செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் 4 க முதல் கீ வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் -4 க முதல் கீ வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2018 பக்கம் : 20+316= 336 விலை : 420/- தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 456  f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000   கணினி & நூலாக்கம் : நல்லதம்பி, கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  கொடையாளர்கள் 1. மாத்தமிழ் மரபு பா பட்டறை - குவைத்து 2. வெ. சம்பத்குமார் (குருவரெட்டியூர், ஈரோடு -மா) குவைத்து 3. மூ. சத்யமூர்த்தி (பாண்டிச்சேரி) குவைத்து 4. அசோக்குமார். அ (இலால்குடி, திருச்சி மா) - குவைத்து 5. இரமேசுகுமார். கே.பி. (நாகர்கோவில்) -குவைத்து 6. கிருட்டிண செகன். பொ. (நாகர்கோவில்) - குவைத்து 7. ஆறுமுகம். அ (பாண்டிச்சேரி) - குவைத்து 8. சேதுமாதவன். ப (கடலூர்) – குவைத்து 9. தமிழ்நாடன் (குணவாசல், கடலூர் மா) - குவைத்து திரைகடல் ஓடியும் திரவியம் தேடச்சென்ற மண்ணில் இருந்து கொண்டு தாய் மொழியாம் தமிழின் மேல் வற்றாத பற்றுக்கொண்டு வாழும் தமிழ் உள்ளங்களை முதலில் வணங்குகிறேன். இவ்வருந்தமிழ்க் களஞ்சியம் நான்காம் தொகுதி வெளிவருவதற்கு உதவிய குவைத்து கொடையாளர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. கடப்பாட்டு உரை தமிழ் இயற்கை இயங்கியல் வழிப்பட்ட ஒலி, வரி, வடிவுகளையும் இயற்கை இயங்கியல், மெய்யியல், வாழ்வியல், படைப்பியல் என்பவற்றை அடிமனையாகவும் கொண்ட மொழி. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் மூல முழக்கத்தை முழுவதாகக் கொண்டது நம்மொழி என்பதை ஓராற்றான் விளக்குவதாக அமைந்தது இக் களஞ்சியம். ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என்பவை இல்லாமல், வெளிப்பட எவரும் அறிந்து கொண்டுள்ள வழக்கு, செய்யுள் என்பவை கொண்டே விளக்குவது இக்களஞ்சியம். இதனை, ஊன்றியும் விரும்பியும் கற்பார் தாமும் இவ்வாய்வு செய்ய வியலும் என்பதைத் தூண்ட வல்ல ஆய்வும் இது! ஆதலால், படிப்பாளியைப் படைப்பாளி ஆக்கவல்லது என்பதை என் பட்டறிவுத் தெளிவாகக் கண்டு வருகிறேன்! எளிமையாய் - ஆழ்ந்த நுணுக்கங்களை - ஓரளவு கற்றாரும், கொள்ள வழிகாட்டும் `கைவிளக்கு அன்னது இது. இதனை முதல் - இடை - நிறைவு என்னும் மூன்று நிலை களிலும் உற்ற பெறலரும் உதவுநராக இருந்து முற்றுவித்ததுடன், தமிழ் உலகப் பயன்பாட்டுக்கும் வழியமைத்துத் தந்த `கலங்கரை விளக்கம் செம்மொழிச் செம்மல் முனைவர் திருத்தகு க. இராமசாமி அவர்களே ஆவர். ஆதலால், அவர்களை நெஞ்சாரப் போற்றுவது என் தலைக்கடனாம்! திருவள்ளுவர் தவச்சாலை நிறுவன வழியே இப்பணி செய்ய வாய்த்த அளவில் சொற்றிரட்டியும் மெய்ப்புப் பார்த்தும உதவிய பெருந்தகு கேண்மையும் உழுவலன்பும் உடைய முனைவர் பெருந்தகை கு. திருமாறனார் அவர்களுக்கும் எம் எழுத்துப்பணியைத் தம் பணியாக் கொண்டு தொடர்ந்து செய்துவரும் தொய்விலாத் தொண்டர் மெய்ப்புப் பார்த்தலில் வல்லார் முனைவர் பி. தமிழகனார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். என் எழுத்தைப் படியெடுத்தும், கொங்கு வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்தும் உதவிய புலவர் கலைமணியார் அவர்களுக்கும், இப்பணியில் இல்லை எனினும் உழுவ லன்பாலும் உரிமைப் பேற்றாலும் என் எழுத்துகளைப் படியெடுத்து உதவிய திருக்குறள் செம்மல் பெரும்புலவர் மு. படிக்கராமு அவர்களுக்கும் பெருநன்றியும் வாழ்த்தும் உடையேன். இத்தொகை அனைத்தையும் கணினிப்படுத்தியும், மெய்ப்புப் பார்த்தும், வரவு செலவு கணக்கைத் தக்க வகைத் தணிக்கைக்கு உரியவையாகச் செய்தும், பணிநிறைவை ஒப்படைத்தும் பெருநன்றாற்றிய கவனகச் செம்மல் முனைவர் கலை. செழியனார் அருந்தொண்டைப் பாராட்டி நன்றி பெரிதுடையேன். பணி நிறைவுப்பயன், தமிழ் கூறு நல்லுலகப் பயன்பாடு ஆதல் வேண்டும் என்பது தானே! இல்லாக்கால் செய்த பணியால் ஆவதென்ன? செய்யாமை ஒப்பது தானே! அவ்வாறு ஆகாமல் தாய்த்தமிழக ஆர்வலர்களுடன், அயலகத் தமிழ்ப் பெருமக்களாக விளங்கினும் தாய்த்தமிழக ஆர்வலர்களிலும் மேம்பட்ட ஆர்வலர்களாகக் குவையத்து, அமெரிக்கா, கனடா, மலையகம், சிங்கபுரி, ஈழம் முதலாக வாழ்வார் ஆர்வத் தளிர்ப்பும் தூண்டலும் முன்னிற்கும் பேறு வியப்புக்கும் பெருநன்றிக்கும் உரியதாம்; இப்பெருமக்கள் அனைவர் உள்ளமும் ஓருருவாக வாய்த்து, கருவி நூற்பணியைத் தொகை தொகையாக வகைப்படுத்தி வான் பெருந்தொண்டாகச் செய்தலே எம் பிறவிக் கடன் எனக் கொண்ட தமிழ்ப் போராளி திருமிகு கோ. இளவழகனார் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயற்கரிய செய்வார் பெரியர் என்பதை நிலைநாட்டியதைப் போற்றுவதன்றி என் சொல்வேன்? களஞ்சியம் கணினிப்படுத்திய அளவில் நிறைவுறுமா? பத்துத் தொகுதிகளையும் ஒருமுறைக்கு மும்முறையாய் முழுதுற மெய்ப்புப் பார்த்தல், எளிமைப் பாடா? கண்புரை வளர்ந்தாலும் இடைத்தடை நேர்ந்தாலும் இத்தொண்டு தமிழன்னை தளிர்க்கும் தொண்டு என்று இமைப் பொழுதும் சோராது கடனாற்றிய கடப்பாட்டாளர் மெய்ப்புச்செம்மல் முனைவர் பி. தமிழகனார்க்குப் பெருங்கடப்பாடு உடையேன்; பதிப்புச் சுமையை ஏற்றமை என் சுமை ஏற்றமையாம்! வாழிய நலனே! வாழிய நலனே! இரா. இளங்குமரன் களஞ்சியம் வளமான வீடுகள் கட்டி வாழும் நிலக்கிழார் பெருநிலக்கிழார் ஆகிய உழவர்கள், தங்கள் வீட்டின் உட்பகுதியில் களஞ்சியங்கள் அமைத்திருப்பர். களஞ்சியம் இருக்கும் வீடு என்றால் வளமிக்க உழவர்வீடு என்பது பொருள். களத்தில் வரும் தவசங்கள் பயறு வகைகள் ஆகியவற்றை அங்கே பூச்சியரிப்பு, மட்குதல் ஏற்படாவகையில் தளத்தின்மேல் உயர்த்தியும் புன்கு வேம்பு ஆகியவற்றின் தழைகளைப் பரப்பியும், பாதுகாப்பர். அவ்வாண்டு முழுமைக்கும் பயன்படும். அடுத்த ஆண்டு விளைவு குறைந்தாலும் களஞ்சியப் பொருள் கவலையின்றி வாழ உதவும். ஏருழவர் போலச் சொல்லேர் உழவராம் சான்றோர் நூல்கள், அக்காலத்தார்க்கே அன்றி எக்காலத்தார்க்கும் பயன்படும் வகையில் பாதுகாத்துப் பயன் கொள்ளச் செய்வது நூல் களஞ்சியமாகும். இந்தியப் பரப்பில் தமிழ் மொழியில் தான் முதன்முதல் `கலைக் களஞ்சியம் உருவானது என்பது பெருமிதப்படத்தக்கதாம். இப்பொழுது தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்படும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் செவ்வியல் மொழிக் கொடையாக வந்து, தமிழ்மண் பதிப்பக வெளியீட்டால், தமிழ்கூறு நல்லுலகப் பொருளாவது, செம்மொழிச் செம்மல் முனைவர் திருமிகு க. இராமசாமி அவர்கள் தூண்டல் வழியாகத் துலங்கிய துலக்கமாகும். ஆதலால் படைப்பாளன் என்ற நிலையில் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். தமிழ்க் களஞ்சியம் மொழியின் வளம், அம்மொழியைப் பேசுவோர் பயன்படுத்தும் சொற்களாலும், அம் மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய வகைகளாலும் அறியப்படும். தமிழின் வளம் இலக்கியங்களிலும் மக்கள் வழக்குகளிலும் நிறைந்துள்ளது. சொற்களின் வளமும், பெருக்கமும் மொழியின் சிறப்பைக் காட்டும். சொற்களின் பெருக்கைக் காட்ட எத்தனையோ நிகண்டுகளும், அகராதிகளும், களஞ்சியங்களும் தமிழில் வந்துள்ளன. இவற்றுள் பல பிறமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்களாய்க் கருதிப் பொருள் தந்துள்ளன. பிற மொழிகளில் ஏறிய தமிழ்ச் சொற்களும் வேற்றாடை உடுத்தியுள்ளன. அவற்றை அறிந்து தமிழெனக் காட்ட, மொழி உணர்வும், இலக்கிய இலக்கணப் புலமையும், தமிழ் முழுதறி தகுதியும், மக்கள் வழக்குகளை வழங்கும் சூழலில் கேட்டறிதலும், சொற் பொருளாய்வும், சொல்லியல் நெறிமுறைகளும், வேர்ச் சொல்லாய்வும், கூர் மதியும் நிறைந்திருக்க வேண்டும். இத்தமிழ்ச் சொற் களஞ்சியம் சொற்களின் பொருளை மட்டுமா தருகின்றன? சொற்களின் வேரும், அதன் விரிவும், அவற்றின் விளக்கமும், சான்றுகளும், மக்களின் பொது வழக்கும், வட்டார வழக்கும், யாழ்ப்பாணத் தமிழ் வழக்கும் செறிந்துள்ள தமிழ்க் களஞ்சியமாம். ஒரு வினைச் சொற்கள் தொகை தொகையாகிய தொகை இக்களஞ்சியம். `அடித்தல் சொல்லடியாக 145 சொற்கள் உண்ணல் வகைகள், ஊர்ப் பெயர் ஈறுகள் (504) நோய் வகைகள் (229), நோய் வினைகள் (216), மதில் பொறி வகைகள் (28) மலை வகைகள் (25) முதலிய எத்தனையோ வகைகளும் தொகைகளும் அடங்கியுள்ளன. இவற்றின் தொகுப்பு கற்பாரை வியக்க வைக்கும்! இக் களஞ்சியத் தொகுதிகளுள் நூற்றுக்கணக்கில் மரபுத் தொடர்கள், இணை மொழிகள், ஒலிக்குறிப்புகள், அவற்றின் விளக்கங்கள் அடங்கியுள்ளன. சொற்கள் விளக்கத்திற்கு அன்றாடச் செய்திகளும் (செய்தித்தாள்கள்) சான்றாகின்றன. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்பர். ஆனால், பற்பல நூறுவகைகள் உள்ளமையை இக்களஞ்சியம் காட்டும். மேனாட்டு உடைகளை மாட்டியதால் தமிழர் மேனாட்டார் ஆகாரன்றோ? பஜ்ஜி ஏதோ பிறமொழி என்றே மயங்கி நிற்பர். அது பச்சைக் காய்கறிகளால் செய்யப்படுவது. தேவநேயப் பாவாணர் உடன் பழகியமையாலும், அவர் நூல்களைத் தோய்ந்து தோய்ந்து கற்றமையாலும், அவரே பாராட்டியமையாலும் ஐயா, பல சொற்களுக்கு வேர்ச்சொல் வழி மூலமும் கிளையும் காட்டியுள்ளார். புழுதி, பூழ்தி, பூதி. பல சொற்களின் பொருள் வேறுபாடுகளும் காட்டப்பட்டுள்ளன: விரைப்பு- விரைப்பு; விறைப்பு - தொய்வின்மை; இக்களஞ்சியம் தவசங்களாம் சொற்கள் கொட்டப்பட்டு நிறைந்துள்ளது. படிப்பார் தத்தமக்குத் தேவையான தவசங்களை அள்ளி அள்ளிப் பயன் கொள்ளலாம். எவ்வளவு அள்ளினும் என்றும் குறையாது இக்களஞ்சியம். தமிழரின், மொழி, இன, இலக்கிய, இலக்கணம் ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு, நாகரிகங்களின் அடங்கல்களைப் படை படையாகத் திரட்டித் தொகுத்து வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஐயா முதுமுனைவர், இளமை முதல் தொகுத்த சொற்களஞ்சியங்களைச் சேர்த்துச் சேர்மானமாக்கித் திரட்டித் தந்துள்ளார்கள். தமிழர்களே! இங்கே வம்மின்! களஞ்சியம் கொண்மின்!! தமிழை வளர்மின்!!! பி. தமிழகன். அணிந்துரை செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் என்னும் இந்நூல் இன்று நம்மிடையே வாழும் தொல்காப்பியராக விளங்கும் மூத்த தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஏறத்தாழ 8000 தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் விளக்கத்தினை மேற்கோள் சான்றுகளுடன் வழங்கும் இந்நூல் தோராயமாக 3254 பக்கங்களில் பத்துத் தொகுதிகளாக வெளிவந்து தன்னேரிலாத தமிழ் மொழிக்குத் தனிப்பெருமை சேர்க்கும் முன்னோடிப் பணியாக அமைந்துள்ளது. அகரமுதலிகளில் இடம்பெறாத சொற்கள், மரபுச்சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள் போன்றவை இக்களஞ்சியத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க தாகும். இசை, மருத்துவம், கல்வெட்டு, அறிவியல் ஆகிய துறைகள் சார்ந்த இன்றியமையாத சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. அகரத்தில் தொடங்கும் சொற்களுக் கான பொருள் விளக்கங்கள் மட்டுமே 276 பக்கங்களில் முதல் தொகுதியாகவும் தனித் தொகுதியாகவும் அமைந்திருப்பது நூலின் செறிவையும் விரிவையும் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அயன் மொழிச் சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். சொற்பொருட் களஞ்சியப் பணியை நிறைவேற்றும் வகையில் நூலாசிரியருக்குத் தூண்டுதலாக அமைந்தது ஒல்காப் புகழ் தொல்காப்பியமே. குறிப்பாக, எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே (தொல். 640) என்னும் நூற்பா. இந் நூற்பாவினை மூல முழக்கமாகக் கொண்டது தமிழ்மொழி என்பதை விளக்கும் பொருட்டே இக்களஞ்சியம் உருவாக்கப் பட்டதென நூலாசியிர் குறிப்பிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டியவாறு ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் எனக் காணாமல் வெளிப்படையாக அறியக்கூடிய சொற்களுக்கு மட்டுமே அமைதியும் திரிபும் பொருள் விளக்கமும் காட்டுவது இக்களஞ்சியம் என்பதும் நூலாசிரியர் கூற்றாகும். பொருள் விளக்கங்களினூடே கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாக்களின் பயன்பாட்டினையும் உணரலாம். பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர். (தொல். 641) தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. (தொல். 642) பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே. (தொல். 874) பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் (தொல். 875) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (தொல். 877) ஒரு பொருள் பல சொற்கள் மிகவும் நுட்பமாய் ஆராயப் பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. `அழகு பொருண்மையைக் குறிக்கும் 67 தனித்தமிழ்ச் சொற்களை அடையாளங்கண்டு அவற்றிற்கு நுட்பமான விளக்கங்களைத் தந்திருப்பது ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் வளமான பட்டறிவிற்கும் சான்றாக விளங்குகிறது. பெருமதிப்பிற்குரிய ஐயா இளங்குமரானாரின் நெடுங்கால அவா இந்நூல் வெளியீட்டின் வழி நிறைவேறியுள்ளமை மகிழ்வளிக்கிறது. இது காலத்தை வென்றுநிற்கும் நிலைத்த பணி. தமிழ் ஆய்வாளர்களுக்குக் கிட்டியுள்ள தலைசிறந்த நோக்கீட்டு நூல். உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் இந்நூலினை வரவேற்றுப் போற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களஞ்சியப் பணி ஒரு தொடர் பணி. இப்பத்துத் தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொகுதிகள் வெளிவந்து தமிழிற்கு வளம்சேர்க்க வேண்டும் என்பது என் அவா. தனித்தமிழ்ப் பற்றாளராகவும் அரிய தமிழ் நூல்களின் பதிப்புச் செம்மலாகவும் விளங்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ. இளவழகனார் இக்களஞ்சியத்தை அருமுயற்சியுடன் சிறப்புற வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டிற்குரியதாகும். முனைவர் க. இராமசாமி முன்னாள் பேராசிரியர் - துணை இயக்குநர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் முன்னாள் பொறுப்பு அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை நுழைவுரை தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் புதைந்து கிடக்கும் அறிவுச் செல்வங்களைத் தனக்கே உரிய நடையில் இருந்து தமிழின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் அய்யா இளங்குமரனாரின் நினைவாற்றலை நினைந்து நினைந்து மகிழ்பவன். அவர் அருகில் இருக்கவும், அவருடன் உரையாடவும், வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகவும் கருதுகிறேன். மொழிஞாயிறு பாவாணர், செந்தமிழ் அறிஞர் இலக்குவனார், மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் முதலான பெருமக்களை எட்டி இருந்து பார்த்தவன். அவர்களின் அறிவு நலன்களைக் படித்துச் சுவைத்தவன். இப் பெருமக்களின் மொத்த உருவமாக அய்யா இளங்குமரனாரைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்பவன். அய்யா அவர்களின் அறிவுச் செல்வங்களைக் கடந்த காலத்தில் பேரளவில் எம் பதிப்பகம் வெளியிட்டு அவரின் உழைப்பை தமிழ் கூறும் உலகுக்கு அளித்ததில் நிறைவு அடைகிறேன். இன்று உங்கள் கைகளில் தவழும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் எனும் இவ்வருந்தமிழ்த் தொகுப்பை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் உழைத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வியந்து போகிறேன். இச்செந்தமிழ்த் தொகுப்பு தமிழ் அகராதி வரலாற்றில் தமிழுக்குப் புது வரவாகும். இதுவரை யாரும் செய்ய முன்வராத பெரும்பணி யாகும். அய்யாவின் இலக்கிய, இலக்கணப் பெரும்பரப்பைத் தாங்கிவரும் இப்பொற் குவியலை உலகத் தமிழர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாவாணர் போல் வேர்காட்டி, வளம் கொடுக்கும் சொற்கடலாய் வாழும் அய்யாவின் பேருழைப்பால் விழைந்த இலக்கிய இலக்கணக் களஞ்சியத்தை வெளியிடுவதன் மூலம் என்னையே நான் பெருமைப் படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். அய்யாவின் 75ஆம் (30.01.2005) அகவை நிறைவை திருச்சித் திருநகரில் தமிழர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வில் புலமைக்குத் தலைவணக்கம் எனும் நிறைவுமலரினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு மகிழ்ந்தது. அந்த மலரில் மலேசியப் பாவரசு சு.ஐ.உலகநாதன் எழுதிய பாடலினை கீழே சுட்டியுள்ளேன். வாய்த்திருக்கும் அகவையெலாம் வரலாறு படைக்கின்றார் வையகமே வந்து போற்று நம் முன் சான்றாக வாழும் `ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட இக்களஞ்சியத்தை தமிழ் உலகுக்கு வழங்குவதில் பெருமையும், பூரிப்பும் அடைகிறேன். கோ. இளவழகன் ஆசிரியர் விவரம் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூரில் நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர் ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டு பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழ் அமைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. பதிப்பாசிரியர் விவரம் முனைவர் பி. தமிழகன் பிறப்பு : 5. 10. 1946 பெற்றோர் : பிச்சை - மீனாட்சி (வேளாண்குடி) ஊர் : இலால்குடி வட்டம், குமுளூர் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர் நடுநிலைக் கல்வி - இருங்கலூர் உயர்நிலைக் கல்வி - பூவாளூர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளி புலவர் - கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் தமிழியல் இலக்கிய இளைஞர், முதுகலை, கல்வியியல் முதுகலை, தனித் தேர்வர் ஆய்வு : தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள் ஆசிரியர்கள் : முதுபெரும்புலவர் அடிகளாசிரியர், பாவலரேறு பாலசுந்தரனார் ஈடுபாடு : சங்க இலக்கியம், பத்தி இலக்கியங்கள், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், நாட்டுப்புறவியல் ஆசிரியப் பணி : திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 33 ஆண்டுகள் தமிழாசிரியர், பணி நிறைவுக்குப்பின் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் பேராசிரியர் பணி தொடர்தல். இயக்கப் பணி : தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், திருவள்ளுவர் தவச்சாலை நூல்கள் : தமிழகத் தொல்பொருள் ஆய்வு (வ்ட்பீது கீகுநூழ்ஙூ) வழக்குச் சொல் அகராதி (ர்மயூரூயுகுயிகீஞ்ணூ நிகுபீய்நூக்ஷி) பதிப்புப் பணி : முதுமுனைவர் இரா. இளங்குமரனாரோடு இணைந்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட முதுமொழிக் களஞ்சியம், சங்க இலக்கியம். பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்கு உதவியோர் ஆசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் பதிப்பாசிரியர்: முனைவர் பி. தமிழகன் கணினி மற்றும் நூல்வடிவமைப்பு: திரு. நல்லதம்பி (யாழினி கணினி) திருமதி. கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: முனைவர் பி. தமிழகன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் 1. க வரிசைச் சொற்கள் 2 2. கா 201 3. கி 281 4. கீ 306 க முதல் கீ வரை க வரிசைச் சொற்கள் க: க:1 உயிர்மெய் வரிசையில் முதல் எழுத்து. உயிர்க்குறில் ககர ஒற்றொடு ஏறியதால் உயிர்மெய்க் குறில் (க் + அ = க) உயிர்க்குறில் மாத்திரை அளவே, உயிர்மெய்க் குறில் அளவும் ஆதலால், ஒரு மாத்திரை அளவே பெற்றது. ககரம் ஒற்றுக்கு அரை மாத்திரை; உயிர்க்குறிலுக்கு ஒரு மாத்திரை; ஆதலால், ஒன்றரை மாத்திரை ஆக வேண்டாவோ? ஒரு மாத்திரை ஆயது ஏன் எனின், ஒருபடி நீரில் அரைப்படி உப்பைப் போட்டால் ஒன்றரைப் படியாகாமல் ஒரு படியே ஆனால் போல்வது இது என்பர் உரையாசிரியர். பழம் படியளவு இந்நாள் லிட்டர் எனப்பட்டதாம். ஒற்றின் மேல் உயிர் ஏறுதல், உடல்மேல் உயிர்வந் தொன்றுவது இயல்பே என்பதாலும் (நன். 204) மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே -தொல். 18 மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் -தொல். 46 என்பவற்றாலும் , க் + ஆ = க ஆயிற்றாம். மெய்யொடும் உயிர் சேர்தலால் மெய்யுயிர் என்பதன்றோ முறைமை எனின், உயிரிலா உடல் இயங்காமையும், உயிருள்ள உடலே இயங்குதலும் இயக்குவது முன்னும், இயங்குவது பின்னுமாகப் பெயரீடு பெற்றதாம். க என்னும் மெய்யையும் பிறமெய்களையும் இகர உயிர் இன்றி ஒலிக்க இயலாமையும், இக் என ஒலிக்க இயல்வதையும் எண்ணித் தெளிக. க என்பதில் அகர உயிர் ஏறியமையால் இகர உயிர் வேண்டியதில்லை யாயிற்று. வண்டிகள் - பொறி ஊர்திகள் - ஆகியவை முன்னியங்கலும் பின்னியங்கலும் காண்கிறோம் அல்லவோ! அத்தகைய இயக்கம் என்க. க:2 தமிழ் எண்களின் தொடக்கமாம் எண் ஒன்று. அவ் வொன்றை, இவ் ஒன்றாம் உயிர்மெய்யாலேயே முன்னோர் எழுதினர் என்பது எண்ணி மகிழத் தக்கதாம். க:3 க = கடவுள். தமிழில், க கா வைத் தவிர என்ன உண்டு என்றோர் எள்ளல் கடந்த காலத்தில் ஒருவரால் எழுப்பப்பட்டது அவர் க, கா என்றது கடவுள், காதல் என்பவற்றையாம். ஆதலால் க கடவுள் பொருள் கொள்ளப்பட்டது. க:4 வியங்கோள் பொருளில் க வரும். எ-டு: வாழ்க ! ஓங்குக ! உயர்க ! க:5 க = ஆன்மா. உயிரும் மெய்யும் கூடிய எழுத்து. ஆதலால் ஆன்மா என்னும் பொருளும் உண்டாயிற்று. மெய்= உடல். க:6 கண் என்பதன் ஈறு குறைதல். எ-டு: கக்கட்டி. கக்கட்டி = கண்பட்டையில் உண்டாகும் ஒருவகைக் கட்டி கண்கட்டி என்பது கக்கட்டி (கட்கட்டி > கக்கட்டி) ஆயது. அதற்குக் காவிக் கட்டியை நீரில் நனைத்து உராய்த்து போட்டுப் பழுக்க வைத்து உடையச் செய்வர். காவி மண்ணால் ஆயதால் அதற்கு மண்கட்டி > மக்கட்டி > மக்கட்டி என்பார். கக்கட்டிக்கு மக்கட்டி மருந்து (ம. வ.) x.neh.: மண்கு > மட்கு > மக்கு. க:7 பழங்கால நிறுத்தல் அளவையுள் ஒன்று. அது காற்பலம் எனப்பட்டது. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் -திருக். 1037 குறைந்த நிறையைக் குறிக்க உள்ளதன் நுணுக்கமாம் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தியது பொருள் பொதிந்த ஆட்சியாம். கஃறு: கரு > கறு > கஃறு என்பது கருமைப் பொருளது. கஃறு என்னும் கல்லதர் அத்தம் என்பதைக் குறிப்பிசை என்பார் சங்கர. (நன். 101) கக்கம்: கமுக்கம் > கக்கம் = தோட்பட்டையின் உட்பகுதி; அக்குள். கமுக்கம் = மறைவிடம், மறைவான செய்தி கக்கத்தில் மறைத்துக் கொண்டுபோய்விட்டதைப் பார்க்கவில்லை ம.வ. கட்கம் என்பதும் இது. * கட்கம் காண்க. கக்கல்: உண்டதைக் கக்கக் என்னும் ஒலியொடு வெளித் தள்ளல் கக்கல் ஆகும். கக்குவான் என்பது இருமல் நோய். இருமலும் ஒலிக்குறிப்பே. கக்கல் கழிச்சல்: கக்கல் = வாந்தி யெடுத்தல். கழிச்சல் = வயிற்றோட்டம் போதல். ஒருவரைக், கக்கல் கழிச்சல் ஒரே வேளையில் இருந்து வாட்டினால் அதனை, வாந்தி பேதி என்பர் பேதி வயிற்றோட்டமாம். கழிதல், மிகுதல், விட்டுப் போதல், அகலுதல் என்னும் பொருளுடையது. கழிவதைக் கூட விட்டு விடலாம். ஆனால் நாளையும் பொழுதையும் வீணே கழிப்பாரை, என்ன பிறவி என்று ஏசாமல் தீராது! இத்தகையரைத் தானோ கழிசடை என்பது! கக்கல் ஒலிக்குறிப்பு; விக்கல் போல். கக்கல் விக்கல்: கக்கல் = வாந்தி யெடுத்தல். விக்கல் = குடலுக்குச் செல்லாமல் தொக்கிக் கொள்ளுதல். கக்கலில் ஒலியுண்டாகும்; விக்கலில் திணறலுண்டாகும், இனி விக்கல் நீர்வேட்கையால் உண்டாவதாயின் அதற்கு ஒலியுண்டாம். கக்கல் கக்குவான் நோய் என ஒரு நோயாகக் குழந்தைகளை ஆட்டிப் படைப்பதுண்டு. விக்கலும் நோயாக முதியவர்களை வாட்டுவதுண்டு. முடியாத நிலையில் படுத்தவரைக் கக்கலும் விக்கலுமாகக் கிடக்கிறார்; எப்பொழுதோ தெரியாது எனக் கைவிரிப்பதுண்டு. விக்கல் ஒலிக்குறிப்பு; விக்குள் என்பதும் இது. நாச் செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் -திருக். 335 கங்கணம்: கங்கணம்:1 கண்காணம் > கங்காணம் > கங்கணம். தெய்வம் - காக்க வேண்டும் - கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்று கட்டும் மந்திரிப்பு மஞ்சள் கயிறும், கைவளையும் கங்கணம் எனப்படும். கங்கணம்:2 கங்கு + அணம் = கங்கணம் = (வெப்பமிகுதல்) முகில் கூட்டம், நீர்த்துளி. வெப்பு மிகலால் உண்டாகும் முகிலும், முகில் சொரியும் மழைத்துளியும் கங்கணம் ஆயிற்றாம் ( வெ.வி.பே) கங்கம்: கங்கு > கங்கம். தீக்கங்கு, தீக்கங்கு நிறத்தையுடைய பருந்து. கங்கம் வந்துற்ற செய்யநம் களத்து -கம். உயுத். 1233 கங்களவு: கங்கு + அளவு = கங்களவு. கங்கு = வெப்பம்; தீக்கங்கு. எரிந்த கட்டையில் தீத்துண்டைக் கங்கு என்பது முகவை, நெல்லை வழக்கு. நடவு நிலத்தில் பயிர், நில வெப்பத்தால் வாடிப் போகாமல் இருப்பதற்காக நடவு செய்து ஒருநாள் விட்டு மூன்றாம் நாளில் பாய்ச்சப்படும் தண்ணீரைக் கங்களவு என்பது உழவர் வழக்கு. எடுப்புத் தண்ணீர் என்பதும் இது. கங்கன்: கங்கன் = பகைவர்க்குத் தீக்கங்கு அன்னவன்; சிவந்த நிறத்தவன். நன்னூல் செய்வித்த வேந்தன், கங்கன். கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோல் சீய கங்கன் -நன். சிறப்புப். சேரன் படைத்தலைவர்களுள் ஒருவன், கங்கன். துன்னருங் கடுந்திறல் கங்கன் -அகம். 44 கங்கு: கங்கு:1 கங்கு = நெருப்புப் பற்றி எரிந்த விறகுக் கட்டையின் துண்டு கங்கு. பொற்கொல்லர், கொல்லர் ஆகியோர் கங்குகொண்டே பணி செய்வர். கரித் துண்டுகளில் தீப்பற்ற வைத்து ஊதி, அவர்கள் அதனைக் கொண்டு தம் பணி செய்வர். முன்னாளில் கங்கு கொண்டே தீப்பற்ற வைத்துச் சமைத்தல் வழக்கம், சிற்றூர்களில் இருந்தது. அதற்கெனத் தீக்கரண்டியும் இருந்தது இது தென்தமிழக வழக்கு. * கங்களவு காண்க. கங்கு:2 கங்கு = பருந்து, தினை. கங்கு என்னும் தீயின் சிவப்பு நிறத்தால் பருந்தையும் தினையையும் குறித்தது. கங்கு:3 கங்கு = ஓரம். கங்கு என்பது ஓர் ஓரம் என்னும் பொருளில் மக்களிடையே வழங்குகிறது. அந்தக் கங்கில் பார் (ம.வ.) கங்கு:4 கங்கு = எல்லை. கங்கு என்பதற்கு எல்லை என்னும் பொருளும் உண்டு. கங்குகரை இல்லாத கடலே என்பது வள்ளாலர் ஆட்சி (திருவருட். 2118). எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே -புறம். 396 பொருள்: எம்மனோராகியஇரவலர் அவன்பாற் பெற்ற செல்வத்துக்கு எல்லை இல்லையாம். (ஔவை. சு.து. உரை) கங்குகரை: கங்கு = எல்லை முடிவு. கரை = எல்லை முடிவுக்கு அடையாளமாம் வரம்பு. கங்கு கரை இல்லை, கங்குகரை காணாத கடல் என்பவை கங்குகரை இணையைச் சுட்டும். கங்கும் இல்லை; கரையும் இலலை என்று கொள்க. கங்காவாது ஓர் எல்லையின் கடைசி; கரையாவது அக் கடைசி எல்லையில் வைக்கப்பட்ட வரப்பு அல்லது கரை. கங்குல்: கங்கு > கங்குல் . கங்கு = எல்லை. பகலின் எல்லை இரவு; இரவின் எல்லை விடியல்; இவற்றின் இடைப்பட்டது கங்குலாம். கங்குல், எல்லை காண்பளவும் -கம். அயோ. 1051 கடைத்தோன்றிய கடைக்கங்குல் -புறம். 400 கசகசப்பு: வியர்வைக் கசிவு வழியாக உண்டாகும் வியர்வை நாற்றமும் வியர்வை உணர்வும் கசகசப்பு எனப்படும். இதனை நசநசப்பு என்றும் கூறுவர். இவை மக்கள் வழக்கு. இனி வெளிப்படப் பேசாமல் பேசலும் பலபேர் ஒருங்கு பேசலும் கசகசப்பு எனப்படலும் மக்கள் வழக்கு. தெருவே கசகச வென்று இருக்கிறது. என்பர். கசக்கிப் பிழிதல்: கசக்கிப் பிழிதல் = கடுமையாய் வேலை வாங்கல். பழங்களைக் கசக்குதலும், கசக்கியதைப் பிழிந்து சாறு எடுத்தலும் நடைமுறைச் செய்தி. அது போலச் சிலரை வாட்டி வேலை வாங்கி முடித்துக் கொள்ளுதல் செல்வர்கள் அல்லது அச்செல்வர்க்குத் துணை நிற்பார் செயல். இச்செயலை உவமையால் குறிப்பதே கசக்கிப் பிழிதல் என்பதாம். கசக்குதல் என்பது இடக்கரடக்காகவும் வரும் பழங்களை யன்றிக் கரும்பை ஆட்டிச் சாறு கொள்வதும், அச்சாற்றால் கட்டியாக்கிக் கொள்ளலும், ஆட்டிப் படைத்தல் எனப்படும் மாவாட்டல், எண்ணெய் ஆட்டல் என்பன வெல்லாம் இவ்வகை சார்ந்தன. கசக்குதல்: கையால் அசக்குதல் கசக்குதல் ஆகும். கை அசக்கு = கசக்கு, கசக்கப்பட்டது கசங்குதலாம். கீழ்க்கை இடக்கையாய், அதன்மேல் கதிர், நெல், பயறு, நெற்று முதலிய வற்றை வைத்து வலக்கையை மேற்கையாய்ப் பக்கம் படரவிட்டுத் தேய்த்தல் கசக்குதலாம். அழுக்குத் துணியை நனைத்து இருகையாலும் கும்மித் தோய்த்தல் - துவைத்தல் - துணி கசக்குதலாம். கந்தையானலும் கசக்கிக் கட்டு என்பது பழமொழி. கண்ணைக் கசக்குதல் கவலை, வருத்தக் குறியாம். ஒன்றைச் சொன்னால் போதும் உடனே கண்ணைக் கசக்குவாய் என்பது மக்கள் வழக்கு. கசடன்: கசடு + அன் = கசடன். உடலழுக்கு கசடு; ஆனால் உள அழுக்கு ஆகிய அழுக்காறு (பொறாமை) அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய மன அழுக்குகளை யும் பிற கூடா ஒழுக்கங்களையும் உடையவன் கசடன் என்று வழங்கப்படுவான். கசடு: கசடு:1 உடலில் உண்டாகும் வியர்வையைக் கசகசப்பு என்பதன் வழியாக உண்டாகிய சொல் கசடு. கசடாவது அழுக்கு, மாசு எனப்படுவது உடல் அழுக்கு கசடு, மன அழுக்கும், மன அழுக்கு வழி ஏற்பட்ட மற்றை அழுக்குகளும் மாசாம். மனத்துக்கண் மாசில னாதல் -திருக். 34 கல்விக் கழகு கசடற மொழிதல் -வெற். வேற் கற்க கசடற -திருக். 391 இவண் ஐயம் திரிபறக் கற்றலே அன்றி, மன அழுக்குத் தீரத் கற்றலுமாம் கசடு:2 கசடு = வடு அல்லது தழும்பு. பைத்த பாம்பின் துத்தி யேய்ப்பக் கைக்கச டிருந்தஎன் கண்ணகன் தடாரி -பொரு. 69-70 கசண்டி: கசம் >fr©o. முடி முழுவதாக இல்லாத வழுக்கைத் தலையைக் கசண்டி என்பது நாஞ்சில் நாட்டு வழக்காகும். கசகசக்கும் வியர்வையற்றது என்னும் பொருளில் வந்திருக்கலாம். ஒ. neh.: வழு வழு என்று இருப்பதால் தலை வழுக்கைக்கும் தேங்காய் வழுக்கைக்கும் பெயராயிற்று. வழு வழுப்பு வழியாகப் பெற்ற பெயரே வாழை என்பது. கசப்பு: கசப்பு:1 அறுசுவையுள் ஒன்று; கைப்பு என்பது அது; கசப்பு ஆயது எட்டிக்காய், வேம்பு இவற்றின் கசப்பை மாற்ற முடியுமா? என்பது பழமொழி. கசப்பு:2 இனிப்புப் போல் விரும்பப்படுதல் இல்லாததால் கசப்புக்கு வெறுப்பு என்னும் பொருளும் உண்டாயிற்று. இதைக் கேட்டுக் கேட்டுக் கசந்து போனது (ம. வ.) கசம்: கயம் > கசம். கயம் என்பது ஆழமான நீர்நிலை. மேலிருந்து பார்க்க நீரும் தெரியாமல் இருளே தெரிந்தமையால், இருட்டுக் கசம் என்பர் ஒரு செறிந்த காடோ, வெளிச்சமிலா வீடோ இருண்டிருத்தல் இருட்டுக் கசமாக இருக்கிறது என வழக்கில் ஊன்றியது இது முகவை, நெல்லை வழக்கு. கசவாளி: கசம் > கசவு > கசவாளி. கயமை என்பது கயம் என்னும் இருண்மைப் பொருளது. இருண்மை யுள்ளத்தான் கயவன்; கயத்தன்மை யுடையவன் கயவாளி (கசவாளி) கருமி எனப்படும் தன்மையனை அவன் ஈயாக்கசவாளி என்பதும், கசவாளி என்பதும் தென்தமிழக வழக்கு. கசறல்: கசறு + அல் = கசறல் தர இயலாத - விலைமானம் கட்டாத - பொருளை மீள மீளக் குறைத்துக் கேட்டுப் பெறுவதைக் கசறல் என்பது மக்கள் வழக்கு. கசறுவார்க்கும் தாராதவரைப் பிசுநாறி எனப் பழிப்பதும் வழக்கு. பிய்த்துத் தருதல் இல்லாத இழிவன் பிசுநாறி. கசநாறிக்கு ஏற்ற பிசுநாறி என்பதும் மக்கள் வழக்கே. கசாயம்: கழாயம் > கசாயம். நன்றாகக் கழுவியும், தூய்மை செய்தும், மாசு களைந்து கழ கழ எனக் கொதிக்கக் கொதிக்க வேகவிட்டு வடிகட்டிப் பக்குவப்படுத்தும் மருத்துவ முறை வடிப்பு நீர், கழாயம் எனப்படும். அது மக்கள் வழக்கில் கசாயமாக வழங்குகின்றது. மூன்று வேளை கழாயம் (கசாயம்) குடி. கதகதப்புப் போய்விடும் (ம.வ.) கசாலை: அஃகம் + சாலை = அஃக சாலை > கசாலை. மாடு கட்டும் தொழுவைக் கசாலை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும் அது, அஃக சாலை (அக்க சாலை) என்பதன் முதற்குறையாகும் தவசம் கொட்டும் கொட்டிலும், காசு அடிக்கும் கொல்லுலையும் அமைந்த இடம் அஃக சாலை எனப்பட்டது அக்கம் = தவசம், காசு. கொற்கையை அடுத்துள்ள அக்காசாலை, பழைய அஃக சாலையாம். மாடு என்பது செல்வம் ஆதலால் அதனைக் கட்டிய இடம் அக்கசாலை எனப்பட்டு, கசாலை ஆயிற்று. எ-டு: கசாலைத் தெரு (சேற்றூர், விருதுநகர் மாவட்டம்). கசிதல்: கசிவு > கசிதல் = அன்புறுதல். புது மண் பானையில் நீர் வைத்தால் கசிவு உண்டாகும் அதுபோல் குளக்கரை, வயற்கரை, வரப்பு ஆகியவற்றிலும் நீர் உள்ள போது வெளியே கசிவதுண்டாம். கசிதல் என்பது நீர் சிறிதளவாய் ஊறி வெளிப்படுதலாம். இனி, இக்கசிதல் அன்புடையார்க்கும் உள்ளமை, அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்னும் குறளால் (71) விளங்கும். ஒருவனிடத்தே அன்பு உள்ளது என்பதற்கு அடையாளமாக இருப்பது கண்ணீர் எனப்படுதலால் அக்கண்ணீர்க் கசிவே இங்குக் குறிக்கப்படு கிறதாம். உனக்குக் கசிவே இல்லை; உன் மனம் என்ன இரும்பா? கல்லா? என வெதும்பி உரைப்பார் உரையில் கசிவு அன்பாதல் விளங்கும். கசிப்பு: கசிதல் > கசிப்பு. கசிதல் வழிதல், அன்பு செலுத்துதல் என்னும் பொருளது கசிய மாட்டான் என்றால், காட்டமாட்டான் என்பது நீர் சொட்டுதல் இன்றிச் சிறிது பதப்படுத்தும் நிலையைக் கசிதல் (கண்ணீர்) என்பர். பட்டை முதலியவற்றைக் காய்ச்சித் துளித்துளியாக வடியச் செய்யும் சாராயத்தைக் கசிப்பு என்பது யாழ்ப்பாண வழக்கு. கசிம்பு: கசிதல் > கசிம்பு. தண்ணீர் ஒழுகுதல், வழிதல் , வடிதல், கொட்டில், சொட்டுதல், துளித்தல், பொசிதல், கசிதல் என அளவுமிகுதி சுருக்கம் என்பவை பற்றிய பல பெயர்களைப் பெறும். கசிதல் என்பதைக் கசிம்பு என வழங்குவது நெல்லை வழக்கு. கச்சகம்: கச்சு + அகம் = கச்சகம். கச்சு = இறுக்கமாகக் கட்டுவது. கையால் இறுக்கமாகப் பற்றிப் பிடிக்கும் குரங்கு கச்சகம் எனப்படும் (வெ. வி.பே) குரங்குப்பிடி என்பது மக்கள் வழக்கு. கச்சக்காய்: கச்சு > கச்சம் > கச்சக்காய். கச்சல் என்பது சிறு என்னும் பொருளது. சிறிய வாழைப்பழம் கதலி எனப்படுவதும், சிறிய மீன் கசலி எனப்படுவதும் பொதுவழக்கு. கச்சல் என்பது மாம்பிஞ்சு என்னும் பொருளில் வந்து அதனை வெட்டி ஊறப்போடுதலாகிய ஊறுகாயைக் கச்சக்காய் என்பது விருதுநகர் வட்டார வழக்கு. வடு என்பது மாம்பிஞ்சின் பொதுவழக்கு. கச்சம்: கச்சம்:1 கச்சு + அம் = கச்சம் = இறுக்கிக் கட்டிய கயிறு. கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்தடி -மதுரைக். 436 பொருள்: கோத்துகட்டிய கச்சுக் கிடந்து தழும்பிருந்த வீரக்கழலையும் பிறக்கிடாத அடியினையும் (உரை. நச்) கச்சம், கொச்சக் கயிறு என மக்களால் வழங்கப் படுகிறது. கச்சம்:2 கச்சம் = கடன். மகளிர் மார்ப்புக் கச்சு, ஆடவர் இடைக்கச்சு, போர்வீரரின் மெய்ம்மறை என்பவை எல்லாம் பொருள்களாகக் கொள்ளப்படும். இவற்றொடு கடன் என்னும் பொருள் இதற்குண்மை அருமை மிக்கதாம். ஒருவரை இறுக்கிக் கட்டிச் செயலறச் செய்வது கடனாதல் மானப் பிறவியர்பால் மிகப் பொருந்துவதாம். கவலை கறியைத் தின்னும் என்பர். மானிகள் பட்ட கடன் கவலை, உயிரையே தின்பது கண்கூடு. கச்சம்:3 கச்சம் = ஆமை. கட்டியானதும் இறுக்கமிக்கதுமாம் ஓட்டையுடைய ஆமை என்பதும் கச்சம் எனப்படும். (வெ.வி.பே) கச்சம்மாள்: கச்சு + அம்மாள் = கச்சம்மாள். அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெற்று வாயிலும் வயிற்றிலும் கையிலும் காலிலும் என்பது போல சின்னஞ் சிறியவர்களை உடையவளைக் கச்சம்மாள் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. இங்குக் கச்சு என்பது அடுத்தடுத்து நெருங்கிப் பிறந்த சிறுமக்களைக் குறித்து வருகின்றது. கச்சாங்காற்று: கச்சு + ஆம் + காற்று = கச்சாங்காற்று. தென்மேற்குப் பக்கத்தில் இருந்து அடிக்கும் காற்றைக் கச்சாங்காற்று என்பது தென்தமிழக - குறிப்பாகக் குமரி மாவட்ட - வழக்கு. கச்சாங்காற்று வீசினால் மழைவரும் என்பர் கச்சு என்பது இறுக்கம், செறிவு மழைநீர் செறிந்த காற்று கச்சாங் காற்று. கச்சாடை: கச்சு + ஆடை = கக்காடை கச்சணம் என்பது தாய்ச்சீலை; அது கொங்கு வட்டாரத்தில் கச்சாடை என வழங்கப்படுகிறது கச்சணம், கச்சணத் துணி, தாய்ச்சீலை என்பவை நெல்லை, முகவை மாவட்ட வழக்குகள். கச்சான்: சிறு தூறாலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும். கச்சு என்பது சிறுமைப் பொருள் வழியாக அமைந்த கச்சு என்பது சிறிதாய துணியால் அமைந்த மார்புக் கட்டு என்பதும் கச்சணம் என்பது ஆண்பால் அரையில் கட்டும் துணி என்பதும் கச்சு என்பதன் சிறுமைப் பொருள் காட்டும் இறுக்கப் பொருளும் தரும். * கச்சக்காய் காண்க. கச்சில்: கச்சு + இல் = கச்சில் இடைவெளியின்றிக் பற்றிக் கிடக்கும் முட்கீற்றுகளைக் கொண்டிருக்கும் ஈ(ர்)ந்து கச்சில் என வழங்கப்படுதல். அதன் இறுக்கத்தையும் இடைப்புகல் அரிய தன்மையையும் காட்டும் கச்சூரம் என்பதும் இது. கச்சு: கச்சு:1 கச்சு = அரைப்பட்டிகை. கச்சினன் கழலினன் -திருமுரு. 208 கச்சு:2 தோட்பட்டிகை. விரவுவரிக் கச்சின் வெண்கை ஒள்வாள் -பெரும். 71 கச்சு:3 குதிரை முதுகு வார். சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇ -நற். 220 (ச.இ.பொ.க) கச்சு:4 மகளிர் மார்புக்கட்டு கச்சு எனப்படுதல் பண்டு முதல் இன்றளவும் உண்டு. கச்சை: ஒரு கட்டை நன்றாகப் பிதுங்காமல் ஒதுங்காமல் இறுக்கிக் கட்டுவதைக் கச்செனக் கட்டுதல் என்பர். நெகிழக் கட்டும் வேட்டியினும் இறுக்கிக் கட்டும் வீரர் உடை கச்சை எனப்பட்டது. நீலக் கச்சை பூவார் ஆடை என்பது புறப்பாடல் (274) கச்சைத் தொங்கலின்றி மேலே தூக்கிக் கட்டுதல் உழவர் வழக்கம் அவ்வுடை கச்சணம் எனப்படும். கச்சு + அண் + அம் = கச்சணம். அண் =மேலே அரைஞாண் மேல் தூக்கி இறுக்கிக் கட்டல் அது. கச்சை கட்டல்: கச்சை கட்டல் = ஏவிவிடல். கச்சை என்பது இடுப்பில் கட்டும் உடையையும், இடைவாரையும் குறிக்கும். கச்சை கட்டுதல் போர்க்குப் புகுவார் செயல். அதனால் கச்சை கட்டுதல் என்பது ஏவிவிடல் பொருளுக்கு உரியதாயிற்று. ஒருவர் எதிர்பாரா எதிர்ப்பின் போதோ, தடுப்பின் போதோ அமைந்திருப்பார். அவரைச் சில சில சொல்லி எதிர்த்து எழுவதற்கும், தாக்குதற்கும் ஏவிவிட்டு விடுவர் சிலர். இதனைக் கச்சை கட்டுதல் என்பது வழக்கு. கஞலல்: கனலல் > கஞலல். நெருங்கல், விளங்குதல், ஒளிவிடல், நிறைதல் ஆகிய பொலிவும் வலிவுமாம் பொருள் தரும் , கஞறல் என்பதும் இது. (வெ.வி.பே). கலையின் வாழ்வு கஞலும் வாழ்வுக் கன்னியேகுண்டல.தமிழ்வாழ்த்து கஞ்சகம்: காஞ்சகம் > கஞ்சகம் = கறிவேப்பிலை. காய்ந்த எண்ணெய் மேல் போட்டு வறுத்து அல்லது பொரித்து காய்ந்த குழம்பு, சாறு தொடுகறி இவற்றின் மேல் போட்டுத் தாளிக்க உதவுதலால் கறிவேப்பிலை கஞ்சகம் எனப்பட்டது. சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளந் துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து கஞ்சக நறுமுறி அளைஇ-பெரும். 306 - 308 கஞ்சன்: கச்சன் > கஞ்சன். கச்சல் பதன் கெட்ட சிறிய வாழைக்காய்; தள்ளுபடியாகிய காய்; அவ்வாறு சிறுகுணமும் ஈவினையும் உடையான் கச்சனாம் கஞ்சன். குடிக்கும் கஞ்சியும் உதவாக் கருமி கஞ்சன் எனினுமாம் (ம. வ) கஞ்சன் தன்மை, கஞ்சத்தனம். புண்ணுக்குக் கட்டச் சுண்ணாம்பும் தாராதவன் ; எச்சில் கையால் காக்கையும் ஓட்டாதவன்; ஈரக் கையையும் உதறாதவன் என்பவை பழமொழிகள். கஞ்சி: கஞ்சி:1 காய்ச்சி வடித்துக் கொட்டியதைக் கஞ்சி எனல் முதுவழக்கு, வடிகஞ்சி என்பது புதுவழக்கு, கரைசல் உணவைக் கஞ்சி எனல் பொதுவழக்கு. சோறுவாக்கிய கொழுங்கஞ்சி ஆறுபோலப் பரந்தொழுகி -பட். 44-45 கஞ்சி:2 கஞ்சத்தனம் என்பதையுடையவனைக் கஞ்சி என்பது ம.வ கஞ்சன் என்பது ஆண்பால். கஞ்சம் = கருமித்தனம். கஞ்சி:3 காஞ்சி என்பதன் முதற்குறுக்கம் கஞ்சி காய்ச்சல்: கஞ்சி காய்ச்சல் = கிண்டல் செய்தல். கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய தவசங்களை, இடித்து, அரைத்து மாவாக்கி ஊற வைத்துப் கிண்டிக் கிண்டிக் கஞ்சி காய்ச்சுதல் வழக்கம். கஞ்சியாவதற்குள் அது படும்பாடு பெரும்பாடு. அப்பாடுகள் எல்லாம் ஒருவனைப் படுத்துதல் கஞ்சி காய்ச்சலாக வழங்குகின்றதாம். கிண்டல், கேலி, நகையாண்டி படுத்துதலே இங்குக் கஞ்சி காய்ச்சல். கிண்டல் என்பது கீழ்மேலாகவும் மேல்கீழாகவும் புரட்டிப் புரட்டி எடுத்தல், உப்புமா கிண்டல், கோழி கிண்டல் அறிக. கேளிக்கை, கேளியாய்க் கேலியாய் உள்ளது. நகையாண்டி நையாண்டி ஆயிற்று. கஞ்சி தண்ணீர்: கஞ்சி தண்ணீர் = கஞ்சியும், தண்ணீரும். கஞ்சி = நீராளமாகக் காய்ச்சப் பெற்ற சோற்றுப் பொறுக்கும் நீரும். தண்ணீர் = சோற்றில் விட்டுவைத்துக் காடியான நீர். கஞ்சி, அன்னப்பால் எனப்படும். அன்னப்பால் காணாத ஏழைகட்கு நல்ல ஆவின்பால் எங்கே கிடைக்குமம்மா? என்பது வறுமையர் வினா? கஞ்சிப்பசை, கஞ்சிக் கலயம், கஞ்சித் தொட்டி என்பவை எவரும் அறிந்தவை. கஞ்சியை அன்னசாரக் கஞ்சி என்றும் மருத்துவர் சுட்டுவர். தண்ணீர் என்பது சோற்றுத் தண்ணீர்: தண்ணீர் என்பதும் அது புளிப்பு மிக்கதாகலின் அது காடி எனவும் படும். காடிக் கஞ்சியானாலும் மூடிக் குடி என்பது பழமொழி. கஞ்சி தண்ணிக்கு வழியில்லை என்பது வறுமை ஒலி. கஞ்சுகம்: காய்ந்து > காஞ்சு > காஞ்சுகம் > கஞ்சகம் = சட்டை. உடலில் வெப்போ குளிரோ தாக்காமல் அளவே வெப்பமிருக்க அணியும் சட்டை கஞ்சுகமாகும் பண்டு, சட்டை இட்ட முதன்மையர்(பிரானியர்) கஞ்சுக மாந்தர் எனப்பட்டனர். கஞ்சுக மாக்கள் -சிலப். 26: 166 நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் -சிலப். 28: 80 எண் பேராயத்தார் உடைகளுள் ஒன்று கஞ்சுகம் (சிலப். 5: 157. அரும்.) * கதவு காண்க. கடகம்: கடகம் ஓர் அணிகலம். ஆண்கள் கடகம் அணிவதைக் கம்பர், கடகக்கை புடைத்து என்று குறிப்பார் (அயோ. 414). கடகம் வளைவு உடையது. பனைநாரால் பின்னப்படும் பெரும் பெட்டி கடகப்பெட்டி. கடகப்பெட்டி எனப்படுவது குமரி நெல்லை வழக்காகும். மடைசெறி முன்கைக் கடகம் -புறம். 150 பொருள்: செறிந்த முன்கைக் கணிந்த கடகம் ப.உ. அணிகலத்தையும், அணிந்த இடத்தையும் சுட்டுகிறது இவ்வடி. கடகால்: நீர் ஏறா மேட்டுக்கு நீர் ஏற்ற இறைபெட்டி போட்டு அள்ளி விடுவர். அது இருவர், நால்வர் செய்யும் பணி. நீரை ஒருவர் அள்ளி விடும் அளவில் அமைந்தது கடகால் (கடை கால்) எனப்பட்டது. அது, நெல்லை மாவட்ட வழக்குகளில் உள்ளது. கடத்தல்: பிறர் அறியா வகையில் இருவர் பாலை நிலத்துக் கடந்து செல்லுதல் கடத்தல் ஆகியது. கொண்டு தலைக்கழித்தல் என்பது இலக்கணர் வழக்கு அது பின்னே கடந்து போதல் பொருளாகி வளர்ந்தது அதன்பின் பிழையான வழியிலே பெண்ணைக் கடத்திக் கொண்டு போதலையும், பொருள்களையும், பொருள்பறிக்கும் வகையாகப் பிள்ளைகளைக் கடத்திக் கொண்டு போதலையும் உலகம் காண்கிறது கடத்தல் கேட்டைத் தடுத்து நிறுத்த ஒற்றும், காவலும் படையும் திணறல் கண்கூடாயுள்ளது. கடத்தல் கடத்துதலும் ஆகும். கடந்தடுதல்: கடந்து + அடுதல் = கடந்தடுதல். மறைந்தோ முறைமாறாகவோ தாக்காமல் நேருக்கு நேராக நின்று பகையைத் தாக்கி அழிப்பது கடந்து அடுதல் ஆகும். கடந்து என்பதால் தன் நாடு கடந்து பகைவன் நாடு சென்று அழித்தலும் ஆகும். இடம்சிறி தென்னும் ஊக்கம் துரப்ப ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேர லாதன் -புறம்.8 கடப்பாடு: கடன் + பாடு = கடப்பாடு = கடன்பட்டது போல் கடமை புரிதல்; ஒப்புரவு. நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற் கடப்பாட் டாளன் -குறுந். 143 கடப்பாடு புரிபவன் கடப்பாட்டாளன். கடமலைக்குண்டு: கடம் என்பது மதத்தையும், மதயானையையும், மதயானை வாழும் மலைப்பகுதியையும், யானைக் கூட்டத்தையும் குறிக்கும். கடமலை என இணையும் போது மதமலை என ஆகி யானையை உருவகத்தால் குறிக்கும். மலைபடுகடாம் என்பது பத்துபாட்டுள் பத்தாம் பாட்டு. அப்பாட்டின் பெயர்க் காரணம் விளக்கும் நச்சினார்க்கினியர். மலைக்கு யானையை உவமித்து அதன்கட் பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்த வதனால் இப்பாட்டிற்கு மலைபடுகடாம் என்று பெயர் கூறினார் என்கிறார். மலையை யானைக்கு உவமையாகக் கூறுவது பழவழக்கு, வரைமருள் வேழம் என்று மலைபடுகடாமும், மலையெனத் தேனிறை கொள்ளும் இரும்பல் யானை என்று புறநானூறும் (17) புகலுகின்றன. குண்டு என்பது ஆழ்பெரும் அகழியையும் பள்ளத்தையும் குறிக்கும் குண்டுகண் அகழி என்றார் ஐயூர் மூலங்கிழர் (புறம். 21) இவற்றால் கடமலைக்குண்டு என்பது மதமலையாகிய யானைகள் மிகுந்த பள்ளத்தாக்கு என்பதாம். பின்னே அதனைச் சார்ந்த ஊரைக் குறித்தது. கடமான்: கடம் + மான் =கடமான். மானுள் ஒருவகை. கடமான் நல்லேறு -புறம். 157 கடமை: கடமை:1 கருநிறத்ததாம் காட்டெருமை கடமை எனப்பட்டது அது. கடமா எனவும் படும். கடமா தொலைச்சிய கானுறை வேங்கை -நாலடி. 300 கடமை:2 கடமை என்பதும் ஒருவகை மானே கடமை மிடைந்த துடவை -குறுந். 392 கடமை:3 கடன் > கடம் > கடமை. உலகம் நம்மைத் தந்தது; உற்றார் உறவினர் உதவினர்; இயற்கை வளம் சொரிந்து வாழ வைக்கிறது; இவற்றை யெல்லாம் பெற்று வாழும் நாம், அவற்றுக்குச் செய்ய வேண்டுவது என்ன? நம் பிறவிமுதல் பெற்ற நலங்களுக்குக் கைம்மாறாகச் செய்ய வேண்டுவது கடமையாகும் எந்தக் கைம்மாற்றையும் எதிர்பாராத கொடைகள் இவை. இக்கொடையைக் கைம்மாறு வேண்டாக் கடப்பாடு என்னும் குறள் (211). செய்யாமல் செய்த உதவி என்றும் சொல்லும் (101). பிறப்புரிமையொடு வந்தது நம் கடமை அல்லது கடன் ஒருவரிடம் பெற்ற கடனைக் கட்டாயம் தீர்க்க வேண்டுவது போலக் கைம்மாறு கருதாது வழங்கியவற்றுக்கு நாம் செய்ய வேண்டுவனவே கடமை - கடப்பாடு - என்பவை. இக்கடமையே உலகை வாழ வைக்கும். நம்மை உலகில் வாழ்ந்து கடமை செய்தவராகப் பதிவு செய்யும்! கடமை செய்யார் பெற்ற உரிமைகள் பாழும் உரிமைகள்; உலகுக்குக் கேடானவை. உரிமையைப் பெறுவது உயிரின் நோக்கு. ஆனால் அதற்குத் தரவேண்டிய விலை கடமையாகும் தத்தம் கடமையைச் செய்யாமல் காலம் தள்ளுபவர் உலகில் இருந்து கடன் காரராகவே போவவராவர். உரிமையைப் பெறு; கடமையைச் செய் இவ்விரண்டும் பொற்காசின் இரு பக்கங்களாகும். கடம்: கடு + அம் = கடம். நெருக்கத்தால், வெப்பத்தால், வினை அழுத்தத்தால், பாலுணர்வு மிகலால் வழிச்செல் துயரால் உண்டாவது கடம். இது பலபொருள் ஒருசொல். கடம்:1 காடு. கல்லென் கடத்திடை -மலைபடு. 415 கடம்:2 பாலை; கானம் வெம்பிய வறங்கூர் கடம் -நற். 186 கடம்:3 கடமை. திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிர் -குறுந். 181 கடம்:4 கடத்தற்கரிய வழி; கடமுதிர் சோலைய காடிறந் தோரே (ஐங். 328) கடம்:5 நேர்ந்து கொள்ளுதல். கருவயிறு வாய்க்கெனக் கடம்படு வோரும் -பரி. 8 கடம்:6 குடம் > கடம். இசைக் கருவிகளுள் ஒன்று. கடம்:7 கடம் = நண்டு; கற்கடகம் என்பதன் தொகுப்பு. கடம்:8 மதம்; கடமலைக்குண்டு ( ஊர்பெயர்) கடம் = மதம். (வெ.வி.பே) கடம்பால்: கடம் என்பது காடு, செறிவு என்னும் பொருளது. தலை காடாகக் கிடக்கிறது என்பது பேச்சு வழக்கு செறிவுடைய அல்லது கெட்டியான சீம்பாலைக் கடம்பால் என்பது விருதுநகர் வட்டார வழக்கு. கடம்பு: கடம் > கடம்பு. வலிமை மிக்கதொரு மரம்; கடப்பமரம் என்பதும் அது கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டவன் நன்னன். எனவே. கடம்பின் பெருவாயில் நன்னன் எனப்பட்டான் (பதிற். பதி. 4) கடம்பு மாலை அணிந்தவனும் கடம்ப மரத்தமர்ந்த வனுமாம் முருகன் கடம்பன் கடம்பமர் செல்வன் (பரி. 8) கடம்பமர் நெடுவேள் (பெரும். 75-76) எனப்பட்டான். கடம்பன் என்பது ஒரு குடியின் பெயர். துடியன் பாணன் பறையன் கடம்பனென் றிந்நான் கல்லது குடியும் இல்லை -புறம். 335 கடம்பின் திண்மையும் திரட்சியும், திணிநிலைக் கடம்பின் திரளரை -குறிஞ். 176 என்பதால் விளங்கும். கடம்ப மரம் முரசம் செய்வதற்கு ஏற்றது என்பது பதிற்றுப்பத்தால் விளங்கும் (பதிற். 11,17; அகம் 347). கடலை: கட > கடல் > கடலை. கடலை என்பது குறுங் கொடிவகை; அது செடி வகையாகவும் வளர்ந்தது. கடலைக் கொடியின் ஆணிவேர் பக்கவேர் சல்லிவேர் எனப் பல வேர்களில், ஆணிவேரில் கடலை காய்த்தல் இல்லை. ஆணி வேர் கடந்த பக்கவேர் சல்லிவேர் ஆயவற்றில் கொத்துக் கொத்தாகக் கடலைக்காய் காய்க்கும். அக்காயின் கொட்டை கடலை எனப்படும். பச்சையாகவோ அவித்தோ வறுத்தோ தின்ன உதவும். எண்ணெய் எடுக்கவும் பிண்ணாக்குப் பெறவும் ஆகும். மணிலாவில் இருந்து இங்கு வந்ததால் மணிலாக் கொட்டை எனப்படும் மக்கள் வழக்கில் மல்லாங்கொட்டை என வழு வழக்கில் உள்ளது. வேரில் காய்ப்பதால் வேர்க்கடலை எனவும் வழங்குகிறது. நிலத்துள் காய் இருப்பதால் நிலக்கடலை எனப்பட்டது. இதுபோன்ற ஒன்று செடியாய்த் தலைமேல் கொத்துக் கொத்தாகக் காய்த்துப் பச்சையாகத் தின்னவும் அவித்தும் வறுத்தும் தின்னவும், மாவு ஆக்கிய பயன்படவும் ஆயதைக் கொண்டைக் கடலை என்றனர் அதனை வறுத்தும் பொரித்தும் பயன்படுத்துவதால் வறுகடலை, பொரிகடலை என்றனர். பொட்டு பருப்பின் மேல் இருப்பதால் பொட்டுக்கடலை என்றும் கூறினர். வேரில் காய்க்காமல் செடியின் உச்சியில் - கொண்டையில் - காய்த்தலால் கொண்டைக் கடலை எனப்பட்டது. இப்பொழுது பட்டாணி என்னும் பயறும் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளது. வெள்ளைப் பட்டாணி எனப்படுகிறது அது. கடலை பழம்பயிரி என்பதையும், அதனை நெய்யில் வறுத்துத் தின்றனர் என்பதையும் புறநானூறு (120) கூறுகிறது. நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டு பொருள்: நறிய நெய்யிலே கடலை துள்ள அதனொடு சோற்றை அட்டு ப.உ கடலைக்காய்: காய் என்பது செடி, கொடி, மரங்களில் காய்ப்பது. வேரில் தோன்றுவதைக் காய் என்பது இல்லை. நிலக்கடலை என்றே கூறுவர் ஆனால் சேலம் மாவட்டத்தார் கடலைக்காய் என வழங்குகின்றனர். மணிலாக் கொட்டை என்பது அது வந்த வரலாறு கூறுவது. கடல்: கட > கடல். எல்லை கடந்த விரிவினதும், நாடு விட்டு நாடு செல்லக் கடக்கும்வழியாக இருந்ததும் கடல் என்று வழங்கப்பட்டது. கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்னும் பெயரும், கடற்கடம்பர்த் தொலைத்த வீறும் புறப்பாட்டும் பதிற்றுப் பத்தும் புகலும். கடல், கப்பல் என்பவற்றின் பெயர்களை எண்ணிய அளவால் தமிழர் கடலாட்சியின் மாட்சி புலப்படும். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்பான் ஒரு பாண்டியன். தேனக்கவார் பொழில் மானக்கவாரம், முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்பவை எல்லாம் வென்று வந்த சோழர் மெய்க்கீர்த்திகள் மிகப்பல. கடல் கடந்து பன்னாட்டு வாணிகம் செய்தவர் தமிழர். ஆதலால் அவ்வணிக நாவாய் உலக வலம் வருவதற்கு முற்பட்டே இடப்பட்டதாக வேண்டும். இச்சொல். அருவி, ஆறு, ஏரி, குளம், தெப்பம், ஏந்தல், தாங்கல் என ஏற்பட்ட அவற்றினும் கடத்தற்கு அருமையும் நோக்கில் அடங்கா நெடுமையும் கருதி இடப்பட்ட பெயர் இது. செறிவைக் காடு என்றும், பேருயரத்தை வானம் என்றும் கருதியமையால் நிலம் காடாகக் கிடக்கிறது, தலைகாடாகக் கிடக்கிறது என்றும் வான்குருவி வான்கோழி, வானவர் நாடு என்றும் பெயரிட்டது போல், கடல் பெரும் பரப்பினதும் வளமிக்கதுமாம் நிலைநோக்கி துணிக்கடல், நூற்கடல், துயர்க்கடல், இடர்கடல் என்னும் வழக்குகள் உண்டாயின. கடல் சார்ந்த ஊர் கடலூர் எனப்படுதல் போல் கடல் சாராத நீர் நிலைகளும் கடல் என மக்கள் வழக்கில் ஆகின. நாரை பறவாத நாற்பத்தெட்டு மடைகளையுடையது இராசசிங்க மங்கல ஏரி எனவும், மாக்கடலாம் மதுராந்தக ஏரி எனவும், குற்றாலத்தின் பேரருவிக்கு மேல் பொங்குமா கடல் எனவும் பெயரிட்டனர். அம்பா சமுத்திரம், தளபதி சமுத்திரம், தாதா சமுத்திரம், திருமலை சமுத்திரம், வாண சமுத்திரம் என ஏரிகளை மாகடல் (சமுத்திரம்) ஆக்கி அவற்றின் பெயரால் ஊர்ப்பெயர்கள் எழுந்தன. கடல் சூழ்ந்த உலகை மாநீர் வேலி என்றனர்(முதுமொழிக்) நீராரும் கடலுடுத்த நிலமடந்தை என்று மனோன்மணியம் சுந்தரனாரும், புடவிக்கணி துகிலென வளர் அந்தக்கடல் என அருணகிரியாரும்(திருப்) சுட்டினர். விரிவுறக் கற்றாரை இலக்கணக்கடல், இலக்கியக்கடல் , தமிழ்க்கடல் எனலும் பணியின் மிக்காரை, அறக்கடல் அருள்கடல் எனலும் சில வீடுகளைக் கடல் போல எனலும் புலமக்கள் பொதுமக்கள் வழக்குகளாக உள. கடல்போல் மக்கள் கடல் போல் படை எனலும் உண்டு. கடலன்ன காமம் -என்பார் வள்ளுவர்(1137) கடற்குட்டம் போழ்வர் கலவர் எனக் கலமோடியர்க்குக் கடல் சிறு குட்டை போன்றது என்பார் நான்மணிக்கடிகையார்(16). கடற் செய்தி பற்றிய சங்கப் பாடல்கள் மிகப்பல. நெய்தற் பாடல்களைக் கடற்பாடல்கள் என்று சொல்லிவிடலாம் அல்லாவோ. ஏலேலோ பாட்டுக் கப்பற் பாட்டே. கடலன் ஒரு குறுநில மன்னன் (அகம். 81) கடல்தெய்வம், கடல்கெழு செல்வி எனப்பட்டது (அகம்.370) வளி தொழிலாண்டோன் கரிகாலன் முன்னோனாம்! கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, உண்டா லம்ம இவ்வுலகம், தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே -புறம். 182 எனப். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் என்னும் குறளுக்குப் (9960) பேருரை கண்ட பெருமையன். கடல்மரம்: மரக்கலத்தின் - கப்பலின்- ஒருபெயர், கடல்மரம் என்பது. கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி -நற்.30 கடல்விளை அமிழ்து: கடல்விளை அமிழ்து = உப்பு. கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர் சுனைகொள் தீநீர்ச் சோற்றுலைக் கூட்டும் -அகம். 169 கடல்விளை அமுதம் என்பதும் இது. கடல்விளை அமுதம் பெயற்கேற் றாங்கு -நற். 88 என்றும் கடலில் விளையும் அமிழ்து உப்பே என்பது புனை கதையர்க்குப் புலப்படுமா? கடவல்: கடவல்:1 கடவு + அல் = கடவல் = செலுத்துதல், இயக்குதல். வண்டி, குதிரை, யானை ஆயவற்றை இயக்குதல் கடவல் - கடவுதல் எனப்படும். கடுமா கடவு வோரும் -பரிபா. 12 கடவல்:2 கடவல் = வினாவுதல். பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ எனவும் -குறுந்.118 பொருள்: பலரும் புகுதற்குரிய வீட்டு வாயிலை அடைக்க எண்ணி வினாவுவார் உள்ளே வருவீர் இருக்கின்றனரோ என்று கேட்கவும்(உரை. உ.வே.சா.) கடவாள்: கடவு + ஆள் = கடவாள் = தேர் செலுத்துபவன், தேர்ப்பாகன். கடவுதல் = செலுத்துதல். கடவுள் கதழ்தேர் கடவாளி னோடும் -கம். உயுத். 2240 கடவு: ஓரிடத்தல் இருந்து மற்றோர் இடத்திற்குக் கடந்து செல்ல அமைக்கப்பட்ட வழி கடவு எனப்படும். வீட்டுக் கடவு, தெருக் கடவு மலைக் கடவு எனக் கடவுகள் பலவாம். ï¥bghGJ xU eh£oš ïUªJ k‰bwhU eh£L¡F¢ bršYtj‰F¥ bgW« muá‹ x¥ãirî Miz flî¢Ó£L MF«.(Passport) கடவுள்: கடவுள்:1 கடவு + உள் =கடவுள். கடவுதல் = செலுத்துதல். உலகை இயக்குகின்ற ஆற்றலுக்குக் கடவுள் எனப் பெயரிட்டனர். x.neh.: இயவுள். பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் -முருகு. 274 இயக்குகின்ற ஆற்றல் இயவுள் ஆவது போல் செலுத்துகின்ற. கடவுகின்ற- ஆற்றல் கடவுளாம். கட + உள் + கடவுள் என்பது சமயவாணர் கொள்கை. கடந்திருப்பதும் உள்ளிருப்பதும் கடவுள் என்பர் அவர். நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்க மாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா வாங்கு -புறம். 106 கடவுள்:2 கடவுள் = தேவர். வானத்து நிலைபெறு கடவுளும் விழைதக -பதிற். 21 கடவுள்:3 கடவுள் = கொற்றவை கடவுள் வாகை -பதிற். 66 பொருள்: கடவுள் வாகை - வெற்றி மடந்தை யாகிய கடவுள் வாகை (உரை, பரிமே) கடவுள்:4 கடவுள் = முனிவர். கடவுள் நண்ணிய பாலோர் -குறுந். 203 பொருள்: முனிவரை அணுகி வாழும் பகுதியினர் (உரை, உ. வே.சா) கடவுள் மீன் அருந்ததி (பதிற். 65); கடவுள் தச்சன், கொல்லிப் பாவை செய்தவன் (அகம். 209); கடவுள் மரம், கடவுள் முதுமரம் (நற். 83); கடவுள் ஆலம் (புறம். 199) என்பனவும் கடவுட் பெயரொடும் இணைந்தவை என்பதைச் சங்கநூல்கள் சாற்றுகின்றன. கடவுள், கடவுள் தன்மையர், கடவுள் தன்மையாகக் கருதப்பட்டவை கடவுட் பொருளாகக் கொள்ளப்பட்டன என்க. ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவின் அல்லது நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே -புறம். 335 என்னும் வீர வழிபாட்டு முறையும் அந்நாளில் போற்றப் பட்டமையையும், அகன்ற மனையிட மெங்கும் கதிரோன் மறைந்த மாலைக் காலத்தே அரும்பு புரி நெகிழ்ந்த முல்லையினது ஒளி மலரை நெல்லோடே தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி மாணிக்க விளக்கை மை விளக்கோடே எடுத்து அம்மாலைக் காலத்தே என்னும் அடியார்க்கு நல்லார் உரையால் (சிலம்பு.6: 1-4) இல்லுறை தெய்வ வழிபாடு செய்யப்பட்டதையும் அறியலாம். இறைவன், திருமால், முருகன், கொற்றவை பற்றியவும் மாயோன் சேயோன் வேந்தன், வருணண் பற்றியவும் ஆங்காங்குக் காண்க. கடறு: கட + அறு = கடறு = கடத்தற்கு உரியதல்லாத அரிய காடு. செறிவாலும், ஏற்ற இறக்கம், அட்டை, விலங்கு, பாம்பு முதலியவற்றாலும் எளிதில் கடக்க இயலாமல் அமைந்த காடு கடறு ஆகும். கடுங்கண் கானவர் கடறுகூட் டுண்ணும் பெரும். 116 கடற்கரை: கடற்கரை:1 கடல் + கரை = கடற்கரை. கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாறு -அகம். 126 கடற்கரை:2 கடற்கரைக்கண் கோயில் கொண்ட முருகன். அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே -முருகு. 125 கடற்கரையாண்டி என்பதும் முருகன் பெயர்களுள் ஒன்று. கடற்கரை:3 கடற்கரை, கடற்கரை யாண்டி என்பன மக்கள் பெயருமாயின. கடற்சமர்: கடற்போர் என நாம் வழங்குவதை ஈழத் தமிழர் கடற்சமர் என்கின்றனர். சமர் என்பது அமர் என்பதன் வழிச் சொல். சகர ஒற்று முன் ஒட்டாகக் கொண்டது அது. x.neh.: அவை > சவை (சபை) கடற்படை: கடல் + படை = கடற்படை. பழந்தமிழர் கலவாணிகம் செய்ததுடன் கடற்படையும் வைத்திருந்தனர்; கடற் பகைவரை அழித்து நாடு காத்தனர். கடற்படை அடற்கொண்டி மண்டுற்ற மலிர்நோன்தாள் தண்சோழ நாட்டுப் பொருநன் அலங்குளை அணியிவுளி நலங்கிள்ளி -புறம். 382 * கடல் காண்க. கடன்: கடன்:1 கடன் = கடமை ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறா அ தீரும் -புறம்.9 தம்கடன் இறீஇயர் எண்ணி இடந்தொறும் காமர் பொருட்பிணி போகிய நம்வெங் காதலர் -குறுந். 255 கடன்:2 கடன் = முறைமை. பாணன் கையது கடன்முறை யாழே -புறம். 68 நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால், யானுயிர் என்ப தறிகை வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே -புறம். 327 கடன் உடன்: கடன் = காலம் குறித்து வட்டிமேனி குறித்து ஒப்படை தந்து பெறும் தொகை. எழுத்துறுதியோ வாக்குறுதியோ இரண்டுமோ இதற்கு உண்டு. உடன் = கைம்மாற்று; கேட்டவுடன் அல்லது வாங்கியவர் கையில் பணம் வந்தவுடன் தருவதாகிய தொகை. வட்டியற்றது இது. கடன் உடன் வாங்கியாவது செய்வதைச் செய்துதானே தீர வேண்டும் என்று வலியுறுத்தப் பெறுவதும், அவரவரே மேற்கொள்வதும் வழக்காறாகும். இத்தகு முனைப்பால் இடர்ப்படுவார் மிகப்பலர். வேண்டாச் செலவுக்கும் வெட்டிச் செலவுக்கும் இம்முனைப்புக் காட்டுவார் நிலைமை என்னாம்? கடன் இல்லாக் கஞ்சி கால்வயிற்றுக் கஞ்சி என்றும் கடன் கொடுத்தான் நட்பை உடன் கெடுத்தான் என்றும் வழங்குவனவற்றை அறிய வேண்டுமே. கடன் கொண்டான் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது கம்பன் தலையில் கட்டப்பட்ட எவனோ ஒரு கொம்பன் பாட்டு இராமாயணத்தில் இல்லாதது. கடன்மை: கடன் + மை = கடன்மை = முறைமை. எண்ணுங்கால் கணங்கொள்கை நும்மனோர் கடன்மைகாண்- கம்ப.உயுத். 393 கடா: கடா:1 ஆண் விலங்கு கடா எனப்படும். எ-டு: ஆட்டுக்கடா, கடாக்களிறு. கடா:2 கடா இணை தேடுதல் உயிரியற்கை. இணை சேர்தலும் இன்பம் தரலும் பெறலும் இயற்கை. இவ்வியற்கை இன்ப உருவகம். கடா என்பதற்கு வினா என்னும் பொருள் தந்தது. இக்கடாவுக்கு விடை என்னை என்பது ஆசிரிய மாணவ அறிவறி முறையாயிற்று. * விடை காண்க. கடாநிலை: கொற்றவைக்குப் கடாப் பலியூட்டுவதைப் பற்றிப் பாடுவது கடாநிலை எனப்பெறும். கொற்றவை தனக்குக் கொற்றவர் எறியும் கடாநிலை உரைப்பது கடாநிலை யாகும் -பன்னிரு. 326 வடாஅதுறை கன்னிக்கு மன்னவர் எறிந்த கடாநிலை உரைப்பது கடாநிலை யாகும் -பன்னிரு. 327 கடா என்றது எருமைக் கடாவை கொற்றவைக்குக் கடாப்பலியிடல் இந்நூற்றாண்டின் மையப் பகுதி வரையிலும் கூடத் தொடர்ந்தமை, பாளையங்கோட்டை ஆயிரத்தமன் கோயில் பன்னீராட்டைக் கொருமுறை எருமைப் பலி யீட்டால் அறியலாம். இன்றும் அப்பலியீடு சில இடங்களில் அறியப் படுவதே! கடாம்: கடாம்:1 கடம் >flh« =மதம். கடாஅக் களிறு -திருக். 1087 கடாம்:2 கடாம் = காட்டில் எழும் பல்வகை ஒலி. மலைபடு கடாஅம் மாதிரத் தியம்ப -மலைபடு. 348 பொருள்: மலைக்கு யனையை உவமித்து அதன்கட் பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்த அதனால், இப்பாட்டிற்கு மலைபடுகடா மென்று பெயர் கூறினார். (உரை,நச்) கடாம்:3 மலைபடுகடாம் என்னும் பத்துப்பாட்டு நூல். முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து கடா விடுதல்: கடா விடுதல்:1 கடா விடுதல் = ஏரவர் களத்தில் வைக்கோல் போரடிப்ப தற்குக் காளை மாடுகளையோ எருதுகளையோ பிணைத்து மிதிக்க விடுதல் கடாவிடுதல் ஆகும். பிணையலடித்தல் என்பது மக்கள் வழக்கு. போரடித்தல் என்பதும் இது. கடா விடுதல்:2 குன்று கண்டன்ன நிலைப்பல் போர்பு நாட்கடா அழித்த நனந்தலைக் குப்பை -புறம்.353 கடா அழித்தல் என்பது புலமையோர் வழக்கு கடாவுறுத்தல், அதரி திரித்தல் என்பவும் இது. கடி: கடு + இ = கடி. கடி என்பதற்குப் பத்துப் பொருள்களைத் தருகிறது தொல்காப்பியம்(866). கடியென் கிளவி. வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீ ரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே என்கிறது. மேலும். ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே என்றிரண்டினையும் இணைக்கிறது. ஆதலால் பன்னிரு பொருள் கூறியதாம். சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம், காவல், மணம், மிகுதி, சிறப்பு, திருமணம், புதுமை, விளக்கம், அச்சம், கடுமை, பேய், விளக்கமுடைய தாளம், வரைவு, பூசை என்னும் பதின்மூன்று பொருள்களைச் சான்றுடன் கூறுகின்றது. பலகுணம் தழுவிய உரிச்சொல் என்னும் பகுப்பில், கடியென் கிளவி காப்பே கூர்மை விரையே விளக்கம் அச்சம் சிறப்பே விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல் வரைவே மன்றல் கரிப்பின் ஆகும் எனப் பதின்மூன்று குணங்களை உணர்த்துகின்றது. (நன்.457) காப்பு : ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவி -அகநா.7 கூர்மை : கடிநுனைப் பாழி -தொல்.உரி.87.சேனா; நச் நாற்றம் : கடிமாலை சூடி -சீவக. 1574 விளக்கம் : கண்ணாடி அன்ன கடிமார்பன் -சீவக. 2327 அச்சம் : கடியர மகளிர்க்கே கைவிளக் காகி -(நன் 457.சங்கர) சிறப்பு : கடிமலர் மிசைப்பூத்துக் கம்புளோ டன்ன மார்க்கும் (நன் 457. சங்கர) விரைவு : எம் அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின் -புறம்.9 மிகுதி : கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் -குறுந். 105 ஆர்த்தல் : கடிமுரசு (நன். 457. சங்கர) வரைவு : கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி -நாலடி. 156 மன்றல் : கடிவினை முடிகென (நன். 457. சங்கர) கரிப்பு : கடிமிளகு தின்ற கல்லா மந்தி -நன். 457 சங்கர. விலக்குதல் அல்லது நீக்குதல் என்னும் பொருளில் தொல்காப்பியர், கடிசொல் இல்லைக் காலத்துப் படினே (985) என்றார். இதனை வரைவு என்பதொடு வைக்கவும் இடமுண்டு. சேனாவரையர் கடி என்பதற்குக் காட்டும் சான்றுகள் கடிந்தகடிந்தொரார்செய்தார்க்கு என வரைவும் (திருக்.658) கடிநுனைப் பகழி எனக் கூர்மையும், கடி கா எனக் காப்பும் (களவழி.29) கடி மலர் எனப் புதுமையும். கடுமான் என விரைவும்(அகம்.134) கடும்பகல் என விளக்கமும்(அகம். 148) கடுங்கால் ஒற்றலின் என மிகுதியும் (பதிற். 25) கடுநட்பு எனச் சிறப்பும் கடுமையான் நெடுந்தகை செருவத் தானே என அச்சமும், கொடுஞ்சுழிப் புகார்த்தெய்வ நோக்கிக் கடுஞ்சூள் திருகுவன் நினக்கே எனமுன்றேற்றும் (அகம். 110) உணர்த்திய வாறு கண்டு தருகுவன் கொள்க என்றும், கடுத்தனள் அல்லளோ அன்னை எனவும் , கடுமிளகு தின்ற கல்லா மந்தி எனவும், கடியென் கிளவி மேற்கூறப்பட்ட பொருளே யன்றிச் சிறுபான்மை ஐயமாகிய குறிப்பும் கரிப்பாகிய பண்பும் உணர்த்துதற்கு உரித்து என்றும் கூறுவார் (சொல். 383-384) சேனாவரையர் காட்டிய எடுத்துக்காட்டுகளில் கடியும் கடுவும் நிரவிவரல் காண்க. * உரிச்சொல் காண்க. கடிகா: கடி + கா = கடிகா = காவற்காடு. கடிகாவிற் பூச்சூடினள் -புறம். 239 பகைவர் புகுதற்கரிய காவற்காடு ஆகலின் கடிகா எனப்பட்டது. காவலும் பிறர் புகத்தடுத்தலும் ஆகிய இருமையும் உடைமை காட்டுவது இச்சொல். கடிகை: கடிகை:1 கடி என்பது ஓர் உரிச்சொல். அதை, கடியென் கிளவி காப்பே கூர்மை விரைவே அச்சம் எனப் பலபொருள் தரும்(நன். 457). காலம் விரைந்து செல்லும் இயற்கையது. அதன் விரைவு கண்ணிமை, கைந்நொடி என நொடிக் கணக்கில் கண்டு அதனையும் பகுத்தனர். நொடிப்பகுப்பு உலக விளையாட்டுப் போட்டிகளிலும் அறிவியல் விண்கலம் செய்கைக்கோள் ஏவலிலும் மிகத்துல்லியமாகக் கணக்கிடப் படும். பழநாளில் பொழுது காணக் கடிகை என ஒன்று வைத்திருந்தனர். அது நீர் சொட்டல், மணல் சொரிதல் கொண்டு அளக்கப்பட்டது. கதிரின் நிழல் கொண்டும் அளந்ததுண்டு. இதுகால் கடிகையாரம் அவ்விடத்தைப் பற்றிக் கொண்டுள்ளது. கடிகை:2 காலம் அளவிட்டுக் கற்பிக்கும் கல்வி நிலையம் என்பது பொதுப்பொருள் எனினும், அக்கல்வி நிலையங்கள் வடமொழிக் கல்விக்காக அமைக்கப்பட்டமையால் ஒப்புகை இல்லாமலோ வடமொழியர் அல்லாத பிறரோ புகுதலைக் கட்டாயமாகக் கடிந்த (விலக்கிய) நிலையமாகலின் கடிகை எனப்பட்டதாம். கடிகை:3 கடிகை = ஊரவர் அவை. உறுப்பினர் அல்லார் புகக் கூடாமையால் - கடியப் பட்டதால் பெற்ற பெயர். கடிகை:4 நான்மணிக் கடிகை என்னும் நூல். விளம்பி நாகனார் இயற்றியது. கடுகங் கடிகை மாமூலம் கடிகை:5 கடித்துச் சுவைக்கும் கண்ட சருக்கரை. அமிர்தின் இயன்றன்ன தீஞ்சேற்றுக் கடிகை -மதுரைக். 532 கடிகை:6 கடி + கை = கடிகை = வெட்டப்பட்ட துண்டு. கடிதல் = வெட்டுதல். கருதி வாயினும் கையினும் கடிகையிற் கட்டி -கம். சுந். 790 பொருள்; வெட்டப்பட்ட கருப்பங் கழித்துண்டு கடிகை:7 ஒரு நாளைக் கூறு இடப்பட்ட பொழுது; நாழிகை. முனிவனோடும் ஓர்கடிகையின் அடைந்தனன் -கம்.பால.255 கடித்தல்: கடித்தல்:1 வன்மையான பண்டங்களைப் பல்லால் வலுவாகக் கடித்துத் தின்பது கடித்தலாம். கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி என்று நாலடியார் கூறும் (156). கடித்தல் வேறு; கறித்தல் வேறு. * கறித்தல் காண்க. கடித்தல்:2 கடித்தல் = சண்டையிடல். நாய் பூனை முதலியவை ஒன்றையொன்று பகைத்தல் கடிப்பாலேயே தம் பகையைத் தீர்க்கும். கடித்தல் அவற்றின் சண்டைக்கு அறிகுறி. ஆனால், அந்நாயும் பூனையும் நட்பாக இருக்கும் போதும் கடிக்கும். அதனைச் சண்டைக் கடியாகக் கொள்வதில்லை. பொய்க்கடி, அன்புக்கடி எனப்படும். இவ்வாறே நெருங்கிப் பழகிய இருவர் தங்களுக்குள் சண்டையிடும் போது, என்ன இருவரும் இந்தக் கடி கடிக்கிறீர்கள்! இந்தக் கசிவும் வேண்டாம்; இந்தக் கடியும் வேண்டாம் என்று அவர்களை அறிந்தோர் அறிவுரை கூறுவது வழக்கம். போதும் கடியாதே எனச் சண்டையிடுவர் தங்களுக்குள் கூறுவதும் உண்டு. கடிப்பவர் அடுத்த நேரமே கடி மறந்து கசிபவர் என்க. கடிப்பான்: முகட்டுப் பூச்சி எனப்படும் மூட்டைப் பூச்சியைக் கடிப்பான் என்பது இராசபாளைய வட்டார வழக்கு. மூட்டைக் கடி தாங்கவில்லை என்பது பேச்சு வழக்கு. கூழுக்குத் தொடுகறியைக் கடிப்பான் என்பது நெல்லை வழக்கு. கறித்தல் = கடித்தல். இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று என்பது குமரகுருபரர் வாக்கு (மீனாட். பிள். 24) கடிப்பு: கடிப்பது, கடித்துத் தின்னும் பொருளும் கடிப்பு எனப்படும். கருப்புக் கட்டியைக் கடித்துக் கொண்டு குடிக்கும் தேநீர் கடிவெள்ளம் எனப்படுதல் மலையாள வழக்கு. இருமுனைகளும் கௌவிப் பிடிக்கும் இடுக்கி என்னும் கருவியைக் கடிப்பான் என்பது மதுரை, நெல்லை மாவட்ட வழக்காகும். கடிமரம்: கடி + மரம் = கடிமரம். கடி = உரிச்சொல். கடியென் கிளவி காப்பே கூர்மை என்னும் நன்னூல்(457). அதில் முதற்கண் நிற்கும் காப்புமரம் கடிமரமாம் காவல் மரம். ஊரவர் மட்டும் காக்கும் மரமன்று. நாடும் அரசும் ஒருங்கே கண்ணும் கருத்துமாகக் காக்கும் மரம் அதுவாம். அது கொழுமை நீங்கிக் காயவும் காணப் பொறார். அரசன் வாழ்வும் தாழ்வும் அழிவும் அம்மரமே என்னும் கடைப்பிடியால் அரசுடன் மக்களும் அதனைச் சேரக் காத்தனர். அக் கடிமரம் பகைவரால் அழிக்கப்படுமானல் அரசையே அழித்ததாகக் கொண்டு மானப் போர் தொடுப்பது வழக்கம். கடிமரம் பகைவரால் வெட்டப்படும் போது அதனை அறிந்தும் காவலன் ஒருவன் கோட்டைக்குள் பதுங்கி இருத்தலை அறிந்து, கடிமரம் தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பில் கடிமனை இயம்ப.... மலைத்தனை என்பது நாணுத் தக உடைத்தே -(புறம்.36) என்கிறார் ஆலத்தூர்கிழார். கடிமரத்தில் யானையைக் கட்டுதல் இழிவு செய்தலாகக் கருதப்பட்மையால், பெருஞ்சித்திரனார் தமக்கு முறையொடு பரிசில் நல்காத வெளிமானை இகழும் வகையால் குமணன் கொடுத்த யானையை வெளிமான் கடிமரத்தில் கட்டி, கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானை என் பரிசில் -புறம். 162 என்றது எண்ணத்தக்கது. கடிய நெடுவேட்டுவன்: கோடை மலைத் தலைவன்; வள்ளல்; பெருந்தலைச் சாத்தனாரால் பாடப்பெற்றவன். (புறம். 205). கடியலூர் உருத்திரங் கண்ணனார்: தொண்டைமான் இளந்திரையன் மேல் பெரும் பாணாற்றுப் படையையும், கரிகாற்சோழன் பட்டினப் பாலையையும் பாடியவர். பதினாறு நூறாயிரம் பொன்பரிசு கரிகாலனிடம் பெற்றவர் என்பதும், பட்டினப் பாலை காவிரிப்பூம் பட்டினத்துப் பதினாறுகால் மண்டபத்து அரங்கேற்றப்பட்டது என்பதும் சிறப்புச் செய்திகளாம். அகநானூற்றிலும் (167), குறுந்தொகையிலும் (352) இவர் பாடல்கள் உண்டு. கடு: கடு = நஞ்சு கடுமையானதும் கொல்லக் கூடிய கொடியதுமாம் நஞ்சு கடுவெனப்பட்டது. கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்று அழவெழ உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற் பாம்பு -முருகு. 149-151 கடுகடுப்பு: சினத்தின் குறி; தேனி, தேள் கொட்டியதால் உண்டாகும் வலிப் பெருக்கம். “ï›to¡ fLfL¤jhš vt®jh‹ cwthf ïU¥gh®?”, தேள் கடித்து இரண்டு நாள் ஆகியும் இன்னும் கடுகடுப்புப் போகவில்லை என்பவை மக்கள் வழக்கு. கடுகு: கள் + து =கடு. கள் = கரியது. கடு > கடுகு = கரியது. கடிப்பகை, ஐயவி என்பனவும் கடுகின் பெயர். கடுகு அளவால் சிறியது. அதனால் சிற்றளவினைக் கடுகத்தனை என்பர். கடுகு கீழே விழுந்தால் உருண்டு விரைவாக ஓடி மறையும்; அதே போல் குய்யில் (தாளிதத்தில்) வேக்காட்டு எண்ணெயில் போட்டால் விரைந்து வெடித்துப் பக்கமெல்லாம் மணம் பரப்பும். இவ்விரைவு, கடுக - விரைய எனப் பொருள் தந்தது; கடி என்னும் உரிச் சொல் மூலமும் ஆயிற்று. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது பழமொழி. கடுகைத் துளைத்து என்பது திருவள்ளுவ மாலை. கடு, கடுமைப் பொருள் தருதல் வழியாய்க் கடுவன் என ஆடவர் பெயரும், ஆண் குரங்கின் பெயரும் ஆயிற்று. கடுக்கன்: கடுக்கை என்பது கொன்றை. அதன்பூப் போன்றதும் ஆண்கள் காதில் அணிவதுமாம் அணிகலம் கடுக்கன் எனப் படுதல் நெல்லை வழக்கு. முக்கட்டு என்னும் காதணியில் கல் உண்டு. கடுக்கனில் கல் இல்லை என்பதுதான் வேறுபாடு. கடுக்காய்: கடுக்காய்:1 விரலால் குடைந்து எடுத்தலும், அதனை உண்ணலும் நுங்குதல் எனப்படும். நுங்கினான் பசிகள் ஆற என்பது இரட்சணிய யாத்திரிகம். அவ்வாறு விரலால் பதிக்க முடியா வாறு கெட்டிப்பட்ட நுங்கைக் கடுக்காய் என்பது நெல்லை வழக்கு. கடுக்காய்:2 கடுக்காய் என்று வழங்கப்படும் மருந்துப் பொருள், கருமை என்னும் நிறப்பெயர் வழியது ( எ-டு: திரிகடுகம் = மும்மருந்து). துவர்ப்புச் சுவையில் கடுக்காய் சிறந்தது. கடுக்காயும் தாயும் கருதிலொன்றென் றாலும் கடுக்காய்தா யிற்கதிகம் காண்நீ - கடுக்காய்நோய் ஓட்டி உடல்தேற்றும் உற்றவன்னை யோசுவைகள் ஊட்டி உடல்தேற்று வாள் (சித்தர் அறிவியல் திங்களிதழ் 2: 3: 19) கடுக்குக்கடுக்கு: கெட்டியான தின்பண்டத்தைக் கடுக்குக் கடுக்கு எனக் கடித்துத் தின்ற நாய் போயிற்று என்பது பல் போய்விட்ட முதியவர் பாடு. கடுப்பான்: தயிர் மோர் விட்டு உண்பதற்கு ஊறுகாய் போன்ற மற்றொன்று துவையல் ஆகும். அது மற்றைத் தொடுகறி விடுகறி ஆகியவற்றினும் உரைப்பு தூக்குதலாக இருக்கும். அக்கடுமை கருதிக் கடுப்பான் என்பது ஒட்டன் சத்திர வட்டார வழக்கு வெற்று வற்றலை அரைத்தே காரத் துவையல் என உண்பதும் உண்டு. அதன் கடுப்பு கண்ணீர் வர வைக்கவும் வல்லது. கடுப்பு: கடுமை என்னும் பொருளில் கடுப்பு என்று வழங்குவது பொதுப்பொருள். அது கடுஞ்சினம், உள்வேக்காடு என்னும் பொருளில் வழங்குதல் வட்டார வழக்காகும். அவன் கடுப்பு இன்னும் தீரவில்லை என்பர். உன் கடுப்பு என்னை என்ன செய்துவிடும்? என்பதும் உண்டு. நீர்க்கடுப்பு வயிற்றுக்கடுப்பு என்பன வெப்பு மிகையால் ஏற்படும் துயர். இது தென்தமிழக வழக்கு. கடுவாத் தாள்: கடுவாத் தாள் = நூறு உருபாத் தாள். கடுவாய் என்பது பெரும்புலி! பதினாறு அடி தாவும் வேங்கையைக் கடுவாய் என்பர். அதன் பிளந்த பெருவாயையும் அதன்கொடுங்காட்சியையும் கண்டு கடுவாய் என்றனர். கடுவாய் எளிமையாகக் காணக் கூடிய விலங்கன்று. செறிந்த காடுகளின் இடையே அரிதில் வாழ்வது. அதனைத் தேடி முயன்றே காண முடியும். அது போல் அரிதில் காணக் கூடிய பெரிய பணத்தாள் கடுவாத் தாள் எனப்பட்டது. முன்பு, நூறு மட்டும் தேடு; நூற்றுக்கு மேல் ஊற்று என்பது பழமொழி. இப்பொழுது நூறு உருபா என்பது, பழைய சல்லிக் காசு நூறுக்கு ஒப்பு. கடுவா தாள் என்பது பழநாள் பணத்தாள் மதிப்பை விளக்கும் வரலாற்று வழக்காறாம். கடுவாய்: பெரும்புலி அல்லது வரிப்புலிக்கு ஒருபெயர் கடுவாய் என்பது. கடுவாய்ப்புலி என்பது மக்கள் வழக்கு. அதன் வாயமைப்பு விரிவும் அதனை அகல விரித்துக் கடிக்கும் கடுமையும் ஒரு சேரக் குறித்ததாய் மக்கள் வழங்குவது கடுவாய் என்பதாம். கடுவாய்ப் புலி: கடுவாய் = கொடுமையான வாயையுடைய பெரும்புலி. புலி = உடலில் வரியும் புள்ளியும் உடைய சிறுபுலி. வாயைப் பிளக்குதடி - கையுறை வாளும் உருவுதடி என்பார் கவிமணி. இது கடுவாய்ப் புலியாம். சிறுபுலி, சிறுத்தை எனப்படும். கடுவாய்ப் புலி என்றால், கடுவாய் ஆகிய புலி என்றாகும். கடுவாய் புலி என்றால், கடுவாயும் புலியும் என்றாகும். கடுவாய் புலி காட்டில் திரியும் கவனித்துப் போ என்பது பட்டறிவாளர் உரை. கடை: கடை = இடம்; வாயில்; தலைக்கடை = தலைவாயில். வாயில் கடைமணி நடுநா நடுங்க -சிலப். 20: 53 ஏழாம் வேற்றுமை உருபு. கண் கால் கடை -நன். 302 கடை கண்ணி: கடை = தனித்தனியாய் அமைந்த வணிக நிலையம். கண்ணி = தொடராக அமைந்த கடைவீதியும், சந்தையும். கடை = இடம்; இடம் என்னும் பொருள்தரும் இச்சொல் வாயில் எனப் பொருள் பெற்றது. தலைக்கடை, புறக்கடை அல்லது புழைக்கடை என்பவற்றைக் கருதுக. கடையில் - வாயிலிலே - வணிகம் செய்தமையால் அதற்குக் கடையெனப் பெயர் வந்தது. கண்ணி = இணை; இணையாகக் தொடுக்கப்பட்ட அல்லது வரிசையாய் அமைந்த கடைத்தெருவும் சந்தையும் கண்ணி எனப்பட்டன. கண்ணிணை போல் அமைக்கப்படும் கண்ணி என்னும் பாவகையையும், பூக்கண்ணியையும் வலைக்கண்ணியையும் கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி முதலியவும் கருதுக. கடைகோடி: கடைகோடி = ஆகக்கடைசி. கடை என்பது கடைசி என்னும் பொருளது. கோடி என்பது கடைசி என்னும் எண்ணுப் பெயர். அது தெருக் கோடி தெற்குக் கோடி என இடத்தின் கடைசியைக் குறிப்பதுமாயிற்று. இவ்விரண்டுஞ் சேர்ந்து ஆகக்கடைசி என்னும் பொருள் தருவதாக வழக்கில் ஊன்றியுள்ளது. கடைகோடி, வீடு, வயல் என்பன வழக்குகள். கடைக்கட்டில்: வாழ்வின் முடிவில் கடைசியாய் படுக்க வைக்கும் கட்டில் பாடை ஆகும். பாடையைக் கடைக்கட்டில் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காகும். பாடைக்கட்டில் கால் இல்லாததாக இருக்கும். ஆதலால் அதனைக் கால் கழி கட்டில் என்பது சங்க நூல் வழக்கு. கடைக்கண் காட்டல்: கடைக்கண் காட்டல் = குறிப்பால் கட்டளையிடல். கண்ணடித்தல் காதல் தலைவன் பாற்பட்டதெனின் இக்கடைக்கண் காட்டல் காதல் தலைவி பாற்பட்டதாம். அவள் அவனினும் அரிதிற் புலப்படக் காட்டலால் அடித்தல் வினையின்றிக் காட்டல் அளவில் நின்றதாம். கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்கடுகாம் என்பார் பாவேந்தர். அவ்வளவு எளிமையாக மலையையும் புரட்ட வைத்து விடுமாம் அக்காதற் கண்காட்டல்! இந்த வில் என்ன, எந்த வில்லையும் முரிக்க முடியுமாம் சீதையைக் கண்ட இராமனுக்கு. குறிப்பறிதல் என்னும் ஓரதிகாரப் பெயர் ஈரிடத்து வள்ளுவத்தில் இயைந்தமையே இதன் நுண்மையைக் காட்டும். கடைக்காட்சி: நேர்பார்வையில் ஆராய்ந்து ஊரவையார் இறுதியாகச் செய்யும் தீர்ப்பு, இவ்வூர் தர்மிகளோம் சபையார் கடைக்காட்சியாக இப்பரிசு செய்து (க.க.அ,மு) கடைக்கூட்டு: கடை + கூட்டு = கடைக்கூட்டு = கடைசி விருப்பம். உம்முடைய கைக்கடைந்தான் உயிர்காக்க கடவீர்என் கடைக்கூட்டால் -கம். உயுத். 1574 கடைசியர்: காலம் இடம் ஆகிய இருவகைகளிலும் கடை என்னும் சொல் இறுதி(கடைசி) என்னும் பொருள் தந்தது. அது தொழில் வகையாலும் ஏற்பட்ட போது உழத்தியர் கடைசியர் எனப்பட்டனர். கடிமலர் களைந்து முடிநா றழுத்தித் தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர் என்பது சிலம்பு ( 10: 127 - 130). சுண்ணாம்பு நீற்றுபவரைக் கடையர் என்பது யாழ் வழக்கு. கடையரே கல்லாதவர் என்பதும், கீழ்மை இயல்பர் கடையர் என்பதும் பரவலான வழக்கு. கடைநிலை: பரிசில் நீட்டித்த போது அதனை வெறுத்த புலவன், வேந்தனது கடை காவலரிடம் முனிந்துரைப்பதாக வரும் நூல் கடைநிலை எனப்படும். இக்கடை நிலையை வசைப்பாட்டு என்றும், அங்கதம் என்றும் கூறுவர். கடைநிலை என்பது காணுங் காலைப் பரிசில் உழப்பும் குரிசிலை முனிந்தோர் கடையகத் தியம்பும் காட்சித் தென்ப. -பன்னிரு.344 பரிசில் நீட்டித்தல் அஞ்சி வெறுத்தோர் கடைநின் றுரைப்பது கடைநிலை என்ப. -பன்னிரு. 356 கடைநிலை எனினும் வசைப்பாட் டெனினும் அங்கதம் எனினும் ஒருபொருள் மேற்றே -பன்னிரு. சங்கப்பி. 161 இனிக் கடைநிலையைப் புறத்துறையில் வரும் வாயினிலை என்பாரும் உளர். அது சான்றோர், எம் வரவினைத் தலைவற்கு உரை எனக் கடை காவலர்க்குக் கடைக்கண் நின்று கூறுதல் என்பர்(அகராதிகள்). புரவலன் நெடுங்கடை குறுகிய என்னிலை கரவின் றுரையெனக் காவலர்க் குரைத்தன்று -பு.வெ.190 என்னும் புறத்துறை, கொண்டு கூறப் பெற்றது இதுவாகும். கடைநிலை - வினாவி நிற்றல் எனப் பொருள் காணலும் உண்டு. பெரியோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தம் தீர வாயில்காக் கின்றோர் என்வர வினையிறைக் கியம்புதி நீயெனக் கடைக்கணின் றுரைப்பது கடைநிலை யாகும் -முத்துவீ. 1099 பரிசில் நீட்டிக்கப் பருவரலுற்ற புலவர்கள் பாடிய பாடல்கள் பல புறநானூற்றில் இடம் பெற்றுள. கடைநிலைக்கு முன்னோடி அவை என்க. (127,382,383,384,391,392,393,394,395,398) கடைந்தெடுத்தல்: கடைந்தெடுத்தல் = அகவையை மீறிய அறிவு. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்தலிலிருந்து வந்த வழக்குச்சொல் இது. பாலின் அளவு காய வைக்கும் பொழுது சுண்டும். அதன்பின் பிரையிட்டுத் தயிராக்கிக் கடைந்தால் வெண்ணெய் திரளும், அத்திரள் சிறிதாயினும் அப்பாலின் ஊட்டம் அனைத்தும் அத்திரளில் அடங்கி விடுகிறது. அதுபோல் சிறிய அகவையில் பெரிய ஆளுக்குரிய அறிவு, ஆற்றல்,ஊட்டம் அனைத்தும் அத்திரளில் அடங்கி விடுகிறது.அதுபோல் சிறிய வினாவுதல் இருப்பின் கடைந் தெடுத்தவன் அவன் என்பர். ஆனால், பாராட்டுதலாக அஃது அமையாமல் இகழ்தலாக வழங்குகின்றது. ஏனெனில் அகவைக்கு விஞ்சியதும் பொருந்தாததும் ஆகிய அறிவுக் கூர்ப்பே வெளிப்பாடாக இருத்தலால். சிறந்ததாக இருந்தால் சிறுப்பெருமை என்றும், சிறுமுதுக் குறைவு என்றும் சொல்லப்படும். கடைமடை: ஏரி, குளம், கால்வாய் நீர், விளை நிலங்களில் பாய்ந்து, கடைசியாக வெளியேறும் மடை, கடைமடை யாகும். விளை நிலங்களுக்கு நீர் முதற்கண் வரும் மடை தலைமடை. தலைமடையாலே நீர்பாயும் கடைமடையாலே விழவும் (தெ.இ.கல்.தொ.23:490) கடையம்: மகளிர் காலணிகளுள் ஒன்று கடையம். கடைசல் வேலை மிக்கது ஆதலால் பெற்ற பெயர். கடகம் கைவளை, தோள்வளை ஆயவற்றைக் குறிக்கும் ஆடவரணி. கடகக்கை புடைத்து நக்கான் - என்பார் கம்பர்(அயோத். 413) கட்கம்: கட்கம்:1 கமுக்கம் > கக்கம் > கட்கம் = மறைவிடம்; தோள்பட்டையின் உட்பகுதி. கட்கம்:2 தோட்பட்டையின் உட்பகுதியில் வைக்கும் வாள். கட்சி: கட்டப்பட்டது; கூடிச் சேர்ந்து பலவற்றால் கட்டப்பட்டது கட்சி - கூடு என்னும் பொருளது. பறவை முட்டை இடுவதற்காக ஆண் பறவையும் பெண்பறவையும் கூடிக் கட்டியது கட்சி எனப்பட்டது. ஈனில் என்ற அது. உறைவிடமும் ஆயிற்று. அதன்பின் விலங்குகள் உறையும் குகையாய் ஆயது. இந்நாளில் கட்சி என்பது அரசியல் அமைப்புப் பெயராகியது. அரசியலில் ஆளும். கட்சி, எதிர்க்கட்சி என அமைந்து கருத்து மோதல் ஏற்படுவதால் கட்சி கட்டுதல் என்பது கூடி எதிர்த்தல் பொருள் தந்தது. விளையாட்டில் கட்சி பிரித்தல் வழக்கம். எரித்த கட்சி, எரியாக் கட்சி எனச் சமயப் போர்க் கட்சிகள் மேடை யேற்றப் படவும் ஆயது! கட்சி, கட்சி மாறி என விரிவாக்கிவிட்டது மக்கள் தேர்தல் ஆட்சி. கட்டக்கால்; குட்டைக் கால் என்பது கட்டைக்கால் ஆகிக் கட்டக்கால் என வழங்கப்படுவது இது. குறுங்காலை யுடைய பன்றியைக் கட்டக்கால் என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு. கட்டப்பிள்ளை நெட்டப்பிள்ளை என்பது நாட்டுப்புறப் பாட்டு. கட்டடம் - கட்டிடம்: கட்டு = அடம் = கட்டடம். இது கட்டு என்னும் முதனிலையையும், அடம் என்னும் இறுதி நிலையையும் கொண்டது. கட்டடம் என்பது கட்டும் தொழில் வழியாக வந்த பெயர். கட்டுதல் என்பது கற்கட்டு, செங்கற்கட்டு, கட்டட வேலை முடிந்தது; பூச்சுத் தான் நடக்க வேண்டும்! வீட்டைக் கட்டிப்பார்; வீடு கட்டி விளையாடல் இவை எல்லாம் கட்டடச் சொல்லை விளக்குவன. கட்டு = இடம் = கட்டிடம். கட்டடம் கட்டுதற்கெனத் தேர்ந்து கொண்ட இடம் - மனையிடம் - கட்டிடம். இடம் வாங்கி விட்டேன் என்பது கட்ட இடம் வாங்கி விட்டேன் என்னும் பொருளது. அவ்விடத்தில் கட்டடம் இனிமேல்தான் கட்ட வேண்டும் என்னும் பொருள் கொண்டது. கட்டிடம், இடப்பெயர்; கட்டடம் தொழிற் பெயர். முன்னதில் இடம் இடப்பெயர்; பின்னதில் அடம் தொழிற்பெயர். கட்டட வேலை செய்யும் கல்வியறியார் எப்படி எழுதினாலும், பொறியியல் கற்ற அறிஞரும் இரண்டும் ஒன்றாக எழுதலாமா? ஒன்றென எண்ணலாமா? ஒப்பந்த விளம்பரங்கள், செய்தித் தாள்கள் இவற்றிலெல்லாம் இப்பிழை என்றால், அறிஞர்களும் இப்பிழையை விட்டார்களா? இரண்டும் சரிதான் என்று எத்தனை சொற்களைச் சொல்வார்களோ! எத்தனை காலம் சொல்வார்களோ! கட்டணம்: கட்டணம்:1 கட்டு + அண் + அம் = கட்டணம் = கட்ட வேண்டிய திட்டவட்டமான தொகை. கட்டாயம் போல்வது அஞ்சற் கட்டணம், மின்கட்டணம், சரக்குக் கட்டணம், கல்விக் கட்டணம் என்பவை வழக்கில் உள்ளவை. கட்டணம்:2 கட்டணம் என்பது பாடை என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. பாடு என்பது படுதல்; கண்ணிமை மூடுதல்; உறங்குதல்; செத்தாரை எடுத்துச் செல்லும் படுக்கை அமைப்பு. கண்பாடு = உறக்கம் பாடிவீடு = படுக்கை இடம். கட்டைகளை வைத்துக் கட்டுதல் வழி வந்த பெயர் இது. கட்டம்: கட்டம்:1 கட்டு + அம் = கட்டம். கட்டுப்பாடாக விளையாடுதற்கு அளவு கோலாகப் போடப்பட்டது கட்டம். எந்த விளையாட்டுக் களமும் அளவீடு அமைந்தது அறிக. கட்டடம் கட்டுதற்கும் கட்டுமானம் செய்தற்கும் ஒன்றை ஒத்த அளவில் செய்தற்கும் கட்டு வேண்டிய தாயிற்று. தாயக்கட்டம், சூது கட்டம், கட்டடம் கட்டுமானம், கட்டளைக் கல், அறக் கட்டளை என்பனவெல்லாம் கட்டு வழியே அமைந்தவை. கட்டு = வரம்பு. கட்டு வழியே கட்டுரை, கட்டாயம், கட்டாரி என்பனவும் ஆயின. கட்டு + உரை = கட்டுரை; கட்டமைந்த உரை. கட்டு + ஆயம் = கட்டாயம்; அளவிட்ட வரி. கட்டு + ஆரி = கட்டாரி; அளவாக வெட்டும் கருவி. கட்டு + ஆர்ப்பு = கட்டார்ப்பு > கட்டாப்பு. அளவிட்டுக் காட்டப்பட்ட தோப்பு. காடு, நிலம் முதலியன. கட்டம்:2 கட்டிப் போட்ட ஒன்றன் இயக்கம், இல்லாமல் ஒழியும். நோய்த் துயர் பிணி எனப்படுதலை எண்ணலாம். பிணியை ஒப்பது கட்டு என்பது. கட்டிப் போடப்பட்டவர் அடையும் துயர் கருதிக் கூறப் பட்ட சொல் கட்டம் ஆகும். அதனைக் கஷ்டம் ஆக்கியது மொழிக்கேடாம். x.neh.: இட்டம் > இஷ்டம். இடுவதை விரும்புவது இட்டம்; விருப்பம். கட்டளை: செறித்து அளவாக அமைக்கப்பட்டது; அளவிட்டுக் காண அமைந்தது வரம்பிட்டு அமைத்த அமைப்பு; ஆணை. செங்கல் அறுப்பதற்கு அமைந்த கட்டளைச் சட்டம், அதனுள் செறிக்கும் மண்செறிப்பு, பிற தொழிலகக் கல்லொடும் ஒத்த அளவீடு என்பவை கருதுக. பொன்மாற்று அறிய அமைந்த கல், கட்டளைக் கல்லாம். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் -திருக். 505 என்பது பொன்மாற்றறியும் கல்லாம். இன்னாரால் ஏற்படுத்தப் படும் அறம் என்பதற்காம் அறக்கட்டளை இந்நாளில் பெருக்கமாம். அறவோர் கட்டளை, ஆசான் கட்டளை என்பவை ஆணை என்னும் பொருளதாம். கட்டளைக் கலிப்பா: சங்கச் கான்றோர்க்கு முற்பட்டோர் கட்டளை அடியால் செய்யுள் செய்தலை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தொல்காப்பியர் கூறும் அடிகளுக்குரிய எழுத்து போல அமைந்தது கட்டளை என்னும் சொல்லாட்சி. கட்டளைக் கலித்துறை என்பது நேரசையில் தொடங்கும் அடிக்குப் பதினாறு எழுத்தையும் நிரையசையில் தொடங்கும் அடிக்குப் பதினேழு எழுத்தையும் கொண்டிருக்கும். கட்டளைக் கலிப்பா ஓரடியை இரண்டு அரையாகவும் அரையடியை நாற்சீர் அளவினதாகவும், அவ்வரையடி நேரில் தொடங்கின் பதினோரெழுத்தும், நிரையில் தொடங்கின் பன்னீரெழுத்தும் பெற்று வரும். யாப்பால் பெற்ற பெயர் நூலுக்கு ஆயிற்று. கட்டளைக் கலிப்பா நாட்டுங் காலை ஒருமாக் கூவிளம் ஒரு மூன்றியைய நேர்பதி னொன்று நிரைபன்னீ ரெழுத்தாய் நடந்தடிப் பாதியாய் நான்கடி ஒத்தவாய் வருவதின்று வழங்கும் நெறியே -தொன். வி. 236 கட்டாடி: கட்டி எடுத்துச் சென்று துணிகளை அடித்து வெளுக்கும் சலவையரைக் கட்டாடி என்பது யாழ்ப்பாண வழக்கு. கட்டு என்பது பொதி; பொதியைத் தோளில் முதுகில் கொண்டு செல்வதும், கழுதைமேல் ஏற்றிச் செல்வதும் இன்றும் அரிதாகக் காணும் காட்சிகளாம். நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதை -அகம். 207 என்பது சங்கத் தொடர். கட்டாந்தரை: கட்டு + ஆம் + தரை = கட்டாந்தரை. கெட்டிமிக்க - வன்மையான - நிலம் கட்டாந்தரை என்பதாம். உழவுக்கு ஆகாத நிலம். கட்டுதல் = வெட்டுதல். வெட்டிப் பக்குவப் படுத்தி விளைநில மாக்கத் தக்க இடம். x.neh.: கொல்லை, செறு. கட்டாப்பு: கட்டு ஆர்ப்பு > கட்டாப்பு = நெருக்கமாகக் கட்டுதல். கோட்டம், தோப்பு, பயிர்நிலம் ஆகியவற்றில் ஆடு மாடு புகாமல் இட்டுக் கட்டப்படும் வேலி, அல்லது நெருக்கமாக அமைந்த உயிர் வேலி கட்டாப்பு என வழங்கப்படுதல் கண்டமனூர் வட்டார வழக்காகும். பொதுவில் தென்தமிழக வழக்கமாகும். கட்டாயம்: கட்டு + ஆயம் = கட்டாயம் = வரி செலுத்தல் போற் கண்டிப்பு. கட்டு = செலுத்து; ஆயம் = வரி. தவிர்க்க முடியாமல் செய்தே ஆக வேண்டியது கட்டாயமாகும். அதனைச் செய்யத் தவறினால் தண்டனையில் இருந்து தப்ப முடியா நிலைமையது. கட்டான்: நரம்பு நார் ஆகியவற்றால் கட்டப்பட்டது உடல். ஆதலால் யாக்கை(ஆக்கை) என வழங்கப்பட்டது. யாத்தல், யாப்பு என்பவை கட்டு என்னும் பொருளது. கட்டான உடல் என்பதை விளங்கச் செய்வது எலும்பு ஆகும். எலும்பைக் கட்டான் என்பது மதுரை வழக்கு. கட்டி: கட்டி:1 மண்திரண்டு செறிந்தது. பக்குவம் வாயா உழவில் நிலம் கட்டி கட்டியாகப் பெயரும் கட்டி, திரண்டு செறிந்தது; வலியது. மண்கட்டி, வெள்ளிக்கட்டி, தங்கக்கட்டி, பனிக்கட்டி என ஆயது. கட்டி:2 கட்டப்பட்ட இடம் கட்டி ஆயது. கல்லுக் கட்டி கட்டி:3 கட்டி என்பான் வலிய வீரன். கங்கன் கட்டி கட்டி:4 உடலில் உண்டாகும் தசைத்திரட்சி கட்டிக்கு மருந்து காவிமண். அதற்கு மண்கட்டி > மக்கட்டி என்பது ம.வ. கட்டி:5 பாகு, சருக்கரைக் கட்டி. கட்டி பூசிக் கடுத்தீற்றல் உரையாசிரியர்கள். சித்த மருத்துவ இயல் சார்ந்தது. கட்டிக் கொடுத்த சோறு: கட்டிக் கொடுத்த சோறு = கற்றுக் கொடுத்த கல்வி. கட்டிக் கொடுத்த சோற்றின் அளவு மிகுமா? சுவைதான் மிகுமா? தந்த அளவே அளவாய் அமையும். அது போல் கற்றுக் கொடுத்த அளவிலேயே அமையும் கல்வி, கட்டிக் கொடுத் சோறாகச் சொல்லப்படும் கட்டிக் கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த கல்வியும் எந்த மட்டோ அந்த மட்டோ என்னும் பழமொழி. இவ்வழக்குத் தொடரின் பொருளை விளக்கும். கட்டிக் கொடுத்த சோறு, கட்டுச் சோறு எனப்படும். தோளில் அதனைப் போட்டுக் கொண்டு போன வழக்கத்தால் தோட்கோப்பு என்பதும் அது. கட்டிக் கொள்ளல்: கட்டிக் கொள்ளல் = திருமணம் செய்தல். திருமணம் செய்தலைத் தாலி கட்டு என்பது வழக்கம். திருமண நிகழ்வில் கட்டாயம் இடம் பெறுவது தாலிகட்டு. தாலிகட்டு முடிந்துவிட்டால் திருமண விழா முடிந்தது எனப் பந்தியில் உட்காரும் வழக்கமே அதனைத் தெரிவிக்கும். வாழ்த்தினால் என்ன? வாழ்த்து திருமணம் ஆவதில்லை! தாலி கட்டுதலே திருமணமாகக் கொள்ளப்படுகிறது. மற்றை மற்றைச் சடங்குகளும் கூட முதன்மையில்லை. அதனால்தான், திருமண விழாவில் தாலி கட்ட மறந்தது போல என்னும் பழமொழி எழுந்தது. தாலி கட்ட மறந்தால் திருமணமே நடந்ததாகாது என்பது தெளிவு. ஆதலால் தாலி காட்டல் இல்லாமலும், தாலி கட்டல் உண்டு என்பதே பொருளாம். முடிச்சுப் போடுதல் கட்டுதல்தானே. மாலை மாற்றிக் கொள்ளல், விரலாழி மாற்றிக் கொள்ளல், பதிவு செய்தல் என்பவை புதிய வரவுகள். கட்டிப்போடுதல்: கட்டிப் போடுதல் = அடங்கச் செய்தல். கயிற்றால் கட்டுதல்தான் கட்டுதல் என்பதில்லை. சொல்லால் கட்டுதலும் கட்டே. கட்டளை, கட்டுரை, கட்டுப்பாடு, கட்டுப்படுத்தல், கட்டுமானம் என்பனவெல்லாம் கயிற்றொடு தொடர்பில்லாக் கட்டுகளே. சிலர் கொதித்து எழும் நிலையிலும் ஒரு சொல்லால், ஒரு விரலசைப்பால், ஒரு கண்ணிமைப்பால் கொதியாது அடங்கியிருக்கச் செய்தி விடுவது உண்டு. அவ்வாறு அடங்கியவர், என்னைக் கட்டிப் போட்டு விட்டீர்கள்; இல்லாவிட்டால் என்ன நடக்கும் - நடந்திருக்கும் - என்பது எனக்கே தெரியாது என்பது உண்டு. பாரதக் கதையில் தருமன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நின்ற வீமன் முதலானோர் கொதிப்படைய, கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் என்று தருமன் கூறியது கருதத் தக்கது. கட்டி முட்டி: கட்டி = கட்டிப்பட்ட ஒன்று, கட்டி. முட்டி = கட்டி உடைந்து உண்டாய் துண்டு, முட்டி. கருப்புக்கட்டி, வெல்லக்கட்டி, செங்கற்கட்டி, தங்கக் கட்டி இவற்றில் கட்டியின் பொருளை அறிந்து கொள்க. இனி மண்ணாங்கட்டி என்பது ஒரு பொருளும், வசையுமாய் அமைந்ததாம். செங்கற்கட்டி உடைந்ததைச் செங்கல்முட்டி என்பது வழக்கு. உழவடையில் கட்டி முட்டிதட்டுதல் ஒரு பகுதியாம். கூழ், களி கிண்டும் போது கட்டி படாமல்இருக்கக் கவலைப்படுவர். அதில் பெரியகட்டி சிறிய கட்டிஇருந்தால், என்ன கட்டியும் முட்டியுமாக இருக்கிறது என்பது வழக்கு. இது கட்டாணி முட்டாணி எனவும் வழங்கப்படும். கட்டியம்: கட்டியம்:1 கட்டு + இயம் = கட்டியம். திட்டமிட்டுக் கட்டிய சொல்லால் ஓங்கிக் குரல் கொடுப்பது - எச்சரிப்பது - கட்டியம் எனப்படும். கட்டியங் காரன் - சீவக சிந்தாமணியில் வரும் கேடன். கட்டியம்:2 அரசன் திருவோலக்கத்தில் வீற்றிருக்கும் போது, அவ்வரசன் புகழை அவையிலுள்ளார் கேட்டு மகிழுமாறு, கட்டியங் கூறுவோன் கூறுவது போல் அமைக்கப் பெறும் நூல் கட்டியம் எனப்பெறும். எடுத்துக் கொண்ட பாடல் அடியின் சீர் எண்ணிக்கையை அளவாகக் கொண்டு பெரிய கட்டியம் சிறிய கட்டியம் என இரு வகையாகக் கூறப் பெறும். சிதம்பர அடிகளாரால் இயற்றப் பெற்ற திருப்போரூர் முருகர் பெரிய கட்டியமும், திருப்போரூர் முருகர் சின்ன கட்டியமும் இவற்றுக்குச் சான்றாம். இவற்றுள், முன்னது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தானும், பின்னது வெண்செந்துறையானும் அமைந் துள்ளன. கட்டில்: கட்டு + இல் = கட்டில். இல் = இடம். குழந்தைகளை உறக்காட்டத் தொங்கலாகத் துணியால் கட்டப்பட்டது கட்டில் எனப்பட்டது. பின்னர்க் குழந்தை படுக்க மரத்தால் செய்யப்பட்ட நாற்கால் பலகைப் படுக்கையும் கட்டில் பெயர்பெற்றது. அதன் பின்னர்ப் பொதுமைப் படுக்கைப் பெயராயிற்று. தொட்டில் கட்டுதல் என்னும் வழக்கம் கருதுக. கட்டு காவல்: கட்டு = கோட்டை, அகழ், சுவர் முதலிய அரண் கட்டாகும். காவல் = காவலர், நாய் ஆகிய கண்காணிப்பு காவல் ஆகும். கட்டுமானம் அமைந்தது கட்டு எனப்பட்டது. பழங்காலக் கோட்டைகளைக் கவனித்தால் கட்டு காவல் அமைதி புலப்படும். அகழ், அரண், கோட்டை என்பவை இருப்பினும் அவற்றையும் தகர்த்தோ கடந்தோ வந்து அழிவு செய்யும் பகைவர் இருப்பர். அவரைத் தடுத்து நிறுத்தவும் காவலும் வேண்டியதாயிற்று கோட்டை வாயிலில் காவலர் இருப்பும், மதில்மேல் காவலர் மேடையும்இருத்தலைக் கண்டு தெளிக. அதன் எச்சம் இக்கால வளமனை, அலுவலகங்கள், கருவூலங்கள் ஆகியவற்றில் இருத்தலை அறிக. கட்டுக்கணி: இயற்கையான முடி இல்லாதவர் செயற்கையாக முடி செய்து கட்டுதல் உண்டு. அச்செயற்கை முடியைக் கட்டுக்கணி என்பது கொங்கு நாட்டு வழக்கு. கட்டுக்கணி = ஒட்டு முடி. கணி = கண்ணி. தொடுக்கப்படும் கயிறு, மாலை ஆகியவை கண்ணி எனப்படும். கட்டு சீலை: குளிசீலை என்பதும் தாய்ச்சீலை என்பதும் கோவணப் பொருளன. சீலை (சீரை)யில் இருந்து(கிழிந்த சீலையில் இருந்து) கிழித்து எடுக்கப்பட்ட துணியைக் கோவணமாகக் கொண்டதால் உண்டாகிய பெயர்கள் இவை. கோவணத்தைக் கட்டுசீலை என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். கட்டுத்தரை: கட்டு + தரை = கட்டுத்தரை. மாடு கட்டும் தொழுவம் கட்டுத்தரை என்பதாம். சுற்றுச்சுவர் அமைந்து, கட்டும் முளை,தீனிபோடும் காடி, நீர் குடிக்கத்தக்க தொட்டி ஆயவற்றைக் கொண்டது கட்டுத்தரை. கட்டுத் தொழுவம் என்பதும் இது. கட்டுப்படுதல்: கட்டுப்படுதல் = கட்டளைக்கு உட்படுதல். பெற்றவர்கள் பெரியவர்கள் என்பதால் அவர்கள் சொல்லுவது மனத்திற்கு ஒவ்வவில்லை என்னும் ஒருவாறு ஏற்றுக் கொண்டு நடப்பதுண்டு. அதற்குக்கட்டுப்படுதல் என்பது பெயர். நன்றியறிதல் காரணமாகவும் செய்தாரை நினைந்து கட்டுப்பட்டு நடத்தலும் உண்டு, ஊர்க்கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டால் அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்ற நிலைமை அண்மைக் காலம் வரை இருந்தது. இதில் வரும் கட்டு ஆணை என்னும் பொருள் தருவதாம். ‘C®¡f£L Ûwyhkh? என்பது வழக்கு மொழி. தலைவன் சொற்படி நிற்கும் குடும்ப ஆட்சியைத் தலைக்கட்டு என்பது வழக்கு. கட்டுப்பாடு: கட்டு + பாடு = கட்டுப்பாடு. கட்டுப்பட்டாக வேண்டிய சட்ட விதிமுறை; ஆணை மொழி. அலுவலகத்தில் கட்டுப்பாடே இல்லை. வைத்தவர் வரிசைதான், தலைமைக்குக் கட்டுப்பாடு இல்லை! பிறகு எவர் கட்டுப்பாட்டைக் கொள்வார்? என்பவை மக்கள் வழக்கு. கட்டுமட்டு: கட்டு = வருவாய்க்குத் தக்கவாறு கட்டுப்படுத்திச் செலவிடல். மட்டு = எவ்வளவுதான் வருவாய் வந்தாலும் திட்டப்படுத்தி இதற்கு இவ்வளவே என்று மட்டுப்படுத்தி(எல்லை அல்லது அளவு படுத்தி)ச் செலவிடல். கட்டுமட்டு உடையன், கட்டுமட்டானவன் எனப் பொதுவாகக் கூறுவதும் உண்டு. இனி இதனைக் கட்டு மெட்டு என்பதும் உண்டு. கட்டுமானம்: கட்டுமானம்:1 கட்டு + மானம் = கட்டுமானம். மானம் = அளவு கட்ட வேண்டிய அளவு கட்டுமான வேலை, கட்டுமான விலை. கட்டுமானம்:2 இட்டுக்கட்டி - புனைந்து - உரைத்தல். உன் கட்டுமானம் தான் இதுவா? என்பது மக்கள் வழக்கு. கட்டுமானம்:3 கட்டடம் கட்டுதற்கு வேண்டும் பொருள்கள். கட்டுமானம்:4 வாங்கும் - விற்கும் - விலை. கட்டுமானம் ஆகாது; தர வாய்க்காது என்பது மக்கள் வழக்கு. கட்டுரை: கட்டுரை என்பது ஓர் அருமையான சொல்; அது மிகப் பொருட் செறிவுடைய பழஞ்சொல்லாகும். சிலப்பதிகாரத்தில் கட்டுரை, உரைபெறு கட்டுரை, கட்டுரை காதை என்னும் நூலின் உட்பிரிவுகள் அமைந்து உள்ளன. கட்டுரை என்னும் சொல்லும் மிகுதியாக எடுத்தாளப்பட்டுள்ளது. அதற்குப் பழைய உரையாசிரியர்கள் பொருள் பொதிந்த சொல் உறுதியுடைய சொல் எனப் பொருள் கூறியுள்ளனர். கட்டுமானம்: நாம் ஒரு வீடு கட்டத் திட்டமிட்டால் முதற்கண் கட்டுமானப் படம் வரைவோம்.அதன்பின் கண்டவாறு கட்டடம் எழுப்புவோம் .அது போலவே கட்டுரையும் திட்டமிட்டு வரையறைப்படுத்திக் கொண்டு எழுதப்பட வேண்டும். அப் பொழுதுதான் அதன் அமைப்பும் பொருளும் தெளிவும் சிறப்பாக அமையும். கட்டழகு: சிலர் உடலைப் பார்த்ததும் கட்டான உடல் என்கிறோம். V‹? அளவுக்கு விஞ்சி மெலிவு இல்லாமலோ, ஊதிப் போகாமலோ உரிய அளவில் பொருத்தமாக அமைந்த நல்ல உடலையே கட்டுடல் என்றும், அத்தகையவரையே கட்டழகன் கட்டழகி என்றும கூறுகிறோம். அதற்கு ஏற்பவே கட்டுரையும் அளவாலும் அமைப்பாலும் கட்டழகு உடையதாக விளங்க வேண்டும். கட்டு விரிதல்:மொட்டு அல்லது முகையாக இருக்கும் பூவில் மணமும் தேனும் உண்டு; எனினும், அவை அவ்வளவாக வெளிப்பட்டுப் பரவுவது இல்லை; ஆனால் அது கட்டு விரிந்துவிட்டால் எங்கேயோ திரியும் வண்டும் அங்கே வந்து மொய்க்கத் தொடங்குகின்றது. அந்தத் தேனிலும் நறு மணத்திலும் தன்னை மறந்து வெளிப்படுத்திக் கற்பவரை வயப்படுத்துவதே கட்டுரையின் பெற்றிக்கு அடையாளமாகும். கட்டுச்சோறு: கட்டுச் சோறும் கற்ற வித்தையும் என்பது ஒரு பழமொழி. கட்டுச்சோற்றைப் பொதி சோறு என்பர். பொதி சோறு துணி முதலியவற்றால் பொதிந்து வைக்கப்பட்ட சோறாக மட்டுமில்லாமல் சுவை பொதிந்தும், கெட்டுப் போகாத தன்மை பொதிந்தும் அமைந்த சோறாகும். அது போலக் கட்டுரையும் நல்ல நடையால் பொதியப் பெற்று உயர்ந்த பொருள் பொதிந்ததாக விளங்க வேண்டும். கட்டுஉரை: கட்டுரை என்னும் சொல்லை இரண்டாகப் பிரித்தால் கட்டு உரை என இரண்டு ஏவல்கள் உண்டாகும். அவ் ஏவலை ஏற்றுத் திட்டமிட்டுக் கட்டி உரைக்கும், உரையே கட்டுரையாகத் திகழும். இட்டுக் கட்டுதல்: கட்டுரை என்பது இட்டுக் கட்டிச் சொல்லும் உரை எனவும் பொருள் தருவதாயிற்று. பொய்யுரை, புனைந்துரை ஆகியவையும் கட்டுரை எனவே சொல்லப்படும். எனினும் அவையும் கற்பவரையும் கேட்பவரையும் வயப்படுத்துவனவாகவே அமைந்தால்தான் நிலை பெறுகின்றன என்பதை மறக்கக் கூடாது. கட்டமைப்பு: கட்டுரை, சிறப்பு அடைவதற்கு உவமை, பழமொழி, மரபுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் வேண்டும். நாம் கூறும் கருத்தை வலியுறுத்தத் தக்க மேற்கோள்களைத் தக்க இடத்தில் செய்யுளாகவும் இடுதல் வேண்டும். கையெழுத்து அழகோ கற்பவர்க்குக் காட்சி இன்பம் தருவதாய் முத்துக் கோத்தால் போல் விளங்க வேண்டும் கட்டு திட்டம்: கட்டுரையைப் பார்த்தவுடனேயே இன்ன பொருள் பற்றி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் முன்னுரையும், இக்கட்டுரையில் அமைந்த பொருள் முடிவு இதுவே என்பதை அறிந்து கொள்ளும் வகையில் முடிவுரையும் கொண்டிருத்தல் வேண்டும். இடையே கூறப்படும் செய்திகளும் ஏறத்தாழ ஒத்த அளவில் பத்திப் பிரிவுடன் விளங்குதல் வேண்டும். முடிவுரை: இவற்றைப் போற்றி எழுதும் புலமையை மாணவர்கள் வளர்த்துக் கொள்வது. தேர்வில் மதிப்பெண் பெருகுவதற்கு வாய்ப்பாவதுடன் பின்னாளிலும் மதிப்பு மிக்க எழுத்தாளர் ஆவதற்கும் வகை செய்யும் என்பது உறுதி. கட்டூர்: கட்டூர் = பாசறை. களப்போர்க்குச் செல்லும் வீரர் தங்குவதற்காகக் கட்டப்பட்ட பாசறை வீடுகள் சில பலவற்றைக் கொண்ட ஊர், கட்டூர் ஆகும். போர் கருதியே கட்டப்பட்ட குறுகியக்காலக் குடியிருப்பு ஆதலால் அப்பெயர் பெற்றது. அப்படிப்பட்ட இடங்கள் நிலைத்த வீடுகளாய் அமைந்து பாளையம் என்றும் பாளையப்பட்டு என்றும் வழங்கலாயதும் உண்டு பாளையம் இறங்கல் என்பது படைகள் தங்கலாம். கட்டை: மரத்துண்டம், குட்டை என்பவற்றைக் குறிக்கும் கட்டை, பொதுவழக்குப் பொருளது. ஆனால் அது துறவர் வழக்கில் உடலைக் குறித்து வழங்கியது. இந்தக் கட்டைக்கு இனி என்ன வேண்டும்? இந்தக் கட்டை சொல்கிறது என்பர். இது பொதுமக்கள் வழக்கிலும் வழங்கலாயிற்று. உடல்வேகுவதைக் கட்டை வேகிறது என்பதும் அது. இனிக் கட்டையிலே போவான் என்னும் வசை மொழியில் உள்ள கட்டை இடுகாட்டில் கட்டையை எரிக்க உதவும் விறகுக் கட்டையைக் குறிப்பதாம். கட்டைக் காலன்: கட்டை > குட்டை = உயரக் குறைவு. கட்டைக்காலன் என்பது கால் உயரம் குறைந்தவனைக் குறித்தல் பொது வழக்கு. நெட்டைக் காலனுக்கு மாறு. ஆனால், கட்டைக்காலன் என்பதற்குப் பன்றி என்னும் பொருள் முகவை மாவட்ட வழக்காக உள்ளது. இதனைக் குறுந்தாள் ஏற்றை(பெரும்பாண். 344) என்பது புலமக்கள் வழக்காகும். கட்டைப்பகுதி: கட்டைப்பகுதி = குறுக்குத்தெரு. நெடுந்தெருவின் ஊடு அமைந்த குறுந்தெரு தமிழகத்தில் குறுக்குத் தெரு என வழங்குகிறது. நெடிய மரத்தைக் குறுக்கே தறிப்பது கட்டை ஆகும். கட்டை > குட்டை. நீளக்குறைவுடைய தெருவைக் கட்டைப் பகுதி என்பது ஈழ வழக்கு. கட்டைப்பருத்தி: கட்டை + பருத்தி = கட்டைப்பருத்தி, உயரமாக வளராத நாட்டுப் பருத்தியைக் கட்டைப் பருத்தி என்பது மக்கள் வழக்கு. சின்ன பருத்தி என்றும் கூறுவர். உயரக் குறைவை முன்னது காட்டும், பின்னது, சின்ன இழைகளை யுடையதும் சின்ன அளவுடையதும் காட்டும். அமெரிக்கன் பருத்தி வந்தபின் பெரிதும் கட்டைப் பருத்தி பயிரிடல் அற்றுப் போயிற்று. அதனைப் பெரிய பருத்தி என்பர். கணக்கு: மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்பவை நூல் என்னும் பொருளைத் தருதல் அறிந்தது. நூலாய்ந்து கற்பிக்க வல்லார் கணக்காயர் எனப்பட்டனர். கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பது தமிழறிந்தது. கணக்கு என்பது பற்றிய இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல் பகர்கின்றது. மேல்கீழ்க் கணக்கென இருவகைக் கணக்கே -பன்னிரு. 344 மேற்கணக் கெனவும் கீழ்க்கணக் கெனவும் பாற்படும் வகையால் பகர்ந்தனர் கொளலே -பன்னிரு. 345 அகவலும் கலிப்பா வும்பரி பாடலும் பதிற்றந் தாதி பதிற்றைம்ப தீறா மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக் கெனவும் வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின் எள்ளறு கீழ்க்கணக் கெனவு கொளலே -பன்னிரு. 346 ஐம்பது முதுலா ஐந்நூ றீறா ஐவகைப் பாவும் பொருணெறி மரபிற் றொகுக்கப் படுவது மேற்கணக் காகும் -பன்னிரு. 347 அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க்கணக் காகும் -பன்னிரு. 348 * கீழ்க்கணக்கு, மேற்கணக்கு காண்க. கணக்கு வழக்கு: கணக்கு = கணக்கிட்டுத் தந்தது. வழக்கு = செய்முறைகளால் தந்தது. எனக்கும் அவனுக்கும் கணக்கு வழக்கு ஒன்றும் இல்லை என நடப்பில் கூறுவதும், கணக்கு வழக்கைப் பார்த்துக் கொடுத்து விடு எனப் பகையில் கூறுவதும் கேட்கக் சுடியவை. வழக்கு = வழக்கம், நடைமுறை. மொய், நன்கொடை, அன்பளிப்பு எனத் தந்தவையும் வழக்கில் வந்துவிடும். தின்றதைக் கக்கு என்பது சிறுபிள்ளைத்தனம் என்றால் பெரியவர்களிலும் அத்தகையர் உண்டு என்பதன் சான்று வழக்கு. கணந்துள்: ஆட்காட்டிப் பறவை என்பது கணந்துள் பறவைக்கு மக்கள் வழங்கும் பெயர். வழிச் செல்வார்க்கு வழிப்பறிப்பாளர் மறைந்திருப்பதைக் காட்டும் பறவை என்பர். நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும் -குறுந். 350 பொருள்: நெடிய காலை யுடைய கணந்துட் பறவை ஆறலை கள்வரை அறிவுறுத்தி வழிப்போகின்றவர்களின் படைத்திரளை நீங்கச் செய்யும். ஆள் அறிவுறீஇ என்பது விளங்க அருமையாகப் படைக்கப் பட்ட பெயர் ஆட்காட்டிப் பறவை என்பதாம். வழிகாட்டி, கைகாட்டி என ஊர்ப் பெயர்கள் உளவே. இதற்குக் கணந்துள் என ஏன் பெயரிட்டனர்? ஆற்றயல் இருந்த இருந்தோட்டு அஞ்சிறை என்கிறது குறுத்தொகை (350). பெருத்த தொகுதியமைந்த இறகுகளையுடைய அழகிய சிறகையுடையது. கணந்துள் திரண்ட கூந்தலைக் கணங்குழை என்கிறது திருக்குறள். அதனை எண்ணினால் கணந்துள் என்னும் பெயரின் பொருள் விளக்கமாம். பெரிய தொகுதியாகிய அழகிய சிறகு, இருந்தோடு எனப்பட்டது (தோடு = தொகுதி). இதனை உடைமையால் கணந்துள் ஆயது. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு -திருக். 1081 கணம்: கணம்:1 கண் + அம் = கணம் = கண்ணிமைப் பொழுது; நொடிப் பொழுது. உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே எழுத்தின் ஒலி அளவு கணத்தால் அளவிடப்படும். குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது -திருக். 29 கணம்:2 கணம் = கூட்டம், தொகுதி. * கணன் காண்க. கணனி: கம்யூட்டர் என்னும் சொல்லைக் கணினி எனத் தமிழகம் வழங்குகின்றது. ஈழம் அதனைக் கணனி என்கின்றது. கணிதம், கணக்கு என இருவகை வழக்கும் உள்ளமை எண்ணிப் பார்க்கலாம். கணி, கணியன், கணிப்பு என்பவை கணி வழிப்பட்ட சொற்கள். கணக்கு, கணக்கன், கணக்காயர் என்பவை கணக்கு வழிப் பட்டவை. கண் என்பது இவற்றின் மூலம் என்பது அறிவியல் வல்லான் ஒருவன் முதுகண்ணன் எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் வழங்கப்படுதல் கொண்டு அறியலாம். கணிகண்ணன், கணிவன் முல்லை என்னும் பெயர்களையும் எண்ணலாம். கண்ணகன், கண்ணுள் வினைஞர் என்னும் பெயர்களும் பழையவையே. கணன்: கண் + அன் = கணன். கணம் = கூட்டம் தொகுதி. பறவையின் கணங்கள் -நாலா. 282 கணம் > கணன். கணன் அடங்கக் கற்றாரும் இல் -சிறுபஞ். 29 கணன் அடங்க = நூற்பரப்பனைத்தும். கணிசம்: அளந்து கொடுக்காமல் கண்ணால் அளவிட்டுத் தருவதைக் கணிசம் என்பர். இதற்கு ஏன் அளந்து கொண்டு; ஒரு கணிசமாகக் கொடுங்கள் என்பர். பின்னர்க் கையால் ஓர் அளவாகத் தருதல் கைக்கணிசம் எனப்பட்டது. கண்ணால் அளந்து தரும் அளவு கணிசம் ஆகும். இது நெல்லை வழக்கு. கணி முற்றூட்டு: கணியர்க்கு இறையிலியாக (வரி இல்லாமல்) வழங்கப்பட்ட நிலம். பள்ளிச்சந்த கணி முற்றூட்டு (க. க. சொ.அ) கணையம்: கணையம்:1 கண் > கணை > கணையம். மதிற்கதவின் உள்ளாக இடப்பட்ட காப்புமரம். திரண்ட வலிய மரம் கணையம் ஆகும். மண்வெட்டி, கோடரி ஆயவற்றுக்கு இடப்படும் கணையினை அறியின் வயிரமேறிய வன்மையை உணரலாம். x.neh.: கணையாவது கைப்பிடியாய் அமைந்த கோல். கணை = கலியது; கூரியது (அம்பு) கரும்பின் கணை - வலியது; முளையிடுவது; கடிக்க இயலாதது. கணையம்:2 உடல் உள்ளுறுப்புகளுள் ஒன்று. கல்லீரல் மண்ணீரல் கணையநீர். கண்: காண வாய்த்த உறுப்பு கண்; புறத்தே காணும் காட்சிகளை அகத்தே பதித்து அறிவைப் பெருக்கலால் அகக்கண், அறிவுக்கண் எனப்படுவதாயிற்று. காட்சி என்பதற்கு அறிவுப் பொருளும் உண்டாயிற்று. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றும், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு -திருக். 392 என்றும், எண் எழுத்து இகழேல்என்றும் முந்தையர் மொழிகள் கண்ணின் சிறப்பைக் காட்டுவனவாம். எண்சாண் உடம்புக்குத் தலையே தலைமையதெனினும், உயரிய இயக்கமாம் மூளை அங்கே இருப்பதெனினும், செவியும் மூக்கும் வாயும் அத்தலையிலேயே இருப்பவை எனினும் கண்ணுக்குரிய சிறப்புப் பெரிதாம். செவிக் குறையினும் கண்குறையே, எவரையும் எளிதில் பரிவுறச் செய்வதாக இருப்பது அதன் அருமையாலேயே ஆம். கண்கள் இரண்டும், நேர்நேர் நெருங்கி ஒப்பவமைந்த அமைப்பால் கண்ணிணை எனப்பட்டன. மக்களைக் கண்மணிகள் என்றனர். கண்ணின் சிறப்பால் கண்ணே, கண்ணா, கண்ணு என விளிப்பெயர் அன்புருவாக வெளிப்படலாயிற்று, இணைந்த ஈரடிப்பாடல் கண்ணி எனப்பட்டது. இயற்கைக் கொடையாக வாய்த்தவை இலைகள். இவை நேருக்கு நேராக ஈர்க்கில் அல்லது தண்டில் இருந்ததால் கண்ணி எனப்பட்டன. எ-டு: பொன்னாங்கண்ணி, கரிசிலாங்கண்ணி. கண் இணை போலக் கட்டப்பட்ட கயிற்று வலை, கண்ணி எனப்பட்டது. மான் கண் போல் அமைந்த காலதர் - பல கண்களையுடைமையால் - பலகணியாம். மான்கண் காலதர் மாளிகை இடங்களும் (சிலப். 5:8). மான்கண், யானைக்கண், புலிக்கண் போலாக அமைந்த மடைவாய் உடைய நீர்நிலை கண்வாய் ஆகும்; அணைக்கட்டில் இருந்து பிரிவது, கண்ணாறு. மலையிடை வழிப்பிளவு, இருபால் மலைகளுக்கும் இடைப்பட்டதாகலின் கண்வாய் > கணவாய் ஆயது. கைபர் கணவாய், போலன் கணவாய், பாலக்காட்டுக் கணவாய், கணவாய்ப்பட்டி. கண்ணிமைக்கும் பொழுது கணம்; அது ஒரு மாத்திரை அளவு. கூட்டமாய் அமைந்ததும் கணம் எனப்படும். எ-டு: மான்கணம், புலிக்கணம்.செறிவமைந்த புல் கணம்புல் ! கணம்புல்லர் என்பார் நாயனாருள் ஒருவர். கண்ணால் பிறரைக் கவர்பவள் கணிகை பேணிய கணிகையும் பிறர்நலம் காட்டி -மணிமே. 16:9 கண்ணை அகழ்ந்து அப்பியவர் கண்ணப்பர் (பெரியபுராணம்). விண்மண், நாள் கோள் கணித்துக் கூறுவார், கணியர், கணிமேதை, கணிமேதாவி, முதுகண்ணர் என்பார். கணியம் சோதிடம் கணிகூறல் போல் தன்பொலிவால் காட்டும் மரம் கணி! அது வேங்கை. கண்ணுதல் = பொருந்துதல், கருதுதல், குறித்தல். கண்ணிய வருமே -தொல். 210 கபிலை கண்ணிய -தொல். 1036 கண்படுத்தல், கண்படை = உறக்கம். கண்படை கருதிய கண்படை நிலையும் -தொல். 1036 கண்ணிடத்துத் தம் திறம் காட்ட வல்லார் கண்ணுள் வினைஞர் சிலப்பதிகாரம் கூறும் வரிப்பாடலுள் ஒன்று கண்கூடுவரி. கண்போல் அமைந்த வட்டவடி வெழுத்து கண்ணெழுத்து. கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பலபொதி -சிலப். 26:16 கண் > கணக்கு. கணக்காயர் என நூலையும் நூலாய் வாளரையும் குறிக்கும் மேற்கணக்கு; கீழ்க்கணக்கு; கணக்காயர் மகனார் நக்கீரனார். வேலையையோ வேலை செய்வாரையோ கண்காணிப்பவர் கண்காணி. கங்காணி என்பது கொச்சை அல்லது வழு வழக்கு. கண் ஏறு படுமென வைக்கப்படும் பொய்ம்மை (பொம்மை) இன்றும் விளைநிலம், புதுமனைகளில் காணலாம். கணவரைக் கண்ணாளர் என்பது அன்பின் உவகைப் பெருக்கும் உவமை யமைப்புமாம். கண்ணின் மணிபோல் மக்களைக் கருதுவது பெற்றோர் பெருநிலை. கண்ணே மணியே தாலாட்டு கண்ணமைந்த வடிசட்டி கண்சட்டி; கலம் வனைவார் செய்வது. அதனைச், சிப்பிலித்தட்டு என்றும் கூறுவர். சிற்பிலித் தட்டு = சிறிது சிறிதாகப் பிலிற்றும் - வழிய விடும்- தட்டு அரிக்கண்சட்டி என்பதும் அது. அரிக்கும் கண்ணமைத்த சட்டி. கண்ணோட்டம் = ஈவு இரக்கம் அருள், கற்றதற்கு அடையாளம் கண்ணுடைமை. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் -திருக். 577 கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் -திருக். 575 கண்ணுடையர் என்பவர் கற்றோர் -திருக். 393 கண்ணோடல் = ஒருபக்கம் சார்தல். முறை எனப்படுவது, கண்ணோடாது உயிர்வௌவல் -கலித்.133 பறைவகைகளுள் ஒருபக்கம் அடிப்பது, இருபக்கம் அடிப்பது என இருவகை உண்டு. அவை ஒருகட்பறை, இருகட்பறை என்பன. காகத்திற்குக் கண் இரண்டேனும் கண்மணி ஒன்றே. ஒரு கண்ணுக்கு ஒருகாட்சி. கண்போல் மதித்தல் கண்ணியம். கண்ணால் அளவிடுதல் மதிப்பிடுதல் கணித்தல் கணக்கிட்டுத் துல்லியமாக எவற்றையும் காட்டும் கருவி கணினி. கண்ணழகு மிக்கார் கண்ணனையர். கண்ணன் வழிப் பெயரும் கண்ணி வழிப்பெயரும் பெருகின கண்ணன், முதுகண்ணன், கணிகண்ணன் இன்னவை ஆண்பாற் பெயர்களாயின் கண்ணம்மை, கண்ணாயி, அங்கயற்கண்ணி, குவளைக் கண்ணி, தாமரைக்கண்ணி - இன்னவை பெண்பாற் பெயர்கள் ஆயின. கண்ணுக்கு மையிடுவார் உண்டு, அணிகலம் இடுவார் இல்லை! மூக்கு காது, கழுத்து, கை, கால், இடுப்பு ஆயவற்றில் எண்ணற்ற அணிகளை அணிவாரைப் பண்டுமுதல் இன்றுவரை கண்டு வருகின்றோம். ஆனால் கண்ணுக்கு அணி உண்டா? ஆம் உண்டு! மற்றை உறுப்புகளின் அணிகலங்களில் அழகு எந்த அளவு உண்டோ, அந்த அளவு அவலமும் உண்டு! ஆனால், அவலமே இல்லாத அணி ஒன்றன்று பலவற்றைக் கொண்டது கண்! அதனைக் காட்டிய பெருமை வள்ளுவர்க்கு உண்டு! கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் என்றது (575) மட்டுமா? அஃதின்றேல் புண் என்கிறாரே வள்ளுவர். கண்ணோட்டமே பேரழகு; கண்ணோட்டத்தில்தான் உலக இயக்கமே உள்ளது என்றெல்லாம் வியந்து வியந்து உரைக்கிறாரே! புன்கணீர் அன்புச்சான்று என்றாரே அவர். ! சிவனிய உலகம் முழு முதல்வனை முக்கண்ணனாகக் கண்டது! அவன் கண்ணை, நெற்றிக் கண் என்றது. பெண்மையைப் பழிக்க அல்லது நிலையாமையைச் சுட்ட வந்தாரும் வேற்கண்ணள் என்று எண்ணி மயங்காதே! இவள் கோற்கண்ணள் ஆவாள் என்பதை மறவாதே என்றனர்! ஆனால், சங்கச் சான்றோர் கண்ணகனார், காவியக் கண்ணகியார், திருத் தொண்டர் கண்ணப்பர், மெய்யியல் கண்ணுடைய வள்ளலார், பாரதியாரின் கண்ணன், கண்ணம்மாள், திரைப் படப்புகழ் கண்ணதாசனார் என எத்துணைப் பேர்கள் சாவா வாழ்வினராய் - நெஞ்சில் வாழ்வாராய்- இருக்கின்றனரே. இவர்கள், நிலை யாமையை வென்ற நிலைபேற்றாளர் என்பதன் சான்றாளர்கள் அல்லரோ! கண் என்பதனைத் தொடக்கமாகக் கொண்ட, வழங்கு சொற்கள்தாம் எத்தனை! எத்தனை! ‘கண்’ என்பதனை ஈறாகக் கொண்ட, வழங்கு சொற்கள் தாம் எத்தனை !எத்தனை! கண் முதற் சொற்கள் சில. கண்கட்டு கண்கட்டி கண்கலத்தல் கண்களவு கண்களி கண்காட்சி கண்காண கண்காணகர் கண்காணி கண்காணிப்பு கண்குறிப்பு கண்கூடல் கண்கூடு கண்கொத்தி கண்கொள்ளாமை கண்சட்டி கண்சிமிட்டல் கண்சிமிழ்த்தல் கண்சிவத்தல் கண்ணகன் கண்ணகி கண்ணகை கண்ணடைத்தல் கண்ணப்பன் கண்ணம்மை கண்ணராவி கண்ணழித்தல் கண்ணறை கண்ணாடி கண்ணாட்டி கண்ணாத்தாள் கண்ணாம்பூச்சி கண்ணாம்பொத்தி கண்ணாரக்காணல் கண்ணாளன் கண்ணாறு கண்ணி கண்ணிசைவு கண்ணிணை கண்ணிமை கண்ணியம் கண்ணிலி கண்ணீர் கண்ணுதல் கண்ணுமை கண்ணுள் வினைஞர்கண்ணுறல் கண்ணுறை கண்ணுறு கண்ணேணி கண்ணேரில் கண்ணோக்கம் கண்ணோடல் கண்ணோட்டம் கண்படல் கண்படை கண்பாடு கண்பார்வை கண்புரை கண்பூத்தல் கண்போகி கண்போடல் கண்மடல் கண்மணி கண்மண் கண்மதிப்பு கண்மயக்கு கண்மலர் கண்மூடல் கண்மூடி கண்மை கண்வளர்தல் கண்வாய் கண்வாய்க்கால் கண்விடு தூம்பு கண்வைத்தல் குறிப்பு: 1. கண் என்பது அதன் வல்லினத் திரிபாகி கட் என இணையும் இடங்கள் உண்டு. கண்ணின் முன் க, ச, த, ப ஆகிய வல்லெழுத்து முதன்மொழியாக அவை இருக்கும். கண் செவி > கட்செவி. 2. கண்டபடி, கண்ட மட்டும், கண்டவாறு, கண்டதும் கழியதும், கண்டவர் விண்டிலர் என்பவை மக்கள் வழக்கில் பெருக வழங்குவன. கண் ஈற்றுச் சொற்கள் சில. அகக்கண் அகங்கண் அகன்கண் அங்கண் அமர்கண் அமர்க்கண் அமைகண் அரிக்கண் அருட்கண் அலக்கண் அழுகண் ஆங்கண் இங்கண் இடக்கண் இடுக்கண் இளங்கண் இன்கண் ஈங்கண் ஈர்ங்கண் உட்கண் உண்கண் உளக்கண் ஊங்கண் எண்கண் ஏண்கண் ஒண்கண் ஒளிர்கண் ஓரக்கண் ஓர்மைக்கண் கடைக்கண் கயற்கண் கருங்கண் கருவிளங்கண் கலைக்கண் குவளைக்கண் குறுங்கண் கூர்ங்கண் சிறுகண் செங்கண் சேற்கண் தணற்கண் தண்கண் தவக்கண் தனிக்கண் தாமரைக்கண் நகக்கண் நெடுங்கண் பழங்கண் புகர்க்கண் புலிக்கண் புறக்கண் புன்கண் பூங்கண் பூனைக்கண் பெருங்கண் பொய்க்கண் பொற்கண் மயில்கண் மறக்கண் மாறுகண் மான்கண் மெய்க்கண் மென்கண் மைக்கண் வடிகண் வடுக்கண் வலக்கண் வன்கண் வாட்கண் விழிகண் வெங்கண் வைக்கண் குறிப்பு: 1 தேங்காய்க்கண், மூங்கில் கண், கரும்பின் கண், மரக்கண் (கணு) நுங்குக்கண் என்பனவும். 2 கண் ஏழாம் வேற்றுமை (இடவேற்றுமை) உருபு என்பதுவும் பிறவும் எண்ணுக. கண்களவு: கண் + களவு = கண்களவு. கையால் கவர்தல், கருத்தால் கவர்தல், கண்ணால் கவர்தல் என்பவற்றுள் ஒன்று கண்களவு. பொருள் திருட்டு ஆகாமல் உள்ளத்தைத் திருடுதல் இது காதலித்தல். கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது -திருக்.1092 காதல் கண்களவு போன்றது இறைமைப் பற்றும் உள்ளங் கவர்கள்வன் -தேவா. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி -தேவா. கண் காது: கண் = கண்ணால் கண்டது போல ஒன்றைக் கூறுதல். காது = காதால் கேட்டது போல ஒன்றைக் கூறுதல். கண்ணும் காதும் பேசுவான் என்பதில் இக்குறிப்புண்மை அறியலாம். காணாததையும் கேளாததையும் கண்டது போலவும் கேட்டது போலவும் இட்டுக் கட்டிக் கூறுதல் சிலர்க்கு இயல்பு. அத்தகையரைக் கண்காது வைக்காமல் உன்னால் பேச முடியாதே என்பர் பிறர்க்குத் தெரியாமல் பார்த்ததையும் கேட்டதையும் மறைப்பதற்குக் கண்ணும் காதும் வைத்தது போல இருக்கட்டும் என்பர். கண்டகம்: கண்டம் + அகம் = கண்டகம். பெரிய நிலத்தைத் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்ட பகுதி கண்டகம். தடி என்பதும் இது. தடிதல் = பிரித்தல். தடியால் அளந்து பிரித்தலால் தடி (க.க.சொ.அ). கண்டது கழியது: கண்டது = கண்ணில் கண்ட பொருள்களும், கையிற்கும் கிடைத்த பொருள்களுமாம். கழியது = உடலுக்கு ஒவ்வாத பொருள்களும் பதன் அழிந்து போன பொருள்களுமாம். கண்டதைக் கழியதைக் குழந்தைகள் மட்டும் தின்பதில்லை. வளர்ந்த பின்னரும் குழந்தையாகவே வாழ்நாளெல்லாம் உணவு வகையில் மட்டும் இருப்பார் உளரல்லரோ . அவர் பிறப்பின் பயனே உண்டியிலேதான் இருக்கிறது என்று கொண்டவர்கள். அவர்கள் எது கிடைத்தாலும் உள்ளே அடைத்துக் கொண்டே இருப்பர். அவர்கள் உடலுக்கு ஒவ்வாததும் உண்பர்; உணவுக்கு ஆகாததையும் உண்பர். பிறகு மருந்து மாத்திரைக்குத் திரிவர். ஆயினும், கண்டது கழியதை விடவே மாட்டார், கண்டதைத் தின்பது கேடு; அதனினும் கேடு கழியதைத் தின்பது. கண்டதைக் கழியதைத் தின்னாதே என்பது மக்கள் வழக்கில் உள்ளதோர் அறிவுரை. கண்ட துண்டம்: கண்டம் = ஒரு பெரும் பரப்பில் அல்லது பொருளில் கண்டிக்கப் பெற்றது கண்டம். துண்டம் = கண்டத்தைத் துண்டிக்கப் பெற்றது துண்டம். கண்டம் பெரியது; துண்டம் கண்டத்தில் சிறியது என்க. கண்ட கோடரி என்பது கோடரியுள் ஒன்று. மரம் வெட்டுவார் கண்டி வைத்து வெட்டுதல் கண்கூடு. உப்புக் கண்டமும். நிலப்பிரிவாம் கண்டமும் அறிந்தவையாம். துண்டம் = துண்டிக்கப்பட்டது, எனினும் இவண் கண்டித்ததைத் துண்டித்து என்க. துண்டு, அறுவை, வேட்டி முதலியவற்றைக் கருவியினால் பாவில் இருந்து அறுந்தெடுக்கப் படுதலால் பெற்ற பெயர்கள் என்பது புலனாம். கண்ட துண்டத்தைத் துண்ட துண்டம் என்பார் அருணகிரியார் (திருப்.) கண்டம்: கண்டம் = துண்டிக்கப்பட்டது. மட்பரப்பெல்லாம் ஒரு காலத்து ஓருருண்டையாய் இருந்து இயற்கை மாற்றத்தால் துண்டிக்கப்பட்டது. அத்துண்டம் கண்டம் எனப்பட்டது. கண்டி என்பது அளவிட்ட பகுதி. ஒருவர் செயல் மிகும்போது அளவிட்டுச் செய்ய ஏவுவது கண்டிப்பு: அதனைச் செய்யாக்கால் குரல் கொடுப்பது கண்டனம். அரசியல் அவையையும் ஆட்டி வைக்கும் கண்டனங்களும், கண்டனத் தீர்மானங்களும் நாடறிந்தவை. கடிய கண்டனம் - தண்டனை - செய்பவன் கண்டன் எனப்பட்டான். கண்டன் அலங்காரம் என்பதொரு நூல்; கண்டன்இருந்த ஊர்கண்டனூர். எமகண்டன் காலகண்டன் என்பவை மக்கள் வழக்கு. கண்டராதித்தன் புகழ்வாய்ந்த ஒரு சோழ வேந்தன். கொடாக் கண்டன், விடாக் கண்டன் என ஊர் ஊர்க்குக் கதையுண்டு. கற்கண்டு, கண்டு சருக்கரை என்பவற்றில் வரும் கண்டு உடைபட்ட நொறுங்கு, தூள் என்பதாம். நூற்கண்டு உருண்டு திரண்டது என்னும் பொருளது. கண்டங்கத்தரி, கண்டல் வேலி என்பவற்றுள் வரும் கண்டுமுள் என்னும் பொருளது. சோதிடம் கணக்கிட்டு இந்த வயதில் உனக்குக் கண்டம் இருக்கிறது என்பதும் பொதுமக்கள் அவ்வாறு சொல்வதும் வட்டார வழக்காகும். கண்டு: உருட்டித் திரட்டப்படுவதைக் கண்டு என்பது வழக்கு. எ-டு: நூற்கண்டு. இனி விளையாட்டுகளில் ஒன்று ஒளிந்து விளையாடல். அதனைக் கண்டுபிடித்தல் என்பர், கண்டு என்பது கண்ணால் கண்டு என்பது. கண்டுபிடித்தல் என்னாது கண்டு என்று அதனைக் கூறுவது குமரி மாவட்ட வாத்தியார் விளை வட்டார வழக்காகும். * கண்டிகை, கண்டமாலை காண்க. கண்ணகன்: கண்ணகன்:1 சங்கப் புலவருள் ஒருவர் கண்ணகனார். உறுப்பால் பெயர் பெற்றவர்; கோப்பெருஞ் சோழனின் உயிர் நண்பர். கண்ணகன்:2 கண் + அகம் = கண்ணகம். கண் = இடம்; அகம் > அகன் (போலி) இடமகன்ற உலகம் என்னும் பொருளில் கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை என ஆட்சி பெற்றுள்ளது (சிலப், 5:3) கண்ணகி: கண்ணகன் என்பதன் பெண்பால் பெயர் கண்ணகி. பேகன் மனைவி கண்ணகி என்பாள் புறப்பாடலில் இடம் பெறுகிறாள் (143-147). சிலம்புக் கண்ணகி பல்புகழ்க்கு இடமாய பெயர். கண்ணகியைக் கண்ணகை என்பது யாழ்ப்பாண வழக்கு. கண்ணகை விழா தனிப்பெருஞ் சிறப்பினது. கண்ணகைபுரம்: ஈழம் புங்குடு தீவில் உள்ளது கண்ணகைபுரம். அங்கே கண்ணகை யம்மன் கோயில் உள்ளது. கண்ணகை யம்மன் இராசராசேசுவரி என்று வழங்கப்படுகிறார். யாழ்சார்ந்த ஏழு (சப்த) தீவுகளுள் நடுவமாக அமைந்தது புங்குடு தீவு. அங்கே சிவன் கோயில்கள் அறுபதுக்கு மேல் உண்டு. அம்மை கோயில் பதினான்கு. இவற்றுள் பழமை வாய்ந்தது கண்ணகை யம்மன் கோயில். தனிநாயக முதலி என்பார் நெடுந்தீவு முதல் மண்டைத் தீவு வரை ஆட்சி புரிந்தார், அவர் வழியில் வந்தவர் கறுப்பாத்தை உடையார் என்பார். அவர் கட்டியது கண்ணகை கோயில். கடலில் இருந்து வந்த பேழையில் கண்ணகை யம்மன் சிலை இருந்ததாகவும். அதனை எடுத்து வைத்து வழிபட்டு. கோயில் கோபுரம் எழுப்பியதாகவும் கூறும் செய்தியும், செங்குட்டுவன் மலைநாட்டில் கண்ணகிக்கு மங்கலவிழா நடத்தியபோது இலங்கை வேந்தன் கயவாகு கலந்து கொண்டு தம் நாட்டுக்கும் கண்ணகி எழுந்தருள வேண்டிக்கொண்ட சிலப்பதிகாரச் செய்தியும் நினைவு கூரத் தக்கன. கயவாகு கடல்வழியே பேழையில் வைத்து ஈழத்திற்குக் கண்ணகியார் சிலையைக் கொண்டு சென்ற வரலாற்றை அறியின் இக்கோயில் உருவாகிய பின்னணி புலப்படும். கண்ணகி விழாவின் போது அவ்வூரார் எங்கே இருப்பினும் அங்கே வந்து வழிபடும் முறைமை போற்றப்படுகின்றதாம். 11.5.2006இல் ஆங்குத் தேர்த் திருவிழா நிகழ்ந்தது. கண்ணசைத்தல்: கண்ணசைத்தல் = குறிப்புக் காட்டல். கண்ணசைத்தல் என்பது. அசைப்பைக் குறிக்காமல் வேறோர் உட்பொருளைக் குறித்துக் காட்டலேயாம். கண்சாடை காட்டுதல் என வழக்கில் உள்ளது. இக் கண்ணசைப்பாம் காரிகையார் கடைக்கண் காட்டல். காதலர் கண்ணடித்தல் என்பவை வேறு வேறு அவ்வழக்கில் அவற்றைக் காண்க. தலைமையுடைய ஒருவர் பிறரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தம் பணியாளர்க்கு அல்லது தம் குடும்பத்த வர்க்குக் கண்ணசைப்பால் காட்டுவதே இக் கண்ணசைப்பாம். கண்ணசைத்தும் உனக்குத் தெரியவில்லையே!நீ எப்படிப் பிழைக்கப் போகிறாய்? என்பது குறிப்பறிந்து செயலாற்றாதவர் மேல் சொல்லப்படும் குறைமொழி. கண்ணடித்தல்: கண்ணடித்தல் = காதல் குறிப்புக் காட்டல். இது பெரும்பாலும் காதலன் காதலிக்கு உரைக்கும் குறிப்புரையாகும். உள்ளத்து உணர்வு முகத்தில் முதிரும்; முகத்தின் முதிர்வு கண்ணில் தெரியும். அக்கண்ணின் முதிர்வு கண்ணின் கடைமணியிற் புலனாம் என்பது மெய்ப்பாட்டுக் கூறு. கண்ணடித்தல் காதலைப் புலப்படுத்துவதுடன், பிறர் வரவு, கூறத்தக்கது, தகாதது, புறப்படலாம், புறப்பட வேண்டா முதலான கெழுதகைக் காதற் பேச்சுகளையும் கண்ணடித்தலே பேசிவிடும். ஆதலால் கண்ணடித்தல் படிப்பு, காதலில் பெரும்படிப்பு என்பர். ஏனெனின் அதனைப் படியாக்கல் வேண்டா; இடருக்கெல்லாம் வித்தாகிவிடும் என்பது அவர்கள் தெளிவு. கண்ணப்பச்சி: அப்பச்சி என்பது அம்மை அப்பன் ஆகிய இருவரையும் குறிப்பதாக இருந்து பின்னர் அப்பனை மட்டும் குறித்து வழங்குவதாயிற்று. அப்பு அப்பா; ஆண்பால் அச்சன்; அதன் பெண்பால் அச்சி. அப்பு என்பதும் அப்பா என்னும் பொருளது. என்ன அப்பு என்பது இன்றும் வழக்கு, இக் கண்ணப்பச்சி என்பது அப்பாவின் அப்பா ஆகிய தாத்தாவைக் குறிப்பதாகவும். அது போல் கண்ணம்மா என்பது அம்மாவின் அம்மாவைக் குறிப்பதாகவும் நெல்லை வட்டாரத்தில் உண்டு. கண்ணமுது: பாயசம் என்பது கன்னலமுது ஆகும். கன்னல் கரும்பு இனிப்பு. ஆழ்வார்கள் வழக்கில் கண்ணமுது என்பது பாயசக் குறிப்பினது. பெருமாள் கோயில்களின் விளம்பரப் பலகைகளில் கண்ணமுது இடம்பெறும். சாற்றமுது (இரசம்) மிளகுசாறு முதலியவை. கண்ணயர்தல்: கண் + அயர்தல் = கண்ணயர்தல் = உறங்குதல். அயர்தல் = சோர்தல் அலுத்து வேலை செய்வார்க்கு எளிமையாகக் கண்ணயர்வு வந்துவிடும். படுத்ததும் உறங்கிவிடுவர்; உழைப்பின் கொடை அது. கண் வளர்தல் என்பது இயல்பாக உறங்குதல். கண்வளர் கின்றான் - நாலா.3419 கண்ணாமடை : கண்ணாம் + மடை = கண்ணாமடை மணமும் இன்சுவையும் பொருந்திய கண்ணமுது (பாயசம்) கண்ணாமடை எனவும் வழங்கும். மடை = உணவு; மடுத்தல் = உண்ணல். திருக்கண்ணா மடைக்கு அரிசி இருநாழியும் நெய் உழக்கும் சற்கரை இருபதின் பலமும் வாழைப்பழம் பத்தும் - க.க.சொ.அ. கண்ணாம்பூச்சி காட்டல்: கண்ணாம்பூச்சி காட்டல் = அங்கும் இங்குமாக ஏமாற்றல். கண்ணாம் பூச்சி என்பது கண்பொத்தி அல்லது கண்கட்டி விளையாடும் விளையாட்டு, கண்ணைக் கட்டி எங்கேயோ விட்டுவிட்டு மறைந்து கொள்வதும் தேடிப் பிடிப்பதும் விளையாட்டாக உள்ளது. இச்சிறுவர் விளையாட்டுக்கு ஒப்பச் சிலர் இப்படி அப்படி என மாற்றி மறைத்து ஓட்டங்காட்டி ஏமாற்றித் திரிவர். அத்தகையரை என்னிடம் கண்ணாம்பூச்சி காட்டுகிறாயா? என்பது வழக்கு. கண்ணாளன்: கண் போன்றவனாம் கணவன் கண்ணாளன் எனப் பட்டான், பெண்பால் கண்ணாட்டி எனப்பட்டதும் உண்டு. கண்ணன்ன கேளிர் என்பது இருவரையும் சுட்டும். உறவினரைச் சுட்டலும், தோழன் தோழியரைச் சுட்டலும் அகப்பொருள் வழக்கு. கண்ணி: கண்ணி:1 இரண்டு யாவர்க்கும் கண் இரண்டு என்பது குழந்தையர்க் கமைந்த பாடல். இரண்டு கண்களும் நேருக்கு நேர் ஒப்ப அமைந்தவை. இவ்வாறு ஒப்ப நேர்க்கு நேர் வரிசையில் - அமைந்த பாடல் வகை. கண்ணி எனப்பட்டன. தாயுமானவர் பாடிய பராபரக்கண்ணி காண்க. ஈரடி ஓரெதுகையாய் வருவதுடன் இரண்டாமடி மடக்காகவும் கண்ணி வருவதுண்டு. அதனை வள்ளலார் பாடிய வருகைக் கண்ணி முதலியவற்றால் அறிக. கண்ணிகள் வெண்டளை பிறழாமல் வரும் என்க. நேருக்கு நேராக இலையமைந்த கொடி கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி எனப்பட்டன. வெற்றிலைக் கொடிக்காலில் இரட்டை இரட்டையாக அமைந்த கொடிவரிசை கண்ணி என்று வழங்கப்படுதல் வெற்றிலைக் கொடிக்கால் வழக்கமாகும். கடைகண்ணி என்பது மக்கள் வழக்கு. வரிசை வரிசையாய் அமைந்த கடைகளை இது குறிக்கும். கண்ணி:2 கண்களைப் போல இணையிணையாய்க் கண்ணமையக் கட்டும் வலைப்பொறி கண்ணி எனப்படும். இதனைப் பறவைகளைப் பிடிக்கவும். மீன்பிடிக்கவும் பயன்படுத்துவர். இது இன்றும் காணும் பொருள்களே. பறவைக்குக் கண்ணி வைத்தல், கண்ணி குத்துதல் (குறவஞ்சி). கண்ணி:3 இரண்டு பூக்களையோ, இலைகளையோ நேருக்கு நேராகக் கண்களைப் போல வைத்துத் தொடுக்கும் மாலை கண்ணியாம். கண்ணி கார்நறுங் கொன்றை -புறம்.கட. கண்ணி:4 கண்களைப் போல் பொருந்தியும் இணைந்தும் இருத்தல்; கண்ணையுடையவள். கண், கயன் மீனுக்கு - கெண்டை மீனுக்கு - ஒப்பானது. அதனால் கயற்கண்ணி, அங்கயற்கண்ணி என்னும் பெயர்கள் உண்டாயின. சிவந்த கண்களைச் செந்தாமரைக்கு உவமை காட்டினர். அதனால் தாமரைக் கண்ணி முண்டகக் கண்ணி (முண்டகம் = தாமரை) எனப்பட்டன. ஆண்பாலுக்கும் தாமரைக் கண்ணன் எனப் பெயராயிற்று. நீல மலர் போலும் கண்ணையுடையார் நீலக்கண்ணி, குவளைக்கண்ணி எனப்பட்டனர். குவளைக் கண்ணி கூறன் காண்க -திருவா. அகன்று நீண்ட கண்ணை யுடையார் அகல்நெடுங்கண்ணி எனப்பட்டனர். கண்ணி:5 காடையின் கண்போல் அமைந்த தவசம் காடைக்கண்ணி என்றும். கண் போல் அமைந்த குன்றிமணி கண்ணி (குறிஞ்சிப்பாட்டு) என்றும் வழங்கப்படும். கண்ணி:6 ஊர்ப்பெயரும் கண்ணியாதல் உண்டு. எ-டு: குவளைக்கண்ணி. கண்ணியம்: கண்ணும் இயமும் பழந்தமிழ்ச் சொற்களே. இவ்விரு சொற்களையும் கூட்டியமைத்த மீட்டுருவாக்கம் இச்சொல்லாம் இலக்கியம் பழஞ்சொல், மாலியம், சிவனியம், மார்க்கியம், காந்தியம், பெரியாரியம் இன்னவும், பெண்ணியம் முதலவும் பின்வரவின. கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் என்பதே கண்ணியப் பொருளாம். அக்கண்ணோட்டத்தால் பிறரைத் தம் ஒப்பவும் தமக்கு மேம்படவும் மதித்தல் கண்ணியம் என்க. கண்ணியும் மாலையும்: கண்ணியும் மாலையும் வெவ்வேறானவை. கண்ணி போன்ற முடிச்சினுள் பூவின் காம்பைச் செருகி இறுக்கி முடிப்பது கண்ணி (சி.த.சொ.ஆ.பக்.3). தழையும் கண்ணியும் தண்ணறு மாலையும் -சிந்தா. 1338 கண்ணீட்டுக் காணம்: கண்ணிடு > கண்ணீடு + காணம். = கண்ணீட்டுக் காணம். காணம் = பொற்காசு. ஆட்சித் துறைகளைக் கண்காணிப்பார் பெறும் பொற்காசு (க.க.சொ.அ.) கண்ணீரும் கம்பலையும்: கண்ணீர் = அழுகை. கம்பலை = அரற்றுதல். அழுது அரற்றுதல் என்பது கண்ணீரும் கம்பலையுமாக எனச் சொல்லப்படும். கண்ணீர் என்பது வெளிப்படை. கம்பலை அரவம், ஒலி, அரற்று என்னும் பொருள் தருவது. ஆரவார மிக்க சிறுவரும் சிறுமியரும் கம்பலை மாக்கள் எனப்படுவர் (சிலம்பு. ஊர்சூழ். 29). கண்ணுக்கடி: பாம்பு கடித்தல், தேன் கடித்தல் என்பவை பாம்பு தீண்டுதல். தேள் கொட்டுதல் எனப்படும். கண்ணால் கடிப்பதுண்டா? பொறாமையால் பார்க்கும் பார்வையைக் கண்ணுக் கடி என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். வாயில்லாமல் செருப்பு கடிப்பது இல்லையா? பல் இல்லாமலே கண்ணின் கடியாகப் பொறாமை சொல்லப்படுகிறது. கண்ணுக்கினியான்: கண்ணால் காண அழகிய இனிய தோற்றம் தருவான் ஒருவன் பெயர். தேன் பொழியும் வாயான் திருவேங் கடத்துடனே ஏன் பிறந்தான் கண்ணுக் கினியானே - இரட்டை. தனிப். நச்சினார்க்கினியர் பெயரை நினைக. கண்ணும் மண்ணும்: கண்ணும் மண்ணும் :1 சிறுவர் விளையாட்டில் மகிழ்வுப் பெருக்கோ, தோல்விக் கிறுக்கோ வந்துவிட்டால் மண்ணை யள்ளி மாறி மாறி வீசுதல் உண்டு. அப்பொழுதில் மண் தலையில் படும்; உடலில் படும்; கண்ணிலும் படும். புழுதியாடிய யானை போலச் சிறார் விளங்குவர். சிறுமியர்க்கும் இவ்வாடலில் விலக்கு இல்லை. கலித்தொகைத் தலைவி நகையாண்டி செய்த முதிய எருமை போல்வான் ஒருவன் கண்ணில் மண்ணை எறிந்து கதறச் செய்த காட்சியுண்டு (65). அவ்வளவு பழமை யுடையது. கண்ணும் மண்ணும் ஆட்டம். கண்ணுக்கு ஒரு துகளும் பேரிடையூறாம். மண்ணுக்கு என்ன வந்தது? இரண்டையும் ஒன்றாக எண்ணிச் சிறுதனம் செய்வாரைக் கண்ணும் மண்ணும் தெரியாமல் இப்படியா ஆடுவது? என்று சினத்தால் தட்டிக் கேட்பதும் தட்டுவதும் உண்டு. கண்ணும் மண்ணும்:2 கண்ணும் மண்ணும் என்பது முத்தெடுப்பார் அல்லது முத்துக் குளிப்பார் வழக்கில் ஊன்றியுள்ள தொடராகும். அவர்கள் ஆழத்துள் சென்று முத்துச் சிப்பிகளை அள்ளுங்கால் கண் தெளிவாகத் தெரியாமல் போதலுண்டு. அவர்கள் மேலே வருதற்கென விடப்படும் கயிற்றைப் பற்றிக் கொள்ளவும் இடருண்டு. அந்நிலையில் நீர்மூழ்குவார் கண்ணும் மண்ணும் தெரியவில்லை என்பர். மண் என்பது மண்டக்கு எனப்படும் கயிறு. அக்கயிற்றை மேலிருந்து கீழே விடுபவன் மண்டக்கான் எனப்படுவான். மண்ணுதல் குளித்தல், குளிப்பாட்டுதல் பொருளவாதல் மண்ணு மங்கலம் என்பதால் அறிக. கண் தூங்கி > கந்தூங்கி (வழு வழக்கு). உட்கார்ந்து கொண்டும், சாய்ந்து கொண்டும் உறங்குபவரைக் கண்தூங்கி என்பது மக்கள் வழக்கு. அந்தக் கண்தூங்கி(கந்துங்கி) யா போனான்? இனி வந்தது போலத்தான், களைப்பாக இருக்கிறது சிறிது கண் தூங்கி எழுந்தால் சரியாகப் போகும். என்பவை ம.வ. பின் தூங்கி முன்னுணரும் பாவாய் என்பது வள்ளுவர் பேரால் வழங்கும் ஒரு பாடல் அடி. அடிசிற் கினியாளை அன்புடையாளை என்பது அப்பாடல். கண்படை நிலை: காலை, பகல், மாலை ஆகிய பொழுதுகளில் அரசியல், பொருளியல், கலையியல் மறையியல்களில் ஈடுபட்ட வேந்தனை, மகளிரோடு, இன்பத் துயில் கொள்க என்று வேண்டிப் பாடுவது கண்படை நிலையாகும். காலைபகல் மாலை யாம்முறை அறத்தியல் அமைச்சியல் அரசியல் ஏனை இயலிசை நாட கத்திய லோடு நான்மறை முறையே எய்தினை ஊழி வாழி இனிய மகளிரோ டின்பத்துயில் கொள்கென் றிங்ஙன முரைப்பது கண்படை யாகும் - பன்னிரு. 323 கண்படை கொள்ளுமாறு மருத்துவரும் அமைச்சரும் கூறுவர் என்க. அரசரும் அரசர் தமைப்போல் வாரும் அவைக்கண் நெடிது நாளாக வைகிய வழிமருத் துவரும் மந்திரி மாரும் முதலியோர் தமக்குக் கண்டுயில் கோடலைக் கருதி உரைப்பது கண்படை நிலையே - முத்து வீ. 1091 கண்படை கண்ணிய கண்படை நிலையைப் பாடாண் திணைப் பகுதியாகக் குறிக்கும் தொல்காப்பியம் (1036) கோயில்களில் நிகழ்த்தப் பெறும் பள்ளியறை நிகழ்ச்சி குழந்தைகளுக்கெனக் கிளர்ந்த தாலாட்டு என்பவை கருதத் தக்கன. பள்ளியெழுச்சி பாடுதல் நூலுருப் பெற்றது போல், கண்படை நிலையும் உருக்கொண்டதாம். கண்பார்த்தல்: கண்பார்த்தல் = அருளல். கண்திறத்தல், கண்நோக்கு என்பவும் இப்பொருளவே. கண்ணைத் திறந்து பார்த்தலெல்லாம் அருளல் பொருளில் வருவனவல்ல. ஒருவர் நோயுற்ற போது கடவுள்தான் கண்பார்க்க வேண்டும் என்பர். பண்டுவரையா நீங்கள் கண்பார்த்தால்தான் ஆகும் என்பர். கண்பார்வை படவேண்டும் என்பதற்காகவே பெருஞ்செல்வர். பெரும் பதவியர் ஆகியோர் திருமுன் காத்துக் கிடப்பவர் பலர். கண்பார்த்தல் என்பது பொதுப் பொருளில் நீங்கிக் கண்ணோட்டம் என்னும் சிறப்புப் பொருளில் வரும் வழக்கு ஈதாம். கண்மண் தெரியாமல்: புழுதிக் காற்றுக் கிளம்பினால் கண்ணை விழித்துப் பார்க்கவும் முடியாது. நிற்கும் நிலம், செல்லும் தடம், பார்க்கும் பொருள் எவையும் தெரியா. அக்கண்மண் தெரியாப் புழுதிக் காற்றுப் போக்குப் போல் செயல்படல், செலவிடல், பேசுதல் விளைவை விளக்கும் வழக்குச் சொல் இது. கண்மதிப்பு: நிறுத்தல் அளத்தல் இல்லாமல் கண்ணால் அளவிட்டுத் தருதல் கண்மதிப்பு எனப்படும், கண்மதிப்பு சற்றே கூடுதலாகப் பெறுவார்க்கு வாய்க்கும். ஆதலால் அவ்வழக்கில் இருந்து கணிசம் என்றொரு வழக்கு வந்தது. கண்மதிப்பாகத் தருதலைக் கணிசமாக என்பர். அது மிகுதி என்னும் பொருளது. பின்னர்க் கைக்கணிசம் எனவும் ஆயது. கண்மூடல்: கண்மூடல் = இயற்கை எய்தல். கண்ணை மூடல் உறங்குதலுக்கும் உண்டே. கண்ணிமை மூடாமலே உறங்குபவரும் உளர். இக்கண் மூடல் இறப்பைக் குறிக்கும். கண்ணடைத்தல் என்பதும் இது. இறப்பைக் குறிக்கும் வழக்கு. மொழிகள் மிகப்பல. இறப்பு என்பதும் கூட நேர்சொல் அன்று. வழக்குச் சொல்லே! இறத்தல், கடத்தல் என்னும் பொருட்டது. வீட்டைக் கடந்து நன்காட்டை அடைதல் இறப்பு எனப்பட்டது. சாவின் மேல் கொண்ட அச்சம், அச்சொல்லைச் சொல்லவும் விரும்பாமல் குறிப்பாலும். மங்கல வழக்காலும் உறுப்புச் செயலறுதல் ஆட்சியாலும் சொல்ல வைத்ததாம். கண்மூடல் என்பது உறுப்புச் செயலறுதல் ஆட்சி யால் சாவை உணர்த்திற்று. பேச மறத்தல், மூச்சுவிட மறத்தல் என்பவையும் இவ்வகைய. கண்மூடி: கண்மூடி = மூடன்; அறிவிலி. கண் என்பது கண் என்னும் உறுப்பைக் குறித்து அதன்மேல் அறிவு என்னும் பொருளும் தரும். கண்ணுடையவர் என்பவர் கற்றோர், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும், கற்றறி வில்லா மாந்தர் கண்கெட்ட மாடே யாவர் என்பன போன்ற வற்றால் கண் என்பதற்கு அறிவுப் பொருள் உள்ளமை தெளிவாம். மற்றும் கண்ணை மூடிக் கொண்டு ஒளிந்தவரைத் தேடிப் பிடிப்ப வனும் முட்டாததில் முட்டி, தட்டாததில் தட்டி, பிடிக்காததைப் பிடித்துப் பெரும்பாடு படுவது போல அறிவின்றிப் பலப்பலவும் செய்பவனும் கண்மூடி எனப்பட்டான் என்க. கண்மூடி வழக்க மெல்லாம் மண்மூடிப் போக முயன்றார் வள்ளலார். கண்வாய்: கம்மாய் எனப் பொதுமக்களால் வழங்கப்படும். இந்நீர் நிலையின் செவ்விய வடிவம் கண்வாய் என்பதாம். நீர் வெளியேறும் வாய், மான்கண், யானைக்கண், புலிக்கண், என்பவை போலவும் துடுப்பு, நாழி என்பவை போலவும் அமைக்கப்பட்ட கண்களை உடைமையால் கண்வாய் எனப்பட்டது. கண்ணில் இருந்து வெளிப்படும் பெருக்குநீர் ஆறெனத் தோற்றம் தருதலால் கண்ணாறு எனவும், கண்ணாற்றுப் பாய்ச்சல் எனவும் வழங்கப்பட்டன. கண்ணாகிய வாய் கண்வாய் என்க. மலையிடை வழியாய் அமைந்தவும் கண்வாயே எனினும் கணவாய் எனப்படுகிறது. கதக்குக் கதக்கு: கதக்குக் கதக்கு = ஒலிக்குறிப்பு. கதக்குக் கதக்கென வாழைக் குலைகளை அறுத்தான்; சதக்குச் சதக்கென வெட்டினான் என்பதும் ஒலிக்குறிப்பே. இவை, தமிழ் நாளிதழ்கள் சிலவற்றில் தவறாமல் இடம்பெறுதல் கண்கூடு. கதம்பை: தேங்காயின் மேல் அதன் பாதுகாப்புப் போல் நாரும், மட்டையும் உள்ளன. அவற்றில் நாரைக் கதம்பை என வழங்குதல் நாஞ்சில் நாட்டு வழக்கமாகும், கதம்பை என்பது வெப்பமானது வெதுப்பம் தருவது என்னும் பொருளது. கதம் = வெப்பு; கதகதப்பு. கதி: கதி:1 கதி = விரைவு; விரைந்து செல்வது. கதியான ஓட்டம்; குதிரை ஓட்ட அளவீடு கதி என்பது. கதி கெட்டவன். கதியற்றவன் என்பவை மக்கள் வழக்கு. கதி:2 கதி = பண ஓட்டம். கதி இல்லை = பண ஓட்டமில்லை, வறுமை (ம.வ.) கதிரை: நான்கு காலுடையதை நாற்காலி என்பது போல் ஆறுகால் உடைய இருக்கைப் பலகையை அறுகாலி என்றார் பாவாணர். அறுகாலியைக் கதிரை என்பது யாழ்ப்பாண வழக்கும், தமிழகப் பரதவர் வழக்குமாகும். கதிரை அறுகாலியைக் குறித்த பொருள் என்ன? கதிர், கிளர்ந்து வரும் நிலை காலூன்றல் எனப்படும். கதிர்வட்டம் வண்டிச் சக்கரம் போல ஒளிக்கோடு கொண்டு விளங்குதலையும், அவ்வொளிக் கோடுகள் ஊன்றித் தோன்று தலையும் கண்டு உவமையால் இப்பெயர் சூட்டியிருக்க வேண்டும். கதிர்: உலகம் இருண்டு கிடந்தது. அவ்விருளைக் கிழித்துக் கொண்டு ஒளிக்கதிர்கள் மேலெழுந்தன; அக்கதிர்களை வழங்கிய ஓர் ஒளிப்பிழம்பு வெளிப்படக் கண்டான். கதிர்களை வழங்கிய அதனைக் கதிரவன் என்றான். அக்கதிர்க் காட்சி அவன் கண்ணையும் கருத்தையும் விட்டு அகலவில்லை. பச்சைப் பசேல் எனப் பச்சைப் பாம்பு போல் தோன்றிய நெற்பயிரைக் கிழித்துக் கொண்ட வெள்ளென வெளிப்பட்டதைக் கதிரொடு ஒப்பிட்டுக் கதிர் என்றான். நெல்வழியே கண்ட அக்கதிர்ப் பெயர் சோளம். கேழ்வரகு முதலியவற்றிற்கும் விரிவடைந்தது. அன்றியும் கதிரொளி ஒளியுடையவற்றிற் கெல்லாம் பொதுவாய்க் கதிர்வீச்சு, கதிர்வேல், கதிர்மணி, கதிர்காமம் முதலியனவாக விரிந்தது. கதுவாய்: கதுவாய்:1 கதி + வாய் = கதிவாய் = கூர்மையான வெட்டுவாய். கதிவாய் மழுங்குதல் - சிதைதல் - கதுவாய் எனப்படும். கதுவாய் மக்கள் வழக்கில் கொறுவாய் என வழங்குகின்றது. கத்தி, அரிவாள், அறுவாள், கோடரி, மண்வெட்டி ஆயவற்றின் வெட்டுவாய் கூரியதாய் இருப்பது கதிவாயாகும். அது மழுங்குதல், முரிதல், சிதைதல் ஆயவை கதுவாயாகும். கதுவாய் போகிய நுதிவாய் எஃகம் - புறம். 353 கதுவாய்:3 இல்லாமல் போதல் என்னும் பொருளில் யாப்பில் இடம்பெறும். அவை மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் என்பன. மோனை. எதுகை முரண். அளபெடை, இயைபு என்னும் ஐவகையிலும் வரும் (யா.கா. 19). கதை: காதை > கதை. காதால் இனிதுறக் கேட்கும் வகையில் இசையொடு பாடப்பட்டவை காதை எனப்பட்டன. அவை, பின்னே உரைநடையில் கதை என்று பெருக வழங்கலாயின. நல்ல தங்காள் கதை, சித்திர புத்திர நாயனார் கதை, கட்டபொம்மன் கதை, கோவலன் கதை, தேசிங்குராசன் கதை முதலிய கதைகள் எளிய இலக்கியங்களாக நடமாடுகின்றன. இக்கதைகளுக்குப் பெருங்கதை என்னும் பெயர் வழிகாட்டி எனலாம். மேலே கூறப்பட்ட கதைகள் கலித்தளையால் அமைந்த ஈரடிக் கண்ணிகளால் தொடர்ந்து கதை கூறுவதாக இயல்கின்றன. இவ்வமைப்பு எளிமையும் இனிமையும் வருணனையும் கொண்டு நடப்பதால் கற்றறியா மாந்தரும் கேட்டுச் சுவைத்து மகிழ்வுறு தலை நாட்டுப் புறங்களில் இன்றுங் காண முடிகின்றதாம். சிலப்பதிகாரம் மணிமேகலையில் வரும் கதைப் பகுதிகள் காதை எனப்படுவதும் காதை என்பது கதைபொதி பாட்டு எனப்படுவதும் கருதத்தக்கவை. கதை நொடி: கதை = சிறுகதை தொடர்கதை போல்வனவாம் புனைவுகள். நொடி = விடுகதை போல்வனவாம் குறிப்பு மொழிகள், பண்டு பாவால் கூறிய புனைவு காதை எனப் பெற்றது. அதன் பின்னர்ப் பாவால் கூறிவது கதை எனவும் வழங்கியது. முன்னதற்குச் சிலம்பும் மேகலையும் பின்னதற்குப் பெருங் கதையும் சான்று. நொடி, குறிப்புமொழி என்பது நொடிவது போலும் என வரும் சிலம்பாலும், தொல்காப்பியத்தில் வரும் உரைநடை வகையாலும் விளக்கமாம். நொடிப்பொழுதில் வெளிப்படுத்தும் குறிப்பு நொடியெனப் பெற்றிருக்கலாம். நொடித்தல் கூறுதல். கதைமொழி மாற்று: கதை மொழி மாற்று இன்னதென்பதை, ஏற்ற மின்னும் தானுமாய் மின்சொல்லைத் தானுமுறப் பெண்ணாணுக் கானாற் கதைமொழி மாற்றாம் எனப் பிரபந்தத் திரட்டுக் கூறுகின்றது(64) மின்னும் தானும் என்பது மனைவியும் கணவனும் அல்லது தலைவியும் தலைவனும் என்பதாம். ஏற்ற என்பதால் எதிரிட்டு வந்தார் என்பது இல்லையாம். அவன் கூறும் கதையைக் கேட்டு, அவள் மறுமொழி கூறலும்; அவள் கூறும் கதையைக் கேட்டு அவன் மறுமொழி கூறலும் கதைமொழி மாற்று என்பதாம். விடுகதை, அளிப்பான் கதை என்னும் வழக்குகளை நோக்கினால் கதைமொழி மாற்று என்பது தெளிவாகும். * விடு கவி காண்க. கதைவிடல்: கதைவிடல் = புனைந்து கூறல். கதை என்பது கற்பனையாகக் கூறுவது. சிறிய நிகழ்ச்சி அல்லது செய்தி கொண்டு. கட்டுமானத்தால் விரித்துக் கூறுவதும் அதுவே. நிகழாததை நிகழ்ந்ததாகவும், சொல்லாததைச் சொன்னதாகவும் இட்டுக்கட்டிக் கூறுபவரைக் கதை விடுகிறார் என்றும், கதை விடுதலில் பெரிய ஆள் என்றும் கூறுவதுண்டு. கயிறு திரித்தல், சரடுவிடல் என்பனவும் கதைவிடல் போல்வனவே. கத்தரிக்காய்: கத்தரியால் வெட்டி யமைக்கப்பட்ட பாவாடை போலும் சுற்றுடையைக் கொண்டமையால் கத்தரிக்காய் எனப்பட்டது. வழுதுணங்காய் என்பதும் இது. * வழுதுணை காண்க. கத்தரிக்கோல்: கத்தி போல் இரண்டு அமைந்து, ஊடுபட்ட பொருள்களை அரியும் கருவி கத்தரிக்கோல் ஆகும். கோல் = திரட்சி, வலிது. இவள்மயிர் அரிதற் கொருகத் தரிகை தருக - பெருங். 4:14:6,7) கத்தரிகை என்பது கத்தரிக்கோல். முடிதிருத்தகமும் தையலகமும் கத்தரிகை ஆட்சியில் தவழ்பவை. கத்தரிக்கோல் வகை: பத்திகன் ஆகியும் விற்பூட் டாகியும் அணில்வரி யாகியும் ஆன்புற மாகியும் மணியறல் ஆகியும் வயப்புலி வரிபோல் ஒழுக்கத் தாகியும் உயர்ந்தும் குழிந்தும் கழுக்கொழுக் காகியும் காக்கை யடியாகியும் துடியுரு வாகியும் சுழலா றாகியும் பணிவடி வாகியும் பாத்திவடி வாகியும் இருப்பவை பிறவுமாம் பெருங். 4:14:32-39 கத்தரிப்பு: கத்தரிப்பு = பிளப்பு, பிரிப்பு. கத்தரி, கத்தரிக்கோல் என்பவை கத்தரிக்கும் கருவி. கத்தரித்தல் தொழிற் பெயர். ஒன்றை இரண்டாய் வெட்டிப் பிரிப்பது கத்தரி. அது செய்யும் தொழிலை உட்கொண்டு, எங்கள் நட்பை அல்லது உறவை அவன் கத்தரித்து விட்டான் என்பது வழக்கில் உள்ளது. கத்தரிக்கவும் அவனுக்குத் தெரியும், கூட்டவும் தெரியும் என்பது பிளக்கவும் பிளந்தாரைக் கூட்டவும் வல்லாரைக் குறிக்கும் வழக்குச் சொல். ஒருவருக்குத் தம் முயற்சியால் கிடைக்க இருந்த வேலை மற்றொருவர் கத்தரியிட்டதால் கிடையாது போனதைச் சுட்டுவார் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்புகளில். கத்தல் கதக்கல்: கத்தல் = மகிழ்வுக் குறியாகக் கழுதை கனைத்தல். கதக்கல் = துயர்க் குறியாகக் கழுதை வாடுதல். கழுதை கனாக் கண்டதாம் கத்தலும் கதக்கலும் என்பது பழமொழி. தாமே ஒன்றை நிகழப் போவதாக நினைத்துக் கொண்டு மகிழ்வாரையும் வருந்துவரையும் பார்த்து இப்பழமொழியைச் சொல்வது வழக்கு. கத்தவம்: நாய் குரைத்தல், சேவல் கூவுதல் என்பவை போல் கழுதை கத்தல் என்பது மரபியல். கழுதை கத்துகிறது என்பர். கத்திப் பேசாதே என்பதும் உண்டு. கத்தும் கழுதையை அதன் கத்தல் வழியாலேயே கத்தவம் என வழங்கினர். ஓர் ஊர்ப்பெயர் கத்தபட்டி என்பது. மதுரை - மேலூர்ச் சாலையில் உள்ளது. கத்தி: கதிப்பான விளம்புடைய வெட்டுக் கருவியும், குத்துக் கருவியும் கத்தி எனப்படும். கத்தி கட்டல்: கத்தி கட்டல் = சண்டைக்கு ஏவிவிடல். சேவற்போர் ஒரு போட்டியாக அண்மைக் காலம் வரை நடந்து வந்தது. போர்க்குணம் உடையது சேவல். அதன் இயல்பை அறிந்து அவற்றை மோதவிட்டுப் பார்த்து மகிழ்ந்தவர்கள், அவற்றின் கால்களில் கத்தி கட்டிவிட்டுப் போருக்கு விட்டனர். சேவல்கள் ஏவிவிட்டவுடன் எதிரிட்டுத் தாக்கிக் கத்தி பிளக்கக் குருதி கொட்டினாலும் உயிர் போனாலும் பின் வாங்காது தாக்கும். வெல்லும் அல்லது வீழும். இவ்வழக்கில் இருந்து இருவரை ஏவிவிட்டுச் சண்டை போட அல்லது பகைத்துத் தாக்க வைப்பது கத்தி கட்டலாக வந்தது. இனி, மல்வென்றி, ஏறுகொள் வென்றி, கோழி வென்றி, தகர்வென்றி, யானை வென்றி, பூழ்வென்றி, கிளிவென்றி, பூவைவென்றி, குதிரை வென்றி, தேர் வென்றி, யாழ் வென்றி, சூது வென்றி, ஆடல் வென்றி, பாடல் வென்றி, பிடிவென்றி எனப் புறப்பொருள் வெண்பாமாலை விரித்துக் கூறுவன போரிலாக் காலத்துப் போர் வீரர்க்கு வீரமூட்டும் வீரவிளையாட்டுகளாம். கத்தி கப்படா: கத்தி = குத்துதல், கிழித்தல் அறுத்தற்குப் பயன்படுத்தும் கருவி. கப்படா = கத்திப்பட்டா எனப்படும் பட்டை யானதும் நீண்டதுமாய்க் கத்திபோல் பயன்படுத்துதற்காம் பெரிய கருவி. கத்தி கப்படாவுடன் வந்தான்; கத்தி கப்படாக்களால் தாக்கினான் என்பவை குற்றத்துறை நடவடிக்கைகள். கத்தியினும் நீண்டதும் பட்டையாய் அமைந்ததும் வாளினும் கனம் குறைந்ததும் நீளம் குறைந்ததுமாகிய கருவி. கத்திப்பட்டை என்பது ஊடு எழுத்துக்கள் சிலவற்றை விட்டுக் கப்படா என வழக்கில் உள்ளதாம். கத்து: கற்றவர் எழுதுவதும். கற்றவர் படிப்பதும் உள்ளமையால் கடிதத்தைக் கற்று என்று வழங்கி, அது கத்து ஆகியிருக்கலாம். குமரி மாவட்ட வழக்கில் கத்து, கடிதம் என்னும் பொருளில் வழங்குகின்றது. கத்தை கசடு: கத்தை (கற்றை) = தொகுதியாக அமைந்த அழுக்குப் பொருள். கசடு = கலத்தில் அல்லது தளத்தில் அமைந்த வழுக்குப் பொருள். கற்றை என்பது தொகுதி என்னும் பொருளது. குப்பை கூளம், தும்பு தூசி என்பன திரண்டால் கற்றையாம். கசடு என்பது தளத்துடன் பற்றிக் கொண்டுள்ள பாசியும் வழுக்கலும் போல்வனவும்; கலத்தில் பற்றிக் கொண்டுள்ள களிம்பு போல்வனவும், இவை, மனத்தைப் பற்றிக் கொள்ளும் குற்றங்களுக்கு ஆகிக் கசடு எனவும் படும். கற்க கசடறஎன்றார் வள்ளுவர் (391). கத்தை கதக்கல்: கற்றையாகச் சேர்ந்த அழுக்கு, கற்றை எனப்படும். தனித் தனியே படிந்த அழுக்கு, கதக்கல் எனப்படும். இது கொத்தை கொதுக்கல் எனவும் வழங்கப்படும் அதற்கும் இப்பொருளேயாம். புளியைக் கரைத்த பின் அதன் எச்சமாய்க் கரைபடாமல் இருக்கும் திப்பிகளும் நார்களும் கதக்கல் அல்லது கொதுக்கல் எனப்படும். திரட்டி வைத்த அழுக்கோ கத்தை அல்லது கொத்தை எனப்படும். கந்து: கட்டுத்தறியைக் கந்து (தூண்) என்பர். கட்டற்ற ஒன்றைக் கந்தழி (கந்து + அழி) என்பது பண்டை வழக்கு (தொல். 1034) ஒரு பெருந்துணி கிழிந்து போனால் கந்தல் ஆகிவிட்டது என்பர். கஞ்சிக்கும் கந்தைக்கும் படும்பாடு, என்ன பாடு? என்பர் வறியவர். இவை பொது வழக்குகள். மேகம் பிரிந்து தனித்தனியே திரண்டு நிற்றலை கந்து கந்தாக நிற்கிறது என்றும், கூட்டம் கந்துகந்தாகக் கலைந்தோடியது என்றும், துண்டம் என்னும் பொருளில் வழங்குதல் நெல்லை, முகவை வட்டார வழக்காம். கப்பக்கிழங்கு: கப்புக் கிழங்கு > கப்பக்கிழங்கு. கப்பு = பிளவு பட்டது. ஒரு கிளை அல்லது கம்பு இரண்டாகவோ பலவாகவோ பிரிதல் கப்பு ஆகும். கப்பும் கவடும் என்னும் இணைச் சொல்லை அறிக. ஒரு வேரில் இருந்து வரும் கிழங்கு ஒன்றாக இல்லாமல் பலவாகப் பிரிந்து பருப்பதால் கப்புக் கிழங்கு (கப்பக் கிழங்கு) ஆயதாம். கவடு என்பது இரண்டாக மூன்றாகப் பிளந்தது அறிக. இரு தொடைகளின் இடை கவடு எனப்படும் அல்லவா! கவட்டை என்பதும் கவை என்பதும் இரண்டாகப் பிளந்தவைதாமே. கப்பல்: பொதிமூடைகள், சிப்பங்கள், கட்டுகள் என்பவற்றை ஒன்றன்மேல் ஒன்றாகப் பாரம் போட்டுச் செல்லும் மிதவை கப்பல் ஆகும். கப்புதல் = நிரம்ப ஏற்றுதல், தொடரி, உந்து ஆயவற்றில் பாரவண்டி, சரக்குந்து என்பவை இருப்பது போலச் சரக்குகளைக் கொண்டு செல்ல அமைந்தது கப்பலாம். வானம் செறிந்து மழை பெய்யுமாறு மூடிவருவதை வானம் கப்புகிறது என்பர். இடித்து நொய்யும் நொறுங்குமாகிய திரணையைக் கப்பி எனலும், சிறுசிறு கற்களைக் கன்மாவுடன் செறித்து இடித்தலைக் கப்புதல் என்பதும் வழக்கமாம். கோழி நிறைய இரை எடுப்பதைக் கப்புதல் என்பது நெல்லை வழக்கு. கப்பக் கிழங்குக்கு உரிய கப்பு வேறு. கப்பல் பாட்டு: கப்பற் சிந்து, ஓடப்பாட்டு, படகுப்பாட்டு, ஏலேலோ பாட்டு என்பனவும் இதுவே. இப்பாட்டு இருவராலோ இருகுழு வினராலோ பாடப்படுவதாய் அமையும். முன்னே பாடுபவர் பாட்டைப் பாடி, ஏலேலோ என இசைப்பார்; பின்னே பாடுபவர் ஐலசா என்பர். இவ்வமைப்பும் ஓரிடத்தில் துடுப்பை ஓரொழுங்கில் தள்ளுதற்குப் பயனுடையதாம். கற்றூண், மரத்தடி ஆகியவற்றைப் புரட்டுவார் முன்பாட்டும் பின்பாட்டும் பாடிக் கொண்டு செயலாற்றுதல் இதனை விளக்கும். கப்பலில் வரும் பொருள் வகை, கப்பல் சென்று வந்த நாடுகள், கப்பல் அமைப்பு ஆகியவையும் கப்பல் பாட்டில் இடம்பெறும். திருமண ஏசல் பாட்டும், கப்பல் பாட்டாக விளங்குகின்றது. மாப்பிள்ளையை ஏசல், மகட்கொடையாளரை (சம்பந்தியை) ஏசல், மணமகளை அண்ணி கொழுந்தியர் ஏசல் எனவும் ஏசற் பாட்டுருக் கொள்ளும். தெப்பத் திருவிழாக்களில் இறைமைச் செய்தியைத் தாங்கிக் கப்பல் பாட்டு வெளிப்படுதல் பல இடங்களில் காணக் கூடியதாம். கருமாணிக்கன் கப்பற் கோவை என்பதொரு நூலுண்மை அறியத்தகும். இராமலிங்கக் குருக்கள் என்பார் இயற்றிய, மதுரை மீனாட்சி கப்பற் சிந்து என்னும் நூலின் தொடக்கம் வருமாறு: ஏலேலோ ஏலேலோ ததினம் ஏலேலோ ஏலேலோ ஆத்தாளே ஈசுவரியே - எங்கள் அம்பிகையே அண்டமெல்லாம் பூத்தாளே நின்மீதில் - நன்றாய்ப் புகழ்ந்துரைக்கும் கப்பலுக்கு ஏலேலம் முடுகுகளில் ஒன்று வருமாறு: குடையாணி குமிழாணி கூராணி தங்கம் குச்சாணி உச்சாணி அச்சாணி வெள்ளி கடையாணி தடையாணி சடையாணி செம்பொன் கணக்கடங் காததோர் தங்கத் தகட்டால் இடைகள் தெரியாமலே கோட்டித் திருத்தி இரத்தினக் கற்களை மேலே யமைத்த முடியாணி முள்ளாணி கள்ளாணி பூட்டி மூவாறு பாய்மரம் மேலே நிறுத்தி - ஏலேலம் கப்பு கவடு: கவடு = அடிமரத்தில் இருந்து இரண்டாகப் பிரிவது கவடு; இடுப்பில் இருந்து இரண்டாகப் பிரியும் தொடையூடு பகுதியும் கவடு. கப்பு = கவட்டில் இருந்து இரட்டையாகப் பிரியும் கிளை கப்பு. கப்பு என்பது பொருளால் இரண்டாகப் பிரிதல் என்னும் பொதுமைக்குரியது. ஆயினும் கவட்டினம் கப்புச் சிறிதெனக் கொள்க. கவை, கவட்டை, கவலை, கலைக்கோல் என்பன வெல்லாம் இரண்டாகப் பிரிவன என்னும் பொருளனவாம். கப்புதல்: அசை போடாதும், இதழ் மூடியும் வாயுள் அடக்கித் தின்னுதல் கப்புதலாம். புகை மூடி, அல்லது மண்டிக் கிடத்தலைப் புகை கப்பிக் கிடக்கிறது என்பது வழக்கு. கோழி, நொய் நொறுங்கு தவிடு இவற்றைக் குழைத்து வைத்ததைத் தின்னுதல் கப்புதல் எனப்பெறும். கப்பி என்பது தவசமணி நொறுங்கலாகும். கப்பி கடவதாகக் காலைதன் வாய்ப்பெயினும் குப்பை கிளைப்போவாக் கோழி - நாலடி. 341 அப்பம் அவலென் அதிரசமும் தோசையும் கப்புவதும் போச்சே கனிந்து - தனிப். தத்துவப் பிரகாசர் கமக்காரன்: கமக்காரன் = வேலைக்காரன். கம்பம் > கருமம் > கமம். தச்ச, தட்டு, கொல்லு முதலியவற்றைச் செய்வார் கம்மாளர் என்றும் அவர்கள் செய்யும் தொழில் கம்மத் தொழில் என்றும் வழக்கில் உள்ளமை அறிக. நுண்வினையைக் குறித்த கம்மம், பொது நிலையில் மற்றைத் தொழில்களையும் குறிப்பதாகியது. அதனால் வேலைக்காரன் பணியாளன் என்பான் கமக்காரன் என வழங்கப்பட்டான். கமஞ்சூல்: கமம் + சூல் = கமஞ்சூல் கமம்நிறைந் தியலும் - தொல். 838 மழைபொழியும் நிலையில் உள்ள முகில் கமஞ்சூல் எனப்படும். கமத்தல்: துணிகளை நனைத்தலைக் கமத்தல் என்பது சலவைத் தொழில் வழக்கு. இது மதுரை மாவட்டம் பாலமேடு வட்டார வழக்காகும். ஈர நைப்பால் வரும் வாடையைக் கமத்து மணக்கிறது என்பது மதுரை, முகவை வழக்கம் ஆகும். கமலுதல்: ஒலித்தல் என்னும் பொருளில் பாலமேட்டுப் பகுதியில் வழங்குகின்றது. அமலுதல். ஞமலுதல். கஞலுதல் போலக் கமலுதல் ஒலித்தல் பொருளில் வருகின்றது. கமலை என்பது ஒலித்தல் பொருளில் வரும் இறைவைத் தொழிற் பெயராகும். கமறுதல்: கமறுதல்:1 கம் > கம > கமறு > கமறுதல். கம்முதல் அடைத்தல். மூக்கை அடைந்த மிளகாய் நெடி தொண்டையைப் பற்றி அடைப்பது கமறுதல் ஆகும். சமையல் கட்டில் இருந்து மிளகாய் நெடி வந்தால், கமறுகிறது; அடுப்பைப் பார் என்பது ம.வ. கமறுதல் இருமுதலாகவும். தொண்டை எரிவாகவும் வெளிப்படல் உண்டு. கமறுதல்:2 சேவு நாட்பட்டு விட்டது போலும்; கமறிப் போயிற்று என்பதும் ம.வ. கமுகு: கம்முதல் மூடுதல் என்னும் பொருளுடைய பெருவழக்குச் சொல். வானம் கம்முகிறது; மழை பெய்யும் என்பர். கம்முதல் கப்புதலும் ஆகும். கப்புதல் செறிதல்; மிகுதிப் பொருளது. கப்புதல் = மிகத்தின்னல். தொண்டையில் குரல் வராமல் அடைத்துவிட்டால் தொண்டை கம்மிவிட்டது என்பர். தென்னந்தோப்பு, பனங்காடு என்பவற்றினும் கமுகந் தோட்டம் செறிவு மிக்கதாம். நெருக்கமாக ஊன்றப்படுவதுடன், மேலே இருந்து வெயிலே வராச் செறிவும் உடையது. ஒரு மரத்தில் ஏறி இறங்காமல் அடுத்தடுத்துப் பற்றிக் காய் பறிக்கும் வகையில் அமைந்தது. அதனால் அச்செறிவாம் கம்முதல் உடையதைக் கமுகு என்றனர். கமுகு இனமான தென்னை, பனை ஆயவற்றொடும் ஒப்பிட்டுக் காண்பார் இதனை நன்கு அறிவர். கமுகு, அம் ஈறு பெற்றுக் கமுகம் தோட்டம், கமுகம் பாளை என வரும். தென்னந் தோப்பு, தென்னம்பாளை என்பது போல. கமுகம் காய், பாக்கு ஆகும். கமுக்கம்: வெளியிடக் கூடாத செய்தியைக் கமுக்கம் என்பது தென் தமிழக வழக்கு. கமுக்கக்கூடும் (கம்புக்கூடு) என்பது தோற் பட்டையின் கீழ்வாய்க் குடைவு. அது பிறர் பார்வையில் படாத மறை - கமுக்கப் - பகுதி. அது போன்றது என்ற உவமை. இஃதாம். இரகசியம் என்னும் வேற்றுச் சொல்லாட்சி பெரிதும் வழக்கில் ஊன்றியமையால், கமுக்கம் எனும் தமிழ்ச்சொல் வழக்கில் அருகியது. பாவாணர் அதனைப் பெரிதும் ஆட்சிக்குக் கொண்டு வந்தார். அந்தச் செய்தி நமக்குள் கமுக்கமாக இருக்கட்டும் என்பது வழக்கு. கமுக்கல்: மூங்கில் என்னும் புல்லினத்தைக் கமுக்கல் என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. அது காற்றுக்கு இயல்பாக வளைந்து நிமிர்தலால் அப்பெயர் பெற்றதாம். வளை என்னும் மூங்கில் பெயரும் அப்பொருளதே. கமுக்கூடு: மார்புக்கும் தோளுக்கும் உட்பட்ட குடைவிடம் கமுக்கூடு என மக்களால் வழங்கப்படும். கமுக்கு > கமுக்கம் = மறைவு; வெளியே புலப்படாமை. இதன் இலக்கிய வழக்கு அக்குள் என்பது. அல்கு + உள் = அல்குள் . அஃகுள். அல்குதல் = குறைதல் சுருங்குதல். கமுக்கம் என்பது புத்தாக்கக் கலைச்சொல்லாகவுள்ளது. விலாக்குழி என்பதும் இது (செ.சொ. பொ.). கம்: கம் என்பது கமழ்தல் (மணத்தல்) ஆகும். காடே கம்என் றன்றே - அகம், 23 வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவு - அகம். 184 பிடவு என்பது விடா என்னும் குறுமரம். இதன் மணம் பக்கமெல்லாம் பரவுதல் முல்லைப்பாட்டில் சேணாறு பிடவம் எனப்படும் (25). கமகம என மணக்கிறது என்பது நாடறி செய்தி. கம்பக்கட்டு: கம்பில் கட்டிவிடுகின்ற வாணவெடியைக் கம்புக்கட்டு என்று நாகர்கோயில் வட்டாரத்திலும், கம்பத்தில் (பெரிய கம்பு) கட்டிவிடுவதால் கம்பக்கட்டு என்று குமரி மாவட்டத்திலும் வழங்குகின்றது. நிலத்தில் ஊன்றியோ, கிடத்தியோ வெடிக்கும் வெடியன்று ஈது. கம்பு: சிற்றூர்களில் குடிசை வீட்டுத் தலைவாயிலின் மேல் சிலகம்புகளைப் பரப்பி அவற்றின்மேல் இலைதழைகளைச் செறிய வைத்து அதன்மேல் சுவர் எழுப்புவர். அதற்குக் கம்பை என்பது பெயர். கம்புகளால் - மரக்கிளைகளால் - ஆயமையால் கம்பை எனப்பட்டதாம். சாட்டைக் கம்பு, முளைக்கம்பு முதலியவற்றில் உள்ள கம்பு, மரக்கிளைகளின் கொம்புகளில் இருந்த எடுத்த கம்பே ஆகும், சிறிதானதை அன்றிப் பெரிதானதைத் தடிக்கம்பு என்பர். கம்பு போல் உள்ள கதிரீனும் புல் கம்பம்புல் எனப்படும். கம்பம் என்பது ஊர்ப்பெயர். கம்புகளை நட்டு மேலே இலைதழை வேய்ந்த காட்டு ஊர், கம்பம் என்று பெயர் கொண்டு பேரூராய்ப் பெருநகராய் விரிந்தமை கண்கூடு. ஒற்றைவீடு, ஒற்றைக் கடை இந்நாளில் பேரூர்களாகி விடவில்லையா? கம்பு + அம் = கம்பம்; பெருந்தூண் என மரத்தூணும் இரும்பு முதலாம் தூண்களும் உண்டாகி உள்ளன. கம்புக் கிழங்கு: குச்சிக் கிழங்கு, கப்பக்கிழங்கு என்பதைக் கம்புக்கிழங்கு என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும். இதற்கு வட்டார வழக்காக ஏழிலைக் கிழங்கு, ஆல்வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கவலைக் கிழங்கு, மாவுக்கிழங்கு முதலிய பெயர்களும் உண்டு. கம்புள்: கம்புள் = கோழிவகையுள் ஒன்று. நீர்க்கோழி, கயக்கோழி எனவும் வழங்கும் - (புறம். 395; பெருங். 1:5:68) கமழ்பூம் பொய்கைக் கம்புள் சேவல் - மதுரைக் 254 துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும் - புறம். 297 கண்பு என்பது ஒருவகைக் கோரை; இந்நாளில் சம்பங் கோரை என்பது அது. கம்புள் கோழியை மக்கள் சம்பங் கோழி என்கின்றனர். கண்புளுள் உறைந்த கோழி கண்புள் என்பது. கண்பு சண்பு சம்பு ஆகியது போல், கண்புள் > கம்புள் > சம்புள் > சம்பங் கோழி யாயிற்று. கம்மம்: கம் + அம் = கம்மம். கம் = கம்மத் தொழில்; கம்மக்காரர் என்பார் கம்மத் தொழிலர். ஈமும் கம்மும் - தொல். 328 கம்மர் கருமான் என வழங்கப்பட்டனர். இரும்பு வேலை செய்வார் அவர். கருங்கைக் கொல்லர் இரும்புகொள் நீரினும் மீட்டற்கு அரிதென - புறம். 21 கம்மியம்: கருமியம் > கம்மியம். கருமான், கருமாரத் தொழில் என்பது இன்றும் மக்கள் வழக்கே. கரும் வினைஞர், கருங்கைக் கொல்லர் என்பவை பழமையான ஆட்சிகள். கரும வல்லராம் கம்மியர் கொல்லர், தச்சர், தட்டார் செம்பு கொட்டிகள் எனத் தொழில் வகையால் பிரித்துக் கூறப்படினும் மொத்த வகையால் கம்மியர் என்றே வழங்கப்படுவர். கம்மம் ஆள்பவர் கம்மாளர். அவர் தம் தொழிலை வழிவழியாகத் தம்மக்களும் தம் பணியில் ஈடுபடுவாரும் கற்குமாறு கற்பித்தலும் செய்தலால் ஆசிரியர் எனப்பட்டனர். பின்னர்க் காலச் சூழலால் சாதிமைப் பிரிவுகள் ஏற்பட்ட நிலையில் ஆச்சாரியார் என எவர்க்கும் மேம்பட்டோம் என்பார்க்கு ஒப்பவும் மேலாகவும் தம்மான உணர்வால் தாமும் ஆச்சாரியார் என ஆக்கிக் கொண்டனர். அவர்கள் கம்மத் தொழில்சிறப்பு கோயில் கோட்டை கோபுரம் சிற்பம் அணிகலம் படைக்கலம் உண்கலம் கடல்செல்கலம் என்ன எவ்வெற்றை யெல்லாம் படைத்துள்ளது? அவரில்லையேல் உலகம் காக்கும் உழுதொழில் உண்டா? மான ஆடை நமக்குக் கிட்டியிருக்குமா? குடியிருக்கும் மனை மாளிகை ஏற்பட்டிருக்குமா? கம்மத் தொழில் கடவுள் தொழில் எனல் சாலும்! ஏனெனில் தமிழர் தெய்வத்தைக் கருப்பொருள் என்பர். கருமக் கம்மம் இல்லையேல் கடவுள் உரு. உருவாகுமா? தவம்செய்வார் தம்கருமம் செய்வார் என்னும் குறளையும் (266) கருமமே கண்ணாயினார் என்னும் தனிப்பாடலையும் எண்ணலாம். கம்முதல்: கம்முதல்:1 கம்முதல் = மூடுதல் (மறைத்தல்). வானம் கம்முகிறது; மழை வரும் என்பது மக்கள் வழக்கு. கம்முதல்:2 கம்முதல் = குறைதல். “தொண்டை கம்மிவிட்டது; மருந்து வாங்க வேண்டும்.”, பத்து உருபாவுக்குக் கம்மியாக எந்தக் காயும் வாங்க முடியாது. என்பவை மக்கள் வழக்கு. கம்முதல், கம்மல் ஆகும். கம்மென: கம் + என = கம்மென. மாலை வந்தால் போதும் முல்லை கம்மென மணக்கத் தொடங்கிவிடும், என்பது மக்கள் வழக்கு. கம் > கமழ்தல் = மணத்தல். x.neh.: உம் > உமி > உமிழ்தல் > உமிழ்நீர். கயந்தலை: யானையின் இளங்கன்றைக் கயந்தலை என்பது தொன்மைச் செய்யுள் வழக்கு. கன்று கயந்தலை மீமிசைச் சொல் அல்லது ஒரு பொருள் பன்மொழி. கயந்தலை என்பது நெல்லை குமரி முகவை மாவட்டங்களில் குழந்தையரைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. கயந்தலை மடப்பிடி: சங்கச் சான்றோர் வளமான சொல்லாட்சியாளர். அவர்கள் சொற் கலை வித்தகராக விளங்கியதுடன் சொல்லோவியராகவும் திகழ்ந்தனர். நாம் ஆண் யானை என்பதை அவர்கள் களிறு என்றனர். பெண்யானை என்பதைப் பிடி என்றனர். யானைக் குட்டியைக் கயந்தலை என்றனர். மாந்தர்களின் ஆண் பெண் குழந்தை களுக்குத் தனித்தனிச் சொற்கள் இருப்பது போல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூடச் சொற்களைப் படைத்துப் போற்றினர். ஒரு பிடி; அது கயந்தலை மடப்பிடி, குட்டி போட்ட மெல்லிய பிடி; இளங்கன்றுடைய ஆவைக் கற்றா என்றும், புனிற்றா என்றும் வழங்குவது போல. இளங்கன்றுடைய யானையைக் கயந்தலைப் பிடி என வழங்கினர். மடம் என்னும் உயர்ந்த பண்பு மகளிர்க்குத்தான் உண்டு என்றால். இந்தப் பிடிக்குமே உண்டாம். களிறு என்ன கற்பித்ததோ அதனைத் தவறாமல் கடைப்பிடிக்கும் பிடி ஆதலால் கயந்தலை மடப்பிடி யாம் (மலை.307) கயம்: கயம் = ஆழ்ந்த நீர்நிலை; அது கசமாகி இருட்டுப் பொருள் தந்தது. ஆழ்ந்த நீர் நிலையில் வெளிச்சம் படாமல் இருக்கும் போதில், என்ன இருட்டுக் கசமாக இருக்கிறது என்பர். நல்லவை கல்லாக் கயமை இக்கயத்து இருள் வழிப்பட்ட பெயர். கயம் > கசம் = யானை; கருநிறத்தது என்னும் பொருளது. தெண்ணீர்க் கயத்துள் சிறுமீன் சினையினும் என்னும் வெற்றிவேற்கை கயம் என்பதன் பழமைப் பொருள் தழுவாது நீர்நிலை என்னும் பொதுப்பொருள் தழுவி வந்தது. கயம் பெரிய என்னும் பொருளால் உரிச்சொல்லாம். கயவாய் = பெரிய வாய்; கயக்கொடுமை = மிகக்கொடுமை. கயவாய்ப் புனிற்றெருமை - மீனாட். பிள். கயவாயர்: கயம் + வாயர் = கயவாயர் = பெரிய வாயினை உடையவர். கயம் = பெரிய. யானையும் பிடியும் வாரியிடும் கயவாயர் - கம்ப. சுந்.757 கயிறு உருட்டல்: கயிறு உருட்டல் = புனைந்துரைத்தல். பஞ்சு, நூல், நார் முதலிய மூலப்பொருள் கொண்டு நொய்தாகவும் தும்பு, துகளாகவும் இருக்கும் அவற்றால் வலிய கயிறு உருட்டல் வழக்கு. பல நுண்ணிழைகள் கூடுதலால் வலிய கயிறு உண்டாக்கப்படுதல் போல் ஆங்கும் ஈங்கும் கண்டு கேட்ட சில சிறிய செய்திகளைத் திரட்டி மனம் போலச் சேர்க்க வேண்டுவன சேர்த்து ஒன்றாக்கிப் பலரும் அறிய உருட்டி விடுவதைக் கயிறு உருட்டல் என்பது வழக்கம். தாமரைத் தண்டின் நூலே பல்லாயிரம் சேருங்கால் பருங்கயிறாகி யானையையும் கட்டிவிடும் என்பர். கயிறு உருட்டுபவரால் வலிமையானவரும் ஒரு கால் வீழ்ச்சியுறல் காணக் கூடியதே. *‘சரடு விடுதல், கதைவிடல் காண்க. கயிறு கட்டல்: கயிறு கட்டல் = திருமணம் தாலி கட்டல். மஞ்சள் கயிறு கட்டல், முடிச்சுப் போடல், மூன்று முடிச்சுப் போடல் என்பன வெல்லாம் இதுவே. மங்கலம், தாலி என்பவற்றைத் திருப்பூட்டெனப் பூட்டினாலும் அதனைக் கயிற்றில் நுழைத்துக் கழுத்தில் கட்டுவதே வழக்கம். வெறுங்கயிற்றை மஞ்சள் துண்டு கட்டிப் போடுவதும் கூட வழக்கில் இருந்தது. கயிறு மட்டுமே அடையாளமாக இருப்பதும் உண்டு. ஆதலால் தங்கத்தில் இருந்தாலும் தாலிக் கயிறு, தாலிச்சரடு என்னும் வழக்கம் மாறாமல் இன்றும் உள்ளது. கயிறு திரித்தல்: கயிறு திரித்தல் = புனைந்துரைத்தல். உருட்டுதல், திரித்தல் என்பவை ஒரு பொருளன. சிறிய நுண்ணிய வேறுபாடும் உண்டு. உருட்டுவார், தொடையில் உருட்டுவர்; திரிப்பார், கையால் திரிப்பர். விளைவு ஒன்றாக இருப்பினும் வினையாற்றும் முறையால் சிறிது வேறுபாடு மட்டுமே யுண்டு. கயிறு திரித்தல் போல் சில செய்திகளைப் புனைந்து கூறுதல் உண்மையால் அப்பெயர் பெற்றது. கரடி: கரடி, கருநிற விலங்கு. காடு என்பது கருநிறப் பாறை. அந்நிறம் போல்வது. இதன்பழம் பெயர்கள் உளியம், எண்கு என்பன. அதன் வளைந்த நகங்கள் வலியவை; நிலத்தை அகழவும் போரிடவும் வாய்ந்தவை ஆதலால் உளியம் எனப்பட்டது. உளி என்பது தச்சர் கருவிகளுள் ஒன்று. கறையான் புற்றை எளிமையாகத் தோண்டி அதனை உண்பதால் எண்கு எனப்பட்டது (அகம். 112, 149, 247, 307; நற். 325, 336) எண்மை - எளிமை. மரமேறுதலும் எளிதாகக் கொள்ளும் கரடி. உண்ணுதலிலும் எண்ணி உண்ணும் என்பது எண்ணத் தக்கது. மேலே சுட்டிய பாடல்களில் அதனைக் காணலாம். கரடிகை: கரடி + கை = கரடிகை. கை = சொல்லீறு. தோற்பறைவகை. கரடி கத்தினாற் போலும் ஓசையுடைத்தாதலால் கரடிகை என்று பெயராயிற்று என்பார் அடியார்க்கு நல்லார் (சிலப். 3:27) கரடு: கரடு:1 கருநிறப் பாறையாய்த், தகண் தகணாக எடுக்க வாய்ந்த தாய்க் கலப்பையால் உழ வாயாததாய் அமைந்த பொற்றை, கரடு எனப்படும். விளைவுக்குப் பயன்படாது; கள்ளி, கற்றாழை, முள் முதலாம் குறுந்தூறுகள் அன்றி மரம் வளர வாயாதது. கருநிறப் பாறை கரடு எனப்பட்டது. அதில் வாழும் கருநிற ஓணான் கரட்டான் எனப்படும். கரடு:2 கடினமான உள்ளம் உடையவரைக் கரடான ஆள் என்பதும், கடினமான கணக்கைக் கரடான கணக்கு என்பதும் மக்கள் வழக்கு. கரடு:3 வளர்ச்சியில்லாமல் உயரம் குன்றியவரையும் குன்றிய ஆடு மாடுகளையும் என்னதான் ஊட்டி வளர்த்தாலும் கரடு வளரவா செய்யும்? கரடு கரடுதான் என்பதும் மக்கள் வழக்கு. கரடு:4 கரை உடைந்துவிட்டது கரடு வெட்டி அடைத்தால்தான் அடைபடும் என்பர். அக்கரடு அறுகம்புல் செறிந்த திண்ணிய மண் தகணையாம். கரடுமுரடு: கரடு = மேடு பள்ளமுடையதாயும் வழு வழுப்பும் ஒழுங்கற்ற தாயும் அமைந்தது. முரடு = ஒப்புத் தரத்தின் விஞ்சிய பருமையும் தோற்றப் பொலிவும் அற்றது. துணி, தாள், நிலம் முதலியவற்றைக் கரடு முரடாக இருக்கிறது என்பது வழக்கு. சிலர் பண்பியல் ஒவ்வாமையையும் சொல்லினிமையின்மையையும் கருதிக் கரடு முரடு எனல் உண்டு. கரடு, கரு நிறமானதும் ஒழுங்கற்றதும் கல்லும் சரளையும் செறிந்ததுமாகிய திரட்டைக் குறித்துப் பின்னே மற்றவற்றுக்கு ஆயிற்று. கரட்டு நிலத்தில் பெரிதும் வாழ்வதும், கரடு உடையதும் ஆகிய உயிரி கரட்டான் என்பதை அறிக. முரடு மாறுபட்ட அமைவுடையது என்பதை முரண் என்பதால் அறிக. முரண்டு, முரடன், முரட்டாட்டம் என்பவற்றை யும் கருதுக. கரட்டு வரைவு: சொர சொரப்பான தாளைக் கரட்டுத்தாள் என்பதும், முதலாவது எழுதிப் பார்க்கும் வரைவைக் கரட்டு வரைவு என்பதும் படிப்பவர் வழக்கு. கரட்டு வரைவு (Rough). கால் பாதத்தின் மேல் உள்ள கணுக்கால், கரண்டக்கால் என்றும் கரண்டை என்றும் வழங்கும். அது சொர சொரப்பும் கருமை நிறமும் அமைந்தது. பழங்காலத்தில் இரும்பால் ஏனம் இருந்தமையால் முகக்கும் ஏனம் கரண்டி எனப்பட்டது. அடுகலக் கரண்டி, கட்டுமான வேலைப்பூச்சுக் கரண்டி ஆயவை கருதுக. கருநிறத்தது, கரண்டி. கரணம்: பொழுது என்னும் பொருளில் கரணம் என்னும் சொல் கருங்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது. கரணம் என்பது திருமணச் சடங்கு ஆதலால், அது நிகழ்த்தப்படும் பொழுது கரணம் எனப் பட்டதாகும். கரணம் (தொல். 1091) உரிய பொழுதில் செய்யப்படும் திருமணம், கரணம் ஆயிற்று. மங்கலம்புரிய ஒன்றுபட்ட நேரத்தை ஓரை என்றதும் எண்ணத் தக்கது (தொல். 1081). கரணை: கருநிறத் தோல் உடையதாய் அமைந்த கிழங்கு கரணைக் கிழங்கு. நாவை அரிக்கும் தன்மையது. புளிச்சேர்க்கை யால் அரிப்பு அகல்வது. மூல நோய்க்கு அரிய மருந்தாவது அதன் குழம்பும் மசியலும். கரணை இளகியம் (லேகியம்) மருத்துவப் பொருள். அதனைக் கருணை என்பது பிழை வழக்கு. கரண்டகம்: நீர்க்கொடி கரண்டகம் எனப்படும். கரகம் என்பது பழவழக்கு. கமண்டலம், கமண்டலு என்பவை கம்பர் கால வழக்கு. சுண்ணாம்புக் கூட்டைக் கரண்டகம் என்பது பிற்கால இலக்கிய வழக்கு (தனிப். காள.). கரண்டு: நல்ல உடலுடன் இருந்தவன் - இருக்க வேண்டியவன் -வளர்ச்சி குன்றிக் கருநிறம் கொண்டு போனால் கரண்டு போவான் என்பர். கர் என்னும் வேர்வழி வந்த இச்சொல் முதலாவதாக வண்ணம் குறித்து, அதன்பின் வளக்குறைவு குறித்து ஆயது. எ-டு: குருதி சுண்டினால் சிவந்த உடலரும் கரியர் ஆதல் கண்கூடு. இதனைக் கரண்டு போனான்(ள்) என்பது முகவை வழக்கு. கரந்தை: வெட்சி என்னும் புறத்திணை, ஆக்களைக் கவர்தல். வெட்சியார் கவர்ந்த ஆக்களை மீட்டல் கரந்தை. கரு நிறப்பூ வுடையது கரந்தை. மருந்து நலமிக்கது அதன் வகைகள்: குத்துக் கரந்தை, கொடிக்கரந்தை, கொட்டைக் கரந்தை, சிவ கரந்தை, விட்டுணு கரந்தை, சுனைக் கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக் கரந்தை என்பவை. கரப்பு: கரப்பு: கரத்தல் என்பவை மறைத்தல் பொருளவை. இயல்வது கரவேல் என்பது ஆத்திசூடி. கரந்து (மறைந்து) செல்லும் பாம்பைக் கரப்பு என்பது இராசபாளைய வட்டார வழக்கு. நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும், நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர்; கரவிலார் தம்மைக் கரவார் ஒருபாடலில் இத்தனை கரப்புச் சான்று. கரப்பெண்: மணக்கும் முறையுடைய பெண்ணைக் கரப்பெண் என்பது திருமங்கல வட்டார வழக்கு. மணமகள் கையை மணமகன் கையில் பிடித்துத் தரும் கொடைவிழாவாக மணவிழா நடந்தமையாலும் அதனை மணமக்களின் தாதா செய்தமையாலும் தாதா என்பதற்குக் கொடையாளர் என்னும் பொருள் உண்டாயது. அவ்வழிப்பட்டது கரப்பெண் என்பது. கரைப்பெண் என்பது கரப்பெண் எனவும் ஆகியிருக்கலாம். * கரைப்பெண்டு காண்க. கரம்: கரம் குறிற் சாரியை. அகரம், ககரம், சகரம், அகாரம் எனக் குறிக்குக் காரச் சாரியை இயைதல் இயைபன்று. எனினும் ஏற்கப்பட்டுள்ளது. குறிற் சாரியை குறிலாதலும் நெடிற் சாரியை நெடிலாதலுமே இயல்பாம். ஆ = ஆகாரம், சா = சகர ஆகாரம், மி = மகர இகரம், யா = யகர ஆகாரம். ரகாரம் ழகாரம் எனத் தொல்காப்பியத்து வருதல், இன் னோசையும் இசைநிறைவும் பற்றி நீண்டொலித்தது; அவற்றை இயல்பென்று கொள்வது தவறாகும் என்பது செ.சொ.அ.முதலி. கராம்: கராம் = முதலை. கருநிறம் உடைமையாலும், கரடு போன்ற மீந்தோல் உடைமையாலும் கராம் எனப்பட்டது. கரடாவது கருநிறப் பாறை. கரடு முரடு என்பது இணைச்சொல். கராஅம் கலித்த குண்டுகண் அகழி - பட். 242 என்பது சான்றோர் படைப்பு. கராம் > கராஅம். கரி: கரி:1 கர் என்னும் வேர்வழியாக வரும் சொல் கரியாகும். அடுப்புக்கரி, நிலக்கரி, யானை முதலியன வெல்லாம் கருமை வண்ணத்தால் கரி எனப்படுவன. நிலக்கரி கல்போல் இருத்தலால் கரிக்கட்டி என்றும், அதனை எடுக்கும் ஆலை கரிக்கட்டி ஆலை என்றும் வழங்கலாயின. கரி:2 கரி = சான்று. கரி என்பது, சான்று (சாட்சி) என்னும் பொருளில் வள்ளுவரால் ஆளப்படுகின்றது. மல்லல்மா ஞாலம் கரி என அவரால் கரி இப்பொருளில் ஆளப்படுகின்றன (25, 245). சான்று, நேர் நின்று கண்டு வந்து சாற்றுவதாகும். ஒருவன் கேட்பதை - அறிவதை - அதற்குரியவரும் அறிய நிகழ்வது சான்று. உரியவர் அறியா வகையில் மறைந்திருந்து கண்டவர் உரைப்பது அல்லது கண்ணில் காட்ட இயலாச் சான்றாய உரைப்பது கரியாகும். கரிக்கால்: வெள்ளையாட்டைப் பார்த்தால் கரிய ஆடுகளையும் காணலாம். ஆனால் வெள்ளையாடு என்பதே வழக்கு. இதனால் காராட்டை வெள்ளையாடு எனல் மங்கல வழக்கு என்றனர் இலக்கணர். ஆனால் கருவூர் வட்டார வழக்கில் வெள்ளை யாட்டைக் கரிக்கால் என வழங்குகின்றனர். கரிசனை: அக்கறை என்னும் பொருளில் வழங்கும் சொல் கரிசனை. கருக்கடை என்பதும் கரிசனை போன்றதே. அரிவாள் வகையுள் ஒன்று கருக்கு அரிவாள். அது கூர்மையான பல பல்களைக் கொண்டிருக்கும். அக் கருக்கு மழுங்கினால் கூர் வைப்பர். அதற்குக் கருக்கு வைத்தல் என்பது பெயர். கருக்கு என்பது பனை மட்டையின் பெயர். அது கரியதாய், கூரானதாய், அரம்பம் போல இருக்கும். கூர்மையாக - அக்கறையாக ஈடுபடுவது கரிசனை, கருக்கடை என்க. கரிசு: கரிசு = கரிய தன்மையது; குற்றம்; பாவம். வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை என்பது பழமொழி. களவென்னும் காரறி வாண்மை என்பது திருக்குறள் (287). கரவு என்பது மறைப்பு. வஞ்சம், சூது, ஏமாற்று, பொய்ப்புனைவு, தன்னலம் எல்லாமுமாம். கரவு கரிசாம். கரியாக்கல்: கரியாக்கல் = அழித்தல், சுட்டெரித்தல். கரியாக்குவோர் அக்கரிக்காக எரிக்கக் கூடாத உயர் மரத்தையும் தீ மூட்டி எரிப்பதுண்டு. அவர்களுக்குத் தேக்கானால் என்ன சந்தனம் ஆனால் என்ன, வேண்டுவது கரி. அவ்வளவே! அது போல் சிலர் எளியதும் வேண்டாததுமாகிய பொருள்களை மட்டுமல்லாது, தம் செலவுக்காக விற்கக் கூடாத அரிய பொருள் களையும் விற்று விடுவது உண்டு. அதனைக் குறிப்பது கரியாக்கல் என்னும் வழக்கம். போன இடத்தைக் கரியாக்காமல் போக மாட்டானே என்பது கரியாக்குவானுக்குத் தரும் சான்றுரை. கரியாமணக்கு: ஆமணக்குப் போலும் இலையுடையதும். ஆமணக்கு இலைபோல் இல்லாமல் சற்றே கரிய இலையுடையதும் ஆகிய பப்பாளியைக் கரியாமணக்கு என்பது காரைக்குடி வட்டார வழக்கு ஆகும். கரியிலை: காய்ந்து போன இலையைக் கரியிலை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு. காயும் ஒன்று கருநிறம் அடைதலும், சருகு ஆதலும் உண்மையால் கரியிலை சருகு இலையைக் குறித்து வழங்குகின்றது. கரு: கரிய முகில் கொண்டல் எனப்படும். எதனால்? நீரைத் தன்னகத்துக் கொண்டதால் கொண்டல் ஆயிற்று. அது மழையாகப் பொழிதல் கருவுயிர்த்தல் எனப்படும். அது போல் பயிர்களும் மற்றை உயிர்களும் கருவுயிர்க்கும் பொருள் கருப்பொருள் எனப்படும். முதற்பொருளாம் இடம் காலம் இயைந்த அமைவில் பிறந்த பொருள் கருப்பொருள் என முதல் கரு உரி என முப்பொருள்களின் இடைப்பொருளாகக் கொள்ளப்பட்டது. வெண்முகில் நீர் கோத்த நிலையில் கார் (கரு) வண்ணம் கொண்டமையால் வண்ணப் பொருளும் இணைந்தது. கருக்கடை: கருக்கடை:1 கருக்கு + அடை = கருக்கடை = கூர்மை. பனைமடலின் ஓரம் கருக்கு எனப்படும். அது கூர்மையான முள் உடையது; வலிமையானது. அதனைப் போல் கூர்மையும் வலிமையும் உடையவனைக் கருக்கடை யானவன் என்பது நெல்லை வழக்கு. அவன் வேலையில் கருக்கடையானவன், அவள் படிப்பிலும் சரி, குடும்பப் பேணலிலும் சரி மிகக் கருக்கடையானவன் என்பவை மக்கள் வழக்கு. கருக்கடை:2 கருக்கடை = அக்கறை. கரிசனை என்பதும் அக்கறைப் பொருளதாக வழங்கும். கருக்கல்: கரு > கருக்கு > கருக்கல் = விடிபொழுது கரு > அல் = கருக்கல்; இருள் அகலும் பொழுது எனப் பொருள்படும். கதிர் கால் கொள்வதற்கு முற்பட்ட இருட்டுப் பொழுது கருக்கல் எனப்படும். நாளைக் கருக்கலில் புறப்பட்டால்தான் வேலை முடியும் என்பது ம.வ. கருக்கல் என்பதில் வரும் அல் உடன்பாடு, எதிர்மறை என்னும் இருபொருளிலும் வருதல் உண்டு. எனவே கருக்கல் என்பது அந்திக் கருக்கல். சந்திக் கருக்கல் என இருபொழுதிலும் வழங்கப்படும். மாலைப் பொழுதில் இருளுதலும் கருக்கலேயாம். கருக்கு: குளம்பி (காபி)க் கொட்டை வடிநீர் கரியதாய் இருப்பதால் அதனைக் கருக்கு என்பது நாஞ்சில் வட்டார வழக்கு. இனி இளநீரைக் கருக்கு என்பதும் அவ்வட்டார வழக்கில் இருப்பதாகக் குறிப்பிடுதல் உண்டு. அது முன்னது போல் பொருந்தி வரவில்லை. ஏனெனில் பொதுமக்கள் வழக்கு புனைவோ சிக்கலோ அற்றதாகவும் வெளிப்படையாகப் பொருந்திய பொருள் தருவதாகவும் இருக்கும். கருத்தன்: ஐந்தறிவு கடந்து ஆறாம் அறிவு ஆகிய கருதுதல் - எண்ணுதல் - சிந்தித்தல் செயலாற்றல் வழிகாட்டல் என்பவற்றை உடையவன் கருத்தன் எனப்பட்டான். அவன் தலைவனும் வணங்கத் தக்கவனும் ஆனான். கருக்கொண்டு வந்தவன் எல்லாவனும் கருத்தன் ஆகான். கருதுதல் உடையவனே கருத்தன் என்க. கருத்தன் கண்டு பிடித்தவை கருவி எனப்பட்டது. கருத்தொடு பயன்படுத்தப் படுவது எதுவோ அதுவே கருவியாம். ஆதலால் கருவி கருத்தா என்பவை இணைச்சொற்கள் ஆயின. கருத்தன். விளியில் கருத்தா ஆவான். கருப்பம்புல்: கரும்பு புல்லினப் பயிராகும். அது கருப்பு என வருதல் மெல்லினம் வல்லினமாதல் என்னும் திரிபாக்க முறையால் வருவது. கருப்பம்புல் என்பது பொதுவகையில் கரும்பைக் குறியாமல் விதைக் கரும்பைக் குறிப்பதாக எறையூர் (இறையூர்) வட்டார வழக்கில் உள்ளது. கருப்பை: கருப்பு > கருப்பை = கரிய எலி, காரெலி. பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் - புறம். 324 கருமத்த மாடு: இருமை > எருமை; இருமையாவது கருமை. எருமை மாட்டைக் கருமத்த மாடு என்பது குமரி மாவட்ட வழக்காகும். இர், எர், கர் என்னும் வேரடிச் சொற்கள் கருமைப் பொருளில் வருவனவே. கரும்புதல்: ஒன்றை ஓர் ஓரத்தில் இருந்து சிறிது சிறிதாகப் பல்லால் கரும்பித் தின்னுதல் கரும்புதலாகும். கரும்பினைத் தின்னும் முறைமை கருதி யமைந்த தொழிற் பெயர் கரும்புதல் என்க. காய் கனி முதலியவற்றை எலி தின்னுதலை, எலி கரும்புதல் என்பர். கருவம்: கரு + வ் + அம் = கருவம். கருவம் = தமக்குள் தாமே உருவாக்கிப் பெருக்கிக் கொண்டிருக்கும் செருக்கு. தம்மைத் தலைகால் தெரியாமல் ஆடச் செய்வது. கருவூலம்: பொற்கொல்லர், செம்பு கொட்டிகள் ஆயோரால் வடிக்கப்பட்டவை காசு (பொற்காசு), செம்புக் காசு (செப்புக்காசு) முதலியவை. அவற்றைக் கருவைத்து உருக்கிச் செய்வதால் கருமாரத் தொழிலாகும். கருமார் என்பார் கொல்லர். அவர்கள் வடித்து வழங்கப்பட்ட காசுகளைச் சேமித்து வைக்கப்பட்ட இடம் கருவூலம் எனப்பட்டது. கல்வெட்டுகளில் பயில வழங்கும் கருவூலச் சொல் இந்நாளில் புத்தாக்கம் பெற்று மாவட்ட அலுவலகம் சார்ந்து அமைந்துள்ளது. கருளன்: கருளன் = கருடன். கருடன், கரு நிறத்தது. எறுழ்வலிக் கருளன் -கம். சுந். 1054 கலுழன் என்பதும் இது. கரை: நிலத்தை ஊடறுத்துக் கொண்டு செல்வதால் ஆறு எனப்பட்டது; அது ஊடறுத்த பகுதியில் இருபால் மண்ணையும் கரைத்தலால் அப்பகுதி கரை எனப்பட்டது. அது கரையாமல் இருக்க மண்மேடு போட்டனர். அம்மேடு கரை எனப்பட்டது. இருப்பக்கமும் அமைந்த அது வாய்கரை (வாகரை) என வழங்கலாயிற்று. கரையே எல்லையாக ஆற்றுக்கு இருந்து பின்னர் எல்லை எனப்பட்டது. எல்லை இல்லாதது. அளவில்லாதது கரையிலது எனப்பட்டது. கட்டியாக இருந்த சோறும் களியும் நீராளமாக ஆக்குதல் கரைசல் ஆயிற்று. கட்டித்துவையலை நீராளமாக்கும் சட்டினியைக் கரை துவையல் என்பதுண்டு. கரைகாப்பவர் கரையாளர் எனப்பட்டார். ஆற்றங்கரை மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் - நல். 12 கல்வி கரையில கற்பவர் நாள்சில - நாலடி. 135 கங்குகரை இல்லாத கடலே - திருவருட் கரைத்துக் குடித்தல் என்பது மக்கள் வழக்கு. காகம் கரைதல் ஒலிக்குறிப்பால் ஆயது. அழைத்தல் பொருளது. கலங்கரை விளக்கம் அழைப்புப் பொருளதே. கரை இடல்: ஊரவையினருள் தடிவழி வாரியத்தார், இன்னாருக்கு உரிய நில அளவு இது என்று அளந்து எல்லையிட்டு வரப்பு அமைத்தல், கரை இடல் எனப்படும். சபையுள்ளிருந்து கரையிட்டு க.க.சொ.சு. கரைசோறு: மோர்விட்டுக் கரைத்துக் குடிக்கும் சோற்றைக் கரைசோறு என்பது கருவூர் வட்டார வழக்காகும். கரைத்துக் குடிக்கும் கஞ்சி கரைகஞ்சி என்பது முகவை வழக்கு. கரைத்தல் = கூழாக்குதல். கரைப்பெண்டு: சில தொழில்கள் பரம்பரை உரிமை முறையுடன் செய்யப் பட்டு வந்தன. அவற்றுள் கரைகாவல் தொழிலும் ஒன்றாகும். பரம்பரை முறையால் வரும் அத்தொழில் போல் பரம்பரை முறை வழியால் வந்த பெண் கரைப்பெண்டு என்று வழங்கப் பட்டிருக்கலாம். இது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு. * கரப்பெண் காண்க. கரையிறந்தோர்: கரையிறந்தோர் = அளவற்றோர். கரை = அளவு. நான்முகனே முதல் அமரர் கரையிறந்தோர் = கம்.ஆர. 348 அளவிலார், கரையிலார், கணக்கிலார் என்பனவும் இது. கர்: கர் என்பது ஒருவேர். அது, கருமைப் பண்பு வழியில் சொற்கள் பலவற்றை ஆக்குவது. கர் தனிக்குறில் ஒற்று. கர் கர் என ஓசைக்குறிப்பு நிலையில் இருந்து, பொருள்தரும் ஒலிக்குறிப்பு ஆக வேண்டும் எனின், அதனொடும் உயிர் எழுத்து ஒன்று ஒன்ற வேண்டும். ஒன்றினால், கர, கரா, கரி, கரு முதலியனவாகித் தாமே பொருள் தருவனவாகவும், பிற எழுத்துகளின் கூட்டுடன் சொல்லாகிப் பொருள் தருவனவாகவு மாகிப் பெருக்கமுறும். கர கர என - ஒலிக்குறிப்பாம்; இரட்டைக் கிளவியாம் கரகரத்தல். கர என்பது மறைக்க ஒளிக்க என ஏவலாம். கரா எனின் முதலை வகையுள் ஒன்றாம். கர் என்பதனொடு அகரம் சேரக் கர என விரிந்தும், கர் என்பதனொடு ஆ, இ, ஈ முதலாக விரிந்தும் சொற் பெருக்கமா தலைக் காணலாம். கருமைப் பண்படித் திரிபுகளைக் காண்போம். 1. கர் + அ = கர கரகம் = கருநிலக் கலயம். கரசம் = கருநிறத்ததாம் யானை. கரடகம் = மன அழுக்கு அல்லது இருள் ஆகிய வஞ்சகம். கரடகன் = வஞ்சமிக்க நரி. கரடம் = காக்கை, யானை மதம் கரடி = கருநிற விலங்கு. கரடிகை = கரடி கத்துவது போல ஒலிக்கும் தோற்பறை கரடு = கருநிற வன்னிலம், மேட்டு நிலம். கரட்டான் = கரட்டு நிலத்தின் நிறத்தையுடைய ஓணான். கரணை = கருநிறத் தோலும் கரகரப்புத் தன்மையும் அமைந்த கிழங்கு. கரண்டி = கரிய இரும்பால் செய்யப்பட்டது; பின்னர் அது பிற மாழைகளாலும் ஆயது. கரத்தல் = மறைத்தல், ஒளித்தல். கரந்தை = கருநிறப் பூவையுடைய நிலைத்திணை. கரப்பான் = கருநிறப் பூச்சி. கரம்பை = கருமண் நிலம், கருமண். கரவடம் = வஞ்சம், களவு (மன இருள்). கரவம், கரவி = யானை. கரளம் = கரிய நஞ்சு. 2. கர் + ஆ = கரா. கரா, கராம் = கருநிற முதலை. கராளம் = வஞ்சம் (மன இருள்). 3. கர் + இ = கரி கரி = எரிந்து கருநிறங் கொண்டது; இருந்தை, அடுப்புக்கரி; நஞ்சு (கரியது); யானை, பன்றி, வயிரம், நிலக்கரி; காட்டலாகாச் சான்று. கரிக்கண்டு = கரிக்கை, கரிசலாங்கண்ணி; கரிசாலை, கரிப்பான் என்பனவும் அது. கரிகாலன் = கரிகளுக்குக் காலனாக இருந்தவன். கரிந்த காலையுடையவன் என்பது வழக்கு. கரிக்குருவி = கருநிறப் பறவை. கரும்புள்; கரிச்சான் என்பனவும் அது. கரிக்கோல் = பென்சில் கரிசல் = கருமண் நிலம், கரிசல் காடு. கரிசு = குற்றம், மனமாசு. கரிதல் = கருநிறமாதல். கரிநாள் = கருநாள். கரிமருந்து = கருமருந்து. கரிமா = யானை கரியபவளம் = மருந்து, கருநிறத்தது. கரியவன் = கருநிறத்தவன், கருநிறக்கோள் (சனி), கள்வன். கரில் = குற்றம். 4. கர் + ஈ = கரீ கரீரம் = கருவேல், கருநிற மிடா (பானை), யானை. 5. கர் + உ = கரு கருத்தல் = கருநிறமாகி வருதல். கருகல் = தீயாலும் வெப்பாலும் கருநிறப் பட்டுப் போதல், கருகுதல். கருகுமணி = கருநிறமணிமாலை. கருகூலம் = கருப்புக் கட்டி. கருவூலம் = பொன், வெள்ளி முதலாம் கருமார் வேலையால் ஆய காசகம். கருக்கட்டுதல் = கருமுகில் கூடுதல். கருக்கல் = கதிர் வெளிப்படுமுன் உள்ள இருட் பொழுது. கருக்காய் = நெல்லின் பொன்னிறப் பொலிவற்றதும் மணியற்றதும் கருநிறமாயதும் ஆகிய கரும்பதர். கருக்கு = பனையின் கருமட்டை, கூரிய கரு முள்ளாகிய கருக்கு. கருநிறக் குளம்பி வடிசாறு (டிகாசன்). கருக்கு வைத்தல் = பனையின் கருக்குப் போல் மாழைக் கருவிகளைக் கூராக்கல். கருக்கொள்ளல் = முகில் கருநிறங் கொள்ளுதல், கருமுகில், கருமுகில் சூலுற்று மழை பயத்தல் போல் மகப்பயத்தற்குக் கருவுறுதல். கருநிறமானவை கருங்கடல், கருங்காக்கை, கருங்காலி, கருங்காவி, கருங்குதிரை, கருங்குரங்கு, கருங்குருவி, கருங்குவளை, கருங்குறுவை, கருங்குன்றி, கருங்கொடி, கருங்கொட்டி, கருங்கொண்டல், கருங்கொல், கருங்கொள், கருங்கோழி, கருங்கோள், கருஞ்சாந்து, கருஞ்சாரை, கருஞ்சீரகம், கருஞ்சுரை, கருஞ்சூரை, கருடக்கொடி, கருடன், கருடிக்கூடம், கருநடம், கருநரை, கருநாள், கருநெய்தல், கருநெல்லி, கருநொச்சி, கருந்தினை, கருப்பம், கருப்பற்று, கருப்பு, கருப்புக்கட்டி, கருப்புப்பு, கருப்பை, கருப்பொருள், கருமணி, கருமம், கருமயிர், கருமர், கருமா, கருமாரி, கருமார், கருமுகில், கருமுத்து, கருமை, கரும்பாம்பு, கரும்புல், கரும்புள், கரும்புறா, கரும்பேன், கரும்பொன், கருவண்டு, கருவண்ணம், கருவரி, கருவானம், கருவி, கருவிரல், கருவிழி, கருவிளம், கருவிளை, கருவூமத்தை, கருவூர், கருவேம்பு, கருவேல், கருளன், கருள். 6. கர் > கார் காரகம் = கருவி, கருவியால் செயலாற்றல். காரகன் = கருவிகொண்டு செய்வோன். காரக்கல் = பட்ட இடத்தைக் கரிதாக்கும் நச்சுக்கல். காரடம் = கரவடமாகச் செய்யும் செப்படிவித்தை. காரணம் = கைகருக்க வேலை செய்தல்; கரு - கரணம் = காரணம் = செய்கை (தேவ.) காரண்டம் = காக்கை காரன் = கருமம் செய்பவன். காரா = கரிய எருமை. காராடு = கருநிற ஆடு. காராமணி = கருநிறப் பயறு. காரான் = கருநிற(ப் பசு) ஆன். காராளர் = கார்மழை கருதிய வேளாண் தொழிலர். காரி = கரிக்குருவி, களர்நிலம், காக்கை, சனிக்கோள், நஞ்சு காரியம் செய்யுமிடம், காரியம் செய்பவள், காரத்தைக் கொண்டது, கார்கோள் நாளாம் சனி. காரிகை1 = கருமுகில் போலும் கொடையாட்டி திருக். 571 காரிகை2 = கண்நிறைந்த காரிகை அழகு. திருக். 1272, 777 (தேவ.) காரிக்கூன் = காளான். காரிப்பிள்ளை = கரிக்குருவி. காரியம் = கருமம். காரியாறு = கரிசல் நிலத்துவழி வரும் ஆறு, அவ் ஆறோடும் ஊர். காரிருள் = கப்பிக் கொண்ட கரிய இருள். காருகம் = கருங்குரங்கு. காருடம் = கருடன். காரெலி = கருநிற எலி. காரெள் = கரிய எள். காரை = கருநிற முள்மரம். கார் = கார்காலம், கார்கால விளைவு. கார்கோள் = கடல், கரிய கோள் (சனி). கார்த்திகை = மழைக்குரிய திங்கள். கார்நிறம் = கருநிறம். கார்நெல் = கார்காலத்தில் விளையும் நெல். கார்மலி = கடல். கார்முகில் = கருமுகில். கார்வண்ணம் = கருவண்ணம். 7. கர் > கார் > கால் = கருமை காலம் = கார்காலம், காலச்சோளம், காலப் பருத்தி. காலமழை = கார்கால மழை. காலன் = கருநிறத்தனாம் கூற்றுவன், கரியவனாம் சனியன், கருவண்ணன் (வருணன்) காலிகம் = கரி. காலிகை = கருமை, புகை, மழைமுகில். கால் = இருள், காலம். கால்வாங்கல் = மழை விடுதல். 8. கர் > கார் > கால் > காள் காளகண்டம் = குயில், மயில். காளகண்டன் = நீலகண்டன். காளம் = நஞ்சு, கருமை, கருமுகில். காளவனம் = சுடுகாடு. காளவாய் = கரும்புகை கக்கும் சூளை. காளன் = பெயர், கரியன், கருமிடற்றன். காளாம்பி = காளான். காளி = கரியள். காளிதம் = கறுப்பு, கறை. காளிமம் = கறுப்பு. காளிமை = கறுப்பு. காளியன் = கரு நஞ்சுடைய பாம்பு. காளை = கருநிற ஏறு. 9. கர் > கார் > கால் > காள் > காழ் (ளகரத்திற்குப் பின்தோன்றியது ழ கரம்) காழகம் = கரிய உடை, கரிய நிலம் (கடாரம்),கருமை. காழோர் = வயிரமிக்க தடியுடைய குத்துக் கோலர். காழ் = கருமை, கருமணிக் கோவை, குற்றம், மரவயிரம். மன வன்மம், கெட்டியான விதை. காழ்ப்பு = வயிரம், மரவயிரம், மன வன்மம். 10. கர் > கரி > கறி கறி = மிளகு கறிக்கரணை கறிக்காய் = மிளகு. கறித்தும்பை. கறிமுள்ளி கறியாமணக்கு கறு = மிளகு. கறுக்கை = சினமுறல், கருநிறமாதல், கறுத்தக்காட்டான் = கொடி. கறுத்தல் = சினத்தல், கரிதாதல் கறுத்தவன் = கரியன். கறுத்த வுப்பு = காருப்பு கறுப்பன் = கரியன், கார்நெல். கறுப்பி = கரியள், கார்நெல் கறுப்புக்கட்டல் = மழைக்குறி கறுவல் = கரிய நிறம், சினத்தல் கறேர் = கருமை. கறை = அழுக்காதல் கறையடி = யானை கறையான் = கருநிறத்தது, இருளிலேயே இருப்பது கற்கடகம் = கடுக்காய். கற்காணம் = கருஞ்சீரகம் கற்காடு = அகில். கற்பலகை = கரும்பலகை 11. பொருள்வழி வண்ணம் (கருமை) காக்கை, காகம் = கருமையானது. காகக் கரிப்பான் காகச் சுக்கான் காக துண்டம் (காரகில்) காகக் கொடி காகருகம் = எள். காகருடி = பன்றி. காக்கட்டான் = கருவிளை காகணம் = கருவிளை காக்காச் சோளம் (கருஞ்சோளம்) காக்காய்ப் பொன் (காக்கைப் பொன்) காக்கைவேர் = காக்கணான் வேர் கலகம் கச்சரா: கலகம் = கைகலப்பால் உண்டாகும் சண்டை. கருவிகள் கலத்தலும் கலகத்தில் இடம்பெறும். கச்சரா = கலகத்திற்காகக் குற்றம்சாட்டப் பட்டுக் (கச்சேரிக்கு ) காவல் நிலையம் நீதிமன்றம் ஆகியவற்றுக்குச் செல்லுதல். “கலகம் கச்சரா என்று திரிபவன் உடலை வளைத்து வேலை பார்ப்பானா?”, கலகம் கச்சரா இல்லாமல் இருக்க மாட்டானே அவன்? என்பன போன்றவை நாட்டுப் புறங்களில் கேட்கும் வழக்குகள். கச்சரா என்பது கச்சேரியின் திரிபு. அஃது உருதுச்சொல். கலங்கல்: கலங்கிய நீர் கலங்கல் ஆகும். கலங்கிய உள்ளம் அல்லது அஞ்சுமுள்ளம் கலங்கல் ஆகும். மதுவின் அடிச்செறிவு கலங்கல் என்பதைப் புறநானூறு கூறுகிறது (298). அலங்கல் அசைதல் ஆகும்; கலங்கலோ உள்வாங்கிப் படிதல் ஆகும். கலங்கல் - கலக்கல் - கலக்கம் - கலக்குதல். கலக்கடை: கலம் + கடை = கலக்கடை = அணிகலக்கடை. கலம் = அணிகலம். கலக்கடை கணிப்பரும் கதிர்கள் நாறுவ - கம்ப. பால. 150 கலம்: கலம்:1 பழநாளில் கடலில் எனினும் ஆறு தெப்பம் முதலாம் எவற்றில் எனினும் காற்றின் இயக்கத்தொடும் நீரின் போக்கொடும் கலந்து போகக் கண்டதால் மிதவையைக் கலம் என்றனர். கலமாவது, கலந்து - அதனோடு அதுவாகக் கூடிச் செல்வது. காற்றின் வழியே மிதவை இயங்கியமை, வளிதொழி லாண்ட உரவோன் மருக களிஇயல் யானைக் கரிகால் வளவ -புறம். 66 என்பதனாலும் நீர் ஓட்டத்தின் வழியே மிதவை ஓடியதை, நீர் வழிப் படூஉம் புணைபோல் - புறம். 199 என்பதனாலும் அறியலாம். வளிதொழில் = காற்றின் இயக்க மறிந்து செலுத்துதல்; புணை = மிதவை, மிதப்பு. கலம்:2 மிதவைக்குரிய மரத்தைக் குடைந்து தோண்டிச் செய்யப் பட்டதால் கலம் என்றதுமாம். கல்லியமைத்தது கலம் என்க. கலம்சொரி களிறு: பிறநாடுகளிலிருந்து மரக்கலங்கள் வழியாகக் கொண்டு வரப்பட்ட யானைகள். தீவாந்தரத்துப் பூபாலர் நிறைவிடுத்த கலஞ்சொறி (சொரி) களிறு மறை முறை நிற்ப முதற் குலோத்துங்கள் மெய்க்கீர்த்தி. க.க.சொ.அ x.neh.: நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் - பட். 185-186 கலம்பக மாலை: ஒரு போகும் வெண்பாவும் கலித்துறையும் முதலாகக் கூறப்பெறும் கலம்பக உறுப்புகளுள் ஒரு போகு, அம்மானை என்னும் இரண்டும் ஒழிந்து எஞ்சிய வெல்லாம் இனிதுவரின் அது கலம்பக மாலை என்னும் பெயர் பெறும். ஒருபோ குடனே அம்மானை நீக்கி வெள்ளை முதலா எல்லா உறுப்பும் தள்ளா தியல்வது கலம்பக மாலை -பன்னிரு. 260 ஒருபோ கம்மானை ஒழித்துவெண் பாபாடுதல் கருதிற் பேரது கலம்பக மாலை -பன்னிரு. 261 கலம்பக மாலையைப் பன்மணி மாலை என்றுங் கூறுவர். பன்மணி மாலை பகரும் விதிமுறை ஒருபோ கம்மானை ஊசல் ஒழிய ஏனை உறுப்புகள் எல்லா வற்றுள்ளும் அவ்வாறு செய்யுள் அறைவர்கற் றோரே என்பது பிரபந்த தீபம் (29) கலம்பக மாலை என்னும் பெயரீடு. பலபூக்கள் கலந்து நெருங்கிய கலம்பக மாகிய மாலை என்னும் பெரும்பாணாற்றுப் படை (74) உரையையும். களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கலத் தொடையல் கொண்டு என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருப்பாடலையும் (திருப்பள்ளி. 5) நினைவுறுத்துவதாம். கலம்பகம்: பல்வேறு பாவும் பாவினமும் உறுப்பும் கலந்து வரலுடைமையால் கலம்பகம் என்னும் பெயர் பெற்றதாம். பலவகை மலர் மிடைந்த தொடையைக் கலம்பகம் என்று வழங்கினர். அது கதம்பம் என வழக்குற்றது. கலம் பன்னிரு மரக்கால் என்னும் முகத்தலளவைக் கருவி. பகம் அதிற் பாதியாம் ஆறு மரக்கால், இப்பன்னிரண்டும் ஆறுமாகிய 18 உறுப்புகளை உடைமையால் கலம்பகப் பெயர் பெற்றதென்றும் கூறுவர். ஒரு போகும், வெண்பாவும், கலித்துறையும் முதற்கவி யுறுப்பாக முற்கூறப் பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் இப்பதினெட்டு உறுப்புகளும் பொருந்த மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்டுறை என்னும் இவற்றால் இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் முழுதுறக் கூறல் கலம்பகமாகும். இக்கலம்பகம் தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், உழவர்க்கு முப்பதுமாகப் பாடுதல் வேண்டும் என்பர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது பேணிக் கொள்ளாப் பிழையால் பிறந்த கேட்டுச் சான்றாம் இது. ஒருபோகு வெண்பாக் கலித்துறை உறமுன் வருபுய மதங்கம் மானை காலம் சம்பிர தம்கார் தவங்குறம் மறம்பாண் களிசித் திரங்கல் கைக்கிளை தூது வண்டு தழைமேற் கொண்டெழும் ஊசல் மடக்கு மருட்பா வஞ்சி விருத்தம் அகவல் கலியினம் அகவல் விருத்தம் வஞ்சி வஞ்சித்துறை வெண்டுறை நடைபெற் றந்தாதி மண்டலித் தாங்கலம் பகமே - இலக். பாட். 51 கலம்பகத்தில் வரும்பாடல் தொகை வருமாறு: அதுவே, இமையவர்க் கொருநூ றிழிபைந் தையர்க் கமைதரும் அரசர்க் காகும் தொண்ணூ றமைச்சருக் கெழுபான் வணிகருக் கைம்பான் அமைத்தனர் பின்னவர் தமக்கா றைந்தே - இலக். பாட். 53 இனிப் பிறர் பிறர்க்கும் கலம்பகம் வகுக்கு மாற்றையும், அவர்க்குப் பாடல் தொகையா மாற்றையும் பலர் பலவாறு கூறுவர். கலம்பகம் மண்டலித்துப் பாடப் பெறும். மண்டலித்துப் பாடுதல் என்பது அந்தாதித் தொடையால் செய்யுட்கள் அனைத்தையும் வகுத்து ஈற்றுச் செய்யுள் ஈறு, முதற் செய்யுள் முதலோடு பொருந்தி அமையப் பாடுதல். கலவடை: கலங்கள் - ஏனங்கள் - வைப்பதற்குக் கட்டும் மேடையைக் கலவடை என்பது கட்டடத் தொழிலாளர் வழக்கு. சுமை அடை என்பது போன்றது, கல அடை. கலவம்: கலவு + அம் = கலவம் (> கலாபம். வட. ) கலவம்:1 கலவம் = பலவாகக் கலந்த தொகுதி; மயில்தோகை. நெடுமாத் தோகை, காமர் கலவம் பரப்பி அகம் 194. ஓர்கலாபம் வழங்கநிழல் மின்னவரு மஞ்ஞையென வந்தாள் - கம்.பால. 1226 கலவம்:2 பதினாறு கோவையாய் அமைந்த மகளிர் இடையணி. பூந்துகில் கலாபம் பீறி - கம்.சுந். 284 இருபத்தைந்து கோவையாய் அமைந்தது என்றும் கூறுவர். (கம்.அக.) கலவன்: பயிர் நெருக்கமாக இல்லாமல் இடைவெளி மிகுதியாக இருப்பதைப் பயிர் கலவனாக இருக்கிறது என்பது உழவுத் தொழில் வழக்காகும். நெருக்கமாகப் பயிர் இருந்தால் பயிர் கலப்புக்காகப் பறிப்பது வழக்கம். அற்குக் கலைப்பு (கலப்பு) என்பது பெயர். கலவித்து விட்டு: சண்டை போட்டு விட்டுப் போவதைக் கலவித்து விட்டுப் போய்விட்டான்(ள்) என்பது கிள்ளியூர் வட்டார வழக்கு. கலகம் செய்தல் என்பது சண்டை போடுதலைக் குறிக்கும் பொதுவழக்கு. கலகம் செய்து என்பது கலவித்து என ஆயது. கலகம் கலவு ஆயது இது. கலனை: கல் > கலன் > கலனை. கல் > கள் = கூட்டம்; கூட்டத்தார். இப்பொன் பன்னிரண்டு கழஞ்சையும் கொண்டும் இவ்வூர் மன்றாடிச் கலனையோம் (கூட்டத்தோம், மரபோம்) நித்த முழக்குநெய் யட்டுவோ மானோம். தெ.கல்.தொ. 19:59:61 (க.க.சொ.அ.). கலன்: கல்லெழுத்துப் போன்ற உறுதிமொழிக்கு மாறுபடுதல் (வில்லங்கம்). இந்நிலத்துக்கு எப்பேற்பட்ட கலனும் இல்லை; கலனுள வாய்த் தொற்றுங்கால் நாங்களே தீத்து குடுக்கக் கடவோம் (தெ.க.தொ. 12:1:190) நில விற்பனை செய்யுங்கால் இனி எத்தொடர்பும் இல்லை. ஏதேனும் வில்லங்கம் (தடை) உண்டாயின் நாங்களே எங்கள் பொறுப்பில் தீர்த்துத் தருவோம் என்னும் உறுதிமொழி தந்த சான்று இது. கலாம்: கலகம் > கலாம் = சினம், சண்டை, மாறுபாடு, ஊடல். அரும்கலாம் உற்றிருந்தான் - கம்ப. ஆர. 365 வன்கலாம் - கம். உயுத். 2195 தீக்கலாம் கொண்ட தேவர் -கம். உயுத். 1368 கொழுநரோடு உட்கலாம் உடையாரின் உட்கினார் - கம்.அயோ. 814 கலி: கலி:1 கல் + இ = கலி. கல்லில் இருந்து ததும்பி வீழும் நீர், துள்ளி எழுப்பி அலை கொழித்து ஓடும் அத்துள்ளலோட்டம் கலி எனப்படும். கலித்தளை எனப்படும் காய்முன் நிரை துள்ளல் நடையாம். கலி:2 கலித்தல் நீர் மிகலால் உண்டாதலால் மிகுதிப் பொருள் தந்தது. மக்கள் கலித்துவிட்டனர் என்பது மக்கள் வழக்கு. கலி:3 கலி விரைந்தோடும் ஓட்டம் ஆதலால், அது வெற்றிப் பொருள் தருவதாயிற்று. ஆதலால் ஓடிக் கலித்துவிட்டான் என்பது வெற்றியைக் குறிக்கும். ஓட்டப் போட்டியில் முந்தியவர் வென்றவர் அல்லவா! கலி:4 கலிமான் = குதிரை; விரைந்தோடலால் பெற்ற பெயர். கலிமான் தேர் கத்திருவர். - யா.வி.62 மேற். கலிங்கு: கல் > கலி > கலிங்கு = கல்லென ஒலிந்து நீர் செல்லும் கல்மடை. ஏரிகளின் மடைகள், பயிர் நிலத்திற்கு நீர் செல்லும் கால்கள், வாய்க்கால்கள், இக்கலிங்கு ஏரியில் நீர்மிகுந்து கரையில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் நீர் வழிந்தோடுமாறு கட்டப்பட்ட கற்பரப்பு. ஏரியும் துருந்து மதகுகளும் முறிந்து கலிங்குகளும் அழிந்து கிடக்கையில் உடைந்த மடைகளும் அடைத்து, ஏரியும் கல்லி, கரையும் கற்கட்டி, மதகுகளும் அட்டுவித்து கலிங்குகளும் செய்தபடி (தெ.க.தொ. 12:126) கலித்தொகை: தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்னும் அடிப்படை அலகுகளையும் வண்ணகம், அம்போதரங்கம் என்பனவற்றையும் உடையது கலி. இக்கலிப்பா வகையால் அமைந்த நூல் கலித் தொகை எனப் பெயர் பெற்றது. எட்டுத் தொகையுள் ஒன்றாகிய கலித்தொகை இவ்வகைப்பட்டதே. இனிக் கலித்தொகை, தத்துவராயர் அடங்கன் முறைகளுள் ஒன்றாக மெய்ப்பொருள் கூறுவதாக அமைந்துள்ளது. கலித்தொகை தொகைநிலை எனவும் படும். தொகைநிலை என்பன தோன்றக் கூறில் கலியடி செய்யுள் கலித்தொகை யாமே என்பது பிரபந்த தீபம் (51). கலிப்பா: கலியாவது துள்ளல்; ஏறி இறங்கு நடை துள்ளல் நடையாம். கடல் அலை ஏறி இறங்கி ஓயாமல் ஒழியாமல் காட்சி தருதலைக் கண்டவர்கள் அக்கடலுக்கு ஆர்கலி என்ற பெயரிட்டதை எண்ணலாம். காய்முன் நிரை - கலித்தளை; காய்ச்சீர் ஏற்றமும் அதனொடு இயையும் நிரையசை இறக்கமும் கொண்டிருத்தல் கலியின் பொருளை விளக்கும். இனிக் கலித்தல் பெருகுதல் ஆதலால், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்குறுப்புகளும் அவற்றின் பன்மடிப் பெருக்க நிலைகளும் உணர்வார் கலியின் பொருள் அறிவர். கலியின் அடிப்பெருமை நூற்றைம்பது என்னும் இலக்கணமும் இதனைத் தெளிவிக்கும். கலியந்தாதி: வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவின எழுத்துகளும் அளவே அமைந்து, குறிலுக்குக் குறிலும் நெடிலுக்கு நெடிலும் பொருந்தி நான்கு கலை கொண்டது ஓரடியாய், அவ்வண்ணம் நான்கடியாகியும், ஒருவகை ஒலியே உடையதாகியும், முப்பத்திரண்டு கலையொடு பொருந்தியும் குறிலும் நெடிலும், இணைந்து வரின், அவ்வாறே இணைந்தும், முப்பது கட்டளைக் கலிகள் அந்தாதி முறையில் வருமாயின் அது கலியந்தாதி எனப் பெயர் பெறும். வல்லினம் மெல்லினம் இடையின எழுத்துப் புல்லி மருங்கு போகா தொன்றிக் குறிலெனில் குறிலே நெடிலெனில் நெடிலே பொருந்தி நாற்கலை கொண்டோ ரடியாய்த் திருந்தும் இவ்வகை நான்கடி யாகியும் ஓரொலி யாகியும் எண்ணான் காகிய கலையொடு பொருந்தியும் குறிலும் நெடிலும் முறைமுதல் வரினும் அவ்வெழுத் தாகியும் இப்பரி சியன்ற முப்பது கட்டளை மிக்கது கலியந் தாதி யாகும் - பன்னிரு. 265 இனி வெண்கலிப்பாவாகவும் சிறுபான்மை வரும் என்பர். வெண்கலி யுஞ்சில சிறுபான்மை வருமே - பன்னிரு. 266 இது கலித்துறை அந்தாதி எனவும் பெறும். திருக்கருவைக் கலித்துறை அந்தாதி எடுத்துக்காட்டாம். இனிக் கட்டளைக் கலித்துறை அந்தாதி என்பதும் இதுவே. திருவரங்கத் திரு வாயிரத்தில் இடம் பெற்றுள்ளது கட்டளைக் கலித்துறை அந்தாதி. கலியர்: கலியர் = வணிகர்; புதுப்புது வருவாயினர். அருவி வீழல் ஒலி கல். கல் ஒலித்துத் துள்ளல் கலி. கலியிசைப்பா கலிப்பா. மிகுதிப் பொருள் தரும் இக்கலியின் வழிவந்த சொல் கலியாணர் என்பது. கலியாணர் புதுப்புது வருவாயினர்; அவர் வணிகர். ஒலி ஓவாக் கலியாணர் -மதுரைக். 118 கலியாண எழில் (சுந்தரம்): சொந்தத்தின் மானைக் கல்யாண மணங்குறி வென்றே செய்தலான் கலியாண சுந்தரம் என இதன் இலக்கணத்தைப் பிரபந்தத் திரட்டுக் கூறுகின்றது(44) உரிமையமைந்த பெண்ணொருத்தியை மணக்கத் திட்டமிட்டு அவளை மணந்து வெற்றி கொண்ட செய்தியைப் பற்றிக் கூறுவது கலியாண சுந்தரம் எனப்படும் என்கின்றது. உரிமையமைந்த பெண்ணே எனினும் அவளை அடைதற்கு இருந்த தடைகள் இடையூறுகள் ஆகியவற்றை வெற்றி கொண்டமையும், அதன் பின்னர் உற்றார் உறவினர் பகைமை நீங்கிப் பாங்குற மணமுடித்து வைத்து மகிழ்ந்த சிறப்பையும் கூறுவதாக இந்நூல் அமைந்ததாகலாம். கலியாணம்: கலி = மிகுதி, துள்ளல், எழுச்சி முதலாம் பொருள்தரும் சொல், யாணம் என்பது வருவாய். கலவணிகம் புரிவார் மிகுபொருள் தேடிவந்தமையால் அவர் பண்டே கலியாணர் (மிகு வருவாயினர்; பெருஞ்செல்வர்) எனப்பட்டார். (மதுரைக். 118) திருமணப் போதில் மணமக்களுக்கு மொய் என்றும் சுருள் என்றும் கொடை வழங்கப்படுவதால் அந்நிகழ்வு கலியாணம் என வழங்கப்பட்டதாம். கல்யாணம் என்பது சொற்பிழை; கலி பற்றுவது என்பது கருத்துப் பிழை * கலியர் காண்க. கலிவெண்பா: கலிவெண்பாவால் அமைந்த நூல் கலிவெண்பா எனப்படும். அக்கலி வெண்பா ஒரோ ஒன்றாகவும் நூலாதற்கேற்ற நெடியதாக வும் இருக்கும் என்க. குமரகுருபர அடிகள் இயற்றிய கந்தர் கலிவெண்பா, வள்ளலார் அருளிய விண்ணப்பக் கலிவெண்பா, பரஞ்சோதியார் பாடிய திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா முதலியன குறிப்பிடத் தக்கன. சொற்பெறு மெய்ஞானச் சுயஞ்சோதி யாம்தில்லைச் சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே என விளித்து, வீறுடையாய் நின்றனக்கோர் விண்ணப்பம் எனச் சுட்டி, சூழ்ந்திடுக என்னையுநின் தொண்டருடன் சேர்த்தருள்க வாழ்ந்திடுக நின்றாண் மலர் என விண்ணப்பித்து நிறைகின்றது வள்ளலாரின் விண்ணப்பக் கலிவெண்பா. அது 417 கண்ணிகளைக் கொண்டுள்ளது. வேறு பல பனுவல்களும் கலிவெண்பாவால் பாடப்படுவது உண்டெனினும் அவை வேறு பிற பெயர்களைக் கொண்டனவாக, இவ்வொன்றும் பாவகையால் பெயர் பெற்றதாம். கலிவெண்பா பன்னீரடியின் மிக்கு வரும் நெடிய வெண்பா. கலுசம்: கால் சட்டை என்பதைக் கலுசம் என வழங்குதல் விளவங்கோடு வட்டார வழக்காகும். கால் சராய் என்பது தென்தமிழகப் பொது வழக்காகும் இன்னும் அரைக்கால் சட்டை என்பதும் மக்கள் வழக்கே. கலுழன்: கலுழ்தலாவது அழுதல், கண்ணீர் வடித்தல். நீனறு நெய்தலிற் பொலிந்த உண்கண் கலுழ்ந்து வாரரிப்பனி பூணக நனைப்ப இனைதல் ஆனாள்: என்பது பரணர் பாட்டு (புறம். 144). பேகனைப் பிரிந்த கண்ணகி கலங்கிக் கலுழ்ந்த நிலையைக் காட்டும் பாட்டு இது. சேற்றில் கிளைக்க நீர்ஊறி வருவதைச், சேறு கிளைத் திட்ட கலுழ்கண் ஊறல் என்கிறார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் (புறம். 325). நாடோறும் பாடில கலிழும் கண்ணொடு புலம்பி எனக் கலுழ்தலைக் கூறுகிறார் மாமூலனார் (குறுந்.11) கலுழ்தல், கலுழி, கலுழ்பவள் எனப் பெருவரவாகப் பழவிலக்கியங்களில் வழங்கப்படும் சொல் கலுழன் என்னும் ஒரு பறவைப் பெயராக இடைக்காலத்தில் வழக்கூன்றியது. கலுழனாவது கருடன் அதன் கண்ணும், கண்ணின் நீர்க் கசிவுத் தோற்றமும் உற்றுக் கண்டவர்க்கு அழுகைக் கண்போல் தோன்றியமையால் கலுழன் எனப் பெயர் சூட்டினர். கறங்கு வெஞ்சிறைக் கலுழன்தன் கடுமையிற் கரந்தான் -கம். உயுத். 170 கடையுக முடிகெழு கடல்புரை கலுழன் -கம். உயுத். 3752 கண்ணன் ஊர்தியாகத் தொன்ம உலகம் பிற்காலத்தே கண்டது. பெரிய திருவடி என்றும் கருடாழ்வார் என்றும் பாராட்டி வணங்கியது. அதன் கருநிறம் கருதிக் கருடன் என்றனர். கலுழி: கலுழி:1 கலக்கத்தால் உண்டாகும் கண்ணீர் கடலிடைப் புகுந்த கண்கலுழி ஆறரோ -கம். அயோ. 176 கலுழி:2 கலங்கிய நிலையில் நுங்கும் நுரையுமாக வரும் வெள்ளம். நெடுவரை இழிதரும் நீத்தம்சால் அருவிக் கடுவரற் கலுழி கட்கின் சேயாறு -மலைபடு. 554,555 கலையம்: கலயம் என்பதும் அது. கல்லைக் குடைந்து நீர்க்கலமாக அமைக்கப் பட்டது கலையமாம். பின்னர் மண்ணால் செய்யப் படினும் பழம் பெயரே பெயராய் வழங்கி வருவதாயிற்று. மரக்கால், நாழி, படி என்னும் பெயர்களைப் போல. கல்: கல் என்பது ஓர் ஒலிக் குறிப்பாகும். இயற்கையினிடை வாழ்ந்து இன்பங் கண்ட ஆய்வு நலமிக்க முன்னோர் ஆரவாரத்தைக் குறிக்கும் இடங்களிலெல்லாம் கல் என்னும் ஒலிக்குறிப்பைப் பயன்படுத்தி யுள்ளனர். படையணிச் செலவும், பாசறை நிலனும், பேரூர் மறுகும், சீறூர் மன்றமும், கார்க்கடல் அலையும், கடிப்பிணை முரசும், நீர்வழி தூம்பும், கார் செறிவானும் - இன்ன தன்மைய பலவும் கல் என்னும் ஆரவாரத்தை உடையன என்பதை இலக்கியங்களில் பெருகக் காண்கிறோம். கல்லென் கடல்கண்டன்ன கண்ணகன் தானை புறம். 351 கல்லென் பாசறை -புறம். 301 கல்லென் பேரூர் -சிலப். 12:12 கல்லென்சீறூர் -ஐங். 382 கல்லென் கடற்றிரை -சீவக. 2097 கல்லென் முரசம் -சீவக. 1063 கல்லெனத் தூம்பு -சீவக. 1280 கல்லெனத் துவன்றிக் கண்கிளர்ந்தது போல் -பெருங். 1. 55: 113 எனினும் படை முதலாய இவற்றின் ஒலி ஒரு வழியே கல்லென ஒலிப்பதில்லை. பல திறப்பாடுற்றதாகும். இருப்பினும் தொல் பெரும் இலக்கியங்கள் கல்லெனும் ஒலிக்குறிப்பைப் பயன்படுத்துவதிலிருந்து அதற்கோர் தகவுடைய காரணம் இருந்தே யாக வேண்டும் என்பது உண்மை யாகின்றது. உலகத் தோற்றத்தே முதலாவதாக விண்ணும், அதன் பின் முறைமுறையே வளியும், தீயும், நீரும், மண்ணும் தோன்றின என்பது ஆய்வியல் முடிவு. இறுதியான மண்ணின் தோற்றத் திலும் கல் தோன்றிய பின்னரே மணலும் மண்ணும் தோன்றின என்பதும் தெளிவு. ஆதலால் கல்லே நிலத்தோற்றத்தின் தாய் எனலாம். இஃது இவ்வாறாகத், தமிழ்க்குடியின் தொன்மை கூற வந்த ஆன்றோருள் ஒருவர், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி எனக் கூறினார். இக்கூற்றுள் தமிழ்க்குடியின் தொன்மையே அன்றி நிலத் தோற்றத்தின் முறைமையும் தெளிவாக்கப் படுகின்றது. கல் தோன்றிவிட்டது. ஆனால், மண் தோன்ற வில்லை என்பதனால் கல்லின்பின் மண் தோன்றியது எனப் படைப்பு முறைமையும் தெளிவாக்கப் படுகின்றது. ஆனால், இங்கே காட்டப்பட்ட கல்(மலை) தோற்றமுற்று விட்டாலும் கல் என்னும் பெயருடன் தோன்றியிருக்க முடியாது. ஒரு பொருள், தோன்றிய பின்னரே அதன் இயல்புக்கு ஏற்பப் பெயரமைப்பதும், அமைவதும் இயற்கை. அதுவே வளமிக்க மொழியும் ஆய்வு நலமிக்க அறிஞரும் கொள்ளும் நெறி. கல் தோன்றி, மண் தோன்றி, உயிர் தோன்றி, உணர்வுடைய மனிதன் தோன்றி, வாழத் தொடங்கி, உலகத்தே உருண்டு, புரண்டு, தவழ்ந்து, தாவி, நடந்து, பழகியும், ஆட்டி, அசைத்து நீட்டிக் குவித்துத் தசைப் பயிற்சி செய்தும், குழறி, உளறி, சிரித்து, உரப்பி, ஒலித்துக் கருத்து வெளியிட்டும் வாழ்ந்த பின்னரே மொழியுணர்வு தோன்றியிருக்கக் கூடும். இவ்வாறு முதற்கண் தோற்றமுற்ற சொற்களும் எளிய ஓசையும், இயற்கை அமைதியும் பல்பொழுதும் கேட்டறிந்த வாய்ப்பும் உடையதாக இருந்தே தோன்றியிருக்க முடியும். இவற்றை யெல்லாம் நோக்குங்கால் மாந்தன் கருத்தைக் கவர்ந்த சொற்களுள் கல்லும் ஒரு சொல்லாக இருந்திருக்கலாம். அன்றியும் அவன் கண்ட முதன்மைச் சொற்கள் சிலவற்றுள் ஒன்றாகவும் நின்றிருக்கலாம். கல்தோன்றி விட்டது; மண்ணும் தோன்றிவிட்டது; உயிரும் பிறவும் தோன்றிவிட்டன. நீர் கொண்டு நெடுவான் பரவிய முகில் கடனாற்ற, இயற்கை யன்னை மெய்குளிர்ந்து வண்ணப் போர்வை போர்த்து வனப்பு மிக்க கன்னியாக விளங்கினாள். வானைத் தொடும் மலையும், வானத்து மீனை நிகர்க்கும் சுனையும் பற்பல இடங்களில் இலங்கின. இவற்றைக் கண்டு உள்ளம் பறிகொடுத்த மொழிவளம் பெறாத முதுகுடிகள் தங்களுக்குள் சுவைத்துத் திளைத்தனர். முட்டி முடுகித் தத்தித் தாவி ஆரவாரத்தோடு எழும் ஒலியில் செவியையும், காட்சியில் உள்ளத்தையும் தந்து நின்றனர். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிந்து பல வழிகளிலும் பொறிபுலன்களைச் செலுத்தினர். அருவி வீழும் அழகும் ஒலியும் அவர்கள் புறக்கண்ணையும் புறச்செவியையும் விட்டு அகலினும், அகக் கண்ணையும் அகச் செவியையும் விட்டு அகல்வதாக இல்லை. அவ்வருவியின் ஒலியிலே ஒன்றிய ஒரு பெருமகன் காதில் அவ்வொலி கல் என ஒலித்திருக்க வேண்டும். கல் என ஒலித்த அவ்வொலியாலேயே அவன் அருவியைக் குறித்ததாக மாறியிருக்கக் கூடும். அதன் பின்னரே மலைக்கும் காரணம் கருதிய பெயராய் வழிவழி வளர்ந்திருக்க வேண்டும். கா கா என்னும் ஒலியுடைய பறவையைக் காக்கை என்பதும், கூ கூ என்னும் ஒலியுடைய பறவையைக் கூகை என்பதும் இன்னும் வழக்கில் உளவாதலைக் காண்கின்றோம். இது போன்றே கல்லென்னும் ஒலியுடன் வீழும் அருவியும் அருவி சூழும் இடமும் கல்லாகக் காரணம் குறிக்கப் பெற்றது தெளிவாகும். மொழி வளமுற்ற காலத்தே கல்லலைத் தொழுகும் கல்லென அறையும் ஒல்லென் கம்பலை கல்லெனத் கரைந்து வீழும் கடும்புனல் குழவி என அருவி தாலாட்டக் கண்துயிலும் யானை என்றும், மயிலாட்டத்திற்கு அருவி பறையடிக்கின்றது என்றும் விரித்தோரும் உளர். கல் எனத் தத்தி நீர் விழும் மதகுக்குக் கலிங்கில், கலிங்கு என்ற பெயர்கள் உண்மை கண்கூடு. கலிங்கில் பெயரால் பெயர் பெற்ற ஊர்களும் உண்டு. கலிங்கப்பட்டி, கலிங்கல் மேட்டுப்பட்டி என்பன அவற்றுள் சில. கல்லெனும் ஒருமை ஒலி காலம் செல்லச் செல்லப் பல்வேறுபட்ட ஒலிகளைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் பெறலாயிற்று. அது போழ்து, ஒரு சிறு மாற்றமும் பெற்றது. கல் எனும் ஒலிக்குறிப்பு கலியாயிற்று. மிகுதி, ஆரவாரம், துள்ளல் ஆகிய பொருள்களிலெல்லாம் பின்னே வழங்கு மாறான பெருமிதச் சொல்லாகக் கலி நின்றது இதனால் கலிகெழு கடவுள், கலிகெழு கடல், கலிகெழு பாக்கம், கலிகெழு மறுகு, கலிகேழ் ஊர், கலிகெழு மீமிசை என மிகுவொலி யைக் குறிப்பது காண்க. முதல் மனதின் இயற்கையில் அமைந்த மலைப்பிளவு குகைகளுக் கிடையே தன் வாழ்வைத் தொடங்கினான். எனினும் கொடு விலங்குகளும் பருவ வேற்றுமைகளும் அவனை வாளா விருக்க விட்டு வைக்கவில்லை. சற்றே அவனைத் தூண்டிற்று. கல்லை உடைக்கவும் அதனைக் கூர்மை யாக்கவும், பாறைகளைக் குடையவும் முயன்று வெற்றியும் கண்டான். பருவ காலத்தின் கொடுமையை அழிக்கக் கண்ட கல்வீடும், கடு விலங்கை அழிக்கக் கண்ட கற்கருவியும்அவ்வளவோடு விடாமையால் ஓய்வு ஒழிவு நேரங் களிலெல்லாம் கல்லில் சிலபல உருவங்களைத் தீட்டி உவக்கும் நிலைக்கு வளர்ந்தான் இக்காலத்தும் இவன் அருவியை மறந்தான் இல்லை; அதன் ஒலியை மறந்தான் இல்லை, கல்லினின்று செதுக்கியும், துளைத்தும் ஆக்கிய அவன் தொழிலைக் கல் என்பதன் வழியாகக் கலை என்பதாலேயே குறித்தான். கல்லின் விளைவே கலையாயிற்று. கல் தொழிலுக்கு மட்டும் கலை என்று பெயர் வைத்த அவன் வழிவழி வந்த மாந்தர், அழகும் கவர்ச்சியும் தரும் அனைத்தையும் கலை என்ற பெயராலேயே அழைக் கலாயினர். கல்லிலிருந்து கலை கண்ட மாந்தன் தோண்டிச் செய்யும் அனைத்துப் பொருளையும் கலைப்பொருளாகக் கருதினான். இதனாலேதான் அவன் ஆடையாகப் பயன்படுத்திய மரத் தோலும் விலங்குத் தோலும் கலை என்ற பெயரால் குறிக்கப் பெற்றன. ஆனால் இவ்வளவு மாற்றங்களைப் பெறுமுன் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கக் கூடும். அதனால் மனிதன் அறிவும் உணர்வும் பெருகி மொழிவளமும் பெற்று உண்பதும், உடுப்பதும், உணர்வதும் அன்றி வேறுபல தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஆட்படலானான். அதன் விளைவாக அவன் சில பல பொருள்களைக் தோற்றுவிக்க முனைந்தான். இவையும் கலையழகு பெறச் செய்யப்படலாயின. இதனால் கலையழகு தவழ அவன் கண்ட பொருள்களைக் கலம் பெயரால் அழைத்தான் அவையே உண்கலம், அணிகலம், படைக்கலம். இவை வனைகலம், புனைகலம், தொடுகலம் என்றும் வழங்கப் பெற்றன. கல்லெனும் ஒலி வளர்ந்து பெருகி வகை இவ்வாறாக, இன்று கல்வி என்பதும் தோண்டி எடுப்பது என்ற பொருளொடுதான் வழங்கப் பெறுகின்றது. கல் என்னும் தோண்டுதல் பொருளில் வழங்கிய கலை, இப்பொழுது அழகு மல்கி, உணர்வைத் தூண்டி, அறிவை வளர்த்துச் செம்மை தரும் அத்துணை வனப்புகளுக்கும் பொதுமைப் பெயராக மாறிவிட்டது. மரத்தினால் அமைந்த அளவைக் கருவி தகடாக இன்று மாறி நின்றும் மரக்கால் என்னும் பெயரே பெற்று வருவது போல் எள்நெய்யான எண்ணெய்என்னும் சொல் பொதுமையாகிக் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என்று ஆனாற்போல் கலையின் பொருளும் இயலும் மாறிக் கொண்டாலும் பெயர் மட்டும் மாற்றமுறாது நிற்பது வியப்புக்குரியதே. கல் முன்வரு சொற்கள் கல்குளம் கல்குறிச்சி கல்மலை கல்மழை கல்மாரி கல்லத்தி கல்லமனூர் கல்லல் கல்லாமணி கல்லாமேடு கல்லாலயம் கல்லால் கல்லிடைக்குறிச்சி கல்லீரல் கல்லுக்குழி கல்லுப்பயறு கல்லூரணி கல்லூரி கல்லூர் கல்லூற்று கல்லெடுப்பு கல்லெழுத்து கல்லை கல்வாழை கல்வெட்டு கல்வேலி கல் பின்வரு சொற்கள் இராமக்கல்(நாமக்கல்) ஓணாக்கல் கரடிக்கல் குண்டுக்கல் குத்துக்கல் கோட்டக்கல் சூலக்கல் திண்டுக்கல் புகைக்கல் மூலைக்கல் கருங்கல், செங்கல் என வண்ணம் கொண்டும். வட்டக்கல் ,சதுரக்கல் என வடிவு கொண்டும், மாக்கல், பருக்கைக்கல் எனத் தன்மை கொண்டு வருவன பல. கற்காலம், கற்போது, கற்றாழை என லகர ஒற்று, றகர ஒற்றாகவும், கன்னாடு, கன்மலை,கன்மா என லகர ஒற்று, னகர ஒற்றாகவும் வருவனவும் பல உள. கல்தச்சன்: கல்லால் திருக்கோயில் கட்டிய சிற்பி கல்தச்சன் என்றும், அவர்களின் தலைவன் பெருந்தச்சன் என்றும் வழங்கப்பட்டனர். தச்சு வேலை, கல்லை இணைத்துக் கட்டும் கட்டக்கலை. க.க.சொ.அ கல்நாடு: கல் + நாடு = கல்நாடு. நடு > நாடு. போரிட்டு இறந்தோர்க்கு உரிய நடுகல் நட்டு வைப்பதற் கென்று ஊரின் ஒரு பக்கத்தில் ஒதுக்கப்பட்டதும் பார்க்கத் தக்கதாகவும் அமைந்த இடம் கல்நாடு எனப்படும். தகடூரில் பட்டார் நாசந்தை சிறுகுட்டியார் கல்நாடு க.க.சொ.அ. கல்புரை: கல்புரை = கல்மாடம். கோயில் கருவறையின் உட்பக்கம் தளிகை வைப்பதற்கு உரியதாக அமைக்கப் பெறும் கருங்கற் பலகை, கல்புரை எனப்படும். கல்புறை(ரை)க்குப் புடவை இணை -தெ. க. தொ. 14: 16 புரை உயர்வாகும் -தொல். 785 கல்மழை: மழைநீர் மிகு குளிர்ச்சியால் கல்லாகிப் பொழிவதை, ஆலங் கட்டி மழை என்பர். ஆலம் என்பது நீர். பனிக்கட்டி என்பது போல வழங்குவது ஆலங்கட்டி அதனைக் கல்மழை என்பது மதுரை வழக்காகும். கல்முகை: முகை, மலர் நிலையுள் ஒன்று. அது திரளின் மொக்குள் எனப்படும். முகைமொக்குள் என்பது வள்ளுவம் (1274). மொக்கு மலராகும் போது வெடிப்புறும். அவ்வாறு கல் ஆகிய மலையும் வெடிப்புறல் உண்டு அதனை முந்தையர் கல்முகை என்றனர். கல்முகை வேங்கை மலரும் -ஐங். 276 கல்லகம்: கல் + அகம் = கல்லகம். கல்பரப்புடைய நிலப்பகுதியும், அப்பகுதியில் உள்ள ஊரும் கல்லகம் ஆகும். கல் ஆவது திண்ணியது வலியது! கெட்டியாம் தன்மையது கல்லகம் . மண்படலம் அருகியதாய் கற்பரப்பு மிக்கதாய்க் குறுங்காலப் புன்செய்ப் பயிருக்கு உரியதாக இருக்கும். தினை, கேழ்வரகு, குதிரைவாலி, வரகு, சாமை, கொள், எள், கடலை முதலியவை விளையும் நிலம், கல்லகம். இப்பெயரிய ஊர் திருச்சி- மதுரை சாலையில் துவரங் குறிச்சிப் பகுதியில் உண்டு. கல்லக்காரம்: அக்காரம் = இனிப்பு. அக்கார அடிசில் என்பது கற்கண்டுச் சோறு கல்லக்காரம் எனப் பனங் கற்கண்டை வழங்குதல் யாழ்ப்பாண வழக்காகும். கல்லடார்: கல் + அடார் = கல்லடார். அடு + ஆர் = அடார். கல் = மலை, மலை முழை(குகை); அடார் = அடுத்துப் பற்றும் பொறியாம். மூடு கல்பலகை. ஒரு விலங்கைப் பற்றிப் பிடிக்க மலைவாணர் கண்ட பொறிகளுள் ஒன்று கல்லடார். குகை வெளியை அளவிட்டு அதனை மூடும் வகையால் கல்பலகை அமைத்து, அதனைச் சற்றே வெளிப்புறம் சாய நிறுத்தி உள்ளாக விலங்கு விரும்பியுண்ணும் பொருளைத் தூண்டில் புழுப்போல் தொங்கவிட்டு வைப்பது அடாராம். மூடுபலகையின் உள்ளே புகுந்து தீனியைப் பற்றி இழுக்கும் போது அடைப்புப் பலகை உள்சாய்ந்து மூடிக் கொள்ளும். உள்ளே புகுந்த விலங்கு வெளிப்படாமல் மாட்டிக் கொள்ளும். பின் அதனைப் பற்றிக் கொள்வர். எலிப்பொறி, புலிக்கூண்டு ஆயவற்றின் முன்னோடி கல்லடாராம். தினையைக் கவர வரும் பன்றியைப் பற்றுவதற்காகப் புனவரால் வைக்கப்பட்டது. பின்னே வேட்டையரால் புலியைப் பற்ற அப்பொறி ஆக்கப்பட்டது. தினையுண் கேழல் இரியப் புனவன் சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் -நற். 119 இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டி பெருங்கல் அடாஅர் -புறம். 19 புழைதொறு மாட்டிய இருங்கல் அரும்பொறி என்னும் மலைபடுகடாத்தால்(194) சுட்டப்படுவது அடாஅர் பொறியேயாம். அடுத்து வரச் செய்து பற்றுதற்கமைந்த பொறி. அடு + ஆர்= அடார். ஆர்த்தல் = கட்டுதல், பற்றுதல். கல்லம்பலம்: கல் + அம்பலம் = கல்லம்பலம். கல்லால் கட்டப்பட்டதும் ஊரவை கூடுவதற்காக அமைந்ததும் கல்லம்பலம் ஆகும். இவ்வூர் கல்லம்பலத்து சந்திராதித்தவல் ஆற்றுத் தண்ணீர் அட்டுவதாக குடுத்த னிலம் தெ.க.தொ. 8:607 ஊரவை கூடுதற்குரிய பொதியில் என்பது ஊர்ப்பொது விடத்தமைந்த மரம்; பின்னர்க் கல்லம்பலம் ஏற்பட்டமைச் சான்று இது. கல்லளை: கல் + அளை = கல்லளை. கல்லாவது மலை; அதிலுள்ள இயற்கை முழை(குகை) கல்லளை எனப்பட்டது. அள்ளல் என்பது சேறு. அதில் சேற்று நண்டு சேற்றைக் கிள்ளி அதற்குரிய அளையை(வளையை) அமைக்கும். அவ்வளைப் பெயர், கல்லில் அமைந்த முழைக்கும் ஆகியதே கல்லளை என்பதாம். புலவு நாறு கல்லளை -குறுந். 253 புலிசேர்ந்து போகிய கல்லளை -புறம். 86 கல்லறை: கல்லால் கட்டப்பட்ட அறை கல்லறை ஆம். ஆனால் கல்லறை என்பது இறந்தாரை அடக்கம் செய்வதற்குக் கல்லால் கட்டப்பட்ட அறையே கல்லறை எனக் கிறித்தவ சமய வழக்காயிற்று. கல்லறைத் தோட்டம் என்பது அச்சமயப் பொது இடுகாடு ஆம். பெட்டியில் வைத்து அடக்கம் செய்து அதனைக் கல்லறையுள் வைத்து அதனை மூடிக்கட்டிய கல்லறை மேல் பெயர் முதலாம் மற்றவை பொறித்துச் சமயக் குறியொடு தோன்றச் செய்யும் வழக்கினது. பிரமிடு என்னும் பெரும் பாரிகைக் கல்லறை பழங்கால மாமன்னர் நினைவுச் சின்ன அடக்க நிலையங்களாம். கல்லாமேடு; கல் + ஆம் + மேடு = கல்லாம்மேடு > கல்லாமேடு. கற்பாறையும் அதன் மேல் மண் மேடுமாய் அமைந்த நிலமும் ஊரும் கல்லாமேடு ஆகும். கல்லகம் என்பதனினும் மேடானது. தண்ணீர்த் தட்டுப்பாடு உடையது. மழை பெய்தாலும் உள்வாங்குதலோ நிற்றலோ இல்லாமல் உடனே வழிந்து ஓடுவது. உரிய வகையில் கரையிட்டுத் தடுத்தால் தண்ணீர் கிணறு வழியாகவே நீர்பெற முடியும். கல்லுதல் = துளைத்தல் துளைத்தற்கும் அரியகல் மேடு என்னும் பொருளும் தரும் அல்லவா! கல்லாறு: கல்லை உருட்டிக் கொண்டு வரும் ஆறு கல்லாறு. குறுமணல் அதில் காணல் அரிது. பிறவகை ஆறுகள் வருமாறு: ஐயாறு = ஐந்தாறுகள் கூடி வரும் ஆறாம் காவிரியேஐயாறு. கரும்பாறு = இன்சுவை நீர் உடைய ஆறு. காரியாறு = கருமண் வழிவந்த ஆறு. காவிரியாறு = காக்கள் ஊடு ஓடும் பெற்றியால் காவிரி; இசைப்பாடலில் காவேரி. குடகனாறு = குடகில் இருந்து வரும் ஆறு. குமரியாறு = குமரி நிலத்துக் குமரி மலையில் இருந்து வந்தது குமரியாறு கூட்டாறு = ஈராறு கூடுவது கூடுதுறையாம் கூட்டாறு. கூவகவாறு = கிணறன்ன சுனை தொடங்கி வந்த ஆறு. தெற்காறு = திசையால் பெற்ற பெயரால் இது. வடக்காறு என்பதையும் எண்ணுக. தமிழக நில அமைப்பால் மேணை கீழணை உண்டேயன்றி மேலாறு, கீழாறு இல்லை. பஃறுளியாறு = கலவித்துப் பலவாறுகளின் கூட்டாறு. பாம்பாறு = நெளிந்து வளைந்து செல்லும் ஆறு. பூவானியாறு = பூப்போலும் திவலை தெறிக்க ஓடும் ஆறு (பவானி) பெரியாறு = பெரிய ஆறு; பேராறு. (வண்டிப் பெரியாறு). பொருநை ஆறு = அலை கொழிக்கப் பொருபடை போல் செல்வதும் கடலொடு கலப்ப துமாம் ஆறு. பொருந்தம் என்பதும், ஆன் பொருந்தம் என்பனவும் அது. பொருநை யின் தாம்பரச் சிறப்பு தாம்பிரவரணி ஆயது. பொறையாறு = அமைந்து செல்லும் சமநிலத்தாறு. பொன்னி = பொன்போலும் நெல்வளம் பெருக்கும் ஆறு. முல்லையாறு = முல்லைக் காட்டின் ஊடறுத்துவரும் ஆறு. மூணாறு = மூன்றாறு கூடிய ஆறு. வையை ஆறு = வையம் (ஓடம்) வைத்துக் கடக்கும் ஆறு. குறிப்பு: வசிட்டா நதி முதலாகப் பெயரும், நதி ஒட்டும் வந்தால் அப்பெயர் பொய்மைப் புனைவென்று முடிவு செய்க. * ஆறுகள் காண்க. கல்லி வயக்கின நிலம்: கரடு முரடாகவும் கள்ளி முள்ளியாகவும் இருந்த நிலத்தைத் தோண்டியும் சமப்படுத்தியும் விளைநிலமாகச் செய்தது கல்லி வயக்கின நிலம் வயல். நிலமாக்குல், வயக்குதல் எனப்பட்டதாம். நாட்டாண்மை மங்கலத்துத் திடல் கல்லி வயக்கின நிலம் இரண்டுமா (தெ.க.தொ. 8. 556) கல்லுமுறி: கட்டுப்படுவதற்கு அடையாளமாக ஊர்க்கூட்டத்தார் முன்வைக்கப்படும் கல், கல்லுமுறி எனப்படும். இது திருப்பரங் குன்ற வட்டார வழக்கு. முறி என்பது எழுத்து ஓலை. கல்லே எழுத்து முறியாகக் கொள்ளப்பட்ட கல்வெட்டை நோக்கலாம். முறியில் எழுதப்பட்டதே கல்லிலும் செம்பிலும் வெட்டப்பட்ட பழ வரலாற்றுச் சான்றும் ஆகலாம். கல்லும் கரடும்: கல் = வளமற்ற பாறை அல்லது குன்று. கரடு = கல்லும் மண்ணும் கலந்த திரடு. வளமானது மலை; வளமற்றது கரடு என்க. கரடு முரடு என்பதில் கரடு பற்றிய குறிப்பைக் காண்க. கல் என்பது கரடு என்பதன் இணைச்சொல்லாக வந்தமையால் தனிக் கல்லைக் குறிக்காமல் நீர்ப்பசையற்று வறண்ட கல்லாஞ் சரளை எனப்படும் நிலப்பகுதியைக் குறிக்கும் என்க. கல்லும் கரடுமாய இடம் பாலை எனப்படும். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பழிந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்பது சிலம்பு (11: 64-66) கல்லும் கரடுமாய வழி கல்லதர் அத்தம் (சிலப். 16:57) என ஆளப்படும். கல்லும் கரம்பையும்: கல் = சின்னஞ் சிறிய கல்துகள் அல்லது மணல் கரம்பை = சின்னஞ் சிறிய கருமண் கட்டி. அரிசியிலோ, பருப்பிலோ கல்லும் கரம்பையும் கிடக்கிறது. பொறுக்க வேண்டும் என்பது வழக்கு. கரிசல் மண்ணும், அதன் சிறிய கட்டியும் கரம்பை என்ப்படும். கருநிற மண்ணாதலால் கரம்பை எனப்பட்டது. கரடு, கரடி என்னும் பெயர்களை நினைக. நெல், பயறு அடிக்கும் களங்களில் கிடந்த கல்லும் கரம்பையும் அவற்றுடன் சேர்ந்து வந்து விடுவது உண்டு. ஆனால், இப்பொழுது கலந்து விற்பதே கலையாகி விட்டது. கல்லும் கரைதல்: கல்லும் கரைதல் = இரக்கமில்லானும் இரங்கல். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது பழமொழி. கல்லையும் கரைய வைக்க முடியும் என்பதை அது காட்டும் . ஆனால், இக்கல் கரைதல், கல்போன்ற உள்ளம் கரைந்து இரங்கி உதவுதலாம். சிலர் கையை அறுத்துக் கொண்டாலும் தொட்டுத் தடவச் சுண்ணாம்பும் தரார் எனப் பேர் பெற்றிருப்பர். அத்தகையரும், சில வேளைகளில் ஏதோ உதவக் கண்டால், அந்தக் கல்லுமா கரைகிறது அந்தக் கல்லுக்குள்ளுமா ஈரம் இருக்கிறது என்பர் இரங்காதவர் இரங்குதல் என்பது பொருளாம். கல்லும் கள்ளியும் நாட்டல்: அரசனால் அறத்திற்கென வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையாகக் கல்லும் கள்ளியும் நாட்டப்பட்டமை குறிக்கும் தொடர் இது. நாட்டோமுக்குத் திருமுகம் வர எதிரெழுந்து சென்று தொழுது வாங்கித் தலைமேல் வைத்துப் பிடிசூழ்ந்து பிடாகை நடந்து எல்லை தெரித்து கல்லும் கள்ளியும் நாட்டி அறவோலை செய்த நிலம். பெரிய ஆனைமங்கலம் செப்பேடு (க.க.சொ,அ) கல்லூரி: கல்லூரி மல்கிய காலம் இது. இச்சொல்லை வழங்கிய பெருமையர் திருத்தக்க தேவர் (சிந்தா 995) கல்வி நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடுதல் ஆகாது. ஆங்கிருந்து ஊர்ந்து ஊருக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் ஆக வேண்டும். கற்றவர் அன்றிக் கல்லாரும் கேட்டறியும் செல்வராய்த் திகழ வேண்டும் என்பதால் கல்லூரி எனப்பட்டதாம். கல் என்னும் ஏவலே கல்வி சுட்டிய அருமையது. கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன் என்னும் தொடரில் வரும் எதிர்மறை முதனிலை கல்வி சுட்டல் அறிக. கல்லெடுத்தல்: இறந்தார்க்குச் சுடுகாட்டில் செய்யும் மூன்றாம் நாள் சடங்கு இது. எரிந்துபட்டு எஞ்சிய எலும்பை எடுத்து அடுக்கி நீராட்டிப் புதைத்து அதன்மேல் நினைவுக் குறியாகக் கல்நாட்டுவது கல்லெடுப்பாகும். நடுகல் மூலம் இதுவாம். கவசம்: கவசம் = மெய்மறை, தலைச்சிராய், கைத்தோல். கவவு > கவசு + அம் =கவசம். சுற்றி வளைத்துப் பற்றிப் பிடித்தல் கவசமாம். கவவு அகத்திடுமே -தொல். 840 கவவுக்கை நெகிழாமல் -சிலப். 1: 61 ஒ.நோ.: விரவு > விரசு. பரவு > பரசு. கவடு: கவ > கவடு. கவ > கவை = இரட்டை. கவடு = இடுப்பில் இருந்து இரண்டாகப் பிரியும் தொடைகள். கவட்டுக்குள் பாய்தல் என்பது இரு கால்களுக்கும் இடையே விரைந்து செல்லுதல். அதுபோல் இருவர் செயல்களுக்கு இடையே ஒருவர் புகுந்து அவர் விருப்பம் போல் செய்தல் கவடு பாய்தலாம். ஒரே ஒருமையாம் பொழுதில், வஞ்சமாம் இரட்டை நிலையில் ஒருவர் செயல்படுதல் கவடு எனப்படும். அவ்வாறு செயல்படுவார் கவடர் ஆவர். இரட்டை யாகப் பிரியும் கவண். கவட்டை என்னும் கல்லெறி கைப்பொறி உண்டு. மதில்மேல் ஓர் உறுப்பு, தொலைவில் வருவாரைக் குறிவைத்து அடிப்பது கல்லுமிழ் கவணும் என்பது சிலம்பு (15:208). கவட்டை: மாட்டுத் தரகர். குழுமொழியாகக் கவட்டை என்பர். இது இரண்டு உருபா என்பதைக் குறிக்கும். கவைத்தலை = இரட்டைத்தலை. கவைமகன் என்பார் ஒரு சங்கப் புலவர். கவைமகன் என்று அவர்தம் பாடலில் கூறியதால் பெற்ற பெயர் அது (குறுந். 324). கவணி: தோல் துண்டைக் கவணி என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. கவணுக்குப் பயன்படும் துண்டுத்தோல், பின்னர் மற்றைத் தோல் துண்டையும் குறிப்பதாகலாம். கவரிமா: எருது போன்றதொரு விலங்கு. அடர் மயிர்க்கற்றை யுடையது. இமய மலையாம் பனிமலைப் பகுதியில் வாழ்வது. இமயத்து வாழும் அதனைப் புறமும் (132), பதிற்றுப்பத்தும் புகல்கின்றன. (11, 21, 23). கவரி > சவரி = சடை. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் என்பது திருக்குறள் (969). நீத்தல் என்பது முற்றிலும் நீங்கல். Ú¤jh® bgUikí« (âU¡.), நீத்தல் விண்ணப்பமும் (திருவா.) காண்க. கவர்: ஒரு வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலைக் கவர் என்பது உழவர் வழக்கம். ஒரு பனை, மேலே இரண்டாகப் பிரிந்து செல்லுதலால் கவர்பனை என்னும் பேரும் ஊரும் பெரம்பலூர் வட்டாரத்தில் உண்டு. கவர்த்தல், பிரிதல். கவலை: கவலை:1 ஒரே வேளையில் உண்டாகும் இருவகைச் செயல்தவிப்பு. இதைச் செய்வதா அதைச் செய்வதா என்னும் இடர்நிலை (ம.வ.) கவலை:2 பலவாகப் பிரியும் வழி. கவலை மறுகு - மலை. 482 கவலை:3 பலவாகப் பிரியும் கிழங்கு. எ-டு: கவலைக் கிழங்கு. கவாடம்: கவவு + வாடம் = கவவாடம் > கவாடம் (கபாடம் (வட)) கவவுதல் = பொருந்துதல். கவாடம் = நிலையைப் பொருந்தி யமைந்ததும் இரண்டாகிப் பொருந்தி யமைந்ததும் ஆகிய கதவு. கவாடம் திறமினோ - கலிங். கடைதிறப்பு ஒ.நோ.: தளம் + வாடம் = தளவாடம். கவி: கவி என்பது குனி, கவிழ் என்னும் பொருள் தரும் ஏவற்சொல். அது தலை கவிழ்ந்து அல்லது கவிந்து இருக்கும் குரங்குக்குப் பெயர்ச் சொல்லாயும் அமையும். களவு செய்து பிடிபட்டவன் ஊர்மன்றில் நிறுத்தப்பட்ட போதில் தலைகவிழ்ந்து நின்று காலால் நிலங்கிளைத்தலைப் பண்டே யன்றி இன்றும் காணலாம். களவுக் காதலன் தலைவியை நோக்கினான்; அவள் நிலம் நோக்கினாள். அவள் கண்ணுக்கு ஒப்பாகேன் என்று குவளை நாணிக் கவிழ்ந்தது. காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று என்று திருக்குறள் (1114). கலங்கவிழ்தலும் கலயங் கவிழ்தலும் நாம் அறிந்தவை. அரசுகள் கவிழ்தலை இதழ்கள் வழியே எவரும் அறிவோம். பூனைக்காலி என்னும் செடிக்குக் கவி என்பதொரு பெயர். அதன் பூ கவிழ்ந்திருப்பதால் பெற்ற பெயர். கவிழ் தும்பை என்னும் செடிப் பெயரும் கவியும் பூவால் பெற்றதே. கண்ணேரில் எதிர் வெளிச்சம் தாக்குகிறது. அதனைக் கண்டு ஒதுங்க வேண்டும். இயல்பாக என்ன செய்கிறோம்! நெற்றிப் புருவத்தின் மேல் கையைக் கவிழ்த்துக் கண்ணை இடுக்கிப் பார்க்கிறோம். இப்பார்வையைச் சங்கப்பாடல் கவிகண் நோக்கு என்கிறது (புறம்.3). முகில் செறிந்து மழை பொழியும் நிலையில் தாழ்வதை வானம் கவிழ்ந்ததாகக் கூறுதல் வழக்கு மேகங் கவிகின்றது மழை உடனே வரும் என்பதைக் கருதுக. கவிதல் என்பது கவிகம் எனவும் கூறப்படும். குதிரையின் வாயைச் சுற்றிக் கவிந்துள்ள கடிவாளத்திற்குக் கவிகம் என்பது பெயர். குடைவமைந்த பொருள் குடை எனப்படும். குடைதல் தொழில் பழமையானது. குடைவரை கோயில்கள் அதற்குச் சான்று. இந்நாளில் தொடரி (Train) செல்வதற்குத் தக்கவாறு குடைவுகள் மலைகளில் உண்டாக்கப்படுகின்றன. கோலார் தங்க வயல் வளம் குடைவு வளமே. சுற்றிச் சுற்றி நீரில் நீந்தியாடுதல் குடைதல் எனப்படும். குடைவு என்பதும் கவிவு என்பதும் ஒரு பொருளதாதல் அறிக. குடைதல் வளைவு வட்டம் ஆகிய பொருள்களைத் தருதலால், நடுவுயர்ந்து சூழவும் தாழ்ந்து வளைந்துள்ள குடைக்குக் கவிகை என்பது பெயராயிற்று. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ் தங்கும் உலகு என்றார் திருவள்ளுவர் (389). அதிவீரராம பாண்டியன் அரண்மனையில் குடைபிடிக்கும் ஏவலரும் பாவலராகத் திகழ்ந்தனராம். அதனால், கவிகை ஏந்தியவரும் கவிகை யேந்தினர் என்றொரு வழக்கு மொழி எழுந்தது. கவித்தல் என்பது வட்ட வடிவப் பொருளின் வாய்ப்புறம் தலைகீழாக வைத்தலாகும். முடி சூட்டுதலும் கவித்தலேயாம். அது முடிகவித்தல் எனப்படும். இருகை விரல்களையும் மூடி வைத்தலை இருகையும் கவிந்தமாக்கி என்னும் கந்தபுராணம் (காவிரி.40) கவித்தம் என்பது கூத்தின் கை வகையுள் ஒன்றுமாம். கவிப்பு என்பதும் தலையில் கவிக்கும் முடியைக் குறிக்கும். குடையைக் குறித்தலும் உண்டு. வணிகர் பெற்ற சிறப்புப் பட்டங்களுள் கவிப்பர் என்பது ஒன்று. அரசரால் ஒருவகை முடி கவிக்கப்பட்ட சிறப்பால் பெற்ற பெயர் அதுவாகும். கொடுக்கும் கை கவிதல் கண்கூடு. அது வானம் கவிந்து பொழிவது போல்வது. ஆதலால் கொடைக் கையை வானம் வழங்குதலோடு ஒப்பிட்டுக் காரினை வென்ற கவிகையான் என்கிறது புறப்பொருள் வெண்பா மாலை (9:29) கவிச்சி அல்லது கவிழ்ச்சி என்பது சுற்றிச் சுற்றி அல்லது சுழன்று சுழன்று ஓரிடத்து அல்லது ஒரு பொருளில் அடிக்கும் நாற்றத்தைக் குறிக்கும். இதனைக் கவிச்சியடித்தல் எனப் பல வடிவுகளில் வழங்குகின்றனர். இவற்றை நோக்கக் கவி என்னும் சொல்லின் வடிவும் பொருளும் தெளிவாம். இது வளர்ந்து பல சொல்லாய் விரிந்த நிலையும் விளங்கும். ஆகவே, குரங்கைக் குறிக்கும் கவி என்னும் சொல் தமிழ்ச்சொல்லே என்பது வெளிப்படையாம். இனிக் கவிதை என்பது எம்மொழிச் சொல் எனின் கவி என்பதன் வழியே கிளர்ந்த சொற்கள் காலந்தோறும் வளர்ந்து பெருகிய வளர்ச்சியில் பிற்காலத்தோரால் அமைத்துக் கொள்ளப்பட்டது. கவி, கவிதை, கவிஞர் என்பவை என்க. கவி, கவிதை ஒப்பு நோக்குக. பழு, பழுதை. செய்யுள், பாட்டு, பா, யாப்பு, தூக்கு, தொடர்பு, பனுவல் இன்னவை பழைய ஆட்சியுடையவை. அத்தகு பழமையாட்சி யின்றி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளின் முன்னர்த் தோன்றிய தமிழ்வழிப் புத்தாக்கச் சொல் கவிதை முதலியனவாம். கற்பார் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு கவியச் செய்யும் சொல்லும் பொருளும் வாய்ந்தது கவிதை. தென்னுண் தேனின் செஞ்சொற் கவியின்பம் என்றார் கம்பர். கவிப்பா அமுதம் என்பார் பாவேந்தர். இவை கவித்து - கவர்ந்து - இன்பஞ் செய்தலைக் குறிப்பவை. கவின்: கவ்விப் பிடிக்கத் தக்க அழகுடையது கவி, கவின். உள்ளத்தைக் கவித்து ஈர்த்து நிறுத்த வல்லதாகலின் கவின் எனப் பெற்றதாம். கை புனைந்தியற்றாக் கவின் பெறு வனப்பு என்பது நக்கீரர் வாக்கு (திருமுரு. 17) கவிர்: அடிமரம் ஒன்று; அது இரண்டாகப் பிரிகிறது, அதனைக் கவை என்பர். அதில் பிரிவது கொம்பு எனப்படும். கொப்பு என்பதும் அது. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் என்பது ஔவையார் பாடல். கவிர்என்பதும்இரண்டாகப் பிரிவதேயாம். முள் முருங்கைப் பூ. இரண்டாகப் பிரிந்து வளைந்து ஒன்றாகத் தலைக்கூடும். பற்றுக் குறடு போல் அது தோன்றும். அழகிய சிவப்பு நிறமாகப் பூ இருக்கும். கவிர் இதழ் அன்ன காண்பின் செவ்வாய் என்னும் அகப்பாடல் (4) மகளிர் சிவந்த வாய் கவிர் இதழ்போல இருப்பதைக் கூறுகிறது. காவியங் கண்ணும் மூடா கவிரிதழ் தாமும் கோடா என்பது அரிச்சந்திர புராணம். கவண், கவட்டை, கவடு, கவிர், கவை, கவைத்தலை, கவலை முதலிய எல்லாம் கவர் என்னும் அடிச்சொல் வழிப்பட்டவை யாம். கவுல்: இச்சொல் வஞ்சம் என்னும் பொருளில் தென்காசி வட்டாரத்தில் வழங்குகின்றது. யானை தனக்குத் தீமை செய்த வரைப் பழிவாங்குவதற்குக் கன்னத்துள் கல்லை வைத்துக் கொண்டிருக்கும் என்னும் நம்பிக்கை வழி இப்பொருள் உண்டாகியிருக்கலாம். கவுள் = கன்னம். கவுளி: கைப்பிடி அளவாம் வெற்றிலையைக் கவுளி என்பது வெற்றிலைக் கொடிக்கால்காரர் வழக்கம். கையால் பற்றிப் பிடிக்கும் அளவு கவுளியாம். கவவுக்கை என்பது சிலப்பதிகாரம் (1:61). கவைத்தலை: இருதலை கவைத்தலை எனவும் பெறும். தலை இரண்டும் உடல் ஒன்றும் அமைந்த மகவு கவை மகவு எனப்பெறும். கவை மகவினை உவமைப்படுத்திய புலவர் பெருமகனார் கவைமகனார் என வழங்கப் பெற்றார் (குறுந். 324). கவைமக நஞ்சுண் டாஅங் கஞ்சுவல் பெருமஎன் நெஞ்சத் தானே என்பது அவர் வாக்கு. இளஞ்சிறார் கல் ஏவி விளையாடுதற்குப் பயன்படுத்துங் கவண், கவணை, கவட்டை என்னும் பெயருடைய கருவியை அறிக! ஒரு மரக்கொம்பு இரண்டாகப் பிரிவதைக் கவட்டை என்று வழங்குவதையும், இரு தொடைப் பொருத்துவாயைக் கவடு என்பதையும் கருதுக. உள்ளொன்று வைத்துப் புறமொன்று சொல்லி இருநெறிப் படச் செல்லும் தன்மை, கவடு என்று வழக்கில் உண்மையைக் கண்டு தெளிக. பாம்பின் பிளவுபட்ட நா, கவைநா என இலக்கிய வழக்கில் உண்மையும் கொள்க! கவ்வாங்கல்: கவட்டை என்னும் கவணையில் வைத்து அடிக்கும் கல்லைக் கவ்வாங்கல் என்பது நெல்லை வழக்காகும். கவ்வக் கலந்து என்பார் வள்ளலார் (கடிதம்). இரண்டறக் கலத்தல் அது. கல் கவட்டையில் இறுக்கமாக இருப்பது குறிக்கும் இது வில்லை இறுக்கிப் பிடிக்கும் கை (வில்லக விரல்) என்னும் சங்கத் தொடரை நினைவூட்டும். புலவர் வில்லக விரலினார் (குறுந். 370). கவட்டை என்பது இருதலைக் கட்டை . கவை = இரண்டு. கவட்டையைக் கவண்டி என்பது பேராவூரணி வட்டார வழக்கு. கவுட்டை என்பது கோவை வழக்கு. கவ்வை: கவ்வை:1 கவ்வு + ஐ + கவ்வை, கவ்வல் = கடித்தல், பற்றுதல். அரவோ முதலையோ கவ்விக் கொண்டாற் போன்ற கடுந்துயரம். வேந்தர் வேந்தன் கவ்வையொழிந் துயர்ந்தனன் - கம்.பால. 245 கெளவை > கவ்வை. காயெரி யுற்றனர் அனைய கெளவையர்- கம். அயோ. 478. கவ்வை:2 கெளவை > கவ்வை = அலர். கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து - திருக். 1144 * கெளவை காண்க. கழகம்: கழங்கு என்பதோர் ஆடற்பெயர். கழங்காடல் என்பது அது. அதற்குப் பயன்படும் காய் கழற்சிக்காய் ஆகும். கைக்கண் எடுத்து மேலே ஏறவிட்டுக் கீழே வருங்கால் பிடித்து மீண்டும்மேலேற விடுதல் கழங்கு விளையாடுதல் ஆகும். அதனால் அக்கழங்காடிய இடம் கழகம் எனப்பட்டது. கழல விடப்பட்ட பரல்களையுடைய காலணி கழல் எனப்பட்டமை அறிக. கழங்காட்டம் போட்டியாட்டமாய் அமைந்தது. அதன் வளர்ச்சியாய் அமைந்தது சூதாட்டம். ஆதலால் அச்சூதர் கூடிய இடமும் அவர்கள் கூட்டமும் சூதர் கழகம் எனப்பட்டன. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் என்றார் திருவள்ளுவர் (937). பின்னே கம்பர் காலத்தில் இளையர் பயிலும் களரிப் பயிற்சிக் கழகமாகக் கொள்ளப்பட்டது. அவர், கந்தனை அனையவர் கலைதெரி கழகம் என்றார் (பால. நாட்டுப். 48). சூதர் கழகம் களரிக் கழகமாய் வளர்ந்து மேலே அறிஞர் ஆய்வுக் கழகமாய் விளங்கியதால், கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் என்றார் பரஞ்சோதியார் (திருவிளை. பாயி.) சொல்லின் பொருள் நிலை காலந்தோறும் மாறுதல் அடைதலும் அம்மாறுதல் பெருமைப் பொருளும் சிறுமைப் பொருளும் தருதலும் வழக்கமாம். இந்நாளில் கழகம் பதிப்பகமாய், கட்சியாய், அரசியலாய் விரிந்தமை அறிவனவே. கழல்: கழல் = ஆடவர் காலணிகளுள் ஒன்று. பரல்கள் கலகல என ஒலிக்கக் காலில் கழலவிடப்பட்ட அணி ஆகலின் கழல் எனப்பட்டதாம். வீரக்கழல் என்பதும் அது. தாள், களங்கொளக் கழல் பறைந்தன - புறம். 4 வில்லோன் காலன கழலே - குறுந். 7 காலது புனைகழல் என்பது வீரத்திற்கும் வென்றிக்கும் கட்டின; போர்தொறும் வென்று கட்டின என்றுமாம் (புறம். 100, ப.உ.). கழற்றி விடுதல்: கழற்றி விடுதல் = பிரித்தல். ஒரு கட்டில் இருந்தோ, பிணைப்பில் இருந்தோ பிரித்தல் கழற்றல் எனப்படும். அணிகலன்களைத் திருகுவாய், பூட்டுவாய் ஆகியவற்றிலிருந்து பிரித்தலும் கழற்றுதலே. இத்தகையன பருப்பொருளாம் கழற்றுதல். ஒரு நிகழ்ச்சியில் இருந்தோ, கூட்டத்தில் இருந்தோ, சிக்கலில் இருந்தோ உறவு, நட்பு ஆகியவற்றில் இருந்தோ தம்மைப் பிரித்துக் கொள்ளுதலும் கழற்றுதலாக வழக்கில் ஊன்றியது. அவன் முழுதாகத் தன்னை நம்மிடமிருந்து கழற்றிக் கொண்டு விட்டான். என்பது பெருவழக்கு. கழனி: கழல் > கழன் > கழனி = மண்ணின் இயற்கை, செறிவு. மண்திணிந்த நிலன் எனப்படும் (புறம். 2). ஆனால் கழனி, நீராலும் பண்படுத்தலாலும் இலைதழையாலும் செறிவு குறைந்து கால்வைத்தால் சேறும் செதும்பும் ஆக்கப்படுதலால் கழனி எனப்பட்டது. கழனி நெல்நடவுக்கு உரிய நிலமாகும். மருதம் மென்னிலம் எனப்படும். அதனினும் மென்னிலம் கழனியாம். ஆனால் களர், அளறு, உளைமண், உவர்மண் அல்லாத மண் கழனி ஆகும். கால் வைத்தால் பதியத் தக்கதாய் மண் விலகி அகல்வதாய் உள்ளதே கழனி என்க. கழனி ஆயிரம் விளையுட்டாக, காவும் கழனியும் என்பவை புலமையர் வழக்காகும். கழன்றது: கழன்றது = பயனற்றது, தொடர்பற்றது. பொருத்துவாய் கழன்றுவிட்டால் அக்கருவி பயன்படுதல் இல்லை. கழன்ற அகப்பை எனச் சிலரைச் சொல்வதுண்டு. தேங்காய் ஓடும், கைபிடிக் காம்பும் உடையது மர அகப்பை. அதன் காம்பு கழன்றுவிட்டால் தேங்காய் ஓட்டை வைத்துப் பயன்கொள்ள முடியாது. காம்பை வைத்தும் பயன்கொள்ள முடியாது. முன்னது ஒழுகிப்போம்; பின்னது அள்ள வாராது. இதனைக் கருத்தில் கொண்டு கழன்ற அகப்பை என்றால் பயனின்மைப் பொருள் வழக்கில் உண்டாயிற்று. உனக்கு மரை கழன்று விட்டதா என்றால் ‘மூளைக் கோளாறா? என்பது பொருளாம். இங்குக் கழற்றுதல் என்பது தொடர்பின்மைப் பொருளது. கழி: கழி என்பது மிகுதிப் பொருள் தரும். ஆதலால், சால உறுதவ நனிகூர் கழிமிகல் என்றார் நன்னூலார் (431). கற்பக் கழிமடம் அஃகும் - நான்மணி. 27 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார் என்றது குறள் (404). இங்குக் கழிய என்பது மிகுதிப் பொருளே தந்தது. கழிபே ரிரையான் என்று குறளே (946) சொல்வதால் கழி, கழிய, கழிவு என்பன ஒப்பன எனவாம். கழிமுதுக்குறைமை என்கிறது குறுந்தொகை (217), முதுக்கு உறைதல் என்பதே பேரறிவாம். அதனினும் பேரறிவைக் கழிமுதுக்குறைமை என்கிறது. கழிநெடிலடி என்பதும் அன்னதே. உள்ளது என்றது முன் சிறவாதுள்ளது என்றவாறு என்னும் சேனாவரையர் உரையை மீள நோக்க வைக்கிறது கழிமுதுக்குறைவு. ஏனெனில், முன்னரே முதுக்குறைவுடையது அஃதாதலின். ஆதலால் இயல்பாக உள்ளது மேலும் சிறக்கும் எனக் கொள்ளல் தகவாம். கழிபெருஞ் சிறப்பு - தொல். 1013 கழிபடர் உறீஇ - தொல். 1029 இனிக் கழிவு என்னும் சொல் இறந்த காலம் (1103), முடிந்த செயல் (737) என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஆதலால், கழி என்பதே உரிச்சொல் வடிவு எனக்கொள்ள ஏவுகின்றது. கழிவு என்னும் ஆட்சியில் மிகுதிப் பொருள் வருதல் அறிந்தால் அன்றி அப்பாடம் கொள்ளல் ஆயத் தக்கதாம். கூர்ப்பும் கழியும் உள்ளது சிறக்கும் எனப் பாடம் இருந்து படி எடுத்தோர் கழியும் என்பதைக் கழிவும் என எழுதினரோ என எண்ண வேண்டியுள்ளது. ஆனால், தொல்காப்பிய மூலம் பாடவேறுபாடுகள் ஆழ் நோக்காய்வுப் பதிப்பில் பாட வேறுபாடு உள்ளதாகக் காட்டப் படவில்லை என்பதும் அறியத் தக்கதாம். கழிசடை: கழிசடை என்பது வசைச் சொல்லாக வழங்குகிறது. அவன்(ள்) ஒரு கழிசடை, கழிசடைப் பயல், அந்தக் கழிசடையுடன் ஏன் பேசுகிறாய்? இப்படிக் கேட்கும் செய்திகள் நாளும் உண்டு. கழிதல், அகலுதல் பொருளது; வழிதல், வழிந்தோடுதல் என்பனவும் அவ்வழிப் பொருளவே. கழிச்சல் நோய் (பேதி) என ஒரு நோயே உண்டு. வயிற்றுப் போக்கு என்பது அதன் பொருளைக் காட்டும். கக்கல், கழிச்சல் என்பவை (வாந்தி, பேதி) சேர்ந்திருந்தால் என்னாம்? கால்கழி கட்டில் என்பது இறந்தோரைக் கிடத்தும் காலில்லாக் கட்டிலாம் (பாடை). இவண் கழிதல் இன்மையைக் குறித்தது. கழிந்தது பொழுது என்பதில் பொழுது முடிந்து போனதைச் சுட்டிற்று. பொழுதைக் கழிக்கிறான் என்பது வேலையில்லாது நாளைக் கழித்தலைக் குறித்தது. கழிவாய் கழிமுகம் உப்பங்கழி என்பவை கடல் சார்ந்தவை. நிலத்திட்டுக் கழிந்த நீர்ப்பகுதி கழிவாய் எனப்பட்டது. அக்கழியில் படகு வந்து செல்லும் துறை கழிமுகம், உப்பு எடுப்பதற்காகப் பயன்படுத்தும் நீர்ப்பகுதி உப்பங்கழி. கழிகலன் மகடூஉ என்பது முந்தையோர் உரை: கலன் கழி மகளிர் என்பதும் அப்பொருளதே. கணவனை இழந்த கைம்மை மகளிர் மங்கல அணியைக் கழற்றல் வழியாக வந்த பெயர் இது. கழித்துக் கட்டுதல் என்பது தீர்த்துக் கட்டுதல். கருச்சிதைவைக் கழிப்பு என்பது சிற்றூர் வழக்கு. கருக்கலைப்பு, கருச்சிதைப்பு, கருவழிப்பு இவற்றிலெல்லாம் கரு உண்டு. கழிப்பு என்றாலே, கருக்கலைப்பைக் குறிக்கும் சொல்லாக வழங்குகின்றது. அதனைச் செய்தலில் தேர்ந்தவள் கலைப்புக் காரி எனப்படுகிறாள். அக்கழிப்பைக் கொண்டு செய்வினை முதலாகச் சொல்லப்படும் தீவினை செய்பவன் கழிவினையாளன் எனப்படுகிறான். கண்ணேறு கழித்தலும் கழிப்பே. அதற்கு வெள்ளிக் கிழமைகளில் வற்றல் உப்புப் போட்டு எரியூட்டுக் கழிப்புச் செய்தல் வழக்கு. கண்டதைக் கழியதைத் தின்னாதே என்னும் வழக்கை எவர் அறியார்? கண்டது, பார்த்த பொருள்; கழியது, உடலுக்கு ஆகாது, ஒவ்வாது என விலக்கப்பட்ட பொருள். சிலர் வாயடக்கம், மனவடக்கம் கொள்ளாமல் தின்று கெடுவதைத் தடுக்கும் கட்டளை இது. கழிவுப் பஞ்சும் காசாதல் தெரியுமே! கழிவு வைக்கோல் தாளும், கூரைத் தகடு ஆக அறிவியல் வளம் உதவுகிறதே! கழிப்பறை நகரத்தில் காணப்பட்டுச் சிற்றூர்க்கு வந்தமை சீரல்லவா! கட்டணக் கழிப்பறை கொடி கட்டிப் பறக்கும் காட்சியைப் பட்டணங்களிலும் சாலை வழிகளிலும் எவர் அறியார்? வேண்டாப் பொருள்களைப் போட்டு வைக்க வீடுகளில் கழிவறையுண்டு; செல்வர்கள் வீட்டுக் கழிவறைகளில் பல சிறு குடும்பங்களே வாழலாம். நால்வகைக் கணக்கிலே கழித்தல் இல்லையா? கூட்டிக் கழிக்கத் தெரியாதவர் பாடு, கணக்கில் என்ன பாடு? கூட்டிக் கழிக்கத் தெரியாத ஒருவர், வீட்டு வேலையாளாகக் கூட, காலந்தள்ள முடியாதே. கழீஇ, கழுவி, கழூஉ என்பனவெல்லாம் அகற்றுதல், அப்பால் படுத்துதல், போக்குதல் என்னும் பொருளவே. எத்தனை பேர்கள் என்னென்ன வகைக்கெல்லாம் கை கழுவியதாகச் சொல்கிறார்கள்! கழுவாய் தேட வேண்டும் என்ற எண்ணம் கூடப் பலர்க்கு வருவதில்லையே! மாசு போக்கி மணியாக்குதல் மணி கழுவுதல் என்றே வழங்கும். கழூஉமணி என்பது இலக்கண இலக்கிய ஆட்சிகள். கழிசடை என்பதைக் காண்போம். ஒருவரைக் கழிசடை என்றால் எவ்வளவு சினம் உண்டாகிறது? சினம் மட்டுமா? எப்படிச் சீறுகிறார்? சாய்க்கடை என்றால் எப்படி அருவறுப்பாகக் கருதுவாரோ அப்படியன்றோ கழிசடை என்றாலும் கருதுகிறார். கழிசடை என்பது என்ன? தலை சீவுகிறோம்; சீவும் போது மயிர், சீப்புடன் வருகிறது; உதிர்கிறது; சிலர் சீவாத போதும் மயிர்தானே உதிர்ந்து கொட்டுதல் அறிந்ததே; அந்த மயிரை என்ன மதிப்பு மதிக்கிறோம்; அது தலையில் இருந்த போது எவ்வளவு மதிப்பு அதற்கு? எத்தனை எத்தனை எண்ணெய் - மணம் - சீவுதல் - அழகுறுத்தல்! எத்தனை முறை கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்துக் களித்தல்! எல்லாம் என்ன ஆயின? உதிர்ந்த மயிர் உடலிலோ உடையிலோ ஒட்டியிருப்பின் அருவறுப்பாய்த் தொடாமல் தொட்டெடுத்து ஊதித் தள்ளுகிறோம். இல்லையேல் விரலால் சுண்டிக் கீழே வீழ்த்துகிறோம். கையையும் கழுவுகிறோம். இந்த மாற்றம் ஏன்? அதன் நிலைமாற்றமே இம்மதிப்பு மாற்றத்திற்கு அடிப்படை. இதனைத் தெளிவாகத் தெரிந்த திருவள்ளுவர் கற்பவர் நெஞ்சில் படுமாறு, தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை என்றார் (964). அவர் இதற்கு எதிரிடையையும் எண்ணினார். நிலையில் திரியாதவர் அவர். அதனால், நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்றார் (124). திருவள்ளுவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்தவரோ தெரியாதவரோ ஒருவர் கழிசடை என்றார். சடை என்பது தலைமுடி; அதன் கற்றை; அதன் பின்னல்; அதிலிருந்து கழிந்த மயிர்க்கு என்ன பெயர்? கழிசடை. சடையிலிருந்து கழிந்த மயிர் கழிசடை. இலைநுனி, ‘நுனி இலை’யாக வில்லையா?, இல்வாய், வாயில் ஆகவில்லையா? சடை கழி கழிசடை ஆயிற்று. இலக்கணம் தெரிந்தவர் இதனை இலக்கணப் போலி என்பர். எவரும் என்ன இலக்கணமும் சொல்லிக் கொள்ளுங்கள்; எங்களுக்குக் கவலை யில்லை என்று பொதுமக்கள் சொற்களைப் படைத்துவிட்டு விடுகிறார்கள். அவர்கள் படைத்த சொல்லுக்கு விளக்கம் இயல்பாய் - இனிமையாய் - அதே பொழுதில் அருமையாய் இருக்கிறது! ஏனெனில் அப்படைப்பாளியின் நோக்கம் படைப்பாக இருந்ததே யன்றிக் குறுகிய நோக்குப் புகவில்லை. விளக்கம் இருந்ததே யன்றி விருப்பு வெறுப்பு அருந்தது இல்லை. ஒரு குறளின் பொருளை ஒரு வழக்குச்சொல் கழிசடைச் சொல் தந்துவிடுகிறது என்றால் பொதுமக்கள் வழக்கு எப்படி எப்படியெல்லாம் போற்றிக் கொள்ளத் தக்கது. கழித்தல்: கழித்தல் = கருக்கலைப்பு. கழித்தல் கணக்கில் உண்டு. கழித்துக் கட்டல், ஒதுக்கிவிடல், தீர்த்துவிடல் பொருளில் உண்டு. ஆனால் இக்கழித்தல் அவ்வகைப்பட்டதன்று. கழிப்புக்குப் பண்டுவச்சியர் முன்பே இருந்தனர். அப்பொழுது கழிப்பது பழிப்பதற்கு இடமான செயலாக இருந்தது. கருச்சிதைத்தல் கடும்பாவம் என்னும் கருத்தும் இருந்தது. இதுகால் மலச்சிக்கல் நீக்க மருத்துவம் போல் இயல்பாகிவிட்டது. இப்பொழுதே கழித்துவிட்டால் எளிது கழிக்க நாட்பட்டால் வெளிப்பட்டு விடும் கழிக்க ஒன்றும் சுணக்கம் வேண்டா. எவருக்கும் ஐயம் வராது. என்பன வெல்லாம் எங்கும் கேட்கும் செய்திகள். எவரும் அறியார் என எண்ணி எல்லாரும் அறியச் செய்யும் செயல்கள் இவை. கழிப்பறை: கழிப்பு + அறை = கழிப்பறை. கழிப்பறை = இயற்கையாக உடலில் இருந்து வெளியேற்ற மாகும் நீர், மலம் ஆயவற்றைக் கழிக்கும் - போகச் செய்யும் - அறை கழிப்பறை ஆகும். கழிதல், கழிச்சல் என்பவை எண்ணாமலே வெளியேறும் மலவெளிப்பாடாம். * கழிவறை காண்க. கழிமுகம்: கழிமுகம்; வடிமுகம் என்பதும் இது. நீர் நிற்காமலும் தேங்கிக் கிடவாமலும் இயல்பாக வடிந்தோடும் கடற்பகுதி கழிமுகம் ஆகும். கழிதல் = வழிதல். கழிதல் அமைந்த இடம் கழிவாய் என்பதுமாம். கைதை வேலிக் கழிவாய் - சிலப். 7:43 கழியோடி: கடல்நீர் நிலத்துள் கால்போல் உள்வாங்கிச் செல்லுதல் கழி எனப்படும். அது படகுப் போக்குவரத்துக்குப் பயன்படும். அதனால் அது நெடியதாக இருக்கும். கழி நெடுமைப் பொருளது. அக்கழியில் செல்லும் படகு கழியோடியாகும். செலுத்துவாரும் அப்பெயர் பெறுவர். ஈழத்தில் கடற்படை ஊடறுத்துச் சென்று உள்நாட்டுள் அக்கழியைப் பயன்படுத்துதலால் கடற்படைக் கழியோடி என வழங்குகிறது. கழிவறை: கழிவு + அறை = கழிவறை. வேண்டாப் பொருள்களையும் பயன்படுத்த உதவாப் பொருள் களையும் போட்டு வைக்கும் கட்டடத்து ஒருபகுதி கழிவறை யாகும். கழிவறை வேறு, கழிப்பறை வேறு. * கழிப்பறை காண்க. கழிவு வகை: சக்கை = முந்திரி எலாமிச்சை முதலியவற்றின் கழிவு கொதக்கு = புளியின் கழிவு. கூந்தை = பனங்காயின் கழிவு. கோது = கரும்பின் கழிவு. (சொல். ஆ.க. 69) கொதக்கு கொத்தை எனவும் வழங்கும். கழு: கழு:1 தன்மேல் வைத்தது ஊடுருவிக் கீழிறங்குமாறு செய்யப் பட்ட வழுவழுப்பான கொலைக் கருவி. பண்டை நாளின் கொலைக் கருவியாகக் கழு இருந்தது. கழு வேற்றுதல் குற்றத் தண்டவகையுள் ஒன்று. சிலம்பில் உரையாசிரியர் இரண்டன் உருபு விரிக்க என்றதால் வந்த புனைவு ஆயிரம் பொற்கொல்லரைக் கழு வேற்றியது. கழு:2 கழுவில் மாட்டல் என்பதொரு வழக்கு முன்புண்டு. திருடியவனைக் கண்டு மெய்ப்பித்த பின் தரும் தண்டனை வகையுள் ஒன்று கழுவில் மாட்டல், கழுவில் போடல் என்பவை. இரண்டு கால்களையும் இயங்கா வகையில் இரண்டு துளைச் சட்டங்களின் இடையே வைத்து ஆணி திருக்கிக் கட்டையை அகலாமல் செய்வதே அது. குட்டையில் போடல், குட்டை மாட்டல் என்பதும் அது. பழநாளில் பள்ளிக்கு வாராத மாணவர்களைப் பற்றி வந்து கழுவில் மாட்டல், கோதண்டம் போடல் என்னும் தண்டனைகள் தரப்பட்டதுண்டு. கழுக்கா மழுக்கா: கழுக்கு = பூண் தேய்ந்து போன உலக்கை. மழுக்கு = கூர் மழுங்கிப் போன அரிவாள் முதலிய கருவிகள். கழுக்காகவும் மழுக்காகவும் இருப்பவை செவ்வை யற்றனவாய்ப் பயன்படுத்துதற்கு உதவாதனவாய் அமைந்தவை. அவற்றைப் போல் உழைப்புக்கு உதவாமல் இருப்பவனைக் கழுக்கா மழுக்காவாய்த் திரிகிறான் என்பது வழக்கு. கழுந்தராய் உனகழல் பணியாதவர் என்பதில் கம்பர் (பாயிரம்) கழுந்து என்பதைப் பயன்படுத்துகிறார். கழுந்து பூண்போன உலக்கையாம். மழுங்குதல் மொட்டையாதல் பொருளில் இன்றும் வழங்குகின்றது. இதனைக் கழுக்கட்டி மழுக்கட்டி என்பதும் வழக்கு. கழுது: காடு காவற்கு அமைக்கப்பட்ட கால் ஊன்று மேடை கழுது ஆகும். நான்கு அல்லது ஆறு கால்களை ஊன்றி மேலே கம்பு இலை தழைகளைப் பரப்பியது கழுது. காவல் காப்பவரொடு காட்டு விளைபொருள் வைப்புக்கும் பயன்படும் சுமைதாங்கி அது. உளைமான் துப்பின் ஓங்குதினைப் பெரும்புனத்துக் கழுதிற் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென - அகம். 102 திருச்சிராப்பள்ளி - சென்னை நெடுஞ்சாலையில் தொழுதூரை யடுத்துக் கழுதூர் என்னும் ஊர் உள்ளது. கழுதினைப் பரண், பரணை என்பது ம.வ. கழுதை: கழு > கழுது > கழுதை. வெளுத்தல், சலவை செய்தல், துவைத்தல் என இந்நாளில் வழங்கும் தொழில் பழநாளில் கழுவுதல் எனப்பட்டது. கால் கைகளை நீரால் அழுக்குப் போக்கல் கால்கை கழுவல் என்றும் முகம் கண் ஆகியவற்றை நீர்விட்டுத் துடைத்தல் முகம் கழுவுதல் கண் கழுவுதல் எனவும் வழங்குகின்றன. நீரால் அழுக்குப் போக்கலே பழநாளில் கழுவுதல் எனப்பட்டது. கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ என்னும் குறுந்தொகைப் பாட்டில் (167) தயிர்பிசைந்த கையைக் கழுவாமல் உடையிலே துடைத்துக் கொண்டு தாளிதம் தன்சுவை குன்றாமல் ஆக்கும் ஈடுபாட்டில் சமைக்கும் மனையாட்டியைச் சுட்டுகிறார் கூடலூர் கிழார். கலிங்கமாவது உடை; அது கழுவுறு கலிங்கம்; இவற்றால் கழுவுதல் தூய்மைப்படுத்துதல் என்னும் பொருளில் வருதல் புலப்படும். களிறு நீர்த்துறையில் படிய இளஞ்சிறார் அதன் கொம்பைக் கழுவுதலை, ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு என்று ஔவையார் பாடுகிறார் (புறம். 94). கழுவுதலால் பொலிவமைந்த முத்து மாலையை கழூஉ விளங்கு ஆரம் என்னும் புறநானூறு (19). கழுவாய் என்பது போக்கும் வழி; நீர்விட்டுக் கழுவுதலால் ஆகிய ஒரு சடங்கு. வழுவாய் மருங்கில் கழுவாயும் உள (புறம். 34) என்று ஆலத்தூர் கிழார் பாடுகிறார். கழுவுதற்குக் கொண்டு செல்லும் துணிகளைப் பொதிகளாக்கிக் கொண்டு செல்லுதல் பண்டே வழங்கிய வழக்காம். கழுவுதற்குக் கொண்டு செல்லும் துணிப்பொதியைச் சுமத்தலால் கழுதை எனப் பெயர் கொண்டது என்பதை அறியலாம். பின்னை உப்பு, நெல் முதலியவை கொண்டு செல்லப் பயன்படுத்தப் பட்டது. இதனை, நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதை என உப்புச்சுமை சுமத்தலைச் சுட்டிய குறிப்பால் அறியலாம் (அகம். 207). கழுதை போன்றதும் உயரமானதுமாம் ஒன்று கோவேறு கழுதை. மக்கள் ஏறிச் செல்லும் ஊர்தியாயிற்று. கல்லாஞ்சரளை, கரடு, மேடு, மலைச் சரிவுகளில் பொருள் ஏற்றுமதிக்கு வண்டிப் போக்குப் போல் ஆகியது. உலகளாவிய சுமைதாங்கியாம் பேறும் பெற்றது. தோற்றவர் நாட்டை இழிமைப்படுத்த வென்றவர், கழுதை ஏர்பூட்டி வெள்வரகும் வெள் எள்ளும் விதைத்தல் பழநாள் வழக்கு. தனி ஒருவர் களவோ அல்லது இழிசெயலோ செய்தால், ஊரவர் கழுதைமேல் ஏற்றிக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலமாக்கிச் சாணகம் பெய்தல் சிற்றூர் வழக்காக அண்மை வரை இருந்தது. இனி, துணிசுமக்கும் கழுதை எங்கும் போகாமல் காக்க இருகால்களையும் தளைத்தல் வழக்கம். தளைத்தல் கழு எனப்படும். கழுப் போடுதலால் கழுதை எனப்பட்டதுமாம். ஏற்பன கொள்க. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயது என்பது பழமொழி. செத்த கழுதைமேல் எத்தனை கழுதை ஏறினால் என்ன? குட்டியாய் இருக்கையில் கழுதைக்கும் எட்டுப்பங்கு அழகு என்பவை போலப் பலப்பல பழமொழிகள் வழங்குகின்றன. கழுதைக்கால் கட்டில்: மடக்குக் கட்டிலின் கால் வளைந்து, ஒன்றோடு ஒன்று பின்னி இருப்பதால் ஒப்பு வகை கண்டு அதனைக் கழுதைக் கால்கட்டில் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. கூரிய ஒப்புப் பார்வையும் நகைச்சுவையுணர்வும் கூடிய சொல்லாட்சி இது. கழுதைப் பிறவி: கழுதைப் பிறவி = சுமை சுமத்தல். கழுதை என்றால் பொதி சுமக்க வென்றே அமைந்த விலங்காதல் வெளிப்படை. mJ nghš áy®¡F¤ jh§f kh£lh¡ FL«g¢ Rik mikªJÉL« nghJ, ‘v‹ ãwÉ fGij¥ ãwÉah» É£lJ’ RkªJ jhnd Mf nt©L«; nt©lh vd¤ jŸËdhš e«ik É£L¥ nghFkh? என நொந்துரைக்கும் வழக்கு உண்டாயிற்று. சரி, சுமை தாங்க முடியாதென ஓடிவிட வேனும் முடியுமா? அதுதான் காலில் தளை போடப்பட்டுள்ளதே! இவனுக்குத் தளை மனைவி மக்களாமே! தளை போடல் கால்கட்டு ஆதலைக் காண்க! கழுதைப்புலி: கழுதை போலும் நிறமும் புலிபோலும் வரியும் உடைமையால் கழுதைப்புலி என மக்கள் பெயரிட்டு வழங்கினர். கழுதைப்புலி இறந்த விலங்குகளையே உண்பதாகவும், எலும்பைக் கடித்துண்ணலை யுடையது என்பதாகவும் கூறுவர் (தமிழ் இலக்கிய விலங்கினங்களும் விலங்கினச் சொற்களும் பக்: 47) கழுத்திரு: கழுத்திலே போடப்படும் திருமங்கல நாணைக் கழுத்திரு என்பது நாட்டுக் கோட்டை வட்டார வழக்காகும். கழுத்தில் அணியும் திரு என்பதாம். மங்கலம், மங்கலநாண், மங்கல அணி என்பவை மங்கல மடந்தை என்பதன் அடையாளம் ஆதலின் அவ்வாறு கொள்ளப்பட்டது. கழுத்து ஒடிதல்: கழுத்து ஒடிதல் = அளவில்லாத பொறுப்பு. தாங்க மாட்டாத சுமையைத் தலைமேல் வைத்தால் தலை, தாங்கிய பொருளைக் கழுத்துத் தாங்க மாட்டாமல் வளையும்; குழையும்; சுழுக்கும் உண்டாம். தலைமேல் உள்ள பொருளை அப்படியே தள்ளி விடவும் நேரும். அந்நிலையில் அத் தாங்க மாட்டாச் சுமையைக் கழுத்தை ஒடிக்கும் சுமை என்பர். அது போல் ஒருவர் குடும்பம் பெரிதாகி விட்டாலோ, பொறுப்பு அளவு கடந்து மிகுந்து விட்டாலோ கழுத்து ஒடிகிறது என்பது வழக்கு. தாங்க முடியாத அளவில்லாத பொறுப்பு என்பது பொருளாம். கழுத்தேர்: கழுத்து + ஏர் = கழுத்தேர். கழுத்து ஏர்; முன் ஏரை அடுத்துப் பின்னே செல்லும் ஏரைக் கழுத்தேர் என்பது நெல்லைப் பகுதி வழக்காகும். ஈற்றடியை அடுத்த முன் அடியை எருத்தடி என யாப்பிலக்கணம் கூறுவதை எண்ணலாம். எருத்து = கழுத்து. கழுநீர்: கழுநீர் என்பது குவளை. குவளைக் கண்ணன், குவளைக் கண்ணி என்பவை ஆண் பெண் பெயர்கள். கருங்குவளை, செங்குவளை என்பன கருங்கண் செங்கண் ஆகிய இருவகைக் கண்களுக்கும் உவமை ஆவன. நீரில் வாழும் கொடிக் குவளை மலர்களின் மேல்பட்ட நீர்த்துளி கண்ணின் நீர்த்துளியெனத் தோன்றியமையால் கலுழ்நீர் எனப்பட்டு கழுநீர் ஆகியிருக்கலாம் என்பது ஒன்று. இஃது இயல்பாகக் கண்டார்க்குப் புறத்தோற்றத்தால் பெயரிட வாய்ப்பது. மற்றொன்று அரிய மருத்துவ ஆய்வின் அடிப்படையில் அமைவது. அது, உடலில் உண்டாகிய அரத்தக்கட்டைக் கழுநீர்ச்சாறு அகற்ற வல்லது என்பது. செந்நீர் உறைவை அகற்றும் நலப்பாட்டால் கழுநீர் எனப்பட்டதாகலாம் என்பது. முன்னது பொதுமக்கள் பாவலர் படைப்பாகலாம்; பின்னது மருத்துவர் ஆய்வு முடிபு ஆகலாம். கழுவாய்: கழுவுதலால் ஏற்படுவது கழுவாய். குற்றம் செய்து அக்குற்றத்தை நற்செயல்களால் அகற்றுதல், குற்றம் என உணர்ந்து அதனை மீளச் செய்யாது ஒழித்தல் என்பவை தீர்வு வழிகளாம். எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என்பது அறநெறி (திருக். 655). அந்நெறி விடுத்து, நீரால் அழுக்கைக் கழுவுவது போல் அகத்தே கொண்டு செய்த பாவத்தை நீரால் கழுவிவிட முடியாது. ஏனெனில், புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் என்பது அறநெறி (திருக். 298). வழுவாய்க்குக் கழுவாய் உண்டு; அதன் வழியாகத் தீர்க்கலாம் என்பது தமிழ்நெறி அன்றாம்; அயல்நெறி அஃதாம். வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவென நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றார்க் குய்தி இல்லென அறம்பா டிற்றே என்னும் புறப்பாடல் (34), எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்னும் திருக்குறள் (110). கழுவேற்றல்: கழுவேற்றல் குற்றத் தண்டனையாகப் பழநாள் வேந்தரால் தரப்பட்டது. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் - திருக். 550 எனப்பட்டது. கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றங்காண் என்று ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் உரைத்ததாகச் சிலம்பு (20:64-65) சொல்லும். கழையாவது மூங்கில். நாழி, மரக்கால் முதலிய முகத்தல் அளவைக் கருவியாக இருந்த மூங்கில், கூரை வேய்தற்குரிய வரிச்சு, கம்பு முதலியவாகவும் பயன்பட்டது. கழைக்கூத்து, கழை தாவல் கருவியும் ஆயது. களை குத்தி எடுக்கவும் மூங்கில் பிளாச்சு கூர்மையாகச் சீவிப் பயன்படுத்தப்பட்டது. அக்கழையில் கல்மூங்கில் என ஒன்று வயிரம் பெற்ற திண்மையினது. அதனைக் கூர்மையாகச் செதுக்கி அதன்மேல் குற்றவாளியின் இருக்கை வாயை வைத்து, ஏற்றிவிடின் படிப் படியே இறங்கி உயிர் போகிப் பறவைக்கு இரையாய்ப் போயொழியும் அவன் உடல். கழுவன் பொட்டல் என்பது சான்று. அக்கழுவேற்றலைச் செய்தவன் கொடியன் அல்லன்; கொடியனைத் தண்டிக்கக் கொடிகொண்ட தலைவனாம் கோ ஏவ, அவன் ஆணைப்படி கடனாற்றலைக் கடமையாகக் கொண்டவன். அவன்மேல் பழியில்லை யேனும் பழிப்பெயர் பெற்றான். கழுவன் என்பது அவன் பெயராயிற்று. பாட்டன் பெயரைப் பேரன் தாங்கும் முறையால் இந்நாள் கூடக் கழுவன் பேரினர் உள்ளனர். பழிப்பெயர் என அறியார்; அவர் பாட்டன் பேரெனவே அறிவார். கழுவேறல் கழுவேற்றல் வேறுபாடு இல்லையா? கழுவேறி யது பழைய திருவிளையாடல்; கழுவேற்றியது புதிய திருவிளை யாடல். களஞ்சியம்: உழவர் களத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நெல், புல், சோளம், கம்பு, கேழ்வரகு முதலியவை கெட்டுப் போகா வகையில் கொட்டி வைக்கப்பட்ட இடம் புரை எனப்படும். புரை நிலமட்டத்தில் இருந்து உயர்த்திக் கட்டப்பட்டது. புரை உயர்வாகும் என்பது தொல்காப்பியம் (785). புரை எனப்படுவதற்குக் களஞ்சியம் என்பது மற்றொரு பெயர். அரண்மனை, கோயில் ஆகியவற்றில் அமைக்கப்பட்ட களஞ்சியங்கள் மிகப் பெரியவை; உயரமானவை. அவை அஃகசாலை எனப்பட்டன. அஃகம் - தவசம். அஃகம் சுருக்கேல் என்பது ஆத்தி சூடி. களமாக்கல்: களமாக்கல் = இல்லாமை அல்லது வெறுமையாக்கல். களம், போர்க்களம், சூடடிக்கும் நெற்களம், வீரர்கள் போர் புரிவது செங்களம் எனவும் படும். உழவர்கள் பயிர் பச்சைகளை அகற்றி மேடாக்கிக் கெட்டிப்படுத்துவது நெற்களமாம். இல்லாக் கால் அதில் கதிரடிப்பு, பிணையலிடல் என்பவற்றைச் செய்வதற்கு வாய்க்காது. ஏர்க்களமாக்கல் இது. போர்க்கள மாக்கினால் என்ன ஆகும்; எல்லாக் கொடுமைகளுக்கும் இடமாகும். வாழ்வார் எல்லாம் வன்சாவுக்கு இரையாவர். ஆதலால் களமாக்கல் அழிப்பு வேலையாகவே அமைந்து விடும். தம் குடியைக் கெடுக்கும் மக்களை, நீ களமாக்கி விடுவாய் எனப் பழிப்பது முதியவர்கள் வழக்கு. களம்: மணலுக்கு அடியில் உள்ள கருமண்ணைக் களம் என்பது நெல்லை வட்டார வழக்காகும். களம் = கருமை. களர் மண் என்பது கருநிறச் சேற்றுமண்; அளறு என்பதும் அது. காலாழ் களர் என்பது வள்ளுவம் (500). களரி: களப்போர்க்குரிய கருவிகளைக் கொண்டு பயிற்சி பெறும் இடம் களரி எனப்பட்டது. சிலம்பம், வாள் முதலிய கருவிப் பயிற்சியும் மல் முதலாம் பயிற்சியும் பெற்ற இடம் களரி எனப் பட்டது. களம் என்பது போர்க்களம் ஆகும். களர்ப்படு: களர் + படு = களர்ப்படு = களர்நிலம் அல்லது உவர்நிலம். களர் = உவர்; படு = படிந்து கிடக்கும் நிலம். களர்ப்படு கூவல் தோண்டி - புறம். 311 களரி என்பதும் இது. களரி பரந்து கள்ளி போகி - புறம். 356 (சி.த.சொ.ஆ. 42) களர்ப்பாழ்: கள் + அர் = களர். களர் + பாழ் = களர்ப்பாழ். கரிய நிறமும் உள்வாங்கு சேறும் உவரும் அமைந்து விளைவுக்குப் பயன்படா நிலம் (பாழ் நிலம்), களர்ப்பாழ் நிலமாகும். (க.க.சொ.அ.) உப்பெடுக்கும் களர்நிலம் உவர்நிலமாகும். களர்நிலத்துப் பிறந்த உப்பு - நாலடி. 133 களவழி: போர்க்களச் செய்தியைக் கூறும் நூல் களவழியாம். களவழி நாற்பது என்றொரு நூல் கீழ்க்கணக்கில் உள்ளது. போர்க்கள நிகழ்ச்சியையே புனைந்துரைக்கும் அந்நூல் பொய்கையாரால் பாடப்பட்டதாம். அது வெண்பா யாப்பினது. போர்க்களம் செருக்களம், மறக்களம், அமர்க்களம், செங்களம் எனவும் பெயர் பெறும். மறக்கள வஞ்சி, செருக்கள வஞ்சி காண்க. ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து என்பதொரு களவழிப்பாட்டு (36). களவழி நாற்பது என்பது பெயராயினும் அதில் நாற்பத்தொரு பாடல்கள் உள. புறத்திரட்டில் வரும் 1427 ஆம் பாடல் களவழி என்றிருப்பினும் நூலில் இடம்பெற வில்லை. 41 பாடல்களுமே களத்து என்றே முடிநிலை யடைகின்றன. அவற்றுள் 36 பாடல்கள் அட்ட களத்து என்றும், 3 பாடல்கள் பொருத களத்து என்றும், ஒவ்வொரு பாடல் வீழ்ந்த களத்து பெய்த களத்து என்றும் முடிகின்றன. களத்து என்னும் முற்றாட்சியையே புறத்திரட்டுக் கூறும் பாட்டும் கொண்டுள்ளது. சிவந்த களத்து என்பது அதன் முடிநிலையாகும். களவு: களவு = உள்ளத்தைக் கவர்தல். களவு ஐம்பெருங் குற்றங்களுள் ஒன்றாக எண்ணப்பட்டது. பிறர்க்கு உரிமைப்பட்ட ஒன்றை அவரறியாமல் வஞ்சித்துக் கவர்ந்து கொள்வதே களவாம். இப்பொல்லாக் களவினைத் தவிர்த்து உலகில் பெருக வழங்கும் களவும் உண்டு. அது நல்ல களவென நாடு கொள்வது. அதனையே தொல்காப்பியம், திருக்குறள் முதலியன களவியல் எனக் கூறும். அக்களவு, ஒருவர் உள்ளத்தை ஒருவர் கவர்தலாம். பால் ஒருமைப்பாட்டால் நட்பாகவும், பால் வேறுபாட்டால் காதலாகவும் கொள்ளப்படும். கற்புக்கு முற்பட்டது களவு என்பது தமிழ்நெறி. இறைவனை அடியார்கள் உள்ளங் கவர் கள்வன் என்பதும் களவே. இக்களவே இறையன்பாம். களவு கண்ணி: காதல் வயப்பட்ட தலைவன் ஒருவன் பேராசையால் நள்ளிருள் போதில் தலைவியைக் களவிற் கொள்ளுமாறு செல்லுதலைக் கூறுதல் களவுகண்ணி என்பதாம். இதனை, மானாசை யாலிறைவன் கங்குலிலே யார்களவிற் செல்லுதலே சாலுங் களவுகண்ணி தான் என்கிறது பிரபந்தத் திரட்டு (69). களவிற் செல்லுங்கால் ஏற்படும் இடையூறுகளை விரித்துரைத்து அத்தடைகளை எல்லாம் வெற்றியடைந்த வரலாற்றை விளக்குவதாக இப்பனுவல் அமைதலாம். கண்ணாற் சிறைகொண்டு அகப்படுத்துதலைக் கண்ணி என்றார். இன்றும் காதலைக் கண்ணி போடுதல், தூண்டில் போடுதல், வலை வீசுதல் என வழக்காறுகள் உண்மை ஒப்பிடக் கூடியதாம். களவிற் புணர்ச்சித் தடை, வருந்தொழிற்கு அருமை என்றும், இடையூறு கிளத்தல் என்றும் கூறப்படும். இரவரன் மாலைய னேவரு தோறும் காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும் நீடுதுயில் எழினும் நிலவுவெளிப் படினும் வேய்புரை மென்றோள் இன்றுயில் என்றும் பெறாஅன் பெயரினும் என்று வரும் குறிஞ்சிப்பாட்டும் (239-243), தாயும் நாயும் ஊருந்துஞ் சாமை காவலர் கடுகுதல் நிலவு வெளிப்படுதல் கூகை குழறுதல் கோழிகுரற் காட்டுதல் ஆகிய ஏழும் அல்லுக்குறித் தலைவன் வருந்தொழிற் கருமை பொருந்துத லுரிய என்று வரும் அகப்பொருள் விளக்கமும் (161) கருதத் தக்கன. களா: கள் > களா = கரியது; கருநிறத்தது ஆகியதொரு பழம். களா, சிறுசிறு முட்களை யுடையது. கொத்துக் கொத்தாய்க் காய்ப்பது. காக்கையில் கரியது களாம்பழம் என்னத் திகழ்வது. இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையது. ஊறுகாயாகவும் பயன்படுவது. களா வகைகள்: சிறுகளா, பெருங்களா, மலைக்களா, முள்ளுக்களா, சொத்தைக் களா, கொட்டைக்களா, சீமைக்கொட்டைக்களா, கொத்துக்களா, ஊசிக்களா. (சாம்ப. மரு. அக.) களிகள்: களி + கள் = களிகள் = களிப்பூட்டும் கள்; கள்குடித்துக் களிப்பவர்கள். இவை மட்டுமா பொருள்கள். களித்த களிக்கின்ற களிக்கும் கள் என வினைத்தொகையும் ஆகுமல்லவா! களி என்னும் கட்குடிப்பெயர், மகிழ்வுப் பொருள் தருவதால் களிப்பு எனப் பொதுமையுற்றது. உச்சி முகர்ந்துவிட்டால் கள்வெறி கொள்ளுவதாய்ப் பாடினாரே பாரதியார். உண்டாட்டுப் படலம் எனப் பாவிகங்கள், தொன்மங்கள் ஆயவற்றில் மட்டுமா? கள்ளே உலையாக ஏற்றுதலைச் சுட்டுகிறதே புறம் (113). மட்டுவாய் திறப்பவும் மைவிடை ஊழ்ப்பவும் கள்ளே குடிகெடுக்கும் என்றால், நாடுநாடாக ஆக்கும் மதுவகை வீடுவீடாகப் புகுந்து விளையாடினால்தான் குடியரசு போலும்! குடிகெடுக்கும் சின்னதிரையும், மதுவகையும் குடிகேடு என ஒழிக்கும் அரசே மக்கள் நல அரசு ஆகும். களித்தல்: கள்ளருந்தி மகிழ்தல் என்னும் பொருளுடைய இச்சொல், மகிழ்தல் என்னும் பொதுப் பொருளிலும் வரும். களித்தல் என்பது விளையாடுதல் என்னும் பொருளில் முன்சிறை (முஞ்சிறை) வட்டார வழக்கில் உள்ளது. சிறை = காடு, அணை. களிம்புப் பால்: கட்டி பட்டுள்ள சீம்பால் ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் களிம்புப் பால் என வழங்குகின்றது. தடவு களிம்புகள் கட்டியாக வும் நீராகவும் இல்லாமல் இடை நிகர்த்த நிலையில் இருப்பதை அறியலாம். களிவெருட்டு: மஞ்சுவெருட்டு, சல்லிகட்டு என்பவை தருமபுரி வட்டாரத்தில் களிவெருட்டு என்று வழங்கப்படுகிறது. மகிழ்வாக வெருட்டிப் பிடிப்பதால் களிவெருட்டு ஆயது. ஏறு தழுவுதல் என்பது பழவழக்கு. மாடுபிடி என்பது வெட்சிப்போர். அது போர்த் தொடக்கம். இது வீரவிளையாட்டு என்பது அதன் வேறுபாடு. களை: எங்கேயோ ஒருவரைப் பார்க்கிறோம். அவரை முன்பின் தெரியாது. நமக்கு எவ்வகைத் தொடர்புடையாரும் அல்லர். பால்வேறுபாடு உடையாரும் அல்லர். ஆயினும், நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிடுகிறார். பன்முறை அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்து மகிழத்தூண்டி விடுகிறார். கள்ளம் கவடு இல்லாத முகம்; குழந்தை முகம்; பால் வழியும் முகம்; பார்த்தால் பசி தீரும் முகம் என்றெல்லாம் நாம் நினைத்து உள்ளுள் மகிழச் செய்கிறார். அத்தகு முகத்தைக் களையான முகம் என்றும், முகக்களை என்றும் அதனை உடையவரைக்களை யானவர் களையான முகத்தர் என்றும் யாரும் தூண்டாமலே நமக்குள் உணர்ந்து பூரிக்கிறோம். பொலிவுக்கும் அல்லது அழகுக்கும் களைக்கும் தொடர்பு உண்டா? களை என்பது அழகாகுமா? அகரமுதலியில் களை என்பதற்கு அழகு எனப் பொருள் வழங்கினாலும் ஏற்கத் தக்கது தானா? ஏற்பது எப்படி? களை என்பது பயிருக்கு இடையே முளைத்துப் பயிருக்குரிய நீரையும் ஊட்டத்தையும் கொண்டு வளர்வதுடன் பயிரை நலித்தும் விளைவைக் கெடுத்தும் தீமை செய்வதன்றோ? ஏரினும் (உழவினும்) நல்லது எருவிடுதல்; எருவிடுதலினும் நல்லது களை வெட்டல் என்று திருவள்ளுவர் ஓதுகிறாரே? (1038) முளைக்கும் போதே முள்மரம் போன்ற களைகளைக் களைந்து விட வேண்டும்! இல்லாவிடின் களைபவன் கையையே அழித்துவிடும் களை என்கிறாரே (879)! இக்களை அழகாகுமா? கவர்ச்சி யுடையதாகுமா? ஓடுகிறோம்; கடினமாக இடையீடு இன்றி உழைக்கிறோம். களைப்பு உண்டாகிறது. களைப்பாற வேண்டிய கட்டாயம் உண்டாகின்றது. களைப் பாறுதல், களையாறுதல், இளைப்பாறுதல் ஓய்வெடுத்தல் என்றெல்லாம் அமைந்து களைப்பு நீங்கிப் பின்னர் ஓய்வாலும் உறக்கத்தாலும் உணவாலும் ஊக்கம் பெற்று மீண்டும் உழைப்பில் இறங்குகின்றோம். களைப்பு களை (அழகு) ஆகுமா? களை களைதல் என்பதொரு தொழில். களைதல் என்றாலே களை களைதல்தான். எனினும் தெளிவு கருதிக் களை களைதல் எனப்படுகின்றது. அதனை எண்ணிப் பார்த்தால் களையின் அழகுப் பொருள் தெளிவுற விளங்கும். களை என்பதற்குக் கழற்று, பிடுங்கு, போக்கு, அவிழ், அகற்று, நீக்கு, விலக்கு என ஏவற் பொருள்கள் உண்டு. களைதல் எனின் கழற்றுதல், பிடுங்குதல் முதலாக மேற்கூறியவை அமையும். களை மண்டிக் கிடக்கும் இடத்தையும் களை களைந்த இடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் களை நன்கு வெளிப்பட விளங்கும். அதற்கு, அழகு பொலிவு, கவர்ச்சி முதலாக அமைந்த பொருள் நயம் தெளிவாகப் புலனாகும். களைதலுக்கு உரியவை எவையோ அவை களை எனப்படுதல் கண்கூடு. புல், கீரை, செடி, கொடி, மரம், குப்பை, சண்டு, சாவி, இலை, தழை எவை எனினும் களைதற்கு உரியவை எல்லாம் களைகளே! களைகளைக் களைந்த பின் ஏற்படுவதாம் பொலிவும் நலமும் களையே! களையெடுத்து நீர் பாய்ச்சிப் பசுமைக் கோலங் கொண்டு நிற்கும் பயிர் நிலத்தைப் பார்க்கப் பார்க்க உள்ளம் கொள்ளை கொண்ட உழவன் அதில் களையைக் கண்டான்! பாடுபட்டுக் களைந்த களைப்பை எல்லாம் களையத் தக்க களையைக் கண்டு களித்தான்! களைக்கு அழகுப் பொருளை அருளினான்! அழகுக்கெனவே வளர்க்கப்படும், போற்றிக் காக்கப்படும் பூங்காவில் களையெனக் களைவனவற்றையே பூங்கா தன் பயிரெனக் கொண்டிருந்தாலும், அதனை ஒழுங்குறுத்தி வெட்டுவ வெட்டிக் கொய்வ கொய்து, குப்பை கூளம் அகற்றிச் செப்பமுறுத்தாக்கால் பூங்கா எனப்படுமா? கவின்பெறு வனப்பு எனக் கருதப்படுமோ? காடு எனப்படும். கா எனப்படாது. களைதலால் ஏற்படுவது களை என்பதைப் பூங்கா தன் பொலிவால் தெளிவித்தலை எவரே அறியார். முகம் வழிக்காமல் விட்டுவிட்டால் என்ன? களை மண்டிக் கிடக்கிறது என்பதும், முடிவெட்டி முகம் வழித்தலைக் களைவெட்டுதல் என்பதும் புதுவதாக வழங்கும் வழக்குகள். முகம், வழிக்காத முகத்திற்கும் வழித்த முகத்திற்கும் முன்னைக் களையும் பின்னைக் களையும், களைக்கு அமைந்த இருவகைப் பொருள்களையும் நன்கு விளக்கும். களைதல் என்பது களை களைதலை மட்டுமோ குறித்து நின்றது. முடி களைதல், உடை களைதல், அணி களைதல், அழுக்குக் களைதல், துயர் களைதல் இப்படி எத்தனை எத்தனை களைதல்கள் வழக்கில் உள்ளன. அழுக்கிலா முகம், அவலமிலா முகம், வஞ்சம் சூதில்லா முகம் அமைய வேண்டிய அமைப்பெல்லாம் ஒருங்கமைந்த முகம், புன்முறுவல் பூத்துக் குலுங்கும் முகம், மலரும் கண்ணும், மகிழும் சொல்லும் அமைந்த அழகு முகம் களையான முகம் என்பதில் என்ன ஐயம்! முகக்களை என்பதில்தான் என்ன ஐயம். களையின் பொருள் எதிரிடைப்பட்ட தெனினும், எத்தகு நயமுடையதாக வாழ்வொடும் இயைந்ததாக அமைந்துள்ளது என்பதை எண்ண எண்ணக் களைப்பு உண்டாகவில்லை. களையே உண்டாகும்; களிப்பே உண்டாகும். களைகண்: விளைபயிர்க்கு இடையூறாய் வளரும் பயிர், களை என்பதாகும். களை என்பது களைதல் என்னும் தொழில் வழியாக வந்த பெயராம். அகற்றுதல், போக்குதல், நீக்குதல், கழற்றுதல், ஒதுக்குதல் முதலியவை களைதல் பொருளில் வருவனவே என்பதை அறிந்தோம். களையைக் களைதலுக்கு வந்த களைதல் பெயர், ஆடை களைதல், அழுக்குக் களைதல், உமிகளைதல் எனப் பருப்பொருள் களுக்கு வருவதுடன், துயர் களைதல் எனக் கருத்துப் பொருள் களுக்கும் வரும் என அறிந்தோம். பிறரால் களைதற்கு உரிய துயரும் உண்டு; களைதற்கு அரிய துயரும் உண்டு; களைதற்கு முடியாத துயரும் உண்டு. களைவரிய துன்பத்தைக் காட்டுவார் கம்பர் (உயுத். 2536). களையாத துன்பத்தைக் காட்டுவார் இளங்கோ வடிகளார் (சிலப். 19:17). களைகண் என்பது இருசொற்களே எனினும் ஒரு சொற்றன்மைப் பட்டு நின்றது. கண் என்பது ஓர் உறுப்புப் பெயர் எனினும் அவ்வுறுப்பின் பயனாம் அருள் என்னும் பொருள் கொண்டு நின்றது. களைகண் என்பது துயர் களையும் அருள் உள்ளம் என்னும் பொருள் தரும் தனிச் சொல்லாகப் பழமை தொட்டும் பெருக்கமாகவும் வழங்கி வருகின்றது. வெருவந்த செய்யாமை (அஞ்சத் தக்க செயலைச் செய்யாமை) என்பதை அடுத்துக் கண்ணோட்டம் என்றோர் அதிகாரம் வள்ளுவர் வகுத்ததும் அதில், கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம் என்றும் (575), கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் என்றும் (577), கண்ணென்னாம் கண்ணோட்ட மில்லாத கண் என்றும் (573), கண்ணோட்டத்துள்ளது உலகியல் என்றும் (572), அருளின் பாலனவாம். கண்ணோட்ட மாவது கண்ணால் காணப்பட்டாரை அருளிச் செய்தல் என மணக்குடவரும் பரிப்பெருமாளும் உரைத்தனர். தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்க மாட்டாமை என்றார் பரிமேலழகர். அவர் கூறியன என்பது அவர்தம் அல்லல், வறுமை என்பன உரைத்து அவற்றைத் தீர்த்தருள வேண்டுகையாம். இளையரும் மகளிரும் களைகண் காணார் வேகுறு துயரமொடு ஆகுலம் எடுப்ப என்றும், எவ்வ மாந்தர் எரிவாய் உறீஇய பெருங்கயல் போல வருந்துபு மிளிராக் களைகண் பெறாஅக் கலக்க நோக்கம் என்றும் களைகண் கிட்டாக் கலக்க நிலையைப் பெருங்கதை விளக்கும் (2.17: 85-86; 2.19: 101-104). உளத்துணை ஒன்றில்லாத் தனிமையும் களைகண் தேடி ஏங்கும். தனிமைக் கிரங்கிக் களைகண் காணாது என்னும் அப்பெருங்கதை (1.56:30) களைகண் வாய்க்காமையால் படும் ஏக்கம் பெரிதாம். எம்பெருமான் எமைக்கைவிடிற் பினையார் களைகண் உள்ளார் - கம். ஆர. 210 என்பதில் களைகணை எதிர்நோக்கிய நோக்கம் நன்கு விளங்கும். களைகண் தேடாமலே கண்முன் தோன்றிக் களைகண் அருளுமாயின் அப்பேற்றைக் கூற முடியுமா? களைகண் ஈகுவென் கையறல் ஒழிக திகழொளிக் கண்ணினான் களைகண் ணாகியோர் இளைஞன் தோன்றி என்பவை பெருங்கதைக் காட்சிகள் (5.4:30; 5.2: 32, 33). களைகண் ஆக எவரில்லையேனும் தோழமையாளரேனும் இருத்தல் வேண்டுமன்றோ! அவரே இல்லை எனின் எவரே களைகண் ஆவார்? களைகண் ஆகிய காதலந் தோழன் என்பதும் அப்பெருங்கதை (3.24:121). களைகண் என்பதன் பொருள் களைகண் தேடுவார்க்கு உரிய இன்மைகள் (இல்லாமைகள்). அதனால் அவர்கள் படும் பாடு, அதனை நீக்குதற்குரிய துடிப்பு இவற்றை எல்லாம் தொண்டரடிப்பொடி யாழ்வார் ஒரு பாடலில் நினைந்து நினைந்து இரங்க - ஏங்க - எய்க்க - இனைய இயம்புகிறார். ஊரிலேன்; காணி யில்லை;உறவுமற் றொருவ ரில்லை; பாரில்நின் பாத மூலம் பற்றிலேன்; பரம மூர்த்தி! காரொளி வண்ண னே!ஓ!கண்ணனே! கதறு கின்றேன்; ஆருளர் களைகண் அம்மா?அரங்கமா நகரு ளானே! - நாலா. திவ். 900 என்பது அது. துன்பந் துடைக்க வென்று இக்காலம் எழும்பும் பொதுநல அமைப்புகள் பலப்பல. ஊண் உடை உறைவு எல்லாம் வழங்கிக் கற்பிக்கத் துணையாம் அமைப்புகளும் உள. உடற்குறையர், ஏதிலியர் என்பாரைக் காக்கும் நிறுவனங்களும் உள. உள்ளத்தால் உதவ முந்துறும் அவர்கள் மொழி நலமும் கருதலாம். களைகண் இல்லம், களைகண் குடில், களைகண் அவையம், களைகண் மன்றம் எனப் பெயர்கள் சூட்டலாம்! வழிநலம் பேணும் உள்ளம், மொழிநலமும் பேணுதல் முறைமை என்பது ஏற்படுமாயின் எத்தகு நலமாக இருக்கும். கண்ணிய யாவர்க்கும் களைகண் ஆகிய புண்ணியர் என அவரைக் கம்பர் வாக்கால் போற்றலாமே! (பால. 1338). களைகை: களைதல் என்பது களைகை என ஈழத்தில் வழங்குகின்றது. முரண்பாட்டை அழிப்பதை, முரண்பாட்டுக் களைகை என் கின்றனர். தல் போலவே கை என்பதும் தொழிற்பெயர் இறுதியாம். எ-டு: செய்கை, உண்கை. களை கை எனப் பக்குவிடுதல் ஆகாது. அது, களையும் கை என உறுப்பைத் தழுவியதாகிவிடும். களைதல்: விதைத்து வளர்வது பயிர்; விதையாமல் தோன்றி வளர்வது களை; எப்பயிர் ஆனாலும் பயிராவதும் களையாவதும் விதைப்பது விதையாததைப் பொறுத்தனவே. நெல், பயிர்தான்; பூங்காவில் முளைத்தால் களை! புல், களைதான்! பூங்காவில் வைத்துப் பயிரிட்டால் பயிர்! களையை அகற்றுதல் களைதல் எனப்படும். ஆனால், களைதற்குரியது களை எனப்பட்டது என்பதையே செயற்பாடு விளக்குகின்றது. களைதலைப் பற்றிய இலக்கியச் சொற்கள் பல; வழக்குச் சொற்களும் பல; வட்டார வழக்காய் இயல்வனவும் உள. களை வெட்டுதல் என்பது வேளாண்மைத் தொழில் களுள் ஒன்று. வெட்டுதற்குப் பயன்படும் கருவி மண்வெட்டி; கருவிப் பெயரிலே உள்ள வெட்டி, களைவெட்டுத் தொழிலையும் செய்யும் என்பதற்குச் சான்றாயிற்றே. கல்லிலே வெட்டும் எழுத்து கல்வெட்டு! மண்ணை வெட்டும் கருவி மண்வெட்டி. களை வெட்டுதல் பொருள் தரும் சொல் கட்டல் கட்டுதல் என்பன. களைதல் - கள்தல் - கட்டல் என்று வந்தது. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் என்பதில் களை கட்டலைச் சுட்டுகிறார் வள்ளுவர் (திருக். 550). களைதல் என்பதையும் அவர் குறிக்கிறார். இளைதாக முள்மரங் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து - திருக். 879 என்பது அது. களை களைதலை இன்றித் துயர் களைதலையும் களைதல் குறிக்கும். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பது துயர் களைதலைக் கூறும் குறள் (788). வெட்டல் கருவி வினை; கட்டல் கருவி வினையும் கைவினையும் ஆம். வழிப்பறி என்பதில் பறித்தல் தொழிலும், நாற்றுப் பிடுங்குதல் என்பதில் பிடுங்குதல் தொழிலும், பூக்கொய்தல் என்பதில் எடுத்தல் தொழிலும் உள்ளமை விளங்கும். இவை கருவி வினைகள் அல்ல, கைவினைகளே ஆம். களையைச் சுரண்டுதற் கென்றே அமைந்த கருவி, களைசுரண்டி. களை சுரண்டியின் இலையளவு (தகட்டளவு) சிறிது. அதனினும் அகலமாக அமைந்தது களைபரண்டி. அது படர் கொடிகளைப் பரண்டும் அளவு தகடு விரிவுடையது. சுரண்டுதல், பரண்டுதல் ஆகிய தொழில்களுக்குரிய கருவி சுரண்டியும் பரண்டியும்! சுரண்டி இல்லாமலே முதுகைச் சுரண்டலும், பொருளைச் சுரண்டலும் கண்கூடு; சில உயிர்கள் காலால் பரண்டல் இயற்கை. களை குத்தல் ஒன்று; களை கொத்தல் மற்றொன்று. முன்னதற்குரிய கருவி களைகுத்தி; பின்னதற்குரியது, களைகொத்தி. களையின் வேரைப் பார்த்து நேராகக் குத்தி எடுக்க உதவுவது களைகுத்தி; இரும்பாலும் களைகுத்தி உண்டு; மரத்தாலும் களைகுத்தி உண்டு. களையைப் படர் பகுதியுடன் கொத்தி எடுக்க உதவுவது களை கொத்தி. குத்திக்கும் கொத்திக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. பின்னே வேறுபாடு மறைந்ததும் உண்டு. மீன்குத்தியை மீன்கொத்தியென வழங்குதலும் உண்டே! கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து என்றார் வள்ளுவர் (490). மண்வெட்டியுள் சிறியது கொட்டு மண்வெட்டி என்பது. அதனைக் களை வெட்டுதற்குப் பயன்படுத்துவதால் களைகொட்டு என்பர். கொட்டுதலும் களைவெட்டுதல் பொருளில் வருவதைக் காட்டுவது இது. இனி, அகழ்தல் தோண்டல் கல்லல் கிள்ளல் என்பவை பறித்தல் பொருளில் வரும் சொற்களாம். இவை நான்கும் நுண்ணிய வேறுபாடுடையவை. கிள்ளலில் கல்லலும், கல்லலில் தோண்டலும், தோண்டலில் அகழ்தலும் ஒன்றில் ஒன்று நிலத்தில் ஆழமாகச் செல்பவையாம். நகத்தில் கிள்ளி எடுத்தல் என்னும் வழக்கால் விரலளவு ஆழம் கிள்ளலாம்; கிழங்கு கல்லி எடுத்தல் என்பதால் அதனின் ஆழம் கல்லல்; தோண்டுதல் மண்வெட்டி பதியும் அளவு கடந்து செல்வதால் அதனின் ஆழமானது. கம்பி போட்டுக் குத்தி எடுக்கும் அளவுடையது அகழ்தலாதலால் அதனினும் ஆழமானது. அது அறுகு கிள்ளல் அன்று; கல்லல் அன்று; தோண்டல் அன்று; அகழ்தலாம். அறுகு போல் வேரூன்றி என்னும் வாழ்த்தே வேராழம் காட்டும். ஏழடி எட்டடிகளுக்குக் கீழும் கரிசல் நிலத்தில் அறுகின் வேரும் கிழங்கும் படிந்திருத்தல் கண்கூடு. கிணறு அகழ்வது போல் அகழ்ந்தெடுப்பதும் காணலாம். தோண்டலின் ஆழத்தை விளக்குவதொரு சொல் தோணி. தொள்ளம், தோளம் என்பனவும் தோணியின் பெயர்களே. பரிய மரத்தைக் குடைந்து மிதவை யாக்குதலால் தோணியாயிற்று. தோண்டி அமைக்கப்பட்டது தோண்டி, தோணி ஆயிற்று. களைவெட்டி முடித்து அக்களையைப் பறித்த இடத்திலேயே போட்டுவிட்டால் மீண்டும் முளைப்பதும் உண்டு. ஆதலால், அதனை வாரிப் போடுதற்கு ஒரு கருவியுண்டு அதற்குக் களைவாரி என்பது பெயர். களை களைதல் வினைக்குத் தமிழில் எத்தனை எத்தனை சொற்கள்? களைவெட்டல், களைகட்டல், களைகொட்டல், களை கொத்தல், களைகொய்தல், களைபறித்தல், களையெடுத்தல், களைசுரண்டல், களைபரண்டல், களைகிள்ளல், களைகல்லல், களைதோண்டல், களைஅகழ்தல், களைபிடுங்கல், களைவாரல் முதலியன. இத்தகைய தமிழ்ச்சொல்வளம், தமிழின் தனி வளம் அல்லவோ! களையெடுத்தல்: களையெடுத்தல் = தீயாரை அல்லது வேண்டாரை விலக்கல். உழவுத் தொழிலின் ஒரு பகுதி களையெடுத்தலாகும். களைகட்டல், களைபறித்தல் என்பனவும் அதுவே. களையெடுத்தல் பயிர் நலத்துக்கும் பயிர்க் காப்புக்கும் செய்யும் செயலாம். அதுபோல் தீயவர்களையும் கேடர்களையும் சுரண்டுபவர்களையும் ஏமாற்றுக் காரர்களையும் தேர்ந்தறிந்து தம் கூட்டிலிருந்து விலக்கிவிடும் தேர்ச்சி சிலர்க்கு உண்டு. அவர் செயல் களையெடுத்தல் எனப்படும். களையெடுக்கா விட்டால் சீராகாது என்பது வழக்கம். அடர்ந்து நீண்டுபோன முடிவெட்டு தலைக் களைவெட்டுதல் என்பது இந்நாள் நகர்ப்புற வழக்கில் உண்டு. கள்ளம் கவடு: கள்ளம் = களவு. கவடு = வஞ்சம். கள்ளம் கவடு இல்லாதவர் என்னும் இணைமொழி. களவும், களவுக்கு மூலமாம் வஞ்சமும் இல்லாதவர் என்பதை விளக்கும். கள்ளுதல் களவாடல், கவடு இரட்டையாகப் பிரிதல். ஓரெண்ணத்தை உள்வைத்து அதற்கு எதிரிடையானதை வெளிக்காட்டிச் செய்தல் கவடு அல்லது வஞ்சமாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பது திருவருட்பா (8). கள்ளாளும் உள்ளாளும்: கள்ளாள் = திருடன் அல்லது களவாளன். உள்ளாள் = களவாளனுக்கு உளவாளனாக இருக்கும் கையாள். கள்வான் பெரியவனா? fh¥gh‹ bgÇatdh? என வினாவுவர். கள்வானுக்குக் காப்பானே கையாளாக அல்லது உள்ளாளாக இருந்தால் திருடுவது மிக எளிமையல்லவோ? தடுக்க வேண்டியவனே எடுத்துக் கொடுப்பவனாக இருக்கும் போது என்ன குறை? கள்ளாளும் உள்ளாளுமாக இருந்ததைச் சுட்டிக் காவற்காரர் மேல் நடவடிக்கை எடுப்பது நாடறிந்த செய்தி. ஏன் அவன் உள்ளாளாக இருந்தான் என்பதை எண்ணிப் பொறுப்போடு நடந்திருந்தால் உள்ளாளாக இல்லாமல் காவற்காரனாகவே இருந்திருப்பானே! கள்ளி: கள்ளி:1 முள்ளுடையதும் பால்வழிவதும் மழையிலாப் பாலைநிலக் குறுந்தூறுமாவதும் கள்ளி. தோற்றத்தால் பசுமை; பாலால் வெண்மை; பெயரால் கருமை (கள்ளி) ஏன்? பால் உலர்ந்தால் கரிய நிறமாக இருத்தலைக் கண்டு இட்ட பொருள் பொதி பெயர் அது. தாம்வளர் கள்ளியும் வெட்டார் என்பது ஆன்ம நேயப் பழமொழி. கள்ளி வகைகள்: கள்ளி வகைகள் பலவுண்டு. சதுரக்கள்ளி, வட்டக்கள்ளி, செடிக்கள்ளி, கொடிக்கள்ளி என்பவையாம். கள்ளி வேலியுண்டு; கள்ளியால் பெயர் பெற்ற ஊர்கள் பலப்பல. கள்ளிக்குடி, கள்ளில், கள்ளிப்பட்டி. எ-டு: ஆதனுங்கனைப் பாடிய புலவர் கள்ளில் ஆத்திரையனார் (புறம். 175, 389). கள்ளி:2 கரவு நெஞ்சமுடையவள் கள்ளி என்பது மக்கள் வழக்கு. கள்ளும் கவறும்: கள் = கட்குடி. கவறு = சூதாட்டம். கள்ளும் கவறும் கடிமின் என அறநூல்கள் கூறும். கள் என்பது மதுவகை யெல்லாம் சுட்டுவது. கவறு என்பது குதிரைப் பந்தயம். பரிசுச்சீட்டு, குலுக்கல் சீட்டு, உலகப் போட்டிப் பந்தயம், பொன்னாக்கம், பணம் இரட்டிப்பு என இன்னவை எல்லாம் சுட்டும். இரண்டும் அறிவை மயக்கி அழிவைச் செய்வன. முன்னது உயிர் அழிவுக்கும், பின்னது பொருளழிவுக்கும் இடமானவை எனத் தோன்றினும் இரண்டும் முழுதழிவுக்கே கொண்டு செல்வனவாம். கள்ளும் சுள்ளும்: கள் = கள்ளு; சாராயம் முதலிய மதுவகை. சுள் = மதுக்குடிக்குத் துணையாம் தொடுகறி வகை. சுள் என்பது சுள்ளாப்பு என்றும் சொல்லப்படும். சுள்ளாப்பு என்பதற்கு அடி, உறைப்பு, வெப்பம் முதலிய பொருள்கள் உண்டு. வெயில் சுள்ளாப்பாக அடிப்பது போலச் சுள்ளாப்பாக இருக்கும் சுவையும் சுள்ளாப்பு எனப்பட்டது. சுள்ளக்காய் சுள்ளாக்காய் என்பவை மிளகாயைக் குறித்து வழங்குகின்றன. மிளகாய் பிற்காலத்து வெளிநாட்டு வரத்துப் பொருளாயினும் மிளகு பழம்பொருளாம். கறிக்குச் சுவையூட்டும் அது கறி என்றே சொல்லப்பட்டது. யவனர் தந்த விலைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்பது சங்கப்பாட்டு (அகம். 149). கறங்குதல்: கறங்கு என்பது வட்டம், வளையம் என்னும் பொருளது. கண்களின் வடிவம் வட்டம்; அக்கண் வடிவாகச் செய்யப்பட்டது பலகணி; மான் கண் காலதர் மாளிகை என்பது சிலம்பு (5:8). வட்ட வளையக் கண்களாக அமைத்த அதனைக் கறங்கு என்பார் கம்பர். கறங்கு கால் புகா (சுந். 118) என்பது அது. கறங்குதல் சுற்றி வருதல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றது. கறத்தல்: கறத்தல் = பறித்தல். மாட்டில் பால் கறப்பது போல, நாளும் பொழுதும் பொருள் பறிப்பது கறத்தலாகும். வழியில் வருத்திப் பறிப்பது வழிப்பறி; மொத்தமாகப் பறிப்பது கொள்ளை; தெரியாமல் கவர்வது திருட்டு; நயமாகப் பல்கால் சிறுகச் சிறுகப் பறித்துக் கொண்டே இருப்பது கறத்தலாகும். என்னை அவன் கறவை மாடாக வைத்துக் கொண்டிருக் கிறான். கறவை நின்று போனால் ஏறிட்டுப் பார்க்கமாட்டான் என்பதில் கறவைப் பொருள் தெளிவாம். கறி: காய்கறி, இணைச்சொல். மரக்கறி, ஊன்கறி என வழக்கு உண்டாயினும் கறி என்பது ஊனைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாகவும் வழங்குகின்றது. கறிக்குழம்பு கறி வைத்தல் என்பவை ஊன் வழியாகச் சொல்லப்படுவனவே. கறி என்பது உடல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கு. உங்களுக்கு உதவாமல் இந்தக் கறி இருந்து என்ன செய்ய என நெய்வேலியார் ஒருவர் வினாவிய வினாவுதலால் பொதுவழக்கெனக் கொள்ள வாய்க்கின்றது. கறிக்காலி: கால்நடையைக் காலி என்பது பொதுவழக்கு. ஊர்காலி மாடு, கன்று காலி என்பனவும் பெருவழக்குகளே. ஊன் தேவை கருதி வளர்க்கப்படும் ஆட்டைக் கறிக்காலி என்பது ஒட்டன்சத்திர வட்டாரவழக்கு. கறிச்சை: கறங்கு என்பது, சுற்றுதல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்குச் சொல்லாக இருப்பதால், அப்பொருள் அடியாகவே கறிச்சை என்பது வண்டு என்னும் பொருளில் வழங்குகின்றது. வண்டு என்பது வளைந்து செல்வது என்னும் பொருளதே. வண்டு கட்டுதல் என்பதை அறிக. ஒருகால் முதற்கண் கறிச்சை என்பது கருநிற வண்டைக் குறித்து, பின்னர்ப் பொதுவகையில் வண்டுக்கு ஆகியிருக்கலாம். கறித்தல்: மென்மையான பண்டங்களையும் காய்கறிகளையும் தின்னுதல் கறித்தலாம். காய்கறிகளைத் தின்னுதல் வழியில் கறித்தல் தொழில் பெயர் வந்திருக்கலாம். கறித்தலினும் கடித்தல் என்பது வன்பொருளைக் கடித்துத் தின்னுதலாம். இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று என்பார் குமரகுருபரர் (மீனா. பிள்.) விலங்குகள் கதிர், பயறு, குழை, பூ. இலை முதலியவற்றைக் கறித்தலைப் பற்றியே, தொகைநூல் பாடல்கள் குறித்தல் அறியத் தக்கதாம். ஆதலால் மாந்தர் உண்ணுதலைக் குறித்தல் பிற்கால வழக்கென்க. எயிற்றால் கறித்தான் சில என அனுமனைச் சுட்டுவார் கம்பர் (உயுத். 1836). கறிவேப்பிலை:1 கறிக்குப் பயன்படுவதும், வேப்பிலை போன்ற தோற்ற முடைய இலைகளை யுடையதும் ஆகையால் கறிவேப்பிலை எனப்பட்டது. அதன் இலை துவையல், தாளிப்பு ஆயவற்றுக்கு அல்லாமல் அப்படியே தின்னத்தக்கதுமாம். கறித்தல் = தின்னுதல். கறிவேப்பிலை:2 கறிவேப்பிலை தாளிதத்திற்குப் பயன்படும் இலை. அதனைத் தாளித்துக் கொட்டினால் கறிக்கும் தனிச்சுவை உண்டாகின்றது. ஆயினும் அதனை எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு உண்பதே வழக்கமாக உள்ளது. இதிலிருந்து, என்னைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று பழி கூறுவது உண்டாயிற்று. தங்கள் பயனே குறியாகக் கொண்டவர்கள் எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை விளக்குபவற்றுள் கறிவேப்பிலைக்கும் தனியிடம் உண்டாகிவிட்டது. கறுக்கு: கருக்கு > கறுக்கு. கறுப்பு நிறமான பனைமடல் கறுக்கு எனப்படும். கறுப்பு கருமை வண்ணமானது. கருமை, வலிமையும் ஆம். கருங்கை = வலிய கை. கறுக்கு மடலின் இருபுற ஓரங்களும் கூரிய பல் பல்லாக இருக்கும். அதனைப்போல் பல்வைத்துச் செய்யப்பட்ட அரிவாள், கறுக்கரிவாள் எனப்படும். அப்பல் கூர் தேய்ந்தால் கூர் ஆக்குதல் பன் வைத்தல் எனப்படும். பல் அரிவாள், பல்லரிவாள் பன்னரிவாள் பன்னறுவாள் என வழங்கும். பன்னறுவாள், இரம்பம் போல்வன செய்யத் தூண்டிய இயற்கைக் கொடை கறுக்கு மட்டை எனலாம். பருத்தியின் ஒருபெயர் பன் என்பது. அதன் கொறுக்கு கூர்மையானது; முள்போல் குத்துவது. கறுக்கு, கொறுக்கு ஆகிக் கொலுக்கு என வழங்குகின்றது. கறுப்பு: கறுப்பு:1 கறுப்பு = வெறுப்பு. கறுப்பு, கடுஞ்சினம் என்னும் பொருளில் வரும் சொல். கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள் தருவன என்பது தொல்காப்பியம் (855). சாராயம் என்பது மதி மருள - இருள செய்வதால் அதனைக் கறுப்பு என்பது வில்லுக்கிரி வட்டார வழக்காக உள்ளது. கள் என்பது கருநிறப் பொருளில் வந்ததையும் அறிக. கறுப்பு:2 கறுப்பு (கருப்பு) = பேய். கறுப்பு, கருநிறத்தைக் குறியாமல், கருநிறத்தால் அச்சுறுத்தும் பொய்த் தோற்றத்தைக் குறித்து வருகிறது. சிலர் இரவில் தனித்துச் சென்றால் நிழலசைவு, இருள், சலசலப்பு இவற்றால் அஞ்சி நடுங்குவர். இத்தகையரைக் கருப்பு அச்சுறுத்தி விட்டது எனக்கூறிக் கருப்பு ஓட்டும் முயற்சியில் ஈடுபடுவது நாட்டுப்புறக் காட்சி. அதிலும் பெண்களுக்கே இக்கருப்புக் கோளாறு காட்டுதலும் பேயாட வைத்தலும், உடுக்கு அடித்தலும் கல் சுமக்க வைத்தலுமாகிய நிகழ்ச்சி இந்நாளிலும் தொடர்கிறது. ஓராளும் கறுப்புடையும் பேய் என்றார் பாவேந்தர். கறையான்: கறையான் வெளிச்சத்தை விரும்பாது; வெளிச்சத்தில் வாழவும் செய்யாது; இருளையே விரும்பும். மண்ணின் மேலே உயர்ந்து புற்று இருந்தாலும் மண்ணின் உள்ளே இருட்டில் ஈரக்கசிவின் இடையேதான் வாழும். வெளியே இரை தேடப் போகும் வழியையும் மூடு பாலம் போட்டு அதன் உள்ளேயே உலாவும்! ஒரே இரவில் 100 அடி நீளம் கூட மூடுபாலம் அமைத்துச் செல்லும் ஆற்றல் உடையவை கறையான்கள். இவ்வறிவியல் கருத்தெல்லாம் நன்கு அறிந்தே பெயர் சூட்டி யிருக்கிறார்கள் நம் பண்டையோர். கறை என்பதன் பொருள் இருள். இருளிலேயே வாழும் உயிரிக்குக் கறையான் என்று பெயரிட்டது, இயற்கை நிலையறிந்து வைத்த பெயர் அல்லவா! இனி, அதற்கு ஆழல் என்பது மற்றொரு பெயர். நிலத்தை அகழ்ந்து ஆழத்தில் இருப்பதால் ஆழல் என்னும் காரணப் பெயர் அதற்கு இட்டனர். அதற்கு மற்றொரு பெயர் மிகப் பழம்பெயர் சிதல் என்பது. சிதைப்பதையே கடனாக்கிச் சிதைப்பதால் கிடைக்கும் உணவையே உண்டு வாழ்வதால் பெற்ற பெயர் இது. ஓயாமல் ஒழியாமல் ஊர்ந்து கடனாற்றுவதால், செல் என்பது இதன் மற்றொரு பெயர். சிதலை ஆழல் செல்லே கறையான் என்பது திவாகரம். கறையான் கூட்டம் கூட்டமாக வாழும். ஆதலால் பல்கிளைச் சிதலை என்றும் (அகம். 81), நுண்பல சிதலை என்றும் (புறம். 51), சிதலைத் தோடு என்றும் (நற். 325) கூறினர். தோடு = தொகுதி. கறையான் வாழும் சிறு புற்று ஒன்றை ஆராய்ந்து பார்த்த அறிஞர்கள் அதனுள் இருந்த பணியாளர் 15,60,000 பேர் என்றும், போர்வீரர் 2,00,000 பேர் என்றும், இளவலர் 40,000 பேர் என்றும் கணக்கிட்டனர். ஒரு சிறுபுற்றில் 18 இலக்கம் கறையான்கள்! (கலைக்கதிர் மலர் 12, இதழ் 8, பக். 24). கறையானைப் பல்கிளை, தோடு என்றது அறிவியல் பார்வை அன்றோ! கறையான் புற்றுக்கு வன்மீகம் என்பது ஒருபெயர். வன் + மீ + அகம் = வன்மீயகம். வன்மீயகம், வன்மீகம் என்றாயிற்று. வன்மையான மேலிடத்தை உடையது என்பது பொருள். கறையான் புற்றின் வன்மை கடப்பாறையின் கூர் நுனையையும் மழுங்கச் செய்ய வல்ல பாறைத்தன்மை உடையது என்பது கண்கூடு. எவ்வளவு மழை வெயில் காற்றையும் தாங்கி ஊழையும் வென்று நிற்கின்றது கறையான் புற்று. வன்மீகம் வடக்கே வான்மீகம் ஆயிற்று. வான்மீகனார் புறப்பாடல்கள் இயற்றிய தமிழ்ப்பாவலருள் ஒருவர் (புறம். 358) என்பதை அறிக. கற்கிடை: கற்கு + இடை = கற்கிடை. கற்களுக்கு இடையே வைக்கப்பட்ட முதுமக்கள் தாழியும், அத் தாழி வைக்கப் பட்ட புதையிடமும் கற்கிடை எனப்பட்டது. இவ்வூர் ஈழச்சேரியும் பறைச்சேரியும் வெள்ளான் சுடுகாடும் பறைச்சுடுகாடும் கற்கிடையும் ஆக இறையிலி நீங்கு நிலன் (க.க.சொ.அ.) கற்கை நெறி: பயிற்சிமுறை, கற்பித்தல் என்பவை பயிலுதல் பயிற்று வித்தல் சார்ந்த கலைச்சொற்கள். ஈழத்தமிழர் பயிலும் முறையைக் கற்கை நெறி என்கின்றனர். கற்பிக்கை நெறியும் ஆக்க இச்சொல் தூண்டும் அல்லவோ! கற்சிறை: கல் + சிறை = கற்சிறை. கற்சிறை என்பது கல்லால் கட்டப் பெற்ற அணை. கடுகி வரும் நீரைக் கல்லணை தாங்கினாற் போலப் பெருகி வரும் படையைத் தடுத்து நிறுத்துவான் கற்சிறை எனக் காரணக் குறி பெற்றான். அதுசெயற் கருஞ்செயல் ஆகலின் ஆசிரியர் தொல்காப்பியனார். அதனைப் பெருமை என ஆண்டார். ஐயனாரிதனார் ஒரு தனிநிலை என்றார். வருவிசைப் புனலைக் கற்சிலை போல ஒருவன் தாங்கிய பெருமை - தொல். புறப். 8 பொருபடையுட் கற்சிறை போன்று ஒருவன் தாங்கிய நிலையுரைத் தன்று - பு.வெ. 54 கற்பனை விளக்கம்: தலைவியின் அடிமுதல் முடிவரை உறுப்புகளைக் கற்பனை நயம் செறியப் பாடி, அவள் மறையோர் வேள்வியில் தோன்றி வந்தவளாகச் சொல்லி, தொடக்க முதல் முடிவு வரை நூலைச் சுவைபெற யாப்பது கற்பனை விலாசம் எனப்படும் கற்பனை விளக்கம் ஆகும். ஆதிமுதல் அந்தம்வரை பாதாதி கேசத்துக் கோதிய கற்பனை உண்டாக்கி - கோதை மறையோர்செய் வேள்விதனில் வந்ததாய் அப்பாடு அறிகற் பனைவிலா சம் என்பது பிரபந்தத் திரட்டு. அப்பாடு = அப்பாடப்படும் நூல். கற்பிதம்: ஒரு நிகழ்வை, அல்லது ஒரு காட்சியை அல்லது ஓர் எண்ணத்தைத் தாமே கற்பித்துக் கொண்டு படைத்து மொழிதல் கற்பிதம் எனப்படும். கற்பனை என்பது வனப்புறக் கூறுதல். கற்பிதம் உள்நோக்குக் கொண்டு படைத்துக் கூறுதல். ஊர்க்கணக்கர் ஒருவர்க்கு அவ்வூரவர் அவரவர் தொழில் முறைக்குத் தகப் பணம் தருவது வழக்கம். அரசு வரியன்று அது. அவர், தமக்கு வேண்டுவனவற்றைத் தட்டாமல் செய்வதற்குத் தரும் கையூட்டுப் போன்றது அது. அத்தொகையை ஊர்க்குயவர் அவ்வாண்டு தரவில்லை. அவரை ஏதாவது ஒன்றில் மாட்டிவிட வேண்டும் என்ற கருவுதல் ஊர்க்கணக்கர்க்கு இருந்தது. அந்நிலையில் பெருமழை ஒன்று பெய்து ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அவ்வெள்ளத்தில் எருமைகள் சில மாட்டிக் கொண்டு தப்ப முடியாமல் இறந்து பிணமாக ஊர்க்கரையின் பக்கம் ஒதுங்கி நாறின. அவ் வெருமையை எடுத்துப் புதைத்தாக வேண்டும். அதனைச் செய்வது எவர் கடமை என ஊர்க்கணக்கரிடம் ஊரவர் கேட்டனர். ஊர்க்கணக்கர் இதனைக் குயவர்மேல் கொண்ட உள் எரிவைத் தீர்த்துக் கொள்ள ஒரு கற்பிதம் செய்தார். காட்டெருமுட்டை பொறுக்கிக் குயவர் சூளையில் பானை சட்டிகளை வேக வைத்தலால் உண்டாகிய புகையே வானத்தில் முகிலாகி மழை பொழிந்தது. அப்பொழிவே வெள்ளமாகி ஆற்றில் வந்து எருமையை இழுத்துக் கொன்றது. ஆதலால், ஆற்றில் செத்த எருமைகளை எடுத்துப் புதைப்பது ஊர்க்குயவர்க்குக் கடன் என்று பழைய ஏடு ஒன்றில் இருப்ப தாகப் படித்தார். வேறு வழியின்றிக் குயவர்கள் எருமைகளை எடுத்துப் புதைத்தனர் என்பது போல்வது கற்பிதமாம். கற்பென்னும் திண்மை: பெண்ணினும் பெருமை மிக்கவை எவையும் இல்லை என்று, வள்ளுவரை ஓங்கிய குரலெழுப்பி உரைக்க வைக்கும் நற்பண்பு, இக்கற்புடைமையாகும். கற்பு கற்பு என்று பலராலும் பலகாலும் உரைக்கப் படுகிறதே, அதுதான் என்ன? இவ்வினாவை எழுப்பாதீர்; யானே விடையும் கூறிய பின்னரும் அதன்மேல் வினாவுதல் வெற்று வினாவா? வெட்டி வினாவா? என வள்ளுவம் புன்முறுவல் பூக்கிறது! திண்மை என்று சொல்லி விட்டேனே, பின்னும் என்ன தெளிவு வேண்டும்? என்கிறது அது. எண்ணியதை எண்ணியபடி முடிக்க வல்லார்க்கு என்ன வேண்டும்? திண்மை வேண்டும்! திண்மையாவது மன உறுதிப்பாடு. அதனை உடையவர் திண்ணியவர் (குறள் 666). திண்மைக்கு மேலும் விளக்கம் வேண்டுமா? உரியார் அன்றிப் பிறர் உட்புகாத் திண்மை. மதில் வெளிப்பட விளக்கும் பெருஞ்சான்று இல்லையா (குறள். 743). கல்லும் சாந்தும் நீரும் இட்டு இட்டு, குற்றி இடித்து வலுவாக்கும் திண்ணை நம் கண்ணை விட்டு அகலுமா? ஊடுருவும் ஒளிக்கதிரும் உண்டு! அயலார் ஒருவரால் ஊடுருவிச் செல்ல மாட்டா உருக்குக் கோட்டை, உரியான் ஒருவனுக்கே உருகும் கற்புக் கோட்டை. அணுவும் துளைக்க மாட்டா ஆழ்புலத்து அறையையும் வெல்லும் வாழ்புலத்து அறை கற்பு! கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை (கொன்றை. 14) என்பது. எவர் சொல்லியது திறம்பாமை? காதலனும் காதலியும் காதலித்த போது சொல்லிய உறுதிச் சொற்கள் திறம்பாமை (மாறாமை) யாம். கனப்பொள்ளல்: கனம் + பொள்ளல் = கனப்பொள்ளல். பொள்ளல் = ஓட்டை, வெற்றிடம். பார்க்கப் பெரியதாய் உள்ளே கூடு உடையதாய அமைக்கப் படும் அணிகலங்களும் உருவங்களும் கனப்பொள்ளல் எனப் பட்டன. (க.க.சொ.அ.) பொல்லம் என்பதும் இது. நார்ப்பெட்டி, நார்க்கடகம் ஓட்டையானால் அதனைப் பொல்லம் என்பது மக்கள் வழக்கு. பொல்லம் பொத்தலையா எனக் கூவி வருவார் அண்மைக் காலம் வரை இருந்தனர். கனம்: கல் > கன் > கனம். கல் போன்ற வன்மையது கனம் ஆகும். அது எடைக் கனத்தையும், புகழ்ப்பேற்றின் செயலாற்றலின் எண்ணத்தின் கனங்களையும் குறிப்பதாயிற்று. எ-டு: கனவான், கனமிக்க. யான் எனது என்று செருக்கும், தலைக்கனத்தையும் குறிக்கும். தலைக்கனம் பிடித்தவன் என்பது மக்கள் வழக்கு. கனம் இனம்: கனம் = பெருமை. இனம் = இனிய சுற்றம் நட்பு முதலியன. கனமும் இனமும் சேர்தல் அருமையில் அருமையும் பெருமையில் பெருமையுமாம். அவர் கன இனமானவர் என்பது மக்கள் வழக்கு. * கனம், இனம் காண்க. கனல்: கல் > கன் + அல் = கனல். கரியது ஆக்குவதும் கெட்டித் தன்மை ஆக்குவதும் கனலாம். எவ்வண்ணப் பொருளாயினும் எரியிடைப் படின் கரியதாதல் கண்கூடு. பாரிய கட்டையையும் கரியாக்கி மற்றொரு பொருளாக்கிவிடும். கரிவது பொடிப்பொடியாகப் போய்விடும். கன்னல் என்னும் கரும்பு வண்ணமும், கல் என்னும் கரிய கல் வண்ணமும் எண்ணத் தக்கவை. கல்லின் கருநிறத்தொடு, கெட்டித்தன்மை யாதலும் கொண்டதால் செங்கல், வெள்ளைக்கல், பச்சைக்கல் எனப் பல கற்பெயர்கள் உண்டாயின. கரும்பலகை கற்பலகை என வழங்கலும் எண்ணத்தக்கது. * அனல் காண்க. கனவு: கல் > கன் > கன > கனவு > கனா = தோன்றி மறைதல். நனவில் கண்ட காட்சி ஆழ்மனத்தில் பதிந்து உறங்குங்கால் திரைமறைவுக் காட்சி போல ஒன்றாய்ப் பலவாய் மாறாய்த் தெளிவின்றித் தோன்றுவதாய் விழித்தபின் பலவும் மறைந்து சிலமட்டும் மறையாததாய் இருப்பது கனவாகும். கனவின்கண் காதலர் வருதலை நோக்கி அதனைக் காதலியர் விரும்புவது என்பது காணாதவரைக் காண வேண்டுமென்னும் ஏக்க உரையாம். கனவில் காணும் காட்சியால் அலறி எழுவாரும் அதன் பயன் அறிய விழைவாரும் இருப்பதால் கனவுக்குப் பயன் சொல்லும் ஒருவகைக் கணியரும் உண்டாயினர். கனா நூல் என ஒன்று உண்டு. அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டும் பழைமையது. சிலப்பதிகாரக் கனவு, கட்டபொம்மன் காலக் கனவு, சீதை கனவு என்பவை நாடறிந்தவை. கற்பனையால் எதிர்கால நிலையைக் கூறுவதைக் கனவு என்பதும் வழக்காயிற்று. விலங்குகளும் பறவைகளும் கனவு கண்டதாகப் புலமையர் படைத்த படைப்புகளும் சங்கப்பாடல்களில் உண்டு. உங்கள் கனவு நனவாகட்டும் என நற்கனவை வாழ்த்துதல் வழக்கு. * நனவு காண்க. கனவுதல்: கனவுதல் = கனவு காணுதல். நனவு x கனவு. கனிமம்: மரம் செடி கொடிகள் காய்த்து, பழுத்து, கனி தரல் கண்கூடு. அவ்வாறே மண்ணும் காய்ந்து, பழுத்து, கனிந்ததால் இரும்பு செம்பு பொன் வயிரம் எனக் கனிகின்றது. அதனைக் கனிமம் என்றனர். கனிமம் மாழைகளின் பொதுப் பெயராம். அரிய பெயரீடு இது. கனை: கன்றின் குரல் கனைத்தல் எனப்படுகிறது. தாயை நோக்கி அழைத்தலே பெரிதும் கனைப்பாகிறது. ஆதலால் ஒன்றை வேண்டி அழைத்தல் என்றாகியது. குழந்தை அழுதால், ஏன் கனைக்கிறாய்? ஓயாமல் கனைத்தாலும் ஒன்றும் கிடையாது எனல் வழக்காயிற்று. கனைத்தல் என்பது பேரொலியாய்ச் சிற்றொலியாய் வழங்குவதாயிற்று. கனைகடல், கனைகுரல் நாரை, கனைகுரல் பல்லி முதலாயவை அவை. கனைத்தான்: கனைத்தல் = கத்துதல். சிலபேர் அப்படி இப்படி எனச் சொல்வர்; ஆனால் எதுவும் செய்யார். உன்னை என்ன செய்கிறேன் பார்? என்பர். ஆனால், எதுவும் செய்யார் அத்தகைய சொல்வீரனைக் கனைத்தான் எனல் நெல்லை வழக்கு. கன்று கயந்தலை: கன்று = குட்டி. கயந்தலை = பெரிய மெல்லிய தலையை யுடைய யானைக்குட்டி. கன்று, ஆன்கன்று, மான்கன்று, யானைக்கன்று என வழங்கப் பெறும். ஆனால் கயந்தலை யானைக் கன்று ஒன்றை மட்டுமே குறிப்பதாயிற்று. கயம் என்பதற்குப் பெரிய என்னும் பொருள் உண்டு. கயந்தலை என்பது பெரிய தலையாம். கயவாய்ப் புனிற்று எருமை என்பார் குமரகுருபரர் (மீனாட். பிள். 24). கயவாய் = பெரிய வாய். யானைக் கன்றின் உடலோடு அதன் தலைப்பருமையை ஒப்பிடப் பெரிதாய் இருத்தல் கருதி வந்த பெயராம். கன்று காலி: கன்று = கன்றுக்குட்டி. காலி = எருமை, பசு முதலிய மாடுகள். கன்று காலி மேய்ப்பதைச் சிற்றூர்களில் ஒரு தொழிலாகவே செய்கின்றனர். ஊர் மாடுகள் ஊர்க்காலி மாடு எனப்படும். ஊர்க்காலி மாடு மேய்த்தலை உரிமைத் தொழிலாகக் கொண்டு விளைவு காலத்தில் களத்தில் உரிமைப் பங்கு (சுதந்திரம்) பெறுதல் இன்றும் சிற்றூர்களில் உண்டு. கன்றும் காலியுமாக மேயச் செல்லும் மாடு எனின் பால்வற்றிப் போன மாடாகும். இளங்கன்று உடையதாயின், கன்றை மட்டும் வீட்டில் நிறுத்தி மாட்டைக் காட்டுக்கு ஓட்டிச் செல்லுதல் வழக்கமாம். கன்று காலி தங்கிடமும் மேய்ப்பிடமும் நத்தம் புறம் போக்கு என ஒதுக்கி வைக்கப்படுவதுண்டு. கன்றுத் தோட்டம்: நர்சரி எனப் பல இடங்களில் பூச்செடி, பழச்செடி ஆகியவை உண்டாக்கி விற்கப்படுகின்றன. ஏலத் தோட்ட வழக்காக ஏலப் பயிர் உண்டாக்கும் இடத்தைக் கன்றுத் தோட்டம் என்று வழங்குகின்றனர். * நாற்றங்கால் காண்க. கன்னக் கிடாரி: கிடாரி என்பது மாட்டில் பெண்; பசு, எருமை ஆகியவற்றின் பெண்பால் கிடாரி எனப்படும். ஆண்பால் கடா எனப்படும். உறங்கியவன் கன்று, கடாக்கன்று என்பது பழமொழி. பசு எருமை வளர்த்துப் பால் விற்பவர் கன்று போட்டுப் பெருகுதலைக் கருதுவார். ஆனால் உரிய பருவம் வந்தும் ஈனாக் கிடாரியைக் கன்னக் கிடாரி என்பது அரூர் வட்டார வழக்காக உள்ளது. கன்னிக் கிடாரி ஈனும். ஆனால் கன்னக் கிடாரி ஈனாதது. ஈனா வாழை என்பது போன்றது. கிடாரி > கிடேரி என வழங்கலுமுண்டு. கன்னல்: காலம் காட்டும் கருவிப் பெயராகவும் காலப் பெயராகவும் கன்னல் என்பது முன்னரே வழக்கில் இருந்தது. அக்கன்னல் சிறுவிழா என்னும் பொருளில் செட்டிநாட்டு வழக்காக உள்ளது. அது, மற்றைப் பெருவிழாக்களைப் போல் திங்கள், கிழமை, நாள் என்னும் அளவு பெறாமல் சிற்றளவுப் பொழுதில் நிகழும் விழாவுக்கு ஏற்பட்டு அதன் பின்னர்ச் சிறுவிழாப் பொருளில் ஆட்சி பெற்றிருக்கும். கன்னாடகம்: புறப்பொருள் வெண்பாமாலையில் தமிழ்க்குடியின் பழமை, பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி என்று கூறப்படுகிறது. அப்பழமை கொண்டே தொல்பழந் தமிழ்நாட்டைக் கன்னாடு என்றனர். அக்கன்னாட்டு இசையைக் கன்னாட இசை என்றனர். பின்னே உண்டாகிய கருநாடகத் தொடும் இசையைத் தொடர்பு படுத்துவது உலகு என்னும் அறிவியல் வழிக் கலைச்சொல்லை லோக் ஆக்கிக் கொண்டது போன்றதாம். கன்னாடகம் என்பது பழமை, பழந்தமிழ்நாடு, பழந்தமிழிசை என்பனவாம். கன்னாடு, மலைநாடு கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும் (புறம். 60). கருநாடு = கருமண் அமைந்த நாடு; நாட்டின் பெயர் அது. பின்வரவு. கற்காலம் = பழங்காலம். பழங்கற்காலம், புதுக்கற்காலம் என்பவை பொற்(மாழைக்) காலத்திற்கு முற்பட்டவை. கன்னி மயக்கம்: தன் பேரழகால் கன்னியொருத்தியைத் தன்னவளாக்கித் தன்னகத்துச் சேர்ப்பது கன்னி மயக்கம் என்னும் பனுவலாகக் கூறப்படும். பூவையைத் தவத்தால் எழில்பெற்று மாரன்போல் வந்துதன் அகத்தாக்கல் கன்னி மயக்கம் என்பது பிரபந்தத் திரட்டு (63). அகத்தாக்கல் (அகத்து ஆக்கல்) என்பது மனத்து ஆக்கலும் மனைக்கண் ஆக்கலுமாம். முன்னது களவும், பின்னது கற்பும் என்க. கன்னியாப் பெண்: கன்னியாள் ஆகிய பெண் இவ்வாறு மக்கள் பேச்சில் வழங்குகின்றது. அவள் என்றும் மகப்பேறு அடையாது கன்னியாகவே இருப்பவள். பூப்பும் அடையமாட்டாள். இவ்வழக்கு வடமதுரை வட்டார வழக்காகும்.  கா வரிசைச் சொற்கள் கா: கா:1 கா = ககர ஆகாரம்; காவன்னா. கா:2 ஓர் ஒலிக்குறிப்பு. காகா எனக் கரைதல். கா:3 கா = பழநாள் நிறையளவுகளில் ஒன்று; நிறை கோல். காப்பொன் என்பது. காப்பொன்னின் மாப்பொன் லோபதாய்த் தெட்டாதிரான் - தனிப். கா:4 கா = காவடி; தோட்சுமை. ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது - திருக். 1196 கா:5 கா = காப்பாயாக, காக்க. கா:6 கா = பூங்கா. திட்டப்படுத்திப் பூச்செடி கொடிகளை அமைத்துக் காப்பது கா. காகதுண்டம்: காகம் + துண்டம் = காகதுண்டம். அகிலின் பெயர், காகதுண்டம் என்பது. அகில் கரு நிறத்தது ஆதலால் காகதுண்டம் என்பதாயிற்று. காரகில் என்பது அகில் வகையுள் ஒன்று என்பது, புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது - நறுந். 26 என்பதால் புலப்படும். அகில் வகைகளை, அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகில் என்று சிலம்பு (4:108. அடியார்க்.) கூறும். காழ்வை என்பதும் அகிலின் ஒரு பெயராம். காழ், கருமை, வன்மை என்னும் பொருளதாம். காகம்: காகம்:1 காகா எனக் கரையும் பறவை; காக்கை. பகல்வெல்லும் கூகையைக் காக்கை - திருக். 481 காகம்:2 கருநிறம்; காகத்தின் நிறம் கருமை. எ-டு: காகக் கரிசலாங்கண்ணி, காக்கைப்பொன். காகம்:3 காகம் = கீரி. கருநிறத்ததால் கீரி காகம் எனப்பட்டது. காகம்:4 காக்காய் என்பதும் இது. (வெ.பே.) அக் காக்காய் - நாலா. 162-171 காக்கட்டான்: கருநிறக் குவளை; கருங்குவளை. காக்கணம் என்பதும் இது. காக்கல்: குழம்பு காய்கறி மிகுந்து காரமாக இருந்தால் காக்கலாக இருக்கிறது என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. காக்காக்கடி: காக்காக்கடி = பற்படாமல் பண்டத்தின் மேல்துணி போட்டுக் கடித்துத் தருதல். குழந்தைகள் எச்சிற் பண்டம் தின்னக் கூடாது என்பதற்காகக் காக்காக்கடி கடித்து ஒருவர்க்கொருவர் தருவது வழக்கம். காக்கை அலகால் கொத்தித் தருவது போலத் தருவது கொண்டு இப்பெயர் ஏற்பட்டதாகலாம். காக்காக்கடிக்கு எச்சிலும் இல்லை; தீட்டும் இல்லை என்பது வழக்கம். அணில் கடித்த பழம் சுவையானது எனத் தின்பர். ஆனால் எலி, பேரெலி கடித்ததைத் தின்னார். அது போல் காக்கை கடித்தது குற்றமற்றது என்னும் கருத்திலும் இவ்வழக்கு வந்திருக்கலாம். காக்காச் சோளம்: காக்கையின் கருநிற மமைந்த சோழம். கருஞ்சோளம் என்பது மக்கள் வழக்கு. காக்கை: காலையில் நாம் எழுகின்றோமோ இல்லையோ காக்கை எழுந்து விடுகின்றது. கா கா எனக் கரைந்து நம்மை எழுப்பியும் விடுகின்றது. காகம் கா கா எனத் தொடுத்துக் கரைகின்றதா? இல்லை! காக்கை ஒன்று ஓரிடத்திலிருந்து கா என்று குரல் கொடுத்தால் இன்னோர் இடத்தில் இருக்கும் காக்கையொன்று கா என்று மறுகுரல் கொடுக்கும்! மாறி மாறி இவ்வாறு கேட்பது வியப்பாக இருக்கும். ஒன்று நான் இங்கே இருக்கிறேன் என்று குரலிட்டுக் காட்ட, மற்றொன்று நான் இங்கே இருக்கிறேன் என இடஞ்சுட்டிக் காட்டி இனஞ்சுட்டிக் கொள்ளல் வியப்பேயாம்! இவ்வியப்புணர்ந்தே கா கா என்று கரையும் அப்பறவையைக் காக்கை காக்கா காகம் என முன்னோர் வழங்கினர். கரைதல் என்பதற்கு அழைத்தல் கூப்பிடுதல் எனப்பொருள் கண்டனர். அப்பொருளும் மக்கள் அழைப்போடு நில்லாமல், கலங்கரை விளக்கம் எனப் பெயரிட்டழைக்கவும் தூண்டலாயிற்று. கப்பல்களை அழைக்கும் விளக்கே கலங்கரை விளக்கம். காகத்திற்கு அச்சம், சினம், கிளர்ச்சி, மகிழ்ச்சி முதலிய உணர்ச்சிகள் உண்டாகி விடுமானால் ஒரே காகம், கா கா எனப் பன்முறை கத்தவும் செய்யும்! பல காகங்கள் சேர்ந்தும் இடை யீடின்றிக் கா கா எனக் கத்தவும் செய்யும், இவ்வொலியைக் கேட்ட அறிவாளர், அவ்வொலியையும் அக்கூட்டத்தையும் காகளம் என்றனர். களம் இடமும் கூட்டமுமாம்! காலம் களனே என்பது நன்னூல் (48), களவன் என்பவன் நிகழிடத் திருந்த சான்றாளன். காகம் கலந்துண்ணல் திருமூலரால் பாராட்டப்படும்; காகம் கரைந்துண்ணல் திருவள்ளுவரால் சிறப்பிக்கப்படும். ஆனால் எத்தித் திருடும் காகம் என்பதைக் கண்ணாரக் காண்கிறோமே! எத்தித் திருடியதைக் கரைந்து உண்ணாது காகம்; கரந்தே உண்ணும்! எத்தித் திருடாமல் இயல்பாகக் கிடைத்ததையும் கொடையாகக் கிடைத்ததையும் உண்ணுங்கால் கரைந்தே உண்ணும்; அதனால்தான் திருவள்ளுவர், காக்கை கரவா கரைந்துண்ணும் என்றார் (திருக். 527). பொருள் வந்த வகைக்கு ஏற்ப வெளிப் படையாகவும், கரவாகவும் துய்க்கப்படுதலைக் காகம் விளக் குமோ? காகத்தை உணர்ந்த வள்ளுவர் உள்ளம் விளக்குமோ? காக்கை கரைந்து கொண்டு வீட்டைச் சுற்றினால் விருந்து வரும், என்பது மாந்தர் நம்பிக்கை! பிரிந்த தலைவன் வருவான் என்பது தலைவியின் நம்பிக்கை! இனத்தை அழைத்து இனத்தோடு உண்ணும் காக்கையின் இயல்பு இந்நம்பிக்கைக்கு மூலமாகலாம். பிரிந்த தலைவன் வர இருப்பதைக் காக்கை தன் கரைவால் சொல்லியதாம். அதற்கு மகிழ்ந்த தலைவி ஏழு கலங்களில் நெய்யொடு கலந்து நெற்சோறு வழங்குவாளாம். இப்படிப் பாடிய புலவர் பெயர் நச்செள்ளையார்! பாணர் குடியினர்! அவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் எனப்பட்டார்! காக்கை தந்த பெயர்க் கொடை தானே இது. (குறுந். 210) இவருக்குப் பின்னேயும் காக்கை பாடினியார் இருவர் இருந்துளர். அவர்கள் இலக்கணப் புலமையாளர்; காக்கை பாடினியார், சிறுகாக்கை பாடினியார் என்பவை அவர்கள் பெயர்கள். காக்கை பாடினியம், சிறுகாக்கைபாடினியம் என்பவை அவர்கள் இயற்றிய யாப்பியல் நூல்கள்! காக்கையின் கொடை இவ்வளவுடன் நின்றதா? காக்கையின் மூக்குப் போன்ற மூக்கை உடையவன் காக்கை மூக்கன்; மாறு கண்ணையுடையவன் காக்கைக் கண்ணன்; காக்கைக் கால் விரல்போல் வயிரத்தில் அமைந்த வரி, காக்கைக்கால், காகபாதம்; ஊர் பேர் அறியாமல் வந்து போகின்றவன் காக்கன் போக்கன். காக்கையின் உறுப்புகளாலும் இயல்பாலும் கிடைத்த கொடை இவை என்றால், அதன் வண்ணங் கொடுத்த கொடை எண்ணத்தொலையாது. காக்கட்டான், காக்கணம் = கருவிளை. காக்கரை = கரிசல் நிலம். காக்கன் = கடல்வாழ் கருமீன். காக்காச் சோளம் = கருஞ்சோளம். காக்காத்தாளி, காகதாளி = கருங்காலி மரம். காகக் கரிப்பான் = கருங்கையாந்தகரை. காகக்கல் = கருங்கல். காகக்குட்டம் = கருங்குட்டம். காகச்சிலை = இரும்புத் துண்டு. காகச்சுக்கான் = கருஞ்சுக்கான். காகசுரம் = கரும்புள்ளி யுண்டாக்கும் சுரம். காகணம் = கருஞ்சிவப்புக் கொப்புளம் ஆக்கும் நோய். காக தக்காளி = கருந்தக்காளி. காகதுண்டம் = அகில், கருங்காலி, நீர்க்கோழி. காகதுண்டி = காக்கைப் பொன். காகதும்பி = கருவண்டு. காகதும்பை = கருந்தும்பை. காகநாவல் = கருநாவல். காக்கையின் பண்புக் கொடையும் உண்டு. அவை, ஒருவகை: காலையில் எழுந்திருத்தல், காணாமல் புணர்தல், கூடி யுண்ணல், மாலையில் குளித்தல், கெடுதியைத் தன் இனத்துக்கு அறிவித்தல் (அகரமுதலி). மற்றொரு வகை: மடியின்மை, கலங்காமை, நெடுகக்காண்டல், பொழுதிற வாது இடம்புகுதல், மறைந்த புணர்ச்சி (திருக்கோவை. 235 உரை). காக்கை பிடித்தல் என்பதற்கும் காக்கைக்கும் தொடர்பு உண்டா? பாவம்! பழியோரிடம் பாவமோரிடம்! கால்கை பிடிப்பதே காக்கை பிடித்தலாம். காக்கை வலி? கால் கை வலித்தலே, காக்கை வலியாம்! இப்படியெல்லாம் நம்மவர் சிறுமைப்படுத்துவர் என்றுதான் காக்கை கன்றிக் கருமையாகித் தோன்றியதோ? இனியொரு காக்கைச் சுவை! காட்சிச்சுவை! காக்காய் கறிசமைத்துக் கருவாடு மென்று தின்பர் சைவர் என்பது! நல்ல சைவரா இவர்? ஆம் நல்ல சைவரே! ஒரு சிறு காயாக இருந்தாலும் முழுமையாகக் கறியாக்கி உண்ணாமல் கால் காயை வெட்டி எடுத்து அதனைச் சமைத்து உண்பராம்! ஏன் கால் காயையும் உண்கிறாராம்? கரு வாடிப் போகுமே - உயிர்போய் விடுமே - என்பதால் உண்கிறாராம். வழக்கிலே யுள்ள இச்செய்தி, கலைவாணரால் திரைச்செய்தி யாகத் திகழ்ந்தது. நல்லனவெல்லாம் கா கா என எப்பாலும் எப்போதும் பறையறையும் காக்கை தந்த சொல்வளம் நல்வளம் அல்லவோ! காக்கை பாடினியார்: காக்கை பாடினியார், நச்செள்ளையார் வழியினராகவோ, அப்பெயர் கொண்டவராகவோ இவர் இருந்திருத்தல் கூடும். இவர்க்கு இளையவர் சிறுகாக்கை பாடினியார் என ஒருவர் இருந்தார் என்பதும், அவர் சிறுகாக்கைபாடினியம் என்னும் யாப்பு நூல் இயற்றினார் என்பதும் யாப்பருங்கல விருத்தியால் விளங்குகிறது. காக்கை பாடினியம் என்பது யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆயவற்றுக்கு முன்னூல் என்பது அந்நூல்களின் உரையால் விளங்கும். காக்கை பாடினியம் யாப்புநூல்; எம்மால் தொகுக்கப்பட்டு உரைவிளக்கம் காணப்பட்டது. காக்கை பாடினியார் நச்செள்ளையார்: சங்கச் சான்றோருள் ஒருவர். இவர் காக்கையைப் பாடிய பாடல் குறுந்தொகையில் உள்ளது (210). விருந்துவரக் கரைந்த காக்கை என்னும் தொடருள்ளமையால் நச்செள்ளையார் இப்பெயர் பெற்றார். இவர் பாடல்கள் குறுந்தொகை (1) புறநானூறு (1) பதிற்றுப் பத்து (10) ஆகியவற்றில் பன்னிரு பாடல்கள் உள. ஆடு கோட் பாட்டுச் சேரலாதனைப் பதிற்றுப்பத்தில் பாடிப் பரிசு பெற்றவர் இவர். காங்கை: காங்கை = வெப்பம். கங்கு > காங்கு > காங்கை. கங்கு என்பது தீ எரிந்து சூடுள்ள கட்டைத் துண்டு ஆகும். தீக்கங்கு என்பர். கங்கு > காங்கு ஆகிக் காங்கையும் ஆகி அவ்வெப்பப் பொருளில் காங்கை போதாது தேய்ப்பதற்கு என்று வழங்குதல் சலவைத் தொழிலர் வழக்கமாகும். இன்றைக்குக் காங்கை மிகுதி என்பது மக்கள் வழக்கு. காசம்: காசு = காய்ச்சு. காய்ச்சு > காசு + அம் = காசம். உருகக் காய்ச்சி எடுக்கப்பட்ட பொன். உருக்கும் ஈளைநோய்; காசநோய். காசு: காசு:1 தங்கக்காசு, வெள்ளிக்காசு, செப்புக்காசு, காசுமாலை என்பவை எல்லாம் அறிந்தவை. காய்ச்சி வடிக்கப்பட்ட மாழை யால் அமைந்தது காசு எனப்பட்டது. காய்ச்சு > காசு. காசு என்பது பொன், பொற்காசு முதலாம் பொருள் தரும். காசு நிறமுடைய மாக்கட்டி காசுக்கட்டி எனப்பட்டது. கொன்றையின் பூ, காசின் அன்ன போதீன் கொன்றை எனப்படுகிறது (குறுந். 148). அந்நாளில் காசு உருண்டையாக இருந்தது என்பது இவ்வுவமையால் புலப்படும். காசு:2 காசு = குற்றம். அணிகலமாகச் செய்யப்படும் போதே செம்பு கலந்து செய்தற்கும்; மாற்றைக் குறைத்தற்கும், பின்னைக் களவு திருட்டு ஆயவற்றுக்கும் இடமாக இருத்தலால் காசு என்பதற்குக் குற்றம் என்னும் பொருளும் உண்டாயிற்று. காசு:3 வெண்பாவின் இறுதிச்சீர் வாய்பாடுகளுள் ஒன்று. உகரம் பெற்ற தேமா அது. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு - திருக். 739 காசு என்பதே காசு வாய்பாடு தானே! காசுக்கடை: காசு + கடை = காசுக்கடை. தங்கம் வெள்ளி வாங்கவும் விற்கவும் அமைந்தகடை காசுக்கடை யாகும். காசு, பணம் ஆதலால் காசுபணம் என்பது இணைச்சொல்லாக வழங்குகிறது. காசுக்காரர், பணக்காரர் எனப்படுவார். காசுக்கடைத் தெருவை நோக்கினால் அப்பெயரை எப் பலகையாவது காட்டுகிறதா? வணிகர்க்கு அவ்வளவு தமிழ்க் காதல்! தமிழர் கடை என்பதன் சான்று தமிழ்ப்பெயர் தாங்கல்! காசலை: காசு + அலை = காசலை = அக்கறை. இன்றைக்கு என்னவோ காசலையா வந்து பேசுகிறான்; நேற்றெல்லாம் கண் தெரியவில்லை என்பதில் புதிதாக வந்த அக்கறை புலப்படும். இது முகவை, மதுரை, நெல்லை வழக்கு. காசின்மேல் உள்ள பற்றால் அலையாக அலைந்து தேடுவது போன்ற அக்கறை இதுவாம். காச்சு மூச்சு: காச்சு (காய்ச்சு) = கஞ்சியைக் காய்ச்சு. மூச்சு = பசியால் உயிர் போகிறது. பசித்துக் கிடக்கும் குழந்தைகள் கஞ்சிக்காகக் கத்தும் போது, காச்சு மூச்சு என்று கத்துகின்றன என்பர். அக் கத்துதலால் வந்த வழக்கு ஒருவர் சாகக் கிடக்கும் போதோ, சண்டையின் போதோ பேரொலி கேட்குமானால் காச்சு மூச்சு என்று கிடக்கின்றது என்று வழங்கலாயிற்று. காஞ்சனம்: காஞ்சனம்:1 காய்ஞ்சனம் > காஞ்சனம் = காய்ச்சப்பட்ட பொன். காஞ்சனம்:2 பொன்னிற மணல். காஞ்சனம்:3 பொன்னிறம் அமைந்த மஞ்சள். காஞ்சனம்:4 பொன்னிற நெற்று உடைய புன்கு (புன்குமரம்). காஞ்சனம்:5 பெயர், காஞ்சன மாலை (பொன்மாலை). காஞ்சி: காஞ்சி:1 காய்ஞ்சி > காஞ்சி = காய்ச்சப்பட்ட பொன்னால் (காசால்) ஆகிய அணிகலம்; எண்கோவை மணி. காஞ்சி:2 எட்டிமரம்; எட்டிப்பழம் சிவப்புடன் கூடிய மஞ்சள் நிறமுடையது (நோய்களைக் குணப்படுத்தும் இந்துக் கோயில் மரங்கள் - பக். 281) ஆதலால், காஞ்சி எனப்பட்டது. காஞ்சிகை, காஞ்சிரை என்பவும் இது (வெ.பே.). பொன்போன்ற நிறமமைந்த பூவையுடையது பூவரசு. அம்மரமே திருக்கோயில் மரமாகலால் காஞ்சி எனப்பட்டது. காஞ்சி மரம் = பூவரச மரம். ஆற்றுப் பூவரசு எனப் பொருள்படும் காஞ்சியைப் பெயராகக் கொண்டது (வாழ்.கள. 7). காஞ்சி:3 ஊர்ப்பெயர். காஞ்சிபுரம். காஞ்சி:4 புறத்திணையுள் ஒன்று; நிலையாமை பற்றியது. பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே - தொல். 1024 நில்லா உலகம் எனக் கண்ணேரில் காட்டும் கதிர், மதிகளின் மறைவும், குறைவும், வளர்வும் இன்மையும் ஆகிய காட்சிகள். காஞ்சி மாலை: பகைவர் ஊர்ப்புறத்துக் காஞ்சிப்பூ மாலை சூடி ஊன்றலைக் கூறுவது காஞ்சி மாலையாம். காஞ்சி புனைந்து கருதார் ஊர்ப்புறம் ஊன்றலை உரைப்பது காஞ்சி மாலை - முத்துவீ. 1074 காஞ்சிப்பூ மாலையே காஞ்சித்தார் சூடிக் கருதலர் ஊர்ப்புறம் கைப்பற்றலைச் செப்பலே - பிரபந். தீப. 46 காஞ்சி என்னும் புறத்திணையின் ஊன்றுதல் என்னும் துறை வழியே பிறந்தது இக்காஞ்சி மாலை என்னும் இலக்கிய வகையாம். காஞ்சி கையறுநிலைப் பொருளதாதல் மறைமலை யடிகளார் இயற்றிய சோமசுந்தரக் காஞ்சியால் தெளிவுறும். நிலையாமை பற்றிக் கூறுவதும் காஞ்சியே என்பது தொன்னெறி. காஞ்சியம்: காய்ஞ்சியம் > காஞ்சியம். காஞ்சியம் = பொன்போலத் தோற்றம் தரும் வெண்கலம். பொன்னிற வேரையுடைய நுணாமரம். மஞ்சிகை, மஞ்சிட்டி என்பதும் இது. (வெ.பே.) காடர்: காடு + அர் = காடர். காடர் தமிழகத்தும் சேரலத்தும் வாழும் பழங்குடியினர். ஆனைமலையில் காடர், முதுவர், மலசர் என்பார் வாழ்கின்றனர். தமிழும் மலையாளமும் கலந்த மொழி பேசும் இவர்கள் வேட்டை வல்லார்; தேன் எடுத்தல் தேர்ச்சியர்; யானை பிடித்தலிலும் வல்லார். இவர்கள் தலைவன் மூப்பன்; தாய் வழிக் குமுகாயத்தர்; இடம் பெயர்ச்சியுடையவர். பழந்தமிழர் என்பது இவர் பெயரால் புலப்படும் (வாழ். கள.) காடாக்கல்: காடு + ஆக்கல் = காடாக்கல் காடாக்கல் = அழித்தல், கெடுத்தல். காடு ஆக்குதல் கட்டாயம் வேண்டத் தக்கதே. மழையின் குறைவுக்குக் காட்டை அழித்ததே அடிப்படை. காலத்தில் மழை யின்றி விளைவு இன்றி நாடு அல்லல்படுவது காடு அழிவாலேயாம். ஆதலால் காடாக்கல் நல்லதே எனினும், இக்காடு ஆக்கக் காடன்று; அழிகாடு! ஆம்! சுடுகாடு. சோலையாக இருப்பதையும் பாலையாக மாற்றுவார் உண்மையில் அத்தகையரைக் காடாக்குவார் என்பது வழக்க மாயிற்றாம். கல்லுழி மங்கன் போன வழி காடு மேடு என்பது பழமொழி. காடி: கடி > காடி = கடுகப்புளித்த சோற்றுநீர். கடி = மிகுதி. புளிப்பு மிகுந்த நீர் காடி எனப்படும். காடிக் கஞ்சி யானாலும் மூடிக்குடி என்பது பழமொழி. மாடுகளைத் தொழுவத்தில் கட்டித் தீனிபோடுவதற் குரியதாகச் செய்யும் பலகை யடைப்பு உழவர்களால் காடி என வழங்கப்படுகின்றது. கட்டை வண்டியின் மேல் முளைக்கம்பு ஊன்றிப் பலகையால் அடைப்பதும் காடி ஆகும். காடி வண்டி என்று வண்டிப் பெயரும் ஆயிற்று. மலையகத்தில் பேருந்தைக் காடி என வழங்குகின்றனர். பக்க அடைப்பு மட்டுமே பேருந்துக்கு இருந்த வரலாற்றை நினைவூட்டுவது அது. காடு: காடு:1 காட்டு அரணம்; அரணியம் = காடு. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண் - திருக். 742 காடு:2 ஊர்ப்பெயரீறு; ஆர்க்காடு, ஏர்க்காடு. காடு:3 இடப்பெயர் ஈறு; இடுகாடு, சுடுகாடு, வயற்காடு. காடு:4 இறப்பு, நோய் முதலியவற்றின் ஈறு; சாக்காடு, நோய்க்காடு. காடு:5 மிகுதி. வெள்ளக்காடு. ஒரே வெள்ளக் காடாகக் கிடக்கிறது என்பது மக்கள் வழக்கு. காடு:6 செப்பம் செய்யாமை. வீடு காடாகக் கிடக்கிறது என்பது மக்கள் வழக்கு. காடு:7 திட்டமின்றி மரஞ்செடி கொடிகள் அடர்ந்து கிடப்பது காடு. காடு கரை: காடு = முல்லை நிலம் அல்லது மேட்டு நிலம். கரை = மருத நிலம் அல்லது வயல் நிலம். முன்னது, புன்செய்; பின்னது, நன்செய். ஓரூரிலேயே ஒருவருக்கே காடு கரையுண்டு. காடுகரை பார்த்து வரல் வழக்காறு. காட்டில் ஓர வரப்புகள் மட்டுமே உண்டு. கரையில் உள்வரப்புகள் பலவுண்டு. வரப்பு உயர நீர் உயரும் என்பது தெளிவே. காடு காள்: காடு காப்பவள் > காடு காள் = காளி. எ-டு: காடு கிழாள் என்பதும் இது (சிலப். 4:9). காடுகிழாள் வெயில்: காடுகிழாள் = காளி; மாலைக் காலத்துப் பரந்த பச்சை வெயில். செல்சுடர்ப் பசுவெயில் - மதுரைக். 411 இக்காலத்து இதனைக் காடுகிழாள் வெயில் என்ப (சிலப். 4:5 moah®¡., நச்.) காடுபடு பொருள்: காடுபடு பொருள் = காட்டில் பெருகி விளைந்து எடுப்பார் இன்றிப் பரவிக் கிடக்கும் பொருள்கள். அரக்கு, கருந்தினை, தேன், நாவி, மயில்தோகை (வெ.பே). காடுவெட்டி: பல்லவர்களுக்குரிய சிறப்புப் பெயர்களுள் ஒன்று காடு வெட்டி என்பது. காடுகளை அழித்து நாடாக்கிய செயல் அவர்களுக்கு முன்னரே, காடு கொன்று நாடாக்கிக் குளம்தொட்டு வளம்பெருக்கி எனப் பட்டினப்பாலை (283, 284) பாடுகிறது. கிள்ளிவளவன் என்னும் பெயர் எண்ணத்தக்கது. * கொல்லை செறு காண்க. காடேற்றுதல்: காடேற்றுதல்:1 காடு + ஏற்றுதல் = காடேற்றுதல். கடுங்குற்றம் செய்தாரைத் தண்டிக்கும் முறைகளுள் ஒன்று காடேற்றுதல். அவர்கள் காட்டை விட்டு நாட்டுள் வரக்கூடாது என்னும் தண்டவகை அது. காடேற்றுதல்:2 பேய் ஓட்டுபவர், உடுக்கடித்துப் பேய்பிடித்தவரை ஆட்டி அலைக்கழித்து அவரைப் பற்றிய பேயைக் காட்டுக்கு ஓட்டுவதாக அறிவறியா மக்களிடம் நம்ப வைக்கும் வழக்கம். காடை: உருவில் சிறுத்து உருண்டு திரண்டு குறுவால் உடையது, காடை. இதனைக் குறும்பூழ் என்பர். அப்பெயர்க்குத் தகவே உருவமைந்தது. காடை, கௌதாரி என வேட்டையர் விற்பதற்குக் கொண்டு வரலுண்டு. காட்டுப் பறவையாகவே இருப்பதால் காடை எனப்பட்டது போலும். காடையில் புதர்க்காடை, வண்ணக்காடை, செங்காட்டுக் காடை, சாம்பல் காடை, மழைக்காடை, குறுங்காடை, மஞ்சள் கால் குறுங்காடை எனப் பலவகை யுண்டு (அறி. கள.). காடைக்கண்ணி: காடைக்கண்ணி = கூல (தவச) வகையுள் ஒன்று. அத்தவசம் காடையின் கண்போல் இருத்தலால் காடைக்கண்ணி எனப்பட்டது. காட்சி: காண் + சி = காட்சி. காட்சி:1 காணல். காட்சி ஐயம் துணிவு - நம்பி. அகம். 118 காட்சி:2 தலைவன் தலைவியர் முதற்கண் காணல். ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றிய பால தாணையின் கிழவனும் கிழத்தியும் காண்ப - தொல். 1039 காட்சி:3 அணிவகையுள் ஒன்று; காட்சி அணி. காட்சி:4 முன்னொட்டு. எ-டு: காட்சிச்சாலை. காட்சி:5 பின்னொட்டு எ-டு: தொலைக்காட்சி, கண்காட்சி, பொருட்காட்சி. காட்சி:6 ஏரண (தருக்க) முறையுள் ஒன்று அது. நேர்காண் சான்று. காட்சி:7 பயன்படுத்தாமலும் விற்பதற்கு இல்லாமலும் பார்வைக்கு மட்டுமே வைத்த பொருள். காட்சி:8 தோன்றுதல் அல்லது தோற்றம். ஆட்சி காட்சி ஆவணம் (பெரிய. தடுத்.) காட்சி:9 அறிவு; கண்ணால் உண்டாகும் அறிவு; பின்னர்ப் பொதுநிலையில் அறிவு குறித்தது. நான்கறி வதுவே கண்ணறி வதுவே - தொல். 1526 காட்சி:10 காட்டப்படுவதும், காட்டும் பொழுதும். முதற்காட்சி, இரண்டாம் காட்சி. காட்டு: காட்டு:1 எடுத்துக்காட்டு. காட்டு:2 முன்னொட்டு. காட்டத்தி, காட்டவரை, காட்டு ஆ (பசு), காட்டாமணக்கு, காட்டுக்கோழி (கானங்கோழி), காட்டுப்பூனை, காட்டுக்கிராம்பு, காட்டுக்கீரை, காட்டுத்துளசி (பேய்த்துளசி), காட்டுநெல்லி, காட்டுப்பன்றி, காட்டுப்பாகல், காட்டுப்புறா, காட்டுமல்லிகை, காட்டெருமை, காட்டு முருங்கை, காட்டுவாகை, காட்டுவெள்ளரி (பேய்க்கொம்மட்டி). காட்டு:3 காட்டு என்னும் ஏவல். காட்டுத் தீ: காடு + தீ = காட்டுத்தீ. ஓங்கி உயர்ந்து எரியும் தீ; செறிந்த காட்டில் பட்டமரம் மூங்கில் முதலியவை பரவியும் பெருகியும் கிடத்தலால் அணைக்க முடியா அளவில் பரவி எழுந்து எரியும் தீ. காட்டெரி போல் பகைவர் நாட்டில் எரியூட்டல் பழம் போர்முறை. அது, எரிபரந் தெடுத்தல் புறப்பொருள் துறை. புகைபடு கூரெரி பரப்பி - புறம். 344 காட்டேறி: காட்டேறி:1 காடு > காட்டு + ஏறி = காட்டேறி. காட்டில் வாழும் மாந்தர் காட்டேறி எனப்பட்டனர். நகர நாகரிகம் இல்லாமை கருதிக் காட்டேறி என்று குறித்தனர். காட்டான் என்பதும் பட்டிக்காட்டான் என்பதும் நகரவர் எள்ளல். காட்டேறி:2 பேய் வகையுள் ஒன்று காட்டேறி. உடுக்கடிப்பவர் பேயை வெருட்டிக் காட்டுக்குப் போக வைப்பராம். காட்டில் இருக்கும் பேயாகக் கொண்டு காட்டேறி என்றனர். காட்டை: காடு + ஐ = காட்டை. காட்டில் வரையறை செய்யப்பட்ட எல்லை. கட்டை > காட்டை. மரத்துண்டம்; விரல்நுனிவரை. காணக்காடு: சுடுகாட்டைக் காணக்காடு என்பது கொங்கு நாட்டு வழக்கு. அதனைக் காணாமல் தப்ப எவருக்கும் முடியாது. அனைவரும் கண்டேயாக வேண்டிய காடு, சுடுகாடு அல்லது இடுகாடு (புதைகாடு) ஆதலால் காணக்காடு என்பது மெய்யியல் வழக்காக உள்ளது. கட்டைச் செலவு முதலியவற்றுக்குக் காசு (காணம்) வழங்குதலால் காணக்காடு ஆகும் என்பதனினும் இப்பொருளே சிறப்பினதாகும். காணம்: காண் + அம் = காணம். காணம்:1 தன் பொலிவாலும் விலைமானத்தாலும் காண்பாரைக் கவரும் பொன் காணம் எனப்பட்டது. காணம் இலியெனக் கையுதிர் கோடலும் - மணி. 16:10 காணம்:2 பொற்காசின் ஓர் அளவு, பொன்னால் வாங்கப்படும் நிலம், பொருள் முதலியவை. காணம்:3 கண்போல் வளைவாக அமைந்த காயையுடைய பயறுவகை (கொள்ளு). காணம்:4 வளைய வளைய வரும் செக்கு. காணல்: மலையின் உச்சியைக் காணல் என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. குன்றேறி யானைப்போர் காணல் எளிதாவது போல் தடையறக் காண வாய்க்கும் மலையுச்சியைக் காணல் என்பது பட்டறிவின் வழிப்பட்ட சொற்படைப்பாகும். காணாக்கடி: தேள், நட்டுவாய்க்காலி, பாம்பு என நச்சுயிரிகளுள் கடித்தது எதுவெனத் தெரியாமல் உள்ளதைக் காணாக்கடி என்பது ம.வ. அவ்வலியின் தன்மையைக் கேட்டு இன்னது கடித்தது என உணர்ந்து மருத்துவம் செய்வது சித்தமருத்துவ முறைகளுள் ஒன்று. காணாக்கடி கடித்துவிட்டது; தீர்த்தம் குடிக்க வேண்டும் என்று மஞ்சள்நீர் குடித்தலும் வழக்கம். இத்தீர்த்தம் எல்லார் வீடுகளிலும் தருவதோ குடிப்பதோ இல்லை. நாக வழிபாடு, சக்கம்மா வழிபாடு செய்வார் வீட்டிலேயே வழங்குவர். காணி: காணி:1 கோயிற்பணி, அறப்பணி முதலியன செய்வார்க்கு வழிவழி உரிமையாகத் தரப்பட்ட நிலம் காணி ஆகும். இந்நாயனார்க்கு வில்லவராயர் செய்வித்த உலக முண்டான் திருநந்தவனம் செய்யும் பேர்க்கு இவர் காணியாகக் கொண்டு விட்ட நிலம் தெ.க.தொ. 17:170 காணியாட்சி, விருத்தி, போகம் எனப்படுவனவும் இது. காணிக்கடன் என்பது காணியாகப் பெற்ற நிலத்திற்குச் செலுத்தும் வரி. காணிக்கை என்பது அரசனுக்கும் உயர் அலுவர்க்கும் மக்கள் செலுத்தும் கையுறை. வழிவழியாகக் காணி கொண்டவர் தம் நிலத்தைப் பிறர்க்குக் குத்தகையாக விட்டுப் பயன் கொண்டதும் உண்டு. இதனைக் காணிகொண்டாரும் அடை கொண்டாரும் என்கிறது கல்வெட்டு; அடை = ஒப்படை. காணி செவ்வையாகப் பேண வில்லையெனின் அதனைக் காணி மாறிப் பிறர்க்கு அளித்தலும் உண்டு (தெ.க.தொ. 5:1001). காணிநிலம் போல ஆயர் காணிமாடு பெற்றமை, இவ்வெருமை பத்தும் காணிமாடாகக் கைக்கொண்டு என்பதால் விளக்கமாம். க.க.சொ.அ. காணி:2 கண்காணிக்கும் உரிமை காணி; கண்காணி என்பதும் இது. காணி:3 ஓரளவை. காணிநிலம் வேண்டும் பாரதி பாடல். மனை இருபத்து நான்கு கொண்டது காணி (வெ.வி.பே.) காணி:4 கண்ணி > காணி (ம.வ.) பொன்னாங்கண்ணி > பொன்னாங்காணி. கரிசலாங்கண்ணி > கரிசலாங்காணி. மானாங்கணியாகப் போட்டுவிட்டான் என்பது ம.வ. வானாங் காணியாக என்பது மானாங்கணி எனப்படுகிறது. காப்பார் இல்லாமல் வானமே காப்பாகப் போட்டுவிட்டான் என்பது அக்கறை இல்லாமை; கண்காணிப்பு இல்லாமை. x.neh.: மானாவரி. வானமாரியை நம்பியுள்ள விளைநிலம் வானாவரி, மானாவாரி என மக்களால் வழங்கப்படுதல் அறிக. காணிக்கை: காணத்தக்க பெரியவர்களைக் கண்டு அவர்கள் கண்டு மகிழும் வகையில் செலுத்தும் ஆடை, அணி, பழவகை முதலியவை. உயிரோடு இருப்பார்க்குச் செய்வது காணிக்கை. தெய்வத்திற்கும் இறந்தார்க்கும் படத்தின் முன்னரோ சிலையின் முன்னரோ படைக்கும் பொருள் படையல். * படையல் காண்க. காண்டம்: கண்டம் > காண்டம். காண்டம் = முழுப்பகுதியில் துண்டிக்கப்பட்ட ஒரு பகுதி கண்டமும் காண்டமுமாம். நிலப்பகுதி - ஆசியாக் கண்டம். நூற்பகுதி - பால காண்டம். பொருட்பகுதி - உப்புக்கண்டம். மரம் வெட்டக் கண்டி வைத்தல், கண்ட கோடரி என்பவை (ம.வ.). காண்டிகை: கண்டிகை > காண்டிகை. விரிந்து செல்லாமல் சுருங்கிய உரை காண்டிகை யுரை. கருத்து, சொற்பொருள், எடுத்துக்காட்டு என்னும் மூன்றுடையது காண்டிகை. விரிவுற்றது, விரிவுரை, விருத்தியுரை. நன்னூல் காண்டிகை யுரை - ஆறுமுகநாவலர். நன்னூல் விருத்தியுரை - சங்கர நமச்சிவாயர். காண்டு: நல்லதைக் கண்டோ, பிறர் வாழ்வு கண்டோ பொறாமைப் படுபவனைக் காண்டு என்பது மதுரை வட்டார வழக்காகும். காண்டு போலக் காந்தி என்பதும் (வயிறு எரிபவன், கண்ணெரிபவன், எரிச்சல்காரன்) வழக்கே. காண்டை: கரண்டை > காண்டை. கரண்டை = ஒருவகை முட்செடி; அது காண்டை எனப்படும் (வெ.வி.பே.) காதலர் காதலர்: காதலர் காதலர் = பேரர். காதலர் என்பது காதல் செய்வாரை அன்றிப் பெற்றோர் பேரன்புக்குரிய மக்களைக் காதலர் என்பதும், அவர்கள் மக்களாகிய பேரர்களைக் காதலர் காதலர் என்பதும் வழக்கு என்பது விசய ராசேந்திரன் மெய்க்கீர்த்தியால் புலப்படுகிறது. காதலர் காதலர் தம்முள் மேதகு கதிராங்கனை கழல் மதுராங்கதனை என்பது அது. (க.க.சொ.அ.) காதல் திருமகன் பங்கமில் குணத்தெம்பி பரதன் - கம். அயோ. 301 தன்காதலன் வைகும் ஆலிலை அன்ன வயிற்றினைப் பெய்வளைத் தளிராற் பிசையும் - கம். அயோ. 308 காதல்: காதல் என்பது அன்பின் பல்வேறு படிநிலைகளை அடக்கிக் கொண்டிருக்கும் சொல். மாதர், காதல் என்பது தொல்காப்பியம் (891). மாதர் என்பதற்கே காதல் எனப் பொருளுண்மையைத் தெளிவிக்கும் அது. காதல் என்னும் பனுவல், பால் வேற்றுமையும் பருவ வொற்றுமையும் உடைய இருவர் அன்பைக் கூறுவதாக இலக்கிய வாழ்வுற்றது. களவுக்காதல், கற்புக்காதல் என இருவகைப்பட்ட இயலினும் ஒன்றன்மேல் ஒன்று தொடர்ச்சியாகவும், முதிர்ச்சியாகவும் திகழ்வதேயாம். காதல் நூல்களுள் பெருகப் பயின்று வருவதும், சுவை மிக்கதெனப் பாராட்டப்படுவதும் நாகம கூளப்ப நாயக்கன் காதல் என்பதாம். அதனை இயற்றியவர் சுப்பிரதீபக் கவிராயர் என்பார். பாட்டுடைத் தலைவன் மலை ஆறு முதலிய பதின் உறுப்புகளையும் பிற சிறப்புகளையும் கூறித் தொடங்கும் அந்நூல், அவன் கொலுவிருத்தல், வேட்டைக்குச் செல்லுதல் நற்குறி காட்டல், வேட்டையாடல், சோலையை அடைதல், தலைவியைக் காணல், அவளை வேண்டல், களவில் மணம் புணர்தல், தலைவன் ஊருக்குத் திரும்பல், தலைவி புலம்பல், தோழியர் கூறுதல், தாயின் மகிழ்ச்சி, மகளை வாழ்த்துதல், தலைவனை அடைதல், வாழ்த்து என நூல் நிறைகின்றது. 374 கண்ணிகளை யுடையது அந்நூல். கண்ணிகள் வெண்டளை யாப்பின. கொடுமணல் கந்தசாமிக் காதல், பொன்னையன் காதல் என்பவை வெண்டளையன்றிப் பிற தளைகளையும் கொண்டு ஈரடிக் கண்ணியாய் இயல்கின்றன. வ.சுப.மாணிக்கனார் முனைவர்பட்ட ஆய்வேடாம் தமிழ்க்காதல் அரிய ஆய்வு நூல். காது, காதல்: காதலாவது விரும்புதல். காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் - திருக். 440 என்பதில் காதல் விருப்பப் பொருளில் வருதல் அறிக. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதமை எல்லாம் தரும் - திருக். 507 என்பதில் வரும் காதல் தன்மை (காதன்மை) விருப்பப் பொருளதே. காது என்பது ஓர் உறுப்பு. அவ்வுறுப்புக்குச் செவி என்பது முற்படு பெயர். சொற்கேட்டல் இன்பம் செவிக்கு என்ற வள்ளுவரே (65), செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புச் சிறப்புப் பற்றியும் கூறுகிறார் (389). செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்றும் பாராட்டுகிறார். இனியவை கேட்கவே விரும்புதலால், காது என்பது விருப்பப் பொருளில் வந்ததாம். செவிச்சுவை செவிநுகர் கனிகள் என்பனவும் எண்ணத்தக்கன. குழல் இசையைக் கேட்கும் ஆனினம், செவியாட்ட கில்லாவே எனக் காதை அசைக்காமல் கூர்த்துக் கேட்பதைக் கூறுகிறார் பெரியாழ்வார். காது கொடுத்துக் கேட்பவர் கேளிர் என்பவராம். காது கொடுத்தும் கேளாரா கைகொடுத்து உதவுவார்? காது வடிதல்: காது வடிதல் என்பது காதில் இருந்து நீர், சீழ் ஆகியவை வடிதல் எனல் பொதுவழக்கு. ஆனால் காது நீண்டு வளர்தலைக் காது வடிதல் என்பது குமரி மாவட்ட வழக்கு. கண்ணகியார் காதினை வடிந்து வீழ் காதினள் என்று இளங்கோவடிகள் கூறுவது எண்ணத்தக்கது (சிலப். 4:51). மதுரை, சிம்மக்கல்லை அடுத்துள்ள செல்வத்தம்மன் (கண்ணகி) சிலையைக் காண்பார் வடிந்து வீழ் காது காண்பார். அது கண்ணகியார் சிலை என்பதை உறுதி செய்யும், சிலம்பும் உளது. காந்தள்: நெருப்பு காந்துதல் உடையது; காந்தல் உடைய அது சிவந்த நிறத்தது. ஆதலால் சிவந்த நிறத்தையுடைய பூவைப் பெற்றது காந்தள் எனப்பட்டது. செவ்வேளின் சிவந்த கை அன்னது, சிவந்த காந்தள். அதற்கு ஐவிரலிப் பூ என்பது மக்கள் வழங்கும் பெயர். காந்தி: காந்து, காந்தம், காந்தி என்பவற்றைக் கருதுக. காந்தம் ஒளிப் பொருள் ஆவதுடன் கவர்ச்சித் தன்மை யுடையதுமாதல் தெளிவு. சூரிய காந்தி என்பது கதிரோன் வயமாகி மலர்முகம் காட்டல் கண்கூடு. அதனைப் பொழுது வணக்கி என்பது ம.வ. காப்பாண்டி: பொருளைக் காப்பதில் எவருக்கும் அக்கறையுண்டு. அப்படிக் காத்தாலும் அதனைக் களவு கொள்ளும் கள்வர்க்கு அதனைக் கொள்வதில் மிகவும் அக்கறை யுண்டு. அதனால், காப்பான் பெரிதா? கள்வன் பெரிதா? என்றொரு பழமொழி உண்டாயிற்று. விளவங்கோடு வட்டார வழக்கில் காப்பாண்டி என்பது திருடனைக் குறித்து வழங்குதல் காப்பானில் காப்பான் கள்வன் என்பதைக் காட்டுகின்றது. காப்பாள்: காப்பு + ஆள் = காப்பாள் = காவலாள், ஏரி காப்பார். மாரிக் குளத்துக் காப்பாள் அன்னன் - ஐங். 206 பொருள்: மழை பெய்ய நிறைந்த குளத்தின் கரைக்கண் நின்ற காப்பாளனை ஒப்பவன் உரை, ஔவை சு.து. பெருங்குளங் காவலன் போல - அகம். 252 இவண் காவலன், காப்பாள் என்னும் பொருளொடு வந்ததாம். ஊர் காவலன் என்பது மக்கள் பெயராக வழங்கல் அக்காவல் வழிஞர் பெயராம். காப்பியம் (பாவிகம்): காப்பியம், காவியம் என்பன ஒரு பொருளன. ஐம்பெருங் காப்பியம் ஐஞ்சிறு காப்பியம் என்பன காப்பிய நூல்கள் இவை எனக் கூறும். பெருங்காப்பியம் என்பன அறமுதல் நான்கு பொருளும் உரைப்பன என்றும், காப்பியம் என்பன அந்நாற் பொருள்களுள் ஒன்று குறைய உரைப்பன என்றும் பாட்டியல் நூல்கள் கூறும். காப்பியம் என்பது கருதறம் பொருளொடு இன்பம் இவற்றிலொன் றெஞ்ச இயம்பலே என்பது பிரபந்த தீபம் (91). அறமுதல் நான்கிற் குறைபா டுடையது காப்பிய மென்று கருதப் படுமே என்பது இலக்கண விளக்கப் பாட்டியல் (11). ஆனால் வெண்பாப் பாட்டியலோ அறம் முதலாம் நாற்பொருளில் குறையாது பிற உறுப்புகள் சில குறைந்து வருதலையே காப்பியம் என்று கூறும். கருதுசில குன்றினும் காப்பியமாம் என்பர் பெரிதறமே யாதி பிழைத்து - வருவதுதான் காப்பிய மாகும் என்பது அது (43). சிதம்பரப் பாட்டியலும் (16) இவ்வாறே கூறும். இவண் காப்பியம் என்றது சிறுகாப்பியங்களை. அவை சூளாமணி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயண குமார காவியம், நீலகேசி என்பன. காப்பு: கா > காப்பு = காவல். நோய் பேய் அண்டாமல் இருக்க வேண்டும் என்னும் அச்ச உணர்வால் போடப்பட்ட அணிகலம் காப்பு ஆகும். மாழையால் செய்யப்பட்ட அது, பேய்க்கு அச்சம் தரும் என நம்பினர். ஊர்விழா நிகழும் காலத்தின் தொடக்க அடையாளமாய் ஊரில் காப்புக் கட்டுதல் வழக்கம். வேப்பிலைத் தழைகளை வைக்கோற் புரியில் வைத்துக் கட்டித் தெருமுகப்பில் குறுக்கே கம்புகள் நட்டுக் கட்டுவது அதுவாம். உள்ளூர்க்காரர் வெளி யூர்க்குப் போகத் தடையும் வெளியூர்க்காரர் தங்கத் தடையும் அதுவாக இருப்பதால் அதனைக் காப்புக் கட்டுதல் என்றனர். காப்புமறம்: காப்பு + மறம் = காப்புமறம் = காவற்படை. இந்நாளில் அரசியல் தலைவர்களுக்குக் காவற் படைஞர் வைப்பது உலகறி செய்தி. இது பழமை வழியது என்பது பதிற்றுப்பத்தால் விளங்குகிறது. இளஞ்சேரல் இரும்பொறை தன்னைப் பத்துப் பாடல்களால் பாடிய பெருங்குன்றூர் கிழார்க்குப் பரிசிலாக உவகையுடன் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் விட்டான் (பதிற். பதி. 9) காப்புமாலை: தெய்வங் காக்கவென மூன்று பாட்டானாதல் ஐந்து பாட்டானாதல் ஏழு பாட்டானாதல் பாடுவது காப்பு மாலையாம். காப்பு மாலையே தெய்வம் காக்கவென மூன்றைந்தேழ் செய்யுளின் மொழிபகற் றோரே - பிரப. தீப. 35 பிள்ளைத்தமிழ் நூல்களில் இடம்பெறும் காப்புப் பருவம் இதனைத் தோற்றுவித் திருக்கலாம். ஏனெனில் பாட்டுடைத் தலைவரைக் காக்கவென்றே இயல்வது அது. காப்புறுதி: இன்சுயூரன்சு (Insurance) என்னும் ஆங்கிலச் சொல்லை ஆயுள் காப்பு என்றும், காப்பீடு என்றும் தமிழகம் வழங்குகின்றது. இதனை ஈழத் தமிழகம் காப்புறுதி என வழங்குவது செறிவும் செப்பமும் மிக்க ஆட்சியாம். காமச்சுவை மாலை: காமச்சுவையினை நயப்பக் கூறுதல் காமரச மாலை எனப்படும் காமச்சுவை மாலையாம். சீலமாம் கொக்கோகம் செப்புதலே காமரச மாலை என்று இதன் இலக்கணம் கூறுகிறது பிரபந்தத் திரட்டு (38). கொக்கோகம் எனப் பெயரியதொரு நூல் அதிவீரராம பாண்டியனால் செய்யப்பட்டதாம். காமம்: கமம் > காமம். கமம் நிறைந்தியலும் - தொல். 838 பிறை தோன்றி வளர்பிறையாய் வளர்ந்து முழுமதியாவது போன்றது காமம். காதலாகத் தோன்றி முதிர்ந்து காமமாக நிறைவுறுவதே கற்பாகும். இன்பம் எல்லா உயிர்க்கும் பொதுவானது. அதனால், எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் என்றார் தொல்காப்பியர் (1169). ஆதலால் மூன்றாம் பாலைக் காமத்துப்பால் என்றார் திருவள்ளுவர். களவு கற்பாகச் சிறத்தலே காமம். ஆதலால் காமத்துப்பாலில் 39 இடங்களில் காமம் என்ற சொல்லைப் பயன்படுத்திய திருவள்ளுவர் இரண்டு இடங்களில் மட்டும் இன்பம் என்பதைப் பயன்படுத்தினார். அவற்றைப் பயன்படுத்திய இடங்களிலேயே காமம் என்பதையும் பயன்படுத்தினார். களவொழுக்கம் எதுவும் கற்பொழுக்கம் ஆகத் தவறிவிடல் ஆகாமையே அறம் என்பது முந்தையோர் நெறியாம். களவிலாக் கற்பிருக்கலாம். ஆனால் கற்பிலாக் களவுக்குத் தமிழ்நெறியில் இடமே இல்லை என்பது சங்கநூற் பரப்பு அகப்பாடல்கள் அனைத்தின் முடிபுமாம். காமரம்: காமரம் = சீகாமரம் என்னும் பண். காமரு தும்பி காமரம் இசைக்கும் - சிறுபாண். 78 பொருள்: விருப்ப மருவின தும்பி சீகாமரம் என்னும் பண்ணைப் பாடும் (உரை, நச்.) காமவுலா: திக்கு விசயம் (திக்கு உலா) என்பது வெற்றிப் பொருட்டால் நிகழ்த்தப் பெறுவது. இது காமப்பொருட்டால் நிகழ்த்தப் பெறுவதாம். கட்டழகமைந்த தலைவன் ஒருவன் தன் எழிலுக்கும் வேட்கைக்கும் தகவுக்கும் ஏற்ற நங்கையைத் தேடித் திசையுலாக் கொள்வதும், அவன் உலாக் கொள்ளும் நோக்கறிந்த நங்கையர் கூட்டம் அவன் உலாக் கொள்ளும் யானையின் முன்னுற எதிர்த்துப் பார்ப்பார் போல நிற்றலும் மதன விசையம் என்பதாம். அரச குமரர்கள் பெண் தேடிப் புறப்பட்டதாகவும், தக்கவளைத் தேர்ந்து மணந்து திரும்பியதாகவும் கிளர்ந்த கதைகளை யுட்பொருளாகக் கொண்ட பனுவல் இதுவாம். மகளிர் சீர்மையைச் சிதைப்பது போல் எழுந்த சிறுநூல் வகைகளுள் ஈதுமொன்று எனலாம். பெண்ணிற் பெருந்தக்கது யாது? என வினவிப் பெண்ணிற் பெருந்தக்கது இல் என விடையிறுத்த வள்ளுவம் (குறள். 54) பிறந்த மண்ணின் மாண்பு மறைந்த காலை அல்லது மறைக்க என்றே எழுந்த சிறுநூல் இத்தகைய எனல் தகும். மதன நலத்தார் திசைவென் றிறைவன் செயலறிந்த மாமுன் இசைந்தெதிர்த்தல் அவ்விசைய மே என்பது பிரபந்தத் திரட்டு (37). காமர்: காமர்:1 காமர் = விரும்பத்தக்க அழகு. தாமரை புரையும் காமர் சேவடி - குறுந். கடவுள். காமர்:2 காமர் = விருப்பம். நிறைந்த விருப்புக்கு இடமானது. கமம் நிறைவு ஆகும். காமம் என்பது, கமம் என்னும் நிறைவு மூலத்தின் வழி வந்த சொல்லே. இன்பத்துப் பாலைக் காமத்துப் பால் என வள்ளுவம் வழங்குவதும் அறியத் தக்கது. காமர் நெஞ்சம் ஏமாந் துவப்ப - புறம். 198 காமனெழில்: காமனை முதற்கண் பாடுதல்; பின்னர் மகளிர் விரும்பும் எழில் மையலாளன் காமக் கவலையை விரித்துரைத்தல். நிறைவில் இருவர்தம் இன்பநிலை இயம்பல்; இவ்விணைவு ஊழ்வினையால் நிகழ்ந்தமை சாற்றல் என்பவை மதன சிங்காரப் பொருள் எனப்படும் காமனெழில் ஆகும். இப்பொருளை வெண்கலிப்பாவால் கூறுதல் முறையாம். வெண்கலிப்பாவாவது, கலித்தளை யாலும் வெண்சீர் வெண்டளையாலும் இயன்று ஈற்றடி வெண்பாவைப் போல் முடிவுறுதலாம். மாச்சீர் கலியுள் புகாது என்பது வெண்கலிக்கும் உரியதே. மதனனைமுன் பாடியவன் மாற்றிநினை மாது விதனனைப் பாடியவன் மேவும் - இதம்பாடல் வெண்கலியா லேயுரைத்தல் ஊழ்விதிபோல் ஆக்கலே அண்சீர் மதனசிங்கா ரம் - பிரப. திர. 43 காமன்: காமம் > காமன். காமத்தை உண்டாக்குபவன். அவன் மன்மதன். காமன் படையுவள் கண்காண்மின் - பரி. 11:123 பொருள்: உவள்கண் காமபண்டாரமும் படையு மாயிருக்கும் (உரை, பரிமே.) காமமாம் தன்மையைக் காமன் என்றதும் (1197) நிலத்தை நல்லாள் என்றதும் (1050) இவ்வகைப் பட்டனவே. காமா சோமா: காமா = அழகில் மன்மதனே! சோமா= கொடையில் சோமனே! காமா சோமா என்று நடத்திவிட்டான் என்பது வழக்கு. பிறரைப் புகழ்ந்து அவர்கள் துணையால் எளிமையாக நிறைவேற்றி விட்டதைக் காமா சோமா என்று நடத்திவிட்டான் என்பர். புகழ்ச்சியைக் கருவியாக்கி நிறைவேற்றுதலைக் குறித்தது இது. அழகுக்கு மன்மதன் முதல்வன் எனப்படுவான். இடைக் காலத்தில் வாழ்ந்த ஒரு வள்ளல் பெயர் சோமன் என்பது. புல்லரிட்டதே சோமன் கொடை அருமை அறிக என்பது ஒரு தனிப்பாடல் செய்தி. காமாரம்: பொறாமையை அழுக்காறு என்பது இலக்கிய வழக்கு. அதனை வத்தலக்குண்டு (வெற்றிலைக் குண்டு) வட்டாரத்தார் காமாரம் என்கின்றனர். கா என்பது காய்தல்; வெதும்பல். உள் வெதுப்பால் சண்டைக்கு நிற்றல் காமாரம் எனப்பட்டிருக்கலாம். மாராயம் என்பது புறத்திணைத் துறைகளுள் ஒன்று. அது மாரம் ஆகியிருக்கக் கூடும். காம்பு: காம்பு:1 இலைகளின் அடிப்பகுதி காம்பு எனப்படும். எ-டு: வெற்றிலைக் காம்பு; அரசிலைக் காம்பு. காம்பு:2 பால்சுரக்கும் மடுவின் நுனி, காம்பு எனப்படும். காம்பு:3 நாட்பட்ட பண்டத்தில் உண்டாகும் நெடியைக் காம்புகிறது; காம்பிப் போய்விட்டது; தின்ன உதவாது என்பதும் ம.வ. காம்பு:4 காம்பு = மூங்கில். கண்பு > கம்பு > காம்பு. கணுக்களை உடைமையால் கண்பு என்று வழங்கப்பட்டது. கண்ணாவது கரும்பின் கணுப்போன்ற சுற்றுவரை. முளையிடும் கண் என்பது. அக்கண்பாம் காம்பு குடையின் கைப்பிடியாம் காம்பையும் குறித்தது. காம்பு கண்டன்ன தூம்புடை வேழத்து - ஐங். 20 வேழம் = கொறுக்காந் தட்டை. பொற்பவழப் பூங்காம்பிற் பொற்குடை - பரிபா. 19 காம்புதல்: வேக்காட்டில் பாகாகக் காய்ச்சப்படும் பொருள் மிகுகெட்டியாகிப் பதன் கெட்டுப் போதலைக் காம்புதல் என்பது தென்தமிழக வழக்கு. இறுகியும் சுவைமாறியும் கும்பிப் போன மணம் கொண்டும் இருக்கும். அதனைக் கும்புதல் என்பதும் உண்டு. கருப்புக் கட்டி காம்புகிறது கும்பிப் போய்விட்டது என்பர். காயடி கம்பு: ஆயர்கள் ஆடு தின்பதற்காகக் கருவேலங்காயை அடித்தும் பறித்தும் வளைத்தும் ஆட்டுக்கு ஊட்டுவர். அதற்கு உதவும் கம்பு ஆகிய தொரட்டி (தோட்டி)யைக் காயடி கம்பு என்பது வழக்காகும். இது, ஆயர் தொழில் வழக்கு. காயடித்தல்: வேளாண் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் காளையைக் காயடித்தல் செய்வர். இல்லையானால் கட்டுக்குள் நில்லாது. பாலுணர்வு அற்றுப் போகச் செய்வது காயடித்தலாம். கோயில் காளையையும் பொலி காளையையும் காயடிப்பதில்லை. கட்டற்றுத் திரிவாரைக் கோயில் காளை என்பதும் அவனுக்குக் காயடித்தால்தான் ஒழுங்குக்கு வருவான் என்பதும் மக்கள் வழக்கு. காயடித்தல் என்பது திருமணம் செய்வித்தல். கால்கட்டை போடுதல் என்பதும் காயடித்தல் போன்றதே. காயம்: காயம்:1 காயம் = நிலைபேறு. நிலம், தீ, ஒளி, வளி, வெளி என்னும் பூதங்கள் ஐந்தாலும் அமைந்தது உலகம். இவற்றுள் முதல் நான்கும் நிலையில் திரிபுடையன. இறுதியாகிய வெளி என்றும் திரியா நிலைபேறு உடையது. ஆதலால் அதனைக் காயம் என்றனர். வறிது நிலைஇய காயம் என்பது புறநானூறு (30). காயம் நிலைபேற்றுத் தன்மையது ஆதலால் உடலில் பட்ட புண்ணின் வடுமாறாத் தன்மையாம் வடுவைக் கண்டு காயம் என்றனர். காயம்பட்ட உடலும் காயம் எனப்பட்டு அதுவே அழியா உடலாம் புகழ் உடலைத் தந்து நின்று நிலைத்தலால் மெய் என்பது போலக் காயம் என்பதும் அழியாப் பேற்றை வழங்கும் சொல்லாயிற்று. காயமாம் உடலை ஊறின்றிக் காக்கும் மருந்து, மருந்து மூலம் ஆயன காயம் என்றும், காயச்சரக்கு என்றும் வழங்கப் பெற்றன. எனினும், காயப் பொருள் அறியார், காயமே பொய்யடா என அழுங்கல் இசைத்து மெய்யியல் அறியாராய் உழன்றனர். காயப்பேறு அறியாமல் காயகல்பம் தேடி அலைந்தனர். பின்னாளில் காயம் என்பதன் பொருள் உணர்ந்தவர், எனக்கு அரசுப்பணி காயமாயிற்று என்பது அரிய நல்ல வழக்காயிற்று. காயம்:2 பல்வகை மசாலை மருந்துகளைக் காய்ச்சிக் குழம்பாக்கித் திரட்டிய கட்டி காயம் எனப்படும். சிற்றளவுச் சேர்மானமும் பேரளவுப் பொருளில் கலந்து தன்மணம் ஆக்கி விடலால் பெருங்காயம் எனப்பட்டதாம். வெள்ளை நிறப் பூண்டும் காயச்சரக்கு ஆதலால் வெண்காயம் (வெங்காயம்) எனப்பட்டது. அஃது உலர்ந்தும் நெடிதிருந்தும் பயன்படுவது. ஈரப் பதனுடையதும் காய்ந்தால் வற்றிப் போவதுமாம் காயம் ஈர வெண்காயம் எனப்படுகிறது. * உள்ளி காண்க. காயலாங்கடை: பழைய இரும்புப் பொருள் வாங்கி விற்கும் கடைகளைச் சென்னையில் காயலாங்கடை என்பர். அவ்வணிகத்திற்கும் அப்பெயர்க்கும் என்ன தொடர்பு எனின், அவ்வணிகம் முதற்கண் செய்தவர் காயல்பட்டினம், காயல் என்னும் பெயர்களைக் கொண்ட ஊரவராக இருந்தமையால் காயலான்கடை எனப்பட்டதாம். பின்னர்ப் பழைய இரும்பு முதலியவை விற்கும் கடைக்குப் பெயராயிற்று. காயல்: காய் + அல் = காயல் = காய்தல் அற்றது. காயல் என்னும் பெயருடைய ஊர்கள் தென் தமிழகத்தில் பல உண்டு. புன்னைக் காயல், மஞ்சள் நீர்க்காயல்; இனி, காயல் பட்டினம் உண்டு. அது முன் அடையாகக் காயல் கொண்டது. காயல் என்பது காய்தல் இல்லாத இடம் என்னும் பொருளது. நீர்வளம் உடைமையால் ஏரி, குளம் என்பவை காயல் எனப்பட்டு, அவற்றையுடைய ஊர்க்கு ஆயன. காயல் என்பதற்கு ஏரி என்னும் பொருள் குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. காயல், காய்தல் என உடன்பாட்டிலும் வரும். அல் உடன்பாடு, எதிர்மறை இரண்டன் ஈறுமாம். கதிர் காய்தலால் விளைவது உப்பு ஆதலால் அவ்வுப்பு விளைநிலம் காயல் ஆயது என்பதுமாம். * காயலாங்கடை காண்க. காயா: காய் + ஆ = காயா. ஆ = எதிர்மறை. காயாத - காய்க்காத - மரம் காயா எனப்பட்டது. காயாமர மொன்று - யா.வி. 62 பூப்பூக்கும்; ஆனால் காய் காய்க்காது. அதற்குப் பெயர் காயாமரம். இது, ஆண்மரம் எனப்படும். காயாம் பூ நிறத்தவன் கண்ணன் எனலால் காயாம்பூ வண்ணன் எனப்பட்டான். காயாம்பூ மலர்ப் பிறங்கலன்ன மாலை என்றார்குலசேகரஆழ்வார்(நாலா. 648). வலிமை மிக்க கெட்டித் தன்மையது அது. வெண்கடம்பு என்பர். மண்வெட்டி, கோடரிக் கணைகளுக்கும், கணைய மரத்திற்கும் அதனைப் பயன்படுத்துவர். கருங்காலியும் வலியதே. கருமை = வலிமை. கருங்காலிக் கட்டைக்கு வாய்நாணாக் கோடரி - ஔவை. தனிப். காயா? பழமா?: காயா பழமா = வெற்றியா? தோல்வியா? காய், முதிரா நிலை; பழம், முதிர் நிலை. ஒருசெயல் நிறைவேறலைப் பழுத்தல் என்பது குறித்தது இது. தானே பழுக்காததைத் தடிகொண்டு பழுக்க வைத்தது போல என்னும் பழமொழி பழத்திற்கு நிறைவேற்றல் பொருளுண்மை தெளிவிக்கும். காயைப் பழுக்க வைக்கப் பலவகை முயற்சிகள் வேண்டும்; காத்திருக்கவும் வேண்டும். காலத்தால் பயன்கொள்ள நேராமலும் போய்விடும். ஆனால், பழமென்றால் உடனே பயனாகி விடுமே! அக்கருத்திலேயே செயல் நிறைவேறி, உடன் பயன்படுதலைப் பழம் என்றும், நிறைவேறாமல் தடைப்பட்டு நிற்பதைக் காயென்றும் சொல்லும் வழக்கமாயிற்று. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தலைக் கூறும் திருக்குறளை அறிக (216). காயாம் பொழில்: காயா + பொழில் = காயாப்பொழில் > காயாம்பொழில். வெயில் நுழைவு அறியாக் குயில்நுழை பொதும்பர் என்னும் இலக்கிய ஆட்சி (மணிமே. 4:5) பொதுமக்கள் வழக்கில் காயாப் பொழிலாய் காயாம்பொழில் என வழங்குகின்றது. காயாம் பொழில் என்பது காயாமொழி எனவும் வழங்குகின்றது. ஊர்ப்பெயராயது இது. காயாப் பொழில் ஒப்பது பொதும்பு. * பொதும்பு காண்க. காய்: வெப்பம் வெயில் காய்தலால் உண்டாகும் மரம், செடி, கொடிப் பயன் காய் ஆகும். காய்கனி என்னும் இணைச் சொல்லால் கனியின் முன்னிலை காய் எனல் விளங்கும். மாங்காய், மாங்கனி. சில காய்கள் நெற்று என முதிர்வில் பெயர் பெறும். துவரங்காய் துவரை நெற்று; தேங்காய் தேங்காய் நெற்று. சில காய்கள் கனியாகிக் காய்ப்பெயர் மீளப் பெறல் உண்டு. அவை ஊறுகாய் எனப்படுவது. நெல்லி, இலாமிச்சை, கடாரங்காய், மாங்காய், களாக்காய் என்பன ஊறுகாய்க்காவன. நிலக்கடலையைக் கிழங்கு என்னாமல் கடலைக்காய் எனல் வழக்கு. காய் ஏவற்பொருளில் காய்தலாதல் (சினத்தல்) உண்டு. கதிர் காய்கதிர் என்பது இலக்கிய வழக்கு (அகம். 135). பசியைக் காய்பசி என்பதும் உண்டு (மணிமே. 6:82). காய்கறி: காய் = காய்வகை. கறி = கறிக்குப் பயன்படும் கிழங்கு, கீரை வகை. காய்கறிக் கடைகளில் இவ்விருபால் பொருள்களும் இருக்கக் காணலாம். காய் என்னப்பட்டவை நீங்கிய பிறவற்றை எல்லாம், கறிக்குப் பயன்படுவன என்னும் பொருளால் கறி என்றனர். இனிப் புலவைக் குறிக்குமோ என்பார் உளராயின் அப்பொருள் காய்கறிக் கடையில் விற்கப்படுவது இல்லை என்பதையும், அதனை விற்கும் கடை கறிக்கடை எனப்படு வதையும் அறிக. இக்கால் காய்கனிக்கடை என்பாரும் உளர். அவர் காய் விற்கும் இடம் வேறு, கனிவிற்கும் இடம் வேறு என அறிதல் வேண்டும். இரண்டையும் ஒன்றாக வைத்து விற்பது இல்லை. ஓரிரு கடைகள் சிற்றூர்களில் இருப்பின் அவை விதிவிலக்காம். விதிவிலக்கு விதி ஆகாது. காய்ச்சல்: காய்ச்சல் = எரியூட்டிக் காயவைத்து ஆக்கப்படும் சமையல். உடலில் உண்டாகும் வெப்புநோய் காய்ச்சல் ஆகும். காய்ச்சல் மக்கள் வழக்கில் காச்சல் எனப்படுகிறது. காய்ச்சியூற்றல்: திருமணமாகிக் கருவுற்ற ஏழாம் மாதம் அல்லது ஒன்பதாம் மாதத்தில் பிறந்த வீட்டார் மகப்பேற்றுக்கு அழைக்கும் அழைப்பு, காய்ச்சியூற்றல் என்பதாம். பொங்கிப் போட்டும் நீராட்டியும் அழைத்து வருதலால் காய்ச்சியூற்றும் சடங்கு எனப்பட்டது. மகப்பேற்றுக்கு அழைக்கும் அவ்வழைப்பு, வளைக்காப்பு எனவும், கட்டுச்சோறு எனவும் வழங்கும். வளையல் பலவாகத் தொடுத்தலும் பலவகைச் சோறாக்கிப் படைத்தலும் வழக்கமாதலின் இப்பெயர்களைப் பெற்றன. காய்ச்சு வீடு: சமையலறை என்பது பொதுவழக்கு. காய்ச்சு வீடு என வழங்குவதும் பொதுவழக்கே. அட்டில் என்பது இலக்கிய வழக்கு. அடுமனை என்பதும் இலக்கிய வழக்கே. ஆக்குப்புரை என்பதும் அதன் பெயரே. அட்டிற்புகை (சிலப். 13:122); அடுமனைக் கல்லூரிகள் இந்நாள் கிளர்ந்துள. மனையியல் கல்லூரி என்பதும் இது. காய்தல்: காய் > காய்தல் = உலர்தல், வெதும்பல், சினத்தல். கதிர் வெப்பும், தீயெரி வெப்பும் காய்தல் எனப்படும். காயப்போடல், காயவைத்தல் என்பவை அவை. பட்டுணி போடுதலைக் காயப் போட்டால்தான் நீ வழிக்கு வருவாய் என்பதால் அறியலாம். உடல் காய்கிறது என்பதில் காய்தல் காய்ச்சல் நோய் எனப்படுகிறது. எதற்கெடுத்தாலும் காய்ந்து விழுகிறார் என்பதில் காய்தல் சினப்பொருள் தருகிறது. உலைகாய்தலும் உலைக்களத்தில் இரும்பு காய்தலும் கண்கூடு. காய்தலும் உவத்தலும் இன்றி ஆய்தலே ஆய்வாம்! காய்த்துக் குலுங்குதல்: காய்த்தல் = காய் காய்த்தல் குலுங்குதல் = கிளையும்கொப்பும்காய்ப்பெருக்கம் தாங்காமல் வளைந்து ஆடுதல்; காற்றால் காய் உதிர்தலுமாம். தட்டான் காய்கள், பூத்துக் காய்த்துக் குலுங்குகின்றன என்பது ஒரு புலவர் மற்றொரு புலவரிடத்துக் கூறிய சாடலுரை. ஒட்டிக்கு ரெட்டி உழுதால் - (ஒருமுறைக்கு இருமுறை உழுதால்) ஏன் காயாது என்பது மற்றொரு புலவர் மறுமொழி. குலுங்குதல், அசைதல், வளைதல், அலுங்குதல் என்பனவும் அசைதலாம். காரகில்: அகில் வகை நான்கனுள் ஒன்று. * காகதுண்டம் காண்க. கார சாரம்: காரம் = உறைப்புச் சுவை. சாரம் = மற்றைச் சுவை. குழம்பு காரசாரமாக இருக்கிறது. காரசாரம் இல்லாமல் சப்பு என்று இருக்கிறது என்பவை வழக்குகள். காரச்சேவு காரவடை என்பவை தின்பண்டங்கள். மிளகு காரமிளகு எனவும் படும். சாரம் = சார்ந்தது. காரத்தைச் சார்ந்த பிற சுவைகள். சாரம் என்பதற்கு இனிமைப் பொருள் உண்டாயினும் பிறசுவைகளைச் சுட்டலே சிறக்கும். காரணம்: கார் + அணம் = காரணம். கார் = கருநிற முகில்; அணம் = நெருங்குதல். உலகத்து உயிர் இயக்கமே மழையால் இருப்பதால் வாழ்வுக்கு அடிப்படையாக அமைந்தது காரணம் எனப்பட்டது. அதன் செயற்பாடு மழையாகப் பொழிதலாலும், அதனாலேயே உலகத் தொழிலியக்கமும் உயிர் வாழ்வும் இருப்பதாலும் காரியம் எனப்பட்டது. கார் + இயம் = காரியம். எந்த ஒன்றற்கும் காரணமும் காரியமும் இல்லாமல் இயலாமையால் காரணம், காரியம் என்பவை இணைச்சொற்களாகக் கொள்ளப் பட்டன. காரணம் = அடிப்படை. காரியம் = வினைப்பாடு அல்லது செயற்பாடு. காரணவர்: மழையின்றி உலகில் எதுவும் இல்லை. ஆதலால் உயிர் வாழ்வுக்கு மழைபெய்தலே (கார் + அணம் = காரணம்) மூலம் என்றனர். அம்மழை போல் குடும்ப வாழ்வுக்கு மூலமாக இருப்பவர் தாய்மாமன் எனப்படுவார். அவரைக் காரணவர் என்பது நாஞ்சில், குமரி மாவட்ட வழக்காகும். சேரலர் நாட்டுப் பெருவழக்கும் அது. காரத்தோசை: பல்வேறு பருப்புகளும் அரிசியும் மல்லி, மிளகாய், கறிவேப்பிலை, உள்ளி, இஞ்சி முதலியவும் ஆட்டி ஆக்கும் கெட்டியான தோசையை அடைத்தோசை என்பது பொது வழக்கு. அதனைக் காரத்தோசை என்பது ஒட்டன்சத்திர வட்டார வழக்கு. காராட்டம்: போராட்டம், போர்; ஆட்டம் என்பது விளையாட்டு, போராட்டு என்பனவற்றின் பொது. ஆடு என்பது வெற்றி. புதுக்கடை வட்டாரத்தார் காராட்டம் என ஓர் ஆட்டம், வட்டார வழக்கில் கொண்டுள்ளனர். அது பொய்ச் சண்டை குறிப்பது. கார் அறிவு என்பார் வள்ளுவர். கார் ஆட்டம் என்பது பிறர் சண்டை என நினைக்கத் தக்கதாகப் பொய்ச் சண்டை யிடுவதைக் காராட்டம் என்பது தேர்ந்த பார்வையாம். நாய், பூனை, புலி, யானை ஆயவை குட்டிகளுக்குப் பொய்ச் சண்டை போட்டுப் பழக்குதல் கண்கூடு. காரான் பசு: ஆன் ஆ என்பன பசுவைக் குறிக்கும். எருமை கருமை யானது. அதனைக் காரான் என்றனர் முன்னோர். கருநிறப் பசுவையும் காரான் என்பர். ஆனால் இக்காரானில் இருந்து விலக்குதற்கு அதனைக் காரான் பசு என்றனர். காரி: காரி:1 காரி என்னும் வள்ளலின் புகழ் நாடறிந்தது. அவன் புகழ் பரப்பும் பாடல்கள் சங்கச் சான்றோரால் பாடப் பெற்ற பாட்டு தொகைகளில் உண்டு. அவன் புகழ் விளக்கும் ஊர்களும் பல உள்ளன. காரி என்னும் பெயர் இவ்வள்ளல் காலத்தும் இவனுக்குப் பின்னரும் பயில வழங்குகின்றது. காரி கிழார், காரிக் கண்ணனார் சங்கச் சான்றோர். காரியாசான் சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர். காரிமாறனார் நம்மாழ்வார்; காரி நாயனார் அறுபான் மூவருள் ஒருவர்; காரி ஆறும், காரி நாடும் பண்டு விளங்கின. கர், கார், கால், காழ், காள் இவற்றின் வழியாகப் பிறந்த சொற்கள் நூற்றுக் கணக்கில் உள. தமிழ்ச் சொற்பரப்பைக் காட்டும் மூலங்களுள் கர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவையெல்லாம் கருமை என்னும் பொருள் வழியே வருதல் விளங்கும். காரி என்னும் பெயரின் மூலம் கார் என்பதே. கார் என்பது கருமையாய் கருமுகிலாய், மழையாய், மழைக்காலமாய், மழைக்கால விளை பயிராய், விளைபயிரின் பயனாய்ப் படிப்படியே பொருளால் விரிந்து தமிழ் வளத்தைக் காட்டுகின்றமை அறிந்து மகிழத் தக்கது. காரி என்பான் கரு நிறத்தால் பெயர் பெற்றானா? அவன் கரியன் ஆயினும் ஆகலாம்; செய்யன் ஆயினும் ஆகலாம்! அவை, அவன் புகழுக்குரியவை அல்ல. வண்ணத்தைக் கொண்டு பெயரமைதல் வழக்கே. அவ்வண்ணப் பெயர் மறுதலையாகப் பொருள் தருவதும் வழக்கே. வெள்ளையப்பன் கருப்பையாவாக இருப்பது இல்லையா? கருப்பாயி சிவப்பாயியாக இருப்பது இல்லையா? காரியின் நிறத்தைப் பற்றிய குறிப்பு அறியக்கூடவில்லை. அவன் வண்மையும் வன்மையும் செம்மையும் சீர்மையும் அவனைப் பற்றிய பாடல்களால் அறிய வருகின்றன. காரி மலையமான் நாட்டின் மன்னன்; அவன் முள்ளூர் மலைக்குரியவன்; அவன் தலைநகர் கோவல் என்னும் திருக்கோவலூர்! அவனொரு குறுநில மன்னன்! மூவேந்தருக்கும் உற்றுழி உதவும் உரவோன்! அவன், கழல் தொடிக் காரி, கழல் புனை திருந்தடிக் காரி, கழல்தொடித் தடக்கைக் காரி, நெடுந்தேர்க் காரி, ஒள்வேல் மலையன், தேர்வண் மலையன், கோவல் கோமான் என்றெல்லாம் பாராட்டப் பெற்றவன். காரியின் குதிரை புகழ்வாய்ந்தது. அது கரு நிறமானது. காரிக் குதிரை என்று வழங்கப் பெற்றது. காரிக் குதிரையால் காரியும், காரியால் காரிக்குதிரையும் சான்றோர்களால் பாடும் புகழ் பெற வாய்த்தது. காரிக் குதிரைக் காரி என்று தன் ஊர்தியால் பெயர் பெற்ற பேற்றாளன் காரி! கருநிறக் காளை, காரிக் காளை என்று இந்நாள் வழங்கப் பெறுவதில்லையா! காரி என்னும் பெயர், முள்ளூர் மன்னன், கோவல் கோமான், தேர்வண் மலையனுக்கு எப்படி வாய்த்தது? காரி என்னும் சொல்லின் பொருளையும் இம்மன்னன் தனித் தன்மையையும் அறியின் புலப்படும்! காரியின் நாட்டைக் கடலும் கொள்ளாதாம்! பகைவரும் பற்றிக் கொள்ள நினையாராம்; அவன் வலிமை அத்தகைத்து. மூவேந்தருள் எவனேனும் ஒருவன், எனக்குப் போர்த் துணையாக வரவேண்டும் என்று முந்தி வந்து, காரியை வேண்டித் துணையாக்கிக் கொள்வான் (புறம். 122). யானையும் அரசும் களத்தில் படப் பகையழிக்கும் வல்லாளன் காரி (புறம். 126). இவை, காரியின் வீர மாண்புகள். இவை பிறர்க்கும் உரியவை எனலாம். ஆனால், காரியின் தனிவீறு ஒன்று, அது, வெற்றி பெற்றவனும் புகழ்வானாம் காரியை; தோல்வியுற்றவனும் புகழ்வானாம் காரியை! எனக்குத் துணையாக வந்து வெற்றி வாய்ப்பைத் தந்தவன் நீயே! என்று வென்றவன் புகழ்வான்! எனக்குத் துணையாக வாராமையால் யான் தோல்வி கண்டேன் என்று தோற்றவன் புகழ்வான்! காரிக்கு இருபால் புகழும் உண்டு. கடந்தட்டு வென்றோனு நிற்கூறும்மே வெலீஇயோன் இவனென தோற்றான் தானுநிற் கூறும்மே தொலைஇயோன் இவனென போரில் வென்றவனும் தோற்றவனும் ஒருங்கே புகழ வாய்க்கும் பேறும் வீறும் பொதுவாக எவருக்கும் வாய்ப்பனவோ? ஆகலின், இப்பெருமிதத்தைக் கூறும் பெருஞ்சாத்தனார், ஒரு நீயாயினை பெரும! என வியந்தார் (புறம். 125). காரியின் ஒருதானாய வீறே அவனுக்குக் காரிப் பெயரைத் தந்ததாம். காரி என்பதொரு புள்; கரும்புள், கரும்பிள்ளை என்பனவும் அது. கரிக்குருவி, கரிச்சான் என்பனவும் அது. வலியன், வல்லூறு, வலுசாறு என்பனவும் அதுவே. வலியன் வயன் என இலக்கியத்தில் இடம்பெறும்! காரி எவ்வாறு ஒரு தானாய வீரன் எனச் சாத்தனார் குறிக்கின்றாரோ, அது போலவே புள் என்றாலே கரும்புள்ளாய காரிக் குருவியையே குறிக்கும். அக்குறிப்பு இக்காரியைப் பற்றிக் கபிலர் பாடும் பாட்டிலேயும் இடம் பெற்றுள்ளது. நாளன்று போகிப் புள்ளிடை தட்ப என்றார் அவர் (புறம். 124). பறவையின் வேந்தென வளையமிடுவது அரசாளிப் (இராசாளிப்) பறவை. அவ்வரசாளியையும் ஆட்டி வைப்பது காரிப் பறவையாம் கரிச்சான். உடலால் சிறியது; உரத்தால் அரியது; ஆதலால் பெரியவையும் அறைபட்டு அலறும்! அஞ்சி ஓடும், இக்காட்சியை நாம் கண்டது இல்லையோ? வலிய காரிப் பறவை மிகப் பழங்காலந் தொட்டே சொகினம் (சகுனம்) காட்டும் பறவை என்னும் குறிப்பும் உண்டு. அது தடுத்தால் தோல்வி என்றும், வழிவிட்டால் வெற்றி யென்றும் வீரர்கள் குறிக்கொண்டனர். புலரி விடியல் புள்ளோர்த்துக் கழிமின் என்பது மலைபடுகடாம் (448). நாளும் புள்ளும் கேளா ஊக்கம் என்பது தகடூர் யாத்திரை. வால்நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடம்போனால் கால்நடையாய்ப் போனவர்கள் கனகதண்டி ஏறுவார்கள் என்பது இன்றும் வழங்கும் பழமொழி. காரிக்குருவி சொகினம் காட்டாது தடுத்தால், எத்தகைய வீரனுக்கும் தோல்வியே ஏற்படும்! அது சொகினம் காட்டின் வெற்றி உறுதியாகக் கிட்டும் என்பது பண்டையோர் நம்பிக்கை. சொகினம் = சகுணம். பொய்யாது புள் மொழிந்தார்க்கு வையாது வழக்குரைத் தன்று - பு.வெ. 18 வெற்றிக்கும் தோல்விக்கும் காரிக் குருவியின் குறிப்பே அடிப்படை! அதுபோல் மூவேந்தர் வெற்றிக்கும் தோல்விக்கும் காரியே மூலவன். இக்கருத்தாலேயே கோவற் கோமான் முள்ளூர் மன்னன், தேர்வண் மலையன் காரி ஆனான். வென்றோர் வெலீஇயோன் எனவும், தோற்றோர் தொலைஇயோன் இவன் எனவும் கூறிக் கூறிப் புகழ் விளக்கமாகிய பின்னர்க் காரிப் பெயர் பெற்றான் என்றும் அப்பெயரே அவன் பெயர்கள் அனைத்தையும் வென்று விளக்கமும் வீறும் கொண்டு இலங்குகின்ற தென்றும் கொள்ளலாம். காரி:2 காரன் என்பதன் பெண்பால் காரி யாயது. வேலைக்காரன் - வேலைக்காரி; வீட்டுக்காரன், வீட்டுக்காரி; பணக்காரன், பணக்காரி. காரன், காரி என்பவர் காரியத்திலே கண்ணாக உள்ளவராம். காரிகை: காரிகை:1 காரிகை அழகாகும் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை (திருக். 571) கண்நிறைந்த காரிகை (திருக். 1272) எனக் காரிகையைப் பொருள் விளங்க விரிப்பார் வள்ளுவர். காரிகைப் பெயர் பெண்ணுக்கு ஆதல் அழகு நலம், பண்புநலம் கருதியதாம். காரிகை:2 காரிகையை முன்னிலைப்படுத்திய யாப்புநூல் யாப்பருங் கலக் காரிகை ஆகும். அந்நூல் இயற்றிய பேற்றால் அதன் ஆசிரியர் அமிதசாகரர் காரிகைக் குளத்தூர் என்னும் ஊரைப் பரிசிலாகப் பெற்றார் என்பது கல்வெட்டு. காரிக்கம்: சலவை செய்யப்படாத அழுங்கல் நிறத்துணி காரிக்கம் எனப்படும். காரிக்கம் சலவைத் துணியினும் விலைமலிவும் தடித்த நூலால் அமைந்து நெருக்க முடையதுமாம். காரியக்கண்ணர்: காரியம் + கண்ணர் = காரியக்கண்ணர். எடுத்த செயலிலே ஒருமித்த கருத்தாக இருந்து உறுதியாக முடிக்க வல்லார் காரியக்கண்ணர் ஆவர். அவர் தாம் செய்யும் கடமையைத் தெளிவாகத் தெரிந்தவர். ஆதலால், கடனறி காரியக்கண்ணர் எனப்படுவார். கடனறி காரியக் கண்ணரவரொடு - பரிபா. 19 மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர்செய் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணா யி னார் - நீதிநெறி. 52 என்னும் வெண்பா எண்ணத்தக்கது. கடனறி காட்சி யவர் என்பது வள்ளுவம் (218). காருகம்: கருகம் > காருகம். கருகமாவது ஓவிய வரைவு, தீட்டுதல்; வரைகோடு இடுதல். காருகம் = நெயவு. காருகர் நெய்பவர். ஓவியம் வண்ணம் கரை ஆயவை கருதிக் கருதிக் கவினுறச் செய்தல் வல்ல நெயவாளர் காருகர் எனப்பட்டனர். உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை மண்ணுவ மணிபொன் மலைய கடல பண்ணிய மாசறு பயந்தரு காருகப் புண்ணிய வணிகர் - பரி. தி. 1 காரை: காரை என்பது ஒருவகை முட்செடி. கரிய தண்டினை யுடையதால் காரை எனப்பட்டது. காரை சூழ் பகுதியில் அமைந்த ஊர் காரை எனப்பட்டது. எ-டு: காரைக்கேணி, காரைக்குடி, காரைக்கால். ஆனால், காரை மக்கள் வழக்கில் வேறாக உள்ளது. மதுக்கூர் வட்டாரத்தார் வைக்கோலைக் காரை என வழங்குகின்றனர். கார்காலத்தில் விளையும் நெல் கார்ச் சம்பா. கார்காலத்தில் விளை வதால் காரை என வழங்கி அதன் வைக்கோலை (தாளை)க் குறிப்பதா யிற்று. காரோடன்: கரு > கார் + ஓடன் = காரோடன். மழுங்கிய கத்தி அரிவாள் முதலியவற்றுக்குக் கூர்மையான கருக்கு உண்டாக்குவதற்குச் சாணை தீட்டுபவன், காரோடன் எனப்படுவான். உருளும் சாணைக் கல்லில் வைத்துக் கருக்குத் தீட்டலால் காரோடன் எனப்பட்டான். சாணை பிடித்தல், சாணை வைத்தல், சாணை தீட்டல் என்பவை காரோடம் என்பதன் மக்கள் வழக்காம். சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கற்போற் பிரியலம் - அகம். 1 பொருள்: சிறியனாகிய சாணைக்கல் செய்வோன் அரக்கொடு சேர்த்து இயற்றிய கல்போல் பிரியலம் (உரை, வேங்கட.) சாணை பிடிக்கும் கல் அரக்கொடு பயின் (பிசின்) சேர்த்துச் செறிவு மிக்கதாய் அமைத்தமையால் பொன்காண் கட்டளைக் கல்போல் கரிதாதல் தெளிவாம். அக்கரு நிறக்கருவி காரோடம் எனப்பெயர் கொண்ட பொருத்தம் நயக்கத் தக்கதாம். சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல்போல் என்னும் உவமை அகப்பாட்டில்(1) பின்னும் (356) வருதல் புலமையாளர் (மாமூலர், பரணர்) நுண்ணியல் நோக்க ஒருமை புலப்படுத்தும். கார்: கார் = கருமை, கருமுகில். கருமுகில் பெய்யும் மழைக்காலம் ஆகிய கார்காலம். ஆவணி, புரட்டாசி என்னும் முறை, உலகியல் சுழற்சியால் ஐப்பசி கார்த்திகை அடைமழை எனலாயிற்று. கார் என்னும் சொல் இல்லாமலும் காலம் என்றாலே மழைக் காலம் சுட்டுவது பொதுமக்கள் வழக்கு. * காலம் காண்க. கார் எட்டு: காரின் தோற்றம் செயல்களை இறைவன் தோற்றம் செயல்களுடன் ஒப்பிட்டு எட்டு வெண்பாக்களால் பாடும் சிறுநூல் கார் எட்டு என வழங்கப்படுகின்றது. கார் எட்டு நக்கீரதேவ நாயனாரால் அருளப் பெற்றதென்பதைப் பதினோராம் திருமுறையுள் காண்க. கார் பற்றிய நாற்பது பாடல்களையுடைய நூல் கார் நாற்பது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கார்கோள்: கார் = கருமுகில். கோள் = கொள்ளுதல். கருமுகில் திரண்டு மழைபொழியும் நிலையில் கப்பிக் கொள்வதைக் கார்கோள் என்பர். அது பெய்யும் மழையைப் பெறும் கடலைக் கார்கோள் என்பது இலக்கிய வழக்கு. கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை - முருகு. 7 பொருள்: கார்முகக்கப் படுதலின் கடல், கார்கோள் ஆயிற்று (உரை, நச்.) கார்நாற்றம்: மழைபெய்யுங்கால் உண்டாகும் மணம் கார்நாற்றம் எனப்பட்டது. நீருக்கு நிறமும் மணமும் இல்லை. எனினும், மண்ணில் வீழ்ந்த போதில் அதன் மணத்தையும் நிறத்தையும் பெறுகிறது. நாற்ற வகைகளை அடுக்குகிறது பரிபாடல் (20). மாலை மலைமணந்து மண்துயின்ற கங்குலாள் வானாற்று மழைதலைஇ மரனாற்று மலர்நாற்றம் தேனாற்று மலர்நாற்றம் செறுவெயி லுறுகால கானாற்றுங் கார்நாற்றம் கொம்புதிர்ந்த கனிநாற்றம் தானாற்றம் கலந்துடன் தழீஇவந்து தரூஉம் வையை கால மாரி: காலம் + மாரி = காலமாரி = கார்கால மழை. கால மாரியின் அம்பு தைப்பினும் வயற்கெண் டையின் வேல்பிறழினும் ... ... ... ஓடல் செல்லாப் பீடுடை யாளர் - புறம். 287 காலம் என்பதே கார்காலத்தைத்தான் குறிக்கும். இது மக்கள் வழக்கில் பல்வேறு வடிவங்களில் ஊன்றியுள்ளது. காலப்பயிர், காலச்சோளம், காலப்பருத்தி என்பவற்றைக் கருதுக. கோடை என்பதைக் கோடைக்காலம் என்றே வழங்குவர் அல்லது கோடை என்பர். கோடைச் சோழம், கோடைப் பருத்தி. காலம்: கதிரொளியில், கால் ஊன்றி (கால் = கோல், தூண்) அதன் நிழற்படிவைக் காலடியால் அளந்தமையால் காலம் எனப் பட்டது. இன்றும் தம் நிழலால் பொழுதை அளத்தலும், சுவர் நிழல், மரநிழல் முதலியவை கொண்டு காலக் கணிப்புச் செய்தலும் சிற்றூர் வழக்கம். படியும் நிழல்கொண்டு காலம் கணக்கிடல் மாம்பழக் கவிச்சிங்க நாவலரால், படியாதவன் கணக்கு என இரட்டுறலாகக் கூறப்பட்டது. படி ஆதவன் (கதிரோன்) நிழல் கணக்கு, படிக்காதவன் காலக் கணக்கீடு என இருபொருளவுமாம். காலமும் இடமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை ஆதலால் முதற்பொருள் ஆயின. காலம் என்னும் சொல்லுக்குப் பொதுப் பொருள் நீங்கிய சிறப்புப் பொருள் ஒன்று உண்டு. அது கார்காலம் என்பது. காலம் என்றாலே கார்காலம் சுட்டுதல் இன்றும் மக்கள் வழக்கில் பெருக உள்ளது. காலம் என்பதே கார் என்பதிலிருந்து தொடங்கிய முறையை அறிந்தால் மேலும் விளக்கமாம். பெரும்பொழுது ஆறு என்பதை யும் அதன் முறை வைப்பையும், காரே கூதிர் முன்பனி பின்பனி சீரிள வேனில் வேனில் என்றாங்கு இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுதே என்கிறது நம்பி. அகப். (11). காலம் கார்த்தால் வந்தான் என்பதும் எண்ணத்தக்கது (ம.வ.). * கால மாரி காண்க. காலதர்: கால் + அதர் = காலதர். கால் = காற்று; அதர் = வழி. வீடுகளில் காற்று வருவதற்காக அமைக்கப்பட்ட அமைப்பு, கால் அதர் என வழங்கப்பட்டது. கல்வழி, கல்லதர் எனப்படும். காலார நடத்தல்: நடவாமல் அமர்ந்தும் படுத்தும் இருந்ததால் உண்டாகிய சோர்வை அகற்றி, எழுச்சியுறக் காலார நடத்தல் வேண்டும் என நடப்பார் உளர். வயிறார உண்ணல் என்பது போல் காலார நடந்தால் மனநிறைவும் மகிழ்வும் உண்டாம் என்னும் உடல்நல நோக்கில் உழையாச் செல்வர்க்கும் அமர்ந்து பணி செய்வார்க்கும் வாய்த்த மருத்துவ நலமாக உள்ளது காலார நடத்தல். (ம.வ.) காலி: காலி:1 கால்நடைகளைக் காலி என்பர். கன்றுகாலி என்பது இணைச்சொல். காலி:2 பானையில் தண்ணீர் காலி எனத் தண்ணீர் அற்றுப் போனதைக் குறிப்பர். அது, இல்லாமை அல்லது வெறுமையைக் குறிப்பதன்று. கால் ஆகிய காற்று மட்டுமே உள்ளது, நீரில்லை என்பது பொருளாம். இது அறிவியல் திறம் வாய்ந்த சொல்லாம். காலி:3 காலி = ஊர் சுற்றி, காலப் போக்கடிப்பு. பொழுதை வீணடித்து ஊர் சுற்றித் திரிபவன் காலி, படு காலி எனப்படுவான். கால்நடை காலி எனப்படும். ஊர் ஆடு மாடுகள், ஊர்க்காலி என வழக்குறும். மாந்தரெல்லாம் காலால் நடப்பவரே எனினும் வெட்டித் தனமாகச் சுற்றுபவரே காலியாகச் சொல்லப்படுவராம். காலித்தனம், காலிப்பயல் என்பவை பொழுதை வீணாக்குவதுடன், பொருளையும் வீணாக்குப வனைக் குறிப்பதாகலாம். காலியாதல் போக்கடிப்பாக வழக்கில் உள்ளதும் அறியத் தக்கதே. மேல் வீடு (மூளை) காலி; வாடகைக்கு விடப்படும் என்பது எள்ளற் பழமொழி. காலெறி கடிகையார்: தலைவியின் எயிறு ஊறிய நீரைத் தேனொடு பால் கலந்ததாகப் பாடுவார் திருவள்ளுவர் (1121). காலெறி கடிகையார் கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தைச் சுவைத்தாற் போன்ற சுவையுடைய வெண்ணிறப் பல்லினிடத்தே ஊறிய இனிய நீர் என்றமையால் இப்பெயர் பெற்றார். இவர் பெயர் அறியக் கூடவில்லை. இப்பெயரார் வேறு பாடல் பாடியதும் தெரியவில்லை. கரும்பின் காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன வாலெயி றூறிய வசையில் தீநீர் - குறுந். 267 காலை: கால் + ஐ = காலை. கதிரோன் கால்கொள்ளும் பொழுது காலை ஆகும். காலைப் பொழுது, காலை நேரம் என்பது அது விடிகாலை, விடியற்காலை, விடிபொழுது வைகறை என்பனவும் அதுவே. காலை என்பது காலைப் பொழுதைக் குறியாமல் பொதுமைப்படக் காலப் பொழுதைக் குறிப்பதும் உண்டு. நீவந்த காலை என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அது கால் என்பதுமாம். அதுவும் பொதுப் பொருளிலும் வரும் அவன் நம்மைத் தேடி வந்தக்காலும் நாம் கண்டு கொள்ளவில்லை இப்பொழுது நாம் அவனைத் தேடிப்போவது நன்றாகவா உள்ளது? என்பது மக்கள் வழக்கு. காலைக் கட்டுதல்: காலைக் கட்டுதல் = கவலைப்படுதல். காலைக் கட்டுதல், அயலார் கட்டுதல் அன்று. தானே தன் காலைக் கட்டுதல் ஆகும். கப்பல் கவிழ்ந்தாலும் காலைக் கட்டலாமா? கன்னத்தில் கைவைக்கலாமா? என்பவை பழமொழிகள். கவலைப்பட்டோர். குத்துக் காலிட்டு உட்கார்ந்து கால் முட்டிகளுக்கு ஊடே தலையை வைத்துக் கைகளால் காலைக் கட்டிக் கொண்டு இருத்தலே, காலைக் கட்டுதல் எனப்படுகிறது. கவலைக்குரிய தன்மை வெளிப்பாடு காலைக் கட்டுதல் ஆகும். தாயைப் பிரிய மாட்டாத சேய் தாயின் காலைக் கட்டுதல் கவலையோடு கூடிய அன்பின் வெளிப்பாடாம். அக்கால் தன்கால் அன்றாம். காலைச் சுற்றல்: காலைச் சுற்றல் = நெருக்கி வளைத்தல். கொடி காலைச் சுற்றும்; வைக்கோற் புரி, கயிறு ஆகியவையும் காலைச் சுற்றும் சில வகைப் பாம்புகளும் தீண்டிவிட்டு ஓடாமல் காலைச் சுற்றிக் கொள்ளுதல் உண்டு. காலைச் சுற்றியது கடியாமல் விடாது என்பது பழமொழி. காலைச் சுற்றுதல் நெருங்கி வருதலையும், சுற்றி வளைத் தலையும் குறிப்பதாக விரிவடைந்தது. சிலர்க்கு இரக்கத்தால் உதவினால் அவ்வுதவி யளவில் நில்லாமல் மேலும் எதிர்பார்த்து, தங்களுக்கு உதவுதல் அவர்கட்குக் கட்டாயக் கடமை போலவும் வலியுறுத்திப் பெறுவர். இத்தகையவர்கள் உறவினைக் காலைச் சுற்றியது என்பது வழக்காயிற்று. சுற்றம் என்னும் சொல்லும் எண்ணத் தக்கதாம். காலைப் பிடித்தல்: காலைப் பிடித்தல் = பணிந்து வேண்டுதல். இறைவன் திருவடியை வணங்கல் பழஞ்செய்தி. அவ்வாறே தோற்றுப் போன வீரர்கள் தங்கள் கருவிகளை வெற்றி பெற்றவர் காலடியில் வைத்து அடைக்கலம் அடைதலும் மரபு. இவற்றைப் போல் குற்றம் செய்தவர்கள் தம் குற்றத்தைப் பொறுக்க வேண்டுமென்று ஊர்மன்றத்தில் விழுந்து வணங்கலும் வழக்கு. இவற்றிலிருந்து காலைப் பிடிக்கும் வழக்கம் உண்டாயிற்று. பணிவோடு ஒன்றை வேண்டுவோர், வேண்டுதற்கு உதவுவார் காலைப் பிடித்தலும் வணங்கலும் நடைமுறை யாயிற்று. காரியம் ஆகக் காலைப் பிடித்தல் எனப் பழமொழியும் உண்டாயிற்று. காலை வாரல்: காலை வாரல் = கெடுத்தல், நம்பிக்கை இழப்பு. காலைப் பிடித்தலுக்கு எதிரிடையானது காலை வாருதல் என்பது; வீழ்த்துதல் பொருளது. அவனை நம்பிக் கொண்டிருந்தேன் அவன் என் காலை வாரிவிட்டான் என்பதில் நம்பிக்கைக் கேடும், கெடுத்தலும் விளங்கும். சண்டையில் காலை வாரிவிடுதலும் வீழ்ந்தவன் மேல் ஏறிக் கொள்ளலும் என நிகழ்ந்த நடைமுறை கொண்டு எழுந்த வழக்குமொழி இது. ஒருவர்க்கு இக்கட்டான பொழுதில் அதனை நீக்குவதற் காகக் கேட்டு உறுதியளித்திருந்த ஒன்றை, உரிய பொழுதில் தாராமல் இழுத்தடித்துக் கடைசியில் இல்லை என்பதைக் காலைவாரி விடுதலாகச் சொல்லுவது ம.வ. கால்: உயிரிகள் ஊர்தல் நடத்தல் பறத்தல் செயல்களுக்கு உதவும் உறுப்பு கால் ஆகும். இயக்கத்திற்கு உதவுவது கால் ஆதலால் காற்றும், இயக்கச் சக்கரங்களும் கால் எனப் பெயர் பெற்றன. கால் ஊன்றல், பயன் செய்வதால் தூண் கால் பெயர் பெற்றது கற்கால், மரக்கால். கால் ஒரு முழுமையில் நான்கில் ஒரு பங்கு அதனால், கால் என்னும் எண்ணுப் பெயர் ஆயது. அது உடலின் அரைக்குக் கீழ் இரண்டாகப் பிரிவதால் காலும் காலும் சேரிடம் அரையாயிற்று அரை = இடுப்பு. அரைஞாண் = இடுப்புக் கயிறு. கால் = உறுப்பு. கிண்கிணி களைந்த கால் -புறம். 77 செங்கால் நாரை -தனிப். பைங்கால் கொக்கு -புறம். 242 கால் = காற்று. கால்தந்த கலன் எண்ணுவோர் -புறம். 386 கால் = அடிமரம். கருங்கால் வேங்கை -புறம்.137 கால் = தண்டு. புழல்கால் ஆம்பல் -புறம். 266 கால் = தாள். கருங்கால் வரகு -புறம். 335 கால் = முறை. ஒருகால் நினைப்பின் இருகாலும் தோன்றும் -முருகு. வெ.2 கால் = வாய்க்கால். வியன்புலத்துழை காலாக -புறம். 105 கால் =தூண். பல்கால் பொதியில் -புறம். 375 கால் = உருள். கால்பார் கோத்து -புறம். 185 கால் = இடம். பைங்கால் செறு -நற். 240 கால் = பந்தல்கால். நாற்கால் பந்தல் -புறம். 29 கால் = அடிப்பகுதி. கலிமயில் கலாவம் கால்குவித் தன்ன -புறம். 146 கால் = மரக்கால். எண்ணாழிக்கால் = எட்டுநாழி - படி - கொண்ட மரக்கால். முதற்பராந்தகன் காலத்தில் தொண்டை நாட்டில் மக்கள் வழக்கில் இருந்த மரக்கால் (க.க.சொ. அ). இவற்றுடன் வேர், கட்டில்கால், உறிக்கால், பரண்கால், காலம், காலன் முதலாம் பொருள்களையும் தரும். கால் என்பது சக்கரம், வட்டம், உருள் முதலிய பொருள் தரும் சொல் சகடக்கால் (நாலடி.2) என்பது வண்டிச் சக்கரம். சக்கர - வட்ட - வடிவில் ஆக்கப்பட்ட இனிப்பு சக்கரை. பணம் அல்லது காசு வட்ட வடிவில் செய்யப்பட்டதால் அதைச் சக்கரம், வட்டம், உருள் என்றும் வட்டார வழக்காகக் கூறுவர். குமரி மாவட்ட வழக்கில் கால் என்பது, பணம் என்னும் பொருளில் வழங்குகின்றது. கால்கட்டு: வீட்டில் தங்காமல் அலைந்து திரிபவனையும், கட்டுப்பாடு இல்லாமல் பொறுப்பற்று இருப்பவனையும் உனக்குக் கால்கட்டுப் போட்டால்தான் சரியாகும் என்பது தென்தமிழக வழக்கு காலில் கட்டு கால்கட்டு அன்று ஒரு பெண் கழுத்தில் தாலிகட்ட வைத்துவிட்டால், காலில் கட்டுப்போட்டது போல் வீட்டுப் பொறுப்பைப் பார்த்துக் கொள்வான் என்பதாம். கால்கட்டு = திருமணம். கால்கட்டை போடுதல்: கால்கட்டை போடுதல் = திருமணம் செய்வித்தல். பள்ளிக்கு வராமல் தப்பியோடும் மாணவர்களுக்கு முன்பு கட்டை போடும் வழக்கம் இருந்தது. குட்டை போடும் வழக்கமும் இருந்தது. கட்டை என்பது ஒரு சங்கிலி வளையத்தில் மாட்டப் பட்ட கட்டை. சங்கிலி காலில் மாட்டப்பட, கட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டியது. குட்டை என்பது இருகால்களையும் உள்ளடக்கி உட்கார்ந்து கால் நீட்டிய நிலையிலே வைக்கும் துளைக் கட்டையாகும். ஓடும் மாடுகளுக்குத் தொங்கும் கட்டை கழுத்தில் கட்டி விடுவது இன்றும் வழக்கமே. இவ்வழக்கத்தி லிருந்து கட்டை போடுதல் என்பது வந்ததாகலாம் கட்டை போட்டால் நினைத்தபடி திரியவோ ஓடவோ முடியாது. அது போலத் திருமணம் செய்து விட்டால், கட்டின்றித் திரிந்த காளை போல்வான் கட்டுக்குள் அமைவான் என்னும் கருத்தில் திருமணத்தைக் கால் கட்டை போடுதல் என்பது வழக்கமாயிற்று. தளை போடுதல் என்பதும் அது. கால்கழி கட்டில்: நெடுஞ்சதுர அமைப்புடையதாகவும், ஆள்படுக்கத் தக்க அமைப்புச் செய்யப்பட்டதாகவும், கட்டிலுக்கு அமைந்த கால் அமைக்கப் படாததாகவும் உள்ள பிணப்பாடை கால்கழி கட்டில் எனப்பட்டதாம். கழிதல் = நீங்குதல். இந்நாளில் பாடை எனப்படுவது பண்டு கால்கழி கட்டில் எனப்பட்டது. என்சிறுவனைக் கால்கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே -புறம். 286 கால்குத்தல்: திருச்செந்தூர் வட்டாரப் பரதவர் வழக்கில் கால்குத்தல் என்பது வருதல் பொருளில் வழங்குகின்றது. கடலில் சென்றவர்கள் ஆங்கிருந்து திரும்பிக் கரையில் படகை ஏற்றி ஊன்ற வைத்தல் கால்குத்தல் ஆதலால், வருதல் என்னும் பொருள் தருவதாயிற்று. கால்கோள்: கால்கோள்:1 கல்லெடுத்து வருதல் கால்கோள் ஆகும். சிலப்பதிகாரத் கால்கோட் காதை சான்று. கால்கோள்:2 ஒரு கல்லை அல்லது நடுகல்லை - நடுதல் கால்கோள் ஆகும். கால்கோள்:3 ஒரு வினையைத் தொடங்கும் தொடக்கம் கால்கோள் ஆகும். அது கால் கோள்விழா எனவும் வழங்கும். கால்கோள்:4 வானம் மழைபொழிய ஊன்றுதல் கால்கோள், கால்கோள். மழை கால்கோளாகி யிருக்கிறது; இங்கும் மழை வரலாம் என்பது மக்கள் வழக்கு. கால்கோள்:5 விடியல் 7.30 வரை கால்கோள் பொழுது என்பது கணியம் பார்ப்பவரும் ஏற்கும் வழக்கு. காலக்குறிப்பு நல்லது என்பது காலை 7.30க்கு மேலேயே ஆதலால், அப்பொழுதில் எதைச் செய்யவும் காலம் பார்த்தல் வேண்டா என்பர். கால்மாடு: கால்மாடு என்பது கால்பக்கம் என்பது மக்கள் வழக்கு. மாறும் வேழமும் நாகமும் மாடெலாம் -கம். பால. 952 மாடு செல்வப் பொருள் தருதல் கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை -திருக். 400 கால்மாடு என்பதற்குக் கால்நடைச் செல்வம் என்னும் பொருள் தருகிறது. கல்வெட்டு எங்கள் நாட்டில் நாங்கள் மீட்ட பாற்பள்ளியும் கால்மாடும் தெ.க.தொ. 5: 224 கால்வழி: கால்வழி = மக்கள். கான்முளை என்பதும் இப்பொருளதே. கால்வழி என்பது வாழையடி வாழையென வரும் மரபுத் தொடர்ச்சியாகும். கால் என்பதற்கு ஊன்றுதல், முளைத்தல் எனப் பல பொருள்கள் உண்டு. இங்குக் கால் குடும்பத்திற்கு ஊன்றுதலாக வாய்த்த மக்களைக் குறித்து நின்றது. ஆலமரத்தில் அடிமரம் இருந்தாலும் கிளைகளில் இருந்து இறங்கும் வீழ்தும், கால் ஆகி மரத்தில் உதவும். அதுபோல் கால் முளையும் குடியைத் தாங்கும் குடும்பத்தை வழி வழி நிலைபெறுத்தி வருபவர் மக்கள். ஆதலால், அவர்கள் கால்வழி கான்முளை எனப்பட்டனர் என்க! * சரவடிகாண்க. கால்வாயும் வாய்க்காலும்: ஆயிரம் காலால் நடந்து வந்தேன் என்று ஆறு கூறுவதாகக் கூறுவார் கவிமணியாம் மாமணி. பாரத் தொடரி (goods train)ia¥ போல ஊர்ந்து செல்லும் பூச்சியை ஆயிரங்கால் பூச்சி என்று சிறார் உவமை கூறி மகிழ்வர். கால் என்பது பலபொருள் தரும் சொல். அப்பல பொருளுள் இடப்பொருள் என்பதும் ஒன்று! அதனால், இலக்கணர் கால் என்பதை இடப்பொருள் உருபெனவும் சுட்டுவர். ஆற்றில் இருந்து நீர் பிரியும் இடம் கால் எனப்படும். மேலக்கால், தென்கால், வடகால் என்பவை காலால் பெயர் பெற்று, ஊர்ப்பெயரும் ஆனவை. வெள்ளக்கால்என்பதும் கால் பெயரால் வந்த ஊர்ப்பெயரே. ஆறு பிரியும் இடம் கால்! அக்கால் எங்குச் சென்று சேரும்? வாய் ஆகிய இடம் சென்று சேரும் அவ்வாய் எவ்வாய்? கண்வாய் என்பதே அது. கால், வாய்க்குச் செல்லும் நீரோட்டப் பகுதி - காலும் வாயும் இணைந்த பகுதி- கால்வாய் வாயில் இருந்து நீர் வெளிப்பட்டுப் பாயும் - பயிர் நிலத்துக்குச் சென்று பாயும் - பகுதி, வாயொடு கால் இணைக்க அமைவதாம் வாய்க்கால் என்பதாம். கால்வாய், வாய்க்கால் என்பவை முறையே வாய்க்கு நீர் வரும் வழியும், வாயிலிருந்து நீர் வெளியேறும் வழியும் ஆம்! போக்குவரவுக்கு இடனாக இருப்பது வாய், அஃது இல்லத்துக்கு ஆகும் பொழுது இல்வாய் என இருந்தது அச் சொல்லமைதி முன்பின் மாறிக் கிடந்து, வாயில் ஆகிவிட்டது! நிலை பெற்றும் போயது! இலக்கணப் போலி என இலக்கணமும் ஏற்றமைந்து விட்டது. ஊணும் நீரும் போக்கு வரவு புரிய இடனாக இருக்கும் வாய் என்னும் உறுப்பும் நோக்கத்தக்கதே! வாய் என்பது வழி என்னும் பொருள் தருவதை இவற்றால் உணரலாம் வரும்வழி, வருவாய்! செல்லும் வழி செல்வாய்! வாய் என்னும் நீர்நிலை இடப்பெயர் கண்வாய் எனப் படுவானேன்? நீர் வெளியேறுதற்கு மடையில் கண்கள் உண்டு! என்ன கண்கள் அவை? புலிக்கண், யானைக்கண், மான்கண், துடுப்புக்கண், நாழிக்கண் என்பவை(போன்றவை) அவை கண் போலும் துளையே, நீர் வெளிப்படுத்தும் வாயாக இருத்தலால் கண்வாய் எனப் பெயர் பெற்றது. கண்வாய் என்பதன் கொச்சை வடிவே இந்நாள் பெருக வழங்கும் கம்மாய் என்பதாம். கண்வாய் என்பதன் உண்மை உணரா ஆய்வாளர். கம்மாய் என்பதை மெய் வடிவாய்க் கொண்டு கம் = நீர்; வாய் = இடம் ; கம்மாய் =நீர் வெளியேறுமிடம் என வேற்றுச் சொல்லாகக் காட்டி விம்மிதம் உற்றனர். தோய்ந்து புளிப்பமைந்த மாவால் ஆக்கும் பண்ணியம், தோயை > தோசை என ஆனதை அறியாமல் தோ என்பது இரண்டு; சை என்பது ஒலி. எனவே இரண்டொலி தருவது தோசை என வேற்றுச் சொல்லாக்க வல்லார், கம்மாயைச் சும்மா விடுவாரா? கண்வாய்க்கு நீர் வரும் வழி,கால்வாய் எனப்பட்ட தன்றோ! அதனை ஆகு ஆறு என்க, கண்வாயில் இருந்து நீர் செல்லும் வழி, வாய்க்கால் எனப்பட்டதன்றோ! அதனைப் போகு ஆறு என்க. நீர் வரவு செலவுகளை நாம் நினைத்தால், பொருள் வரவு செலவும் புலப்படுமே! அப்புலப்பாட்டை முந்துறக் கொண்டு மொழிந்தவர் பொய்யாமொழியார். கால்வாயிலிருந்து கண்வாய்க்கு ஒருநாள் அல்லது இருநாள் நீர்வரலாம். வந்த நீர், பயிருக்கு எத்துணை நாள்களுக்குச் சென்று ஊட்டுகின்றது! ஒருநாள் வடிவு நீர், ஒருநாள் அளவிலேயே செலவாகிவிட்டால் என்ன பயன்? ஒருநாள் வரும் நீரை, ஒரு பயிர் விளைவுக்குப் போற்றிக் காத்து விடுவதன்றோ கண்வாய்! ஆதலால், பொருள் நிலை, வரவுசெலவு வகைகளைப் புகல்வது கால்வாயும் வாய்க்காலுமாம்! ஒருவர்க்கு ஒரு திங்களுக்கு ஒருமுறை வருவாய் வரலாம்! மாத ஊதியர் நிலை அதுதானே! ஒருவர்க்குப் பல திங்களுக்கு ஒருமுறை வருவாய் வரலாம்! உழவர் ஊதிய நிலை அதுதானே! இவர்கள் எப்படி வருவாயைச் செலவிட வேண்டும்? கண்வாயில் இருந்து வாய்க்காலுக்குச் செல்லும் நீரொழுக்குப் போலச் செலவு செய்ய வேண்டும்? வரவு மிகையா? குறையா? அது கவலைக்கு உரியதன்று!செலவு வரவில் குறையா? மிகையா? என்பதே கவலைக்கு உரியது! குறைந்த வருவாய் எனினும், அதற்கும் குறைந்த அளவில் செலவு செய்தலைத் திட்டப்படுத்திக் கொள்க! நிறைந்த நன்மையாவது இதுவே! இதனைத்தான் வள்ளுவப் பெருந்தகை நயமுறக் கூறுகிறார். ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை என்பது அது (478) ஆகாறு (ஆகு அறு) பொருள் வரும் வழி; இட்டிது, சுருக்கமானது; போகாறு (போகு ஆறு) பொருள் செலவாகும் வழி; அகலாக் கடை, விரிவடையாத இடத்து! ஆகாறு போகாறுகளைக் காட்டிப் பொருளியலை நாட்டுகின்றார் வள்ளுவர். கால்வாய் வாய்க்கால்களைக் கண்முன் காட்டி நிலை நாட்டுகின்றது, கண்வாய்! உழவர் இக்குறிப்பை மறக்கலாமா? பிறர் பிறரும் மறக்கலாமா? காண்பார்க்குக் கண்ணிடைப் பொருளியல் நெறிமை புலப்பட வேண்டுமே! கால் வைத்தல்; கால் வைத்தல் = வருதல், குடிபுகுதல். கால் வைத்தல்; காலை நிலத்தில் அல்லது ஓரிடத்தில் வைத்தல் என்னும் பொருளில் விரிந்து வருதல்என்னும் பொருளில் வருவது வழக்கமாகும். என்றைக்காவது எங்கள் வீட்டில் நீங்கள் கால் வைத்ததுண்டா? என்னும் வினாவினால் ‘வந்ததுண்டா? என்பது பொருளாம். கால் வைத்த நேரம் என்பது குடிபுகுந்த நேரம் என்பதையும் குறிக்கும். அவள் கால் வைத்த நேரம் நல்ல நேரம். செல்வம் கொழிக்கிறது என்பதும், அவள் கால்வைத்த நேரம் இப்படித் தொட்டதெல்லாம் கரியாகிறது என்பதும் போன்றவற்றில் கால்வைத்தல் என்பது குடிபுகுதல் என்னும் பொருளைக் காட்டும். காவடி: காவுதடி > காவடி. காவுகின்ற (தாங்குகின்ற) அடியுடையதாதலால் காவு அடி எனினும் ஆம். இக்காவடி என்பது உழவர் வழக்கில் நுகக்கோல் (நுகத்தடி, மேற்கால்) என்பதைக் குறிக்கின்றது. காவடி தாங்குவது போல் சமமான அளவில் ஊடு ஆணி ஒன்று மையமாக அமையத் தாங்கும் கோல் நுகக்கோல் என்பது எண்ணத் தக்கது. நுகத்தில் பகல் (நடு) ஆணி அன்னான் தஞ்சைவாணன் என்பது தஞ்சைவாணன் கோவை (1). காவடிச் சிந்து: முச்சீர் இரட்டையும் முடுகும் தனிச்சீர் எடுப்பும் உடைய அமைப்புடையது காவடிச் சிந்து ஆகும். காவடிச் சிந்து என்றதும் நினைவுக்கு வருபவர் சென்னிகுளம் அண்ணாமலையார் ஆவர். அவர் காவடிச் சிந்துகளைக் காண்க. மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித்துரையார் பாடிய காவடிச் சிந்தும் உண்டு. திருப்புகழ், தேவார, திருவாசக நாலாயிரப் பனுவல்களாகத் தமிழிசை வெளிப்பட்டும் தமிழிசை என ஒன்றில்லை என்பார் இரங்கத்தக்கார். அவர் அடியார்க்கு நல்லார் அடிப்பொடியைத் தொட்டுப் பார்த்ததும் இல்லாரே யாவர். சென்னி குளநகர் வாசன் - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் = செப்புஞ் செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையிற்புனை தீரன் - அயில் வீரன். என்பது கோயில் வளம் என்னும் காவடிச்சிந்தின் முதலடி. பாடியவர் அண்ணாமலையார். வேலா மலைக்குமரி பாலா தமிழ்க்கருள்செய் மீனுலவுங் குளிர்வானதி தந்திடு மெய்யனே - புகழ் வானளவுஞ் சிவஞான புரந்திகழ் துய்யனே என்பது பாண்டித்துரையார் காவடிச்சிந்தில் முருகக் கடவுள் வாழ்த்தின் ஈற்றடி. காவணம்: கா + வண்ணம் = காவண்ணம் > காவணம். திருமண விழாவுக்கு வீட்டு முகப்பில், காலுன்றி வாழை நாட்டி, தொங்கல்கள் அமைந்து அழகிய மேற்கட்டுடன் அமைக்கப்படும் விழாக்கோலம் காவணம் எனப்படுதல் செட்டிநாட்டு வழக்கு. மணமேடையைக் காவணம் என்பது பாலமேடு வட்டார வழக்கு. சோலையென எழிலுறத்தப்படுதலும், மனையறக் காவல்பேறு கருதிய தொடக்கவிழா ஆதலும் குறிப்பது காவணமாம். காவல்: காவல்:1 காவல், தனிவாழ்வுக்கும் வேண்டும்; பொது வாழ்வுக்கும் வேண்டும், காவல் இல்லையானால் கட்டு அழியும்; கெட்டுத் தொலையும், காவல் இன்றியமையாதது. ஆதலால், தமிழர் கைகளில் காப்பு அணிந்தனர்; விழாவுக்குக் காப்புக் கட்டினர். ஊருக்குக் காவல் தெய்வம் வைத்தனர்; காவற் கடவுளும் கண்டனர். அரண் சூழ்ந்த காவல் காடு கா எனப் பெற்றது. பின்னர் மரக்காடும், பூஞ்சோலையும் காக்கள் ஆயின. பொலிவு நயம் கூர்ந்து பூங்காவும் ஆயது. காத்தலின் வல்ல வேந்தன் காவலன் எனப்பெற்றான். காவலனாக இருந்த வேந்தன் கோவாகவும் விளங்கினான். அவன் வாழ்ந்த மனை கோயில் ஆயது. இவை காவல் சிறப்புகள். காவல் வகை இரண்டு. அவை அகக்காவல், புறக்காவல் என்பன. அகக்காவல் நிறைகாவல்; புறக்காவல் சிறைகாவல். அகக்காவல் உள்ளிருக்கும் நன்மை வெளிப்போகாமல் காப்பது. புறக்காவல் வெளித்தீமை உட்புகாமல் காப்பது. தன்மாடு தொழுவத்தை விட்டுப் போகாமலும் இருத்தல்வேண்டும்; ஊர்மாடு தோட்டத்துள் புகாமலும் இருத்தல் வேண்டும். இத்தகையவை அகக்காவலும் புறக்காவலும். தோட்டத்திற்கு வேலி வேண்டும்; இல்லையேல் கட்டுக் குலையும். வேலி என்பது வேலால் அமைந்தது. அல்வேல் இருவகைப்படும். ஒன்று வெள்வேல். மற்றொன்று கருவேல்; வேலமுட் படலையே வேலியாக ஊன்றுதல் இன்றும் காணக் கூடியதே. பயிரைக் காக்க வேலி வேண்டுவது போல உயிரைக் காக்கவும் வேலி வேண்டும். அவ்வேலியே நிறைகாவலும் சிறைகாவலும். தாலிக்கு வேலி தார்மன்னனே என்பதொரு தனிப்பாடல். நிறையாவது நிறுத்தும் தன்மை. நேர்மை, பிறழாமல் ஆடாமல் அசையாமல் நிறுத்தும் கோலே நிறைகோல் என்பது அறிக. சிறையாவது புறஞ்செலாது அடக்கிக் காத்தல்; பருந்து வட்டமிட்டு வளைந்து வருங்கால் குஞ்சுகளைக் காக்கத் துடிக்கும் கோழி, தன் சிறகுகளுக்குள் அவற்றை ஒடுக்கி வைப்பது போல, ஓரிடத்துக் காவலுள் ஒடுக்கி வைத்தல், குஞ்சினைக் கொண்டு செல்லும் வல்வாய்ப் பருந்தின் சிறகுகளுக்குள் அகப்பட்டு அலமரும் குஞ்சு போலச் சிறைகாவலில் துயருறுத்தலும் உண்டு. சிறை, குறையுடையாரைத் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கு வைக்கப்பட்ட அறநிலையமாகும். சிறகு என்பதும் சிறை என்பதும் ஒரு பொருள் தரும் பழந்தமிழ்ச் சொற்களே! செறிந்த காடு சிறைக்காடு எனப்படுதல் உலக வழக்கே! சிறையிற் சிறந்தது நிறையே என்பது அறவோர் கண்ட முறை. அந்நிறை ஆடவர்க்கும் வேண்டும்; மகளிர்க்கும் வேண்டும்; ஆடவர் நிறை. ஆண்மை எனப்படும்; மகளிர் நிறை கற்பு எனப்படும். நிறை முதிர முதிரச் சால்பு ஆகும். சால்புடையார் சால்பாளர். சான்றோர் ஆவர். இவை பாற்பொதுச் சொற்கள். சால்பாளர் இலரேல் உலகம் தன் சுமை தாங்காது மடியும்! வாழ்வின் அடிப்படைக் காவல், வாழ்வார் அனைவருக்கும் வேண்டும் என வாழும் தமிழர் நினைத்தனர். நமக்குத் தம்வாழ்வாலும் அறத்தாலும் சொல்லாலும் காட்டினர். காவல்:2 முன்னாளில் ஊர்காவல், திசைகாவல் எனவும், நகர்காவல், நாடுகாவல் எனவும் காவல் வகைகள் இருந்தன. இவை ஒன்றில் ஒன்று விரிந்த பரப்பும் அதிகாரமும் உடையனவாம். காவல் என்பது காக்கும் தொழிலாய்க் காவல் செய்வாரைக் குறித்தது. காவலன் என அடையின்றி அழைக்கப்படுவான் அரசன் ஆவான். காவற்பெண்டு: காவல் + பெண்டு = காவற்பெண்டு. நாடு காவல் பற்றுமையால் மறக்குடிப் பிறந்த தாய் ஒருத்தி தன்வயிற்றைச் சுட்டிக் காட்டி இக்குகையில் இருந்த புலியைக் காண விரும்பின் போர்க்களம் நோக்கிப் போ என்றும் வீரப்பாட்டைப் பாடியமையால் அவர்தம் நாடுகாவல் வேட்கை யுணர்ந்தார் இப்பெயரை அவர்க்குச் சூட்டினராதல் வேண்டும். செவிலித் தாயைக் காவற்பெண்டு என்னும் வழக்கம் இல்லையாம். சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டுள னோவென வினவுதி; என்மகன் யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும் புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே - புறம். 86 காவி: காவி = காவி நிறமுடைய செங்குவளை மலர். குவளைவகை கருங்குவளை, செங்குவளை என்பவை கண்ணகி கருங்கண்ணையும், மாதவி செங்கண்ணையும் ஒப்ப அமைதலைக் குறிப்பாகச் சுட்டினார் இளங்கோவடிகள் (சிலப். 5:237) காவி வண்ணம் துவர் - துறவு - வண்ணமாம். பிறர் துயரை யாம் தாங்குவேம். பிறர் நலம் புரிதலே எம்பிறவி நோக்கு என்பதன் அடையாளம் காவியாம். உள்ளத்துச் செந்தண்மையாம். அருளை வெளிப்படக் காட்டும் உடை அது. காவுதல் = தாங்குதல். காவினேம் கலமே என்பது ஔவையார் மொழி (புறம். 306). காவுதல் ஆகிய அது தம் துயர் தாங்கி. பிறர் துயரத் துடிப்புகளுக்குத் தாம் பொறுப்பேற்றுத் தாங்குதலுமாம். அவர்க்கே காவியுடை தகும் என்பதால். தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள் வது என்றது வள்ளுவம் (262) காவிக்கல்: காவி நிறமான கல் இது. துவர்ச்சுவை யுடையது. வண்ணமும் சுவையும் துவர் ஆகும். துவர் - துவர்ப்பு; துவர் - காவி. எ-டு: துவரை: பாக்குச் சுவை துவர்ப்பு: நிறம் காவிநிறம். காவியுடை சிவனியத் துறவியர் உடையாக உள்ளது. வெற்றிலை போடுவார் பல் காவியேறி இருத்தலைக் காணலாம். காவிதிமை: கா + விதிமை = காவிதிமை = காவல் காக்கும் முறைமை. காவிதிமை செய்ய ஒருவனுக்கு அரையன் மணலிலிங் கனான செம்பியன் பெருங்காவிதிக்குப் பங்கு ஒன்றும் தெ.க.தொ. 2:66) இஃது. எட்டி, ஏனாதி போல்வதொரு பட்டம் ஆகும். காவிரி: கா + விரி = காவிரி. கா = சோலை. காக்களை விரித்துக் காக்களின் இடையே செல்லும் ஆறு காவிரி எனப்பட்டது. மலைத்தலைய கடற்காவிரி எனப்பட்டது. (பட். 5) காவிரிப் பாவை என்பார் சாத்தனார் (மணிமே. 3:55)) காவிரியைக் காவேரி என்பது இசைப்பாட்டுக்கு ஏற்ப வழங்கப்பட்டது. நடந்தாய் வாழி காவேரி என்கிறது சிலம்பு (7:4). காவேரியின் பண்டை வெள்ளப் பெருக்கும் கரைபுரண்டு ஓடலும், எல்லை கடந்த செயலைக் காவேரித்தனம் எனவும் காவேரியாகத் திரிகிறான் எனவும் மக்கள் வழக்கில் உண்டாயின. காவிரிச் சிறப்பைப். புனல்பரந்து பொன்கொழிக்கும் - பட். 7 என்பதும், புனல் நாடு என்பதும், பொன்னி என்பதும் புலப்படுத்தும். காவிரிக்குப் பண்டே அணைகட்டிய பெருமையன் கரிகாலன். அவன் கட்டிய கல்லணைப் பகுதியில் கல்யானைமேல் அமர்ந்த களிற்றியானையாக உள்ளான். சுற்றுலா மையம் அது. காவிரிப்பூம் பட்டினம்: காவிரிக்கிழவன் என்பான் சோழன் (புறம். 399) அவன் தலைநகரும் துறைநகருமாக இருந்தது காவிரிப் பூம்பட்டினம். காவிரி கடலோடு சேரும் இடத்து (புகும் இடத்து) இருந்ததால் காவிரி புகும் என்பது காவிரிப்பூம் பட்டினமாகி யிருக்கலாம் என்று கருத இடமிருந்தாலும் அக்காவிரி புகும் இடம் பூக்கள் மல்கிய கழிகளை உடையதாக இருந்தது என்பதால் காவிரிப்பூம் பட்டினம் என்பதும் தகவாம். பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினம் என்கிறது அகம் (205) புகார் என்பது, பூம்புகார் எனப்படுவதும் பூமலி கழிமுகத்தது என்பது காட்டும், அப் பழநகர் ஆழியுள் ஆழ்ந்ததை அகழ்ந்து பார்த்தால் அரிய வரலாற்றுப் புகழுடையதாக இருக்கும். பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் முதலியவை கூறும் அப் பட்டினப் பேறு உலகப்புகழ் வாய்ந்தது; அதன்புகழ் புனைவன்று என்பது தெளிவாகும். இந்திய வரலாறு தெற்கிலிருந்து தொடங்குதல் வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தும் சான்றாகவும் அமையும். கரிகாலன் கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் கொடுத்தான், பொன்னியை - பொன்னிநாட்டைப் பாடியதற்காக! அப்பொன் பொருட் செல்வமாதலின் இன்று அது இல்லை. ஆனால் அப்பொன் பெற்றான் கொடையும், அவனைப் போல் அவ்வூரில் வாழ்ந்த புலமையர் கொடையும் எளிமையானவையோ? உலகம் உள்ள காலமெல்லாம் ஒளி செய்யும் கொடையல்லவோ! காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார். காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார். காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார். காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார். காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நக்கீரனார், என்பார் அவ்வூர்ப் பெயருடைய புலவர்களாக நாம் அறிய வருகிறோம். இப்பெயரைக் கொள்ளாமல் இருந்தார் எத்தனை எத்தனை பேர்களோ? சோழர் தலைநகராம் உறையூரில் வாழ்ந்தவர்களைக் கண்டுள்ளோம். அவர்களையன்றிச் சோணாட்டின் உள்நாட்டுப் புலவர்கள் கோவூர்க் கிழார், அரிசில் கிழார் அனையர் எத்தனையரோ? இவர்கள்தாமே இற்றைச் செம்மொழித் தகுதியை அரசு வழியே உலகம் அறியச் செய்தவர் களுள் ஒரு பகுதியினர். காவிரிப்பூம்பட்டினக் கடலகழ்வு ஆய்வினைத் தொல்லகழ்வுத் துறை எடுத்துத் துலக்குவதாக! காவுதல்: காவினேம் கலமே என்பார் ஔவையார் (புறம். 306) காவுதல் = தாங்குதல்; கலம் = யாழ். குற்றால வட்டாரத்தில் காவுதல் என்பது தாங்குதல் பொருளில் வழங்குகின்றது. காவட்டு, காவடி, காவு என்பவை தாங்குதல் பொருள் உடையவை. பிறர் துயர் தாங்குதல் அடையாளச் சான்றாகக் கொண்ட காவி: அவ் எண்ணம் இலாரால் வண்ண அளவில் பொருள் அமைந்துவிட்டது. எண்ணத்தொடு கூடிய வண்ணம். தவமும் தவமுடையார்க்கு ஆகும் என்று பாராட்டப்படும் (திருக். 262) காவும் கழனியும்: கா = சோலை. கழனி = வயல். காவும் கழனியும் மருதம் சார்ந்தனவே. கோயில் முதலிய வற்றுக்கு அறப்பொருளாக வழங்குவார். காவும் கழனியும் வழங்கிய செய்தி செப்பேடு. கல்வெட்டுகளில் காணக் கிடக்கின்றது. முல்லைக் காட்டினை வேறுபடுத்திக் காட்டுவது, இக்காவும் கழனியும் என்க. கா என்பது கான், கானம், கானகம், காவு எனவரின் அது முல்லையும் குறிஞ்சியும் சார்ந்ததாம். காவோலை: கா + ஓலை = காவோலை; முதிர்ந்த ஓலை. கா = காவல். தோட்டம் நிலம் ஆயவற்றுக்கு வேலியமைத்துக் காவல் புரிதல் வேளாண் கடமைகளுள் இன்றியமையா ஒன்றாம். ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு என்னும் வள்ளுவம் (1038). வேலி கட்டிக் காப்பதற்குப் பயன்பட்ட முற்றல் ஓலை காவோலை யாகும். கழிசூழ் படப்பைக் காண்ட வாயில் ஒலிகா ஓலை முள்மிடை வேலி நற். 38 பெண்ணை. வீழ்கா வோலைச் சூழ்சிறை யாத்த கானல் நண்ணிய வார்மணல் முன்றில் - நற். 354 காழகம்: காழ் + அகம் = காழகம் = காழ் = கெட்டித்தன்மை அமைந்தது. காழகம் : 1 காழகம் = உடை. விலங்கின் தோலும், மரப்பட்டையும் உடுத்த உடையாக இருந்த காலத்து, அதன் கெட்டித் தன்மை குறித்து இச்சொல் ஆடைக்கு உண்டாயிற்று. காழகம் : 2 காழகம் = கடாரம். மலையகக் காடு மலை ஆற்றுப் பகுதியது காழகம். ஈழத்துணவும் காழகத் தாக்கமும் - பட். 191 காழாரம்: காழ் + ஆரம் = காழாரம். காழ் = கெட்டித்தன்மை. உறுதித்தன்மை. ஆரம் = அருமை யமைந்தது. முதிர்ந்த கெட்டியான முத்துகளால் தொடுக்கப்பட்ட மாலை காழாரம் ஆகும். மார்பிற் பூண்ட வயங்குகா ழாரம் - புறம். 150 பரூஉக் காழாரம் -மதுரைக். 681 பரூஉ = பருத்துத் திரண்ட திண் காழாரம் - மதுரைக். 715 திண் = வலிய. காழி: கழி > காழி. கடற்கழிசார் ஊராகலின் காழி எனப்பட்டுப் பின்னர்ச் சீர்காழியாயது. பௌவமறை, ஓதமலிந்துயர் வான்முகடேற பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு சேயோங்கு சேணுபுரம் புயலார்கடற் பூம்புகலிந் நகர்தானே போரார்ந்த தெண்டிரைசென் றணையுங் கானற்பூம் புகலி மொய்பவளத் தொடுதரளம் துறையாகும் கடல்தோணிபுரம் துங்கமணி சிப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே இவையெல்லாம் பிரமபுரம் எனப்படும். காழி யாகும். தேவாரங்கள் காட்டுவனவாம். ஆதலால், கழி > காழி ஆயமை தெளிவாம். கழுமலம் என்பதும் இதன்பெயராம். சீர்காழி, திருஞான சம்பந்தர், சீர்காழி அருணாசலக் கவிராயர், சீர்காழி சிற்றம்பல நாடிகள், சீர்காழி மறைஞான சம்பந்தர், காழி கண்ணுடைய வள்ளல், சண்பை ஞானசம்பந்தர், முத்துத்தாண்டவர், மாசிலாமணி தேசிகர், சிதம்பரநாத முனிவர், மச்சுச்செட்டியார் முதலாய பெருமக்கள் தோன்றிய பெருமைக் குரியதாகும். காழியர்: கழியர் > காழியர் > வண்ணார், சலவையாளர். கழிநில உவர்மண் எடுத்து ஆடை அழுக்குப் போக்கும் தொழிலைச் செய்வதால் கழியர் காழியர் எனப்பட்டார். காழியர், கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு - அகம். 89 பொருள்: வண்ணார்கள் எடுக்கும் வெவ்விய உவர்மண் (உரை. வேங்கட) காழோர்: காழ் + ஓர் = காழோர். வலிய குத்துக் கோலுடைய பாகர்; பரிக்கோல்காரர். காழோர், சிறையருங் களிற்றிற் பரதவர் ஒய்யும் - நற். 74 பொருள்: தோணியைப் பரிக்கோற்காரர் பிணித்துச் செலுத்துகின்ற அடக்குதற்குரிய களிற்றியானையைப் போலப் பரதவர் செலுத்தா நிற்கும் (உரை. பி.நா.) காழ்: காழ் = கெட்டித்தன்மை, வயிரம், உறுதி, கருமை. ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம் காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும் என்னும் நாலடியால் (192) காழ், வயிரமாதல் புலப்படும். ஆடும் கிளை வயிரமேறிவிட்டால் அது களிற்றைக் கட்டும் தூணும் ஆகிவிடும் என்பது இதன் பொருள். காழ் என்பதற்கு விதை என்னும் பொருள் உள்ளமை, காழில் கனி என்னும் குறள் தொடரால் (1191) விளங்கும். சங்க இலக்கியக் களஞ்சியம் 27 பொருள்களைத் தருகிறது. மேற்குறித்த பொருள்களைத் தழுவியவை அவை. காழ்1 = விதை அணில் வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போல் நல்விளர்- புறம். 236 காழ்2 = வடம். குயில்வா யன்ன முகை அதிரல் பயிலா தல்கிய பல்காழ் மாலை - புறம். 269 காழ்3 = காம்பு. கண்திரள் நோன்காழ் - புறம். 95 காம்பாவது, கருவிகளின் கைப்பிடி காழ்4= வயிரம். நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் -முருகு. 32 காழ்5 = மேகலை. பல்காசு நிரைத்த சில்காழ் - முருக. 16 காழ்6 = குத்துக்கோல். தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி - பதிற். 53 காழ்7 = தண்டு. திண்காழ் ஏற்ற வியலிரு விலோதம் - மதுரைக். 449 காழ்8 = கட்டுத்தறி. கவைத்தாம்பு தொடுத்த காழ் - பெரும். 209 காழ்9 = இரும்புக்கம்பி. கயத்துவாழ் யாமை காழ்கோத் தன்ன - புறம். 70 காழ் 10 = கழி. உடும்பிழு தறுத்த கொடுங்காழ்ப் படலை -புறம். 325 காழ்11 = மரம். நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய - மதுரைக். 286 காழ் 12 = முத்து. பரூஉக் காழாரம் சொரிந்த முத்தம் - மதுரைக். 681 காழ் 13 = முதிர்ச்சி காமம் காழ்கொளினே - குறுந்அ 17 காழ்14 = வலிமை விசிப்புறுத் தமைந்த புதுக்காழ்ப் போர்வை -புறம். 399 காழ் 15 = சட்டக்கால். காழ்சாய்த்து, நொடை நவில் - மதுரைக் 621, 622 காழ்16 = கட்டை. தேய்வை வெண்காழ் புரையும் -புறம். 369 தேய்வை = சந்தனம். காழ் 17 = தூண் மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ் - நெடுநல். 111 காழ்16 = கருமை. எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த் தண்ணுறுந் தகரம் கமழ மண்ணி - குறிஞ், 107, 108 காழ் 19 = கால். காழூன்றிய கவி கிடுகு - பட். 167 காழ்20 = மிகுதி துறுகாழ் வல்சியர் - அகம். 253 காழ்21 = விட்டம். செதுகாழ் சாய்ந்த முதுகாற் பொதியில் - அகம். 373 காழ்22 = வரகரிசி. சுழல்மரம் சொலித்த சுளகலை வெண்காழ் - அகம். 393 கழல்மரம் = திரிகை. சுளகு = முறம். காழ் 23 = பிணிப்பு. பார்வை வேட்டுவன் காழ்கனைத் தருள - நற். 312 காழ் 24 = தடி. மாலை வெண்காழ் காவலர் வீச - ஐங். 421 பொருள்: வெண்காழ் என்றது மாலைக் காலத்து முயலெறியும் தடியை (ப.உ.) காழ்25 = மாலை. நலம்பெறச் சுற்றிய குரலமை ஒருகாழ் - கலி. 54 காழ் 26 = கண்ணி. கோட்டங் காழ் கோட்டின் எடுத்துக் கொண்டு - கலி. 107 காழ் 27 = கைம்மரம். குயில்காழ் சிதைய மண்டி - அகம். 167 காளம்: (கலை) குழற்கருவி, எக்காளம், குழல் வடிவில் நீண்டு முன்வாய் அகன்றிருக்கும் தோற்றத்தில் அமைக்கப் பெறுவது. இதன் பகுதிகள், கங்கில், குழல், மோதிரம் என்பனவாகும். கங்கிலையும் குழலையும் இணைக்கும் திருகுச்சுரையே மோதிரம் என்று பெயர் பெறும். இத்தகைய காளம் தஞ்சை இராசராசேச்சரத்தில் சிவபாத சேகரன் காளம்; ஸ்ரீராஜராஜன் காளம் என்ற பெயர்களால் இராசராசனால் பொன்னால் செய்யப்பெற்றுக் கொடுக்கப் பட்டிருந்தன. இராசராசன் இரட்டைக் குழலமைப்பில் செய்தளித்துள்ளமை சிறப்புடையதாகும். சிவபாத சேகரனென்றும், ஸ்ரீராஜராஜனென்றும் திருநாமம் வாங்கி, கங்கில் ஒன்றும் குழல் இரண்டும் மோதிரம் ஐஞ்சும் உடைய பொன்னின் காளங்கள் (க.க.சொ.அ.) காளாஞ்சி: வெற்றிலை மென்று துப்பும் கலத்தைக் காளாஞ்சி என்பது பழவழக்கு. காளாஞ்சி ஏந்துவார் என்பது ஒரு பணிவிடையர். காளாஞ்சி என்பதற்குத் தளுகை என்பது நெல்லை மாவட்ட வழக்கு. காளம் என்பது கருமை, காகம் என்னும் பொருளது. காகளம் என்பதும் அது. காக்கைக்கு முதற்கண் தெய்வப் படையலாக உணவைப் படைத்து வழங்கும் வழக்கத்தால் தளுகைப் பொருள் ஏற்பட்டிருக்கும். கோயில் திருப்பொருள் தளுகை ஆகும். தளி = கோயில்; தளிகை (தளுகை) கோயில் உணவு, கல் தளி, மண் தளி; கோயில் கட்டம் கல்லால் ஆயதும், மண்ணால் ஆயதும் பற்றியது. காளான்: காள் + ஆன் = காளான். காள் = கருமை; ஆன் = சொல்லீறு. காலையில் வெண்ணிறக் குடையாய் விளங்கும் காளான் மாலைக்குள் கருங்குடையாய், மறுநாள் அழன்று கரிந்து போவதாய் இருப்பதால் காளான் எனப்பட்டது. ஆம்பி, காளாம்பி என்பனவும் இது. அடுப்பில் காளான் முளைத்த வறுமையைக் காட்டும் புறப்பாட்டு. (164). காளி: காளி = சீற்றமிக்கவள். சீற்றம் மிக்குப் பேசுபவள்; தலைவிரி கோலமாகத் திரிபவள், மெல்ல நடவாமல் ஆட்டமும் ஓட்டமுமாக நடப்பவள், பேய்க்கூச்சல் போட்டு ஊரைக் கூட்டுபவள் ஆகியவளைக் காளி என்பது வழக்கு. சீற்றத்திற்கு வடிவமாகக் காளியைக் கருதுபவர் வழியே வந்த வழக்கம். இவ்வாறு நிலைத்துவிட்டது. காளி என்பதற்குக் கரியவள் என்பதே சொன்முறைப் பொருளாம். காளி, கருத்தம்மா, கருத்தம்மை எனப்படுவாள். காளன் = கரியன் (கண்ணன்); ஆண்பால். காளமேகம் = கருமேகம்; காளமேகமெனக் கவிபொழிவோன். காளி வழிபாடு வான்மழை பெய்யும் முன்னிலை வழிபாடு; கருமுகில் வழிபாடு. காளியும் கூளியும்: காளி = கருநிறத்தவளாம் காளி. கூளி = காளியின் ஆணைப்படி நடக்கும் குள்ளப் பேய். தடித்துப் பருத்த ஒருத்தியும் சின்னஞ்சிறிய பிள்ளைகளும் ஆரவாரத்துடன் ஓடக்கண்டால் என்ன காளியும் கூளியுமாக இந்த ஓட்டம் என்பர் (ம.வ) கூளி குள்ளம்; குட்டையானவனைக் குள்ளன் என்னும் வழக்கால் அறிக. உயரங்குறைந்த மகிழ்வுந்தைச் சிற்றூரார் கூளிக்கார் என்பதுண்டு. காளிக்குக் கூளி கூறுவதும், கூளிக்குக் காளி கூறுவதும் பரணிநூல் செய்திகள். கர், கார், கால், காழ், காள் என்பவை கருவண்ணஞ் சார்ந்த வேர்கள். காளியும் மூளியும்: காளி = கன்னங்கறேல் என்று இருப்பவள். மூளி = காதறுபட்டவள் அல்லது காதறை. தோற்றப் பொலிவு இல்லாதவர்களைக் காளியும் மூளியும் என்பது வழக்கு. தற்பெருமையாலும், பிறர்மேல் கொண்ட வெறுப்பாலும் காளியும் மூளியுமாகக் கூடிக் கசிகிறதைப் பார் என்பர். மூளி என்பது வாய்போன, பானை, குடம், சட்டிகளைக் குறிப்பதும் உண்டு. மூளி அறுவாள் எனக் கூர் மழுங்கிய அறுவாளைக் குறிப்பதும் உண்டு. காளை: காளை:1 காள் > காளை. காள் = கருமை, வலிமை. பழநாளில் காள், காழ் என இரண்டும் வேறுபாடற விளங்கின. முதற்கண் ளகரமே இருந்தது, பின்னை ழகரம் தோன்றியது என்பது மொழியாய்வாளர் கருத்து. காளை ஒருகால் கருநிற ஏறுக்குப் பெயராகி பின்னர்ப் பொதுமையில் ஏறு எனப்படும் காளைக்கு ஏற்பட்டிருக்கும். கருநிறக் கரும்பு பின்னே வெள்ளைக் கரும்பு, இராமக்கரும்பு, பேய்க்கரும்பு என்றானாற் போல. காளையின் வலிமை மடுத்த வாய் எல்லாம் பகடன்னான் என்னும் குறளாலும்(624) அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய வரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகடு என்னும் புறப்பாடலாலும் அறியலாம்(90). ஏறுகளின் வீறுமிக்க செயல்களை முல்லைக்கலி முழங்கும் முழக்கம் ஆர்கலி முழக்கமாம். வீரமுரசில் கட்டப்படும் தோல் புலியைக் கொன்ற காளையின் தோல் என்பது சுட்டத்தக்கது. காளை:2 காளை போன்றவன்; காளைப் பருவத்தன். களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே -புறம். 312 காற்றாடல்: காற்றாடல் = வணிகம் நடவாமை. உலாவப் போதல் காற்றாடல் எனப்படும். வேலை யொன்றும் இன்றி வெளியே உலாவுதலே வேலையாகப் போதலே அக் காற்றாடலாம். காற்று வாங்கப் போதல் என்பதும் அது ஓய்வு பெற்ற முதியவர் காலார நடப்பதே அக்காற்றாடலாகும். ஆனால், சிலர் கடையில் பொழுதெல்லாம் போனாலும் வணிகம் ஒன்றும் நடவாது. பொருள்கள் கடையில் இருந்தும் வாங்குவார் இல்லாமல் - வாராமல்- காத்துக் கொண்டிருப்பதே கடைக்காரர் பணியாக இருக்கும் அக்கடையைக் காற்றாடுவதாகக் கூறுவது வழக்கு. கடை காற்றாடுகிறது என்பர். கடை ஓடாது என்பதற்கு முன்னிலை காற்றாடலாம். காற்று: கால் + து = காற்று. கால் ஊன்றலும் இயக்கமுமாக உள்ளது காற்று. ஊன்றல் நிலையிலும் இயக்கமாக இருத்தலும், இயக்க நிலையிலும் ஊன்றலாக இருத்தலும் காற்றின் இயற்கையாம். ஊன்றிய நிலைத்திணையாகிய புல் பூண்டு செடி கொடி மரம் ஆயவை ஊன்றுநிலை இயக்கத்தவை. ஈரறிவு உயிரி முதல் ஆறறிவுயிரி வரை உள்ளவை இயங்குநிலை ஊன்றலுடையவை. கால் இயங்கும் உறுப்புப் பெயர்; இயங்க உதவும் ஆழி (சக்கர)ப் பெயர் உலகியக்கம் உருளியாக இருத்தல் நடைவண்டி முதல் வானூர்தி வரை உள்ளமை கண்கூடு. உலகைக் சுருக்கி வைத்த அருமை அறிவியல் படைப்பு உருளியைப் படைத்த படைப்பாம். அவ்வுருளி இயக்கம் அறம் அறிவு முதலாம் இயக்கமும் ஆதல் வேண்டுமென அமைக்கப்பட்டனவே அறவாழி அந்தண்மை; அறவாழி உருட்டல்; அறக்கோல் ஆட்சி என்பன. காலால் நடப்பது கால்நடை, கால்நடையாலும் பொதியூர்தி, பொதிவண்டி ஆயவற்றாலும் கொள்ளலும் கொடுத்தலும் செய்தமை கால்வணிகம். கடல்வழியாகக் கலம் செலுத்திய வணிகம் கலவணிகம். கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட என்கிறது சிலம்பு (2:7-8). அக்கல வணிகம் பருவக்காற்று இயக்கம் அறிந்தே செய்யப் பட்டமையால் வளிதொழிலாளல் எனப்பட்டது. களிதொழி லாண்ட உரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ என்பது புறப்படல் (66). ஆடுமாடுகள் காலிகள் எனப்பட்டன. ஊர்மாடுகள் ஊர்காலி எனப்பட்டன. ஓடுதலும் ஆடுதலும் ஆயவனும் ஆயவளும் ஓடுகாலி எனப்பட்டனர். காற்றுப் பிரிதல்: காற்றுப் பிரிதல் = அடைப்பு அகலல். மேலால் காற்றுப் பிரிதலும், கீழால் காற்றுப் பிரிதலும் உடலியற்கை உடலுள் மிகுந்த தீய காற்று வெளிப்பட இயற்கை வழங்கியுள்ள வாயில்கள் இவை. இவை வெளிப்படாமை பலப்பல துயர்க்கு இடனாம். இவை பிரிதலைக் காற்றுப் பிரிதல் என்றும் காற்றுப் பரிதல் என்றும் கூறுவர்(ம.வ) காற்றுப் பிரிந்தால், அடைப்பு விலகியது என்னும் குறிப்பாம். காற்று மூச்சுக் காற்றைக் குறியாமல், வெளிப்படுத்த வேண்டிய தீக்காற்றைக் குறித்தலால் வழக்கு வழிப்பட்ட தாயிற்றாம். கானக்கரை: கானம் = காடு; கானக்கரை என்பது சுடுகாடு. கரை என்பது மேட்டிடம். கானக்கரை என்பது சுடுகாடு என்னும் பொருளில் திருவாதவூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. சுடலைக் கான் என்பது மணிமேகலை(16:25). சுடுகாட்டுக் கோட்டம் என்பதால் அது கோயிலாகக் கொள்ளப் பட்டமை புலப்படும் (மணிமே.6:204) காடும் கரையும் என்பது இணைச்சொல். கானல்: கானல்:1 கானல் = கடற்கரைச் சோலை. பல்பூங் கானல் அல்கினம் வருதல் -அகம். 20 கானல்:2 கானல் = கடற்கரை குறுந்தூறு முட்புதர் உள்ள கடற்கரைப் பகுதி கானல் எனப்படும். கானல் கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும் -புறம். 60 கானல்:3 கானம் ஆகிய காடு (உயர்மரச் செறிவு) இல்லாதது (கான் + அல்) கானல் எனப்பட்டது கான் = காடு மடலவிழ் கானல் (சிலப். 6:113). கானல் நீர்: கான் > கானல் + நீர் = கானல்நீர். வெயில் மிக்குளதாகிய பொழுதில் நீர்தோன்றுவது போல் தோன்றும்பொய்ந்நீர்த் தோற்றம் கானல் நீராம். கானல் நீரை நம்பி ஓடும் மானைப் போல என்பது ஏமாற்றுதலைக் குறிப்பது. வம்பு என்னும் பொய்மழைத் தோற்றம் குளிரில் தோன்றுவது போல, வெயிலில் தோன்றும் பொய்த் தோற்றம் இது. சூடான பாலை வனங்களில் வெப்பநிலை 600-800 சி.வரை உயரும் அப்போது தரையை ஒட்டிய காற்றுப் படலங்கள் சூடாகி அவற்றின் அடர்த்தி மிகவும் குறையும். அப்போது ஒளி விலகலின் காரணமாக ஒளிமிகவும் திசைமாறி அப்படலங்களிலிருந்து எதிரொளிக்கப்படுவது போலவே தோன்றும். பாலை வனங்களில் கானல்நீர் (mirage)v‹D« மாயத் தோற்றம் ஏற்படுவதற்கு இதுவே காரணம். தொலைவில் சலசலக்கும் நீர்நிலை இருப்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்பட்டுப் பயணிகள் ஏமாறுவர். நகரங்களில் கூடச் சூடான தார்ச்சாலைகளிலும் கான்கீரீட் சாலைகளிலும் இத்தகைய மாயத்தோற்றம் ஏற்படும். (அறி.கள) கானவாரணம்: கானம் + வாரணம் =கானவாரணம். கானம் = காடு; வாரணம் = கோழி காலால் வார்வதும் கிழிப்பதும் ஆகியது வாரணம் எனப்பட்டது. காட்டில் இருப்பதும் கால்விரலால் கிழிக்கவும் கிண்டவும் வல்ல இயற்கையதாய் அமைந்ததுமாகிய காட்டுக் கோழி கானவாரணம் எனப்பட்டது. கானங்கோழி, காட்டுக்கோழி என்பனவும் இது. பல்பொறிக் கான வாரணம் -புறம். 52 வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள -தொல். 800 வார்தலை யுடையது வாரணம். நாட்டுக் கோழியும் உண்மையால் காட்டுக் கோழி (கானவாரணம்) என்றார். கானவேட்டம்: நாற்படையும் புடைசூழ வேட்டைக்குச் சென்ற வேந்தன் ஒருவன் காட்டில் வெதும்ப அலைந்ததனால் மயங்கிக் காட்டு முயலுக்கும் யானை முதலியவற்றுக்கும் அம்பேவித் திகைப்புற அவ்வேளையில் ஆங்கொரு நங்கையைக் கண்டு களிப்புற்ற செய்தியைக் கூறுதல் கானவேட்டம் என்பர். கன்னிவேட்டம் என்பது இது. ஆனைபரி சேனைபுடை யாகவேட் டஞ்சென்று கானவி னான்மயங்கிக் கானமுயல்- ஆனையிவைக் கம்பேவி யேதிகைத்த அப்போது மானொருத்தி இன்பமுறல் கன்னிவேட்ட மே -பிர. திர. 49 கான்: கா > கான் = காவலரணமாவது. கானப் பேரெயில் -புறம். 21 கான்:1 கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் -புறம்.33 கான்:2 கான் = காட்டின் மணம். தலைவேய் கான்மலர் -அகம். 391 கானம், கானகம் என்பதும்இது. கானக் காக்கை (புறம்.342); கானக நாடன் (புறம்.5). கானக் கோழி, கானங்கோழி எனவும் வழங்கும்(குறுந். 242) கான்:3 ஒருவரிசை வாழைக்கும் மற்றொரு வரிசை வாழைக்கும் உள்ள இடைவெளியைக் கான் என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு ஆகும். காண்டு என்பது கொடிக்கால் இடைவெளிப் பெயராக இருப்பதை அறியலாம். கால் என்பது வாய்க்கால் இரண்டு வரிசைக்கும் இடையே உள்ள கால் கான்ஆகும். பால்மொழி, பான்மொழி என்றாவது போல வாய்க்கால் வெட்டுதலைக் கான்பறித்தல் என்பது திருச்சி மாவட்ட வழக்கு கான் என்பது கோட்டையூர் வட்டார வழக்கில் சாய்க்கடை ஆகிய வடிகாலைக் குறிக்கிறது. கான்முளை: கால் > கான் + முளை = கான்முளை. முளை = முளைக்கும் பயிர்; உயிர். கான்முளை = மக்கள். வித்தால் முளைத்து வளம் பெருக்கும் பயிர்வகை போல, விந்தால் முளைத்து வளம் பெருக்கும் மக்கள் மற்றை உயிரிகளும் விந்தால் வளர்ந்து பெருகினாலும் உறவுமுறை காணலும் காட்டலும் அவற்றுக்கு இயலாமையால் மக்கள் பிறவிக்கு மட்டுமே கான் முளையாகிய மரபுநிலை உண்டாம். * முறைப்பெயர் காண்க.  கி வரிசைச் சொற்கள் கி: ககர இகரம் என்னும் உயிர்மெய்க் குற்றெழுத்து சொல்லின் முதல் இடைகடை ஆகிய மூவிடங்களிலும் வரும் எழுத்துகளுள் ஒன்று ஒருமாத்திரை அளவினதாம் உயிர்மெய்க் குறிலுள் ஒன்று. கிழக்கு, புக்கில், கண்ணகி. கிக்கீ: கிக்கீ = ஒலிக்குறிப்பு; பறவை ஒலி. காக்கா கிக்கீ கீச்செனப் பறவை ஒக்க ஒலிக்கும் ஒலியாம் இசையில் பறவையின் ஓசை இசையாகி இன்பம் தருதலால் ஒலியாயிற்று. ஓசைக்குப் பொருளில்லை; பொருளுணர்ச்சி ஓசை எழுப்புவதற்கு இல்லை; கேட்பவர்க்குப் பொருளுணர்ச்சி இருப்பதால் ஒலியாயிற்று. கிசுகிசுத்தல்: இருவர் தமக்குள் பிறர் கேட்காதவாறு காதோடு காதாகப் பேசுவதைக் கிசுகிசுத்தல் என்பர். என்ன சிசுகிசுப்பு: எங்களுக்குத் தெரியக் கூடாதா? என்பது மக்கள் வழக்கு. இதனைக் குசுகுசு என்று கூறுவதும் உண்டு. கிச்சடி: பச்சடி என வழங்கும் தொடுகறியைக் கிச்சடி என்பது குமரி வட்டார வழக்கு பச்சடி கிச்சடி என்னும் வழக்குக் கொண்டு பின்னதை எடுத்திருக்கலாம். கிச்சடி என்பது நெல்லை முகவை மாவட்டங்களில் கரை துவையல் ஆகிய சட்டினியைக் குறிப்பதாக உள்ளது கிச்சடிச் சம்பா என்பது நெல்லில் ஒரு வகை ; மெல்லிய அரிசியுடையது. கிச்சு: கிச்சு என்பது தீ என்னும்பொருளில் மதுரை வட்டார வழக்காக உள்ளது. கிச்சுக் காட்டுதல், கிச்சங்காட்டுதல் என்பவை நகைப்பூட்டல். தீயை உராய்ந்து பற்ற வைத்து ஒளியூட்டச் கிச்சுக் காட்டி மூச்சுத் திணறச் செய்தல் கிச்சுமுச்சு ஆகும். கிச்சு முச்சு இல்லாமல் விளையாடுங்கள் என்பது பெரியவர்கள். விளையாடும் சிறுவர்க்கு இடும் கட்டளை. கிச்சுக்காட்டல்: * அக்குளுத்தல் காண்க. கிச்சுக் கிச்செனல்: கிச்சுக் கிச்செனல் = சிக்கில், சிக்கிச் செல்லல். வண்டிச் சக்கரம் இயல்பாக ஓடாமல் தடைப்பட்டுத் தடைப்பட்டு நின்று ஓடினால் வண்டி கிக்சுக் கிச்சு என்று சிக்குகிறது. பழுது பார்க்க வேண்டும் என்பர் (ம.வ) கிச்சு முச்சு: கிச்சு =கிச்சங் காட்டுதல் முச்சு = மூச்சுத் தடுமாறச் செய்தல். குழந்தைக்குக் கிச்சுமுச்சுக் காட்டாதே என்று எத்தனை முறை சொன்னாலும் சிறுவர்கள் விடுவது இல்லை. கிச்சு முச்சுக் காட்டுதலில் அவர்களுக்குக் கொள்ளை ஆர்வம்! குழந்தைக்குத் தான் தன் துயரைச் சொல்லத் தெரியாதே. கிச்சுக் காட்டுதல் என்பது உணர்வு மிக்க இடங்களில் தொட்டுச் சிரிப்பு உண்டாக்குதல். அச்சிரிப்பு மிகுதிப் படுதலால் மூச்சு முட்டிப் போதல் உண்டு அது முச்சு எனப்பட்டதாம். கிடக்கை: கிடக்கை:1 கிடக்கை = கிடத்தல். படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே -புறம். 278 நிற்றல் இருத்தல் கிடத்தல் என்பவை முறையே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேளலறச் சென்றான் -நாலடி. 29 என வரும். இக்கிடக்கை வறிதாக இறந்து கிடந்த நிலையன்று என்பாராய்க் களப்போரில் படையழித்து வீறு கொண்டு விழுப்புண்பட்டுக் கிடந்த கிடக்கை ஆகலின், அவனை எதற்காகப் பெற்றாளோ அப்பிறவிக் கடனை ஆற்றி மார்புப் புண்பட்டுக் கிடந்தான் ஆதலின், படுமகன் கிடக்கை கண்டு பெற்ற பொழுதினும் பெரிது உவந்தனளாம். இது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் -திருக். 69 என்பதன் சான்று. இதன் புறத்துறை உவகைக் கலுழ்ச்சி கிடக்கை:2 நாடு, உலகம் என்னும் இடப்பெயர் கிடக்கையாம். படுத்துக் கிடக்க இடமாவது அதுதானே. படிந்து கிடப்பதுமாம் அது; பல்வேறு படிவுகள் அடுக்கடுக்காக அமைந்தது அகழ்வுகளால் புலப்படுதல் கண்கூடு. திரைபிறழிய இரும்பௌவத்துக் கரைசூழ்ந்த அகன் கிடக்கை -பொருந. 178,179 கிடக்கை:3 களப்போர் செய்யும் இடம். பட்டுக் கிடக்கும் பிணங்களும் பாழ்பட்ட கருவிகளும் கொட்டிய குருதியும் கிடக்கும் இடமாதலின் போர்க்களம் கிடக்கை எனப்பட்டது. வாள்மின் னாக வயங்குகடிப் பமைந்த குருதிப் பலிய முரசுமுழக் காக அரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை -புறம். 369 கிடங்கில்: கிடங்கில்:1 கிடங்கு > கிடங்கில் = பள்ளம், ஆழமான நீர்நிலை. பல்வகைப் பொருள்களும் உயிர்வகைகளும் கிடக்கும் இடம். கிடங்கில்:2 ஓர் ஊர்ப்பெயர் கிளைமலர்ப் படப்பைக் கிடங்கில் -சிறுபாண். 160 கிடங்கிலில் வாழ்ந்த சான்றோர்கள்: கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார். கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் கிடங்கில் குலபதி நக்கண்ணனர் கிடங்கில் கோமான் என்பான் வேந்தன். அவன் ஓய்மான் நாட்டு நல்லியக் கோடன் என்பான். இற்றைத் திண்டிவனம் சார்ந்த பகுதி அது. கிடங்கு: கிடங்கு = அகழி; ஆழமான நீர்நிலை; பெரும் பள்ளம். தூர்ந்த கிடங்கில் சேர்ந்த ஞாயில் -புறம். 350 மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும் நீஇர் இன்மையில் கன்றுமேய்ந் துகளும் -புறம். 355 கிடுகிடுத்தல்: கிடுகிடுத்தல் = நடுக்கம், ஆட்டம். பனி கடுமையானால் குளிரில் பல் கிடுகிடுக்கிறது என்பர். கிடுகிடு என வீடு நடுங்கிவிட்டது நிலநிடுக்கத்தால் ம.வ. கடுகிடுப்பான்: குடுகுடு என ஒலிக்கும் கருவியும், கருவியுடையவனும், குடுகுடுப்பை, குடுகுடுப்பைக்காரன் எனப்படுதல் வழக்கம். கிடுகிடு என நிலநடுக்கத்தைக் கிடுகிடுப்பான் என்பது கொங்கு நாட்டு வழக்கு சொல்லாலே நிகழ்நிலை காட்டும் செறிவுடைய சொல்லாட்சி இது. கிடுகு; கிடுகு:1 கிட்டு > கிடு . கிடுகு =கிட்டுதல் =நெருங்குதல்; கிட்ட , கிட்டக்க ம.வ, தென்னையின் கீற்றை நெருக்க நெருக்கமாக வைத்துப் பின்னுதல் கிடுகு ஆகும் .ம.வ. கிடுகு:2 தோல் என்னும் கிடுகுப்படை மெய்ம்மறையாகக் கொள்ளப்படுவது தோல் என்னும் கிடுகுப் படையாம். கிடுகு கேடயம் என்பவை ஒருங்கு கொள்வன. பூந்தலைக் குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து-முல்.41 கிடுகு:3 தென்னைக் கீற்றால் செய்யப்படுவது கிடுகு. அது மறை தட்டியாகப் பயன்படும். கிடுக்குக் கிடுக்கு: கிடுக்குக் கிடுக்கு = மெதுவாக. வண்டி இப்படிக் கிடுக்குக் கிடுக்கு என்று போனால் எப்பொழுதுதான் வீடு போய்ச் சேர்வோமோ? ம.வ. கிடேறி: கிடை + ஏறி = கிடேறி. கிடை = மாட்டு மந்தை. மாட்டு மந்தைக்கென விடப்பட்ட பொலிகாளை கிடை ஏறி எனப்படும். கிடேறியினால் பெயர் பெற்ற ஊர் கிடேறிப்பட்டி என வழங்கப்படுகின்றது மதுரை மேலூர்ப் பகுதியது அது. கிடேறி பொலிகாளையாம், ஏறு என்க. * ஏறு காண்க. கிடை: கிடை:1 கிடை = படுத்துக் கிடத்தல். எ -டு ஆட்டுக்கிடை; மாட்டுக்கிடை. ஆடு மாடுகளை மந்தை மந்தையாக வைத்தி ருப்பார், பகற்போதில் அவற்றை மேயவிட்டு நீர் பருகவிட்டுப் பேணுவர். இரவுப் பொழுதில் விரும்பி அழைப்பார் நிலத்தில் படுக்க விடுவர். அதற்குக் கிடை என்பது பெயர். கிடையாடு கிடை மாடு என்பதே அவற்றுக்குப் பெயர். அவை வேற்றூர்களிலிருந்து மேய்ச்சல் புலம் நோக்கி ஓட்டி வரப் பட்டவை ஆதலால் வரத்தாடு, வரத்துமாடு எனப்படும். நல்ல இயற்கை உரமாய் அவற்றின் நீரும் புழுக்கையும் சாணியும் அமைந்த நிலவளமாய் விளைவைப் பெருக்கும். ஆட்டெரு அவ்வாண்டு மாட்டெரு மறு ஆண்டு என்பது பழமொழி. கிடை:2 கிடை = நெட்டி. தூண்டிலில் தக்கையாக இருப்பது நெட்டிப் பழுப்பே. அது நீருள் ஆழ்ந்து படாமல் மேலே மிதந்து கிடத்தலால் கிடை எனப்படும். அது நீர் உள்ளே சென்றால் மீன் கவ்வி உள்ளிழுத்ததாகும். அதனால் தூண்டிலை மேலே தூக்கி மீனைப் பிடிப்பர். அறுகய மருங்கில் சிறுகோல் வெண்கிடை -புறம்.75 கிடேச்சு என்பதும் அது. கிட்டங்கி: கிட்ட அடங்கி > கிட்டங்கி. கிட்டக் கிட்ட அல்லது அடுத்தடுத்து இடைவெளியிள்றிப் பொருள்களை அடுக்கி வைக்கும் பண்டசாலை கிட்டங்கி எனப்படும். கிட்டக் கிட்ட அடக்கி வைக்கப்பட்டது கிட்டடக்கி > கிட்டக்கி > கிட்டங்கி ஆயது. அடக்கி வைக்கப்பட்டது அடங்கி யாயது ஒடுக்கிக் கொள்ளப்பட்டது ஒடுங்கி யாவது போல (சிவ. போ.1) கிட்டணி: கிட்டத்தில் என்பதைக் கிட்டணி எனல் அறந்தாங்கி வட்டார வழக்கு. கிட்டத்தில் = பக்கத்தில்; அணி = அண்மையான இடம் இரண்டும் ஒரு பொருள் பன்மொழியாய் - மீமிசைச் சொல்லாய்- வழங்குகின்றது. மிகப் பக்கம் எனக் குறிப்பது அது. கிட்டத் தட்ட: கிட்ட = குறித்த அளவுக்கு நெருங்க தட்ட = குறித்த அளவுக்கு மேலேற. கிட்ட = நெருங்க; தட்ட = தட்டுமாறு உயர ஏறக்குறைய, ஏறத்தாழ, கூடக்குறைய என்பன போல வரும் இணைச்சொல்லே கிட்டத்தட்ட என்பதாம். கிட்டத்தில் என்பது பக்கத்தில் என்னும் பொருள் தருவதும் உண்டு. அதற்கு முரண் எட்டத்தில் என்பது. கிட்டப்பார்வை, எட்டப்பார்வை என்பவை முரண்பார்வைகளே. கிட்டத்தில்: கிட்டு + அத்து + இல் = கிட்டத்தில் கிட்டுதல் = நெருங்குதல். எட்டத்தில் என்பதற்கு எதிர் கிட்டத்தில் என்பது . அருகில் நெருக்கத்தில் பக்கத்தில் என்பனவும் இது கிட்டத்தில்தான் இருக்கிறது; மெதுவாகப் போகலாம் (ம.வ). கிட்ட உறவு முட்டப் பகை என்பது பழமொழி கிட்டக்கிட்ட என்பது மிக நெருக்கம். கிட்ட முட்ட: கிட்ட = கிட்டத்தில் அல்லது நெருக்கத்தில். முட்ட = கண்ணுக்குப் படுமாறோ காதுக்குப் படுமாறோ உள்ள தொலைவில். போனவன் கிட்ட முட்டத் தெரியவில்லை, வண்டி கிட்டமுட்டத் தெரியவில்லை இன்னவாறு கிட்டமுட்ட வழங்கப் படுகின்றது. கிட்டுதல் = நெருங்குதல். கிட்டத்து வீட்டுக்காரர் எட்டத்து வீட்டுக்காரர் என்பவை சொல்லப்படுபவை. முட்ட என்பது ஒலி ஒளி முதலியவை முட்ட என்பதாம். கிட்டு: வண்டியில் பாரம் மிகுதியாக ஏற்றினால், அப் பாரம் அசைந்தாடிச் சரியாமல் இருக்கப் பாரக் கயிறு போட்டுக் கட்டுவர். அப் பாரக் கயிறும் போதாதென்று அக்கயிறு நழுவிப் போகாமால் இருக்க இறுக்கி ஊடு போட்டுப் பின்னிக் கட்டு வதைக் கிட்டு போடல் என்பது வழக்கு. வலிய அக்கயிறு கிட்டிக் கயிறு என வழங்ககப்படும். கிணறு: கீழ் > கீண் > கிண் > கிணறு. கீண்டு = கிழித்து கடல் அகடு கீண்டு -நைட.6 மண்ணின் கீழே அகழ்ந்து தோண்டிய நீர்நிலை. x.neh.: கேணி. கீழ் - கேண் > கேணி. பாழூர்க்கு கிணற்றில் தூர்கஎன் செவியே -புறம். 132 நெடுங்கிணற்று, வல்லூற் றுவரி தோண்டி -பெரும். 98 கிணறும் கேணியும் கிணறு = இறைத்துக் கொள்ளத் தக்க ஆழ்ந்த நீர்நிலை. கேணி = அள்ளிக் கொள்ளத் தக்க ஊற்று நீர்நிலை தோட்டத்தும் பிற நிலத்தும் கிணறு உண்டு தோட்டம் துரவு என்பது இணைமொழி துரவு ஆவது கிணறு மிகப் பழங்காலத்தே உறைக்கிணறு இருந்தமை, உறைக் கிணற்றுப் புறச்சேரி எனவரும் பட்டினப் பாலையால் அறியலாம்(76) கேணி ஊற்று நீராதல், தொட்டனைத் தூறும் மணற்கேணி என்பதால் (திருக். 396) தெளிவாம். ஆற்றங்கரை ஊரார் ஊற்றுநீர் எடுத்துப் பருகுதல் கருதி, அதனை ஊருண் கேணி என்பர். ஊருணி, ஊரணி, ஊருண் கேணி ஆய மூன்றும் வெவ்வேறானவை என்பதை அறிக. கிணை: கிண் > கிணை = விரைந்து இடையீடின்றி இயக்கும் போர்ப்பறை. கிண்ணுதல் = விரைதல். விரைந்து ஓடுதல்; அவன் கிண்ணி விட்டான் (ம.வ). பெரும்பறையாம் தடாரிப் பறை கிணை எனப்படும். அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற -புறம். 373 அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி எஞ்சா மரபின வஞ்சி பாட -புறம்.378 என்றும், பாடின் தெண்கிணைப் பாடுகேட் டஞ்சிய போரடு தானை-அகம். 226 என்றும் வருவனவற்றால் போர்ப்பறை என்பதும் அதிர ஒலித்து அஞ்சச் செய்வது என்றும் அறியலாம். வேந்தர் விடியல் எழுச்சிக்கும் பாடப்படும் என்பது. செய்தார் மார்ப எழுமதி துயிலெனத் தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி -புறம். 397 என்பதால் விளங்கும். கிணைப்பறை அறைபவன் கிணைஞன், கிணைமகன் எனவும் (புறம்377;379) அவன் மனைவி கிணைமகள் எனவும் (புறம். 111) கூறப்பட்டனர். கிண்கிணி: கிண் கிண் என ஒலிக்கும் கால் அணிகலம் கிண்கிணியாம். ஒலிக்கும் வெண்கல மணியைக் கிணிமணி என்பதும் வழக்கம். கொன்றையின் மொக்கு, பொன்னால் செய்யப்பட்ட கிண்கிணி போல் உள்ளது என்றும், மொக்கு விரிந்த நிலை கிண்கிணியின் சற்றே பிளந்த வாய்போல உள்ளது என்றும், அவ்வாய் தவளையின் வாய்போல உள்ளது என்றும் கூறினர். தவளை வாய பொலஞ்செய் கிண்கிணி காசின் அன்ன போதீன் கொன்றை என்கிறது குறுந்தொகை (148). கிண்டலும் கேலியும்: கிண்டல் = ஒருவன் கரவுச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல்; கிண்டி அறிதல் கிண்டல் ஆயிற்று. கேலி = நகையாடுதல் கேலியாம். கிண்டியறிந்து கொண்ட செய்தியைக் கொண்டு நகை யாடுதல் கிண்டலும் கேலியுமாம். என்னைப் பார்த்தால் உனக்குக் கிண்டலும் கேலியுமாக இருக்கிறது என்று இயலாதார் தம்மை நொந்து கொள்ளுதல் கண்கூடு. கிண்டல்: கிண்டு + அல் = கிண்டல். அல் = சொல்லீறு கோழி தீனி பொறுக்குவதற்குக் கிண்டிக் கிளறும். சமையல் புரிவார் உப்புமா, களி ஆயவற்றைக் கிண்டுவர். அக்கிண்டுவது போல் சிலரைக் கேளிக்கையாக அவர் இயல் செயல்களைச் சொல்லியும் செய்தும் காட்டுதல் கிண்டல் ஆகும். ஒருவர் எள்ளுகிறார் எனத் தெரிந்தால் என்ன கிண்டலா? என்பர். கிண்டல் அடிக்கிறார் என்பது இக்கால வழக்காக உள்ளது. கிண்டிக் கிழங்கெடுத்தல்: கிண்டிக் கிழங்கெடுத்தல் = மறைவை வெளிப்படுத்தல், கடுமையான துன்புக்காளாக்கல். கிழங்கு நிலத்துள் புதையுண்டிருப்பது. அதனை எடுக்க அகழ்தல் வேண்டும். அறுகங் கிழங்கு மிக ஆழத்தில் - எட்டடி, பத்தடி ஆழத்திற்கு மேலும் இருப்பது. அதனைத் தோண்டி எடுத்தல் அரும்பாடாம். இவற்றிலிருந்து கிண்டிக் கிழங்கெடுத்தல் வழக்கு உண்டாயது. கிண்டல், இருக்கும் இடம் காண்டல்; தடவித் தெரிதல், பின்னர் அதன் வழியே அகழ்ந்து கிழங் கெடுத்தல், அதுபோல ஒரு கரவுச் செய்தியைத் தெரிவதற்குத் துப்புத் துலக்குதலும் அதன் தடம் பற்றி ஆய்தலும், உண்மை கண்டுபிடிக்கும் வழிகளாம். காவல் நிலையம் போனான். கிண்டிக் கிழங்கு எடுத்து விட்டனர் என்பதில் கமுக்க வெளிப்பாடும். வெளிப்படுத்திய வகையும் வெளிப் படுவனவாம். கிண்டிக் கிளறுதல்: கிண்டிக் கிளறுதல் = துருவித் துருவிக் கேட்டல். கோழி தீனியைத் தின்னுதற்குக் கிண்டும் கிளறும். பளிக்குத் தளமாக இருந்தாலும் கிண்டிக் கிளறலைக் கோழி விடுவது இல்லை. பழக்கம் கொடிது. பாறையிலும் கோழி கிண்டும் என்பது பழமொழி. சிலரிடம் சில செய்திகளை வாங்குவதற்காகக் கிண்டிக் கிளறுவது உண்டு. சினமூட்டியும், சிறுமைப்படுத்தியும், துன்புறுத்தி யும் செய்திகளைப் பெறத் துடிப்பர். காவல் துறையினர், துப்பறி வாளர், வழக்கறிஞர் ஆகியோர் பிறரைக் கிண்டிக் கிளறுதலில் தேர்ச்சி மிக்கவர்கள். தன்னைத் தானே கேட்டுக் கொள்ளலும், பிறரை அறிவுடையராக்க வினவலும் கிண்டிக் கிளறல் ஆகாது. குறை காண்பதற்காகக் கேட்பதே கிண்டிக் கிளறல் என்க. உண்மையறிய இது துணையாவதும் உண்டு. கிண்டுதல் கிளறுதல்: கிண்டுதல் = கோழி காலால் நிலத்தைக் கிழித்தல். கிளறுதல் = கிண்டிய இடத்தில் கோழி அலகால் சீத்தல். கோழி கிண்டிக் கிளறித் தொலைக்கிறது என்பது வழக்கு. கிண்டிக் கிளைத்தல் என்பதுவும் இதுவே. குப்பையில் கிண்டிக் கிளைத்தது கூடத்திலும் கிண்டிக் கிளைக்கும் என்பது பழமொழி. ஒருவர் செய்தியைத் துருவித் துருவிக் கேட்கும் போது. ‘v‹d »©o¡ »sW»whah? என்று முறைப்பது வழக்கு. நெல்லைக் காலால் கிண்டுவதும், பின்னர்க் காலால் கையால் கிளறுவதும் கற்பித்த கல்வியாகலாம். கிண்ணம்: கிண் + அம் = கிண்ணம். கிண் கிண் என்பது ஒலிக்குறிப்பு. கிண்கிண் என ஒலிப்பது கிண்கிணி அது மணியாகப் பயன்பட்ட நிலையில் கிணிமணி எனப்பட்டது. உண்கலமாகிய நிலையில் கிண்ணம் ஆயது. கிண்ணத்தின் அளவில் சிறியது கிண்ணி ஆயது. கிணற்றுக் குள்ளே கிண்ணி மிதக்கிறது என்பது விடுகதை. அது வானத்தில் தோன்றும் முழுநிலவு. கிண்ணுதல்: விரைவாக ஓடி மறைதல். நெல்லை வட்டார வழக்குச் சொல் இது. கிண்கிண் = மணியொலி. கிண்கிணி = கால்சதங்கை. மணியின் ஒலி எழுந்து விரைந்து பரவி (ஒலி) மறைவது போல் விரைந்து ஓடி மறைதல் வழியாக ஏற்பட்டது இச்சொல். அவன் நொடியில் கிண்ணி விட்டான் என்பர். கிந்துதல்: நொண்டி நடத்தலைக் கிந்துதல் என்பது நெல்லை முகவை வழக்கு. என்ன கிந்திக் கிந்தி நடக்கிறாய்? காலில் அடிபட்டு விட்டதா? முள் தைத்துவிட்டதா? என்பர். கிண்ணுதலுக்கு எதிரிடை கிந்துதல் ஆயிற்றுப் போலும். கிய்யா மிய்யா: கிய்யா : குருவிக் குஞ்சின் ஒலி. மிய்யா = பூனைக் குட்டியின் ஒலி. அவன் பேச்சா பேசுகிறான். கிய்யா மிய்யா என்கிறான் எனப் பழிப்புக் காட்டுவதுண்டு. ஒன்றை ஒருவனிடம் கேட்க அதற்கு விளக்கமான - தெளிவான - விடை கூற முடியாமல் மருண்டு பேசுவதைக் கிய்யா மிய்யா என்கிறான் என்பர். குருவிக் குஞ்சும் பூனைக்குட்டியும் எவற்றையோ கண்டு அஞ்சி ஒலிப்பது போல இவனும் அஞ்சி உளறுகிறான் என்றும், அவன் மருளுதல் தெரிவதை அன்றிப் பொருள் புலப்பாடு இல்லை என்றும் தெரிவிப்பதாம் இது. கிலி: கிலி = அச்சம். புலி அடித்தது பாதி கிலி அடித்தது பாதி என்பது பழமொழி. கிலுகிலி என்பது உள்ளிடு கல்லுடையது. கல் அங்கும் இங்கும் ஓடி கிலுகிலி என ஒலிக்கும். கிலுக்கு என்பது அதன் பெயர். அக்கிலுக்கின் ஒலி போல ஒருநிலைப்படாத நெஞ்சத் துடிப்பு கிலி எனப்பட்டது. கிலுகிலி: கிலு கிலு என்னும் ஓசையின் பெயரால் அமைந்த பெயர் கிலுகிலி. மக்கள் வழக்கில் கிலுகிலுப்பை என வழங்குகின்றது. மகாஅ ரன்ன மந்தி உமட்டியர் ஈன்ற கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி யாடும் - சிறுபாண். 56-61 கிழக்கு: கீழ் + கு = கீழ்க்கு > கிழக்கு. மேல் + கு = மேற்கு ஆயது போலக் கிழக்கு ஆயது. தமிழக அமைப்பு மலை, காடு, வயல், கடல் என நிலம் கீழ் கீழாக அமைதலால் கிழக்கு ஆகியது. மேற்கும் கிழக்கும் மேல், கீழ் என நிலமட்டம் காட்டலொடு திசைப் பெயரும் ஆயின. மேலே கீழே என்னும் உயரம் தணிவுப் பொருளுக்கும் ஆயின. குணபுலம் காவலர் மருமான் -சிறுபாண்.79 பொருள்: கிழக்கின் கண்ணதாகிய நிலத்தைக் காத்தல் தொழிலை யுடையார் குடியிலுள்ளான் (உரை. நச்.) செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காக்க கிழக்காம் தலை -திருக்.488 கிழங்கு: கீழ்நோக்கிச் செல்வதே - வளர்வதே - முதிர்வதே கிழங்கு கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே -புறம். 109 கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு -மதுரைக்.53(சில. த.சொ.ஆ. 93) கிழமை: கிழமை = உரிமை. ஞாயிறு, திங்கள், செவ்வாய் முதலிய நாள், கோள்களுக்கு உரிமையானது - ஆளுகைக்கு உரியதானது - கிழமையாம். ஞாயிற்றுக் கிழமை, திங்கட்கிழமை. ஞாயிறு திங்கள் செவ்வாய் - ஞானசம். கோளறு பதிகம். கிழமை இதழ்: கிழமை = ஞாயிறு முதலாம் நாள்கள் ஏழு கொண்டது. வாரம் என்பதும் இது. பல்வேறு இதழ்களில் கிழமை இதழ் என்பதும் ஒன்று. நாளிதழ், கிழமையிதழ், இருகிழமை இதழ், திங்களிதழ், பருவ இதழ் என்பவை இதழ்வகைகள். ஆண்டுக்கு ஒன்றாக வெளிப்படுத்துவது மலர். மலரின் அகவிதழ் புறவிதழ் ஆகியவை போன்றவை நாளிதழ் முதலியவை. கிழவன், கிழத்தி: கிழவன் = மண உரிமையாளன். கிழத்தி = மண உரிமையாட்டி. ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப - தொல். 1039 கிழார்: கிழார் = உரிமை உடையவர். உரிமையாவது நிலவுரிமை. கிழார் 1 வேணாட்டார் தோட்டத்தைக் கிழார் என்பர் என்பது நன்னூல் உரை(273.சங்.) நில உரிமை உடையவர் கிழார் என்பவர். இன்று நிலக்கிழார், பெருநிலக் கிழார் எனல் வழக்கே. சேக்கிழார், கோவூர்க்கிழார் பெயர்களை நினைக. கிழார் உரிமையர் என்பதைத் திங்கள் செவ்வாய் முதலாம் கோள்களின் ஆளுகை நாள்களைத் திங்கள் கிழமை, செவ்வாய்க் கிழமை முதலாக வழங்குபவற்றால் அறியலாம். கிழார்:2 கிழார் என்பது நீர் இறை சாலின் பெயர். தோட்டம் தோறும் இருப்பது, கால்வாய் ஏரி ஆறு வாய்க்கால் இல்லாமல், வானம் பார்த்ததாய் இல்லாமல் கிணற்றையும் ஏற்றத்தையுமே கொண்டது தோட்டம்! அதனால் அக் கிழார் என்னும் ஏற்றத்தைக் கொண்ட பெயரே அது. கிழி: கிழி = ஆடை. பாவிலிருந்து கிழித்து எடுக்கப்படுவதால் கிழி எனப்பட்டது. அறுவை (அறுக்கப்பட்டது). வேட்டி, (வெட்டி எடுக்கப்பட்டது), துண்டு (துண்டாக்கப்பட்டது), துணி (துணிக்கப்பட்டது) என்பனவும் அது. பொற்கிழி என்பது துணியில் முடிந்து தரப்படும் பொன் வெள்ளி நாணயங்கள் அல்லது காசுகள் ஆகும். தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் என்பது திருவிளையாடல் புராணம். கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கியவர்கள் நம் தமிழர் - (திரு.வி.க). கிழித்தல்: கிழித்தல் = வைதல். மாட்டாமை. கிழித்தல், துணி தாள் தோல் முதலியவற்றைக் கிழித்தலை விடுத்து வசைப் பொருளில் வருவது இக்கிழித்தலாம். கிழி கிழிஎன்று கிழித்துவிட்டார் என்றால், சொல்ல மாட்டாத , வாயில் வராத சொற்களை யெல்லாம் சொல்லி வைதார் என்பது பொருள் மறைத்து வைத்திருந்த செய்திகளை யெல்லாம் வெளிப்படுத்த வசை கூறலால் முகத்திரையைக் கிழித்தல் போல வழக்கில் வந்ததாகலாம். கிழித்தல் என்பது செய்ய மாட்டாமைப் பொருளிலும் வழங்குகின்றது. நீ செய்து கிழிப்பது எனக்குத் தெரியாதா? என்பதில் செய்யமாட்டாய் என்பது கருத்தாகும். கிழித்துக் கொண்டிருத்தல்: கிழித்துக் கொண்டிருத்தல் = கிறுக்காதல். கிறுக்குப் பிடித்தவர்களுள் சிலர் தாள், துணி ஆகியவை கிடைத்தால் அவற்றைக் கிழித்துக் கிழித்து ஏதோ பெருஞ்செயல் செய்வதாக மகிழ்வர்.அதனைக் கண்டவர்கள் கிழித்துப் போடுதலைக் கிறுக்குத் தன்மை எனக் கூறினர். அவ்வகையால் கிழித்துக் கொண்டிருத்தல் என்பதற்குக் கிறுக்குப் பொருள் ஏற்பட்டது. துணிக்கடையில் கிழிப்பதைக் கிறுக்கு என்பவரார்? பயனின்றிக் கிழித்தலே சுட்டப்பட்டதாம். சிலருக்கு ஏதேனும் அறிவுரைத்தால், அவ்வறிவுரை அவர்கள் ஏற்கத் தக்கதாக இல்லாவிடில், நான் என்ன கிழித்துக் கொண்டா இருக்கிறேன்: இதை எல்லாம் உன்னிடம் கேட்க என்பது வழக்கம். கிழியஞ்சிட்டி: கிழி + அம் + சிட்டி = கிழியஞ்சிட்டி. கார்த்திகை விளக்கு, விளக்கணி நாள்(தீபாவளி) விளக்கு என்பவை மண்சிறு சிட்டியில் எண்ணெயும் திரியும் இட்டு வரிசை வரிசையாக வைத்துப் பொலிவூட்டுவது வழக்கம். அதற்குத் துணியைக் கிழித்துத் திரியாக்கிப் பயன்படுத்துவதால்(துணி) அம்(அழகிய) சிட்டி(சிறுசட்டி) எனப்பட்டது. கிழியஞ் சட்டி என்பது மக்கள் வழக்கு. நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடைய வாகிப் புலமெலாம் பூத்தன தோன்றி -கார்நா.26 கிளவி: கிளவி =சொல். கிளத்தல் =சொல்லுதல். கிளக்கப் படுதலால் கிளவி எனச் சொல்லப்பட்டது கிளவியாக்கம் தொல். சொல். முதலியலாகும். வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையால் இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று ஆக்கம் = அமைத்துக் கோடல். நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினர் என்பவாகலின் சேனா. கிளி: கிள்ளி > கிளி. கிள்ளி எடுத்தலால் கிள்ளை எனப்பட்டது. கிள்ளி என்பதன் இடையொற்றுக் கெட்டுக் கிளி என வழங்கவும் பட்டது. மயிலியல் மானோக்கிற் கிளிமழலை மென்சாயலோர் -பட். 149-150 குளிர் - கிளிகடி கருவியும் என்ப (மலை. 110 நச்) கிளிக்கால்: கமலைக் கிணற்றில் கீழ்க்குத்துக்காலும் மேற்குத்துக்காலும் என இருவகைக் குத்துக்கால்கள் உண்டு. அவற்றுள் மேற்குத்துக் காலை கிளிக்கால் என்பது இறையூர் வட்டார வழக்கு. உவமை வழியால் ஆளப்பட்ட வழக்கு இது. கிளிக்கூண்டு: கிளி+ கூண்டு =கிளிக்கூண்டு. காட்டில் திரியும் கிளியைப் பற்றி வீட்டில் சிறை வைப்பதற்குப் பயன்படுத்துவதே கிளிக்கூண்டு. கிளி கட்டினால் கூடு. அதனை அடைத்து வைக்கச் செய்தது கூண்டு. பழநாளில் பாதுகாப்புக்காக ஏற்படுத்துப்பட்டது சிறை! இன்று தண்டனைக்கு ஆகிவிட்டது! கிளிக்கூண்டு என்பதோ தீராச் சிறைத் தண்டனை. பேச வாய்த்த அதன் திறம், அதற்கே தந்த தண்டனை அது. கிளிஞ்சில்: கிளர் = ஒளிர்தல், ஒளியுடையதாதல். ஒளியுடைய முத்தைத் தருதலால் - கிளர்வதைத் தருவதால் - கிளர்ஞ்சில், கிளிஞ்சில் ஆயது. கிளர்தல் = உயர்தல், எழுதல், நிறைதல், ஒளிசெய்தல், வளர்தல்(வெ.வி.பே) மீன்நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறுதீ விளக்கில் துஞ்சம் -நற்.175 கிளிஞ்சில் = இப்பி, சிப்பி. கிளித்தட்டு: கிளி + தட்டு = கிளித்தட்டு. தமிழ்நாட்டு விளையாட்டு வகைகளில் ஒன்று கிளித்தட்டு. ஆடுபவர்களை இரண்டாகப் பகுத்துக் கொண்டு அவர்கள் எண்ணிக்கைக்குத் தகக் கட்டம் கட்டமாகக் கோடு கீறுவர். எட்டுப்பேர் ஆடல் என்றால் நான்காகப் பகுப்பர். நீண்ட சதுரப் பரப்பில் நான்கு தட்டுகள் குறுக்கே அமைத்து ஊடே ஒரு நெடுங்கோடு போட்டு எட்டுக் கட்டமாக்கி நான்கு பேர் மறிப் போராகவும் நான்கு பேர் மறிபடாமல் கடப்போராகவும் தேர்வர் கடப்போர் கோட்டைக் கடக்கும் போது தடுப்போர் தொட்டுவிட்டால் அவர் ஆட்டத்தில் பட்டுப் போனவராவர் கடந்துவிட்டால் அப்படியே நான்கு தட்டுகளையும் கடப்பவர், வென்றவர் ஆவர். வென்றவர் மீளவும் கடப்பவர் ஆவர். தோற்றவர் மறிப்பவராகத் தொடர்வர்.. தட்டு = கட்டம்; தடுத்தல். கிளிப்பூச்சி: கிளிபோலும் பச்சை நிறம் உடைய வெட்டுக் கிளியைக் கிளிப்பூச்சி என்பர். தத்துக்கிளி என்பது அது. தத்தித் தத்திப் போவதால் கிளியைத் தத்தை என்பது இலக்கிய வழக்கு வெட்டுக்கிளியாம் பூச்சியும் தத்தித் தத்திப் போவதேயாம். முன்பிறந் தாளும் கிளியும் தத்தை -பிங்.3608 கிளிமூக்கு: கிளிமூக்கு:1 கிளியின்மூக்கு கிளிமூக்கு:2 கிளியின் மூக்குப் போன்ற வடிவமைந்த மாம்பழம். கிளிமூக்கு:3 கிளியின் மூக்கைப் போலும் மூக்குடையார்க்கு ஊர் வழங்கும் பட்டப்பெயர்(ம.வ) கிளிமூக்கு:4 சுவடி கட்டும் கயிற்று அடிவாய் ஓலை கிளிமூக்கு எனப்படும். கிளை: கிளை:1 பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு குடியை ஒருமரமாகக் கொள்ளின் அக்குடும்பங்கள் அதன் கிளைகளைப் போன்றிருத் தலால் இனத்திற்குக் கிளை என்றும் இனத்தார்க்குக் கிளைஞர் என்றும் பெயர்(சொல்.3) கிளைத்தல் ஒன்று இரண்டாக மூன்றாகப் பலவாகப் பிரிதல் கிளைத்தல் எனப்படும். சில வழியினர் உங்கள் கிளை என்ன? என்று கேட்டே அக்கிளைக்கு எதிரான கிளையிலே மணம் செய்வர். அவரவர்க்குரிய கிளையில் மணம் கொள்வது உடன்பிறந்தவரை மணப்பதாகத் தள்ளுவர். கேளும் கிளையும் கெட்டார்க்கில்லை என்பது பழமொழி. கேள் தந்தைவழி உறவினர். கிளை தாய்வழி உறவினர். கிளை:2 மரக்கிளை. கிளையினில் பாம்பு தொங்க விழுதென்று குரங்கு தொட்டு -அழகின் சிரிப்பு கிளை:3 உறவு, துணைவி கிளைஞரேம் அல்லேம் -புறம்.144 கிளை:4 மூங்கில். பண்ணை திரளலால் - பல கவைத்தலால் அல்லது கிளைத்தலால் கிளையாயது. கிளையமல் பெருவரை -அகம். 388 அமல்தல் = நிறைதல். கிளை கெட்டவன்: மணம் செய்தற்குரிய உறவின் முறையைப் பாராமல் முறையொடு பொருந்தாதவரை மணந்தவனை ஊரவர் கிளை கெட்டவன் என்பர். கிளைத்தல்: கிளைத்தல் = தளிர்த்தல், கவடுவிடல், மண்ணைக் கிண்டுதல், பக்கமுண்டாதல். கிளை = பிரிவு ஒன்றிலிருந்து ஒன்று உண்டாகிப் பல்குவது கிளைத்தல் ஆகும். கோழி கிளைத்தல், கோழி கிண்டிக்கிளைத்துத் தான்தின்பதும் குஞ்சுகளுக்கு ஊட்டுதலுமாம். புதைத்த இடத்தைக் கிளைத்துப் பாருங்கள்; இங்கேதான் வைத்தேன் என்பதும், பழையதை எல்லாம் கிளைத்தால் சரிப்படாது விடு என்பதும் ம.வ. கிளைப் பிரிவுகள்: கவை - அடிமரத்திலிருந்து பிரியும் மாபெருங்கிளை. கொம்பு - (அல்லதுகொப்பு) - கவையின் பிரிவு. கிளை - கொம்பின் பிரிவு. சினை - கிளையின் பிரிவு. போத்து - சினையின் பிரிவு. குச்சு - போத்தின் பிரிவு. இணுக்கு - குச்சின் பிரிவு (குச்சு - குச்சி) -தேவநே.4 இனி, குச்சின் பிரிவு ஈர்க்கு(ஈரிலை) ஈர்க்கின் பிரிவு இலை. இலைகளின் நிலைகள் துளிர், தளிர், கொழுந்து, இலை, பழுப்பு, சருகு. கிளைமை: உறவு, உறவினர், துணைவி. கிளைமை கொண்ட வளைவார் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம் -நற்.323 கிளையல்: கிளைத்தல், தோண்டுதல் என்னும் பொருளில் வழங்கு கின்றது. கிண்டுதல் கிளறுதல் என்பவை தோண்டாமல் பரவ இழுத்தல். பன்றி தோண்டுதல் கிளைத்தல் ஆகும். கிளைக்க உதவும் கருவியாகிய மண்வெட்டியைக் கிளையல் என்பது கருங்கல் வட்டார வழக்காகும். கிளைவழி: கிளை + வழி = கிளைவழி. கிளைவழி:1 கிளைவழி = உறவு உறவினர் வழிவந்தவர்; உங்கள் கிளைவழி என்ன? என்பது மக்கள் வழககு. கிளைவழி:2 உரிய வழியில் இருந்து பிரியும்வழி; பெருஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் வழி. ஒ. neh.: நெடுஞ்சாலையில் இருந்து வலப்பக்கமாக ஒரு கிளைவழி இருக்கும் அதில் பிரிந்தால் எங்கள் ஊர்க்கு அது போகும் என்பது மக்கள் வழக்கு. கிள்ளாக்கு: கிள் > கிள்ளு + ஆக்கு = கிள்ளாக்கு. கிள்ளி எடுத்துச் செப்பம் செய்யப்பட்ட பனை ஓலையாம் ஏடு; ஏட்டில் எழுதப்பட்ட கடிதத்துக்கு ஆகியது கிள்ளாக்கு = ஓலை மடல் அல்லது ஓலைக் கடிதம். கவிவீர ராகவன் விடுக்கும் ஓலை என்னும் அந்தகக் கவிவீரராகவர் தனிப்பாடலில் ஓலை என்பதே கிள்ளாக்குப் பொருளில் வந்தது. கடவுச்சீட்டு (passport) என்பதைக் கிள்ளாக்கு என்றார் பாவாணர். கிள்ளாக்கு தாயுமானவர் பாடலில் இடம்பெறும். கிள்ளி: கிள்ளி = சோழ அரசர் குடிப்பெயர். கிள்ளுதலால் - நிலத்தைத் தோண்டுதலால் - பெற்ற பெயர் கிள்ளி என்பது. காடு கெடுத்து நாடாக்கியதால், குளம் தொட்டு வளம் பெருக்கியதால் கிள்ளி எனப்பட்டனர். எ-டு: நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன். பெருங்கோக் கிள்ளி கேட்க -புறம். 67 மக்கள் வழக்கில் நகத்தால் கிள்ளுதல், கீரையயைக் கிள்ளி எடுத்தல் என்பவை உள. கிள்ளி மங்கலம் என்பதோர் ஊர்ப்பெயர். அவ்வூர்ப் பெருஞ்சான்றோர், கிள்ளி மங்கலங்கிழாரும், அவர் மகனார் கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனாரும் ஆவர். கிள்ளுதல்: விளையாட்டாகவும் , தண்டிப்பாகவும் கிள்ளுதல் உண்டு. கிள்ளுதல், நகத்தால் கிள்ளுதல் (தோண்டுதல், வலிவரச் செய்தல்). கிள்ளி உண்பது கிள்ளை, கிளி. இங்கே கூறப்படும் கிள்ளுதல் கொடிக்கால் வழக்காகும். வெற்றிலை பறித்தலை அது குறிக்கும். திருப்பூர் வட்டார வழக்கில் இவ்வாட்சி மிக உள்ளது. கிள்ளி எடுக்கும் ஓலையும் ஓலைக் கடிதமும் கிள்ளாக்கு எனப்படுதல் கடந்த கால வழக்கு. கிள்ளை: கிள்ளை = கிளி. தளிரையும் கனியையும் கிள்ளி எடுத்தலால் கிள்ளை எனப்பட்டது தெள்விளி இடைஇடைப் பயிற்றிக் கிள்ளை ஓப்பியும் -குறிஞ். 100,101 பொருள்: தெளிந்த சொற்களை நடுவே சொல்லிக் கிளியை ஓட்டுதலைச் செய்தும்(உரை,நச்) கிறுக்கு: ஒரு குழந்தை கையில் எழுதுகோல் கிடைக்கிறது. உடனே கிறு கிறு என்று சுழி, நெடுஞ்சுழி, குறுஞ்சுழி, குறுக்கு, நெடுக்கு எனப் கைபோன போக்கெல்லாம் கீறுகிறது; கிழிக்கிறது. எழுதவில்லை என்றால் குத்துகிறது; குடைகிறது; செய்ய நினைத்தபடி யெல்லாம் செய்கிறது, உடைகிறது, கெடுகிறது, அலங்கோலமாகிறது அவற்றைப் பற்றிய கவலையில்லை. ஆனால் அது குழந்தை! அது வளரும் அடையாளம். ஆனால் அப்படிச் செயல்படும் முதியர், கிறுக்கர் கிறுக்கு எனப்படுகின்றனர். கிறுத்தான் மறுத்தான்: கிறுத்தான் = குறும்புக்காரன். மறுத்தான்= குறும்புக்காரன் குறும்பையும் மடக்கும் குறும்புக்காரன். எதைச் செய்தாலும் எதைச் சொன்னாலும் கிறுத்தானுக்கு மறுத்தானாக இருப்பதே உனக்கு வழக்கம் என்பது ஓர் இடிப்புரை. கிறி என்பதற்குப் பொய், வஞ்சம் முதலிய பொருள் உண்டு. கிறுத்துவம் என்பது குறும்பு என்னும் பொருளிலும் வழங்குகின்றது. பொய்யைப் பொய்யால் வெற்றி கொள்வான் போல் குறும்பைக் குறும்பால் வெற்றி கொள்வான், கிறுத்தானுக்கு மறுத்தானாம். வலியவனுக்கு வலியவன் கையகத்தில் உண்டு என்பது பழமொழியே யன்றோ? கின்னரம்: கின்னரி என்னும் இசைக்கருவிக்கு மூல இசையைத் தந்த பறவை கின்னரமாகும். கின்னரி என்னும் இசைக்கருவி செயற்கை. கின்னரப் பறவை இசைத்தல் இயற்கை. ஆதலால் அப்பறவை வழிப்பட்டதே கின்னரி இசையாம். இன்சீர்க், கின்னரம் நரலும் அணங்குடைச் சாரல் -பெருங். 493-494 கின்னரம் பாடும் கிளி -தனிப். கின்னரம் மிதுனம், கின்னரம் மிதுனம் என இணைந்து வருவதால் இரண்டும் இணையிசைக் கருவிகளாகும்(கம்ப. பால. 876; சுந்.214) கின்னரர் என்பார் ஆணும் பெண்ணுமாம் இரட்டையர் என்பதும் எண்ணத் தக்கது. கின்னர மிதுன மொப்பார் -சீவக.657  கீ வரிசைச் சொற்கள் கீ: ககர ஈகாரம். கீ, கீக்கீ, கீச்சுக் கீச்சு ஒலிக்குறிப்பு அடுக்கு. பெரிதும் பறவைகளின் ஓசை. கீச்சுக்கீச்சு: கீச்சுக்கீச்சு:1 பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கிச்சுக்கீச் சென்னும் கிளி -தனிப். ஔவை. பொருள்: பேசும் கிளி, பூனையைக் கண்ட அச்சத்தில் பேச்சை விட்டொழியும் என்பதாம். கீச்சுக்கீச்சு:2 கீச்சுக்கீச்சு = ஒலிக்குறிப்பு. வண்டி அச்சுக்கு மை போடாவிட்டால் கீக்சுக்கீச்சென ஓசை உண்டாகும். அப்படியே ஓடவிட்டால் விரைவில் அச்சுத் தேய்ந்து விடும். அதனால் அந்த ஒலி வந்தால் உடனே மை போடுவது வழக்கம். கிணற்றில் இறைக்கப் பயன்படுத்தும் உருளையிலும் அந்நிலை ஏற்படுவது உண்டு. வண்டி. மை, மசை, மசகு என்பவை மை என்னும் பொருளன. கீச்சுக்குரல்: கீச்சுக்குரல் = மென்குரல் மென்குரலில் பேசுவாரைக் கீச்சுக்குரல் அவர்க்கு என்பர்(ம.வ) கீண்டு: கீழே விழுந்து கிழித்து , அறுத்து. பூவுடை அலங்கு சினை புலம்ப வேர்கீண்டு -திருமுரு. 298 பொருள்: பூவுடைத்தான அசைகின்ற கொம்பு தனிப்ப வேரைப் பிளந்து (உரை, நச்) கீரங்கீரர்: கீரங்கீரனார், கீரத்தனார், கீரத்தையார் என்பார் சங்கச் சான்றோர். அந்நாளிலேயே சீரர், கீரராக மாறிவிட்ட சான்றுகளாம். இனிக் கீர்த்தியும் சீர்த்தியும் பொருளால் ஒப்பனவே எனக் கொள்ளலுமாகும். செங்கீரை - மழலையாம் செஞ்சொல் . மேலும் புலமையர் தலைவராக இருந்தவர் நக்கீரர் ஆதலாலுமாம். கீரர்: சீரர் > கீரர். சீர்த்தி மிகுபுகழ் -தொல். 796 நல் + கீரர் = நற்கீரர் > நக்கீரர். இவர் சங்கப் புலவர்களின் தலைவராகத் திகழ்ந்தபெருமையர். இவர் புலமை வீறும், துணிவும் சொல்லுக்குக் கீரன் என்னும் புகழைத் தந்தது. தருமியொடு வாதிட்டது முதலாம் புனைவுகள் பிற் காலத்தவை. இறையனார் களவியல் உரைநடைச் சிறப்பே அவர் பெயரை அதற்குச் சூட்ட உதவியதாம். கீரி: கீரி என்பது ஒலியால் ஏற்பட்ட ஓருயிரியின் பெயர். கீர், கீர் என ஒலிப்பது கீரி. எ-டு: குர், குர் என்று ஒலிப்பது குர்க்கு, குரக்கு , குரங்கு. கீரியின்பல் நன்றாகக் கீர - கிழிக்க - வல்லது. கீர் கீர் என்பது ஒலி. பொருள் புரியாமல் ஒலிக்கும் ஒலியுடையது கீர்வாணம் எனப்பட்டது. சங்கு அறுக்கும் அறுவை கீர் எனப்படுவதால், கீரு கீரு என அறுத்தல் என வழங்கப்பட்டது இது பொது வழக்குச் சொல். * செங்கீரை காண்க. கீரிப் புழு: கீரிப்புழு = வயிற்றில் உண்டாகும் ஒருவகைப் புழு. கீரிப்பூச்சி என்பதும் அது. மலச்சிக்கல் உள்ளார்க்கு உண்டாகிக் குடலைக் கிழிப்பது போல் துயரூட்டுவது ; மண்புழுப்போன்றது; கழிப்பு மருந்தால் வெளியேறுவது. கீரை: கீரை:1 கீர் கீர் என்பது ஓசைக் குறிப்பு; மெல்லிதாக அறுக்கும் போது ஏற்படும் ஓசை, பின்னே சங்கு போன்றவற்றை அறுக்கும் ஓசைக்கு மாறியதால் நக்கீரரைப் பற்றிய புனைபாவில், சங்கினைக் கீர்கீரென அறுக்கும் நக்கீரர் என எள்ளப்படுவதாக அமைந்தது. அதன்பின்னர் விறகு முதலிய வன்பொருளை உடைத்தலும் கீரலாகி, கீறுதல் என வல்லினாமக உருக்கொண்டது. கோடு ஈர் இலங்குவளை -குறுந்.11 என்பதிலுள்ள ஈர்தல் அரிதல் பொருளதாம். தேர்வு தேறுதல் ஆகவில்லையா அதுபோல். கீரையில் ஒருவகை அறுகீரை; அறைக்கீரை என்பதும் அது. அறுத்தல் வழியதுதானே அறை! கீருதல் வழியால் பெற்ற அறுகீரைப் பெயர், அவ்வினப் பெயராகிப் பின்னர் அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, ஆரைக்கீரை, முஞ்ஞைக்கீரை, மயில்கீரை முதலிய பெயர்களைப் பெற்றது. எள்நெய் எண்ணெயாய்ப் பலவற்றைக் குறிப்பது போல் ஆகித் தன் இனம் பெருக்கி வாழ்வு கொண்டது! கீரை நலம் சொல்லாத மருத்துவர் உண்டா? எளியது, அரியது, இனியது என என்னென்னவோ சொல்லலாம் கீரையை! கீரை:2 கீரை = பசுமை. குறுகக் குறுகக் கீரி(அரிந்து) பயன்படுத்தும் இலைக்கறி வகை கீரை எனப்பட்டது. கீர்தல் = அரிதல். கீரைகள் பெரும்பாலும் பச்சை நிறம் கொண்டவை. ஆதலால் கீரை என்பதற்குப் பசுமை(பச்சை) என்னும்பொருள் உண்டாயிற்று வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவை இட்டு மெல்லுங்கால் செவ்வண்ணம் உண்டாகும். அவ்வாறு உண்டாகவில்லை என்றால் கீரையாக உள்ளது என்னும் மக்கள் வழக்கு அதனைத் தெளிவிக்கும். சிவந்திருப்பதைத் தம்பலம் என்பர் தம்பலம் பூச்சி என்பது செந்நிறப் பூச்சி. கீழறை: கீழறை:1 கீழ் + அறை = கீழறை. கீழே உள்ள அறை. கீழறை:2 கீழ் + அறை = கீழறை. கீழ் = கிழக்கு கிழக்கே உள்ள அறை என்பது மக்கள் வழக்கு கீழறை:3 கீழறுப்புச் செய்தல். உடனிருந்தே கெடுத்தல். கீழறுக்கும் அமைச்சர் (சிலப். 5:130 அரும்) தம்மைத் தேறியளித்த அரசரைக் கீழறை எண்ணும் அமைச்சரும் (சிலப் 5:130 அடியார்க்) கீழை: கீழ் + ஐ = கீழை = கீழக்கு. கீழை வாயில் -கம்.உயுத். 1018 கீழைத்தேர்த் தெரு மேலைத் தேர்த்தெரு என்பவை தேரோடும் ஊர்களிலெல்லாம் உள்ள தெருப்பெயர்கள். குணவாயில் என்பது அது. குணவாயில் கோட்டத் தரசுதுறந் திருந்த அடிகள் -சிலப். பதி கீழோர்: மலை நிலத்திற்குத் தணிந்தது காடாகிய முல்லை நிலம். அம்முல்லைக் காட்டினும் தணிவாகிய நிலம் மருதமாம் வயல்நிலம். அந்நிலம் குறிஞ்சி முல்லையை நோக்கத் தணிவும் (கீழும்) திசையை நோக்கக் கிழக்குமாக இருத்தலால் பழந்தமிழ்ச் சான்றோர் தாழ்வான நிலத்தில் பணிசெய்தலும் குடியிருத் தலுமாகிய உழவரைக் கீழோர் என்றனர். பிறப் பொக்கும் என்று முழங்கிய மண்ணில் வேறு பொருள் காணல் காண்பவர், ஒப்புரிமைப் பிறப்பை ஒதுக்கித் தள்ளிய கேட்டினை உடையவர் ஆவர்! உழுதுண்டு வாழ்வாரைத் தொழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் பெற்றியாம். கீழோர் வயல்பரக்கும் வார்வெள்ளருவி பரந்தானாதரோ -பரி. 17 பொருள்: மலைக்கண் வார் வெள்ளருவி ஆனாது பரந்து உழவரது வயலின்கண் பரக்கும் (உரை, பரிமே). கீழ்: கீழ்:1 கீழாய பண்புடையவர் கீழ். அச்சமே கீழ்களது ஆசாரம் -திருக். 1075 கீழ்:2 கீழ் = கீழே இருக்கும் இடம். மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் -திருக். 973 கீழ்:3 கீழ் = கிழக்கு. கீழ்பக்கத்து வீடு (ம.வ) கீழ்க்கணக்கு: குறைந்த அடிகளை உடையனவாய், அறம் பொருள் இன்பங்களைப் பற்றிக் கூறும் நூற்றொகுதி கீழ்க்கணக்கு எனப்பெறும். குறைந்த அடிகள் என்பது ஐந்தடியின் ஏறாத அடி என்க. அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத் திறம்பட வருவது கீழ்க்கணக் காகும் -பன்னிரு. 248 கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாவால் அமைந்தவை என்பது கருதத்தக்கது. கீழ்க்கணக்கு நூல்கள்: நாலடி நான்மணி நானாற்ப(து) ஐந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி-மூலம் மெய்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு கீழ்ப்பணிதல்: அடங்கி ஒடுங்கிப் பணிவொடு நடத்தல். கீழ்ப்படிதல் என்பதும் அது. பொலந்தார் யானை இயல்தேர்ப் பொறைய வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து நின்வழிப் படாஅர் ஆயின் -பதிற்.75 கீழ்மரம்: கட்டை வண்டிப் பரப்பின் கீழே தெப்பக் கட்டை என்பதொரு குறுக்கு மரம் உண்டு. அம்மரத்தின் அடியில் இருந்து சக்கரங்களின் குடங்களின் ஊடே செல்வது அச்சு. அவ்வச்சு பழுதுபட்டுப் போனால் வண்டி செல்ல இயலாது. அதனால் மாற்று அச்சு ஒன்றை வண்டியின் கீழாக அமைந்த நெடுமரத்தில் (போல்) வேறொரு அச்சினையும் கொண்டு செல்வது உப்பு வணிகர்(உமணர்) வழக்கம் அவ்வச்சுக்குச் சேம (பாதுகாப்பு) அச்சு என்பது பெயர். சேம அச்சினைக் கட்டியுள்ள மரத்தின் பெயர் கீழ்மரம். உமணர் கீழ்மரத்து யாத்த சேம அச்சு -புறம். 102 கீழ்வாய்: கீழ்வாய்:1 மேல் கீழாகப் பகுக்கப்பட்ட வாயில் கீழமைந்தது கீழ்வாய். கீழ்வாய்:2 கீழல் = கிழித்தல். இத்துணியைக் கீழ்வாய் எனின் கிழிக்க என்னும் ஏவலாம். * கீண்டு காண்க. கீழ்வாய் நெல்லி: கீழ்காய் நெல்லி என்பதும் இது. இலைக்காம்பின் கீழே சரமாலையாகத் தோன்றும் காயையுடைய சிறுசெடி கீழ்வாய் நெல்லி மஞ்சள் காமாலை நோய்க்குச் செவ்விய மருந்தாவது இது. காய் அரிசிப் புல்லின் காய்போல் சிறிய உருண்டையாக இருக்கும். கடுங்கசப்பினது இது. சருக்கரை கொல்லியும் ஆகும். கீவா நெல்லி, கீழா நெல்லி என்பவை மக்கள் வழங்கும் பழை வழக்குகள். கீறல்: உடைத்தல், கைவிரல் அடையாளம் செய்தல். வன்மையான கட்டை முதலியவற்றைப் பிளப்பதும் உடைப்பதும் கீறுதல் ஆகும். கண்ணாடி முதலியவை வெடிப்பது கீறல் எனப்படும். கல்வியறிவு பெறாமல் கைவிரல் புரட்டுதலையே கையெழுத்தெனக் கொள்ளும் வகையில் இரேகை வைப்பது கீறல் எனப்பட்டது. கைபோன போக்கில் கோடு போடுதலைக் கிறுக்குதல் என்பது கொண்டு பெயர்பெற்றது கீறல் ஆகும். கீறல் கீற்று: விரலில் வரிகள் உண்டு. அது இரேகை எனப்படுகிறது. அரி என்பது அது. கண்ணில் தோன்றும் சிவப்பு அரி செவ்வரி எனப்படும். எழுத்தாகக் கீறுவதை அரிவரி என்பர். அகரமுதலாம் வரிசை அடங்கல் அது. அவ்வரி எழுத்தை எழுத அறியாதவர் கைவிரல் அரியாம் வரியைப் பதிவுகளில் பதிவு செய்தனர். அதனைக் கீறல் என்றனர். மின்னல் வெட்டு மின்னல் கீற்று எனப்படும். தென்னை ஓலைகளைப் பின்னியது கீற்று எனப்படும். கீறல் கீற்று ஆகியது; கீற்று முடைதல் தொழிலாயது. கீற்றுத் தட்டி கீற்றுக் கூரை என்பவை சிற்றூர்க் குடிசை சார்ந்துள்ளன. கட்டை முதலியவற்றை உடைத்தல் கீறல் எனப்பட்டது. பாளை கீறிவிட்டது; பலகை கீறிவிட்டது என்பவை வழக்கு. படித்தவர்களும் கைவரி வைத்தல் பதிவாவணச் சான்றாக உலகளாவிய அளவில் உள்ளது. எழுதும் கீறலினும் எழுதாக் கீறல் மையே மெய்ச் சான்றாக உலகம் கொண்டுள்ளது கண்கூடு. கீறி: விறகைக் கீறுதல் - பிளத்தல் - பொதுவழக்கு. கீறல் என விரல் வரி வைப்பதும் பொது வழக்கு. கீறி என்பதற்குக் கோழி என்னும்பொருள் உள்ளமை குற்றால வட்டார வழக்கு ஆகும். கீறுதல் - கிண்டுதல் - கிளறுதல் செய்யும் கோழியைக் கீறி என்பது அரிய வட்டார வழக்காகும். பொது வழக்காகக் கொள்ளத் தக்கதும் ஆகும். கீறியறுத்தல்: கீறுதலும் அறுத்தலுமாகிய இருவினை ஒருசொல். அரம்போழ்ந் தறுத்த கண்சேர் இலங்குவளை -மதுரைக்.316 பொருள்: வாளரம் கீறி அறுத்த இடம் நேரிதாகிய விளங்கும் வளை(உரை,நச்) ஈதலும் இசைபடலும் போல -(திருக். 231) கீற்று: கீறு > கீற்று. கீறுதல் = கிழித்தல். மற்றை இலைகள் போலவோ பனை ஓலை போலவோ இல்லாமல் தனித்தனிக் கிழிவென அமைந்த தென்னையின் ஓலை கீற்று என வழங்கப் படுகிறது. கீற்றுகளைச் செய்வினைத் திறனால் முடைந்து (பின்னி) இணைத்தது படல் எனப்படும். படல் ஆவது அகன்று விரிவானது என்னும் பொருளது. படல் கூரை வேய்வதற்குப் பயன்பொருள். 