலம்: கோகுலம் > கோகிலம். கோகிலம் குயில்பல் லிப்பேர் - சூடா. நிக. இசையால் உயர்ந்த குயில் கூட்டம். கோகுலமாய்க் கூவுநரும் - பரி. 9 கோகிலாபுரம் என்பது வளமார்ந்ததோர் ஊர். மேல் தொடர்க் கம்பம் சார்ந்தது. கோக்கள்: கோ + கள் = கோக்கள். கோக்கள்:1 கோக்கள் = ஆன்கள்; கள் பன்மையீறு. கோக்கள்:2 கோக்கள் = அரசர்கள். கோக்கள் வைகும் முற்றத்தான் முதல்தேவி - கம். அயோ. 1075 கோக்காலி: கோ = உயரம். காலி = காலை உடையது. முக்காலி, நாற்காலி, அறுகாலி (Bench) மொட்டான் (Stool) என்பவற்றின் உயரத்தினும் உயரமானதாய்க் கொக்குக்கால் போல் நெடியதாய் உயரமான இடத்தில் வண்ணமடிக்கவும் உயர் பரணையில் உள்ள பொருளை எடுக்கவும் ஏணியின் பயனைச் செய்வது கோக்காலி ஆகும். கோக்கதவு: கதகதப்பாக இருப்பதற்கு அமைக்கப்படும் அடைப்பு கதவு ஆயது. மிகுவெப்பம், மிகுதட்பம் இல்லாமல் ஒரு நிலைப்பட உதவுவது அது. வீட்டில் பல கதவுகள் இருக்கும் ஆனால் தலை வாயில் கதவு பெரிதாகவும் (அகல நீளம் கூடியது) வேலைப்பாடு உடையதாகவும் இருக்கும். அதன் உயர்வு கருதி அதனைக் கோக்கதவு என வழங்குதல் நாகர்கோயில் வட்டார வழக்காகும். கோக்கு மாக்கு: கோக்கு = ஒன்றைக் கோக்க வேண்டிய முறையில் கோத்தல். மாக்கு = கோக்க வேண்டிய முறையை மாற்றிக் கோத்தல். ஏர், ஏற்றம், கட்டில், அணிகலம் முதலியவற்றைக் கோக்கு முறையில் கோவாமல் மாற்றிக் கோத்தல் பொருந்தாமை போலப் பொருந்தாமல் முறைகேடாகச் செய்யும் செயல் கோக்கு மாக்காம். எடுக்கவோ அன்றி கோக்கவோ என்பது பாரதச் செய்தி. ஒன்றிருக்க ஒன்றை ஏமாற்றிச் செய்வதைக் கோக்கு மாக்கு எனல் வழக்கு. கோங்கமார்: கோங்கு ஆகிய தோட்டி (தொரட்டி) கொண்டு ஆடு மேய்க்கும் ஆயரைக் கோங்கமார் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும். கோ > கோன் > கோனார் > கோனாக்கமார் > கோங்கமார் என வரலாம் எனினும் கோங்கு என்பதற்குப் பொருள் உண்டாகலின் அது கொள்ளப்பட்டது. * கோங்கறை காண்க. கோங்கறை: நீண்டுள்ள கம்பில் அல்லது கழையில் கட்டிய அறுவாளை யுடையது கோங்கறை; அது தோட்டி. அறை = அறுக்கப்பட்டது; அறுப்பது. கோங்கு = நீண்டது. ஒரு மரத்தின் பெயர் கோங்கு. நெடிது வளர்வதால் பெற்ற பெயர் அது. கோங்கறை குமரி வட்டார வழக்குச் சொல். கோங்கு + அறை = கோங்கறை. கோங்கு: கொங்கு > கோங்கு. கொங்கு = மகரந்தம். பொன்போலும் பொடிமிகக் கொண்ட மரம் கோங்கு. காட்டு மரங்களுள் ஒன்று. உயரமிக்கது. வளர்ந்தது என்னும் பொருளில் வருவது கோ. கோ > கோங்கு. சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன - அகம். 25 கோங்கம் என்பதும் இது. அறுமீன் பயந்த அறஞ்செயல் திங்கள் செல்சுடர் நெடுங்கொடி போலப் பல்பூங் கோங்கம் அணிந்த காடே - நற். 202 கோசாலை: கோ + சாலை = கோசாலை = பசுத்தொழுவம். கோ = ஆன் (பசு). வீட்டுத் தொழுவத்தில் வேறுபடுத்தக் கோசாலை என வழங்கப்பட்டதாம். திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் கோயிலுக்குப் பால் அமுது செய்தருளவும் பாற்போனகப் பாலுக்கும் குலோத்துங்க சோழன் திருக்கோசாலை யிடையற்கு விட்டபசு நானூற்றெழுபதினால் (தெ.க.தொ. 8:54). கோசுக்கீரை: முட்டை வடிவில் அமைந்த கோசுக்கீரை வெளிநாட்டு வரவினதே. அது உரிக்க உரிக்க ஈர உள்ளி போல இலையே உடையதாம். ஆதலால் அதனைப் பொதுமக்கள் பொருள் பொருந்த இலைக்கீரை என வழங்கினர். கன்னியாகுமரி வட்டார வழக்காக உள்ளது இது. கோச்சடை: உயரமான சடை கோச்சடை. அவ்வாறு சடையுடைய வனாக ஒரு வேந்தன் இருந்தான். அவன் பாண்டியன்; கோச் சடையன் மாறவர்மன் என்பான். கோச்சடையான் ரண தீரன் என்பானும் அவன். அவன் பெயரால் மதுரை அருகே விளங்கும் ஊர் கோச்சடையாகும். கோச்சை: சண்டைக்குப் பயிற்சி செய்து சேவற் போர் செய்யும் சேவலைக் கோச்சை என்பது வேடசெந்தூர் வட்டார வழக்கு. கோ= தலைமை, உயர்வு, உயரம் முதலாய பொருள் தரும் சொல். கோபுரம், கோங்கு என்பவை அறிக. கோடல்: கோடல் என்பது ஒரு மலரின் பெயர். அது கிளைகளாகக் கொள்ளாமையால் (கோடு + அல்) கோடல் எனப்படும். மறைந்து கிடந்த கோடல் வித்து மழை பெய்து மேலெழுந்து கவரும் சிறப்பால் தோன்றி, மேந்தோன்றி என்றும் வழங்கப்படும். அது சிவந்த நிறத்தது ஆதலால் காந்தள் என்றும், சிவந்த விரல்களை யுடைய கைபோல் இருத்தலால் ஐவிரலிப் பூ என்றும் வழங்கப்படும். குறிஞ்சிப் பூவின் செறிவு சிறப்பு பொலிவு முதலியவற்றால் மலைப் பெயர்க்கு ஆகியது போல், காந்தளும் தன் சிறப்பால் காந்தளஞ் சிலம்பு எனப்படும்; குறுந்தொகை முதற்பாடல் காந்தளஞ் சிலம்பைக் கூறும். அதற்குமுன் அமைந்த கடவுள் வாழ்த்து காந்தள் விருப்பனாம் முருகனைப் பற்றிய பாடல் என்பது தொகை செய்தார் எண்ணத்தைப் புலப்படுத்தும். கோடல் - கொள்ளுதல் பொருளதாதலை, பல்பொருட்கு ஏற்ப நல்லது கோடல் - தொல். 1614 முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் - தொல். 1015 என்பவை காட்டும். பொறுத்துக் கொள்ளுதல் என்னும் பொருளில், கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி - தொல். 1097 என்றும் வரும். கோடல் மரபு: கோடன் மரபு என ஒரு மரபு உண்டு. அஃது ஆசானைச் சார்ந்து மாணவன் கற்கும் முறையாகும். கோடன் மரபே கூறுங் காலை பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகியவன் குறிப்பிற் சார்ந்து இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போதல் என்மனார் புலவர் என்பது நன்னூல் (40). இதன் தலைப்பு பாடம் கேட்டலின் மரபு என்பது. கோடன்: கோடன்:1 கோடன் என்பது பழமையான பெயர். ஓய்மான் நல்லியக் கோடன் என்பான் பாடுபுகழ் பெற்றவன். சிறுபாணாற்றுப் படைப் பாட்டுடைத் தலைவன். புறநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல் உண்டு (176) இவனைப் பாடிய புலவர்கள் இருவர். ஒருவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்; மற்றொருவர் புறத்திணை நன்னாகனார். புரவலர் புலவர் மூவரும் நல்லவர்தாமே! புலவருள் முன்னவர், இடைக்கழி நாட்டு நல்லூரைச் சார்ந்தவர் என்பதும், பின்னவர் புறத்திணை பற்றிப் பாடுதலில் வல்லார் என்பதும் பெயர்களால் அறியக் கிடக்கின்றன. இடைக்கழி நாடாவது இந்நாள் மதுராந்தகம் வட்டத்தில் உப்பங்கழிக்கும் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதி (பத்துப் பாட்டு ஆராய்ச்சி பக்.55) மாவிலங்கைத் தலைவன் எனப் புறப்பாடல் கூறுகின்றது. பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன் என்பது அது. சீறியாழ் இல்லோர் என்பார் சீறியாழ்ப்பாணர். அவர்களை ஆற்றுப்படுத்திய பாடலே சிறுபாணாற்றுப் படை. யாழிசை வல்லார் தம்மைப் பெரிதும் புரந்தான் என்பதனோடு அவ்விசையில் தேர்ச்சி மிக்கானாகவும் இருந்தான் என்பதை இயக்கோடன் என்பது காட்டுகின்றது. இயமாவது இசை. பலவகை இசைக்கருவிகளின் கூட்டிசை பல்லியம் எனப்படும். நெடும்பல்லியத்தினார் என்பது சங்கச் சான்றோர் ஒருவர் பெயர். இயவர் என்பார் இசைவல்லார். இயக்கோடன், கொள்கையில் நிரம்பிய கோமான் என்பது, செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும் இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும் செறிந்துவிளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சினம் இன்மையும் ஆணணி புகுதலும் அழிபடை தாங்கலும் வாள்மீக் கூற்றத்து வயவர் ஏத்தக் கருதியது முடித்தலும் காமுறப் படுதலும் ஒருவழிப் படாமையும் ஓடிய துணர்தலும் அரியேர் உண்கண் அரிவையர் ஏத்த அறிவுமடம் படுதலும் அறிவுநன் குடைமையும் வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்தப் பன்மீன் நடுவண் பால்மதி போல இன்னகை யாயமோ டிருந்தோன் என்னும் சிறுபாணாற்றுப்படையால் (207-220) அறியலாம். மேலும், நல்லியக்கோடன் வள்ளல்கள் எழுவரும், அவர்க்குப் பின்னர்க் குமண வள்ளலும் மாய்ந்த பின்னர்த் தோன்றிய கொடையாளன் என்றும் சிறுபாணாற்றுப்படை குறிக்கிறது. புலமையாளர் கலைவல்லார் ஆயோர்க்கு, வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே (50) மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே (67) செம்பியன் ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே (83) என்னும் இடர்மிக்க கால நிலையில், பெயன்மழைத் தடக்கைப் பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு (125-127) பாடி யானையொடு பெருந்தேர் எய்தியதாகப் பரிசு பெற்ற பாணன் பரிசு பெற வரும் பாணனுக்கு உரைக்கின்றான். நல்லியக் கோடன், பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் போன்றவன் என்பதும் அவன் கொண்ட தண்ணிய பண்புச் சிறப்பேயாம். இவற்றால், கோடன் என்பது நல்லவற்றை யெல்லாம் கொண்டொழுகுவோன் என்னும் பொருள் கொள்ளுமாறு அமைந்தமை அறிகிறோம். கோடன்:2 கோடன் என்பான் மாணவன். ஆசிரியன் உரைப்பதை அப்படியே செவியால் கேட்டு மனத்தகத்துக் கொள்பவன் கோடனாம். உரைகோளாளன் என்பதும் அது (நன். 37). * கோடன் மரபு காண்க. கோடாங்கி: தம்மை நாடி வந்து கணியம் - சோதிடம் - குறி - பார்ப்பவரின் முகக்குறி தோற்றப் பொலிவு உரைநிலை என்பவற்றைக் கூர்த்த வகையால் அறிந்து கொண்டு அவர்கள் ஒப்புமாறு சொல்லுவார் கோள்தாங்கி (கோடாங்கி) எனப்படுதல் நாம் அறிவது. கருவூர்ப் பக்கத்தே கோடாங்கி பட்டி என்றோர் ஊரே உண்டு. கொட்டும் தட்டிக் கூறுவதால் கொட்டங்கி என்று வழங்குகிறது களவியல் காரிகை. கோடாய்: குழந்தையைப் பெற்றவள் நற்றாய்; குழந்தையைத் தூக்கிச் சீராட்டியும் பாராட்டியும் ஊட்டியும் வளர்ப்பவள் செவிலித்தாய்! செவிலித் தாய்க்குக் கோடாய் என்பது பழநாள் பெயர் (நற். 251). கோடி: கோடி என்பது கடைசி. கடைக்கோடி என்பதும் அது. அக்கோடியும் ஒரு பேரெண் ஆயிற்று. கோடி, கோடிகோடி, அடுக்கிய கோடி, கோடானு கோடி என்பவை எண்ணுக. ஒரே ஒரு புதுத்துணி கொடுத்தால் அதனைப் பெற்ற மகிழ்வால் கோடி எனக் கொள்வது இயற்கை. கோடிக்குப் புதிது, தேயாதது முதலிய பொருள்கள் வந்தன. இதே போல் புதிய மண்வெட்டி கோடி மண்வெட்டி எனப்படும். கடியாததாய் முதலாவதாகக் கடித்த பாம்பு கோடிப் பாம்பு. கோடி தேடிக் கொடிமரம் நட்டல் என்பது வழக்கு மொழி. ஔவையார் பாடிய கோடி பாட்டு - கோடி என்னும் சொல்வருமாறு பாடிய பாட்டு - நாலு கோடிப் பாட்டு. உண்ணீஇர் உண்ணீரென் றூட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி யுறும் மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி யுறும் கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி யுறும் கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோணாமை கோடி யுறும் என்பவை அவை. கோடி மண்வெட்டி: கோடி மண்வெட்டி = நிரம்பத் தின்னல். கோடி என்பது புதியது என்னும் பொருளது. புதிய மண்வெட்டி தேயாதது; கூரானது நிரம்ப ஆழத்துச் சென்றும் அகலத்துச் சென்றும் மண்ணைப் பெருக அள்ளி வருவது. அம்மண்வெட்டி போல் அள்ளி அள்ளித் தின்பவனைக் கோடி மண்வெட்டி என்பர். பெருந்தீனியன் என்பது பொருளாம். சோற்றுப் பானை, சோற்று வண்டி, குப்பை வண்டி என்பனவும் பெருந்தீனியனைக் குறிப்பனவே. சோற்றுத் துருத்தி என்றார் பட்டினத்தார். இத்தகையவர்களைக் கொண்டே சோறு கண்ட இடம் வீடுபேறு (சுவர்க்கம்) என்னும் புதுமொழி எழுந்துள்ளதாம். கோடியர்: கோடியர் = புதிய புதிய ஆடைகள் அணிகள் ஒப்பனைகள் ஆயவற்றைக் கொண்டும் யாழிசைத்தும் ஆடும் கூத்தர். அவர்கள் கூட்டம் கூட்டமாகப் போதலாலும் கோடியர் எனப்பட்டனர். விழவில், கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியும் இவ்வுலகம் - புறம். 29 கோடு: கோடு:1 கோடு = வளைவு. கொடு என்னும் வளைவுப் பொருட்சொல் முதல்நீண்டு கோடு என ஆதல் சொல்லியல் முறை. அந்நிலையிலும் அது வளைவுப் பொருள் கொள்ளும். கோடு வளைவுப் பொருள் தருவதால் மலை, மரக்கிளை முதலிய பொருள்களைத் தரலாயிற்று. குவடும் கோடும் = சிறுமலை, பெருமலை; திருச்செங்கோடு. கவடும் கோடும் = மரத்தின் பிரிவும், பிரிவில் இருந்து வளையும் கொம்பும்; கொப்பு என்பதும் அது. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்; கொப்பும் குழையுமாக வெட்டிவிட்டாயே என்பது வழக்கு. கோடு:2 கோடு = கொம்பு, யானையின் தந்தம். நுதிமழுங்கிய வெண்கோட்டான் - புறம். 4 எருமையின் கோடு, மான்கோடு, மரக்கோடு, சுறாக்கோடு எனக் கொம்புவகை பலவாம். கோடு:3 கோடு = சங்கு. கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய வழிச் செவ்வண்ணம் போல (தொல் 6.நச்) கோடு:4 கோடு = கரை. கோடின்றி நீர் நிறைந்தற்று - திருக். 523 கோடு:5 கோடு = வரை கீற்று. கோடு போடு என்பது வழக்கு. வளைவாக வரை என்பது இதன்பொருள். கோடு வளைவு ஆதலால் நேர்கீற்று நேர் கோடு என வழங்கப்படுவதாயிற்று. உறங்கி எழும்பும் போது சிலர் வாயில் வழிந்த நீர் கன்னத்தில் கோடு போட்டிருக்கும். அதற்குக் கோடுவாய் (கொடுவாய்) என்பது பெயர். கோடு:6 ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வது போல், கற்றுக் கொள்வதும் கோடு எனப்படும். கற்கும் முறையைக் கோடல் மரபு என்பர் (நன். 40). கோடன் = மாணவன். கோடன் = கொள்கையாளன். எ-டு: நல்லியக்கோடன்; அவன் ஆட்சி புரிந்த இடம் கோடன் பாக்கம் (சென்னை). கோடகன் = கொள்கைப் பிடிப்பாளன்; ஓர் ஊர்ப்பெயர் கோடகநல்லூர்; முனிவர் சுந்தர முனிவர்; சான்று: மனோன் மணியம். கோடை: கொடு > கோடு + ஐ = கோடை. கொடிய வெப்பும், வெதுப்பலும் உள்ள காலமும் காற்றும் கோடைக் காலம், கோடைக் காற்று என்பன. கோடைப் பழமை புறநானூற்றால் புலப்படும். கோடைப் பொருநன். கோடைக் காலத்தைப் பாடியவர், கோடை பாடிய பெரும்பூதனார் (புறம்). கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே - திருவருட். ஆடையும் கோடையும் தட்டாமல் விளையும் என்பது மக்கள் வழக்கு. ஆடை = கார்காலம். கோடைக்கானல், கோடை வெயிலுக்கு ஏற்ற குளுமை வாழ்விடம். கோடைச் சோளம், கோடைப் பருத்தி - வேளாண் வழக்கு. கோட்டம்: கோடு > கோட்டு > கோட்டம். கோட்டம்:1 கோட்டம் = வளைவு. கோட்டம் கண்ணியும் கொடுந்திரை யாடையும் - புறம். 275 கமலை வண்டியில் வடம் கோட்டம் விழுந்துவிட்டது என்பது வேளாண் வழக்கு. கோட்டத்தை எடுத்து கமலை வண்டிமேல் போட்டால்தான் இறைக்க முடியும். கோட்டம்:2 கோட்டம் = கோயில். அணங்குடை முருகன் கோட்டம் - புறம். 299 கோட்டம்:3 கோட்டம் = மாறுபாடு. அணங்கறி கழங்கில் கோட்டம் காட்டி - நற். 47 கோட்டாறு: கோடு > கோட்டு + ஆறு = கோட்டாறு. கோடு = வளைவு. வளைந்து செல்லும் ஆறும், அவ்வாறு சார்ந்த ஊரும் கோட்டாறு எனப்பட்டன. நூறு கவனகம் (சதாவதானம்) செய்த செய்குதம்பிப் பாவலர் பிறந்தமண் கோட்டாறு. திருவருட்பா, திருவருட்பாவே என்று முழங்கியவரும் அவரே. கோட்டி: கோட்டி:1 கோள் + தி = கோட்டி = கொள்வது. உண்ணும் உணவைக் கொள்ளும் இடம் குடல் ஆதலால், குடலுக்குக் கோட்டி என்னும் பெயரைப் புலவு வணிகர் கொள்கின்றனர். குடல் அன்றிக் குடற்கறியையும் கோட்டி என்பராம். கோட்டி:2 கோட்டி = கூட்டம்; கோட்டம் = வளைவு; வளைந்திருத்தல். சுற்று மதில் கோட்டை எனப் பெறுவதும், கோட்டையுள் அமைந்த கோயில் கோட்டம் எனப்பெறுவதும், கூட்டம் கூடி இருத்தல் கோட்டி எனப் பெறுவதும் கருதுக! அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் என்பது திருக்குறள் (401). வளைவாக - வட்டமாக - அமர்ந்த அவை (மக்கள் கூட்டம்) கோட்டி எனப்பட்டது. வெள்ளைக் கோட்டி என்பது அறிவுத் தெளிவிலார் கூட்டம் (சிலப். 30:198). கோட்டி கோடி ஆகிக் கோயில் பொருள் தந்தது. எ-டு: காஞ்சி காமகோடி (காமாட்சி கோயில்). கோட்டி:3 கோட்டம் > கோட்டி = கிறுக்கு. அறிவுக் கோட்டம் அது. அவனுக்குக் கோட்டி பிடித்து விட்டது என்பது ம.வ. கோட்டினம்: கோடு > கோட்டு + இனம் = கோட்டினம். கொம்புடைய எருமை இனம். கோட்டினத்து ஆயர் மகன் - கலி. 103 கோட்டுமா: கோட்டுமா:1 கோடு > கோட்டு + மா = கோட்டுமா(வு). கோடு = சங்கு, சிப்பி. கோட்டுமா = சங்கு, சிப்பி ஆயவற்றைச் சுட்டு ஆக்கிய பொடி. கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய வழிப்பிறந்த செவ்வண்ணம் போல (தொல். 6, நச்.). கோட்டுமா = சுண்ணாம்பு; சிப்பிச் சுண்ணாம்பு எனப் படுவது. மிகுந்த வெள்ளை நிறத்தது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் எனப்படுவது மூதுரை. கோட்டுமா:2 கோடு > கோட்டு + மா = கோட்டுமா. மா = விலங்கு. கோட்டுமா = கொம்புடைய விலங்கு; யானை, எருமை முதலியன. கூரை கோட்பட்டுக் கோட்டுமா ஊரவும் - சிலப். 15: 98 கோட்டுமீன்: கோடு > கோட்டு + மீன் = கோட்டுமீன் = கொம்புடைய மீன்; சுறாமீன். கோட்டுமீன் கொழுங்குறை - புறம். 399 கோட்டூர்: கோட்டூர் = நீர்நிலையின் கரையை யடுத்துத் தோன்றிய ஊர். கோடு என்பது வளைவு. அது கொம்பு, கொப்பு, நீர்க்கரை முதலியவற்றைக் குறிக்கும். ஏரிக்கரை, குளக்கரை ஆயவற்றை ஒட்டியமைந்த ஊர்கள் கோட்டூர் எனப்பட்டன. எ-டு: சங்கர நயினார் கோயில் - திருவேங்கடம் சாலையின் இடையேயுள்ள பெருங்கோட்டூர். கோட்டை: கோட்டை:1 கோடு > கோட்டு > கோட்டை. கோடு = வளைவு. வளைத்துக் கட்டப்பட்ட சுவரும் மதிலும் கோட்டை எனப்பட்டன. கோட்டையூர், கோட்டைப்பட்டி, என ஊர்ப் பெயர்களின் முன்னொட்டாகவும், புதுக்கோட்டை, செங் கோட்டை, பழங்கோட்டை எனப் பின்னொட்டாகவும் வரும். கோட்டை இயற்கைக்கோட்டை, செயற்கைக் கோட்டை என இருவகைய. இயற்கைக் கோட்டை அரணாகும்; அரணமுமாம். மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் அமைவ தரண் - திருக். 742 செயற்கைக் கோட்டை, பாகார் இஞ்சி (கம்ப. சுந். 178) என்றும், இஞ்சி சூழ் தஞ்சை (திருவிசைப்.) என்றும் சொல்லப்படும். செம்புருக்கு நீர்விட்டுக் கட்டப்பட்டுச் செறிவாயதால் (அர் + அணம்) அரணம் ஆயது. அரணம் செயற்கையாகச் செய்யப்பட்டதை, ஆவரணம் என்றனர். ஆ + அரணம் = ஆவரணம். ஆக்கப்பட்ட அரணம் ஆவரணமாம். திருவரங்கத்தில் ஏழு கோட்டைகள் இருப்பதால் அதனை ஏழாவரணம் (சப்தாவரணம்) என்றனர். கோட்டையின் அருமை அமைவை நோக்கி ஆரணி என வழங்கினர். அரணம் > ஆரணம் > ஆரணி. இது வேலூர் மாவட்டத்தது. காடு, இயற்கை அரணம் ஆதலால் அஃது அரணம் > ஆரணம் > ஆரணியம் எனப்பட்டது. அதனை ஆரண்யம் என வேற்றுச் சொல்லாக்கினர். முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் தமிழர் போரற முறை (தொல். 1011) ஆதல் கருதுக. காட்டரண் சிறப்பு கானப்பேர் எயில் என்னும் அருமைப் பெயரால் விளங்கும் (புறம். 21). கோட்டை:2 சணலால் அமைந்த கோணிகளில் அளந்து போடப்பட்ட தவசம் இரண்டு மூடை ஒரு கோட்டை என முகத்தல் அளவைப் பெயராயிற்று. கோட்டை:3 கோட்டை விடுதல் என்பது தப்ப விடுதல், இழந்து போதல், தோற்றுப் போதல் பொருளைத் தருதல், கோட்டை இழந்து கோல் இழந்து போன வேந்தர்களின் பழவரலாற்றுச் சான்றாம். கோட்படுதல்: கோள் + படுதல் = கோட்படுதல் = கொள்ளப்படுதல். வாள்பொரு வானத்து அரவின்வாய்க் கோட்பட்டுப் போதரும் பான்மதியம் - கலித் 105 கோட்பறை: கோள் + பறை = கோட்பறை. கொள்ளையடிக்கப் புகுவார் தம் வல்லாண்மை காட்டவும், அஞ்சினார் அகன்றோடவும் துணிவுடையார் எதிர்க்கவும் கொட்டும் பறை முழக்கு கோட்பறை யாகும். கொள்ளையடிக்கக் கொட்டும் பறை முழக்கு என்பது இதன் பொருளாம். வெட்சிப்போர் வேறு; இக்கோட்போர் (கொள்ளைப் போர்) வேறு. அது போரறம். இது வல்லாண் கொள்ளையர் செயல். கோட்புலி: கோள் + புலி = கோட்புலி. புலி, தான் கொள்ளக் கருதியதைக் கொள்ளாமல் விடாது. அதன் அழுந்திய முயற்சி அது. அத்தகைய கொள்கை யுடைய ராய் விளங்கிய சிவனடியார் ஒருவர் கோட்புலி நாயனார். அவர் திருத்தொண்டர் புராணப்பாடு புகழாளருள் ஒருவர். கோணக்கண்: மாறுகண் என்பது பொதுவழக்கு. எதையோ பார்ப்பது போல் தோற்றம் தந்து வேறொன்றைப் பார்ப்பதாக இருப்பதை மாறுகண் என்பர். புதுக்கடை வட்டாரத்தில் மாறுகண் என்பதைக் கோணக்கண் என்கின்றனர். கோணக்கால், கோணக்கை, கோணன், கோணையன் என்பவை எல்லாம் வளைவுப் பொருளில் வழக்கிலுள்ள தென்தமிழகச் சொற்களாம். கோணம்: கோண் + அம் = கோணம். கோண் = வளைவு. கோணம் = தோட்டி (அங்குசம்). கோணம் தின்ற வடுவாழ் முகத்த - மதுரைக். 592 கோணல் மாணல்: கோணல் = நேர் விலகி வளைந்து செல்லும் கோடு. மாணல் = வளைந்து செல்லும் கோட்டைக் குறுக்கும் மறுக்குமாக எதிரிட்டுச் செல்லும் கோடு. கோண் = வளைவு. கூன், கூனல் என்பனவும் வளைவே. நெறிமுறையில் செல்லாதவனைக் கோணன் என்பதும் வழக்கு. மாணல் என்பது மாறல் என்னும் பொருளது. மாறல், கோணலைத் தொடர்ந்து மாணல் ஆயது. கோண்: நேராய் உள்ள ஒன்று வளைதல் கோண் ஆகும். சிலர் கால் வளைதலால் கோணக்(ற்) காலன் எனப்படுவதுண்டு. கோண் + அல் = கோணல், கோணுதல். கணக்கில் முக்கோணம் நாற்கோணம் என்பன உண்டு. எழுகோணம் எண்கோணம் என மாளிகைகள் உண்டு. எழுகோண மாளிகை, எண்கோண மாளிகை என்பவை அவை. சதகூறிட்ட கோணிலும் உளன் என்பார் கம்பர் (உயுத். 254). கோணலாக அமைந்த சணல்சாக்கு கோணிச் சாக்கு எனப் படும். கும்பகோணம் என்பது பிறழ்வழக்கு; குடமூக்கு என்பது அதன் பெயர். மூக்கின் அமைப்பு முக்கோணமாதல் அறிக. அறிவுக் குழப்பம் உடையவனைக் கோணையன் என்பது மக்கள் வழக்கு. கோண்மா: கோள் > கோண் + மா = கோண்மா = உயிரைக் கொள்ளும் விலங்கு. புலி, அரிமா அன்னவை கோண்மா எனப்படும். ஆருயிர்த் துப்பில் கோண்மா வழங்கும் - அகம். 108 கோண்மீன்: கோள் > கோண் + மீன் = கோண்மீன். கோளாகிய விண்மீன், கோண்மீன். நாண்மீன் விராய கோண்மீன் போல மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ - பட். 68-69 கோதண்டம்: கோ = பெரிய; தண்டம் = தண்டனை. முன்னைத் திண்ணைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஒழுங்காக வாராத பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் வழங்கிய தண்டனை வகைகளுள் ஒன்று. கால்கள் இரண்டிலும் தொடரி (சங்கிலி) மாட்டி, அத்தொடரியை ஒரு கட்டையில் மாட்டி அதனைக் கையில் ஏந்திக் கொண்டு வருதல் வேண்டும் என்பது அது. கிட்டி போடுதல் என்பதும் பெரும்தண்டமே. இரண்டு கட்டைகளை எடுத்து அவற்றில் கால்நுழையுமளவு பள்ளமாக்கி, ஒன்றைக் கீழே வைத்து பள்ளத்தின்மேல் கால்களை வைத்து, மேலே மற்றொரு கட்டையை வைத்து இருபக்கங்களிலும் திருகாணி வைத்துவிடுவது கிட்டியாகும். அவன் பள்ளியை விட்டு ஓடாமல் இருக்கச் செய்யும் தண்டம் இது. இன்னும் கொடிய தண்டங்களும் இருந்தன. கோதாட்டு: கோது + ஆட்டு = கோதாட்டு. கோதாட்டு:1 சூதாட்டு. கோது = களங்கம் குற்றம். கோதாட்டொழி - ஆத்தி. கோதாட்டு:2 நாவில் படியும் அழுக்குப் போக்கல். கோதாட்டி - திருச்செந். பிள். கோது: கோது = சக்கை; பயன்கொள்ள ஆகாதது என ஒதுக்கப் பட்ட சக்கை. நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல் - புறம். 114 பொருள்: மதுப்பிழிந்து போகடப்பட்ட கோதுடைத் தாகிய சிதறியவை (ப.உ.) ... ... - கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு - நாலடி. 34 கோதை: கோதை:1 கோதி முடிக்கப் படுவது. கோதை = கூந்தல். கோதை, கூட்டி முடியும் உயர் கொண்டை வகையுள் ஒன்று. கோதைத் தாமம் குழலொடு களைந்து - சிலப். 27:107 கோதை:2 உயரிய ஒப்பனைக் கூந்தலை யுடைய ஆண்டாளார். கோதை:3 சேரவேந்தன் மாவண்கோதை. கோதை மார்பில் கோதை யானும் - புறம். 48 வில்லவன் கோதை - சிலப். 25:151 கோதை:4 மாலை; கொத்தாகக் கூட்டிக் கூந்தலில் முடியும் மாலை. கோதை யருவிக் குளிர்வரை நன்னாட - நாலடி. 71 கோதை:5 ஓராறு; கோதையாறு; கோதைவிரி (கோதாவரி). கோதா வரியினை வீரர் கண்டார் - கம்ப. ஆரண். 226 கோதை:6 ஓரூர்; கோதை நாய்ச்சியார்புரம். கோதை:7 ஒரு பின்னொட்டு. பூங்கோதை (பெயர்). கோதை:8 அன்மொழித் தொகையாய்க் கோதையை யுடைய மாதரைக் குறித்தது. கோதை மீதில் படர்ந்த மருந்து - முத் தாண். கோத்தை: கோது > கோத்து + ஐ = கோத்தை. கொத்தை = அழிவு. கொத்தைப் பருத்தி நூற்க உதவாது எனத் தள்ளப் படுவது மக்கள் வழக்கு. கோது = குற்றம்; பயனற்றது. சீர்த்து விளங்கிப் புகழ்பூத்தல் அல்லது கோத்தை யுண்டாமோ மதுரை கொடித்தேரான் வார்த்தையுண் டாகு மளவு - பரிபா. தி. 10 கோநாய்: நாய்வகையில் உயரமாகவும் பரியதாகவும் ஓங்கிக் குரல் எழுப்புவதாகவும் அமைந்த நாய் கோநாய் எனப்பட்டது. கோ - பெரியது என்னும் பொருள் தருதல் கோத்தும்பி என்பதால் விளங்கும். கோத்தும்பி மணிவாசகரால் பாடுபுகழ் பெற்றது. ஓநாய் என்பதும் வழக்கு. ஓ - உயர்வு. ஓங்கல்; ஓ = ஒலி; ஓ மதகு நீர் தாங்கும் பலகை. ஓரிடப் பெயரும் ஊர்ப்பெயரும் ஓநாய்க்கல் (ஓணாக்கல்) என்பது. * நாய் காண்க. கோநீர்வரி (கோமூத்திரி): ஆன் நடந்து கொண்டு நீர் விடுதலால் உண்டாகும் தடத்தின் வடிவாக அமைக்கப்படுவதொரு கோட்டிலே எழுத்துகள் அமையப் பாடும் பாடல் கோமூத்திரி எனப்படும். நான்கடிப் பாடலில் முன்னிரண்டடிகளையும் ஒரு வரிசையாயும், பின்னிரண்டடிகளையும் ஒரு வரிசையாகவும் நேர் கீழே எழுதினால் இரட்டைப் படையாக வரும் எழுத்துக ளெல்லாம் ஒரே எழுத்துகளாக அமைந்து, ஓரெழுத்து மேலும் ஓரெழுத்துக் கீழுமாகக் கோத்துப் படிக்க அப்பாடல் அமைப்பு மாறாதிருக்கும். பருவ மாகவி தோகன மாலையே பொருவி லாவுழை மேவன கோகன கானமே மருவு மாசை விடாகன மாலையே வெருவ லாயிழை பூவணி காலமே 1, 3; 2, 4 என அடிகளை இயைத்துக் காட்டியது இது (தண்டி. 67, மேற்.). இவ்வகையில் திருக்கோமூத்திரிப் பதிகம் தேவாரத்தில் உள்ளது. அஃது ஆளுடைய பிள்ளையார் அருளியது. பெயர் இவ்வாறு இருந்தாலும், அதன் திருக்கடைக் காப்பு வழிமுடக்கு மாவின் பாய்ச்சல் என்றுள்ளது. கோமூத்திரி வகைக்கு இப்பதிகப் பாடல்கள் இயையாமையாலும், மாவின் பாய்ச்சல் என்பது குதிரைப் பாய்ச்சல் எனப்படும் சதுரங்க துரக கதி பந்தம் போல்வதொரு மிறைக்கவியாதல் வேண்டும். சதுரங்க துரகபதி பந்தம் ஆகாதோ இஃது எனின், 64 கட்டங்களுள் அடக்கிக் காட்டத் தக்க பாட்டு அதுவாகலின் அவ்வகைப் படுத்தக் கூடவில்லை. திருக்கோமூத்திரி என்னும் பதிகக் குறிப்பு ஆயத்தக்கதாம். பூ மகனூர் எனத் தொடங்கும் திருப்பிரமபுரப் பதிகம் காண்க. கோந்து: பழநாளில் பயின் என வழங்கப்பட்ட பசைப்பொருள் பிசின் என வழங்குகின்றது. கொந்து என்பது திரள்வது, கூடுவது என்னும் பொருளது. ஒருவகை நீர் திரண்டு கட்டியாவதால் கோந்து என மக்களால் வழங்கப்பட்டது. கோந்து என்பது தென்தமிழக வழக்கு. ஒன்று சேர்தல் கொந்து > கோந்து. பிரிதல் கந்து > கந்தை (கிழிந்த உடை). கோந்தை: உள்ளீடு இல்லாத பனங்கொட்டையைக் கோந்தை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும். கோது என்பது பயனற்றது. கோதென்று கொள்ளாதாம் கூற்று என்பது நாலடி (106). உள்ளீடு இல்லாதது பயனற்றது. கோது > கோத்து > கோத்தை > கோந்தை. கோபால்: கோபாலன் என்னும் கண்ணன் பெயர் கோபால் எனத் தொகுத்தது. கோவைப் பரிபாலிப்பவன் கோபாலன் (இருபிறப்பி). அவன் அடையாளமாக இடப்பட்ட நெற்றி தோள் மார்புத் திருமண் கோபாலம் எனப்பட்டது. அதனை மக்கள் கோப்பானம் என வழங்குகின்றனர். இராமன் பெயரால் இடப்பட்ட இராமம் நாமம் ஆனது போன்றது. எ-டு: நாமக்கல். கோப்பு: கோப்பு:1 கோக்கப்பட்டது கோப்பு. பலவகைப் பொருள்களை - மணிகளை - மலர்களை - இதழ்களை ஓர் ஒழுங்குற வைப்பது கோப்பு எனப்படும். இந்நாள் அலுவலகக் கோப்புகளையும் அந்நாள் கோவைகளையும் எண்ணுக. இக்கோப்பு மக்கள் வழக்கில் உடை, அணி, ஒப்பனை முதலியவற்றைக் கொண்டு பொலிவாக இருப்பவரை அவர் கோப்பானவர் என்னும் பாராட்டாக உள்ளது. கோப்பு, விளக்கமாகக் கட்டுக்கோப்பு என்பதுமாம். கோப்பன் = பொலிவானவன். இது தென்தமிழக வழக்கு. கோப்பு:2 கோப்பு உழவர் வழிச் சொல்லாகும். கல்வெட்டிலும் கோப்பு ஆட்சி உண்டு. ஏரிநீர், வயல்சென்று பாய்வதற்குப் பகுத்து விடுவதைக் கோப்பு என்பது வழக்கு. கட்டுக் கோப்பு என்பது, ஓர் ஒழுங்குபட்ட அமைப்பு ஆகும். இப்பகுதியில் பாய்நிலம் இவ்வளவு எனக் கணக்கு வைத்து அதற்குத் தக்க அளவு, பொழுது ஆயவை வரம்பு செய்து நீர்விடுவது கோப்பு ஆகின்றது. கோப்பு:3 செப்பமாகவும் பொருந்தவும் செய்யப்படும் செய்நேர்த்தி கோப்பு எனப்படும். அதனால் கோப்பு என்பது அழகு என்னும் பொருளமைந்த வழக்காகச் சோழவந்தான் வட்டாரத்தில் வழங்குகின்றது. கோத்தல், கோவை என்பவை ஒழங்குறத் தொடுத்தல் அறிக. கோப்பெருந்தேவி: கோவாம் வேந்தன் பல தேவியர்களை உடையவனாக இருந்தான். அவருள் பட்டத்து அரசியாக இருப்பவளும், திருவோலக்கத்தில் அரசன் உடனிருக்கை கொள்பவளும், மன்னனுக்குப் பின்னர் மன்னனாம் மகவுரிமை உடையவளும் கோப்பெருந் தேவி ஆவாள். பெருந்தேவி, தேவி என்பாளும் அவள். கூத்தரங்கில் கூட இருந்தவளும், வழக்குரையில் உடன் இருந்தவளும் கோப்பெருந்தேவி. ஆதலால் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுடன் இறப்பில் ஒன்றானாள் என்னும் சிலம்பால் தெளிவாம் (வழக்குரை காதை). கோமகள் கோமாட்டி கோயிலாள் அரசமாதேவி எனப்பட்டாளும் அவள். கோமான்: கோ + மகன் = கோமகன் > கோமான் = அரசன். மகன் > மான்; மகள் > மாள். ஆர்கலி நறவின் அதியர் கோமான் - புறம். 91 கோம்பை: மலையடி வாரத்தில் உள்ள ஊர்கள் பல கோம்பை என்னும் பெயருடன் வழங்குகின்றன. கோம்பை என்பது பள்ளத்தாக்கு என்னும் பொருளில் கண்டமனூர் வட்டார வழக்கில் உள்ளது. கூம்பு > கோம்பு > கோம்பை. கூம்பு வடிவில் உயர்ந்த மலையின் அடிவாரம் கோம்பை என வழங்கியதாகலாம். ஆங்குள்ள ஊருக்கும் அப்பெயர் வழங்குதல் இயல்பு. கோயிலொழுகு: கோயில் நடைமுறை ஒழுங்குகளைக் கூறும் நூல் கோயிலொழுகு என்பதாம். திருவரங்கக் கோயிலொழுகு என்பதொரு நூல் குறிப்பிடத் தக்கது. கோயிலொழுகு போல்வதொரு நூல் சீதளப் புத்தகம் என்பது. சீர்தளம் என்பது சீதளமாயிற்று. திருக்கோயில் என்பது அதன் பொருள். திருக்கோயில் திருப்பணி, கோயில் நடைமுறை பற்றிய செய்திகளைக் கூறும் நூலே, சீதளப் புத்தகமாம். மதுரைத் திருக்கோயில் திருப்பணிகளைக் குறிக்கும் சீதள நூல் உண்டு. திருப்பணி மாலை என்பதொரு நூலும் கோயில் திருப்பணி பற்றியதே. மதுரைத் திருவாலவாயுடையார் கோயில் திருப்பணி மாலை, நல்ல பெண் என்பாள் செய்த திருப்பணியை, மண்ணிலுள் ளோர்களும் யாவரும் போற்று மதுரைச்சொக்கர்க் கண்ணிய சந்நிதி வாசலி லேநல் லழகுபெறத் திண்ணிய பேரருள் நந்தீ சரைப்பிர திட்டைசெய்தாள் பெண்ணினி னல்லபெண் ணென்றே பெயர்மிகப் பெற்றவளே என்கிறது. இதன் பாடல்கள் பெரும்பாலனவும் கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை. சிதைவின்றிக் கிடைத்துள்ள பாடல்கள் நூற்று ஆறாம். கோயில்: கோ + இல் = கோயில். கோ = ஆன், அரசன், இறைவன் முதலாய பலபொருள் ஒரு சொல். கோயில் என்பது தொழுவம், அரண்மனை, கோயில் எனமூன்றும் பொருள் கொண்டன. இவற்றைக் காட்டும் வளாகமாகக் கோபுரம் விளங்கின. புரம், புரி, புரிசை என்பவை கோட்டை யமைந்த வளாகமாம். மாநகர்க்குக் கோபுரம் - நன். 55 என்பது அடையாளம். வாயில் வந்து கோயில் காட்ட - சிலப். 20:46 என்பது அரண்மனை. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா என்பது இறையுறை இடம். கோயில் என்பதா? கோவில் என்பதா? இருவகையாலும் சொல்லுகின்றனரே. கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் கூட இருவகையாலும் எழுதுகின்றனரே, எது சரியானது? கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா என்று பள்ளிப் பிள்ளைகளுக்கும் சொல்லி வைத்தார் பாட்டி, கோயில் இல்லா ஊரே தமிழகத்தில் இல்லை என்பதும் உண்மை. அக்கோயில்களிலேயும், அதன் விளம்பரத்திலும் கூடக் கோயிலும், கோவிலும் மாறி மாறித் தலைகாட்டி மயக்குகின்றனவே; கோயில் பெயரிலே கோயிலுக்கே குழப்பம் வரலாமா? கோயில் ஊர்களிலே குழப்பம் வரலாமா? கோ என்பது ஓர் எழுத்து ஒரு சொல். இதற்கு நாற்பதற்கு மேற்பட்ட பொருள்கள் உளவாயினும், அரசன், தலைவன், இறைவன் என்னும் பொருள்களின் அடிப்படையிலேயே கோயில் என்பது வந்தது. கோ இல் என்னும் இரு சொற்களின் இணைப்பே கோயில் என்பது அனைவரும் அறிந்ததே. கோ = அரசன்; அவன் கோமகன், கோமான், கோவேந்தன் என்றும் வழங்கப் பெற்றான். அரசி, கோமகள், கோமாள், கோப்பெருந்தேவி, கோயிலாள் என வழங்கப் பெற்றாள். இருவர்க்கும் தனித்தனி அரண்மனைப் பகுதிகள் இருந்தன. அரசுறை கோயில்(சிலப். 18:25)அரசன் செழுங்கோயில் (சிலப். 19:75) கோமகன் கோயில் (சிலப். 22:14)கோப்பெருந்தேவி கோயில் - (மணி. 7:64) கொங்கவிழ் குழலாள் கோயில் (மணி. 23:38) என்றும் வருவனவற்றால் அறியலாம். இனிப் பொது வகையால், கோயில் என்று வருவன இரண்டன் பகுதிகளையும் உட்கொண்ட அரண்மனைகளையும், காவல்மிக்க மாளிகை இடங்களையும் குறிப்பனவாம். சோழன் கோயில் (புறம். 378)ஆஅய் கோயில் (புறம். 127) காவல்வெண் குடை மன்னவன் கோயில் (சிலப். 3:18) மாலை வெண்குடை மன்னவன் கோயில் (சிலப். 5:173) மறத்துறை விளங்கிய மன்னவன் கோயில் (சிலப். 14:12) பெரும்பெயர் மன்னன் பேரிசைக் கோயில் (சிலப். 13:128) வேறுபட்ட வினை யோவத்து வெண் கோயில் (பட். 50:13) என இவ்வாறு வருவனவற்றால் விளங்கும். கோயிலில் பணிபுரிந்தவர்கள் கோயின் மாக்கள், கோயிலார் எனப் பெற்றனர். அரண்மனைத் தொடர்பால் பெற்ற பெயர்கள் இவை என்பது வெளிப்படை. காவல் கடமை புரிந்த வேந்தனைக் கடவுளாக மக்கள் மதித்தனர்; வழிபட்டனர். மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என வாழ்ந்தனர். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் என அறநூல் (388) கூறும் அளவுக்கு அரசர் செல்வாக்கு இருந்தது. அவர்தம் அரண்மனைக்குள்ளே இறைவனும் கோயில் கொண்டான்; அவன் கோயில் கொண்ட இடமும் கோயில் ஆயிற்று. அரசர்க்குரிய விழாக்களும் சிறப்புகளும் கோயில் களுக்கு உரியவையாயின. இந்நிலையில் அரசன் கோயிலும் இறைவன் கோயிலும் ஒன்றாகியும், வேறாகியும் விளங்கின. இதனை, அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும் பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும் - சிலப். 13:137-138 என்றும், பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் - சிலப். 5:169-173 என்றும் இளங்கோவடிகளார் இயம்புகின்றார். அரண்மனை, பெருமாளிகை, இறைவன் குடிகொண்ட இடம் ஆகியவை கோயில் என வழங்கப் பெற்றன என்பதை நாம் தெளிவாக அறிகின்றோம். இவற்றுள் எந்த ஓர் இடமும் - எந்த நூலிலும் - கோவில் எனக் குறிக்கப் பெற்றதே இல்லை. பழந்தமிழ்ச் சான்றோர் காலம் தொட்டு ஔவைப் பாட்டி காலம் வரைக்கும் கோயில் பெயர் மாறவில்லை. இடைக்காலப் பிற்காலங்களில் எழுந்த கோயில் திருவாய் மொழி, கோயில் நான்மணி மாலை, கோயில் கலம்பகம், கோயில் புராணம், கோயில் திரு அகவல், கோயில் திருப்பணியர் விருத்தம் என்பவற்றிலும் கோயில் செவ்வையாகவே இருந்தது. கோயில் ஒழுகு என்னும் நூலும் தன் ஒழுகு தவறாமலே இலங்கியது. ஆனால், இன்று கோயிலும் கோவிலும் குழம்பிக் குலாவுகின்றன. அகர வரிசை நூல்கள் கோயிலொடு கோவிலுக்கும் இடம் தந்துவிட்டன. ஆனால், நிகண்டு நூல்களில், கோவில் புகுந்திலது. ஆசிரியர் தொல்காப்பியனார் உயிர்மயங்கியலில், இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும் (91) என்றார். அதற்கு, ஓகார வீற்றுக் கோ என்னும் மொழியினை இல் என்னும் வருமொழியொடு சொல்லின் ஓகாரம் மிகாது இயல்பாய் முடியும் என உரை கூறிக் கோயில் என எடுத்துக்காட்டுத் தந்தார் இளம்பூரணர். ஆனால், இதே உரையைத் தழுவிக் கொண்ட நச்சினார்க்கினியர் உரை கோவில் என எடுத்துக்காட்டுத் தருகின்றது. இஃது ஏடு எழுதியவர் தவறாகவோ; பெயர்த்தவர் தவறாகவோ அமைதலும் கூடும். கோவூர், கோவியன் வீதி என்பன சங்கச் சான்றோர் நாளிலேயே வழங்கப் பெற்றனவே எனச் சிலர் எண்ணவும் கூடும். கோவூர் என்பது வகர உடம்படு மெய் பெற்று நின்றது. மற்றது, கோவியன் வீதி எனப் பிரிந்து வியன் என்னும் அகற்சிப் பொருள்தரும் உரிச்சொல்லாக நின்றது. இ ஈ ஐவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ்விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும் - நன். 162 என்று நன்னூலார் உடம்படு மெய்க்கு விதித்த விதி கோயிலுக்குப் பொருந்தாது. அதனால் அன்றே, அதன் உரைகாரர் கோவில் எனக் காட்டார் ஆயினர். காட்டினும், இலக்கிய வழக்கொடு முரணுவது என்று தள்ளுவதே முறையாம். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்பது தொன்னெறி. அம்மரபு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை போற்றப் பெற்றது. மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் என உணர்ந்து கோயில் எனச் சொல்லுதலும் எழுதுதலும் கடமையாம். கோயில் என வழங்கும் இடங்கள் வரம்பிலவாக இருத்தலின் அவற்றை யெல்லாம் காட்டாது சிலவே சுட்டப் பெற்றன. பிற்காலப் புலவர்கள் அறிஞர்கள் ஆகியோர் மரபுநிலை மாறாமலும், மயங்கியும் எழுதியவற்றைக் கற்பார் கண்டு கொள்வரெனச் சுட்டிக் காட்டப் பெற்றில. நன்னூலார்க்கு உடம்பாடு ஆயின் ஏ, ஓ முன் இருமையும் என்று கூறியிருப்பார் அல்லரோ! கோரல்: கோர் + அல் = கோரல். கோரிக்கை அல்லது வேண்டுகை வைத்தல். ஊரவர் தீர்மானத்தை நிறைவேற்றி அருளுமாறு கோருகிறோம். கோரிக்கை வைத்தல் என்பதும் கோருதல் என்பதும் இது. கோலுதல் > கோருதல். இக்கால் மக்கள் வழக்கில் கோலுதல் கோருதலாக உள்ளமையும் எண்ணலாம். கோலம்: கோல் + அம் = கோலம் = அழகு. கோல் = வட்டம், வளையம், உருண்டை. வட்டமும் வளையமுமாய்ச் செடியும் கொடியும் வரைந்து வண்ணமும் வனப்பும் செய்தது கோலம் எனப்பட்டது. அது கண்டவர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்ததால் அழகு என்னும் பொருளும் வாய்த்தது. அவ்வாறு அழகு தோன்றாமல் வரைந்தது அல்லது இட்டது அலங்கோலம் எனப்பட்டது. அல் - அல்லாதது. அம் - அழகு; அழகற்றது. பின்னர் அழகற்ற புனைவு, உடை, இல்லம் ஆயவை அலங்கோலம் எனப்பட்டன. பெரும் ஆளாகக் கண்ட பெருமாள் அழகர் எனப் பட்டதும், அழகர் மலை உள்ளதும் அறியும் நாம், சென்னையில் கோலப்பெருமாள் கோயில் உள்ளதையும், மதுரை நகரின் உள்ளே கூடலழகர் கோயில் உள்ளதையும் எண்ணலாம். அவரை அந்தரவானத்து எம்பிரான் என்பார் அடியார்க்குநல்லார் (சிலப். 18:4 உரை). கோலார்: தங்கவயல் என வழங்கப்படும் கோலார், பண்டு குவளால புரம் என வழங்கப்பட்டதாம். நன்னூற் புரவலனாம் சீயகங்கன் அரசுசெய்த இடம் அது (நன். பாயி.). கோலியான்: ஒட்டி அடையும் தூசி, நூலாம்படை, சிலந்திவலை முதலியவற்றைத் துடைத்து எடுக்கும் துடைப்பக் கோலுக்கு ஒட்டடைக் கோல் (ஒட்டடைக் கம்பு) என்பது பெயர். ஒட்டறை என்பது பிழை. ஒட்டியுள்ளவற்றைக் கோலி வரும் கருவியாகிய அதனைக் கோலியான் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. கோலுதல் = அள்ளுதல், எடுத்தல். கோலுதல்: கோலுதல் = அள்ளிக் கொள்ளுதல். கோலம் = அழகு. கண்ணால் அள்ளிக் கொள்ளும் அழகு கோலுதல் எனப்பட்டுப் பின்னர்க் கையால் அள்ளுதலையும் கோலுதல் என்று வழங்கப்பட்டது. கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்றது, அழகு -என்பார் பேரா. திருக்கோ. 1 கோல்: கோல்:1 கோல் = வலிய கம்பு. எறிகோல் அஞ்சா அரவின் அன்ன சிறுவன் மள்ளர் - புறம். 89 கோல்:2 செங்கோல்; செம்மை = நேர்மை. கொடிது கடிந்து கோல்திருத்தி- புறம். 17 கோல்:3 முரசு - பறை - முழக்கும் கோல். நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை - புறம். 70 கோல்:4 கோல் = தாற்றுக்கோல். குன்றம் போகும் கதழ்கோல் உமணர் - அகம். 140 தார்க்கோல் என்பது உழவர் வழக்கு. கோல்:5 கோல் = திரட்சி. சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கை - அகம். 142 கோல்:6 கோல் = தண்டு. கருங்கோல் குறிஞ்சி - புறம். 374 கோல்:7 கோல் = கோல்தொழில். கோல்திரள் முன்கை - புறம். 113 பொருள்: கோற்றொழிலாகச் செய்யப்பட்ட திரண்ட குறிய வளையலை அணிந்த முன்கை (ப.உ.). கோல்:8 கோல் = அம்பு. வார்கோல், கொடுமர மறவர் பெரும - புறம். 43 கோல்:9 கோல் = துலாக்கோல் (நிறைகோல், சமன்கோல்). தெரிகோல் ஞமன்ன் போல ஒருதிறம் பற்றல் இலியரோ - புறம். 6 கோல்:10 கோல் = கொடுங்கோல். குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக - புறம். 72 கோல்:11 கோல் = கம்பி. வெள்ளிக்கோல் வரைந்தன்ன வால்அவிழ் மிதவை - அகம். 37 கோல்:12 கோல் = மரக்கிளை. குமரி வாகைக் கோலுடை நறுவீ - குறுந். 347 கோல்:13 கோல் = ஊன்றுகோல். கோல்காலாகக் குறும்பல ஒதுங்கி - புறம். 159 கோல்:14 கோல் = அழகு. கோலமை விழுத்தொடி விளங்க வீசி - அகம். 162 எ-டு: கோலக்கா, திருக்கோலக்கா. கோல்:15 கோல் = தூண்டிற்கோல். நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள் - அகம். 216 கோல்:16 கோல் = மையெழுதும் கோல். எழுதுங்கால் கோல்காணாக் கண் - திருக். 1285 கோல்:17 கோல் = எழுதுகோல். ஊசி, இறகு, கரிக்கோல், ஊற்றுக்கோல், பந்துமுனைக் கோல் என வகை வகையாக வந்துள்ள எழுதுகோல்கள். கோல்:18 கோலாட்டம் ஆடப்பயன்படுத்தும் கோல். கோல்:19 மாடு கட்டப் பயன்படுத்தும் முளைக்கோல். கோல்:20 உழவு வண்டி ஆயவற்றிக்குப் பயன்படுத்தும் நுகக்கோல். கோல்:21 அளக்கும் அடிக்கோல். முழக்கோல். நீட்டி அளப்பதோர் கோல் - திருக். 796 கோல்:22 கோல் = உருண்டை. கோல் + இ = கோலி. கோல்:23 கோல் என்பது முக்கோல். திரிதண்டம், திரிதண்டு என்பனவும் அது. நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க் குரிய என்பது தொல்காப்பியத்தில் காணப்பெறும் ஒரு நூற்பா (மரபு. 71). முக்கோல் கொள்ளுதல் காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன் நாமமும் விடுத்தமைக்கு அடையாளம் என்றும், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலமும் கடந்தமைக்குச் சான்று என்றும், மனம், வாக்கு, காயம் என்னும் முக்கரணமும் ஒடுக்கியமைக்குக் காட்டு என்றும் கூறுவர். முக்கோல் - திரிதண்டம். அது மூன்று கோல் ஒன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்ட தண்டு என்பது கதிர்வேல் பிள்ளை அகராதிக் குறிப்பு. முக்கோல் உடையவரை முக்கோற் பகவர் என்பார் நாற்கவிராச நம்பியார் (நம்பி. 188). அவிர் முருக்கந்தோல் உரித்த கோலர் என்பது சிறந்து விளங்கும் முருக்கின் தோல் உரிக்கப் பெற்ற கோலை உடையவர் என்றுமாம். முருக்கின் கோலைத் தண்டாகப் பயன்படுத்துதல் செம்பூ முருக்கின் நன்னார் களைந்து, தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து என வரும் குறுந்தொகையாற் (156) புலனாம். கோல்தாங்கி: ஊன்றுகோல் என்பதைச் சீர்காழி வட்டாரத்தினர் கோல் தாங்கி என்கின்றனர். தாங்கும் ஒன்று தாங்கி ஆகும். சுவரில் பதித்து நீண்ட கம்பும் அதன்மேல் உள்ள பொருள் வைக்கும் பலகையும் இணைந்த அமைப்பை மண்தாங்கி என்பர். குடிசை வீடுகளில் எல்லாம் மண்தாங்கி உண்டு. சுமைதாங்கி அமைப்பது முன்னை வழக்கு. கோல், தாங்குவதாக இருத்தலால் கோல் தாங்கி என்பர். கோவப்பேறு: சினமும் அருளும் ஆகிய இருவகை முரணியல்களையும் இறைவன், நெறியுறச் செய்தமையை மாறி மாறி வர உரைப்ப தொரு நூல்வகை கோபப் பிரசாதம் எனப்படும் கோவப்பேறு ஆகும். காய்தலும் அருளலும் ஆகிய இது, காய்வருளாம். பிரசாதம் என்பது அருட்கொடையாம். இந்நூலின் உட்கிடைப் பொருளை, இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க் கருளினர் என்றறிய உலகின் முன்னே உரைப்பதில்லை எனவரும் நக்கீர தேவ நாயனார் இயற்றிய கோபப்பிரசாத அடிகள் விளக்கும். இந்நூல் 100 அடிகளைக் கொண்ட இணைக்குறள் ஆசிரியப்பாவால் அமைந்ததாகும். அண்ட வாணனுக் காழியன் றருளியும் உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும் என நூல் தொடக்கத்திலேயே அருளலும், ஒறுத்தலும் கண்டு கொள்க. கோவம்: கோவப் பழச் சிவப்புப் போன்று கண்சிவக்கச் சினத்தல் கோவமாம். கோவங் கொண்டார் கண் சிவக்கும். அக்கண் சிவப்பன்ன நிறமுடைய பழத்தைத் தரும் கொடி கோவக் கொடி; கோவப்பழம். கொவ்வை என்பதும் இது. கொவ்வைச் செவ்வாய் - தேவா. அப். சிவந்த பழத்தின் பெயரால் கொடி பெயர் பெற்றது; சினையாகுபெயர். கோவைக்காய் கறிக்கு ஆகும்; பழம் தின்ன ஆகும். கோவக்காயை ஆவக்காய் என்பது மக்கள் வழக்காகச் சில இடங்களில் உள்ளது. வானவில்லின் சிவப்பை எண்ணி இந்திர கோபம் என்றும் கூறினர். கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள - தொல். 855 உடல் கறுத்தலும், கண் சிவத்தலும் வெகுளிச் சான்று. கோவப்பழம் போல் கண் சிவந்து ஏறுதலால் அந்நிறப் பெயர் கோவம் என்னும் பண்புப் பெயராய், கோபம் என வேற்றுமொழி வேடம் பூண்டு உலா வருகிறது. காமம், கோபம், லோபம் முன்னவை இரண்டாகிய அரிய தமிழ்ச்சொற்களை ஆரியப் படுத்திவிட்டனர். கோவன்: கோ + அன் = கோவன். கோவன் = கோ ஆகிய பசுவுக்கு உரியவன். உயிர்களை எல்லாம் ஆன் (பசு) ஆகக் கொள்ளல் மெய்யியல் ஆகலின் கோவன் அரசன் எனவும் ஆண்டவன் எனவும் கொள்ளப்பட்டான். கோவன் புத்தூர் என்பதே கோவையின் பழம்பெயர். கோவன் வேட்கோ ஆகிய குயவர்களைக் குறித்தல் உண்டு. கோ திகிரியைக் கொண்டமை போல் குயத்தொழிற் கருவி திகிரி ஆதல் எண்ணுக. கலம்செய் கோவே என்பது புறம் (256). கோவன் > கோன் எனவும் வழங்கப்பட்டான். மக்கள் வழக்கில் கோனார் எனப்படுவதொரு குடிப்பெயராயிற்று. * மேய்ப்பர் காண்க. கோவிந்தா! கோவிந்தா!: கோவிந்தா கோவிந்தா = எல்லாமும் போயிற்று. இறந்து போனவர்க்குப் பல்லக்கு, பாடை எனக் கட்டி இடுகாடு அல்லது சுடுகாடு கொண்டு போகும் போது, கோவிந்தா, கோவிந்தா என்று சேர்ந்து சொல்லுவர். கோவிந்தன் தன் திருவடிப் பேற்றை அல்லது வைகுண்டத்தை அருள வேண்டும் என்பதற்காக வேண்டுவதாகக் குறிப்பர். ஆனால் கோவிந்தா கோவிந்தா என்பது இழப்பைக் குறிப்பதால் அவர் கோவிந்தா ஆகிவிட்டார் என்றால் பொருளை எல்லாம் இழந்துவிட்டார் என்னும் பொருள் தருவதாக வழக்கில் வந்துவிட்டது. பிள்ளைகள் விளையாடலில் அடுத்தவர்க்குத் தோல்வி வரவேண்டும் என்று கோவிந்தாப் போடுவதும் உண்டு. கோவிந்தனுக்கு உரிய விளி, கோவிந்தா! கோவினம்: கோ + இனம் = கோவினம் = ஆனினம். கோ = ஆன். கோவினத்து ஆயர் மகன் - கலி. 103 கோவேறு கழுதை: உயரமானதும் உடல்வலியதும் மலைசார் வாழ்வினதும் ஊர்வாழ் கழுதையினும் குதிரையினும் வேறானதாய் அமைந்த கழுதை கோவேறு கழுதையாம். மலைவாணர் சுமைகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தும் சுமையூர்தி கோவேறு கழுதையாம். சுற்றுலாச் செலவினர்க்கு மலையூர்தியாவதும் அது. * கழுதை காண்க. கோவை: எடுக்கவோ கோக்கவோ என்னும் துரியன் நயத்தகு நாகரிக வினவல் நாடறிந்த செய்தி. கோக்கப்பட்டது யாது? அது, கோவை என்க. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய முப் பொருளும் பொருந்திக் கைக்கிளை முதலமைந்த அன்புடைக் காமப் பகுதியவாம் களவொழுக்கத்தினையும் கற்பொழுக்கத் தினையும் கூறுதலை எல்லையாகக் கொண்டு கட்டளைக் கலித்துறை நானூறாகத் திணை முதலாகத் துறையீறாகிய பன்னிரண்டு அகப்பாட் டுறுப்பும் வழுவின்றி வரப் பாடுவது அகப்பொருட் கோவை எனப்படும் கோவையாகும். யாவையும் பாடிக் கோவை பாடுக என்னும் முன்மொழி, கோவையின் அருமையை உணர்த்தும். பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்னும் திருமொழியோ, சுவை நலப் பேற்றினைச் சொட்டச் சொட்ட உரைக்கும். கோவை என்பது கூறுங் காலை மேவிய களவு கற்பெனுங் கிளவி ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ முந்திய கலித்துறை நானூ றென்ப - பன்னிரு. 341 களவினுங் கற்பினும் கிளவி வகையாற் றிணைநிலை திரியாச் செம்மைத் தாகி நாட்டிய கலித்துறை நானூ றுரைப்பது கோட்ட மில்லாக் கோவை யாகும் - பன்னிரு. 342 முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து களவு கற்பெனும் வரைவுடைத் தாகி நலனுறு கலித்துறை நானூ றாக ஆறிரண் டுறுப்பும் ஊறின்றி விளங்கக் கூறுவ தகப்பொருட் கோவை யாகும் - இலக். பாட். 56 கோவை வெண்பா, அகவல், கலி, வஞ்சி, வண்ணம் இவற்றாலும் வழங்கப்படும் என்பர். முதல்கரு உரிப்பொருளொரு மூன்றும் அடைந்து கைக்கிளை அன்புடைக் காமப் பகுதிய வாங்களவு ஒழுக்கமும் கற்பும் இயம்புத லேயெல்லை யாகக் கட்டளைக் கலித்துறை நானூற் றாற்றிணை முதலாகத் துறையீ றாகச் சொல்லப் பட்டும் ஈறா றகப்பாட் டுறுப்பும் இயையக் கூறுவ தகப்பொருட் கோவையா மற்றிஃ தகவல்வெண் பாக்கலி யடுக்கியல் வண்ண வஞ்சி யினானும் வழுத்தப் படுமே - முத்துவீ. 1042 தொல்காப்பியனார் கூறும் அகப்பொருட் கூற்று வகைகளே இக்கோவைப் பனுவலுக்குக் கொடைவள வைப்பகமாம். கோவைக்கு எடுத்துக் காட்டுத் திருவைக் கூட்டுக; ஆர் சேர்க்க, அது திருக்கோவையார். பாண்டிக் கோவை, தஞ்சைவாணன் கோவை முதலியவை சான்று. * அகப்பொருட் கோவை காண்க. கோவை நூறு: முடிமுதல் தொடை இயையுற, நூறு பாடல்களால் அமைந்த நூல் கோவைச் சதகம் எனப்படும், கோவை நூறு ஆகும். கோவை என்னும் சொல்லாட்சியால், அகப்பொருட் கோவைக்குரிய கட்டளைக் கலித்துறைப் பாவான் இயல்வது என்பது விளங்கும். நெல்லை மாவட்டம் சார்ந்த வடகரைக் குறுநில மன்னர் மேல் புலவர் பெரியசாமி என்பவரால் இயற்றப்பட்ட, கோவைச் சதகம் எடுத்துக்காட்டாம். கோழி: கோழி:1 கோழி = உறையூர். சோழன் ஒருவன் யானைமேல் ஊர்ந்துவர, ஒருகோழி அவ்வியானையின் மத்தகத்தின் மேல் பறந்து தாவி அலகால் குத்திச் செயலறச் செய்த வீறு கண்ட சோழன் அவ்வூரே உறையத் தக்க ஊர் எனக் கொண்டான். அதுவே உறையூர் என்பது. வாழிய வஞ்சியும் கோழியும் போல என்பது பரிபாடல் திரட்டு. கோழியூர் திட்டக்குடி பெண்ணா கடம் பகுதியில் உள்ளது. பெருங்கோழியூர் நாய்கன் என்பான் மகள், நக்கண்ணை சங்கப் புலமையாட்டி. கோழி:2 கோழி என்பது பொதுப்பெயர். சேவற்கோழி, பெட்டைக் கோழி என்பவை பால்பிரி பெயர்கள். ஆனால் கோழி என்பது பெட்டையின் சிறப்புச் சொல்லாகவும், சேவலின் சிறப்புச் சொல்லாகவும் அமையும். கோழி அடைக்கத்துக் கத்துகிறது என்பதில் கோழி, பெட்டையைக் குறிக்கும். கோழி கூவியது என்பதில் கோழி, சேவலைக் குறிக்கும். மதுரைப் பகுதியில் இழுவை (ரிக்சா) வண்டியர் கோழி என்பதைப் பெண்பிள்ளை என்னும் பெயரால் வழங்குவர். கோழிக்கொண்டை: சேவற் கோழியின் செங்கொண்டை போன்ற பூவை யுடையது கோழிக் கொண்டை . கொண்டை = தலைமுடி. இயற்கை யுவமை இந்தப் பெயர்க்கொடை. செந்தீயின் கோலம் கோழிக் கொண்டைப் பூக்கள் கண்ணோய்க்கு மருந்து என்பது சித்த மருத்துவம். கோழி கிண்டல்: காப்பின்மை, செயற்பாடின்மை. வீட்டுப் பின்புறக் கொல்லையில் கீரை பாவுதல் நடைமுறை, கீரை பாவினால் மட்டும் போதாது. அதனைக் கோழி கிண்டிக் கிளைக்காவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் கோழி கிண்டிக் கிளறித் தின்றுவிடும். ஒன்றிரண்டு முளைவிட்டு வருமாயின் அதுவும் அதன் கிண்டிக் கிளறலால் வேரழிந்து முளையழிந்து கெட்டுவிடும். ஆதலால், கோழி கிண்டல் என்பது காவாமையால் ஏற்படுவது என்பதைக் கண்ட அறிவு, அதற்குக் காப்பிலாத் தன்மையை வழங்குகின்றது. அவன் வாழ்வில் கோழி கிண்டுகிறது என்றால் செயற்பாடற்ற வறுமையைக் காட்டுவதாக விரிந்தது. கோழியாகக் கூவல்: கோழியாகக் கூவல் = ஓயாமல் அழைத்தல். கோழி பொதுப் பெயர்; சேவற் கோழி, பெட்டைக் கோழி என இருபாற் பெயராம். விடியல் பொழுதில் கோழி கூவலொலி நாளும் கேட்கக் கூடியதே. கோழி வைகறையில் எழுந்து தனக்கியல்பான சுறுசுறுப்பாலும் விழித்த குறிப்பாலும் கூவும். அதனைக் கேட்டு அண்டை வீட்டு அடுத்த வீட்டுக் கோழிகளும் கூவும். மாறி மாறி அவை கூவிக் கொண்டிருக்கும். அதிலிருந்து கோழியாகக் கூவல் என்பதற்குப் பன்முறை அழைத்தல். கூப்பாடு போட்டுக் கூப்பிடல் என்னும் பொருள்கள் எழுந்தன. கோழியாகக் கூவுகிறேன்; என்ன என்று கேட்டாயா? என்பது இடிப்புரை. கோழை: கோழை:1 குரல்வளை வழியாக வெளியேறும் சளி அல்லது ஈளை. வல்லென்று கெட்டியோ நீரியலோ இல்லாமல் கொழு கொழுவென இருக்கும் சளித்திரள் கோழை எனப்பட்டது. x.neh.: வழு வழுப்பானது, வாழை. கோழை:2 உறுதிப்பாடற்றவன்; அச்சமிக்கான். கோழை:3 எளிதில் அஞ்சி ஓடி ஒளியும் எலி. கோளடைச்சி: குமரி மாவட்டத்தில் மாமிக்கு வழங்கும் உறவுப் பெயர்களுள் ஒன்று கோளடைச்சி என்பது. மருமகனிடம் தன் மகளைக் கொள்ளுமாறு ஒப்படைப்பவள் ஆதலால் கோள் (கொள்ளுமாறு) அடைச்சி (ஒப்படைப்பவள்) எனப்பட்டாள். கோளறு பதிகம்: கோள் + அறு + பதிகம் = கோளறு பதிகம். கடவுள் அடியாராகத் திகழ்வார்க்கு எக்கோளாலும் கேடு நேராது. எந்நாளும் நன்னாளே! எக்கோளும் நற்கோளே என ஞான சம்பந்தரால் பாடப்பட்டது இப்பதிகம். இறைவன் படைத்தவை யெல்லாம் நல்லவை. அவற்றில் குறை காணல் மக்கள் மனக்குறை. படைத்தவன் அருளை நாடுவார்க்கு, அவன் படைத்தவை தீமை செய்யா என்னும் தெளிவுறுத்த எழுந்ததே கோளறு பதிகம். ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம்பிரண்டு நல்ல நல்ல மிக நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே என்று கூறியதைக் கிளிப்பிள்ளையாய் ஒப்பிப்பதன்றிப் பொருளுணர்ந்து ஓதுவாரைத் தேட வேண்டியே உள்ளது. படிப்பின் குறையல்லவா இது. கோளா: கோள் > கோளா. கோள் > கோளம் = உருண்டை. உருண்டையாகச் செய்யப்படும் சிற்றுண்டி கோளா ஆகும். அட்டில் வழக்கு. கோளாறு: கோள் + ஆறு = கோளாறு. கோள் = கொள்கை. ஆறு = வழி. அவர் கோளாறானவர் என்பது மக்கள் வழக்கு. கொள்கை வழியர் என்பது பொருள். கொள்கை அறிவு சொன்ன சொல் கேட்டல் இல்லாரை மக்கள், அவன் கோளாறானவன் என்றும், மூளைக் கோளாறு என்றும், மரை கழன்றது என்றும், அரை என்றும் கூறுவர். உடன்பாடு எதிர்மறை ஆகிய இருபொருள்களிலும் வழங்கும் சொற்களுள் ஈதொன்று. கோளி: கோளி:1 கொத்துக் கொத்தாகக் காய்களையும் இலைகளையும் கொண்ட மரம் கோளி மரமாம். அத்தி, ஆல், அரசு, இற்றி (இஞ்சி) ஆகிய மரங்கள் அவை. கோளி:2 பூவாது காய்க்கும் மரம். அது, பலா. பூவின் தோற்றம் கண்டு கொள்ளல் இல்லாமல் காய்ப்பதால் கோளில் > கோளி ஆயது. x.neh.: உள்ளில் > உள்ளி. கோளி:3 இல்லாததும், பொல்லாததும் சொல்லிக் கோள்மூட்டு பவன் கோளி. கோளி:4 கற்ற கல்வியை விடாது அதனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழும் கொள்கையாளன். கோளி:5 பிறர்மனை விரும்பித் திரிபவன் பரத்தன் என வள்ளுவரால் குறிக்கப்படுவான். அத்தகையன் பிறர்மனையைக் கொள்ளல் குறித்துக் கோளி எனப்படுதல் விளவங்கோடு வட்டார வழக்காகும். கோளில், கோளிலி என்பவை காய்த்தல் இல்லாத (கொள்ளாத) மரங்கள் எனப்படுதலாகிய இலக்கிய வழக்கு நோக்கத் தக்கது. கோளி:6 கோள் > கோளி = பழமாகிய வளமுடைய மரம். முன்னூர்ப் பழுனிய கோளி - புறம். 254 கோளியாமுடை: கோளி + ஆம் + உடை = கோழியாமுடை. உடை = வலைப்பின்னல். நூலாம்படை என்பது பொதுவழக்கு. ஒட்டடை என்பது அதன் பொருள். நூலாம்படையைக் கோளியா முடை என்பது விருதுநகர் வட்டார வழக்காகும். கோளி = கொள்ளப்படுவது; பற்றிக் கொள்ளப்படுவது. கோளோடை: கோள் = கொள்ளுதல். ஓடை = வழி. மணங்கொள்ளுவதற்கு வழி செய்யும் திருமண உறுதிச் சடங்கினை நட்டாலை வட் டாரத்தார் கோளோடை என வழங்குகின்றனர். கோளோடை யான் என்பவன் மணவினை நடத்தி வைப்பவன். இது புதுக்கடை வட்டார வழக்குமாகும். இவை குமரி மாவட்டத்து ஊர்கள். கோள்: கோள்:1 கோள் = காய். குலை இறைஞ்சிய கோள் தாழை- புறம். 17 கோள்:2 கோள் = குலை. கோள் தெங்கின் குலைவாழை - பொரு. 208 கோள்:3 கோள் = கொல்லுதல் (உயிரைக் கொள்ளுதல்). ஆள்கோள் பிழையா அஞ்சுவரு தடக்கைக் கடும்பகட்டு யானை - அகம். 93 கோள்:4 கோள் = பளிங்கு போல் முகத்தோற்றம் காட்டல். வெண்கோள் தோன்றாக் குழிசி - புறம். 257 கோள்:5 கோள் = கோட்பாடு (கொள்ளுதல்). பல்கால் அலவன் கொண்ட கோள் - நற். 35 கோள்:6 (நாள்) கோள் = இராசி. நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு புணர்த்த விளக்கத் தனையை - பதிற். 14 நாளும் கோளும் என்னும் இணைச்சொல்லை எவரும் அறிவர். சொல்லவும் செய்வர்; அவ்விணைச் சொல்லின் பொருளை எண்ணிச் சொல்லார். நாள் என்பது ஒளி செய்யும் கதிரோன்; அதற்கு நாள்மீன் என்பது பெயர்; கதிரோன் ஒளியை வாங்கிக் கொண்டு ஒளிசெய்யும் மீன் கோள்மீன். திங்கள் செவ்வாய் வியாழன் போல்வன. பழநாளிலேயே, நாள்மீன் விராய கோள்மீன் போல என்னும் ஆட்சி இருந்தது (பட். 68). கோள்:7 கோள் = மனங்கொளல். அதன் அளவுண்டு கோள் மதிவல் லோர்க்கே - அகம். 48 கோள்:8 கோள் = கடைப்பிடித்தல். இருங்கோள் ஈராப் பூட்கைக் கரும்பன் ஊரன் - புறம். 381 கோள்:9 கோள் = செம்பாம்பு (கேது) குழவித் திங்கள் கோள்நேர்ந் தாங்கு - பெரும். 384 கோள்:10 கோள் = வகை. பலகோள் செய்தார் மார்ப - புறம். 397 கோள்:11 கோள் = பழுத்தல். கார்கோள் பலவின் காய்த்துணர் - மலை. 12 கோள்:12 கோள் = கூற்றம். பருவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக் கொடுவாய் இரும்பின் கோள் இரை துற்றி - அகம். 36 கோள்:13 கோள் = கொள்ளுதல். அவரைக், கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக - புறம். 120 கோள் இல் (கோளில்) = கொள்ளுதல் இல்லாதது; கோளில் பொறியைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர். தத்தமக்குரிய கடமையைக் கொள்ளுதல் இல்லாத பொறிகளை (மெய், வாய் முதலியவைகளை)க் கோளில் பொறி என்கிறார். கோள்:14 கோள் = கோள்கூறுதல் (ம.வ.) ஓரிடத்துக் கேட்டதை ஓரிடத்துக் கூறிப் பழியாக்கல். புறங்கூறுதல், பழிமொழிதல், பொய், மூட்டிவிடல் (ம.வ.). இருவர் தனியே பேசுவதை நேரில் கேட்டோ, ஒற்றுக் கேட்டோ அதனை அறியாரும் அறிய வைப்பது கோள் சொல்வதாகும். கோள் சொல்லியே சிலர் வயிறு வளர்ப்பதால் கோள் கொண்டுணி என்னும் வழக்கம் உண்டாயிற்று. கோளுரை வாயான் பாழுறப் பதைப்பான் என்பது நல்லறம். கோள்:15 கோள் என்பது கொண்டாட்டம் என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. காவடி, பாற்குடம், வேல், முளைப்பாலிகை ஆகியவற்றைத் தலையிலும் தோளிலும் கொள்ளுதல் குறித்து வந்த சொல்லாட்சி இது. கொண்டாட்டம் என்பதும் மேற்குறித்தவற்றைக் கொண்டு ஆடுதல் வழியாக ஏற்பட்ட வழக்குச் சொல்லேயாம். கோள்:16 ஆசிரியர் உரைக்கும் பாடத்தை அல்லது அவையில் கூறும் செய்தியைக் கேட்டல் கோள்; உரைகோள்; கேட்பவர் உரைகோளாளர். கோள்:17 பகைவர் ஊரை வளைத்தலும், நிலவிலும் கதிரிலும் ஒளி வட்டம் சூழ்தலும் ஊர்கோள் எனப்படும். கோள்:18 மறவாது மனத்துக் கொள்ளும் கவனகன். கோளாளன் என்பான் மறவாதான் - திரிகடு. 12 கோள்:19 சொல்லீறு. எ-டு: வேண்டுகோள், மாறுகோள். இருவர் மாறுகோள் ஒருதலைத் துணிபு உத்திவகையுள் ஒன்று. மறுதலை சிதைத்துத் தன்துணி புரைத்தல் - தொல். 1610 கோள்:20 கோள் = தகுதி, சிறப்பு. எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று தம்மைத்தாம் கொள்வது கோள்அன்று - தம்மை அரியரா நோக்கி அறனறியும் சான்றோர் பெரியராக் கொள்வதே கோள் - நாலடி. 165 கோறல்: கோறல்:1 கொல்லுதல் > கோறுதல் = கோறல். கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று - சிலப். கோறல்:2 நன்றி மறத்தல். செய்தி கொன்றார்க்கு உய்தி இல்லென அறம்பா டிற்றே - புறம். 34  கெள வரிசைச் சொற்கள் கௌ: ககர வரியின் பன்னிரண்டாம் எழுத்து; நெடில். நெடிலாகலின் இரண்டு மாத்திரை யுடையது. ஒன்றரை மாத்திரை எனக் கொள்வர் பின்னூலார். சொல்லின் முதலாக மட்டுமே வரும். கௌ நெடிலாதலால் அது, ஓரெழுத்து ஒருமொழியாம். கௌ = வாயால் பற்று என்னும் ஏவல். கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயால் பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை - நாலடி. 70 கௌவக் கலத்தல்: இரண்டு அல்லது பலவற்றை வேறுபாடற ஒன்றாகக் கலத்தல் கௌவக் கலத்தலாம். கொவ்வைச் சாறும் கோள்வெடி யுப்பும் கௌவக் கலந்து கட்டியில் பூசுக - வள்ள. கடி. கௌவிவெல்லம்: கரும்புப் பாகு காய்ச்சும் வட்டகையின் அடியில் ஒட்டிக் கிடக்கும் பாகைக் கௌவிவெல்லம் என்பது குமரி மாவட்ட வழக்காகும். கௌவுதல் பல்லால் பற்றுதல் போல் பற்றிக் கிடப்பது. பற்றுத் தேய்த்தல், கரிப்பற்று என்பவற்றை நினைக்கலாம். கௌவுதல்: கௌவுதல் = தொழில் பெயர். கௌவல் என்பதும் அது. கெளவை: கெளவை:1 கெளவை = அலர் (பழிச்சொல்). கெளவை அஞ்சிற் காமம் எய்க்கும் - குறுந். 250 கெளவை:2 கெளவை = துயர். வல்விலங்கும் நச்சுயிரியும் கௌவிக் கொண்டாற் போன்ற துயரம். தமியர் உறங்கும் கெளவை இன்றாய் இனியது கேட்டின் புறுகவிவ் வூரே - குறுந். 34 கெளவை:3 கெளவை = இளங்காய். பிளவின்றி ஒன்றியிருக்கும் எள்ளுக்காய்; முற்றின் வெடிப்புறும். கெளவை போகிய கருங்காய் - மலை. 105 கெளவை:4 கெளவை = கவ்வை (போலி). கவ்வையால் கவ்விது காமம் - திருக். 1144 கெளவை மரம்: முள்மரக் கிளையைக் கௌவிக் கொண்டுவரும் கவை மரம். கௌளி: காலால் கவ்விப் பற்றிக் கொண்டு ஏறுவதும், ஒலி எழுப்புவதும், பல்லால் கௌவிப் போரிடுவதுமாம் பல்லி கௌளி என்பதாம். பல்லி ஒலிக்குறி கூறல், பல்லி விழும் பயன், கௌளி சாத்திரம் என்பனவும் நூலாகியுள; சிலர் பிழைப்பும் ஆகியுள. * பல்லி காண்க.  ங வரிசை ங: உயிர்மெய் வரிசையில் இரண்டாம் எழுத்தாம் இது ஙகரம் எனப்படும். ஙகர ஒற்று கங்கம், தங்கம், மங்கல், மங்குல், எங்கும் என்பன போன்ற சொற்களிடையேயும் செங்கதிர், செங்காய், செங்கீரை, செங்கோடு, செங்கோல், செங்கொடுவேரி என்பன போன்ற பண்புத்தொகைகளிலேயும் செங்கால் நாரை, செங்கை வளவன் என்பன போன்ற அடை சினை முதல்களி லேயும் இடம் பெறுவதன்றிச் சொல்லின் ஈற்றில் இடம் பெறாது. சிங்ங், சங்ங், தங்ங் என வருவன ஒற்றளபெடை ஒலிக்குறிப்பே அன்றிச் (சிங்கு, சங்கு, தங்கு) சொல் வடிவுறாது. ஙகர உயிர்மெய் இ + ஙனம் = இங்ஙனம் எனப்படுதல் இப்படிக்கு என்பது போல்வதே அன்றி, ஙனம் எனத்தனியே ஆளப்படுவதில்லை. அங்ஙனம் என்பதும் அவ்வாறு எனப் பொருள்பட்டமை சுட்டு வழியதேயாம். இங்கனம் என்பதும் பழவழக்கே. இவற்றால் ஙப்போல் வளை என்றார் ஔவையார் (ஆத்திசூடி) ஙகர எழுத்து வரிசை பன்னிரண்டும் (ஙா, ஙி...) அகர வரியில் இருப்பது, ங என்னும் ஒன்றாலேதான். இல்லையேல் அவ்வரிசை நின்றிராது என்று கூறி, நீ, ஙகர எழுத்தொன்றும் தன் இனத்தை முழுதுற வாழ வைப்பது போல் உன்னினத்தை வாழ வைக்கும் வகையில் - சுற்றத்தால் சுற்றப்பட்டு வாழும் வகையில் - வாழ்க்கையை அமைத்துக் கொள் என்றார். பாரதிதாசனார் கிறுக்கன் என்னும் புனைபெயரில், புதுவை முரசு இதழில், ஙங்ங் என்றொரு கட்டுரை வரைந்தார். அதற்குப் பொருளும் விளக்கமும் வரைந்தார். ஙங் கலந்தன ஙேதி ஙேவலல் ஙங் கலந்தன ஙாங ஙாவரம் ஙங் கலந்தன ங ஙெள் ஙோரிது ஙங் கலந்தன ஙேரி ஙத்தலே ஙங்ங் என்றால் பாடல் என்பது நான் கண்டுபிடித்த பொருளாகும்... ங வரிசையில் பல எழுத்துகள் அநாவசியமாக விடப் பட்டிருப்பதை நிவர்த்தி செய்து, அவற்றிற்கும் உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் இன்று கச்சையை வரிந்து கொண்டு முதலில் ஒரு பாடல் போட்டேன். இதே முறையைத் தமிழ்ப் பண்டிதர்களும் கைப்பற்றி நடப்பார்களானால் அநாவசியமாக விடப்பட்டிருக்கும் எழுத்துகளை அவசியமான வைகளாகச் செய்து விடலாம் என்கிறார். (புதுவை முரசு) நகர முதலாக வரும் பல சொற்கள் ஞகர முதலாக அகராதிகளில் இடம் பெற்றமையை நோக்கினால் பாரதிதாசனார் எள்ளல் புலப்படும்! ககார ஙகாரம் முதல்நா அண்ணம் - தொல். 89 மெல்லெழுத் தென்ப ஙஞண நமன - தொல். 20 ஙஞணந மனஎனும் புள்ளி முன்னர்த் தத்தம் இசைகள் ஒத்தன நிலையே - தொல். 25 (இ)ங்கு = சங்கு, பால். தாய், சேய் ஒலிகள்: ங்கு, ங்கு என்பவை. சங்கால் பாலூட்டும் போது சொல்லும் மழலைச் சொல். பள்ளிகளில் ங் ஒலியை ஒலிக்கத் தரும் பயிற்சி. சங்கு சக்கர சாமி வந்து சிங்கு சிங்கென ஆடிற்றாம் - அது சிங்கு சிங்கென ஆடிற்றாம் பிற்காலத்ததாம் ஏட்டுப் பள்ளிகளின் இவ்வழக்கு, பிள்ளைத்தமிழின் காப்புப் பருவ உள்ளடக்கமாகலாம். நுங்கும் சிங்கம் வங்கம் தங்கண் இவ்வடுக்கு அருணகிரியார் திருப்புகழ். ஒற்று மொழி முதலாகத் தமிழில் வாராது ஆதலால் ங்கு சங்கு என்பதன் முதற்குறையாம். ங்கு என்பதிலும் இகர உயிர் முன்னிற்றல் இன்றிச் சொல்ல இயலாமை அறிக. இனி, ஙம்முதல் பற்றிய பாவாணர் கருத்து வருமாறு: பிற மொழிகளில் மொழி முதல் இடைகடை யெழுத்துகளுக்கு வரம்பில்லை, தமிழிலோ அவ்வரம்புண்டு. ஒரு தனி மொழியின் அல்லது தனித்து வழங்கக் கூடிய மொழியின் முதலெழுத்து மற்றோர் எழுத்தாய்த் திரியின், அத்திரிபெழுத்தே முதலெழுத்தாய்க் கொள்ளப்படும் இலக்கணம் இடம் தரின். எ-டு: நண்டு - ஞண்டு. அரைநாண் - அரைஞாண். தம் திரிந்த வடிவிலும் தனித்து வழங்கும் தகுதி சிறி துடைமையின் அவற்றின் முதலிலுள்ள திரிபெழுத்துகளும் மொழி முதல் எழுத்துகளாகக் கொள்ளப்படல் கூடும். ஆனால், ஒரு தொடர் மொழியிலுள்ள வருமொழியின் முதலெழுத்து மொழி முதலல்லா எழுத்தாகத் திரியின் அவ்விதிமுதல் இயல்பு முதலாகக் கொள்ளப்படாது. அல் + தாலம் = அற்றாலம். விண் + நாடு = விண்ணாடு. இவற்றில் றா, ணா என்னும் விதி முதல்கள், மொழி முதலெழுத்தாகாமை உணர்க. தொல்காப்பியர் சிறந்த ஆராய்ச்சி யுடையராதலின், ஙகரம் வருமொழியின் விதி முதலாய் மட்டும் வருவது கண்டு அதை மொழி முதலெழுத்தாகக் கூறியிலர். நன்னூலாரோ அவ் வாராய்ச்சி யின்மையின் விதி முதலாய் வந்த ஙகரத்தை இயல்பு முதலென மயங்கிக் கூறினர். ஙகரம், அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம், எனச்சுட்டு வினா முதற்றொடர் மொழிகளில் வருமொழி விதிமுதலாய் இருக்குமே யன்றி யாண்டும் தனிமொழியில் இயல்பு முதலாக வருவதன்று. அங்ஙனம், இங்ஙனம் என்பன அவ்வகை அவ்விதம் அப்படி என்னும் தொடர்மொழிகளிலுள்ள வண்ணம் வகை, விதம், படி என்னும் சொற்கள் தனித்து வழங்குவது போல ஙனம் என்னும் சொல் தனித்து வழங்குவதன்று. அவன் செய்த விதம், அவன் செய்த ஙனம் என்னும் தொடர்களைக் கூறிக் காண்க. அங்ஙனம், இங்ஙனம் என்னும் சொற்றொடர்கள் பண்டைக் காலத்தில் அங்கனம், இங்கனம் என வழங்கியமை சங்க நூல்களால் அறியப்படும். இக்காலத்தும் சிலர் அங்கனம் இங்கனம் என்றே கூறுவதை உலக வழக்கிற் காணலாம். ஈங்கனம் கனையிரு ளெல்லை நீந்தினாள் - சீவ. விமலை. 54 ஈங்கனம் செல்க தானென என்னை - புறம். 208 இங்கனம் எனினும் ஈங்கனம் எனினும் ஒன்றே. இனி, அங்ஙனம் இங்கனம் என்பவற்றின் முதல்வடிவுதான் யாதோ வெனிற் கூறுதும். கண் என்னும் இடப்பெயர் சுட்டு வினாவொடு புணர்ந்து அக்கண், இக்கண், எக்கண், என நிற்கும். பின்பு மெலித்தன் முறையால் அங்கண், இங்கண், எங்கண் எனத் திரியும். எ-டு: கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் - புறம். 15 அங்கண் எனினும் ஆங்கண் எனினும் ஒன்றே. முன்னதன் நீட்சி பின்னதெனினும் ஒக்கும். அங்கண், இங்கண், என்பன அங்கன், இங்கன் என மருவி மீண்டும் அங்ஙன், இங்ஙன், என மெலியும். எ-டு: தீர்த்தத் துறைபடிவேன் என்றவனைப் பேர்த்திங்ஙன் - சிலப். 9:38 தமிழ்ச்சொற்கள் பல இன்னோசை பற்றி அம்மீறு பெறுதல் பெரும்பான்மை. எ-டு: தூண் > தூணம். கால் > காலம். குன்று > குன்றம். இங்ஙனமே அங்ஙன், இங்ஙன் முதலிய மரூஉச் சொற் றொடர்களும் அம்மீறு பெற்று அங்ஙனம், இங்ஙனம் என வழங்கும். அங்ஙனம், இங்ஙனம் முதலிய சொற்றொடர்த் திரிபுகள் அம்மட்டில் அமையாது அன்னணம், இன்னணம் முதலிய திரிபும் கொள்ளும். நன்னூலாரே, இன்ன தின்னுழி இன்னணம் இயலும் எனத் தம் உரியியற் புறனடையில் (460) கூறியுள்ளார். ஆதலான் தொல்காப்பியர்க்கு முற்காலத்தன்றிப் பிற்காலத் தமிழில் ஙம்முதலே யில்லை யென்று தெள்ளிதில் தெளிக (தேவநே.5) 