மேனாட்டு இலக்கியக் கதைகள் முதற் பதிப்பு - 1960 இந்நூல் 2002 இல் ஏழுமலை பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. மேனாட்டு இலக்கியக் கதைகள் 1. ஆர்தர் வருகை ஆயிரத்தைந்நூறு ஆண்டுகட்குமுன் பிரிட்டனில்1 அதர்2 என்றோர் அரசன் இருந்தான். உண்மையில் அவன் பிரிட்டனை அக்காலத்தில் வென்று ஆண்ட ரோமர்களுக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாகவே யிருந்தான். அவனிடம் அமைச்சனாயிருந்த மெர்லின் என்பவன் ஒரு மாயக்காரன்; அவன் ஒரு சிறந்த அறிஞனும் கூட. அதர் நாள்களில் நாகரிகமிக்க வல்லரசாயிருந்த ரோம்3 நாட்டை நாகரிகமற்ற காந்தியர்4 என்ற முரட்டு மக்கள் படையெடுத்துச் சூறையாடினர். தம் தாய்நாட்டைக் காக்கும்வண்ணம் தாம் ஆண்ட பிரிட்டன் முதலிய மற்ற நாடுகளையெல்லாம் ரோமர்கள் கைவிட்டுச் சென்றனர். வல்லமையும் நாகரிகப் பண்பும் மிக்கரோமர் பிடி அகன்றதே, பிரிட்டானியர்5 தம் பழைய போர்க்குணமேலிட்டு ஒருவரை யொருவர் எதிர்த்தழித்தும், பூசலிட்டும் வந்தனர். செழித்த வயல்கள் நிறைந்த நாடுகளெல்லாம் முட்புதரும் தீய விலங்குகளும் நிறைந்த காடுகளாயின. அதோடு கடற்கரை யெங்கும் ஸாக்ஸனியர்6 என்ற கடற் கொள்ளைக்காரர் தொல்லை மிகுந்தது. வட எல்லையில் விலங்குகள் ஒருபுறமும் விலங்கையே ஒத்த ஸ்காட்டியர்7 பிக்டுகள்8 ஆகிய காட்டு மக்கள் ஒருபுறமாகச் செய்த அழிவுகளால் நாடு முற்றும் அல்லோல கல்லோலப்பட்டது. இங்ஙனம் பிரிட்டனின் வாழ்வில் சீர் குலைவும் குழப்பமும் ஏற்பட்டன. அதரும் பிரிட்டானியரும் தமக்கு உதவி செய்யும்படி ரோமருக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், அவர்கள் தம் நாட்டினுக்காகப் போரிட்டுக் கொண்டிருந்தனராதலால் பிரிட்டானியர் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை. நாட்டின் இக்குழப்பநிலையில் அதருக்கு இன்னொரு கவலையும் மேற்பட்டது. தனக்குப்பின் நாட்டையாளப் புதல்வனில்லையேயென்று அவன் மனமுடைந்தான். அதர் கொடுங்கோலனாயிருந்தமையால் அவன் ஆட்சியை யாரும் விரும்பவில்லை. அவன் வாள் வலிமைக்கு அஞ்சியே பெருமக்கள் அவனுக்கடங்கியிருந்தனர். அவன் ஆட்சியிறுதியில் அவன் செய்த கொடுஞ்செயல் ஒன்று இவ்வெறுப்பை மிகுதிப்படுத்திற்று. அவன் கீழ்ச்சிற்றரசர்களாயிருந்தவர்களுள் கார்லாய்ஸ்9 என்பவன் ஒருவன். அவன் மனைவி இகெர்னே10 அழகு மிக்கவள். அதர் அவளை விரும்பி அவள் கணவனைக் கொன்று அவளை வலுவில் மணந்து கொண்டான். இகெர்னேயை மணந்து அவன் நெடுநாள் வாழவில்லை. பின்னர் இகெர்னே ஆர்தர்11 என்றொரு பிள்ளையைப் பெற்றாள். இவனே பிற்காலத்தில் ஆர்தர். இகெர்னேக்கு கார்லாய்ஸ் மூலம் பெல்லிஸெண்ட்12 என்ற புதல்வி இருந்தாள். அவள் சிறுபிள்ளையாயிருக்கையில் ஆர்தரின் விளையாட்டுத் தோழியாயிருந்தாள். வயது வந்ததும் அவன் ஆர்க்கினி13த் தீவுகளிள் இறைவனாகிய லாட்டை14 மணந்தாள். ஆர்தர் இகெர்னேக்கும் அதருக்கும் பிறந்தவனாகக் கொள்ளப் பட்டாலும், உருவிலோ குணத்திலோ மற்றெதிலோ அவன் தாய் தந்தையர்களைச் சற்றும் ஒத்திருக்கவில்லை. உண்மையில் அவன் பிரிட்டன் மக்களைப் போலவேயில்லை. பிரிட்டன் மக்கள் இருண்ட மாநிறமுடையவர் ஆர்தர் தூய வெண்பொன்மேனியுடையவர். பிரிட்டானியர் சற்று மட்டமான உயரமுடையவர்; ஆர்தர் உயர்ந்து நெடிய கை கால் உறுப்புகள் உடையவர். குணத்தில், ஆர்தரின் தந்தை அதர், கொடுமையும் மனம்போன போக்கும் உடையவர். இகெர்னே குடியினர்கூட ஒருவரை ஒருவர் வஞ்சித் தொழுகியவர்களே. ஆனால், ஆர்தர் தூய வீரமும் பேரருளும் பெருந் தன்மையும் மிக்கவர். ஆர்தரின் இச் சிறப்புக்கேற்ப அவர் பிறப்பையும் இறப்பையும் பற்றிப் பல அரிய கதைகள் கூறப்பட்டன. அவர் வாழ்க்கை தெய்வீகத் தன்மை வாய்ந்ததென்று மக்கள் நம்பியதற்கேற்ப, அதனை முற்றிலும் அறிந்தவனான மெர்லின்15 அவரைப்பற்றிக் கூறுகையில், “அவர் பேராழி யினின்றெழுந்தவர்; பேராழியிற் சென்றொடுங்குபவர். அவர் பிறப்பு இறப்பற்றவர்” என்று மிகவும் மறைபொருளாகக் கூறி வந்தார். ஆர்தர் பிறப்புப் பற்றி மெர்லின் மூலமாக வந்த வரலாறு இது: “ஒருநாள் அதர் மெர்லினுடன் கடற்கரையடுத்திருந்த ஒரு குன்றின் அடிவாரத்தில் போய்க்கொண்டிருந்தார். அதர் மனத்தில் அப்போது பிரிட்டன் நாட்டின் குழப்பம் தீரும்படி தமக்கு ஒரு நற்புதல்வனில்லையே என்ற கவலை நிறைந்திருந்தது. அச்சமயம் வானளாவ எழுந்த ஓர் அலைமீது ஒரு கப்பல் தெரிந்தது. அதில் உள்ள மனிதர் அனைவரும் (பிற்காலத்திய ஆர்தருருவைப் போலவே) நெடிய வெண்பொன் உருவ முடையவராகவும், வெள்ளிய ஆடை உடுத்தியவராகவும் இருந்தனர். அதர் கண்களுக்கு அவர்கள் மனிதராகவே தோற்றவில்லை. தேவர்களாகத்தான் காணப்பட்டனர். அவர்களைக் கண்டு அரசன் மிகவும் வியப்படைந்தான். ஆனால், மெர்லின் அவர்களை எதிர்பார்த்தே அரசனுடன் அங்கே வந்ததாகத் தெரிந்தது. கப்பல் சற்று நேரத்தில் கண்ணுக்கு மறைந்துவிட்டது. மெர்லின் அதரைக் கூட்டிக்கொண்டு குன்றிலிருந்து கடற் கரையில் இறங்கியவர்கள் தான். அப்போது அவர்களை நோக்கித் தெளிவாக ஒன்பது அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து வீசின. அவற்றுள் கடைசி அலை ஓரழகிய ஆண் குழந்தையைக் கரைமீது கொண்டுவந்து ஒதுக்கிற்று. மெர்லின் அக்குழந்தையை எடுத்து அதர் கையில் தந்து, இதோ! உமது கால்வழியில் பிரிட்டனை ஆளப்போகும் உரிமை பெற்றவன் என்று கொடுத்தான். அதர்மீதுள்ள வெறுப்பைப் பெருமக்கள் இச்சிறு பிள்ளைமீதும் காட்டிவிடப்படாதென அஞ்சிய மெர்லின், அதனை ஆண்டன் பெருந்தகை16 என்ற ஒரு வீரனிடம் விட்டு வளர்க்கச் செய்தான். ஆர்தர் வளர்ச்சியடைந்து வருகையில் மெர்லினே அடிக்கடி வந்து அவருக்குக் கல்வியறிவும் படைக்கலப் பயிற்சியும் தந்தான். அந்நாளைய எல்லாவகை அறிவிலும் மேம்பட்டிருந்த மெர்லின் தன் மாயமும் மந்திரமும் நீங்கலாக எல்லாக் கலைகளிலும் ஆர்தரை ஒப்புயர்வற்றவராக்கினான். ஆர்தர் வீரத்திலும் அறிவிலும் சிறப்புமிக்க சிறுவராயி ருந்ததுடன் அன்பும், கனிவும் மிக்கவராகவுமிருந்தார். தாய் தந்தையர் அவர் தமக்கை பெல்லிஸெண்டைக் கொடுமைப் படுத்துவதுண்டு. ஆர்தர் அவளைப் பார்க்கப் போகும்தெல்லாம், அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவார். அவள் மணமான பின்பும் ஆர்தரிடம், உடன் பிறப்பாளரிட மும்கூடப் பிறர் காட்டாத அளவு அன்பு உடையவளானாள். மெர்லின் ஆர்தருக்குக் கல்வி புகட்டியதேயன்றி அவர் வாழ்க்கையில் அவருக்கு வெற்றிதரப் பேருதவியாயிருந்த எக்ஸ்காலிபர்17 என்ற வாளைப் பெறவும் உதவியாயிருந்தான். ஒரு நாள் ஆர்தர், மெர்லினுடன் ஓர் ஏரிக்கரையோரமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது முன் ஆர்தர் பிறப்பின் போது ஏற்பட்டதே போன்ற அரிய காட்சி ஒன்று தோற்றியது. நீர் நடுவில் வெண்பட்டாடையுடுத்திய ஒரு வெண்மையான கை பேரொளி வீசும் வாள் ஒன்றை ஏந்தி, மேலெழுந்து, அவ் வாளை மூன்றுமுறை சுழற்றியது, மெர்லினின் தூண்டுதலின்பேரில் ஆர்தர் ஒரு படகில் சென்று அதைக் கைக்கொண்டார். உடனே அக் கை வியக்கத் தக்க முறையில் நீருக்குள்ளேயே போயிற்று. ஆர்தர் எடுத்த வாளின் பிடி பலவகை மணிக்கற்கள் பதித்த தாயிருந்தது. வாளின் ஒரு புறத்தில் ‘என்னைக் கைக்கொள்’ என்றும், இன்னொருபுறம் ‘என்னை எறிந்து விடு’ என்றும் எழுதியிருந்தது. பிந்திய தொடர் கண்டு ஆர்தர் முகம் சுண்டிற்று. மெர்லின் அதுகண்டு, வீசியெறியும் நாள் இன்றில்லை; அண்மையிலுமில்லை. அதற்கிடையில் அதனை வைத்துக் கொண்டு நீ எத்தனையோ வெற்றிகளை அடையப் போகிறாய்” என்றாள். அதருக்குப்பின் அவர் ஆண்ட காமிலட்18 (அஃதாவது லண்டன்) நகரில் நெடுநாள் அரசரில்லை. பெருமக்கள் சச்சரவினால் பெருங்குழப்ப மேற்பட்டிருந்தது. ஆர்தர் இப் போது இளைஞராய்விட்டபடியால் அவரை அரசராக்கிவிட வேண்டுமென்று மெர்லின் முடிவு கொண்டாள். ஆனால், ஆர்தர் அதரின் பிள்ளை என்று ஒருவருக்கும் தெரியாது. அதனை அவர்கள் எளிதில் ஏற்கும்படி அவன் ஓர் ஏற்பாடு bய்தான். காமிலட் அரண்மனையின் ஒரு மூலையில் சலவைக்கல் ஒன்றில் ஒரு வாள் பதித்துவைக்கப்பட்டிருந்தது. வாளின் பிடி மட்டும் வெளியிலும் மற்றப் பகுதி முழுவதும் கல்லினுள்ளாகவும் இருந்தது. அவ் வாள் பதித்திருந்த கல்மேல் “என்னை வெளியே இழுப்பவன் இந் நகருக்கு மட்டுமன்றிப் பிரிட்டன் முழுமைக்குமே அரசனாவான்” என்றெழுதியிருந்தது. மெர்லின், பெருமக்களை அதன் முன் அழைத்து வந்து “நாடு நெடுநாள் அரசனில்லாமல் சீரழிகின்றது. விரைவில் ஓர் அரசன் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். உண்மையான அரசன் யார் என்பது இப்போது தெரியாமலிருக்கிறபடியால் இவ்வாள் மூலம் அதனை ஆராய்ந்து முடிவுசெய்வோம் என்றான். விருந்துக்கு வந்த பெருமக்கள் ஒரு போட்டிப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தனர். அதைவிட்டு ஒவ்வொருவராக வந்து வாளையெடுக்க முயன்று ஏமாந்து போயினர். இதற்கிடையே இதே போட்டிப் பந்தயத்தில் ஈடுபட ஆர்தருடன் வந்து கொண்டிருந்த ஆன்டன் பெருந்தகையின் மகனான கேப் பெருந்தகை19 தன் வாளைக் கொண்டுவர மறந்துவிட்டான். அவன் ஆர்தரை அனுப்பி அதை எடுத்துவரச்சொன்னான். ஆர்தர் செல்லும் வழியில் அரண்மனை மூலையில் பதிந்த கிடந்த வாளைக் கண்டு இதே போதுமே என்றெடுத்தான் அதுவும் எளிதில் வந்துவிட்டது. அதன் அருமை தெரியாத ஆர்தர் அதைக் கேயிடம் தரக் கே தந்தையிடம் சென்று ‘தான் அதை எடுத்துவிட்டதால், தானே அரசனாகவேண்டும் என்று கூறினான். பெருந்தன்மைமிக்க ஆன்டன் அவனை நம்பாமல் உறுக்கிக் கேட்க உண்மை வெளிப்பட்டது. அதன்பின் ஆன்டன் தன் மகனைக் கடிந்துகொண்டு வாளை மீட்டும் கல்லில் பதித்து அனைவரும் காண அதனை ஆர்தர் எடுக்கச் செய்தான். அதன்பின் மெர்லின் பெருமக்களையும் பொது மக்களையும் அழைத்து ஆர்தரை அரசராக முடிசூட்டினான். ஆர்தர் அரசனானவுடன் பொதுமக்களிடையேயும் பெருமக்களிடையேயும் உள்ள தம் நண்பர்களை அழைத்து குழப்பமடைந்த இந்த நாட்டில் நீங்கள் ஒழுங்கையும் தெய்வீக ஆட்சியையும் நிலைநாட்ட உழைப்பதாக ஆணையிட முன்வரவேண்டும். உண்மைக்குக் கடமைப்பட்டு நன்மையின் பக்கம் நின்று, ஏழை எளியோர் ஆதரவற்றோர் பெண்டிர் ஆகியவர்கட்கு இன்னல் வராமல் காக்கவே நான் கொடுக்கும் வாளைப் பயன்படுத்திப் புகழ்பெறுவதாக உறுதி கூற வேண்டும். ஒரு தலைவியே விரும்பி அவள் அன்பே புணையாகக்கொண்டு அருஞ்செயலாற்றவேண்டும். இத்தகைய புகழ்வீரருக்கு நான் ‘தூயவீரர் பெருந்தகை’20 என்ற பட்டம் தந்து என் வட்ட மேடையில் இடந்தருவேன்” என்றார். அவர்களும் ஒத்து அவர் வட்ட மேடையைச் சுற்றியிருந்த நூறு இருக்கைகளை நிறைக்கலாயினர். அவர்கள் வீரத்தைச் செயலிற்காட்ட விரைவிலேயே ஒரு தறுவாய் ஏற்பட்டது. காமிலியார்டு21 நகரிலுள்ள லியொடக்ரான்22 என்ற அரசர் நாட்டில் ஸாக்ஸானியரும் தீய விலங்குகளும் வந்து பேரழிவு செய்தன. ஆர்தரையும் அவர் வீரரையும், அவர்கள் சூளுரைகளையும் பற்றிக் கேள்விப்பட்ட அவர், தம் நாட்டிற்கு வந்து தமக்கு உதவுமாறு ஆர்தருக்கு அழைப்பனுப்பினர். ஆர்தரும் அவர் வீரர்களும் சென்று பல நாள் காட்டு விலங்குகளை வேட்டையாடி அழித்தும், ஸாக்ஸானியரை நாட்டுக்கு அப்பால் துரத்தியும் நாட்டில் அமைதியை ஏற்படுத்தினார்கள். அதோடு அவர்கள் வேரோடு படும்படி காடுகளும் அழிக்கப்பட்டு நாடாக்கப்பட்டன. காமலியர்டில் அரசன் அரண்மனைக்குள் செல்லும் போதே ஆர்தர், மாடத்தில் நின்றிருந்த லியோடகிரான் புதல்வி கினிவீயரைக்23 கண்டு, அவள் அழகில் ஈடுபட்டு அவளையே மணப்பதாக உறுதி செய்துகொண்டார். இது கினிவீயருக்குத் தெரியாது. விலங்குகளை யழித்துக் காடு திருத்தியபின் அவளைக் கண்டு, அவள் காதலைப் பெற அவர் எண்ணியிருந்தார். ஆனால், காமிலட்டில் பெருமக்கள் வெளியிலுள்ள பகைவர்களை எல்லாம் திரட்டிப் படையெடுக்கச் செய்து தாமும் கிளர்ச்சி செய்ததாகச் செய்தி வந்தது. எனவே, வேண்டா வெறுப்பாக அவர் காமிலட்டுக்குச் சென்றார். தம் நலனைக் கருதாது நாட்டு நலனையே எண்ணி அவர் போருக்கு முனைந்தார். ஆர்தரை எதிர்த்தவர்களுள், பெரும்பான்மையோர் பிரிட்டனின் அரசர்களும், சிற்றரசர்களும் ஆக இருந்தனர். பெருமக்களிலும் கிட்டத்தட்ட அனைவரும் எதிரிகளுடன் சேர்ந்து போரிட்டனர். ஆர்தர் வீரர்கள் தொகையில் குறைவு. அவர்கள் தம் புதிய வீரப்பட்டத்திற்குப் புகழ்தேட அரும்பாடுபட்டுப் போர் செய்தும் அடிக்கடி பின்வாங்க நேர்ந்தது. ஆனால், ஆர்தர் சென்றவிடமெல்லாம் அவரின் வாள் எக்ஸ்காலிபர் எதிரிகளின் குருதி குடித்துக் கொம்மாளமடித்துக் கொக்கரித்தது. மாலையில் ஆர்தரும் வீரரும் தம் கடைசித் தாக்குதலை நடத்தி எதிரிகள் அனைவரையும் வெருண்டோடச் செய்தார்கள். பெருமக்கள் அன்றடைந்த திகில், ஆர்தர் ஆட்சி முடியும்வரை அவர்களை விட்டு நீங்கவில்லை. போர் முடிந்த பின்னும் அமைதியை ஏற்படுத்தும் பொறுப்பும் மீந்திருந்த புறப்பகைவரை ஒடுக்கும் பொறுப்பும் ஆர்தரையும் அவர் வீரரையும் சார்ந்தன. ஆகவே, கினிவீயரைச் சென்று காண அவருக்கு நேரமில்லை. ஆயினும், கினிவீயர் இல்லாமலும் அவர்தம் வாழ்க்கை நிறைவடையாதென் றெண்ணினார். ஆகவே, தம் வீரருள் தலைசிறந்தவரான லான்ஸிலட்டை லியோடகிராமிடம் அனுப்பிப் பெண் பேசச் செய்தார். லியோடகிராம் முதலில் பெரிதும் தயங்கினார். ஆர்தர் ஆட்சியோ புதிய ஆட்சி. மேலும் பலர் அவர் அதர் பிள்ளையல்லர்; கார்லாய்ஸின் பிள்ளையோ அல்லது வேறு துணையற்ற எடுப்புப் பிள்ளைதானோ என்று பேசிக் கொள்வதையும் பெருமக்கள் வெறுப்பதையும் கேட்டு அவர் பின்னும் கலக்கமடைந்தார். ஆனால், லான்ஸிலட்டுடன் சென்ற பெடிவியர்ப் பெருந்தகை24 அவர் பிறப்பைப்பற்றி மெர்லின் கூறியதையும் அவர் கையிலிருக்கும் என்ஸ்காலிபரின் சிறப்பையும் அவர் வெற்றிகளையும் எடுத்துச் சொன்னபின் ஆர்தர் சார்பாக லான்ஸிலட்25 கினிவீயர் இளவரசியைக் காண அவர் இணங்கினார். வாழ்க்கையின் போக்கில் காற்றில் பறக்கத்தகும் சிறிய துரும்புகள் ஊழ்வலியின் ஆற்றலிற்பட்டு மலைகளையும் வீசியெறியும் பெருஞ் சுரங்க வெடிகளாக மாறிவிடுகின்றன. ஆர்தர், நேரில் வந்து கினிவீயரை மணக்க நேராமல் லான்ஸிலட்டை அனுப்பியது அவர் வாழ்வின் போக்கையும் லான்ஸிலட், கினிவீயர் ஆகியவர்களையும் பிரிட்டனின் எதிர் காலத்தையும் கூட மிகுதியும் மாற்றும் தீவினையாக மாறிற்று. கினிவீயரின் பார்வையில் ஆர்தர் வீரமும் பெருந்தன்மையும் ஒன்றும் பெரிதாகத் தோற்றவில்லை. லான்ஸிலட்டே அவள் உள்ளங் குடிகொண்ட உரவோன் ஆயினான். அவர்களிருவரும் யார் சார்பின் கூடினோம் என்பதை மறந்து ஒருவருடன் ஒருவர் நட்புப் பூண்டுவிட்டனர். ஆனால், அவர்கள் நட்பு மணவினையாக மாறமுடியாதென்பதை இருவரும் உணர்ந்தனர். லான்ஸிலட் தன் தலைவனுக்கு மாறாக நடக்கத் துணியவில்லை. கினிவீயரும், ஆர்தருக்குத் தன்னை மணஞ்செய்து கொடுக்கத் தயங்கிய தன் தந்தை, லான்ஸிலட்டுக்குத் தன்னை மணஞ் செய்விக்க ஒருப்படான் என்பதை அறிந்தாள். ஆகவே, லான்ஸிலட்டின் கடமையுணர்ச்சி ஒருபுறம்; ஆர்தரை மணந்தால் லான்ஸிலட் இருக்குமிடத்தில் அவன்மீதே உரிமை பெற்ற அரசியாக ஆட்சிபுரியலாம் என்ற கினிவீயரின் எண்ணம் ஒருபுறமாக, ஆர்தர் மணவினைக்கே உறுதி தந்தன. அத்துடன் லான்ஸிலட் கினிவீயரையன்றி வேறு எப்பெண்ணையும் விரும்புவதில்லை என்றும், கினிவீயரின் எண்ணம் ஒருபுறமாக ஆர்தர் மணவினைக்கே உறுதி தந்தன. கினிவீயர் ஆர்தரை மணந்து கொள்வதனால் தான் மணமேயில்லாதிருந்து விடுவதாகவும் கூறவே, கினிவீயரின் தன்னலவேட்கை நிறைவு பெற்றது. தான் ஈடுபட்ட இத் தன்னல வாழ்க்கை ஆர்தரை வஞ்சித்ததாகுமே என்பதை இரண்டகமும் சூழ்ச்சியும் படைத்த அவளுள்ளம் உணரவில்லை. ஆர்தர், கினிவீயரை வரவேற்றுக் காமிலட் நகரமெங்கும் ஊர்வலமாக அழைத்துச் சென்று அரண்மனை புகுந்தார். அவ் இளவேனில் பருவத்தில் நறுமலர்களிடையேயும் இனிய பறவைகளின் இசையிடையேயும் ஆர்தர், கினிவீயரின் அழகையும் அவள் இனிய குரலையுமே உணர்ந்தார். ஆனால் அதேசமயம் கினிவீயர் அவற்றிடையே லான்ஸிலட் வீர உருவையும், லான்ஸிலட் வீரக்கழலோசையையுமே உணர்ந்தான். காமிலட் மக்கள் ஆரவாரத்திடையேயும் வட்டமேடை வீரர் கேளிக்கைப் போட்டிகளிடையேயும் ஆர்தர் கினிவீயரை மணந்து அவளை அரசியாகத் தம் அரசிருக்கையில் கொண்டார். இச் சமயம், ரோமிலிருந்து வழக்கமான திறையை புதிய அரசனான ஆர்தரிடமிருந்தும் பெறுவதற்காகத் தூதன் வந்தான். “நாட்டைப் பாதுகாக்க முன் வராத பேரரசருக்குத் திறை ஏன்?” என்று ஆர்தர் கேட்டு விடையனுப்பினார். அதன்பின் ரோமர் படை ஒன்று வந்திறங்கிற்று; ஆர்தர் வீரர்கள் அவர்களை முறியடித்து ஓட்டினர். பிரிட்டானியரிடையே தனித்தனி நின்று ஒற்றுமையைக் கெடுத்த உள்நாட்டுப் போர்களும் சச்சரவுகளும் விளைவித்து வந்த சிற்றரசர்களையும் குறுநில மன்னர்களையும் ஆர்தரின் வீரர் சென்றடக்கினர். ஆர்தர், பிரிட்டன் முழுமைக்கும் பேரரசரானார். பிரிவுப்பட்டிருந்த பிரிட்டானியரைத் தனித்தனியாக ஆடுகள் போல் ஸாக்ஸன். கடற்கொள்ளைக்காரர்கள் கொத்தி வந்தனர். ஆர்தர், பிரிட்டன் படைகளனைத்தையும் திரட்டித் தம் வீரருதவி யுடன் அவர்களைக் கண்டவிடமெல்லாம் முறியடித்தார். மொத்தம் பன்னிரண்டு போர்கள் நிகழ்ந்தன. பன்னிரண்டிலும் பிரிட்டானியருக்கே வெற்றி கிடைத்தது. கடைசிப் போர் பேடன் குன்றி26ல் நிகழ்ந்தது. அத்துடன் ஸாக்ஸானியர், பிரிட்டன் இனி, நமக்குற்ற இரையல்ல என்றெண்ணி வேறு நாடுகளில் தம் கவனத்தைச் செலுத்தினர்.27 ஆர்தரின் வீரர்கள் செய்த அருஞ்செயல்கள் பல. அவற்றால் ஆர்தர் ஆட்சி புகழடைந்தது. அவற்றுட் சிலவற்றை அடுத்து வரும் பக்கங்களில் காணலாம். 2. லான்ஸிலட் பெருந்தகையின் வீரம் ஆர்தர் அரசருக்கு வலக்கையாய் இருந்து அவர் போர்களில் எதிரிகளைத் துரத்தியடித்து அவர் பேரரசை நிலைநிறுத்த உதவிய பெருவீரர் லான்ஸ்லட்டே. அவர் ஆர்தர் வட்டமேடை வீரருள் தலைசிறந்தவராயிருந்தததுடன் அவருக்கு ஒப்பற்ற தோழராகவும் இருந்தார். ஆயினும் அவருக்கு ஆர்தர் அரண்மனையிலிருந்து விருந்து வாழ்வு வாழப் பிடிக்கவில்லை. நாடெங்கும் சென்று காடுகளிலும் ஒதுக்கிடங்களிலும் மறைந்து மக்களைத் துன்புறுத்திவரும் ஆர்தரின் பகைவரைப் போரிட்டு வென்றழித்துத் தம் புகழைப் புதுப்பிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். சிறப்பாக ஆற்றுக்கடவருகிலுள்ள மாளிகைத் தலைவனாகிய துர்க்கைன்28 என்ற கொடிய வீரனை அழிப்பதிலேயே அவர் மிகவும் கருத்துக் கொண்டார். இந்நோக்கத்துடன் அவர் தம் மருமகனாகிய லயோனெல் பெருந்தகை29 யுடன் புறப்பட்டுச் சென்றார். அந்நாளில் பிரிட்டனெங்கும் நிறைந்திருந்த காட்டு வழிகளில் சுற்றியலைந்து மிகவும் களைப்படைந்து லான்ஸிலட் ஒரு மரத்தடியில் சோர்ந்து கண்ணயர்ந்து உறங்கினார். லயோனெல் பெருந்தகை அவரைக் காத்து அருகில் நின்றிருந்தான். அச் சமயம் காற்றினும் கடுக மூன்று வீரர் குதிரை மீதேறியோடினர். நெடிய பாரிய உடலுடைய ஒரு முரட்டு வீரன் அவர்களைப் பின்பற்றித் துரத்திவந்தான். அவர் கொடிய ஈட்டியால் அவர்களைக் காயப்படுத்தி அதன்பின் அவரவர் குதிரைகளின் கடிவாளங்களால் பிணித்துக் கல்லிலும் முள்ளிலும் கட்டியிழுந்தான். இக்கொடுமையைப் பார்க்கப் பொறுக்காமல் லாயேனெல், லான்ஸிலட்டை எழுப்பக்கூடத் தாமதிக்காது முரட்டுவீரன் பாய்ந்தான். ஆயினும், முரட்டுவீரன் லயோனெலைவிடப் பன்மடங்கு வலிமையுடையவானயிருந்தபடியால் லயோனெலையும் மற்ற வீரர்களைப் போலவே கட்டியுருட்டி இழுத்துக்கொண்டு சென்று தன் மாளிகையில் சிறையிட்டான். அங்கு முன்பே பல வீரர்கள் ஆர்தர் வட்டமேடை வீரர் பலர் உட்பட சிறைப்பட்டிருந்தனர். அவர்களனைவரையும் காலை மாலை குதிரைச் சவுக்கால் குருதி கொப்பளிக்குமட்டும் அடிப்பதே அவனுடைய நாள்முறை விளையாட்டாயிருந்தது. இவ்வீரன் வேறு யாருமல்லன் : லான்ஸிலட் பெருந்தகை தேடிக்கொண்டிருந்த கொடியவீரன் துர்கையனே, அவன் லயோனெலையும் பிறரையும் அடைத்த மாளிகையே ஆற்றுக்கடவை அடுத்த அவன் மாளிகை. துர்க்கைனின் கொடுமைகளைக் கேட்டு அவனை எதிர்க்கும் எண்ணத்துடன் எக்டார் பெருந்தகை30 என்ற ஆர்தரின் இன்னொரு வீரனும் அப்பக்கம் வந்தான். துர்க்கைன் மாளிகையருகே ஒரு மரத்தில் ஆர்தர் வீரர் பலரின் கேடயங்களைக் கண்டு அவன் சீற்றமும் மன வருத்தமும் கொண்டு மாளிகையை நோக்கிப் புறப்பட்டான். அப்போது வேட்டையாடி மீண்டு வந்து கொண்டிருந்த துர்க்கைன் அவனைப் பின்புறமிருந்து தாக்கினான். எக்டர் தன் திறமெல்லாங் கொண்டு அவனைத் தாக்கியும் பயனில்லாமல் போயிற்று. அவனைத் துர்க்கைன் கீழ்ப்படியும்படி கோரியும் தூய வீரனாகிய எக்டார் அதற்கு இணங்கவில்லை. ஆகவே துர்க்கைன் அவனையும் மற்றவர்களைப்போல் முள்ளிலும் கல்லிலும் கட்டி இழுத்துச் சிறையிலிட்டுத் துன்புறுத்தினான். சிறையில் எக்டார் லாயோனெலைக் கண்டு வியப்படைந்து லான்ஸ்லட் எங்கே? என்று கேட்டான். லயோனெல் கடந்த செய்திகளை விரித்துக்கூறி லான்ஸிலட்டைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை, என்று சொன்னான். இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கிடையிலும் லான்ஸிலட் உறங்கிக் கொண்டு தானிருந்தார். நெடுநேரம் சென்று எழுந்தபோது லயோலெனலைக் காணாமல் அவர் அவனைத் தேடலானார். அப்போது எதிரில் வந்த கந்தை ஆடை உடுத்த ஒரு மாது தன்னைத் துன்புறுத்தும் ஒரு போலி வீரனிடமிருந்து தன்னை விடுவிக்கும்படி கோரினாள். அங்ஙனமே செய்தபின் அம் மாது துர்க்கைனைப் பற்றியும், அவனால் கொடுமைக் குட்படுத்தப்படும் வீரரைப்பற்றியும் கூறினாள். லான்ஸிலட் அவள் காட்டியவழியே துர்க்கைனின் மாளிகை நோக்கிச் சென்றார். வழியிலேயே துர்க்கைன் காயம்பட்ட வீரன் ஒருவனை இழுத்துக் கொண்டு வந்தான். லான்ஸிலட் அவ்வீரனை விடுவிக்கும்படி துர்க்கைனுக்கு ஆணையிட்டார். துர்க்கைன் மறுக்கவே, லான்ஸிலட் அவன்மீது போர் தொடங்கினார். லான்ஸிலட்டின் வாள்வீச்சுகள் தான் எதிர்பார்த்ததை விடக் கடுமையாயிருக்கவே, துர்க்கைன் அவரை நோக்கி உன் வலிமையைப் பார்க்க, நீ என் மாபெரும் பகைவன் ஸான் ஸிலிட்டிடம் பழகியவன் போலிருக்கிறதே!” என்றான். லான்ஸிலெட்டிடம் நான் ஸான்ஸிலட்டுடன் பழகியவனல்லன். லான்ஸிலட்டே தான்! உன் முடிவு நெருங்கிவிட்ட தாகையால் உன் முழுத் திறமையையும் காட்டிப் போர் செய்க” என்றான். சிறிது நேரத்தில் துர்க்கைன் பிணமாய் நிலத்தில் வீழ்ந்தான். காயம்பட்டுத் தூக்கிக்கொண்டு வரப்பட்ட வீரனாகிய கஹேரிஸ் பெருந்தகை31 விடுவிக்கப்படவே அவன் துர்க்கைன் வேலையாளிடமிருந்த திறவுக் கொத்தை வாங்கிக் கொண்டு சிறைப்பட்ட வீரரை விடுவிக்கச் சென்றான். லான்ஸிலட் தம் வீரர்களைக் கூடப் பார்க்கத் தங்கவில்லை அவர்களைக் கூட்டிக்கொண்டு காமிலட்டுக்கு வரும் வேலையைக் கஹேரிஸினிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் மேலும் சென்று, இன்னும் பல தீய வீரரையும் மாயாவி வஞ்சகர்களையும் அழித்துப் பிரிட்டன் முற்றிலும் அமைதியைப் பரப்பினார். இறுதியில் ஆர்தர் நடத்திய ஒரு விருந்தினிடையே அவர் வந்து அரசனையும் தாம் விடுவித்த வீரரையும் கண்டு இன்புற்று வாழ்ந்தார். 3. காரத் பெருந்தகையின் அருஞ் செயல்கள் வீட்ஸன்32 என்ற விழாக்காலத்தில் ஆர்தர் யாருக்காவது ஓருதவி செய்தல்லாமல் உணவு கொள்வதில்லை. ஓராண்டு அவ்விழாவின்போது அவர் அரண்மனை அலுவலாளாகிய கவெயின் பெருந்தகை ஆர்தரிடம் வந்து, மூன்று குதிரை வீரர் வெளியே காத்திருப்பதாகக் கூறினார். அவர்கள் உள்ளே வந்தவுடன் முதல்வீரன் ஆர்தர்முன் மண்டியிட்டு நின்று “அரசே! எனக்கு மூன்று வரங்கள் வேண்டும். ஒன்றை இப்போதே பெற்றுக் கொள்கிறேன். மற்ற இரண்டையும் அடுத்த ஆண்டில் கோருவேன்” என்றான் ஆர்தர், “அப்படியே ஆகட்டும்; உனக்கு வேண்டுவதைக் கேள்” என்றார். வீரன், “ஓராண்டுக் காலம் எனக்கு அரண்மனையில் அடிசில் வேலையைத் தந்து உண்டியும் உடையும் தருக” என்றான். அரசர் அப்படியே உத்தரவிட்டார். பின், அரசர் வீரனிடம், “உன் பெயர் என்ன? நீ யார்? எவ்விடத்திலிருந்து வந்தாய்?” என்று கேட்டார். வீரன், “சிலகாலம்” இவற்றை மறைவாக வைத்திருக்க விரும்புகிறேன்” என்றான். அரசர் அதற்கும் இணங்கினார். வீரன் ஓர் ஆண்டுக்காலம் வேலைக்காரருடன் வேலைக்காரனாய் வாழ்ந்து வந்தான். ஆனால் என்ன தொழில் செய்தாலும் அவன் தன் கைகளை அழுக்கடையாமல் தூய்மையாக வைத்துக்கொண்டான். அது கண்ட வேலைக்காரர் அவனை ‘அழகிய கையன்’ என்று பொருள்படும்படி போமென்ஸ்33 என்று அழைத்தனர். அடுத்த ஆண்டு விட்ஸன் விழாவின்போது தூய வெள்ளிய ஆடை உடுத்த லினெட்34 என்ற ஒரு மங்கை அரசனிடம் வந்து “அரசே! என் தலைவி லியோனிஸ்35 பெருமாட்டின் மாளிகைகளைச் செவ்வெளி நாட்டுச் சிவப்பு வீரன்36 முற்றுகையிட்டுத் தொல்லை தருகிறான். உங்கள் வீரருள் ஒருவனை அனுப்பி அவளை மீட்டுத் தருமாறு வேண்டுகிறேன்” என்றாள். அரசர் அவளுக்கு விடை தருவதற்கு முன்னால் போமென்ஸ் முன் வந்து, “அரசே! ஓர் ஆண்டுக்கு முன் நான் கோரிய இரண்டு வரங்களும் நிறைவேறவேண்டும் நாள் இது. என்னை இம்மாதுடன் லியோனிஸ் பெருமாட்டியை மீட்கும்படி அனுப்புவது ஒரு வரம். வட்ட மேடை வீரருள் தலைமைகொண்ட லான்ஸிலட் பெருந்தகையை என்னுடன் அனுப்பி நான் வேண்டும்போது என்னை வீரனாக்குவிப்பது மற்றொரு வரம்,” என்றான். ஒ மன்னர் மகிழ்ச்சியுடன் இணங்கினர். ஆனால் லினெட் என்ற பெயருடைய அம்மங்கை முகம் கோணிற்று, “பெரும் புகழ்பெற்ற அரசரென்று இவரிடம் வந்தால், என்பின் மாண்புமிக்க தலைவியை மீட்க ஒரு தூய வீரனை அனுப்பாமல், அதற்கு மாறாக முகத்திலடித்ததுபோல ஒரு பணிப்பையனையா அனுப்புவது?” என்று அவள் முனகிக் கொண்டாள். போமென்ஸ் அவள் முகச் சுளிப்பைக் கவனியாமல், அவள் பின் சென்றான். மன்னனிடம் அவன் கேட்டுக் கொண்டபடியே லான்ஸிலட் பெருந்தகையும் அவனுடன் சென்றார். அரண்மனையை விட்டு வெளியே வரும்போது போமென்ஸ் முன் ஒரு சிறுவன் நல்ல கவசத்துடன் ஓரழகிய குதிரையுடனும் காத்து நின்றான். போமென்ஸ் கவசத்தை அணிந்து குதிரையை நடத்திக்கொண்டு சென்றான். போமென்ஸ் அடிசிற்கூடத்தில் வேலையாளாயிருக்கையில் அவனையும் பிறவேலையாட்களையும் அப்பகுதியின் தலைவரான கேப் பெருந்தகை கொடுமையாக நடத்திவந்தார். தம் கீழ் வேலையாளாய் இருந்தவன் பெரிய வீரனாக முயற்சி செய்வது அவருக்குப் பொறுக்க வில்லை. “ஆர்தராகட்டும்; வேறு யாராகட்டும்; என்கீழ் வேலை செய்யும் வேலையாளை என் இணக்கமின்றி வெளியே போகக் சொல்லயாருக்கும் உரிமை கிடையாது,” என்று கூறிக்கொண்டு அவர் போமென்ஸைத் தடை செய்ய வந்தார். போமென்ஸ் அவரிடம், “உம்வேலையின் மதிப்புப் பெரிதுதான். ஆனால், உமது உள்ளம் சிறுமைப்பட்டது. ஒருவர் தமக்கு மேலுள்ளவரிடம் கெஞ்சுவதில் பெருந்தன்மை யில்லை. கீழ் உள்ளவரிடம் பரிவு காட்டுவதுதான் பெருந்தன்மை என்பதை அறியாத நீர் ஒரு வீரரா? கேப் பெருந்தகைக்குச் சினம் மூக்கையடைத்தது. அவர் தம் வாளின் பின்புறத்தில் அவனைத் தட்ட எண்ணினார். போமென்ஸ் தன் வாளுடையால் அதனைத் தடுத்து வீசி எறிந்தான். பின்னும் அவர் எதிர்க்க போமென்ஸ் அவரை எளிதில் வீழ்த்தி, “ஆர்தரிடமே சென்று மன்னிப்புப் பெறுவீராக,” என்று கூறி அனுப்பினான். அதன்பின் போமென்ஸ், லான்ஸிலட்டிடம் மண்டியிட்டு நின்று, “என் வீரத்தை ஓரளவு உமக்குக் காட்டினேன். என்னை வீரனாக்குக” என்றான். லான்ஸிலட் அகமகிழ்வுடன் தம் வாளால் அவன் தலையைத் தொட்டு “நீ ஆர்தர் வீரருள் ஒருவனானாய், எழுந்து பணியாற்றுக,” என்றார். அவர் விடைகொள்ளுமுன் போமென்ஸ் அவரிடம் நம்பகமாகத் தான் இன்னான் என்பதைத் தெரிவித்தான். அவன் வேறு யாருமல்லன், கவேயின் பெருந்தகையின் தம்பியும், ஆர்தரின் மருமகனுமாகிய காரத்37 தே என்று கேட்டு லான்ஸிலட் பெருமகிழ்ச்சி கொண்டார். போமென்ஸ் என்று இதுகாறும் அழைக்கப்பட்ட காரெத் பெருந்தகை தன் குதிரையை விரைவாகச் செலுத்தி லினெட்டைப் பின்பற்றினான். தற்பெருமையும் வீம்பும் மிக்க லினெட், காரெத்தை அருகில் கூட வரவொட்டாமல் அவமதிப்புடன் நடத்திக் கடுமொழிகள் பேசினாள். “சீ! என் அருகில் வராதே என்னதான் உடைமாற்றி னாலும் நீ அண்டிவரும்போது கறிச்சட்டி நாற்றம் வீசுகிறது. அகப்பைகளைக் கழுவும் இக்கையா சூரர்களையும் கலங்க வைத்த செவ்வீரனை எதிர்க்கப் போகிறது? வேண்டாம்! என் தலைவியை மீட்க நான் வேறு யாரையாவது பார்த்துக் கொள்கிறேன். நீ சட்டி துடைக்கத்தானே போ”, என்றாள். காரெத் சற்றும் அவள் அவமதிப்பைப் பொருட்படுத்தாமல் பணிவுடன், “அம்மணி! செவ்வீரனை எதிர்க்க முடியாவிட்டால் இறப்பது நான்தானே? நான் இறந்தால் கேடொன்றும் இல்லை. என் பணியை முற்றுவிக்க ஆர்தரிடம் வேறு வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் வெற்றி பெற்றால் உங்கள் அவமதிப்பெல்லாம் எனக்கும் என் தலைவர் ஆர்தருக்கும் பெரும் புகழாக மாறுமன்றோ?” என்றான். லினெட் அப்போதும் சீறிக்கொண்டு, “வெற்றி பெற்றால்!...... அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா தான்,” என்று குத்தலாகப் பேசிவிட்டுக் குதிரையை அதட்டி முன் செலுத்தினாள். வழியில் ஒரு மனிதன் காரெத் பெருந்தகையிடம் ஓடி வந்து ‘ஐயையோ என் தலைவரைப் பாதுகாப்பாரில்லையா? ஆறு திருடர்கள் சேர்ந்து அவரைக் கட்டி வைத்து உதைத்கிறார்களே” என்று கதறினான். காரெத் பெருந்தகை அம்மனிதன் காட்டியவழியே சென்று அவன் தலைவனை மீட்டான். திருடர்களில் மூவர் கொலை யுண்டனர். ஓடிச்சென்று மற்றவர்களுள் மூவரையும் காரெத் விடாது துரத்திக் கொன்றபின் மீண்டும் தற்பெருமைமிக்க அம்மாதைப் பின்தொடர்ந்தான். அவன் போரிட்ட வீரத்தைப் பார்த்திருந்தும் அவள், அவனிடம் தான் காட்டிய புறக்கணிப் பையும் அவமதிப்பையும் விடவில்லை. காரெத்தும் லினெட்டும் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. ஆற்றில் பாலம் எதுவுமில்லையாதலால் ஆழமற்ற ஒரு பகுதியில்தான் கடந்துசெல்ல வேண்டும். ஆனால், அவ்விடத்துக்கெதிராக மறுகரையில் இரண்டு வீரர் நின்று ‘இதைக் கடந்து செல்லக்கூடாது’ என்றனர். மாது, காரெத்தை நோக்கி இவர்களை உன்னால் எதிர்க்க முடியுமா? உனக்கு அச்சமாயிருந்தால் வேறு சுற்றுவழியில் செல்லலாம்” என்றாள். காரெத். “அம்மணி தங்கள் அவமதிப்பையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. ஆயினும் இரண்டு தடவை நான் போரிடுவதைக் கண்டபின்னும் உங்களுக்கு ஏன் இந்த அவநம்பிக்கை” என்று கூறிக்கொண்டே குதிரையை ஆற்றினுள் செலுத்தினான். ஆற்று நடுவில் வந்து அவனை எதிர்த்த முதல்வீரன் வெட்டுண்டுப்போக ஆறெல்லாம் அவன் குருதியால் சிவப்பாயிற்று. இரண்டாவது வீரனும் அதுபோலவே காரெத் வாளுக்கு இரையானான். மாலையில் அவர்கள் ஒரு மரத்தடியில் கறுப்புக் கவசமணிந்த ஒரு வீரனைக் கண்டனர். கறுப்புச் சேணமிட்ட கருங்குதிரை ஒன்று ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. மரக்கிளையில் பறந்துகொண்டிருந்த ஒரு கருங்கொடியின் பக்கம் ஊதுகுழல் ஒன்று தொங்கிற்று. கறுப்பு வீரன் லினெட்டை நோக்கி” இவன்தான் ஆர்தர் அனுப்பிய வீரனோ! அப்படி யானால் குழலை ஊதி என்னுடன் போருக்கு வரட்டும்” என்றான். லினெட், “இவன் வீரன் அல்லன், கறிச்சட்டி கழுவும் வேலைக்காரன்” என்றாள். காரெத், “அவள் கூறுவது முழுப்பொய்; என் கை சிலகாலம் கறிச்சட்டி கழுவியது உண்டாயினும் என் நாக்கு இவ்வளவு பொய் சொல்லி யறியாது; என் செவியும் இவ்வளவு பொய் சொல்லிக் கேட்டதில்லை” என்று கூறிவிட்டுக் குழலை ஊதினான். காரெத்தும் கறுப்பு வீரனும் நெடுநேரம் சண்டை யிட்டனர். இறுதியில் கறுப்பு வீரன் கொல்லப்பட்டு வீழ்ந்தான். தன் கவசத்தையும் தலையணியையும் விடக் கறுப்புவீரன் கவசமும் தலையணியும் சிறந்தவை என்று கண்டு காரெத் அவற்றை அணிந்துகொண்டு புறப்பட்டான். சற்றுத் தொலைவு சென்றதும் கறுப்பு வீரனின் உடன் பிறந்தானாகிய பச்சை வீரன் எதிரே வந்தான். அவன் காரெத்தைக் கறுப்புவீரன் என்றெண்ணி வணக்கம் செய்யப்போனான். அதற்குமுன் மாது அவனைத் தடுத்து, ‘இவன் உன் உடன் பிறந்தானுமல்லன்; உன்னைப் போன்ற வீரனுங்கூட அல்லன்; மிக இழிந்த பிறப்புடைய ஒரு சமையல் வேலைக்காரனே. அதோடு அவன் உன் உடன் பிறந்தானாகிய கறுப்பு வீரனைக் கொன்று விட்டு அவன் உடையையும் அணிந்து வந்திருக்கிறான். அவனிடம் பழிக்குப்பழி வாங்கி என்னைப் பிடித்த இப்பீடையையும் அகற்று வாய் என்று நம்புகிறேன் என்றாள். நன்றிகெட்ட லினெட்டைக் கடுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டுக் காரெத், பச்சைவீரனைத் தாக்கத் தொடங் கினான். காரெத்தின் வாள்வீச்சைத் தாங்க மாட்டாமல் பச்சைவீரன் பணிந்து உயிருக்கு மன்றாடினான். காரெத் தான் அழைக்கும்போது தன் வீரருடன் ஆர்தர் அரண்மனைக்கு வந்து மன்னிப்புப் பெற்று அவர் பணியில் ஈடுபடவேண்டும் என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு அவனை விடுவித்தான். அவனும் நன்றியுடன் காரெத்தை வணங்கிச் சென்றான். போகும்போது மாதை நோக்கி, ‘பெருந்தன்மை மிக்க இவ்வீரனை அவமதிப்பது உனக்கு அழகன்று; நன்றியுமன்று; அவனைப் பாராட்டி மேன்மை அடைக” என்று கூறி அகன்றான். பச்சைவீரனைப் போலவே கறுப்பு வீரனுக்குச் சிவப்பு வீரன் என்று இன்னோர் உடன்பிறந்தான் இருந்தான் அவனும் எதிர்ப்பட்டுத் தோற்றுத் தன் அறுபது வீரருடன் ஆர்தர் அரண்மனைக்கு வருவதாகக் கூறி அகன்றான். லினெட் மனத்தில் காரெத்தைப் பற்றிய எண்ணமுற்றும் மாறுதல் அடைந்தது. தான் அவமதிக்க அவமதிக்க அவன் எதிர்க்காது பணிவதையும், தான் கடுசொல் கூறிப் புண்படுத்துந் தோறும் அவன் மேன்மேலும் இன்சொல்லே வழங்கி வருவதையுங் கண்டு, அவள், தான் இதுவரை அவனைக் கடுமையாக நடத்தியதற்கு வருந்தி மிகவும் பணிவுடன் கழிவிரக்கத்துடனும் மன்னிப்பு கோரினாள். ‘இன்னா செய்தாரையும் நன்மையைச் செய்து ஒறுக்கும் தாங்கள் இழிபிறப்பு உடையவராய் இருக்க முடியாது. தங்கள் உண்மை நிலையறியாது இகழ்ந்ததற்கு ஆயிரம் முறை தங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கவேண்டிய வளாகிறேன்” என்று அவள் வாய்விட்டுக் கூறினாள். தீமைக்கே நன்மை செய்த பெருந்தகையாகிய காரெத், அவள் மனமாற்றமடைந்ததற்கு மகிழ்ந்து அதை பாராட்டுமுறையில் தான் இன்னான் என்பதை அவளிடம் நம்பகமாகக் கூறினான். லயானிஸின் மாளிகைக்கு வெளிப்புறமுள்ள ஒரு படர்ந்த மரத்தில் கவசமணிந்த பல வீரர்கள் விழுதுகள் போல் கட்டப் பட்டுத் தொங்கினர். அதைக் கண்டு காரெத்தின் உள்ளம் பொங்கி யெழுந்தது. அவர்கள் அனைவரும் லியோனிஸ் பெருமாட்டியை மீட்கவந்து தோல்வியை யடைந்து செவ்வெளிநாட்டுச் செவ்வீரனால் தூக்கிடப்பட்டவர்கள் என்பதைக் காரெத்துக்கு லினெட் கூறினாள். காரெத் அம்மரத்தில் தொங்கிய ஒரு குழலை ஊதியதும் செவ்வீரன் கவசமணிந்து முன் வந்தான். மாளிகையிலிருந்து லியோனிஸ் பெருமாட்டி குழல் ஓசை கேட்டுப் பலகணியில் வந்து காரெத்தின் போரைக் கவனித்து நின்றாள். அவள் அப்போது அவனைத் தன் கனிந்த பார்வையால் ஊக்கியும் வந்தாள். பலமணிநேரம் கடுசண்டை நடந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டவும் குத்தவும் தள்ளவும் பார்த்தனர். இறுதியில் செவ்வீரன் கை தாழ்ந்தது “நிறுத்துக; நான் இனி உமது ஆள். உம் விருப்பப்படி நடப்பேன்” என்றான். காரெத், நீ எனக்குப் பகைவனல்ல. நீ செய்த தீங்கெல்லாம் என் தலைவி லியோனிஸ் பெருமாட்டிக்கே அவளை மீட்க வந்த வீரரெத்தனையோ பேரை நீ கொண்டிறிருக்கின்றாய்! அவளிடமே மன்னிப்புப் பெற்று உயிரை அவள் தருங் கொடையாகப் பெறுக” என்றான். லியோனின் பெரு மாட்டியிடம் மன்னிப்புப் பெற்றுச் செவ்வீரன் விடுதலை அடைந்தான். அதன்பின் காரெத் அவனைக் காமிலட்டுக்கு அனுப்பி ஆர்தரிடம் அமருமாறு கூறினான். லியோனிஸ் பெருமாட்டி காரெத்தை அன்புடன் வரவேற்றாள். ஆயினும் அவள் அவனிடம், “உன் வீர வாழ்வு இப்போதே தொடங்கி இருக்கிறது. அதனைப் பிஞ்சிலேயே நான் தடைசெய்யக்கூடாது. இன்னும் பன்னிரண்டு திங்கள் வீரமாதின் அருள்வழி நின்று மீண்டும் வருக. நான் உன் புகழையே என் உயிராய்ப் போற்றி நின்று உன்னை யடைவேன்” என்றாள். போமென்ஸ் என்ற பெயர் துறந்து காரெத் என்ற பெயருடன் மன்னரும் மன்னனவையும் மகிழ்ந்து பாராட்ட, காரெத் பல அரும் பெருஞ் செயல்களாற்றி ஓராண்டிலேயே நூறாண்டுப் புகழ்பெற்றுத் தன் உள்ளத்திறைவியாகிய வியோனினிஸ் பெருமாட்டியை மணந்தான். அவன் உடன் பிறந்தானாகிய கவெயின் பெருந்தகை, லியோனிஸ் பெருமாட்டியின் தோழியாகிய லினெட்டை மணந்து கொண்டான். 4. கெரெய்டின் திருமணம் பிரிட்டனின் அரசராகிய ஆர்தரின் அரண்மனை வேடர் சிலர். காட்டில் மிகப்பெரியதும் பால் நிறமுடையதுமாகிய ஒரு மானைக் கண்டதாக வந்துரைத்தார்கள். கினிவீயர் அரசிக்கு எப்படியும் அம் மானைப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்ற அவா ஏற்பட்டது. உடனே அவன் தன் சேடியருடனும் வேடருடனும் காட்டுக்கு வேட்டையாடப் புறப்பட்டாள். டெவன் வட்டத்தைச் சார்ந்த புகழ்பெற்ற வீரனாகிய கெரெய்ன்டும் உடன் சென்றான். நெடுநேரம் காட்டிலலைந்து பார்த்தும் மான் அவர்கள் கையிற் படாமல் மறைந்துவிட்டது. உச்சி வேளையானதும் இனி வேட்டையாட முடியாதென்று அவர்கள் ஒரு மரத்தடியில் வந்து இளைப்பாறி யிருந்தனர். அப்போது அப்பக்கமாக ஒரு மங்கையும், அவளைப் பின்பற்றி ஒரு வீரனும், அவர்கள் பணிப்பையனாகிய குள்ளன் ஒருவனுக்கு விரைவாகச் சென்றனர். அவ்வீரன் யார் என்று அறிந்து வரும்படி அரசி தன் சேடியருள்டன் ஒருத்தியைப் பொருட்படுத்தாது உரையாடாமல் சென்றனர். அதுமட்டுமன்றி வீரன் துடுக்குத்தனமாகத் தன் சாட்டையால் தோழியை ஓங்கி அடித்துவிட்டுச் சென்றான். கெரெய்ன்டு இதனைக் கண்டதும், மிகவும் சினங் கொண்டு “அவர்களிருப்பிடத்தையறிந்து அவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்து வருகிறேன்” என்று கூறி புறப்பட்டான். கெரெய்ன்டு நெடுந்தொலைவு அவர்களைப் பின்பற்றி சென்று இறுதியில் ஒரு நகரையடுத்துக் காணப்பட்ட ஒரு பெருங் கோட்டையில் அவர்கள் நுழைவதைக் கண்டான். வாயில் காப்போன் அவனைக் கோட்டையினுள் நுழைய விடாமல் வாயிலை அடைத்துவிடவே, எப்படியும் இனி இந்நகரில் தங்கி இவர்களை ஒரு கை பார்த்துவிட்டுச் செல்வோம் என்று எண்ணிக் கொண்டு நகரினுள் நுழைந்தான். நகரில் அன்றைய இரவு முற்றும் விளக்கொளியில் மக்கள் விரைந்து வேலைசெய்தும் பரபரப்புடன் ஓடியாடியும் விழாவுக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்பவர் போற் காணப்பட்டனர். செய்தியாது? என்ற கேள்விக்கு யாரும் மறுமொழி தரக்கூட நேரமின்றிப் பரபரப்புடன் அவனைக் கடந்து சென்றனர். தங்குதற்கு இடமாவது கிடைக்குமா? என்று தேடிப் பார்த்தான். அதற்கும் வழிவில்லை. இறுதியில் ஒரு கிழவன், “ இன்று உனக்கு இடம் வேண்டுமானால் ஒரே ஓர் இடம் தானுண்டு. நகருக்கு வெளியில் பாழாய்க் கிடக்கும் பழைய கோட்டைக்குச் செல்க” என்றான். கெரெய்ன்டு அங்ஙனமே நகர்ப்புறத்துக்கு மீண்டும் வந்தான். வீரனும் மங்கையும் நுழைந்த கோட்டை எதிரில் இடிந்து தகர்ந்த ஒரு பழங்கோட்டையைக் கண்டு அவன் அதில் நுழைந்தான். அங்கிருந்த ஒரு முதியவன் அவனை வரவேற்று அதில் அதிகம் இடிந்து பொடியாகாத ஓர் அறைக்குக் கொண்டு சென்றான். அங்கே அவன் மனைவியாகிய மூதாட்டியும், கந்தையாடையிலும் கட்டழகு மாறாத காரிகையாகிய அவன் புதல்வியுமிருந்தனர். அவர்களும் அவனை விருந்தாக ஏற்று முகமன் கூறினர். அவர்கள் வாயிலாக கெரெய்ன்டுக்கு அரசியை அவமதித்த வீரனைப்பற்றிய விவரமும், மறுநாளைய விழாவைப்பற்றிய விவரமும் தெரியவந்தன. அவன் அந்நாட்டில் நன்மக்களை நெடுங்காலம் துன்புறுத்தி வந்த பருந்துவீரன் என்ற புனைபெயருடைய எடிர்ன்38 என்பவனே. அந்நகரில் நெடுநாள் வாழ்ந்த பழங்குடியினனாகிய அப்பழங்கோட்டை வீரனை எதிர்த்து அவன் அக்கோட்டையை அழித்து அதிலுள்ள செல்வமனைத்தையும் கொள்ளையிட்டு. அச்செல்வத்தால் புதிய கோட்டைகட்டி நகரில் ஆட்சி புரிந்து வந்தான். அவ்வெற்றி நாளைக் கொண்டாடுமுறையில் தான் அதன் ஆண்டு நிறைவாகிய மறுநாளில் அவன் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதில் அவன் தன்னை எதிர்க்க முன்வரும் வீரரனைவரையும் வென்று வெற்றிமாலை சூடவும் திட்டமிட்டிருந்தான். கெரெய்ன்டிடம் அப்போது போரிடுவதற்கான கவசமும் போர்க்கருவிகளும் இல்லை. அவை தனக்குக் கிடைத்தால், தானே சென்று அவன் கொட்டத்தை அடக்க விரும்புவதாகக் கூறினான். முதியவனாகிய பழங்கோட்டை வீரன் ‘தன் துருப்பிடித்த கவசத்தையும் கருவிகளையும் வேண்டுமானால் தருகிறேன்.’ என்றான். போரிடுபவர் அக்காலத்தில் தாம் தம் தலைவியாக ஒரு மங்கையை முன்னிட்டுப் போரிடுவது வழக்கம். போரில் வெற்றிபெற்றால் அவன் அவனுக்கு மாலையிட்டு அவனையே கணவனாகக் கொள்வான் கெரெய்ன்ட் முதிய வீரன் புதல்வியையே தலைவியாகக் கொள்ள எண்ணினான். பெற்றோரும் அதற்கிசைந்தனர். மறுநாள் விழாவுக்கான கேளிக்கைகள் தொடங்குமுன் கெரெய்ன்டு பருந்துவீரன் முன்சென்று அவனைப் போருக்கழைத்தான். போரில் தோற்றால் ஆர்தர் அரசனிடம் பெற்ற விருதுகளை விட்டுக்கொடுப்ப தாகவும், வென்றால் தன் தலைவியாகிய பழையவீரன் புதல்விக்கு அவள் தந்தையிடம் கொள்ளையிட்ட பொருள்கள் யாவும் கொடுபட வேண்டுமென்றும் அவன் உறுதி கோரினான். பருந்துவீரன் இறுமாப்புடன் எதிருறுதி கூறவே மற்போர் தொடங்கிற்று. இருவீரரும் முதலில் குதிரைகள் மீதிருந்தும், பின் ஈட்டி கேடயங்களாலும், இறுதியில் வாளாலும் போர் புரிந்தனர். மூன்றிலும் பருந்துவீரன் தோற்றுவிடவே அவன் கொட்டமும் அவன் தலைவியாகிய மங்கையின் கொட்டமும் அடங்கின. பழைய வீரன்வசம் அவன் செல்வங்கள் யாவும் வந்தன. கெரெய்ன்டு மறுநாளே தலைநகராகிய காமிலட் சென்று பழைய வீரன் மகளாகிய எனிடை மணக்க விரும்பினான். எனிடின் தாய் அவளை மணப்பெண்ணுக்கான ஆடையணிவித்தாள். ஆனால், கெரெய்ன்டு தான் அவளை அவள் பழைய கந்தையாடையுடனேயே கொண்டு செல்வதாகக் கூறினான். சற்று மனச்சோர்வுடன் எனிட் தன் புத்தாடைகளைத் துறந்த கந்தையாடையுடன் புறப்பட்டாள். காமிலட்டில் ஓரிரவு தான் எனிட் கந்தையாடையுடன் படுத்திருந்தாள். கினிவீயர் அரசியின் சேடியர் இரவோடிரவே அவளையறியாது அவளுக்கு அரசியருக்கும் கிட்டாத வெண்பட்டாடையுடுத்திப் பொன்னும் மணியும் பூட்டினர். எனிட் காலையில் கண்ணாடிமுன் சென்று தன்னையே அடையாள மறியமல் திகைத்தாள். கெரெய்ன்டு புன்முறுவலுடன் எதிரே வந்து உன் கந்தையாடையின் விலை இது. அதுவே என் காதலை உனக்குத் தந்தது. அதற்கு மாற்றாக அரசி கொடுத்த ஆடையணிகள் இவை, என்றான். எனிடும் கெரெய்ன்டும் கினிவீயர் அரசியின் மகனும் மருகியும்போல் சிறக்க இனிது வாழ்ந்தனர். 5. கெரெய்ன்டின் ஐயப்பேய் டெவன் வட்டத்து39 வீரனான கெரெய்ன்டு40 ஆர்தர் வட்ட மேடையிலுள்ள நூறு விரருள் ஒருவனாய்ச் சிறக்க வாழ்ந்துவந்தான். அவன் வெற்றிகளுக்கு அறிகுறியாக வந்த திருமகள் அருள்போன்ற அவன் மனைவி எனிட்41 கினிவீயர் அரசியின் நட்புக்குரிய தோழியாய் அவளுடன் அளவளாவி யிருந்தாள். கினிவீயர் அரசி புற அழகில் ஒப்பற்றவளாயினும், உலகின் ஒப்பற்ற வீர அரசன் தலைவியாயினும் அகத்தூய்மையற்றவள் என்று எங்கும் கூறப்பட்டு வந்தது. அதனைச் செவியுற்ற கெரெய்ன்டு தன் மனைவியின் கறையற்ற உள்ளம், அவளுறவால் மாசடைந்து விடுமே என்று கவலை கொண்டான். ஆயினும் அதனை வெளிக்காட்டாமல் வேறு சாக்குப் போக்குச் சொல்லி மனைவியைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு தன் நாட்டுக்குச் சென்றுவிட எண்ணினான். ஆர்தர் அரசரானது முதல், அவர் பிரிட்டனெங்குமுள்ள தீயோர், திருடர், கொடுங்கோலரான குறுநில மன்னர் ஆகிய அனைவரையும் அடக்கி எங்கும் அமைதியும் நல்வாழ்வும் நிலவச் செய்திருந்தார். ஆனால், டெவன் வட்டத்திலுள்ள காடுகளிடையே இன்னும் பல கொடியோர் இருந்து ஏழைமக்களையும் குடிகளையும் வருத்தி வந்தனர். அரசியலின் பல நெருக்கடி வேலைகளிடையே அங்கே போக அவருக்கு நேரமில்லை. இவற்றை அறிந்து கெரெய்ன்டு அவரிடம் சென்று “அரசே! தம் நகரில் தம் மருகன்போன்று கவலையின்றி நெடுநாள் வாழ்ந்து விட்டேன். என் நாட்டைச் சுற்றிக் கொடுங்கோன்மையும் தீமையும் தலைவிரித் தாடுகையில் நான் இங்கே வாளா இருத்தல் தகாது. தம் புகழொளியை அங்கேயுஞ் சென்று பரப்ப மனங் கொண்டேன். விடை தருக!” என்றான். ஆர்தர், நல்லெண்ணமின்றித் தீய எண்ணங்களுக்கே இடந்தாராத தூய உள்ளம் படைத்த மன்னர். தாம் செய்ய வேண்டும் கடமைகளுள் ஒன்று செய்யப்படாம லிருக்கிறது என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் சுறுக்கெனத் தைத்தது. ஆயினும், தம் புகழின் தவமணியாகிய கெரெய்ன்டு தம் குறைவை நிறைவுபடுத்தி விடுவான் என்ற கருத்துடன் அவர் அவனுக்கு விடை தந்தார். கெரெய்ன்ட் மனைவியுடன் தன் நாடு சென்று அவளுடன் இனிது வாழலானான். இன்ப வாழ்வைத் தூய்மைப்படுத்துவதே வீரம். ஆர்தரின் வட்ட மேடையின் தொடர்பு கெரெய்ன்டின் வாழ்வைத் தூய்மைப்படுத்தியவரை அவன் மனைவியைத் தொலைவிலிருந்தே அன்பு செலுத்தி வந்தான். டெவனில் வந்ததும், அவன் மற்றக் கடமைகளை யெல்லாம் மறந்து அவளுடைய மாடத்திலேயே இருந்து இன்ப வாழ்க்கையில் மூழ்கினான். பிறர் துன்பந்துடைத்த வீரன் என்று புகழ் படைத்த கெரெய்ன்டு, மணவாழ்வில் புகுந்ததும் தனது இன்பமே நாட்டமாய் விட்டான். அவன் வீரம் கெட்டுவிட்டது என்று பலரும் பேசினர். எனிட் காதுவரை இஃது எட்டிற்று. தோழியர் பலர், தமது நற்பேறே பேறு. தம் கணவர் தம்மையன்றி வேறெதிலும் நாட்டம் கொள்வதில்லை என்பர். எனிடின் காதுகளுக்கு அதுகூடத் தன்னை குத்தலாகப் பேசியது என்று பட்டது தூயவீரன் என்று பெயர் படைத்த தன் கணவன், தன் உறவால் கெட்ட பெயரெடுக்கும் படியானது தன் குற்றமே என்று அவள் எண்ணினாள். ஆனால், அவள் தன் கண்ணெனப் போற்றிய தன் கணவனிடம் அவனுக்குக் கண்ணுறுத்தலாகும் இவ்வுண்மையினை எங்ஙனம் கூறுவாள்? கடமை ஒருபுறம் சொல்லும்படி முன் தள்ள, கணவனிடம் கொண்ட இயற்கைப்பற்றுப் பின் தள்ள, அவள் பலவாறு அலைக்கழிவு எய்தினாள். அவள் துயர், அவள் முகத்திலும் கண்களிலும் வெளிப்பட்டது. கெரெய்ன்டு அதனைக் கண்ணுற்றான். ஆனால், அது பற்றிய வினாக்கள் அவளைத் தலை குனிந்து முகங்கோணச் செய்தனவே யன்றி வேறெதுவும் விடை தருவிக்கவில்லை. கினிவீயர் போன்ற பெண்மணிகளின் புற அழகின்பின் அகத்தில் கறையிருக்கக்கூடும் என்ற நச்செண்ணம் அவன் தூய உள்ளத்தில் சற்றே வீசிற்று. அது நிலைக்க வில்லையாயினும் அதன் சாயல் அவன் உள்ளத்தில் அவனும் அறியாமல் மறைந்து தங்கிநின்றது. இன்பவாழ்வில் சொக்கிய கெரெய்ன்டு இரவில் அயர்ந்து உறங்குவான். மக்கள் இகழ்ச் சொற்களெல்லாம் உருப்பெற்று எனிடின் மனக்கண் முன்நின்று அவள் உறக்கத்தைக் கெடுக்கும். ஒருநாள் விடியற்காலமாயிற்று. கெரெய்ன்டு இன்னும் உறங்குகிறான். எனிட் அவன் பக்கத்தில் நின்று அவன் மாசற்ற முகத்தை நோக்கிய வண்ணம் தன் மனக்குறையை வாய்விட்டுக் கூறினாள்: “என் கணவன் புகழுக்கு இழுக்காக வாழ்வதிலும் மாள்வதே மேல். உண்மையில் போரில் புகழ்பெற்றுக் கணவன் மாண்டுவிட்டால்கூட மகிழ்ச்சியுடன் உடன் சாவேன். கெரெய்ன்டுக்கு நான் மனைவியானால் அவன் மாண்டும் நான் புகழ் பெறுக,’ என்ற சொற்கள் அவளையறியாமல் வெளிவந்தன. எனிட் இச்சொற்களைச் சொல்லி முடிப்பதற்குள் அவள் கைப்பட்டு எனிட் தலையணி தடாலென்று விழுந்தது. அவ் ஓசையால் அவன் விழித்துக் கொண்டான். விழிக்கும்போது அவள் கூறியவற்றிலுள்ள கடைசி வாசகம் அவன் காதில் விழுந்தது. முன்பின் தொடர்பில்லாமல் கேட்டதால் அஃது அவனுக்குத் தப்பெண்ணத்தை ஊட்டிற்று. அவன் மாண்டும் நான் புகழ்பெறுக.’ என்ற வாசகம் மட்டும் அவன் காதில் விழுந்தது. ஐயத்தின் பழைய சாயல் இப்போது வாலும் தலையும் பெற்று ஐயப்பேயுருவமெடுத்தது. தன் மனைவியின் அன்பு வேறு பக்கம் போயிருப்பதால் தான் மாண்டு அவள் வாழ்வு நிறைவடையவேண்டும் என்று அவள் கூறியதாக ஐயப்பேய் கதை கட்டிவிட்டது. தூய உள்ளத்திலும் அன்பு மிகுதியாயுள்ள இடத்திலும் தான் ஐயப்பேய் தன் முழுச்சிறகையும் விரித்துத் தாண்டவமாடும். கெரெய்ன்டுக்குத் தன் இன்பவாழ்வு எட்டிக்காயாயிற்று. மனைவிமீது சீற்றங் கொதித் தெழுந்தது. அவளைத் துன்பத்துக்காளாக்கி அவள் உள்ளத்துள் மறைந்து கிடந்த (அஃதாவது மறைந்து கிடந்ததாகத் தான் கொண்ட) தீய எண்ணங்களை முற்றிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவன் எண்ணினான். மறுநாள் கெரெய்ன்டு எனிடிடம் ‘உன்ஆடை அணிகளை எறிந்து விட்டு மாசடைந்த உடையுடன் வருக; என்றான். கணவனுக்கெதிராக நாம் என்ன செய்துவிட்டோமோ என்று அவள் நடுநடுங்கினாள். நல்லகாலத்தில் நல்லுரை கூறவே நாவெழாத அவளுக்கு இப்போது எங்கே நாவெழப் போகிறது? அவள் மணவினைக்குமுன் தாய் வீட்டில் அணிந்திருந்த பழங்கந்தையுடன் வந்தாள். கெரெய்ன்டு அவளை முன்னால் ஒரு குதிரைமீதேறிச் செல்லச் செய்து தான் பின்னே சென்றான். ‘அதோடு என்ன நேரினும் நான் பேசச்சொன்னாலன்றி என்னிடம் பேசப்படாது’ என்று கடுமையான உத்தரவுமிட்டான். கணவனுடன் காட்டிற்குள் செல்வதுபற்றி அவளுக்குக் கவலையேயில்லை. ஆனால், அவனுடன் உரையாடக் கூடாதென்பது அவளுக்கு மிகவும் துன்பந்தந்தது. ‘அவ்வளவுக்கு அவன் அன்பை இழக்க நான் என்ன செய்திருப்பேன்’ என்று பலவகையில் ஆராய்ந்து ஆராய்ந்து அவள் தன் மனத்தைப் புண்படுத்திக் கொண்டே சென்றாள். கெரெய்ன்டு மனத்திலும் நான் இவளைத் தெய்வமாகத் தானே நடத்தினேன்? எனக்கா இந் நன்றிகொன்றதனம் என்ற எண்ணமெழுந்து வாட்டியது. அவர்கள் சென்ற காட்டுவழி முன் போர்வீரராயிருந்த கொள்ளைக்காராக மாறித் திரிந்த கொடியோர் வாழ்ந்த இடமாயிருந்தது. இருவரும் ஒரு மேட்டிலேறிச் சென்ற சமயம் எனிட் ஓர் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். புதரில் மறைந்திருந்த மூவர் தமக்குள் பேசிக்கொண்டது அவள் காதிற்பட்டது. ஒருவன் இந்த அழகிய மாதைப் போகவிடு. அந்தக் கோழைப்பயலைப் பின்னாலிருந்து நொறுக்கிவிட்டு எல்லாம் ஒரு கை பார்க்கலாம்’ என்றான். அடுத்தவன் ‘சரிசரி’ என்றான். கணவன் உயிருக்கு அஞ்சிய காரிகை அவன் ஆணையை மீறத் துணிந்தாள். ‘இதோ மூவர் உங்களை எதிர்க்கக் காத்திருக்கின்றனர்’ என்றாள். கெரெய்ன்டு கடுமையாக ‘அந்தமட்டும் உனக்கு நன்மைதானே! ஆயினும், யாரும் என்னை வென்றுவிட முடியாது என்று அறி என்று கூறித் தன் ஈட்டியை எடுத்தான். கெரெய்ன்டு முதலில் பெற்றிருந்த புகழைப்போலவே அவனைப்பற்றிப் பின்னாலெழுந்த இகழும் காடுவரை எட்டியிருந்தது. ஆனால், பின்னது எவ்வளவு பொய்யானது என்பதை அம்மூவரும் விரைவில் உணர்ந்தனர். ஒருவன் நெஞ்சில் கெரெய்டின் ஈட்டி ஊடுருவிப் பின்புறம் சென்றது. மற்ற இருவரும் வாளுக்கிரையாயினர். கெரெய்ன்டு இறந்த வீரரின் கவசத்தை அகற்றி அவர்கள் குதிரைமீதேயிட்டுத் தன் குதிரையுடன் அவற்றையும் ஒட்டி முன்செல்லுமாறு எனிடுக்கு ஆணையிட்டான். நான்கு குதிரைகளை ஓட்டுவதில் அவள் படுந்துன்பங்கண்டு அவன் இரங்கி, சற்று அண்டிவந்து உதவினான். அவளுக்கு அஃது ஆறுதலா யிருந்தது. ஆயினும், தன் எச்சரிக்கை கேட்டு அவன் கூறிய மறுமொழிகளின் பொருளறியாமலும் அவற்றுள் புதைந்து கிடந்த வெறுப்பைக் கண்டும் அவள் மனமாழ்கினாள். பின்னும் ஒரு தடவை வேறு சில திருடர் மறைந்து கெரெய்ன்டை எதிர்க்க முற்பட்டனர். இத்தடவையும் எனிட் எச்சரிக்கையின்பேரில் கெரெய்ன்டு மூவரையும் தென்புலத்துக்கனுப்பினான். இப்போதும் எனிடிடம் அவன் கடுமை நீங்கவில்லை. முன்னைய மூன்று குதிரைகளுடன் பின்னும் மூன்று குதிரைகள் அவள் பொறுப்பில் விடப்பட்டன. ஒரு நாள் முழுவதும் குதிரைமீது சென்றதால் இருவருக்கும் பசி காதடைத்தது. வெறுப்பிடையும் கெரெய்ன்டிற்கு எனிட்மீது இரக்கம் பிறந்தது. அவர்கள் காட்டைக்கடந்து ஓர் ஊரை அடைந்ததும் அறுவடைக் களத்துக்கு உணவு கொண்டு சென்ற ஒரு பையனை அழைத்து அவன் உணவு கோரினான். எனிட், கணவன் காட்டிய வெறுப்பினால் உணவில் விருப்பஞ் செல்லவில்லையாயினும், உண்பதாகப் பாசாங்கு செய்தாள். பசியிடை அதை அறியாத கெரெய்ன்டு, இருவரும் உண்பதாக எண்ணி அத்தனையும் உண்டு தீர்த்தான். பின் பையனிடம் உணவுக்கு மாறாக ஒரு குதிரையையும் கவசத்தையும் கொடுத்தான். பையன், கெரெய்ன்டு ஒரு பெரிய வீரன் என்பதை அறிந்து, தன் ஊர்த்தலைவனிடம் அவனை இட்டுச்செல்ல விரும்பினான். கெரெய்ன்டு அதனை மறுத்து ஒரு விடுதியில் அறையமர்த்தி அதில் எனிடை ஒரு மூலைக்கனுப்பித் தான் ஒரு மூலையில் இளைப்பாறலானான். பையன், ஊரெல்லாம் தன் குதிரையைக் காட்டி வீரன் வள்ளன்மையைத் தமுக்கடித்தான். அதுகேட்ட தலைவன் பரிவாரங்களுடன் கெரெய்ன்டைப் பாராட்ட வந்து விட்டான். அத்தலைவன் உண்மையில் முன் எனிடை நாடிச் சென்று அவளைப் பெறாது மீன்ட லிமூர்ஸ்42 என்பவனே. அவன், கெரெய்ன்டு, எனிடைப் புறக்கணித்து நடத்துவதைக் கவனித்து அவளிடம் தனிமையில் “உன்னைப் புறக்கணிக்கும் இவனைவிட்டு வந்துவிடு; அவனைக் கொன்று விட்டுக்கூட உன்னை நான் அடையத் துணிந்திருக்கிறேன்” என்றான். கணவன் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அவனைக் காக்க எண்ணிய எனிட் “அவனைக் கொல்ல வேண்டியதில்லை. நாளைக் காலையில் வா; உன்னுடன் வந்து விடுகிறேன்’ என்று கூறினாள். இரவு, முற்றும் எனிட் உறங்கவில்லை. விடியுமுன் கெரெய்ன்டிடம் இச்செய்தியைக் கூறினாள். இம் முறை கெரெய்ன்டு அவளிடம் அவ்வளவு கடுமை காட்டவில்லை. ஏனெனில், அவன் சினத்தின் ஒரு பகுதி நயவஞ்சகனான லிமூர்ஸிடம் சென்றது. உள்வஞ்சகமுடையவனாயினும் உண்டி தந்தவிடத்தில் கலவரம் விளைவிக்க வேண்டா என்ற எண்ணத்துடன் கெரெய்ன்டும் எனிடும் தம் குதிரைகளைக் கொண்டுவரச் சொல்லி வெளியேறினர். விடுதிக்காரனது கடனுக்கு ஈடாகக் கெரெய்ன்டு குதிரைகளில் மீந்த ஐந்தையும், அவற்றிலுள்ள கலங்களையும் எடுத்துக் கொள்ளுமாறு கூறினான். காலையில் நரிமுகத்தில் விழித்தோம் என்று மகிழ்ச்சியுடன் விடுதியாளன் அவர்களை விடை கொடுத்தனுப்பினான். காடுகளுக்குள் நுழைந்ததும் கெரெய்ன்டு மனம் மீண்டும் கடுமையடைந்தது. “என்னை நீ காப்பாற்ற முயல வேண்டா. இனி, எக்காரணங் கொண்டும் என்னிடம் பேசவும் வேண்டா. எனக்கு உன் எச்சரிக்கைகளில்லாமலே என்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும். நீ நினைப்பதுபோல நான் பேடியல்லன்” என்றான். அவன் பேடியென்று தான் நினைக்கவில்லையானாலும் பிறர் அவ்வாறு சொல்லுகிறார்களே என்று கவலைப்பட்டது அவள் நினைவுக்கு வந்தது. அவர்கள் அடுத்தபடி நுழைந்த பகுதி டெவனிலேயே எவரும் அணுகத் துணியாத இடம். அது ‘டூர்ம்’43 என்ற பெருஞ் செல்வனுக்குரியது. அவனிடம் குடி, சூது, வஞ்சகம், பெண்பழி ஆகிய எல்லாத் தீக் குணங்களுங் குடிகொண்டிருந்தன. பிரிட்டன் எங்கும் செங்கோலால் அறம் வளர்த்த ஆர்தருக்கெதிராக டெவனெங்கும் தன் கொடுங்கோலால் மறம் வளர்த்த கொடியோன் அவன். இத்தகைய கொடிய நாட்டில் எந்நொடியில் பகைவர்கள் வருவார்களோ என்ற எச்சரிக்கையுடன் சென்றாள் எனிட். எனவே, கெரெய்ன்டு கேளாத குதிரைக் காலடி ஓசை அவளுக்குக் கேட்கவே திரும்பிப் பார்த்தாள். மூன்று குதிரை வீரர் குதிரை நுரை தள்ளும்படி ஓடிவருவதையும், முன் வந்தவன் அண்டி விட்டதையும் அவள் கண்டாள். அவன் லிமூர்ஸே என்றும் அவள் ஒரே நொடியில் கண்டு கொண்டாள். கணவன் ஆணையை நினைத்து அவள் வாய் திறவாமலே பின்புறம் நோக்கிக் கையைக் காட்டினாள். கெரெய்ன்டு லிமூர்ஸை எதிர்த்துப் போரிட்டான். இருவரும் மாறிமாறிக் குத்திக் கொள்ள முயன்றும் இறுதியில் லிமூர்ஸ் விழுந்தான். அவனைப் பின்பற்றி வந்த வீரரும் அது கண்டு ஓடிவிட்டனர். லிமூர்ஸ் குதிரையும் அவனை இழுத்துக் கொண்டே ஓடிற்று. போரில் ஈட்டியால் குத்தப்பட்டு நெஞ்சில் ஆழ்ந்த காயம் ஏற்பட்டுக் கவசத்தினுள்ளாகக் குருதி கசிவதைக்கூடக் கெரெய்ன்டு பொருட்படுத்தவில்லை. எனிட் அதனைக் குறிப்பாயறிந்து ஒன்றும் பேசத்துணியாமல் மெல்லச் சென்று கொண்டிருந்தாள். ஆயினும், அவன் முற்றிலும் சோர்ந்து விழுந்துவிடவே, அவள் உடனே குதித்துச் சென்று அவன் கவசத்தை அகற்றித் தன் மேலாடையைக் கிழித்துக் கட்டினாள். காயம் படுகாயமான தானாலும், குருதி மிகுதியும் சிந்தியதனாலும் கெரெய்ன்டு தன்னுணர்வின்றிக் கிடந்தான். எனிடின் குதிரைகூட ஓடிப்போய் விட்டதனால், தான் முற்றிலும் தனிமையாய்ப் போய்விட்டதைக்கூட அறியாமல், ஏழை எனிட் அழுது கொண்டிருந்தாள். அவ்வழியாக அச்சமயம் வேட்டைக்குப் புறப்பட்டு டூர்மும் அவன் ஆட்களும் வந்தனர். கெரெய்ன்டு இறந்து விட்டவன் போலவே கிடந்ததனால் டூர்ம், எனிடைக் கைப்பற்றும் நோக்கங்கொண்டு நன்மை செய்ய எண்ணியவன்போல் கெரெய்ன்டுடன் அவளை அரண்மனைக்குக் கொண்டு போகும்படி தன் ஆட்களுக்கு ஆணையிட்டான். அன்று முழுவதும் எனிட், கெரெய்ன்டுக்கு உணர்வு மீளும்படி எல்லா முயற்சிகளும் செய்தாள். அன்று முழுவதும் அவள் உணவு உட்கொள்ளவே யில்லை. மாலையில் வந்த டூர்ம் நல்ல உணவும் குடியும் தந்தும், நல்லுடையுடன் ஆடையணிகளையும் தந்தும் அவளைத் தன் வயப்படுத்த முயன்றான். கெரெய்ன்டு இறந்துவிட்டதாக அல்லது இறக்கும் நிலையில் இருப்பதாகவே எண்ணினதனால், அவன் அவளை மிகுதியும் வற்புறுத்தியிழுக்கவே அவள் ‘ஐயகோ’ என்றலறினாள். பெண்மை முழுவதும் வெளியிட்டலறிய அவ்வலறலில் சற்றுத் தன்னுணர்வு மீண்டு வரும் நிலையில் இருந்த கெரெய்ன்டின் வெறுப்பு முற்றும் எங்கோ பறந்து போயிற்று. அவன் வாளெடுத்துக் கொண்டோடி வந்தான். ஒரு நொடியில் டூர்மின் தலை மண்ணில் புரண்டது. தலைவன் நிலைகண்ட அவன் ஆட்கள் நெறிகலங்கி ஓடினர். கெரெய்ன்டு, எனிடின் கையைப் பிடித்துக் கொண்டு “நான் என் செவியை நம்பி ஏமாந்தேன்; அறிவைப் பறிகொடுத்தேன். எதில் ஐயம் கொண்டாலும் இனி உன்னிடம், உள் கால்பட்ட இடத்தில்கூட ஐயங்கொள்ளேன்” என்று அவளை வாரி அணைத்துக் கொண்டான். கெரெய்ன்டு குதிரைமீது எனிடுடன் வெளியே வருகையில் முன் அவளை எதிர்த்துத் தோற்றிருந்த வீரனாகிய எடிர்ன்44 அவர்களுக்கு வணக்கம் செய்து தான் தற்போது முற்றிலும் மனந்திருந்தி ஆர்தரின் வீரருள் ஒருவனாய் விட்டதைத் தெரிவித்தான். கெரெய்ன்டு இன்ப வாழ்க்கையில் கடமை மறந்து விட்டான் என்று கேட்டு, டூர்மைத் தாமே எதிர்க்க வந்த ஆர்தர், நடந்தனைத்தும் கேட்டுக் கெரெய்ன்டை முன்போல் அன்புடன் வரவேற்றார். கெரெய்ன்டையும் எனிடையும் சுற்றிச் சிறிய கெரெய்ன்டுகளும், சிறிய எனிட்களும் தோன்றி அவர்கள் வாழ்வை அழகு செய்தனர். 6. பலினும் பலானும் மன்னன் ஆர்தரும், அவருடைய வீரரும் வட்டமேடையைச் சுற்றி உட்கார்ந்திருக்கையில், ஓரிளமங்கை குதிரை ஏறி வந்து அவர்கள் முன் இறங்கினாள். அரசனை வணங்கி அவள் தான் போர்த்திருந்த சால்வையை அகற்றியபோது அவள் இடுப்புடன் இடுப்பாக ஒட்டி ஒரு வாள் கிடந்ததைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். அரசர் ‘நீ ஏன் வாளை அணிந்திருக்கிறாய்?’ என்று கேட்டார். அவள் ‘அரசே! நான் வாளை அணிந்திருக்கவில்லை. ஒரு மாயக்காரன் மாயத்தால் அது என் உடலுடன் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது. அதை என் உடலிலிருந்து பிரித்தெடுப்பவனே வீரருள் சிறந்த வீரனாவான்’ என்றாள். வட்டமேடை வீரர்களனைவரும் ஒவ்வொருவராக வந்து அதை இழுத்துப் பார்த்தனர். அவர்கள் அம்மங்கையை இழுத்தனரேயன்றி வாளை அகற்ற முடியவில்லை. அரசரே வந்து முயன்றும் பயன் ஏற்படவில்லை. மங்கை அனைவரையும் கண்டு நகைத்து நின்றாள். ஆர்தர் வட்டமேடை வீரருள் பலின் பெருந்தகை45 ஒருவன். அவன் ஆர்தரின் ஒன்றுவிட்ட உடன்பிறந்தானைக் கொன்றதனால் வட்டமேடையினின்று அகற்றப்பட்டு அரண்மனையினொருபுறம் காவலில் வைக்கப்பட்டிருந்தான். வட்டமேடை வீரரெல்லாம் முயன்று தோல்வியடைந்த அம்முயற்சியிலீடுபட்டு வென்றால், தான் இழந்த நற்பெயரை மீண்டும் பெறலாமே என்று அவன் எண்ணினான். ஆனால், தன் அறையைவிட்டு வெளிவர இடந்தரத்தக்க நல் ஆடை எதுவும் அவனிடம் இல்லை. வாளணிந்த மங்கை46 அரசர் பேரவையிலிருந்து மீண்டுவரும்போது பலின் இருந்த அறைவழியே போக வேண்டியிருந்தது. அதற்கே காத்திருந்த பலின் அவள் முன்சென்று, ‘உன் வாளை எடுக்க நானும் முயன்று பார்க்கிறேன், என்றான். அவன் அழுக்கடைந்த ஆடையைக் கண்டு ‘இவன் எங்கே வாளை இழுக்கப்போகிறான்’ என்று அவள் நினைத்தாளானாலும் ‘முயன்றுதான் பாரேன்’ என்று அசட்டையாகக் கூறினாள். ஆனால், பலின் அவள் வியக்கும்படி எளிதாய் அதைத் தன் கையால் இழுத்தெடுத்து விட்டான். வாள் அணிந்த மங்கை, அவனை அரசரும் பிறரும் இருந்த இடத்துக்கு இட்டுச் சென்று ‘இவன் உங்கள் அனைவரையும் விடச் சிறந்த வீரன்; இவனையும் மேடை வீரருடன் வீரனாக ஏற்றுக்கொள்க, என்றான். இயற்கையிலேயே பெருந்தன்மை வாய்ந்த ஆர்தர், எளிதில் அவனை மன்னித்து அங்ஙனமே ஏற்றுக் கொண்டார். மங்கை அதன்பின் பலினிடம் தன் வாளைத் திரும்பத் தன்னிடமே கொடுக்கும்படி கேட்டாள். பலின் அஃது இனி எனக்கே உரியது; அதனை யாருக்கும் தரமாட்டேன் என்று கூறிவிட்டான். மங்கை, உன் நன்மைக்காகவே அதனைத் தரும்படி கேட்டேன். ஏனெனில் நீ யாரை மிகுதியாக நேசிக்கிறாயோ அவர்களையே அது கொல்லும் என்று எச்சரித்துவிட்டுச் சென்றாள். வாள் அணிந்த மங்கை கூறியது பொய்க்கவில்லை இறுதியில் அவ்வாள் பலின் உடன்பிறந்தான் பலான் உயிரைக் குடித்து அவன் உயிருக்கும் இறுதி கண்டது. இவற்றிக்கிடையே பலான் செய்த அருஞ்செயல்கள் பல அவனிடம் முன் இருந்த வாளுடன் மங்கையிடமிருந்து கைக்கொண்ட மாயவாளும் இருந்ததனால், அவனை மக்கள் ‘இரட்டைவாள் வீரன்’ என்றழைத்தனர். இத்துடன் அவன் இடர்களுக்குள் துணிச்சலாகக் குதிப்பவன். ஆதலால், அவனை மக்கள் ‘துணிகர வீரன் பலின்’ என்றும் கூறினர். அவன் புகழ் நாலாபக்கமும் பரந்தது. ஒரு நாள் பலின் குதிரை ஏறிக் காட்டுவழியே அருஞ்செயல்களை நாடிச்சென்றான். அப்போது காட்டின் நடுவே ஒரு மாளிகை தென்பட்டது. அதனை நோக்கி அவன் செல்லுகையில் வழியில் ஒரு நெடிய சிலுவை மரம் நின்றது. அதன் குறுக்கு விட்டத்தின் மீது ‘எந்த வீரனும் இம்மாளிகைக்குள் நுழைய வேண்டா’, என்றெழுதியிருந்தது. துணிகரவீரன் என்று பெயரெடுத்த பலினா அதைச் சட்டை செய்பவன்? அவன் அதைக் கடக்கப் போகும்போது ஒரு கிழவனின் உருவம் அவன்முன் தோன்றித் ‘துணிகரமிக்க பலின்! இன்னும் ஓர் அடிகூட முன் வைக்காமல் பின்னால் சென்றுவிடு, என்று கூறிற்று. பலின் இதையும் சற்றும் பொருட்படுத்தவில்லை. சற்றுநேரம் சென்றபின் ஒரு குழல் ஊதிய ஓசை கேட்டது. உடனே நூறு பெண்கள் வெளிவந்து பலினை வரவேற்று விருந்து நடத்தினர். விருந்து முடிவில் பெண்களின் தலைவி எழுந்து பலினை நோக்கி ‘இரட்டைவாள் வீரரே! எங்கள் மாளிகையில் வரன்முறையாக ஒரு வழக்கமுண்டு இங்கே வருகின்ற எந்த வீரனும் எங்களுக்குரிய அண்மையிலுள்ள தீவைக் காக்கும் எங்கள் வீரனை எதிர்த்துப் போரிட வேண்டும். போரில் வென்றவனே அதன்பின் எங்கள் வீரனாய் இருப்பான் என்றாள். பலின், ‘இது மிகவும் கெட்ட பழக்கமே. ஆயினும், போரிட நான் அஞ்சவில்லை,’ என்று கூறி எழுந்தான். பெண்கள் அவனை ஒரு படகிலேற்றித் தீவில் கொண்டு போய் விட்டனர். தீவிலுள்ள மாளிகையிலிருந்த சிவந்த கவசம் அணிந்து செஞ்சேணமிட்ட சிவப்புக் குதிரையின்மேல் ஒரு வீரன் ஏறிவந்து பலினை எதிர்த்தான்; அவன் உண்மையில் வேறு யாருமல்லன்; பலினின் உடன்பிறந்தவனான பலானே. பலினிடம் இரண்டு வாள் இருப்பது கண்டு, அவன் இவன் நம் உடன்பிறந்தான் பலின் தானோ, என்று தயங்கினான். ஆனால், பெண்கள் பலினின் கேடயத்தை மாற்றிப் புதிய கேடயம் கொடுத்திருந்தபடியால் அவன் பலினாக இருக்கமாட்டானென்று பலான் எண்ணினான். அப்போது அவன் வாய்திறந்து நீ யார்?” என்று கேட்டிருந்தால் அவர்கள் வாழ்க்கை வீணில் முடிவடைந்திருக்காது. கடும் போரிட்டதன்பின் ஒருவர் வாளால் மற்றவர் வெட்டுண்டு இருவரும் வீழ்ந்தனர். பலின், பலானை நோக்கி, ‘உன்னைப் போன்ற வீரமிக்க இளைஞனுடன் நான் இதுகாறும் போரிட்டதில்லை. நீ யார் என்று நான் அறியலாமா?” என்று கேட்டான் பலான். ‘ நான் பலினின் உடன் பிறந்தான் பலான், இத்தீவில் முன் காவல் செய்த வீரனைக் கொன்று அவனிடத்தை அடைந்தேன்” என்றான். பலின் அந்தோ! நம் தீவினை இருந்தவாறு! நானே உன் உடன் பிறந்தான் பலின்.இந்த வாளைக் கொடுத்த மங்கை கூறிய எச்சரிக்கையை அசட்டை செய்ததனால் தன் உடன் பிறந்தானையே கொல்லும்படி நேரிட்டது” என்று மனமாழ்கினான். பலினும் பலானும் ஒருங்கே இறந்தனர். இருவரும் ஒரே கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வாழ்க்கையின் உள்ளுறை முற்றிலும் அறிந்த மெர்லின் அவர்களை அடக்கம்செய்த இடத்தில் ஒரு வீரக்கல் நாட்டி அதில் அவர்கள் உருக்கமான வரலாற்றைப் பொறிக்கும்படி செய்தான். 7. மாயாவியை மயக்கிய மாயக்காரி முள்ளடர்ந்து பாம்புப்படைகள் நிறைந்திருந்த காட்டு மரமாகிய பிரிட்டனை, ஆர்தர், அதிலுள்ள முட்களை வெட்டி அறுத்து உருப்படுத்திச் சீவி, வீணையாக்க முயன்று வந்தார். ஆனால், கட்டையில் உள்ளூரக் கீறல்களிருந்ததென்பதை அவர் அறியார். அத்தகைய கீறல்களில் முதன்மைவாய்ந்தவை கினிவீயர் அரசியின் பொய்ம்மையும், அதற்கு இடந்தந்து ஆட்பட்ட லான்ஸி லட்டின் கோழைமையுமே ஆகும். இது தவிர, வினையின் கீறலினுள்ளாக இருந்து அவ்வப்போது வேலை செய்யும் தச்சரையும் கெடுத்து இறுதியில் தலைமைத் தச்சனாகிய மெர்லினுக்கும் வினைவைத்த நச்சரவு ஒன்றும் இருந்து வந்தது. அதுவே கினிவீயரின் தோழியாய் அவள் அரண்மனைக்குவந்த விவியன்47 ஆவாள். விவியன் வனப்பு மிக்கவள். மென்மை வாய்ந்த சிறிய உருவமுடையவள். குழந்தைகள் பேச்சுப்போல் பசபசப்பும் கவர்ச்சியும் உடைய அவள் சொற்கள், அவள் உள்ளத்திலிருந்து வஞ்சகம், பொறாமை, கொடுமை ஆகிய தீக்குணங்களை முற்றிலும் திரையிட்டு மறைத்து அவளுக்கு ஒப்பற்ற நடிப்புத்திறத்தை அளித்தன. மாசற்ற முனிவரையும் மாறுபடுத்தத்தக்க அவள் நயவஞ்சக நடிப்பில் ஆர்தர் வட்டமேடை வீரர் பலரும் ஈடுபட்டனர். கலஹாட்ம, பெர்ஸிவேல், கெரெய்ன்ட், காரெத் முதலிய சிலர்மட்டும் இதில் முற்றிலும் விலகி நின்றார்கள். ஆயினும், ஆர்தரின் தெய்வீக அரசியலின் கட்டுப்பாட்டை மேற்பூச்சாகவே மேற்கொண்ட பலர், உள்ளூர அதில் பட்டழிந்தும் வெளித்தோற்றத்தில் மட்டுமே ஆர்தர் வீரராக நாடகம் நடித்தனர். இங்ஙனம் ஆட்டையும் மாட்டையும் கடித்த நச்சரவு இறுதியில் ஆர்தரின் ஆட்களிடமே தன் கோரைப்பல்லைக் காட்டிற்று. விவியன், ஆர்தரிடமே தன் பசப்பு வேலையைக் காட்டலானாள். அழுகல் பிணத்தையன்றி நல்ல பொருள்களைக் கழுகினால் காண வியலாதன்றோ! அதுபோல் ஆர்தர் நற்குணங்கள் அவள் கண்ணுக்குப் படாமல் அரசி அவரை வஞ்சித் தொழுகுவதை அவர் அறிய முடியாதிருந்தனர் என்ற குறை மட்டுமே அவள் கண்களுக்குப் பட்டது. கினீவீயரின் வஞ்சனைக்கு ஆளானவர் தன் வஞ்சனைக்கும் உட்படுவார்’ என அவள் நினைத்தாள். ஆனால், உலகில் வஞ்சனை என்ற ஒன்று உண்டு என்பதைக்கூட அறியாத தூயமனமுடைய ஆர்தர் அவளை ஏறிட்டுக் கூடப் பாராமல் உதறித் தள்ளினார். இதனால் சினங்கொண்ட அவள், பார்; உன் ஒழுக்கக் கோட்டையின் வேரையே அழித்துவிடுகிறேன், என்று உள்ளத்துக்குள் வஞ்சினங் கூறிக்கொண்டாள். ஆர்தர் ஒழுக்கக் கோட்டைக்கு வேராயிருந்தவன் மெர்லினேயென்று விவியன் அறிவாள். அவன் இயற்கையின் புதைந்த அறிவனைத்தும் திரண்ட உருக்கொண்டது போன்றவன்; நாத்திறமிக்க கவிஞன்; கைத்திறமும் வினைத்திறமும் வாய்ந்த சிற்பி. அவன் மாயமும் மந்திரமும் அறிந்த வனாயினும் அவற்றை நல்லறிவு வகையிலும் உலக நலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்திய அருளாளன். ஆயினும், கதிரவன்போல் உலகெங்கும் ஒளிபரப்பும் அவன் புகழைக் கைக்குடை மறைப்பதுபோலத் தன் சூழ்ச்சியால் அவன் புகழை மறைத்துவிட விவியன் துணிந்தாள். மலையில் வளை தோண்ட எண்ணும் எலியைப்போல மெர்லினை எப்பகுதியில் தாக்கலாம் என்று அவள் தன் திறமெல்லாம் கூட்டிக் கொண்டு ஆராய முயன்றாள். வெளிப்பார்வைக்குக் குழந்தைபோல் ஊடாடும் அவள் விளையாட்டியல்பும் நாநலமும் இவ்வகையில் அவளுக்கு ஓரளவு உதவின. அவள் மெர்லினுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவனைச் சுற்றிச் சுற்றித் திரிவாள். அவன் செல்லுமிடமெல்லாம் சென்று அவனைச் சுற்றிப் பாடி ஆடுவாள். அவனைத் தந்தை என்றழைத்துப் பிள்ளைபோலக் கொஞ்சி மழலையாடுவாள். அவனையே தன் ஆசிரியரெனக்கொண்டு தனக்குக் கல்வி கற்பிக்கும்படி கோருவாள். மெர்லின் கூரறிவு அவள் வெறுமை, கீழ்மை, வஞ்சம் ஆகியவற்றை எளிதில் கண்டுகொண்டது. ஆயினும், அறிவுக்கன்றி அன்புக்கு அவ்வளவு இடம் இதுவரை ஏற்பட்டிராத அவன் மனம் அவள் குழந்தை நடிப்பிலும் அரைகுறை மழலைச் சொற்களிலும் ஈடுபட்டது. அவன் தன் மாயத்தால் பெண்களையும் குழந்தைகளையும் களிப்பூட்டத்தக்க சிறிய வித்தைகள் சிலவற்றை அவளிடம் பொழுதுபோக்காகக் காட்டினான். அவற்றைக்கண்டு மிகவும் களித்து வியப்பவள் போலப் பாசாங்கு செய்து விவியன் அவனை இன்னும் ஊக்கி மென்மேலும் பலவகை வித்தைகள் காட்டும்படிக் கூறினாள். அவ்வப்போது பேச்சை இவ்வித்தைகளின்பாலும் மாய மந்திரங்களின்பாலும் திருப்புவாள். அப்போது ஒவ்வொரு சமயம் அவன் தன்னை மறந்து பலவகைப் புதுப்புது வகையான மாயங்களைப்பற்றிப் பேசுவான். அவற்றுளொன்று, பிறரை வசப்படுத்திச் செயலற்றுப் போகும்படி செய்வது. இதைப்பற்றிக் கேட்டது முதலே விவியனின் விளையாட்டு நடிப்பிடையே வெற்றி நடிப்புக் கணப்போதில் கருக்கொண்டு வளைந்து வளர்ந்தது. எப்பாடுபட்டாவது இவ்வொரு வித்தையைக் கற்றுக் கொண்டுவிட்டால் கற்பித்த ஆசிரியனாகிய அவனை நடைப்பிணமாக்கி ஆர்தர் நோக்கங்களை நிறைவேற்றிவைக்கும் வலக்கையாகிய அவனை ஒழித்து விடலாம் என்று அவள் எண்ணினாள். இவ்வெண்ணத்துடன் அதுபற்றி அடிக்கடிப் பேசி, அதனை அவன் வெளியிடும்படி வற்புறுத்தலானாள். விளையாட்டு மிஞ்சிவிட்டது எனக்கண்டு மெர்லின் பேச்சைமாற்றி மறைக்கப் பார்த்தான்; பின் அவளுடன் பேசுவதையே நிறுத்திப் பார்த்தான். ஆனால், அவன் மாயத்திலும் தன் மாயத்தை அவள் பரக்க விரித்து முற்றுகையிடுவது கண்டதே அவன் அவளறியாமல் அவளை விட்டு விலகி வெளிநாடு சென்றான். ஆனால், விவியன் அவன் போக்கு முற்றிலும் மறைந்திருந்து கவனித்து அவனறியாமல் அவனைத் தொடர்ந்தாள். இருவரும் தம்மிடத்திலிருந்து நெடுந்தொலை விலகிக் காட்டிற்குச் சென்றபின், மெர்லின் மனதயர்ந்திருக்கும் சமயம் பார்த்து, அவள் அவன்முன் சென்று, “நான் சிறுபிள்ளை என்று நினைத்து இப்படி ஏமாற்றவேண்டா” என்றும், “ஆண்டில் இளையளாயினும் அன்பில் முதிர்ச்சியுடையவளான படியினாலே நான் உன்னைத் தொடர்ந்து வரமுடிந்தது,” என்றும் கூறி முன்போல் அளவளாவினாள். மெரிலினைத் தான் உண்மையிலேயே தந்தையாக எண்ணிவிட்டதாக அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறினாள். மேலும் என்னை நீ வெறுக் கும்படி நான் செய்த குற்றம் என்ன?’ என்று அவள் மன்றாடிக் கேட்டாள். தன்மீது அவன் ஐயப்படுவதாகக் கேட்டதே மிகவும் ஆத்திரம் கொண்டவள் போல் நடித்து அழுதாள். தான் மந்திரத்தை அறியமுயல்வது விளை யாட்டாகவே யென்றும், தன்மீது ஐயங்கொள்வது தகாதென்றும் அவள் வாதிட்டு அவன் மனத்திலுள்ள ஐயத்தைப் போக்க முயன்றாள். “என் அன்பை எவ்வகையில் வேண்டுமாயினும் தேர்வுக்கு உள்ளாக்குங்கள். நான் யாரிடமும் பற்றுக்கொள்ளாத கன்னி.தாய் தந்தை யாரென்று அறியேன். பாசங்காட்ட உடன்பிறந்தார்கூடக் கிடையாது. உம்மிடமே என் முழு அன்பையும் வைத்தேன். உமக்காக என் உயிரையும் கொடுப்பேன். இப்படியிருக்க என் அன்பை ஏற்று அதற்குக் கைம்மாறாய் என்னை நம்புவதாகக் காட்டி அம்மந்திரத்தை எனக்குக் கற்பிக்கக் கூடாதா?” என்று அவள் மன்றாடினாள். ஒருநாள் புயலும் மழையும் எண்டிசையும் ஒரு திசையாக்கி அதிர்ந்தது. அவர்கள் ஒரு படர்ந்த மரத்தின் பிளவில் ஒதுங்கினர். விவியன், மெர்லினின் கால்களைக் கட்டிக்கொண்டு, இன்று நாம் இறப்பினும் இறக்கக்கூடும். உமக்குப் பிள்ளையில்லை; எனக்குத் தந்தையில்லை; இருவருக்கும் இறுதிபோல் தோன்றும் இவ்விறுதி நாளில் என் வேண்டுகோளை நிறைவேற்றி ஒரு சில நொடிகள் என் உள்ளத்திற்கு நிறைவு தரப்படாதா?’ என்று குறையிரந்தாள். மெர்லின் மனம் பலவகையில் கலங்கியிருந்தது. பல நாள் மனத்துயரில் உண்டியும் நீருமில்லாதிருந்ததால் கண்கள் பஞ்சடைந்தன. விவியன் பேச்சும் விளையாட்டும் மட்டுமே அவனுக்கு ஊசலாடும் உயிரிடமாகத் தோற்றின. அவன் அறிந்தும் அறியாமலும் அவளுக்கு அம்மந்திரத்தை ஓதுவித்து அதனைப் பயன்படுத்தும் வகையையும் கற்பித்தான். அவள் மன நிறைந்தது போல் பாசாங்கிட்டு, எங்கே அதன் உண்மையைச் சற்றறிகிறேன்; என்று அதைக் கையாடிப் பார்ப்பதுபோல் இறுதியாட்டத்தை முற்றுவித்தாள். மெர்லினும் அவன் மாயமும் அறிவியலும் ஆற்றலும் அவனுக்குப் பன்மடங்கு கீழ்ப்பட்ட அச்சிறு கள்ளியின் மாயத்திற்குக் கட்டுப்பட்டு அம் மரத்திலேயே புதையுண்டன. எலி, மலையைச் சிறைப்படுத்தியதுபோல் தனக்கு மந்திரங் கற்பித்த ஆசானைச் சிறைப்படுத்தி நடைப்பிணமாக்கி அவள் வெற்றியுடன் ஆர்தர் நகராகிய காமிலட்டுக்கு மீண்டு வந்தாள். அதுமுதல் ஆர்தரின் ஒழுக்கக் கோட்டையில் ஒழுக்கக்கேடு பெருகி அழிவுப்பயிர் வளரலாயிற்று. 8. லான்ஸிலட்டும் ஈலேயினும் பிரிட்டனின் பேரரசரான ஆர்தர், கார்ன்வாலையடுத்த லையானீஸ்48 என்ற நாட்டில் வாழ்ந்து வந்த தம் வளர்ப்புத் தந்தையாகிய ஆண்டன் பெருந்தகை மாளிகைக்குச் சென்று தம் (வளர்ப்பு) உடன்பிறந்தாருடன் பொழுதுபோக்கியிருந்தார். ஒருநாள் அவர் தாம் இளமையில் திரிந்த காடுகளில் சென்று நெடுநேரம் உலாவினார். உச்சிவேளையாயிற்று. ஆயினும் எதிர்காலக் கனவுகளிலாழ்ந்து கால் சென்ற வழியே சென்றதனால் அவர் வழிதப்பி அதற்குமுன் நெடுநாள் மனிதர் கால்படாத ஒரு குன்றின் அருகே வந்து விட்டார். அக்குன்றில் ஒருகாலத்தில் ஓர் அரசனும் அவன் உடன்பிறந்தானும் நாட்டின் அரசிருக்கைக்காக ஒருவரை ஒருவர் வாளுக்கு மற்றவர் ஒரே சமயத்தில் இரையாய் விட்டதாகக் கூறப்பட்டது. அக்கொடியர் இருவர் உயிர்களும் பேயாய் நின்று ஒருவரை ஒருவர் அதட்டி வந்ததாக மக்கள் கூறலாயினர். ஆகவே அவ்விடத்தில் இரவிலன்றிப் பகலில்கூட யாரும் செல்வதில்லை. ஆர்தர் இக் கதையைக் கேட்டிருந்தாரானாலும் தாம் செல்லும் அக்குன்றுதான் அஃது என்பது அவருக்குத் தெரியாது. தெரிந்தாற்கூட அச்சம் என்பதே இன்னது என்று அறியாத தூய வீரனாகிய அவர் பின்னடைந்திருப்பார் என்று சொல்வதற் கில்லை. மற்றும் தீக்குணங்களாகிய அகப்பேய் உள்ளத்திருந்தால் அல்லவோ புறப்பேய்கள் அணுகும். அரசர் குன்றையெல்லாம் சுற்றிப் பார்த்தபின் அதன் சாரலில் ஓர் அழகிய ஏரியைக் கண்டு அதனை நோக்கி இறங்கி வந்தார். அப்போது அவர் காலிற்பட்டு ஏதோ ஒன்று நொறுங்கிற்று. அவர் குனிந்து அது யாதென்று நோக்க அது நெடுநாள் வெயிலாலும் மழையாலும் கிடந்து இற்றுப்போன ஒரு மனிதன் எலும்புக்கூடு என்று கண்டார். (அஃது உண்மையில் நாம் மேற்கூறிய அரசன் எலும்புக்கூடே.) அவ்வெலும்புக் கூட்டினின்று ஆர்தர் கவனத்தை இன்னோர் ஓசை ஈர்த்தது. எலும்புக் கூட்டி லிருந்து பளபளப்பான வளையம்போன்ற ஏதோ ஒன்று உருண்டு உருண்டு சென்றது. ஆர்தர் அதன்பின் ஓடிப்போய் அதனை எடுத்துப் பார்த்தார். அதுவே இறந்த அரசன் மணிமுடி. அதில் ஒன்பது வைரமணிகள் பதித்திருந்தன. தந்நல மில்லாத் தகையாளரான ஆர்தர் அவ்வுயர்ந்த பொருளை உயரிய முறையில் நாட்டுக்குப் பயன்படுமாறு செய்ய எண்ணி ஆண்டு தோறும் தம்வீரரையும் நாட்டில் உள்ள பிறரையும் போட்டிப் பந்தயங்களிலீடு படுத்தி வெற்றி பெற்றவர்க்கு அம்மணிமுடியின் வைர மணிகளை ஒவ்வொன் றாகப் பரிசளித்தார். எட்டாண்டுகளாக லான்ஸிலட்டே போட்டியில் வெற்றி பெற்று, எட்டு மணிகளையும் பெற்றார். அவர் இல் வாழ்விலீடுபடாதிருந்த நிலையில் அவற்றை அரசியிடமே காணிக்கையாகச் செலுத்தி யிருந்தார். ஒன்பதாவது மணி யையும் அவரே பெறுவார் என்று யாவரும் உறுதி கொண்டிருந்தனர். லாரும் அதற்காகக் காமிலட்டுக்குப் புறப்பட்டனர். அரசிக்கு உடல் நலமில்லாததனால் உடன்போகக் கூடவில்லை. அது கண்ட லான்ஸிலட் தனக்கும் உடல் நலமில்லை என்று சாக்கு கூறிப் பின்தங்கினர். அரசர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஆனால், எட்டு மணிகளையும் காணிக்கையாய்ப் பெற்ற அரசிக்கு ஒன்பதாவதும் எல்லா வற்றிலும் மிகப் பெரிதானதுமான கடைசி மணியையும் பெற்று ஆரமாக அணியவேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று. ஆகவே, அவள் லான்ஸிலட்டை விழாவிற்குப் போகும்படி வற் புறுத்தலானாள். லான்ஸிலட் : அம்மணி? இப்போது நான் என்ன செய்யட்டும்? அரசர் கூறியபோது பிடிவாதமாக மறுத்துவிட்டு இப்போது போனால் அவர் மனம் எப்படியாயிருக்கும்? அரசி: இதுவா பெரிய தடை, அதற்கு எளிதில் நான் வகைசொல்லித் தருகிறேன். எல்லாரும் என்னை லான்ஸிலட் என்றறிந்து வெற்றியை எளிதில் விட்டு விடுகிறார்கள். இதனால், இகழுரைக்கும் அவமதிப்புக்கும் இடம் ஏற்படுகிறது. ஆகவே ஆளுடை தெரியாத வகையில் மாற்றுருவில் வந்து போட்டியிட எண்ணினேன்’ என்று சொல்லிக் கொள்க! அதற்கேற்பக் கேடயத்தையும் மாற்றிக்கொண்டு செல்க. லான்ஸிலட் சரி என்று புறப்பட்டார். ஆளடையாளம் அறியாமலிருக்கும்படி லான்ஸிலட் நேர்வழிவிட்டுச் சுற்றுவழிகளினூடாகச் சென்றார். அதில் வழி தவறி எங்கு வருகிறோம் என்று தெரியாமலேயே ஒரு மாளிகையுள் நுழைந்தார். அங்கிருந்த ஒரு கிழவர் அவரை வரவேற்று உள் அழைத்துச் சென்றார். அம் மாளிகை ஆஸ்டொலட் மாளிகை49 என்பது; அதன் தலைவரே அக்கிழவர். அவருக்கு டார்50 லவேயின்51 என்ற இரு புதல்வரும், அல்லி மங்கை52 என்றழைக்கப் பட்ட ஈலேயின்53 என்ற புதல்வியுமுண்டு. லான்ஸிலட் உள் நுழைந்தபோது அவர்கள் யாரோ ஒருவர் பேசிய துணுக்குப் பேச்சைக்கேட்டுக் கலகலவென்று அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். லான்ஸிலட் பெருந்தகை தமக்கு அவ்விடம் புதிதாகவும் ஆள்கள் புதியவராகவும் தோற்றவே அதனைப் பயன்படுத்தித் தம் பெயரை மறைத்துக் கொண்டார். அதோடு தாம் ஆளடையாள மறியாமல் விழாவுக்குச் செல்ல விரும்புவதால் கேடயத்தை அங்கேயே வைத்துவிட்டு, வேறு கேடயம் கொண்டுபோக விரும்புவதாகவும் அவர் கோரினார். டார்ப் பெருந்தகை முதல் ஆண்டுப் போட்டி விழாவில் காயமுற்றுப் போரில் கலக்கமுடியாமல் போய்விட்டதால் அவன் கேடயம் லான்ஸிலட்டுக்குக் கொடுக்கப்பட்டது. லான்ஸிலட் சற்று ஆண்டு சென்றவராயினும் ஆஸ்டொலட் குடியின் செல்வக் குழந்தையாகிய ஈலேயின் மனத்தில் அவர்மீது பேரார்வம் ஏற்பட்டது. அவளைக் குழந்தை என்ற முறையில் லான்ஸிலட் தங்கைபோல் பரிவுடன் பாராட்டியதை அவள் தப்பாகப் புரிந்து கொண்டாள். தன் இளங்குழந்தை மனத்தில் அவர்மீது கொண்ட பற்றுதலுக்கு அவள் நீர்வார்த்து அதனை வளர்த்து வந்தாள். பெண்கள் தாம் விரும்பிய தலைவருக்கு அல்லது உறவினர்க்கு விழாவிலணியத் தம் கைக்குட்டையைக் கொடுப்பது வழக்கம். அவளும் அதன்படி லான்ஸிலட்டுக்குத் தன் கைக்குட்டையைக் கொடுத்தாள். லான்ஸிலட், கினிவீயருக்கு முன் கொடுத்த உறுதிமொழியை எண்ணி நான் இதுவரை எந்த மங்கையின் அறிகுறியையும் அணிந்ததில்லை’ என்றார். உடனே அவள் திறம்படி, அப்படியாயின் இப்போது என் அறிகுறியை அணிந்தபின் உம்மை யாரும் அறவே அறிந்து கொள்ள மாட்டார்கள்,’ என்றாள். அஃது உண்மையே என்று கண்டு லான்ஸிலட் இணங்கினார். வற்புறுத்தி வழக்காடிப் பெற்ற அவ்வெற்றியைக் கூட அப்பேதை தன் காதலின் வெற்றி எனக் கொண்டாள். போட்டி விழாவில் லான்ஸிலட் மற்றோர் புதிய வீரனென்று அவர் உறவினரும் நண்பரும் நினைத்தனர். தம் லான்ஸிலட்டின் புகழைக் கொள்ளைகொள்ள இவன் யார் என்று தருக்கி அவர்கள் போட்டியில் அவர் வெற்றி பெறும்போதெல்லாம் அவரை வெறிகொண்டு ஒற்றுமையுடன் தாக்கினர். அப்படியும் தோலா வீரரான லான்ஸிலட்டே வெற்றிகொண்டவ ராயினும் பலநாள் உயிருக்கு மன்றாடும் நிலையில் படுகாயப்பட்டார். வெற்றியறிகுறியாகிய மணியைக்கூடப் பெறாமல் அவர் லவேயினுடன் பக்கத்திலுள்ள ஒரு துறவியின் மடத்தில் சென்று தங்கினார். லான்ஸிலட் இங்கே இங்ஙனம் இருக்க ஈலேயின் ஆஸ்டொலட்டில் லான்ஸிலட்டையே எண்ணி எண்ணித் தன் மனக்கோயிலில் அவர் உருவை வைத்து வழிபடலானாள். அவர் பெயரை அவள் அறியாவிட்டாலும் ஆர்தர் வட்ட மேடையில் அவரே முதன்மை வாய்ந்த வீரராய் இருக்க வேண்டும் என அவள் உறுதியாக நம்பினாள். தன்னிடம் விட்டுப்போன கேடயத்தை அவர் காதலுக்கு அறிகுறி என எண்ணி அதனை அவள் ஓயாது எடுப்பதும் துடைப்பதும் அதிலுள்ள மூன்று அரிமாக்களின் படத்தைப் பார்த்து அவரைப்பற்றி மனக்கோட்டைகள் கட்டுவதுமாயிருந்தாள். அக்கேடயம் அழுக்குப்படாமலிருக்க அவள் தன் சிறந்த பொன்னாடை ஒன்றைக் கொண்டே அதற்கு உறைசெய்து அதில் அவர் கேடயத்தின் படங்களைத் தீட்டிப் பூ வேலைகளைச் செய்து மினுக்கினாள். இங்ஙனம் நொடிகளையெல்லாம் ஊழிகளாகக் கழித்து நாள்கள் பல சென்றதால் அவள் மனத்துக்குள், ‘அவள் வெற்றியடைந்தாரா? ஏன் வரவில்லை? என்றெல்லாம் கவலை கொண்டாள். லான்ஸிலட்டோ என்று யாவரும் எண்ணும்படி வியக்கத்தக்க முறையில் புதிய வீரனைப் பாராட்டி ஆர்தர் அவருக்கு மணியை அளிக்க எண்ணி அவரை அழைத்துப் பார்த்தார். புதியவீரர் மணியைப் புறக்கணித்துச் சென்றதும், அவர் உயிருக்கே மோசமான நிலையில் படுகாயமடைந்து கிடந்தார் என்று கேட்டதும் அவர் ஆர்வத்தைப் பின்னும் மிகைப்படுத்தின. உரிமைப்படி எப்படியும் மணியை வெற்றி பெற்றவருக்குக் கொடுத்தாக வேண்டும் என்றெண்ணிய ஆர்தர் தம் சிற்றப்பன் பிள்ளையாகிய கவெயினிடம்54 அதைக் கொடுத்து அவரைப் பாராட்டி வருமாறு அனுப்பினார். கவெயின் பல இடங்களிலும் சுற்றித் திரிந்து புதிய வீரரைக் காணாமல் ஓய்ந்து தற்செயலாக ஆஸ்டொலட் வந்தார். ஈலேயினும் ஆவலுடன் போட்டி விழாவின் முடிவென்ன என்று கேட்டாள். ஆளடையாளமற்ற புதிய வீரர் ஒருவர் வெற்றி பெற்றாரென்று கேட்டதே அவள் மகிழ்ச்சிப் பெருக்கால் தனக்கு அவர் மீதே காதலென்பதையும், அவர் கேடயம் தன்னிடமே இருந்தது என்பதையும் வெளியிட்டுக் கூறி அக்கேடயத்தையும் காட்டினாள். கவெயின் அதன் மூன்று அரிமாக்களைக் கண்டு, ‘ஆ! நான் எண்ணியது சரி; இது லான்ஸிலட்டன்றி வேறன்று; என்றார். ஈலேயினும் நான் எண்ணியதும் சரி; என் தலைவர் ஆர்தர் மேடையில் முதன்மை வாய்ந்த வீரரே, என்றாள். கவெயின் சோம்பேறி யாதலால், பின்னும் லான்ஸிலட்டைத் தேடவேண்டியதில்லை, என்று மணியை ஈலேயினிடமே கொடுத்தார். அத்துடன் அவரிடம் நாரதர் பண்பும் சற்று இருந்ததால் லான்ஸிலட்டுக்கு ஒரு காதலி ஏற்பட்டுவிட்டதை அரண்மனை எங்கும் பறைசாற்றிக் கினிவீயரிடமும் கூறிவிட்டார். அரசியாகும் பேரவாவால் கினிவீயர் லான்ஸிலட்டைத் துறக்கத் துணியினும் தன்னலமும் தன் போக்கும் மிக்க அவள் அவர்மட்டும் தம் காதலொப்பந்தத்தை விடாதபடி அவர்மீது உரிமை செலுத்தி வந்தாள். ஆகவே, அவர் தன்னையன்றி இன்னொரு பெண்ணின் காதலில் ஈடுபட்டார் என்று கேட்டதுமே அவள் அவர்மீது பெருஞ்சினங்கொண்டாள். ஈலேயின் லான்ஸிலட் படுகாயமடைந்தார் என்று கேள்விப்பட்டது முதல் ஆஸ்டொலட்டில் அவள் கால் தரிக்கவில்லை. தந்தையிடம் சென்று அவள் தானே அவரைப் பக்கத்திலிருந்து பார்க்கவேண்டுமென்று முரண்டினாள். குடும்பத்தின் ஒரே பெண்ணாகிய அவள் சொல்லை அவள் தந்தையும் சரி, தமையன்மாரும் சரி என்றும் தட்டுவதில்லை. எனவே, டார்ப் பெருந்தகையுடன் அவள் துறவியின் மடத்துக்கு அனுப்பப்பட்டாள். லான்ஸிலட்டின் நிலைமை கண்டு அவள் மிகவும் கலங்கிப்போனாள். ஆயினும் அவள் காட்டிய பரிவும் களங்கமற்ற பற்றுதலும் காதல் வாழ்வில் முறிவுற்றுச் சோர்ந்த லான்ஸிலட்டின் உள்ளத்துக்குக் கிளர்ச்சி தந்ததனால் அவர் விரைவில் உடல்நலமுற்றார். முற்றிலும் அவள்மீது அவர் காதல் கொள்ள முடியாவிடினும் தன்னல மிக்க கினிவீயரின் கட்டுப்பாடு இல்லாதிருந்தால் லான்ஸிலட் அவள் காதலை ஏற்று அவளுக்காவது நல்வாழ்வு கொடுத்திருக்கக்கூடும். அது முடியாது போகவே அவள் மனத்தை வேறு வகையில் திருப்பிவிடலாம் என்று லான்ஸிலட் அரும்பாடு பட்டார். தாம் அவளைத் தங்கையாகவே நேசிப்பதாகவும் அவளைவிட மூன்று மடங்கு ஆண்டுடைய தன்னை மறந்து அவளுடனொத்த வேறோர் இளைஞனையே மணக்கும்படியும் அவர் கூறிப்பார்த்தார். ஒன்றும் பயனில்லாமல் போகலாயிற்று. அவள் தந்தையும் உடன் பிறந்தாரும் கூடக் கவலை கொண்டனர். சிறு பிள்ளைத் தனமான சிறுவிருப்பத்தை நயமாகப் பேசி முறிப்பதைவிடக் கடுமையாக நடப்பதாலேயே எளிதில் முறித்தல்கூடும் என்று லான்ஸிலட்டிடம் அவள் தந்தை கூறினார். அதன்படி லான்ஸிலட் மற்றெல்லாரிடமும் விடைபெற்றுச் செல்லும்போது ஈலேயினிடம் மட்டும் சொல்லாமல் சென்றுவிட்டார். மேலும் அவர் கேடயத்துக்கு அவள் அரும்பாடு பட்டுத் தைத்த உறையை எறிந்து விட்டுக் கேடயத்தை மட்டுமே கொண்டுபோனார். லான்ஸிலட்டும் ஈலேயின் தந்தையும் நினைத்தபடி கடுமை யால் ஈலேயின் காதல் முறிவு பெறவில்லை. அவள் காதலுள்ளம் தான் முறிவுற்றது. ஆனையுண்ட விளங்கனிபோல் அவள் உடலும் உள்ளூர நோயுற்று, அஃது ஒரு வார காலத்திற்குள் காலன் அழைப்பைப் பெற்றது. இதற்கு முன் அவள் தந்தையிடம் தன் கடைசி விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டாள். அவள் தன் இறந்த உடலை வெண்பூக்களாலும் வெள்ளாடை அணி மணிகளாலும் அணி செய்வித்துப் பூம்படகொன்றில் வைத்துக் காமிலட்டுக்கு லான்ஸிலட்டிடம் அனுப்புமாறு அவர்களிடம் கோரினாள். அதோடு அவள் தன் காதல் வரலாற்றைத் தெரிவித்துத் திருமுகம் எழுதி அதனைத் தன் கையில் வைத்தனுப்ப ஏற்பாடு செய்தாள். காமிலட்டில் தம் வீரருடனும் லான்ஸிலட்டுடனும் அரசியுடனும் இருந்த ஆர்தர், கண்காண ஈலேயின் ஆற்றணங்கே பவனி வருவதுபோல் ஆற்றில் மிதந்து வந்தாள். அவள் கையிலிருந்து கடிதத்தை ஆர்தர் எல்லோருமறிய வாசிக்கச் செய்தார். அதன் மூலம் அவள் காதலின் ஆழமும் லான்ஸிலட்டின் புறக்கணிப்பும் கொடுமையும் யாவருக்கும் புலனாயிற்று. கினிவீயர் அரசியின் சினமும் மாறிற்று. ஆயினும், லான்ஸிலட் மனநிலை யாவர் சினத்திற்கும் வெறுப்புக்கும் அப்பாற் சென்றுவிட்டது. அவர் தம் வாழ்க்கையின் வெற்றிகளையும் பெருமைகளையும் எண்ணினார். ஒரு மாதின் கவலையால் மெலிந்த ஈலேயின் தன்னலத்தால் ஒப்பற்ற ஒரு நறுமலர் மலர்ச்சியடையாமல் வாடிப்போகும்படி நேர்ந்ததையும் எண்ணி எண்ணி மன மாழ்கினார். ஆர்தரின் வீரமிக்க உலகில் வெற்றிவீரர் என்று பேர்வாங்கிய அவர், அந்த உலகிலேயே ஏழேழ் நரகினுங் காணமுடியாத துன்பமெய்தி நடைப்பிணமாக வாழ்ந்தார். 9. தெய்வீகத் திருக்கலம் ஆர்தர் தம் ஆற்றலால் பிரிட்டனில் தம் அரசாட்சியை நிலைநிறுத்துவதுடன் அமையாது தெய்வ அருள்வழி நின்று அருளாட்சியும் நிறுவ எண்ணினார். இயnசுபெருமானின் திரு அடியவருள் ஒருவரான அரிமாத்தியா யோஸப் என்பவன் இயேசுவின் திருக்குருதி யடங்கிய கலமொன்றைப் பிரிட்டனுக்குக் கொண்டு வந்திருந்தான். அஃது, அருளாளர்க்கன்றிப் பிறர்க்குக் காணவும் கிட்டாதது. தம் நற்செயலாலும் உள்ளத் தூய்மையாலும் தம் வீரர் அருள் நிறைவாலும் இதனை அடையவேண்டும் என்று ஆர்தர் எண்ணினார். ஆனால், அவர் எவ்வளவோ தூய்மையுடையவ ராயினும் அவரைச் சார்ந்தோர் உள்ளத்தின் மாசு காரணமாக அதனை அவர் பெறக்கூடாதிருந்தது. ஆர்தர் வாழ்வில் மாசு படரக் காரணமாயிருந்தவர்களுள் தலைமையானவர்கள் கினிவீயர் அரசியும் லான்ஸிலட்டும் ஆவர். அரசி உள்ளத்தில் கறை மிகுதி; ஆனால், லான்ஸிலட் உள்ள உயர்வுடையவர். அவள் பொய்மைக்காட்பட்டே அவர் கறைப்பட்டார். இந்நிலையில் அவரிடம் தூய காதல் கொண்ட ஒரு மாதின் மூலம் அவருக்குக் கலஹாட் என்ற ஒரு சிறுவன் தோன்றினான். அரசியின் பொறாமைக்கஞ்சிய லான்ஸிலட், தாம் மறைவில் மணந்த அம் மாதையோ அதன் பயனாய்ப் பிறந்த புதல்வனையோ ஏற்கமுடியாதவராயிருந்தனர். ஆயினும், வீரத்திலும் நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கலஹாட் புகழ் ஓங்குந்தோறும் அவர் உள்ளூர மகிழ்ச்சி அடைந்தார். ஆர்தாராலும் அவர் வீரர் பலராலும் காணமுடியாத திருக்கலத்தை இவன் கண்டு அதன் ஒளியில் இரண்டறக் கலப்பான் என்று எதிர்கால நுனித்தறியும் அறிஞர் கூறக்கேட்டு, அவர் இன்னும் மகிழ்ச்சியடைந்தார். மெர்லின் அமைத்த ஆர்தர் வட்டமேடையைச் சுற்றியிருந்த நூறு இருக்கைகளில் தொண்ணூற்றென்பது நிறைவடைந்தும் இன்னும் ஒன்று நிறைவடையாமலே இருந்தது. அது பொன்னாலான இருக்கை. அதன்மீது மணிகள் அழுத்திய எழுத்துகளில், ‘மாசற்ற தூய அருள் வீரனே இதில் அமரலாம் என்று எழுதியருந்தது. ஒருநாள் ஆர்தர் கொலுவிருக்கையில் திடுமெனக் கதவுகள் அடைத்துக்கொண்டன. அவ்வரையிருளில் ஒளிவீசும் வெண்பட்டாடை அணிந்த முதியோன் ஒருவன் பால்வழிந் தோடும் இளமுகமுடைய சிறுவனொருவனை உடன் கொண்டு வந்து, ‘இவனே பிரிட்டனில் யாவரினும் தூய உள்ளமுடைய கன்னிவீரன். வட்டமேடைப் பொன்னிருக்கை இவனுக்கே உரியது’, என்றான். அச்சிறுவனே கலஹாட் பெருந்தகை. அவ்விருக்கையிலும் அப்போது ‘இது கலஹாட் பெருந்தகையின் இருக்கை’ என்ற மணி எழுத்துகள் காணப்பட்டன. அதேசமயம் வாள்பதித்த கல் ஒன்று ஆற்றில் மிதப்பதாக ஒருவன் வந்து கூறினான். அதன்மீது ‘இதை உருவுபவன் திருக்கலத்தை அடைவதற் குரியவன்,’ என்றெழுதப்பட்டிருந்தது. மனத்தில் கறையுடைய பலரும் சென்று தோல்வியுறவே அனைவரும் வியப்படைந்தனர். (அஃது அரசியின் பொய்ம்மையினால் அவருக்கு நேர்ந்த இழுக்கு என்பதனை அவர்கள் அறியார்) லான்ஸிலட்டோ தம்குற்றம் தாமறிந்தவராதலால் மறுத்துவிட்டார். கலஹாட் அனைவரும் காண அதனை எடுத்துக்கொண்டான். இதன்பின் திருக்கலம் ஒருநாள் அனைவர் கண்முன்னும் ஒரு கணம் கோடி ஞாயிறு திங்கள் தோன்றினாற் போன்ற ஒளிவீசிக் காட்சியளித்து மறைந்தது. அதன்மீது பட்டுத்துணி போர்த்திருந்தும் அஃது அவர்கள் கண்களைப் பறிக்கும் அழகுடையதாய் ஒளியும் மணமும் வீசியது. அதனைக் கண்டதே அனைவரும் அதனைச் சென்றடைய எண்ணிப் புறப்படலாயினர். ஆர்தருக்கு இம் முயற்சியில் ஆர்வமிகுதியாயினும் கவலையும் மிகுதியாயிற்று. வட்டமேடை வீரர் பலரும் இதனைக் காணத் தகுதியற்றவர்களாதலின் அவர்கள் மீள மாட்டார்கள். ஆதலால், அதன் இருக்கைகள் பல வெற்றிடமாய் விடுமே என்று அவர் வருந்தினார். கலஹாட் போன்ற சிலர் காணக்கூடும் என்று மகிழ்வும் கொண்டார். கலஹாட் முதலில் தம் வாளுக்கு இசைந்த கேடயத்தை நாடிச் சென்றார். உள்ளத்தூய்மையற்றவர் எடுத்தால் அவர்களை வீழ்த்தும் திறமுடைய கேடயமொன்று ஒரு மடத்திலிருப்பது கேட்டு அதனைக் காணச்சென்றார். அஃது அரிமாத்தியா ஜோஸப் இறக்கும்போது விட்டுச்சென்றது. அது தூய வெண்ணிறமுடையது. ஜோஸப் தம் குருதியால் அதில் சிவந்த சிலுவைக்குறியிட்டிருந்தார். அதனை எடுத்துக்கொண்டு பலநாள் பயணம் செய்து பல நாடுகளுக்கும் சென்றார். லான்ஸிலட் வழியில் ஒரு கோயிலின் பக்கத்தில் செல்லுகையில் பலகணி வழியாய் மூடப்பட்டிருந்த திருக் கிண்ணத்தைக் கண்டும் உள்ளே நுழைய முடியாது போனார். வெளியில் சோர்ந்து படுத்திருக்கையில் கனவில் மற்றுமொரு முறை அது தோற்றமளித்தது. ஆனால், அப்போதும் அதனை அணுக உடலில் ஆற்றலற்றுப் போயிற்று. அங்கிருந்து ஒரு மரக்கலத்திலேறிச் செல்கையில், கலஹாட் பெருந்தகை வந்து அவரைக் கண்டார். சிலநாள் தந்தையும் மகனும் அளவளாவியிருந்தனர். பின் வெண்கவசம் அணிந்த வீரன் தன் குதிரையில் வரும்படி கலஹாட்டை மட்டும் அழைக்க, அவர் லான்ஸிலட்டிடம் பிரியா விடை பெற்றுச் சென்றார். வழியில் கலஹாட் பெர்ஸிவல் பலீஸ் என்ற இருவரையும் கண்டு உடனழைத்துக்கொண்டு முன் லான்ஸிலட் கனாக் கண்ட இடமாகிய கர்போனெக் அரண்மனையை அடைந்தார். இவ்விடத்தில் முதியோன் ஒருவன் திருக்கலத்தை மூடியேந்திக் கொண்டுவந்து காட்சியளித்தான். பின் அவன் அவர்களிடம், “நீங்கள் அனைவரும் கப்பலேறி ஸாராஸ் நகரையடையுங்கள். அங்கு நீங்கள் அதனைத் திரையின்றி ஊனக் கண்ணால் காண்பீர்கள். மனிதர் அதனைக் கடைசியாகக் காண்பது அப்போதுதான். விரைவில் அது வானுலகம் சென்றுவிடும்” என்றனர். ஸாராஸ் நகரில் திருக்கலத்தைக் கலஹாட், கோயிலில் வெள்ளி மேடையில் வைத்து அதன் அருள்வலியால் நோய்களைப் போக்கி அறம்பெருக்கினன். ஆயினும், கொடுங்கோலனான அரசன் அவர்களைச் சிறையிட்டான். அவன் இறந்தபின் ஒருநாள் வானொலி ஒன்று கலஹாடின் தோழர்களை நோக்கி, ‘திருக்கலம் வானுலகு செல்லும் நேரம் வந்துவிட்டது; நீங்கள் இனி உங்கள் இடம் செல்லுதல் தகுதி’ என்றது. அதனைத் திரையின்றிக் காணும் அளவு தூய்மை பெறாத அவர்களும் விடைகொண்டு போயினர். கலஹாட் திருக்கலத்தின் முன் மண்டியிட்டு வணங்கிய போது அதன்மீதிருந்த திரையகன்று அதன் தண் ஒளி அவன் உடலையும் உளத்தையும் குளிர்வித்து நிறைத்தது. வானவர் எதிர்கொண்டழைப்பத் திருக்கலத்துடன் அவன் ஆவி மேலெழுந்து விண்ணுலகு சென்றது. லான்ஸிலட்டும், அதன்பின் பெர்ஸிவலும் பலிஸும் காமிலட் வந்து தாம் தாம் கண்ட அருங்காட்சிகளைக் கூறிக் கலஹாட்டுக்குக் கிடைத்த அரும்பெறற் பேற்றினைக் குறித்துப் புகழ்ந்தனர். அதுகேட்ட ஆர்தரும் மக்களும் மகிழ்ந்தனராயினும், மீண்டு வராத பலரையும், திருக்கலம் உலகினின்று மறைந்ததையும் எண்ணியபோது, கவலையின் மெல்லிய சாயல் அவர்கள் வாழ்வின் மீது படரலாயிற்று. 10. ஆர்தர் முடிவு ஆர்தர் வாழ்வுக்கு மெர்லின் விதைவிதைத்தான்; அவன் வீழ்ச்சிக்குக் கினிவீயர் விதைவிதைத்தாள். அவ்விதை லான்ஸிலட்டால் முளைவிட்டு விவியனால் உரம் பெற்று வளர்ந்து மாட்ரெடால் அறுவடையாயிற்று. மாட்ரெட்55 ஆர்தர் உடன்பிறந்தாளான பெல்லிஸென்ட் மகன். தம்நெருங்கிய உறவினனென்ற முறையில் ஆர்தர், அவனையே தமக்கடுத்த இளவரசனாக்க எண்ணினார். ஆனால், உரிமையுடன் அவர் அரசியற் செல்வத்தைப் பெறுவதற்கு மாறாக, அவரை அழித்துப்பெற எண்ணி அவனும் இறுதியில் அழிவுற்றான். பாற்கடலில் பிறந்த நஞ்சேபோல் ஆர்தர் குடியில் பிறந்த அவனிடம் கீழ்மையும் வஞ்சகமும் நன்றிகொன்ற தன்மையுமே மிகுந்திருந்தன. வஞ்சகன் யாரையும் வஞ்சமிழைப்பவர் என்று நினைப்பது இயற்கை. அதற்கேற்ப அவன் தன் தாய்தந்தையர் பேசும் மறைசொற்களைக் கூட ஒளிந்திருந்து கேட்கும் கயமையுடையவனாயிருந்தான். ஒரு நாள் கினிவீயர் அரசி தோழியர் சிலருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவன் மதிலேறிப் பதுங்கி அவர்கள் பேசுவதை உற்றுக்கேட்டான். அச் சமயம் அவ் வழியே வந்த லான்ஸிலட் அவனை வேறு யாரோ திருடன் என்றெண்ணிக் காலைப்பிடித்துக் கீழே மோதினர். அவன் அரசன் மகனென்று கண்டதும் வருந்தி, அவனிடம் மன்னிப்புக் கோரினார். மன்னிப்பு என்பதன் தன்மையையே அறியாத அக்கொடியோன் இதற்குப் பழிவாங்க எண்ணி அதற்காகக் காத்திருந்தான். விரைவில் அவனுக்கு அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. ஆர்தரின் பரந்த பேரரசின் ஒரு கோடியில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அதனையடக்கச்சென்ற அவர், தம் இடத்திலிருந்து ஆளும் உரிமையை மாட்ரெட்டுக்கே தந்துபோனார். இப்புதிய அரசுரிமையை முற்றிலும் பயன்படுத்தி லான்ஸிலட்டைப் பழிவாங்குவதுடன், ஆர்தர் நாட்டையும் கைக்கொள்ள அவன் சூழ்ச்சி செய்தான். லான்ஸிலட்டுக்குப் பிரான்ஸின்56 சில பகுதிகளில் குறுநில மன்னருரிமை உண்டு. அப்பகுதியில் கிளர்ச்சி ஏற்பட்டதாகப் பொய்க் கையொப்பமிட்டு மாட்ரெட், லான்ஸிலட்டுக்கு ஒரு கடிதம் வரும்படி செய்தான். ஏற்கெனவே லான்ஸிலட்டுக்கு அங்கே பல வேலையிருந்தும், காமிலட்டை விட்டுச் செல்ல மனமில்லாமல் பின்தங்கியிருந்தார். இப்போது இன்றியமையாத நிலைமை ஏற்பட்டுவிட்டதால் இதனை ஒட்டி அங்கே சென்று கிளர்ச்சியை அடக்குவதோடு நில்லாது சிலநாள் தங்கிப் பிற வேலைகளையும் முடித்துவர அவர் எண்ணினார். ஆகவே, அவர் கினிவீயர் அரசியிடம் சென்று பிரியாவிடை பெற்றார். கினிவீயர் அரசி அச்சமயம் லான்ஸிலட்டிடம், “நீ இல்லாமல் காமிலட்டில் நான் இருக்கமுடியாது. உன்னைப் பார்க்கும் ஆறுதலினாலேயே நான் வேண்டா வெறுப்பாக ஆர்தருடன் வாழ இசைந்தேன். இனி நீ இல்லாதபோது அவருடன் வாழ, அவரைக் காணக் கூடப் பொறுக்க முடியாது. ஆகவே, நான் ஆல்ம்ஸ்பரியிலுள்ள மடத்தில்57 சென்று என் மீதி நாளைக் கழித்து விடுகிறேன்” என்றாள். லான்ஸிலட் எவ்வளவு தடுத்தும் அவள் கேளாமல் அவ்வுறுதியிலேயே நின்றாள். லான்ஸிலட்டும் இறுதியாக விடைபெற்றுச் சென்றார். அவர்கள் தனிமையிலிருப்பதாக எண்ணி மறைவாகப் பேசிய அனைத்தையும் மாட்ரெட் மறைந்து நின்று கேட்டுக் கொண்டான். ஆகவே, கினிவீயர் தான் லான்ஸிலட்டிடம் கூறியபடியே யாருமறியாது மாற்றுருவில் ஆல்ம்ஸ்பரி சென்றதும், அவன் அவர்கள் தீய ஒழுக்கத்தை எங்கும் பறைசாற்றியதுடன் கினிவீயர் லான்ஸிலட்டுடனேயே ஓடிப்போய்விட்டாள் என்று துணிந்து ஒரு கதையும் கட்டி விட்டான். நற்செய்தியினும் தீச்செய்தி கடுகிச் செல்லும் இயல்புடையதாதலின் இப் பழியுரை நாடெங்கும் பரவிற்று. கிளர்ச்சிக்காரரை அடக்கிவிட்டுத் தம் நகரை நோக்கி மீண்டும் வந்துகொண்டிருந்த ஆர்தர் செவியிலும் இது படவே, அவர் காமிலட்டுக்கே வராமல் படை திரட்டி லான்ஸிலட்டின் குறுநிலக்கிழமைமீது படை எடுத்தார். லான்ஸிலட் தம் நிலக்கிழமை சென்றெட்டியதும் கிளர்ச்சி யெதுவும் இல்லை என்று கண்டார். ஆகவே, தமக்கு வந்த கடிதம் மாட்ரெட் சூழ்ச்சியால் அனுப்பிய கடிதம் என்பதை அறிந்துகொண்டார். அதன்பின் கினிவீயர் தம்முடனேயே வந்ததாகப் பரவிய கதை கேட்டு அவர் பின்னும் புண்பட்டார். ஆயினும், அவள் உண்மையிருப்பிடத்தை அவர் கூறவும் துணியவில்லையாதலால், யாரும் அவரை நம்பவில்லை. ஆர்தர்கூட, கினிவீயரை அவர் தம் கோட்டையில் ஒளித்து வைத்தார் என்றே நினைத்துப் போரெழுச்சியில் முனைந்தார். லான்ஸிலட் ஊழ்வலியால் நெறிதவறினும் வன்னெஞ் சருமல்லர்; வஞ்சகமும் தீங்கும் உடையவருமல்லர். தம் தோழரும் தலைவரும் தம் பிழையால் வாழ்விழந்தவருமான ஆர்தரை எதுவரினும் எதிர்க்க அவர் மறுத்தார். “என் நாடும் என் உயிரும் தங்களைச் சார்ந்தவை. அதோடு தங்களுக்கு மாறாப் பிழையும் செய்தேன். தங்களை எதிர்த்து மீண்டும் பிழை செய்யேன். என் நாட்டையும் உயிரையும் தாங்கள் கொண்டால், என் தீராக் கடனில் ஒரு பகுதியே தீரும். அங்ஙனமே கொள்க” என்று அவர் ஆர்தருக்குச் சொல்லியனுப்பினார். எதிர்த்தோரை மட்டுமே எதிர்க்கும் தூய வீரராகிய ஆர்தருக்கு, எத்தகைய தீங்கு செய்தவராயினும் கழிவிரக்கமும் தன்மறுப்பும் மிக்க தம் பழைய தோழராகிய லான்ஸிலட்டை எதிர்க்க மனமில்லை. ஆனால், ஆர்தர் மருமகனாகிய கவெயின்58 ஆர்தர் சார்பின் நின்று லான்ஸிலட் செய்த பழி லான்ஸிலட்டை அழித்தாலன்றிப் போகாது என்று முரண்டினான். அதோடு நேரில் லான்ஸிலட் கோட்டை வாயிலில் சென்று அவரை மற்போருக்கும் அழைத்தான். லான்ஸிலட் “எது வரினும் என் தலைவரை எதிர்த்துப் போரிடேன்; அவர் உறவினரை எதிர்த்தும் போரிடேன்” என்றார். பார்ஸ், லயோனெல் முதலிய பிற வீரர்கள்சென்றெதிர்த்தனர். ஆனால், லான்ஸிலட் வந்தபோது புலியை எதிர்த்த ஆடுகள்போல் அவர்கள் வெருண்டோட லாயினர். கவெயின் அது கண்டு, “நான் வந்தால் எளிதில் வெற்றி கிடையாதென்று லான்ஸிலட் ஒழுங்குமுறை பேசித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்” என்று வசைமொழி கூறினான். அதுகேட்டதே லான்ஸிலட் தம் உறுதியைக் கைவிட்டுக் கவெயினை எதிர்த்துப் போருக்கு வந்தார். கவெயின் மீண்டும் மீண்டும் காயமுற்றுத் தோல்வியுற்றும் விடாது குண மடைந்ததும் வந்து போரிட்டான். லான்ஸிலட்டும் அவமதித்த வனென்று எண்ணாது காயமுற்றபோதெல்லாம் எதிர்க்காது விட்டார். மூன்றாம் முறை கவெயின் காயமுற்றுக் கிடக்கையில் மாட்ரெட், ஆர்தருக் கெதிராகப் பின்னும் சூழ்ச்சி செய்து, அவர் லான்ஸிலட்டுடன் போராடி மாண்டார் என்ற கதையைப் பரப்பித் தன்னையே அரசனென விளம்பரம் செய்து கொண்டுவிட்டான். இச்செய்தி கேட்டதும் ஆர்தர் காமிலட்டை நோக்கிச் சென்று மாட்ரெட்டை முறியடித்துக் துரத்தினார். பேராவல் பிடித்த மாட்ரெட் தோற்றும் தன் சூழ்ச்சி முயற்சிகளை விடவில்லை. கினிவீயரின் பழியைக் கேட்டது முதல் பிரிட்டன் மக்களில் பெரும்பாலோர் அவர் தமக்குச் செய்த நன்மைகளை மறந்து, அவரை எதிர்க்கத் துணிந்தனர். ஆர்தர் வீரரால் முறியடிக்கப்பட்டவர்களும் அவர் ஆட்சியில் தம் தீய எண்ணங்கள் நிறைவேறப்பெறாது புழுங்கிவந்த கயவர்களும் மாட்ரெட்டுக்கு ஆதரவு தந்தனர். ஆகவே, ஆர்தர், மாட்ரெட்டை நாட்டின் பல இடங்களுக்கும் சென்று பல தடவை எதிர்த்துப் போராட வேண்டியதாயிற்று. ஆர்தரால் முன் பன்னிரண்டு போர்களில் முறியடிக்கப் பட்டுப் பிரிட்டனை நாடாது ஓடிய ஸாக்ஸானியர் பிரிட்டனின் சீர்குலைவைக் கேள்வியுற்றுத் துணிகரமாக ஆங்காங்குப் படையிறக்கிக் கொள்ளையடித்தனர். ஆர்தர், பிரிட்டனின் நிலைகண்டு மனம் புழுங்கினார். அப்போது அவருக்கு முன் மெர்லின் கூறிய சொற்கள் நினைவிற்கு வந்தன. தம் முடிவு-பிரிட்டனை விட்டுத்தான் வேறு உலகம் செல்லும்-நாள் இனி தொலைவிலில்லை என்பதை அவர் உய்த்துணர்ந்து கொண்டார். தம் வாழ்க்கைத் துணைவியாகிய கினிவீயர் எவ்வளவு நிலைதவறினாலும் அவளுக்கு இறுதியாக அறிவுரை தந்து மன்னித்து வரவேண்டும் என்ற பேரவா அவர் உள்ளத்தில் எழுந்தது. கினிவீயர் மாற்று உருவில் சென்றாலும், அவளை மடத்துத் தலைவியும் துறவுப் பெண்களும் அறியாமலில்லை. ஆனால், உள்ளூற அவள்பால் அவர்கள் பரிவும் இரக்கமும் கொண்டனர். அரசர் அவள் இருப்பிடம் வந்து அவளிடம் தன் சீரிய வாழ்க்கைக்கு அவள் செய்த இழுக்கை எடுத்துக்கூறிப்பின், “உன்னைக் குறைகூற நான் இங்கே வரவில்லை. உன்னை நான் மனமார மன்னித்துவிட்டேன். ஆனால், கடவுளும் மன்னிக்கும்படி உன் மனத்தின் அழுக்கை நோன்பாலும் நல்லெண்ணத்தாலும் நற்பணியாலும் போக்கி, மேலுல கிலாயினும் என்னை வந்தடைக என்று கூறவே வந்தேன்” என்று சொல்லிச் சென்றார். மாட்ரெட் பலதடவை தோற்றாலும் படைகள் முற்றிலும் அழிவதற்கு முன்னமே அவற்றைப் பின் வாங்கியும் புதுப்படைகள் திரட்டியும் நாட்டின் மறுகோடி நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இறுதியில் பிரிட்டனின் தென்கீழ்க் கோடியில் உள்ள லாயனிஸ் சென்றதும் மேலும் பின்வாங்க இடமின்றி இறுதிப் போராட்டத்தில் முனைந்து நின்றான். போருக்கு முந்திய இரவில் ஆர்தர், ஒரு கனவு கண்டார். அதில் கவெயின் வந்து ஆர்தரிடம் லான்ஸிலட் வரும்வரை போரை நிறுத்தி வைக்கும்படி கோரினதாகக் கண்டு விழித்தார். பெடிவீயர்59 முதலிய நண்பருடன் கலந்தபின் அதுவே நன்றெனக்கொண்டு மாட்ரெட்டுக்குச் செய்தி அனுப்பினார். மாட்ரெட்டுக்கும் தாமதம் செய்வது தனக்கு நல்லதென்றே தோன்றிற்று. பிரிட்டனில் பல பகுதிகளிலிருந்தும் உதவிப் படைகள் அனுப்பும்படி அவன் நண்பர்களை வேண்டியிருந்தான். ஆகவே, அவனும் போர் நிறுத்தத்துக்கு இசைந்தான். ஆயினும் இப்போர்நிறுத்தம் பாம்புக்கும் கீரிக்கும் ஏற்பட்ட போர் நிறுத்தம்போலவே இருந்தது. இரு தரப்பாரிடமும் உள்ள வெறுப்புடன் எதிரி சூழ்ச்சியால் நம்மை ஏமாற்றிவிடுவானோ என்ற ஐயமும் நிறைந்து இருந்தது. இந்நிலையில் மாட்ரெட்டும் அவன் நண்பரும் ஆர்தர், அவர் நண்பர்கள் ஆகியவர்களுடன் இருதரப்புப் படைகளிடையிலும் வந்து போர் நிறுத்தக் கட்டுப்பாடுகளை அமைக்க முன்வந்தனர். அச்சமயம் தீவினையால் ஆர்தர், நண்பர் ஒருவர் காலில் ஓர் அரவம் தீண்ட அதனைக் கொல்ல அவர் வாளுருவினார். ஐயமும் வெறுப்பும் நிறைந்த அச்சூழ்நிலையில் ஏன் என்றோ யார் என்றோ கேட்பவர் யார்? எதிரிகள் சூழ்ச்சி செய்தனர் என்று கொண்டு இருதரப்பாரும் ஒருவர்மீதொருவர் பாய்ந்து விழுந்தனர். பலர் போருக்கு முனைந்திராததனால் கவசம் கூட அணிய நேரமின்றிப் போரில் குதித்தனர். அச்சமயம் நாற்புறமும் உறைபனி வேறு சூழ்ந்ததால் யார் பகைவர் யார் நண்பர் என்று பிரித்தறியக் கூடாமல் பலர் தம் நண்பரையே கூட வெட்டித்தள்ளினர். ஆர்தர், தம் எக்ஸ்காலிபர்60 என்ற வாளினால் சென்றவிடமெல்லாம் பிணக் குவியல்களை நிறைத்தார். ஆர்தரின் வட்டமேடையில் மீந்து நின்ற சிலரும் நெற்பயிரிடையே காட்டுப்பன்றிபோல் நாற்புறமும் அழிவு செய்தனர். ஆனால், போரில் எப்பக்கம் வெற்றி என்பதை அறியமடியாதபடி போர்க்கள முற்றிலும் உறைபனியால் மூடியிருந்தது. மாலையில் உறைபனி சற்றே விலகிற்று. அப்போது ஆர்தர் போர்நிலைமையை ஒருவாறு உணர்ந்துகொண்டார். கெரெய்ன்டும் அவனுடைய டெவன் நாட்டு வீரரும் இவ்வளவு குழப்பத்திடையேயும் அணி குலையாமல் நின்று இறுதித் தாக்குதலுக்குக் கச்சை கட்டுவதைக் கண்டு மகிழ்வுற்று அவர்கள் முன்புறம் தாக்கும்போது தாமும் தம் வீரரும் மறுபக்கம் சுற்றி வந்து தாக்கினார். மாட்ரெட் படையின் ஒரு பகுதி கெரெய்ன்டு படைக்கு ஆற்றாது ஓடிற்று. கெரெய்ன்டு அவர்களைத் துரத்திக் கொண்டோடுகையில் ஓர் அம்பு தலையணியின் பிறவொன்றி னூடாக ஊடுருவிச் சென்று, அவனைக்கொன்றது. அவன் வீரர், அவன் வீழ்ச்சிக்குப் பழிவாங்கும் வண்ணம் படை வீரர்களைப் பின்னும் துரத்திக் கொண்டோடினர். ஆர்தர் என்றுமே எதிர்ப்பவரைத் தாக்குவதன்றி ஓடுபவரைத் துரத்துவதில்லை; ஒரு சில வீரருடன் வெற்றி வீரராய், ஆயின் வீரரனைவரையும் இழந்தோமே என்ற துயரத்துடன் அவர் நின்றார். அச் சமயம் மாட்ரெட் மறை விலிருந்து வெளிவரவே இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். நெடுநேரம் போர் புரிந்து இருவரும் ஒருவரை ஒருவர் படுகாயப் படுத்தினர். இருவரும் சோர்ந்து விழப்போகும் சமயம் முழு வன்மையையும் கொண்டு ஒருவர்மீது ஒருவர் வாளை ஓச்சினர். மாட்ரெட், ஆர்தர் வாளால் ஒரு பிளவாகப் பிளக்கப்பட்டு உடனே மாண்டான். ஆர்தர் மண்டையுடைந்து வலிமை முற்றிலும் அற்றுப் படுகாயத்துடன் சாய்ந்தார். அவர் ஆர்தரைத் தம் தோள்மீது தாங்கி ஸாக்ஸானியரால் பெரும்பகுதி அழிக்கப்பட்டுக் கடற்கரையிலிருந்த ஒரு கோயிலில் கொண்டு சென்று படுக்கவைத்தார். ஸாக்ஸானியரை நடுங்கவைத்து ரோமானியரை முறியடித்துப் பிரிட்டனெங்கும் ஆணைசெலுத்தியதுடன் தீமையையே உலகெங்கும் ஒடுங்கும்படி செய்த வீரகோளரியான ஆர்தர், பெடிவீயரன்றி வேறு துணையற்ற நிலையில், போர் வெற்றியிடையேயும் வாழ்க்கையில் சலிப்பும் முறிவுமுற்றுத் தனியே கிடந்தார். ஆர்தர் மனம், அச்சமயம் தம் இளமைக்கனவுகள், தம் அரசாட்சி, தம் வீரர் பெரும்புகழ் ஆகிய யாவற்றையும் எண்ணிப் பெருமூச்சுவிட்டது. தம் வலக்கையாயிருந்த லான்ஸிலட்டையும் தம் உயிருக்கு உறையுளாயிருந்த கினிவீயரையும் எண்ணிற்று; இறுதியில் தெய்வீகக் குருதியேந்தி ஒளிவீசித் தம் கண்முன் வந்த கடவுளருளொளி விளக்கமாகிய தெய்வீகக் கலத்தை எண்ணி அதனை நாடிச் சென்று பெற்ற கலஹாட் பெருந்தகையின்61 பெரும்புகழில் திளைத்தது; பின் அதனைப் பெறுமாற்றலில்லாது மாண்ட, தம் உயிரினும் அரிய வீரரை எண்ணி மாழ்கிற்று; இறுதியில் தமக்குக் கண்கண்ட தெய்வமாயிருந்த மெர்லினை யெண்ணிக் கலங்கிற்று. மெர்லினை எண்ணியதுமே, தம் பிறப்புப் பற்றி மெர்லின் கூறிய அருஞ்செய்திகளும் தாம் நேரிற்கண்ட அரும்பெருங் காட்சிகளும் தெய்வீகமான திருக்கை ஏரியின் தடத்தில் ஏந்திய எக்ஸ்காலிபரும் அவர் நினைவுக்கு வந்தன. அவர் கண்கள் அவர் முன் கிடந்த எக்ஸ்காலிபரைப் பெருமையுடனும் துயருடனும் நோக்கின. அதன் ஒரு புறம், “என்னை எடுக்க” என்றும், மறுபுறம் “என்னை எறிக” என்றும் பொறித்த எழுத்துகளைக் கண்டதே அதனை எறியும் நாள் வந்ததெனக் கண்டு பெடிவீயரிடம், ‘பன்மணிகள் பொறித்த என் கண்மணி போன்ற இப்பொன்வாள் மனிதர் கையில் படத்தக்கதன்று. இதனை உன் வலிமை கொண்டமட்டும் கடலில் வீசி எறிந்துவிட்டு நீ காணும் காட்சியை வந்து கூறுக” என்று ஏவினார். தலைவன் பணி மாறாது பெடிவீயர் வாளுடன் சென்றான். ஆனால், ஆர்தர் பெருமையனைத்துக்கும் பிற்காலத்தில் ஒரே அறிகுறியா யிருக்கக்கூடும் அவ்வாளை, பல நாட்டரசாட்சி களையும் கொடுத்துக்கூடப் பெறமுடியாத பன்மணிகள் பதித்த அப்பொன்னிழைத்த வாளை எறிய அவனுக்கு மனம் வரவில்லை. “ஆர்தர் மனச்சோர்வுற்றிருக்கிறார். வாளை எறியவில்லை என்று சொன்னால் வருந்துவார். ஆகவே, இவ்வொரு வகையில் ஒரு சிறு பொய் சொன்னால் என்ன? நாளை அவர் நலமடைந்த பின் இத் தவறுதலை அவர் மன்னிப்பதுடனல்லாமல் போற்றவும் கூடும்” என்றெண்ணி அதனைப் புதரில் மறைத்து வைத்துவிட்டு ஆர்தரிடம் வந்து அதனை எறிந்துவிட்டதாகக் கூறினான். ஆர்தர் : அப்படியா! எறிந்தபோது நீ என்ன கண்டாய்? ஏழை பெடிவீயர் இக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை. நீ கண்டதை வந்து கூறு என்ற சொல்லின் குறிப்பையும் அவர் உணரவில்லை. ஆகவே, மனக் குழப்பமடைந்து பின் ஆர்தருக்கு ஏற்றபடியே பேச எண்ணி, ‘நான் கண்டது வேறெதுவுமில்லை. அலைகள் கரையில் மோதுவதையும் எக்ஸ்காலிபர் வீழ்ந்த இடத்தில் குமிழிகள் எழுவதையும் மட்டுமே கண்டேன்!” என்றார். ஆர்தர் சினங்கொண்டு, “நான் பிரிட்டனை இழந்தேன். ஆட்சியையும் நண்பரையும், மனைவாழ்வையும் இழந்தேன். என் இறுதி நண்பன் வாய்ம்மையையும் இழக்கவா வேண்டும்?” என்று வருந்தி, ‘இச் சிறு பொருளை எண்ணி என் சொல்லி மறுக்கத் துணிந்து நீ இனி யாது செய்யத் துணியாய்? பொருளாவல் பொல்லாதது” என்று இடித்துரைத்தார். அது பொறாத பெடிவீயர் மீட்டும் வெளிச்சென்று வாளையெடுத்தான். அதன் கண்ணைப் பறிக்கும் மணிகள் அவனுறுதியை மீண்டும் கலைத்தன. “நான் சற்று வழவழ என்று பேசி ஆர்தர் மனத்தில் ஐயத்தை உண்டு பண்ணிவிட்டேன். இனித் துணிந்து கூறுவேன்” என்று எண்ணுக் கொண்டு பெடிவீயர் மீண்டும் வாளைப் புதைத்துவைத்து வந்து முன்போலவே கூறினான். இத்தடவை சினத்தால் ஆர்தர் உடலெல்லாம் பட படத்தது. “எனக்கு ஒரு நண்பர் மீதி என்ற எண்ணமும் போயிற்று. என் இறுதி முயற்சியில் நான் இறந்தாலும் கேடில்லை. நானே சென்று வாளை எறிந்து வருகிறேன்” என்று எழத் தொடங்கினார். பெடிவீயர் அவர் காலில் வீழ்ந்து, ‘பெருந்தகையோய்! மன்னித்தருள்க! என் சிறுமையையும் கோழைமையையும் பொறுத்தருள்க. தாங்கள் எழ வேண்டா; அக் கொடுமைக்கு நான் ஆளாகக்கூடாது. இதோ நானே சென்று வாளை எறிந்து வருகிறேன்” என்று சென்றார். இரண்டு மனிதர் சேர்ந்து தூக்கவேண்டும் என்ற அளவில் பளுவுடைய அவ்வாளைப் பெடிவீயர் எடுத்துச் சென்று முழு வலிமையுடன் தலையைச் சுற்றிச் சுழற்றி வீசியெறிந்தான். அப்போது முழுநிலாக் காலமாதலின் நிலவொளியில் அவ் வாள் ஒரு பேரொளிப் பிழம்புபோல் ஒளிர்ந்தது. பெடிவீயர் வியப்பும் துயரமும் கலந்த உணர்ச்சிகளுடன் அதையே பார்த்து நின்றான். ஆனால், அது நீர்ப்பரப்பில் வந்து விழுமுன் வியக்கத்தக்க வகையில் வெண்பட்டாடை யணிந்த ஓர் ஒள்ளிய மென் கை அதனை ஏற்று மும்முறை சுழற்றி வீசி அதனுடன் உட் சென்றது. இக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு வியப்பும் அச்சமும் இறும்பூதும் கலந்த தோற்றத்துடன் அவன் ஆர்தரிடம் வந்து மூச்சுவிடாமல் அனைத்தும் கூறினான். ஆர்தர் அதுகேட்டு மனநிறைவு கொண்டார். பெடிவீயரிடம், “நண்பரே! என் நாள் இப்போது அணுகிவிட்டது. மெர்லின் கூறியபடி என் யாக்கை இறவா யாக்கையானாலும் புறப்பண்புகளும் அகப்பண்புகளும் சேர்ந்து என் உரத்தைக் குலைத்தன. பிரிட்டன் இன்றிருக்கும் நிலையில் நான் நலமடைய முடியாது. ஆயின், நான் இனிச் செல்லுமிடத்தில் நன்மையன்றித் தீமையோ, ஒளியின்றி இருளோ, அன்பன்றி வன்போ இல்லை. அவ்விடத்தில் சென்று நான் குணமடைந்து வருவேன். தீமைமிக்க இவ்விருட்காலத்தில் உன்னால் உலகைத் திருத்த முடியா தாயினும் கூட உன்னளவில் முக்கரணங்களும் தூய்மையாக நட. இறைவன் முன்னிலையில் ஆவிலானில் (துறக்கத்தில்) ஒன்று கூடுவோம்” என்று ஆர்தர் கூறிப்பின் தமக்குச் செய்யும் இறுதி உதவியாகக் கடற்கரைக்குத் தம்மைத் தாங்கிச் செல்லும்படி கூறினார். பெடிவீயருக்கு அவர் சொற்கள் விளங்கவில்லையாயினும் அவர் கேட்டுக்கொண்டபடி அவரைத் தூக்கிச் சென்றார். போகும் போது ஆர்தர், காலங்கடந்து விடப்படாதென்று விரைபவர் போலப் படபடத்து “விரைந்து செல்க நேரமாய்விடும்” என்று முடுக்கினார். கடலலைகளின் மீது பெடிவீயர், பேரொளி ஒன்று கண்டான். அதில் சில கரும்புள்ளிகள் தென்பட்டன. சற்றுநேரத்தில் அவ் ஒளி அழகுமிக்க பெரியதொரு படகாகவும், புள்ளிகள் அதில் தங்கியிருந்த அரமைந்தரும் அரமங்கையருமாக மாறின. மங்கையருள் மூவர் அர இளவரசிகள் போலவும், அவர்களில் நடுவில் இருந்தவள் பட்டத்தரசிபோலவும் காணப்பட்டாள். ஆர்தர், தம்மைப் படகில் சேர்க்கும்படி கூறினார். மூன்று பெண்டிரும் அவரை ஏற்றினர். அரசிபோன்றிருருந்தவள் அவர் தலையை ஆதரவுடன் மடிமீது கொண்டு கண்ணீர் வடித்தாள். பின் படகு சிறிது சிறிதாக அகன்று மறையலாயிற்று. பெடிவீயர், “ஐயனே! நான் ஒருவன் தனித்து இவ் வெற்றுலகில் வாழவா?” என்று துயரத்துடன் கேட்டான் ஆர்தர், “அன்பரே! வருந்த வேண்டா; உன் புண்கள் குணப்பட்டு பிரிட்டனின் கெட்டகாலம் நீங்கிய பின்மீண்டும் வருவேன். இன்றிறந்த வீரர் மீண்டும் எழுவர். அதுவரை நும் கடனாற்றி நாள் கழிக்க. இதுவே இறைவன்அமைதி,’ என்று கூறியகன்றார். படகு ஒரு புள்ளியாகுமளவும் காத்திருந்து பெருமூச்சுடன் பெடிவீயர் திரும்பிவந்து பிரிட்டன் மக்களுக்கு இவ்வரிய வரலாற்றைக் கூறி அவர்கள் கண்களில் பெருமித உணர்ச்சியையும் வியப்பையும் துயரையும் ஒருங்கே ஊட்டினார். லான்ஸிலட்டும் கினிவீயரும் தம் மீந்தநாளை இறை பணியில் கழித்துத் தொண்டாற்றி நோன்பு நோற்று ஆர்தரடி சார்ந்தனர். பழைய பிரிட்டானியராகிய வேல்ஷ் மக்கள் இன்னும் ஆர்தர் மீண்டும் வந்து தமக்கு நல்ஆட்சியும் இறையருட் பேறும் நல்குவர் என்று எதிர் நோக்குகின்றனர். அடிக்குறிப்புகள் 1.Britain 2. Uther 3. Rome 4. Goths 5. Britains 6. Saxons 7. Scot 8.Plets 9.Garlios 10. Ygerne 11. Arthur 12. Bellicent 13. Orkney 14. Lot 15. Merlin 16. Sir Anton 17. Excalibur 18. Camelot 19. Sir Ky 20. Knight 21. Camellard 22. Leodogran23. Guinevere 24. Sir Bedivere 25. Sir Lancelet 26. Badon Hill. 27. ஆர்தர் காலத்துக்குப்பின் அவர்கள் மீட்டும் வந்து கொள்ளையடித்ததுடன் நில்லாது குடியேறி நாட்டில் பெரும்பகுதியையும் கைப்பற்றினர். அவர்களே இன்று ஆங்கிலேயர் என்று அழைக்கப்படும் இங்கிலாந்துக் குடிகள். பழைய பிரிட்டானியர் மேற்கேயுள்ள மலை நாடுகளாகிய வேல்ஸிலும், கார்ன்வால், கிளைடு ஆகிய இடங்களிலும் சென்று தங்கினர். அவர்களில் பெரும்பகுதியார் இன்று வெல்ஸில் வாழும் வெல்ஸ் மக்கள் ஆவர். 28. Sir Turquine of the Manor 29. Sir Lionel 30. Sir Ector 31. Sir Gaheris 32. Whitson 33. Sir Beaumains 34. Linet 35. Lady Liones36. Red Knight of the Red Lawns.37. Gareth 38. Edyrn 39. Devon Shire 40. Sir Geraint 41. Enid 42. Limours 43. Doorm 44. Edyrn 45. Sir Balin 46.Maiden with the Sword 47. Vivien 48. Lyonesse 49. Castle of Astolat 50. Sir Torre 51. Sir Lavaine 52. Lily Maid 53. Elaine 54. Sir Gawaine 55. Modred 56. France 57. Abbey at Almsbury 58. Sir Gavains 59. Bedevere 60. Excalibur 61. Sir Galahad மேனாட்டுக் கதைக் கொத்து முதற் பதிப்பு - 1945 கிரேக்கக் கதைகள் (முதற்புத்தகம்) கிரேக்கக் கதைகள் முன்னொரு காலத்தில் கிரேக்க நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு மூன்று அழகிய பெண்கள் இருந்தனர். மூத்த பெண்கள் இருவரும் அவ்வூரில் இருந்த இரு செல்வர்களுக்கு மணம் செய்விக்கப்பட்டனர். ஆனால், எல்லாரிலும் மிக்க அழகு வாய்ந்திருந்த கடைசி மகளான சைக்கீ மணமாகாமலே, தன் தந்தையின் மாளிகையில் வாழ்ந்து வந்தாள். அவள் எல்லையற்ற எழில் படைத்திருந்தாள். முதல் தடவையாகக் கண்ட யாரும் அவளை ஒரு தெய்வமகள் என்றே நினைக்கும்படி அவள் இருந்தாள். ஒருநாள், கடல் தாண்டி வேற்றுநாடு சென்று திரும்பிய வீரன் ஒருவன் வீனஸ் தெய்வத்தின் கோயிலில் தொழுவதற்கு வந்தான். சைக்கீயும் அன்று அக்கோவிலுக்கு வந்திருந்தாள். முன் மண்டபத்தில் அவள் நிற்பதைக் கண்ட அவ்வீரன் அவள்தான் வீனஸ் தெய்வம் என்றும், தன் மீது அருள் சுரந்து நேரில் காட்சியளிக்கத் தோன்றிவிட்டாள் என்றும் கருதி அவள் காலடியில் வீழ்ந்து வணங்கினான்; அழகுத் தெய்வத்துக்கான துதிப்பாடல்களையும் பாடினான். அங்கு நடந்ததை அறிந்த வீனஸ் தெய்வத்துக்குப் பெருஞ்சினமேற்பட்டது. அன்று முதல் அவள் யாதொரு பிழையுமறியாத சைக்கீயை வெறுத்துப் பகைத்தாள். எனவே, அவள் தன் மகனான கியூப்பிட் என்னும் காதல் தெய்வத்திடம் நடந்த வரலாற்றைத் தெரிவித்து, அவனைப் பூவுலகுக்குச் சென்று, தன் தாயின் உள்ளத்தை வெம்பவைத்த அந்த அழகுப் பெண்ணைக் கொன்று வருமாறு ஏவினாள். காதல் தெய்வம் அப்படியே செய்து வருவதாக உறுதி கூறித் தன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு, பறந்து வந்து பூவுலகில் இறங்கினான். விரைந்து பறப்பதற்காக கியூப்பிட்டின் முதுகில் இரண்டு சிறகுகள் இருக்கும். அவன் சைக்கீ வாழ்ந்த நகரத்தை அடைந்தான். அந்த எழிலணங்கை எங்கும் தேடினான். அவள் இருக்கும் இடத்தை அவன் நட்டுச்சிப் பொழுதில் கண்டுபிடித்தான். சைக்கீ அரண்மனைத் தோட்டத்தில், குளிர்ந்ததொரு நிழலிடத்தில், பசும்புல் நிலத்தில் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். ஒரு கையை மடக்கி, பளிங்குச் சுனையின் படிமீது வைத்துக்கொண்டு அவள் படுத்திருந்தாள். மற்றொரு கையில் அவள் புத்தகம் ஒன்றை வைத்திருந்தாள். அருகில் நின்றிருந்த பன்னீர்ப் பூ மரம் தன் கிளைகளைத் தாழ்த்தி அவளுக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்ததுடன், நறுமணம் வீசும் மலர்களையும் அவள்மீது சொரிந்து கொண்டிருந்தது. அவள் காலடியில் வந்திறங்கிய காதல் தெய்வத்தின் சிறகுகள் படபடத்தபோது சைக்கீயின் மெல்லிய கூந்தல் மயிர் சற்றே பறந்து சுருள் சுருளாகத் தரைமீது படிந்தது. தான் தேடிவந்த பொருளைக் கண்டதும் தன் கொலை நோக்கம் கைகூடப் போகிறது என்ற மகிழ்ச்சியுடன் அவன் கொடிய புன்னகை புரிந்து நின்றான். ஆனால், அது ஒரு நொடியில் மறைந்து, பெரு வியப்பால் அவன் வாய்திறந்து, விழிகொட்டாது அவளையே பார்த்துக்கொண்டு சிலைபோல் நின்றான். தெய்வங்களின் உறைவிடமான ஒலிம்பசு மலையிலேயே அவன் வாழ்ந்து வருபவனாயிருந்தும், அதுவரையில் அவ்வளவு அழகு வாய்ந்த ஓர் உருவத்தையும் அவன் கண்டதே இல்லை. சைக்கீயின் அழகில் ஈடுபட்ட கியூப்பிட், அவள் அருகே மண்டியிட்டுத் தாழ்ந்து, மெல்ல அவள் நெற்றியை வருடி, குனிந்து அவளை முத்தமிட்டான். இனி அவளைத் தன்னால் கொல்ல முடியாது என்பதையும் அவன் உணர்ந்தான். அன்று முழுவதும் கியூப்பிட் சைக்கீ செல்லும் இடத்துக் கெல்லாம் அவளைத் தொடர்ந்து சென்றான். அவளைப் பார்க்கப் பார்க்க அவள் முன்னிலும் அழகு மிகுந்து விளங்கியதாய் அவனுக்குத் தோன்றியது. அன்றிரவு நிலவொளியில் அவன் கிரேக்க நாட்டிலிருந்து கடல் வெளியில் பறந்து சென்றபோதெல்லாம் அவன் உள்ளம் சைக்கீயையே நினைத்து உருகியது. உலக மக்களைக் காதலால் வருத்தும் தெய்வமாகிய தானும் அன்று அவ்வருத்தத்தை உணர்ந்துதான் தீர வேண்டும் என்பதை அவன் அறிந்தான். அத்துயர் நீங்குவதற்கு ஒரே வழி சைக்கீயை மணப்பது தான் என்பதையும் அவன் உணர்ந்தான். ஆனால், அவளை மணப்பது எப்படி? இறுதியாக அவன் பரிதிக் கடவுளான அப்பாலோவிடம் சென்று தனக்கு உதவும்படி கேட்டான். அப்பாலோவும் அதற்கு வழி கிடைத்தால் உதவுவதாகக் கூறினான். விரைவில் அதற்கேற்ற வாய்ப்பும் ஏற்பட்டது. சைக்கீயின் தந்தையான அந்நாட்டு அரசன் தன் நாடு முன்போல் செழிப்பாக இல்லை என்பதையும், தன் நாட்டு மக்கள் முன்போல் மகிழ்வுடன் வாழவில்லை என்பதையும் கண்டு வருந்தினான். மேலும், தன் அருமை மகளான சைக்கீக்கு ஏற்ற கணவன் இன்னும் கிடைக்கவில்லையே என்றும் அவன் வருந்தினான். எனவே, அவன் அப்பாலோ கோவிலுக்குத் தன் ஆட்களை அனுப்பி, தன் நாட்டில் இவ்வாறு துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பதைக் கேட்டுவரும்படி கூறினான். அப்பாலோ அந்த ஆட்களிடம் பின்வருமாறு தெரிவித்தான். சைக்கீ, பூவுலக மக்களுக்கு ஒவ்வாத பேரழகு பெற்று, தெய்வங்களிலும் சிறந்து விளங்குவதால் கடவுளர்கள் சினங்கொண்டிருப்பதாகவும், அந்நாட்டில் அமைதி ஏற்பட வேண்டுமானால், சைக்கீயை மணமகள்போல் அணிசெய் வித்து மாலை நேரத்தில் கடற்கரையிலுள்ள பெரும்பாறையருகில் கொண்டுபோய் விட்டு விட்டு வந்துவிட வேண்டுமென்றும், கொடிய கடல் பூதம் வந்து அவளைத் தூக்கிச் சென்றுவிட்டால் கடவுளரின் சினம் தணிந்து விடுமென்றும், பூதம் வரும் நேரத்தில் பெண் இல்லாமற் போனால், அது ஊருக்குள் வந்து ஆண், பெண், குழந்தை ஆகிய எல்லோரையும் கொன்று தீர்த்துவிடும் என்றும் அப்பாலோ கூறினான். அதைக்கேட்ட மன்னன் பெருந்துயரத்தில் ஆழ்ந்தான். சைக்கீயை அக்கொடிய பூதத்திடம் ஒப்புவிக்க அவன் இணங்கவில்லை. தன் நாட்டைத் துறந்துவிட்டு, மகளுடன் எங்காவது ஓடிவிடலாம் என்று கூட அவன் நினைத்தான். ஆனால், சைக்கீ அவ்வாறு செய்யக்கூடாது என்று தந்தையைத் தடுத்துவிட்டாள்.. “நான் பூதத்திடம் சிக்கிக் கொடிய வேதனையுடன் மடிந்தாலும் அது பொருட்டல்ல; நம் நாட்டு மக்கள் அமைதியாக மகிழ்ச்சியுடன் வாழ்வதுதான் பெரிது; அதுவே எனக்கும் மகிழ்ச்சியைத் தரும். சைக்கீயின் கோழைத்தனத்தால் மக்கள் எல்லாரும் மடிந்தார்கள் என்ற பழி எனக்கு வரக் கூடாது” என்று அவள் கூறினாள். தள்ளாமை மிக்க அரசனுக்குத் தன் மகளை இழக்கவே மன மில்லையாகையால், அவன் அதற்கு ஒருப்படவில்லை. அரசனின் போக்கால் தங்கள் உயிருக்கு ஊறு வரும் என்று அஞ்சிய அந்நாட்டு மக்கள் ஆயிரம் ஆயிரமாய்த் திரண்டு வந்து, அப்பாலோ கூறியதுபோல் சைக்கீ பூதத்திடம் போக வேண்டியது தான் என்று வற்புறுத்தினார்கள். எனவே, அன்று பிற்பகலில் சைக்கீ களைத்துப்போய் உறங்கும்போது, அவள் தாதியர் அவளை மணப்பெண்போல் அணிசெய்தனர்; அவளை விட்டுப் பிரிய மனமில்லாதிருந்தும் நாட்டின் நன்மையை நினைத்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே அவளுக்குப் பொன்னாடை களையும், அணிகளையும், மலர்களையும் அணிவித்தனர். அவள் விழித்தெழுந்ததும் அவள் தெய்வ மணமகள்போல் விளங்கினாள். மாலையில் அவர்கள் அவளை ஊர்வலமாக அழைத்துச் சென்று ஊருக்கு நெடுந்தொலையிலிருந்த கடற்கரைப் பெரும்பாறைக்குக் கூட்டிவந்து அங்கேயே விட்டுவிட்டு அழுது அரற்றி அவளிடம் பிரியமுடியாமல் விடைபெற்றுப்போனார்கள். அவர்கள் போகும்வரையில் தன் கடமை உணர்ச்சி காரணமாக நெஞ்சுறுதியுடன் இருந்த சைக்கீக்கு யாரும் எதிர்ப்படாத தனிமையில் இருக்கும்போது அச்சம் ஏற்படத்தான் செய்தது. தன்னைப் பிடிக்க வரும் கடற்பூதத்தை நினைத்துப் பார்த்ததுமே அவள் உடல் நடுங்கியது; பொறிகலங்கிய நிலையில் அவள் உணர்விழந்து விழுந்து விட்டாள். நடந்தவைகளை எல்லாம் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கியூப்பிட், “செபிரஸ்” என்னும் தென்றல் காற்றை அழைத்து, சைக்கீயை அப்பாறை உச்சியிலிருந்து வாரி எடுத்து நீண்ட தொலையில் உள்ள பைம்பொழில் ஒன்றில், தேன் சொரியும் மலர்கள் நிறைந்த பசும்புல் வெளியில் படுக்கவைக்கு மாறு பணித்தான். அப்பைம்பொழில் கியூப்பிட் வாழும் பொன் மாளிகையில் தான் இருந்தது. மறுநாள், காலைக் கதிரவன் உலகமக்களைத் துயிலுணர்த்திக் கண்விழிக்கச் செய்தபோது, சைக்கீயும் தூக்கம் நீங்கி எழுந்தாள்; தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். தான் முன்பு ஒருபோதும் கண்டிராத ஓர் அழகிய சோலையில் நறுமண மலர்களின் நடுவே படுத்திருப்பதை அவள் உணர்ந்தாள். தன்னைப் பிடிக்கவரும் என்று தான் அஞ்சியிருந்த அக்கடற்பூதம் எங்கே என்று அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். உவகைப் பெருக்கில் பாடிப் பறந்து திரிந்த பறவைகளையும், ரீங்காரம் புரிந்த வண்டுகளையும் தவிர வேறு எந்த உயிரினத்தையும் அவள் காணவில்லை. வியப்புற்ற நிலையில் அவள் நடந்தவைளை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், இதுவரை தான் அறியாத ஓர் இன்ப உணர்ச்சி தன் உள்ளத்தில் ஊறி உடல் எங்கும் பரவிநிற்பதை அவள் உணர்ந்தாள். காதல் தெய்வமாக வணங்கும் கியூப்பிட் அவள் முன் தோன்றாவிடினும் அப்போது அவன் அவளையே நினைத்துக் கொண்டிருந்தபடியால், அவள் மனத்தில் அந்த இன்ப உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. உள்ளத்தில் ஊக்கம்தான் பெருகிநின்றதே தவிர, அச்சம் சிறிதுமில்லாமல் அகன்று விட்டது. சைக்கீ பூப்படுக்கை யிலிருந்து எழுந்து சோலைவழியே நடக்கத் தொடங்கினாள். சற்று நேரத்தில் அவள் கியூப்பிட்டின் பொன்மாளிகைக்கு வந்து சேர்ந்தாள். கதிரவன் ஒளியில் அது பளபள என மின்னியது. அம்மாளிகையின் கதவுகள் திறந்திருந்தன. முன்வாசல் வழியே சைக்கீ அப்பொன் மாளிகைக்குள் புகுந்தாள். வீட்டினுள் யாரையுமே காணவில்லை. அவள் ஒவ்வோர் அறையாகச் சென்றாள். அம்மாளிகை யாருடையதாக இருக்கக்கூடும் என்று அவள் நினைத்துப் பார்த்துக்கொண்டே அதன் அழகை வியந்து பெருமிதத்துடன் சென்றுகொண்டிருந்தாள். தன் தந்தையின் அரண்மனையைப் போல் பலமடங்கு அழகும் செல்வமும் பெருகி இருந்தது அது. அவ்வாறிருந்தும் அதில் யாரும் இல்லாதிருந்தது அவளுக்கு விந்தையாகவே இருந்தது. உச்சிப் பொழுதில் அவள் விசாலமான ஓர் அறைக்குள் சென்றாள். அகன்று பரந்திருந்த அந்த அறையில் அறுசுவை மிக்க உணவு ஒரு பொன் இலையில் படைக்கப்பட்டிருப்பதை அவள் கண்ணுற்றாள். அவளுக்கும் பசி நன்றாக வந்துவிட்டிருந்தது. ஆயினும் தன்னை யாரும் அழைக்காமல் அந்த உணவைத் தான் உண்பது முறையல்ல என்று அவள் கருதினாள். உடனே அவள் பெயரை விளித்து ஒரு குரல் எழுந்தது. கண்ணுக்கு யாரும் தெரியாமலே குரல் கேட்பதை உணர்ந்த சைக்கீ நடுங்கிவிட்டாள். “சைக்கீ, ஏன் அஞ்சுகிறாய்? இந்த உணவு உனக்குத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. தெய்வங்கள் உனக்கெனத் தேர்ந்தெடுத்த உன் கணவனின் மாளிகைதான் இது. சிறிதும் கூசாமல் அஞ்சாமல் உண்ணு. இன்றிரவு உன் கணவன் உன்னைக் காண வருவான்,” என்று அக்குரல் அவளுக்கு ஆறுதல் கூறியது. அச்சம் தெளிந்த சைக்கீ சுவைமிக்க அவ்வுணவை உண்டு, களைப்பு நீங்க அருகிலிருந்த கட்டிலில் படுத்தாள். அப்போது அவள் கண்ணுக்குப் புலப்படாத பாடல்மகளிர் இன்னிசை பாடி அவளைத் தூங்க வைத்தனர். பிறகு அவள் கண்விழித்தபோது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. சைக்கீ துணுக்குற்று எழுந்தாள். அவள் அருகில் ஏதோ சலசலத்தது. கியூப்பிட்டின் சிறகுகள் படபடத்த ஓசைதான் அது; காதல் தெய்வம் இருட்டிலேயே அவளுடன் பேசினான். சைக்கீக்குத் தன் அருகில் இருப்பது யார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், கியூப்பிட்டின் ஆற்றலை உணர்ந்த சைக்கீ, தன் அச்சத்தைக் கைவிட்டாள்; அவன் அருகில் இருந்தால் தனக்குக் கேடு வராது என்ற உறுதி அவளுக்கு ஏற்பட்டது. ஒவ்வோர் இரவும் கியூப்பிட் சைக்கீயைக் காண வருவான். சைக்கீ பெருமகிழ்வுற்று வாழ்ந்தாள்; ஆனால், அவள் ஒரு தடவையாவது அவன் உருவத்தைக் கண்ணால் கண்டதில்லை; அவள் காலையில் விழிக்குமுன் அவன் போய்விடுவான். பகல் எல்லாம் அப்பொன் மாளிகையில் அவள் தனிமையாகவே இருந்தாள். இப்படியே காலங்கழித்து வந்தது. ஒரு நாள் தன் தந்தையும் அக்காள்மார் இருவரும் தன்னைத் தேடி அழுவதாகக் கனாக்கண்டாள். அவர்களைப் பார்க்க விரும்புவதாக அவள் அன்றிரவு கியூப்பிட்டிடம் தெரிவித்தாள். கியூப்பிட் வருத்தத்தோடு அதற்கு இணங்கினான். அதனால் ஏதேனும் துன்பம் ஏற்படக் கூடும் என்று அவன் அஞ்சினான். ஆயினும், அவள் விருப்பத்தை மறுக்க அவனுக்கு மனமில்லை. அவன் அதற்கு ஒருவாறு இணங்கிய மறுநாள் அவள் அக்காள்மார் இருவரும் அம்மாளிகைக்கு வந்தனர். அம்மாளிகையின் அழகையும் அங்கிருந்த பெருஞ் செல்வத் தையும் கண்ட அவர்கள் பெருவியப்பும் திகைப்பும் அடைந்தனர். அவர்கள் போகும்போது சைக்கீ அவர்களுக்கு ஏராளமான பரிசுகளை வழங்கினாள். ஆனால், அக்காள்மார் இருவரும் பேராசையும், பொறாமையும் கொண்டனர். அவர்கள், எப்படி இவ்வாழ்வு தங்கள் தங்கைக்கு வந்தது என்பதை அறியத் துடித்தனர். அதிலும், சைக்கீ தன் கணவனைக் கண்ணால் பார்த்ததில்லை என்பதைக் கேட்டபின், அவர்கள் ஆவல் அடங்காததாயிற்று. இதற்கிடையில் சைக்கீ என்னவானாள் என்பது வீனஸ் தெய்வத்துக்குத் தெரிந்துவிட்டது. சைக்கீ மீது அவள் கொண்டிருந்த சினம் பெருஞ்சீற்றமாகக் கொழுந்துவிட்டது. எனவே, அவள் சைக்கீயின் கனவில் ஒரு கெட்ட நினைப்பைப் புகுத்திவிட்டாள். தன் அக்காள்மார் இருவரையும் மீண்டுங் காணவேண்டும் என்ற நினைப்பு சைக்கீக்கு ஏற்பட்டது. கியூப்பிட் வருத்தத்தோடு அதற்கு இணங்கினான். அவர்களும் மறுநாளே சைக்கீயைப் பார்க்க வந்தனர். பொறாமை மிக்க அவர்கள் இருவரும் முகவாட்டத்துடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டனர். தங்கள் தங்கையைப் பற்றி அவர்கள் மூதறிஞர் ஒருவரிடம் தெரிவித்ததாகவும், அதைக் கேட்ட அவர், சைக்கீயின் நிலையைக் குறித்து வருந்தி, அவளை ஒரு கொடிய பூதம் மணந்திருக்கிறதென்றும், அதன் உண்மை உருவம் கொடிய நச்சுப்பாம்பின் கோர உருவமாக இருக்கு மென்றும் விடை கூறினதாகவும் அவர்கள் சொன்னார்கள். அக்கொடியவனின் உண்மை உருவத்தைக் காண்பதற்கு ஒரு மாயவிளக்கைப் பெற்றுவந்திருப்பதாகவும், அவனை ஒரே குத்தில் கொன்றுவிடக்கூடிய மாயக்கத்தி ஒன்றையும் அம்முதியவர் அளித்திருப்பதாகவும் அந்த நயவஞ்சகத் தமக்கையர் சைக்கீயிடம் தெரிவித்தார்கள். சைக்கீ அன்றிரவே அவ்விளக்கால் அவன் உருவத்தைக் கண்டு, அக்கத்தியால் அவனை மாய்த்துவிட்டால் தான் அவள் உயிர் தப்ப முடியும் என்றும் அவர்கள் யோசனை கூறினார்கள். அப்பாவி சைக்கீ அன்றிரவு தூங்கவே இல்லை. அவள் உள்ளம் வெதும்பிப்போயிருந்தாள். எனவே, தன் காதலன் கண்ணயர்ந்ததும் அவள் மாயவிளக்கைப் பொருத்திப் பார்த்தாள் என்ன விந்தை! தன் கணவன் உலகில் யாருமே பெற்றிராத பேரெழில் பெற்றுக் கண்ணுக்கினியனாக விளங்கியதை அவள் கண்டாள்; அவனே காதல் தெய்வமான கியூப்பிட் என்பதையும் அவள் உணர்ந்தாள். கியூப்பிட் அதற்குள் விழித்தெழுந்து விட்டான். நடந்ததைப் பார்த்ததும் அவன் பெருஞ்சினங் கொண்டான். தான் இனி அவளை ஒருநாளும் பார்க்க முடியாதென்றும், அவள் இனி வாழ்நாள் முழுவதும் தன் கணவனைக் காணாமலேதான் வாழவேண்டுமென்றும் கூறிவிட்டு அவன் அங்கிருந்து மறைந்தான். தன் பேதைமையால் விளைந்த பெருங்கேட்டை எண்ணிப் பெருந்துயரில் ஆழ்ந்த சைக்கீ அம்மாளிகையிலிருந்து வெளியேறினாள். பொன் மாளிகையின் கதவுகள் அவள் சென்றபின் இறுக மூடிக்கொண்டன. அன்பனை இழந்த சைக்கீ அழுது அரற்றி நிலையில்லாமல் எங்கும் திரிந்தாள். தெய்வங்களின் தந்தையான சீயஸ் பெருமான் அவளை மன்னித்து அவளைத் தெய்வ அணங்காக மாற்றி, அவள் தன் கணவனுடன் என்றும் வாழும்படி செய்த கதையை மற்றொருமுறை கூறுகிறேன். பழங்கால கிரேக்கர்களின் பல கடவுளர்களில் அரோரா வைகறைத் தெய்வமாக வணங்கப்பட்டாள். அவள் உலக மக்களுள் ஒருவனான ஓர் ஆண்மகனை மணந்ததாகக் கதை கூறப்படுகிறது. கிரேக்கர்கள் தங்கள் தெய்வங்கள் ஒலிம்பசு மலையில் உறைந்து வந்ததாகவும், அவர்கள் பூவுலகத்துக்கு அடிக்கடி வந்து அங்கு வாழ்ந்த அழகிற்சிறந்த மக்களை மணந்து மகிழ்ந்ததாகவும் கருதினார்கள். ஆனால், அவர்கள் மணந்த உலக மக்கள், தெய்வங்களைப் போல் குன்றாத அழகும், இளமையும், சாவா வரமும் பெற்றவர்கள் அல்லர். ஆகையால், சில ஆண்டுகள் கழிந்ததும் அவர்கள் முதுமையடைந்து நலிவுற்று மடிவார்கள். சிற்சில சமயங்களில் சில தெய்வங்கள் அவர்களும் இறவாநிலை பெறவேண்டும் என்று கடவுளரின் தந்தையான சீயஸ் பெருமானிடம் வரம் கேட்டுப் பெறுவதுண்டு. ஆனால், அவர்களுக்கு நீங்காத இளமை நிலைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்க மறந்துவிடுவதுண்டு. எனவே, தெய்வங் களை மணந்த மாந்தர்கள் இறந்துவிடாமல் நீடித்து உயிர் வாழினும், காலப்போக்கில் அழகு மங்கி, உடல் வலு தளர்ந்து, தொண்டு கிழமாகிவிடுவார்கள். அவர்களை மணந்த தெய்வங்கள் முன்பு அழகினால் அவர்கள்மீது கொண்டிருந்த அன்பை இழந்துவிடுவார்கள். ஆனால், அவர்கள் மீது கொண்ட பரிவால் அவர்களை அத்தெய்வங்கள் மீண்டும் உலகிற்குக் கொண்டுவந்து விட்டுச்செல்வார்கள். அவ்வாறு விட்டுச் செல்லும்போது, அவர்களை விலங்குகள், பறவைகள் முதலிய உயிரினங்களாக உருமாற்றி விடுவார்கள். உருமாறிவிட்டாலுங் கூட, அவர்களுக்கு உலகில் வாழ்வது தான் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், ஒலிம்பசுத் தெய்வங்கள் இவ்வாறு குறுக்கிடாமல் அவர்களைத் தங்கள் இயல்பான வாழ்வுக்கே விட்டுவிட்டிருந் தால், இன்னும் எவ்வளவோ நலமாக இருந்திருக்கும் அல்லவா? வைகறைத் தெய்வமான அரோரா, கிரேக்கர் தெய்வங்கள் எல்லாரிலும் அழகிற் சிறந்தவளும் மனத்தைக் கவர்ந்தவளும் ஆவள். பொழுது விடியும்போது, கீழ் வானத்தில், நீல விசும்பில் செந்தழல் வண்ணமும் பொன்னிறமும் அவைகளின் கலவைகளும் சேர்ந்து உள்ளத்தை மகிழ்விக்கும் ஓவியமாகத் தோற்ற மளிப்பதைக் கண்டு வியந்த பண்டைக் கிரேக்கர்கள், அதை ஒரு பெண்ணென உருவகப்படுத்தினர். தாமரை இதழ்போன்ற மலர்முகம் படைத்த மகள் ஒருத்தி, பொன்வண்ணத் தேரில் ஏறி, முத்துகளாலான தலைவாசலைக் கடந்துவந்து பகல் பொழுதின் வருகையை அறிவிப்பதாக அவர்கள் கருதினார்கள். அத்தெய்வமகளின் உடை செந்தழல் நிறமாக இருக்கும். அவள் மேலே போர்த்தியிருந்த போர்வை ஊதா நிறமுள்ளது. அவள் உச்சி நெற்றியில் சுடர்விடும் விண்மீன் ஒன்று ஒளிரும். அவள் ஒரு கையில் தீப்பந்தம் வைத்திருப்பதாக அவர்கள் கற்பனை செய்திருந்தனர். அத்தெய்வமகளை, வைகறைத் தெய்வமாக “அரோரா” என்று அவர்கள் பெயரிட்டழைத்தனர். அவள் காலைத் தெய்வமாக இருந்ததுடன் மாலைத் தெய்வமாகவும் விளங்கினாள். எனவே, அவள் மேற்கே நெடுந்தொலையில், நீலக்கடலில் மரகதமணிபோல் விளங்கிய ஒரு தீவில் வாழ்வதாகக் கருதப்பட்டது. அத்தீவு மலர்ச்சோலைகளும் பைம்பொழில்களும் புல் வெளிகளும் நிறைந்து விளங்கிற்று. பகல் பொழுதின் வெம்மையில் வாடாமல் அவள் அப்பசுமைத் தீவில் இருப்பாள். கதிரவன் மறைந்ததும், அவள் நெற்றி விண்மீன் சுடர் தெறிக்க, தீப்பந்தம் ஒளிவீச, மீண்டும் வந்து மறுநாள் வைகறை வரையில் முத்து வாசலில் காத்திருப்பாள். சில சமயங்களில் வானவீதியில் செல்லாமல், ஒளிமயமான ஒரு பாதை வழியே பூமியில் இறங்கி வருவாள், அப்பொழுது உலகமக்கள் அவளை அன்போடு விரும்பி வரவேற்பார்கள். அவ்வாறு அவள் உலகின் வழியே செல்லும்போது, செடிகளின் மலர்களிலும் இலைகளிலும் அவள் பனிநீரைத் தெளித்து அவை வாடாமல் புதுப்பிப்பாள்; மக்களுக்கு நல்வாழ்த்துக் கூறுவாள்; கண்ணுறங்கும் பறவைகளைத் துயில் நீக்குவாள். அவளை உலக மாந்தர் எல்லாரும் அன்புடன் போற்றிய போதிலும், அவள் உள்ளத்தில் அன்பு சுரக்கும்படி செய்த ஆண்மகன் யாரும் முன்பு இருந்ததில்லை. ஆனால், டிராய் மன்னனின் மகன் டிதோனஸ் என்னும் அழகுமிக்க இளைஞனைக் கண்டதும் அரோரா அவன்மீது காதல் கொண்டு விட்டாள். டிதோனஸ் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்தான். அவன் உறுப்புகள் ஒவ்வொன்றும் எழிலுற அமைந்திருந்தன. அவன் எப்போதும் இசை பயில்வதிலும் நடனமாடுவதிலும், விளையாட்டு வேடிக்கைகளை மேற்கொள்வதிலும் ஈடுபட்டு மகிழ்வுற்று வந்தான். டிராய் மன்னனின் அரண்மனையில் உள்ள எல்லாரும் அவனைக் கண்ணெனப் போற்றி வளர்த்தனர். அரோராவும் டிதோனசும் ஒருநாள் காலையில் முத்துத் தலைவாசல் அருகில் எதிர்ப்பட்டனர். அழகொளி வீசும் அவள் எழில் முகத்தைக் கண்டதும் டிதோனசின் உள்ளம் விரைந்து துடித்தது. நெஞ்சு நெகிழ்ந்தது. அரோராவுக்கும் அவனது உடற்கட்டும் தோற்றப் பொலிவும் வியப்பையும் மகிழ்வையும் அளித்தன. அவள் அவனைப் பார்த்துப் புன்னகை பொழிந்தாள்; அவன் மீது அன்புற்றாள். அன்று முதல் டிதோனஸ் தன் களியாட்டங்களை மறந்து அவளது வருகையையே எதிர்நோக்கி நின்றான். பலநாள் அவர்கள் இவ்வாறு எதிர்ப்பட்டு அளவளாவி மகிழ்ந்தபின் ஒருநாள் டிதோனஸ் அரோராவிடம், “நீ என் மனைவியாக இருப்பாயா?” என்று கேட்டான். “ஆகட்டும். நீ என்னுடன் வந்து மேலைக் கடலில் உள்ள என் தீவில் வாழலாம் வா,” என்று அரோரா கூறினாள். “ஆனால், நான் ஒன்றை மறந்துவிட்டேனே,” என்று அவள் காதலன் கூறினான். “நான் முதியவனாகி இறந்து போவேனே! நாம் இருவரும் சில ஆண்டுகள்தானே ஒன்றாக வாழமுடியும்,” என்று மேலும் வருத்தத்துடன் கூறினான். “நான் தெய்வங்களின் தந்தையான சீயஸ் பெருமானிடம் வேண்டி உனக்குச் சாவாவரம் வாங்கித் தருகிறேன்” என்று அரோரா கூறினாள். சீயஸ் பெருமானும் டிதோனசுக்கு இறவா வரமளித்து விட்டான். அரோரா டிதோனசைத் தன் அழகான தீவுக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அளவிலா அன்புடன் காதலித்தனர். ஆனால், அந்தோ! காலம் செல்லச் செல்ல டிதோனசு முதியவனாகிக் கொண்டு வந்தான். அரோரா அவனுக்குச் சாவா வரம்தான் கேட்டுப் பெற்றாளே தவிர, என்றும் இளமை மாறாமலிருப்பதற்கான மூவா வரம் கேட்கவில்லை; மறந்து விட்டாள். எனவே, ஆண்டுகள் பல ஆனபோது டிதோனசு வலுவிழந்து, உடல் தளர்ந்து, நரைத்துத் திரைத்துக் கிழமாகி வந்தான். அவன் மனைவியான அரோரா மட்டிலும் என்றும் போல் குன்றா இளமையுடனும், மாறா எழிலுடனும் விளங்கினாள். தான் முதியவனான நிலையிலும் தன் மனைவி அழகு நிறைந்து விளங்குவதைக் குறித்து அவன் அடங்காப் பெருமை கொண்டான். ஆனால், மேலும் பல ஆண்டுகள் சென்றபின், அவனுக்கு எதிலுமே கருத்துச் செல்லவில்லை; எதையும் நுகர்ந்து மகிழ இயலாமற்போயிற்று. அவன் அவ்வளவு படுகிழமாகிவிட்டான். அவன் கால்கள் அவனைத் தாங்க முடியாதபடி வறு குன்றிவிட்டன. அவன் கண்கள் எதையும் பார்க்க முடியாதபடி ஒளி மங்கிவிட்டன; அவனிடம் உயிர்ப்போடு எஞ்சியிருந்தது அவன் குரல் ஒலி ஒன்றுதான் என்று கூறக்கூடிய நிலை வந்துவிட்டது. அரோரா அவனைத் தன்னோடு நெடுநாள் வைத்திருந்தாள். ஆனால், கடைசியில் அவனது முனகலையும் குறைகளையும் கேட்டு அவள் சலிப்புற்றுவிட்டாள். தன்னைத் தன் போக்கில் இறந்துபோக விட்டுவிடும்படி அவன் கடவுளரை எப்போதும் வேண்டிவந்தான். ஆனால், அவனை அவர்கள் இறந்துபோக விடமாட்டார்கள் என்பது அரோராவுக்குத் தெரியும்; அவள்தான் அவனுக்குச் சாவாவரம் வாங்கியிருக்கிறாளே! டிதோனசுக்கு எஞ்சியிருந்தது குரல் ஒலி மட்டுமே. ஆகையால், அவன் அதை இடைவிடாது பயன்படுத்தினான்; எப்போதும் கூச்சலிட்டு இரைந்து பேசிவந்தான்; தான் சொல்வதை யாராவது கேட்கிறார்களா இல்லையா என்பதைப் பாராமலே, அவன் சொல்லியதையே மீண்டும் மீண்டும் திருப்பித் திருப்பிக் கத்தி வந்தான். அரோரா அவன் நிலைக்கு இரங்கினாள்; ஆனால், முன்பு அவன்மீது அவள் கொண்டிருந்த காதல் அற்றுப் போய்விட்டது. குழிந்த கண்ணும், எலும்புக்கூடாய் வற்றிய உடலும், வளைந்த காலும் உடையவனாய், தாழியில் வைக்கும் பருவத்திலிருந்த அக்கிழவனுக்கும், அவள் முன்பு காதலித்த இளங்காளை டிதோனசுக்கும் எவ்விதத் தொடர்பும் தென்படவில்லை. அவனும் அவள் ஒருத்தி இருப்பதையே உணரமுடியாதவனாகிவிட்டான். எனவே, அவள் அவனை மீண்டும் பூவுலகிற்கே இட்டு வந்து, வெட்டுக்கிளியாக உருமாற்றி அங்கேயே விட்டுச் சென்றாள். நீங்கள் பொழுது விடியும்போது தாமரை இதழ்போல் சிவந்த வைகறை வானத்தைப் பார்த்ததும் அரோராவை நினைத்துப் பாருங்கள்; செந்தழல் வண்ணப் போர்வை போர்த்து, பொன்னிறத் தேரேறி, முத்துத் தலைவாசலைக் கடந்து அவள் வருவதை எண்ணிப் பாருங்கள். புல் வெளியில் கிரீச், கிரீச் என்று பச்சை வெட்டுக்கிளி இரையும்போது அரோராவின் கணவனான டிதோனசை நினைவுகொள்ளுங்கள். கிரேக்கர்கள், இரவில் தண்ணொளி வீசி எல்லாரையும் மகிழ்விக்கும் வெண்மதியைப் பெண்ணாக உருவகித்து அவளை டயானா என்று குறிப்பிட்டு வந்தார்கள். டயானா ஒரு வேட்டுவப் பெண்ணாக அவர்கள் கண்களுக்குத் தோன்றினாள். அவள் கையில் வெள்ளியினாலான வில் ஒன்று இருக்கும். அவள் அம்புகள் வெள்ளி முனை படைத்தவை. டயானாதான் வேட்டைத் தொழிலுக்கு இறைவி. வேட்டையாடுவதற்கு வசதியாகச் சல்லடம் கட்டுவதுபோல் அவள் ஆடை தொடைவரையில்தான் தொங்கும். அவள் முதுகில் அம்புக்கூடு தொங்கும். வேட்டைத் தலைவி என்ற முறையில் அல்லாமல், நிலவுத் தெய்வம் என்ற முறையில், அவளை நீண்ட, இருண்ட நிற அங்கி தரித்த ஒரு பெண்ணாக அவர்கள் கருதி வந்தனர். அவள் மேலாடை நெடுக விரிந்து பரவிக் கிடக்கும். அந்த ஆடை முழுவதிலும் விண்மீன்கள் சுடர்விட்டு ஒளிவீசும். அவள் நெற்றியில் இளம்பிறை திகழும். இந்த அழகு வர்ணனை, நட்சத்திரங்கள் மின்னும் இராக்கால வானத்தை நம் அகக் கண்முன் கொண்டு வருகிறதல்லவா? டயானா அழகும் எழிலும் நிறைந்த ஒரு தெய்வமகள். தன் தோழியரைவிட அவள் ஒரு பிடி உயரமானவள். நீரணங்குகளும் மரக்கன்னியருமே அவளுக்குத் தோழிகள். டயானா வேட்டை மீது செல்லும்போது அவர்கள் தங்கள் உறைவிடங்களைவிட்டு நீங்கி வந்து அவளுடன் சேர்ந்து, வேட்டைக்குச் செல்வார்கள்; அல்லது அவள் பச்சை வயல்வெளிகளில் ஆடிப்பாடி அகமகிழும்போது அவளுடன் சேர்ந்து ஆடிக் களிப்பார்கள். சில சமயங்களில் டயானா தன் அண்ணனான அப்பா லோவுடன் சேர்ந்து கடற்குதிரை மீது அமர்ந்து, கடலலைகள் காலில் தண்ணீர் சொரிவதைப் பார்த்து மகிழ்வாள். ஒருநாள் அப்பாலோ கடலில் தென்பட்ட கருநிறப் பொருள் ஒன்றை அவளுக்குச் சுட்டிக் காட்டினான். “அதை நீ உன் ஒரே அம்பால் ஊடுருவி அடித்து விடு பார்க்கலாம்; உன்னால் அது முடியவே முடியாது,” என்று அப்பாலோ டயானாவிடம் கூறினான். அப்பாலோவுக்கு அந்தக் கருநிறப் பொருள் என்ன என்பது நன்றாகத் தெரியும். அது ஓரியன் என்னும் ஒரு பூதகணத்தவனின் தலை. ஓரியன் கடலுக்கு இறைவனான நெப்டியூனின் மகன். கடலில் நடந்து செல்லும் பேராற்றலை நெப்டியூன் தன் மகனான ஓரியனுக்கு வழங்கியிருந்தான். அப்பாலோவுக்கு ஓரியன்மீது பொறாமை இருந்து வந்தது. ஓரியன், டயானாமீது அன்புகொண்டிருந்தான். அவன் அடிக்கடி கடலைக் கடந்துவந்து அவளைக் கண்டு போவான். அப்படி வரும்போது அவன் தன் தலைமட்டிலும் கடல் அலைக்கு மேலே தெரியும்படி நடந்து வருவான். ஆனால், அன்று, நெடுந் தொலையில் வந்த ஓரியனை டயானாவினால் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, தன் அண்ணன் தன் வில் வல்லமையைப் பழிப்பதுபோல் கூறிய சொற்களைக் கேட்டதுமே அவள் வில்லை முடுகி இழுத்து ‘விர்’ என்று விட்ட அம்பு ஓரியனின் தலையைத் துளைத்துச் சென்றுவிட்டது. தான் என்ன கொடுமை இழைத்துவிட்டோம் என்பது அவளுக்கு உடனே பிடிபடவில்லை; பிணமாகிவிட்ட ஓரியனை அலைகள் அவள் காலடியிற்கொண்டு ஒதுக்கிய பின்தான் அவள் அதை உணர்ந்தாள். ஓரியனின் நாய் சிரியஸ் ஓடிவந்து ஓலமிட்டு, அவன் உடலைப் பரிவுடன் முகர்ந்து, நக்கி, வளைய வளையச் சுற்றி வந்த காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. “ஐயோ, சிரியசே! நீ உன் தலைவனை இவ்வுலகில் இழந்து விட்டாய், ஆனால், நீ என்றும் இடைவிடாமல் அவனுடன் வானத்தில் விண்மீனாக விளங்குவாய்,” என்று டயானா தேறுதல் கூறி வாழ்த்தினாள். டயானா ஓரியனை விண்மீன் மண்டலத்தில் என்றும் விளங்கும்படி செய்துவிட்டாள். அவள் ஆணைப்படி ஓரியனின் நாய் சிரியசும், அவனது வாளும், இடுப்புக் கச்சையும் அவனுடன் விண்மீன்களாக இன்றும் விளங்குகின்றன. டயானா எத்துணை ஆற்றல் படைத்த பெருந்தெய்வம் என்பதை நீங்கள் இக்கதையிலிருந்து தெரிந்து கொண்டிருப் பீர்கள். அவள் உலக மக்களுக்கு உற்ற துணைவி. ஆனால், அவளைப் பகைத்தவர்களுக்கு அவள் மிகவும் பொல்லாத எதிரி. ஆகமெம்னன் என்னும் கிரேக்க மகன் ஒருவன் டயானாவுக்குத் தனி உரிமையுள்ள ஒரு காட்டில் வாழ்ந்த கலைமான் ஒன்றைக் கொன்று அவள் சினத்துக்கு ஆளாகி விட்டான். டயானாவின் சீற்றத்தைத் தணிப்பதற்கு ஆகமெம்னன் தன் அருமை மகளான இபிஜீனியாவைக் காவு கொடுப்பது ஒன்றுதான் வழி என்று நிமித்திகக்காரர்கள் கூறினார்கள். ஆனால், ஆகமெம்னன் அதற்கு முதலில் இணங்கவே இல்லை; பலநாள் பிடிவாதமாக மறுத்து வந்தான். ஆனால், இறுதியில் வேறு வழியில்லாது போகவே அவன் அவளை அதற்கு ஒப்படைக்க இணங்கினான். அந்த இளநங்கையும் காலும் கையும் கட்டுண்டு பலிபீடத்தில் தலைவைத்துக் கிடந்தாள். அவள் தலையை வெட்டுவதற்குக் கத்தியையும் ஓங்கியாகிவிட்டது. ஆனால், அந்நொடியில் நிலவுத் தெய்வத்தின் நெஞ்சு இளகி விட்டது. அப்பெண்மீது அவள் இரக்கங்கொண்டாள். அவளை டயானா ஒரு மேகப்படலத்தில் மறைத்துச் சுற்றி எடுத்துக் கொண்டு போய்விட்டாள். அவளுக்குப் பதிலாக ஒரு மானை அவள் பலிபீடத்துக்கு அனுப்பி வைத்தாள். ஆனால், மற்றொருதடவை, ஆக்டீயன் என்னும் வேட்டுவச் சிறுவன் ஒருவன் தவறிழைத்தபோது அவள் இவ்வாறு பரிவுடன் நடந்துகொள்ளவில்லை. அவள் தன் தோழியருடன் ஒருநாள் ஒரு சுனையில் நீராடிக் கொண்டிருந்தபோது அவ்வேடன் ஒளிந்திருந்து பார்த்துவிட்டான். டயானாவுக்கே தனியுரிமையுள்ள காட்டுச் சுனையின் தெள்ளிய நீரில் அவளும் தோழியரும் நீரை ஏற்றி இறைத்து நீராடிக் கொண்டிருந்தனர். அச்சுனையைச் சுற்றி வளர்ந்திருந்த செடிகளின் இலைகள் திடீரென விலகி இடைவெளி தெரிந்தது. அதன் வழியே ஓர் ஆண் மகன் உற்றுப் பார்ப்பதை அவர்கள் கண்டார்கள். ஒருவேளை அவன் தெரியாத்தனமாக அப்படிப் பார்த்திருக்கலாம். ஆனால் மக்கள் தெரிந்து, வேண்டுமென்றே குற்றம் இழைத்தார்களா அல்லது தெரியாமலே பிழை செய்தார்களா என்பதைப் பற்றிக் கடவுளர் அக்கரைப்படுவ தில்லை. டயானாவின் கண்கள் சீற்றத்தால் சிவந்தன. சிறிது நீரை வாரி அவன்மீது தெளித்து, “ஓடிப்போ” என்று அவள் விரட்டினாள். ஆக்டீயோன் ஓடிச்செல்லும்போதே அவன் உடல் முழுவதிலும் மயிர் முளைத்து வந்தது; தலையில் கொம்புகள் கிளம்பின. சிறிது தொலைபோனதுமே அவனுக்கு, கைகளையும் கால்களையும் ஒருப்போல ஊன்றி ஓடினால் விரைவாகச் செல்லலாம் என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அதேபோல், அவனும் அக்காட்டினூடே ஒரு விலங்குபோல் விரைந்து ஓடினான். தனக்கு என்ன நேர்ந்துவிட்டது என்பதை அவன் முதலில் உணரவில்லை. ஒரு நீரோடை அருகில் வந்தவுடன் தண்ணீரில் தன் உருவத்தை அவன் கண்டான். டயானா தன்னை ஒரு மானாக மாற்றிவிட்டிருப்பதை அவன் உணர்ந்தான். சற்று நேரத்துக்குள் அவன் நாய்களே அவனை விரட்டத் துவங்கின. தான் யார் என்பதை அவைகளுக்கு அவனால் உணர்த்த முடியாமற்போகவே, அவை அவனை வேட்டையாடிக் கொன்றுவிட்டன. அந்நிகழ்ச்சி நடந்ததிலிருந்து கிரேக்க வேட்டைக்காரர்கள் டயானாவின் சுனைக்குப் பக்கத்தில்கூடச் செல்வதில்லை. எங்கேயாவது செடிகளுக்குப் பின்னால் பெண்கள் நீரை ஏற்றி இறைத்து விளையாடும் ஓசை கேட்டால், அவர்கள் தலை நிமிர்ந்து பாராமல் ஒதுங்கிச் சென்று விடுவார்கள். சினம் மூண்டால் டயானா இவ்வாறு கடுமையாக நடந்து கொள்வாளாயினும், இயல்பாக அவள் இரக்கமுள்ளவள் தான். கிரேக்க மாவீரன் ஹெர்க்யூலிஸ் ஆற்றிய பன்னிரு அருஞ் செயல்களுள் நான்காவது பணி டயானாவின் மானைப் பிடிப்ப தாகும். அம்மானை அவன் ஓராண்டு காலம் ஓடித் துரத்தினான். சற்றே களைத்த மான் டயானாவைத் தஞ்சமடைந்தது. உடனே அவள் அதற்கு அபயமளித்து, ஹெர்க்யூலிஸ் முன் தோன்றி, “மாவீர, உன்னை மெச்சினேன், உன் வீரம் பெரிதாயினும் நீ என் மானைக் கைப்பற்றல் தகாது; உன் பணி இத்துடன் நிறைவேறி விட்டது; நீ நலமே போய் உன் மன்னனிடம் இதைக் கூறு,” என்று அவனை வாழ்த்தி அனுப்பினாள். டயானாவின் இயற்கை இயல்பை இது எடுத்துக் காட்டும். ஒலிம்பசு மலையில் இருந்த பல தெய்வமாளிகைககளில் ஒரு மாளிகை பெரும்பாலும் ஆளில்லாமல் வெறுமனேயே இருக்கும். எப்போதாவது கடவுளர் பேரவை கூடும்போது மட்டிலும்தான் அதன் தலைவன் அங்கே வந்து இருப்பான். மிச்ச நாட்களில் அவன் தன் தனிப்பட்ட தலைமை மாளிகையில், இதைவிட இன்னும் பேரழகுவாய்ந்த பொற்கோயிலில், கொலுவிருப்பான். அப்பொற்கோயில் எங்கே இருந்தது என்று உங்களால் கூறமுடியுமா? அது கடலுக்கடியில் இருந்தது! தனித் தங்கத்தினால் ஆன அம்மாளிகை மிகவும் பெரிது. ஆயிரக்கணக்கானபேர்கள் அங்கே வாழ இடமுண்டு. அதன் அடித்தளத்தில் நுண்ணிய வெண்மணல் பரப்பப்பட்டிருந்தது. அம்மணலுடன் முத்தும் வயிரமணிகளும் விரவப்பட்டிருந்தன. அந்த அரண்மனைப் பூங்காவில் பவளத்தாலான செய்குன்று களும் படிகமலைகளும் இருந்தன. அழகிய பலநிறப்பூக்கள் நிறைந்த கடற்செடிகளும் பச்சைப் பசேரென்ற கடற் பாசிகளும் அங்கே இருந்தன. சிறுசிறு மீன்கள் உள்ளே வந்து ஓடி ஆடித் திரியும் அங்கே பல குகைகளும் கெவிகளும் இருந்தன. அவைகளில் கடல் கன்னியர் வாழ்ந்து வந்தார்கள். அந்த அரண்மனையின் அரசன் நெப்டியூன். அவன் தான் கடல் இறைவன். அவன்தான் கடலுக்கடியில் இப்பெரு மாளிகையைக் கட்டியிருந்தான். அங்கே அவன் கொலுவிருந்தான். அவனுடன் அவன் மனைவி ஆம்பிட்ரைட் என்பவளும், மகன் ட்ரைட்டனும் வாழ்ந்து வந்தார்கள். நெப்டியூன் கையில் மூவிலைச்சூலம் ஒன்று இருக்கும். அவன் தன் சூலத்தால் கடலைக் குத்திக் கிழித்துப் பெரும் புயலை உண்டுபண்ணிவிடுவான்; பூமியை அதிரச் செய்வான்; திடுமெனக் கடல்மீது புதிய தீவுகள் தோன்றும்படிச் செய்வான். அவன் அச்சூலத்தை நிலத்தில் ஊன்றினால் அதிலிருந்து தெள்ளிய இனிய நீர் ஆறாகப் பெருகும். நெப்டியூன் தன் விருப்பம்போல் கடலில் சூறைக் காற்றைக் கிளப்பிக் கடலைக் குமுறவைக்கவும், இல்லையேல், அமைதியை ஏற்படுத்தவும் வல்லவன். நுரைத்துப் பொங்கிச் சீறியடிக்கும் வெள்ளிய அலைகள் எழும்புவதையும், படகுகள் அவைமீது இங்குமங்கும் அடிபடுவதையும் பார்க்கும்போது நெப்டியூனுக்குச் சினம் மூண்டுவிட்டது என்று கிரேக்கர்கள் கூறுவார்கள். மீண்டும் கடலில் அலை அடங்கி அமைதியான நீலக்கடலாக அது தோற்றமளிக்கும்போது அவனது சீற்றம் தணிந்துவிட்டதாக அவர்கள் கூறுவார்கள். மாலை வெயிலில் பலநிறக் கதிர்கள் கடலில்பட்டு, கண்கவரும் ஓவியம்போல் திகழும்போது, நெப்டியூன் பொன் மயிருள்ள கடல் குதிரைகள் பூட்டிய முத்துத் தேரில் பவனி வருவதாகவும், அவனை மச்ச மைந்தரும் மீன் மகளிரும் புடைசூழ்ந்து அவனது புகழைப் பாடிவருவதாகவும், அவர் களுக்கு நடுவே நெப்டியூனின் மகன் டிரைட்டன் வெற்றிச்சங்கம் ஊதிவருவதாகவும் அவர்கள் கற்பனை செய்திருந்தார்கள். டிரைட்டன் ஒருபாதி மனிதனும், ஒருபாதி மீனுமாக அமைந்தவன். இடுப்புவரையில் மனித உடலையும் அதற்குக் கீழே மீன் உடலையும் அவன் பெற்றிருந்தான். வலம்புரிச்சங்கு ஒன்றை அவன் வைத்து முழங்குவான். அது பேரிடி முழக்கம்போல் வானம் அதிரக் கேட்கும். நெடுந்தொலையில் பேரலைகள் கற்பாறைகள் மீது மோதும்போது அம்முழக்கந்தான் கேட்கும். டிரைட்டனின் தாய் ஆம்பிட்ரைட் முன்பு மச்ச கன்னியாக இருந்தவள். அதனால் அவள் இடுப்புக்குக் கீழே மீன் வால்போல் அமைந்துவிட்டது போலும்! ஆம்பிட்ரைட் மிக்க அழகுள்ளவளாக இருந்தமையால், நெப்டியூன் அவளை மணந்துகொண்டான். ஆனால், பிற பல தெய்வங்களைப்போலவே, அவன் அன்பும் ஒரே இடத்தில் நிலைத்திருக்கவில்லை. பிறகு அவன் சில்லா என்னும் அழகிய பெண்ணைக் காதலித்தான். ஆம்பிட்ரைட் அதனால் பெருஞ்சினங்கொண்டாள். ஒருநாள் அவள் சில்லா குளித்துக்கொண்டிருந்த சுனையருகே வந்தாள். சில்லா திரும்பிப்பாராமல் குளித்துக் கொண்டிருக்கவே தன் கையிலுள்ள சில பச்சிலைகளை ஆம்பிட்ரைட் அச்சுனைநீரில் போட்டாள். உடனே சில்லா பெரிய கடல் பூதமாகிவிட்டாள். சில்லாவின் கால்கள் தந்தம்போல் கடைந்தெடுத்த கால்கள் என்று நெப்டியூன் அன்புடன் பாராட்டியிருந்தான். எனவே, ஆம்பிட்ரைட், அப்பூதத்துக்குப் பன்னிரண்டு கோணலான கால்களைக் கொடுத்துவிட்டாள். ஒடுங்கி நீண்ட கழுத்துகளுடன் ஆறு தலைகள் ஏற்படும்படியும் சபித்துவிட்டாள். நெப்டியூன் சில்லாவின் குரல் இனிமையைப் பெரிதும் பாராட்டியிருந்த படியால், பூதமாக மாறிய சில்லாவுக்குக் குரைக்கும் நாயின் ஊளை ஒலியை அவள் கொடுத்துவிட்டாள். தன் இழிந்த கோலத்தைக் கண்ட சில்லா உள்ளம் வெம்பி, வெட்கி, ஒருவரும் வரமுடியாத ஒரு பாறையில் இருந்த குகையில் குடிபுகுந்தாள். அப்பாறை இன்றும் சில்லா என்றே கூறப்படுகிறது. அங்கு வாழ்ந்த சில்லா காலப்போக்கில் தன் மென்மையான இயல்புகளை இழந்துவிட்டாள்; அவள் பெற்ற உருவத்துக் கேற்பக் கொடிய உள்ளமும் பொல்லாத பண்பும் படைத்தவ ளானாள். அவ்வழியே சென்ற கப்பல்கள்மீது பாய்ந்து தாக்கி உடைத்து மாலுமிகளை விழுங்கிவந்தாள். கடலில் மரக்கலங்கள் உடைந்து மாலுமிகள் உயிரிழப்ப தற்கு, கிரேக்கர்கள் இதையே காரணமாகக் காட்டிவந்தார்கள். இன்றுங்கூட யாராவது அப்பாறை அருகில் சென்றால் உயிரிழக்க வேண்டியவர்கள் தான். ஆனால், நாம் இப்போது ஆள் விழுங்கும் சில்லா என்னும் பூதம் இருப்பதை நம்புவதில்லை. நீருக்கடியில் மறைந்து கிடக்கும் பாறைகளும், குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் உள் நீரோட்டங்களும் கப்பல்களை உடைப்பதற்குப் போதும் என்பது நமக்குத் தெரியும்; அதற்கு ஒரு சில்லா தேவையில்லை. ஒருநாள் நெப்டியூனுக்கும் அத்தீனி என்னும் தெய்வத்துக்கும் ஒரு நகரத்தின் பெயர் குறித்து வழக்கு ஏற்பட்டது. அத்தீனி அந்நகர் தன் பெயரால் வழங்க வேண்டு மென்றாள். நெப்டியூன் அது தன் பெயரால் வழங்க வேண்டுமென்றான். இருவரும் ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியாமற் போகவே, நெப்டியூன் அதுபற்றி முடிவு கூறுமாறு மற்றத் தெய்வங்களைக் கேட்டுக்கொண்டான். உலகமக்களுக்கு மிக்க பயன் செய்யும் ஒரு பொருளை யார் பரிசாக வழங்குகிறார்களோ, அவர் பெயரே அந்நகருக்கு ஏற்பட வேண்டும் என்று அவர்கள் முடிவு கூறினார்கள். “நான் அவர்களுக்குக் குதிரையைக் கொடுக்கிறேன்,” என்று நெப்டியூன் கூறினான்; உடனே அவன் ஆணையால் பூமியிலிருந்து ஓர் அழகான குதிரை தோன்றியது. அதுதான் உலகத்தில் வந்த முதலாவது குதிரை. “நான் ஆலிவ் மரத்தைத் தருகிறேன்” என்று அத்தீனி கூறி, தன் கைத்தண்டால் நிலத்தைக் கீறினாள். உடனே ஒரு மரம் முளைத்தது. “அத்தீனியின் பெயர்தான் அந்நகருக்கு வழங்கவேண்டும்,” என்று பிற கடவுளர்கள் முடிவு கூறினார்கள். “மரம் பசுமை யானது; செழிப்புக்கும் அமைதிக்கும் அது அறிகுறி; ஆனால், குதிரை போரைக் குறிக்கிறது; போரினால் அழிவுதான் ஏற்படும்,” என்று அவர்கள் தெரிவித்தார்கள். அதன்பின் அத்தீனி அந்நகருக்கு ஆதென்ஸ் என்று பெயரிட்டாள்; அதையே நாம் ஏதென்ஸ் என்று கூறுகிறோம். நெப்டியூன் அடங்காச் சினத்துடன் தன் கடல் மாளிகைக்குச் சென்றுவிட்டான். ஏதென்ஸ் செழித்து வாழாது, பாழடைந்துவிடும் என்று நெப்டியூன் நம்பினான். ஆனால், அது புகழ் மிகுந்து விளங்கி, உலகின் தலைசிறந்த நகரமாகத் திகழ்ந்தது. ஆயினும், குதிரையும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள விலங்கினமாகவே அமைந்தது. அதை நெப்டியூன் அமைதியுள்ள விலங்காகப் பழக்கி, அதன்மீது ஏறிச்செல்வது எப்படி என்பதை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தான். கிரேக்கர்கள் குதிரை பூட்டிய தேர் ஏறி ஓட்டப்பந்தயங்கள் நடத்திய காலத்தில், முதல்நாள் விழாவை நெப்டியூன் விழாவாகவே கொண்டாடினார்கள். பரிதிக்கடவுளான அப்பாலோவும், நிலவொளித் தெய்வமான டயானாவும் இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்த உடன் பிறந்தவர்கள். அவர்கள் கைப்பிள்ளைகளாக இருக்கையில் அவர்களின் தாயைச் சீயஸ் கடவுளின் மனைவியான ஹீரோ மிகவும் கொடுமைப்படுத்தினாள். அத்தாய் தன்னிரு குழந்தைகளையும் எடுத்துக்கொண்டு அடிக்கடி இடம் விட்டு இடம் பெயர்ந்து ஓட வேண்டியதாக இருந்தது. கடைசியில் சாவாவரம் பெற்றிருந்த தீமிஸ் அவள்மீது இரக்கம்கொண்டு, அப்பாலோவைத் தன்னிடம் விட்டுச் செல்லும்படி கூறியிருந்தாள். தீமிஸ், அப்பாலோவை அணையடைத் துணியில் சுற்றிக் கட்டிவைத்து அமிழ்தத்தைக் கொடுத்து வந்தாள். அதை உண்ணும் அப்பாலோ நாள்தோறும் அதிக அழகும் வலுவும் பெற்று வளருவான் என்று தீமிஸ் கருதினாள். ஆனால், அமிழ்தம் அவன் வாயில் பட்டதோ இல்லையோ அப்பாலோ தன் கட்டுகள் தெறிக்கும்படி துள்ளி எழுந்து, வியப்புற்ற தீமிஸின் கண்முன்னாகவே ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஓர் அழகிய இளைஞனாகத் திகழ்ந்தான். அவன் கண்கள் நீலக் கருவிழி படைத்திருந்தன. அவன் தலைமயிர் நீண்டு பொன்மயமாய் இருந்தது. அவன் முகம் தெளிவுடனும் ஒளியுடனும் விளங்கிற்று. ஒரு யாழும் ஒரு வில்லும் தரும்படி அப்பாலோ தீமிஸிடம் கேட்டான். “பொன்யாழ் தனக்கு எப்போதும் பக்கத் துணையாக இருக்கும்; வில் தனக்கு வேடிக்கைப் பொருளாக இருக்கும்,” என்று அவன் கூறினான். மேலும் தான் மக்களுக்கு நிமித்தம் பார்த்து எதிர்காலக் கேடுகளை முன்கூட்டியே எடுத்துக்கூறப் போவதாகவும் அப்பாலோ,தீமிஸிடம் உரைத்தான். ஒலிம்பசுத் தெய்வங்கள் அவனை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். பரிதியின் தேரை அவனிடம் அவர்கள் கொடுத்து ஓட்டச் சொன்னார்கள். சூரியன் ஒரு பொன் தேர் என்று பண்டைக் கிரேக்கர்கள் கருதினார்கள். அது நாள்தோறும் கிழக்கிலிருந்து புறப்பட்டு, மேற்குநோக்கி வானவீதியில் பாய்ந்து செல்லும் என்றும், அப்பாலோ அதை ஓட்டிச் செல்கிறான் என்றும் அவர்கள் கருதினார்கள். எனவே, அப்பாலோவை அவர்கள் பரிதிக்கடவுள் என்றே குறிப்பிடத் துவங்கினார்கள். அவன் இசைக்குத் தெய்வமாகவும் கருதப்பட்டான். காலையில் கதிரவன் ஒளி பட்டதுமே பறவைகள் தங்கள் இன்குரலால் இசைபாடுவதைப் பார்த்த மக்கள் அவ்வாறு குறிப்பிட்டார்கள். அப்பாலோ மருந்துகளுக்குச் சக்தி அளிக்கும் தெய்வமாகவும் கருதப்பட்டான். பகலவனின் வெளிச்சத்தால் எத்தனையோ நோய்கள் தீருவதால் அவர்கள் அவ்வாறு நினைத்தார்கள். அவனே எதிர்கால நிகழ்ச்சி உரைக்கும் நிமித்திகக் கடவுளாகவும் கருதப்பட்டான். ஆனால், அப்பாலோ பெரும்பாலும் பரிதிக்கடவுள் என்றே சிறப்பாகக் குறிப்பிடப்பட்டான். அவன் தாவிக் குதிக்கும் தன் குதிரைகளை நீலவானில் விரைந்து செலுத்திக்கொண்டு வருவான் என்றும், இல்லையேல், தன் பொன் யாழில் இன்னிசை மீட்டிக்கொண்டு வயல்களிலும் காடுகளிலும் சுற்றித் திரிவான் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஒரு காலத்தில் ஊருக்கெல்லாம் துன்பம் விளைத்து வந்த பைதான் என்னும் மலைப்பாம்பைக் கொன்று அவன் மக்கள் துயர் தீர்த்தான். மக்களும் அதற்கு நன்றி பாராட்டி, அப்பாலோவுக்கு ஒரு கோயில் எழுப்பினார்கள். அப்பாலோ பிற கடவுளர் எல்லாரைக் காட்டிலும் தலைசிறந்த பேறுகளைப் பெற்றிருந்தும், அவனையும் விதி சில சமயங்களில் சதி செய்தது. மலைப்பாம்பைக் கொன்றொழித்தபின் அப்பாலோ தன் வீரப் பெருமிதத்துடன் சென்று கொண்டிருக்கையில், காதல் தெய்வமான கியூப்பிட் தன் சிறிய அம்புகளை மக்கள் மீது எய்துகொண்டிருந்ததைக் கண்டான். “அம்புகள் மலைப்பாம்பைக் கொல்பவனுக்கல்லவா வேண்டும். மக்கள் மனதை வாட்டுவதற்கு இவ்வளவு பெரிய படை எதற்கு?” என்று அப்பாலோ, கியூப்பிட்டிடம் இகழ்ச்சியாகக் கேட்டான். கியூப்பிட் அதைக்கேட்டு வெகுண்டு, “மலைப்பாம்பைக் கொன்ற மாவீரனே! உன் நெஞ்சையும் என் அம்புகள் துளைக்கும், பார்” கூறிவிட்டு, பார்னாசஸ் என்னும் உச்சிமலை முகட்டுக்குப் பறந்து சென்றான். தன் அம்புக்கூட்டிலிருந்து இரண்டு அம்புகளை எடுத்தான். ஒன்று பொன் முனை அம்பு. அது தைத்தவர்கள் நெஞ்சில் காதல் பிறக்கும். மற்றொன்று ஈயமுனை அம்பு. அது துளைத்தவர்கள் நெஞ்சில் பகைமை பிறக்கும். ஈயமுனை அம்பை அவன் டாப்னே என்னும் வன மகள் மார்பில் பாயும்படி எய்தான்; பொன்முனை அம்பால் அப்பாலோ மார்பைத் துளைத்தான். அம்புபட்ட அப்பாலோ டாப்னே செல்வதைக் கண்டு அவள்மீது காதல்கொண்டு அவளைப் பிடிக்கச் சென்றான். ஆனால், பகைமை உணர்ச்சி மிக்கிருந்த அவள் அவனை வெறுத்து அவன் பிடிக்குச் சிக்காமல் ஓடினாள். காற்றிலும் கடுகி விரைந்த அவளை அப்பாலோ அதைவிட விரைந்து தாவிப் பிடிக்க நெருங்கினான். அவன் ஓடும்போதே பல இன்மொழிகளால் அவளை அழைத்துக் கொண்டே ஓடினான். டாப்னே அவன் நெருங்குவதைக் கண்டு நெஞ்சு திடுக்கிட்டு, அச்சம் மேலிட்டு, “ஐயோ! அப்பா! பீனியஸ்! என்னைக் காப்பாற்று” என்று தன் தந்தையான ஆற்றுக்கிறைவனை அழைத்தாள். அவள் அவ்வாறு அலறி வாய்மூடுமுன் அவள் தரையில் வேரூன்றி நின்று, ஒரு மரமாகிவிட்டாள். தன் மகளைக் காப்பாற்றுவதற்காகப் பீனியஸ் செய்த வேலைதான் அது. அப்பாலோ அதைக் கண்டு மிகவும் வருந்தினான். தன் அன்புக்குரிய பெண் மரமாகிவிட்டாலும் அவள்மீது தான் கொண்ட அன்பின் அறிகுறியாக அம்மரத்தின் மலர்களைக் கண்ணியாக முடித்து, அதை அவன் தன் தலையில் சூடிக்கொண்டான். அதுதான் வெற்றிவாகை மரம். அம்மரத்தின் இலைகள் எக்காலத்தும் என் அன்புபோல் பசுமையாக இருக்கட்டும் என்று அவன் வாழ்த்தினான். அதுமுதல் வாகைமரம் அப்பாலோவுக்கு உகந்த மரமாகி விட்டது. அப்பாலோவுக்கு ஹையாசிந்தஸ் என்னும் மானிடச் சிறுவன் மீது அளவிலா அன்பு ஏற்பட்டது. அடிக்கடி அப்பாலோ பூவுலகுக்கு ஹையாசிந்தஸுடன் வட்டு வீசி விளையாடுவான். ஒரு நாள் அப்பாலோ வீசிய வட்டு ஹையாசிந்தஸ் நெற்றியில் பட்டு படுகாயம் உண்டு பண்ணிவிட்டது. ஆறாகக் குருதி கொட்டும் அச்சிறுவன் இறந்துவிடாமல் தடுப்பதற்காக, அவனை அப்பாலோ ஒரு மலர்ச்செடியாக மாற்றி அவன் உயிரைக் காப்பாற்றி விட்டான். செங்குருதி நிற ஹையாசிந்தஸ் மலர்கள் அப்பாலோவின் அன்பை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. பெர்செபோனீ நிலமகளின் புதல்வி. அவள் அழகிற் சிறந்தவள். அவள் அடர்ந்த கூந்தலும் நீலக் கருவிழியும் சிவந்த வாயும் இனிய மணிக்குரலும் வாய்ந்தவளாயிருந்தாள். கிரேக்கர் தெய்வங்கள் குடியிருந்த ஒலிம்பசு மலையில் அவளும் ஒரு பொன் மாளிகையில் வாழ்ந்து வந்திருக்கலாம். ஆனால், அவள் உலகில் உள்ள மலர்ச்செடிகளையும் புல்வெளிகளையும் பைம்பொழில்களையுமே ஆவலோடு விரும்பினாள். அவளுடன் ஒத்த பிற தெய்வ மங்கையருடன் சேர்ந்து வாழும்படி அவள் தாயார் அவளைக் கேட்டுக் கொண்டதற்கு அவள் இணங்க மறுத்துவிட்டாள். தனக்கு மகிழ்ச்சி தருவது மண்ணுலகே என்று அவள் கூறினாள். “அம்மா, நீ விண்ணவர் உறைவிடமான ஒலிம்பசு மலையில் குடியிருந்தால் உனக்கு ஒரு கேடும் வராதே; அதுதானே நல்லது,” என்று அவள் தாயான டெமீட்டர் (பூதேவி) கவலையோடு கூறினாள். தன் செல்வக் குழந்தையைப் பாதுகாப்பதற்குத் தான் அருகில் இல்லாத நேரத்தில் அவளுக்கு ஏதேனும் ஊறு நேர்ந்துவிடுமோ என்று அவள் எப்போதும் அஞ்சி வந்தாள். டெமீட்டர் பெரும்பாலும் தன் ஒலிம்பசு மலை மாளிகையில்தான் இருப்பாள். மண்ணுலகுக்கு எப்போதோ ஒரு தடவைதான் வந்துபோவாள். அப்படி வருகிற நாட்களில் அவள் தன் அருமை மகள் பெர்செ போனீயுடன் இன்பமாகக் காலங்கழிப்பாள். பெர்சபோனீ சோலைகளிலும் புல்வெளிகளிலும் கடற்கரை களிலும் ஓடி ஆடி மகிழ்வாள். இவ்வளவு அன்புடன் உறவாடிப் பொழுதுபோக்கும் தாயையும் மகளையும் யாரும் கண்ணால் கண்டதில்லை; அவர்கள் தெய்வப் பிறவிகளாகையால், பிறர் கண்ணுக்குப் புலப்படாமல் திரியும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தது. ஆனால், தன் மகள் பெர்செபோனீயின் விளையாட்டுகளைக் கண்டு மகிழ்ந்து டெமீட்டர் சிரிக்கும்போதெல்லாம் மரங்களில் கனிகள் பழுக்கும்; கதிர்கள் பருத்துக் குலை சாய்க்கும். அதைக் கண்ணுற்ற கிரேக்கக் குடியானவர்கள், “இவ்வாண்டு, பயிர் நன்றாக விளையும்,” என்று கூறிக்கொள்வார்கள். அவ்விரு தெய்வ மகளிரும் தங்கள் வயல்களினூடு நடந்து செல்வதாலும், அவர்களுள் ஒருத்தி செழிப்பின் செல்வியான டெமீட்டர் என்பதாலுந்தான் இவ்வாறு பயிர் செழித்திருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒருநாள் காலையில் டெமீட்டர் மலர் கொய்வதற்காகப் பூம்பொழிலுக்குச் சென்றாள். அவளுடன் அவள் தோழியரான கடல் மகளிரும் சென்றனர். அவர்கள் மஞ்சள்நிற மலர்களை எடுத்து அழகிய கண்ணியாகத் தொடுத்து அவள் முடிமீது சூட்டினார்கள். அது அவளுக்குப் பொன் மகுடம் வைத்தது போல இருந்தது. அதேபோல் அவள் கழுத்தில் அவர்கள் அணிவித்த மஞ்சள்நிற மாலை பொன் ஆரம் பூட்டியதுபோல் விளங்கிற்று. பெர்செபொனீ இப்படி மலர் எடுத்து வருகையில், இதற்குமுன் அவள் ஒருபோதுமே கண்டிராத அழகுடன் விளங்கிய வெள்ளை சூரியகாந்தி மலர்ச்செடி ஒன்றை அவள் கண்டாள். பிற செடிகளைப்போல் அதில் தனித்தனியே ஓரோர் மலர் இருப்பதற்கு மாறாக, ஒரே காம்பில் நூறு மலர்கள் செறிந்து பூத்திருந்ததை அவள் கண்டாள். “அம்மம்மா! என்ன அழகு! எத்தனை பூ!” என்று அவள் வியப்புடன் கூறி, அச்செடியை நெருங்கிப் போய் பார்த்தாள். அம்மலர்களின் நறுமணம் அந்த இடமெல்லாம் கமழ்ந்தது. அந்த விந்தை மலரைப் பார்க்க வருமாறு பெர்செபோனீ தன் தோழியரை அழைத்தாள். ஆனால், அந்த நொடியிலேயே, குலைநடுங்கவைக்கும் ஒரு நிகழ்ச்சி நேர்ந்துவிட்டது. அவள் காலடியில் பூமி வெடித்து, இருள் கவிந்த கெவி ஒன்று தோன்றியது. அதனுள்ளிருந்து நான்கு பெரிய கருங்குதிரைகள் கட்டிய பொன்தேர் ஒன்று எழும்பி வந்தது. அத்தேரில் திண்தோள் படைத்த ஒரு மன்னன் அமர்ந்திருந்தான். அவன் ஒரு மன்னனைப்போல் தலையில் பொன்முடி கவித்திருந்தாலும், அவன் முகத்தில் ஓர் அரசனுக் குரிய அழகும் பொலிவும் இல்லை. அவன் அவளருகில் வந்ததும் தன் தேரைச் சற்றே நிறுத்தி, அவளை வாரி எடுத்துக் கொண்டு, மீண்டும் அக்கெவியினுள் கடு விரைவாய்ச் சென்று விட்டான். “ஐயோ, பாதாள உலகின் மன்னன் ஏடீஸ் நம் பெர்செ போனீயைத் தூக்கிச் செல்கிறானே,” என்று அவள் தோழியர் கூக்குரலிட்டனர். “இறந்தோர் ஆவிகள் உறையும் தென் புலத்துக்கல்லவா அவன் அவளை எடுத்துச் செல்கிறான்,” என்று அவர்கள் அரற்றினர். வெடிப்பு மறைந்து நிலம் ஒன்று சேர்ந்தது; அந்த இடத்தில் மீண்டும் சூரியகாந்தி மலர்கள் பூத்தன. ஆனால், ஒரே காம்பில் நூறு மலர்கள் பூத்திருந்த அந்த விந்தைச் செடி மறைந்துவிட்டது. பெர்செபோனீயின் கண்ணைக் கவர்ந்து கருத்தை மாற்று வதற்காக ஏடீஸ் அங்கே நட்டுவைத்திருந்த மாய மலர்ச்செடிதான் அது. சிறிதுநேரம் பொறுத்து டெமீட்டர் தன் அருமை மகளைப் பார்ப்பதற்காக அங்கே வந்தபோது, கடல் மகளிர் அங்கிருந்து போய்விட்டிருந்தனர். அவள் மகளுக்கு என்ன நேரிட்டது என்பதை அவளிடம் எடுத்துக்கூற அங்கே யாருமே இல்லை. ஒன்பது நாள் அவள் அங்குமிங்கும் ஓடி அலைந்து தன் மகளை ஓயாது தேடினாள். ஒவ்வொரு நாள் கழியும் போதும் அவள் கவலை மேலும் பெருகியது. எட்னா எரிமலையில் ஏற்றிய இருபெரு பந்தங்களையும் பிடித்துக் கொண்டு அவள் எங்கெங்கெல்லாமோ தேடியும், அவள் மகள் போன இடம் தெரியவில்லை; பத்தாவது நாளன்றும் முதல் நாளிருந்ததைப் போலவே தன் மகள் பற்றிய யாதொரு துப்பும் தெரிய வராமையிலேயே அவள் இருந்தாள். “இனி நான் மனித உருவம் எடுத்து உலக மாந்தரிடையே சென்று தேடுகிறேன். அவர்களாவது ஏதேனும் குறிப்புத் தரக்கூடும்,” என்று டெமீட்டர் முடிவு செய்தாள். உடனே அவள் நரைத்துத் திரைத்த மூதாட்டி போல் ஓர் உருவமெடுத்தாள். கிரேக்க நாட்டில், அட்டிக்கா என்ற பகுதியில் உள்ள ஓர் ஊரில் ஒரு கிணற்றுக்கருகில் கிடந்த பாறைமீது அவள் வந்து அமர்ந்தாள். மாலைப்பொழுதில் சில பெண்கள் தண்ணீர் இறைப்பதற்காகப் பித்தளைக் குடங்களுடன் அங்கே வந்தனர். அருகில் கிழவி இருந்ததை ஒருத்தி பார்த்தாள். “ஐயோ, ஏழை, தொண்டு கிழவி! ஏன் இவள் இப்படி இங்கே உட்கார்ந்திருக்கிறாள்?” என்று அவள் கேட்டாள். “அம்மா, இளவரசி, என்மீது சற்று இரக்கங்கொள். உன் தந்தை அரண்மனையில் நான் தங்குவதற்கு ஒரு சிறு இடமாவது தரமாட்டாயா?” என்று டெமீட்டர் கேட்டாள். “நாங்கள் இளவரசிகள் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று அப்பெண் வியப்புடன் வினவினாள். “கிழவிகளுக்கு எல்லாம் தெரியும்; அதில் வியப்பு ஒன்றுமில்லை. அது சரி; நீ போய் உன் தாயான அரசியிடம் கூறி எனக்கு ஏதேனும் ஒரு வேலை பார்த்துத் தா; பட்டத்து அரசிக்கு எத்தனையோ தாதியரும் பணிப் பெண்களும் வேண்டியிருக்குமே; நான் எனக்குத் தரும் வேலையை ஒழுங்காகவும் உண்மையாகவும் செய்வேன்,” என்று அக்கிழவி கூறினாள். இதைக்கேட்ட இளவரசி அவள்மீது பரிவு கொண்டு உடனே தன் தாயிடம் சென்று, நடந்ததை உரைத்து அவள் பதிலையும் தெரிந்துவந்து சொன்னாள். “பச்சிளம் குழந்தையான என் தம்பி இளவரசனை வளர்க்க ஒரு தாதி வேண்டும்; அவனுக்கு அவ்வப்போது பாலுட்டி அவனைச் சீராட்டி உறங்கவைக்க வேண்டும்; அந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்ளக்கூடுமானால், எங்களுடன் நீ அரண்மனைக்கு வா,” என்று இளவரசி கூறினாள். டெமீட்டரும் அதற்கு இணங்கி, அவர்களுடன் அரண்மனை சேர்ந்தாள். ஏழை எளியவரிடம் அன்பு காட்டி நடக்கவேண்டும் என்று நன்கு கற்றறிந்த அந்த இளவரசிகள் அவளைத் தங்களுடன் உண்ண அழைத்தனர். “வேண்டாம் அம்மா, உங்கள் உணவு எனக்கு ஏற்காது. ஒரு வேலைக்காரியிடம் சிறிது மாவும் தண்ணீரும் கொடுத்து அனுப்புங்கள்; நான் கூறுவதுபோல் அவள் அதை உணவாகச் சமைத்துத் தரட்டும்; அதுவே போதும்,” என்று டெமீட்டர் கூறிவிட்டாள். அவள் கூறியதுபோலவே ஏற்பாடு செய்யப்பட்டது. அவளும் மாலைநேரம் முழுவதும் குழந்தையை எடுத்துவைத்துக் கொண்டு சீராட்டினாள். இரவில் எல்லாரும் உறங்கிய பிறகு, அவள் அக்குழந் தையை எடுத்துச்சென்று கணப்புமாடத்தில் எரியும் நெருப்பின் நடுவே வைத்தாள். அக்குழந்தை அழவுமில்லை; நெருப்புத் தழலினால் துன்புறவும் இல்லை. மலர் மெத்தையில் படுத்திருப்பதுபோல் அது சிரித்துக் கொண்டே படுத்திருந்தது; நெருப்பு அக்குழந்தையைச் சுடக்கூடாது என்று அத்தெய்வமகள் தடுத்திருந்தாள். “கண்ணே, செல்வக் குழந்தாய், பகலில் நான் தரும் அமிழ்தத்தை அருந்து, இரவில் நெருப்பில் படுத்துறங்கு; இவ்விரண்டும் உனக்கு அழியாத உடம்பைத் தந்துவிடும். நீயும் தெய்வங்களைப்போலவே இறவாத நிலையைப் பெற்று விடுவாய்,” என்று டெமீட்டர் கூறினாள். பகலில் அவள் அக்குழந்தைக்கு ஒன்றுமே ஊட்ட மாட்டாள். அதன் உடம்பெல்லாம் அமிழ்தத்தைத் தடவி உருவி விடுவாள்; இரவில் அதை அவள் நெருப்பில் கிடத்திவைப்பாள். ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தை அதிக வலுவும் அழகும் பெற்று வளர்ந்துவந்தது. அரசன் அதுகண்டு அளவிலா மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டான். அத்தனை வலுவான குழந்தை அந்நாட்டில் வேறு எதுவுமே இல்லை என்று அவன் உறுதியாகக் கூறினான். “நீ குழந்தைக்கு ஒன்றுமே ஊட்டுவதில்லையாமே? அது உண்மையா?” என்று அரசன் ஒருநாள் டெமீட்டரிடம் கேட்டான். “நீ அதைக்குறித்து என்னிடம் ஒன்றும் கேட்கக் கூடாது,” என்று டெமீட்டர் பதில் சொன்னாள். “ஒவ்வொரு நாள் மாலையிலும் குழந்தையை ஏதோ ஒரு மாயவேலைக்காகக் கணப்புமாடத்துக்கு எடுத்துச் செல் கிறாயாமே, அது உண்மையா?” என்று அவன் மேலும் வினவினான். “அரசே, நீ அதைக்குறித்தும் என்னை யாதும் கேட்கக் கூடாது,” என்றாள் அவள். “சரி, அது போகட்டும்; நீ வளர்த்துள்ள குழந்தைகள் எல்லாவற்றிலும் என் குழந்தைதானே அழகிற் சிறந்தது? அதையாவது கூறு,” என்று மன்னன் பெருமிதத்தோடு கேட்டான். “என் மகள் இதைவிடப் பன்மடங்கு அழகுள்ளவளாக இருந்தாள்; ஆனால் அவளை நான் இழந்துவிட்டேன்,” என்று டெமீட்டர் வருத்தத்துடன் கூறினாள். இப்பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருந்த அரசி மன்னனிடம், “இன்றிரவு நான் கணப்புமாடத்தருகில் சென்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துவிடுகிறேன்,” என்று தனிப்படக் கூறினாள். “வேண்டாம், ஒருவேளை இவள் ஒரு தெய்வமோ என்னவோ, நீ ஏதாவது செய்து அவளுக்குச் சினமூட்டி விடப்போகிறாய், வேண்டாம்,” என்று அரசன் அவளுக்கு அறிவுறுத்தினான். ஆனால், அரசியால் தன் ஆவலை அடக்க முடியவில்லை. அன்றிரவு அவள் கணப்புமாடமிருந்த கூடத்துக்கு மெல்லமெல்ல அடியெடுத்து வைத்துச் சென்றாள். கணப்புமாடத்தருகில் குழந்தையுடன் நின்ற கிழவி தன் காலால் தீயைக் கிளறிக்கொடுத்து, கொழுந்துவிட்டெரியும்படி செய்து, குழந்தையை அந்நெருப்பில் படுக்க வைத்தாள். துணுக்குற்று அச்சம் மேலிட்ட அரசி, “ஓ” என்று அலறி விட்டாள். அந்த நொடியிலேயே கிழவியின் கூனல் நிமிர்ந்தது; அவள் உருவம் உயர்ந்தது; தன் தெய்வத் திருவழகுடன் டெமீட்டர் அரசியைத் திரும்பிப் பார்த்தாள். திகைப்படைந்த அரசி வாய்திறப்பதற்குள், அவள் குழந்தையை நெருப்பிலிருந்து எடுத்துத் தரையில் படுக்கவைத்தாள். “நான்தான் டெமீட்டர் என்னும் பெயருள்ள பூதேவி; உன் மகனை அழியாத உடம்புள்ளவனாக்கி இறவாதநிலை பெறும்படி செய்திருப்பேன்; உன் ஆவல் துடிப்பால் அதை நீ கெடுத்துவிட்டாய்,” என்று டெமீட்டர் அரசியிடம் கூறினாள். தான் செய்த பிழையை உணர்ந்த அரசி டெமீட்டர் முன் மண்டியிட்டு வணங்கி மன்னிப்பு வேண்டினாள். டெமீட்ட ரோவெனில், தன்னால் இனி அக்குழந்தையை வளர்க்க முடியாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டு, அரண் மனையிலிருந்து நீங்கினாள். அந்த ஆண்டில் ஒரு பயிருமே விளையவில்லை. டெமீட்டர் தன் மகள் பெர்செபோனீயைக் காணாத துயரத்தால் மேலும் வருந்தினாள். அவள் முகத்தில் சிரிப்பே தோன்றாதபடியால், கதிர்களில் மணி பிடிக்கவுமில்லை; மரத்தில் கனிகள் காய்க்கவும் இல்லை. உலகமெங்கும் பஞ்சம் வந்துவிடுமோ என்று பிற தெய்வங்கள் அஞ்சின. ஒலிம்பசு மலை மாளிகைகளிலிருந்த அத்தனை தெய்வங்களும் அவளுக்குச் செய்திவிடுத்தனர். “என் மகள் பெர்செபோனீயை எனக்கு மீட்டுத்தரும் வரையில் உலகில் விளைச்சலே இராது.” என்று டெமீட்டர் கூறிவிட்டாள். வேறு ஒரு வழியுமில்லாதபடியால், அத்தெய்வங்கள் ஏடீஸ் மன்னனுக்குச் செய்திவிடுத்து, பெர்செபோனீயை அவள் தாயிடம் சேர்ப்பிக்கும்படி அவனிடம் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையில் பெர்செபோனீ, ஏடீசின் மனைவியாகி விட்டிருந்தாள். பாதாள உலகில் அவள் ஏடீசுடன் அரியணை யிலமர்ந்து கொலுவிருந்தாள். முன்னிலும் மிகுந்த பேரெழிலுடன் அவள் விளங்கினாள். ஆனால், அவள் அங்கே மகிழ்ச்சி யுடனிருந்த நாளே கிடையாது. தெய்வங்கள் விடுத்த செய்தியுடன் ஹெர்மீஸ் என்னும் தூதுவன் ஏடீசிடம் வந்தான். பெர்செபோனீயை ஏடீஸ் திருப்பியனுப்பிவிட வேண்டும் என்ற செய்தியைக் கேட்டதுமே, அவளும் அவனை அதற்கு இணங்கும்படி வற்புறுத்திக் கேட்டுக்கொண்டாள். ஹெர்மீஸ் களிததும்பும் முகத்துடன் விளங்கிய ஓர் இளைஞன். அவன் காலிலும் மகுடத்திலும் வெள்ளிச் சிறகுகள் முளைத்திருக்கும். மின்னல் பாய்ந்தாற்போல் ஹெர்மிஸ் பாதாள உலகுக்கு வந்தபோது, அவளுக்கு உலக நினைவுகள் மீண்டும் உண்டாயின. பூவுலகில் கதிரவன் ஒளிவீசும் காட்சியும் மலர்கள் அழகுறப் பூத்திருப்பதும் அவள் கண்முன் தோன்றின. தான் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவள் துடித்தாள். ஏடீசும் அவளைப் போகவிடுத்தான். சிறிதுபொழுதில் அவள் தன் தாயை அடைந்து அவளைத் தழுவிக் கொண்டு நின்றாள். “அம்மா, பெர்செபோனீ! நீ பாதாள உலகில் இருக்கையில், எதையாவது தின்றுவிடவில்லையே?” என்று டெமீட்டர் கேட்டாள். “ஏன் அம்மா!” “அங்கே எந்த உணவையாவது உண்டவர்கள் அங்கேயே தங்கிவிடுவார்கள்; அதற்காகத்தான் கேட்டேன்,” என்றாள் டெமீட்டர். “ஐயோ, அப்படியா அம்மா? என் கணவர் தந்த நான்கு மாதுளை அரிசியை நான் தின்றுவிட்டேனே,” என்று பெர்செபோனீ பதட்டத்துடன் கூறினாள். அதைக் கேட்ட டெமீட்டர் மீண்டும் ஒலிம்பசுத் தெய்வங்களிடம் முறையிட்டாள். “என் குழந்தையை இனிமேலாவது என்னிடமிருந்து பிரிக்காதீர்கள்,” என்று அவள் கூறினாள். “ஏடீஸ் வந்து அவளை அழைத்தால், அவள் போகத்தானே வேண்டும்; அவள்தான் மாதுளை அரிசியைத் தின்றுவிட்டிருக் கிறாளே,” என்று அவர்கள் கூறினார்கள். “தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தானே அவள் அவ்வாறு செய்துவிட்டாள்; பெர்செபோனீ மீண்டும் டெமீட்டரைப் பிரிந்தால் விளைச்சலே இராதே” என்று மற்றொரு தெய்வம் எடுத்துக் காட்டியது. இருதரப்புக்கும் பொதுவாக, பெர்செபோனீ ஆறு மாதம் தன் கணவன் ஏடீசுடன் பாதாளத்தில் இருக்க வேண்டுமென்றும், மீதி ஆறு மாதம் பூவுலகில் தன் தாயுடன் இருக்க வேண்டுமென்றும் தெய்வங்கள் தீர்ப்பளித்தனர். மழைக்காலமான ஆறு மாதத்தில் அவள் பூமிக்கடியில் பாதாள உலகில் இருப்பாள்; இளவேனில் வந்தவுடன், அவள் மீண்டும் உலகுக்கு வருவாள்; அப்போது பயிர்கள் விளையும், மரங்கள் பழுக்கும், மலர்கள் பூக்கும். கிரேக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்) 1. வெல்போர்த் தீஸியஸ் (கிரேக்கர் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தெற்கே வந்து நாகரிக மடையுமுன்பே நாகரிக உலகில் தலைசிறந்து வாழ்ந்தவர்கள் கிரேட்டர்கள். கிரேக்க, கிரேட்ட நாகரிகக் கலப்பைச் சுட்டிக்காட்டுவது அதேனிய வீரன் தீஸியஸ் கதை.) நடுநிலக் கடலின் நடுவே பதித்த ஒரு மணிப்பதக்கமாகத் திகழ்வது கிரீட் தீவு. அதன் மன்னன் மினாஸ் அறிவுக்கும் வீரத்துக்கும் நேர்மைக்கும் பேர்போனவன். ஆயினும் அவன் கடல்தெய்வம் பாஸிடானின் கடுஞ்சீற்றத்துக்கு ஆளானான். மினாஸ் பல போர்கள் நடத்தி வெற்றி பெற்றிருந்தான். அந்த வெற்றிகளுக்காகத் தேவர்களுக்கு நன்றி தெரிவித்து விழாப் பலி அளிக்க விரும்பினான். இதுவரை எவரும் அளித்திராத சிறப்புமிக்க பலிஎருது ஒன்றை அவன் நாடித் தேடினான். மினாஸ்மீது பற்றுமிக்க பாஸிடான் தெய்விகத்தன்மையும் ஆற்றலும் அழகும் உடைய ஒரு வெள்ளெருதை இதற்காக அனுப்பி வைத்திருந்தான். அதன் அழகு மினாஸைக் கவர்ந்தது. அதன் மீதுள்ள ஆவலால், அவன் அதைப் பலியிடாமல் தனக்கென வைத்துக்கொண்டு, வேறோர் எருதைப் பலியாக வழங்கினான். தன்னை ஏமாற்றிய அன்பன்மீது பாஸிடான் கடுஞ்சினமும் பகைமையும் கொண்டான். முதலில் அவன் மினாஸின் எருது வெறிகொள்ளும்படி செய்தான். அது செய்த அழிவுக்கு அளவில்லை. ஆனால், இதனாலும் பாஸிடோன் சினம் தணியவில்லை. அவன் மினாஸின் மனைவியின் கருவிலிருந்தே இன்னும் கொடிய ஓர் அழிவுப் பூதத்தை உண்டுபண்ணினான். எருதின் தலையும் மனித உடலும்கொண்ட அந்தப் பூதத்தை மக்கள் மனித எருது அல்லது மினோட்டார் என்றனர். அது ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று பயிர்களை அழித்துப் பெருந்தொல்லை கொடுத்து வந்தது. மினாஸின் நண்பர்களுள் டேடலஸ் என்ற ஒரு அறிவிற் சிறந்த சிற்பி இருந்தான். மினோட்டாரின் அழிவு வேலையைக் கட்டுப்படுத்த அவன் தன் தலையைப் பயன்படுத்தி ‘மருட்கோட்டம்’ என்ற ஒரு திறந்த சிறைக்கோட்டம் அமைத்தான். அதன் வெளிவாயில் கவர்ச்சிகரமாகச் செய்யப்பட்டிருந்தது. அதனுள்ளே சென்றவன் திரும்பவும் வாயில்கண்டு மீளமுடியாது. பாதைகள் பலவாகக் கிளைத்தும் சேர்ந்தும் வளைந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் சுற்றிச்சுற்றி இட்டுச்சென்றன. தோட்டங்கள், வாவிகள், குன்றுகள், புதர்கள், காடுகள் எல்லாம் உள்ளே எப்படியோ இடம்பெற்றன. உட்சென்றவர் சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்துத் திரிவர். மீளும் எண்ணம் வந்தாலும் மீளமுடியாது அலைவர். மினோட்டார் இந்த வாயிலினுள் நுழைந்தபின் எதிர்பார்த்தபடியே வெளிவர முடியாமல் சுற்றிச் சுற்றித் திரிந்தது. ஆனால், அதன் அழிவுவேலைக்கு இரையாக அரசன் தன் பகைவர்களை அடிக்கடி அதனுள் செல்லும்படி தூண்டி அதன் கொடுஞ்செயல்களுக்குத் தூண்டுதல் தந்தான். அத்துடன் அவ்வப்போது அக்கோட்டத்தின் தன்மையறியாமல் அதன் அழகில் சிக்கி வேடிக்கை பார்க்க உட்சென்றவர்களும், உள்ளே திரிந்து வெளிவர முடியாமல் மினோட்டாருக்கு இரையாயினர். இது தவிர, ஆண்டுதோறும் அதற்குப் புத்தம் புதிய இரையளிக்க ஒரு தறுவாயும் மினாஸுக்கு ஏற்பட்டது. மினாஸின் மூத்தபுதல்வன் அண்ட்ராசியூஸ் சிறந்த வீரன். அதேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் கேளிக்கைகளில், தொடர்ச்சியாக எல்லாக் கேளிக்கைகளிலும் அவனே பரிசு வாங்கினான். அதேனிய மக்கள் எவருக்கும் பரிசு கிடைக்காமல் போயிற்று. இதுகண்டு அதேன்ஸ் அரசன் ஈஜியஸ் மனம்புழுங்கிப் பொறாமை கொண்டு அவனைக் கொன்றுவிட்டான். இது கேட்ட மினாஸ் வெகுண்டு, அதேன்ஸ்மீது படையெடுத்து அதைப் பணியவைத்தான். தோற்ற நகரத்தார் மினோட்டாருக்கு இரையாக ஆண்டுதோறும் ஏழு இளைஞரும் ஏழு இளநங்கை யரும் அனுப்பவேண்டுமென்று அவன் கட்டளையிட்டான். டேடலஸின் சிற்பத் திறனும் மினாஸின் போராண்மை யும் சேர்ந்து, பாஸிடான், கிரீட்டுக்குத் தந்த பழியை அதேன்ஸின் பழியாக்கிற்று. எல்லாரும் விரும்பும் இளமைப்பருவம் அதேனியருக்கு அச்சத்துக்கும் நடுக்கத்துக்கும் உரிய துன்பப் பருவம் ஆயிற்று. அப்பருவத்தவரும் அதை அணுகுபவரும் எங்கே அடுத்த ஆண்டின் பலிமுறை தம்மீது வருமோ என்று அஞ்சி வாழ்ந்தனர். தேர்வின் அச்சம் ஒருபுறம் எல்லாரையும் கவலையில் ஆழ்த்திற்று. தேர்ந்தபின் தேரப்பட்டவர் உறவினரை மீளாத் துயரம் ஆட்கொண்டது. கலையாரவாரமிக்க அதேன்ஸ் நகரில் கண்ணீரும் கம்பலையும் நிலையாகத் தங்கின. மினாஸின் புதல்வி அழகிற் சிறந்த அரியட்னே. அவள் ஆண்டுதோறும் பலியாக வரும் இளைஞர் நங்கையர் துயர்கண்டு கண்கலங்கினாள். அவள் எவ்வளவு தடுத்துரைத்தும் கெஞ்சியும் மன்னன் தன் பலி முறையை நிறுத்தவில்லை. ஓராண்டு, பலியாக வந்தவர் முகங்களுள் ஒன்று வழக்கத்திற்குமேல் அவளைக் கவர்ந்தது. அது மற்ற முகங்களைப்போலத் துயரமோ அச்சமோ உடையதாயில்லை. மணமகளைக் காணச்செல்லும் மணமகன் முகம்போல அது மலர்ச்சியுடையதாயிருந்தது. அரியட்னேயைக் கவர்ந்த அம்முகம் அதேனிய அரசனின் ஒரே புதல்வன் தீஸியஸின் முகமே. தன் நகரமக்கள் வாழ்வில் துன்பத்தின் சாயலைப் பரப்பிவந்த மினோட்டாரை ஒழித்துவிடத் தீஸியஸ் துடித்தான். அதற்காகத் தனக்கு வயது வரும் காலத்தை அவன் எதிர்நோக்கி யிருந்தான். அந்த ஆண்டு இளைஞர்களைத் தேர்ந்து வலுக்கட்டாயமாகச் சேர்க்குமுன் அவன் தானாகவே அதில் ஒருவனாக முன்வந்தான். கிழ அரசர், ஈஜியஸ் தன் ஒரே புதல்வன் இவ்விடருக்குள் சிக்குவதை விரும்பவில்லை. ஆனால், தீஸியஸ் பிடிவாதம் பிடித்தான். “நம் மக்கள் சாக நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்பா, மேலும் நான் மினோட்டாருக்கு இரையாவதற்காகப் போகவில்லை. என்னுடன் வரும் மற்றப் பதின்மூவரைக்கூட நான் இரையாக விடப் போவதில்லை. நானே முதலில் சென்று, மினோட்டாரைக் கொன்று அவர்களைக் காப்பேன். ஆகவே, அதுவரை நீங்கள் கவலையில்லாமல் இருங்கள். நான் வரும்போதே உங்களுக்கு என் வெற்றியை முன்கூட்டி அறிவிப்பேன். போகும்போது வழக்கம்போலக் கப்பலில் கருங்கொடி பறக்கும். வெற்றியுடன் நான் திரும்பி வந்தால், கருங்கொடியை மாற்றி வெள்ளைக்கொடி பறக்க விடுவேன்,” என்றான் அவன். மன்னன் மினாஸும் தீஸியஸின் செய்தியைக் கேள்விப் பட்டு, அவனைத் தடுத்து நிறுத்த முயன்றான். தீஸியஸ் இங்கும் தன் தன்னம்பிக்கையை எடுத்துரைத்தான். “பாஸிடான் அருளால் நான் மினோட்டாரைக் கொன்று விடுவேன்,” என்று அவன் வலியுறுத்தினான். பாஸிடானின் சீற்றத்துக்கு அஞ்சி நடுங்கியவன் மினாஸ். எனவே, பாஸிடானின் அருளில் தீஸியஸ் காட்டிய நம்பிக்கை அவன் உள்ளத்தில் சுருக்கென்று தைத்தது. அவன் உடனே தன் கைவிரலிலிருந்து ஒரு கணையாழியைக் கழற்றிக் கடலில் எறிந்து, “எங்கே பாஸிடானின் அருளால் இதை எடு பார்ப்போம்,” என்றான். தீஸியஸ் உடனே கடலில் குதித்து அதை எடுத்துக் கொடுத்தான். அது கண்டு மினாஸின் பொறாமையும் அச்சமும் உட்பகையும் இன்னும் மிகுதியாயின. பார்த்த உடனே தீஸியஸிடம் பற்றுக்கொண்ட அரியட்னே, அவன் வீரதீரங்கண்டு அவனிடமே தன் உள்ளத்தை ஓடவிட்டாள். இத்தகைய வீரனுக்கு மினோட்டாரை எதிர்த் தழிக்கத் தன்னாலான உதவி செய்வதென்றும், அம்முயற்சியில் அவன் உயிருக்கு இடையூறு நேர்ந்தால் தானும் அவனுடனே மாளுவதென்றும் அவள் உறுதி பூண்டாள். அதன்படியே அவள் தீஸியஸை அணுகித் தன் காதலையும் தன் உறுதியையும் தெரிவித்தாள். அழகியாகிய அவள் காதலை ஏற்பது தீஸியஸுக்குங் கடினமாகத் தோற்றவில்லை. ஆனால் மினோட்டாரை அழிக்க அவள் எப்படி உதவ முடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் சிரித்தாள். “தீஸியஸ், நீ பெரிய வீரன்தான்; துணிச்சல் மிக்கவன்தான். ஆனால் மினோட்டாரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? அதை எப்படிக் கொல்லப் போகிறாய்? கொன்றால், அதன்பின் எப்படி மீண்டு வருவாய்?” என்று கேட்டாள். தீஸியஸிடம் இவைபற்றிய திட்டம் எதுவும் இல்லை என்பதை அவள் கண்டாள். பாஸிடானின் அருள் என்ற சொல்லைக்கேட்டு அவள் புன்முறுவல் கொண்டாள். “அன்பரே, பாஸிடானின் அருள் இப்போது என் வடிவில் உமக்கு வந்திருக்கிறது. அது இல்லாமல் எத்தகைய வீரனும் மினோட்டாரை வெல்ல முடியாது. ஏனெனில், பாஸிடானின் அருட் கட்டளையால் கடலிலிருந்து பிறந்த மினோட்டாரை நிலஉலக வாள் எதுவும் துளைக்காது. நாளைக் காலை நாம் இருவரும் குளித்துப் பாஸிடான் கோவிலுக்குச் செல்வோம். அவர் அருளால் அவர் சிலையருகேயுள்ள வாளை உமக்கு எடுத்துத் தருகிறேன். அதன் பின் இருவரும் மருட் கோட்டம் செல்வோம்” என்றாள். அரியட்னே உதவி செய்வேன் என்றது வெறும் காதல் பசப்புரையன்று என்பதைத் தீஸியஸ் கண்டான். ஆனால், ஆரிடர் தரும் பணியில் இவ்வாரணங்கை ஏன் இட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணினான். அவ் எண்ணத்தை உய்த்தறிந்தவள் போல அரியட்னே மேலும் பேசினாள். “சிறைக்கோட்டத்துக்குள் போன பின்தான் என் உதவி உமக்கு மிகுதி தேவை. நீர் மினோட்டாரின் இடத்தைத் தேடித் திரிய வேண்டும். அதில் உம் கவனம் செல்லும். ஆகவே திரும்பி வருவதற்கு வழி தெரிந்துகொள்ள வேண்டிய வேலையை நான் கவனிப்பேன்” என்றாள். “அப்படியா? அதற்கு நீதான் என்ன செய்யக் கூடும்? மருட் கோட்டத்திற்குள் நுழைந்தால் வெளியே வரவே முடியாது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேனே?” “அப்படியானால் என்ன நினைத்து வந்தீர்?” “மினோட்டாரை ஒழிப்பதுதான் என் வேலை. மற்றவற்றை அதன்பின்தானே பார்க்கவேண்டும்.” “உங்கள் வீரத்திற்கு இத்துணிவு நல்ல சான்றுதான். ஆனால் வீரம்மட்டும் இங்கே போதாது. நீர் திரும்பிவர வழிதெரிதல் வேண்டும். அத்துடன் விரைந்து திரும்பி வரவேண்டும். காலதாமதம் நேர்ந்தால், என் தந்தையின் கையில்பட நேரும். மினோட்டாரை ஒழித்தவனை அவர் எளிதில் விடமாட்டார்.” “அப்படியானால் இதற்கு நீதான் வழி சொல்ல வேண்டும்.” “மருட்கோட்டத்தை அமைத்த சிற்பியின் மூளை பெரிது. ஆனால், உம் காதலால் என் மூளை அதைவிட மிகுதிவேலை செய்துவிட்டது. நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன்.” தீஸியஸ் மறுநாள் அரியட்னேயுடன் புறப்பட்டுச் சென்று பாஸிடானின் வாளுடன் மருட்கோட்டம் சென்றான். வாயில் கடந்தபின் வழி ஒன்றிரண்டாய், பலவாய், பின் ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்து பலபடியாகப் பெருகிற்று. பல நாழிகை இருவரும் வளைந்து வளைந்து சுற்றி நடந்தனர். பாதைகள் பலவிடங்களில் பெரும்பாதைகளைச் சுற்றிச் சென்றன. பலதறுவாய்களில் வந்தவிடத்துக்கே மீட்டும் வந்ததாகத் தோற்றிற்று. இறுதியில் அவர்கள் ஒரு திறந்த இடைவெளி கண்டனர். பலபாதைகள் அங்கு வந்து சந்தித்தன. எல்லாப் பாதையருகிலும் மனித எலும்புகள் சின்னா பின்னமாகக் கிடந்தன. மினோட்டாரின் இருப்பிடத்தருகே வந்துவிட்டோம் என்றுணர்ந்து அவர்கள் விழிப்புடன் நடந்தனர். ஏதோ ஒரு பாதைவழி அவர்கள் திரும்பினர். அதுவும் சுற்றிச் சுற்றி அவ்வெளியிடத்துக்கே வந்தது. இங்ஙனம் நெடுநேரம் சென்றபின் ஒரு புதர்மறைவிலிருந்து அச்சந்தரும் உறுமல் கேட்டது. விரைவில் மினோட்டாரின் கோர உருவம் அவர்கள் முன் வந்து நின்று எக்காளமிட்டது. மினோட்டாரின் உடல் மனித உடலாயிருந்தாலும் பருமனிலும் உயரத்திலும் மனிதனைவிடப் பெரிதாயிருந்தது. தலையும் மிகப்பெரிய காளையின் தலையை விடப் பெரிதாயிருந்தது. அதன் கண்கள் இருட்டில் புலியின் கண்களைவிட மிகவும் சிவப்பேறியதாய், தீ அழல்வதுபோல் அழன்றன. அதன் மூக்குத் தொளைகள் இரண்டிலிருந்தும் மாறிமாறித் தீயும் புகையும் பாய்ந்தன. இரும்புபோன்ற அதன் காலடிகள் பாறையை அறைந்தன. மற்போர் வீரனைப்போலக் கைகள் இரண்டையும் முட்டியிட்டு வீசிக்கொண்டு தலையையும் கொம்பையும் தாழ்த்தியவண்ணம் அது தீஸியஸ் மீது பாய்ந்தது. அரியட்னே மினோட்டாரின் உருவத்தைப் பற்றிப் பலவும் கேள்விப்பட்டிருந்தும், அதை நேரே கண்டவுடன் நடுநடுங்கிச் செயலிழந்தாள். மினோட்டார் பாய்ந்து அருகில் வருமளவும் தீஸியஸ் அசையாமல் நின்று அருகில் வந்ததும் விலகிக்கொண்டு, அதன் கழுத்தில் வாளால் ஓங்கித்தாக்கினான். அது மினோட்டாரைக் காயப்படுத்திற்று. நோவால் அலறிக் கொண்டு அது மீண்டும் அவன் மீது பாய்ந்தது. மீண்டும் மீண்டும் தீஸியஸ் விலகி அதைத் தாக்கினான். ஆனால், கடைசித்தடவை அது மூர்க்கமாகப் பாய்வதுகண்டு, விலகாமல் வாளை உறுதியுடன் அதன்மீது பாய்ச்சினான், வாளின் வேகமும் மினோட்டாரின் பாய்ச்சலும் ஒருங்கு சேர்ந்து மினோட்டாரைக் கிட்டத்தட்ட இரண்டாகப் பிளந்தது. காடெங்கும் அதிரும் வண்ணம் அலறிப் புடைத்துக் கொண்டு அது விழுந்தது. அரியட்னே அச்சத்தால் உணர்விழந்து ஒரு பாறை மீது சாய்ந்தாள். தீஸியஸ் தன் கைக்குட்டையால் வீசி அவளுக்கு உணர்வு வருவித்தான். புழுதி படிந்து சோர்ந்த அவள் முகத்தின்மீது பாறையொன்றின் பின்புறமாக விழும் கதிரவனின் பொன்னொளிபட்டு அதை மாலை நிலாப்போல மிளிரச் செய்தது. மினோட்டாரின் இறுதிக் கூக்குரல் மினாஸையே தட்டி எழுப்பியிருக்கும் என்பதை அரியட்னே அறிவாள். ஆகவே, அவள் தீஸியஸை விரைவுபடுத்தினாள். வெளியே செல்ல அவள் என்னவழி வகுத்திருக்கிறாள் என்பதைத் தீஸியஸ் அப்போதுதான் கவனித்தான். அவள் ஒரு பெரிய உண்டைநூலைக் கொண்டு வந்திருந்தாள். மருட்கோட்டத்துக்கு வெளியே ஒரு மரத்தில் அதன் ஒரு கோடியைக் கட்டிவிட்டு, வரும்வழி நெடுக உண்டையை அவிழ்த்து நூலை நெகிழ விட்டுக்கொண்டே வந்திருந்தாள். இப்போது அவள் அந்த நூலை மீண்டும் உண்டையில் சுற்றிக்கொண்டே நூலைப் பின்பற்றி வெளியே தீஸீயஸுடன் சென்றாள். அரியட்னேயுடன் தீஸியஸ், தன் தோழர் பதின்மூவரும் இருந்த கப்பலண்டை வந்தான். அவர்கள் அவனை எதிர்பார்க்க வில்லை. கண்டதும் மகிழ்ச்சிக் கூத்தாடத் தொடங்கினர். ஆனால் தீஸியஸ் இன்னும் அவர்களுக்கு மினாஸால் ஏற்படக்கூடும் துன்பத்தைத் தெரிவித்து, விரைந்து அதேன்ஸுக்குப் புறப்படும்படி கட்டளையிட்டான். வழியில் தீஸியஸ் தன் தோழர்களுக்கு அரியட்னே யார் என்பதைத் தெரிவித்து, அவள் உதவிய வகைகளையும் அவ்வுதவியுடன் தான் மினோட்டாரைக் கொன்ற வகையினையும் விரித்துரைத்தான் அனைவரும் தீஸியஸ் வீரத்தையும் அரியட்னேயின் அரிய அறிவுக் கூர்மையையும் காதலுறுதியை யும் புகழ்ந்தனர். மினோட்டார் இறந்ததை அறிந்த மினாஸ் தீஸியஸையும் அதேனிய இளைஞர் நங்கையரையும் பிடித்துக் கொண்டு வர ஆட்களனுப்பினான். அவர்கள் வருமுன் அதேனியர் நெடுந் தொலை கடலில் சென்றிருந்தனர். அதேன்ஸ் நகர்மீது தனக்கிருந்த ஆதிக்கம் அகல்வது கண்டு சினந்தெழுந்த மினாஸ் இளைஞனைப் பிடிக்கச் சென்ற வீரர்களைத் தூக்கிலிட்டான்; ஆனால், தன் புதல்வி அரியட்னே கூட எதிரியுடன் சேர்ந்து ஓடியது கேட்டதே; அவன் சீற்றம் கரைகடந்தது. மருட் கோட்டத்தைப் போதுமான அளவு திறமையுடன் அமைக்க வில்லை என்று கருதி அவன் டேடலஸ்மீது பாய்ந்தான். டேடலஸும் அவன் புதல்வன் இக்காரஸும் கடுஞ் சிறையில் தள்ளப்பட்டனர். டேடலஸும், இக்காரஸும் தம் கலைத் திறத்தைப் பயன்படுத்தித் தப்பியோட வழிசெய்தனர். அவர்கள் கழிகளைப் பிணைத்து மெழுகு பூசி இறக்கைகள் செய்தனர். அவற்றின் உதவியால் அவர்கள் வானில் பறந்து சென்றனர். இளைஞனாகிய இக்காரஸ் இப்புதிய ஆற்றலால் மிகுதி கிளர்ச்சி பெற்று முகில் கடந்து பறந்தான். வெங்கதிரவன் ஒளி முழுவேகத்துடன் இறக்கைகளைத் தாக்கியதால் மெழுகு இளகிற்று. இறக்கைகள் சிதைந்து அவன் கடலில் வீழ்ந்து இறந்தான். டேடலஸ் மட்டும் கடல் கடந்து அயல்நாடு சென்று, மகன் முடிவால் எச்சரிக்கை யடைந்து, தன் கலைத்திறத்தைப் பணிவுடன் பயன்படுத்தி வாழ்ந்தான். தீஸியஸ் தன் வெற்றியால் செருக்கடைந்து பல இன்னல்களை வருவித்துக்கொண்டான். அரியட்னே போன்ற அறிவுடைய வெளிநாட்டுப் பெண்ணுடன் வாழ அவன் மனம் இடந்தரவில்லை. வழியில் அவர்கள் ஒரு தீவில் தண்ணீர் குடிக்க இறங்கினார்கள். அரியட்னே இளைப்பாறும் சமயம் தீஸியஸ் அவளை விட்டுவிட்டு வந்து விட்டான். அத்துடன் தந்தைக்கு அவன் கூறிய உறுதியை அவன் மறந்துவிட்டான். கப்பலில் வெள்ளைக்கொடிக்கு மாறாகக் கருங்கொடியே திரும்பி வரும் போதும் பறந்தது. கப்பல் தொலைவில் கடலில் வரும்போதே கரையிலிருந்து ஈஜியஸ் கருங்கொடியைக் கண்டான். கப்பல் கரைவரும்வரை காத்திராமல், மகன் இறந்துவிட்டான் என்ற வருத்தத்தால் அவன் உயிர் நீத்தான். காதலியைத் துறந்த பழி தந்தை உயிரைக் கொண்டதே என்று தீஸியஸ் கலங்கினான். தீஸியஸ் வாழ்க்கையின் தொடக்க வீரம் அவன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்திருந்தது. அவன் தொடக்கப் பிழைகள் அவன் உள்ளத்தில் ஆழ்ந்தமைந்து செயலாற்றும் அமைதியையும், அநீதி செய்ய அஞ்சும் தன்னடக்கத்தையும் வளர்த்தன. வீரச் செயல்கள் பல புரிந்து, நாட்டில் நல்ல சட்டதிட்டங்கள் வகுத்து, அவன் அதேன்ஸின் புகழைக் கிரேக்க உலகெங்கும், அதற்கு அப்பாலும், பரப்பினான். தொலை கிழக்கு நாடாகிய தமிழகத்தில் அன்று வீரமிக்க பெண்டிரே ஆட்சி செய்த பகுதி ஒன்று இருந்தது. அதனைக் கிரேக்கர், பெண்கள் நாடு என்று கூறினர். அந்நாடுவரை தீஸியஸ் தன் வாள்வலியைக் கொண்டு சென்றான். ஆனால் வீரமிக்க அந்நாட்டின் பெண் படைகளை அவன் எளிதில் வெல்ல முடியவில்லை. இறுதிப் போரில் அந்நாட்டின் பெண்ணரசியான அந்தியோப்பியுடன் வாட்போர் செய்து வென்றான். பின் அவன் அவளை மணந்துகொண்டு புதுப்புகழுடன் அதேன்ஸுக்கு வந்து ஆண்டான். தீஸியஸ் கதை அதேன்ஸின் புராணக் கதைகளுடன் கதையாயிற்று. 2. ஒடிஸியஸ் (தமிழருக்குச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்போல, இந்தியருக்கு இராமாயண பாரதம்போல, கிரேக்கருக்கு இலியட், ஒடிஸி ஆகியவை, இரு தனிப்பெரும் காப்பியங்கள் ஆகும். ஒடிஸியின் கதைப் பகுதியே ஒடிஸியின் அருஞ்செயல்கள் என்ற இந்தக் கதை.) கிரேக்க உலகிலேயே அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவன் ஒடிஸியஸ்தான். அவன் இதாகா என்ற சிறு தீவின் அரசன். அவன் பெயரைக் கேட்டாலே வீரரும் வேந்தரும் நடுங்குவர். ஆனால் அவன் மனைவி பெனிலோப்பிடம் அவன் பெட்டிப் பாம்புபோல் அடங்கிக் கிடந்தான். கிரேக்கரிடையே ஹெலென் என்ற அழகிய பெண் இருந்தாள். அவள் அகமெம்னான் என்ற பேரரசன் மனைவி. அவளை அயலினத்தானாகிய டிராய் நகர் இளவரசன் தூக்கிக் கொண்டு சென்றான். டிராய் கோட்டை கொத்தளங்களையுடைய கடல் கடந்த பெருநகரம், தம் இனத்தின் மதிப்பைக் கெடுத்த டிராய் நகரத்தாரை வென்று ஹெலெனை மீட்டுவரக் கிரேக்கர் புறப்பட்டனர். ஒரு பெண்ணுக்காக ஏன் இவ்வளவு பேர் அழிய வேண்டும் என்று ஒடிஸியஸ் வாதிட்டுப் பார்த்தான். யாரும் கேட்கவில்லை. எனவே கிரேக்கருக்கும் டிராய் மக்களுக்கும் பெரும்போர் மூண்டது. பத்தாண்டு முற்றுகை நடைபெற்றது. எத்தனையோ வீரர் இருபுறமும் மாண்டனர். எத்தனையோ களங்களில் செங்குருதி பெருக்கெடுத்தோடிற்று, இறுதியில் ஒடிஸியஸின் ஆழ்ந்த சூழ்ச்சித்திறத்தின் உதவியால், கிரேக்கர் வெற்றிபெற்று மீண்டனர். பெனிலோப்புக்கு ஒடிஸியஸ் அவள் காதலுக்குரியவனாக மட்டுமே காட்சியளித்தான். அவன் நாட்டு மக்களுக்கோ அவன் நல்ல சட்டதிட்டங்களமைத்து, தீமையகற்றி நன்மை பெருக்கிய நாட்டுத் தந்தையாக மட்டுமே தோன்றினான். அதேசமயம் உலகெங்கும் அவன் ஒப்புயர்வற்ற வீரத்தின் புகழும் சூழ்ச்சித்திறத்தின் புகழும் பரவியிருந்தன. ஆனால், ஒடிஸியஸின் உள்ளத்தின் உள்ளே இவை எதனாலும் முழு மனநிறைவு ஏற்படவில்லை. ஏதோ ஒரு குறை அவன் நெஞ்சின் ஆழ்தடத்தில் குருகுருத்துக் கொண்டிருந்தது. அது வேறு எதுவுமல்ல, உலகஞ் சுற்றித் திரிந்து, கடக்கரிய கடல்கள், அணுகுதற்கரிய தீவுகள், குகைகள் நெஞ்சந்துணுக்குறச் செய்யும் இடையூறுகள் ஆகியவற்றில் குளிக்க எண்ணி அவன் உடல் தினவெடுத்தது. டிராய் நகரிலிருந்து மீளும் வழியில், கிரேக்கருடன் சற்று நேர் வழி நீங்கிச் சுற்றித் திரிந்து, இதாகா வர அவன் எண்ணினான். சுற்றித் திரியும் ஆவலில்கூட அவன் பெனிலோப்பை மறந்துவிடவில்லை. அவளை விட்டுப் பிரிந்து போரிலேயே பத்தாண்டு சென்றுவிட்டது. ஆனால், பத்தாண்டு சென்றபின் இன்னும் ஒரு அரையாண்டு கழித்துச் சென்றுவிடலாம் என்றுதான் அவன் நினைத்தான். பயணத்திடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவ்வெல்லை கடந்து அவனை அலைய வைத்தன. நெடுநாள் கடலில் அலைந்தும் நேர்வழியில் செல்லாத தால், அவர்கள் உணவு, உடை, தண்ணீர் வசதியில்லாமல் அவதிப்பட்டார்கள். ஆகவே, அவர்கள் ஒரு தீவிலிறங்கி சிகான் என்ற நகரில் புகுந்து தமக்கு வேண்டிய பொருள்பெற எண்ணினார்கள். அங்குள்ள மக்கள் எதுவும் தர மறுக்கவே, போர் மூண்டது. பல நாள் போர்செய்து இருபுறமும் அலுத்தபின், சந்து பேசி, சில பொருள்களே பெற்று மீண்டும் பயணம் புறப்பட்டனர். சிகான் தீவு கடந்து ஒன்றிரண்டு நாள் கழிந்தபின் கொடுங் காற்று ஒன்று வந்து அவர்களைத் தெற்கே இழுத்துச் சென்றது. காற்று விரைவில் தென்றலாக மாறிற்று. இளவெயிலும் இளநிலவும் சேர்ந்து எறித்தன. இவ்விடத்தில் இறங்கிச் சற்றுத் தங்கிப் போகக் கிரேக்கர் துடித்தனர். அந்தத் தீவுக்குத் தாமரைத் தீவு என்று பெயர். அங்கே மாலைப்பொழுதும் தென்றலும் இளவெயிலும் இளநிலவும் மாறாதிருந்தது. எங்கும் தாமரை பூத்துக் குலுங்கிற்று. அங்குள்ள மக்கள் யாவரும் தாமரை இதழையும் பூந்துகளையும் உண்டு, தாமரைத் தேனைக் குடித்துச் செயலற்று அரைத் துயிலில் ஆழ்ந்திருந்தனர். முதலில் சென்ற கிரேக்கர் தாமரை யிதழுண்டு துயிலில் ஆழ்ந்தனர். அது கண்ட ஒடிஸியஸ் தாமரையைத் தின்னாமல் தன்னை அடக்கிக்கொண்டதுடன், தோழர்களையும் அரும்பாடுபட்டுத் தடுத்தான். துயின்ற தோழரையும் இழுத்துத் தூக்கிக்கொண்டு, அவர்கள் கலங்களிலேறி விரைந்து கடந்தார்கள். கடலில் அவர்கள் வழிதவறித் திசைதெரியாது சென்றார்கள். நெடுநாளாகக் கரையே காணவில்லை. பசியும் நீர் வேட்கையும் கடலோடிகளைக் கலக்கின. கடைசியில் இனிய நீருற்றுகளும் கனிமரங்களும் நிறைந்த ஒரு மிகப் பெரிய தீவைக் கண்டனர். அனைவரும் மன மகிழ்ச்சியுடன் அதில் உண்டு பருகி உறங்கினார்கள். இரவு கழிந்ததும் அவர்கள் எங்கும் சுற்றிப் பார்வையிட்டனர். அங்குள்ள காலடித்தடங்கள் மனிதர் காலடித் தடங்களைவிட எவ்வளவோ பெரிதாயிருந்தன. தடங்கள் சென்ற வழிகளில் ஒன்றைப் பின்பற்றி அவர்கள் ஒரு பெரிய குகையை அடைந்தனர். தோழர்கள் உள்ளே செல்ல அஞ்சினார்கள். ஆனால், ஒடிஸியஸ் துணிந்து முன் சென்றான். அவர்கள் பின் சென்றனர். அங்கே ஆடுகள் கும்பு கும்பாக நின்றன. கிரேக்கர் சிலர் ஆவலுடன் அவற்றில் பால் கறந்து குடித்தனர். குகையில் அவர்கள் நெடுநேரம் மனமகிழ்ச்சியுடன் இருக்கவில்லை. அதற்குள் தடாலென்ற பெருத்த ஓசை கேட்டது. அதை அடுத்து, மனிதரைப்போல இரண்டு மூன்று பங்கு உயரமுள்ள ஒரு கோர உருவம் அவர்களை அணுகிற்று. அதன் முகத்தில் கண்கள் இருக்குமிடத்தில் எதுவுமில்லாமல், நெற்றியில் மட்டும் ஒரே ஒரு பெரிய கண் இருந்தது. அந்த உருவத்தைக் கண்டு கிரேக்கரனைவரும் நடுநடுங்கினர். தப்பி ஓட வழியில்லை. ஏனென்றால், வரும்போதே உருவம் ஒரு பெருங்கல்லால், குகை வாயிலை அடைத்தது. அந்த ஓசையைத்தான் அவர்கள் முதலில் கேட்டனர். அந்தத் தீவு சைக்கிளப்ஸ் என்ற அரக்கரினத்தவர் வாழ்ந்த இடம். அவர்கள் எல்லாருக்கும் ஒரே ஒரு நெற்றிக்கண் தான் உண்டு. அவர்கள் மனிதரை உணவுடன் உணவாக உண்பவர்கள். கிரேக்கர்கள் புகுந்த குகையிலுள்ள சைக்கிளப்ஸ் அவர்களைக் கண்டதும், இரண்டொருவரைப் பிடித்து, இரவு உணவுடன் வைத்து உண்டான். இதைக்கண்ட மற்றக் கிரேக்கர்களின் உடலின் எண்சாணும் ஒருசாணாகக் குறுகிற்று. தம்மை உள்ளே இழுத்துவந்ததற்காக அவர்கள் ஒடிஸியஸைத் திட்டலாயினர். உடல் வலிமையால் சைக்கிளப்ஸை வெல்ல முடியாது என்று ஒடிஸியஸ் கண்டான். அவன் மூளை வேலை செய்தது. அவன் ஒரு திட்டத்தை வகுத்தான். அந்தக் குகையிலுள்ள சைக்கிளப்ஸின் பெயர் பாலிஃவீமஸ். ஒடிஸியஸ் அவனுக்குத் தன்னிடமுள்ள தேறல் வகையில் சிறிது கொடுத்துக் குடிக்கச் செய்து நட்பாடினான். அந்த மகிழ்ச்சியில், பாலிஃவீமஸ் அவனைக் கூடிய மட்டும் கடைசியாகவே கொல்வதாக வாக்களித்தான். அத்துடன் நண்பனென்ற முறையில் அவன் ஒடிஸியஸின் பெயர் அறிய விரும்பினான். ஒடிஸியஸ் குறும்பாக, “என் பெயர் யாருமில்லை,” என்றான். பாலிஃவீமஸ் அன்றுமுதல் அவனை ‘யாருமில்லை!’ என்றே அழைக்கத் தொடங்கினான். தம் நடுக்கத்திடையேகூட கிரேக்கர் அதுகேட்டுச் சிரித்தனர். ஆனால், அப்பெயரின் முழு நகைச்சுவையையும் அவர்கள் அப்போது அறியவில்லை. ஓய்வு நேரங்களில் ஒடிஸியஸும் தோழர்களும் ஆடு மேய்க்கச் சைக்கிளப்ஸ் வைத்திருந்த கழிகளில் ஒன்றைக் கூராகச் சீவித் தீயில் வாட்டி வைத்துக் கொண்டனர். ஒருநாள் பாலிஃவீமஸ் உள்ளே வந்தபோது குகை வாயிலை அடைக்க மறந்துவிட்டான். அதற்காகவே காத்திருந்தனர் கிரேக்கர். அன்று உண்டு குடித்து அவன் படுத்தபின், அவர்கள் கூறிய கழியைத் தூக்கி அவன் ஒற்றைக் கண்ணில் குத்தி அழுத்திவிட்டனர். அவன் சாகவில்லை. ஆனால், நோவு பொறுக்காமல் அலறிக்கொண்டு அவர்களைப் பிடித்து நொறுக்க நாலுபுறமும் தடவினான். கண் தெரியாத நிலையில் அவன் தன் உறவினர்களைக் கூவி அழைத்தான். கிரேக்கர் என்ன நேருமோ என்று குகையின் மூலைகளில் பதுங்கினர். பல சைக்கிளப்ஸ்கள் வெளியில் வந்து நின்று, “என்ன பாலிஃவீமஸ், என்ன?” என்று கூவினர். “என்னைக் கொன்று விட்டான், என்னைக் கொன்று விட்டான்!” என்று கூவினான் பாலீஃவீமஸ். “யார் கொன்றது, கொன்றது யார்?” என்று கடுஞ்சீற்றத் துடன் அவர்கள் கேட்டார்கள். “யாருமில்லை, யாருமில்லை,” என்றான் பாலிஃவீமஸ். கொன்றது யாருமில்லை என்றால், இரவில் இப்படிக் கூவித் தங்கள் உறக்கத்தைக் கெடுப்பானேன் என்று சைக்கிளப்ஸ்கள் சலித்துக்கொண்டனர். அவன் குடித்து உளறுகிறான் என்று நினைத்து அவர்கள் தங்கள் தங்கள் குகைக்குச் சென்று விட்டார்கள். ஒடிஸியஸ் ‘யாருமில்லை’ என்ற பெயர் கூறியதன் முழுநகைத் திறத்தைக் கிரேக்கர் அப்போதுதான் உணர்ந்தார்கள். பாலிஃவீமஸுக்கு இப்போது குகை திறந்திருப்பது நினைவுக்கு வந்தது. அவன் வாயிலை அடைத்து உட்கார்ந்து கொண்டான். வெளியே போகும் ஆடுகளை மட்டும் ஒவ்வொன்றாக மேயச் செல்லும்படி விட்டான். ஒடிஸியஸ் ஆடுகளை மூன்று மூன்றாக இணைத்து அவற்றினடியில் ஓரிரு கிரேக்கர்களைக் கட்டி அனுப்பி விட்டான். தானும் இவ்வாறே வெளியே போய் விட்டான். கலங்களில் ஏறியபின் கிரேக்கரால் தம் வெற்றிக் களிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள், “வென்றது ஒடிஸியஸடா, ஒடிஸியஸ்; யாருமில்லை என்று இனிச் சொல்லாதே,” என்று கூவினர். பாலிஃவீமஸ் தான் ஏமாந்ததுகண்டு பின்னும் கூக் குரலிட்டுக்கொண்டு கடற்கரைக்கு வந்து மலை போன்ற கற்களை வீசி எறிந்தான். மற்ற சைக்கிளப்ஸ்களும் இதற்குள் வந்து அரையளவு ஆழம் கடலில் இறங்கி வந்தும் கல் வீசியும் பார்த்தனர். அவர்கள் அரையளவு என்பது மூன்று நான்கு ஆள் ஆழமாதலால், கிரேக்கர் கலங்களுக்கு அவர்கள் கற்கள் மிகவும் இடையூறு விளைவித்தன. ஒன்றிரண்டு கலங்கள் கவிழ்ந்தன. மீந்தவற்றுடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலைகளைத் தண்டுகளால் உதைத்துக்கொண்டு கிரேக்கர் தப்பிச் சென்றனர். ஈயோலஸ் என்ற அரசன் நாட்டிற்குக் கிரேக்கர் சென்றபோது அவன் அவர்களை விருந்தினராக ஏற்று அன்பு காட்டினான். ஐயை என்ற தீவில் மனிதரைவிட மிகவும் நெட்டையான ஸிர்கே என்ற மாயப்பெண் இருந்தாள். அவள் மிக இனிமையாகப் பாடுபவள். பாட்டில் மயங்கியவர்களுக்கு வசியமருந்திட்ட இனிய குடிதேறலுங் கொடுத்து, அதன்பின் தன் மந்திரக் கோலால் தட்டி அவர்களை அவள் பன்றிகளாக்கி மகிழ்வாள். கிரேக்கர்களில் முதலில் சென்ற சிலர் இவ்வாறு பன்றியாகி விட்டனர். இது கண்ட ஒடிஸியஸ் தன் குடித்தெய்வமான ஹெர்மிஸை வேண்டினான். ஹெர்மிஸ் அருளால் மாயத்திலிருந்து தப்பி, ஸிர்கேயிடம் தன் வாள் வலிமையைக் காட்டினான். அவள் அவனுக்கு அடங்கி நட்பாடி, பன்றியான கிரேக்கரை மீண்டும் கிரேக்கராக்கி அனுப்பினாள். கடலகத்தில் இன்னும் ஏற்படக்கூடும் பல இடையூறுகளையும் அவற்றிலிருந்து தப்பும் நெறிகளையும் ஸிர்கே, ஒடிஸியஸுக்குச் சொல்லி உதவினாள். கடலின் ஒரு பக்கத்தில் பாறைகளிடையே ஸிரன்கள் என்ற கடலணங்குகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அழகிய உருவமும் இனிய குரலும் உடையவர்கள். அவர்கள் பாட்டு எவரையும் மயக்கவல்லது. ஆனால், மயங்கியவர்களை அவர்கள் பிடித்துத் தின்றுவிடுவர். ஒடிஸியஸ் முன்பே ஸிர்கேயால் இந்த இடையூற்றை அறிந்தவனாதலால், தன் தோழர்கள் காதுகளை மெழுகினால் அடைத்துவிட்டான். தன்னையறியாமல் தான் பாடலணங்குகளிடம் செல்லாதபடி தன்னைப் படகுடன் கட்டி வைத்துக்கொண்டான். பாடலணங்குகளைக் கடந்த சில நாட்களுக்குள் விழுங்கு பாறையை அவர்கள் அணுகினர். ஒரு கடலிடுக்கு வழியாகக் கப்பல்கள் வரும்போது, இருபுறமும் உள்ள பாறைகள் வந்து அவற்றை நெரித்து அழித்துப் பின் பழைய நிலைக்கு வந்துவிடுவது வழக்கம். ஒடிஸியஸ் முதலில் ஒரு பறவையை முன்னால் பறக்கவிட்டான். பாறைகள் நெருங்கிப் பறவையைக் கொன்றது. அதன் பின் பாறைகள் விலகின. இச்சமயம் பார்த்து ஒடிஸியஸ் தோழருடன் வேகமாக அக்கடலிடுக்கைக் கடந்தான். மற்றோரிடத்தில் கடலின் ஒருபுறம் ஸில்லா என்ற ஆறு தலை அரக்கன் கப்பல்களை விழுங்கக் காத்திருந்தான். எதிர்ப்புறம் அவனுக்குத் தப்பிச் செல்பவர்களை விழுங்கச் சாரிப்டிஸ் என்ற ஒரு நச்சுச்சுழி காத்திருந்தது. ஆறுதலை அரக்கனுக்குக் கிரேக்கரில் சிலர் இரையாயினர்; சுழிக்கும் சிலர் இரையாயினர். ஆனால் இருபுறமும் அழிவு நடக்கும் நேரத்தில் இடைவழியில் ஒடிஸியஸும் தோழர் சிலரும் தப்பிச் சென்றனர். திரினேஸியா என்ற தீவில் அவர்கள் ஓரிரவு தங்கினர். இந்தத் தீவிலுள்ள ஆடுகள் தெய்வீக ஆடுகளாதலால், அவற்றைக் கொன்றால் பெருங்கேடு விளையும் என்று ஸிர்கே எச்சரித்திருந்தாள். ஆனால், ஒடிஸியஸ் உறங்கும்போது கிரேக்கர் ஆடுகளைக் கொன்று தின்றனர். இதன் பயனாகக் கடல் வழி முழுவதும் கொந்தளிப்பாயிற்று. கிரேக்கரனைவரும் அதில் மாண்டனர். ஒடிஸியஸ் மட்டும் மிதக்கும் பாய்மரத்தில் தப்பிச் சென்று, காலிப்லோ என்ற தெய்வமாதின் உதவியால் கரை சேர்ந்தான். அத்தெய்வமாது ஒடிஸியஸிடம் காதல் கொண்டிருந்ததால், எட்டாண்டாகியும் அவனை விட்டுப்பிரிய மனமில்லாது, அவனைத் தன்னுடன் வைத்துக்கொண்டாள். ஆனால், எட்டாண்டுகளின்பின் ஒடிஸியஸ் வேண்டுகோளுக் கிரங்கி அவள் அவனைத் தன் நாட்டுக்கு அனுப்பினாள். கடைசியாக மீட்டும் ஒரு தடவை ஒடிஸியஸ் கப்பலுடைந்து அவன் உயிருக்கு ஊசலாடினான். ஆனால், இங்கும் வெள்ளாடையுடுத்த ஒரு பெண் அவனைக் காப்பாற்றினாள். அவள் அந்நாட்டு அரசன் அல்ஸினஸின் புதல்வி நாசிகா. அவளுதவியும் அவள் தாய் தந்தை உதவியும் பெற்று ஒடிஸியஸ் தன் நாடாகிய இதகா வந்து சேர்ந்தான். இதகா வந்து சேர்ந்தும்கூட ஒடிஸியஸின் இடையூறு களுக்கு ஒரு முடிவுவரவில்லை. கிரேக்கரின் குலதெய்வமாகிய அதேனெ அவன் முன்தோன்றி மனைவியை நேரே பார்க்கச் செல்லக்கூடாது என்று தடுத்தது. கணவன் வரவைக் கணந்தோறும் ஒவ்வொரு கணமாக எண்ணிப் பொறுமையுடன் காத்திருந்தாள் பெனிலோப். கணமும் நாழிகையும், நாளும் வாரமும், மாதமும் ஆண்டும் உருண்டுருண் டோடின. ஆனால், அவள் நம்பிக்கை இழக்கவில்லை. ஆனால் நாட்டு மக்கள் எல்லாரும் நம்பிக்கை இழந்தனர். ஆண்டு பத்தும் எட்டும் சென்றன; அவளை இனி யாரும் மணக்கலாம் என்று எண்ணிப் பல வீரர் வந்து மொய்த்தனர். அவளால் அவர்களுக்குத் தக்க மறுமொழியும் கூற முடியவில்லை. தடையும் செய்யமுடியவில்லை. கணவனைத் தவிர எவரைக் கண்டாலும் அவளுக்குத் தன் கடுஞ் சீற்றத்தையும் தடுக்கமுடியவில்லை. இந்நிலையில் எல்லாரையும் தடுத்து நிறுத்த அவள் ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் தன் கணவன் திரும்பி வந்தவுடன் தருவதற்காக ஒரு கைக்குட்டையில் அழகான பின்னல் பூ வேலைசெய்து வந்தாள். தன் மறுமணத்துக்காகவே அதைப் பின்னுவதாக அவள் கூறினாள். “இது முடிந்தவுடன் யாரைத் திருமணம் செய்வது என்று உறுதி செய்வேன்,” என்று சொல்லி அவள் நாள் கடத்தினாள். ஒவ்வொரு நாள் செய்த வேலையும் இரவு அழிக்கப்பட்டதால் நாட்கள், மாதங்கள் கழிந்தன. இறுதியில் கணவன் வராத சீற்றத்தால், அதை முடித்துவிட்டாள். பின்னும் அவள் நாட்கடத்தச் சூழ்ச்சி செய்தாள். ஒடிஸியஸின் போர்க்கோடரிகள் பன்னிரண்டை அவள் நிலத்தில் அகல அகல நட்டுவைத்தாள். ஒவ்வொரு கோடரியிலும் ஒரு சிறுதொளை இருந்தது. ஒரே அம்பைப் பன்னிரண்டு கோடரியின் தொளைகளிலும் செல்லுமாறு எய்பவனைத்தான் மணப்பதாக அவள் கூறினாள். ஒடிஸியஸ் தவிர வேறு எவராலும் இதைச் செய்ய முடியாது என்பதை பெனிலோப் அறிந்திருந்தாள். எவரும் தன்னையடையாதபடி செய்யவே அவள் இச்சூழ்ச்சியை வகுத்திருந்தாள். ஒடிஸியஸ் இத்தனையையும் கேள்வியுற்றான். ஆண்டுகள் பல ஆனதாலும், பல இன்னல்களுக்குத் தான் ஆளானதாலும், தன்னைத் தன் மனைவி அடையாளம் காணமுடியாது என்பதையும் அதேனெ கூறியிருந்தாள். கணவன் தவிர எவன் அவளை அடித்தாலும் அவள் கடுஞ் சினத்துக்கு ஆளாக வேண்டிவரும். உலகின் எல்லா இடர்களையும் வென்ற ஒடிஸியஸ் பெனிலோப் ஒருத்தியின் சீற்றத்துக்கு அஞ்சினான். ஆகவே, அவன் அவளை மணந்துகொள்ளப் போட்டியிடும் வீரருள் ஒருவனாய் தன் மாளிகையில் புகுந்தான். முதலில் அவன் மாளிகையின் வாயில்களை எல்லாம் அடைத்துவிட்டான். எல்லா வீரரும் அம்பெய்து தோற்றதும் அவன் கோடரிகளினூடாகத் தன் அம்பைச் செலுத்தினான். வீரரெல்லாம் திகைத்து நின்றபோது, அவன் அம்புகள் அவர்கள்மீது பாய்ந்தன. வெளியே கதவுகள் அடைத்திருந்ததால், அவர்கள் ஓடமுடியாமல், அடைபட்டு அம்புக்கு இரையாயினர். பெனிலோப் இப்போதும் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. தன் கணவனை ஒத்த ஒரு வீரன் எவனோ எங்கிருந்தோவந்து, தன் நம்பிக்கையைக் குலைத்துத் தன் கையைப் பற்றத் துணிந்துவிட்டான் என்று மட்டுமே அவள் கருதினாள். அவள் அடுப்பங்கரையில் கையாடிக்கொண்டிருந்த அகப்பைக் கோலைச் சுழற்றிக்கொண்டு ஒடிஸியஸ்மீது பாய்ந்தாள். ஒடிஸியஸ் தன் முழு அறிவுத்திறத்தையும் இப்போது காட்டினான். தான் ஒடிஸியஸின் தூதுவன் என்று கூறி அவள் சீற்றம் தணிந்தபின் மெல்லத் தன் நீண்ட பயணக் கதையைக் கூறித் தானே ஒடிஸியஸ் என்று அறிவித்து முடித்தான். சீற்றம் தணிந்தும் பெனிலோப்பின் ஐயம் அகலவில்லை. அதன்பின் ஒடிஸியஸ் பெனிலோப்பைத் தான் காதலித்தநாள் முதற்கொண்டு தம்மிடையே நிகழ்ந்த ஒவ்வொரு செய்தியையும் கூறினான். இப்போது பெனிலோப் அவனை அடையாளம் கண்டு கொண்டாள். அவள் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. உலகஞ் சுற்றிய வீரனை அவனுக்காக இத்தனை நாள் ஓயாது துடிதுடித்துக் காத்திருந்த கைகள் வளைத்தணைத்துக் கொண்டன. ஒடிஸியஸின் வீரச்செயல்களையும் வெற்றிகளையும் கிரேக்க உலகம் பாடிப் புகழ்ந்தது. 3. பொன்மறித் தோட்டம் (பொன்மறி என்பது பொன்மயமான கம்பிளியாடு, அதன் கம்பிளியைக் கைப்பற்றக் கிரேக்க வீரர் ஐம்பதின்மர் செய்த கடுமையான பயணம் கிரேக்க இலக்கியத்தில் பேர்போனது. பொன் அக்காலத்தில் எவ்வளவு அரும்பொருளாயிருந்தது என்பதையும் அதுபற்றி மக்கள் காட்டிய வியப்பார் வத்தையும் இக்கதை காட்டுகிறது. அத்தொல் பழங்காலத்தில் தமிழகத்தில் மட்டுமே தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது.) பொன்முகிலின் இறைவியாகிய நெஃவேலேயை அதமஸ் என்ற வேந்தன் மணந்து ஓர் ஆணையும் பெண்ணையும் குழந்தைகளாகப் பெற்றான். அதன்பின் அவன் அவளைப் புறக்கணித்து இனோ என்ற இரண்டாம் மனைவி ஒருத்தியை மணந்துகொண்டான். இனோவின் தீயுரை கேட்டு அரசன் தன் குழந்தைகளைக் கொல்லப்புகுந்தான். நெஃவேலே வெகுண்டு, நாட்டின்மீது பஞ்சத்தை ஏவிவிட்டதுடன், பொன்மறியொன்றை அனுப்பிப் பிள்ளைகளைக் காப்பாற்றச் செய்தாள். பிள்ளைகளை முதுகிலேற்றிக்கொண்டு பொன்மறி வான்வழியாகப் பறந்து கால்சிஸ் என்ற நகரம் சென்றது. பெண்குழந்தை வழியில் நழுவிக்கடலில் விழுந்துவிட்டது. ஆனால், ஆண் குழந்தையைக் கால்சிஸ் அரசன் ஏற்று, பொன்மறியையும் கோயிலில் பலியிட்டான். அதன் பொன்மயமான கம்பிளி ஒரு மரத்தின்மீது தொங்கவிடப்பட்டது. நெஃவேலேயின் கட்டளைப் படி என்றும் உறங்காத ஒரு வேதாளம் அதைக் காத்துவந்தது. கிரேக்க உலகெங்கும் பொன்மறியின் பொன்மயமான கம்பிளியின் புகழ் பரவிற்று. மனிதர் கனவிலும் கைப்பற்றக் கருதமுடியாத ஒரு பொருளாக அது எல்லோராலும் குறிக்கப்பட்டிருந்தது. அதை அடையும் முயற்சிக்கு ஜேஸன் என்ற இளைஞன் ஒருவனே முன் வந்தான். ஜேஸன் இயோல்கஸ் என்ற நகரின் அரசனான ஐஸன் புதல்வன். ஐஸனின் உடன்பிறந்தானான பீலியஸ் அவன் மீது மிகவும் பொறாமை கொண்டவன். இவன், அண்ணனின் இளம் புதல்வனைக் கொன்று தானே அரசைக் கைக்கொள்ளச் சூழ்ச்சி செய்தான். இதை அறிந்த ஐஸன், தன் சிறு புதல்வனை யாருமறியாமல் சிரான் என்ற தன் நண்பனிடம் அனுப்புவித்தான். அண்ணனைச் சிறையில் அடைத்துவிட்டுத் தம்பி அரசைக் கைக் கொண்டு ஆண்டான். சிரான் பல ஆண்டுகள் ஜேஸனைத் தன் புதல்வன் போலப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தான். அரசுரிமைக்கு வேண்டிய எல்லாக் கலைகளையும் அவனே கற்பித்தான். ஜேஸன் கட்டிளைஞனாகி அரசுரிமைக்குரிய பருவத்தை அடைந்தான். அப்போது சிரான் அவனை அழைத்து, “மைந்தனே, உன் தந்தை இயோல்கஸ் நகரின் அரசர். உன் சிற்றப்பன் பீலியஸ் அவரை எதிர்த்து நாட்டைக் கைப்பற்றியிருக்கிறான். ஆனால், நீ இங்கு வளர்வது அவனுக்குத் தெரியாது. மக்கள் அவனை வெறுக்கிறார்கள். நீ இப்போது போனால், அவன் ஆட்சியை உன்னிடம் ஒப்படைத்துவிடுவான் என்றே நினைக்கிறேன். போய் அரசு கைக்கொண்டு ஆளுக, தெய்வங்கள் உன்னைக் காப்பாற் றட்டும்,” என்று வாழ்த்துக்கள் பலகூறி வழியனுப்பினான். ஜேஸன் இயோல்கஸ் செல்லும் வழியில் ஓர் ஆறு குறுக்கிட்டது. அதை அவன் கடக்க முனைந்தான். அச்சமயம் ஹீரா என்ற வானவர் பெருந்தேவி ஏலமாட்டாக் கிழவியுருக்கொண்டு, ஆற்றைக் கடக்கத் தனக்கு உதவும்படி மன்றாடினாள். இரக்க உள்ளங்கொண்ட ஜேஸன் அவ்வாறே செய்தான். ஆறு கடந்ததும் தேவி தன் உருக் காட்டி அவனை வாழ்த்திச் சென்றாள். சிரான் எதிர்பார்த்ததுபோல் பீலியஸ் அரசிருக்கையை எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. எவராலும் செய்யமுடியாத ஏதேனும் ஓர் இடர்ப்பொறியான காரியத்தில் அவனை மாட்டி ஏமாற்றவே அவன் விரும்பினான். ஆகவே, “பொன்மறியின் கம்பிளியை என்னிடம் கொண்டுவந்து கொடு; நான் அதன்பின் அரசுரிமை தருகிறேன்,” என்றான். ஜேஸன் பொன்மறியைப் பற்றி அதுவரை ஒன்றும் கேள்விப் பட்டதில்லை. அதுபற்றி உசாவினான். யாருக்கும் அதுபற்றி ஒன்றும் தெரியவில்லை. “அதை அடைவது எவருக்கும் கைகூடாத ஒரு செயல்; பீலியஸ் அதைக்கூறி ஏமாற்றவே பார்க்கிறான்,” என்று பலரும் தெரிவித்தனர். கைகூடாதது என்று எதையும் கருத இளைஞனான ஜேஸனின் உள்ளம் மறுத்தது. எப்படியும் பொன்மறியின் பொன்மயமான கம்பிளியைத் தேடுவது என்று கச்சைக் கட்டிக்கொண்டான். அவன் உறுதி கண்டு எல்லாரும் திகைப்படைந்தனர். பொன்மறியைத் தேடுவதற்கான பயணம் இதுவரை உலகில் எவரும் செய்திராத நெடும்பயணமாயிருந்தது. அதனைச் செய்து முடிக்க உலகில் இதுவரை இல்லாத வகையில் வலிமையும் விரைவும் வாய்ந்த கப்பலொன்று வேண்டி வந்தது. எத்தகைய இடையூற்றுக்கும் அஞ்சாத வீரத்தோழரும் தேவைப்பட்டனர். இவ்விரண்டு ஏற்பாட்டையும் பெறுவதில் ஜேஸன் சில நாட்கள் போக்கினான். இப்பெருங்கப்பலைக் கட்டுவதற்கு ஆர்கோஸ் என்ற அருந்தச்சன் முன்வந்தான். அவன் பெயரையே கப்பலுக்கு இடுவதாக ஜேஸன் கூறியதால், தச்சன் தன் முழுத்திறமையையும் காட்டினான். வலிமைமிக்க பெரு மரங்கள் வெட்டி வீழ்த்தப் பட்டன. பலநாள் பல ஆட்கள் ஒத்துழைப்புடன் கப்பல் கட்டி முடிந்தது. அதன் வலிமை, அழகு, விரைவு ஆகியவற்றை எல்லாரும் புகழ்ந்தனர். ஆர்கோநாவம் என்ற அதன் பெயர் எங்கும் பரந்தது. ஜேஸனின் துணிச்சலையும் கப்பலின் பெயரையும் கேட்டுக் கிரேக்க உலகின் தலைசிறந்த வீரர் பலர் நீ முந்தி நான் முந்தி எனக் கப்பலில் உடன்செல்ல முன்வந்தனர். ஜேஸன் அவர்களில் பேர்போன வீரர்களாக ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுத்தான். ஹெராக்ளிஸ், காஸ்டர், பாலிடியூஸிஸ்; மெலீகர், பீலியஸ், லின்ஸியஸ் முதலிய பல மாவீரர் அவர்களிடையே இருந்தனர். தவிர யாழிசையால் கல்லும் உருகப் பாடவல்ல ஆர்ஃவியூஸும் அவர்களுள் ஒருவனாயிருந்தான். ஆர்கோநாவத்தின் புகழும், அதன் வீரர்களும் ஜேஸனும் மேற்கொண்ட பெரும் பயணத்தின் புகழும் அவர்களுக்கு முன்னே சென்றிருந்தது. பெண்களே முழுவதும் நிறைந்திருந்த லெம்னாஸ் தீவின் அரசியும், ஸிஸிகஸ்தீவின் அரசனும் அவர்களை வரவேற்று இனிது நடத்தினர். ஆயினும் தற்செயலாக வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சி பிந்தியத் தீவில் நிகழ்ந்தது. ஸிஸிகஸ் தீவின் அரசனிடமிருந்து விடைபெற்று அவர்கள் மீண்டபின் புயல் அவர்கள் கப்பலைத் திரும்பவும் ஸிஸிகஸ் தீவில்கொண்டு வந்தது. அப்போது இருட்டாயிற்று; தாங்கள் திரும்பவும் முன்பு விட்டுச் சென்ற தீவுக்கே வந்ததாக கிரேக்கர் அறியவில்லை. தீவிலுள்ள மக்களும் அவர்கள் தம் நண்பர்களென்பதை அறியாமல், யாரோ கொள்ளைக் கூட்டத்தினர் என்று நினைத்துத் தாக்கினர். கடுங் கைகலப்பு ஏற்பட்டது. அதில் தீவின் அரசன் இறந்தான். விடிந்து தம் பிழையை உணர்ந்த கிரேக்கர் மிகவும் வருந்தினர். மிஸியா என்ற தீவில் ஒரு நறுநீர் ஊற்றண்டை நீரருந்தச் சென்றபோது, ஜேஸன் தோழருள் ஒருவன் திடீரென மறைந்துவிட்டான். அவனை அவர்கள் எங்கும் தேடியும் காணாமல் திரும்பிச் சென்றனர். நீரூற்றினுள் வாழ்ந்த ஒரு நீரரமங்கை அவன் அழகில் சிக்கி, அவனை உள்ளிழுத்துக் கொண்டது அவர்களுக்குத் தெரியாது. சில நாட்களுக்குப்பின் அவர்கள் அரக்கரிடையே அமிகஸ் என்ற பெயருடைய ஒரு மற்போர் வீரன் வாழ்ந்த பகுதியில் இறங்கினர். அவன் வந்தவர்களுடனெல்லாம் மற்போரிட்டான். அவர்கள் தோற்றால் அவர்களை மரங்களில் கட்டிவைத்து உணவில்லாமல் சாகடித்து வந்தான். கிரேக்கருள்ளும் பலர் இங்ஙனம் கட்டுண்டனர். ஆனால், கிரேக்கருக்குள் பாலிடியூலஸ் என்ற சிறந்த மல்லன் இருந்தான். இதை அமிகஸ் எதிர்பார்க்கவில்லை. அமிக்கஸ் தோற்றான். உடனே பாலிடியூலஸ் அவனைப் பிடித்து மரத்தில் கட்டிவிட்டுக் கிரேக்கரனைவரையும் விடுவித்தான். இதுவரை எல்லாருக்கும் அமிக்கஸ் கொடுத்த தண்டனையைத் தன் இடத்திலேயே அவன் அடைந்தான். கிரேக்கர்கள் கருங்கடற் கரையிலுள்ள ஸால்மி டெஸ்ஸஸ் என்ற நகருக்கு வந்தபோது, அங்குள்ள கண்குருடான அரசர் ஃவினியஸைப் பற்றிக் கேள்விப்பட்டனர். கால்சிஸ் செல்லும் வழியைப்பற்றியும் பொன்மறியை நாடிச் செல்பவர்களுக்கு நேரும் இடர்களைப் பற்றியும் வேறு எவரையும்விட அவனுக்கே மிகுதி தெரியும் என்று அவர்கள் அறிந்தனர். ஜேஸன் தன் தோழர் களுடன் அவனை அணுகித் தன் முயற்சிக்கு உதவியளிக்கும்படி வேண்டினான். “கட்டாயம் உதவி செய்கிறேன். ஆனால், முதலில் நீங்கள் எனக்கு உதவி செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் நான் உண்ண உட்காருவதற்குள் கழுகுகள் வந்து என் உணவை உட்கொண்டு விடுகின்றன. இதனால் என்றும் நான் முக்காலைப் பட்டினியாய் இருந்துவருகிறேன். அந்தக் கழுகுகளை ஒழித்து எனக்கு உதவுங்கள்” என்று அவன் கேட்டான். ஜேஸன் இவ்வேலையை மிக எளிதில் செய்து முடித்தான். முதல் நாளிலேயே கழுகுகளில் அவன் அம்புகளுக்கு இரையாயினவைபோக மிகச் சிலவே மீண்டன. மறுநாள் வந்த ஒன்றிரண்டும் வீழ்ந்தபின் ஃவினியஸின் உணவு மேடைப் பக்கம் ஈ கூட ஆடவில்லை. ஃவினியஸ் மகிழ்ந்து பயணத்துக்கு வேண்டிய எல்லா விவரங்களும் சொன்னான். கருங்கடலுக்குச் செல்லும் ஒரு நுழைவாயில் போன்ற ஸிம்பிள்கேடிஸின் ஆள்விழுங்கிப் பாறைகளை அவர்கள் அடைந்தனர். ஃவினியஸ் மூலம் அதன் இயல்பை அவர்கள் அறிந்திருந்தனர். பாறைகளினிடையே எது சென்றாலும் பாறைகள் இருபுறமுமிருந்து வந்து நெருக்கி இடையில் அகப்பட்டவற்றை அழிவு செய்துவிட்டுப் பின் மீண்டுவிடும். ஜேஸன் ஒரு பறவையைத் தன் கப்பலின் முன்னால் பறக்கவிட்டான். பாறைகள் உடனே நெருங்கிப் பறவையை நெரித்துக் கொன்றன. அதன்பின் அது விரிவுற்றது. கப்பல் வேகமாக வந்தது. அதுகண்டு பாறைகள் விரிந்து மீண்டும் மூடத் தொடங்கு முன் ஜேஸனும் ஆர்கோநாவத்துடன் விரைந்து கடலிடுக்கைக் கடந்தான். ஜேஸனும் ஆர்கோநாவத்திலுள்ள வீரரும் கடந்த துறைமுகங்கள் பல. இறங்கி இளைப்பாறிய தீவுகளும் பல. இறுதியில் அவர்கள் காக்கஸஸ் மலைகளுக்கப்பால் சென்று கால்சிஸ் நகரை அடைந்தனர். கால்சிஸின் மன்னன் அயதிஸ். அவன் அவர்களை வரவேற்று, “வந்த காரியம் என்ன?” என்று உசாவினான். பொன்மறியின் கம்பிளியை நாடிவந்ததாக ஜேஸன் கூறியதும் அவன் திகைத்தான். “அன்பர்களே! நீங்கள் எத்தனையோ இடையூறுகளைக் கடந்து இறுதியில் அமைதியுடன் வந்து சேர்ந்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால், நீங்கள் இதுவரை கடந்தவை இடையூறுகளல்ல. இனித்தான் உண்மையான இடையூறுகள் தொடங்க இருக்கின்றன. அவற்றைச் சந்திக்கு முன் சென்று விடுங்கள்,” என்றான். ஜேஸன் கேட்பதாயில்லை. அயதிஸ் சொற்கள் கடுமையாயின. எச்சரிக்கும் முறையிலும் அச்சுறுத்தும் முறையிலும் அவன் அவர்கள் கடக்கவேண்டிய இன்னல்களை எடுத்துரைத்தான். “முதலில் பித்தளைக் குளம்புகளிட்டுத் தீ உமிழ்கின்ற இரண்டு காளைகளைக் கொண்டு நீங்கள் ஒரு வயலை உழவேண்டும். பின் வேதாளத்தின் பற்களை அதில் விதைக்க வேண்டும். விதைத்த இடத்திலேயே படைக்கலந் தாங்கிய கொடும் பூதங்கள் தோன்றிப் போருக்கு எழும். அவையனைத்தையும் அழிக்கவேண்டும். இத்தனையும் செய்தபின்தான் தங்கமயமான கம்பிளியைக் கைக்கொள்ள முடியும்,” என்றான் அவன். பொன்மறியை நாடிப் புறப்பட்டபின் முதல் தடவையாக ஜேஸன் மனம் இடிவுற்றது. வெற்றி பற்றிய அவன் நம்பிக்கையார்வம் தகர்ந்தது. அன்றிரவு முழுவதும் அவன் பைத்தியம் பிடித்தவன்போல, அரண்மனையையடுத்த தன் மாளிகைப் புறவாரத்தில் முன்னும் பின்னும் நடந்து கொண்டி ருந்தான். அவன்முன் அப்போது அழகுமிக்க ஒரு பெண்ணணங்கு நின்றாள். அத்தகைய அழகு உலகில் இருக்குமென்று அவன் அதுவரை கனவுகண்டதே கிடையாது. அவளும் அதுவரை அவ்வளவு அழகும் வீரக்களையும் ஆணுருவில் இருக்குமென்று கனவுகண்டது கிடையாது. அவள், மன்னன் அயதிஸின் புதல்வி மீடியா. மாயா வினியாகிய தன் தாயிடமிருந்து அவள் மந்திரங்கள் யாவும் கற்றுணர்ந்திருந்தாள். அதை அவள் யாருக்காகவாவது பயன் படுத்த வேண்டிவரும் என்று நினைத்ததில்லை. ஜேஸனிடம் அவள் கொண்ட பாசம் அங்ஙனம் அவற்றைப் பயன்படுத்த அவளைத் தூண்டிற்று. அவள் தன் காதலை அவனுக்குப் புலப்படுத்தி, காதலுக் காகத்தான் அவனுக்கு இவ்வகையில் உதவிசெய்து வெற்றி தருவிக்க முடியும் என்று கூறினாள். ஜேஸன் நன்றியுடன் அவள் காதலை ஏற்றான். மீடியா அவனுக்கு ஒருவகை நறுநெய் கொண்டு வந்து கொடுத்தாள். அதை உடலில் பூசிக்கொண்டால், நெருப்பு முதலிய எதுவும் உடலைத் தாக்காது. பூதங்களிடமிருந்து தப்பவும் அவள் வகைமுறை கூறினாள். “பூதங்களிடையே ஒரு கல்லை எறிந்துவிடு. பின் அவை ஒன்றுடன் ஒன்று போரிட்டு அழிந்து விடும்,” என்று அவள் கூறினாள். ஜேஸன் அவள் கூறியதுபோல உடலில் நறுநெய் பூசிக்கொண்டான். இதனால் பித்தளைக் குளம்பு பூட்டிய தீயுமிழும் காளைகள் இரண்டும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் அவற்றை ஏரில் பூட்டி வயலை உழுதான். பின் வேதாளத்தின் பற்களை எங்கும் விதைத்தான். விதை தூவிய இடங்களிலெல்லாம் தூவுமுன் பூதங்கள் படைக்கலங்களுடன் எழுந்து ஆரவாரத்துடன் ஜேஸன் மீது பாய்ந்தன. ஜேஸன் மீடியாவின் அறிவுரையைப் பின்பற்றி ஒரு கல்லை எடுத்து அவற்றினிடையே வீசினான். ஒவ்வொரு பூதமும் விழுந்த கல்லை அடுத்த பூதம் தன்மீது எறிந்ததாகக் கருதி ஒன்றுடனொன்று போராடி மாண்டன. ஜேஸன் இப்போது அயதிஸிடம் சென்றான். அவன் கோரியபடி செய்தாய்விட்டபடியால், மன்னனிடமிருந்தே எளிதில் பொன்மறியின் கம்பிளியைப் பெறலாமென்று அவன் நினைத்திருந்தான். ஆனால், மன்னன் அது தொங்கிய மரத்தைக்காட்டி, “அதைச் சுற்றி உறக்கமிலா வேதாளம் காவல் கிடக்கிறது. உன்னால் அதைக் கடந்து சென்று எடுத்துக் கொள்ள முடியுமானால், எடுத்துச்செல்க,” என்றான். உறங்காத வேதாளத்தைக் கடக்கும் வகை தெரியாமல் ஜேஸன் மீண்டும் விழித்தான். இத்தடவை மீடியா அவனுக்கு உதவி செய்யுமுன் அவனிடம் காதலுறுதி கோரினாள். “என்னைத்தவிர இவ்வகையில் யாரும் உதவமுடியாதென்று என் தந்தை அறிவார். ஆகவே உனக்கு உதவிசெய்தபின் நான் இங்கிருக்க முடியாது. நீ இல்லாமல் நான் இருந்தாலும் வாழ்வில் பயனில்லை. ஆகவே, என்னையும் இட்டுக்கொண்டு சென்று மனைவியாய் ஏற்றுக்கொள்ளுவதானால் உதவுகிறேன்,” என்றாள். ஜேஸன் அவள் கோரியபடி வாக்களித்தான். பாவம், அயலின மாதர் மணத்தையோ அயலினத் தாருக்குத் தந்த உறுதியையோ கிரேக்கர் சட்டமும் நீதியும் சிறிதும் மதிப்பதில்லை என்பதை அப்பாவி நங்கை மீடியா அறியவில்லை. அதற்கான தண்டனையையும் அவள் அடையக் காத்திருந்தாள். அன்றிரவு மீடியாவும் ஜேஸனும் பொன்மறியின் கம்பிளி தொங்கிய மரத்தை நோக்கிச் சென்றனர். அதைச் சுற்றிக் காத்திருந்த தூங்காத வேதாளம் அலறிக் கொண்டு அவர்களை நோக்கி வந்தது. மீடியா தான் செய்துகொண்டு வந்திருந்த ஒரு பெரிய அப்பத்தைத் தூக்கி அதன்முன் எறிந்தாள். அது அப்பத்தை அடக்க முடியாத ஆவலுடன் தின்றது. சிறிது நேரத்திற் கெல்லாம் அது கண்மூடி அயர்ந்து உறங்கிற்று. ஜேஸன் மரத்திலேறிப் பொன்மறியின் கம்பிளியை வெற்றிகரமாகக் கைப்பற்றி எடுத்துக்கொண்டு தன் தோழர்களுடன் விரைந்து கப்பலில் ஏறினான். மீடியா தான் உயிருக்குயிராய் நேசித்திருந்த தன் தம்பி அப்ஸிர்ட்டஸை மட்டும் எழுப்பித் தன்னுடன் கூட்டிக் கொண்டு கப்பலில் வந்து சேர்ந்தாள். கப்பல் புறப்பட்டது. ஜேஸனின் இடையூறுகள் இத்துடன் தீரவில்லை. பொன் மறியின் கம்பிளி கையாடப்படுகிறது என்பதைப் பொன்மறியே கனவில் வந்து அரசனிடம் கூறிற்று. அரசன் உடனே எழுந்து ஏவலாட்களை அனுப்பி உசாவினான். கம்பிளி பறிபோனது உண்மை என்று தெரிய வந்ததே, அவனுக்கு மீடியா மீது சீற்றம் பிறந்தது. அவளும் ஜேஸனுடன் ஓடிவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை அது தெரிந்ததும் அவன் விரைந்து கப்பல்களைத் திரட்டிக்கொண்டு ஜேஸன் கப்பலைப் பின் தொடர்ந்தான். பிடிபட்டால், தாம் அரும்பாடுபட்டுத் தேடிய பொன் கம்பிளியை இழக்க வேண்டிவரும் என்பதை அறிந்து ஜேஸன் துடித்தான். மீடியாவை நோக்கி, “உன் காதல் உண்மையானால், நீ இதுவரையில் செய்த உதவிகளெல்லாம் போதாது; இப்போது எப்பாடு பட்டாயினும், தப்ப உதவி செய்தாக வேண்டும்,” என்று கெஞ்சினான். மீடியாவின் காதலில் களங்கமில்லை. அவள் அதன் உறுதியைக் காட்டினாள்; அதற்காக எதையும் துறக்க முன்வந்தாள். ஆனால், அவள் உறுதி எவர் நெஞ்சையும் திடுக்குற வைக்கத்தக்கதாயிருந்தது. தான் உயிருக்குயிராய் நேசித்த தன் தம்பி அப்ஸிர்ட்டஸை அவள் உடன்தானே கொன்று, அவன் உடலைத் துண்டு துண்டாகக் கிழித்து, தந்தையின் கப்பல் அணுகுந்தோறும் அவன் முன் ஒரு துண்டை எறிந்தாள். அப்ஸிர்ட்டஸிடம் மீடியாவைவிட மிகுதியாக உயிர் வைத்திருந்தவன் அயதிஸ். ஆகவே, அவன் இறந்த உடலின் துண்டைக் கண்முன் கண்டதும், கப்பலைச் சற்று நிறுத்தி அதை எடுத்து வைத்துக்கொண்டு புலம்பினான். இதனால் பின்தொடரும் வேகம் குறையவே ஜேஸன் தப்பியோட முடிந்தது. திரும்பிவரும் பயணம் மாதக் கணக்காக நீண்டது. இடையூறுகளும் பல ஏற்பட்டன. ஆனால், ஜேஸனின் வீரமும் மீடியாவின் மாயத் திறமையும் அவர்களைக் காத்தன. கடைசியில் அவர்கள் இயோல்கஸ் வந்து சேர்ந்தனர். கொடுங்கோலன் பீலியஸ் இதற்குள் ஜேஸனின் தந்தையைக் கொன்றுவிட்டான். அத்துடன் பொன் மறியின் கம்பிளியைக் கொண்டுவந்தபின்னும் ஜேஸன் கோரிய வண்ணம் முறைப்படி அரசுரிமையை அவனுக்குத் தர மறுத்துவிட்டான். ஜேஸன் மனம் மீண்டும் சோர்வுற்றது. ஆனால், மீடியா பீலியஸை ஒழிக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டாள். பீலியஸ் இப்போது கிழவனாயிருந்தான். தான் அரிதிற் பெற்ற ஆட்சியை நீடித்து ஆள இப்போது இளைஞனாயிருந்தால் எவ்வளவு நல்லது என்று அவன் அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வான். தன் மாயத்தால் இதை அறிந்த மீடியா, அவன் புதல்வியரிடம் சென்று, ‘உங்கள் தந்தையை என்னால் இளைஞனாக்க முடியும்,’ என்றாள். இதை மெய்ப்பிப்பவள்போல அவள் ஒரு கிழ ஆட்டைத் துண்டு துண்டாக்கி ஒரு மருந்து கலந்து மிடாவிலிட்டுக் கொதிக்க வைத்தாள். புதல்வியர்கள் கண்கள் வியப்புடன் கண்டுகளிக்க, இள ஆடு ஒன்று அதிலிருந்து கத்திக்கொண்டு வெளிவந்தது. இவ்வருஞ்செயலைப் புதல்வியர் தந்தையிடம் கூறினர். இந்த முறையை அவன் விரும்பாவிட்டாலும், இளமைபெறும் ஆவல் அவனைத் தூண்டிற்று. அவன் இணங்கினான். மீடியா புதல்வியர் கண்காண அவனைத் துண்டு துண்டாக்கினாள். ஆனால், எதிர்பார்த்தபடி அவனை இளைஞனாக்க மறுத்தாள். புதல்வியரிருவரும் வெகுண்டு தம் தம்பியிடமும் பிறரிடமும் கூறிக் கலகம் விளைவித்தனர். அதன் பயனாக ஜேஸனும் மீடியாவும் நகரைவிட்டுத் துரத்தப்பட்டனர். காதலரிருவரும் கொரிந்த் நகர் சென்று அதன் மன்னனான கிரியானிடம் அடைக்கலம் புகுந்தனர். அவன் ஜேஸனை அன்புடன் வரவேற்றான். அவனுக்கு ஆதரவளிக்கவும் இணங்கி னான். ஆனால், அயலினத்தாளாகிய மீடியாவைக் கைகழுவி விட்டால், தன் மகள் கிளாகியை அவனுக்கு மணஞ் செய்வித்து அரசுரிமையையும் அளிப்பதாக உறுதிகூறினான். மீடியாவிடமிருந்து பல உதவி பெற்றும், ஜேஸனுக்கு அவளிடம் உள்ளூரக் காதல் கிடையாது. அத்துடன் அவள் மாயத்திறமை கண்டு, அவன் பொறாமையும் அச்சமும் கொண்டான். ஆகவே, அவன் கிரியான் விருப்பத் துக்கு இணங்கினான். இஃதறிந்த மீடியா, தான் அவனுக்காகச் செய்த தியாகங்களை எடுத்துக் கூறி மன்றாடினாள். பயனில்லாது போகவே, அவள் பழிவாங்க உறுதிகொண்டாள். புதிய பெண்ணிடம் நட்பாடுவதாகப் பாசாங்கு செய்து அவளுக்கு மீடியா உயர்ந்த மணிமுடி ஒன்றும் துகிலும் பரிசளித்தாள். அவையிரண்டிலும் கொடு நஞ்சு தோய்க்கப் பட்டிருந்ததென்பதை அறியாமல், கிரியானின் புதல்வியாகிய கிளாகி அவற்றை அணிந்தாள். அவள் உடல் உடனடியாக வதங்கிச் சுருண்டது. அவளைப் பிடிக்கச் சென்ற அரசன் கிரியானும், தொட்டதே அந்நஞ்சுக்கு இரையானான். ஜேஸன் இதைக்கேட்டு, மீடியாவைப் பழிவாங்க ஓடினான். அதற்குள் மீடியாவால் கொல்லப்பட்டுக் கிரியானின் மற்றுமிரண்டு புதல்வரும் கிடந்தனர். மனம் முற்றிலும் இடிந்து போய், ஜேஸன் நிலத்தின்மீது புரண்டான். பொன்மயமான ஒரு விமானம் அச்சமயம் அவன் மீதமாகப் பறந்து சென்றது. அதில் இருந்த ஓர் அழகிய பெண்ணுருவம் பேய்ச்சிரிப்புச் சிரித்துக்கொண்டு அதேன்ஸ் நகர் நோக்கிச் சென்றது. அந்த உருவம் தான் மீடியா. ஜேஸனுடனும் வாழமுடியாமல், தாயகமும் செல்ல விரும்பாமல், மீடியா அதேன்ஸைத் தன் இருப்பிடமாக்கினாள். ஆனால், இங்கே அவள் மனித உருவில் அமரவில்லை. தெய்வமாகிச் சிலை வடிவில் இடம் பெற்றாள். தன் மாயத்தை எல்லாம் அவள் அதேன்ஸின் கலைமாயமாக்கினாள். 4. மெலீகரின் வீர மறைவு (மெலீகர் ஜேஸனுடன் சென்று பொன்மறியின் கம்பிளியைக் கைப்பற்ற உதவிய ஆர்கோநாவ வீரருள் ஒருவன். காதலுக்குப் பலியான பெண்டிர் கதைகள் பல. மெலீகர் அதேவகையில் வாழ்விழந்த ஒரு ஆடவன். தாயும் மனைவியும், கண்டு மகிழ, அவன் தன் காதலிக்கும் நாட்டுக்கும் கடமையாற்றி மாண்டான்.) குழந்தை ஒன்று வேண்டுமென்று தவங்கிடந்தாள் கிரேக்க மாதாகிய அல்தெயா. இளமை அவளைவிட்டு நீங்கியநேரம் அவள் துயரகற்றி மகிழ்வூட்டும் வண்ணம் வந்து பிறந்தான். மெலீகர். ஆனால், பிள்ளைப்பேற்றின் அயர்ச்சிதீரப் பல நாளாயிற்று. பிள்ளைபிறந்த ஏழாம் நாள் அவள் அரைத்துயிலுடன் சாய்ந்து கிடந்தாள். சற்றுமுன் அவள் அடுப்பிலிட்ட கட்டை ஒன்று தளதளவென்று பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீயின் ஒளி அவள் கண்களின்முன் நிழலாடிற்று. நிழல் வளைந்து வளைந்து மூன்று கூறுகளாய், ஒவ்வொரு கூறும் ஒரு கிழவி வடிவத்தில் நிலையாகப் படிந்தது. அவள் கூர்ந்து கவனித்தாள். ஆம், அவர்கள் தான் ஊழ் மாதர் மூவர் - மூவரும் உடன்பிறந்தவர்கள். ஒவ்வொரு மனிதர் ஊழையும் ஒரே தறியில் ஒன்றுபட்டு நெய்து உருவாக்குபவர்கள் அவர்களே! “மூவர் ஏன் என்முன் வரவேண்டும்? இது நல்லறிகுறியா? தீயறிகுறியா?” அவள் மனம் இக்கேள்விகளால் அலைப்புண்டு ஊசலாடிற்று. “உனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்,” என்றது ஒரு குரல். “நீ மகிழ்ச்சியுடனிருக்கிறாய்,” என்றது மற்றொன்று. “ஆனால்,” என்று தொடங்கிக் கண்சாடை காட்டிற்று மூன்றாவது குரல். அதைத் தொடர்ந்து, “அதோ அடுப்பில் இப்போது எரிகிறதே அந்தக் கட்டை,” என்று ஒரு குரல் தொடங்கிற்று; இது முதற்குரல். “முழுவதும் எரிவதற்குள்ளாகவே,” இது இரண்டாவது குரல். “உன் புதல்வன் வாழ்வு முடிந்துவிடும்,” இது மூன்றாவது குரல். மூன்று உருவங்களும் மறைந்தன. தாய் நடுங்கினாள். பிள்ளைப்பாசம் அவளைத் தட்டி எழுப்பிற்று. அவளுக்கு அறிவையும் சிந்தனையாற்றலையும் அளித்தது. அவள் விரைந்து எழுந்தாள். படபடப்புடன் அடுப்பில் எரிந்துகொண்டிருந்த அந்தக் கட்டையை வெளியே எடுத்து நீரூற்றி அணைத்தாள். கட்டை முழுதும் எரியவில்லை. பாதி எரிந்தபடியே இருந்தது. அதை எவரும் எரித்துவிடாமல் தன் அணி மணிப்பெட்டியின் உள்ளறையில் வைத்துப்பூட்டினாள். இனி, பிள்ளையின் வாழ்வு பற்றிய கவலை இல்லை என்று அவள் தேறி இருந்தாள். ஊழின் வாயிலிருந்து தன்பிள்ளையின் வாழ்வை அவள் பறித்தெடுத்துக் காத்தாள். ஆனால், அதே தாய் கையே அந்தப் பிள்ளையின் வாழ்வை மனமறிய ஊழின் கையில் கொண்டு சென்று திணித்தது. தாய்மட்டுமல்ல, தாயும் அவளுடன் போட்டியிட்டு அவனை உரிமையுடன் நேசித்த இன்னொரு பெண்ணும் - அவன் மனைவியும் - மனமார அவன் ஊழின் கட்டைக்குத்தாமே தீ வைத்து அது எரிவதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தாயின் உள்ளத்தில் இத்தகைய நிகழ்ச்சியை ஏற்படுத்தியது நிகழ்ச்சியை எது? அல்லது நிகழ்ச்சிகள் யாவை? மெலீகர், பொன்மறியின் பொன் கம்பிளி நாடிச் சென்ற வீரர்களுள் ஒருவன். அவன் தந்தை காலிடோன் மன்னன் ஒளியஸ் பொன்மறித்தேட்டத்திலிருந்து திரும்பிவந்தபின் மெலீகர் நீண்ட பயணத்தைப்பற்றியும் அதில் நேர்ந்த இடை யூறுகள் பற்றியும் தந்தையிடம் விரித்துரைத்தான். காலிடோனுக்கு வடபால் பல முரட்டுவகுப்பினர் நாடோடிகளாகத் திரிந்து வந்தனர். அவர்கள் அடிக்கடி காலிடோனுக்குத் தொல்லை கொடுத்தும் படையெடுத்துச் சூறையாடியும் வந்தனர். இம்முரட்டு மக்களுக்கு இப்போது புதிய ஊக்கமும் ஏற்பட்டிருந்தது. ஒளியஸ் குடியினர் சில தலைமுறையாக ஆர்ட்டெமிஸ் இறைவிக்குப் பலியிடும் வழக்கத்தை நிறுத்தியிருந்தனர். இச்சமயம் பார்த்து முரட்டு வகுப்பினர் அத்தேவிக்குப் பலியிட்டு அவள் ஆதரவைப் பெற்றனர். தேவி அருளால் அவர்களுக்கு மேன்மேலும் வெற்றி கிடைத்தது. வெற்றி கிடைக்கக் கிடைக்க, அவர்கள் துணிச்சலும் துடுக்குத்தனமும் பெருகின. மெலீகர் இந்நாடோடிகளை எதிர்த்தடக்கிவிட உறுதிகொண்டான். தந்தையை இவ்வகையில் ஊக்கி அவன் இணக்கம் பெற்று, படையுன் சென்று அவர்களைப் பல இடங்களிலும் மடக்கி ஒடுக்கினான். தோற்ற நாடோடிகள் ஆர்ட்டெமிஸுக்கு வழக்கமான பலியைக் கொடுக்காமலே குறையிரந்து முறையிட்டனர். ஆர்ட்டெமிஸ் தன் ஆதரவுபெற்ற புதிய மக்களுக்கு எதிராக வெற்றி கண்ட காலிடோன்மீது கடுஞ்சீற்றங்கொண்டு அதன்மீது பழி வாங்க ஒரு காட்டுப்பன்றியை ஏவிவிட்டாள். அது காலிடோன் எல்லையில் புகுந்து பயிர்களை அழித்தும், ஆடுமாடுகளையும் உழவர்களையும் குத்திக் கிளறியும் பேரழிவு செய்தது. இதனால் அழகிய பூங்காவனங்களெல்லாம் புதர்க்காடுகள் ஆயின. புல்மேடுகளெல்லாம் புழுதிமேடு களாயின. மெலீகர் மீண்டும் போர்க்கோலம் பூண்டான். பன்றியின் பின்னணியிலிருந்து முரட்டு வகுப்பினர் அட்டூழியங்கள் செய்ததால், அவன் தலைசிறந்த வேட்டைக்காரரையும் வீரரையும் திரட்டி ஒரு படை சேர்த்து, அதனுடன் பன்றிமீதும் படர்ந்தழித்த முரட்டுக் கூட்டத்தினர்மீதும் போர்தொடுத்தான். மெலீகருடன் சரிசமமாக நின்று பன்றியையும் படுகளவீரரையும் எதிர்த்துத் தாக்கியது ஒரு பெண்மணி. அவள் பெயர் அட்லாண்டா. அவள் பத்து ஆடவராலும் தாக்குப் பிடிக்கமுடியாத உடல் வலிமையும் வீரமும் உடையவள். அவள் திறங்கண்டு மெலீகர் அவளை மிகவும் நன்கு மதித்து நேசித்தான். அவள் மணமாகாதவளாயிருந்தால், கட்டாயம் அவளை மணந்திருப்பான். அவளும் அவனை ஏற்றிருப்பாள். ஆனால், காதலுக்கு இடமில்லாமலே அவர்களிடையே ஒருவர்க் கொருவர் மதிப்பும் நேசமும் வளர்ந்தன. போரில் இருவர் குதிரைகளும் ஒன்றையொன்று வளையமிட்டன. வேட்டையில் ஒருவர் அம்பும் மற்றொருவர் அம்பும் தம்முன் இணைந்து பழகின. பலநாள் திரிந்து வேட்டையாடி அவர்கள் பன்றியைக் காலிடோன் எல்லையிலிருந்து நெடுந்தொலை துரத்தினர். ஆனால், அதை ஒழிக்காமல் இருவரும் ஓய்வு கொள்ள இணங்கவில்லை. இரண்டுநாள் இருவரும் கண்ணயராமல் தொடர்ந்தும் அது அவர்கள் கண்ணில் படாமல் ஓடி ஏய்த்துக் கொண்டிருந்தது. மூன்றாவது நாள் ஒருபெரும் பாறை ஒன்றை அவர்கள் அணுகிய போது, பின்னாலிருந்து அவர்கள் பன்றியின் உறுமலைக் கேட்டனர். அச்சமயம் பின்னாலிருந்துவந்த வேடுவர் படைமுழுவதும் அதன்மீது பாய்ந்தது. அது அத்தனை பேரையும் கால்வேறு கைவேறாகப் பெயர்த்தெறிந்து பின்னும் கும்மாள மடித்தது. தொலைவிலிருந்து வந்த சிலரும் அதை அணுக அஞ்சி நடுங்கினர். அட்லாண்டா சட்டெனத் திரும்பித் தன் வில்லை வளைத்து நாணேற்றி அம்பெய்தாள். அது பன்றியின் நெற்றிப் பட்டத்தில் தைத்தது. அது அலறிக்கொண்டு விழுந்து புரண்டது. அதன் குருதி எங்கும் பரந்தது; ஆனால், அப்போதும் அது வாளா இறக்க மனமின்றி முழுமூச்சுடன் திமிறி எழுந்தது. அது இறுதி நேரப் பாய்ச்சலென்றும் பாராமல், மெலீகர் அதன்மீது தன் ஈட்டியைச் செலுத்தி அதைக் கொன்றான். மற்ற வேடரும் பன்றி ஒழிந்தது என்ற மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் வந்து உரியது,” என்றாள். மெலீகர் மேலும் வற்புறுத்தி, “நான் கொல்லாவிட்டாலும் உங்கள் அம்பால் இது சிறிதுநேரத்தில் செத்தேயிருக்கும். நான் உடனே அதைக் கொன்றது வேட்டுவரின் தோழமை உரிமை யினால்தான். ஆகவே, அதே தோழமை உரிமைப்படி தோலைப் பெற்றுக் கொள்க,” என்றான். அவன் பெருந்தன்மையையும், உள்ளன்பையும் கண்டு அவள் உள்ளம் பூரித்தாள். அவன்மீது தனக்கு அடக்கமுடியாத பாசம் இருப்பதை அவள் அப்போது தான் உணர்ந்தாள். அவன் அவளிடம் கொண்ட ஆழ்ந்த நேசமும் விரைவில் எல்லாருக்கும் விளங்கிற்று. மெலீகரின் தாய்மாமன்மார் இருவர் இருந்தனர். அவர்களும் பன்றிவேட்டையில் பங்குகொண்டிருந்தனர். பன்றியின் தோலைத் தம் குடும்பத்தவருக்கும் நகரத்தவருக்கும் இல்லாமல் வேறொருவருக்கு மெலீகர் உரிமையாக்கியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அத்துடன் அது ஆடவனா யிராமல், ஒரு பெண்ணாயிருந்தது அவர்களுக்கு இன்னும் புழுக்கத்தை உண்டுபண்ணிற்று. எப்படியும் அதை அவளிட மிருந்து பறிக்க அவர்கள் திட்டமிட்டனர். பெண்ணாயினும் அவளை நேரடியாகத் தாக்க அவர்களுக்குத் துணிவும் வீரமும் போதவில்லை. ஆகவே, அவள் தனியே செல்லும் சமயம் பார்த்து முன்பின்னாகச் சென்று அவளை மடக்கி அதை அவளிடமிருந்து பறிக்க முயன்றனர். எதிர்பாராத் தாக்குதலால் அட்லாண்டாவும் செயலிழந்து நின்றாள். கோழைத்தனமான இச்செயலை மெலீகர் தற்செயலாக அவ்விடம் வந்து காணநேர்ந்தது. தன் தாயுடன் பிறந்தவர்கள் என்றுகூடப் பாராமல் அவன் அவர்களை வாளால் தாக்கினான். கோழையாகிய இருவரும் ஓட முயன்று வாளுக்கிரையாயினர். அவர்கள் வீழ்ந்தபோதுகூட, மெலீகர் வருத்தப்படவில்லை. அவர்கள் தன் தாய்மாமன்மார் என்பதை உன்னி, அவர்கள் கோழைத்தனத்துக்காக அட்லாண்டாவிடம் மன்னிப்புக் கோரினான். அவன் தன்மீது கொண்ட பாசத்தை இச்செயல் அட்லாண்டாவுக்கு வெட்ட வெளிச்சமாகக் காட்டிற்று. வீரரின் பெருந்தன்மை உருவில் வந்த அந்தப் பாசத்தை அவள் பெருமிதத்துடன் ஏற்றுப் புன்முறுவல் செய்தாள். “இவ்வுல கிலில்லாவிட்டாலும் இனி ஒரு உலகில்...” என்று கூறிப் புன்முறுவலுடன் அவள் தன் கையை நீட்டினாள். “கட்டாயம் இணைவோம்,” என்று முடித்து அவன் அக்கையைத் தன் கையால் அழுத்திக் கொண்டான். அல்தெயாவும் மெலீகரின் மனைவி கிளியோப்பாத்ராவும் தம் மாளிகை முன்றிலிருந்து அளவளாவிப் பேசிக் கொண்டிருந் தனர். மெலீகர் பன்றியைக் கொன்ற செய்தி அவர்களிடம் முதலில் வந்து எட்டிற்று. தாயின் உடல் பூரித்தது; மனைவியின் உடல் புல்லறித்தது. மகன் பெருமை பேசி எக்களித்தாள் தாய்; கணவன் தனிச்சிறப் பெண்ணித் தருக்கினாள் மனைவி. தான் ஒரு தாயானதற்காகத் தெய்வங்களுக்கு நன்றி தெரிவித்தாள் அல்தெயா; தன்னை ஒரு பெண்ணாய்ப் பிறப்பித்ததற்குத் தெய்வங்களுக்கு வாழ்த்தெடுத்தாள் கிளியோப்பாத்ரா. இரண்டு அன்புக்கோட்டைகளிலும் ஒரே செய்தி அம்பாக வந்து மீண்டும் துளைத்தது - தன் உடன்பிறந்தார் இறந்தனர் - தன் மகன் கையால் - ஒரு பெண்ணின் உரிமை காக்க! தாய் இதுகேட்டுச் சீற்றங்கொண்டாள்! மனைவி இது செவியில் புகாமுன் தன்வயமிழந்தாள்! “ஆ, இதற்கா தவங்கிடந்து பெற்றேன்?” என்று அலறினாள் அல்தெயா. கணவனை அணைக்க எழும் தன் கைகளைப் பிசைந்து முறித்தாள் கிளியோப்பாத்ரா. “ஆ, எரிகிற கட்டையை இதற்கா அணைத்தெடுத்தேன்,” என்றாள் தாய். தாயின் உள்ளத்தைவிட மனைவியின் உள்ளம் விரைந்து வேலைசெய்தது. “மாமி” “என்னை அம்மா என்று கூப்பிடு,” “ஏன்?’ “பழைய உறவு போய்விட்டது. அது வேண்டா!” “அம்மா, இப்போதே அந்தக் கட்டையை எரித்து விடேன்.” அல்தெயாவின் செயலற்ற துயருக்குக் கிளியோப்பாத்ரா குரல் கொடுத்துவிட்டாள். கட்டையை அணைத்தெடுக்க அன்று விரைந்ததைவிட அதை எடுத்துத் தீக்கிரையாக்க இன்று அவள் தாயுடல் விரைந்தது. பாதி எரிந்த கரிக்கட்டை, அது மீண்டும் பற்றிற்று. பற்றிப் புகைந்து, எரிந்தது. தாய் சிரித்தாள். மனைவி அது எரியும்வரை பொறுக்காதவள்போல், அதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அனலுடன் அனலாகத் தன் கண் பார்வையால் அதை எரிப்பதுபோல, அவள் அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தன்னை எரிப்பதுபோலக் கட்டை எரியப் பார்த்திருந்த தாய் - கட்டையைத் தீ எரிப்பது போதாமல், கண்ணில் கனலை எழுப்பி அதை எரிப்பவள்போலப் பார்த்திருக்கும் மனைவி - இக்காட்சியைக் கண்டான் மெலீகர்! கடமை, உரிமை, காதல் ஆகிய மூன்றும் இழந்த அவன் வாழ்வு உள்ளூரப் புகைந்தழன்றது! அகஉலகின் இப்புயல்களிடையே புறஉலகின் ஒரு காற்று வந்து புகுந்தது. “முரட்டு வகுப்பினர் பன்றிக்காகப் பழிவாங்கப் புகுந்துவிட்டனர்,” என்ற செய்தி அவன் காதில் விழுந்தது. அவர்கள் காதுகளிலும் விழுந்தது. ஆனால், அவர்கள் பேசவில்லை. மற்றக் காலிடோனியர் நெஞ்சுகள் துடித்தன - மெலீகர் குடும்பப் புயல்களிடையே சிக்கிவிட்டான். இனி தமக்கு உதவுவானோ மாட்டானோ என்று அவர்கள் உள்ளங்கள் தத்தளித்தன. “நான் கடமையாற்றுகிறேன் - கட்டை விரைந்து எரியட்டும்,” என்று கூவிக்கொண்டு மெலீகர் வெளியேறினான். அதிர்ச்சி, மகிழ்ச்சி, பாராட்டு, மாளாத்துயரம் ஆகிய பல்வகை உணர்ச்சிகளுக்கும் ஒருங்கே ஆளாயினர் காலிடோனியர் - ஆனால், தாயும் மனைவியும் உணர்ச்சியற்ற மரக்கட்டைகளால், மரக்கட்டை எரிவதையே ஆர்வத்துடன் பார்த்திருந்தனர். முரட்டு வீரர் வீசிய முதல் அம்புக்கு அவன் பலியானான். ஆனால், அந்த அம்பை வீசிய கையும், இலக்கு நோக்கிய கண்ணும் பட்டு விழத் தன் அம்பை வீசினாள் அட்லாண்டா! மெலீகர் இறந்தான். அவனுக்காகத் தாய் கலங்கவில்லை; மனைவி அழவில்லை; ஆனால், என்றும் எதற்கும் கண்ணீர் விடாத வீர அணங்கு அட்லாண்டா ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டாள்! 5. அட்லாண்டாவின் ஓட்டப்பந்தயம் (ஆண்மையில் ஆடவரை வென்ற ஒரு நங்கை! வீரன் மெலீகரின் மதிப்புக்குரியவளாகியும், அவள் காதலை வெறுத்து வாழ்ந்தாள். இறுதியில் காதல் அவள் வாழ்வில் புகுந்து அவளை மாற்றிய வரலாறே அட்லாண்டாவின் கதையாகக் காட்சி தருகிறது.) ஷேணியஸ் என்ற அரசனுக்குப் பெண்குழந்தை என்றாலே பிடிக்கவில்லை. அவனுக்கு ஆண்குழந்தைகள் பிறந்த போதெல்லாம் மகிழ்ச்சியடைந்தான். ஆனால், இறுதியில் அட்லாண்டா பெண்குழந்தையாய்ப் பிறந்தபோது, அதை ஏற்க மறுத்தான். அதை மலைப்பாறைகளில் கொண்டு போட்டு விடும்படி கட்டளையிட்டான். குட்டியை இழந்த ஒரு கரடி,. குழந்தை அட்லாண்டாவைச் சிலநாள் பேணி வளர்த்தது. காட்டில் கரடி வேட்டையாடிய சில வேடர் அவளைக் கண்டெடுத்துத் தம் பிள்ளையாக வளர்த்தனர். அவளும் நாளடைவில் வேட்டையில் வல்லவளானாள். ஆடவரைவிடத் திறமையாக ஓடவும் குதிரையேறிச் செல்லவும் இலக்குத் தவறாது அம்புசெலுத்தவும் அவள் பழகினாள். அட்லாண்டா நெட்டையான அழகான வடிவமைப் புடையவளாயிருந்தாள். ஆயினும் மற்ற அழகிய பெண்களைப் போல அவள் இன்பவாழ்வு வாழ விரும்பவில்லை. ஓட்டப் பந்தயங்களில் அவளை வெல்லும் ஆடவர் கிடையாது. வேட்டையிலும் போரிலும் அவள் முதன்மை பெற்று விளங்கினாள். பெண்களின் இயற்கைப்படி அவள் இளைஞர் களைக் காதலிக்கவோ, அவர்கள் காதலுக்கு இடங்கொடுக்கவோ இல்லை. அவள் ஆடவரிடையே ஒரு தடவைதான் ஒருவனிடம் ஆழ்ந்த நட்புக்கொண்டாள். மெலீகர் என்ற ஒப்பற்ற வீரனிடம் அவள் கொண்டிருந்த மதிப்பு அத்தகைய நட்பாயிற்று. ஆனால், அச்சமயம் அவனுக்கும் அட்லாண்டாவுக்கும் இடையே வயது, வாழ்க்கைநிலை ஆகியவற்றில் மிகுதி தொலை இருந்தது. அவன் இளமை தாண்டியவன்;அவளோ இன்னும் கட்டிளமையை எட்டிப்பிடிக்கவில்லை; அவன் மணமானவன்; அவன் மனைவி அவனிடமே உயிரை வைத்திருந்தாள். அவளோ அவன் படை வீரருள் ஒருபடைவீரன் போலவே நடந்து வந்தாள். இந்நிலை யிலும் ஒருவரையறியாமல் ஒருவர் உள்ளத்தில் காதல் பிறந்தது. ஆனால், அது கைகூடாக் காதலாய்ப் போயிற்று. அட்லாண்டாவை எதிர்க்கத் துணிந்த சில எதிரிகளைத் தாக்கி அவன் உயிர்நீத்தான். அவனைக் கொன்றவர்களை ஒழித்து, அவள் நட்புக் கடன் தீர்ந்தது. “மணஞ்செய்வதானால் மெலீகர் போன்ற அஞ்சா உறுதியுடைய வீரனை மணம் செய்ய வேண்டும். அல்லது மணம் நாடாத கன்னியாகவே காலங்கழிக்க வேண்டும்,” இதுவே அட்லாண்டாவின் உள்ளுறுதியாயிற்று. அட்லாண்டாவின் வீரப்புகழ் அவள் தந்தை காதுக்கும் எட்டிற்று. சில அடையாளங்களால் அது தன் மகளே என்று அவன் தெரிந்துகொண்டான். பெண் குழந்தை வேண்டாம் என்று முன்பு அவளை அவன் வெறுத்துத் தள்ளியிருந்தான். இப்போது ஆண்களைவிட அவள் வீரமுடையவளாயிருந்தது கண்டு அவன் அவளை மீண்டும் வரவழைத்துத் தன் மகவாக ஏற்றான். அவளை யாராவது நல்ல அரசிளஞ்செல்வருக்கோ, வீரனுக்கோ மணமுடித்துவிடவும் அவன் விரும்பினான். அட்லாண்டா தன் உறுதியைத் தந்தையிடம் தெரிவித்தாள். “என்னுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வெற்றி பெறுபவனையே நான் மணந்துகொள்வேன். அத்துடன் போட்டிக்குவந்தவர் வெற்றிபெறாவிட்டால், அவர்கள் உயிரிழக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருக்க வேண்டும்,” என்று அவள் கூறினாள். அரசன் இக்கடுமுறையை விரும்பவில்லை. ஆயினும், வேண்டாவெறுப்பாக அதற்கு இணங்கினான். எத்தனையோ கட்டிளங்காளைகள் வந்துவந்து முயன்றனர். அவர்கள் உயிரிழந்ததுதான் மிச்சம். அட்லாண்டாவை எவராலும் ஓட்டத்தில் வெல்ல முடியாது என்ற எண்ணம் பரந்தது. நாளடைவில் எவரும் போட்டிக்கு வருவதே அரிதாயிற்று. அட்லாண்டா இனி, கன்னியாகவேதான் காலங்கழிப்பாள் என்று பலரும் கருதி இருந்தனர். மிலானியன் என்பவன் ஒரு வேட்டுவ இளைஞன். அவன் வேடிக்கை பார்க்க ஷெணியஸின் நகருக்கு வந்திருந்தான். அன்றுதான் அட்லாண்டாவுடன் கடைசித் தடவையாக ஓர் இளைஞன் போட்டியிட்டான். மிலானியன் அப்போட்டியில் கண்ணும் கருத்துமாயிருந்தான். இளைஞன் போட்டியில் வென்றால், போட்டியிட்ட அப்பெண்ணை மணந்துகொள்வான் என்று பிறர் கூறக்கேட்டான். இளைஞன் போட்டியில் வெல்வான் என்றே அவன் எண்ணினான். மிலானியன் எதிர்பாராதவகையில், அரசனும் பொது மக்களும் இளைஞன் பக்கமே ஆதரவு காட்டினர். ஒருவர்கூட அந்த அழகிய நங்கை வெல்ல வேண்டும் என்று விரும்பியதாகத் தெரியவில்லை. இது கண்டு அவன் வியந்தான். ஆனால், எல்லோரும் இளைஞனை ஊக்கியும், முதல் சுற்றிலேயே அந்தப் பெண்ணுடன் ஓடமுடியாமல் அவன் சோர்வுற்றான். இரண்டாவது சுற்றுக்குள் பெண் இளைஞனைத்தாண்டி நெடுந்தொலை சென்று விட்டாள். இளைஞன் தோற்றுவிட்டான். எல்லார் முகத்திலும் ஊக்கக்கேடு மட்டுமல்லாமல், வருத்தமும் மேலிட்டது. இதற்கான காரணத்தையும் இளைஞன் உணரவில்லை. ஆனால், கூட்டம் கலையவில்லை. பெரிய வாளுடன் ஒரு வீரன் வந்தான். இளைஞன் கைகால் கட்டுண்டு களத்தின் நடுவே நிறுத்தப்பட்டான். அப்போதுதான் மிலானியனுக்கு எல்லாரும் வருந்தியதன் காரணம் தெரிந்தது. போட்டியில் தோற்றதனால், இளைஞன் தான் விரும்பிய நங்கையை இழந்ததுடன் நிற்கவில்லை; அவன் உயிரையும் இழக்கவேண்டி வந்தது. அழகிய இளைஞனின் தலை மண்ணில் உருண்டது. அவன் பொன்முடியில் அவன் குருதியும் மண் புழுதியும் படிந்தன. இத்தனைக்கும் காரணமான நங்கையின் முகத்தை அவன் இப்போதுதான் ஏறிட்டுப் பார்த்தான். அவனை அறியாமல் அது அவன் மனத்தைக் காந்தம்போலக் கவர்ந்தீர்த்தது. இளைஞனின் சாவுக்காட்சிகூட அவன் நெஞ்சை அச்சுறுத்தவில்லை. எப்படியும் அவளைப்பெற முயல்வது என்று அவன் துணிந்தான். மறுநாளே மிலானியன் மன்னனிடம் சென்று அட்லாண்டா வைத் தான் மணம் செய்ய விரும்புவதாகக் கூறினான். இதைக் கேட்டதும் மன்னன் திடுக்கிட்டான். மன்னன்: நேற்றுத்தானே அழகிய ஓர் இளைஞன் உயிரைப் பலிகொடுத்தான். அதைப்பற்றிக் கேள்விப்படவில்லையா? மிலானியன்: நானே நேரில் வந்து பார்த்தேன். மன்னன்: பார்த்தும் ஏன் இப்படி வந்தாய்? சாக வழி தேடித்தான் வந்தாயா? மிலானியன்: இல்லை. எத்தனையோ ஆடவர் உயிரைக் குடித்த அந்த அழகைப் பெற்று வாழவே விரும்புகிறேன். மன்னன்: அது முடியுமென்று நீ நினைக்கிறாயா? மிலானியன்: ஆம், ஒரு மாதம் கழித்துப் பந்தய நாள் குறித்து, அதுவரை பயிற்சி ஏற்பாட்டுக்கு வாய்ப்பு அளித்தால் முடியுமென்று கருதுகிறேன். மன்னன்: சரி, அப்படியே ஆகட்டும். ஒரு மாதங்கழித்து நாட்குறித்துப் பறைசாற்றுவிக்கிறேன். ஓட்டம் விளையாட்டு, வேட்டை ஆகியவற்றுக்குரிய தெய்வம் அஃவ்ரோடைட் என்ற தேவி. மிலானியன் ஒரு மாத முழுவதும் ஒருநாள்கூட வீட்டில் தங்கவில்லை. ஒவ்வொரு நாளும் இறைவி அஃவ்ரோடைட்டுக்குரிய ஒவ்வொரு கோவிலிலும் சென்று வழிபாடாற்றினான். மாத முடிவும் அடுத்தது. அர்கோலிஸ் என்ற இடத்தில் கடற்கரையையடுத்து இறைவியின் தலைக்கோயில் இருந்தது. இறைவிக்குப் பலியாகவும் நன்கொடையாகவும் தன்னால் வாங்கக்கூடிய பொருள்கள் அத்தனையும் அன்று அவன் வாங்கி வந்தான் அவற்றை அடுக்கி வைத்துக்கொண்டு அவன் இறைவியையே சிந்தித்து நின்றான். மாலையாயிற்று. மறுநாள் பந்தயத்துக்கான நாள்! இறைவி அருள்பாலித்தால் போவது. இல்லாவிட்டால், அட்லாண்டாவுக்காக, அங்கே மாள்வதை இங்கே இறைவிக்காக மாள்வது என்ற துணிவுடன் நின்றான். பலநாளாகக் காலுணவில் நோன்பிருந்து, அன்று முழு நோன்பிருந்ததால், தலை சுழன்றது; கால்கள் தளர்ந்தன; ஆனால், அவன் அசையவில்லை. நின்ற நிலையிலேயே நின்றான். கதிரவன் கடலில் குளிக்கும் நேரம், அரையிருளைக் கிழித்துச் செந்நிற முகில் ஒன்று கோயிலை நோக்கி மிதந்து வந்தது. அதன் ஒளி தாளாமல் மிலானியன் கண்களை நிலத்தில் பதியும்படி தாழ்த்தினான். முகிலினின்று புறப்படுவதுபோல வெள்ளிமணி ஓசை போன்ற ஓர் ஒலி பிறந்தது. “உன் ஆழ்ந்த அன்பழைப்புக்கேட்டு இறைவி அஃவ்ரோடைட் உளங்கனிந்தாள்; உன் காரியம் கைகூடும். பலிபீடத்தருகே மூன்று பொற்பந்துகள் இருக்கக் காண்பாய். பந்தயத்தில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அட்லாண்டாவின் முன், அவள் காலடியருகே, ஒன்றை உருட்டுக.” இதைக்கேட்ட மிலானியன் இறைவியின் ஒளியுருவத்தின் கருணையைப் புகழ்ந்து விழுந்து வணங்கினான். பலிபீடத்தருகே உள்ள பொற்பந்துகள், கண்கண்ட இறைவியின் திருவருட் பேறுகளாக மிளிர்ந்தன. பந்தய நாள் வந்தது. ஒரு மாதம் முன்னறிவிப்பு இருந்த படியால் செய்தி நெடுந்தொலை பரந்திருந்தது. பல நகரங்களிலிருந்தும் இந்தப் புதுமைவாய்ந்த போட்டியைக் காணப் பல பெருமக்களும் பொதுமக்களும் திரண்டு வந்தனர். மிலானியன் முகத்திலிருந்த நம்பிக்கையொளி கண்டு யாவரும் வியந்தனர். அவன் நம்பிக்கை அட்லாண்டாவுக்குக்கூட வியப்பூட்டிற்று. அவள் முதல் தடவையாகத் தன்னுடன் போட்டியிடும் இளைஞனை நிமிர்ந்து பார்த்தாள். முதல் தடவையாகவே அவள் பந்தயத்தில் தனது தோல்வியில் சிறிது ஆர்வங்கொண்டாள். ஆனால், பந்தயத்தில் இறங்கியபின் வழக்கமான போட்டியார்வம் இம்முதலுணர்ச்சியை மறக்கடித்தது. கிளர்ச்சியுடன் மிலானியன் அட்லாண்டாவுக்கு இணையாக முதற்சுற்று முடிவு அணுகும்வரை ஓடினான். ஆனால் முடிவில் அட்லாண்டாவின் வலது கால் மிலானியனின் வலதுகாலைத் தாண்டி ஒரு அடி முன்செல்லத் தொடங்கிற்று. அச்சமயத்துக்கே காத்திருந்த மிலானியன் மடியிற் செருகி வைத்திருந்த பொற்பந்தில் ஒன்றை அவள்முன் உருட்டினான். பொற்பந்து அட்லாண்டாவின் கண்களை மருட்டிற்று. அது அஃவ்ரோடைட் இறைவியின் ஆடற்பந்து என்பதை அவள் அறிவாள். அருந்தவங்கிடந்தும் பெறற்கரிய அப்பந்து காலடியில் வந்து விழ, அதை அசட்டைசெய்து அப்பால் செல்ல அவள் மனம் ஒருப்படவில்லை. ஓட்டத்திலேயே சற்றுத் தயங்கினாள். பின், நின்று குனிந்து, அதை எடுத்துக்கொண்டு மீண்டும் ஓடினாள். இந்தச் சிறிதுநேர ஓய்வுக்குள், மிலானியன் சிறிது தொலை முன்சென்றிருந்தான். ஆனால், அட்லாண்டா இரண்டாம் சுற்றின் தொடக்கத்துக்குள் பழையபடி அவனை எட்டி வந்துவிட்டாள். அவள் தன்னம்பிக்கை பெரிதாயிற்று. இரண்டாம் சுற்றிலும் மூன்றாம் சுற்றிலும் மீண்டும் பொற்பந்தை எடுக்க அவளுக்கு அது துணிச்சல் தந்தது. ஆனால், முதல் இரண்டு சுற்றிலும் பொற்பந்துகளை எடுக்கத் தங்கியதால், அட்லாண்டா முந்திக்கொள்ள முடியவில்லை. மூன்றாம் சுற்றிலோ அவள் பின்தங்கி விடவே நேர்ந்தது. அவள் பந்தை எடுத்துக்கொண்டு எட்டிப்பிடிக்கத் தொடங்குமுன், மிலானியன் இலக்கை எட்டிப்பிடித்துப் பந்தயத்தில் வெற்றிபெற்றான். மன்னனும் மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கும் காட்டிய ஆர்வத்துக்கும் கிளர்ச்சிக்கும் எல்லை இல்லை. அட்லாண்டா கூடப் பந்தயவெறி தீர்ந்ததே தான் தோற்றதுபற்றி மகிழ்ந்து, “பந்தயத்தில் தோற்றேன்; வாழ்க்கையில் வெற்றிபெற்றேன்,” என்று ஆர்வத்துடன் கூறினாள். அட்லாண்டாவின் போட்டியற்ற வீரம் மிலானியனின் காதலில் முற்றிலும் தன் வயமிழந்து நின்று நிறைவெய்திற்று. 6. பெர்ஸியஸ் (கிரேக்க புராணக் கதைகளினிடையே ஓர் அழகிய சிறு காவியம் பெர்ஸியஸ் கதை. அதே ஆர்கஸ்நகரின் அரசன் அக்ரிசீனுக்குத் தனே என்ற ஒரு புதல்வி இருந்தாள். அவள் வளரவளர அவள் அழகும் வளர்ந்தது. ஆனால், அவள் தந்தை அவள் வளர்வது கண்டு மகிழ்வதற்கு மாறாகக் கவலை கொண்டான். ஏனென்றால், அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையே பாட்டனைக் கொன்று நாட்டைக் கைக் கொள்ளும் என்று வருபொருளுரைப்போன் ஒருவன் கூறியிருந்தான். அவளைக் கொன்றுவிடலாமொன்று அவன் அடிக்கடி நினைப்பான். அதற்கு மனம் வரவில்லை. ஆகவே, அவள் பிள்ளையே பெறாமலிருக்கும்படியாக, அவளை ஆண்கள் கூட்டுறவிலிருந்து விலக்கி வைத்துவிட எண்ணினான். இவ் எண்ணத்துடன் அவள் பருவமடையுமுன்னே அவன் கடற்கரையடுத்து எவரும் அணுக முடியாத கொடும்பாறை ஒன்றின்மீது பித்தளையால் இழைத்த ஒரு பெருங் கோபுரம் கட்டுவித்தான். அதன் கீழறைகள் ஒருசிறு வாயில்தவிர, வேறு பலகணியோ வாயில்களோ இல்லாமல் செய்யப்பட்டிருந்தன. கீழறைகள் நிறைய உணவுப்பொருள்கள் நிரப்பப்பட்டிருந்தன. மேல்தளத்தில் பெண்களுக்கு வேண்டிய எல்லாத் தனியறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. தனே பருவமடையும் தறுவாயில் அரசன் அவளையும், அவள் பாங்கியர்களையும் கோபுரத்தைப் பார்வையிடும்படி அழைத்துச் சென்றான். கீழறைகளில் உணவுப்பண்டங்கள் கண்டு அவர்கள் வியப்படைந்தனர். ஆனால், மேலே போகப் போகக் கோபுரத்தின் பளபளப்பான பித்தளைச் சுவர்களின் அழகும், பெண்டிர் இன்ப வாழ்வுக்கும் ஒப்பனைக்குமுரிய மாட கூடங்களும் அவர்கள் கண்களைக் கவர்ந்தன. அவர்கள் அவற்றில் தம்மை மறந்து விளையாடி யிருந்தனர். அரசனும் அவனுடன் வந்த ஒருசில ஏவலாளரும் இதுசமயம் பார்த்து மெல்ல நழுவிச் சென்றுவிட்டனர். கோபுரத்தினுள் நுழை வதற்கான ஒரேவாயில் வெளியிலிருந்து அடைபட்டது. அதனை அடைவதற்கான ஒரே பாலமும் அழிக்கப்பட்டது. பெண்டிர் நெடுநேரம் சென்றபின்பு தாம் தனிப்பட்டு விட்டதையும் கோபுரத்தில் அடைபட்டதையும் கவனித்தனர். அவர்கள் கூக்குரலிட்டனர்; அழுதனர்; தொழுதனர். ஆனால், அலைகளின் தொலை இரைச்சல் தவிர அவர்களை எதுவும் அணுகவில்லை. அவர்களுக்குத் துணையாக விடப்பட்ட ஏவலாள் ஒருவனே. அவனும் ஊமையும் செவிடுமான ஓர் அலி. அவர்களுக்கு உணவு வட்டிக்கும் பொறுப்பும், நாள்தோறும் படகில்வரும் புதிய பால் முதலிய பொருள்களைக் கயிறு கட்டிக் கூடைகளில் பலகணிவழியே பெறும் பொறுப்பும் அவனிடம் விடப்பட்டிருந்தது. நாட்கள் பல சென்றன; தனே பருவமடைந்து முன்னிலும் அழகுடையவளாய்த் திகழ்ந்தாள். ஆனால், அவள் வாழ்வில் மகிழ்ச்சியில்லை. தன் தந்தையே தன்னைச் சிறைப்படுத்தியதை எண்ணி எண்ணி அவள் மனமாழ்கினாள். தேவர்கள் தந்தையாகிய ஜீயஸ் பெருமானை அவள் நாள்தோறும் வழிபட்டுக் குறையிரந்தாள். தனேயின் கனவில் ஜீயஸ் பொன்முகில்மீது தவழ்ந்து வந்து காட்சியளித்தான். அவள் தன்வழிபாடு நிறைவேறியது கண்டு மகிழ்ந்து மெய்ம்மறந்தாள். கனவு அரைக்கனவாக நீண்டது. ஜீயஸ் அழகிய மனித உருவுடன் வந்து அவளுடன் உரையாடி னான். அவன் ஜீயஸ் என்பதை அவள் சிறிது நேரத்தில் மறந்தாள். இளைஞன் உருவில் ஜீயஸ் அவளுடன் அளவளாவிப் பேசினான். அடுத்தநாள் முதல் தனேயின் வாழ்வில் மாறுதல் ஏற்பட்டது. இரவில் கண்ட பொன்மயமான அழகிய வடிவிடம் அவள் ஈடுபட்டாள். தொடுத்து மூன்று இரவுகள் கழிந்தபின், ஜீயஸ் பழையபடி தன் ஒளி உருவம் காட்டி விடை பெற்றுக் கொண்டான். “கண்மணி தனே, நான் உன் வழிபாட்டில் ஈடுபட்டு விட்டேன். ஆனால், அதற்காகமட்டும் வரவில்லை; என் கூறாக உனக்கு இப்போது கரு விளைந்துள்ளது. உன் மகன் உலகில் அரும்புகழ் நிறுத்துவான்,” என்று கூறி அவன் அகன்றான். தனேயின் நாட்கள் முன்னிலும் மகிழ்ச்சியாகக் கழிந்தன. அவள் ஓர் அழகிய ஆண்மகவை ஈன்றாள். பாங்கியரும் இச் சிறைக்கூடத்திலிருந்தே அவள் தெய்வ அருளால் இத்தகைய அருங்குழவி பெற்றதை எண்ணி மகிழ்ந்து கூத்தாடினர். பெர்ஸியஸ் என்ற பெயருடன் குழந்தை சிறைக்கோபுரத்தில் வளர்ந்தது. சிறைக்குள்ளிருந்தே தனே தெய்வ அருட்குழவி ஒன்றை ஈன்றாள் என்ற செய்தி அரசனுக்கு எட்டிற்று. அவனால் இப்புதிய இடரைப் பொறுக்க முடியவில்லை. இருவரையும் தடங்கெட அழிக்க அவன் புதிய சூழ்ச்சி செய்தான். தாயையும் சேயையும் அவன் சிறையிலிருந்து யாரும் அறியாமல் வெளியேற்றினான். ஒருவர் குந்தியிருக்கப் போதுமான மரத்தொட்டி ஒன்றில் இருவரையும் வைத்துக் கப்பலிலேற்றி, நடுக்கடலில் விட்டு விடும்படி அவன் கட்டளையிட்டான். தனேயின் கதறலோ, பிள்ளையின் மருட்சியோ அவன் உறுதியைக் குலைக்கவில்லை. தனேயின் கதறலை மனிதர் யாரும் கேட்கவில்லை. ஆனால், இறைவன் ஜீயஸ் காதுக்கு அது எட்டிற்று. அவன் தென்றலை அனுப்பி, அத்தொட்டியை அப்படியே மிதக்கவிட்டு, இறுதியில் ஸெரிஃவஸ் என்ற தீவில் கொண்டுபோய்ச் சேர்ப்பித்தான். ஸெரிஃவஸ் வலைஞர்கள் வாழ்ந்த தீவு. பாலிடெக்டிஸ் என்ற வலைஞரின் தலைவனே அத்தீவின் அரசனாயிருந்தான். அவன் தம்பி டிக்டிஸ் வலைகளை உலர்த்தக் காலையில் கடற்கரைக்குச் சென்றபோது, தனேயும் குழந்தையும் மிதந்துவந்த தொட்டியைக் கண்டான். இருவரும் குளிராலும், ஈரத்தாலும், பசியாலும் குற்றுயிராயிருந்தனர். அவன் அவர்களை வீட்டுக்கு இட்டுச் சென்று, உலர்ந்த ஆடைகள் கொடுத்து உணவூட்டினான். கடலில் மிதந்த அயர்வுதீரப் பலநாட்கள் ஆயின. அவர்கள் துயரக்கதையை ஒருவாறு கேட்டறிந்த டிக்டிஸ் அவர்களுக்கு ஆறுதல் கூறி, இருவரையும் தன் மகள், மகள் பிள்ளையாகவே வளர்த்து வந்தான். பாலிடெக்டிஸ் அடிக்கடி தன் தம்பி இல்லத்துக்கு வருவதுண்டு. அச்சமயங்களில் அவன் தனேயைக் கண்டான். அவள் அழகு அவனை மயக்கிற்று. அவன் அவளை மணம் செய்துகொள்ள விரும்பினான். அடிக்கடி அவளிடம் தன்னை மணந்துகொள்ளும்படி வேண்டினான். ஆனால், பெருந்தெய்வ மாகிய ஜீயஸூக்கே தனே தன்னை உரியவளாகக் கருதிவிட்டாள். எந்த மனிதரையும் அவள் மணக்க விரும்ப வில்லை. ஆதலால், பாலிடெக்டிஸ் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் இணங்கவில்லை. தனேயை வயப்படுத்தும் எண்ணத்துடன் பாலிடெக்டிஸ் பெர்ஸியஸிடம் வெளிநட்புக் காட்டி வந்தான். ஆனால், வீரமும் கட்டழகும் வாய்ந்த அந்த இளைஞனை அவன் உள்ளூர வெறுத்தான். தாய் திருமணம் செய்யாமலிருப்பதற்கு, இத்தகைய மகன் இருப்பதே காரணம் என்று அவன் நினைத்ததனால், பெர்ஸியஸ் மீது அவன் வெறுப்பு இன்னும் மிகுதியாயிற்று. எப்படியாவது பெர்ஸியஸை ஒழித்துவிட வேண்டும் என்று பாலிடெக்டிஸ் திட்டமிட்டான். ஒருநாள் பாலிடெக்டிஸ், பெர்ஸியஸை ஒரு விருந்துக்கு அழைத்தான். நட்புப்பேச்சுக்கிடையே அவன் பெர்ஸியஸிடம், “நான் கேட்ட எதுவும் நீ கொடுப்பாயா?” என்று வினவினான். அதை விளையாட்டாக எண்ணி, பெர்ஸியஸ் “ஓகோ, கட்டாயம்,” என்றான். இதுதான் வாய்ப்பு என்று கருதிய பாலிடெக்டிஸ், “எனக்கு நீ வல்லரக்கி மெடூசாவின் தலையைக் கொண்டு வந்து கொடுக்கமுடியுமா?” என்றான். பெர்ஸியஸ் திடுக்கிட்டான்; மெடூசாவைப் பற்றி அவன் கோரமான செய்திகளைக் கேட்டிருந்தான். அவள் இருந்த இடத் துக்கே யாரும் சென்றதில்லை. யாருக்கும் அதன் திசைகூடத் தெரியாது. அவள் அழகிய பெண் முகத்துடன், பாம்புகளையே தலைமுடியாகக்கொண்டு, கழுகுகளின் இறக்கை போன்ற பெரிய இறக்கைகளை உடையவள். மேலும் அவள் முகத்தைப் பார்த்தவர் கள் உடனே கல்லாய் விடுவார்கள். இத்தகைய வல்லரக்கியின் தலையை வெட்டிக் கொண்டுவரச் சொல்வதென்றால், சாகும்படி சொல்வதாகத்தான் பொருள். ‘இங்ஙனம் சொல்பவன் நம் மாறாப் பகைவனே,’ என்று பெர்ஸியஸ் தனக்குள் கூறிக்கொண்டான். கொடுத்த வாக்குறுதியை உயிர்கொடுத்தும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தால் பெர்ஸியஸ் கவலையுடன் அலைந்து திரிந்தான். ஒருநாள் கடற்கரையோரமாக அவன் உலவும்போது ஒரு பேரொளி உருவம் அவன் முன் தோன்றிற்று. அதுதான் அதேனாதேவி. “பெர்ஸியஸ்! தேவர்களுக்கு உன்மீது பாசம் மிகுதி. உனக்கு என்மூலம் அவர்கள் எல்லாவகை உதவியும் செய்ய மனமுவந்து முன்வந்திருக்கின்றனர். இதோபார், அவர்கள் உனக்கு அனுப்பி யுள்ள பரிசுகளை! இது வெண்கலத் தலையணி; இதை அணிந்தால் நீ எவர் கண்ணுக்கும் புலப்படாமல் எங்கும் திரியலாம். இதோ இறக்கைகள் பூட்டிய மிதியடிகள். இவற்றில் ஏறிக் கொண்டு நீ நிலம், காடு, கடல், எதுவும் கடந்து செல்லலாம். இந்தக் கேடயம் உன்னை இடர்கள் எல்லா வற்றிலிருந்தும் காக்கும். இந்தக் கொடுவாள் உன் பகைகள் எதுவாயினும் ஒழிக்கும்” என்று தேவி கூறினாள். பெர்ஸியஸ் துயர்நீங்கி அகமகிழ்வுடனும், நன்றியறி தலுடனும் மீண்டும் மீண்டும் தேவியை வணங்கினான். போகும்வழி, நடந்துகொள்ளும் முறைமை, இடர்களிலிருந்து தப்புவதற்கான எச்சரிக்கைகள் ஆகிய அறிவுரைகள் பலவற்றையும் அதேனா பெர்ஸியஸுக்கு அறிவித்தாள். பெர்ஸியஸ் தன் தாயிடம் சென்று நடந்தவை யாவும் கூறி விடைகோரினான். ‘தாய் மகனைப்பற்றிக் கவலைப்பட்டாள். அதேனா திருவருளும் தெய்வப் படைக்கலங்களின் உதவிகளும் தனக்குக் கிடைத்திருப்பதை நினைவூட்டிப் பெர்ஸியஸ் தாய்க்கு ஆறுதல் கூறினான். ஆனால், அவன் தாயைப் பற்றிக் கவலைப் பட்டான். தான் இல்லாதபோது தன் தாயிடம் பாலிடெக்டிஸ் கொடுமை பண்ணுவானே என்று அவன் மறுகினான். அதற்கும் அதேனாவையே நம்புவதென்று அவன் தீர்மானித்தான். அதேனாவின் கோவில் எல்லைக்குள் இருப்பவரைத் தாக்க அரசர்களும் அஞ்சுவர் என்பதை அவன் அறிவான். ஆகவே, அவன் தாயை அதேனாவின் கோயிலெல்லையில் கொண்டு தங்கவைத்துச் சென்றான். அதேனா கூறிய வழியே பெர்ஸியஸ் தெய்வீக மிதியடி களிலேறிப் பறந்து சென்றான். அந்நாளைய நாகரிக உலகமாகிய தென் ஐரோப்பா கடந்து, அவன், நடு ஐரோப்பா, வட ஐரோப்பா மீது பறந்தான். உலகின் வடகோடியை அடுத்து மனிதரின் ஊழைவகுத்த மூன்று கிழக்கன்னியர் வாழ்ந்த கிரேயா நாட்டை அவன் அடைந்தான். இம்மூவரும் குருடர்கள்; ஆனால், மூவருக்கும் பொதுவாக ஒரே கண் இருந்தது. அதை மாறிமாறிப் பெற்றுத்தான் அவர்கள் பார்க்க வேண்டும். மெடூசாவைப் பற்றிய விவரங்கள் யாவும் அவள் இருந்த நாட்டின் திசையும் வழியும் தெரிந்தவர்கள் இக்கிழக்கன்னியர்கள் மட்டுமே. அவர்களிடமிருந்துதான் அதைப் பெர்ஸியஸ் பெற வேண்டும் என்று அதேனா கூறியிருந்தாள். அவள் கூறிய படியே செயலாற்ற எண்ணிப் பெர்ஸியஸ் அவர்கள் அருகே சென்றான். பெர்ஸியஸ் பின்புறமிருந்து வருவதைக் காற்றசைவால் கிழக்கன்னியருள் ஒருத்தி அறிந்தாள். உடனே வருபவனைப் பார்ப்பதற்காக அவள் பக்கத்திலிருந்தவளிடம் கண்ணைக் கேட்டாள். கண் கைக்குக் கை மாறியது. அந்த நேரத்துக்கே பெர்ஸியஸ் காத்திருந்தான். கண் ஒரு கையிலிருந்து ஒருகைக்கு மாறுமுன் அவன் அதைத் தட்டிப் பறித்துக் கொண்டான். மூவருக்கும் உயிரினும் மேலான செல்வம் அந்தக் கண். அதை யாரோ பறித்துவிட்டது உணர்ந்த மூன்று குருட்டுக் கிழவியரும் கோவெனக் கதறினார்கள். “மெடூசாவைக் காணும் வழியைக் கூறுங்கள், உங்கள் கண்ணை அப்போதுதான் தருவேன்,” என்றான் பெர்ஸியஸ். அவர்கள் மேலும் அழுதனர். ஏனென்றால், மெடூசாவிடம் அவர்களுக்குப் பாசம் மிகுதி. ஆனாலும் கண்ணைப்பெற வேறு வழியில்லாமல், அவர்கள் மெடூசா பற்றி யாவும் கூறினர். கிழக்கன்னியரிடமிருந்து வழியறிந்தபின், பெர்ஸியஸ் மீண்டும் தெற்காகத் திரும்பிப் பறந்தான். உலகின் தென்கோடி கடந்தபின் பகலாட்சி தாண்டி இரவாட்சியின் பரப்பில் சென்றான். உலகிற்கப்பாலுள்ள எல்லையற்ற புறக்கடல் எங்கும் கருங்கும்மென்று இருளில் இருளாகத் தோற்றிற்று. இருண்ட கடலின் நடுவே ஓர் அகலமான தீவு இருந்தது. அதில் மூன்று பெண்கள் இருந்தனர். இருவர் உறங்கினர். ஒருத்தி மட்டும் சுற்றிச்சுற்றி நடந்தும் பறந்தும் அவர்களைக் காத்தாள். அவள் தலையின் ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு பாம்பாகச் சீறிற்று. அவள் முகம் அழகாயிருந்தாலும், உடல் அருவருப்பா யிருந்தது. பெரிய இறக்கைகள் ஆடைகள்போல மூடியிருந்தன. அவளே வல்லரக்கி மெடூசா என்று பெர்ஸியஸ் அறிந்து கொண்டான். எவரும் வரமுடியாத தன் தீவில் எவரோ வந்திருப்பதை மெடூசாவும் உணர்ந்து கொண்டாள் என்பதை அவள் சுற்றிச்சுற்றிப் பார்த்த பார்வை தெரிவித்தது. பெர்ஸியஸ் இப்போது இருந்தது நாலு திசைகளிலு மில்லை. உச்சிக்கு நேர்மேலே அவன் பறந்துகொண்டிருந்தான். இதனால் அவன் மெடூசாவின் பார்வையில் படவில்லை; முகத்தையும் இன்னும் மேலே காணவில்லை. அத்துடன் அம் முகத்தைக் கண்டவர் கல்லாய்ப் போய் விடுவார்கள் என்பதை அவன் மறக்கவில்லை. அவள் தன்னைக்காணாமல் அவன் தன் தலையணியால் தன்னைக் கண் புலப்படாமல் மறைத்துக் கொண்டான். ஒருகையில் வாளுடனும் மற்றக் கையில் கேடயத் துடனும் அவன் மெடூசாவை அணுகினான். மெடூசாவைப் பாராமலே அவள் தலையை அறிந்து வெட்டும்படி, அவன் தன் கேடயத்திலுள்ள அவள் நிழல் வடிவத்தைப் பார்த்துக் கொண்டே சென்றான். மெடூசாவின் தலையைப் பெர்ஸியஸின் தெய்விக வாள் முதல்வெட்டிலேயே துண்டுபடுத்திவிட்டது. அச்சமயம் அவள் வீறிட்டுக் கூக்குரலிட்டாள். தூங்கியிருந்த அவள் தோழியர் இருவரும் எழுந்து பறந்து கொலைகாரனைக் கொல்ல விரைந்து வட்டமிட்டனர். ஆனால், அதற்குள் பெர்ஸியஸ், மெடூசாவின் தலையைப் பார்க்காமலே அதை ஒரு பையிலிட்டு, அதனுடன் வானில் எழுந்து பறந்தான். அவன் தலையணி அணிந்திருந்ததால், மெடூசாவின் தோழியர் அவனைக் காணாமல் அலறிக் கொண்டே இருந்தனர். நெடுந்தொலை செல்லும் வரை பனிக்காற் றுடன் பனிக்காற்றாக அவர்கள் அலறல் பெர்ஸியஸுக்குக் கேட்டது. காற்றுவெளியில் பறந்து வந்துகொண்டிருக்கும்போது, பெர்ஸியஸ் காதுகளில் ஒரு பெண்ணின் அழுகைக்குரல் கேட்டது. குரல் பாறைகளிலிருந்து மிதந்து வந்ததாகத் தோன்றிற்று. அவன் பாறைகளைச் சுற்றிப் பறந்து பார்த்தான். எவரும் அணுகமுடியாத ஒரு கொடும்பாறையில் அழகே உருவெடுத்தாற்போன்ற ஒரு பெண்மணி சங்கிலியினால் அசையமுடியாதபடி கட்டப்பட்டிருந்தாள். அவள் அங்கங்கள் ஒவ்வொன்றும் தாங்கமுடியாதபடி வேதனையால் துடித்தன. கதறியழுது அவள் தொண்டையடைத்து முகம் வீங்கியிருந்தது. பெர்ஸியஸ் மனம் பாகாய் உருகிற்று. அவன் உடனே தன் வாளின் மொட்டைப் பக்கத்தால் சங்கிலிகளை உடைத்தெறிந்து அவளை விடுவித்தான். நீண்ட வேதனையால் அவள் சோர்ந்து உணர்விழந்தாள். பெர்ஸியஸ் அருகில் உள்ள பாறைகளில் பறந்து சென்று தேடி, நீர் கொணர்ந்து தெளித்து, உணர்வு வருவித்தான். அதன்பின், அவன் அப்பெண்மணியிடம் கனிவுடன் பேசினான். “நீ யார் அம்மா? இங்கே எப்படி வந்தாய்? இந்த இடரை உனக்கு யார், எதற்காகச் செய்தார்கள்?” என்று கேட்டான். பெண்மணியின் உடலில் இப்போதும் நடுக்கம் தீரவில்லை. அவள் கைகால்கள் புயலில்பட்ட தளிர்கள்போலத் துடி துடித்தன. அவள் தன் துயரக்கதையைச் சுருக்கமாகக் கூறினாள்: “எனக்கு உதவ வந்த அன்பரே! என் இடர் இன்னும் முற்றிலும் தீரவில்லை. இங்கிருந்து போக முடியுமானால் விரைந்து போய்விடவேண்டும். ஆகவே, சுருக்கமாகக் கூறுகிறேன்,” என்று தன் வரலாற்றைக் கூறலானாள்: “என் பெயர் அண்ட்ரோமீடா. என் தந்தை கெஃவியஸும் தாய் கஸியோபியாவும் அருகிலுள்ள நாட்டை ஆள்பவர்கள். நான் பருவமடைந்தபோது என் தாய் என்ன காலக்கேட்டினாலோ என் அழகைப்பற்றி எல்லை கடந்து பெருமைப்பட்டாள். கடலிறைவி நெரியஸ் அழகுகூட என் அழகுக்கு ஈடாகாது என்று அவள் புகழ்ந்துவிட்டாள். கடலிறைவன் தன் ஒற்றர்கள் மூலம் இதை அறிந்து என்மீதும் எங்கள் நாட்டின் மீதும் ஒரு பெரும்பூதத்தை ஏவிவிட்டான். என்னை அப்பூதத்துக்கு இரையாக அனுப்பிவிட்டால், நாடும் பிறரும் காப்பாற்றப் படலாம் என்ற செய்திகேட்டு, என் தாய் தந்தையரே கண்ணீருடனும் கதறலுடனும் என்னை இங்கே கட்டிவிட்டுச் சென்றனர். இன்னும் சிறிது நேரத்தில் அப்பூதம் வந்துவிடும். நாம் அதற்குள் ஓடிவிட வேண்டும்.” பெண்மணி இவ்வளவு கூறுமுன் பாறை நடுங்கும்படி பூதம் அலறிக்கொண்டு வந்தது. அண்ட்ரோ மீடாவுக்கு வந்த உணர்வும் போயிற்று. ஆனால், பெர்ஸியஸ் விரைந்து தன் வாளைச் சுழற்றிப் பூதத்தை வெட்டி வீழ்த்தினான். அண்ட்ரோமீடாவை மீண்டும் உணர்வுபெறச் செய்விப்பது பெருங்காரியமாய் போய்விட்டது. அவள் உணர்வுபெற்றதும் தானும் இளைஞனும் உயிருடன் இருப்பதுகண்டு வியந்தாள். அருகே அச்சந்தரும் பூதத்தின் உருவம் துண்டுபட்டுக் கிடப்பது கண்ட பின்னரே, தன் துன்பம் ஒழிந்தது என்று அவளால் நம்ப முடிந்தது. பெர்ஸியஸும் அண்ட்ரோமீடாவும் மன்னன் செஃவியஸிடமும் அரசி கஸியோபியாவிடமும் வந்தனர். அரசன் அரசியரால் தம் கண்களை நம்ப முடியவில்லை. செய்தி முழுவதும் கேட்டபின் அரசி அண்ட்ரோமீடாவையும், அரசன் பெர்ஸியஸையும் அணைத்து இன்பக் கண்ணீராட்டினர். “எங்கள் பழியைப் போக்கி எங்கள் இன்னுயிர்ப் பாவையையும் உயிருடன் எங்களுக்குத் தந்த உமக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்,” என்றான் அரசன். “உங்கள் இன்னுயிர்ப் பாவையை என் இன்னுயிர்ப் பாவை ஆக்கினால் போதும்,” என்றான் பெர்ஸியஸ். பெண்ணின் விருப்பமறிய அரசன் அவளை நோக்கினான். அண்ட்ரோமீடா தாயைக் கட்டிக்கொண்டு, “உங்களை விட்டு நான் எப்படிப் பிரிந்து செல்வேன்?” என்று கண்கலங்கினாள். இருவர் குறிப்புமறிந்த தாய்தந்தையர், பெர்ஸியஸுடன் அண்ட்ரோமீடாவின் திருமணத்தை நாடுகளிக்க ஆரவாரத் துடன் நடத்தினர். சிலநாள் மனைவியின் நகரில் இருந்தபின், அண்ட்ரோ மீடாவுடன் பெர்ஸியஸ் ஸெரிஃவெல் தீவுக்குப் புறப்பட்டான். மெடூசாவின் தலையடங்கிய பை அவன் கையில் எப்போதும் தொங்கிற்று. அதேனாவின் கோயிலில்கூட பாலிடெக்டிஸின் தொல்லை தனேயை விடவில்லை. அவன் அவளிடம் தன் ஒற்றர்களை அனுப்பியும் தூதர்களை அனுப்பியும் நச்சரித்தான். எதற்கும் அவள் அசையாதது கண்டு, அவன் அதேனாவின் கோயி லென்றும் பாராமல் படைவீரரை அனுப்பி, அவளை வலுக் கட்டாயமாகத் தூக்கிவர உத்தரவிட்டான். படைவீரர்களைக் கண்டு, தனே துடி துடித்தாள். பெர்ஸியஸ் இந்தச் சமயத்தில் திடுமென வந்து சேர்ந்தான். தாயைக் கைப்பற்றித் துணிந்து படைவீரர் நின்ற காட்சிகண்டு அவன் குருதி கொதித்தது. ஆனால், படைவீரரைப் பின்பற்றி வந்த பாலிடெக்டிஸ், பெர்ஸியஸைக் கண்டு வியப்பும் சீற்றமும் கொண்டான். அவனைப் பிடித்துக் கொல்லும்படி அவன் தன் படைவீரர்க்கு ஆணையிட்டான். பெர்ஸியஸால் இன்னும் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவன் பையிலிருந்து மெடூசாவின் தலையை எடுத்து அனைவர் முன்பும் நீட்டினான். எல்லாரும் கல்லாய்விட்டனர். பாலிடெக்டிஸும் அவர்களில் ஒருவனானான். தாயை மீட்டுக்கொண்டு பெர்ஸியஸ் மனைவியுடன் ஆர்கஸுக்குப் புறப்பட்டுச் சென்றான். போகுமுன் டிக்டிஸை அவர் ஸெரிஃவஸின் அரசனாகமுடிசூட்டினான். ஆர்கஸ் செல்லும் வழியில் ஒரு புயல் வந்து, பெர்ஸியஸின் கப்பலைத் தெஸ்ஸலி நாட்டுக்கரையில் ஒதுக்கிற்று. தெஸ்ஸலி அரசன் அவர்களை வரவேற்றான். தெஸ்ஸஸி நாட்டின் தலைநகரான லாரிஸாவில் அப்போது ஒரு வீரக் கேளிக்கைப் போட்டி நடந்தது. அரசன் பெர்ஸியஸை அதில் கலந்துகொள்ளும்படி வேண்டினான். ஆர்கஸின் கிழ அரசன் அக்ரிசீனும் அதில் ஈடுபட்டிருந்தான். பெர்ஸியஸ் போட்டியில் எறிந்த சக்கரப்படை, தவறி அவன்மீது விழ, அவன் உயிர்நீத்தான். இங்ஙனம் பெர்ஸியஸ் தான் அறியாமலே அவன் தன் பாட்டனைக் கொன்றுவிட நேர்ந்தது. ஆர்கஸின் மக்கள் பெர்ஸியஸையே அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், ஊழமைதியை முற்றிலும் நிறை வேற்றிவிடப் பெர்ஸியஸ் மறுத்தான்; மெகபாந்திஸ் என்ற டிரின்ஸ் நகர் அரசனையே அவன் ஆர்கஸ் அரசனாக்கினான். பெர்ஸியஸ் தன் மனைவி ஆண்ட்ரோமீடாவுடனும், தன் தாய் தனேயுடனும் டிரின்ஸ் நகரில் புகழுடன் ஆண்டுவந்தான். 7. பறக்கும் குதிரை லநாட்டுக் கதைகளிலும் வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. பறக்கும் குதிரையைப்பற்றிய செய்திகளும் மிகப்பழங்காலக் கதைகளில் காணப்படுகின்றன. தமிழகத்தில் சாத்தன் என்ற பண்டைப் பழந்தெய்வத்தின் ஊர்தியாகப் பறக்கும் குதிரை இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் சிற்றூர்களில் ஒன்றில் இன்னும் ஆண்டுக்கு ஒருநாள் பறக்கும் குதிரை விழா நம்பிரான் விழா என்ற பெயருடன் பழைய சாத்தன் அடியவர் களின் பரம்பரையினரால் நடத்தப்பட்டு வருகிறது. கிரேக்கரின் பறக்கும் குதிரையாகிய “பெகாஸஸ்” பற்றிய கதையை இவ் ஒப்புமைகளுடன் இங்கே தருகிறோம்.) கொரிந்த் நகரில் ஒரு பறக்கும் குதிரை இருந்தது. அதை யாராலும் பிடிக்கவோ அதன்மீது ஏறவோ முடியவில்லை. பிடிப்பவர் அணுகுமுன் அது அவர்களை உதைத்துத் தள்ளி வானில் பறந்து வட்டமிட்டு, வீறுடன் மீண்டும் இறங்கி வந்து, “ஏறாக்குதிரை யாக” இறுமாந்து நின்றது. அதன் பெயர் பெகாஸஸ். அது தூயவெள்ளை நிறமுடையதாய், மண்ணுலகக் குதிரைகளைவிட உயரமும் பருமனும் உடையதாயிருந்தது. மக்கள் அக்குதிரையைத் தெய்விகப்பிறவி என்றே கருதினர். மெடூசாவின் தலையைப் பெர்ஸியஸ் வெட்டியபொழுது, அதினின்று தெறித்த குருதி ஒரு குதிரை உருவில் படிந்தது. தேவர்கள் அதை ஒரு தெய்விகக் குதிரை ஆக்கினர். இக்குதிரையையே பெகாஸஸ் என்று கொரிந்த் மக்கள் கூறினர். பெகாஸஸைப் பிடிக்கப் பலதடவை முயன்று தோல்வி யுண்டவர்களுள் கொரிந்த் அரசன் மகனான பெல்லராஃவான் ஒருவன். ஆனால், மற்றவர்களைப்போல அவன் தோல்விகளால் மனமுறிவடையவில்லை. ஒவ்வொரு தோல்வியும் அவன் ஆவலைப் பெருக்கிற்றேயன்றித் தணிக்கவில்லை. விடாமுயற்சி யுடன் அவன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டே யிருந்தான். கடைசியில் அவன் ஒரு நல்லறிவனிடம் சென்று அறிவுரை கோரினான். அதேனே இறைவியின் திருக்கோயில் சென்று இரவு முற்றும் விழித்திருந்து வழிபாடாற்றி அத்தெய்வத்தின் அருளுதவியை நாடும்படி அவன் கூறினான். பெல்லராஃவான் அவ்வண்ணமே சென்று வழிபாடாற்றினான். ஓரிரவு கழிந்தும் தயங்காது அடுத்த இரவும், அதற்கடுத்த இரவும் இருந்து கடுவிழிப்புடன் இடைவிடா வழிபாடியற்றினான். மூன்றாம் நாளிரவு அவன் கண்கள் அவனைமீறித் துயில் கொண்டன. அது கண்டு அதேனே இரங்கி அவனுக்குத் துயிலில் காட்சியளித்தாள். அவள் கையில் பொன்னாலான கடிவாளம் ஒன்று இருந்தது. அதை அவனிடம் நீட்டிக்கொண்டே அவள், “பெல்லராஃவான்! உன் அன்புறுதிக்கு உன்னை மெச்சினேன். இதோ இந்தப் பொற்கடிவாளம் உனக்கு உதவும், போ!” என்றாள். பெல்லராஃவான் கோயிலிலிருந்து வெளியே வந்ததும், பெகாஸஸ் ஓடையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் மெல்லக் குதிரையை அணுகி, பொற்கடி வாளத்தை அதன் தலைமீது வீசினான். கடிவாளத்தில் அழகொளியில் மயங்கிப் பெகாஸஸ் அசையாது நின்றது. கடிவாளத்தைப் பூட்டியதும் அவன் சட்டென்று அதன்மீது தாவி ஏறினான். இப்போது பெகாஸஸுக்குத் தன்னுணர்வு வந்துவிட்டது. அது சீற்றமும் வீறும்கொண்டு வானில் எழுந்து பறந்தது. குட்டிக்கரணங்களிட்டுத் தன்மீது ஏறிய பெல்லராஃவானைக் கீழே தள்ள முயற்சி செய்தது. ஆனால், எவராலும் அணுக முடியாத குதிரையை ஒரு தடவை அணுகி ஏறியபின்பு, அவன் கடிவாளத்தின் பிடியை விடாமலும், குதிரைமீது அணைத்த தன்கால்களை நெகிழ விடாமலும் கெட்டியாக உட்கார்ந்து கொண்டான். குதிரை எத்தனை குட்டிக்கரணங்களிட்டும், மனிதனும் அதனுடன் குட்டிக்கரணமிட்டதன்றி வேறெவ்வகை யிலும் அசையவில்லை, தன்னாலியன்றமட்டும் தள்ளிவிட முயன்றும் பயனில்லாததால், பெகாஸஸ் இறுதியில் பெல்லாராஃவானைச் சுமந்து காடும் மலையும் கடலும் தாண்டி உலகெங்கும் சுற்றித் திரிந்தது. பொல்லராஃவானும் பெகாஸஸும் சிலகாலம் கொரிந்த் நகரைச்சுற்றித் திரிந்து அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால், அரசன் நண்பன் ஒருவன், பெல்லராஃவானுடன் பகைத்துக் கொண்டான். பெல்லராஃவான் அவனுடன் ஒருநாள் போராடு கையில் அவனைக் கொன்றுவிட நேர்ந்தது. இச்செயலுக்குப் பின் அவன் கொரிந்திலிருக்க விரும்பாமல், திரேஸன் நகர் சென்றான். திரேஸன் நகரின் மன்னன் மகள், பெல்லராஃவானிடம் காதல் கொண்டாள். இருவரும் மணந்து கொள்ளப்போகும் சமயம் கொரிந்திலிருந்து வந்த தூதன் பெல்லராஃவான் செய்த கொலையைப்பற்றி மன்னனிடம் கூறித் திருமணத்தை நிறுத்திவிட்டான். இதனால் மனமுடைந்து பெல்லராஃவான் பெகாஸஸுடன் பறந்துசென்று, டிரின்ஸ்நகரை ஆண்ட மன்னன் பிரேட்டஸிடம் போனான். பிரேட்டஸ் அவனுடன் மிகவும் நட்பாடி அளவளாவி, அவனுக்கு வேண்டிய வாய்ப்பு நலங்கள் செய்து தந்தான். பிரேட்டஸின் மனைவி ஸ்தெனோபீயா மிகவும் அழகுடையவள். ஆனால், அழகுக்கேற்ற நற்குணம் அவளிடம் இல்லை. அவள் பெல்லராஃவானிடம் தகாப்பற்றுக் கொண்டாள்; பெல்லராஃவானிடம் பறக்கும் குதிரை இருந்ததைச் சுட்டிக்காட்டி, தன்னை மட்டும் இட்டுக் கொண்டு ஓடிவிடும்படி கோரினாள். பெல்லராஃவான் தன் நண்பனுக்கு நன்றிகேடனாக விரும்பவில்லை. இதனால் ஸ்தெனோபீயாவுக்கு அவன்மீது சீற்றம் வந்தது. தான் செய்ய எண்ணியதை அவன் செய்ய முனைந்ததாக அவள் தன் கணவனிடம் கூறி அவனைச் சினமூட்டினாள். மன்னன் இப்போது பெல்லராஃவானுக்குத் தெரியாமலே அவன்மீது பகைமைகொண்டான். ஆனாலும், அவன் நேரில் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. லிஸியாவிலுள்ள அரசன் அயோபேட்டிஸ் அவன் மாமன்; ஸ்தெனோபீயாவின் தந்தை. அவனுக்கு ஒரு கடிதம் எழுதி ஸ்தெனோபீயா கூறிய குற்றச் சாட்டைத் தெரிவித்தான். அதற்குரிய தண்டனையை அளிக்குமாறும் வேண்டியிருந்தான். சூதுவாதற்ற பெல்லராஃவா னிடமே இந்தக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினான். அயோபேட்டிஸ் கடிதத்தில் கண்ட செய்தியையும், அதில் குற்றஞ்சாட்டப்பட்டவனே ஐயுறவு எதுவுமின்றி அதைக் கொண்டுவந்து கொடுத்ததையும் கண்டு வியந்தான். முதலில் களங்கமற்ற பெல்லராஃவானின் முகத்தைக் கண்டதும், இதை நம்பமுடியவில்லை. ஆயினும், தன் மகளையும் மருமகனையும் நம்பாதிருக்க வழியின்றி, அவன் தக்க நடவடிக்கையில் முனைந்தான். லிஸியா அருகே வெள்ளாட்டின் உடலும், பாம்பின் வாலும், சிங்கத்தின் தலையும் உடைய ஒரு கொடுவிலங்கு இருந்தது. அதனை மக்கள் சிமேரா என்று அழைத்தனர். அதை அணுகிய எவரையும் அது விழுங்காது விடுவதில்லை. அயோபேட்டிஸ் அதைக் கொல்ல அனுப்பும் சாக்கில், பெல்லராஃவானை அதற்கு இரையாக்க எண்ணினான். ஆனால், பெகாஸஸ் இவ்வகையில் சொல்லியது பெல்லராஃவானுக்குப் பெரிய உதவியாயிற்று. அவன் மிக நீண்ட வாளை எடுத்துக் கொண்டு பறந்து சென்றான். சிமேரா அறியாமல் அவன் தாழ்ந்து அதன் தலைமேலாகப் பறந்து சென்றான். அதன் அருகே பறக்கும்போது தன் நீண்ட வாளால் அதன் தலையை வெட்டி வீழ்த்தினான். பெல்லராஃவானின் அருஞ்செயல் கேட்டு அயோ பேட்டிஸ் ஒருபுறம் அச்சமும், மற்றொருபுறம் வியப்பும் கொண்டான். அவனைக் கொல்ல அவன் பல்வேறு முயற்சிகள் செய்தும் பயனில்லாது போயிற்று. தேவர்களின் அருளை இந்த அளவுபெற்ற இளைஞன் தன் மகளைக் கவர்ந்துகொண்டு செல்ல முயன்றான் என்ற செய்தி மீது அவனுக்கு மீண்டும் பெருத்த ஐயுறவு ஏற்பட்டது. ஒருநாள் அவன் பெல்லராஃவானிடமே நேரில் அதைக் கேட்டுவிட்டான். பெல்லராஃவான் அது கேட்டுத் திடுக்கிட்டான். மன்னன் தன் மருமகன் அனுப்பிய கடிதத்தைக்காட்ட, அவன் திகைப்பும் திகிலும், சீற்றமாக மாறிற்று. அவன் அயோபேட்டிஸிடம் ஒன்றும் கூறாமல், இரவே டிரின்ஸ்நகர் சென்றான். அரசன் அரசி அறியாமல் சிலநாள் அங்கேயே தங்கி யிருந்து, தனியாக ஸ்தெனோபீயா உலவிய சமயம் அவள் முன் சென்றான். அவள் முதலில் அச்சங்கொண்டாள். ஆனால், பெல்லராஃவான் அவளுக்கேற்றபடி நடித்தான். அவள்மீது தனக்கு இப்போது புதிதாகப் பாசம் ஏற்பட்டு அவள் திட்டப்படி நடக்கவே வந்திருப்பதாகக் கூறினான். ஸ்தெனோபீயா தன் விருப்பம் நிறைவேறப் போவதாக எண்ணி மகிழ்ந்து கூத்தாடினாள். பெல்லராஃவான் ஸ்தெனோபீயாவைக் குதிரை மீதேற்றினான். அவனும் தன் பின்னால் ஏறுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால், அவன் ஏறாமல் பெகாஸஸின் காதில் ஏதோ கூறினான். குதிரை உடனே வானோக்கிப் பறந்தது. ஸ்தெனோபீயா நடுநடுங்கிக் கதறினாள்; குதிரையைத் தன் வலுக்கொண்ட மட்டும் இறுகப் பற்றிக்கொண்டாள். ஆனால், பெகாஸஸ் கதிரவனை எட்டிப்பிடிக்க எழுவது போல நேரே செங்குத்தாகப் பறந்தது. ஸ்தெனோபீயாவின் தலை சுழன்றது. திடுமெனப் பெகாஸஸ் கீழ்நோக்கிப் பறந்தது. தன்கீழ் கடல் தொலைவில் தெரிவது கண்டு ஸ்தெனோபீயா பின்னும் நடுக்கமடைந்து கதறினாள். அவள் கைகால்கள் உதறலெடுத்தன. குதிரை நடுக்கடலில் வந்தவுடன் சட்டெனத் திசை திரும்பிக் குட்டிக் கரணங்களிட்டு மீண்டது. ஸ்தெனோபீயா பிடியகன்று கடலில் விழுந்து இறந்தாள். பெல்லராஃவான் திரும்பி டிரின்ஸுக்கும் லிஸியாவுக்கும் வந்தான். பிரேட்டஸ் தன் மனைவியைப் பற்றியோ, அயோபேட்டிஸ் தன் மகளைப் பற்றியோ எதுவும் கேட்கத் துணியவில்லை. ஆனால், அவன் சீற்றம் தம்மீது பாயாதிருந்தது கண்டு அமைந்தனர். அத்துடன் ஸ்தெனோபீயாவின் தங்கை அவன்மீது காதல்கொண்டதறிந்து, அவளை அவனுக்கு மணம்செய்து வைத்தனர். பெல்லராஃவான் மூன்று குழந்தைகளுக்குத் தந்தை யானான். ஆனால், ஸ்தெனோபீயா தனக்குச் செய்த பழியை அவனால் மறக்க முடியவில்லை. மூத்த பிள்ளையை நாடாள விட்டு அவன் பெகாஸஸுடன் உலகம் சுற்றப் போவதாகக் கூறிப் புறப்பட்டான். பெல்லராஃவானுக்கு இந்த மண்ணுலகைச் சுற்றுவதில் விருப்பமில்லை. ‘ஒன்று தேவருலகுக்குச் செல்ல வேண்டும்; அல்லது அம்முயற்சியில் மாளவேண்டும்’ என்று கருதினான். பெகாஸஸிடம் இதை அவன் கூறியபோது, அது தன் வாழ்விலேயே முதல் தடவையாகக் கனைத்தது. அதன் கண்ணில் இன்னதென்று கூறமுடியாத பேரொளி தோன்றிற்று. இத்தடவை பெகாஸஸ் தலையை உயர்த்திக் கொண்டு மேனோக்கிப் பறந்துகொண்டே இருந்தது. வானுலகு அருகே வரும்போது தேவர்களின் தந்தையான ஜீயஸ் ஒரு தேவனை அனுப்பி, ஈ வடிவில் சென்று குதிரையின் கண்களைக் கடிக்குமாறு பணித்தார். கண் கடிக்கப்பெற்ற குதிரை நோவு தாங்காமல் தலையைக் கவிழ்த்துக் கைகால் உதறிற்று. பெல்லராஃவான் குதிரையிலிருந்து நழுவி விழுந்தான். அவன் உடல் மண்ணுலகத்தை எட்டுமுன் அது எரிந்து சாம்பலாயிற்று. பெகாஸஸை ஜீயஸ் தம்மிடம் அழைத்துத் தம் ஊர்தியாக்கிக் கொண்டார். பெகாஸஸ் ஜீயஸுக்கு எப்போதும் அடங்கி நடந்தாலும், ஒவ்வொரு சமயம் பெல்லராஃவானை நினைத்து முரண்டிக் கொள்ளும், அதன் உள்ளக் குறிப்பறிந்த ஜீயஸ் புன்முறுவலுடன் அதன் மனத்துயர் அகலும் வரை அதை வாளா விட்டுவைத்து வந்தார். பெகாஸஸிடம் நாளடைவில் இணக்கமாகவே நடக்கத் தொடங்கிற்று. இன்சுவைக் கதைகள் (மூன்றாம் புத்தகம்) 1. நீர் அணங்கு வடக்கே நெடுந்தூரத்துக்கு அப்பால் பகலவனின் வெயில் ஒளியில்பட்டு மின்னிக்கொண்டு வான்முகட்டை முட்டி நிற்கும் மலை உச்சிகளுடன் வியப்பான கற்சிலை வடிவங்கள் போலவும், நீலத்திரையில் எழுதிய கண்கவர் உருவங்கள் போலவும் இமயமலை முடிகள் விண்ணளாவி நிற்கின்றன. என்றும் அழியாது படிந்திருக்கும் பனிவட்டத்துக்குக் கீழே உள்ள மலைப்பாறைகளில் வான மகளிரோ, வன தேவதைகளோ தூவிச் சென்றனர் என்று சொல்லும்படி, அத்தனை அழகழகான பூச்செடிகள் கண்ணைக் கவர்வனவாகக் காணப்படும். செக்கச் செவேரென்ற கடப்ப மலர்களும், பொன்நிறம் படைத்த செண்பக மலர்களும், கருமையும் மஞ்சளும் கலந்த வேங்கைப் பூக்களும், வெண்மையான மரமல்லிகைகளும், செங்காந்தளும், நீலமும், குறிஞ்சியும், முல்லையும் விரவிநின்று வானவில்லின் தோற்றம் போல் பேரழகுடன் அங்கே விளங்கும். அம்மலர்களுக்கும் மலைகளுக்கும் நடுவே, மலை மகளின் திருமுடியினின்றும் விழுந்த நீலமணிபோல் அங்கே ஓர் ஏரி இருக்கிறது. அளவில் சிறிதாயினும் அழகில் பெரிதாயிருந்த அந்த ஏரி நீரின் தெளிவையும் ஆழ்ந்த நீல நிறத்தையும் பார்த்தவர்கள், வானத்தின் சிறிய துண்டு ஒன்று உடைந்து அங்கே விழுந்து கிடக்கின்றதெனக் கூறுவார்கள். அச்சிறிய ஏரி ஊருக்கு வெகு தொலைக்கு அப்பால் இருக்கிறது. பொதுவாக மனிதனோ, விலங்கினமோ அதனருகில் வருவதே அரிது. எப்போதோ ஒருகால், வழிதவறி வரும் கவரிமான் அந்த ஏரியின் தெளிந்த நீரைப் பருகிச் செல்லக்கூடும். மேலே நீலவானத்தில், அதிக உயரத்தில் பருந்தோ, கழுகோ தன் இரையைக் குறிபார்த்து வட்டமிட்டுப் பறக்கும். அந்த ஏரி அவ்வளவு எழிலுடனும் அமைதியுடனும் விளங்குவதையும், அந்த மலையிடம் நெடுந்தொலையில் சந்தடியின்றி இருப்பதையும் கவனித்தால், அந்த இடத்தின் அமைதிநிலை ஒருபோதும் குலைக்கப்பட்டிராது என்றே கருதத் தோன்றும். ஆயினும், படிகத் தெளிவுடன் கூடிய அதன் குளிர்ந்த நீர் அதன் ஆழ்ந்த கசத்தில் மாய ரகசியம் ஒன்றை மறைத்து வைத்திருக்கிறது என்பதை நான் கூறினால் நீங்கள் நம்ப வேண்டுமே! அந்த ரகசியம் எட்டுத் திசையிலும் வீசும் காற்றுக்குத் தான் தெரியும்: அந்தக் காற்றோ என்றால், கீழே நெருங்கி வளர்ந்துள்ள கடப்பமரத்துக்கு அதைச் சொல்லும்; அல்லது காட்டுக்குத் தெய்வமான காளிக்குச் சொல்லும். அன்றொரு நாள் நிலவெறிக்கும் நள்ளிரவில், அந்த ஏரிக்கரையருகில் உள்ள கல்லின்மீதிருந்து வானத்திரையில் ஒளிரும் சுடர்மீன்களை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்துக்கொண்டு, ஏரியிலிருந்து கிளம்பிக் கீழே மனிதர்கள் வாழும் தரைமட்டத்திற்கு விரைந்து பாயும் கானாற்றின் சலசலப்புத் தாலாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அந்த ரகசியத்தை அங்கே வீசிய மெல்லிய பூங்காற்று காதோடு காதாய்க் கூறிச் சென்றது. அந்த ரகசியத்தை நான் உங்களுக்குஞ் சொல்லப் போகிறேன்: யாரும் அறிந்திராத நெடுங்காலத்துக்கு முன்னால், கீழே இருந்த கடம்பவனத்துக்குப் பக்கத்தில், மலைச்சாரலில் ஒரு சிறிய குடிசை இருந்தது. அக்குடிசையில் பெருங்குறத்தி என்றொரு கிழவியும், மலை அழகன் என்னும் அவள் மகனும் குடியிருந்து வந்தார்கள். மலையழகன் பேருக்கேற்பப் பேரழகனாகவே விளங்கினான். அடிவாரத்தில் வாழும் மலைக்குடிகளில் எல்லாம் அவனே ஒப்பற்ற எழில் பெற்றவனாக இருந்தான்; நெடிய உருவமும், கருத்துச் சுருண்ட தலைமயிரும், வளைந்த புருவமும், அகன்ற விழிகளும், எப்போதும் மகிழ்ச்சி குதித்தாடும் கருவிழிகளும் கண்டோர் மனதைக் கவரும் அழகுடன் விளங்கின. ஒரு முறை அவனைப் பார்த்தவர்கள் ஒருநாளும் அவனை மறக்க முடியாத உடல் அழகு அவனுக்கு இருந்தது. மலை அழகனும், அவன் தாய் பெருங்குறத்தியும் வறுமையே அறியாதபடி காலங்கழித்து வந்தனர். அவர்களிடம் பாற்பசுக்களும், காளைகளும், ஆட்டுமந்தையும், சேவலும், கோழியும் ஏராளமாக இருந்தன. தாயும் மகனும் சோம்பல் சிறிதுமின்றி நன்றாக உழைத்து வந்தனர். பாலும் தயிரும் வெண்ணெயும் நெய்யும் உள்ள பானைகளை அடுக்கிக்கொண்டு, மலையழகன் பக்கத்து ஊர்களுக்கு விற்கச் செல்லும்போது, ஊர்ப்பெண்கள் எல்லாரும் அவன் அழகைக் கண்டு வியந்து மயங்கி நிற்பார்கள். “இவன் எந்தப் புண்ணியவதியை மணப்பானோ, அவள் என்ன பாக்கியம் செய்தவளோ,” என்று அம்மங்கையர் ஒருவரோடொருவர் பேசி மனம் பொருமுவார்கள். மலை அழகனுக்கு வயது ஒன்றும் அப்படி ஆகிவிட வில்லை; பதினெட்டு வயதுகூட நிரம்பியிராத அவன் தனக்கு வாய்க்கப் போகும் மனைவியைப் பற்றிச் சிறிது கூட எண்ணிப் பார்த்ததே கிடையாது. பெண்களைப் பார்ப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது. அதிலும் அவ்வூர் நாட்டாண்மைக்காரர் மகளைப் பார்க்க அவன் ஆசைப் படாமலும் இல்லை. அவள் தான் எவ்வளவு அழகு! அதற்கு ஈடு சொல்வதற்குக் கதையையும் கற்பனையையும்தான் துணை கொள்ள வேண்டும். அவ்வளவு எழிலுடன் விளங்கிய அந்த இளமங்கைக்கும் அவனைக் காண்பதற்கு ஆவலாகத்தானிருந்தது. மலையழகன் தன்மீது அதிகப்படியான கருத்துச் செலுத்துவதும் அவளுக்குத் தெரியத்தான் செய்யும். எனவே, அவள் உள்ளப் பூரிப்புக்குக் கேட்பானேன்! மலையழகன் அத்தெருவழியாகப் போகும் நேரத்தில் எல்லாம் அவளும் ஏதோ வேலை செய்வதாகப் போக்குக் காட்டிக் கொண்டு தன்வீட்டு முன்மாடியில் வந்து நிற்பாள். மாடியில் வைத்திருந்த சம்பங்கிச் செடிக்குத் தண்ணீர் வார்த்துக்கொண்டே தெருவில் போகும் அந்த அழகு இளைஞனைக் கண்குளிரக் கண்டு மகிழ்வாள். வெயில்காலத்தில் ஒவ்வொரு நாளும் காலையில் மலையழகன் அவனுடைய பசுக்களையும் ஆடுகளையும் கடம்பவனத்தருகில் உள்ள புல்வெளிக்கு இட்டுச் சென்று மேய விடுவான். அங்கே அவை விருப்பம் போல் புல் தின்று காலாறிக் கொண்டிருக்கையில், அவன் மரநிழலில் மலர்கள் படிந்து மெத்தென்றிருக்கும் புல்தரையில் படுத்துக்கொண்டு, மேலே தெளிந்த வானத்தில் கழுகும் பருந்தும் வல்லூறும் வைரியும் வட்டமிடுவதைக் கண்டு களித்திருப்பான். சித்திரை மாதத்தில் ஒருநாள் வெயில் நன்றாய்க் காய்ந்து கொண்டிருக்கும்போது, மலைப்புறத்தில் சுற்று முற்றும் ஆட்டமோ அசைவோ இல்லாத அமைதியான வேளையில், வழக்கம்போல் அவன் புல்மீது படுத்துக் கொண்டு பனிமலையி லிருந்து வீசும் குளிர்ந்த மென்காற்று உடலைத் தழுவிச் செல்வதால் ஏற்படும் இன்பத்தை நுகர்ந்து மகிழ்ந்திருக்கையில், நெஞ்சை உருக்கும் மாயமான இன்னிசை ஒன்று காற்றிலே மிதந்து வருவதைக் கேட்டான். அது ஏதோ நெடுந்தொலையிலிருந்து கிளம்புவதாகத் தெரிந்தது. மலையில் கிளம்பிய எதிரொலிபோல் இருந்ததே தவிர, உடலெடுத்த உயிர்ப்பிறவியின் தொண்டையி னின்றும் பிறந்த குரலோசைபோல் தோன்றவில்லை. உடலையும் உள்ளத்தையும் இனிக்கவைத்து உருக்கும் அந்த இளமென்கீதம், தெய்வமகளிர் இசைக்கும் பாடலாகத்தான் இருக்கலாமேயன்றி, மக்கள் பாடும் பாட்டாக இருப்பதற்கு இல்லை. வானவீதியில் வந்த அந்த அமுத இசையின் இனிய ஒலி அடங்கும்வரையில் மலையழகன் மாயத்தால் கட்டுண்டவன் போல் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு சட்டென்று எழுந்து அங்கும் இங்கும் எங்கும் தேடினான். பாட்டிசைத்தவரைக் காண ஓடினான். ஆனால், யாருமே தென் படவில்லை. செடிகளின் மறைவிலோ, மரங்களின் கிளை களிலோ, ஊசிப் பாறைகளின் மீதோ யாருமே இருப்ப தாகவுந் தெரியவில்லை. புல்வெளியில் பசுக்கள் அமைதியாக மேய்ந்தன. கால் வழுக்கும் கடும்பாறைகளில் ஆடுகள் தங்களுக்குள்ள தனித் திறமையுடன் ஏறிநின்று தழைகளைக் கடித்துத் திரும்பின. அன்றுபொழுதடைந்து அவன் வீடு திரும்பும்போது அந்திவெள்ளி பனிமலை முடிமீது தன் படரொளியை வீசி நின்றது. வழக்கம்போல் பசுக்களும் ஆடுகளும் வீடுநோக்கி நடந்தன; ஆனால், வழக்கம்போல் வீடு திரும்பும்போது அவன் குரல் எடுத்து உணர்ச்சியாக ஊக்கத்துடன் பாடிவரும் மலை நாட்டுப் பாடல்கள் அன்று அவனிடமிருந்து கிளம்பவில்லை. தலை நிமிர்ந்து மிடுக்காக நடக்கும் நடையும் இல்லை. ஏதோ வாயடைத்துப் போனவன்போலவும், கவலை கொண்டவன் போலவும், ஆழ்ந்த எண்ணத்துடன் மெள்ள நடந்தான். அந்த அருந்திறல் பாடகர் யாரென்பதைக் கண்டறிய முடியாது போனது அவனுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. “ஏண்டா அப்பா ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” என்று மண்கலயத்தில் பால் வார்த்துக் கொடுத்துக் கொண்டே பெருங்குறத்தி அவனைக் கேட்டாள். வாடிப்போயிருந்த அவன் முகத்தை உற்று நோக்கி, அவனது மனதில் குடிகொண்டுவிட்ட துயரத்தை அறிய அவள் முயன்றாள். சுடச்சுட வைத்திருந்த கேழ்வரகு அடையையும், வீட்டில் கடைந்தெடுத்த வெண்ணெயையும், நறுமலர்களின் மணம் செறிந்த மலைத்தேனையும் ஆர அமரத் தின்றுகொண்டே அவன் மௌனமாக இருந்தான். அவன் உள்ளத்தை வாட்டும் நிகழ்ச்சியைக் குறித்து அவன் ஏதுமே பேச விரும்பவில்லை. ஆனால், அவன் தாயோ அவனது முகவாட்டத்தால் மனம் வருந்திப் பெருங்கவலைகொண்டாள். மேலும், அந்நாள்வரையில் அவன் தன் தாயாரிடம் எதையும் ஒளித்தது கிடையாது. எனவே, கடைசியாக அவன் அவளிடம் மலைமீது கேட்ட மனமுருக்கும் எழிலிசையைப்பற்றியும், பாடியவரைத் தேடியுங் கண்டுபிடிக்க முடியாமல் போனதைப் பற்றியும் விளக்கிக் கூறினான். பெருங்குறத்தியின் முகம் கறுத்தது. “அட, பாவி மகனே, அகப்பட்டுக் கொள்ளாதேடா; நீ இள வயசு; நீர் அணங்கு உன்மேல் கண் வைத்து விடாமல் பார்த்துக்கொள் அப்பா; கருத்தாக இரு; தாய்க்கு ஒரே பிள்ளை நீ,” என்று அவள் படபடத்துக் கூறினாள். “ஏனம்மா நீ இப்படி அஞ்சுகிறாய்? நீர் அணங்கு என்றாயே அவள் யார்? சொல்லம்மா,” என்று ஆவலோடு கேட்டான். “அப்பா அந்த மாயக் குரலின் கவர்ச்சி இன்னும் நீங்காமல் இருக்கும்போது அதைப்பற்றிப் பேசக்கூடக் கூடாது,” என்று பெருங்குறத்தி மகன் காதருகில் சென்று தாழ்ந்த குரலில் கூறினாள். “நீ சற்று வளர்ந்து பெரியவன் ஆனபின் அவளைப் பற்றிக் கூறுகிறேன். ஆனால், அதுவரையில் பனிமலையில் கேட்கும் இன்னிசைப் பாடல்கள் உன்னை இழுத்துச் சென்று விடாமல் பார்த்துக் கொள்,” என்றாள். பிறகு அதைப்பற்றி ஒரு பேச்சுமே யாரும் பேசவில்லை. தாய் சொல்லை மறுத்துப் பேசும் வழக்கமே மலையழகனிடம் கிடையாது. ஆனால், நீர் அணங்கைப் பற்றி அவள் குறிப்பாகச் சொன்னதைக் கேட்டதுமே அவளை நேரில் பார்க்கவேண்டு மென்றும், அவள் பாட்டை மறுமுறை கேட்க வேண்டும் என்றும் அவனுக்கு ஆசை உண்டாகிவிட்டது. மறுபடியும் அவன் மலைமீது நெடுகலும் சென்று தேடினான். மீண்டும் மீண்டும் பலநாள் தித்திக்கத் தேனூறும் அந்தத்தெய்வீக இசை கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், பாடியவர் மட்டும் கண்ணுக்குப் புலப்படவேயில்லை. மலையழகனுக்கு மனக்கவலை யுண்டாகிவிட்டது. உடலும் மெலியத் தொடங்கியது. பக்கத்து ஊர்களுக்குப் பாலும் வெண்ணெயும் விற்கச் செல்லும்போது, வழக்கம்போல் பாடிக் கொண்டே செல்வதும் நின்று போய்விட்டது; நாட்டாண்மைக் காரர் மகள் நின்ற இடத்தைத் திரும்பிக்கூடப் பார்க்க அவனுக்குத் தோன்றவில்லை; அதனால் அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. அவள் கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டுப் பன்னீர்ப் பூச்செடியின் மூடுங்கூட அழுகிவிட்டது. ஒரு நாள் மலையழகன் வழக்கம்போல ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது ஆட்டுக்குட்டி ஒன்று வழிதவறி எங்கோ சென்றுவிட்டது. ஒவ்வொரு குட்டியிடமும் தனித்தனியே தாய்போல் அன்பு கொண்டிருந்த அவனுக்கு அது காணாமற் போனது உயிரைப் பறி கொடுத்ததுபோல் இருந்தது. எனவே, காடென்றும் மலையென்றும் பாராமல் அதுவரையில் சென்றறியாத இடங்களுக்கெல்லாம் சென்று தேடினான். அப்படித் தேடிச் செல்கையில் இக்கதையின் துவக்கத்தில் சொல்லப்பட்ட அந்தத் தெளிந்தநீர் ஏரிக்கரைக்கு வந்து விட்டான். அங்கு வந்தானோ இல்லையோ, உடனே அங்கே அவன் என்றும் உணர்ந்தறியாத இன்பமூட்டும் அமுத இசை எழுவதைக் கேட்டு இறும்பூ தெய்தினான்; அவ்வளவு அருகில் எழும் அந்த இன்பப்பாடல் வரும் திசையை நோக்கினான். ஏரியின் மறு கரையில் அவனுக்கெதிரே ஒரு சிறந்த எழிலணங்கு நிற்பதையும், உயிரையும் உடலையும் ஒருங்கே பிணிக்கும் அந்தத் தீங்குரல் அவளிடமிருந்தே கிளம்புவதையும் அவன் கண்டு பெருவியப்பெய்தினான். மலைநாட்டு மகளிரெல்லாம் வனப்புமிக்கவர்களாகவே இருப்பினும், அதுவரையில் அவன் அவ்வளவு அழகுமிக்க மங்கையைப் பார்த்ததேயில்லை. துவளும் கொடிபோல ஒடுங்கி நிமிர்ந்த அவள் மேனி, நிலவு ஒளிவீசுவதுபோல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கருத்து இருண்டிருந்த அவளது கூந்தல், சுருண்டு சுருண்டு அவளது கழுத்தைச் சுற்றிப் பரந்து விரிந்து கிடந்தது; குதிகால்வரையில் நீண்டு பரந்திருந்த அத்தலைமுடி, மயில்தோகை அவளைப் போர்த்ததுபோல் அமைந்திருந்தது. செம்பருத்திப் பூவின் செவ்விதழிலும் சிவந்து காணப்படும் அவளது வாய் சற்றே திறந்தபோது வெண்முத்துப் போன்ற பல்வரிசை, ஒளி வீசி நின்றது. அவளது அகன்று பரந்த கண்களில் நீலக் கருவிழிகள், வானத்தில் சுடர்விடும் விண்மீன்போல் வெட்டி வெட்டி மின்னிக்கொண்டி ருந்தன. அவளது எழில் மேனியோ, பொன்னை உருக்கி வார்த்த பொம்மைபோல் இருந்தது. புகைப்படலம் போன்ற மென்மையுடன் அவள் புனைந்திருந்த ஆடை, அவளது அழகை மேலும் சிறப்பாக எடுத்துக் காட்டியது. அழகே உருவாகத் திரண்டதுபோல் நின்ற அப்பூங்கொடியாள் மலையழகனைப் பார்த்துப் புன்முறுவல் காட்டி நின்றாள். வைத்த கண் வாங்காமல் உள்ளமும் எலும்பும் ஒன்றாய் உருகித் தேனுறு பாய இன்பஅலையில் அமிழ்ந்து செயலற்று நின்ற மலையழகன், அந்த அழகு வெள்ளம் அகலத்திறந்த கண்மடைகள் வழியே உள்ளே பாய்ந்து அவன் உடலில் நிரம்பிப் பொங்குவதை உணர்ந்தான். இன்பமும் அன்பும் சுரந்து பொங்கும் இன்ப ஊற்றான அந்த எழிலணங்கின் அருகில் செல்ல விழைந்தான். ஆனால் ஆழமும் அகலமும் உடைய அந்த ஏரி குறுக் கிட்டது. கரையில் படகு ஒன்றுமில்லை. தாவிப் பாய்ந்து விடவேண்டுமென்ற உள்ளத் துடிப்புடன் வழியறியாது திகைத்து நின்ற மலையழகனைப் பார்த்து அப்பேரெழில் நங்கை தளிர்க் கைகளை நீட்டி, “நடந்து வா,” என்று இசை ததும்பக் கூறினாள். என்ன வியப்பு! ஏரிநீர் பனிக்கட்டியாய் உறைந்து வழி காட்டியது. பளிங்கு பதித்த வான வீதிபோல் அது அவனுக்குத் தோன்றியது. “இங்கு வருக” என்றன அவள் வாயிதழ்கள்; எட்டிப் பிடிப்பதுபோல் அவள் எழிற் கைகளைப் பரிவுடன் மேலும் நீட்டினாள். மலையழகன் உணர்வெல்லாம் அந்த இன்பக் காட்சி யிலேயே முற்றிலும் ஒன்றிவிட்டது; அவனை மறந்தான்; அவன் தாயை மறந்தான்; அவன் தேடிய இளமறியை மறந்தான்; அவனைக் காணக் காத்திருக்கும் நாட்டாண்மைக்காரர் மகளையும் மறந்தான்; “இதோ வருகிறேன்” என்பவன்போல் அப்பனிக்கட்டிமீது விரைந்து அடியெடுத்து வைத்தான். சருக்கி ஓடுவதுபோல் சென்ற அவன், ஏரி நடுவை அடைந்தான்; கடுங்கசம்; அங்கே நீர் ஆழம் பாதாளம் வரையில் எட்டும் என்று மக்கள் நம்பி வந்தனர். அந்த இடத்திற்கு அவன் வந்ததுதான் தாமதம், பனிக்கட்டி திடீரென மறைந்தது; மிகவிரைவில் அவன் கீழ் மட்டத்துக்கு இழுத்துச் செல்லப் பட்டான்; ஏதோ ஓர் அரிய ஆற்றல் அவனைக் கட்டிப் பிடித்துக் கீழே கொண்டு சென்றது. கரையில் நின்ற அந்த எழில் மங்கை நீர் அணங்கும் உடன் மறைந்தாள். அவளது தந்தக் கடைசல் போன்ற இள மென் கைகள் அவனை அணைத்துத் தழுவின. அமுத இசை பொழிந்த அவள் வாயிதழ்கள் அவன் முகத்தில் பதிந்தன. அவனை ஏந்திக்கொண்டே அவள் கீழே நீர் மட்டத்தி னடியிலிருந்த தன் அழகிய அரண்மனைக்கு அதிவிரைவாகச் சென்றாள். அன்று மாலையில் மலையழகனது ஆடுகளும், மாடுகளும் தலைவனின்றித் தனியே வீடு திரும்பின; மகிழ்ச்சி ததும்பி நின்ற அக்குடிசையில் சோகமும் துயரமும் குடிகொண்டன. கடும்புயல் வீசும் இராக்காலங்களில், வானம் மையமாக இருண்டிருக்கும்போது, காற்றலைத்துப் பொங்கிப் புடைக்கும் பேரலைகள் குமுறி எழும் சமயங்களில், அந்த மலை ஏரிக்கரையில் பாறைமீது உட்கார்ந்து கல்லும் உருகும் வண்ணம் அழுது அரற்றும் ஒரு கிழ உருவத்தைக் காணலாம். மறைந்த மகனைக் கூவியழும் பெருங்குறத்திதான் அவ்வுருவம். ஒவ்வோர் ஆண்டும் சித்திரைத் திங்கள் நிறை நிலவில், அந்தி வெள்ளியும் திங்களும் வான நடுவில் இருக்கும்போது, படிகம் போல் தெளிந்த அந்த ஏரித் தண்ணீரின் கீழே தொலைதூரத்தில் இரண்டு எழில் உருவங்கள் ஒன்றை ஒன்று தழுவி இன்புற்றிருப்பது நன்றாகத் தெரியும். என்றும் இணை பிரியாமல் வாழும் நீரணங்கும் மலையழகனும்தான் அப்படி மெய்ம்மறந்து இருக்கின்றனர். 2. பச்சைக்கிளி முன்னொரு காலத்தில், பெரியண்ணன் என்னும் ஒரு குடியானவன் மலையடிவாரத்தில் உள்ள குடிசை ஒன்றில் வசித்து வந்தான். பெரியண்ணனுக்குத் திருமணமும் ஆகிப் பன்னிரண்டு பெண்மக்களும் இருந்தனர். ஆனால், குழந்தைகள் பெற்றெடுத்த தனால் அவனுக்குத் துன்பந்தான் அதிகம் ஆயிற்றே தவிர, மகிழ்ச்சிக்கு வழியில்லை. அவனும் அவன் மனைவியும் மிகவும் ஏழைகள்; அவர்களுக்கென்று சொல்லிக்கொள்ள வறுமையையும் அந்த ஓலைக் குடிலையும் தவிர வேறு ஒன்றும் கிடையாது. தகப்பனும் தாயும் குழந்தைகளும் காலையில் இருந்து இரவு வரையில் ஓயாது உழைத்து வந்தார்கள். அதனால் ஏதோ அரைவயிற்றுக் கஞ்சிதான் குடிக்க முடிந்ததே தவிர, சிறப்பாய் வாழ வழி ஏற்படவில்லை. குடும்பமும் பெருகிக்கொண்டே வந்தது. கடுங்கோடையில் ஒரு நாள் உச்சிப்பொழுதில் ‘சுள்’ என்று வெயில் காய்ந்து கொண்டிருந்தது; தரையிலிருந்து கானல் பரந்து கண்களை உறுத்தியது; பெரியண்ணன் மலை அடிவாரத்தில் உள்ள பாதாளக் குகையின் அருகில் குழி தோண்டிக் கொண்டிருந்தான். அந்தக் குகையில் யாருமே எட்டிப் பார்த்தது கிடையாது. அடிக்கடி அதிலிருந்து குடல் நடுங்கும் உறுமல் ஒலிகள் கேட்கும். அதைப் பேய்க் குகை என்று அந்த வட்டாரத்து மக்கள் குறிப்பிட்டு வந்தார்கள். வெயில் கடுமையாக இருந்த படியால், பெரியண்ணன் மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டு அருகில் ஓங்கி வளர்ந்திருந்த மருதமரத்து நிழலில் சற்று இளைப்பாற உட்கார்ந்தான். இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது, அவன் மனதில் பல வகையான எண்ணங்கள் வந்து துன்புறுத்தின. ஒரு குழந்தையைக்கூட வைத்துக் காப்பாற்ற முடியாதபடி அவர்கள் அவ்வளவு ஏழையாயிருக்கையில், அவர்களுக்கு ஏராளமாய் குழந்தைகள் பிறந்திருப்பதை எண்ணி அவன் வருந்தினான். அவன் அப்படி எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் முதலை அளவு பருமன் உள்ள பச்சை ஓணான் ஒன்று பாதாளக் குகையிலிருந்து மெள்ள நகர்ந்து வந்து, அவன் பக்கத்தில் நின்றது. அப்பாவி பெரியண்ணன் அப்படியே அயர்ந்துவிட்டான்; குலை நடுங்கி, அச்சத்தால் கைகால் விறைத்து, ஆடாமல் அசையாமல் அதையே பார்த்துக்கொண்டு இருந்தான். அது அவனை ஒரே வாயில் விழுங்கிவிடும் என்றுதான் அவன் எண்ணினான். ஆனால், அந்த முதலை ஓணான் ஈரநெஞ்சு படைத்தது. பின்னும் சற்று நெருங்கிவந்து அருமையாகப் பேசத் தொடங்கியது. “ஏனப்பா பெரியண்ணா! ஏன் என்னைக் கண்டு அஞ்சுகிறாய்? நான் உனக்கொன்றும் தீங்கு செய்ய மாட்டேன்; அதற்கு மாறாக, நான் உனக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா என்று பார்க்கத்தான் வந்திருக்கிறேன்,” என்றது. எடுத்த எடுப்பிலேயே அந்த முதலை ஓணான் அவனைத் தின்று விழுங்கப்போவதில்லை என்பதை அறிந்ததும் அவன் சற்று ஆறுதல் அடைந்தான். ஆனால், ஓணான் பேசுவதைக் கேட்க அச்சமாகத்தான் இருந்தது. நெஞ்சுக்குள் “கடவுளே! காப்பாற்று,” என்று முணுமுணுத்துக் கொண்டான். சிறிது மனந் துணிந்து ஓணானிடம் பணிவாகப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான். “அம்மா! உங்களைக் காண மிக்க மகிழ்ச்சி. எனக்கு ஏதோ உதவி செய்ய வந்ததற்கு என் மனமார்ந்த நன்றி. உண்மையிலேயே எனக்கு இப்போது உதவி மிகவும் தேவை. எனக்குப் பன்னிரண்டு பெண் மக்கள் இருக்கின்றனர். வாழ்க்கை நடத்த வழி தெரியாமல் திகைக்கிறேன். இந்த இக்கட்டிலிருந்து விடுபட ஏதேனும் வழி கூறினால், உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு,” என்றான். அதைக் கேட்ட அந்த ஓணான் புன்சிரிப்புச் சிரித்தது. கொழு கொழு என்று உருண்டு திரண்டு பருத்திருந்த அந்த ஓணானின் சிரிப்பும் ஓர் அழகாகத்தான் இருந்தது; அதன் செதில்கள் எல்லாம் வெயிலில் பச்சைக் கல்போல் பளபளத்தன. அதன் கண்களிலும் வாயிலும் சிரிப்புத் தாண்டவமாடிற்று. அது கண்ணுக்கினிய காட்சியாகத்தான் இருந்தது. ஆனால், அச்சமொன்றும் இல்லாமல் வழக்கம்போல் இருந்தால் பெரியண்ணன் அதைக் கண்டு எவ்வளவுக்குச் சிரித்து மகிழ்ந்திருப்பானோ அவ்வளவுக்கு அவன் அப்போது சிரிக்கவில்லை. உள்ளே அச்சம் வாட்டியது. பசி எடுப்பது வரையில் அப்படிப் பாசாங்கு செய்துவிட்டுப் பிறகு அவனைத் தின்றுவிடும் என்ற கலக்கம் ஒரு பக்கம் அவனுக்கு இருக்கத்தான் செய்தது. அந்த ஓணான் முன்னைவிட ஆறுதலான குரலில் மீண்டும் பேசத் தொடங்கியது. “அட, அப்பாவி மகனே! எனக்கு உன் துன்பம் எல்லாம் நன்றாகத் தெரியும்; என் குகையை விட்டு நான் வெளியே வந்ததே உனக்கு உதவி செய்யத்தான்; உனது கடைக்குட்டிப் பெண் குழந்தையை இன்றிரவு என்னிடம் கொண்டுவந்து தா: அவளை நான் என் சொந்தப் பெண் போல் வளர்த்து வருவேன்,” என்றது. அதைக்கேட்டதும் பெரியண்ணன் திடுக்கிட்டு மயக்கம் போட்டு விழுந்துவிட்டான். கீழே நெருஞ்சி முள்ளும் கள்ளியுமாகக் கிடந்தபடியால், அவன் மேலெல்லாம் முள் தைத்து வலி எடுத்தது. ஆனால், அந்த ஓணான் மெதுவாக அவனைத் தூக்கி இருத்தி, தன் கேள்விக்கு உடனே இரண்டிலொன்று பதில் சொல்லும்படி கேட்டது. அந்த ஏழைத் தகப்பனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வறுமையால் துன்பப்படுவதென்றால் மிகவும் தொல்லைதான்; ஆனால், அதற்காகத் தன் பச்சைக் குழந்தையை விந்தையான முதலை ஓணானிடம் ஒப்புவிப்பது என்றால் மனம் வருமா? யார் கண்டார்கள். அது ஒரே வாயில் குழந்தையை விழுங்கி விட்டாலும் வியப்புறுவதற்கில்லையே! ‘எந்தப் பொல்லாத வேளையில் இந்த மலை அடிவாரத்தில் குழிதோண்ட வந்தேனோ,’ என்று அவன் மனதுக்குள் அவனை நொந்து கொண்டான். அவனை வேலைக்கு ஏவிய தலைவனையும், பொதுவாக, அவன் பிறந்த வேளையையும் பழித்துக் கொண்டான். அவன் அப்படிக் காக்க வைப்பது ஓணானுக்குப் பிடிக்கவில்லை. “அட, பயித்தியக்காரா, உன் களிமண் மூளையை இபபடி எல்லாம் குழப்பிக் கொள்ளாதே. நீ உன் குழந்தையை என்னிடம் ஒப்புவிக்கப் போகிறாயா இல்லையா என்பதைப் பற்றி வீண் எண்ணங்கள் கொள்ளவேண்டாம்; அவளை எடுத்து வளர்ப்பதென்று நான் முடிவு செய்துவிட்டேன்; சூரியனை மேற்கே தோன்றச் சொன்னாலும் சொல்லலாம்; ஆற்று வெள்ளத்தை மலைமீது எதிர்த்துப் பாயச் செய்தாலும் செய்யலாம்; ஆனால், இனி என் எண்ணத்தை மட்டும் உன்னால் மாற்றவே முடியாது. உடனே ஓடிப்போய் உன் குழந்தையைச் சுணக்கமில்லாமல் கொண்டு வா; இல்லையானால் நீயும் உன் வறுமைமிக்க குடும்பமும் என்ன பாடு படவேண்டும் தெரியுமா? போ, போ,” என்று ஓணான் அவனை வற்புறுத்தியது. பாவம், பெரியண்ணன் இனிச் செய்தவற்கு வேறு ஒன்றுமே இல்லை; எண்ணிப் பார்க்கக்கூட இடமில்லை என்பதை அறிந்துகொண்டான்; ஓணானுக்குச் சினம் வந்துவிட்டால் என்ன செய்வது? அதிலும் அது எவ்வளவு பெரிய ஓணான்; என்னென்ன செய்யுமோ! பாதாளக் குகையில் அதனோடுகூட இன்னும் என்னென்னவெல்லாம் இருக்குமோ! சொல்லியபடி நடப்பது தான் நல்லது என்று எண்ணிக்கொண்டு அவன் வீடு நோக்கி ஓடிவந்தான். அவன் முகத்தில் ஒரே துயரம் குடிகொண்டிருந்தது. வாயிற்படியில் அவனை எதிர்பார்த்து நின்ற அவனுடைய மனைவிக்கு, அவனைக் கண்டதும் தூக்கி வாரிப்போட்டது. பெரியண்ணன் ஏழை தான்; எனினும், வழக்கமாகச் சிரித்த முகத்தோடுதான் வீடு திரும்புவான். “ஏன் இந்த முகவாட்டம்? வேலை போய்விட்டதா? கீழே எங்கேயாவது விழுந்து அடிபட்டு விட்டதா? இல்லை, உழவுமாடு செத்துப்போய் விட்டதா?” என்று அவள் பரிவுடன் வினவினாள். பெரியண்ணன் ஏதும் பேச வாய் வராததால் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றான். அவன் உள்ளம் அவ்வளவு தூரம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. மெள்ள மெள்ள, அவனிடமிருந்து எல்லா விவரங்களையும் அவன் மனைவி கேட்டுத் தெரிந்துகொண்டாள். முதலை ஓணானுக்கு அவர்கள் கடைக்குட்டிப் பெண் பச்சைக்கிளியை வளர்ப்புப் பெண்ணாகக் கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் குடும்பத்துக்கே கேடுதான் என்றும் அறிந்து கொண்டாள். முதலை ஓணான் சொன்னதெல்லாம் நல்லதுக்கென்று தான் முத்தரசி நினைத்தாள். “ஒருவேளை நமக்கும் நம் குழந்தை பச்சைக்கிளிக்கும் நல்லகாலம் பிறந்து விட்டதோ என்னவோ! ஓணான் பொல்லாதது என்று யார் சொன்னார்கள்; எப்படித் தெரியும்? அது அப்படிப் பொல்லாததாயிருந்தால், உங்களை அங்கேயே தின்றுவிட்டிருக்காதா என்ன? என் புத்திக்கு, அது நமது நன்மைக்குத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது என்று படுகிறது; பிள்ளைக்கு ஒன்றும் கேடு நேராது. நம்மோடு இருந்தால்மட்டும் என்ன? பச்சைக்கிளி பசி பட்டினியால் வாடிச் சாகத்தான் போகிறாள் இந்த வழியையுந்தான் பார்ப்போமே,” என்று அவள் கணவனிடம் கூறினாள். அவள் பேச்சு பெரியண்ணனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. எப்போதுமே அவன் அவளிடம் யோசனை கேட்பான். எனவே, மறுபேச்சின்றி உள்ளே சென்று தன் கடைசிப் பெண் பச்சைக்கிளியைக் கையில் அணைத்து எடுத்துக்கொண்டு பழைய மருதமரத்துப் பக்கம் வந்தான். ஓணான் அவன் வருகைக்காகப் பொறுமையோடு காத்திருந்தது. அதன் விருப்பப்படி பெரியண்ணன் நடந்ததைக் காண அதற்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. தங்கப்பணம் நிறைந்த பை ஒன்றை அது அவன் கையில் கொடுத்தது. பச்சைக் கிளியை அதன் முதுகில் வைத்துக்கொண்டு, “இவளுக்கு நான் அம்மையும் அப்பாவுமாக இருந்து வளர்த்து வருவேன். கவலைப்படாதே போ,” என்று கூறிவிட்டுப் பாதாளக் குகைக்குள் புகுந்துவிட்டது. பெரியண்ணன் தங்கப்பணம் நிறைந்த பையைத் தூக்கிக் கொண்டு, வீடுநோக்கித் திரும்பினான். அவன் அதற்குமுன் தங்கப்பணத்தைக் கண்ணால்கூடப் பார்த்தது கிடையாது. எனவே, அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஓணான் ஏதோ அன்புள்ளதாகத்தான் தெரிந்தது. அவ்வளவு பணத்தையும் வைத்துக் கொண்டு மீதிக் குழந்தைகளைச் செல்வமாக வளர்த்து நகைபோட்டுத் திருமணம் பண்ணிக் கொடுக்கலாம்; வயது காலத்தில் அவனும் அவன் மனைவியும் துன்பப்படாமல் வாழலாம் என்றும் நினைத்தான். அன்று இரவு பெரியண்ணன் வீடுசென்றதும் வீட்டில் ஒரே கொண்டாட்டமாகத்தான் இருந்ததென்பதைச் சற்று வருத்தத்தோடு சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. குழந்தைப் பச்சைக்கிளியை யாரும் தேடவில்லை. மீதிப் பதினொரு குழந்தைகள் இருப்பதால், ஒன்று குறைந்தது என்ன வேறுபாட்டைக் காட்டிவிடப் போகிறது? மேலும் அதுவோ சின்னஞ் சிறியது. ஓணானும் பச்சைக்கிளியும் குகையின் அடித்தளத்துக்குச் சென்றதும், குழந்தைக்குப் பால் வழங்கப்பட்டது. பால் குடித்தபின் அது தாலாட்டித் தூங்க வைக்கப்பட்டது. அவள் தூங்கும்போது அவளை ஓணான் மெல்லத் தூக்கி எடுத்து மலையின் மேலிடத்துக்குக் கொண்டு சென்றது. அங்கே அவளுக் கென அது ஒரு பெரிய மாளிகையை அமைத்தது. பூங்காவும் புல்வெளிகளும் பழத்தோட்டங்களும் நிழல்மரச் சோலைகளும் அதைச் சுற்றி அமைக்கப்பட்டன. குழந்தை பச்சைக் கிளி அம் மாளிகையிலுள்ள அழகான ஓர் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். வழுவழுப்பான சுவர்களும், சலவைக்கல் தளமும், பூவேலைப்பாடு அமைந்த மேல் தளங்களும் உள்ள அந்த அறையில் இரு செவிலித் தாய்மார்கள் அவளைப் பேணி வளர்த்தார்கள். ஆனால், ஓணான் அவளை ஒரு நொடிகூட விட்டு அகலுவதே இல்லை. அவள் எது கேட்டாலும் உடனே வாங்கித் தந்து அவள் ஆவலைத் தீர்க்க ஓணான் காத்துக் கிடந்தது. இப்படியாக அந்த அழகான சூழ்நிலையில், ஓணானும் செவிலித்தாயும் மற்றுமுள்ளவர்களும் அன்பைச் சொரிந்து சீராட்டிப் பாராட்டி வளர்த்துவரப் பச்சைக் கிளி கவலையற்ற சோலைக்கிளிபோல் வளர்ந்து வந்தாள். ஆண்டுகள் சில கழிந்தன. பேரெழிலும், நற்பண்பும், கல்வி, கலை, இசைப் பயிற்சியும் பெற்ற நங்கையாகப் பச்சைக்கிளி பருவமெய்தினள். ஓணானை அவளுடைய தாய்போல் கருதி அன்புடன் நடந்துவந்தாள். உண்மையில் ஓணான் அவளுக்குத் தாயும் தந்தையுமாக இருந்தது. முன்பு சொல்லியதுபோலவே அவளை அன்பாக அது வளர்த்து வந்தது. அப்போது ஒருநாள் அந்நாட்டு அரசன் வேட்டைக்குச் சென்றவன் பொழுதடையும் வரை வேட்டையிலேயே ஈடுபட்டு நின்றுவிட்டானாகையால், வழிதப்பி இரவில் தங்குவதற்கு இடம்தேடி அலைந்தான். நடுக்காட்டில் ஒதுக்கிடமின்றி மனம் சோர்ந்த நிலையில் இருந்த அம்மன்னன் மலையுச்சி யில் விளக்கு வெளிச்சம் திடீரெனத் தெரிந்ததைக் கண்டு, அது யார் வீடென்றும், தங்குவதற்கு அங்கு இடம் கிடைக்குமா என்றும் தெரிந்து வருமாறு அவன் ஊழியரை அனுப்பினான். அரசன் அன்றிரவு அதன் வீட்டில் தங்கிச் செல்லலா மென்று அனுமதியளித்த ஓணான் அவனை எதிர்கொண்டழைக்க வந்தது; ஆனால், அது அதன் வழக்கமான ஓணான் உருவத்தில் வரவில்லை. சரிகைப் பட்டாடைகள் அணிந்து, தாதியர் புடைசூழ ஒரு சீமாட்டி வடிவத்துடன் வந்தது. அரசன் வரவால் தன் வீடு பெருமை பெற்றதென்று பணிவுடன் அறிவித்து, அரசனுக்கு உதவி செய்யக் கிடைத்த வாய்ப்பிற்கு மகிழ்ச்சி தெரிவித்து அச்சீமாட்டி அரசனுக்குப் பெரு விருந்து ஒன்று நடத்தினாள். அவ்வளவு உபசாரத்துடன் வரவேற்புக் கிடைத்ததால் மகிழ்ந்த மன்னன், அழகான பூங்காவையும் பழத்தோட்டத்தையும் மரச் சோலையையும் மாளிகையையும் சுற்றிப் பார்த்து, விருந்து மண்டபத்தில் பொன் வட்டில்களை ஏந்திப் பல நூறு ஆட்கள் பரிமாற, எண்ணற்ற இளமங்கையர்கள் இசை பாட, அறுசுவையுண்டியுடன் விருந்துண்டு மகிழ்ந்தான். அவன் அரண்மனையில்கூட அவ்வளவு அரிய விருந்து நடந்ததில்லையே என்று வியப்புற்றான். அவைகளை எல்லாம் விட, அரசன் மனதைக் கவர்ந்தது பச்சைக்கிளியின் பேரெழில்தான். சீமாட்டி உருவத்திலிருந்த தன் வளர்ப்புத் தாயான ஓணானின் பக்கத்தில் ஒய்யாரமாக வீற்றிருந்து கொண்டு பச்சைக் கிளி அவ்விருந்துக் கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வந்தாள். ஓரிரவு தங்கிச் செல்ல வந்த அரசன் அந்த அழகான மாளிகையில் ஒரு வாரம் முழுவதும் தங்கியிருந்து, போக மனமில்லாமல் விடைபெற்றுச் செல்லும்போது, பச்சைக்கிளியே அவனுக்கு மணமகளாகத் தரும்படி சீமாட்டியைக் கேட்டுக் கொண்டான். சீமாட்டியாக இருந்த அந்த ஓணான் தேவதை, சொந்தப் புதல்விபோல் வளர்த்துவந்த பச்சைக் கிளி அரசனை மணந்து அரசியாகப் போவதில் மனமகிழ்ந்து, அதற்கு உளமிசைந்து உறுதியளித்தாள். திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யப் போவதாகவும், அரசியின் பதவிக்கு ஏற்றபடி வாழ்க்கை நடத்துவதற்கு வசதியாக இருக்கும் பொருட்டுப் பச்சைக் கிளிக்குத் தான் பத்து நூறாயிரம் பொன் மகட்கொடை கொடுக்கப் போவதாகவும் அவள் கூறினாள். மறுநாள் காலையில் மணமகளை அரண்மனைக்கு அழைத்துச் செல்வதற்காக அரசன் அங்கு வந்தான். நன்றி மறந்த பச்சைக்கிளி, அவள் அவ்வளவு சீரும் சிறப்புமாக வளர்ந்ததும், அரசியாக வாழப்போவதும் அவளை அன்புடன் ஆதரித்து வளர்த்த ஓணானின் தயவால் என்பதையும், அஃதில்லாவிடில் ஏழைக் குடிசையில் அரைப் பட்டினியாகப் பாடுபட்டு உடல் நலிந்து உயிர்விடத்தான் வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பாராமல், ஓணான் தேவதைக்கு நன்றியையும் அன்பையும் தெரிவித்து ஒரு சொல்கூடச் சொல்லாமல் அரசனுடன் போய்விட்டாள். அவளது நன்றிகெட்ட நடையைப் பார்த்ததும் ஓணான் பொறுக்க முடியாதபடி துயரமும், சினமும் அடைந்தது. அதன் ஆத்திரத்தில், பச்சைக்கிளியின் முகம் குரங்கு மூஞ்சியாக மாறிவிடட்டும் என்று சபித்து விட்டது. அப்படியாவது அவள் நன்றிகெட்ட புத்தியை நொந்து மனந்திரும்புவாள் என்று ஓணான் தேவதை நம்பியது. அரண்மனைக்கு வந்தபின் மணமகளின் முகத்தைப் பார்த்த அரசன் பெருஞ் சினமும், ஏமாற்றமும் அடைந்தான். அவன் காட்டில் கண்ட அழகிக்குப் பதிலாக, முகம் நீண்டும் சுருங்கிய குரங்கு மூஞ்சிப் பெண்ணைப் பார்த்ததும் அவள் பேரில் அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. தான் ஏதோ மாயத்தால் ஏமாற்றப்பட்டதாக அவன் நினைத்தான். “இந்தக் குரங்கு மூஞ்சியை நான் திருமணம் செய்யவே முடியாது. இவள் என் சமையலறையில் பணிப் பெண்ணாக வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும்,” என்று அரசன் பச்சைக்கிளியை அரண்மனை அடுக்களைக்கு அனுப்பி விட்டான். அழகற்றவளாக இருக்கும் அந்தப் பெண் ஏதாவது பயனுள்ள வேலையைச் செய்யட்டும் என்று எண்ணி அவளிடமும், அவளது தோழியிடமும் தலைக்குப் பத்துக் கட்டு பஞ்சைக் கொடுத்து இருவரும் அதை நூற்று முடிப்பதற்கு ஒரு வாரத் தவணையும் கொடுத்தான். பச்சைக்கிளி அவள் முக மாறுதலை அறியவில்லை. அடுக்களையில் கண்ணாடி இல்லை. அரசியாக வாழவந்தவளை அப்படி இழிவாகக் குற்றேவல்கள் செய்ய அரசன் விதித்திருப்பதைக் குறித்துச் சினத்தால் முணுமுணுத்தாள். மகட்கொடையாகப் பெருந்தொகை கொண்டு வந்திருப்பதையும் பாராமல் தன்னை வேலைக் காரிபோல் நடத்துவது நீதியா, முறையா என்றும் அவள் குறை கூறினாள். என்னவானாலும் அவள் ஒரு வேலைக்காரி போல் நூல் நூற்கப் போவதில்லை என்று கூறி, அவளிடம் ஒப்புவிக்கப் பட்டிருந்த பஞ்சுக் கட்டுகளை வெளியே வீசி எறிந்துவிட்டாள். வார முடிவும் நெருங்கிவிட்டது. அரசன் கட்டளையை மீறியதற்காகத் தனக்குத் தண்டனை கிடைக்குமோ என்ற அச்சமும் உண்டாகிவிட்டது. சற்று வெளியே போய் வருவதாகச் சொல்லிவிட்டு ஓடோடியும் போய் ஓணான் சீமாட்டியிடம் நடந்தவைகளைச் சொல்லி, ஏற்கெனவே நூல் நூற்று வைத்திருக்கும் கட்டுகளைத் தனக்குத் தந்துதவ வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். அரச தண்டனையி லிருந்து அவளைக் காப்பாற்ற விரும்பிய ஓணானும், அவள் கேட்டது போலவே நூல் கட்டுகளைக் கொடுத்து உதவினாள். நூலைப் பெற்றுக் கொண்ட பச்சைக்கிளி நன்றிகூடத் தெரிவிக்காமல் முன்போலவே விரைந்து சென்று விட்டபடியால், ஓணான் தேவதை மீண்டும் வருத்தத்துடன் மனம் வெம்பியது. எனவே, முன்பு இட்டிருந்த சாபத்தை மாற்றவில்லை. கொடுத்த வேலை சரிவரச் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவந்த அரசன் நூல் கட்டுகள் அடுக்கி வைக்கப் பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுற்றான். பச்சைக் கிளிக்கும் தோழிக்கும் பரிசாக ஆளுக்கொரு நாய்க்குட்டியைக் கொடுத்தான். ஒரு வார முடிவில் திரும்பவும் வந்து நாய்க்குட்டிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன என்று கவனிக்கப் போவதாகக் கூறிச் சென்றான். தோழி நாய்க்குட்டியை அன்புடன் பேணி, அதைக் குளிப்பாட்டி உணவூட்டி நன்றாக வளர்த்தாள். ஆனால், பச்சைக்கிளிக்கோ சினம் தீரவில்லையாகையால் அவள் நாய்க்குட்டியை வெளியே வீசி எறிந்து விட்டாள். வாரமுடிவு நெருங்கியதும் பச்சைக்கிளிக்கு அச்சம் உண்டாகிவிட்டது. தன்னிடம் கொடுத்த நாய்க்கு ஏற்பட்ட கதியை அறிந்தால், அரசன் சினத்தினால் என்ன செய்வானோ என்று அஞ்சினாள். மறுபடியும் அவள் தன் ஓணான் தாயிடம் உதவி கேட்க எண்ணி ஓடிச் சென்றாள். மாளிகையின் தலைவாயிலில் பழைய காவலாளி ஒருவன் நின்று கொண்டிருந்தான். கதவைத் திறந்து அவளை உள்ளே விடுவதற்கு மாறாக, “யாரடி நீ, எங்கே வந்தாய். என்ன வேண்டும்?” என்று கடுகடுத்துப் பேசினான். வீட்டுக் காவலாளி அவளைப் பார்த்து அவ்வாறு பேசியதைக் கேட்கப் பச்சைக்கிளிக்குப் பெருஞ் சினம் உண்டாயிற்று. மிகவும் துடுக்குத்தனமாகப் பதில் சொன்னாள்: “ஏண்டா, குரங்கு மூஞ்சிக் கிழவா, என்னைத் தெரிய வில்லையா உனக்கு; உடனே என்னை உள்ளே விடுகிறாயா, இல்லையா?” என்றாள். குரங்கு மூஞ்சியுடனிருந்த அப்பெண் தன்னைப் பார்த்துக் குரங்கு மூஞ்சி என்று ஏளனமாகப் பேசியதைக் கேட்ட கிழவனுக்கு எவ்வளவு சினம் வந்திருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள். அவள் முகம் குரங்கு முகமாக இருப்பதைப் பச்சைக்கிளி அதுவரை உணரவில்லை. அடுக்களையில் வேலை பார்க்கும் பணிப் பெண்ணுக்கு முக அழகு பார்க்கக் கண்ணாடி கிடைக்குமா? அதுவும், கண்ணாடி கிடைத்தற்கரிய பொருளாயிருந்த அந்தக் காலத்தில்! அவளைச் சரியானபடி தண்டிக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். மாளிகை உள்ளே சென்று கண்ணாடி ஒன்றைக் கொண்டு வந்து அவள் முகத்துக்கு நேரே நீட்டினான். “நீயா என்னைப் பார்த்துக் குரங்கு மூஞ்சி என்று சொல்ல வேண்டும். பார் உன் முக அழகுச் சிறப்பை! உன் முகம்தான் குரங்கு மூஞ்சியாக இருக்கிறது. நன்றி கெட்ட நாயே! உனக்கு ஓணான் தேவதை என்னென்ன நன்மையெல்லாம் செய்திருக்கிறாள்; உனக்கு எவ்வளவு நகை போட்டு மகட்கொடையும் கொடுத் திருக்கிறாள்; எல்லாவற்றிற்கும் மேலாக உன்னை அரச வாழ்வுக்கு உரியவளாகவும், அரசனின் மணமகளாகவும் ஆக்கி வைத்தாளே. அவைகளை எல்லாம் எண்ணிப் பாராமல், நீ ஏதோ உனக்குரிய செல்வங்களை ஆளப் பிறந்தவள்போல், அவை உனக்கு உரிமை யானவைபோல் நினைத்துக் கொண்டு, ஒரு நன்றி மொழியோ கும்பிடோகூட இல்லாதபடி போய்விட்டாயே. உனக்கு நல்வாழ்வு வந்ததும் தலை திரும்பி விட்டது. செருக்கு மதியை மறைத்தது. உன் நன்றி கெட்ட தன்மையை நினைத்து நினைத்து ஓணான் தேவதை எவ்வளவு கண்ணீர் விட்டிருக்கிறாள் தெரியுமா? போதாக்குறைக்குக் கடைசியாக இந்த வீட்டின் பழைய வேலைக்காரனைத் தாறுமாறாக ஏசிப் பேசுகிறாய்?” என்று கிழ வேலைக்காரன் அவள் மனதில் படும்படி சினந்து கூறினான். கண்ணாடியில் அவள் முகத்தின் நிலைமையையும் கண்டு, அவன் கூறிய கடுஞ்சொற்களையும் கேட்ட பச்சைக்கிளிக்குத் தான் எவ்வளவு கெட்டவளாக நடந்து விட்டோம் என்பது புலப்பட்டுவிட்டது. ‘தன்னை வெளியே துரத்திவிடாமல் அரண்மனையில் இருந்துவர இசைந்தானே அரசன்; அவன் இரக்கத்தை என்ன சொல்வது!’ என எண்ணினாள். அவள் மனங்குன்றிய நிலையில் கண்ணீர் வழிந்தோட அழுதுகொண்டே தன்னைத் தயவுசெய்து உள்ளே விடும்படி அந்த முதிய காவலாளியைப் பணிவாக வேண்டிக் கொண்டாள். ஓணான் தேவதையின் காலடியில் விழுந்து தன் அறியாமைக்கும் செருக்குக்கும் மன்னிப்புக் கோரப் போவதாகச் சொன்னாள். உண்மையில் அவளிடம் அன்பும் பரிவுமே கொண்டிருந்த அக்காவலாளி அவளை உடனே உள்ளே அனுப்பி வைத்தான். நடந்தவைகளை எல்லாம் கதவின் பின்புறத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த ஓணான் தேவதையும் பச்சைக்கிளிக்குத் தண்டனை போதும் என்று கருதி அவளை எதிரேற்க வந்தாள். தன்னை அன்புடன் வளர்த்துப் பெருமைக்கு ஆளாக்கிய ஓணான் தேவதையைக் கண்டதும் பச்சைக்கிளி அவள் காலடியில் கதறி விழுந்து தன்னை மன்னிக்கும்படி கோரினாள். “சிறு பிள்ளை, அறியாமல் செய்துவிட்டேன்; மெய்யாகவே அதற்கு வருந்துகிறேன்; என்னை மன்னிக்க வேண்டும்,” என்று கதறி அழுதாள். உடனே ஓணான் தேவதை தன் கையிலிருந்த மந்திரக் கோலைப் பச்சைக்கிளியின் தலையில் வைத்தாள். உடன் தானே பச்சைக்கிளி பழைய அழகிய வடிவத்தை அடைந்து விட்டாள். நன்றி மறந்து நடப்பதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் பன்மடங்கு பேரெழில் பெற்று அவள் விளங்கினாள். அங்கு வந்த அரசனும் பெரிதும் மகிழ்வடைந்தான். 3. மீனம்மை வெகு காலத்துக்கு முன் ஆனைமலைச் சாரலில் நல்லம்மை என்று ஒரு கிழவி இருந்தாள். அவளுக்குப் பொன்னம்மை, சின்னம்மை, மீனம்மை என்று மூன்று பெண்கள் இருந்தனர். நல்லம்மையின் கணவன் உயிரோடிருந்த காலத்தில் அவர்கள் வாழ்க்கை எவ்வித இடையூறுமின்றி, இனிது நடந்து வந்தது. அப்போது அவர்களுக்குச் சொந்தமாகக் குடியிருக்க ஒரு குடிசையும், சாப்பாட்டுக்கு ஒரு வயலும், கறவைக்கு இரண்டு பசுக்களும் ஓர் ஆடும் இருந்தன. நல்லண்ணனும் விடிந்தது முதல் அடைந்தது வரையில் சளைக்காது உழைத்து வந்தான். ஆனால், இக்கதை தொடங்குவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் அவன் இறந்து விட்டதன் பின் காரியங்கள் எல்லாம் வரவரச் சீர்கேடு ஆகிவிட்டன. காடு கழனியில் உழைத்துப் பாடுபட ஆளுமில்லை; நூல் நூற்று விற்பதற்கு முடியாதபடி நல்லம்மை யின் உடலும் தளர்ந்து விட்டது. எனவே, வாழ்க்கைச் செலவை நடத்தும் பொருட்டுச் சிறிது சிறிதாக வயலும் விலையாகி விட்டது; பிறகு மாடுகளும் ஆடுகளும் விற்கப்பட்டன. ஒரு கீரைப்பாத்திகூடப் போடமுடியாத கொல்லைப்புறம் சூழ்ந்த அக்குடிசை மட்டுந்தான் மிஞ்சியிருந்தது. யாருக்காவது வேலை செய்வதையோ, தெருவில் பிச்சை எடுப்பதையோ தவிர வேறு எதுவும் செய்து பிழைக்க அக்குடும்பத்தாருக்கு வழியில்லை. மூத்த பெண்களான பொன்னம்மையும் சின்னம்மையும் வெறும் உதவாக்கறைச் சோம்பேறிகள்; தாயாருக்காக ஒரு சிறு வேலையைக்கூடச் செய்யத் தயங்கும் தன்மை உள்ளவர்கள். போதாக்குறைக்கு அவர்களுக்குத் தங்கள் தங்கை மீனம்மைமீது பொறாமை. மீனாள் மிகவும் அழகு வாய்ந்தவள்; அவள் பற்கள் முத்துப்போல் வெள்ளையாக இருக்கும்; வாய் பவளம்போல் சிவப்பாக இருக்கும்; கண்கள் அவள் பேருக்கேற்றபடி கயல் மீன்கள்தான். கருத்து இருண்டு சுருண்ட அவளது கூந்தல் பட்டுப்போல் மெத்தென்றிருக்கும். அவள் கந்தல் உடை உடுத்திருப்பினும் கூட அவள் அழகு மிகுந்து தான் விளங்கினாள். உடல் அழகைப்பற்றி அவ்வளவாக அக்கறை கொள்ளாத குடியானவர்கள்கூட மீனம்மை எதிர்ப்பட்டால் திரும்பி நின்று பார்த்து அவளது அழகை வியந்து மகிழ்ந்துதான் செல்வார்கள். தங்கள் கையில் பூவோ, பழமோ, கறிகாயோ ஏதேனுமிருந்தால் அதை அவளிடம் அன்புடன் அளித்துச் செல்வார்கள். அதனால் அவளுடைய தமக்கையர் இருவருக்கும் மேலும் அதிகப் பொறாமைதான் உண்டாகி வந்தது. ஆகையால் அவர்கள் அவளை எப்போதும் சிடு சிடுவெனப் பேசியும் வாய்ப்பு வாய்க்கும்போது அடித்துத் துன்புறுத்தியும் வந்தார்கள். ஒருநாள் காலைக்கதிரவன் தன் தங்கக் கதிர்களை விசிறிபோல் பரப்பிக்கொண்டு மலைமுடிகள் மீது தோன்றி ஒளிவீசிக்கொண்டிருந்த நேரத்தில், மீனா ஒரு வாழைப்பூவும் கையுமாக வீட்டுக்கு வந்தாள்; மலைமேட்டில் வருத்தத்துடன், வண்டி இழுத்துக்கொண்டிருந்த ஒரு குடியானவனுக்கு உதவியாக மீனாள் வண்டியைத் தள்ளிச் சென்றதைக் கருதி, அவன் மீனாளிடம் அந்த வாழைப்பூவை அன்புடன் கொடுத்திருந்தான். நல்லம்மைக்கு ஒரே கொண்டாட்டமாகி விட்டது. வீட்டிலிருந்த இஞ்சித்துண்டையும் உப்பையும் போட்டு வாழைப்பூக் கறிவைத்து அன்று காலைக் கஞ்சி குடித்து மகிழலாம் என்று மனம் பூரித்தாள். வாழைப்பூவைக் கழுவி அவிக்கத் தண்ணீரைத் தேடினாள். பானையில் தண்ணீர் இல்லை. “பொன்னம்மா, நீ என் கண்ணல்லவா! மலை அருவிக்குப் போய் ஒரு தோண்டித் தண்ணீர் எடுத்துவா அம்மா,” என்று நல்லம்மை தன் மூத்த மகளைக் கேட்டுக் கொண்டாள். மலை அருவி குடிசையிலிருந்து அரைமைல் தொலைவிலிருந்து கரடு முரடான ஒற்றையடித் தடத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஏறித்தான் அங்கே போக முடியும். ஆதலால் தண்ணீர் எடுத்து வருவதென்றால், எந்நாளும் அக்காள் தங்கையரிடையே அக்கப்போர்தான். ஒவ்வொருவரும் “நீ போ,” “நீ போ” என்று அடுத்தவளை ஏவுவார்கள். “சின்னம்மா நீ போய்த் தண்ணீர் கொண்டு வா,” என்று பொன்னம்மை சொன்னாள். “ஏன், நீயே போ,” என்றாள் சின்னம்மை. பேச்சுத் தடித்து முற்றிவிட்டது. தன் மக்களின் வழக்கு இடும்புத் தனத்தைப் பார்த்த நல்லம்மை, மனம் நொந்து பெருமூச்சு விட்டாள். “கடைசியில் இந்தத் தள்ளாத கிழம்தான் தண்ணீருக்குப் போக வேண்டும் போலும்! இந்த வயதில் நானே தான் அலுப்புத்தட்டாமல் என் பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டியதாயிருக்கிறது. வேறென்ன செய்வது” என்று நல்லம்மை முனகினாள். இவ்வாறு முனகிக்கொண்டே நல்லம்மை தோண்டியை எடுத்துக்கொண்டு குடிசையிலிருந்து புறப்பட்டாள். ஆனால், பத்தடிகூடப் போயிருக்கமாட்டாள். அதற்குள் பக்கத்து வயலில் சிந்தின நெல் பொறுக்கிக் கொண்டிருந்தவர்களுக்குத் துணையாக வேலை செய்து கொண்டிருந்த மீனாள், அவளைப் பார்த்து ஓடோடியும் வந்து, தோண்டியை வாங்கிக்கொண்டு தானே தண்ணீர் கொண்டுவரப் புறப்பட்டாள். நல்லம்மைக்கு மன ஆறுதலும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. “கண்ணே, உன்னை ஆண்டவன் காப்பாற்றுவான்,” என்று மனதுக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு குடிசைக்குத் திரும்பினாள். அதனால் தமக்கையர் இருவரின் கடுகடுப்பும் முணுமுணுப்பும் மேலும் பெருகி, அவர்கள் மூலைக்கொருவராக இருந்து அவளை ஏசிப் பேசினார்கள். இடுப்பில் தோண்டியுடன் சென்ற மீனாள் ஒற்றையடித் தடத்தின் வழியாக மலையில் ஏறி, பாறை இடுக்குவழியாக ஊற்றெடுத்துப் பசும்புல் தரையில் பாய்ந்துகொண்டிருந்த மலை அருவியை அடைந்து தண்ணீரை ஏந்திப் பிடித்தாள். நீர் தோண்டியில் நிறைந்து கொண்டிருக்கும் போது தன் முன்னே அரண்மனைக் காவலன்போல் உடை உடுத்தியிருந்த ஒருவன் நிற்பதை அவள் கண்டாள். “ஏ, அழகுப் பெண்ணே! ஆரணங்கே, நீ என்னோடு என் அரசன் அரண்மனைக்கு வா. நீ அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விதி முடிந்து போட்டிருக்கிறது,” என்று அந்த ஆள்காரன் மீனாளிடம் கூறினான். அவ்வளவு அன்பாக யாருமே அதுவரை பேசி அறியாத அந்த இளம் பெண்ணும், இரக்கமுள்ள அந்த ஆள்காரன் சொல்லியபடி செய்வது நல்லது என்றே நினைத்தாள். மேலும் விதியின் முடிச்சு அப்படி இருந்தால் அதற்கு மாறாக நடக்கத்தான் முடியுமா? “இந்தத் தண்ணீர்க் குடத்தைக் கொண்டுபோய் என் அம்மையிடம் கொடுத்துவிட்டு நீ கூறியபடி உன்னோடு வருகிறேன்,” என்று அவள் விடை கூறிச் சென்றாள். சொன்னதுபோல் ஒரு நொடியில் அவள் அந்த இடத்துக்கு மீண்டும் வந்து சேர்ந்தாள். அந்தக் காவலாள் அவளை அழைத்துக்கொண்டு செடி கொடிகளுக்குள் மறைந்திருந்த அடித்தடம் வழியாகப் பலாவும் மாவும் நிறைந்திருந்த காட்டினூடே கூட்டிச் சென்றான். சிறிதுதொலை சென்றதும் அழகான தோட்டம் ஒன்று இருந்தது. மிளகுக் கொடியும் கொடிமுந்திரியும் செறிந்து படர்ந்திருந்த அத்தோட்டத்தை அடைந்ததும் அங்கே கண்ணாடியாலான கருங்கைவழி ஒன்று தென்பட்டது. இருவரும், அதில் இறங்கிச் சென்றனர். குறித்த இடத்தை நெருங்கியதும் அந்த ஆள்காரன் அவளிடம் எல்லா விவரங்களையும் எடுத்துச் சொன்னான். அவளுக்குக் கணவனாகப் போகிற மாப்பிள்ளை மிகுந்த செல்வவான் என்றும் பேரழகன் என்றும் ஆனால், அவனுக்கு ஒரு சாபம் இருக்கிற தென்றும் அவன் கூறினான். கலியாணமானபின் மூன்று ஆண்டு மூன்று திங்கள் மூன்றுநாள் வரையில் மீனாள் கணவன் முகத்தை வெளிச்சத்தில் பார்க்கக்கூடாதென்றும், பார்த்தால் இருவருக்கும் பெருங்கேடு விளையுமென்றும் அவன் சொன்னான். எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று கூறினாலும் தான் அப்படியே நடக்கத் தயாராக இருப்பதாக மீனாள் தெரிவித்தாள். சற்று நேரத்தில் அவர்கள் ஒரு மாய அரண்மனையை அடைந்தார்கள். அதன் சுவர்களெல்லாம் பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. கட்டில், மஞ்சம் முதலியவை வெள்ளியால் செய்து வயிரமும் மணியும் வைத்து இழைக்கப்பட்டிருந்தன. தரையில் அழகான கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் பட்டு மெத்தையும் திண்டுகளும் இடப்பட்டிருந்தன. இவைகளைக் கண்டு மீனாள் வியப்பால் விழி மிரண்டு நின்றாள். ஆள்காரன் தன் கைகளைத் தட்டி ஓசை செய்தான். உடனே அழகான தாதிமார் இருவர் வந்து அதைவிடப் பின்னும் அழகான மற்றோர் அறைக்கு மீனாளை இட்டுச் சென்றார்கள்; அவளது கந்தல் ஆடையை அகற்றிவிட்டு அவளுக்குச் சரிகைப் பட்டாடைகளை அணிவித்தார்கள். அவளது கூந்தலுக்கு மண மிகுந்த எண்ணெய் விட்டு வாரி, பூச்சூட்டி, தங்க வயிர நகைகளைப் பூட்டி மற்றோர் அறைக்கு அழைத்துச் சென்றனர். தாதிமார் கைதட்டி ஓசைசெய்ததும், அங்கே பொன் தட்டுகளிலும் வெள்ளிக் கிண்ணங்களிலும் அறுசுவை இன்னமுத வகைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. ஊசல் கீரையும் ஆறிய கஞ்சியும் குடித்துவந்த மீனாள் தான் கனவிலும் கருதியிராதபடி இன்பமுற உண்டு மகிழ்ந்தாள். பிறகு அவளைத் தாதியர் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றனர். அந்த அறையின் விளக்கு அணைத்துவிடப்படும் என்றும், இருட்டில் அவளது கணவன் வருவான் என்றும், அவன் முகத்தைப் பார்ப்பதற்காக மீனாள் எந்தவிதமான விளக்கையும் பொருத்தக் கூடாதென்றும் அவளை எச்சரிக்கை செய்தனர். சொல்லியதுபோல் நடந்துவந்தால் அவளும் அவள் கணவனும் நெடுங்காலம் நலமாக வாழலாம் என்றும், பிந்திய காலத்தில் பெருநன்மைகள் சித்திக்கும் என்றும் அவர்கள் அவளிடம் கூறிச் சென்றார்கள்; அதுபோலவே மீனாளும், அவள் கணவனும் நெடுநாள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இருட்டியபின் தான் அவள் கணவன் அவளைக் காண வருவான். மற்ற வேளைகளில் அவள் வாய்க்குச் சுவையான உணவு வகைகளை உண்பதிலும், மனதுக்குப் பிடித்த ஆடைகளை உடுத்துவதிலும், காதுக்கு இனிமையான பாட்டுக்களைப் பாடுவதிலுமாக இன்பமாய் காலங் கழித்துவந்தாள். ஆள்காரனும் தாதியரும் அவளுக்கு வேண்டும் பணிவிடைகளைச் செய்து வந்தனர். ஆனால், ஒருநாள் மீனாளுக்கு அவள் வீட்டைப்பற்றிய நினைவு வந்தது. விம்மி விம்மி அழுதுவிட்டாள். உடனே ஆள்காரன் வந்து “செய்தி என்ன?” என்று கேட்டான். அவள் தாயையும், தமக்கையரையும் சென்று பார்த்துவர வேண்டு மென்று அவள் கூறினாள். ஆள்காரன் மாய அரசனிடம் சென்று அவள் விருப்பத்தைத் தெரிவித்து, மீனாள் வீட்டுக்குப் போய் வருவதில் தடையில்லை என்றும் ஆனால் அங்கு அரண்மனையில் நடப்பவைகளையோ, அவள் வீட்டைவிட்டுப் புறப்பட்டபின் நடந்தவைகளையோ யாரிடமும் தெரிவிக்கக் கூடாதென்றும் அவனிடமிருந்து அறிந்துவந்து மீனாளுக்குக் கூறினான். “இதற்கு நீ உடன்பட்டால் உன் வீட்டுக்குப் போய் வரலாம் என்று அரசர் சொல்லியிருக்கிறார்,” என்பதாகச் சொல்லி, தங்கப்பணம் நிறைந்த பை ஒன்றையும் அவளிடம் கொடுத்தான். அவள் அதற்கு உடன்பட்டுப் புறப்பட்டாள். மீனாளுடன் ஆள்காரன் மலை அருவி வரையிலும் வந்தான். கோடைகால வெயிலில் மலைப் பாறைகள் எல்லாம் தகதக என்று மின்னிக்கொண்டிருந்தன. தெளிந்த வானத்தில் பறவைகள் இன்பமாகப் பறந்து கொண்டிருந்தன. மலைஅருவி மெல்லோசையுடன் சல சலத்தது. தன் பழைய இடத்துக்கு வந்ததும் மீனாளுக்கும் மகிழ்ச்சி உண்டாய்விட்டது. அவள் அன்பிற்குரிய அம்மையைக் காணலாம் என்ற எண்ணத்தில் அவள் உள்ளம் மகிழ்ச்சியால் துடித்தது. குடிசையை அடைந்த மீனாள் உள்ளே குதித்தோடி வந்து நல்லம்மையைக் கட்டிக்கொண்டாள். பிறகு பொன்னம்மையை யும் சின்னம்மையையும் தழுவிச் சேர்த்து அளவளாவி மகிழ்ந்தாள். குடிசையில் அடுப்புக்கு விறகுகூட இல்லாமல் ஓய்ந்து உட்கார்ந்திருந்த மூவரிடமும், தான் கொண்டு வந்திருந்த தங்கப்பணம் நிறைந்த பையைக் கொடுத்து வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்ளுமாறு சொன்னாள். அவளையும், அவள் கணவனையும்பற்றி எல்லா விவரங்களையும் விளக்கமாகத் தெரிவிக்கும்படி எல்லோரும் கேட்டபோது ஆள்காரன் எச்சரிக்கை செய்திருந்தது நினைவுக்கு வந்தது. “நான் நலமே இன்பமாக இருக்கிறேன். அவ்வளவுதான் சொல்லக் கூடும்,” என்று மறுமொழி சொல்லிவிட்டாள். சிறிதுநேரம் அப்படி அளவளாவி இருந்து விட்டு மீனாள் மலை அருவியின் பக்கத்தில் காத்துக் கொண்டிருந்த ஆள்காரன் துணையுடன் மீண்டும் அரண்மனை வந்தடைந்தாள். தங்கை மீனாளுக்கு அவ்வளவு வாழ்வு வந்ததைக் கண்டு பொன்னம்மைக்கும், சின்னம்மைக்கும் வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. அந்த நல்வாழ்வு அவளுக்கு எப்படி வந்ததென்பதை அறிந்துவிட வேண்டுமென்று அவர்கள் துடிதுடித்தனர். மீனாள் கணவன் யார் என்பதையும், இருவரும் எங்கே வாழ்கிறார்கள் என்பதையும்பற்றி அவர்களிடம் ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டதால் அவர்களுக்குச் சினம் வேறு வந்தது. பாவம், மீனாளுக்கே விவரம் முற்றிலும் தெரியாதே! தாங்களாக ஒன்றும் தெரிந்துகொள்ள முடியாதபடியால், மலையுச்சியில் வாழ்ந்துவந்த சூனியக்காரக் கிழவியிடம் உளவு கேட்கலாம் என்று துணிந்தனர். அந்தச் சூனியக்காரி பச்சைப் பிள்ளைகளை உயிரோடு தின்று விடும் கொடிய கொலைகாரி என்பது நாடறிந்த செய்தி. கெடுமதி படைத்த சகோதரிகள் கொடுமனம் படைத்த கிழவியை நாடுவது இயல்புதானே. மஞ்சு தவழும் மலைமுடியில் பொன்னம்மையும் சின்னம்மையும் ஆர்வத்துடன் ஏறிச்சென்று சூனியக்காரக் கிழவியின் குகைவாயிலை அடைந்தனர். கையைத் தட்டிக் கூப்பிட்டதும் கிழவி வெளியே வந்தாள். சகோதரிகள் இருவரையும் கண்டதும் அவளுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மூர்க்கரை மூர்க்கர் விரும்புவதில் வியப்பென்ன! யாருக்காவது கெடுதல் பண்ணத்தான் அவர்கள் தன் உதவியைநாடி வந்திருப்பார்கள் என்பது அவளுக்குத் தெரியும். பிறருக்குத் துன்பம் செய்வதென்றால் அவளுக்குத்தான் மிக்க விருப்பமாயிற்றே. மூவரும் உள்ளே நுழைந்து, தோலும், கொம்பும், கறுப்புத் துணியும், உடுக்கையும், மண்டை ஓடும் கடை பரத்திக்கிடந்த ஓர் அறைக்குச் சென்றார்கள். அவர்கள் தங்கை மீனாளுக்கு வந்த வாழ்வைப் பற்றிப் பொன்னம்மை சூனியக்காரியிடம் தெரிவித்து, அவள் சீரையும் சிறப்பையும் குலைப்பதற்கு ஏதாவது வழிதேட வேண்டுமென்ற அவர்கள் விருப்பத்தையும் அறிவித்தார்கள். கிழவி அவளிட மிருந்த மாயக் கண்ணாடியில் மைப்போட்டுப் பார்த்தாள். மீனாள் தன் சிறப்புமிக்க அரண்மனையில் ஆடை அணிகளுடன் இன்பமாகப் பொழுது போக்குவது கண்ணாடியில் தெரிந்தது. பொன்னம்மையும் சின்னம்மையும் அதைப் பார்த்தனர். மீனாள் தன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட பிறகு நடந்தவைகளைக் கிழவி தெரிந்து சொன்னாள். மீனாள் கணவனுக்குள்ள சாபத்தை எடுத்துக் கூறிச் சகோதரிகளிடம் ஒரு விளக்கைக் கொடுத்தாள். “மறுமுறை உங்கள் தங்கை உங்களைக் காண வரும்போது இந்த விளக்கை அவளிடம் கொடுங்கள். அவள் கணவன் தூங்கும் போது இவ்விளக்கை ஏற்றி அவன் முகத்தைப் பார்க்கும்படி சொல்லுங்கள். அப்படிப் பார்த்தால் அவனுக்குள்ள சாபம் நீங்கிவிடும் என்று கூறுங்கள். உங்கள் எண்ணம் ஈடேறி விடும். வெளிச்சத்தில் கணவன் முகத்தைப் பார்த்ததுமே மீனாளின் வாழ்வு சீரழிந்து அவளுக்கு எல்லாத் துன்பங்களும் வந்துவிடும்,” என்றாள். மீனாளின் உண்மைநிலை முழுவதையும் தெரிந்து கொண்டதனால் பொன்னம்மைக்கும் சின்னம்மைக்கும் மட்டில்லாத மகிழ்ச்சி; மேலும், அவள் வாழ்வைக் கெடுக்கும் வழியும் தெரிந்துவிட்டதால் கூடுதல் மகிழ்வு கொண்டனர். கிழவியிடம் விடைபெற்றுக்கொண்டு இரு சகோதரிகளும் மலைமுகட்டிலிருந்து இறங்கி அவர்கள் குடிசையை அடைந்தனர். சில நாள் பொறுத்து மீனாள் மறுமுறை அவர்களைப் பார்க்கவந்தாள். முன்போலவே தங்கப் பணப்பை கொண்டு வந்திருந்ததுடன் தமக்கையர் இருவருக்கும் சரிகைப் பட்டாடைகளும் கொண்டுவந்திருந்தாள். அக்காள்மார் இருவரும் தங்கையைத் தனியாக அடுக்களைக்கு அழைத்துச் சென்று, “மீனா, மீனா, உன்னைப்பற்றி எங்களுக்குக் கவலை மிகுதியாகிவிட்டது. உன்னை உன் கணவன் ஏதோ பெருந் துன்பத்துக்கு ஆளாக்கப் போகிறான் என்று எங்களுக்குத் தெரியவந்து, உன்னைக் காப்பாற்ற ஏதாவது வழி உண்டா என்று நாங்கள் ஆராய்ந்தோம். அவன் தூங்கும்போது இந்த மாய விளக்கின் உதவியால் அவன் முகத்தைப் பார்த்துவிடு. எல்லாத் துன்பங்களும் விலகிப்போம். உன்பேரில் எங்களுக்குள்ள அன்பால் நாங்கள் பெரிதும் வருத்தப்பட்டு இதைப் பெற்று வந்திருக்கிறோம். இதை நீ உன் தலையணைக்கடியில் மறைத்து வைத்துவிடு. அவன் தூங்கின பிறகு அதை வெளியே எடுத்து ‘மாய விளக்கே ஏற்றிக்கொள்’ என்று சொல்லு. விளக்குப் பொருத்தி வெளிச்சம் வந்துவிடும். உன்னை உன் கணவன் ஒன்றும் செய்ய முடியாது,” என்று கூறினார்கள். இளகிய மனது படைத்த மீனாள் அவர்கள் சொல்லை நம்பி, அவர்களுக்குத் தன் நன்றியையும் தெரிவித்துவிட்டு, விளக்கைத் தாவணியில் மறைத்துக் கொண்டு திரும்பிச் சென்றாள். அரண்மனை சேர்ந்ததும் அவள் தலையணையின்கீழ் அவள் அவ்விளக்கை மறைத்து வைத்தாள். நள்ளிரவில் அவள் கணவன் அயர்ந்து தூங்கும்போது அதை எடுத்து, ‘மாயவிளக்கே ஏற்றிக்கொள்’ என்றாள். மாயவிளக்குப் பொருத்திக் கொண்டது. பட்டப் பகல்போல் வீசிய அதன் வெளிச்சத்தில் மீனாள் தன் கணவன் முகத்தைப் பார்த்துவிட்டாள். விளக்கிலிருந்த எண்ணெய்த் துளி ஒன்று அவள் கணவன் முகத்தில் தெறித்தது. அவன் திகைத்து விழித்தெழுந்தான். மீனாள் தன் முக அழகை ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். “ஐயோ, ஏனிப்படிச் செய்தாய்?” என்று ஆழ்ந்த வருத்தத்துடன் அவன் கேட்டான். அதே நொடியில், எல்லாம் அந்த இடத்தைவிட்டு மறைந்துவிட்டன. மீனாள் முன்பு உடுத்தியிருந்த கந்தல் உடையில் மரஞ்செடிகளுக்கிடையே பச்சிளங் குழந்தையுடன் தான் தன்னந்தனியாய் இருப்பதைக் கண்டாள். ஒரு மாதத்துக்கு முன்தான் அவளுக்கு அந்த அழகான குழந்தை பிறந்திருந்தது. குளிரும் அச்சமும் வாட்ட மீனாள் குழந்தையும் கையுமாக நடுங்கிக்கொண்டே தட்டித் தடுமாறித் தன் பழைய குடிசைக்கு வந்து சேர்ந்தாள். வஞ்ச மனம் படைத்த அக்காள்மார் இருவரும் அவளைக் கண்டபடி ஏசிப்பேசி அடித்து விரட்டிவிட்டனர். மீனாள் பல நாள் பட்டினியும் பசியுமாகப் பச்சைக் குழந்தையுடன் இடுவார் பிச்சையை ஏற்று உண்டு பனியிலும் வெயிலிலும் உழன்று திரிந்து வெகு தொலை நடந்தாள். கால் கடுத்து மனஞ் சோர்ந்து இனிச் சாகத்தான் போகிறோம் என்ற எண்ணத்தில் அவள் ஒரு படிக்கட்டில் வந்து படுத்தாள். அது அந்த ஊர் அரசியின் அரண்மனைப் படிக்கட்டு, அப்போது வெளியே வந்த அரசியின் தோழி ஒருத்தி கைப்பிள்ளையுடன் களைப்பாகப் படுத்திருந்த மீனாள்மீது இரக்கம் கொண்டு தன் அறைக்கு அவளை எடுத்துவரச் செய்து, பிள்ளைக்குப் பாலும் அவளுக்குச் சோறும் ஊட்டச் செய்தாள். பிறகு அயர்வுதீர இருவரையும் பட்டு மெத்தையில் படுக்க வைத்தாள். மீனாள் உடல் நலிந்து படுத்த படுக்கையாய் விட்டாள். அரசியின் தோழி இயன்றமட்டிலும் எப்போதும் அவள் அருகில் இருந்து அவளுக்கு உதவி செய்து வந்தாள். ஒரு நாள் நள்ளிரவில் அவள் அப்படி அங்கே வந்தபோது அழகிற் சிறந்த இளைஞன் ஒருவன் அங்கே வந்து தொட்டிலில் கிடக்கும் குழந்தையை எடுத்துச் சீராட்டிக் கொஞ்சுவதையும், “ஐயோ, என் ஆசைக் கண்மணி, உன்னை என் தாயார் பார்த்து யார் என்று தெரிந்துகொண்டால் உன்னைத் தங்கத் தொட்டியில் பன்னீர் விட்டுக் குளிப்பாட்டி, பொன்னும் மணியும் பதித்த நகைகள் அணிவித்து பூம்பட்டுடுத்தி வளர்ப்பாளே; கோழி மட்டும் கூவாதிருந்தால் நான் இங்கிருந்து போகவே நேரிடாதே” என்று மனம் வெதும்பிக் கூறுவதைக் கண்டாள். அவன் அதைச் சொல்லும்போதே கோழியும் கூவிற்று. இளைஞனும் உடனே மறைந்து விட்டான். அதேபோல் பல நாளிரவிலும் நடந்து வரவே, தோழி அதை அரசியிடம் அறிவித்தாள். அரசி உடனே அதன் உண்மையை அறிந்துவிட முடிவு செய்தாள். ஊரிலுள்ள அத்தனை கோழிகளையும் அன்றே கொன்றுவிடக் கட்டளையிட்டாள். பறம்பு நாட்டுக் குடிகளுக்கு அரசியின் கட்டளை கொடுமையாகப் பட்டாலும் அரச தண்டனைக்கு அஞ்சி அப்படியே செய்தனர். அன்று இரவு நீல வானத்தில் விண்மீன்கள் வெள்ளிப் பொட்டுக்கள்போல் சுடர்விட்டு மினுமினுத்துக் கொண் டிருக்கும் நடுச் சாமத்தில் அரசி மீனாளின் படுக்கை அறைக்குச் சென்று திரைக்குப் பின்னால் மறைந்து நின்றாள். அவள் வந்த சிறிது நேரத்தில் அந்த அழகுருவான இளைஞன் வழக்கம்போல் வந்தான். தொட்டிலில் கிடக்கும் குழந்தையைக் குனிந்து கொஞ்சும்போது அவன் பிடரியில் இருந்த பெரிய மறுவை அரசி பார்த்து விட்டாள். வெகு காலமாகக் காணாமற் போய்விட்ட தனது அருமை மகன், இளவரசன், அவனே என்பதை அரசி உடனே அறிந்து கொண்டாள். பல ஆண்டுகளுக்கு முன் அரசிக்கு அந்த மகன் பிறந்ததும், மீனாளைக் கெடுத்த அதே சூனியக்காரி அரசியின் நல்வாழ்வைக் குலைப்பதற்காக ஒரு சாபம் இட்டிருந்தாள். நல்லவர்கள் வாழ்வதைக் காணப் பொறாத அவள், இளவரசன் அரண் மனையிலிருந்து மறைந்து போய்க் காட்டில் தன்னந் தனியாய் வாழ வேண்டும் என்றும், என்றைக்கு அவன் தாய் கோழி கூவுவதற்கு முன் அவனைக் கண்டு முத்தமிடுகிறாளோ அன்றுதான் சாபம் நீங்கும் என்றும் அவள் மந்திரம் போட்டிருந்தாள். காணாமற்போன தன் மகனைக் காணக் கிடைத்த அரசி அவன் தோளில் முத்தமிட்டுவிட்டாள். முதல் நாளே அவ்வூர்க் கோழிகள் அத்தனையும் கொல்லப்பட்டு விட்டபடியால், சாபம் தொலைந்தது. இளவரசன் இயற்கை நிலைமையை அடைந்து விட்டான். தன் செல்வக் குழந்தையையும், ஆருயிர் மனைவியை யும், அன்புக்குரிய தாயாரையும் ஒருங்கே பெறக் கொடுத்து வைத்த இளவரசனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள். மீனாளின் மகிழ்ச்சிக்கு அளவு உண்டா என்ன! அன்று முதல் அவள் அல்லல் எல்லாம் தீர்ந்து விட்டது. தங்கள் தங்கை மறுபடியும் அரச வாழ்வு அடைந்து விட்டதைச் சூனியக்காரி வாயிலாக அறிந்த பொன்னம்மையும், சின்னம்மையும் சிறிதும் வெட்கமின்றி மீனாளிடம் உறவு கொண்டாட வந்தனர். ஆனால், அந்தத் தடவை அவர்கள் பாசாங்கு பலிக்கவில்லை, அவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்து விடும்படி இளவரசன் கட்டளையிட்டு விட்டான். மீனாளும், இளவரசனும் நெடுநாள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து அந்நாட்டை ஆண்டு வந்தனர். அவர்கள் குழந்தை அழகும் வீரமும் மிக்க இளவரசனாக சிறப்புடன் வளர்ந்து வந்தான். 4. தேன்மொழியாள் நினைவுக்கெட்டாத நெடுங்காலத்துக்கு முன்னே, ஈழத் தீவில் அழகிற் சிறந்த மூன்று சகோதரிகள் இருந்தனர். வேல்விழியாள், மயில்நடையாள், தேன்மொழியாள் என்று பொருத்தமான பெயருடன் விளங்கிய அம்மூன்று மங்கையரில் கடைசித் தங்கையான தேன்மொழியாள்தான் ஒப்பற்ற அழகு பெற்றிருந்தாள். அதனால் தமக்கையர் இருவரும் அவள்மீது பொறாமை கொண்டிருந்தனர். அம்மூன்று சகோதரிகளும் அவர்கள் வீட்டு மச்சுத் தாழ்வாரத்தில் படர்ந்திருந்த பூங்கொடிகளின் நிழலில் உட்கார்ந்து தெருவேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். ஒருத்தி நூல் நூற்றுக் கொண்டிருப்பாள்; அடுத்தவள் திரி திரிப்பாள்; மூன்றாமவள் பின்னுவாள். அப்படியே வேலைக் கிடையே பொழுது போக்காய் பேசிக்கொண்டும், ‘தங்களுக்கு வாய்க்கப் போகும் மாப்பிள்ளை எப்படி இருப்பான்’ என்பதை மனதில் கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டும் அவர்கள் காலங் கழித்து வந்தார்கள். ஒருநாள் அவ்வூர் இளவரசன் வேட்டைக்குப் போகும்போது அவ்வழியே சென்றான். தாழ்வாரத்தில் தங்கப் பதுமைகள்போல் இருந்த அம்மூன்று பெண்களையும் கண்டதும், அவன் அளவில்லாத வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தான். அவனுடன் வந்த தோழர்களைப் பார்த்து அவன் பின்வருமாறு கூறினான்: “அதோ பாருங்கள்; நம் ஈழ நாட்டு அழகுச் சுடர்கள். எவ்வளவு எழிலுடன் விளங்குகிறார்கள்! நூல் நூற்கும் மங்கை என்ன அழகாக இருக்கிறாள்! திரி திரிப்பவள் அவளையும் மிஞ்சி விடுவாள்போல் இருக்கிறதே! ஆனால், பின்னல் பின்னுகிறாளே அந்தப் பேரழகிதான் என் மனதைக் கவரும் எழிலணங்கு.” வேல்விழியாளும், மயில் நடையாளும் இளவரசன் தங்களைவிடத் தங்கையின் அழகை மெச்சிப் பாராட்டியதைக் கேட்டு மனம் புழுங்கினார்கள். அதனால் அவர்கள் மறுநாள் தேன்மொழியாளை நூல் நூற்க வைத்துவிட்டு, திரிதிரிப்பதை மயில்நடையாளும், பின்னல் வேலையை வேல்விழியாளும் செய்வதென்று முடிவு செய்தனர். “அப்படியாவது இளவரசன் வேல்விழியின் அழகைச் சிறப்பாகப் புகழமாட்டானா பார்ப்போம்,” என்று எண்ணினார்கள். மறுநாளும் அவ்வழியே வந்த இளவரசன் மணங்கமழும் மலர்களுக்கிடையே பெருமிதமாக வீற்றிருந்த அம்மங் கையர்களை ஏறிட்டுப் பார்த்துக் களி ததும்பிய குரலில் தன் கூட்டாளிகளிடம் பின்வருமாறு கூறினான்: “பின்னல் பின்னுபவள் அழகிதான்; திரிதிரிப்பவளும் அழகிதான்; ஆனால் நூல் நூற்கும் ஆரணங்குதான் என் மனதைக் கொள்ளை கொள்ளும் உயிரோவியம்.” இதைக் கேட்ட தேன்மொழி வெட்கத்தால் தலைகுனிந்து மகிழ்ச்சியால் மனம் விம்மினாள். வேல்விழியும், மயில்நடையும் மீண்டும் பொறாமையால் மனம் வெதும்பினர். தங்கையின் பெருமையைக் குலைக்க மற்றொரு வழி காண முனைந்தனர். மூன்றாம்நாள் தேன்மொழியை உள்ளே தள்ளி இருந்து திரிதிரிக்கும்படி கூறிவிட்டு, தமக்கையர் இருவரும் முன்பக்கமாக உட்கார்ந்துகொண்டு நூற்பதிலும் பின்னுவதிலும் ஈடுபட்டிருந் தனர். இளவரசன் வரும் போது அவன் மனதைக் கவருவதற்காக முகத்தில் புன்சிரிப்பையும் வருவித்துக் கொண்டிருந்தனர். (உள்ளத்தில் பொறாமைத்தீ வாட்டும்போது முகத்தில் நல்ல சிரிப்பு எப்படி வரும்?) அப்படி முன்னேற்பாடுகள் செய்துங்கூட. இளவரசன் வழக்கம்போல் தேன்மொழியின் அழகைத்தான் மிச்சமாகப் பாராட்டினான். “நூற்பவளும் அழகிதான்; பின்னுபவளும் அழகிதான்; ஆனால், உள்ளே தள்ளியிருந்து திரிதிரிக்கிறாளே அவள் தான் என் நெஞ்சம் கவர்ந்த பேரழகி,” என்று அவன் கூறிச் சென்றான். அதற்குமேல் மேலும் பொறுத்துக் கொண்டிருக்கத் தமக்கையர் இருவருக்கும் முடியவில்லை. பொறாமையும், சினமும் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு வந்தன. தங்கையை எப்படி யாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற பொல்லாத எண்ணம் அவர்களுக்குத் தோன்றிவிட்டது. அந்தக்காலத்தில் அவ்வூரில் விரல்குப்பி எளிதில் கிடையாத அரும்பொருளாக இருந்தது. தைக்கும்போது ஊசியைத் தள்ளுவதற்கு அது இல்லாவிடில் விரலில் ரத்தம் கட்டிவிடுமே! தேன்மொழியிடம் பொன்னால் செய்து மணிகள் பதித்திருந்த வேலைப்பாடமைந்த விரல் குப்பி ஒன்று இருந்தது. கடல் கடந்து வணிகஞ் செய்ய வெளிநாடு சென்றிருந்தபோது அவள் தந்தை அவளுக்கென வாங்கிவந்து கொடுத்திருந்தார். அவள் அதைத் தன் கண்ணெனப் போற்றி வந்தாள். தங்கள் தங்கைக்கு அதன்மேல் உயிர் என்பது அக்காள்மார் இருவருக்கும் தெரியும். வீட்டின் பின்புறத்திலுள்ள பெரிய பூந்தோட்டத்தில் அவர்கள் அந்த விரல் குப்பியை வீசி எறிந்து விட்டார்கள்; அந்தப் பூந்தோட்டம் ஒரு வியப்புமிக்க பூங்காவனம். அங்கே முல்லை, மல்லிகை, சண்பகம், மருக்கொழுந்து, பன்னீர்ப்பூ, பிச்சி, ரோசா, செவ்வந்தி, தாழம்பூ முதலிய மணமலர்ச் செடிகளும், மா, பலா, வாழை, மாதுளை, கிச்சிலி, எலுமிச்சை முதலிய நறுங்கனி மரங்களும், கரும்பும், தென்னையும் பனையும், இஞ்சியும், மஞ்சளும், தேக்கு, சந்தனம், தேவதாரு, கருங்காலி, மருது, ஈட்டி முதலிய பெரு மரங்களும் ஏராளமாக வளர்ந்திருந்தன. ஆனால், அத்தோட்டம் ஆள்விழுங்கிப் பூதத்துக்குச் சொந்தமானது. அங்குவரும் பச்சிளம் பிள்ளைகளையும், பெண்களையும் அப்பூதம் ஆசையோடு விழுங்கித் தின்றுவிடும் என்பது அந்த வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரியும். விரல்குப்பியை வீசி எறிந்துவிட்டுத் தமக்கையர் இருவரும் நல்ல பிள்ளைகள்போல் தாழ்வாரத்துக்கு வந்து தேன் மொழியைத் தங்களுக்குச் சிறிது துணி தைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர். சரி என்று சொல்லிய தேன்மொழி ஊசியும், நூலும் இருக்கும் இடத்தில் கூட வைத்திருந்த விரல்குப்பியைக் காணாமல் மனம் பதைத்து அங்குமிங்கும் தேடினாள். வீடெங்கும் தேடியும் காணாமல் கண்கலங்கி நின்ற தங்கையைப் பார்த்து, வேல்விழியாள் பரிந்து பேசுவதுபோல் பேசத் துவங்கினாள். “ஐயையோ! உன் பொன்னான விரல்குப்பி தொலைந்து போய்விட்டதா? இனி நீ என்ன செய்வாய்? உனக்கு அது உயிர் ஆச்சே. பலகணிமேல் மறந்து போய் வைத்து விட்டிருப்பாய்; காக்கை குருவி ஏதாவது எடுத்துச் சென்றிருக்கும்; இரு, இரு, நான் என் மாயக் கண்ணாடியில் மை போட்டுப் பார்த்து அது எங்கிருக்கிறது என்று பார்த்துச் சொல்லுகிறேன்,” என்றாள். காணாமற் போய்விட்ட தன் விரல்குப்பி இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளத் தேன்மொழியாள் துடியாய்த் துடித்தாள். வஞ்ச நெஞ்சம் படைத்த வேல்விழியாள் உள்ளே சென்று திரும்பி வந்து, “ஐயோ, தேன்மொழியே! உன் விரல்குப்பி ‘பாதாள வயிரன்’ தோட்டத்தில் அல்லவா விழுந்துவிட்டது. ஆயினும் என்ன? நீ நம் வீட்டுச் சுவரைத் தாண்டித் தோட்டத்தில் இறங்கி அதை எடுத்துவர எண்ணினால், நானும் மயில்நடையும் உன்னை ஒரு கயிற்றில் கட்டி இறக்கி விடுகிறோம். அதை எடுத்துக் கொண்டதும் நீ கயிற்றை அசைத்தால், நாங்கள் உன்னை மேலே தூக்கிவிடுவோம். உச்சிவேளையில் பூதம் உறங்கும்போது நீ இறங்கலாம்,” என்று கூறினாள். தன் உயிர்போன்ற விரல்குப்பியைத் தேடி எடுப்பதற்காகத் தேன்மொழியாள் எது வேண்டுமாயினும் செய்யத் துணிந் திருந்தாள். வேல்விழியும் மயில்நடையும் தேன்மொழியின் இடுப்பைச் சுற்றி ஒரு வடத்தைக் கட்டிப் பூதத்தின் தோட்டத்தில் அவளை இறக்கி விட்டனர். அவள் கால் தரையில் பட்டதும் அவர்கள் மேலே வட்டத்தை அறுத்து விட்டனர். பெண்களை அப்படியே விழுங்கிவிடும் பூதத்தின் தோட்டத்தில் தேன்மொழி தன்னந்தனியே நின்றாள். தப்புவதற்கு வழியே கிடையாது. சுவர்மேல் ஏறி வரவும் அவளால் இயலாது. முழுதும் கண்ணாடியால் செய்த பெருஞ் சுவர்கள் அத்தோட்டத்தை வளைத்து நின்றன. அந்த மாயத்தோட்டத்தின் அழகில் ஈடுபட்ட தேன்மொழி, தனக்கு ஏற்பட்ட இடரை மறந்து, வியப்புடன் அங்குமிங்கும் சென்று மலர்களைக் கொய்யத் தொடங்கினாள். ஒரு வேளை பாதாள வயிரன் வந்துவிட்டால் சட்டென்று ஒரு செடியின் கீழ்ப் பதுங்கி விடலாம் என்று அவள் நினைத்துக் கொண்டாள். ஆனால், திடுமென்று ஒரு பெரிய உருவம் மரங்களுக்கிடையே தோன்றிற்று. திரண்டு பருத்த அதன் கைகள் முழுவதும் மயிர் படர்ந்த குரங்கின் கைகளைப்போல் இருந்தன. கண்கள் இரண்டுக்கும் பதிலாக நெற்றியில் மட்டும் ஒரு விழி இருந்தது. அவ்வுருவத்தைப் பார்த்தாளோ, இல்லையோ தேன்மொழி உடல் நடுங்கி, மெய்மறந்து, வாய் குழறி “ஐயோ, அம்மா, என்னைக் காப்பாற்று” என்று உரக்கக் கத்திவிட்டாள். பாதாளவயிரன் அதைக் கேட்டு அவளை நெருங்கி வந்தான். அவளைக் கண்டதுமே அவனுக்கு உடனடியாக அவளைத் தின்று விட வேண்டுமென்ற ஆசைதான் ஏற்பட்டது. ஆயினும், பூங்கொடி போன்ற அந்தப் பெண்ணுக்கு அப்படிப்பட்ட சாவா என்று சிறிது தயக்கமும் இருந்தது. மேலும் அவள் உடல் பருமன் அவனுக்கு ஒரு வாய் உருண்டைக்கே பற்றாது. சற்றுக் கொழுக்க வைத்துப் பின்னர் சாப்பிடலாம் என்றும், அதுவரையில் அவளைத் தன் வீட்டிலேயே வளர்த்துப் பணிப்பெண்ணாக வைத்துக் கொள்வது என்றும் அவன் மனதில் முடிவுசெய்து கொண்டான். பூதம் மனதில் செய்த முடிவு அவளுக்கு எப்படித் தெரியும்? எனவே முதலில் அவளுக்கு ஏற்பட்ட அச்சத்தை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். ஆனால், நாள் செல்லச் செல்ல, அவன் அவளிடம் அன்பாய் நடந்துகொள்வதை (அவள் தமக்கையர் எப்போதும் நடத்துவதைவிட மிகவும் அன்பாகவே நடத்தி வருவதை) உணர்ந்து, மனம் தேறி, அவன் சொன்ன வேலைகளை மனங்கோணாமல் உவப்போடு செய்து வந்தாள். எப்போதும் சிரிப்பும், களிப்புமாகவே அவள் காலம் கழிந்து வந்தது. அப்படி இருக்கையில் ஒரு நாள் காலையில், தேன்மொழி பலகணியின் பக்கம் நின்று கொண்டு தன் தலையை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். இளவரசன் வளர்க்கும் கிளி ஒன்று அங்கே பறந்துவந்து பலகணிக் கம்பையில் அமர்ந்துகொண்டது. “ஐயையோ பேதைப் பெண்ணே பாதாள வயிரனுக்கா உணவாகிறாய்” என்று கிளி பாடியதைக் கேட்டதும் தேன்மொழிக்குச் சினமும் அச்சமும் வந்து, பாதாளவயிரனிடம் ஓடிச் சென்று அதைக் கூறினாள். அவனோ, “கண்ணே ஏன் அஞ்சுகிறாய்? திரும்பிப்போய் அந்தத் துடுக்கான கிளியின் வாலைப் பிடித்து உலுக்கி, ‘பச்சைக் கிளியே பவள மூக்கே உன் தூளி இறகால் மெத்தை தைத்து உந்தன் உடையான் அரச குமாரன் தன்னை மணந்தே நான் மகிழ்வேனே’ என்று பதில் சொல்லு” எனக் கூறினான். தேன்மொழியும் அப்படியே போய்ச் சொன்னாள். தன்னை அவ்வளவு ஏளனமாகப் பேசி வாலையும் பிடித்து உலுக்கியதைப் பொறாத கிளி அடங்காச் சினத்தால் நெஞ்சு வெடித்து அங்கேயே இறந்துவிட்டது. கிளி திரும்பி வராததைக் கண்ட இளவரசன் மற்றொரு கிளியை வாங்கிப் பேசப் பழக்கினான். அதுவும் முந்தியதைப் போலவே தேன்மொழியின் பலகணிப் பக்கம் வந்து பாடிச் சிரித்தது. தேன்மொழியும் முன்போலவே எதிர்ப்பாட்டுப் பாடவே, அக்கிளியும் அங்கேயே சினத்தால் நெஞ்சு வெடித்து உயிர் விட்டது. தனது இரண்டாவது கிளியும் திரும்பி வராததைக் காண இளவரசனுக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. மூன்றாவது கிளி ஒன்றை வாங்கி அதன் பின்னேயே காவலுக்குச் செல்வதென்று முடிவு செய்து அதைப் பின் தொடர்ந்தான். அதுவும் தேன் மொழியின் பலகணிப் பக்கம் போய்ப் பாடுவதை இளவரசன் கவனித்து நின்றான். தான் நெடுநாளாகத் தேடிக்கொண்டிருந்த கட்டழகி உயிரோடிருக்கக் கண்டு அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆறுதலும் ஏற்பட்டது. தன் அழகைப் பாராட்டி அன்பைக் கவர்ந்து கொண்ட இளவரசனை மீண்டும் பார்த்ததும் தேன்மொழிக்கு உண்டான மகிழ்ச்சியை என்னவென்பது! உச்சிப் பொழுதாதலால் பூதம் வழக்கம்போல் உறங்கிக் கொண்டிருந்தது. இளவரசன் பலகணிப் பக்கம் நெருங்கி வந்து தேன்மொழியிடம் எல்லா விவரமும் கேட்டுத் தெரிந்து கொண்டான்; பூதம் அவளை என்றாவது தின்றுவிடும். ஆகையால், சீக்கிரமாகவே அங்கிருந்து தேன்மொழி தப்பி வெளியேறிவிட வேண்டுமென்று இருவரும் கலந்து பேசி முடிவுக்கு வந்தனர். ஆனால் பூதத்தின் கோட்டையிலிருந்து எப்படித் தப்புவது? உறங்கும் போதுகூட அது தன் ஒற்றைவிழியைத் திறந்து கொண்டுதானே தூங்கும். உள்ளே சந்தடி ஏதாவது கேட்டால் உடனே அதற்கு விவரம் தெரிந்து விடுமே “காட்டிற்குப் போய் என் குலதேவதையிடம் இதற்கு ஒரு வழி அறிந்து வருகிறேன்,” என்று கூறி இளவரசன் சென்றான். காட்டிலே பெரிய ஆலமரப் பொந்தில் உறையும் ‘ஆனந்தவல்லி’ அம்மனைக் கண்டு வணங்கி, அவன் தன் குறையைத் தெரிவித்தான்; “தாயே என் மனதுக்குகந்த மங்கை தேன்மொழி பாதாள வயிரனிடம் சிக்கியிருக்கிறாள். அவளைப் பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு வகை கூற வேண்டும்,” என்று கோரினான். அவனிடம் இரக்கம் கொண்ட அத்தேவதையும் தன் மந்திரச் சுவடு ஏடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “அப்பனே நான் உனக்கு ஒரு சிறு கம்பும் நூல் உருண்டையும், ஒரு சீப்பும் தருகிறேன். பாதாளவயிரன் உன்னைப் பிடித்து விடுவான்போல் தோன்றும்போது முதலில் கம்பைப் போடு! பிறகு நூல் உருண்டையைப் போடு; கடைசியில் சீப்பைப் போடு; ஒவ்வொரு தடவையும் ‘ஆனந்தவல்லி, ஆனந்தவல்லி காப்பாற்று’ என்று கூறு; எல்லாம் சரிவர நடக்கும்,” என்று சொன்னாள். இளவரசன் புலிமாறன் தன் குலதேவதையை வணங்கிவிட்டு, அவள் அளித்த மந்திரப் பொருள்களைப் பத்திரமாகத் தன் உள் உடையில் மறைத்துக் கொண்டு ஊர் திரும்பினான். அன்று இரவு நிலா வெள்ளிபோல் ஒளி வீசிற்று. நள்ளிரவில் ஊரெல்லாம் அடங்கியபின் இளவரசன் தேன்மொழியின் பலகணி அருகில் வந்து நின்றான். அவன் வரவை எதிர்பார்த்து நின்ற தேன்மொழி, முன்பு அவளைத் தமக்கையர் இருவரும் தோட்டத்தில் கட்டி இறக்கிய அதே கயிற்றின் உதவியால் இளவரசன் சொல்லியதுபோல் இறங்கிக் கீழே வந்தாள். அவளைத் தன் குதிரை மீதேற்றிக்கொண்டு இளவரசன் மிகு விரைவில் ஊருக்கு வெளியே சென்றான். ஆனால், அதற்குள், மாயவல்லமை படைத்த பாதாளவயிரன் அங்கே நடப்பதை எல்லாம் தன் ஒற்றை விழியின் உதவியால், கண்ணாடியில் காண்பதுபோல் சந்திரவட்டத்தில் கண்டு தெரிந்து கொண்டான். தான் ஆவலோடு தின்பதற்காகக் கொழுக்க வைத்து வந்த தேன்மொழி இப்படித் தன் பிடியினின்றும் தப்பிவிடுவதைக் காணப் பொறாமல் உடனே குதித்தெழுந்து, தன் ஆவேசக் குதிரைமீதேறிக் கொண்டு, பாதாளவயிரன் இளவரசனைத் துரத்தி வந்தான். வாலே இல்லாமல் ஆறு கால்களுடன் இருந்த அந்த ஆவேசக் குதிரை, இளவரசனின் குதிரையைவிட மிக விரைவாக ஓடி அதை நெருங்கிவிட்டது. தனக்குப் பின்னால் குளம்படி ஓசை கேட்ட இளவரசன் திரும்பிப் பார்த்து, பூதம் தன்னை எட்டிப் பிடித்துவிடும் போலிருந்ததை உணர்ந்து, தன்னிடமிருந்த மந்திரக் கம்பைப் பின் பக்கமாக வீசி எறிந்து, “ஆனந்தவல்லி! ஆனந்தவல்லி! காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டான். மந்திரக்கோல் தரையில் விழுந்ததோ இல்லையோ, பூதத்துக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள தூரம் முழுவதிலும் பூமியை மறைத்துக்கொண்டு ஈட்டிமுனைகள் முளைத்தெழுந்தன. ஆள்விழுங்கிப் பூதமும் ஆவேசக் குதிரையும் வேகம் தணிந்து, ஈட்டிமுனைகள் உடலைக் கிழித்து இரத்தம் பொழிய, மெள்ள மெள்ள முன்னேற நேர்ந்தது. இதற்குள் புலிமாறனும் தேன்மொழியும் எத்தனையோ காதவழி போய்விட்டனர். ஆயினும் என்ன? ஈட்டி முனைகளைக் கடந்து வந்தபின் பாதாள வயிரனின் ஆறுகால் ஆவேசக் குதிரை முன்னிலும் விரைவாகப் பாய்ந்துவந்து இளவரசன் குதிரையை எட்டிப் பிடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்துவிட்டது. திரும்பிப் பார்த்த புலிமாறன் நூல் உருண்டையை வீசி எறிந்து, “ஆனந்தவல்லி, ஆனந்தவல்லி காப்பாற்று,” என்று கூறினான்; அவ்வளவில் காதலர் இருவருக்கும் பூதத்துக்கும் இடையே, கரை புரண்டோடும் பெரிய ஆற்றுவெள்ளம் திடீரெனப் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் மேலும் ஆத்திரம் மூண்ட ஆள்விழுங்கிப் பூதம் சற்றும் அஞ்சாமல் ஆவேசக் குதிரையைத் தண்ணீரில் இறக்கி அதைக் கடக்கத் தொடங்கிற்று. வெள்ளத்தின் இழுப்பு வேகமாக இருந்துங்கூடப் பூதம் சிறிது சிறிதாக முன்னேறி மறுகரை சேர்ந்து மீண்டும் இளங்காதலர் களைப் பிடிக்க வந்தது. நீர் சொட்டச் சொட்ட நனைந்துகொண்டு வரும் பாதாள வயிரனைப் பார்த்ததும், புலிமாறனுக்கும் தேன்மொழிக்கும் அச்சமும் நடுக்கமும் ஏற்பட்டுக் கலக்கம் உண்டாகிவிட்டது. அதற்குள் பூதத்துக்கு அடங்காப் பசி ஏற்பட்டிருக்கும் என்பதும் கடுஞ்சினம் மூண்டிருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இரண்டு பேரையுமே ஒரே கவளமாக அது விழுங்கிவிடும் என்று எண்ணினர். இருந்தபோதிலும் ஒரு பக்கம் துணிவும் இருந்தது. மூன்றாவது மந்திரப் பொருளான சீப்பை இளவரசன் பின்பக்கமாக வீசி எறிந்து முன்போல் தேவதையை வேண்டிக் கொண்டான். உடனே இரண்டு குதிரைகளுக்கும் இடையில் வானமுகட்டை முட்டும்படியாக சோப்புநுரைமலை ஒன்று கிளம்பி எழுந்தது. அதைக் கடந்துவரப் பூதத்தால் இயலாது என்று உறுதியாகத் தோன்றிய போதிலும் இளவரசன் தன் குதிரையை விரைவாகவே விரட்டினான். நொடிக்கு நொடி இருவரும் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றனர். ஆள்விழுங்கிப் பூதமும், ஆறுகால் குதிரையும் நுரைமலை அடிவாரத்தில் வந்ததும் மேலே முன்னேற முடியவில்லை. பாதாளவயிரன் தான் கற்ற வித்தையெல்லாம் காட்டினாலும், ஆவேசக் குதிரையால் அந்த மலையில் ஏற முடியவில்லை ‘சாண் ஏற முழம் சறுக்க,’ என்பதுபோல் குதிரை வழுக்கி வழுக்கி விழுந்தது. பூதமும் அதனுடன் உருண்டது. குதிரைக்கு ஏற இயலாது என்பதை உணர்ந்த பூதம், கீழே இறங்கித் தன் காலால் நடந்து மலையைக் கடக்க முற்பட்டது. பூதமும் சறுக்கி விழுந்ததைத் தவிர ஓர் அடிகூட மேலே ஏற முடியவில்லை. பாதாளவயிரன் மூடப் பிடிவாதத்தால் மீண்டும் மீண்டும் ஏறி விழுந்து மண்டை உடைந்து அங்கேயே சாய்ந்து மடிந்தான். புலிமாறனும், தேன்மொழியும் தங்களுக்கு ஏற்பட்ட கெடுதல் நீங்கியதை அறிந்ததும், அளவில்லாத மகிழ்வுடன் ஊர் திரும்பி அரண்மனை அடைந்தனர். அவர்கள் திருமணவிழா வெகு சிறப்பாக நடந்தது. நெடுந்தொலையிலிருந்துங்கூட விருந்தாளிகள் வந்தனர். ஆனால், கெடுமதி படைத்த தமக்கையர் இருவருக்கும் அழைப்பு அனுப்பவில்லை. அதற்கு மாறாகத் தகுந்த தண்டனை அளிக்கப்பட்டது. தேன்மொழியும், புலிமாறனும் ஆனந்தவல்லியின் அருளுடன் வாழையடி வாழையாக நெடுங்காலம் இன்பமாக வாழ்ந்தனர். 5. தங்கக் கவரிமான் இமயமலைத் தொடர்களில் பிற எல்லா மலைகளிலும் உயரம் மிக்கதாய், எல்லாவற்றிலும் எழில் மிக்கதாய், வான முகட்டை நோக்கிச் செங்குத்தாக ஓங்கி நிற்கும் கொடுமுடிகளை யும், படுபாதாளப் பள்ளங்களையும் உடையதாய் நங்கை பர்வதம் விளங்குகின்றது. அதன் சரிவுகளில் பனித் திரள்களும், உருகுபனிப் பாளங்களும் எப்போதும் மூடிநிற்கும். அதன் அடிவாரத்தில்கூட முட்செடிகளும் பாசிகளும்தான் வேர்கொள்ளும். உருகுபனி ஆறுகள் ஊடறுத்துப் பாயும் பந்துகளில், கடுவிசையுள்ள அருவிகள் குதித்துக் குதித்துப் பாயும் போது நீர்த்திவலைகள் சிதறி அழகான வெள்ளி நுரைப் படலங்கள் கிளர்ந்தெழும். அவைமீது கதிரவனின் விரிசுடர்க் கதிர்கள் வீசும்போது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மாயவண்ணத் திரைகள் வானத்தில் படரும். நங்கை பர்வதத்தின் கொடுமுடிகளில் மிக உயர்ந்து நிற்பது நந்திக்கொம்பு என்னும் உச்சி. அந்தக் கொடு முடியின் அடியில் அகன்ற வாயுடன் ஒரு குகை இருக்கிறது. உலகத்திலுள்ள அரும் பெரும் கருவூலங்கள் எல்லாம் அங்கேதான் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. மலைப்பூதங்களான கூளிகள் அக்கருவூலங்களைக் காவல்செய்து வருகின்றன. அக்கூளிகள் பாசிநிற உடையுடுத்து அழகான மணிமுடி அணிந்து இன்பமாக ஆடிப்பாடித் திரியும். மணிமுடிகளின் உச்சியில் வைரம், மாணிக்கம், முத்து முதலிய ஒன்பது வகை மணிகளையும் பரல் அரிசியாகக்கொண்டு ‘கலீர் கலீர்,’ என்று ஒலி விடுக்கும் சிறு சலங்கைகள் தொங்கும். கீழே நெடுந்தொலைவில் வாழும் மக்கள் தங்கள் பேராசையால் அந்த அரும்பெரும் கருவூலங்களைக் கவர்ந்து செல்லாமல் அக்கூளிகள் எப்போதும் விழிப்பாக இருந்து காவல்செய்யும். எத்தனையோ பேர் பெருமுயற்சி செய்தும் அந்தக் கருவூலக் களஞ்சியத்தை நெருங்கியதுகூடக் கிடையாது. அவ்வளவு பாதுகாப்பாக மாயமாய் மறைத்து வைக்கப்பட்டுள்ள செல்வத்தைப் “பார்த்தோம்,” என்ற சொல்லக்கூடியவர் எவரும் இல்லை. எப்படியாவது அந்த நிதிக் குவையைக் கைப்பற்றிவிட வேண்டுமென்று உயிரைக்கூடப் பொருட்படுத்தாது முயற்சி செய்து தோல்வி அடைந்த ஒருவனின் கதைதான் இது. உயர்வுமிக்க அப்பனிமலைக் குன்றுகள் சுற்றிவரச் சூழ்ந்து நிற்க, கௌரிசங்கர், கைலாசம், நந்தாதேவி முதலிய சிறந்த மலையுச்சியிலிருந்து தவழ்ந்து, பாரிசாதம், கற்பகம், தேவமல்லி முதலிய தெய்வீக நறுமலர்களின் மணங்களை ஏந்தித் தெளிந்த வானத்தில் மெல்லென வீசி வரும் இளங்காற்றை நுகர்ந்து வாழும் மூன்று வான மகளிர், அந்நங்கை பர்வதத்தின் முகட்டில் வாழ்ந்து வந்தனர். கூளிகளின் குடியிருப்புக் கருகில் ஒரு சிறிய பூங்காவில் அவர்கள் குடியிருந்தனர். அப்பூங்காவின் வேலிக்கம்பிகள் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் ஆனவை. கம்பியின் முள்முனைகள் வயிர ஊசிகளால் ஆனவை. வேலித் தூண்கள் பகலிலும் சுடர்விட்டு ஒளிரும் மரகதமணிகளால் ஆனவை. அப்பூங்காவில் வாழும் அவ்வானமகளிர் நந்திக்கொம்புச் சிகரத்தின் இடைப் பெண்கள். அப்பனிமலைகளில் வாழும் அருமையான கவரிமான்களைக் காவல் செய்வதுதான் அவர்களின் வேலை. அக்கவரிமான்கள் தங்களை வேட்டையாட வருபவர்களைத் தங்கள் அழகால் மனங் கவர்ந்து தடுமாறச் செய்து மலையுச்சியிலும் படுபாதாளங்களிலும் தங்களை விடாமல் தொடர்ந்தோடி வரும்படி பண்ணி அலைக்கழித்து முடிவில் அவர்கள் உயிரை வாங்கிவிடும். அக்கவரிமான் கூட்டத்தின் தலைமையாக விளங்கியது தங்கக் கவரிமான். அதைப் போன்ற உடல் அழகும் அருமைச் சிறப்பும் வாய்ந்த ஓர் உயிர்ப் பிறவியை யாருமே பார்த்திருக்க முடியாது. அதன் பால்போன்ற வெண்மை நிறத்துக்கு, அம்மலையுச்சியில் மனிதனின் காலடியே பட்டிராத மோன வெளியில் வானமண்டலத்திலிருந்து புதிதாகப் பெய்யும் பனியின் வெண்மையைத்தான் ஈடாகச் சொல்ல முடியும். அதன் கடுவேகத்துக்கு அம்மலைகளிலிருந்து கிளம்பிச் சென்று கீழே பாய்ந்து புடைக்கும் காற்றைத்தான் ஒப்பிட முடியும். அக் கவரிமானின் கொம்புகளிரண்டும் பொன் மயமானவை. அவைமீது வெயில் படும்போது கண்ணைப் பறிக்கும் பேரொளியுடன் அவை மிளிரும். அக்கொம்புகளின் கூர் முனையில் இரண்டு ஒளிர் மணிகள் சுடர் விட்டுக் கொண்டிருக்கும். எனவே, இரவிலும் பகலிலும் அத்தங்கக் கவரிமான் எங்கே நின்றாலும் கொம்பு முனைகள் விண் மீன்களைப்போல விட்டு விட்டு ஒளி வீசி மின்னிக் கொண்டிருக்கும். எவ்வளவு தொலைவில் உள்ளவர்களுக்கும் அது நிற்பது தெரியும். இமயமலைச் சாரலில் வாழும் எல்லோருக்கும் அக்கவரிமானின் வரலாறு நன்றாகத் தெரியும்; யாரொருவர் அதைப் பிடித்து அதன் கொம்பையும் வால் கவரியையும் கைப்பற்றி வருகிறாரோ அவரே நந்திக் கொம்புக் குகையில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள நிதிக் குவியலுக்கு உரிமையுடையவர் ஆவார் என்பது வழி வழியாக அவர்கள் அறிந்திருந்த உண்மை தான். ஆனால், ஒரே அம்பில் வீழ்த்தினால்தான் அந்தக் கவரிமானைக் கைப்பற்ற முடியும் என்பதும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். முதல் அம்புக்குத் தப்பி விட்டால், அல்லது சிறிதே காயம் பட்டால் அம் மாயமானின் இரத்தம் படியும் இடங்களில் எல்லாம் செங்குருதியிலும் சிவப்பான செங்கள்ளி முளைத்தெழுந்து விடும்; அக்கள்ளிப் பூவைத் தின்று வரும் அந்த மானின் வலிவும், சினமும் முன்னினும் பன்மடங்காகிவிடும். தன்மீது அம்பு விட்ட ஆளைக் குத்திச் சாய்ப்பதற்காக அது ஒரே தாவுதலாகப் பாய்ந்து வேல் முனைபோன்ற தன் கொம்பால் அம்பெய்தவன் வயிற்றைக் கிழித்துக் கொன்றுவிடும். இதிலிருந்தே அந்தத் தங்கக் கவரிமானைப் பிடிப்பது அரிது என்பது உங்களுக்கு விளங்கும். எத்தனையோ பேர் ஏதோ ஆசையால் அதைப் பிடிக்கச் சென்றும், மலையுச்சியில் நின்று அந்த மாயமான் அவர்களைப் பார்க்கும்போதே வெருண்டு உயிர் தப்பினால் போதும், என்று ஓடிவந்திருக்கிறார்கள். எனினும், அதைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மக்களிடையே வேரூன்றி நின்றது. நந்திக் கொம்பிலுள்ள அரும் கருவூலத்தின் மீதுள்ள விருப்புத்தான் அதற்குக் காரணம். பல ஆண்டுகளுக்கு முன்னால் இமயச்சாரல் வட்டாரத்தில் வாழ்ந்துவந்த வேலன் என்னும் அழகுமிக்க இளைஞன் அந்தத் தங்கக் கவரிமானைப் பிடிக்கச் சென்றதும், அந்த ஆசையின் காரணமாகத்தான். தங்கக் கவரிமானின் கொம்பை ஒடித்துவந்து, தான் மணம்செய்யக் கருதியிருந்த பூமுடி என்னும் கோமகளுக்குப் பரிசமாகக் கொடுக்க அவன் உள்ளத்தில் எண்ணினான். வேலன் அழகில் தலைசிறந்தவனாக இருந்ததோடு, அம்பு எய்வதிலும் பேராற்றல் படைத்தவனாகவும் இருந்தான். அந்நாள் வரையிலும் அவன் இலக்கு வைத்த குறி எதுவும் தப்பினதே இல்லை. அவன் வேட்டைமீது சென்றபோதெல்லாம், “கவரிமான் கண்ணில்பட்டது. ஆனால், தப்பிவிட்டது,” என்ற பேச்சே இருந்தது கிடையாது. அந்த மண்டிலம் முழுவதிலும் அவனே ‘பெருஞ்செல்வன்,’ என்று பெரும்புகழ் பெற்றிருந்த கோமகளின் மகளாக விளங்கிய பூமுடியும், தன் காதலன் செயற்கரிய அந்த அருஞ்செயலைச் செய்து தனக்குத் தங்கக் கவரிமானின் கொம்பைத் தருவதாகக் கூறியபோது, உள்ளம் பூரித்துப் பெருமிதத்துடன் அவனுக்கு ஊக்கமளித்தாள். நந்திக்கொம்பின் நிதிக்குவியலைக் கொண்டு வந்தபிறகு, வேலனை மணப்பதற்குத் தன் தந்தை கட்டாயம் ஒப்புக்கொள்வார் என்பது அவளுக்குத் தெரியும். எனவே, ஒருநாள் அதிகாலையில் வேலன் விழித்தெழுந்ததும் தான் வழிபடும் குன்றக் கடவுளைக் கும்பிட்டுத் தன் முயற்சிக்கு ஊக்கமும் வெற்றியும் அளிக்குமாறு வேண்டிக்கொண்டு, வேட்டையாடப் புறப்பட்டான். திண்மையும் ஆற்றலும் வாய்த்திருந்த தன் வில்லையும், என்றும் குறி பிழைத்திராத தன் கூர் அம்புகளையும் எடுத்துக்கொண்டு பனிமலை முடியை நோக்கிக் கிளம்பினான். வேட்டை முடிந்து திரும்பி வந்ததும், தங்கக்கவரிமான் கொம்பையும், கூளிகளிட மிருந்து கைப்பற்றி வரும் அருநிதியையும் தன் அன்பின் கோயிலான செல்வநங்கை பூமுடியின் காலடியில் வைத்து, அவள் அன்பைப் பெறப்போகும் காட்சியைத் தன் மனக்கண்ணில் கண்ட களிப்புடன் அவன் மிடுக்கான நடை நடந்து சென்றான். வைகறைப் புலர்பொழுதில், தாமரை இதழின் நிறத்தைப் பழிக்கும் மேனி அழகுடன் விளங்கிய பனி மலைகள், காலைக் கதிரவனின் கதிர்கள் வீசப்பெற்றதும் உருக்கிய பொன்போல் சுடர்விட்டு மிளிர்ந்தன. வேலன் அதிவிரைவாக மேலே மேலே ஏறிக்கொண்டிருந்தான். அடிவாரமும், நடுமலைக்காடும் தாண்டி, குத்துச் செடியும் சிறுபுல்லும், மலைப்பாசியும், கரும்பாறையும், பனித்திடலும் உள்ள உயர்மட்டத்துக்குச் சென்றுவிட்டான். கதிரவனின் பொன்கதிர்கள் பட்டுத் தெறிக்கும் ஒரு பாறைக்கல்லின்மீது நின்று அவன் நெடுகிலும் தன் கண்ணை வீசிக் கவனிக்கும்போது தூரத்தில் தங்கக் கவரிமான் நிற்பதைக் கண்டான். அவன் நிற்கும் இடத்துக்கும், மான் நிற்கும் இடத்துக்கும் பெருந்தொலை இருக்கவில்லை. அதன் தங்கக் கொம்புகள் இளவெயிலில் கண்ணைப் பறிக்கும்படி மின்னிக் கொண்டிருந்தன. அதன் மருண்ட பார்வையில் ஏமாற்றித் திகைக்கவைக்கும் ஒரு கள்ளச் சிரிப்பு கூத்தாடிக் கொண்டிருந்தது. வேலன் தன் வில்லில் அம்பைப் பூட்டிக் குறிப்பார்த்தான். அதுவரையில் பிழையாத அம்பு அன்றும் வெற்றியைத் தரும் என்பதில் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. மான் தன் கையில் சிக்கிக்கொண்டதாகவே அவன் எண்ணினான். ஆனால், கை ஏன் அப்படிப் படபடத்தது. கைக் கூச்சமா? அல்லது மாயமா? எதுவானால் என்ன? விர் என்று கிளம்பிய அம்பு, மானின் மார்பைத் துளைக்கவில்லை. மாயமான் சிறிது காயமுற்றது. உடனே தொடங்கிவிட்டது உயிர்ப்போராட்டம். மானின் காயம்பட்ட உடலிலிருந்து சொட்டும் இரத்தத் துளிகள் பாறையிலும், பனிக்கட்டிகளிலும் விழும் இடத்தில் எல்லாம், குபீர் என்று முளைத்துக் கிளைக்கும் செங்கள்ளியின் தீக்கொழுந்து போன்ற பூக்களை, அந்தக் கவரிமான் தின்று வலிமை பெற்று விடுவதற்கு முன்னதாக அதை அடித்து வீழ்த்திவிட வேலன் முடுகி முயன்றான். ஆனால், அந்த மானோ காற்றிலும் கடு விசையுடன் அங்குமிங்கும் பாய்ந்து வேலன் அம்பு வருவதற்குமுன் சற்றே நின்று தனக்கு மேலும் மேலும் உயிர்க்கிளர்ச்சி ஊட்டும் அப்பூக்களைத் தின்றுவிட உன்னி ஓடியது. என்ன ஊழிவேக ஓட்டப் பந்தயம் அது! இதோ மலையுச்சி; அதோ படுபாதாளம்; இதோ கடுங்கசமான ஏரிக்கரை; அதோ இடி முழக்குடன் கண்ணுக் கெட்டாத பள்ளத்தில் பாயும் அருவி மேடு; உயிரைப் பணயமாக வைத்து நடக்கும் அந்த ஓட்டப் பந்தயம் குலை நடுக்கந் தரத்தக்கதாக இருந்தது. மானும், மனிதனும் எதிரியின் உயிரை வாங்கி விடுவதென்ற ஒரே நோக்கத்தோடு இப்படி விரட்டி நிற்கும்போது, திடுமென வந்த கருமுகில்கள் மலையுச்சியைக் கவிந்து கொண்டன; காற்றும் கனத்தது; கடும்புயல் வீசும்போலிருந்தது. ஒரு நொடிநேரம் மாயமான் வேலனின் திகைத்த கண்ணுக்குத் தெரியாது மறைந்தது. மறு நொடியில், மேகப்படலம் சற்றே விலகியதும், அந்தக் கவரிமான் கல்வீச்சுத் தூரத்தில் நிற்பது தெரிந்தது. உயிருக்கு உலைவைக்கும் அதன் அழகுதான் எப்படி இருந்தது! வெண்ணெய் போன்ற அதன் வெண்கவரிதான் என்ன! கள்ளிப்பூவின் ஊட்டத்தால் மேலும் கனத்துத் திரண்டு நின்று தீ உமிழும் கொம்புதான் என்ன! வடுவுற்றறியாத தன் எழில் வடிவில், கூர் அம்பை எய்து குருதிபாயச் செய்த கொலைஞனைக் கொன்றே தீர்த்துவிட வேண்டும் என்ற துணிவுடனும், அடங்காத சினத்துடனும் உறுத்து நோக்கும் அதன் கனல் கக்கும் கண் பார்வைதான் என்ன! அந்தப் பார்வை வேலனின் வயிற்றைக் கலக்கிவிட்டது. யாரும் வந்தறியாத அந்த உச்சி மலையில், தான் தன்னந்தனியாக நிற்பதையும், தன் குறிக்குத் தப்பி விட்ட தங்கக் கவரிமான் தன் வாள் முனைக் கொம்பால் தன்னைக் குத்திக் கொல்லப் பாய்ந்து வருவதையும், தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தின் கொடுமையையும் அவன் அப்போதுதான் உணரத் தொடங்கினான். தன் காலடியில் இருப்பதோ படுபாதாளப் பள்ளம். அதன் கீழே கரைகளைக் கிழித்துக்கொண்டு பாயும் காட்டாறு. தன் உயிருக்குக் கூற்றுவனாக வாய்த்துள்ள அம் மான் கொம்பின் ஒளி, வேலனின் கண்ணைப் பறித்துப் பார்வையைக் கவர்ந்தது; தன் தனிமைநிலை பற்றிய ஏக்க உணர்ச்சி சிந்தையைக் கலக்கியது; மாயமானின் கொலை நோக்கு, அவன் நெஞ்சு உரத்தை அழித்தது; என்ன செய்கிறோம், எங்கே செல்கிறோம் என்ற உணர்ச்சியே இல்லாது வேலன் விரைந்து ஓடினான்; அது பிசகாது ஓடவேண்டும் என்பதையும் மறந்தான். அந்தோ! பித்துப் பிடித்தவன்போல் பாய்ந்தோடிய வேலன் கால் இடறினான். செங்குத்தான அந்தப் பனி மலையிலிருந்து கீழே அதள பாதாளத்தில் ஓடும் காட்டாற்று அருவியில் விழுந்தான். இடி முழக்கத்தோடும், நுரைத்துப் பொங்கும் அலைகளோடும், கடுவேகத்தில் செல்லும் அந்த ஆற்று வெள்ளம், வேலனைக் கீழே கீழே இழுத்தோடியது. தங்கக் கவரிமானுக்குச் சினம் பொறுக்க முடியவில்லை. தன்னைக் காயப்படுத்திய அக்கொடியவனைத் தன் கொம்பு நுனியால் குத்திக் கிழித்து, அவன் குருதி வெள்ளத்தில் தன் கொம்பைக் கழுவி உலர்த்த வேண்டும் என்ற தன் எண்ணம் ஈடேறாது போனதால், அது சினம் மூண்டு ஓடியது. அனல் வீசும் பெருமூச்சுடன் அது கீழே, மக்கள் வாழ்ந்த அடிவாரத்தை நோக்கிப் பாய்ந்தது. தங்கள் தலைவனுக்குத் துணையாக அதன் படைகளாகிய மான் கூட்டங்களும் பாய்ந்து வந்தன. மாயமானைத் தொடர்ந்து, மலைப் பூதங்களும் வந்தன. தங்கக் கவரிமானின் தணியாச் சினத்தினால், அங்குள்ள பொருள்கள் எல்லாம் பற்றி எரிந்து அழிந்தன. பேருக்கு ஒரு குடிசையோ, அடையாளத்துக்கு ஒரு மரமோ கூட இல்லாமல் அந்த வட்டாரம் அவ்வளவும் பொடி சாம்பலாய் விட்டது. இது நடந்து எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் ஏழாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே அந்த மான் அழித்த பாழ் நிலத்தில் பச்சை மரம் தளிர்க்கும் என்று வழிவழி வழக்காகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், அப்படி முதல் முதல் தளிர்க்கும் மரத்தைக் கொண்டு செய்யப்படும் தொட்டிலில் படுக்கும் முதல் குழந்தைக்கு, நந்திக் கொம்பின் தங்கக் கவரிமானை மேய்க்கும் காவல் பெண்களான மூன்று வானமகளிரும், அந்த மானைப் பிடிக்கும் வழியைச் சொல்லிக் கொடுப்பார்கள். மேலும், அந்த மலைக்குகையில், பச்சை உடை உடுத்துப் பவளமணி முடியணிந்து, என்றும் இமைக்காது கண் விழித்து நிற்கும் கூளிகள் காவல் புரிந்து வருகிற அந்த அழியாப் பெருநிதியை அடைவதற்கும் அவர்கள் வழி கூறுவார்கள். எஎஎ சிறுகதை விருந்து முதற் பதிப்பு - 1945 இந்நூல் 1945இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை -1 . வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. தீமையில் நன்மை ஒரு காலத்தில் ஓரரச மகன் இருந்தான். ஒரு செட்டிப் பிள்ளையும், ஒரு வாத்திப் பிள்ளையும் அவனுக்கு நண்பர் களாக இருந்தார்கள். இவர்கள் மூவரும் ஆடிப் பாடித் திரிந்து, மன மகிழ்ச்சியுடன் நாட்கழித்துக்கொண்டு வந்தனர். அந்நண்பர்கள் தங்கள் வீடுகளில் எது எக்கேடு கெட்டாலுங் கவனிக்கிறதே இல்லை. நாட்டுக் காரியங்களில் நாட்டம் வைப்பதில்லையென்று அரசனும், கொடுக்கல் வாங்கல் வேலைகளிற் குறிக்கோள் கொள்வதில்லையென்று செட்டி யும், நூல்களைப் படிப்பதில்லையென்று வாத்தியாரும் தங்கள் தங்கள் பிள்ளைகளைத் திட்டிப் பேசிக்கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சி விளையாட்டுக்களில் மனம் பதிந்திருந்தமையால், நண்பர்கள் மூவரும் தகப்பன்மார் புத்திமதிகள் மனத்தின்கண் படாமலே சில நாட்கள் கழிந்தன. பிறகு வரவர அரசன் முதலானோர் தங்கள் பிள்ளைகளைக் கடுகடுத்துப் பேசத் தொடங்கினர். இதனைப்பற்றி மூவரும் மனத்தாங்கல் கொண்டிருந்தனர். இவ்வாறு இன்னுஞ் சில நாட்கள் செல்லவே, ஒரு நாள் அரசச்செல்வன் மற்றிரண்டு நண்பர்களையும் நோக்கி, “நண்பர்களே! இவ்வாறு மனத் துன்பத்துடன் இங்கிருந்து கொண்டிருக்க என்மனம் இடங்கொடுக்கவில்லை. நம் மூவருடைய மனத் துயர்கள் ஒருவகைப்பட்டவைகளாகவே இருக்கின்றமையால் நாமெல்லோரும் இவ்விடத்தைவிட்டு வெளியேறிப் போய்விடுவதே தக்கதென்று என் மனத்திற் படுகின்றது. மேலும் மனவன்மையும், அறிவும், அண்டன்மை யும் வெளிநாட்டு நடமாட்டத்திலேதான் வெளிப்பட்டுக் காணப்படும்” என்றான். அரசமகன் சொல்லுக்கு மற்ற இருவரும் உடனே இசைந்து கொண்டனர். எனினும் செட்டி மகன் சொல்லுகின்றான். “நான் எங்குச் செல்வது? எவ்விடஞ் சென்றாலும் கைச்செலவுக்குப் பொருள் வேண்டுமல்லவோ! ஆகையின் நாம் முதன் முதல் மாணிக்கமலைக்குச் செல்ல வேண்டும். அங்கு நமக்கு அருங்கற்கள் அகப்படும். பிறகு நம் மனப்படி நாலு திக்குஞ் சென்று, நல்ல நல்ல நாடுகளெல் லாம் பார்த்துக்கொண்டு உவப்புடன் நாள் கழிக்கலாம் வாருங்கள்” உடனே மூவருஞ் சேர்ந்துகொண்டு நடையாக நடந்து மாணிக்கமலை அடைந்தனர். அவர்கள் நல்ல காலம் அங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மணிக்கல் அகப்பட்டது. அகப்பட்டதும் மூவருஞ் சிந்திக்கலானார்கள். “நாம் செல் வதோ காட்டு வழிகள். இவ்விலையுயர்ந்த பொருள்களை எவ்வாறு கைவிட்டுப் போகாமற் காப்பது? மறவர்களாலும், குறவர்களாலும் நமக்கு உயிர்ச்சேதம் வந்தாலும் வரு மல்லவோ” கடைசியாக வாத்திப்பிள்ளை தன்னிரு நண்பர் களையும் நோக்கி, “நான் தக்கவழி ஒன்று சொல்லுகின்றேன். இக்கற்களை நாம் விழுங்கி வயிற்றில் வைத்துக் கொள்வோம். அப்போது திருடர் பயம் ஏது?” என்றான். அவ்வாறே அம் மூவரும் அன்றிரவு உணவருந்தும்போது தத்தம் கற்களை உணவோடு உட்கொண்டுவிட்டனர். இஃது இவ்வாறாக, ஒரு மனிதன் பல நாட்களாக அம் மாணிக்கமலைச் சாரலில் வந்து அருங்கல் ஒன்று சம்பாதிக்க அரும்பாடு பட்டுத் திரிந்து கொண்டிருந்தான். அவன் பொல்லாத வேளை அவனுக்கு ஒரு கல்லும் அகப்பட வில்லை. இந்நிலையில் அவன் அங்கு ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான். அவனிருந்த இடத்திற்கு அருகிலேயே முன்சொன்ன மூவரும் அப்போது உணவருந் தினர். ஆனால், இவர்கள் அங்கு அம்மனிதனிருப்பை அறிந்தார்களில்லை. ஆனால், அவனோ இவர்கள் செய்கையை யெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமலிருந்தான். மூவரும் உண்டி முடித்து உவப்போடு உட்கார்ந்து, பிறகு நடக்க வேண்டியவைகளைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கையில் அம்மனிதன் நினைக்கின்றான்; “யான் நாட்கள் பலவாக மாணிக்கங் காண இம் மலையைச்சுற்றிச் சுற்றித் தேடிக் கொண்டிருக்கின்றேன். நான் கொடுத்து வைக்காமையால் எனக்கொன்றுங் கிட்டவில்லை. இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கல் அகப்பட்டிருக்கின்றது. நான் இவர்களைப் பின் தொடர்ந்து போய் இவர்களுடன் சேர்ந்து கொள்வேன். இவர்கள் அயர்ந்து தூங்கும் போது இவர்களை வெட்டிப்போட்டு இவர்கள் வயிறுகளிலுள்ள மாணிக்கங்களைக் கவர்ந்து கொள்வேன். ” நினைத்தவன், மூன்று நண்பர்களும் வழிக்கொண் டேகப் பார்த்து அவர்களைப் பின் தொடர்ந்தான். அவன் சில நேரத்துக்கெல்லாம் அவர்களைக் கூடி அவர்களிடஞ் சொல் கின்றான். “ஐயன்மார்களே! யான் ஒரு வழிப்போக்கன்; இந்தக் காட்டு வழியே ஒன்றியாகப் போக மனந் துணியவில்லை. நல்ல காலமாக நீங்கள் என் கண்ணுக்கு அகப்பட்டீர்கள். நான் உங்களுடன் கூடிக்கொண்டு வழி நடக்க உத்தரவு கொடுக்க வேண்டும்” தமக்கு வழித் துணை யாவான் என நினைத்து அம் மூவரும் அம் மனிதன் வேண்டுகோளுக்கிணங்கிக் கொண்டனர். இவர்கள் நால்வரும் மாணிக்கமலைச் சாரலைக் கடந்து ஒரு பெருங் காட்டுவழியின் பக்கத்தில் இருந்த ஓர் ஊரில் சிறிது நேரந்தங்கி இளைப்பாறி அப்பாற் சென்றனர். அவ்வூரின் கோடியில் அவ்வூராளியின் மாளிகை இருந்தது. அவன் பல பறவைகளை வேடிக்கைக்காக அம்மாளிகையில் வளர்த்து வைத்துக்கொண்டிருந்தான். அவைகளில் ஒன்று பாட்டுப் பாடிற்று. அவ்வூராளிக்குப் பறவைகள் பாட்டுக்களின் கருத்து நன்கு தெரியும். அப்பறவை பாடினதைக் கேட்டு, அவன் அவ்வழிப்போக்கர்களைக் கூவியழைத்தான். அக்கூக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பி வராமலிருக்க அஞ்சி மெதுவாய் நடந்துவந்து அவ்வூராளியினெதிரில் நின்றனர். அவன் அவர்களை நோக்கி, “உங்களிடம் மாணிக்கமிருக்கிறதென்று இப் பறவைபாடிச் சொல்லுகின்றது”என்று சொல்லிக்கோலொடு நின்று கொடுங்களென்றான்.அதற்கு அவர்கள் தங்களிடம் ஒன்றுமில்லையென்று வாய் குழறிச் சொன்னார்கள். அதற்கு மேல் அவன் ஆட்களைவிட்டு அவர்கள் உடைகளைச் சோதிக்கும்படி கட்டளையிட்டான். ஆட்கள் அவ்வாறு செய்தும் மாணிக்கத்தைக் கண்டார்களில்லை. ஊராளி மனக்கிலேசத் துடனே அவ் வழிப்போக்கர்களைப் போகவிட்டுவிட்டான். அவர்கள் இரண்டோரடி எடுத்து வைப்பதற்குள் அப் பறவை மறுபடியும் அவ்வாறே பாடிற்று. மறுபடியும் அவ்வூராளி அவர்களை மீண்டும் நிற்கவைத்து அவர்கள் உடைகளைத் தானே சீலைப்பேன் பார்ப்பது போல் வைத்த கண் வைத்தபடியே இடம்விடாமல் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். பார்த்தும் அவன் கைக்குங் கண்ணுக்கும் மாணிக்கம் அகப்படாததனால் அவர்களை மறுபடியும் போகவிட்டான். அவர்கள் முகந் திரும்பினார்களோ இல்லையோ உடனே அப்பறவை அவ்வாறாகவே பெருங்குரலோடு பாடிற்று. அவர்களை அவ்வூராளி போகவொட்டாமற் றடுத்து அவர்களை நோக்கி, “பாட்டை சாரிகளே! இப்பறவை எப்போதும் பொய்ப்பாட்டுப் பாடுவதில்லை. உண்மையையே பாடும். உங்களிடம் மாணிக்கம் உண்டென்று முக்காலுஞ் சொன்னது. அதனை யான் முற்றும் நம்புகிறேன். என்ன சொல்லுகின்றீர்கள்?” என்று கண்டித்துக் கடுங்குரலொடு கேட்டான். அதற்கு அவர்கள் அவனை நோக்கி “ஆண்டவரே, தாங்கள் கடுஞ்சோதனை செய்தீர்களே, உங்கள் கைக்குங் கண்ணுக்கும் அணுக்களும் மறைந்திருக்க வொண்ணாவே! எங்களை என்ன சொல்லச் சொல்லுகின்றீர்கள்?” என்றார்கள். இதனைக் கேட்ட அவ்வூராளி அவர்களை நோக்கி, “பறவையோ பொய்யாதது; உங்களிடம் மாணிக்கம் கட்டாயமாய் உள்ளதென்று ஊன்றி யூன்றிச் சொல்கின்றது. அம்மாணிக்கம் உங்கள் உடைகளிற் காணப்படாவிட்டாலும், உங்கள் ஊனுக்குள் மறைந்து கிடக்கின்றதென்றே யான் உறுதியாக உளங்கொண்டிருக் கின்றேன். இப்போது பொழுது போயிற்று. நாளைக் காலையில் உடலையே சோதித்துச் சோதித்துப் பார்க்கவேண்டும்” என்ற சொல்லி அந் நால்வரையும் ஓரிருட்டறையில் தள்ளித் தாளிட்டுவிட்டான். அன்றிரவு மூவருடன் வந்த நடுவழியிற் சேர்ந்த நச் செண்ணத் தோனாகிய நான்காமவன் நள்ளிரவின்கண் தனக்குள்ளேயே நினைக்கின்றான். அஃதாவது “நாளைக் காலையில் இவ்வூராளி ஒவ்வொருவர் வயிற்றையும் கீறிப் பார்க்கப் போகின்றான் போலும்! முதன் முதல் அம்மூவரில் ஒருவனைச் சோதித்துப் பார்த்தானாயின் கட்டாயமாய் மாணிக்கத்தைக் காணவே போகிறான். உடனே ஏனைய மூவருக்கும் விதி முடிய வேண்டியது தானே அவர்களில் யானும் ஒருவனல்லனோ! எப்படியாயினும் என்னுயிர் போகவே போகின்றது இப்போது என்ன செய்யலாம்? தன்னுயிர் நீத்தும் பிறர் உயிர்களைக் காப்பவன் நற்கதியடைவானன்றோ! ஆகையினாலே அவ்வூராளியின் கொடுஞ்செயலுக்கு யான் முந்திக் கொள்வேன். அவன் என் உடலைச் சோதித்துப் பார்த்து விட்டானானால் அவன் பேராசை அடங்கிப்போய்விடும். ஓருயிரை வீணே கொன்றொமென்று கழிவிரக்கங்கொண்டு தான் கொல்லவேண்டுமென்று வந்த அம்மூவரையும் கொல்லாமலே விட்டுவிடுவான். என்னோருயிரை இழந்து உடன்வந்த மூவருயிரையுங் காத்து, இனிவரும் பிறப்பிலாவது நல்வாழ்வு பெற இதுவே வழியாகும். சாவுக்குப் பயப்படுவானேன்; அஃது ஆறிலும் உண்டு, நூறிலும் உண்டு” என்பதே. பொழுது விடிந்ததும் ஊராளி கருவிகள் கைக் கொண்டு, அடைபட்டிருந்த நால்வரையும் வெளியிடத்துக்கு வரச்சொல்லி அவர் தம் உடலைச் சோதிக்கத் தொடங்கி னான். அப்போது நான்காமவன் ஊராளியை நோக்கி, அப்பனே! என் நண்பர்களின் வயிற்றை அறுக்கும்போது யான் என் கண்ணால் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையால், ஆண்டவனே! முதன்முதல் என் வயிற்றைக் கீறிப்பாரும்; பிறகு அவர்கள் உடலைச் சோதியும்; இந்த என் பணிவான விண்ணப்பத்தைத் தாங்கள் அன்புகூர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். இவ்வேண்டுகோளுக்கு ஊராளி ஒத்துக்கொண்டு அவன் வயிற்றை முதலிற் கீறிக் குடர்களை யெல்லாம் உருவிச் சோதித்து, உடலெல்லாம் ஓரிடமும் விடாமல் அறுத்தறுத்துப் பார்த்து விட்டான். மாணிக்கமே காணோம். ஊராளிக்கு மட்டற்ற மன வருத்தம் உண்டாய் விட்டது. “குருவின் பேச்சைக்கேட்டுக் கோரவதை செய்துவிட்டேன். பறவையின் பேச்சைக் கேட்டுப் பாவத்துக்காளேனேன். பேராசையாற் பிணிப்புண்டு தீராவருத்தம் வைத்துக்கொண்டேனே! பெருங்கொலை செய்து பெற்ற பயன் யாது? எண்ணம் ஈடேறிற்றா? இல்லையே இவன் தன் வயிற்றிற் போலவே அவர்கள் வயிற்றிலும் மாணிக்கங் காணப்போகிறதில்லை. நான் ஏன் கொலைமேற் கொலை செய்யவேண்டும். அப்படிச் செய்தாலும் பலன் யாதொன்றுங் காணப் போகிறதில்லை. இத்தகைய கொலை செய்வதற்கு இனிமேல் என் மனமும் எண்ணாது; என் கையும் செய்யாது” என்று இவ்வாறு எண்ணி ஒரு முடிவு செய்துகொண்டு மற்ற மூவரையும் நோக்கிப், “புண்ணியவான்களே! உங்கள் நண்பனைப் படுகொலை செய்ததற்காக உங்களை மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் மனங்கொண்ட இடத் திற்கு நீங்கள் போகலாம்” என்றான். உடனே அம்மூவரும் அவ்விடம் விட்டுச் சரேலென நடந்தார்கள். வழியில் தங்களுக்கு நேர்ந்த பேரிடையூற்றைக் குறித்துப் பேசலாயினர். அரசமகன்: நண்பர்களே! எவனோ ஒருவன், வழியில் வந்து சேர்ந்தான். முதன் முதல் அவன் தன்னுயிரை விடுவதற்குக் காரணமென்ன? அஃது எனக்கு விளங்கவில்லையே. செட்டிமகன்: அவன் துணிச்சல் யாருக்கு வரும். உயிரை விட்டு உயிர்களைக் காப்பாற்றினான். அவனல்லனோ வீரசிகாமணி! வாத்திமகன்: அவன் எப்படியோ நம்மிடம் மாணிக்கம் இருப்பதைக் கண்டு கொண்டிருக்கின்றான். தனது உயிர் எப்படியும் போய்விடும் என்று நினைந்து அவன் முதலில் தன்னுயிரைக் கொடுத்துவிட்டால் நமது உயிர் ஓர் வேளை தப்பினாலும் தப்பலாம் என்று எண்ணினான். எண்ணிப் புண்ணியஞ் சம்பாதித்துக் கொண்டான் என்றே தோன்று கின்றது. மூவரும் இவ்வாறு பேசிக்கொண்டே நடந்துபோய் ஒரு நகரை யடைந்து மாணிக்கங்களை விற்றுப்பெரும் பொருள் அடைந்தனர். அந்நகரின்கண் முதன்முதல் செட்டிமகன் வாணிபஞ் செய்யத் தொடங்கிப் பெரியதொரு வாணிபச் சாலையும் ஏற்படுத்தி நடத்தி, அறவழியில் கொடுக்கல் வாங்கல் செய்து பெரும் புண்ணிய வணிகன் எனப் பேரெடுத் தான். அரச மகன் அந் நாட்டுச் சேனையிற் சேர்ந்து படிப்படி யாகத் தளகர்த்தனானான். வாத்தியின் மகனோ கல்வியில் மேன்மேலுந் தேறிப் பெரு நாவலனாய் அந் நகர்க் கலாசாலை யில் சிறந்த சொற்பொழிவாளனானான். இவர்கள் மூவரும் அந்நகரின் கண் நன்கு வாழ்ந்து பேரும்புகழும் அடைய, இச்செய்தி இவர்கள் பிறந்த நகருக்கும் எட்டவே இவர்களுடைய தாய்தந்தையர்கள் இவர்களை வந்து கண்டு கூடிக்குலாவி, அளவளாவி, அகமகிழ்ந்தார்கள். 2. பேராசைப் பேயன் நட்பிற் சிறந்த நான்கு அந்தணர் ஓரூரில் உறைந்திருந் தனர். அவர்களை வறுமை பிடுங்கித் தின்றது. “இப்பொல்லாத வறுமையை போக்கடிக்க ஒரு வழி தேடவேண்டுமே! ஒருவன் வலுவுடையவனாக இருக்கலாம், அழகுடையவனாக இருக் கலாம், பேச்சு வன்மையுடைவனாக இருக்கலாம், கற்றுவல்ல பெரும்புலவனாகவுமிருக்கலாம். அவனுக்குப் பணமின்றேல் இவ்வுலகு என்னத்திற்கு! அவன் நடைபிணத்திற்கு நேரன்றோ! வறுமைப் பிணியால் வருந்தியிருப்பதைக் காட்டிலும் எமனால் பிணிக்கப்பட்டு உயிர்விட்டுப் போய்விடுவதே நலாமன்றோ! ஆகையால், நாமெல்லாம் புறப்பட்டு பொருள்தேடிப் பசிப்பிணியை யொழித்து கொள்வோம்.” என்று ஒருவரோ டொருவர் பேசிக்கொண்டு, வேற்று நாடு செல்லப் புறப்பட்டு விட்டனர். அந் நால்வரும் பல காவதங்கள் நடந்து ஓருரை யடைந்தனர். அங்கு அவர்கள் சிறிது நேரந் தங்கி, ஆற்றில் குளித்துமுழுகி அருகேயிருந்த ஒரு கோவிலுக்குட் சென்று கடவுளை வணங்கிக்கொண்டு பின்னும் நடக்கலாயினர். நடக்கும் வழியில் மாயவித்தையிற் பேர்போன ஒரு மந்திரக்காரனைக் கண்டார்கள். கண்டு வணங்கி அவர்கள் அவனுடன் சென்று ஒரு குகைக்குள் புகுந்தனர். புகுந்ததும் அவன் இந்நால்வரை நோக்கி, “நீங்கள் எந்த ஊர், எங்கே போகின்றீர்கள்? ஏங்கி இளைத்து இவ்வாறு கால்நடையாகப் போவதின் நோக்கம் என்ன?”என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் மிகத்தொலைவிலிருந்து வருகின்றோம் பணக்காரர் ஆனால் ஆவது; இன்றேல் பிணங்களாகப் போய்விடுவது என்று உறுதி கொண்டிருக்கின்றோம். அதற்குத் தக்க ஆசிரியரைத் தேடியலைகின்றோம். உங்களைக் கண்டோம்; மனம் விண்டோம்; எங்களை ஈடேற்றி வைப்பது தங்கள் கடன்” என்று அம் மந்திரக்காரன் அடிகளில் விழுந்து பணிந்தனர். இவர்கள் வன்மனங்கொண்டவர்கள்; மலைமீதும் ஏறுவார்கள்; குகையினும் புகுவார்கள்; பனிகளையும் வெல்வார்கள்; சுடுகாட்டிலும் மறைவார்கள்; எத்தகைய இடுக்கண்களுக்கும் அஞ்சார்கள்; இவர்கள் மாய மந்திரவித்தைகட்குத் தக்க மாணவர்கள்,” என்று எண்ணினான். இவர்களை நோக்கிச் சொல்லுகின்றான். “நல்லோர்களே! இதோ, நீங்கள் ஒவ்வொருவரும் ஓரிறகு எடுத்துக்கொள்ளுங்கள். இம்மலைச் சாரலுக்குச் சென்று மேலேறி நடவுங்கள். எவனுடைய இறகு கீழே எங்கு விழுகின்றதோ, அங்கே அவனுக்குப் பொருள் கிடைக்கும். ஆனால், உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன். “ஆசைக்கோ ரளவுண்டு,” என்பதை மறவாதீர்கள். போய்வாருங்கள்” இதனைக் கேட்டுக்கொண்டு மந்திரக்காரனை வணங்கி அந் நால்வரும் இமயமலைச்சாரலை நோக்கி நடந்தனர். மலைச்சாரலைக் கண்டு, அதன் மீதே நால்வரும் சில மணி நேரம் நடக்க, ஆங்கோர்மேட்டின்மேல் முதலாவதாக ஒருவன் இறந்து விழுந்தது. நால்வருஞ் சேர்ந்து அவ்விடத்தைத் தோண்டினர். தோண்டவே அடி மண்ணெல்லாம் செம்பாக இருக்கக் கண்டனர் கண்டதும் அவ்விறகுடையோன் ஏனை யோனை நோக்கி, “நமக்கு வேண்டுமளவும் செப்புத்தூள்களை மூட்டை கட்டிக்கொண்டு பேகலாம்” என்றான். மற்றவர்கள் அவனை நோக்கி “முழுமுட்டாளே! இச்செம்பினால் நமக்கென்ன பயன்! இதனால் நமது வறுமை தீர்ந்துவிடுமா? இவ்விடம் விட்டு இன்னும் ஏறிப்போகலாம்”என்றனர். மந்திரவாதியின் அறிவை மனத்திற்கொண்ட அவன், அவர்களை நோக்கி, “உங்கள் மனம் போல் செய்யலாம்; நான் இனி உங்களுடன் கூடி ஓரடியும் எடுத்து வைக்கமாட்டேன். இச் செப்புத்தூள்களே எனக்குப் போதும்” என்றான். மற்ற மூவரும் இவன் அறிவில்லாதவன் என்று சொல்லிவிட்டு மலையின்மேல் ஏறிப்போனார்கள். செம்பு கண்டவனோ தான் தூக்கக் கூடியவரையில் செப்புத்தூள்களைச் சேகரித்து வாரி, மூட்டை கட்டிக்கொண்டு திரும்பிப் போய்விட்டான். அப்போது இரண்டாவது மனிதன் அவர்களை நோக்கி, “நீங்கள் போகலாம். நான் வரமாட்டேன். நான் ஆசாரியன் மொழிப்படி நடக்கவேண்டும். இந்த வெள்ளித் தகடுகளே எனக்குப் போதும்” என்றான். இதனைக் கேட்ட மற்றை இருவரும் மலையேறிப் போயினர். வெள்ளித் தகட்டுக்காரனோ சுமக்கக் கூடிய வரையில் வெள்ளித் தகடுகளை யெடுத்துத் தலைமேல் வைத்துக்கொண்டு தன்னூர் திரும்பினான். பேராசை கொண்டு பெருவழி சென்ற இருவரும் பெரு மகிழ்ச்சியுடன் மலையேறிச் செல்ல, நெடுந்தொலைக்கப் பால் முன் சென்றவன் இறகு மெதுவாய்க் கைவிட்டு நழுவிவிட்டது. திட்டென நின்று இருவரும் அவ்விடத்தைக் கொத்தினர்; மண்ணெல்லாம் பொன்னாக விருந்தது. பார்த்தான் பொன்னுடையான். மட்டற்ற மகிழ்ச்சி மேற்கொண்டான். “நண்பனே பொன்னே அகப்பட்டு விட்டது; அதுவும் மட்டற்றுக் கிடக்கின்றது. நாம் இருவரும் வேண்டியவரையிற் கட்டி யெடுத்துக்கொண்டு கடுகென ஊர் போய்ச் சேரலாம். பொன்னை விட மேலான பொருளும் உண்டா! வீணாசை வேண்டா. கட்டிக்கொள் மூட்டை. சட்டெனச் செல்லலாம்.” என்றான். இதனைக்கேட்ட கடையானவன் பொன்னாளனை நோக்கி, “அடா அடிமுட்டாளே! செம்பும் வெள்ளியும் பொன்னும் முறையாக அகப்பட்டுக்கொண்டு வந்தனவே! இனி மாணிக்கமே அகப்படுமென்பதற்கு மாறேதாயினு முண்டோ! இன்னும் போய்ப் பார்க்கவேண்டும். எழுந்திரு போகலாம்.” என்றான். பொன்னாளன், “போடா போ! ஆசைக்கும் ஓர் அளவு வேண்டுமென்றாரே நமது மந்திரகுரு. அதனை நீ சிறிதளவும் எண்ணிப் பார்க்கவில்லையே. வேண்டுமானால் நீ போய்வா; யான் உனக்காக இங்குக் காத்துக்கொண்டிருக்கின்றேன்” என்றான். பொன் வெறுத்துக் கன்மேலாசை வைத்தவன் தனி வழியே போயினான். சில தூரஞ்சென்று சுற்றிச் சுழன்று ஓரிடத்தைச் சேர்ந்தான். அங்கு அனல் வீசுகின்றது. கண் பஞ்சடைகின்றது. நாக்கு வறட்சி கொடுக்கின்றது; தாகமோ சொல்லுந்தரமன்று. இந்நிலையில் அங்குச் சென்றடைந்த ஆசைப்பேய் பிடித்த பார்ப்பான், தலையின் மேல் நின்று ஒரு சக்கரஞ் சுழன்றுகொண்டிருக்க ஒரு மனிதனைக் கண்டான். அவன் உடம்பெல்லாம் செந்நீர் ஒழுகினபடியே இருந்தது. பேராசைப் பேயன் அவனைப் பார்த்து, “ஐயாவே! தலையின் மேலிருந்தொரு சக்கரங் சுழன்றுகொண்டிருக்க, நீர் இங்கு என் செய்துகொண்டிருக்கின்றீர்? இருக்கட்டும் முதலில் எனக்குக் குடிக்கத் தண்ணீர் எங்கே அகப்படும், சொல்வீரா? தாகத்தால் எனக்குப் பாதியுயிர் போயிருக்கின்றது” என்றான். இவ்வாறு இவன் சொன்னவுடனே அச்சக்கரம் இவன் தலைமேல் வந்து தங்கிச் சுழன்றுகொண்டிருக்கத் தொடங் கிற்று. அப்போது பேராசைக்காரன் சக்கரவிடுதலை பெற்றவனை நோக்கி, “ஐயனே! இஃதென்ன! இஃதென்ன,”என்று கதறினான். விடுதலை படைத்தவன் “இதே மாதிரியாக இஃது என் தலைமேல் வந்தது,” எனப் பார்ப்பான், “அஃதிருக் கட்டும், இஃது என்னை எப்போது விடும் சொல்லுமையா! பொல்லாத நோய் பொறுக்கக்கூடலியே!” என்று பின்னுங் கதறினான். அப்போது அம்மனிதன், “தன் கையில் மந்திர இறகுடன் உன்னைப் போலவே இங்கு ஒரு மனிதன் வந்து, நீ என்னைக் கேட்டது போலவே உன்னைக் கேட்பானாயின், இந்தச் சக்கரம் உன்னை விட்டு அவன் தலைமேல் ஏறி சுழலும்” என்றான். பிறகு தலைச் சக்கரக்காரன் விடுதலையடைந்தவனைப் பார்த்து, “ஐயனே நீர் இங்குவந்து இப்பொல்லாத் தொந்தரவில் எத்தனை நாளாக அகப்பட்டுக்கொண்டிருந்தீர் சொல்லுமையா” என, அதற்கு அவன் “நான் வரும்போது இராமன் அரசாண்டு கொண்டிருந்தான்; வறுமைப்பிணி பொறுக்க மாட்டாமற் புறப்பட்டுவர, வழியில் உன்னைப் போலவே மந்திர இறகு பெற்று மலைமேலேறி நடந்து கடைசியாக இவ்விடத்தை யடைந்தேன். நான் வந்தபோது இச்சக்கரம் ஒருவன் தலைமேற் சுழன்று கொண்டிருந்தது. யான் அவனைக் கேட்டது போலவே சில கேள்விகள் கேட்கவே இச்சக்கரம் என் தலையைப் பிடித்துக்கொண்டது. அவன் எத்தனை நூற்றாண்டுகள் இவ்வாறிருந்தானோ எனக்குத் தெரியவராது” என்றான். பிறகு பார்ப்பான், “ஐயனே! இந் நிலையில் நீர் உணவுக்கென் செய்தீர்! என அதற்கு அவன், “இங்கே வந்து இந்நிலையை யடைபவர்க்குப் பசி தாகம் இல்லை; கிழத்தனமும் சாவும் இல்லை; இவ்வேதனையை அவர் இங்குள்ள நாட்களில் எல்லாம் அநுபவித்தே தீரவேண்டும். ஐயா மன்னிக்கவும்; இவ்விடா வேதனையினின்று என்னை விடுவித்துவிட்டீர்; நான் வீட்டுக்குப் போகிறேன்.” என்று சொல்லியோடி மறைந்தான். இவன் இங்கே இவ்வாறிருக்கப் பொன் பெற்றவன், ‘போனவன் இன்னுந் திரும்ப வில்லையே’ என்று எண்ணிப் புறப்பட்டு மலைமேலேறி வந்தான். சில தூரம் நடந்து வந்ததும் சிறிது தூரத்தில் தலைமேற் சக்கரம் சுழல ஒரு மனிதனைக் கண்டு மிக்க வியப்படைந்தான்; அம் மனிதன் உடலெல்லாம் செந்நீர் பெருகிக் கொண்டிருக்கவும், மிக்க வேதனையோடு கதறிக் கொண்டிருக்கவுங் கண்டு அச்சமுந் திகிலுங் கொண்டான். சிறிது கிட்ட செல்லவே அவன் தன் நண்பனெனக் கண்டு கொண்டான். இவன் கண்ணீரொழுக அவனைக் கூப்பிட்டு, “நண்பனே இஃதென்ன!” என, அவன், “விதிவசம் என்கிறார்களே அதுதான் இது” என்று சொல்லித் தன் வரலாற்றையும் சக்கரத்தின் வரலாற்றையும் சுருங்க வெடுத்துச் சொல்லினான். பிறகு பொன்னாளன், ‘பேராசை வேண்டாம், மேலும் மேலும் போகவேண்டாம். என்று சொன்னேனே! கேட்டாயா! வந்ததைப் பட்டுக்கொள்ள வேண்டியதுதானே! யார் தான் என்ன செய்யலாம்; போய்வருகிறேன்.” என்று சொன்னான். சக்கரக்காரன் அவனை மறித்து “நண்பா! என்னை இந்நிலையில் விட்டு விட்டுப் போவாயேயானால் உனக்கு நல்ல கதி கிடைக்குமா!” என்றான். இதனைக் கேட்ட பொன்னாளன், “சொல்வது சரியே! ஆயினும், இயல்வது கரந்தால்தானே எனக்குப் பழியும் பாவமும்! உனக்கு என்னால் ஒன்றுஞ் செய்ய முடியாதே யான் இங்கிருப்பதனால் யாது பயன்? நீ படும் வேதனையை நான் பார்த்துக்கொண்டு மனம் புழுங்கி அழவேண்டியது தானே, உன்னுடைய அறிவுக் கேட்டால் உனக்கு நேர்ந்த தண்டனையை நீயேதானே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் நெருங்காமலே மிகமிக விரைவில் திரும்பி அவன் கண்ணுக்கு மறைந்து போய்விட்டான். 3. சிற்றாவின் சீற்றம் பசுக்களில் சிற்றா ஒப்பற்ற பசு; சிறு பிள்ளைகள் அருகே சென்றால் கூடச் சும்மா நிற்கும். பால் கறக்கும் நேரம் தவறினால் அம்மா அம்மா என்று பால் கறப்பவனைக் கூவி அழைக்கும். இவ்வளவு பொறுமையுடைய சிற்றா முதலில் ஒரு தெறுதலையா யிருந்தது என்றால் யாராவது நம்புவார்களா? ஆம், கன்றாயிருக்கும்போது பார்க்கவேண்டும். அதனைக் காட்டிற்கு மேயப்போகும்போது ஊர்மாடுகள் அத்தனைக்கும் முந்தித் தலைதெறிக்க ஓடுவதும் சிற்றாதான். திரும்பி வரும்போது எல்லாப் பசுக்களும் வந்த பின்னும் பின் தங்கி மாட்டுக்காரப் பையன் மருதப்பனுக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டு துள்ளி வளைந்து வளைந்தோடி வருவதும் சிற்றாதான். தாய்ப்பால் மறக்கும் பருவம் ஆயிற்று. சிற்றாவுக்குக் கழுத்தில் பழுப்பான தோல்வார் இட்டு அதில் பொன்போல் பளபளப்பான பித்தளை மணி கட்டித் தூக்கியிருந்தது. புது வளையலிட்ட சிறு பெண்ணைப்போல் சிற்றாவுக்கு இது கலகலப்பாகவும் இருந்தது. தலையை ஆட்டும்போதெல்லாம் அதன் இனிய ஒலி கேட்டது கண்ட சிற்றா அடிக்கடி தலையை ஆட்டியும் ஓடி யாடியும் அதன் இன்னோசை கேட்டு மகிழ்ந்தது. ஆனால் இன்பப் பொருளாகிய இந்த மணி ஓசையிலும் ஒரு சூது இருக்கிறது என்பது இரண்டு மூன்று நாட்களுக்குள் சிற்றாவுக்கு தெரியவந்தது. மந்தையைவிட்டு நல்ல புல் வெளியில் சென்று போட்டியில்லாமல் புல் கறிக்கலாம் என்று ஓடிய போதெல்லாம், இந்தப் பாழும் மணிஓசை கேட்டு மாட்டுக்கார மருதப்பன் தன்னைப் பிடிக்க ஓடி வந்ததைக் கண்டு சிற்றாவுக்கு மணி மீது வெறுப்பு ஏற்பட்டது. “மனிதர் இந்த மணியை நம் கழுத்தில் கட்டியது நம் இன்பத்துக்குத்தான் என்று நினைத்தோம். அது உண்மையில் நம்மை ஓடவிடாமலும் நல்ல புல்வெளியில் தங்குதடையின்றி மேயவிடாமலும் தடுப்பதற்காகத் தான் எனத் தெரியாமல் ஏமாந்தோம்” என்று சிற்றா தனக்குள் நினைத்துக்கொண்டது. அதன்பின் சிற்றா முன்னிலும் பன்முறை முன்னிலும் வன்மையாகத் தலையைச் சுழற்றிச் சுழற்றி ஆட்டலாயிற்று. ஆனால், இப்பொழுது மணியின் இன்னொலி கேட்பதற்காக வன்று. மணியை எப்படியாவது உதறித்தள்ளி விடுவதற் காகவே, மணியும் எளிதில் போவதாயில்லை. சிற்றாவின் சிந்தனையெல்லாம் அதுமுதல் எப்படி மணியை உதறித் தள்ளுவது என்பது பற்றித்தான். நல்ல காலமாகவோ அல்லது கெட்ட காலமாகவோ அந்த வாரைச் சேர்த்துக் கட்டிய சணல்நார் நைந்த நாரா யிருந்தது. தண்ணீர் குடிக்க ஓடையண்டை சென்றபோது வழக்கம்போல் சிற்றா தலையை ஆட்டவும், வியக்கத்தக்க வகையில் மணி உருண்டு தண்ணீருக்குள் விழுந்தது. அதனுடன் தனது பலநாளைய கவலை ஒழிந்ததெனச் சிற்றா துள்ளிக் குதித்து ஓடலாயிற்று. என்ன வியப்பு! எவ்வளவு குதித்தும் இப்போது மணி ஓசையில்லை, இனி தனது மேய்ச்சல் மந்தைக்குள் கட்டுப் பட்டிருக்க வேண்டியதில்லை என்று எண்ணிச் சிற்றா மெல்ல மந்தையினின்றும் விலகி, மலையடி வாரத்திற்கு ஓடிற்று. போகும் வழியில் வளமான பச்சைப் புல்லைக் கண்டு ‘நாம்தான் நற்பேறுடையோம்’என்று மகிழ்ந்தது. மணியோசை கேளாததால் மருதப்பன் சிற்றாவை கவனிக்கவில்லை. சிற்றாவுக்கு இனி ஒரே ஒரு அச்சம்தான். முன் நாட்களில் வழி தவறியபோதெல்லாம் நாய் தன் பக்கம் பாய்ந்து தன்னைத் துரத்தியது அதற்கு நினைவு. நாய் தன்னை உண்மையில் கடிக்காது என்பது சிற்றாவுக்குத் தெரியாது. இன்று தன் மந்தை தப்பி அடுத்த மந்தைக்குப் போகவே அங்குள்ள நாய் குரைத்துக்கொண்டு சிற்றாவைத் துரத்திற்று நாய் என்றால் புலிதான் என்று நினைத்த சிற்றா விழுந்தடித்து ஓடிற்று நாய் சற்று நேரத்திற்குள் பின் தங்கிவிட்டது. ஆனால் சிற்றாவின் உள்ளத்தில் நாயின் அச்சம் விட்டபாடில்லை. ஆகவே சிற்றா நெடுந்தொலைவு ஓடி ஒரு பாறை ஏறித் தாவுகையில் அப்புறமிருந்த பாழ்ங் கிணறு ஒன்றினுள் விழுந்தது. விழுந்ததாலுண்டான உடல் வலியைவிட நாய் அங்கு வந்து கொன்று விடுமே என்ற அச்சமே சிற்றாவுக்கு மிகுதி. அச்சம் நீங்கியவுடன் வெளிக்கிளம்ப முயன்றது; நாற்புறமும் வழியில்லை. நீர் வேட்கையால் கத்தவும் முடியவில்லை, முடியுமட்டும் வாய்விட்டு இரைந்து கொண்டும் முணுகிக்கொண்டும் அது வருத்தத்துடன் இருந்தது. மணியோசையின் முழுப் பயனும் இப்போதுதான் சிற்றாவுக்கு மனத்திற் பட்டது. இனி யாது செய்வது? மருதப்பன் நெடுநேரம் சென்றுதான் சிற்றா காணாமற் போனதென்று அறிந்தான். அறிந்த அவன் காடும் மேடும் தேடினான். அவன் தந்தை அம்பலவாணனும் நண்பரும் வேறு மலையடிவாரம் முழுவதும் தேடினார்கள். அவர்களுடன் சென்ற மருதப்பன் சிற்றாவில்லாமல் வீட்டுக்குவர மனமில்லாமல் ஒரு பாறையில் உட்கார்ந்து சிற்றாவை நினைந்து வருந்திக் கொண்டிருந்தான். அப்போது சிற்றாவின் குரல் போல் மெல்லென ஒர குரல் கேட்டது. உடனே சற்று உரத்து ஆவலுடன், “சிற்றா! சிற்றா!” என்று கத்தினான். இப்போது குரலும் சற்று உரத்துக் கேட்டது. அதனைப் பின்பற்றி உற்று நோக்கப் பாழும் கிணற்றினுள் சிற்றா செயலற்றுக் கிடப்பதைக் கண்டான். தொலையில் போகும் தந்தையையும் நண்பர்களையும் மருதப்பன் கைகொட்டி அழைத்து அவர்களுதவியால் சிற்றாவை எடுத்துச் சென்றான். பல வாரம் சிற்றா படுக்கை யில் கிடந்தது. சிறு கன்றானதால் விழுந்து முறிந்த எலும்புகள் விரைவில் சேர்ந்தன. சிற்றா அதன்பின் மணியில்லாமலே மந்தைக்கு அடங்கி நடந்ததுமட்டுமல்ல, வேறு கன்றுகள் ஏதெனும் தப்பியோட முயன்றால் கூடத் தன் கொம்பினால் முட்டுவதாக அச்சுறுத்தி மந்தைக்குள் துரத்திவிடும். 4. குடிக்கூலி கோடைக்காலத்தில் குற்றாலத்தில் சென்று நாட் கழிக்க விரும்பித் தொலையிடங்களிலிருந்து பலர் வருவதால் அங்கே அப்போது குடிக்கூலிக்கு நெருக்கடி மிகுதி. எவ்வளவு குடிக்கூலி கொடுக்க முனைந்தும் இடம் அகப்படாமல் பலருக்கு இடர்பாடு ஏற்படுவதுண்டு. ஆகவே அங்கே தங்க விரும்புபவர் பல நாட்கள் முந்தியே குத்தகையாகக் கூடிக்கூலி பேசி முன் பணம் கொடுத்துவிடுவார்கள். வேறு சிலர் சில நாட் குடிக்கூலிக்கும் முழு ஆண்டுக் குடிக்கூலிக்கும் மிகுந்த வேற்றுமை இல்லை என்பது கண்டு, நிலையான குடிக்கூலி பேசிக்கொண்டு வேண்டும்போது அங்கே தங்கியும், மற்ற நேரங்களில் இன்னும் உயர்வான குடிக்கூலிக்கு அவ்விடத்தை விட்டும் வருவர். இதனால் அவர் களுக்கு வேண்டும் வாய்ப்புகளோடு மேலூதியமும் கிடைக்கும். கதிரொளிக்கும் சேந்தனுக்கும் கோடைவிடுமுறைக் காலம் வந்தது. குழந்தைகள் நலத்திற்காகவும், உடல் நலிந்திருந்த அவர்கள் தந்தையின் நலத்திற்காகவும் அனைவரும் குற்றாலத் திற்குச் சென்று தங்குவதாக ஏற்பாடாயிற்று. அவர்களுடன் சென்ற அண்டை குடியினரான கமுகவிளாகத்தினரும், பூஞ் சோலையாரும் ஒரே மொத்தமாக இரண்டு திங்களுக்குக் குடிக்கூலி பேசித் தங்கினர். ஆனால், கதிரொளியின் தாயாகிய கற்பகத் தம்மாளுக்கு அவ்வளவு நீண்ட காலத்துக்குத் குடிக்கூலி பேசி முடிக்கப் பிடிக்கவில்லை. இடையில் ஊர்செல்ல வேண்டியிருந்தால் குடிக்கூலியை வீணாக விட்டுவிட்டுப் போகவேண்டி வருமே என்று எண்ணிஅவள் பதினைந்து நாளைக்குக் குடிக்கூலி பேசிக் கொண்டாள். “அப்பதினைந்து நாளும் கழிந்தபின், வேண்டு மானால் இன்னும் பதினைந்து நாளோ, ஒரு திங்களோ பேசிக் கொள்ளலாமே; அதற்குள் என்ன கெட்டுப் போகிறது” என்றாள் அவள். ஆனால், உண்மையில் அவள் செய்த முடிவினால் எல்லாம் கெட்டுப்போயிற்று என்றுதான் சொல்லவேண்டும். பிள்ளை களுக்குப் பதினைந்து நாட்களும் பதினைந்து நொடிகளாகக் கழிந்தன. இன்னும் திங்கட் கணக்கில் இருக்க முடியாவிட்டாலும், விடுமுறைக்கால முழுமையுமாவது அங்கே தங்க அவர்கள் விரும்பினார்கள். அதோடு. தந்தையின் உடல் நிலையிலும் அப்பதினைந்து நாட்களுக்குள் எவ்வளவோ மேம்பாடு காணப்பட்டது. ஆகவே, இன்னும் ஒரு திங்கள் குற்றாலத்திலேயே தங்குவது என்று எல்லாரும் முடிவு கட்டினர். ஆயினும் அவர்கள் முடிவு கைகூடாமல் போயிற்று. அவர்கள் முதலில் பேசிய காலமுடிவிலிருந்து இரண்டு திங்கள் அவ்விடத்தை வேறு யாரோ பேசி முடித்துவிட்டார்கள். பக்கத்திலெல்லாம் கற்பகத்தம்மாளும், அவள் வேலையாளும் சென்று தேடியும் வேறு வீடும் அகப்படவில்லை ஆகையால் வேண்டா வெறுப்பாக அனைவரும் குற்றாலத்தலிருந்து விடைகொள்ள வேண்டிவந்தது. தந்தை பச்சைமாமலையாருக்கும், பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட மன உளைவைக் கேட்கவேண்டியதில்லை. பச்சை மாமலை, “சிலரது ஊதாரித்தனத்தினால் ஏற்படும் கெடுதியை விட இந்தக் கற்பகத்தின் மட்டற்ற சிக்கனத் தினால் வரும் கேடே மிகுதி” என்று முணுகிக்கொண்டார். கதிரொளியும், “அம்மா எப்போதும் இப்படித்தான். காசு காசு என்று கடைசியில் காசும் இழந்து காரியமும் இழப்பதுதான் அவள் வழக்கம்.” என்று குறைகூறினால் மற்றப் பிள்ளை களும் மனம் வெதும்பிக் களை இழந்து வாடி நின்றனர். சேந்தன் மட்டும் அப்போதும், “போகத்தான் போகிறோமே இந்தக்கடைசி நாளையாவது காலாரத் திரிந்து கழிப்போமே” என்றான். தற்காலிகமாக அதுவே சிறப்புடையது என்று எல்லாருக்கும் தோற்றிற்று. எனவே, அன்று காலைநேர முழுமையும் அவர்கள் அருவியோரங்களிலும் குறிஞ்சி நிலப் பரப்புகளிலும் நெடுநேரம் சுற்றித் திரிந்தனர். உச்சி உறைக்கு நேரம் தாழ்த்து மூன்று மணி யளவிலேயே வந்தனர். மாலை நேரத்தை எப்படிக் கழிப்பது நல்லது, என்று அவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். புதிய மலைச்சாலையின் மேல்புறமுள்ள சோலைகளில் சென்று உலாவலாம் என்றான் நெல்லை. அதன்படி அச்சாலை வழியே அனைவரும் சென்றார்கள். வழியில்செம்மையும் வெண்மையும் கலந்த அழகிய கொய்யாக் கனிகள் ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. வேலு அவற்றைக் காட்டி, “அதோ கொய்யாப்பழம் வாங்கித் தருவையா?”என்று சேந்தனிடம் கேட்டான். நெல்லை “என்னிடமும் காசு இருக்கிறது, சேர்த்து வாங்கு” என்றாள். எல்லாரிடமும் உள்ள காசுகளைச் சேர்த்து இரண்டே முக்கால் அணாவுக்குக் கனிகள் வாங்கி அவைகளைச் சேந்தன், மடியில் கட்டிக்கொண்டான். திரும்பவும் சாலைக்கு மீண்டு வரும்போது வழியில் நிலைகாலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மிதிவண்டி மீது நெல்லை காலிடறி விழுந்தாள். தடாலென்று மிதிவண்டியும் விழுந்து பாதையின் பக்கமுள்ள கால்வாய்க்குள் சரிந்த நெல்லையின் கால் கம்பிகளில் பட்டு நோகக்கண்டும், அதனை அடக்கிக்கொண்டு வண்டிக்குரியவர் யாரேனும் வந்து திட்டுவார்களோ என்று அஞ்சினாள். அச்சமயம் யாரோ ஒரு சீமாட்டி அப்பக்கம் ஓடிவந்து “பாவம், சிறு குழந்தைகள், நான் வண்டியை இப்படி இடக்கான இடத்தில் வைத்திருக்கப்படாதுதான்” என்று கூறினாள். மேலும் அவள் விழுந்த பிள்ளை யார் என்று உசாவி நெல்லையை அன்பாயழைத்துத் தடவிக்கொடுத்துக் கடைக் காரனிடம் இன்னும் சில பழங்கள் கொடுக்கும்படி சொன்னாள். அஞ்சுதல் கொண்ட இடத்தில் இத்தனை நட்பு ஏற்பட்டது கண்டு மகிழ்ந்தனர் பிள்ளைகள். அவள் எவ்வளவோ நல்லவள். பிள்ளைகளுடன் பழகிய உயர்குடி மாதாக இருக்கவேண்டும் என்று எல்லாரும் பேசிக்கொண்டனர். ஆனால், கதிரொளி மட்டுமே நம்மை இவ்வளவு பாராட்டிய அச் சீமாட்டியின் பெயர் இடம் எதுவும் உசாவி யறிந்து கொள்ளாமற் போனோமே என் வருந்தினாள். சாலை நெடுந்தொலை ஏற்றமாகச் சென்றது. பழங்களைத் தின்றுகொண்டே ஏறிச் சென்றனர். இடையில் வேறு தண்ணீர் வேண்டும் என்றாள். நீர்வீழ்ச்சி பக்கத்திலில்லா ததால் குடிநீருக்கு அங்கே எங்கே போவது என்று சுற்றிப் பார்த்தார்கள். பக்கத்துத் தோட்டத்தினுள் வானளாவும் சக்கரப் பொறி சுழல்வது கண்டு, அங்கே சிறு நூலின் வழி ஓடும் நீர் இருக்கும் என்று அதனுள் சென்றார்கள். எண்ணியபடி அங்கே அழகிய பூஞ்சோலையும், அதற்குத் தண்ணீர் பாயும் அழகிய சிறு நீரோடையும் இருந்தன. பிள்ளைகள் அதனருகில் சென்று உட்கார்ந்து நீர் அருந்தினார்கள். அவர்களும் நீர் அருந்திக் கனிகளைப் பரப்பிவைத்துத் தின்னத் தொடங் கினார்கள். அவ்வளவில் ஒரு பெரிய தாட்டையன் அப்பக்கம் ஓடிவந்து கனிகளைப் பறித்துக்கொண்டு அவர்கள்மீது சீறினான். “என்ன துணிச்சல் உங்களுக்கு, இதனுள் நுழைந்து பழங்களைப் பறித்து இங்கேயே தின்ன,” என்றான் அவன். கதிரொளி, “பழம் இங்கே பறித்ததில்லையே, விலைக்கல்லவா வாங்கினோம்!” என்றாள். அவன், “யாரிடம் இந்தப் பொய். விலைக்கு வாங்கிய வர்களா இந்தச் சோலை தேடிவந்து தின்னவந்தீர்கள்?” என்று சொல்லிக்கொண்டு கையிலகப்பட்ட சேந்தன் செவியைத் திருகினான். சேந்தன். “அடே அய்யா, அப்பா” என்று கூவினான். வேலுவும் நெல்லையும் ‘அண்ணா அண்ணா’ என்ற கதறினர். அச்சமயம் சற்று முன் அவர்கள் கண்ணுற்ற மிதி வண்டிக்குரிய மாது ‘சரிங் சரிங்’ என்று மிதி வண்டியின் மணியை அடித்து கொண்டு உள்ளே வந்தாள். அவள் முதலில் பிள்ளைகள் யார் என்று கவனியாமலே அம் மனிதனைப் பார்த்து,“அவர்களை ஏனடிக்கிறாயடா?” என்று கேட்டாள். அக் கேள்வியின் எடுப்பிலிருந்து அவன் வேலைக்காரன் என்று அவள் தான் அத் தோட்டத்திற்கும் அதனை ஒட்டியுள்ள மாளிகைக்கும் உரியவள் என்று பிள்ளைகள் எண்ணினார்கள். வேலைக்காரன், “இவர்கள் துணிந்து தோட்டத் திற்குள் வந்ததுடனல்லாமல், நம் கொய்யாக் கனிகளைப் பறித்து இங்கேயே அச்சமின்றித் தின்று கொண்டிருக்கிறார்கள். அதனை விலைக்குவாங்கினோம் என்று என்னைவேறு ஏமாற்றப் பார்க்கிறார்கள்.” என்றான். அவள்,“என்னடா, இவ்வளவு சிறிய பிள்ளைகள் அப்படித் துணிந்து பறிப்பார்களா, பறித்தாலும் இங்கே வைத்துத் தின்ன எண்ணுவார்களா? நீ முன்பின் ஆராயாது அவர்களை கண்டித்தது தவறு. நான் கண்டது நல்லதாயிற்று. அவர்கள் விலைக்கு வாங்கியதை நானே கண்டேன். சில பழங்களை நானே வாங்கியும் கொடுத்தேன்.”என்றாள். அப்போதுதான் பிள்ளைகள் அவள் பக்கம் திரும்பி அவள் முன் தான் கண்ட மாதே என்று உணர்ந்தனர். வேலு ஓடிச்சென்று அவள் ஆடையைப் பற்றிக்கொண்டு, “மாமி, மாமி” என்றான். அவள் வேலுவைத் தோளில் தூக்கி மிதிவண்டி மீது வைத்துக்கொண்டு, “வாருங்கள், உங்களுக்குத் தின்பண்டம் தருகிறேன்; களைப்பாறிச் செல்லலாம்” என்றாள். வேலைக்காரன் தலைவியின் செயல்கண்டு, நடை தோற்றம் யாவையும் மாற்றிக்கொண்டு, சேந்தனை வணங்கி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பிள்ளைகளுடன் நடந்து பின் சென்றான். இரண்டுமணி நேரத்துக்குள் அம் மாதுக்கும் கதி ரொளிக்கும் இணைபிரியா நட்புண்டாயிற்று. பலநாள் பழகியவர்கள்போல இருவரும் பழங்கதைகள் புதுக்கதைகள் யாவற்றையும் பேசிப் பேசிக் களித்தனர். அப்போது கதிரொளி, மறுநாள் தாங்கள் அவ்விடம் விட்டுச் செல்ல வேண்டியிருப்பதைத் தெரிவித்தாள். அதன் காரணத்தை அறிந்த உடனே அம் மாது, “இவ்வளவுதானே, பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோலாயிற்று. எங்கள் வீட்டுப் பின் புற மாளிகைக்கு முன்பணம் தந்த மனிதர் தம் உறவினர் உடல் நலிவால் வரல் முடியாதென்றும், முன்பணத்தைக்கூடத் தாம் பொருட்படுத்த வில்லையென்றும், வீட்டை வேறு குடிக்கூலிக்கு விட்டுவிடலாம் என்றும் தந்தியடித்திருந்தனர். முன்பணத்தை இப்போதுதான் அனுப்பிவிட்டு வருகிறேன். நீங்கள் இங்கே வந்து எத்தனைநாள் வேண்டுமானாலும் இருக்கலாம்” என்றாள். வழியிடறி விழுந்தவனுக்குப் புதையல் பட்டது போலாயிற்று பிள்ளைகளுக்கு. அவர்கள் குற்றால வாழ்வே குறைவற்ற வாழ்வாக வாழ்ந்தனர். 5. மூட்டைப்பூச்சி ஓர் ஊரில் மூட்டைப்பூச்சு இருந்தது. அதற்கு ஒரு பெண். அந்த பெண்ணை அது மிகவும் செல்வமாக வளர்த்து வந்தது. பெண் பூச்சி நன்றாக வளர்ந்து பருத்தது. அது முன்கோப முடையது. எடுத்ததற்கெல்லாம் அதற்குக் கோபம் வந்துவிடும்; முகத்தை சுளித்துக்கொண்டு மூலையில் போய் உட்கார்ந்து கொள்ளும். பிறகு தாய்ப்பூச்சி சென்று நல்சொற்கள் கூறிக் கொஞ்சினால்தான் அதற்குக் கோபம் தணியும். போதாக் குறைக்குத் தன்னிலும் அழகு மிகுந்த மூட்டைப்பூச்சி வேறெதுவுங் கிடையாது என்று நினைத்து, அது செருக்குக் கொண்டிருந்தது. தாய்ப்பூச்சிக்கு இவையெல்லாம் பிடிப்பதில்லை. ஒரே பெண்ணாயிற்றே என்று பொறுத்துக்கொண்டிருந்தது. இருந்தாலும், அவ்வப்போது அது தன் பெண்ணிற்குச் சூடு கொடுக்கத் தவறுவதில்லை. “சொன்னேன் கேள்! பெண்ணாய்ப் பிறந்த உனக்கு இவ்வளவு முன்கோபமும், படபடப்பும் உதவா! எவ்வளவுக் கெவ்வளவு பொறுமையுடனிருக்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு சீர் பெறுவாய். உன்னைவிடக் கோபத்தில் நான் குறைந்தவளல்லள். இருந்தாலும் குடும்ப நிலையைக் கருதி அதையெல்லாம் அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் முரண்டினாயோ ஒரே நசுக்காக நசுக்கி விடுவேன். ஒரே பெண்ணாயிற்றே என்று கூடப் பாரேன்! மனத்திலிருக்கட்டும்!” என்று அது கூறும்போதெல்லாம் பெண்பூச்சி சற்று அஞ்சி அடங்கிவிடும். இருந்தாலும் அதன் பிறவிக் குணமாகிய முன்கோபம் அதனை விட்டபாடில்லை. பெண்பூச்சிக்கு வயது வந்தது. அதற்கேற்ற மணமக னொருவன் வேண்டுமே என்று தாய்ப்பூச்சி கவலைகொண்டு தேடி அலையாக அலைந்தது. கடைசியில் பக்கத்தூரிலேயே அழகிய மாப்பிள்ளைப்பூச்சி ஒன்று கிடைத்தது. மணவினை சிறப்பாக நடந்தேறியது. மாதம் ஒன்று கழிந்தது. பெண்ணை பல்லக்கிலேற்றி மாமியார் வீட்டிற்குத் தாய் பூச்சி அனுப்பிவைத்தது. பல்லக்கும் மாமியார் வீட்டு வாயிலின்முன் வந்து நின்றது. முத்துப்போன்ற பற்கள் வெளியே தெரிய சிரித்துக் கொண்டே பெண், பல்லக்கைவிட்டு கீழே இறங்கிற்று. அப்பொழுது வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்த அதன் மைத்துனப்பூச்சி “அடடே, அண்ணியாரின் பல் பாகல் விதை போலிருக்கிறதே!” என்று விளையாட்டாகக் கூறிற்று. அதைக் கேட்டதும் பெண்ணுக்குக் கோபம் பொங்கியது. எனினும் வீட்டினுள் காலெடுத்து வைத்ததும் வைக்காமலும் இருக்கும்பொழுதே சண்டையிடுதல் கூடாதென்று ஒருவாறு அது தன் கோபத்தை அடக்கி கொண்டது. அன்றைப் பொழுது ஒருவாறு கழிந்தது. மறுநாள் காலையுணவிற்காகத் தோசை சுட வேண்டி யிருந்தது. பெண் அடுப்பின் மீது தோசைக்கல்லை ஏற்றி மா இருந்தவரையில் தோசைகளைச் சுட்டு அடுக்கிற்று. அதற்கு வேண்டிய துவையலையும் அரைத்து வைத்தது. கடைசியில், மிஞ்சிய மாவைத் தோசைக்கல்லில் ஊற்றிவிட்டுத் தெருப் புறம் வந்து நின்றது. சிறிது நேரமானதும், கல்லிலிருந்த தோசை காந்துவதைக் கண்டு, மாமியார்ப்பூச்சி சட்டுவத்தை தேடிற்று; அகப்படவில்லை. தெருப்புறம் வந்து பெண்ணைப் பார்த்து, “பெண்ணே, இலஞ்சியமே! நீ ஆண்ட சட்டுவத்தைத் எங்கே வைத்தாய்?” என்று அன்புடன் கேட்டது. அவ்வளவுதான்? வந்துவிட்டது, பெண்ணிற்குக் கோபம் மூக்கின்மேல். “சமையற்காரியைக் கேட்பதுபோல், ‘சட்டுவம் எங்கே’ என்று என்னை மட்டு மரியாதையில்லாமல் எப்படிக் கேட்கலாம்? அதுவும், தெருவில் நிற்கும் போதா வந்து கேட்பது? நேற்று என்னடாவென்றால் ‘என் பல் பாகல் விதையைப் போலிருக்கிறது’ என்று மைத்துனன் பழித்தான். போனாற் போகிறதென்று பொறுத்துக்கொண்டேன். இன்று தெருவில் வந்த ‘சட்டுவத்தை எங்கே வைத்தாய்!” என்று மாமியார் கேட்பதா? என்னதான் மாமியாராயிருந்தாலும் இவ்வாறு மானங்குலைக்கலாமா? இனி ஒரு நொடிப்பொழுதுகூட இங்கே தங்கமுடியாது. வாழந்தால் மானத்தோடு வாழவேண்டும். மானமிழந்த பின் வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா? இனிச் செத்தாலும் சாவேனேயன்றி இவ் வீட்டின் பக்கந் திரும்பிக்கூடப் பாரேன். யார் என்ன சொன்னாலும் சரி” என்று கூச்சலிட்டது. கூச்சலிட்டு முடித்த பின் பல்லக்குப் போகினை நோக்கி “எடடா சிங்கம், பல்லக்கை; விடடா பிறந்தகத்திற்கு!” என்று கட்டளையிட்டுப் பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டது. பல்லக்கும் புறப்பட்டு விட்டது. வழியிலிருந்த குளக்கரை யொன்றில் கணவன் பூச்சி எண்ணெய் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அதைக் கண்டதும் குளத்திற்குநேரே பல்லக்கை நிறுத்தச் சொல் லிற்று பெண்பூச்சி. பல்லக்கு நின்றது; கதவு திறந்தது. உள்ளே யிருந்தபடியே, “எண்ணெய் தலையழகா, இருகாதும் பொன்னழகா! உன்னாச்சி என்னை உருவவுருவச் சொன்னாளே! என்று பெண் உரக்கக் கூறிற்று. கூறி முடிந் ததும் கதவு மூடிக்கொண்டது. பல்லக்கு மீண்டும் புறப்பட்டு விட்டது. வீடுவந்து சேர்ந்ததும் பெண்பூச்சி இறங்கி வீட்டினுட் சென்றது. தாயினிடம் நடந்தவற்றை யெல்லாம் கூறித் தேம்பித் தேம்பியழுதது. தாய்ப்பூச்சிக்கு உண்டான கோபத் திற்கு அளவேயில்லை. “என்ன தலைமுழுகிப் போய்விட்டது என்று ஊர் திரும்பிவிட்டாய்! இந்த அற்ப காரியத்திற்காக மனம் புண்ணாகி இனிப் புக்ககம் திரும்புவதில்லையென்று முடிவு கூறி வந்து விட்டாயோ! முளைத்து இன்னும் இரண்டிலை சரியாக வெடிக்கவில்லை. அதற்குள் இத்தனை செருக்கா? நான் உன்னை உண்டாயிருக்கையில் மண்கரைச்சான் காலம் வந்துவிட்டது. எல்லோரும் வரிச்சற் குடிக்கு இடம் மாற வேண்டியதாயிற்று. வழியில் ஒரு மகிழமரம் இருந்தது. அதனடியிற் செல்லும்போது, கொத்தோட ஒரு மகிழம் பூ இற்று என் மார்பில் விழுந்தது. வயிறும் பிள்ளையுமாக இருந்த எனக்கு எப்படியிருக்கும்! துக்கம் தொண்டையை அடைக்க, உன் தந்தையிடம் தெரிவித்தேன். நொந்ததா நோவவில்லையா? என்று கூட உன் தந்தை கேட்கவில்லை. இதைவிட மானக்கேடு வேறு என்ன வேண்டும்? அப்படியிருந்தும் அவ்வளவையும் பொறுத்துக்கொண்டேன். எப்படியாவது நம் குடித்தனம் நன்றாக இருக்கவேண்டுமே என்று கோபத்தை அடக்கிக்கொண்டேன். உன்னையும் பெற்றேன். ஆண்டுகள் பல வளர்த்தேன். நல்ல மாப்பிள்ளையைத் தேடி மணமுடித்து வைத்தேன். இப்படி யெல்லாமிருக்க, நீ என்னடா என்றால், “சட்டுவமெங்கே? என்று மாமியார் கேட்டதால் குடி முழுகி விட்டதாக நினைத்துவிட்டாய்போலும். உடனே, புத்தகத்தை விட்டுப் புறப்பட்டுவிட்டாய். இனி அந்தப் பக்கந் திரும்பமாட்டேன் என்று உறுதி கூறிவிட்டு வந்ததாக என்னிடம் நாக்கில் நரம்பில்லாதவள்போல் அச்சமின்றிச் சொல்கிறாய். உன்மேல் குற்றமில்லை. எல்லாம் நான் சிறு சிறுவயதில் உனக்குக் கொடுத்த செல்லத்தினால் விளைந்த கேடு. உன்னைச் சிரிப்பதுமன்றி, உன்னைப் பெற்ற என்னையுமன்றோ உலகம் பழிக்கும். மூக்கு முனையில் இப்படிக் கோபத்தை வைத்திருக்கிற நீ எத்தனைநாள் வாழலாமென்று புக்ககம் துறந்து பிறந்தகம் வந்தாய்? குடிப்பழி தேடிய உன்னை ஒரே மிதியாக மிதித்தால் என்ன? என்று கூறியபடியே தாய், காலைத் தூக்கி மிதித்தது. செருக்கு மிகுந்த பெண்பூச்சி நசுக்குண்டு மாய்ந்தது. இஃதிவ்வாறாக, பல்லக்கிலிருந்தபடி தன் மனைவி சொல்லிச் சென்ற சொற்களைக் கேட்ட கணவன் பூச்சி, தலைகூட முழுகாமல், நேரே வீட்டிற்கு ஓடிற்று. “என் தாயே, என்னாச்சி, என் தேவியை என்ன சொன்னாய்?”என்று நெஞ்சந் துடிக்கத் தன் தாயைக் கேட்டது. மிகுந்த வருத்தத்துடன் நடந்ததை மாமியார்ப் பூச்சி கூறிற்று. உடனே கணவன் பூச்சி சினந்தணிந்து, தன் தாயாரின் அடிபணிந்தது. தாயே, என் பிழையைப் பொறுத்தருள். அவ்வளவு செருக்குப் படைத்த மனைவி எனக்கு வேண்டா! அவளை இனி தான் திரும்ப அழைக்கமாட்டேன்.” என்று முடிவாகக் கூறி விட்டது. 6. ஆபத்தை விளைக்கும் அழகான பொருள் உலகில் எல்லாப் பொருளிலும் நன்மையும் தீமையும் கலந்தேயிருக்கும். தீ நமக்கு எவ்வளவு பயனுடைய பொருள். நம்முடைய உணவைச் சமைப்பதற்குத் தீத்தானே வேண்டும். அத்தீயே நம்மைச் சுடுகின்றதல்லவா? அதனால் அத்தீயை நாம் இகழலாமா? செல்வத்தை நாம் விரும்புகிறோம். செல்வத்தால்தான் உலகில் பல காரியங்களை நாம் செய் கின்றோம். நாம் உண்பதற்கும், உடுப்பதற்கும், படிப்பதற்கும், அறஞ்செய்வதற்கும் செல்வம் துணை செய்கிறதல்லவா? அச் செல்வத்தாலேயே ஒருவனுக்குத் தீமை வருவதும் உண்டு. செல்வனுக்குத் திருடரால் அச்சம் உண்டு. ஆனாலும், செல்வம் இன்றியமையாத பொருள். உலகில் எல்லோரும் அழகைத்தானே விரும்புகிறார்கள் அந்த அழகால் சில சமயம் தீமையும் உண்டாகிறது. அழகுடைய ஒரு பொருள் ஒருவனிடம் இருந்தால் அதைத்திருட நினைக்கிறான் மற்றொருவன். அதனால் பொருளுடையவன் பொருளை இழக்கிறான். ஆதலால் எல்லாப் பொருளிடத்திலும் நன்மை தீமை இருப்பதை நாம் உணரவேண்டும். ஆராயாமல் எந்தப் பொருளையும் நல்லது, கெட்டது என்று முடிவு செய்தல் கூடாது. மிகுந்த நன்மையுள்ளதை நல்லதென்றும் மிகுந்த தீமையுள்ளதைக் கெட்டதென்றும் ஆராய்ந்து முடிவு செய்தல் வேண்டும். ஒரு காட்டில் ஒரு கலைமான் இருந்தது. அதன் கொம்பு பல கவர்களாய்ப் பிரிந்து பார்ப்பவர் கண்களைப் பறிக்கும் படி அவ்வளவு அழகா யிருந்தது. நெடுநாள் அந்த மான் யாதொரு துன்பமுமின்றி மிக மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அது மேய்ந்து கொண்டிருக்கையில் அதற்கு நீர் வேட்கை உண்டாயிற்று. நீர் வேட்கையைத் தணிப்ப தற்காக அது ஓர்ஏரிக்குச் சென்றது. ஏரி நீர் தெளிவாக இருந்ததனால் அதன் நிழல் அதில் நன்றாய்த் தெரிந்தது. அதன் கொம்பு மிக அழகாயும் கால்கள் மிக மெல்லியவை யாயும் இருப்பதை அது கண்டது. ஆம், ஆம், நமது கொம்பு எவ்வளவு அழகுடையன. இந்த அழகையெல்லாம் நம் முடைய கால்கள் கெடுக்கின்றனவே என்றுதன் கொம்பு களை மெச்சிக் கொண்டும் கால்களை இகழ்ந்துகொண்டும் இருந்தது. அப்போது திடீரென்று வேட்டைக்காரர்கள் வந்துவிட்டார்கள். உடனே அது வெகு விரைவாக ஓடத் தொடங்கிற்று. வேட்டைக்காரர்கள் ஏறியிருந்த குதிரை களும் விரைவாகப் பின்தொடர்ந்தன. கலைமான் காற்றாய்ப் பறந்து சில நாழிகைக்குள் நூற்றுக்கணக்கான கல்தொலை ஓடிவிட்டது. குதிரைகள் எவ்வளவோ தொலை பிந்தி விட்டன, ஆயினும் பின் தொடர்வதை விடவில்லை. வேட்டைக்காரர்களிடமிருந்து மான் நெடுந்தொலை யில் சென்று விட்டது. சென்றும் என்ன பயன்? அதன் கொம்பு திடீரென்று ஒரு முட்செடிக்குள் மாட்டிக் கொண்டது. மான் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தது; ஆனால் முடியவில்லை. அதற்குள் வேட்டைக்காரர்கள் வந்துவிட்டார்கள். ஐயோ, ஏழை மான் என்ன செய்யும்? அது இகழ்ந்த கால்களால் அது எவ்வளவோ தொலைவரையில் விரைந்தோடிச் சென்றது. மிக அழகியதென்று அது மெச்சின கொம்பே கடைசியில் அதற்கு எமனாயிற்று. வேட்டைக்காரர்கள் மானை அதன் இறைச்சிக்காக மட்டும் அன்று; அதன் கொம்புக்காகவே வேட்டையாடினர். மான் கொம்பினால் கத்திப்பிடி, பொத்தான் முதலிய பல பொருள்கள் செய்யப்படும். ஆகையால், அழகான அதன் கொம்பே அதனை இறந்துபோகும் படி செய்தது. ஆகையால், அழகால் மயங்கி அழியக் கூடாது. அழ கில்லாத பொருளும் ஆபத்திற்கு உதவும். 7. எல்லாம் நன்மைக்கே உலகில் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கும். இன்பத்தை விரும்புவதும் துன்பத்தை வெறுப்பதும் மக்க ளுடைய இயற்கை. துன்பத்தை வெறுப்பதால் அத்துன்பம் நம்மைவிட்டு நீங்குமா? ஆதலால் துன்பத்தை உலக இயற்கை என்று எண்ணல் வேண்டும். அமைதியோடு ஏற்று மனங் கலங்காத தன்மையை நாம் அடையப் பழகவேண்டும். மனக் கலக்கம் மேன்மேலும் துன்பத்தை மிகுவிக்கும் அல்லவா? மனக்கலக்கம் இல்லாமல் இருப்பது எப்படி? நம் அறிவா லேயே அது கூடும். அறிவுடையவன் துன்பத்தைக் கண்டு அஞ்சமாட்டான். அத்துன்பத்தைத் தீர்ப்பதற்கு உரிய வழியை ஆராய்ந்தறிவான். அறிவில்லாதவன் துன்பத்தைத் தீர்ப்ப தற்கு வழி அறியாதவனாய்க் கலங்குவான். நமக்கு இன்பம் வந்தாலும் நாம் அளவு கடந்து மகிழ்தல் கூடாது. மனத்தை அடக்கி மகிழ்ச்சியை ஏற்றல்வேண்டும். இப்படி இருந்து கொண்டுவந்தால் நமக்குத் துன்பம் வந்தாலும் நம்முடைய மன அடக்கத்தால் அத்துன்பத்தைக் குறைக்கலாம். நமக்குத் துன்பம்போன்று தோன்றுபவை நமக்கு இன்பம் கொடுப்பதும் உண்டு. தாய் தன் மகனுக்கு மருந்து கொடுப்பது துன்பமாகத் தோன்றுகிறதல்லவா? அதனால் உடலுக்கு நன்மையே உண்டாகிறது. தந்தை தாய் ஆசிரியர் கள் சில சமயங்களில் பிள்ளைகளைக் கடுமையாய்ப் பேசுவது துன்பமாகத் தோன்றுகிறது. அதனால் நன்மை யுண்டாவதைப் பிள்ளைகள் பின் உணர்வார்கள்.இதேபோல் கடவுள் சில சமயங்களில் சில துன்பங்களை மக்களுக்குக் கொடுக்கிறார். பிறகு அத்தீமையால் நன்மையும் உண்டாகிறது. ஓர் ஊரில் அகிபாய் என்னும் மகம்மதிய ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவர் மகம்மதியர்களுக்கு அறிவு புகட்டி வந்தார். அவர் சிறந்தவர். பல இடங்களுக்குப்போய் மக்கள் தன்மைகளை உணர்ந்து ஒழுங்குபடுத்துவார்; அவர் நல்ல பொருள்களை அடையும்படி மக்களுக்கு அறிவித்தார். அவர் மொழிக்குப் பலர் இசைந்தார்கள்; அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள். நல்ல வழியில் நடக்கப் பழகிக் கொண்டார்கள்; நல்ல வாழ்வை மக்கள் பெறப்பாடுபட்டுப் பல நாளும் உழைத்தார். அவர் ஒரு கூடாரத்தையும், சேவலையும், ஒரு கழுதையையும் உடையவராயிருந்தார். அவர் அவற்றை எங்குப் போனாலும் எடுத்துக்கொண்டுபோவார். கழுதை கூடாரத்தைச் சுமக்கும். சேவல் கூவி நேரத்தைக் காட்டும். கூடாரம் தங்க இடம் கொடுக்கும். கோழி கூவினால் அகிபாய் எழுந்து கடவுளைத் தொழுவார். அவர் ஓரிடத்தும் நிலையாக இருப்பதில்லை. கடவுளையே மனத்தில் இருத்திக் காலம் கழிப்பார். ஒரு நாள் அவர் ஓர் ஊருக்குப்போனார். வழி நெடுந்தொலையானதால் ஊர் போய்ச் சேருமுன் இருட்டிவிட்டது. இரவு ஒன்பது மணி, ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும்போய்க் கதவைத் தட்டி இடங்கொடுக்கும்படி கேட்டார். ஒருவரும் இடம் கொடுக்க வில்லை. பிறகு ‘எல்லாம் நன்மைக்கே’ என்று சொல்லிவிட்டு ஊருக்கு வெளியே சிறிது தொலைபோய்க் கூடாரத்தை அடித்தார். இரவு பத்துமணியாயிற்று. பிறகு சிலநேரம் மறை ஓதினார். கடவுளை எண்ணிக் கொண்டே தூங்கிவிட்டார். விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப்பின் ஒரு கழுதைப்புலிவந்து கழுதையைத் தூக்கிக்கொண்டு போய் விட்டது. பிறகு ஒரு நரி வந்து சேவலைப் பிடித்துக்கொண்டு போய்விட்டது. ஆசிரியர் எழுந்து பார்த்தபோது கழுதையையும் சேவலையும் காண வில்லை, அவர் “எல்லாம் நன்மைக்கே” என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டார். காலையில் எழுந்ததும் அவர் ஊருக்குள் சென்றார். அங்கே ஊராரெல்லாம் வந்து அவர் காலில் விழுந்து, “ஐயா நேற்று நாங்கள் உங்களுக்கு இடங்கொடுக்காததினால் கொள்ளைக் காரர் வந்து எங்கள் சொத்துக்களையெல்லாம் கொள்ளை யடித்ததுமல்லாமல், எங்கள் வீடுகளையும் தீக் கொளுத்திவிட்டுப் போய் விட்டார்கள்.” என்று சொல்லி அழுதார்கள். உடனே ஆசிரியர் தமக்கு முந்தின இரவு நேர்ந்ததெல்லாம் நன்மைக்கே என்று கண்டு கொண்டார். விளக்கு எரிந்திருந்தாலும், கழுதை கத்தியிருந் தாலும், சேவல் கூவியிருந்தாலும் ஆசிரியர் இருக்கிற இடத்திற்கும் கொள்ளைக்காரர் வந்திருப்பார்கள். அம் மூன்றும் இல்லாமையால் அகிபாய் இருப்பிடம் கொள்ளைக் காரர்களுக்குத் தெரியாதுபோயிற்று. ஆகையால் நமக்கு நேர்வன எல்லாம் நன்மைக்கே என்று அறிதல் நல்லது. எஎஎ வியப்பூட்டும் சிறுகதைகள் முதற் பதிப்பு - 1957 இந்நூல் 2002 இல் ஏழுமலை பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. பண்ணன் பண்ணை குறுங்குடி என்ற ஊரில் பண்ணன் என்ற ஓர் ஏழை அம்பட்டன் இருந்தான். அவன் சிறு பிள்ளைப் பருவமுதலே மிகவும் சோம்பேறியாக இருந்தான். ஆனாலும் அவன் அழகிற் சிறந்தவன். நுண்ணறிவுடையவன். யாரையாவது உருட்டிப் பசப்பி வாழப் படித்திருந்தான். அவன் பசப்புக்களுக்கு ஆளாகி, ஒரு பெண் அவனை மணந்துகொள்ள இணங்கினாள். அவள் பெயர் பைந்தொடி. அவள் பெற்றோரும் உறவினரும்கூட அவன் நயநாகரிகப் போக்கில் ஈடுபட்டிருந்தார்கள். ஆகவே, அவளை அவன் மணந்து கொள்ள இசைந்தார்கள். பண்ணன் பைந்தொடி யுடன் தனிக்குடித்தனம் தொடங்கி நடத்தலானான். பண்ணன் நாடோடி வாழ்வுடன் அவன் பெற்றோர் வாழ்வு எப்படியோ ஒத்துக்கொண்டது. ஏனென்றால், அவன் தந்தை உழைத்து வீட்டுக்கு வேண்டியவற்றைச் செய்து தந்தார். ஆனால், அவன் மணமான சில நாட்களுக்குள் தந்தை காலமானார். பண்ணன் ஊர் சுற்றி எப்படியோ தன் வயிறு கழுவி னான். அவன் மனைவி படிப்படியாகக் கால்பட்டினி, அரைப்பட்டினியாக அவதிப்பட்டாள். மாமியிடமிருந்தும் அவள் எந்த உதவியும் எதிர்பார்க்க முடியவில்லை. ஏனெனில், அவளும் உணவுக்கும், உடைக்கும் ஆலாப் பறக்கலானாள். உழைத்து ஏதாவது பணம் திரட்டும்படி தாயும், மனைவியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். பண்ணனுக்குப் பொறுப்புணர்ச்சியும் வரவில்லை. அவர்கள் துன்பங்கண்டு இரக்கங்கூட உண்டாகவில்லை. “என்னால் உழைக்கமுடிவில்லை. வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? வேறு எந்த ஊருக்குப் போனாலும் நிலைமை மாறாது. இந்த ஊர் பழகிவிட்டதுபோல, அந்த ஊர் பழக்கப்பட்டதாயிராது” என்றான். “தன் ஊரில் தன் வயிறு கழுவ முடியும் வரை, அடுத்த வர்களைப் பற்றி அவன் கவலைப்படப் போவதில்லை” என்று தாயும் மனைவியும் கண்டார்கள். அவர்கள் தங்கள் தங்களாலான ஊழிய வேலைகளைச் செய்யத் துணிந்தார்கள். அப்படியும் அவர்கள் நல்வாழ்வு வாழமுடியவில்லை. அரும்பாடு பட்டும் அவல வாழ்வு வாழ்ந்தனர். அந்த வாழ்விலுங்கூடப் பண்ணன் நாணமில்லாமல் அவர்களைப் பசப்பி அவர்களிடமிருந்து ஒன்றிரண்டு காசு கைப்பற்றி வந்தான். கணவன் மானமற்றப் போக்கு பைந்தொடியின் உள்ளத்தைச் சுட்டது. ஒரு நாள் அவள் மனம் விட்டுப் பேசினாள். “அன்பரே, பெண்களுக்குக் “கணவன் கல்லானாலும் காவலன், புல்லானாலும் பூமான்” என்பார்கள். நீங்கள் என்ன செய்தாலும், எப்படி இருந்தாலும் என் உள்ளத்தில் உங்களுக்குக் கட்டாயம் இடமிருக்கும். ஆனால், ஊரார் உங்களைப்பற்றி எண்ணுவதும் பேசுவதும் கேட்க எனக்கு மானம் பிடுங்கித் தின்கிறது. கணவனைப் பறிகொடுத்த கைம்பெண்கள்தான் தன் கைவேலையால் அவலவாழ்வு வாழ்வார்கள். அப்போதுகூடத் தங்களுக்கு ஒரு பிள்ளை இருந்தால் அந்த நிலைக்குஅவர்களைப் பிள்ளைகள் விடமாட்டார்கள். ஆனால், நீங்கள் உங்கள் தாய்க்குப் பிள்ளையாயிருந்தும் தாயை ஊரில் அலையவிடு கிறீர்கள். நீங்கள் உயிருடனிருக்கும் போதே என்னைக் கைம்பெண் போல வாழும்படி செய்து வருகிறீர்கள். இதைக்கண்டு நையாண்டி செய்பவர்களிடமே நீங்கள் சென்று பசப்பி ஒட்டி வாழ்கிறீர்கள். நீங்கள் இதை அறியாமல் வாழமுடிகிறது. என்னால் இதைத் தாங்கிக் கொண்டு நெடுநாள் வாழமுடியாது. மானத்துடன் வாழ முடியவில்லையானால், நான் உயிரையாவது விட்டுவிடவேண்டும். நான் கைம்பெண்ணாக இருப்பதைவிட, நீங்கள் மனைவியற்றவராக இரப்பதுதான் உங்கள் போக்குக்குப் பொருத்தமும், மதிப்பும் ஆகும்” என்றாள். பண்ணன் சோம்பேறி மட்டும்தான். மானமற்றவன் அல்லன். மனைவியின் சொற்கள் மிகையுரைகளல்ல, மெய்ம் மொழிகளே என்பதை அவன் நன்கு உணர்ந்தான். “இந்த நிலைமையை நான் விரைவில் போக்குகிறேன். நீ கவலைப்பட வேண்டாம். எப்படியும் பணம் திரட்டிக்கொண்டு விரைவில் வருகிறேன்” என்றான். மலடி ஒரேயடியாக மூவிரட்டையாகப் பிள்ளைகளைப் பெற்றாற் போன்ற அதிர்ச்சியும், கவலையும் பைந்தொடியை வாட்டின. “நான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் இங் கிருந்து முடிந்த அளவு சற்று உழைத்தால் போதும். உங்களை விட்டுத் தனியாய் இருக்கவும் எனக்கு விருப்பமில்லை” என்றாள் பைந்தொடி. திருமணத்துக்குப்பின் முதல் தடவையாக அவன் அவளிடம் கனிவுடன் பேசினான். “நீ கவலைப்டவேண்டாம். பைந்தொடி! நான் கூடிய விரைவில் வந்துவிடுவேன். உன் கணவன் என்ற மதிப்பை விரைவில் வந்து காப்பேன். நீ நாளை எண்ணிக் கொண்டு இரு. நீ எதிர்பார்ப்பதற்குள் வந்து உன்னை நன்னிலைப் படுத்துவேன்” என்று தேற்றி இன்மொழி கூறிச்சென்றான். தன் ஊரில் உழையாதவன் இப்போது ஊர் ஊராக சென்று உழைத்தான். விரைவில் வீடு திரும்பும் ஆர்வத்துடன், மிகுதி உழைத்தான்; மிகுதி அலைந்தான். சிறுகச் சிறுகச் செலவு செய்து, மிகுதி மீத்தான். ஆனால், அவன் திருத்தம் கண்டு தெய்வம் மகிழ்ந்திருக்க வேண்டும். அவன் நீண்ட நாள் உழைக்கத் தேவையில்லா நிலையை ஒரு சிறு நிகழ்ச்சி ஏற்படுத்திற்று. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு அவன் காட்டு வழியாகச் சென்றான். அன்று வழக்கத்தைவிட வழி தொலை மிகுந்ததாக இருந்தது. இரவில் அவன் காட்டிலேயே தங்கிவிட நேர்ந்தது. ஒரு கோணற் பனைமரத்தடியில் அவன் தன் பணிக்கலப் பெட்டியுடன் படுத்து உறங்கினான். அந்த பனைமரத்தில் ஒரு பனை மரப்பூதம் குடி கொண் டிருந்தது. பகலெல்லாம் அது தன்னை ஒரு ஒரு ஓலை யாக்கிக்கொண்டு, பனை ஓலையுடன் பனை ஓலையாகத் தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இரவு வந்ததும் அது பனைமரப் பூதமாக முழு உருவெடுத்தது. அச்சமயம் அதன் உடல் ஒரு பனைமரத்தளவு நீண்டு உயர்ந்தும் தலை பனை மண்டை அளவு பெருத்தும் இருந்தன. அதன் கைகள் அரைப்பனை மரம் நீளமும் பருமனும் உடையனவாய் விளங்கின. நள்ளிரவு கழிந்தவுடன், பனைமரப் பூதம் இறங்கி வந்தது. முழுவுருவுடன் நின்று, பண்ணனை நோக்கி அலறிற்று. பண்ணன் கண்ணை விழித்துப் பார்த்தான். பூத உருவைக்கண்டு அவன் உடல் முழுவதும் நடுங்கிற்று. ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. இதற்கு அவன் இயற்கையான சோம்பல் மட்டும் காரணமன்று. சமயத்துக்கேற்ற அறிவமைதியும் அதற்குத் துணைநின்றது. அவன் மெல்லப் பூதத்தை ஏற இறங்கப் பார்த்தான். பூதம் மீண்டும் அலறிற்று. “எழுந்திரடா, மடப்பயலே, இதோ நான் உன்னை விழுங்கப் போகிறேன்” என்றது அது. அவன் தன் அச்சத்தை வலிந்து அடக்கிக் கொண்டு. ஆர்ந்தமைந்து பேசினான். “நீயா என்னை விழுங்கப் போகிறாய்? நன்று நன்று! நான் இங்கு வந்திருப்பதே எதற் காக என்பதை அறியாமல், என் கையில் வந்து சிக்கினாய்? இதோ இன்றிரவே என் பையில் உன்னைப் போலவே ஒரு பூதத்தைப் பிடித்து அடைத்திருக்கிறேன். உன்னோடு உருப்படி இரண்டாயிற்று. ஓர் இரவுக்கு இது போதும், பையிலிருக்கும் உன் தோழனை நீயே பார்?”என்றான். பூதம் பைக்குள் பார்வையைச் செலுத்திற்று. பண்ணன் தன் அம்பட்ட வேலைக்காக வைத்திருந்த முகக்கண்ணாடியை நிமிர்த்திக் காட்டினான். பூதம் தன் நிழலையே கண்டு மற்றொரு பூதம் என்று நினைத்தது. அதன் பனையளவு உயர்ந்த கால்கள் நடுங்கின. குரல் கரகரத்தது. அது ஓடத் துணிந்தது. பண்ணன் அதை எட்டிப் பிடிப்பவன் போல் எழுந்தான். பூதம் அதன் நெடிய உடலை வளைத்து அவனை வணங் கிற்று. “நான் தெரியாமல் உன்னருகே வந்துவிட்டேன். அப்பனே! என்னை விட்டுவிடு. உனக்கு என்ன வேண்டுமானாலும் நான் தருகிறேன். எப்போது என்ன வேண்டுமானாலும் கொடுப்பேன்!” என்றது. “பனை மண்டையா! என்னை ஏமாற்றவா எண்ணு கிறாய்? பூதங்கள் சொல்லை யார் நம்புவார்கள்? காரியத்துக்கு எதுவும் சொல்லிப் பின் ஓடி விடுவது தானே உங்கள் வழக்கம்! பேசாது என் பையில் இடம்பெற்றுவிடு. வேறு வழியில்லை” என்று பண்ணன் மீண்டும் அதட்டுவதாகப் பாவனை செய்தான். பனைப்பூதம் முன்னிலும் கெஞ்சிற்று “என்னை இங்கேயே தேர்ந்து பாருங்கள். நான் ஒரு கணத்துக்குள் இங்கிருந்தே ஆயிரம் பொன் வரவழைத்துத் தருவேன். அதன் பின் விட்டு விடுங்கள். என்ன வேண்டுமானாலும் அதன் பிறகு கூடத் தங்கள் கட்டளையை நிறைவேற்றுகிறேன்.” என்று மீண்டும் பணிவுடன் கேட்டுக் கொண்டது. “சரி, சொன்னபடி இந்த இடத்தில் நின்று கொண்டே ஆயிரம் பொன் வரவழைத்துக்கொடு அப்புறம் பார்ப்போம்” என்றான் பண்ணன். பூதத்தின் கால்கள் அங்கேயே நின்றன. ஆனால், கைகள் பனைமரத்தை வேருடன் பிடுங்கின. அதனடியில் ஒரு புதையல் இருந்தது. பூதம் அதை எடுத்து, அதிலுள்ள ஆயிரம் பொன்னை எண்ணிக் கொடுத்தது. பண்ணன் ஓரளவு மனம் அமைந்தவன் போலப் பேசினான். “சரி, நீ அவ்வளவு மோசமான பூதமல்ல, அருகே குறுங்குடி என்று ஓர் ஊர் இருக்கிறது. அதில் என் வீடு தென்கோடியில் இருக்கிறது. முன் நிற்கும் வேப்பமரத்தால் அதை நீ அடையாளம் கண்டுகொள்ளலாம். நாளை ஒரு நாள் இரவுக்குள் நீ அதன் பின்புறம் ஆயிரம் கலம் நெல் கொள்ளத்தக்க பத்தாயம் கட்டவேண்டும். அந்த இரவுக்குள்ளேயே அது நிறையும்படி நெல்லும்கொட்டவேண்டும். நெல் நல்ல மணி நெல்லாய் இருக்க வேண்டுமென்று சொல்லத் தேவையில்லை?” என்று கண்டிப்பாகக் கூறினான். “அவ்வாறே கட்டாயம் செய்கிறேன். ஐயனே! அதில் ஒரு சிறு பிசகு நேர்ந்தாலும் தண்டியுங்கள்!” என்று கூறிப் பூதம் விடை பெற்றுக்கொண்டது. பண்ணன் ஆயிரம் பொன்னைக் கந்தையில் கட்டிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டான். அவன் சென்று சில நாட்கள்தான் ஆயின. அதற்குள் அவன் திரும்பியது கண்டு உண்மையிலேயே அவன் மனைவி பைந்தொடி ஆறுதலடைந்தாள். பணம் ஈட்டினார்களா என்றுகூட அவள் கேட்கவில்லை. பணம் பற்றிய பேச்சால் அவனை விட்டுப் பிரிய நேர்வதைவிட, உழைத்து அவனையும் ஊட்டுவதே நன்று என்ற துணிவுக்கு அவள் வந்திருந்தாள். ஆனால், ஒரு பொன்னையே அவன் அவளிடம் தந்தான். “இதனைக்கொண்டு இன்றைய வீட்டுச்செலவு கழி. நான் சிறிது வெளியே போய் வருகிறேன்” என்று அவன் அகன்றான். ‘தன் அம்பட்டத் தொழிலுக்கு இனி முழுக்குப் போட்டு விடலாமா?’ என்று அவன் முதலில் எண்ணினான். ஆனால், வழக்கமான அவன் கூரிய நுண்ணறிவு வேலை செய்தது. அவன் அதைக் கைவிடவில்லை. அதை உண்மையிலேயே ஊக்கமாக நடத்தினான். முதல் நாளிரவில் பனைமரப் பூதம் முன்னிரவிலேயே பண்ணன் வீட்டைக் கண்டுபிடித்துக் கொண்டது. பூதங் களின் வழக்கப்படி நள்ளிரவுக்குள்ளேயே பின்புற வெளியில் நாற்புறமும் சுவரெழுப்பிப் பத்தாய வேலையை முடித்து விட்டது. பின் அது நாலாபுறமும் பல புலங்களுக்கும் தாவிச்சென்று கதிரறுத்து அடித்து, கலம் கலமாக நெல்லைக் கொண்டுவந்து குவித்தது. விடியற் காலத்திற்குள் பத்தாயம் நிரம்பி வழிந்தது. ஊரார் ஓரிரவுக்குள் எழுப்பிய பத்தாயத்தைக் கண்டு வியப்படைந்தனர். ஆனால், பண்ணன் சமயத்துக்கேற்ற கதை கட்டிக் கூறினான். “உண்மை உழைப்பால் நான் சிறிது ஈட்டினேன். ஆனால், என் உழைப்பிடையே நான் காட்டில் ஓர் அரசரையே காண நேர்ந்தது. அவரை ஒரு மலைப்பாம்பு விழுங்கிக்கொண்டிருந்தது. என் மழிப்புக் கத்தியால் பாம்பைக் கிழித்து அவரை விடுவித்தேன். அவர் எனக்குப் பரிசு தந்தனுப்பினார். அத்தடன் என் மனங்குளிர, நான் எதிர்பாராமலே, இந்த பத்தாயத்தையும் ஆள்விட்டுக் கட்டி நெல் குவித்திருக்கிறார். அவருக்கும் அவரைக் காப்பாற்ற உதவிய இந்தக் கத்திக்கும் நான் கோயிலெழுப்ப எண்ணியிருக்கிறேன்” என்றான். பண்ணன் மீது எல்லாருக்குமே முன்பு இரக்கமும், நல்லெண்ணமும் இருந்தன. ஆகவே, இவ்வளவு நற் பேற்றையும் செல்வத்தையும் கண்டு யாரும் பொறாமைப் படவில்லை. அவனும் நண்பர் உறவினர்களுக்கெல்லாம் வாரி வழங்கி, அவர்கள் ஆதரவு பெற்றான். அவன் தாயையும் அழைத்துக் குறைவில்லாப் பணிவிடை செய்தான். பனைமரப்பூதம் பத்தாயம் கட்டிய இரவில், அதன் வீட்டிற்கு ஓர் அரிய விருந்தாளி வந்திருந்தது. அது தொலை நாட்டில் இருந்த அதன் மருமகன் பேரீந்தமரப் பூதமே. மாமனைக் காணாமல் அது இரவெல்லாம் அங்கலாய்த்தது. கடையாமத்தில் சேறும் செண்டும் அடர்ந்து சோர்ந்த நடையுடன் மாமன் பூதம் வந்து சேர்ந்தது. இரவெல்லாம் உழைத்தனால் அதற்குப் பேசக் கூட முடியவில்லை. மெள்ள மெள்ளப் பண்ணன் பையிலுள்ள பூதத்தின் கதையை முழுவதும் பேரீந்தப் பூதம் கேட்டது. அது விலாப் புடைக்கச் சிரித்தது. ஆயிரம் பொன் பரிசு! ஓரிரவுக்குள் ஒரு பத்தாயம்! அது நிறைய ஆயிரம் கலம் நெல்!’ என்று போட்ட போது அதன் சிரிப்பு சீற்றமாயிற்று. “மாமா! நீ இப்படி ஒரு மட்டி மாமாவாக இருப்பாய் என்று தெரிந்திருந்தால், உன் பெண்ணைக் கட்டியிருக்கவே மாட்டேன். போகட்டும், இனி இப்படிப்பட்ட சில்லுண்டி மனிதரைக் கண்டு அஞ்சாதே!” என்றது. பனைமரப்பூதம், உள்ளூரப் புழுங்கிற்று. “ஏன், நீ அவ் வளவு அறிவுடையவனாயிருந்தால், அந்தச் சில்லுண்டி மனிதனை ஒரு கை பார்க்கிறதுதானே” என்றது. “பார்! இரவு முடியவில்லை; விடிவதற்குள் உன் முன் அவன் குடலையும் மூளையையும் கொண்டு வருகிறேன் பார்!” என்று கூறிவிட்டுப் பேரீந்த மரப் பூதம் புறப்பட்டது. பண்ணன் இரவெல்லாம் உண்மையில் விழித்திருந் தான். தனக்கு வாழ்வளித்த முகக்கண்ணாடியை அவன் வீட்டுப் பலகணியில் வைத்திருந்தான். விண்மீன் ஒளியால், கண்ணாடி யிலேயே பூதத்தின் வரவு போக்கு வேலைகளைக் கூர்ந்து கவனித்தான். பூதம் போனபின்பும் அவன் பத்தாய நெல்லைப் பயன்படுத்தும் வகை, அவ்வகையில் ஊராருக்குக் கூறவேண்டிய விளக்கக் கதை ஆகியவைபற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் பனைமரப் பூதத்தைவிட உயரிய ஒருபூதத்தின் உருவம் கண்ணாடியில் தெரிவது கண்டு அவன் வியப்படைந்தான். உண்மையில் அது பேரீந்தமரப்பூதமே, வீட்டை அடை யாளம் கண்டபின், அது சுற்றிப் பார்த்தது. பலகணி திறந்திருக்கவே எட்டிப் பார்த்தது. அதுவும் தன் நிழலைக் கண்ணாடியில் கண்டது. புதுப் பூதத்திற்கு புதிய அச்சம் பிடித்தது. “ஒரு பேரீந்த மரப் பூதத்தையுமல்லாவா அடைத்து வைத்திருக்கிறான்? என்ன காரியம் செய்தோம். ஓடிவிடு வோம். தலை தப்பினால் போதும்” என்று அது ஓடத் திரும்பிற்று. கண்ணாடியில் யாவும் பார்த்துக் கொண்டிருந்தான் பண்ணன். அது ஓடத் திரும்புவது கண்டதும், “எங்கே போகிறாய்? பூதமே!நில்! உன் தோழனுடன், உன்னையும் அடைக்கிறேன் பார்” என்று கூறினான். பேரீந்தமரப் பூதம் வியர்த்து விறுவிறுத்தது. “அண்ணா! மாமா பனைமரப்பூதம் தான் என்னை அனுப்பினார், ஒரு பத்தாயம் நெல் போதுமா? இன்னொரு பத்தாயம் அரிசி யாகவும் இருக்கட்டுமா? என்று கேட்டுவரச் சொன்னார்” என்றது. “அடே! இதைச் சொல்லாமல், ஏண்டா ஓடப் பார்த் தாய்? நீ வெளிநாட்டுப் பூதம் போலிருக்கிறது. உன்னை இலேசிலே விடப்படாது. நீ இங்கிருந்தே பத்தாயிரம் பொன் கொடு. அத்துடன் பனைமரப் பூதம் சொல்லியபடி இன் னொரு பத்தாயம் அரிசியையும் ஓரிரவுக்குள் ஏற்பாடு செய்! இல்லாவிட்டால் உன்னையும், உன் மாமனையும் தொலைத்து விடுவேன்!” என்றான். பேரீந்தமரப் பூதத்தின் குரல் கீச்சுக்குரலாயிற்று. “இங்கிருந்தே பத்தாயிரம் பொன் தர, என் பிறப்பிடம் இங்கில்லையே. ஆனால் ஒரு பகலிரவு தவணை தாருங்கள். மாமாவைப் பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டாம். நானே இரவுக்குள் உங்கள் பலகணிக்குள் பத்தாயிரம் பொன்னைக் குவிக்கிறேன். புதிய பத்தாயம் அரிசியும் இரவுக்குள் தருவிக்கிறேன். என் மீது இரங்கி என்னை விட்டவிட வேண்டும்” என்றது. “சரி, முன்னிரவில் பொன் வராவிட்டாலும் சரி, விடியற் காலம் பத்தாயவேலை முடியாவிட்டாலும் சரி, நான் உன் நாட்டுக்கே கிளம்பிவிடுவேன்” என்று கூறி பண்ணன் பூதத்துக்கு விடைகொடுத்து அனுப்பினான். அன்று மாலையே பத்தாயிரம் பொன் கிழி பல கணிக்குள் வந்து விழுந்தது. பண்ணன் அதை ஏற்கெனவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆகவே, அதை எடுத்துப் பாதுகாப்பாக வைத்தான். இரவிலும் அவன் கண்ணாடி யின் மூலம் பத்தாய வேலையைக் கவனித்தான். விடிவதற்குள் பத்தாயம் முற்றுப்பெற்றதுடன் அது நிறைய அரிசியும் பொங்கி வழிந்தது. பண்ணன் வாக்களித்தபடி மழிப்புக் கத்திக்கு ஒரு கோயில் கட்டினான். அதன் முன் கூடம் மிகப் பெரிதாயிருந்தது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான அம்பட்டர்களை வரவழைத்த அவன் விருந்து நடத்தினான். அதனையடுத்து அம்பட்ட மாநாடு ஒன்றும் நடத்தி, அச்சமூகத்தினர் வாழ்வை வளப்படுத்துவதற்கான திட்டம் வகுத்தான். 2. கோவேந்தன் முக்காணிகள் தமிழகத்தின் மிகப் பழங்குடிகள். மூவரசரும் அவர்களுக்குக் காணி அளித்திருந்தனர். அதனாலேயே அவர்கள் முக்காணிகள் என்று அழைக்கப்பட்டனர். முருகன் படை வீடுகளின் கோயிலுரிமை அவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. அந்த உரிமையை அவர்கள் குடியின் ஆண்கள் வழிவழியாக ஆண்டுவந்தனர். ஆயினும் அதன் மரபு ஆண்மரபாக இல்லை. பழைய தாய் மரபாகிய பெண்மரபாகவே இருந்தது. ஒவ்வோர் ஆடவன் ஆட்சியுரிமையும் அவனிடமிருந்து அவன் உடன் பிறந்தாள் பிள்ளைக்கே சென்றது. இதனால் முக்காணிப் பெண்களின் மதிப்பு, பன்மடங்கு உயர்ந்தது. எந்த இளைஞனும் முக்காணிப் பெண்களின் தாய் தந்தையருக்குப் பெரும்பொருள் கொடுத்தாலல்லாமல் அவர்கள் கைப் பிடிக்கும் உரிமையைப் பெற முடியாதிருந்தது. மானூர் என்ற சிற்றூரில் நொடிந்துப் போன ஒரு முக்காணிக் குடும்பம் இருந்தது. அதில் கோமாறன் என்ற ஓர் இளைஞன் இருந்தான். அவன் தந்தை இளமையிலேயே அவனை விட்டு உலகு நீத்தார். வறுமையின் சூழலிலே அவன் தாய் பூமாரி அவனை வளர்த்து வந்தாள். வாழ்வுக்கே அவர்கள் நிலை தடுமாற்றமாய் இருந்தது. இந் நிலையில் திருமணம் எட்டாக் கனியாய் அமைந்தது. தாய் இதுபற்றி மிகவும் கவலைப்பட்டாள். ஆனால், கோமாறன் அவளைத் தேற்றினான். தானே தன் முயற்சியால் மணம் புரிந்து கொள்வதாக அவன் உறுதி கூறினான். மானூர் செந்தில்மாநகரின் அருகிலேயே இருந்தது. செந்தில்மாநகரில் முக்காணிச் செல்வர் பலர் வாழ்ந்து வந்தார்கள், கோமாறன் அவர்களை அணுகினான். செல்வர் இரங்கிச் சிறுசிறு தொகை அளித்தார்கள். ஆனால், செல்வப் பெண்டிரே மிகுதியும் பரிவு கொண்டனர். அந்த ஏழை இளைஞனுக்கு அவர்கள் சற்றுத் தாராளமாகவே பொருளுதவி செய்தார்கள். எனவே, கோமாறன் ஒரு நல்ல குடும்பப் பெண்ணையே தேர்ந்தெடுக்க முடிந்தது, அப்பெண்ணின் பெயர் குணமாலை. பெயருக்கேற்ப, அவள் நற்குணச் செல்வியாக அமைந்தாள். அவள் பெற்றோருக்குக் கோமாறன் கைநிறையப் பணம் கொடுத்தான். அவளையே தன் இல்லம் கொண்டுவந்து மணம் முடித்துக் கொண்டான். மணவினைதான் ஆயிற்று. மணவாழ்வின் பொறுப்பு இன்னும் பெரிதாயிருந்தது. ஆனால், கோமாறன் இதற்கும் சளைக்கவில்லை. அத்துடன் இத்தடவை அவன் பிறர் உதவி கோரவும் எண்ணவில்லை. தொலை சென்றாவது. தன் முயற்சியாலேயே பொருள் திரட்ட எண்ணினான். தன் எண்ணத்தை அவன் தன் மனைவிக்கும் தாய்க்கும் எடுத்துக் கூறினான். இளமனைவி குணமாலை பிரிவாற் றாமையால் வருந்தினாள் அவன் தக்க நல்லுரை கூறி அவளைத் தேற்றினான் அன்னையிடமும் அவன் போகும் இன்றியமையாமையை விளக்கி விடைபெற்றான். மனைவியை தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு அவன் மதுரைக்குப் புறப்பட்டான். கோமாறனுக்கு மும்முடி என்ற ஒரு நண்பன் இருந்தான். போகும் பரபரப்பில் அவன் அந்நண்பனிடம் விடைபெற மறுத்தான். ஆனால் ஊரெல்லை தாண்டிச் சிறிது தொலைவிலேயே அந் நண்பன் எதிர்ப்பட்டான். அப்போது பொழுது சாயத் தொடங்கிவிட்டது. நண்பர் இருவரும் ஓர் இலுப்பை மரத்தடியில் அமர்ந்தனர். தான் கொண்டுவந்திருந்த சிற்றுண்டியில் அவன் நண்பனையும் வற்புறுத்தி உண்பித்தான். பின்பு அவர்கள் மாலை நெடுநேரம் வரையில் உரையாடிக்கொண்டு இருந் தார்கள். பிறகு நண்பன் ஊருக்குத் திரும்பினான். கோமாறன் அடுத்த ஊர் சென்று, ஒரு விடுதியில் இரவு தங்கிப் புறப் பட்டான். கோமாறன் இந்நிகழ்ச்சியை ஒரு நன்னிமித்தமாகவே கொண்டான். வெளியூர் வாழ்க்கை பற்றியமட்டில், அது நன்னிமித்தமாகவே இருந்தது. ஏனெனில், ஓராண்டுக்குள் ளாகவே அவன் மதுரையில் போதிய பொருள் திரட்டினான். அதுமட்டுமின்றி, அவன் ஆவலுடன் தன் ஊருக்கு மீண்டு வந்தான். ஆனால், புறப்படும் சமயம் ஏற்பட்ட ஒரு சிறு நிகழ்ச்சி, ஊரில் அவனுக்கு எதிர்பாராத் தடங்கலை உண்டாக்கக் காரணமாக இருந்தது. இது அவன் அறியாத, அறியமுடியாத மாயமாய் அமைந்தது. நண்பன் மும்முடியுடன் கோமாறன் தங்கிப் பேசிய மரத்தில் ஒரு குறளி குடியிருந்தது. மாலை நேரமானதால் அது விழித்துக்கொண்டது. நண்பர் பேச்சு முழுவதையும் அது கேட்டுக்கொண்டு இருந்தது. கோமாறனைப் பற்றிய பல செய்திகள் அதற்குத் தெரிய வந்தன. அதன் பயனாக அதன் குறும்புள்ளத்தில் ஒரு நைப்பாசை உருக்கொண்டது. கோமாறன் குடும்பவாழ்வில் ஒரு குழப்பம் உண்டுபண்ணி, வேடிக்கை பார்க்க அது திட்டமிட்டது. சமயமும் சூழ் நிலையும் இதற்கு நல்ல வாய்ப்பளித்தன. நண்பர்கள் பிரிந்து வேறுவேறு திசையில் சென்றதும். குறளி மும்முடியைப் பின்பற்றிச் சென்றது. குறளியின் மெய் யுருவம் ஆவியுருவமானதால், மும்முடி அதைக் கவனிக்க முடியவில்லை. மும்முடியின் வீட்டையும் ஆட்களையும் குறளி நன்கு அடையாளம் கண்டறிந்தபின் மீண்டும் இலுப்பை மரத்துக்கே வந்தது. ஆனால் மறுநாள் விடியுமுன் அதன் திட்டம் ஒரு பெரிய திருவிளையாட்டாயிற்று. அது கோமாறன் உருவிலே திரும்பவும் ஊருக்குள் வந்தது. மும்முடியின் வீட்டுக்கும் அது சென்றது. கோமாறன் உருவில் வந்தது குறளிமாறனே என்பது மும்முடிக்குத் தெரியாது. ஆகவே, வெளியூர் செல்ல விடைபெற்ற கோமாறன் திரும்பி வந்தது கண்டு அவன் வியப்படைந்தான். ஆனால், இவ்வகையில் குறளிமாறன் அவனுக்குப் பொருத்தமான விளக்கம் தந்தான். “இளமனைவியைவிட்டு இப்போதே செல்வானேன், சில நாள் சென்று செல்லலாமே!”என்று மும்முடி கோமாற னிடம் வாதாடியிருந்தான். குறளிமாறன் அதை இப்போது எடுத்துச் சுட்டிக் காட்டினான். “உன் அறிவுரையை மீறித்தான் போக இருந்தேன். ஆனால், அமைந்து சிந்தித்தபின், நான் அதையே பின்பற்றுவதென்று திட்டமிட்டேன். இளமனைவியின் துயர் தோய்ந்த முகமும் அன்னையின் வாட்டமும் உன் பக்கமே இருந்தன. ஆகவே, ஒப்பற்ற நண்பனாகிய உன்னையும் அவர்களையும் விட்டுப்போக மனமில்லாமல் வந்துவிட்டேன். மேலும், முயற்சி செய்பவனுக்கு எந்த ஊரானால் என்ன? என்னிடம் இன்னும் சிறிது பணம் இருக்கவே இருக்கிறது. அதைக்கொண்டு ஏதேனும் தொழில் செய்யலாம் என்று எண்ணுகிறேன். நண்பனாகிய உன் அறிவுரையும் ஒத்துழைப்பும் அதில் மிகுதி தேவைப்படும். அதனாலேயே திரும்ப வீடு செல்லுமுன் உன்னையும் என்னுடன் இட்டுப் போகவந்தேன். என் கருத்தை மாற்றிய நண்பன் நீ. ஆகவே, உன்னைக்காண என் மனைவியும் தாயும், மகிழ்வது உறுதி. ஆதலால் என்னுடன் அன்பு கூர்ந்து வீட்டுக்கு வா. என் விருந்தினனாக இருந்து எனக்கு ஆதரவளி” என்று கைப்பற்றி இழுத்தான். நண்பன் மும்முடி எப்போதுமே கோமாறனிடம் பற்றார்வம் கொண்டவன். ஆயினும் கோமாறன் இவ்வளவு குளிர்ச்சியாகப் பேசி அவன் என்றும் கேட்டதில்லை. இது அவன் உள்ளத்தில் புத்தார்வம் எழுப்பிற்று. அவன் கோமாறன் உருவில் வந்த குறளிமாறனுடன் புறப்பட்டான். குறளிமாறன் திட்டத்தின் ஒரு பெரும்பகுதி இப்போது வெற்றி பெற்றது. ஏனென்றால், மும்முடியின் உதவி கொண்டே அவன் கோமாறன் மனைவியையும் தாயையும் கண்டுணர்ந்து, அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளப் பழகினான். மும்முடியின் பேச்சு, போனவன் உடனே திரும்பியதற்கான விளக்கமும் அளித்தது. கோமாறன் வாழ்வுபற்றிய பல செய்திகளைக் குறளிமாறன் அறிந்து பயன் படுத்தவும் முடிந்தது. குறளிமாறன் முன்பு குடியிருந்த மரத்தடியில் ஒரு புதையல் இருந்தது. அவன் அதைப் பல ஆண்டுகள் காத்துக்கொண்டே வந்திருந்தான். இப்போது ஓர் இரவில் அவன் அங்கே சென்று அதை எடுத்து வந்தான். கோமாறன் வீட்டிலேயே ஓரிடத்தில் அதை ஒளித்துவைத்தான். அதில் சிறு தொகை எடுத்து, அதன் புதுத் தொழில் தொடங்கினான். தொகையுடன் தொகை எளிதில் பயன் படுத்தப்பட்டது. தொழில் விரைந்து வளமடைந்தது. மும்முடிக்கு அவன் பல பரிசுகளும், மறை உதவிகளும் செய்தான். மும்முடியின் நட்பு இதனால் வளர்ந்து வேரூன்றிற்று. ஊரில் குறளிமாறன் மதிப்பும் முன்பு கோமாறனுக்கு இருந்த மதிப்பை விடப் பன்மடங்காக வளர்ந்தோங்கிற்று. கோமாறன் வாழ்வின் மாறுதல் கண்டு எல்லாரும் மகிழ்ந்தார்கள். இருவரும் வியப்படையவில்லை. ஏனெனில், அதன் ஒவ்வொரு பகுதியும் இயல்பாகவே தோன்றிற்று. கோமாறன் குறளிமாறனாக மாறியிருந்ததை மட்டும் யாரும் கவனிக்க முடியவில்லை. ஆனால், உண்மை நிலையை அறியாமலே, மாறுதல் கண்டு மறுகிய இரண்டு உள்ளங்கள் இருந்தன. ஒன்று கோமாறன் தாய் பூமாரி; மற்றது அவன் மனைவி குணமாலை. மைந்தன் தன்னுடன் முன்பு பழகியது போல இப்போது பழகவில்லை என்பதைப் பூமாரி கண்டாள். ஆனால், இது புதுச்செல்வத்தின் பயன் என்று மட்டுமே அவள் எண்ணி னாள். இது அவளுக்கு வருத்தத்தை அளித்தது. ஆனால், மகன் மீது வெறுப்புக்கொள்ள இதில் எதுவும் இல்லை. புது மாறுதலைக் கண்டு பூமாரியைவிட மறுகியவள் குணமாலையே. பிரிந்து செல்லும்போது கணவனுக்கு இருந்த ஆர்வம், திரும்பி வந்தபோது ஏன் இல்லை என்று அவள் தனக் குள்ளேயே ஓயாது கேட்டுக்கொண்டாள். இந்தக் கேள்விக்குச் சரியான விளக்கம் ஒன்றுமே ஏற்படவில்லை. உண்மையில் அது ஒரு புதிராகவே வளர்ந்துவந்தது. ஏனெனில், கணவனின் மாறுதலின் காரணமறியும் வரை அந்தக் காரிகை அவனிடம் நெருங்கிப் பேசாமல் இருந்தாள். குறளிமாறன் அவள் பேசாதவரை, தானாகப் பேசி மாட்டிக் கொள்ளவும் விரும்பவில்லை. இந்நிலையில் கோமாறன் தாயுடன் குறளி மாறன் தொலை உறவினன் போலவே நடந்தான். ஆனால், கோமாறன் மனைவியுடனோ, இந்த அளவு கூடப் பழகவில்லை. அவன் அவளை யாரோ எவரோபோல் நடத்தினான். கற்புடைய மனைவியாயினும் குணமாலை மானமுடைய நங்கை. அவளும் வாய்பேசாது தண்ணீருடன் ஒட்டாது ஒழுகும் எண்ணெய்போல் ஒழுகி வந்தாள். உள்ளூர, மும்முடியின் நட்பும் அறிவுரையும் தான் கணவனை மாற்றியிருக்கவேண்டும் என்று அவள் கருதினாள். இந்த எண்ணம் அவள் வாழ்க்கையின் தனிமையை இன்னும் பெருக்கிற்று. தன்னிடம் விளக்கம் கூறாமலே, நண்பனுடன் கணவன் மேன்மேலும் நெருங்கிப் பழகுவதை அவள் கண்டாள். அந்நட்பு வளருந்தோறும், அவள் பெண்மைப்பாசம் அவள் உடலுக்குள்ளேயே அடங்கி ஒடுங்கிற்று. குடும்பத்தில் நிலவிய இந்தப் பிளவு ஊரறியாத பிளவாக இருந்தது. மும்முடிகூட இதை முற்றிலும் கவனிக்கவில்லை. கவனித்த அளவிலும் குறளிமாறன் நட்பை அவள் குடும்ப நட்பாகக் கொள்ள எந்தத் தூண்டுதலும் காணவில்லை. தன் தாயும் மனைவியும் நண்பனை ஆர்வமாக வர வேற்பார்கள் என்று குறளிமாறன் கூறியிருந்தான். ஆனால், அவர்கள் வரவேற்பில் அவன் அத்தகைய ஆர்வத்தைக் காண வில்லை. அத்துடன் கோமாறன் மனைவி குணமாலை கோமாறனைக் கூட ஆர்வமாக வரவேற்கவில்லை என்பதை அவன் குறிக்க நேர்ந்தது. இது அவனுக்குப் புதிராக இருந்தது. அவன் மீது பரிவும் அன்பும் வளர்ந்தன. இது அவன் நேச பாசத்தை இன்னும் பெருக்கிற்று. வரவர மகனைப்பற்றிய கவலையும் பாசமும் தாய் உள்ளத்திலிருந்து விலகிற்று. அந்த இடத்தில் அவள் ஆண்டவன் பற்றுக்கே இடமளித்தாள். இது அவள் முதுமைக்கு ஏற்ற பண்பாய் அமைந்தது. குறளிமாறன் மதிப்பை அது இன்னும் உயர்த்திற்று. ஆனால், இளநங்கையான குணமாலை நிலைமையும் அம் முதியவள் நிலைமையி லிருந்து வேறுபடவில்லை. கணவன் செல்வம் வளர்ந்தாலும், அவளுக்கு அவன் அன்புச்செல்வம் சிறிதும் கிட்டவில்லை. இது தெய்வங்களின் கோபமாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவளிடம் வளர்ந்தது. அது முதல் அவளுக்கு அவள் வாழ்க்கை ஒரு நீடித்த நோன்பாயிற்று. அடிக்கடி மாமியுடனேயே அவள் ஆண்டவன் பணியில் ஈடுபட்டாள். அத்துடன் துணையற்ற சிறுவர் சிறுமியர் ஏழைகள் ஆதரவிலும் தொண்டிலும், அவள் பாச உள்ளம் படர்ந்தது. அவள் இளமையின் பாசத்துடிப்பு தாய்மையின் பாச ஆர்வமாக வளர்ந்தது. ஒரு சிறிய உலகத்தாயின் உள்ளமாக அது நாளடைவில் விரிவடைந்தது. கோமாறன் ஊருக்குத் திரும்பியபோது அவன் இங்ஙனம் ஒரு புத்தம் புதிய உலகத்தைக் கண்டு மருட்சியடைந்தான். ஊரெல்லையில் அவனைக்கண்ட சிலர் அவனைக் குறளி மாறனாகவே எண்ணிப் பேசினர். அவர்கள் அவனுக்கு அறிமுகமானவர்களே. ஆனால், அவர்கள் பேச்சு அவனுக்குப் புரியவில்லை. ஒருவன் அவன் கொடாத பணத்துக்கு நன்றி கூறினான். மற்றொருவன், “என்ன , வீட்டுப் பக்கம் வந்து மாதம் ஒன்றாகிறதே, எங்களிடம் மனத்தாங்கலா, என்ன?” என்று கேட்டான். ஒரு பெண், “உங்கள் கடையில் இப்போது நீலச் சிற்றாடை ஒன்று வந்திருக்கிறதாமே; என் மகளுக்கு அது பிடித்திருக்கிறதாம். நாளை வருகிறேன். ஒன்று கடனாகக் கொடுங்கள்” என்றாள். இந்த மாயவுரைகள் அவன் மனத்தைக் கலக்கின. குடும்பத்தில் அவன் கண்ட காட்சி அவனுக்கு இன்னும் மிகுதியான அதிர்ச்சி தந்தது. தன்னைப்போலவே அங்கே ஒரு கோமாறன் இருந்தான். அவன் தன் தாயிடம் அவள் மகனாகவே நடந்து கொண்டான். குணமாலையிடம் அவன் அவளுடைய கணவனாகவே நடித்தான். அவர்களும் இதை வாளா பார்த்துக்கொண்டிருந்தனர். ஊரார்கூட இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. கருதவில்லை. இவற்றைக் கண்டு அவன் தலை சுழன்றது. மறுபுறம் பூமாரி, குணமாலை நிலைமைகளைக் கூற வேண்டியதில்லை. தம் மெய்யான மைந்தனும் கணவனுமே முன் நிற்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்? ‘தன் மைந்தனைப் போலவே இன்னொருவன் எப்படி வந்தான்’ என்று தாய் உற்று நோக்கினாள். தன் கணவனையே உரித்து வைத்தாற்போல இன்னொருவன் எங்கிருந்து வந்தான். இது என்ன மாயம்?” என்று குணமாலை குமுறினாள். தெய்வக் கோபம் தீரவில்லை என்பதற்கு இஃது ஓர் அத்தாட்சியே என்று அவள் கலங்கினாள். “யார் கோமாறன்? யார் போட்டியிடும் மாயமாறன்?” என்ற பூசல் குடும்பச் சூழலைக் கலக்கி ஊரிலும் அமளிப்பட்டது. ஆனால், பொதுவாக எல்லோரும் குறளிமாறனையே கோமாறன் என்று நினைத்தனர். அவனுக்காகவே இரங்கினர். பரிந்து பேசினர். மும்முடிக்கோ, குறளிமாறன் தான் கோமாறன் என்ற உறுதி ஏற்பட்டிருந்தது. உண்மையில் குறளிமாறன் உருவிலும் செயலிலுமே அவன் நட்பு வேரூன்றியிருந்தது. குறளிமாறனுக்கு ஏற்பட்ட இக்கட்டுப்பற்றி அவன் எல்லோரிடமும் உணர்ச்சிவேகத் துடன் பேசினான். எதிரியாகிய கோமாறனை அவன் மாய மாறன் என்று கூறி ஏசினான். “ஊரார் இதைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது, மாயமாறனைப் பிடித்து நன்றாய் உதைக்க வேண்டும்” என்று அவன் எல்லாரிடமும் வலி யுறுத்திப் பேசினான். “இந்த நண்பனுக்கு நான் என்ன செய்தேன்? இப்படி என் குடி கெடுக்க முனைந்து கச்சை கட்டுகிறானே” என்று கோமாறன் வெம்பிப் புழுங்கினான். அடிக்கடி அவன் தன் தாயிடமும் மனைவியிடமும் ஆத்திரமாகப் பேசினான். ஆனால், அவர்கள் மிரளமிரள விழித்தனர். இதையும் அவன் அறிய முடியவில்லை. “ஆண்டவனே, இஃது என்ன திருக்கூத்து! நீயுண்டு, நாங்கள் உண்டு என்று இருந்தோமே, அது போதாதா? இன்னும் ஏன் எங்களைச் சோதிக்கிறாய்? என்று அவர்கள் புலம்பினார்கள். ஆனால், அவர்கள் புலம்பலின் முழு வெப்பத்தை யாரும் அறிந்து கொள்ளவில்லை. அந்த ஆண்டவன்தான் அறிந்திருக்கக் கூடும். பூசல்வழக்காயிற்று. கொற்கைமா நகரிலுள்ள இளவரசன் கேள்வி மன்றத்தில் குறளிமாறனும் கோமாறனும் நின்றனர். குறளிமாறன் பக்கமே சான்றுகள் வலுத்தன. ஆனால், கோமாறன் கொந்தளிப்புக் கண்டு யாருமே திகைத்தனர். எனினும் பேயின் அமைதிக்கு எதிராக, மனித உணர்ச்சியின் கொந்தளிப்பு என்ன செய்யமுடியும்? இளவரசன் மன்றத்திலிருந்து கோமாறனுக்கு எந்தத் தெளிவும் ஏற்படவில்லை. அரசன் அளியாத நீதி தேடி, அவன் ஆண்டவனிடம் சென்றான். செந்தில் மாநகர் திருவீதிகளெங்கும் அவன் அழுது புலம்பிக்கொண்டே சென்றான். “என் திருமணத்திற்குப் பணம் உதவிய செல்வச் சீமான்களே, இப்போது என்னை ஏன் கைவிட்டீர்கள்? மனைவி இல்லாத இளைஞனாயிருந்தபோது, என்னைக் கண்டு பரிந்து பணத்தை வாரித் தந்த தங்கைமார்களே, தாய்மார்களே! மனைவியை உயிருடனேயே இழந்து தவிக்கும் என்னைக் கண்டு, கருணை இல்லையா? அந்த ஊற்று வற்றி விட்டதா? ஆண்டவன் செந்தின் மாநகரில் இல்லையா? எங்கே போய்விட்டார்?” என்று அலறாத வண்ணம் அவன் அலறி அரற்றினான். கோயில் திருக்கூட்டம் கூடிற்று. திருக்கூட்டத்தார் உள்ளங்களெல்லாம் கோமாறன் பொங்கும் துயர் கண்டு கலங்கின. அவர்கள் மதுரை உயர்முறை மன்றத்துக்கே தெரிவித்து, மதுரையிலிருந்து சான்றாளர்கள் தருவித்தனர். கோமாறனுக்கும் இப்போது குறளிமாறனைப் போலவே சான்றுகள் கிட்டின. ஆனால், இதனால் அவனுக்கு எதுவும் நன்மை ஏற்படவில்லை, ஏனெனில், வழக்கு உண்மையி லேயே மாயவழக்கு என்ற முடிவுதான் ஏற்பட்டது. “ஆண்டவனே நேரில் வந்து தீர்த்தாலல்லாமல், மாயம் தீர வழியில்லை” என்று திருக்கூட்டத்தார் அறிவித்துவிட்டனர். “அரசன் நீதியும் கிட்டவில்லை. ஆனமட்டும் பார்த்தும் ஆண்டனும் வாய்திறக்கவில்லை. இனி என்ன செய்வேன்? எந்த உலகத்திற்குச் செல்வேன்?” என்ற புலம்பலுடன் வேறு எதுவும் அறியாமல், கோமாறன் எங்கெங்கும் திரிந்தான். வழக்கம்போல ஒரு நாள் அவன் தன் ஊர்ப்புறத்தி லேயே ஓர் ஆயர்பாடியருகில் புலம்பிக் கொண்டு சென்றான். பக்கத்திலுள்ள மரத்தடியில் ஏதோ ஒரு கும்பல் கும்மாளம் அடித்துக்கொண்டு இருந்தது. அதிலிருந்து ஒரு சிறுவன் அவனை நோக்கி வந்தான். “யாரப்பா நீ? உனக்கு என்ன நேர்ந்தது? அரசனையும் ஆண்டவனையும் ஏன் பழிக்கிறாய்? அதோ அரசர் இருக்கிறார். அவரிடம் வந்து உன் குறையைத் தெரிவி. அவர் ஆராய்ந்து முடிவு கூறுவார்.” என்றான். “தம்பி! அரசனாலும் தீர்க்க முடியவில்லை என் வழக்கை. ஆண்டவன் திருக்கூட்டத்தாலும் தீர்க்கமுடிய வில்லை. மீண்டும் நான் ஏன் அரசனைப் பார்க்கவேண்டும்?” என்று கோமாறன் சீறினான். சிறுவன் புன்முறுவல் பூத்தான். “அந்த அரசனைச் சொல்லவில்லை, அன்பரே! அதோ நாங்களாகத் தேர்ந் தெடுத்த எங்கள் அரசர் இருக்கிறார். அவர் கட்டாயம் வழக்குத் தீர்த்துக் கூறுவார். ஏனென்றால், அவர் தீர்க்கா விட்டால், நாங்கள் எங்கள் குடியரசுத்திட்டப்படி அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிடுவோம். அதுமட்டுமல்ல நீதி காணாத மன்னன் என்பதற்காகத் தண்டனையும் அளிப் போம். ஆகவே, துணிவுடனும் நம்பிக்கையுடனும் வா” என்றான். வேறொரு சமயமானால், கோமாறன் சிறுவனையும் அவன் உரையும் கேட்டுச் சிரித்திருப்பான். குழம்பிய நிலையில் அவன் சிறுவனைப் பின்பற்றிச் சென்றான். மரத்தின் உச்சிக்கிளையில் ஒரு சிறுவன் மன்னனாக வீறுடன் உட்கார்ந்திருந்தான். அடுத்த கிளைகளில் வேறு சிலர் அமைச்சர், தலைவர்களாக அமர்ந்திருந்தனர். காவலர், ஏவலர், வீரர், குடிகளாக வேறு பலர் அழகுபடக் கீழே நின்று நடித்தனர். ஆய்ச்சிறுவர்களாகிய அவர்கள் அன்று தான் விளையாட்டாக ஒரு குடியரசு நிறுவியிருந்தார்கள். கோமாறனை அழைத்து வந்த சிறுவன் உண்மையில் இந்தப் புதிய குடியரசின் புதுப்பணியாளே. “கோவேந்தன் வாழ்க! கோவேளிர் புகழ் ஓங்குக!” என்று காவலர் மன்னன் புகழ் பாடினர். ஏவலன் ஒருவன் கழியுடன் வந்து முன்னின்றான். அரசனை வணங்கி, “கோவேந்தே! வழக்கு மன்றம் தொடங் கிற்று; இதோ அடுத்த நாட்டிலிருந்து வந்த ஓர் அயலானே தங்களிடம் குறையிரந்து நின்றான். உங்கள் நீதி எங்கும் பரவட்டும்” என்றான். மன்னன் கோவேந்தன் கேள்வி தொடங்கினான். கோமாறன் சிரிக்கவில்லை; சினக்கவில்லை. ஒன்றொன் றாகத் தனக்கு நேர்ந்தவற்றை எல்லாம் கூறினான். கோவேந்தன் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந் தான். அவன் என்ன சொல்லப்போகிறான் என்று கோமக்கள் ஆவலாக இருந்தனர். “இது எவ்வளவோ சிறிய வழக்குத்தான். ஆயினும் எதிர்தரப்பினரை அழைக்காமல் தீர்ப்புச் சொல்ல முடியாது. தீர்ப்பை நடைமுறைப் படுத்தவும் முடியாது. ஆகவே, நாளை இந்நேரத்துக்குள் எதிர்தரப்பாளரையும் அழைக்கிறேன். தீர்ப்பு நாளையே கூறப்படும்” என்று ஆய்ந்து அமைந்து பேசினான். கோமாறன் ‘சரி’ என்று போய்விட்டான். அவன் உள்ளத்தில் புதிய நம்பிக்கை எதுவும் எழவில்லை. ஆனால், புதிய அவநம்பிக்கைக்கும் எதுவும் தோன்றவில்லை. மறு நாள் வரை அவன் அந்தப் பக்கத்திலேயே சுற்றித் திரிந்தான். கோவேந்தனாக நடித்த சிறுவனை மற்றத் தோழர்கள் சுற்றிவளைத்தனர். “தோழனே! என்ன அவ்வளவு எளிதாகப் பேசிவிட்டாய். நாளை என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டார்கள். அவன் சிரித்தான். “நாளைச் செய்வதை நாளை பார்க்கலாம். நீங்கள் தாம் சரியான தீர்ப்பு அளிக்காவிட்டால், என்னைப் பதவியிலிருந்து நீக்கித் தண்டிக்கப் போகிறீர்களே; ஆனால், சரியாகத் தீர்த்துவிட்டால், என்ன பரிசோ?” என்றான். “குடியரசனுக்கு வேறு என்ன பரிசு இருக்கமுடியும்? குடிமக்களின் அன்புதான் பரிசு நாங்கள் பெரியவர்களான பின்னும் உன்னையே அரசனாக்குவோம்” என்றான். பணி யாளனாக நடித்த சிறுவன். கோவேந்தன் பணியாளன் பக்கம் திரும்பினான். “இப் போது உனக்கு வேலை இருக்கிறது. நீ மீண்டும் பணியாளாக வேண்டும். ஊர் காவலரிடம் நான் தரும் முடங்கலைக் கொண்டு போய்க் கொடு, அவர் சொல்லுகிறபடி நடந்து கொள்ள வேண்டும்” என்றான். கோவேந்தன் காரியத் திறமைகண்டு, சிறுவர் மீண்டும் வியப்புடன் அமைந்தார்கள். கோவேந்தன் கொடுத்த தாள் நறுக்குடன் பணியாள் அகன்றான். “காவலின் கண்ணியப் பொறுப்புடைய பெரியீர், நான் சிறுவர்களால் விளையாட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டரசன்தான். ஆனால், அந்த நிலையிலேயே கோமாறன் வழக்கு என்னிடம் வந்தது, அதை நான் கேட்டேன். அதன் மாயம் எனக்குப் புரிந்துவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. யாவருக்கும் விளக்கமாக நான் அதைத் தீர்த்துவிட்டால், அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் நீங்கள் தாமே! ஆகவே, எதிர்தரப்பாளராகிய மற்றக் கோமாறனையும், மனைவியையும் தாயையும் நண்பனையும் தங்கள் சார்பிலேயே என் மன்றத்துக்கு வரக் கட்டளை பிறப்பிக்கும்படி கோருகிறேன். “என்னிடம் பணியாளாக நடிக்கும் சிறுவன் தங்கள் காவலருடன் சென்று, முறைப்படி எதிரிகளை அழைத்து வரவும் அருள்புரியுங்கள்” இதுவே கோவேந்தனின் முடங்கல். முடங்கலைப்பார்த்து ஊர்காவலன் புன்னகை செய் தான். ஆனால், அதன் அமைதியும் அறிவும் பண்பும் அவனை வயப்படுத்தின. தீர்ப்பைக் காணும் ஆர்வமும் அவனுக்கு ஏற்பட்டது. ஆகவே, அவன் எதிர்பார்த்ததைவிட மிகுதி ஒத்துழைப்பைக் காட்டினான். சிறுவனுடன் தலையாரி யையே அனுப்பினான். வேண்டிய கட்டளையும் பிறப் பித்தான். அத்துடன் மற்ற வழக்கு நடவடிக்கைகளில் உதவ, ஏவலர் காவலர்களுடன் அவனே நேரில் வந்தான், எனினும் எவரும் கலவரமடையாத படி, பணிச்சார்பற்ற உடையிலே உருமாற்றிக் கொண்டு, யாரோ பார்வையாளர் போல வந்து அகல இருந்தான். மரத்தடியிலேயே மறுநாள் கேள்வி மன்றம் கூடிற்று. எல்லாம் முன்னாள் போலவே நடைபெற்றது. ஆனால் குறளிமாறன், பூமாரி, குணமாலை, மும்முடி ஆகிய அத்தனை பேரையும் பணியாளான சிறுவன் காவலர் உதவியுடன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான். காவலர் சிறுவன் ஆட்கள் போலப் பின்னணியிலேயே நின்றார்கள். முறைமன்ற நடவடிக்கைகள் போலவே கேள்விகள், குறுக்குக்கேள்விகள் எல்லாம் நடைபெற்றன. ஆனால், சான்றாளர்கள் வரவழைக்கப்படவும் இல்லை. அதுபற்றிய பேச்சும் இல்லை. எப்படித் தெளிவு ஏற்படமுடியும் என்று ஆயர் சிறுவர்களும், பிறரும் கவலைப்பட்டனர். அதே எண்ணம் தோன்றிக் காவலர்க்கும் ஊர்காவல் தலைவர்க்கும் வியப்பூட்டிற்று. கோவேந்தன் இறுதியில் கையமர்த்தினான். தீர்ப்புக் கூறப்போகும் பாவனையிலே, ஒரு குறிப்பேட்டையும் எழுது கோலையும் கையிலெடுத்தான். அவன் பேச்சையே யாவரும் எதிர்பார்த்து நின்றார்கள். “வழக்காடிகளே உங்கள் இருவர் சார்புகளையும் நான் நன்கு கேட்டாய்விட்டது. சான்றாளராக நான் எவரையும் அழைக்கவிரும்பவில்லை. நான் விரும்புவது கண்கூடான சான்றையே. இந்த வழக்கின் எல்லாக் கோணங்களையும் நன்கு கண்டிருக்கக்கூடிய சான்றாளர் ஒருவர்தாம் இருக் கிறார். அவரையே சான்றாளராக அழைக்கப் போகிறேன். அவர் முடிவே என் தீர்ப்பின் முடிவாக இருக்கும்” என்றான் கோவேந்தன். வழக்காடிகள் உட்பட யாவரும் சுற்றிப் பார்த்தார்கள். அத்தகைய புதுவகைச் சான்றாளர் யார் என்பது எவருக்கும் விளங்கவில்லை. கோவேந்தன் மீண்டும் பேசினான். “நான் கூறும் சான்றாளரைக் காண நீங்கள் எங்கும் சுற்றிப் பார்க்கவேண்டாம். அவர் ஆண்டவன் தான். அவர் உங்கள் கண்ணுக்குத் தெரியப்போவதில்லை. ஆனால், அவர் தீர்ப்பை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்” என்றான். கோவேந்தன் பேச்சு வழக்கின் புதிரை விடப் புதிராக இருந்தது. “புதிர் தீர்க்கும் இப் புதிர் யாதோ?” என்ற கேள்விக் குறி எல்லார் நெற்றிகளிலும் இருந்தன. கோவேந்தன் மடியிலிருந்து ஒரு சிறிய புட்டி எடுத்தான். அது நீலநிறமான புட்டி. அதன் மூடி திருகுமூடியாய் இருந் தது. அந்தப் புட்டியை அவன் வழக்காடிகள் இருவருக்கும் இடையே வைத்தான். “கடவுள் சான்றாக, நான் கூறுவது முற்றிலும் உண்மை” என்று கூறிக்கொண்டு, வழக்காடிகள் ஒவ்வொருவரும் இந்தப் புட்டிக்குள் தம் கை, கால், உடல், தலை எல்லா வற்றையும் அடக்க வேண்டும். யாரால் புட்டிக்குள்ளே சென்று உள்ளிலிருந்து பேச முடியுமோ, அவன் தான் உண்மையில் கோமாறன் ஆவான். இதுவே என் தீர்ப்பு” என்றான். தீர்ப்பு கேட்டு எல்லோரும் திகைத்தனர். கோமாறனுக்கு, வழக்கிலே முதல் தடவையாகக் கோபம் வந்தது. “இது என்ன தீர்ப்பு? நடித்த நடிப்பெல்லாம் இந்தக் குறும்புக்குத் தானா?” என்று அவன் சீறினான். “இதோ கோமாறனுக்கு உரியவர்கள் நிற்கிறார்கள். அவர்கள் சான்றாகக் கடவுளே உண்மைக் கோமாறனை அறிவிக்க இருக்கிறார். அதற்குள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய், வழக்காடியே?” என்றான் கோவேந்தன். கோமாறன் சீற்றம் அடங்கவில்லை. அவன் அடங்கிய கொந்தளிப்புடன் நின்றான். குறளிமாறன் முகம் மகிழ்ச்சியால் சிவந்தது. “கடவுள் சான்றாக, நான் கூறுவது முற்றிலும் உண்மை” என்று கூறிக் கொண்டு, அவன் புட்டி மீது குதித்தான். அவன் கால்கள் புட்டிக்குள் நுழைந்தன. உடல் நுழைந்தது. கைகள் முடங்கி அதனுள் நுழைந்தன. “பார்த்தீர்களா, என் மெய்மையை?” என்ற பெருமிதத் தோற்றத்துடன், தலையையும் அவன் உள்ளுக்கு இழுத்தான். புட்டிக்குள் இருந்துகொண்டே, “போதுமா சான்று” என்று கூவினான். காவலர், ஊர்க்காவலர் உட்பட, எல்லோரும் திகைத்து நின்றனர். ஆனால், கோவேந்தன் திகைக்கவில்லை. அவன் அவசர அவசரமாகப் புட்டியின் மூடியை எடுத்தான். “போதுமையா சான்று, எல்லாம் விளங்கிவிட்டது!” என்ற சொற்களுடன், மூடியைப் புட்டி மீது திருகினான். “நடந்தது என்ன, நடப்பது என்ன” என்றே யாரும் தெளிவாக அறியவில்லை. புட்டிக்குள் இருந்த குறளிக்குக் கூட எதுவும் தெரியவில்லை. ஆனால், மூடி நன்றாக இறுகியபின், கோவேந்தன் அதை எடுத்து எல்லோருக்கும் தெரியும்படி காட்டினான். அதைக் கோமாறன் முன்னே நீட்டினான். “அப்பனே, நீ தான் கோமாறன், உன் எதிரியாக நின்றவன் ஒரு குறளி. இதை ஆண்டவன் காட்டிவிட்டார். சற்றுமுன்பு நீ எவ்வளவோ கோபப்பட்டாய் படபடத்தாய். ஆனால், அதற்கும் பலன் இல்லாமல் போகவில்லை. உன் மனைவி, தாய், நண்பன் ஆகியவர்கள் சான்றுகளை இனி நீ கேட்பாய். முழு உண்மையும் அதன்பின் தான் உனக்கும் மற்றவர்களுக்கும் தெரியும்” என்றான். ஊர்க்காவல் தலைவர், காவலர் வியப்புக்கு இப்போது எல்லையில்லை; தீராத மாயத்தைக் கோவேந்தன் அறிவுத் திறம் தீர்த்துவிட்டது என்பதை அவர்கள் கண்டனர். ஆனால் இன்னும் என்ன முழு உண்மை என்று காணும் ஆர்வத்துடன், அவர்கள் வெளிப்படத் தம்மைக் காட்டிக் கொள்ளாமல் அமைந்து நின்றனர். “அன்பர்களே, வழக்கின் முடிவை நீங்கள் பார்த்தாய் விட்டது. எதிரியும் தண்டனை அடைந்து முடிந்துவிட்டது. இத்தனையும் ஆண்டவன் திருமுன்பிலே நிகழ்ந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதே ஆண்டவன் திருமுன்பில், இப்போது உங்களில் ஒவ்வொரு வரும் உங்கள் உள்ளத்தைத் திறந்து பேசவேண்டுகிறேன். முதலில் கோமாறன் தனக்கு நடந்தவை, தான் எண்ணியவை எல்லாம் கூறட்டும்” என்றான். கோமாறன் நடந்ததுமட்டுமின்றி, அதனால் தனக்கு ஏற்பட்ட குழப்பங்களையும் மன உடைவையும் எடுத்துரைத் தான். அது கேட்டு நண்பன் மும்முடி உள்ளம் அவனைச் சுட்டது. தாய் பூமாரி துடிதுடித்தாள். மனைவி குணமாலை பாகாய் உருகினாள். அடுத்தபடி நண்பன் தான் கண்டதும் கேட்டதும் கூறினான். நண்பனாக எண்ணிய கோமாறன் மாறுதலையும், அவன் மனைவியைப்பற்றிய தன் தவறான கருத்தையும் கூட எடுத்துக்கூறி வருந்தினான். நண்பன் உரைகள் தாய் உள்ளத்தில் பூட்டை உடைத்தன. அவள் மனம் விட்டுப் பேசினாள். கோமாறனிடம் கண்ட மாறுதலை மகனின் மாறுதல் என்று கொண்டதால், அவளுக்கு ஏற்பட்ட மனக்கசப்பையும், அதன் பயனாக ஆண்டவனிடம் அவள் செலுத்திய புதுப்பாசத்தையும் அவள் கல்லும் உருக எடுத்து விளக்கினாள். நண்பன் உரையும், தாய் உரையும் குணமாலை உள்ளத்தை ஒரே உணர்ச்சிவெள்ளம் ஆக்கி விட்டன. அவள் கணவன் அன்பில்லாதவன் என்ற தன் எண்ணத்தை எடுத் துரைத்து மன்னிப்புக் கோரினாள். ஆயினும் அதற்காகத் தான் ஆற்றிய நோன்பு, சமூகப்பணி ஆகியவைகள் பலித்து விட்டதற்காகக் கழிபேருவகை கொள்வதாக அவள் முடித் தாள். கோமாறன் வாழ்வில் புயலின் பின் தென்றல் வீசிற்று. கோவேந்தன தீர்ப்பின் முழுப்பெருமையும் தமிழக மெங்கும் பரந்தது. மதுரைப் பேரரசனே அவனுக்குக் கோவேந்தன் என்ற பட்டத்துடன் ஆய்ப்பாடி முழுவதும் ஆளும் உரிமையும் அளித்தான். கோமக்களாகிய ஆயர் கோவேந் தனையே தம்குடி தழைக்கவந்த புதியதொரு கண்ணபெருமானாக வாழ்த்தி மகிழ்ந்தனர். எஎஎ அப்பாத்துரையம் - 40 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) இளையோர் வரிசை  மேனாட்டு இலக்கிய கதை  மேனாட்டு கதைக் கொத்து  சிறுகதை விருந்து  வியப்பூட்டும் சிறுகதைகள் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 40 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 24+288 = 312 விலை : 390/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 312 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். பொருளடக்கம் மேனாட்டு இலக்கியக் கதைகள் 1. ஆர்தர் வருகை ... 4 2. லான்ஸிலட் பெருந்தகையின் வீரம் ... 15 3. காரத் பெருந்தகையின் அருஞ் செயல்கள் ... 21 4. கெரெய்டின் திருமணம் ... 30 5. கெரெய்ன்டின் ஐயப்பேய் ... 35 6. பலினும் பலானும் ... 47 7. மாயாவியை மயக்கிய மாயக்காரி ... 52 8. லான்ஸிலட்டும் ஈலேயினும் ... 59 9. தெய்வீகத் திருக்கலம் ... 67 10. ஆர்தர் முடிவு ... 72 மேனாட்டுக் கதைக் கொத்து 1. கிரேக்கக் கதைகள் (முதற்புத்தகம்) ... 85 2. கிரேக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்) ... 117 1. வெல்போர்த் தீஸியஸ் ... 118 2. ஒடிஸியஸ் ... 127 3. பொன்மறித் தோட்டம் ... 136 4. மெலீகரின் வீர மறைவு ... 147 5. அட்லாண்டாவின் ஓட்டப்பந்தயம் ... 155 6. பெர்ஸியஸ் ... 162 7. பறக்கும் குதிரை ... 172 3. இன்சுவைக் கதைகள் (மூன்றாம் புத்தகம்) 1. நீர் அணங்கு ... 179 2. பச்சைக்கிளி ... 187 3. மீனம்மை ... 198 4. தேன்மொழியாள் ... 209 5. தங்கக் கவரிமான் ... 218 சிறுகதை விருந்து 1. தீமையில் நன்மை ... 227 2. பேராசைப் பேயன் ... 233 3. சிற்றாவின் சீற்றம் ... 238 4. குடிக்கூலி ... 241 5. மூட்டைப்பூச்சி ... 246 6. ஆபத்தை விளைக்கும் அழகான பொருள் ... 250 7. எல்லாம் நன்மைக்கே ... 252 வியப்பூட்டும் சிறுகதைகள் 1. பண்ணன் பண்ணை ... 257 2. கோவேந்தன் ... 266