அப்பாத்துரையம் - 43 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) பொது நல்வாழ்வுக் கடுரைகள் திருநிறை ஆற்றல் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 43 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசி ரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 24+296 = 320 விலை : 400/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல் elavazhagantm@gmail.com  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 320 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. நல்வாழ்வுக் கட்டுரைகள் முதற் பதிப்பு - 1957 இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. முன்னுரை இளைஞர்கட்குத் தம் வாழ்க்கைப் பயிற்சியின் உதவி கொண்டு அறிவுரையும் எச்சரிக்கையும் தருவது முதுமையின் கடமை. வருகின்ற தலைமுறையாளருக்குத் தம் வாழ்க்கைப் படிப்பினைகளைத் தந்து அவர்கள் வாழ்க்கையினைத் தம் வாழ்வினும் வளம்படுத்துவது முந்திய தலைமுறையினர் பொறுப்பு. வாழ்க்கையின் அறிவு, தோல்விகளின் பயனாகவும், துன்பங்களின் பயனாகவும், நேரச் செலவு, ஆற்றல் செலவு ஆகியவற்றின் பயனாகவும் கிடைப்பது. மனிதன் தான் அடைந்த தோல்வியையே மீண்டும் அடைந்து, விழுந்த குழியிலேயே மீண்டும் விழ வேண்டும் என்பதில்லை. அந்த நிலையிலேயே மனிதன் இருந்தால் மனித நாகரிகம் விலங்கு நிலையிலேயே இருந்திருக்கும். ஒருவர் வாழ்க்கையில் என்றுமே தோல்விகள் வரமாட்டா என்றில்லை. தோல்விகள் என்றும் வரக்கூடியவையே. ஆனால், வந்த தோல்வியே மீண்டும் வருவது அறிவு வளர்ச்சிக்குரிய நிகழ்ச்சி ஆகாது. தோல்வியால் பெற்ற படிப்பினை அதே தோல்வி மீண்டும் வராமல் தடுப்பதேயாகும். புதிய தோல்விகள் ஏற்படுமானால், அவை புதிய அறிவுக்கே வழி வகுக்க வேண்டும். எனவே, பல இன்னல்கள் அடைந்து மனிதன் பெற்ற அறிவை அவன் தன் எதிர்காலத்துக்கும், தன் வருங்காலத் தலைமுறை யினருக்கும் வாய்மொழி மூலமோ, நிலையான எழுத்து வடிவு மூலமோ தெரிவித்தல் நாகரிக சமூகத்துக்கு இன்றியமையாத தொன்று. வாழ்க்கை ஓர் எல்லையற்ற கடல்; அதில் இன்ன சமயமென்றில்லாது பெரும் புயல்களும், மலைபோன்ற அலைகளும், ஆழ்சுழிகளும் எழக்கூடும். நீர்த்திரைகளுள் மறைந்து கலங்களை உடைக்கக் காத்திருக்கும் கொடும் பாறைகளும் உண்டு. இவற்றைத் தாங்கத் துணிந்து கடற்பயணத்தி லிறங்குவோர் இப் பேரிடையூறுகளைக் கடந்து உயிருடன் தப்பினால், அங்ஙனம் தப்பி வெற்றி கண்டபின், தாம் அதனால் பெற்ற அறிவைத் தம்மைப் போல அக்கடலகத்தில் பயணஞ் செய்வோருக்கு வழிகாட்டியாகத் தருதல் ஒருதலை. கடற்கொள்கைக் காரரும் பகைவரும் நீங்கலாக, மனித சமூகத்தில் எவரும் - மனித இன வளர்ச்சியில் கருத்துக் கொண்ட எவரும் இத்தகைய பணியைத் தம் உயிர்க்கடனாக ஏற்றுக் கொள்ளாமலிரார். இவ் வறிவுரைகள் இன்னல்களை நீக்கமட்டுமல்ல; ஆற்றல், அறிவு, இன்பம் ஆகியவற்றைப் பெருக்கவும் பயன்படுபவை. பத்தாண்டுகள் ஓர் அயல்மொழியை வருந்திக் கற்ற ஒருவர் பிறருக்குத் தம் அறிவைத் தருவதானால், அவர்கள் அதே முறையில் பத்தாண்டு அதனைக் கற்பதில் செலவு செய்ய வேண்டியிராது. ஓராண்டுகளில் அதனைக் கற்று. மீந்த மூன்று ஆண்டுகளில் இன்னும் ஒரு மொழியோ, கலையோ கற்கலாம். இதனால் பத்தாண்டுக் காலத்தில் மனிதன் அடையும் பயன் தலைமுறைதோறும் விரிந்து பெருகுகிறது. அறிந்த அறிவு வருங்கால அறிவுக்கு முதலீடாகி மேன்மேலும் அறிவாகிய வட்டியைத் தருகிறது. புத்தறிவாகிய இவ்வட்டியும் பழைய அறிவுத் தொகுதியில் சேர்ந்து அடுத்த தலைமுறையில் ஏற்கெனவே அறியப்பட்ட பழைய அறிவுடன் ஒன்றுபட்டு அத்தலை முறையினரின் முதலீடாகிறது. இதனையே நாம் பொது அறிவு என்கிறோம். இங்ஙனம் அறிந்த அறிவு பெருகுந்தோறும் இன்னும் அறியப்படாத அறிவுக்கான வாயில் பெருகுகிறது. “அறிதோறு அறியாமை கண்டற்றால்,” (குறள் : 1110) என அறிஞர் கூறுவது இதனையே ஆகும். கடற்பயணத்தைவிட, கல்வியறிவைவிட வாழ்க்கை பல வகைச் சிக்கல்கள் உடையது. இவ்விரண்டையும்விடப் பல திறப்பட்ட நுண் நயங்களும் வாழ்க்கையில் உண்டு. அச்சந்தந்து எச்சரிக்கை செய்யும் பெருந்துன்பங்களைவிட, அறிவை மறைத்துப் பேரளவான பொல்லாங்கு தரும் சிறு வழுக்கள் அதனிடையே உண்டு. உள்ளார்ந்த நலங்களை வெளிப்படக் காட்டி நன்மைக்குத் தூண்டுதல் தரும் கவர்ச்சிமிக்க பெரும் பண்புகளைவிட, கருத்திற் படாத அல்லது தீமைபோன்ற தோற்றத்திற் புதையுண்டு பெரு நன்மைக்கு வழிவகுக்கும் சிறு நுண் நலங்கள் அதனிற் பல. தோற்றங் கடந்து அவற்றின் விளைவும் பயனும் கண்டோர் விளக்கினாலன்றி, அவற்றின் மெய்த் திறமறிந்து பயன்பெறுதல் அரிது. சிறப்பாக, இளமைப் பருவம் உணர்ச்சிமிக்கது; ஆற்றல் மிக்கது; ஆர்வமிக்கது. இவற்றால் அஃது அருஞ் செயல்கள் செய்யும் திறமுடையது. அருஞ்செயல்களைச் செய்தும் வருகிறது. ஆனால், வாழ்க்கைக் களம் இளமைக்குப் புதிது; அதில் அது பழகித் தன் ஆற்றலை முன்னிலும் நற்றிறம்படப் பயன்படுத்துமுன், முதுமை வந்து விடுகிறது. இம் முதுமைப் போதில் உணர்ச்சி குன்றிவிடுகிறது; ஆற்றல் குறைந்து விடுகிறது. அறிவு வளரும் ஆற்றல்கூட ஒரு வகையில் மட்டுப்படுகிறது. ஆனால், அறிவு முதலீடு இப் பருவத்திலேயே மிகுதி. அத்துடன், அறிவுப் பரப்பின் அளவு மட்டுமன்றி அதன் கூறுகளின் தராதரமும் இப்போதுதான் தெளிவு பெறுகிறது. இவற்றை முதுமை தனக்கென முற்றும் பயன்படுத்த முடிவதில்லை யாயினும், அது தன் ஆர்வத்தை இளமை வழிச் செயலாற்ற முயலுமானால், முதுமையின் அறிவுடன் இளமையின் உணர்ச்சியும் ஒருங்கிணைதல் கூடும். இளமையின் பயன் முதுமை என்பது உண்மையாதல்போல, முதுமையின் பயன் இளமை என்பதும் இங்ஙனம் உண்மை ஆகலாம். முதுமையின் அறிவை இளமையுடன் சேர்க்கும் இச்செயலுக்கே நாம் கல்வி, நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம், அறிவியல் என்ற பெயர்களைத் தந்து அழைக்கிறோம். இவை யாவும் பழைமை அல்லது முதுமையின் இன்கனிகள். இவையே புதுமைப் பயிரின் விதையாகவும் நல்லுரமாகவும் அமைகின்றன. காட்டு வழியே ஒருவன் செல்கிறானென்று வைத்துக்கொள்வோம். அவன் தான் செல்லும் பாதை இரு பிரிவாகச் செல்வதைக் கண்டு தயங்குகிறான். அவன் செல்ல நாடும் இடத்துக்கு எந்தப் பக்கமாகச் செல்ல வேண்டும் என்று அறிவது அவனுக்கு அச்சமயத்தின் இன்றியமையாத தேவை. அவ்விரண்டு பாதைகளுமே அவன் விரும்பும் இடத்துக்குச் செல்பவையாக இருக்கலாம். அப்போதும் அவனுக்கு எது நல்ல பாதை, எது சுருக்கப் பாதை எது இடையூறற்ற அல்லது இடையூறு குறைந்த பாதை என்று அறிய வேண்டி வரலாம். ஆனால் இரண்டில் ஒன்றே அவன் விரும்புமிடம் செல்வதாகவும் இருக்கக்கூடும். ஒன்று விரும்புமிடத்திற்குச் செல்வதாகவும், மற்றொன்று நெடுந்தொலை சென்று பின் பொட்டென முடிவதாகவும் இருக்கலாம். தவறான வழியில் செல்ல நேர்ந்தால், போனவழியே மீண்டும் வந்து புறப்பட்ட இடத்திலிருந்து மற்றொருமுறை புறப்பட வேண்டி வரும். தவறான பாதையில் இடையூறு அல்லது உயிரூறு ஏற்படின், அவன் துன்பமோ அழிவோகூட எய்தக்கூடும். சில சமயம் பார்ப்பதற்கு அகலமான கவர்ச்சியான பாதையே தவறான பாதையாகவும், தோற்றத்தில் கடுமையான, கவர்ச்சியற்ற நெறியே சால்புடைய நெறியாகவும் இருக்கலாம். இவற்றை யெல்லாம் ஏற்கெனவே சென்றறிந்து வகை தொகைகண்ட ஒருவன், அல்லது கண்டவர் கூறக்கேட்ட ஒருவன் நட்பு முறையிலறிந்து கூறினால், வழிப்போக்கனுக்கு நேரமும் உழைப்பும் எவ்வளவு மிச்சப்படும்! எவ்வளவு இடையூறுகளிலிருந்து அவனுக்குப் பாதுகாப்பு ஏற்படும்! அத்தகைய வழித்துணை போன்றவை வாழ்க்கைப் படிப்பினைகள். சிறுவர்க்கும் இளைஞர் கட்டும் இவை ஆன்ற பயன் தருவன். சிறுமைப்போதில் மனிதன் பெற்றோர்களின் நல்லாதரவில் இருக்கிறான். அவன் தன்னைப் பற்றி அப்போது சிந்திக்க முடியாது; சிந்திக்கவும் தேவையில்லை. அப்பொறுப்பு முழுவதும் பெற்றோரைச் சார்ந்ததாகிவிடுகிறது. அவர்களே குழந்தையின் நலத்தில் குழந்தையினும் அக்கறை காட்டி, குழந்தையின் நன்மை தீமைகளினால் பலகால் அக்குழந்தையினும் மிகுதி இன்பதுன்பம் அடைபவராவர். ஆனால், பெற்றோர் ஆதரவிலிருந்து சற்று நெகிழ்வு பெற்று ஆசிரியரின் ஆதரவு பெறும் நிலையில் சிறுவர் பொறுப்பு ஓரளவு தொடங்குகிறது. பெற்றோர் ஆதரவில் செயலற்ற நிலையிலிருந்த அவர்கள் இப்போது செயல்துணை அளித்து வழிகாட்டும் ஆசிரியர் வழிநின்று செயலாற்றுபவர் ஆகிறார்கள். ஆனால் பதினான்கு பதினைந்து ஆண்டுப் பருவமடைந்தும், அவர்கள் பெரும் பாலும்தம் வாழ்க்கைக்குத் தாமே பொறுப்புக்கொள்ள வேண்டியவராகிறார்கள். வழக்கு மன்றத்தில் உறுதிமொழி கூறல், அரசியல் மன்றத்திற்கான மொழிதரல், செய்த குற்றத்திற்குத் தண்டனை பெறுதல் ஆகிய பொறுப்புக்கள் இப்பருவத்தில் முழுவதும் அவர்களிடம் வருவதில்லையாயினும், இவற்றுக்கான பயிற்சிகள் தொடங்கிவிடுகின்றன. இளமைப் போதைப் போல இப்போது அவர்கள் உடலும் உளமும் திருப்பியபடியெல்லாம் திரும்பிக் கொள்ளும் நிலையில்லை. முதுமைப் போதைப்போலத் திரும்ப முடியாத நிலையிலும் இல்லை. அவர்கள் நிலை இவ்விரண்டையும் விட நன்மை தீமைச் சிறப்புடையது. ஏனெனில், இப் பருவத்தில் அவர்கள் எப்படித் திரும்புகிறார்களோ, அப்படியே வாழ்நாள் முழுவதிலும் அவர்கள் போக்குத் திரும்பியிருக்கும். திருப்புபவர் இன்றித் திரும்பும் இப்பருவத்தில், உருவாக்குபவர் இன்றி உருவாகும் இப்பருவத்தில் தான் திரும்புவதற்கான உதவியுரையும், உருவாகுவதற்கான தூண்டுதலுரையும் மிகுதியாகத் தேவை. எனவே, இப்பகுதிக்கான அறிவுரைகளை, ‘வாழ்க்கையின் வாயிற்படி’ ‘இளைஞருக்கான அறிவுரைகள்’ என்ற கட்டுரைகளில் தருகிறோம். இந்தப் படிகளிலேயே குருத்துவிட்டு வாழ்க்கையை முற்றிலும் ஆக்கவோ, அழிக்கவோ செய்யத்தக்க வாழ்க்கை நிகழ்ச்சி காதலாகும். வாழ்க்கைப் போக்கையே மாற்றியமைக்கும் இவ்வுணர்சசி, இளமைக்கு முன்னும் இன்னதென்று உணரப் படாதது, இளமைக்குப் பின்னும் அதன் தன்மை தோன்றுவ தில்லை; பெற்றோர் இத்துறையில் தெள்ளத் தெளிய உதவு முடியாது; ஆசிரியர் இத்திறத்தில் மிகுதியாக வழிகாட்ட முடியாது. முதியவர் இவ்வுணர்ச்சியை அறியமாட்டார்கள். அறியினும் அதனை மறந்துவிட்டிருப்பது உறுதி. எதிர்பாராது வந்து கவிதைபோல எழுதிச்சியும் பயனும் ஈந்து வாழ்க்கையுடன் வாழ்க்கையாய் ஒன்றுபட்டுப் பிரித்தறியப்படாத இவ்வுணர்ச்சி வகையில் ஒருவருக்கு வழிகாட்டியாயிருப்பது அவ்வுணர்ச்சியும் இயற்கையுமல்லாது வேறில்லை. ஆயினும் வாழ்க்கைக் களம் காணாத இளைஞர்கள் அதன் தன்மை, அதன் இடைஞ்சல்கள், அதில் நேரும் பிழைகள் ஆகியவற்றை அறிவதும்; அதன் தற்காலிகத் தோற்ற மயக்கங்களில் சிக்கிவிடாமல் அதன் நிலையான வாழ்க்கைப் பயனைச் சிக்கெனப் பிடிக்க உதவுவதும் கூடாததன்று. இத்தகைய படிப்பினையுரைகளே ‘காதல் வாழ்வின் கடமைகள்’ என்ற கட்டுரையில் தரப்பட்டுள்ளன. குடும்ப வாழ்வின் வளத்தக்கான அறிவுரைகளைக் ‘குடும்பத் தலைவரின் பொறுப்புகள்,’ ‘பெற்றோர் பொறுப்பு’, ஆகிய இரு கட்டுரைகளிலும்’ உறவினர், அயலார், ஊரார், அரசியல், உலகம் எனப்படிப்படியாக விரிந்து செல்லுகின்ற உலக வாழ்விடையே தனி மனிதர் கொள்ள வேண்டிய பொறுப்புடையப் பங்கைக் ‘குடிமையின் உரிமையும், பொறுப்பும்’ என்ற கட்டுரையிலும் காணலாம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும் தெய்வத்துள் வைக்கப் படும் (குறள். 50) 2. வாழ்க்கையின் வாயிற்படி கேள்வியாலறிந்த ஒருவர் வீட்டிற்சென்று அவரைப் பார்க்க முனைபவர், அவர் வீட்டு வாயிற்படி செல்லுமளவும் அவரைப் பற்றிய எவ்வகைக் கருத்தும் இல்லாமல் செல்லக் கூடும் ஆனால், வாயிற்படி அடைந்து உள்ளே பார்வையைச் செலுத்தியதும், “அவர் எப்படிப்பட்டவரோ, எப்படி வரவேற்பாரோ,” என்ற எண்ணங்கள் அவர்கள் உள்ளத்தில் எழுதுவது உறுதி. அதுபோலவே வாழ்க்கையின் வாயிற் படியாகிய பதினாலு, பதினைந்து வயதை அணுகிய எவரும், தம் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணவோ, சிந்திக்கவோ, கவலைகொள்ளவோ செய்யாமல் இருக்க முடியாது. செல்வக்குடியில் பிறந்து, சோம்பேறி வாழ்வு வாழப் பழகிய ஒரு சிலர், இத்தகைய சிந்தனைக்கு ஆளாகாமலிருக்கலாம். ஆனால், சிந்தனைக்குரிய இந்தப் படியில் சிந்திக்காதவர், வாழ்க்கையில் என்றுமே சிந்திக்காதவராவார். சிந்தனையைக் கெடுத்த அவர் செவ்வாழ்வு அகன்ற பின் அவர் சிந்திக்கக் கூடும். ஆனால், செல்வத்தின் செல்வமட்டுமின்றி வாழ்க்கைக்கே செல்வமாகிய இளமையை இழந்த பின் அவர் சிந்தனையின் பயனும் வறுமையடைந்தே தீரும். எவ்வளவு செல்வக் குடியினராயினும் இவ்வாழ்க்கைப் படியில் சிந்தனைக்கு இடம் கொடாதவர், வாழ்க்கைப் பட்டியலில் தம் பெயர் பொறிக்காது விலங்கு போல் உண்டு உயிர்த்து ஒழிபவரேயாவர் அவர்கள் பிறந்தும் பிறவாதாரில் வைத்து எண்ணப்படத்தக்கவர்கள். வாழ்க்கையின் வாயிற்படியில் சிந்திப்பவருள்ளும், கனவு காண்பவருள்ளும் பலர் மேற்கூறிய சோம்பல் வாழக்கையாளர் வாழ்வையே குறிக்கோளாகக் கொள்வதுண்டு. இத்தகையோர் உழையாத வாழ்வை அவாவி அதன்பயனாக அண்டிப்பிழைக்கும் அடிமை வாழ்வையோ, அல்லது தகாத வழியில் பொருளீட்டி வாழும் வாழ்வையோ நாடிக் கேடுறுபவரேயாவர். ஏனெனில், உழைப்பால் வரும் செல்வமே தற்சார்பும் தன்மதிப்பும் தரும். அதுவே பிறருக்குத் தீமைதராமல் பல சமயம் பிறருக்கு நன்மையாகவும் முடியும். வாழ்க்கைத் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு நன்மகனும் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளாவன: “வாழ்விற்கு உரிமையற்றவனாக நான் வாழலாமா? வாழும் தகுதி எனக்கு வேண்டாமா? என் பெற்றோர் எனக்குப் பொருள் ஈட்டிவைத்திருந்தால், அவர்கள் எனக்குச் செய்த கடமைக்கு ஈடாக நான் என்ன செய்யக்கூடும்? என் நாடு என்னையும் என் குடியையும் உயர்நிலையில் வைத்திருக்கிறதானால், அதற்கு நான் செய்யும் கைம்மாறு யாது? அத்தகைய உயர்குடிப்பேறு எனக்கு இல்லையானால், அதை என் பின்னோர்கள் பெறச் செய்யும் வழியாது?” என்பதே. இக் கேள்விகளுக்கு அவனுக்குக் கிடைக்கக்கூடும் விடை ஒன்றே. செல்வக்குடியில் பிறந்ததனால் உழையாமல் வாழ்வதும், உழையாமல் செல்வக் குடியாளனைப் போல் வாழ எண்ணுவதும் செல்வம் உண்டுபண்ணுவதாகாது. பிறர் உழைப்பை உண்டு உலகுக்குச் சுமையாய் இருப்பதேயாகும். அஃதாவது வாழத் தகுதியின்றி, வாழும் உரிமையின்றி வாழ்வதேயாகும். உழைப்பின் பெருமை பற்றிப் பல அறிஞர் பலவாறாகப் பராட்டியுள்ளனர். “முயற்சி திருவினை ஆக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்,” (குறள். 616) என்று ஒழுக்க நூலார் வரைந்துள்ளனர். ஆயினும் தம் சமூக வாழ்வில் எக்காரணத் தாலோ பெரும்பாலோர் உழைப்பை மதிக்காதிருந்து வருகிறார்கள். இங்ஙனம் உழைப்பை மதியாதிருந்து எத்தனையோ நாகரிகங்கள் அழிந்து மண்ணோடு மண்ணாய்ப் போயிருக்கின்றன என்பதை அறிந்தும், உழையாத வாழ்வே நாகரிகம் என்ற எண்ணம் இன்னும் உலகைவிட்டு அகன்றபாடில்லை. உலகிற்கே நாகரிகத்துக்கு வழிகாட்டிய பண்டை எகிப்திய, பாபிலோனியப் பழங்குடி மக்கள், கலைச்சிறப்பு வாய்ந்த கிரேக்கர், போர் வீரமிக்க உரோமர் ஆகியவர் யாவரும் உழைப்பை மதியாது உழைப்பாளர்களை அடிமைகளாக நடத்தியதானாலேயே அழிவுற்றனர் என்பதை வரலாறு எடுத்துக்காட்டும். உழைப்பினும் அறிவுழைப்பைப் பலர் மதித்து, உடலுழைப்பைக் குறைவாய் எண்ணுவதுண்டு. இது கை கால்களையும் கண் காதுகளையும் புறக்கணித்து, மூளையை மதிப்பது போன்றதாம். கை கால்களால் நாம் உழைப்பதுடன் அவற்றினுதவியாலேயே நூலை எடுத்துப் படிக்கவும், கேட்கவும், எழுதவும் செய்கிறோம். அப்படியிருக்கக் கையால், கண் காதுகளில்லாமல், எப்படி மூளை வளர்ச்சி பெற முடியும் என்று நாம் கருதுவதில்லை. உண்மை யாதெனில், கைகால் கண்காதுகளிலிருந்து சிறந்தன்றி மூளை சிக்காது, முன்னது அடிப்படைப் பண்பு; பின்னது சிறப்புப் பண்பு மட்டுமே. முன்னது இன்றியமையாதது; பின்னது அமைந்தால் தனிச் சிறப்புடையது. இது போலவே உடலுழைப்பு, உடல் நலம் ஆகியவை இன்றியமையா அடிப்படைத் தேவைகள் ஆகும். அறிவு இவற்றுடன் அமைந்தால் மட்டுமே சிறப்புடையது; அறிவற்ற உடலுழைப்பைப் போலவே, உடலுழைப்பற்ற அறிவும் சிறப்புடையதன்று. மேலும் அறிவுழைப்புக்கு இயல்பாக எங்கும் தரப்படும் உயர்வுக்குக் கூட ஒரு தனிக்காரணமுண்டு. உடலுழைப்புப் பெரும்பாலும் தனக்கு மட்டுமே பயன்படத்தக்கது. தற்காலிகப் பயன் மட்டுமே உடையது. அறிவுழைப்போ பிறருக்குப் பெரிதும் பயன்படுவது; நிலையான நீடித்த பயனுடையது. அது மனிதருடைய உடலுழைப்பில் சிக்கனம் செய்து அதற்கு உரம் தருவது. எனவே அறிவுழைப்பு உடலுழைப்புக்கு எதிரானதன்று; அதன் மீது எழுப்பப்படுவது, அதற்கான உயர் மதிப்பும், அஃது உழைப்பை நீக்குவது என்பதனாலன்று; உழைப்பை நிறை பயனுடைய தாக்குவது என்பதனாலேயே, தன்னலத்துக்கு மட்டுமின்றிப் பொது நலத்துக்கும் உதவுவதனாலேயே அது மதிப்படைவது. இளைஞர்கள் சிறப்பாக உடலையும், அறிவையும் ஒருங்கே பேணக் கடமைப்பட்டவர்கள். முதுமையில் அறிவு மிகுதியா யிருந்தும் அது பயன்படாததன் காரணம் உடலாற்றல் குறைவதும், அதன் பயனாக அறிவு வளர்ச்சி பெறாது நின்று விடுவதுமே யாகும். இளமையில் அறிவு எளிதில் வளர்ச்சியடைவது உடல்வலுவின் காரணமாகவே. ஆகவே, உடலுழைப்பைக் கவனியாமல் அறிவைப் பேண எண்ணுவது, முதலை விட்டுவிட்டு வட்டியில் மிகுதி ஆர்வமுடையவராயிருப்பது போன்ற மடமையேயாகும். உடலுழைப்பைப் புறக்கணித்து அறிவுழைப்பை மதிக்கும் தீய பழக்கம் பெருகியதன் காரணமாகப் பலர் தன் மதிப்பு, தற்சார்பு, தன்முயற்சி ஆகிய மூன்றையும் விட்டு அடிமைத்தனம், கோழைமை, மடமை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள். உழையாதிருப்பதே உயர் குடியின் பண்பு என்னும், அதே சமயம் உழைப்பவரைவிட உயர் ஊனுடைய கொள்ளுதலே சிறப்புடைய தென்றும் கருதும் இவர்கள், தம் வருவாய்க்கு மேற்பட்ட இன்பப் பொருள்களில் நாட்டம் வைக்கின்றனர். இதனால் அவர்கள் கடன்படவும், தொல்லைப்படவும் வெளிப்பகட்டுக்காகக் குடும்ப வாழ்வில் இடர்ப்பட்டு நரகவேதனை அடையவும் நேருகிறது. இது மட்டுமோ? தம் மிகுதிப்படையான செலவினங்களைச் சமாளிக்க உதவுவதற்காகவே இவர்கள் அரசியற் பணி, அலுவலகப் பணி ஆகியவற்றை நாடியலைந்து அதற்காக ஆண்டுள்ளோரைச் சுற்றித் தொடூண்ழியர் போலப்பசப்ப வேண்டியதாகிறது. தாம் ஆடை நெய்வது குறைவு என்று கருதும் இவர்கள், நெசவாலை நடத்துபவரிடம் போய்க் குறையிரந்து தொழில் பெறத் துடிக்கின்றனர். அது பெற்ற பின்னும் தம் தொழிலில் காட்டும் ஆர்வத்தினும் தம் தலைவரை மன மகிழச் செய்வதிலேயே ஆர்வம் காட்ட வேண்டியவராகின்றனர். அரசியற் பணியிலீடுபட்டார் தம் மேற்பணியாளர் பேச்சுக்கு ‘ஆமாம்’ போட்டு, அவர் கொள்கைக்கு இணங்கி, அறிவைப் பறிகொடுக்க வேண்டியவராகின்றனர். இவரினும் மிகுதி உயர்வு பேண எண்ணுகின்றவர் சின்னஞ்சிறு பொருள்களை எடுத்துச் செல்லக்கூட ஏவலாளர்களை எதிர்பார்த்து நிற்கும் கோழை களாய் விடுகின்றனர். மற்றும் பலர் இம் மாய வெளிப்பகட்டுக் காக உள்ள நிறையையும், வாய்மையையும் கெடுத்துத்தகாத வரிகளில் கருத்துச் செலுத்தி வஞ்சனையும் கொடுமைகளும் மறைவில் புரிபவராகின்றனர். வாழ்க்கையின் வாயிற்படியாகிய இளமையே இத்தீய பண்புகள் பற்றும் காலமாதலால், இளைஞர் இப்பொறிகளிற் சிக்காது தன்னுழைப்பு, தற்சார்பு, தன்னறிவு, தற்பண்பு பேணி வாழக்கடவர். எளிய வாழ்வு என்பது மனித வாழ்வை வெறுத்த துறவிகளுக்குரியது என்றோ, மனித வாழ்வு வாழ இயலாத பஞ்சை ஏழைகளுக்கு உரியது என்றோ பலர் எண்ணி விடுகிறார்கள். இதனினும் தவறுடைய எண்ணம் எதுவும் இருக்க முடியாது. எளிய வாழ்வு என்பது இன்பம் வெறுத்த வாழ்வு அன்று, உண்மையில் அதுவே இன்பம் நிறைந்த வாழ்வு. நல்உணவு, நல் ஆடை, நல் அணிமணி, இன்பப் பொருள்கள் ஆகியவற்றை வெறுப்பதோ, ஒதுக்குவதோ எளிய வாழ்வு ஆகாது; அவை வறுமை வாழ்வு அல்லது துன்ப வாழ்வு மட்டுமே. எளிய வாழ்வு என்பது இவ்வின்பங்களை அவற்றின் பயன் நோக்கி அறிவுடன் பயன்படுத்துவதேயாகும். தோற்றத்திற்காக பிறருக்குக் கண்ணுறுத்தும்படியான உயர்நிலைக்காக, உடலைக் கெடுக்கத்தக்க தற்காலிகப் புலனுகர்வுக்காகப் பயன்படும் தீய இன்பங்களே எளிய வாழ்க்கைக்கு மாறான பகட்டு ஆரவார வாழ்வின் பண்புகள் ஆகும். எளிய வாழ்க்கையினர் விரும்பும் உணவு, தற்காலிகச் சுவையுடன் நிலையான உடல் நலமும் தரவேண்டும். அவர்கள் மேற்கொள்ளும் ஆடை தற்காலிகப் பாதுகாப்பும், நிலையான உடல் நலமும், காண்பவர்க்கு நன்மதிப்புணர்வும் தரவேண்டும். எளிய வாழ்வு வாழ்பவன் கீழோரைக் கண்டு சீறவோ, அடக்குமுறை ஆர்ப்பரிப்புக் கொள்ளவோ, இறுமாப்பும் வெறுப்பும் அடையவோ மாட்டான். மேலோரைக் கண்டு அஞ்சவோ, அடங்கி ஒடுங்கவோ, தொண்டூழியம் செய்ய விதிர் விதிர்க்கவோ மாட்டான். அவரவர் நிலைக்கேற்ற படி அவன் யாவர் மாட்டும் ஒத்த அன்புடனே தான் ஒழுகுவான். இத்தகைய எளிய வாழ்வே உண்மையில் உயர் நாகரிக வாழ்வு ஆகும். உயர்கலை வாழ்வும் இதுவே, இம்மறை நுட்பம் உணராது, கண்டபடி இன்பப்பொருளும், ஆடையும் புனைபவனை நாகரிக மக்கள் நாகரிகமுடையவன் என்று கூறமாட்டார்; பட்டிக் காட்டான் என்பவர். அது போலவே பகட்டுக்காக எளிய வாழ்வு வாழ்பவனையும், உண்மை நாகரிகமுடையவர் பாராட்ட மாட்டார்கள். அவனையே பகடி, அகடி, விகடி எனக் கடிந்து நகையாடுவர். எளிய வாழ்வாகிய இந் நடுநிலை வாழ்வைப் பெறும்வழி ஊதாரித் தனத்துக்கும், கஞ்சத்தனத்துக்கும் இடைப்பட்ட நற்சிக்கன வழியாகும். உயர்வுடைய நல்லுணவு, நல்லாடை, நற்கலைகள், நல்வாய்ப்புகள் ஆகியவற்றுக்குத் தேவைப்பட்ட அளவும், உன் திறத்துக்கேற்ற அளவும் செலவிடு. இதில் தயக்கம் கொண்டு குறையறிவாளனாகாதே. ஆனால், அதே சமயம் இவற்றின் உயர்வுக்குப் பயன்படாமல் வீண் செலவாக, அல்லது வீண் ஆரவாரமாக ஒரு காசும் செலவு செய்யாதே. மேலும் தற்காலிக மகிழ்ச்சி கருதி, சொகுசு கருதி, நிலையான நலங்களை அல்லது இன்பங்களைப் போக்கிக் கொள்ளாதே. தற்காலிகமாகச் சிறு துன்பங்களை வெறுத்து நிலையான தீங்கை அல்லது துயரை வருவித்துக் கொள்ளாதே. இளைஞர் பெரும்பாலும் இன்பம் என்று கருதி ஏமாறுவது துன்பந்தரும் தற்காலிக இன்பங்களையே. அவர்கள் பெரும்பாலும் வெறுப்பதும், நன்மருந்துகள் போலத் தற்காலிகமாகச் சிறிது இன்னாத்தோற்றம் தந்து நிலையான பயன் தரும் உடலுழைப்பு, முயற்சி, பொறுமை முதலிய நற்பண்புகளையே. எளிய வாழ்வில் ஊன்றி நிற்பதாலும், தன்நிலைக்கும், நிலைக்குரிய வருவாய்க்கும் உட்பட்டு வாழ்வதாலும் இத்துன்பங்களைப் பெரும்பாலும் விலக்கிவிடலாம். தானுழைத்துத் தற்சார்புடன் வாழ்வதற்கு அடுத்தபடியான உயர்வுடையது, உழைப்பார்க்கு உதவுவதேயாகும். பயனை எதிர்பாராத உதவி என ஒழுக்க நூலார் உயர்வுபடுத்திக் கூறிய உதவி இதுவன்றி வேறு எதுவுமன்று. பயனை எதிர்பாராத உதவி என்றவுடன் பலர் பயனற்ற உதவி என்றெண்ணிப் பொருளை எவருக்கேனும் கொடுத்துவிடுவது கொடை என்றும், கல் முகட்டிலும், ஆற்றிலும், குளத்திலும் நற்பொருளைக் கொட்டுவது நற்செயலென்றும் எண்ணிவிடுகின்றனர். அதேபோல வரையாது கொடுத்தல் என்பது எந்த வீணர் எது கேட்டாலும் கொடுப்பது என்று கொள்கின்றனர். இவை கொடையுமாகா, நன்னடையுமாகா என்று வாதிட்டு விளக்கத் தேவையில்லை. பகட்டுக்காகச் செலவு செய்யும் வீணர் செயலே தவறானால், அந்த அளவு சிறு நோக்கங்கூட இல்லாத மடமைமிக்க இச் செயல்களை என்னென்பது? உண்மையில் பயனை எதிர்பாராத செயல் என்பதும் வரையாத கொடை என்பதும் கொடுப்பவன் தன் தனிப்பட்ட நலன் கருதிச் செய்யாத உதவி என்றும், தனக்கு வரும் கைம்மாறெண்ணி அளந்தீயாமல், தேவையாளர் தேவையளவை எண்ணி ஈவது என்றுமே பொருள்படும். பண்டை ஆன்றோர்களின் சொற்பொருள் வழக்கறியாத இடக்காலக் குறையறிவினரே, இச்சொற்களின் வெண்பொருள் கொண்டு கதை கூறு மயக்குற்றனர் என்னலாம். தாமே எளிய, அஃதாவது பயன் கருதிய வாழ்வு வாழ்பவர் பிறர்க்கு உதவியினும் கொடை வழங்கினும் அதுபோல் எளிய, அஃதாவது பயனுடைய வாழ்வுக்கான உதவியும் கொடையுமே வழங்குவர் என்பது தேற்றமன்றோ? ஆகவே, உழைப்பவர் எளிய வாழ்க்கையுடையவர் ஆகியவர்கள் தம்மைப்போல உழைப்பவர் அல்லது எளிய வாழ்வை நாடுபவர்களுக்கு அவர் நலத்தையும் உழைப்புலகின் நிலையான நலத்தையும் பெருக்கும் முறையில் கொடுக்கும் அல்லது அளிக்கும் கொடையும் உதவியுமே வரையாக் கொடை என்றும், பயன் காணா உதவி என்றும் விதந்துரைக்கப்பட்டன. இரு வழியிலும் கொடுப்பவர் பயனை எதிர்பார்ப்பதில்லை யாயினும் கொடையாளியை அக்கொடை எளிதில் மீட்டும் அடையுமாயின், அஃது உதவியின் பாற்படும். அஃது அவன் இனம், அஃதாவது மனித வகுப்பை அல்லது நாட்டையே சாருமாயின் அது கொடையின் பாற்படும். செயலின் பயன் நோக்கி இவை இருவகையானாலும், செய்பவன் பண்பில் இரண்டும் ஒன்றே. உயர் பண்பாளர் தொடர்புறவுடைய உறவினருக்கும் நண்பருக்கும் உதவும் போதும், தொடர்புறவில்லாத ஏதிலர்க்கு உதவும் போதும் ஒரே உணர்ச்சியுடன் தான் உதவுகின்றனர். ஆனால், கொடுப்போர் பெறுவோர் ஆகிய இருசாராரிடையேயும் உள்ள தொடர்புறவே அவற்றின் பயனில் சிறிது மாறுபாடு உண்டுபண்ணுகிறது. இது காரணமாகவே, “உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து” (குறள். 105) எனக் கூறினர் ஒழுக்க நூலான்ற செந்நாப்புலவர். காலமறிந்து, பயனறிந்து இடமறிந்து செய்யப்படும் உதவி தினைத் துணையாயினும் பனைத் துணையாகப் ‘பயன் தெரிவா’ரால் கொள்ளப்படுதல், இவ்வகையிலேயே என்பதும் காண்க. புலனுகர்ச்சியையே வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவன், வரையிறந்து உண்டு குடித்து இன்பம் துய்ப்பவனா கின்றான். உண்ணும் உணவும், பருகுநீரும் வாழ்வுக்கு வகையெனக் கொள்ளாது ஊணுக்கும், குடிக்கும் வாழ்வு ஒருவகை, எனக் கொள்கின்றனர். இப் பேரூணரும், பெருங்குடியரும் இவர்கள் முதலில் உலகுக்குச் சுமை ஆகி, பின் தமக்குத் தாமே சுமையா கின்றனர். உடல் நலமிழந்தும், இளமையில் முதுமை எய்தியும் வாழ்வின் இடைப்போதிலிருந்தும் இவர்கள் கழிவது கண்டும், இவர்கள் வழியில் மக்கள் செல்ல நினைத்தல் வியப்புடைய தேயாகும். இத்தகையோருள் பலர் தாம் உழையாது உண்பதால் தம் உணவுக்கே தாம் தகுதியுடையவர் அல்லர் என்பதை மறந்து, தம் மீதூண் விருப்பிற்காக, தம் பல்சுவையுண்டிக்காக, மற்றையோரைப் பின்னும் ஏவலாளராகவும், ஏவுவிப்போராகவும் கொண்டு உழைக்கச் செய்து உண்கின்றனர். தனி மனிதர் உயர்வு தாழ்வு பேணும் இக்கால உலகில் இவர்கள் சிலகால மேனும் தனி மனிதராக உயிர்பேண முடிகிறதாயினும் இயற்கை இத்தகைய தொரு மரபையும், நாளடைவில் அம்மரபு பேணும் வகுப்பையும் இனத்தையும், அழித்தல் ஒருதலை. பொருளீட்டுதலே குறிக்கோளாகக் கொண்டு வாணிக உலகை ஆட்டிப்படைத்த பினீசியரும், கார்த்தஜீயரும், வெனீசியரும் அழிந்ததும், வெற்றிநாடிப் போர் செய்து பேரரசாட்சி செய்து உரோமரும், கலைச்சுவை நாடி உண்டு உடுத்துப் பிறரை அடிமைகொண்ட கிரேக்கரும் அழிந்ததும் இம்மரபினரின் பெருக்க வளர்ச்சிக்கும் அவர்கள் உதவியதனால் என்பது மறக்கத்தக்கதன்று. “உழைத்து உண்க; உழைப்பவரைப் பேணி உண்க; உழைப்பவரை அடக்குமுறை செய்யாது உண்க; உழைப்பவரை அவமதியாது, அஃதாவது பயனழியாது உண்க,” இவையே எளிய உணவு பற்றி கட்டளைகள். “அருவருப்புக்கிடனற்ற, தன் உடல் நலமும், பிறர் உடல் நலமும் பேணத்தக்க, கூடுமானால் பொதுக் கலைப் பண்புக்கு உகந்த நல்லுடை உடுக்க,” இதுவே உடை பற்றிக் கூறத்தக்க பொது உரை. இக்காலத்தவர்க்குச் சிறப்பாக இன்னொருவரையும் உரியதாகிறது. “தன் நிலைக்கு ஒவ்வாத அல்லது மேற்பட்ட உணவு உடையில் நாட்டம் கொள்ளற்க,” இதன் பொருள், “உயர் உணவு, உயர் உடைகளை வெறுக்க,” என்பதன்று. இவை நன்றெனப்பட்டால் இவற்றிற்கான நிலையையடைந்து அதன் பின் இவற்றைக் கொள்வதில் கேடில்லை. ஆனால், தன் நிலைக்கு மேம்பட்ட நிலையையுடையவன் என்று காட்டுவதற்கான இன்றியமையாத தேவைகளைக் குறைத்துப் பகட்டுணவு ஆடையும் மேற்கொள்வது தற்கொலை அல்லது தற்பண்புக் கொலையாக முடியும். அதனால் கடன்பட்டுப் பின் தம் பகட்டும் இழந்து, அதில் நாட்டங்கொள்ளுமுன் இருந்த நிலையையும் இழந்தவர்கள் பலர். தம் நிலைக்கு மேம்பட்ட வாழ்வை நாடி அதற்கான வீண் செலவு செய்யும் வேறு சிலர், இத் தற்கொலையினின்றும் தப்புவதற்காகத் தகாத வஞ்சனை வாழ்வும் மேற்கொள்கின்றனர். இவை சிறு தீமைகளை விலக்கும் பெருந்தீமைகளாகத் தற்கொலையினின்று தப்பும் தற்பண்புக் கொலைகளாகவே அமைகின்றன. தற்கொலையினால் இறப்பது தனி உயிர் மட்டுமே. ஆனால், இத் தற்பண்புக் கொலையினால் அதற்கு இடந்தரும் மரபும் குடியும் இனமும் யாவும் ஒருங்கே கெடும்; ‘ஏழு பிறப்பும் கெடும்;’ ‘ஊருடன் கெடும்’ எனக் கூறிய கூற்றுகள் இத்தகைய பண்புக் கேடுகளைக் குறித்தவையே. அவை மேலீடாகப் பார்ப்பவர்கட்டு உயர்வு நவிற்சியணிகள் போலத் தோன்றினும், உள்ளூர நோக்கின் தன்மை நவிற்சியணிகளேயாகும். உழைப்பின்றி வாழும் இன்ப வாழ்வினரால் நாடும் மக்களுலகும் அடையும் கேடுகள் எண்ணில. சட்டங்கள் மூலமும் பழக்க வழக்கங்கள் மூலமும் நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பிறப்புக் காரணமான உயர் குடியினரும், சிறப்புக் காரணமாக உயர்குடி மரபினரும் படைத்துண்டு பண்ணப்படுகின்றனர். அவர்கள் சிறப்புக்காக, நல்வாழ்வுக்காகச் செலவு செய்யப்படும் பொருள் நாளடைவில் உழைப்பவர் தலையில் வரிகளாகவும், போதிய நல்வாய்ப்பின்மை, கல்வியின்மை நல்லுணவு உடை உறையுள்களின்மை ஆகிய தீங்குகளாகவும் வந்து விடிகின்றன. இன்னும் இவ்வகையினரிற் சற்று குறைபட்டவரும், அவர்கள் நிலையிலிருந்து சற்று வழுவியவருமே வாணிக உலகிலும் புகுந்து, வாணிகக்கழகப் பங்குகளிலும் பிற துறைகளிலும் சூதாட்டங்களைப் பெருக்கி, அதன் மூலம் பலரைக் கெடுத்துச் சிலரை உயர்த்தி மீண்டும் இழந்த உயர்பதவி பெற முயல்கின்றனர். இவற்றில் அழிந்த பல்லோர் உலகின் வாழ்க்கைப் பரப்பில் தென்படாது மூழ்கிச் செல்பவர் ஆகின்றனர். வெற்றிபெற்ற சிலரோ மீண்டும் அரசியலாதரவு பெற்றுப் பெருமக்களினம் சார்கின்றனர். வெற்றிபெறும் சிறுபான்மையோரைக் கண்டு மருட்சியுற்ற பொதுமக்கள் தீயில் விழும் புற்றீசல்கள் போல் இச்சூதாட்ட வகையில் தம் கையுறைச் சில் பொருள்களையும் கொண்டு கொட்டுகின்றனர். உழைப்பவர் உழைப்பை அழித்து, உழையாதவர்களை மேலும் ஊக்கி, நாட்டைக் கெடுக்கும் இத் தீய பழக்க வழக்கங்களுக்கு இன்னும் அரசியல் ஆக்கந்தருவது என்பது, நாட்டின் நீங்காக் களங்கமேயாகும். மீதூணை யாவரும் கண்டிப்பர்; பெருங்குடியையும் எவரும் கண்டிக்காதிரார். ஆனால் மட்டான உணவைப் போலவே, மட்டான குடியும் தீமையற்றதெனப் பலர் கொள்ளுவதுண்டு. குடியென்பது இங்கே நீர் அல்லது சூழ்நிலைத் தட்பவெப்பத்துக்கு, அல்லது உடல் நிலைக்கேற்ப வெந்நீரின் குடி எனக்கொள்ளப் பட்டால், தவறில்லை. சுவைமிக்க பால், மோர் போல உணவோடு உணவான குடிகளாயினும் தவறில்லை. ஆனால் இன்றைய நாகரிக உலகில் கள்ளும் கடுந்தேறலும் (செயனேல, நெநச, நவஉ) இன்தேறலும் (றiநே றாளைமல), பிற கொடிய குடிவகைகளும், சிறு வெறிக்குடிவகைகளும் (உடிககநந, வநய) இந்நீர்க் குடிகள் போதாமல் புகையிலை யூறல், சுருட்டு ஆகியவற்றின் புகைக்குடிகளும் இன்றியமையாப் பொருள்களாய் விட்டன. குடிவகைகளால் உடல் நலக்கேடு மட்டுமல்ல; பொருட் செலவும் பிறதேவைகளுக்கு மேற்பட்டதாய், அவற்றின் செலவையும் பயனையும் கெடுப்பதாயுள்ளது. பிற பொருள்களின் தேவை மிகுதிப்பட மிகுதிப்பட விலை குறைவதும், இவற்றில் மட்டும் தேவை மிகுதிப்படுந்தோறும் விலை மிகுவதும் பொருளியல் வரலாற்றுக் கண்கொண்டு நோக்கினால் தெளிவாகும். வாழ்க்கைக்கு இன்றியமையாப் பொருள்களல்லாத இவை இன்றியமையாப் பொருள்களானதும், இவற்றை விளைவிக்கும் நாட்டினர் இவற்றை வாணிக ஆதாயச் சரக்குகளாக்கிக் காப்பு வரியிட்டனர். பிறநாட்டு அரசியலாரும் இதனைப் பின்பற்றி ஆதாயம் பெற முனைந்தனர். இங்ஙனம் பிற பொருள்கள் எல்லாற்றிலும் மக்கள் தேவைக்கு உதவி செய்து நல்வாழ்வுக்கு அடிகோல உழைக்கும் அரசியல், இவ்வொரு துறையில் மட்டும் எப்படியோ மக்கள் நல்வாழ்க்கையைக் கெடுத்துத் தம் ஆதாயத்தைப் பெருக்க முனைந்துவிட்டது. அறிவுத் துறையாளரையும் இன்றைய ‘உழையா இன்ப வகுப்பினர்’ ஆட்டிப் படைக்கின்றனராதலால், இத் தீய வழக்கங்களுக்கு ஆதரவுரை தரப்பலர் முன்வந்து விடுகின்றனர். பழங்களைப் போலவே பழச்சாறும் இயற்கை தந்த வளம் என்றும், மனிதர் பயன்படுத்தவே அவையும் ஆண்டவனால் படைக்கப் பட்டன வென்றும், அவற்றை மட்டாக உண்டால் கேடில்லை என்றும் இத்தகையோர் கூறுகின்றனர்! இந்த நெறியே ஆராய்வதனாலும், இவை விளையும் நாடுகளுக்கே இவை பயன்பட்டிருக்க வேண்டும்; ஆனால், இன்று இவை ஒரு சில நாடுகளில் மட்டும் பயிராகிப் பிற பல நாடுகளுக்கும் விற்கப்படுகின்றன. பிரிட்டனில் இவை பெருக்கமாக விளைபவையல்ல. விளையும் நாடுகளிலும் இவை வணிக நோக்கத்துடனேயே விளைவிக்ப்படுவதால், பிற நற்பயிர்களை அழித்தே பெருகுகின்றன. வெறிக்குடிகளைக் கண்டிப்பவரும் சிறுவெறிக் குடிகளையும், புகையிலையையும் கண்டிப்பதில்லை. எனவே, இவை வெறிக் குடிகளை விடப் பரந்து வழங்கிக் காற்றைப் போல, நீரைப் போல் இன்றியமையாத பழக்கங்களாகி வருகின்றன. பெருந் தீமைகளளவு இச்சிறு தீய பழக்கங்கள் தனிமனிதனைக் கெடுப்பதில்லை என்பது உண்மையே. ஆனால், தடுப்பாரின்றி, ஊக்குவார் பலராக வளர்வதனால், இவை மக்கள் இனப்பண்பின் வேர் முதலையே நச்சுப்படுத்தி, நாளடைவில் மனித நாகரிகத்தையே அழிக்கக்கூடியவை ஆகின்றன. இதுவே நாகரிகமாயின் தற்கொலையும் ஒரு நாகரிகப் பண்பு எனக் கூறுதல் சாலும். இவற்றை ஒதுக்கி வாழ்பவர், இவற்றை ஒதுக்கத் தூண்டுபவர் இன்று இகழ்வே பெறக்கூடும் எனினும் நாளடைவில் உலகுக்கு பெருநன்மை செய்தவராவர் என்பதில் ஐயமில்லை. குடியொழிப்பு வகையிலும், மற்ற தீய பழக்கங்கள் வகையிலும் மாதருலகம் பலசமயம் சீர்திருத்தத்துக்கு நீக்க முடியாத முட்டுக்கட்டையாவதுண்டு. ஏனெனில், நன்மை தீமையில் முந்திக்கொள்பவர் ஆடவரேயாதலால், அவற்றைப் பேணுவதில் பெண்கள் எப்போதுமே தலைசிறந்தவராகி விடுகின்றனர். நல்ல காரியங்களில் இவற்றின் நிறைய பயனை நாம் எங்கும் காண்கிறோம். பெண்டிர் நாகரிகமற்றது எனக் கருதும் காரியத்தை எந்த ஆடவனும் செய்யத் துணிய மாட்டான். ஆடவர் சீற்றத்தினும் அவர்கள் நகைத்திறமும், முகக்கோட்டமும் அதனைப் பிஞ்சிலேயே கருக்கும் அனலாகின்றன. ஆயினும் தீய பண்புகளில் மக்களைச் சீர்திருத்த விரும்புபவர், இப் பெண்டிர் பண்பையும் எதிர்த்தல் தவறன்று. வேண்டுமானால், அவர்கள் மனங்குளிர ஒரு கோப்பை சிறு வெறிநீர் ஒப்புக்கு ஏற்று மிகுதியை விரும்பாதிருப்பதன் மூலம் அவர்கள் மனத்தை மாற்ற முடியும். “தீதெனக் கருதுகிறேன். எனினும் தங்களுக்காகச் சிறிது கொள்கிறேன்,” என்ற நயத்தக்க அன்பொழுக்கம் பெண்டிரின் முகக்கோட்டத்தையும் வெல்லுந் திறமுடையதாகும். இளைஞர் களிடையேயும், இளமங்கையர்களிடையேயும் சிறுவெறி வகைகளில் வெறுப்புப் பெருகினால், இன்றைய நாகரிக அருந்தகங்களின் பண்பும் மாறிவிடும். இன்றைய சிறு வெறி நீரகங்கள் (ஊயகள) யாவும் நறும்பாலகங்கள், இனிய நறு நீரகங்களாக மாறும். மேலும், இன்று புகை குடிக்கும் கை செண்டும், நறுமணச் செண்டும் ஏந்தும் கைகளாகும். வாணிகக்களச் சூதாட்டம் பல்லோரைக் கெடுத்து, ஒருவர் இருவர் பொருள் பெறும் ஆதாய நோக்குடையது. ஆனால், ஆதாய நோக்கம் கொண்டதாயினும், இன்பப் பொழுதுபோக்குக் கொண்டதாயினும் சூதாட்டம் எவருக்கும் உண்மையில் நன்மை செய்வதன்று. ஏனெனில், அதனால் பொருள் பெறுபவரும், பொருள் இழப்பவரும் பொருள் நோக்கம் இல்லாது பொழுது போக்காக அதில் ஈடுபடுபவரும் யாவருமே அதனால் தம் பண்பாட்டை இழப்பவராவர். நாகரிக மக்கள் என்று தம்மைப் பகட்டாகக் கூறிக்கொள்ளும் பலர், இத்துறையில் ஈடுபடுவதைப் பார்க்க, இக் கூற்றுப் பொருளற்றதென்று தோன்றக்கூடும். ஆனால், கூற்றை ஊன்றி நோக்கினால் இதன் உண்மை விளங்கும். இச்சூதாட்டங்கள் உழைப்பவர்களின் பொழுது போக்கு அல்ல. உழைப்பவர் அதில் ஈடுபட்டால், ஒன்று அழியவேண்டும்; அல்லது எங்ஙனமேனும் பொருள் பெற்று உழையாதவர் இனம் சாரவேண்டும். சூதாட்டப் பண்பாடு பரவுந்தோறும் உழைப்பவர் உழையாதவராகித் தீர வேண்டும்; உழைக்கும் இனம் ஒழிந்தும் தீர வேண்டும். இது மட்டுமன்று, உழையாமல் வரும் உயர்வுக்கும் பிறரைக் கெடுத்து உயரும் உயர்வுக்கும் சூதாட்டப்பழக்கம் மதிப்புத் தருகின்றது. உழைப்பவரை இழிவுபடுத்த இஃது உதவுகிறது. தவிர நாலுகாசு கொடுத்து விட்டு நாலாயிரம் பொன் பெறும் தகுதிக்கு ஏங்கி நிற்கும் அடிமைத் தனத்தையும் அலப்பையும், அதை அவாவும் கோழை மனப்பான்மையையும் இது வளர்க்கிறது. உலகின் நாகரிகத்தை வளர்க்கும் பண்புகள் இவை என்று எவரும் கூறமுடியாது. இன்றைய இன்ப நாகரிகத்துக்கு வேண்டிய பொருள்களை ஆக்கித்தரும் உழைப்பாளிகளையோ, அதற்கு வகை செய்யும் அறிஞர்களையோ, நல் இன்பப் பொழுது போக்கிற்கு உதவும் கலைஞர்களையோ கூட இச் சூதாட்டக் குழுவினரிடையே காண முடியாது என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. சூதாட்ட மனப்பான்மை உழைப்புத் திறத்தை மட்டுமன்றி, அறிவுத் திறத்தையும் கலைத்திறத்தையும் ஒருங்கே அழிப்பது. அறிவுத் துறையிலும் கலைத் துறையிலும் கூட இன்று சூதாட்டம் புகுந்து வருகிறதென்றாலும், அவை இருக்கும் அறிவுத் திறத்தையும் கலைத்திறத்தையும் மூடாக்காகக் கொண்டு சூதாடுபவையேயன்றி, அறிவு வளர்க்கும் அறிவுத் துறைகளோ கலைவளர்க்கும் கலைத் துறைகளோ ஆகமாட்டா. உண்மையில் அவை அறிவுத் துறையாளரையும், கலைத் துறையாளரையும் இன்ப வாழ்வினரின் சூதாட்டச் சூழலில் இழுத்து, அவர்களைப் பூண்டோடறுக்க முற்படும் வழிமுறைகளேயன்றி வேறல்ல. இன்றைய நாகரிகம் சூதாட்டத்தைத் தொடர்ந்து ஆதரிக்கு மானால், வருங்கால உலகம் பழைய விலங்கு நிலையைவிடக் கீழானநிலை யெய்திக் கெடும் என்று கூறலாம். ஒருவன் பண்பாட்டுக்கு அவன் குடிமையும் பெற்றோரும் கல்வியாசிரியரும் எவ்வளவு பொறுப்புடையவராவர். ஏனெனில், குடிமையையும் பெற்றோரையும் யாரும் தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லை. ஆசிரியரையும் ஓரளவுக்கு பெற்றோர் தேர்ந்தெடுக்கக் கூடுமேயன்றி சிறுவர் தேர்ந்தெடுப்பதில்லை. ஆகவே, சிறுமைப்போது எவ்வளவு நெகிழ்ச்சியுடையதாயினும் இவர்கள் தாக்குதலால் குழந்தையின் மனப்போக்கு முற்றிலும் உருவாய்விடுவதில்லை. சிறுவர் அல்லது இளைஞர் தம் தோழரைப் பெரும்பாலும் தாமே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனராதலால், அவர்கள் உள்ளப் பண்புகளின் வளர்ச்சி தளர்ச்சிகளுக்கு இத் தோழர்கள் பெரிதும் காரணமாகின்றனர். அவர்களின் உள்ளார்ந்த பண்புகளே அவர்கள் அத்தோழர்களைத் தேர்ந்தெடுக்க உதவினவாதலால், இத்தோழமை அவர்கள் உள்ளார்ந்த நற்பண்புகளையும், தீப்பண்புகளையும் அப்படியே வளர்க்க உதவுகின்றன. தோழமையின் இப்பெருஞ் சிறப்புணர்ந்த பெற்றோரும், ஆசிரியரும் அது வகையில் மிக்க கவனம் செலுத்துதல் இயல்பு. ஆனால், இளைஞரும் தம் தோழரைத் தேர்ந்தெடுப்பதில் முற்றிலுந் தன் உள்ளுணர்ச்சிக்கு ஆளாகிவிடாமல், அறிவையும் ஓரளவு பயன்படுத்த வேண்டும். கற்ற அறிவையும், பெற்றோர் ஆசிரியர் கற்பித்த அறிவையும் பயன்படுத்தி, எத்தகைய பண்புகளைய நாம் உயர்வுடையதாகக் கொள்கிறோமோ, அப்பண்புடையாளர்களின் தொடர்பையே நாம் மிகுதி அவாவுறவும், அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளவும் வேண்டும். சில சமயம் பெற்றோர் கொண்ட கோட்பாடுகளிலும், சில சமயம் ஆசிரியர் கோட்பாடுகளிலும், சமூகத்தின் கோட்பாடுகளிலும் கூட நீண்டநாள் தோய்வுற்ற தீங்குகள் காணப்படலாம். இவற்றையே சர் ஃபிரான்ஸிஸ் பேக்கன் ‘குடும்பத்தப் பெண்ணங்கள்’ (ஐனடிடள டிக வாந உயஎந) ‘ஊர்த் தப்பெண்ணங்கள்’ (னைடிடள டிக வாந அயசமநவ யீடயஉந) ‘மனித வகுப்பின் தப்பெண்ணங்கள்’ (ஐனடிள டிக வாந சயஉந) என்று வகுத்தனர். எனவே, ஓரளவு பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியவற்றின் வழியைப் பின்பற்றியபின் தத்தம் பகுத்தறிவையும் முழுதும் பின்பற்றி ஆராய்தல் வேண்டும். தோழமையைப் போலவே கல்வியிலும் நாம் அடையும் பயன், நம் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது. நாம் விரும்பிக் கற்கும் கல்வியே நம் உளத்தில் பதிந்து பண்படுத்தும் கல்வி ஆகும். கல்வி என்பது மக்கள் விலங்கு நிலையிலிருந்து இன்றைய நிலைவரை அடைந்துள்ள முன்னேற்றத்தின் விளைவாக ஏற்பட்ட அறிவுத் தொகுதிக்கான பயிற்சியே யாகும். இவற்றின் தொடக்க வளர்ச்சிப் பண்பாடுகள் விலங்குக்கும் மனிதனுக்கும் பொதுவான உணர்ச்சிப் பண்புகளாதலால், இவை எல்லார் உள்ளங்களிலும் இயற்கை விரும்பந் தூண்டுபவை. அறிவியற்றுறை களைவிடக் கலைகளும், கவிதையும், கதையும் மக்கள் மனதை எளிதாக இயக்குவதன் காரணம் இதுவே. ஆனால் நல்லகாலமாக, கலைகளில் உயர்ந்த கலைகள் மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன வாதலால், இவை இனிய மருந்துபோல், இன்பமேயன்றிப் பயனும் தருகின்றன. இதற்கு மாறாக அறிவியல்கள் உயர் பண்புடைய சிலருக்கன்றி ஆர்வந்தூண்டு தலரிது. மக்களின் ஆதாய நோக்குக்கு அறிவியல் பயன் பட்டிராவிடில், அவை இன்று பரந்திருக்கும் அளவுக்குக் கூட பரந்திருக்க முடியாது. இதற்குச் சான்று வேண்டுமானாலும், அறிவியலின் அறிவியலான கணக்கியலிலும் கலைசார் அறிவியலான இலக்கணத்திலும் இன்னும் பொதுவாக இளைஞர் கசப்பு நீங்கவில்லை என்பதை எடுத்துக் காட்டலாம். கணக்கியல் எல்லா இயலுக்கும் வாணிகத்துக்கும் அடிப்படையாதலால், பயன் கருதியவர் அதில் முனையாதிருப்ப தில்லை. அதுபோலவே இயல்கள் அனைத்திற்கும், கலைகளில் உயர் கலையாகிய இலக்கியத்துக்கும், வாழ்க்கைக் கலையாகிய மொழிக்கும் இலக்கணம் அடிப்படை இயலாயிருப்பதனால், அஃது இன்றியமையாது கற்கப்படவேண்டியதாகும். திருத்தமாக, தெளிவாகப் பேசவும் எழுதவும் தெரியாதவன் நாகரிகத்தின் புறத்தோற்றத்தைக்கூட எட்டுதல் அரிது. உயர்பணிப் பொறுப்புடைய பலரும், உழைப்பிலும் தன்மறுப்பிலும் மிக்க படைவீரர் போன்றவரும் அறிவுத் துறையிற் சிறந்த பலரும் எண்ணியதை உரைப்பதிலும், உரைப்பதை எழுதுவதிலும் இடர்ப்பாடுடையவராயிருப்பது காணலாம். உயர் துறைகளில், திறம்பட எண்ணுவதில்கூட இலக்கண இலக்கிய அறிவும், மொழி அறிவும் மிகவும் இன்றியமையாதவை. ஏனெனில், மனித நாகரிகத்தின் உயர்தரக் கருத்துக்கள், கலை அறிவியற் கருத்துக்கள் யாவும் நாகரிகமொழிகளில் உட்கூறாகவே, உள் உறுப்பாகவே அமைந்து, பிறமொழிகளில் எளிதில் மொழி பெயர்க்கக்கூடாதவையாகவும், மொழி பெயர்த்தாலும் பயன் தரக் கூடாதவையாகவும் உள்ளன. மொழியுடன் மொழியாக, மொழியின் வளர்ச்சியுடன் வளர்ச்சியாக வளர்ந்த இவற்றை, அம் மொழியின் அமைப்பையும் அச் சொல் வரலாறுகளையும் உணர்ந்தாலன்றி, முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது. எனவே, நன்கு பேசுவதற்கும் எழுதுவதற்கும் மட்டுமின்றி, நன்கு சிந்திப்பதற்கும் இலக்கண இலக்கிய அறிவும், மொழியறிவும் இன்றியமையாதவை ஆகும். ஆங்கிலமொழியின் கலை, இயற்சொற்கள் பலவும், இலத்தீன், கிரேக்கம் முதலிய வழங்காமொழிச் சொற்களாய் அமைந்துவிட்டமை இவ்வகையில் ஒரு பெருத்த இடர்ப் பாடேயாகும். இவ்வழங்காமொழிச் சொற்களை யறிந்தன்றிப் பொதுமக்கள் அவற்றால் முழுப் பயனடையவும், அவற்றின் உள்ளார்ந்த பண்பில் தோயவும் முடிவதில்லை. ஆயினும், இலக்கணம் பயில்வர் அச்சொற் பொருள்களையும் ஆராய வேண்டுயவராதலால், அப்பண்புகளை ஓரளவு துணிய இலக்கியம் உதவும் என்பதில் ஐயமில்லை. 18 ஆம் நூற்றாண்டில் பிறமொழிச் சொல்லாட்சி ஆங்கிலத்தில் குன்றிவிட்டதனால், அதன் பிற்பட்ட வளர்ச்சி பெரும்பாலுந் தாய்மொழியடிப் படையிலேயே அமைந்து வருவதும் கவனிக்ககத்தக்கது. இலக்கணம் மொழியின் வழுக்களகற்றும்; இலக்கிய வழக்குகளறிவிக்கும்; பேசுவதைத் திருத்தமாகப் பேசுவதற்கும், எழுதுவதைத் திருத்தமாக எழுதுவதற்கும் இஃது அடிப்படை அறிவைத் தரவல்லது; ஆனால் திறம்படப் பேசுதல், எழுதுதல் ஆகிய மொழித் திறங்களுக்கு இவை போதா. சட்டியிலுள்ளது தான் அகப்பையில் வருமாதலால், மனதில் கருத்தும் சிந்தனையும் இருந்தாலன்றிப், பேச்சிலும் எழுத்திலும் அவை மிளிரமாட்டா. இவ்விரண்டையும் தருபவை நூல்களே, இலக்கிய நூல்கள் இவற்றில் முதல் தரமானவை. இவை கருத்துக்களைத் தருவதுடன் வாழ்க்கையையும் நாட்டுப் பண்பையும் அப்படியே படம் பிடிக்கின்றன. கலையுணர்ச்சியுடனும் அழகுணர்ச்சியுடனும் இன்ப உணர்ச்சியுடனும் தோய்ந்து அறிவு மருந்தையும் உணவையும் இனிய சிற்றுண்டியாக்கி இவை தருகின்றன. இவற்றால், அறிவு நூலைப் படித்துணரத்தக்க உளப் பண்பு வளர்ச்சியடைகிறது. படிப்பதால் அறிவுப் பண்பு வளர்கிறது; சொற்பொருள் விளங்குகிறது; ஓரளவு சொல் திறமும் ஏற்படுகிறது. ஆனால் சொற்களைக் கையாண்டன்நிச் சொற்றிறம் வளர்வதில்லை. ஆகவே பேச்சையும் எழுத்தையும் வளப்படுத்தும் ஒரே சிறந்த வழி, பேசி எழுதிப் பழகுவதுதான். இறைத்த கிணரே ஊறுவதுபோல், பேசி எழுதிப் பழகுபவனுக்கே நூல் ஒப்பற்ற பயனுடையதாகும். படிக்கும்போதும் கேட்கும்போதும் செயலற்ற நிலையில் இருக்கும் அறிவு பேசும்போதும் எழுதும்போதும் செயல் நிலையடைந்து சொற்களின் பண்பில் கருத்துச் செலுத்துகின்றது. படிப்பவரெல்லாம் பேசவும் எழுதவும் முடியாததன் காரணம் இதுவே. அதேசமயம் கல்வியும் வாசிப்புமில்லாமல், ஒருவன் தற்கால இலக்கிய வளர்ச்சியிலோ அறிவியல் வளர்ச்சியிலோ இடம்பெறுதல் அரிது. ஏனெனில், அவன் இவ்வகையில் நாகரிகத் தொடக்ககால மனிதன் நிலையிலேயே பெரிதும் இருக்கக் கூடியவனாகிறான். எனவே இலக்கிய இலக்கண மொழியறிவும், பேச்சுப்பழக்கமும், எழுத்துப் பழக்கமும் சேர்ந்தே மனித நாகரிகத்தின் அடிப்படைப் பண்பாளராக ஒருவரை ஆக்க வல்லது. பேச்சுப் பழக்கம், எழுத்துப் பழக்கம் ஆகியவற்றின் இன்றியமையாக் கலைப் பண்பாட்டின் காரணமாகவே, “சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்” (ஒளவை : தனிப்பாடல்) என்ற மூதுரை எழுந்துள்ளது. வாழ்க்கையில் முன்னேற விரும்பும் இளைஞன், இவற்றுடன் வாழ்க்கையைத் திட்டப்படுத்தும் வழக்கத்தையும் மேற் கொள்ளல் வேண்டும். இதற்கு மிகச் சிறந்த வழி நாட்குறிப் பெழுதும் முறையே. நாட்குறிப்பில் ஒருவன் தான் செய் வதனைத்தையும் எண்ணுவதனைத்தையும் குறிக்க வேண்டு மென்பதில்லை. அது முடிவதுமன்று; பயனுமற்றது; தன் வாழ்க்கைத் திட்டத்தை நோக்கமாகக் கொண்டு அதற்கான நிலையான கனாக்களையும், அவற்றின் நடைமுறையில் ஏற்படும் அனுபவங்களையும் குறித்தல் கட்டாயம் நலந்தரும். ஏனெனில், இத்திட்டத்தின் வெற்றிக்கு இதுவே பயன் அளிக்கும். தவிர, வழக்கத்துக்கு மாறுபட்ட சிறு செய்திகள் நாட்போக்கில் சிறப்படைந்து விடக்கூடும். நாட்குறிப்பு இவற்றைத் தொகுத்துணர உதவும் தனித்துறைப் பணியாளர் பலர் நாட்குறிப்பின் மூலம் தம் பணியில் அரும்பெரு வெற்றிகள் கண்டுள்ளனர். நாட்குறிப்பைப் போன்ற மற்றொன்று வரவு செலவுக் கணக்குக் குறிப்பு. இங்கும் திட்டம் வகுத்து அதில் மாறி வருவனவே சிறப்பாகக் குறிக்கப்படல் பயனுடையது. தீய செலவுகள், பயனில் செலவுகள் ஆகியவற்றைக் குறைக்கவும், நற்பயன் தரும் செலவுகளை எடுத்துக்காட்டி ஊக்கவும் இது பெரிதும் உதவும். வாழ்க்கைக்கான வருவாய்த் தொழிலுடன் வாழ்க்கை மேம்பாடு கருதிய ஒரு கலைத்தொழிலும், ஓய்வுகாலப் பொழுதுபோக்கிற்குப் பெரிதும் பயன்படுவது. வாழ்க்கைத் தொழிலில் விருப்பு மிகுதியில்லாமல் போகிறவர்களுக்குக் கூட, இஃது அத்தொழிலின் வெறுப்பைக் குறைக்கும். ஓய்வுக் காலத்தினை இன்பக் காலமாக மாற்றி இது வாழ்க்கை இன்பத்தினையும், ஓய்வின் பயனையும் பெருக்குகிறது. இக்கலைத் தொழில் ஒருவன் விருப்பத்தைப் பொறுத்த தாயினும், இதன் உயர்வும் வெற்றியும் அவன் வாழ்க்கையை உயர்த்துவதில் வாழ்க்கைத் தொழிலினும் சிறந்தது. பலர் கலைத் தொழிலில் வருவாய்பெற்று, அதனையே முழுவாழ்க்கைத் தொழிலாக்கி சிறப்படைந்துள்ளனர். உலகின் தலைசிறந்த அறிஞரும், கலைஞருள் பலரும் தம் விருப்பத் தொழிலையே வாழ்க்கைத் தொழிலாக்கியவராவர். வாழ்க்கையின் வெற்றிக்கான திறவுகோல், “தனி மனிதன் வாழ்க்கை முற்றிலுந் தனிமனிதனைச் சார்ந்ததல்ல” என்பதை அறிவதேயாகும். தனிமனிதன் சமூகத்தின் ஓர் உறுப்பு மட்டுமே. அவன் வாழ்வு தாழ்வுகள் அச்சமூகத்தின் வாழ்வு தாழ்வுகளுடன் நீக்கமறப் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே, தன் உயர்வுக்கு மட்டும் ஒருவன் உழைத்தால், அவன் அதில் ஓரளவு வெற்றிகாண முடியும். அவ் வெற்றியும் நிலைத்து நிற்காது, சமூகம் அவனைப் பின்பற்றி அவன் பண்புகளைப் பேணாது; அவன் புகழையும் வளர்க்காது. அவன் உயர் சமூக நலனுக்குப் பயன்படும் அளவிலேயே, சமூகம் அவன் பண்பு பேணி வளர்த்துத் தானும் வளரும். சமூகத்தில் அவன் அடையும் மதிப்பு, நாளடைவில் அவன் உழைப்பின் பண்பைச் சமூகம் மேற்கொள்வதனாலேயே அமையும். அவன் தன்னலத்தை மற்றும் மறுத்துப் பொது நலம் பேணுபவனாயிருந்தால், சமூகம் அவனால் உயர்ந்து, அவனுக்கும் அவன் பெயருக்கும் அழியாப் புகழை உண்டுபண்ணும். இச்சமூக உயர்வை நோக்கமாகக் கொண்டவர்களே விலங்குநிலை வாழ்விலிருந்து உயர்ந்து, மனித நிலையில் வாழ்பவர் ஆவர். இப் பண்பில் ஒவ்வோர் இளைஞனும் இளமங்கையும் தோய்ந்துள்ள நாடே உலக நாகரிகத்தில் உச்சியில் நிற்கும் நாடு ஆகும். அதன் மொழி, நாகரிகம், பண்பாடு ஆகியவை உலகில் சிறத்தல் ஒரு தலை. 3. இளைஞருக்கான அறிவுரைகள் வாழ்க்கையின் வாயிற்படி என்று நாம் குறித்த காலத்திற்கும் இளமைக்கும் மிக தொலைவில்லை. அது போலவே இளமைக்கும், வருகிற பிரிவில் கூறவிருக்கும் காதலுக்குரிய இளமைக்கும் நெடுந்தொலை கிடையாது. உண்மையில் அவையாவும் இளமையின் முத்திறக் கூறுகளே, வாழ்க்கையின் சிறுமைப் போதில் எத்தகைய பொறுப்பும் இல்லாததனால், ஒழுக்க நூலார் அது பற்றி மிகுதி கூறவேண்டுவதில்லை. பிற்பகுதியிலோ வாழ்க்கை ஒரு நிலைப்பட்டு விடுகிறது; சிக்கல்கள் அதில் மிகுதியாயிருப்பதில்லை. சிக்கல்கள் ஒரு சில இருப்பவையும் தனிமனிதரைப் பற்றியவையல்ல; குடும்பம், ஊர், நாடு, உலகம் ஆகியவற்றைப் பற்றியவை. இவை இரண்டினுக்கும் இடைப்பட்ட இளமைக்காலமே வாழ்க்கை முழுமைக்கும் தனி மனிதன் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள உதவும் காலம் ஆகும். முன் அனுபவமின்மை, வகை துறையின்மை, புது அனுபவ மயக்கம் ஆகிய மூன்று இடைஞ்சல்களால் இப்பருவம் இடர்ப்படுகின்றது. முதல் இடைஞ்சல் பற்றியே வாழ்க்கையின் வாயிற்படி என்ற முன் பிரிவில் சில விளக்கங்கள் தரப்பட்டன. மூன்றாவது இடைஞ்சல் பற்றி வரும் பிரிவிற் கூறுவோம். இப்பிரிவில் வாழ்க்கைக்கு இன்றியமையா வகைதுறையாகிய பொருள் செயல்வகை பற்றிக் கூறுவோம். வாழ்க்கையில் இன்பமும் அறமும் அஃதாவது குடும்ப வாழ்வும் சமூகத் தொண்டும் பொருளையே அடிப்படையாகக் கொண்டவை. பொருளே ஒருவருக்குத் தன்மதிப்பும் சமூகத்தில் இடமும் தரவல்லது. பொருளில்லாமலோ, பொருள் செயல் வகையுணராமலோ ஒருவன் மற்ற இரு கூறுகளிலும் எவ்வளவு திறமுடையவனாயினும், உலகில் அவன் ஒளிபெற மாட்டான். வடுவிலா வையத்து மன்னிய மூன்றில், நடவண தெய்த இருதலையும் எய்தும்,” (நாலடியார் 114) என அறம் பொருள் இன்பம் ஆகியவற்றிடையே பொருளே மற்ற இரண்டிற்கும் அடிப்படையானதென்று அறவோர் வகுத்தது இதனாலேயே ஆகும். பொருளில்லாமலோ, அல்லது பெருள் இடப்பாட்டுக் கிடையிலோ உலகில் பலர் பல அருஞ்செயல்கள் செய்துள்ளனர் என்பதை நாம் இங்கே மறக்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. “பொருள் பெரிதன்று” அன்பே பெரிது; பொருள் பெரிதன்று அறிவே பெரிது,” என்று பல ஒழுக்க நூலார் வற்புறுத்தி கூறியிருப்பதையும் நாம் இங்கே புறக்கணிக்கவில்லை. உலகில் பல அறிஞர், கலைஞர், கவிஞர், சமூகத் தொண்டர், நாட்டுத் தொண்டர், உலகத்தொண்டர் ஆகியவர்கள் தம் வாழ்க்கை வருவாய் பற்றிய எண்ணம் சிறிதுமில்லாமல், தத்தம் துறையில் உழைத்துப் பீடு பெற்றுள்ளனர். பலர் சொல்லோணா வறுமை துன்பத்திடையே உலகோர் போற்றும் உயர்நிலை அடைந்துள்ளனர். இத்தகையோர் வரலாறுகளைப் படிக்கும் இளைஞர் பலர் பொருளினும் கலை அல்லது அறிவு அல்லது தொண்டு சிறப்புடையது என்ற எண்ணங் கொள்வது இயல்பே. இது தவறுமன்று; ஆனால், பல இளைஞர் எண்ணம் இம் மதிப்புடன் நிற்பதில்லை. இப்பெருஞ் செயலாளர்களைப் பின்பற்றுவதாக எண்ணி அவர்கள் பொருளிலும் பொருள் சார்ந்த வாழ்விலும் அக்கரை செலுத்தாது, வலிய அவல வாழ்வை மேற்கொண்டு விடுகின்றனர். எனவே, ஒழுக்க நூலாரையே மயக்கும் இப்பொன் பூச்சிட்ட மயக்கத்திற்கு ஒரு விளக்கமும், அதனைப் பின்பற்றும் இளைஞர்கட்கு ஓர் எச்சரிக்கையும் தரவேண்டுவது இன்றியமையாததாகிறது. ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் இரண்டு பெருங் கூறுகள் உண்டு. ஒன்று தனிமனிதர் வாழ்வு; மற்றது பொது வாழ்வு. இவற்றுள் பெரும்பாலான உலக மக்கள் பொதுவாழ்வை மறந்து, தனி வாழ்விலேயே முழுதும் கருத்துச் செலுத்தி விடுகின்றனர். இக்குறைபாடு சிறுமையுடையது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இம்மனப்பான்மையே விலங்கு மனப்பான்மை யாகும். உண்மையில் விலங்குகளில்கூட உயர்தர விலங்குகளிடம் இம்மனப் பான்மை குறைந்து வருகிறது என்று கூறலாம். விடாய்தீரத் தான் நீரைக் குடிக்காது, பெடையைக் குடிக்க விடும் மானையும் யானையையும் நல்லிசைப் புலவர் பாடல்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. பெரியார் பலரின் வாழ்க்கை இதற்கு நேர்மாறாக,தெய்வீக அஃதாவது நல்லருள் மனப்பான்மையைக் காட்டுகிறது. அவர்கள் தனிமனிதர் வாழ்வை முற்றிலும் புறக்கணித்துப் பொது வாழ்வுக்கே தம் உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்படைக்கின்றனர். இதனையே அறநூலார், “அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” (குறள். 72) எனக் குறித்தனர். இவ்வுயர் நெறியைத் தனிமனிதர் பின்பற்றின் உலகம் மேம்பாடையும் என்றெண்ணியதாலேயே, ஒழுக்க நூலார் இதனை உயர்க்குறிக்கோளாக எடுத்துக்காட்டுகின்றனர். ஆயினும் தம் வாழ்வின் தனிநலம் விடுத்து மக்கள் பொது நலம் பேணும் இப்பெரியார், தம் கடமையில் ஒரு செம்பாதியையே ஆற்றினர் என்று எடுத்துக்காட்டுதல் தவறாகாது. மறுபாதியை அவர்கள் பொது மக்கள் கடனாகவே விட்டுச் சென்றனர். மக்கள் அக்கடனைச் சரிவர அறிந்து ஆற்றாவிடின், வரும் கேடு அப் பெரியார் தனி நலனுக்கு அன்று, பொது நலனுக்கே என்பதும் குறிப்பிடக்கத்தது. இன்னொரு வகையில் கூறுவதானால், கலைக்காக வறுமை யிடையேயும் உயர் பணியாற்றிய கலைஞனுக்குச் சமூகம் தனி நலனும் தந்திருக்குமானால், அவன் கலை இன்னும் உயர்ந் திருக்குமன்றோ? கலைஞர் தனி வாழ்வு செம்மைப்பட்டிருக்கு மானால், வெற்றிகண்ட சிலராகிய பெரியாரின் வெற்றியும் பெருக்கடைந்திருக்கும். வெற்றி காணாது மங்கிமாண்ட பலருடைய தோல்விகளும் வெற்றிகளாயிருக்கும் மன்றோ? தன்னலம் பேணும் பெரும்பாலாரடங்கிய சமூகம், அதற்காக வாழும் இத்தகையோர், தம் வாழ்வில் வறுமையுறும்படி செய்து, தன்னையே எத்துணை வறுமைப்படுத்திக் கொள்கிறது. உலகத்தில் பெரும்பாலார் இவ் விலங்கியல் தன்மையினரான அறிவிலாத் தன்னல வாழ்வினரேயாதலால், உலக நலத்தில் அக்கரை கொண்டுள்ள பெரியார், சிறியார் யாவரும் முன்பிலும் பொதுநலத்துக்கே உழைத்தல் அப்பொதுநல வகையிலேயே குறைபட்ட செயலாகும். பெருந்தன்மை என்பது பெரும் பயன் தரும் தன்மையாகும். தன்னலம் பேணுவதினும் பொதுநலம் பேணுதல் எவ்வளவு உயர்வோ, அல்லது எவ்வளவு அறிவுடைய செயலோ; அவ்வளவும் பொதுநலம் மட்டும் பேணுவதிலும், தன்னலம் பேணிப் பொதுநலம் பேணுதல் உயர்வும் அறிவும் உடையதே யாகும். பெரியார் பலரைப் போலவே பெரும்பாலும் பிறர் நலனுக்குத் துரும்பாயுழைக்கும் பெண்டிரைப் பற்றிக் கூறுகையில் செந்தாப்புலவர், “தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (குறள். 56) எனக் கூறியதின் உட்கொள் இதுவே. எல்லாரும் உரிய குறிக்கோளுடன் தான் இருக்க வேண்டும். ஆனால், எல்லோருமே செய்கரிய செய்பவராய்த் திகழவேண்டும் என்பதில்லை திகழ்வர் என்று கூறவும் முடியாது. இந்நிலையில் அச்செயற்கரிய செய்த பெரியாரிடம் உள்ள ஒரு குறைபாட்டை, அஃது எவ்வளவு சிறியதாயினும், அவன் ஏற்றுக்கொள்ளுதல் தவறு என்பது கூறாமலே விளங்கும். ஒருவர் குறைபாட்டைப் பின்பற்றுவதனால் நிறைவைப் பின்பற்றியவர் ஆகமாட்டோம். குறைபாட்டைப் பின்பற்றுதல் எளிது; நிறைவைப் பின்பற்றுதல் அரிது. இந்நிலையில் நிறைவைப் பின்பற்றுவது எவ்வளவு முதன்மையோ, அவ்வளவு குறைபாட்டைப் பின்பற்றா திருப்பதும் முதன்மையே யாகும். ஏனெனில் நிறைவைப் பின்பற்ற முடியாதவிடத்தில், குறைபாட்டை மட்டும் பின்பற்றி விட்டால், அது பெருங்குற்ற மாய்விடும். மேலும், பொருளில் அக்கரையற்றவனாயிருப்பதனால் ஏற்படும் குறைபாடு இது மட்டுமன்று. பொருள் தேடுவதன் மூலமே ஒருவன் சமூகத்தையும் வாழ்க்கையையும் மக்கள் இயல்பையும் நன்கு உணர்ந்துகொள்ள முடியும். தனிமனிதன் தன்னைத் திருத்திக்கொள்வதைவிட, உலகம் தன்னைத் திருத்திக்கொள்வது எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். பெரியார் வாழ்க்கையிலீடுபட்டு, அவர்கள் பகட்டான உயர் குறிக்கோளில் ஈடுபட்டு பல இடங்களில் அவர்கள் சிறப்புகளை பெற்றும், பெறாதும் உள்ள இளைஞர்கள், உலகின் இயல்பறியாது வாழ்க்கையில் குதித்து, அதன்பின் தம் தொல்லைகளுக்கு உலகைக் குறைகூறத் தொடங்கிவிடுகின்றனர். உலகம் பெரிதும் குறைபாடு உடையதே; ஆனால் தனி மனிதன் தன்னை உலகுக்குத்தக்கபடி திருத்திக்கொள்ள முடியாதபோது, உலகம் எப்படித் தனி மனிதனுக்குக்காக, அதுவும் பலருள் ஒருவனுக்காக, தன்னை திருத்திக் கொள்ள முடியும்? இவை மட்டுமன்று; பொருள் தேடுவதனால் ஒருவன் தற்பயிற்சியும், தற்சார்பும், தற்பண்பும் பெறுகிறான். பொது நலத்தொண்டு, உயர் குறிக்கோள் ஆகியவை அவன் கையில் ஒரு படையாக உதவுகிறதென்றால், அவன் தற்சார்பும் தற்பயிற்சியும் அப்படைக்கலத்தைத் தாங்கும் கையாகவும் கைத்திறமாகவும் பயன் அளிக்கின்றன. இத் தற்சார்பும் தற்பயிற்சியும் இல்லையானால், அவன் உயர் குறிக்கோள் கைப்பயிற்சியும் கையும் அற்றவனிடமுள்ள வாள்போல் பயனற்றதாகவும் வைத்திருப்பவனுக்கு மனக்கொதிப்பையும் ஏமாற்றத்தையும் பலசமயம் கேட்டையும் உண்டுபண்ணுவதாகவும் முடியும். உலகில் பெரும்பாலார் தன்னல வாழ்வுடையவர் மட்டுமல்ல. அத்தன்னலவாழ்விலும் வெற்றி பெறாதவர்கள், அஃதாவது வறுமையில் வாடுபவர்கள். வறுமையில் வாடும் கலைஞர்கள், அறிஞர்கள் தம் வறுமைக்குத் தாம் பொறுப் பாளிகள் அல்லவென்று நினைப்பதுபோலவே, அவர்களும் கருதுகிறார்கள். அவர்கள் மனபான்மையுடன் ஒத்துப் பார்த்தால் அது தவறுமன்று. ஏனெனில் பெரியார் தம் நலன் காணாது பிறர் நலத்திற்கு உழைக்கக்கூடும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அறியவும் முடியாது; ஒருவேளை அறிந்தாலும், தோல்வியில் வாடும் அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்கக்கூட நேரமும் இடமும் இராது. இது பற்றி அவர்கள் எண்ணினாலும், “அறிவும் கலையும் உடைய இவர்களே வாழ்க்கைக்கு வகை காண முடியவில்லை யானால், நாம் எம்மட்டு? நாம் என்ன செய்யக்கூடும்?” என்று தான் அவர்கள் கூறிக்கொள்வர். வாழ்க்கையில் வெற்றிபெற்ற தன்னலக்காரராகிய செல்வரோ வறிஞர், அறிஞர் ஆகிய இருவர் பற்றியும் அக்கரை காட்ட மாட்டார்கள். பெரும்பாலும் செல்வர் ஆதிக்கத்திலேயே இருக்கும் அரசியல்களும், செல்வர் வகுத்த தன்னல அடிப்படையிலிருந்து தம்மை எளிதில் விடுவித்துக் கொள்ள முடியாது. அரசியல்கள் மட்டுமின்றிச் சமூகப் பழக்க வழக்கங்களும், சமயங்களும், அறிவு, கலைத் துறைகளுங்கூடப் பெரும்பாலும் செல்வர் ஆதிக்கத்தின் சாயலிற்றோய்ந்துள்ளன வாகவே இருத்தல் காணலாம். ஆகவே, தன்னையும் பேணி உலகையும் பேணும் பொறுப்பு முற்றிலும் உலகின் அடிப்படை உண்மைகாணும் மெய்யறிஞர்களைச் சார்ந்ததேயாகும். வாழ்க்கையில் வெற்றி பெறாதவறியோர் தன்னலமுடைய வராயினும், தம் வறுமையின் காரணம் அறியாத நல்லோரேயாவர். தம் வறுமை சமூகத்தின் வறுமை என்பதையும், தமக்கு மட்டுமன்றிச் சமூகத்திற்கும் அனைவரும் உழைத்தாலன்றி பெரும்பாலோர் வறுமை ஒழியாதென்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். வாழ்க்கையின் வாயிற்படி கடந்து, வாழ்க்கையிற்புகும் ஒவ்வோர் இளைஞரும் மனதிற் பதித்துக்கொள்ள வேண்டியது இதுவே. தன்னலம் நீங்கிய பொதுநலம் என்றும் ஒன்று இல்லை. பொதுநலம் நீங்கிய தன்னலம் என்றும் ஒன்று இல்லை. சமூகத்திலிருந்து ஒதுங்கித் தன்னலம் பேணுபவன் பொது நலனை அழித்துச் சில நாள் வாழலாம்; ஆனால், அவனால் பொதுநலனும் அழியும்; நாளடைவில் அவன் தன்னலனும் அழியும். தன்னலம் விடுத்துப் பொதுநலனுக்கு வாழ்பவன் அப்பொது நலத்துக்கு ஓரளவு உதவலாம். ஆனால் அவன் சுவரை யழித்துச்சித்திரம் வரைபவன் போல, நிறையபயன் தர மாட்டான். பொதுநலத்துக்கு கந்ததன்னலம் ஒன்றே இளைஞர் முன் இருக்க வேண்டிய குறிக்கோள் தனக்குப் பொருளீட்டித் தான் வாழ்ந்து பிறரும் வாழ உழைப்பதனாலேயே இது நடைபெறக்கூடும். “பிறர்க்கென வாழ்தல் பெரியார் தன்மை; தனக்கென வாழ்தல் பொதுப்படையான மனிதர் தன்மை,” எனதான் ஒழுக்க நூல் பாராட்டும் பலரும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இந்த உண்மை நிலையை உற்று நோக்கினால், நாகரிக சமூகத்தில் ஒவ்வொருவன் இயல்பும் பிறர்க்கென உழைப்பது தான். அவனிடம் இருக்க வேண்டிய தன்னலம், அப்பொதுநல உழைப்புக்கு அவனைத் தகுதியாக்கும் தன்னலம் மட்டுமே. பொருள் ஈட்டுவதற்கான வழிகள் பல நம் கண்முன் காணப்படுகின்றன. அவற்றுள் உழைப்பில்லாத வழி சமூக நலனை நாளடைவில் அழிக்கும் வகையேயாகும். ஆட்சித் துறைப் பணிகளும், செல்வர் அலுவலகப் பணிகளும் அறிவுத் துறையினர் கருத்தைப் பெரிதும் கவர்பவை. ஆனால், இவை சமூக நலனுக்கு ஒரு சிறிதே பயன்படத்தக்கவை. ஏனெனில், இவை பெரும்பாலும் தன்னல நோக்குமட்டும் உடையவர்களாலேயே நடத்தப்படு கின்றன. ஆகவேதான், இக்கால அறிஞர் அறிவுழைப்புப் பெரும்பாலும் நேரடியாகச் சமூகத்திற்கோ, மக்களுக்கோ பயன்தருவதில்லை. மக்கள் நலனுக்கு மாறான இவ்வுழைப்புச் சிறிதுகாலப் பகட்டும் சிறிது காலத் தன்னல வாழ்வும் தரக்கூடுமாயினும், சமூக வாழ்வை உயர்த்தவோ, மேன்மேலும் சமூகத்தின் ஆதரவுடன் பெருகவோ வழிவகுக்கமாட்டாது. ஆகவே, ஒவ்வோர் இளைஞனும் பொருளீட்டுவதில் அக்கரை கொள்வதுடன், அதற்கான ஓர் உழைப்பையும் மேற்கொள்வது அவசியம். அவ்வுழைப்பு ஓரளவாவது உடலுழைப்பாயி ருந்தால் நலம் எப்படியும் அஃது உடலுழைப்பாளிகளின் நலனைக் கருத்திற் கொண்ட தாயிருத்தல் வேண்டும். உடலுழைப் பாளரின் வளர்ச்சியோ நாட்டுவளர்ச்சியாதலால், அதற்கு உதவாத செல்வர் செல்வமும், அதற்கு உதவாத அறிஞர் அறிவும், அதற்கு உதவாத கலைஞர் கலையும் அவர்கள் உழைப்பின் பயனை அழிக்கும் அழிவுச் செல்வமும் அழிவறிவும், அழிவுக் கலையுமேயாகும். உழைப்பினாலும், உழைப்பினை மதிப்பதனாலும் ஏற்படும் நலன்கள் பல. உழைப்பவன் உடல் நலமுடையவனாயிருப்பதுடன், எவர் இடையீடும் இல்லாமல் இயற்கையை அண்டியே வாழ்பவனாகிறான். தன்னல வாழ்வு வாழும் இன்னொருவனை அண்டி வாழும் அடிமைப்பண்பு அவனிடம் ஏற்படுவதில்லை. உழைப்பை மதிப்பவனோவெனில், அவனுடன் சமத்துவம் பேணுபவன் ஆகிறான். உலகில் உழைப்பவனே பெரும்பாலும் மிகத் தாழ்ந்தவனாயிருக்கிறான். தான் உழைப்பதனாலும், உழைப்பை மதிப்பதனாலும் ஒருவன்மனிதனை மனிதனாக மதிப்பவனாகிறான். செல்வம் தொகுத்துள்ளவரை அல்லது வருவாய் மிகுதியுடைவரைச் செல்வர் என்றும், செல்வம் தொகுக்காத வரை அல்லது வருவாய் குறைந்த வரை ஏழை என்றும் கூறுவது உலக வழக்காயிருக்கிறது. ஆனால், ஒழுக்க நூலார் உலக மக்களைச் செல்வர் என்றும், வறியோர் என்றும் வகுக்கும் முறை உலகியலார் முறையினின்றும், பெருளயலார் முறையினின்றும் வேறுபட்டது. வருவாய்க்குட்பட்டு வாழப் பழகியவர்களையும், செலவுக்குத் தக்க வருவாயைத் தாமே ஈட்ட முயல்பவர்களையும் அவர்கள் செல்வர் என்கின்றனர். வருவாய்க்கு மிஞ்சி செலவு செய்பவர் களையும், பிறர் உதவியை எதிர்நோக்கி மிகுதியாகச் செலவு செய்பவர்களையும் அவர்கள் வறியோர் என்று கூறுகிறார்கள் வேறு வகையில் கூறுவதானால், ஒழுக்க இயலார் குறிப்பிடும் செல்வர்கள், தற்சார்பும், தற்பண்பும் உடையவர்கள். அவர்கள் கருத்தில் பிறர் சார்புடையவரும், பிறரை எதிர்பார்த்து வாழ்பவருமே உண்மையில் வறியோர்! “உலகியலார் கணக்கில் நீ வறியவனாயினும் ஆகுக; செல்வனாயினும் ஆகுக. பொருளியலார் கணிப்பில் நீ வறிஞனாயினும் ஆகுக; செல்வனா யினும் ஆகுக. ஒழுக்க நூலார் குறித்த வறிஞனாகாமல் செல்வனாதல், உன் வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது உறுதி. மற்ற இரு துறைகளிலும் செல்வனாவது, ஒரு வேளை உன்னாற்கூடாமற் போகலாம். ஏனெனில் அது முற்றிலும் உன் செயலை மட்டும் பொறுத்தன்று.” “ஆனால் இவ்வொழுக்க முறையில் செல்வனாவது, எவருக்கும் முடியக்கூடியதே. ஏனெனில் அது தன் முயற்சி ஒன்றினாலேயே முற்றிலும் கூடவல்லது.” போதிய விடாமுயற்சியின் பேரில் உலகியலார் முறை யிலும், பொருளியலார் முறையிலும் செல்வனாவதுகூட அவனுக்கு இத்திறத்தில் எளிதாகும். அத்துடன் பிறவகைச் செல்வம் போல் மக்கள் மதிப்புக்கும் அச்சத்துக்கு மட்டுமின்றி, இஃது அவர்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியதாயிருக்கும். செல்வத்தை அடைவதில் உள்ள மறை திறவு, செலவுத் திறனுக்கேற்றபடி ஈட்டு என்பதல்ல ஈட்டும் திறனுக்கேற்றபடி, அதுவும் பிறரைச் சாராது எதிர்பாராது ஈட்டும் திறனுக்கேற்றபடி செலவு செய்து வாழ் என்பதே. இங்ஙனம் செய்பவன் ஏழையாயினும், உலகை எதிர்பாராது வாழ்ந்து பணியாற்றலாம். செல்வரிடமோ, அரசியலாரிடமோ சென்று அவன் மண்டியிடவேண்டி வராது. அவன் பொருளீட்டிவிட்டால் உலகம் அவன் செல்வத்தால் பயனடைந்து அவனைப் புகழும். செல்வரும் அரசியலாரும் அவனை நாடி அடைவர். ஏனெனில் அவன் அவர்களுக்கு அடிமைப்படாமலே செல்வனானவன். அவன் செல்வம் அவர்கள் செல்வத்தினும் ஆற்றலுடைய தென்பதனை அவர்கள் காண்பர். பெருஞ் செல்வத்தால் பலர் செருக்கடைவதுண்டு. அறிவுத்திறத்தாலும், கலைத்திறத்தாலும் வேறு பலர் செருக்குறுவதுண்டு. ஆனால், இச் செருக்கின் அடிப்படை பிறர் அவரை மதிப்பது தான் என்பதையும் இம் மதிப்பினும் அவர்கள் அன்பு மிகவும் பெருமையுடையது என்பதையும் அவர்கள் அறியார். பெருஞ் செல்வத்துடன் பிறருக்கு பயன்படாதவனை விட, சிறு செல்வத்துடன் பிறருக்குப் பயன்படுபவனுக்கு எங்கும் மதிப்பு மிகுதி என்பதைக் காணலாம். செல்வரினும் அறிஞருக்கும், ஆட்சியாளரினும் கலைஞருக்கும் மக்களிடையே செல்வாக்கு மிகுதியாயிருப்பதன் காரணம் இதுவே. அறிஞரும் கலைஞரும் மட்டும் பணத்துக்காகச் செல்வரையும் ஆட்சியாளர்களையும் அணுகாதிருக்க முடியுமானால், இன்றைய உலகின் ஆட்சி அறிஞர் கலைஞர் கையிலேயே இருந்திருக்கும். ஏனெனில் அறிஞர், கலைஞர், உழைப்பைச் சுரண்டியே செல்வர் செல்வம் ஈட்டுகின்றனர். ஆட்சியாளர் ஆளுகின்றனர்; மற்றும் அறிஞர் கலைஞர், தன்னல வாழ்வு வாழாமல் பொது நல வாழ்வு வாழ்வார்களானால் உலகின் ஆட்சி மக்கள் நிறை ஆட்சியாகவே இருந்திருக்கும். அறிஞரைப் புறக்கணிக்கும் மக்களும் மக்களைப் புறக்கணிக்கும் செல்வரும், செல்வரை அண்டிவாழும் அறிஞரும் என உலகம் முக்கூறுபட்டிராது. இளைஞர் பொருள் நாடி அதற்காகத் தற்பண்புடன் உழைத்து, எளிய வாழ்வும் வாழ்வாராயின், அவ்விளைஞன் வாழும் நாடு உலகிற்கு வழிகாட்டும் நாடாகவும், உலக நாகரிகத்தின் முகடாகவும இயங்கும் என்பதில் ஐயமில்லை. செல்வத்தைப் பற்றிக் கவலைகொள்ளாமலிருப்பது தவறு என்றும்; உழைத்துச் செல்வம் பேணுவதைப் போல், தன் மதிப்பைப் பேணுவதில் பிறர் நலத் தொண்டுக்கும், அறிவுப் பணிக்கும் தக்க முதலாவதும் வேறில்லை யென்றும்; தேவைகளை வருவாய் அளவுக்கு இசையக் கட்டுப்படுத்தினா லன்றி, ஒருவன் உண்மைச் செல்வனாக வாழ முடியாதென்றும் காட்டினோம். ஆனால், செல்வத்தைப் பற்றிக் கருத்தில்லாமலிருக்கக் கூடாது என்றதனால், செல்வத்தையே வாழ்க்கைக் குறிக்கோளாக கொள்வதும் செல்வத்தை வைத்தே தன் மதிப்பையோ, பிறர் மதிப்பையோ அளவிட்டுக் காண்பதும் சரி என்று கொண்டுவிடக் கூடாது. செல்வத்தையே குறிக்கோளாகக் கொண்டவர்கள், தாம் செல்வர் என்று பிறர் கருதுவதற்காக, வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்து வறுமை அல்லது அடிமையை வளர்ப்பர். செல்வத்தை வைத்துப் பிறரை மதிப்பவர்களோ மக்கள் குணத்தை உண்மை யில் அறியமாட்டாதவர்களாவர். செல்வருள் நல்லவரும் உண்டு; தீயவரும் உண்டு. நல்ல வழியில் செல்வமீட்டிய மேலோரும், தீயவழியில் ஈட்டிய கீழோரும் உண்டு. வறியவருள்ளும் நல்லோரும், தீயோரும், மேலோரும், கீழோரும் உண்டு. செல்வத்தையே நன்மை எனக்கொண்டு வறுமையைத் தீமையெனக் கொள்பவர் பெரும்பாலும் தீய வழியில் செல்வ மீட்டித் தீய வழியில் செலவிடும் கீழோர் உறவே பேண முடியும். செல்வத்தையே தெய்வமாக மதிக்கும் நாடுகளில்தான் தற்கொலைகள் மிகுதி. ஏனென்றால், செல்வத்தையே மதிப்பவர் தம்மை எப்போதும் வருவாயினும் உயர்ந்த செல்வ நிலையிலுள்ளவராகக் காட்டிக் கொள்ளவே விரும்புவார். நல்லவன், மதிப்புடையவன் என்பதனிடமாக அவர்கள் அகர வரிசையிலுள்ள ஒரே சொல் செல்வன் என்பது கெட்டவன் கீழோன் என்பதற்கேற்ற அவர்கள் சொல் வறியவன் என்பது. நல்லோரும் மேலோரும், மான அழிவுக்கு அஞ்சுவதுபோல. கோழைகள் சாவுக்கு அஞ்சுவதுபோல, இவர்கள் வறியவர் என்று கருதப்படுவதற்கு அஞ்சுவர். உலகில் பலர் தற்கொலைக்கு முனைவது அவர்களால் வாழ முடியாது என்பதற்காகவல்ல. அத்தகைய நிலை மிக அருமையாகவே ஏற்படக்கூடும். ஆனால், எப்போதுமே வரவுக்கு மீறிச் செலவு செய்து வாழ்பவர்களுக்கு அவர்கள் வெளிப்பகட்டு வாழ்வே ஓர் ஓயாப் போராட்டம். அதில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடும் விடுதலை தற்கொலை ஒன்றுதான். வறுமையினால் தற்கொலை, வீரத்தினால் தற்கொலை, மானத்துக்கஞ்சித் தற்கொலை, மனக்கோளாற் றினால் தற்கொலை ஆகிய பலவகைத் தற்கொலைகளிலும் இஃது இழிந்து எவ்வகை மன்னிப்புக்கும் இடந்தராத தற்கொலையாகும். ஏனெனில் இத்தகைய தற்கொலையைச் செய்யும் இயல்பினர் கூட, இதன் காரணத்தை வெளியிட்டுக் கூறமுடியாது. இவர்கள் தற்கொலை மானத்தைக் காப்பதற்கு மாறாக, மானத்தைக் குலைப்பது; கிறுக்கிகர் தற்கொலையைவிட இஃது இரங்கத் தக்கது; அதனைப் போலன்றி இது மிகவும் வெறுக்கதக்கது. செல்வப் பகட்டின் உடனொத்த மற்றொரு தீங்கு, கடனாகப் பொருள்கள் வாங்குவது. கடனாகப் பொருள் கொடுப்பவர் ஏழைக்குக் கொடுப்பதில்லை. எனவே, அதனை ஒரு நட்புதவி என்று கூறமுடியாது. காசு பெறாமல் அவர் கொடுப்பது ஒரு பயனையும் எதிர்பாராமலா? கடனுக்குப் பொருள் கொடுக்கும் போது பெரும்பாலும் விலை மிகுதியாகவே இருப்பதும், பொருள் இழிந்ததாகவே இருப்பதும் இயல்பு. கணக்கில் அடிக்கடி தொகை விடுபடுவதும் அரிதன்று. விடுபடுவதும் பெரும்பாலும் கடன் கொடுத்தவர் வரவில் விடுபாடாயிருக்காது. இத்தகைய நட்டங்கள் மட்டுமேயன்றி, கடன் பெறுபவர் தரப்பில் வேறு சில கெடுதல்கள் உண்டு; கணக்குத் தீர்க்கும் சமயம் வரை, அவர்களுக்குத் தாம் செலவு செய்யும் செலவின் அளவு தெரியவராது. அவ்வப்போது கைப்பணம் கொடுப்பவர் மிக அவசியமான செலவுகளுக்கு மட்டுமே பணம் கொடுப்பர். கடன் பெறும் வழக்கம் மெத்தனமான மிகுதிச் செலவைத் தூண்டுகிறது. அடிக்கடி வருவாய்க்கும், செலவு செய்பவர் சக்திக்கும் மேற்பட்டுக் கடன் பெருகி விடுவதுண்டு. காலத் தவணைகளில் முழுவதும் கொடுபடாது விடப்பட்ட மீதித் தொகை பெருகி ஆளைக்கரைப்பதும் கவிழ்ப்பதும் உண்டு. கடனுக்கு மாறாகப் பொருளகமுறி(உhநளூரந) கொடுப்பதும் கடனைவிட மிகுதியுஞ் சிறப்புடையதன்று. பொருளகத்தில் பொருளிருந்தாலன்றிப் பொருளகமுறி செல்லுபடி ஆகாது. பொருளாளருக்கே தன் பொருளகக் கணக்கின் இருப்பு நினைவின்றி, மிகுதி முறி கொடுக்க நேரலாம். மற்றும் நேரடியாகப் பொருள் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் தம் பொருள் நிலையின் நிறைவு குறைவு பற்றிய தகவல்கள் உடனுக்குடன் தெரிவதுபோல், பொருளகமுறி கொடுப்பவருக்குத் தெரியமுடியாது. பொருளகமுறியால் கணக்கு வைத்துக் கொள்வதும். பணப் பாதுகாப்பும் எளிது என்று அதன் சார்பில் கூறப்படலாம். இது பெருந்தொழில் உடையவர்க்கு மட்டுமே பொருந்தும். மதிப்புக்காகப் பொருளகக் கணக்கும் பொருளக முறியும் மிகுதி பயன்படுத்துதல், கடனைப் போன்ற தீங்குடையதே. ஏனெனில் காசாகச் செலவு செய்யத் தயங்குமிடத்தில் கூட மனிதர் பொருள் முறியைப் பயன்படுத்தல் கூடும். பாதுகாப்பு வகையிலோ வெனில், பணம் திருடு போவதைவிட, பொருளக முறியில் கள்ளக் கையொப்பம் மிடல், கையெழுத்திட்ட வெற்றுமுறி திருடு போதல் ஆகியவற்றால் விளையும் கேடுகள், இன்னும் மிகுதி என்று கூறவேண்டுவதில்லை. பெரிய நிலையம், தன் பெருந்தொழில்களில் வரவு செலவு வைத்துக் கொள்வதுபோலச் சிலர் தம் தனிப்பட்ட செலவுக்கும் கணக்கு வைத்துக் கொள்வதுண்டு. தம் வரவு செலவுகளின் போக்கை உணர்ந்து தடுக்கவும் திருத்தவும் இத்தகைய குறிப்புப் பயன்படும் என்று கூறியிருக்கிறோம். ஆனால் இது பெரும்படி செலவுகளுக்கும் திட்டத்துக்கு மேற்பட்ட செலவுகளுக்கு மட்டுமே பொருந்தும். வரவுக்காக ஈட்டும் தொழிலை விட்டு வரவு செலவுக் கணக்கையே பெரிதாக எண்ணி நேரம் செலவு செய்பவர், வேலையற்ற சோம்பேறியாகவும் கஞ்சராகவும் இருக்க முடியும். கடனாகப் பொருள் வாங்காதவர் சிறு செலவுகளில் ஏமாற முடியாது. கணக்கைவிடக் கைப்பணத்தின் பளு அவர்கட்டு ஒரு நல்ல எச்சரிக்கை தரும். ஆகவே, கூடிய மட்டும் கடன் வாங்காதும், பொருள் முறிகளைத் தொழில் துறையிலன்றி வழங்காதும், திட்டப்படுத்தி செலவினங்களுக்குப் புறம்பான பெருஞ் செலவுகளையே குறித்தும் வருபவர்கட்குச் செலவினம் வரவினரை மிஞ்சிவிடாது; ஏமாற்றமும் விளையாது. மதிப்புக்காக வாழும் வழக்கமுடையவர்கள், தம் தொழிலகத்தில் மட்டுமன்றி, வீடுகளிலும் வேலையாட்களை வைத்துக் கொள்வதுண்டு வேலையாட்கள் இன்றியமையாத இடத்திலோ, வேலை முழுவதையும் வீட்டுக்காரர்களே செய்ய முடியாத இடத்திலோ வேலையாட்கள் வைத்துக் கொள்வது விலக்க முடியாத ஒரு தேவையாகலாம். ஆனால், மதிப்புக்காக மட்டுமே வேலையாட்களை வைத்திருப்பது, மிகமிகத் தவறு உண்மையில் அவர்களால் வரும் மதிப்பைவிட, அவர்கள் வேலை முறைகளால் வரும் இக்கட்டுகளும், சில சமயம் அவமதிப்புகளும் மிகுதி. மதிப்புக்காக வேலைக்காரரை ஏற்பவர், அவர்களை உறவினர் போலவோ, நண்பர் போலவோ நடத்தமாட்டார்கள். அடிமைகளை அதட்டுவது போலவே அதட்டுவர். இதனால் வீட்டாளர் வேலையாட்களிடையே அன்பும், நல்லெண்ணமும் கெட்டுவிடுகிறது. காணாத இடத்திலும், சில சமயம் கண்ட இடத்திலும் முணுமுணுப்பும் வெறுப்பும் மிகுதியாய்விடுகிறது. உறவினர்களைவிட வேலையாட்கள் வீட்டில் நெருங்கிப் பழகுவதால், வீட்டுக்குரியோர் குற்றங்குறைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பை அவர்கள் உடையவராகின்றனர். இத்தகைய காரணங்களாலும் ஊதிய வகையில் வரும் வெறுப்பினாலும் தூண்டப்பட்டு வேலைக்காரர் வெறுப்பு, பகைமை ஆகியவற்றுக்குள் அடக்கி வைக்கப்பட்ட குண்டுகளா கின்றனர். இங்ஙனம் நடத்தப்படும் வேலையாட்கள் ஏழைகளில் ஓர் அடிமை இனமாகி, சோம்பல், வெறுப்பு, மனக்கசப்பு ஆகியவற்றின் விளைநிலங்களாகி விடுகின்றனர். இன்றியமையாத் தேவைக்காக அமர்த்தப்பட்ட இடங்களில்கூட அடிமைப் பண்புகளில் பழக்கப்பட்ட இந்நச்சு வகுப்பு, தீயவரும் எண்ணக் கூடும் செயல்களைச் செய்பவர்கள், தூண்டுபவர்கள் அல்லது வளர்ப்பவர்கள் ஆய்விடுவதுண்டு. வருவாய்க்கு உட்பட்டுச் செலவு செய்தால் மட்டும், வறுமையை முற்றிலும் ஒழித்துவிட முடியாது. வருவாய் இல்லாத காலத்துக்கு உதவவும், தொழில் மேம்பாடு, வருவாய் மேம்பாடு கருதியும், நல்வாழ்வு, எதிர்காலப் பாதுகாப்புக் கருதியும் சிறிது சிறிதாக ஓரளவு பொருள் மீத்து வைப்பது பொருளீட்டும் ஒவ்வொருவர்க்கும் உரிய கடமை ஆகும். நோய்ப்படுதல் குடும்பத்தில் எதிர்பாராச் செலவுகள், போக்குவரவு ஆகியவை நேர்ந்தால் திட்டப்படியான செலவுக்குமேற் செலவும் ஏற்படும். தவிர வாழ்க்கைத் தொடக்கத்தில் இருக்கும் குறைபாடுகளை நீக்கி நல்வாழ்வும் அதிலுள்ள வாய்ப்பும் பெற மீத்து வைப்பு இன்றியமையாதது. தன் கல்வியும் குடும்பம், குழந்தைகள் ஆகியவர்கள் கல்வியும் உண்மையில் பிற்கால வாழ்வுக்குரிய கடமைகள் ஆகும். வாழ்க்கைக் காப்பீட்டுப் பொருளும், பாதுகாப்புச் சேமப் பொருளும் இதே வகைப்பட்டவை. இவற்றுக்கெல்லாம் மீத்து வைப்பது செல்வந்திரட்டுவதற்கல்ல; இவை நல்லின்ப வாழ்க்கைத் திட்டத்தின் உத்திகளேயாகும். இவற்றின் நோக்கமும் வாழ்க்கை வளம் மட்டுமே. இவ் வெல்லை கடந்து மீத்துவைப்பது மேலும் நல்வாழ்வுக் குரிய வீடு, நல் உணவு, உடை முதலிய மேம்பாடுகளுக்கு உதவக்கூடும். ஆனால் வாழ்க்கைத் தேவைகளைக் கவனியாதும், தன் மேம்பாடு, குடும்ப மேம்பாடு ஆகியவற்றைக் கவனியாதும், பிறரைத் தொழில் ஏவும் எண்ணங்கொண்டும் சேமிப்பதென்பது உண்மையில் தன் வாழ்வை மேம்படுத்தும் செல்வம் ஆகாது; பிறர் வாழ்வைக் குறைக்க விரும்பும் செல்வமே ஆகும். மேற்குறிப்பிட்ட மீத்துவைப்புக் கடமைக்கு இது நேர்மாறுபட்டது. தம் தேவை, தம் மேம்பாடு, குடும்ப மேம்பாடு ஆகிய வற்றுக்கு மேற்பட்டு, அவற்றுக்குத் தேவையற்ற அளவில் ஒருவனுக்கு வருவாய் மிகுமானால், அவன் அம் மிகை செல்வத்தைச் சேமித்து வைப்பதற்கான பயன்மிக்க சேமிப்பு முறை, படிப்படியாகத் தன்னைச் சார்ந்தோர்க்கும் தன் அண்டையிலுள்ளார்க்கும் இன்றியமையாத் தேவைகட்கோ, மேம்பாட்டுக்கோ உதவுவதேயாகும். தன்னை உயர்த்தும் செயலைவிடத் தன் சுற்றத்தையும் சூழலையும் உயர்த்துபவன் செயல், உலகியல் ஆதாய முறையில் பார்த்தால்கூட, அறிவுடைய செயலேயாகும். சுற்றந்தழா அல், நட்பு, அறம் எனப் படிப்படியாக விரிந்து செல்லும் அன்பு உதவிச் செயல்கள் மற்றச் செலவுகளை விட ஒருவனுக்கு உயர்வும் செல்வாக்கும் தருவதுடன், அவன் வாழ்க்கை வளர்ச்சியிலும் தளர்ச்சியிலும் அவனுக்கு உறுதுணை யாக உதவவல்லவை. அத்துடன் அவை தரும் மன நிறைவும் அமைதியும் செல்வத்தைக் குவிப்பதாலோ, பகட்டாக வாழ்வதாலோ, பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதாலோ என்றும் பெறக் கூடாதவை. மனிதன் பெறும் செல்வங்களில் மிக உயர்ந்த செல்வம் மனிதனே. மனிதர் மதிப்பும் அன்பும் நல்லெண்ணமும் உண்மையில் ஏழையைச் செல்வரினும் வலிமையுடையவராகவும் ஆட்சியாளரினும் செல்வாக்குடைய வராகவும் ஆக்கத்தக்கவை என்பது உறுதி. பணத்தின் பயன்களில் மிகச் சிறந்த பயன் கல்வி ஆகும். கல்வி பணத்தை ஈட்டும்; ஆனால், பணமில்லாமல் அது மதிப்புப் பெறும். அஃது ஈட்டிய பணத்தைக் காக்கும்; பணம் அழிவுற்றாலும் மீண்டும் அது பணத்தை ஈட்டும். பணம் தான் இருக்கும் வரை ஒருவனைச் செல்வனாக வைத்திருக்கும். பணம் போனபின், அதற்குரிய செல்வன்மகன் செல்வனாயிருக்க முடியாது. கல்வியோ மரபுரிமையாகக் குலத்தின் செல்வமாய்க் குடிவாழ்வை வளர்க்கும். இவ்வகையில் ஆண்கள் கல்வியினும் பெண்கள் கல்வி சிறப்புடையது. ஏனெனில் ஆண்கள் கல்வி பெண்களுக்குப் பரவாது. பெண்கல்வி ஆண்களுக்குப் பரவுவது உறுதி. மேலும், குடும்பத்தில் பிள்ளைகளுக்கு உள்ளார்ந்த பண்புகளை ஊட்டுபவர் பெண்டிரேயாதலால், அவர்கள் கல்வி மட்டும்தான் சமூகத்தின் கல்வியாய் வளரும். எனவே, வருவாயின் மிச்சத்தை வாழ்க்கை வைப்பாக மீத்துவைக்க விரும்புபவன், தன் கல்வி, கேள்வி பழக்க மேம்பாடுகளுக்கும், குடும்பத்தினர், பெண் ஆண் குழந்தைகள் கல்வி கேள்வி, பழக்க மேம்பாடுகளுக்கும் செலவு செய்வதினும் உயர்ந்த பயனுடைய செயல் வேறு கிடையாது. நாட்டுப்பற்றும், மனித உணர்ச்சியாகிய இரக்கமும் ஒழுக்க நூலாரால் அறமாகப் போற்றப்படுபவையானாலும், உண்மையில் மனிதன் பொருளியல் வாழ்வினும் குறைந்த பயனுடையவை அல்ல. அவை அறத்தொடு சார்ந்த உறுதிப் பொருள்களேயாகும். பணத்தை அழிவு செய்வதுடன் மனக்கவலைகளைப் பெருக்கும் செய்திகளுள் தலைமையானது வழக்குமன்றஞ் செல்வதே. குற்றத்துறை வழக்குகளில் பெரும்பாலும் நன்மக்கள் ஈடுபடுவதில்லை. குற்றத்துறை மன்றத்தையும், காவலர் துறையையும் அறிவது சிறைக்கூடத்தை அறிவதற்கான வழி என்பதை போலி மக்கள் கூட அத்துறை செல்லாது எச்சரிக்கையாயிருப்பர். ஆயினும், குடி, கடன் கொடுத்தல், வாங்குதல், கள்ளக் கையொப்பமிடல், அரசியற் பொருள் கையாடல் முதலிய குற்றங்களில் பகட்டான பொய் வாழ்க்கை வாழ்பவர் சிக்குவது எளிது; இச் செயல்களிலிருந்து விலகுபவர் இச் செயல்களி லீடுபவர்களின் தோழமை, நட்பு ஆகியவற்றிற்கு இடந்தந்தால், வழக்குமன்றம் ஏறவேண்டி வரக்கூடும். ஆகவே, இச் செயல்களை மட்டுமன்றி, அதனைக் கைக்கொண்ட போலி மக்கள் நட்பையும், பிற தீயவர் நட்பைப் போலவே தொலைவில் வெறுத்து ஒதுக்குதல் வேண்டும். குற்ற வழக்கில் ஈடுபடாத நன்மக்களும் உடைமை உரிமை வழக்குகளில் ஈடுபடுவதுண்டு. தேவைக்கு மேற்பட்ட நிலம், மனை, உடைமைகள் வைத்துக் கொள்வதும், பிறரிடம் வீம்பும் பழிக்குப்பழியும் வைத்துக்கொள்வதுமே இவற்றுக்கான முக்கிய காரணங்கள். வீம்பும், வழக்காட்டு விருப்பும் உடன்விளைந்த தோழர்கள். வாழ்க்கையில் அன்பைக் குறிக்கோளாகக் கொண்டவன் வீம்புக்கும், வழக்காட்டு விருப்புக்கும் இடந்தரமாட்டான். பழியேற்ற விடத்தில் கூடப் பழிக்குப் பழி எண்ண மாட்டான். உடைமையிழப்பு நேர்ந்த விடத்தில்கூட, இன்றியமையாத போதன்றி, அவன் வழக்குத் தொடரத் தயங்குவான். ஏனெனில், பல சமயங்களிலும் வழக்கு வெற்றியால் கிடைக்கும் பலனைவிட அதன் செலவும் தொல்லைகளும் மிகுதியாய்விடக்கூடும். தோற்றாலோ சொல்ல வேண்டுவதி ல்லை; வழக்கு மன்றங்களில் எப்போதும் நேர்மைக்கே வெற்றியென்றும் கொள்ள இடமில்லை-வழக்குமன்றங்கட்கு மேற்பட்டு மேல்வழக்கு மன்றங்கள் இருக்கவே அப்போது தேவை ஏற்பட்டிராது. வெற்றி தோல்வி மட்டுமன்றி, இவற்றால் அயலாரிடையே வெறுப்பும் பகைமையும் வளர்ந்து, நன்மக்கள் எளிதில் மேற்கொள்ளாத குற்ற வழக்குகளை அவர்கள் மேற்கொள்ளவும் தூண்டிவிடக்கூடும். ஆகவே இன்றியமையாத் தேவை ஏற்பட்டாலன்றி, அதுவும் நன்மை தீமை விளைவுகளை முற்றிலும் ஆராய்ந்தபின்னல்லாது, வழக்குகளில் எவரும் ஈடுபடாதிருத்தல் நலம். நோய்க்கிடங் கொடாதவர் நல்லொழுங்குப்படி வாழ்பவர், மருத்துவரை நாடவேண்டி வராததுபோல வழக்கை நாட அஞ்சுபவர், வழக்கு மன்றத்தை எட்டிப் பார்க்கவும் தேவையேற்படாது. வழக்கு ஏற்பட்டபோது ஊர்ப் பொதுவராகிய நல்லார் நட்பு முறையில் அவ்வழக்கைத் தீர்த்துவைக்கும் பழைய வழக்கம் குன்றியதன் பயனாகவே, வழக்குமன்றங்கள் உலகில் ஏற்பட்டன என்பதும், இத்தருவாயில் நினைவில் வைக்கத்தக்கது. வழக்கு மன்றங்கள் மனித நாகரிகத்தின் புற சின்னமன்று; அந் நாகரிகத்தாலும் மறைக்க முடியாத உலகின் இழிவுச் சின்னமேயாகும். விற்பனைக் களத்திலும் பிற இடங்களிலும் விலைகூறுவதில் பெரும்பேரம் நடைபெறுவதுண்டு. பேரம் செய்பவர் யாவரும் உள்ளூர எத்தர்களே என்று கருதும் வழக்கத்தை நாகரிக உலகம் கைவிட்டு விட்டது. பழங்காலத் துருக்கி நாட்டில் வாணிகக் களத்தில் விலை கூறியபின், மறுவிலை கேட்டால், கடைக்காரர் வாங்கவந்தவர் தம்மை அவமதித்தாகக் கொண்டு அவருக்குப் பொருள் தர மறுப்பாராம்; சிந்தித்தால், இது சரி என்பது தெளிவாகத் தோன்றும். பேரம் செய்து முதலில் மிகுதி விலை கூறுபவர்கள், சூதுவாதற்றவர்களோ குருடரோ குழந்தைகளோ பொருள் பெற வந்தால் என்ன செய்யும் தகுதி உடையவர் என்பது கூறாமலே விளங்கும். எனவே பொய்விலை கூறுபவன், பொய்யன், ஏமாற்றுக்காரன் சண்டாளன் ஆகிறான். ஒரு நல்ல இஸ்லாமியனுக்கும் இது அடாப்பழி எனத் துருக்கியர் கொண்டதில் வியப்பில்லை. இத் துருக்கியரிடமிருந்து நாகரிக உலகு இப்பாடத்தைக் கற்றுகொண்டால் எவ்வளவு நலமாயிருக்கும்? வாழ்க்கையில் எத்துறையிலும் பொய்யும் வஞ்சகமும் கொடியவை; மக்கள் நம்பிக்கைக்கும் வாழ்க்கை வாய்ப்புக்கும் அடிப்படையான வாணிக துறையில், இவை மன்னிக்க முடியாதவை. எனவே, தாழ்ந்த சிற்றூதியத்திற்காகவோ சிறு நலனுக்காகவோ பொய்கூறுவது ஒழுக்க முறையில் மட்டுமன்று, அறிவு முறையிலும் மிகக்கேடேயாகும். இன்று இது பேணப்படாததனால், தனிமனிதனை பாதிக்காதிருப்பினும், நாகரிகச் சமூக வாழ்வு இதனால் கேடடைந்தே வருகிறது என்பதில் ஐயமில்லை. இன்றும் கூட்டத்துடன் கோவிந்தா என்று பிறரைப்போல் பொய் தவிர்த்து, மெய் கூறுபவன் ஒழுக்கமுடையவனாயிருப்பதுடன் மட்டுமன்றி, நாளடைவில் வெற்றியும் பெறுவது உறுதி என்பதை அங்ஙனம் நடந்து பார்த்தவர் அறிவர். தீய தோழர்களை விலக்குவதனாலும், நல்ல தோழர்களைச் சார்வதனாலும் ஏற்படும் நன்மைகள் மிகப் பலவேயாயினும் அவற்றின் மிக முக்கியமான பலன்கள் அவற்றால் தீய பழக்கங்கள் ஒழிவதும், நல்ல வழக்கங்கள் பெருகுவதுமேயாகும். உண்மையில் தீய தோழர்களைவிடத் தீய பழக்கங்களே மிகக் கொடியவை. அதுபோல, நல்ல தோழர்களைவிட நல்ல வழக்கங்கள் மிகநலம் தருபவை. ஏனெனில் தோழர்கள் எப்போதும் உடனிருப்ப வரல்லர். உடனிருந்தாலும் அவர்கள் தோழமைப் புறத் தோழமை மட்டுமே. ஆனால், பழக்கங்களும் வழக்கங்களும் என்றும் ஒருவனைவிட்டுப் பிரியாமலிருக்கும் அகத்தோழர்கள். அவர்கள் தனிமையிலிருக்கும்போதும், உறங்கும்போதும் உணர்வற்ற நிலையிலிருக்கும் போதும், அவை உடனிருந்து செயலாற்றிக் கொண்டே இருக்கின்றன. பலர் உணர்வோடிருக்கும்போது மறைக்கும் பழக்கங்கள் உணர்வில்லாத வேலையில் வெளிப்படக்காணப் பெறுவதுமுண்டு. செய்பவனை அறியாமலே, செய்யப்படும் தீவினைகளான, தூக்கத்தில் நடத்தல், மயக்க வெறியில் திருடுதல் ஆகிய புதுமைகள் இத்திறத்தவை. தோழர்களிடையே நெருங்கிப் பழகாதவர்களைவிட, நெருங்கிப் பழகும் நட்புரிமையுடையோரின் பண்புகள் ஒருவரிடம் எளிதில் பற்றி உறையும். வழக்கங்களிலும் பழக்கங்களிலும் இதே போன்ற வேறுபாடு உண்டு. தன்னுணர்வுடனும் அறிவுடனும் ஒருவன் அடிக்கடி செய்யும் செயல்களே, அவன் வழக்கங்கள் ஆகின்றன. இவற்றை அவன் எளிதில் மாற்றிக்கொள்ள முடியாதாயினும், முயன்றால் அவை மாற்றக் கூடாதவையல்ல. ஆனால், இவையே தன்னுணர்வு நிலையும் அறிவு நிலையும் தாண்டி உள்ளத்திலும் உள்ளுருப்புகளிலும் ஊறிவிட்டால், இவை அறிவுச் சார்பற்ற உணர்ச்சிப் பழக்கங்களும் செயற்பழக்கங்களும் ஆகிவிடுகின்றன அறிந்து செயலாற்றாத காரணம் அறியப்படாத இப்பழக்கங்களை எளிதில் மாற்ற முடியாது. இவை நல்லனவானால், பாலில் பழம் நழுவி விழுந்தது போன்ற அருமையுடையவையே. தீயனவானாலோ பாலில் நஞ்சு விழுந்த மாதிரிதான். ஆகவே பழக்க நிலையில் வருமுன்பே தீய வழக்கங்களைக் கைக்கொள்ளாதும் கடிந்தும் வருவது இன்றியமையாதது. நல்ல வழக்கங்களையே தேடிப் பயின்று, அவற்றைப் பழக்கமாக்கல் வேண்டும். அறிவு பெறுவதைவிட நல்ல வழக்கங்களைப் படியவைத்துப் பழக்கங்களாக்குவதே கல்வியின் இன்றைய குறிக்கோள்,” என அறவோர் கருதுகின்றனர் என்பது இங்கே குறிக்கத்தக்கது. புலர்காலை எழுதல்; மேற்கொண்ட கடமை, பணிகளை வழுவாது அவற்றுக்கே முதலுரிமையளித்தல், ஓய்வு நேரங்களில் பயனுடைய நூல்களைப் பயிலல்; எவரிடமும் அன்பாயிருத் தலுடன் இன்மொழி பேசுதல்; பெண்டிரிடம் பொறுதியும், சகிப்புத்தன்மையும், பரிவும், துணை நலமும் காட்டுதல்; குழந்தை களிடம் இன்முகம் உடையராயிருத்தல்; அயலார், ஏதிலார் ஆகியவர்க்கு உதவுதல்; பகைவரிடமும் மதிப்புடன் நடத்தல்; தீய பண்புகளையும் வெளியிடாது அடக்கி, நற்பண்புகளை பாராட்டுதல் ஆகிய பல வழக்கங்கள் பழக்கங்களாகப் படியவிட்டால், அறிவுத் திறத்தில் மட்டுமன்றி இயற்கைப் பண்பிலும் மனிதன் உயர்வடைகிறான். அவன் அறிவுத் திறம் அவன் மரபினர் கற்றேயறியத் தக்கவை ஆனால், அவன் பண்புத்திறம் “கல்லாமல் பாகம் படும்” குலக்கல்வி, குடிக்கல்வி ஆகிவிடுகிறது. இத்தகைய பண்பிற் பழகிய குடியே உயர்குடியாதலால், அறிவுடையோர் தம் குடிபேணும் வகையாக, இப்பண்பு பேணக்கடவர். இளைஞர்களுக்குக் கூறும் அறிவுரைகளில் கடைசி அறிவுரையும், கடைப்பிடி அறிவுரையும் நூல்களைப் பற்றிய நூலின் ஆசிரியர்கள், காலத்தில் பழைமைப்பட்டதன் காரணமாக, அவர்கள் பழம்பொருள்கள் ஆகிவிட மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் பழைமை எவ்வளவு மிகுதியோ, அவ்வளவு அவர்கள் காலங்கண்ட பழம்புகழும் உடையவராவர். காலத்தின் அளவு, அவர்கள் புகழாகிய தங்கம் இடப்பட்ட நீண்ட நாட்புடத்தின் அளவேயாகும். ஆயினும், இப் பழைமையின் பெருமைகூட எல்லா நூல்களுக்கும் ஒருங்கே பெருமை தருபவையல்ல. சில பழைய ஏடுகள் பழங்கால ஆராய்ச்சி, வரலாற்றுச் சூழ்நிலைச் சிறப்பு ஆகியவற்றால் புகழ் அடைகின்றன. இவை வரலாற்றுச் இவை வரலாற்றறிஞர்க்கு மட்டுமே பயன்படுபவை. இலக்கிய நூல்களிலும் வரலாற்று முறையில் புகழ் பெற்றவை உண்டாயினும், இன்றும் விரும்பிப் படிப்பவையும், நமக்கு இன்றும் பயன்படுபவையும் ஆன பெரும்பான்மையான இலக்கிய ஏடுகள் காலங்கண்ட பயனுடையவையே. இவற்றை நாம் புத்தம்புதிய நூல்களினும் போற்றுவது தவறன்று. ஏனெனில், அவை காலமாகிய அரிப்பினால் சலித்துத் தேர்ந்தெடுக்கப் பட்டவை. தற்கால நூல்களின் பெருமையை நான் பழ நூல்களின் அளவைக்கொண்டே ஓரளவு தேர்த்தறிய முடியும். அதே சமயம் தற்கால நூல்களுக்கும் ஒரு தனிப் பயன் உண்டு. அவை நம் சூழலிலேயே எழுதப்பட்டவை. எனவே. நம்மால் அவற்றை முழுவதும் எளிதில் அறியவும் அனுபவிக்கவும் முடியும். பழைய நூல்களையும் சரி, புதிய நூல்களையும் சரி, அவற்றின் புகழிலீடுபட்டுக் கண்மூடிப் படிப்பது தவறு. புகழ் பெற்ற ஒரு நூலை நாம் அறியமுடியாத காரணத்தால், அதை நாம் சரியாக மதிப்பிடாமற் போகலாம். ஆனால், இத் தவற்றால் நேரும் கேடு பெரிதன்று; திருத்தக்கூடாததும் அன்று. ஆனால், புகழிலீடுபட்டுக் கண்மூடி வாசிப்பன் கேடு மிகப் பெரிது. பழைய நூல்கள் வகையில் இக்கேடு இன்னும் பெரிது. நம் அறிவு, நம் நுகர்வு ஆகியவற்றை வழிகாட்டியாகவும்; புகழையோ, நூலின் விளக்க உரைகளையோ தேவைப்பட்டபோது துணைகளாகவும் கொண்டாலன்றி, ஆசிரியர் உள்ளக்கிடக்கையை நாம் உள்ளபடி அறிய முடியாமலே போய்விடும். நம் கருத்துக்கு மாறுபட்டவை ஒரு நூலிலிருந்தால் அதனைப் பற்றிச் சிந்திப்பதற்கு மாறாக, நாம் அவற்றை மேற்கொள்வதால், நம் அறிவுத் திறமே குன்றிவிடும். மக்களிடம் காலத்தின் புகழும், நூலாசிரியர் புகழும் அறிவுத்திறனை மறைத்து வளர்வதன் கேட்டினை ஷேக்ஸ்பியர் பற்றிய பல புரளிகள் காட்டுகின்றன. ஷேக்ஸ்பியர் ஒரு சிறந்த மனித உலகக் கவிஞராக மட்டுமின்றி, அவர் ஒரு தெய்வீக கவிஞர் என்று போற்றப்படுவதன் காரணமாக, அவர் சிறப்பைவிட அவர் இலக்கணப் பிழைகளே பெரிதும் பின்பற்றப்பட்டுவிடுகின்றன. தவிர ஷேக்ஸ்பியர் விட்டுச் சென்ற செல்வங்கள் போதாதென்று பழம் பொருளாராய்ச்சிப் புலவர்கள் எத்தனையோ பேர், இல்லாத பொல்லாத செய்திகளையெல்லாம் அவர் மீது சுமத்தி ஏமாற்றிவிட வழி ஏற்படுகிறது. இத்தகைய மூடப்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் ஷேக்ஸ்பியர் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்று ஆராய்ச்சி நிகழ்த்தினாராம். அவர் வீட்டிற்குரிய இடத்திலிருந்த ஒரு விடுதியிற் சென்று அவ்விடத்தில் ஏதேனும் பழைய ஏடுகள், தாள் கட்டுகள் மீந்துள்ளனவா என்று விடுதி மாதினைக் கேட்டார். அம் மாது அவர் வந்த காரியச் சிறப்பை உணராமல், ஏதோ பழைய கட்டு ஒன்று இருந்தது என்றும், முன்னாள்தான் அதனைத் தான் எரித்துவிட்டதாகவும் கூறினாள். கூறியதுதான் தாமதம், ஆராய்ச்சியாளர் உடனே எங்கும் சென்று மாதர் அறியாமை பற்றிக் கொடும்பழி தூற்றினர். அவரினும் மூடபத்தியில் சிறிது குறைந்து, அதே சமயம் அதைப் பயன்படுத்தும் கயமை அறிவுத் திறத்தில் சிறந்த அவர் புதல்வர் அவ்விடத்தில் சென்று சுற்றிவிட்டு, தாமே வருந்திச் சில ஏடுகளை எழுதி உண்டு பண்ணிப் பழைமைத் தோற்றம் தந்து அவற்றைக் காட்டி அவை தாம் கண்டெடுத்த ஷேக்ஸ்பியரின் கையெழுத்துப் படிகள் என்று வெளியிட்டார். அவர் தந்தை உட்பட ஷேக்ஸ்பியரின் பத்தர் அனைவரும் அவரைப் போற்றி, அவ் ஏடுகளைப் புகழ்ந்தனர். அதை அச்சிடும் வகையில் பல்லாயிரம் பொன் திரண்டது. விரைவில் பொய் ஆராய்ச்சி அறிஞரால் வெளிப்படுததப்பட்டதாயினும் அதற்குள் பத்தரான இளம்புதல்வர் பெரும்பொருள் திரட்டிக்கொண்டார். “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” (குறள் 355) என்பதும், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” (குறள் 423) என்பதும், நூல் துறைகளிலும் எத்துணை இன்றியமையாத எச்சரிக்கை என்பதை இந்நிகழ்ச்சி விளக்கும். கலைத் துறைகளிலும் கவிதைகளிலும் எவரும் காணாத தனியழகையும் தனிப்பட்ட திறங்களையும் தாம் காண்பதாகப் போலிக் கலைப்பத்தக் கூத்தாடுவதுண்டு; பொதுமக்கள் அது கண்டு ஏமாறுவதுண்டு. அதனைப் பாராட்டாவிடில் நாம் கலையுணர்வற்றவர்களென்பது வெளிப்பட்டுவிடும் என்று இவ் அப்பாவி மக்கள் நினைத்து ஏமாற்றத்துக்குள்ளாகிறார்கள். அறியாமை போலியறிவைவிட, ஏமாற்றைவிடக் கீழான தன்று. ஏனெனில், அறியாமை அறிவுக்கான முதற்படியாகும். அறியாமைக்கு அறிவு மருந்து. ஆனால் போலியறிவு நோயன்று, நஞ்சு; எனவே அறியாமைக்கு அஞ்சாது, அறியாததை, அறிந்த அறிவாகிய பொது அறிவு அடிப்படையில் பகுத்தறிவின் உதவிக்கொண்டு காணலே இலக்கியத்திலும் கலையிலும் சிறப்புடையதாகும். இம் முறையில் கலையுணர்வு பெறக் கூடாத ஒன்றல்ல. அறிந்த அறிவை ஆராய்வதன் மூலமே பகுத்தறிவுக்கு வழி ஏற்படுவது போல, நுகரும் இன்பம், அழகு ஆகியவற்றை ஆய்ந்தமைந்து ஆராய்வதன் மூலம், புதிய கலையழகின் நுகர்ச்சி பெருகுதல் ஒருதலை. புறப்பொருள் ஆகிய செல்வத்தையும், அதனாலான வாழ்க்கையையும், புறப்பொருளில் அகமாகிய கலையின்பத்தையும் பற்றிக் கூறியதாயிற்று. இளமையின் புத்துணர்ச்சியாகிய அகத்துறை வாழ்வு பற்றி வரும்பிரிவில் கூறுவோம். இப்புத்துணர்ச்சி உண்மையில் அகத்துறையின் புறப்பொருளே யாகும். புறப்பொருளின் மூலமே, புறப்பொருள்களைக் குறியீடுகளாகக் கொண்டே, அகப் பொருள்களைக் காணுதல் கூடும். அகத் துறையின் புறச் சார்பு ஆகிய இன்பம் சிற்றின்பம் என்றும் கூறப்படும். அது சிறிய உலகாகிய வீட்டிலிருந்து நுகரப்படுவது. இவ் வின்பமே குறியீடாக, அகத்தின் சுகமாகப் பெறப்படுவது பேருலகாகிய வீட்டிலமர்ந்து பெறத்தகும் பேரின்பம் அல்லது அருளின்பம் ஆகும். 4. காதல் வாழ்வின் கடமைகள் ஒருவர் செய்ய வேண்டும் கடமைகள் எவை என்று நாம் அறிஞரைக் கேட்டால்; அவர்கள் தாய் தந்தையருக்கு ஆற்றும் கடமைகள், உடன்பிறந்தார் சுற்றத்தார்களுக்கு ஆற்றும் கடமைகள் ஆகிய குடும்பக் கடமைகளையும்; அயலார்க்கும் நண்பர்கட்கும், ஊர் நாடு உலகு ஆகியவற்றின் மக்கட்கும், நாட்டின் தலைவராகிய மன்னருக்கும் ஆற்றும் கடமைகளாகிய சமூகக் கடமைகளையும், இவை அனைத்திற்கும் பொது நிலைப்பட்ட கடவுளுக்கு ஆற்றும் கடமையையும் மட்டுமே சுட்டிக் காட்ட முடியும். இவற்றுள் சமூகத்துக்கு ஆற்றும் கடமையல்லாது “வேண்டுதல் வேண்டாமை இல”னாகிய கடவுளுக்கு ஆற்றும் கடமை தனியாக எதுவுமில்லை. சமூகக் கடமைகளோ குடும்பக் கடமைகளை அடிப்படையாகக் கொண்டவை. சமூகம் என்பது குடும்பங்களின் தொகுதி மட்டுமே. ஆகவே, எல்லாக் கடமைகளுக்கும் குடும்பக் கடமையே, அடிப்படை என்பது தெளிவு. ஒருவன் குடும்ப வாழ்வில் புகுவது காதலாலேயே. ஆதலால், காதற் கடமையே ஒருவன் வாழ்விலுள்ள கடமைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஒளிநிலைக் கடமையாகும். காதற் கடமையை நன்கு ஆற்றியவன், மற்ற எல்லாக் கடமைகளையும் திறம்பட ஆற்றி, இறுதிக்கடமையாகிய கடவுட் கடமையையும் ஆற்றியவனாவான். காதல் வாழ்வு என்பது கடமை பற்றிய கவலையும், பொறுப்புமற்ற வாழ்வு என்று பல சொத்தை இளைஞரும், சிலசமயம் சில கீழ்த்தர நங்கையரும் எண்ணித் தம் வாழ்வைப் பாழாக்குகிறார்கள். ‘வண்ணாத்திப் பூச்சியைப் போலப் பகட்டித் திரிவதே, காதலின் ஒரே கடமையாக இயற்கை அமைத்துள்ளது,”என அவர்கள் எண்ணுகின்றனர். வாழ்க்கையில் அடிப்படை யுணர்ச்சியும் கடமைகளின் உயர்நிலைக் கருவூலமும் ஆகிய காதலுணர்ச்சியை, இவ்வளவு விலையற்றதாக இயற்கையன்னை அளித்திருப்பாள் என்று கருதுவது எவ்வளவு பேதைமை! உண்மையில் காதல் வாழ்வு அவ்வளவு விலையற்றதாகத் தரப்பட வில்லை. காதல் வாழ்வின் வெற்றிக்கு ஒருவர் பேரறிஞராயிருக்க வேண்டுமென்றில்லை. வாழ்வின் வாசற்படியில் காதலர், பேரறிஞராயிருந்து விட முடியாது. காதல் வாழ்வின் வெற்றிக்கு ஒருவர் பெருங்கலை வல்லராயிருக்க வேண்டியதில்லை. அதுவும், வாழ்க்கைத் தொடக்கத்தில் எளிதில் எதிர்பார்க்கத்தக்கதன்று. காதல் வாழ்வின் வெற்றிக்கு ஒருவர் செயற்கரிய செய்யும் ஒருவராயிருத்தல் வேண்டுமென்றில்லை. இளமையிலேயே ஒருவர் அந்நிலையை அடைந்துவிட முடியாது. ஆனால், காதல் வாழ்வின் வெற்றிக்கு இம் முத்திறங்களுமே சரிசம அளவில் தேவை. அறிவிற் சிறந்தவரும், கலையில் ஓங்கியவரும் செயலில் திளைத்தவரும் பலர் பெண்டிர் குழுவில் என்ன பேசுவதென்றறியா திருப்பதையும், அவர்களுடன் ஊடாட முடியாதிருப்பதையும் பார்க்கலாம். தனித்துறையில் சிறந்த பெண்டிர் நிலையும், இதற்கு மேற்பட்ட தன்று. ஆகவே, வாழ்க்கையின் வேர்முதலாகிய காதலுக்கு, முழு வாழ்க்கைப் பண்பின் வேர்முதலாகிய மூன்று இயற்கைத் திறங்களும் ஒருங்கே தேவை என்று காணலாம். ஒருவர் காதல் வாழ்வின் வெற்றிக்கு இம் முத்திறங்கள் தேவை என்பது மட்டுமல்ல. ஒருவரிடம் இருக்கும் உள்ளார்ந்த முத் திறக் கூறுகளையும் வெளிக் கொணர்ந்து, அவற்றின் முழு ஆற்றலையும் காட்டி, அவற்றை வளர்க்கும் செயலையும் காதல் போல் வேங எதுவும் செய்வதில்லை. இதனாலேயே “கல்லையும் பிளக்கும் காதல்,” “தடங்கற்களை ஊடறுக்கும் காதல்,” என அதனைப் புனைந்துரைக்கின்றனர். காதல் வாழ்வில் வீர உணர்ச்சி ஏற்படாதவருக்கு, என்றும் வீர உணர்ச்சி இருக்க முடியாது. காதலர்க்காகத் தியாகம் செய்யாதார், மேலும் எதற்காகவும் தியாகம் செய்யார். காதலர் காதலுக்காக வாழாதவர் புகழுக்காக வாழ்தல் அரிது! காதற்போதில் அறிவும் கலையும் கவிதையும் பொங்கிக் காணாதவர் அத்திறங்களை என்றும் காண மாட்டார்கள், ஒரு சிலர் காதல் வாழ்வின் பின் இவற்றில் சிறந்து விளங்குவதன் காரணம், அவர்களிடையே இம்முத்திறமும் ஒத்து, காதற்போதில் அவை வெளிவர முடியாததனாலேயே ஆகும். ஓரிளைஞன் வாழ்வில், ஒரு நங்கை வாழ்வில் காதலை உணரும் வாய்ப்பு, அதனைப் பெறும் வாய்ப்பு, அதன் மூலம் வாழ்க்கையின் மறுமலர்ச்சி பெறும் வாய்ப்பு இல்லாவிட்டால், அவர்கள் குடும்ப வாழ்வும் சமூக வாழ்வும் துயரடைந்ததாக அல்லது விலங்கு வாழ்வாக முடிவது ஒருதலை. ஏனெனில். காதலுக்காக வாழமுடியாத அவர்கள் அன்புக்காக, புகழுக்காக வாழ்வர் என்று கூறமுடியாது. இவ்விரண்டும் கடந்த, ஆனால் இரண்டின் திறமும் வாய்ந்த கடவுட் பற்றும் அவர்களுக்கு இருக்க முடியும் என்று எவரும் கூறமுடியாது. ஆகவே, அவர்கள் வயிற்றுக்காக, பணத்துக்காக, ஆதிக்கத்துக்காக வாழவேண்டும்; அல்லது நோக்கமின்றி வாழவேண்டும். வயிற்றுக்காக வாழ்பவரையே நாம் கீழ்மக்கள் என்கிறோம். இவர்கள் விலங்கு நிலையில் உள்ளவர்கள். பணத்துக்காக வாழ்பவர்களே தீவினையாளர்கள். இவர்கள் வாழ்வு பேய்நிலை வாழ்வு. ஆதிக்கத்துக்காக வாழ்பவர்கள் கொடியவர்கள். அவர்கள் வாழ்வு காட்டு விலங்குகளின் வாழ்வு. நோக்கமற்றவர்களோ, என்றால், விலங்கு நிலையினும் கீழ்பட்டவர்கள். இவர்களையே நாம் காலடிகள், கயவர்கள் என்கிறோம். காதல் என்பதன் பெருமையை உலகம் அறியமுடியாமல், அந்தச் சொல்லை நாகரிக சமூகத்தில், கோயிலில், குடும்பத்தில், பள்ளியில் ஒலிக்கவும் முடியாத கீழ்த்தர உணர்ச்சி குறித்த ஒரு சொல்லாக்கியவர்கள் இக் கயவர்களேயாவர். பெயரளவில் உலகம் மக்கள் வாழும் உலகமாயிருப்பினும், நாகரிக மேம்பாடுடையதென தாம் கருதும் இக் காலத்திலும் உலகத்தில் பெரும்பாலோர் இக் கடைக்கட்ட தரத்திலுள்ள கயவர்களாகவும், மீந்தவருள்ளும் பலர் கொடுவிலங்கு நிலை, பேய்நிலை, விலங்கு நிலையிலுள்ளவர்களாகவும் இருப்பதனால் தான் உலகில், “காதல் என்பது கத்தரிக்காய்” என்ற பேச்சும், காதல் என்பது நாடக மேடைக்குத்தான் உரியது,” என்ற கோட்பாடும், “காதல் மறைத்தற்குரியது” என்ற கருத்தும் உலவி வருகின்றன. இவையனைத்தும், கூறுபவர் இழிபண்பைப் குறிக்குமேயன்றி, காதலின் பண்பை மதிப்பிட முடியாது. நாகரிகத்துக்கும் குடும்பத்துக்கும் அடிப்படையான காதலைப் பற்றி, நாகரிகத்துக்கும் குடும்பத்துக்கும் அடிப்படையான காதலைப் பற்றி நாகரிக சமூகத்திலும் குடும்பத்திலும் குறிக்கக் கூடாது என்பது, கடவுளுணர்ச்சிக்காகக் கட்டப்பட்ட கோயிலில் கடவுள் பெயரைக் குறிக்கக்கூடாது என்பது போன்ற பொருந்தாக் கூற்றேயாகும். கடவுட் பண்பின் பகைவர் கோயிலில் கூறக்கூடா தென்ற கட்டுப்பாடு ஏற்படாது. அதுபோலவே, காதல் பண்பு அறியா அநாகரிக மக்கள் கூடிய சமூகத்திலன்றி, காதலற்ற வாழ்வு வாழ்பவர்களின் குடும்பத்திலன்றி, காதல் என்ற சொல் துரத்தப்பட வேண்டிவராது. இன்றைய நாகரிக உலகின் கேடுகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால், அவையனைத்தும் உலகில் நல்ல குடும்ப வாழ்வு அரிது என்பதைப் பொறுத்ததாகவேயிருக்கும். நாகரிக மக்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் உயர்குடி மக்கள், பெரும்பாலும் பணத்துக்காகவும் பதவிக்காகவுமே மணம் செய்து கொள்கின்றனர். அவர்கள் மரபில் குடும்ப வாழ்விற்கு வேர் முதலான நற்காதலுக்கு இடமில்லாமல், குடும்ப வாழ்வை, காதலற்ற குடும்ப வாழ்வை அரித்து, உளுக்கவைத்து, தகர்க்கும் கீழ்த்தர போலிக் காதலுக்கு மட்டுமே இடமிருக்க முடியும். இவ் வுயர்குடி மக்களை உயர்குடி மக்கள் என்று கருதும் பல ஏழைகளின் வாழ்விலும் பணமும், ஆதிக்கவாதிகளின் ஆதரவு அடையவிரும்பும் அடிமைப் பண்பும் பெருகி, அவர்கள் குடிவாழ்வும் விலங்குநிலை வாழ்வாகியுள்ளது. விலைமாதர் தொழில், குடி, சூதாட்டம், களவு, கொலை, கொள்ளை முதலிய எல்லா தீமைகளின் வரலாற்றையும் ஆராய்ந்தால், குடும்ப வாழ்வின் கோளாறுகளே அவையனைத் திற்கும் அடிப்படை என்றும் விளங்கும். உண்மையான காதல் என்பது வாழ்க்கையில் ஒரு தடவைதான் காதற் போதாகிய இளமையில்தான், ஏற்படும் அக் காதற்போதில் காதல் அடிப்படையாகச் செய்யும் மணம் ஒன்றுதான் கடிமணம் ஆகும். உயர்தரக் காதலுக்குரியவர் காதல் துணைவர் இறந்தால், அத்துடன் குடும்ப வாழ்வுக்கு ஒரு முழுக்குக் கொடுத்துவிட்டு, குடும்பத்தினும் விரிந்த, அகல்பெருங் குடும்பமாகிய சமூகத்திற்காகவே வாழத் தொடங்குவர். இத்தகைய உயர்தரப் பண்பு இல்லாதவர்கள் ஆகிய நடுநிலை யாளர்கள் தம்போலக் காதல் துணையறுபட்ட பிறருடன் வாழ்வது இரண்டாந்தரமான காதல் வாழ்வு. கூடியமட்டும் ஒத்த வயதும், ஒத்த அன்பும் உடையவர் கலந்த குடும்ப வாழ்வு வாழ்பவரடங்கிய சமூகத்தில் தீவினைகளும், பொல்லாங்குகளும் இருக்க முடியாது. அதுவே உண்மையில் நாகரிகச் சமூகம் ஆகும். பெண்டிரை இன்பப் பொருளாகக் கருதும் சமூகமும், தம் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் காதலை எதிர்பாராது மணம் செய்யும் சமூகமும் ‘நாகரிகம்’ என்ற பெயருக்கே உரிமையுடைய தாகமாட்டாது. பெண்டிருக்கு ஆடவர்களைவிட, இயல்பாகவே நுண்ணறிவு மிகுதி. ஆனால், இயற்கையறிவு வாழ்க்கைக்குத்தான் வழிவகுக்கும். நாகரிக வாழ்வுக்கு வழி வகுக்காது. நாகரிக உலகினைப் பற்றிய அறிவைக் கல்விதான் தரும். சமூகக் கல்வி. அதற்கடிப்படையான எண் எழுத்து அறிவு ஆகியவையே அக் கல்வியின் கூறுகள். இக் கல்வியில்லாத ஆடவரைப் போலவே, இக்கல்வியில்லாத பெண்டிரும் நாகரிக சமூக வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள். அவர்கள் இயற்கையறிவு, மக்கள் இயற்கை யறிவுமட்டும் உடையவராயிருந்த அநாகரிக காலத்து அறிவு மட்டுமே. ஆதலால், அவ்வியற்கையறிவு அநாகரிக வழிகளில்தான் செல்லும். ஆடவர் கல்வியுடையவராய் நாகரிக வாழ்வில் கருத்தூன்று மிடத்தில்கூட, பெண்டிர் கல்வியற்றவரா யிருந்தால், அவர்கள் ஆடவரையும் இழுத்துக் கொண்டு அநாகரிக வாழ்வு நோக்கியே செல்வர். பெண்கள் இயற்கை அறிவிலும் ஆற்றலிலும் மேம்பட்டவராதலால், ஆடவர் கல்வியற்றவ ராயினும்கூட அவர்களை இயக்கும் திறமுடையவர். இதனால் தான் கல்வியற்ற பெண்டிர் சமூகம், எப்போதும் கல்வி கற்ற ஆடவர் சமூகத்தைவிட மேம்பட்டதாய் நாகரிகத்தின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ள முடிகிறது. பல இளைஞரும் நங்கையரும் காதல் என்பது அழகின் கவர்ச்சி என்று நினைத்தும், இன்ப நாட்டம் என்று நினைத்தும் அவதியுறுகிறார்கள். தம் அழகைப் பேணுவதனாலேயே காதற் கவர்ச்சியுடை வராய்விட முடியும் என்றும், இன்பத்தை தேடினால் காதலைப் பெற்றுவிட முடியுமென்றும் கனவு காண்கின்றனர். அழகுமிக்காரை விட்டு, அழகு குறைந்தவரை காதலர் நாடுவதை நாம் காண்பதில்லையா? அழகு கவர்ச்சி தரினும் அதனை நிலைநிறுத்த முடியாது என்பதனையும் நாம் எத்தனை இடங்களில் காண்கிறோம்? தவிர, அழகுடைய மனைவியரையும் அந்த சந்தமான கணவரையுமுடையவர்கள் எத்தனை பேர், காதல் வாழ்வில் நிலைபெற முடியாது அல்லல்படுகின்றனர்? இவற்றையெல்லாம் கண்டும், இளைஞர் அழகின் கவர்ச்சியே காதல் என்றும், இன்ப வாழ்வு நாட்டமே காதல் என்றும் கொள்ளுதல் எவ்வளவு பேதைமை? அழகும் கவர்ச்சியும், இன்பமும் காதலின் பாதையில் ஒரு கைகாட்டி மரமே தவிர வேறில்லை. காதலிளமையில் காதலர் ஒருவருடன் ஒருவர் பழகுவதற்காக, இயற்கை வகுத்த வகைமுறைகளே இவைகள். ஒருவரை ஒருவர் அறிய அவை ஆர்வமும், தூண்டுதலும் தருகின்றன. இக்கவர்ச்சி காதலன்று. இக்கவர்ச்சியால் வரும் இன்பமும் காதலன்று. இவை காதலின் வாயிற்படிகள். இவை கடந்து காதலர் ஒருவர் பண்புகளை ஒருவர் ஆராய்ந்து, தம் திறங்களுக்கு ஒத்த திறமும், தம் நோக்கத்துடன் ஒத்த நோக்கமும் காதலரிடமிருந்தால், அவர்களைக் காதல் துணைவராகத் தேர்கின்றனர். இத் தேர்தல் முடிந்த பின் அவர்கள் காதல் உடையவர் ஆகின்றனர். இந்த படியை அவர்கள் அடைந்து விட்டால், பின் அழகும் கவர்ச்சியும் இன்பமும் இவற்றின் எதிர்ப் பண்புகளும் அவர்களைப் பிரிக்கமாட்டா. அவர்கள் வாழ்வு அதன்பின் இருவரும் சேர்ந்த கூட்டு வாழ்வு அல்லது முழுவாழ்வே அன்று, தனித்தனி வாழ்வு ஆகிய குறை வாழ்வு அன்று. ஆகவே, ஓரழகைவிட்டு இன்னோரழகை நாடும் நாட்டமும், ஒரு கவர்ச்சியை விட்டு இன்னொரு கவர்ச்சியைத் தேடும் தேட்டமும், ஓர் இன்பத்தை விட்டு இன்னோர் இன்பத்தைக் கொள்ளும் கோட்பாடும் காதலாகமாட்டா, முன்பின் அறியா ஒருவரைப் பணத்துக்காகவோ பதவிக்காகவோ, தாய் தந்தையர் விருப்பத்துக்காகவோ, குலக்கட்டிற்காகவோ, கணவராகவும் மனைவியாகவும் கொள்வது காதலும் ஆகமாட்டாது. மணமும் ஆகமாட்டாது. காதலைத் தேடுவதென்பது இன்பத்தைத் தேடுவதன்று; இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் மாள்விலும் மாறாத வாழ்க்கைத் துணையின் தேட்டமாகும். இன்ப துன்ப வேறுபாடற்ற கடவுட் பண்பும், இன்ப துன்ப இணைப்புடைய காதற்பண்பும் தம்முள் மிகுதி மாறுபட்டவையல்ல. காதல் குடும்ப வாழ்வு தருவதும், குடும்பம் இனப்பெருக்க மளிப்பதும் இயல்பு. இதுவே இயற்கை வகுத்த வகுப்பு. இவ் வியற்கை நெறியை மீறினால், இயற்கையின் தண்டனையைப் பெற்றுத்தானாகவேண்டும். காதலற்ற குடும்ப வாழ்வும், குடும்பமற்ற இனப் பெருக்கமும் இங்ஙனம் இயற்கைக்கு மாறான செய்திகள் ஆகும். காதலற்ற குடும்ப வாழ்வின் பயனாகக் குடும்ப வாழ்வற்ற காதலும், குடும்பமற்ற இனப்பெருக்கத்தால் இனப் பெருக்கமற்ற குடும்ப வாழ்வும் சமூகத்திற்குத் தண்டனையாகக் கிடைக்கும் என்பதைப் பகுத்தறிவுக் கொண்டு சீர்தூக்கிக் காணலாம். இவ் விரு தண்டனைகளும் இன்றைய நாகரிக சமூகத்துக்கு நிரம்ப உண்டு என்பதைச் சமூக நிலையை ஊன்றிக் கவனிப்பவர் உணரக்கூடும். இயற்கை இனப்பெருக்கத்திற்கான வகைமுறையாகவே, காதலை வகுத்துள்ளது என்பது உண்மையே. ஆனால் இனப்பெருக்கமே காதலின் நோக்கம் என்பது சரியன்று. காதலர் காதல் இனப்பெருக்கத்தாலேயே முழுவதும் நிறைவு பெறுகிறது என்பதிலும், காதலர் காதலின் கனியாகிய பிள்ளைப்பேறு இருவர் காதலையும் இணைத்த ஒரு புதுக் காதலை அஃதாவது பிள்ளைப் பாசத்தையும், அதன் மூலமாகக் குடும்ப, சமூகத் தொடர்பையும் வளர்க்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், இனப்பெருக்கம் ஒன்றே காதல் வாழ்வின நோக்கமல்ல, அதுவே குடும்ப வாழ்வின் நோக்கமுமல்ல. ஆகவே, இனப்பெருக்கத்தை எண்ணி மணவினையை ஒதுக்கி வைப்பதும், புதுமணவினை நாடுவதும் இயற்கைக்கு மாறான செயல்களாகும். இனப்பெருக்கம் ஒன்றே காதலின் நோக்கமானால், இனப்பெருக்கங் குறைந்த உயரின உயிர்களில் காதல் குறைவாகவும் இனப்பெருக்கமிகுந்த கீழின உயிர்களில் காதல் மிகுதியாகவும் இருத்தல் வேண்டும். ஆனால் இயற்கையில் நான் காண்பது இதற்கு நேர் மாறுபட்ட நிலையேயாகும். பறவைகளிடத்திலும், பால்குடி உயிர்களிடத்திலுமே நாம் குடும்ப வாழ்வையும், சமூக வாழ்வையும், அன்பு கலந்த குடும்ப வாழ்வு அஃதாவது காதலையும் காண்கிறோம். கொடிய விலங்குகள் என்று நாம் கருதும் காட்டு விலங்குகளிடையே கூட இக்காதல் வாழ்வு உண்டு. ஆனால், பறவைகள் நீங்கலான முட்டையிடும் உயிர்களிடயே அன்பிலா உறவு மட்டும்தான் உண்டு. இன்னும் கீழின உயிர்களிடம் தேடினால், குடும்ப உறவையுங் காணமுடியாது. குடும்ப உறவுக்கும் காதலுக்கும் அடிப்படையான, ஆண் பெண்பால் வேறுபாட்டைக் கூட காணமுடியாது. செடிகளிற் பெரும்பாலனவும், கீழ் உயிர்களில் பலவும் ஆண் பெண் உறுப்புக்கள் இரண்டும் உடைய வையாகவே உள்ளன. இன்னும் பின்னோக்கிச் சென்று தொடக்க அணுவுயிர்களை ஆராய்ந்தால், அவற்றுக்கு ஆண் பெண் உறுப்பு வேறுபாடுகளோ, பிற உறுப்பு வேறுபாடுகளோகூட இல்லை. அவற்றிக்குப் பிறப்பு, இறப்புக் கூடக் கிடையாது. அவை உண்ணும் உறுப்பு மட்டும் பெற்று, உண்டு பெருத்து, வெடிப்பதனால் இனம் பெருகுகின்றன. இவ் வெடிப்பு முறையால் இனம் பெருக்கும் நுண் உயிர்கள் நொடிக்குப் பன்னூறாயிரமாகவும், கீழின உயிர்கள் பல ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்காகவும் பெருகுகின்றன. இனப்பெருக்கத்திலும் தொகைப் பெருக்கத்திலும் மிகுதியான இக் கீழின உயிர்கள் அனைத்திலும் காதல் என்ற உணர்ச்சியே இல்லை. நேர்மாறாகக் காதல் கனிந்து விளையும் உயிரின உயிர்களில் இனப்பெருக்கமும் தொகைப் பெருக்கமும் மட்டமாகவே இருக்கின்றன, எனவே, காதல் உயிர் வளர்ச்சியில் இனப்பெருக்கத்திடையே வளர்ந்த பண்பாயினும் இனப்பெருக்கத்திற்கான் பண்பு அன்று. அஃது உயிர்களின் பண்பாட்டு வளர்ச்சியிலும், குடும்பம், சமூகம், நாகரிகம் ஆகியவற்றின் வளர்ச்சியிலும் தோன்றிய பண்பே. அதன் நோக்கம் அன்பும் கூட்டுறவும் மட்டுமன்றி, வேறு எதுவுமல்ல. மேற்கூறியவற்றால், காதல் வாழ்வு குடும்ப வாழ்வுக்குரிய ஒரு வாயில் என்றும், அது சமூக வாழ்வுக்கு ஒருபடி என்றும் அதன் மூலமே நாகரிகம் வளர்கிறதென்றும் காண்கிறோம். வாழ்க்கையின் வாயிற்படியாகிய இளமையில் வந்து நிற்கும் இளைஞரும், நங்கையரும் தன் காதலர் கருத்தை ஈர்ப்பதற்காகவும், மதிப்பைப் பெறுவதற்காகவும், அன்புக்கு உரியவராகவும் எடுத்துக்கொள்ளும் முயற்சியே, சமூகத்தின் கருத்தையும் மதிப்பையும் அன்பையும் பெறுவதற்காக அவர்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஓர் ஒத்திகை ஆகும்.இந்த நோக்கத்துக்கு ஒத்த அளவில், இந் நோக்கத்தை நிறைவேற்றும் அளவில் அவர்கள் அழகு பேணக் கடவர்; தூய்மை பேணக்கடவர்; பிறர் மதிப்பதற்கேற்ற தன்மதிப்புப் பேணக்கடவர்; கயவர் தன்மையறிந்து விலகுதற்கேற்ற அறிவு பெறக்கடவர். தீமை பெருக்கி நன்மை பெருக்குதற்கேற்ற அன்பு பாராட்டக்கடவர். சமநிலையும், கூட்டுறவும் பேணும் கலைப் பண்பு வளர்க்கக்கடவர். காதல் வாய்ப்புப் பெறாதவர்கூட, காதலின் நோக்கங் களறிந்து தம் அடிப்படைக் குறைபாட்டை நீக்கக்கூடா தென்றில்லை. காதலில் சற்றுக் குறைப்பட்ட உணர்ச்சியே நட்பு. வாழ்க்கைத் துணையாகத் தமக்கு வாய்த்தவர் காதலரல்லாத இடத்தில், அவரை நண்பராக்குதல் கூடாததன்று காதல் தங்கம் போன்றதானால், நட்பு வெள்ளி போன்றதென்பதில் ஐயமில்லை. தியாகத் தீயில் புடமிட்ட நட்பு பலசமயம் காதலை கடந்து, ஒளி வீச வல்லது. மற்றும் தம் காதலுக்குரியவரான வாழ்க்கைத் துணைவருக்குக் காட்டப்படும் தியாகத்தைவிட நட்புக்குரியவரான ஒருவருக்குக் காட்டப்படும் தியாகம், தன்னையும் உயர்த்திப் பிறரையும் உயர்த்தி, பல சமயம் காதலர் வாழ்விலும் அரிதான உயர்பீடு தரமுடியாதென்றில்லை. காதலைத் துறந்தும் காதலில்லாமலும் பீடுற்ற பலர் வாழ்வுகூடப் பாலைவன நீரூற்றுப் போலச் சிறத்தல் இதனாலேயே ஆகும். குடும்பச் சூழலும், சமூகச் சூழலும் பலவழியில் காதல் திறமற்றக் கேடுறுமிடத்தில், காதலின் இயற்கைத்திறம் குடும்ப நிலை கடந்து, சமூகநிலை பெற்று, மக்கள் தொண்டார்வமாகவும், நாட்டார்வமாகவும், அறிவார்வமாகவும், கலையார்வமாகவும், கடவுட்பற்றாகவும் மாறுவதுண்டு. நீர் கெட்டியாகிப் பனியாகவும், பனிப்பறையாகவும், ஆவி வடிவாகி நீராவியாகவும் மாறி, தோற்றமும் பண்பும் வேறுபட்டாலும், அப்பொருளின் உள்ளார்ந்த தன்மை மாறாததுபோல, பல சமயம் நீரால் ஆற்றமுடியாச் செயல்களையும் அவை ஆற்றுவதுபோல, காதல் உருமாறி இப்பண்புகளானபோது, தோற்றமும் பண்பு மாறினும், அதன் இயல்புப் பண்பாகிய அன்புத்திறம் மாறாது, பல சமயம் இயலுருவினும் மேம்பட்ட பெரும் பயனையும் அளிக்க வல்லதேயாகும். காதல் வாழ்வின் கவர்ச்சியுட்பட்ட இளைஞரும், நங்கையரும் அது தற்காலிக உணர்ச்சியன்று, வாழ்க்கை மலரின் முதலரும்பு என்று கண்டால்; அதனைத் தேறும்வரை அக் கவர்ச்சியில் நின்று, தேர்ந்ததே தன்னுழைப்பு, தன்மதிப்பு தன்மேம்பாடு ஆகிய நிலத்தின் மீது நிற்கும் தகுதியும்; அதன் மீது விட்டுக்கொடுப்பு, ஒத்துழைப்பு, நேர்மை, அன்பு, தியாகம் ஆகிய சுவர்களும், கட்டுமானமும் எழுப்பும் திறமும்; இவற்றை கவித்து நற் சமூகப் பயன், புகழ் ஆகிய கூரைகள் வேயும் பண்பும் உடையவராகக் கடவர். இதுவரை தாய்தந்தையரிடம் பொறுப்புவிட்டு வாழ்ந்த அவர்கள், தம் நன்மை தீமைக்குத் தாய் தந்தையரே தண்டனை பெறவிட்ட அவர்கள் இதுமுதல் தம் பொறுப்பையும், துணைவர் பொறுப்பையும் தான் ஏற்கக் கடவர்; தம் நன்மையின் பயனை துணைவர்க்கும் ஈந்து, துணைவர் தீமையின் தண்டனையைத் தாமே பெரிதும்பெற முந்துறக்கடவர் ஆசிரியரிடம் வழி கேட்ட அவர்கள், அவர் வழிநின்ற அவர்கள், தாமே வழியறியவும் தம் துணைவருக்கு வழிகாட்டவும், அதே சமயம் துணைவர் வழிக்கு விட்டுக்கொடுத்து அதன் விளைவையேற்று, அவரை நல்வழிப் படுத்துவதன் மூலமே, தாம் நலம்பெறும் பண்பை அடையக் கடவர். தோழருடன் குலாவினும் தனிவாழ்வும் தனி நலனும் விடாத அவர்கள், காதலருடன் குலாவுவதுடன் அவர் வாழ்வன்றித் தமக்கென வேறு வாழ்விலா நிலையைப் பெறக்கடவர். இயற்கையின் குறிக்கோளாகிய இறைவன் நெறி எனக் காணக்கடவர். காதல் உணர்ச்சி இளமைப் பருவத்திற்குப் புது உணர்ச்சியும் புது அனுபவமும் ஆகும். ஆதலால் அதில் ஏற்படும் மயக்கங்களும் ஏமாற்றங்களும் எண்ணிறந்தன. இவற்றுட் சில, காதற்காலத்திலும் இளமையிலும் கசப்பு, துன்பம், பலசமயம் அழிவு ஆகியவற்றைத் தருபவை. ஆனால், இன்னும் சில இடர்கள் இளமையிற் பயன் தராமல் நீடித்த , வாழ்வில் கசப்பையும், தோல்வியையும் தருவன. இவ் விருவகை இடர்களினின்றும் காதலர் தப்பவேண்டுமானால், காதலுணர்ச்சியில் தாம் ஈடுபடு முன்பே, அதற்கான தகுதியைப் பெற முயலுதல் வேண்டும். அஃதாவது தம் வாழ்வின் முத் திறங்களிலும் சரிசமநிலை பேணுவதில் விழிப்பாயிருக்க வேண்டும். இதனை விளக்கமாகக் கூறுவதனால், இளைஞரும் நங்கையரும் உணர்ச்சி வயப்பட்டு அறிவுத் திறமிழக்கவோ, அறிவுத்திற மேம்பட்டு உணர்ச்சியைப் புறக்கணிக்கவோ, இவ்விருதிறமும் பேணிணும் செயல் திறத்தை மறக்கவோ கூடாது. இளமைப் பருவத்தினர் பெரும்பாலார் செய்யும் தவறு, முதல் தரத்தது. உலகில் இன்று ஆண் பெண் பாலாரிடையே சமூகத்தில் ஒத்த நேர்மையில்லாத நிலையில், இதனால் இரு பாலாருக்கும் கேடு ஏற்படுவது உறுதியாயினும், ஆடவரினும் பெண்டிர் அடையும் கேடே நீக்கமுடியாததாயுள்ளது. ஆடவருள் தலைசிறந்த கவிஞனான தாந்தே உணர்ச்சி வயத்தில் அறிவுத் திறமிழந்தான். காதலறியாச் சிறு பெண்ணைத் தன் கற்பனைக் காதலுக்கிலக்காக்கி, அவளைப் பெறாததாலும் அவளும் விரைவில் இறந்தாலும், அவ் வொரே உணர்ச்சியில் தன்னிலை முழுவதையும் இழந்தான்.உலகுக்குத் தன் உணர்ச்சி யனைத்தையும் பிழிந்து அவன் கவிதைப் பெருங்காப்பியமாக தந்திராவிடில் தாந்தேயின் காதலை எவரும் அறிவற்ற பயனற்ற மடமைக் காதலுக்கு ஓர் இலக்கியமாகவே கொண்டிருப்பர். ஆனால், அவன் கலைத்திறம் அவன் காதல் திறத்துக்கு மதிப்புக் கொடுக்கிறதேயன்றி, அவன் காதல் கவிதைக்குச் சிறப்புத் தருவதாகக் கொள்ள முடியாது. உண்மையில் தாந்தே போல் எந்த இளைஞனாவது நடந்து கொண்டால், அவனிலும் அறிவற்றவன் உலகில் எவனும் இருக்க முடியாது. உணர்ச்சியில் அறிவை இழக்கும் பெரும்பாலான தவற்றையன்றி அறிவால் உணர்ச்சியிழப்பவர்களும், செயல் திறத்தால் இரண்டும் இழப்பவர்களும் இல்லாமலில்லை. அறிவுத் திறமிருந்தும் உணர்ச்சித் திறமற்றவர்கட்கு சாக்ரடீஸ் ஓர் இலக்கியமாகக் கூடும். உலகுக்குகே அறிவொளி ஈந்த அப் பேரறிஞன், உணர்ச்சித்திறம் குன்றியதனாலேயே, அதனைச் சமூகத்தில் பரப்ப முடியாமல் எதிர்ப்பாற்றலைக் கிளப்பி அழிய நேர்ந்தது. இஃது அவர் பெருமைக்கு ஊறு தருவதல்லவாயினும், அதன் முழுப் பயனுக்கு ஊறு தருவதே. பல இளைஞர் களிடையே கருத்துப் புரட்சி ஏற்படுத்திய அவர், புத்தரைப்போல் வாழ்க்கத் துணைவியைத் தம் முதல் சீடராகப் பெற முடியவில்லை என்பது வெளிப்படை. அறிவிலும் செயலிலும் சிறந்து, உணர்ச்சித்திறமும் இன்றிக் காதலற்ற வாழ்வு வாழ்ந்தவருட் குறிப்பிடத்தக்க இரு தனிப்பெரியார் உரோமப் பேரரசர் ஜூலியஸ் ஸீஸரும், பிரான்சின் வீரப் பேரரசன் நெப்போலியன் போனப்பார்டும் ஆவர். ஜூலியஸ் ஸீஸர் வாள் வலியால் உலகாண்டவருள் முதல்வரும் நல்ல இலக்கியப் பயிற்சியுடைய எழுத்தாளரு மாயினும், காதல் துறையில் ஒரு கயவனெனத்தக்க வாழ் வுடையவரே. நெப்போலியனோ நாளைக்கொரு நாடுவென்ற வீரனாயினும், செயல் துறையில் மனிதப் பண்பின் எல்லைக் கோட்டை எட்டியவனாயினும், அவன் வாழ்வு உண்மையில் காதலற்ற வாழ்வாகவே இருந்தது. அவன் காதலியர் பலர்; ஆனால் அவர்கள் அவன் உயர் நிலைச் சிறப்பால் விலைக்கு வாங்கப்பட்ட காரிகைகளே. அவன் வீரர்தாம் அவனுக்காக உயிர்கொடுக்கும் உறுதியுடையவராயிருந்தனர். அவன் காதலியரல்லர்! பெண்டிருள்ளும் நெப்போலியனைப் போலக் காதலை விலைக்கு வாங்கியவர் உண்டு. எகிப்து அரசி கிளியோப்பாத்ரா இங்ஙனம் மன்னர், பெருமன்னர், வீரர் காதலையும் உயிரையும் விலைக்கு வாங்கிய அரசியேயாவள். புகழுலகின் உச்சியை எட்டுமளவு அரிய இயற்கைத் திறமுடைய இவர்களே முத் திறப் பண்பொவ்வாது காதலிற் சீரழிந்தனராயின், மற்றையோர் இச் சமநிலை யெய்தாமல் மேம்பட மாட்டார் என்று கூறத் தேவையில்லை. காதலைப் பெற்றவர் காதலையே வாழ்வாகக் கருதுவர். ஆதலால் அவர்கள் காதல் போனால், வாழ்தலை விரும்பமாட்டார். அதனாலேயே கவிஞர், “காதல், காதல், காதல்; காதல் போயிற் சாதல், சாதல், சாதல்” எனச் சாதற் சிறப்புரைத்தனர். இது வெளிப்பார்வைக்கு உயர்வு நவிற்சியணியாகத் தோற்றமாயினும், காதலின் திறமுணர்ந்தவர் கட்கு இஃது அதன் தன்மையை உள்ளவாறுணர்த்தும் தன்மை நவிற்சியணியேயாகும். காதல், வாழ்க்கையின் தொடக்கத்திலும் இன்றி, இறுதியிலுமின்றி, இடையில் வருவதென்று பேதையர் கருதும் கருத்தைக் கண்டித்து, வாழ்க்கையின் தொடக்கமும் இடையும் ஈறும் காதலே என்றுதான் கவிஞன் எண்ணியிருக்கக் கூடும். காதலற்ற மனிதன் பிறந்தும் பிறந்தவனல்லன்: வாழ்ந்தும் வாழ்ந்தவனல்லன்; அவன் வாழ்விறுதியுற்றும், இறுதிப்பயனுற வில்லை என்று கவிஞர், “காதல் போயிற் சாதல், சாதல், சாதல்,” எனக் காதலையும், சாதலையும் மும்முறை அடுக்கினார் என்னலாம். காதலற்றவன் பிறப்பும் சாப்பிறப்பு, வாழ்வும் சாவாழ்வு அவன் இறப்பும் சாவிறப்பு என்று அவர் கருதியிருக்கவேண்டும். காதல் தன்மதிப்பைத் தூண்டும்; தன்முனைப்பை அழிக்கும்; தன் முயற்சியை ஊக்கும்; குறுகிய தன்னலத்தை வேரறுத்து, பரந்த உலகப்பற்றை வளர்க்கும். அது மனிதனைத் தெய்வமாக்கும்; போலிக் காதலாகிய சிற்றின்ப வேட்கை இத்தனை பண்பு களையும் தலைகீழாக்கும். மனிதனை விலங்கினும் கீழினப் படுத்தும், காதலைச் சிற்றின்பம் என்று பலர் கருதுவதனாலேயே அஃது இழிபொருள் ஆகக் கருதப்படும் காதல் சிற்றின்பம் அன்று, பேரின்பப் பண்பு. அக உணர்ச்சியின் நிறைவு காதல்; காதலின் உறுதி மணம்; மணத்துக்கு முற்பட்ட காதல் புறந்தோன்றாது, அல்லது புறந்தோன்றவிடாது, இருவரிடையே பேணப்படும் தன்மை யுடையது. மணத்துக்குப் பிற்பட்ட காதல் இக் களவுநிலை கடந்து, உலகறிந்த இருமையுள் ஒருமை நிலையுடைய கற்பாக விளங்குகிறது. அக்கற்பின் திறம்பேணும் காதல் தலைவியர் கடமைகளை வரும் பிரிவிற் கூறுவோம். 5. குடும்பத் தலைவரின் பொறுப்புகள் குடும்பம் என்ற எல்லையை எட்டும் வரை மனிதன் வாழ்வுக்கும், விலங்கின் வாழ்வுக்கும் மிகுதியும் வேறுபாடு காண முடியாது. அதற்கு முற்பட்டு ஆண், பெண் ஆகிய இருபாலாருக்கும் வாழ்விலும், கடமைகளிலும் வேறுபாடு மிகுதியாகயில்லை. ஆனால், குடும்ப எல்லையை எட்டியபின் மனிதன் தனிப்படச் சமூகத்தின் உறுப்பாவதில்லை. ஆண் பெண், அஃதாவது கணவனும் மனைவியும் சேர்ந்தே சமூகத்தின் ஓர் உறுப்பாகிறார்கள். இருவர் கடமையும் சேர்ந்ததன்றி ஒரு முழு மனிதன் கடமை ஆகாது. அந்தக் கடமையில் ஆணின் பங்கும் பெண்ணின் பங்கும் இரு பகுதிகள்; இவ் விரு பகுதிகளும் ஒருவகைப்பட்ட பகுதிகள் அல்ல; ஆனால், ஒன்றையொன்று எதிர்பார்த்து அவாவி நிற்கும் பகுதிகள். இருவரும் ஒப்பானவர்கள்; ஆனால் இருவர் கடமைப் பகுதிகளும் ஒன்றல்ல. இருவர் கடமைகளும் இருதிசை நோக்குபவை. ஆனால், இரண்டும் எதிரெதிராக வந்து ஒன்றுகூடி இணைபவை. இத்தகைய ‘வேற்றுமையில் ஒற்றுமை’யே குடும்ப வாழ்வின் மறை மெய்ம்மை ஆகும். அது வகை துறையில் வேறுபட்டு, நோக்கத்தில் ஒன்றுபட்ட பண்புப் பாகுபாடு ஆகும். குடும்பத்தின் வெற்றிக்குரிய பண்புகள் பல கூறப்படலாம், ஆனால் அவ்வெற்றிக்கான உயிர் நிலைப் பண்பு குடும்பத் தலைவர்களான கணவன் மனைவியரிடையே ஏற்படும் காதல்தான். இவ் வுயிர்ப்பண்பு அமைந்துள்ள குடும்பத்தில், வேறு எந்தப் பண்பு அமைந்திராவிட்டாலும் அத்தனை கேடு ஏற்படாது என்னலாம். ஏனெனில், காதல் எல்லாப் பண்புகளையும் படைக்கும் திறமுடையது. ஆனால், குடும்பத் தலைவரிடையே காதல் இல்லாமல் வேறு எத்தனை நற்பண்புகள் இருந்தாலும், அக்குடும்ப வாழ்வு உருப்படியாக முடியாது. ஏனெனில், காதல் இல்லாத இடத்தில் பெரும் பண்புகள் பீடழியும். நற்பண்புகள் தீய பண்புகளாகத் தோற்றும். மிகச் சிறு கீறல்கள் பெரும் பிளவுகளாகவும் மிக மெல்லிய காற்று பெரும் புயலாகவும் உருவெடுக்கும். கணவன் ஒன்றெனில் மனைவி அன்றென்பதும், மனைவி அன்றெனில் கணவன் நன்றென்பதும் காதலில்லாக், குடும்பங்களில் மிகுதி. இவற்றால் சிறு வேற்றுமைகள் சிற்றூடல் களாகாமல் பெரும் பிளவுகள் ஆகும். காதலுள்ள இடத்தில் பொய்ம்மைகூடப் பூவிற் சுரந்த தேனென இனிக்கும். காதலற்ற விடத்தில் மெய்ம்மைகூடப் பொய்ம்மை என்று ஐயுறப்படும். எனவே, இளமைக் கவர்ச்சியில் தோன்றிய காதல் இளமையுடன் மடிவதன்று; அது மனிதனைச் சமூக உறுப்பினனாக இயக்கி ஒரு நாகரிக இனமாக ஆக்கும் முதல் உணர்ச்சியேயாகும். காதலற்றவர் நோக்கு கடுகை மலையாக்கும் நோக்கு காதலர் நோக்கு மலையைக் கடுகாகக் கருதும் நோக்கு. இவ்விரண்டு நோக்குகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்தால் விலங்கு நிலைக்கும் மனித நிலைக்கும் உள்ள வேற்றுமையை உணரலாம். காதல் நோக்கு வாழ்க்கையைக் குறிக்கோளாக் கொண்டது. இடையில் வரும் தடங்கல்கள் காதலர்க்குக் கடத்தற்குரிய தடங்கல்களேயன்றி, தடையாதற்குரிய தடங்கல்கள் அல்ல. காதல் வாழ்வின் வெற்றி ஒருவர் வாழ்வின் வெற்றியன்று; இருவர் வாழ்வின் வெற்றியேயாதலால், குற்றம் யாருடையது. வெற்றி யாருடையது. என்ற ஆராய்ச்சியில் காதலர் புகுவதில்லை. புகினும் விளையாட்டின்பம் நாடிப் புகுமேயன்றி, வெற்றிப் பண்புடன், போட்டி எதிர்ப்புப் பண்புடன் புகார். ஆனால், காதலற்றவர் நோக்கு வாழ்க்கை நோக்கன்று; இருவர் வெற்றி விருப்பன்று. அஃது இன்பநோக்கு, ஒருவர் வெற்றி நோக்கு. அது தடங்கல்களைத் தடைக் குரியவையாகவே வரவேற்கிறது. காதற் ‘போராட்டத்தில்’ வெற்றியுண்டு; தோல்வியில்லை. ஏனெனில் அவர்கள் நாடும் வெற்றி இருவர் வெற்றியாதலால், அதில் வென்றவர் தோற்றவர் இருக்க முடியாது. அதுபோலவே காதலர் நாடும் இன்பம் இருவர் இன்பம் அதில் ஒருவர் இன்பத்துக்காக ஒருவர் துன்பப்பட வேண்டியதில்லை. ஒருவர் இன்பம் மற்றவர் துன்பம்; ஒருவர் வெற்றி, மற்றவர் தோல்வி; ஒருவர் ஆதாயம், மற்றவர் இழப்பு என்பதே ‘உலகியல்’ நெறி என்று சிலர் கூறும் விலங்கியல் நெறியாகும். இவ் விலங்கியல் நெறியிலிருந்து நாகரிகம் நோக்கி முன்னேற்றுவிக்கும் முதற் பண்பும், முதற்படியும் காதலேயாகும். காதலர் நோக்கின் தன்மையைப் பழைய ஜெர்மன் கதை ஒன்று நன்கு விளக்குகிறது. வாழ்வுடன் காதலும் வளர்ந்து கனிவுற்ற ஒரு கணவனும் மனைவியும் வாழ்க்கையின் பிற்பகுதியில் படிப்படியாக வறுமை பிடியிற்பட்டு வருந்தினர். அவர்கள் வருவாய் குறுகக்குறுக அவர்கள் தம் செலவையும் மட்டுப்படுத்திக் கொண்டே எளிய வாழ்க்கை வாழ்ந்தனர். மனைவி வீட்டினுள் தன் செட்டால் செலவை மிச்சப்படுத்தினால். கணவன் தன் செட்டால் வெளித்தோற்றத்தைப் பேணிவந்தான். ஒரு நாளிரவு கணவன் தன் மனைவியிடம் புதிதாக ஒரு கருத்தை வெளியிட்டான். அவர்கள் இளமைக் காலத்தில் வண்டியிற் பூட்டிப் பயன்படுத்திய குதிரையை அவர்கள் கிட்டத்தட்டத் தம் குடும்பத்தில் ஓர் உறுப்பாகவே வைத்துப் பேணினர். இப்போது அதற்குத் தீனியிடவும் அவர்களால் முடியவில்லை. அதைக் கொண்டுபோய் அயல் நகரிலுள்ள சந்தையில் விற்றுவிட்டால் என்ன என்பதே கணவன் எண்ணம். மனைவி அதற்கு இணங்கினாள். குதிரையுடன் சென்ற கணவன் வழியில் மற்றொரு குடியானவனைக் கண்டு, அவனுடன் அளவளாவிச் சென்றான். குடியானவன் நன்கு கொழுத்த ஒரு பசுவை நடத்திக் கொண்டு வந்திருந்தான். இரு நாட்டுப்புறத்தவரும் தத்தம் நாற்காலி நண்பரின் தனிச் சிறப்பைப் பற்றிப் புகழ்ந்து அதனை விற்க வேண்டும் என்ற நிலை வந்தது பற்றிப் பரிந்து பேசிக் கொண்டனர். அப்போது குடியானவனைப் பார்த்துக் கிழவன், “நாம் வீணே சந்தை வரைச் சென்று நம் விலங்குத் தோலுரை அவற்றின் மதிப்பறியா நகரமாந்தருக்கு விற்பானேன்? இவற்றை நாமே மாற்றிக்கொண்டால் என்ன?” என்றான். நாட்டுப்புறத்தானா னாலும், குடியானவன் சற்று உலகியல் தெரிந்தவன். அவன் உள்ளூரப் புன்முறுவலுடன், வலிய வந்த இப்பேரத்திற்கு இணங்கி அதன்படி விலங்குகளை மாற்றிக் கொண்டான். குதிரையைக் கொடுத்துப் பசுவை மகிழ்வுடன் இட்டுச் சென்ற கிழவன் மீண்டும் பல குடியான நண்பர்களுடன் இது போல ஊடாடிப் பசுவைக் கொடுத்து ஒரு கம்பளியாட்டையும், கம்பளியாட்டைக் கொடுத்துப் பன்றியையும், பன்றியைக் கொடுத்து வாத்தையும்; வாத்தைக் கொடுத்து கோழியையும் இறுதியில் கோழியைக் கொடுத்து ஒரு கணப்புக் கரி மூட்டையையும் பெற்றான். இதற்குள் அவன் சந்தையையும் அணுகிவிடவே, “வந்ததே வந்தோம்,” சந்தையைத்தான் பார்த்துவிட்டுச் செல்வோமே, என்று கருதி எங்கும் சுற்றுப் பார்த்தான், இறுதியில் அவன் களைப்புடன் சந்தை விடுதியில் சென்று மூட்டையைக் கணப்படுப்பருகில் வைத்துவிட்டுத் தன்னிடமிருந்த ஒரு செப்புப்பணத்தைக் கொடுத்துச் சிற்றுணா அருந்தினான். அவன் அருந்தி முடிப்பதற்குள் அருந்தகத்தார் ஒருபுறம் தீப்புகை கம்முவதைக் கண்டு கலகலத்தனர். அது வேறு எதுவுமில்லை. நம் நாட்டுபுறக் கிழவன் கணப்படு பருகில் வைத்திருந்த கரி மூட்டையே. மற்றவர் கண்டு அவிப்பதற்குள் கரி முற்றிலும் எரிந்து, சாம்பலாயிற்று. குதிரை கரிமூட்டையாகும் வரை கவலைப்படாத நம் கிழவன் இப்போதும் அவ்வளவாகக் கவலைகொண்டு விடவில்லை. இனி வீடு செல்லும்போது சுமை எதுவுமில்லாமல் செல்லலாம் என்ற மகிழ்ச்சி மட்டுமே கொண்டான். ஆனால், அவனுடனிருந்த சில வெள்ளையாடை நண்பர்கள் அவன் நாட்டுப்புற மடமை பற்றிக் கேலி செய்தனர். சூதுவாதற்ற கிழவன் அவர்களிடம் அக் கரிமூட்டை பற்றித் தனக்கு அக்கரையில்லை யென்றும், அஃது ஒரு கோழியைக் கொடுத்துத்தான் எவ்வளவோ தந்திரமாகப் பெற்றதே யென்றும் கூறினான். அதைகேட்டு அவர்கள் பின்னும் நதைத்தனர். அவர்கள் பெருகப் பெருக அவனும், கோழி பன்றிக்கும், பன்றி ஆட்டுக்கும் என இப்படிக் குதிரைவரை தான் திறம்பட ஆற்றிய பண்டமாற்றுக்கள் பற்றி எக்களிப்புடன் கதையளந்து தீர்த்தான். வெள்ளாடை நண்பர் வேறு வேலையற்றவரும், நகரின் இன்ப வாழ்வுச் செல்வருமாதலால், கிழவனைத் தொடர்ந்து இன்னும் இன்பப் பொழுது போக்குப் பெற எண்ணினர். அவர்கள் “அன்பரே! நீர் இப்போது எல்லாம் கவலையற்றுப் பேசலாம், வீட்டிற்குச் சென்றால், உம் மனைவியிடம் நீர் நல்ல கழற்றுமானம் வாங்குவீர்,” என்றனர். கிழவன் அப்போதும் தளராமல், “என் மனைவி என் திறத்தைக் கண்டு என்னை உச்சிமேற்கொண்டு மெச்சி மகிழ்வாள்,” என்றான், செல்வர் இவ் வியத்தகு மடநம்பிக்கை கண்டு, “அவள் அங்ஙனம் செய்வாளானால், நாங்கள் உமக்கு ஆளுக்கு ஒரு நூறு பொன் பந்தயம் வைத்துத் தருவோம்,” என்றனர். கிழவன் இணங்கினான். கிழவன் வீடு சேர்ந்ததும் அவன் செல்வர்களை மனைவிக்கு அறிமுகப்படுத்தினான். பின், அனைவரும் வீட்டின் விருந்தினராக அமர்ந்து உண்டனர். மனைவி கணவனிடம் குதிரை பற்றி எதுவும் கேட்கவேயில்லை கணவனாக அப்பேச்செடுத்தவுடன், அவளும் ஆர்வத்துடன் கேட்பதாகப் பாவனை செய்தாள். குதிரையைக் கொடுத்துவிட்டுப் பசு வாங்கினதை அறிந்ததும் அவள், “ஆகா மிக நன்று; பசுத்தான் நமக்கு வேண்டும். நமக்கு இனிப் பாலுக்குக் குறையிராது. தயிரும் வெண்ணையும் நிறையக் கிடைக்கும். எங்கே நம் பசுவைப் பார்ப்போம்,” என்றாள். பசு ஆடானதைக் கேட்டதும் அவளுக்குப் பாலின் ஆவல் மறந்து கம்பளியில்தான் ஆவல் மிகுந்தது. ஆடு பன்றியானபோது அவளுக்கு அதற்குத் தீனியிடும் செலவு மிகக்குறைவு என்று தென்பட்டது. பன்றி வாத்தான போதும், கோழியான போதும் அவளுக்கு வாத்து முட்டை, கோழிமுட்டி ஆகியவற்றில் ஆவல் மிகுந்தது. எல்லாம் மாறிக் கரி மூட்டைப் பற்றிக் கேட்டதும், அவளுக்கு அப்போதுதான் வீட்டில் கரியில்லை என்ற எண்ணம் உண்டாயிற்று! கரியும் எரிந்து வீணாயிற்று என்று கணவன் கூறிவிடவே, அவன் “அந்தக் கரியைச் சுமந்து கொண்டு ஆடையை அழுக்காக்காமல், அதை அங்கேயே தொலைத்துவிட்டு வந்தது நன்றாயிற்று. கரிமூட்டையுடன் நீங்கள் வந்திருந்தால், இந்த நல்ல அன்பர்களை நாம் இங்கே கண்டிருக்க மாட்டோம். மேலும் அக் கரிமூட்டையை நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் தொலைவில் வைத்திருந்ததனால்தான், தீயின் சேதமில்லாமல் வந்து சேர்ந்தீர்கள். எல்லாம் நன்றாய்ப் போயிற்று. நமக்கு இந்தக் கரியும் புகையும் தேவையில்லை. நம் காடுகளில் வேண்டிய அளவு மரம் இல்லாமலா போயிற்று?” என்றாள். வெள்ளையாடை நண்பர்கள் எதிர்பாராத இவ் வுரையாடல் கேட்டுத் தம் கேலிக்காக வெட்கிப் போயினர். அவர்கள் இன்ப வாழ்க்கைச் சோம்பேறி களாயினும், உள்ளூர நல்லவர்களேயா தலால், இம் முதுமைக் காதலியின் கனிவில் மகிழ்வுற்றுத் தாம் கூறிய தொகையைப் போல் இரண்டு பங்குத் தொகைக் கொடுத்துக் குடும்பத் தலைவர்களை வாழ்த்திச் சென்றனர். இக் கதை கட்டுக்கதையே; ஆயினும், இது காதலின் தன்மையை நன்கு எடுத்துக்காட்டுகிறது. குடும்பத் தலைவியிடம் இக் காதற் பண்பு இயற்கை நிலையைவிடச் சற்று மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதனால், அஃது ஓர் உப்பற்ற நகைச் சித்திரமாயிலங்குகிறது. ஆயினும், இது வெற்று நகைப்பன்று. அன்பு கலந்த புன்முறுவல் நகைப்பே. வாழ்க்கையை இன்பமாக கழிப்பது என்ற உறுதியுடையவர்கட்குப் புறத்தடங்கல்கள் எதுவும் குந்தமாக முடியாது. அவை வாத்துக்களின் முதுகில் பட்ட நீர்த்துளிகள் போலத் தொடக்கற்றுச் சிதறிச் செல்லும் என்பதை இக்கதை எடுத்துக்காட்டுகிறது. “வாழ்க்கை ஒரு சனியனுமன்று, சுமையுமன்று; கடந்து செல்வதற்கான ஒரு பாதையுமன்று; வாழ்க்கை வாழ்வதற்கே” என்று பல நல்லறிஞர் எடுத்துக்காட்டுவதுண்டு. காதல் கோட்பாடு இதனினும் ஒரு படி உயரியது எனலாம். அவர்கள் வாழ்க்கை ‘வாழ்வதற்கே’ என்று மட்டுமல்ல, வாழ்க்கை ‘வாழ்பவர்க்கே’ என்றும் கொள்கின்றனர். ஆகவே குற்றம் கண்டவிதத்தில் திருத்துவதும், திருத்த முடியாதவிடத்து அதன் பயனைப் பகிர்ந்து மகிழ்வதும், குறை கண்டவிடத்து அக்குறை பொதிந்து செல்வது மட்டுமே காதலர் பண்பாய் இருக்க முடியும். குறைகளில் தெரிந்த குறைகளும் உண்டு; தெரியாத குறைகளும் உண்டு. பின் கூறப்பட்ட குறைபாடுகள் இல்லாதவர் இல்லை. ஆனால், அவற்றையுடையோரைவிடப் பிறரே அவற்றை எளிதில் காண்பர். குறை கூறுவதால் அவை திருந்தமாட்டா; ஏனெனில், பிறர் குறைபாடுகளையே யன்றித் தத்தம் குறைபாடுகளை எவரும் காண முடியாது. இக் குறைபாடுகளை எடுத்துக்காட்டாத பேராண்மையும்; எடுத்துக்காட்டும் போதும் புண்படாது நயம்பட எடுத்துக்காட்டும திறமும்; அவற்றின் பயனை அக்குறைபாடுடையவருடன் தானும் மேற்கொண்டு, அக் குறைபாட்டையே நாளடைவில் குறைத்து, நீக்கும் சால்பும் சில சமயம் அக்குறைபாட்டையே திருப்பி நிறைபாடாக்கும் மாயச்சிறப்பும், காதல் ஒன்றிற்கே உரியவை ஆகும். காதலுக்கடுத்தபடி அதன் திறத்தின் சிறப்பில் பங்கு கொண்ட இனப்பண்புகளாகிய நட்பு முதலிய பிற அன்புத் திறங்களிலும் இதனைக்காணலாம். காதலில் தோன்றிக் குடும்பக்காதலில் வளர்ச்சியுற்று நாகரிகத்தில் முதிர்ச்சி பெறும் இன்னொரு பண்பு தன்னடக்கமும் மறையடக்கமும் ஆகும். இம் மறைப்பும் அடக்கமும் காதலில்லா வாழ்வில் காணப்படும் வஞ்சக மறைப்போ, வன்மம் உட்கொண்ட அடக்கமோ அல்ல. காண்பவர் கண்டுவப்ப, காணும் பண்பற்ற கயவர் காணாதிருக்கும் முறையில் மறைக்கும் திரை மறைப்பே, காதல் மறைப்பாகும். காதலரும், குடும்பத்தாரும், பண்புடையாரும் தனிமையும், ஓதுப்புறமும், தனிக்கூட்டுறவும் நாடுவது தம் பண்பறியாரிட மிருந்து மறைக்கும் மறைப்பேயன்றி, பிறரிடமிருந்து விலகி வாழும் மறைப்பன்று. இம் மறைப்பிற்குக் காரணம் காதலுக்கு ஒரு பண்பும் ஓர் அறிவுக்கலப்பும் இன்றியமையாத் தேவை என்பதே. குடும்ப வாழ்விற்கும் பண்பாட்டிற்கும் கூட அதே வகைப் பண்பும் அறிவுக் கலப்பும் தேவை. காதலரின் காதல் அழகை மட்டும் சார்ந்ததானால், அதனை மறைக்க வேண்டியதேயில்லை. யாவரும் காணும் அழகை அவர்கள் மறைக்கவும் முடியாது. மறைப்பவர் வேலையும் பயனற்ற வேலையாகும். ஆனால் காதல் என்பது புற அழகின் மறைவிலுள்ள அக அழகையும், அதற்கப்பாற்பட்ட அக அழகுத்திறங்களாகிய மனிதப் பண்புகளையும் காண்பதே ஆகும். இவற்றை அறிந்த அவர்கள் அப் போலிப் புற அழகை வீணாகப் பயன்படுத்தமாட்டார்; பிறரையும் பயன்படுத்தவிடமாட்டார். காதல் வாழ்வைவிடக் குடும்ப வாழ்வில் இம் மறைப்புக் குறைவதன் காரணமும், பண்புடையார் குழுவில் அஃது இன்னும் குறைவதன் காரணம் யாது? காதலின் தன்மையறிய மட்டுமன்றுக் காதல் வாழ்வின் பயனையும் பகிர்பவரே குடும்பமாக இணை கின்றனர். குடும்ப வாழ்வின் நுண் நயமறிந்தவரே பண்புடையார். இவர்கள் அனைவரும் காதல் எல்லை குடும்ப எல்லை பண்பெல்லையறிந்து பேணுபவர். இம்முத்திற எல்லைகளுக்கும் புறம்பான உலகம் நாகரிகப் போர்வை போர்த்தால்கூட உள்ளூர விலங்குலகமேயாதலால் அதனின்றும் விலகுதல் மறைப்பாகாது. அவர்கள் கண்ணை மறைக்கும் படலத்தை அகற்ற முயலுதலே யாகும் என்னல்வேண்டும். காதல் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் காதலர், சிறப்பாகப் பெண்டிர், அழகொப்பனையில் மிகுதியாகக் கருத்துச் செலுத்துவதுண்டு. இதனைச் சிறப்பெனக்கொண்டு பின்பற்று பவரும் உண்டு; இதனைக் கீழ்த்தரப் பண்பென இகழ்பவரும் உண்டு. காதற் பண்பும் வாழ்க்கைப் பண்பு முணைந்தவர். இவ்விரு சாராரிலும் சேர முடியாது. அழகு நாடுதலும், அழகொப்பனை செய்தலும் காதலின் இயல்புகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இப் பண்புகள் காதல் வளர்ச்சியில் பெருகி வளரும் பண்புகள் அல்ல; நேர்மாறாக தளர்ச்சி பெறும் பண்புகளே யாகும். காதலன் பண்பழகில் ஈடுபட்ட அறிவுடைப் பெண் தன் புற அழகின் கவர்ச்சியால் அவனைத் தன் பண்பழகில் ஈடுபடுத்து கிறாள். புற அழகின் ஒப்பனை அவள் அறிவுப் பண்பின் சின்னம். ஏனெனில், தன்னை அழகுபடுத்தும் பெண்ணே பின்னர்த் தன்னையும், வீட்டு வாழ்வையும் அழகு படுத்திச் செம்மையுறுத்து கிறாள். தன்னை அழகுபடுத்தும் கை தான் கணவன் வாழ்வையும் பிள்ளைகள் வாழ்வையும் செப்பம் செய்யும் கையாகிறது. காதல் வாழ்வில் தம்மை ஒப்பனை செய்வதில் பெண்களினும் இயல்பாகக் குறைவுபட்ட ஆடவர், பிற்கால வாழ்வில் தத்தம் செயல்களிலும் தம் பொருள்களை வைத்துப் பேணுவதிலும் செப்பமில்லாதவராகவே பெரும்பாலும் இருக்கின்றனர் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. ஆனால், காதல் வாழ்வில் ஒப்பனையில் மிகுதியுங் கருத்தூன்றிய பெண்பாலார், பிற்கால வாழ்விலும் தம் வீட்டையும், வீட்டுப் பொருள்களையும் ஒழுங்குபடவைத்துப் பேணுவதில் கைதேர்ந்தவராகவே இருக்கின்றனர். பெண்டிர் அழகு நோக்கு உண்மையில் ஆடவர் நினைப்பது போலப் பிறரைக் கவர்ச்சி செய்வதற்கு மட்டுமுரிய அழகுநோக்கன்று அவர்கள் காரியங்கள் எல்லாவற்றிலும் அது செப்பம் தருகிறது. கவர்ச்சியை அவர்கள் நாடுவதும் பிறரை இயக்கி நற்பயன் விளைவிக்கும் தொலை நோக்குடனன்றி வேறன்று. பெண்டிர் ஆடவரைவிட விரைந்து உடலிலும் அறிவிலும் வளர்கின்றனராயினும், அவர்கள் வளர்ச்சி உடல், உளம் இரு தரப்பிலும் ஆடவரைப் போலப் பருமையையோ, வலுவையோ நாடாது. நுண் நயமும் நீடித்த உள்ளுரமுமே நாடுவது ஆகும். இத் திறங்கள் அறிந்த குடும்பத் தலைவனும், தலைவியும் ஒருவரையொருவர் குறிப்பால் உணர்ந்து அவ்வத்திறங்களை வளர்ப்பதுடன் அவற்றுக்கேற்றபடி செயலாற்ற வேண்டும். நுண்மை, கலைத்திறம், தொலை நோக்கு, செப்பம் ஆகிய பண்புகள் வேண்டுமிடத்தில் ஆடவர் தாம் உழைப்பதிலு ம் பெண்டிரை முன்னிடல் சால்புடையதாகும். வலிமை, உறுதி, வீரம், துணிகரத் தன்மறுப்பு ஆகியவை வேண்டிய இடங்களில் பெண்டிர் தாம் முனைவதிலும் ஆடவரை முன்னிறுத்தல் சால்புடையது. வளர்ச்சிக்கு வேண்டிய அகப்பண்புளைப் பேணும் இயற்கைச் செல்வம் பெண். ஆனால், வளர்ச்சியில் முனைந்து முயற்சி செய்பவர் ஆடவர். இவ் விரண்டிலும் உயர்வு தாழ்வு கூறுவதென்பது, கூறுபவர் நோக்கின் கோணலினாலன்றி வேறன்று. பெண்ணை உயர்வென்று கூறுவது பொருள் திரட்டி முதலீடாக வைத்திருப்பவனைச் செல்வன் என்று கூறுவது போன்றது. ஆணை உயர்வென்று கருதுவது பணம் ஈட்டும் திறம் மிகுதி உடையவனைச் செல்வன் என்று கூறுவது போன்றது. இவ்விரண்டும் கருவியும், காரியமும் ஆதலால், இரண்டும் சேர்ந்தே ஒரு முழுப் பண்பு ஆகும் என்று கூறல்வேண்டும். குடும்பம் என்பது இங்ஙனம் ‘இருவர் ஆகிய ஒருவர்’ என்ற ஆட்சியே யாகும். குடும்ப ஆட்சியை நாம் ஓர் அரசியல் என்று கூறினால், அதை யாரும் ஓர் உருவக அணி என்றுதான் கூறுவர். ஆனால், குடும்ப ஆட்சியிலிருந்தே அரசியல் தோன்றியுள்ளது. உயர்ந்த அரசியல் முறையை, இன்றும் குடிபோலத் திறமையுடைய ஆட்சி என்ற சமூகத்திலேயே குடியாட்சி என்று கூறுகிறோம். ஆனால், நம் குடியாட்சிகளில் பொருளமைச்சர், உணவமைச்சர், உள் நாட்டமைச்சர், படைத்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், வெளிநாட்டமைச்சர் எனப் பல அமைச்சர்கள் பணியும், அவர்கள் கீழே பல பணியாளர் துணையும் தேவைப்படுகின்றன. குடும்பத்திலோ வெளிநாட்டமைச்சர் துறை போன்ற ஆடவரின் புறத்தொழில் ஒன்று நீங்கலாக, மற்றை எல்லாத் துறைகளையும் ஒரே அமைச்சராக நின்று குடும்பத் தலைவியே ஆற்றிவருகிறார். குடியரசமைச்சருக்கு ஊதியம் உண்டு. இக் குடும்ப முழுநிலையமைச்சருக்குக் குடும்ப உறுப்பின ருரிமையன்றி வேறு ஊதியம் கிடையாது. ஆயினும் எந்தக் குடியாட்சியும் குடும்பத்தைப்போல, திறம்பட ஆளப்படுகிறது என்று யாரும் கூறமுடியாது! இதன் மறைதிறவு யாது? குடும்ப ஆட்சி காதலடிப்படையில் நடைபெறுகிறது. அக்காதல் இருக்கும் வரையில் குடும்ப ஆட்சி பழுதுபடாது. குடியாட்சியில் காதலுக்குப் பதில் இடம்பெறும் பண்பு நாட்டுப்பற்று ஆகும். காதலின் அளவில் நாட்டின் உறுப்பினர் அனைவரையும் நாட்டுப்பற்று ஈடுபடுத்துவதும் அரிது; அதன் தலைவரிடம் அது தலைமைப்பட்டுச் சிறத்தலும் அரிது. இவ் விரண்டு நிலையும் ஏற்பட்டால்தான், குடியாட்சி குடும்ப ஆட்சிபோன்ற சிறப்புடையதாகும். பெண்டிர் தம் இயக்கும் திறம் காரணமாகவும், தொலைநோக்கு, செயற்செப்பம் ஆகியவை காரணமாகவும் அமைச்சராக நடந்தாலும், உண்மையில் அவர்கள் நிலை, அமைச்சர் நிவை யன்று; அரசர் நிலையேல. கணவனும் மனைவியும் உண்மையில் குடும்ப ஆட்சியை ஒருங்கே நடத்தும் இரண்டு துணையரசர்களே யாவர். இதனாலேயே இருவரும் தலைவன் தலைவி என ஒப்பாக அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் உயர்வு தாழ்வோ தனித்தனிப் பொறுப்போ கிடையாது. இருவர் பொறுப்பும் ஒரே கூட்டுப் பொறுப்புத்தான். இதனால் இருவரும் ஒன்றுபட்டன்றி குடும்பத்தை நடத்துதல் முடியாது. அவ்வொன்றுபடும் பண்பு காதலாலேயே உண்டாகிறது. இருவரும் ஒன்றுபட்டபின் அதே காதல் குடும்பப்பற்றாகி, பிள்ளைகளையும் உறவினர்களையும் இணைத்து, நாளடைவில் சமூகப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றையும் உண்டாக்குகிறது. காதலில்லாத இடத்தில் நாகரிகம் வளராததற்கும், பெண்கள் சமத்துவமில்லாச் சமூகங்கள் பின்னடைவதற்கும் காரணம் இது வேயாகும். குடும்பத் தலைவருள் ஒருவராக அமைந்தவளும் மற்றத் தலைவரை இயக்குபவளும் ஆகிய பெண், குடும்பத்தினுள் எல்லாக் காரியங்களையும் தலைவன் குறிப்பு மாறாமலும் அவன் ஒத்துழைப்புடனும் தானே ஆற்றுகிறாள். குடும்பத்திற்கு வெளியிலுள்ள எல்லாக் காரியங்களையும் அதுபோல ஆடவன் அவள் குறிப்பறிந்து தானே செய்யும் வெளிநாட்டமைச்ச னாகவும், வெளிநாட்டுத் தூதுவனாகவும் செயலாற்றுகிறான். பொருள் துறையுலோ ஈட்டும் துறையை ஆடவன் ஆற்றுகிறான். அதனை பேணும் திறத்தையும், பயன்படுத்தும் துறையையும் பெண் ஆற்றுகிறாள். காதல் வழியில் நிற்கும் குடும்பங்கள், பெரும்பாலும் இவ்வியற்கை வழியில் நின்று நலம்பெறுவது காணலாம். ஆணின் திறத்தைப் பெண்ணும், பெண்ணின் திறத்தை ஆணும் திறம்பட ஆற்றக்கூடாதென்றில்லை. ஆனால் இது வாழ்க்கையில் சிக்கனப்படாது. இஃது ஆங்காங்குச் சிறக்கும்; பொதுச் சிறப்பு ஆகமாட்டாது. பெண்டிர் வீரராய்ப் போரிலீடுபடுவதும், பொது பணிகளாற்றுவதும் தவறன்று. அஃது ஆடவர் இசை, நடனம், கவிதை முதலிய கலைத் துறைகளில் சிறப்பது போன்றதே யாகும். குடும்ப வாழ்வு எல்லைக்கு வெளியில் ஆண், பெண் இருவரும் தனித்தனியே செயலாற்றி தீர வேண்டுமென்றில்லை. ஒருவர் திறம் மற்றவர் திறமாகக்கூடா தென்றுமில்லை. ஆனால், வாழ்க்கையின் முதல் நிலையான குடும்பத்தில் இயற்கை நெறியே சிறந்ததாகும். பெண் பொருளீட்டு மிடங்களில் அதனைப் பேணும் செயலை, ஆடவனால் ஆற்ற முடிவதில்லை. குடும்ப வாழ்வை ஒதுக்கிவிடுமளவில் பெண்டிர் பொதுப் பண்பிலீடுபட்டாலும் ஆண் அவ்வாழ்வில் பெண்ணின் இடம் பெறல் முடியாத ஒன்று ஆகவே, பெண்ணின் திறங்களிணும் எல்லை விரிவு குறைப்பட்ட ஆடவனுக்கு அவனுக்குரிய பொருளீட்டல், வீரம் ஆகியவற்றை விட்டு, மீந்த திறங்களில் இருபாலாரும் பங்கு கொள்ளுதலே சால்புடையது. ஆயினும் சமூகத்தில் பெண்டிர் சமத்துவம் பேணுவதற்காகவும், தன்மதிப்பைப் பேணுவதற்காகவும், சொத்துரிமையும் பொருளீட்டும் உரிமையும் வேண்டு மெனப் பெண்கள் கோருவது தவறன்று. இது குடும்ப வாழ்வைப் பாதிப்பதாக யாரும் கொள்ள முடியாது. ஏனெனில் காதலிக்கும் குடும்பத்தில் உரிமை பற்றிய பேச்சுக்கு இடமே இருக்க முடியாது. ஆனால் குடும்ப வாழ்விலும் சரி, பெண்கள் சொத்துரிமை யில்லாததால், காதற் பண்புக்கே இடையூறு நேரிடுகிறது. பெண்டிர் ஆடவர் சொத்துக்கு உரியவரல்லாதவராயிருப்ப தனால்தான், அவர்கள் கல்விக்கும் உரியவரல்லவர் என்று கருதப்படுகிறது தமக்கெனச் சொத்து பெண்களுக்கு இல்லாத தனால், பெண்கள் தாம் காதலித்தவரை மணக்கும் உரிமை இழக்கின்றனர். கணவனை இழந்தால் தன்னிடம் பாசமற்ற அவன் உறவினரால் தொல்லைப்படுகின்றனர். கணவன் காதல்கூட பலசமயம் சொத்துரிமையற்ற பெண்ணைப் பிற உறவினர் நிலைகளிலிருந்து பாதுகாக்க முடிவதில்லை. ஆதரவற்ற, பெண்களோ சொத்துரிமையும் வருவாய்க்குரிய வழியும் இல்லாத நிலையிலேயே கீழ்த்தர வாழ்விலிறங்க வேண்டிய நிலைக்குரியரா கின்றனர். ஆண்களில் வருவாய்க்கு வகையற்றவர் கொள்ளைக் காரராவதும், பெண்களில் வருவாயற்றவர் குடும்ப வாழ்வில் இடம்பெறாது தவறுவதும் கண்கூடு. இவையன்றி, சொத்துரிமையற்ற பெண், காதல் வாழ்வில்கூடத் தலைவனுடன் ஒப்பானத் தலைவியாய் இருக்கமுடியாது என்று கூறத்தேவை யில்லை. ;செல்வற் குடியிற் பிறந்த பெண்ணும், ஏழையைக் காதலித்தால் ஏழையாகத் தீரவேண்டியிருக்கிறது. ஆடவன் தன் செல்வத்தை காதலிக்கு உரிமையாக்குவது போல், அவளால் உரிமையாக்க முடிவதில்லை. காதலின் திறங்குறைந்த ஆடவர், குடும்ப நலன் பேணாது, குடி, கூத்தி, தகாத்தோழமை ஆகியவற்றால் கெடுதல் கூடும். அதுபோலக் காதலின் திறம் குறைந்த பெண்டிரும் குடும்ப நிலைமீறி ஒப்பனை, ஆடையணிமணி, இன்பக் கேளிக்கைகள் ஆகியவற்றில் கருத்துக் கொள்ளக்கூடும். இவ் விருதிறத்த வரும் குடும்ப வாழ்வினைச் சீர்குலைப்பவரேயாவர். இத்தகையவர் களை ஒறுத்தடக்கும் பொறுப்பை நல்ல சமூகம் ஏற்றுக்கொள்ளல் வேண்டும். எனவே நல்ல குடும்பத் தலைவர், தலைவியர், தம் குடும்பத் தலைமையுடன் நின்றுவிட முடியாது. தாம் ஒன்றுபட்டுக் குடும்பம் நடத்துவதுபோலவே, பிறரும் நடத்தும்படி அவர்கள் உதவவேண்டும். சமூகக் கட்டுப்பாடுகள், வழக்கங்கள் இந்நோக்கம் கொண்டு அமைந்தவையே யாகும். இவற்றை அமைத்தோர் காலம் கழிந்தபின், இவற்றின் நோக்கங்களை அறிந்துள்ளவர் குறைகின்றனர். இதனால், கட்டுப்பாடுகள் மூடநம்பிக்கைகள் ஆகின்றன. பழக்கங்கள் மூடப்பழக்கங்கள் ஆகின்றன. முன் கட்டுப்பாடுகளை அமைத்த நல்லறிஞர் வழிநின்று அன்றன்றையச் சூழ்நிலைக் கேற்பப் புதுப்புது வழக்கங்களை ஏற்படுத்திப் பழக்கங்களாக்காவிட்டால் சமூக வாழ்வு வளர்ச்சி பெறாது. வளர்ச்சி பெறாத இத்தகு சமூகத்தில் குடும்பம் வளர்ச்சியற்று மரத்துப்போகும். குடும்பம் காதலுக்காக அமைந்த வேலி என்பதும் மறக்கப்பட்டுப் போகும். பழக்கங்களின் பொருளையும், கட்டுப்பாடுகளின் பொருளையும் வரன் முறையறிந்து விளக்கும் விளக்கமே கல்வியாகும். கலையும் இலக்கியமும் இவ் வரன் முறைகளைப் பேணும் கல்வி ஆகும். இக்கல்வியில் ஒரு பெரும் பகுதி குடும்பப் பெண்களால் பேணப்பட்டு வருகின்றது. அரசனில்லாதபோதும் அரசியல் நிலையங்கள் சிலகாலம் தாமாக இயங்குவதுபோல, சமூகக் கல்வியில்லாத விடத்துப் பெண்டிர் சிலகாலம் சமூகத்தை இயக்கிச் செல்லும் திறம் உடையவர்கள். ஆனால் கல்வியில்லாச் சமூகம் நீடித்து நிலைக்கமுடியாது. சமூக முழுவதுமே கல்வியைப் பேணாமல் அதன் ஒரு பகுதியையே பேணினால், அப்போதும் சமூகம் சீரழியும், ஆனால் கல்வியைப் பேணும் சமூகப்பகுதி பெண்ணாயிராதவரை கல்வி வளர்ச்சி பெறவே முடியாது. ஏனெனில் சமூகத்தில் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அறிவைக் கொண்டு செல்லும் பாலம் பெண்டிரேயாவர். ஆடவரிடம் வழக்கமாக வழங்குபவை. பெண்டிரிடம் பழக்கமாகப் பழகியே, வரும் தலைமுறையின் இயற்கைப் பண்பாகின்றன. இப் பழக்கங்களின் பொருளறிவும் கல்வியறிவும் பெண்டிரிடமிருந் தாலன்றி அவர்கள் புதிய வழக்கங்களை ஆக்குவதில் உதவவோ, பழக்கங்களை அவற்றின் பயனறிந்து பேணுவதில் அக்கரை காட்டவோ முடியாது, ஆகவே, குடும்பத் தலைவரும் தலைவியரும் தம் குடும்பத்திலும், தாம் உறுப்பினராயிருக்கும் சமூகத்திலும் கல்வியைப் பேணி, ஆண், பெண் இருவரிடையேயும் சரி சமமாக வளர்க்கும் நோக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுவது இன்றியமையாதது. பிள்ளைப்பேறு காதலின் நோக்கமன்று. ஆனால், குடும்பத்தில் அது தலையான நோக்கம் ஆகும். இந் நோக்கத்தை சிலர் அதன் அளவால் மதித்துவிடுகின்றனர். நல்ல குடும்பம் என்பது நிரம்பப் பிள்ளைபெற்ற குடும்பமன்று, நல்ல அறிவும் பண்பும் உடைய குழந்தைகளைப் பெற்று வளர்த்த குடும்பமே அதுவே சிறப்புறும்; எனவே, நல்லுடலும் நல்லறிவும் உடைய குழந்தைகளைப் பெற்றெடுத்தலும், அவர்கட்கு நல்ல பயிற்சி அளித்தலுமே ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு உரியதாகும். அளவை மட்டுப்படுத்தினாலன்றிப் பண்பை உயர்வுப்படுத்த முடியாது என்று கூறத்தேவையில்லை. கீழின உயிர்களிலும் மேலின உயிர்கள் இனப்பெருக்கத்தில் தொகை குறைத்தே பண்பு மேம்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளோம். ஆயினும் குறைப்பதற்கோ, கூட்டுவதற்கே எல்லைகூற முடியாது. குழந்தைகள் தொகையும் சரி, பண்பும் சரி, தாய் தந்தையர் உடல்நிலை, பொருள் நிலை, பண்பு ஆகியவற்றைப் பொறுத்தது. அளவினும் பண்பு முக்கிமானது என்பதையும், பண்பு குன்றாத நிலையிலும், பொருள் வருவாய்க்கு ஒத்த வகையிலும் அளவுப் பெருக்கம் தடுக்க வேண்டியதன்றென்று மட்டும் கூறலாகும். அளவினால் பண்பு குறையுமிடத்திலும், பொருள் சிக்கல் ஏற்படுமிடத்திலும் மட்டுமே அளவு கண்டித்தற்குரியதாகும். வறுமையிருக்கு மிடத்தில் பிள்ளைகள் பெருக்கமாகவும் செல்வமிருக்கு மிடத்தில் குறைவாகவும் இருப்பதை நாம் இயல்பாகக் காண்கிறோம். இதனால் வறுமைக்கும் இனப்பெருக்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக்கூடும் என்று பலர் எண்ணிவிடுகின்றனர். பெரும்பாலும் வறுமை யிருக்குமிடத்தில்தான் பெருக்கத்தைப் பற்றி நாம் கவனிக்கிறோம். அதுபோல செல்வமிருக்கு மிடத்தில்தான் அதன் அருமையை சிந்திக்கிறோம். எனினும், இயல்பாகவும் இவ்வேறுபாட்டுக்கு ஒரு காரணம் இல்லாமலில்லை. வறுமையில் பசியும் உழைப்பும் தோழமையுடையவை. முன்னது உச்ச நிலை யடையுமிடத்தில் உடலழியுமாயினும், உச்ச நிலையிற் குறைந்த அளவில் அஃது உடலை உரப்படுத்தும் என்பது உறுதி. செல்வர் நல்லுண்டி, உடை, வீடு முதலிய வசதிகள் உடையராயினும், பெரும்பாலும் பசியும் உழைப்புமில்லாமல் நோயுடலைச் சுமக்கின்றனர். ஆண் பெண் இருசாராரும் இக்காரண காரியத் தொடர்பறிந்தால், தம் குடும்ப வாழ்வைச் செப்பம் செய்தல் எளிது. நல்ல உழைப்பு, நல்ல உணவு, நல்ல வாழ்வு ஆகியவற்றைப் பேணினால் பிள்ளையில்லாமல் பிள்ளையாகக் கொள்ள வேண்டியும் வராது. மணமுடிக்கு முன்பே, தலைவனும், தலைவியும் மண வாழ்க்கைக்கான வருவாய்க்கு வழி செய்துகொண்டாலன்றி மண வாழ்க்கைத் தொடக்கத்தி லிருந்தே புதிய மணவாழ்வுக்குப் பல இடையூறுகள் நிகழக்கூடும். காதல் தடங்கல்களை வெல்வதே யாயினும், அதனைத் தெரிந்து மேற்கொள்வதோ, தொடக்கத் திலேயே அதனைத் துன்பப் பாதையில் செலுத்துவதோ, காதலின் அறிவுத்திறம் ஆகாது. ஜப்பான் நாட்டினரிடையேயும், கீழ் நாட்டவர் பலரிடையேயும் மணவாழ்வின் செலவுகளைத் தாமே மேற்கொள்ளும் வண்ணம், மணமாகா ஆடவரும் பெண்டிரும் அதற்கெனக் கூலிவேலையிற் புகுந்து பொருள் ஈட்டுவராம். மணவாடைகளின் செலவுகட்கு மணமகளே ஈட்டிய பின்னும், மணவாழ்க்கைத் தொடக்கச் செலவுகட்கு மணமகன் ஈட்டிய பின்னுமே, அவர்கள் மனைவினையுட் புகுவராம். காதல் வாழ்க்கைப் பொறுப்பிற்கு இஃது ஒரு நல்ல சான்று. ஆணோ பெண்ணோ, குடும்பச் செல்வமுடையவரா யிருக்குமிடத்தில் கூட, அதை மட்டும் நம்பியே மணவாழ்வில் புகுதல் அடிமைப் பண்பாகும். தாய் தந்தையர் விருப்பத்துக் கடங்கிக் காதலர் தம் காதலுறுதி செய்தபின் தம் மண வாழ்விற்காக எவ்வளவு காலம் காத்திருப்பதையும் ஒரு பொருட்டாகக் கருதார். விலக்கமுடியா வறுமையிடையே மணமான மணத் துணைவர் வாழ்வில் வறுமையைப் போக்கும் பொறுப்புக் காதலுக்கு - சிறப்பாகப் பெண்ணின் காதலுக்கே உரியது. துன்பத்தில் பெண்டிர் துவள்வாரானால், அவர்களாலேயே இயக்கப்பெறும். ஆடவன் முயற்சி முழுப்பயன் தராது. பெண்ணின் காதல் இயக்க, ஆண் தன் முயற்சியில் முழு ஆற்றலுடன் முனைகிறான். அஃது அவன் முயற்சியாற்றலை வளர்ப்பதுடன், அதன் பாதையிலுள்ள தடைகளைத் தாண்டவும், தளர்ச்சிகளைத் தாங்கவும் வலுத்தருகிறது. முயற்சி முழுத் தோல்வி பெற்றாலுங் கூட, அதனால் ஆடவன் மனம் இடிவுறாமல், அமைந்துநின்று மீட்டும் பூது முயற்சி கொள்ளப் பெண்ணின் காதல் உதவும். மனைவியிடம் காதலன் குறிப்பறிந்து பழகுவதுடன், மற்ற உறவினருடன், சிறப்பாக மாதருடனும் அவ்வவர் தொடர்பு இயல்புகளுக்கேற்ப அணுகாது, அகலாது நேசமனப்பான்மை யுடனும், ஆதரவுடனும் பழகுதல் வேண்டும். பெண்ணின் உறவினரிடம் அவன் அன்பு சற்று மிகுதியாக இருத்தல் சால்புடையது. மனைவியும் இதுபோலவே ஆடவருடன் முழுவதும் ஒத்துறவாடு வதுடன், பிற உறவினர் நண்பர்களுடனும், சிறப்பாக ஆடவருடனும், கணவரின் உறவினருடனும் தகுதியறிந்து பழகுதல் வேண்டும். அணுகாது அகலாது பழகுதல், இங்கும் அவசியமானது. பழக்கத்தின் அணுக்கம் அவர்கள் குடும்ப உறவு. கணவன் மனைவி பொது நட்பு ஆகியவற்றின் அளவாகவும், தொலைவு அவர்கள் உறவு, பொது நட்பு ஆகியவற்றின் தொலைவாகவும் இருக்க வேண்டும். ஆடவர் பெண்டிருடனும் பெண்டிர் ஆடவருடனும் பழகுமிடத்து இருவரும் எதிராளியின் பண்படிப்படையாகவே அணுக்கமும் தொலைவும் வரையறுத்துக் கொள்ளல் வேண்டும். கணவன் மனைவியரின் காதலே எல்லாத் தொடர்புகளின் அளவு கோலாதலால், இருவரும் தம் நண்பரிடமும், சிறப்பாகத் தம்மின் வேறுபட்டவர்களிடமும் தத்தம் வாழ்க்கைத் துணைவர் காதலன்பிற்கு மேற்படாத, அதனுடன் முரண்படாத அளவில் பழகுதல் வேண்டுமென்று கூறத்தேவையில்லை. உண்மையான காதல் பொறாமைக்கு இருபுறமும் இடம் வைக்காதென்றாலும், குறிப்பறியாத இடத்தில் உண்மைக் காதலளவில் பொறாமையும் வலியுடையதாகும். கணவன் மனைவியர் ஒருவர் வகையில் ஒருவர் பொறாமைப்படாது நடப்பதுடன், அப்பொறாமை கண்டவிடத் திலும், ஒரு சிறிது ஊடல், பிணக்குக் காணப்பட்ட இடத்திலும் அதனைக் கண்டு புறக்கணித்தலோ, பொருட்படுத்தாம லிருத்தலோ பெருந்தவறு. பொறாமை காதலின் வலிவுக்கொத்த வலிவுடையது மட்டுமன்று, தடங்கள் ஏற்பட்டபோது அது காதலை விழுங்கி வளரும் தன்மையுடையது. நாடகங்களிலும், புனைகதைகளிலும் இதன் பயனாகத் துயர் நிகழ்ச்சிகளை நான் காண்கிறோம். பெண்ணை பிள்ளைப்பேறு, பிள்ளை வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டும், கணவன் நலம் பேணியும் குடும்பத்தில் தொல்லைகளை ஏற்றுக்கொற்ற வேண்டியவள். ஆதலால் அவள் உடல்நிலை, மனநிலை ஆகியவையறிந்து கணவன் அவளிடம் தனிச்சலுகைகள் காட்டவேண்டும். பெண்டிரே குடும்ப வாழ்வின் மென்மலராதலால், ஆடவன் அவர்களைக் கண்போல் பேணக்கடவன். அதே சமயம் பெண்டிர்க்குக் கணவனே கண் என்று கூறத் தேவையில்லை. கணவனைக் கண் என்று கருதாத காரிகையர் கண்ணிழந்தாலன்ன கடுந்துயர் அடைவது உறுதி. குழந்தைப் பேற்றுக்குப்பின் கணவன் பொறுப்பு மிகுகிறது. ஆயினும், ஒருவகையில் மனைவியின் காதல் வாழ்வு இப்போது முன்னையினும் உரம்பெற்று விடுகிறது. குழந்தைகளால் மாதர்க்கு எத்துணைத் துன்பங்கள் ஏற்படினும், குழந்தை வளர்ப்பு அவர்களுக்கு ஒரு கடமையாக மட்டும் இல்லை. இன்பமாகவும் அமைந்திருக்கிறது. உண்மையில் பெண் விரும்பும் பேரின்பம் இதுவல்லதில்லை என்னலாம். ஆடவனுக்கும் குழந்தைகள் இன்பம் கொடுத்தல் உறுதியாயினும் இஃது அவன் காதல் வாழ்வின் பண்பையே பொறுத்தது. மனைவியைப் பேணாது குழந்தைகளைப் பேணிப் பரிவு காட்டும் கணவர் உண்டு. இது சுவரை விட்டுவிட்டுச் சித்திரத்தைப் பேணுவது போன்றதேயாகும். உண்மையில் தான் உடல் நலமும், உளநிறைவுமன்றிப் பிள்ளைகள் உடல் நலத்துக்கும் உள நலத்துக்கும் உத்தரவாதமளிப்பவை வேறு எதுவுமில்லை. மனைவியைப் பேணிய கணவன் குழந்தைகளிடம் கொள்ளும் இன்பம், எதிரெதில் நிலைக் கண்ணாடிகளில் தோன்றும் எண்ணற்ற நிழலுருக்கள் போல, அவனிடமிருந்து மனைவி யிடமும், மனைவியிடமிருந்தும் அவனிடமும் மாறிமாறிப் பரந்து பெருகும். பெண்டிருடன் பழகுவதும் குழந்தைகளுடன் பழகுவதும் ஆடவர்க்கு ஒரு கலை பெண்டிருக்கோ கணவனுடன் பழகுவதும் பிற ஆடவருடன் பழகுவதும் தான் கலை ஆகும். முன்னது காதலின் பயனாக வரும் இயற்கைக் கலை; பின்னது சமூகப் பழக்கம்; கல்வி, ஆடவர் பண்புகளை அறிதல் ஆகியவற்றால் மட்டுமே ஏற்படக்கூடும் சமூகக் கலை. ஆண் பெண்களாகிய பெற்றோரிருவரும் குழந்தையிடம் பாசங் கொண்டு விட்டால் மட்டும் போதாது. குழந்தையின் இயல்பறிந்து வேண்டுமளவு பாசங் காட்டினும், தேவைப்படும் அளவுக்கு அதற்குத் தன்செயல், தன்போக்கு ஆகிய வாய்ப்புகள் தரவேண்டும். குழந்தை தாய் தந்தையரிடம் எவ்வாறு நடந்து கொள்கிறதோ, அதைப் பொறுத்தே அது பிறருடன் பழகும் வகையும், அதன் பிற்கால அறிவும், பண்பாடும் அமையும். ஆகவே, மிகுதி அன்பு காட்டுவதன் மூலமாகக் குழந்தையைச் செயலற்றதாக்குவதோ, மிகுதி சலுகையால் முரட்டுத்தனம், பிடிவாதம் ஆகியவை உடையதாக்குவதோ தவறு. கொடுமையும் அசட்டைத்தனமும் இதனைவிடத் தவறு ஆகும். அன்பு, சுதந்திரம்; தவறு செய்துவிட்டு ஆதரவாக எச்சரிப்பது; வரம்புகளை அறியப் பழகுவது; படிபடியாகப் பிறருடன் எப்படிப் பழகுவது என்ற படிப்பினை தருவது ஆகியவை பிள்ளை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை. பிள்ளைகளைத் திருத்தும் வகையில் தண்டனையினும் அன்பு பேரிடம் கொள்ளல் வேண்டும். தண்டனையிலும் அவ்வன்பைச் சிறிது மறைத்துக் காட்டுவதே குழந்தைகளைத் திருத்துவதற்கான மிகச் சிறந்த வழி. தாய் தந்தையர் தம்முள்ளும் குழந்தையிடமும் காட்டும் பண்புகளே, குழந்தைகளையும் மறியாமல், அக் குழந்தைகளின் எதிர்கால இயற்கைப் பண்புகளாகின்றன. சிறிது வளர்ந்த குழந்தைகள் எப்போதுமே தாய் தந்தையருடன் அடைப்பட்டிருக்க விடக்கூடாது. குழந்தையின் வளர்ச்சியில் அதனையொத்த வயதுடைய பிற குழந்தைகளின் பழகும் பழக்கம் மிக அவசியமானது. இஃது இல்லாத குழந்தைகளே பிற்காலத்தில் கூச்சமும், சமூகத் தொடர்பில் வெறுப்பும் உடையவை ஆகின்றன. குழந்தைகளை ஆண் பெண் என்று வேறுபாடின்றிப் பழக விடுவதும். அவற்றின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். சிறு பருவத்தில் பிறரிடம் பழகாத பிள்ளை வருங்காலத்திலும் மற்றவர் மனப்பான்மையை உணரமுடியாமல் தயக்கம் அடைகிறது. எதிர்பாலாரிடம் சில சமயம் கொடுமையும், சில சமயம் கசப்பும் கொள்ளத் தொடங்கிவிடுகிறது. தமக்குரியரிடம் உரிமை பாராட்டும் சமயம் உரிமை காட்டினால் போதும் சற்றுத் தொலையுறவுடையவரிடமும், உறவற்ற நண்பர், சமூகப் பண்புடை யாரிடமும் அன்பும் ஆதரவும் வெளிப்படையாகக் காட்டுவதற்குரியன. காதலரும் நெருங்கிய உறவினரும் வாய்மொழி யில்லாமலே குறிப்பறிபவர். தொலைவினுள்ளவர்களிடம் மன உணர்ச்சி களைச் சமயத்துக்கேற்பச் சிறிது பெருக்கி முகமனுரைகள் கூறுவதும், கடிதம் எழுதுகையில் சிறிது விளக்கிப் புனைந்து எழுதுவதும் அவசியம். தம் மனைவியரல்லாத மாதரிடமும், தம் கணவரல்லாத ஆடவரிடமும் ஒருவர் பேசமுடியாதுபோனால், பண்புடையராகக் கருதப்படமாட்டார். அப்பேச்சுகள் காதலுரிமையிற் பெரிது குறைந்தும் அவ்வவர் தகுதிக்கேற்ப நட்புரிமையில் பலதிறப்பட்டும் இருத்தல் வேண்டும். கூடியமட்டும் தீய ஐயங்கள், தயக்கங்கள் கொள்ளாமலும் கொள்ளா விடாமலும் பார்த்துக் கொள்ளல்வேண்டும். இவற்றையே நாம் சமூகப் பண்பு என்கிறோம். இவையில்லா தாரிடம் அஃதாவது பண்பில்லாதவரிடம் பேச்சும் தேவையில்லை, ஒளிப்பும் தேவையில்லை. அவர்கள் தொடர்பை விரும்பவதாகவும் காட்டிக்கொள்ள வேண்டியதில்லை வெறுப்பாக மிகுதி காட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், விலகி ஒதுங்கிச் செல்லுதலும் அவராக அணுகினாலும் இடங்கொடாமல் செல்லுதலுமே நலம். பண்பிலாரிடம் நடக்க வேண்டிய இம் முறையைச் செல்வர், தம்மினும் செல்வம், பதவி ஆகியவற்றில் குறைந்தவரிடமும், வெளித்தோற்றத்தில் குறைப்பட்டவரிடமும் காட்டுவதுண்டு. சமூகத்தில் இஃது ஓரளவு தேவைப்படலாம். ஆனால், சமூகம் கடந்தது மனிதப்பேரினம். அதனை மறக்காத அளவில் புறத்தோற்றத்திலும், செல்வ நிலையிலும் வேறுபட்டாரிடத்தில் ஒப்புரவு, கண்ணோட்டமும் காட்டவேண்டும். பெண்டிர் வலிமையற்றோர், குழந்தைகள், துன்பமுற்றோர் ஆகியவர்களுக்கு உதவவேண்டின், சமூக எல்லை, புறத் தோற்றங்கள் ஆகியவற்றைக் கலைக. இதுவே பண்பிற் சிறந்தார் நிலை. சமூக நிலைகளைப் போலவே சமயத்துறையிலும் சமூகத்தார் பேணுமளவு புறத்தோற்றங்களைப் பேணல் தேவைப்படலாம். ஆனால் புறத்தோற்றம் பேணுவது சமூகத்தின் தவறு என்று உணர்ந்து, பண்புடையாளர் அவ் வகையில் தம்மாலியன்ற அளவு சமூகத்தைத் திருத்தக் கடமைப்பட்டவர். சமயம் என்பது உண்மையில் சமூகத்திற் கப்பாற்பட்ட மனித இனப்பற்றே ஆகும். இஃது அன்பு சார்ந்ததாகவே இருத்தல் வேண்டும். வெளித்தோற்றங்களிலும் வினை முறைகளிலும் பற்றுக் காட்டுவர், உள்ளூரச் சமயவாழ்வை அரித்துக் குலைப்பவரேயாவர். காதலின் பெயரைக் கண்டவிடமெல்லாம் பயன் படுத்துபவன், அதன் பெருமையைக் குலைப்பவனே யாவான். எல்லாப் பண்புகளினூடாகவும் விளங்கும் அப்பண்பு, முழு உருவில் காதலர் தனி வாழ்வுக்கு மட்டுமே உரியது. அதுபோலவே, கடவுளின் பெயரும், வாழ்க்கையின் பிற கடமைகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட உயரிடத்தில் மட்டுமே வைத்துப் பேணத்தக்கது. அதனை மலிவான சரக்காக்குபவனும், அதனைப் பிழைப்புக்கு உதவும் கருவியாக்குபவனும் கடவுட் பண்பின் பகைவர் ஆவர். உண்மைக் கடவுட்பற்றை ஒருவன் சொல்லைவிட அவன் செயலிலும், அவன் செயலைவிட அவன் நோக்கத்திலும், அச் செயலின் பயனிலுமே காணலாம். ஒருவன் கடவுளிடம் பற்றுடையவனானால், அதை அவன் காட்டுமிடம் ஒன்றே ஒன்றுதான் - கடவுளின் படைப்புகளிடம் அவன் அன்புடன் நடப்பது ஒன்றே. ஒரு நண்பனை ஒருவன் மிகுதியும் மகிழ்விக்க விரும்பினால், அவன் குழந்தையைப் பாராட்டுவதிலும் உயர்முறையிருக்க முடியாது. அதுபோலக் கடவுளுக்கும் அவர் பிள்ளைகளில் கடைப்பட்ட பிள்ளையை நேசிப்பதுபோல, உகந்த செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. காதலினும் மிகுதியாக ஒருவன் உயர் பண்புகளைக் காட்டும் பண்புக்கூறு ஒன்று உண்டு. அது துன்பம்தான். துன்பம் வந்தவிடத்துப் பண்பு குன்றுபவன் உண்மையில் பண்பற்றவனே. புடமிடும் பொன்போலப் பண்பு, துன்பத்தால் உயர்வது இதனாலேயே வெளியில் தோன்றாது அடங்கிக் கிடக்கும் பண்புகள் கூடத் துன்பத்தில் முழு உருவுடன் ஒளிரத் தொடங்குகின்றன. இத் துன்பம் தனி மனிதனை அழித்தால்கூட நாட்டை உயர்த்தும். நாட்டை அழித்தால்கூட மனித இனத்தை உயர்த்தும். பண்பின் உயர்வுமிகுந்தோறும் தனி மனிதன், குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகள் தவிடுபொடியாகி, அடிப்படைப் பண்பாகி மனிதப் பண்பு வந்தெய்தும். இம் மனிதப் பண்பு தனி மனிதனாகிய கீழ் எல்லையையும், மனித இனமாகிய பேரெல்லையையும் பிணைப்பதாகும். குடும்பத் தலைவர் கடன்படாத பொருளியல் வாழ்வும் நோய்க்கிடங்கொடா உடல் நல வாழ்வும் பேணுதல் வேண்டும். பொருள்துறையில் குடும்பத் தலைவர் இருவருள் எவரும் சமூகத்திற்குக் கட்டுப்படுவதன்றி, எந்தத் தனி மனிதனுக்கும், குழுவுக்கும் தனியடிமைப்படல் கூடாது. அத்தனியடிமைக்கு இடங்கொடுக்கும் மனிதர் மட்டுமன்றி, அதனை ஆட்கொள் பவனும், சமூகமும் நாளடைவில் கெடுவது உறுதி. நல்லுழைப்பும் பசித்துண்டலும், வருவாய்க்குட்பட்டு வாழலும் மேற்கூறியவை இரண்டையும் பேணுபவை. ஆடவர் அடிமைப்படுவது. தவறாயினும் பெண்டிர் அடிமைப்படுவது அதனினும் பன்மடங்கு தவறு ஆகும். ஏனெனில், பெண்டிரின் மதிப்பே சமூகத்தின் தன்மதிப்பளவை ஆகும். விருந்தினராகப் புதிதாக வருபவர்கட்கு உதவுதலும், சுற்றம், நண்பர் ஆகியவர்கட்கு உதவுதலும், தம்மையண்டி அழைப்பவரை வேலையாட்களாக நடத்தாமல் நண்பராகவே நடத்துதலும் குடும்ப வளர்ச்சி பேணுபவன் தவறாது மேற்கொள்ள வேண்டிய கடமைகள் ஆகும். ஒருவன் தன் வருங்காலத்திற்கும், தன் குடும்பத்தின் எதிர் காலத்துக்கும் வைத்துச் செல்லத்தக்க பொருள் வைப்பீடுகள் பிள்ளைகள் கல்வி பிறர்க்குதவுதல் ஆகிய இரண்டுமே. கல்வியை மதியாது செல்வத்தை நம்பி வாழும் சமூகங்கள் கண்ணைப் பேணாது, கண்ணாடியைப் பேணுபவை ஆகும். ஏனெனில் செல்வம் இழக்கத்தக்கது; கல்வியோ அழியாதது; தலைமுறை தலைமுறையாக எளிதில் வளர்ச்சி பெறுவது. அது செல்வத்தை ஆக்கவும், ஆக்கிய செல்வத்தை அழிவுறாது பேணவும், அழிந்த செல்வத்தை மீட்டும் பெறவும் உதவவல்லது. பொதுவான குடும்பப் பொறுப்புகளை இத்துடன் நிறுத்திப் பெற்றோர் என்ற முறையில் குடும்பத் தலைவர்க்குரிய கடமைகளைப் பற்றி வரும் பிரிவில் கூறுவோம். 6. பெற்றோர் பொறுப்பு கால்வாங்கி நின்று தோல்வாங்கி எய்யும் அம்புபோல், ஒருவர் குழந்தைகள் அவர்கள் தலைமுறை கடந்து, கால எல்லையிலுள்ள புகழிலக்கு நோக்கி, உய்க்கப்பெறுவர் ஆவர். பெற்றோரின் நற்பண்புகளும் தீய பண்புகளும் பிள்ளைகள் மூலமாகவும், பிள்ளைகளின் பிள்ளைகள் மூலமாகவும் உலகில் நின்று பரவி நிலைபெறுகின்றன. இவற்றையறின்தோர் தம்மைப் பேணுவதிலும், தம் குழந்தைகளைப் பேணுவதிலும் கண்ணும் கருத்துமாயிருக்கக் கடவர். நாம் நம் முன்னோர்களிடமிருந்து பரந்து பெருகிய பசுங்கிளைகள் பலவற்றில் ஒன்றாதல்போல, நம்மிடமிருந்து பல்கிப் பெருகிக் கிளைக்கும் பல்லாயிரக்கணக்கான பசுங்கிளை களுக்கு நாம் தாய்மரமாவோம். ஆகவே, நம் முன்னோர்களின் நற்பண்புகளுக்கு நாம் ஆற்றும் கடமைகளும் உண்டு. நம் பின்னோர்களுக்கு நாம் ஆற்றும் பொறுப்புகளும் உண்டு. நம் சின்னஞ்சிறு வழுக்களும், வடுக்களும், நம் பிள்ளைகள் வாயிலாக நம் மரபின் மாறாப்பழிகளாக வளரத்தக்கன. அவற்றை நாம் எச்சரிக்கையுடன் விலக்கவும் பெரு முயற்சியுடன் அகற்றவும் வேண்டும். நம் நற்பண்புகளும் இதுபோல் பெருகத்தக்கவை யாதலாலும், தீய பண்புகளைத் தடுப்பதற்கு நல்ல பண்புகளினும் சிறந்த கருவியில்லையாதலாலும், நம்மிடம் அவற்றைப் பெருக்குவதிலும், நம் குழந்தைகளிடம் அவற்றை உண்டுபண்ணுவ திலும், நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற பண்பில் பெருமை யடைவரிலும் நாம்குறை வைக்கக்கூடாது. ஒழுக்க நூலார், ‘அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்’ என்றும் ‘தந்தை தாய்ப்பேண்’ என்றும் தாய் தந்தையரிடம் பிள்ளைகள் கொள்ள வேண்டும் கடமைகளையே சுட்டிச் சென்றனர். பிள்ளைகளிடம் தாய் தந்தையருக்குரிய பொறுப்பினை ஒழுக்க நூலார் சுட்டிக் காட்டுவதில்லை. இதற்குக் காரணம் பிள்ளைளைப் பெறு முன்பே பிள்ளையருமையினைத் தாய் தந்தையர் அறிந்தவர் ஆவர் என்று அவர்கள் கருதியதே. பிள்ளைப் பாசம் மனித நாகரிகத்துடனே மட்டுமன்றி, உயிர்கள் வளர்ச்சியினூடாக ஒட்டி வளர்ந்த இயற்கையுணர்ச்சிப் பண்பு. இதனாலேயே, ‘பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி வழங்கி வருகிறது. இதனைத் தாயின்பற்றில் நன்கு காணலாம். பிள்ளை எத்துணை தவறு செய்தாலும் எத்துணைக் கொடுமை செய்தாலும், தாய் தீமைக்கும் நன்மையே செய்து, பிள்ளை நலம் ஒன்று பற்றி மட்டுமே கவலை கொள்ளும் இயல்புடையவளாயிருக்கிறாள். ஆயினும், இங்ஙனம் பாசம்தான் மனித நாகரிகத்தில் வளர்கிறதே தவிர பொறுப்பும் பொறுப்புணர்ச்சியும் வளர்கின்றன என்று கூறுவதற்கில்லை. உண்மையில் விலங்குகளிடையே தான் பாசமும், பொறுப்பும் ஒருங்கே இயற்கையுணர்ச்சியாக வளர்கின்றன. மனிதனிடத்தில் பாசம் வளர்கிறது. பொறுப்பு மறுக்கப்படுகிறது, ஏனெனில், மனிதன் வாழ்வில் அவன் நீண்டநாள் அறிவின் செயலால், செயற்கையாகத் தோன்றி வளர்ந்துள்ள நாகரிகத்தில் அவன் பொறுப்பெல்லை, இயற்கையுணர்ச்சி யெல்லையை மீறி வளர்ந்துள்ளது. உயிரினங்கள் வகையில் பெற்றோர் பொறுப்பு, பிள்ளையைப் பெறுவதுடன் பெரும்பாலும் நீங்கிவிடுகிற தென்னலாம். உயிரினங்களில் அன்னையும் தந்தையும் இயற்கை வாழ்வே வாழ்வதினால், நம் உடம்பைப் பேணவோ, தம் பிள்ளைகள் உடம்பைப் பேணவோ தனிப்பட எதுவும் செய்ய வேண்டிய தில்லை. ஓடியாடி உணவு தேடித் தங்கு தடையின்று ஊடாடித் திரியும் வேற்றின் வாழ்வில், அவற்றின் உடல் உரம் பெற்றுக் குழந்தைகள் உடலும் உரமுடையதாகி விடுகின்றது. உயிரினங்கள் உயர்வடையுந்தோறும் சிறிது சிறிதாக பயிற்சி முறை தொடங்குகிறதாயினும், முட்டையிடும் உயிர்களில் இந்த முட்டையைத் தாய் குஞ்சு பொறிப்பதுடனும், முதிராக் குஞ்சுகளுக்குத் தாய் தந்தை இரை கொடுப்பதுடனும் நின்றுவிடுவது. பாலூட்டி வளர்க்கும் உயிர்கள் சிலநாள் குட்டிகளைக் கூட்டிச்சென்று, பகைவரிடமிருந்து தற்காலிகமாகப் பாதுகாப்பதுடன், தம்மைத் தமே அவை பாதுகாத்துக் கொள்ளவும் பயிற்றுவிக்கின்றன. மனிதன் இவ்வளவும் செய்வதே எளிதில் முடியாத காரியம், ஏனெனில், மனித நாகரிகத்தில் சமூகம் நெடுந்தொலை வளர்ந்துவிட்டது. தனி மனிதன் சமூகத்தினளவு வளரவில்லை. சமூகத்தைத் தம் அறிவால் வளர்த்தவர் சிலரே யாதலால், அச் சிலரே, சமூகத்தின் தலைமை வகித்து நடத்தினர். இவர்கள் பிறரை அதில் பங்குகொள்ளப் பயிற்றுவிக்கத் தவறினர். இது மட்டுமன்று, தலைமை வகித்தவர்களும் தம் வின்னோரைத் தலைமை வகித்து நடத்தப் பயிற்றுவிக்கவில்லை. ஆகவேதான் அறிவற்ற தலைவராகிய பின்னோர் முன்னோர் வழக்கங்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி, உயிரற்ற பழக்கங்களாக ஆக்கினர். புதிதாக அறிவுடைய தலைவர்கள் தோன்றிச் சமூகம் வளர்ச்சியடைந்தாலும், வளர்ச்சி மரபு தடைப்பட்டு, சமூக வளர்ச்சியில் மக்களும் பங்குகொள்ள முடியாமல் தலைவரும் தொடர்ந்து அதனைப் பேண முடியாமல் ஆயிற்று. இதற்கிடையில் அறிஞர் பலரும் பலபலவாறாக வளர்த்த அறிவுப் பகுதிகள் ஒரே பேரறிஞராலோ, ஒன்றுபட்ட அறிஞர் கூட்டுறவாலோ ஒருமுகப் படுத்தப்படாமல் போயின. தனித்தனி அறிஞர் சமூகத்தின் தனித்தனிக் கூறுகளின் தலைமையைக் கைக்கொண்டு, பலதுறைச் சிறப்பறிவை வளர்த்தனர். எனவேதான், இன்றைய நாகரிகத்தில் சமூக நோக்கு. மனித இன நோக்குக்குன்றி, தனி மனிதன் நோக்குத் தலை விரித்தாடுகிறது. இத் தனிமனிதருள்ளும் அறிஞராகவோர் படிப்படியாகப் பொதுவான மனித இன நலமறிந்து குழு நலமும்; குழு நலமறந்து தன்னலமும், தனி நலமும் பேணினராதலால், தம் அறிவைத் தம் தற்காலிகப் போலி நலத்துக்கும் அத்தன்னலத்தினைப் பெருக்க உதவும் குழு நலத்துக்கும் விற்கலாயினர். இதன் பரந்துபட்ட பயன் சமூக முழுவதையும் மனித நாகரிக முழுவதையும் பாதித்துள்ளது. ஒவ்வொரு தனிமனிதன் வாழ்வும். இங்ஙனம் சமூக வாழ்வில் ஓர் உறுப்பாக நிற்காமல் தனிப்பட்டு விட்டதாகையால், அவன் அறிவு வளரும் போதும் உடல் வளர்வ தில்லை. இரண்டும் வளரும்போதும்கூட சமூகம் அவனால் வளரவோ, சமூகத்தால் அவன் வளரவோ செய்வதில்லை. தற்காலிகமாக அவன் வாழ்வுக்கு அதுவும் குழுநலம் மட்டுமே வளர்ந்து சமூகம் கெடுகிறது. இத்தகைய இன்றைய மனித நாகரிகப் போக்கிற்குப் பல விளக்கங்கள் காட்டலாம். உணவை உண்டுபண்ணுபவன், மேலும் மிகுதியாக உண்டுபண்ணப் போதிய உணவு பெறுவதற்கு, இன்றைய நாகரிகத்தில் வழி கிடையாது. உழைப்பதனால் வளர்ச்சி பெறும் அவன் உடல், ஊட்டம் பெறாததனால் தேய்வுற்று அழிகிறது. அதே சமயம் அவன் உணவுப் பெருக்கத்தால் நலமுறுவதாகக் கருதிக்கொள்ளும் செல்வன், உணவூட்டம் பெற்றும் உழையாததனால், வளர்ச்சி பெறாமல் போகிறான். இவர்களிருவருக்கும் இடைப்பட்டவனாய். நாகரிகத்தை உண்டுபண்ணிய பண்டையறிஞர் மரபில் வந்த அறிஞனோ, உணவு உண்டு பண்ணும் உழைப்பாளிக்கு உதவமுடியாதவனாய், அதனைக் கண்காட்சியாகக் கொண்டு செரிக்குமாற்றலின்றி, உண்டு தெவிட்டும் செல்வனை அண்டிப் பிழைத்து, சமூகத்தைக் கெடுத்து, இறுதியில் தானும் தன் மரபுக்கெட்டு வாழவேண்டிய வனாகிறான். இதற்கிடையே அறிஞர் மரபில் வளர்க்கப்பட்டு வந்த அறிவுச் செல்வமும், எந்த ஓரறிஞனாலும் அறிந்து இயக்கவே முடியாத அளவு பரந்துவிட்டதனால், அறிஞர் பல துறை அறிஞராகப் பிரிவுற்று ஒற்றுமையும், பொது நோக்கும் இன்றிக் கெட்டழிகின்றனர். இத்தனைக் கேடுகளையும் இன்னும் உலகம் அறியாதிருக்கிறதென்றால், அதற்குக் காரணம் சமூகத்தில் இவற்றால்கூட வளர்ச்சி முற்றிலும் கெடாமல், சில போலிப் புறவளர்ச்சிகள் கண்களைப் பகட்டி உள்ளார்ந்த சீர்கேட்டை நாம் காணமுடியாமல், மறைப்பதேயாகும். தனி மனிதன் அறிவு என்றும் விரிவடைந்தே வருவதனால், அறிஞர் தொகை பெருகி, அவர்கள் மரபின் சீர்கேட்டை மறைத்து வருகின்றது. அறிஞர் பெருக்கம் என்பது தொகைப் பெருக்கமட்டுமல்ல; அவர்கள் அறிவு மக்கள் வளர்ச்சி வகையில் ஒன்றுபட்டு உழைக்கும் பண்பின் பெருக்கமே என்பது மறக்கப்பட்டு வருகிறது. தனி மனிதன் வாழ்வு, தனி மனிதன் வாழ்விலிருந்து தொடங்கி, தனி மனிதன் வாழ்வில் சென்று ஒடுங்குகிறதென்றே பலரும் கருதக்கூடும். ஆனால், உண்மையில் அது சமூக வாழ்வில் தொடங்கிச் சமூக வாழ்வில் முடிவதாகும். ஒருவரது இன்றைய வாழ்விற்குக் காரணமான முன்னோர் அவன் தந்தையும் தந்தையின் தந்தையும் ஆகிய நேர் முன்னோர் மட்டுமல்லர். ஒவ்வொருவர் நேர்வழி முன்னோர்கள் என்பது கூடத் தவறு. தந்தையின் தாய் தந்தையும், தாயின் தாய் தந்தையும் என இம் மரபு பெருகி, கிட்டத்தட்ட ஒருவர் இன முழுவதையும் குறிப்பதாகும். ஆனால், மனித நாகரிகம் ஓர் இன எல்லையுட் பட்டது அன்று. ஆகவே, ஒருவர் பிறப்பில் அடையும் நாகரிகப் பண்பு அவருக்கு முந்திய எல்லாத் தலைமுறைகளிலும் உள்ள உயர்வு அவனும் அவன் குடியும் பிறருடனும் பிற குடிகளுடன் உறவாடும் அளவைப் பொறுத்திருக்கிறது. ஒரு நாட்டின் நாகரிக உயர்வும். அந்நாடு உலக நாடுகளுடன் உறவாடி அவற்றின் நற்பண்புகளை மேற்கொள்ளுவதையே பொறுத்திருக்கிறது. இங்ஙனமாதலால், தனிமனிதன் தன்னைப் பேணுவது, தன் மரபைப் பேணுவது என்பது கூடியமட்டும் தன் முன்னோராக்கிய சமூகத்தின் எல்லா அறிஞர் அறிவின் பயனாகியப் பண்புகளைப் பேணுவதும், வளர்ப்பதுவும், வளர்க்கவும் மக்களைப் பயிற்றுவதுமே யாகும். இன்றைய பெற்றோர் தம் முழுப்பொறுப்பையும் நிறைவேற்றா திருப்பதற்குரிய பொறுப்பில் பெரும்பகுதி அப்பெற்றோருக்கு மட்டும் உரியதல்ல, இன்றைய சமூக முழுவதற்குமேயுரிது என்பதும் இதனால் தெளிவாகும். ஆனால் தனி மனிதர், “செய்த்தக்கன செய்யாமையாலோ செயத்தகாதன செய்வதாலோ,” தான் சமூக சீர்கேடு உறுகிறதாதலால், தனி மனிதர் முதற்கடமையும் பெற்றோர் முதற் கடமையும் தம்மளவில் சமூகநோக்கும் குறிக்கோளும் உடையவராய், தம்மைத் திருந்திய மரபு தோற்றுவிப்பதேயாகும். தாம் உழைப்பதனால், அவர்கள் தம் உடல் பேணி மக்களையும் தூண்டி உழைத்துண்டு உடல் பேணும் பண்பை வளர்க்க வேண்டும். தானுழைக்காது உண்பவரும், பிறர் உழைக்க உண்பவரும் கெட்டவர் மட்டுமன்று, அறிவிலிகளும், கீழ் மக்களுமாவர் என்ற கருத்தைச் சொல்லாலும், செயலாலும் பரப்பவேண்டும். இக்கருத்தின் தோய்வே ஒருவனை உயர்குடியின னாகவும், தாழ்குடியினனனாகவும் பிரிப்பது. தவிர, தம் நலனே பேணுவதிலும் பிறர் நலமே பேணுவது உயர் பண்பு மட்டுமன்று அறிவுடைமையுமாகும். நாம் பிறரைப் பேணுவதால், நம் நலனில் பலருக்கு அக்கரை பிறக்கிறது. அவரும் பிறர் நலமே பேணுவதால் தன்னலம் பொதுநலம் ஆகிய வேறுபாடற்ற, சமூக நலம் ஒன்றே வளர்கிறது. இப்பண்பே நாகரிகம். பெற்றோர் இப்பண்பில் தம் பிள்ளைகளைத் தொடக்கத்திலிருந்தே பயிற்றுவித்தல் வேண்டும். பிள்ளைகளின் தீய பண்புகளை அகற்றுவதிலும், நற்பண்புகளை அகற்றுவதிலும், நற் பண்புகளைப் பேணுவதிலும் பெற்றோர் பின்பற்ற வேண்டிய இயற்கைத் தத்துவங்கள் பல. இவை வெளிப்பார்வைக்கு ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட முரண்பாடுகளாகத் தோற்றத்தக்கவை. கட்டுப்பாடு வேண்டும், ஆனால் தற்போக்கும் பண்பை வளர்க்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்; அதே சமயம் தற்சார்பு வளர்த்தல் வேண்டும். மரபுப் பண்பை ஊட்ட வேண்டும்; ஆயினும் தற்பண்பை ஊக்கவேண்டும். கண்டிப்பும் ஒறுப்பும் வேண்டும். ஆனால் அன்பும் ஊக்கமும் தேவை. பொது அறிவு ஊட்ட வேண்டும்; ஆனால் பகுத்தறிவுணர்வு கொள்ளவும், புத்தறிவாற்றல் வளரவும் வழி செய்ய வேண்டும். சுருங்கச் சொன்னால் அரசரிடம் அமைச்சர் ஒழுகுவதுபோல் பெற்றோர் பிள்ளைகளிடம் அகலாது அணுகாது தீக்காய்வார்போல,” இருக்கும் நடுநிலைப் பண்பைத் தேறவேண்டும். எந்த அளவில் எந்தப் பண்பு எந்தச் சூழ்நிலையில் எந்தப் பருவத்தில் வேண்டும் என அறிவதே பெற்றோர்க்கு இயல்பாய் அமையவேண்டும் பண்பு. பெற்றோர் காதல் வாழ்வில் வாழ்ந்தவரானால், இப் பண்பு அவர்களிடம் இயற்கையில் உண்டாகும். காதல் வாழ்விற்குப் பதிலாக மக்கட் காதலிலும் சமூகக் காதலும் அவர்கள் ஈடுபட்டாலும் இ பண்பு தோன்றாமற் போகாது. பெற்றோரைப் போல பிள்ளை என்பதிலும் தாயைப்போலப் பிள்ளை என்பதே ஆண்மகவு, பெண்மகவு ஆகிய இருபாலாரிடத்திலும் உண்மையாதலால், தாய் தன்னையும், தன் பண்புகளையும் பேணுவதில் தவறிவிடக்கூடாது. நம் நாட்டில் சிறப்பாகவும், பிற நாடுகளில் பொதுவாகவும் தாய்மார் பலர் பெண்மையைக் கீழ்ப்பாலதாக எண்ணி நடப்பதுண்டு. ஆண்களே பொருளீட்டு பவராயிருப்பது பெரும்பாலாதலால், அவர்கள் ஆடவரை மட்டுமே பேணித் தம்மையோ, தம் பெண்மக்களையோ புறக்கணிப்பதும் உண்டு. இன்னும் சிலர் தம் குடும்ப ஆடவர் கூட்டுறவை வெறுத்து, வெளி ஆடவர் மயக்கில் ஆழ்ந்து ஒருவர்க் கடிமையாயிருப்பதினும் பலருக்கு அடிமையாயிருப்பது மேல் என்ற நிi லயை மேற்கொண்டு விடுவதும் உண்டு. முந்திய பண்பு நாகரிகக்கேடு என்பதில் ஐயமில்லை. பெண்டிர் குடும்பத்தில் ஆளப்பிறந்தவர்கள். வெளியிலோ குடும்பப் பண்பைப் பேணப் பிறந்தவர்கள். ஆகவே, பெண்டிர் ஆடவரையும் ஆண் மக்களையும் பேணும் தம் நல்லியலில் குறைபடாமல், அதே குறிக்கோளுடன் தம்மை அதைவிட நன்கு பேணக்கடவர். இவ்வகையில் அவர்களை ஊக்குதல் ஆடவர் கடன். ஆண்பாலாரின் வளர்ச்சியினும், பெண்பாலாரின் வளர்ச்சியே சமூகத்திற்கு உயிர்நிலையானது என்பதை ஆடவன், தானறிவதுடன், பெண்டிருக்கும் அறிவிக்கக் கடமைப்பட்டவன். நாகரிக மரபில் மிகப்பல நாடுகளிலும் தந்தையே குடும்பத் தலைவனாயிருப்பதன் காரணம், பெண்ணின் பெருந்தன்மையால் சமூகம் தீமையுறாமல் ஆடவன் அவளைக் காத்தற் பொருட் டாகவேயாம். அதுபோல, மணவினை என்ற ஒன்று அமைந்துள்ளதும் பெண்ணை அடிமைப்படுத்துவதற்காக அன்று. அது விலங்குத் தன்மையிலிருந்து, இன்னும் நெடுந்தொலை சென்றுவிடாதிருக்கும் ஆணுலகிலிருந்து, பெண்களைப் பாதுகாத்துச் சமூகத்தை வளர்க்க அறிஞர் வகுத்த முறையேயாகும். காதலியரையும் தாய்மாரையும் பெண்மக்களையும் ஆண்மக்களுக்கு ஒப்பாகவன்று. அவர்கட்கும் முற்படக் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளோம். ஆனால், ஆடவர் கல்வி ஓரளவு தொடக்கத்தில் தனிமனிதர் பயிற்சி, அஃதாவது உணவு, உடை, உறையுள் தேடும் தொழிற் பயிற்சியாகவும் பின்னரே சமூகப் பயிற்சி, உயர்கலைப் பயிற்சியாகவும் இருக்க முடியும். பெண்டிர்க்கும் தனி மனிதர் பயிற்சி வேண்டுவதாயினும், அதிற் சிறிது குறைந்தாலும், அதனை விட்டுவிட்டாலும் மிகுதியாகக் கேடு வராது. ஏனெனில், அவர்கள் வாழ்க்கையில் செயல் செய்வதினும் இயக்குதற்கே பெரிதும் உரியவர்கள். ஆனால் சமூகக் கல்வியிலும் உயர் கலைக் கல்வியிலும் பெண் பிறப்பாலேயே ஆடவனுக்குத் தாய் ஆவாள். இயற்கை அவள் உடலை மென்மையாக்கி, உயிர்ப் பண்பை விரைவுபடுத்தி, அவள் அறிவை, உயர் பண்பாகிய கலைப் பண்பாக்குவதன் காரணம் இதுவே. ஆகவே, தொழிற் கல்வியைவிடக் கலைத் தொழிற் கல்வியும் கலைப் பயிற்சியும், சமூகக் கல்வியைவிட மனித இனக் கல்வியும் அவளுக்கு மிகமிகத் தேவையாகும். ஆணாகிய நாணுக்குப் பெண் வளைத்துக் கட்டப்பட்ட வில் வளைவு ஆவாள். வில்லின் வளைவே நாணின் முறுக்கிற்கும், அம்பின் விரைவிற்கும், இயக்குதற் காரணம் ஆகும். தாய் சிறப்பாகவும் தந்தை பொதுவாகவும் பிள்ளைகளிடம் எப்போதும் அன்புடையவராகவும், இன்முக முடையவராகவும் இருப்பதற்குரியர். பிள்ளைகள் முன் தாய் தந்தையர் வாழ்வும் தொடர்பும் பேச்சும் இதுபோலவே அவர்கள் முழு வாழ்க்கைப் பண்பின் முதிர்கனியாயிருத்தல் வேண்டும். அவர்கள் குழந்தை களிடம் எப்போதும் தம் இரு கண்களில் ஒரு கண்ணை ஈடுபடுத்தியே இருத்தல் வேண்டும். ஆனால் அதேசமயம் அவர்கள் பிள்ளைமை வாழ்க்கை பிள்ளைகளுக் குரிய சூழ்நிலையில், தாய் தந்தையர் அன்பில் மட்டுமன்றி, பிற பிள்ளைகள், உயிரினங்கள், இயற்கைச் சூழல்கள் ஆகியவற்றிடையேதான் முழு வளர்ச்சி பெறுமாதலால், தாம் செல்லுமிடத்திலெல்லாம் அவர்களை இட்டுச் செல்லாமல், அவர்கள் செல்லும் வழியெல்லாம் விட்டுத்தான் பின்தொடர்ந்து காப்பவராகவே இருத்தல் வேண்டும். அனுபவமிக்க பல தாய் தந்தையர் தம் பிள்ளைகள் வாழ்வைத் தமக்குச் சிறை என்று கூறுவதை நாம் கேட்டிருக்குறோம். காதல் வாழ்வு அவர்கட்கு ஒரு பொற்கூண்டாகவும் இருக்கத்தக்கதென்னலாம். ஆனால், எக் காரணத்தாலும் தாய் தந்தையர் சிறை, அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு சிறையாகக் கூடாது. அவர்களும் தமக்குரிய பருவத்தில் காதலென்றும் சிறைக் கூட்டில் அடைபடும்வரை அவர்கள் தங்குதடையற்ற விடுதலை வாழ்வு வாழவேண்டியவராவர் என்பதையும், அவர்கள் பொறுப்பு, பாதுகாப்பு ஆகிய யாவற்றையும் இயற்கை தாய் தந்தையரிடம் விட்டு வைத்துள்ளது. இதனாலேயே என்பதையும், தாய் தந்தையர் உணரவேண்டும். ஒருவர் தாயாகவோ தந்தையாகவோ குடும்பத்தில் இடம் பெற்றபின் அவர்களுக்குத் தமக்கென்றோ, தம் காதலர்க் கென்றோ கூட பிள்ளைகளின்ப மல்லாத வேறு இன்பம் இருக்கக்கூடாது; இருப்பதும் உண்மைக் காதல் வாழ்வின் இயல்பல்ல. பிற்காலத்தில் பிள்ளைகள் காதல் வாழ்வை மதித்தறிவதற்கும் அதற்குத் தகுதியுடையவர்கள் ஆவதற்கும், சமூக வாழ்வில் ஈடுபடுவதற்கும் இதனிலும் உயரிய வழிகாட்டும் பண்பு வேறு இல்லை. குழந்தைகளைத் தொல்லையென்று கருதும் தாய் தந்தையர், குழந்தைகளை வேலையாட்களிடம் விட்டுவிட்டுத் தாம் தனிவாழ்வு வாழும் தாய் தந்தையர் ஆகிய இருசாரரும் பணத்தைப் பூட்டி வைத்துப் பட்டினி கிடக்கும் மிடியர்களே யாவர். தாய்க்கும் சரி, தந்தைக்கும் சரி, பிள்ளைகளைவிட உயரிய எவ்வகை இன்பமும் இருக்க முடியாது. குடும்ப வாழ்வு அறிந்தவரும். காதலின் நிழலில் சிறிது தங்கியவரும் இதனினும் உயரிய இன்பத்தை அறியவும் மாட்டார்கள். தாம் சற்று விலகியிருந்து, குழந்தைகள் சின்னங்சிறு விளையாட்டில் கருத்துச் செலுத்தும் தாய் தந்தையர், கால எல்லை கடந்து மனித இனத்தின் வளர்ச்சியில் கருத்தூன்றித் தாம் ஒருவரா, இருவரா, பிள்ளைகளேயதாமா, தாம் பிள்ளைகளின் வேறானவரா என்று அறியமாட்டாத கடவுள் நிலையில் நின்று பேரின்பம் நுகர்வோர் ஆவர். பிள்ளைகளை ஊக்குவதற்கும் ஒறுப்பதற்கும் தாய் தந்தையர் வழங்கத் தக்க ஒரே கருவி தம் அன்பே. அவர்கள் நற்பண்புகள் கண்டவிடத்தும், அவற்றின் வளர்ச்சியைக் கவனிக்கு மிடத்தும் தாய் தந்தையர் பெறும் மகிழ்ச்சியினும், குழந்தைகளை ஊக்கும் திறம் உடைய பொருள் உலகில் எதுவும் இருக்க முடியாது. இவ்வுயிர் திறத்தைப் பெறாத காரணத்தாலன்றோ, அதற்கீடாக ஆசிரியர் பரிசு வழங்கவும் சமூகம் உழைப்பிற்குரிய விலை தரவும், ஆட்சியாளர் பட்டம் பதவி வழங்கவும், நேரிடுகிறது. தாயின் முத்தங்களுக்கும், தந்தையின் அணைப்புக்கும் இருவர் கடைக்கண் நகைப்புக்கும் ஒத்த பொருள்கள் உலகில் சிறப்படைகின்றன. பிள்ளைகளை ஒதுக்கவேண்டிய நேரத்தில் தாய் தந்தையர் வேறு எதுவும் செய் வேண்டுவதில்லை. நிலையாயுள்ள தம் அன்பைச் சற்று மறைத்துக் காட்டினால், தம் இன்பத்தைச் சற்றுக் குறைத்துக் காட்டினால் போதும்! தேவையானால், மிகுதி ஒறுப்பு வேண்டி வந்த இடங்களில் தாய் தந்தையர் வருத்தம் ஒருவரை ஒருவர் கண்டித்தல், இருவரும் தம்மைத் தாமே தண்டித்துக் கொள்ளுதல் ஆகியவை வழிக்கு வராப்பிள்ளைகளையும் வழிக்குக் கொண்டுவரப் போதியவை. இவற்றுக்கு மேற்பட்ட தண்டனைமுறை ஆசிரியர்க்கோ, சமூகத்திற்கோ, ஆட்சியாளருக்கோ இல்லை என்று மட்டுமல்ல, கடவுளுக்குங்கூட கிடையாது என்னலாம். பிள்ளைகளை அடிப்பது மட்டுமன்று, அச்சுறுத்துவது கூடத் தவறு என்று இக்காலக் கல்வித் துறையறிஞரும், குழந்தை வளர்ப்புத் துறையறிஞரும் வற்புறுத்துகின்றனர். இது முற்றிலும் உண்மை; அடிப்பதால் பிள்ளைக்கு உடல் நோவு மட்டுமன்று, உள நோவும் அதனினும் மோசமான பண்புக்கேடுகளும் உண்டாகின்றன. அச்சுறுத்துவதாலோ அவர்களின் அடிப்படை மனிதப் பண்பே கெடுகின்றது. மனிதர் விலங்கு நிலையில் இருந்த காலத்தில் ஒருவரை ஒருவர் அச்சுறுத்தி ஆண்டதன் சின்னங் களாகவே இன்றும் மனிதர் உள்ளங்களிலும் வாழ்விலும் பேய்களைப் பற்றிய அச்சமும், பேய்வழிப்பாடும், போர் வெறியும், போரார்வமும், அச்சம் காரணமான மூடபத்தியும், உருவ வழிபாடும், தனிமனித வழிபாடும் கொடுங்கோன்மை யார்வமும், அடிமைப் பண்பும், சாதி வேற்றுமையும் பகைமையும் நிலவி வருகின்றன என்னலாம். பழங்காலம் என்று தவறாகக் கூறப்படுகிற, நாகரிக கேடடைந்து நலிந்த இடையிருட காலத்தில், பிள்ளை வளர்ப்பில் பல தவறான கருத்துக்கள் நிலவியிருந்தன. அவற்றின் பயனாகவே, ‘அடியாத மாடு பணியாது, ‘கோலைப் பேணிப் பிள்ளையைக் கெடுக்காதே, பிள்ளையைப் பேணு, கோலைக் கெடு’ (ளுயீயசந வாந சடின, ளயீடிடை வாந உhடைன) என்பன போன்ற பழமொழிகள் தோன்றின. ஆனால், நாகரிக நலிவுற்ற காலமும் நாகரிகமில்லாத காலமாக மாட்டாது. இப்பழமொழிகள் மிகைப்படக் கூறப்பட்டவை யாயினும், சிறிதளவு உள்ளார்ந்த உண்மை உடையவையே. பிள்ளைகள் செய்யும் கேடுகள் தம் உயிருக்கோ, பிறர் உயிருக்கோ கேடு தராதவரை, தீமையையே அவர்கள் நோக்கமாகக் கொண்டு விடாதவரை, அவர்கள் ஒறுப்பு அவர்களைத் திருத்தும் அன்பொறுப்பாக மட்டுமே இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். பெரும்பாலும் பிள்ளைகள் தாய் தந்தை, சமூகச் சூழ்நிலை ஆகியவற்றால் கெட்டாலன்று, இத் தீங்குகள் அவர்கட்கு இயல்பாக உண்டாகவும் முடியாது. ஆனால், எக் காரணத்திலாவது இவைத் தோன்றினால், அவர்களிடம் இப் பண்புகள் குழந்தைப் பண்பாக இராமல் சமூகப் பண்பாயிருப்ப தனால், சமூகந் திருந்த அவர்கள் ஒறுப்பதற்குரியவரே. எடுத்துக்காட்டாக மண் தின்னும் பிள்ளையை அன்பினால் திருத்த நினைப்பது, அது கண்டும் காணாமலும் அப் பழக்கத்தில் தோய்ந்து, மீளா அடிமையாய் விடவே ஏதுவாகும். கண்டவிடத்தில் சிறிது அன்பை ஒதுக்கி வைத்திருப்பதால், ‘சூடு கண்ட பூனை அடுப்பிடை நாடாது’ என்ற அடிப்படை உயிரினப் பண்பின் மூலமாகக் குழந்தை நிலையாகத் திருத்தமடைந்துவிடும். மின்சாரக் கம்பிகளைக் கையாள முனைதல், பொறி வண்டிகள் செல்லும் பாதையில் செல்லுதல், பாம்பு, தேள் முதலியவற்றைப் பொம்மைகளாகக் கருதி அடுத்துச் செல்லுதல் ஆகிய காரியங்களில் குழந்தையின் பகைவரன்றி வேறு எவரும், அதனை ஒறுத்து விலக்கத் தயங்கமாட்டார்கள். இங்கே தண்டனையின் பயனை நோக்கத் தண்டனையின் கடுமை மிகக் குறைவே யாகும். சில பிள்ளைகளிடம் சமூகச் சூழல் காரணமாக ஏற்படும் அடிமைப் பண்பும், ஆதிக்கப் பண்பும் இது போலச் சமூகப் பண்புகளாதலால், திருத்துவதால் போகாது, ஒறுப்பினாலேயே போகக்கூடிய அடிப்படைத் தீமைகள் ஆகும். ஆனால் இவ்வொறுப்பின் விளைவுகளும் தாய் தந்தையர்கள் அன்பினாலேயே முழுப்பயன் பெறக்கூடும். எடுத்ததற்கெல்லாம் அடித்தொறுக்கும் தாய் தந்தையர்கள் இத்தகைய செயல்கண்டு அடித்தொறுப்பதால் பயன் சிறிதும் ஏற்படாது. ஏனெனில், தாய் தந்தையர் பிள்ளைகளை அடிக்க நேர்ந்தால், அது தம்மை அடிப்பதை ஒத்ததாகவே இருக்கும். அன்பின்றி அடிக்கும் தாய் தந்தையர் ஒறுப்பு, பகைவர் ஒறுப்பாயிருக்குமேயன்றி தாய் தந்தையர் ஒறுப்பு ஆகமாட்டாது. பிள்ளைகளைத் தம் விளையாட்டுப் பொம்மைகளாக்கும் தாய் தந்தையரும், ஓயாது அவர்களை மடிமீதும் தோள் மீதும் இட்டு வளர்ப்பவரும், அவர்கள் சொல்கேட்டு நடக்கும் பிள்ளைப் பித்தரும், அவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துக் கிளிப் பிள்ளைகளாக வளர்ப்பவரும், தத்தம் போலி இன்பத்திற்காகப் பிள்ளைகள் வாழ்வைப் பலி கொடுக்கும் எமன்களே யாவர். பிள்ளைகளை எவ்வளவு கொஞ்சும் போதும் அவர்கள் பொம்மையல்ல, ஆட்டுக்குட்டிகளும் கன்றுக்குட்டிகளும் அல்ல. வளர வேண்டிய மனிதர் என்பதையும்; அவர்கள் இன்று தம்மை யொத்த பிள்ளைகளையும், இயற்கைப் பொருள்களையும் தாமே அறிந்து பழகும் அளவிலேயே, நாளை அவர்கள் தம்மையொத்த மனிதரை அறிந்து பழகி உலகப் பொருள்களைக் கையாள வல்லவராவர் என்பதையும் தாய் தந்தையர் என்றும் மறத்தலாகாது. கூடுமானபோதெல்லாம் உயிர்களிடம் பொதுவான அன்பு, உயிர்களின் இன்பத்துன்பம் பற்றிய எண்ணம், நலம் கேடு தரும் உயிரினம் பற்றிய அறிவு முதலியவை குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டும். அன்றியும் தம்மைப்போன்ற பிள்ளைகளையும், தம் தாய் தந்தையர்களின் உற்றார் உறவினர் நண்பர்களையும், பிள்ளைகள் தக்கவாறுணர்ந்து அன்பு பாராட்டிப் பழகவும், நண்பரென அறியாதவிடத்து அகல இருந்து நோக்கவும் அவர்கள் பயிற்றுவிக்கப்படல் வேண்டும். சில குழந்தைகள் யார் வந்தாலும் பண்டமும் பொருளும் கேட்கவும், வேறு சில குழந்தைகள் யாரிடமும் எதுவும் பெற மறுக்கவும் பழக்கப்படுகின்றன. இரண்டும் தவறு; பொதுவான பாசத்துக்கிடையே தாய் தந்தையரை ஒத்தவர் இவர் இவர், தாய் தந்தையரைப் போன்றவர் இவர் இவர் என்ற பகுத்தறியும் பண்பைப் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். ‘இவன் நற்குடியினன்’ என்று உலகோர் நாளைப் பிள்ளையை மட்டும் கண்டு, தாய் தந்தையரும் பண்பறிந்து கூறுவது இத்தகைய திறங்களாலேயே ஆகும். பிள்ளைகள் செய்யும் குறும்புகளைத் தகா முறையில் அடக்கமுனைந்து அவர்களைக் கெடுப்பவரும், அடக்க முடியாமல் அல்லற்படுபவரும் பலர். குறும்புகள் செய்யும் பிள்ளைகளே பெரும்பாலும் பிற்கால வாழ்வில் அறிவும், திறமும் மிக்கவராயிருக்கின்றனர் என்பதை அனுபவமுடையோர் அறிவர். இக்குறும்புகள் பிள்ளைகளின் அறிவின் முதல் தாக்குதலேயாகும். ஆதலால், அதனை முற்றிலும் அடக்காமல் ஓரளவு சிறு குறும்புகளைக் கண்டிக்காது விட்டும், தீங்கற்றவற்றில் ஊக்கியும், மற்ற விடங்களில் அக்குறும்புகளின் பயன்களை அன்புடன் விலக்கியும் இன்றியமையா இடத்தில் மட்டும் திடுமென அன்பை விலக்கி ஒறுத்துத் திருந்தியவுடன் முன்னிலும் மிகுதி அன்பு காட்டுதலும் வேண்டும். பிள்ளைகளிடம் மட்டுமன்றி, யாவரிடமும் தண்டனையின் பண்பு இதுவே எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். “கடிதோச்சி மெல்ல எறிக,” என்பதே அம்முறை. தண்டனையின் ஆற்றல் அளவு ஒறுப்பின் அளவன்று; ஒறுப்பின் பேணா ஏற்படும் தற்காலிக அன்பு விலக்கின் அளவே, என்பதைத் தண்டனை தரும் பொறுப்புடையோர் கவனித்தல் நலம். “தீமையிது, இது செய்யற்க,” என்று அடிக்கடி கூறுவதைவிட, “நன்மை இது, இது செய்க” என்று கூறுவதே உளப்பண்பறிந்த ஒழுக்க முறையாளர் மரபு. ஏனெனில் ‘செய்யற்க’ என்ற சொல்லின் வலிவினும் மிகுதியாகத் தீமையின் தடம் அதை அடிக்கடிக் கூறுவதால் மனத்திற் பதியும். தவிர மனிதப் பண்பு பொதுவாகவும், குழந்தைகள் பண்பு சிறப்பாகவும் செய்யாதே என்பதன் வகையில் செயலார்வம் கொள்வதேயாகும். அத்துடன், `செய்க செய்யாதே’ என்ற அறிவுரையை விட, ‘இங்ஙனம் செய்தனர் இத்தகையர்; இங்ஙனம் செய்தனர் இத்திறத்தார்,’ என வேறு பிரித்துக் காட்டல் சிறப்புடையது. இங்கும் நீதியைப் புகுத்திக் காட்டும் கதைகளை நீதியைப் பற்றிக் குழந்தைகள் தாமே சிந்தித்துத் தாமே தமக்குரிய நீதிக் கருத்துக்களை உருவாக்கத் தூண்டும் கதைகளும் சிறப்புடையவை. வீரம், வாய்மை, தியாகம் முதலிய பண்புகள் வெற்றியடைகின்றன என்று காட்டும் கதைகளைவிட, அவற்றைப் படம் பிடித்துக் காட்டும் கதைகளே உள்ளத்தைப் பண்படுத்தக்கூடியவை. ஏனெனில், கீழ்த்தரமான வாழ்க்கை வெற்றிகளால் இவற்றின் உயர் உணர்ச்சிப் பண்புகளை அளக்க முடியாது. அவை உணர்ச்சியை நேரிடையாக எழுப்பவல்லன. ஆதாய நோக்குக்கு அப்பாற்பட்ட அழகுணர்ச்சி, காதல் முதலியவைபோல இவையும் இயற்கைப் பண்பாட்டை ஊட்டுபவை. பிள்ளை வளர்ப்பில் பழகியவர்கள் இவற்றினும் உயரிய ஒரு முறையறிந்து கூறுகின்றனர். நல்ல பண்புகளைப் புறப்பண்பாகக் கூறாமல், பிள்ளையின் பண்பாகவும், பிள்ளையின் பெற்றோர், முன்னோர் பண்பாகவும் குறிப்பிட்டு அவர்கள் மரபுணர்ச்சியை ஊக்குவது, அவர்கள் பண்பை உயர்த்துவதில் ஓர் ஒப்பற்ற கருவியாகும். இத்தகைய மரபுப் பற்று குறுகிய பற்றன்று. கீழானவர் கைப்பட்டாலல்லாமல், அது குறுகிய பற்று ஆகவும் ஆகாது. “என் குடி உயர்வுடையது; என் நாடு’ என் மொழி உயர்வுடையன; என் இனத்தின் மரபு இது,” என்று கருதுபவன் உணர்ச்சியில் என் என்ற சொல்லின் பொருள், “நான் பெற்ற மரபு அது; நான் அதனை வளர்ப்பேன்; அதற்காகவே வாழ்வேன்; அதற்கு மாறுபாடாக கண்ணிலும் எதுவும் பட்டாலும் அதை நான் இல்லாமற் செய்வேன்,” என்பதாகும். எனவே ஒருவன் ‘பாண்டியன் பணியமாட்டான்’ தமிழன் வீரமரபில் வந்தவன், “தென்னவன் பின்னிடான்,” என்று கூறும்போது, அவன் சேரன் பணிபவன் என்றோ கூறுவதாகமாட்டாது. சில சமயம் வலியுறுத்துவதற்காக மாறுபட்ட குழுவினரைப் பழித்துக் கூறப்பட்ட விடத்திலும் பண்புடையார் அதனைப் படர்க்கைக் கூற்றாகக் கொள்வாரேயன்றித் தன்மைக் கூற்றாகக் கொள்ள மாட்டார். ஆரியன் ஒருவன், சோழன் ஒருவன், இத்தகைய உரைகளைக் கேட்காமல், இது பாண்டியர் கூற்று, தமிழர் கூற்று எனக் கருத்தில் பெயர்த்துக் கொள்வான். இத்தகைய மரபுணர்வு பேணுவதனால், மரபுகளிடையே போட்டி உணர்ச்சி ஏற்படுவது உறுதி. ஆனால், மரப்பண்பாயிருக்குமிடத்தில் இப்போட்டியும் அன்புப் போட்டியாகவும் வரவர விரிந்து செல்லும் அன்புணர்ச்சியாகவும் வளர்வது உறுதி. குடும்பம் இதற்கு உண்மையில் ஓர் ஒப்பற்ற வழிகாட்டியாகும். என் தங்கை, அவன் தங்கை என்று போட்டியிடும் சிறுவன் வாழ்வில் பிற்காலத்தில், அவன் தங்கையாகவே இருப்பினும் அவள் பிறர் மனைவியாய், பிறர் தங்கை அவன் தங்கையினும் உரிமையுடைய காதல் மனைவியாகிறாள். அவ்வன் புரிமையும் தாண்டிப் புதுவராகிய பிள்ளையிடமும், பிள்ளை தாண்டி அதன் காதலுக்குரிய மற்றக் குடும்பங்களிடமும் அது பரவுகிறது. எனவே, குடும்பப் பண்புடன் மரபுப் பண்பும் பேணுபவன். உலகப் பண்பிற் குறைந்த எதனினும் நிறைவு பெறமாட்டான். அவனுக்குக் குடும்பம், இனம், வகுப்பு, ஊர், நாடு யாவும் உலகத்துக்குரிய படிகளாகவே இருக்க முடியும். குழந்தையின் பண்பை இந்த இலக்கு நோக்கிச் செலுத்துபவர், அவனைத் தம் குடியிலும் வகுப்பிலும் இனத்திலும் நாட்டிலும் உயர்வு பெறச் செய்து அவ்வக் குழுவினுக்கும் உயர்வு அடையும் உயர்வு, அவர்கள் எவ்வளவு விரிந்த குழுவின் இலக்கை எட்டுகின்றனர் என்பதைப் பொறுத்ததே. ஆயினும், விரிவு நாடி அவர்கள் முன்படிகளைக் கடந்து செல்லின், அவர்கள் புகழுக்குரியவராக மாட்டார். உரியவராயினும் அஃது அடிமைகள் கூலிகள் பெறும் போலிப் புகழேயாகும். ஏனெனில் தாயைப் பட்டினியிட்டுத் தானம் வழங்குபவன் செயலாகவே அவன் செயல் இருக்கமுடியும். மேலும், நாடு, இனம், மொழி ஆகியவற்றின் மூலமாகவன்றி, எவரும் உலக நாகரிகத்தில் பங்கு கொள்ளவும் முடியாது; வளர்ச்சி பெறவும் முடியாது; பிற நாகரிகங்கள் ஓர் இனத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய தூண்டுதல் தரக்கூடும். சிலசமயம் தாய்நாட்டில் உயிர்ப்பிழந்து சோர்வுற்ற, அல்லது இறந்துபட்ட நாகரிகத்தின் பண்புகள் புத்தம்புதிய இனத்துக்குத் தூண்டுதல் தந்து, வளர்ச்சியை விரிவுபடுத்தலாம். ஆனால், எங்கும் எப்போதும் தற்பண்பாகிய விதையிலிருந்துதான் நாகரிகம் வளர்ச்சியடையும். பிற நாகரிகங்கள் அதற்கு உரமாகலாமேன்றி விதையாகமாட்டா. உரமாவதும் முரண்பட்ட பண்புகள் இராமல், அடிப்படைப் பொது உறவும், மேற்படையான நிறைவுப் பண்பும் இருக்கும் இடத்தில் மட்டுமே யாகும். உரமிக்க தற்பண்புடைய, அஃதாவது நல் உயர்ப் பண்புடைய தமிழ் போன்ற மொழியினங்கள் பிற இனங்களின் பண்புக் கலப்பால் பெரும்பாலும் கெட்டிருக்கிறதேயொழியத் திருந்தியதில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கூடத் தமிழகத்திற்கு அரசியல் தூண்டுதல் தந்ததேயன்றி, நாகரிக மேம்பாட்டுக்கு உதவவில்லை. அது தமிழரைத் தற்பண்பு நோக்கி மீள்வதற்கான ஊக்கம் அளிக்க மட்டுமே செய்துள்ளது. பிள்ளைகள் எல்லாப் பிள்ளைகளுடனும் சரிசமப் பண்பு பேணும்படி பழக்கப்பட வேண்டும். அது மதிப்பிற்குரிய ஒரு செய்தி மட்டுமே என்று பலர் கருதுகின்றனர். அது தவறு; நீகிரோவரை அடக்கிப் பழகிய மேல் நாட்டுக் குடியேற்ற வெள்ளையர், தம் நாட்டுக்குத் திரும்பியபின், மற்ற ஆங்கிலேயரைவிட எளிதாக ஏழை மக்களைக் கொடுமையாக நடத்தும் பண்பை மேற்கொண்டவர். மக்கள் சமத்துவம் பற்றிய புரட்சிக் கருத்துக்களை உலகிற்கு முதல் முதலில் அளித்த அறிஞர் பிரிட்டானி யராயிருந்தும், புரட்சியியக்கத்திற்குப் பிரிட்டன் தாயகமாகாமல், ஃபிரான்ஸே தாயகமாயிற்று. ஆனால் ஃபிரான்ஸிலும் அது பொருளாதாரத் துறையில் வெற்றி பெறவில்லை. ஜெர்மனியிலும் வெற்றி பெறவில்லை; இவ் வெல்லா நாடுகளின் அறிஞர் உரைகளையும் பயன்படுத்தி, ரஷ்ய அறிஞரே தம் நாட்டில் முழு அளவு செயலில் வெற்றி கண்டார். இதற்குக் காரணம் வெள்ளிடைமலை. பிரிட்டனும் ஃபிரான்சும் குடியேற்ற நாடுகளையும், ஆட்சி நாடுகளையும் உடைய ஆதிக்க வல்லரசுகள். எனவே மக்கள் சமத்துவ எண்ணம் அவர்களிடம் செயல் துறையாக வளரவில்லை. ஜெர்மனியும் ஆதிக்கப் பாதையை நாடிற்று. இத்தகைய ஆதிக்கப் பாதையை நாடாத ரஷ்யாவும், சீனாவும் ஓரளவு வெற்றியடைந்தது இயல்பே. பிள்ளைகள் ஆதிக்க மனப்பான்மை அவர்களைக் கொடுங்கோலராக்கும். அவர்கள் அடிமை மனப்பான்மை இதனினும் கேடானது. அது தம்மினும் கீழ்ப்பட்டவர்களிடம் கொடுங்கோன்மையும், தம்மினும் மேம்பட்டவரிடம் நயவஞ்சகப் பசப்பும், ஒப்பானவரிடம் பொறாமையும் புழுக்கமும் நம்பிக்கைக் கேடும் உண்டுபண்ணும். இவை போலவே உயிர்களைக் கொடுமைப்படுத்தும் பழக்கமும், நாளடைவில் அவர்கள் உள்ளத்தில் கொடுமைத் தன்மையையும், இரக்கமற்ற தன்மையையும் வலுப்படுத்தி மனிதரிடமும் நண்பரிடமும் அவ்வாறு நடக்கும் குணத்தை வளர்க்கும். கொடுமைக்கு நேரேதிரான தீய பண்பு அச்சம். இதுவும் அடிமைத்தனம் போன்று தன் எதிர்ப் பண்பினும் தீங்கு விளைவிப்பதாகும். உலகில் கள், குடி, காமம், பொருளாசை ஆகியவற்றால் பல பழிகள் நேருகிறதானாலும், அவையனைத்தும் சேர்ந்தால்கூட அச்சத்தினால் வரும் கேடுகளில் ஒரு சிறு பங்குக்கு ஒப்பாகமாட்டாது. விடுதலை யிழந்து நெடுநாள் அடிமைப்பட்டு வாழ்பவர்கட்குக் கூட, எளிதில் அடிமைப் பண்பு உள்ளத்தில் எழுவதில்லை. ஏனெனில், அடிமைப் பண்பின் தாய் அச்சமே யாகும். அச்சம் என்ற ஒன்றுமட்டும் உலகில் இல்லை என்றால் மற்ற எல்லாப் பழிகளும் கடுகளவாகக் குறுகிவிடும். பொய், கொலை, களவு, காமம் முதலிய எந்தத் தீமை செய்தவனும், அவற்றுக்காகக் கழிவிரக்கங் கொண்டு திருந்தக்கூடும். தண்டனையச்சம் தண்டனையினும் கொடியது. அது தண்டமையால் வரும் திருத்தப்பாட்டினைக் கெடுத்து, அதைத் தடுக்கும் முயற்சியாய் விடும். அது பண்பை அழிக்கும். அஞ்சி அஞ்சிச் சாகிறவரிடம் பண்புகள் யாவும், வரவரக் கெட்டழியும். “அச்சமே கீழ்களது ஆசாரம்,” என்ற தமிழ் அறமொழி இதனைத் திறம்படச் சுட்டிக்காட்டுகிறது. அச்சத்தின் வகைகள் அளவில. கடவுளச்சம், ஒழுக்க அச்சம் முதற் கொண்டு உயிரச்சம், மான அச்சம், புகழச்சம், தண்டனையச்சம், அன்பச்சம் ஈறாக எல்லா அச்சங்களும் தீமை பயப்பவையே. மேற்போக்காகப் பார்ப்பவர்களுக்குக் கடவுளச்சம் ஒரு தீமையா? என்று கேட்கத் தோற்றும். ஆனால், சிறிது சிந்தித்துப் பார்த்தால் , கடவுளச்சத்தின் காரணம் கடவுட் பற்றும், மனிதப்பற்றும், இல்லாமையினாலேயே என்பதனை உணரலாம். அறியாமையால் வரும் கடவுளச்சம் காரணமாக எத்தனை மனிதர்கள், இளம் பெண்கள், குழந்தைகள் தெய்வங்களுக்கு முற்காலங்களில் பலியிடப்பட்டுள்ளனர்? இன்றும் எத்தனை உயிர்கள் பலியிடப்படுகின்றன? உணவுக்காகக் கொல்லுபவரினும் சின வெறியால் கொல்பவரினும் கடவுளுக்காகக் கொல்லுபவர் மிகத் தீய பண்பை வளர்ப்பவரே யாவர். ஒழுக்க அச்சமும் கடவுளச்சம் போல ஒழுக்கப் பற்றின்மையையே காட்டும். ஏனெனில், ஒழுக்க அச்சம் என்பது தீய ஒழுக்கத்தின் பயனை எண்ணி அஞ்சும் அச்சமேயன்றி, அதன் மீது வெறுப்புக்கொள்ளுவதன்று. மான அச்சம் மானமிழந்த போது உயிர்விடும் தியாகமன்று. அதற்கு நேர்மாறாக மானம் வந்தபின் அதனை விலக்கிவாழ வேறுவகை தேடத்தூண்டும் உணர்ச்சியே. அன்பச்சம் அன்புடையவரைப் புண்படுத்துவ தனால் வரும் வருத்தமன்று. அதன் விளைவிலிருந்து தப்பப், பொய்ம்மை மேற்கொள்ளுதலேயாகும். பிள்ளைகளிடம் வேறெத்தனை பழிப்பண்புகள் ஏற்பட்டாலும் ஏற்படட்டும்; அச்சம் மட்டும் ஏற்படவே கூடாது. தெளிவுப்பட சொல்வதானால், ஒரு குழந்தையை அச்சுறுத்திப் பிழைக்க வைப்பதைவிட அதனைச் சாகவிடுவதே மேல். ஏனெனில், அச்சத்தால் பிழைக்கும் பிள்ளையின் வாழ்வு முழுவதும், ஓயாது அஞ்சி அஞ்சிச் சாகும் ஒரே நீண்ட சாக்காடாகவே இருக்கும். பல தடவைகளில் அச்சம் தரும் ஏமாற்றத்தை வேறு எதுவும் செய்வதில்லை. செத்து விடுவோம் என்ற அச்சத்தால் சாகிறவர் பலர்; “புலி யடித்ததா, கிலி யடித்ததா,” என்ற பழஞ்சொல் வழக்கு இதனாலேயே எழுந்தது. கொடுவிலங்குகள் தம் தோற்றத்தின் அச்சத்தாலேயே தம் எதிரிகளை மலைய வைத்துப் பிடிக்கின்றன. அச்சந்தரும் மலைப்பாம்பு ஊர்ந்துவரும்போது, காண்பவருக்குத் தப்பி யோட எவ்வளவு நேரவாய்ப்பு இருந்தாலும், அச்சங் காரணமாகக் கால் கைகள் மரத்துப் போய், அவர்கள் பொறுமையாக அதன் வரவை எதிர்பார்த்து நிற்பதுண்டு. அச்சமில்லாதவன் வாழ்வு, சிறப்பாகச் சிறு பருவத்திலிருந்தே அச்சமென்ப தின்னதென்று அறியாதவன் வாழ்வு சாவுக்கு எளிதில் இரையாவதில்லை. அச்சத்தை வருவிக்கும் கேடுகளைத் தவிர்ப்பதில், அச்சமின்மைப் போன்ற படைக்கலம் வேறில்லை. பிள்ளைகள் வாழ்வின் வெற்றி நாடுபவர் அவர்களை எக்காரணங்கொண்டும் அச்சுறுத்தா திருப்பதுடன், கூடுமான வரையில் அஞ்சாமைப் பண்பை வளர்க்கக்கடவர். இடையூறுகள் வந்தால் எச்சரிக்கையா யிருப்பதற்கும், மன அமைதிகெடாது செயலாற்றுவதற்கும் அஞ்சாமை தேவை. வாழ்வில் வெறுப்பு என்பது முதியவர்களுக்குக் கூடத் தீமை பயப்பதே யாகும். வாழ்வின் பயன் தெரிந்த எவரும் முதுமையை வெறுக்கவும் மாட்டார். முதுமை வந்தபோதும் வாழ்வில் வெறுப்புக்கொள்ளவும் மாட்டார்; ஏனெனில், இளமை வாழ்க்கையின் மலர் என்றால் முதுமை அதன் கனி ஆகும். மலர் காண்பதற்கு அழகு, முகர்வதற்கு மணமுடையது. ஆனால் கனி மலரின் பயன்; அத்துடன் அது மலரின் அழகும் மணமும் உடையதாய், சுவையும் தருகிறது. செடிக்கோ கனி விதையும் உதவுகிறது. முதுமையும் அதுபோல வாழ்க்கையின் படிப்பினைகள் முற்றும் அறிந்து அறிவுத்திறம் உடையது. அத்துடன் பிறருக்கான உயர் உணர்ச்சியின்றித் தனக்கான கீழுணர்ச்சிகள் அற்றது. தாம் பெற்ற படிப்பினைகளை உலகுக்கு ஈந்து புகழ் பெறும் பருவமும், “தாம்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” எனும் நிலையில் நின்று உலகின் இன்பங்கண்டு அதன் புரவலாகத் தம்மை ஆக்கிக்கொண்டு மகிழும் பருவமும் இதுவே. இங்ஙனம் உலகப் பற்றுடையவருக்கு முதுமையே வெறுக்கத்தக்க தன்று, நுகரத்தக்க தென்றால், இளமையும் அதனை அவாவி நிற்கும் சிறுபோதும் அடங்கிய வாழ்வு வெறுக்கத் தக்கதன்று என்பது கூறாமலே யமையும். “மனித வாழ்வு நிலையற்றது, அதன் இன்பமும் சிற்றின்பம்,” என்று கூறும் வேதாந்திகளும், சமயவாதிகளும் போலி வேதாந்திகளும், போலிச் சமயவாதிகளுமேயாவர். வாழத் தெரியாது தாம் வாழாது கெட்டது போக, தாம் நுகராத இன்பத்தைப் பிறர் நுகர்வது காணப்பொறாத இச் சிற்றறிவுடைய மாக்கள் பிறரைப் பிஞ்சிலேயே வெதும்ப வைக்க வரை தேடுகின்றனர். உண்மையில் நிலையற்றது வாழ்வல்ல; தனிமனிதன் வாழ்வு மட்டுமே. அதனைப் பொது வாழ்வின் ஒரு கூறு எனக் காண்பவர், கடமையாற்றிப் பெறும் இன்பத்தைத் தான் பண்டைக்கால அறிவுச் சான்றோர் பேரின்பம் என்றனர். திருவள்ளுவர் பெருமான் இந்திரனுலகு, தாமரைக் கண்ணானுலகு ஆகிய சமயவாதிகளின் கற்பனைகளைக் கண்டியாது கண்டிப்ப தன் கருத்து இதுவே. தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு, “வாழ்க்கை வாழ்வதற்கே,” என்றும், “வாழ்வு தனிமனிதனுக் காகவாயினும் அத் தனிமனிதன் பொதுமனித இனத்துக்காகவே, என்றும்,” “உண்பதினும் இனிது ஊட்டுதல், கற்றலினும் இனிது கற்பித்தல், வாழ்வதிலும் இனிது வாழ்வித்தல்,” என்றும் தம் வாழ்க்கை யாலும், சொல்லாலும், செயலாலும் வலியுறுத்தல் வேண்டும். பிள்ளைகள் கல்வியில் பள்ளிக்கூடம் வகிக்கும் இடமும், ஆசிரியர் வகிக்கும் இடமும் மிக இன்றியமையாததும் சிறந்ததும் ஆகும். ஆயினும், அஃது அவர்கள் கல்வியின் மேற்கட்டிடம் மட்டுமே. அதன் கடைகால் வீட்டிலேயே இடப்படுகிறது. இவ் வீட்டுக் கல்வியில் தாய் தந்தையர் அன்புடன்கூடிய அறிவுரை, அன்பு பொறுப்பு ஆகியவையும், தாய் தந்தையர் கண்காண விளையாடி மகிழ்வதும் ஒத்த வயதுப் பிள்ளைகளுடனும் அண்ணன் தங்கையருடனும் விளையாடுவதும் பாட்டிமார், தாய் தந்தையர் மூத்தோர்களிடம் கதை கேட்பதும். சமூகத்தில் உறவினருடனும் பிறருடனும் பழகுவதும் ஆகிய எல்லாமே உறுப்புக்கள் ஆகும். இவ் வெல்லா உறுப்புகளினூடாகக் குழந்தை சமூகக் கல்விக்கு முந்திய குடும்பப் பருவக் கல்வியையும், அதனூடாக எண்ணங்களையும் உயர் கருத்துக்களையும், அவற்றைக் குறிக்கும் தாய்மொழிப் பேச்சு நடையையும் கற்கிறது. இப் பருவக் கல்வியிலும் அதனைத் தொடர்ந்த தொடக்கப் பள்ளிக் கல்வியிலும் பாட்டும் கதையும் தலைமையான இடம் பெறுவன. குழந்தையின் வளர்ச்சிப் பருவங்கள் உயிர் வளர்ச்சி, மனித நாகரிகம் ஆகியவற்றின் தொடக்கம் முதல் எல்லாப் பருவங்களையும் குறிப்பவை. ஆதலால், அவ்வவற்றுக்குரிய சூழ்நிலைகளையுடைய கதைகளே அவ்வப் பருவத்திற் குகந்தவை. கற்பனைத் தெய்வக் கதைகள் (குயசைல வயடநள), விலங்குக் கதைகள் (ஹniஅயட ளுவடிசநைள), நகைச்சுவைக் கதைகள், வீரக்கதைகள், நாட்டுக் கதைகள் என இவை படிப்படியாகப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கேற்ப அறிவுத் திறம் உடையவை. இக்கதைகள் நேரப்போக்கும் இன்பமும் தருவதுடன், பொது அறிவையும் வளர்க்கின்றன. அதே சமயம் ஒவ்வொரு பருவம் கழியுந்தோறும் அப் பருவத்துக் கதையைப் பிள்ளை வெறுக்கத் தொடங்கு வதனால், புதுவகைக் கதையீயல் ஆர்வமும் தோற்றும். இக்கதைகளைப் பிள்ளைகள் மெய்யென ஏற்கும் பருவம் அக் கதைகளுக்குரிய பருவம். அவற்றை ஐயுற்றுக் கேள்வி கேட்டால், அக்கேள்வி கேட்கும் அறிவுத் திறம் போற்றி, அக்கதையை அறியாச் சிறுபிள்ளைக் கதை என்றுக் கூறி, அவர்கள் வளர்ந்து அவர்கள் அறிவும் வளர்ந்ததை அவர்களே அறியச்செய்ய வேண்டும். அறிவு வளர்ச்சியுற்ற பின்பும் அக் கதையைக் கூறுவதோ, அல்லது அவை உண்மையென்று சாதிப்பதோ, பிள்ளைகளிடம் வளர்ந்துவரும் பகுத்தறிவைக் குலைப்பதாகும். எடுத்துக் காட்டாக மதியம் தேய்ந்து போவதற்குரிய புராணக் கதையை ஆறு ஏழு வயதுப்பெண், அல்லது எட்டு ஒன்பது வயதுப் பையனுக்குக் கூறலாம். அது முடிவதற்குள் அவர்களே அதனை நையாண்டி செய்யத் தொடங்கி விடுவார்கள். அதன்பின் மெல்ல அது வெறுங் கட்டுக்கதை என்று கூறி அதே செய்திப் பற்றிய விஞ்ஞான விளக்கத்தைச் சிறுகச் சிறுகப் படிப்படியாகக் கூறலாம். விலங்குக் கதைகளும் மற்றக் கதைகளும் இது போலவே படிப்படியாக விலக்கப்படவேண்டும். பிள்ளைகள் கல்வியில் எழுத்தும் புத்தகமும் கொள்ளும் பங்கைவிட, கைவேலையும் உடல் இயக்கமும் பாட்டும் கதையும் பெரிதாயிருக்க வேண்டு. கூடியமட்டும் கண்ணாற் பார்க்கத்தக்க பொருள், படம் ஆகியவற்றால் அவர்கள் கருத்தை மனத்தில் உருவகப்படுத்த உதவவேண்டும். பிள்ளைப் பருவம் முடிந்து சிறுமைப்போதின் பெரும்பகுதி வரை, கல்வி விளையாட்டுகள் விளையாட்டாகவே இருத்தல் வேண்டும். பன்னிரண்டும் வயதுக்குமேல் சிறுகச் சிறுகப் பொது அறிவும் பதினாறுக்கு மேல் பகுத்தறிவு விளக்கமும் ஏற்படல் நலம். கலைக்குரிய கல்வி எல்லாப் பருவத்திலும் தூண்டப்பட வேண்டும். கல்வியின் நோக்கம் அறிவைப் பரப்புவதும் பேணுவதும் மட்டுமன்று. உண்மையில் அவை கல்வியின் தனி மனிதரைச் சார்ந்த நோக்கமே. அதன் பொது வாழ்வு சார்ந்த வளர்ச்சி, புதிய அறிவு நாடி அறிவின் அளவையும், எல்லையையும் வளர்ப்பதாகும். இப்புத்தாராய்ச்சியே நாகரிக வளர்ச்சியை உண்டுபண்ணுகிறது. புத்தாராய்ச்சிக்கு பொது அறிவு மூல முதலாகுமாயினும் அதற்குத் தூண்டுதல் தருவது பகுத்தறிவேயாகும். அஃதாவது அறிந்த அறிவைக் காரணகாரியமாகத் தொகுத்து, வகுத்து, ஒப்பிட்டு, அதன் முடிவுகளிலிருந்து புதிய அனுபவங்களையும், புதிய செய்திகளையும் புதிதாகக் காண உதவி செய்வதேயாகும். எனவே, பிள்ளையின் அறிவு வளர்ச்சியில், தொடக்கத்தி லிருந்தே பகுத்தறிவை நோக்கி அவர்கள் அறிவு வளர வேண்டுவது இன்றியமையாததாகும். அஃதாவது எந்தச் செய்தியையும் ஒப்பிட்டு ஆராயும் பண்பையும், எதையும் பழைமை என்ற காரணத்திற்காகவோ, பெரியார் உரை என்ற காரணத்துக் காகவோ, பெரும்பாலார் நம்பிக்கை என்பதனாலோ, முடிந்த மெய்மையாக ஏற்காமல் ஆராய முற்படும் பண்பையும் வளர்க்கவேண்டும். “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” (குறள் : 422) என்றும், “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” (குறள்: 455) என்றும் வள்ளுவர் கூறிய அறிவிலக்கணப் பண்பு, பிள்ளைகள் அறிவுப் பண்பாதல் வேண்டும். இறுதியாக நற்பழக்க வழக்கங்களைப் பேணுவதே கல்வியாகுமாயினும், அதன் பெரும்பகுதியும் குடும்பச் சூழலிலேதான் நடைபெறவேண்டும். தந்தையும், அதன் பின் ஆசிரியரும், இறுதியாகச் சமூகம், நல்ல நூல்களும் இதில் சில திருத்தங்கள் செய்யலாமாயினும், இதன் அடிப்படை முற்றிலும் தாயைச் சார்ந்ததே. தாய்க்கு அடுத்தபடியாக இவற்றை உருவாக்குபவர் பிள்ளைகளின் தோழர்களே யாவர். பிள்ளைகள் பெரும்பாலும் தங்கள் விருப்பப்படி தோழர்களைத் தேர்ந் தெடுக்கக் கூடுமேயன்றி, தாய் தந்தையரைக் கேட்டுத் தேர்வதில்லை. ஆயினும் கெட்ட தோழர் என்று தாய் தந்தையர் எண்ணுபவருடன் மிகுதியாகத் தொடர்பு கொள்ளாமலும், நல்ல தோழர்கள் என்று கருதுபவர்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளும்படியும் செய்வது பெற்றோருக்கு அரிதன்று. குடும்பத்திற்கு அழைக்கும் விருந்தினர், குடும்பத்தின் எல்லையில் பழகுவோர், வீட்டுப்பிள்ளைகள் ஆகியவர்களைப் பெற்றோர் எளிதில் சிறுவர் சூழ்நிலைத் தோழராக்க முடியும். ஆனால், நல்ல தோழர் என்பதற்காகப் பிள்ளைகளுக்கு முரண்பட்ட கட்டுப்பாடுகளை வலிந்து சுமத்தினால், தாய் தந்தையர் அன்பாட்சி குறைய, அவர்கள் பிள்ளைகள் மீது கொள்ளும் அன்புச் செல்வாக்கும் குறைந்து போகும். நற்பயன், நல்லின்பம் ஆகியவற்றின் கூட்டுறவாலேயே குடும்பம் பிள்ளைகளின் ஒப்பற்ற பல்கலைக்கழகமாகும் என்பதைப் பெற்றோர் மறக்கலாகாது. வாழ்க்கையின் மூலதனம் குடும்பமாயினும் வாழ்க்கைப் பயணத்தின் பெரும்பகுதி குடும்ப எல்லை கடந்த சமூக வாழ்வே யாகும். ஆகவே, குழந்தைகளைப் பெற்றோர் குடும்பத்துள் வைத்துக் குடத்துக்குள் விளக்காமல், உறவினர், நண்பர், ஊரார் ஆகியவருடன் ஊடாடிப் பழகவிட வேண்டும். அவரவர் தகுதியறிந்து நடக்கவும், அவரவர் தன்மையுணரவும் வகை செய்ய வேண்டும். குழந்தையா யிருக்கும்போது இதனைப் பழக்காதவரே பிற்காலத்தில் கூச்சமடைய வேண்டிய இடத்தில் கூச்ச மில்லாமலும், கூச்சமற்று நடக்கவேண்டிய இடத்தில் கூச்ச முற்றும், அஞ்சுவதஞ்சாமலும், அஞ்சத்தகாத தஞ்சியும் இடர்ப்படுகின்றனர். ஆண் பெண் பிள்ளைகள் இளமைப் போதிலிருந்தே எதிர்பாலாரான குழந்தைகளுடன் நேயமாகப் பழகிப் பால் வேறுபாடு தோற்றுமுன் அவர்களிடையே உள்ள வேற்றுமை, ஒற்றுமைப் பண்புகளை அறியச் செய்ய வேண்டும். பெண்டிர் ஆடவர் இருவரும் எதிர்பாலாரை மனிதராகக் கணிக்காமலும், தோழர்களாகக் கொள்ளாமலும் வேறு தனி உலகம் அல்லது தனி இனமாகக் கருதும் பழக்கம் குழந்தைப் போதிலிருந்தே எதிர்பாலருடன் பழகி அவர்கள் வளர்ச்சியுடன் நேய வளர்ச்சி பெறாததனாலேயே ஏற்படுகிறது. இருபாலாராலும் தோழர், உடன் பிறந்தார், நண்பர், மூத்தோர், இளையோர் என்ற பல்திற உறவுகளையும் இயல்பாகக் கொண்டு பழக அறியாத ஆண்பெண் பாலார், புறத்தே நாகரிகப் போர்வை போர்த்த விலங்கினும் கேடான மனிதரேயாவர். பெண்டிரனைவரையும் தமக்குரிய இன்பப் பொருள்களாகவும் தொட்டால் வாடிப்போகும் உடைமைகளாகவும் ஆண்கள் கருதுவதும்; ஆடவர் எல்லாரும் அஞ்சி விலகுதற்குரியர் என்றோ. அண்டிப் பசப்பிட வாழ்க்கைக்கு வழியாதற்குரியர் என்றோ பெண்டிர் கருதுவதும் ஆகிய இவ் விரண்டும் மனிதரென்ற அடிப்படையில் ஒருவர் மனத்தின் பரப்பை முழுவதும் மற்றவர் அளந்துணராததனாலேயே யாகும். பிள்ளைகள் காதல் வாழ்வின் சிறப்பையும் உயர்வையும் வேறெவ் விடத்திலிருந்தும் பெறமுடியாது - தம் குடும்பத்தின் தலைமைத் தெய்வங்களாகிய தாய் தந்தையரிடமிருந்தே அறிய வேண்டும். ஆடவர் உறவுகளுக்கெல்லாம் தந்தையும், பெண்டிர் உறவுகளுக்கெல்லாம் தாயுமே ஒருவர் உள்ளத்தில் மூல முதலாகத் தோற்ற வேண்டும். ஆண் பெண் தொடர்பு இழிவுடையதெனக் கருதுபவரும், அதனைப் புறந்தோற்றாது காப்பது அதன் மறைக்கும் பண்பு காரணமாக என்று எண்ணுபவரும் தம் தாய் தந்தையரை உள்ளத்துக்குள்ளாக அவமதிப்பவரே யாவர். இத் தீயபண்பு உலகில் பரந்து விட்டதற்குச் சான்று, கடவுளை அன்னையாகக் கொண்ட பண்டை மனிதன் மரபினர் அன்னை வடிவாம் பெண்டிரை இழித்தும் அவர்களை விலக்குந் துறவையும் மடத்து வாழ்வையும் உயர்த்தியும் வருவதேயாகும். பிள்ளைகள் உடல்நலம், மிகுதி உழைப்பு, மிகுதிப் படிப்பு ஆகியவற்றால் கெடாமல் பார்த்துக்கொள்ளல் வேண்டும். இன்ப விளையாட்டுகள், உலாவல், தொடர் ஊர்திப் பயணம், நல்லுரையாடல்களால் உடல் நலமும் உள நலமும் ஒருங்கே பேணல் வேண்டும். உளநலத்துக்கும் அறிவு நலத்துக்கும் உடல் நலம் தேவையில்லையென்று கருதுவது முற்றிலும் தவறு. ஆனால், இக் கருத்து ஏற்படுவதற்குக் காரணம் உண்டு. அறிவு நாடி உடல் நலம் திருத்தும் வாய்ப்பு உழைப்பாளிரினத்துக்கு இருப்பதில்லை. ஆனால், அவர்கள் உழைப்பு அவர்களுக்கு உடல் நலம் தந்து விடுகிறது. அதே சமயம் அறிவுநாடி உளந்திருத்தும் வாய்ப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் உழைப்பதில்லை. ஆகவே அவர்கள் உடல்நல முடையவரா யிருப்பதில்லை. சமூகத்தின் இவ்விரு குறைபாடுகளின் பயனாகவே உடல்நலம் வேறு, அறிவு நலம் அல்லது உளநலம் வேறு என்ற எண்ணம் பொதுவாகத் தோன்றியுள்ளது. ஆனால், உண்மையில் உடல் நலத்துக்கும் உள நலத்துக்கும் நெருங்கிய இன்றியமையாத் தொடர்பு உண்டு. அறிவு நாடி உள நலம் திருத்தும் வாய்ப்புடையவர் உழையாததால் உடல் நலத்தை மட்டும் கெடுத்துக்கொள்ள வில்லை. உள நலத்தையும் ஓரளவுதான் பெறுகின்றனர். பெற்ற உள நலம் புத்தறுவு நலனாக வளர உடல் நலம் இடந்தராமல் போகிறது. அது போலவே உழைப்பாளர் அறிவு நல வாய்ப்பில்லாமல் போவதால், அறிவு நலம் மட்டும் இழக்கவில்லை. உடல் நலமும் அவர்கள் ஓரளவே பெறுகின்றனர். உடல் நலத்துடன் உள நலம் அறிவு நலமும் கூடிய முழு அறிவு நலத்தையும். அதன் பயனாக உண்மையான உளநலம், அறிவு நலம் ஆகிய புதுச்சிந்தனை யாற்றலையும் உழைப்பவரினம், உழையாத இனம் ஆகிய இரண்டு இனங்களும் அடையாது போகின்றனர். உழைக்கும் இனத்தில் பிறந்து, ஓரளவு அதன் வாய்ப் பெல்லை கடந்து, அறிவு நலம் நாடி உளம் திருந்தும் வாய்ப் புடைய நடுத்தர வகுப்பினரே மட்டான உடல் நலம், உள நலம் இரண்டும் பெற்று முழு வாழ்வு நலம் அல்லது நாகரிகப் பண்பை வளர்க்கின்றனர். உழையாது உடல்பேணுபவர் அறிவுநலம் குன்றுவர். அதேசமயம் அறிவு பேணாது உழைத்து உடல் பேணுபவரும், அறிவு குன்றிருப்பர். மனிதர் எல்லோருக்கும் உடலுழைப்பே போல், அறிவுழைப்பும் இன்றியமையாத தேவையாகும். உண்மையில் அறிவு உடல் உறுப்பின் ஒன்றாகிய மூளையின் திறமேயாகும். மற்ற உறுப்புகள் போல் இது புற இயக்கம் உடையதாயிராமல், குடல் முதலிய உறுப்புகள் போலச் செயலாற்றுகின்றது. உடலின் எல்லா உறுப்புகளின் உழைப்பும் ஒத்தியிருப்பதே. ஒத்த உடல் நலம் பேணுவதாகும். மூளையும் உறுப்பாதலால், அது வளராத இடத்தும் முழு உடல்நலம் ஏற்படாது. உடல் வலுவும் உள வலுவும் ஒத்திருக்கும் நிலையே, உடல் நலமும் நீண்ட வாணாளும் தருவதாகும். பிள்ளைகள் வளரவளர அவர்களைத் தற்சார்புடையவர் களாக்கி, சரிசம நிலையுடையவராக நடத்துதல் வேண்டும். அறியாத ஒருவரிடம் அறிவுறுத்திக் கூறும் உரையாடல் முறையிலன்றி, அறிந்தவரிடையே உரையாடும் உரையாடல் முறையிலேயே அவர்கள் வருங்கால வாழ்க்கைக்கு வேண்டிய பொறுப்பு, கடமை, உரிமைகள் யாவற்றையும் உணரச் செய்தல் வேண்டும். பிள்ளைகள் காதல் வாழ்வு, குடும்ப வாழ்வு தொடங்கியப்பின் குடும்பம் கூட்டுக் குடும்பமாயிருந்தால்கூடத் தனியாக வேறு உட்குடும்பமாக, ஆனால் அதேசமயம் அன்பாதரவுடன் நடத்துதல் வேண்டும். கூட்டுக் குடும்ப முறை நாகரிக முறையன்று என்றுகூடத் துணிந்து கூறலாம். ஏனெனில், அஃது உண்மையில் சமூகம் வளர்ச்சி பெறாத காலத்திலுள்ள பழங்காலச் சிறு சமூகத்தின் சின்னமே. இன்றும் சில இடங்களில் இச் சிறு சமூகம் கூட்டுறவு ஊர்களாகவும் இயங்கியுள்ளன. இவற்றில் பல நற்பண்புகள் இருந்தாலும், இவற்றினைக் கையாண்டவர் வழக்காற்றுப் பண்புகள், குருட்டுப் பழக்கமாக இறுகிக் கெட்டுவிட்டன. ஆகவே, இக்கூட்டு முறைகள் தனி மனிதன் உரிமைகளை அடக்கி வைக்காத முறையில் புதுப்பிக்கப்பட வேண்டு மேயன்றி பழைய முறையில் நீடித்தல் தகாது. பழங்காலக் கூட்டுக் குடும்பம் மனித வளர்ச்சியுடன் வளராமல் பிற்பட்டுவிட்டதன் காரணமாகவே, குடும்பப் பூசல்களும் பொறாமையும் போட்டியும் பெருகின. மழை வெறித்தாலும் தூவானம் விடாததுபோல், இவை இன்னும் மக்களை விட்டப்பாடில்லை. இவை நீங்க வேண்டுமானால், குடும்பத் தலைவனையும், தலைவியையும் தலைவர் தலைவியாகவே தனியே விட்டுவைத்தல் நலம். தமிழர் பண்பு இவை என்பதைத் தலைவர், தலைவியர் என்ற பெயர்களே காட்டும். முதியோர் இளைஞருடன் போட்டியிடுதல் முறையுமன்று, நலமுமன்று. இளைஞர் வயது வந்ததும் தம் பாதுகாப்புக்குரிய வற்றைப் பேணுமாறு அவர்களைத் தனியே விட்டுவிட வேண்டும். மொத்தத்தில் தாய் தந்தையர் குடும்ப வாழ்வை மனித நாகரிகத்தின் தலைக்கோயிலாக்கி வாழ்ந்தால் மனிதர் வாழ்விற்குரிய தெய்வத்தை அக்குடும்ப எல்லைக்கு வெளியே தேடவேண்டிய அவசியமேயிராது. திருவள்ளுவர் பெருமான் இதனை உட்கொண்டேபோதிலும், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள் 50) என்று கூறினார். 7. குடிமையின் உரிமையும் பொறுப்பும் தனி மனிதன் சமூகத்தில் ஓர் உறுப்பு. ஆனால், மனு மனிதன் வாழ்வு சமூக வாழ்வில் ஓர் உறுப்பன்று. சமூக வாழ்வே தனிமனிதன் வாழ்வின் ஒரு பகுதியாய் அமைகிறது என்று கூறலாம். ஏனெனில், அவன் வாழ்வின் முற்பகுதி சமூக வாழ்வை அவன் மேற்கொள்வதற்கான பயிற்சி முறைப்பகுதியே. இது தனி வாழ்வுக்கு வேர் அல்லது அடிப்படைப் பகுதியாயினும் அஃது ஓர் அடிப்படை உறுப்பே. தனிமனிதன் பிறக்கும் போது சமூகப் பண்புக்குப் புறம்பான எந்தப் பண்பையும் அவன் தனக்கே உரியதாகக் கொண்டு பிறக்கவில்லை. தனி மனிதனுக்கே உரியதாகத் தோற்றும் உடலானது உயிர்ப்பண்பு மரபிலும் சமூகப் பண்பு மரபிலும் அவனுக்கு வந்தமைந்த ஒரு கருவி மட்டுமே. சமூகப் பண்பின் மரபில் வந்த இக் கருவி, சமூகப் பண்புகளை அவன் எளிதில் மேற்கொள்ள உதவுகிறது. கருத்தோற்றத்திலோ, பிறப்பிலோ இக் கருவி முழு நிறை மனித உடலாய் பிறக்கவில்லை. கட்டிளமைக் காலம் அல்லது முழு மலர்ச்சிக்காலம் (ஹனடிடநளஉநnஉந) வரை அதன் உறுப்புகள் சமூக மரபில் நின்றே படிப்படியாக வளர்ந்து முதிர்ச்சி பெறுகின்றன. முழு உறுப்புகள் வளர்ச்சிபெறும் இதே சமயத்தில், தாய், தந்தையர், உறவினர், தோழர் தூண்டுதலுடன் மனிதன் அவர்கள் செயலைப் பார்த்துச் செயலாற்றவும்; தாய்மொழி என்ற சமூக மரபுத் தொகுதி வாயிலாக, அவர்கள் சொல்வது கேட்டுச் சொல்லவும்; எண்ணுவது, அறிவது உணர்ந்து அறியவும் உணரவும் பழகிக் கொள்கிறான். உடலின் வளர்ச்சி முற்றுப் பெறும் முழுமலர்ச்சிப் பருவமே அவனிடம் சமூகப் பண்புகள் வளர்ச்சி பெற்று முழு முதிர்ச்சியடையும் பருவமாயும் அமைகிறது. முழு மலர்ச்சிக்குப் பிற்பட்ட தனிமனிதன் வாழ்வே மனிதன் தனிவாழ்வு என்று சிறப்பாகக் கூறக்கூடியது. இதில் மனிதன் சமூகமரபில் நின்றியங்கினாலும், அவ் வெல்லை கடந்து வளர்ச்சி பெறுகிறான். சமூகத்தைவிட்டுமனிதன் பிரியும்போது, அவன் தன் பிள்ளைகள் மூலம் தன் உடல் மரபுப் பண்பைத் தன் பின்னோர்களுக்கு விட்டுச் செல்கிறான். தன் அறிவுப் பண்பை அவர்கட்கும் சமூகத்திற்கும் விட்டுச் சென்று, புதிய சமூகத்தை ஆக்கும் மரபில் பங்கு கொள்கிறான். ஆகவே, தனி மனிதர் வாழ்வின் அடிப்படையிலேயே சமூகம் வளர்ச்சியடைகிறது என்னலாம். தனிமனிதன் வாழ்வுக்கு மூலதனமாயமையும் சமூக வாழ்வு, அதனினின்றும் ஈட்டப்பெற்ற தனி மனிதன் வாழ்வாகிய புதிய ஆதாயத்திருந்து சேமிக்கப்படும் வாழ்க்கைப் பயனென்னும் சிறு சேமிப்பு மூலமே வளர்ச்சி பெற்று, உயிர்ப் பண்பாய் உலவுகிறது. தனிமனிதரைச் சமூகம் தன் பண்பு கடந்து வளரச் செய்யவில்லையானால், அச் சமூகம் வளராது; உயிருடன் உலவாது; அது படிப்படியாகத் தேய்வுற்று அழிவது உறுதி. “தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது” (குறள் 68) என்று அறிவு நூல் வகுத்தது இதனாலேயே யாகும். தனிமனிதன் சமூகத்துக்கு அளிக்கும் புது மரபுப் பண்பே புகழ் ஆகும். இது பலர் பாராட்டுவதனால் மட்டும் ஏற்படும் வெற்றுப் புகழ் அன்று. பண்பும் பயனும் அறிந்து அறிஞர் பாராட்ட, அவர் வழி நின்று அவற்றைக் கண்டு மக்கள் பாராட்டும் பண்புடைப் புகழே. இதனாலேயே ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்ற தொல்லோர் உரையும் எழுந்துள்ளது. உலகம் என்று இங்கே கூறப்படுவதும் அறிஞர், சான்றோர் என்று கூறப்படுவதும், சமூக வளர்ச்சியின் பழங்காலம், தற்காலம், வருங்காலம் எனும் முக்காலப் போக்கும் நுனித்துணர்ந்த மூதறிஞரையே. முழுமலர்ச்சிக்குப் பின்னரே மனிதன் சமூகத்தில் ஓர் உறுப்பினன் ஆகிறான் என்பது கவனிக்கதக்கது. இப்பருவம் வரை இன்றும் மனிதர் தம் செயலுக்கு பொறுப்பு வகிப்பதில்லை. அவர்கள் செயலுக்கு அவர்கள் தாய் தந்தையர், குடும்பத்தார், உறவினர் ஆகியவர்களே பொறுப்புடையவர்களாகக் கருதப்படு கிறார்கள். மணப்பொறுப்பு, மொழியுரிமை, வழக்கு மன்றத்தில் ஆணையிட்டுச் சான்று கூறும் உரிமை ஆகிய எதுவும் இப்பருவம் கடந்து முழு மலர்ச்சிப் பருவம் எய்தினும் மேல் வளர்ச்சி பெறாது போவதும் உண்டு. சமூகப் பண்பு முற்றுப் பெறாத இவர்களும், சமூகப் பண்புடன் நின்றுவிடும் இவர்களும் அரும்பில் வதங்கிய மலர்களையும் பிஞ்சில் வெம்பிய காயையும் போல்பவர்கள். சமூக வாழ்வாகிய செடி வாழ்க்கையில் அவர்கள் உண்மையில் ஓர் உறுப்பாவதேயில்லை. இத்தகையோர் பிறந்தும் பிறவாதாரிலும் வாழ்ந்தும் வாழாதாரிலும், வாழ்விலேயே இறந்தவரிலும், வைத்தெண்ணத் தக்கவர்கள். எனவேதான் அறநூலார், “தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார், தோன்றலில் தோன்றாமை நன்று” (குறள்.236) என வகுத்தனர். சமூகப் பண்பு வளர உதவும் வாழ்வே வாழ்வு, மற்றவை வாழ்வல்ல என்பதே இதன் குறிப்பு. முழு மலர்ச்சிப் பருவம்வரை மனிதன் செயலாற்றுவதற்கு உதவும் அறிவு, ஐம்பொறியறிவாகிய ஐயறிவே. அவற்றால் அவன் அறியும் அறிவும், சமூகம் முன்பே அறிந்த அறிவுப் பகுதியாகிய பொது அறிவு மட்டுமே. பழைய அறிவாகிய இப் பொது அறிவிலிருந்து, புதிய அறிவாகிய மெய்யுணர்வு பிறக்க, பகுத்தறிவாகிய ஆறாம் அறிவு செயற்பட வேண்டும். அறிவின் முழு மலர்ச்சிப் பருவத்தை எட்டாதவரும், அதனை எட்டி மேற்செல்லாதவரும் இங்ஙனம் விலங்குகளுக்கும், மனிதருக்கும் பொதுவாக உரிய ஐயறிவு மட்டுமே உடையவராவர். தமிழ் ஆன்றோர், ஐயறிவுடைய இத்தகையோரை விலங்குகளுடன் ஒன்றுபடுத்தி “மாவும் மாக்களும் ஐயறி வினவே,” “மக்கள் தாமே ஆறறி வுயிரே,” என்று வகுத்தனர். தமிழக நீங்கிய பிற புலத்தார் மனிதவுருவுடைய மாக்களையும் மக்களாகக் கணித்தனராதலால், ஆறறிவுடையோரைச் சிறப்பிக்க அவர்களைப் புத்தேளிர் என்றனர். இத்தகைய மக்கள் நிலை, அல்லது புத்தேளிர் நிலை பெற்றோரே புகழ்பெற்றோர் ஆவர். தனிமனிதன் வாழ்வுக்குத் தாயகம் சமூகப் பண்பு. இஃது உயிர்ப் பண்பின் ஒரு பகுதியே. இவ்விரண்டும் கடந்த முடிவான தாய்ப் பண்பு இயற்கைப் பண்பு. இயற்கைப் பண்பும், சமூகப் பண்பும் தனிமனிதன் வாழ்விற்குரிய தாய் தந்தைப் பண்புகள். மீன் நீரில் பிறந்து நீரில் வளர்ந்து நீரில் கரைந்த காற்றையே உயிர்ப்பதுபோல, மனிதனும் இயற்கைப் பண்பின் வழிவந்த சமூகப் பண்பில் பிறந்து, சமூகப் பண்பில் வளர்ந்து சமூகப் பண்பில் தோய்ந்தூறிய இயற்கைப் பண்பே உயிர்த்து வளர்கிறான். மீன் நீரையும் நீரியக்கங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். ஆனால், அவற்றின் ஆற்றல் மீனின் இயக்கத்தை தடைப்படுத்தவும் இறுதியில் அழிக்கவும் முடியும் தாய் தந்தையர் யுதவும் பண்புகள் பிறப்புக்கும் வாழ்வுக்கும் மட்டுமன்றி, மாள்வுக்கும் காரணமாகக் கூடும் என்பதை ஓர் அழகிய உவமை வாயிலாக விவேகசிந்தா மணியின் ஒரு பாட்டு விளக்குகிறது, “சங்குவெண் தாம ரைக்குத் தந்தைதாய் இரவி, தண்ணீர்! அங்கதைக் கொய்து போட்டால் அழுகச்செய் தந்நீர் கொல்லும் துங்கவெண் கரையில் போட்டால் சுடரவன் காய்ந்து கொல்வான்!” என்பதே அப் பாட்டு. இங்ஙனம் ஆக்கமுறையில் மட்டுமன்றி, எதிர்பாற்றல் வகையிலும், அழிவாற்றல் வகையிலும் தாய்ப் பண்புகளாக விளங்கும் இயற்கைப் பண்பு. அதன் வழிவந்த உயிர்ப் பண்பு, சமூகப் பண்பு, இவற்றின் வழிவந்த பிற நாகரிகப் பண்புகள் ஆகிய யாவற்றைவும் தமிழ் ஆன்றோர் ஒருங்கே ஊழ் என்றனர். இவற்றுள் இயற்கைப் பண்பாகிய மூலஊழ் எல்லாவற்றிலும் வலுவுடையது. மீனின் இயக்கத்துக்குக் கடலின் இயக்கம் போலவும், பறவையின் இயக்கத்துக்குப் புயலின் இயக்கம் போலவும், இது வரம்பற்ற ஆற்றலாகவும், அதே சமயம் உயிர்ப்பண்பற்ற, விருப்பு வெறுப்பற்ற, தன்னளவில் வளர்ச்சியற்ற அஃறிணை ஆற்றலாகவும் அமைந்துள்ளது. தமிழர் இதனையே தெய்வம் என்ற அஃறிணைச் சொல்லால் குறித்தனர். உயிர்களில் செயலாற்றும்போது இது மரபாகிறது. சமூகத்தில் செலாற்றும் போது இது சமூக மரபுகளாகவும்; அறிஞரால் வழங்கப்பட்டுச் சமூகப் பழக்கமானபின் பழக்க வழக்கங்களாகவும் மாறுகிறது. குடும்பம், சமூகம் ஆகிய எல்லை கடந்து நாட்டெல்லை அல்லது ஆட்சியெல்லையில் இப் பழக்க வழக்கங்களின் அடிப்படையாகச் சட்டங்களும், அரசியலமைப்பு முறைகளும் ஏற்படுகின்றன. நாட்டெல்லையுடன் அமையாமல், அதனைக் கடந்து உலக எல்லையையும் அறிஞர் மனத்துள் வகுத்து, அதற்குப் பொதுவான கட்டுப்பாடுகளையே ஒழுக்கம் என்ற பெயரால் குறித்தனர். ஆனால், குடும்ப எல்லையிலுள்ள கட்டுப்பாடுகளைப் பேணி வலியுறுத்தக் குடும்பத் தலைவராகிய தந்தையும் தாயும், சமூகக் கட்டுப்பாடுகளை வலியுறுத்தவும் நாட்டுக் கட்டுப்பாடு களை வலியுறுத்தவும் அரசன் அல்லது ஆட்சியாளரும் இருப்பதுபோல், உலகக் கட்டுப்பாடுகளாகிய ஒழுக்கத்தை வலியுறுத்த ஒரு தலைவன் கிடையாது. அரசன் ஆணைநின்று அதனைச் செயற்படுத்தும் பணியாட்களும் ஒழுக்க வகையில் கிடையாது. இப் பொறுப்பைத் தனிமனிதன் வகிக்க வேண்டுமாத லால், அவன் உள்ளக் கற்பனையில் உலகத் தலைவனாக ஒரு கடவுளையும், ஒவ்வொருவர் தனி வாழ்விலும் அவன் ஆணைய வலியுறுத்தும் பணியாளர்களாக மனச் சான்றினையும் உருவகப்படுத்திக் காட்டினர். சமயங்கள் அறிஞரது இவ் வுருவகக் கருத்தைப் பயன்படுத்தி, அவற்றின் அடிப்படையில் புதுக்கட்டடம் அமைத்தன. தெய்வம் என்ற சொல்லையும் ஊழ் என்ற சொல்லையும் கடவுள் அல்லது இறைவன் என்ற சொல்லையும் பலர் ஒரு பொருள்பட வழங்குவதுண்டு. இது முற்றிலும் சரியன்று; தெய்வம் என்பது தன் செயலற்ற, ஆனால் எல்லாச் செயலையும் கட்டுப்படுத்தும் அஃறிணைப் பண்பாகிய இயற்கைப் பண்பு. ஊழ் என்பது அதனை அடிப்படையாகக் கொண்டு தனி உயிர் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, அதே சமயம் அதன் வளர்ச்சிக்கு விட்டுக் கொடுத்து உதவும் வினைப்பண்பு. இஃது அஃறிணைப் பண்பல்லவாயினும் செயற்பண்பாயிராமல், தனி உயிர் முயற்சியால் செயற்படும் செயப்படு பண்பாய், அமைந்துள்ளது. கடவுள் என்ற சொல் எல்லாத் தனிமனிதர், தனி உயிர்களும் வளரும் வளர்ச்சியின் இலக்காகவும், அறிஞர் காட்டிய வழிகளின் இலக்கான கடந்த குறிக்கோளாகவும் கருத்துருப் பெற்றபண்பு. இஃது அஃறிணைப் பண்புமன்று, செயப்படு பண்புமன்று. செயலிலக்கான பண்பு. தனிமனிதன் வாழ்வின் சூழலாகிய இயற்கைப் பண்பு, உயிர்ப்பண்பு, சமூகப்பண்பு ஆகிய ஊழ்த்திறங்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் துணையாலேயே மனிதன் செயலாற்றுகிறான். அவற்றை அவன் கழித்துவிட முடியாது. “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்” (குறள் 380) என ஆன்றோர் கூறியது இதனாலேயே. ஆயினும் ஒழிக்க முடியாதவை என்பதனால், அவை வெல்ல முடியாதவையோ, ஆட்கொள்ள முடியாதவையோ ஆய்விட மாட்டா. நீரோட்டத்தை எதிர்த்து நீந்துபவன் முயற்சி ஓட்டத்தின் ஆற்றலால் தடைப்படுவது உறுதி. ஆனால் அம் முயற்சி சிறு அளவாயினும், அந்த அளவில் நீரோட்ட வேகத்தைக் குறைக்கவாவது செய்யாமற் போகாது. “தெய்வத்தான் ஆக தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” (குறள் 616) என்ற மூதுரையின் குறிப்பு இது. இங்குத் தெய்வம் என்றது இயற்கைச் சூழ்நிலைப் பண்பாகிய கண்ணற்ற ஊழையே. எதிர்த்துச் செயலாற்றும் முயற்சி அல்லது ஆள்வினை அளவிலும் பண்பிலும் அறிவிலும் மிக்கதானால், ஊழின் ஒழுங்கைச் சரிசெய்வது மின்றி, அதனைப் பேரளவில் வெல்லவும் முடியும். இங்ஙனம் செய்பவரே செயற்கரிய செய்பவர் ஆவர். இயற்கைப் பண்பு பிற பண்புகளுக்கெல்லாம் அடிப்படை யாய் நிலையாய் இருப்பது போல, ஊழை வெல்லும் கருவியாகப் புத்தூழ் படைக்கும் பெரியாரும் உண்டு. இப்புத்தூழ் அவர்கள் ஊழை அல்லது இயற்கையின் பொதுநிலையை எதிர்த்து வென்ற வெற்றியை நிலையான நாகரிகப் பண்பாக்குகிறது. மனித நாகரிகத்தில் மொழிவகுத்தவர், மொழிக்கு எழுத்து வடிவு வகுத்தவர். தீயின் பயனை அறிந்து முதலில் வழங்கியவர், உலோகங்களை முதலில் வழங்கியவர் ஆகிய நிலையான கருவி யூழ்களை வகுத்த பெரியார்களே முனைவர் என்று போற்றப்படுகின்றனர். இவர்களையே வள்ளுவர் பெருமான் ‘ஊழையும் உப்பக்கம் கண்டவர்,’ ‘செயற்கரிய செய்தவர்,’ ‘தெய்வத்தொடு வைத்தெண்ணப்படத் தக்கவர்’ என்று சிறப்பித்துள்ளார். இவ்வகையில் முதல்வரே ‘பகவன்’ ஆவர். தெய்வத்தின் ஆற்றலும் கடவுட் குறிக்கோளும் நிலையான உலகப் பற்றும் மிக்கவராய் உலகுக்கு என்றென்றும் பயன்படும் நிறைபயனுடைய அடிப்படைக் கருவிகளை அமைத்தவர் இவர் என்றுங் கூறலாம். கீழ்நாட்டு வாழ்வில், சமூகத்திலும் சமயத்திலும் அரசியலிலும் மக்கள் அக்கரை கொள்ளாமல் ஆதிக்க வாதிகள் கையிலேயே அவற்றை முற்றிலும் விட்டதனால், இம் முத்திறக் கட்டுப்பாடுகளுமே மக்கட் சார்பற்றவையாய்விட்டன. சமூகத்தின் தலைவராயமைந்தவர் தந்நல வேட்டைக்கேற்பச் சமூகக் கட்டுபாடுகளும், சட்டங்களும் அமைந்தன. பழக்க வழக்கங்களை அறிஞரும் மக்கட் பற்றாளரும் தலைநின்று பேணி வகுத்து, வேண்டும் உருவில் மாற்றியமைப்பதற்கு மாறாக, அவை ஆதிக்கவாதிகளுக்கு வேண்டிய அளவில் மட்டும் திரிக்கப்பட்டு, மக்கள் உணர்ச்சிக்கு விட்டுக்கொடுக்காத தொய்வற்ற, வளர்ச்சியற்ற, நிலைவரமான மரச்சட்டங்களும் கற்சட்டங்களும் ஆயின. தனிமனிதன் ஒழுக்க முறைகளும் ஆதிக்கத் தலைவர்களை எதிர்க்குமிடத்தில் ஒடுக்கப்படுகின்றனவாதலால், அவையும் ஒருதலைச் சார்பாக, எதிர்மறைப் பண்பாக நடைபெறுகின்றன. ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்ற அறமொழிக்கு இந்நாளைய ஒழுக்கமுறை சென்றுள்ளது. “அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்று கவிஞர் பாரதியார் முறையிட்டுள்ளது, இது பற்றியே யாகும். உலக நாகரிகத்தில் மேனாடுகள் பலபடி பிற்பட்டு நின்றவையே. ஆனால், தனிமனிதன் ஒழுக்கமுறை அங்கே இத்தகைய சீர்கேடுகளால் எதிர்மறைப் பண்பாகாமல் தப்பியுள்ளது. சமூக வாழ்விலும் சமய வாழ்விலும் மட்டுமன்றி, அரசியல் வாழ்விலும் மக்கள் அந் நாடுகளில் கவனம் செலுத்திப் பங்கு கொள்கிறார்கள். ஆகவே அங்கே ஆதிக்கவாதிகள் ஆட்சி எதிர்பற்ற வேட்டைக் காடாயில்லை. இயல்பாய் மனிதர் முயற்சி வேறுபாடு காரணமாக ஏற்பட்டுள்ள உயர்வு தாழ்வுகளிலும், உயர்வு தாழ்வு அடிப்படையில் அமைந்த அமைப்புகளும், பழக்க வழக்கங்களும், நிலையங்களும் இதனால் படிப்படியாக நிலை குலைந்து, சரிசம ஆட்சியும், சரிசம வாய்ப்பும் மக்களுக்கு கிடைத்து வருகின்றன. இது காரணமாகத் தனிமனிதன் குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி, அரசியலிலும் சரி பொறுப்புடையவனாய் வாழ்கிறான். ஆடவரைவிட முயற்சியில் எங்குமே பிற்பட்டுவிட்ட பெண்ணுலகுகூட, மேனாடுகளில் இப்போது தன் பொறுப்பை வகிக்க வீறியெழுந்துள்ளது. இதனால் மேனாட்டுச் சமூகம் அரசியலில் மட்டுமன்றிச் சமயம் ஒழுக்கநெறி ஆகியவற்றிலும் மேம்பாடடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. கீழ்நாடுகளைப் போல் அங்கே அச்சமே ஒழுக்கமாகவும், அடிமைத் தனமே சமயமாகவும், தன்மதிப்பற்ற தன்மையே பொதுமக்களுக்குரிய நிலையாகவும் இல்லை. மேல்நாட்டிலும் இன்று ஆதிக்கவாதிகள் இல்லையென்று கூறமுடியாது. மேல்நாட்டு நாகரிக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய அறிவுநூல் தரும் ஆற்றலைக்கூட, இவ் ஆதிக்கவாதிகளே பெரிதும் கைப்பற்றியுள்ளனர். ஆயினும், பொது மக்கள் அதனைக் கைப்பற்றும் அவாப் பெற்றுவிட்டனர். ஆதிக்கத்தில் பங்கு கொள்ளவும் அவர்கள் படிப்படியாக முயன்று வெற்றி பெறுகின்றனர். இவற்றுக்குத் தடையான உயர்வு தாழ்வுகள் வேறுபாடுகள் பல உண்டானாலும், அறிஞர் நீண்டநாளாக இவற்றைத் தகர்க்க முனைந்து வெற்றி கண்டும் வருகின்றனர். ஆனால், கீழ்நாடுகளிலோ அறிவியல் சிறதளவும் முன்னேற்றம் அடையவில்லை. முன்னேற்றம் பெற முடியாமலும் இருக்கிறது. இங்குள்ள ஆதிக்கவாதிகள் தங்கள் ஆதிக்கத்துக்காக வெளிநாட்டு ஆதிக்கங்களுக்கு அணைகொடுத்து, அவர்கள் மொழியாட்சி மூலம் நாட்டு மக்கள் தாய்மொழிகளும் தாய்மொழிப் பண்புகளும் வளரவொட்டாமல் தடுத்து வருகிறார்கள். அரசியல் மட்டு மன்றித் தனிமனிதன் செயலாற்றவோ, பேசவோ, சிந்திக்கவோ கூட முடிவதில்லை. பொதுமக்கள் தன்மதிப்பு என்பதைக் கூட வேறு யாருக்கோ உரியது என்று கிடக்கின்றனர். இந்நிலையில், சிந்திக்கும் தொழிலை மேற்கொண்ட அறிஞர்கூட, ஆதிக்கவாதிகளின் கைப்பாவைகளாகவே செயலாற்ற முடிகிறது. தனிமனிதன் பொறுப்பற்ற நிலையிலிருந்து தொடங்கிப் பொறுப்பற்ற ஒரு நாகரிகமாக இன்று கீழ் நாட்டுலகம் வளர்ந்து வருகிறது. மேல்நாட்டுக்கு ஒப்பான நிலையில் கீழ்நாடுகளில் சமூக, அரசியல், சமய, ஒழுக்க நிலையை உயர்த்த வேண்டு மென்றால்கூட, பல அறிஞர் பல காலம் பலியாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கீழ்நாட்டு மக்கள் பொறுப்பும், அறிஞர் பொறுப்பும் மிகப்பெரிது, அதனை வகிப்பதற்கான முதல் தகுதி தனிமனிதன் பொறுப்பு வகிக்க அவாவும்படி அவனைத் தூண்டுவதே. இன்றைய மனிதர் யாவரும் வெளிப்படையாகத் தனிமனிதன் ஒழுக்கத்தை மட்டுமே வற்புறுத்துகின்றனர். ஆனால், அத் தனிமனிதன் ஒழுக்கமும்கூட, நிறைவுடையதாயில்லை. சமூகத்தைப் பேணும் பண்பும், சமூகத்தை வளர்க்கும் பண்பும் ஆகிய ஆக்கப் பண்பாய் அஃது இல்லாமல், சமூகத்தை வளர்க்கக் கருதாத எதிர்மறைப் பண்பாக மட்டுமே இயல்கிறது என்பதைப் பலர் கவனிப்பதில்லை. “தன் காரியம் தனக்கு; அடுத்தவன் நன்மை தீமைகளில் நாம் ஏன் வீணாகத் தலையிட்டுக்கொள்ள வேண்டும்; சமூகத்திலும் நாட்டாட்சியிலும் யார் இருந்தாலென்ன, இருப்பவர்களை எதிர்க்காது நாம் வாழ்ந்து விட்டுப் போவோம்,” என்பவையே இன்றைய கீழ்நாட்டு மனிதன் வானளாவிய உயர்நெறிப் பண்புகள் ஆகும். அவன் செயல், அவன் வாழ்வு ஆகியவற்றின் பின்விளைவுகளையோ, காரணங்களையோ பற்றி அவன் கவனத்தைத் திருப்ப முயன்றால்கூட, இவற்றுக்குத் தடையாக அவன் முன்வினைப்பயனும், மேலுலகத் தண்டனை களும் வந்து குறுக்கிடும்; இவை அவன் பொறுப்பற்ற வாழ்வுக்கு ஒத்த சப்பைக் கட்டுகளாகவே அமைகின்றன என்பதை அவன் கவனிப்பதில்லை. ஆதிக்க வாதிகளின் வேட்டைப் போட்டி களிடையே வளர்ச்சியுற்ற அடிமைத்தனத்தின் நிழலில் தங்கிய அறிஞர், தம் அடிமைத் தனத்துக்கு விளக்கமாகக் கூறியவையே இவை என்பதையும் யாரும் ஊன்றிக் கவனிப்பதில்லை. எனவே, தனி மனிதனுக்கும் அறிஞருக்கும் பொதுவாகவும், கீழ்நாடுகளில் உள்ள தனிமனிதனுக்கும் அறிஞருக்கும் சிறப்பாகவும் உள்ள முதற்கடமை தம் தனி வாழ்வுக்கே அடிப்படையாய் அமைந்த அரசியல், சமூக, சமய, பொருளியல் சட்ட திட்ட அமைப்புகளைச் சிறுகச் சிறுகவேனும் மாற்றி யமைப்பதேயாகும். உலகிலுள்ள மற்ற நாட்டு மக்களைப் போலக் குடும்பம், இனம், நாடு, உலகு எனப் படிப்படியாக விரிந்து செல்லும் கடமைப் பொறுப்பின் விரிவைவிட்டு உலகம் என்றும், உலகு கடந்த கடவுளொழுக்கம் என்றும் பசப்பும் பொறுப்பற்ற தனி மனிதன் ஒழுக்க முறையைவிட்டு, எல்லாச் செயல்களையும் காரண காரியத் தொடர்புபடுத்தி, நல்லவை எனக் காட்டும் பழக்கம் ஏற்படுதல் வேண்டும். நாட்டின் நன்மை, மக்கள் நன்மை ஆகியவை கருதியே முற்காலங்களில் அமைக்கப்பட்ட பல சட்ட திட்டங்கள், வழக்கங்கள், இன்று காரணம் அறியப்பட்ட மாட்டாதவையாய்ப் போனது மட்டுமன்று, காரணமான சூழ்நிலைகள் மாறியும், முற்றிலும் எதிராகியும் உள்ளன. அயலார் பழக்கவழக்கங்கள் புகாமல் தடையாகும்படி அமைக்கப்பட்ட சாதிக் கட்டுப்பாடுகள் இன்று வேற்றுமை விளைவித்து அயலால் அரசியல் ஆட்சி, பண்பாட்சி, பொருளாட்சி, ஆதிக்க ஆட்சி ஆகியவற்றுக்கு எளிதில் வகை செய்வதாயமைந்துள்ளது. காதல் வாழ்வுக்குப் பாதுகாப்பான கோட்டையாய், அமைந்த திருமணவினையும், குடும்ப வாழ்வும் காதலை உட்புகவொட்டாமல் புறத்தேவிட்டு அடைக்கும் கோட்டையாய் புகுந்துவிட்டாலும், காதல் வளரமுடியாத பழக்கவழக்கக் கட்டுப்பாடுகளுடையதாய் மாறியுள்ளது. கட்டுப்பாட்டுக்கு உள்ளடங்கிய மக்கள் வாழ்வைப் பாதுகாக்க எழுந்த சமயமும் அரசியலும், கட்டுப்பாடுகளை எதிர்த்தழித்தவர் ஆதிக்கத்துக்குட்பட்டு, வேலியால் அழிக்கப்படும் பயிர்போல இன்னலுறுகின்றன. இவற்றைச் சீர்திருத்தி அமைக்கப்பாடுபட வேண்டிய அறிஞர்கூட, ஆதிக்கவாதிகளை அடுத்த நயந்து அவர்கள் ஆதிக்கத்தை வளர்த்து வாழவேண்டியவராகிவிடுகின்றனர். கீழ்நாடுகளில் நிலவும் இவ் வடிமைத்தனம் கீழ் நாடுகளின் ஒற்றுமையைக் குலைத்துக் கெடுப்பதன்று, அவற்றை மேல்நாட்டு ஆதிக்க வேட்டைக்காரரின் வேட்டைக் காடாகவும் ஆக்கியுள்ளது. இதனால், ஆதிக்க வேட்டையாகிய நோய் மேல் நாடுகளிலும் பரவி வருகிறது. கீழ்நாடுகளின் தன்னாண்மைக்கும் விடுதலைக்கும் நல்வாழ்வுக்கும் மேல்நாடுகள் எமன்களாய் அமைந்துள்ளன என்னலாம். உலகில் சரிசம நிலையும் பண்பாடும் வளர்ச்சியுற்று மனித நாகரிகம் மேம்பட வேண்டுமானால், கீழ் நாடுகள் சீர்திருத்தி நன்னிலையுறுதல் இன்றியமையாதது. கீழ்நாடுகளின் வாழ்வில் மிகமிகச் சீர்கெட்ட பகுதி அரசியல்தான் என்று கூறவேண்டும். நெடுங்காலமாக இத் துறை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ மேல்நாட்டு வல்லரசு களின் பிடியிலேயேயுள்ள. நேரிடையாக மேல்நாட்டாட்சியின் காலடியிலில்லாத நாடுகளிலும், மேல்நாட்டுப் பொருளிய லாதிக்கமும், பண் பாட்டாதிக்கமும், மொழி அறிவாதிக்கமும் மிகுதியாகவே உள்ளன. இம் மேல் நாட்டாதிக்கம் வருவதற்கு முன்பே, சமூக சமய அரசியல் ஆதிக்கங்கள் பொதுமக்கள் கையிலிருந்து தொலைதூரம் சென்று, கிட்டத்தட்ட அயல் நாட்டவர் போலவே பிரிந்துவாழும் ஒருசில உயர்குடிமக்கள் கையில் அடைபட்டிருந்தன. ஆகவேதான், பொதுமக்கள் தம் நாட்டாட்சியிலேயே அடிமை மனப்பான்மையில் பயிற்று விக்கப்பட்டு, மேனாட்டு ஆட்சியையோ, வேறு அயல் ஆட்சிகளையோ தடையில்லாது ஏற்கும் பக்குவமான மனப்பான்மையில் வைக்கப்பட்டிருந்தனர். இராமனாண்டாலென்ன, இராவணனாண்டாலென்ன, இராமனுடன் கூடவந்த குரங்காண்டாலென்ன? என்ற மனப்பான்மையுடன் மக்கள் இருந்தனர். ஆகவே, ‘தம் நாட்டு அயலார்’ ஆட்சியிலிருந்து ‘பிறநாட்டு அயலார்,’ ஆட்சிக்கு நாடு மாறிய மாற்றத்தில் அவர்கள் எத்தகைய வேறுபாடுகளையும் காணவில்லை. இது மட்டுமன்று. பல சமயங்களில் மேனாட்டு ஆதிக்கத்தால் தமக்குச் சில வகைகளில் உரிமைகள் மிகுந்ததைக் கூடக் கண்டனர். மேனாட்டு ஆதிக்கத்தை ஒட்டி மேனாடுகளில் வளர்ந்த அறிவியல் நூல்களின் அறிவும், பயனும் அவர்களை வயப்படுத்தின. மொத்தத்தில் அறிவியலின் பயனை மக்கள் பெறாவிட்டாலும், அதனால் நடுத்தர வகுப்பின் வாழ்க்கைத் தரம் ஓரளவு உயர்ந்தது. எனவே தம் நாட்டு ஆதிக்கக்காரரைவிட அயல்நாட்டு ஆதிக்கக்காரரை மிகுதியும் ஆதரிக்கும் வகுப்பு ஒன்று எழுந்தது. இது நாட்டு நலனை அடிப்படையில் பின்னும் கெடுப்பதாயிருந்தது. மேல்நாட்டு ஆட்சி ஆதிக்கம், நாகரிக ஆதிக்கம், பொருளியல் ஆதிக்கம் ஆகியவற்றின் கீழ மேல்நாட்டு நாகரிகத்தின் வெளிப்பகட்டான பண்புகள் மட்டுமே கீழ் நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல்கள், அரசியல் மன்றங்கள், சட்டதிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஆட்சிப் பொறுப்பை விரும்பாத மக்களிடையே, அதனால் ஏற்பட்ட நன்மையெல்லாம் மேல்நாட்டு ஆட்சிக்கு உகந்த கையாளாகவோ, அதன் ஆட்சிப்பெயராகவோ கீழ்நாட்டு ஆதிக்கக் குழுக்கள் அடிமைப் பண்பு முறையில் ஏணிப்படிகள் போன்ற பல படிகள் ஏற்பட்டதேயாகும். முன்னிருந்த சமய உரிமை ஏணிப் படிகள், சமூக ஏணிப் படிகள் ஆகியவற்றில் இஃது ஒரு சிறிதளவு மாறுபாடு செய்ததாயினும், ஏணிப்படி முறைக்கு இன்னும் கொடுத்தது. மேனாட்டு மொழிக்கல்வியும் அறிவியற்கல்வியும், கீழ் நாட்டு மொழிகளை வளப்படுத்துவதற்கும் அறிவியலை வளர்ப்பதற்கும் மாறாக, மேனாட்டு ஆதிக்கத்துக்கு விளம்பர ஆட்பேர்களாக அமைந்த கீழ் நாட்டு ஆதிக்கக்காரர் பிடியை மேலும் வலியுறுத்தவே பயன்பட்டன. மேல் நாட்டுத் தாய்மொழிகளுக் கொப்பான தேசிய மொழி நிலையைக் கீழ்நாட்டு மொழிகள் என்றும் அடையவில்லை. இலக்கியங்களும் நாட்டுப் பண்பையும் மக்கள் வாழ்வையும் வளர்க்கவில்லை. அறிவியலோ மேனாட்டு அறிவியலின் விளைவாக ஏற்பட்ட மேனாட்டுத் தொழில்களை வளர்க்க வழி வகுத்தனவேயன்றி, கீழ்நாட்டில் அதன் பண்பை வளர்க்கவில்லை. மேலும் கீழ்நாட்டு ஆதிக்கவாதிகளின் சிறு போட்டிப் பூசல்களே அரசியலாயமைந்த தனால், ஆதிக்க வகுப்பினருக்கு முன்பிருந்த அரசியல் கட்டுப்பாடுகள் நீங்கி, அவர்கள் ஆட்சியுரிமை போட்டியின்றி வந்தது. சமூக ஆதிக்கவாதிகளே அரசியலில் வலிமை பெற்றதனால், பொது மக்களின் நிலை, பல அடுக்காக அடுக்கிய மூட்டைகளினடியில் நெளியும் பொதி மாடுகளின் நிலை ஆயிற்று. பொறுப்பற்ற அரசியல் வாழ்வில் சமயமும், சமூகமும் இங்ஙனம் பொறுப்பற்றதாயின. கட்டுபாடுகள், மரபுகள் மக்கள் தேவைக்குத் தக்கபடி நெகிழ்வு பெறமுடியாமல், இறுக்கமுற்று உணங்கி மரத்துப் போயின. உலகுக்கு நாகரிகமும் அறிவியலும் கலையும் சமயங்களும் தந்த கீழ்நாடு, பழைமைப் பற்றுக்கும் மாறாப் பிடிவாத அடிமைத் தனத்துக்கும் குத்தகை உரிமை யுடைய பகுதியாய் விட்டது. இந்நிலையில் தனிமனிதன் ஒழுக்கக் கருத்துக்களும் படிபடியாக ஆதிக்கவாதிகள் பக்கம் திரும்ப அஞ்சி மக்கள் மீதே திரும்பின. அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்த முடியாத சமயம், பெருமக்களை ஆள முடியாத சமயம், பொதுமக்கள் மீது மட்டும் தம் கட்டுப்பாடுகளையும் ஆட்சியையும் முழுவதும் சுமத்த முடிந்தது. பொதுமக்கள் கடமை வற்புறுத்தப்பட்டது. பிறர் கடமைகள் பற்று பொதுமக்கள் பேசுவது தவறெனக் கூறப்பட்டது; பொதுமக்கள் உரிமை பேசுவது தவறெனக்காட்டப்பட்டது; மேலோர் உரிமை சரியான தென்று நாட்டப் பெற்றது; உயர்வு தாழ்வு தெய்வீக ஊழின் அடிப்படை எனக் கூறப்பட்டது. மதவேறுபாடுகளால் மக்களிடையே பூசல் எழுந்தால், அதன் வியைவுகள் பொது மக்களைப் பாதிக்கும் போதெல்லாம் அது தடுக்கப்படவில்லை. அஃது உயர்ந்தோர் நலனைப் பாதிக்கும்போது மட்டும் சமரசஞானம் பேசப்பட்டது. வகுப்பு வேற்றுமையால் பொது மக்களிடையே பிளவு ஏற்பட்டபோது தடுக்கப்படவில்லை. அதுவே சிலர் உரிமைகளின் குறுக்கிடும் போது மட்டும் அதனை எதிர்க்கும் திட்டங்கள் பல வகுக்கப்பட்டன. பொதுமக்களுக்கு மேலோர் ஆதிக்கத்தைவிட, ஒழுக்க வாதிகள் வகுத்த பழிச் செயல்களைவிட, அவர்கள் அடிமைத்தனமும் அறியாமையும் பெரும் பகைகளாய் உள்ளன. பொது மனிதன் எதையும் பேச அஞ்சுகிறான்; சிந்திக்க அஞ்சுகிறான்; ஏனெனில், இதனால் அவன் உடனடி வாழ்வு பெரிதும் பாதிக்கப்படும். அவனைச் சூழ உள்ள அவன் தோழர்களே அவனுக்குப் பகைவராய் விடுவர். இச்சூழலில் அவன் நோக்க எல்லை வருங்காலமன்று, நிகழ்காலமாகின்றது. தற்காலிக நலன், தன் சிறு நலன் ஆகியவற்றை விட்டு அவன் நீடித்த நிலையான நலனை, தன் நலனுடன் பிணைக்கப்பட்ட தன் குழு நலனை அல்லது மக்கட் பொதுநலனைச் சிந்திக்க முடியாது. “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே,” என்ற தொல்லோர் உரை இப்போது ஆதிக்கவாதிகளுள் உயர்ந்தோர் என்ற பொருள்பட நின்றது. பொது மனிதன், உலகியல் தன் வகுப்பாகிய பொதுமக்கள் வகுப்பே மிகமிகப் பெரும்பான்மையான வகுப்பு என்பதை மட்டுமன்றி, அது மனித இனத்தின் ஒரு பகுதி என்பதையே மறந்துவிட்டான். உலகம் உயர்ந்தோர்க்கு மட்டுமே உரியது என்று அவன் கருதலானான். இவ் வடிமைத்தனத்திடையே அவன் அஞ்சிய ஐம்பெரும் பழிகளாகிய கொலை, களவு, கள், சூது, பொய் ஆகியவைட அவனுக்கு மட்டும் தண்டனையும், மனச்சான்றின் குத்துதல் காரணமான வெந்துயரும் தந்தன. உயர்ந்தோர் அவற்றாற் பெரும்பாலும் பாதிக்கப் பெறவில்லை. போரில் அவர்கள் கொல்லலாம். இது போர்க்களத்தில் மட்டுமன்று; போர்க்களத்தில் படைவீரரின் படைவீடுகளை அடுத்த பகுதிகளில் கொலையே பொது நீதி. அவர்கள் காமவேட்டையிலிருந்தும் திறமிருப்பவர்கள்தாம் தப்பிக் கொள்ள வேண்டும். படைவீரர் பொதுமக்களிடையிலிருந்து திரட்டப்பட்டவர்கள் தாமே என்று கூறப்படலா மானாலும், அவர்கள் உயர்ந்தோர்க்காகப் போராடும் காலத்திலேயே இவ்வுரிமை பெறுவர் என்பதும், அப்போதும் உயர்தரத் தலைவர் உரிமைகட்கே முதலிடம் என்பதும் கவனிக்கப்படல் வேண்டும். தவிர, கள்ளும் சூதும் ஏழையர்க்கு எமன்; உயர்ந்தோர்க்கு அவை ஒரு விளையாட்டு. கீழ்நாட்டு ஏழைகள் - சிறப்பாகத் தமிழ்நாட்டு ஏழைகள், இப்பழிகளுக்கு இன்னும் மிகுதியும் இரையாகிறவர்கள் ஆவர். பிற நாட்டு ஏழைகளைப் போல உண்டி, உடை, உறையுள் போக. மீந்த பொருளை இவர்கள் கள், சூது ஆகியவற்றில் சூறை கொடுப்பதில்லை. உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் விடுத்தே இவற்றில் ஈடுபட்டு அழிகின்றனர். வெறும் வயிற்றில், கள்ளும் தேறலும் பழிச் செயல்கள் மட்டுமல்ல, தற்கொலைப் பண்புகள் பலவற்றையும் வளர்க்கின்றன. கொலையைத் தடுக்கும் சட்டங்கள், இவர்கள் தற்கொலைக்குக் காரணமான அறியாமையைத் தடுக்க முயல்வதில்லை. அது ‘கட் குடியாதே, சூதாடாதே’ என்று வேதாந்தம் மட்டும் பேசும். கட் குடித்தவரிடையே, சூதாடியவரிடையே உயர்ந்தோர் என்பவர் மேலுலகப் பாலம்வரை பெற்று, இவ்வுலகில் வாழ்வும் பெறுவர்; ஆனால், தாழ்ந்தோர் இவ்வுலகிலேயே துன்புறுவர். இஃது ஏன் என்ற சிந்தனை யாருக்கும் ஏற்படுவதில்லை. இது போலவே பொய்யும், வஞ்சமும் மேலோர் வாணிகத்தில் விலக்கப்படாத செயல்கள், வேதாந்திகள், ஒழுக்கவாதிகள் ஆகியவர்களின் அறவுரைகள் வயிறு நிறைந்த உயர்ந்தோர் சிந்தனையைக் கிளறுவதில்லை. ஆனால், பசிப்பிணியால் வாடும் ஏழைகள் துன்பம் இவ்வுலகத்துடன் முடிவதன்று. இனி ஏழைகள் துன்பம் இவ்வுலகத்துடன் முடிவதன்று. இனி மற்றோர் உலகத்திலும் அல்லது பிறப்பிலும் தண்டனை உண்டு என்ற எண்ணத்தால் அவர்கள் வெந்துயர் அடைகின்றனர். பழிபாவச் சிந்தனையற்ற மேலோர் இரு உலகக் கவலையுமற்றிருக்க ஏழையர் இரு உலக இன்னல்களையும் எண்ணி எண்ணி நலிகின்றனர். இன்றைய மக்கள் வாழ்வில் தனி மனிதன் வளர்ச்சியில் மேலோர் முனைந்து முயல முடிகிறது. அவர்கள் இயல்பிலேயே உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடையவர்கள். அவ் வாழ்க்கைத் தரத்தை அவர்கள் மேன்மேலும் வளர்க்கப் பாடுபடுகின்றனர். ஏழையர்களுக்கோ வாழ்க்கைத்தரம் பற்றி எண்ணுவதற்கே வழியில்லை. அவர்கள் வாய்க்கும் கைக்குமாகப் பாடுபட வேண்டியிருக்கிறது. அவர்கள் வாழ்க்கைத் தரம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே போவதும் அரிதன்று. இந்நிலையில் அவர்கள் நோக்கம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன்று, வாழ்வது மட்டுமே. அஃதாவது சாகாமல் உயிர் பேணுவதற்குப் போதிய குறைந்த அளவு உணவு, உடை, உறையுள் வாய்ப்புப் பெறுவதே. இதற்குமேல் அவன் அவாவுவதரிது. அவாவினாலும் இதனை ஆதிக்கவாதிகள் கண்டிக்க வந்துவிடுவர். ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற வேதாந்தம் அவனுக்குப் போதிக்கப்படும். இவ் வேதாந்தம் செல்வனுக்கு அறிவுரையாவது மில்லை; அவன் வன்னல மேம்பாட்டை இது குறைகூறஞ் செய்யாது. பொது மக்களிடையே ஒரு சிலர் இவ் வேதாந்தத்தைப் புறக்கணித்து முனைந்து தம் வளர்ச்சியில் முயன்றால், அவர்கள் வெற்றி பெறும்வரை ஒழுக்க அறிஞர் அவர்களைக் குறை கூறலாம். அவர்கள் தோல்வியுற்றால், நையாண்டி செய்யலாம். ஆனால், வெற்றி பெற்றால் மேலோர் சமூகம் அவர்களைத் தம் வகுப்பில் ஒருவராக வரவேற்கும் அவனும் முன்னாற் கந்தையாடையுடன் எச்சலுக்குக் காத்திருந்தவனேயாயினும், பந்தியில் உடனிருந்து உண்ணும் உரிமை பெற்றபின், தன் உச்சி குளிர்ந்து தலைதிரிந்து தன் முன்னிலையையும், அந்நிலையில் இன்னும் உள்ள தன் தோழரையும் மறந்து, புகு வகுப்பின் உறுப்பினனாய்ச் செயலாற்றுவான். இவ் வகையில் ஏழையரிடையே தனி மனிதன் முன்னேற்றம், ஏழைக்கு உதவுவதில்லை. செல்வனுக்கே உதவும். படைவீரரும், அறிஞரும் பொது மக்களிடையேதான் பிறப்பர். மேலோரிடையே பிறத்தல் அரிது. ஆனால், இந்த வாழ்வின் நலத்தையும் ஏழைகள் பெறுவதில்லை. மேலோர் வகுப்பில் அருகலாப் பிறந்த அறிஞரும் வீரரும், அவ்வத் துறைகளில் உயர்நிலை பெறுவது உறுதி. மேலோசை ஆதரிக்கும் வீரரும் அறிஞரும் அவருடன் இடம் பெறலாம். எனவேதான் ஏழை செல்வனானால், ஏழை வகுப்பு பயன்பெறாதது போலவே, ஏழை வீரனானாலும், அறிஞனானாலும் அவ் வகுப்புப் பயன் பெறுவதில்லை. ஏழைகட்கு உதவவேண்டும் என்று கருதும் அறிஞனும் உலக மக்கள் அனைவருக்குமே நலம் செய்ய வேண்டும் என்று கருதும் அறிஞனும் அவ் வழியில் உழைக்க எத்தனையோ தடைகள் உண்டு. ஏழைகள் மேலோரால் அறிஞன் என்று காட்டப் படுபவரையே அறிஞராகக் கருதும் இயல்பினர். தவிர மேலோர் அறிஞரைத் தமக்கியைய ஓர் அளவு உயர் வாய்ப்பளித்து உயர்த்தி விடுவதால், அறிஞரும் மேலோராயிருத்தல் வேண்டும் என்று ஏழை கருதிவிடுகிறான். எனவே, செல்பவரால் பாராட்டப் படாத அறிஞன், அறிஞனாவதற்கே வழி குறைவு; வாய்ப்பும் குறைவு. செல்வர் ஆதிக்கத்தை அவன் சிறிதளவு எதிர்த்தாலும், அவனுக்கு வாழும் வகை கிடைப்பதரிது. இதனாலேயே உலகப் பற்றாளராகிய அறிஞர், பிறருக்கு உழைக்க முனையுமுன், பிறரைச் சாராது, செல்வரை நம்பியிராமல், தாமே தம் வாழ்க்கை வாய்ப்பைத் தேடிக் கொள்ள வேண்டியவர் ஆகின்றனர். அஃதாவது எளிய வாழ்க்கை யாயினும், தற்சார்பும் தன்னுழைப்பும் உடைய வாழ்க்கை வாழும் அறிஞனே, செல்வரை அண்டி அவர்களுக்கு அடிமை ஆகாமல், ஏழைகளுக்கு உழைக்க முடியும். அவன் தன் அறிவை ஏழைகளிடையே பரப்புவதும், அவர்களிடைய அன்பு பெருக்கி அவர்களை ஒற்றுமைப் படுத்துவதும், அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவதும் அவர்களுக்காகச் செய்யும் கடமை மட்டுமல்ல அவன் வாழும் வகையும், அதுவே. ஏனெனில், ஆதிக்கமேலோர் ஆதரவின்றி வாழவும், தேவைப்பட்டால், அவர்கள் எதிர்ப்பைச் சமாளிக்கவும் இஃது இன்றியமையாததாகும். தமிழகம் தாழ்ந்த நாடுகளிலும் பலவகையில் தாழ்ந்துள்ளது. தமிழினத்தைச் சேர்ந்த அயல்நாட்டவர் தாம் தமிழினத்தவர் என்று கூற விரும்பவில்லை. தவிர, தமிழ்நாட்டிலும் தமிழின நாடுகளிலும், பிற நாட்டுப் பிற இனத்தவரும் தமிழரல்லாதவரும் ஆதிக்கம் பெற்று அவ்வழிப் பிறமொழி, பிற பண்புகளை ஆதரிக்குந்தோறும், ஒருவர் உயர்ந்தும், தனித் தமிழ்ப் பண்பினை ஆதரிக்குந்தோறும் அவர் தாழ்ந்தும் விளங்குகின்றனர். பிறமொழியறிஞருக்கும், பிற மொழிப் பண்பு பேணுபவர்க்குமே உயர்வும் மதிப்பும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மற்றெல்லா மொழியுரிமைகளையும் பாதுகாக்கவும், பேணவும், சலுகைகள் காட்டி வளர்க்கவும் வகை துறைகளும் சங்கங்களும் அரசியல் செல்வாக்குகளும் உண்டு. தமிழ் ஒன்றுக்குத்தான் கிடையாது; தமிழர் கிளர்ச்சியால் தமிழுக்கு உணர்வு கிடைக்கும்போதுகூட, தமிழிலக்கியத்துக்குச் சிறப்பு ஏற்படும்போதுகூட, தமிழ்ப்பண்பு கடைப்பட்ட சலுகையே பெற முடிகிறது. இந் நிலைக்கு மொழி, சமயம், பண்பாடு, அரசியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் நீண்ட நாளாகப் படிப்படியாகப் பெற்றுவந்த அடிமைத்தனமும், அதனால் ஊறிவிட்ட அடிமை மனப்பான்மையும் தன்னம்பிக்கையின்மையுமே காரணங்கள் ஆகும். தவிர, போர் வீரமும் போட்டியும் தற்பெருமையும் பண்பாகக் கொண்ட அவர்க்கு இன்று அதனைத் தம்மினத் தவரன்றி வேறு எவரிடமும் காட்ட வழியில்லாததால், போட்டியும் பொறாமையும் பூசலும் எல்லாம் தம் மக்களினத்துக்குட் பட்டே செயலாற்றுகிறது. இதனால், தமிழர் ஒற்றுமையின்மைக்கும் தன்மதிப்பின்மைக்கும் ஓர் எடுத்துக்காட்டா0 கியுள்ளனர். பிறரால் கருவேப்பிலையாய்ப் பயன்படுத்தப்பட்டும், தமக்குள் நெல்லிக்காய் மூட்டையிலுள்ள காய்களைப் போன்ற கட்டற்ற தனிவாழ்வு உடையவராய் விட்டனர். இவற்றை மாற்றியமைக்கும் பொறுப்புத் தமிழர் ஒவ்வொருவருக்கும் மட்டுமன்றி, தமிழரின் நண்பர், தமிழக நண்பர், ‘நாடன தமிழினத்தவன்’ என்று கூறிக்கொள்ளக் கூசாத ஒவ்வொருவருக்குங்கூட உரியது. தாழ்ந்த தமிழகத்தை உயர்த்தும் செயல் மிகக்கடுமை வாய்ந்ததேயாயினும், அதுவகையில் அரசியல், சமயம், மொழி, பண்பாட்டுச் சிக்கல்கள் ஏராளமாயினும், இவற்றை எதிர்த்துப் போராட முன்வரும் வீர அறிஞருக்கு இயற்கை தரும் உதவிகள் பல. தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் ஒப்பற்ற உலகப் பொதுமறையான திருக்குறள் ஆகிய மூன்றும் அவர்கள் கையில் ஒப்புயர்வற்ற தனிப்பெரும் படைகள் ஆகும். தமிழர் பண்பு, தமிழர் குறிக்கோள், தமிழர் ஒழுக்கம் ஆகியவை இவை எனக்காட்டி, அவற்றுக்கு இணக்கமுடைய அயற்பண்புகளை ஆதரிப்பதற்கும், அவற்றிற்கு முரண்பட்ட அயற்பண்புகளை எதிர்ப்பதற்கும் இவை பேருதவியாகத்தக்கன. மேலோருள் தமிழகத்துக்குப் புறம்பான நாடு, மொழி, இனப் பண்புகளைத் தமிழருக் கெதிராகத் திணிக்க முற்படுபவரும், அவர்கள் கண்காணியரும் தவிர, மற்ற எவரும் மேலோர் என்பதற்காக இப்பகைகளை எதிர்க்கத் துணியமாட்டார்; விரும்பவும் மாட்டார். குணத்தால், அஃதாவது அறிவுத்திறம், உழைப்புத்திறம், அன்புத்திறம் ஆகியவற்றால் உயர்ந்தோரும் மற்றோரும் என்ற வேற்றுமை தவிர தமிழகத்தில் வேறு எந்த வேற்றுமையையும் தமிழ்ப் பண்பாளர் விட்டுவைக்க ஒருப்படமாட்டார். எனவே, தமிழ்ப்பண்பை வளர்க்கும் ஒரு செயலால் தமிழறிஞன், பொதுமக்கள் அரசியலில் சரிசமப் பங்கு கொள்ளவும், சமயத்தில் சரிசம உரிமை பெறவும், பொருளியல் வாழ்வில் சரிசம நேர்மையும் வாய்ப்பும் பெறவும் வழி வகுத்தல் முடியாததன்று. ஆகவே, அவன் வேலை இவ்வகைகளில் பிறநாட்டார் வேலைகளிலும் எளிதாகின்றது. தமிழிலக்கியத் தினிடமாக, சிறப்பாகச் சங்க இலக்கியத்தினிடமாகவும், திருவள்ளுவர் திருக்குறளினிடமாகவும் தமிழனுக்கு அமைந்தது போல் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வேண்டிய எல்லாப் பண்புகளையும் ஒருங்கே கொண்ட ஓர் இலக்கியமோ, ஒரு நூலோ உலகில் வேறு எம்மொழியாளருக்கும் அமைந்ததில்லை. குடும்ப வாழ்வு சமூக வாழ்வுக்கும், அரசியல் வாழ்வுக்கும், நாட்டு வாழ்வுக்கும், உலக வாழ்வுக்கும் அடிப்படையும் தொடக்கமும் மட்டுமன்று; அத்தனைக்கும் அது வழிகாட்டியும் கூட ஒரு நாடு குடும்பத்தைப் போல் ஆளப்படுகிறது; மக்கள் ஒரு குடும்பத்தினராக வாழ்கின்றனர் என்பதைவிடச் சிறந்த பாராட்டு நாட்டுக்கு இருக்க முடியாது. ஆட்சியாளர் அல்லது மன்னர் அவர் நாட்டு மக்களுக்கு ஒரு தந்தைபோல், ஒரு தாயைப் போல இருக்கிறார் என்று சொல்வதினும் உயர்புகழ்ச்சி இருக்க முடியாது. நாடு கடந்து உலகுக்கும், உலகு கடந்து இயற்கைக்கும், முதல்வராகக் கருதப்படும் கடவுளுக்குங்கூட உயிர்களின் தாய், உலகின் தந்தை என்ற சொற்களினும் உயர் புகழ்ச் சொற்களைக் கூறவியலாது. உயர் ஆட்சி, உயர் சமயம், உயர் அரசியல் ஆகியவற்றின் எல்லா உயர்பண்புகளும் குடும்பத்தில் உண்டு. குடும்பத்தில் ஆண் பெண், தாய் தகப்பன், பிள்ளைகள், பெயரன், பெண் வழி உறவினர் என்ற வேறுபாடுகள் உண்டு. கடமை, உரிமை வேறுபாடுகளும் உண்டு. ஆனால், இவ்வேறு பாடுகள் யாவும் அவரவர் ஆற்றலையும் தேவையையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றியவையல்ல. குடும்பம் விரும்பும் தகுதி, திறமை, குடும்பத்தின் பொது நலனையும், அஃதாவது எல்லார் நலனையும் பேணுவதேயன்றி வேறன்று. சமூகமும் நாடும் உலகும் இப் படிப்பினையை மறந்துவிடக் கூடாது. ஆற்றலுடையோர் ஆற்றல், ஆற்றலற்றவர்க்கு ஆற்றல் தருவதாகவும் ஆதரவு தருவதாகவும் அமைய வேண்டும். இல்லையேல், அவ்வாற்றலுக்குரிய இடம் குடும்பத்தினுள் அன்று; அதன் பகைவர் திறத்தில்தான். இதுபோலவே திறமுடையவர், அறிவுடயவர், சூழ்ச்சியுடையவர் ஆகிய யாவரும் தமக்கு மட்டுமன்று அனைவருக்கும் அவற்றின் பயனை அளிப்பவரும், அனைவரிடமும் அப் பண்புகளை வளர்ப்பவருமேயாவர். ஆற்றல், அறிவு, திறமை, தகுதி எதுவும் பிறருக்குத் தொண்டாற்றவேயன்றிப் பிறரை அடக்குவதற்கோ, பிறருடன் போட்டியிடுவதற்கோ அன்று. ஆற்றல், அறிவு, திறம் ஆகியவற்றின் தன்மை இதுவானால், செல்வத்தின் தன்மைபற்றிக் கூறவேண்டுவதில்லை. ஏனெனில், ஆற்றல், அறிவு, தகுதி, குருதி மரபில் வந்தவையாயினும், ஓரளவில் தனிமனிதன் தனிப் பண்புகள், செல்வம் சமூகத்தினால் பிறப்பிக்கப்படுவது; சமூகத்தில் மட்டுமே விலையுடையது; சமூகத்தை வளர்ப்பதைத் தவிர வேறு எப்பயனும் உண்மையில் உண்டுபண்ண முடியாதது. இன்று செல்வத்தைத் தமதெனத் துய்ப்போர், தம் இனத்தையும் கெடுத்துத் தம்மையும் கெடுப்பவரே யாவர். அவர்களுக்கு மேலுலகில் பழி உண்டோ இல்லையோ, இவ்வுலகில் தோல்வி ஏற்படுவது உறுதி. உழைக்காததால் உடல் வலியின்மையும், நோயும், அதன் பயனாக அறிவு வலிவின்மையும் குறுகிய வாணாளும் இயற்கை அவர்கட்குத்தரும் தண்டனைகள். செல்வர் இத் தண்டனைகளின் மூலம் இயற்கை தரும் எச்சரிக்கைகளைக் கவனியாதிருந்தால், இயற்கை அவர்கள் சமூகத்தையே அழித்து விடுகிறது. ஏனெனில், இத்தகைய தற்கொலைப் பண்பாளர் பொறுப்பற்றவராகு மிடத்தில், அப்பொறுப்புச் சமூகத்தினிடம் போய்விடுகிறது. தனிமனிதன் தன்னோடொத்த தனிமனிதர்கள் அனைவரையும் அளாவும் வகையில், இரு வகையான தொடர்புகளைக் காணலாம். சிலர் எல்லா மனிதரும் நல்லவர் என்ற அடிப்படையில் பரிமாறுகிறார்கள். தீயவர் எனத் தெளியப்பட்டாலன்றி அவர்களை வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்யமாட்டார்கள். வேறு சிலர் எல்லா மனிதரும் தீயவர் என்ற அடிப்படையில் பரிமாறுகிறார்கள். தனிப்பட்ட நல்லவர் என்றோ, தமக்கன்புடையோர் என்றோ, தெளிவுபட்டால் மட்டுமே நட்பாடுவர். இவ் விருதிறப் பரிமாற்றங்களில் முன்னதே நாகரிக மனிதனுக்கு உரியது. ஆயினும், தீமையும் இயல்பாகக் காணப்படுவதாலாலும், தீமை நன்மை போன்று பற்பல உருவிலும் நடமாடுவதுண்டாதலாலும், தனி மனிதன் எப்போதும் விழிப்பாகவே இருக்கக்கடவன். எல்லோரையும் தீயவரென்று எண்ணுபவன் வாழ்க்கையில் தீமையச்சம் ஓர் எச்சரிக்கை தரும் விதிவிலக்காயிராமல், நிலையான விதியாய் அவன் வாழ்விலேயே வெறுப்புப் பண்பைப் பெருக்கும். வாழ்க்கையில் குடும்ப முதலிய பல படிப்படியான விரிந்த எல்லைகளும், அவனுக்குப் படிப்படியான மிகுதி வெறுப்புகுரியனவாகவே அமையக் கூடும். இவ் வெறுப்பு வெறுப்பை ஊட்டு மாதலால், அவன் வாழ்க்கை ஒரு நரகமாகவே அமையத் தக்கதாய்விடும். நேர்மாறாகப் படிப்படியாக உலகை நோக்கி அன்பு மிகுந்து, அதே சமயம் படிப்படியாகத் தன்னை நோக்கி அன்புக் கடமை மிகுதியாய் இருப்பதே இயற்கை வாழ்வு ஆகும். அன்புக்கு அடுத்தபடியான வாழ்க்கைப் பண்பு வாய்மையாகும். அன்பு கூட்டுறவை உண்டாக்குகிறதெனில், வாய்மை அதனைக் காக்கிறது. வாய்மை யென்பது சொல்லில் உண்மை, அல்லது மனத்தில் உண்மை, அல்லது செயலில் தவறாமை என்பதை மட்டுமல்ல; இம்மூன்று திறங்களிலும் எல்லாச் செயல்களும் எண்ணங்களும் பேச்சுகளும் ஒன்றுக்கொன்று பொருந்தியிருக்க வேண்டும் என்பதே. குறிப்பிட்ட காரணமும் நன்னோக்கமுமின்றி, இவ் வாய்மையிலிருந்து ஒருவன் வழுவக்கூடாது. “பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்” (குறள். 292) என வள்ளுவர் கூறியது இதனாலேயேயாகும். வாழ்க்கையில் நோக்க முடையவர்க்கே இவ் வாய்மையும் அமையவல்லது; பொய்ம்மையும் வாழ்க்கையாக அமையவல்ல நோக்கத்தின் வழியாகத் தற்பண்பும், வாழ்க்கைத் திட்டமும் அமைகின்றன. இவற்றால், தனி மனிதனிடம் சமூகத்தவர் நம்பிக்கை வளர்கிறது. பல கடமைகள் வந்து முட்டும்போது மனிதன் அக் கடமைகளுள் முதலுரிமையுடையதனையே முதன்மையாகக் கொள்ளல் வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட கடமைதான் முதலுரிமையுடையது என்று எவரும் பொதுவாக வகுக்க முடியாது. சமூகத்தின் பொது நோக்கப்படியே சமூகம் இதனை வகுக்குமாயினும், தனி மனிதன் பண்புடன் சமூகப் பண்பு ஒத்துப்போவது உறுதி. கடமைகள் போலவே தீமைகள் வகையிலும் விலக்கமுடியாதவிடத்தில், மனிதன் பெருந் தீமையை நீக்கிச் சிறு தீமையையே மேற்கொள்ளல் வேண்டும். பிற மனிதர்களை மதிப்பிடும் போதும், விலக்கவோ வெறுக்கவோ செய்யும்போதும் இது போலவே ஒருவர் குணம் குற்றம் இருசார்பும் ஆராய்ந்து, குணம் மிகையானால் குணத்தாலும், குற்றம் மிகையானால் குற்றத்தாலும் மதிப்பிட வேண்டும். “குணநாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” (குறள்.504) என்பது திருக்குறளுரை. இதிலும் தற்பண்பே பெரிதும் தனி மனிதனுக்கு வழிகாட்டியாகும். அறிவும் அன்பும் முரண்பட்டவிடத்து, அறிவிலும் அன்பே சாலச் சிறந்த பண்பு. ஆயினும் அறிவே அன்பையும் பாதுகாக்க வல்லது. அறிவும் உணர்ச்சியும் எதிராக இடங்களிலும், அறிவே ஏற்றுக்கொள்ளத் தக்கது. ஆனால், செயலாற்றுவதில் அறிவினும் உணர்ச்சியே பேராற்றல் வாய்ந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. உண்மையில் உணர்ச்சி என்பது பழைய அறிவு மரபில் வந்ததே. அறிவு இல்லாக் கீழ்நிலையில் அது செய்யும் தீமை மிகுதி. ஆனால், அறிவு தாண்டிய உணர்ச்சிகள் அறிவைவிட நுண் திறமும் ஆற்றலும் உடையவை. பெருங்கவிஞரும், உயர்திற அறிவியலாராய்ச்சியாளரும் அறிவுத்திறம் மட்டும் உடைய வரல்லர்; அறிவு கடந்த உணர்ச்சித்திறம் அல்லது புனைவாற்றல் உடையவர்களே. ஆண் பெண் பாலருள் பெண்பாலார் நுண்ணறிவிற் சிறந்த வராயிருப்பது இவ் வுணர்ச்சியாற்றலின் பயனாகவே. தன்மதிப்புடைமை, ஆனால் பிறரையும் மதித்தல், தன் உரிமை பேணினும் தகுதி நோக்கி விட்டுக் கொடுத்தல், பிறர் உரிமையில் அக்கரை காட்டல், தன் கடனை ஆற்றிப் பிறர் கடனாற்றவிடத்து அவர்களைத் திருத்தல், அல்லது பொதிந்து நடத்தல், அல்லது அத் தீமையேற்று அவர்களை அன்பு முறையில் ஒறுத்தல், ஒப்புரவு பேணல், உயர்வு தாழ்வு உள்ள போதும் அதைப் பாராட்டாதிருத்தல், அதை நீக்கப் பாடுபடுதல் ஆகிய இவையே நாகரிகத்தின் அறிகுறிகள். பெண்டிர், குழந்தைகள், நலிவுற்றோர், துணையற்றோர் ஆகியவர்களை ஆதரிப்பதும், வேற்றினம், பகைவர் ஆகியவரைப் பகைவர் என்று அறிந்தும் அங்ஙனம் நடத்தாமையும் நாகரிகத்துக்கு அழகு செய்யும் பண்புகளாகும். கடனாற்றுவோர் ஊதியம் நாடுவதும், பெறுவதும், தவறன்று. ஆனால், ஊதியம் கடனுக்கான விலையென்று கடனாற்றுபவரும் எண்ணக் கூடாது; பிறரும் எண்ணக்கூடாது. எண்ணினால் அக்கடமைகள் சீரழியும். பத்தர் புரோகிதராவதும், வணிகர் தரகராவதும், ஆட்சியாளர் கொடுங்கோலர் ஆவதும் இதனாலேயே. ஊதியம் மனிதரென்ற முறையில் அனைவரும் பெறத்தக்க ஒன்றே. கடனாற்றுவதும் அவ்வாறே. எனவே, கடனுக்கேற்ற ஊதியம், ஊதியத்துக்கேற்ற கடன் என்று அளவு கூற முடியாது. சில சமயம் சில கடமைகளை யாற்றுபவர்க்கு ஊதியம் கருவியாய் அமையும். இதனைக் கடமைக்கேற்ற உயர் ஊதியம் என்று உலகம் எண்ணுவதனால், உலக நாகரிகம் கெடுகிறது. அவ்வூதிய விருப்பால் அக் கடமையைத் தகுதியற்றோர் ஏற்றுவிடுகின்றனர். பத்தியற்றோர் புரோகிதராகவும், திறமையற்றோர் அரசியலாராகவும், அறிவற்றோர் ஆசிரியராகவும் இங்ஙனம் வரநேர்ந்து விடுகிறது. வாழ்வில் வாய்மை யின்மையால் வருங்கேடுகளில் மிகப் பெரிது, “வேடநெறி நில்லார் வேடம் பூண்டொழுகும்” கீழ்மையே யாகும். இது கடமைகளுக்கு அளந்தூதியம் தருவதனால் ஏற்படுவதேயாம். தகுதிகளுக்கு அல்லது பண்புகளுக்கு உரிய சின்னங்கள் தகுதியற்றோரால் மேற்கொள்ளப் படுவதனால், புறவேடம் வற்புறுத்தப்படுகிறது. உலகில் சமயவாழ்வு மிகுதியும் கெடுவதற்கு மக்களிடையே பெருகியுள்ள புறவேட மதிப்பே காரணம். புறவேடம் பொய்த்துவிடின் அதனை ஒழிக்கும் நிலை ஏற்படாமலிராது. அதற்குரிய அகப்பண்பின் மதிப்பும் கேடுறும். சமய வினைகளும் பழக்கவழக்கங்களும் சட்டதிட்டங்களும் புற வேடங்களே. இவற்றை, இவற்றின் அகப்பண்பு அறிந்தோர், தலைமை வகித்து நடத்தாதவிடத்தில் அவை பொய், சூது, வஞ்சம் முதலிய எல்லாப் பழிகளும் உறையும் இடமாய்விடும். சமூகப் பிரிவு, குடும்பம், நாடு, இனம் ஆகிய எல்லா இயற்கை எல்லைகளும் இயற்கை வாழ்வில் வெவ்வேறு படியுடைய எல்லைகளாயினும் இவற்றிடையே உள்ள தொலை அவ் வெல்லை பேணும் பொது அன்பு, விட்டுக் கொடுப்பு, தியாகம் ஆகியவற்றின் எல்லையேயாகும். தனிமனிதரில் கடந்த அறிவு, அருளன்பு, தியாகம் ஆகியவற்றின் எல்லையேயாகும். தனிமனிதரில் கடந்த அறிவு, அருளன்பு, தியாக நிலை உடையவர் இவ் வெல்லை கடந்து செயலாற்றுபவராதலால், இவர்கள் எல்லை கடந்த புகழும் உரிமையும் உடையவராவர். பல பிரிவுகள் அன்பால் நெருக்கமுற்று ஒன்றுபடலும், ஒரே பிரிவு அன்பின்மையால் பிரிந்து படலும், சீரழிதலும் உண்டு. ஆயினும் எல்லா இடத்திலும் இவ்வன்பு பெருகித்தழைப்பதில்லை. இருபுறமும் அன்பு பூத்தாலன்றி, அன்பின் பயன் பெரிதாயிருக்க முடியாது. பெரியார் அன்பிலாரிடத்தும் அன்புகாட்டக் கூடுமாயினும், இஃது அன்பிலாரை மாற்றியமைக்க உதவினாலல்லது, பயனற்ற அன்பாகவே போய்விடும். ஆகவே, அன்பொத்தவரிடையே அன்பும் செயலாற்ற முடியும். சரி ஒப்பில்லாதவரிடம் அன்பு வளராததன் காரணம் இதுவே. வாழ்வில் எல்லாருக்கும் அவர்கள் தேவைக்கு முழு நிறைவு பெறுவது; அதே சமயம் எல்லாரும் அவர் ஆற்றல் முழுவதும் பொது வாழ்வுக்கு அளிப்பது; ஆகிய இவையே அறிஞர் கனாக்காணும் உலக நாகரிக இலக்காகும். இப்போக்குடன் ஒத்துழைப்பதே தனிமனிதர் கடமை; ஒத்துழைக்கும் அறிவுடையாரே அறிஞர்; ஒத்துழைக்கும் விருப்பமுடையவரே நல்லார். ஒத்துழைத்து வெற்றி காண்பவரே பெரியார், அதுவே வாழ்க்கையின் குறிக்கோளும் ஆகும். திருநிறை ஆற்றல் முதற் பதிப்பு - 1957 இந்நூல் 2004இல் சாரதா மாணிக்கம் பதிப்பகம், சென்னை - 43 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. I. திருவின் ஆக்கம் 1. தீமைதரும் படிப்பினை உடல் துன்பம், மனத்துயரம், அமைதியின்மை ஆகிய மூன்றுமே வாழ்க்கையில் இன்ப ஒளி பரவாத இருண்ட நிழற் கூறுகள். தேள் கொட்டினாற் போன்ற துன்பத்துக்கு ஆளாகியும் துடிதுடிக்க நேராத உள்ளமுடையவர்கள்; மனக்கலக்கம் என்னும் ஆழ்சுழியில் அகப்பட்டும், தத்தளிக்க நேராத சித்த முடையவர்; சொல்லரிய துயரத்தால் வெப்ப மடைந்தும் கண்ணீரால் ஒளிமழுங்கப்பெறாத கண்களை உடையவர் ஆகியவர்களை இவ்வுலகில் கண்டால் அரிது. எத்தனையோ குடும்பங்களின் நோவும் பிணியும் சாக்காடும் வந்து புகுந்து, குடும்பங்களின் மீது துன்பக் கருத்திரையிட்டு மூடியுள்ளன. எத்தனையோ குடும்பங்களில் அவை மனித இதயத்தை மனித இதயத்திடமிருந்து பிரித்துள்ளன. தீமையின் வலை அறுக்க முடியா உறுதி உடையதாகவே தோன்றுகிறது. அதில் சிக்கி நோவு, துன்பம், இன்னா இடர்கள் ஆகியவற்றுடன் பலர் மல்லாட வேண்டி யவர்கள் ஆகின்றனர். வாழ்வின் மீது பாய்ந்து படரும் இத் தீமையிலிருந்து தப்பிப் பிழைக்கவோ, அல்லது அவற்றின் ஆற்றலைக் குறைக்கவோ நாடாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். இதற்காகப் பல்வேறு சூழ்ச்சித் திறங்களில் சென்று சிக்குபவர் பலர். இன்னும் பலர் கண்மூடித்தனமாகப் பாய்ந்து ஓடிப் பல கிளை வழிகளில் செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஏதாவது நிலையான இன்பமொன்றைச் சென்றடைந்து, திரும்ப இத்துன்பநிலைக்கு வராமலிருக்கவே விரும்புகின்றனர். இதில் ஐயமில்லை. ஆனால் உண்மையில் அவர்கள் அடையும் இன்பம் என்ன? கிளைவழிகளில் சென்று நாடுகின்ற இன்பங்களில் ,குடி இன்பமும் கூத்தியர் இன்பமும் அறிவை மழுங்க வைப்பவை; பொறியின் ஆற்றல் கடந்தும், உடலாற்றல் கடந்தும் நுகரும் பொறியின்பமும் உடலின்பமும் வாழ்வைத் தேய்த்துக் குறுக்குபவை. துன்பநெறிகளை அகலத் துறந்து போலிக் கலையின்பக் கோட்டைக்குள் சிறைப்படுபவரும் இதே வகை இன்ப நுகர்வால் தளர்ச்சியுறுகின்றனர். மூன்றாவது வகையினர் துன்பந்தரும் வறுமையைப் போக்கச் செல்வத்தையோ, புகழையோ நாடுகின்றனர். வேறு சிலர் துன்ப நீக்கத்தையும் இன்பத்தையும் நாடிச் சமய வினை முறைகளில் கருத்துச் செலுத்துகின்றனர். முந்திய இரு வகையினர் பெறும் தற்காலிக இன்பம்கூட இவர்கள் பெறுவதில்லை. ஆறுதல் மட்டுமே பெறுகின்றனர். இந்த ஆறுதலும் நிலையானதாய் அமைவ தில்லை. தீமையை மறப்பது அல்லது மறைத்து வாழ்வது இன்பமாகாது. மேற்கூறிய மூவகை இன்பநாட்டத்தவரும் தற்காலிக இன்பம் அல்லது ஆறுதலே பெறுகின்றனர். இது துன்பத்தை மறக்கஅல்லது மறைக்க மட்டுமே உதவுகிறது. அதை ஒழிக்கும் வகைமுறைகளாக அவை விளங்க மாட்டா. இதுமட்டுமன்று. இத்தற்காலிக இன்பம் அல்லது ஆறுதல்கள் விரைவில் முடிந்துவிடுகின்றன. உடனே பழைய பிணி, நோவு, நோக்காடுகள் வந்துவிடுகின்றன. சில சமயம் இவை புதிதாக, முன்னிலும் மிகையாக, வந்தமைகின்றன. அடிக்கடி இன்பந்தூண்டும் ஆவல் துன்பத்தின் அழைப்பாக முடிகிறது. தற்காலிகப் போலி இன்பத்தின் கோட்டைமதில் தகர்க்கப் படுகிறது. துன்பவெள்ளம் மனிதனை மீண்டும் ஆட்கொள்கிறது. பெரும்பாலான இன்பங்களின் நிலையாமையை எண்ணும்போது, ஒவ்வோர் இன்பத்தின் மீதும் ஒரு கூரிய வாள் தொங்கிக்கொண்டிருக்கிறது என்றே கூறத்தகும். இன்ப நாட்டத்தில் துன்பத்தை மறந்திருப்பவன் எதிர்பாராதபடி எந்தக் கணத்திலும் துன்பமாகிய வாள், அறிவால் அரண் செய்யப்படாத அவன் இன்பத்தின் மீது, அறுந்து விழக்கூடும். வாழ்க்கையில் ஏற்படும் அவர்களின் முரண்பாடு மிகவும் வியப்பிற்குரியது. குழந்தை மனிதனாகவேண்டுமென்று, ஆடவர் அல்லது பெண்டிர் ஆகிவிடவேண்டுமென்றுதான் அவாவி அழுகிறது. ஆனால் மனிதனோ எப்போதும் குழந்தைப்பருவத்தில் தனக்கிருந்த முயற்சியற்ற, கட்டுப்பாடற்ற நல்லின்பத்தையே நாடுகின்றான். வறியோர் ஏழ்மையின் கட்டுப்பட்ட நிலையை ஒழித்து மனம்போல வாழ உதவும் செல்வத்துக்கு ஏங்கி அலைகிறார்கள். ஆனால் செல்வரோ செல்வத்தைப் பெற்றபின் கட்டுபாடற்ற இன்ப வாழ்வு வாழமுடிவதில்லை. இன்னும் மிகுதி செல்வத்தை ஈட்டவேண்டுமென்ற பேரவா அவர்களை அலைக்கிறது. செல்வத்தைக் காக்கும் கவலை, வறுமை வந்து விடுமோ என்ற அச்சம் அவர்களை உருக்குலைக்கின்றன. சிலசமயம் அவர்கள் கிட்டிய இன்பப் பொருள்களை விட்டு விட்டுக் கிட்டாத இன்ப நிழல்களைத் தேடி அலமருகின்றனர். மற்றும் சமய உணர்ச்சி, அறிவு விளக்கக் கோட்பாடு, கலைக் குறிக்கோள் ஆகியவற்றில் கருத்துச் செலுத்திய சிலர் அவற்றால் மனநிறைவு பெற்று அமைதி அடைந்து விட்டதாக எண்ணு கின்றனர். ஆனால் வல்லமை வாய்ந்த, கவர்ச்சியாற்றல் மிக்க ஒரு பேரவா தலை நீட்டியதும் அவர்கள் மாய அமைதி வன்பாலையில் மலர்ந்த மலராக வாடி வதங்குகிறது. செயல்துறை அடைந்ததும் கருத்தியல் கோட்பாடுகள் பயனற்றவை ஆகின்றன. கற்பனைப் பீடத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்ட குறிக்கோள் என்னும் சிலை, செயல் துறைக் காற்றுப்பட்டதும் முற்றிலும் துகள்துகளாகிக் காலடியில் விழுந்து விடுகிறது. துன்பம், துயரம், இன்னாமை ஆகியவற்றுக்கு எதிர் பண்பு இன்பம். துன்பம், துயரம், இன்னாமை ஆகியவற்றிலிருந்து விடுபட விரும்புபவர்கள் இன்பத்தை நாடுகிறார்கள். இது இயல்பே. ஆனால் துன்பத்தின் காரணம் வறுமை என்றும், இன்பத்தின் கருவி செல்வம் என்றும் மட்டுமே அவர்கள் உணர்கின்றனர். அவர்கள் செல்வத்தை அடைகின்றனர். சில சமயம் இன்பத்தையும் காண்கின்றனர். ஆனால் துன்ப விடுதலை கிட்டுவதில்லை. எனவே செல்வத்தாலும் இன்ப நாட்டத்தாலும் இன்ப விடுதலை கிட்டாது என்பது தெளிவாகிறது. அப்படி யானால் துன்பத்தினின்று விடுதலை பெற வழியே கிடையாதா? தீமையின் வன்தளையறுத்து நிலையான இன்பம் பெற வழி யாது? துன்ப விடுதலை பெற, துன்பத்தின் தலைகளை இறுக்கும் வறுமையை ஒழிக்க, நோவு, நோக்காடு, துயரங் களைஅகற்ற, நிலையான இன்பத்தை அடைந்து, தீமை துன்பம் ஆகியவற்றுக்குத் தடையுத்தரவு இட்டு நிறுத்த வழி இல்லாம லில்லை; உண்டு நீடித்த அமைதி நிலவச் செய்ய வகை உண்டு. அதுவே தீமையின் இயல்பு, காரணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவு கைவரப்பெறுதல் ஆகும். தீமையை மறுப்பது, மறைப்பது போதாது. அதன் இயல்பை உணர்ந்து காரணத்தைக் கண்டுணரல் வேண்டும். தீமையை நீக்கக் கடவுளை வணங்கித் தொழுவதனால் பயன் ஏற்படாது. தீமை ஏன், எப்படித் தோன்றுகிறது என்பதை அறிந்து, அதன் படிப்பினைகள் மூலம் அத்தீமையையே நன்மையாக்கி இயக்க முயல வேண்டும். இத்தகைய அறிவு இல்லாத வெற்றாற்றல் எதுவும் செய்ய இயலாது. படபடப்புடன், ஆத்திரத்துடன் தீமையின் தளைகளை அழிக்கப் பாடுபடுவன் விலங்கைக் கையாலும் பல்லாலும் உடைக்க முயல்பவன் போல அல்லற் படுவான். அம் முயற்சிகளால் தளை இறுகும்; மனது புண்படும், தீமை பெருகவே செய்யும். ஆத்திரம் அனுபவமின்மையின் சின்னம். அடக்கமும் பொறுமையும் அனுபவத்தின் முதிர் பயன்கள். அடம் அறியாமையின் சின்னம். பணிவே அறிவின் கதிர்விளைவு. அடக்கம், பொறுமை, பணிவு ஆகிய மூன்றையும் அவாக்கள் தூண்ட, அறிவின் கூடிய ஆர்வமும் முயற்சியும் பிறக்கின்றன. அறிவார்வமும் செயலார்வமுந்தான் ஒருவனை உலகையறியவும் தன்னையறியவும் தூண்டுகின்றன. தீமை பற்றிய நல்லறிவு இங்கேதான் தொடங்குகிறது. தீமை உலகில் புறத்தே காணப்படும் ஒரு பண்பன்று. அது புறப்பண்பல்ல, அகப்பண்பே. அதன் தோற்றத்தை அகத்தேதான் காணமுடியும். அகத்தேதான் காணவேண்டும். தன்னை அறியும் ஒருவனால் மட்டுமே இது முடியும். தவிர, தீமை என்பது காலம் இடம் ஆகிய திசைகளில் எல்லையற்ற பாரிய அளவுடைய ஒரு பண்பன்று. காலம் இடம் ஆகிய திசைகளில் எல்லையற்ற இயற்கையண்டத்தின் ஒரு நேரடிக் கூறும் அன்று. அது அகத்தோடு புறத்தை இணைத்துக் காட்டும் ஓர் அகப்பண்பு. மனிதன் செயல்கள் புற இயற்கையுடன் முரணுகின்ற கால, இடச் சுழல்களைக் காட்டி அது மனிதனுக்கு நன்மை, தீமைபற்றிய அறிவை உண்டு பண்ணுகிறது. தீமை அல்லது துன்பம் ஓர் அகப்பண்பு என்று கண்டு, அதன் குறுகிய எல்லையையும் பாரிய விளைவுகளையும் உணர்பவர்களுக்கு, அது ஒரு தீய பண்பாகவே இராது. நன்மையைப் போலவே அது ஒரு நல்ல பண்பாகவும் நன்மையைவிடப் பயன் தரும் நற்பண்பாகவும் அமைகிறது. நன்மையைப்போலவே அது ஒரு தற்காலிகப் பண்பு. ஆனால் நன்மையைப் பெருக்கும் வகையிலும் தீமையைக் குறுக்கும் வகையிலும் அது எச்சரிக்கை தந்து, நிலையான இன்பத்தையும் அமைதியையும் அடைய வழிவகுக்கிறது. அது சிறு பண்பாயினும் பாரிய மலையைச் சிறுகச் சிறுகத் தகர்க்கும் சிற்றுளிபோல, பெரும் பயன் தரும் சிறுபண்பு ஆகும். அகப்பண்புகளிலே தீமைதரும் தீயபண்புகளையும், நன்மை தரும் நற்பண்புகளையும் புறத்தே நிகழும் இன்ப துன்பங்களால் கண்டு, அவற்றின் நிலையான இயல்புகளையும் காரணகாரியத் தொடர்புகளையும் கண்டுணர்வதாலேயே நன்மை தீமை பற்றிய அறிவு வளர்கிறது. இவ்வாறினால் தீமைகளைப் படிப்படியாக முற்றிலும் விலக்கமுடியும். நன்மைகளைப் படிப்படியாக முற்றிலும் வளர்க்க முடியும். முழுநிறை நன்மை அல்லது நல்லாற்றல் நோக்கிச் செல்லும் நெறி இதுவே. தீமை நிலையான பண்பு மன்று, தீயபண்பு மன்று. அது தற்காலிகமான பண்பு, திருத்துகிற பண்பு, ஆனால் திருத்துகிற பண்பாக அது அமையத் தீமையைப்பற்றிய அறிவு ஏற்படுதல் இன்றியமையாதது. ஏனெனில் நன்மை வளர்வது நன்மை யாலல்ல; தீமை பற்றிய அறிவினால்! தீமைக்கு நாம் அடிமைப் பட்டிருப்பதன் காரணம் தீமை பற்றிய அறியாமையே. எனவே தனிமனிதன் அறியாமையால் ஏற்படும் தீமையன்றி, இயற்கையின் எல்லையற்ற பரப்பில் வேறு தீமை கிடையாது. தீமை பற்றிய அறிவு ஏற்படத் தொடங்கிய நாள் தொட்டுத் தீமை குறைந்தே தீரும். நன்மை வளர்ந்தே தீரும். இத்தகைய நன்மை, நன்மை தீமை என நாம் முன்பு வகுத்துணர்ந்த தற்செயலான நன்மையாயிராது. தீமைக்கு எதிர்ப்பண்பான தற்காலிக நன்மையாகவும் இராது. அது தீமையற்ற நன்மை, எல்லையற்ற எதிர்கால வளர்ச்சிக்குரிய, திட்டமிட்ட, நிலையான நன்மையின் ஒரு தொடக்கக் கூறு ஆய்விடும். அறிவறியும் முயற்சி இல்லாததாலேயே, அதாவது தீமையைப்பற்றிய அறிவு இல்லாததாலேயே, உலகில் தீமைகள் வளர்கின்றன என்பதில் ஐயமில்லை. ஒரு குழந்தையைச் செவிலியர் படுக்கைக்குக் கொண்டுபோக முயலும் போது, நாள்தோறும் அது விளக்கொளியைப் பிடிக்க முயற்சி செய்து வந்தது. தாய் அதைக் தடுத்து நாள் தோறும் குழந்தையைப் பேணினாள். ஆனால் என்றும் தாய் கவனித்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு நாள் தாய் கவனிப்பில் சிறிது தவறுதல் ஏற்பட்டபோது, பிள்ளை விளக்கை பிடித்தே விட்டது. அதன்பயன்? அதன்பின் அதுவகையில் தாயின் கவனிப்புத் தேவைப்படவேயில்லை. தாய் கையைப் பிடித்திழுத்தாலும் குழந்தை விளக்கின் பக்கம் நாடாது. சிற்றறிவுடைய பெற்ற அன்னையின் படிப்பினையைவிட, பேரறிவுடைய இயற்கை யன்னையின் படிப்பினை பிள்ளைக்கு நிலையான அறிவு தருகின்றது. பிள்ளை துன்பம் அனுபவித்ததற்குக் காரணம் தீயன்று. தீயின் இயல்பை அது அறியாததே. ஒருதடவை சுட்டுக் கொண்டபின் இவ்வறியாமை நிலையாக அகன்றது. இவ்வறிவு பெறுமுன் தீமை அழகிய இன்பந்தரும் பொருள் என்று எண்ணித்தான் குழந்தை அதைப் பிடிக்க அவாவிற்று. தீமையின் அறிவின்றி மனிதர் அவாவும் வெற்றின்பங்கள் இத்தகையவைகளே. குழந்தை சுடுதல் என்ற விளைவிலிருந்து. தீமையின் காரணத்தை எவ்வளவு எளிதாக உணர்ந்து கொண்டதோ, அவ்வளவு எளிதாக அறிவிலா மனிதர் அதை உணர்வதில்லை. ஏனெனில் அறிவைப் போலவே அறியாமையும் குழந்தையிட மிருப்பதைவிட மனிதனிடம் வேரூன்றி விடுகிறது. எங்கும் எப்போதும் இருளே தீமையின் சின்னமாகக் கொள்ளப்படுகிறது. நேர்மாறாக ஒளியே நன்மையின் சின்னமாகவும் உள்ளார்ந்த, நிலையான நிறைமெய்ம்மை அல்லது கடவுளின் சின்னமாகவும் கொள்ளப்படுகிறது. இச் சின்னங்கள் நன்மை, தீமைகளின் தொடர்புகளை நன்கு எடுத்துக் காட்டுபவையே. இயற்கையின் இருள் ஒரு புள்ளி அளவிலேயே இருக்கிறது. ஞாயிறும் கோடிக்கணக்கான விண்மீன்களும் ஒளிக்கோளங்களே. அவற்றின் ஒளி இயல்வெளி எங்கும் எப்போதும் நீக்கமற நிறைத்தே இருக்கிறது. அவ்வொளி மறைக்கப்படுவது ஒளிக்கூறற்ற நிலஉலகு முதலிய ஒரு சில கோள்களில் மட்டுமே. அவற்றுள்ளும் ஞாயிற்றை நோக்கி இராத ஒரு பாதியே எப்போதும் தன்னிழலால் தன்னை மறைத்துக் கொள்கிறது. நிலம் இங்ஙனம் எல்லையற்ற ஒளியின் அகல் வெளியிலே தன்னிழலால் தன்னைத் தற்காலிகமாக மறைத்துக் கொள்வது. தன் குறைபாட்டால் அல்லது அறியாமையால் உயிர் தற்காலமாக அடையும் தீமைக்கு ஒரு நல்ல சின்னமே யாகும். தீமை எப்படி ஏற்படுகிறது என்பதன் விடை எளிது. இற்கையின் இயல்பாக நன்மைபற்றிய மனிதன் அறியாமையிலிருந்தே தீமை பிறக்கிறது. ஆனால் தீமை ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விடை விளக்கம் இதனினும் முக்கியமானது. நிழலில்லாமல் ஒளியை நாம் காணமுடியாது. அதுபோலத் தீமையில்லாமல், தீமை நன்மைகளின் இயல்புகளை நாம் உணரமாட்டோம். இவையே தீமையின் படிப்பினைகளும் பயனும் ஆகும். இயற்கையின் தங்குதடையற்ற நிறைநன்மை மனிதனிடத்திலும் தங்குதடையற்று இருக்குமானால், தீமையின் படிப்பினைகளை மனிதன் அறிய மாட்டான். அதனால் நன்மையும் அவனுக்கு உருவற்றதாய்விடும். அவன் நன்மையின் இயல்பை உணரமாட்டான். நன்மையை இயக்கியாள்வதற்கு மாறாக, அதற்கு அடிமைப்பட்டு விலங்காய் வாழ்வான். தீமையின் படிப்பினைகளை அறியாதவன் மேன்மேலும் தொடர்ந்து தீமைக்கு ஆளாகிறான். அவன் நாடும் இன்பங்களே அவனுக்குத் தீமைகளாவதால், நாளடைவில் அவன் நீடித்த, கிட்டத்தட்ட நிலையான தீமையில் கிடந்து உழலுகிறான். அவன் நிலை இருட்டறையில் கதவுபலகணி அடைத்துக்கொண்டு ஒளி என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவன் நிலையையே ஒத்தது. அவன் அறைக்கு வெளியே எங்கும் வெளிச்சம் பரவியுள்ளது. ஆனால் அறையில் மட்டும் அதை விடாது பூட்டிக் கொண்டு, இருட்டை உண்டுபண்ணிக் கொண்டே, அவன் இருட்டு விலகமாட்டேன் என்கிறது என்று கூறுகிறான். தப்பெண்ணங்கள், மூட நம்பிக்கைகள், குறுகிய தன்னலம், படிந்து விட்ட பிழைகள் ஆகியவற்றில் கிடந்து அழுந்தும் பலர் நிலை இங்ஙனம் இருட்டறையில் இருப்பவர் நிலையே. அவர்கள் துணிந்து எழுந்து தன்னலப் பலகணிகளை, மூட நம்பிக்கைக் கதவுகளைத் திறந்தால், எங்கும் பரவிய ஒளியைக் காண்பர். அறையின் இருளும் கணத்தில் மறையும். தீமை என்பது தற்காலிகமானது; மனிதன் தானாக வருவித்துக் கொள்வது அல்லது விரும்பி ஏற்பது என்ற உண்மையைச் சிறிய தன்னாராய்ச்சி காட்டிவிடும். ஆழ்ந்த தன்னாராய்வு அதில் திட்டமான அறிவை உண்டாக்கும். நீடித்த ஆழ்ந்த ஆராய்ச்சியும் பயிற்சியும் அதில் உறுதியான நம்பிக்கை உண்டு பண்ணும். இந்நிலையை அடைந்தவன் தீமைக்கு அஞ்சான். ஏனெனில் அவன் தீமையை விரும்பி வரவேற்றாலன்றி அது வரமாட்டாது என்பதை அவன் அறிவான். நன்மை வரவில்லை என்று அல்லது பெருகவில்லையென்று அவன் ஏக்கமடைய மாட்டான். ஏனென்றால் அதன் தகுதியை வளர்த்த அளவுக்கு, அது கட்டாயம் வரும் என்பதை அவன் உணர்வான். தன் விருப்பம், தன்னறிவு, தன் தகுதி ஆகியவற்றை வளர்ப்பதால் அகச் செல்வம் பெருகும் என்பதையும், புறச் செல்வத்தாலும் பெறமுடியாத நல்லின்பத்தையும் ஆற்றலையும் அவ்வகச் செல்வம் தரும் என்பதையும் அவன் காண்பான். இதனால் அவன் தானே தன் ஊழின் முதல்வன் ஆகிறான். இன்றும் நின்றது சூரிருள் எத்துணை காவல்காரா மின்னும் பாலொளி கண்டிலையோ இனும் (காவல்) மின்னும் பேரொளியின் ஒளியின் சின்னம் (காவல்) துன்னும் மேட்டில் முருகுடையோன் பதம் (காவல்) கண்டிலையோ இனும்சீறடி காரிருள் ஓட்டுவதை? திண்டிறலார் இருள்தெய்வங்கள் தம் அணிச்சீர் குலைவை! (காவல்) கண்டிலையோ ஒளிவேற்கண்கதிர்களை? கண்களினால் உண்டிலையோ? பிழை சாய்த்திடும் வான்குரல் கேட்டிலையோ? (காவல்) காலை வேந்தன் ஒளிமகன் காதலன் கார்முகிலின் மேலும் மாமலை மேலும் தன்பொன்னொளி வீசுவதை ஆலித்தோடும் பனியிருள் வேந்தர்தமை அடர்த்த காலின் செவ்வழி கண்டிலையோ கண்முன்? (காவல்) போம் இருள்; போம்இருள் காதலர் காதலிக்கும் பொருள்கள்; போம் இருட்காதல்; ஒலிப்பகைவோர்களும் சென்றொழிவர்; போம் இராவின் இருள் தன்னுடன் போகும் இன்னாத எலாம் ஆம் இனிப்பேரொளி தான் எனக் கூவினர் பாடகரே. (காவல்) 2. அகத்தின் நிழலே புறம் உன் அகநிலை எப்படியோ, அப்படியேதான் புறநிலை உலகமும் இருக்கும். இயற்கையிலுள்ள ஒவ்வொரு பொருளும் அகத்தோடு சாரும்போது, அக உணர்வின் ஒவ்வொரு கூறாய் அமைந்துவிடும். எனவே, புறப்பொருளின் தன்மைபற்றி நீ ஒரு சிறிதும் கவலை கொள்ள வேண்டியதில்லை. உன்னைப்பற்றிய வரை, அது உன் அக உணர்வின் ஒரு கூறாகவே இருக்க முடியும். உன் அறிவு முழுவதும் உன் முன்னைய செயலுணர்வின் பயன். செயலுணர்வு என்னும் வாயில் வழியாகவே அது உன்னை வந்தடைந்தது. இனி நீ அறிய இருக்கும் அறிவும், இதுபோலச் செயலுணர்வு என்ற வாயில்வழி வரவேண்டியதே. ஆனால் அந்த வாயில் கடந்து விட்டபின், அவ்வறிவுகள் உன்னில் ஒரு பகுதியாய், “நீ” ஆகிவிடுகின்றன. உன் எண்ணங்கள், ஆவல்கள், அவா ஆர்வங்கள் ஆகியவையே உன் உலகம். இயற்கையினமாக இயங்குகிற அழகு, மகிழ்வு, இன்பம் ஆகியவையும் சரி; அருவருப்பு, துயர், துன்பம், ஆகியவையும் சரி, உன்னுள்ளிருப்பவையே; அவை வெளியி லிருந்து வருபவை அல்ல. உன் வாழ்வு, உன் உலகு, உன் இயற்கை ஆகியவற்றை ஆக்குவதும் அழிப்பதும் உன் எண்ணங்களே! உன் அக அமைப்பை உன் எண்ணங்கள் ஆற்றல் கொண்டு நீ கட்டமைக்குந்தோறும், அவற்றுக்கியைய உன் வெளிவாழ்வும் புறச்சூழல்களும் அமைந்து உருவாகும். உன் நெஞ்சத்தின் மிக உள்ளார்ந்த ஆழ்தடத்தில் நீ தேக்கிவைக்கும் எண்ணங்கள்கூட ஒன்று விடாமல், சற்று முன்னோ பின்னோ, இயற்கையின் விலக்க முடியாத செயல் எதிர்செயல் ஒழுங்குமுறைப்படி, உன்புற வாழ்வு நோக்கி வளர்ச்சியடைவது உறுதி. தூய்மைக்கேடு, வெறுப்பு, தன்னலம் ஆகியவற்றை உடைய உள்ளம் மயிரிழையளவும் தவறாமல் தீங்கு நோக்கியும் இடர் நோக்கியும் இழுத்துச் செல்லப்பெறும். அது போலவே தூய்மை, தன்னலமறுப்பு, மேதகைமை ஆகியவற்றை உடைய உள்ளம் மயிரிழையளவும் தவறாமல் இன்பம், செல்வ வாழ்வு ஆகியவை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது. ஒவ்வோர் உள்ளமும் தன் இனப்பண்புக் கூறுகளைத் தன்னை நோக்கி ஈர்க்கிறது. உள்ளத்தின் இனப் பண்புகளல்லாத எதுவும் புறஉலகில் நின்று அகத்தே புகமாட்டாது. புறஉலகின் அகநிலை உணர்வுத்துறையில் கட்டாயமாகச் செயலாற்றும் தெய்வீகக் கவர்ச்சியாற்றலாகக் கொள்ளத் தக்கது. புற உலகையும், அக உலகையும் இணைக்கும் இத்தெய்வீக அமைதியை உணர்ந்து நடப்பவன், புற உலகத்தை இயக்கியாண்டு தெய்வீக ஆற்றலின் ஒரு கூறாகிறான். ஒவ்வோர் ஆன்மாவும் அதன் முன்னைய எண்ணங்கள், அனுபவங்கள் ஆகியவற்றின் ஒரு பல்கூட்டுத் திரளேயாகும். உடல் அவ்வனுபவங்களைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்கும் உரிய ஒரு நிலைக்களக் கருவியே யன்றி வேறல்ல. பழைய அனுபவங்கள் அஃதாவது இயற்கை உணர்ச்சிகள் ஆன்மாவின் அடிப்படை. ஆனால் அவற்றின் வளர்ச்சி புதிய அனுபவங்களைப் பொறுத்தது. அனுபவங்களின் படிப்பினைகளைக் கொண்டு வளரும் அறிவு இப் புது அனுபவங்களையும் வளர்க்கிறது. இவ்வறிவு செயலாற்றினால், மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் நிகழ்ச்சியும் அகத்தின் இவ்வறிவுப் பண்பு மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இது செயலாற்றாவிட்டாலும் அகப்பண்பே புற நிகழ்ச்சியை இயக்குகிறது. ஏனெனில் அகப்பண்புக் கூறுகளின் இயற்கைக் கவர்ச்சியாற்றல் புறத்தே தன் இனப்பண்புகளை வளர்க்கிறது. இவ்வகையில் மொத்தத்தில் எப்படியும் ஒருவன் எண்ணங்கள் எவ்வகைப்பட்டனவோ, அவ்வகையிலேயே ஆன்மாவின் இயல்பும், புற உலகின் உயிர்ப்பகுதி, உயிரிலாப்பகுதிகளின் இயல்பும் அமைந்து விடுகின்றன. “நாம் இருக்கும் இருப்பின் சூழல் நாம் எண்ணிய எண்ணங்களின் விளைவே; அது நம் எண்ணங்களின் மீதே அமைந்து, எண்ணங்களைக்கொண்டே கட்டமைக்கப்படுகிறது” என்பது புத்தர் பெருமான் திருமொழி. புற நிகழ்ச்சிகளுக்கு அகத்தே காரணம் காண்பது தவறு என்பதை இவ்அறமொழி வலியுறுத்துகின்றது. ஒருவன் கிழ்ச்சியுடையவனாயிருக்கிறா னென்றால், அதற்குக் காரணம் அவன் மகிழ்ச்சியுடைய எண்ணங்களில் ஈடுபட்டிருந்தான் என்பதே. அதுபோல ஒருவன் சோர்வும் தளர்ச்சியும் துன்பமும் உடையவனாயிருக்கிறா னென்றால், அதற்குக் காரணம் அவன் மகிழ்ச்சியுடைய எண்ணங்களில் ஈடுபட்டிருந்தான் என்பதே. அச்சமுடைமை, அச்சமின்மை, மடமை, அறிவுடைமை, கலக்கம், அமைதி ஆகிய எத்தகைய பண்பின் மூலகாரணமும் அகத்தில்தான் இருக்கிறது; புறத்திலன்று. “புற நிகழ்ச்சிகள் யாவற்றுக்கும் அகந்தான் காரணம் என்று கூறுகிறீர்களே, புறப்பண்புகள் எதுவும் புற நிகழ்ச்சிகளையோ, அக நிலையையோ சிறிதும் தாக்குவதில்லையா?” என்று சிலர் கேட்கலாம். புறப்பண்புகளுக்குச் செயல் மதிப்பு முற்றிலும் கிடையாது என்று நாம் கூறவில்லை. ஆனால் அவற்றின் செயல் விளைவுகள் அறிவுடைய மனிதனின் செயலுக்குப் பிற்பட்டவை; மனிதன் அகப்பண்புகள் செயலாற்றாமலிருந்து அவற்றை இயங்கவிடும்போதுதான் அவை செயலாற்றும் என்பதை நாம் உறுதியாக, ஆராய்ந்து முடிபு கட்டிய மாறாமுடிபாகக் கூறமுடியும். எண்ணங்களின் இயல்பு, பயன், ஆற்றல் ஆகியவற்றை ஒருவன் அறியாத போதுதான் புற நிகழ்ச்சிகள் தன் செயலை இயக்கும்படி மனிதன் விட்டு விடுகிறான். அத்தகைய நிலையில்தான் தன் வாழ்க்கையைப் புறப்பண்புகள் அல்லது நிகழ்ச்சிகள் ஆக்கவோ, அழிக்கவோ முடியும் என்று மனிதன் “நம்புகிறான்.” “நம்புகிறான்” என்ற சொல் இங்கே பொருள் பொதிந்த நிறைச்சொல் ஆகும். புறப்பண்புகளின் ஆக்கும் திறம் இந்நம்பிக்கையின் பயனாகவே ஏற்படுகிறது. அவை உண்மையில் உயிரிலாப்பண்புகள். வேறு உயிர்ப் பண்பு தலையிடாதவிடத்தில் அவற்றினூடாக இயங்கும் தெய்வப்பண்பு உயிர் செயலாற்றும். ஆயினும் தெய்வப்பண்பு உயிரிலா பண்புகளினூடாகச் செயலாற்றுவதைவிட மிகுதியாக பண்புகளினூடாகச் செயலாற்றும். ஏனெனில் மனிதன் தெய்வப் பண்பை நோக்கி வளரும் உயிர்ப் பண்புடையவன். அப்பண்பே அறிவ. அதை அவன் பயன்படுத்தாமல் தன் உயிர்பண்பை அதன் வழி நின்று இயக்காமல், புறப்பண்பின் உயிரிலாத் தற்செயல் விளைவில் மிதந்தால், அதற்குக் காரணம் அறியாமையேயாகும். காரண காரியத் தொடர்பை ஆராய முனையாத இவ்வறியாமையையே நாம் நம்பிக்கை என்ற பெயர் கூறி அழைக்கிறோம். அகப்பண்பின் ஆற்றலில் உணர்வுபெறாமல் புறப்பொருளில் நம்பிக்கை வைப்பவன், அவற்றுக்குள் இயக்குதல் தலைவனாயிருப்பதற்கு மாறாக, அவற்றுக்கு அடிமை ஆகிறான். தான் ஓர் அடிமை என்று ஒத்துக் கொண்டு, அவற்றுக்கு அடங்கி நடக்கிறான். அறிவொளியுடைய மனிதனாய்ப் பிறந்தும், அவன் அறியாமை இருளாகிய மாயையில் உழலும் விலங்குப்பிறவியாகிறான். புறப்பொருள்கள் அவன் அறிவுக்கு அறிவு கொளுத்தும் அறிவுப் பிழம்புகளா யிராமல், களிப்பூட்டும் கவின் பொருள்களாமல், ஆற்றல் தரும் ஆற்றல் பண்புகளாக உலவாமல் - துன்பம், அச்சம், தளர்ச்சி ஆகிய இருட் பண்புகளூட்டும் மாயப் பொருள்களாகின்றன. ஒளிப்பண்பு அல்லது அறிவுப்பண்பு, இருட்பண்பு அல்லது அறியாமைப் பண்பு ஆகியவற்றின் இருவேறு பட்ட பயன்களை நாம் வாழ்க்கையில் தெள்ளத்தெளியக் காணலாம். இவற்றை விளக்கப் பல சான்றுகள் தரலாம். என் அனுபவத்தில் பட்ட ஒரு நிகழ்ச்சியை இங்கே கூற விரும்புகிறேன். இளைஞர் இருவர் பல்லாண்டு உழைத்துச் சேமித்து வைத்திருந்த செல்வத்தை இழந்து தவிப்படைந்து நின்றனர். ஒருவன் அத் துன்பத்தில் ஆழ்ந்து, அதே சிந்தனையாயிருந்து, உடல் குன்றி, ஊக்கமிழந்து நலிந்தான். ஆனால் மற்றவனோ ஒருநாள் துயரில் ஆழ்ந்திருந்து, மறுநாள் விடியற்காலமே பத்திரிகைகளைப் புரட்டிப் புது வாழ்வுக்கு வழிகாணப் புகுந்தான். தன் இழப்புப்பற்றிப் பரிந்துரை கூற வந்தவரிடம் “வாழ்வு தாழ்வு எவருக்கும் வருவது இயல்புதானே! இத்தடவை இழப்புக் காளானவன் நான் மட்டுமல்ல. பலரும் ஆளாகியுள்ளனர். கடும் உழைப்பால்தான் இனி, காரியம் ஆகும்,” என்று கூறினான். இரண்டாமவனுக்குச் சிறியதொரு வேலை கிட்டிற்று. அவன் முன்னிலும் பன்மடங்கு ஊக்கமாக உழைத்தான். முன்னினும் எச்சரிக்கையாகச் சேமப்பணத்தைப் போட்டு வைத்தான். விரைவில் அவன் முன்போலவே பணம் திரட்டிச் செல்வன் ஆனான். அத்துடன் துன்பத்தி லாழ்ந்து நலிந்தவனையும் அவன் அழைத்து வேலை தந்து உதவி, அவனையும் ஆட்படுத்த முயன்றான். வந்த இடரில் கருத்துச் செலுத்துபவன் அதனை ஒழிக்கும் ஆற்றல் உடையவனாகமாட்டான். சென்ற இடரில் கருத்துச் செலுத்துபவன் மேலும் இடரை வர வழைப்பான். இடரில் கருத்துச் செலுத்தாதவன் மட்டுமே இடரைத் தடுத்தாள்வதுடன், அதனை நற்பயன் தரும் படிப்பினையாகவும் கொள்கிறான். அது அவனுக்கு ஒரு கருவியாய்ப் புது உரமும் புது ஊக்கமும் உதவியும் தருகிறது. உலகச் சூழல்கள் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் மூலகாரணமாகக் கூடுமானால், அவை உலக மக்கள் அனைவரையுமே ஒரே வகையாக வாழவோ, தாழவோ, வகை செய்யக்கூடும். அதுமட்டு மல்ல, ஒரே இடத்தில், ஒரே சமயத்தில் உள்ள ஒரே சூழ்நிலை ஒருவருக்கு முற்றிலும் நல்லதாகவும், மற்றொருவருக்கு முற்றிலும் தீயதாகவும், வேறு பிறருக்கு நன்மை தீமைக் கலப்புடையதாகவும் இருக்கக் காண்கிறோம். எனவே மக்கள் வாழ்வும், தாழ்வும் வாழ்வு தாழ்வு வேறுபாடுகளும் புறச்சூழல் களுள் காரணமானவையாக இருக்க முடியாது. அவரவர் மனநிலை காரணமாக எழுந்தனவாகவே இருத்தல் சாலும். இதனை நாம் உணர்ந்து நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைத்து, நம் உள்ளத்தை ஆன்மாவின் நற்கோயிலாகப் பண்ணமைக்க வேண்டும். அதன் திருவெல்லையிலிருந்து தூய்மைக் கேடான பண்புகளை மட்டுமன்றி, தேவையற்றவை பயனற்றவை ஆகிய பண்புக்கூறுகளையும் அகற்ற வேண்டும். மகிழ்ச்சி, அமைதி, உரம், ஊக்கம், உயிர்ப்பு, அன்பு, நேசம், அழகு, ஒழுங்கு ஆகிய நல்ல பண்புக் கூறுகளைத் தேர்ந்து மேற் கொள்ளவும் வளர்க்கவும் வேண்டும். புறநிகழ்ச்சிகள் அவற்றின் மெய்யுருவில் நமக்கு வாளா தெரிவதில்லை. நம் எண்ணங்களை ஆடையாகப் போர்த்துக் கொண்டே அவை நம்முன் நடமாடுகின்றன. நாம் காணும் பொருள்களின் தன்மையும் இவ்வாறானவையே. நிகழ்ச்சிகளிலும் பொருள்களிலும் தத்தம் இயல்பிலே அழகும் இல்லை, அருவருப்பும் இல்லை. ஏனெனில் ஒருவன் அழகைக் காணு மிடத்தில் இன்னொருவன் அருவருப்பையும், ஒருவன் அருவருப்பைக் காணுமிடத்தில் இன்னொருவன் அழகையும் காணலாம். ஒருவர் காணும் அழகை, அவர் உள்ளப் பண்பில் தோயாமல் இன்னொருவர் எளிதில் காணமுடியாது. மட்டுமீறிய இயல்நூல் ஆர்வமுடைய ஓர் அறிஞர் நாட்டுப் புறத்தில் ஒரு குட்டையினருகே நின்று கொண்டிருந்தார். குட்டையில் அவர் என்ன அற்புதத்தைக் காண முடியும் என்று வியப்புடன் ஒரு குடியானவன் அவரை நோக்கிக் கொண்டு நின்றான். அறிஞர் தம் விலையேறிய சட்டைப் பையிலிருந்து வகைவகையான கண்ணாடிப் புட்டிகளை எடுத்து அதன் அழுக்கு நீரை அதில் அடைப்பதைக் கண்டபோது அவனால் ஏளன நகை நகைக்காமல் இருக்க முடியவில்லை. அவர் பித்துக்கொள்ளியா யிருப்பாரோ என்ற ஐயம் அந்த நகைப்பினூடே நிழலாடிற்று. ஆனால் தம் வாழ்க்கைத் தொழிலிலேயே அக்கறையா யிருந்த அறிஞர் அவனை நோக்கி “அப்பனே, இந்த ஒவ்வொரு புட்டியிலும் ஒன்பது நூறாயிரம் அற்புத அண்ட கோளங்கள் இருக்கின்றன. நம்மிடம்தான் அவற்றைக் கண்டறியும் ஆற்றல் போதவில்லை. கருவிகளின் உதவியாலும், ஆராய்ச்சி அறிவின் துணையாலும் நாம் அவற்றைக் கண்டு மகிழ முடியும்” என்றார். இவ்அறிவுரை கேட்ட பின் அந்தப் பட்டிக்காட்டுக் குடியானவன், அவர் பித்துக் கொள்ளியல்ல, முழுப் பைத்தியமேதான் என்று துணிந்து விட்டான். “அந்தோ, புழுக்களையும் தலைப் பிரட்டைகளையும் பூச்சிகளையும் கருவிகளில்லாமல் பார்க்க முடியாது திண்டாடுகிறதே இந்தப் பைத்தியம்? எல்லாரும் பார்க்கிறதைப் பார்க்க முடிகிறதில்லை இதற்கு. அதே சமயம் எல்லாரும் பார்க்க விரும்பாததைப் பார்க்க அங்கலாய்க்கிறது” என்று கூறி அவன் வருத்தத்துடன் சென்றானாம். இயற்கையின் அற்புத அழகை இயல் நூலறிவு குட்டையில்கூடக் காணமுடியும்; கல்லாத உள்ளம் கலைக் கண்காட்சிகளில்கூட எவ்வகை அற்புதத்தையும் காணாது. வழிப்போக்கன் காட்டு மலர்களை மிதித்துச் செல்லும்போது, அதைப் பற்றி எதுவும் கருதமாட்டான். ஆனால் கவிஞன் அதன் அழகில் அல்லது மணத்தில் ஈடுபடுவான். அறிஞன் அதன் இனப் பண்பை ஆராய்வான். மணமுள்ள ஓர் இள மலருக்கு அதன் அழகையோ, அழகுள்ள இள மலருக்கு அதன் மணத்தை யோ ஏற்றக்கூடாதா என்று அவன் சிந்திப்பான். கடல் பெரும்பாலான மக்களுக்கு ஓர் எல்லையற்ற வெள்ளக்காடு. வேறு சிலருக்கு அது மனிதரால் செப்பம் செய்ய வேண்டாத இயற்கையின் கப்பற்பாதை. அது முத்துக்கள், பவளங்களின் சேமகலம் என்பதை மிகச் சிலரே எண்ணுவர். அறிவாராய்ச்சி பெருகும்தோறும் அதன் செல்வவளம் பற்றிய எண்ணம் வளரும். ஆனால் கலைஞனுக்கு அது ஓயா உயிர்ப்பும், கணந்தோறும் மாறும் உணர்ச்சிகளும், எல்லையற்ற ஆற்றலும் உடைய இயற்கையின் பரு வடிவமாகக் காட்சியளிக்கும். குட்டை, மலர், கடல் ஆகியவற்றைப்போலவே ஒவ்வொரு பொருளும் ஒவ்வோர் இன்ப துன்ப நிகழ்ச்சிகளும் மனிதர் பண்புகளுக்கேற்ற பண்பும், உருவமும், பயனும் உடையனவா யிருக்கும். கல்லாமனிதன் காணும் துன்பத்தினூடாகக் கற்றறி சிந்தையுடையவன் இன்ப அமைதிக்கு இன்றியமையாத காரண காரியத் தொடர்பு வடிவான அறிவுரைகளைக் காண்பான். பருப்பொருளின் அறிவியல் வாதி எல்லையற்ற அழிவே காணும் இடங்களில், மறை தெய்வ இயல் வாதி எல்லையற்ற பேருயிரின் நாடித் துடிப்பை உணர்வான். நாம் நம் எண்ணங்களைப் புறப்பொருள்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஆடையாகப் போர்த்துவதுபோலவே, பிறர் உள்ளங்களுக்கும் நம் எண்ணங்களின் வண்ண ஆடை தந்து அவற்றினூடாக அவர்களை - அவர்கள் உள்ளங்களைக் கண்டறிகிறோம். எவரையும் நாம் நம் வண்ணமாகவே காண்கிறோம் என்பது நமக்குப் பெரும்பாலும் புலப்படுவ தில்லை. ஆனாலும் அதைத் தெளிவுப்படுத்துவது எளிது. வண்ணக் கண்ணாடி அணிந்தவன் எல்லாப் பொருள்களின் வண்ணத்தையும் காண்கிறான். அதுபோல ஐய மனப்பான்மை யுடையவன் எல்லாரையும் ஐய மனப்பான்மையுடையவர் என்ற பொது நோக்குடனேயே காண்பான். பொய்யன் எல்லாரும் பொய்யரே என்ற உறுதியுடன் தான் இருப்பான். அதுமட்டுமன்று. வாய்மையுடையவர் எவருமே உண்மையில் இருக்கமுடியாது என்றும்; தலைசிறந்த பொய்யர்களே வாய்மையுடையவர் என்று தம்மைப் பிறர் நம்ப வைக்கின்றனர் என்றும்; அறியா மட்டியாயிருந்தாலல்லாமல், ஒருவன் எவரையும் வாய்மையுடையவன் என்று நம்பமாட்டான் என்றும் அவன் உறுதியாகக் கொள்கிறான். பொறாமை யுடையவன் இது போலவே எல்லாரிடத்திலும் பொறாமையை யும், கஞ்சன் எவரிடத்திலும் பண ஆசையையும் காண்கிறான். தன் அகச்சான்றைக் கொன்றடக்கிப் பொருள் திரட்டியவன், குண்டு செறித்த துப்பாக்கியைக் கையில் அணைத்துக்கொண்டே தூங்குகிறான். தன்னைப் போலவே எல்லாரும் அகச்சான்றைக் கொன்று பொருளைப் பறிக்கக் கங்கணங்கட்டிக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணித்தான் அவன் அஞ்சி வாழ்கிறான். காமுகன் எல்லாரும் காமுகராயிருப்பதே இயல்பு என்று நினைக்கிறான். பொறியடக்கிய புங்கவர் எவரையும் கண்டால், அவன் அவர்களைத் தன்னிலும் திறமை மிக்க பாசாங்குக்காரர் கயவர் என்றுதான் கருதுவான். காமுகப் பண்பற்ற மனிதரும் இருக்கக்கூடும் என்று அவன் கனவிலும் கருத மாட்டான். ‘அற்பண்பினரை’ப் போலவே ‘நற்பண்பின’ரும் எல்லாரை யும் தம் வண்ணமாகக் காணும் வழுவுடையவரே. ஆனால் இவ் வழு அவ் வழுவுடையாரைக் கெடுக்கும் இடத்தில் கூட, உலகத்தை உயர்த்தும் வழு ஆகும். உறுதியுடையாரிடத்து இது வழு வாயமையால், சூழலையே மாற்றியமைக்கத் தக்கதாகும். அன்பு கனிந்த எண்ணங்களை உடையவர்கள் எல்லா ரிடமும் அன்பும் கனிவும் கொள்கின்றனர். அறச் சிந்தனை யுடையவர்கள் பிறர் நலங்கள் கண்டு மகிழ்கின்றனர். அழுக்காறு என்பது எப்படியிருக்கும் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். கடவுட் கருத்துடையவன் காண்பவரிட மெல்லாம், காண்பவற்றினிட மெல்லாம் கடவுட் பண்பே காண்பான். . கடவுளிருக்குமிடம் பற்றி அவன் ஐயுறவு கொள்ள மாட்டான்; கடவுளில்லாத இடம் பற்றியோ, அவனுக்குச் சிந்தனையே ஏற்படாது! அனுபவங்கொண்டு மக்கள் தத்தம் பண்புகளில் திருந்திக் கொள்ளாதவரை, அவர்கள் தத்தம் பண்களின் வண்ணமாகவே வளர்ந்து, அவ்வண்ணமாகவே உலகையும் வளர்ப்பார்கள். அதுமட்டுமன்று; தம் வண்ணங்களையே அவர்கள் தம்மைச் சுற்றிலும் கவர்ந்தீர்த்துத் திரட்டுவர். “இனம் இனத்தோடே” என்ற பழமொழி இவ்வகையில் அதன் புறப் பொருள் கடந்து அகப்பொருள் செறிவுடையது. நற்பண்புடை யோர் நற்பண்புகளை வளர்த்து நற்பண்பாளர்களைத் தம்மைச் சுற்றிலும் திரட்டுகின்றனர். பிறரையும் படிப்படியாக நற்பண்பாளர் ஆக்குகின்றனர். ‘அற்பண்பு’டையோர் இது போலவே தீய பண்புகளை வளர்த்துத் தீய பண்பாளர்களைத் திரட்டிப் பெருக்க முனைவர். ஆனால் இப்போட்டியில் தீயபண்பு வெற்றியுறுவது அரிது. ஏனெனில் தீயபண்பு நல்லவர்களை அழித்துத் தீயவர்களையும் அழிக்கப் பார்க்கிறது. நல்ல பண்போ நல்லவர்களையும் காத்துத் தீயவர்களையும் காக்கப் பார்க்கிறது. அன்பு நாடுவோர் அன்பே வழங்குக! வாய்மை நாடுவோர் வாய்மையே கொள்க! மன்பதைக் கெதுநீ வழங்கினை, அதுவே மன்பதை ஆம்உனக்கு; உன்மனம் அதுவே. இறப்புக்குப்பின் ஓர் இன்ப உலகங்காணும் அவாவுடையவனாக நீ இருந்தால் இறக்கும்வரை நீ அதற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. அதை இப்போதே முழுவதும் பெறுவதற்குரிய நற்செய்தி ஒன்றை நான் உனக்குக் கூறமுடியும். அவ்வுலகம் உன்னருகே, உன்னைச்சூழ, உனக்குள்ளேயே இருக்கிறது. நீ அதற்காகக் காத்திருக்கவில்லை. அது உனக்காகக் காத்திருக்கிறது. அதோ அங்கே, இதோ இங்கே என்று கூறுபவரை நம்பி, நீ அங்கும் அங்கும் அலைய வேண்டாம். நீ இருக்கும் இடத்திலேயே, உன் உள்ளேயே அது அடைபட்டுக் கிடக்கிறது. நீ எங்கும் போகவேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம். கதவைத் திறந்தால் போதும். அல்லது கதவைத் தட்டினால் போதும். அது தானாகத் திறந்து விடும். கதவு தட்டுவது என்பது வேறு ஒன்றுமல்ல. “உன் இன்ப உலகம் உனக்குள்ளேயே இருக்கிறது” என்பதை நீ நம்ப வேண்டும். நீ எத்தனையோ செய்திகளை முன்பின் ஆராயாமல் நம்புகிறாயே, நம்பி ஏமாந்தபிறகும் நம்புகிறாயே! இந்த ஒன்றை நம்பிப்பார்! நீ பின் என்றும் ஏமாறமாட்டாய், ஏமாப்பு அடைவாய்! ஐயந்திரி பின்றி உள்ளத்தில் இதை அழுத்தித்தோய வை. இதை உறுதியாக நினை. பின் நீ உணர்வாய். நீ தூய்மையுறுவாய்; உன் அக உலகைப் பொன்னுலகாகக் கட்டமைத்துவிடுவாய். நீயே உன் உலகின் இறைவன் என்பதைக் கண்ணார, கருத்தார, செயலாரக் காண்பாய். கலகித் தோங்கிய காடு பூங்காவென உலர்ந்தபாலை உளங்கொளும் சோலையா, இலகு தீமைகள் இன்னல்கள் எகியே உலகுசெம்மை யுறநீ அவாவிடில்,- உன்னை நீ செம்மைப்படுத்துவாய்! நீடு துன்பமும் நீங்காப்பிணிகளும் ஊடறுத் திவ்வுலகு நலம்பெற பாடுற் றோர்க்கெலாம் ஓய்வும்நல் இன்பமும் பீடுற்றோங்க நனிநீ அவாவிடில்,- உன்னை நீ நலப்படுத்துவாய்! போலி வாழ்வுக் கனவிடையே மக்கள் மாலுறக் கலகித்து மாளும் நிலை ஆலித்தேகிட, அன்பும் அமைதியும் மேலிட் டோங்கும் ஒளிநீ அவாவிடில்,- நீ நின் நீள்உறக்கம் ஒழித்தோட்டுவாய். 3. இன்னாமை நீக்கும் இன்னெறி தீமை என்பது, எல்லையற்றுப் பரந்த இன்ப வெளியிலே, குறையுருவமுடைய நம் நிழல்போன்ற ஒரு தற்காலிகப் போலிப்பண்பே என்றும்; நம் சூழலும் நாம் காணும் உலகமும் நாமாக வருவிக்கும் நம் நிழலே என்றும் கண்டோம். இக்காட்சியறிவிலிருந்து உறுதியாக, ஆனால் எளிதாக நடந்து மேற்சென்று “உலகமைதியின் காட்சி” என்ற உயர் படிக்குச் செல்வோம். எதுவும் இன்றியமையாக் கட்டுப்பாடுடைய இயற்கைச் சட்டத்தினின்றும் வழுவாது என்பதையும், காரணகாரியத் தொடர்பு இல்லாமல் எதுவும் தன்னியல்பாய் நிகழ்வதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டோம் “மனிதன் தான் விதைத் ததைத்தான் அறுக்கிறான்; தானே தான் அறுக்கிறான்.” என்ற உண்மைகள் எல்லையில்லாக் காலத்தின் வாயிலின்மீது அழல்நிற எழுத்துக்களில் தீட்டப்பட்டிருப்பதையும் காண்கிறோம். தீயில் கையிட்டவன் சுட்டபுண்ணால் துன்புறுவது உறுதி. சுட்ட புண் ஆறும்வரை அவன் துன்பப்படத்தான் செய்வான். தீயைத்திட்டுவதாலோ தீயின் அற்றலை வேண்டி வணக்கவழிபாடு செய்வதாலோ அவன் யாதொரு பயனும் அடைய மாட்டான். புறப்பொருளில் காணும் இதே அமைதி அகத்திலும் ஆட்சி செய்கிறது. வெறுப்பு, சீற்றம், அழுக்காறு ஆகியவை பலநிற அனற்பிழம்புகள். எரியும் இயல்புடைய அப்பிழம்புகளைத் தொட்டவன் தீமையை நுகர்ந்ததாக வேண்டும். ஏனெனில் இச் செயல்கள் இயற்கையின் அமைதியை அறியாதவன் செய்த அறியாச் செயல்கள். அவற்றின் விளைவாகிய தீமை, இயற்கைமீறிய அச்செயல்களின் அமைதிக் குலவை அகற்றும் இயற்கையின் எதிர்செயல்கள் அல்லது சரியீட்டுச் செயல்களே யாகும். நற்செயல்கள் இவ்வகையில் தீயசெயல்களிலிருந்து மாறுபட்டவை. அவை இயற்கையின் நிறை அமைதிக்கு எதிரானவையல்ல. ஆகவே எதிர்செயலால் இயற்கை அவற்றைத் தண்டிக்க நேர்வதில்லை. அவை இயற்கையோ டொத்தவையாதலால், இயற்கையின் செயல்களே அவற்றின் விளைவுகளாகின்றன. உயிருள்ளனவும் உயிரில்லாதனவுமாகிய உலகின் எல்லாப் பொருள்களும் இயற்கையின் கூறுகளாதலால், அவையாவுமே நற்செயல்களுடன் ஒத்துழைத்து அவற்றின் விளைவை வளர்ப்பதுடன் தாமும் வளர்கின்றன. நற்செயல்கள் தரும் ஆறுதலமைதி, இன்ப அமைதி, குறைவிலா நிறைவேற்றி ஆகியவற்றின் மறை நுட்பம் இதுவே. அன்பு, நேசம், நல்லெண்ணம், உள்ளத்தூய்மை ஆகியவைகள் இயற்கையமைதியோடொத்த நற்பண்புகள். அவற்றால் விளையும் பயன்களும் இயற்கையமைதியின் பலதிற நிழல்கள் போன்றவையே. அவற்றையே நாம் மன அமைதி, இன்பம், உடல்நலம், சமூக நலம், ஒப்புரவு என்ற பெயர்களால் குறிக்கிறோம். இவற்றின் கூட்டுறவால் ஏற்படும் வெற்றிகளைச் சிலர் தெய்வத் திருவருள் என்றும், நற்பேறு என்றும், குருட்டுயோகம் என்றம் பலவாறாகக் கூறுவர். வேறுசிலர் இவற்றைப் பித்தலாட்டம் என்பர். இருசாரார் கூற்றுக்களும் அவற்றின் மறைநுட்பப் பண்பை அறியாது கூறப்பட்டவையேயாகும். தெய்வம், நற்பேறு, யோகம் என்ற சொற்கள் இங்கே இயற்கையின் தெய்விக ஆற்றலமைதியைக் குறிப்பன என்பதை அவர்கள் உணர்வதில்லை. இயற்கை அமைதி பற்றிய நிறையுணர்வுடையவன் இயற்கையோடிணங்கிய பண்பைப் பெறுகிறான். இப்பண்பே மனித சமூகத்தில் நேர்மை, இயைபமைதி, அன்பு என்ற படிவங்களாகத் திகழ்கின்றன. உலகில் இவற்றின் ஆற்றல் பெரிது. இவற்றுடன் இணங்குபவர்க்கு அது இணக்க ஆற்றலாகவும் ஆக்க வளர்ச்சியாகவும் அமைகிறது. அவற்றை மீறுபவர்க்கு அது அழிவாற்றலாகிறது. இயற்கைக்குக் கீழ்ப்படியும் இணக்கப் பண்பினும் ஆற்றல் வாய்ந்த பண்பு எதுவும் இல்லை. நன்மைதீமைகளில் சலியாது நடுநிலைநின்று, துன்பங்களைத் தாங்கி அவற்றின் அழிவாற்றல் ஓயும்வரை பொறுத்திருந்து வெற்றிகாண்பவரைத் தீமை எதுவும் செய்யமுடியாது. தீமையைத் தாங்கும் உரமும் எதிர்க்கும் வீரமும் அதன் காரணங்களை அமைந்தறிந்து விலக்கும் திறமும் அவரிடம் வளர்வதே இதற்குரிய விளக்கம் ஆகும். பணிவு பொதுவாக ஒரு வலிமையற்ற பண்பு என்று கொள்ளப்படுகிறது. இயற்கையாற்றல் தெரிந்து ஆற்றும் பணிவு இதற்கு நேர்மாறானது. அது தீமையை எதிர்த்துத் தாக்கும் வலிமை தருகிறது. ஆற்றல்பண்பு, ஆக்கப்பண்பு, வளர்ச்சிப்பண்பு ஆகிய யாவும் உள்ளிருந்துதான் எழுகின்றன. அதுபோலவே அழிவுப்பண்பும் தளர்ச்சிப் பண்புகளும் அகத்திலிருந்து கிளறும் கிளர்ச்சியன்றி, வேறு எதுவும் அன்று. வளர்ச்சிப்பண்பில் நம்பிக்கை உடைய சிலர்கூடப் புறச்சூழல்களால் தாங்கள் தளைபட்டுக் கிடப்பதாகக் கூறுவதுண்டு. இன்னும் விரிவான வாய்ப்புவளங்கள், திருந்திய உடல்நிலை வாய்ப்புக்கள் வேண்டுமென்று சிலர் கூறுவர். வேறு சிலர் தம் ஊழ் தம் கைகால்களைக் கட்டுப்படுத்திச் செயலைத் தடைசெய்கின்றது என்பர். இத்தகையவர்களுக்கு நாம் கூறும் அறிவுரை ஒன்று உண்டு. அதை அவர்கள் உள்ளத்தில் வடுப்பட அழலிடும் எழுத்துக்களால் பொறித்துக் கொள்ளுதல் வேண்டும். “உங்கள் சூழலின், உங்கள் வாய்ப்பு வளங்களில், உடங்கள் உடல்வாய்ப்பு நலங்களில் நீங்கள் அவாவும் முன்னேற்றங்களை நீங்களே முயன்று பெறமுடியாதென்றில்லை. அதற்கு நீங்கள் செய்யவேண்டுவதெல்லாம், உங்கள் அகப் பண்பமைதியை நீங்கள் மாற்றியமைக்க உறுதி கொள்வதே.” தொடக்கத்தில் இவ் அறிவுரை கவர்ச்சியற்ற அறிவுரையாகத் தோன்றலாம். நல்ல அறிவுரைகள் எவையுமே பெரும்பாலும் தொடக்கத்தில் இப்படித்தான் தோன்றும். போலி அறிவுரைகளைப் போல் அவை எளிதாகவும், கவர்ச்சிகர மாகவும், பகட்டாகவும் இருக்கமாட்டா. ஆனால் அவற்றின் வழிநிற்க உறுதிகொண்டு, இந்நெறியில் காலூன்றிபடுத்தி, தீமைகளகற்றி, ஆன்மீக ஆற்றல்களையும் உயிர்ப் பண்புகளையும் வளர்த்து உருவாக்கத் தொடங்கினால் - உங்கள் அகவாழ்வு கடந்து புறவாழ்விலேயே காணப்படும் மாய மாறுபாடுகளைக் கண்டு நீங்கள் மலைப்படைவீர்கள். நீங்கள் இப்பாதையில் முன்னேறிச் செல்லுந்தோறும், அப்பாதையில் பொன் மலர்கள் பரவிக்கிடக்கக் காண்பீர்கள். அவற்றைப் பயன்படுத்தும் துணிவும் திறனும் உங்களை அறியாமலே உங்களுள்ளத்தில் எழும். இன்னலமிக்க நண்பர்கள் நீங்கள் அழையாமல் உங்களை அணுகி உதவ முன்வருவர். காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும் பூசிகள்போல, உங்களுடன் ஒத்துணர்வுடைய எத்தனையோ மக்கள் ஒத்துழைக்க முனைந்து வருவார்கள். நல்ல ஏடுகளும் பிற துணை நலங்களும் நீங்கள் நாடாமலே வேண்டிய வேண்டிய தறுவாய்களில் உங்களுக்கு வந்து உதவும். ஒருவேளை நீங்கள் வறுமையில் வாடி, துணையற்று, நண்பரற்று நலிபவராயிருக்கலாம். உங்கள் சுமையின் பளுவைக்குறைத்து உதவும் நண்பர்களுக்கு நீங்கள் எவ்வளவு அங்கலாய்த்துக் கொண்டாலும், பளுவும் குறையாமல், நண்பரும் வாராமல், உங்கள் வாழ்வு மேன்மேலும் இருண்டு வருவதா யிருக்கலாம். நீங்கள் இதற்காக உங்கள் ஊழை, உங்கள் பிறப்பை, பெற்றோரை, உங்கள் தொழில் முதலாளியை, அல்லது பிறருக்கு நல்லின்பத்தையும் உங்களுக்குக் கடு வறுமையையும் கடுமைமிக்க சூழலையும் தந்த தெய்வங்களைப் பழிக்கலாம். நீங்கள் பழிக்கும் இத்தனையுமல்ல, பழிக்குரியவை! நீ உன்னைத் தவிர மற்றெல்லாவற்றையும் பழிப்பதிலிருந்தே தெரியவில்லையா, பழி உனதே என்று? ஒழுங்கமைதி வாய்ந்த உலகில் முறையீடு என்ற ஒன்றுக்கே இடமிருக்க முடியாது; ஏனெனில் எல்லாம் காரணகாரிய நியதிப்படியே நடை பெறுகின்றன. பழிதூற்றுவதால், நீ உன் தளைகளை அகற்றவோ, தளர்த்தவோகூட இல்லை. அவற்றை மேன்மேலும் இறுக்கவே செய்கிறாய். உன்னைச் சூழ்ந்த இருட்டை நீ குறைக்கவேயில்லை. அதனை மேன்மேலும் செறிவுபடுத்துகிறாய். வாழ்க்கையில் உன் குறிக்கோளை மாற்று. இத்தனையும் மாறிவிடும். தன்னம்பிக்கையும் உறுதியும் கொள். உன் தகுதி உயரும், உன் சூழல் மாறிவிடும். இல்லாததை விரும்புமுன், இருப்பதை நீ முழுதளவும் பயன்படுத்திக் கொண்டாயா என்பதுபற்றிச் சிந்தி. பெருநலங்களை அவாவுமுன், சிறுநலங்களைப் புறக்கணிக்காதிருக்கிறாயா என்று பார். சிறுநலங்களைப் புறக்கணித்துப் பெருநலங்களை வரவழைக்கிறேன் என்று உனக்குள் கூறி உன்னையே நீ ஏய்த்துக்கொள்ளாதே. ஏனெனில் பெரு நலங்களின் தன்மையை நீ குறுநலங்களிலேயே நன்கு அறிந்து கொள்ள முடியும். கீழ்த்தரச் சிறுபடிகளில் தேறியபின்பே சிறுவர் சிறுமியர் உயர்வகுப்புகளுக்குச் செல்ல முடியும். சிறுநலங்களின் வெற்றியில் தேர்ந்த பின்பே நீயும் பெருநலங்களில் தேறும் வழியைக் காண்பாய். கிட்டா நலங்களைப் பெறுவதற்கான வழிகளைக் கிட்டிய நலங்களைப் பயன்படுத்தியே நீ உணர்வாய். சேமக்காசுகள் பற்றிய விவிலிய நூற்கதை இவ்வகையில் சீரிய அறிவுரை தருகின்றது. பெருந்திருவாளன் ஒருவன் வெளிநாடு செல்கையில் தன் சேமப்பணத்ச் சரிசம கூறுகளாகத் தன் நண்பர்களிடம் தந்து “சேமமாக வைத் திருந்து திரும்பியவுடன் தருக!” என்று கூறிச் சென்றான். சிலர் அதனைச் சமயம் வாய்த்தவழி வட்டிக்கும் தொழிலுக்கும் உதவிப் பெருக்கினர். உடையவன் திரும்பி வந்ததும் முதலுடன் மிகைப்பணமும் தந்து, பெருக்கமுற்ற வகையும் கூறினர். அவர்கள் நல்லெண்ணங்கண்ட உடையவன் அம்மிகைபணத்தையும் முதலையும் அவர்களுக்கே தந்தான். ஆனால் சேமக்காசு பெற்றவருள் ஒருவன் மட்டும் அயலான் பணத்தை நாம் ஏன் இடையூறுவரக் கூடும் வழிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று வாளா இருந்து, உடையவன் வந்ததும், முதலைத் திருப்பித் தந்து தான் அதைப் பெருக்க எண்ணாததன் காரணத்தையும் கிளர்ந்தான். உடையவன் அவன் சிறுமதிகண்டு வருந்தி, உளஞ்சுருங்கி அப்பொருளை வாங்கிக் கொண்டான். உடையது பெருக்காதவனிடம் உள்ளதும் நிலைக்காது, பெருக்கமும் வாராது என்பதை இக்கதை சுட்டிக் காட்டுகிறது. ஒருவேளை நீ குடிசையில் வசிப்பவனாயிருக்க கூடும். உன் இருப்பிடத்தைச் சுற்றிலும் உடல் நலத்துக்கும் உள நலத்துக்கும் ஒவ்வாத சூழல்கள் இருக்கலாம். இன்னும் வாய்ப்பான இடமகன்ற வீடிருந்தால் நலம் என்று நீ நினைக்க லாம். அப்படியானால் நீ முதலில் இடமகன்ற மாளிகையில் இருக்கத் தகுதியுடையவனாக (உன்னை) ஆக்கிக் கொள்ளல் வேண்டும். அதாவது நீ இருக்கும் குடிசையை எந்த அளவு சிறிய மாளிகைக்கு அணித்தாக ஆக்கமுடியுமோ அந்த அளவு நீ முதலில் ஆக்க வேண்டும். எப்படியும் குறைந்தபடி அதனைக் கறையத் தூய்மை செய்தல் உன்னாலாகக் கூடியதே. உன் சுருங்கிய கையுறையால் அதை எவ்வளவு அழகாகச் செய்ய முடியுமோ, எவ்வளவு வாய்ப்புநலமும் இனிமையும் உடையதாகச் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்து முடி. உன் எளிய உணவை எவ்வளவு கவனமாகப் பக்குவம் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்து, உன் சிறிய பந்தியிலும் கவர்ச்சிபட விளம்புவாயாக. உன் கூடங்களில் கம்பளமிட உன்னால் முடியாமல் போகலாம். ஆனால் கம்பளத்திலும் இனிது முறுவல் பூத்த இன்முக வரவேற்பு, கனிவார்ந்த இன்னுரையாடல், வீடு மாளிகையாய் விடாமலிருக்கலாம்; ஆனால் மாளிகையில் வாழ்பவரிடையும் இராத அன்பமைதி, பெருமித உணர்ச்சி மாளிகையாகுமுன்பே உன் குடிசையை அதனினும் சிறப்புடையதாக்கும். உன் குடிசையின் சூழல் உன்னையும், உன் மதிப்பையும் உயர்த்திவிடுகிறது. அதன்பின் நீ மாளிகையை மிகுதி விரும்பா திருக்கலாம். ஆனால் மாளிகை வந்தெய்துவது உனக்கு எளிதாய் விடும். அது எதிர்பாராமலே கூட உனக்கு வந்தெய்தலாம். ஒருக்கால் நீ அவாவுவது, அவாவி அங்கலாய்த்துக் கொள்வது நேரமும் ஓய்வும் பற்றியாயிருக்கலாம். உன் வேலை கடுமையாகவும், வேலை நேரம் நீடித்ததாகவும் இருக்ககூடும். அப்படியானால் உன் ஓய்வு மிகக் குறைவாகவே இருக்கும். அதை மிகுதிப்படுத்த நீ துடிக்கிறாய். சரி. முதலில் நீ அச் சிறு ஓய்வுக் காலத்தை முழுதும் பயனுடையதாக்கு. அதன் பின்னே நீ மிகுதி ஓய்வை அவாவும் தகுதியுடையவனாவாய். உன்னிடமிருக்கும் சிறிதளவு நேரத்தைக்கூட நீ வீணாக்கினால், உனக்கு மிகுதி நேரம் கிடைத்து என்ன பயன்? சிறிதளவு நேரத்தில் சோம்பி யிருக்கக் கூடியவன் மிகுதி நேரத்தில் இன்னும் மிகுதியாக வல்லவா சோம்பியிருக்க நேரும்? நீ கருதுவதுபோல, நேர நெருக்கடியும் ஓய்வின்மையும் அவ்வளவு பெருந்தீங்குகளல்ல. அவற்றினும் பெரிய தீங்கு, அவற்றை நீ நன்கு பயன்படுத்தாமலிருப்பதே. அவை மிகுதி வாய்ப்புத் தராமலிருப்பதற்கும் அதுவே காரணம். ஓய்வுக் குறைவு என்ற, நன்மையும் தீமையும் அல்லாத, நடுநிலைப் பண்பின்மீது நீ உன் குறைபாட்டை விரித்து மூடியபின்பே, அது உனக்குத் தீங்காகக் காட்சி தருகிறது. என் வருங்கால வாழ்வு உன்னையே பொறுத்தது என்பதை நீ உணருந்தோறும் அத்தீங்குகள் உண்மையில் தீமைப் போர்வை போர்த்த உள்ளார்ந்த நலன்களே என்பதை நீ காண்பாய். வறுமை உனக்குப் பொறுமை, அவா ஆர்வம், மனஉரம் ஆகியவற்றை அளிக்கும் அரு மருந்து, ஓய்வுக்குறைவு உனக்கு ஊக்கமும், தளரா முயற்சி, விரைவு, சுறுசுறுப்பு ஆகிய திறங்களில் பயிற்சி தரும் ஆசான். ஒவ்வொரு கணமும் உன்னைக் கடந்து செல்லுமுன் நீ அதனை எட்டிப்பிடித்து அதன் மதிப்பேறிய நற்பயனைக் கைப்பற்றும் திறனை அது உனக்குக் கற்பிக்கிறது. கருநிறமண்ணே நல்லுரமாய் வளப்பமிக்க வண்ணமலர்கள் தருகிறது. அதுபோலத் துன்பமிக்க வறுமை யிலேயே மனிதப் பண்பின், நறுமணமிக்க வண்ணமலர்கள் அரும்புகின்றன. இடர்கள், தடங்கல்கள், இக்கட்டான சூழ்நிலைகள் ஆகியவற்றிடையேதான் நற்பண்புகள் வித்தூன்றி வளர்ந்து புகழ்வானோக்கி வளம் பெறுகின்றன. ஒருக்கால், நீ ஒரு கொடுங்கோல் தலைவன் அல்லது தலைவியிடமிருந்து அலுவல் பார்க்கிறாய் போலும்! உன்னை உன் தலைவர் கடுமையாக நடத்துகிறார் என்று நீ மனமழுங்கக் கூடும். இங்கும் இதனை நீ உன் பயிற்சிக்குரிய நிலை என்று கருதிப் பார். கடுமைகளுக்கும் கொடுமைகளுக்கு மாறாக மென்மைகளும் நன்மைகளும் செய்து பொறுதி காட்டிப்பார். புறத்தே உள்ள குறை குறையாயிருக்கலாம். ஆனால் நீ அதனையும் உள்ளஉரம், ஆன்மீக வலுப்பெறுவதற்குரிய சாதனமாக்கினால், நீ நலமுறுவது உறுதி. அதுமட்டுமன்று. ஒருசமயம் உன் வாய்விடா உயர்பண்பு உன் தலைவருக்குப் படிப்பினையாகலாம். அவர் தன் நடத்தைக்கு வெட்கி உன் நிலையை உயர்வுபடுத்தலாம். அல்லது நீயாக உயர்வுற்று, உன் சூழ்நிலை மாற்றத்தால் வேறு நிலை பெறலாம். எப்படியும் உன் அடிமைத்தனத்தையும் துன்பத்தையும் பற்றிக் குறை கூறுவது அவற்றைப் போக்க வழியல்ல, அவற்றை உறுதிப்படுத்தவே வழியாகும். நேர்மாறாகப் புற அடிமைத் தனத்துக்குக் காரணமாக, அல்லது அதற்குத் தகுதியாவதாக, உன் உள்ளத்தின் அகத்தே இருக்கக் கூடும் பண்புக் கூறுகளைத் துருவித்தேடிக் கண்டுணர்ந்து மாற்று. அவற்றால் அடிமை எண்ணங்கள் மாறி, அடிமைப் பழக்கங்கள் ஒழியும். அதன்பின் நீ அடிமையை ஒழிக்க எண்ணினாலும் எண்ணாவிட்டாலும், அடிமை தானே கட்டாயமாக ஒழியும். நீ உனக்கு அடிமையாயிருக்கவில்லையானால், வேறு எவரும் உன்னை அடிமை யாக்க முடியாது. நீ உன்னை அடக்கியாண்டால், உன் முன் உள்ள தடங்கல்களை எதிர்த்து வீழ்த்தினால், அதன்பின் உன்னை அடிமை கொண்டவர்கள் உன் அன்படிமையாவது உறுதி. செல்வர் கொடுமைக்கு நீ ஆளாகிறாய் என்று குறைப் படாதே. நீ செல்வனானால் நீ கொடுமைக்காரனாக இருக்கமாட்டாய் என்று நீ நினைக்கிறாயா? காலங்கடந்த நிலவர அமைதிமுறையை நினைத்துப்பார். கொடுமைப்படுத்து கிறவன் கொடுமைக்கு ஆளாவான்; கொடுமைப்படுவதை எண்ணி நைபவன் கொடுமைப்படுத்தாமலிருக்கமாட்டான். இவ்வமைதி முற்றிலும் நேர்மை வாய்ந்தது. இன்று கொடுமைப்படுத்து பவன் நாளைக் கொடுமைக்கு ஆளாகப் போவது உறுதி அதிலிருந்து தப்பும் வழி கிடையாது. இன்று கொடுமை பற்றிக் குறைப்படும் நீ, முன்னம் அல்லது முன்னைய ஒரு வாழ்வில் செல்வனாயிருந்து கொடுமைகள் செய்து, அவற்றின் பயனையே இப்போது நுகருதல் கூடும். எனவே குறைபடுதலால் பயன் ஏற்பட வகைகிடையாது. அப் பண்பு மீண்டும் கொடுமை செய்யும் பண்பையும் கொடுமையைத் துய்க்கும் பண்பையுமே மாறி மாறி வளர்க்கும். முழுதுறழ் நேர்மை. முழுதுறழ் நலத்தில் சிந்தனையைச் செலுத்தி, நன்னம்பிக்கையையும் நல்லுரத்தையும் பெறும்படி நற்பயிற்சி செய். நிலையற்ற இன்பதுன்பங்களிலிருந்து நிலையான துன்ப நீப்பிலும் இன்ப வளத்திலும் கருத்தைப் பதியவை. தன் மதிப்பினும் உயர் பண்பு வேறில்லை. தன் இரக்கத்தினும் இழிபண்பும் இழிவுபடுத்தும் பண்பும் வேறு கிடையாது. தன் மதிப்பைப் பேணி வளர்த்து, தன் இரக்கத்தைக் களைந்தெறிக. அது உன் இதயமலரின் உள்ளிருந்தரிக்கும் புழுவாய் அதன் வளர்ச்சியைத் தடுத்து அழிக்கும். பிறரை எதற்கும் குறை கூறாதே. உன்னையே எதிலும் குறைகூறிக் கொள்ளப்பழகு. ஏனெனில் நீ பிறரைத் திருத்தமுடியாது. உன்னை மட்டுமே திருத்த முடியும். பிறர் பகைமையை நீ அடைய முடியும். உன் பகைமையை நீ பெற முடியாது. தற் குறை காணும் பழக்கத்தாலும் தன் திருத்தத்தாலும் நீ எல்லையற்ற இயற்கையின் அடித்தளத்தின்மீது உன் வாழ்வின் அடித்தளம் பதிப்பாய். அடித்தளம் உறுதியாயிருந்தால், கட்டடம் உறுதியில் பிற்பட்டு விடாது. புறவறுமையையும் புறத்தேயுள்ள தீய சூழலையும் அறவே அகற்ற வேறுவழி கிடையாது. அவற்றுக்கு வழி வகுத்த, வகுத்து வளர்க்கிற, குறுகிய தன்னலம், தன்னடக்கமின்மை, போட்டி, பொறாமை, பகைமை முதலிய அழிவுப் பண்புகளை அகற்றுவது ஒன்றே அதற்கு வழி. உண்மைச் செல்வத்துக்கு வழி அகச் செல்வத்தைப் பெறுவதே. ஏனெனில் செல்வம் இருப்பவனுக்குக் கூட இவ் வழியிலன்றி அச்செல்வம் கிடைப்பதில்லை. செல்வத்தை நாடுபவன் அதன் மெய்ப்பயன் நோக்கி அதன்மீதுள்ள தன்னலப் பற்றை விட வேண்டும். இந்த ஒரு செய்தியில் மட்டுமாவது கொண்டவன் பட்டான், பட்டவன் கொண்டான் என்ற மூதுரை நிறையுரை ஆகும். தன்னலப்பற்று தன்னலத்தைக் கூட நிறைவு படுத்தாது. தன்னலமற்ற பொதுநலப்பற்று பொதுநலம் வளர்ப்பதுடன், தன்னலத்தையும் நிறைவு படுத்தும். அதுவே செல்வத்தின் முழுநிறை பயன் அளிக்கும். அதுவே அதன் நிலையான மெய்ப்பயனும் ஆகும். இந்த மெய்ப்பயன் பிறர்க்கு நலம் செய்வதுடன் நில்லாது. அதற்கு முன்னிலையாக அது செய்பவனையே நலப்படுத்திவிடும். பொதுநல நோக்கமில்லாதவன் செல்வம் பெறுவதரிது. பெற்றாலும் அது அவன் அகவறுமையை மிகுதிப்படுத்தி அவன் பழைய வறுமைநிலை கடந்து அதனினும் கொடிய பொல்லா வறுமைக்கு வழிவகுக்கும். நன்மையோ, தீமையோ, எதுவாயினும் ஆகுக - உள்ளத்தின் கருத்துக்கள் எவற்றையும் மாற்றுவதை விடப் புதிய கருத்துக்கள் எவற்றையும் மாற்றுவதை விடப் புதிய கருத்துக்களைப் புகுத்தல் எளிது. புதிய கருத்துக்கள் வளருந் தோறும் பழைய கருத்துக்கள் மங்கிப் படிப்படியாக அடங்கும். இவை சிறிதுகாலம் நீடித்தாலும் கேடில்லை. பழம் பண்பாய் நலிவுறுகிறது. இந்த நல் ஆக்க முறையை தவிர, அகப் பண்புகளில் அழிவும் கிடையாது; மாற்றமும் கிடையாது. ஆகவே, மாற்றம் விரும்புபவன் அகத்தே ஆக்கம் பெருக்கக்கடவன். நீ உன் குறுகிய தன்னலத்தை விடாவிட்டால், உன்னினும் உனக்குப் பகைவர் இல்லை. பகைமையும் பகைவரும் உன்னைச் சூழ்வர். உன் குறுகிய தன்னலத்தை நீ விட்டு விட்டால், உன்னினும் உனக்கு நண்பர் இருக்கமாட்டார். நட்பும் நண்பரும் உன்னைச் சூழ்தர நீ நிமிர்ந்து வாழ்வாய். கிழிந்த தன்னலச் சட்டை அகன்றபின்தான், எல்லையற்ற அன்பு என்னும் அகச்சட்டை செயலாற்றும். அது தரும் செல்வம் பெரிது. மேனிலை நாடுவோர் உயர்ந்த நோக்கத்தின் பானிலைப் படூஉம்எலாப் பொருளும்; ஏதுமே தீநிலை எய்துறா; தீதின் பாலன வானுறப் பறந்திடும் சிறைவிரித்தரோ! 1 களிகொளுங் கதிர் பரப்பும் தாரகை ஒளிதரத் துய ராகுங் கருமுகில் வளரு மேனும் இராப்பின் பகலெனத் தளரும்; பொன்னொளி தாழ்வரை மேவுமே! 2 காலமென்னும் கனவரை உச்சியாம் கோலவெற்றி குறுகும் படிகளே தோல்வி; செல்பவர் நற்றுணை இன்பமால்! சாலும் நட்டமும் பேறாய் அமையுமே! 3 துன்பப் பாதை தொடரும் பேரின்பமே, அன்புச் சொல் செயல் எண்ணங்கள் ஆரவே! மின்படர் முகி லோடு கருமுகில் தென்படும் ஒருங்கே மீநெ றிக்கணே! 4 செங்கதி ரொளிபடர் முகடு நோக்கிச்செல் பங்கமில் பாதையில் படரும் நீண்முகில் தங்ககிலாது, கலையும்; வெற்றியின் பொன்குவ டெதிருறப் பொலிந்து நிற்குமே! 5 விளங்கும் ஆர்வ விரிபொழில் தடம் வளங்கெடத் துயர்க் கண்ணீர் விளைவுற, உளங்கொள் அச்சமும் ஐயமும் பாவியே களங்க மூட்டும் கரும்புய லென்னவே! 6 இடுக்கண் துன்பம் இடையூறு இவையெல்லாம் நடுக்க, நேச மிடைகெட நிற்பினும் அடுத்து மேற்செல் படிகள் இவையெனப் படுத்து மேம்படு பண்பின் உயருவாய்! 7 உனக்கும் ஊழ்நில வாழ்வில் அடங்கியே இணக்க மோடுநேர் வழியின் ஏகிய கணக்கி னாரைக் கனிவுடன் காத்து அன்பு வணக்கஞ் செய்து வரவேற் பளிக்குமே! 4. நினைவின் ஆற்றல் இயற்கையின் மிகப் பெரிய ஆற்றல்கள் யாவும் ஓசையற்ற அடங்கிய ஆற்றல்களே. ஓசையும் விரைவும் உடைய ஆற்றல்கள் கரையறுத்தோடும் நீரோட்டம் போன்றவை. அவை கடுங் கற்பாறையை ஒன்றும் செய்யமாட்டா. ஆனால் கரையார்ந்து தேங்கிய நீர் கருங்கற்பாறையையும், சாய்க்கும் வலுவுடையது. ஓடு நீரின் வலு முன்னோடும் நீரின் வலுவாக மட்டுமே இருக்கும். தேங்கிய நீரிலோ முன்னோடு நீர் பின்வரும் நீருடன் தங்கி, முழுநீர் ஆற்றலாகும். கட்டற்ற நினைவின் ஆற்றல் ஓடுநீரின் ஆற்றல் போன்றது. அது தற்காலிக வெற்றிதரும். நிலையான வெற்றி நாடாது. ஆனால் அடக்கமுடைய உள்ளத்தின் நினைவாற்றல் தேக்கி வைத்துப் பெருக்கப்பட்ட நீரின் ஆற்றல் போன்றது. ஆற்றலைச் சேமித்து வைப்பவர் அதனை அழிவுக்கும் பயன்படுத்தலாம்; ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம். புற ஆற்றல்களாகிய தீ, நீராவி, மின்வலி ஆகியவற்றில் இந்த இருதிறப் பண்பைத் தெளிவாகக் காண்கிறோம். புறத்தே கண்டஇம் மெய்ம்மையை அகத்தேயும் காணலாம் என்பதைப் பலர் கவனிப்பதில்லை. நினைவாற்றல் உண்மையில் தீ, நீராவி, மின்வலி ஆகியவற்றைக் காட்டிலும் பன்மடங்கு வல்லமை வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இப்புற ஆற்றல்களைக் கண்டுபிடித்தது மனிதனின் அக ஆற்றலாகிய நினைவாற்றலே. வாழும் மனிதர் ஒவ்வொருவரிடத்திலும் இந்நினைவாற்றலின் ஊற்று உண்டு. பலரும் அதனை வளர்த்துப் பெருக்கித் தேக்கவும் செய்கின்றனர். ஆனால் அதனை வாழ்க்கையின் ஆக்கத்துக்குப் பயன்படுத்தி மனித இனத்துக்கு உய்தி தேடுகின்றார்கள் ஒருசிலர்; அதனை அழிவுத்துறையில் ஈடுபடுத்தி இன அழிபாடு செய்கின்றனர் மற்றும் மிகமிகப் பலர்! புற ஆற்றல்களை வசப்படுத்தி அடக்கி ஆள்வதில் மனிதன் இன்று பெருமுன்னேற்றம் அடைந்துள்ளான். ஆக ஆற்றல்களை வசப்படுத்தி அடக்குவதில் இன்னும் அந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூற முடியாது. இதற்கு அடிப்படைக் காரணம் உண்டு. “உன் பகைவர்களை நேசி” என்ற திருநூல் வகுத்த கட்டளையின் உள்ளார்ந்த பொருளை இக்கால மக்கள் அறியவில்லை. அது இயேசு பெருமான் உயர் ஒழுக்கக் குறிக் கோளைக் காட்டுவதாகக் கொண்டு, அதை மனித இனத்தின் நடைமுறை ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்ட ஒரு பித்துக் கொள்ளி வேதாந்தமாக்கி விட்டனர். இக் கட்டளையின் மெய்ப் பொருளை மனித இனம் உணர்ந்தால், அதை நடைமுறைக் குகந்த ஒரு இன்றியமையா மூல முதற் கட்டளை என்று கண்டால், மனித இனம் புறப் பண்புகளை அடக்கி யாள்வது போல, அகப் பண்பையும் அடக்கியாள முடியும். “நண்பர்களை நேசி” என்பது இயற்கைநெறி; “பகைவர்களை நேசி” என்பது இயற்கையல்ல. இயற்கைக்கு அப்பாற் பட்ட, அல்லது மேற்பட்ட தொலைக் கனவுக்குறிக்கோள் என்று கொள்ளப்படுகிறது. இது முற்றிலும் சரியல்ல. நண்பர்களை நேசி என்பது இயற்கைநெறியன்று: ஆராயா மனித இயல்பு, அது ஒழுக்கநெறியுமன்று: ஏனென்றால் தன்னலமுடைய எவனும் நண்பனை நேசிப்பான். நண்பரை நேசியாதவன் கெட்டவ னல்லன்; அறிவற்றவன். பகைவரை நேசி என்ற கட்டளை தன்னடக்கத்தின் முதற்படி. பகைவரிடம் பகைமை முனைப்பாய் எழும். அதனடிப்படையாக வெறுப்பு, சீற்றம், அழுக்காறு, வஞ்சம் ஆகிய எல்லாக் குணங்களும் வளர்கின்றன. பகைவரிடம் இவற்றைப் பயன்படுத்திப் பழகியவனிடம் இப்பண்புகள் படிந்து, பகைவரல்லாதவரிடமும் செயலாற்றும். பகைவரை நேசிப்பதனால், தன்னடக்கம் ஏற்படும். இத் தீய பண்புகள் பயிற்றுவிக்கப்படாது விலகி அகலும். தவிர, தன்னடக்கமில்லாத மனிதன் பகைவர் யார், நண்பர் யார் என்பதை அறிய மாட்டான். அவன் பகைவரை நண்பராகவும் நண்பரைப் பகைவராகவும் கருதுவான். ஆகவே “பகைவரை நேசி” என்ற கட்டளையை மீறும்போது அவன் பெரும்பாலும் உண்மையான நண்பர்களிடம்தான் நேசம் காட்டாது போகிறான். போலிநண்பரிடமே நேசம் காட்டாது போகிறான். போலி நண்பரிடையே நேசம் காட்டிக் கெடுகிறான். தன்னலமாகிய நினைப்பில் உள்ளத்தின் பல்வகையாற்றல்களாகிய நீரோட்டச் சுழிகளுக்கும் அடிமைப்பட்டு மனிதன் துரும்புபோல் அல்லாடுகிறான். ஆற்றல்களை அவன் பயன்படுத்தவேண்டுமானால் அவன் அந்நீரோட்டங்களில் செயலற்று மிதப்பவனா யிருக்கக்கூடாது. தான் இயங்குவதுடன் அதையும் பயன்படுத்தி இயக்குபவனாயிருக்க வேண்டும். தனிமனிதன் வாழ்வு தாழ்வு அவன் உள்ளத்தின் நினைவாற்றல்களால் ஆக்கவும் அழிக்கவும் படுவன. அதுபோலவேதான் ஒரு தேசத்தின் வாழ்வுதாழ்வுகளும் அதன் பொதுமக்கள் நினைவாற்றல்களின் பயனாக ஏற்படுகிறது. இவ்வுண்மையை விவிலிய நூலின் எபிரேய முனைவர் உணர்ந்திருந்தனர். மக்கள் வாழ்க்கைப்பண்பை ஊன்றிக் கவனித்தே மக்கள் அவர்கள் வருங்கால வாழ்வைப்பற்றி முன்னறிந்து கூறியும், எச்சரித்தும் வந்தனர். போர்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் ஆகிய யாவும் மக்கள் தம் நினைவாற்றல் களைத் தவறான பாதையில் செலுத்தியதனாலேயே தலை யோங்கின என்று அவர்கள் கண்டுணர்ந்து கூறினர். இவை நாட்டின் எந்த ஒரு தனிமனிதன் தன்னலத்தாலும் ஏற்படவில்லை. நாடுமுழுவதும் ஒன்று என்ற பரந்த பொதுநலத்துக்கு மாறாக, குறுகிய தன்னல வாழ்வில் பிரிவுற்று வாழ்ந்ததன் யன்களேயாகும். மனிதன் செயல்வெற்றிகள் யாவும் முதன்முதலில் நினைவாற்றல் வெற்றிகளின் கனவாகவே தொடங்கின. மனிதவாழ்வில் புறநிகழ்ச்சிகள் அவன் அகவாழ்வின் புறப் படிவங்களே. ஆனால் செயலற்ற வெற்றிகளுக்குக் காரணமான நினைவாற்றல்கள் ஆரவாரமிக்க நினைவெழுச்சிகளா யிருக்கமாட்டா. அமைதியான அடங்கிய நினைவாற்றல் களாகவே இருக்கும். கலையாசிரியன், புதுவது புனைவோன், சிற்பி ஆகிய யாவருமே இவ்வடங்கிய ஆற்றலின் உதவியால் தம் உள்ளத்தில் முதலில் கட்டமைத்த உருவங்களையே பிற்படச் செயற்களத்தில் நிறைவேற்றுகின்றனர். நினைவாற்றல்கள் இயற்கையமைதியோடொட்டி ஒழுகும்போது, அவை இயற்கையால் பேணப்பட்டு ஆக்க ஆற்றல்களாகின்றன. செயற்படிவம் பெறுகின்றன. முழுநிறை நலமாகிய இயற்கை நலத்தில் உறுதியான பற்றுக்கொண்டு, அதற்கிணங்கத் தம் நினைவாற்றல்களை ஒழுங்கமைப்பவர், அவ்வியற்கை நலத்தின் வரம்பற்ற வல்லமையில் பங்குகொள்கின்றனர். அவன் படைப்பாற்றலில் அவர்கள் ஒரு கூறாகின்றனர். பற்றுறுதி கொள்க, பற்றுறுதி மூலம் வாழ்க, (க்ஷநடநைஎந யனே லுடிர ளுhயடட டுiஎந) என்ற திருமறைவாசகம் இதனாலேயே ஏற்பட்டது. வாழ்க்கைக் கடைத்தேற்றமாகிய நீள்நலத்தின் நுட்பம் இது. தீமையின் எதிர்மறையாற்றலாகிய இருட்செறிவினின்று விடுபடுவதற்காக, நிறைநீள் ஒளியாகிய இறைவன் ஆற்றலுடன் இயைபவன் அவ் ஆற்றலின் உயிரொளி வண்ணமாய், உறுதி இன்பம் பெறுகிறான். அச்சம், கவலை, ஐயம், மனக்கசப்பு, வெறுப்பு ஆகியவை இப் பற்றுறுதியில்லா அறியாமையின் விளைவுகள் இவையனைத்தும் தன்னலமென்ற வித்தினின்றே பிறப்பவை. தன்னலம் தீமையில் நம்பிக்கை கொள்கிறது. நிறைநலமாகிய தெய்வீக ஆற்றலில் நம்பிக்கை இழக்கிறது. உண்மையான அதாவது தகுதியற்ற இறைமறுப்பு (நாத்திகம்) கடவுளில்லை என்று கூறுவதோ, கடவுளைப் பற்றிக் கவலையில்லாமலிருப்பதோகூட அல்ல. கடவுட் பண்பாகிய பொது நிறை நலத்தில் பற்றுறுதியோ, நம்பிக்கையோ இல்லா திருப்பதே! மெய்யான இந்த இறைமறுப்பைக் கோட்பாடுகளினால் உணர முடியாது; செயல் துறையிலேயே உணரவேண்டும். பொது நலப்பற்று எந்த வாழ்வில் இல்லையோ, தன்னலமும் தற்பற்றும் எங்கு வாழ்க்கைக்குறிக்கோளாகிறதோ, அங்கே இறைமறுப்புத் தாண்டவமாடுகிறது. கோட்பாட்டில் கடவுளை மறுத்து வாதிடுபவரிடம் தெய்விகப் பண்பு இருக்கக் கூடும். அதேபோலக் கடவுள் பெயரை ஓயாது கூறிக்கொண்டிருக்கும் தன்னலக்காரரிடம் தீய பண்பாகிய இறைமறுப்புப் பண்பு தங்குதடையின்றி நிலவக்கூடும்! தன்னலஞ்சார்ந்த எதிர்மறைப்பண்புகள் தனிமனிதனுக்குத் தொடக்கக் கவர்ச்சி தரலாம். ஆனால் அந்தக் கவர்ச்சி அடிமைப்பண்பின் கவர்ச்சி. அது நினைவாற்றல்களை மனிதன் இயக்குவதற்கு மாறாக அவற்றுக்கு அவனை அடிமைப்படுத்தி, அவற்றால் அவன் இயக்கப்படும்படி செய்கிறது. பற்றுறுதி, அமைதி, குறிக்கோளுடமை, பொதுநலநாட்டம் ஆகிய ஆக்கப் பண்புகளிலிருந்து அது மனிதனைப் பிரித்துக் குலைக்கிறது. மறைபண்பின் இக்கவர்ச்சியிலிருந்து விலக நேர் பண்பாகிய ஆக்கப்பண்புகளைப் பேணிப் பயிற்சி பெற வேண்டும். இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. புறமுகநோக்கு அடிமைப்படுத்தும். ஆகவே ஆண்மைதரும் அகமுகநோக்கிற் பயிலவேண்டும். படிப்படியாகப் புற உலகப்போக்குகளின் அகநிலைக் காரணமறிந்து, அகநிலை அறிவையும் அகநிலை ஆராய்ச்சியையும் பேணி வளர்க்க வேண்டும். தீமையை மறுப்பதனால் அது போய்விடாது. நன்மையை அவாவுவதனால் அது வந்துவிடாது. தீமையின் காரணமறிந்தே அதை விலக்கமுடியும். அப்போதே நன்மையில் நம்பிக்கையும் பற்றுறுதியும் ஏற்படும். தீமையின் காரணம் அடிமைத்தனம். உள்ளத்தின் போக்கைக் கட்டுப் படுத்தும் நல்லாண்மை இல்லாததால் அது தோன்றி வளர்கிறது. உள்ளத்தை உள்நின்றியக்கும் ஆண்மையை, தன்னடக்கத்தால் படிப்படியாகப் பேணும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது நல்லுணர்ச்சியினால் ஏற்படுவதன்று. உணர்ச்சிகடந்து அது செயலாற்ற வேண்டும். அது அறிவு முயற்சியன்று. அறிவு கடந்து செயல்துறையில் அது முனைய வேண்டும். தன்னடக்கப் பயிற்சி ஒருவனுக்குத் தன் அகநிலை நினைவாற்றல்கள் பற்றிய அறிவைத் தருகிறது. அவற்றை அவன் இயக்கப் பழகுகிறான். அகநிலைப் பண்பின் இயக்கம் புறநிலை உலகை இயக்கும் ஆற்றலாகிறது. உலகம் தனது என்ற தன்னம்பிக்கையும், உலகை இயக்கும் நல்லாற்றலில் பற்றுறுதியும் ஏற்படுகிறது. அவன் வாழ்க்கையில் சலியா நோக்கம் உடைய வனாகவும், பொது நலப்பற்றுடையவனாக - அஃதாவது தெய்வ நம்பிக்கை உடையவனாகவும் அமைகிறான். பற்றுறுதியற்றவர் கைப்படும் காரியங்களெல்லாம் தகர்கின்றன. ஆரவாரத் தெய்வப் பற்றுடையவர் வாழ்வு மலைப்பையும் ஏமாற்றத்தையும் உண்டு பண்ணுகிறது. நேர் மாறாக, உண்மைத் தெய்வப்பற்றுடையவன் வாழ்வில் அமைதி தவழ்கிறது. ஏனெனில், அவன் தெய்வப்பற்றுப் புற உள்ளமறியாத அக உள்ளப்பற்று அது அவன் வாழ்க்கையை உள்ளூர நின்று மேம்படுத்துகிறது. வெற்றி, பயன், ஆற்றல் இவை வாழ்வில் முன்னேறிச் செல்பவனின் மூன்று படிகள். வெற்றி நல்வாழ்வைத் தொடங்கி வைக்கிறது. பயன் அதை வளர்க்கிறது. ஆற்றல் அதில் எதிர்பாராது அல்லது எதிர்பாராச் சமயத்தில் வந்துறும் இடர்களையும் இடையூறுகளையும் எதிர்த்து மேலும் வெற்றி பெருக்குகிறது. அகப்பண்புகளை இயக்குபவன் தொடக்கத்தில் அடையும் தோல்விகளே அவன் வெற்றிக்குரிய படிகளாகின்றன. வெற்றியும் அதுபோல மேலும் பெரு வெற்றிகளுக்குப் படிகளாகவே அமையவேண்டும். வெற்றியின் விளைவாக ஏற்படும் இப்பெருக்கமே அதன் பயனாகும். இத்தகைய பயன்களின் தொகுத்த சேமிப்பே ஆற்றல். இடையூறுகள் - அஃதாவது இன்னும் வெல்லப்படாத புறச்சூழல் கூறுகளின் விளைவுகள் ஏற்பட்டபோது, ஓடுநீரைத் தடுக்கும் தடையை நீர்த்தேக்கம் கவிந்து தாண்டுவதுபோல, அல்லது தாக்கித் தகர்ப்பது போல, இவ்வாற்றல் செயலாற்றி அச்சூழலை மாற்றியமைக்கிறது அல்லது ஒழிக்கிறது. நீ வாணிகம் போன்ற ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். தொழில் வளமாகத் தான் நடக்கின்றது. ஆனால் அணிமையில் பேரிடர் வரக்கூடும் என்று உனக்குத் தோன்றுகிறது. நீ அதுபற்றி அச்சமோ, ஐயமோ, கவலையோ கொண்டால், அந்த இடரைத் தடுப்பதற்கு மாறாக, அதை விரைவில் வருவித்துக் கொள்பவனாகவே இருப்பாய். உன் அச்சம், ஐயம், கவலை ஆகியவற்றை நீ எச்சரிக்கையாக, விழிப்பாக மாற்று. இப்புதிய வடிவில் அவை உனக்குத் துணை தரும். உன் முந்திய வெற்றி தோல்விகளின் படிப்பினைகளைப் பயன்படுத்து - அவை உனக்கு அரணாகும். “இடர்காத்து வெல்வேன், இடர்வரினும் தளரேன்” என்ற நம்பிக்கையும் உறுதியும் கொள். அது வந்த இடரையும் தடுத்து, வரப் போகும் இடர்களையும் முளையிலேயே களையும்.கவலையில் ஆழ்ந்து மனம் செல்லவிடாதே. வேலையில் உள்ளத்தை ஈடுபடுத்தி அதனை ஊக்கப்படுத்து. இவ்வகையில் கவலையை அகத்தே இடம் பெறாமல் ஒதுக்கியபின், ஓய்ந்த ஒன்றிரண்டுமணி நேரங்களில் வகைதுறைகள், வழி துறைகள் பற்றிச் சிந்தி. உன் அகத்தினுள்ளிருந்தே உனக்குத் தெய்விக உதவி வரும். துன்பநேரத்தில் துன்பத்தை நினையாமல் இன்பத்தை நினை. முடியுமானால் துன்பத்தை இன்பமாகக் கருதப் பழகு. தனிமனிதன் தோல்வி சமூகத்தின் வெற்றியென்பதை உணர். ஆனால் அத் தோல்வியை முழுவதும் சமூகத்தின் வெற்றியாக்குவது உன் கடமையுணர்ச்சியை, மனச்சான்றைப் பொறுத்தது. “நான் என் கடமையைச் செய்துவிட்டேன். இனிவருவது வெற்றிதான். தனிப்பட்ட தோல்வி வரினும் அது சமூக வெற்றியே” என்ற எண்ணம்தான் தோல்வியைத் தடுப்பதிலும், அதை வெற்றிப் படியாக்குவதிலும், தனிப்பட்ட தோல்வியைப் பொது வெற்றியாக்குவதிலும் ஆற்றல் வாய்ந்தது. அத்தகைய மனச்சான்றுறுதி யுடையவன் தன் உயிருக்கு இறுதிவரினும், இதழ்தன்னைச் சூழ்ந்து பேயாட்டமாடினாலும், தயங்காது புன்முறுவலுடனே அவற்றை அணைப்பான். அத்தகையவர்களை உருக்குலைக்கும் செய்தி உலகில் எதுவுமே இராது. எவ்வளவு கடுமையான சிக்கல்களையும் அமைதியான ஆற்றல் வாய்ந்த சிந்தனை தீர்க்கும் வல்லமையுடையது. ஏனெனில் அமைதியிடையேதான் அறிவின் ஒளி ஓட்டாங்க மாகச் செயலாற்றும். ஆற்றல் சிக்கல்களை அறுக்கிறது. ஒளி வழிகாட்டுகிறது. அமைதி ஆற்றலுக்கும் அறிவுக்கும் தக்க சூழ்நிலைவண்ணம் ஆக்குகிறது. புறப்பகை எதற்கும் நீ அஞ்சவேண்டுவதில்லை. அவற்றை அல்லது அவர்களை நீ எளிதில் வெல்ல முடியும். ஆனால் அகப்பகைக்கு அஞ்சு. அது புறப்பகையை உண்டு பண்ணுவதுடன், அதனுடன் சேர்ந்து அதனை வளர்த்து வலிமைப்படுத்தும். ஆனால் புறப்பகை பெரிது. கண்ணுக்கு எளிதில் புலனாவது: அகப்பகை நுண்ணியது. கண்ணுக்குப் புலனாகாதது. அதைத் தெளிவாகக் காண அமைதி என்னும் விண்ணொளியும், அறிவு என்னும் கண்ணொளியும், ஆற்றல் என்னும் காட்சிக்கருவியும் சேர்ந்து செயலாற்ற வேண்டும். அகப் பகையை இங்ஙனம் கண்டபின் புறப்பகையைக் காண வேண்டிய தேவையோ, பொருட்படுத்த வேண்டிய நிலையோ இராது. ஏனெனில் உண்மையான பகை அகப்பகையே. புறப்பகை அதன் நிழல் மட்டுந்தான். அகப்பகையை நீக்கிய அன்றே, புறப்பகை அகலும். கதிரவனை மறைக்கும் சிறுமுகில்கீற்றின் நிழல், நிலத்தில் பல கல்தொலை அளாவிப் பரவியுள்ளது. அதுபோல சிறு நுண்துகள் அளவான அகப்பகையே மிகப்பெரிய புறப்பகையாக நிழலாடும். நீ எண்ணுகின்ற ஒவ்வோர் எண்ணமும் உன் உள்ளத்திலிருந்து வெளிச்செல்கின்ற ஒவ்வோர் ஒளி அலை. இவ்வலைகள் புறப்பொருள்கள்மீது பட்டதும் அவை அவற்றைத் தம் வயமாக்குகின்றன. அதுமட்டுமன்று. அவை உனக்குப் புறம்பே யுள்ள பிற உள்ளங்களில்பட்டு, அவற்றில் தகுதியுடைய இடங்களில் தங்கி, அவ்விடங்களை உன் வயமாக்கி, திரும்ப உன் ஆற்றலாக உன்னிடமே வருகின்றன. அவை பின்னும் உன் உள்ளப் பண்புகளை மாற்றுகின்றன. உள்ளங்களுடன் உள்ளங்கள் இங்ஙனம் ஓயாது எண்ண அலைகள் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன. மனித உள்ளத்தைப் பலர் தனித்த, நாற்புறமும் கட்டுண்ட நிலையான ஒரு குட்டையாக அல்லது குளமாக எண்ணுவது வழக்கம். ஆனால் உள்ளத்தின் பண்பு இதுவல்ல. ஒவ்வொரு மனித உள்ளமும் இயற்கையின் ஓர் அலையாகவே இயங்கு கிறது. அலைகள் எழுப்பும் சிற்றலைகள் அல்லது திவலைகளே எண்ணங்கள். சிற்றலைகளின் திரளாகவே அலை எழுகிறது. அதேசமயம் அது எழுப்பும் சிற்றலைகள், அடுத்த அலைகளையும் இயக்கி, அடுத்த அலைகளால் தாமும் இயக்கப்படுகின்றன. இவ் அலைகளுக்குத் தனித்த நிலையான உருவமும் வடிவமும் பொருண்மையும்கூடக் கிடையாது. ஆனால் எல்லா அலை களும் ஒரேகடலின் இயக்கக் கூறுகளே. உள்ளங்களும் இவ்வாறே முழுதும் தனித்தன்மையற்றவையாய், ஒன்றையொன்று இயக்கியும் ஒன்றாலொன்று இயக்கப்பட்டும், இயற்கையின் உள்ளமாகிய கடலில் அலைகள்போல எழுந்தெழுந்து அமிழ்ந்து, மீண்டும் உருவா கின்றவையே. அவற்றின் ஆக்கமும் இயக்கமும் ஒரேகடலின் பகுதியும் ஒரே கடலியக்கத்தின் ஆக்கமுமேயாகும். உள்ளமாகிய அலை அடுத்த உள்ளமாகிய அலையை அழிக்கும் அழிவுப் பண்பே உள்ளத்தின் தன்னலம். அடுத்த அலையுடன் மோதுவதால் அதுதானும் அழிவுக்கே ஆளாகிறது; இதையே நாம் தீமை என்கிறோம். ஓர் உள்ளத்தின் தன்னலம் இன்னோர் உள்ளத்தின் தன்னலத்தையே பெருக்கும். இதற்கு நேர்மாறாக ஓர் உள்ளத்தின் பொதுநல ஆர்வம் அடுத்த உள்ளங்களாகிய அலைகளிலும் அதே பொது நல ஆர்வத்தைத் தூண்டி, எல்லா உள்ள அலைகளையும் ஒருங்கே இயக்கும் பொது உள்ளமாகிய சமூக நலம் என்னும் கடல்வெள்ளம் இதனால் எல்லா அலைகளின் இயக்கமாக இயங்கும். சமூக நலம் வளரும் அலைகளில் இயக்கங்களின் அடிப்படை கடலே ஆவதுபோல, எல்லாத் தனி மனித நலங்களும் சமூக நலனையே மூல முதலாகக் கொண்டவை. சமூகநல வளர்ச்சி அவை எல்லாவற்றின் வளர்ச்சிக்கும் இயற்கை மூலத்தளமாகிறது. அமைதியான தூய தன்னலமற்ற எண்ணங்கள் இங்ஙனம் தனி மனிதனை வளர்த்து, சமூகத்தையும் வளர்த்து, ‘எல்லார் வளத்தையும் ஒருவன் வளமாகவும் ஒருவன் வளத்தை எல்லார் வளமாகவும் மாற்றியமைக்கின்றன.” தனிமனிதன் துன்பங்கள் சுழிகள்! சமூகத்தின் பொதுத் துன்பங்கள் புயல்கள்! நல்ல பண்புகளும் பொது நலப்பற்றும் தனிமனிதனைச் சமூகத்துடன் பிணைத்து அவன் இயங்கும் எல்லையை விரிவுபடுத்துகின்றன. சுழிகள் இந்நிலையில் அவனைத் தாக்க முடியாது. துரும்பைச் சுழற்றும் சுழி பெரிய கட்டைகளையும் படகு கலங்களையும் ஒன்றும் செய்யமாட்டா. அதுபோலத் தன்னலச் சுழிகள் பொது நலப்பணியை அசைக்கமாட்டா. அத்துடன் தனி மனிதன் வளர்க்கும் உள்ள அமைதி சமூகத்திலும் அமைதியாய்ப் பரவுகிறது. கடலில் புயல் கொந்தளிப்பிடையே ஊற்றப்பட்ட எண்ணெய் அவ் வெள்ளத்தை அமைதிப் படுத்திவிடும் என்று கூறப்படுகிறது. அதுபோல இச்சமூக அமைதி புயல் வேகத்தையும் தணித் தாற்றும் ஆற்றலுடையது. உள்ள உரம், வீரம், தோல்விகளால் சலியாத மனப் பண்பு ஆகியவை அலைகளின் அழிவுச்சக்தியை தடுத்து ஆட்கொள்ளும் அலைதாங்கிகள் அலைகளின் மோதுதல் ஆற்றலைச் சுக்குநூறாக்கும் சிதறுகட்டைகள் ஆகின்றன. அகத்தே நல்ல எண்ணங்களைப் பேணுக, அது புறத்தே நல்ல சூழ்நிலைகளை உண்டுபண்ணும் அகப் பண்புகளை உருவாக்குக. அது உன் புறவாழ்க்கையை உன் விருப்பத்துக்கு இயைந்ததாக மாற்றிவிடும். அகத்தே உயர் குறிக்கோள்களும் பொன்மயமான கனவுகளும் காணுக. புறத்தே உன் நனவுவாழ்க்கை அதேதிசையில் சென்று அதே பொன்மயமான ஒளியைப்பெறும். உன் உள்ளப் பண்புகள் குதிரை ஓட்டு பவன் கையிலிருக்கும் கடிவாளம். அது இழுத்தவழி குதிரை செல்லும். அது இயக்க ஊர்தியின் அச்சை இயக்கும் சக்கரம். அச்சக்கரம் திரும்பியவழி வாழ்வாகிய இயக்க ஊர்தி ஊரும். தனிமனிதன் தன்னடக்கமே சமூகத்தில் ஒழுங்காகவும் அரசியல் சமுதாயத்தில் தன்னாட்சியாகவும் மலர்கிறது. தனிமனிதன் உள்ளத்தின் ஒழுங்குமுறையே சமூகத்தின் பழக்கவழக்க மரபாகவும், அரசியல் சமுதாயத்தில் ஆட்சி முறைச் சட்டமாகவும் அமைகிறது. “மக்களெவ்வழி அவ்வழி அரசு” என்பது போல, “உள்ளம் எவ்வழி அவ்வழி மக்கள்” என்றும் கூறலாம். இவற்றை ஒன்றாய் உறழ, உள்ளம் எவ்வழி அவ்வழி மக்கள், அவ்வழி அரசு என்ற உண்மை துலங்கும். ஆகவே, உள்ளத்தின் தன்னாட்சி, நற்பண்பிலிருந்தே சமுதாயம், அரசியல் ஆகியவற்றின் தன்னாட்சி, பண்பு, ஒழுங்கு ஆகியவை பிறக்கின்றன என்பதைக் காணலாம். வாழ்க்கை என்பது ஒரு தறி. அதன் பாவு நூல்கள் நம் உணர்ச்சிகள். நூல்கள் நிரல்படத் தறியில் பற்றியிழுத்துக் கட்டப்பட்டாலன்றி அவற்றைப் பாவுநூல் என்று கூற முடியாது. நம் உணர்ச்சிகள் நிலையானவையாயிராமல், வந்த வந்த நேரத்தில் வந்து, சென்ற சென்ற போக்கில் சென்றால், அது சிக்கல் வாய்ந்த இழைபோல வாழ்வில் பொருந்தாதனவாகும். காற்றடித்த திசையெல்லாம் இழைகள் சென்றோடிச் சிக்குறாமல் அவற்றை ஓடு கருவிகளில் ஓட்டி ஒரு நிலைப்படுத்தி நிலையான படிவங் களாக்க வேண்டும். உணர்ச்சியலைகள் ஒழுங்குபட்டபின், நான் விரும்பும் ஆடையின் படிவத்துக்கேற்ப, அறிவு என்னும் ஊடு நூல்களை இழையோட விடவேண்டும். சரிகை ஆடை வேண்டுபவன் திட்டப்படி வேண்டிய இடத்தில், வேண்டிய அளவில், வேண்டிய முறையில் பொன்நூலை இழைய விடவேண்டும். அதுபோல நாடிய இன்பக் குறிக்கோளை நாடியவகையில் வாழ்க்கையில் இன்ப எண்ணங்களாக ஓடச்செய்க. உறுதியான இழை, நயமான இழை, பல்வண்ண இழை திட்டப்படி ஓடவிடப்படுவதுபோல, அமைதி, உறுதி, அன்பு முதலிய நற்பண்புகள் சார்ந்த எண்ணங்களை இழையோட விடு. கோபம், பொறாமை, ஐயுறவு முதலிய தீய எண்ணங்கள் நூலின் தூசுதுரிசாகவும், முடிச்சுகள் சிக்கல்களாகவும் அமையாமல், நுண்ணறிவு என்ற கைவிரலாலும், அனுபவமென்ற மென்கருவியாலும் சமனுறுத்தி இழைகாத்துப் பேணு. இம்முறையால் உன் குறிக்கோள் வாழ்வாகிய ஆடை வாழ்க்கைத் தறியிலிருந்து வெளிவரும். ஆற்றலின் பிறப்பிடம், அறிவின் வளர்ப்புத் தொட்டில் அமைதி, மோனம்! அதை நிலையாகவே பேணுக. வேண்டும் போதே பயன்படுத்துக. வாழ்க்கையின் மாறா வழிகாட்டி அதுவே. துன்பமும் அமைதி குலைவும் நேரும் சமயங்களில் மோனத்தை நாடு. அதன்மூலம் அமைதி கைகூடும். அறிவுநடமாடும். ஆற்றல் பெருகும். அதேசமயம் நிலையான அமைதி மற்றெல்லாப் பண்களையும் வளர்க்கும். தன்னியல்பான இயற்கையுணர்வு1 என்பது இம் மோன ஆற்றலையே. “பேசுவது வெள்ளிபெறுமானால், பேசாமை பொன்பெறும்” என்று கூறுவது இதனாலேயே. பேசாமை அதாவது பேச்சிடையே ஓய்வு பேச்சுத்திட்பத்தை வளர்ப்பது போல, எண்ணம் ஓய்வுபெற்ற நிலையாகிய மோனம் எண்ணங்களின் திட்பத்தை உண்டு பண்ணுவதுடன், அவற்றில் நிலையான அமைதியும் ஒழுங்கும் பேணி வளர்க்கும். நிலையான மோனம் இங்ஙனம் உணவு சமைப்பதில் ஈடுபடுத்தப்படும் நீர்போலவும், தற்காலிகமோனம் உணவில் முன்னும் பின்னும் இடையேயுள்ள உட்கொள்ளும் நீர்போலவும் பயன்படுகின்றது. பிறரிடம் நீ எப்படி நடந்து கொள்வாயோ, அப்படித்தான் பிறர் உன்னிடம் நடந்து கொள்வார்கள். நீ தன்னலம், பொறாமை ஆகிய சோர்வூட்டும் பண்புகளை ஒழிக்குந்தோறும், உன் சூழல் எல்லையிலுள்ள அனைவருமே அவற்றைவிட்டு உயர்வார்கள். நீ தானுயர்வதுடன் அவர்களையும் உயர்த்தி உன் புதிய உயர்வுக்குப் புதிய ஊக்கமும் பெறுவாய். அழிவு எண்ணங்கள் அழிவு விதையாகி அழிவுப்பயிர் வளர்ப்பது போல, ஆக்க எண்ணங்கள் ஆக்க விதையாகி ஆக்கப்பயிர் வளர்க்கும். உன்னிடத்திலிருந்து எழும் இன்ப எண்ணங்கள் இன்ப அலை எழுப்பி இன்பமாகப் பொங்கிப் பொதுளும். உன் தன்னடக்கம் அந்த இன்பங்களைப் பெருக்கும். உன்னைச் சூழ நீ வளர்க்கும் இன்பம் உன்னை இன்ப உலகத்தில் ஊடாடவைக்கும்; அந்த இன்பச்சூழலே பொன்னுலகு. இந்த உலகவாழ்வை நீத்தபின்தான் அதைப் பெறவேண்டுமென்று நீ காத்திருக்க வேண்டுவதில்லை. அதை இவ்வுலகிலே இவ்வாழ்விலே, இன்றே நீ பெறலாம். அதைப் பெறாமலே மண்ணுலகில் வாழ விரும்பினால், அல்லது துன்ப உலகிலே வாழ ஒருப்பட்டால், அதுவும் இங்கேயே உனக்கு வந்து அமையும். மூன்று உலக வாழ்வும் உன் அகப்பண்பு மூலம் உனக்கு இவ்வுலகிலேயே காத்துக் கிடக்கின்றன. உன் விருப்ப மொழி எப்பக்கமோ அப்பக்கமாக நீ அவற்றை அடையலாம். உயிர் இயல்பாகவே இன்பமயமானது. இன்பத்தில் பிறக்கிறது. இன்பத்தில் வாழ்ந்து வளர்கிறது. அது இன்பத்திலேயே நிறைவடைய முடியும். இயற்கையும் இன்பமயமானது. இன்பமாகவே இருக்கிறது. இவையிரண்டினிடையேயும் ஒரே ஒரு வேற்றுமை உண்டு. இயற்கைக்கு வளர்ச்சி தளர்ச்சி கிடையாது. அலைகள் தோன்றி வளர்ந்தழிந்தும் அழியாத கடல்போல அது நிலவுகிறது. இயற்கையினுள் ஒரு சிறு இயற்கையாக உருவாகும் உயிர் அவ்வியற்கையின் ஒரு சிறு கூறாக, ஆனால் முழுநிறைகூறாகத் தோன்றுகிறது. அது அவ்வியற்கையோடொத்து வளர்கிறது. ஆனால் சில சமயம் அதனுடன் முரண்பட்டு ஒத்து அதன் இன்பத்தில் நிறைவுறு கிறது. துன்ப இன்ப வேறுபாடற்ற இயற்கையில், அது துன்ப இன்பம் நுகர்ந்து இன்புருவாய் வளர்கிறது. இயற்கை தன்னியல்பாய் இயங்குவது. இயற்கையை இயக்குவது இயற்கையின் உள்ளம். இயற்கையின் இந்த உள்ளத்தின் கூறுகளே உயிர்கள். அவை இயற்கையை இயக்கும் பேருயிரின் பகுதிகள். இயங்கா இயற்கையாகிய புற இயற்கையின் உடலினுள்ளிருந்து இயக்கும் பேருயிராகிய இறைவனின் கூறாக நின்று, அவை இயற்கையை இயக்குகின்றன. மனிதன் பேருயிருடன் அணுக்கத் தொடர்புடைய அறிவுயிர். அவன் இயற்கையால் இயக்கப்படும் நிலையில் இருத்தல் கூடாது. அந்நிலையே சோம்பல் அல்லது செயல் திறமற்றதுயில். இந்நிலையில் இருப்பவையே கீழின மாக்களும் விலங்கினங்களும். மனிதன் சோம்பல் அல்லது திறமற்ற துயில்நிலையை உடையவன் அல்லன். செயல் நிலையை வளர்க்கும் நிலையுடையவன். அவன் கொள்ளும் துயிலும், ஓய்வும், மோன நிலைகளும் ஆகும். இவற்றின்மூலம் அவன் தன் வளர்ச்சியை இயற்கையோடமைந்த அமைதி நிலை அல்லது ஒழுங்குடையதாக்கிக் கொள்கிறான். இறுதித் துயிலாகிய இயற்கைநிலை எய்தும்போதுகூட, அவன் தன் அறிவுள்ளத்தின் படிவமாக ஒன்று அல்லது பலவான உயிர் மரபுகளைப் படிவித்தே செல்கிறான். மனிதனின் பரந்த, தலைமுறை தலைமுறை தொடர்ந்த, உயிர்மரபும் இனமரபும் இயற்கையுள்ளமாகிய பேருயிரை நோக்கி வளர்கின்றன. முழுநிறை வளர்ச்சியை அடைந்த தனிமனிதன் எல்லையற்ற பேருயிரின் ஒரு கட்டற்ற சிறியபடிவம் ஆகிறான். அவனை அப்பேருயிரிலிருந்து பிரிப்பது அவன் எல்லை ஒன்று மட்டுமே. ஆனால் பேருயிரில் அந்த எல்லை அவனைப் பேருயிரின் ஒரு சரிசம உறுப்பு அல்லது கூறு ஆக்குகிறது. அவன் பேருயிரின் ஒரு பகுதியாகிறான். பொன்னுலக முகடேறப் போதுதீயோ நீ, போலி உலகு அளவற்றினை அவாவுதியோ நீ? மின்னுகனவார் அழகை மேவுவையோ நீ, மீளாத அவலநிலை பாவுவையோ நீ? 1 வானகமும் உன் எண்ண வடிவழகுதான், மறுகுநரகு உன் கருத்தின் சீர்குலைவுதான்! மேனிமிர்ந்த அகநோக்கல்லால் பேரின்பம், வேறில்லை இழிநோக்கே துன்பமாகும்! 2 கருத்தல்லால் சொல்லேது, பொருளும் ஏது? கனவல்லால் அழகேது, இன்பமேது? உருத்தெழுந்த எண்ணவண்ணம் அல்லால் ஏது ஊழூழிதொடர் உலகக் கூத்துத்தானே? 3 ஊழ்ஆளும் கருத்தன் உளக்கருத்தேயாகும், ஒண்கருத்தாம் நாடி அதன் துடிதுடிப்பே! வீழ்துயர் நன்மதிப்பொடவ மதிப்பாய் வேறு வேறுமுக மூடியுடன் கருத்துத் தோன்றும், 4 வேறான வண்ண ஒளிக் கதிர் கலந்தே வெள்ளொளியின் கதிராக விளங்குதல்போல், மாறுகின்ற முரண்பாடு பலவும் சேர்ந்தே மாறாத கனவழகாய் நிலைத்து இயங்கும்! 5 கனவொளியை உன்னகறுத்தே கதிக்கவிட்டுக் கனவாளன் இரவொழியக் காத்துநின்றான், இனவொளியின் விடியலுற நீவிழித்து நனவொளியை காண்கவென நயந்தளித்தே! 6 நிழலிட்ட கனவூடு நினைவைத் தீட்டி நிறைஅருளின் திசைநின்று நனவை மீட்டின், அழவிட்ட கனவொளியின் வண்ணமாக ஆன்றநிறை அறிவொளியின் உலகு தோன்றும்! 7 ஒளிபடாக் கூறே இருள்; நிறை தூய்மை ஒளிராஇடமே கறைஎனல்போல, களிதரு நல்ல கருத்தே நினைவின் கரு, அதன்பிறர்வே தீது எனலாகும்! 8 மீயுயர் நலமே விரும்பி அயர்க, மீயுயர் நலமே மேவுவை பெரிதே! மீயுயர் பொருளே விழியுறக் காண்க, மீயுயர் பொருளாய் விளங்குவை இனிதே. 9 1. Instinct. 5. வெற்றியின் மறைநுட்பம் குழந்தைப் பருவத்தில் இன்ப ஒளியிலே குளித்து மகிழும் சிறுவர் சிறுமியர் எவ்வளவு ஆர்வத்துடன் வன தெய்வங்கள், நீர்த்தெய்வங்களின் கதைகளைக் கேட்கின்றனர்! சிறுவர் சிறுமியராயிருக்கும்போது அந்தக் கதைகளில் காட்டிய ஆர்வத்தை, அந்தக் கதைகளைக் கேட்கும்போது அதன் ஒவ்வொருபகுதியிலும் பெற்ற அளப்பிலா இன்பத்தை, வளர்ந்தபின் மக்கள் அந்தக் கதையிலாகட்டும், அல்லது வேறு எந்தக் கதையிலாவது, செய்தியிலாவது ஆகட்டும், பெறு வதில்லையல்லவவா? இதற்குக் காரணம் என்ன? சிறுவராயிருக்கும்போது ஒரு நல்ல பையன், அல்லது நல்ல பெண்ணின் வாழ்வுதாழ்வில் நாம் எவ்வளவு உள்ளார்ந்த அக்கரைகாட்டினோம்! துன்பநேரத்தில் பாதுகாப்பற்ற அச்சிறுவர் சிறுமியர்களுக்கு நல்லாதரவு தர நம் உள்ளம் துடித்தது. அந்த நல்லாதரவுத் துடிப்பின் வடிவமாகவே கதையின் நல்தெய்வங்கள் வந்ததைக் கண்டு, எதிர்பார்த்து அவாவிய அந்த அவா நிறைவேறப் பெற்றது உணர்ந்து நாம் கைகொட்டி மகிழ்ந்தோம். சிலசமயம் நம் சிறுதோழன் வாழ்வில் தீமைவந்து விடுமோ என்று அஞ்சினோம். வருமோ என்று ஐயுற்றோம். நம் அச்சமும் ஐயமுமே வடிவாத் தீய குறும்புத் தெய்வங்கள் வந்தன. எதிர்பார்த்த ஐயமும், அச்சமும் நிறைவேறக்கண்டு அதில் கருத்தூன்றினோம். ஆனாலும் உள்ளூர நன்மை அவாவினோம். அச்சம், அவநம்பிக்கையிடையே நம்பிக்கை ஒளி நாடினோம். அந்த உள்ளார்ந்த நம்பிக்கை வடிவமாகவே கதைமுடிவு அமைந்தது. நல்ல இனிய பண்புடைய தெய்வங்கள் வந்து துன்பமகற்றின. இன்பம் அளித்தன. சிறுவர் சிறுமியர் பிரிவின் பின்கூடி, துன்பத்தின் பின் மகிழ்ந்து, உற்றார் பெற்றாருடன் குறைவிலா நிறைவாழ்வு வாழ்ந்தனர்; ஊழூழிகாலம் வாழ்ந்தனர் என்று முடிகிறது கதை! நம் அவாவும் அத்துடன் நிறைவேறுகிறது. குழந்தைகளுக்கு இத்தகைய கதை தரும் களிப்பின் மறைநுட்பம் யாது? அது, அவர்கள் உள்ளார்ந்த அச்சங்கள், அவர்களின் உருவமாயமைகின்றது என்பதுதான். குழந்தைப் பருவம் தூய அழகு நலம் வாய்ந்தது. அது உருக்கம் தரும் அச்சங்களுடையது. அதேசமயம் ஊக்கந்தரும் அவாக்களும் நிறைந்தது. அச்சம் அவர்களுக்கு உருக்கமும், அவாக்கள் அச்சந்தவிர்த்து ஊக்கமும் அளித்தன. மனிதர் எல்லாருமே வளர்ந்த குழந்தைகள்தான் என்று கூறுவதுண்டு. உண்மையில் அவர்கள் வளர்ந்த குழந்தைகள்தான். ஆனால் அவர்கள் முழுவதும் அல்லது செம்பாகமும் வளர்ந்த குழந்தைகளாயிருந்தால், உலகில் வாழ்வு ஒரே இன்பக் காடாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. குழந்தைப் பருவம் என்னும் மஞ்சள்வெயில் அல்லது குளிர் நிலவு, வாழ்க்கை யென்னும் மஞ்சள்வெயில் அல்லது குளிர் நிலவு, வாழ்க்கை யென்னும் நண்பகலொளிபட்டு மறைகிறது. அதன் இளந்தளிர் அழகு பெரிதும் கெடுகின்றது. ஆனால் வளர்ந்த மனிதர் வாழ்க்கையிலும் நம்பிக்கை என்னும் இடை நிலவொளிகள் உண்டு. அந்த நம்பிக்கை நிலவொளியினூடாகக் குழந்தைப் பருவ அவா ஆர்வங்கள், வாழ்வின் பகலொளி பட்டுக் கனவார்வங்கள் ஆகின்றன. குழந்தைக் கதையை வாசிக்கும் குழந்தைகள், கதையின் உச்சத் துயரக் கட்டத்தில்கூட கதை துன்பமாக முடித்தால் கூட “இல்லையப்பா? இப்படியா கதைமுடியும். நீ முழுவதும் சொல்லவில்லை” என்றுதான் கூறும். குழந்தைப் பருவத்தின் இந்த நம்பிக்கை உறுதி வாழ்க்கை என்னும் சறுக்கு களத்தில் வந்து சிந்திச் சீர்குலைகின்றது. குழந்தைகளின் உலகைவிட மனித உலகு அறிவு வளர்ச்சியுடையதாக யிருக்கலாம். ஆனால் அறிவு வளர்ந்த அளவுக்கு குழந்தைப்பருவ நல்லவா ஆர்வங்கள், களங்கமிலா நம்பிக்கை, துடிப்புக்கள், பற்றுறுதிகள் வளரவில்லை என்பது தெளிவு. குழந்தைகளின் ஆற்றலுணர்வு குறும்புத் தெய்வங் களிடம் அக்கரைக்காட்டின. ஆனால் குறும்புத் தெய்வங்களை விட நல்தெய்வங்களே ஆற்றல் மிகுதி உடையவை என்பதில் அவர்கள் உறுதியாக நம்பிக்கை வைத்திருந்தனர். வளர்ந்த பின் குழந்தைமனம் தெய்வங்களின் தன்மைப்பற்றி ஆராயத் தலைப்பட்டது. ஆனால் தீமையின் ஆற்றலை விட நன்மையின் ஆற்றல் பெரிது என்ற பழைய நம்பிக்கை அறிவாக மாறவில்லை. அறிவு வளர்ந்தது. ஆனால் பழைய நம்பிக்கை போய்விட்டது. பழைய நல்லநம்பிக்கை இல்லாமல், வேறு வகையான நம்பிக்கை யுடனேயே, அறிவு வளரத் தலைப்பட்டது அவ்வளவுதான். அறிவு வேறு, உணர்வு வேறு. குழந்தைப்பருவ உணர்வு அறிவாயிற்று. அது நன்றே ஆனால் குழந்தைப் பருவ நல்லுணர்வு நல்லறிவாகவில்லை. குழந்தைப் பருவத்தின் தூய்மை, ஆர்வ அவாக்கள் குறைந்துவிட்டன. மக்கள் அறிவுப் பண்புடன் இக்குழந்தை உணர்ச்சிகளும் வளர்ந்தால், அவற்றின் கூட்டு நிறைமனிதப் பண்பு ஆகும். அப்பண்பாளரே கனவாளர்கள்; அவர்கள், குழந்தை உணர்வுக் கண்ணால் காணும் உலகை, தம் அறிவுக் கண்ணால் கண்டு, உணர்வற்ற வெள்ளறிவுக் காட்சியாளர்களுக்கு வழி காட்டுகின்றனர். அறிவைவிட உணர்வு எந்த வகையில் மேம்பட்டது என்று பலர் கேட்கக் கூடும். உணர்வு என்பது உணர்ச்சியல்ல என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். உணர்ச்சிமீது அறிவு படிந்தவடிவமே உணர்வு. அறிவு தீமையகற்றமட்டுமே உதவும். உணர்வு நன்மையாக்க உதவும். உணர்ச்சிவசப்படும் தன்னடக்க மற்றவன் போக்கை அறிவு திருத்துகிறது. ஆனால் அறிவுக்கு அப்பாற்பட்ட அல்லது அறிவால் தழுவப்பட்ட உணர்வு அறிவையே நல்வழிப்படுத்தத் தக்கது. அவ்வுணர்வே உடல் நலத்தையும் உளநலத்தையும் உண்டு பண்ணுவது. அவ் வுணர்வே ஒருவனை நல்லவன், அஃதாவது சமூகத்தை வளர்ப்பவனாக்குகிறது. மனிதன் இயற்கையில் உணர்ச்சி வசப்பட்டவன் மட்டுமல்ல. உணர்வு வசப்பட்டவன். வனதெய்வக் கதையில் குழந்தைகள் இவ்வளவு ஈடுபடுவதற்குக் குழந்தைகளின் இயற்கை யுணர்வே காரணம். வளர்ந்த மனிதரிலும் இவ்வுணர் வுடையோர் உண்டு. அவர்களையே பொதுப்படியாக நாம் நல்லார் என்றும், சிறப்புப்படியாகக் கனவாளர் என்றும் கூறுகிறோம். அவர்கள் மீயுயர் நலம் அல்லது தெய்வீகப் பண்புகளை ஒவ்வொருநாளும் தம் உள்ளத்தில் தோய வைத்து, அவ்வுள்ளப்பண்பை உகப் பண்பாக்க முயலுகின்றனர். அப்பண்பே அவர்களுக்கு உண்மை யான உடல்நலம், உளநலம், உண்மையான செல்வம் ஆகியவற்றைத் தருகின்றன. அறிவு நல்லதுதான் ஆனால் இப்பண்புடன் அது ஒப்பிடத் தகுந்ததல்ல அது இப்பண்பு செயலாற்றுவதற்குரிய ஒரு கருவி மட்டுமே. அறிவுடையார், நல்லார் ஆகிய இருதிறத்தாருள் அறிவு இல்லாத இடத்திலும் கூட நல்லாரே சிறந்தவர். ஆனால் நல்லார் அறிவுடை யாரானால் இன்னும் சிறப்புடையவர். அவர்கள் சிறப்பு இன்னும் அரிது. இத்தகைய அருஞ்சிறப்பாளரையே நாம் கனவாளர் என்கிறோம். நல்லார் என்ற சொல் பொதுவாக சமூக ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட்டவர்களைக் குறிக்கவே வழங்கப்படுகிறது. அதிலும் அவ்வொழுக்கத்துக்கு மாறாக நடக்காதவர்களை அஃதாவது தீமை செய்யாதவர்களை மட்டுமே அது அடிக்கடி குறிக்கிறது. ஆனால் உண்மையாக நல்லவர்கள் என்பவர்கள் தீமை செய்யாதவர்கள் மட்டுமல்ல. அவர்கள் தீமை செய்யாத துடன் கூடியமட்டும் நன்மையே செய்பவர்கள்; நன்மை செய்வதற்காகவே வாழ்பவர்கள்; அதற்கென்றே அறிவும் ஆற்றலும் நாடுபவர்கள். அதுமட்டுமன்று. அவர்கள் சமூக ஒழுக்கத்தினைப் பின்பற்றுபவர்களல்ல. அவர்களே சமூக ஒழுக்கத்தை ஆக்குபவர்கள்; பேணுபவர்கள்; வளர்ப்பவர்கள். அவர்கள் வளர்த்த சமூகமே, அச்செயலைக்கண்டு விரும்பிய பின், அவர்களைப் பின்பற்றுகிறது. அவர்கள் ஒழுகிக் காட்டிய ஒழுகலாறு சமூக ஒழுக்கத்தின் மேல்வரிச் சட்டம் அல்லது அடிப்படைக் குறிக்கோள் ஆகிறது. நல்லார் என்பவர்கள் தூய கருத்துடையவர்கள்; உயர்ந்த அவா ஆர்வங்களுடையவர்கள்; தன்னலங் கடந்த பொதுநல ஆர்வமுடையவர்கள்; புகழார்வம்கூட இல்லாது சமூகத் தொண்டார்வம் உடையவர்கள். அவர்களிடம் வாழ்க்கைத் திட்டமும் அதைச் சமூகக் கண்பார்வையில் காட்டும் ஆற்றலும், அதை நோக்கி வழிகாட்டி ஈர்த்துச் செல்லும் திறனும் இருந்தால், அப்போதுதான் அவர்களைக் கணவாளர் என்று சிறப்பிக்கிறோம். இத்தகையோர் தங்கள் வாழ்வைச் சுற்றி ஒரு உளப்பண் பொளியை வீசிக் கொண்டே இருக்கின்றனர். அது இனிமை பயக்கும் ஒருபண்பு வளி மண்டலமாக, ஆற்றல் தரும் ஒரு மின் ஓட்டமாக இயங்குகிறது. தீமை கொழிக்கும் எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள். ஆனால் நன்மையைப் பெருக்கும் எண்ணங்கள் ஆக்க எண்ணங்கள். அவற்றின் கூரொளிக் கதிர்களின் முன் செய லற்ற தீய ஆற்றல்கள் யாவும் எழுஞாயிற்றின் ஒளிக் கரங்களைக் கண்டோடும் இருள்போல மாய்ந்தொழியும். அகத்தில் இருந்த இருளும் மாசும் கெட, அவ்வெண்ணங்கள் உள்ளத்தில் களிபரப்பி ஒளிவீசும். அத்தகைய உள்ளத்தில் தூய அன்பும் நல்லவாவும் நற்பற்றுக்களும் நடனமிடும். தளரா உறுதியுடைய, நிமிர்ந்த, தூய்மையும் பற்றுறுதியுமுடைய இடத்தில் உடல் உள நலங்களும் ஆற்றலும் வெற்றியும் மிளிரும். நோய், தோல்வி, இடர் ஆகியவை இவற்றை உடையவனை அணுகமாட்டா. ஏனெனில் அவை பற்றிவாழ்வதற்குரிய மாசு, இருள் ஆகிய பற்றுக் கோடுகள் எதுவும் அவனிடம் இருக்க மாட்டா. உடலின் நிலைகள் பெரும்பாலும் உளநிலை சார்ந்தவையே. அறிவியல் உலகு இந்த உண்மையை விரைந்து கண்டுவருகிறது. மனிதன் உளநிலை அவன் உடல் நிலையையே பொறுத்தது என்ற பழைய இயற்பொருள்வாத நம்பிக்கை விரைந்து மாய்ந்து வருகிறது. மனிதன் உடற்பண்புகளுக்கு அப்பாற்பட்டவன் என்னும் உயர் ஆன்மிகக் கருத்து வளர்ந்து வருகிறது. கருத்தின் ஆற்றலாலேயே உடலின் இயல்பு வரையறுக்கப்படுகிறது. செரிமான மில்லாமையினால் மனிதன் மனக்கலக்கமடைகிறான் என்ற கருத்தினிடமாக, மனக்கலக்க மடைவதனாலேயே செரிமானமில்லாமை ஏற்படுகிறது என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. அணிமை வருங்காலத்தில் நோய்கள் யாவுமே உளப்பண்பு காரணமாக ஏற்படுபவைதான் என்பது உறுதிப் படக்கூடும் என்னலாம். இயற்கையிலுள்ள எந்தத் தீங்குகளும் உளப்பண்பு சாராததென்று கூறமுடியாது. நோய், துயர், துன்பம் ஆகியவை உளம் சார்ந்ததேயன்றி இயற்கையின் அமைதி சார்ந்தவையல்ல. ஆகவே, தீமை பொருள்களின் இயல்பில் இல்லை. உளநிலையின் சார்பிலேயேதான் இருக்கிறது. அவை பொருளுலகில் அடிப்படைப் பண்புகளல்ல. அடிப்படை உயிரின் பண்புமல்ல. தற்காலிகமான உளநிலையின் பண்பே - எண்ணங்களின் சாயற் படிவமே! இன்னும் தெளிவாகக் கூறப்போனால், பொருள்களின் நிகழ்வுகள் ஆகியவற்றின் தொடர்பு பற்றிய உள்ளத்தின் அறியாமையிலிருந்தே தீமை பிறக்கிறது. மிகப் பொது நிலையாக, நூற்றைம்பது ஆண்டுக்குக் குறையாது வாழ்ந்துவந்த ஓர் இந்திய அறிவு வகுப்பு இருந்தது என்று மரபுரை வழங்குகிறது. மாசு மறுவற்ற தூய்மையும் எளிமையும் அவர்கள் வாழ்க்கை முறையின் கண்டிப்பான கட்டுப்பாடுகளாய் இருந்ததாக அறிகிறோம். அவர்களிடையே யாராவது சிறிது நோய் உற்றால், அவர்களால் மன்னிக்கத்தகாத இழிசெயல் செய்யப்பட்டு விட்டதாக கருதப்படுவார்களாம். ஏனெனில் இயற்கையின் மாறா அமைதியை மீறியதாக அவர்கள் கருதப்பட்டனர். நோய் ஒரு தற்செயல் நிகழ்ச்சியென்றோ, கோபமுடைய ஒரு தான்தோன்றித் தெய்வத்தின் தண்டனை யென்றோ கொள்வது தவறு. அதைக் கடவுளின் சோதனை என்று கொள்வது இன்னும் மோசமானது; ஏனென்றால் அறிவு நிறைவுடைய கடவுளுக்குச் சோதனை செய்து உண்மை யறியவேண்டிய தேவை இருக்கமுடியாது. அது நம் சென்ற காலப் பிழைகள் அல்லது பழிகளின் நேர்விளைவாக மட்டுமே இருக்கமுடியும். இவ்வுண்மையை நாம் எவ்வளவு விரைவில் உணருகிறோமோ அவ்வளவும் நேரடியாக உடல்நல வழியை நாம் கடைப்பிடிப்போம். நோய்ப்பண்பைக் கவர்ந்தீர்த்து அதற்கு - அதைப்பற்றிய எண்ணங்களுக்கு - உள்ளத்தில் இடம் கொடுப்பவர்களிடமே அது வந்துசேரும். நெஞ்சுரம், தூய்மை, ஆக்க எண்ணங்கள் நோய்வருமுன் அதைத் தடுத்தோட்டுகின்றன. வந்தபின்னும் அதனைக் குறைப்படுத்தும் சிறந்த முறைமையாகின்றன. சீற்றம், தொல்லைகள், அழுக்காறு, பேரவா முதலிய தீயப்பண்புகளுக்கு இடத்தந்து, உள்ளத்தின் சமநிலை நலத்தைக் கெடுத்துக்கொண்டே முழுநிறை உடல் நலத்தையும் எதிர்பார்ப்பது முடியாது. ஏனெனில் அங்ஙனம் செய்பவர்கள் அப்பண்புகள் மூலம் ஓயாது நோய்விதைகளை உள்ளே தூவிவருகிறார்கள். மெய்யறிவாளன் சாக்கடைத் தேக்கமுள்ள வீட்டையோ, தொற்றுநோய்ப் பிடிப்புள்ள வீட்டையோ தெரிந்தெடுத்தாலும் கூடத் தெரிந்தெடுப்பான். இத்தகைய பண்புகளுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்கமாட்டான். உளப்பண்புக்கும் உடல்நிலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள் பல ஒருவன் பெரும்பீழை தரும் ஒரு நோய்க்கு ஆளாயிருந்தான். ஒருவர்பின் ஒருவராகப் பல மருத்துவரிடம் மருந்துதவி பெற்றான். ஒன்றும் பயன்பட வில்லை. மருந்து நீரூற்றுகளுக்குச் சென்று குளித்தாடி இருந்து பார்த்தான். நோய் பெருக்கமுற்றதே தவிரக் குணநலம் பெறவில்லை. ஓரிரவு கனவில் ஒரு தெய்விக வடிவம் அவன்முன் தோன்றிற்று. “எல்லாவகை மருத்துவமும் பார்த்துவிட்டாயா?” என்று அது கேட்டது. “ஆம்” என்றான். “எல்லாம் பார்த்திருக்க மாட்டாய். இதோ என்னுடன் வா, நீ கவனியாத ஒருமுறை காட்டுகிறேன்” என்று கூறி வடிவம் அவனை அழைத்துச் சென்றது. ஒருபடிகநிற நீராழியைக் காட்டி, “இதில் முழுகு” என்று கூறி அது மறைந்தது. நீராழியின் படிக்கட்டிலுள்ள அறிவிப்புப் பலகையில் “தன் மறுப்பு” என்ற எழுத்துப் பொறித்திருந்தது. அவன் அதில் மூழ்கியதும் நோய் நீங்கியதாகக் கனவு கண்டான். விழித்தெழுந்ததும் நீராழி, நீராழியல்ல; தன்மறுப்பின் அறிகுறியே என்று கண்டுகொண்டான். அவன் தன் வாழ்வின் பழக்கங்களை, தன் உள்ளத்தைத் துருவித் தேடினான். தகா எண்ணம் ஒன்றும் அது சார்ந்த பழக்க மொன்றும் தன்னிடம் ஊன்றியிருப்பதாகக் கண்டான். அரும்பாடுபட்டுப் பழக்கத்தை நீக்கியபோதே, பாதிக்கு மேல் குணங்கண்டது. எண்ணங்களை அடக்கியதே, நோய் இருந்த தடம் தெரியாமல் அகன்றது. மிகுதி உழைப்பால் நாங்கள் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டோம் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் பெரும்பான்மையாக மிகுதி உழைப்பினால் ஏற்படும் தொல்லையைவிட வீணுழைப்பு, அமைதியற்ற படபடப்பு ஆகியவற்றால் ஏற்படும் தீங்கே மிகுதியாயிருக்கும். படபடப்பினால் வேலைக்குத் தேவையான அளவுக்குமேல் உழைப்பவர் உழைப்புக் கருதி உழைக்கவில்லை. தாம் உழைப்பதாகக் காட்டிக் கொள்ளவோ, தன் மனத்தில் உழைப்பில் பற்றில்லாமையை மறைக்கவோதான் அப்படிச் செய்கின்றனர். தவிர, பேரவாவால் உடலாற்றல் மீறி உழைக்கவோ, திறமை வளர்ப்பதாகத் தவறான எண்ணங்கொண்டு வேலையின் நுட்பங்களில் மட்டுமீறிக் கருத்துச் செலுத்தவோ செய்வதனால், உடல் கெடுவதுடன் அதற்கு அடிப்படையான உளநலமும் கெடுகின்றது. உழைப்பில் அமைதியும் ஓய்வும் உளநலத்துக்கும் உடல்நலத்துக்கும் இன்றியமையாதது. கவலையும் நச்சரிப்பும் இரண்டையும் கெடுக்கும். இவற்றால் வேலையின் தரமும் அளவும்கூடக் குறையும். திட்டமிட்ட அளந்தவேலை ஒருவனைத் திறமையுடைய நல்ல உழைப்பாளி ஆக்குவதுடன் உளநலம், அறிவுநலம், உடல் நலம் ஆகியவற்றையும் வளப்படுத்துகிறது. உண்மையான உடல்நலமும் செயல் வெற்றியும் ஒன்றைவிட்டு ஒன்று அகலாத பிணைப்புற்ற உளப் பண்பினாலானவை. ஏனெனில் இரண்டும் மனஅமைதியின் பயன்களே. ஒருபுறம் மன அமைதி உடல் நலத்தை உண்டு பண்ணுகிறது. மறுபுறம் அது உழைப்பினைத் திட்டப்படுத்தி நிறைவேற்றுகிறது. அத்துடன் மன அமைதி எண்ணங்களை ஒழுங்குபடுத்தி அவற்றுக்கு உருவும் வடிவும் உண்டு பண்ணுகிறது. அதனால் வாழ்க்கை திட்ட அமைதிப்படுகிறது. உணர்ச்சிக் குமுறல்களின் மீதும் தப்பெண்ணங்களின் மீதும் அது தன் ஆற்றலைப் படியவைத்து வாழ்வின் இன்னல்களைத் தடுக்கிறது. வாழ்வு என்னும் கடலில் உயிர் என்னும் கலம் ஏது மில்லாமல் பயண முற்றுவித்து வெற்றியடைய அமைதியும் பற்றுறுதியும் பெரிதும் உதவுகின்றன. அமைதிக்கடலின் புயலை அமைத்து அது கலஞ் செல்லும் வழியை எளிதாக்குகிறது. இன்னலமிக்க தளராத பற்றுறுதி கலத்தை ஓட்டும் மீகாமனா யிருந்து வழிகாட்டிப் பயணத்தைப் பின்னும் இனிது நிறைவேற்றுகிறது. எல்லாக் காரியங்களிலும் வெற்றிக்கு முதலாகும் சீரிய பண்பு பற்றுதியே. மீயுயர் பொருளாகிய தெய்வத்தினிடத்தில் பற்றார்வம் இயற்கையின் உயர் அமைதியில் பற்றார்வம், உங்கள் பணியில் பற்றார்வம், பணியை முறக்கும் ஆற்றலில் பற்றார்வம் எனப் பற்றார்வம் வாழ்க்கையின் கொந்தளிப்பிடையே எங்கும் துணையாகவும், எல்லாவற்றுக்கும் அடிப்படையான சலியாத கருங்கற் பாறையாகவும் நிலவுகின்றது. உன் அகத்துள்ள உயர் குரலுக்கு எப்போதும் செவி கொடுத்து அதைப் பின்பற்று, தெய்விக ஆற்றல் உடைய ஆன்மாவிடம் உண்மை தவறாதிரு; உள்ளொளி, உள்ளக் குரலில் பற்றுறுதி கொள்; உன் ஒவ்வோர் எண்ணத்தின் பயனும், ஒவ்வொரு முயற்சியின் விளைவும் வருங்காலத்தில் உன்னை வந்து எய்தும் என் உறுதியாக நம்பு. இவை இயற்கையின் அமைதி. இரண்டும் இரண்டும் நான்கு என்ற முடிவு எப்படி பிழைக்காதோ, அப்படியே இவை தவறமாட்டா. இயற்கையின் இவ்வமைதியில் பற்றுறுதியும் திட்ட மான நம்பிக்கையும் கொள். ஏனெனில் இத்தகைய பற்று ஓர் உயிர்ப்பண்பு ஆகும். அதை உடையவன் செயலைச் செய்வான்; விளைவு பற்றிக் கவலைப்பட மாட்டான். அவன் வெற்றியில் மகிழமாட்டான்; தோல்வியில் வருந்தமாட்டான். முயற்சியைச் சரிவர முற்றுவிப்பதுடன், அவன் மனம் நிறை வடைந்துவிடும். ஊசிவழி நூல் செல்வது எவ்வளவு இயல்போ, அவ்வளவு இயல்பாக, வெற்றி அதற்குரிய முயற்சியைத் தொடரு மென்பதை அவன் அறிவான். வெற்றி வெளிப் படையாகத் தெரிந்தாலும் அவன் கவலை கொள்ள மாட்டான். வெற்றியில் மகிழவும் மாட்டான்; ஏனெனில் வெற்றியினளவு முயற்சியின் அளவையும் முயற்சியின் அளவு வெற்றிக்குமுன் ஏற்படும் தடைகளின் அளவையும் மட்டுமே பொறுத்தது. முயற்சி கடுமையும் நீட்டிப்பும் அடையுந்தோறும், பயனும் அந்த அளவுக்கு அருஞ் சிறப்புடையதாகிறது. பற்றுறுதி மிக்கவன் அவா ஆர்வமுடையவனா யிருப்பதனால் இடையூறுகள் அவனை விட்டகலுகின்றன. ஐயமென்னும் அழுக்குப்பாசி, அவா ஆர்வத்தின் மூச்சுப்பட்டதே விலகிக் கொள்கிறது. அதன் கதிரொளியின் முன், இடையூறு களென்னும் பனிமலைகள் தாமாக உருகி அழிகின்றன. பற்றுறுதி இத்தடைகளை ஊடறுத்து வழிவகுக்கின்றது. விலைமதிப்பற்ற கருந்தனமாகிய இப்பற்றுறுதியை ஒருவன் எப்பாடுபட்டும் பெறத்தகும். இன்பம், வெற்றி, அமைதி, ஆற்றல் ஆகியவை அடங்கிய பேழையின் திறவுகோல் அதுவே. துன்பந்தாண்டி வாழ்வில் பெருமையடைய மிகச் சிறந்த நூலேணியாக அது பயன்படுகிறது. உலகியல் செல்வங்கள், இன்பங்கள் மீது உன் வாழ்வை எழுப்பாதே. அவை மணல் பரப்புக்கள். அவற்றின்மீது கட்டமைக்கப்பட்ட கட்டடம் எவ்வளவு உறுதியாயிருந்தாலும் பயனில்லை. நிலத்தளத்தின் நொய்ம்மையால், கட்டடம் சரிந்துவிடும். பற்றுறுதி என்கிற கடும்பாறை மீது வாழ்க்கைக் கட்டடத்தை எழுப்பு. காலங்கடந்த நிலையான மெய்ம்மையுடன் பிணைக்கப்பட்ட அப்பற்றுறுதி உனக்குப் பற்றுறுதியின் வலுவுடன் அந்நிலையான மெய்ம்மையின் வலுவையும் அளிக்கும். பற்றுறுதி வாழ்வுக் கட்டடத்தின் அடித்தளமட்டு மன்று. கட்டடத்திற்கான செங்கல்லும் மண்ணும் அந் நிலத்தின் திண்மையின் செல்வமாகவே இருக்கும். ஆகவே உன்வாழ்வு நிலையான மெய்ம்மைமீது நிலையான மெய்ம்மை கொண்டு கட்டமைந்ததாய், மாறா உறுதியுடையதாய் இருக்கும். மகிழ்ச்சியின் அலை முகட்டில் நீ மிதந்துயர்ந்த போதிலும், துன்பத்தின் ஆழ்கசத்தில் நீ தள்ளப்பட்ட போதிலும், பற்றுறுதியாகிய இப்புணையை நீ பற்றியிருக்குமட்டும், நீ அதன் துணை நீங்காது அதன் நடுநிலை நெறிக்கு வந்து சேர்வது உறுதி. பெரும் பாறையுடன் இணைக்கப்பட்டுள்ள சிறு பாறையும் பெரும் பாறையின் உறுதியுடையதாகி, தான் நொறுங்காமல் அதைத் தன்மீது நொறுங்க விடுவதுபோல, நிலையான மெய்ம்மைமீது பற்றிக்கொண்ட உன் பற்றுறுதி தீமையின் ஆற்றல்கள் முழுவதையும் தன் மீது ஏற்று நொறுங்கச் செய்யும். “ஐயுறவுகளால் அசைக்க முடியாத பற்றுறுதி கொள்க. அதன்பின் உன் ஆணைமீது, மலைகள் நகரும். மலைகளின் உதவியால் கடல்கள் தூர்படும். இவ்வரும் பண்பு கைவரப் பெற்று அதனைக் கடுந்தேர்வுகளால் கெட்டிமைப்படுத்தியவர்கள் உண்டு. அவர்கள் ஊனுடல் கோயில் கொண்ட ஆண் பெண்மனிதத் தெய்வங்களாய், இப்பற்றுறுதியின் பேராற்றலால், அதன் பேரொளியிடையே, அதன் பெரும் பயன்கண்டு பீடுபட வாழ்கின்றனர். இருள் நீக்கும் கதிரவன் ஒளிக்கதிர்கள் போல, அவர்கள் இன்ப அமைதியொளியின் ஆற்றலுக்கு உடைந்து துன்பம், பிணி, வறுமை ஆகியவை விலகி ஏகின்றன. அவர்கள் ஆணையால் மலைகள் மடிகின்றன; புயல்கள் அமைகின்றன; புதர்க்காடுகள் பூம்பந்தர்களாகத் திகழ்கின்றன. பற்றுறுதியுடையவர் தம் வருங்கால வெற்றிபற்றிக் கவலைப்பட நேர்வதில்லை; கவலைப்படத் தேவையுமில்லை. விரும்பியன யாவும் விரும்பிய வண்ணமே பெறும் வாய்ப்புடைய ஒரு நங்கையை யான் அறிவேன். ஆ, என்ன தவப் பேறுடையவர் என்று அவரைக்கண்டு வியவாதார் இல்லை. அவர் விரும்பும் தேவை எதுவும் இல்லாத அளவுக்கு அரும்பெறற் பேறுகள் அவருக்காகச் சூழ்ந்து காத்திருந்தன. முயற்சி இல்லாமல் அமைந்தனபோல வாய்த்த இந்தச் சூழல் நற்பேற்றைக் கண்டு பலர் உண்மையிலேயே அவர் முயற்சியற்று வாழ்வில் மிதந்தவர் என்று நினைத்தனர். ஆனால் இத்தனையும் அவர் இடைவிடா நன்முயற்சிகளின் விளைவேயன்றி வேறல்ல. அவர் பண்பின் முழு நிறைவு நோக்கி இடைவிடாப் பயிற்சி மேற்கொண்டவர். புறப்பண்பு நிறைவைவிட அகப்பண்பு நிறைவில் கருத்துச் செலுத்தியவர். முயற்சியின் விளைவைப்பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. அறிவிலார் போல முயற்சியில் தளரவோ முனகி முணுமுணுக்கவோ செய்ததில்லை. மெய்யுணர் வுடன் முயற்சியை வாழ்வாக்கிவாளா அமைந்திருந்தனர். கண்காணாக் கருத்தியல் அலைகளை எழுப்பிப் பற்றுறுதி என்னும் மணிகள் இழைத்து அவா, ஆர்வம், இன்பம் பற்றார்வம், அன்பு ஆகிய ஒளிதிகழ் பொன் வண்ணங்களின் வாயிலாகப் பேரொளி வாழ்வின் கோட்டம் அமைத்துள்ளவர் அவர். அதன் இளநிலாக் கதிர்கள் அவர் விழிகளில் நிலவின; அவர் இன்முகத்தில் தவழ்ந்தன; அவர் குரல் நாளங்களை இயக்கி இசைத்தன. அவரது சூழலில் வந்தடைந்த அனைவரையும் அச்சூழலின் கருத்துக் கடந்த கவர்ச்சியாற்றல் ஈர்த்து எழில்பெறச் செய்தது. இந்நங்கையின் எழில்வாழ்வு எல்லா நங்கையரின் வாழ்வாகவும், எல்லா நம்பியரின் வாழ்வாகவும், உன் வாழ்வாகவும் ஆகத் தடை எதுவும் கிடையாது. தான் இருந்து வாழும் இல்லத்தைதானே தூக்கிச் செல்லும் நத்தையினம் போல, உன் வாழ்வை, வாழ்வின் வெற்றி தோல்வி வித்துக்களை, உன் செல்வங்களை, செல்வாக்கை நீயே சுமந்து செல்கின்றாய். உன் உள்ளத்தை விரிவுபடுத்தி அதில் பொதுநலம் என்னும் வெள்ளத்தைப் பெருக விட்டால், அதில் அன்புக் கனிவுள்ள, தூய இன்பகரமான கருத்தலைகளை இயங்க விட்டால், உன் வாழ்விலும் சூழலிலும் எல்லா நலங்களும் வந்து தவழும். உன் உள்ளத்தைக் குறுகலாக்கித் தன்னலத் தால் சுருங்க வைத்தால், மாசடைந்த வெறுப்புணர்ச்சிகளையும் துன்பகரமான கருத்தலைகளையும் இயங்கவிட்டால், எல்லா வகைப் பழிகேடுகளும் உன் வாழ்விலும் சூழலிலும் வந்து மொய்க்கத் தவற மாட்டா. கோடி குவித்த செல்வம் தரும் பெருமையையும் செல்வாக்கையும்விட, விரிந்த உள்ளத்தின் நற்கருத்தலைகள் உனக்களிக்கும் பெருமையும் செல்வாக்கும் எப்போதும் மிகுதியாகவே இருக்கும். தன்னலமற்ற இத்தகைய தூய உள்ளத்தை அன்பு என்னும் ஏரால் உழுது பண்படுத்து. பற்றுறுதி, ஒருமுகச் சிந்தனை ஆகியவற்றை உரமாகச் செறிய வை. நோக்கங்களாகிய நல்ல விதைகளை விதை. அதன்பின் உன்வேளாண்மை இயற்கை யின் வேளாண்மையாகத் தானே இயலும். ஒருவேளை உன் தற்கால நிலைமை உனக்குப் பிடிக் காதாயிருக்கலாம். உன் வேலையில் உன் மனம் பற்றாதிருக்கலாம். ஆனால் அந்த நிலையிலும் உன் கடமைகளில் தவறு வரவிடாதே. உன்நிலை மேம்படுவது உறுதி என்றும், உன் வாய்ப்புக்கள் பெருகும் என்றும் உன் உள்ளத்தை நம்பவைத்துக் கடமையில் அதை ஈடுபடுத்து அதே சமயம் உன் அகக் கண்களைத் திறந்து விழிப்புடன் இருக்கவைத்து அத்தகைய வாய்ப்புக்கள், நிலைகள் ஆகியவற்றை எதிர்நோக்கும்படி செய். உன் கடமையாற்றி இப்போதைய உன் நிலை, உன் வாய்ப்புக்கள் ஆகியவற்றைக் கெடுக்காமலே, உன் அகக் கண்கள் உன் வருங்காலத்துக்கும் குறைவற உழைப்பதைக் காண்பாய். புதிய வாய்ப்பு, புதியநிலை கண்டு கிட்டிய உடனே, உன் அகஉள்ளம் அதனைப் பற்றி முன்னேறி விடும். அதே சமயம் கடமையாற்றிய புறமனம் சோர்வின்றி உன் புதிய வாழ்விலும் முனைந்து செயலாற்றும். கடமையிடத்துக் கண்ட வெற்றியினும் பன்மடங்கு வெற்றி உன் புதிய வாழ்விலும் உனக்குக் கிட்டும். கடமை அதற்கான பயிற்சியை ஏற்கெனவே உனக்குத் தந்து விட்டது. சின்னஞ்சிறு நுண்ணிய வேலைகள் எளியன; பாரிய வேலைகள் அருமையும் கடுமையும் உடையன என்று நீ கருதலாம். ஆனால் சின்னஞ்சிறு வேலைகளை நிறைவேற்றுவதில் நீ பெறும் பயிற்சிதான் பெருங்காரியங்களில் உனக்கு உறுதுணையாயிருந்து வெற்றிதரும். சிறு காரியங்களிலும், உன் உள்ளவா ஆர்வங்களை இயக்காத காரியங்களிலும், நீ காட்டும் கடமை உழைப்புதான், பெருங்காரியங்களிலும், நீ உள்ளார்வங் கொண்ட காரியங்களிலும் உனக்கு முழு நிறை வெற்றியைத் தரமுடியும். தவிர சிறு செயல்களில் தொடர்ந்து உழைப்பதன் மூலமே உன் இயற்கை தன் ஆற்றலெல்லைக்கு மேற்பட்ட செயல்களுக்குத் தேவையான நீடித்த இடைவிடா உழைப்பு, பல தோல்விகளால் சலியாத அயரா ஊக்கம், பல படியாகச் சிறுசிறு வெற்றிகளைக் கடந்து பெருவெற்றி நோக்கி உழைப்பதற்கு வேண்டிய பொறுமை, விடாமுயற்சி ஆகியவற்றை நீ பெறத் தக்கவன் ஆவாய். இயல்பான ஆற்றல் எல்லை கடந்த பேராற்றலை நீ பெறுவதற்குரிய மறைதிறவு இதுவே. இயற்கையின் ஆற்றல்வேறு, இயல்பான ஆற்றல் வேறு. இயல்பான ஆற்றல் கடந்து செயலாற்றும் திறம் இயற்கையில் அடங்கிக் கிடக்கிறது. இவை புயல், சூறாவளி, இடி, மின்னல் ஆகவும் செயலாற்றும். வளந்தரும் மழையாகவும், வளர்ச்சி தரும் உயிர்ப் பெருக்கமாகவும் செயலாற்றலாம். நீ இயற்கையின் ஒரு சிறு நுண்பகுதியே யாயினும், இயற்கையை விட ஆற்றலில் குறைந்தவனல்ல. ஏனெனில் இயற்கையின் எல்லையற்ற, உள்ளடங்கிய ஆற்றலின் வளர்ச்சிப்பகுதியாகிய பேருயிரின் ஒருபகுதி நீ. ஆகவே உன் உள்ளடங்கிய ஆற்றலும் எல்லையற்றதே. உன் இயல்பு அஃதாவது சூழ்நிலைகளைதான் உன் உடல் உருவில் உன் வாழ்நாளில் இடம், காலம் ஆகிய எல்லைகளால் குறுக்கப்பட்டிருக்கின்றது. அவ்வியல்பு கடந்து, உன் உடலில் சிறுமைகடந்து நீ செயலாற்றத்தக்க எல்லைகள் பல. சமூகத்தை இயக்கி, நீ அருஞ்செயலாற்றலாம். இது கூட்டுழைப்பாற்றல். கருவிகளை உண்டுபண்ணி நீ ஊர்திகளில், மரக்கலங்களில், வானூர்திகளில் சென்று நிலமும் கடலும் வானும் கடக்கலாம். உயிர்களைப் பெருக்கியும், கருவிகளை முறுக்கியும் நீ இயற்கையின் வளத்தைப் பன்மடங்கு பெருக்கிப் புதுப்பிக்கலாம். இடமும் காலமும் கடக்கும் இதே வகைகளில் போதிய அளவு முயன்றால், நீ உன் வாழ்நாள் எல்லையைக்கூடக் கடக்க முடியாது என்றில்லை. உண்மையில் உன் உள்ளடங்கிய ஆற்றலின் எல்லை, இயற்கையின் எல்லையற்ற எல்லை அல்லது கடவுளாற்றல் தான் என்பதை நீ மறந்துவிடாதே. எல்லா மனிதரும் - ஏன், எல்லா உயிர்களும் - இயற்கையின் உயிராற்றல்; அஃதாவது கடவுளின் கூறுகளே. ஆதலால் உயிர்களின் பெருமை, சிறுமை என்பதெல்லாம் பல தரப்பட்ட படிமுறைகளேயன்றி வேறல்ல. இது உன்தன் மதிப்பையும் உயர்த்த வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் நீ கொள்ளும் மதிப்பையும் உயர்த்த வேண்டும். இந்நிலையை நீ அடைந்தால், எப்படி நீ ஒரு மனிதனை - ஓர் உயிரை - வெறுக்கமுடியும்? உன் அகரவரிசையில் நன்மை தீமை, அஃதாவது பொதுநலம் நோக்கியபண்பு, அதனின் அகன்ற பண்பு என்ற வேறுபாடு இருக்கமுடியுமே தவிர, நல்லார், தீயவர் என்ற வேறுபாடு இருக்கமுடியாதன்றோ? உன் நண்பர்களிடமும் பகைவர்களிடமும் - உண்மை நண்பர்களிடமும் பகைவர் களிடமும் கூட - நீ என்ன வேறுபாடு காட்ட முடியும்? உன் நண்பர்களை நீ அன்புக்கனிவுடன் ஆதரிப்பாய்! உன் பகைவர் களையும் அதே அன்புக் கனிவுடன் நீ - பகைமையற்ற உள்ளத்துடன் - எதிர்ப்பாய்! கூடுமானால் நீ ஆதரிக்கும் உன் நண்பர்களிடம் நீ காட்டும் அன்புக்கனிவைவிட, நீ எதிர்க்கும் உன் பகைவர்களிடம் மிகுதியான கனிவைக்காட்டி, அவர் களையும் கூடியவிரைவில் நீ நண்பர்களாக்கிக் கொள்வாய்! தீயவர்களாகத் தோன்றும் அல்லது செயலாற்றும் பகைவர் களும் இங்ஙனம் நல்லவர்களாகி நட்பாடத் தொடங்கிவிடுவர். புதிய ஆற்றலைப் பெறுவதைவிடப் பழைய ஆற்றலைப் புதிதாகப் பயன்படுத்தும் திறமே பெரிது. ஏனெனில், இயற்கையில் புதிய ஆற்றல் என்ற எதுவுமே கிடையாது. உன் இயற்கை ஆற்றலை நீ நன்கு பயன்படுத்த வேண்டுமானால், அதை வீணழிவு செய்து கெடுக்காமல் பேணவேண்டுவது உன் முதற்கடமை ஆகும். அறிவில்லாதவர்கள் தங்கள் கைப்பொருளை வீண்காரியங்களில் செலவிடுவது போலவே, தங்கள் உடலாற்றலையும், உள ஆற்றலையும் தங்கள் சூழ்நிலை வாய்ப்புக்களையும் தகாத சிறு செயல்களில் வீணே ஈடுபடுத்திப் பயனற்றன ஆக்கி அழிக்கின்றனர். எனவே அறிவுடையவன் பொருளில் சிக்கனத்தை நாடிச் செல்வம் ஆக்குவது போல, உடலாற்றலிலும் சூழ்நிலை வாய்ப்புக்க ளிலும் அதேவகையான சிக்கனத்தைப் பேணப் பயில வேண்டும். எடுத்துக்காட்டாக, தீயவழியில் அவாக்களை ஓடவிட்டவன், தன்னலச் சிறுதிற இன்பங்களில் ஆர்வங்களைப் பயிலவிட்டவன், நல்வழிகளிலும் சரி, தனக்கும் தன் சூழலுக்கும் நிலையான ஆக்கவளர்ச்சி தரும் பொது நலவழிகளிலும் சரி, அவற்றின் திறங்களைக் குறைத்து விடுகிறான். வீணுரையாடல், வீணின்பம் ஆகியவற்றால் இயற்கையின் இன்பச் சேமநலத்தை அழிவுக்காளாக்குகிறான். மேலீடாகப் பார்ப்பவருக்கு இயற்கையின் அழிவாற்றல்கள்தான் பெரிது என்று தோற்றும். புயல், மின்னல், இடி, சூறாவளி, காட்டுத்தீ ஆகியவை காலத்தின் சிற்றெல்லையில் பேராற்றல்களாகத் தோற்றுகின்றன. ஆனால் காலங்கடந்த இயற்கையின் அமைதியில் அவை கண நிகழ்ச்சிகளே. திண்ணிய பாறைகளுக்கு உடையாத அலையின் மோதல், அலைதாங்கி களில் பட்டு உடைதல் போல, இவ்வழிவாற்றல்கள், ஊக்க ஆற்றல்களாகிய உயிராற்றல்களுக்கு நாளடைவில் உடைவது உறுதி. கடலின் ஆழத்தில் அலையுடன் அலையாய் இயங்கும் பவளப்புழுவின் கூடுகள், ஆழ்கடலில் பவளக் கொடிகளாகி வளர்ந்து, பவளக்குன்றுகளாகவும், பவளத் தீவுகளாகவும், நாளடைவில், பிறபாறைகள் உடைந்தாலும் அவற்றின் அழிவு கடந்து எஞ்சிய பகுதியாகவும் நிலவுகின்றன. அழிவின் கூளங்களிடையே பாசியும் காளானும் பயிரிடுவாரின்றிப் படர்ந்து உயிர் ஆற்றல்கள் ஆகின்றன. இவ்வுயிராற்றல் முனைத்தெழும் ஆற்றலன்று; அக நின்றுவளரும் ஆற்றல்! புறநின்று வளரும் ஆற்றலன்று; அக நின்றுவளரும் ஆற்றல்! எதிர்த்தழிக்கும் ஆற்றலன்று; தாங்கி நின்று அழிக்கும் ஆற்றல்! பேரவா, கோபம், அழுக்காறு, குறுகிய தன்னல முனைப்பு ஆகியவை இயற்கையின் அழிவாற்றல்களுக்கு ஒப்பானவை. அவை அந்நொடியில், அன்று வலிவுடையவை. ஆனால் அவை காலத்தில் நின்று அழிபவை. அடங்கிய அமைதி ஆற்றல்களாகிய வீரம், தன்னடக்கம், பொறுமை, தியாகம் ஆகியவை நின்று வெல்வது உறுதி. பழங்காலக் கிறித்துவ உலகின் சமயப் பெருந்தலைவர் (போப்) ஆணையையும் பேரரசர் கட்டளையையும் கண்டு மார்ட்டின் லூதரின் நல்லன்பர்கள் நடுநடுங்கி, அவ்விடம் செல்லவேண்டாம் என்று அவரைத் தடுத்தனர். புயல் கண்டு நடுங்கிய பாறைகளாகவே அவர்கள் காட்சியளித்தனர். ஆனால் புயலிடையே புகுந்து அதன் ஆற்றலில் உடையாமல் மீண்டும் தலைநிமிரும் நாணற் புல்லின் தன்மை லூதரிடமிருந்தது. அவர் பணிவுடன், ஆனால் அமைந்த வலுவுடன், “மோட்டில் உள்ள ஓடுகளைவிடப் பலவான அச்சந்தரும் பேய்கள் ஓம்ஸ் நகரில் இருந்தால் கூட இருக்கட்டும், நான் அதற்காகப் போகாமலிருக்கப் போவதில்லை!” என்றார். பிரிட்டனின் அரசியல் மாமன்றத்தில் பெஞ்சமின் டிஸ்ரேய்லி முதல்நாள் அடைந்த தோல்வி பெரிதாயிருந்தது. மன்ற முழுவதும் அதுகண்டு கைகொட்டி நகைத்தது. ஆனால் அவர் “இதே மன்றம் திறந்தவாய் மூடாது என் பேச்சின் ஒவ்வோர் எழுத்தையும் கேட்கும் நாள் ஒன்று உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அன்று கூறினார். அக்கூற்றுப் பொய்க்கவில்லை என்பதை வரலாறு காட்டும். பேராறுகள் சிற்றோடைகளாகவும், சிற்றோடைகள் சிறுநீர்க் கசிவுகளாகவுமே தொடங்குகின்றன. அதுபோலப் பேராற்றலும் சிறுதிற ஆற்றல்களிலிருந்தே பெருக்க மடைகின்றன. செயற்கரிய செய்து முடிக்கும் திண்பேராற்றல், அறிவாற்றலின் விளைவேயாகும். பயனற்றனபோலத் தோன்றும் சிறு பயன் உடைய சிறுதிறக் காரியங்களில் பெறும் பயிற்சி அறிவைத் தரும். அவ்வறிவே பெருந்திறங்களில் செயல் வெற்றிகாணும் பெருந்திறங்கள் ஆகும். அடங்கிய, அமைந்த ஆற்றல்களுள், தலை சிறந்த ஒன்று நகைமுகம், புன்முறுவல்! அழிவாற்றல்களுள் ஒன்று, அடங்காச் சிரிப்பும் ஏளனமும்! முன்னது அறிவை வளர்க்கும். பின்னது அறிவு அகன்ற இடத்திலேயே தோன்றும். திட்டமிட்ட, ஒருமுகப்பட்ட செயல் அமைந்த உள்ளத்தின் விளைவு. அது பொறுமை, விடாமுயற்சி ஆகியவற்றுக்கு மூலவிதை. இரண்டுபட்ட உள்ளம், இருதலை நோக்கம் சிதறிய வாழ்வின் சின்னம். ஒன்றுபட்ட உள்ளம் உள்ளத்தின் உட்குரல் கேட்டு நடக்கும். இரண்டுபட்ட உள்ளம் புறக்குரல்கள் கேட்டுச் சிதறிய வாழ்வுடையதாயிருக்கும். ஒன்றுபட்ட உள்ளம் உள்முகநோக்கி இயற்கையின் அமைந்த ஒருமை உள்ளங்காணும். இரண்டுபட்ட உள்ளம் அதன் பன்முகத் தோற்றங்களில் சிதைவுற்று, அழிந்து இயற்கையின் புறப்பொருள்களுடன் ஒன்றுபட்டு ஒடுங்கும். இயற்கையின் அமைதி உயிர்களின் உள்ளத்தில் உளநலமாகி, உடலில் உடல் நலமாகிறது. பாதையோ பல, வாயில்கள் பலப்பல; சூழப் படர்ந்து நின்றன, கிடந்தன, பார்க்கும் என்முன்னே; விதியாம்சில, விரிவிலா தொடுங்கிய சிலவே; மேனிமிர்ந்தன, தாழ்ந்தனசில; சில நடுங்கும். ஊதை செல்வன, வெய்துயிர்ப்பன; இளங்காற்றின் உலவுகாவனம் ஆயினசில; சில ஒளியின் போதவிழ்வன, சில இருள் அடர்வன; இவற்றுள் போதல் சாலும் கால் விரைந்திட, மெல்லென இனியே! (1) உறுதி வாய்ந்த நல்நெஞ்சொடு செல்லுவன்யானே, உளத்து வாய்மையும் தூய்மையும் துணைக்கொள அமைத்தே! பொறுதியோடு உயர் தோங்கிய நல்வழிகண்டே பூம்பொழில்தடம் நண்ணுவன், பூம்பொழில் நெறியின் இறுதிமுள் திரள் வெந்துயர்ப் படுகர் என்றுணர்வேன்; எனது நெஞ்சத்தில் ஏக்கமும் தயக்கமும் கண்டால், மறுதி கைச்செலும் அகல்நெறி அது இனிதென்றே மருட்டுவார் வழி மயங்கிட நேரும் என்றறிந்தே! (2) முடிவில் இன்பமே முடிவினில் பெற்றிட உள்ளம் முனையும், ஆதலின் முனைந்திலேன் கணந்தரும் இன்பம்! நெடிது செல்லுறும் காலத்தின் ஒவ்வொரு கணமும் நிமிர்ந்து நோக்கிமெய்ப் பயனுற நாடுவன் பெரிதே! உடல்நலம் உளநலம் திரு வீறுடன் வெற்றி உறுதியாக நான்பெற் றிருவேனெனும் உணர்வால், கடுமைநோன்புடன் கடிதெலாம் பொறுப்பன், தீ நெறியில் கால்சறுக்குறா தொவ்வொரு கணமும் கண் விழித்தே! (3) துன்பம்ஓய, மெய்யின்பத்தின் ஆர்ஒளிதோயத் தூய உன்உளம் நாடிய தாதலினாலே, மன்பதைக்கெலாம் வெற்றியும் வாழ்வுமே வகுக்கும் மாசிலா ஒரு தூநெறியதன் தடம்பிறழேன்! என்பிழைக்கினும் பிழைத்திடா அந்நெறி வளையாது என்றும், ஆதலின் அதன் வழிநின்று நான் வளைந்தே இன்ப துன்பமும் வெற்றியும் தோல்வியும் படியாய் இடைவிடாது ஒளிபெற்று உயிர் வெற்றியில் மடுப்பேன். (4) தன்னலத்துடன் ஆணவம் தடங்கெட அழித்துத் தாழ்ந்த மென்பணி வமைதியில் செல்லுவன்யானே! தன்ன தென்றிடும் உரிமையும் கட்டளைத் தருக்கும் தவிர்த்து மெய்அறிவறிவுறும் ஆர்வத்தில் திளைப்பேன்! பன்னலங்களும் பண்பினில் ஒத்துமெய்யின்பப் பாதையே சென்று சேர்ந்திடும், ஆதலினாலே இன்னலங்கொடு தனித்தனி சிறுசெயலதுவும் இழைப்பன், இன்னலிற் பிழைப்பன், பேரின்பத்தில் இழைந்தே! (5) 6. பொங்கும் இன்பத்தின் புதைதிறவுகோல் இன்பத்தின் வேட்கை எங்கும் பெரிதாகவே இருக்கிறது; ஆனால் இன்பப் பேறு எங்கும் அரிதாகவும் காணப்படுகிறது. வறுமைக்கு ஆட்பட்ட மக்களின் மிகப் பெரும்பாலோர் தமக்குப் பெருஞ் செல்வம் கிடையாதா என்றுதான் ஏங்கித் தவிக்கின்றனர். அந்தச் செல்வம் மட்டும் கிடைத்து விட்டால், அந்தச் செல்வமே தமக்கு முடிவில்லாத இன்பத்தைத் தந்துவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால், ஏற்கெனவே பெருஞ் செல்வத்தைப் பெற்றிருப்பவர்களின் மிகமிகப் பெரும்பாலோர் தங்கள் ஒவ்வொரு சிறு அவாவையும் ஆவலையும் அதனால் தீர்த்துக் கொள்ள முடிந்தாலும், வறுமையுடையவர்களைவிட இன்பத்திலிருந்து தொலைவிலேயே இருக்கின்றனர். ஏனென்றால் இன்பம் நுகரும் ஆற்றலே அவர்களிடம் குறைந்துவிடுகிறது. அவர்கள் நுகர்ச்சிக்குரிய நரம்பு நாடிகள் தளர்ந்து செயலற்றுப் போகின்றன. இவ்விரு சாரார் அனுபவங்களையும் பார்த்தால், இன்பம் என்பது புறப்பொருளை அடைவதனால் மட்மடும் வருவதல்ல என்றும், துன்பம் என்பது அதனைப் பெறாததால் மட்டும் எய்துவதல்ல என்றும் உணரலாம். இன்ப துன்பங்கள் புறப்பொருளைப் பொறுத்தவையாயிருந்தால், ஏழைகள் எப்பொழுதுமே இன்பமுடையவர்களாகவும் இருக்க வேண்டும். மெய்ந்நிலை இதற்குக் கிட்டத்தட்ட நேர் மாறாகவே இருப்பதைக் காண்கிறோம். என் வாழ்வில் நான் கண்ட தலைசிறந்த இன்ப வாழ்வுடைய மக்கள் சிலர் மிகக் குறைந்த வாழ்க்கை வாய்ப்புக்களை உடைய ஏழைகளாயிருந்த துண்டு. நேர்மாறாக, மிகவும் துயருக்காளான சிலர், நிறை இன்பப் பொருள்களின் சூழலில் இருந்த பெருஞ் செல்வராகவும் இருந்திருக்கின்றனர். அதுமட்டுமோ? தாமே பெரும் பொருள் திரட்டிய பலர் அதனால் தாம் பெற்ற தன்னல நிறைவுணர்ச்சியே தம் வாழ்க்கையிலுள்ள எல்லா இன்பங்களையும் போக்கடித்து விட்டதென்றும், ஏழைகளாயிருந்தபோது தாம் கண்ட இன்பத்தைத் தாம் மீண்டும் எப்போதும் கண்டதில்லை என்றும் மனமுருகி ஒத்துக் கொண்டுள்ளனர். அப்படியானால், இன்பம் என்பதன் இயல்புதான் என்ன? அது கணக்கு வழக்கில்லாமல் தானாக எப்போதோ வரும் ஒன்றா, அல்லது அதை அடைவதற்கான திட்டவட்டமான வழிதுறைகள் உண்டா? இன்பம் தற்காலிகமான ஒரு மாயத் தோற்றம், துன்பமே என்றும் நிலையானது என்று கூறலாமா? மெய்யறிவின் எல்லைக் கோட்டைக் கடந்த ஒரு சிலர் தவிர மற்ற எல்லாருமே இன்பத்தை அவா நிறைவால் ஏற்படும் உணர்ச்சி என்றுதான் கொள்ளுகிறார்கள். இது பொதுவாக அறியாமையாகிய நிலத்தில் விளையும் களை போன்ற ஒரு தவறான குருட்டு நம்பிக்கையே யாகும். தன்னல இச்சைக்கள் இக் களைப்பயிரை வளர்க்கின்றன. உலகத்திலுள்ள எல்லாத் துன்பங்களுக்கும் இந்நம்பிக்கையே மூல காரணம் என்னலாம். மேலும் இங்கே அவா என்று நாம் கூறியது கீழ்த்தர விலங்கவாக்களை மட்டுமல்ல. உயர்தர உள அவாக்கள் கூடத் தன்மையில் அவற்றைப் போன்றவைதான். முந்தியவை கீழ்த்தர அவாக்களானால், அவை கீழ்த்தர உள்ளங்களையே அடிமைப் படுத்துகின்றன. பிந்தியவையோ, உயர்தர அவாக்களானாலும், அறிவுத் திறமும் நயநாகரிகமும் உடைய உயர்தர உள்ளங் களையும் மெல்ல வசப்படுத்தி அடிமையாக்கும் நுண்திறம் உடையவையாயிருக்கின்றன. இன்பத்துக்கு அடிப்படையான அழகு, இணக்க அமைதி, தூய்மை ஆகிய தாயகப் பண்புகளை அவை அரித்துத் தின்று விடுகின்றன. உலகில் துன்பங்களுக்கெல்லாம் தன்னலமே காரணம் என்பதை எல்லாருமே எளிதாக அட்டியில்லாமல் ஒத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தன்னலமென்று கூறும்போது தம்மைத் தவிர மற்றவர்களின் தன்னலத்தை மட்டுமே எண்ணிக் கொள்வார்கள். இது ஒரு ஆன்ம வஞ்சகம். ஒரு நச்சுத் தற்கொலைப் பண்பு. அவரவர் துன்பம் அவரவர் தன்னலத்தின் பயன்தான் என்பதை ஒருவன் ஒத்துக் கொள்ளத் தொடங்கினால், அவன் தெய்விக உலகின் வாயிலை எட்டி விட்டான் என்று கூறலாம். அது வேறு எவரது தன்னலமோ என்று கருதுமளவும், அவன் பழியுலகத்தின் சிறைக்கோட்டத் துக்குள் அடைப்பட்டே கிடக்கவேண்டும். இன்பம் என்பது உண்மையில் உள்ளத்தின் அகத்தே உள்ள ஒரு முழுநிறை அமைதியேயாகும். அவாக்கள் என்னும் அலைகள் ஓய்ந்த பின் இவ்வமைதி உண்டாகிறது. அவாக்களின் நிறைவேற்றம் தரும் இன்பம் தற்காலிகமானது. அது துன்ப மாகவும் மேலும் அவாவைத் தூண்டுவதாகவும் அமைகிறது. அவாக்களை ஒருவன் நிறைவுபடுத்தக் கருதுந்தோறும் அவை அலையாகத் தோன்றுகின்றன. அவற்றின் அரவம் கடலின் அரவம்போல எல்லையற்றதாய்க் குமுறி எழுகின்றது. அதன் மாய மருட்சிக்கு ஆட்பட்ட உள்ளத்தை அது முழுதும் ஆட்படுத்தி ஆண்டு, அம்மனத்தின் முழு ஆற்றலையும் உழைப்பையும் அது தனக்கே திறையாகக் கொண்டுவிடுகிறது. உடலாற்றல், உள ஆற்றல் முழுவதும் தளர்ந்த பின், அவாக்கள் மனிதனைத் துன்பம் என்னும் தீயில் தள்ளுகின்றன. அவாவைச் சுட்டெரிக்க இத் தீ பயன்படுத்தப் பட்டாலன்றி, அதுவே வாவுடையவனுக்கு அல்லல் படுத்தும் அளறு ஆகும். அவாக்களை இயக்க அல்லது அறுக்க இத்தீயைப் பயன்படுத்தினால், வாழ்க்கை வழிப்போக்கன் விரைவில் இன்ப உலகை அடைகிறான். காணாத இன்ப உலகு எங்கே என்றும், கரையிலாத் துன்ப உலகு இயல்பு எது என்றும், காணுதற்காய்க் காட்சியினுக் கப்பால் என்றன், கருத்தினை யான் அனுப்பினேன், மீட்டுவந்து, “காண்க, நீ கருதும் இன்ப உலகும், துன்ப உலகும் நான்” என்று கட்டுரைத்தன்றே! இன்ப உலகும் துன்ப உலகும் வேறெங்கும் இல்லை. நம் உள்ளத்தில் அகநிலையின் உள்ளேயே இருக்கின்றன. தற்பற்றிலும் அவாநிறைவிலும் ஈடுபட்டு ஆழ்பவன் நரகில் உழல்கிறான். தற்பற்றொழித்து அது கடந்த மேல்புலத்திற்கு ஒருவன் எழுவானானால், அவன் வானுலகில் தவழ்பவன் ஆகிறான். தற்பற்றுத் தானும் குருடாய், உள்ளத்தையும் குருடாக்கிக் குருட்டுப் பாதை வழியே நம்மை இருளுக்குக் கொண்டு செல்கின்றது. அது மெய்யறிவுத் துணிபற்றது; என்றும் துன்பமே தருவது. சரியான காட்சியுணர்வு, சார்பிலா நடுநிலையுணர்வு, உண்மை அறிவு ஆகிய மூன்றும் அவா அடங்கிய அமைதியுடைய இடத்திலேயே தோன்றும். அதுவே இன்பந் தரும். தற்பற்று மாய இன்பங்களை நாடித் துன்பங்களையே வரவழைக்கும். தற்பற்றற்றதன்மை துன்பங்களை எதிர்த்து மடக்கி நிலையான இன்பத்தை உண்டுபண்ணும். தற்பற்றுப் பிறரிடம் தற்பற்றுக்கண்டு கண்டித்துத் தன் தற்பற்றை வளர்ப்பதனால், பிறர் தற்பற்றையும் தூண்டி வளர்த்து அல்லற்படும். தன்மறுப்புத் தற்பற்றொழித்துப் பிறர் தற்பற்றையும் மாற்றியமைத்து எல்லையில்லா நிறை பயன் உடைய இன்பச்சூழலை உருவாக்கும். அன்பு, பெறுபவனை மகிழ்விக்கும், ஆனால் பெறுபவன் அடையும் மகிழ்வு கொடுப்பவன் உளநிறைவுக்கு ஈடாகாது. பெறுபவன் மகிழ்வு கொடுப்பவன் காட்டிய அன்பின் அளவு. கொடுப்பவன் மகிழ்வின் அளவு எல்லையற்றது. கொடையினில் கொடுப்போன் உள்ளம் கொடைபெறு பவனு ளத்தில் எடையினிற் பெரிதாம் சால; எண்ணிய அன்பின் பீடும் தடையிலாது அன்ன தேயாம்; தனக்கிலாது ஈந்தவெல்லாம் கொடுப்பவன் உள்ளத்துள்ளே குன்றெனக் குணத்தின் ஓங்கும்! பசி பெரிதென்று உணவின் அவாவை வளர்ப்பவன் உணவை மட்டின்றிப் புசிக்கிறான். அதனால் பசி மட்டும் போகிறது. பசியின் சுவையும் போகிறது. பசியின் அவா மட்டுமே மீந்து நிற்கின்றது. அவாவும் அவாவை நிறைவேற்ற அவன் முன்பு அலைந்து தேடிய உணவும் இருக்கின்றன. அவாவை நிறைவேற்று வதற்குரிய பசிச்சுவையும் செரிமானமும் கெட்டுவிடுகின்றன. உணவு நோயைத் தருகிறது. நோய் புதுத்துன்பங்களையும் கவலைகளையும் தருகிறது. சாவச்சத்தைப் பெருக்குகிறது. தொடக்கத்திலேயே பசிக்கு மட்டும் உண்டு, அவாவை அடக்கி, பிறர் பசி நீக்க முயன்றிருந்தால், அவன் உடல்நலமும் உள நலமும் கெடமாட்டா. அமைதியும் இன்பமும் பெருகியிருக்கும். பழங்கதை ஒன்று இதனை நன்கு சுட்டிக் காட்டுகிறது. ஓர் எலி ஒருபானையில் பண்டம் நிரம்ப இருப்பதைக் கண்டது. ஆனால் மற்ற எலிகளும் அதனுடன் சென்று அதைப் பங்கிட எண்ணின. முதல்எலி மற்றவற்றை எதிர்த்துத் துரத்தித் தான்மட்டுமே உள்ளே புகுந்து தின்றது. தின்றபின்பும் மற்ற எலிகளை வரவிடாது தானே இருந்திருந்து தின்றது. மிகுதி உணவினால் அதன் உடல் மிகவும் பருத்துவிட்டது. பானையிலிருந்து வெளிவர முடியவில்லை. நுழையும்போது பல எலிகள் உள்ளே செல்லத் தக்கதாய் இருந்த பானையின் வாய், இப்போது இந்த ஒரு எலி திரும்பிவர முடியாத அளவு சிறிதாயிருந்தது. உள்ளேயே கிடந்து பண்டத்தை அழித்த எலி பண்டத்துக்குரியவர் கையில் எளிதாக அகப்பட்டு மாள வேண்டியதாயிற்று. ‘இழப்பவன் பெறுவான்; பெறுபவன் இழப்பான்’ என்ற பழைய அறிவுரையின் பொருள் இதுவே. அடிமைத்தனம் உடைய நம் கீழ்த்தர அவாக்களைப் பின்பற்றித் தற்காலிக இன்பங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதன்மூலம், நாம் நிலையான உயர் இன்பத்தை இழக்கிறோம். அச்சிறு தர அவாக்களை அடக்கி இயக்குவதால், நாம் உயர் இன்பத்துக்குரியவராய்ப் பெரிதும் நலமடைகிறோம். இதிலும் பயன் தெரிந்து மனமார இழப்பவனே துறப்பவன் ஆகிறான். துறவுள்ளம் இன்றி, அஃதாவது தன்னலமில்லாமல் இழவாதவன், இழப்பதன்மூலம் ஆதாயம் நாடும் வணிகனாகிறான். இத்தகையவன், விரும்பும் ஆதாயத்தைப் பெற முடியாது. தனக்கென நாடாது பிறர்க்கு அல்லது பொது இனத்துக்கென நாடுபவனே பிறர்நலம் பெருக்கித் தானும் அதன் வழியாக நலம் அடைகிறான். நீரில் இழுத்துச் செல்லப்படுபவன், நிலையான உறுதியான பொருளைப் பிடித்தாலன்றி இழுப்பிலிருந்து விடுதலை பெற முடியாது. நிலையில்லாது மிதந்தோடும் பொருள்களைப் பிடித்தால், அவன்தன் பழைய இழுப்புடன் இப்புதிய இழுப்புக்கும் ஆளாவானேயன்றி, இழுப்பிலிருந்து தப்ப மாட்டான். கீழ்த்தர அவாக்கள் நிலையில்லாதவை. ஆதலால், அவற்றைப் பற்றுபவன் நிலை, மிதந்துசெல்லும் கட்டையைப் பற்றிக்கொள்பவன் நிலையேயாகும். மாறாத மெய்யின்பத்தை நாடுபவர் நிலையில்லாத மாறுபடும் கீழ்த்தர இன்பங்களைக் கடந்து மாறாத உயர்பண்பமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். உளத்தூய்மை, தன்மறுப்பு, வரையறையில்லா விரிந்த அன்பு அல்லது அருளாண்மை ஆகியவை இத்தகைய அமைதி நிலையை எய்துவிக்கும். நிலையற்ற மற்ற இன்பங்களுக்கெல்லாம் எதிரீடு ஆன துன்பங்கள் உண்டு. மணிப்பொறியின் ஊசல் குண்டுபோல மனிதன் அப்போலி இன்பங்களிலிருந்து துன்பத்துக்கும், துன்பத்திலிருந்து புதிய போலி இன்பங்களுக்கும் இடையே அல்லாடுவான். அமைதியின்பம் இவ்வின்பங்கள் போன்றதன்று. இன்பங்களுள் இந்த ஒரு இன்பத்துக்கு மட்டுமே எதிர்நிலையான துன்பம் கிடையாது. தன்னை மறுத்து, கிட்டத்தட்டத் தன்னை மறந்து, அமைதி பெற்ற நிலை துன்ப நீங்கிய இன்பநிலை மட்டுமன்று, அதுவே அழிவில்லாத் தெய்விக நிலை, அதுவே பேரின்பம். இந்நிலையடைந்தவர் சிறு இன்பங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை இராது. ஆனால் வாழ்வின் தன்மை காண அவர்கள் திரும்பி நோக்கினால், தம் பழைய செயல் களிடையே சில மின்மினிகளாகச் சுடரிடுவதைக் காண்பர். அவையே அவர்கள் இரக்கச் செயல்கள், தன்மறுப்புச் செயல்கள்! வரவிருக்கும் இன்பத் தேனாரமுதத்தின் முனிமுகமான சிறு துளிகளாக அவை விளங்குகின்றன. ஆன்மநிலையில் இன்பம் என்பதும் இயைபமைதி என்பதும் ஒருபொருட் சொற்களே. உயிரின் இயைபமைதி என்பது இயற்கையின் பேரமைதியின் ஒருகூறே. இயற்கையின் பேரமைதியின் ஆன்மிகநிழலே அருள் அல்லது நிறைந்த அன்பு. இவ்இயைபமைதியைப் பேணும் அன்புநலத்தையே நாம் பொதுநலம் என்கிறோம். உயிர்வாழ்வின் வீணைநாதமாக இயங்கும் இவ் வியைபமைதியைக் கெடுக்கும் கீறலாகத் தன்னலமும் தற்பற்றும் விளங்குகின்றன. ஆன்மிக வீணை யினின்று எழும் தெய்வீக இசையில், இவை முரண் ஓசைகள் உண்டுபண்ணிக் கெடுக்கின்றன. பொதுநலமும் விரிந்த அன்பும் இக்கீறல்களைத் தடுத்துப் பேரின்ப இசை அலைகளை எழுப்புகின்றன. ஆடவரும் பெண்டிரும் இன்பத்தை நாடி எங்கெல்லாமோ கண்ணைமூடிக் கொண்டு அலைந்து அல்லற் படுகின்றனர். ஆனால் அது அண்டமெங்கும் உள்ளது. தம்மைச் சூழ உள்ளது - சிறப்பாகத் தம்முன்னே இருக்கிறது என்பதை உணர்வது வரை அவர்கள் அதைக் காணப் போவதில்லை. தன்னலமாகிய சிறுசிறைக்கூடத்தில் நம்மை அடைத்து வைத்துக் கொண்டு நாம்தான் அதை உள்ளே புக விடாமலிருக்கிறோம் என்பதை அவர்கள் அறிவதில்லை. படர்ஆல மரமேறி, படர்கொடிகள் தாவி, பாவை இன்பச் செவியை நான் பற்றிவிட விரைந்தேன்; விடர்தாண்டி, மலை ஏறி இறங்கி, அவள்மாய வெளியுருவைப் பின்தொடர்ந்து வேடனெனச் சென்றேன்; இடர்தரு கானாற்றிடையே நீந்தினேன், கழுகுக்கு எட்டாதகொடும்பாறை எட்டி எட்டி அலுத்தேன்! கடலகமும் வானகமும் ஓடி என்றன் நாட்டம் கடந்தகன்று கண்மறைந்தாள் கருத்திழந்து நின்றேன். இளைத்த உடல் துவள, கால்மடங்க, கண்சோர்ந்தே இருந்திட்டேன் பாலைவனத்திடையே! ஆங்கு ஓர்நாள், களைத்தொருவன் பிழைத்த என்றன் கை உதவிநாட கையுணவும் கருத்தன்பும் கலந்தவனுக்கு அளிப்ப; துளைத்த துயர் அரிப்பவந்த துணைஒருவர்க் காங்கே துணைதரு நன்மொழிபுகன்று துயர் தேற்றிநிற்ப, முளைத்தங்கு வந்தவள்போல் வந்துநின்றாள், ‘உன்றன் குறிப்பறியும் கொள்கை யிளங்கோடி இதோ’ என்றே! தற்காலிகமான இன்பத்தையும் தனிப்பட்ட குறுகிய தனி மனித எல்லையிலுள்ள இன்பத்தையும் துறந்துவிடு; உலகெலாம் இன்பமுறுவித்து அதனுடன் உனக்கும் நிலையான இன்பந் தரும் பேரின்பம் உன்னிடம்தானே வந்தெய்தும். இதுவே பொங்குந்தன்மையுடைய பீடுமிக்க இன்பத்தின் மறைதிறவு கோல். பொது நலமாகிய வானிலேதான் துயர் என்னும் நிழலாடாத உயர் இன்பங்களாகிய வானணங்குகள் நடமாடுவர். பொதுநலத் தெய்வ ஒளியில் நீ அவர்களுடன் கை கோர்த்து உலவுவாய்! பிறர் துயரில் உன்துயரை மறக்கப் பயிற்சி மேற்கொள். பிறர் இன்பம் உன் இன்பமாய்விடும். உலக சேவையில் தன்னலம் மாய்க்கக் கற்றுக்கொள். உலகம் உனக்காக வாழும்; உலகத் துன்பத்தை அகற்றப் பாடுபடும் உன்னைத் துன்பம் அணுகாது. உன்மீது படக் கூடும் அதன் நிழல்தோற்றங் கூட உனக்கு இன்பமாகவே மாறும். ஏனெனில் உலகமுழுவதும் அதில் பங்கு கொண்டு அதன் இயல்பை மாற்றிவிடும். “நல்ல எண்ணங்களை எண்ணுக. இது முதற்படி. நல்ல சொற்களைச் சொல்லுக. இது இரண்டாவதுபடி, நல்ல செயல்களைச் செய்க. இது மூன்றாவது படி. இவற்றின் பின் நான்காவதுபடி என்று ஒருபடி கிடையாது. ஏனெனில் அதன்பின் உன்மெல்லடிகள் படிந்தும் படியாமலும் பொன்னுலகத்தில் மிதந்து செல்லும். உன் எண்ணங்கள் இப்போது உன்னைச் சூழ்ந்த பொன்னிலவொளியாயிருக்கும். உன் சொற்கள் இப்போது உன்மீது தவழும் இனிய தென்றலலைகள் ஆய்விடும். உன் செயல்கள், உன் நடையுடன் நடைபயிலும், மெல்லிசைப் பண்ணாய் இயலும்.” “ஆம், பொன்னுலகை அடையும் வழி இதுவே. அது உனக்குமேல், அப்பால் இல்லை. அது உன்னைக் கடந்து தொலைவில் இல்லை. அது உனக்கு எட்டாத ஆழத்தில் இல்லை. அதைப் பெற நீ நடக்க வேண்டியதில்லை. கை நீட்டி முயல வேண்டியதில்லை. தலைநிமிர்ந்து பார்க்கவேண்டியதில்லை. அது உன்னுள்ளேயே இருக்கிறது. கருத்து அதன் கோயில். குறிக்கோள் அதன் கோபுரம். பண்பு அதன் படித்தடம். பொதுநல அவா அதன் கருத்தடம். அமைதி அதன் இறைப்பீடம்.” பரமனை அடையப் பத்திமை வேண்டும். பத்திமை என்பது மேனோக்கிய அன்பு. கீழ்த்தர எண்ணங்களை அகற்ற அம்மேனோக்கிய அன்பு பயிற்சி தரும். ஆனால் மேனோக்கிய அன்பினும் அகநோக்கிய அன்பு சிறந்தது. ஏனெனில் அதுவே தூய்மை என்பது. பத்திமை பரமனைக் காட்டுவது போல, தூய்மை இன்பத்தைக் காட்டும். பரமன் இன்ப உருவினன். பத்திமையால் அவனைக் காணலாம். ஓரளவு ஓரொருகால் அணுகும் அருவாய்ப்புப் பெறலாம். ஆனால் தூய்மை பரமனின் இன்ப உருவுடன் கலந்து நிலவும் அரும்பெறற்பேறு தரும். தன்னலத் தளை அகலாதவர் பத்திமை நாடுவர். பொதுநலப் பாசத்தினால் அத்தளையற்று, அன்பெனும் கனிந்த நிலவொளியில் குளிப்பவர் தூய்மையும் அமைதியும் கைவரப் பெற்றுப் பத்திமையாலும் பெறற்கரிய உயரின்ப வாழ்வு எய்துவர். பற்றிய பொருளே நம்மைப் பற்றவல்லது. பற்றாதன நம்மைப் பற்றமாட்டா? தளைப்படுத்துபவரே தளைப்படுவர். தளைப்படுத்தாதவர் தளையுறார். கொள்ளுதலால் வரும் இன்பத்துக்கு ஓர் எல்லையுண்டு. ஓர் இறுதி உண்டு. ஒரு குறையுண்டு. கொடுப்பதில் இன்பங் காண்பவர்க்கு அவ்வின்பத்திற்கு எல்லை கிடையாது, குறை கிடையாது, இறுதி கிடையாது. உடலைப்பற்றியவர் உடலுடன் வீழ்வார். உயிரைப் பற்றியவர் உயிருடன் உய்வார். கொடை கையினின்று தொடங்குகிறது. ஆனால் விரைவில் அது கருத்தின் கொடை ஆகிறது. இறுதியில் அது உள்ளத்தின் அன்புக்கொடையாக மலர்கிறது. கையினின்று எதிரலை எழுப்புவதில்லை. கருத்தினின்றே எழுப்புகிறது. கொடை இங்ஙனம் செயல்தளத்திலிருந்து எளிதில் கருத்துத் தளத்துக்கு நம்மை உயர்த்திவிடும் தன்மையுடையது. கருத்துத் தளத்தின் அலைகள் இது போலக் கருத்துத் தளத்துடன் நின்றுவிடுவ தில்லை. அவை உள்ளத் தளத்தில் மிதந்துயர்வுற்று அன்பலை களாகின்றன. தளத்தில் உயருந்தோறும் நுண்மையடைந்து ஆற்றல் பெருகுகின்றது. உயர்தளத்தின் நுண் இயக்கங்கள் தாழ்தளங்களின் தடமில்லாப் பேரியக்கங்களாகின்றன. அன்பலை எழுப்புபவன் அவ்வுயர் தளத்திலிருந்து உலகை இயக்கி ஆள்கிறான். தாழ் தளத்திலிருந்து பிறரை ஆள்பவர் ஆட்சி வெங்கதிரொளிபோல வெப்பந்தரும் ஆட்சி. உயர் தளத்திலிருந்து பிறரை ஆள்பவர் ஆட்சி தண்கதிரொளி போலத் தண்ணில வார்ந்த ஆட்சி. ஏனெனில் தாழ்தளத்திலுள்ள உயர்வு. தாழ்வு, கொள்வோன் கொடுப்போன் வேறுபாடு, இன்ப துன்ப எதிரலைகள், ஆதாய நட்டங்களாகிய செயலெதிர்செயல் விளைவுகள் அன்புத்தளத்தில் கிடையாது. காதலில் கொள்வோர் கொடுப்போர் வேறுபாடோ, பயன்நுகர்வு வேறுபாடோ கிடையாததுபோல, அன்புத்தளத்தில் ஆட்சியில் வேறுபாடற்ற ஒருமை நிலவும். காதலில் தனிமனிதன் இன்பமே இருதுணைவர் இன்பமாய், பின் இருநிலவாழ்வின் இன்பமாவது போல, அன்புத்தளமடைந்தவன் இன்பம் அவனை அடைந்தவர்க்கும் இன்பமாய், நாளடைவில் அவனை அடையாதவர்க்கும் இன்பமாய் ஆக்கமும் பெருக்கமும் பெறும். “நன்றி மறப்பது நன்றன்று”. இது. “கொள்வது இன்பம்” என்று கருதும் தாழ்தளத்தில் உள்ளவருக்குக் கூறப்பட்ட உலகியலொழுக்கம். ‘நன்றியை எதிர்பார்ப்பது நன்றன்று’. இது தாழ்தளத்திலிருந்து மேல்தளநோக்கிச் செல்லப் பயிற்சி நாடுபவர்களுக்காகக் கூறப்படும் உலகிய லொழுக்கம். தன்னலத் தளமாகிய உலகியல் தளங் கடந்தவர்களுக்கு நன்றியை எதிர்பாரா நற்செயலே இயற்செயலாய் விடுகிறது. கீழ்த்தளத்தில் கொடுப்பவர் கொடுக்கும் பொருளால் ஏற்பவர் இன்பம் பெற எண்ணுவர். ஆனால் உயர்தளத்தில் இருசாராரும் பெறும் இன்பம் பொருளில் இல்லை. பொருள்கடந்த செயலில், கொடையில், செயல் கடந்த பண்பில், பொதுநல அவாவிலேயே அவர்கள் இன்பம் அடங்கியுள்ளது. ‘கொள்பவன் இழக்கிறான், கொடுப்பவன் பெறுகிறான்’ இது முரணுரை அன்று, மிகையுரையன்று; அணியுரையன்று, வாயடியுரையன்று. இதுவே மெய்மை, மெய்மை கடந்த வாய்மை, வாய்மை கடந்த உண்மை. இந்நிலை இன்று உன் வாழ்விலிருந்து தொலைவி லிருக்கலாம். ஆனால் அதே பொருளில்தான், இறைவனும் உன்னிடமிருந்து தொலைவிலிருப்பதாகக் கூறமுடியும். நீ உள்ளே நோக்கு. உன் கருத்துத் திரையை விலக்கு. உன்னைச் சூழ்ந்த மாசகற்று. உன்னுள்ளே திகழும் புகழொளியின் இன்பம், உன் அகநிறைந்து, புறம் போந்து, நீ உலவும் உலகத்தில் நிலவொளி வீசும். நீ அதன் ஒளி வண்ணமாவாய். வாடா இன்ப உலகைநாடி வாட்டம் அடைகின்றாயா நீ? கோடா உவகைக் கோட்டை தேடிக் கோட்டம் உறுகின்றாயா நீ? ஆடா அமைதி அன்பின் உயிரில் அணைய விழைகின்றாயா நீ? ஓடா ஆவல் அற்ற உள்ளம் உகந்து கொள்க அமைதியே! நீடு துன்பம் நெஞ்சில் கொண்டு நெகிழ்ந்து நைகின்றாயா நீ? கூடுநெறியில் வளைந்துதிரிந்து குலைந்து மலைகின்றாயா நீ? நாடும் அமைதி தேடிப்புன்கண் நலிய விழைகின்றாயா நீ? வீடுபெறுதி, குறுந்தன்னலங்கள் வீழ்த்தி, அமைதிப் பொதுவிலே! 7. செல்வப்பேறு இன்பம் என்பது ஒருபொருளல்ல. இன்பந்தரும் பொருள்கள் இன்பங்களாகா; இன்பத்துக்கான கருவி களாகவே இவை கொள்ளத்தக்கன. இன்பத்தை நாடுபவர்கள் அதற்குக் கருவியான செல்வத்தைத் தேடுகிறார்கள். ஆனால் இன்பம் அவர்களுக்குத் தொலைநோக்காகி விடுகிறது. செல்வத்தையே அண்மைநோக்காக, நேரடி நோக்காகக் கொண்டு விடுகின்றனர். அது ஒரு கருவி, அக இன்பம் நாடுவதற்குரிய புறக்கருவி என்பதை மறந்து விடுகின்றனர். எனவேதான் கடுமுயற்சி செய்து அரும்பெறலாகச் செல்வத்தைப் பெற்றபின்னும் அவர்கள் நோக்கம் நிறைவேறுவ தில்லை. நாடிய செல்வத்தின் பயனாக இன்பத்தையும் அவர்கள் பெறுவதில்லை. நூறு பெற்றபின் பல நூறும், ஆயிரம் பெற்றபின் பல ஆயிரமும் எனச் செல்வப்பற்றுப் பெருகிக் கொண்டே போவதால், முயல்பவர் எந்த நிலையிலும் முயற்சிக்கு முன்னைய நிலையிலேயே இருக்கின்றனர். தேவைப்பொருள் கிட்டிய பின் இன்பப் பொருள். இன்பப்பொருள் கிட்டியபின் உயர் இன்பப் பொருள் என அவர்கள் முயற்சி எல்லைக் குறிக்கோளின்றி விரிந்து செல்கிறது. இன்பப்பொருள் இன்பந் தருவதில்லை. தேவையின் துன்பம் தேவை தீர்ந்த பின்னும் நீடிக்கிறது. உண்மையான இன்பம் புறப்பொருளிலன்று. அகத்திலேயே உள்ளது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. உண்மையான செல்வமும் புறப்பொருளன்று, உண்மையான இன்பந்தரும் ஓர் அகப்பண்பு ஆகும். அது புறச்செல்வத்தை ஆக்குவது, பயன் உறச் செய்வது, வளர்ப்பது, அது இல்லாத புறச் செல்வமும் புறவறுமையும் ஓர் நீர்மையுடையனவேயாகும். உண்மையான செல்வம் அல்லது அகப்பண்பு என்பது என்ன? புறச் செல்வத்தின் பயன், பயனின்மை ஆகியவற்றி லிருந்தே அதை உணரலாம். ஒருவன் சமூகத்தில் வாழாமல், காட்டில் வாழ்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் புறச்செல்வத்துக்குப் பயனே இராது. அங்கே புறப் பொருள்கள் தான் பயன்தரும். ஆனால் காட்டிலோ புறப் பொருள்கள் வகைவகையாக, ஏராளமாக முயற்சியின்றிக் கிடைக்கும் அருவி நீர், மலைத்தேன், மூங்கிலரிசி, வகைவகைப் பழங்கள், வேட்டைவிலங்கு, பறவை முதலிய உயிரினங்களைப் போட்டியின்றி அவன் பெறலாம். அவன் இன்பவாழ்வுக்கு வேண்டியன இரண்டே. ஒன்று அறிவுடன் கூடிய தன்முயற்சி. இது அவனிடத்தே உள்ளது. இது அவன் தனிப்பட்ட அகப்பண்பு, அவன் வளர்க்கவேண்டிய பண்பு. இரண்டாவது அவனது உயிரின, மனித இனப்பாசம். மனித இனத்தோழமை இல்லாவிட்டால், அவன் நாய், பூனை, மான் ஆகியவற்றினிடமாவது பாசங்கொண்டு வளர்ப்பான். அவன் பாசங்கொண்ட பொருள் அவனுக்கு முற்றிலும் புறப் பொருளன்று. அவன் வளர்க்கும் மானின் அருமை அதன் தசையில் அருமையினும் பெரிது. மனிதத் தோழமை அவனுக்கு அங்கே கிடைத்தால், அவன் இன்னும் மகிழ்வான். உயிரின் அன்பு, பிற மனிதர் நேசம், மதிப்பு, புகழ் ஆகியவையே மனிதனுக்குப் புறப்பொருள் இன்பத்தினும் மேம்பட்ட இன்பம். இன்பந்தரும் உண்மைச்செல்வம் இங்ஙனம் ஓர் அகப்பண்பு என்றும், அது தனி அகப்பண்பு அன்று, பொது அகப் பண்பாகிய சமூகப்பண்பு என்று காண்கிறோம். புறச்செல்வம் எத்தனை ஏற்பட்டாலும் மனிதனுக்கு மன நிறைவும் இன்பமும் தோன்றாததன் காரணத்தைக் காண்பது எளிது. அவன் உள்ளார்ந்த சமூகப்பண்பு தன்னைச் சமூகமாக்கிச் சமூக ஆட்சி செய்ய விதிர் விதிர்க்கின்றது. இதன் மூலம் தூண்டுதல் அவனைக் குடும்ப உறுப்பினனாக்குகிறது. இங்கே அவன் போட்டி பண்பைப் பயன்படுத்தவில்லை. அன்புப்பண்பை, கூட்டுறவுப் பண்பையே பயன்படுத்துகிறான். ஆனால் தன்னைக் கடந்து தன் குடும்பத்தில் பற்றுக் கொண்டபின், அவன் போக்கில் திசைமாற்றம் ஏற்படுகிறது. அவன் குடும்ப நலனுக்காகவே புறப்பொருள் நாடுகின்றான். அவன் அடிப்படையில் மேலும் முன்னேறிச் சென்றால், அவன் பின்னும் கூட்டுறவுப் பண்பையே வளர்க்கவேண்டும். அப்படிப் பழங்கால நல்லோர் வளர்த்ததுதான் சமூகம், ஊர், நாடு, மனிதசமூகம் அல்லது மனிதப் பொதுவினம். ஆனால் புறப்பொருளில் பற்றுக் கொண்டவன் புறச்செல்வமே செல்வமென்று நினைத்துப் போட்டிப் பண்பை வளர்க்கிறான். பிறரை ஆள்வதற்கு எளிய இனிய வழியாகிய அன்பு, கூட்டுறவுப் பண்புகளை மறந்து, போட்டி, ஆதிக்கம் ஆகியவற்றை நாடுகிறான். புறச் செல்வமும் புறவலுவும் இவை சார்ந்த புற அறிவும் இதில் அவனை ஊக்குகிறது. இவற்றின் பயனாகத் துன்பமே நிகழக்கூடும். அவன் செயலறிவு வெற்றிப் பெற்றால், அத்துன்பம் செல்வத்துடன் கூடிய துன்பமாய், செல்வர் துன்பமாகும். அன்றேல் செல்வத்தை நாடும் துன்பமாய் வறுமையின் மிடிமைத் துன்பமாகும். அகப் பண்பின், நல்லொளி புறப்பொருளில் உலக முழுவதையும் பொன்னாகவும் மலராகவும் பொன் மலராகவும் ஆக்கக் காத்துக் கொண்டிருக்கையில், உலகின் மக்கள் பலர் ஒரு கைப்பிடி பொன்னை அல்லது ஒரு சில காணி நிலங்களைநாடி அலமருகின்றனர் என்பது எத்தனை அறியாமை! தன்னல அறிவாகிய கண் பண்பொளிகாணாது; தன்னலச் செயலாகிய கையாலும், தன்னலப் பண்பாகிய போலித் திறமைத் திரையாலும் அதை மறைத்து, தன்னழிவு என்ற வற்றற்பாலையில் மனித வாழ்க்கையைச் செலுத்தி அழிக்கிறது. இயற்கை கொடுக்கிறது. வரையாது வாரி வழங்குகிறது. எத்தனைபேர் அள்ளினாலும் அள்ள அள்ளக் குறையாதது அதன் வளம். ஆனால் சிறுமையுள்ளம் படைத்த மனிதன் ஆத்திரமடைந்து அதை இயற்கையிடமிருந்து தட்டிப் பறிக்கவும், இயற்கையின் மற்றச் செல்வர்களான தன் தோழர்களிடம் அது செல்லாமல் தடுக்கவும் அரும்பாடுபட்டுச் செல்வத்தைத் திரட்டி, அச்செல்வத்தைக் கொன்னே கழித்துத் தானும் வறுமையுற்று, உலகிலும் வறுமை பரப்புகிறான். போட்டியே இயற்கையின் அமைதி என்று பலர் நம்புகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சியைக்கூடப் பலர் இந்த மெய்ம்மையை நிலைநாட்டத் துணைக்கு அழைக்கிறார்கள். ‘இயற்கையில் தகுதியே அழியாது நின்று வெல்கிறது’ (ளுரசஎiஎயட டிக வாந குவைவநளவ) என்ற தத்துவம் போட்டியின் தத்துவமே என்று அவர்கள் கொள்கின்றனர். இதனிலும் போலியறிவின்பாற்படும் தத்துவம் பிறிதில்லை. தகுதி என்பது திறமை மட்டுமன்று. திறமையால் ஒரு தனி உயிரினம் அல்லது தனிமனிதன் திறமையற்ற தன் தோழ இனத்தை வெல்லலாம். ஆனால் இது தற்காலிக வெற்றியாகவும் போலி வெற்றியாகவுமே முடியும். ஏனெனில் திறமையில் தாண்டிய பிறிதொரு தனி உயிர் அல்லது உயிரினத்தின் தாக்குதலால் அது அழியவே செய்யும். மனிதன் இப்படி அழியவில்லை என்பதை அறிவியலும் வரலாறும் காட்டுகின்றன. உடல் வலுவில் மேம்பட்ட உயிரினங்களைத் தாண்டி, அவன் வளர்ந்திருக்கிறான். இந்த அறிவு புற அறிவாகிய சூழ்ச்சியறிவு மட்டுமல்ல. அதுவும் திறமையை போலத் தற்காலிக வெற்றி மட்டுமே தரக்கூடியது. மனித இனத்துக்கு நிலையாகத் தொடர்ந்த, வளர்ச்சியுடைய வெற்றியைத் தரும் திறங்கள் அகநோக்கு, பொதுநோக்கு ஆகிய இருநோக்குகளே. புறச் சூழல்களை இயக்கும் தன்மையில் அவன் தன்னைத் திருத்திக் கொள்ள அகநோக்கு அவனைத் தூண்டிற்று. பொதுநோக்கு அவனைத் தனிமனிதனாய் நின்று போராடாமல் தடுத்து, படிப்படியாக விரிந்து செல்லும் இனப்பண்பு வளர்த்தது. உலகமே குடும்பம், சமூகம், இனம், ஊர், நாடு, உலகம் என்ற விரிவுப் படிகளை வளர்த்து, அது இறுதியில் எல்லாமே தானாகும் நிலையை அவனுக்கு உண்டுபண்ணுகிறது. நாகரிகத்தின் இப்படிப் பினையை அறியாதவர்கள் அறிவியலையோ, வரலாற்றையோ அறிந்தவர் ஆகமாட்டார்கள். போட்டி மனப்பான்மையுடையவர் “நேர்மை வெல்லாது சூழ்ச்சி வெல்லும்’; “அறம் வெல்லாது, மறம் வெல்லும்,” “அன்பு வெல்லாது, ஆற்றல் வெல்லும்;” என்ற தவறான குருட்டு நம்பிக்கையை எப்படியோ உறுதியாகப் பற்றிக் கொண்டு விடுகின்றனர். இஃது உண்மையில் அறியாமை அடிப்படையாகப் பிறந்ததேயாகும். ஆயினும் இந்தப் போலிப் புற அறிவையே நாம் அறிவு என்று கூறுவதால்தான், உண்மையான மெய்யறிவை நாம் அறிவென்று கூறாமல், பண்பு என்று கூறுகிறோம். தன்னலத்தின் குறுகிய சிறு சூழலில், புற அறிவும் சூழ்ச்சியும் ஆற்றலும் போட்டியும் தற்காலிகமான சிறு வெற்றிகளை உண்டு பண்ணும். ஆனால் இவை போலி வெற்றிகள். நிலையான தோல்விகளுக்கே இவை வழி வகுப்பன. அவை இன்ப உருவம் போர்த்த துன்பங்கள். உண்மையான இன்பமும் செல்வமும் நாடுபவன் இந்த மாய வெற்றிகளான மின்மினிகளில் நம்பிக்கை கொள்ளக்கூடாது. தன்னலம், போட்டி ஆகிய மடமை குறிக்கும் சொற்கள் அவன் பண்பின் அகர வரிசையில் இடம்பெறக்கூடாது. அவற்றை ஒழித்த அன்றே அவன் இயற்கையின் உள்ளுயிராகிய இறைவனிடத்தில் உண்மை யான பற்றுக்கொண்டவன் ஆகிறான். இயற்கையின் அன்பமைதியாகிய அருளறத்தில் அவன் காலடி எடுத்து வைத்து, ‘நேர்மை வெல்லும்,’ என்ற நம்பிக்கை ஒளி நோக்கிச் சலியாது செல்கிறான். தீயவர்கள் வெற்றி பெறுகிறார்களே, தீமை வெல்கிறதே என்ற கவலையும் தன்னம்பிக்கைக் கேடும் பண்பு அல்லது மெய்யறிவுடையவனிடத்தில் எழமாட்டா. காற்றிலடித்து மேலெழுந்து பறக்கும் பதர்களாக அவன் அதைத் தற்காலிகத் தோல்வி என்றே கொள்வான். அதுமட்டுமல்ல. நேர்மையின் இயற்கையமைதியில் ஊன்றிய நம்பிக்கை உடைய அவன், அத் தோல்விகளையும் அறிவுதரும் வெற்றிப் படிகளாகவே கொள்வான். தவறான பாதையில் செல்லும்போதுகூட நேர்மையுணர்வாகிய அகச் சான்றே தன்னைக் கட்டாயமாக நேர்வழியில் உய்க்கும் திறமுடையது என்பதை அவன் அறிவான். ஏனெனில் தன் அமைதியில் நின்று நேர்மையின் வெற்றியில் அவன் கொண்ட பற்று புற ஆற்றல்களை வெல்வது மட்டுமல்ல. புற ஆற்றல்களையே இயக்கி ஆட்கொள்வது ஆகும். அது செல்வத்தை இயக்கிப் பயன் உண்டுபண்ணுவது மட்டுமல்ல; வறுமையையும் இயக்கிச் செல்வமாக்குவது. அது இன்பத்தை இயக்கி வாழ்வை வளர்ப்பது மட்டுமல்ல; துன்பத்தையும் இயக்கி இன்பமாக்குவது. இறைவர் இயற்கையில் பரந்து உலவுகின்றார்: ஆனால் உன்னுள்ளே செறிந்து நிலவுகின்றார்! இயற்கையை அவர் இயக்குபவர், அதேசமயம் இயற்கை வழிநிற்கும் உன்னை அவற்றைவிட முனைப்பாக அவர் இயக்க வல்லவர். அவர் அறிவொளி உன் இழப்புக்களைப் பேறுகளாக்கும். உன்னையடையும் பழிகளை அவர் பண்புகளாக்குவார். ஆனால் இவற்றுக்குரிய அடிப்படைத் தன்மைகளை நீதான் வளர்க்க வேண்டும். அவையே வாய்மை, நேர்மை, பெருந்தன்மை, அன்பு ஆகிய பொதுநலத் திறங்கள். தன்மையிடந்தான் முதன்மையிடம் என்று கூறும் உலக வழக்கை1 நீ ஏற்றுக் கொள்ளாதே. ஏனெனில் தன்னலம் பேணுபவனது வெற்றி நீர்மீது எறிந்த கல்போல நீரைச் சிதறடிக்கும். ஆனால் அக் கல் அமிழ்வதுபோல அது நீருள் அமிழ்ந்து கிடக்கும்; தன்னினும் நொய்மையான மணலுக்கும் சேற்றுக்கும் அடியில் அது நாளடைவில் புதையுண்டு மறையும். ஆனால், நுட்பமும் நொய்ம்மையும் உடைய பொருள்கள் போல, பொதுநலம் நீரில் மிதந்து சென்று அதனுடன் உயர்வுற்று இயங்கும். தன்னை முதன்மையாக நினைப்பவன் தன் நலத்திலேயே முழுதும் அக்கரையுடையவனாயிருப்பான். ஆனால் இதன் மூலம் அவன் உலகை இழப்பதுடன் தான் பற்றிய தன் நலத்தையும் மெய்யாக இழப்பான். ஏனெனில் தன்னலம் விரும்பும் அவனைப் பிறர் வெறுப்பர், எதிர்ப்பர், பகைப்பர். பொதுநல அவாவுடையவரோ அவனை விட்டு ஒதுங்குவர். தன்னந்தனியிலிருந்து புண்பட்ட உள்ளத்துடன் அவன் ஆறுதல் நாடும்போதுகூட, மனிதர் எவரும் அவனைப் பொருட்படுத்தமாட்டார். பொது உள்ளமாகிய இறைவனும் அவன் உள்ளத்தின் திசையை நாடமாட்டார். ஆறுதல் தரும் பண்புடைய மனச்சான்று அவனுக்கு ஆறுதல் தராது. ஊறுதான் தரும். அமைதி தரும் பெருமித உணர்வு அவனை அணுகாது. குறுகிய எல்லையில் அடைப்பட்டுப் புழுங்கி வாடி அவன் உயிர்ப் பண்பு நலியும். நேர்மை யென்னும் நேர்நெறிவிட்டு விலகுபவர்கள் போட்டி என்னும் முள்பாதையுள் புகுவர். முன்போகவும் முடியாமல் பின் போகவும் முடியாமல் அலமருவர். ஒரு காலில் முள்ளெடுக்க மறுகாலூன்றில், அதிலும் முள்தைத்துச் சொல்லொணாத்துயர் பெருக்கும். போட்டியென்னும் இவ் இனப்பகைமையினின்று ஒருவனைக் காப்பது வாய்மை, பாசம், பற்றுறுதி ஆகியவையே. இது வெறும் அணிந்துரை யன்று. மெய்ம்மை! போட்டித்திறம் ஒருசிறிதும் அற்றவர்கள் பலர் வாய்மையென்னும் இரும்பு மிதியடி மூலம் போட்டி முட்கள் எவற்றாலும் தாக்குறாமல் இருப்பது காணலாம். அவர்கள் மீது செலுத்தப்படும் பொறாமையுரைகளெல்லாம் புகழ்மாலையாகவும், போட்டியெல்லாம் ஊக்கும் முறைகளாகவும் ஆகின்றன. அவர்கள் வாழ்வின்மீது தூவப்படும் வறுமைச்சேறு வள்ளன்மைச் சாந்தாக மணம் அளிக்கிறது. அன்பு நேர்மையுடையவன் அகத்தே வளரும் பண்புகளின் தொகுதியே நற்குணம் என்று அழைக்கப்படுகிறது. தீமையின் படைக்கலங்கள் எவையும் ஊடுருவாத இருப்புக் கவசமாகவும், கடுந்தேர்வுகளால் நிலை தளராத கனகப் பாளமாகவும் அது துலங்குகிறது. அது வெற்றிக்கோட்டைக் கெடுத்த உறுதியான கடைகாலாகவும் அமைகிறது. ஒள்ளிய உள்ளத்தின் கண்காணா உயர் ஆடை கள்ளப் பழித்துன்பம் பட்டுக் கறைப்படுமே! கொள்கைக் கழிவிரக்கம் குன்றனைய வழிபாடு தெள்ளும் தெளிவதனில் ஊட்டாது, தேறிடுவாய்! 1 அறிவை அறியும்நல் அறிவை அறியும்வரை செறியும் அறியாமைச் சிக்கறுத்தல் ஆகாது; முறிவும் உறுநோவும் முடங்கும் நெறிதோறும் குறுகும், அளறுள் புதைமுட்கள் என்னவே! 2 நல்லாடைச் சிக்கறுக்கும் நன்னிலம் மெய்யறிவே; வல்லவாவின் பிணைந்த மாசகற்றும் நன்னீராம் மெல்லிய அன்பு; நயம்; இந்த முப்பண்பும் அல்லல் தொலைத்தின்ப அமைதி அளித்திடுமே! 3 பழிதரு துன்பமும் பழியின்பின் கழிவிரங்கும் அழிதரு துன்பமும் எனுநச்சுச் சுழலிடை வழிதரும் இன்னலம், பொறுதியின் நன்னலம், கழிபெரு மகிழ்வீன்று கடுந்துயர் போக்குமே! 4 தானெனும் ஒன்று மறைய, அதனிடத்தே யானென வாய்மை இடம்பெறும்; மாயும், ஊனிடை மாயா உயிரென நின்று பானுரையாக்கும் பரமன் உள்ளத்தையே! 5 II. அமைதிநெறி 1. கருத்தின் ஆற்றல் உண்முகச் சிந்தனை ஒன்றே உலகளாவிய உயிர் ஒளியைப் பெறுவதற்கான நெறி. மேலோர்கள் யாவரும் நோக்கத்துடன் விரைந்தேறிச் சென்ற மறைநிலை அக அறிவின் ஒளியக ஏணி அதுவே. கீழோர்களும் முன்னோ, பின்னோ; இடறிவிழுந்தோ, இடையறாது தேடியோ, இறுதியிற் சென்று தட்டித் தடவிப் பிடித்தேற வேண்டிய இருள அனுபவ ஏணியும் அதுவே. தன்னை மறுத்துத் தன் சூழலையும் அடக்கியாண்டு மறப்பவன் எவனோ, அவனே அதன் பொற்படிகளில் காலூன்றுகிறான். மனம் என்னும் உள்ளத்தின் காலடி அதனில் பற்றியவுடனே உள்ளுணர்வு எனும் அதன் கண்நோக்கிற்கு மங்காத நிறை அமைதியின் ஒளி தென்படும். ஊனக் கண் காணும் ஊறுபடு காட்சி மறைந்து உயர் வானக்கண் காணத்தக்க வாய்மையின் நிறை நீளொளி எங்கும் பரவி ஒளிரும். திருநிலை வானரசு, திரு நிலை வடிவழகு, திருநிலை இன்பம், தூய திருநிலை நிறை இசை ஆகியவை தன்னை மறுத்தவன் உள்ளுணர்வு ஒன்றினாலன்றி எய்தப் பெறமாட்டா. சிந்தனை என்பது அமைதியின் செல்வம். அமைதி பேணியவன் எண்ணங்கள் ஒருமுகப்பட்டுச் சிந்தனை ஆகின்றன. பொதுப்படையாகப் புறப் பொருளை ஒருவன் பார்க்கிறான், காண்பதில்லை. பார்வை மேற்போக்கானது; அதில் அகத்தின் கருத்துத் தோய்வதில்லை. காட்சி பொருள்களின் பண்பு அல்லது அகக் கூறுகளைக் கவனிக்கிறது. பண்புக் கூறுகளின் தொடர்புகளில் காண்பவன் கருத்துச் செலுத்தும் போது அவன் காட்சி நோக்கு ஆகிறது. பலவழி நோக்கி ஒருபொருளை முற்ற உணர்வதே சிந்தனை ஆகும். ஒருபொருளைப்பற்றி இடைவிடாது ஆழ்ந்து சிந்திப்பவன், அப்பொருளே ஆகிறான். அஃதாவது அவன் அகத்தில் அப்பொருளின் அக உருவம் அஃதாவது பண்பு வடிவம் கட்டமைகிறது. அவ் அகப்பண்பே பொருளின் உயர்நிலையா தலால், அதனை இயக்குவதன் மூலம் அவன் பொருளையும் பொருளுலகையும் இயக்குகிறான். புறப்பொருள்கள் மட்டுமன்றி, உயிர்களும் இங்ஙனம் அகநிலைபோல் முழுதும் உணர்ந்து இயக்கப்படத் தக்கனவே. தன்னலமுடையவன் புறப் பொருள்கள்மீதும் புற உயிர்கள்மீதும் தன் தன்னலத்தை, ஏற்றி அவற்றை அல்லது அவர்களைப் பகைப்பண்புகள் ஆக்குகிறான். சூழல் இவ்வாறு அவனுக்கு எதிராகிறது. ஆனால் பொது நலமுடையவன் நிலை இதற்கு நேர்மாறானது. அவன் உள்ளத்தின் பெருமிதப் பண்பு சூழுள்ள யாவரையும் பெருமிதப் பண்புடைய நண்பர் ஆக்குகின்றது. பொருள்களும் இது போலப் பயனுடையவை ஆகின்றன. ஏனெனில் பொருள்களின் பண்புகளையும் பண்புத் தொடர்புகளையும் அவன் முழுதும் அறிவதால், அவற்றின் பயனோக்கி அவற்றைக் கையாள முடிகிறது. காலில் குத்தும் முள்ளை அவன் முள்ளெடுக்கப் பயன்படுத்துவான். தாள் துண்டுகளை அறுக்கும் கத்தியைக் காலில்பட்டு அதை அறுத்துவிடும்படி அவன் விட்டுவைக்கமாட்டான். நோக்கமுடையவன் நோக்கி முழுதுணரும் பொருளையோ காட்சியுடையவன் பகுதியளவு காண்பவன். நோக்கமும் காட்சியுமில்லாவிடினும் கண் தன்னியல்பில் பார்க்காம லிராது. அதுபோல நோக்கமும் அமைதியும் பேணி ஒரு முகமாகச் சிந்திக்காதவன் வகையிலும் உள்ளம் வாளா இருப்பதில்லை. அது தன்னியல்பாக ஓய்வு கிடைத்த வேளையிலெல்லாம் சிந்திக்கவே செய்யும். ஆனால், நோக்க முடைய சிந்தனைக்கும் இந்த இயல்பான சிந்தனைக்கும் வேறுபாடு உண்டு. நோக்கமுடையவன் சிந்தனை பொருளின் பயன் நோக்கி அதைக் கையாளும். நோக்க மற்றவன் சிந்தனையோ பொருளுலகின் பண்படா அவாக்க ளென்னும் சுழல் காற்றுக்களில் அலமரும். செயலற்ற ஓய்வு நேரங்களில் எவ்வளவு பண்பாடற்றவரும் இத்தகைய இயல்பான சிந்தனை வயத்தவராய் இருப்பது காணலாம். இத்தகைய இயல்பான சிந்தனையின் தன்மையே ஒருவர் அகப் பண்பை வரையறுத்துச் சிறைப்படுத்துவது ஆகும். ஓய்வு நேரங்களில் ஒருவன் உள்ளம் எத்தகைய சிந்தனைகளில் அமைதி நாடுகிறது என்று கண்டால், அதுவே அவன் பண்பு என்று தேரலாம். மனிதன் கருத்து, செயல், வாழ்வு ஆகிய யாவுமே இந்த பண்பின் விளைவுகளானாலும், வாழ்விலும் செயலிலும் அவற்றை நுனித்துணர்வதைவிட எளிதாக இந்த அமைதி காலக் கருத்தில் உணரலாகும். இதனாலேயே “ஒருவன் செய்வது எது என்பதைவிட அவன் செய்யாமலிருப்பது எது என்பதே அவன் வாழ்வின் உயிர் நிலைக் கூறு” என்ற கூற்று மெய்ம்மையுறுகிறது. ஓடுகின்ற இயந்திரங்களில் இயந்திரத்தின் உள்ளார்ந்த இயல்புகளை ஓரளவு காணலாம். ஆனால், அது ஓடி அமைந்து ஓய்ந்தபோதுதான், அதன் இயல்பு முழுவதும் விளங்கும். அதன் இயக்க இயல்புகளின் அடிப்படை அதுவே. ஓய்வு காலச் சிந்தனைகள் இயல்பாய் எழுபவையானாலும், அவை இயல்பாக விளைவின்றிச் செல்பவை அல்ல. அவை உளப் பண்பின் சின்னம் மட்டுமல்ல. அவை உளப்பண்பை மேன்மேலும் தம் வழியில் உருவாக்கிக் கொண்டே செல்கின்றன. அவற்றின் இயல்பான வழிகள் என்பது இயற்கையின் புறச்சூழல் வழியே, எனவே, தன்னியல்பான சிந்தனைகளுக்கு இடந்தருபவன், புறச்சூழல் வழியே இயங்கி அவற்றுக்கு அடிமைப்படாமல் இருக்க முடியாது. புறச் சூழல்களை நோக்கமாகக் கொள்வதனிடமாக, பொருள்களின் பயனுணர்ந்த மெய்யுணர்வை நோக்கமாகக் கொண்டவன் சிந்தனை மேலானது. அது இந்த இயல்பான சிந்தனையை மாற்றியமைத்து அதன் மூலம் வாழ்க்கைச் சூழலையே புதிதாக உருவாக்க வல்லதாகிறது. எண்ணங்களை எப்போதும் உயர்வு படுத்துபவன், ‘உள்ளுந்தோறும் உயர்வுள்ளுபவன்’. தன்னை யறியாமலே அமைதி நேரத்திலும் உயர் சிந்தனை களிலாழ்ந்து உயர்வுறுகிறான். நோக்கத்துடன் அவற்றை இயக்குவதன் வாயிலாக, அவன் உயர்வு பெறும் ஆற்றல் பெருகுகிறது. உலகத்தின் ஆன்மிக ஞானியர் அனைவரும் உயர்நிலை பெற்றவழி இந்த உயர்ந்த சிந்தனைவழியே. புத்தர்பிரான் வாய்மையைப் பற்றியே ஓயாது சிந்தித்தார். இறுதியில் “நானே வாய்மை, வாய்மையே நான்” என்று கூறும் நிலையை அவர் சென்றெய்தினார். இயேசுபெருமான் இறைவன் அறிவுத் திருவுருவிலேயே உள்ளத்தை ஓயாது ஓடவிட்டார். அதனாலேயே “நானும் என் தந்தையும் ஒருவரே” என்று அவரால் கூற முடிந்தது. நோக்கமுடையவன் சிந்தனை இயல்பான சிந்தனையிலிருந்து வேறாயிருப்பதுபோலவே, நோக்கமற்ற மனக்கோட்டையிலிருந்தும் வேறானது. உண்மையில் மனக்கோட்டை இயல்பான சிந்தனையை விட மோசமானது. இயல் சிந்தனை உள்ளார்ந்த அவாவினால் மட்டுமே தூண்டப்படுவது. மனக்கோட்டை அவ்வவாவை மேன்மேலும் வளர்ப்பது. பயனுடைய சிந்தனை இவ்விரண்டுக்கும் மாறாக, கலப்பற்ற வாய்மையின் தூய உருவத்தைக் காண முயலும் முயற்சி ஆகும். அம்முயற்சியில் அது எத்தகைய வழுவும் குறையும் வைப்பதில்லை. அது முழுநிறை முயற்சி. அம்முயற்சியில் எதுவும் அதைத் தடைப்படுத்த முடியாது. அது உறுதியுடன் கூடிய இடையறா விடாமுயற்சி. குருட்டு நம்பிக்கைகள் அத்தகைய சிந்தனையின்முன் நிற்கமாட்டா. ஏனெனில் அது காரண காரியத் தொடர்பு நாடுவது. அழலெழும் அதன் ஆற்றலின்முன் பத்தரை மாற்றுத் தங்கம் போன்ற வாய்மை ஒன்றே அழியாது நிற்க வல்லது. மனித உள்ளத்தின் வாய்மை நாடும் இம்முயற்சியில் அவன் தன்னையே மறந்து விடுகிறான். வாய்மையன்றி வேறெதனையும் அவன் காண விரும்புவதில்லை; காண்பதுமில்லை. சென்ற காலத்தின் பழைய நம்பிக்கைக் கோட்டைகளின் ஆராயாக் குருட்டு நம்பிக்கைக் கூறுகளாகிய போலிக் கற்கள் யாவும் தூளாகி விழுகின்றன. மீந்த நன்னம்பிக்கைகளும் ஆராய்ந்து கண்ட புது முடிவுகளுமே அவன் வாய்மைக் கோட்டைக்கு உறுகூறுகள் ஆகின்றன. பழமையின் தூசுகள் அகல அதன் தாய்ப் பாறை மீதே புதிய வாய்மை கட்டமைக்கப் பெறுகிறது. உள்ளத்தின் உள்ளார்ந்த உள்ளமே மெய்ம்மையின் அள்ளிக் கொளும் பேரழகுருவம் - உள்ளச் சிறையில் அதையடைத் தாருயிர் என்றே மறையப் புறஞ்சூழ் மதில்கள் எழுப்பி தசைபொதி யாம் அஃது உடலெனச் சாற்றி நசையில் உணர்விழப்பர் நாடி - அசைவிலா அவ்வொளியின் வாயில் அடைத்தே இருளின்கண் எவ்வமடைந் தின்னாமை எய்துவர் - செவ்விதின் நேரார், அறிவை அறிதா நேர்வழி காரார் இருளின் கதவுதிறந்-தேரார் ஒளிபுறஞ் செல்லவிடுதல் - வெளியிருந்து ஏக விடலன் றென. நாள்தோறும் சிந்தனைக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை நீ விட்டு வைப்பாயாக. அதை உனக்குரிய திருநிறை நேரமாகக் கருதிப் பேணுக. அந்நேரம் புலர்காலை நேரமாயிருந்தால் மிக நன்று. ஏனென்றால் அதுவே இயற்கையின் ஓய்ந்த அமைதி நேரம். இயற்கையின் இயல்பான சூழல் அமைதி உன் சார்பாக முழுதும் அமைந்திருக்கும் நேரம் அதுவே. இரவின் நிறை துயிலால் உன்னிடம் இயல்பாய் நிலவும் விசை யுணர்ச்சிகள்கூட அச்சமயம் ஓய்ந்து அமைந்து கிடக்கும். முந்தின நாளைக்குரிய கிளர்ச்சிகளும் கவலைகளும் அத்துயிலின்போது உன் உள்ளத்திலிருந்து தற்காலிகமாவது விடை கொண்டேகி, அதனை அலைக்கழிக்காது விட்டிருக்கும். இத்தகைய நேரத்தில்தான் உள்ளம் உன் விருப்பத்துக்கேற்பப் புதுப் பண்பை விரும்பி ஏற்கத் தக்கதாயிருக்கும். மேலும் இவ்வேளையே ஓய்வின் நேர்மை எல்லை. ஓய்வு இது கடந்து நிலவினால் அது சோம்பலாய் விடும். உன் சிந்தனை ஓய்வை நீடிக்க விடாமல் அதை முயற்சியில் செலுத்தும். அத்துடன் அம்முயற்சி தொடங்கு முன்னேயும் எளிதில் உருவாக்கும். ஓய்வின் முடிவில் சிந்தனையில் கூட முனைசிந்தனையும் முயற்சியும் இல்லாதவன் வாழ்வு சீர்படாது. ஏனெனில் ஓய்வின் பின் உழையாது சோம்பியிராதே என்பது இயற்கையின் விலக்க முடியாக் கட்டளை. அதை மீறினால் அவன் இயற்கையின் கடுந்தண்டனைக்கு ஆளாவது உறுதி. உடலக விழிப்பு அறிவக விழிப்பாகவோ, உள்ளக விழிப்பாகவோ அமைய வேண்டுமென்பதில்லை. ஆனால் உள்ளக விழிப்பு அறிவக விழிப்பாகவும் உடலக விழிப்பாகவும் அமைதல் உறுதி. விழிப்பில் உடலையும் அறிவையும் இயக்கும் உள்ளகம். அதை எப்போதும் இயக்குமாதலால், உடல்நலமும் அறிவுநலமும் உள்ளக நலம், அஃதாவது அக நலத்தின் விளைவாகவே கிட்டுகின்றன. புலர்காலையில், கதிரவன் எழும் முன்னே, காரிருள் வானில், விண்மீன்களின் கண்ணொளிக் காவல் கழியு முன்பே, விண்மீன்களின் தோழனாக விழித்தெழுதல் நன்று. விண்மீனில் ஒரு விண்மீனைப்போல, அரையிருளிடையே உன் உள்ளொளிச் சிந்தனை எழுப்பி அதனுடன் உன் செயற்களப் பாராட்டத்தைத் தொடங்குவாயாக. இவ்வழியில் இன்னும் உலகில் பெரும்பகுதி இருளில் கனவில் அயர்ந்துறங்கும்போதே, நீ விழிப்புற்று, மெய்ம்மையின் விடியல் ஒளியைக் காண ஆயத்தமாய் விடுகின்றாய். புற உலகின் விடியற்போதே உன் அக உலகின் விடியற்போதை வருவிக்கப் பெருந்தூண்டுதலாயிருக்கும். ஏனெனில் அப்புற விடியற் போதுகளில் நீ சிந்தனை மூலம் படிப்படியாகப் பெறும் அமைதி, உன் அக விடுதலையின் அமைந்த பேரொளிக்கு வழி வகுக்கும். பெரியார் உற்ற பீடுறும் முகடெலாம் ஒருபெருங் குதியுடன் உற்றன ஆகா! சிறியார் துயில்வரு சிற்றிராப் பொழுதினில் சிறுகப் பயில் சிறு நடை விளை வறிதி. விடியற்போதிலேதான் இயேசு தனிமையில் குன்றேறி நின்று இயற்கையின் அரையிருளில் அதன் உள்ளத்துடன் உறவாடப் பயின்றார். புத்தர்பிரான் விடிய ஒரு கடிகை முன்பே எழுந்து ஆழ்நினைவமைதியில் திளைத்து வந்தார். இத்தகு செய்திகள் தற்செயலான நிகழ்ச்சிகள் அல்ல. அவர்கள் அரிய உள்ளக நிலைகளின் பண்புக்குரிய பயிற்சிப் பழக்கங்களே இவை, புத்தர் இப்பழக்கத்தைத் தம் சீடர்களுக்கும் வலியுறுத்தி வந்தார். விடியற்காலையில் சிந்தனைக்கு ஒருமணி நேரம் தர உனக்கு எக்காரணத்தாலேனும் வாய்ப்பில்லாமல் போனால், அதற்கு அடுத்தபடி சிந்தனைக்குரிய நேரம் ஒன்று உண்டு. அதுவே உன் நாள் அலுவல் முற்றியபின் நீ ஓய்வுகொள்ளப் போகும் போதுள்ள இராநேரம். துயிலெழுமுன் இயற்கை தரும் அமைதி நேரத்துடன், துயிற்படுமுன் இயற்கை தரும் இந்நேரம் பேரளவு ஒப்புடையது. ஆனால் கடுமையான உழைப்புக் காரணமாக இதுவும் உனக்கு அரிதாய்விட்டால், அப்போதும் நீ அயர்ச்சியுற வேண்டியதில்லை. இயற்கைதரும் இவ்வமைதி நேரங்களுக்கு அடுத்த படியாக, உன் வேலையினிடையே உனக்குக் கிட்டும் ஓய்வுவேளைகளில் ஒரு சிறுபகுதியை நீ பயன்படுத்த லாம். ஓய்வுடன் ஓய்வாகச் சிந்தனையில் செலவிடும் இப்பகுதி உன் ஓய்வை ஊறுபடுத்தாது. ஏனெனில் ஓய்வுதரும் அமைதியின் பின் நீ முயற்சியில் பெறும் புத்தாற்றலைவிட, சிந்தனை அமைதியின் பின் நீ பெறும் கிளர்ச்சி மிகுதியா யிருக்கும். இத்துடன் சிந்தனையின்போது நீ பெறும் பயிற்சியால், உன் அகநாட்டமும் பண்பும் உயர்வுபெறும். உன்னுடன் உழைப்பவர்களுடன் உழைத்துக் கொண்டே நீ அவர்கள் உள்ளங்களுக்கெட்டாத உயர் அகவெளியில் உலவத் தொடங்குவாய், நாளடைவில் ஓய்வு நேரத்தில் மட்டுமன்றி, உழைப்பு நேரத்தில்கூட உன் உள்ளம் அறிவின் அறிது யிலமைதியில் அளவளாவி ஒளிதிகழும். அகமுகச் சிந்தனையும் தன்னடக்க நிறைஅமைதியும் இணைபிரியாத் தோழமை உடையன. அகமுகச் சிந்தனை தன்னறிவைத் தூண்டுகிறது. தன் குறைபாடுகள், பிழைகள், தன் உள்ளார்ந்த அவா முனைப்புகள் ஆகியவற்றையும் பொருளுலகின் வாய்மையையும் மாற்றி அது ஆராய்ந்து நன்முடிவு காண முயல்கிறது. தன்னையும் உலகச்சூழலையும் ஒருநிலைப்பட வைத்தாராய்வதால், ஏற்படும் நடுநிலைமை யமைதியே வாய்மையை உணரும் பாதைக்கு வழிகாட்டி ஆகும். இந்த நடுநிலைமையில்லாதவர் சுக்கானில்லாமல் கடலில் மிதக்கும் கலங்கள் ஆவர். ஒருவேளை உன்னிடம் வெறுப்பும் சீற்றமும் அடிக்கடி வெறியாடலாம். நடுநிலை அமைதி பெற்றபின் இப்பண்புகளே சீற்றம் பொறுக்கும் பொறுமையமைதி யாகவும் வெறுப்பையும் பகைமையையும் பொருட்படுத்தாது மன்னிக்கும் அருளமைதியாகவும் மாறிவிடும். அன்பமைதி எல்லாக் கீழ்க் குணங்களையும் உயர் குணங்களாக மாற்றிவிடும். தனிமனிதனை இனத்தோடு இணைப் பதன் மூலம் மனிதன் தனித் தன்னலத்தின் சூழலின் ஏற்படும் வாழ்க்கையின் எல்லாச் சிக்கல்களையும் அது தீர்த்துவிடும். இத்தகைய அமைதி இல்லாவிடத்தில் மனிதன் அலைகடல்புயலில் மிதக்கும் ஒரு துரும்பு ஆவான். எந்தச் சிற்றலையும் அவனை நிலைகுலைத்து அலைக்கழியச் செய்யும். அமைதி மட்டும் இருந்தால், பேரலைகள் கூட அவன்மீது தாவிச் சென்றுவிடும். மனிதன் உண்மைப் பகையாவதெல்லாம் உட்பகையே. அது உண்மையில் அவன் உள்ளத்தின் புறப்பகுதியாகிய தன்னலப் பகுதியே. இது அதன் நிலையான பகுதியன்று, அடிக்கடி மாறக்கூடும் பகுதி. எளிதில் அதை மாற்றியமைக்கவும் கூடும். எளிதில் மாறிவிடாத உட்பகுதியே சமூக உள்ளமாகிய அன்புப்பகுதி. புறமனத்தை இவ்வன்புப் பகுதியின் ஆட்சிமூலம் இயக்கிவிட்டால், புறமனத்தின் பகைமை மாறிவிடும். அது உள்ளத்திற்கோர் அரணாய்விடும். சிந்தனை புறமனத்தையும் அகமனத்தின் அன்பமைதியில் தோய வைத்து, அதனையும் அதன் வாயிலாகப் புறப்பொருளுலகையும் இயக்கும். அவாக்கள் என்னும் சிற்றலைகள் புறமனத்தின் பரப்பில் எழுந்து புறப்பொருள்களின் கவர்ச்சியால் புயலாகு முன்பே, உள்ளமைதி அவ்வலைகளை அமைதிப்படுத்தி விடுகிறது. துன்பங்கள் புற மனத்தைத் தீண்டுமுன்பே, அக அமைதி அவற்றை எதிர்த்து நிற்கும் உரத்தை அளித்தும், அத்துன்பங்களையே இன்பசாதனமான படிப்பினைகளாக்கியும் உதவுகிறது. ஆழ்ந்த சிந்தனை பொருள்களின் பண்புகளையும் காரண காரியங்களையும் தொடர்புகளையும் காட்டி, பொருளுலகு ஒரே அமைதியுடைய ஒருமையுலகு என்பதை விளங்க வைக்கிறது. புறஉலகில் அது மெய்ப்பித்துக் காட்டும் அமைதியே அகத்திலும் அமைதி உண்டுபண்ணக் காரணமாயிருக்கும். புறஉலகில் பொருள்கள் யாவுமே ஒன்றுடனொன்று காரண காரியமா யிருப்பதுபோல, அதுபற்றிய உன் அறிவும் ஒருகூறுடன் ஒரு கூறு தொடர்புடையதாய், காரணகாரிய இணைப்புப் பெற்று, ஒரே முழுநிறை மெய்ம்மையின் ஒழுங்குபட்ட உறுப்பமைதியாய் நிலவும். அக அமைதி இங்ஙனம் உணர்ச்சிக் கொந்தளிப்பற்ற நிலைமட்டுமன்று. அது அறிவு முரண்பாடும் அற்ற முழுநிறை அறிவமைதி ஆகிறது. புறஉலகின் ஒவ்வொரு புதுக்காட்சியும் புத்தனுபவமும் அறிந்த அறிவமைதியுடன் சிந்தனைத் தழலிலிட்டு ஒரே உருவில் உருவாக்கப்பட்டு விடுகின்றது. உணர்ச்சியற்ற அமைதிநிலை சிந்தனைக்கு உதவுவதுபேல சிந்தனைதரும் இவ்வறிவமைதி தீயவாக்களைக் களைந்தொறுப்பதிலும். நல்வாக்களை உருவாக்குவதிலும், நிறைவேற்றுவதிலும் பெரும்பயன் தந்து அமைதியை வளர்க்கிறது. அறிவும் ஆற்றலும் உடைய இவ்வமைதி முழுநிறை வாய்மை, முழுநிறை ஆற்றல், முழுநிறை இன்பம் நோக்கி இடையறாது முன்னேறுகிறது. அறிவமைதியுடையவன் மதஉணர்ச்சி உடையவனாயிருப்பான்; மதவெறியுடையவனாயிருக்க மாட்டான்! ‘மதவெறிக்கும் மதத்துக்கும் எந்தத்தொடர்புமில்லை’ என்பதையும், அது மதத்தைச் சாக்காகக் கொண்டு எழும் கீழ்த்தர மனித உள்ளத்தின் புறமன எழுச்சியே யென்றும் அவன் அறிவான். மதத்தின் கிளை, உட்கிளை, வகை வேறுபாடுகள் ஆகியவை அவனை ஒரு சிறிதும் அலைக்கமாட்டா; அது மட்டுமன்று. வேறுவேறு மதங்களிடையேகூட அவன் பொது நிலையமைதி பேணுபவனாவான். ஒரே பரந்த கடலில் குடா, வளைகுடாக்களெனவே அவன் அவ்வேறுபாடுகளை எண்ணுவான். மதவேறுபாட்டைப் போலவே மொழிவேறுபாடு, தேச இனவேறுபாடு, நாகரிகப் பண்பாட்டு வேறுபாடு, பழக்க வழக்க வேறுபாடு ஆகியவற்றிலும் சிந்தனைப் பயிற்சியும் மன அமைதியும் உடையவன் அலைவுற மாட்டான். அவன் தன் மதம், தன்மொழி, தன்தேசம் ஆகியவற்றுக்குத் தன்னல மின்றி உழைப்பான். ஆனால், தன்னலம் தன் சமூகத்தின் ஓர் உறுப்பு என்று அவன் அறிவதுபோலவே, தன்மதம் உலகமத வாழ்வின் ஓர் உறுப்பு, தன்மொழி உலகமொழி வாழ்வின் ஓர் உறுப்பு என்பதையும் அவன் நன்கு ஓர்ந்துணர்வான். எனவே தனக்கு உழைக்கும்போது சமூகத்தில் பிறரை எதிர்க்காமல், அவர்களுக்கும் உதவும் முறையில் உழைப்பதைப் போல, தன் மதம், தன்மொழி ஆகியவற்றுக்கு உழைக்கும் உழைப்பையே உலக மதவாழ்வுக்கும், மொழிவாழ்வுக்கும் உழைக்க வேண்டிய உழைப்பின் ஒரு படியாக அவன் கொள்வான். அவன் சமூகத் தொண்டிலும் முரண்பாடு எதுவும் இடம்பெறாது, எல்லாத் துறையிலும் அவன் விருப்பு வெறுப்புக்கள், உழைப்பு ஆகியவை திட்டமிட்டவையாக அமையும். வடமீனைத் தொலைவிலிருந்து பார்ப்பவன் அதன் மெய்யான பாரிய அளவை உய்த்தறியமாட்டான். உறு பேராற்றல் கொண்ட தொலைநோக்கிக் கண்ணாடிகள்கூட அதனை அணுக்கமாகக்காண உதவாத அளவு அண்டங்கடந்த பெருந்தொலைவில் அது இருக்கின்றது. ஆனால் மனிதன் காட்சியாற்றல், காட்சிப் பொறியாற்றல் மேம்படுந்தோறும், அதன் பருமன், ஆக்கம், பண்பு ஆகியவற்றைப் பற்றிய அறிவு வளர்ந்துகொண்டே போகும் என்பது உறுதி. ஆயினும் வடமீனின் திசை, அதன் தொலை ஆகியவற்றைப் பற்றிய மட்டில், தொடக்கத்திலிருந்தே பார்ப்பவன் அறிவு மாறா அறிவாயிருக் கின்றது. இதுபோலவேதான் மெய்ம்மையை நாடி முயல்பவன் நிலையும் அமைந்துள்ளது. முழுநிறை மெய்ம்மை அவனிட மிருந்து எவ்வளவோ நெடுந்தொலைவில் தான் இருக்கிறது. அதன் எல்லையற்ற பாரிய அளவை அவன் இன்று அளந்தறிய முடியாது. ஆயினும் அதனை அவன் அகக் கண்கள் நோக்கி விட்டால், அவன் அதை நோக்கிச் செல்வது உறுதி. அது தன் காட்சியளவிலும் பாரிய அளவுடையது என்ற உணர்வு, அதன்திசை ஆகியவை அதை உணர்ந்த நாளிலிருந்தே உறுதிப் படுகின்றன. அவன் முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு படியும், அதாவது அவன் அடையும் ஒவ்வோர் இன்பதுன்ப நிகழ்ச்சியும், அதன் ஆராவின்பத்தின் நுகர்வைப் பெருக்கிக் கொண்டேதான் இருக்கும். சிந்தனை முழுநிறை மெய்ம்மையின் திசையை மட்டுமே காட்டும். அதைநோக்கிச் செல்ல உதவுவது புறப் பொருளுலகில் அவன் கொள்ளும் தொடர்புகளும் செயல்களும் நிகழ்ச்சிகளுமே. இவற்றில் அவன் அடையும் பயிற்சிகளும் படிப்பினைகளுமே அவனை அதன் பண்புகளை உணரச் செய்யும். சிந்தனை, செயல் ஆகியவற்றின் படிமுறை வளர்ச்சி பற்றிப் புத்தர்பிரான் திருவாய் மலர்ந்தருளி யிருப்பதாவது:- “முதலாவது சிந்தனை அன்புச் சிந்தனையாகும். எல்லா உயிர்களின் நலங்களையும் - உன் எதிரிகளென நீ கருதுபவர்களின் நலங்கள் உட்பட எல்லார் நலங்களையும் அவாவும் முறையில் கருத்தைச் செலுத்தி உன் உள்ளத்தை நீ திருத்தி அமைக்க இச் சிந்தனை உதவ வேண்டும்.” “இரண்டாவது சிந்தனை அருளிரக்கச் சிந்தனை ஆகும். எல்லா உயிரினங்களின் துன்பங்களையும் நினைந்து நினைந்து, எல்லா உயிரினங்களின் இன்ப துன்பங்களையும் உன் இன்ப துன்பங்களாகக் கருதி அவற்றுடன் ஒன்றுபட்டுப் படர்ந்த இரக்கத்தால் நீ அருள்நிலை பெற வேண்டும்.” “மூன்றாவது சிந்தனையாக நீ எல்லா உயிரின் இன்பங்களிலும் கருத்துச் செலுத்தி, அவ்வுயிர்களின் மகிழ்ச்சியை உன் மகிழ்ச்சியாகக் கொண்டு அவற்றின் மீது ஆர்வம் பெருக்கவேண்டும்.” “நான்காவது சிந்தனையாக நீ உன் அகத்திலுள்ள துப்புரவுக் கேடுகள் பற்றியும், உயிரினங்களின் நோய்நொடி சாக்காடு ஆகியவற்றுக்குக் காரணமான துப்புரவுக் கேடுகள், பழிதீங்குகள், ஊழல் உளைச்சல்கள் பற்றியும் கருத்துச் செலுத்தி, அவற்றைக் காரண காரியப்படுத்தியுணர வேண்டும். பரந்த மாபெருந் தீங்குகளுக்கு எவ்வளவு சிறுதிறப்பட்ட போலி இன்பங்கள் காரணம் என்பதனை நீ உணரும் உணர்வு பெறவேண்டும். “ஐந்தாவது சிந்தனையே சிந்தனையின் நிறை செல்வம். இன்பதுன்பங்கள், விருப்புவெறுப்புக்கள், ஆதிக்க அடிமைத் தனங்கள், செல்வ வறுமைகள் ஆகியவற்றில் நிலையாமையையும் வெறுமையையும் போலித் தன்மையையும் உணர்ந்து, அவற்றிடையே நீ நடுநிலை வீறமைதி பெறவேண்டும். பிறர்வாழ்வின் இன்பதுன்பங்களைத் தனதாகக் கொண்டு பயிற்சி பெற்ற அமைதி மூலமாகவே, தன் இன்ப துன்பங்களையும், பிறர் இன்ப துன்பங்களாகக் கருதும் பற்றற்ற நிலை எய்தி, அவற்றுக்கு அப்பாற்பட்டு நின்று வாழ்க்கையை வீறமைதியுடன் காணல் வேண்டும்.” புத்தர் பிரானின் சீடர்கள் இப்படிகளின் மூலம் முழுநிறை வாய்மைபற்றிய மெய்யுணர்வை நோக்கிச் சென்றார்கள். நாமும் இதே படிமுறைகளைப் பின்பற்றலாம். அல்லது படிமுறைகளை மாற்றியமைத்துக் கொள்ளலாம். வாய்மையை நோக்கிச் செல்லும்வரை, படிமுறை எது என்பது முக்கியமன்று. செல்லும் திசைதான் முக்கியம். அத்துடன் வாய்மை என்னும் அக்குறிக்கோளிலுள்ள நம் ஆர்வம் எந்த அளவு விதிர்விதிர்புடைய தாயிருக்கும். நம் நெஞ்சம் அந்த ஆர்வத்திடையே எந்த அளவு அன்பின் மெய் வீரத்தால் விரிவடைகிறதோ, எந்த அளவு நம் தனி நிலைகடந்த பிற உயிரினங்களுடன் பொது முறையில் ஒன்றுபட்டு அகற்சி பெறுகிறதோ அந்த அளவு நம் முன்னேற்றம் நிறைவுடைய தாயிருக்கும். கதிரவனொளியைப் பெற்று வளம்பெறும் வண்ணம் கற்கள் வளர்வதில்லை. மரம் செடி கொடிகள்தான் அதை நோக்கி வளரத்தக்க உயிர்ப்பண்பு அஃதாவது, மென்மைப் பண்பும் நெகிழ்ச்சிப் பண்பும் உடையவையாய் இருக்கின்றன. ஆனால் அவற்றிலும் கொப்புகிளைகளை விட இலைகளும் தளிர்களும், அவற்றைவிட மலர்களும் இத்தன்மையை மிகுதியாக உடையன ஆகின்றன. காலையிளம்பரிதியின் இளஞ்சூட்டையும் அமுத நிறக்கதிர்களையும் ஆவலுடன் அள்ளிப் பருகும் வண்ணம் மலர் தன் மெல்லிதழ்ப் பூட்டவிழ்த்து விதிர்விதிர்த்து விரிகின்றது. கதிரொளி உட்புகுவதற்காக இதழ்கள் வழிவிடு கின்றன. இதே முறையில் நீ உன் உள்ளத்தை மலர்போன்ற தூய்மையும் மென்மையும் நெகிழ்வும் உடையதாக்கு. அப்போதுதான் வாய்மையின் அன்பொளி அதனூடு சென்று பரவமுடியும். பொதுநல அவாஆர்வமென்னும் அகல்சிறகு விரித்து வானளாவிப் பற. போலி அவாக்கள் எனும் முகிலினங்கள் கண்டு அஞ்சாதே. அவை உள்ளத்துக்குத்தான் அருகே இருக்கின்றன. ஆகவே அவை உன்னைத்தான் வாய்மையாகிய கதிரவனிட மிருந்து மறைக்கின்றனவேயொழிய, இயற்கையாகிய எல்லையற்ற வானிடத்தில் கதிரவனொளி பரவுவதை அவை தடுக்கவில்லை. நிலத்தைப் போர்த்த போர்வையாகிய முகிலினங்கள் அசைந்து விலகும்போது அவை உன்னை வந்தடையும். நீ முகிலினங்களைத் தாண்டிப் பறக்கக் கற்றுக் கொண்டால் நீ வேண்டும் போதெல்லாம் அவற்றைக் காணலாம். இயற்கையமைதியுடன் ஒன்றிய முழுநிறை இணக்க அமைதி உன்னால் பெறக்கூடிய ஒன்றே என்பதை நீ மனமார நம்பு. கரையற்ற நிறைதூய்மை வாழ்வு வாழமுடியும் என்பதில் நீ திடமான பற்றுறுதி கொள். முழுநிறை வாய்மை உன்னால் எட்டிப் பிடிக்கத் தக்க ஒன்றே என்பதை அசைக்கமுடியாத ஆணிப்பிடியாகப் பிடி. இம் மூன்று நம்பிக்கைகளும் சிந்தனையற்ற மற்ற நம்பிக்கைகளைப் போன்றவையல்ல. ஏனென்றால் அவை சிந்தனையைச் செயலாற்ற வைக்கும் பண்புகள், சிந்தனைக்கும் அவையே தூண்டுதல் தருகின்றன. இந்த நம்பிக்கை உடையவர்கள் குணம் என்னும் கோதிலா ஒளிக்குன்றேறுவர். ஒளிரும் வான் முகட்டில் உயர்ந்து பறப்பர். இந்நம்பிக்கைகள் அற்றவரோ, அடிவாரங்களைச் சுற்றுவர்; இருண்ட குகைகளிலும் ஆழ்கசங்களிலும் உளைந் தழுந்துவர். நோக்கம், ஆர்வம், நம்பிக்கை, பற்றுறுதி, அமைதி சிந்தனை ஆகிய இந்தப் படிகளில் ஏறிச்சென்று நீ தெய்விக அன்பு, தெய்விக நேர்மை, தெய்விகத் தூய்மை, தெய்விக அமைதி ஆகிய நற்பண்புகளின் தொகுதியை அடைவாய். இத்தொகுதியே முழுநிறை நன்மை அல்லது கடவுள். இப்பண்புகள் கைவரப் பெற்றவனுக்கு, பழமை என எதுவும் எங்கும் இல்லை. எல்லாம் புதுமையாய், புத்துருவும், புது வடிவும், புது வண்ணமும் உடையவனாய், ஒரே புத்தொளியின் பலதிறப் பண்பாரவாரம் ஆகின்றன. பொருளுலகைப் போர்த்த திண்ணிய போலித் திரை, திண்ண மிக்க ஊனக் கண்களின் காட்சி நமக்கு தரும் போலித் தோற்றமே. மென்மையும் அரிய நுண்ணயமும் உடைய மெய்யார்வ உணர்வுக் கண்களுக்கு அத்திரை மிகவும் மெல்லியதாய், தாள்வலைபோன்று ஒளியூடுருவ வல்லதாய் அமைந்து விடுகிறது. அத்திரை கடந்து பார்வையைச் செலுத்தினால், ஆன்மிக உலகின் உண்மைநிலை தெளிவாகும். திரையின் இப்பாலுள்ள உலகின் இடவேறுபாடு, கால வேறுபாடு, திரைக்கு அப்பால் இருப்பதில்லை. வடிவுருக் களுக்குரிய இடமும் பிறப்பு வளர்ச்சி இறப்பாகிய காலமும் கடந்த அவ்விடையறா மெய்ம்மையில் கருத்தூன்றிப் புற உலகில் மிதந்து செல்பவரே உயிர்வீடு பெற்றவர் (சீவன் முத்தர்) ஆவர். அவர்களே தேவர்கள் ஆவார்கள். அறிவுத்தாரகை “கண்ணன் பிறப்பும் கருதுபுத்தர் ஏசுபிரான் வண்ணப் பிறப்பும் வரவுவணர்த்தும் - விண்ணகத்தின் நுண்மீனொளியே, நுனித்துன்னை நோக்கியவர் எண்மானம் என்னென்றியம்புகேன்? - கண்மயங்கி வையம் துயின்று வளர்நள் ளிரவதனின் கொய்யும் இருளில் தம் கூர்விழியின் - பொய்யாத உள்ளொளியைக் கண்டார் இதுவியப்பே! - அள்ள அள்ளக் குன்றா அருட்செல்வம் கோவலர் தம்சேரிக் கன்றினிடை ஏகிக் கனிவுடனே - சென்றங்கே தங்கி இருந்தான் இதுவும் தரும்மலைப்பே! பொங்கும் இதன்உட் பொருள் கேளீர்:- எங்குமுள்ளான் இங்குமுள்ளான் அங்குமுள்ளான் என்றேத்தும் மெய்ப்பொருளே எங்கெங்கும் தேடி இடர்பட்டே - தங்கச் சிலைகள் வடித்தார், செயல் பல செய்தார், கலைகள் படித்தார், களைத்தயர்ந் தார்; இந் நிலையில் பயில்நீள் நெறியின் - தொலையாத ஆயா மடமை அதுவே இரவின் இருள்; மேயும் அவாக்கள் விரியா னிரைகளவை தோயும் தொழுவம்; அதனுள்ளே - தோயாது. தொக்குறையும் தூய உயிரே பரமனொளி புக்குறையும் ஏசுபிரான், புத்தன், புகழ்க்கண்ணன்! மிக்கார் அருட்கனிவில் மேவியே - பொய்க்கோலப் போலி மத வாத இருளகற்றிப் போந்திட்ட சில ஒளியின் திகழ்துணையால் - ஞாலத்து எளியார் எளிமையின் இன்கனிவி னூடே தெளிந்தார் இறை உருவம் தேர்ந்து; - தெளிவிலா வாத எதிர்வாதந் தன்னிலும் அன்பிலா நீதி, உயிர்ப்பில் நெறியிலும் - பேதம் பயிலும் வழக்கில் அலைந்திளைத்துப் பல்கால் மயலுற் றிடர்ப்பட் டுழலும் - இயலொளியை நேராக அன்புற்றார் நேர்ந்தார் பேரின்புற்றுச் சீராளும் செல்வம் சிறந்து.” 2. இருதலை மணியம் தன்முனைப்பும் வாய்மையும் மனித உள்ளம் இரண்டு அரசுகளின் போர்க்களம். மனிதனை ஆட்சிசெய்ய அவ்விரண்டும் அக்களத்தில் நின்று ஓயாது போரிடுகின்றன. அவ் இரு அரசுகளுள் ஒன்று தன் முனைப்பு. அதனை நாம் பொருளுலகின் சார்பான, “உலகரசு” என்று கூறலாம். மற்றொன்று வாய்மை அல்லது கடவுளின் சார்பான “ஒளியரசு”. உலகரசு ‘உலகக் கோமான்’ ஆகிய தன்முனைப்பின் ஆட்சியிலுள்ளது. மற்றது தந்தையாகிய எம் இறைவன் ஆட்சியிலுள்ளது. தன் முனைப்பின் ஆட்சியே இறையாட்சி யமைதிக்கு எதிராக உணர்ச்சி பேதங்கள், தற்பெருமை, பேரவா, செருக்கு, தன்னடம் ஆகிய இருளாற்றல் களை இயக்குகிறது. வாய்மையோ இவற்றுக்கெதிராக மெல்லமைதி, பொறுதி, தூய்மை, தன்மறுப்பு, பணி விணக்கம், அன்பு ஆகிய எளிமைவாய்ந்த, நொய்ம்மையும் நெகிழ்வும் தொய்வும் உடைய ஒளிபடர்ந்தொளிர வல்ல பண்புகளை இயக்குகிறது. ஒவ்வோர் உள்ளத்திலும் இத்தகைய போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. போராட்டத்தில் ஒவ்வொரு படைஞனும் இரண்டு எதிரெதிர் தரப்புகளில் யாதாமொரு தரப்பில் சேரவேண்டியது இன்றியமையாதது. அதுபோலவே ஒவ்வோர் இதயமும் தன்முனைப்பு, வாய்மை ஆகிய இருபடை யாட்சிகளுக்குள் ஒரு படையாட்சியின் கீழ்ச்சேர்ந்து அணியமர்வு பெற வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட இடைவழித் தரப்பு எதுவும் இருக்கமுடியாது. “தன்முனைப்பு என்ற ஒன்று உண்டு. வாய்மை என ஒன்று உண்டு. தன் முனைப்பு இருக்குமிடத்தில் வாய்மை இடம் பெறாது. வாய்மை இருக்குமிடத்தில் தன்முனைப்பு இடம்பெற மாட்டாது” என்றார் வாய்மையின் போதகராகிய புத்தர் பிரான். அருளாளவந்த இயேசு பெருமானோ, “எந்த மனிதனும் இரு தலைவர்களுக்கு ஆட்பட்டிருக்க முடியாது. அவர்களுள் ஒருவரிடம் நேசங்கொண்டால், மற்றவரை மனமார வெறுத்தாக வேண்டும். அல்லது மற்றவரைப் பற்றிக்கொண்டு முன்னவரை இழித்தாகவேண்டும். ‘திரு’ மகனையும் இறைவனையும் ஒருவரே ஒரேமூச்சில் வணங்கிப் பின்பற்ற முடியாது.” என்று கட்டுரைத்தார். வாய்மை என்பது எளிமை வாய்ந்தது. வளைவு நெளி வின்றி நேரடியானது. எத்தகைய உறழ்ச்சி பிறழ்ச்சிகளுக்கும் வகைதொகைச் சிக்கல்களுக்கும் இடம் தராதது. ஆனால், தன்முனைப்போ சூழ்ச்சித் திறம் வாய்ந்தது. பாம்பு போல் வளைந்து நெளிந்து பிறழும் நுண்ணியத் திறங்கள் உடையது. எல்லையற்ற எத்தனையோ மடிப்பு தொகுப்பு உறழ்வுகளுக்கு இடம்தருவது. மருள்வயப்பட்ட தன் முனைப்பின் அடியார்கள் உலகியல் அவாக்கள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக்கொண்டே வாய்மையையும் இழவாதிருக்க லாம் என்னும் மாய இன்பப் பகற்கனவு காண்கின்றனர். ஆனால் வாய்மை, நெறியாளர்களோ வாய்மையின் பலிபீடத்தில் தங்கள் தன்முனைப்பையே பலியிட்டு வழிபாடாற்றுகின்றார்கள். உலகியல்பற்று, தன்னலவேட்டை ஆகியவற்றின் தொற்றுக் களிலிருந்து அவர்கள் விழிப்புடன் எப்போதும் தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். வாய்மையை உணர்ந்து அதை வாழ்க்கையிலே நிலைபேறுடைய ஒன்றாக்க நீ விரும்புகிறாயா? அப்படியானால் நீ எப்போதும் எதையும் அதற்காகத் துறந்து விட ஒருங்கியிருத்தல் வேண்டும். ஏனெனில் தன்முனைப்பின் கடைசித் தடத்தின் சாயலும் அகன்ற பின்பே வாய்மையின் முழுநிறை செவ்வொளியை நீ கண்ணாரக் காணக்கூடும். “நாள் தோறும் தன்னை மறுப்பவனே என்னை ஏற்கத் தக்கவனாவான்” என்று இயேசுபிரான் கூறியது இதனாலேயே ஆகும். உன் கீழ்த்தரப் புலன் சார்ந்த இன்ப அவாக்கள், உன் குருட்டுத் தப்பெண்ணங்கள், உன் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றை விட்டொழித்து விடு. அதன்பின்பே வாய்மை யென்னும் இடுங்கிய நேர்நெறியில் நீ நுழைந்து செல்ல முடியும். அதனுள் நீ காணும் அமைதியை உலகிலுள்ள எதுவும் உன்னுடன் வந்து பங்கு கொள்ளமுடியாது. தன் முனைப்பின் முழுமறுப்பு முழு ஒழிப்புத்தான் வாய்மையின் முழுநிறை படிவத்தை வெளிப்படுத்தும் என்று எல்லாச் சமயங்களும், எல்லா மெய்விளக்க முறைகளும் வலியுறுத்தியது இதனாலேயே. தன்முனைப்பின் மறுப்பே வாய்மை. அதுபோல வாய்மையின் மறுப்பே தன்முனைப்பு. தன்னை இறக்க விட்டவன் வாய்மை ஒளியில் மீண்டும் புதிதாக மறுபிறப்படைகிறான். தான் வாழ எண்ணுகிறவனிடமிருந்து வாய்மை மறந்து உறைகிறது. தன்முனைப்பைப் பற்றிக் கொண்டிருக்கும் வரை மனிதனின் வாழ்க்கைப் பாதை பல இன்னல்களுக்கும் இடையூறுகளும் துன்பங்களும் நிறைந்ததாகிறது. மீட்டும் மீட்டும் கட்ட நட்டங்களும் கடுந்துயர்களும் மனக்கசப்புக்களும் அவனை வந்து தடுக்கின்றன. வாய்மைவழியைப் பின்பற்றி விடுதலை பெற்றவனுக்கோ, இவற்றின் தொடக்கு விட்டுப் போகிறது. துயரமோ மனக்கசப்போ அவனைத் தொடர்வதில்லை, தொடுவதுமில்லை. வாய்மை தன்னியல்பில் ஒளிமயமானது. அது இருளில் இருளடைவதில்லை. மறைந்துலவுவதுமில்லை. அது ஒளியூடுருவிச் செல்லத்தக்க பளிங்கு போன்றது. அத்துடன் அதுவே என்றும் நிலைபெற்ற பேரொளியாக ஒரே நிலையில் நின்று இலங்குகிறது. ஆனால் கண்ணொளியற்ற குருட்டுத் தன்முனைப்பு வழிதவறிச் செல்வதுடன் வாய்மை இருக்கும் திசையையும் அறியாது தியங்குகிறது. பகல் தன்னியல்பில் ஒளிமயமாகவே இருந்தாலும் குருடனுக்கு இருள்மயமானதே. அவன் வெளியிடத்தின் ஒளியைக் காணாது வளைவு நெளிவு களைத்தான் மெய்யால் தடவி உணர்வான். வாய்மையொளி காணாதவர் உணரும் உலகும் குருடன் தடவிச் செல்லும் இக்குருட்டு இருள்வழி போன்றது. ஒளியின் நன்மை தீமைகளின் மெய்யுருவங்களை மனிதன் அறிவான். ஆனால் குருடனை நன்மை தீமைகள்தான் தாமாக வந்தடைய வேண்டும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், நன்மைகள் தாமாக வந்தடைவ தில்லை. தீமையே அடையும் என்று கூறத் தேவையில்லை. வாய்மையே இயற்கையின் நிலைபெற்ற மெய்ம்மை; அதுவே இயற்கையின் அகஇசையமைதி, அதன் முழு நிறைநேர்மை, அதன் இடையறா அன்புத் தாயகம். அது கடல் போன்றது; என்றும் அளவில் கூடுவதுமில்லை. குறைவது மில்லை. அது எவரையும் எதனையும் சார்ந்த தன்று; ஆனால், எல்லாரும் எல்லாமும் அதைச்சார்ந்தே இயங்க வேண்டும். அதை மறைக்கும் ஆற்றல் தன்முனைப்பு ஒன்றுக்குத்தான் உண்டு. தன்முனைப்பின் பலதிறப்பட்ட படைப்புக்களான ஐம்புலஇன்பம், செருக்கு, தருக்கு ஆகியவை அதைப் பலவகையில் நிழலடிக் கின்றன அல்லது இருளடிக்கின்றன. தன்முனைப் புடையவனிடமிருந்து வாய்மையுடைய வனைப் பிரித்துக் காட்டும் முனைப்பான பண்புக்கூறு பணிவிணக்கமே. இது வீம்புத் தற்பெருமை, முரண்டுப் பிடிவாதம், தற்செருக்கு ஆகியவற்றின் எதிரிடைப்பண்பு. வாய்மையுடையவன் தான் கொண்டது வாய்மை எனத் தருக்குவதில்லை. அவன் வாய்மையை நாடுகிறான். நிலையிலாக் கருத்துக்கள் கடந்து நிலையான அதன் வடிவத்தை ஆராய்ந்து தேடுகிறான். தன்முனைப்புடையவனோ, கண்ட கண்ட கருத்துக்களை யெல்லாம் வாய்மைகளாகக் கண்டு, மெய்யான வாய்மையை மட்டிலும் இழந்து விடுகிறான். வாய்மை யுடையவன் எல்லா மக்களையும் அடிப்படையில் வேற்றுமை யில்லாமல் பார்த்து, எல்லாரிடமும் அடிப்படை வேறுபாடின்றி நேசம் செலுத்தி, அவரவர் பண்படிப் படையாகவும் கருத்தடிப்படையாகவும் வாய்மை யுடையவர்களை வரவேற்கிறான். தன்முனைப் புடையவன் தன் மனங்கொண்ட கருத்தையே நிலையான வாய்மையாகக் கொண்டு, தன் நிழல்களைப் பெருக்கி வாய்மைக் கெதிராக ஒரு தடையரணை வளர்த்துக் கொள்கிறான். ஒருவன் அன்பின் ஒளியில் வாய்மையை எங்கும் காண்கிறான். மற்றவன் தன்னல இன்பநாட்ட மென்னும் இருளிலும் அதன் ஒளிப்படாத இடந் தேடித் தடவுகிறான். பெருத்த வாதச் சிக்கல்களில் ஈடுபட்டும் வாத எதிர் வாதப் போரிட்டும் பலர் வாய்மையைப் போராடிப் பெற்று விடவோ, போராடிப் பாதுகாக்கவோ முனைகின்றனர். ஆனால் இம்முறையில் அவர்கள் பாதுகாப்பது தத்தம் திறத்துள்ள நலங்களையும் தற்கருத்துக்களையுமே யன்றி வேறெதனையு மன்று. வாய்மை நாடுபவன் பாதுகாக்க வேண்டுவது வாய்மையையன்று, தன்னைத்தான் பாதுகாக்க வேண்டும்; அதுவும் தற்கருத்துக்களிலிருந்து, தன்முனைப்பிலிருந்தே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், வாய்மை நித்தியமானது, எங்கும் நிறைந்தொளி வீசுவது. சாத்தன் கருத்தும் சாத்திகருத்தும், கொற்றன் கருத்தும் கொற்றி கருத்தும் அதை எதுவும் செய்யமாட்டா. அவை வாய்மையை அழிக்க மாட்டா. வாய்மை எய்தப் பெறாது தம்மையே தாம் அழித்துக்கொள்ளும். ஏனெனில் தனிப்பட்ட கருத்துக்களின் தனிமுனைப்புக்களை அழிப்பதாலேயே வாய்மை கைகூடப் பெறும். தத்தம் சமயம் அல்லது உட்சமயம் அல்லது கட்சி அல்லது கோட்பாடே நிலைபெற்றதென வாதிடும் சழக்கர் சத்துருவான சத்தியம் அல்லது வாய்மையை உணரமாட்டாத வர்கள் ஆவர். தத்தம் சமயமும் கட்சியுமே சரி என்று பிடிமுரண்டு வாதம் செய்து அதற்கு ஆட்சேர்த்துத் திரிவதால் அவர்கள் போலி வாய்மை அதாவது பொய்மைக்கே உழைப்பவராகின்றனர். ஏனெனில், வாய்மை தங்குதடையற்ற அகல் வெளியில் நிலவும் ஒளி. அது ஒரு சமயம், ஒரு கருத்து ஆகிய சிறு பேழைகளுக்குள் அடைபடுவதன்று. சமயங்களும் கருத்தும் அப்பேரொளியைக் காணும் பலவகைக் கண்ணாடிகளாகத்தான் நிலவ முடியுமேயன்றி, அதை அடைத்துக் காக்கும் பேழையாக அமைய முடியாது. வழிகள் பல. ஆனால் குறிக்கோள் வழிச் செல்பவை எல்லாம் நல்வழிகளே. தவறான வழி ஒரு வழிதான். அது திறந்த வழியுமன்று. அத்துடன் தன்முனைப்பு, கட்டுப்பாடு, குருட்டு நம்பிக்கை ஆகியவற்றில் அடைப்பட்டுக் கிடந்துழலும் நெறியை ஒரு நெறியென்றுகூடக் கூறமுடியாது. ஏனெனில், அது இருதிசை திறந்துள்ள நெறியன்று. ஒரு திசை வாயிலுடைய குருட்டுப் பாதை. அது மறுதிசையில் அடைப்புடைய இடர்ப்பொறியேயாகும். சமய வினை முறைகள், சமயமுடிபுகள் ஆகியவை வாய்மைக்கு வழிமுறைகளாகாத இடத்தில், அடைபட்ட வழிகளே. அதுமட்டுமன்று. அவை வாய்மையருகே செல்லாமலே அடைபட்டு விடுகின்றன. அவற்றின் மயிரிழைச் சிக்கல் விளக்கங்கள் முன்னேறிச் செல்லுவதற்கான வழிகாட்டி களல்ல. வளைய வளைய அலையவிடும் அடைப்புப் பாதையின் திருகு முருகுகளே அவை. நீ வாய்மையின் சேயா, தன்முனைப்பின் அடிமையா என்பதை நீயே உன்னை அகமுகமாக ஆராய்ந்து கண்டுணர்வது எளிது. உன் உள்ளத்தில் ஐயம், பகைமை, பொறாமை, சிற்றின்ப அவாக்கள், தற்பெருமை ஆகியவற்றுக்கு மிகுதி இடம் ஏற்பட்டுள்ளதா? அவற்றை எதிர்த்து நீ முனைந்து போராடுகிறாயா? உன் உள்ளத்தில் அவற்றுக்கு இடங் கொடுத்தால், அல்லது இடங்கொடுத்து அவற்றுடன் போராட மறுப்பவனானால், நீ தன் முனைப்பின் அடிமை தான். அவற்றுக்கு இடந்தராமலோ, தந்தபின் அவற்றுடன் போராடியோ வருபவனாக நீ இருந்தால், நீ வாய்மையின் சேயாகலாம். நீ மட்டிலாத் தன்முரண்டு உடையவனாய், தன் ஆதா யத்தில் மட்டற்ற ஆர்வமுடையவனாகவும் தற்போக்குடையவ னாகவும் தன் காரியக்குட்டியாகவும் இருந்தால், நீ அடிமை. பணிவும் இணக்கமும், மென்மையும் பொதுநல நோக்கம் உடையவனாய், தன்னடக்கத்தில் கருத்துடையவனாய் நீ இருந்தால் மட்டுமே நீ விடுதலை பெற்றவனாக, தனக்குத் தான் தலைவனாகக் கருதப்படத் தக்கவன் ஆவாய். நீ பணத்துக்காக, கட்சி, ஆட்சி ஆதிக்கத்துக்காக, தன் புகழ்விருப்பினால் தூண்டப்பட்டு, பகட்டாரவாரத்தை நாடி வாழ்கிறாயா? அப்படியானால் நீ செல்லும் வழி அடிமைகள் ஏறிச்செல்லும் வழிதான். நேர்மாறாக, கடைசிப் படியிலும் மனநிறைவுடையவனாய், உன்னைக் கடந்து செல்பவர் கடந்து செல்லும் போதும் கருத்து உலையாதவனாய், பிறரால் கவனிக்கப்படாமலே வாழ்வதில் வெறுப்பற்றவனாய் இருக்கிறாயானால், நீ அடிமைத் தளைகளுக்கு அப்பாற்பட்டவன் ஆவாய். உன் உள்ளத்தில் செருக்கும் இறுமாப்பும் இருக்குமானால், நீ எந்தக் கடவுளை எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்து வழிபட்டு வணங்கினாலும், உன் தன்முனைப்பே உன் தெய்வமாய் அமையும். நேர்மாறாக உள்ளத்தில் பணிவு இருக்குமானால், நீ கடவுளை வணங்காவிட்டாலும் அவர் உன் விருப்பறிந்து நடப்பார். இது உறுதி. ஏனெனில் கடவுள் அத்தகைய உள்ளங்களிலேயே இடையறாது தங்குவார். வாய்மை நாடுபவர்களைக் கண்டறிவது எவ்வாறு என்பது பற்றித் தெய்வத் திருப்பாடலில்1 திருவளர் கண்ண பெருமான் கூறியது காண்க. அஞ்சாமை, ஒருமுக மார்ந்த செஞ் சிந்தனை, நெஞ்சாரும் மெய்யுணர்வு நாடும் நிறையமைதி, தளைநீத்த கையுடன் அவாக்கள் தளைப்படுத்தி வளைத்தடக்கும் ஆற்றல், மருவுறும் நற்பற்று, கலைபயில் நல்லார்வம், கவினார்ந்த மெய்ப்பணிவு, நிலைநிமிர் பேராண்மை, நீடுபல் உயிர்நேயம், வாய்மை, முனியாமை, மாற்றார் நலம்விழையும் தூய்மை, நிறையமைதி, தோலாத நல்லறம், பிறர்குறை காணாப் பெருந்தகைமை, நெஞ்சீரம், பெறுமவற் றுள்ளே நிறைவுபெறும் பீடுள்ளம், பொறுமை, உள்ளுரம், பொறுப்புணர்ச்சி, பண்பிணக்கம், குறுகிய வன்பழி கொள்ளாக் குணநலம், தருக்கும் செருக்கிலாத் தகைமை இவையே திருக்கிளர் பாரதச் செம்மால், வானகச் செந்நெறி பதியுறும் சேவடி மின்னெறி யாளர்க்கு மேவிய பண்பே. வாய்மை ஒன்று. அதற்கு இட்டுச் செல்லும் வழிகள் தான் பல. ஆனால் தன் முனைப்பின் பாற்பட்ட மனிதர்கள் இதனை மறந்துவிடுகின்றனர். அவர்கள் மெய்யான வாய்மை ஒன்று நீங்கலாக வேறு எத்தனையோ வாய்மைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் அத்தகையிடையிலும் அவர்கள் வழி மட்டும் ஒன்றே. அது தத்தம் சமயம் அல்லது சமயக்கிளை அல்லது சமயக்கட்சி அல்லது கோட்பாடே என்று சாதிக்கப் பார்க்கின்றனர். அதுமட்டுமோ? அவர்கள் வாய்மைக்குரிய வழி நேரானது என்று கொள்ளாமல், அது வளைந்து வளைந்து பல கவர்விட்டுச் சிக்கலாயிருப்பது என்றும் கொண்டு, அச்சிக்கல் களுக்குள் சிக்கி அழுந்துகின்றனர். வாய்மையின் மெய்யொளியை நீ காண வேண்டுமானால், உன் சமயமே மெய்ச் சமயம், உன் கருத்தே மெய்க்கருத்து, உன் நலமே ஒரு தனிநலம் என்று குறுகிய தனிமதிப்பெண்ணங்களை விட்டுவிடு. கடவுளும் வாய்மையும் அறிவுக்கெட்டாதன. எளிதில் உணரப்படாதன என்று காட்ட, ஆய்வுரை வாதச் சிக்கல்களை வளர்த்து அவற்றில் அமிழ்ந்து இறுமாப்புக் கொள்ளாதே. அறச்சிந்தனை என்னும் நெய்த்திரி மீது உன் அறிவு ஒளிபெறட்டும். பழிபாவம் என்பவைகள் புறச் செயல்களில்தான் இருக்கின்றன என்று எண்ணாதே. அவற்றின் பெரும்பகுதி, வேர்ப்பகுதி முற்றிலும் புறச்செயலில் பழி நீக்குவதைக் குறியாகக் கொண்ட பலர் புறத்துறவு மேற்கொண்டு அவல முறுகின்றனர். இது பழிபாவத்தின் தழைகுளையாகிய சிறுசினைகளைக் குறைத்து அதன் அடிமரத்தையும் வேரையும் பெருக்கும் செயலாகவே முடியக்கூடும். ஆடையணியை விலக்குவதனால், ஒருவன் பகட்டார வாரத்தை விலக்கியவன் ஆகமாட்டான். உரையை விட்டதனால், அவன் அவாக்களை ஒழித்தவன் ஆகமாட்டான். வீடு குடிவிட்டு விலகிக் காட்டில் உறைவதனால், அவன் தன்முனைப்புக் குறைந்து விடாது. புறச்செயலும் சின்னமும் அகப்பண்பை வளர்ப்பவை அல்ல, அதன் வளர்ச்சி தளர்ச்சிகளைக் காட்டி எச்சரிப்பவை. புறவிலக்குச் செய்தபின் இவ்வெச்சரிக்கை அற்று விடவே, அகப்பண்புகள் உள் முதிர்வடைந்து முற்றிவிடுகின்றன. புறத்துறவு இங்ஙனம் புறத்தே துறவாகி அகத்தே தீமை வளர்க்கும் நச்சுப்பண்பாகி விடுகிறது. புறஉலகிலேயே புற உலகப் பற்றற்று அக உலகின் நிறை அமைதியில் நிலவுதலே மனிதனின் முழுநிறை இன்ப அமைதி ஆகும். அது தோலா நிறைவேற்றி, அதுவே வாய்மையின் குன்றேறி நின்று நிலவும் குளிர்நிலவொளி. நெறியடுத்தனை; நீடிய வெறுப்பொடு துயரம் தறிப்படுத்தனை; தகையிலா ஐம்புலக் கள்ளர் மறிபடுத்தனை; மாசுக ளனைத்தின் வேர் அகற்றிக் குறியடுத்தனை; கொள்கையில் நின்றனை குறியாய்! தன்னை வென்றபின்பே பொருள்களின் தகுதி களையும் அவற்றின் மெய்மையான தராதரத் தொடர் புகளையும் நீ காண்பாய். உணர்ச்சி எழுச்சிகள், தப் பெண்ணங்கள், விருப்பு வெறுப்புக்கள் உடையவர் இவற்றை உணர மாட்டார்கள். ஏனெனில் இவ்வுணர்ச்சிகளின் வழியே எல்லாப் பொருள்களின் காட்சியறிவும் அவர்கள் அகக்கண்களில் மாறுபட்டுத் தோன்றும். அவர்கள் கண்ணிருந்தும் காணாதவராவர். காதிருந்தும் கேளாதவரேயாவார். அதுமட்டுமன்று. கண்ணில்லாதவர் நிலையைவிட அவர்கள் நிலை பொல்லாதது. ஏனெனில் கண்ணில்லாதவர் காண மாட்டார், அவ்வளவே! காண்பதாக எண்ணிப் பிழையைப் பிழையாக்கிக் கொள்ளமாட்டார். புறக்குருடர், புறச்செவிடர் நிலையைவிட இந்த அகக் குருடர், அகச் செவிடர் நிலை பலவகையிலும் ஆரிடர் தரத்தக்கது. அமைதியின் தேசத்திலும் அதனால் ஏற்படும் பாசத் திலும் ஈடுபடுபவர் ஏசலிலும் பூசலிலும் எங்ஙனம் கைகலப்பர்? அவ்வலைகளில் அசையாது அவர்கள் வாழ்வில் இயங்குவர். “அலைகளை விடக் கடல் பெரிது; முகில்கள் சென்ற பின் கதிரவன் ஒளி நின்றியங்கும்; தேய்ந்த பிறை மீண்டும் வளர்ந்து நிறைவுறும்” என்ற மெய்ம்மைகளை அறியும் அவர்கள் அலைகள். முகில் நிழல்கள், பிறைத் தேய்வுகள் ஆகியவற்றுக்காகக் கலக்க முறமாட்டார்கள். ஐம்புலவேட்கையாகிய வலங்கொண்ட, ஆனால் நிலையில்லாத, போலி இன்பங்களின் பற்றுடையவர் வாழ்க்கை யார்வத்தின் பயனாகவே வாழ்வை இழப்பர். தசைப் பற்றாலே துன்பப்புயலில் தடுமாறுவர்; இன்ப நிலவில் தடம் மாறுவர். துன்பவிதை விதைத்து, துயர அறுவடை அறுத்துச் சோகிப்பர். அவர்கள் அடையத்தகும் ஆறுதல் ஒன்றே ஒன்றுதான்; துன்பமிகுதியால் அவர்கள் புறஞ் செல்லும் வழியில் எய்ப்புற்று, அது கடந்த உயர் பொருள் ஆகிய கடவுள் கருத்து என்ற சேமவைப்பில் கருத்துச் செலுத்தக்கூடும். புறங்கடந்த உயர்சிந்தனை அவர்களைப் படிப்படியாக ஈர்த்து அகத்திசையில் அவர்கள் கருத்தைத் திருப்பக்கூடும். அனுபவ வாயிலாக இப்பரி பக்குவநிலை அடைந்தவர்களே வாய்மை வழியில் காலடி பதிக்க எண்ணும் அகச்செல்வர் ஆவர். தீமையினின்றும் நன்மைக்கும், நன்மையினின்றும் வாய்மைக்கும் இங்ஙனம் வழி பிறக்கின்றது. ஆசையின் முறிவினால் ஒருவருக்கு மீண்டும் ஆசையே தான் தோன்றுமானால், அந்தச் செக்குமாட்டுப் போக்கு அவர்களை ஒரே நச்சுச் சூழலில் சுழற்றிச் சுழற்றிப் பேயாட்டமே ஆட்டுவிக்கும். ஆசையின் முறிவிலிருந்து ஆசை முறிப்புக்கு அவர்கள் முயலும் நாளே இந்நச்சுச் சுழலிலிருந்து அவர்கள் முன்னேறும் முதற்படியாகும். ஆசை நிறைவினால் ஆசைபெருகும் போதும் இதே போன்ற எதிர்ச்சுழல் உருவாகிறது. ஆனால் இது பழைய நச்சுச் சுழலில் சிக்கவைத்து அதன் மூலமே நன்மைக்கு வழிகாட்டக்கூடும். இதனாலேயே கீழின்பத்தின் காட்டுப் பாதை துன்பமாகிய நாட்டுப் பாதைக்கும், அத்துன்பப்பாதை உயர் இன்பமாகிய நாடுநகர் அகவழிகளுக்கும் இட்டுச் செல்பவை ஆகின்றன. தன் பிழையால் இன்னலுறுபவன் தன்னை நொந்து தற்கழிவிரக்கங் கொள்கிறான். மட்டற்ற கழிவிரக்கம் மனக்கசப்பூட்டித் தன்னம்பிக்கையை அழித்து முயற்சியைத் தடுக்கும். ஆனால், இவ்விழிநிலை நீடிக்காது. உயிரின் அகவியல்பே இதனை மாற்றியமைத்துவிடும். பொதுவாகக் கழிவிரக்கம் இன்னலின் படிப்பினைகளில் கருத்துச் செலுத்தி வாழ வழிவகுக்கும். ஆனால் தன் பிழைக்கு வருந்தும் கழிவிரக்கத்தை விடத் தீமைக்குப் பிறர் காரண மெனக் கருதி நையும் நைவு கொடியது. ஏனெனில் இது தன்முனைப்பு அடிப்படையானது. தன்முனைப்பே உள்ளம் தளைக்கும் தனித்தாழ்; தாழ் அவிழ்க்கும் மெய்திறவு தாங்கி வருந்தெய்வ நன்மகனே வாய்மை; அவன் வருபோழ்தத்தே நாடி அழைக்குமுன் நாடி எதிர்செல்வீர்! சென்மின் அவன் செல்திசை இருள் சாரினும் சீரொளியை நாடிச் சென்றத் திறவெடுத்து, நும்முள்அப் பேரின்ப வாயிலின் தாழ்திறந்து நோக்கரிய பேரொளியை நோக்குவிப்பன் ஆங்கவனே! உலகு துன்பமயமானதல்ல. ஆயினும் துன்பம் உலகமய மானது. அது புற உலகிலிருந்து தோன்றி அகநோக்கற்ற வர்களின் சூழலில் உலகேயாக மயங்கிக் கிடக்கிறது. அவாக்கள் என்னும் அகக் கோளாறுகள் அதற்கு மாய இன்பப் பூச்சுப் பூசி விடுவதுடன், வாய்மைஒளி அவற்றின்மீது படியாமல் இன்னல்களாகிய கருஞ்சாயலை அதன்மீது படரவிடுகிறது. துன்பத்தை நீக்கி இன்பத்தை நாட விரும்பும் அவாக்களின் அடிமைகளை இவ்விருவகை மாறாட்டத் திரைகளும் ஏய்த்து, இன்பத்தை விட்டுத் துன்பத்தை அணைக்க வைக்கின்றன. புறத்துன்பத்தைக் கண்டு அஞ்சுபவர்கள். சிந்தனையற்றவர்கள், இக்குழியில் விழுந்து குலைவுறுகின்றனர். நீ துன்பத்துக்காளாய், போதிய அளவு துன்பத்தின் இயல்பை அறிந்து கொண்டாயா? துயரமென்னும் ஆழ்கயத்தில் நீ முக்குளித்து அதன் அடித்தலந் தடவி யிருக்கிறாயா? அப்படியானால் நீ தன்முனைப்பை எதிர்த்துப் போரிடத் தயங்கமாட்டாய். ஏனென்றால் துன்பத்தின் படிப்பினை அதுவே. மெய்யறிவு பெறத் தன்முனைப்பை விடுவது இன்றி யமையாதது என்பதை உணராத “அறிவாளிகள்” உண்டு. அவர்கள் அறிவுக் கோட்பாடுகள் என்னும் சிக்கல் மிக்க சுழல்நெறிகளில் கறங்கிச் சுழல்வர். கறங்கும் அவர்கள் பார்வையில் எதுவும் தெளிவான காட்சியறிவை நல்காது. வாய்மை என்பது சிக்கல் மிக்க ஒன்று என்று அவர்கள் கொண்டு மேலும் மேலும் தங்கள் கருத்துக்களைச் சிக்கலாக்கிக் கொண்டு உழலுவர். வாய்மை அவர்கள் கருதுவதற்கு நேர்மாறானது. அது எளிமை வாய்ந்தது, நேரானது. அது சிக்கல் வளர்ப்பதல்ல, சிக்கல்களறுப்பது. அது முரண்பாடு வளர்ப்பதல்ல; முரண்பாடகற்றி இணக்கம் பெருக்குவது. இருதலைக்குறிக்கோளிடையே, இரு கடமைகளிடையே நெறிகாணாமல் தயங்கவிடுவதல்ல! வாய்மை ஒரே குறிக் கோளை, ஒரே கடமையை நோக்கி அது மனிதனை இட்டுச் செல்வதாகும். ஏனெனில் அது பொதுநலத்தின் நண்பன், தன்னலத்தின் நண்பனன்று. தன்னலம் தன்னலத்தை வளர்த்தாலும், தன்னலத்துடன் தன்னலம் முரணுவதை அது தடுக்காது. பொதுநலமோ பொதுநலத்தையே வளர்க்கிறது. பொதுநலத் துடன் பொதுநலம் முரணுவதில்லை. தன்னலமுடையவன் பிறரிடமிருந்து தன் கருத்து, சொல், செயல்களை மறைக்க வேண்டும். பொதுநலவாளன் அது செய்யவேண்டுவதில்லை. தீமைக்கு அவன் நன்மை செய்வதால், அவன் செயலே அவன் கருத்தை எளிதில் புலப்படுத்தி விடுகிறது. வாய்மைவழி எளியவழி; அதே சமயம் அது குற்ற மற்றவழி; முடிவிலா இன்பமே முடிவாகக் கொண்ட வழி அது. படர்ந்து திசைதவறி மெய்சோர்ந்த தோழ, கேள்! பரந்து கனியுமுளப் பரமன் அருள்நாடு! அடர்ந்து கனலெழுப்பும் பாலை அதிலோடி, அறவுமுன் நாவறட்சி அடைந்தல்லற் படுவதேன்? கடந்து செலும்வழியில் அருகே கனிமரக்கா, கருது நறும்பனிநீர்ச் சுனையும் அவைஉள, காண்! திடங்கொண் டதுவிடத்தே தேறி இளைப்பாறு, தேர்வாய் அதுவேசீர் வாய்மை எனத்தெளிவாய்! (1) தேடித் துழாவுறுநின் திண்கா லடியருகே தெவிட்டா உயிரன்பின் தீஞ்சுனை மென்பசுமை கூடிக் கிடக்க, நீ குந்தி இளைப் பாறாமல் குலைவதேன்? நீகொள் குறிக்கோளின் அந்தமும் நாடும் முயற்சியின் தொடக்கமும் ஒன்றாக நயந்துன் முனங்கிடப்ப நாடிநீ செல்வதெவன்? தேடுவோன் உள்ளத்தில், தேடும் பொருளாக, நாடுவோன் நாட்டமாய் நின்ற அதுகாணய்! (2) கோடுயர் குன்றத்தில் இல்லை உனதிறைவன் குன்றேறிக் கொடுமுடி தேடிநீ உழல்வதேன்? ஓடும் மணற்பரப்பில் ஆடுறும் வெங்கானல் உள்ளே இலை, நீ உளைந்து திரிவதுமேன்? மேடுபள்ளம், காடுகரை தாண்டி அவனில்லை, வீணேநீ ஏறி இறங்கி அலமாற்க! நாடுகின்ற உள்ளத்தில் உள்ஆய், அவ்வுள்ளத்தின் நடுவே மறைந்து நகைத்து நின்றான் காண்கநீ! (3) பரந்த அரையிருளில் மணற்பரப்பில் பள்ளமெல்லாம் பதிந்த அடிச்சுவடென் றெண்ணிநீ ஏங்கற்க! தெரிந்த அவைமறையும் அளவில் தெரியுமவன் தேரா அருளுருவின் சுவடு, நீ தெளிந்திடுவாய்! காந்த அவன்குரலில் இசைகேட்க விரும்புதியேல், கறங்கு பிறகுரல்கள் செவிகொளாக் கலைபயில்க! சுரந்த நிறைமோனத் தூநிலையில் நிறைஇசையாய்ச் சூழும் உனதுமுழு வாழ்வில் அவன் இசையே! (4) மாய்கின்ற எல்லாம் நீ மாயவிடு, சாயவிடு! மாய்மால உலகில்எலாம் துறந்துவிடு! மால்தீர்க்கும் ஆய்நின்ற அருளொளியை அகத்தே நீ காண்குவையேல், அகம்பற்றும் அவையெல்லாம் அறநீத்துக் கழுவிவிடு! வேய்கின்ற புறஆடை மேற்போர்வை அகற்றிவிடில் வெளிமதில் வாய்திறந்து காட்டும் வியன் அருளே! காய்கின்ற எல்லாமும் காய்ந்துநிற்கும் கதிரின்ஒளிக் கவின்உனது வாழ்விடையே மாறாக் கவின் நல்கும்! (5) மோனம் முடிந்த இடம் மேவி உறையுமவன் மூவா முதலடி முன்னிப் பழித்துயர்கள் போன திசையறியாப் போத நிலைபெறுவாய்! புத்தேள் அவன் இன்பப் புத்தொளியில் ஆடிநீ, வானம் தலையாக, வளர்திசை ஆடையாய், மண்ணாழம் அடியாக, மனிதஉளம் உயிராக, ஊனம் களையநின்ற உரவோன் உரைமோனம் உள்ளச் செவியுற நீ ஓய்வுற் றமைவுறுவாய்! (6) ஆடி அலைந்துநீ அமைந்த நாளெல்லாம் ஓடி ஒழியநீ உள்ளத் தமைதி கண்டு, கூடி அவன் அன்பின் கூறாம் அருள்தோய்ந்து, குலவு நிறைவாய்மை ஊற்றிற் குளித்துநீர் ஆடி அவன்இசை பாடிக் களித் துன்றன் ஆகம் பிறிதாக, அகமும் புதிதாக, ஊடி உளமார உயிரின் உலவாத உள்ளன் புருக்கி உவகை பெருக்குவாய்! (7) 3. அகநிலை ஆற்றல் பெறும்வழி இன்பம், எழுச்சி, புதுமை ஆர்வம் - இவற்றை நாடி, இவற்றால் அலைக்கழிக்கப்படும் மாந்தரே - ஆடவர் பெண்டிரே - உலகில் பெரும்பாலானவர் ஆவர். இவற்றால் அவர்கள் தன்னிலை மறந்து நகையாடுவர்; அல்லது கண் கலங்குவர். உள்ள உரத்தையோ, ஆற்றலையோ, நிலை பேறான அமைதியையோ, அவர்கள் நாடுதல் அரிது. நலிவையேநாடி அவாவி, தம்மிடமுள்ள ஆற்றப் பண்புகளையெல்லாம் அவர்கள் குலைத்துக் கொள்கின்றனர். அகநிலை ஆற்றலும் செல்வாக்கும் பெற்ற மக்கள் மிகச் சிலரே என்றால், அதற்குக் காரணம் உண்டு. அவற்றைப் பெறத் தன் மறுப்பு. இன்றியமையாதது ஆகும். அத்துடன் தன் மறுப்பால் பெற்ற உறுதியான அடித்தளத்தின் மீது அவர்கள் பொறுமையுடன் நற்பண்புகளாகிய செங்கல்கள் அடுக்கி, ஆற்றலாகிய அரணின் மதில் எழுப்ப வேண்டியவர் ஆகின்றனர். அலைகின்ற கருத்துக்கள், உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படல் ஆற்றலாகாது; நலிவேயாகும். ஆற்றல் என்பது அவற்றால் இயக்கப்படுதலன்று, அது அவற்றை இயக்குவது. உணர்ச்சியின் எழுச்சியால் உணர்ச்சியாற்றல் உடையவர்களாகக் காணப்பெறுபவர் உண்டு. இவர்களும் ஆற்றலுடையவர்கள் ஆகமாட்டார்கள். இங்கே ஆற்றல்கூறு இருக்கிறது. ஆனால் அது உணர்ச்சியின் ஆற்றலேயன்றி, உணர்ச்சியை ஆளும் ஆற்றலன்று. அலைகின்ற உணர்ச்சியில் ஆடுகின்ற நலிந்த உள்ளம் புழுவின் அல்லது சிறு பூச்சியினத்தின் நிலை யொத்ததானால், ஆட்டுகின்ற உணர்ச்சியின் இயக்கம் கரடி புலிகளின் மூர்க்கத் தன்மையை ஒத்தது. அவற்றின் ஆற்றல் அழிக்கும் ஆற்றல்; ஆக்கம் தர அவை உதவ மாட்டா! இவற்றைத் திசைமாறிய ஆற்றல்கள் என்னலாம். ஏனெனில் அவை பகைவரை நோக்கிச் சுடுவதற்கு அமைக்கப்பட்ட பீரங்கிகள் போன்றவை யல்ல. தம்மவரையே நோக்கிச் சுடுவதற்கு அமைக்கப்பட்ட பீரங்கிகள் போன்றவை. உணர்ச்சியாற்றலை இயக்கி அடக்கவல்ல உயர் அறிவாற்றலே ஆக்க ஆற்றல், மனித ஆற்றல், தெய்விக ஆற்றல் அவ்வாற்றல் உயருந்தோரும் அது ஆக்க ஆற்றலாய் மனித ஆற்றலாய், தெய்விக ஆற்றலாய் வளர்ச்சியுறுகிறது. தளர்ந்து நலிவுற்ற மனிதன், ஆற்றல் படைத்த மனிதன் ஆகிய இருவர்களுக்குமிடையே உள்ள வேறுபாடு துணிவாற்றல் சார்ந்த ஒன்று எனப் பலர் எண்ணக்கூடும். இது உண்மையன்று. ஏனெனில் துணிச்சல் மிக்கவர்கள் மூர்க்கமாயிருக்கலாம். அடம்பிடித்தவர்களாய், பிடிமுரண்டுக்காரரா யிருக்கலாம். உணர்ச்சிவெறியில் துணிகரச் செயலைச் செய்து பின் வருந்துபவர்களாயிருக்கலாம். ஆற்றல் படைத்த மனிதன் என்பவன் துணிவாற்றல் படைத்தவனோ, உணர்ச்சியாற்றல் படைத்தவனோ ஆகான். அறிவாற்றல் படைத்தவன் மட்டுமே. ஏனெனில் ஆற்றலை இயக்கும் ஆற்றல் அறிவே. கண்ணுடை யவன் நடைவழியறிந்து நடக்கும் நடையே உயிர்நடை. அதுபோல அறிவுடையவன் ஆற்றலே அறிவுடைய ஆற்றலாக, நோக்குமுடைய ஆற்றலாக, உயிர் ஆற்றலாக இயங்க முடியும். மற்றது குருட்டு மாட்டின் குதிப்பு; குடியன், கோட்டிக்காரன் கும்மாளம்; அவ்வளவே! உண்மையான ஆற்றலை அடைவதற்கான படிகள் மூன்று. முதன் முதற்படி அவாக்களையும் தன்முனைப்பு உணர்ச்சிகளையும் அடக்கித் தன்னிலை யமைதி பெறுவது. இரண்டாவது தன்னலம் துறந்து பண்பமைதி பெறுவது. மூன்றாவது சிந்தனை, அறிவு ஆகியவற்றைச் செயற்படுத்தி உயர் உள்ள நிலை அடைவது. இம்மூன்று படிகளும் உயிரினப்படி, விலங்கினப்படி, மனித அல்லது தெய்விகப்படி1 என்று வகுக்கப்படலாகும். இவற்றின் பண்புகள் முறையே மட அமைதி, மட எழுச்சி, அறிவமைதி அல்லது பண்பமைதி ஆகும். ஆற்றலின் அடிப்படை வலு அறிவமைதிப் படியில் அது கண்டுணரும் அடிப்படை அறிவுத் தத்துவங்களைச் சார்ந்தது ஆகும். இவையே ஆற்றலின் ஊற்றுக்கள், இவற்றை உணர்வதே அவற்றின் மறைதிறவுகள் ஆகும். மிகுந்த முயற்சியினால் ஆராய்ந்து தேடியும், பல இன்னல்களை எதிர்த்துப் போராடியும், பலநலங்கள் துறந்து இறுதியாக நிலையான வாய்மையுடைய ஒருமைத் தத்துவத்தைக் கண்டபின்னரே உள்ளத்தில் தெய்விக நிறை அமைதி உண்டாகிறது. சொற்கடந்த இன்பத்தின் ஒளி உள்ளத்தில் நிரம்பித் ததும்புகின்றது. இத்தத்துவத்தைக் கண்டபின் மனம் உலைவதில்லை. மனிதனும் எழுச்சிதளர்ச்சி அலைகளின்றி ஓய்வமைதி பெறுகிறான். அவன் உணர்ச்சிகளின் அடிமையாக இல்லை. உணர்ச்சிகளை வேண்டும்போது பிறப்பிக்கவும் வளர்க்கவும் அடக்கவும் வல்லவனாகிறான். அவன் ஊழ் கடந்தவன்; ஏனெனில் அவன் தன் ஊழைத் தானே ஆக்கிக் கொள்ள வல்லவன் ஆகிறான். தன்முனைப்பு வயப்பட்டவன், வாய்மை நெறிப்பட்டவன் ஆகிய இருவருமே ஒருவகையில் ஒருநோக்கம் உடையவர்கள் தாம் என்று ஒப்புக் கொள்ளலாம். ஏனெனில் வாய்மை உடையவனுக்கு அறிவார்ந்த நோக்கம் எப்படியோ, அப்படியே தன்முனைப்பாளனுக்கும் தன்னலம் நோக்கமாய் அமைகிறது. ஆனால் தன்முனைப்பாளன் நோக்கமாகிய தன்னலம் அறிவு சார்ந்த நோக்கமல்லவாதலால், அவன் தன்னோக்கத்தில் காட்டும் உறுதியை முறையில் காட்ட மாட்டான். ஒவ்வொரு தோல்வியிலும் அவன் முறையை மாற்றிக் கொள்வான். தன் நோக்கம் ஈடேற அவன் எந்த முறையையும் கையாள்வான். நன்மைதீமைத் திரிபு வேறுபாடு இவ்வகையில் அவனுக்குக் கிடையாது. ஆனால் வாய்மை நெறிப்பட்ட வனுக்கோ அறிவார்ந்த நோக்கத்திலும், நிலையான முறைகள் அஃதாவது காரணகாரியத் தத்துவம் சார்ந்த முறைகளிலும் உறுதியான பற்று உண்டு. ஆகவே அவன் நோக்கத்தைப்போலவே முறையிலும் உறுதியாயிருக்கிறான். அவன் திருத்துவது முறையையல்ல, தன் பண்புகளை, அகக் கூறுகளை! நோக்கமும் முறையும் மாறாமல் தனிப்பண்பை மாற்றும் அவனைச் சூழ்நிலை எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் அவன் பண்புகள் சூழ்நிலைகளையே மாற்றும் வல்லமை உடையன. தன்னல நோக்குடையவனுக்குப் பிறர்நலங்கள் யாவும் தடங்கலாகவே இருக்கமுடியும். சூழலும் தடங்கலாயிருக்கும். எனவே, அவனுக்கு ஏற்படும் இன்னல்கள் இடர்கள் எண்ணில. ஆனால் வாய்மையாளன் நோக்கமும் முறையும் மாறாது. துன்பத்தினையும் பண்புமாற்றத்துக்குரிய படிப்பினையாகப் பயன்படுத்திவிடுவதால், அவனுக்கு இடர் என்ற ஒன்று இருக்கமுடியாது. அவன் எதையும் - வாய்மை நோக்கத்தை விட்டு நழுவுவது ஒன்று தவிர எதையும் - இடர் என்றே கருதுவது கிடையாது. முள்மேல் நடந்து தொல்லைப் படுவதற்கு மாறாக, அவன் முள்ளைத்தேடி எடுத்து அகற்றி அதனைக் குண்டூசியாகப் பயன்படுத்திக்கொண்டே நடக்கிறான். இதனால் இடர் அகன்று விடுவது மட்டுமல்ல, இடர்தரும் முள்ளே ஒருநிறை பயனீட்டுப்பொருளும் ஆய்விடுகிறது. நிலைகாணா வெள்ளத்தில் மிதந்து சென்று விடவோ, அதில் மிதந்து செல்லும் படகு தேடவோ அல்லது அது தாண்டும் பாலம் அமைக்கவோ செய்வதுடன் அவன் நிற்பதில்லை. அவ்வெண்ணத்துக்கு அணையிட்டு விரும்பிய வழியில் திருப்பி, அதைக் கடந்து செல்வதுடன், அதைக் கொண்டு, வேளாண்மையும் படகுப் போக்குவரத்தும் கட்டை முதலிய பளுக்களை ஈர்த்துச் செல்லுதல், மின் ஆற்றல் ஆகிய ஆற்றல்களும் எய்தப்பெறுகிறான். ‘தன்முனைப்பாகிய இருளின் அடிமைகள் யார்?’ ‘வாய்மையாகிய ஒளியின் செல்வர் யார்?’ என்பதைப் பொதுப்படையான தறுவாய்களில் காண்பதைவிட, நெருக்கடிகளில் மிகத் தெளிவாகக் காணலாம். ஆட்டு மந்தை ஆடுகள் என்ற வகையில் ஒருநிலைப்படத் தோன்றும், மலையேற நேரும்போதுதான் அதில் வெள்ளாடு எது, பள்ளாடு எது என்பது தெற்றென விளங்கும். நாய்களிலும் இதுபோல, நீர்நிலை எதிர்வந்தபோதுதான், கீழ்த்தர நாய் எது, மேல்தரநாய் எது என்று காணலாம். புலி எதிர்த்தபோதுதான் நாட்டுநாய் எது, வேட்டைநாய் எது என்று காணலாம். பாம்பினத்தின் இறைமை தாங்கும் நாகம் எது, பிற பாம்புகள் எவை என்பதை முன்னது படம் எடுக்க சமயம் நேரும்போதுதான் தெளிவாகக் காணலாம். அதுபோல நெருக்கடி நேரங்களில்தான் தன்முனைப்பின் அடிமைகளாகிய கயவர், வாய்மையின் செல்வர்களாகிய சான்றோர் ஆகியவர்களின் அடிப்படை வேறுபாடுகளைக் காண முடியும். நெருக்கடிகளைக் கடந்து வெற்றி பெறும்போதுகூட, முந்தியவர் ‘முயலெய்த அம்புடை’ வேடர் போன்றவராகவே தோற்றுவர். அதில் முழுத் தோல்வியுறும்போது கூடப் பிந்திய வகையினர் ‘யானைபிழைத்த வேலை’ உடைய வீரர் போன்று வீறெழத் தோன்றுவர். மிகப்பெரும்பாலான இடங்களில் கயவர் நெருக்கடிகளைச் சமாளிக்கவேமாட்டார்கள். சான்றோரே சமாளித்துச் செயற்கரிய செய்பவர் ஆக மிளிருவர். உயர் குறிக்கோளுடையவர்கள் அகக்கண்களைக் கூடத் தன்னலம் மிக எளிதாக மறைக்கவல்லது. தன்னலம் பாதிக்கப்படாதவரை, தன் உடைமைகள், நம்பிக்கைகள், முனைப்புக்குரிய செய்திகள் ஆகியவற்றில் உறுதியாய் நின்று கொண்டே ஒருவன் உலக அமைதி, உலக அமைதி சகோதரத்துவம், உலகளாவிய மனித இனப்பற்று ஆகியவற்றில் தனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு என்று நம்பிக் கொண்டிருக்க முடியும். ஆனால் அப்பற்றுக்கெதிராக அக்குறிக்கோள்கள் செல்லத் தொடங் கினதும் அல்லது செல்லத் தொடங்கியதாகத் தோற்றியதும், அவனை அறியாமலே அவன் தன்முனைப்பு அக்குறிக்கோள் களிலுள்ள அவநம்பிக்கையை அலைத்து அழிக்க முற்பட்டு விடும். அவன் நாளடைவில் உலக அமைதிக்குப் பகரமாகப் போரையும், உலக சோதரத்துவத்துக்குப் பகரமாகக் குறுகிய தன்னலக்குழு நலங்களையும், உலகளாவிய மனித இனப்பற்றுக்குப் பகரமாகக் குறுகிய இரண்டகப் பகைமையையும் அணைக்கத் தொடங்கினால் வியப்பில்லை. இதனாலேயே தன்னலத்தோடிணைந்த உயர்குறிக்கோள்கள் நிலையான பயன்தர முடியாமற் போய்விடுகின்றன. தன்னலமறுத்த தன்மறுப் புணர்ச்சியாகிய நிலத்தின்மீதே உயர்குறிக்கோளாகிய கட்டடம் எழுப்பப்பட முடியும். குறிக்கோள் தத்துவம் கடந்தது. ஏனெனில் குறிக் கோளுக்காகவே தான் தத்துவங்கள் கண்டுணரப் பெறு கின்றன. ஆயினும் குறிக்கோளின் பெயரைச் சொல்லித் தத்துவங்களைக் கைவிடுவதில் மிகுந்த பிழைபாடு ஏற்பட வழியுண்டு. ஏனெனில் தன்முனைப்பும், அதன் மறைவில் இருந்துகொண்டு தன்னலமும், ஆராயாத தப்பெண்ணங்களும், தற்பற்று நம்பிக்கைகளும் அங்ஙனம் செய்வதற்கு மறைதூண்டுதலாய் இருக்கக்கூடும். குறிக்கோளுக்குத் தத்துவங்கள் எதிரானது என்று முடிவுகட்டுமுன், தன்னலமும் தன்முனைப்பும் அம்முடிவுக்குத் தூண்டுதல் தந்தனவா என்று பார்க்கவேண்டுவது இன்றியமையாதது. இத்தகைய இக்கட்டு நேராமல் இருக்கவேண்டுமானால், நாம் மேற்கூறியபடி தத்துவங்களை மேற்கொள்ளு முன்பே தன் மறுப்புமூலம் தன்னலத்தையும் தன்முனைப்பையும் வேரற அழித்து விட்டோமா என்று தன்னாராய்ச்சி செய்து கொள்ள வேண்டும். தன்மறுப்பு அல்லது தியாகமாகிய நிலத்தில்தான் தத்துவங்கள் தூய்மையான விதைகளாய், குறிக்கோளை நோக்கிய பயிராய் வளரமுடியும். தன்மறுப்பின் அடிப்படையாக எழுந்த தத்துவங்களே குறிக்கோளின் தெய்விகத் தன்மையை நிலைநாட்டு பவையாகவும் விளக்குபவையாகவும் அமைகின்றன. தன் மறுப்புச் சிலசமயம் தன்னல மறுப்பாக மட்டும் அமையாது. தன் உயிர் மறுப்பாகவும் வளரும். இயேசு பெருமானின் சிலுவையேற்றம் இத்தகைய தன் உயிர்மறுப்பு ஆகும். அவர் தத்துவங்களின் மதிப்பு இதனாலேயே தனி மனிதர் உடல், உயிர், எல்லை கடந்து, சமூக, கால எல்லை கடந்து உலகளாவியுள்ளது. இயேசு பிரானுக்கிருந்த சமூக எதிர்ப்புப் புத்தர் பெருமானுக்கு ஏற்படவில்லை. ஆயினும் சமூகதத்துவ எதிர்ப்பு இருந்தது. ஆகவே அவரும் மிக உயர்ந்த தன்மறுப்பின் மூலம் தத்துவத்தின் உயர்வை மெய்ப்பிக்க வேண்டியிருந்தது. அவர் துறவின் புகழையே துறந்த அகத்துறவுமூலம் தம் தத்துவங்களுக்குங்காலம், சமூகம், தேசங்கடந்த அழியாத் தன்மை உண்டுபண்ணிவிட்டார். அகநிலை ஆற்றல் உள்ளொளிமூலமே கிடைக்கத்தக்கது. உள்ளொளிபெற அகநிலைத் தத்துவங்களை அறிந்து அகப்பண்புகளை வளர்த்துப் பொலிவூட்டல் வேண்டும். ஆனால் அகநிலைத் தத்துவங்கள் ஓயாத இடைவிடாத பயிற்சி யினாலேயே பெறப்படுவன. உயர் குறிக்கோள், சிறப்பாக உயர் குறிக்கோள்களிலெல்லாம் மீஉயர் குறிக்கோளாகிய இயற்கை யளாவிய தெய்விக அன்புத்தத்துவம், அகநிலைத் தத்துவங் களில் தலைசிறந்த தத்துவமாக மட்டுமன்றி, அத்தத்துவங் களைத் தத்துவங்களாக ஆக்கி அளித்து வளப்படுத்தும் உயிர்த் தத்துவம் ஆகவும் விளங்குகிறது. இத்தத்துவங் களையே சமயவாணர் கடவுளின் கண்கண்ட வடிவமென்று சிறப்பித்தனர். கண்ணும் கருத்தும் கற்பனையும் கடந்த அறிவு வடிவம், வாய்மைவடிவம் ஆகியவற்றைவிட இது எளிது மட்டுமல்ல. அவற்றுக்கு வழிகாட்டுவதுபோல அவற்றைக கடந்தும் நிற்பது. ஏனெனில் அது உயிரைப் பயிற்றுவித்து வழிகாட்டித் தன்னை நோக்கி ஈர்க்கும் உயிர்த்தத்துவமாயியங்குகிறது. “அவனருளாலே அவனையே குருவாகக் கொண்டு அவன் தாள் வணங்கி அவனை அடைதல்” என்ற உயிருக்கு உயிரான கடவுள் தத்துவத்தின் இலக்கணத்துடன் இவ்வன்புத் தத்துவத்தின் இலக்கணம் முழுவதும் ஒப்பாகும். ஏனெனில் இவ்வன்புத் தத்துவமே கடவுள் தத்துவத்தின் முழுநிறை வடிவம். உணர்ச்சியற்ற தன்மையடைந்தவன் உணர்வற்றவனாயிருப்பான் என்று பலர் எண்ணுகின்றனர். இது தவறு. உணர்ச்சியற்ற தன்மை என்னும்போது நாம் உணர்ச்சி யழிந்த தன்மை என்று கொண்டுவிடக்கூடாது. உணர்ச்சியின் தானே இயங்கும் அலையெழுச்சிகளை நாம் அடக்கி, அவற்றை வேண்டும்போது வேண்டிய திசையில், அளவில், உருவில், இயக்கத்தக்க உணர்ச்சியமைதியையே நாம் உணர்ச்சியற்ற தன்மை என்று கொள்கிறோம். இத்தன்மையிலிருந்துதான் அறிவின் ஆற்றல் பிறக்கிறது. இவ்விரண்டின் கூட்டுறவினால் தான் தன்னலம் அழிந்து தன் முனைப்புக் குறைய முடியும். இவையாவும் அழிவுற்றபின் உணர்வமைதி, அறிவமைதி, பண்பமைதி என்ற மூன்றும் ஒருங்கேகூடிய முழுநிறை அமைதி, அஃதாவது அகநிலை ஆற்றல் கைவரப்பெறுகிறது. இவ்அக நிலை ஆற்றல் பெற்றவனுக்கு விருப்பம்வேறு, உணர்ச்சிவேறு, அறிவு வேறு, செயல்வெற்றி வேறு ஆகாது. விருப்பமே யாவுமாய், விரும்பியபடியே செயல்வெற்றி ஏற்பட்டுவிடும். அகநிலை ஆற்றல் இங்ஙனம் மனித உள்ளத்தின் சிந்தாமணியாய், அதன் கற்பகதருவாய், அதன் நிறையமுத கலமாய் அமைகிறது. உலகின் கருத்தையே பின்பற்றித் தன் கருத்தாக்கி உலகில் வாழ்வது எளிது. உலகைத் துறந்து தனிமையிலிருந்து தன் கருத்தையே உலகின் கருத்தென எண்ணி ஒரு மாய உலகில் வாழ்வதும் எளிது. ஆனால் இவ்விரண்டிலும் இனிமை அல்லது இன்பம் கிடையாது. தன் கருத்தைத்தான் திருத்தி, அதன் ஆற்றலால், உலகில் இருந்து கொண்டே உலகைத் திருத்தி, உலகாண்டு, வாழும் வாழ்வே இனிய வாழ்வு. அதுவே பேரின்பமும் ஆகும். தனிமைவாழ்வின் தன்னுரிமையும் தன்னலமும் உலகவாழ்வின் பொதுஉரிமையும் பொதுநலமும் ஒருங்கே நிறைவு பெற்ற நிலை இதுவே. குழந்தை நடக்கக் கற்றுக்கொள்கிறது. வளர்ந்து விட்ட அதன் தாய்தந்தையர் உறவினர் அதற்கு அவ்வகையில் உதவு கின்றனர். ஆனால் அவர்கள் அதற்குச் செய்யும் உதவியெல்லாம் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவாவை அதற்கு ஊட்டுவதுதான். அதன்பின் அது பிறர் உதவியில்லாமல் தானேதான் நடக்கக் கற்றுக்கொள்கிறது. ஊக்கத்துடன் நடக்கமுயன்று அது பல தடவை விழுந்து எழுந்து மீண்டும் நடக்கிறது. விழுந்தபோது தடுப்பது, மீண்டும் நடக்க முடியும் என்ற நம்பிக்கை ஊட்டி நடக்கும் ஆர்வத்தை வளர்ப்பது முயற்சிகளுக்கு இடையே ஓய்வுதருவது இவை தான் மற்றவர் தொடர்ந்து செய்யும் உதவி. பிள்ளை தன் தோல்விகளிலிருந்துதான் உண்மையில் நடக்கக் கற்றுக் கொள்கிறது. பிறர் செய்யும் இந்தச் சிறு உதவிகள் கூட மனித இனத்திலும் உயிரின உயிர்கள் வகையிலும் மட்டும்தான் நடைபெறுகின்றன. கீழின உயிர்களில் இயற்கையன்றி வேறெதன் உதவியும் இன்றி உயிர்கள் தமக்கு வேண்டுவன யாவும் கற்றுக் கொள்கின்றன. இதனால் எங்கும் இயற்கை தோல்விகளின் மூலமேதான் வெற்றிக்கு வழி வகுக்கிறது என்பதை உணரலாம். உயர் உயிரினங்களிலும் மனித இனத்திலும் மூத்தோர் இளையோர்களுக்கு உதவிசெய்வது இயற்கையின் உதவியை இன்னும் சற்று நீட்டிப்பதாக மட்டுமே பயன்படுகிறது. மூத்தோர் தம் அனுபவ எல்லைவரை இளையோரை இட்டுச்சென்று பின் அவர்கள் அவ்வெல்லை தாண்டித் தாமே வளரவிட்டு விடுகின்றனர். அகநிலை ஆற்றலில் முனைவோர் பிள்ளைகளின் வாழ்வில் கண்ட இவ் இயற்கைப் பாடத்தை நினைவில் கொள்ள வேண்டும். அதை முழுவதும் விளக்கிக் கொள்ளவும் வேண்டும். மூத்தோர் செய்யும் உதவி தன்னல உதவியன்று, இனநல உதவிதான் என்ற உணர்ச்சி இங்கே தனது என்ற உணர்ச்சியாக மாறுகிறது. அகநிலை ஆற்றலிலும் முதற்படி இதுவே. தன்னலம் படிப்படியாகப் பொதுநலமாக மாறி இனநலமாக வேண்டும். அதன்பின் மூத்தோர் அனுபவ எல்லை கடந்து இளையோர் புத்தனுபவ எல்லையை அடைவதுபோல, நாமும் அறிந்த அறிவெல்லை கடந்து அஃதாவது மனித இன அறிவு எல்லை கடந்து, அக நிலை அல்லது தெய்விக அறிவெல்லையில் நுழைகிறோம். இங்கிருந்து நமக்கு இயற்கை தரும் உதவி நம் தோல்விகளிலிருந்தே நமக்குக் கிட்டும். தளராமுயற்சியும் தோல்விகளால் பெறும் அறிவும், இடைஇடையே அவ்வறிவுக்கு உரமான இயற்கை யமைதியின் கூறான ஓய்வும் சேர்ந்து இறுதியில் நமக்கு ஆன்மிக ஆற்றல் தருகின்றன. இதை அடைந்தவன் இயற்கை - அஃதாவது கடவுளின் ஒரு சிறிய - அஃதாவது. தற்காலிக எல்லையுள்ள பதிப்பு ஆகிறான். நினைத்ததை நினைத்தபடி முடியக்காணும் ஆற்றல் அவனிடம் தானே உண்டாகிறது. மறைநிலைச்சமயவாணர்1 இவ்வாற்றலையே அருஞ்செயல்2 ஆற்றல் என்று குறிக்கின்றனர். திரு நூல்களில் கூறப்படும் கதைகளின் அருஞ்செயல்களுக்கு விளக்கமும் இதுவே. ஆனால் அச்செயல்களின் உண்மையான விளக்கத்தை அக்கதைகளின் நம்பிக்கை உண்டுபண்ண முடியாது. ஏனெனில் அது ஆராயா நம்பிக்கையாதலால் ஆன்மிக ஆற்றலை வளர்ப்பதற்கு மாறாக அதை மழுக்க, அழிக்கவே பயன்பட நேர்கிறது. மனிதன் ஒப்பற்ற அகநிலைவழிகாட்டி அன்பே. அதன் வழி நிற்பது அகச்சான்று. ஆனால் அன்பும் வளரத் தக்கது, அகச்சான்றும் வளரத்தக்கது என்பதை நாம் மறக்கக் கூடாது. தான் என்ற முனைப்பகற்றித் தனது என்ற நிலை அடைதலே அன்பு. “தனது” என்பதன் எல்லை விரியுந் தோறும் அன்பு அறத்தைத் தூண்டும். பொதுநலமாகி, இனநலமாகி விரியும். இறுதியில் எல்லையற்றதாய், இயற்கையளாவி அருளாடும். அன்பு விரிவடையுந்தோறும் அகச்சான்றும் விரிவடைகிறது. இவ்விரிவால் தன்னலமும் தன்முனைப்பும் கரைகின்றன. தன்னலம், குழுநலம், தேச நலம் காரணமாகப் போரிடுபவனுடைய அகச்சான்று காணாத உண்மையை அருளாளன் காண்கிறான். தன்னலம் இனநலம் காரணமாக இறைச்சி நாடி உயிர் கொல்பவன், உண்பவன், காணாத மெய்ம்மையை இந்நிலை, கடந்த அருளாளன் உணர்கிறான். அகச்சான்று விரிவடையுந்தோறும் குறிக்கோள் உயர்வடைகின்றது. தெய்வத்தின் பெயரால் பலியிடுகிறவன் வகையில் குறிக்கோளுயருந்தோறும் தெய்வத்தைப் பற்றிய எண்ணமும் உயர்ந்து, அதே தெய்வம் பலியை விரும்ப மாட்டாது என்பதை உணர்கிறான். குறிக்கோள் எல்லையி லேயே மனித சமூகத்தின் தெய்வ உணர்ச்சி நிற்கிறது என்பதை இது காட்டுகிறது. தெய்வ உணர்ச்சி போலத்தான் சமூக உணர்ச்சி, தேச உணர்ச்சி, மொழி உணர்ச்சி ஆகியவையும் தனிமனிதன் அல்லது சமூகக் குறிக்கோள் எல்லையில் நிலவுகின்றன. ஆகவேதான் குறிக்கோளின் குறிக்கோள் அறிந்து செல்லும் பண்பை அகநிலை வாழ்வு நாடுபவன் பெற வேண்டும். குறிக்கோள்களை நாம் வழிபடு தெய்வங்கள் அல்லது உருவ முடைய தெய்வங்கள் என்று கூறலாமானால், குறிக்கோளின் குறிக்கோள் அல்லது பண்பு எல்லையை நாம் உருவற்ற இயக்குந் தெய்வம் என்று கூறலாம். அன்பும் அகச்சான்றும் அறிவைக் குறிக்கோள்களின் வழிச் செலுத்திக் குறிக்கோள்களின் குறிக்கோளாகிய பண் பெல்லைக்கு இட்டுச்செல்லும். ஒவ்வொரு தோல்வியும், ஒவ்வொரு தன்மறுப்பும் இதற்காகச் செலுத்தப்படும் 1பகுதிப்பணம் ஆகும். மன அமைதியும் தன்னடக்கமும் அதற்கான தகுதி அல்லது நுழைவுக் கட்டணம் என்னலாம். தன்னலத்தின் வழி பண்புக்கு மாறுபட்ட திசையில் நம்மைச் செலுத்தி, ஊக்க அழிவு, நலிவு அழிவு ஆகியவற்றைத் தரும். பொதுநலத்தின் வழி, அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவற்றைத் தரும். சாராது பழியெனும் வெம்பகழி, நேர்மைத் தகுதிநெறி யாளன்தனை; பேராத பேரூழின் கையாட்டுகள், பேதைமைத், தடைகளும் இன்னல்களுமே; சீராக மோனத் திறம்பற்றி நிற்பன் அவன்; சிதறும் திறங்களிடையே! நேராகநிற்பன், இடம் காலம் பிணிமூப்புச் சாக்கா டவற்றினிடையே; (1) சுற்றிலும் மின்னல் இடி சூழலாம்; வெந்நிரயச் சுற்றங்கள் கூவிஎழலாம்; முற்றிலும் தோல்வியவை யுறுமே; அவை அவன்றன் மொய்ம்பின்முன் நிற்கமாட்டா; வெற்றிகொள் அன்பெனும் மூட்டுடை மெய்ம்மையெனும் மெய்க்கவசம் போர்த்தவதனால், பற்றா இருட்படைகள் பாழுறப் பேரொளியின் பண்பாய் அமைவன் அவனே! (2) அடிக்குறிப்புகள் 1. பண்டையோர் இம்மூன்று படிகளையே முக்குணங்களாக வகுத்தனர். அவை மடம் (தமசு), உணர்வு, (இரஜசு), பண்பு (சத்துவம்) என்பன. 2. Mystics 3. Miracles 4. Subscribtion 4. தன்னலங்கடந்த அன்புப்பேறு கலைமன்னன் மைக்கேல் ஏஞ்சலோவின் கண்களில் கல்லின் பாரிய பாளங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்பமைந்த தெய்விகச் சிலையாகத் தோற்றிற்று என்று கூறக் கேட்கிறோம். அத்தகைய பண்பமைந்த உள்ளம் இருந்ததனால்தான், அவன் கண்களும் அத்தகைய பண்பைக் கண்டன. அதனால்தான் அவன் கைகளும் அத்தகைய பண்பைச் செய்து காட்டின. வாய்மை நெறிநிற்கும் கடவுட் பற்றாளன் கண்களில் உலகின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மனிதனும் கலைமன்னன் கண்ட உருவமையாக் கருங்கற் பாளங்களே! பற்றார்வம் என்னும் கண்ணால் அவற்றிடையே தம் அகப்பண்பின் நிழலைக் கண்டு, மன அமைதி, பொறுமை, இடைவிடா முயற்சி ஆகிய உளி கொத்துளிகளைக் கைக்கொண்டு உழைத்தால், அக்கற்பாளங்கள் யாவும் பண்பட்ட அழகுச் சிலைகளாய்விடும். ஒவ்வொருவர் உள்ளத்தினுள்ளும் அன்புத் தெய்வத்தின் பேரொளி நிலவுகின்றது. ஆனால் அதைச் சுற்றிலும் அடிக்கடி ஒளியூடுருவவிடாத திண்ணிய மாசு படர்ந்து, அடர்த்தியாகி, அதை மறைத்துக் கொண்டிருக்கிறது. உள்ளேயிருக்கும் ஒளியில் கறையில்லை. அது அணையாது, அழியாது. அதுவே மனிதனிடம் அமைந்த வாய்மைக் கூறு. ஆனால் அழியும் தன்மையுடைய புறத்தேயுள்ள திண்பொருள் தற்காலிகமாகவேனும் நம்மகத்தேயுள்ள அந்த அழிவிலா ஒளியை மங்கவைக்கவும் மறைக்கவும் முடிகிறது. இப்புறத்தோட்டின் கறையைப் படிப்படியாய் அகற்ற ஒருவன் அரும்பாடு படவேண்டும். அதன் கரடுமுரடான பகுதிகள் வழவழப்பாக்கப்பட வேண்டும். திண்ணிய பகுதிகள் மேன்மையாகி ஒளியுருவத் தக்கதாக்கப் பட வேண்டும். தேவையற்ற கூறுகள் சிற்றுளியால் சிறிது சிறிதாகப் பெயர்க்கப்படவேண்டும். இத்தனையும் செய்து முடிக்கப் பொறுமை, அனுபவத்தால் தேர்ச்சியடைந்த கைத்திறநயம், குறிக்கோளில் பற்றார்வம், அதை அகக்கண்ணால் கண்டு புறத்தே படிய வைக்கும் அழகார்வம் ஆகியவை வேண்டும். இத்தனையும் முடிவுற்ற பின்னரே, அகத்தே கண்ட மெய்க்காட்சி புறத்தே காட்சியளிக்க முடியும். வாய்மையை மெய்யாக்கும் இம்முயற்சியில் இடையே நிகழும் கடுந்தேர்வுகள் பல. ஆனால் இவை தடைகள் போலத் தோன்றினாலும், தடைகள் அல்ல. அவை முயற்சியின் தகுதியை உயர்த்துகின்றன. அதன் பயனை நயனுடையதாக்குகின்றன. சில சமயம் இக்கடுந்தேர்வுகள் முழுத்தோல்விபோலக் காட்சி யளிக்கும். செய்த செயல்கள் முழுவதும் விழலுக்கிறைத்த நீர் போலாயின என்று தோற்றும். ஆனால் உண்மையில் முயற்சிகள் எவையும் வீணாகமாட்டா. ஏனெனில் அவற்றின் மெய்ப்பயன் புறத்தேயில்லை. செய்பவன் அகத்திறத்திலேயே உள்ளன. முயற்சிகளால் அகமுதிர்வு ஏற்படுகிறது. அது புற வெற்றியை எளிதில் தரவல்லது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே, இவ்வகமுதிர்வு வகையில் வேறுபாடு கிடையாது. ஆகவேதான் தோல்விகண்டு மலைவது அறியாமை ஆக அமைகிறது. சிலை வடிப்பவன் முயற்சி சிலசமயம் அதன் அவசரத்தினாலேயே திருந்தமுடியாமல் கேடுறும். ஏனெனில் கலைஞன் கண்ட மெய்யுருவம் ஒரு குறிப்பிட்ட அளவு முயற்சியினால் அடையப் பெறாவிட்டால், இன்னும் சிறிது செதுக்கி அதைப் பெற முடியும். ஆனால் அவ்வுருவத்தின் எல்லை கடந்து உளி கல்லைச் செதுக்கா. விட்டால், பள்ளம் விழுந்த பகுதியை மீட்டும் எவ்வாற்றாலும் நிரப்பமுடியாது. ஆகவே வாய்மை நாடுபவன் தோல்வி அவ்வளவு கேடுராது. அவன் விரைந்த ஆத்திர வெற்றிகள் அவற்றைவிடக் கேடு தருவன. அவை அகமுதிர்வு உண்டுபண்ணுவதற்கு மாறாக, அகமுதிர்வுக்கு உதவ முடியாதபடி புறச்சூழலை மாற்றியமைத்து விடுகின்றன. கலைப் பண்பற்றவன் கலை முயற்சி போல, இவ்விரைவு தன்னடக்கமற்ற வாய்மைப் பண்பற்றவன் செயலாகிவிடும். தன்னடக்கமுடையவனுக்குத் தோல்விகள் வெற்றிக்குப் படிகளாவது போலவே, குறைபாடுகளும் வழுக்களும் முழுநிறை பண்புக்குப் படிகளாய் விடும். பயன்தெரிந் தார்தமக்குப் படுகுறை கள்வ ழுக்கள் நயன்படு நல்ல மாடி நாடுறு நல்ல ஏணி வியன்பல படிக ளாக விளங்குவது அல்லால், வேறு கயம்படக் கீழி றங்கும் கடும்பழி யவைக ளாகா! ஆகவே தெய்விக வாழ்வு வாழ ஒருவன் குறைபாடற்றவ னாக, குற்றமற்றவனாக இருக்க வேண்டு மென்பதில்லை. தன்னடக்கம், நோக்கம் ஆகிய இரண்டும் இருந்தால் போதும். மற்றக் குறைகள் எவையும் நாளடைவில் திருந்துபவைகளே. நல்லான், பொல்லான்; பெரியான், சிறியான்; அறிவுடையவன். மூடன்; செல்வன், ஏழை என்ற வேற்றுமைகள் எதுவும் முழுநிறை இன்பத்தின் பாதைக்குச் செல்லும் வகையில் கேடுதரமாட்டா. அடக்கமின்மை, வழியிலா வழிச் செல்லுதல், உயர் நோக்க மின்மை, அறிவின்மை ஆகியவைமட்டுமே கேடு பயக்கும். அடக்கமுடைமையும் தன்னலமின்மையும் தன் வழுக்களை அறிவுடன் களைய உதவுவது போலவே பிறர் வழுக்களையும் களைய உதவும். ஏனெனில் தன்னலமில்லாதவன் அன்புடையவனாயிருப்பது ஒருதலை. அன்பு தன்னலப் படியிலேயே தொடங்கி விடுகிறது. ஏனென்றால் அறிவுடைய தன்னலம் ‘தான்’ என்ற நிலையிலுள்ள பற்றைத் ‘தனது’ என்ற அளவுக்கு மாற்றிவிடுகிறது. அறிவின் துணை கொண்டு இத் ‘தனது’ என்பதன் எல்லை விரிந்து கொண்டே போகிறது. தன்னலமற்ற நிலையில் இது முழுநிறை பொதுநல அன்பாக மாறுகிறது. தன் நலத்துக்காகத் ‘தான்’, ‘தனது’ என்பவை மாறி, தன்னை அடக்கியும், தன்னை மறந்தும், பொதுநலத்துக்கு உழைக்கும் உயர் மனித அன்புநெறி ஆய்விடுகிறது. மனிதப் பண்பாகிய இவ்வன்புநெறி உயர் குறிக்கோளுடன் இணையும் போது, அது தெய்விக அன்புநெறி அல்லது அருள்நெறி ஆகிறது. மனித அன்புநெறிக்கும் தெய்விக அன்புநெறி அல்லது அருள்நெறிக்கும் உள்ள முக்கியமான வேறுபாடுகள் மூன்று. மனித அன்புநெறி மனித இனத்தளவே பரவ வல்லது. தெய்விக அன்பருள் நெறி இது தாண்டி இயற்கையையே அளாவியது. இரண்டாவது, அன்புநெறி படிப்படியாகவே விரிந்து செல்வது. அணிமைநலம், தொலைநலம் என்ற வேறுபாடு அதில் உண்டு. தாழ்ந்தவரிடம் இரக்கம், ஒத்தவரிடம் நட்பு, உயர்ந்தவரிடம் பத்தி என அது வேறுபடும். அருளன்போ அணிமை தொலை வேறுபாடும், உயர்வு தாழ்வொப்பு வேறுபாடும் அற்றது. மூன்றாவதான வேறுபாடே மிக மிக முக்கியமானது. அன்புநெறியில் நேர் அன்புணர்ச்சி அல்லது பற்று, எதிர்மறை அன்புணர்ச்சி அல்லது பகைமை உண்டு. அன்பு நெறியாளர் நண்பரையே நேசிப்பர் எதிரிகளைப் பகைப்பர். அருள் நெறியாளரோ இருசாராரிடையேயும் வேற்றுமை காட்ட மாட்டார். அன்பனைப்போலவே அவர்கள் பகைவர்களையும் நேசிப்பர். அவர்கள் விருப்புவெறுப்புக்கள் தனி மனிதன் செயல்துறையில் வேறுபடாது. ஏனென்றால் அருள்நெறியாளர் அன்பு எதிர்ப்பு அதற்குரிய மனிதனிடம் அன்புகாட்டி அவன் தீய பண்பு அல்லது பண்புக் குறைபாடுகளிடமே எதிர்ப்பு நிகழ்த்தும். அருளாளர் ஆட்களிடம் ஒருசார்பு காட்டாதது போலவே, பொருள்களிடத்திலும் காட்டமாட்டார். உயர் அருளாளர் பண்புகளிடத்தில்கூடக் காட்ட வேண்டியிராது. ஏனெனில் அவர்கள் நன்மையை வளர்க்கும்போது எப்படித் தமக்காக வளர்ப்பதில்லையோ, அப்படியே தீமையை எதிர்க்கும்போதும் தமக்காக எதிர்ப்பதில்லை. தவிர, தீமையும் நன்மையின் படிகள் என்று அவர்கள் அறிவதால், அவர்கள் நன்மையில் விலக்கமுடியாப் பற்றுறுதியுடன் தீமையையும் நன்மையாக மாற்றும் ஆற்றலுடையவராவர். தன்னலத்தின் அகக்கூறே தன்முனைப்பு. அறிவு பெருகுந் தோறும் தன்னலம் விரிவடைகிறது. தன்னலம் பொது நலமான பின்னர், தன்னலத்தின் புறக்கூறு முற்றிலும் அகன்று விடுகிறது. அதன் அகக்கூறு மட்டுமே மீந்துள்ளது. அதனை நாம் தன்னலம் என்பதில்லை. தன் முனைப்பு என்கிறோம். அறிவில்லாத் தன்னலத்தில் இதே தன்முனைப்பு தன்னலத்திலும் கேடாயிருந்த ஒன்று. ஆகவே தன்னலம் நீக்கியபின்னும் நிலவும் தன்முனைப்பு உண்மையில் தன்னலத்துக்கும் வேராகிய ஓர் அடிப்படைத் தீமைப்பண்பு என்று காணலாம். தன்னலத்தின் புறமாக நின்று தன்னலத்தைக் கெடுக்கும் அப்பண்பே தன்னலம் நீங்கிய பின்பும் அதன் இடம் கொள்கிறது. அறிவிற் சிறந்த பலரிடமும், அருளாளர் சிலரிடமும்கூட இத்தகைய முனைப்பின் பல வடிவங்கள் நிழற்படுவது காணலாம். தாம் கூறுவதே அல்லது கருதுவதே சரியென்ற உறுதியான பற்றாக, வெறியாக, அது செயலாற்றலாம். புகழ்நாடித் தன் மறுப்புச் செய்வதாக அது செயலாற்றலாம். சிறியவரிடம் மட்டுமன்றி, மிகப் பெரியவரிடமும் உள்ள இவ்வடிப்படைக் கோளாறு நீங்கிய பின்பே அருளில் அருளாகிய தெய்விக அருளன்பொளி சுடச்சுட மாற்றுயரும் பொன்னொளியாகப் பொலியும். விருப்புவெறுப்பற்ற, சமரசப்பண்பு தோய்ந்த, புகழ் ஆர்வங்கூடக் கலவாத அன்பு கிட்டத்தட்ட இறைவன் அருளுருவுடன் ஒப்பாகும். உலகியலில் கைம்மாறு கருதாத காதலன்பும், தாயன்பும் மட்டுமே அதற்கு உவமை கூறத்தக்கன. இறைவன் புகழ் பாடுவோர் இவ்விரண்டன்பையுமே விதந்து கூறுவதன் காரணம் இதுவே. காதலன்பு ஆண் பெண் இருபாலாருக்கும் பொது. ஆயினும் பெண்பாலரிடம் காதல் அருமையாகத் தோன்றிச் செழுமையாக வளர்வது. காதல் கண்ட பெண்பாலுள்ளம் கடவுளைக் காணும்தகையது. அது தாயான பின் அது கிட்டத்தட்டத் தானே கடவுள் தன்மையடைகிறது. கடவுளையும் இயற்கையையும் நாம் தாயுள்ளம் ஒன்றுடனேயே ஒப்பிடுகிறோம். அது காதலில் கனிந்த தாய்மையாயின் அதன் நிலை இன்னும் பெரிது. ஏனெனில் அது கடவுள் தன்மையில் மலர்ந்து கனிந்த கடவுள் தன்மை ஆகும். தாய்பெறும் துன்பங்கள் யாவும் தன் குழவிகாண நீங்கும் என்பர். ஆனால் குழவியின் வருங்கால வாழ்வு பற்றிய தன் கனவார்வம் நிறைவேறக் காணும் தாய் இன்பம் இன்னும் உயர்ந்தது. இத்தகைய உயர் இன்பங்கள் தாயின் காதல் துன்பம், பிள்ளைப்பேற்றுத் துன்பம், தாயின் வளர்ப்புக்காலக் கவலைகள் ஆகியவற்றிலிருந்தே பிறக்கின்றன. கட்டடத்தின் உயர்வும் உறுதியும் அதன் அடிவாரத்தின் ஆழத்தையும் உறுதியையும் பொறுத்தவை. அதுபோல இன்பத்தின் உயர்வும் அதற்குத் தரப்படும். துன்பத்தின் விலையைப் பொறுத்தது என்னலாம். துன்பம் என்ற ஒன்று ஏன் இயல்கின்றது என்பதற்கு விளக்கம் இதுவே. அது இன்ப ஓவியத்தின் எழிலார் உருவரை - அதனை எடுத்துக்காட்டும் பின்னணிவண்ணம் - அதன் ஒளிவண்ணங் களுக்கு உருத்தரும் நிழல்வண்ணம்! துன்பம் என்பது தீ. அதில் புடமிடப்பட்டே வாய்மை எனும் பொன்கலவை இன்பம் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம் ஆகிறது. கீழ்த்தர இன்பங்கள் உயிர்களைப் பிரிக்கின்றன. அவ் இன்பம் தனிமை உணர்வு தேடுகிறது. ஆனால் துன்பம் இணைக்கிறது. அவ்விணைப்பினூடாக, ஒற்றுமையினூடாக, உயர் இன்பம் எழுகிறது. ஆகவே மனிதன் துன்பத்திலிருந்து இன்பத்துக்குச் செல்கிறான் என்பதைவிட, தாழ்ந்த இன்பங்களிலிருந்து துன்பத்தின் துணையால் உயர் இன்பங்கள் நோக்கி உயர்வு அடைகிறான் என்பதே பொருத்தமானது. இன்ப துன்ப முரண்பாடு இல்லாத நிலையான பேரின்பமாளிகைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகளே துன்பங்கள். தாய் தன் தசையின் தசையாக ஒரு துணையற்ற தசைப் பிழம்பைத் தன்னெதிரே காணும்போது, அது பற்றிக் கவலைப் படுகிறாள். நன்றே அவள் கவலை! ஏனெனில் அக்கவலையே அக்குழந்தை உயிராய் அவ்உயிரை வளர்க்கிறது. காதல் துணைவர், கணவன் மனைவியர், உடன் பிறந்தார் ஒருவர் பற்றியொருவர் எவ்வளவு கவலைகொள்கின்றனர்? நன்றே அவர்கள் கவலை! ஏனெனில் தசையுதிரினும் உதிராது நின்று அக்கவலையே, வாழ்வை வளப்படுத்தும் நீடித்த அன்பு நிழலாய், அவ்வன்பொளி நோக்கி மனித சமூகத்தை இட்டுச் செலும் துணையாய் உள்ளது. ஆனால் உயிரை வளர்க்கும் இனிய காதல் ஒருவன் நெஞ்சத்தைத் தேனீபோலக் கொட்டுகின்ற காலத்தில், கவலை கொள்ளவேண்டிய நண்பர் குழாம் கைவிட்டு நெஞ்சில் நச்சுத்துயர் விளைக்கும் காலத்தில், ‘தயா’வின் இருப்பிடமாகிய தாயன்புகூடத் தடங்கெடும் நேரத்தில், மனிதன் உள்ளத்துக்குப் புகலிடம் தரும் தாய் உள்ளம் ஒன்று உண்டு. அதுவே கடவுள் அன்பு. ‘பிள்ளைகள்’ எத்தனையிருந்தாலும், அத்தனை பேருக்குமாகக் கவலை கொண்டு துயர்ப்பட்டு, அக்கவலையும் துயருமே தன் இன்பமாகக் கொண்டு வாழும் தாய்போல, உயிர்களனைத்தினையும் பற்றிக் கவலைப்படும் அன்பு அது. தாய் அன்புபோல அது கவலையையே தன் இன்பமாகக் கொண்டது. தாயன்பு தாயளவில் எத்தனை பற்றற்றதாயிருந்தாலும், தாயின் பற்றுதலுக்குரிய பிள்ளையிடமே அது முழு அளவில் செயலாற்றவல்லது. அதுவும் அப்பிள்ளை தானாகச் செயலாற்ற முடியாதபோது அல்லது செயலாற்றி மன முறிவுற்றபோதுதான் தாயன்பு செயலாற்ற வல்லது. உயிர்களனைத்துக்கும் தாயாகிய இறைவன் அன்பு இதுபோலவே செயலற்றவர் சார்பிலும் செயலாற்றுகின்றது. ஆனால் அது தற்காலிகமாக வேனும் செயலாற்ற முடியாத இடம் ஒன்றே. தாயின் மரபுக்குரியதல்லாத அயல்மகவிடமும், தாயன்புக்குக் கட்டுப்படாத மகனிடமும், தாய்அன்பு நாடாத மகவிடமும் தோயாத தாயன்புபோல, தன்முனைப்புடைய, இயற்கையமைதியற்ற, அவாவடக்காத உயிர்களிடத்தில் மட்டும் அதுசெயலாற்ற முடியாது அகல நிற்கும். இறையன்பு பற்றிச் சமயவாணர் கூறுவது அத்தனையும் பொருள்பொதித்த மெய்யுரைகளே. ஆனால் அதைக் கதையாகக் கூறுபவரும் கேட்பவரும் அதன் பண்பும் பொருளும் உணரமாட்டாதவர்களாகின்றனர். உலகியல் சிந்தனையிலேயே ஆழ்ந்த குருமாரும், உலகியல் கடந்த ஒன்றை அவாவியும் உலகியலையும் அத்துடன் பற்றி நிற்க அவாவும் மக்களும், உலகியல் மொழியூடாக அதைக் கேட்டும் ஆராய்ந்தும் அச்சொற்களையே உணர்வர். அதன் உலகியல் கடந்த பொருள்காணாது உலகியல்பொருளே கொண்டு உலமருவர். கிறிஸ்தவகுருமார் இயேசு இறந்தார், இறந்தபின் மீட்டும் புத்துயிர் பெற்று மறுபிறப்புப் பிறந்தார் என்று கூறுவர். இது உண்மையே; ஆனால் முழு உண்மையல்ல. இறந்த காலத்தில் கூறப்பட்ட அந்த உண்மை இறந்த காலத்துக்கு மட்டும் உண்மையன்று. முக்காலத்துக்கும் உண்மையே. அதை இறந்தகால உண்மையாகக் கொள்பவர் உடல் இறந்தது, உடல் பிறந்தது என்றுதான் கொள்வர். இது மெய் என்பார் மெய் என்று வாதாட, அன்றென்பார் அன்று என்று வாதாட இருவரும் வாயாடி நிற்பர்! ஆனால் இங்குக் கூறப்பட்டது உயிராயின் அது இறவாதது. ஆகவே இறக்கவும், பிறக்கவும் முடியாதது. பிறந்தார், இறந்தார் என்பது முக்காலத்துக்கும் பொது மட்டுமல்ல, இரண்டும் ஒருங்கே நிகழும் நிகழ்ச்சி என்பதை ஓர்ந்து நோக்கினால், கதை பொய், கருத்துமெய் என்பது போதரும். துன்பமும், சாவும் புதுப்பிறப்பின், அஃதாவது வளர்ச்சியின் தத்துவம். தம்மை அடக்கும் அவாக்களை மக்கள் அழித்தால், தம்மால் இயக்கப்பெறத்தக்க நல்லார்வங்கள் பிறக்கின்றன. இது கிறிஸ்துவின் ஓயா இறப்பு, பிறப்பு! இவ்விரண்டும் ஒரே சமயத்தில் என்றும் நடைபெறும் உடனிகழ்ச்சித் தத்துவமாகும். “சிலுவையிலறையப்பட்டார் இயேசு, நீயும் சிலுவையேற்றால், அவர் உன்னுள் இடம் பெறுவார்”. இதன் நுண் பொருள் இதுவே! உன் அவாக்களை நீ கழுவேற்று. அவற்றின் அழிவில் குறுகிய உன் வடிவாகிய தன்னலம் அழியும். உன் புதுப்பிறப்பாகிய பொதுநலம் பிறக்கும். இது செய்யாது, தன்முனைப்பை வைத்துக்கொண்டு இயேசுவின் பெயர் சொல்லி அல்லது வேறு எந்த இறைவன் பெயர் சொல்லித்தான் என்ன பயன்? தன்முனைப்பற்ற தெய்விக அன்பு ஓர் உணர்ச்சியன்று. அஃது ஓர் அறிவுநிலையமைதி. ஆனால் அது செயலற்றதன்று. அது தீமையில் நம்பிக்கையற்றது. ஆகவே தீமைகள் யாவையும் தன் வயப்படுத்தி அழித்து நன்மையாக்கவல்லது. அன்பும் அறிவும் இரண்டறக் கலந்த இவ்வொளியில் நிற்பவர்க்கு அன்பு வேறாகவும் அறிவு வேறாகவும் தோன்றுவதில்லை. அது ஒரே பண்பின் இரு கோண நோக்காய் இயங்கும். அதை நோக்கியே உலகவாழ்வு முழுவதும், அதன் ஒவ்வோர் இன்பதுன்ப நிகழ்ச்சி யும் நேராகவோ, சுற்றிவளைந்தோ சென்று கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் தற்செயல் நிகழ்ச்சி அல்லது எதிர்பாரா நிகழ்ச்சி எதுவுமில்லை. எல்லா நிகழ்ச்சிகளும் போதிய காரணகாரியத் தொடர்புடனே தான் நிகழ்கின்றன. எனவே நம் ஊழின் சங்கிலியில் ஒவ்வொரு கண்ணியும் நாம் தெரிந்தோ, தெரியாமலோ; நாம் மனமார விரும்பியோ, விரும்பாமலோ ஏற்பதேயாகும். தீமைகள், துயர்கள்கூட இதற்கு விலக்கன்று. ஏனெனில் நன்மை என்று நாம் நினைத்து நெஞ்சில் விதைத்த போலி நன்மையின் விளைவே அவை. உன் வாழ்வும் தாழ்வும் வாழும் உன்செயலே. உன் துன்பங்கள் நீ விரும்பி அணைத்துக் கொண்ட தளைகளால், தெரிந்தோ தெரியாமலோ நீயாகப் புகுந்து உள்ளிருந்து தாழிட்டுக் கொண்ட குறுகிய இருண்ட சிறைக்கூடத்தால் உனக்கு நேர்பவையேயன்றி வேறல்ல. எதைவிட்டாலும், அத்தளையை விட்டுவிட, அச்சிறையைவிட்டு வெளிவர நீ துணியவில்லை. அதை விட்டுவிட்டால் உன் உள்ளார்ந்த விருப்பங்கள் நிறைவேறாது போய்விடுமே என்று நீ அஞ்சுகிறாய். உனைவாட்டும் நோயும் நீ; பகையும் நீ; உனையன்றித் தினையளவும் உன்வாழ்வு மாள்வுக் குரியார்இல்! உனைவாட்டும் வெஞ்சிறையில் நின்றுநீ வெளிவர நினையின், அது தடுப்பார் நீணிலத்தில் இலரன்றே! தளை நீ உருவாக்கியது. ஆகவே உன்னால் அதைத் தகர்க்கமுடியும். சிறை நீ விரும்பி உட்புகுந்தது. ஆகவே நீ விரும்பினால் விரும்பிய கணமே வெளிவரலாம். ஆனால் தகர்க்கும் விருப்பமும், வெளிவரும் விருப்பமும் உன் துன்பத்தின் அளவையே - நீ அவற்றின் காரணத்தைப் பற்றிச் சிந்திக்கும் அளவையே பொறுத்தது. துன்பத்தின் ஆற்றலும், அது தரும் அறிவாற்றலும் சேர்ந்து உன் போலி விருப்பாற்றலை வெல்ல வேண்டும். வடிவத்தைத் தொடரும் நிழல்போல, தீயைத்தொடரும் புகைபோல, காரணத்தைக் காரியம் தொடர்கிறது; தொடர்ந்தே தீரும். ஆனால் எல்லாக் காரணங்களும் வெளிப்படையாகத் தோன்றுவதில்லை. வெளிப்படையாகத் தோன்றுபவையெல்லாம் உண்மைக் காரணமாகவோ, முழுநிறை காரணமாகவோ இருக்கவேண்டுமென்பதும் இல்லை. செயல் முறையறிவி லிருந்தே மெய்க்காரணம், போலிக்காரணங்களைத் திரித்தறிய முடியும். இன்னும் நீடித்த அனுபவத்தாலும், சிந்தனையாலும் முழுநிறை காரணம். அஃதாவது காரணகாரியத் தொடர்புடையதாய்ப் பின்னப்பட்டுள்ள முழுஉலக அமைதியையும், அதன் மூலகாரணம் அல்லது கடவுளையும் உய்த்துணர முடியும். இதையறிந்தவன் விதைக்கின்ற வித்தெல்லாம் நல்வித்து. அது பின்னும் நல்வித்துக்களை விளைவித்து எங்கும் நன்மைபரப்பித் தீமையை நலிய வைக்கும். இயற்கை யளாவிய அன்பாகிய கடவுட்பண்பை உணராதவர், அகத்துறவு - அஃதாவது அகத் தன்மறுப்பு நிலை பெறாதவர் உலகத்தைத் திருத்துவதாகவும், நேர்வழியில் உய்க்கப் பாடுபடுவதாகவும் எண்ணி உழைக்கலாம். ஆனால் புறத்தே அவர்கள் திருத்தும் செயலை விட அகத்தே அவர்கள் விதைக்கும் தீயபண்புகளால் விளையும் கேடுகளே மிகுதியாயிருக்கும். தீமைகள் யாவும் இதயத்திலிருந்தே எழுகின்றனவாதலால், இதயத்தைத் திருத்துவது ஒன்றே சீர்திருத்தமாகும். மற்றத் திருத்தங்களெல்லாம் போலித் திருத்தங்களாகவே முடியும். தன்னலமும் தன்முனைப்பும் தேய்ந்து அவாக்கள் அடங்கி அமைந்த உள்ளத்திலோ இயல்பாக நன்மைகளே விளையும். விளக்கின் சுடரைச் சூழ அலைவீசும் ஒளிபோல, அவை தம் சூழலை மாற்றியமைக்கும். அகத்தின் சமநிலை பெற்றவர் அதுபோலப் புறத்தேயும் சமநிலை ஏற்படப் பாடுபடுவர். அவர்கள் பாடுபட்டாலும், பாடுபடாவிட்டாலும் அவர்கள் பண்பு அந்நிலையைப் படிப்படியாகக் கொண்டு வரும். அகத்தின் சமநிலை போலப் புறத்திலும் சமநிலை ஏற்பட்டால், உலகில் ஒப்புரவுப் பண்பு வளரும்; ஒப்புரவு நிலையும் வளரும். முதலில் செல்வர் வறியோரைப் புறக்கணிக்க மாட்டார். அதேசமயம் வறியோர் செல்வரை வெறுக்க மாட்டார். பேராவலுடையோர் பிறர்க்கு உதவத் தொடங்குவர். மனக்கசப்படைந்தவர் முயற்சியில் ஊக்கங் கொள்வர். சிற்றின்ப நாட்டமிகுதியுடையவர் அதில் தளர்வர். வாழ்வில் சுவையற்றவர் அச்சுவை நாடுவர். பொறாமையுடையவர் பிறருடன் கூடி வாழ்வர். தன்நிறைவுடைய தன்னலக்காரர் பிறர்மீது பாசம் காட்டுவர். மக்கள் கட்சி, மதம், மொழி, இனம், நாடு, நிறம் கடந்து மனிதப் பண்பு காட்டுவர். தீமை செய்தவரிடமும், பகைவரிடமும் மன்னிப்புப்பண்பும், விட்டுக்கொடுக்கும் பண்பும் வளரும். பழிதூற்றுபவர் அதனைக் குறைத்துப் புகழ்பரப்புவர். உலகில் இத்தகைய சமநிலை ஏற்படுங் காலம் பொற்காலம் என்று கூறத்தகும். அகநிலை அமைதியுடையவன் தன் காலச் சூழலிலும் சமூகச் சூழலிலும் இத்தகைய பொன்னமைதியைப் பரப்ப முயலுவான். தங்குதடையற்ற வேறுபாடற்ற, தெய்விக அன்பு காட்டுவது எப்படி முடியும் என்று பலர் கேட்கக்கூடும்? குடியன், வேடதாரி, கோழை, கொலைஞன், நயவஞ்சகன், நன்றி கொன்றவன் ஆகியவர்களுடன் எப்படி அன்பாட முடியும்? இவர்களையேனும் கண்டிக்காது, வெறுக்காது இருப்பது எப்படி என்று கேட்கப்படலாம். ஆனால் விருப்பு வெறுப்புக்கள் தாமாக நல்லன, கெட்டன என்று கூற முடியாது. அவற்றின் பயனாக ஏற்படும் விளைவுகளே அத்தகையன ஆகும். குடியன், வேடதாரி ஆகியவர்களை நீ வெறுப்பதனால், பகைப்பதனால், அவர் களிடம் அப்பண்புகள் குறையவோ, நற்பண்புகள் வளரவோ வகை ஏற்படுமா? அப்படியானால் வெறுப்பு நற்பண்பு ஆகலாம். நடைமுறையில் இதற்கு நேர் எதிர் பயனே ஏற்படுவதைக் காண்கிறோம். அல்பண்பாளர் என்று நாம் கருதுபவர்கள் உண்மையிலேயே அல்பண்பாளராகவும் இருக்கலாம். நற்பண்பிலிருந்து உறுதியற்றுச் சறுக்கியவராகவும் இருக்கலாம். உண்மையில் அல்பண்பாளரல்லாமலிருந்து நம் வெறுப்பின் காரணமாகவே அவர்கள் அல்பண்பாளராகக் கருதப் பட்டவர்களாயிருக்கலாம். எந்த நிலையாயினும், அவர்களை வெறுப்பதன் மூலம் அவர்கள் அல்பண்பு அவர்களிடம் ஊறி உறுதிப்படத்தான் இடம் ஏற்படுகிறது. இந்தியாவில், சிறப்பாகத் தென்னாட்டில், ஊனுணவை விலக்கியவர்கள் பலர் உண்டு. கூர்ச்சரத்தில் இவர்கள் திருவைணவரென்றும், தமிழகத்தில் திருச்சைவரென்றும் பிறரால் சிறப்பிக்கப்படுகின்றனர். இவர்கள் இப்பண்பைச் சாக்கிட்டே தம்மை உயர்வுடையவராகக் கருதிக்கொள்கின்றனர். ஆனால் இவர்கள் தம்மை உயர்த்தப் பண்பைப் பயன்படுத்த முடிந்ததேயன்றி, பண்பை உயர்த்த முடியவில்லை, உயர்த்த முயலவுமில்லை! ஊனுண்பவர் இழிந்தவர், அவர்கள் ஊனுணவு கைவிட்டாலும் இழிந்தவரே என்று இத்தகையவர்கள் கருதுவதால், இயற்கையிலேயே ஊனுணவை விலக்க விரும்புபவர்கள், விலக்கமுயலுபவர்கள்கூட ஊனுண்ணாதவர்கள் வெறுப்புச் செயலின் எதிர் விளை வாக, ஊனுண்ணாமை மீதும் வெறுப்புக் கொள்ள இடமேற்பட்டு விடுகிறது. தீயப் பண்புகள் கண்டால், அவற்றை வெறுக்கும் உரிமை எல்லாருக்கும் உண்டு. ஆனால் பண்பை வெறுக்கும்போது அப்பண்புடையோரையும் வெறுப்பது, அம்மக்களை நிலையாக அப்பண்புக்குரியவராக்கி விடுகின்றது. குடிகாரன் குடிகாரனாகப் பிறப்பதில்லை. குடிகார இனம் என்று ஓர் இனம் கிடையாது. அவன் என்றும் குடிகாரனாக இருக்க வேண்டும் என்றும் இல்லை. குடி வெறுப்பவர் அவனிடம் அன்புகாட்டிக் குடியை மட்டும் வெறுப்பதாக அவன் கண்டால், அவன் திருந்த இடம் உண்டு. இதனால்தான் பழிகாரரை வெறுக்காது பழியை எதிர்க்கும் பண்பும், பகைமையில்லாது பண்பைப் பண்பால் பண்புடன் எதிர்க்கும் பண்பும் வளர்வது உலக நலத்துக்கு இன்றியமையாதது ஆகிறது. மேலும் இயற்கையளாவிய தெய்விக அன்பு உயர்நீதி மட்டுமல்ல, அதுவே உண்மையான நீதி. ஏனெனில் நல்லார், தீயார் ஆகிய இருதிறத்தாரும் தற்காலிகத் தீமைகளில் கிடந்துழன்று திருந்துவதற்கும் உரியவரே. தீமையின் தொடர்பிலிருந்து நிலையாக விடுதலைபெறாத ஒருவருக்கு, கிட்டத்தட்ட அதே நிலையிலுள்ள இன்னொருவரைக் கண்டித்தொறுப்பதற்கு என்ன உரிமை? நேர்மாறாக அவரிடம் அன்பு செலுத்தும் கடமை மற்றவருக்கு உண்டு. ஏனெனில் அந்த அன்பு ஒன்றே பண்பை மாற்றும்; சூழலைத் திருத்தி அமைக்கும். பெரும்பாலும் தம் கருத்துக்களுக்கு ஒத்துவராதவர்களை மனிதர் தத்தம் கோணத்திற்கேற்ப, ஒரு சாராரைத் தீவிரவாதி, வெறியர், பிடிவாதக்காரர் என்றும், இன்னொரு சாராரைப் பிற்போக்காளர், மிதவாதிகள், பசப்பர், போலிகள் என்றும் அவப்பெயரிட்டு அழைக்கவும், தூற்றவும், ஒறுக்கவும் துணிகின்றனர். இக்கூற்றுக்கள் யாவும் தத்தம் கோணத்திலிருந்து கூறுப்பட்டவையேயன்றி, பொது நீதியாகிய வாய்மையை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டவையல்ல என்பது வெளிப்படை. ஏனென்றால் இக்கூற்றுக்கள் யாவுமே இருதிசையில் செல்வன. ஒருவரைப் பிற்போக்காளன் என்னும்போது, இன்னொருவனை வெறியன் என்று கூறவேண்டியிருக்கிறது. வெறியனை நோக்க, அவன் பிற்போக்காளனாகவும்; பிற்போக்காளனை நோக்க, அவன் வெறியனாகவுமே இருக்கமுடியும். அவ்வத் தூற்றுதலுக்கு ஆளானவர் அதன் எதிர்ப்பண்பைச் சுட்டித் தூற்றமுடியும். மனித இனமொழிகள் எல்லாவற்றிலுமே ஒரு பொருள் சுட்டிய கருத்தைத் தூற்றுதல் முறையில் கூறுவதற்கு ஒரு சொல்லும், போற்றுதல் முறையில் கூறுவதற்கு ஒரு சொல்லும் அமைந்திருக்கின்றன. முற்போக்காளனை முற்போக்காளன் என்பர் போற்றுவோர், போற்றுதல் விரும்பும் நேரங்களில்! அவரையே அதே கருத்துடனேயே வெறியன் என்பர் தூற்றுவோர், தூற்றல் அவாவும் வேளைகளில்! இதுபோலவே, பிற்போக்காளன் என்பதற்கு மிதவாதி என்றும், சமரசவாதி என்றும் கூறமுடியும். போலிப் பசப்பர் என்ற சொற்களையோ எவரும் எவர்மீதும் வழங்கலாம். அல்லது இருகோடி யிலுள்ளவர்களும் நடுநிலையாளர்மீது சுமத்தலாம். இத்தகைய கணைகள் உள்ளத்தின் புறத்தோட்டிலிருந்து வருவன; பொது மனித நலத்திலூறிய அக உள்ள நிலையடைந்தவர் இவ்வேறுபாடுகளைக் கொள்ளார். பொது நிலையடைந்தவர் சூழ்நிலை காரணமாக இவற்றைக் கொள்ள நேர்ந்த விடத்தில் கூட, உணர்ச்சியில் அந்நிலை கடந்து அன்பொப்புரவும் கண்ணோட்டமும் செய்வர். தெய்விக அன்புநெறி தழுவியவர்கள் மக்களினத்தை எப்போதுமே மக்களினமாகக் கருதுவர். நாடு, மொழி, இனம், சாதி, சமயம், கட்சி, கருத்து ஆகிய யாவும் ஒரே பரந்த மாகடற் பரப்பிலுள்ள மாகடல், கடல், குடா, விரிகுடா, நீரிடுக்கு, காயல் என்ற பலதிறப்பட்ட புறவடிவ வேறுபாடுகள் என்றே அவர்கள் கருதுவர். கண்டனம் மட்டுமன்றி, விருப்பு வெறுப்பு, நட்பு, பகைமை ஆகியவை அவர்களிடம் தலைகாட்ட மாட்டா. ஒருவேளை புறத்தே அவற்றைக் கொண்டாலும், அது பண்புகளை ஒட்டியதாக இருக்குமேயன்றி, தனி மனிதரையோ குழுவையோ சார்ந்ததாயிராது. ஆரம், சங்கிலி, கடுக்கன், தோடு, அட்டிகை, மூக்குத்தி, சுட்டி, சொருக்குப்பூ, ஒட்டியாணம், பதக்கம் ஆகிய எந்த உருவில் இருந்து எந்தப் பயன் பெற்றாலும், அவற்றினூடாக அவற்றைக் கடந்து பயன்தரும் அகப்பொருள் பொன்னாகவே மதிக்கப்படுவதுபோல; மனிதர் புறப்பண்புகள் எதுவாயிருந் தாலும், அவர்கள் அவை கடந்த அடிப்படை மனிதப்பண்பை மறவாது அதன் தற்காலிக உருவாக மற்றவற்றைக் கொள்வர். தெய்விக அன்புபெற மனிதர் ஒருசார்பு நிலைகளினூடாக ஒப்புரவு பேணி நடுநிலை உணர்வுகொண்டு அதன் மூலம் பொதுநிலை உணர்வுபெற உதவும். அது தனிமனித உள்ளத்தைப் பொதுமனித உள்ளமாகிய கடவுளுணர்வுடனும், அதன் இருப்பிடமாகிய, அதன் தனிமனிதப் பதிப்பாகிய அகஉள்ளத்துடனும் இணைவிக்கும். இதன் மூலம் அது பொது உள்ளத்தின் வரம்பிலாற்றல் பெறும். கடலின் ஆற்றல்பெற்ற துளியாகி அது கடலின் விரிவின்றி, அதனினும் செறிவு மிக்கதாக அதை இயக்க வல்லதாகிவிடும். தனிமனித உள்ளம் கடவுளாற்றல் பெற்றுக் கடவுளின் புற உள்ளம் அல்லது உடலாகிய மனித இனத்தையும் இயற்கையையும் இயக்கும் ஆறு இதுவே. பரந்த கடல் அணுக்கள் கரைப் பாறைகளின் செறிந்த திரளணுக்கள் தமைமோதி உடைத்திடினும், அவைதாம் உரம்பெற்று நிற்பதையும் உணர்ந்தேன் நான்; எனினும் நிரந்தரமாய்க் காலத்தில் நெக்குடைதல் கண்டேன்! (1) பருங்கற்கள், பொடிக்கற்கள், மணலாகப் பாறை உரங்கெட்டு மடியும்நிலை உட்கொண்டேன்; மலையும் திறங்கெட் டிந் நிலையாகும்; செடிகொடிகள் தோன்றி, உரங்கொண்டு மண்ணாகி உயிர் புதுக்கல் கண்டேன்! (2) வானகத்தின் சிறுதுளிகள் மலைப்பாறை தேய்த்துக் கானகமும், உயிரினமும் கடுகவளர்த் துலகம் தானாக்கும் நிலைகண்டேன்; தளிர்நுனியும், வேரும் மால்நிலைய காழ்வயிரம் துளைத்திடுதல் கண்டேன்! (3) கண்டுணர்ந்தேன் புயலனைய கடுஞ்சீற்றம், அச்சம், மண்டுபகை, பழிகளவை மலையென நின்றெழினும், துண்டுபடும், தேயும்உளம்; உட்கனியும் கனிவால் எண்டிசையும் இன்பமெழும் இறையருளால் என்றே! (4) 5. அந்தமில் இன்பம் உலகப்பொருள்கள் யாவும் காலவரையறை, இட வரையறை உடையன; மாறுவன, மாய்வன. ஆயினும் மனிதன் தொன்று தொட்டுக் கால எல்லையற்ற, இட எல்லையற்ற, மாறாத, மாயாத ஒரு பண்பை அவற்றி னூடாகக் கண்டு வந்திருக்கிறான். மாறும் பொருளிடையே மாறும் பொருளாக அவன் செயலாற்றும் வேளைகளிலெல்லாம் அவன் மாறுபாட்டையே உணர்கிறான். ஆனாலும், செயலிடை அமைதி தோன்றித் தன்னைப் பற்றிய சிந்தனையால் தன்னுணர்வு பெற்ற நேரங்களிலெல்லாம், மாறுபடாத அவ் அகப்பண்பில் உலவ அவன் தவறியதில்லை. வானகத்தில் ஓயாது சிறகடித்துப் பறக்கும் சிறு பறவை, ஓய்வுநாடும் நேரத்தில் கட்டாயமாக இறங்கி நிலத்தில் வந்து தன்நிலை பெறுதல்போல, அவனும் அச்சமயத்திலேயே தன் தனிநிலை பற்றிச் சிந்திக்கிறான். பறக்கும் பறவை தனக்குப் பறப்பதற்கான சிறகு மட்டுமன்றி, நிற்பதற்கான காலும் இருப்பதையும்; தான் உண்ணுவதற்கான இரைகள் பெரிதும் பறக்கும் வானிலில்லை. நிற்கும் நிலத்திலேயே உள்ளது என்பதையும் நிலத்தில் அமரும் போதுதான் காணும், வானம் அதன் வாழ்விடம்தான்; ஆனால், வாழ்வின் தாயகம் நிலமே. மனிதனுக்கும் அதுபோலச் செயல் வாழ்க்கை ஒரு கருவி மட்டுமே. அவன் தாயகம் ஓய்வு. செயல் துறையில் அல்லது கருவித் துறையில் அவன் மாறுபடும் உலகமாகிய வானில் உலவுகிறான். ஓய்வு அல்லது தாயகத் துறையில் மாறுபடாப் பண்பின் தோய்கிறான். பறக்கும் பறவைகளில் சிலவற்றுக்கு அல்லது சில போது பறக்கும்போதே இரையகப்படுவதுண்டு. நிலத்திலும் தொலைவில் உள்ள உணவை அது நடந்து சென்று பெறுவதில்லை. பறந்துசென்றே பெறுகிறது. ஆயினும் எப்படியும் அதன் உணவுத் தாயகமும், ஓய்வுத் தாயகமும் நிலமே! இதுபோல ஒரு மனிதன் செயலுலகில் பெறும் இன்பங்கள் மிகச் சில. அவையும் மாறா ஓய்வுலக இன்பத்தின் திரிபுகளே. செயலுலகில் உழைப்பதனால் அவன் உடல் வளர்ச்சியடைகிறது. அவ் வுடலின் ஒரு கூறாக அறிவுள்ளமும், இன்பந்துய்க்கும் உள்ளமும் ஓய்வுக் காலத்திலேயே அறிவு நாட்டமும் இன்ப நாட்டமும் கொள்ள முடியும். உள்ளமும் ஓய்வு பெற்றாலல் லாமல், இந்த இன்பத்தை முழுதும் துய்க்க முடியாது; உண்மையான இன்பத்தின் தாயகம் இவ்வமைதியேயாகும். அது செயல்துறை சார்ந்ததன்று; அது கடந்தது. புறத்திலிருந்து வருவது அன்று, அகத்திலிருந்து வருவது. செயல் கடந்த இயற்கை அமைதியிலிருந்து செயலிடை ஓய்வமைதி பெற்ற அக அமைதியில் அது தன் நிலவொளி வீசுகிறது. எல்லாச் சமயங்களின் பொதுத் தாயகக் களம் இதுவே. இதுவே எல்லாக் கருத்துக்களும், கோட்பாடுகளும், எல்லா முரண்பாடுகளும் வந்து ஒடுங்கும் மூலப் பெருவெளி. எல்லா மனிதர்களின், எல்லா உயிர்களின் வாழ்வு தாழ்வுகளைக் கடந்த நிலையான முடிந்த இன்ப இலக்கு இதுவே. இதனை உணர்ந்த பின்தான் உயிர்கள் தம் உள்ளார்ந்த மெய் இயல்பை உணரவல்லன. வரம்புபட்ட உலகில் வாழ்ந்தாலும், மனிதன் இத்தொடர் பினால்தான் வரம்பிலா மெய்ம்மையில் தான் ஒரு சிறுதுணுக்கு என்பதைக் காண்கிறான். துயிலில் கனவுலகில் திரியும் ஒருவன் திடுமெனத் துயில் நீங்கி நனவுலகைக் காண்பது போல், நிலையான மெய்ம்மையாகத் தோற்றும் நிலையற்று போல், நிலையான மெய்ம்மையுலகிலேயே தான் இருப்பதை உணர்கிறான். அதுவே தனக்குரிய மெய்யுலகு என்பதையும் அறிகிறான். வரம்பிலா மெய்ம்மை ஓர் எல்லையற்ற கடல். மனிதன் அதன் ஒரு திவலை. உலகியல் உணர்வு என்ற திரை கடலிடையிருந்து திவலையை மறைத்து அதைத் தனி வாழ்வுடைய ஒருசிறு பொருளாகக் காட்டுகிறது. ஆனால் திவலை கடலகத்தின் ஒரு நுண்கூறு. அது கடலின் அகண்டமான பரப்பிலே இரண்டறக் கலந்தபின்தான் தன் இயல்பை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறது. தசையுடல் மாயும் இயல்புடையது என்பதை யாவரும் அறிவர். ஆயினும் அம்மாய்வுபற்றி அவர்கள் அச்சமும் வெறுப்பும் கொள்ளாமலில்லை. எனினும் அஞ்சிப் பயனில்லை என்பதனால் அதை மறந்து, நினைவிலிருந்து ஒதுக்கி வாழ எண்ணுகின்றனர். இது ஓரளவு ஏற்புடையதே என்னலாம். ஆனால், அவர்கள் தன்னலம் அவ்வொதுக்கீட்டைப் பொருளற்றதாக்குகிறது. கடைசி நொடிவரை தன்னலமே அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. ஒதுக்கிடும், மறுப்பும், உண்மையை மறைத்து விடுவதுடன் நிற்கவில்லை. மறுத்துக் கருத்துமாறாட்டமே செய்து விடுகிறது. உயிர்நிலையானது; ஆனால் உலகும் அதுபோல நிலையானதே என்ற வாதத்தால், தன்னல வாழ்வுக்குச் சிலர் சப்பைக்கட்டுக் கட்டப் பார்க்கிறார்கள். நிலையான உயிரின் தன்மையை அறியவொட்டாமல் நிலையற்ற உடல் தடுப்பது போல, நிலையான உலகின் தன்மையை அறிய விடாமல், அதன் மாறுபடும் புறவடிவம் தடுக்கிறது. என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. அகநோக்கின்மையும், அமைதியின்மையும் இவ்வகையில் அவர்களுக்குச் சிந்தனை எழாமல் தடுக்கிறது. தன்னுணர்வைத் தன்முனைப்பு மறைக்கிறது. நிலையற்ற இன்பங்கள், புலனுகர்வுகள் பெருகப் பெருக, துன்பவிதையும் அகல விதைக்கப்படுகிறது. அத்துடன் அகத்தேயுள்ள தெய்விக அன்பொளி வரவர ஆழ்ந்து மறைக்கவும் படுகிறது. உலகியல்பற்று உலகின் காரண காரியத் தொடர்பை - அஃதாவது மாறுபடும் உலகிலுள்ள மாறுபடா இயற்கை யமைதியை - திரையிட்டு இருட்டடிக்கிறது. எல்லாம் தற்செயல் நிகழ்ச்சிகள், குருட்டுயோகங்கள் என்ற நினைப்பால் அறிவற்ற, செயலற்ற வாழ்வில் மனிதன் மிதக்கத் தொடங்குகிறான். செயல் முறைக்கு ஒவ்வா முரண்படும் பல கோட்பாட்டுச் சிக்கல்களையும், அறிவுச் சிக்கல்களையும் அவன் அறிவெனப் பற்றுகிறான். இயற்கையின் மாறா அடிப்படை அமைதித் தத்துவம் ஒன்றே. ஆனால் அதன் மாறுபடு தோற்றங்கள் மிகப்பல. எனினும் இந்தத் தோறறங்கள்தான் அவனுக்கு அம் மாறா அடிப்படையின் தன்மையை அறிவிக்கும் கருவிகள். அவை கண்ணாடிகள் போல அவனுக்கு அக உலகின் - அஃதாவது உள்ளத்தின் - தன்மை களையும் கூறுகளையும் காட்டுகின்றன. ஆனால் புலனடக்காமல், அவாவடக்காமல், அகக்கூறுகளின் தொடர்பையோ, அதன் மூலம் புறமாறுதல்களின் இணைப்பமைதியையோ அவன் காண மாட்டான். தன்னுறையில் தானுறங்கும் பூச்சிக்கூடு அதன் மூலம் தனக்குரிய புதிய மெய்யுருவம் பெறுதல்போல, புலனடக்கம் உடைய மனிதன் தன் மெய்ந்நிலை வடிவம் பெறுகிறான். நீ தன்மறுப்புப் பயில்க. கீழின உயிர்களுக்குரிய அவல அவாக்கள் துறக்க. புல இன்பங்களுக்கு அடிமையாகாமல் அவற்றை அடக்கி இயக்குக. நற்பண்புகள் மேற்கொண்டு ஒழுகுக. நாளடைவில் நற்பண்புகள் தாமே வளரும். அமைதி ஏற்படும். அகநோக்கு உண்டாகும். மெய் இது, பொய் இது என்று திரித்துணரும் பகுத்தறிவு இதனால் உண்டாகும். உலகு, உடல், தன்முனைப்பு ஆகியவற்றின் புறத்தோற்றங்கள் பாலைவனத்தின் கானல் தோற்றம் போல்வன. அக நிலைத் துயிலிடையே தோற்றும் கனாக்கள் அவை. வாய்மை எனும் நனவொளி பட்டதும், நனவுலகத் தென்றல் வீசியதும், அவை தடங்கெட மறையும். அவற்றினிடத்தே ஒரே அன்புப் பேரமைதி தோன்றும். புலனறிவு கடவாத, அறிவு காணாத மெய்ம்மையை அது கண்டு திளைக்க வைக்கும். வரம்பிலா நிலையான மெய்ம்மையை அடைந்தவன் காலத்தின் செயலைக் கடந்துவிடுகிறான். உடலையும் உலக மாறுதலையும் தாண்டி விடுகிறான். இருளுலகின் எல்லை கடந்து ஒளியுலகில் அடியெடுத்து வைக்கிறான். அகநிலை ஒளியின் பேரரசாட்சியில் அவன் அழியா இன்பவாழ்வு எய்துகிறான். வாய்மையைச் சென்றடையும்வரை அதற்குரிய வழி சிக்கல் வாய்ந்ததாய் இருக்கலாம். ஆனால் வாய்மை சிக்கல் வாய்ந்த தன்று; சிக்கலற்றது. இளமையும் முதிர்வும் கடந்தபின் சாரும் முதுமை குழந்தைப் பருவத்தை ஒத்ததாயிருப்பது போல, கடும் பகல் நீங்கிய மாலைச் செவ்வொளி காலைச் செவ்வானுடன் ஒப்புடையதாயிருப்பது போல, நிறை வாய்மையும் கிட்டத் தட்டக் குழந்தைப் பருவத்தின் ஒளிமையின்பம் உடையது. ஆயினும் காலைவானை விட மாலைவானம் கனிவுடையது. அதுபோலவே குழந்தைப் பருவ ஒளிமையைவிட, வாய்மையின் ஒளிமை முதிர்தீங் கனவின் மோனஎழில் நலம் வாய்ந்தது. உலகின் வளைவு நெளிவுச் சிக்கல்களைக் கண்டு வாய்மை நோக்காளன் நகை பூத்து நிற்பான். எளிய வழிகளில் அவன் இழைவான். ஆனால் உலகமோ சிக்கல் உணரமாட்டா எளிய அறிவுநிலையினன் என்று அவனை ஏளனம் செய்து நகும். ஆயினும் சிக்கல் உணர்பவர் கடுமுயற்சியினாலும் அடையா வெற்றிகளை அவன் கிட்டத்தட்ட முயற்சியில்லாமல் எளிதில் அடைவான். விலங்கியல்புடைய அறிவிலார் வழியைவிட மனிதர் அறிவுவழி எவ்வளவு உயர்வுடையதோ, அவ்வளவு உலகின் அறிவுவழியைவிட அவன் வாய்மைவழி உயர்வுடையதாயிருக்கும். அதையடைந்தபின் கழிவிரக்கம் இராது. மனக்கசப்பிராது. ஏமாற்றங்களும், துன்பங்களும் நேரமாட்டா. நிகழ்வது எதுவாயினும் அவன் மனம் காற்றசைவில்லாதபோது அமைந்து நின்று ஒளிரும் விளக்குப்போல நிலவும். உலகின் மாறுதல்களிடையே, அவன் மாறாது உலைவில்லாது உலவுகிறான். உலகின் போக்கில் புறத்தோற்றத்தில் தீமைப்புயல் எவ்வளவு நீடித்ததாகத் தோன்றினும், அது ஆடியமர்ந்து ஓய்வது உறுதி. ஆனால் வாய்மையாளன் தன்னடக்கம் உலகின் அமைதியை விரைவில் கொண்டுவர அவனளவில் ஒருபடி உதவாமலிருக்க முடியாது. அதற்குமேல் அவன் என்ன விரும்பமுடியும்? ஆகவே அவன் அமைதி இருமடங்காகிறது. அவன் தன்னமைதி பெறுகிறான். உலக அமைதியை உறுதியாக நம்புகிறான். அவ்வமைதியை விரைவுபடுத்தத் தான் தன்பங்கு உழைப்பைச் செய்ததாக உணர்ந்து அவன் மனநிறைவு பெறுகிறான். உவகையின் அழுகையின் ஊடாக உயிர்ப்பிடை அயிர்ப்பிடை ஊடாகி, மடிமையிலே நல் உழைப்பினிலே மறிதர மறிதர ஊடாடி, கடமையின் பண்பினில் பழியினிலே கருமுதல் கடைவரை பாவாடி உடையவன் திரிதரு நூலாழி உருள்தர உருள்தரும் ஒளிர்நூலே! கடும்புயல் வீசுவதுகண்டு யாரும் கடுஞ்சினம் கொள்வதில்லை. ஏனெனில் எந்த அளவு அது கடுமையுடையதோ, அந்த அளவு அது கடுகி ஓயும் என்பதை அறிவோம். புயலின் அழிவு பெரிதாயினும், அவ்வழி பொருளே பின் ஆக்க வளத்தின் கருமுதல் ஆகிறது. அதுபோலப் பூசலும் பொறாமையும் வேற்றுமையும் உலகை அலைக்கழித்தாலும், அவை ஓய்வது உறுதி. அத்துடன் அவ்அழிபாடே மறுபடி ஆக்கத்துக்கு மூலதனமாய் உதவும். அழிவில் உறுதியும், துயரில் இரக்கமும், வெறுப்பில் அன்பும் கரந்துநின்று செயல் விளைவான எதிர் விளைவுகளை உண்டு பண்ணுகின்றன. அவற்றின் மீதே மெய்யுணர்வின் கோயில் எழுப்பப்படும். வரம்பிலா வாய்மைஒளி கண்டவன் வீறமைதி யுடையவன். எல்லையிலா அருளன்புடையவன். அரவில்லா ஆழ்ந்த உருப்பளிங்கு போன்ற தெளிந்த உள்ளமுடையவன். அவன் வாயாடா மோனத்தில் பிறக்கும் சிறு சொற்களும் கருத்துச் செறிந்து கருத்துத் தூண்டுவனவாய், உலகில் நல்ல கருத்தலைகளையும், நல்லுணர்வலை களையும் பரப்பும். “இறையருள் ஒளியிலாது இறையருள் காணார், குறையிருள் பார்வை யலால் இருள் இலையே!” என்று திறவா வாய் திறந் துரைத்தது கன்றிய பாலையில் கன்னிமுக அரிமா1 மருள்தரு மாய மருட்கை மொழியினில் வாழ் வூழ் வாய்மை வினாவிய வதற்கே! தடுமா றுளத்துடன் தடம்பிறழ்ந்து அலைந்தேன், படிறுடை விழியொடு படுதுயர் அடைந்தேன்! அன்பொளியாலே அமைதியின் வழிகொள, முன்புள மறைவிழி யோடு மறைப்பும் மறைந்திட இறையருள் மனத்தகத் தொளிர, இறையருள் ஒளிதர இறைஒளி கண்டேன்! 1. கன்னிமுக அரிமா - Sphinx. 6. புத்திநெறி அன்புநெறி ஒன்றே வாழ்வை முழுநிறைவு ஆக்கவல்லது. அறிவாராய்ச்சி சென்றொடுங்கும் முடிந்த இலக்கும், அதன் அணிமணி மகுடமும் அதுவே. ஒருமனிதன் வாய்மையின் அளவுகோல் அன்பே. அன்பின் ஆட்சி இல்லாத இடத்தில் வாழ்வினை வாய்மை மிகுதொலைவிலிருந்து கூட அண்ட முடியாது. பொறுப்பற்றவரும், ஒறுத்து அடக்குமுறை செய்து கண்டிப்பவரும் எத்தனை உயர்பண்புடைய சமயநிலையுடையவராயினும், இறையளவுகூட வாய்மையுடையவரென்று கூறவியலாது. சமரச மனப்பான்மையுடனும், ஒருசார்பற்ற அமைதியுடனும், தாமும் நடுநிலையுடன் சிந்திக்கத் தூண்டுபவரிடம் வாய்மையின் சுவடு பதியாமல் போகாது. ஆனால் அன்புக்கும் வாய்மைக்கும் உரிய தீர்க்கமான அச்சாணி செயல்முறை வாழ்க்கையே. மற்ற மனிதர்களிடம், பிற உயிர்களிடம் ஒருவன் என்ன உணர்ச்சியுடன் நடந்துகொள்கிறான்? கடுந்தேர்வுகளிலும் நெருக்கடிகளிலும் அவன் எவ்வாறு உறுதியுடன் நிற்கிறான்? இவையே வாய்மைக்கும் அன்புநெறிக்கும் உரிய உண்மையான தேர்வு முறைகள். துன்பம், உணர்ச்சி வேகம், ஏமாற்றம் ஆகியவற்றால் முன்னும் பின்னும் உந்தப்படுபவன், முதல் தேர்வில் தளர்பவன் ஆகியவர்கள் வாய்மையுடையவர்கள் ஆக மாட்டார்கள். அவர்கள் அன்பும் உறுதியற்றது. கோட்பாட்டுருவில், தத்துவ உருவில் சிலர் வாய்மையைக் காண நினைக்கிறார்கள். ஆனால் வாய்மை கோட்பாடன்று, கோட்பாடாக அதை உருவாக்கவும் முடியாது. பற்றி உறுதியுடன் நிற்கத் தூண்டும் ஒருபண்பு அது. பற்றிய பின் கழிவிரக்கத்துக்கு இடமில்லாமல், துன்பத்தில் சோராமல், தோல்வியில் நிலைகுலையாமல் இருக்க உதவும் ஆய்ந்தமைந்த முடிவு எதுவானாலும், அது வாய்மையின் திசையின் உள்ளது. அதனூடாக வாய்மை மிளிரும். அதன் முற்றொளி அனுபவ முதிர்ச்சியினாலே, துன்பத்தேர்வின் விளைவினாலே, தோல்விகளின் படிப்பினைகளினாலே, அமைதிவாய்ந்த சிந்தனையினாலேதான் பெறத்தக்கது. கறையற்ற தூய உள்ளத்திலேயே அது எழவல்லது. உலகில் சமயங்கள், உட்சமயங்கள், கருத்துக்கள், கோட்பாடுகள், மாறாட்டங்கள் பல. இவற்றுள் எதில், எதன் சார்பில் வாய்மை காணக் கிடைக்கக்கூடும்? எதன் சார்பிலும் கிடைக்க வேண்டுமென்றில்லை. எதன் சார்பிலும் கிடைக்கலாம். ஆனால் அது கிடைப்பது கோட்பாட்டை வகுப்பதாலல்ல, அறிவதாலல்ல; அறிந்து தெளிவதாலு மல்ல. அதை வாழ்வில் வாழ்ந்து ஒழுகிக் காட்டுவதாலேயே அது கைவரப் பெறும். மதவாதமெனும் சந்தை இரைச்சல் கடந்தாலன்றி வாய்மையின் உருவை மயக்கமறக் காணமுடியாது. தன் மதம் ஒன்றே தெய்விக மதம் என்று கருதும் தன்முனைப்பாளரிடையோ, அல்லது எவ்வனைத் தன் முனைப்பேனும் உடையவரிடையோ அது தோன்றாது. மனித இனத்தின் அல்லது இயற்கையின் எந்த ஒரு கூறினுக்குள்ளாகவோ அதைச் செயற்படுத்தி நிறுத்த எண்ணுபவரும் அதன்வழி ஒழுக முடியாது. ஏனெனில் வாய்மையின் பரப்புக் கடவுள், இயற்கை ஆகிய இரண்டின் பரப்பில் ஒரு சிறிதும் குறைந்ததாக மாட்டாது. கோட்பாடாகவும் அது உருவாக்கத்தக்கதன்று. அது புலன் கடந்த, அறிவுகடந்த ஒன்று. ஆயினும் உணர்வினால் நுகர்ந்து செயலில் ஒழுகிக் காட்டத்தக்கது. தூய நடுநிலையமைதி வாய்ந்த உள்ளத்தில் பண்பாக அது உருவாகி, செயலாக நிழற்படத்தக்கது. அமைதி தனிமையின் பிள்ளை. ஆனால் அது வளர்ந்த பின் புயல்களை அடக்கும் திறம் உடையது. அறிவின் உதவியால் உலகை இயக்கும் தன்மை உடையது. உணர்ச்சி வயப்பட்ட வரும்கூடத் தனிமையில் ஓரளவு அமைதியுடையவராய் இருப்பது எளிது. இத்தற்காலிக அமைதியை அவர் மேன்மேலும் பயின்றால், படிப்படியாகத் தோழரிடையேயும், செயல் நெருக்கடி களிடையேயும் எதிரலைகளை வளர்த்து இந்த அக அமைதி நிலையான உணர்வுப் பண்பாய் வளரும். இதைச் சிந்தனைக்குப் பயன்படுத்தி அறிவமைதியாக்கிய பின் அது நிலையான பண்பாய், செயலுலகை இயக்குகிறது. அமைதியின் வெற்றிக்கு இயற்கையமைதி சார்ந்த அதன் இயற்கை வலுவே காரணமாகும். அமைதியுடையவர் முன்னிலையில் அமைதியற்ற உணர்ச்சிவேகமுடையவர்க்கும் அகமுனைப்புக் குறைகிறது. தன்னலமுடையவரும் அது தளர்ந்து பொதுநலப்போக்குக் கொள்கின்றனர். புறஉலகில் நன்மை வெல்லாது, தீமை அடிக்கடி வெல்கிறது என்ற போலித் தத்துவத்தை இது பொய்யாக்குகிறது. தீமை வெல்லும் இடங் களைத் துருவி ஆராய்ந்தால், அங்கே நன்மை அகவாய்மையின் அமைதியற்ற போலி நன்மையாயிருப்பது நன்கு தெரியவரும். வாய்மையை நிலைநிறுத்த யாரும் போராட வேண்டுவதில்லை. வாதாட வேண்டுவதில்லை. வாய்மையின் இயல்பு அமைதிபேணுதல். அமைதியின் இயல்பு அறிவும் சிந்தனையும், அன்பும் பொதுநலமும் பேணுதல். இப்பண்புகளின் தனியியல்பினால் தீயபண்புகள் கருகித் தேய்ந்தழியும். வெற்றி உண்டாகும். முடிவிலாததாகத் தோற்றும் இருள் வரம்பு பட்டழியும். வரம்புடையதாகத் தோற்றும் ஒளி வரம்பற்றதாகிப் பரந்து நிலவும். அன்பின் அமைதி மனித சமுதாயத்தின் அடிப்படை அமைதி. அதுவே இயற்கையளாவிய அமைதியுமாகும். பலவிடங் களில், காலங்களில், இதனைப் பலர் பலவகைப் பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். ஆனால் அத்தனைக்கும் வடிவும்பண்பும் ஒன்றே. அதன் நடுமையத்தில் அதன் ஒருபெருங்கண்ணாய், உள்ளுயிரொளியாய் ஒளிர்வது வாய்மை. அவ்வொளியின் உயிர்க்கதிர் ஊடுருவப் பெற்று அவ்வமைதியின் சாயலுற்றவர் அழியாப் பொருளின் அழியா அன்புருவமாய் அமைவர். அதன்பின் அவர்கள் பண்பு, அவர்கள் கருத்து, அவர்கள் செயல் ஆகிய யாவும் இயற்கையின் பண்பு, இயற்கையின் கருத்து, இயற்கையின் செயல்கள் ஆகின்றன. அவை அழிக்கப்பெறாதவை, வெல்லப்பெறாதவை, மாற்றியமைக்க பெறாதவை. மாந்தர் பிறப்பதும், வாழ்வதும், வளர்வதும், மாய்வதும்; துன்புறுவதும், இன்புறுவதும் எல்லாம் இந்த ஓர் அமைதியினைப் பெறுவதற்காகவே. அதைக் கடந்தபின் ஒரே நிறையின்பம்தான்; இன்பதுன்ப மாறுபாடு இல்லை. ஒரே வாழ்வுதான்; பிறப்பிறப்பு வேறுபாடு இல்லை. ஒரே பண்புதான்; பண்பு எதிர்பண்பு, நன்மை தீமை இல்லை. அதன் பின்பு உயிர் வேறு, உடல் வேறு அல்ல; உயிரின் செயற்கருவியுருவே உடலாய் அமையும். அறிவும் பண்பும் வாய்ந்த அமைதி, மனிதருக்கு மனிதர், உயிரினத்துக்கு உயிரினம் வேறுபாடறியும் ஆனால் வேறுபாடு காட்டாது. நண்பர் பகைவர், நற்பண்பு, அல்பண்பு திரித்தறியும்; ஆனால் செயல் வேறுபாடு கொள்ளாது. உணர்ச்சி வேறுபாடற்ற இப்பண்பின் செயலுருவே பணி அல்லது தொண்டு. அதுவே உண்மை இறைவழிபாடு. ஏனெனில் அது இறைவன் பண்பின் வழிபட்ட செயல். இறைவன் ஆற்றலும் அதன் வழிபட்டு நின்று செயலாற்றுகிறது. தன்மறுப்பு, துறவு, தியாகம் ஆகியவற்றின் முழுஆற்றலையும், பண்பையும், மதிப்பையும், வாய்மையின் மெய்ப்பணி காட்டுகிறது. தன்மறுப்பு, துறவு, தியாகத்தால் பெறப்படும். வாய்மை ஆகியவற்றையுடையோர், அவ்வாய்மையின் பயனையும் மறுக்கின்றனர்; துறக்கின்றனர் - அகலுலகுக்காக, உயிரினங்களின் அமைதி நோக்கிய வளர்ச்சிக்காக! அகமேபுறம், புறமே அகம் என்பது இங்கேதான் மெய்ப்பிக்கப்படுகிறது. நாம் புறம் என்று கூறுவது புறத்தின் முழுஉருவன்று. புறத்தின் ஒருகூறுமட்டுமே. புறத்தின் முழுக்கூறும் அகத்திலேயே இயல்பாய் அமைந்து கிடக்கிறது. ஆனால் அகத்தில் நாம் எந்தக்கூறுகளைச் செயற்படுத்து கிறோமோ, அந்தக் கூறுமட்டுமே நம்மை உடனடியாகச் சூழ்ந்த புறச்சூழலாய் அமைகிறது. உலகின் மாபெரும் சமயாசாரியர்கள், மக்கள் தலைவர்கள் தியாகத்தின் திருவுருவங்களாகவே காட்சியளிக்கின்றனர். அவர்கள் தம் நலங்களை, தம் புகழைக் கூட மறுத்துத் துறவுவாழ்வே வாழ்ந்தனர். இத்துறவு உலகை வெறுத்த துறவன்று. உலகளாவிய பற்றுக் காரணமாகத் தம் தனிநலங்கள் துறந்த துறவே. அகநிறைவு நாடிப் புறந்துறந்த அகப்பற்றே. இத்துறவு அவர்களுக்குப் பேரின்ப வழிகாட்டிற்று. ஆனால் அவர்கள் பேரின்பவாழ்வைக் கூடத் தமக்கென நாடியவர் களல்லர். உலகமாந்தர் அனைவருக்கும் அதே பேரின்பவாழ்வின் வழிகாட்ட அவர்கள் அந்த வாழ்வையும் தியாகம்செய்ய முனைந்திருந்தனர். அவ்வாழ்வை அவர்கள் அதனால் இழக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் இது பேரின்பத்தின் இயல்பு. அது துறத்தலால் இழக்கப்படுவதன்று, பெறப்படுவது. கொடுத்தலால் குறைபடுவதன்று, நிறைவு பெறுவது. இதே பண்பு பேரின்பப் பண்பு சார்ந்த கல்வி, காதல், அன்பு, தன்மதிப்பு, அறிவுடைய தன்னலம் - அஃதாவது பொதுநலம் ஆகியவற்றிற்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. முனிவர், திருத்தொண்டர், ஆழ்வார்கள் ஆகியவர்கள் எந்தச்சமயம், கிளை, உட்கிளை சார்ந்தவராயினும், பிறநெறிகளை எதிர்க்கும் குறுகிய தன்முனைப்புக்கு ஆளாகாத வரை, ஒரே நிலைப்பட்ட பண்புடையவர்களே. அவர்கள் மக்கட் பணியாளர்கள். ஆழ்ந்த பணிவிணக்கமும், பொது நல வீறமைதியும் ஒருங்கே உடையவர்கள். தன்முனைப்பை அகற்றிய அளவில் அவ்வீறமைதி உலகளாவியதே. அத்துடன் அவர்கள் கொடுப்பவர்கள்; கொள்பவர்கள் அல்லர். கொள்வதுபற்றிய சிந்தனையே அற்றவர்கள். அவர்கள் உழைப்பவர்கள். உழைப்பிடையே கொள்ளும் ஓய்வையும் அவர்கள் உழைப்புக்கான ஊட்டமாகக் கொள்பவர்கள். இறந்தகாலம் பற்றிய கழிவிரக்கம், வருங்காலம் பற்றிய கவலை, ஆத்திரம் எதுவும் அவர்களிடம் கிடையாது. உழைப்பின் பலன், பரிசு, பாராட்டு எதுபற்றியும் அவர்களுக்குக் கவலை இராது. அவர்கள் உழுது விதைக்கும் உழவர்கள், ஆனால் உழுபலனைத் தரும் பொறுப்பை அவர்கள் இயற்கைவானிடமும், வாய்மை நிலத்தினிடமும் விட்டுவிட்டுப் பற்றற்றிருப்பவர்கள் ஆவர். உலகுக்கு உழைக்கவந்த உரவோர்களை உலக மக்கள் உயர்தெய்விகப் பிறப்பாக எண்ணிப் போற்றுகின்றனர். கருத்தளவில் இதில் தவறில்லை. ஏனென்றால் தெய்விக ஆற்றல் எங்கேனும் உண்டென்றால், அவர்களிடம் அது கட்டாயம் உண்டு; முனைப்பாக, பேரளவில் உண்டு. ஆனால் பொதுவாக மக்கள் தெய்வம், கடவுள் என்றவுடனே மனித நிலைக்கு அப்பாற்பட்ட, அதனுடன் தொடர்பற்ற, ஏதோ ஒரு செப்படிவித்தை அல்லது குறளியாற்றலாகக் கருதி, அதன் மதிப்பை, அருமையை, பெருமையை அழித்து விடுகின்றனர். புலியைக் கைகள் கொண்டு எதிர்த்து நின்று கொன்றவனை வீரமனிதன் என்று கொண்டால் பெருமை உண்டு. அவனை ஒரு மின்வலி ஆற்றல் தாங்கிய பொறி என்று கொண்டால், அவனுக்குப் பெருமை ஏது? அது மின்வலி ஆற்றலாகுமேயன்றி, அவன் ஆற்றல் ஆகாதன்றோ? உரவோர்களின் பெருமை அவர்கள் மனிதஎல்லை தாண்டிய மனிதத்தன்மையிலேயே, அவர்கள் மனிதப் பண்பு தோய்ந்த தன்மறுப்பிலேயேதான் உள்ளது. அதன் அளவு அவர்கள் மனித இனத்தில் கொண்ட அன்பின் அளவு. அவ்வன்பை நாம் அவர்கள் தன்மறுப்பின் அளவால், தியாகத்தின் அளவால்தான் அளக்கிறோம். அவர்கள் உலகநலன்நாடி மேற்கொண்ட துன்பத்தை நாம் தவம் என்கிறோம். அதற்காக அவர்கள் செய்த தியாகத்தைத் தெய்விக ஆற்றல் என்கிறோம். பிறப்பால் இயேசுபிரானும், பிற நாயன்மார்கள், ஆழ்வார்கள், முதல்வர், பகவர் ஆகியவர்களும் தெய்வங்களல்லர், மனிதர்களே! ஆனால் அவர்கள் தம் வாழ்வால் தெய்விக ஆற்றல் பெற்றனர். எல்லார் உள்ளங்களிலும் மறைந்துறையும் தெய்விக ஒளியை அவர்கள் வளர்த்துச் செயற்படுத்திக் காட்டினர். அதே ஒளியை நம் உள்ளங்களிலும் அவர்கள் எழுப்பத் தூண்டுதல் தந்தனர். அவர்கள் பெருமை இது - இதனினும் பெருமை தெய்வம் என்ற சொல்லில் வேறு இருக்க முடியாது. பணிவு, வாய்மை, ஊறுசெய் யாமை பொறுமை, தன்மதிப்பு,மேலோர்வழிபட நிற்றல், தூய்மை, நிறைதன் னடக்கம் நீள்புலன் மறுப்பு, தன்மறுப்பு, பொதுநல ஆர்வம், ஆகிய இவற்றுடன் பிறப்பு இறப்பு, மூப்பு, பிணியே, துயர், பழி இயல்படத் தோற்றும் காரண மறியும் அறிவின் துணிவு, நன்மை தீமை நடுநிலை அமைதி...................................... ............................................நடுஉளத் திருந்த செம்பொருள்நாடும் அயராமுயற்சி அதுபெறும் ஆர்வத் துடிப்பாம் இவையே மெய்யுணர்வாகும், வீறுடை அரசே! வேறுள யாவும் வீண் மடமை என் றறிதி! என்ற கண்ணபிரான் அறிவுரை இவ்வுண்மைக்கு விளக்கம் தருகிறது. உரவோர் பிறப்புத் தெய்விகப் பிறப்பல்ல என்பது மட்டுமன்று. மனிதப்பிறப்பிலும் பிறப்பின் தன்மையாலோ, குடியின் தன்மையாலோ அவர்களுக்கு எத்தகைய தனிப்பண்புங் கிடையாது. புத்தர்பெருமான் போல அவர்கள் அரசர்குடியில் பிறக்கலாம். இயேசுபிரான்போல அவர்கள் பொதுமக்களிடையே பிறக்கலாம். அவர்கள் புலமைமிக்க வராயிருக்கலாம். கல்வி நீரோடையின் வாய்ப்பு நலம் அற்றவராகக்கூட இருக்கலாம். தம் குடியின் பெருமை சிறுமைகளால் அவர்கள் பெருமையும் சிறுமையும் பெறுபவர்கள் அல்லர். அவர்கள் பிறப்பால் குடியும் நாடும் பெருமையையடையும். அவர்கள் பிறவாமையால் குடியும் நாடும் உலகமும் சிறுமைதான் அடையமுடியும். சமயங்களின் முடிந்த முடிபு யாது? தூய உள்ளமே. தெய்விகப்பண்பின் அடிச்சுவடும் அதுவே. பிறப்பு இறப்புக்கள் சிறப்புடையச் செம்பொருளின் மறப்பினால் ஏற்படும் ஒறுப்பே. நீடித்த புறநோக்கனுபவத்தாலேயே அகநோக்குப் பெற்று அகத்தே அச்சிறப்புடைச்செம் பொருளின் சீர்சான்ற செல்வம் எய்தப் பெறலாம். அங்ஙனம் பெற்றவர்களே உருவுடைய நாம் வழிபட்டு மேம்படத்தக்க உருவுடைய தெய்வங்கள் அல்லது தெய்விக வடிவங்கள். அவர்கள் செயலலைகளும் சொல்லலைகளும் கருத்தலைகளுமே உலகில் பண்பாக உலவி, தெய்விக அரசு நாட்டத் தூண்டுதல் தந்து வருகிறது. வெங்கடு முயற்சியாலே வியன்புகழ் உச்சி சார்ந்து பங்கமில் பணியால் வந்த வல்லமை ஒளியின் வட்டம் பொங்கும்உன் வதனஞ்சூழப் பொலிந்தனை, பொங்கும்தங்கம் துங்கநல் வாழ்வில் பெற்றாய், தூயநல் இசையும் ஆர்ந்தே! (1) தூயநல் இசைகடந்த தொல்புகழ் இன்னும் உண்டே! மாயுந்தன் முனைப்பின் கூட்டம் மாய்தரக் குருதி சிந்தா நேயப்போ ராட்டமாடி நெருஞ்சிமுள் முடியே சூடி ஆயத்தார்போற்றும் தூய அருந்திருப் பெறுதி நீயே! (2) அருந்திருப் பெற்றுத் துன்பக் கடல்இன்பக் கடலா மாறு, திருந்திடு வாழ்வு வாழ்ந்து கொடுத்தலால் குறையாதோங்கும் பெருந்திரு ஆனஅன்பு பெருக்கிஇவ் வுலகமெல்லாம் புரந்திடும் அழிவி லாத பொன்னுல கமைதி சார்வாய்! (3) 7. நிறை பேரமைதிப் பேறு இயற்கையில் புறத்தே நாம் காண்பது இடைவிடா மாறுபாடு, கூறுபாடு, வேறுபாடு; அதன் அகத்தே நாம் காணத்தக்கது ஒற்றுமை, அமைதி, மோனம். மனிதன் புறத்தே இயற்கையின் மாயும் பகுதியின் ஒரு கூறாகவும், அகத்தே அதன் மாயப்பகுதியின் ஒருகூறாகவும் அமைந்து, இயற்கையின் ஒரு சிறிய முழுநிறை பதிப்பாகக் காட்சியளிக்கிறான். இவ்விருமை நிலை அவனை இயற்கையின் இருபெரும் பகுதிகளுக்கிடையேயுள்ள ஒரு சின்னஞ்சிறு பாலமாக்கியுள்ளது. இருபகுதிகளிலும் செல்ல முடிகின்றன. எனவேதான் இயற்கையின் எல்லையற்ற இடப் பரப்பையும் காலப் பரப்பையும் நோக்க அவன் எல்லை குறுகியதாயினும், இயற்கையின் முழு ஆற்றலும் அவன் மூலம் இயங்கவல்லதாகின்றது. இருதிசைகளில் செல்லும் இயற்கையின் ஆற்றல்களில் எத்திசைச் செலவை மனிதன் ஊக்குகிறான் என்பதைப் பொறுத்தது - அவன் வாழ்வின் தன்மையும், அதன் வளர்ச்சி தளர்ச்சிக் கூறுகளும்! இயற்கையின் புறவடிவம், அஃதாவது மாறுபடும் பகுதியிலிருந்து அகவடிவம், அஃதாவது மாறுபடாப்பகுதிக்கு மனிதனாகிய பால மூலமாக ஆற்றல்கள் செல்லுமானால், அவன் உயிர்ப் பண்பு - அஃதாவது இயக்கும் பண்பு - அல்லது புறத்தை அகவயப்படுத்தும் பண்பு - நலிவுறுகிறது. இதனால் அவன் தளர்ச்சியடைகிறான். இப்போக்கிலும் இன்பதுன்பங்கள் இரண்டும் இருக்கலாம். ஆனால் இயற்கையின் புறச்சூழலுக்கு அகம் அடிமைப்பட்டு அதன் வயப்படுவதால் இங்கே இன்பம் ஏற்படுகிறது. துன்பமோ புறத்துக்கு அகம் முரண்படுவதால் ஏற்படுகிறது. இரண்டும் துன்பமாகவே முடியும் என்பது வெளிப்படை. ஆனால் மனிதன்மூலம் செல்லும் இயற்கையாற்றலின் திசை அகத்திலிருந்து புறமானால் மனிதன் உயிர்ப்பண்பு ஊக்கம் பெறுகிறது. புற அமைதியுடன் அக அமைதி இசைவதால் இன்பங்கள் ஏற்படுகின்றன. இது நிலையான பேரின்பக் கூறு. அதே சமயம் துன்பங்கள் அக அமைதியுடன் புறத்தேயுள்ள மாறுபடும் பகுதியின் முரண்பாட்டால் தான் ஏற்படுகிறது. அக அமைதியுடன் இயற்கையின் மாறாப்பகுதி ஒத்துழைத்து மாறுபடும் புறப்பகுதியை வெல்வதால், இங்கே துன்பமும் காரணகாரியத்தொடர்பில் கருத்தைத் திருப்பிப் புறத்தேயுள்ள மாறுபடும் இயல்புடையசூழலை எளிதாக மாற்றியமைக்கிறது. இம்முறையில் அகத்திருந்து புறஞ்செல்லும் போக்கு அறிவுப் போக்காக வளர்கிறது. உயிரினங்களின் வளர்ச்சிப் படியும் மனித இனத்தின் நாகரிக வளர்ச்சிப் படிகளும் இத் திசையிலேயே இயங்குகின்றன. கடலின் மேற்பரப்பில் புயல்கள் வீசும்போதும், அதன் ஆழ்பகுதியின் பெருங்கூறு ஒருசிறிதும் அசையாமல் நின்று நிலவுகிறது. மேற்பரப்பில்கூட ஆழங்குறைந்த கரையோரப் பகுதிகள் நீங்கலாக, அகல்பெரும் பரப்பில் புயல்கள் செயலாற்றுவது குறைவே. அலைகடல் என்று கவிஞர்கூறும் கடலில் இங்ஙனம் கரையில் வாழும் மனிதன் காணும் ஒருசிறு பகுதி மட்டுமே அலைகின்றது. அதன் மிகப் பெரும்பாலான பகுதி அமைதியின் அகல் பரப்பாகவே இயங்குகின்றது. கடலின் இத்தன்மை இயற்கையின் தன்மைகளுடன் பேரளவு பொருத்தமுடையது. மாறுபடும் பகுதி அதன் மேற்பரப்பின் ஒருகூறே. மேற்பரப்பின் பெரும்பகுதியும் அதனினும் பாரிய ஆழப்பகுதி முழுவதும் அமைதிப் பிழம்பேயாகும். இயற்கையின் சின்னஞ்சிறு பதிப்பாகிய உயிரினிடமும் மனிதனிடமும் அமைதிப் பகுதி, மாறுபடுபகுதி ஆகியவற்றின் தொடர்பு இதுவே. உயிரின வளர்ச்சியில் மற்ற உயிரினங்களை விட மனிதன் இயற்கையின் அமைதிநிலை நோக்கி முன்னேறி, இன்னும் நாகரிக முதிர்வடையுந்தோறும் முனைந்து செல்பவனேயாவான். ஆகவேதான் பார்வைக்கு மனிதனின் மாறுபடும் புறப்பகுதி வலுவுடையதாகத் தோற்றினாலும், அது போலித் தோற்றமேயாகின்றது. நீரின் இயல்பைப் புறந்தோன்றாமல் மறைக்கும் பனித்திரைபோல, அப்புறப்பகுதி அகப்பகுதியின் ஆற்றல் புறஞ்சென்று இயங்காமல் தடுக்கமட்டுமே செய்கிறது. புறத்தை அடக்குவதன் மூலம் மனிதன் பெறும் எல்லையற்ற ஆற்றலின் மறைதிறவு இதுவே. அறியும் அறிவின் செயல்முழுதும் அமைதியைச் செயலாற்றிவிடும் ஒரு பண்பறி வேறன்று. அடிக்கடி அறியும் அறிவு நிலையைவிட1 அறிவுகடந்த அமைதிநிலைகள், அஃதாவது கனாநிலைகள்2 அரும்பெருஞ்செயல் ஆற்றலுடையனவாய் இருப்பது காணலாம். எடுத்துக்காட்டாக, கைப்பொறியச்சு அடிப்பவன் கண்கண்டு அடிக்கும் முறையைவிடக் காணாக்கை யுணர்ச்சி முறை மிக எளிதாக விரைந்த வளர்ச்சி தருகிறது என்பதைப் பலரும் அறிவர். இசைக்கருவிகளின் பயிற்சியிலும் இந்த மெய்ம்மையைக் காணலாம். கணக்கியலின் உயர்படி ஆராய்ச்சிமுறைகளெல்லாம் எண்கடந்த குறியீடுகள், ஐம்புலக் கற்பனைகளாகிய அறிவு கடந்த உணர்வுக் கற்பனைகள்3 ஆகியவற்றாலேயே இயங்குகின்றன. உயிர்களின் உடலிலும், புறப்பொருளியக்க நிலையினைப் புறவுறுப்புக்களின் அமைதியிலும், அகப் பொருளியக்க அமைதியினை நாடி நரம்பு, இதயம், மூளை, தன்னியக்க உறுப்புக்கள் ஆகிய அக உறுப்புக்களிலும் காணலாம். “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார்” “ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி.” என்று தமிழ்த் திருவள்ளுவரும், “ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தால் அன்பதில் ஒன்றாம் அரன்.” என அறிவுத்துறை ஒளவைப்பிராட்டியாரின் ஒளவையாருங்குறளும் அகத்தின் பேராற்றலுக்குச் சான்று பகர்கின்றன. அகத்தின் ஆற்றல் வெறும் புனைந்துரையோ, மிகை யுரையோ அன்று, அவ்வுருவில் கரந்து பெரும்பொருள் நுனிப்பாகக் குறித்த குறிப்புரையேயாகும் என்றும் காணலாம். அகத்தின் பண்பும் ஆற்றலும் கண்டவர் கடவுளைப் பற்றிச் சமயவாதிகள் கழறும் கூற்றுக்கள் மிகையுரைகள் அல்ல, குறையுரைகள் என்பதையும் எளிதில் காண்பர். கடவுளைக் காண ஒருவன் இயற்கையை - அஃதாவது அண்டத்தைத் துருவி ஆராயும் புற நோக்கில் செல்லுதல் தவறன்று. ஆனால் அதன் பயனாக அவன் கடவுளின் செயலமைதியையே உணர முடியும். கடவுளின் தன்மைகளை அகத்தன்றிப் புறத்தே உள்ளவாறு காண்டல் இயலாது. கடவுளாற்றல் பெற்றுக் கடவுட் கூறாவதும் புற நோக்குடையார்க்கு என்றும் கைகூடாத செயலாகும். அகநோக்கு ஒன்றே அந்நிலை பெறத்தக்கது. புற நோக்குடையவன் உலகத்தைப் பலவாகக் காண்கிறான். மாறுபாடும் வேறுபாடுமே அவன் காட்சிக்குப் புலனாகின்றன. இவற்றின் அடிப்படையாக அவன் தன்னலமும் தற்பற்றும், ஒருபுறமும், வெறுப்பும் பகைமையும் மற்றொரு புறமும் பெறுகிறான். இது முரண்பாடுகளை வளர்த்து, இன்பத்தையும் துன்பமாக்கித் துன்பம் பெருக்குகிறது. அகநோக்குடையவர் வேறுபாட்டிடையே காணும் அடிப்படை ஒற்றுமையாகிய பொதுநல, அன்புத் தத்துவத்தை அவன் அறிவதில்லை. அவ்வன்புத் தத்துவத்தை அவன் அறிந்தால், புறத்தே முரண்பாடு தளரும். ஒற்றுமை அமைதி வளரும். இவ்வமைதியே பேரின்பவீட்டுக்கு இட்டுச்செல்லும் ஒடுங்கிய அகஅமைதிப் பாதை ஆகும். இடுங்கிய அவ்வழியில் குழந்தைகள் போன்ற எளிய உள்ளம் உடையார் நுழைவர். பற்றவாக்களின் பளுச் சுமந்த பாரிய உள்ளமுடையவர் அணுகவும் மாட்டார். நுழைந்து செல்லவும் முடியாது. நுண்புழை போன்றது நுவல் இன்பவாயில், பண்பிலார் காணார்; பழிசேர் உலகின் மாயப் பகட்டுஅதை மறைத்தே நிற்கும். தூய உளமுடையார்க் கது தோற்றினும், செருக்கும் உணர்ச்சியும் சிற்றின்ப நாட்டமும் பெருக்கும் பேரவா முனைப்புச் சீற்றமும் தாழொடு பூட்டாய் வாயில் தடுக்கும்! வந்தனை வழிபாடுகள் எத்தனை செய்து நீ நொந்தனையானாலும்; சமயச்சார்பான புறவினைகளை நீ எவ்வளவு நுணுக்கமாகவும், கண்டிப்பாகவும், விரிவாகவும் நிறைவேற்றி னாலும்; தன்னடக்கமும் அவாவடக்கமும் இல்லாத இடத்தில் அமைதியோ, அமைதியில்லாத விடத்தில் நிலையான இன்பமோ ஏற்படமுடியாது. புதுப்பிறப்பு அல்லது மறு பிறப்பருளும் சிந்தாமணி தன்னடக்கத் துறையில் வெற்றியடைந் தவருக்கே உரியதாகும். புறஉலகிலிருந்து, புற உலகப்பொருளிலிருந்து, புலன் சார்ந்த இன்பங்களிலிருந்து, அன்புசாரா அறிவுத்துறை வாதத்திலிருந்து, உலக ஆரவாரங்களிலிருந்து எவ்வளவுக் கெவ்வளவு நீ பின்வாங்கி உன் உள்ளத்தின் உள் அவாக்களுக்குள் சென்று ஒதுங்கு கிறாயோ; எவ்வளவுக்கு எவ்வளவு நீ தன்னல, வேற்றுநல முரண்பாடுகளுக்கு அப்பால் செல்கிறாயோ; எவ்வளவுக் கெவ்வளவு தன்னல அவாக்கள் வந்தெட்டாத் தொலைக்குச் செல்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு ஆழ்ந்த தூய அமைதிவெளியில் நீ ஓய்வமைதியுற்று, சிந்தனை என்னும் அகக்காட்சியின் உதவியால் வாய்மையொளி காண்பாய்! புறத்தே நீ முன்பு கண்ட நிழற் பொருள்களின் மெய்வடிவம், நீ பலவாகக் கண்ட வடிவங்களின் ஒருநிலைப்படிவம் உனக்குத் தெரியும். அது மட்டுமன்று. நீ அப்போது உன் உண்மையான தனிவடிவத்தையும், உனக்கும் உலகுக்கும் உள்ள போலி மாயத்தொடர்பையும், உனக்கும் முழுநிறை வாய்மைக்கும் உள்ள மெய்த்தொடர்பையும் உணர்வாய்; உன் மெய்யான உள்ளம் அப்போதுதான் உனக்குக் கைவரும். ஏனெனில் அது உன் விருப்பப்படி அமையும். அகக்காட்சி தரும் இந்நிலையை அறிவின் காட்சிக் குன்றம் என்னலாம். குன்றேறி நின்றவன் உலகின் பரந்த முழுக்காட்சியை அப்போது காண்பதுபோல, நீ அப்போது உலக முழுவதையும் ஒருங்கே, ஒருநிலைபெறக் காண்பாய். உன் பழிகள் உனதே. நீ அவாவைப்பற்றி நிற்கும் வரை அவற்றைப் பற்றிக்கொண்டுதான் இருப்பாய். அவற்றைவிட்டு நீங்குவது உன் கைக்குள்தான் இருக்கிறது. நீ அவாவை விட்டால், பழிகள் உடனே உன்னை விடும். ஏனெனில் பழிகளின் பழித்தன்மை உன்னைத் தாக்க மாட்டாது. நீ அவற்றைப் பிறருக்கு நிகழும் அல்லது புறத்தே நிகழும் நிகழ்ச்சிபோலக் கருதி அவற்றில் படிப்பினைகள் கோருவாய். அதேசமயம், புதிதாக மேலும் அவாக்கள் உண்டாகாதிருப்பதால், புதுப்பழிகள் வாரா. அவா அற்ற இடத்தில், வீடு உற்றதாகிவிடும். கனி அருகிருப்பக் காய் அருந்த எண்ணுவதேன்? அமைதி எளியார்க்கு எளிதாயிருக்க, புயலை விரும்பி அணைப்பது ஏன்? உன் அகத்தேயிருக்கும் விலங்கியல்பைக் கீழ்ப்படுத்தி அடக்கு. உன் தன்னலக் கூறுகளாகிய கீழ்த்தர உலோகக் கலவைகளை அன்புப் புடத்திலிட்டுப் பொன்மயமாக்கு. அமைதியின் நாயகனான இறைவனை நீ அணைவாய். இவ்வெற்றியின் மூலம் நீ தசையுடம்பிலிருந்து கொண்டே, அதன் அழிவுத் தன்மையிலிருந்து விடுபடுவாய். வெப்ப அலைகள் வீசியெறியாத இன்பக்கரை சென்று சேர்வாய். அவ்விடத்தில் பெறும் உளநிறை அமைதியும் இன்பமும் பெரிது. உனதுள மருவும் உயிர்நிலை ஆன்மா, அது ஒருபோதும் மாள் கிலதே! முனம் பிறந்ததுவும் பினர் இறந்ததுவும் கனவு; அது பிறப்பிறப் பில்லா நனவு; உருமாற்றம் இலாதது; நலிவும், தொடக்கமும், இறுதியும், உலைவும் தினையதும் அற்ற தெளிவருள் அமைதி தேர்அதன் மெய்நிலைவடிவே! மாசற்ற மெய்ம்மையுணர்வு, மடமையின் சாயலற்ற அறிவு, மாறாத மாள்வற்ற எல்லையிலா அன்பு ஆகிய இவையே ஆன்மாவின் தூய தனிவடிவக் கூறுகள். அத்தூய வடிவடைந்த பின் அதன் அமைதி நிலைபேறுடையது. மக்களுக்கு மெய்யுரைத்திடும் மாண்புடையீரே! தொக்கஐயவெம் பாலையினூடு சென்றீரோ? பொக்க வெந்தழல் துயரினில் புடமிடப்பெற்று மிக்க வேணவா விரிகருத்தாம் இருட்பேய்கள் சிக்க கன்றனவோ? மனம் பொய்ம்மைகள் தேய்ந்து செவ்வியுற்றதுவோ, தெளிதூய்மையில் ஆர்ந்தே? (1) உலகினுக்கொரு பேரளி உதவிடுவீரே! பொலிவிலாத பொச்சாப்பினைக் கடந்து சென்றீரோ? கலித்தவெந்துயர் இரவிடை அழுங்கினரோ? செம் புலத்து நீரெனப் பிறர்துயர்கண்டு நீர்புன்கண் அலக்கணுற்று நொந்த லைந்திரோ? அவர் துயர் பகிர்ந்தே ஆரழற்படு மெழுகென அகங்குழைந் துளைந்தே? (2) மாந்தருக் கெலாம் அமைதியை வழங்கிடுவீரே! போந்த பூசலாம் புயற்கடல் அலைதணந் தீரோ? காந்துபொம்மலும் பொருமலும் புகைச்சலும் கடந்து சாந்த மார்தரு மோனமாம் கரைபுரந்தீரோ? எந்துவெம்பகை துடைத்திரோ? இழையற இதயத்து இணையிலா நிறை அன்பெனும் அமுதத்தில்குளித்தே! (3) அடிக்குறிப்புகள் 1. Conscious State 2. Sub-Conscious or Un-Conscious State 3. Higher Abstract Conceptions. உதிர்மணிகள்1 உயிருக்கு உருவம் கிடையாது. ஆனால், உருவுடைய உடல் மூலம் அதன் பண்பைக் காணலாம். உயிர் என்று ஒன்று உண்டா, இல்லையா? இந்தக் கேள்வியை நாம் எழுப்பலாம். அறிஞர் எழுப்பியுள்ளனர் அன்றும்; எழுப்புகின்றனர், இன்றும்! ஆனால் இக்கேள்வி எழுவதே உயிரின் செயலால் தான்! கடவுள் உண்டா, இல்லையா? - அறிஞர் கடவுள் உண்டு என்று காட்டியபின்னர் எழுந்துள்ள கேள்வியே இதுவும்! அறிஞர் வழிநின்று அதை உணர்ந்தவர், உண்டு என்றும் வாதாட முற்பட்டதில்லை, இல்லை என்றும் வாதாட முற்பட்டதில்லை. அவ்வழி நின்று, அதன் வழிபட்டனர். ‘வழிபாடு’ என்ற தமிழ்ச்சொல் உணர்த்தும் பண்பு, இதுவே. அறியாதவரே உண்டென்றும் இல்லையென்றும் வாதிட்டுழன்றனர். இருசாராரும் வழிபடாதவரேயார். கடவுள் உண்டு என்று நிலைநாட்ட வேண்டிய ஆர்வம் காந்தியடிகளுக்கு அவர் அரசியல் வாழ்வின் ஒரு நெருக்கடிக் கட்டத்திலேகூட ஏற்பட்டது. ஆயினும் அவர் ‘வழி நோக்கியவர், வழிபட்டவர்; ‘வள்ளுவர் ஒளியின் ஒரு நிழல் அவர் பக்கம் சாய்ந்திருந்தது. எனவே அவர் வாதம் ஆத்திகர்களுக்குப் புதிது. ஆத்திக உலகம் காணாதது. அத்துடன் நாத்திக உலகத்திற்கும் அது எதிர்பாராதது. அது அவர்கள் நாவுக்குத் தடையாயிருந்தது. மரத்தை நட்டவன், பானையைப் புனைந்தவன் ஆகிய பழைய வாதங்களை அவர் நாடவில்லை. கல்லினுள் தேரையையும் கருப்பைக்குள் முட்டையையுங் கூட அவர் சுட்டிக்காட்டவில்லை. இவற்றை விஞ்சிய தெய்வப் பண்பை அவர் பொதுநிலை உயிர் வாழ்விலேயே கண்டார். வரலாற்றிலும் கண்டார். ‘தாய் பிள்ளையை நேசிக்கிறாள். தன் உயிரைவிட நேசிக்கிறாள். எதனால்? இயேசுபிரான் சொன்னார் இதழ் தாங்கி உயிர் நீங்கி இடரிடையே உலகுக்கு உழைத்தனர், எதை நாடி? புத்தர்பிரான் ஏழை மாந்தருக்கும் எளிய உயிர்களுக்கும் ஒருங்கே இரங்கினார்; ஏன்? தம் உயிர்தாண்டி, தம் பலம் தாண்டி, தம் இனம் தாண்டி, தம் நலம் துறந்து, தம் புகழ் துறந்து, தம் உயிரே துறந்து அவர்கள் பாடுபடத் தூண்டியது எது? அதுவே கடவுள்!” என்றார். ‘மகனைக் கண்டவன் தந்தையைக் காண்பான்’ என்றார் இயேசு. மன்னுயிரிடம் பாசம் கண்டவன், முன்னுயிரான இறைவனை உணர்ந்தவன். அவன் கடவுளை வெறுத்தால் கூட, கடவுள் அவனை விரும்பாதிரார் என்றே அருளாளர் அனைவரும் அறைகின்றனர். அன்பகத்தில்லார் அவன் இல்லையோ என்று உலகம் ஐயுறுதற்குக் காரணர் ஆவார். உயிரைப்போலவே உருவற்றவர் கடவுள் என்பர். ஆனால் மெய்மையின் உருவின் ஊடாக, அறிஞர் அவரைக் காணலாம். அன்புருவினூடாக, அறவோர் அவரேயாகலாம். இம்மூவுரு விலும் கடவுளைக் கண்டவர், அணைந்தவர், கடவுளானவர் திருவள்ளுவர். கடவுளைக்காண வளைந்து - வாழ்வுலகுக்கு வெளியே கடவுளை கடவுளுலகைத் தேடும் கருத்துணரா மாக்கள் கொண்டாடும் அத்தனையும் வளைந்து செல்லும் வழிகள் அத்தனையும் கடவுளைக் காணாதவர், அவர் பண்புணராதவர் வகுத்த வழிகளே! கடவுளைக்காண நேர்வழி திருவள்ளுவர் சமயங்களுக்கெல்லாம் மூல முதல்வராய் நின்று காட்டிய வாழ்க்கை வழியே. ஏனெனில் அவர் கடவுளை ‘இங்கு’ கண்டவர், ‘அங்’கல்ல. மகனிடம் தந்தை கண்டவர் அவர். மகனைக் காணத் தந்தையைத் தேடியவர் அல்லர். உயிரின் பண்பை உள்ளவாறு உணர்பவருக்குக் கடவுள் பண்பைக் கற்பிக்க வேண்டா. உயிர், உலகு, உயிர் முதல் என்ற முப்பொருளில் உணர்வுக்கெட்டாதது உயிர் முதல்; உணர்வுக்குப் புறம்பானது உலகு. இரண்டின் இயல்பையும் காண உதவுவது உயிரே. ஆனால் தமிழ் ஒளிபெறாது வள்ளுவர் வழிகாணா துழன்ற இடையிருட்காலச் சமயவாதிகள் உயிர்முதலைக் கற்பனை உலகில் தேடினர். இயல் நூலாரே புலனறிவின் குறைபாடறிந்தும் புலன் வழி நின்று உயிரற்ற உலகை அலசுகின்றனர். வள்ளுவர் ஒருவரே உயிர், வாழ்வு, இன்பம் என்ற முப்பாலாக உயிர், உலகு, உயிர்முதல் ஆகிய மூன்றையும் கண்டார். உலக முதல்வராகிய அவர் வழியேதான் எல்லாச் சமயங்களும் தோன்றின என்பர் அறிஞர் ஷ்வைட்சர். ஆனால் உலகின் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு வழியில் அவர் ‘தடம்’ காணாமல், அதேசமயம் அவர் சென்ற திசையை ஒவ்வொரு வரியில் நுனித்துணர்ந்து, ஒவ்வோர் அருட்படியில் நின்று ஒளி நிழலாடுகின்றன. அடிக்குறிப்பு 1. தமிழாக்க ஆசிரியர் எழுதிய பிற்சேர்க்கை