பொன்னின் தேட்டம் முதற் பதிப்பு - 1957 இந்நூல் 2002 இல் வெற்றியரசி பதிப்பகம், சென்னை 88 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. பொன்வேட்கை மக்கள் பொன்னுக்குக் கொடுக்கும் உயர்வு வேறு எதற்கும் கொடுப்பதில்லை. பால் வேண்டாப் பூனையும் பழம் வேண்டாக் குரங்கும் இருந்தாலும் இருக்கலாம்; பொன் வேண்டா மனிதன் இருக்கமாட்டான் என்று திண்ணமாகக் கூறலாம். அறநூலார் மக்கள் வேட்கைகளை மண், பெண், பொன் என்ற மூன்றனுள் அடக்குவர். ஆனால் மண்ணின் விளைவினுள் சிறந்ததும் பெண்ணின் விழைவுக்கு ஆளானதும் பொன்னேயாகும். தமிழ்ப் பாகவத புராண முடையார், ‘விழைவெ னப்படு கின்றது மென்மெலத் தழல்வி ரிந்த கனகத் தரும்பிமென் மழலை மாதர் மருங்கிற் படர்ந்துபைங் குழவி மீது கொழுந்துவிட் டோங்குமால்.’ என்றனர். விழைவு என்னும் கொடி பொன்னில் வித்தூன்றி அரும்பி, மாதராகிய பந்தரில் படர்ந்து குழந்தைகளாகிய கொழுந்துகள் விட்டு வளருமாம்! பொன்னை நனவுலகில் பெறாதவர் அதைப்பற்றிக் கனவு காண்கின்றனர். நம் உள்ளத் தடத்தின் உள்ளுறை மறைவுகளை அறிந்த கவிஞர்கள் நனவுலகத்தின் குறைகளைப் போக்கிப் புனைவாற்றலால் தாம் இயற்றிய நிறைவுலகத்திற்குப் பொன்னுலகு என்றுதான் பெயர் கொடுத்தனர். உலகின் நடுவில் அமர்ந்து வெங்கதிரும் தண்கதிரும் தன்னைச் சுற்றிவர நிற்பதாகக் கூறப்படும் தெய்வ மாமலையாகிய மேருவும் ஒரு பொன் மலையே. அதுமட்டுமன்று. அது தன்னை அண்டியவரை யெல்லாம், தன்னை அண்டிய காகத்தைக்கூடப் பொன்மய மாக்கக் கூடிய மலையாம்! தமிழ்மொழி வழக்கைப் பாருங்கள்! போற்றத்தக்க பொருள்களைப் பொன்னைப்போல் போற்றுக என்றனர் தமிழர். என்றும் மாறா விலையுடைய பொருள்களுள் யானை ஒன்று. அதனைக் குறிக்க அவர்கள் “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்” என்றனர். தாய் தந்தையர் தம் உயிரினும் உயர்வாகக் கருதும் மக்களைப் பொன்னே, பொன் மணியே எனப் புனைந்து கூறி மகிழ்வர்; மற்றும் அவர்களைப் பொன்னாகவே கருதித் தாமும் பிறரும் அவர்களைப் பொன்னன் என்றும், பொன்னி என்றும், தங்கமணி என்றும் தங்கம்மை என்றும் பலவாறாக அழைப்பர். காதலிளைஞரும் காதலியரின் அருமையைக் குறிக்கும்போது பொன்னினும் உயர்ந்த பொருளைக் கருதமுடிவதில்லை. பலபடக் கூறுவானேன்? நிலவொளியிள் அழகைப் பொன் நிலவு என்றே குறிக்கின்றனர் கவிஞர். வாணிப உலகின் தொடர்பற்ற கவிஞரே இவ்வளவு தொலைவு பொன்னில் மயங்கினால், வாணிப உலகிலும் உலகியல் வாழ்விலும் ஈடுபட்ட பிறர் மயங்குவதில் என்ன வியப்பு? உலகியல் கடந்த தெய்வம் ஒன்று உண்டோ இல்லையோ, உலகியலுக் குள்ளாக ஒரு தெய்வம் உண்டெனில், அது பொன்தான். அப்பொன் தெய்வத்தின் ஆற்றலே ஆற்றல்! அதன் சூழலுட்பட்ட மக்கள் அதில் சிக்கித் தம்மை மறக்கின்றனர்; தம் உறவை மறக்கின்றனர். உலகைக்கூட மறந்து அதனையே உலகாகவும் இறைவனைக்கூட மறந்து அதனையே இறை வனாகவும் கொள்கின்றனர். மற்றும் பொன்னைப் பெற்றவர் ஒருபுறம் அதன் பிடியுட்பட்டு வாழ்க்கையைத் துரும்பென மதிக்கின்றனர். இன்னொரு புறம் அதனைப் பெறாதவர் அதனைப் பெறும்வண்ணம் தம் வாழ்நாள் முற்றும் உழைக்கின்றனர். அதற்காக எம்முயற்சியும் செய்ய அவர்கள் தயங்குவதில்லை. அவர்கள் அதற்காகவே வாழ்ந்து அதிலேயே உயிர்விடுகின்றனர். பலர் இம்முயற்சியில் உயிரினும் அரிய தம் மதிப்பினையும் ஒழுங்கை யுங்கூட விட்டுக்கொடுக்க முனைகின்றனர். நன்றோ தீதோ, மாந்தரை வேட்கை என்னும் தளை வீசி அடிமைப்படுத்தும் இப்பொன் தெய்வத்தின் ஆற்றல் அளவிடற் கரியது. அதன் கடைக்கண் நோக்கத்தால் சிறியவர் பெரியவர் ஆகின்றனர். அதன் அருட்பேறடைந்தவர் மெலியராயினும் வலியவரை அடக்கி ஆட்கொள்ளுகின்றனர். சிறுவர் பொன்னையோ பொன் போன்ற பகட்டான பொருள்களையோ வைத்து விளையாடுகின்றனர்; பெரியோர் பொன்னை வைத்துச் சூதாடுகின்றனர். ஆடவர் பொன்னைப் பொருளாக மதித்து அதனுக்காக மாளுகின்றனர்; பெண்டிர் அப் பொன்னைக் கையாளும் வண்ணம் ஆடவரைப் பகடையாக வைத்தாளுகின்றனர். நாகரிக மிக்கவர் தம் கழுத்திலும் கையிலும் காலிலும் பொன்னணிகள் அணிந்து மகிழ்வர். நாகரிக மற்றவரோ இவ்வியற்கையான இடங்கள் போதா என்று பிற உறுப்புக் களிலும் தொளை செய்து பொன்னணிகளுக்குத் தம் உடலில் புதிய இடம் தேடுகின்றனர். இவ்வாறாகச் சிறியவர், பெரியவர், ஆடவர், பெண்டிர், நாகரிகமற்றவர், நாகரிக மிக்கவர் ஆகிய அனைவருடைய உள்ளங்களையும் பொன் கவரத்தக்க பொருளாய் அமைந்துள்ளது. இக்கவர்ச்சி ஆக்க முறையில் நற்பயனுடையதுதானா அன்றா என்று ஆராய்வோம். உலகியல் விழைவுகள் யாவுமே கானல்நீர்போல் நிலையற்றவை என்று கூறுவர் முற்றத் துறந்த முனிவர். ஆனால் உலகியலில் ஆழ்ந்து ஆராய்ந்த அறிஞர்கூட அவ்வப்போது பொன்னின் தேட்டம் கானல் நீர்த் தேட்டம் போன்றது என்று கருதுவதுண்டு. பொன்னையே பற்றுக்கோடாகக் கொண்டு மற்ற எல்லாப் பொருள்களையும் புறக்கணிக்க எண்ணிய பேராவற்பேயன் கதையை யாவரும் அறிவர். உலகெலாம் பொன்மயமாயிருந்தால் நன்று என்று எல்லாருந்தாம் எண்ணுகிறோம். மனித வகுப்பின் இவ்விழைவினை நடைமுறையில் நிறைவுபெறக் கைவரப் பெற்றான் பேராவற்பேயன். பெற்று அவன் தான் நற்பேற்றுப் பேரலையின் உச்சியில் மிதப்பதாகவும், தான் பெறத்தகும் பேறனைத்தும் பெற்றதாகவும் எண்ணினான். (இதுவும் நம்மில் யார் எண்ணார்!) ஆயின் அந்தோ. மலர் பொன்னானால் அதற்கு மணமேது? உணவும் நீரும் பொன்னானால் அதனை உண்ணலும் பருகலும் கூடுமோ? மாந்தரும் உயிரினங்களும் பொன்னானால் அவை பொன்னானாலும் பெறற்கரிய உயிர் பெற்று வாழுமோ? பேயன் இவ்வுண்மைகளை யெல்லாம், நேரில் கண்ட பின்புதான் அறிந்தான். பொன் விருப்பத்திடையும் மாறாது கிடந்த அவன் தந்தையுள்ளம், புதல்வி பொன்னானபோதுதான் தன் பொன் மயக்கத்தினால் நேர்ந்த தவற்றின் முழு அளவையும் நன்கறிந்தது. அதன் பயனாக அவன் மனம் பொன் மீது வெறுப்புற்றது. பொன்னின் ஏமாற்றம் நீங்கி இயற்கையுலகே மீண்டும் வேண்டும் என்று அவன் விரும்பினான். பொன்னின் மதிப்பு மக்கள் மனத்தில் ஏற்பட்ட வேட்கையே யன்றி வேறன்று என்பதை டால்ஸ்டாயின் பேர்போன “மூட ஐவான்” கதை நன்கு விளக்கும். உலகில் பூசலும் போட்டியும் உண்டுபண்ணி அழிவு வேட்டையாட வந்த “பேய்கள்” பொன்னிலும் பொன் போன்ற வெளி மயக்குகளிலும் நம்பிக்கை வைத்த மற்ற உடன்பிறந்தாரிருவரையும் தம்முள்ளும் பிறருடனும் பகைமை கொள்ளும்படி தூண்ட முடிந்தது, அப்பகை வாயிலாக அவர்கள் அப் பேய்களின் தீக்கருத்துக்களுக்கு அடிமைப்பட்டு அவற்றின் அழிவுச் செயலுக்குக் கருவிகளாய் அமைந்தனர். ஆயின் பொன்னைப் பொருளாக மதியாது வாழ்க்கையையும் வாழ்க்கைக் கருவிகளையுமே பொருளாக மதித்த ஐவானிடம் பேய்களின் குட்டிக் கரணங்கள் எவையும் பயனளிக்கவில்லை. அவன் நாட்டு வேலையாட்கள் பேய்முதலாளியிடம் பணி பூண்டு பொன் காசுகளைப் பணி ஊதியமாகச் சில நாள் பெற்று அவற்றைத் தம் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுத்தனர். பிள்ளைகள் அவற்றைப் பிற விளையாட்டுப் பொருள்களுடன் விளையாட்டுப் பொருள்களாகவே மதித்து விளையாடித் தம் வழக்கப்படியே சில நாளில் சலிப்புற்றனர். அதன் பயனாக அவர்கள் பெற்றோரிடம் சென்று “எங்களுக்கு இனிப் பொன் காசுகள் வேண்டாம்; சங்கு, பாசி, பவழம் முதலியவையே வேண்டும். அவற்றைக் கொண்டுவந்து தாருங்கள்,” என்றனர். வேலையாட்களும் அதன்பின் பேயினிடம் சென்று “இனி எங்களுக்கு ஊதியமாகப் பொன் வேண்டாம். வேறு ஏதேனும் கொடு. சங்கோ, பாசியோ, பவழமோ எது இருந்தாலும் கேடில்லை. ஊதியமாகப் பெற்றுச் சென்று எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம்” என்றனர். ஜெர்மென் கவிஞர் கெதெ (ழுடிநவாந) ஆங்கில நாடகாசிரியர் மார்லோ (ஆடிசடடிற) முதலியவர்களுடைய பேய்க்கதைகளில் பேய்கள்தாம் மனிதரையும் மனித வகுப்பினரையும் பார்த்துச் சிரிக்கும். ஆனால் டால்ஸ்டாயின் இக்கதையில் மனித வகுப்பு, பேய்களைப் பார்த்து உள்ளூரச் சிரிக்கும் அடங்கிய சிரிப்புக்குரல் செவிப்புலனாகின்றது. பேய்களின் சிரிப்பை விட இம் மனித வகுப்பின் சிரிப்பு நம் செவிக்கும் நம் துன்புற்ற உள்ளத்துக்கும் எத்தனை ஆறுதல் தருகிறது! டால்ஸ்டாய் போன்று பிற அறிஞரும் கதையாலும் கவிதையாலும் கட்டுரையாலும் பொன்னின் வேட்கையை வெறும் பித்து எனவும், அறியா மையால் வந்த மயக்கம் எனவும் ஏளனம் செய்துள்ளனர்! ஆனால் பித்துக்கும் ஒரு ‘பிடி’ இருக்க வேண்டுமே. கானல் நீர் கண்டு மயங்கியவர் அதில் என்றென்றுமா மயங்குவர்? அதுவும் நாகரிகமிக்க மக்களினம், நாகரிகமிக்க வல்லரசுகள் அதனுக்காகப் போரிடுமா? உண்மையில் இக்கதைகளை எழுதியவர்கள் கூடப் பொன்னை வெறுத்தனர் என்று எண்ணிவிட முடியாது. ஆழ்ந்து நோக்கினால் அவர்கள் எள்ளி நகையாடியது பொன்னையல்ல, பொன் வேட்கையையே என்பது தெரியவரும். பொன்னின் உள்ளார்ந்த விலையையோ, அதன் மெய்ப் பயனையோ ஆராயாமல் மேலீடான அதன் தோற்றத்தில் மயங்கி ஏமாறும் மனப்பான்மையையே இவ்வறிஞர் ஒறுக்கின்றனர். மின்னுவ தெல்லாம் பொன்னல்ல: பொன் வேட்கையும் பொன்னுணர்வோ பொன்னின் பயனோ ஆகமாட்டாது. பேராவற் பேயன் கண்ட உண்மை இதுதான். பொன் உணவாகாது, உடையாகாது, இரும்புபோல் கருவிகள் செய்யவும் உதவாது. அடுப்பில் வைத்தெரிக்க விறகுகூட ஆகாது. (ஆனால் பொன்னைக் கொடுத்து இவ்வனைத்தும் பெறலாம்.) ஆகவேதான் பொன் உண்மையான செல்வமன்று, என்று அவர்கள் கூறினர். பொருள் அல்லது செல்வம் என்பது வாழ்க்கையின் கருவி மட்டுமே. பொன் நேரிடையான வாழ்க்கைக் கருவி அன்று; ஆகவே நேரிடையான செல்வமும் அன்று. அது அக் கருவியைக் கைக்கொள்ளும் ஆற்றலுக்கு அல்லது உரிமைக்கு ஓர் அறிகுறி. கொடி பேரரசினைக் குறிப்பினும் அது பேரரசாகாதன்றோ? மணி முடியும் செங்கோலும் அரசாட்சிக் கறிகுறியான அரசன் அணிகலன்கள் ஆயினும் அவையே அரசாட்சி ஆகா அல்லவா? அது போலவே பொன் செல்வத்தின் மதிப்பீடு மட்டுமேயன்றி நேரிடையான உண்மைச் செல்வமாகாது. அவ்வுண்மைச் செல்வத்திற்குப் பொன் எவ்வகையில் அறிகுறியாயிற்று என்று பார்ப்போம். 2. பண்பும் பயனும் இயற்கையின் செல்வங்களுள் உயர்ந்தது எது, தாழ்ந்தது எது? என்று அறுதியிட்டுக் கூறுதல் முடியாது. ஏனெனில் வெளிப்பகட்டான முத்து, மணி முதலியவற்றைவிடத் தோற்றத்தில் இழிந்த இரும்பும் நிலக்கரியும் இன்று நாகரிக உலகிற்கு இன்றியமையாத தேவைகள் ஆய்விட்டன. ஆயினும் எல்லாப் பண்புகளையும் ஒப்பு நோக்கினால் இயற்கையன்னையின் தலை சிறந்த செல்வம் பொன்னே என்பதில் ஐயமில்லை. காலப்போக்காலும் ஆழ்ந்த ஆராய்ச்சியாலும் பொன்னைப் பற்றிய பல பழைய கருத்துக்கள் மாறியும் திருந்தியும் உறுதிப் பட்டும் வந்திருக்கின்றன. ஒரு காலத்தில் பொன்னே திண்பொருள் களுள் எடை மிகுதியிலும் விலை உயர்விலும் முதன்மையுடைய தாகக் கருதப்பட்டது. இன்னும் அவ்விரு வகையிலும் பொன் உயர்நிலையுடையதாகவே இருந்து வருகிறது. ஆனால் இன்று அது முதன்மையுடையது என்று கூறிவிடுவது முற்றிலும் சரியன்று. பொன்னைவிடத் திண்பொன் (ஐசனைரைஅ) மின்பொன் (ஞடயவiரேஅ) ஆகிய திண்பொருள்கள் (ஆநவயடள) எடை மிகுந்தவை. மின் பொன், ஒண்பொன் (சுயனரைஅ) ஆகியவை பொன்னினும் விலை மிகுந்தவை. ஆயினும் இம் மூன்று திண்பொருள்களும் அருகியே வழங்குகின்றன. எனவே இன்று பெருவழக்கான திண்பொருள் களுள் பண்டைக்காலத்தைப் போல இன்னும் பொன்னின்நிலை முதன்மையுடையதாகவே இருக்கிறது. கீழ்வரும் அட்டவணை திண்பொருள்களினிடையே பொன்னின் எடை நிலையை நன்கு காட்டும். அதிற்காணும் எண்கள் திண்பொருள்களின் ஒப்ப எடை எண்கள் (ளயீநஉகைiஉ பசயஎவைல); அதாவது சரி அளவு நீருடன் ஒப்பிட்டு அவற்றின் எடை மிகுதியை நீரினைப்போல் இத்தனை மடங்கு என்று காட்டும் எண்கள். (புள்ளிகள் பதின்கூற்றுப் புள்ளிகள்), (னுநஉiஅயடள) திண்பொன் 22.38 செம்பு 8.94 மின்பொன் 21.45 பித்தளை 8.00 பொன் 19.32 இரும்பு 7.79 பாதரசம் 13.60 உருக்கு 7.75 காரீயம் 11.35 வெள்ளீயம் 7.29 வெள்ளி 10.51 துத்தம் 7.19 தண்ணீர் 1.00 14.1 அங்குலம் நீள அகல உயரமுடைய பொன்கட்டி 1 டன் எடையுள்ளதாயிருக்குமாம். விலையில் எதனாலும் எட்டிப்பிடிக்க முடியாத திண்பொன், ஒண் பொன் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகத் திண்பொருள்களுள் விலை உயர்வானது பொன்னேயாகும். பொன்னுக்கடுத்தபடி உயர்ந்த திண் பொருளாகிய வெள்ளி அதில் ஏறக்குறைய இருபதில் ஒரு பங்கே விலை யுடையது. செம்பு, இரும்பு, ஈயம் முதலிய பிற திண்பொருள்கள் வெள்ளியிலும் எத்தனையோ மடங்கு விலை குறைந்தவை. பொன்னும் வெள்ளியும் திண் பொருள்களுள் விலையுயர் வுடையவை. அதனோடு அவை அரும்பொருள்கள் எனவும் போற்றப்படுகின்றன. இங்ஙனம் போற்றப்படுவதற்குத் தலைமை யான காரணங்கள் அவற்றின் நிறமும் மினுமினுப்பும், எளிதில் பளபளப்புக் கெடா நிலையுமேயாகும். பொன்னின் இயற்கை நிறம் பசுமையான மங்கிய மஞ்சள். வெள்ளியின் நிறம் தூய வெண்மை. நிறத்தை மட்டும் பார்த்தால், பித்தளை என்ற திண் பொருட் கலவை பொன்நிறத்தையும் வெள்ளீயம் வெள்ளியையும் போன்றன. ஆனால் பொன்னையும் வெள்ளியையும் போலன்றி இவை பழகப் பழக நிறங் கெடுகின்றன. காற்றிலுள்ள உயிர்க் காலுடன் (டீஒலபநn) கலந்து களிம்பு அல்லது துருப் பிடிப்பதே அதற்குக் காரணம். வெள்ளியிலும் வெண்மை மிக்கது மின்பொன். ஆயின் இம்மின்பொன் உண்மையில் மேலே கூறியது போல் வெள்ளி பொன் ஆகியவற்றைவிட எவ்வளவோ விலையும் அருமையும் மிக்க உயர் திண்பொருள் ஆகும். இரும்பு கூட வெட்டுவாயில் வெள்ளி போன்றதே. ஆனால் பிற எல்லாத் திண்பொருள்களையும்விட இது மிகுதியாகவும் விரைவாகவும் நேர்மையுடனும் உயிர்க்காலுடன் கலந்து துருப்பிடிப்பதால் கிட்டத்தட்ட எப்போதும் கருப்பாகவே இருக்கிறது. செம்பு பொன்னிலும் பழுப்புடைய திண்பொருள். பொன்னுக்குப் பழுப்பேற்றுவதற்குக் கூடப்பயன்படுவது. ஆயின் இரும்புக்கு அடுத்தபடி விரைவில் இது உயிர்க்காலுடன் கலந்து நிறம் கெடுகிறது. பளப்பளப்பில் பொன்னுக்கு மிகவும் அணுக்க முடையது பித்தளை. இது செம்பும் துத்தமும் கலந்த கலவை. உயிர்க்காலுடன் அவ்வளவு விரைவாகக் கலக்காததனால் பொன்னைப் பயன்படுத்த முடியாத பேரளவான பணிகளுக்கு இது செல்வரால் பயன்படுத்தப்படுகிறது. இதில் வெண் பித்தளை என்ற இன்னொருவகையுமுண்டு, செல்வர் வீட்டுக் கதவுகள், மேடைப்பலகை அறைகள், பெட்டிகள் முதலியவற்றின் பிடிகளும் கலங்களும் இவற்றால் செய்யப்படுகின்றன. உண் கலங்களுள் புளிப்புள்ள உணவுகள் வைக்கப் பித்தளையும் செம்பும் ஆகா. புளிப்புப் பட்டுவிட்டால் இவற்றால் நச்சுத் தன்மையுடைய களிம்பு ஏற்படுகின்றது. இதனைத் தடுக்க ஈயமோ ஈயப் பூச்சோ பூசுகின்றனர். ஆனால் ஈயம் சூடான உணவுக்கு விலக்கப் படவேண்டும். இத் தீங்குகளிலிருந்து பாதுகாப்பாக இன்று கண்ணாடிக் கலங்களும் வெண்கலக் கலங்களும் அலுமினியக் கலங்களும் மங்கு அல்லது பீங்கான் கலங்களும் வழங்குகின்றன. ஆனால் அழகிலோ, தூய்மையிலோ, மேற்கூறிய எத்தகைய தீங்கிற்கும் ஆளாகாத தன்மையிலோ இவற்றுள் எதுவும் வெள்ளிக்கும் பொன்னுக்கும் ஈடாக மாட்டாது. ஆகவே முதல்தரச் செல்வரும் மன்னரும் வெள்ளி அல்லது அதனினும், மிக்கதான பொற் கலங்களை உண் கலங்களாகவும் பரிமாறும் கலங்களாகவும் வழங்குகின்றனர். பொன்னில் வெள்ளி கலக்குந்தோறும் அது பசுமையாகியும் வெளிறியும் தோன்றும். செம்பு கலக்குந்தோறும் பழுப்பும் செந்நிறமும் மிகுதியாகும். சுரங்கங்களில் பொன் உருகி ஓடும்போது பச்சைப்பசேலென ஒளி வீசுவது அதில் கலந்த வெள்ளி துத்தம் முதலியவற்றாலேதான். பொன் இயற்கையன்னையின் மடியிலிருந்து எடுக்கப்படும் போது பல பொருள்களுடன் கலந்து சேர்ந்துதான் வருகிறது. ஆனால், கலப்பு வேறு, சேர்மானம் வேறு. (ஆiஒவரசந & ஊடிஅயீடிரனே) கலந்த பொருள்களை வேறு பிரிப்பது எளிது. அவற்றின் தனிப்பண்புகள் மாறுவதில்லை. ஆனால் சேர்மானமாய்விட்டால் பண்பும் தோற்றமும் எல்லாம் மாறித் திரியும். திரிந்த அப்பொருள்களை மிகவும் கடு முயற்சியின்றி மீட்டெடுத்தல் எளிதில் இயலாது. தங்கம் வெள்ளிகளின் தனிச் சிறப்புக்களுள் ஒன்று அவை எளிதில் பிற பொருள்களுடன் சேராதிருப்பதே. சிறப்பாக மற்ற எல்லாத் திண்பொருள்களும் நீரகங்களுக்கு (ஹஉனை) இடைந்துபோகுந் தன்மை உடையவை. வெள்ளிகூடக் கந்தரக நீரகம், வெடியுப்பு நீரகம் (ளுரடயீhரசiஉ ஹஉனை, சூவைசiஉ ஹஉனை) ஆகிய வற்றுடன் கலந்து திரியும். ஆனால் பொன் ஒன்று பெரும்பாலும் நீரகங்களுடன் சேர்ந்து திரிவதில்லை. இப் பண்பைப் பயன்படுத்தித்தான் மக்கள் பொன் கலவையிலிருந்து பொன்னை எளிதில் பிரித்தெடுக்கின்றனர். பொன்னுடன் எளிதில் சேரும் பொருள்கள் அரசநீரம் (ஹயீரய சுநபயை) என்ற கலவை நீரகமும், பாதரஸமும், ஸயானைடு என்ற பொருளுமே. அரச நீரகம் என்பது செறிவுமிக்க வெடியுப்பு நீரகம் (சூவைசiஉ ஹஉனை) ஒரு பங்கும், செறிவுள்ள நீர்க்கால் பாசக நீரகம் (ழலனசடிஉhடடிசiஉ ஹஉனை) மூன்று பங்கும் சேர்ந்தது. மற்றும் உயர் வெப்பநிலையுடைய வேறு (ளுநடநniஉ ஹஉனை, கூநடடரசiஉ ஹஉனை) ஆகிய இரு நீரகங்களிலும் தங்கம் கரையும். அரச நீரகத்துடன் கலந்த பொன் “பொன் நீர்” என்று வழங்குகிறது. பொன் பூச்சுக்கு இது மிகவும் பயன்படுகிறது. இங்ஙனம் பொன் இயற்கையின் பரப்பிலுள்ள பொருள் களுடன் எளிதில் கலவாதிருப்பதனால்தான் அது அழியாச் செல்வமாகப் போற்றப் படுகிறது. எகிப்திய அரசர் கல்லறை களிலுள்ள பொன் அணிகளும், பொன் ஆடைகளும் 7000 அல்லது 8000 ஆண்டுகள் கல்லறைகளுக்குள்ளிருந்தும் அழியாதும் நிறம் கெடாதும் இருக்கின்றன. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ‘லுதீன்’ என்ற கப்பல் ஹாலந்துக் கடற்கரை யருகில் மூழ்கிற்றாம். அதையும் அதிலிருந்த பாரிய பொற்குவையையும் அண்மையில் வெளியில் எடுத்தார்கள். அப்போது அத்தங்கத்தின் பண்பைக்கண்டு யாவரும் வியந்தன ராம். 150 ஆண்டுகள் உப்பு நீரில் கிடந்த வேறு எப்பொருள்தான், அன்று உருக்கி வார்த்தடித்தது போலிருக்கக் கூடும்? தங்கமும் வெள்ளியும் பிற எல்லாத் திண்பொருள் களையும்விட எளிதில் தகடாக அடிக்கவும் கம்பியாக நீட்டவும் இடம் தருபவை. நுண்ணிய கலைப்பண்பு மிக்க வேலைப் பாடுகள் இரு திண்பொருள்களிலும் வியத்தகு முறையில் செய்தல் கூடும். நம் நாட்டுக் கம்மியர் பண்டுதொட்டு இன்றளவும் இதில் தலைசிறந்து விளங்குகின்றனர். அன்னத்தின் தூவிகள்போல் மெல்லிய தகடுகளாக அல்லது தாள்களாகத் தங்கத்தை அடிக்க முடியும். ஒரு அவுன்சுத் தங்கத்தைத் தாள்களினிடையில் வைத்து அடித்து அடித்து ஒன்றேகால் அங்குலச் சதுர அளவுள்ள 2500 தகடுகள்வரை அடிக்கமுடியுமாம். இவ்வாறே ஒரு கிராம் தங்கத்தைக் கிட்டத்தட்ட 2 கல் தொலையளவு நீளமுள்ள கம்பியாக நீட்டக்கூடுமென்கின்றனர். இக்கம்பி மிக மெல்லியதாய் நூறாயிரத்தி லொருபங்கு மில்லிமீட்டர் அதாவது அங்குலத்தில் இருபத்தைந்து நூறாயிரத்தில் ஒருபங்கு திண்ணமுடையதா யிருக்கும். தங்கக் கம்பிகளை இத்தகைய மெல்லிய நூல்களாக்கி அதினின்று பொன்னாடைகளும், பொன் கரைகளிட்ட ஆடைகளும் செய்கின்றனர். பொன் பாரன் ஹைட் வெப்ப நிலையளவை 1947 பாகையில் (நூற்றளவை 1063) உருகுநிலை யெய்தும். நூற்றளவை 1250-இல் விரைந்து உருகும். தங்கம் ஆவியாவதற்கு 250000 நூற்றளவை (450320 பாரன் ஹைட்) வெப்பநிலை வேண்டும். தங்கத்தின் உருகு நிலையையும் கொதி நிலையையும் பிற திண்பொருள்களுடனும் நீரின் நிலைகளுடனும் கீழே வரும் அட்டவணையில் ஒப்பிட்டுக் காண்க. உருகு நிலை கொதிநிலை (பாரன்ஹைட்) இரும்பு 27860 பொன் 45,032 (250000 உ) (ஊயளவ) இரும்பு 4,393 (24500உ ) செம்பு 1996 பாதரசம் 644 பொன் 1947 துத்தம் 77 நீர் 210 காரீயம் 617 வெள்ளீயம் 442 நீர் 5 பொன்னின் தனிப்பண்புகள் பலவற்றை மேலே கூறினோம். பொன் என்னும் பொருளாயிராமல் எடைப்பொருளாயிருப்ப தனால் இதற்குத் தனக்கென ஒருவடிவம் இல்லை என்பது கூறாமலே அமையும். அதனைப் பிற பொருள்களைப்போலவே எப்படியும் நிலை திரித்து அமைக்கலாகும். ஆனால் இயங்கியல் ஆராய்ச்சியாளர்கள் (ஞாலளiஉளைவள) எத்தகைய பொருளும் கொதித் தாறும் பொழுது ஒரு தனிப்பட்ட வடிவினை எடுத்துக் கொள்கின்றது என்றும் அதன் மூலம் அதனைத் தனிப்படப் பிரித் துணர்தலும்கூடும் என்றுங் கூறுவர். இவ்வடிவத்திற்கு மணியுரு என்று பெயர். பொன்னுக்கும் இத்தகைய மணியுரு உண்டு. தூய பொன்னைத் தமிழில் பசும்பொன் என்றும் தங்கம் என்றும் கூறுவர். பெயருக்கியைய உண்மையில் அது மிகவும் மென்மையுடையது. ஒரு சிறிதேனும் செம்பு இல்லாதபடி எப் பணியிலும் வழங்கமுடியாத அளவு அது குழைவு உடையது. திண்பொருள்களுள் இதன் திண்மைநிலை எவ்வளவு குறைவானது என்பதைக் காண்க. கல்லியம் 7.0 அலுமினியம் 2.9 (ளுடைiஉடிn) வெள்ளி 2.7 திண்பொன் 6.5 துத்தம் 2.5 இரும்பு 4.5 பொன் 2.5 மின்பொன் 4.3 வெள்ளீயம் 1.8 செம்பு 3.0 காரீயம் 1.5 மின் வன்மைச் செலவு (நுடநஉவசiஉ ஊடினேரஉவiடிn) ஒன்றில்மட்டும் பொன் வெள்ளிக்கு முதலிடம் தந்து இரண்டாம் இடம்பெற்று நிற்கின்றது. இவ்வகையில் அது வெள்ளியில் நூற்றுக்கு எழுபத்தைந்து, அஃதாவது முக்காற்பங்கு செலவு உடையது. பொன்னின் நேர்மை என்பது அதில் உள்ள தூய பொன்னின் அளவு, இதனைத் தமிழர் மாற்றுக்களாக அளப்பர். முழுமையும் தூய்மையுடைய தங்கம் பத்தரை மாற்று என்றும், கலப்பு மிகைபட மிகைபட மாற்றுக்குறைவு என்றும் கொள்ள வேண்டும். பொன்னின் மாற்றை உரைகல்லில் உரைத்துக் காண்பர். மையெனக் கருத்துச் சற்றே சுரசுரப்பான உரைகல்லில் மிகுதியுந் தேய்வில்லாமலே பொன்னின் வடு எளிதில்படும். அதன் நிறத்திலிருந்து மாற்றை நுனித்துணர்வர் கம்மியரும் வணிகரும். பொன்னிலுள்ள வடுக்களை அகற்றவும் அதனைத் தனித்தெடுத்து வைத்துக்கொள்ளவும் உதவும்படி கருமையான ஒருவகை மெழுகையும் அவர்கள் வழங்குகின்றனர். நிறத்தை மட்டுங் கொண்டு எளிதில் மாற்றை உணர முடியாதவர்கள் மாற்று ஆணிகள் என்ற பலவகை மாற்றுக்கள் உடைய பொன் ஆணிகளின் கோவை ஒன்றை வைத்துக்கொண்டு, பொன்வடுவுடன் அவற்றின் வடுக்களை ஒப்புமை நோக்கி மாற்றறிவர். நேர்மையை மேல் நாட்டினர் வேறுமுறையில் 24 மாற்று நிலைகள் (ஊயசயவ) ஆல் வகுப்பர். ஆங்கில அரசியல் ஏற்புத் தங்கம் (க்ஷசவைiளா ளுவயனேயசன ழுடிடன) 22 மாற்று நிலை உடையது. இதில் 100-க்கு 91-67 பங்கு பொன்னும் 8.33 பங்கு செம்பும் உண்டு. வாணிபத்துக்கான பொன் 19 1/2 மாற்றுநிலை இருந்தாலே சட்டப்படி நல்ல தங்கமாகும். 19 மாற்றுநிலைப் பொன் மலிவானது. உறுதியான வேலைப்பாட்டிற்கும் ஏற்றது. பொன்னின் சிறந்த பண்புகளுள் முதன்முதலாக மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தது அதன் அழகிய நிறமும் பளபளப்பான தோற்றமுமேயாகும். மனிதன்பழங்காலந்தொட்டு அதனைத் தனக்கும் தனது பெண்மை உலகிற்கும் பூண்களும் அணிகலனும் செய்ய வழங்கினான். இன்றும் இந்நாட்டில் நாம் பொன்னைச் சிறப்பாக இவ்வகையிற்றான் பயன்படுத்துகிறோம். இப் பழங்கால வழக்கத்தின் இடையறாத் தொடர்பினால், உண்ண உணவுக்கும் உடுக்க உடைக்கும் அல்லற்படும் இந்நாளிலுங்கூட மிகுதியான தங்கம் இந்நாட்டில் தேங்குகிறது என்று பொருளியலார் கூறுகின்றனர். அதற்கேற்ப நாம் ஆங்கில நாட்டுத் தங்கக் காசுகளைக் காசுகளாக வழங்காமல் உருக்கிப் பூண்களுக்கான தங்கமாகவே பயன்படுத்துகிறோம். பொன் நூல்களும் பொன் வெள்ளி கலந்து இழைத்த நூல்களும் தனித்தும் பிற நூல்களுடன் கலந்தும் செல்வர் களுடைய ஆடைகள், தலையணிகள், சட்டைகள் முதலியவற்றிற்கு உதவுகின்றன. பொன் வெள்ளிக் கலங்களும் தட்டங்களும் செல்வர்கள் வீடுகளிலும் அரண்மனைகளிலும், செல்வ வளமிக்க கோயில்களிலும் மடங்களிலும் உண்ணவும் பருகவும் நற்பொருள்கள் காணிக்கைகள் வைக்கவும் பயன்படுகின்றன. இன்ப வாழ்க்கைக்கான பல பொருள்களும், செல்வச் செருக்கைக் காட்டும் பொருள்களும், பொன்னாலேயே செய்யப்படுகின்றன. பொதுமக்கள் பித்தளை முதலிய இழிந்த திண் பொருள்களை வழங்குமிடத்திலும், பொன்னை வழங்குவர். பகட்டான மாபெரும் செல்வர், அரசர் பேரரசர்களின் மணிமுடியும். செங்கோலும், இருக்கைகளும் பொன்னாலானவைகளே. பொன்னுக்கு இத்தனை சிறப்பு இருந்தும், அது. இரும்பிளைப்போல் ஏழை மக்கள் வாழ்விலும் செல்வர் வாழ்விலும் ஒப்ப வழங்கும் எளிமையற்றது. நேரிடையாகத் தனிப்பட்ட மக்கள் வாழ்விலும் சரி, உலகத் தொழில் முறைகளிலும் சரி, இரும்பு முதலிய பொருள்களைப்போல் அது பெரும்படியான பயனுடையதும் அன்று. அதன் பயனெல்லாம் இன்பவாழ்விலும் வாழ்க்கையின் உயர்தர நிறைவுகளிலேயுந்தான். இக்காலத்தில், பொன்னின் உயர்வான விலையின்றியே, பொன் தோற்றம் உண்டுபண்ணப் பொற்பூச்சினை அடிக்கடி வழங்குகின்றார்கள். பூச்சில் பலவகையுண்டு. செம்பு கலந்த பொன் உண்மையில் பொன்னினும் பகட்டான தோற்றமுடையது. அதனைப் பொன்மீது பூசிப் பொன்னைக்கூடப் பொலிவு செய்வதுமுண்டு. அரசநீரம் போன்ற நீரகங்களிற் கரைத்த பொன்கரைசலும் பூச்சுக்குப் பயன்படும். இவையேயன்றி மிக மெல்லிதாக அடித்த பொன்தாளும் பொன்பூசப் பயன்படக் கூடும். திண்ணம் வாய்ந்த தாள்களுக்கிடையில் வைத்துப் பொன்சுத்தியால் அடிக்கப்பட்டோ பொறிகளின் உருளை களிடையே அரைக்கப்பட்டோஉள்ளித்தாள்போல் மெல்லி தாக்கப்படுகின்றது. அதன்பின் அது தூரிகை பட்டதும் பொடிப் பொடியாய் அதில் ஒட்டிக்கொண்டு பிற பொருள்களின் மேற் பூச உதவுகின்றது. ஓர் இராத்தல் (பவுண்டு) எடைப் பொன்னிலிருந்து மூன்றரை அங்குலச் சதுர அளவுள்ள இத்தகைய தாள்கள் 75 வரை அடிக்கலாம். பொதுவாகப் பொன் எடைமிக்க பொருளான போதிலும், இம் மெல்லிய உருவில் அஃது ஊதினால் காற்றில் தங்கத் தூசியாய்ப் பரந்து செல்லுந் தன்மையுடையது. பொன்னெழுத்துக்கள் அச்சிடுவதற்கும், புத்தகங்களின் விளிம்புகளுக்குப் பொன்பூச்சுப் பூசுவதற்குங்கூட இப்பொன் தாள்கள் பயன்படுகின்றன. இவ்விரண்டு வகைகளிலும் அணி செய்யப்பட்டு மேனாட்டின் விவிலிய நூலைப்போலவே இன்று தமிழ் நாட்டின் திருக்குறள், தேவாரம், திருவாசகம் முதலிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொன் தாளின் இன்னொரு பயன் மருந்தாகவும் நல்லுணவு முறை (கூடிniஉ) யாகவும் வழங்குவதேயாம். தமிழர் மருத்துவ நெறியாகிய சித்தர் நெறியில் தங்கம் நீறாக்கப்பெற்று மருந்துகளிற் சேர்க்கப்பெறுகின்றது. உடலுக்கு நலனையும் நீண்ட வாழ்நாளையும் பொலிவையும் இது தரும் என நூல்கள் கூறுகின்றன. தாய்மார் இன்றும் சிறு குழந்தைகளுக்குச் சிறு அளவேனும் பொன் உரைத்துக் கொடுக்கின்றனர். மேற்கூறிய பயன்கள் எல்லாம் மக்கள் வாழ்வில் இன்றியமையாப் பயன்கள் அல்ல; மக்கள் வாழ்வை அணிசெய்பவை மட்டுமேயாகும். ஆனால், இன்றைய உலகில் பொன் தலைசிறந்த பொருளாய் இயங்குவதும் உலக முன்னேற்றத்துடன் இன்றியமையாது இரண்டறக் கலந்து விளங்குவதும் இம் மேலீடான பயன்களாலல்ல. பொருளின் மதிப்பீடாகவும், அதன் அறிகுறியாகவும், வாணிபத்தின் உயிர் நிலையான காசாகவும் வழங்குவதே அதற்கு உண்மையில் (முதல் பிரிவில் யாம் கூறிய) உயர் நிலையைக் கொடுத்தது. 3. வாணிப வாழ்வு அரசியலாரின் பொருளியல் திட்டத்துக்கும் வாணிப வாழ்விற்கும் பொன் எவ்வளவு இன்றியமையாதது என்பது. மேலீடாகப் பார்ப்பவர்க்குப் புலப்படாது. ஏனெனில் பொது மக்கள் பலவகைக் காசுகளில் பொற்காசுகளும் ஒருவகை என்றும், ஏழைக்குச் செப்புக் காசு எப்படியோ அப்படியே செல்வருக்குப் பொற்காசு என்றுந்தான் எண்ணுகிறார்கள். செப்புக் காசின் மதிப்பும் பொற்காசை அல்லது பொன்னைப் பொறுத்தது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. அதனை விளக்க வேண்டினால் செப்புக் காசின் செம்புக்கு விலை என்ன, பொற்காசின் பொன்னுக்கு விலை என்ன என்று ஆராய்ந்தால் போதும். செப்புக்காசின் விலைக்கும் அதிலுள்ள செம்பிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அரசியலாரின் பொறிப்பு இல்லாவிட்டால், உண்மையில் அஞ்சல் பொறிப்பில்லாத அஞ்சல் தலைபோலவும், விலை மதிப்புப் பதிவு இல்லாத விலைமதிப்புத் தாள் (நோட்டுகள்) போலவும் அது பயனற்றதே. பொன்காசு அப்படியன்று. அது பெரும்பாலும் பொன்னின் விலைக்கு ஒட்டியதாகவே இருக்கும். எங்கேனும் அரசியலார் பொன் காசில் பொன்னின் அளவையோ மாற்றையோ குறைத்துவிட்டால், காசின் விலைமதிப்பும் இறங்கிவிடுவது காணலாம். இதற்குக் காரணம் என்ன? முன்னைய பிரிவு ஒன்றில் பொன் நேரிடையான செல்வம் அன்றென்றும் செல்வத்தின் மதிப்பீடு மட்டுந்தான் என்றும் கூறியிருக்கிறோம். ஆனால் அதன் மதிப்பு மதிப்புத்தாள் போன்றதும் அஞ்சல்தலை போன்றதுமான மதிப்பு அன்று. அவ்விரண்டிலும் பொறிப்பு வாயிலாக அரசியலார் அவற்றின் விலைக்குப் பொறுப்பு ஏற்பதனால் மட்டுமே அவற்றிற்கு மதிப்பு ஏற்படுகிறது. அவற்றின் ஆக்கப்பொருள் அல்லது முதற் பொருளான தாளுக்கு மதிப்பில்லை. ஓரளவு காசுகள் அனைத்தின் செய்தியும் இதுவே. ஆனால் பொற்காசு மதிப்புப் பெறுவது முற்றிலும் அரசியல் பொறிப்பினால் அன்று. அரசியல் பொறிப்பு அவ்வவ் அரசியலாரின் ஆட்சிப் பரப்புக்குள் மட்டுந்தான் செல்லும். ஆனால் பொற்காசுகள் உலகெங்கும் செல்லுகின்றன; ஏற்கப்படுகின்றன. காரணம் அவற்றின் விலை உண்மையில் அவற்றின் தங்கத்தின் விலையிலிருந்து மிகுதி குறையாதிருப்பதேயாகும். அங்ஙனம் எந்த அரசியலராவது குறைத்தாற்கூட அவ்வரசியலுக்கு வெளியிலுள்ள மக்கள் அதனை அதன் பொன் விலைக்கு ஒப்ப மதித்தே வாங்குகின்றனர். ஆகவே உலக வாணிபத்தில் காசு என்ற வெளியுருவம் இருந்தாலும் இல்லா விட்டாலும் பொன் ஒரே படியாக மதிப்பீட்டுப் பொருளாய் வழங்குகின்றது என்று காணலாம். அம் மதிப்பீட்டில் தனி மனிதர் அளவிலோ மாற்றிலோ ஏமாற்றுச் செய்யாமற் பாதுகாக்க மட்டுமே அதில் அரசியலார் பொறிப்பு இடுகின்றனர். நல்ல பொருள்களுக்குப் பெரிய வாணிபக் குழாத்தினரோ நிலையமோ இடும் வாணிபக் குறியீட்டைப் போலவும் (கூசயனந ஆயசம), நாழிகளுக்கும் எடைகளுக்கும் அரசியலார் இடும் குறியீடு போலவும், (ளுநயட டிக ளுவயனேயசனளையவiடிn) கற்றோர்க்கு அரசியலாரும் பல்கலைக் கழகங்களும் வழங்கும் பட்டம் போலவுமே இப்பொறிப்பு என்று அறிக. உலகில் விலையுள்ள பொருள்கள் எத்தனையோ இருக்க, தங்கம் மட்டும் இங்ஙனம் வாணிப மதிப்புப் பெறுவானேன்? வாணிப உலகு திடீரென என்றும் தங்கத்தைக் குறியீடாகக் கொள்ளவில்லை. மிகப்பண்டு தொட்டு இத்தகைய நிலைக்கு அது வளர்ந்து வந்திருக்கிறது. பல காலத்திலும் பல இடங்களிலும் பல பொருள்களைச் செல்வத்தின் அறிகுறியாகக் கொண்டு நீண்டநாள் நிகழ்ந்த நடைமுறை அறிவினாலேதான் இறுதியில் மக்கள் பொன்னை ஏற்றனர். இலத்தீன் மொழியில் செல்வம் என்ற சொல் ஆனினத்தையே முதலில் குறித்தது. ஆனினமே அவர்களிடையே செல்வமாகவும் செல்வத்தின் மதிப்பீடாகவும், பண்டமாற்றுக் காலங்களில் வாங்குவோருக்கும் கொடுப் போருக்கும் பொதுவான கொடுக்கல் வாங்கற் பொருள் அல்லது இடையீட்டுப் பொருளாகவும் இருந்திருக்கவேண்டும். நாகரிகமாகிய நீரோட்டம் சென்று எட்டாத நாட்டுப்புறங்கள் சிலவற்றில் இன்றும் நெல்லும் அரிசியும் இத்தகைய இடையீட்டுப் பொருள்களாக வழங்கு கின்றன. ஆப்பிரிக்கரிடையே சங்கு மணிகள்கூட இத்தகைய இடையீடாக வழங்குகின்றனவாம். இப்பொருள்கள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு வகையில் மக்கள் வாழ்விற்கு உகந்தவையாகவே இருந்தன. மக்கள் ஆனினங்களிலிருந்து பாலும் நெய்யும் பெற்று அதனால் அதனைச் செல்வமாகக் கொண்ட காலத்தில், அது, இடையீட்டுப் பொருளாயிருத்தல் இயற்கையே. ஆனால் ஆனினத்தை இடம்விட்டு இடங்கொண்டு செல்லுதல் முடியாது. அது பிணி மூப்பு இறப்புகட்கு ஆளானவை ஆதலின் அச்செல்வம் நிலவரமான ஒரே மதிப்புடைய தாயிருக்கவும் முடியவில்லை. சங்குமணிகள் ஆனினத்தினும் இடம்விட்டு இடம் கொண்டுசெல்ல வாய்ப்புடையவை. ஆனால் வாழ்க்கையில் நேரிடைப் பயன் அற்றவை. அழிவு பெறுபவை. மலிவாகக் கிடைப்பதனால் மதிப்பும் இழந்துவிடுகின்றன. நெல்லும் அரிசியும் மிக்க பயனுடையவை. சிறுமதிப்பு அளவில் எளிதிற் கொண்டுசெல்லவுங் கூடியவையே ஆனால் பரந்தலை காலநிலைகின்ற வாணிபத்திற்கொத்த விரிவு இவற்றிற்கு இல்லை. மாறின் இவை அழிவு பெறுவதனால் இவை என்றும் மாறா விலையுடையனவும் அல்ல. திண்பொருள்கள் காசுகளாக வழங்கப்பட்ட காலமுதல் செல்வம் இடம்விட்டு இடம் பெயர்வது எளிதாயிற்று; வாணிபமும் ஏற்பட்டது. ஆனால் பிற திண்பொருள்கள் தம்மீதுள்ள பொறிப்புகளின் பயனாக மட்டும் விலை மதிக்கப் பட்டன. தங்கமோ மக்கள் அனைவரும் விரும்பியதனாலும், விலை மிகுதியும் அருமையும் உடையதாயிருப்பதனாலும், பொறிப்பினுக்காகவன்றி தனக்கெனவே மதிப்புப்பெறத் தொடங்கிற்று. எனவே வாணிப உலகில் தங்கமே மதிப்பளவை (ளுவயனேயசன) ஆயிற்று. உலகின் பேரரசுகள் இத் தங்கத்தைப் பெற்றுச் சேர்ப்பதன் மூலமே தம் நாட்டிற்கும் நாட்டின் காசுகட்கும் பிறநாடுகளில் செல்வாக்குத் தேடின. ஆகவே ஒரு நாட்டிற்குப் பொன் மதிப்பளவை இல்லாதுபோனால் நாட்டிலுள்ள செப்புக் காசுகள் நாட்டுக்கு வெளியில் மதிப்புக்கெடும் என்று காணலாம். வெளியில் மதிப்புக்கெட்டு நாளடைவில் உள்நாட்டிலும் அவை மதிப்புக்கெடும். அரசியலார் பொறிப்பும் விலையிழந்து அவர்களும் நிலைகெடுவர். ஆகவே இன்று வாணிப வாழ்வுக்கு மட்டுமன்றி அரசியல் வாழ்விற்குங் கூடத் தங்கம் அடிப்படை என்பது காணலாம். அமெரிக்க ஐக்கிய நாடுகள் பொன்னுக்கு மாறாக அல்லது அதனுடனாக வெள்ளியை மதிப்பளவையாகக் கொள்வதுண்டு. அஃதாவது நாட்டில் வெளியிடப்படும் காசுகள். மதிப்புத் தாள்கள் இவற்றிற்கு, அவற்றிற் குறிக்கப்பட்ட தொகையின் பெறுமானமுள்ள வெள்ளியைக் கொடுக்க அரசினர் பொறுப்பேற்கின்றனர். ஆயினும் பொன் மதிப்பளவைகொண்ட நாடுகளும் வெள்ளி மதிப்பளவை கொண்ட நாடுகளும் வாணிப உறவு கொள்வதனால் நாளடைவில் இரண்டும் ஒரேவகை மதிப்புடையவை ஆகின்றன. ஆகவே பொன் மதிப்பளவை ஏற்காத நாடும் ஏற்கும் நாட்டைப் பின்பற்றியே செல்ல நேர்ந்து விடுகிறது. நாகரிகமற்ற அக்கால மக்களையேயன்றி நாகரிகமுள்ள இக்கால மக்களையும் பொன்னின் பிடி இவ்வளவு உறுதியாகப் பிடிப்பானேன்? என்ற கேள்விக்குத் தெளிவான மறுமொழி கூறல் அருமையே. இது பொன்னின் எடையாலும் நிறத்தாலும் அழகாலும் என்பதெல்லாம் முற்றிலும் சரியன்று. ஒவ்வொன்றிலும் பொன்னை மிஞ்சிய பொருள் உண்டு. அவற்றை மேலே குறித்துள்ளோம். ஆயினும் அதன் நிறத்தாலும் அழகாலும் பொன் பெற்ற முதற்கவர்ச்சி பிற்காலத்தில் விலைக்குறியீடு வேண்டப்பட்டபோது பயன்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதோடு செல்வக்குறியீடு என்ற வகையில் அதற்குப் பிற பொருள்களில் ஒருங்கே காணப்படாத பல சிறப்புக்கள் இருப்பது காணலாம். விலையடக்கத்திலும் கையடக்கத்திலும் பொன்னுக்கு ஈடான பொருள்கள் மிகக்குறைவு; அச்சிலவும் பொன்னளவு அருமையாகக் கிடைக்காமலோ அல்லது வாணிபப் பழக்கத்திற்கான அளவிலும் குறைந்து மிக அருமையாகக் கிடைத்தோ பொன்னைப்போல் பயன்படுத்துந் தகுதி அற்று விடுகின்றன. வெள்ளியும் பிற இழிந்த திண்பொருள்களும் மலிவினாலும் வளம்படக் கிடைப்பதனாலும் மதிப்பிழந்தன. மின்பொன், திண்பொன், ஒண்பொன் முதலியவை மக்கள் வழங்கும் அளவிற்குக்கூடக் கிடைக்கப்பெறாமல் பொன்னைவிடப் பேரரும்பொருள்களாயின. எனவே மிக அருகலுமாகாமல் மிக மலிவுமாகாமல் ‘பொன் நிலை’யில் நின்ற இத் திண்பொருள் ஒப்புயர்வற்ற தனிவாய்ப்புடைய இடையீட்டுப் பொருளாகவும் மதிப்பளவையாகவும் வழங்கலாயிற்று. மேலும் நூறு வெள்ளிக்காசு கொண்டுசெல்பவன் அதன் விலைக்கு நெல்லோ இரும்போ எதுவாங்கினாலும் அதனைத் தூக்கிச் சுமத்தல் இயலாது. தங்கமானால் கையடக்கமாயிருக்கும். மேலும் பிற பொருள்கள் கெடும்; தங்கம் கெடுவதில்லை. மக்களுக்கு வாழ்க்கையில் நேரிடைப் பயனற்றதாயிருப்பதுகூட இவ்வகையில் ஒரு சிறப்புத்தான். நெல்லையுண்பது போல பொன்னை உண்ணமுடியுமானால் அது செல்வம் என்ற முறையில் அழிவுற்று நிலவரப் பண்டமாற்றாக உதவாதன்றோ? உண்மையான செல்வம் உணவாகவும் உடையாகவும் வழங்கும் போதெல்லாம், அவற்றின் மதிப்பீடாகிய பொன், வழங்குபவரிடமிருந்து ஈபவரிடம் சென்று செல்வ நிலைக்கு என்றும் அழியாக் குறியீடாக நிற்கின்றது. காசுக்கு மாற்றாகத் தாள்கள் வழங்கும்போதும், அத்தாளிற்கு மதிப்பிருப்பது, அதிற்குறிப்பிட்ட எடையுள்ள தங்கம் அரசியலாரிடம் இருப்பதனாலேயே என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே வாழ்க்கைக்கு நேரிடையாகப் பயன்படும் உணவு உடைகட்கு அடுத்தபடி வாணிப வாழ்வுக் கான செல்வம் பொன்னே என்று காணலாம். உண்மையில் மக்கள் வாழ்வுக்கு உணவும் உடையும் எப்படியோ அப்படியே வாணிப வாழ்வுக்குப் பொன்னும் இன்றியமையாப் பொருள் ஆகிவிட்டது என்று கூறலாம். இங்கிலாந்தில் 17-ஆம் நூற்றாண்டு முதல் வெள்ளியும் பொன்னும். மதிப்பளவைகளாக அரசியலாரால் ஏற்கப் பட்டிருந்தன. இரண்டினிடையேயும் விலை வேற்றுமை ஏற்பட்டபோது அரசினரிடையிலும் வாணிப உலகினி டையிலும் பல குழப்பங்கள் ஏற்படத் தொடங்கின. ஆகவே 1816-இல் இங்கிலாந்தில் பொன் வெள்ளி இணைப்பளவை (துடிiவே ளுவயனேயசன டிக ழுடிடன&-ளுடைஎநச) கைவிடப் பட்டு, பொன்னே தனி மதிப்பளவையாக (ளுiபேடந ளுவயனேயசன) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தைப் பின் பற்றி ஒவ்வொரு நாடாக எல்லா நாடுகளும் 19-ஆம் நூற்றாண்டிற்குள் தங்க அளவையை ஏற்றுக் கொண்டு விட்டன. உலக முதற்போரினால் ஏற்பட்ட பொருள்முடையினாலும் அதன் பயனாக உலக முழுமையிலும் ஏற்பட்ட 1930-ஆம் ஆண்டின் செல்வச் சீரழிவினாலும் ஒவ்வொரு நாடாக யாவும் பொன் மதிப்பளவையைத் துறந்தன. இறுதியில் 1930-இல் இங்கிலாந்தும் துறந்தது. பின்பு, படிப்படியாக எல்லா நாடுகளும் முடை தீர்ந்தபின், பொன் மதிப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டன. தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெள்ளிக் காசுக்கே இடமின்றி அக்காலத்தில் எங்குந் தங்கக் காசுகள் வழங்கப்பட்டதொன்றே, இந்நாட்டில் உயர்தர வாணிபத்திற்கு- அஃதாவது உலக வாணிபத்திற்குத் தங்க மதிப்பளவை அக் காலத்தில் ஏற்பட்டிருந்தது என்பதைக் காட்டும். அக்காலத்தில் பிறநாடுகள் பலவற்றுடன் தமிழ்நாடு வாணிப உறவு வைத்திருந்த போதிலும் அவையெல்லாவற்றினிடமிருந்தும் இந்நாடு பொன் காசன்றி வேறு காசு பெறாதது குறிப்பிடத்தக்கது. எனவே அன்று அக்காசுகள் இந்நாட்டில் காசு மதிப்பினை ஒட்டிப் பெறப்படவில்லை, பொன் மதிப்பை ஒட்டியே பெறப்பட்டன என்று எண்ணல் தகும். மேலும் பொன் புடமிடல், பொன் மாற்றுக் கணித்தல், பணம் கொடுக்கல் வாங்கலை மிகுதிப்படுத்தும்படி வட்டித் தொழில் நடாத்தல் ஆகிய எல்லா வாணிபத் துறைகளிலும் நம் நாட்டினர் பிறநாடுகளினும் சிறந்திருந்தனர் என்பதற்கு வரலாறு சான்று பகரும். 4. பொன்னின் வரலாறு பழங்கால வரலாற்றைத் துருவி ஆராய்பவர் பொதுப் படையாகத் திண்பொருள்கள் மூன்று நான்கு ஆயிரம் ஆண்டு களுக்குள்ளாகத்தான் வழங்குகின்றன என்று கூறுகின்றார்கள். அதிலும் மனித நாகரிகத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமை யாததான இரும்பு மிகப் பிந்திய காலத்திலே அஃதாவது, இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே தான் கையாளப் பெற்றிருந்த தெனத் தெரிகிறது. இப் பிற்காலம் ‘இரும்பு ஊழி’ என அழைக்கப் பெறுவதுமுண்டு. இதற்கு முந்திய காலத்தில் இரும்பினிடமாக வழங்கப்பட்டது. செம்போ வெண்கலமோ ஆகும். இச் ‘செப்பூழிக்’ காலத்தில் இன்று இரும்பாற் செய்யப்படும் கத்தி, கோடரி, சுத்தி, கடப்பாறை, உளி, வில், வாள், ஈட்டி முதலிய எல்லாக் கருவிகளும் செம்பினாலேயே அல்லது செம்புக் கலவைகளாகிய பித்தளை வெண்கலம் முதலியவற்றினாலேயே வழங்கின. இதற்கும் முந்திய மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த பண்டைக் குடிமக்கள் திண் பொருள்கள் எவற்றையும் பயன்படுத்தத் தெரியாதவர்களாய், இன்றியமையாத சில கருவிகளை மட்டும் கல்லினால் செய்து வந்தனர். இவ்வூழிக்குக் ‘கல்லூழி’ என்று பெயர். திருத்தமும் கலைப் பண்பும் மிக்க கற்கருவிகள் வழங்கிய காலத்தைப் ‘புதுக்கற்காலம்’ என்றும், திருத்தமும் பண்பட்ட வடிவமற்ற கற்கருவிகள் வழங்கிய காலத்தைப் ‘பழங் கற்காலம்’ என்றுங் கூறுவர். இன்றைக்கு 8,000 அல்லது 10,000 ஆண்டுகள் வரை முந்திய இப் பழங்கற்கால மனிதனின் கல்லறைகள் பல பழங்கால ஆராய்ச்சியாளராற் கண்டெடுத்து ஆராயப்பட்டுள்ளன. அவற்றுள் மனிதன் தனது சிறந்த உடைமையாகப் போற்றிய பிற பொருள்களுடன் வைத்திருந்த பொற் பூண்களும் காணப்பட்டன. இதிலிருந்து இரும்பையும் வெண்கலத்தையும் பித்தளையையும் பிற திண்பொருள்களையும் மக்கள் வழங்குவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாகவே பொன், மக்களால் அணிகளாக வழங்கப் பெற்றது என்று காணலாம். மற்ற திண்பொருள்களைவிட முன்னதாக மனிதன் பொன்னை யறிந்ததற்கு அதன் பகட்டான தோற்றமே, சிறப்பான காரணமாகும். அக்கால மனிதன் குன்றுகளின் பக்கம் வாழ்ந்து காய்கனி கிழங்குகளையும் விலங்கு பறவைகளின் ஊனையும் தின்று வந்தான். ஓய்ந்த நேரங்களில் அருவிகளின் ஓரமாகவோ சுனை, சிற்றாறுகளின் ஓரமாகவோ சென்று குளிர்ந்த நீரைப் பருகியும் அதில் நீராடியும் வந்தான். அவ்வப்பொழுது அவன் இளவேனிற் காலத்தில் நிலவின் பொழிவில், அவ்வாறுகளின் மென் மணலின்மீது படுத்து இயற்கையின் அழகில் மனத்தை ஈடு படுத்துவான்; அல்லது அதில் உலவி மகிழ்வான். அத்தகைய நேரங்களில் ஒரு சமயம் அவன் அம்மணலிடையே மினுமினுப் பான நுண்பொடிகளைக் கண்டான். குழந்தையுள்ளத்தையுடைய அவன் குழந்தையைப்போலவே உள்ளார்வத்துடன் சென்று அதனை எடுக்க, அது மிக நுண்ணிய பொடியானபடியால் கையில் எடுக்குமுன் மாயமாய் மறைந்துவிட்டது. ஆயினும் இம் மாயப் பொடியின் தோற்றத்தில் அவன் மனம் ஒன்றுபட்டு மீண்டும் மீண்டும் அதனையே நாடலுற்றது. அவன் வாயிலாக அச் செய்தியைக் கேள்வியுற்ற அவன் தோழரும் தம் மனத்தை அம் மாயப்பொடிக்கே பறிகொடுத்து அதனைத் தேடித் துழாவி விளையாடினர். அதன்பின் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வோர் இடத்தில் கையில் எடுக்கும் அளவுடைய அத்தகைய மணிக்கல் அகப்பட்டது. அதுபோது அக்கால மனிதன் அடைந்த மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் எல்லையில்லை. அவன் அதனைக் கையிலெடுத்து மீண்டும் மீண்டும் அதனைக் கண்ணுற்று உவகையுற்று ஆடினான், பாடினான், கூத்தாடினான். தோழர்களிடமும் உற்றாரிடமும் சென்று அதனைக் காட்டி அதனைப் பெற்றதன் பேற்றையும் திறனையும் போற்றிப் பெருமை பாராட்டினான். அவர்களும் அதன் கவர்ச்சியுட்பட்டு அவனை மதித்தனர். பலரும் அதுமுதல் ஆற்றோரங்களில் திரிந்து அதே பொருளை நாடினும் ‘கொடுத்துவைத்த’ ஒரு சிலர்க்கே அது கிட்டிற்று. ஆகவே அதன் அருமையும் மதிப்பும் இன்னும் மிகுந்தன. மிகவே அதனை இழந்துவிடாமல் பாதுகாக்கும் எண்ணத்துடன் அவன் அதில் ஒரு தொளையிட்டு அதனைக் கயிற்றில் கோத்துக் கழுத்திலோ கையிலோ கட்டிக்கொண்டான். இவ்வகையாகத்தான் வரலாற்றுக்கெட்டாத காலத்தில் பகுத்தறிவின் உதவியால் நாம் புனைந்து உருப்படுத்திக் கொள்ளவேண்டிய பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்து பண்டைய மனிதன் பொன்னை முதன்முதலில் கண்டு பூணாக வழங்கியிருக்கவேண்டும். இன்றும் ஆற்றோரங்களில் மணலில் காலையிளங் கதிரொளியிலோ மாலையிலோ உலவுபவர் கண்ணை அதே நுண்பொடி மயக்குவதுண்டு. இன்றும் குழந்தைகள் அதனை எடுக்க முயல்வதுண்டு. ஆனால் மனிதன் உள்ளம் இன்னும் குழந்தையுள்ளமாயிராததனால் அதில் அவன் தன் உள்ளத்தைப் பறிகொடுப்பதில்லை. அதைக் குழந்தைகளின் விளையாட்டிற்கே விட்டுவிடுகிறான். ஆயினும் இன்றும் ஆங்காங்குத் தற்செயலாக முன்போல மணிக்கற்கள் அகப்படாமலில்லை. அதோடு ‘பல துளி பெரு வெள்ளம்’ என்ற உண்மையை நடைமுறையறிவால் அறிந்த தொழிலாளர் பலர், கையில் குழிந்தகன்ற இரும்புத் தட்டங்களையோ ஓடுகளையோ கொண்டு ஆற்றோரங்களிலோ அல்லது நீர் கட்டிக்கிடக்கும் இடங்களிலோ உள்ள மண்ணைத் தோண்டியெடுத்துக் கரைத்துக் கரைத்துக் கொட்டுவதை பலர் இன்றுங் காணலாம். இவர்கள்தான் உலகின் முதல் பொன் தேட்டாளர்களை நினைவூட்டும் அவர்கள் கால்வழியினர் ஆவர். ஆனால் இவர்கள் பெரும்பாலும் ஏழைகள். எப்போதும் ஒரேமாதிரியாக உழைப்புக் கேற்ற பயன்பெறாது இவர்கள் என்றேனும் பிறர் கண்ணுறுத்தும் வெற்றி பெற்று அதன் ஒருநாட் கவர்ச்சியால் பலநாள் அல்லலுறுவோராவர். பொன் தேட்டத்தின் புதுமுறைகளையும் அது பற்றிய புதுச்செய்தி களையும் அறிந்தால் இவர்களும் பிறநாட்டுத் தேட்டாளர்கள் போல் பெருஞ்செல்வம் ஈட்டுதல் கூடும். ஆற்றின்நீர் விரைவாக ஓடுமிடங்களில் பொன்னும் பிற பொருள்களும் ஒருங்கே அடித்துச் செல்லப்படும். விரைவு குறைந்த இடத்தில் படிப்படியாக எடை மிகுந்தவை கீழே தங்கும். பிற பொருள்கள் எல்லாவற்றையும்விடத் தங்கம் எடை மிகுதியுடையதானதால் விரைவு குறைந்தவுடன் முதலில் தங்குவது தங்கமேயாகும். இதனால் ஆறு சட்டெனத் திரும்பும் இடங்களிலும், அகலம் மிகுதியாகும் இடங்களுக்குச் சற்று முன்னும் இதனை எதிர்பார்க்கலாம். மண்ணினுள்ளும் எடை மிகுதியான பொருள் கீழும் எடை குறைந்தவை மேலும் இருப்பதனால், தேட்டாளர் மேற்பரப்பில் தேடிவிட்டு மனம் நிறை வடையக்கூடாது. ஆழ்ந்து தோண்டிக் கடும்பாறை காணுமிடம்வரைத் தேடவேண்டும். கடும்பாறையில் எங்கேனும் தங்கம் இருப்பதாகக் கண்டால், தேட்டாளர்கள், அது, ஆற்றில் கரைந்துவருந் தங்கமன்று. பொன் வேர்களின் பகுதியே என்றறிந்து அதனைத் தொடர்ந்தகழ்ந்து, நெடுநாள் பழக்கத்தால் பொன் எத்தகைய இடங்களில் குறைந்த முயற்சியில் நிறைந்து அகப்படும் என்று அறிவர். முதன்முதலாக இந் நுண்பொடிகள் ஆற்றுமணலில் எப்படி வந்தன. ஆற்றில் அவை காணப்படுவானேன், எவ்வெவ்விடங் களில் எவ்வெவ்வளவில் காணப்படும்; எத்தகைய முயற்சிகளால் அவற்றை எளிதில் பெறலாம் என்ற செய்திகளை ஆராய்வோம். உண்மையில் பொன் இயற்கையில் பல இடங்களிலும் பரந்து காணப்படுகிறது. ஆனால் எல்லா இடங்களிலும் அது தனித்துப் பிரித்தெடுக்க முடிகிற அளவிலும் நிலையிலும் இல்லை. வான வெளியிற்கூட மிகக் குறைந்த அளவு பொன் இருக்கக்கூடும் என்று எண்ணப்படுகிறது. கடல்நீரில் பத்துக் கோடிப் பங்கில் 5 பங்களவு முதல் 267 பங்களவுவரை பொன்கலப்பு உள்ளதாம். கடல் முற்றிலுமுள்ள பொன்னைப் பிரித்தெடுக்க முடிந்தால் அஃது ஓராயிரம்கோடி டன்கள் எடையுள்ளதாயிருக்கும் என அறிஞர் மென்டலியெவ் (ஆநனேநடநலநஎ) கணக்கிட்டிருக்கின்றார். ஆனால் இது பிரித்தெடுக்கக் கூடாததாயிருக்கின்றது. பல ஆறுகளிலுள்ள நீரிலும் மிகக்குறைந்த அளவு பொன் கலப்பு இருப்பதாக எண்ணப்படுகிறது. இருபுறமும் கா விரித்துச் செல்லுவதனால் காவிரி எனப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு ஆற்றுக்கு அதில் பொன் கலப்பு உண்டு என்ற குறிப்பினாலேயே தமிழர் பொன்னி எனப் பெயரிட்டிருக்கின்றனர். இன்றும் இந்தியாவில் கிடைக்கும் தங்கத்தில் நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து பங்கு விளைவைத் தரும் கோலாற்றுத் தங்க வயல்கள் காவிரியாற்றின் தலைப் பிலேயே இருத்தலைக் கவனிக்கவேண்டும். ஆனால் நீரில் கலந்த பொன்னைவிட மணலில் கண்ட நுண் பொடிகள் காட்சிக் கெளியவை. கடுமுயற்சியால் பல இடங்களில் அவை உழைப்புக்கு ஊதியமும் தருகின்றன. மணலுடன் கலந்து பெரும்படியாகப் பொன் இன்று எடுக்கப்படு மிடங்கள் வட அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியோவும் கொலராடாவுமே யாம். மணலிற் கிட்டும் மணிக்கற்கள் மணல்போல் ஒரே படித்தாக எப்போதும் கிடைக்காமல் என்றேனும் தற்செயலாகவே கிடைக்கின்றன. ஆயினும் அவற்றைத் தேடிச் சென்றவர் ஆற்றின் விழுவாயான கடலிலிருந்து அகன்று அதன் தலைப்பு ஆகிய மலையை நோக்கிச் செல்லுந்தோறும் இவை அளவில் பெரிதாகி வருவது கண்டனர். மேற்பார்வைக்கு மணிக்கற்களாகத் தோன்றாத சில கற்களும் எடை மிகுந்திருப்பது கண்டு அரு முயற்சியால் அதனை உடைத்துப் பொடியாக்கி உருக்கி நோக்க அவை உண்மையில் பொன்மிகுதியாய் உள்ள பொன்கலவைக் கற்களாயிருப்பதையும் (சூரபபநவள) பலர் கண்டனர். பொன் மணலுக்கு அடுத்தபடி இக்கலவைக்கற்களே சிலகாலம் பொன்னின் தேற்றுவாய்களாக இருந்தன. இத்தகைய பொன் கலவைக் கற்களுள் மிகப் பெரியது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்டோரியா மாகாணத்தில் 1869-இல் கண்டெடுக்கப்பட்ட ‘நல் விருந்தினன்’ (றுநடஉடிஅந ளுவசயnஉந) என்ற புனைபெயருடைய கல்லேயாகும். இது 2520 அவுன்சு நிறையுடையது. அகப்பட்ட நாளில் இது 13,600 பொற்காசுகள், அதாவது 2,44,000 இந்திய வெள்ளிகள் (ரூபாய்கள்) விலை பிடித்ததாம். சில இடங்களில் இத்தகைய கலவைக் கற்கள் மிகுந்து கூழாங்கற்களாக அகப்படுகின்றன. அவற்றைப் பொறிகளால் உடைத்துப் பொன் புது முறையில் எடுக்கப்படுகிறது. இத்தகைய இடங்களுள் சிறந்தவை வடமேற்கு அமெரிக்காவிலுள்ள அலாஸ்காவும் தென் அமெரிக்காவிலுள்ள பிரேஸிலும் ஆகும். ஆற்றின் தலைப்பு நோக்கிச் செல்வதில் பயன் உண்டு என்று கண்ட பொன் ஆர்வமிக்க மனிதன் அதன் தலைப்புக்களிலுள்ள குன்றுகளையும் பாறைகளையும் ஆராயத் தொடங்கினான். எடை மிகுந்த கற்கள் உள்ள இடங்களிலும் ஆற்றின் நீரோட்டத்தால் ஆழமாகப் பிளந்து செல்லப்பட்ட இடங்களிலும் ஆராய்ந்து அவன் ஆற்றின் பொன்வளமெல்லாம் உண்மையில் அவ்வாற்றின் பிறப்பிடமாகிய குன்றுகளிலும் பாறைகளிலும் உள்ளவையே என்று கண்டான். ஆற்றுவெள்ளம் இப்பாறைகளை உடைத்து அடித்துக் கொண்டு வந்தவைகளே பொற்கலவைக் கற்களும் மணிக்கற்களும் ஆயின என்றும், அவை மீண்டும் அடித்தடித்துப் பொடியாக்கியவையே பொன் மணல் என்றும் அவன் தன் பகுத்தறிவால் உய்த்துணரலானான். ஆற்றின் விழுவாயிலிருந்து பொன் படிப்படியாக மிகுவதும், பொன் மணல் படிப்படியாகப் பருமைமிகுந்து கூழாங்கற்களாகவும் பாறைகளாகவும் காணப்படுவதும் இதே கோட்பாட்டை வலியுறுத்தின. கடல்நீரில் இன்று கலந்திருக்கும் பொன்கூடப் பல நூறாயிர ஆண்டுகளாக ஆறுகளனைத்தும் அடித்துக் கரைத்துக் கொண்டுவந்த பொன்னேயாகும் என்று கூறல் மிகையாகாது. சின்னஞ் சிறுமலைகளே பொன்னின் பிறப்பிடமானால் மலைகளின் தந்தையாக உருவகப்படுத்தப்பட்ட மேருமலை பொன் மயமாகவே இருக்கும் என்று எண்ணுதல் இயற்கைதானே. ஆகவேதான் மெய்ம்மையும் புதுமையும் தோன்றப் புனைந்து கூறும் அக்காலக் கவிஞர்கள் மேருமலை பொன் மயமானது எனக் கூறினர். பலரும் பொன்னைத் தேடியலைந்தும் ஒரு சிலர்க்கே அது கிட்டியது. கண்டு மக்கள் மயங்கி அவர்கள் தம் அறிவாற்றலின் துணையால் இயற்கையில் மறைவாகக் கிடந்த பொன்னை தேடியெடுத்தவர்கள் என்றெண்ணாது அவர்களை மாயக்காரர் என்றும், மந்திரக்காரர் என்றும், மணிமந்திரக்காரர் என்றும் எண்ணினர். கண் கூடாக அவர்கள் மண்ணையும் கல்லையும் பொன்னாக்கியதையும் பொன்கலந்த பிற திண்பொருள்களிடத் திலிருந்தும் பாதரசத்திலிருந்தும் பொன்னைப் பிரித்தெடுப்பதையும் கண்டுங்கூட உண்மையை உய்த்தறிய முடியாமல் அவர்கள் மண்ணையும் கல்லையும் இரும்பையும் பொன்னாக்கினர் என்று நினைத்தனர். அதைப் பித்தரை முழுப்பித்தராக்கச் சிந்தாமணிக் கதை வேறு புனைந்துரைக்கப் பட்டது. தொட்டதெல்லாம் பொன்னாக்கும் இம்மணியைப் பெற்றே அக்காலச் சித்தர் எளிதில் பொன் பெற்றனர் என்று தமிழ்நாட்டுப் பொதுமக்கள் நம்பினர். மேனாடுகளிலும் அந்நாட்களில் இந்நம்பிக்கை பரந்திருந்தது. கவிதையின் உள்ளம் காணும் திறனுடையவர்க்கு இச் சிந்தாமணிக் கதை வெறுங் கதையன்று. மனிதரது பகுத்தறிவும் உய்த்துணர்வுமே இச் சிந்தாமணி என்றறிவர். அங்ஙனம் அறியாதவர் உள்ளத்தில் எல்லாம் பேராவற் பேயன் கூத்தாடுகின்றான் என்பதில் ஐயமில்லை. சித்தர் நூல்களையுங் கூடத் தன்னிலை தவறாது படிப்பவர்க்கு அவற்றின் ஆசிரியர் மெய்யறிவையே சிந்தாமணியென்றும், சஞ்சீவி என்றும். காயகற்பமென்றும், முப்பூ என்றும்,சிவம் என்றும் கூறி மக்களைப் ‘பொன்னிலை’ மயக்கத்திற் காளாக்கி நகையாடினர் என்று காணலாம். கடுஞ்சொற்களின் ஆழத்திலும் புதைந்து கிடக்கும் கவிஞனது மெய்ம்மையைப் போலப் பாறையிற் புதைந்து கிடக்கும் தங்கத்தின் தடத்தை அறிந்த பொன் தேட்டாளன் பகலிரவென்றும் பசியென்றும் விடாயென்றும் பாராது வெட்டியும் கல்லியும் தகர்த்தும் பொடித்தும் அதனைப் பின்பற்றி அகழ்ந்து சுரங்கங்களுக்கு வழிதேடினான். ஆற்றின் படுக்கையில் கிடைத்த பொன்மண்ணைத் தொடர்ந்து சில சமயம் மருத நிலத்திலும், பாறைகளிற் கிடைத்த பொன்னின் கவட்டைப் பின்பற்றிக் குறிஞ்சி நிலத்திலும் பொன் சுரங்கங்கள் தோண்டப் பெற்றன. மருத நிலத்துப்பொன் ஆற்றில் கரைந்து வந்த பொன்னே யாதலால் அதனைவிடப் பொன்னின் பிறப்பிடமாகிய குறிஞ்சி நிலத்துப் பொன்னே அளவிலும் அழியா நிலையிலும் மிக்கது என்று கூறவேண்டுவதில்லை. நிலத்தின் ஆழத்தை அகழ்ந்தும் மலைகளின் உட்புறம் குடைந்தும் இன்று பல சுரங்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பாக் கண்டத்தில் உருசியாவிலும் ஆஸ்திரியாவிலும் அமெரிக்காவில் கானடாவிலுள்ள ஷோர் ஏரிக்கரையிலும் மருத நிலப் பாங்கரிலேயே பொற்சுரங்கங்கள் உள்ளன. தென் தகோட்டா (ளு.னுயமடிவய) வில் கருங்குன்றுகளிலுள்ள பச்சைப் பாறைகளிலும் வட அமெரிக்காவின் அராக்கி மலைத் தொடர்களின் கந்தகக் கலவைக் கற்களிலும் குறிஞ்சி நிலத்தில் சுரங்கங்கள் வெட்டப்பட்டுள்ளன. மைசூர் நாட்டுக் கோலாற்றுத் தங்க வயலும், கலிபோர்னியாவின் ‘தாய்ப் பாறையும்’ தென் அமெரிக்காவின் பேர்போன ‘இராந்து’ப் பாறையும் நிலத்தில் மிகவும் ஆழ்ந்து விரிந்த முதற் பாறைகளைச் சேர்ந்தவையாதலால் நிலவரமான பயன் தரவல்லவை. உலகின் பொன் தேட்ட நிலையை ஆழ்ந்து ஆய்ந்தவர், ‘பொன் வேர்கள்’ என்னும் பொற்கலவைப் பாறைகள் நிலத்தினுள் ஒரே படியாக நரம்புபோல் செல்லுபவை என்றும், அவற்றின் போக்கறிந்தபின் இன்னின்ன இடங்களில் இத் தங்க வேர்களைக் காணலாம் எனத் திட்டப்படுத்துவது எளிதென்றும் கூறுகின்றனர். இதனைக் கீழேயுள்ள படம் இனிது விளக்கும். ஆ.க. இரண்டிலும் அ. என்ற இடத்தில் தற்செயலாகப் பொன்கலந்த மண்ணை ஒருவன் கண்டான் என்று வைத்துக் கொள்வோம். ஆ என்ற இடத்தில் சற்றுத் தொலை ஆழத்திலும் இ என்னுமிடத்தில் இன்னும் ஆழத்திலும் அதே வகை மண்ணைக் காண்கிறான், எனவே பொன் கிடக்கை வேர்போல் நிலத்தினுள்ளாக அ, என்ற நேர்க்கோடாகக் கிடக்கின்றது என்று அவன் உய்த்தறியலாம் அல்லவா? அதன்பின் அதே சாய்வில் அதற்கு நேரான கோட்டில் அப் பொன் பாறை இருக்கும் என அவன் எண்ணலாம். பிறர் வியக்கும் வண்ணம். இன்ன இடத்தில் இவ்வளவு ஆழத்தில் பொன் அகப்படும் எனவும் அவன் உறுதியாகக் கூறமுடியும். அதுமட்டுமன்று. நிலத்தின் பரப்பில் குறுக்கிட ஆறு முதலிய ஏதேனும் ஒன்றின் செயலால் பொன் வெளிக்கண்ட தெனக் கொண்டு தேடினால் அதனுக்கெதிரான பிறிதொரு சாய்வில் அவன் அதனை மீண்டும் கண்டு க. முதல் ங. வரை அதனைப் பின்பற்றிச் செல்லவோ கா.கி. முதலிய இடங்களில் சுரங்கக் குழிகள் இறக்கவோ செய்தல் ஆகும். உலகின் தோற்றத்தைப் பற்றி ஆராய்பவர் பிற பொருள்களுக் கெல்லாம் படிப்படியாகத் தோற்றுவாய் அல்லது தாயகங்கள் கண்டு இறுதித் தாயகமான “முதற்பொருள்” வரைச் செல்வர். அதன் ‘தாயகம்’ யாதெனும் கேள்வி பின்னும் எழத்தக்கதே. மறுமொழிகிட்டும் வரை இங்ஙனம் கேட்டு மறுமொழி காண்பதும், காணாவிடத்து உய்த்துணர்வதும் புனைந்துணர்வதும் இயற்கையே யல்லவா? அதுபோல, ஆற்றுமணலும் மணிக் கற்களும் கலவைக் கற்களும் பாறைகளிலிருந்தும் பாறைகள் நிலத்தின் கருவிடங்களான தாய்ப்பாறைகளிலிருந்தும் தோன்றிய வகை யாது என்ற கேள்வி எழலாம். இதற்கு முடிந்த மறுமொழி கூறும் நாள் வரவில்லையெனினும் ஒருவாறாக விளக்கஞ் செய்துள்ளனர் அறிவியலின் முன்னணியில் நின்று வரும் பொருள் நுனித்துணரும் மெய்யறிஞர்கள். மண்ணுலகின் வெளிப்புறத்தைப் போல் திண்ணமாயிராது நடுப்புறம் பெரு வெப்பத்தாலுருகிய நிலையிலுள்ளது. காற்றுச் சூழலால் (வாயு மண்டலம்) தட்பமெய்திய வெளிப்புறத்தோடு வறண்ட நிலம் வெடிப்பது போல் வெடிக்கிறது. இவ் வெடிப்புக்கள் வழியாக உள்ளே கொதித்தெழும் குழம்பிலிருந்து பல பொருள்கள் ஆவியாக வெளிவருகின்றன. வெடிப்புக்களின் பக்கங்களிற் பட்டு இவையும் தட்பமடைந்து நாளடைவில் வெடிப்பை அடைக்கின்றன. இங்ஙனம் வெடிப்புகளில் வந்தடைத்த பகுதிகளே தாய்ப்பாறைகள். மண்ணுலகின் மேற்புறத்தை விட உட்புறத்தில் மிகுதியாகப் பொன் முதலிய திண்பொருள்கள் உருகிய நிலையிலும் ஆவியாகவும் கலந்திருப்ப தனால் இத் தாய்ப்பாறைகளிலும் அவை மிகுதியாயுள்ளன. உலகின் உள்ளிடம் பொன் கலப்பு மிகுதியுடையது என்பது உலகின் பரப்பில் நடுவிடமாகிய மேரு பொன் மயமானது என்ற முன்னோர் புனைவை மீண்டும் நினைவூட்டுகின்றது. உலகில் மேல்மண், நிலத்தினுள் காணும் குழம்பின் காய்வே யென்பதும், அக் குழம்பு ஒரு காலத்தில் ஞாயிற்றின் பகுதியாயிருந்து பிரிவுற்றதென்றும், ஞாயிறும் பிற விண் மீனினங்களும் அகன்ற இயற்கை வெளியில் உள்ள “வான் (நுவாந) என்ற ஒரே பொருளின் திரிபென்றும் அறிவியல் (ளுஉநைnஉந) கடலினுக்கும் அப்பால் அறிவுக் கண் செலுத்திய மெய் விளக்கத்தார் (யீhடைடிளடியீhநசள) கூறுகின்றனர். எனவே மற்றெல்லாப் பொருள்களையும் போலவே இயற்கை வெளியில் கலந்திருந்து பின் ஞாயிற்றையும் நிலத்தின் உட்பிழம்பையும் கடந்து புற நிலத்தினூடாக வெளிவந்து அங்ஙனம் வெளிவரும் வழியில் தங்கிய தங்கற் பகுதியே இன்று நமக்குத் தங்கமாக வந்து தங்கிய செல்வமாயிற்று என்னலாம். 5. சுரங்கத் தொழில் திண்பொருள்களில் மக்கள் முதல் முதலில் அறிந்ததும் அறிந்து பயன்படுத்தியதும் பொன்னே என்று கூறியுள்ளோம். திண்பொருள்களை நிலமகளின் கருவினின்று கண்டு வெளிப் படுத்தச் சுரங்கங்கள் தொட்டதும் முதன் முதலில் பொன்னுக்காகவேதான். எகிப்திய நாட்டில் நான்காம் கால்வழியினர் காலத்திலுள்ள ஓர் ஓவியத்தில் பொன்கழுவும் காட்சி ஒன்று தீட்டப்பெற்றிருக்கிறது. இதுவன்றி எகிப்திய அரசர்கள் போரில் பிடித்த பிறநாட்டுப் படைஞர்களை அடிமைகளாக்கி அவர்கள்மூலம் நிலத்தில் சுரங்கங்களிலிருந்து பொன் வெட்டி எடுத்ததாகவும் அறிகிறோம். இவ்வரசர்கள் காலம் கி.மு. 2,900 ஆகும். (அதாவது இன்றைக்கு 4,000 ஆண்டுகட்குமுன் எனலாம்). கி.மு. 1,200-இல் (இற்றைக்கு 3,200 ஆண்டுகட்கு முன்) அர்மீனியா நாட்டிலுள்ள ஒரு சிற்றாற்றின் குறுக்கே கம்பளி நூல்களால் அணை கட்டப்பட்டு அதன் வழியாக நீருட்கரைந்த நுண்மணல் பொடிகள் அரித்தெடுக்கப்பெற்றனவாம். இச் செய்தியையே அறிவியல் முன்னேற்றமற்ற அக்காலத்திய கிரேக்கக் கவிஞர் ஜேஸன் பொன் கம்பளி வேட்டையாடிய கதையாகப் புனைந்துரைத்தார். கி.மு. 350-ஆம் ஆண்டில் லிடியாவை ஆண்ட கிரீஸஸ் என்பவன் அலெக்சாண்டரால் வெல்லப்பட்டவன். அவன் தன் நாட்டில் சுரங்கங்களிலிருந்து பொன் எடுத்து ஒப்பற்ற பொற்குவை திரட்டிவைத்திருந்ததனாலேயே அன்றை உலகின் மாபெருஞ் செல்வனாக விளங்கினான். தமிழ்நாடும் அக்காலத்தில் பொன்னும் மணியும் முத்தும் செழித்த நாடாயிருந்தது. கொற்கையிலிருந்து முத்து எடுக்கப் பெற்றதுபோலவே, பிற இடங்களில் தங்கமும் அக்காலத்தில் மிகுதியாக எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். அப்படியில்லா விட்டால் அக்காலத்தில் நாட்டில் இவ்வளவு பொற்குவை இருந்திருக்க முடியாது. வரலாற்றறிஞர்கள், தமிழ்நாட்டிற் பிறநாட்டுக் காசுகள் மிகுதியாகக் காணப்படுவது பிறநாட்டு வாணிபத் தொடர்புகளால் என்பர். ஆனால், இந்நாட்டிலேயே தங்கக் காசுகள் இருந்தது வாணிபத்தின் பயன் என்று கூறமுடியாது. பூண்கள் அணியும் வழக்கமும் உள் நாட்டில் பொன் விளைவில்லாமல் இவ்வளவு வரன்முறை வழக்கமாயிருந்துவிட முடியாது. தமிழ்நாட்டிற்கு வெளியில் உள்ள சுரங்கங்களிலிருந்து பொன் வந்திருக்கலாமோ எனில், அன்று. உள் நாட்டில் விளைவின்றிப் பிறநாட்டிலிருந்து தரப்படும் பொருள்களை அந்நாட்டுடன் தொடர்புபடுத்திக் கூறுவது பண்டைத் தமிழ் நூல்கள் வழக்கம். கலிங்கத்தின் நேரிய ஆடையும், சீனத்தின் பட்டும், சிங்களத்தின் மாணிக்கமும் ஆரியப்படை காவலரும் யவனப் பெண் காவலரும் எடுத்துக் கூறப்படும் நூல்களில் பொன் வெளியிலிருந்தே சிறப்பாக வருவதாயின் அது கூறப்படாதிரா தன்றோ? மேலும் காவிரிக்குப் பொன்னி என்று பெயர் வந்ததற்கான காரணத்தை மேலே எடுத்துக்காட்டினோம். அந்த ஆற்றின் தலையிடத்தில் கோலாற்றுப் பக்கம் இன்று பல இடங்களில் பொன் எடுக்கப்பட்டபோதிலும் முற்காலங்களில் தொழிலாற்றிய சுரங்கங்களின் பக்கமாகவே மிகுதியான தங்கம் அகப்படுவதாகக் கூறப்படுகிறது. இதிலிருந்தும் அக் காலங்களில் பொன் எடுக்கப்பட்டது என்று மட்டுமன்று; சுரங்கங்களும் வெட்டப் பட்டிருந்தன என்று அறியலாகும். காவிரியாற்றின் தலைப்பில் மட்டுமன்றி அதன் போக்கிலுங்கூட அக்காலத்தில் தங்கம் எடுக்கப்பட்டிருக்கலாம். சோழநாட்டில் பொன் விளைந்த களத்தூர் என ஓர் ஊரின் பெயர் பழைய நூல்களில் காணப்படுகிறது. அக்காலத்தில் அங்கே தங்கம் சுரங்கத்தினிடமாகவோ, மணலிலிருந்தோ வேறெவ்வகையிலோ கிடைத்திருக்கவேண்டும் என எண்ணலாம். அண்மைக் காலங்களில் அருகலாகத் தமிழ்நாட்டின் உள்நாட்டு வெளிநாட்டுப் பொன் தேட்டாளர்கள் உழைத்து வந்துள்ளனர். அவர்களால் இதுவரை பெரும்படியான பொன்விளைவு எங்கும் காணமுடியவில்லை யாயினும், சிறு சிறு அளவில் பல இடங்களில் பொன் காணப்படுவதாக அவர்கள் குறித்திருக்கின்றனர். வையையாற்று மணலில் பல இடங்களிலும் பொன் கலப்பு உள்ளது; பழகமுத்து (ஞயடயமயஅரவார) என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் இது சற்று மிகுதியாகக் காணப் பட்டதாம். இன்னும் சேலம் வட்டத்தில் சிற்றாறுகளிலும் கஞ்சமல்லிய (முயதேயா ஆயடடயை) மலையடி வாரங்களிலும், மலையாளத்தில் நீலாம்பூரிலும் வயநாட்டிலும், பெய்ப்பூர் (க்ஷநலயீடிடிச), ஆற்றின் கரையிலும், திருவாங்கூரிலும் பெல்லாரியிலும் தங்கம் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. வடநாட்டிலும் துங்கபத்திரைக் கரையிலும் விந்தியமலையை ஒட்டிய கோண்டவனப்பகுதியிலும் பொன் கிடைத்தல்கூடும் என்று கருதப்படுகிறது. ஆயினும் இவை பேரளவில் இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டுப்பற்று மிக்கவர் அதில் முனைந்து முயலவும் இல்லை. எப்படியும் வாணிப அளவில் இன்று இந்தியாவில் மைசூரிலும், விந்தியமலையின் கீழ்ப்பகுதியிலும் பொன் எடுக்கப்படுகிறது. சுரங்கங்களுள் பழங்காலச் சுரங்கங்கள் பெரும்பாலும் மண்ணில் (மருதப்பகுதியில்) வெட்டியெடுக்கப்பட்டவையே. கரும்பாறைகளைத் தகர்த்துப் பொடியாக்கவோ மலைக்குள்ளும் நிலத்தினுள்ளும் நெடுந் தொலை செல்லவோ உதவும் புதிய பொறிகள் அக்காலத்தில் இல்லை. நிலத்தின் ஆழத்திற் சென்று பொன் இருக்கும் பாறைகளின் கிடக்கையைப் பின்பற்றி உள்ளீடான சுருங்கை வழிகள் அமைப்பதும் அக்காலத்தில் மிகுதி கிடையாது. (நம் நாட்டில் கோட்டைகளில் சுருங்கைகள் உள்ளன. ஓரளவு புதுப்பொறிகள் வருமுன்னமே நம்நாடு தொழிலில் முதன்மையுடையதா யிருந்ததென்பதை மக்கள் பெரிதும் மறந்து விடுகின்றார்கள்.) பழம்பொருள் ஆராய்ச்சியின் பயனாகத் தமிழ் நாட்டில் உலகின் பிற்கால அறிவியல் நிலைக்குப் பல வகையிலும் ஒப்பானதும் சில வகையில் உயர்வானதுமான நாகரிகம் ஆரியர் வரவுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததென்று படிப்படியாக விளங்கி வருகின்றது. அதனால் விளங்கவேண்டும் பல உண்மைகளில் அந்நாளைய தமிழர் பொன்னை வெட்டிய வகையின் வரலாறும் ஒன்று. இவ்வகையில் தமிழ் நாட்டின் பழைய நிலைகள் தெரியவராவிடினும் இன்னொரு பழைய நாகரிக நாடு ஆகிய சீன நாட்டின் மக்கள் ஆழ்ந்து சுரங்கம் வெட்டிய வகை தெரியவருகிறது. தாள் செய்தல், அச்சு, வெடி மருந்து ஆகிய புதுவது புனைவுகளைப் பழைய காலத்திலேயே கண்ட இச்சீரிய மக்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே 3000 அடிக்கு மேலும் மூங்கில் குழாய்களால் மண்ணைக்கல்லி உள்ளிடத்தில் பொன் இருக்கிறதா இல்லையா என்பதை அறியும் வகையையும், இருந்தால் எடுக்கும் வகையையும் அறிந்திருந்தனராம். மணலிலும் மண்ணிலும் பொன்னைத் தேடிய மக்கள் சிறிய மண் வெட்டியால் மண்ணைக் கோரியெடுத்துத் தட்டங்களிலோ பரந்த ஓடுகளிலோ வைத்து நீருடன் கலந்து சுழற்றிச் சுழற்றிக் கொட்டுவர். பொன் எடைமிகுந்த பொருளானபடியால் மண்ணும் மணலும் நீருடன் கலந்து போகும்போதும் அது அடியிற்கிடந்து விடும். பொன்கலந்த மண் பொன் கலவாத மண்ணை விட எடைமிகுந்தே இருக்குமாதலால் அது மண்ணின் ஆழத்தினுள்தான் காணப்படும். இப்படி ஆழமாகத் தோண்டித் தோண்டி யெடுத்து அரித்து மண்ணில் கலந்த பொன் பொடிகளையும் பிற திண் பொடிகளையும் பிரித்தெடுப்பர். அதிலிருந்து பின் பொன்னைப் பிரித்தெடுக்க அக்காலத்துச் சிறந்த முறை புடமிடுவதேயாகும். பொன் கலவையை உருக்கி நீட்டித் தகடாக்கி, அரை அல்லது அரையே அரைக்கால் அங்குல அகலமும் இரண்டு அல்லது இரண்டரை அங்குலம்வரை நீளமும் உள்ள துண்டுகளாக்கி அவற்றைப் புளி நீரால் கழுவுவர். பின் உப்பும் இருப்புக் கந்தகியும் (ஐசடிn ளுரடயீhயவந) கலந்த செங்கற்பொடியில் அதனையிட்டுப் புரட்டி இரண்டு ஓட்டுச் சில்லுகளினிடையில் வைத்துக் கீழே காற்றுப் புகும் தொளையுடைய அகன்ற சட்டி அல்லது ஓட்டில் வாட்டியின் கொழுங் கனலினிடையே பல மணி நேரம் வைப்பர். இங்ஙனம் 41 தடவை புடமிட்டால் பொன் கலவை முற்றிலும் மாசுதீர்ந்து பத்தரை மாற்றுத் தங்கம் ஆகுமென்பர். பொன் கலவை மிகுதியாயிருக்கும் இடத்தில் மேன் மேலும் வெட்டுவதனால் பொற்குழி வரவர ஆழமாய்க் கிணறு போலாகிச் சிறு சுரங்கமாய்விடுகிறது. அதில் மக்கள் ஏணிவைத்து இறங்கி மண்ணை வெட்டி மேலே கொண்டு வருவர். மண்ணிறைந்த கூடைகளைக் கிணற்றிலிருந்து இறைப்பதுபோல் கயிறிட்டும் ஏற்றமிட்டும் இறைப்பர். குழியின் நாற்புறமும் நன்கு கட்டப்பட்டு உறுதியான விட்டம் இட்டால் பெரிய கூடைகளும் வன்மையான கயிறு மிட்டு மிகுதி மண்ணெடுப்பதுடன் மண் வெட்டுபவர்களும் அதில் இருந்து கொண்டே குழியினுள் இறங்கவும் ஏறவும் செய்வர். ஆனால் எவ்வளவு திறம்பட ஏற்பாடுகளைச் செய்தாலும் இப்பொற்குழிகள் அல்லது சிறு சுரங்கங்கள் மிகவும் ஆழம் செல்ல முடியாது. நிலத்தினுள் சுரக்கும் நீரை இறைக்கும் தொந்தரவு ஒரு புறம், சுற்றுமுள்ள சுவர்களின் மென்மை ஒரு புறம், உட்செல்லச் செல்லக் காற்றும் ஒளியும் இன்றிப் புழுக்கம் மிகுந்து வேலைக்காரர் வேலைசெய்ய முடியாத நிலை ஒருபுறம், ஆக எல்லாம் சேர்ந்து சுரங்கங்களின் வேலை மிகுதி ஆழம் செல்லாமல் தடுத்து வந்தது; நிலத்தின் போக்கு இது. கடும்பாறைகள் உள்ள இடத்தில் கேட்க வேண்டிய தில்லை. அவற்றை வெறும் மண்வெட்டியாலோ கடப்பாறை யாலோ பிளக்க முடியாத காரணத்தால் அப்பாறைகளில் பொன்னிருக்கிறதா என்று ஆராயக்கூட வகையின்றி யிருந்தனர் அந்நாளைய மக்கள். மண்ணிலுள்ள பொன், ஆற்றில் கரைந்து வந்த பொன் பொடியே யாதலால் அது விரைவில் அற்றுவிடும். தமிழ் நாட்டில் முற்காலத்தில் மிகுந்த பொன் விளைந்து பின் அருகியதன் மறைபொருள் இதுவே. முற்காலத்தில் பொன் எடுத்தது பாறையிலிருந்தன்று; மண்ணிலிருந்தே. அதில் தமிழ்ப் பொன்தேட்டாளரும் வணிகரும் முயன்று அவ்வூற்று அற்றுப் போகும்படி செய்திருப்பர். புதிய முறையிற் பாறைகளைத் தகர்க்கும் முயற்சியில் யாரும் முனையாததனால் பழைய சுரங்கத் தொழில் இந்நாட்டில் அழிந்துவிட்டது. இந்தியாவில் பன்னிரண்டாம் நூற்றாண்டினுக்குள் வெடி மருந்தின் வழக்கு ஏற்பட்டுவிட்டது. அதன் முன்னமேகூட வெடிமருந்து இந்நாட்டில் இருந்திருக்கலாம். சீனநாட்டிலேயே இது முதல் முதல் வழங்கியதென்று மேல்நாட்டு ஆராய்ச்சி யாளர் கூறுவர். ஐரோப்பாக் கண்டத்திற்கு இதன் வழக்கு 16-ஆம் நூற்றாண்டிலேயே சென்றது. நம்நாட்டில் மலைகளில் பாறைகளை உடைப்பதற்கு இது இன்றும் வழங்குகிறது. பண்டைக் காலத்திலும் இது வழங்கி இருக்கலாம். ‘கல்லுளிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தவிடு பொடி’ என்ற பழமொழியைப் பார்க்க அக்கல்லுளிச் சித்தர் இவ்வெடி மருந்தின் ஆற்றலைக் கைக்கொண்ட வராயிருந்திருப்பாரோ என்று தோன்றும். சுரங்கத்தொழிலில் இவ்வெடிமருந்தின் பயன் கொஞ்ச நஞ்சமன்று. பல நாள் பல மனிதர் முனைந்து குறைபயனுடன் செய்யும் வேலையை அது இமைப் போதில் எளிதில் செய்து கொடுத்தது. மலைகளைக் குடைவதும் பெரும் பாறைகளைப் பிளப்பதும் எளிதாயிற்று. அதன் பிறகே சுரங்கத்தொழில் விரைந்து முன்னேறத் தொடங்கிற்று. மண்ணை அகழ்வதுடன் நில்லாமல் மனிதர் மலைகளை ஊடுருவிப் பக்கவாட்டில் குறுக்காகவும் நெடுந்தொலைவு தாய்ப்பொற் பாறைகளை (டுடினநள) பின்பற்றிச் செல்லலாயினர். மண்ணினுள் செங்குத்தாக அகழ்ந்து செல்வதை விட மலையினுள் பக்கத்தைத் தொளைத்துக் குறுக்காக அகழ்தல் பல வகையில் எளிது. மண்ணினுள் அகழ்வோர் ஊற்றுநீரை இறைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அல்லது நாற்புறமும் ஊற்றுக்கண் கசியாது அடைக்க வேண்டும். ஆனால் மலையினுட் குடைபவர்க்கு ஊற்றின் தொந்தரவு மிகுதியில்லை. ஊற்றுக்கள் ஏற்பட்ட போதும் சமாளிப்பது எளிது. பல இடங்களில் நீரை இறைக்கவே வேண்டி வராதபடி சுரங்கம் சுருங்கை உருவில் வெளிப்புற வாயிலிலிருந்து சற்று உயர்ந்து சாய்வாகத் தோண்டப் பெற்று நீர் எளிதில் வெளியோடும்படி அமைக்கப் பெற்றிருக்கும். நீண்ட சுருங்கைகளில் வெளிச்சமும் காற்றும் குறைவு. இவற்றிற்காகப் பக்கத்துக்குப் பக்கம் இரண்டு சுருங்கை வழிகளை இடை வழிகளால் இணைப்பதும், கூடுமான இடங்களில் மேல் முகட்டைத் தொளைப்பதும் உண்டு. அப்படியும் காற்று வராவிட்டால் ஒரு கடைவாயில் நெருப்பிட்டுக் காற்றைச் சூட்டினால் மேலெழ இயக்கிக் காற்றியக்கம் உண்டு பண்ணுவர். குன்றைக் குடைவதில் இன்னும் ஒரு வாய்ப்பு உண்டு. குடைவின் பக்கங்கள் பெரும்பாலும் கல்லாதலால் வேறு அணைப்பு இல்லாமலேயே அவை உறுதியாக நிற்கும். மண்ணுக்குள் அகழும்போது நாற்புறமும் வலிமையான சுவர்கள் எழுப்ப வேண்டும். மண்ணினுள் பக்கம் நோக்கிச் சுருங்கைகள் வெட்டும் போது மேல் முகட்டைத் தாங்கவும் தூண்ங்கள் ஆங்காங்கு அமைத்தல் வேண்டும். வெடிமருந்து ஏற்பட்ட பின் பாறைகளைத் தகர்ப்பது மட்டுந்தான் வாய்ப்பதயிற்று. தகர்த்த பொடிகளை மேலெழுப்பு வதிலோ தகர்க்கும் உழைப்பிலோ பொன்னைப்பிரிப்பதிலோ அது உதவுவதில்லை. இவ்வெல்லா வகையிலும் தொழிலுக்கு உதவிய பெரும்படி முன்னேற்றம் நீராவிப் பொறியினால் ஏற்பட்டது. ஆவிப்பொறிகள் ஆழத்திலுள்ள நீரை முன்னிலும் விரைவாக அப்புறப் படுத்தின. பாறைத்துண்டுகள் பெரிய பெரிய அளவில் தகர்க்கப்பட்டு மேலெழுப்பப்பட்டன. ஆவி ஆற்றலால் வேலை செய்த பொறிச் சுத்தியல்கள் கற்களையும் பாறைகளையும் உடைத்து நொறுக்கின. இவை மட்டுமன்றி ஆவியாற்றலால் காற்றோட்டம் வேண்டுமிடத்தில் விசிறிகள் அமைக்கப் பட்டன. இக் காரணங்களால் நூறு இருநூறு அடி ஆழத்துடன் இதுவரை நின்றிருந்த சுரங்கங்கள் துணிந்து 2000, அல்லது 3000 அடி ஆழம் வரை சென்று வேலை செய்தன. இவற்றையெல்லாம்விடப் பாறைகளை உடைக்கும் வகையிலும் நீராவியால் ஒரு பெரிய துணை ஏற்பட்டது. வெடிமருந்து வைக்குமுன் அதற்காகப் பாறைகளில் தொளைகள் செய்து அதில் வெடி மருந்தை வைத்து விட்டுத் தொலைசென்று மருந்தில் தீப்பற்றவைப்பர். இத்தொளைகள் முன்னால் கல் தச்சரது கைக்கருவிகளாலேயே செய்யப்பட வேண்டியிருந்தன. ஆனால் ஆவிப் பொறியால் அழுத்தம் செய்யப்பெற்ற காற்று வைரத்தையும் தொளைக்கும் உரமுடையது. ஆதலால் அங்ஙனம் அழுத்தப்பெற்ற காற்றைக் குழாய் மூலம் சுரங்கத்தினுட் கொணர்ந்து பாறைகளில் தொளைசெய்ய வேண்டுமிடங்களில் அதனைச் செலுத்தினர். இது வெடி மருந்தின் வேலைக்கொத்து விரைவில் தொளை செய்ய உதவிற்று. கைத்திறனைவிட நீராவித்திறம் எத்தனையோ உயர்வுடைய தாயினும் அதனை வைத்துக் காப்பது ஆணையை வைத்துக் காப்பதுபோல் செலவும் இடைஞ்சலும் அழிவும் நிரம்பியதாகும். நீராவியை வெளியிலிருந்து சுரங்கத்தினுள் நெடுந்தொலை கொண்டுவர மிக நீண்ட குழாய்கள் வேண்டும். அவை வெடித்து விடாதபடி இருக்கக் குழாய்கள் பல அங்குலத் திட்ப முள்ளதாய்த் திண்ணமாயிருக்கவேண்டும். அருமுயற்சியால் அகழ்ந்த சுரங்க வழிகளில் இக்குழாய்கள் மிகுந்த இடத்தை அடைத்துக் கொண்டன. மேலும் நீளம் மிகுந்தோறும் நீராவியின் சூடு வீணாகக் கழிந்து போவதனால் ஒன்றிரண்டாயிர அடிகளுக்குக் கீழும், சில ஆயிர அடிகளுக்கு மேலும் நீண்டு சுரங்கங்கள் வளர்வதற்கில்லாதிருந்தது. இந்நிலைகளனைத்திலும் பெரும்புரட்சிகளை உண்டு பண்ணிற்று மின் வன்மை. பாரிய இருப்புக் குழாய்களுக்கு மாறாக மெல்லிய செப்புக் கம்பிகள் போதியவை ஆயின. இவை எத்தனை தொலை வேண்டுமானாலும் ஆற்றல் குன்றாது நீண்டு செல்லத்தக்கவை. ஆகவே சுரங்கங்கள் எல்லையற்று ஆழ்ந்தும் நீண்டும் செல்ல முடிந்தன. தென் ஆப்பிரிக்காவில் ஊர்-ஆழ்- சுரங்கம் (ஏடைடயபந னுநநயீ ஆiநே) என்பது செங்குத்தாக அரைக்கல் (2550 அடி) ஆழமுடையது. இதுவே ஒரு காலத்தில் உலகின் மிக ஆழமான சுரங்கமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்று அதே நாட்டில் திரான்ஸ்வாலில் இராந்துப் பாறைச் சுரங்கத்தில் செங்குத்தாக 8000 அடிவரை சென்று அதன் பின்னும் குறுக்காகப் பல கல் செல்ல முடிகிறது. இராந்துப்பாறை சற்றுச் சாய்வாகச் செல்வதனால் இனி அதில் சுரங்கம் தோண்டுபவர் இன்னும் மேன்மேல் ஆழமாக அகழ்ந்து கொண்டுபோக வேண்டிவரும். மின் ஆற்றல் இல்லாவிட்டால் இப்புதைபட்ட பாறைகளிலுள்ள பொன் அத்தனையும் புதைபட்டேதான் கிடக்கவேண்டும். இதே மின் ஆற்றலால்தான் கோலாற்றில் மண்ணினுள் ஒருகல், இருகல் தொலை சுருங்கைசெய்து தாய்ப்பொன் பாறையைப் பின்பற்ற முடிகிறது. காற்றும் ஒளியும் முன்னையிலும் எத்தனையோ மடங்கு மலிவாக எத்தனையோ மடங்கு பொலிவுடன் கிடைத்தன. பாறைகளை உடைப்பதிலும், பாறைகளையும் தொழிலாளிகளையும் பல்லாயிர அடி ஏற்றியிறக்கிச் செல்வதிலும், மக்களுக்கு அப்பாதாள உலகில் நிலவுலகிலும் கிட்டாத எல்லாவகை வாய்ப்புகளும் செய்வதிலும் பழைய அலாவுதீன் கதையின் பூதங்களைவிடப் பன்மடங்கு இம் மின்வன்மை சுரங்கத்தொழிலுக்கும் தொழிலாளருக்கும் உதவுகின்றது. ஆவிக் குழாய்களின் வெப்பத்தால் முன் சுரங்கத்தின் வெப்பம் பொறுக்கமுடியாததாயிருந்தது. இன்று மின் வன்மையால் எத்தகைய தட்பநிலை வேண்டுமானாலும் சுரங்கத்தில் ஏற்பாடு செய்தலாகும். இன்றைய கோலாற்றின் அடித்தளத்திலோ ஆப்பிரிக்க இராந்துச் சுரங்கத்தின் உள்ளுலகிலோ புதிதாகச் சென்று பார்வையிடும் ஒருவன் தன்னைச் சுற்றிலும் உள்ள காட்சிகளையும் அகன்ற தெருக்கள் போன்ற சுருங்கை வழிகளையும் பார்த்தால் அது ஒரு நகரம் என்று நினைப்பானேயன்றிச் சுரங்கம் என்று நினைக்கமாட்டான். ஞாயிறும் திங்களும் மீனினமும் கோளும் இல்லாக்குறை ஒன்றே அது நிலப்பரப்பு அன்று என்பதனை அறியத் துணை செய்யும். இத்தகைய கீழுலகைக் கனவிலேனும் சென்று பார்த்துத்தான் நம் நாட்டின் பழங்கதையாளர் மயிலி ராவணன் கதையையும் பிறநாட்டினர் அலாவுதீன் கதையையும் எழுதினார் களோ என்று எண்ணத்தகும். சுரங்கங்களில் உடைத்தெடுக்க பெரும்பாறைகளும் துண்டுகளும் பொடியும் சுரங்கவழிகளில் அமைக்கப்பட்ட புகைவண்டிப்பாதை வழியாகத் தொட்டிகளிலேற்றப்பட்டுச் சுரங்கத்தின் அடிப்புறத்திற்குக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு தொட்டியும் வெறுமையாகவே 4 டன் எடையுடையதாய் 7 டன் எடைவரை தாங்கிக் கொள்வதாயிருக்கும். இத்தகைய தொட்டிகள் பலவற்றைச் சேர்த்துப் பல்லாயிர அடி தூக்கி அவற்றை நிலப்பரப்புக்குக் கொண்டுவர மின் ஆற்றலால் இயங்கும் ஓர் இருப்புச்சட்டம் அமைந்துள்ளது. அச்சட்டத்தில் மாட்டப்பட்ட உருக்குக் கம்பிகள் 32 அல்லது 40 டன் எடையுள்ள அச்சட்டத்தைக் கண்மூடித் திறக்குமுன் 8000 அடி உயர்த்திப் பொன் உருக்கும் ஆலையில் கொண்டு சேர்க்கிறது. அங்ஙனம் சேர்க்க மூன்று வினாடிகளே செல்லும்படி அத்தனை விரைவாய் இயங்குவது அச்சட்டம்! ஓர் இமைப்பொழுதிற்குள் (ளுநஉடினே) அது 300 அடி உயருந் தன்மையது. ஆலையிலுள்ள பெரிய அரைக்கும் கருவிகள் இப்பாறை களைப் படிப்படியாக உடைத்து அரைத்துத் தூளாக்கிப் பின் விரைவாக ஊடுகின்ற நீரில் அவற்றை இழுத்துச் செல்கின்றன. வழியில் பாதரசம் பரப்பிய பலகைகள் கிடக்கும். பாதரசம் பொன்னுடன் கலக்கும் நீர்வடிவுடைய திண்பொருள். மணலிலுள்ள பொன் பொடிகளில் ஒரு பகுதி (கிட்டத்தட்ட பத்திலொரு பங்கு) இங்ஙனம் பாதரசத்துடன் சேருகிறது. இக் கலவையைப் பின் தனியாகத் தீயில் காய்ச்சப் பாதரசம் ஆவியாகி மேல்சென்றுவிடத் தங்கம் கீழே தங்கிவிடுகிறது. ஆவியாய்ச் சென்ற பாதரசமும் வீணாவதில்லை. தட்பமிக்க குழாய்களில் சென்று மீண்டும் நீர்மை உருப்பெற்றுப் பாதரசமாகிறது. அதன்பின் மீந்த மணல் மெல்லிய கம்பளி மயிர்த்துண்டுகள் பாவிய பலவகைச் சாய்வான பலகைகளின் வழியே செலுத்தப்படும். நுண்ணிய எடைமிக்க பொன்பொடிகள் மயிர்த்துய்களில் சிக்கித் தங்கிவிடும். துண்டுகளைப் பின் எடுத்து உலர்த்திப் பொடிகளைச் சேர்த்துருக்குவர். இவ்விரு முறையிலும் தப்பிச்செல்லும் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய பொடிகளைப் பொன்னுடன் எளிதாகக் கலப்பதும் நீரிலும் எளிதாகக் கரைவதும் ஆகிய (சயனைடு என்ற) பொருளின் கரைசலிலிட்டு வடிப்பர். மணலிலிருந்த பொன் சயனைடுடன் கரைந்து துத்தத் தகடுகளின்மீது செல்லும். தங்கம் துத்தத்தின் கவர்ச்சியுட் பட்டவுடன் ஸயனைடை விட்டுப் பிரிந்து துத்தத்தின் மீது பொடியாகப் படிந்துவிடும். இவ்வகையில் மூன்று முறையாகத் தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது. இப்போதும் பொன் ஓரளவு மாற்றுக்குறைவாகவே இருக்கும். தனித்தும் பிறபொருள்களுடன் கலந்தும் உருக்கப்பட்டு அது மாற்றுயரும். அதன்பின் வேண்டிய உருவுடைய அச்சுச் சட்டத்தில் அதனை வார்த்துக் குளிர்ச்சியடையுமுன் மேல்மாசகலச் சம்மட்டிகளாலடிப்பர். இவ் வார்ப்புக்கள் சில நாடுகளில் உருளையாகவும் சிலநாடுகளில் கம்பிகளாகவும் இருக் கின்றன. உருசியாவில் இவை கருப்புக்கட்டி (பனைவெல்ல) வடிவில் சற்றே குவிந்து பரந்துள்ளன. அவற்றை அகன்றபுறம் கீழாக வைத்தால் எளிதில் எடுக்கமுடியாது. ஒவ்வோர் உருகிய வார்ப்பும் 36 கல் (யீடிரனே) எடை யுடையது. ஆங்கில நாட்டில் இது கம்பியுருளை வடிவாய் அமைந்துள்ளது. ஒவ்வொரு கம்பி யுருளையும் 400 அவுன்சு எடையுள்ளது. இதிலுள்ள தங்கம் 191/2 மாற்று நிலையுடையதானபடியால் இந்த 400 அவுன்சிலும் உண்மையில் 398 அவுன்சுதான் தனித்தங்கம் இருக்கும். மீதியுள்ள 2 அவுன்சு வெள்ளியாகும். தங்கத்தில் கலந்த பிற திண்பொருள்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க அக்காலத்தில் புடமிட்டனர் என்று மேலே கூறினோம். அதில் செலவும் முயற்சியும் மிகுதி; காலதாமதமும் ஆகும். தற்காலத்தில் புடமிடுவதற்கு மாற்றாகப் பல புதிய முறைகள் ஏற்பட்டுள்ளன. 16-ஆம் நூற்றாண்டில் மக்கள் இவ்வகையில் வெடியுப்பு நீரகத்தை (சூவைசiஉ யஉனை) வழங்கினர். இந்நீரகம் பொன் நீங்கலாக மற்ற எல்லாத் திண்பொருள் களையும் எரித்து விடவல்லது. 19-ஆம் நூற்றாண்டில் இதே தன்மையுடையதும் ஆனால் இதனினும் மலிவானதுமான கெந்தக நீரகம் (ளுரடயீhரசiஉ யஉனை) வழங்கப்பெற்றது. 1869-இல் பாசக முறை (ஊhடடிசiநே யீசடிஉநளள) வழக்கிற்கு வந்தது. உருக்கிய தங்கத்தில் பாசகக் கால் (ஊhடடிசiநே பயள) ஊதப்பெற அதன் குமிழிகளுடன் கலந்து மற்றப்பொருள்கள் வெளிவந்து பொன் தூய்மை யாகின்றது. இறுதியாக 1902- இல் அமெரிக்காவில் இதனினும் மலிவான மின்வன்மைப் பிரிவீட்டுமுறை (நடநஉவசடிடலளளை) கையாளப்பட்டது. இங்ஙனமாகப் பொன்னும் பொன்தொழிலும் முன்னேற்ற மடைய உதவியது இரும்பும் இரும்பினாலாகிய பொறிகளுமே என்று எண்ணும் போது பொன்மேலா இரும்பு மேலா என்று எண்ணாதிருக்க முடியவில்லை. மனிதரது அறிவியல்பாகிய சிந்தாமணியிற் பட்டு இரும்பு பொன்னையும் பொற்புடைய தாக்கும் உயர் பொன்னாயிற்றுப் போலும்! எப்படியும் தமிழர் அதையும் கரும்பொன் என்றுதானே கூறினர்! 6. பொன்னின் பரப்பு தங்கம் ஆரியர் வரவுக்குமுன் நாகரிக உலகெங்கும் பரந்து கிடந்த ஸெமித்திய திராவிட மக்களனைவரிடையேயும் பரவியிருந்தது. சிறப்பாக எகிப்து, அஸிரியா, மினோவா (ஆரிய வரவுக்கு முந்திய சிறிய ஆசியா) எதுருஸ்கா (ஆரிய வரவுக்கு முந்திய இத்தாலியப் பகுதி) ஆகிய இடங்களிலுள்ள மக்கள் பண்டைக் காலந்தொட்டே பொன்னை வழங்கியதுடன், வாணிபத்திலும் என்றும் முதன்மைபெற்று வந்திருக்கின்றனர். ஆரியர் வரவால் அவருட் பல பகுதியினர் தம் பண்பு திரிந்தழிந்து விடினும், தமிழர் இன்றும் அப்பண்பு முற்றிலும் கெடாது வாணிப வாழ்விலும் அழியாது நிற்கின்றனர். இப்பண்டைக் கால நாகரிகத்தை அடுத்துக் கிறிஸ்து பிறந்தபின் கிட்டத்தட்ட 15 நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாகரிகம் இடைக்கால நாகரிகம் எனப்படும். இக்காலத்தில் ஐரோப்பியர் பண்டைய நாகரிகத்தின் நிழலைப் பின்பற்றி அதனைப் பார்த்துப் போலி வாழ்வு வாழ்ந்தனரேயன்றித் தமக்கெனப் புதுவதாக ஒன்றும் புனைந்து கொள்ளவில்லை. அதோடு தம் பண்புமிழந்து முன்னைய நாகரிகங்களின் மாதிரிகளையே பின்பற்றினர். அதற்கு முற்றிலும் இயைபாகவே அவர் பொன் தேட்டத்தில் முனையாது தமக்கு முன் அதனைத் தேடியும் வாணிபமுறையில் சேர்த்தும் திரட்டி வைத்திருந்த சீனம், இந்தியா முதலிய நாடுகளுடன் வாணிபம் செய்து அதனைத் திரட்ட முனைந்தனர். 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய மறுமலர்ச்சியியக்கம் அந்நூற்றாண்டில் கவிதையாகவும் வாணிப முயற்சியாகவும் முளைவிட்டு. 17-ஆம் நூற்றாண்டில் அரசியல் அறிவியல் விழிப்பாகத் தளிர்த்து 18-ஆம் நூற்றாண்டில் பகுத்தறிவியக்க மாகப் பூத்து 18,19,20-ஆம் நூற்றாண்டுகளில் கவிதையாகவும், புதுவது புனைந்த அறிவியல் புரட்சியாகவும், புத்துலகு புனையும் ஆராய்ச்சியாகவும் கனிவுற்றது. அதன் பயனாக வெள்ளையர் வாணிபத்தையும் குடியேற்ற விரிவையும் குறிக்கோளாகக் கொண்டு பழைய உலகின் இருட் கண்டமான ஆப்பிரிக்காவிலும், புது உலகாகிய அமெரிக்காவிலும் புத்தம்புது உலகாகிய ஆஸ்திரேலியாவிலும் குடியேறி அவற்றின் வளங்களை ஆய்ந்து கைக்கொண்டு தம் வாணிப நலனையும் கைத்தொழில் வளனையும் பேணிக்கொண்டனர். அம்மூன்று கண்டமும் பொன்னும் மணியும் புதைந்து கிடந்தவை யானபடியால் அவர்கள் வாழ்வில் அவை அளவற்ற செல்வக் குவியலைக் கொண்டு கொட்டத் தொடங்கின. அவற்றுள் தங்கம் முதல்முதலாகக் கலிபோர்னியாவில் 1848-லும், ஆஸ்திரேலியாவில் 1851-லும், கிளான்டைக், அலாஸ்கா என்ற வட அமெரிக்கப் பகுதிகளில் 1890-க்கும் 1900-க்கும் இடைப்பட்ட காலத்திலும், தென் ஆப்பிரிக்காவிலுள்ள நேட்டாலில் 1927-லும் வெட்டியெடுக்கப்பட்டன. ஐரோப்பாவில் இதே நூற்றாண்டில் ஆஸ்திரியாவிலும் உருசியாவிலும் பொன் அகப்பட்டன. 1880-இல் இந்தியாவில் மைசூரில் உள்ள கோலாற்றில் தங்கம் வெட்டியெடுக்க ஏற்பாடாயிற்று. இம் முயற்சியுளெல்லாம் பழைய உலகமாகிய ஆசியா ஐரோப்பா பொன் விளைவில் பிந்தி இருப்பது காணலாம். ஆசியா பிந்தியிருப்பது முயற்சியின்மையாலேயே என்று எண்ணவேண்டும்; பிற பொருள்கள் வகையிலும் இந்தியாவின் செழுமை அண்மை வரையில் பயன்படுத்தப் பெறாமலேயே இருந்து டாடா (கூயவய) முதலிய சில செல்வர் ஊக்கத்தினால் மேம்பாடடைந்தது போலப் பொன் வகையிலும் மேம்பாடு கிட்ட இடமுண்டு. பொதுப்படத் திண்பொருள்கள் வகையிலும் தொடுபொருள்கள் (அiநேசயடள) வகையிலும் இந்தியாவில் விந்தியமலைச்சாரலும் மேற்குத் தொடரும் ஒப்பற்ற வண் மையுடையவை என்று எண்ணப்படுகின்றன. தமிழராவோர் வளத்திற்கு உறைவிடமும், தமிழும் தென்றலும் பிறந்ததாகச் சொல்லப் படுவதும், அகத்தியர் கல்லையும் இரும்பையும் பொன்னாக்கும் பிற சித்தர் சூழ இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுவதும் ஆன வண் பொதிகையைக் கூட ஆராய்ந்து அதன் செல்வத்தின் அளவை அறிய முயன்றிலர் தமிழர்! இன்று உலகில் தங்கம் மிகுதியாக விளைவது தென் ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்வாலிலுள்ள இராந்து என்ற பாறையிலிருந்துதான். இது உலகின் முதல்தரத் தங்க வயலானது 1927 முதல்தான். இதனை முதலில் 1886-இல் ஜார்ஜ் வாக்கர் என்ற ஏழை மனிதர் கண்டுபிடித்தார். இன்று உலகின் தங்கத்தில் ஒரு பாதி அதிலிருந்து கிடைக்கின்றது. இங்ஙனம் பெரிய அளவு இதில் கிடைப்பது, இதிலிருந்து கிடைக்கும் கல்லில் தங்கம் பெரும் பகுதியாக இருப்பதனால் அன்று. பிற இடங்களில் இதனினும் மிகுதியான பங்கு தங்கக் கலப்புள்ள பாறைகள் கிடைத்துள்ளன. ஆனால் இங்கே பாறைகள் எடுக்க எடுக்க கிட்டத்தட்ட எல்லையற்ற அளவில் இருப்பதுடன், எல்லா இடத்தும் ஏறக்குறைய ஒரே அளவில் பாறையில் பொன் கலந்து காணப்படுகிறது. இதனால் இச்சுரங்கத்தில் வேலை செய்வதற்கு முன்னதாகவே அதற்கு இவ்வளவு செலவு பிடிக்கும், இவ்வளவு பலன் கிடைக்கும், இவ்வளவு ஆதாயம் என்று கணக்கிட் டறியலாம். எனவே முதலிடுபவர் இதில் துணிந்து முதலிடுவர். இதைப் போன்று பிறநாட்டுச் சுரங்கங்களில் முதலிடார் என்பது தேற்றம். உலகின் பல நாடுகளிடையேயும் தங்க விளைவு வகையில் 1940-ஆம் ஆண்டு விளைவின்படி முதல்நிலை திரான்ஸ்வாலுக்கும், அதன்பின் படிப்படியாக கனடா, உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றுக்கும் உரியது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக இந்தியாவில் பொன் விளைவு குன்றிவரினும், உலகினைப் பொறுத்த வரையில் இருபோர்களையும் சற்றேனும் பொருட்படுத்தாது பொன் விளைவு மிகுந்துகொண்டேதான் வருகிறது. அடுத்தபக்கத்திற் காணும் தங்க விளைவின் அட்டவணை இதனைக் காட்டவல்லது. 1937 1938 1939 1940 அவுன்சு அவுன்சு அவுன்சு அவுன்சு நூ ஆ நூ ஆ நூ ஆ நூ ஆ ஐ. அமெரிக்கா ஹ. வட அமெரிக்கா 1. ஒன்றிய நாடு *41,17 42,67 46,20 48,63 2. கனடா 40,95 47,25 50,95 53,22 3.மெக்ஸிகோ 6,46 9,49 10,56 8,33 4.நியூபவுண்டுலந்து 22 24 20 21 க்ஷ. நடு அமெரிக்கா 1,40 1,40 1,54 2,50 ஊ. தென் அமெரிக்கா 13,88 13,25 17,36 21 ஐஐ. ஆப்பிரிக்கா ஹ. தென் ஆப்பிரிக்கா 1,17,35 1,21,61 1,23,21 1,40,47 க்ஷ. ரொடேசியா 8.08 8,15 8,00 8,30 ஊ. பொன்கரை 5,59 6,74 7,82 8,86 னு. மடகஸ்கர் தீவு 8,88 9,68 10,77 10,68 காங்கோ ஐஐஐ.ஆஸ்திரேலியாக் கண்டம் 18,12 21,00 22,17 22,40 ஐஏ. ஆசியா 1. இந்தியா, பர்மா 3,32 3,22 3,17 2,89 2. உலாந்தாக் கீழிந்தியத் தீவுகள் 56 78 81 ? 3. ஜப்பான் கொரியா 14,48 16,20 19,03 18,00 4.சீனா 2,77 3,20 3,73 ? 5. பிலிப்பினா 7,17 9,03 10,77 10, 68 ஏ. ஐரோப்பா 1. உருசியா 49,69 49,00 45,00 44,00 2.பிற 5,64 5,64 5,55 5,60 அமெரிக்கா 1,06,11 1,14,31 1,26,81 1,32,98 ஆப்பிரிக்கா 1,39,90 1,46,20 1,54,81 1,63,31 ஆஸ்திரேலியா 18,12 21,00 22,18 22,18 ஆசியா 28,30 32,44 37,16 23,00 ஐரோப்பா 55,00 54,64 50,55 49,01 உலகம் 3,47,42 3,70,68 3,91,51 4,05,68 உலகம் விலை 121,59,00 129,73,77 324,34,43 141,98,80 டாலர் ரூ. 303,97,50 303,97,50 392,57,40 354,97,00 போரினால்கூட அமெரிக்கா, ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பொன் விளைவில் தடங்கலில்லாமல் வளர்ச்சி யடைந்துள்ளன என்றும், போரின் பின்னென்று மட்டுமின்றி அதற்குமுன்னும் இந்தியாவின் விளைவு குறைந்து வந்திருக்கின்றது என்றும் காணலாகும். உலகின் பொன் விளைவில் இந்தியாவின் பங்கு நூற்றுக்கு மூன்றுதானாகிறது. இதுவும் குறைந்து வருகிறது. இச்சிறு பகுதியில் நூற்றுக்கு 95 பகுதி மைசூர்த் தனியரசைச் சார்ந்த கோலாறு தங்கவயலிலும் அதனையண்டிய வயல்களிலும்தான் கிட்டுகின்றது. இக்கோலாற்றுச் சுரங்கப்போக்கில் 9 பாறைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. அவற்றுள் தலைமையானவை கோலாறு, மைசூர், ஊர்காம், நந்தி துர்க்கம், பாலகட்டம் முதலியவை. 1940-ஆம் ஆண்டில் இவற்றிலிருந்து வெட்டி எடுத்த மண் பாறைகளின் எடையும் (டன்களில்) அதிலிருந்து கிட்டிய நேரிய தங்கத்தின் எடையும் (அவுன்சில்) கீழ்வரும் அட்டவணையில் தரப்படுகிறது. மண்பாறை நேரிய பொன் டன்கள் அவுன்சு 1. சாம்பியன் பாறை ... 1,35,470 65,511 2. கோலாறு(மைசூர்) ... 2,43,648 89,753 3. நந்திதுர்க்கம் ... 3,40,330 80,342 4. ஊர்காம் ... 1,59,830 53,827 மொத்தம் ... 8,79,328 2,89,433 இந்தியாவில் தங்கம் வெட்டி யெடுக்கத் தொடங்கிய ஆண்டாகிய 1880 முதல் 1934 வரையில் பொன்னுக்காக வெட்டி யெடுக்கப்பட்ட பாறைகளின் மொத்தநிறை 260 நூறாயிரம் டன். அதிலிருந்து கிட்டிய தங்கம் 179 நூறாயிரம் அவுன்சு. இதன் மொத்த விலை ரூ.106 கோடியே 2 நூறாயிரம். தங்கமெடுக்கும் வாணிபக் குழாத்தினர் அரசியலாருக்குத் திறையாக இதனின்றும் கொடுத்தது ரூ.31 கோடியே 90 நூறாயிரம் ஆகும். தங்கத்தின் விலை இந்தியாவைப் போல இங்கிலாந்திலும் மாறுதலுடைய தாயினும், இரண்டாம் உலகப்போர் தொடங்கியது முதல் (அதாவது 1939 செப்டம்பர்த் திங்கள் முதல் ஒரு தூய அவுன்சு எடைக்கு 168 ஷில்லிங் (ரூ. 126) ஆக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதன் விலை இன்னும் ஏறியிறங்கிக் கொண்டே இருக்கிறது. பம்பாய்க் கடைத்தெரு விலைப்படி ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு தோலாத் தங்கத்தின் உயர்ந்த விலை இவ்வளவு என்று கீழ் வரும் அட்டவணையில் காணலாம். ஒரு தோலா தங்கத்தின் உச்ச விலை (பம்பாய்) ரூ. அ. 1938-39 37 10 1939-40 43 8 1940-41 48 8 1941-42 58 4 1942-43 72 0 1943-44 67 0 இன்று எல்லா நாடுகளிலும் கையிருப்புத் தங்கத்தின் அளவில் (சநளநசஎந படிடன) முதன்மையாக நிற்பது அமெரிக்க ஒன்றிய நாடுகளே. 1940-ல் இது 2,199 கோடியே 50 நூறாயிரம் அமெரிக்க வெள்ளி மதிப்புடையது. அதாவது 5,498 கோடியே 75 நூறாயிரம் ரூபாவுக்கு ஒப்பானது. இத்தொகை 1921-இல் அமெரிக்காவிடம் இருந்த கையிருப்புத் தங்கத்தினும் 5 மடங்கு மிகுதியானது. தங்க விலை ஏற்றத்திற்கொப்ப ரூபாவின் மதிப்பு உயராததன் காரணமாகக் கழிந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக இந்தியத் தங்கம் கப்பலேறி அமெரிக்கா சென்றுகொண்டிருக்கிறது. 1933 முதல் 1940 வரை சென்ற தங்கம் 4 கோடி 29 நூறாயிரத்து 18 ஆயிரம் அவுன்சுகள். அவுன்சு 35 அமெரிக்க வெள்ளி அல்லது ரூ. 87 1/2 விலையுடையது. ஆகவே கப்பலேறிய தங்கத்தின் முழு மதிப்பு ரூ. 735 கோடியே 31 நூறாயிரத்து 50 ஆயிரம் ஆகும். தங்கத்தின் விலைக்கொப்பத் தம் நாட்டுக் காசுகளின் மதிப்பை உயர்த்தியோ தாழ்த்தியோ வைத்துக்கொள்வதனால் மட்டுமே அரசியல் தன்னாண்மையுள்ள நாடுகள் பொருளியல் உலகிலும் வாணிப உலகிலும் தம் உயர்வைப் பேணிக் கொள்கின்றன. இந்தியா இன்னும் அந்நிலையை எட்டவில்லை. தமிழ்நாடோ இந்தியாவிலும் பிற்பட்டுக் கிடக்கின்றது. வாணிப உலகிலும் பொருளியல் உலகிலும் முதன்மை கொண்டிருந்த தமிழ்நாட்டிற்கு இன்று இந்திய வாணிப உலகில் இரண்டாம் படியான இடங்கூடக் கிட்டவில்லை. இன்றேபோல் முயற்சி யில்லாமல், நாட்டு முன்னேற்றக் கொள்கையின்றி அவரவர் குறுகிய தன்னலமே பேணும் மனப்பான்மை யிருந்தால், தமிழர்க்கு இன்று மீந்திருக்கும் பழம் பெருமை தானும் போகலாம். தமிழர் தம் இனமும் தம் நாடும் பேணி எழுந்தால், தமிழர் மட்டுமன்று, இந்தியாவும் மேம்பாடடையும் என்பதில் ஐயமில்லை. அதற்கான முதற்படிகளிலொன்று, பொன் முதலிய திண்பொருள்கள் வகையில் கவனம் செலுத்தி அவற்றின் வளத்தையும் அவற்றின் மூலம் நாட்டின் வளத்தையும் பெருக்குவதற்கான திட்டங்கள் வகுப்பதேயாகும். 7. பொன் தேட்டம் எப்பொருளும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அதற்கு முழு மதிப்பும் பயனும். மக்கள் செல்ல முடியா அடர்ந்த காட்டிலும், பாலை வனத்திலும் கடல் சூழ்ந்த சூழகத்திலும் (தீவிலும்) பூத்த பூவினை எடுத்து மகிழ்பவர் யார்? அதுபோல் பொன் கிட்டுமிடம் மக்கள் வாணிப வாழ்வின் ஒழுக்கினின்று விலகுந்தோறும் அதன் முழு மதிப்பையும் நாம் பெற முடியாமல் போகிறது. சில விடங்களில் பொன்னைப் பிரித்தெடுக்க ஏற்படும் கடுமுயற்சியினாலும் செலவினாலும் கூட அது மதிப்பற்றுப் போய்விடுகிறது. ஆனால் மாந்தர் அறிவியல் புதுப்புனைவுகளின் பயனாகப் பல புத்தம் புதுக் கருவிகளும் முறைகளும் ஏற்பட்டு எதிர்பாராத தடைகளையும் நீக்கி விடுகின்றன. எடுத்துக் காட்டாகத் தென் ஆப்பிரிக்க இராந்துச் சுரங்கத்தில் பொன் கலவையளவு மட்டாகவும், ஆழமிகுந்த அடிப்புறத்தில் கடுமையான பாறைகளில் கலந்தும் இருப்பதனால் தற்காலப் புதுப்புனைவுகளில்லையானால் அவை பயன் பெறாமலேயே போயிருக்கும். கனடாவிலுள்ள கிளான்டைச் சுரங்கம் குளிர் மிகுந்து மனிதர் எளிதில் வந்து வாழ முடியாத இடத்தில் இருப்பதால் மின்வன்மை முதலிய தற்கால நாகரிக வாய்ப்புகள் ஏற்படுவதற்கு முன்னால் கண்டு பிடிக்கப்பட்டிருந் தாலும் கூடப் பயன்படாமலேயே இருந்திருக்கும். ஆசியாவில் வட ஸைபீரியா விலுள்ள லீனா ஆற்றங்கரைச் சுரங்கங்களிலிருந்து தங்கத்தைக் கொண்டுவருபவர் வழியில் திருடர் அச்சத்தினால் கையில் துப்பாக்கியுடனும் படைபடையாய்த் திரண்டும் வருவராம். நாகரிக மிக்க இந்நாளிலும்கூட அண்மைவரை கீழ் ஆப்பிரிக்காவிலும் நியூகினியிலும் உள்ள சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுத்த தங்கத்தைக் கொண்டு வரவோ, வெட்டி யெடுக்கும் தொழிலாளருக்கு உணவு முதலிய பொருள்கள் கொண்டு செல்லவோ வகையில்லாதிருந்தது. இப்போது இவ்விரண்டு நாடுகளிலும் இவ்வகையில் வான ஊர்திகள் பேருதவி செய்கின்றன. பல நாடுகளில் தங்கச் சுரங்கங்களுக்கென்றே புகைப் பாதைகளும், கற்பாதைகளும் போடப்படுகின்றன. உலகின் மிகப் பெரும்புகைப் பாதைகளாகிய சைபீரியப் பாதையும், கனேடியப் புகைப்பாதையும் சுரங்கப் பொருள்களைக்கொண்டு செல்லவே ஏற்பட்டன. சுரங்கங்களாலேயே நகரங்கள் ஏற்பட்டு நாடு மதிப்புப் பெறுவதுண்டு. தென்அமெரிக்க நகரங்களுட் பலவும், மைசூரிலுள்ள கோலாறு நகரும் இதற்கு எடுத்துக் காட்டுக்களாம். பொன்னின் எதிர்கால விளைவு, பயன், பரப்பு ஆகியவை பற்றி அறிஞர்கள் பலவாறாக எழுதியுள்ளனர். டாக்டர் ஃப்ரூட் முதலிய பல அறிஞர்கள் ‘பொன்னின் வெளிப்பகட்டும் அதன்மீது மக்கள்கொண்ட மாயப்பற்றுதலுமே அது விலை பெற்றதன் காரணம். இன்று அது செலாவணி இடையீடாக நடைபெறுவதும் உண்மையில் உலகில் பெரும்பான்மையான மக்கள் இப்பகட்டில் நம்புவதனால்தான். மக்களிடை நாகரிகம் மிகுந்து பொன்னின் மாய மருட்கையில் பற்றுதல் குறையக் குறைய அதன் மதிப்பீடும் குறையும். செலாவணியிலும் அதன் பயன் அதன்பின் போய்விடும்’ என்கின்றனர். இன்னும் சிலர் பொன் இடையீட்டுக்கு அறிகுறி மட்டுமேயானதால் மக்கள் ஒருவரை ஒருவர் நம்பும் படியான நிலைமையோ அல்லது எல்லார் நம்பிக்கையையும் பெற்ற அரசாங்கமோ ஏற்பட்டபின் பொன்னுக்கு வேண்டுதலே இல்லாமல் வெறுங்கணக்கும் இன்றியமையாத இடத்து அதனைக் குறித்துள்ள மதிப்பீட்டுத் தாள்களும் இடையீட்டுப் பொருளாய் வழங்கும் என்கின்றனர். இவற்றுள் முதற்சொன்ன கருத்தில் ஓரளவு உண்மை உண்டு என்று முன் பிரிவுகளில் கூறியிருக்கிறோம். வரலாற்று முறைப்படி பார்த்தால் பொன் மக்கள் மதிப்பைப் பெற்றது அதன் மாயமருட்கையாலும் வெளிப்பகட்டாலுமே. ஆனால், வரலாற்றில் பற்பல காலநிலைமைகளுக்கும் ஒத்த பல பண்புகள் இதற்கு இருப்பதனாலேதான் அது நீடித்து உலகில் செலாவணிப் பொருளாய் வழங்குகிறது. அவற்றில் சிலவற்றை இரண்டாம் பிரிவில் கூறியுள்ளோம். சுருக்கமாகக் கூறின், அவையே பொன்னின் அழியாமை, நேரடியாகப் பயன்பட்டு விடாமை, அருமை ஆகிய குணங்களாலேயே அது நின்று நிலவுகிறது. இரண்டாவது கருத்து பொன், மக்கள் கணக்கீட்டுக் குறிப்பு மட்டுமே; வேறு அதற்குத் தனி மதிப்பில்லை என்பதுதான். மதிப்பீட்டுப் பொருள்கள் தமக்கென மதிப்புடையவை அல்ல; பிற பொருள்களின் விலையை அளக்கும் கருவிமட்டும்தான் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால், இது முற்றிலும் உண்மையல்ல; பாலளக்கும் நாழியும் துணியளக்கும் முழமும், வெல்லத்தை நிறுத்துப் பார்க்க உதவும் எடையும் பாலாகவோ துணியாகவோ வெல்லமாகவோ ஆக மாட்டாவாயினும் விலையற்றவை ஆகா. அதுபோலப் பொன்னும் பிறபொருள்களை அளப்பதால் அப்பொருள்களை நோக்க மதிப்பற்றதாகத் தோன்றினும் உண்மையில் நிலவரமான மதிப்புடையதே யாகும். அதுமட்டுமன்று; உலகில் பொன்விளைவு மிகுந்தோறும் அதன் விலை குறையும்; விலையில் குறைவு ஏற்படுந்தோறும் விளைவு மிகும்; ஆனால் இவற்றால் அதன் மதிப்பீட்டு விலை அவ்வளவாக மாறுவதில்லை. இங்கிலாந்தில் பொன் மதிப்பளவையாக இருக்கும்போது பொன்னுக்குக் கட்டுப்பாடான விலை இருந்தது. அதன் மூலம் அது தாள் நாணயத்துடன் கட்டுப்பட்டிருந்தது. அக் கட்டுப்பாடு நீங்கினபின் தாள் நாணயம் பெயரளவில் நாணயமாய் பொன்னே உண்மை நாணயமாயிருந்து வருகிறது. கொடுக்கல் வாங்கல் வாய்ப்புக்குத் தாள் எவ்வளவு எளிதா யிருந்தபோதிலும் முக்காலத்திற்கும் எல்லா இடத்துக்கும் அது பொருத்தமான தாகாது; ஏனெனில் அது ஒரு அரசியலார் அல்லது ஒரு கூட்டத்தாரின் மதிப்பைப் பொறுத்ததேயன்றி அத்தாளையே நேரடியாகப் பொறுத்ததன்று. பொன் அங்ஙனம ல்லாததால் நாட்டெல்லை கடந்து உலக முழுமைக்கும், கால எல்லை கடந்து எக்காலத்துக்கும் அது மக்கள் பொருளாதார உறவின் பொது இணைப்பாயிருந்து வந்திருக்கிறது; அங்ஙனமே இன்னும் இருந்து வருகிறது. அங்ஙனமே இனிமேலும் இருந்துவரும் என்று அவர்கள் கூறினர். பொன்னின் அருமையே அது செலாவணியாயிருக்க உதவும் உயர் பண்பு என்று கூறினோம். இவ்வருமைப் பாட்டில் கூடுதலோ குறைவோ நேர்ந்தால் என்ன நேரும் என்று பார்ப்போம். பொன் விளைவு மிகுதிப்பட்டது அல்லது உலகில் உள்ள அளவு வேறெக்காரணங்கொண்டோ மிகுந்தது என்று வைத்துக் கொள்வோம் அப்போது விலைகுறையும். குறையவே பொன்னை எடுப்பவர்களின் செலவு கட்டாது. விளைவும் குறைந்து பழையபடி விலை ஏறவேண்டி வரும். பொன் விளைவு குறைந்தாலும் இவ்வாறே தானாகச் சரிப்பட்டுவிடும். விளைவு குறைவினால் விலை கூடுதல்; விலை கூடுவதால் விளைவு செய்பவருக்கு ஊதிய மிகுதி; ஊதிய மிகுதியினால் விளைவு மிகுதி. ஆக இத்தகைய இயற்கைச்சுழலின் தன்மையினாலும் பிற பண்புகளினாலும் பொன் கிட்டத்தட்ட இயற்கைச் செல்வமாய் படைப்பிலேயே அமைக்கப் ட்டதென்று கூறும் நிலையில் உள்ளதாகும். கடலிலிருந்து தோன்றிய மழை எப்படியும் சுற்றி இறுதியில் கடலில் விழுந்து சரி ஒப்புநிலை அடையும் வகையையும் காற்று மண்டலத்திலும் கடலிலும் சூடுள்ள இடத்தில் நீரும் காற்றும் எழுந்து மேற்சென்று அவ்விடம் குளிர்ந்த காற்றும் நீரும் வந்து நிரப்ப. அக்குளிர்ந்த நீர் அல்லது காற்றிலிருந்த இடத்தை மீட்டும் சூடான காற்றும் நீரும் போய் நிரப்பும் இயற்கை அருமை போன்றதே தங்கத்தின் இந்தத் தங்காத்தன்மையும் இந்தச் செல்வத்தின் செல்லும் தன்மையுமாகும். மேற்காட்டிய விளக்கத்தால் பொன் ஏன் மாறா விலையுடையது என்று காட்டினோம். பொன் விலையில் ஏற்றத் தாழ்வு ஏற்படலாம். எல்லாப் பொருள்களையும் போல் அதுவும் பொருள் என்ற வகையில். ஆனால் அது விலையற்றுப்போகவோ அழியவோ செய்யாது. இதனாலேயே இன்று வேண்டாம். நாளை வேண்டும் என்று சேமிப்பவர்க்குத் தங்கத்தைவிட மேலான பொருள் இந்நாகரிக காலத்திலும் வேறில்லை. வாணிப உலகிலும் பங்குரிமை உலகிலும் பணமிடுபவர்கள் அதனால் பெரும்பயனடைகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இது வாணிப முறையே யாகும். அவர்கள் முதலும் வட்டியுமாய் வரினும் வரலாம். முதலுக்கே மோசம் வந்தாலும் வரலாம். ஆனால் தங்கத்தைச் சேமிப்பதால் வரும் கேடும் நலமும் தங்கம்விலை உயர்வும் தாழ்வுமே. எல்லாப் பொருள்களின் மதிப்பீடும் உண்மையில் தங்கத்தாலேயே அளக்கப்படுவதாத லால் சேமிப்பதால் தங்கத்தின் மதிப்பு மிகவும் கெட்டுப்போகாது. போதாக்குறைக்கு வேறு எப்பொருள் சேமித்தாலும் கெடும். அவற்றைப்பற்றி எல்லாருக்கும் ஒத்தவேண்டுதலும் இராது போகலாம். இவற்றை நோக்கப் பொன் உண்மையிலேயே ஒப்பற்ற நிலையான செல்வச் சேமிப்பு பொருள் என்று கூறலாம். இதை உணர்ந்துதான் தாள் மதிப்பீடு செய்யும் நாடுகள் அதில் பெரும்பகுதியைத் தங்கமாகச் சேமிக்கின்றன. மேனாடுகளில் இத் தங்கச் சேமிப்பை அரசியலார் அல்லது அரசியலார் நிலையிலுள்ள பொருள் நிலையங்கள் சேமிப்பதனால்தான் தனி மனிதனுக்குச் சேமிக்கும் இன்றியமையாமை இல்லை என்பதைப் பொருளியல் அறிஞர்கள் மறக்கின்றனர். பொன்னின் பெருமையை நம்நாட்டு முன்னோர் நன்கறிந்துதான் நாணயங்கள் பெரும்பாலும் பொன்னிலேயே செய்தனர். இந்தியாவில் பொன் நாணயங்கள் கி.மு. 700 முதலே அதாவது 2600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கப்பட்டன என்று வரலாற்றறிஞர்கள் கூறுகிறார்கள். பெரும்படியான உலக வாணிபத்திற்கே இது பெரிதும் பயன்பட்டது. உள்நாட்டு வாணிபத்திற்கு ஒரு சிறிது பிற திண்பொருள் நாணயங்கள் இருந்தன. ஆயினும் அவை சில்லறை வழக்கிற்கான செப்பு நாணயங்களே. பெரும்படி உள்நாட்டு வாணிபம் அந்நாளில் நெல் முதலிய கூலவகைகளை இடையீட்டுப் பொருளாக வழங்கியே நடைபெற்றது; இதனால்தான் பொன்னுக்கடுத்தபடியான வெள்ளி நாணயம் இந்தியாவில் நெடுநாள் இல்லை. முதல் வெள்ளி நாணயம் வழங்கியவர் 17-ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஷெர்ஷாவே. அவரைப் பின்பற்றி அக்பரும் தற்கால ஆங்கில அரசியலாரும் அதனை வழங்கினர். பொன்னே பொருளின் சிறப்பான உருவாதலின் அதனை ஈட்டுதலில் தளரா ஊக்கங் காட்டல் வேண்டுமென்று முன்னோர் கூறியுள்ளனர். இங்ஙனம் ‘சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்.’ அலைந்து ஈட்டும் மக்களின் முழுமனத்தையும் முயற்சியையும் கொள்ளை கொண்ட பொன், மண்ணின் கருவினின்று பலவகைப் பொறிகளாலும் புதுமுறைகளாலும் எடுக்கப்பெற்று மக்கள் வாழ்வென்னும் பரியூர்ந்து நாகரிக உலகமெங்கும் ஓடிச் செல்கின்றது. அதன் ஒழுக்கில்பட்டு ஒரு சிலர் உயர்கின்றனர். பற்பலர் அதன் சுழலுட்பட்டு வருந்திக் கலங்கி அமிழ்கின்றனர். அதன் ஆற்றலினின்றும் விடுபடும் வகையை இதுவரை யாரும் அறிந்திலர். இயற்கையின் ஆற்றல்களை யெல்லாம் ஒவ்வொன்றாகப் பெற்றுவரும் அறிவியல்வன்மை இச் செயற்கை யாற்றலை வெல்லுவதற்கு மாறாக அதன் ஈர்ப்பில் மென்மேலும் ஈடுபடும் வகைளையே கண்டுபிடித்துச் செல்கின்றது. அதனை வெறுத் தொதுக்கிய மனிதரைக் காணவேண்டுமாயின் பழங்கதை களுக்குத்தான் செல்ல வேண்டும். மன்பதைக் கதைகள் முதற் பதிப்பு - 1957 இந்நூல் 2002 இல் வெற்றியரசி பதிப்பகம், சென்னை 88 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. மார்கழி திருவதிகை என்ற ஊரில் ஞிமிலி என்றொரு வணிகன் இருந்தான். அவனுக்குப் போதிய செல்வம் இருந்தது. அவன் மனைவி ஆதிரை நற்குடி நங்கை. அவள் நல்லழகும் நற்குணமும் வாய்ந்தவளாகவே இருந்தாள். ஆனால் அவர்களுக்கு நெடுநாள் குழந்தை இல்லை. நாளடைவில் இந்தக் குறையும் அவர்களை விட்டு அகலத் தொடங்கிற்று. ஆதிரை கருவுற்றாள். கரு முதிர்ந்து வளர வளர, அவளால் வீட்டு வேலைகளைச் செய்ய முடியவில்லை; தன் அறையிலேயே படுக்கையில் கிடந்து புரண்டாள். ஞிமிலி தன் வெளியூர்ப் பயணங்களை நிறுத்தி அவளுக்கு உதவியாக வீட்டிலேயே தங்கினான். சூலுண்டவர்களின் இயல்புக்கேற்ப, ஆதிரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பொருளில் ஆர்வங்கொண்டாள். அவள் கணவனும் தன்னால் இயன்ற மட்டும் அவற்றைத் தருவித்து அவள் அவாக்களை நிறைவேற்றி வந்தான். ஆனால் திடுமென ஒருநாள் அவள் தனக்கு அகத்திக்கீரை வேண்டு மென்றாள். அகத்திக்கீரை தழைக்கும் காலமல்ல அது. அவன் எங்கும் ஆளனுப்பிப் பார்த்தும் அகத்திக்கீரையே அகப்பட வில்லை. இதுகேட்ட ஆதிரை சிரித்தாள். ‘அடுத்த தோட்டத்தில் அகத்தி வளர்ந்திருப்பதைப் பார்த்துத்தான் எனக்கு அவா ஏற்பட்டது. அது இவ்வளவுகிடைக்காத அரும்பொருள் என்பது எனக்குத் தெரியாது’ என்றாள். அவர்கள் வீட்டை அடுத்து ஒரு தோட்டம் உண்டு என்பதே அதுவரை ஞிமிலிக்கோ, அந்த ஊராருக்கோ தெரியாது. அத்தோட்டம், வானளாவிய மதில்கள் சூழ்ந்தது. மதில்களினுள்ளே என்ன இருந்ததென்று எவரும் பார்த்ததில்லை. அதனுள் செல்லும் வாயிலும் ஊர்ப்புறமாய் இல்லாமல் காட்டுப்புறமாய் இருந்தது. ஆகவே அதற்குரியவர் யாரென்பதும் எவருக்கும் புதைமறைவாகவே அமைந்தது. ஆனால் ஞிமிலியின் வீட்டின் உள்ளறையில் நெடுங்காலம் அடைத்துக் கிடந்த ஒரு பலகணி இருந்தது. தற்செயலாக ஆதிரை அன்று அதைத் திறக்க நேர்ந்தது. அதன் வழியாகவே அவள் மதிலகமுள்ள தோட்டத்தைக் கண்டாள். நீலநிறக் கடலின் அலைகள்போல அகத்தியின் தளதளப்பான இலைகள் அங்கே ஆடிக்கொண்டிருந்தன. நீல அலைகள்மீது தவழ்ந்தாடும் வெள்ளன்னங்கள் போல அதன் பூக்கள் விளங்கின. அவற்றைப் பார்த்த ஆதிரைக்கு அகத்திக்கீரை மீத அவாவுண்டானதில் வியப்பில்லை. மனைவியிடமிருந்து தோட்டத்தின் செய்தி கேட்டபின், ஞிமிலியும் பலகணி வழியாகப் பார்த்தான். ஆனால் பலகணியில் ஒரு கைகூட நுழைய முடியாது. மதிலைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான். அதில் ஏற அவன் துணியவில்லை. அதேசமயம் அகத்திக்கீரையின் ஆவல் தணியாமல் நாளுக்கு நாள் ஆதிரையின் உடல் மேன்மேலும் வாடிற்று. இன்னும் வாளா இருந்தால் குழந்தையுடனே தாயும் உலகவாழ்வை நீத்துவிட வேண்டிய நிலை ஏற்படும் என்று ஞிமிலிக்குத் தோற்றிற்று. இந்த உயிராபத்தில் தன் உயிர் கொடுத்தேனும் அகத்திக் கீரை பெற்றுவிடுவது என்று வணிகன் துணிந்தான். விடிய ஒரு யாமத்திலேயே அவன் எழுந்து மதில்களில் ஏறினான். மறுபுறம் எவ்வளவோ ஆழமாகத் தோற்றினாலும் துணிந்து குதித்தான். மடிநிறையக் கீரையைப் பறித்துக்கொண்டு விடியுமுன் வெளியேறினான். கண்டதனால் ஏற்பட்ட அவா தின்றதனால் சிறிதும் நிறைவு பெறவில்லை. அது பன்மடங்கு மிகுதியாயிற்று. ஞிமிலி நாள்தோறும் விடியற்காலம் மதிலேறி உட்சென்று தன்னா லியன்றமட்டும் கீரையை மூடை மூடையாகத் தூக்கி வந்தான். ஆதிரையின் உடல் அகத்திக்கீரை தின்றபின் முற்றிலும் நன்னிலையடைந்து வந்தது. ஆனால் அவள் அவா மட்டும் தீரவில்லை. அதை முற்றிலும் நிறைவேற்றத் தவறினால், எங்கே மீண்டும் பழைய நிலை வந்துவிடுமோ என்று ஞிமிலி அஞ்சினான். எனவே தொடர்ந்து மதிலேறிச் செல்ல வேண்டியதாயிற்று. தோட்டத்திற்குரியவன் உண்மையில் ஒரு மாயக்காரன். நாள்தோறும் அகத்திக்கீரை குறைவதைக் கவனித்து, அவன் தோட்டத்தை மேன்மேலும் உன்னிப்பாகக் காவல்காத்து வந்தான். ஞிமிலி கீரையை மூட்டை கட்டிக்கொண்டு மதிலேறப் போகும் சமயம் அவனை மாயக்காரன் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டான். ஆகா, மதிலேறி வந்து திருட உனக்கு என்ன துணிச்சல்? இதோ, உன் தலையை அந்தக் கீரைக்கு உரமாக்கி விடுகிறேன், பார்!’ என்று அவன் தன் இடுப்பில் செருகியிருந்த வாளை உருவினான். வணிகன் ஒரு கணம் பொறி கலங்கியபடி நின்றான். ஆனால் கீரையுணவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவியின் உருவம், அவள் வயிற்றிலுள்ள இளங்கரு ஆகியவை அவன் மனக்கண் முன் தோன்றின. அவன் மாயக்காரன் காலடியில் விழுந்து அதைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு கோவென்றழுதான். ‘நான் எனக்காகவோ, திருடிப் பிழைப்பதற்காகவோ இப்படிச் செய்யவில்லை. விலைகொடுத்தால் கூட அகத்திக்கீரை எங்கும் கிடைக்கவில்லை. கருவுற்ற என் மனைவி அதன் ஆவல் தீராவிட்டால் இறந்துவிடுவது உறுதி. இந்த இக்கட்டில்தான் இது யாருடையது என்று தெரியாமல் மதிலேறிப் பறிக்க நேர்ந்தது. பறித்த கீரைக்கும் இனிப்பறிக்கப்போகும் கீரைக்கும் என்ன விலை கூறினாலும் தருகிறேன். பெரிய மனது வைத்து, என் மனைவி குழந்தையை எண்ணியாகிலும் என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன்” என்று மன்றாடினான். மாயக்காரன் மனம் சிறிது இரங்குவதுபோலத் தெரிந்தது. அவன் வாளை உறையில் இட்டான். “நான் உன்னைக் கொல்லாமல் விடவேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. உனக்கு வேண்டுமளவு கீரையை எப்போதும் பறித்துக் கொள்ளலாம். ஆனால் உன் மனைவிக்குக் குழந்தை பிறந்தவுடன், குழந்தையை நீ என்னிடம் தந்து விட வேண்டும்” என்றான். தலைக்கு வந்த இடர் தலை முடியுடன் போயிற்றென்றே வணிகன் கருதினான். மனைவியைப் பற்றிய கவலையில் பிறக்க இருக்கும் குழந்தையைப் பற்றி அவன் மிகுதியாக எண்ணவில்லை. மாயக்காரன் கேட்டபடியே வாக்களித்துவிட்டுச் சென்றான். நடந்த செய்திகளைக் கேட்டபோது ஆதிரை திடுக்கிட்டாள். ஆனால் சிறிது அமைந்து சிந்தித்துப் பார்த்தபின், கணவன் உயிர்தப்பியதே பெரிது என்று அவள் ஆறுதலடைந்தாள். பிறக்கப் போகும் குழந்தை பற்றிய அச்சம் அவளுக்கு மிகுதியில்லை. இதுவரை காத்த தெய்வம் இனியும் காக்கும் என்று அவள் ஆறுதல்கூட அடைந்தாள். ஆதிரைக்கு அழகிய பெண்மகவு ஒன்று பிறந்தது. அதன் அழகும் ஒளியும் தாய்தந்தையர் உள்ளத்தைக் களிக்கச் செய்தன. பிள்ளை பிறந்த நாற்பத்தோராவது நாள் அதற்குப் பெயரீட்டு விழா நடந்தது. உறவினர் ஊரார் அனைவரும் வந்திருந்தனர். அவர்களிடையே மாயக்காரனும் இருந்தது கண்டு ஞிமிலி திடுக்கிட்டான். ஆனால் இதை அவன் மனைவிக்கோ மற்றவர்களுக்கோ கூறி அவர்கள் மகிழ்ச்சியைக் குலைக்கவில்லை. பிள்ளைக்குப் பரிசுகொடுத்தவர்களுள் மாயக்காரனே எல்லார் கவனத்தையுங் கவர்ந்தான். ஏனெனில் அவன் பரிசுகள் பலவாகவும் விலையேறியவையாகவும் இருந்தன. உறவினர் குழந்தைக்குப் பெயரிடும் பொறுப்பை அவனிடமே விட்டனர். அவனும் அதை ஏற்றுப் பிறந்த மாதத்தின் பெயரால் குழந்தையை மார்கழி என்று அழைத்தான். விருந்தினரனைவரும் சென்றபின், மாயக்காரன் வணிகனிடம் வந்து குழந்தையைக் கேட்டான். அப்போது தான் அவனை அடையாளமறிந்த ஆதிரை, அவனிடம் பலவாறு கெஞ்சி மன்றாடினாள். பெரும் பொருள் பெற்றுக் குழந்தையை விட்டுப் போகும்படி வேண்டினாள்; மாயக்காரன் இணங்க வில்லை. அவன் குழந்தையைக் கொண்டு போன அன்றே ஆதிரை அந்த ஏக்கத்தால் மாண்டாள். இரண்டு மூன்று நாட்கள் மனைவியையும் மகவையும் நினைத்துத் துடிதுடித்த வண்ணம் ஞிமிலியும் உயர்நீத்தான். தாய் தந்தையருக்கு நேர்ந்த இப்பழிகளை ஒரு சிறிதும் அறியாதவளாகவே குழந்தை மார்கழி மாயக்காரன் வீட்டில் வளர்ந்தாள். மாயக்காரன் தன் வாழ்நாளைத் தன் மாயங்களால் எல்லையற்ற காலம் நீட்டிக்கொண்டே வந்திருந்தான். ஒவ்வொரு தலைமுறையிலும் களங்கமற்ற ஒவ்வொரு கன்னியின் வாழ்வைத் தன் வாழ்வுடன் இணைப்பதன் மூலம் அவன் தலைமுறை தோறும் மேன்மேலும் புதுவாழ்வு வாழ்ந்து வந்தான். மார்கழியை இவ்வளவு அரும்பாடுபட்டுப் பெற்றது இந்த எண்ணத்துடனேயே. அவள் அழகு செழித்து வளருந்தோறும் இதுவகையில் அவனுக்குப் பெருங்கவலை ஏற்பட்டது. யாராவது அவள் அழகைக் கண்டு நேசித்தாலும், அல்லது அவள் தன்னையன்றி வேறு எவரிடமேனும் பாசம் காட்டினாலும், தான் எதிர்பார்த்த புதுவாழ்வு தனக்குக் கிட்டாமல் போய்விடும் என்று அவன் அஞ்சினான். ஆகவே மார்கழிக்குப் பதினைந்து வயதானதும், அவன் அவளைத் தன் காட்டுத் தோட்டத்தின் நடுவில் இருந்த ஒரு கோபுரத்தில் சிறை வைத்தான். மாயக்காரனைத் தவிர வேறு எந்த மனிதரையும் காணாமல், காட்டில் வளரும் மல்லிகை போல அவள் வளர்ந்தாள். கோபுரம் எவரும் ஏறமுடியாத அளவு உயரமாய் இருந்தது. அத்துடன் அதில் ஏறிச் செல்லப் படிகளோ ஏணியோ எதுவும் கிடையாது. அதற்கு வாயிலும் ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்றும் கோபுர உச்சியிலிருந்த ஒரு பலகணியே. மாயக்காரன் அதில் ஏறிச் செல்லத் தனக்கென ஒரு புது வகை முறையையும் பின்பற்றினான். கீழே நின்று அவன் ‘மார்கழி, மார்கழி! உன் கூந்தலைப் பலகணியில் ஒரு சுற்றுச் சுற்றிக் கீழே விரி’ என்பான். அது நீலநிறப் பாம்பு போலச் சுருண்டு சுருண்டு கோபுரத்தின் அடித்தளம் வரை வந்து விழும். அதைப் பற்றிக் கொண்டே அவன் உள்ளே செல்வான். மார்கழியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, மீட்டும் இம்முறையிலேயே இறங்கிச் சென்று வந்தான். மாயக்காரனின் வஞ்சக எண்ணங்கள் ஒன்றும் மார்கழிக்குத் தெரியாது. தன் தாய் தந்தையரைப் பற்றியோ, அவன் கொடுமைக்கு ஆளாகி அவர்கள் மாண்டது பற்றியோ கூட அவள் எதுவும் அறிந்ததில்லை. வேறு மனிதர் எவரையும் காணாதலால் அவள் எதுபற்றியுமே கவலையில்லாமல், கூட்டில் பிறந்து கூட்டிலேயே மடியும் வளர்ப்புப் பறவை போல வாழ்ந்தாள். தற்செயலான நிகழ்ச்சி ஒன்று குறுக்கிட்டிராவிட்டால் மாயக்காரனின் புதுவாழ்வு என்ற சிறையிலிருந்து விடுபட்டு அவள் தனக்குரிய புது வாழ்வை அடைந்தே இருக்க முடியாது. திருவதிகையடுத்த சேந்தமங்கலம் என்ற நகரில் சோவரையன் என்ற மன்னன் ஆண்டிருந்தான். பகைவர்களால் அவன் நாடு கைப்பற்றறப்பட்டது. அவனும் போரில் மாண்டான். ஆனால் அவன் புதல்வன் மானேந்தி திரும்பவும் நாடு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுக் காட்டில் அலைந்து திரிந்தான். மார்கழி சிறைப்பட்டிருந்த காட்டில் நெடுநேரம் வேட்டையாடிய அலுப்பால் அவன் தோட்டத்தினருகே வந்து தங்கினான். வழக்கப்படி மாயக்காரன் மார்கழியைக் காணவந்தான். இளவரசன் அருகே இருப்பதை அவன் கவனிக்கவில்லை. ஆனால் இளவரசன் அவன் வந்ததைக் கண்டு கொண்டான். அந்த நடுக்காட்டில் அவனுக்கென்ன வேலை என்பதைக் காணும் ஆவலுடன் அவனையே நோக்கியிருந்தான். காட்டில் தோட்டம் இருப்பதே வியப்புக்குரியதென்று மானேந்தி எண்ணினான். தோட்டத்தினருகே கோபுரம் இருப்பதை முதலில் அவன் காணவில்லை. கோபுரத்தினருகே சென்று ‘மார்கழி, மார்கழி!’ என்று மாயக்காரன் அழைத் ததையும், அதன்பின் நிகழ்ந்த விசித்திர நிகழ்ச்சிகளையும் அவன் கண்டு வியப்படைந்தான். கூந்தலின் நீளத்திலிருந்தும், பளபளப்பிலிருந்தும் உள்ளே ஓர் அழகரசிதான் இருக்க வேண்டும், அவள் பேர் தான் மார்கழியாய் இருக்க வேண்டும் என்று அவன் ஊகித்தான். மாயக்காரன் கூந்தலேணி பிடித்துக் கீழே இறங்கிச் சென்றபின் அவன் அங்கேயே நீண்டநேரம் தங்கினான். நாள்தோறும் மாயக்காரன் மாலையில் வருவதும் இரவே போய் விடுவதும் இரண்டொரு நாட்களில் மானேந்திக்குப் புரிந்துவிட்டது. அவன் மூன்றாம் நாள் காலையில் துணிச்சலாகக் கோபுரத்தருகே சென்றான். மாயக்காரன் கூப்பிட்டபடியே ‘மார்கழி, மார்கழி’ என்று கூப்பிட்டான். அவன் இளைஞ னாதலால், மாயக்காரனைவிட மிக எளிதாகக் கோபுரத்துக்குள் சென்றான். மாயக்காரனுக்குப் பதில் வேறோர் ஆண்மகன் வருவது கண்ட மார்கழி அச்சத்துடன் நடுங்கினாள். ஆனால் மானேந்தி ஒரு சில சொற்களால் அவள் அச்சத்தைப் போக்கினான். அரண்மனைகளிலே கூடக் காணமுடியாத பேரழகை அக்காட்டுக் கோபுரத்தில் கண்டு இளவரசன் மதிமயங்கி நின்றான். மாயக்காரனைத் தவிர யாரையும் பார்த்தறியாத மார்கழியும் வீரமும் அழகும் கலந்த இளவரசன் வடிவம் கண்டு மலைப்பெய்தினாள். ஒருசில நாட்களுக்குள் இளவரசனுக்கும் மார்கழிக்கும் எவர் பிரித்தாலும் பிரியமுடியாத நெருக்கமான நட்பும் பாசமும் ஏற்பட்டு விட்டன. ஒவ்வொரு நாளும் அவன் வரவை எதிர் பார்த்து எதிர்பார்த்து அவள் உறக்கமற்றவளாகக் காத்திருந்தாள். அதேசமயம் எப்போது விடியும் எப்போது விடியும் என்று அதே தோட்டத்திலேயே இளவரசன் காத்திருந்தான். ‘இரவெல்லாம் தோட்டத்திலேயே உனக்காகக் காத்திருக்கிறேன்’ என்று ஒரு நாள் இளவரசன் மார்கழியிடம் கூறினான். அது கேட்டு அவள் சிரித்தாள். ‘நான்தான் உலகமறியாத பேதை. நாடாளப் போகிறவர் கூட ஏன் இப்படி மதியிழந்து விட்டீர்கள்’ என்று அவள் கேட்டாள். அப்போதுதான் இளவரசனுக்குத் தன் மடமை தெரியவந்தது. இரவில் இங்கே மார்கழியும், தானும் தனித்தனி காத்திருக்கத் தேவையில்லையென்று கண்டான். அதுமுதல் மாயக்காரன் இறங்கிச்சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் இளவரசன் கோபுரமேறினான். இரவெல்லாம் இளவரசியுடன் இனிப்பாகப் பேசிப்பொழுது போக்கிவிட்டு, பகலில் சிறிது உறங்கியபின் வெளிவந்தான். மாலை நேரங்களில் தன் அரச காரியங்களைக் கவனிப்பான். இப்படி அவர்கள் நாட்கள் இன்பமாகக் கழிந்தன. மாலைதோறும் மாயக்காரன் இளவரசியிடம் வந்து பேசினான். அவள் அழகும் தளதளப்பும் முன்னிலும் பன்மடங்காகப் பெருகியிருப்பதை அவன் கண்டான். அதேசமயம் தன் உடல் வலிமை மிக வேகமாகக் குறைந்து வந்ததை உணர்ந்து வியப்புற்றான். அவன் மாய ஏற்பாடுகளின்படி அவன் வாழ்வில் இணைக்கப்பட்ட கன்னியின் வளர்ச்சி அவனுக்கு இளமைநலம் அளித்திருக்க வேண்டும். இதை அவன் அறிவான். அது நடைபெறாததன் காரணம் விளங்காமல் அவன் மலைப்புற்றான். ஆகவே மார்கழியின் வாழ்விலே ஏதோ மருமம் புகுந்திருக்கக் கூடும் என்று அவன் ஊகித்தான். ‘வேறு யாராவது இங்கே வருகிறார்களா?’ என்று அவன் கேட்டான். மார்கழியின் உடல் நடுக்கம் அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. ஆனால் அவள் நாவார எதையும் வெளியிடவில்லை. மாயக்காரனைத் தவிர யாரையும் தான் கண்டதில்லை என்று மறுத்தாள். அவள் பொய் சொல்கிறாள் என்பது பற்றி அவனுக்கு இப்போது ஐயப்பாடு இல்லை. அவள் வாழ்வு தன்னைவிட்டு எவ்வளவு தூரம் சென்று விட்டது என்பதை அந்தப் பொய்யே அவனுக்குத் தெரிவித்தது. ஆயினும் அவன் அமைதியிழக்க வில்லை. ‘பொய்யைப் பொய்யால் தான் வெல்ல வேண்டும்; ஆத்திரத்தால் வெல்ல முடியாது’ என்பது அவன் தத்துவம். அவன் அவளை ஐயுறாததுபோலக் காட்டிக்கொண்டான். ‘என் உடல் வலிமை கெட்டு வருகிறது, அதற்கு என் அன்பைவிட உன் அன்பு குறைவாய் இருப்பதே காரணம் என்று கருதுகிறேன்” என்று மட்டும் நயமாகக் கூறினான். பேச்சினிமையில் மார்கழி தன்னை மறந்தாள். “நீங்கள் கூறுவது சரியல்ல. ஏனெனில் நீங்கள் சொல்லுகிற படி புதிதாகப் பழகியவருக்குத் தான் வலிமை இன்னும் குறைவாயிருக்க வேண்டும்” என்றாள். சொல்லி வாய் மூடுவதற்குள் அவள் தன் பிழையை உணர்ந்து கொண்டாள். ஆனால் சொல்லிய சொல்லைப் பின் வாங்குவது எப்படி? மாயக்காரன் முகம் ஒரு கணத்தில் படமெடுத்த நாகமாயிற்று. அவளது நீண்ட கூந்தலை அவன் பற்றி இழுத்தான். கையிலிருந்த வாளால் அதை ஒட்ட அறுத்தான். மொட்டைத் தலையுடன் அவளை அவ்விடத்திலிருந்து அகற்றி ஆள் நடமாட்டமற்ற ஒரு பாலைவனத்தின் நடுவில் தன் மாயத்தால் கொண்டு விட்டான். ‘எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம்’ என்றறியாமல் அவள் பாலைவனத்தில் திசை தெரியாது சுழன்றாள். மாயக்காரன் அத்துடன் விடவில்லை. தன் புது வாழ்வை அழித்த இளைஞன் யாராயினும் கண்டறிந்து பழிவாங்க அவன் துடிதுடித்தான். கத்தரித்தெடுத்த மார்கழியின் கூந்தல் அவனிடமிருந்தது. அதனுடன் அவன் மீண்டும் கோபுரத்தினுள் சென்று தங்கினான். நடந்தது எதுவும் தெரியாத இளவரசன் வழக்கம் போலக் கோபுரத்தடியில் வந்து காத்திருந்தான். மாயக்காரன் இறங்கிச் சென்ற பின்பே அவன் மேலே ஏறுவது வழக்கம். ஆனால் அன்று நெடுநேரம் வரை காத்திருந்தும் யாரும் இறங்கி வரவில்லை. அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. விடியுமுன் சற்றுத் துணிந்து, ‘மார்கழி, மார்கழி’ என்று கூவினான். அதற்கே காத்திருந்த மாயக்காரன் கூந்தலின் ஒரு கோடியைப் பலகணியில் கட்டி மறுகோடியைக் கீழே வீசினான். இளவரசன் மனமகிழ்வுடன் அதைப் பற்றி மேலே ஏறினான். கோபுரத்தின் உட்கூடத்தில் அரையிருள் சூழ்ந்திருந்தது. மாயக்காரன் மார்கழியின் ஆடைகளைச் சுற்றிக்கொண்டு நின்றிருந்தான். அவனையே மார்கழி என்று நினைத்த இளவரசன் அவனை ஆர்வத்துடன் அணைக்க முனைந்தான். ‘இன்று ஏன் மாயக்காரன் வரவில்லை!’ என்று பேச்சையும் தொடங்கினான். மாயக்காரனுக்கு இப்போது துயரமும் கோபமும் பீறிட் டெழுந்தன. அவன் இளவரசனை மனங்கொண்ட மட்டும் அடித்துத் துவைத்தான். அவன் முகத்தில் குத்திய குத்துக்களால் கண்கள் குருதி கக்கிக் குருடாயின. இந்த நிலையில் மாயக்காரன் அவனைக் குற்றுயிருடன் கோபுரத்திலிருந்து கீழே எறிந்தான். அத்துடன் அவன் ஒழிந்தான் என்ற உறுதியில் தன் வீடு சென்றான். தன் மாயங்கள் பலிக்காத காரணத்தினால், மாயக்காரன் புது வாழ்வு முறிவுற்றது. ஒரு தலைமுறை வாழ்நாள் புது வாழ்வு தொடங்காமலே முடிவுற்றதால், ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவன் குற்றுயிராய் வதைப்பட்டு மாண்டான். அதேசமயம் அவனால் வீசியெறியப்பட்ட இளவரசன் மானேந்தியின் உடலிலிருந்து அவன் எதிர்பார்த்தபடி உயிர் போகவில்லை. பலகணியில் கட்டியிருந்த மார்கழியின் கூந்தலே அவன் விழும்போது அவனைச் சுற்றிக் கொண்டது. கட்டு இப்போது தளர்ந்திருந்ததனால், அவன் சுமை தாளாமல் விழுந்தது. மயிர்ச் சுருளுடன் சுருண்டு விழுந்ததால் அவன் உடலில் முன்னிருந்த நோவன்றிப் புதிதாக எத்தகைய நோவும் ஏற்படவில்லை. அத்துடன் தன் காதலியின் நினைவை ஊட்டிய தலைமுடியே தன் உயிரும் காத்ததை எண்ணி அதை ஆர்வத்துடன் போர்வையாகச் சுருட்டிப் போர்த்த வண்ணம் தன் உடல் தேறுமட்டும் அவன் அங்கேயே கிடந்தான். எந்தக் கணமும் மாயக்காரன் திரும்பி வந்து தன்னைக் கொன்றுவிடக் கூடும் என்று அவன் அஞ்சினான். ஏனெனில் மாயக்காரன் இறந்தது அவனுக்குத் தெரியாது. உடல் தேறியதும் அவன் எழுந்து தட்டித் தடவி நடந்தான். கண்மட்டும் தெரியவில்லை. அந்நிலையில் என்ன செய்வது, மார்கழியை எங்கே தேடுவது என்று விளங்காமல் அவன் திகைத்தான். காட்டிலே திக்குத்திசை தெரியாமல் அலைந்து திரிந்து எப்படியோ அவன் மார்கழியின் தாய் தந்தையர் வாழ்ந்திருந்த திருவதிகை வந்து சேர்ந்தான். இங்கே அவன் எங்கும் தட்டித் தடவிக் கொண்டு சென்று இரந்துண்டான். அன்புடன் உணவு கொடுப்பவரிடம் அவன் ‘மார்கழி’ என்ற இளநங்கையைப் பற்றிக் கேட்பான். சிலர் தமக்குத் தெரியாதென்று கைவிரித்தனர். ஆனால் முதியவர் சிலர் வியப்புடன் அவனையே திருப்பிக் குறுக்குக் கேள்வி கேட்டனர். அவன் மார்கழியைப் பற்றித் தான் அறிந்ததை அவர்களுக்கு உரைத்தான். அவர்களிடமிருந்து பல ஆண்டுகளுக்குமுன் ‘மார்கழி’ என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் காணாமல் போய்விட்டது என்பதையும், தாய்தந்தையர் அத்துன்பத் தாலேயே இறந்துவிட்டனர் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். அத்துடன் மாயக்காரன் இருந்த இடமும் அவனுக்குக் கதைப் போக்கிலிருந்தே தெரிந்துவிட்டது. அவன் கண்கள் இதற்குள் உட்புண்ணாறி வந்தன. அவனிடம் பழகிவிட்ட பெரியார்களுள் ஒருவர் மருத்துவர். மேலும் பண்டுவம் பார்த்து, அவன் கண்பார்வை முழுவதையும் அவர் மீட்டுத் தந்தார். கண்பார்வை வந்ததும் மானேந்தியின் முதல் வேலை மாயக்காரன் வீட்டில் சென்று உளவு பார்ப்பதாகவே இருந்தது. ஊரில் பெரியாரான சில நண்பர்களுடன் அவன் தோட்டத்து மதில் ஏறி உள்ளே நுழைந்து பார்த்தான். பயிர்கள் பார்ப்பார் இல்லாமல் அழிந்து கிடந்தன. மாயக்காரன் உடலும் வாடி வதங்கி ஈ எறும்புகளால் அரிக்கப்பட்டு உருவற்றுக் கிடந்தது. மாயக்காரனைப் பற்றிய அச்சம் நீங்கி அவர்கள் மார்கழியைப் பற்றி புலனறிய எங்கும் தேடினர். எதுவும் அகப்படவில்லை. திருவதிகை சேந்தமங்கல மன்னன் ஆட்சியின் கீழேயே இருந்தது. மானேந்தி அதன் உரிமை இளவரசன் என்றறிந்த திருவதிகைப் பெருமக்கள் அவனுக்குப் படையுதவி தந்து அரசனாக்குவதாக உறுதி கூறினர். ஆனால் மார்கழியைத் தேடிவந்த பின்தான் வாழ்வில் தனக்கு ஈடுபாடு ஏற்படும் என்று கூறிவிட்டு, அவன் மீண்டும் நாடோடியாகப் புறப்பட்டான். இரண்டாண்டுகள் பல நாடுகளும் காடுகளும் சுற்றியபின்பு மானேந்தி மார்கழி அலைந்து திரிந்த பாலைவனத்தை அணுகினான். பாலைவனத்துக்கு வரும்போதே மார்கழி கருவுற்றிருந்தாள். பாலைவனத்தில் அவளுக்கு ஆணும் பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் இருவர் பிறந்தனர். பாலைநீரூற்றும் பேரீத்தம் பழங்களும் ஒட்டகைப் பாலும் உண்டு. அருமுயற்சியுடன் அவள் பிள்ளைகளை வளர்த்தாள். பாலையில் பிறந்ததனால் அவர்களுக்குச் செம்பாலை என்றும் பொலம்பாலை என்றும் பெயரிட்டாள். மானேந்தி பாலைவனத்தில் அலைந்து களைப்புடன் ஒரு கருவேல மரத்தடியில் சாய்ந்து கண்ணயர்ந்திருந்தான். அச்சமயம் குழந்தைகளின் குரல்கேட்டு அவன் திடுக்கிட்டெழுந்தான். செந்நாய் ஒன்று சிறுமியைச் சுற்றி வளைக்க முயன்று கொண்டிருந்தது. அச்சிறுமியின் வயதே உடைய சிறுவன் கவண் கல்லைவைத்து அதன் மீது குறிபார்த்துக் கொண்டிருந்தான். மானேந்தி தன் வாளால் செந்நாயை ஒரு நொடியில் வெட்டி வீழ்த்திவிட்டுக் குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டான். அதற்குள் சிறுவனும் வந்து ‘மாமா, மாமா’ என்று காலைச் சுற்றிக்கொண்டான். ‘நீங்கள் யார், குழந்தைகளே! இந்த ஆளற்ற பாலைக்கு எப்படி வந்தீர்கள்? உங்கள் பெற்றோர் எங்கே?’ என்று அவன் குழந்தைகளைக் கேட்டான். பொலம்பாலை ஒன்றும் பேசத் தெரியாமல் அவனையே மருண்டு மருண்டு பார்த்து விழித்தாள். ஆனால் சிறுவன் கணீரென்று விடையிறுத்தான். ‘நாங்கள் சிறுபிள்ளைகள், மாமா! இதற்கெல்லாம் மறுமொழி கூற எங்களுக்குத் தெரியாது. எங்கள் அம்மா அதோ தெரிகிற ஈத்தங் குப்பத்தில் இருக்கிறாள். வாருங்கள்! உங்களுக்கு எல்லாம் விளக்குவாள்?” என்றான். குழந்தைகளின் தாயும் மானேந்தியும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். பின் திடீரென மானேந்தியை அடையாளம் கண்டு, மார்கழி அவன் காலடியில் தலை புதைத்து அழுதாள். ‘மாமா, மாமா’ என்று சுற்றிய குழந்தைகளை அவள் எடுத்து அவனிடம் தந்தாள். ‘இவர் மாமா அல்ல. இவர்தான் உங்கள் அப்பா!’ என்று குழந்தைகளிடமும் ‘இந்தச் செல்வங்கள் தாம் நம்பிள்ளைகள்’ என்று மானேந்தியிடமும் கூறினாள். மானேந்தி மனைவியையும் மக்களையும் ஆரஅணைத்தெடுத்து இன்பக் கண்ணீராட் டினான். திருவதிகை வந்தது, மார்கழியின் தாய்தந்தையர் வரலாறு அறிந்தது முதலான செய்திகளை எல்லாம் மானேந்தி மார்கழிக்கு எடுத்துரைத்தான். அத்துடன் தான் இன்னான் என்பதையும் முதல் தடவையாக அவளுக்குக் கூறினான். உலகமறியா இளநங்கையாகவே பாலைவனத்துக்கு வந்த மார்கழிக்கு அந்தப் பாலைவனம் ஓர் உலகப் பள்ளியாய் அமைந்திருந்தது. அதில் பிறந்த பிள்ளைகளுடனும், அதிலே தனக்குப் புது வாழ்வளித்த கணவனுடனும் அவள் திருவதிகை வந்து சேர்ந்தாள். ஏற்கெனவே மானேந்தியிடம் பாசங் கொண்டிருந்த திருவதிகை மக்களுக்கு மார்கழியின் ஆர்வக் கதை ஒரு புதிய இன்பக்காவியமாயிற்று. மானேந்தியையும் மார்கழியையும் அரசுரிமை பெறச் செய்யும் முயற்சியில், திருவதிகை மட்டுமன்றிப் பல அண்டையயல் நகரங்களும் ஒத்துழைத்தன. சேந்தமங்கலத்தின் நகராட்சிமன்றமே இடைக்கால மன்னனை வெளியேற்றி அவர்களைத் தவிசேற்றி மகிழ்ந்தது. சேந்தமங்கல அரசிலேயே செம்பாலை திருவதிகை இளவரசனாகச் சிறிய பட்டம் கட்டப் பெற்றான். பொலம்பாலை சோழப் பேரரசுக்குரிய இளவரசனையே மணம் புரிந்து முழுநில அரசியானாள். 2. அன்பரசி களக்காடு என்னும் பழம்பதியில் பண்பார்ந்த வேளாண்குடி ஒன்று உண்டு. அதன் புகழ்மரபுக்குரிய செல்வங்களாக ஆடலழகன் என்ற நம்பியும் பாடுமாங்குயில் என்ற நங்கையும் வளர்ந்து வந்தனர். சிறு பருவத்திலிருந்தே அண்ணன் தங்கையர் பாசத்துக்கு அவர்கள் சிறந்த எடுத்துக் காட்டுக்களாக விளங்கினர். அதற்கேற்ப இருவரும் ஒரே வணிகக் குடும்பத்தில் வாழ்க்கைத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர். ஆடலழகன் வாழ்க்கைத் துணைவியாக அமைந்த வணிக நங்கை பண்பாயிரம் என்பவள். அவள் பாடுமாங்குயிலின் ஆருயிர்ப் பள்ளித் தோழி; அதேசமயம் பண்பாயிரத்தின் அண்ணன் பண்ணன் பாடிலியே பாடுமாங்குயிலை மணம் நேர்ந்தான். பண்பாயிரத்துக்கு அருண்மொழி என்ற புதல்வனும், பாடுமாங்குயிலுக்கு அன்பரசி என்ற புதல்வியும் பிறந்தனர். இரு குழந்தைகளும் தொட்டிலில் தவழும் பருவத்திலேயே இருதிறத்துப் பெற்றோர்களும் அவர்கள் வருங்கால வாழ்வுகளை இணைய விடுவதென்று ஆர்வக் கனவு கண்டனர். அத்துடன் அருண்மொழி குழந்தைப் பருவம் கடக்கும் முன்பே பண்பாயிரம் உலக வாழ்வு துறக்க நேர்ந்தது. தாயற்ற அண்ணன் பிள்ளையைப் பாடுமாங்குயில் தன் குழந்தையுடன் படிக்க வைத்துத் தானே பேணி வளர்த்தாள். அச்சிறுவர் விளையாட்டுத் தோழமையில் தன் அண்ணனும் தானும் கொண்ட ஆர்வக் கனவின் நிழல் கண்டு, அண்ணியின் பிரிவை அவள் ஒருவாறு ஆற்றியிருந்தாள். இரு குடும்பங்களுக்கிடையேயும் நிலவிய இந்த இனிய பாசத் தொடர்பு இப்படியே நீடிக்கவில்லை. மனைவி இறந்த பின் ஆடலழகன் வாழ்க்கையில் கசப்புற்றுக் குடும்பக் காரியங்களில் கவனம் செலுத்தாது ஒதுங்கினான். இதனால் அவன் செல்வம் கரைந்து வறுமைக்கு ஆட்பட்டான். அதேசமயம் பண்ணன் பாடிலியின் செல்வநிலை நாளுக்குநாள் உயர்வுற்றது. இவ் வகையில் அவன் பெரியப்பன் மகனான பண்ணன் சேந்தன் அவனுக்குப் பெரிதும் உதவினான். பண்ணன் சேந்தன் தையல்நாயகம் என்ற உயர்குடிச் செல்வ நங்கையை மணந்தவன். அவளுடனே வாரியூர் என்ற நகரில் அவள் தந்தை இல்லத்திலேயே செல்வாக்குடன் வாழ்ந்தவன். பண்ணன் பாடிலி அவர்கள் இருவருக்கும் நல்லவனாக நயந்து நடந்ததால் அவர்கள் அவனை வாரியூருக்கே அழைத்து, அங்கே புதிய தொழிலகமும் செல்வமும் செல்வாக்கும் பெறும்படி ஏற்பாடு செய்தனர். இப்புதுத் தொடர்பு ஆடலழகன் வறுமையிலிருந்து பண்ணன் பாடிலியைத் தொலைவாக்கிற்று. குழந்தை அருண்மொழி மீண்டும் தந்தையிடமே சென்று வாழ நேர்ந்தது. ஆண்டுகள் சென்றன. அருண்மொழி இளமைப் பருவத்தின் வாயிலைச் சென்று எட்டியிருந்தான். ஆனால் அதற்குள் ஆடலழகன் செல்வ நிலையைப் போலவே உடல் நிலையும் தோய்வுற்றுத் தன் இறுதிப் படுக்கையில் சாய்ந்தான். இறுதி மூச்சுவரை அவன் மைந்தனிடம் தன் தங்கையைப் பற்றியே பேசினான். “நீ தாயற்ற பிள்iளாய்விட்ட சமயத்தில் உன் அத்தைதான் உன்னைத் தாயாக வளர்த்தாள். இனி உனக்கு அவளே தாயாகவும் தந்தையாகவும் விளங்குவாள். அத்துடன் நீ குழந்தையாய் இருக்கும்போதே உன் மாண்ட தாயார் சான்றாக நாங்கள் இருவரும் உன்னை அன்பரசிக்கு உரியவனாக்கியிருக்கிறோம். அந்த எண்ணத்திலேதான் உன்னை நான் வளர்த்திருக்கிறேன். அதே எண்ணத்துடன்தான் உன் அத்தையும் அன்பரசியை வளர்த்து வருகிறாள். ஆகவே, நீ அத்தை வீடு சென்று இரு குடும்பத்துக்குமுரிய கடமைகளையும் ஆற்றி அத்தை மாமன் மனம் மகிழ வாழ்வாயாக.” இந்த அறிவுரையுடன் ஆடலழகன் இயற்கையின் மடியில் தலைசாய்த்தான். அருண்மொழி தாயுடன் தந்தையும் இழந்து தன்னந் தனியனாய் மறுகினான். பின் தந்தை கடைசி அறிவுரையைக் கடைப்பிடித்து வாரியூருக்குப் புறப்பட்டு, மாமன் கடை இருக்குமிடம் கேட்டறிந்து மாமனை நேரில் சென்று கண்டான். பண்ணன் பாடிலி எப்போதும் தான் உண்டு தன் தொழில் உண்டு என்று இருப்பவன். குடும்பத்தில் அவன் தலையிடுவ தில்லை. அதேசமயம் குடும்பப் பாசமும் அவனுக்குக் கிடையாது. எனவே அவன் மருமகனை ஆர்வமாக வரவேற்கவில்லை. அத்துடன் அவனை வெறுப்பதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவனை வீட்டுக்கு இட்டுச் சென்று பாடுமாங்குயிலினிடம் ஒப்படைத்தான். அதோடு தன் கடமை தீர்ந்துவிட்டதாக அவன் கருதினான். ஆனால் பாடு மாங்குயில் அவனைத் தன் அண்ணன் பிள்ளையாகவும் தன் வளர்ப்புக் குழந்தையாகவும் பாராட்டி ஆர்வத்துடன் வரவேற்றாள். தந்தை பிரிவுக்கு ஆறுதல் தேறுதல் கூறிக் கனிவுடன் அவனுக்கு ஆதரவு நல்கினாள். அன்பரசியை அவன் சந்தித்தபோது, இருவரும் முதலில் ஒருவரை ஒருவர் வியப்பார்வத்துடன் நோக்கினர். “ஆ என் பழைய அருள்தானா நீ....ங்கள்? அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்டீர்களே” என்று அவள் தொடங்கினாள். “உங்களைக் காண மகிழ்ச்சி” என்று முடித்தாள். ‘நீ’ என்ற பழைய சொற்பழக்கம் நாவில் வந்து, நீங்கள் என்று வலிந்து மாறுவதை அவன் உள்ளூர உவகையுடன் கவனித்தான். “ஏன் அன்பு! நீயும்தான் பழைய அன்பாயில்லை, முற்றிலும் மாறிவிட்டிருக்கிறாய். இனி நானும் விளையாட முடியாது. நீயும் விளையாட அழைத்தால் வருபவளாய் இல்லை” என்று தானும் தன் பழைய விளையாட்டுத் தோழமையைச் சுட்டிப் பேசினான் அருண்மொழி. “அருள் பசியுடனும் அயர்வுடனும் இருக்கிறான், அன்பு! போய் அவனுக்குச் சிற்றுண்டி குடிநீர் கொண்டுவரச் சொல்லு; அப்புறம் பேசலாம்” என்று அவளை ஏவினாள் பாடுமாங்குயில். சிறுவர் தோழமை இளமைப் பாசமாக வளர்வதற்கு நெடுநாளாகவில்லை. முதற் சந்திப்பிலேயே அருண்மொழி அன்பரசியை வியப்பார்வத்துடன் கண்ணிமையாது நோக்கி யதையும், அது கண்ட அன்பரசியின் முகம் நாணத்தாலும் உள்ளுவகையாலும் சிவந்ததையும் பாடுமாங்குயில் கூர்ந்து கவனித்துக் கொண்டாள். மேலும் வீட்டில் எத்தனையோ வேலையாட்கள் இருந்தாலும் அருண்மொழியின் வேலையை வேறு எங்கும் செய்யவிடாமல் அன்பரசி தானே முந்தி நின்று அவற்றை முடித்து வந்தாள். இதுமட்டுமன்று. அவன் உடுத்த ஆடை அணிகளுடனேயே வந்திருந்தான். தன் தந்தையிடமோ தாயிடமோ அதுபற்றி அவன் கேட்க நேரும் என்று அவள் அறிந்தாள். அப்படிக் கேட்க விடாமல் அவள் தானே அவற்றைத் தன் செலவுக்கென்று பெற்ற பணத்தைக்கொண்டு வாங்கி அவன் பெட்டியில் அடுக்கி வைத்தாள். இங்ஙனம் தாயின் ஆர்வம் கூட எதிர்பார்த்திராத அளவில் அன்பரசியின் உள்ளம் அருண் மொழியைச் சுற்றி இழைந்தது. பண்ணன் பாடிலி எதையும் கணக்குப் பார்ப்பவன் என்பது பாடுமாங்குயில் அறிந்ததே. ஆகவே தன் மருமகனை அவன் ஓர் ஏழை உறவினனாக நடத்த அவள் விடவில்லை. தொழிலகத்தைப் பார்க்க ஓர் ஆள் வேண்டிவந்த சமயம், அவள் அருண்மொழிக்கே அவ்விடத்தைக் கொடுக்கும்படி பரிந்து பேசி, அவனை அதில் அமர்த்தினாள். அருண்மொழி எல்லாருக்கும் நல்லவனாக நடந்து கொள்ளும் இயல்புடையவன். ஆகவே, வீட்டில் மற்ற எல்லாருக்கும் உறவினனாகவும், பண்ணன் பாடிலிக்கு மட்டும் தொழிலகத்தில் தொழில் நேரத்தில் தொழிலாளியாகவும் வாழ்ந்துவந்தான். இந்த நிலையிலேயே அன்பரசியின் உள்ளத்தில் உள்ளார்ந்த பாசத்தை அவன் முழுதும் காண வாய்ப்பு ஏற்பட்டது. தன் காரியங்களில் அன்பரசி காட்டும் அக்கறையை அருண்மொழி அறியாமலில்லை. அவன் உள்ளமும் ஏற்கெனவே அவளிடம் வரவர ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் நீடித்த உழைப்பின் பயனாக ஒன்றிரண்டு நாட்கள் அவன் தொழிலகம் போகமுடியாமல் இருந்தது. அச்சமயம் அன்பரசி தானே அவனுக்குத் தாயாகவும் தாரமாகவும் தங்கை யாகவும் பிள்ளையாகவும் இருந்து, அவன் உடலும் உளமும் பேணி ஆதரவு செய்தாள். அந்த அன்புக்கனிவின் இனிமையில் அருண்மொழி தன் நோயை மறந்தான். மேலும் அவள் தோழமையின் இன்பத்தை இன்னும் பெறும் ஆர்வத்தினால் அவன் தன் நோய் பெரிதும் நீங்கியபின்னும் அது நீடிப்பதாகப் பாசாங்கு செய்யத் தொடங்கினான். அவன் குறிப்பறிந்து அன்பரசி உள்ளூர எல்லையிலா மகிழ்ச்சி கொண்டாள். ஆயினும் தொழிலகத்தில் தந்தை மனம் கோணாமல் நடப்பது அவன் வருங்கால வாழ்வுக்கும் தன் வருங்கால அமைதிக்கும் இன்றியமையாதது என்று அவள் கருதினாள். ஆகவே மெல்ல அவனிடம் தொழிலகம் செல்வது பற்றி வலியுறுத்திப் பேசினாள். “அன்பரே, உடல்நோய் காரணமாக இரண்டு மூன்று நாட்கள் தொழிலகத்துக்கு நீங்கள் செல்லவில்லை. தொழில் எப்படியிருக்கிறதோ, எப்படி நடக்கிறதோ, பார்க்கவேண்டாமா? இன்றாவது நீங்கள் தொழிலகம் சென்றால்தான் நல்லது என்று நினைக்கிறேன்” என்றாள் அவள். “இன்றே போகவேண்டுமா? எனக்கு உடம்பு இன்னும் முற்றும் குணமாகவில்லை என்று நினைக்கிறேன். நாளை போகிறேனே” என்றான். அன்பரசி அவன் கன்னத்தைத் திருகினாள். “அப்பா கோபிப்பார். உடல் இன்னும் குணமாகாததற்குக் காரணம் எனக்குத் தெரியாததல்ல. அது அவருக்கும் தெரிந்து விடக் கூடாது. அத்துடன் நான் இன்று உங்களுடன் இருக்கப் போவதில்லை. அம்மாவை இனியும் தனியே வீட்டு வேலைகளைப் பார்க்கும்படி விடமுடியாது. நான் அம்மாவுடன் சென்று ஒத்தாசை செய்யப்போகிறேன்” என்றாள். அவள் தன் குறிப்பறிந்து தன் நன்மைக்காகவே கண்டிப்பாய் இருப்பது கண்டு அவன் ஆண்மை கிளர்ந்தெழுந்தது. “என்னை மன்னிக்க வேண்டும் அன்பு! உன் நேசம் விலையற்றது, அதற்கு நான் இனித் தகுதியுடையவனாயிருப்பேன்!” என்று கூறி எழுந்தான். அவள் அவன் கையை ஆர்வத்துடன் அழுத்தினாள். “மன்னிக்கப்பட வேண்டியவள் நான்தான். நீங்கள் அல்ல. உங்களை என் கண்பார்வையிலேயே வைத்துக்கொள்ள முடியுமானால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி தருவது எதுவும் இல்லை. அத்துடன் உண்மையிலேயே உங்கள் உடல் இன்னும் முற்றிலும் குணமடைந்து விடவில்லை. நேரமும் மந்தாப்பா யிருக்கிறது. ஆகவே போகும்போது குடையும் போர்வையும் எடுத்துச் செல்ல மறந்துவிடாதேயுங்கள்” என்று அன்பரசி நயந்துரைத்தாள். போர்வையை அவன் தோளில் இட்டு குடையைக் கையில் தந்து அவனுக்கு விடைதந்து அனுப்பினாள். அன்பரசியின் அன்பொளி அருண்மொழியைச் சுற்றிலும் தொழிலகத்திலும் வீட்டிலும் எங்கும் உலவிற்று. தொழிலின் கடுமை இதுமுதல் அவனுக்கு ஒரு சிறிதும் கடுமையாகத் தோற்றவில்லை. அதற்கான தகுதிபெற அன்பரசியின் தோழமையைக்கூட அவன் துறக்கத் தயங்கவில்லை. அவள் வியப்படையும் வண்ணம் அவன் தொழிலக நேரம் வருமுன்பே தொழிலகம் செல்லப் புறப்படத் துணிந்தான். அதுபோலத் தொழிலக நேரம் கழித்தும் தொழிலக வேலையில் ஈடுபட்டிருந்து நேரம் சென்று வீடு திரும்பினான். பாடுமாங்குயிலே அவன் புதிய போக்குக் கண்டு ஒருநாள் அவனை அழைத்துப் பரிவுடன் பேசினாள். “அருள், நீ என் அண்ணன் பிள்ளைதான் என்பதில் ஐயமில்லை. கடமையில் அழுந்தி உடலைக் கவனிக்காமல் இருந்து விடுகிறாய். தொழிலகம் உன் மாமா தொழிலகந்தானே! ஏன் இப்படி இரவும் பகலும் சருகாய் உழைத்து உடம்பை அலட்டிக் கொள்ள வேண்டும்? நேரத்தில் சென்று நேரத்தில் வந்தால் என்ன?” என்று நயத்துடன் கேட்டாள். “மாமா தொழிலகம் என்றால் என்தொழிலகம் தானே, அத்தை? அதற்கு நானல்லாமல் வேறு யார் உழைப்பார்கள்? அன்பரசி ஆணாயிருந்திருந்தால் எப்படி உழைப்பார்களோ, அப்படி நான் உழைக்க வேண்டாமா?” என்றான் அவன். அன்பரசி இதைக்கேட்டுக் கொண்டே வந்தாள். அவள் உள்ளம் பாகாய் உருகிற்று. ஆயினும் அவள் அதை வெளிக் காட்டாமல் அடக்கிக் கொண்டு வெளிப்படக் கிளர்ச்சியுடன் பேசினாள். “நான் ஆணாயிருந்தாலும் எப்படியும் சமாளித்துக் கொள்வேன். ஆனால் நீங்கள் பெண்ணாயிருந்தால் என்ன ஆவீர்களோ?” என்றாள். அருண்மொழியின் உழைப்பார்வம் முற்றிலும் வீணாய் விடவில்லை. குடும்பப் பாசமற்ற பண்ணன் பாடிலியைக்கூட அது அவன்மீது பரிவு கொள்ளச் செய்தது. மனைவியும் மக்களும் அவன் பக்கம் சாய்வதை அவன் ஏற்கெனவே அறிந்திருந்தான். இப்போது அவனும் அருண்மொழியைத் தன் குடும்பத்துடன் சேர்த்துக்கொள்ள உள்ளூர இணக்கம் கொண்டான். பாடுமாங் குயிலையும் அன்பரசியையும் போலவே அவனும் படிப்படியாக அருண்மொழியிடம் நேச உணர்ச்சியுடன் பழகினான். குடும்பத்தில் ஒருமனமும் இன்னமைதியும் மெல்லப் படர்ந்தன. பண்ணன் சேந்தனும் அவன் மனைவி தையல் நாயகமும் ஒருநாள் பண்ணன் பாடிலியின் இல்லத்துக்கு வந்திருந்தனர். அருண்மொழி மாமன் குடும்பத்துடன் குடும்ப உறுப்பினனாக ஒட்டி வாழ்வது கண்டு பண்ணன் சேந்தன் வியப்புற்றான். ஆனால் அவனைவிட அவன் மனைவிக்கு இது கசப்பாக இருந்தது. அவளுக்குக் குழந்தை இல்லாததால், பண்ணன் பாடிலியின் குடும்பத்தையே தனதாக்கி ஆள எண்ணியிருந்தாள். அதன் செல்வ நிலையையும் மதிப்பையும் உயர்த்தி வேறோர் உயர் குடும்பத்துடன் அன்பரசியை இணைக்க வேண்டுமென்பது அவள் பேரவாவாயிருந்தது. வாரியூரில் நகரவைத் துணைத் தலைவராயிருந்த குருகூரார் செல்வத்தாலும் பதவியாலும் உயர்ந்த குடியைச் சேர்ந்தவர். அவர் குடியையே தையல் நாயகம் அன்பரசிக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள். காசு பணமற்ற ஓர் ஏழை இளைஞனுக்காகப் பெருந் தொடர்பைக் கெடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. மெல்லப் பண்ணன் பாடிலியின் உள்ளத்தையும் பாடுமாங்குயிலின் உள்ளத்தையும் இத்திசையில் திருப்ப அவள் முயற்சி செய்தாள். “பாடு, உன் இரக்க உள்ளத்துக்கு நான் உன்னை மெச்சுகிறேன். ஆனால் என்றும் நீ இப்படி ஒருவனை வைத்துத் தற்காக்க முடியுமா? மேலும் நம் தொழிலகத்திலே இருந்தால் அவன் தனக்கேற்ற நல்ல முயற்சியில் எப்படி ஈடுபட முடியும்? விரைவில் அவனே ஒரு தொழில் பார்க்கும்படி தூண்டி அவனுக்கு ஏற்ற ஒரு பெண்ணையும் தெரிந்தெடுக்கும்படி விடுவதுதானே” என்றாள் தையல்நாயகம். பாடுமாங்குயில் அவள் மனப்போக்கை ஓரளவு ஊகித்து உணர்ந்தாள். ஆனால் அதை உணர்ந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவன் எனக்கு அண்ணன் பிள்ளை. உங்கள் மைத்துனருக்கும் அவன் தங்கை பிள்ளைதானே! ஆகவே, நம் தொழிலகம் அவன் தொழிலகம் தானே! மேலும் அன்பரசிக்கு அவனே உரியவனென்று அவன் தாயும் தந்தையும் இருக்கும் போதே நாங்கள் உறுதி செய்து விட்டோம். அதற்கு இப்போது யாரும் வருந்தத் தேவையில்லை. அவனைவிட நல்ல கணவனை நம் அன்பரசிக்கு எங்கே பார்க்க முடியும்?” என்றாள். தாய் தன் அன்பன் பேச்செடுத்ததும் அன்பரசி நாணத்தால் முகம் சிவந்து தன் அறை சென்றாள். பண்ணன் சேந்தன் பாடுமாங்குயிலின் உரைகேட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். “இரக்கச் சிந்தை இந்த அளவுக்குப் போய்விட்டதா? உதவி யற்றவர்களுக்கெல்லாம் இப்படிக் கொடுக்க உங்களுக்கு இந்த உலகமுழுதும் இருந்தால்கூடப் போதாதம்மா” என்றான். பாடுமாங்குயில் இந்த அவமதிப்புரை தாங்காது சீற்றம் கொண்டாள். ஆயினும் தன் கணவனுக்கு அவர்கள் காட்டியிருந்த ஆதரவை எண்ணிச் சீற்றத்தை அடக்கிக் கொண்டாள். அப்படியும் அவள் இறுமாப்புடன் நிமிர்ந்து விடையளித்தாள். “மனிதர் விலை அவர்கள் பணத்திலில்லை, அம்மணி! பணமில்லாதவர் பணக்காரக் குடும்பத்தில் மணம் செய்து உயர்வு பெறுவதும் உலகில் நடக்காததல்ல. அப்படி இருக்க என் அண்ணன் பிள்ளையை, அதுவும் அவர் தங்கை பிள்ளையை, துணையற்றவனாக எப்படிக் கருதிவிட முடியும்?’ என்றாள். தையல்நாயகி கணவனைக் கடிந்துகொண்டு நேச பாவனையுடன் பேச்சை மாற்றினாள். ஆயினும் கூடுமான போதெல்லாம் பாடுமாங்குயிலிடமும் பண்ணன் பாடிலியிடமும் தம் திட்டத்தை மெல்லக் கூறத் தயங்கவில்லை. “அன்பரசி உனக்குமட்டும் புதல்வியல்ல பாடு! அவளை நான் என் ஒரே பிள்ளையாகக் கருதுகிறேன். அவள் நகரவைத் துணைத் தலைவர் புதல்வன் பூணாரத்தைப் பொன்னாரமாக அணியும் நாளை எண்ணி எண்ணித்தான் நான் மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். அதற்காகவே உன் அத்தானிடம் நச்சரித்து நகை நட்டு, திருமணச் செலவுகளுக்கான பணம் எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன். “குருகூரார் வீடு என்றால் எளிதா? அவர்களுடன் சரிசமமாக மதிப்புப் பெறுவதற்காகவே நான் பெரும்பணம் செலவு செய்து உயர்குடி விருந்துகளுக்கெல்லாம் சென்று வருகிறேன். என் வாழ்வின் ஒரே ஆவலைக் கெடுத்துவிடாதே பாடு! அத்துடன் உன் அத்தான் உன் அண்ணன் மகனை ஏளனமாகப் பேசியதற்காக மன்னித்துவிடு. அவனுக்கு ஏற்ற நல்ல இடம் பார்த்துத் திருமணம் செய்யும் பொறுப்பைக்கூட நானே ஏற்றுக்கொள்கிறேன்” என்றாள். பாடுமாங்குயில் ஒன்றும் விடைதரவில்லை. எதிர்ப்பில் தையல் நாயகத்தைச் சமாளிக்க அவள் வகை தெரிந்திருந்தாள். ஆனால் அது நட்பாதரவாக மாறிய பின் அவள் செய்வகை இன்னதென்று அறியாது திகைத்தாள். தையல் நாயகத்தின் திட்டத்தை உதறித் தள்ளவும் அவளால் முடியவில்லை. அதேசமயம் குழந்தைகள் உள்ளத்தின் போக்கறிந்த பின், அதை மாற்றவும் அவள் துணியவில்லை. மாண்ட அண்ணன் அண்ணியின் முகங்கள் கண்ணீருடனும் கம்பலையுடனும் அவள் இமைகளிடையே ஓயாது நிழலாடின. பாடுமாங்குயிலுக்கிருந்த இரண்டக நிலை பண்ணன் பாடிலிக்கு இல்லை. அண்ணன் சேந்தன் சொல்லை அவன் என்றும் தட்டியதில்லை. தையல் நாயகத்தினிடமோ அவன் மதிப்பு இன்னும் பெரிது. அவள் குறிப்பறிந்து நடக்கவே அவன் அரும்பாடுபட்டான். இந்நிலையில் அவன் தன் மனைவியின் விருப்பத்தையோ மகள் விருப்பத்தையோ ஒரு சிறிதும் எண்ணிப்பாராமல், அண்ணியின் திட்டத்தை நிறைவேற்றுவ திலேயே முழு மூச்சுடன் இழைந்தான். குருகூரார் வீட்டுத் தொடர்புக்கு ஏற்ற முறையில் பண்ணன் பாடிலி தன் நடையுடை தோற்றம், வீடு, தொழிலகம் ஆகியவற்றை முற்றிலும் செப்பம் செய்து உயர்வுபடுத்தினான். உயர்குடியினர், அரசியற்பணி முதல்வர் நடத்தும் விருந்து கேளிக்கைகளில் தானும் தன் குடும்பமும் சென்று கலந்து கொள்ள ஏற்பாடு செய்தான். பண்ணன் சேந்தனும் தையல் நாயகமும் இவற்றுக்கான செலவுகளிலும் அழைப்புகள் வருவித்துத் தருவதிலும் அவனுக்கு ஒத்தாசை செய்து ஊக்கினர். பாடுமாங்குயில் இவற்றை விரும்ப வில்லையாயினும் கணவனை மீற இயலாது கலந்துகொள்ள நேர்ந்தது. ஆனால் அன்பரசி தன்னாலியன்ற மட்டும் சாக்குப் போக்குகள் கூறி விருந்துகளுக்குப் போகாமல் ஒதுங்கியிருந்தாள். சாக்குப் போக்காகவே அவள் முதலில் தனக்கு உடம்புக்கு நலமில்லை என்று தன் அறையில் அடைபட்டுக் கிடந்தாள். ஆனால் விரைவில் உண்மையிலேயே அவள் நோய்வாய்ப்பட்டாள். அவள் உடல் வரவரத் துரும்பாக மெலிந்தது. உடலின் வெப்புத் தீயாகி அருகிலிருப்பவர் மீது வீசிற்று. தாய் சில சமயமும் தந்தை எப்போதோ ஒரு தடவையும் அவளை அமைதிப்படுத்தும் எண்ணத்துடன் “உன் விருப்பப்படிதான் திருமணம் செய்து வைப்போம் அம்மா! கவலைப்படாதே!” என்று கூறிவந்தார்கள். அத்தகைய நாள்களிலெல்லாம் அன்பரசியின் உடல் வெப்புக் குறையும். முகம் பெரிதும் தெளிவடையும். உடலில் சிறிது தெம்புண்டாகி எழுந்து உட்கார்வாள். தாய் தந்தையரின் இந்தச் சலுகையைக் கண்டு தையல் நாயகம் உள்ளூரப் புழுங்கினாள். அவள் பண்ணன் பாடிலியை அழைத்து அவனிடம் மறைவில் தனியாகப் பேசினாள். அவனையும் அவன் மனைவியையும் கடிந்து கொண்டாள். “உன் தொழிலகத்தை எவ்வளவு மேம்படுத்தினேன். உனக்கு நன்றியில்லை. உன் குழந்தையை என் குழந்தையாகப் பாராட்டி, எந்தப் பெண்ணுக்கும் எளிதில் கிட்டாத உயர்குடித்தொடர்பு உண்டு பண்ண என் உழைப்பையும் பணத்தையும் வாரி இறைத்து இருக்கிறேன். அவள் ஓர் ஆண்டிப் பயலுக்காக அத்தனையையும் வெறுத்து உடம்புக்கு நோய் என்று நடித்துப் பாசாங்கு செய்கிறாள், நாடகமாடுகிறாள். உன் மனைவி நான் ஏதோ உன் குடும்பத்தைக் கெடுக்க முனைந்ததாக எண்ணி என்னைக் கண்டு நடுங்குகிறாள்; கண்ணீர் வடிக்கிறாள். எனக்கு ஏன் இந்த வம்பெல்லாம்? நான் இனி உன் குடும்பத்தில் காலடி எடுத்து வைக்கப் போவதில்லை. வேறு எந்த ஏழைப்பெண்ணையாவது எடுத்து வளர்த்தால் அதனிடமிருந்தும் அதன் குடும்பத்தாரிட மிருந்தும் நன்றியும் பாராட்டுமாவது எனக்குக் கிடைக்கும்” என்று கூறிவிட்டுச் சரேலென்று வெளியேறினாள். மனைவி செய்ததே சரியென்று கணவனும் வெளியேறத் தொடங்கினான். பண்ணன்பாடிலி அண்ணன் அண்ணி இருவர் கால்களிலும் விழுந்தழுதான். என் மனைவியையும் மகளையும் நான் சரிசெய்துகொள்கிறேன். அவர்கள் உங்கள் சொல் கேளாவிட்டால், அந்த ஆண்டியுடன் அவர்களையும் வெளியேற்றி நானாவது உங்களுக்கேற்றபடி நடந்து கொள்கிறேன். நீங்கள் வெளியேற வேண்டாம்” என்றான். பக்கத்துறையிலிருந்து இவற்றைக் கேட்டுக் கொண்டிருந் தான் அருண்மொழி. அவனருகிலேயே அன்பரசி நின்றிருந்தாள். சிறிது நேரம் இருவர் உள்ளங்களும் விம்மிவெடித்துவிடும் போலிருந்தன. ஆனால் அருண்மொழியின் உள்ளத்தில் தான் குமுறல் மிகுதியாயிருந்தது. இதை அன்பரசி அறிந்து உருகினாள். அன்பரசியின் பாசம் ஒருபுறம், தன்மானம் ஒருபுறம் அருண்மொழியின் உள்ளத்தில் போராடின. இந்தப் போராட்டம் பெரிதானாலும் அது முடிவுற ஒரு கணமே பிடித்தது. அதன்பின் அவன் திடுமென நிமிர்ந்து நின்றான். “எனக்காக உன் தாய் தந்தை ஆண்டியைப் பின்பற்ற வேண்டாம், வெளியேறவும் வேண்டாம். நான் போகிறேன். உயிரை விட்டுப் போகும் உடல்போலப் போகிறேன். என்னை மன்னித்துவிடு” என்றுகூறி அவன் தட தடவென வெளியேறினான். “என்னைவிட்டு எப்படிப் போகிறது என் உயிர்?” என்று கூறி அன்பரசியும் அவன் செல்லும் திசையில் காலடி எடுத்துவைத்தாள். ஆனால் நோயும் துயரமும் ஏற்கெனவே அவள் ஆற்றலைக் கெடுத்திருந்தன. அவள் படிதடுக்கிக் கீழே விழுந்தாள். முன்னே சென்ற அருண்மொழி அதைக் காண வில்லை. அவன் செல்லும் திசையறியாமல் பித்தன் போல நகர்த் தெருக்களின் வழியே சென்றான். சரேலென்று நகர் கடந்து பின்னும் நடந்து கொண்டேயிருந்தான். கீழே விழுந்த அன்பரசி எழுந்திருக்கவில்லை. மூக்கிலிருந்தும் உதட்டிலிருந்தும் குருதி பெருக்கெடுத்தோடிற்று. தாயும் தந்தையும் மட்டுமன்றிப் பண்ணன் சேந்தனும் அவன் மனைவியும்கூடத் திடுக்கிட்டு அவளைத் தூக்கி எடுத்துப் படுக்கையில் கிடத்தினர். பண்ணன் சேந்தன் விரைவில் ஓடிச்சென்று மருத்துவர் பலரை அழைத்து வந்தான். தையல் நாயகம் கோவெனக் கதறியழுது அன்பரசியை மடிமீது வைத்து உணர்வு வருவிக்க முயன்றாள். ஆனால் பண்ணன்பாடிலியும் பேசவில்லை. பாடுமாங்குயிலும் மூச்சுவிடவில்லை. இருவர் உள்ளங்களிலும் இருவேறுவகைப்பட்ட போராட்டங்கள் நிலவின. பண்ணன்பாடிலி பாசத்துடன் பணத்தையும் பகட்டையும் போட்டியிட விட்டான். ஆனால் பாடுமாங்குயில் நெஞ்சம் அண்ணன் அண்ணி நினைவில் ஆழ்ந்து சோர்ந்திருந்தது. அன்பரசிக்கு மெல்ல மெல்ல உணர்வு வந்தது. ஆனால் இயல்பான உணர்வு முற்றிலும் வரவில்லை. ‘அருள், என் உயிர் என்னைவிட்டு எங்கோ போய்விட்டது’ என்ற ஒரு வாசகம் மட்டும் மீண்டும் மீண்டும் அவள் உதடுகளில் மெல்ல முணுமுணுத்தன. பின் அவள் அடங்கினாள். எவர் பேச்சுக்கும் அவள் மறுபேச்சுப் பேச வாய் திறக்கவில்லை. அவள் கண்கள் இமையாது நின்றன. ஆனால் முன் நிற்பவரையே அவள் அடையாளம் கண்டதாகத் தெரியவில்லை. தாயோ தந்தையோ அவளருகில் வந்து ஆதரவுடன் பேசியபோதுகூட அவள் ஒன்றும் வாயாடவில்லை. ஆளடை யாளம் காணமுடியாததுபோல் திருதிருவென விழித்தாள். ஒரு தடவை தாய் பெருமூச்சுவிட்ட சமயம் அவள் ‘நீ யாரம்மா’ என்று அவளை நோக்கிக் கேட்டாள். இது காணத் தாய் உள்ளம் விம்மி விம்மி அழுதது. மருத்துவர் வந்து வந்து போயினர். தம்மாலான வகையிலெல்லாம் நாடி பார்த்தனர். மருந்து கொடுத்தும் பார்த்தனர். நோய் இன்னதென்றே எவருக்கும் பிடிபடவில்லை. மருந்தோ உணவோ நீரோ எதுவும் உட்கொள்ளாமலே அவள் நாட்கள், வாரங்கள் படுக்கையில்கிடந்து புரண்டாள். வெளியே சென்ற அருண்மொழியும் எங்கே செல்வதென்றறியாமல் கால் சென்ற இடமெல்லாம் சுற்றினான். ஊணுடை உறக்கம் ஒழித்து அவன் பித்தன் போலானான். அவனைக் காண மக்கள் சிலர் அஞ்சினர். வேறு சிலர் இரங்கினர். சில காலம் அவன் களக்காட்டில் சென்று திரிந்தான். சில நாட்கள் வாரியூர் வந்தே தெருத் தெருவாகச் சுற்றினான். மாமன் கடையருகிலோ தையல்நாயகம் வீட்டருகிலோ அவன் செல்வதில்லை. ஆனால் அடிக்கடி அன்பரசியின் வீட்டின் பக்கம் வட்டமிட்டான். அவன் நிலையறிந்து நண்பர், சுற்றத்தார் பண்ணன் பாடிலியிடமோ பாடுமாங்குயிலினிடமோ வந்து கூறினர். பண்ணன்பாடிலியும் எதுவும் பேசாமல் இருந்து வந்தான். பாடுமாங்குயில் மகளை நோக்கியும் சுற்றுமுற்றும் நோக்கியும் பெருமூச்சு விடுவாள். ஆனால் தையல்நாயகி இவை கேட்டு முன்னிலும் குமுறினாள். “இதெல்லாம் மகளும் தாயும் நடிக்கிற பாசாங்கு நாடகங்கள். நோய்நொடி என்றால் மருத்துவருக்குப் புரியாமலா போகும்? மேலும் தாயை மகளுக்கு அடையாளம் தெரியவில்லையாமே! நாட்கணக்கில் உணவு நீர் இல்லாமல் உயிருடன் வதங்குகிறாளாமே! இவற்றை யாராவது எப்போதாவது கேட்டதுண்டா? எல்லாம் பித்தலாட்டம், வெறும் பித்தலாட்டம்!” என்று அவள் எரிந்து விழுந்தாள். மகள் மனைவி ஆகியவர் நிலைபற்றி பண்ணன் பாடிலி அவ்வளவு கவலைப்படவில்லை. ஓர் ஏழை உறவினனுக்காக அண்ணன் அண்ணி ஆகியோர் மனத்தை அவர்கள் இவ்வளவு புண்படுத்துகிறார்களே என்று மட்டும் அவன் நொந்து கொண்டான். ஒருநாள் திடுமென அருண்மொழி அன்பரசியின் வீட்டுக்குள் வந்து அவள் அறையினுள் நுழைந்தான். அச்சமயம் வீட்டில் பாடுமாங்குயிலைத் தவிர வேறு யாரும் இல்லை. அவள் அவனைத் தடுக்கவில்லை. மகள் நிலையில் அது தேவைப்படுவ தாகவும் அவள் கருதவில்லை. ஆயினும் மகள் பற்றிய கவலையில் கூட அவன் தோற்றம் கண்டு அவள் இரக்கப்படாமல் இருக்க முடியவில்லை. “போ, அருள்! போய்ப் பார்! நீ போன பின் அன்பு இருக்கும் காணச் சகியாத காட்சியைச் சென்று பார்! இப்படி யாயிற்றே என் பிள்ளையின் நிலை!” என்று அவள் பொருமினாள். “அன்பு! அன்பு!” என்று அலறியவாறு அருண்மொழி அறையினுள் புகுந்தான். முதலில் எல்லாரையும் பார்ப்பது போலவே அன்பரசி அவனையும் பரக்கக் கண்ணுருட்டிப் பார்த்தாள். ஆனால் மீண்டும் மீண்டும் அவன் அவள் பெயர் கூறி அழைத்தபோது அவள் கண்கள் திடீரென இயற்கை ஒளி வீசிற்று. அவள் முகமெல்லாம் புன்முறுவல் எழுந்தது. “ஆ, நீயா-நீங்களா, அருள்!” என்றாள். தாய் அவள் நல்லுணர்வு கண்டு மகிழ்வுடன் வந்து அவளைக் கட்டிக் கொண்டாள். “என்னை உனக்குத் தெரிகிறதா அம்மா?” என்றாள். “ஏன் அம்மா இப்படிக் கேட்கிறாய்? எனக்கு அப்படி என்ன வந்தது” என்று அன்பாகத் தாய் பக்கம் திரும்பிக் கேட்டாள். அழுத குரலில் தாய் யாவும் கூறினாள். அன்பரசி வியப்பார்வத்துடன் தாயையும் அருளையும் மாறி மாறி நோக்கினாள். பின் அருண்மொழியை நோக்கி, ‘இனி என்னைவிட்டுப் போய்விட மாட்டீர்களே!’ என்றாள். “அன்பு, நானா உன்னை விட்டுப் போனேன்? உன்.....” அன்பரசி முகத்தில் எழுந்த கறுப்பு நிழல் கண்டு பாடு மாங்குயில் அருண்மொழியின் வாயைப் பொத்தினாள். “போதும் அருள்! இனி நீ போகக் கூடாது. போனால் அவளை நான் இழந்துவிடுவேன்” என்றாள். “அப்படியானால் நான் கட்டாயம் போகவில்லை அத்தை!” என்றான் அருண்மொழி. இம்மறுமொழி அன்பரசியின் உடலையும் உள்ளத்தையும் ஒரு நொடியில் முன்னிலைக்கே கொண்டுவந்து விட்டது. இடையே எதுவும் நடக்காததுபோல் அவள் அருண்மொழியின் கையை வருடினாள். “நீங்கள் சற்று இருங்கள், உங்களுக்கு நான் சிற்றுண்டி தருவிக்கிறேன்,” என்றாள். பாடுமாங்குயிலால் இது கேட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அன்று பாடுமாங்குயில் தன் கணவனைக் கரையாத வண்ணம் கரைத்துப் பார்த்தாள். “குழந்தை மாதக் கணக்காகக் கிடந்த கிடை உங்களுக்குத் தெரியுமே! அருள் வந்தவுடன் அவளுக்குப் போன உயிர் வந்துவிட்டதையும் பார்த்தீர்கள். மருமகனுக்காக அல்லவானாலும், மகள் உயிர் காப்பாற்றுவதற் காகவாவது அவள் விருப்பப்படி விட்டு விடுங்கள்” என்று அவள் கணவன் நாடியைப் பிடித்துத் தங்கினாள். “என் அண்ணியிடமே சொல்லிப் பார்! அவள் சொல்லை நான் தட்டிவிட முடியுமா? அதைவிட எனக்கு இந்த மட்டிப் பெண்ணின் உயிர்கூடப் பெரிதல்ல” என்று வழக்கமான உணர்ச்சியற்ற நிலையில் அவன் கூறிவிட்டான். பலநாள் அலைந்த அலுப்பால் அருண்மொழி அன்றிரவு அயர்ந்து உறங்கினான். ஆனால் உறக்கத்திடையே ஒரு மென்கரம் அவனை மெல்லத் தட்டி எழுப்பிற்று. அன்பரசி இரவெல்லாம் உறங்காது விழித்திருந்தாள் என்பதை அவள் முகம் அவனுக்குக் காட்டிற்று. “என்ன அன்பு! ஏன் நள்ளிரவில் விழித்திருக்கிறாய்? என்ன செய்தி” என்று கலவரத்துடன் கேட்டான் அருண்மொழி. “அன்பரே, உம் பாசத்தின் ஆழத்தை நானும் என் அன்பின் ஆழத்தை நீங்களும் உணர்ந்து கொண்டதுபோல, இருவர் தொடர்பின் ஆழத்தை அம்மா நன்கு உணர்ந்து கொண்டிருக் கிறாள். அவள் எப்போதும் நம்பக்கமே என்பதை நான் அறிவேன். ஆனால் இப்போது அப்பாவிடம் அவள் நமக்காகக் கல்லும் உருகும்படி மன்றாடி வாதாடியது கேட்டேன். ஆயினும் இரும்பாகியிருந்த அப்பாவின் உள்ளம் இப்போது எஃகாகி யிருக்கிறது. கல்லான பெரியம்மையின் உள்ளத்தின் உறுதி அதை வைரமாக்கிவருகிறது. இந்நிலையில் இனி நமக்குப் போக்கிடம் இல்லை. என் உயிர் இனி என்னை விட்டுப்போக வேண்டியது தான். நான் இனி என்ன செய்வேன்?” என்று அன்பரசி மறுகினாள். அவன் முகம் அந்தக் கணமே மீண்டும் விளறத் தொடங்கிற்று. தன் துடிப்பை மறந்து அவன் அவள் ஆராத்துயர் ஆற்ற முனைந்து கண்ணீர் துடைத்தான். “நீ வருந்தவேண்டா அன்பு! நான் இனி என் தன் மதிப்பைப் பெரிதாகக் கருதி முன்போல் உன்னைவிட்டுச் செல்லப் போவதில்லை. என்ன நேர்ந்தாலும் உன்னுடனே இருக்கத் துணிந்து விட்டேன். உன் உயிர் இனி உன்னைவிட்டுப் போகாது” என்றான். அவள் அவனை ஆர்வமுடன் வாரி அணைத்துக் கொண்டாள். ஆனால் முகத்தில் படர்ந்த வெள்ளொளி ஒருசிறிதுதான் அகன்றிருந்தது. அவள் குரல் இற்ற வீணையின் நாதம் போலக் கரகரத்தது. “உங்கள் தன்மதிப்பு இனி என் தன் மதிப்பு, நீங்கள் போகத்தான் வேண்டும். அதுமட்டுமல்ல. நீங்கள் போகும்போது இனி நான் உங்களைப் பின் தொடரமாட்டேன். ஏனெனில் உங்களையும் என்னையும் ஒருங்கே உயிர்போல் நேசிக்கும் என் தாயை நாம் தனியாக விட்டுச்செல்லப்படாது. ஆயினும் என் உடல் இங்கே கிடக்க, உயிர் உங்களை விரைந்து தொடரும். ஆகவே நீங்கள் விடியுமுன்பே என்னை விட்டகலும்படிதான் உங்களை வேண்டா வெறுப்புடன் கேட்டுக்கொள்ள வேண்டியவளாகிறேன்” என்றாள். அவள் சொல்லின் பொருள் அவனுக்கு விளங்கவில்லை. அவன் விளக்கம் நாடவும் இல்லை. அவன் தலை சுழன்றது. அவள் கெஞ்சும் குரலுக்கு அவன் எதுவும் செய்திருப்பான். உயிரும் கொடுத்திருப்பான். அதன் ஆற்றலை அவன் உணர்ந்தான். ஆனால் முதல் தடவையாக அதன் முன் அவன் நடுங்கினான். அவள் முகத்தில் மாறுதல் எதுவுமில்லை. அது வரவர வெளிறிக்கொண்டு மட்டும் வந்தது. அவன் எழுந்தான். கைகள் கைகளைப் பற்ற முனைந்தன. அவள் கைகள் தந்தியடித்தனவேயன்றிப் பற்றவில்லை. ஆனால் அவள் மீண்டும் “தயங்கவேண்டாம், அன்பரே, நான் தான் கூறினேனே, என் உயிர் உங்களைத் தொடரும் என்று. ஒரு பகல் ஒருநாள்தான் நீங்கள் தனியே செல்கிறீர்கள். அதற்குள் என் திட்டம் நிறைந்துவிடும்” என்றாள். அவன் ஒருமுறை மீண்டும் தன் அவாவெல்லாம் தீர அவள் முகத்தை நோக்கினான். தள்ளாடிய நடையுடன் திரும்பிப் பார்க்கக் கூடத் துணியாமல் தயங்கித் தயங்கி நடந்தான். வாரியூர் எல்லை கடக்கும்போது பொழுது விடிந்தது. “ஒரு பகல் ஓர் இரவு! அதற்குள் என் உயிர் உங்களைத் தொடரும்.” இதன்பொருள் அவனுக்கு விளங்கவில்லை. ‘அந்தோ அதற்குள் அவள் உயிர்விட எண்ணியல்லவா என்னைப் போக்கியிருக்கிறாள்? என்ன செய்தேன்? அந்த விளறிய முகத்தின் கெஞ்சுதலுக்குத் தெரியாமல் இணங்கிவிட்டேனே” என்று புழுவாய்த் துடித்தான். ஆனால் அதே முகத்தின் நிழல் அவனை மேன்மேலும் முன்னே தள்ளிற்று. “அவள் உயிர் போயிற்று என்று கேட்டால், நானும் உடனே உயிர்விடுகிறேன். இது தான் இனி எங்கள் முடிவு!’ என்று தனக்குள் கூறியவாறு நடந்தான். அவன் உள்ளம் உயிரையும் வெறுத்தது, உலகையும் வெறுத்தது; அவன் நடையைத் தட்டிவிட்டான். ஒருபகல் கழிந்தது. அவன் வாரியூரடுத்த காட்டைத்தான் கடந்திருந்தான். அவன் எதிரே ஒரு கானாறு குறுக்கிட்டது. மலைமீது மேகங்கள் கவிந்தகாலம் அது. ஆறு இருகரையும் புரண்டு பெருமிதத் தோற்றத்துடன் ஓடிற்று. ஆற்றைக் கடக்கப் படகு வேண்டும். அந்த முன்னிரவிலும் அங்கே ஒரு படகு ஆளற்ற நிலையில் கிடந்தது. அதனருகே ஒரு பெண் மட்டும் நின்றாள். “நீ யார்? படகு யாருடையது?” என்று கேட்டான். ‘அது என் கணவன் படகுதான். விடியுமுன் அவர் வந்து விடுவார். நான் படகுக்குக் காவல் இருக்கிறேன்’ என்றாள். இரவு கழிந்தால், ஆற்றை மட்டுமல்ல, உலக வாழ்வையே கடந்துவிட ஒருப்பட்டான் அவன். பொழுது விடிந்தது. ஆயினும் படகோட்டி வரவில்லை. ஆனால் அவன் கையில் பெண் ஒரு முடங்கல் கொடுத்தாள். வியப்புடனும் துடிதுடிப்புடனும் அவன் அதைப் பிரித்து வாசித்தான். ‘ஒரு பகல் ஓர் இரவு கழிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஒரு பகல் இருந்து பின் ஆறு கடக்கக் கோருகிறேன்.’ - அன்பு. “படகோட்டியின் மனைவி யார்? இந்த முடங்கல் அவள் கையில் எப்படி வந்தது?’ என்று அறியாமல் அவன் மலைத்தான். ஆனால் அன்பரசியின் கையெழுத்து அவனுக்குச் சிறிது தெம்பளித்தது. அந்தப் போகா நெடும்பகலைப் படகைச் சுற்றி அங்குமிங்கும் உலாவிக் கழித்தான். படகோட்டியின் மனைவியும் படகையோ அவனையோ கண்ணிலிருந்து மறையவிடாமல் அப்பக்கமே நடமாடி வந்தாள். இரவாயிற்று. பெண் அவனிடம் படபடப்புடன் வந்தாள். ‘படகோட்ட என் கணவர் வரவில்லை. நீங்களே இனி ஓட்டலாம். மறு கரையில் அதை மரத்தில் கட்டிவிட்டுப் போங்கள். என் கணவர் எடுத்துக் கொள்வார்’ என்றாள். அவனுக்கு எல்லாம் புதிர்மேல் புதிராயிருந்தது. படகை அவன் கட்டவிழ்த்தான். தண்டைக் கைப்பற்றினான். அவன் கைத்தண்டை உடைக்கவில்லை. அன்பரசி இருக்கும் பகுதி கடந்து மறுகரை செல்ல அவன் தயங்கினான். அன்பரசி சொன்ன சொல் என்ன ஆயிற்றோ? அவளைப் பற்றிய செய்தி ஒன்றும் தெரியவில்லையே’ என்று தனக்குள் கூறிக் கொண்டான். ‘நான் இதோ வந்து விட்டேன்’ என்ற குரல் கேட்டு அவன் திரும்பினான். அவன் திகைத்தான். மறுகணம் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்தான். ஏனெனில் அன்பரசியே முழங்காலளவு நீரில் இறங்கி நின்று படகில் ஏற முயன்று கொண்டிருந்தாள். ஒரு கணத்தில் அருண்மொழியின் உதவியால் அவள் படகில் ஏறியமர்ந்தாள். படகு இரவில் அமைதி கிழித்து நீரில் அம்புபோல் விண்மீன்கள் நீரில் ஒளி நிழல்களாகப் படர்ந்தன. ‘நீ எப்படி வந்தாய், அம்மா என்ன செய்கிறாள்’ என்ற பல கேள்விகள் அவன் உதட்டில் எழுந்தன. ஆனால் அவள் தன் இதழ் பொத்திக் காட்டி அவன் உதடுகளை மூடினாள். அவன் உள்ளத்தின் உணர்வு அதற்குமேல் அவளிடம் எதுவும் கேட்கவிடவில்லை. பெற்றோரைப் பற்றிய கவலை இல்லாதவளாகவே அவள் அவனுடன் சென்றாள். அவள் கவலைப்படாததறிந்து அவனும் அவர்களைப் பற்றிய கேள்விகளையும் எண்ணங்களையும் மெல்ல மெல்ல மறந்தான். மானாடு என்ற ஊரில் இருவரும் தங்கி, அந்தண்மைமிக்க ஆன்றோர் ஒருவர் தலைமையில் திருமணம் செய்துகொண்டனர். ஆண்டு ஒன்று இரண்டு மூன்று என்று அகன்றது. ஆடலழகன், பாடுமாங்குயில் என்ற இரு வாய்பேசா எண்ணங்களின் நிழல்களாக அதேபெயர்களுடன் இரு செல்வங்கள் அவர்கள் மடிகள்மீது மாறிமாறித் தவழ்ந்தன. ஒரு தலைமுறை கடந்து அருண்மொழியின் தந்தையும் அன்பரசியின் தாயும் அவர்கள் முன் வந்து தம் பாசவலையை மீண்டும் விரித்தது போலிருந்தது. அருண்மொழி ஒருநாள் கடைத்தெருவில் ஏதோ ஒரு பொருளை விலை பேசிக்கொண்டிருந்தான். ஆனால் கடைக்காரன் விலைபேசுவதை நிறுத்தி அருண்மொழியை ஏற இறங்கப் பார்த்தான். ‘ஆ, நீ அருளல்லவா? இங்கே எப்படி வந்தாய்?’ என்று கேட்டான். அருண்மொழி ஓரளவு தன் நிலையை விளக்க முற்பட்டான். ஆனால் பேச்சு நடுவிலேயே கடைக்காரன் எழுந்து புலி கண்டவன் போல மிரளமிரள விழித்தான். அருகில் நின்றவர்கள் இதுகண்டு திகைத்தனர். அவன் அவர்களை நோக்கித் தழுதழுத்த குரலில் உளறினான். “அன்பர்களே! இவன் அத்தைமகளை மணஞ்செய்ய எண்ணி, அது கைகூடப் பெறாமல் பித்தனாய் அலைந்தான். ‘பித்தம் தெளிந்து விட்டது போலிருக்கிறது’ என்றெண்ணி இவனிடம் பேச்சுக் கொடுத்து விட்டேன். ஆனால் பித்தம் முற்றியிருக்கிறது. இவனை இப்போதே அரசியலாரிடம் ஒப்படைக்க வேண்டும். நீங்கள் எல்லாம் உதவி செய்யுங்கள்’ என்றான். அருண்மொழிக்கு எதுவும் விளங்கவில்லை. ‘அத்தை மகளையே மணஞ் செய்து இரண்டு பிள்ளைகூட எனக்கு இருக்கிறது. எனக்குப் பித்தம் எதுவும் இல்லை. வேண்டுமானால் வீட்டில் வந்து பாருங்கள்” என்றான். கடைக்காரன் வாரியூரிலிருந்து புதிதாக வந்து கடை வைத்தவன். அவன் தன் பேச்சுக்கு விளக்கம் தந்தான். “நண்பர்களே இவர் சொல்வதுகூட எனக்குப் புரியவில்லை. வாரியூரிலிருந்து நான் வந்து இரண்டு நாட்கள்தாம் ஆகின்றன. இவன் அத்தைமகள் அங்கே உயிர் வெறுத்து மரக்கட்டையாய்க் கிடக்கிறாள். தாய் தந்தையர் துடிதுடித்து, இவனைக் கண்டுபிடித்து மணஞ் செய்ய எண்ணி எங்கும் தேடுகின்றனர். இங்கே இவன் மணம் செய்து பிள்ளைகள் பெற்றிருப்பதாகக் கூறுகிறான். நான் எதை நம்புவது” என்றான். அருண்மொழி யார் என்று தெரியாவிட்டாலும், அவனுக்கு இரு குழந்தைகள் இருப்பதை மானாட்டார் பலர் அறிந்திருந்தனர். ஆகவே அவர்கள் அவன் பக்கம் பேசினர். அருண்மொழிக்குத் திடுமென ஒரு புதிய ஐயம் எழுந்தது. அவன் ஊராரை விலக்கி, கடைக்காரரையே வீட்டுக்கு இட்டு வந்தான். வீட்டில் அன்பரசியையும் குழந்தைகளையும் கண்டு கடைக்காரன் உண்மையிலேயே மிகவும் திகில் கொண்டான். அன்பரசியாய் வந்து மாமன் மகனுடன் வாழ்வது அவள் ஆவி யுருவமாயிருக்குமோ? என்று ஐயுற்றான். அதை மெல்ல அருண்மொழியின் காதிலும் முணு முணுத்தான். அன்பரசி இதைக் குறிப்பாய் அறிந்தாள். அவள் கடைக்காரனை நோக்கிப் புத்தம் புதிய விளக்கம் தந்தாள். “அண்ணா! உங்கள் திகில் அபாயமானது! என் கணவர்கூட அதை நம்பிவிடப் போகிறார். ஆனால் ஆவிகள் உண்டு என்ற நம்பிக்கை உண்மை அறியாத இடத்தில்தான் வெற்றிபெறும். நான் என் கணவனை அடைவதற்காகச் செய்த திட்டத்தை என் கணவக்குக்கூட நான் இது வரை கூறவில்லை. அது என் தாய்க்கு மட்டுமே தெரியும். அவள் நன்மை கோரித்தான் இந்த மறைநாடகம் நடத்த வேண்டி வந்தது. “நான் இல்லாமல் என் துணைவரோ, துணைவர் இல்லாமல் நானோ வாழ முடியாது. இதை என் தாய் அறிந்திருந்தாள். அதே சமயம் என் தந்தையை மீறி நான் நடக்க என் தாய் விரும்பவில்லை. இதனால் நான் ஒரு திட்டம் செய்தேன். என்னைப் போலவே தோன்றும்படி ஓர் உயிர்ச் சிலையை அருங் கலைஞன் ஒருவனைக் கொண்டு ஒரு நாளில் செய்வித்தேன். ஏற்கெனவே நான் சிலைபோல் கிடந்தவளாதலால், சிலையை அங்கே தாயிடம் விட்டு, என் துணைவனுடன் வெளியேறினேன். “என் தாய் நான் இல்லாமல் எவ்வளவு துன்பம் அடைந்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். ஆயினும் நான் எங்கிருந்தாலும் நல்வாழ்வு வாழ்வது எண்ணித்தான் உயிருடன் இருக்கிறாள். அதேசமயம் இது தெரியாத என் தந்தைக்குத் தாய்மீது புதிய சீற்றத்துக்கு இடமில்லாமல் போயிற்று. அத்துடன் நீங்கள் கூறுவதிலிருந்தே என் மறை திட்டம் இன்னும் மறைவாகவே இருக்கிறது என்றும், என் தந்தை மனமாற்றம் அடைந்து விட்டார் என்றும் அறிகிறேன். ஆகவே இனி நான் தாய் துயர் முற்றிலும் அகற்றித் தந்தை மயக்கமும் மாற்றிவிட வேண்டும். உங்களுடனேயே நாளை எங்கள் குழந்தைகளுடன் நாங்கள் அங்கே செல்வோம்” என்றாள். கடைக்காரனும் ஊர்மக்களும் கூட அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஆனால் வாரியூரில் பாடுமாங் குயிலும் பண்ணன் பாடிலியும் அடைந்த புது மலர்ச்சி இதனினும் பெரிது. பாடுமாங்குயில் சின்னஞ்சிறு பாடுமாங்குயிலையும், பண்ணன் பாடிலி சின்னஞ் சிறு ஆடலழகனையும் தணியாத ஆர்வத்துடன் எடுத்து வைத்து மகிழ்ந்தனர். அன்பரசிக்கு மற்றும் மூன்று செல்வர்கள், இரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தனர். ஆண் செல்வங்களுக்குப் பண்ணன் சேந்தன், பண்ணன் பாடிலி என்றும், பெண்செல்வத்துக்குத் தையல் நாயகம் என்றும் பெயரிட்டு வளர்த்தனர். பண்ணன் சேந்தனும் தையல்நாயகமும் தங்கள் உயர் ஆரவார அவாவால் நேர்ந்த தீங்குகளை எண்ணி மனமாறி, புதுமரபுச் செல்வங்களைக் கண்டு மகிழ்ந்தனர். 3. பண்பார்ந்த செல்வி காந்தளூரெங்கும் ஒரே பரபரப்பு. பழந்தீவு சென்று குடியேற விரும்பும் பரதவர் ஒவ்வொருவருக்கும் அங்கே பத்துக் காணி புது நிலம் இலவசமாக அளிக்கப்படும் என்ற அரச விளம்பரம் எங்கும் முரசறையப்பட்டிருந்தது. புது நிலத்துக்குப் பத்து ஆண்டுகள் வரி கிடையாது. அதன் மேல் ஐம்பதாண்டுகளுக்குப் பாதிவரி தள்ளிக் கொடுக்கப்பட்டது. ஊர்க் கோடியிலிருந்த கடற்படை அரங்கத்தில் பலர் வரிசை வரிசையாக நின்று, தம் பெயரைக் குடியேறுபவர் பட்டியலில் பதிவு செய்து கொண்டிருந்தனர். பெயரைஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டவர்களில் பைஞ்ஞீலி என்ற ஓர் இளம் பெண்ணும், பொன்னாவிரை என்ற ஓர் இளைஞனும் இருந்தனர். இருவருமே தாய் தந்தையற்றவர். நெருங்கிய உறவும் பாசநேசமும் உடையவர். ஆகவே இருவரும் ஒருங்கே பழந்தீவுக்குக் கலமேற விரும்பினர். ஆனால், பைஞ்ஞீலியைப் பாதுகாத்து வந்த முதுகணாளர் அவள் அம்மானான வாரியர் வள்ளத்தோள். அவர் புதிய சோழர் கடற்படையிலும் பதவி வகித்தவர். ஆகவே அவளுக்கு அவர் கலத்தில் எளிதில் ஓர் இடம் பெற்றுத் தந்தார். ஆயினும் பொன்னாவிரை அவளுடன் போவதை அவர் விரும்பவில்லை. ஆகவே அவனுக்கு இடம் பெற்றுத்தர மறுத்தார். பயண நேரத்தில் இது இருவர் மகிழ்ச்சியையுமே குலைத்தது. ஏனெனில் நங்கை கலமேறிப் பழந்தீவிலும், நம்பி கலமேறாமல் இப்பால் தமிழகத்திலும் தங்கவேண்டியதாயிற்று. பைஞ்ஞீலிக்கு அப்போது வயது பதினான்கு. அவள் பெயருக்கேற்றபடி அவள் தோள்களிலும் முதுகிலும் அலையலையாகச் சுருண்டு புரண்ட தலைமுடி ஒரே பசுநீல நிறமாய் இருந்தது. விழிகளும் அதே நிறமாய்ப் பைங்குவளை மலர்கள்போல் விளங்கின. அவள் முகமோ பாலாடையில் பொதிந்த முழுமதிபோல் இளமைநலம் வாய்ந்திருந்தது. பொன்னாவிரையைப் பிரிந்து செல்வதனாலுண்டான துயரம் அவள் அழகை இன்னும் பெருக்கிக் காட்டிற்று. பைஞ்ஞீலியின் தூய வெண்ணிலா மேனிக்கிசைய, பொன்னாவிரையின் மேனி பத்தரை மாற்றுச் செம்பொன்னைப் பழிப்பதாய் இருந்தது. அவள் பசுநீல முடிகளின் அமைதியுடன் செம்பொன்னிறம் வாய்ந்த அவன் இளமுடி போட்டியிட்டது. பைஞ்ஞீலியின் துயரைவிட அவன் துயர் குறைந்த தல்லவாயினும் அவளைத் தேற்றும் முறையில் அவன் தன்னையடக்கிக் கொண்டு இன்னுரையாடி இருந்தான். கலத்திலேயே பைஞ்ஞீலி கலம் துறைமுகம் கடந்து செல்லுமளவும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவனும் துறைமுகத்திலிருந்து கலத்தையே கவனித்து நின்றான். பைஞ்ஞீலியின் முகம் கலத்தின் நிழலிலும், கலம் கடலலை களிலும் மறைந்து நெடுநேரம் ஆகும்வரை அவன் கடல் துறையைவிட்டு அகலவேயில்லை. மாதம் தவறாமல் தாயகத்துக்கு வரும்போது அஞ்சல் தூதர் மூலம் பைஞ்ஞீலி தன் ஆராத் துயரைப் பொன்னாவிரைக்குத் தெரிவித்தாள். பொன்னாவிரையும் அதுபோலவே தன் ஆறுதல் மொழிகளைப் பைஞ்ஞீலிக்குத் தெரிவித்தான். கடும் உழைப்பால் காசு திரட்டிக்கொண்டு பழந்தீவுக்கு விரைந்து செல்ல அவன் எண்ணியிருந்தான். அதுவரை தன் பங்குக்குரிய நிலத்தை அவளே பயிரிடும்படி கூறி, அதற்கான தன் ஆணைப் பத்திரத்தையும் அவன் அவளுக்கு அனுப்பி வைத்தான். பயணத்துக்கு வேண்டிய தொகையைத் தானும் தன்னாலியன்றவரை திரட்டி அனுப்ப முயல்வதாக அவளும் எழுதியிருந்தாள். அலைகடலின் எல்லையற்ற பரப்பு அவர்கள் இருவரையும் பிரித்தது. ஆனால் தனித்தனியே தொலைவில் இருந்த ஒரே இதயத்தின் இருபாதிகளாக அவர்கள் ஒருவரை ஒருவர் நினைத்த வண்ணம் நாட்கழித்தனர். சேரநாடு அன்று சோழர் காலடியில் கிடந்தது. இரண்டு தலைமுறைப் போராட்டங்கள் காரணமாக நாட்டில் கோர வறுமையும் பஞ்சமும் தாண்டவமாடின. அந்நிலை ஒழித்துச் செழுமையும் வளமும் பரப்பச் சோழர் எவ்வளவோ முயன்றும் விரைந்த பயன் எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் சோழர் ஆட்சி அச்சமயம் நாடுநாடாக எல்லையற்றுப் பரந்துக்கொண்டே யிருந்தது. போரில் செலுத்திய அதே அளவு கவனத்தைச் சோழர்கள் மக்கள் வாழ்வில், சிறப்பாகச் சேரநாட்டு மக்கள் வாழ்வில், செலுத்த முடியவில்லை. இந்நிலையில் பொன்னா விரையின் உழைப்பு அவன் உடலைத் தான் உருக்குலைத்ததே தவிர, அவன் கையிருப்பை ஒரு சிறிதும் பெருக்க முடியவில்லை. ஒரு மாத உழைப்பின்பின் அவன் பாயும் படுக்கையுமாகக் கிடக்கவேண்டியதாயிற்று. பைஞ்ஞீலிக்கு வழக்கமாக எழுதும் கடிதங்களைக்கூட அவனால் எழுத முடியவில்லை. பிறர் மூலமாக அவன் நிலையறிந்த பைஞ்ஞீலி பாகாய் உருகினாள்; கண்ணீர் வடித்தாள். அவளும் தன்னாலியன்ற மட்டும் கடுமையாகவே உழைத்தாள். ஒரு தனி இளம் பெண் நான்கு ஆண்களின் வேலையைச் செய்வது கண்டு, அயலாரும் உறவினரும் அவளுக்குத் தம்மாலியன்ற உதவிகள் யாவும் செய்தனர். ஆனால் புதுக்குடியிருப்புக்களில் அவரவர் முழு உழைப்பும் அவரவர் வாழ்க்கைக்குத் தேவையாயிருந்தது. பைஞ்ஞீலியாலும் பெருந்தொகை மிச்சப்படுத்த முடியவில்லை. அவளைச் சென்றடையும் நம்பிக்கை இழந்தவனாய் பொன்னாவிரை இங்கே துடித்துக் கொண்டிருந்தான். அவனை வரவழைக்கும் வகை காணாமல் அவனையே எண்ணி எண்ணிப் பைஞ்ஞீலி அங்கே இரவும் பகலும் கண்ணீர் பெருக்கிக் கொண்டே இருந்தாள். பகலின் உழைப்பால் பைஞ்ஞீலி இரவில் ஒரு சில மணி நேரமாவது அயர்ந்து உறங்குவதுண்டு. பொன்னாவிரையைப் பற்றிய எண்ணங்கள் அச்சமயங்களில் இனிய கனவுகளாக அவளைத் தாலாட்டும். எழுந்தபோது அவள் அடையும் ஏமாற்றம் காண்பவருக்குத் துயரம் தருவதாயிருந்தது. ஆயினும் எப்படியோ இக்கனவுகளே அவளுக்கு ஒரு சிறிதாவது தெம்பும் புதிய ஊக்கமும் தராமல் இருப்பதில்லை. ஒருநாள் இத்தகைய இன்பக் கனவிடையே, நள்ளிரவில் அவள் கதவு தடதடவென்று தட்டப்பட்டது. அவள் தூக்கம் முழுவதும் கலையவில்லை. அரைத் துயிலுடனேயே அவள் எழுந்து கதவைத் திறந்தாள். அவள்முன் நடு வயது கடந்த ஒரு முரட்டு வீரன் நின்றான். சற்றுக் கூர்ந்து நோக்கிய பின் அவளுக்கு ஒரு சிறிதே அவன் அடையாளம் தெரிந்தது. அவன் பெயர் சிலம்பன். தாயகத்திலிருந்து அவள் வந்த கலத்தில் அவளுடனேயே வந்தவன் அவன். புது நிலத்தில் இறங்கிய மறுநாளே அவனை அவள் காணவில்லை. இது காரணமாகச் சில நாள் அவன் பெயர் அக்குடியிருப்பில் அடிபட்டிருந்தது. அவள் அவனை நினைவில் வைத்துக் கொண்டிருக்க உதவிய செய்தியும் இதுவே. “ஆ, நீயா? இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய்? எப்படி இந்த நேரத்தில் வர நேர்ந்தது?” என்றாள். “பேச எவ்வளவோ இருக்கிறது. ஆனால் முதலில் வயிற்றுக்கு ஏதாவது கொடு. சிறிது உண்டு இளைப்பாறிவிட்டுப் பேசுகிறேன்” என்றான் சிலம்பன். அவள் சட்டென எழுந்து அவனுக்கு வயிறாரப் பழங்கஞ்சி வார்த்தாள். அத்துடன் சிறிது அப்பமும் கிழங்கு வகைகளும் அளித்தாள். ‘குறை இரவும் தூங்கி எழுந்த பின் காலையிலேயே எல்லாம் பேசிக் கொள்ளலாம்’ என்றாள். அவன் இணங்கவில்லை. “அம்மணி! எனக்கு உண்மையில் பேசக்கூட நேரமில்லை. உன் வரலாறு முழுவதும் எனக்குத் தெரியும். உன் தங்கமான குணத்தையும் நான் அறிவேன். இல்லாவிட்டால் இந்த வேளையில் உன் நன்மையை நாடி இவ்வளவு தொலை வந்திருக்கமாட்டேன். இப்போதே நான் சொல்ல வந்த முக்கியச் செய்தியைக் கூறிவிட்டு விடியுமுன்பே நான் போய்விட வேண்டும்” என்றான். அவள் அப்படியே அவனைப் பேச விட்டாள். “அம்மணி! இந்தத் தீவின் பெயர் பழந் தீவு பன்னீராயிரம் என்பதை நீங்கள் அறியலாமே! சோழர் இந்தத் தீவுகளை ஒவ்வொன்றாகப் பிடித்தடக்கப் பல ஆண்டுகள் ஆயின. ஆனால் இந்தத் தீவிலேயே சோழரால் கண்டுபிடிக்கப்படாமலும், நம் பழஞ் சேரரால்கூடக் கவனிக்கப்படாமலும் ஒரு பெரும்பகுதி இருக்கிறது. அதை இவ்வளவு நாளும் யவன வணிகர் தங்கள் வாணிகத் தளமாகக் கொண்டு மறைந்து வாழ்ந்தனர். இப்போது அவர்கள் கடற் படைகளைச் சோழர் கடற்படை தாக்கி அழித்துவிட்டது. அவர்கள் கிடைத்த பொருள்களைச் சுருட்டிக் கொண்டு தங்கள் தாயகத்துக்கு ஓடிவிட்டனர். சோழ வீரர் கடற் கரையிலேயே இருப்பதால், உள்நாட்டுப் பகுதியில் இன்னும் எண்ணற்ற ஆடுமாடுகள், செல்வங்கள் குவிந்து கிடக்கின்றன. அங்கே செல்பவருக்கு ஏழு தலைமுறைகளுக்கு வேண்டிய வாழ்க்கை வாய்ப்புக்கள் எளிதில் கிடைக்கும். இதை எல்லாருக்கும் சொல்லிப் போகத்தான் வந்தேன். மற்றவர்களுக் கெல்லாம் விடிந்துதான் கூறப் போகிறேன். உன் நல்ல குணத்தை நினைத்து ஒரு நாள் முந்தியே உனக்கு நான் இதைக் கூற எண்ணினேன்” என்றான் அவன். அவள் அவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தாள். ஆனால் இதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்று அவளுக்கு இன்னும் புரியவில்லை. “ஐயா! உம் அன்பு பெரிது. ஆனால் நான் துணையற்ற இளம்பெண். முன்கூட்டித் தெரிந்தாலும் இரவில் நான் எங்கே செல்ல முடியும்? எப்படித் தனியே செல்ல முடியும்? நீங்களோ மற்ற ஊர் நண்பர்களோகூட வருவதாய் இருந்தால் தானே....?” “அது பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அம்மணி, நான் எல்லாருக்கும் நேரே சொல்லக் கூட நேரம் இல்லை. அவர்கள் வேலை செய்யும் இடத்தில் எழுதி வைக்கப்போகிறேன். அவர்கள் அதைப் பார்த்துவிட்டு நாளை இரவோ மறுநாளோ தான் புறப்பட முடியும். அவர்களுக்கு வழியும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் உங்கள் வேலை எளிது. நான் வரும் வழியெல்லாம் கடப்ப மரங்களில் மேல் பட்டையை உரித்துச் சுண்ணம் பூசி வந்திருக்கிறேன். இரவின் இருட்டிலேயே அவை வழி காட்டும். வழி சிக்கலானதுதான். ஒரு மலை ஏறி இறங்கியாக வேண்டும். அது கடந்தபின் இருபுறமும் கடல் அலை பாயும் ஒரு நீண்ட நில இடுக்கைக் கடந்து சென்றாக வேண்டும். ஆனால் இவை கடந்தால் உங்களுக்கு எவ்வளவோ பயனுண்டு. மாடு கன்றுகள், தானிய வகைகள் மட்டுமல்ல; ஆடையணி மணிகள்கூடக் கிடைக்கக் கூடும். முந்திச் செல்வதால் உள்ள முழுப்பயனும் உங்களுக்கு வளமளிக்கட்டும்” என்றான். கடைசி வாசகம் அவள் உள்ளத்தில் புத்தலைகளை எழுப்பிற்று. தன் உயிர் நண்பனை விரைவில் தன்னிடம் வரவழைக்க இது உதவக்கூடும்! இக்கருத்து அவளுக்குப் புது வலிமை தந்தது. அவள் சிலம்பனை வாயார வாழ்த்தி, வீட்டைச் சார்த்திப் பூட்டிவிட்டு இரவோடு இரவாகப் புறப்பட்டாள். முன்னறிவுடன் தன்னிடமிருந்த சில அப்பங்களைச் சுருட்டி எடுத்துக் கொண்டாள். ஒரு நீர்க்கலமும் நீண்ட கத்தியும் அவள் இடையில் தொங்கின. கயிற்றின் ஒரு சிறு சுருளை அவள் அரையில் சுற்றிக்கொண்டு எழுந்தாள். சிலம்பன் கூறிய அடையாளம் அவளுக்கு நன்கு பயன்பட்டது. நள்ளிரவுக்குள் அவள் மலையேறி இறங்கி விட்டாள். ஆனால் நள்ளிரவில் தடம் தவறிற்று. அவள் சுற்று முற்றும் திரிந்து அலுப்புடன் ஒரு மரத்தின்மீது சாய்ந்தாள். அவள் கைகள் அதன் கிளைகளைத் தழுவின. ஆனால் அடுத்த கணம் அவளுக்கு மீன்டும் நம்பிக்கை வந்தது. பிடித்த மரக்கிளையே முறிக்கப்பட்டிருந்தது. கருக்கிருட்டில் சுண்ணத் தடம்கூடத் தெரியவில்லை. ஆனால் அவள் பொறுமையுடன் காத்திருந்தாள். வானத்தில் கவிந்த கருமேகங்கள் அகன்றபின் தடம் மீன்டும் தெரிந்தது. காட்டில் தனியே செல்வதற்கு அவளுக்கு அச்சமாகத்தான் இருந்தது. அத்தீவில் மற்றக் கொடு விலங்குகள் இல்லா விட்டாலும் நாற்புறமும் நரிகளின் ஊளையும் செந்நாய்களின் கூச்சலும் கேட்டன. பொன்னாவிரையின் எண்ணமொன்றே அக்காட்டில் செல்லும் மன உரத்தை அவளுக்கு அளித்தது. ஆனால் நில இடுக்கை அணுகியபோது அவள் அச்சம் இன்னும் மிகுதியாயிற்று. கடலின் அலைகள் இருபுறமிருந்தும் அவள் காலடிகளையே வந்து தழுவின. எங்கே நில இடுக்கில் கடல் பாய்ந்து விடுமோ என்றும், எங்கே இந்தக் குறுகிய நிலத்தில் தடந்தவறித் தான் கடலில் சறுக்கி விழ நேருமோ என்றும் அவள் நடுங்கினாள். ஆனால் கண்ணில் ஆடிய தூக்கச் சோர்வை அகற்றி விழிப்புடன் அடிமேல் அடிவைத்து அவள் நடந்தாள். நில இடுக்கைக் கடந்ததே எல்லையற்ற பெரும்பரப்பில் பசுங் கழனிகள், சோலைகள், அகல் வெளிகள், தனி மனைகள் கண்டு அவள் வியப்படைந்தாள். எங்கும் எவ்வகை அரவமும் இல்லை. ஆனால் அகல் வெளியை அணுக அவள் தயங்கினாள். சிறு சிறு கடல்கள்போல ஆடுகளும் மாடுகளும் அங்கே ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு திரிந்தன. அவற்றினிடையே அச்சமயம் தனியே செல்வது நல்லதல்ல என்று எண்ணி அவள் ஒதுங்கி மனைகளின் பக்கமாகச் சென்றாள். சற்று அகலமான வளைவுக்குள்ளிருந்த ஒரு தோட்ட வீட்டுக்குள் அவள் புகுந்தாள். உள்ளே யாரும் இல்லை. அழகிய குட்டையான ஒரு சிவலைப் பசு மட்டுமே அதில் திரிந்தது. அது வெளியே ஓடிவிடாதபடி கோட்டக் கதவை உள்ளிருந்து தாழிட்ட வண்ணம் அவள் மனைக்குள் சென்றாள். அவசர அவசரமாக ஆட்கள் வெளியேறிச் சென்ற அடையாளங்கள் எங்கும் தெரிந்தன. பாதி உண்ட உணவுடன் கலங்கள் கிடந்தன. பெட்டிகள் பாதி மூடியும் பாதி திறந்தும் காணப்பட்டன. ஆடைகள் அணிமணிகள் தாறுமாறாகக் கலைந்துகிடந்தன. அவசர அவசரமாக ஒரு சிலவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மக்கள் விரைந்தோடியிருந்தனர் என்பது தெள்ளத் தெளிய விளங்கிற்று. நல்லுணவாகச் சிறிது எடுத்து அவள் உண்டாள். தன்னிடமுள்ள அப்பத்திலும் நீரிலும் அவளுக்கு ஒரு சிறிதே தேவைப்பட்டன. இதன்பின் நடந்து வந்த அலுப்புத் தீர அவள் சற்றுப் படுத்து ஓய்வுகொள்ள முயன்றாள். அவள் கண்கள் புத்தனுபவங்களுக்கிடையில் முற்றிலும் அயர்ந்துறங்க மறுத்தன. உடல் மட்டுமே சிறிது ஓய்வுகொண்டது. படுக்கும்போதே சுவரின் ஒரு பகுதி அவள் கவனத்தைக் கவர்ந்தது. சுவரின் சுண்ணம் அகற்றப்பட்டிருந்தது. அவ்விடத்தில் செங்கல்கள் வெளியே தெரிந்தன. ஆனால் செங்கல்களிடையே ஒன்று நிறத்திலும் உருவத்திலும் வேறுபட்டிருந்தது. அது அரும்பொருள் புதைத்த இடமாயிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றிற்று. ஆனால் வெளியே சென்றவர்கள் அதை எடுத்துச் சென்ற தடமே இது என்று எண்ணினாள். அயர்வினால் இதை அவள் அப்போது சென்று உறுதிகாண இயலவில்லை. ஆனால் காலையில் எழுந்ததும் அந்தச் செங்கல்லை அகற்றிப் பார்த்தாள். ‘புதையலைக்கிளறி எடுக்க அவர்கள் முயன்றிருந்தனர். ஆனால் எடுத்துச் செல்ல அவர்களுக்கு நேரமில்லாதிருந்தது’ - செங்கல் களைப் பாதி பிரிக்கு முன் இது அவளுக்குத் தெளிவாயிற்று. வியப்பும் மகிழ்ச்சியும் அவள் உள்ளம் நிரப்பின. வெளியே சென்றவர்கள் அதை அவளுக்கு எளிதாகக் காட்டியிருந்தனரே யன்றி எடுத்துச் செல்லவில்லை. சுவரைப் பாதி தகர்க்குமுன் ஏதோ அச்சத்தால் அவர்கள் தேடியதை எடுக்காமலே ஓடியிருத்தல் வேண்டும் என்று அவள் ஊகித்தாள். ஏனெனில் அதில் விலையுயர்ந்த அணிமணிகளும் பழைய பாண்டியர் பொற் காசுகளாக நூற்றுக்கணக்கான காசுகளும் இருந்தன. அவள் கவலைகள் தீர்ந்தன. ‘இனி பொன்னா விரையின் வறுமை மறைந்தது, அவன் துயரங்களும் அகன்றன’ என்று அவள் எழுந்தாள். காசுகளை அவள் முன்தானையில் முடிச்சிட்டு இடுப்பில் செருகினாள். ஆடையணிமணிகளிலும் ஒரு சில எடுத்துக் கட்டினாள். அரையில் சுற்றியிருந்த கயிற்றை அவிழ்த்து அதைத் தோட்டத்திலிருந்த பசுவின் கழுத்தில் மாட்டினாள். பசுவின் கழுத்தில் ஈட்டப்படுவதற்கிருந்த வார்மணியையும் எடுத்துக் கட்டிக்கொண்டு புறப்பட்டாள். சிலம்பன் எழுதி வைத்த கடிதம் கண்டு, பைஞ்ஞீலியின் குடியிருப்பிலுள்ள அனைவரும் காலையிலேயே புறப்பட்டு மலையேறி இறங்கியிருந்தனர். பசுவின் கழுத்திலிருந்த மணியோசை கேட்டு அவர்கள் வியப்புற்றனர். பசுவுடன் பைஞ்ஞீலியைக் கண்டதுமே அனைவரும் அவளைக் கண்டு ‘எங்கிருந்து வருகிறாய்?’ என்று கேட்டனர். தாங்கள் செல்லப் புகும் இடத்துக்கே அவள் சென்று வந்தது கேட்டு வியப்பும் மகிழ்வும் அடைந்தனர். அவர்களில் ஒருவரேனும் அவள் முன்கூட்டிச் சென்றது பற்றிப் பொறாமைப்படவில்லை. அவள் அமைந்த குணத்திற்கு அவள் எவ்வளவு விரைவில் நற்பேறுகள் அடைந்தாலும் அவர்கட்கு மகிழ்ச்சியே. அவளும் பொற்காசு கிடைத்த விவரம் தவிர யாவும்கூறி அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் தெரிவித்து அனுப்பினாள். குடியிருப்பில் அனைவருக்குமே அவரவர்களுக்கு வேண்டிய ஆடுமாடுகள், ஏர்கலப்பைகள், தட்டுமுட்டுப் பொருள்கள், அணிமணிகள் கிடைத்தன. பைஞ்ஞீலி தன் பொற்காசுகளில் இரண்டைத் தமிழகம் செல்லும் கலத்தின் மீகாமனிடம் கொடுத்துப் பொன்னாவிரையை அழைத்து வரும்படி கோரினாள். பொன்னாவிரையின் செலவு களுக்காக அவனுக்கும் இரண்டு காசுகள் கொடுத்தனுப்பினாள். பொன்காசுகள் கிடைத்ததைவிட அவற்றின் மூலம் பொன்னாவிரை கைவரப் பெற்றதற்கே பைஞ்ஞீலி பெருமகிழ் வடைந்தாள். பழந்தீவின் ஆட்சித் தலைவர் முன்னிலையில் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகத் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டனர். இருவர் நிலத்தையும் தனிப்பெண்ணாகப் பைஞ்ஞீலி பண்படுத்தியது போக, இருவர் நிலத்தையும் ஒரே குடும்ப நிலமாக இப்போது பொன்னாவிரை பண்படுத்தினான். விரைவில் சோழர் ஆட்சித் தலைவர் அவ்விருவர் நற்குணமும் திறமும் கண்டு, பொன்னாவிரையை ஆட்சித் துறையிலும் பைஞ்ஞீலியைக் கல்வித் துறையிலும் அமர்வித்தார். நேச வாழ்வில் காட்டிய அதே பண்பையும் உறுதியையும் இருவரும் குடும்பப் பாச வாழ்விலும், நாட்டுப் பணிவாழ்விலும் காட்டி மேம்பாடுற்றனர். 4. நயத்தக்க நாகரிகம் நாகைப்பட்டினத்தில் வானவன் என்றோர் உயர்குடிச் செல்வன் இருந்தான். அவன் குடும்பம் பல தலைமுறைகளாகச் சோழப்பேரரசருடன் உறவு கொண்டிருந்ததனால் அவன் மட்டற்ற செருக்கு உடையவனாயிருந்தான். அத்துடன் அவன் எவருக்கும் உதவுவதில்லை. எவர் சிறப்புறுவதையும் காணப் பொறுப்பதில்லை. ஆனால் அதே நகரில் மீனவன் என்றொரு வணிகன் இருந்தான். அவன் செல்வக் குடியில் பிறக்கவில்லை. ஆயினும் தன் முயற்சியால் பெருஞ் செல்வனானான். அவன் கலங்கள் ஈழம், கடாரம், பழந்தீவங்கள் எங்கும் சென்று அரும்பொருள் கொணர்ந்தன. அவற்றை அவன் தன் பணியாளர்களுக்கும் உற்றார் உறவினருக்கும் நகரமக்களுக்கும் நலஞ்செய்வதிலேயே செலவழித்தான். சோலை வளம் பெருக்கும் சுனை அச்சோலையின் நிழலில் தானும் மேன்மேலும் நீர்வளம் சுரப்பது போல, அவன் வரையாது வழங்க வழங்க அவன் செல்வங்களும் வரையாது பொங்கின. இவற்றைக் கண்டு வானவன் பொருமினான். மக்கள் வானவனை மிகுதி விரும்பாவிட்டாலும், மன்னனவையிலும் மன்னர் பெருமன்னர் சூழலிலும் அவனுக்குச் செல்வாக்கு எல்லையற்றது. அச்சூழலில் அவன் மீனவன் மீது பல அவதூறுகளை மெல்லமெல்லப் பரப்பி வந்தான். கால இடச் சூழல்களிடையே இதை வலியுறுத்தவும் அவனுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. இச்சமயம் பாண்டி நாட்டு அரசுரிமைப் போர்கள் மூலம் சோழ நாட்டுக்கும் ஈழ நாட்டுக்கும் இடையே பெரும் பூசல் மூண்டது. இதனால் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையே நடைபெற்ற எல்லா வாணிகத் தொடர்புகளும் போக்குவரவுத் தொடர்புகளும் தடைப்பட்டன. ஆயினும் இந்தச் சூழலிடையிலும் எப்படியோ ஈழ நாட்டுத் துறைமுகத்திலிருந்து மீனவன் கப்பலொன்று சரக்குகளுடனும் அரும் பெரும் பொருட்குவை யுடனும் நாகைப்பட்டினத் துறைமுகத்தில் வந்திறங்கிற்று. மீனவன் ஈழ அரசனுக்கு ஒற்றனாயிருந்து பணியாற்றி வந்ததாலேயே அவனுக்கு இந்தச் சலுகை தரப்பட்டதென்று கூறி, வானவன் இச்செய்தியைப் பேரரச வட்டாரங்களில் திரித்துரைத்தான். மீனவனைச் சோழப் பேரரசுத் தலைவர் சிறைப்படுத்தி, தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் வழக்கு மன்றத்தில் குற்றஞ்சாட்டினர். மீனவன் நிலைமையை நேர்மையுடனேயே விளக்கினான். அவன் கப்பல் போர் தொடங்கும் நெடுநாள் முன்னதாகவே ஈழம் சென்று, சரக்குகளுடனும் பொருட்குவை யுடனும் திரும்பிற்று. வழியில் கப்பலின் பல பகுதிகள் புயலினால் பழுதுபட்டதால், பாண்டி நாட்டுத் துறைமுகங்களில் சீர்திருத்தம் பெறுவதற்குச் சென்றிருந்தது. அது இக்காரணத்தினால் போர் தொடங்கியுள்ள சேர சோழ நாட்டுக்கு வர முடிந்தது. வானவன் நீண்டநாள் செய்துவந்த அவதூறு காரணமாக, தலைவர்கள் இந்த விளக்கத்தைப் புனைசுருட்டு என்று கருதினர். ஆகவே அவனைத் தண்டனைக்காளாக்கினர். அவன் செல்வம் முழுவதும் பறிமுதலாயிற்று. அவனும் அவன் குடும்பத்தினரும் பேரரசின் எல்லைக்கப்பால் நாடு கடத்தப்பட்டனர். மீனவன் சேரநாட்டிலும் குந்தள நாட்டிலும் சுற்றித் திரிந்து பல அவதிகளுக்கு ஆளானான். ஆனால் இறுதியில் கோவாப் பட்டினத்திலுள்ள வெளிநாட்டு வாணிக நண்பனான நன்னிசோடன் அவனை வரவேற்றுத் தன்னுடனே வைத்துக் கொண்டான். அவன் நற்குணத்தாலும் திறமையாலும் விரைவில் நன்னிசோடன் செல்வமே பெருகியதனால், நன்னிசோடன் அவனைத் தன் பங்காளியாக்கிக் கொண்டதுடன், அவன் புதல்வனுக்கே தன் புதல்வியை மணமுடித்து, அவனைத் தன் குடும்பத்துடனேயே ஒன்றுபடுத்தினான். சோழநாட்டினரையும் ஈழநாட்டினரையும் பாண்டிய நாட்டுப்போர் பல களங்களில் குருதிப் போராட வைத்தது. பல ஆண்டுகள் சென்று சோழர் வெற்றி எய்தினாலும், இடையே பல தறுவாய்களில் ஈழநாட்டார் கை மேலோங்கியிருந்தது. அச்சமயங்களில் சோழநாட்டாரும் அவர்களுக்கு ஆதரவா யிருந்த பல தமிழரும் படுகொலைக்காளாயினர். அத்துடன் உயர்குடியினர் பலர் சிறைப்பட்டு, குந்தள நாட்டிலும் கூர்ச்சர நாட்டிலும் கொண்டு போய் அடிமைகளாக விற்கப்பட்டனர். இவ்வகையில் சிறைப்பட்டுக் காணாமல்போனவர்களுள் வானவன் குடியின் ஒரே செல்வனான தங்கமணியும் ஒருவன். சிறைப்படும் சமயம் அவனுக்குப் பதினாறு வயதே நிரம்பி யிருந்தது. அவனை இழந்த அவன் தாய் புழுவாய்த் துடித்து உயிர் நீத்தாள். அவனிடமே உயிர்ப்பாசம் வைத்திருந்த அவன் தங்கை தண்பொருந்தம் உணவு, உடைகளில் கருத்துக் கொள்ளாமல் அனலிலிடப்பட்ட தளிர்போல வாடி வதங்கினாள். வானவனோ தன் பெருமை எல்லாம் மறந்து மைந்தன் நாளை வருவான், நாளை வருவான் என்று காத்திருந்தான். தன் ஆருயிர்ப் புதல்விக்கும் ஆறுதல் கூறி வந்தான். ஆண்டுகள் ஐந்து கடந்தன. பாண்டி நாட்டுப் போர் முடிவுற்றது. ஈழ அரசனுடன் சோழப் பேரரசன் நட்புறவு பூண்டான். சிறைப்பட்ட பலர் இருநாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டனர். இரண்டு நாடுகளிலும் அமைதி விழாக்கள் கொண்டாடப்பட்டன. ஆனால் வானவன் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை. வெளியே எங்கும் வெற்றி முழக்கங்கள், விழாக் கொடிகள், இன்னிசை அலைகள்! ஆனால் அவன் இல்லத்தில் மாள்வை நோக்கி மறுகிய மங்கையும், மாள முடியாது மாண்டுவந்த செல்வனும் ஒளியிழந்து வாடியிருந்தனர். ஓர் இளைஞன் தடதடவென வானவன் முன் வந்து ‘அப்பா’ என்றான். வானவன் முகத்தை நிமிர்த்தவில்லை. அவன் காதுகள் கேட்கவில்லை. இளைஞன் சற்றுத் திரும்பி நோக்கினான். ஒரு கட்டிலில் தலையணைகளிடையே ஒரு நுண்ணிழை போலக் கிடந்த உருவத்தைக் கண்டான். “ஆ! தங்கை தண்பொருந்தம், உன்னையா நான் இந்தக் கோலத்தில் காண்கிறேன்” என்றான். தண்பொருந்தம் உறங்கவில்லை, விழித்திருக்கவில்லை. அவள் மாளவில்லை; ஆனால் வாழ்வுமில்லை. அவள் நம்பிக்கை யிழந்து சோர்ந்து கிடந்தாள். அவள் செவியிலும் வந்த இளைஞன் சொற்கள் விழவில்லை. அவன் யார் என்று கேட்கக்கூட இருவருக்கும் தோற்றவில்லை. இளைஞன் கண்கள் பின்னும் சுற்று முற்றும் ஓடின. அவன் தன் அன்னையைத் தேடினான். அன்னையின் உருவப் படமே அவன் கண்முன் இருந்தது. தண்பொருந்தம் நாள்தோறும் அணிந்த வெண்மலர் மாலை அதன் மீது துவண்டுகிடந்தது. அவன் அந்தப் படத்தை எடுத்தான். ‘எங்கே என் தாய், எங்கே என் தாய், எங்கே என் அன்னை?’ என்று அலறினான். தண்பொருந்தம் தன் துயரினும் விஞ்சிய அத்துயர்க் குரல் கேட்டுத் திரும்பினாள். ஆனால் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவளால் வாய்விட்டழவும் முடிய வில்லை. கண்களிலிருந்து மட்டும் வற்றியிருந்த ஊற்று மீண்டும் சுரந்தது. அவளழுகை கண்டு தங்கமணி அவளருகே வந்து ‘தண்பொருந்தம்! நீ ஏன் இப்படிப் போனாய்? அம்மா எங்கே’ என்றான். தண்பொருந்தத்துக்கு அவன் அண்ணன் என்பது விளங்கி விட்டது. புதிய உயிருடன் புதிய துயரும் பீறிட்டெழுந்தன. ‘அண்ணா, அண்ணா! நீ இல்லாமல் அப்பாவும் நானும்தான் உயிருடன் இருக்கிறோம். அம்மா அப்போதே போய்விட்டாள். பாவம் நீ அடுத்த உலகில் இருக்கிறாய் என்று தேடப் போனாள். நீ இங்கிருக்கிறாய்; இத்தனை ஆண்டு கழித்தாவது வருவாய் என்று தெரிந்தால், அவள் போயிருக்கமாட்டாளே’ என்று தேம்பித் தேம்பி அழுதாள். வானவன், ஏதோ சிந்தனைக் கோட்டைகளிடையே தவழ்ந்திருந்தவன் இந்தக் காட்சியைக் கண்டு திகைத்தான். தங்கமணியின் முகத்தை இருகையாலும் ஏந்திக்கொண்டு “நீ யார்? என் இறந்துபோன மகன் பற்றிய செய்தியா கொண்டு வந்திருக்கிறாய்?” என்றான். “அப்பா, நான் இறந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும் அப்பா! இங்கே வந்து அம்மா மறைவையாவது கேட்க நேராதிருந்திருக்கும். ஆனாலும், தங்கையை இந்நிலையில் நான் விட்டுச் சென்றிருக்கப்படாது, நீங்களும்.......” “ஆ, நீயா தங்கமணி, நீயா என் மகன்? எப்படியப்பா வந்தாய்? எங்கிருந்தாய்? தெய்வமே, என் மனைவியைக் கைக் கொண்டாய், மகனைக் கொடுத்தாய்? நான் உன்னை நோகவா, வாழ்த்தவா? ஏன் இந்தக் கூத்து அப்பனே! பிள்ளையைக் காணாமல் அவள் இறந்தாளே!” என்று புலம்பினான். “அப்பா, இங்கே அம்மையைக் காக்க ஒரு தெய்வம் இல்லாமலா போயிற்று? ஆனால் கோவாப் பட்டினத்தில் ஒரு தெய்வம் இருக்கிறது. தமிழனுக்குத் தமிழன் என்ற ஓர் உறவன்றி, அந்தப் பெருந்தகைக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது. ஆனால் எனக்காக அவர் ஏனோ பணம் செலவு செய்து, வருத்தங்களும் மேற்கொண்டு அன்பையும் சொரிந்து, உங்களிடமே என்னை அனுப்பியிருக்கிறார். சிறைப்பட்டு அடிமை யாக்கப்பட்ட என்னை அடிமையாகவே வாங்கி, விடுதலை தந்து மகனாக நடத்தி உங்களிடம் அனுப்பியிருக்கிறார். அத்தகைய தெய்வங்கள் நம் தமிழ்நாட்டிலும் இருந்தால் நம் துன்பங்கள்கூட இன்பமாய் இருக்கும் அப்பா” என்றான் தங்கமணி. “யார் அப்பா, அவர்? விவரமாகச் சொல்லு! உன் உயிரைத் தந்த அவருக்கு நான் என்ன செய்தாலும் தகும்” என்றான் வானவன். “அவர் யார் என்று எனக்குத் தெரியாதப்பா! அங்குள்ள ஒரு பெரு வணிகர். பெயர் மீனவர்.” “மீனவனா, ஆ!” என்று சாய்ந்தான் வானவன். தங்கமணி கவலையுடன் அவனை அணைத்தெடுத்து முகத்தில் நீர் தெளித்து ஆற்றினான். பின், அவரை “உங்களுக்குத் தெரியுமா அப்பா? அவர் பெயர் கேட்டவுடன் இவ்வளவு சோர்வானேன்? சரி, அவரே உங்களுக்கு என்னிடமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார், தர மறுத்துவிட்டேன்” என்று ஒரு உறையையும் சுட்டிக் காட்டினான். வானவன் உறையை அவசர அவசரமாகக் கிழித்து வாசித்தான். “இந்தக் கடிதத்துடன் உம் குடிக்கு ஒரே கொழுந்தான உங்கள் புதல்வன் தங்கமணி உங்களிடம் வந்து சேர்ந்திருப்பான். பெற்ற தந்தை என்ற உங்கள் உரிமை பெரிதாதலினாலேயே அவனை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவனை என் மகன் போலவே நேசிக்கத் தொடங்கிவிட்டேன். அவன் எங்கிருக்கிறான் என்று அறியாமல் நீங்கள் அடையும் துயரை அவனை விட்டுப் பிரியும்போது நான் அடையும் துயரே எனக்குக் காட்டுகிறது. “சோழ நாட்டுக்கும் ஈழநாட்டுக்கும் மீண்டும் நட்புறவு ஏற்பட்டதாகச் செவியுற்றேன். அந்த விழா நாளில் நான் கலக்க முடியாதவனாய் விட்டேன். ஆனால் என் வளர்ப்புப் புதல்வனும் அவன் குடும்பமுமாவது அதில் முழுதும் பங்கு கொள்ளட்டும் என்ற எண்ணத்துடனேயே நான் தங்கமணியை உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். என் அன்பையும் சேர்த்து அவனிடம் நீங்கள் அன்பு காட்டுவீர்களென்று நம்புகிறேன். மறவா அன்பன், மீனவன்.” கடிதத்தை வாசித்து வானவன் கண்ணீர் வடித்துக் கதறியழுதான். தான் மீனவனுக்குச் செய்த கொடுமைகளை மைந்தனுக்கு எடுத்துக்கூறி, நயத்தக்க நாகரிகத்தை வாயாரப் புகழ்ந்தான். எஎஎ மருதூர் மாணிக்கம் முதற் பதிப்பு - 1958 இந்நூல் 2004 இல் வசந்தா பதிப்பகம், சென்னை 88 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. மருதூர் மாணிக்கம் வீரக் கதைகள் பலவற்றை நீங்கள் கேட்டிருக்கலாம். வினோதக் கதைகள், வேடிக்கைக் கதைகளை வாசித்திருக்கலாம். ஆனால் ‘மருதூர் மாணிக்க’த்தின் கதை மிகவும் புதுமை வாய்ந்தது. அதைப்போன்ற கதை எதுவும் கிடையாது. அதில் வீரம் உண்டு. வினோதம் உண்டு. வேடிக்கை உண்டு. இம்மூன்று பண்புகளும் அதில் ஒருங்கே நிரம்பியுள்ளன. பாரத வீரன் அக்கால வீரன் அல்லன், அவன் இக்கால வீரன். பாரத வீரன் என்ற பெயர் பெற்றோர்கள் அவனுக்கு இட்ட பெயர் அல்ல. அவர்கள் இட்ட பெயர் மாரியப்பன் என்பதே. பாரத வீரன் என்பது அவன் பட்டப்பெயர். அவன் வீரப்புகழ் எங்கும் பரந்த பின், மக்களே அவனுக்கு ‘பாரத வீரன்’ என்ற பட்டப்பெயர் கொடுத்தார்கள். தென்பாண்டி நாடு மலை வளம், நாட்டு வளம், கடல் வளம் நிறைந்தது. அதில் செல்வமருதூர் என்று ஒரு மாநகரம் உண்டு. அந்த மாநகரம் தந்த மாணிக்கமே மாரியப்பன். செல்வ மருதூரில் ஒரு சில மாளிகைகளும் ஓட்டு வீடுகளும்தான் இருந்தன. கூரை வீடுகளும் குச்சு வீடுகளுமே மிகுதி. ஆனால் மாரியப்பன் குச்சு வீடுகள் எதிலும் பிறக்கவில்லை. அவன் செல்வக் குடும்பத்திலே பிறந்தான். மாளிகை ஒன்றிலே வளர்ந்தான். மாரியப்பனின் இளமையிலேயே, அவன் தாய் தந்தையர் காலமாய் விட்டனர். அவன் அத்தை செல்லாயி தான் அவனை வளர்த்து வந்தாள். அவன் தமக்கை மகளும் அவனுடனேயே வளர்ந்து வந்தாள். அவள் பெயர் செங்காவி. அவளுக்கும் தாய் தந்தை கிடையாது. செல்லாயியே அவளையும் வளர்த்து வந்தாள். மாரியப்பனுக்கு வீட்டில் சலுகை மிகுதி. அவன் என்ன செய்தாலும், செல்லாயி அவனைக் கண்டிக்க மாட்டாள். செங்காவியோ அவன் சொன்னபடி நடப்பாள். அவளுக்கு அவனே வழிபடு தெய்வமாகவும் இருந்தான். வேறு தட்டிக் கேட்பவர்கள் யாரும் கிடையாது. எனவே அவன் வீட்டில் அவன் வைத்தது சட்டமாயிருந்தது. ஊரிலும் பள்ளியிலும்கூட, எல்லோரும் மாரியப்பனுக்கு முதல் மதிப்புக் கொடுத்தார்கள். இந்த நிலையில் அவன் பள்ளிப் படிப்பு முழுவெற்றி காணவில்லை. பத்தாம் வகுப்பை அவன் எட்டிப் பார்க்கவில்லை. அதற்கு முன், பள்ளிக்கு அவன் முற்றுப்புள்ளி வைத்தான். அவன் ஒடுங்கிய, எலும்பான உடலுடையவன். ஆனாலும் அவனுக்கு இயற்கை உரம் மிகுதி. அத்துடன் அவன் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தான். சிலம்பம், வாள் வீச்சு, மற்போர், வில் வித்தை, குத்துச்சண்டை முதலியவற்றிலும் அவன் தேர்ச்சி பெற்றிருந்தான். இந்த வீரக் கேளிக்கைகளால் அவன் உரம் பெருக்கமடைந்தது. இயல்பாக அவன் எல்லாரிடமும் அன்புடையவன். ஆனால் அவன் இறுமாப்பு இந்த அன்பை மறைத்தது. பொதுவாக, அவன் மற்றப் பிள்ளைகளுடன் தாராளமாக விளையாடுவது கிடையாது. விளையாடும்போதும், எதிலும் முதலிடத்தை விடமாட்டான். முதலிடத்தைப் பெறவும் அதைப் பேணவும், அவன் அரும்பாடுபட்டான். இத்துறையில் மற்ற எல்லாரையும் விட, அவன் விடாமுயற்சியுடனும் மூர்க்கமாகவும் உழைத்தான். மரங்களின் உச்சாணிக் கிளைகளை அவன் எட்டிப் பிடித்து ஏறுவான். எவரும் அணுக அஞ்சும் மலைக்குவடுகளில் அவன் தாவுவான். முட்காடுகளில் திரிந்து வேட்டையாடுவான். ஆறு குளங்களின் நிலைகாணா ஆழ்கசங்கள் அவனுக்கு விளையாட் டிடங்கள். வேகமான நீரோட்டங்கள், சுழிகள் ஆகியவற்றில் அவன் துணிந்து பழகுவான். எல்லாரையும் தாண்டி உச்சநிலை அடைவதிலேயே அவன் ஆர்வம் முனைப்பாய் இருந்தது. பள்ளிப்படிப்பில் அவன் கருத்துச் செலுத்தவில்லை. பாடங்களிலும் பள்ளித் தேர்வுகளிலும் அவனுக்கு அக்கரை இல்லாமலிருந்தது. ஆனால் இது அவன் அறிவாற்றலைத் தடைப்படுத்தவில்லை. ஏனென்றால் வாசிப்பில் அவனுக்கு இயற்கை ஆர்வம் இருந்தது. விரும்பிய, விரும்பிய பாடங்களை அவன் வாசித்தான். அவற்றை மற்றப் பிள்ளைகளைவிட ஊன்றிக் கருத்தாகப் பயின்றான். பாடங்களுக்குப் புறம்பாகவும், விரும்பிய, விரும்பிய புத்தகங்களை அவன் கவனத்துடன் படித்தான். ‘கண்டதுகற்கப் பண்டிதனாவான்’ என்று ஒரு பழமொழி உண்டு. அவன் வகையில் அது உண்மையாயிற்று. தேர்வில் அவன் சிறப்புடன் தேறவில்லை. ஆனால் சிறப்புடன் தேறிய பிள்ளைகள் அவன் பரந்த அறிவு கண்டு வியப்படைந்தார்கள். ஆசிரியர் களுக்குக்கூட அது கண்டு மலைப்பு ஏற்பட்டது. கதை வாசிப்பதில் மாரியப்பன் ஆர்வத்துக்கு எல்லை இல்லை. பள்ளி விட்டபின் இது அவன் நேர முழுவதையும் கொள்ளைகொண்டது. அத்துடன் அவன் வாசிப்பின் பாங்கு, ஒரு தனிப்பாங்காய் இருந்தது. புத்தகம் அவன் கையில் இருக்கும். ஆனால் அது புத்தகம் என்பதையே அவன் உள்ளம் மறந்துவிடும். அது புத்தகத்தின் கதையில் ஆழ்ந்து தவழும். இராமாயணம் வாசிக்கும்போது, அவன் இராமனாய் விடுவான். பாரதம் வாசித்தால், அவனே வில்விசயன். பெருங்கதையில் அவன் உதயணனாக மாறிவிடுவான். சில சமயம் அவன் விக்கிரமாதித்தன் கதை வாசிப்பான். அப்போது அவன் உட்கார்ந்திருக்கும் விசிப்பலகை, விக்கிரமாதித்தனுடைய வீர சிங்காசனம் ஆகிவிடும். தன் சங்கிலி வேதாளம் படும் பாடுபடும். படிப்பில் அவன் எப்போதும் தன்னை மறந்தான். தன் சூழலை மறந்தான். அந்தக் கதைகளின் உலகிலேயே அவன் நீந்தி மிதந்தான். தமிழிலுள்ள கதைகள் அவனுக்குப் போதவில்லை. அவன் புதுக் கதைத்தேடினான். அதற்காக அவன் மற்ற மொழிகளைப் படிக்கலானான். கதை வளமுள்ள எந்த மொழியையும், கதைக்காக அவன் எட்டிப்பிடித்தான். அவற்றை முனைந்து படித்துத் தேர்ச்சி பெற்றான். அத்துடன் கதைப் புத்தகங்களுக்காக, அவன் பெரும் பொருள் செலவு செய்தான். கதை உலகிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் அவன் வாங்கினான். அவன் வீட்டின் ஓர் அறை பெரிய நூலகமாயிற்று. அதில் வீற்றிருந்து அவன் கதை உலகை ஆட்சி செய்தான். வாசிப்பில், அவன் நடிப்பார்வம் பெரிதாயிருந்தது. அது நடிகர் நடிப்பார்வத்தை நாண வைத்தது. போர் பற்றி வாசிக்கும்போது அவன் போர் வீரனாய் விடுவான். அப்போது அவன் கைப்பிரம்பு சுழலும்! பல சமயம் அறையின் பொருள்கள் உடைபட்டுச் சின்னாபின்னமாகும். ஒரு தடவை கதையில் வரும் அபிமன்னன் தேர்க்காலை எடுத்து, எதிரிமீது வீசி எறிந்தான். வாசிக்கும் மாரியப்பன், தன்னையறியாமல் அபிமன்னனாய் விட்டான். அவன் முன்பிருந்த மைக்கூடு தேர்க் காலாயிற்று. அவன் அதை எடுத்து ஓங்கிச் சுவர்மீது வீசி எறிந்தான். நடிப்பார்வம் படிப்படியாக அவனை நடிப்புக்கே கொண்டு சென்றது. அவன் தானே நாடக மேடை உண்டு பண்ணினான். தானே நடித்தான். அத்துடன் நடிகர்களை அவன் தானே ஊக்கி நடத்தினான். நாடகங்களில் அவன் மேடை அதிர ஆர்ப்பரித்தான். அவன் அபார நடிப்புத்திறம் கண்டு புகழாதவர் இல்லை. அதேசமயம் அதைக் கண்டு அஞ்சாதவர்களும் கிடையாது. ஏனென்றால் அவன் தோற்றம் எல்லாரையும் நடுங்க வைப்பதா யிருந்தது. வீரமிகுந்த ஒரு சிலர்தான் அவன் மேடையருகே துணிந்து சென்று நின்றார்கள். அவர்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். மற்ற எல்லாரும் தொலைவில் நின்றே பார்த்தார்கள். நடிகர்கள் கூட அவனுடன் மேடையில் நின்று நடிக்க அஞ்சினார்கள். அவன் மேடையில் அவனே எப்போதும் தனிக் காட்டரசனாக விளங்கினான். அதில் அவனைத் தவிர யாருக்கும் புகழ் ஏற்பட வழியில்லை. யார் எவ்வளவு நன்றாக நடித்தாலும், மக்கள் எவரையும் பாராட்டி ஆரவாரம் செய்ய மாட்டார்கள். அப்படி யாரையாவது மக்கள் பாராட்டத் துணிந்தால், அடுத்த நாளே பாராட்டுப் பெற்றவருக்குச் சீட்டுக் கிழிந்துவிடும். அத்துடன், நடிகர் நடிப்பில் ஏதேனும் சிறு குறை இருந்தால் போதும்! அல்லது இருப்பதாக மாரியப்பன் கருதினால் போதும்! அவர்களை அவன் கடுமையாகத் தாக்கத் தயங்க மாட்டான். சில சமயம் அவன் அவர்களை நாடகக் கூடத்திலிருந்தே துரத்தியடிப்பான். மொத்தத்தில், அவனுடன் நடிக்க முன்வருவதற்கு எவரும் அஞ்சினார்கள். ஏற்கெனவே நடித்தவர்களும் அவன் சீற்றத்துக்கு அஞ்சி ஒவ்வொருவராக நழுவி வெளியேறினார்கள். ஆனால் இவற்றால் மாரியப்பன் ஒருசிறிதும் சோர்வடையவில்லை. மேடை வெறும் மேடையான பின், அவன் நாடகத்தை நடிப்புக் கச்சேரி ஆக்கினான். எல்லா நடிப்புப் பகுதிகளையும் அவன் தானே திறம்பட நடித்துக் காட்டினான். முன்பு அவன் வாசிப்பு வாசிப்பாயில்லை. அது போலவே இப்போது அவன் நடிப்பு நடிப்பாயில்லை. அது கிட்டத்தட்ட நேரிடையான நிகழ்ச்சியாகத் தொடங்கிற்று. அவன் கற்பனையாற்றல் நடிப்பெல்லை தாண்டி வளர்ந்தது. சில சமயம் . ஒருநாள் அவன் மேடையிலிருந்து தட தடவென்று இறங்கினான். மக்கள் நடுவே வந்து நின்று பேசினான். “என் வானர வீரர்களே! ஏன் என்னையே பார்த்துக் கொண்டு சும்மா நிற்கிறீர்கள்? போங்கள்! போய், மலைகளைப் பெயர்த்தெடுத்து, அணை கட்டுங்கள்!” என்று அவன் வீறிட்டு முழங்கினான். மற்றும் ஒருநாள் அவன் வேறொரு பாணியில் தொடங்கினான். “அட அரக்கப்பதர்களே! என்னை என்ன என்று நினைத்தீர்கள்? இதோ பாருங்கள்!” என்று ஆர்ப்பரித்தான். அச்சமயம் வாளைச் சுழற்றுவதுபோல், அவன் கைகால்களைச் சுழற்றினான். அவன் கண்கள் உருண்டு புரண்டு கனற் பொறிகளைக் கக்கின. நாடகம் நடிப்புக் கச்சேரி ஆனதுபோலவே, நடிப்புக் கச்சேரி ஆளற்ற நடிப்பு அரங்கமாயிற்று. இறுதியில் அவன் மேடையைக் கைவிட்டான். ஆயினும் நடிப்பை அவன் என்றும் கைவிடவில்லை. அவன் வாழ்க்கையே அது முதல் ஒரு நடிப்பாயிற்று - வெறி நடிப்பாயிற்று! ஒவ்வொரு நாள் அவன் உலகளந்த பெருமாளாக நடிப்பான். நூலகம் நிலவுலகமாகும். அதன் மாடி வானுலகாகும். கால் வைக்கும் கோக்காலியே மாவலியின் தலை ஆகும். அவன் அதன்மீது ஏறி நிற்பான். அடி நிலம் புகும்படி அதை அழுத்தி மிதிப்பான்! சில சமயம் ஊர்வெளியில் உள்ள எருக்கஞ் செடிகள் மீது அவன் கழிகொண்டு வாள் நடத்துவான். வேறு சில சமயம் ஆவாரஞ் செடிகள் மீதும் பாலை உடை மரங்கள் மீதும் தடிகொண்டு மூர்க்கமாகத் தாக்குவான். இச்சமயங்களில் அவனே வாள் விசயன் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்! பால் வடியும் எருக்குகள் குருதி சிந்தும் மனித உடல்கள் என்பதையும் பலர் அறியமாட்டார்கள்! பாலை உடைமுட்கள் கீறி, அவன் உடலில் குருதி தோயும், காயம்பட்ட வீரனின் பெருமிதத் தோற்றத்துடன் அவன் வீடு திரும்புவான். அவன் போக்குக் கண்டு, அவனைச் செல்லமாக வளர்த்த செல்லாயி கண்ணீர் வடித்தாள். அவன்மீது உயிரையே வைத்திருந்த செங்காவி கண்கலங்கினாள். ஆனால் அவர்கள் அறிவுரைகள், அன்புரைகள் அவன் செவியில் ஏறவில்லை. வேறு வகையான ஊக்குரைகள் அவனுக்கு இப்போது தேவைப்பட்டன. அவை அவனுக்கு மிகவும் எளிதாகவும் கிடைத்தன. அவன் நடிப்புக் காலத்தில், அருகே நின்று ஊக்கிய சில தோழர்கள் இருந்தார்கள். அவர்கள் அவனை வந்து அடுத்தார்கள். அவர்கள் எவரும் அவனை மாரியப்பன் என்று அழைப்பதில்லை. மருதூர் மாணிக்கம் என்று செல்லமாக அழைத்தார்கள். அவர்கள் இப்போது அவன் நடிப்பைப் புகழவில்லை. அவனையே புகழ்ந்தார்கள். அவன் வீரத்தைப் பாராட்டினார்கள். புகழப் புகழ அவன் மகிழ்ந்து ஆர்ப்பரித்தான். அவன் மகிழ புகழ்ச்சி பெருகிற்று. அவர்கள் அவன் சீடகோடிகள் ஆயினர். அவன் புதுவீரப்போக்கை வளர்த்தனர். பின் அவர்கள் அவன் பக்தர்கள் ஆயினர். அவனை அர்ச்சனை செய்தார்கள். “இராமனையும் விசயனையும்விட, நீயே பெரிய வில்வீரன். மாருதியையும் வீமனையும்விட, நீயே பெரிய மல்வீரன்” என்று அவர்கள் தொடங்கினார்கள். “விக்கிரமாதித்தன் வீர அரசனாகப் பிறந்தான். நீ வீரத்தால் அரசனாகப் போகிறாய்? தேசிங்குராசன் துடுக்கான ஒரு சிற்றரசன். நீ சிற்றரசரை நடுங்க வைக்கும் பேரரசனாகப் போகிறாய்” என்று அவர்கள் புகழ் மாலையை உருவி நீட்டினார்கள். “உன் புகழ் பரந்தபின், அவர்கள் புகழ் என்ன ஆகும்! அதனால்தான் அவர்கள் முந்திப் பிறந்துவிட்டு, முந்தி மறைந்து கொண்டார்கள். உன் வீரம் அவர்களுக்கு வருமா?” என்று அவன் பெருமையை நீட்டி அளந்தார்கள். கதையைக் கண்முன் நடக்கும் நிகழ்ச்சியாகக் கருதுபவன் அவன். இப்போது சீடர் புகழ்ச்சிகள் எல்லாம் அவனுக்கு முற்றிலும் மெய்யுரைகளாகவே தோன்றின. அவன் கற்பனை யாற்றல் அவற்றின்மீது மேலும் கற்பனைக் கோட்டைகள் எழுப்பின. அதன் பின் அவர்கள் புகழ்ச்சிகள் அவனை மகிழ்விக்கவில்லை. புகழ்ந்தவர்கள் மீதே அவன் சீறி விழுந்தான். “இராமனென்ன? விசயனென்ன? அவர்கள் எம்மட்டு? அவர்கள் அனைவரும் என் முன்னோடிகள் மட்டுமே! அவர்கள் அரைகுறை அவதாரங்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? கண்ணன்கூட அவர்கள் குறையை நிரப்பப் போதவில்லை. அவனே சாபத்துக்கு ஆளானான். ஒரு வேடனால் கொல்லப்பட்டான். நீங்கள் பாகவதபுராணத்தைப் படித்துப் பாருங்கள்! கற்கி பிறப்பார், அவர் தான் முழு அவதாரம் என்றல்லவா அந்தப் புராணம் கூறுகிறது?” என்று அவன் முழக்கமிட்டான். “ஆகா! நீங்கள்தான் கற்கி! இது தெரியாமல் போனோமே? மன்னியுங்கள்!” என்று ஒரு சீடன் கூறினான். அவன் வாக்கு, உலர்ந்த வைக்கோற்போரில் பட்ட தீப்பொறியாயிற்று. எல்லாச் சீடரிடமும் புதிய பக்தி தோன்றிற்று. ‘நீ’ என்ற சொல் மறைந்தது. ‘நீங்கள்’ ‘தேவரீர்’ என்ற புதுச்சொற்கள் எழுந்தன. “ஆகாகா! நீங்கள் தான் கற்கி என்று இப்போது தான் உணர்ந்தோம். பழைய பாரதத்தைப் புது பாரதமாக்க வந்த பாரத வீரர் நீங்கள்தான் என்பதைக் கண்டு கொண்டோம்! வாழ்க கற்கி! வெல்க கற்கியின் வருங்கால வீரம்!” என்று அவர்கள் ஆரவாரித்தார்கள். அதுமுதல் சீடகோடிகள் அவனைப் புகழ்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டார்கள். அவனுக்குப் பல புகழ்ப் பெயர்களைச் சூட்டினார்கள். அவற்றை அவனுக்குரிய விருதுப் பெயர்களாக்கினார்கள். அவற்றால் அவனை ஓயாமல் அர்ச்சனை செய்தார்கள். “கண்கண்ட கற்கி, கலியுகராமன்! விசயாதி விசயன், நவகோடி விக்கிரமாதித்தன்! திரிலோக தேசிங்குராசன், மன்னாதி மன்னன்! வீர சூரியன், வீர சூரமார்த்தாண்டன் மருதூர் மாணிக்கம், மாளாத மாவலி வாணராயன்!” இந்தப் படியாக, அவர்கள் அவனைப் பலவாறு பரவிப் பாராட்டத் தொடங்கினார்கள். உடுக்கையை உக்கிரமாக அடிக்க அடிக்க, வெறியாட்டுத் தெய்வம் ஓங்கி எழுந்தாடும். அதுபோல, பாராட்டுக்கள் உயர உயர, மாரியப்பன் வீரதீரப் பண்புகளும் உயர்ந்தன. அவற்றால் செல்வ மருதூர் முழங்கிற்று. அருகிலுள்ள சிற்றூர்களில் கூட அதன் ஒலி எதிரொலிகள் கேட்கத் தொடங்கின. செல்வமருதூர் வீரமருதூராக விளங்கத் தொடங்கிற்று. 2. இளவரசி மாரியப்பன் காலையில் ஆறு மணிக்குத்தான் எழுந்திருப்பது வழக்கம். அன்று மணி ஐந்துதான் ஆயிற்று. அவன் இன்னும் அரைதூக்கத்திலேயே இருந்தான். அச்சமயத்தில் இசை ஒலிகள் அவன் காதுகளில் வந்து தவழ்ந்தன. அவை திருவாசக, திருவாய்மொழிப் பண்கள் போன்றிருந்தன. அவன் சிறிது புரண்டு படுத்தான். ஓசை அவனை அணுகி வந்தது. அவன் செவிகளைத் துளைத்தது. அவன் சற்று நெளிந்து எழுந்தான். பாடிக்கொண்டே ஒரு கூட்டம் அவன் அறைக்குள் வந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குள் அறை நிறைந்து விட்டது. அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். கண்களையும் காதுகளையும் துடைத்துக்கொண்டான். ‘ஆம்! அது கனவல்ல. நனவே!’ அவர்கள் அவன் சீடகோடிகள் போலவே இருந்தார்கள். ஆனால் அவர்கள் பூச்சூடிப் பெருமிதத்துடன் வந்தார்கள். அவர்களிடம் இசைக்கருவிகள் இருந்தன. இசைக்குழு ஒன்று பாடிற்று. பாட்டின் மெட்டுகள் தான் திருவாசக திருவாய்மொழி மெட்டுக்கள். அவை புகழ்ந்தது சிவபெருமானையோ, திருமாலையோ அல்ல. மாரியப்பன் விருதுப் பெயர்களையே அவர்கள் நாமாவளி ஆக்கியிருந்தார்கள். அதைப் அப்பண்களில் இசைத்துப் பாடினார்கள். பாட்டில் மருதூர் மாணிக்கம் என்ற அன்புப் பட்டந்தான், ‘பாரத வீரன்’ என்ற வீரப் புதுத் தொடர் அடிக்கடி காதுகளில் முழங்கிற்று. “பாரத வீரன் வாழ்க! அவர் வீரம் வெல்க! கண்கண்ட கற்கிப் பெருமான் வாழிய! எட்டு திக்கும் அவர் வெற்றி தழைத்தோங்குக!” இவ்வாசகங்கள் எழுதிய அட்டைகளைப் பலர் ஏந்திக்கொண்டு வந்தார்கள். அவ்வப்போது பாட்டு முடிவில், இசைக்குழுவினரே இக்குரலை எழுப்பினார்கள். அனைவரும் அவர்களுக்கு எதிர்குரலிட்டு முழங்கிக் கூத்தாடினார்கள். கூட்டத்தின் நடுநாயகமாக ஓர் அழகிய பெண் காணப்பட்டாள். அவள் அன்ன நடை நடந்துவந்தாள். அவள் தலையில் ஒரு பூமுடி இருந்தது. அவள் ஆடையணி மணிகள் ஓர் இளவரசியை நினைவூட்டின. அவள் கையில் ஒரு வெள்ளித் தட்டு ஏந்தியிருந்தாள். அதில் இளவரசர் அணிவதற்குரிய ஒரு பொன்முடி இருந்தது. ஒரு பொன்னாலான செங்கோலும் ஒரு பொற் பேழையும் இருந்தன. எதையும் கண்டு வியப்படையாதவன் மாரியப்பன். ஆனால் இப்போது அவன் முகத்தில் வியப்புக்குறி தோன்றிற்று. அத்திடீர் அதிர்ச்சியில் அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அவன் முன்னால் நடந்த நிகழ்ச்சிகள் அவன் வியப்பை இன்னும் பெருக்கின. இளவரசியைப் போன்றிருந்த பெண் அவன்முன் வந்து நின்றாள். அவன்மீது பன்னீர் தெளித்துச் சந்தனம் பூசினாள். நெற்றியில் குங்குமத்தால் வீரப் பொட்டிட்டாள். பின், அனைவரும் வாழ்த்தொலி செய்ய, அவன் தலைமீது பொன் முடியைச் சூட்டினாள். அவன் கையில் செங்கோல் தரப்பட்டது. ‘பாரத வீரன்’ என்று விருதுப் பெயர் அடங்கிய பொற் பேழையையும் இளவரசி அவனுக்கு அளித்தாள். ‘வாழ்க பாரத வீரன், வெல்க பாரத வீரன் கொற்றம்’ என்ற குரல்கள் எழுந்தன. அவன்மீது நாலாதிசையிலிருந்தும் பொன் வெள்ளி மலர்கள் தூவப்பட்டன. வெள்ளி மணியின் ஓசை போன்ற குரலில், இளவரசி வாய்திறந்து பேசினாள். “இன்னல்கள் அகற்ற வந்த இளங்கதிர் வீரனே! கண்கண்ட கற்கியே! செல்வமருதூரை வீரமருதூராக்க வந்த செல்வமே! மருதூர் மாணிக்கமே! புதிய விக்கிரமாதித்தனே! தமிழகத்துக்குத் தாங்கள் தந்த, தரஇருக்கிற பெருமை அளவிடற்கரியது. தமிழகத்தின் சார்பில் பொதுவாகவும் தமிழகப் பெண்கள் சார்பில் சிறப்பாகவும், நான் தங்களுக்கு வாழ்த்துக்கூறிப் பாராட்டுகிறேன். “தங்களுக்கு ஏற்கெனவே மக்கள் அளித்துள்ள விருதுகள் பல தங்களுக்கே உரிய தனிப்பெரு விருதாக, அவற்றுடன் ‘பாரத வீரன்’ என்ற சிறப்புப் பட்டத்தையும் அளிக்கிறோம். தமிழகப் பெண்களின் சார்பிலும், என் சார்பிலும் தங்களுக்கு வீர இளவரசுரிமையும் அளிக்கிறோம். அதற்குரிய செங்கோலும் வீர மணிமுடியும் இவ்வீரப்பட்டத்துடன் வழங்கி ஊக்கவே, இன்று நான் என் குடிபடைகளுடன் வந்தேன். “இனி ஓராண்டு தங்கள் வீர வெற்றிகளைக் காதாரக் கேட்டவண்ணம் நான் கன்னி மாடத்தில் இருப்பேன். அதன்பின் தங்கள் வெற்றிப் புகழுலக ஆட்சியுடன், என் நிலவுலக ஆட்சியையும் என்னையும் ஏற்று, வீரசிங்காதனம் அமர்வீர்களாக!” “பாரத வீரன்” என்ற புதுப்பட்டம் அவன் உள்ளத்தின் வியப்பையும் மலைப்பையும் அகற்றின. மகிழ்ச்சியும் இறும்பூதும் பெருமிதவீறும் அவன் உள்ளத்தில் வந்து புகுந்தன. ஒரு நொடியில் அவன் ஓர் இளவரசியை மனமுவந்து ஏற்கும் இளவரசனானான். “அழகிற் சிறந்த அரசிளஞ் செல்வியே! உன் அன்பிற்கும், தமிழகப் பெண்மையின் பாராட்டுக்கும் நன்றி. நீ அளித்த ‘பாரத வீரன்’ என்ற பட்டத்தை மனமுவந்து ஏற்கிறோம். அதுவே இன்று முதல் எம் சிறப்புப் பெயர் ஆவதாக! “நீ அளித்த முடி, செங்கோல் ஆகிய இளவரசுச் சின்னங்களையும் என் புதுப் பொறுப்புக்கு அறிகுறிகளாக ஒப்புக் கொள்கிறேன். அவற்றுடன் தமிழகப் பெண்களின் சார்பில், நீ இடும் அன்புக்கட்டளைகளை ஏற்று வீரச் செயல்களால் உன் புகழ் பெருக்குவேன். நீ கூறியபடியே உன்னுடன் பொன் அரியாதனத்தில் அமரும் நாளை விரைந்து அவாவுவேன்.” அவன் பேச்சின் பெருமிதத் தோற்றம் கண்டு அனைவரும் வியந்தனர். இளவரசி நாணிக்கோணி நுடங்கி நின்றாள். அவள் முகத்தில் புன்முறுவல் ஒளிபூத்தது. அவள் மணிக்குரல் மீண்டும் எழுந்தது. “பாரதவீரனே! என் உள்ளங் கவர்ந்த இளவரசே! நீங்கள் கூறியபடியே யாவும் ஆகட்டும். “நீங்கள் விரைவில் வீரக்கவசம் அணியவேண்டும். வீரகுருவின் அருளும் அன்னை காளியருளும் பெறவேண்டும். என் காதல் சான்றாக, இத்தமிழகமெங்கும் சென்று வெற்றி உலா வரவேண்டும். உங்கள் வெற்றிப் புகழ் என் செவிகளையும் என் காதல் உள்ளத்தையும் நிறைக்கட்டும், எங்கும் இன்னலுக்காளான பெண்டிர், உங்களால் இன்னலம் பெறட்டும், சிறைப்பட்ட மக்கள் சிறைவீடு பெறட்டும். இடருட்சிக்கிய மக்கள் இனிய நல்வாழ்வு பெறட்டும். “இவ்வெற்றிப் புகழை முன் ஏகவிட்டு, அவற்றைத் தொடர்ந்து மீண்டும் எம்மிடம் வருக. வந்து எம் உடலுடன் உயிரை இணைப்பீராக! இளவரசி என்ற பெருமிதம் குன்றாமல் காதற் குழைவுடன் அவள் பேசினாள். அவன் உள்ளம் குளிர்ந்தது. மெய் புல்லரித்தது. கனிவுடன் இளவரசியை நோக்கினான். பின் அவன் கூட்டத்தை நோக்கித் திரும்பினான். “பொதுமக்களே! இது உங்களுக்கு இணக்கந்தானா?” என்று வீறுடன் கேட்டான். “ஆகா! முழு இணக்கமே! முழுதும் இணக்கமே!” என்று குரல்கள் ஒரே குரலாக ஆரவாரித்தன. அவன் இளவரசியின் கையை ஆர்வத்துடன் பற்றினான். வீரத்தின் முறுக்கும் இளமையின் துடிப்பும் அவன் நரம்புகளில் ஏறின. அவன் குரல் சிறிது கம்மிற்று. பின் வீறுடன் துள்ளிக் குதித்தது. “அழகாரணங்கே! இளவரசியே! இனி உன் விருப்பம் என் பேறு.” மணிச்சுருக்கமான அவன் பேச்சுக் கணீர் என்று ஒலித்தது. இளவரசி மீண்டும் வாய் திறந்தாள். “அன்பரே! இளவரசே! நான் வந்த காரியம் ஆயிற்று. இனி விடைபெற்றுக் கொள்கிறேன். நண்பர் ஆய்வுக்குழுவுடன் இனி நீங்கள் கலந்தாராய்ந்து, ஆவன செய்வீர்களாக!” என்று கூறிவிட்டு, அவள் பின்னும் அன்ன நடை நடந்து சென்றாள். அவள் கால் சிலம்புகள், ‘கலின் கலின்’ என்று ஒலித்தன. அவ்வொலி தொலைவில் சென்று மெல்ல மெல்ல அடங்கிற்று. அவள் பின்னால், அவள் படைகுடிகளாக வந்த திரளும் வெளியேறிச் சென்றுவிட்டது. ‘பாரத வீரன்’ மீண்டும் தனியன் ஆனான். ஆனால் அவன் உள்ளம் இப்போது தனிமையில் இல்லை. வானளாவும் எண்ணங்கள் மீதேறி அது மிதந்து பரந்தது. அவற்றுடன் அவனும் காற்றில் மிதந்தான். அவன் உடல் இருக்கையில் இருப்புக் கொள்ளவில்லை. அவன் கால்கள் நிலத்தில் நிலைகொள்ளவில்லை. நிலம்பாவா நெடு நடைபோட்டு, அவன் முன்னும் பின்னும் நடந்து ஊசலாடினான். “ஆ, என் பெருமைகள் நாட்டு மக்களால் ஒப்புக் கொள்ளப் பட்டுவிட்டன. இன்னும் பெரும் புகழை நாடு என்னிடமிருந்து எதிர்பார்க்கிறது. நன்று நன்று!” “தமிழகத்தின் பெண்கள் பாராட்டிவிட்டனர். ஒரு பெண்ணின் பாராட்டில், ஆயிரம் ஆண்களின் பாராட்டு அடங்கிக் கிடக்கிறது. இதை நான் அறியாதவனல்ல. அத்துடன் தமிழகப் பெண்களின் தனிநாயகம் என் இளவரசி. அவள் என் புகழில் ஈடுபட்டிருக்கிறாள். அதைப் பெருக்கி என்னுடன் ஒன்றுபடக் காத்திருக்கிறாள். என்னை இளவரசனாக்கியதுடன் அவள் அமையவில்லை. என்னை அரசனாக்கத் துடி துடித்துக் கொண்டிருக்கிறாள். ‘அரசியாக என் பக்கத்தில் வீற்றிருக்க ஆர்வம் கொண்டிருக்கிறாள்.’” “ஆகா! ஆகாகா! நான் கற்கியாய்ப் பிறந்து விட்டேன். நாடு அதை அறிந்து, கற்கி என்று வரவேற்றுப் புகழ்பாடிவிட்டது. இனி கற்கியின் வீரப்புகழை நான் பெறவேண்டும். என் வாள் வலிமையால், வில்லாண்மையால் அதைப் பெறவேண்டும். இளவரசி இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். நாளையே அதற்கான வழிகோல வேண்டும். அவன் எண்ணங்கள் துணிவாயின. துணிவு செயலாகுமுன் துடிப்பாயின. அத்துடிப்புடன் அவன் கால்கள் அறையின் முழு நீளமும் தாண்டி அளந்தன. கருத்துடன் கருத்து அவன் உள்ளத்தில் மோதின. ஒவ்வொரு புதிய கருத்தின் போதும், அவன் கால்கள் நடையை நிறுத்தின. உடல் நிமிர்ந்தது. தலை உயர்ந்தது. கைகள் ஒன்றை ஒன்று ‘பட், பட்’ என்று சென்று தாக்கின. அவன் கனவுக் கோட்டைகளின் மகிழ்ச்சியிடையே, ஒரே ஒரு குறைதான் அவனுக்குத் தென்பட்டது. “இளவரசி என்னை இவ்வளவு மதித்து, இவ்வளவு நேசித்துப் பெருமைப்படுத்தினாளே! அத்தகையவள் பெயரோ, நாடோ, மற்ற விவரங்களோ கேட்காமல் போய்விட்டேனே! எனக்கு வீரம் இருந்து என்ன பயன்? முழு முட்டாளாகவல்லவா அமைந்துவிட்டேன்!” என்று அவன் தன்னையே நொந்து கொண்டான். “அவள் பெயர் என்னவோ?” “அவள் ஊர் என்னவோ?” “அவள் எந்த நாட்டரசன் புதல்வியோ?” “அவளை மணந்த பின்னால், எந்த நாட்டாட்சி எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறதோ?” இந்தக் கேள்விகள் அவன் சிந்தனையைப் புதியதொரு திசையில் செலுத்தின. முடிவில்லாத அச்சிந்தனைகளின் சுழற்சியிலேயே அவன் சுழன்று வட்டமிட்டான். இளவரசி உண்மையில் யார்? இதை மருதூர் மாணிக்கமாகிய பாரதவீரன் என்றும் அறிய முடியவில்லை. அறியவில்லை! அறிந்தால் அன்றே அவன் கனவுக் கோட்டைகள் தகர்ந்து போயிருக்கும். அவன் சீரிய கற்பனை உள்ளம் அதை அவன் என்றும் அறியாமல் காத்தது. ஆனால் சீடகோடிகள் அனைவருக்கும் அது யார் என்பது தெரியும்? ஏனென்றால் அதுவே அவர்கள் வகுத்த திட்டத்தின் இரகசியம். இளவரசி உண்மையில் இளவரசியுமல்ல. பெண்கூட அல்ல. ஒரு சிறுவனே. அவன் பெயர் மருது. அவன் பால் விற்றுப் பிழைத்த மாரியின் மகன். அவன் நல்ல அந்தசந்தமான வனப்புடையவன். சிங்கார ஆடை அணிகளில் விருப்ப முடையவன். நண்பர்கள் அவனுக்குப் பெண் உடை அணிந்து விளையாடுவார்கள்! ‘மருதி’ என்று பெண் பெயரிட்டு அழைத்துக் கேலிசெய்வார்கள். ஆனால் வேடிக்கை வினையாயிற்று. அவன் நாடகத்தில் உண்மையிலேயே பெண்ணாக நடித்தான். மாரியப்பன் உண்மை வீர நடிப்புக்கு அவன் உண்மைப் பெண்மை நடிப்புச் சோடியாய் அமைந்தது. ‘மாரியப்பன் வீரநாடக வாழ்க்கை நடத்த இருக்கிறான், அதில் அவனுடன் மருதியைப் போட்டியிட வைத்தாலென்ன!’ என்று நண்பர்கள் கலந்து பேசிக் கொண்டனர். அதன் பயனே மேற்கண்ட நிகழ்ச்சி. அவர்கள் அவனைப் புதிய பாரத வீரனாக்கத் திட்டமிட்டனர். அத்திட்டத்தில் ‘மருதி’ புதிய ‘அழகு பாரதி’ ஆனாள். புது நாடகத் திட்டம் அவர்கள் எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக முன்னேறிற்று. மறுநாள் காலையிலேயே பாரத வீரன் இளவரசியின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினான். அதற்காக அவன் தன் சீடகோடிகளுடன் கலந்து ஒரு பொது மன்றம் கூட்டினான். இளவரசியின் சேடியர்களுடனும் குடிபடைகளுடனும் வந்த சிலர். அவன் சீடகோடிகளிடையே இருந்தனர். ஆனால் பாரத வீரன் அவர்களை முற்றிலும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. கண்டுகொண்டாலும் அவன் மகிழ்ச்சியே அடைந்திருப்பான். இளவரசியின் வாழ்வுடன் வருங்காலத்தில் அவன் வாழ்வு ஒன்றுபட இருந்தது. அதற்கு இது ஒரு நல்ல சின்னம் என்றே அவன் கருதியிருப்பான்! 3. கொலுமன்றம் பாரத வீரன் கொலுமன்றம் செல்வ மருதூர் வரலாற்றிலே முன்பின் காணாத ஒன்று. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் மிக மிக முக்கியமானவை. பாரத வீரன் வீரவாழ்வுக்கு அவையே அடிப்படையாய் உதவின. அவன் புகழை உச்ச அளவில் பெருக்கவும் அவை முனைப்பாகப் பயன்பட்டன. விடியுமுன்பே நூலகமெங்கும் மூவண்ணமலர்களால் ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. மூவண்ணங்களில் சிவப்பு வீரத்தைக் குறித்தது. நீலம் வெற்றியைக் காட்டிற்று. வெள்ளை புகழின் அறிகுறியாய் இலங்கிற்று. மேடைமேல் மேடைகளாக இரண்டு அரியணைகள் அமைக்கப்பட்டிருந்தன. நிலமேடை இரண்டு விசிப்பலகைகளை இணைத்து அமைக்கப்பட்டிருந்தது. அதன்மீது ஒரு மூவண்ணத் திரைச் சீலை கவித்திருந்தது. இதன் மேல் இரண்டு மரப்பெட்டிகள் கவிழ்த்தப்பட்டிருந்தன. இவையே மேல் மேடைகளாகிய அரியணைகள். பொன்னாலிழைத்த பட்டுக் களால் அவை மூடப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றில் இளவரசியின் படம்தான் இருந்தது. பட உருவில் தான் இளவரசி கொலுவில் பங்கு கொள்ள இருக்கிறாள். நேரே வரமாட்டாள் என்பதை அது குறித்துக் காட்டிற்று. மற்ற அரியணை வெறுமையாகவே இருந்தது. அது பாரத வீரன் வருகைக்காக காத்திருந்தது. நூலகத்தின் இருமருங்கிலும் இரண்டு விசிப் பலகைகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் அமைச்சர்கள், படைத் தலைவர்கள், பெருமக்கள் வீற்றிருந்தனர். பொதுமக்களான வீரர்கள் எள்விழ இடமில்லாமல், எங்கும் நிறைந்திருந்தார்கள். வீரர்களுக்காக இருக்கைகள் போடப்படவில்லை. ஆனாலும் அந்தக் குறையைப் பலர் தாமே முயன்று சரிசெய்து கொண்டார்கள். தத்தம் கைக் கெட்டிய மொட்டை இருக்கைகளை அவர்கள் கொண்டுவந்து உட்கார்ந்தார்கள். எத்தகைய இருக்கைகளும் கிடைக்காதவர்கள் மரப்பெட்டி களைக் கவித்து உட்கார்ந்தார்கள். சிலர் செம்பு மண் குடங்களை யும், பானைகளையும் கொண்டு வந்தார்கள். அவற்றைக் கவிழ்த்து வைத்து அவற்றின்மீது வாகாக உட்கார்ந்தார்கள். ஒரே ஒரு குறும்பன் மட்டும், பாரத வீரன் அறியாமல், பாரத இராமாயணப் புத்தகங்களை எடுத்து அடுக்கினான். அவற்றின்மீது ஒரு துணியிட்டு அதை இருக்கையாக்கிக் கொண்டிருந்தான்! கொலு மன்றத்தின் காவலர்களாக நின்றவர்கள், உயிருள்ள வீரர்களல்ல. நாடகமேடைகளிலுள்ள சில அட்டை உருவங்களே அந்தந்த இடங்களில் அழகாக நிறுத்தப்பட்டிருந்தன. காற்றில் அவை ஆடி ஆடி அலைந்ததனால், அவையும் அவ்வப்போது உயிருள்ள உருவங்களாகத் தோன்றின. நாடக மேடையில் அரசர் அணியும் ஆடை அணி மணிகளைப் பாரத வீரன் அன்று அணிந்திருந்தான். கூட்டத்திடையே அவன் பெருமிதமாக நடந்து வந்தான். மக்கள் இருபுறமும் வழிவிட்டார்கள். “வாழ்க பாரதவீரன், வெல்க பாரத வீரன் கொற்றம்” என்று எல்லோரும் ஆரவாரம் செய்தார்கள். பாரத வீரன் அரியணைமீது ஏறி அமர்ந்தான். உடனே, “வெற்றி, வெற்றி! பாரத வீரனுக்கு எட்டுத் திசையிலும் வெற்றி, வெற்றி!” என்ற குரல்கள் நூலக மாடிவரை எழுந்து அதிர்ந்தன. நூலகத்தின் வெளி வாயிலில் நீண்ட கழிக்கோலுடன் ஓர் உருவம் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தது. அது உயிரற்ற உருவங்களில் ஒன்று என்றுதான் எல்லாரும் எண்ணினார்கள். ஆனால் உள்ளே அமைதி ஏற்பட்டதும், அது திடீரென்று கோலை உயர்த்திற்று. குரலை எழுப்பிற்று! “வெற்றி வீரன்பாரத வீரன் கொலுமண்டபம் கூடிற்று! வீரதீர விக்கிரமா தித்தன் கொலுமண்டபம் கூடிற்று!!” என்ற குரல் அமைதியைத் துளைத்து, மும்முறை முழங்கிற்று. வாயில் காவலன் உயிரற்ற உருவமல்ல, உயிருள்ள வீரனே என்பதையும் அது முழக்கமிட்டுத் தெரிவித்தது. பாரத வீரன் அரியணையில் அமர்ந்தபடியே, தலை நிமிர்ந்து பேசினான். “அமைச்சர்களே, படைத்தலைவர்களே, வீரர்களே! “உங்கள் தலைவன் என்கிற உரிமை எனக்கு உண்டு. உங்கள் தலைவியாக என் அருகே பட உருவில் அமர்ந்திருக்கும் இளவரசியின் துணைவன் என்ற உரிமையும் எனக்கு உண்டு. இரண்டு உரிமையாலும் பேச விரும்புகிறேன். “என் வெற்றியுலாவுக்கான திட்டங்கள், ஏற்பாடுகள் செய்ய நீங்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். அதற்கான ஆய்வுரைகள், அறிவுரைகள், கருத்துரைகள் வழங்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். முறைப்படி அமைச்சர்கள் தொடங்கட்டும்” என்று கூறி அமைந்தான். அமைச்சர்கள், படைத்தலைவர்கள் ஒவ்வொருவராகப் பேசினர். பின் வீரர்களில் பலர் எழுந்து பேசினர். பேச்சு எதிர் பேச்சு, வாத எதிர்வாதம், திட்ட எதிர் திட்டமாகக் கொலுமன்றம். ஒரு மாநாடுபோல் வளர்ந்தது. என்றுமில்லாத இந்த ஆரவாரம் கண்டு, செல்லாயியும் செங்காவியும் ஓடி வந்தார்கள். ஆனால் கழிக்கோல் ஏந்திய காவலன் அவர்கள் உள்ளே வராமல் தடுத்து நிறுத்தினான். “இது என்ன கும்மாளம்? இப்படியும் பணத்தை வீணாக்கி நாடகம் நடிக்கலாமா? பைத்தியக்காரக் கூத்தாயிருக்கிறதே!” என்று அவர்கள் கூக்குரலிட்டார்கள். வீரர்களில் சிலர் எழுந்து சென்றார்கள். “பாரத வீரன் பெருமையறியாமல் இப்படிப் பேசாதீர்கள்!” என்று அவர்கள் அப்பெண்மணிகளுக்குப் புத்திமதி சொன்னார்கள். தெருவிலே போகிறவர்கள், வருகிறவர்கள் கூக்குரல் கேட்டு நூலகத்துக்கு வெளியே கூடினார்கள். வரவர ஊர் முழுவதுமே அங்கே திரண்டுவிட்டது. ஊர் காவலர் சிலர் வந்து கூட்டத்தின் அமைதி காத்தார்கள். இதனால் கொலு மன்றத்தின் புகழ் ஆரவாரம் ஊரெங்கும் பரந்தது. கொலுமன்றத்தின் நடவடிக்கைகளை இந்நிகழ்ச்சிகள் எதுவும் பாதிக்கவில்லை. தீர்மானங்கள், திட்டங்கள் போதிய நுணுக்க விரிவகற்சிகளுடன் நிறைவேற்றப்பட்டன. “பாரத வீரனுக்கு வீர இளவரசனுக்குரிய கவசம் தலையணி, வாள், வில், அம்புத்தூணி, குதிரை ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும்.” இது முதல் தீர்மானம். இதைச் செயற்படுத்துவதற்கு ஒரு செயற்குழு அமர்த்தப்பட்டது. அதில் அமைச்சன் முத்துக்குடும்பன், படைத்தலைவன் குளத்தூரான், பொருட்காப்பாளன் சித்தேசி, நிமித்திகன் நீலகண்டன், மருத்துவன் மணிவண்ணன் ஆகியவர்கள் இருந்தார்கள். “பாரத வீரன் வீரகுருவை அடைந்து அவர் வாழ்த்துப் பெறவேண்டும்”. இது இரண்டாவது தீர்மானம். “பாரத வீரன் குறைந்த அளவு மூன்றுநாள் இரவு பகல் காளி கோயிலில் உணவு உறக்கமில்லாமல் நோன்பிருக்க வேண்டும். அன்னை காளியின் திருக்காட்சியும் திருவருளும், வெற்றியுலாவுக்குரிய கட்டளையும் பெற வேண்டும். மூன்று நாள் இரவு பகலுக்குள் தேவி காட்சி தராவிட்டால், காட்சி தரும்வரை அவன் நோன்பை விடக்கூடாது.” இது மூன்றாவது தீர்மானம். மூன்றாவது தீர்மானம் நிறைவேறுமுன், மணிவண்ணன் எழுந்தான். “காளிதேவி இக்காலத்தில் நேரடியாகக் காட்சி யளிப்பாளா? இது நடக்கக்கூடியதா? காலம் கலிகாலமாயிற்றே!” என்று அவன் குறுக்குக் கேள்வி கேட்டான். ஆனால் நீலகண்டன் இதற்கு ஆணித்தரமான விடையளித்தான். “கலி காலத்தில் ஒரு பாரத வீரன் பிறக்கக்கூடுமானால், காளி ஏன் நேரடியாக வரக்கூடாது? வந்து காட்சி தரக்கூடாது?” இந்த ஆணித்தரமான எதிர்க் கேள்வி முதல் கேள்வியை மடக்கிற்று. முதல் தீர்மானம் தவிர, மற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதில், செயற்குழு எதுவும் நிறுவப்படவில்லை. அவற்றைக் கொலுமன்றம் பாரத வீரன் தனிப் பொறுப்பிலேயே விட்டுவிட்டது. கொலுமன்றம் இத்தீர்மானங்களுடன் முறைப்படி கலைக்கப்பட்டது. ஆனால் உடனடியாக, அதே மேடையிலேயே, முதல் தீர்மானத்தில் கண்ட செயற்குழுவின் முதல் கூட்டம் கூடிற்று. தன் பதவிக்கேற்ப, அமைச்சன் முத்துக்குடும்பன் அதில் தலைமை தாங்கினான். பாரத வீரன் பார்வையாளனாக உடனிருந்தான். முத்துக் குடும்பனே திட்டத்தைத் தொடங்கி வைத்தான். “பாரத வீரன் இப்போது இளவரசன். ஆனால் மருதநாட்டு இளவரசியை மணப்பதால், அவன் மருத நாட்டின் வீர அரசனாகப் போகிறான். அத்துடன் வீர உலாமூலம் அவனே தமிழகத்தின் பேரரசனாகவும், தமிழுலகின் முதன்மைப் புகழரசனாகவும் ஆகப்போகிறான். ஆனாலும் வீர உலாவின் போது அவன் நிலை ஒரு வீரப் படைத்தலைவன் நிலையேயாகும். பாரத வீரனுக்கு நாம் தெரிந்தெடுக்கும் ஆடை அணிமணி ஏற்பாடுகள் இந்த எல்லாத் துறைகளுக்கும் பொருத்தமுடைய தாயிருக்க வேண்டும். “நாடக மேடையில் சில சமயம் இளவரசர் போருக்குச் செல்வதுண்டு. அவர் ஆடையணிமணிகள் அப்போது, இளவரசர் நிலைக்கும் பொருத்தமாயிருக்கும். படைத் தலைவர் நிலைக்கும் பொருத்தமாயிருக்கும். இதே ஆடையணிமணிகளே, பாரத வீரன் வெற்றியுலாவுக்குச் சிறப்பளிக்கும். என் கருத்து இதுவே” என்று அவன் கூறி அமர்ந்தான். தலைவர் கூறியதைக் குழுவினர் எவரும் மறுக்கவில்லை. குழு அதை ஏற்றுவிடும் என்றே தோன்றிற்று. ஆனால் இச்சமயம் பாரத வீரன் எழுந்தான். குழுவினர் பக்கமாகத் திரும்பினான். அவன் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. “அன்பர்களே! இளவரசன் படைத்தலைவன் ஆகிய இருவர் கூறுகளும் என்னிடம் இருப்பது உண்மையே. இரண்டுக்கும் பொது உரிமையான ஆடையணிமணிகள் தகுதியுடையவை என்பதிலும் தடையில்லை. ஆனால் நாடகக் கொட்டகையில் இளவரசன் இளவரசனல்ல, படைத்தலைவன் படைத்தலைவனல்ல. அவர்கள் அணியும் வாள் பொய்வாள். கவசம் பொய்க்கவசம். இவை நாடகத்துக்குச் சரியாய் இருக்கலாம். நாட்டகத்து மெய் வாழ்வுக்கு எப்படிப் பொருந்தும்? “நான் பொய் வாளோ, பொய்க் கவசமோ பூண்டு என்ன பயன்? நான் பொய் வீரன் அல்லவே? அந்தப் பொய் வாள் மெய்வீரர் கவசங்களைக் கிழிக்குமா? அந்தப் பொய்க் கவசம் மெய் வீரர் வாள்களிலிருந்து என்னைக் காக்குமா? “நம் செயற்குழு ஒரு நாடகச் செயற்குழுவல்ல. ஒரு மெய் வீரன் செயற்குழு என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். மெய் வீரன் செயற்குழு இவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? “மேலும் நம் நாடக மேடைக் கதைகள் பழங்காலத்து கதைகள். அதன் நடிக வீரர்களுக்கு இராமன் காலத்து வில்லும், விசயன் காலத்து அம்பும் போதுமாயிருக்கலாம். ஆனால் நான் இக்கால வீரனாயிற்றே எனக்கு அவை எப்படிப் போதும்? இக்கால வீரரிடம் வெடிப்படை இருக்குமே! வில்லும் அம்பும் வாளும் வெடிப்படை முன் என்ன செய்யமுடியும்? “நம் பாஞ்சாலங்குறிச்சி முன்னோர் உலகறிந்த வீரர்கள். ஆனாலும் வெடிப்படையில் கருத்துச் செலுத்தாததனால்தானே, நாம் வெள்ளையனுக்கு நம் நாட்டைப் பறிகொடுக்க நேர்ந்தது? இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.” நாடக மேடை கடந்த, நாடு கடந்த பாரத வீரன் அறிவு கண்டு செயற்குழுவினர் நடுங்கினார்கள். சிறிது நேரம் எவரும் வாய்திறக்க அஞ்சினார்கள். உண்மையான வாள் கவசம், வெடிப்படை - இவற்றுக்கு எங்கே போவது? என்ன செய்வது? இக்கேள்விகளுக்கு விடைகாண மாட்டாமல் அவர்கள் விழித்தார்கள். செயற்குழுவின் சிக்கல்நிலை எவ்வளவு நேரம் நீடிக்குமோ என்ற கவலை தலைவனைப் பிடித்தாட்டிற்று. இச்சமயம் சித்தேசி எழுந்தான். சிக்கல் தீரவகை ஏற்படலாம் என்ற நம்பிக்கை தலைவன் முகத்தில் தென்பட்டது. “ஏன்! கொல்லனிடம் இப்போதே செல்வோமே! வில், வாள், வெடிப்படை ஆகியவற்றைச் செய்து தருவதற்கான கட்டளை கொடுக்கலாமே!” என்றான் அவன். குழுவினர் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பாரத வீரன் முகம்கூட அமைதியாக இருந்தது. ஆனால் குளத்தூரான் முகத்தில் புத்தொளி வீசிற்று. அவன் புன்னகையுடன் மெல்ல எழுந்தான். “அன்பர்களே! பாரத வீரன் இக்கால வீரன்தான். ஆனால் அவன் புகழ் பழைய பாகவத புராணத்திலேயே விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறது. இதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. ஆகவே அதற்கேற்ற முறையில், பழைய புகழின் புது உருவமாகவே அவன் விளங்கவேண்டும். அவன் நடைஉடை, அணிமணி ஏற்பாடுகள் யாவும் இதற்கு இசைவாகவே இருக்கவேண்டும். இதுவே என் கருத்து. இதுபற்றி நான் நன்றாகச் சிந்தித்திருக்கிறேன். இது வகையில் ஒரு புத்தம் புதிய திட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறேன். பாரத வீரனுக்கும் குழுவினருக்கும் இணக்கமானால், அதை விளக்க முன்வருவேன்” என்றான். பாரத வீரன் முகத்தில் புத்தார்வம் துள்ளிக் குதித்தது. அவன் கிளர்ச்சியுடன் எழுந்தான். “ஆகா, நல்ல கருத்துரை புகன்றீர், படைத்தலைவரே! இன்று முதல் நான் உம்மைக் குளத்தூரான் என்ற பழைய பெயரால் குறிக்கமாட்டேன். உம் புகழ் இனி ‘மாவிதுரன்’ என்று வழங்கட்டும்! உம் அறிவுரையை நாம் மெச்சினோம். ஏற்று நடக்க இசைந்தோம். நாளை உம் தலைமையிலேயே குழுக்கூடட்டும். உம் திட்டத்தைக் கூறி வழிகாட்டுக!” என்றான். தலைமைத் திறமை அமைச்சன் முத்துக்குடும்பனிடமிருந்து ‘மாவிதுர’னிடம் சென்றுவிட்டது என்று குழுவினர் கண்டனர். அவன் திட்டத்தையே அனைவரும் ஆவலுடன் எதிர்ப் பார்த்தனர். சிக்கல் முற்றிலும் இனி தகர்ந்தது என்று முத்துக் குடும்பனும் மகிழ்ந்தான். 4. மருதவாணன் கோட்டை மறுநாள் காலையில் செயற்குழு மீண்டும் கூடிற்று. மணிவண்ணன் முன்மொழிய, முத்துக்குடும்பன் ஆதரிக்க, மாவிதுரன் தலைவனாய் அமர்ந்தான். தன் புதுப்பெருமை தோன்ற, அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். பின் பாரத வீரனைச் சாய்ந்த பார்வையால் பார்த்துக்கொண்டு பேசினான். “எண்டிசை ஆளப்போகும் மருதூர் மாணிக்கம் என்னும் தண்டமிழ்ப் பாரதவீரனே! தோழர்களே! “இந்த மாநகரின் பெயர் செல்வமருதூர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் முன்காலங்களில் மருதவாணன் என்ற வீரமன்னன் இருந்து ஆண்டான். இதையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதற்கேற்ப, இந்த மாநகரின் வடமேற்கில், சிறிது தொலைவில், ஒரு கோட்டை இருக்கிறது. அது பாழடைந்து கிடக்கிறது. காட்டின் நடுவில் இருக்கிறது. வேடர்கள் இன்னும் அதை மருதவாணன் கோட்டை என்றுதான் அழைக்கிறார்கள். நம் மருதநாட்டு இளவரசியின் முன்னோர்கள் ஆண்ட கோட்டை அதுதான். இதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். “நம் குழு பாரத வீரனுடன் அங்கே செல்லட்டும். தேடட்டும். கவசம், வில், வாள் முதலியவற்றுக்கான துப்புத் தடயங்கள் அங்கே பெரும்பாலும் கிடைக்கக் கூடும். “இச்சமயம் நான் உங்களுக்கு இன்னொன்றும் நினைவூட்ட வேண்டும். மருதூர், மருதநாட்டிளவரசி, மருதவாணன் என்ற பெயர் மரபுகளின் மூலத்தை எண்ணிப் பாருங்கள்! மருதநிலத்தின் தெய்வம் இந்திரன். மருதநிலத் தமிழ் வேளிர்களின் முன்னோன் அவனே. மருதவாணன் இந்த இந்திரன் நேர்மரபில் வந்தவன். பாரதப் போரில் கதிரவன் ஒளிக் கவசத்தைக் கர்ணனிடமிருந்து இந்திரனே பெற்றான். அது மருதவாணன் மரபில்தான் விட்டு வைக்கப்பட்டது. ‘பாண்டிய மன்னரிடம் இருந்த இந்திரவாளும் அவனிடம்தான் கடைசியில் இருந்ததாம்! ஆகவே மருதவாணன் கோட்டையில் சூரியன் கவசமும் இந்திரன் வாளும் நமக்குக் கிடைக்கக்கூடும். “பாரத வீரனாகிய கற்கி இவ்வூரில் பிறப்பானென்பது நம் முன்னோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் அவை இங்கே வைத்துக் காக்கப்பட்டுள்ளன.” இப்புதிய கருத்துரை எல்லாருக்கும் பிடித்தது. அதை அவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பாரத வீரனோ மகிழ்ச்சிக்கடலில் குளித்தாடினான். கோட்டையை அவர்கள் அன்றே முற்றுகையிட்டார்கள். அது பாழடைந்து இடிந்து தகர்ந்து கிடந்தது. அவர்களை அங்கே தடுக்க யாரும் இல்லை. முட்புதர்கள், கொடி தழைகள், பாம்பு பல்லிகள்தான் சிறிது சிறிது தொல்லை தந்தன. அவற்றால் அவர்கள் முயற்சி சிறிதும் தளரவில்லை. ஒவ்வொரு பகுதியாக அவர்கள் கோட்டையைத் துருவித் தேடினார்கள். துருப்பிடித்த வாள்கள், ஈட்டிகள் ஏராளமாகக் கிடந்தன. குந்தங்கள், வில் அம்புத் தூணிகள் போதுமான அளவில் கிடைத்தன. வெடிப்படைகள், பீரங்கிகள், குண்டுகள்கூட ஓரளவு இருந்தன. அத்துடன் துருவேறாத, கிட்டத்தட்டப் புதிய ஒரு வெடிப்படையும் அகப்பட்டது. அது மற்றவற்றைவிட நீளமாயிருந்தது. உண்மையில் அது கோட்டையைச் சார்ந்ததல்ல. ஒரு வேட்டைக்காரனுடையது. அப்பக்கம் அவன் மான் முயல் வேட்டை நாடியே வந்திருந்தான். எதிர்பாராதபடி பாம்புக் கடியுண்டு அவன் அங்கேயே மாண்டான். அவன் வெடிப்படை அங்கேயே கிடந்தது. பாரத வீரன் அந்த வெடிப்படையைப் பெருமிதத்துடன் எடுத்தான். என்ன நினைத்தோ, அதைக் கையில் பிடித்தான். இலக்கு வைத்துச் சுடுபவன்போல மணிவண்ணனை நோக்கி நீட்டினான். மணிவண்ணன் உயிருக்கு அஞ்சி அலறினான். அது கண்டு பாரத வீரன் விலாப்புடைக்க நகைத்தான். “அன்பனே! மருந்தும் குண்டும்தான் இல்லையே. இதற்கு இவ்வளவு அச்சமா?” என்று கேட்டான். தம் சீரிய முயற்சியைக் கூட மறந்து அனைவரும், மணிவண்ணனைப் பார்த்து நகையாடினார்கள். வில், அம்புத்தூணி, வாள், ஈட்டி ஆகியவற்றில் மிக நல்லவை பார்த்து, அவர்கள் தேர்ந்தெடுத்தனர். மெருகிடப் பட்டபின் அவை உண்மையிலேயே நல்ல படைக் கலங்களாயின. ஒரு வாளையும் வில்லையும் அம்புத்தூணியையும் மாவிதுரன் பொறுக்கி எடுத்தான். வாளின்பிடி ‘இ’ என்ற எழுத்து வடிவாய் மடங்கி இருந்தது. அதுவே மருதவாணனிடமிருந்த இந்திரன் வாள் என்று அவன் விளக்கந் தந்தான். வில் நுனியிலும் தூணிமீதும் குரங்கடையாளம் பொறித்திருந்தது. அவை விசயனின் காண்டீவமும் அம்பறாத்தூணியும் ஆகும் என்று மாவிதுரன் சாதித்தான்.! இவ்விளக்கங்கள் பாரத வீரனுக்கு மிகவும் கிளர்ச்சி தந்தன. அம்புகள் போதுமான அளவில் இல்லை. ஆனால் அம்பு நுனிகள் ஏராளமாய் இருந்தன. அவற்றைக் குச்சிகளில் இணைத்து அவர்கள் போதிய அம்புகள் செய்து கொண்டார்கள். குண்டுகளும் நிறையவே கிடைத்தன. ஆனால் அவற்றுள் ஒரு சிலதான் வெடிப்படையின் குழாய்க்கு இசைவா யிருந்தன. அவன் அளவாக ஈயக்குண்டுகள் சில உண்டுபண்ணிக் கொண்டார்கள். போதாக் குறைக்குக் கல் குண்டுகளைத் தேய்த்தும், மண் உருண்டைகளை உருவாக்கியும் அவர்கள் வளங்கண்டார்கள். தவிர, தீபாவளி, திருக்கார்த்திகை, பொங்கல் ஆகிய விழாக்களுக்கு வானவெடி செய்யும் ஒரு தொழிலாளியை அவர்கள் அணுகினார்கள். அவனிடமிருந்து சிறிதளவு வெடிமருந்து பெற்றார்கள். இதுவே பாரத வீரனுக்கு வெடிப்படை மருந்தாய் உதவிற்று. கோட்டையில் அவர்கள் தேடிய பொருள்களில் ஒரு பாதி அகப்பட்டுவிட்டது. ஆனால் கவசம், தேர், குதிரை ஆகியவை இன்னும் கிடைக்கவில்லை. சிறிது மனசோர்வுடனே அவர்கள் திரும்பலாயினர். ஆனால் திரும்பும் வழியே எதிர்பாராத வகையில் அவர்களுக்குப் புதுவளம் தந்தது. கோட்டையின் இடிந்த மதிலருகே ஒரு புழைவாயில் தெரிந்தது. அது ஒரு சுரங்கத்தின் வாய். ஆனால் உள்ளே பட்டப்பகலில்கூட எல்லாம் கருக்கிருட்டாய் இருந்தது. அதில் நுழைந்து பார்த்தல் நலம் என்று முத்துக் குடும்பன் கருத்துரை கூறினான். ஆனால் விளக்கில்லாமல் எப்படி உள்ளே செல்வது? இச்சமயம் நீலகண்டன் மணிவண்ணனை நோக்கினான். அவன் புகை குடிப்பது வழக்கம். ஆகவே அவனிடம் எப்போதும் நெருப்புப் பெட்டி இருந்தது. நீலகண்டன் குறிப்பை அறிந்துகொண்டான். “ஊம். நான் குச்சி பற்ற வைக்கிறேன். ஆனால் குச்சி பற்றவைப்பவனுக்குக் கண் முன்னால் ஒன்றும் தெரியாது. நீதான் நுழைந்து உள்ளே பார்க்க வேண்டும்” என்று அவன் கூறினான். நீலகண்டன் இதை ஒத்துக்கொண்டான். மணிவண்ணன் ஒவ்வொரு குச்சியாகப் பொருத்திக் கொண்டே சென்றான். அவனையடுத்து நீலகண்டன் சென்றான். பின்னால் பாரத வீரனும் மற்றக் குழுவினரும் காலால் தட்டித் தடவிக்கொண்டு முன்னேறினார்கள். திடீரென்று நீலகண்டன் பேய் கண்டவன்போல் அலறினான். மணிவண்ணனும் அவனும் ஒருவர்மேல் ஒருவர் புரண்டடித்துக்கொண்டு வெளியேறினர். செய்தி இன்னது என்று அறியாமலே, மற்றவர்களும் உயிருக்கஞ்சி உருண்டோடி வந்தனர். வெளியே வந்து ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தார்கள். ‘என்ன அங்கே? என்ன அங்கே?’ என்று ஒருவரை ஒருவர் கேட்டனர். யாரும் விடை கூறவில்லை. கூறமுடியவுமில்லை. சிறிது மூச்சு வந்தபின் நீலகண்டன் மட்டும் ஏதேதோ உளறினான். “அங்கே கண்டதா? தலையில்லா மனிதன் அப்பா, தலையில்லா மனிதன்! அந்தரத்தில் தொங்குகிறான்” என்றான் அவன். மணிவண்ணன் உடல் இன்னும் வெடவெடத்தது. “இந்த நாடகம் இத்துடன் போதும், அண்ணமாரே! பாரத வீரனிடம் எல்லாம் சொல்லி மன்னிப்புக் கேட்டு விடுவோம். எல்லாம் முன்போலவே இருக்கட்டும்” என்றான். மாவிதுரன் பல்லைக் கடித்தான். அவனைக் கடுமையாகப் பார்த்தான். பாரதவீரன் பேச்சு வந்ததுமே, முத்துக்குடும்பன் சுற்றிப் பார்த்தான். எல்லாரும் இருந்தார்கள்; பாரத வீரன் மட்டும் இல்லை. “எங்கே பாரத வீரன்!” என்று அவன் கலவரத்துடன் கேட்டான். எல்லாரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்து மிரள மிரள விழித்தார்கள். திருப்பிச் சுரங்கத்தில் சென்று பார்க்கும் துணிவு எவருக்கும் இல்லை. ஆனால் இச்சமயம் சுரங்கத்துக்குள்ளே யிருந்து, பாரத வீரன் குரலே கேட்டது. அது யாவும் விளக்கிற்று. மற்றவர்கள் ஓடியபோது, பாரதவீரன் ஓடவில்லை. மற்றவர்களுக்கு அச்சந்தந்த செய்தியே அவன் வீரத்தைத் தட்டி எழுப்பிற்று அவன் நின்றபடியே நின்றான். அவன் கையிலுள்ள வாள் அந்தச் சுரங்கம் இடங்கொள்ளுமட்டும் வலசாரி இடசாரியாக அவன் தலையைச் சுற்றிச் சுழன்றது. “யார் அங்கே சுரங்கத்துக்குள்? அது மனிதரானாலும் சரி, பேயானாலும் சரி! கண்கண்ட கற்கி முன் வந்து பார்க்கட்டும்!” என்று சுரங்கமதிர அவன் கத்தினான். யாரும் வரவில்லை. இருட்டில் எதுவும் தெரியவும் இல்லை. எல்லாம் ‘கம்’மென்றிருந்தது. பாரதவீரன் குரல் கேட்ட தோழர்கள் மீண்டும் உள்ளே நுழைய விரும்பினர். மணிவண்ணனைப் பார்த்தனர். அவன் ஒரு குச்சியை எடுத்துப் பொருத்தினான். அதேசமயம் பாதி எரிந்து அருகில் கிடந்த ஒரு சூந்துக்கட்டை நீலகண்டன் எடுத்தான். தீக்குச்சியின் பக்கம் அதை நீட்டினான். அது ‘தக தக’ வென்று பந்தமாக எரிந்தது. அணைந்து கங்கானபின் அது பின்னும் பேரொளி விளக்கம் தந்தது. அதன் உதவியால் அவர்கள் எளிதில் சுரங்கத்துக்குள்ளே சென்றனர். அந்த ஒளியில் எல்லாம் பட்டப்பகலாய்த் தெரிந்தது. பாரத வீரன் வாளை இன்னும் சுழற்றிக் கொண்டுதான் நின்றான். கண்காணா எதிரியை அவன் இன்னும் போருக்கு அழைத்துக் கொண்டுதான் இருந்தான். பந்தத்துடன் வரும் தோழர்களை அவன் புன்முறுவலுடன் வரவேற்றான். “வாருங்கள், தோழர்களே! உள்ளே போகலாம். அங்கே இருப்பது மனிதனாயிருக்கலாம், பேயாய் இருக்கலாம். ஆனால் அது ஒரு பெரிய கோழை என்று நன்றாய்த் தெரிகிறது. அது தானாக வெளிவராது. போய் ஒழிப்போம். வாருங்கள்” என்று அவன் முழங்கினான். “நம் நடிப்பின் சிறுமை எங்கே, பாரத வீரன் வீரத்தின் பெருமை எங்கே?” இந்த எண்ணம் அவர்கள் நெஞ்சின் ஆழ்தடத்தில் சுருக்கென்று தைத்தது. ஏனென்றால் இந்த வெளிச்சத்தில்கூட அச்சம் அவர்களை விடவில்லை. ஆனால் பாரத வீரன் அஞ்சா நெஞ்சம் அவர்களுக்குச் சிறிது தெம்பளித்தது. பாரத வீரன் முன்னே வீறுடன் சென்றான். அவனை ஒட்டி, பதுங்கிப் பதுங்கி, மற்றவர்கள் ஒவ்வொருவராகப் பின்னால் சென்றனர். ஆனால், அங்கே எவர் வீரத்துக்கும் தேவையில்லை. பந்தத்தின் வெளிச்சத்தில் அந்தரத்தில் தொங்கிய உருவத்தை அவர்கள் கண்டார்கள். பாரத வீரன் அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். அது பேயுமல்ல. மனித உருவமும் அல்ல. தலையற்ற ஒரு கவசமே. பாரத வீரன் தவிர, மற்றவர்கள் தம் அச்சத்தை எண்ணி வெட்கமடைந்தார்கள். கவசம் துருப்பிடித்திருந்தது. ஆனால் அது ஒருபுறமாகத் தான் இற்றுப்போய் இருந்தது. தலையோடும் முகப்பும் முற்றிலும் பொடிந்துபோய் இருந்தன. அதைத் தட்டியவுடன் முதுகுப் பகுதி தகர்ந்தது. ஆனால் வியக்கத்தக்க வகையில் மற்றப் பகுதிகள் எல்லாம் உரமுடனிருந்தன. அதை மெருகிட்டபின் அது அருமையான கவசமாயிற்று. பாரத வீரன் நெடிய உடலுக்கு அது முற்றிலும் சரியாக வாய்த்திருந்தது. தேடிவந்த பொருள்களில் மற்றொன்று கிடைத்து விட்டது. அவர்கள் நம்பிக்கை வளர்ந்தது. மகிழ்ச்சி மீண்டும் தோன்றிற்று. இடையில் தட்டிய சபலத்தை மணிவண்ணன் அறவே மறந்தான். கவசத்தைப் பெருமிதமாகக் கைப்பற்றியவண்ணம் அவர்கள் சுரங்கத்திலிருந்து வெளிவந்தார்கள். வெற்றிமேல் வெற்றியாக அவர்களுக்கு இன்னும் ஒரு நற்பேறு காத்திருந்தது. மதிலருகே இரண்டாள் உயரமுடைய ஒரு கறையான் புற்று இருந்தது. பாரத வீரன் அவ்வளவு உயரமான புற்றைக் கண்டு வியப்படைந்தான். விளையாட்டாக அவன் வாளால் அதைக் குத்தினான். குத்திய இடம் தொப்பென்று விழுந்தது. உள்ளே துருப்படிந்த இரும்புச் சக்கரம் தெரிந்தது. அவன் வியப்படைந்தான். புற்றை அகற்றும்படி கட்டளையிட்டான். அது கருங்காலியும் ஈட்டியும் தேக்கும் கொண்டு செய்த ஒரு சிறு தேர். சக்கரமும் அச்சும் தூண்களும் இரும்பாலானவை. அதன் புற வேலைப்பாடுகளும், சிறு சட்டங்களும்தான் இற்றுப்போயிருந்தன. உட்சட்டம் முழுவதும் அப்படியே இருந்தது. மொத்தத்தில் தேர் மிகுதி கெடவில்லை. ஆனால் பளு மிகவும் குறைந்திருந்தது. சக்கரங்களுக்கு நெய் பூசி, மெருகிட்ட பின், ஒரு சிறுவனால் கூட அதை இழுக்க முடிந்தது. புற்றின் அருகேயுள்ள புதர்களில் ஒரு கழுதை மேய்ந்து கொண்டிருந்தது. அது இளங் கழுதைதான். ஆனால் ஒட்டி உலர்ந்திருந்தது. சீடர்கள் அதற்குத் தீனி வைத்தார்கள். தண்ணீர் காட்டினார்கள். பின் அதையே தேரில் பூட்டினார்கள். புதுத் தீனியின் கிளர்ச்சியால் அது தேரைக் கடகடவென்று இழுத்தோடி வந்தது. வெற்றியுலாவின் முதல் ஏற்பாடுகள் இங்ஙனம் வெற்றிகரமாக முடிந்தன. ஏற்பாடுகளின் கடைசிக் கட்டமாக, செயற்குழு அன்றே கூடிற்று. மணிவண்ணன் இதில் யாவரும் மகிழும் புதுக் கருத்துரைகள் வழங்கினான். “அன்பர்களே! வெற்றியுலாவில் பாரத வீரன் பல நாட்கள் செல்ல வேண்டிவரும். பாலைவனங்கள், மலை காடுகள் கடக்க வேண்டியிருக்கும். இத்தகைய உலா முழுவதற்கும் தேர் பயன்படாது. குதிரையே பயன்படும். ஆகவே உலாவுக்குப் பீடிகையாக, வீரகுரு நாடிச் செல்லும் போது, அவரைத் தேரிலேற்றி வழியனுப்புவோம். உலாவிலிருந்து மீளும்போதும் வீரகுருவின் இல்லத்திலிருந்து தேரில் புகழுடன் அழைத்து வருவோம். மற்றச் சமயங்களில் குதிரையே போதுமானது என்று கருதுகிறேன்” என்றான். இதை யாவரும் ஒப்புக் கொண்டனர். அவன் மேலும் பேசினான். “அத்துடன் விசயாதி விசயனான பாரத வீரனின் தேர் விசயனின் தேரை ஒத்ததாயிருக்க வேண்டும். விசயன் தேரைப் போல அதை நான்கு குதிரைகள் இழுத்துச் செல்ல வேண்டும். குதிரைகள், பால் வெள்ளைக் குதிரைகளாய் இருந்தால், இன்னும் சிறப்பு. உலாவில் அவன் ஏறிச்செல்லும் ஊர்தியும் வெறும் குதிரையாகவோ, கழுதையாகவோ இருக்கக்கூடாது. அது விக்ரமாதித்தன் ஏறிச்சென்றது போல, ஒரு வேதாளமாயிருக்க வேண்டும். “இந்த இரண்டு வகைக்கும் நான் ஒரு நல்ல ஏற்பாடு செய்ய எண்ணுகிறேன். பாரத வீரனுக்கும் உங்களுக்கும் அது பிடிக்குமென்று கருதுகிறேன். “நாலு குதிரைகள் கண்டுபிடிப்பது எளிதன்று. பால் வெள்ளைக் குதிரைகள் இன்னும் அரிது. கிடைத்த குதிரைகளை வெள்ளையாக்குவதை விட, கழுதைகளை வெள்ளையாக்குவது எளிது. கழுதையின் மூக்கு வெள்ளையானதே! உடலும் கிட்டத்தட்ட வெள்ளைதான். தவிர அது உண்மையில் குதிரை இனத்தையே சேர்ந்தது. பால் நிற நெய் வண்ணம் தீட்டினால், குதிரையின் தோற்றத்தை அது தோற்கடிக்கும். குதிரையை விடக் குறைந்த செலவில், அது குதிரையைக் காட்டிலும் மிகுதியாக உழைக்கவும் செய்யும். “தேருக்கு ஏற்கெனவே தெய்வமாக நமக்கு ஒரு கழுதையை அனுப்பியுள்ளது. அது போல மூன்றை விலைக்கு வாங்கு வதனால்கூட மிகுதி விலை பிடிக்கமாட்டாது. “தவிர, வேதாளத்துக்குக் குதிரையைவிடக் கழுதைதான் பொருத்தமானது. கழுதை இனமும் குதிரை இனமும் இணைந்த இனம்தான் கோவேறு கழுதை. அது இன்னும் பொருத்தமானது என்று நான் உங்களுக்குக் கூறவேண்டியதில்லை. ஏனென்றால் ஏற்கெனவே ஒரு தெய்வத்தன்மை அல்லது பேய்த்தன்மை அதனிடம் இருக்கிறது. அது ஆணுமல்ல பெண்ணுமல்ல. குட்டி போடாது. குடும்பவாழ்வும் நாடாது. வேதாளமாக அதையே பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன். நம் ஊருக்கு வந்துள்ள நாடோடி நாடகக் குழுவிடம் அத்தகைய விலங்கு ஒன்று இருக்கிறது. நாடகக்குழு நொடித்துப்போனபின், அது ஊர் சுற்றியாகவே திரிகிறது. அதை நாம் எடுத்துக் கொள்ளலாம்” என்றான். இந்த அரிய திட்டம் கேட்டு அனைவரும் அகமகிழ்வுடன் ஆர்ப்பரித்தனர். முத்துக்குடும்பன் ஒரு திருத்தம் கூறினான். “இந்தத் தேரை இழுக்க ஒரு கழுதையே போதுமான தென்று கண்டோம். ஆகவே நாலு கழுதைகளைத் தேடி உருமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். ஒன்றை மாற்றினால் போதும். மற்ற மூன்றும் குதிரைகளாகவே இருக்கலாம். ஆனால் உயிருள்ள குதிரைகள் தேவையில்லை. அட்டைக் குதிரைகள் செய்தால் போதும். வெள்ளைத்தாள் அட்டையாலேயே செய்துவிட்டால், வெண்மை தீட்ட வேண்டாம். “இதனால் நான்கு குதிரைகளில் மூன்று உண்மையிலேயே குதிரைகளாய் இருக்கும். ஒன்று குதிரைபோல் இருக்கும். ஆனால் மற்ற மூன்று குதிரையின் உயிரும் அந்த ஒன்றிலேயே அமைந்திருக்கும். அந்த ஒன்றின் உடலுடன் உடலாக மற்ற மூன்று குதிரை உடல்களும் இயங்கும்.” முத்துக்குடும்பன் அறிவார்ந்த நகைச்சுவை, மணி வண்ணனை மண்ணில் உருட்டிற்று. மற்றவர்கள் நிலைமையைக் கேட்க வேண்டியதில்லை. முன் இழந்துவிட்ட குழுத் தலைமையை அவன் மீண்டும் பெற்றான். அந்த எக்களிப்புடன், விட்ட இடத்திலிருந்து அவன் மீண்டும் தொடர்ந்தான். “கோவேறு கழுதையையும் நாம் முற்றிலும் வேதாளம் ஆக்கிவிடலாம். நாடகத்தில் விக்ரமாதித்தனின் வேதாளமாக நாம் அட்டைசெய்து வைத்திருந்தோமல்லவா? அதன் முகப்பைக் கோவேறு கழுதையின் முகப்பாகவும் பின் பகுதியை அதன் பின் பகுதியாகவும் ஒட்டி விடலாம். நடுவில் பாரத வீரன் உட்கார இடம் இருக்கும். அட்டைகளிடையே வாள் ஈட்டி முதலியவை வைத்துக்கொள்ளவும் வாய்ப்பாயிருக்கும்.” பாரத வீரனுக்குக் கிளர்ச்சி பொறுக்கவில்லை. அவன் முத்துகுடும்பன் முதுகில் ஓங்கி அறைந்தான். முத்துக்குடும்பன் ‘கூகூ’ என்று கத்தினான். “அந்த வேதாளத்துக்கு இந்த வேதாளம் உயிர். இது கூதாளம் போடுகிறது” என்று பாரத வீரன் கேலி பேசினான். தேர்த்திட்டம், வேதாளத் திட்டம் முடிந்தபின் கவசத் திட்ட ஆராய்ச்சி தொடங்கிற்று. கவசத்தின் இற்றுவிட்ட பகுதிக்குத் தாள் அட்டை ஒட்டுப் போடலாம் என்று பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் சித்தேசி இதை விரும்பவில்லை. “முதுகில் யாராவது ஈட்டியால் குத்தினால், அல்லது தலை மீது வாளால் வெட்டினால் சாயம் வெளுத்துப் போகுமே!” என்று அவன் தடை கூறினான். ஆனால் பாரத வீரன் இப்போது மீண்டும் தலையிட்டான். “தூய தமிழ் வீரர் என்றும் முதுகுக்குக் கவசமிட மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆகவே முதுகைப்பற்றி அவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லை. தமிழகத்தில் முதுகில் குத்தும் கோழை இருக்கவே முடியாது. ஆனால் தலைக்கு மட்டும் அட்டை கூடாதுதான். நல்ல இரும்பு ஒட்டுத்தான் போடவேண்டும். ஆனாலும் உள்ளே இரும்புக் கம்பி இணைத்த தகரம் போதும் என்று நினைக்கிறேன். முகத்துக்கு என்ன செய்வது என்பது மட்டும் எனக்கு முற்றிலும் விளங்கவில்லை” என்றான். இந்த இடத்தில் சித்தேசியின் கற்பனை எல்லாக் கற்பனையையும் ஒருபடி தாண்டித் துள்ளிக் குதித்தது. கம்பன் கற்பனையே சித்தேசி உருவில் வந்ததோ என்று எண்ணும்படி இருந்தது. அவன் பேச்சு! அவன் பாரத வீரனுக்குத் தனி வணக்கம் தெரிவித்துக் கருத்துரை கூறினான். “அன்பர்களே, பாரத வீரன் கண்கண்ட கற்கியல்லவா? அதனால்தான் அவனுக்காகக் காத்திருந்த இந்தக் கவசத்தில் முகப்பு இல்லாமலிருக்கிறது. இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன். பாகவத புராணப்படி கற்கிக்குரிய முகம் குதிரை முகம். ஒரு குதிரை முகத்தையே நாம் செய்து, கவசத்தின் முகப்பில் பொருத்திவிடலாம். அப்போது முகம் உண்மையிலேயே கற்கிமுகமாய் விடும். முகத்தை வெண்கலத்தில் செய்தால், பாரத வீரன் குரல்கூட, குதிரைமுகக் கற்கியின் வெண்கலக் குரலாய் விடும்” என்றான். பாரத வீரன் இது கேட்டுத் துள்ளிக் குதித்தாடினான். களிப்பில் சித்தேசியையும் தூக்கிக்கொண்டே ஆடினான். கற்பனை கற்பனையைத் தூண்டிற்று. மற்றவர்களும் தத்தம் கற்பனை ஆற்றல்களைத் துருவித் தீட்டினார்கள். “கவசம் கதிரவனிடமிருந்து கர்ணன் மூலமாக இந்திரன் பெற்ற கவசமே என்பதை இது காட்டுகிறது. கற்கிக்கு வந்து சேரும்படியாகவே இந்திரன் வாங்கி வைத்திருக்க வேண்டும்” என்றான் நீலகண்டன். “தேர்கூட இந்திராணி குளிக்கச் செல்வதற்காக இந்திரன் அமர்த்திய தேராகவே கருத இடமுண்டு. மருதவாணன் இந்திரன் மரபினனாதலால், இந்திராணி அதை இளவரசிக்காக விட்டுச் சென்றிருக்க வேண்டும்” என்றான் மணிவண்ணன். ஒவ்வொரு கற்பனைக்கும் ஒரு காலைத் தூக்கி ஆடினான் பாரத வீரன்! 5. குருவருளும் திருவருளும் விடிய ஒரு யாமத்திலேயே பாரத வீரன் தேரை அவன் சீடர்கள் ஒப்பனை செய்தார்கள். வெள்ளொளி வீசிய நாலு குதிரைகள் விசயன் தேர்க் குதிரைகளை நாண வைத்தன. விசயன் அனுமக் கொடி பறந்த இடத்தில் ஒரு வானவில்லே பறந்தது. சீடகோடிகளின் கற்பனைத் திறமை அருமையாக வேலை செய்தது. அதன் மூலம் வான வில்லின் ஏழு வண்ணப் பட்டைகளும் கொடியில் தீட்டப்பட்டிருந்தன. இந்திரனிடமிருந்து வந்த கதிரவன் கவசம், இந்திரன் படைக் கலங்கள், இந்திராணியின் தேர் ஆகியவற்றுடன் இந்திரவில்லின் கொடி மிகவும் பொருத்தமாய் அமைந்தது. மேலும் பாரதப் போரில் கண்ணன் விசயன் சாரதியாய் இருந்தான். குறை அவதாரமாகிய விசயனுக்கு ஒரு நிறை அவதாரம் பெருமை அளிக்கவேண்டி வந்தது. ஆனால் பாரத வீரனோ முழு நிறை அவதாரம். ஆகையால் அவன் தானே தன் தேரை ஓட்டினான். தேரின்முன் வழக்கப்படி இசைக்குழுவினர் வீரநாமாவளி பாடிச் சென்றனர். படைவீரரும் பொதுமக்களும் வெற்றி முழக்கங்கள் முழங்கினார்கள். மாநகருக்கு அப்பால் குதிரைமுடித் தேரி என்றொரு பாலைவனம் இருந்தது. அதன் எல்லையை அணுகுவதற்குள் கிழக்கு வெளுத்துவிட்டது. அவ்விடம் வரை வந்து மக்கள் தம் வீரத்தலைவனை வழியனுப்பினர். சீடரும் சிறிது தொலை சென்று பிரியா விடைபெற்றுத் திரும்பினர். திரும்பும் சமயம் அவர்கள் பாரத வீரனிடம் ஒரு விலையேறிய பரிசை அளித்தார்கள். அது இளவரசி அவனுக்கு அவர்கள் மூலம் அனுப்பியிருந்த அன்புச் சின்னம். தன் முன்தானையின் ஒரு துண்டையே அவள் இதற்காகக் கிழித்து அனுப்பி யிருந்தாள். பாரத வீரன் அந்த முன்தானைத் துண்டை ஆர்வமதிப்புடன் பெற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அத்துடன் இளவரசியின் மதிப்பு உலகமெல்லாம் விளங்க வேண்டுமென்று அவன் விரும்பினான். அக்கருத்துடன், மலர் சூடுவதுபோல அவன் அதைத் தன் தலையணிமீது சூட்டிக் கொண்டான். கழுதைத் தேர், குதிரை முகம், ஒட்டுப்போட்ட வீரக்கவசம் ஆகியவற்றுடன் அந்த முன்தானைக் கட்டுக்கு இருந்த பொருத்தம் சொல்லுந்தரமன்று. அந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் கண்டு களிக்க, பாலைவன வழியில் யாருமில்லை. ஊளையிடும் பாலைவனக் காற்றுத்தான் அதைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தது. தவிர, அந்தக் காற்றின் சுதிக்கிசைய எங்கும் ‘இராவணன் மீசை’கள் ஆடிக் குதித்தோடிக் கொண்டிருந்தன. அவற்றுக்கும் அதைக் காணும் பேறு கிடைத்தது. இராவணன் மீசைகளிடையே ஒரு பாரிய இராவணன் மீசையாகக் கழுதைத் தேர் உருண்டு புரண்டு ஓடிற்று. மணி எட்டடிக்குமுன் வெயில் கொளுத்தத் தொடங்கிற்று. அனற்காற்றும் மெல்ல எழுந்தது. வழியெல்லாம் கண் மூடித்திறக்குமுன் மேடுகள் பள்ளங்களாயின. பள்ளங்கள் மேடுகளாயின. பாரத வீரன் உடலெல்லாம் வியர்வையாகக் கொட்டிற்று. அவன் நா உலர்ந்து, கண்கள் இருண்டன. ஆனால் அவன் உள்ளம் வீர குருவின் கற்பனை உருவைப் பற்றிற்று. உதடுகள் அன்னை திருநாமங்களைப் பற்றின. கைகள் ஆடி ஓடும் தேரின் தூண்களைப் பற்றின. தேரின் வேகம் பின்னடையும்படி அவன் சிந்தனை சிறகு விரித்துப் பறந்தது. ‘தனக்குரிய குருமூர்த்தி யாராயிருக்கக் கூடும்? அவரைத் தான் எப்படி, எங்கே காணமுடியும்? எப்போது காணமுடியும்? அல்லது அவர் தன்னை எப்படி வந்தடைவார்? இவ்வெண்ணங்களுடன் அவன் தேரில் செயலற்றுச் சாய்ந்திருந் தான். தேரோ, கழுதை இழுத்த இழுத்த திசையெல்லாம் சென்றது. விசுவாமித்திரர் இராமன் வீரகுரு. அவர் தாமாகவே சீடனை நாடி வந்தார். விசயனின் ஒப்பற்றகுரு துரோணாச்சாரி. அவரும் அப்படியே. ஆம். தன் குருவும் அதுபோலவே தாமாகத் தன்னை வந்தடைவது உறுதி. தான் இப்போது செய்யத் தக்கதெல்லாம், தெய்வம் விட்ட வழி செல்வது, காத்திருப்பது ஆகிய இரண்டுமே. தேர் இப்போது தெய்வம் விட்ட வழிதான் சென்றது. அது திட்டமும் திசையுமில்லாமலேயே சென்றது. இந்நிலையில், வழியில் முதல் முதல் காண்பவரையே தன் குருவாகக் கொள்ளல் தகுதி என்று அவன் திட்டம் செய்தான். வேளை உச்சியை அணுகிற்று. திடீரென்று அப்போது தான் முழு உயிர் வந்ததுபோலக் கழுதை பறந்தோடிற்று. அந்தக் கழுதை தெய்வீகமாகவே தான் தேருடன் கிடைத்தது. தெய்வமே அதற்கு வழிகாட்டியிருக்க வேண்டும். குருவின் மோப்பம் அறிந்தே அது விரைகிறது என்று அவன் கருதினான். குருவைக் காணும் ஆர்வத்துடன் அவன் உள்ளம் துடிதுடித்தது. உண்மையில் கழுதை திடுமென விரைந்ததற்கு ஒரு காரணம் உண்டு. குட்டியாயிருக்கும் போது அந்தக் கழுதையை வளர்த்த வண்ணான் நொடித்துப் போனான். அருமையாக வளர்த்த கழுதைக் குட்டியை விற்று விட்டான். உடல் நோக உழைத்தான். கழுதை விரைந்து இரண்டு கை கடந்தது. கடைசி வண்ணானும் நொடித்துப் போனான். அவனுக்குக் குடிகஞ்சிக்கும் வழியில்லை. அதேசமயம் அவனுக்குப் பிள்ளைக் குட்டி, உற்றார் உறவினர் யாருமில்லை. அவன் ஒரே உறவாக அந்தக் கழுதை இருந்தது. அதை அவன் விற்க விரும்பவில்லை. அது அவன் வறுமையிலே பங்கு கொண்டது. அவன் தான் குடிப்பதில் அதற்குப் பாதி கொடுத்தான். வேறு வேலை இல்லாததால், அதை ஊர்ப் புறத்தில் திரியவிட்டான். ஒரு தடவை கஞ்சி குடித்து விட்டு, அது காடு காடாக நாள் முழுதும் திரிந்தது. மருதவாணன் கோட்டைப் பக்கத்தில் சீடர் அதைக் கண்டபின், அதற்குப் புதுவாழ்வு தொடங்கிற்று. அது சென்ற வழி முதல் வண்ணான் துறையடுத்திருந்தது. அந்தத் துறையை நோக்கித்தான் அது விரைந்தது. அதன் மோப்பத்தின் இரகசியம் இதுவே. உச்சி வரை உழைத்து வண்ணான் சோர்ந்து போயிருந்தான். துணிகளை மூட்டையாகக் கட்டி வைத்து விட்டு இளைப் பாறினான். அன்று அவன் வீட்டிலுள்ள ஒரு மூளி மரக்காலில் கஞ்சி கொண்டு வந்திருந்தான். கஞ்சி முழுவதும் குடித்த பின்னும் மரக்கால் அவன் கையில் இருந்தது. மூட்டையைச் சுமந்து செல்ல ஒரு கழுதை இல்லாக் குறை அச்சமயம் அவன் உள்ளத்தில் நிழலாடிற்று. அவனை நோக்கி ஒரு விசித்திரத் தேர் விரைந்து வந்து கொண்டிருந்தது. ஒரு விசித்திரக் கழுதையும் மூன்று அட்டைக் குதிரைகளும் அதில் பூட்டியிருந்தன. குதிரைமுக மனிதனொருவன் அதில் அமர்ந்திருந்தான். அக்காட்சி கனவில் காணும் காட்சிபோல இருந்தது. அது இன்னது என்று புரிய முடியாமல் அவன் திகைப்படைந்தான். ஆனால் அவன்முன் அடுத்து நடந்த நிகழ்ச்சிகள் திகைப்பை மலைப்பாக்கின. பாரதவீரன் தன் கண்முன் வண்ணானைக் காணவில்லை. குருவையே கண்டான். வண்ணான் கையிலிருந்த மரக்கால் அவன் எண்ணத்தை இன்னும் உறுதிப்படுத்திற்று. ‘துரோணம்’ என்பதன் பொருள் மரக்கால்தான். துரோணாச்சாரி என்ற பெயரை அது உடனே அவனுக்கு நினைவூட்டிற்று. அவர்தான் வீரகுரு என்பதை ‘மரக்கால்’ மூலம் தெய்வமே காட்டிற்று என்று அவன் கருதினான். குருவைக் கண்டதும் அவன் மகிழ்ச்சி கரை கடந்தது. முறைப்படி, குருவினிடமிருந்து முப்பது முழதூரத்துக்கப் பால், அவன் தேரை நிறுத்தினான். கழுதையை அவிழ்த்து விட்டு விட்டு, குருவை நோக்கி விரைந்தான். இம்மெனுமுன், அவன் அடியற்ற மரம்போல் அவர் காலடிகளில் விழுந்தான். திருவடித்தாமரைகள் இரண்டையும் இறுகப்பற்றினான். கண்களில் ஒற்றிக் கொண்டான். தழுதழுத்த குரலில் அவரிடம் வேண்டுதல் செய்தான். “மாசுகள் அகற்ற வந்த வான் குருவே! துரோணாச் சாரியாரின் தெய்வ மரபில் வந்த திருவுருவே! ஏழையென் பழிதீர்த்து ஆட்கொள்ள வேண்டும். ஏகலைவனைப் போலப் பெருவிரலைத் தரக்கூட நான் தயங்கமாட்டேன். என் உடலையும் உயிரையுமே உமக்கு அடைக்கலமாகத் தந்தேன். எனக்கு வில்வித்தை, வாள்வித்தை, வெடிப்படைவித்தை எல்லாம் கற்றுத் தரவேண்டுகிறேன். உலகமெலாம்வென்று வெற்றிப் புகழ் உலா நடாத்தி மீளவும் இளவரசியைப் பெற்று வாழவும் திருவருள் பாலிக்கக் கோருகிறேன். இவ்வளவும் கருணை செய்வதாக வாக்களிப்பதுவரை உம் தங்கத் திருவடிகளை விடமாட்டேன்” என்று அவன் கதறினான். பாரத வீரன் ‘குதிரை’க்கும் அதே குருவைக் காணும் துடிப்பு மிகுதியாயிருந்தது. அவன் ஒரு வீரகுரு என்பதை அது அறியாவிட்டாலும், அவனே தன்னை வளர்த்த வண்ணான் என்பது அதற்குத் தெரிந்திருந்தது. ஆகவே அந்தக் குதிரையும் பாரத வீரனுடன் போட்டியிட்டு ஓடி வந்தது. அதுவும் விலங்கு மொழியிலே வணக்க இணக்கம் தெரிவித்தது. தன் இன மரபுப்படி விலங்குக் காம்போதிப் பண் உயர்த்தி வீரப்புகழ் பாடிற்று. பாரத வீரன் செயலைவிட, கழுதையின் செயல் வண்ணானுக்கு நன்கு விளங்கிற்று. அவன் மொழியைவிட, அதன் மொழி நன்கு புரிந்தது. நெடுநாளைக்குமுன் தான் விற்றுவிட்ட தன்செல்வம் அது. இதை அவன் அறிந்து கொண்டான். அந்தத் துறைக்கு உரிய தெய்வத்தின் செவியில், தன் உள்ளத்தின் வேண்டுதல் கேட்டிருக்க வேண்டும். அதனால்தான் தன் செல்வம் தன்னை வந்தடைந்திருக்கிறது என்று அவன் எண்ணினான். அவன் முயற்சியோ, செலவோ இல்லாமல், அவன் செல்வம் அவனை வந்தடைந்தது. இது கண்டு, அவன் பெருமகிழ்ச்சி கொண்டான். பாரத வீரன் சொல்வது அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கழுதையைப் பெற்ற மகிழ்ச்சியால், அவன் பாரத வீரனையும் ஏற்றான். கழுதையை ஆரத்தழுவிய கையாலேயே, அவன் பாரதவீரனையும் தழுவினான். பாரத வீரனுக்கு எல்லா உதவியும் செய்வதாக வாக்கும் அளித்தான். கழுதைமீது வண்ணான் தன் மூட்டைகளை ஏற்றினான். வீட்டுக்குப் புறப்பட்டான். கழுதையுடன் வந்த பாரத வீரனை அவன் விட்டுப்போக விரும்பவில்லை. அவனையும் உடனழைத்தான். தன் குரு தன்னை ஏற்றார் என்ற மகிழ்ச்சியால், பாரத வீரனுக்கும் தலைகால் தெரியவில்லை. அவன் வீர குருவின் பணிக்கே தன் ‘குதிரை’யை ஒப்படைத்தான். அதேசமயம் அவன் தன் தேரைத் துறையிலேயே விட்டுச் செல்ல விரும்பவில்லை. அதைத் தானே இழுத்துக்கொண்டு புறப்பட்டான். அந்த வண்ணான் பெயர் செங்கோடன். அவன் மனைவி கண்ணாயிரம். நல்ல செயலான குடும்பத்தில் பிறந்தவள். செல்வ வளமுள்ள நிலையிலேயே அவள் கணவன் வீட்டுக்கு வந்தவள். அதனால் அவர்கள் முதற் குழந்தை வள்ளி செல்வமாக வளர்ந்தாள். சிறிது தொலைவிலுள்ள மெய்ஞ்ஞானபுரம் என்ற நகரத்தில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஒன்று இருந்தது. அவள் அதில் படித்துப் பத்தாம் வகுப்பும் தேறியிருந்தாள். ஆனால் தந்தை நொடித்தபின், அவள் படிப்பு மதிப்பிழந்தது. அது குடும்பத்துக்கு ஒரு சுமையாயிற்று. ஒரு படித்த ஏழைப் பெண்ணை மணந்து கொள்ள, வண்ணார இளைஞர் எவரும் விரும்பவில்லை. வண்ணான் வரும்போது, வள்ளி வெள்ளாவியைத் துழாவிக்கொண்டிருந்தாள். கண்ணாயிரம் தன் சிறு புதல்வன் சேந்தனுக்குக் கஞ்சி ஊற்றிக் கொண்டிருந்தாள். வண்ணானுடன் வரும் கழுதையைக் கண்டு அனைவரும் வியப்பும் ஆர்வமும் கொண்டனர். ஆனால் பாரத வீரனைக் கண்டபோது, கண்ணாயிரத்துக்கு வியப்பு மட்டுமே ஏற்பட்டது. கழுதை இனி தங்கள் வீட்டிலேயே இருக்கும் என்று கூறி, வண்ணான் மனைவியை ஊக்கினான். அது கேட்டு அவள் மகிழ்ச்சி கொண்டாள். ஆர்வத்துடன் கழுதைக்குத் தீனி வைத்தாள். அந்த மகிழ்ச்சியிடையே பாரத வீரனைப் பற்றியும் வண்ணான் பேசினான். பாரத வீரன்மீதும் மனைவியின் இரக்கத்தைத் தூண்ட அவன் எண்ணினான். “பாவம்! அவன் அறிவு நல்ல நிலையில் இல்லை என்றே தோற்றுகிறது. ஆயினும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். படித்தவன் என்று தெரிகிறது. அத்துடன் நம் கழுதையை அவனே நமக்குக் கொண்டு தந்திருக்கிறான். கழுதையோடு அவனையும் நம் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கருதுகிறேன்” என்றான். கண்ணாயிரம் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவள் முகம் ஆயிரம் கோணல் கோணிற்று. அதேசமயம் ‘படித்தவன்’ என்ற சொல் கேட்டு வள்ளி வெள்ளாவியிலிருந்து எட்டிப் பார்த்தாள். குதிரைமுகத் தோற்றம் கண்டு அவள் மறுபடியும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆயினும் அதே குதிரை முகத்தைக் கண்டு சேந்தன் துள்ளிக் குதித்தான். ‘குதிரைமுக மாமா, குதிரைமுக மாமா’ என்று அவன் பாரத வீரன் முழந்தாள்களைக் கட்டிக்கொண்டான். பாரதவீரன் அவனைத் தன் இரும்புக் கைகளால் மெல்லத்தூக்கி எடுத்தான். குதிரை முகத்துடனே விளையாடவிட்டான். இரண்டு கணங் களுக்குள் சேந்தன் அவனுடன் பழகிவிட்டான். சேந்தனுக்கு அவன் ஒரே ‘மாமா’ ஆய்விட்டான். வெளியே வந்த பின், வள்ளி தேரை ஆர்வத்துடன் பார்த்தாள். பாரதவீரன் அதைக் கவனித்தான். “அது உன்னுடையது தானேயம்மா! தம்பியையும் கூட்டிக் கொண்டுபோய் விளையாடு” என்று அவன் சேந்தனை அவளிடம் கொடுத்துத் தேரில் ஏற்றினான். அவர்கள் ஆசைதீரத் தேரில் அவர்களை வைத்து மூன்று தடவை வீட்டைச் சுற்றி ஓட்டினான. இதனால் வள்ளியின் உள்ளம் முற்றிலும் அவன் வயப்பட்டது. கண்ணாயிரம் உள்ளக்கதவும் விரைவில் அவனுக்கு விரியத் திறந்து விட்டது. வண்ணானுக்கு அன்று முதல் பாரத வீரன் துறையில் ஒரு நல்ல துணைவனானான். சம்பளமில்லாத ஆர்வவேலையாளு மானான். சேந்தனுக்கும் வள்ளிக்கும் அவன் அன்பு மாறா மாமனாகவும், விளையாட்டுத் தோழனாகவும், ஆர்வ ஆசிரியனாகவும் விளங்கினான். தவிர, கண்ணாயிரத்துக்கு அவன் ஒரு கண்ணும், ஒரு கையுமாய் விளங்கினான். அவன் பாச வலைக்குள் குடும்ப முழுவதுமே ஈடுபட்டது. ஒரு சில நாட்களுக்குள் குருவின் குடும்பத்தில் அவன் பிரிக்க முடியாத ஒரு உறுப்பினன் ஆனான். படித்த மங்கையான வள்ளியின் இள உள்ளத்திலோ, அவன் வீரம், கல்வி, பண்பு, அன்பு ஆகிய நற்குணங்கள் ஆழப்பதிந்தன. அவனில்லாமல் ஒரு கணம் போவது அவளுக்கு ஒரு யுகம் போலாயிற்று. குடிதழைக்க வந்தவன் என்று கண்ணாயிரம் இப்போது அவனைப் போற்றினாள். அவனைக் குடும்பத்துடன் ஒரு குடும்ப உறுப்பினனாகச் சேர்த்துக்கொண்டு விட வேண்டும் என்ற ஆர்வம் அவள் உள்ளத்தில் எழுந்து வளர்ந்தது. வண்ணானோ இதை ஒரு தெய்வப்பேறாகக் கருதினான். அது கைகூடத் தக்கதா என்று மட்டுமே அவன் கவலைப்பட்டான். அவர்கள் பேச்சு வள்ளியின் உள்ளத்தில் இயல்பாய் முளைத்த ஆர்வத்தை வளர்த்தது. அவர்கள் விருப்பமறிந்து, அவள் பாரத வீரனிடம் மெள்ளத் தன் உள்ளந்திறந்து காட்டினான்ள். அவன் கருத்தறிய அவள் அவன் உள்ளம் தடவினாள். மருமகள் செங்காவியிடம் பாரத வீரன் உயிரையே வைத்திருந்தான். அதேசமயம் உயிரையும் மிஞ்சிய பாசத்துடன் வள்ளி அவன் உள்ளத்தில் படர்ந்தாள். எனினும் ‘இளவரசி’யின் அன்புத் தளையை அவன் மறக்க முடியவில்லை. வள்ளியிடம் அவன் தன் உள்ள முழுவதும் திறந்து காட்டினான். தன் வீர உலாமுயற்சி, இளவரசியின் அன்புக் கட்டளை, அதனைப் பின்பற்றிய தன் நடவடிக்கைகள் ஆகிய யாவும் கூறினான். “உன்னிடம் எனக்கு அளவற்ற நேசம் உண்டு. ஆனால் என் நெஞ்சு இளவரசிக்கே உரியதாகிவிட்டது. என் வீர வாழ்க்கைக் குறிக்கோளுடன் அவள் புகழ் பின்னிவிட்டது” என்று அவன் கூறினான். இளவரசியின் பரிசான முன்தானைத் துண்டையும் அவன் எடுத்துக்காட்டினான். வள்ளியின் இளம் பெண் மனத்தை அவன் கதை உருக்கிற்று. ஆனால் அவள் ஆவலைக் குறைக்கவில்லை. பல மடங்கு பெருக்கவே செய்தது. மேலும் அவள் விருப்பத்தை அவன் மனமார மறுக்கவில்லை. தடை நிலையையே விளக்கினான். விளக்கும்போதும் அவன் முகத்திலும் துயர் படர்ந்திருந்தது. அது அவளுக்கு ஆறுதல் தந்தது. ஊக்கமும் அளித்தது. அவள் தாய் தந்தையரிடம் எல்லாம் கூறினாள். அவர்களுடன் கலந்து பேசினாள். பாரத வீரன் தான் வந்த காரியத்தை மறக்கவில்லை. தன் வீரக் குறிக்கோளிலிருந்து நழுவவும் இல்லை. நாள்தோறும் அவன் தன் வீர குருவின் மனத்தைக் கரைத்தான். “எனக்கு வீரப் பயிற்சி அளித்து ஈடேற்றுங்கள். வீர உலாவில் வெற்றி பெற்று உலகாளத் திருவருள் பாலியுங்கள். இளவரசியுடன் வீர சிங்காதன மேறும்படி வாழ்த்துங்கள்” என்று நாள்தோறும் கோரினான். அவனை வழிக்குக் கொண்டுவரும் வகை அவன் மனப் போக்கின்படி நடப்பதே என்று வண்ணான் கருதினான். கண்ணாயிரமும் வள்ளியும் இதை ஒத்துக்கொண்டனர். அத்துடன் கண்ணாயிரம் அதே வழியில் வண்ணானை ஊக்கினாள். “இளவரசியை அவன் மணப்பதனால் நமக்கு ஒரு குறைவுமில்லை. மேலும் அதனால் அவன் அரசனாவான். அரசனானபின் நம் வள்ளியை மறக்காமல், மணந்து கொண்டால் போதும். மருமகன் அரசனாயிருக்கும் பேறு கிடைத்தால், மகள் இரண்டாந்தாரமாய் இருப்பது ஒரு குறை ஆகாது; அவள் பட்டத்தரசியாய் இல்லாவிட்டாலும், கேடொன்றும் இல்லை. இளைய அரசியாகவே அவள் நிலை போதிய உயர்வுடையதாய் இருக்கும். இன்றிருக்கும் நம் நிலையைவிட அது நம்மை எவ்வளவோ உயர்த்திவிடும்” என்றாள் அவள். வீரகுரு சீடன் காதில் இதை எல்லாம் ஓதினார். மன்னர் பெருமன்னர் பட்டத்தரசியல்லாமல், வேறு மனைவியரையும் மணப்பதுண்டு, பட்டத்தரசிகூட இதை வெறுப்பதில்லை. பாரத வீரன் இதை அறிந்திருந்தான். விசயன் வாழ்வு இவ்வகையில் அவனுக்குப் போதிய முன் மாதிரியாகவும் இருந்தது. ஆகவே இளவரசிக்கு இனியவனாக நடந்து, அவள் இணக்கம் பெற்று, குருவின் விருப்பத்தையும் நிறைவேற்ற அவன் முடிவு செய்தான். பாரத வீரன் வீரத்திறங்களைக் காண வீரகுரு விரும்பினார். வள்ளியும் கண்ணாயிரமும் உடனிருந்தனர். அவர்கள் கண்டு அகங்களிக்க, அவன் தன் வாளாண்மை, வில்லாண்மைத் திறங்களைக் காட்டினான். வீரகுரு அவற்றைப் பாராட்டினார். அவற்றில் அவனை ஊக்கினார். அவற்றைப் புகழ்ந்தார். இவையே அவர் தரும் பயிற்சியாய் அமைந்தது. ஆனால் அவன் வீரத்தை வளர்க்க வேறு எதுவும் தேவைப்படவில்லை. குருவருளால் எல்லாத் திறங்களும் தனக்கு வளர்ந்து விட்டதாக அவன் குருவைப் புகழ்ந்தான். அவரும் அதை ஏற்றார். இறுதியில் அவனுக்கு வாழ்த்துரை கூறினார், “குருபக்தியில் சிறந்த வீரச் சீடமணியே! உன் வீரம் உலகெங்கும் சிறப்பதாக! உன் புகழ் ஓங்குமாக! நீ வெற்றியுடன் உலா முடித்து, இளவரசியுடன் வீர சிங்காதனம் அமர்வாயாக! ஆனால் உன் புகழாட்சியில் முதல் செயலாக, வீரகுருவின் இந்த விருப்பத்தை மறந்துவிடாதே! இளவரசியின் கட்டளையுடன் என் கட்டளையையும் நிறைவேற்றி, வள்ளியின் உள்ளத்தில் பால் வார்ப்பாயாக!” என்று அவர் முடித்தார். “தங்கள் திருவடிகளைத் தலைமேற்கொண்டு செல்கிறேன். இனி என்னால் முடியாதது எதுவுமில்லை. தாங்கள் கூறியபடியே யாவும் செய்கிறேன். இளவரசியின் அன்புக் கட்டளைக்கு உட்பட்டு, என் உள்ளத்தில் வள்ளி இடம் பெறுவது உறுதி. தங்கள் கட்டளைகளையும் இளவரசியின் கட்டளைகளுக்கு ஒப்பாகவே கருதி நிறைவேற்றுவேன்” என்று கூறி விடை பெற்றான். கண்ணாயிரம் அவனுக்கு விடைகொடுக்கும்போது, கண்ணீராயிரமாகக் காட்சியளித்தாள். வள்ளியின் இளங்கைகள் பாரத வீரன் கழுத்தைப் பின்னிக்கொண்டன. கண்ணாயிரமே அவளைப் பற்றி இழுத்துச் செல்லவேண்டியிருந்தது. சேந்தன் ஒருவனே களிப்புடன் அவனுக்கு வழி அனுப்பினான். “குதிரைமுக மாமா! குதிரைமுக மாமா! யாரை மறந்தாலும் என்னை மறக்காதே, மறந்தால் நான் உன்னைத் தேடி வந்துவிடுவேன்” என்றான் அவன். “நானே உன்னைத் தேடி வருகிறேன், சேந்து! நீ எல்லாரையும் அன்பாகப் பார்த்துக்கொள்” என்று கூறிப் பாரத வீரன் வெளியேறினான். வீரகுரு எவ்வளவு வற்புறுத்தியும், தேரையும் கழுதையையும் உடன்கொண்டு செல்லப் பாரத வீரன் மறுத்து விட்டான். கழுதையை அவன் மாமனாருக்கு வீரக் காணிக்கை யாக அளித்தான். தேரை வள்ளியின் அன்புப் பரிசாக்கினான். மற்றவர்களுக்குத் தன் வாக்குறுதியையே பரிசாக்கிச் சென்றான். பாலைவன வழியில் அவன் கால்நடையாகவே நடந்தான். ‘இராவணன் மீசை’கள் காலைக் குத்திக் கிளறின. வெயில் அனலாய்க் கொளுத்திற்று. வீரகுருவின் குடும்பப்பாசம் சில நாட்களாக அன்னை திருநாமத்தைச் சிறிது மறக்கடித்திருந்தது. வட்டியும் முதலுமாக அவன் அத்திருநாமத்தை ஓதினான். மறதிக்குக் கழுவாயாக, அவன் நடுப்பகல் வெயிலிலும் ஓய்வு கொள்ளாமல் நடந்தான். உண்மையில் அவன் ஓய்வு கொள்ள நினைத்தாலும் அங்கே நிழல் எதுவும் இல்லை. நண்பகல் சாய்ந்தது. கானல் தகதகவென்று பறந்தது. அவன் உடல் எரிந்து கரிந்தது. ஊதைக் காற்று வாரி வீசிய மணம் காதுகளைத் தூர்த்தன. கண்களை உறுத்தின. மூச்சு விடுவதைக் கூடத் தடைப்படுத்தின. ஆனால் அவன் பின்னும் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். அவன் உடல் விசையகன்ற இயந்திரப் பொறிபோல ஆடி ஓடி அலைந்தது. மாலை நேரத்தில் அச்சந்தரும் ஓர் உருவம் பாரத வீரன் வழியில் குறுக்கிட்டது. வேறு யாரானாலும், அதைக் கண்டு மிரண்டோடியிருப்பார்கள். ஆனால் பாரத வீரன் அதை அணுகினான். அது மனித உருவம்தான். ஆனால் புதர்க்காடாக வளர்ந்த தாடி மீசைக்குள், அவன் முகம் புதைந்திருந்தது. பாம்புக்காடாக நீண்டு வளைந்து புரண்ட சடைமுடியில், அவன் உடல் புதைந்திருந்தது. அவன் ஆடை தோலாடை. காலில் அவன் நீண்ட கால்கட்டை போட்டிருந்தான். ஒரு கையில் முழுத் தேங்காயளவு பெரிய ஒரு மண்டை ஓடு இருந்தது. மற்றக் கையில் ஆளுயரம் நீண்ட ஒரு கவர்க்கோல் இருந்தது. அவன் ஓயாமல் முனகிக்கொண்டும், அவ்வப்போது அலறிக்கொண்டும் இருந்தான். அவன் ஒரு காபாலிகன், ‘சிவ சிவ சிவ சிவ’ என்ற ஓசையே அவன் முனகல். இடையிடையே ‘சிவோம்ஹர’ என்ற ஒலி தான் அவன் அலறலாய் அமைந்தது. “பெரியீர்! நான் காளியின் அருள்நாடி வருகிறேன். அருகில் காளியின் திருக்கோயில் எங்கிருக்கிறது என்று அறிவிப்பீரா?” என்று பாரத வீரன் பணிவுடன் கேட்டான். முனகலும் அலறலும் தவிக் காபாலிகன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் கை ‘வா’ என்று சாடை காட்டிற்று. பாரத வீரன் அவனைப் பின்தொடர்ந்தான். பாலைவனத்தின் நடுவே, ஒரு முள்மரக்காவின் இடையில், இடிந்து தகர்ந்த ஒரு கோயில் இருந்தது. காபாலிகன் அதனுட் சென்று பயங்கரமான கூச்சல்களிட்டுப் பூசை நடத்தினான். பின் எதுவும் பேசாமலே, பாரத வீரனை உறுத்துப் பார்த்துவிட்டுச் சென்றான். பாரத வீரன் காளியின்முன் நின்றான். உணவு நீரில்லாமல் அத்தெய்வத்தின் திருநாமங்களை அவன் உள்ளன்புடன் பாடினான். இரவிலும் அவன் உறங்கவில்லை. ஒற்றைக்காலில் நின்று நோன்பாற்றினான். இரவில் காட்டில் திரிந்த முரட்டுக் காட்டெலிகள் கோயிலினுள் புகுந்தன. சிதறிக் கிடந்த படையல் துணுக்குகளை அவை நாடின. ஆனால் காளி பக்தனால் இதைப் பொறுக்க முடியவில்லை. அவன் வாள் கொண்டு அவற்றைத் தாக்கினான். நூற்றுக்கணக்கில் எலிகளைக் கொன்றான். கோயிலெங்கும் ஒரே குருதிக்களமாயிற்று. நாள்தோறும் உச்சி கழிந்து காபாலிகன் வந்து பூசை நடத்தினான். பக்தன் நின்ற நிலையைக் கண்டான். காளி கோயிலருகில் உள்ள குருதிக் களரியையும் கூர்ந்து நோக்கிச் சென்றான். அவன் உள்ளார்ந்த மகிழ்ச்சியை அவன் முகம் காட்டிற்று. அது கண்டு பாரத வீரனும் மகிழ்வு கொண்டான். இரண்டு இரவும் மூன்று பகலும் இவ்வாறு கழிந்தன. காளி பின்னும் காட்சி தரவில்லை. அவன் இப்போது முன்னிலும் கடுநோன்புகளை மேற்கொண்டான். தலைகீழாய் நின்றான். காளியின் திருநாமங்களையும் தலை கீழாய் உருவிட்டான். முட்களால் உடலைக் கீறிக்கொண்டான். சிந்திய தன் குருதியை மூக்கில் தோய்த்தான். மூக்காலேயே காளியின் திருநாமங்களை நிலத்தில் எழுதினான். விடிய ஒரு யாமமாயிற்று. இயற்கை அவனை மீறிற்று. அவன் உணர்விழந்து கீழே விழுந்து கிடந்தான். அப்போது கூட அவன் நா காளியின் திருநாமங்களை முனகிக் கொண்டே யிருந்தது. அச்சமயம் எங்கிருந்தோ ஒரு குரல் செவியில் விழுந்தது, ‘மகனே, எழுந்திரு’ என்ற கூச்சல் விட்டுவிட்டு மும்முறை கேட்டது. மூன்றாவது குரல் கேட்குமுன் அவன் அரையுணர்வில் எழுந்திருந்தான். கண்களை மெல்லத் திறந்தான். செவி கொடுத்துக் கேட்டான். என்னவியப்பு! குரல் காளி உருவத்திடமிருந்தே வந்தது. அதற்கேற்ப, காளி உருவத்தின் கண்கள் சுழன்றன. அவை தெய்வீக ஒளியுடன் வீசின. அவன் உடல் நடுங்கிற்று. ஆனால் அவன் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது. அவன் காளியுருவின்முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து தெண்டனிட்டான். அன்னை மீண்டும் பேசினாள். “மகனே, எழுந்திரு! உன் பக்தியை மெச்சினேன். நீ வீரன் மட்டுமல்ல. வீரபக்தன். உன் வீரத்துக்கு உன்பக்தியே இணை. உன் பக்திக்கு உன் வீரமே இணை. எழுந்திரு! உனக்கு என்ன வேண்டும், கேள்” என்றாள். பாரத வீரன் வேண்டினான். “அன்னையே! முதலில் நீங்கள் எனக்கு நேரில் காட்சி தரவேண்டும். நான் உலகெங்கும் புகழ் பரப்பி, வீர உலா ஆற்றி வெற்றி பெற வேண்டும். என்னை எதிர்பார்த்திருக்கும் இளவரசியையும், உலக ஆட்சியையும் பெறவேண்டும். இப்படி என்னை வாழ்த்தி அருள்பாலிக்க வேண்டுகிறேன்” என்றான். அன்னை மீண்டும் பேசினாள். “மகனே! நீ என்னை நேரில் பார்க்கும் நாள் இன்னும் வரவில்லை. ஏனென்றால் அவ்வாறு பார்த்தபின், நீ திரும்ப உலகத்துக்குப் போக முடியாது. ஆயினும் உன் விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன். நீ ஒரு கணநேரம் கண்ணை மூடிக்கொண்டிரு. அத்துடன் இளவரசி உருவையே மனதில் கருதிக் கொண்டிரு. அந்த உருவிலேயே நான் உனக்குக் காட்சி தருகிறேன். வாழ்த்தி அருள்பாலிக்கிறேன்” என்றாள். பாரத வீரன் அவ்வாறே கண்களை மூடினான். இளவரசியையே கற்பனைக் கண்ணால் வழிபட்டான். ஒரு கணத்திற்குள் “மகனே, கண்ணைத் திற” என்ற குரல் கேட்டது. குரல் இளவரசியின் குரலே. அவன்முன் இளவரசியின் உருவே நின்றது. அன்னை அறிவித்தபடி, அதுவே இளவரசியின் திருவுருக் கொண்ட அன்னை என்று அவன் அறிந்து கொண்டான். அன்னையாக வந்த இளவரசி பேசினாள். “அன்பனே! நீ விரும்பியபடியே வீரப்புகழுடன் வெற்றி உலா முடிப்பாய்! அதன்பின் இளவரசியையும் இருநில ஆட்சியையும் பெற்று வாழ்வாயாக! ஆனால் ஒரு எச்சரிக்கை மட்டும் தர விரும்புகிறேன். நீ நேராக இப்போது வீட்டுக்குச் செல்லவேண்டும் எக்காரணம் கொண்டும், அதுவரை திரும்பிப் பார்க்கக்கூடாது. அத்துடன் வீர உலாவுக்கேற்ற வீரப்பாங்கனை நீ தேர்ந்தெடுக்க வேண்டும். போய் வா! வெற்றி உனதே!” பேச்சு முடிந்தது. இளவரசி உருவம் காளி உருவின்பின் மறைய இருந்தது. அதற்குள் பாரத வீரன் மீட்டும் பேசினான். “மன்னிக்க வேண்டும். அன்னையே! இன்னும் ஒரு வேண்டு கோள்!” என்றான். “இன்னும் என்ன!” என்று திரும்பி நின்று கேட்டாள் அன்னை. அவள் முகத்தில் வியப்புக் குறி தோன்றிற்று. “என் வீரகுருவின் விருப்பமும் நிறைவேற்ற வேண்டும். அவ்வகையில் இளவரசியின் திருவுள்ளத்தை இயக்கக் கோருகிறேன்” என்றான். அன்னை முகத்தில் வியப்புக்குறி படர்ந்தது. பாரத வீரன்கூட அதைக் கவனித்தான். ஆனால் கவனித்ததாக அவன் காட்டிக்கொள்ளவில்லை. “அன்னையே, தாங்கள் அறியாதது என்ன இருக்கிறது? ஆயினும் கேட்கத் திருவுளம் கொண்டதால் சொல்லுகிறேன். வீரகுருவுக்கு வள்ளி என்று ஒரு பெண் இருக்கிறாள். அவளை நான் மணந்துகொள்ள வேண்டும் என்று குரு விரும்புகிறார். இளவரசியை நான் மணந்து அரசனானபின், இளவரசி யிடம் இதற்கான இணக்கம் கோர விரும்புகிறேன். அவர் உள்ளத்தைத் தாங்கள்...” அன்னை குறுக்கிட்டாள். “வள்ளி உன்னை விரும்பு கிறாளா?” என்று கேட்டாள். “ஆம், என்னையே நினைத்து ஏக்கமாயிருக்கிறாள்!” “மகனே, உன் உள்ளம் எப்படி?” “நானும் தான், அன்னையே!... மன்னிக்க வேண்டும்!” அன்னை முகத்தில் தோன்றிய குறிப்பு கோபக்குறிப்பா, சிரிப்பா, வியப்பா என்று அவனால் அறிய முடியவில்லை. ஆனால் விரைவில் அந்தக் குறிப்பு மாறிற்று. “சரி அப்படியே ஆகட்டும், மகனே. நீ போகலாம்” என்று கட்டளை பிறந்தது. அவன் உள்ளம் அமைதியுற்றுக் குளிர்ந்தது. அன்னை மறைந்தாள். அவன் திரும்பினான். திரும்பிப் பாராமலே வீடு நோக்கிப் புறப்பட்டான். காலடிகள் அவனைப் பின்தொடரும் சத்தம் கேட்டன. சில சமயங்களில் அடங்கிய நகைப்பொலி கேட்டது. அடிக்கடி ‘பாரதவீரன்’ “வள்ளி” என்ற பெயர் கூறி யார்யாரோ ‘குசுகுசு’ என்று பேசினர். பின்னால் வருபவர் நிழலைக்கூட ஒன்றிரண்டிடங்களில் அவன் கவனித்தான். ஆனால் அவன் விருப்பமெல்லாம் நிறைவேற்ற அருள்பாலித்தவள் அன்னை. அவள் கட்டளையை அவன் மீறத் துணியவில்லை. மீறவில்லை. ஊருக்குள் வருமுன் காலடிகள் அடங்கின. பேச்சும் ஓய்வுற்றது. அவன் வீட்டுக்குச் சென்று நோன்பின் களைதீர உண்டான். பின் வெளிக்கூடத்தில் சென்று அவன் சாய்ந்தான். இரண்டுநாள், இரண்டு இரவு அவன் கண் விழிக்கவேயில்லை. களையார உறங்கினான். சீடகோடிகள் உலாத் தொடக்கத்துக்கான ஏற்பாடுகளில் முனைந்தனர். பாரதவீரன் வீரத்தைப்பற்றிமட்டுமே இதுவரை சீடர்கள் அறிந்திருந்தனர். இப்போது அவன் பக்தியையும், உள்ளப் பாசத்தையும் அவர்கள் பாராட்டினர்! பக்தியை அவர்கள் கிட்டத்தட்ட நேரடிச் சான்றாகவே கேட்டறிய முடிந்தது. ஏனெனில் காபாலிகனாக வந்து, காளிகோயிலுக்கு வழி காட்டியவன் மாவிதுரனே. அத்துடன் ‘இளவரசி’யாகிய மருதுவும் அவனுடன் சென்றிருந்தான். பக்தியை நன்கு தேர்ந்தறிந்தபின், அவனே அன்னை திருவுருவின் உள்ளிருந்து அன்னை குரலில் பேசினான். அவன் கைவிளக்கே அன்னை திருவுருவின் கண்களுக்குள்ளிருந்து ஒளி வீசிற்று. இளவரசி யுருவில் அன்னையாகக் காட்சியளித்ததும் அவனே. இந்த ‘அன்னை’ காட்சியாலேயே வள்ளியின் காதல் கதையையும் அவர்கள் அறிய முடிந்தது. வேடிக்கையாகவே அவர்கள் நாடகத்தைத் தொடங்கி யிருந்தனர். ஆனால் அதன்மூலம் பாரத வீரனின் பலதிறப் பண்புகள் வெளிப்பட்டது கண்டு அவர்கள் அகமகிழ்ந்தார்கள். அவன் நடிப்புப் புகழைமட்டும் அன்றி, உண்மைப் புகழையும் அவர்கள் எங்கும் பரப்பினார்கள். 6. பட்டிமந்திரி பாரத வீரனைக் காணாமல் செல்லாயி பாகாய் உருகினாள். செங்காவியும் உள்ளூர வெதும்பினாள். அவன் இல்லாத ஒரு வாரகாலம் அவர்களுக்கு ஒரு பெரிய ஊழியாய்க் கழிந்தது. அவன் திரும்பி வந்ததே அவர்கள் இன்பக்கடலுள் ஆழ்ந்தனர். ஆயினும், அவர்கள் கவலை தீரவில்லை. உடல் தேறியபின் அவன் மீண்டும் போய்விடக்கூடும். இந்த எண்ணம் அவர்களை ஓயாமல் வாட்டி வதைத்தது. பாரத வீரன் சீடகோடிகளை அவர்கள் மனமார வெறுத்தார்கள். சபித்தார்கள். ஏனென்றால் அவன் புதிய போக்குக்கு அவர்களே எண்ணெய் ஊற்றி வளர்த்தனர். இது கண்டு அவர்கள் சீற்றங்கொண்டார்கள். ஆனால் அவர்களுடன் அனுதாபம் காட்டிய நண்பர்களும் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் குடும்ப அம்பட்டன் கோமாறனும், கோயிற் குருக்கள் நன்னயப் பட்டருமேயாவர். கோமாறன் சித்தர் நூல்களிலும் வேதாந்த நூல்களிலும் தேர்ச்சியுடையவன். நன்னயப்பட்டரோ, சைவ வைணவ சித்தாந்த நூல்களையும், திருக்குறளையும் கரைத்துக் குடித்தவர். பாரத வீரன் போக்கை இருவரும் கண்டித்தார்கள். ஆனால் இளைஞர்களை மட்டும் குற்றம் கூறிப் பயனில்லை என்று இருவரும் கருதினர். அவன் கற்பனை நூல்களையே மிகுதியும் படித்தான். அவையே அவனுக்கு மூளைக்கொதிப்பு உண்டு பண்ணின என்று கருதினார்கள். செல்லாயியும் செங்காவியும் அவர்கள் கருத்தை ஏற்றுக் கொண்டனர். அந்த நுல்களை மறைத்துவிட அனைவரும் சேர்ந்து திட்டமிட்டனர். கோமாறன் இது வகையில் புதுமை வாய்ந்த ஒரு திட்டம் வகுத்தான். ‘புத்தகங்களை நாம் மறைத்து விடலாம். ஆனால் இந்தச் செய்தி மாரியப்பனுக்குத் தெரியக்கூடாது. அதேசமயம் புத்தகங்கள் போனது பற்றி அவன் புண்படவும் கூடாது. அப்போதுதான் நம் திட்டம் வெற்றி பெறும். “இதுபற்றி நான் நன்கு சிந்தித்திருக்கிறேன். இளைஞர்கள் எது செய்தாலும் பாரத வீரன் ஐயப்படாமல் ஏற்று நடக்கிறான். ஏனென்றால், அவன் போக்குப்படியே அவர்கள் காரியம் செய்கிறார்கள். நாமும் அப்படியே செய்யவேண்டும். “புத்தகங்களை இரண்டு தலைமுறைக்கு யாரும் காணாதபடி, கோயிலின் உள்ளறையில் பூட்டிவைத்து விடலாம். அதேசமயம் புத்தகம் இருக்கும் அறையையும் சுவர்கட்டி மறைத்து விடுவோம். இரவே ஒரு பூதம் வந்து புத்தகங்களுடன் அறையையும் தூக்கிக்கொண்டு போய்விட்டது என்று கதை கட்டுவோம். அவன் இத்தகைய கற்பனையை நம்புவது உறுதி” என்றான். பட்டரும் பெண்டிரும் கோமாறன் கற்பனைத் திறத்தை வியந்தனர். ஏடுகள் மாலையிலேயே அப்புறப்படுத்தப்பட்டன. அன்றிரவே அவசர அவசரமாகப் புதுச்சுவர்கள் எழுப்பப் பட்டன. நூலகத்தின் வாயில்களும் பலகணிகளும் நாற்புறமும் அடைத்துப் பூசப்பட்டன. பூச்சுவாயோ, புதுச்சுவரோ இருந்த இடம் தெரியவில்லை. ஏனென்றால் அவற்றின் மீது கரித்தூளும் தூசியும் கலந்து நயம்படத் தூவப்பட்டன. பாரத வீரன் நூலகத்தைக் காணாமல் திகைத்தான். பெண்டிர் கதைகேட்டு அவன் முதலில் வியப்புற்றான். ஆனால் பூதம் வந்த அரவத்தைக் கேட்டதாகக் கோமாறன் கூறினான். அறையைத் தூக்கிக்கொண்டு பூதம் வானில் பறந்ததைக் கண்டதாக, நன்னயப்பட்டர் தெரிவித்தார். இந்த விளக்கங்கள் கேட்டுப் பாரத வீரன் பூதத்தின் மீது சீறினான். “என் மீது இந்த இருளுலக மக்களுக்கு இவ்வளவு பொறாமையா? பார்க்கிறேன் ஒரு கை!” என்று கறுவினான். சீடர்கள் கதையை நம்ப மறுத்தனர். ஆனால் அவர்கள் பொறியில் அவர்களே அகப்பட்டுக் கொண்டார்கள்” அன்னை நேரில் வருகிறாள்! பூதங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா?” என்று நன்னயப் பட்டர் கேலிசெய்தார். கோமாறன் திட்டம் வெற்றி பெற்றது. ஆனால் புதுப் போக்கை நிறுத்தவே, அவர்கள் அத்திட்டம் கொண்டு வந்தார்கள். எதிர்பாராத வகையில் அது அப்போக்கை வளர்த்தது. பாரத வீரன் கற்கி அவதாரமே என்பதற்கு அது இன்னொரு சான்றாயிற்று. ஏனெனில் அதனால்தான் பூத உலகும், அரக்கர் உலகும் தம் புது எதிரியைக்கண்டு பொறாமையுற்றன. கண்டு அஞ்சித் தடுப்பு நடவடிக்கையில் இறங்கின. இந்த எண்ணங்களால் பாரத வீரனின் புதுப்போக்கு வலுத்தது. அவன் அது முதல் கவசத்தையும் குதிரை முகத்தையும் அகற்றாமலே உண்ணவும் உறங்கவும் தலைப்பட்டான். குதிரைமுகத்தோடு அவனால் தெளிவாகப் பேச முடியவில்லை. அவன் பேச்சுக் கிட்டத்தட்டக் குதிரையின் கனைப்புப் போலவே, அமைந்தது. ஆனால் சீடகோடிகள் அது கண்டு அவனை இன்னும் பெருமைப்படுத்தினார்கள். கற்கி முகத்துடன் கற்கி குரலும் வந்துவிட்டது என்றார்கள். கற்கி முகத்தை எடுக்காமல் அவனால் ஒரு உருண்டை சோறுகூட உண்ண முடியவில்லை. ஒரு குவளை நீர்கூடக் குடிக்க முடியவில்லை. ஆனால் சீடகோடிகள் இது கண்டு சளைக்க வில்லை. அவர்கள் ஒரு வளைகுழலுடன் ஒரு ஊற்று குழாயைப் பொருத்தினர். அதன் மூலமாக வாய்க்குள் குதிரைமுக வழியாக நீர் ஊற்றினர். உணவையும் அவர்கள் நீரில் கரைத்து நீராகாரமாகவே அருந்தச் செய்தார்கள். குதிரைமுகத்தோடு அவனால் நிலத்தில் தலைவைத்துப் படுக்க முடியவில்லை. சீடகோடிகளின் திறமை இதிலும் அவனுக்குப் பெருத்த உதவியாயிற்று. பல செங்கல்களை உடைத்து, அந்தத் துண்டுகளால், அவர்கள் அவன் தலைக்கு அண்டை கொடுத்தனர். சுத்த வீரரான வீட்டுமாச்சாரிக்கு அம்புகளாலேயே விசயன் தலைக்கு அண்டை கொடுத்தான். இதைப் பாரத வீரன் நினைவூட்டிச் சீடர்கள் அறிவைப் பாராட்டினான். சீடகோடிகளுக்கு இப்போது ஒரே ஒரு கவலைதான் மிஞ்சி இருந்தது. வீர உலாவுக்கேற்ற வீரப்பாங்கனைத் தேர்ந்தெடுக்கும் படி, அன்னை கட்டளையிட்டிருந்தாள். அத்தகைய பாங்கனை எங்கே கண்டுபிடிப்பது? இது தெரியாமல் அவர்கள் விழித்தனர். பாரத வீரன் சீடர்களை ஒவ்வொருவராகப் பரிசீலனை செய்து பார்த்தான். யாரும் ஒத்து வரவில்லை. ஏனெனில் அவன் கருதிய தகுதி யாருக்கும் இல்லை. அத்துடன் யாரும் அந்தப் பெரிய பொறுப்பை ஏற்க முன் வரவுமில்லை. அவர்கள் இதுவகையில் கவலை கொண்டார்கள். ஆனால் பாரதவீரன் ஆறுதல் உரைத்தான். “வீரகுரு தாமாகத் தான் வந்து கிட்டினார். அதுபோலப் பாங்கனும் தானாக வந்து சேருவான்” என்றான். அவன் கூறியது பொய்க்கவில்லை. எல்லா வகையினும் பொருத்தமான ஒரு பாங்கன் ஒருசில நாளில் வந்தான். அவன் தானாகவே பாரத வீரனை தேடிக்கொண்டு வந்தான். அவன் பெயர் தப்பிலியப்பன். அவன் பாரத வீரன் வீர குருவின் அண்ணன் மகன்தான். அவனைவிட மிக நல்ல உழைப்பாளி எங்கும் கிடையாது. ஆனால் அவனுக்கு மூன்று பெண் குழந்தைகளும், இரண்டு ஆண்குழந்தைகளும் இருந்தார்கள். அந்தப் பெரிய குடும்பத்துக்குக் குடும்பத் தொழிலின் ஊதியம் பற்றவில்லை. எளிதாக மிகுதியான பணம்பெற அவன் வேறு தொழில்களை நாடினான். புன்செய்க் காடுகளில் அவன் வேலை செய்து பார்த்தான். விறகு வெட்டி விற்றுப் பார்த்தான். இறுதியில் அருகிலுள்ள சர்க்கரை ஆலையில் ஒரு குத்தகை எடுத்தான். ஆலைக்கு வேண்டிய வெல்லப்பாகும் விறகும் தருவித்துக் கொடுத்தான். என்றாலும் அவன் வறுமை தீரவில்லை. சர்க்கரை ஆலையும் திடுமென நிறுத்தப்பட்டு விட்டது. அவன் வேலையோ வேலை என்று அலைந்தான். பெரியப்பனைத் தேடி வந்த புது வாழ்வின் செய்தி அவன் செவிக்கு எட்டிற்று. ஏழையானபின், தங்கை வள்ளியின் படிப்பு அவளைத் தீண்டுவாரற்றவளாக்கியிருந்தது. இப்போது அவளுக்கு வந்த புது மதிப்பைப் பற்றியும் அவன் கேள்விப் பட்டான். அவன் பெரியப்பன் வீடு சென்றான். பெரியப்பன், பெரியம்மை, வள்ளி எல்லாரிடமும் பேசினான். “குதிரைமுகத்துடன் வீரஉலா வரும் பாரத வீரனுக்கு ஒரு பேரரசு கிடைக்கப்போகிறது. மனிதமுகத்துடனே அவனுடன் சென்றால், ஏன் ஒரு சிற்றரசாவது கிடைக்காது” என்று அவன் எண்ணினான். அவனுக்குப் புதிய ஊக்கம் பிறந்தது. மனைவிமார் களிடம் அவன் இதைப் பற்றிக் கூறவில்லை. வயிற்றைக் கேட்டுக்கொண்டா உணவு தேடுவார்கள்? அவர்களுக்காகத் தானே அவன் உழைத்தான்? பயன் அவர்களுக்கு, முயற்சி தனக்கு! இதுவே அவன் கருத்து. அவன் பாரத வீரனைத் தேடிப் புறப்பட்டான். தனக்கு வேண்டிய ஆடையணிகளை அவன் ஒரு சிறு மூட்டையாகக் கட்டினான். அவன் குடும்பத்தின் சொத்தாக அவனிடம் ஒரு கழுதைக் குட்டிதான் இருந்தது. மூட்டையைக் கழுதைக் குட்டியின் முதுகில் ஏற்றிக்கொண்டு அவன் பயண மானான். வீட்டில்தான் அவன் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஆயினும் தனக்கு வரப்போகும் புதுப் பெருமையைப்பற்றி ஊரெல்லாம் தமுக்கடிக்கத் தவறவில்லை. அத்துடன் வழியெல்லாம் அவன் பாரத வீரன் புகழ் பாடிக் கொண்டே வந்தான். வழியிலேயே பாரத வீரன் சீடகோடிகளைப்போல அவனுக்கும் சீடகோடிகள் திரண்டார்கள். எனவே, அவன் புகழ் அவனுக்கு முன்பே செல்வமருதூர் சென்று எட்டிற்று. பேரரசனைப் பார்க்க வரும் சிற்றரசன்போல, அவன் செல்வ மருதூருக்குள் வருகை தந்தான். பாரத வீரனின் சீடகோடிகளில் சிலர் அவனை எதிர் கொண்டழைத்தனர். கானமும் முரசும் முழங்கின. இசைக் குழு பாரத வீரன் புகழுடன், அவன் புகழும் சேர்த்துப் பாடிற்று. அலையுடன் அலைமோதித் தழுவுவதுபோல சீடகோடிகளுடன் சீடகோடிகள் கலந்து மகிழ்ந்தார்கள். பாங்கன் வந்தபோது பாரத வீரன் அருசிருக்கைவிட்டு எழவில்லை. ஆனால் அவனை வரவேற்க இருகைகளையும் நீட்டினான். தப்பிலியப்பனோ, அவற்றை ஏற்கவில்லை. அவன் குனிந்து இரண்டு திருவடிகளையும் பற்றி வணங்கினான். பாரத வீரன் அவனை கைகொடுத்து உயர்த்தி, அருகே அமரும்படி கூறினான். சிறிதுநேரம் வீரனும் பாங்கனும் கலந்து சேமநலங்கள் விசாரித்துக் கொண்டார்கள். அதேசமயம் சீடகோடிகளும் கலந்து உறவாடினார்கள். அதன்பின் பாரத வீரன் தன் பாங்கனுக்குரிய தகுதிகள், பொறுப்புக்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசினான். “உண்மை, பொறுமை, பணிவு, சுறுசுறுப்பு ஆகிய பண்புகள் பாங்கனிடம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும் என்று கூறத் தேவையில்லை.” பாரத வீரன் பேச்சுக்கிடையே தப்பிலியப்பன் இடையிட்டும் பேசினான். “பேரரசராகப்போகும் இளவரசே! மற்ற பண்புகளை நான் பேணத் தடையில்லை. வீரத்தை மட்டும் தங்களிடமே விட்டு விடுகிறேன். அது எனக்கு ஒத்துவராது.” “என்ன அப்படி சொல்கிறாய், பாங்கனே! வீரனுக்கேற்ற பாங்கன் வீரப்பாங்கனாய் இருக்கவேண்டாமா?” “மன்னிக்க வேண்டும், வீரத்தலைவரே! ஆணுக்கேற்ற பெண் ஆணாயிருத்தல் வேண்டாம். ஆண்மையின் எதிர் பண்பே பெண்மை. அதைத்தான் ஆண்மை விரும்பமுடியும். வீரத்துக்கு எதிர் பண்பு பணிவு, பொறுமை அவற்றின் மூலமே உங்கள் வீரம் சிறக்கும்!” பாங்கன் எதிர்மொழித் திறம் கண்டு, சீடகோடிகள் ஆரவாரம் செய்தனர். “ஆகா, ஆகா! பாங்கன் அறிவே அறிவு! வாழ்க பாரத வீரன் கொற்றம்! வெல்க பாங்கன் அறிவே அறிவு! வாழ்க பாரத வீரன் கொற்றம்! வெல்க பாங்கன் தப்பிலியப்பன் தனிப்பெரும் பணிவு!” இத்தகைய கூக்குரல்கள் அலையலையாக எழுந்தன. பாரத வீரன் முகத்தில் தெய்வீகப் புன்முறுவல் சுழியிட்டது. சந்தடி அடங்கியதும் அவன் மீண்டும் பேசத் தொடங்கினான். “பாங்கரே! உம் அறிவுத் திறம் பெரிது. மெச்சினேன். ஆனால் வீரர் வீரருடன் தான் போராடுவர். பாங்கர் பாமர மக்கள் எதிர்ப்பை வீரப்பாங்கன்தான் சமாளிக்க வேண்டி வரும்.” “அதை என்னிடம் விட்டுவிடுங்கள் ஆண்டே! வீரமில்லாதவரிடம் எப்படி வேறு திறமைகளைக் கையாள்வது என்பதை நான் அறிவேன்.” திருக்கூட்டம் முழுவதும் பாங்கருக்கு இன்னும் உரத்த வரவேற்பளித்தது. பாரத வீரன் முகம் சற்றே சுளித்தது. ஆனால் இது விரைவில் மறைந்தது. அவன் கனிவுடன் பாங்கனைப் பார்த்தான். சீடகோடிகளையும் சுற்றி நோக்கினான். “அன்பர்களே, பாரத வீரனுக்கு இந்தப் பாங்கன் சரியான இணைப்பு என்பதை நீங்களே கண்டுகொண்டீர்கள். எனவே அவனை நாம் பாங்கனாக ஏற்றோம். பாரத வீரன் என்ற நம் பெயருக்கு ஏற்ப, இனி நாம் அவனைப் பட்டி மந்திரி என்றே அழைப்போம். அதுவே இனி அவன் விருதுப்பெயராவ தாக!” என்றான். “வாழ்க பாரத வீரன்! வெல்க பட்டிமந்திரி!” என்ற இரட்டை வாழ்த்தொலிகளைச் சீடர்கள் முழக்கினார்கள். பாரத வீரன் கையுயர்த்தினான். நிமிர்ந்து உட்கார்ந்தான். “வெல்க பாரத வீரன், வாழ்க பட்டி மந்திரி” என்று மாற்றிக் கூறுங்கள்” என்றான். பட்டி மந்திரியே தொடங்கினான், “வெல்க பாரதவீரன், வாழ்க பட்டி மந்திரி” என்று! சீடகோடிகள் அவனைப் பின்பற்றினார்கள். அந்தக் கூச்சல் நகர மாந்தர் காதுகளை எல்லாம் துளைத்தது. பட்டிமந்திரி தன் காரியத் திறமையைத் தொடக்கத்திலேயே காட்டினான். “ஆண்டே! எனக்கு இச்சிறிய பதவியைக் கொடுக்கத் திருவுளம் பற்றினீர்கள். அதற்கு மகிழ்கிறேன். எனக்குப் புதுப்பட்டம் தந்து பெருமைப் படுத்தினீர்கள். அதற்கு என் நன்றி. பதவிக்குரிய தகுதி கூறிவிட்டீர்கள். அந்தத் தகுதி எனக்கு உண்டு என்றும் தெரிவித்தீர்கள். ஆனால் இதற்குரிய ஊதியம் இவ்வளவு என்றும் வரையறுக்க வேண்டுகிறேன்” என்றான். “ஊதியமா?” என்ற வியப்புக் குரல் பல சீடர்களிடமிருந்து எழுந்தது. அவர்கள் எல்லாவற்றையும் நாடகமாகவே வகுத்தனர். பாங்கன் அதை ஒரு உத்தியோகமாக்குவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. “ஊதியமா? அப்படியானால் நாம் கூடப் பதவி கோரியிருப்போமே! செலவுகள் செய்தல்லவா நாம் சீடர்களாய்ப் பணி செய்கிறோம்” என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் பட்டி மந்திரியின் போக்குப் பாரத வீரனுக்குப் பிடித்து விட்டது. அவன் தொனி உயர்ந்தது. “அறிவுள்ள மந்திரியே, நன்று கேட்டாய்! உன் ஊதியம் உன் உயர் பதவிக்கேற்றதாயிருக்கும். இதில் ஐயம் வேண்டாம். வீர உலாக் காலத்தில் ஊதியம் தர வழியிராது என்பதை நீரே ஒத்துக்கொள்வீர். அதேசமயம் மாதம் ஐம்பது வெள்ளி உமது பற்றில் சேரும். ஆனால் உம் உணவு உடைகள் முதற்கொண்டு, நீரே பார்த்துக் கொள்ளநேரும். இவைபோக என் பொருள் களைக் காப்பதும் என் நலங்களைப் பேணுவதும் உம் பொறுப்பாயிருக்கும். காயமாற்றுதல், மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகள் செய்தல் ஆகியவற்றையும் நீரே மேற்கொள்ள வேண்டும். “உலாவில் தோல்வியுற்ற எதிரிகளின் உடைமைகள் நம் கைப்பட்டால் அது உம்முடையவையே. “ஒருவேளை - இதை நான் இப்போதே திட்ட வட்டமாக வரையறுக்க முடியாது - எதிரி நாடுகளோ, நாட்டுப் பகுதிகளோ, தீவுகளோ நம் கைப்படலாம். நீர் என்னிடம் உண்மையுடனும், திறமையாகவும் பணியாற்றினால், அந்தச் சமயம் நான் உமக்குத் தனிப் பரிசும் தரக்கூடும். உதாரணமாக ஒரு மாகாணத் தலைவனாகப் பதவி தரலாம். அல்லது ஒருசிறு நாட்டையே தந்து சிற்றரசனாகக்கூட ஆக்கலாம்!” என்றான். மந்திரி இதுகேட்டு, கூட்டத்தைச் சுற்றி வந்து கும்மாளமே அடித்தான். “தொண்டு செய்தால் தங்களிடம் தொண்டு செய்ய வேண்டும். தங்களைப் போன்ற பெருமனம் படைத்த தலைவரிடம் பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்ததே என் பேறு. நான் இன்று முதலே உண்மையாயிருக்கத் தொடங்கி விடுகிறேன். நீங்கள் மட்டும் வாக்குறுதியை மறந்துவிடப்படாது” என்றான். எல்லாரும் சிரித்தனர். ஆனால் பாரத வீரன் சிரிக்கவில்லை. அவன் மேலும் பேசினான். “வாக்குறுதி வாக்குறுதிதான். ஆனால் அது வருங்கால நிலைமைகளைப் பொறுத்தது. உலாக் காலத்தில் ஐம்பது வெள்ளி ஊதியம்தான் திட்டவட்டமானது. உலா முடிவில் அந்தப் பணம் எண்ணித்தரப்படும். அத்துடன் உலாக் காலத்தில் உன் பொருளாக ஏதேனும் இழக்க நேரிட்டால் அதற்கும் ஒட்டிக்கு இரட்டி பணம் வந்தவுடன் தருவேன். உலா முடிவில் உள்ள மதிப்பின்படி அதன் பின் பதவியும், அதற்கேற்ற ஊதியமும் தரப்படும்” என்றான். பட்டி மந்திரியின் காரியத்திறமை கண்டு சீடர்கள் மூக்கில் கை வைத்தனர். இப்படிப்பட்ட மந்திரிக்கு, எவ்வளவு சம்பளம் கொடுத்தாலென்ன என்று அவர்கள் பேசிக்கொண்டனர். வேறு சிலர் பாரத வீரன் தாராள மனப்பான்மையை உயர்வாகப் பேசினர். “இப்பேர்ப்பட்ட தலைவனுக்கு எவ்வளவு தொண்டு செய்தாலும் தகும்” என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். 7. சிங்கத்தை வென்ற வீரசிங்கம் சிங்கத்தைப் போன்றவர்கள் என்று தான் எல்லாரும் வீரர்களைப் புகழ்வார்கள். ஆனால் எடுத்த எடுப்பிலேயே பாரத வீரன் சிங்கத்தை வென்ற வீரசிங்கம் ஆனான். அவ்விருதுப் பெயரும் பெற்றான். எவரும் காணவே அஞ்சும் சிங்க ஏறு அவன் முன் பங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி அவன் வெற்றி உலாவின் புகழுக்கு ஒரு முகப்பு வாயிலாய் அமைந்தது. செல்லாயியும், செங்காவியும் எப்போதும் பாரத வீரன் மீதே கண்ணாய் இருந்து வந்தார்கள். கோமாறனும், நன்னயப்பட்டரும் அவனை இராப் பகல் இடைவிடாது அகலாதிருந்தார்கள். ஆனால் சீடர்கள் இதை எதிர்பார்த்தே யிருந்தனர். உலாத் தொடக்கம் நள்ளிரவு என்ற அதனாலேயே குறிக்கப்பட்டிருந்தது. அச்சமயம் எல்லாரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். பாரத வீரன் தான் படுத்த இடத்தில் ஒரு தலையணையை இட்டு மூடினான். ஓசைப்படாமல் பின்வாயில் வழியாக வெளியேறினான். சீடர்களும் பட்டி மந்திரியும் அவனுக்காக ஊர் வெளியில் காத்திருந்தார்கள். அவர்கள் அவனை ஆர்வத்துடன் வரவேற்றார்கள். அச்சமயம் அனைவரும் காண, பட்டி மந்திரி பாரத வீரன் திருவடிகளில் விழுந்தான். பின் மும்முறை வலம் வந்து வணங்கினான். வழிபாடாற்றினான். “என்னை மன்னனாக்கப் போகும் மன்னர் மன்னனே! உம் வெற்றிக் கொடி மண்ணும் விண்ணும் பறப்பதாக!” என்று வாழ்த்தெடுத்தான். பட்டி மந்திரியின் பக்தியைச் சீடர்கள் மெச்சினார்கள். ஆனால் ஒரு சிலர், அவன் பக்தியில் கூட ஒரு யுக்தி இருக்கிறது என்று குறும்பு பேசினார்கள். பாரத வீரன் உலாவுக்காக முன்பே ஏற்பாடு செய்தபடி, அவன் கோவேறு கழுதைமீது அமர்ந்தான். “ஆகா, ‘கோவேறு கழுதை’ என்ற பெயர் இப்போதுதான் அதற்குப் பொருத்தம்” என்றான் மணிவண்ணன். அவன் கூறியது இன்னதென்று அறியாமல் பல சீடர்கள் விழித்தார்கள். அவன் விளக்கம் கூறினான். ‘கோ’ என்றால் மன்னன். கோவேறு கழுதை என்றால் மன்னர் மன்னனாகிய பாரத வீரன் ஏறுகிற கழுதை என்று பொருள். இதுவரை அது பெயருக்கு மட்டும் கோவேறு கழுதையாயிருந்தது. இப்போது உண்மையிலேயே அது கோ ஏறு கழுதையாகி விட்டது. பாரத வீரன் இதில் தான் ஏறப்போகிறான் என்று நம் முன்னோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்தப் பொருளுடன் முன் கூட்டி அதற்குப் பெயர் கொடுத்திருக்கிறார்கள்” என்றான். தம்மை மறந்து சீடர்கள் மணிவண்ணனைப் போற்றி ஆர்ப்பரிக்க இருந்தார்கள். பாரத வீரன் சட்டென்று கையமர்த்தினான். ஏனென்றால் அவர்கள் ஓசை படாமல் செல்லத் திட்டமிட்டிருந்தனர். வேறு வகையில் பாரத வீரன் அவனைப் பாராட்டினான். அவன் கோவேறு கழுதையினின்றும் இறங்கினான். மணிவண்ணனைத் தழுவி அவன் புலமையைப் புகழ்ந்தான். “இன்று முதல் மணிவண்ணன் என்ற உன் பெயரை ‘மணிப்புலவன்’ என்று மாற்றி அழைப்பேன். அதுவே உன் விருதுப் பெயராகட்டும்” என்றான். வேதாள உருவின் அட்டைப் பகுதிகள் கோவேறு கழுதையின் முன்னும் பின்னும் இணைக்கப்பட்டன. அது தொலைப் பார்வைக்கு ஒரு வேதாளமாகவே இருந்தது. பட்டி மந்திரி தன் அழகிய ‘குதிரை’க் குட்டிமீது சென்றான். சீடகோடிகள் முன்னும் பின்னும் இரு மருங்கிலும் அணிவகுத்துச் சென்றனர். விண் மீன்களின் அரையொளிதான் அப்போது தெரிந்தது. அவர்களிடையே ஓர் அரும்பெருஞ் செயல் தொடங்கும் ஆர்வம் மிகுதியாய் இருந்தது. ஆயினும் இச்சமயம் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லை. ஊரறிந்தால் ஏதாவது தடை ஏற்பட்டுவிடும் என்று பாரத வீரன் எச்சரிக்கை செய்திருந்தான். ஊருக்கப்பால் பத்து நாழிகை தொலைவில் அணை கரையாறு ஓடிற்று. அது தாண்டிப் பாரத வீரனை வழியனுப்புவதென்று சீடர்கள் திட்டமிட்டிருந்தனர். நிலா உதயமாகுமுன் அவர்கள் ஊர் எல்லை கடந்து விட்டனர். ஊமை ஊர்வலம் இங்கிருந்து மெல்ல மெல்லக் கட்டுத் தளரலாயிற்று. அவர்கள் முதலில் அடங்கிய குரலில் பேசினர். இது வண்டுகளின் இரைச்சல்போல இருந்தது. பின் உரத்த குரல் எழுப்பினர். வழக்கமான ஆரவாரம் தொடங்கிற்று. வாழ்த்தொலிகள் கிளம்பின. சீடர்களுக்குள் மணிப்புலவனைப்போலச் சிறுபுலவர்கள் இருந்தார்கள். பல சிறு கவிஞர்களும் இருந்தார்கள். அவர்கள் உலாவுக்கென்று புதிய பாட்டுக்கள் கட்டியிருந்தார்கள். புராண இதிகாசங்கள், பழைய, புதிய தல புராணங்களின் கற்பனைகள் அவற்றில் இழைந்து ஊடாடின. அத்துடன் அவை மக்கள் பாடல்களாக மிளிர்ந்தன. பள்ளு, குறவஞ்சி, நிலாவணி, தெம்மாங்கு, காவடிச் சிந்து, நொண்டிச்சிந்து முதலிய பல வர்ணமெட்டுக்களில் அவை அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் இன்னோசைகள் இப்போது வானவெளியில் பறந்து மிதந்தன. சீடர்கள் கற்பனையில் பாரத வீரன் குலமுதல்வன் கதிரவன் ஆனான். இளவரசியின் குலமுதல்வன் நிலாச் செல்வனானான். செல்வ மருதூரின் முன்னோனான மருதவாணனின் குலமுதல்வன் அழற் செல்வனானான். அவர்கள் பாடல்களும் முதலிய பாரதவீரன் குலமுதல்வனான கதிரவனைப் பரவின. பின் அவை இளவரசியின் குலமுதல்வன் நிலாச்செல்வன் புகழில் இழைந்தன. இருவகைப் பாடல்களும் மருதவாணன் புகழுடன் பின்னின. இறுதியில் அவை பாரத வீரன் புதுப்புகழாக ஓங்கின. முப்பெரும் மரபுக்கும் உரியவன் என்ற முறையில் அவை அவனை மாருத சந்திர மார்த்தாண்டன் என்று பாராட்டின. இதுவும் அவன் விருதுப் பெயர்களுடன் ஒருவிருதுப் பெயராகச் சேர்ந்தது. அவர்கள் செல்லும் வழியிலே மங்கம்மாள்சாலை குறுக்கிட்டது. அது கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்றது. அதன் இருபுறமும் மரங்கள் வானளாவி வளர்ந்திருந்தன. அதை அவர்கள் அணுகுவதற்குள் கிழக்கு வெளுத்துவிட்டது. சாலையை அவர்கள் கடக்கு முன், அங்கே அவர்கள் காணுதற்கரிய ஒரு காட்சியைக் கண்டார்கள். பாரதவீரன் உலாவின் முதல் வெற்றிக்கு அதுவே வழி வகுத்தது. அம்முதல் வெற்றியைக் கண்கூடாக் காணும் பேறு சீடர்களுக்கும் கிடைத்தது. அதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்ததைவிட அவன் வீரம் பன்மடங்கு விளக்கமுற்றது. சாலை வழியாக மற்றொரு ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அதன் முன்னணியில் ஒரு மிகப்பெரிய கூண்டு வண்டி சென்றது. அதன் உயரம் இரண்டரை ஆள் அளவுக்கு மேல் இருக்கும். அகலம் பாதை அளவாயிருந்தது நீளமும் அதற்கேற்றபடியே அமைந்திருந்தது. வெள்ளை சிவப்பு, பச்சை ஆகிய முந்நிறமுடைய தாள் மலர்களும் தாள் கொடிகளும் அதில் எங்கும் தொங்கின. கூண்டுக்குக் கதவுகள் பல இருந்தன. கதவுகள் எல்லாம் பெரிய பித்தளைப் பூட்டுக்களாலும் இரும்புப் பூட்டுக்களாலும் பூட்டப்பட்டிருந்தன. பெரிய இரும்புப் பட்டைகளாலும் சங்கிலிகளாலும் கதவுகளுக்கு வலிமையூட்டப்பட்டிருந்தது. கம்பிப் பட்டைகளுக்கும் சங்கிலிகளுக்கும் தனித்தனியாகப் பல பூட்டுக்கள் இருந்தன. சோடி சோடியாக மூன்று சோடிக் காளைகள் கூண்டை மெல்ல மெல்ல இழுத்துச் சென்றன. வண்டியோட்டியிடம் சாட்டை இல்லை. சாட்டையினிடமாக நெடுநீளமான ஈட்டி ஒன்றுதான் இருந்தது. கூண்டின் முன்னும் பின்னும் பக்கத்திலும் படைவீரர் காவலாகச் சென்றார்கள். அவர்களிடம் வாள், ஈட்டி, வெடிப்படை ஆகியவை இருந்தன. சீடர்கள் இக்காட்சியைக் கண்டு மலைத்து நின்றார்கள். சாலையருகே செல்ல அவர்கள் தயங்கினார்கள். ஆனால் பாரத வீரன் மலைக்கவில்லை. தயங்கவில்லை. அவன் போக்கே எல்லாரையும் மலைக்க வைத்தது. அவன் கோவேறு கழுதையைத் தட்டிவிட்டான். கிட்டத்தட்டச் சாலை நடுவிலேயே போய் நின்றான். ஊர்வலத்தின் முன்னணி வீரரை அஞ்சாமல் எதிர்த்து நின்று நிமிர்ந்து நோக்கினான். முன்னணியைத் தடுத்து நிறுத்திப் பேசினான். “மன்னர் மன்னன், கண்கண்ட கற்கி, பாரத வீரன் வழியில் குறுக்கிட நீங்கள் யார்? எங்களை வணங்கி வழிவிட்டுத் தப்பி யோடுங்கள்! இல்லையானால்....” என்று அவன் அதட்டினான். அணி நிற்கவில்லை. முன்னேறி வந்தது. தலைவனாக முன்னால் வந்தவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அடுத்து நின்ற ஒருவன் எச்சரிப்பு முறையிலே பேசினான். “நீ யாரப்பா, சிங்கத்தின் பாதையில் அஞ்சாமல் வந்து நிற்கிறாய்? அது காட்டுக்கு அரசன். புதிதாக ஆட்சிக்கு வந்த நாட்டு அரசனிடம் அது போகிறது. நாங்கள் இவ்வளவு கட்டுக்காவல் வைத்திருக்கிறோம். அப்படியிருந்தும் அது ஒவ்வொரு நாளும் கட்டுமீறி ஒன்றிரண்டு ஆட்களைக் கொன்று தின்று விடுகிறது. அதன் பாதையில் அருகே கூட நிற்காதே ஓடி விடு” என்றான். பாரத வீரன் அசையவில்லை. “ஓடுவது நானல்ல. நான் தான் கற்கி. உங்களைப்போல் ஒரு நாலுகால் விலங்குக்கு அஞ்சும் கோழையல்ல நான்? உங்கள் காட்டு அரசனும் நீங்களும் எனக்கு வணக்கம் செய்து வழிவிட்டுத் தப்பலாம். இல்லாவிட்டால் அனைவரையும் ஒழித்துக்கட்டி விடுவேன்” என்று அவன் வீறாப்புடன் பேசினான். தலைவன் அருகே வந்துவிட்டான். “பைத்தியக்காரக் கோமாளி! போகிறாயா, இல்லையா?” எனறு கூறிய வண்ணம் அவன் பாரத வீரனை நோக்கி ஒரு அடி முன்னேறினான். அவன் எதிர்பாராதவகையில் அவன் தலையில் ஓர் அடி விழுந்தது. அது பாரத வீரன் ஈட்டியின் அடி அவன் கீழே விழுந்தான். தலைவன் விழுந்தது கண்ட வீரர்கள் சீறினர். ஈட்டியால் பாரதவீரனை மடக்கித் தாக்க முனைந்தனர். பாரத வீரன் தன் கோவேறு கழுதையை அவர்களிடையே வலசாரி இட சாரியாகச் செலுத்தினான். இருபுறமும் சிலம்பம்போல ஈட்டியைச் சுழற்றினான். பலர் விழுந்தனர். பலர் ஓடிப் போயினர். சிலர் தங்கள் வெடிப்படைகளை அவனை நோக்கி நிறுத்திக் குறிபார்த்தனர். ஆனால் கோவேறு கழுதை பாய்ந்த வேகத்தில், குறிபார்க்கும் முன் தாக்குண்டார்கள். விழுந்தவர்கள் போக மற்றவர்கள் ஓடினார்கள். விழுந்தெழுந்தவர்களும் அவர்களைப் பின்பற்றி ஓடி மறைந்தார்கள். இத்தனையும் கண்மூடித் திறக்குமுன் நடந்துவிட்டன. கூண்டுவண்டியின் அருகே இப்போது யாரும் இல்லை. வண்டியோட்டி மட்டுமே நின்றான். அவன் களத்திலிருந்து கூண்டை விட்டு விட்டு ஓட முடியாதவனாயிருந்தான். சீடர்களும் பட்டி மந்திரியும் நடப்பது இன்னது என்று அறியாமல் தொலைவிலேயே திகைத்து நின்றார்கள். வண்டிக்காரன் இந்தப் புதுமை வாய்ந்த ஆர்ப்பாட்டம் கண்டு கலக்கமடைந்தான். பாரத வீரன் அவன் பக்கம் சென்றான். “எங்கே கூண்டிலிருக்கும் சிங்கத்தைத் திறந்துவிடு, ஒரு கை பார்க்கிறேன்! வீர கற்கியிடம் அது என்ன செய்யும், பார்ப்போம்!” என்று முழக்கி ஆர்ப்பரித்தான். வண்டிக்காரன் நடுநடுங்கினான். ஆனால் அவன் கூண்டைத் திறந்துவிடத் துணியவில்லை. “அண்ணலே, இது உயிருள்ள சிங்கம். இத்தனை வீரர்கள் காவல் காத்தும், இரைபோடும் சமயத்தில், அது பலரைத் தாக்கிக் கொன்றிருக்கிறது. எங்கள் பிழைப்புக்காக நாங்கள் அதனுடன் காலங்கழிக்கிறோம். ஈட்டியும் வெடிப்படையும் தாங்கிய வீரர்கள்கூட அப்படித்தான். பணத்துக்காகவே அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அதனுடன் வருகிறார்கள். ஆகவே இந்தச் சிங்கத்துடன் விளையாட வேண்டாம். அது உங்களை மட்டுமல்ல. என்னையும், இந்த மாடுகளையும், உங்கள் கழுதைகளையும், சீடர்களையும் ஒருங்கே கொன்று தின்றுவிடும். பக்கத்திலுள்ள ஊர்களையும் அது போய் அழித்துவிடும்” என்று பாதி அச்சுறுத்தலாகவும், பாதி கெஞ்சலாகவும் அவன் பேசினான். பாரத வீரன் கெஞ்சுதலுக்கும் இணங்கவில்லை. அச்சுறுத்தலுக்கும் பணியவில்லை. “இந்தப் பசப்பெல்லாம் வேண்டாம் திறந்துவிடுகிறாயா, அல்லது உன்னைக் கொன்று, அதன்பின் திறக்கட்டுமா?” என்று வாளை ஓங்கினான். வண்டிக்காரன் இப்போது வெடவெடவென்று நடுங்கினான். “என்னைக் கொல்லவேண்டாம், ஆண்டே! ஆவது ஆகட்டும், நான் திறந்துவிடுகிறேன்! ஆனால் இந்த மாடுகள் நான் பெருவிலை கொடுத்து அருமையாக வாங்கியவை. அவைதான் என் சொத்து. அவை போய்விட்டால் நான் வாழ முடியாது. அவற்றை மட்டும் தொலைவில் கொண்டு விட்டுவர இணக்கம் தாருங்கள்” என்று கெஞ்சினான். பாரத வீரன் அதற்கு இணங்கினான். “உனக்குக் கால் மணி நேரம் தருகிறேன். அதற்குள் வேண்டிய பாதுகாப்புச் செய்து விட்டு வா. ஆனால் கால் மணி நேரத்தில் வராவிட்டால், நானே பூட்டை உடைத்துக் கதவைத் திறந்துவிடுவேன்” என்றான். நிலைமை மிஞ்சிப்போவது கண்டு சீடர்கள் நடுங்கினர். வீர வாழ்வில் அவனைத் தாம் ஊக்கிவிட்டது மடத்தனம் என்று அவர்கள் இப்போது மனமார வருந்தினார்கள். அவர்கள் முகத்தில் அச்சமும் கவலையும் குடிகொண்டிருந்தன. மெல்ல மெல்ல அவர்கள் அவனை அணுகினர். அவன் மனத்தை மாற்றத் தம்மாலியன்ற மட்டும் முயன்றனர். “வீரத்தலைவரே, அந்தப் பொல்லாத சிங்கத்தினிடம் தங்கள் வீரத்தைக் காட்டவேண்டாம். உங்களுக்காக அல்லா விட்டாலும், எங்களுக்காகவாவது இந்த ஒரு செயலை விட்டு விடுங்கள். வண்டிக்காரன் திரும்பிவருமுன் நாம் போய் விடுவோம்” என்று அவர்கள் கண்ணீருடன் வேண்டிக் கொண்டார்கள். பாரத வீரன் சிரித்தான். “நீங்கள் என் சீடர்கள் நீங்கள் இவ்வளவு கோழைகளாயிருப்பதற்கு நான் வெட்கப்படுகிறேன். நீங்கள் வேண்டுமானால் உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கள். நான் வரமுடியாது” என்றான். பட்டிமந்திரி அவர்கள் பின்னாலேயே நின்றான். அவன் கால் கைகள் நடுங்கின. ஆனால் அவன் மூளை நடுங்க வில்லை பாரத வீரனைத் தடுக்க அவன் தன் வாதத்திறமை முழுவதும் காட்டினான். “மன்னர் மன்னரே, தாங்கள் ஆறறிவுடைய மனிதர், ஆறறிவுடைய மனிதரையும் ஆளப்போகும் வீரர். இந்தச் சிங்கம் ஐந்தறிவுடைய விலங்கு. ஐந்தறிவுடைய விலங்குகளுக்குத்தான் அரசு. பாமரையே வீரர் போருக்கு அழைக்கமாட்டார்கள். இந்த விலங்குடன் போரிடுவது தங்கள் மதிப்புக்குத்தகுமா?” என்றான். அவன் வாதத்துக்கு எதிர்வாதம் கூற முடியாமல், பாரத வீரன் சிறிது தயங்கினான். ஆனால் பட்டியின் பழைய வாதமொன்று அவன் நினைவுக்கு வந்தது. “வீரத்தை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு அது வேண்டாம்” என்று அவன் இதற்குமுன் கூறியிருந்தான். அதையே பாரத வீரன் இப்போது பட்டிமந்திரிமீது திருப்பினான். “அறிவுடைய பாங்கரே! உம் அறிவை உம்முடனேயே வைத்துக்கொள்க! வீரத்தை என்னிடமே விட்டு விடலாம். அது போகட்டும். சிங்கம் வீரத்தில் மனிதரை விடக் குறைந்ததா, மேம்பட்டதா?” என்று கேட்டான். பட்டிமந்திரியின் வாய் முற்றிலும் அடைத்துவிட்டது. மனிதரைவிடச் சிங்கம் வீரத்தில் குறைந்தது தான் என்று கூற நா எழுந்தது. தன்நிலையும், சீடர்நிலையும் வீரர் நிலையும் பற்றிய எண்ணம் நாவை அடக்கிற்று. அத்துடன், ‘எங்கே, சிங்கத்துடன் நீயே போட்டியிட்டுப்பார்’ என்று அவன் கூறிவிட்டால் என்ன செய்வது? இந்த அச்சம் வேறு அவனைப் பிடுங்கித் தின்றது. பாரத வீரன் துணிவு கண்டு, சீடர்கள் இப்போது அவனைக் கைவிட்டனர். அவரவர் உயிர்கள் அவரவர்களுக்கு வெல்லமா யிருந்தது. அதைக் காத்துக்கொள்ள அவர்கள் பரபரப்புடன் ஓடினர். சாலையின் மரங்களிலே அவர்கள் தத்தி ஏறினர். எவ்வளவு உயரமாக ஏறினாலும் அவர்களுக்கு அமைதி ஏற்படவில்லை. மேலும் மேலும் முடியுமட்டும் ஏறிக்கொண்டே இருந்தார்கள். பீதியால் உடல் படபடத்தது. எங்கே விழுந்து விடுவோமோ என்றும் அவர்கள் அஞ்சி அஞ்சிச் செத்தார்கள். பட்டிமந்திரியின் நிலை இப்போது இக்கட்டாயிற்று. அவன் உடல் பருத்த உடல். கை கால்களும் பருத்தவை. அவனுக்கு மரம் ஏறத் தெரியாது. தெரிந்திருந்தாலும் கழுதையை அவனால் மரத்தில் ஏற்ற முடியாது. அவனுக்கு உயிர் வெல்லமானாலும், கழுதைக்குட்டி வெல்லத்தைவிட அருமையான கற்கண்டா யிருந்தது. அதை விட்டுவிட்டுச் செல்ல அவன் தயங்கினான். அவன் மூளை இப்போது அவனுக்கு உதவிற்று. அவன் கால தாமதம் செய்யவில்லை. கழுதைமீதே ஏறினான். வலுக்கொண்ட மட்டும் அதைக் காலால் உதைத்துத் தட்டி விட்டான். நல்லகாலமாகச் சிறிது தொலைவில் பாழடைந்த கோட்டை ஒன்று இருந்தது. கழுதையுடன் அவன் அதனுள் புகுந்தான். அங்குள்ள ஒரு கொட்டிலில் அவன் கழுதையைக் கட்டிப்போட்டான். கொட்டிலின் கதவை வெளியேயிருந்து அடைத்துவிட்டான். அங்கே ஒரு ஏணி இருந்தது. அதனுதவியால், பட்டி மந்திரி ஒரு உயர்ந்த மதிலின்மேல் ஏறிக்கொண்டான். சிங்கம் ஏணியில் ஏறி வந்துவிடுமோ என்று கூட அவன் அஞ்சினான். ஆகவே ஏணியை அவன் மதில்மேலேயே ஏற்றி வைத்துக்கொண்டான். இந்த நிலையிலும் அச்சம் அவனை விட்டபாடில்லை. “ஒரு நாடு பெறுவதற்காகக்கூட இந்தமாதிரி வீரனுடன் வந்தது தவறு!” இவ்வாறு அச்சமயம் பட்டி மந்திரி தனக்குள்ளாகக் கூறிக்கொண்டான். வண்டியோட்டிக்கும் ஒரு பாழடைந்த வீடு கிடைத்தது. மாடுகளை அவன் அதற்குள் போட்டு அடைத்தான். அவனும் கதவை வெளியிலிருந்தே கொண்டியிட்டான். ஒரு கெட்டிக் கழியால் கொண்டியை இறுக்கினான். இவ்வளவு பாதுகாப்புக்குப் பின் அவன் கூட்டண்டை விரைந்து வந்தான். பாரத வீரன் இவ்வளவு நேரமும் ஏந்திய ஈட்டியுடன் கூண்டையே பார்த்துக் கொண்டிருந்தான். வண்டியண்டை சென்றபின், வண்டியோட்டி மீண்டும் ஒருமுறை பாரத வீரனிடம் வாதாடிப் பார்த்தான். “ஆண்டே, என்னளவில் நான் சிங்கத்துக்கு அவ்வளவாக அஞ்சவேண்டியதில்லை. நான் அதனுடன் பழகியவன். தப்பவாவது எனக்கு வழி தெரியும். உங்களுக்காகவும் நான் அஞ்சவில்லை. ஏனெனில் நீங்கள் அஞ்சாநெஞ்சர். ஆனால் சிங்கம் அடுத்த ஊர்களுக்குச் சென்று அட்டூழியம் செய்யுமே! அதற்காவது சற்று இரக்கப்படுங்கள். மேலும் அந்தச் செயலுக்காக, அரசியலார் என்மீதுகுற்றஞ் சாட்டுவார்கள், எனக்குத் தண்டனை கொடுப்பார்கள். அதை எண்ணிப் பாருங்கள்” என்றான். “சிங்கம் ஊருக்குள் போகவேண்டுமானால், என்னையும் உன்னையும் கொன்றுவிட்டுத்தானே போகவேண்டும்! அதற்கு ஏன் கவலைப்படுகிறாய்? மேலும் இது என் செயல், உன் செயலல்ல! என் சீடர்கள் மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக் கிறார்களே, அவர்கள் அத்தனை பேரும் உனக்குச் சான்று கூறுவார்கள்! அவர்களறியக் கூறுகிறேன். சிங்கத்தை நீ திறந்துவிடு!” என்று பாரத வீரன் உச்சக் குரலில் கூவினான். வண்டியோட்டி இப்போது முற்றிலும் துணிந்து விட்டான். கடைசிப் பூட்டுத் திறந்தவுடன், அவன் கூண்டின் உச்சியில் ஏறிவிடவே திட்டமிட்டிருந்தான். அதற்கு வாய்ப்பாக அவன் நின்று கொண்டான். பூட்டுக்கள் ஒவ்வொன்றாக அகன்றன. அகற்றிய பூட்டுக்கள் கூண்டின் முகட்டிலேயே வைக்கப்பட்டன. கம்பிப்பட்டைகள், சங்கிலிகள் ஒவ்வொன்றாக விலகின. கடைசிப் பூட்டைத் திறக்குமுன் வண்டி ஓட்டி கடைசியாக ஒருதடவை திரும்பிப் பார்த்தான் பாரத வீரன் சிலைபோல் நின்றான். ஓங்கிய ஈட்டி ஓங்கிய நிலையிலேயே இருந்தது. வண்டியோட்டிக்கிருந்த கடைசி நம்பிக்கை, கடைசி மனித உணர்ச்சி அகன்றது. கடைசிப் பூட்டகன்றது. கடைசிக் கம்பி விழுந்தது. அது விழுமுன் வண்டியோட்டி கூண்டு முகட்டில் தொத்தி ஏறி விட்டான். குரங்கு மரத்தில் ஏறுவதைவிட, எலி கூரைமீது ஏறுவதைவிட அவன் வேகமாக ஏறினான். முகட்டில் நின்றே வண்டியோட்டி ஈட்டியால் கதவைத் திறந்தான். அவன் நெஞ்சம் பகீர் என்றது. அடுத்த கணம் என்ன ஆகுமோ என்ற எண்ணம் அவனை அலற வைத்தது. சீடர்கள் தம்மையறியாமல், “ஐயோ மாரி! ஐயோ” என்று அலறினர். அந்த நேரத்தில் அவர்களிட்ட புதிய பெயர்களை அவர்கள் மறந்தனர். ஆனால் பாரத வீரன் அசையவில்லை. கணங்களை அவனும் எண்ணினான். சிங்கம் வெளிவருவதை அவன் கண்கள் இமைகொட்டாது எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. ஓங்கிய கையின் நாடி நரம்புகள் ஓங்கிய ஈட்டியை வீசக் காத்து நின்றன. கணங்கள் ஒன்று, இரண்டு சென்றன. சிங்கத்தின் மீசைகள் வாயிலுக்கு வெளியே தெரிந்தன. அது பிடறி மயிரைக் குலுக்கிற்று. சற்றுப் பதுங்கிப் பின்வாங்கிற்று. பாய்வதற்கான பதுங்கலே அது என்று பாரத வீரன் கருதினான். ஈட்டியை முன்னோக்கிப் பாய்ச்சுவதற்காக, அவன் உடல் சற்றுப் பின்னோக்கிச் சாய்ந்தது. கைகளும் சற்றுப் பின்னோக்கின. ஆனால் சிங்கம் பாயவில்லை. அது அப்படியே ஐந்து கணநேரம் நின்றது. அவனையே உறுத்துப் பார்த்துக் கொண்டு நின்றது. கணங்கள் உருண்டோடின. சிங்கம் பாய்ந்தபாடில்லை. பாரத வீரன்தான் சிங்கத்தை விழுங்கப்போகும் சிங்கம் போல நின்றான்! வளையிலுள்ள எலி வெளிவருவதை எதிர்பார்த்து நிற்கும் பூனைகூட, அவ்வளவு ஆர்வத்துடன் நின்றிராது! சிங்கத்தை நோக்கி அவன் ஆர்ப்பாட்டம் செய்தான். “வீரச் சிங்கமே! வா, வெளியே! உன் கோரப்பற்களையும் கொடு நகங்களையும் இப்படிக் கொண்டுவா!” என்று கூவினான். சிங்கம் பாரதவீரன் குதிரை முகத்தை ஏற இறங்கப் பார்த்தது. பின் ஒன்றிரண்டு தடவை உறுமிற்று. ஒரு தடவை அது முழங்கி எக்காளமிட்டது. பக்கத்து ஊர்களிலுள்ள மக்களெல்லாம் அதைக் கேட்டுப் பொறி கலங்கியிருந்தனர். அது இனிப் பாய்ந்துவிடும் என்று பாரதவீரன் எதிர்பார்த்தான். அது அப்போதும் பாயவில்லை. அது வாலைச் சுழற்றிற்று. தலையை ஆட்டிற்று. ஒன்றிரண்டு தடவை கொட்டாவி இட்டது. நெற்றியை முன் கால்களால் இரண்டு மூன்று தடவை தடவிற்று. இறுதியில் அது தலையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டது. கூண்டுக்குள்ளேயே சுருண்டு மடங்கி, பின்னோக்கிப் படுத்துக்கொண்டது. அவன் பொறுமையின் எல்லையை அணுகினான். “கோழை சிங்கமே! நீயாக வெளியே வரமாட்டாயா? உன் கோட்டைக் குள்ளேயே வந்து, உன் உயிரைக் குடிக்கிறேன் பார்!” என்று கூறியவண்ணம், அவன் கூண்டை நோக்கி முன்னேறினான். தொலைவிலிருந்த சீடர்களும் பட்டிமந்திரியும் இத்தனை யையும் பார்த்தார்கள். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. தங்கள் தங்கள் கண்களையே அவர்கள் நம்ப முடியவில்லை. வண்டியோட்டியின் நிலையும் இதுவே. ஆனால் அவனுக்கு இப்போது ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டது. தன் இக்கட்டான நிலைக்கு அவன் முடிவு காண எண்ணினான். கூண்டு முகட்டில் இருந்தபடியே அவன் பாரத வீரனிடம் பேசினான். “ஆண்டே! தாங்கள் வீரர் மட்டுமல்ல. பண்டைத் தமிழ் மரபில் வந்த சுத்த வீரர். பணிந்துவிட்டவரிடம் சுத்த வீரர் எதிர்ப்புக் காட்டமாட்டார்கள். சிங்கம் உங்களிடம் பணிந்து விட்டது. அதை நீங்களே இப்போது பார்த்தீர்கள். அது தன் வணக்கத்தையும் உங்களிடம் தெரிவித்துவிட்டது. சுத்த வீரர்களுக்கு இதற்குமேல் என்ன வேண்டும்? ஆகவே சிங்கத்தை முன்போலவே பாதுகாப்புடன் செல்லவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றான் அவன். பாரத வீரன் முகத்தின் கடுமை சிறிது குறைந்தது. ஆனால் உயர்த்திய ஈட்டியைத் தாழ்த்தாமலே அவன் பேசினான். “சிங்கம் வெளியே வந்து பணிவு தெரிவிக்கவில்லையே! அது பணிந்துவிட்டது என்பதை உலகம் எப்படி அறியும்? அதை யார் நம்புவார்கள்?” என்று கேட்டான். அவன் தளரா உள்ளுரம் கண்டு, வண்டியோட்டி மலைப்படைந்தான். ஆயினும் அவன் தன்னை சமாளித்துக் கொண்டான். மீட்டும் கனிவுடன் பேசினான். “ஆண்டே, அது இரண்டுகால் சிங்கமாயிருந்தால், நீங்கள் கூறியபடியே வெளிவந்திருக்கும். கெஞ்சி வணக்கம் தெரிவித்திருக்கும். அத்துடன் உங்கள் வீரப்புகழ் பாடியிருக்கும். ஆனால் அது வாய்விடா விலங்காயிற்றே! ஆகையால் தான் அது குறிப்பாய்த் தெரிவித்தது. “நான் சிங்கத்துடன் பழகியவன். மேலிருந்தே எல்லாவற்றையும் நான் கவனித்தேன். அதற்கு முன்காலே கை .அது முன்காலை மூன்று தடவை நெற்றியில் வைத்துத் தடவிக் காட்டிற்று. இதுவே அதன் வணக்கம். வால் சுழற்றிற்று. இது நட்பறிவிப்பு. தலை தாழ்த்தி உறுமிற்று. மண்டியிட்டது. இது அதன் பணிவான வேண்டுகோளைக் குறிக்கிறது. இறுதியில் நாலு திசையும் கேட்க முழக்கமிட்டது. இதுவே தங்கள் வெற்றியைப் புகழ்ந்து வாழ்த்திய அதன் வாழ்த்தொலி. “இவ்வளவுக்கும் நான் சான்றாயிருக்கிறேன். உலகெங்கும் என்சார்பில் நானே தெரிவிப்பேன். தவிர, இந்தச் சிங்கத்துக்கு உரியவனும், அதன் பிரதிநிதியும் நானே. அம்முறையில் நானே உங்கள் சீடர் அனைவர் முன்னிலையிலும், சிங்கத்தின் சார்பில் வணக்கம் தெரிவிப்பேன். வெற்றிப் புகழ் பாடுவேன். உலகெங்கும் அதைப் பரப்ப உறுதி கூறுவேன். “ஆகவே சிங்கத்தைப் பாதுகாப்புடன் செல்ல இணக்கம் அளிக்கும்படி மீண்டும் கோருகிறேன். கூண்டை அடைக்கவும், இறங்கி வந்து பூட்டவும் கட்டளை பிறப்பிக்கத் திருவுளம் கூறவேண்டும்” என்று வண்டியோட்டி வேண்டினான். பாரத வீரன் ஈட்டியை நிலத்தில் ஊன்றினான். சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்தபின், “அப்படியே ஆகட்டும்!” என்று இணக்கம் அளித்தான். வண்டியோட்டி ஈட்டியாலேயே கதவைச் சாத்தினான். சரேலென்று இறங்கினான். கண்மூடித் திறக்குமுன் பூட்டுகளை இட்டான். பின் பரபரப்புடன் இருப்புச் சட்டங்களையும் ஒவ்வொன்றாக மாட்டிப் பூட்டினான். அவன் தன் காளைகளை மீட்டு வந்தான். இதற்குள் சீடர்கள் ஒவ்வொருவராக இறங்கி வந்தார்கள். பாரத வீரனை மகிழ்ச்சியுடன் தனித்தனியாக ஆரத்தழுவிப் பாராட்டினார்கள். வாய் கொள்ளாது அவன் வீரத்தைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். தன் கழுதையுடனும் பாரதவீரன் கோவேறு கழுதை யுடனும் பட்டி மந்திரி திரும்பி வந்தான். பாரத வீரன் காலடியைப் பற்றிக் கொண்டு, அவன் அழுதான். ஆனால் அந்த அழுகையில் மகிழ்ச்சியும் இன்பமுமே கண்ணீராய் ஓடின. வண்டியோட்டி அனைவர் முன்னிலையிலும் பாரத வீரனை மும்முறை வலம் வந்தான். அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்தான். பின் அனைவரும் சான்றாக, அவன் பேசினான். தன் சார்பிலும் சிங்கத்தின் சார்பிலும் அவன் நன்றியுரை, வணக்கவுரை, புகழுரை வழங்கினான். “பாரத வீரன் அவர்களே! பட்டி மந்திரி அவர்களே! தோழர்களே! “நான் இப்போது பேசுவதற்கு, இங்குள்ள எல்லா வீரர்களும் விலங்குகளும் சான்றாய் இருக்கிறீர்கள். “சிங்கத்தைக் கண்டு அஞ்சாத மனிதர் இல்லை. வீரர் இல்லை. என் சிங்கமோ இதுவரை வீரர் பலர் காவலுக்கும் அடங்கியதில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எமனுடன் பழகுவதுபோலவே காவலர் அதனுடன் பழகுகிறார்கள். நானும் அப்படியே பழகி வருகிறேன். பூட்டும் காவலும் மீறி அது எத்தனையோ உயிர்களைக் குடித்து வந்திருக்கிறது. ஆனால் பாரத வீரன் முன் விரும்பவில்லை. கிட்டத்தட்டக் கால்மணி நேரம் கதவு திறந்திருந்தது. அச்சமயம் காவல் எதுவும் இல்லை. இது உணவு நேரம். இன்னும் உணவு தரப்படவில்லை. அது கொடும்பசியுடன்தான் இருந்தது. இந்த நிலையிலும் அது பாயத் துணியவில்லை. அவன் வீரத்தைக் கண்டு நடுங்கிற்று. அச்சம் தெரிவித்தது. பணிவு தெரிவித்து மண்டியிட்டது. இவ்வளவையும் நானும் பார்த்தேன். நீங்களும் பார்த்திருக்கிறீர்கள். உங்கள் சார்பிலும் என் சார்பிலும் பாரத வீரன் ஒப்புயர்வற்ற, மனித எல்லை மீறிய வீரத்தைப் பாராட்டுகிறேன், புகழ்கிறேன். அந்த வீரனுக்கு என் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். சிங்கத்தைக் கொண்டுசெல்லும் படி அவர் இசைவு அளித்திருக்கிறார். அதற்கு நன்றியும் தெரிவிக்கிறேன். சிங்கம் செல்லும் இடமெல்லாம், நான் அவர் புகழைப் பரப்புவேன் என்றும் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். “இவ்வளவும் நான் என் சார்பில் கூறுபவை. ஆனால் நானே சிங்கத்தின் பேராள், காவலன், சிங்கம் மனிதனாயிருந்தால், இவ்வளவையும் நம் தமிழ் மொழியிலே கட்டாயமாக எடுத்துரைத்திருக்கும். வாயாடா விலங்காய் இருப்பதனால் இது செய்யமுடியவில்லை. சிங்கத்தின் மொழியில் அது தெரிவித் திருக்கிறது. சிங்கத்துடன் நான் பழகியவன். அதன் மொழி அறிந்தவன். அம்முறையில் அது உறுமியும் முழங்கியும் தெரிவித்ததை, நான் தமிழில் மொழி பெயர்த்துக் கூற விரும்புகிறேன். சிங்கத்தின் வாயுரையாக அவற்றைக் கொள்ளக் கோருகிறேன்.” சிங்கத்தின் வாய்மொழியாக வண்டியோட்டி இப்போது பேசினான். “சிங்கங்களுக்குள்ளே நான் இதுவரை எவருக்கும் அடங்காத சிங்கமாய் இருந்து வந்திருக்கிறேன். மிகுந்த அழிவு செய்திருக்கிறேன். அடங்காத சிங்கம் என்ற முறையில், என்னை இதுவரை எல்லாரும் “அடல் ஏறு” என்று அழைத்து வந்தார்கள். ஆனால் இன்று பாரத வீரன்முன் அடங்கி மடங்கிவிட்டேன். இதுமுதல் என் பெயர் ‘மடங்கல்’ என்று குறிக்கப்படட்டும். “தமிழ் நாட்டு முன்னோர்கள் முன்னறிவிற் சிறந்தவர்கள், பாரத வீரன் வெற்றியை அவர்கள் முன்பே அறிந்திருக்கிறார்கள். என் தோல்வியையும் அறிந்திருக்கிறார்கள். என் தோல்வியை என் இனத்தின் தோல்வியாக அவர்கள் மதித்திருக்க வேண்டும். அதனால்தான் தமிழ் நிகண்டாசிரியர்கள், அகர வரிசை ஆசிரியர்கள், சிங்கத்தின் இனப்பெயர்களுள், மடங்கல் என்ற என் பெயரையும் குறித்திருக்கிறார்கள். தமிழ் முன்னோர் எழுதிவைத்த சான்றுடன், நான் இப்போது என் சான்றையும் அளிக்கிறேன். “இன்று முதல் ‘மடங்கல்’ என்ற புதுப் பெயருடனே தான் நான் எங்கும் உலவுவேன். அந்தப் பெயருடன் பாரதவீரன் புகழை எங்கும் பரப்புவேன். ‘சிங்கத்தை வென்ற வீரசிங்கம்’ என்ற விருதுப் பெயருடன், அவர் வெற்றிகளும் புகழும் ஓங்குக. வருங்காலத்தில் அவரும் அவர் மனதில் இடங்கொண்ட மங்கையரும், என் இனத்தவரால் தாங்கப்பட்ட சிங்காதானத்தில் அமர்வார்களாக!” சிங்கத்தின் சார்பில் வண்டியோட்டி செய்த சொற்பொழிவு ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது. “வாழ்க, சிங்கம், வளர்க வண்டியோட்டியின் செல்வம்! வெல்க சிங்கத்தை வென்ற வீரசிங்கம்” என்ற குரல்கள் மங்கம்மாள் சாலை அதிர முழங்கின. பாரத வீரனுக்கு வண்டியோட்டி மீண்டும் மீண்டும் வணக்கம் தெரிவித்தான். வீரர்கள் எறிந்து சென்ற ஈட்டிகள், வாள்கள், வெடிப்படைகள் நிரம்ப இருந்தன. அவை எல்லாவற்றையும் அவன் பாரத வீரனுக்குக் காணிக்கையாகக் கொடுத்தான். ஆனால் பாரத வீரன் அவற்றில் ஒவ் வொன்றிலும் தலைசிறந்த ஒன்றைமட்டுமே தேர்ந்தெடுத்துக் கொண்டான். வண்டியோட்டிக்கு இப்போது ஒரு குறைதான் இருந்தது. காவல் வீரர்களில் ஒன்றிருவர் இறந்து விட்டனர். பலர் ஓடி விட்டனர். சில நாட்களாவது சீடர்களில் சிலரை வீரராக அனுப்பும்படி வண்டியோட்டி பாரத வீரனை வேண்டினான். அதற்கான ஊதியம் பெற்றுத் தருவதாகவும் ஏற்றான். ‘ஊதியம்’ என்றவுடன் சீடர்களில் மிகப் பலர் முன் வந்தனர். பாரத வீரன் அவர்களில் பத்துப்பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினான். பழைய வீரர் படைக்கலங்களையே அவர்களுக்கு அளித்தான். இச்சமயம் சிங்கம் எக்காரணத்தாலோ மீண்டும் உறுமிற்று. பாரத வீரன் புன்முறுவலுடன் வண்டியோட்டியை நோக்கினான். “சிங்கத்தின் மொழி தெரியும் என்றாயே? அது இப்போது என்ன சொல்கிறது? தமிழில் மொழி பெயர்த்துச் சொல்” என்றான். சிங்கம் அப்போது வாயிற்புறத்தில் வாலை வைத்துப் படுத்திருந்தது. அதன் வால் நுனி வெளியே கிடந்தது. “சிங்கத்தை வென்ற வீரசிங்கம் என்ற விருதுப் பெயரின் சின்னமாக, என் வால் நுனியைக் கத்தரித்து வீரனுக்குக் கொடுங்கள் என்று சிங்கம் கூறுகிறது” என்றான் வண்டியோட்டி. சொல்லியபடியே அவன் சிங்கத்தின் வால் மயிரின் நுனியைக் கத்தரித்துக் கொடுத்தான். பாரத வீரன் அதைப் பெரு மிதத்துடன் பெற்றுக்கொண்டான். இளவரசியின் முன்தானைச் சின்னத்துடன் அதையும் தலையணியில் ஒட்டிக் கொண்டான். கூண்டு மீண்டும் மங்கம்மாள் சாலை வழியே பயண மாயிற்று. சீடர்களில் சிலர் வீரராக உடன் சென்றார்கள். மீந்த சீடருடன் பாரத வீரன் அணைகரை நோக்கிப் பயணமானான். 8. அணைகரையாறு பாரத வீரன் சீடர்களில் சிலர் சிங்கக் கூண்டின் காவலர்களாகச் சென்றுவிட்டனர். சீடர்கள் தொகை இதனால் குறைவுற்றது. ஆனால் ஊர்வலத்தின் மதிப்பு இக்காரணத்தால் குறைந்துவிடவில்லை. ஏனென்றால் பாரத வீரன் புதுப்புகழ் அவனுக்கு முன்னே சென்றது. வழியிலுள்ள சிற்றூர்களிலும் குப்பங்களிலும் மக்கள் திரண்டு வந்தனர். சிங்கத்தை வென்ற வீரசிங்கத்தைக் காண அவர்கள் துடித்தனர். அவ்விடங்களி லிருந்து சிறுவர் சிறுமியர் நெடுந்தொலை அவர்களைப் பின்பற்றிச் சென்றனர். சீடர்களின் வாழ்த்தொலிகளில் அவர்களும் பலபடியாகக் கலந்துகொண்டார்கள். பல ஊர்களில் செல்வர்களும் பெரிய மனிதர்களும் சேர்ந்த விருந்தளித்தனர். அச்சமயம் ஆடவர் இளவரசியைப் பற்றிப் பாரத வீரனைப் பேசவைப்பார்கள். அவன் வீரத்தைத் தூண்டி நாடகக் காட்சிகள் நடிக்க வைப்பார்கள். அதேசமயம் பெண்டிர் பட்டி மந்திரியிடம் பேச்சுக் கொடுப்பார்கள். அவன் பெண்டு பிள்ளைகளைப் பற்றி விசாரிப்பார்கள். அவன் ஒரு தீவுக்கு அரசனாவதைக் கேள்விப்பட்டு, அவர்களில் சிலர் வியப்படைந்தனர். அது பற்றி அவனைக் கிளறினர். அவன் அறிவார்ந்த மறுமொழி கேட்டு, அவர்கள் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. “அரசனானால், உனக்கு ஆளத் தெரியுமா?” என்று ஓர் இளம்பெண் கேட்டாள். “என்ன சொன்னீர்கள் அம்மா! எனக்கா ஆளத் தெரியாது? என் வீட்டுக்கு வந்து பார்க்க வேண்டும். எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள். நான் இல்லாத சமயம் அவள் வேலையே பார்க்கமாட்டாள். ஆனால் நான் இருக்கும்போது அவளைப் பம்பரமாய் ஆட்டுவேன். அவள் பரபரப்புடன் வேலை செய்வாள். எனக்கு மூன்று புதல்வியர், இரண்டு புதல்வர் இருக்கிறார்கள். நான் இல்லாவிட்டால், அவர்கள் இடைவிடாமல் சச்சரவிடுவார்கள். நான் இருக்கும்போது ஒருவருக்கொருவர் போட்டியிட்டு என் கட்டளைகளை நிறைவேற்றுவார்கள். “வீட்டை இப்படி ஆளத் தெரிந்தவனுக்கு, நாட்டை ஆள்வதா ஒரு பெரிய காரியம்? ஆறு பேரை ஆளும் திறமை இருந்துவிட்டால் போதும், அதன்பின் ஆறாயிரம் பேரை ஆள்வதும், ஆறு கோடிப் பேரை ஆள்வதும் தானாக வந்துவிடும். ஏனெனில் முதல் ஆறுபேர் ஆளுக்கு ஆறு பேரை ஆள்வர். அவர்கள் தாமும் ஆளுக்கு ஆறு பேரை ஆள்வர். இப்படி ஆட்சித் திறமை பரவிவிடும்.” “இவரிடம் ஆறு நாள் பாடம் கேட்டால் போதும். நம் போன்ற பெண்கள்கூட நாட்டை ஆண்டுவிடலாமே” என்று அந்தப் பெண் தன் தோழியருடன் அளவளாவிப் பேசிக் கொண்டாள். ஆரவாரம் உலாவை ஊர்வலாமாக்கியிருந்தது. விருந்துகளும் நடிப்புக் கச்சேரிகளும் பேச்சுக் கச்சேரிகளும் அதை ஓர் ஊர் சுற்றும் திருவிழா ஆகியிருந்தன. இதனால் அணைகரை செல்லுமுன் பொழுது இருட்டிவிட்டது ஆற்றின் இப்புறமே அவர்கள் தாவளமடித்தனர். அவர்கள் தங்கிய இடத்தில் ஒருவழிப்போக்கர் விடுதி இருந்தது. விடுதிக்காரர் செந்தில் வேலர் ஒரு சிறந்த பக்தர், பெருஞ்செல்வவான். ஈகைப் பண்பும், நகைச்சுவையும் அவரிடம் ஒருங்கே இணைந்திருந்தன. பாரத வீரனிடமும் பட்டி மந்திரியிடமும் அவருக்குப் பெரும் பாசம் உண்டாயிற்று. அவர்களுக்கும் சீடர்களுக்கும் அவர் நல்ல விருந்தளித்தார். அவர்கள் வீரப் புகழ்ப்பாடலையும் கூத்து கும்மாளங்களையும் அவர் இரவு பத்துமணி வரை கண்டு களித்தார். அதன்பின் அனைவரும் உறங்கிவிட்டனர். முன்னிரவில் சிறுதூறல் இருந்தது. ஆனால் அது சிறிது நேரத்தில் ஓய்ந்துவிட்டது. அதை அவர்கள் பொருட்படுத்த வில்லை. அவர்கள் கூத்து கும்மாளங்களை அது நிறுத்திவிடவும் இல்லை. அதே தூறல் மலைப்பகுதியில் பெருமழையாயிருக்கக் கூடும் என்று அவர்கள் கருதவில்லை. மறுநாள் காலை அணைகரை ஆற்றை அணுகியபோதுதான் அவர்கள் அந்த உண்மையை உணர்ந்தனர். ஆறு இரு கரையும் புரண்டோடிற்று. காலையுண்டி முடிப்பதற்குள் வெள்ளம் போய் விடுமென்று அவர்கள் கருதினார்கள். ஆனால் இங்கும் அவர்கள் ஏமாந்தார்கள். வெள்ளம் மிகுதியாகப் பெருகி வந்தது. குறையவில்லை. அணைகரை ஒரு கானாறு. அதில் ஆண்டில் நான்கைந்து நாட்களுக்குமேல் கரண்டையளவு தண்ணீர்கூட இராது. ஆனால் தண்ணீர் வரும் சமயம் அதில் ஆளும் நிலை கொள்ளாது. ஆனையும் நிலை கொள்ளாது. நீரோட்டமும் சுழிகளும் சிறுமலைகளை அடித்திழுத்துச் செல்லத் தக்கவையாயிருந்தன. இச்சமயங்களில் ஆற்றில் யாரும் இறங்கவும் மாட்டார்கள். படகு தெப்பங்களையும் யாரும் பயன்படுத்துவ தில்லை. இச்செய்திகளை விடுதி முதல்வர் விளக்கினார். இரண்டொரு நாள் தங்கி, ஆற்றைக் கடக்கும்படி வேண்டினார். சீடர்களுக்கு இது விருப்பமே. ஆனால் பாரத வீரன் இதற்கு இணங்கவில்லை. சிங்கத்தினிடமே காட்டிய வீரத்தை அவன் அணைகரையாற்றினிடமும் காட்டத்துணிந்தான். எவர் கருத்துரையையும் கேளாமல், எவர் மறு மொழிக்கும் காத் திராமலே அவன் தன் கோவேறு கழுதையுடன் ஆற்றில் இறங்கினான். சீடர்கள் அனைவரும் திகைத்து நின்றார்கள். ஆனால் முத்துக்குடும்பன் பாரத வீரனைப் பின்பற்றி ஆற்றில் இறங்கினான். அவன் பின் மாவிதுரன் இறங்கினான். தத்தம் வீரத்தின் ஏற்றத் தாழ்வுக்கேற்ப, அனைவரும் முன்பின்னாக நீரில் கால்வைத்தனர். தன் கழுதையுடன் பட்டி மந்திரி எல்லார்க்கும் பின்னாலேயே ஆற்றில் இறங்கினான். எல்லாருக்கும் பாதுகாப்பாக முத்துக் குடும்பன் ஒரு கட்டளை பிறப்பித்தான். ஒவ்வொருவரும் முன்னுள்ளவர் கையையும் பின்னுள்ளவர் கையையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்படி கூறினான். எல்லாருக்கும் முன் சென்றவன் பாரத வீரன். அவன் கோவேறு கழுதையை முன்னே செல்லவிட்டு, அதன் கடிவாளத்தைப் பற்றிக் கொண்டான். எல்லாருக்கும் பின்னே சென்றவன் பட்டி மந்திரி. அவன் தன் கழுதையைப் பின்னே செல்ல விட்டு அதன் தலைவரைப் பற்றியிழுத்துச் சென்றான். இங்ஙனமாக, அனை வரும் ஒன்றுபட்டு நின்று, அணைகரையாற்றுடன் போர் தொடுத்தார்கள். தொடக்கத்தில் கவசத்தின் பளு பாரதவீரனுக்கு உதவியாயிருந்தது. ஆற்றின் எதிர்ப்பைத் தாங்கி அவன் எல்லாரையும் இழுத்துச் சென்றான். ஆனால் வேதாள அட்டையுடன் பிணிக்கப்பட்டிருந்த கோவேறு கழுதையே இழுப்புக்கு மிகப் பெரிதும் ஆளாயிற்று. நடு ஆறு செல்வதற்குள் எவருக்கும் ஆழம் நிலைகொள்ளவில்லை. இப்போது நிலைமை தலைகீழாயிற்று. பளுவால் பாரத வீரன் நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தான். ஆனால் அப்போதும் அவன் பிறரை ஊக்கினானேயல்லால், பிறர் உதவி கோரவில்லை. இப் பெருந்தன்மை சீடர் உள்ளத்தை உருக்கிற்று. முத்துக்குடும்பன் கட்டளைப்படி அவர்கள் அவனைச் சூழ்ந்து நின்று தாங்கினர். இதனால் அவனை அமிழாமல் காக்க முடிந்தது. ஆனால் ஆற்றின் வேகத்தில் அனைவரும் வண்டல் போல மிதந்து செல்லவேண்டியதாயிற்று. ஆற்றின் நடு இழுப்பில், அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்து அரைக் கல் தொலைவுக்கு மேல் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு விட்டனர். அணைகரையின் அக்கரை செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவர்களில் பலர் இழந்து விட்டனர். பாரத வீரன் இல்லாவிட்டால் சீடர்கள் அக்கரை சென்றிருப்பார்கள். இது பாரத வீரனுக்குத் தெரியும். தன்னுடன் அவர்களும் வீணாக அழிவதை அவன் விரும்பவில்லை. ஆகவே தன்னை விட்டுவிட்டுப் போகும்படி அவர்களை நயமாகத் தூண்டினான். “கழுதைகளுடன் நீங்கள் எதிர்கரை சென்று விடுங்கள். நான் எதிர் நீச்சலடித்து, ஆற்றை ஒரு கை பார்த்து விடுகிறேன்” என்றான். அவன் பெருந்தன்மை அவர்களுக்குப் புத்தெழுச்சி தந்தது. “உங்களுடனேயே எதிர்கரை சென்று விடுவோம்” என்று கூறி, அவர்கள் முழுமூச்சாக நீரோட்டத் துடன் மற்போரிட்டனர். இது ஒரு சிறிதே பயன் தந்தது. அவர்கள் நடு ஆற்றெல்லை கடந்தனர். இயற்கையே இப்போது அவர்களுக்கு உதவிற்று. ஆறு ஓரிடத்தில் முழு அரைவட்டமாக வளைந்தது. இதனால் நடு நீரோட்டமே அவர்களை மறு கரைப்பக்கம் கொண்டு சென்றது. கரைமீதிருந்த புதர்களையும் பாறைகளையும் கையால் பற்றிச் சில சீடர்கள் கரையேறினர். ஏறியவர்கள் ஆடையை முறுக்கி வீசி மற்றவர்களையும் ஒவ்வொருவராகக் கரையேற்றினர். பாரத வீரனும் கோவேறு கழுதையும் ஒரு சுழியில் சிக்கிச் சுழன்றனர். சுழியின் செயலால் கோவேறு கழுதை ஒருபுறமும், பாரத வீரன் ஒருபுறமுமாக இழுத்துச் செல்லப்பட்டனர். நீரிலிருந்தே இரு சீடர்கள் தம் மேலாடையை வீசிப் பாரத வீரனைப்பற்றி இழுத்தார்கள். அதேசமயம் கரையிலுள்ள ஒவ்வொருவரும் இதே மாதிரி அவர்களைப் பற்றியிழுத்தார்கள். சுழியின் இழுப்புக்களிலிருந்து இதனால் பாரத வீரனை மீட்டுக் கரை சேர்க்க முடிந்தது. கரை சேர்ந்த பின்புகூட அவன் களையார அரைமணி நேரம் பிடித்தது. பட்டி மந்திரி நடு ஆற்றுக்கு வருமுன்பே, கழுதையின் தலைக்கயிற்றை நழுவவிட்டுவிட்டான். ஆனால் விரைவில் அவன் அதன் வாலைப்பற்றிக் கொண்டான். கழுதையின் இயல்புப்படி, தலைவனென்றும் பாராமல், அது பின்காலால் உதைக்கத் தொடங்கிற்று. ஆனால் என்ன வந்தாலும், உதைகளையும் மிகுதி வாங்காமல், கழுதையின் வாலையும் நழுவ விட்டு விடாமல், அவன் விழிப்பாயிருந்தான். நல்லகாலமாக, கழுதையின் முன் காலுக்கு நிலப்பிடிப்பு இல்லை. அதனால் அதன்பின் காலுதைக்கு அவ்வளவு வலு இல்லாது போயிற்று. பட்டிமந்திரியின் ஆடைகள் கெட்டியானவை. நீரில் தோய்ந்தபின் அவை தோல்போல் காற்றேறாதவையாயின. ஆயினும் கழுதையின் உதைகளால், அதன் உட்புறம் காற்றேறிற்று. ஆடைகள் தோற் பைகள் போல் உப்பி அவனை மிதக்கவிட்டன. உப்பலான அவன் உடல் மேலும் உப்பலாகக் காட்சியளித்தது. அவ்வுருவத்தைக் கண்டு, கரையேறிய சீடர்கள் விலாப்புடைக்கச் சிரித்தனர். கரையேறாதவர்கள்கூட, கரையேற முடியாமல் தண்ணீரிலேயே கிடந்து சிரித்தார்கள். அந்த உருவத்தைக் கண்டுகளிக்கும் ஆர்வத்தால், நெருங்கிச் சென்று யாரும் அவனைக் கரையேற்ற முடியவில்லை. ஆயினும் கழுதையின் வாலை அவன் பிடித்திருப்பது தெரியாமல், சிலர் கழுதையைக் கரையேற்றினர். அதன் வாலைப்பற்றிக்கொண்டு அவனும் பின்வந்ததைக்கண்டு அவர்கள் வியப்புற்றனர். செய்தி விளங்கிய பின்னால், அவர்களுக்கு மீண்டும் நினைத்து நினைத்துச் சிரிக்க வாய்ப்பு ஏற்பட்டது. பட்டி மந்திரி நிலைக்கு நேர் எதிரான நிலையில் கோவேறு கழுதை இருந்தது. நீரில் பின்னாலிருந்து உதவவருபவர்களை அது எதிர்த்தது. முன்னாலிருந்து இழுப்பவர்களிடமிருந்து அது விலகிச் சென்றது. இதனால் அது நடு நீர்ப்பக்கமே செல்ல வேண்டியதாயிற்று. அதை யாரும் கரையேற்ற முடியவில்லை. கழுதை கரையேறியும் கோவேறுகழுதை கரையேறாதது கண்டு, பாரத வீரன் முகம் சோர்வுற்றது. “பட்டி மந்திரியின் புகழில் பங்குகொள்ள ஒரு கழுதை இருக்கிறது. என் புகழில் பங்கு கொள்ளத் தக்க கோவேறு கழுதைமட்டும் இல்லாமல் போய் விட்டதே” என்று அவன் முனகிக்கொண்டான். வீரத்தலைவன் சோர்வுகண்டு எப்படியும் கோவேறு கழுதையைக் காப்பாற்றுவது என்று நீலகண்டன் புறப்பட்டான். அவன் கோவேறு கழுதை மீது ஒரு கண் வைத்துக் கொண்டே ஆற்றின் கரையோரமாக ஓடினான். சீடர்கள் கவலையுடன் கோவேறு கழுதையையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அவனையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தார்கள். போனவிலங்கு இனி வருவதேது, நீலகண்டன் வீணாகவே தன்னை அலைத்துக் கொள்கிறான் என்று அவர்கள் எண்ணினார்கள். அரைமைல் ஓடும்வரை நீலகண்டன் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது. விலங்கும் மனிதனும் மறைந்த பின் சீடர்கள் அவன் வெறுங்கையுடன் வருவதையே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நெடுநேரமாகியும் அவன் கூட வரவில்லை. சீடர்களும் பாரத வீரன் இப்போது கோவேறு கழுதையை மறந்து விட்டனர். அவனுக்காகவே கவலைப்பட்டார்கள். கோவேறு கழுதையைப் பற்றிக் கவலைப்பட்ட, அவன் போகக் காரணமாய்விட்டோமே என்று பாரத வீரன் வருந்தினான். ஓடி ஓடி நீலகண்டன் கால் ஓய்ந்துவிட்டது. இனி ஓட முடியாது என்ற நிலை ஆயிற்று. நீந்தி நீந்திக் கோவேறு கழுதைக்கும் நாடிநரம்பு தளர்ந்துவிட்டது. அது நீரில் மிதந்தே சென்றது. ஆனால் இச்சமயம் ஆற்றின் கரையிலிருந்த ஒரு மரம் ஆற்றினுள் விழுந்து கிடந்தது. அது கப்பும் கவருமாயிருந்ததால், நீரில் இழுபடவும் இல்லை. அமிழவும் இல்லை. கரையிலிருந்து ஆற்றின் பாதி அகலம்வரை அது ஒரு மிதவைப் பாலம் போல் கிடந்தது. அதன் கிளைகளில் கோவேறு கழுதையின் உடல் தட்டி மேற்செல்லாமல் நின்றது. நீலகண்டனுக்குப் புது நம்பிக்கை பிறந்தது. உடலில் புதுத்தெம்பு வந்தது. அவன் மரத்தின் வழியாக நடுஆறுவரைச் சென்றான். கோவேறு கழுதையின் கயிற்றைப் பற்றினான். நீர் வழியாக அதைக் கரைக்கு இழுத்து வந்து கரை சேர்த்தான். நீர் குடித்து அதன் உடல் ஊதியிருந்தது. தலையைப் பள்ளத்திலும் உடலை மேட்டிலும் இட்டு, அவன் அதை உருட்டினான். போதிய அளவு நீர் கக்கியபின், அதைச் சுள்ளிகளின்மேல் படுக்கவைத்தான். சருகு கூளங்களைக் கிளறினான். மேற்கூளம் அகற்றி, நனையாத அடிக்கூளம் திரட்டினான். அதன் புகையால் அவன் கோவேறு கழுதையின் உடம்பை வெதும்பினான். அது உணர்வுபெற்ற பின், இளங்குளையுணவூட்டி அதற்கு வலுவூட்டினான். பாரத வீரன் அவனைத் தேடி இரு சீடர்களை அனுப்பியிருந்தான், நீலகண்டனுடன் கோவேறு கழுதையையும் கண்டு அவர்கள் அகமகிழ்வெய்தினர். மீண்டும் எல்லாரும் ஒருங்கு கூடினர். அவர்கள் கொண்டுவந்த உணவெல்லாம் வெள்ளத்தில் கரைந்து போயிற்று. ஆயினும் நெருப்புப் பெட்டி இருந்ததால், அவர்கள் காய்கனிகளைப் பறித்துச் சமைத்து உண்டனர். அன்றையப் பொழுதையும் இரவையும் அவர்கள் ஒரு பெரு மரத்தடியில் கழித்தனர். 9. கவந்தன் போர் சிங்கத்தைப் பாரத வீரன் வென்ற சமயம், பட்டிமந்திரி அவனைக் கண்டு நடுநடுங்கிப்போனான். பாரத வீரன் அருகே செல்ல அவனுக்கு அச்சமாயிருந்தது. அவனிடம் பேச அவன் நா எழவில்லை. அவனுடன் எப்படி நாள் கழிக்கப்போகிறோம் என்ற கவலை எழுந்தது. ஆனால் அணைகரை ஆற்றின் நிகழ்ச்சி அவனுக்கு ஊக்கம் அளித்தது. பாரத வீரன் துணிச்சலும் வீரதீரமும் உடையவன் மட்டுமல்ல. மனித உணர்ச்சியும் பாசமும், நட்புறுதியும் பெருந்தன்மையும் உடையவன் என்று கண்டான். அவனிடம் பணி செய்வது ஒரு பெருமை, அதேசமயம், அது மகிழ்ச்சிக்கும் உரியது என்று அவன் கருதினான். “கோவேறு கழுதைக்கிருந்த உண்மை உழைப்பிலும் பொறுமையிலும் பாதி எனக்கு இருந்தால் போதும்! அவன் உள்ளத்தில் நான் இடம் பெற்றுவிட முடியும். ஒரு சிறிய அரசாட்சியையும் எளிதில் பெற்றுவிட முடியும்” என்று அவன் தனக்குள்ளே கூறிக்கொண்டான். இந்த எண்ணங்களுடன் அவன் பாரத வீரன் கோவேறு கழுதையைப் பின்பற்றித் தன் கழுதையை நடக்கவிட்டான். சீடர்களுக்கு விடை கொடுத்தனுப்பிய பின், அவர்கள் மேற்குத் திசையாக நெடுந்தொலை கடந்தனர். வற்றல் பாலையும் புதர்க்காடும் தாண்டி, செழிப்பான புன்செய்க் காடுகளின் வழியாக அவர்கள் சென்றனர். இளம் புல்லும் ஆவாரையும் கறித்துக்கொண்டு விலங்குகள் கிளர்ச்சிகரமாக நடைபோட்டன. சோளக் கதிர்களிலிருந்தும் கம்பங்கொல்லைகளிலிருந்தும் பறவைகள் கலகலப்புடன் பறந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வீரனும் பாங்கனும் களிப்புடன் சென்றனர். இருவர் உள்ளங்களும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தன. அது இனிய பேச்சாக மலர்ந்தது. குடும்பம், பணம், உணவு, உடைச் செய்திகள் ஆகியவற்றின் சூழலிலிருந்து பாங்கன் உள்ளம் மேலெழுந்து மிதந்தது. புராணக் கற்பனைகளிலிருந்து வீரன் உள்ளம் கீழிறங்கி வந்தது. புன்செய்க் காடுகளின் நறுமணம் இரண்டும் உரையாடலில் பின்னின. வழியில் ஒவ்வொரு காட்சியும் பாரத வீரன் கண்களுக்குப் பாரத இராமாயணங்களையே நினைவூட்டின. புராணங்களையே நினைவூட்டின. ஒவ்வொன்றையும் அவன் பட்டி மந்திரிக்குச் சுட்டிக் காட்டினான். ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை விளக்கமும் தந்தான். அவற்றின்படி, செம்மண் காடுகளெல்லாம், சூரபன்மன் குருதி பரந்தூறிய இடங்கள் ஆயின. சூரனை இக்காடுகளில் கொன்றபின், வேலவன் திருச்செந்தூரிலே சென்று வேலை கடலில் கழுவினான். புதரடர்ந்த மேல்புறக் குன்றுகளெல்லாம், சஞ்சீவி மலையிலிருந்து வரிசையாக விழுந்த துண்டுகள். இந்திரசித்தனின் நாகபாசத்தை முறிக்க அனுமன் இவ்வழியாகவே இலங்கைக்குச் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு சென்றான். நிறமாறும் பச்சோந்திகள், அடிக்கடி உருவம் மாறிய மாய மாரீசன் குருதியிலிருந்து பிறந்தவை. இத்தகைய கதைகளைப் பட்டிமந்திரி எளிதில் நம்பவும் முடியவில்லை, நம்பாதிருக்கவும் முடியவில்லை. நம்பிக்கை, அவநம்பிக்கை ஆகிய இரண்டுக்கும் இடையேயுள்ள வியப்பார்வ மருட்சி அவன் முகத்தில் துள்ளியாடிற்று. சீடர்கள் முகத்தில் காணாத கவர்ச்சியைப் பாரதவீரன் இவ்வார்வத்தில் கண்டான். அவனிடம் கதை கூறுவது ஓர் இன்பமாயிருந்தது. அவன் கேள்விகளும் பாரத வீரன் கற்பனை உள்ளத்தைக் கனிவித்தன. “ஆண்டே, எல்லாம் அறிந்த தங்களிடம் கேள்வி கேட்க எனக்குத் துணிச்சல் வரவில்லை. ஆனாலும் நான் எழுத்தறி வில்லாதவன். அதை நினைத்துப்பார்த்து, என் சந்தேகங்களைப் போக்க வேண்டுகிறேன்” என்று அவன் தொடங்கினான். சீடர்கள் பச்சைப் புகழ்ச்சியைவிட, பணிவார்ந்த இந்தக் கேள்வி பாரத வீரனுக்குக் களிப்பூட்டிற்று. அவன் அகக் கனிவுடனே பேசினான். “ஒப்பற்ற துணைவனே! தாராளமாகக் கேள். என் புகழுடன் ஒட்டி வாழப்போகிறவன் நீ. உன் சந்தேகங்களைத் தீர்ப்பது என் கடமை. அது என் உரிமையும் ஆகும்” என்றான் அவன். “நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தக் காடுகள் முழுவதுமே அந்தக் காலத்தில் அரக்கர்கள், பூதங்கள், தேவர்கள், முனிவர்கள் நிறைந்ததாகத் தோற்றுகிறது. அவர்களெல்லாம் இப்போது எங்கே போனார்கள்.” பாரத வீரன் புன்முறுவல் பூத்தான். “அந்தக் காலத்தில் மட்டுமென்ன? இந்தக் காலத்திலும் தான் இருக்கிறார்கள். என் நூலகத்தை ஒரு பூதம் தூக்கிக் கொண்டு போயிற்று. அதில் என் ஏடுகள் எல்லாம் இருந்தன. இதை நீ அறியமாட்டாய். இது நீ வருமுன் நடந்தது. என் அத்தையும் வேறு இரண்டு நண்பர்களும் அதைக் கண்ணாரக் கண்டார்கள். வேறு யாராவது கண்டதாகச் சொன்னால்கூட நான் எளிதாக நம்பமாட்டேன். அவர்களுக்குத் தெய்வங்கள், பூதங்கள் எவற்றிலும் நம்பிக்கை கிடையாது. அப்படிப் பட்டவர்களே பார்த்து என்னிடம் கூறினார்கள். அது மட்டுமல்ல, நானே ஓரளவு கண்டேன். முந்தின நாள் அங்கு இருந்த புத்தகங்கள் மட்டுமல்லாமல், அறையையே காணவில்லை. பூதத்தைத் தவிர வேறு யார் அறையைத் தூக்கி கொண்டு போக முடியும்?” “அப்படியா செய்தி? நம் சீடர்கள் இதுபற்றி என்னிடம் எப்படி எப்படியோ சொன்னார்கள். அவர்கள் சொன்னதை எல்லாம் நம்ப முடியவில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் போது...” “சொல்லும் ஆளைக்கொண்டு எதையும் நம்பாதே, பட்டி. செய்தியைக் கண்டுதான் மதித்தறிய வேண்டும்.” ‘ஆம், ஆண்டே. அதனால்தான் உங்களிடம்கூடச் சந்தேகம் கேட்க முடிகிறது. இல்லாவிட்டால், என் போன்றவர் எங்கே? நீங்கள் எங்கே? அந்தப் பூதத்துக்கு நீங்கள் எப்படியோ, அப்படித் தானே உங்களுக்கு நான் இருக்க முடியும்?’ “நீ கூறுவது முற்றிலும் சரியல்ல, பட்டி! அந்தப் பூதம் என்னைவிட உருவத்தில் பெரிதாயிருக்கலாம். மாயத்தில் பெரிதாயிருக்கலாம். ஆனால் அந்த மாதிரிப் பூதங்களையும் அரக்கர்களையும் கொல்லவே நான் கற்கியாய்ப் பிறந்திருக் கிறேன். இராவணன், சராசந்தன், இடும்பன், கவந்தன் முதலிய அரக்கர்கள் பலரும் என் கையால் சாவதை நீயே பார்க்கப் போகிறாய். அதை முன்கூட்டி அறிந்ததனால்தான், எனக்குத் தொல்லை கொடுக்க அவர்கள் பூதத்தை அனுப்பியிருக் கிறார்கள்.” “மன்னிக்க வேண்டும், ஆண்டே! எனக்கு அவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனாலும் இராவணனை இராமா யணத்தில் இராமர் கொன்றுவிட்டார் என்று கேள்விப்படு கிறேன். சராசந்தனைக்கூட யார் யாரோ கொன்றுவிட்டதாக நினைவிருக்கிறது. அவர்கள் இப்போது உங்களுக்கு எப்படித் தொல்லை தரமுடியும்?” இப்போது பாரத வீரன் நிமிர்ந்து மீசையை முறுக்கினான். பட்டி மந்திரி திடீரென்று அச்சமடைந்து நடுங்கினான். ஆனால் பாரத வீரன் தொனியில் தான் மாறுபாடு இருந்தது. பேச்சில் மாறுபாடு இல்லை. “பட்டி! நீ ஏதேதோ கேள்விப்பட்டிருக்கிறாய். யார் யாரோ சொல்லியிருக்கிறார்கள். நீ ஆராய்ச்சியுடன் படிக்கவும் இல்லை. ஆராய்ச்சியுடையவர் சொல்லிக் கேட்கவும் இல்லை. இப்போது நான் விளக்குகிறேன். கேள்! இராமனாக அவதாரம் எடுத்த கடவுள் திரும்பவும் கண்ணனாக அவதாரம் எடுத்தார். இது உனக்குத் தெரியுமல்லவா? “ஆம்!” “அதுபோல இராவணன், சராசந்தன், சிசுபாலன் எல்லாருமே திரும்பத் திரும்ப அவதாரம் எடுப்பார்கள். திரும்பத் திரும்பக் கடவுள் அவதாரம் எடுத்து வந்து அவர்களை அழிப்பார்.” “அப்படியா? சரி, சரி! ஆனால் இரண்டு பக்கமும் அவதாரம் எடுத்துக்கொண்டு போனால், திரும்பத் திரும்ப அழித்து என்ன பலன்?” “அப்படிக் கேள். கடவுள் அவதாரங்களில் கடைசி அவதாரம் கற்கி, அதுதான் நான். என் கையால் இறக்கும் எல்லாப் பூதங்களும், அரக்கர்களும் அதுபோலக் கடைசி அவதாரங்கள் தான். எனக்குப் பின்னால் பூதங்கள், அரக்கர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களை நான் அழித்துவிடுவேன். நானும் இனிமேல் அவதாரம் எடுக்க மாட்டேன்!” “எனக்கு இனி அவதாரம் இருக்குமா, ஆண்டே!” பாரத வீரன் பதில் எதுவும் கூறவில்லை. பட்டி மந்திரி அவனை ஏறிட்டுப் பார்த்தான். அவன் முகம் முற்றிலும் மாறுபட்டுவிட்டது. அவன் எதையோ கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். பட்டி மந்திரிக்கு இப்போது அச்சமாயிருந்தது. அவன் கழுதையை நிறுத்தி, பாரத வீரன் பின்சென்று பதுங்கினான். என்ன நேரப் போகிறதோ என்று நடுங்கினான். “அதோ நான் சொன்னது சரியாயிற்று, பார்! கவந்தன் என்ற அரக்கனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அவன் அதோ நம்மை நோக்கி குதிக்கிறான் பார்” என்றான் பாரத வீரன். “யா....ர்? கவந்...தனா?” பட்டி மந்திரிக்கு நாடிநரம்புகள் முற்றிலும் தளர்ந்தன. வீரன் நோக்கிய இடத்தில் அவன் கூர்ந்து நோக்கினான். எதுவும் காணவில்லை. “அதோ இரண்டு கைகளும் இரண்டு பனையளவு நீண்டிருக்கின்றன. இரண்டு கைகளிலும் எவ்வளவு பெரிய பாறைகளை ஏந்திக்கொண்டிருக்கிறான் பார்? அதுதான் கவந்தன். நீ இப்போது இங்கேயே நில். நான் சென்று அவன் கொட்டத்தை அடக்கி வருகிறேன்” என்று கூறிப் பாரத வீரன் முன்னால் விரைந்தான். பட்டி மந்திரி கண்களுக்கு இரண்டு ஏற்றங்கள் தான் தெரிந்தன. அவை பனையளவு நீளம் இருந்தது. உண்மைதான். ஆனால் அவை எப்படி கவந்தனாயிருக்க முடியுமென்று அவனால் காணமுடியவில்லை. இதையெல்லாம் அறியத்தக்க புத்தக அறிவு தனக்கு இல்லாமல் போய்விட்டதே என்று அவன் கவலை கொண்டான். உலா முடிவில் எப்படியாவது முயன்று இவற்றையெல்லாம் படிக்கவேண்டுமென்றும் அவன் உறுதி செய்து கொண்டான். பாரத வீரன் கோவேறுகழுதையைத் தட்டிவிட்டான். பட்டி மந்திரி கண்டபடியே இரண்டு ஏற்றங்கள்தான் அவன் முன் நின்றன. அவற்றின் பின்புறத்திலேயே அவன் சென்றான். கையிலுள்ள பாறைகள் என்று வீரன் கூறியது பளுவுக்காக அதில் கட்டிய கற்களே. ஏற்றத்தை முன்னால் நின்று இறைத்தவர்களை அவன் காணவில்லை. இறைக்கும்போது ஏற்றம் உயர்ந்து உயர்ந்து தாழ்ந்தது. இதையே அவன் வீசுகின்ற கவந்தன் கைகளாகக் கருதினான். கவந்தன்மீது தாக்குவதாக எண்ணி, பாரத வீரன் கோவேறு கழுதை மீதிருந்தபடியே ஈட்டியால் ஏற்றங்களைத் தாக்கினான். ஒரு தடவை இறங்கி வரும் ஏற்றம் அவன் தோளை முறித்தது. மற்றொரு தடவை கிளம்பும் ஏற்றம் அவனையும் கோவேறு கழுதையையும் சேர்த்து அந்தரத்தில் தூக்கி எறிந்தது. மனிதனைப்போலவே விலங்கும் படுகாயமுற்று எழுந்திருக்க முடியாமல் நிலத்தில் கிடந்தது. பட்டிமந்திரி நெடுநேரம் ஏற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பார்க்குந்தோறும், அது கவந்தனல்ல, ஏற்றம்தான் என்று அவனுக்கு உறுதியாய்த் தோற்றிற்று. பாரத வீரன் தாக்குதல்களை அவன் கவனித்தான். அவ்வளவு தொலைவிலிருந்து, அடிபட்டதையோ காயமடைந்ததையோ அவன் உணர முடியவில்லை. ஆனால் இறுதியாகக் குதிரையும் பாரத வீரனும் உயரத் தூக்கி எறியப்பட்டதை அவன் கண்டான். கோவென்றலறினான். ஓடி வந்தான். விழுந்தவன் எழுந்திருக்க முடியாத நிலையில் கிடப்பதைக் கண்டு பதைபதைத்தான். அவன் பாரத வீரனை மெல்லத் தன் மடிமீது தூக்கிச் சாத்தினான். எண்ணெய் தடவி மருந்திட்டுத் துணிக்கட்டுகள், இட்டான். பக்கத்திலுள்ள சருகுகளால் தீ மூட்டி, வெந்நீர் ஒத்தடமிட்டான். சருகுப் படுக்கைசெய்து அதில் அவனைக் கிடத்தினான். கோவேறு கழுதையையும் அவன் இதேபோலக் கவனித்தான். பெரும்பாலும் அடிகள் ஊமையடிகளாகவே இருந்தன. இரவு வேதனை பெரிதாயிருந்தாலும் பாரத வீரனும் கோவேறு கழுதையும் பின்னிரவில் நன்றாக உறங்கி எழுந்தார்கள். வேதனை போனவுடன் பாரத வீரன் அடிகளையும் மறந்தான். அவனை உறுத்தியது தோல்வி மட்டும்தான். காலையில் ஏற்றம் மீண்டும் வேலை தொடங்கிற்று. இதைக் கவந்தன் வெற்றி எக்களிப்பு என்று அவன் கருதினான். அவன் முந்தின முயற்சியில் மீண்டும் ஈடுபட முனைந்தான். இத்தடவை பைத்தியக்காரத்தனமாக இம்முயற்சியைத் தடுக்க, பட்டிமந்திரி தன்னாலான மட்டும் முயன்றான். அது கவந்தனல்ல, ஏற்றம் தான் என்ற வாதம் பாரத வீரன் காதில் ஏறவில்லை. “அருட்பார்வையற்றவர்கள் கண்ணுக்கு அது வேறுமாதிரி தெரிவது இயல்புதான். மேலும் அரக்கர்கள் மாயமருட்சியில் தேர்ந்தவர்கள். சீதையின் கண்களுக்கு மாரீசன் பொன்மானாய்த் தோற்றவில்லையா? சூரபன்மன் மாமரமாக உருமாறி ஏமாற்றப் பார்க்கவில்லையா? அதுபோல அறியாத உன் போன்றவர்களை ஏமாற்றவே கவந்தன் ஏற்றமாகக் காட்சி யளிக்கிறான். நேற்று எப்படியோ தன் மாயத்தால் என்னை வீழ்த்தப் பார்த்தான். ஆனால் நான் கற்கி. தெய்வக் குருதி என் உடலில் ஓடுகிறது. என்னை அவன் அழிக்க முடியாது. இன்று வெற்றியுடன் மீளுகிறேன், பார்” என்று கூறி அவன் மீட்டும் போருக்கெழுந்தான். கோவேறு கழுதை இன்னும் நன்றாக நடக்கக்கூட முடியவில்லை. ஆகவே பாரத வீரன் இப்போது கால்நடையிலேயே தாக்குதல் தொடங்கினான். ஏற்றம் உயரும்போது அவன் கீழிருந்து ஈட்டியால் தாக்கினான். தாழும் சமயம் மேற்புரம் வாளால் வெட்டினான். மரத்தில் பட்டு, ஈட்டி அடிக்கடி வளைந்தது. கல்லின் மேல் தாக்கி வாள் முனை மழுங்கிற்று. தவிர, சில சமயம் ஏற்றம் ஈட்டியையும், ஈட்டி அவனையும் தூக்கி எறியலாயின. ஆயினும் முந்தின நாளைப்போன்ற நிகழ்ச்சி இன்று ஏற்படவில்லை. மரமும் கல்லும் வலுவாயிருந்தாலும், அவற்றைப் பிணைத்துக் கட்டியிருந்த கயிறுகளும் நாரும் படிப்படியாக அறுந்து நைந்தன. ஏற்றம் உயரும் சமயம் கற்கள் முற்றிலும் விலகிப் பெருமுழக்கத்துடன் கீழே விழுந்தன. அவன் தலைக்கு அருகாகத்தான் கற்கள் விழுந்தன. அவன் திறமையாகச் சட்டென்று விலகினான். இல்லாவிட்டால் குறைந்த அளவு தோள்களாவது கட்டாயம் பெயர்ந்திருக்கும். ஆனால் விழுந்த இடத்தில் சேறு படிந்திருந்தது. அது பாரத வீரன் உடலெங்கும் சிதறிற்று. கண்களில்கூடச் சிறிது படிந்தது. ஏற்றம் கீழே திரும்பவில்லை. அது என்ன ஆயிற்று. என்பதையும் அவன் முதலில் கவனிக்கவில்லை. ஆனால் ஏதோ பெருத்த உருவம் நீரில் விழுவதுபோன்ற ஓசைகள் கேட்டன. வேறு பல கூச்சல்களும் அடுத்து எழுந்தன. கண்களில் பற்றிய சேற்றைத் துடைத்துக்கொண்டே, பாரத வீரன் கவந்தன் உருவத்தைப் பார்த்தான். அவனுக்கு எல்லாம் விளங்கிற்று. “கவந்தன்” வயிறு வெடித்துச் செத்திருக்கிறான். அந்த ஓசையைத் தான் நான் கேட்டேன். அதோ திரும்பவும் தாக்க முடியாமல், காலையும் கையையும் விரித்து மலர்ந்து விட்டான். அதோ அழுகுரல்கள் கேட்கின்றன. அது அவன் உறவினர்களான அரக்கர்கள் அழு குரல்கள்தான். ஐயமில்லை” என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். இந்த மகிழ்ச்சியைக் கூற அவன் பட்டிமந்திரியிடம் ஓடோடிச் சென்றான்! பாவம்! பட்டிமந்திரி இத்தடவை போரில் முழுக்கவனம் செலுத்தவில்லை. தொப்பென்ற ஓசையையும் அழுகுரலையும் கேட்டுத்தான். திரும்பிப் பார்த்தான். இரண்டாக நின்ற ஏற்றத்தில் ஒன்று தலைகீழாய் நின்றது. மற்றதும் அதில் எப்படியோ மாட்டிக்கொண்டிருந்தது. “அந்தோ, ஏற்றம் முறிந்து யார் யாரோ கிணற்றில் விழுந்திருக்க வேண்டும். அடிபட்டிருக்க வேண்டும். இந்த வீரத்தலைவன் வீரனாயிருக்கலாம். ஆனால் கற்பனைப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அவருடன் வந்து பழிகேடுமாயிற்று. குடிகேடும் வந்துவிடும் போலிருக்கிறதே!” என்று அவன் பதைத்தான். “ஏற்றம் கவிழ்ந்ததன் காரணத்தை அறிந்து யாராவது வந்துவிட்டால், உயிருடன் போக முடியாது. அதற்குள் பாரத வீரனை இட்டுக்கொண்டு ஓடிவிட வேண்டும்” என்றும் அவன் முடிவு செய்தான். ஆனால் துணிவது எளிது. நிறைவேற்றுவது அரிது. ஏனென்றால், அவனொன்று நினைக்கப் பாரத வீரன் மற்றொன்று நினைத்தான். ஓடுவற்கு மாறாக, அவன் வெற்றி விழாக் கொண்டாட எண்ணினான். ‘ஏற்றம் முறிந்ததற்காக ஓடுவதா, கவந்தன் மாண்டதற்காக மகிழ்ச்சிவிழாக் கொண்டாடுவதா!’ இந்த ஆராய்ச்சியிலும் வாதத்திலும் வீரனும் பாங்கனம் அரை மணி நேரத்துக்குமேல் ஈடுபட வேண்டியதாயிற்று. உண்மையில் பட்டிமந்திரி ஐயுற்றது முற்றிலும் சரியே. ஏற்றம் இறைத்த இருவரில் ஒருவன் ஏற்ற முறிவால் படுகாயம் அடைந்தான். மற்றவன் மண்டையிலும் காலிலும் காயமுற்று நீரில் அமிழ்ந்திறந்தான். வரப்பில் வேலை செய்த ஓரிருவர், அதை அடுத்து நாலைந்து கணங்களுக்குள் உற்றார், உறவினர் வரத் தொடங்கினர். கிணற்றில் விழுந்தவனை எடுப்பதிலும், காயம் பட்டவர்களைக் கவனிப்பதிலுமே அவர்கள் சில நேரம் ஈடுபட்டிருந்தனர். உற்றார் உறவினரோ உரக்க அழுவதிலேயே ஈடுபட்டிருந்தனர். ஆனால் தொழிலாளரில் சிலர் மட்டும் ‘ஏற்றம் ஏன் முறிந்தது, கற்கள் ஏன் அவிழ்ந்தன’ என்ற ஆராய்ச்சியைத் தொடங்கினர். பாரத வீரன் பட்டிமந்திரியும் ஏற்றத்தின் பின் பகுதியையே கண்டனர். சோளக் கொல்லையின் வேலியும் சோளப்பயிரும் மறுபகுதியையுமே ஏற்றம் இறைப்பவரையும் மறைத்தன. இதே வேலியும் பயிருந்தான் மற்றவர்கள் கண்களுக்கும் அவர்களை மறைத்தன. நிகழ்ச்சியின் காரணத்தை ஆராய முற்பட்ட தொழிலாளர்கள் மறுபுறம் வந்து பார்த்துவிட்டனர். உண்மை நிகழ்ச்சியை அறிய முடியாவிட்டாலும், நிகழ்ச்சிக்குப் பின்னால் இருப்பவர்கள் தான் பொறுப்பாளிகள் என்றறிய நெடுநேரம் ஆகவில்லை. வாதத்தில் ஈடுபட்டிருந்த வீரனும் பாங்கனும் நையப் புடைக்கப்பட்டனர் என்று கூறவேண்டுவதில்லை. உண்மை நிகழ்ச்சி முழுவதும் தெரிந்திருந்தால், கொன்றே இருப்பார்கள், இரக்கப்பட்டு, அரைகுறை உயிருடனே இருவரையும் விட்டுச் சென்றனர். பட்டிமந்திரி உருண்டு புரண்டு எழுந்திருக்க நடு இரவு ஆயிற்று. அவன் உதவியுடன் பாரத வீரன் எழுந்திருக்கக் கடைசி யாமம் ஆயிற்று. ஆனால் விடியுமுன் புறப்பட்டு விடுவது அவசியம் என்று பட்டிமந்திரி வலியுறுத்தினான். இதைப் பாரத வீரனும் அட்டியின்றி ஏற்றுக்கொண்டான். ஏனென்றால் எதிரிகள் ஊராரானாலும், கவந்தன் உறவினரானாலும், எதிரிகளே என்பதில் வாதத்துக்கிடமில்லை. அடி வேதனையிலோ, மேலும் அடிபட முடியாது என்ற நிலைமையிலோ கூட இரண்டு கருத்துக்கு இடமில்லை. நல்ல காலமாக இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் ஈடுபடாத உயிர் ஒன்று இருந்தது. அதுவே பட்டிமந்திரியின் கழுதை. அதை அவன் பெருந்தன்மையுடன் பாரத வீரனுக்குத் தந்தான். அதன்மீது அவனை அருமுயற்சியுடன் ஏற்றினான். கோவேறு கழுதை நொண்டி நொண்டியே நடக்க முடிந்தது. பாரத வீரனைக் கழுதைமேல் வைத்து ஒரு கையால் அணைத்துக் கொண்டு, கோவேறு கழுதையையும் நடத்திக்கொண்டு, அவன் மெள்ள மெள்ள நடந்தான். விடியுமுன் அவர்கள் ஒன்றிரண்டு கல் தொலை சென்று விட்டனர். அங்குள்ள ஒரு குளத்தங்கரையில் அவர்கள் இளைப்பாறினர். 10. விடுதலைக் கீதம் இளவரசியின் எழிலுருவமும், இளவரசியுருவில் காட்சி தந்த அன்னை திருவுருவமும் பாரத வீரன் உள்ளத்தை விட்டு என்றும் நீங்கவில்லை. ஆனால் அடிக்கடி வள்ளியின் அன்பு வடிவம் அவற்றை மறைத்து வந்தது. வீரஉலா முடித்து, இளவரசியையும் சிங்காதனத்தையும் பெறும் வரை, வள்ளியின் நினைவை மறக்கவேண்டும் என்று அவன் எண்ணினான். இளவரசியின் அன்புக் கட்டளைகளிலே மனதைப் பக்தியுடன் பதிய வைக்கவும் விரும்பினான். “இன்னல்கள் அகற்றவந்த இளங்கதிர் வீரனே!” இவ்வாறு இளவரசி முதலில் பாரத வீரனை அழைத்திருந்தாள். “நீங்கள் விரைவில் வீரக்கவசம் அணியவேண்டும். வீரகுருவின் அருளும் அன்னை காளியருளும் பெறவேண்டும். என் காதில் சான்றாக, இத்தமிழகமெங்கும் சென்று வெற்றி உலா வரவேண்டும். உங்கள் வெற்றிப்புகழ் என் செவிகளையும் என் காதல் உள்ளத்தையும் நிறைக்கட்டும்” என்பது அவள் அன்புக் கட்டளை. ஆனால் அவள் அக்கட்டளையின் கடைசிப் பகுதி, அவனுக்கு ஒரு தனித்தூண்டுதல் தந்தது. அதன் அருளார்வம் அவன் உள்ளத்தைக் கவர்ந்திருந்தது. “எங்கும் இன்னலுக்காளான பெண்டிர், உங்களால் இன்னலம் பெறட்டும். சிறைப்பட்டவர்கள் சிறைவீடு பெறட்டும். இடருள் சிக்கிய மக்கள் இனிய நல்வாழ்வு பெறட்டும்!” பாரத வீரன் உள்ளத்தை இவ்வாசகங்கள் இச்சமயம் தனிப்பட்ட முறையில் உருக்கின. கவந்தன் போரைப்பற்றி வீரனுக்கும் பாங்கனுக்கும் இடையே இரண்டு கருத்துத்தான் இருந்தது. ஆனால் நொந்த உடலுடன் குளத்தங்கரையில் இளைப்பாறிய பாரத வீரன் உள்ளத்தில், இரண்டுமே நிறைவளிக்கவில்லை. அவன் தன்னைத் தானே இரக்கமின்றிக் கடிந்துகொண்டான். கவந்தன் போரால் அவன்மீதுள்ள பக்தி பாங்கனிடம் சிறிது ஆட்டங்கண்டிருந்தது. ஆனால் வீரன் புதுப்போக்கு அதை முன்னிலும் வைரம் பாய்ந்த பக்தியாக்கி விட்டது. அவன் பக்தனிடம் தன் உள்ளாராய்ச்சியையும் உள்ளக் குறையையும் எடுத்துரைத்தான். “அன்பிற் சிறந்த பாங்கனே! நீ புத்தகம் அறியாதவனென்று கருதி, உன் அறிவுரைகளை நான் மிகவும் புறக்கணித்து விட்டேன். அதற்கு இப்போது மன்னிப்புக் கோருகிறேன்.” கற்பனைக் கோளாறு அடி உதையால் தெளிந்து விட்டது என்று பாங்கன் திடீரென்று எண்ணினான். உண்மை அது வல்ல என்பது விரைவில் தெரிந்தது. “கவந்தன் கவந்தனல்ல, ஏற்றமே என்று நீ கூறினாய்! அது ஏற்ற மர மல்லவாயிருக்கலாம் கவந்தனாயிருக்கலாம். அதைப் பற்றி நான் வீணாக வாசித்தேன். நான் ஆராய்ந்திருக்க வேண்டியது அதுவல்ல. ‘கவந்தன் ஏன் உன்கண்ணுக்கு ஏற்றமாகத் தோற்றியிருக்கவேண்டும்?’ இதையே நான் சிந்தித்திருக்க வேண்டும். இதற்குமுன் இத்தகைய மாயம் இருந்ததில்லை. சிங்கம் உனக்கும் சிங்கமாகவே தோற்றிற்று. எல்லாருக்கும் சிங்கமாகவே தோற்றிற்று. யாருக்கும் பூனையாகவோ எலியாகவோ தோற்ற வில்லை! அணைகரை வெள்ளமும் அது போலத்தான். எல்லாருக்கும் அது வெள்ளமாகவே தோற்றிற்று. இப்போது மட்டும் இந்த இரண்டக மாயம் ஏற்படுவானேன்? “உன் இயற்கையறிவை நான் இங்கேதான் பயன்படுத்தி யிருக்க வேண்டும். இதுவரை அதைக் கவனியாதிருந்துவிட்டேன். இனி உன் கருத்தையும் ஊன்றிக் கவனிப்பேன். அதனால் பலனுண்டு என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.” பட்டி மந்திரியின் மூளை குழம்பிற்று. அவனால் ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. “கவந்தனைக் கவந்தன் என்றே இன்னும் கருதுகிறார். அதேசமயம் இயற்கையறிவுபற்றி வானளாவப் புகழ்கிறார். என் இயற்கையை அறியும் அறிவுகூட எனக்கு இல்லையே!’ என்று அவன் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான். “எனக்கு நீங்கள் கூறுவது ஒன்றும் புரியவில்லையே. விளங்கச் சொல்லுங்கள், ஆண்டே!” என்று மட்டும் அவன் வாய்விட்டுப் பேசினான். “உனக்கு விளக்கமாகக் கூறுவதிலேயே இனி என் நற்பணி தொடங்கவேண்டும். என் பழம்பிழைகள் அதனாலேயே அகல வேண்டும். ஆகவே கேள். கேட்டு, இனி உன் ஒத்துழைப்பையும் முழுதும் கொடு. அஞ்சாமல் உன் அறிவுரையைக் கூறவும் இது உன்னைத் தூண்டும். “உன்னிடம் மாயம் காட்டியது மூலம் இயற்கை யன்னை எனக்கு ஒரு எச்சரிக்கை தந்திருக்கிறாள். “சிங்கத்தை வென்றிருக்கிறேன். சிங்கத்தைவிடப் பொல்லாத கவந்தன் என்ற அரக்கனை ஒழித்திருக்கிறேன். இவற்றால் நான் தற்பெருமை அடைந்தால், அது தவறு. “இவை வீரச் செயல்களாகலாம். நற்செயல்களல்ல. வெறும் வீரத்துக்குச் சான்றோர் என்றும் சிறப்பளிப்பதில்லை. அது காட்டுப்பண்பு. எலியைக் கொல்லும் பூனைக்கும், ஆட்டைக் கொல்லும் புலிக்கும் நான் என்ன சிறப்புத் தரமுடியும்? அவற்றைக் கொடுமை என்போம். தன் தன் உணவுக்காகக் கொன்ற கீழ்த்தர விலங்குகளின் செயல் என்போம். அவை உண்மையான தூய, உயரிய வீரம் ஆகமாட்டா. ‘உண்மையான வீரம் உயர்வு நோக்கத்தில், உள்ளுணர்ச்சியில், பயனில் தான் இருக்கிறது. சிங்கத்தை நான் கொன்றதால், யாருக்கும் என்ன நன்மை விளைந்தது? அல்லது யாருக்கும் என்ன நலன் விளைய வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் செயல்செய்தேன். இந்தக் கேள்விகளை உன் மாயமறுப்புரை என்னிடம் தூண்டிவிட்டன. இளவரசி எனக்குக் கொடுத்த தூய, உயரிய அருளிரக்கக்கட்டளை மீது அது என் கவனத்தைத் திருப்பின. “இதோ, அந்தக் கட்டளை! “எங்கும் இன்னலுக்காளான பெண்டிர், உங்களால் இன்னலம் பெறட்டும். சிறைப்பட்ட மக்கள் சிறை வீடு பெறட்டும். இடருட்சிக்கிய மக்கள் இனிய நல்வாழ்வு பெறட்டும். “இவற்றை நான் மறந்துவிடப்படாது. நான் மறந்தாலும் நீ மறந்துவிடப்படாது. நாம் மறந்தாலும் உலகம் மறந்துவிடப் படாது. உலகம் நமக்கு நினைவூட்ட வேண்டும். நீ எனக்கு நினைவூட்ட வேண்டும். “அதற்கு ஒரு நல்ல வழி வகுத்திருக்கிறேன்.” “இந்த வாசகங்களை நான் எழுதித் தருகிறேன். மூன்று அட்டைகளில் அவற்றை ஒட்டு. எல்லா மக்களும் பார்க்க அதில் ஒன்றைக் கோவேறு கழுதையின் தலைமுன் ஒட்டித் தொங்கவிடு. நான்காண அதன் பிடரிமீது ஒன்றைக் கட்டிவை. மூன்றாவதை உனக்குத் தெரியும்படி அதன் வாலில் கட்டித் தொங்கவிடு.” பட்டி மந்திரிக்கு அடக்கமுடியாத சிரிப்பு வந்தது. ஆனால் அதேசமயம் இப்பேச்சு பாரத வீரனிடம் அவனுக்கு இருந்த மதிப்பை வளர்த்திருந்தது. ஆகவே அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டான். சிரிப்புக்கான காரணமாக ஒன்றை மட்டும் அவன் இடைமறித்துக் கூறினான். “எனக்குத்தான் எழுத வாசிக்கத் தெரியாதே, ஆண்டே! நான் காண எழுதிப்போட்டு என்ன பயன்” என்று கேட்டான். “இந்த நாட்டில் இக்காலத்தில் எத்தனையோ பேருக்குத் தான் எழுத வாசிக்கத் தெரியாது. அதைச் சுட்டிக்காட்டுவதற்கும் இது ஒரு வழிதானே! மேலும் என்ன எழுதப் போகிறேன் என்பதைத்தான் இப்போதே சொல்லிவிட்டேன். முன்னால் இருப்பது அட்டை என்றும், எழுத்து என்றும் உனக்குத் தெரியும். அப்போது நான் கூறியது நினைவுக்கு வராமலா இருக்கும்?” “புராணக்கற்பனை தீண்டாத இடத்தில், வீரத்தலைவர் அறிவு யாருக்கு வரும்? வீரம், அறிவு, பெருந்தன்மை, அன்பு ஆகிய இத்தனையும் இருக்க, இவர் ஏன் ஒரு மன்னர் மன்னன் ஆகக்கூடாது? கட்டாயம் ஆவார். ஐயமில்லை. அதனை ஒட்டி, நானும் குறைந்த அளவு ஒரு சிற்றரசன் ஆகாமலா இருக்கப் போகிறேன்!” என்று கனவுக்கோட்டை வளைத்தான், பட்டி! அவன் உள்ளம் மீண்டும் வானளாவி மிதந்தது. ‘இனி இன்னலுற்றவர்கள், சிறைப் பட்டவர்கள், இடருற்றவர்களுக்கே நம் வீரத்தை பயன்படுத்தல் வேண்டும். வீணில் சிதறிடித்தலாகாது’ என்ற உறுதியுடன் பாரத வீரன் புறப்பட்டான். அன்றைய நிகழ்ச்சிகள் இந்த உறுதியைப் பெரிதும் நிறைவேற்ற உதவின. முதலில் ஒரு நாற்சந்தியை அவர்கள் அணுகினர். தொலைவிலிருந்தே உயிர் வாதைப்படும் ஓர் இளங்குரல் அவர்கள் செவியில் பட்டது. பாரத வீரன் விரைந்தான். பட்டி எவ்வளவு முயன்றும் அவனுடன் ஒத்து நடக்க முடிய வில்லை. நாற்சந்தியில் ஒரு கொடுஞ் செயலை அவர்கள் கண்டார்கள். பதினான்கு பதினைந்துக்கு மேற்படாத ஒரு இளைஞன் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தான். அவன் உடலெல்லாம் சாட்டையடிகளால் வீங்கியிருந்தன. அருகில் நின்ற ஒரு செல்வன் அவனைப் பின்னும் அடிமேல் அடியாக அடித்துக் கொண்டிருந்தான். பாரத வீரன் கோவேறு கழுதை சரேலென்று மரத்தை நோக்கிச் சென்றது. அடிப்பவன் முதுகை ஈட்டி பதம் பார்த்தது. அவன் சீறித் திரும்பினான். ஆனால் அவன் கொடுத்தது சாட்டையடி, அவன் பெற்றது ஈட்டியடி, அவன் தாங்க மாட்டாமல் அலறினான். இளைஞன் செய்தி இன்னதென்றறி யாது விழித்தான். “ஏண்டா, இந்தச் சிறுவனை இப்படி அடிக்கிறாய்? அதே அடி உனக்கு எப்படி இருக்கிறது என்பது இப்போது தெரிகிறதா?” என்று கேட்டான் பாரத வீரன். “ஐயா, செய்தி இன்னதென்று கேளாமல் என்னை இப்படி அடிக்கிறீர்களே! இவனும் இவன் முன்னோர்களும் எங்கள் குடும்பத்தின் வழிவழி அடிமைகள். இப்போது அடிமைக் கடன் செய்ய இவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்படியிருந்தும் இவன் அயல் நாடுகளுக்குத் தப்பியோடிவிட்டான். அங்கே பணம் தேடுகிறானாம்! படிக்கிறானாம்! என்ன திமிர், பாருங்கள். ஆனால், நானா விடுகிறவன்? இங்கே அவனுக்கு உள்ளாளாக ஒரு ஆண்டிப்பயல் இருக்கிறான். அவனைப் பார்க்க எப்படியும் இவன் வருவான் என்று தெரியும். காத்திருந்து வந்த சமயம் பிடித்துக் கொண்டேன். என் அடிமைக் கணக்கு அத்தனையையும் அடியாக வாங்குகிறேன்” என்றான். “அடிமைக் கணக்காடா உனக்கு வேண்டும். இதோ! இதோ!” என்று அவன் மீது பாரத வீரன் அடி, உதை, குத்து ஆகியவற்றை மழையாகப் பொழிந்தான். “ஐயோ, ஐயோ! போதும், போதும்! என்னை விட்டு விடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் விட்டு விடுங்கள்” என்றான். “முதலில் பையனை அவிழ்த்து விடு” என்றான். பாரத வீரன். அவன் அவிழ்க்க விரும்பவில்லை. ஆனால் மீட்டும் ஓங்கும் ஈட்டி அவிழ்க்க வைத்தது. “நான் யார் தெரியுமா? நான்தான் கண்கண்ட கற்கி, கலியுகராமன், பாரத வீரன், சிங்கத்தை வென்ற வீரசிங்கம்! இந்த நாட்டிலேயே - உலகத்திலேயே - இனி அடிமைத்தனம், சிறை, இன்னல்கள் எதுவும் இருக்கக் கூடாது. அதை ஒழிக்க நான் பிறந்திருக்கிறேன்! ஒழிக்கவே புறப்பட்டிருக்கிறேன்! “இந்தச் சிறுவனுக்கு இந்தக் கணமே விடுதலை கொடு. அத்துடன் அவன் வேலை செய்ததற்கான ஊதியத்தைக் கணக்குப் பண்ணிக் கொடு. அவனை அடித்த ஆணவத்துக்கு ஈடாக அவனுக்கு வணக்கம் செலுத்தி ஐம்பது வெள்ளி கொடுத்து அனுப்பு” என்றான். ‘நீ யார், இதையெல்லாம் கேட்க?’ என்று அவன் மீட்டும் சீறினான். ஆனால் அடி, உதை, குத்து ஆகிய பாடங்கள் அவனுக்கு மீண்டும் அறிவு புகட்டின. அவன் கூறியபடி செய்ய ஒத்துக் கொண்டான். இச்சமயம் இளைஞன் பாரத வீரன் காலடியில் விழுந்தான். “கண்கண்ட கற்கியே, கலியுகராமனே! எதிர்பாராது வந்து உதவிய உங்களுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இவனை நம்பி என்னை விட்டு விட்டுச் செல்லாதீர்கள். இவன் வாக்குறுதிகளுக்கு விலையில்லை. இவன் ஒரு அரக்கன். மனிதவடிவெடுத்து என்னை வதைக்கிறான்; உங்களுக்கு அஞ்சிப் பணிகிறான். நீங்கள் போனவுடன், வட்டியும் முதலுமாக என்னைக் கொடுமைப்படுத்துவான்” என்றான். செல்வன் இளைஞனைப் பார்த்த பார்வையே இது உண்மை என்று காட்டிற்று. பாரத வீரன் அவனை மீண்டும் நையப்புடைத்தான். ‘இப்போதே பணம் கொடுத்தனுப்பு!’ என்றான். “கொடுத்து விடுவேன். என்னிடம் இப்போது இல்லையே. வீட்டில் சென்று கொடுக்கிறேன்” என்றான். “வேண்டாம், எழுதிக்கொடுத்து அனுப்பு” என்றான். பாரத வீரனே தாளும் மைக்கோலும் எடுத்து நீட்டினான். அவன் மாறு பெயருடன் கையொப்பமிட முயன்றான். இளைஞன் இதைச் சுட்டிக்காட்டினான். ‘நீயும் உன் படிப்பும் நாசமாய்ப் போக!’ என்று செல்வன் சினந்து விழுந்தான். ஆயினும் பாரத வீரன் கடுங்குத்துக்கும் உதைக்கும் அஞ்சி அவன் எழுதிக்கொடுத்தான். இளைஞன் பாரத வீரனுக்கு வணக்கம் செலுத்தினான். “அண்ணலே, உங்கள் முயற்சி நீடூழி வாழ்க. என்வகையில் நீங்களே இருந்து நடத்திய நன்மைதான் எனக்குக் கிடைக்கும். இவன் வாக்குறுதி, பத்திரம் எதற்கும் விலை கிடையாது. அவற்றை நம்பி நான் இந்த நாட்டில் இருப்பதே ஆபத்து. இவன் ஊர்ப்பெரிய மனிதன், பணக்காரன். ஆகவே காவல், துறை, சட்டம் எல்லாம் இவனுக்குத்தான். ஏழைகளாகிய எங்களுக்குக் கிடையாது. ஆகவே உங்கள் முன்னாலேயே நான் ஓடி விடுகிறேன். அவனோ, அரசியல் காவலரோ கைப்பற்று முன் வெளிநாடு சென்று விடுவேன்” என்றான். பாரத வீரன் எவ்வளவு கூறியும், அவன் கேட்கவில்லை. கையொப்பப் பத்திரத்தைப் பாரத வீரனிடமே போட்டு விட்டு ஓடினான். பாரத வீரன் ஊரில் பாரத வீரனே ஊர்ப் பெரிய மனிதன். ஆனால் எல்லா ஊர்ப் பெரிய மனிதரும் தன்னைப் போல இல்லை என்று அவன் கண்டான். இந்நிலையை மாற்ற என்ன செய்வது என்ற ஆலோசனையுடனேயே அவன் நடந்தான். அவன் எண்ணத்தை அறிந்தவன் போல பாங்கன் பேசினான். இத்தடவை சீடன் குருவுக்கு மிஞ்சிய அறிவுரை கூறினான். “ஆண்டே அரக்கர், பூதங்கள் ஆகியவற்றில் எனக்கு இப்போது நம்பிக்கை வந்து விட்டது!” என்றான். பாரத வீரன் ஆலோசனை சட்டென்று குலைந்தது. “ஆ! அப்படி என்ன புதிய அனுபவம் கண்டாய்?” என்று ஆர்வத்துடன் கேட்டான். “ஒன்றுமில்லை. அந்தப் பையனே கூறிவிட்டான். அந்தச் செல்வன் மனிதனல்ல; மனித உருவில் வந்த அரக்கப் பூதம் என்று. ஆகவே அதில் ஐயமில்லை.” “அவன் அதை உவமையாகச் சொன்னால், நீ அதை அப்படியே உண்மையாக எடுத்துக் கொள்கிறாயே! உன் கற்பனையுள்ளத்தில் நீ எதையும் பட் பட்டென்று நம்பி விடுகிறாய்?” பேசுவது தன் வீரத் தலைவன்தானா, வேறு ஆளா என்று பாங்கன் முன்னால் வந்து முகத்தைப் பார்த்தான். “ஏன் இப்படி முன் வந்து வந்து என் முகத்தைப் பார்க்கிறாய். என்ன புதிய சந்தேகம் வந்துவிட்டது?” என்று பாரத வீரன் கேட்டான். “எங்கே அதே பூதம்தான் உங்கள் உருவில் வந்து பேசியிருக்கக் கூடுமோ என்று பார்த்தேன்” என்றான் அவன். பாரத வீரன் சிரித்தான். இதற்குள் மாலை ஆய்விட்டது. தொலைவில் குதிரை மீது இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவர்கள் பருத்த உடல் கொழுகொழு வென்று மாலை வெயிலில் மின்னிற்று அணிந்த ஆடைகள் வெண்பட்டுக்கள். அவர்கள் பின் ஒரு மூடாக்கிட்ட பெட்டி வண்டி வந்தது. அதற்குக் காவலாக ஒரு முரட்டுக் காட்டான் வந்தான். உள்ளே ஒரு பெண் குரல் கேட்டது. அவள் குரல் சோகம் கலந்திருந்தது. வழி ஒரே காட்டு வழியாய் இருக்கிறதே! இங்கே எங்காவது நல்ல இடத்தில் இரவு தங்கிப் போகக் கூடாதா?” என்று ஈனக் குரலில் அது கேட்டது. காட்டான் அசட்டையாக, “நீங்கள்பேசாதிருங்கள். எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்” என்றான். பாரத வீரன் ஒரு கிளைப் பாதையிலே வந்துகொண்டிருந் தான். முன்னே செல்பவர்கள் இந்தப் பெண்ணைச் சிறைப்படுத்திக்கொண்டு போகிறார்கள் என்று அவன் உடனே ஊகித்தான். காட்டான் அவர்களுக்கு உடந்தையான ஆளாயிருக்க வேண்டுமென்று மதித்தான். பட்டி மந்திரியிடம் எதுவும் கூறவில்லை. கோவேறு கழுதையை நேரே குதிரை மீதிருந்தவர்களை நோக்கிச் செலுத்தினான். “அடே, தடிப்பயல்களா! பேசாது அந்தப் பெண்ணை விட்டு விட்டுப் போகிறீர்களா? அல்லது உதை வாங்குகிறீர்களா?’ என்று அதட்டினான். அவர்கள் திடுக்கிட்டனர்! “ஏது பெண்? எங்களுக்கும் இந்த வண்டிக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. ஆனால் நீ யார்? எங்களை அதட்ட உனக்கு என்ன உரிமை?” என்று கேட்டார்கள். காட்டான் இப்போது கூச்சலிட்டுப் பேசினான். “அவன் திருடன் போலிருக்கிறது. ஐயா! நீங்கள் எங்களை விட்டு விட்டுப் போகவேண்டாம்” என்றான். பாரத வீரனுக்குக் கடுஞ் சீற்றம் எழுந்தது. காட்டான் இக்காரியத்துக்கு உடந்தை என்ற எண்ணமும் வலுவடைந்தது. அவன் ஈட்டி திடீரென்று பாய்ந்தது. குதிரைச் செல்வர்களுள் ஒருவன் கீழே விழுந்து “ஐயோ” என்று அலறினான். இரண்டு குரலுடன் அவன் ஆவிபோய்விட்டது. அடுத்தவன் அவன் உடலையும் குதிரையையும் விட்டு விட்டு, தன் குதிரையுடன் தாவி ஓடினான். ஆனால் காட்டான் தன் கையிலுள்ள கம்பைப் பாரத வீரன்மீது ஓங்கி வீசினான். அது தலையணியையும் உடைத்துத் தலையையும் காயப்படுத்திற்று. குதிரை முகம் மட்டுமே முகத்தின் முன் தொங்கிற்று. நோயும் சீற்றமும் பாரத வீரனையும் காட்டாளாக்கிற்று. அவன் கோவேறு கழுதையிலிருந்து இறங்கிக் காட்டானை நையப்புடைத்தான். ஆனால் காட்டான் வண்டிக்குள்ளிருந்த ஒரு திண்டை இழுத்தான் அதையே கேடயமாக வைத்துக் கொண்டு, அடியைத் தாங்கிக்கொண்டான். முழுவலிமையுடன் பாரத வீரனை உதைத்துத் தள்ளி அவன் மேல் ஏறி உட்கார்ந்து குத்துகள் விட்டான். தன் தலைவன் அடிபடுவதைப் பார்த்துக்கொண்டு பட்டி மந்திரியால் சும்மா இருக்கமுடியவில்லை. அவன் தலைவன் மீதிருந்த காட்டானின் காலைப் பின்னின்று பற்றினான். அவனைப் பரபரவென்று நெடுந்தொலை இழுத்துச் சென்றான். அவன் வாழ்வில் அவன் வீரம் காட்டியது இதுதான் முதல் தடவை. ஆனால் அந்தத் திடீர்வீரம் சட்டென அகன்றது. பாரத வீரன் அருகே வருமுன் காட்டான் அவன் கையைப் பின்புறமாக வளைத்தான். “திருடனுடன் வந்த திருட்டுப்பயலே! உன்னை முதலில் ஒழிக்கிறேன். பார்!” என்று கையை முறுக்கினான். பட்டி மந்திரி வாதை பொறுக்காமல் ‘கூ கூ’ என்று கூச்சலிட்டான். பாரத வீரன் விரைவில் நிலைமையைச் சமாளித்தான். பாங்கனை அவன் விடுவித்ததுடன் காட்டானைப் பின் கட்டு முன் கட்டாகக் கட்டினான். பின் வாளை அவன் நெஞ்சுக்கு நேர் நீட்டினான், “நீ யார்? இந்தப் பெண்மணி யார்? ஓடியவர்கள் யார்? உண்மையைச் சொல். இல்லாவிட்டால் அங்கே கிடப்பவனுடன் உன்னையும் அனுப்புகிறேன்” என்றான். காட்டான் வீறாப்பெல்லாம் மறைந்தது. “ஐயோ, நான் அந்த அம்மாவின் வேலைக்காரன். முன்னே சென்றவர்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. என்னை விட்டு விடுங்கள். உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு” என்றான். உள்ளேயிருந்த பெண்மணி முதலில் எதுவும் கவனிக்க வில்லை. கவனித்தபோது, யாரோ திருடர்கள் தான் தாக்கு கிறார்கள். என்று அஞ்சி ஒடுங்கியிருந்தாள். பாரத வீரன் பேச்சு இந்த எண்ணத்தை மாற்றியது. அவன் யார், எப்படிப்பட்டவன் என்று தெரியவில்லை. ஆனால் வேலையாள் நடந்துகொண்ட மாதிரி சரியாகவும் இல்லை. அவனை வேலையாள்தான் என்பதிலும் தனக்குப் பாதுகாப்பில்லை யென்று அவள் கருதினாள். ஆகவே பாரத வீரனுக்கேற்பப் பேசித் தப்ப எண்ணினான். “ஐயாமாரே! அந்தத் திருடனை அங்கேயே பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். என்னைப் போக விடுங்கள்” என்றாள். “அப்படியே செய்கிறோம், அம்மணி! ஆனால் நீங்கள் நான் சொல்கிறபடி நடக்கவேண்டும். முதலில் நீங்கள் யார்? இவர்கள் கையில் எப்படிச் சிக்கிக் கொண்டீர்கள்?” என்றான். அவனுக்கேற்பக் கதை அளந்தால் அவனிடமிருந்து எளிதில் தப்பிச் செல்லலாம் என்று அவள் நினைத்தாள். அதற்கேற்ப மெய்யுடன் பொய் கலந்து பேசினாள். “நான் குறுங்குடி மலைத் தலைவன் மகள். கணவன் வீட்டிலிருந்து செல்கிறேன். தாய் உயிர் போகும் தருணம். அதனால் குறுக்கு வழியே செல்ல வேண்டி வந்தது. இந்தக் காட்டான் வழிகாட்டி. காட்டு வழியில் என்ன காரணத்தாலோ கொண்டு வந்து விட்டான்” என்றாள். “அவனை நாங்கள் பின் கைகட்டி வேறு வழியில் அனுப்பி விடுகிறோம். நீங்கள் மறுதிசையில் சென்று, முதல் ஊரில் தங்கிச் செல்லுங்கள். உங்கள் தாயைப் போய்ப் பாருங்கள். ஆனால் உங்கள் கணவன் வீடு செல்லு முன், முதல் வேலையாக நீங்கள் ஒரு காரியமாக செய்ய உறுதி தர வேண்டும். அப்போதுதான் போகமுடியும்” என்றான். ‘தாயைப் பார்த்தபின் எதுவேண்டுமானாலும் உறுதி கூறுகிறேன். இப்போது விரைவில் அனுப்பிவிடுங்கள், தாய் என்ன ஆனாளோ?’ என்று பெருமூச்சுவிட்டாள். “இங்கிருந்து பதினைந்து நாழிகை வழியில் செல்வ மருதூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே மருதநாட்டு இளவரசியின் அரண்மனையை விசாரித்துச் செல்லுங்கள். உங்களை நான் கொலைகாரரிடமிருந்து விடுவித்ததை அவர்களிடம் கூறுங்கள். விடுவித்தது பாரத வீரன், கண்கண்ட கற்கி, சிங்கத்தை வென்ற வீர சிங்கம், கவந்தனை ஒழித்த காவலன் என்பதையும் கூறத் தவறாதீர்கள். இதுவே நீங்கள் செய்யவேண்டிய காரியம்” என்றான். அவள் அவசர அவசரமாக உறுதிகூறிக் கொண்டாள். வண்டியைத் தட்டிவிட வண்டியோட்டியிடம் கூறினாள். வண்டி சில அடிகள் சென்றபின், பாரத வீரன் மீண்டும் வண்டியை நிறுத்தச் சொன்னான். பெண்மணிக்குப் புதிய அச்சம் தோன்றிற்று. ஆனால் அவன் புதிய கேள்வி அவளுக்கு அச்சம் தரவில்லை. குழப்பம் உண்டு பண்ணிற்று. “எங்கே, யார் விடுவித்தார்கள் என்பதை கூறுங்கள் பார்ப்போம்” என்று அவன் கேட்டான். அவசரத்தில் அவள் எதையும் நினைவில் கொள்ளவில்லை. “பார்த்தீர்களா? இப்போதே மறந்து விட்டீர்கள். அதை முழுவதும் ஒப்புவித்தால்தான் போகலாம். அல்லது உங்களுக்கு எழுதத் தெரியுமா? எழுதிக் கொண்டு போங்கள்” என்றான். வேறு வழி காணாமல் பெண்மணி ஒப்பிக்க ஒத்துக் கொண்டாள். எழுதவோ, வாசிக்கவோ தனக்கு வராது என்று ஒத்துக்கொண்டாள். பாரத வீரன் தன் பெயர்களை ஓதினான். பள்ளிப் பிள்ளைகள் பாடம் ஒப்பிப்பது போல அவள் பின்னால் சொன்னாள். ஏழு தடவை சொன்ன பின் தான், அவள் தானாக அந்த நீண்ட விருதுப் பெயர்களைச் சொல்ல முடிந்தது. “வழியெல்லாம் இதை உருப்போட்டுக்கொண்டே போங்கள். உரக்க நான் கேட்க உருப்போட்டுக்கொண்டே போங்கள். நினைவாக இளவரசியிடம் இதை ஒப்பித்துக் கூறுங்கள். வண்டி போகலாம்” என்றான் அவன். அவன் காதுகள் குளிர, நெடுந் தொலைவரை பெண்மணி மந்திரப் பாடம் வாசித்தாள். “பாரத வீரன், கண்கண்ட கற்கி, சிங்கத்தை வென்ற வீரசிங்கம், கவந்தனை ஒழித்த காவலன்” என்ற பாட்டுச் சிறிது நேரம் பாரத வீரன், பட்டி மந்திரி ஆகிய இருவர் காதுகளிலும் ஒலித்தது. பெண்மணி நோயுற்ற தாயைப் பார்க்கச் சென்றது உண்மை. ஆனால் அவள் மணமான பெண்ணுமல்ல. குறுங்குடி மலைத் தலைவன் மகளுமல்ல. அவள் ஒரு கோயில் கணிகை. நோயுற்ற தாயின் அழைப்பினால் அயலூர் செல்லப் புறப்பட்டாள். அத்துடன் இளவரசியைப் பார்ப்பதாகக் கூறிய உறுதியை அவள் காப்பாற்ற எண்ணவேயில்லை. எண்ணி யிருந்தாலும் பயன் ஏற்பட்டிராது. ஏனென்றால் அப்படி ஒரு இளவரசி எந்த ஊரிலும் கிடையாது. ஆனால் அது ஒன்றும் பாரத வீரனுக்குத் தெரியாது. பாங்கனும் வீரனும் அன்றிரவு முழுவதும் பெண்மணியைப் பற்றியே பேசினர். இறந்தவன் குதிரையைப் பாரத வீரன் கைப்பற்றினான். இறந்தவன் ஆடையணிமணிகளைப் பாங்கன் ஆவலுடன் எடுத்துக் கணக்கிட்டான். பட்டு ஆடை, மேலாடை, சரிகைப் பட்டுடுப்பு, ஆகியவற்றுடன் வெள்ளியாக மூந்நூறு இருந்தது. தனக்கு ஒரு சிறு சொத்துக் கிடைத்தது கண்டு அவன் கூத்தாடினான். கைக்கட்டுடன் சென்ற காட்டான் எப்படியோ விரைவில் தன்னை விடுவித்துக் கொண்டான். பாரத வீரன் மீதும் பட்டி மந்திரிமீதும் பெண்மணிமீதும் அவனுக்கிருந்த கோபம் சொல்ல முடியாது. ஆனால் யாரையும் எதிர்க்கவும் அவன் துணியவில்லை. இரவோடிரவாக, குதிரையையும் பாங்கன் கழுதையையும் திருடியதுடன் அவன் அமைந்தான். காலையில் பட்டி மந்திரி முதன் முதலில் விழித்தான். புதிதாகவந்த குதிரையைக் காணவில்லை. தன் கழுதையையும் காணவில்லை அவன் தேடி அலைந்து திரிந்தான். பணமும் போயிருக்குமோ என்று தேடினான். நல்லகாலமாகத் திருடன் அதைக் காணவில்லை. அவனுக்கு ஓரளவு ஆறுதல் ஏற்பட்டது. ஆனாலும் தன் கழுதையை நினைக்கும்போதெல்லாம் அவன் விம்மி விம்மி அழுதான். ‘உலாவில் வெற்றியும் தோல்வியும் வருவது இயல்பு. இதற்காக ஏங்காதே, பட்டி!’ என்று பாரத வீரன் ஆறுதலும் ஆதரவும் தந்தான். அன்று காலையிலேயே இன்னொரு விடுதலை வெற்றியும் பாரத வீரனுக்காகக் காத்திருந்தது. சிறைக் கைதிகள் ஏழுபேரைக் காவற்படை ஒன்று இட்டுச் சென்றது கைதிகளை நடத்திச் சென்றதால் அவர்கள் கால்கள் பிணிக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொருவர் கைகளும் பின்புறமாக விலங்கிடப்பட்டிருந்தன. அதேசமயம் ஒவ்வொருவர் விலங்கும் அடுத்தவரின் கால்களில் ஒன்றுடன் கோர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் தனித்தனியாக ஓடமுடியாதிருந்தது. ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டுபேர் பக்கக்காவலாகவும் சென்றனர். ஆனால் ஏழாவது கைதிக்கு இவ்வளவு கட்டுக்காவலும் போதாமல் இரண்டு தோள்களிலும் உடலிலும் குறுக்கு மறுக்காகச் சங்கிலிகள் போடப்பட்டிருந்தன. அந்தச் சங்கிலிகள் ஒரு பாராங் கல்லுடன் இணைந்திருந்ததால், அந்தப் பாராங்கல்லைத் தூக்கிக் கொண்டுதான் அவன் ஒவ்வொரு அடியும் நடக்க வேண்டியிருந்தது. இவர்கள் முன் காவலர் தலைவன் வீறுடன் குதிரை மீது சென்றான். “இவர்களை எதற்காக இப்படிக் கட்டிச் செல்கிறீர்கள்?” என்று பாரத வீரன் தலைவனிடம் கேட்டான். ‘அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்’ என்று அவன் இறுமாப்புடன் பதிலளித்தான். பாரத வீரன் ஒவ்வொருவரிடமும் “உம்மை எதற்காகக் கட்டிப்போட்டிருக்கிறார்கள்” என்று கேட்டான். வறுமையால் திருடியதாக ஒருவர் இருவர் கூறினர். குடும்பத் துன்பங்களால் வெறுப்படைந்து, கொலைகொள்ளை நடத்தியதாகச் சிலர் கூறினர். ஆனால் கடைசிக் கைதி பேச மறுத்தான். பலதடவை கேட்டபின், பாரத வீரனை உறுத்துப் பார்த்தான். அவன் கண்கள் ஒளிகுன்றியிருந்தன. ஆனால் அது பார்க்கக் கோரமாய் இருந்தது. திடீரென அவன் வீறிட்டுக் கூவினான். “கொள்ளையடிப்பதில் நான் ஒரு சிறு தவறு செய்து விட்டேன். என்னை விடத் திறமையான கொள்ளைக்காரர்கள் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். நான் விடுதலைபெறும் நாளை எதிர்பார்த்துக் கடுவேலை செய்கிறேன். நீ அதைப் பார்த்துக் களிக்கவந்தாயா? இங்கு உனக்கு என்ன வேலை. பேசாமல் போ. இல்லையென்றால் உன் மண்டையை உடைத்து விடுவேன்” என்று அவன் கையைச் சங்கிலியுடன் ஓங்கினான். பாரத வீரன் அஞ்சவில்லை, சிரித்தான். “பாவம் உன் கோபத்தை எங்கே காட்டுவதென்று தெரியவில்லை. நான் கேலிசெய்ய வரவில்லை. விடுவிக்க வந்திருக்கிறேன்” என்றான். காவலர் சீறினர். கைதி விழித்தான். ஆனால் கண்மூடித் திறக்குமுன் பாரத வீரன் வாளால் கைதியின் சங்கிலியை உடைத்தான். பின் ஈட்டியைச் சுழற்றிக் காவலர்களை ஒவ்வொருவராக வீழ்த்தினான். தலைவன் குதிரையைப் பின்புறமாகத் திருப்ப முயன்றான். பாரத வீரன் பின்னிருந்தே குதிரைமீது ஈட்டியை வீசினான். விலாவில் தைத்த ஈட்டியுடன் குதிரை தலைவனையும் உடன் கொண்டு பாய்ந்தோடிற்று. கிடைத்த தறுவாயைக் கடைசிக் கைதி நன்கு பயன்படுத்தினான். அவன் விடுவிக்கப்பட்ட தன் கையாலேயே மற்றவர்கள் சங்கிலிகளை உடைத்தான். இம்மெனுமுன் மீந்து நின்ற காவலர்கள்மீது அவர்கள் கற்களை வீசித் துரத்தினர். பதுங்கி நின்ற பட்டி மந்திரிகளையும் பாரத வீரனையும் தவிர, கைதிகளின் அருகே யாரும் இல்லை. மற்றக் கைதிகள் பாரத வீரனுக்கு வணக்கம் கூறினர். கடைசிக் கைதி ஒன்றும் பேசாமல் பக்கத்திலுள்ள மலைப் பக்கமாக நடந்தான். ‘பாரத வீரன் அவனைச் சென்று இடைமறித்தான். மற்றக் கைதிகளையும் அருகே அழைத்தான். உங்களை நான் விடுவித்திருக்கிறேன். நீங்கள் இனி சுதந்திரமாக நல்வாழ்வு வாழலாம். ஆனால் எனக்கு நீங்கள் செய்ய வேண்டும் கடமை ஒன்று உண்டு’ என்று அவன் தொடங்கினான். இளவரசியிடம் சென்று தன் விடுதலைப்புகழ் பாடிச் செல்லும்படி கட்டளை யிட்டான். கைதிகள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஆனால் கடைசிக் கைதி பேசினான். “எங்களுக்கு இளவரசியும் தெரியாது. கிழவரசியும் தெரியாது. விடுதலை செய்த மட்டுக்கும் சரி. நீ நல்ல திருடன்தான். ஆனால் நாங்கள் தப்பியோடினால் ஆயிற்று. திரும்ப அகப்பட்டால் முன்னிலும் கடுமையான தண்டனையே கிடைக்கும். விடுதலையின் பேரால், அந்தச் சூழ்ச்சியில் எங்களைத் தள்ளாதே” என்றான். பாரத வீரன் மேலும் பேச முயன்றான். கடைசிக் கைதி அவன் நெஞ்சில் ஒரு குத்து விட்டான். அவன் எழுந்திருப்பதற்குள் அவன் மலைப் பாதையில் குறுக்கிட்டோடினான். மற்றவர்களும் அவனையே பின்பற்றினர். ஏமாற்றம் பாரதவீரன் முகத்தில் சற்றே படர்ந்தது. ஆனால் விரைவில் அவன் தனக்குத்தானே ஆறுதல் கூறினான். “இளவரசி இப்போதே இதைக் கேட்காமல் போனால் என்ன? கேட்கும் சமயம், இந்த நன்றியற்ற பேய் மனிதரின் தன்மையே அவர்களை விடுவித்த என் புகழை உயர்த்துவது உறுதி” என்று தனக்குத்தானே வாய்விட்டுப் பேசினான். ‘தகாதவர்களுக்கு உதவி செய்யும் செயல், எவ்வளவு நல்லதானாலும் விரும்பத்தக்கதல்ல என்றுதான் நான் நினைக்கிறேன்” என்று பட்டி மந்திரி கருத்துரைத்தான். “நீ கூறுவதும் ஓரளவு சரிதான். எப்படியும் மூன்று தடவை ஒரே நாளில் நான் விடுதலைக் கீதம் பாடியாய் விட்டது. இளவரசிக்காகக் கூட இனி இந்த வேலையை நீடிக்க வேண்டியதில்லை. இனி முன்போல, அரக்கர் அடங்காத சிற்றரசர் முதலிய எதிரிகளை மட்டுமே தாக்குவேன். ஏனென்றால் அதில்தான் நம் புகழ் உலகெங்கும் எளிதில் பரவும். சிறு விடுதலைகளில் மாய அரக்கர்கள் இனி நம்மைத் திருப்பி விட்டு விடமுடியாது” என்றான் பாரத வீரன். பாங்கன் அறிவுரையி லிருந்து பாரத வீரன் தனக்கு வேண்டிய இந்தப் படிப்பினையை வருவித்துக் கொண்டான். பட்டி மந்திரிக்கு அந்நாள் நன்னாளாகவே முடிந்தது. ஏனென்றால், முன் அவன் கழுதையைத் திருடியவன் அதன் மீதே அவ்வழி சென்றான். பட்டி மந்திரி தன் கழுதையைக் கூவி அழைத்தான். தன்னை வளர்த்த அன்புத் தலைவன் குரல் கேட்டதும், அது துள்ளிக்குதித்தோடி வந்தது. முதுகி லிருந்தவன் இந்த அதிர்ச்சியில் புரண்டு விழுந்தான். எழுந்து கழுதைக்குரியவனைக் கண்டதும் அவன் ஓட்டம் பிடித்தான். முன்பு இறந்தவனிடமிருந்து ஐம்பது வெள்ளியும் பட்டாடைகளும் கிட்டியபோதுகூடப் பட்டி மந்திரி அவ்வளவு மகிழ்ந்ததில்லை. தன் கழுதை மீண்டும் வந்ததனால் அவனுக்கு ஏற்பட்ட களிப்பு அதைவிடப் பன்மடங்கு மிகுதியாய் இருந்தது. 11. கரதூஷணர் மாயம் கவந்தன் போராட்டத்தில் பாரத வீரன் உடலுக்கு ஊறு ஏற்பட்டது. இதை அவன் சிறிதும் பொருட்படுத்தவில்லை. இதனால் அவன் உள்ளம் சோர்வுபடவும் இல்லை. ஆனால் விடுதலைப்போர்கள் அவனுக்குப் பெரிதும் சோர்வூட்டின. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது அவை அவன் தலையணியைத் தகர்த்தன. இது அவன் உயர்வின் மதிப்புக்கு ஊறு தருவதாயிருந்தது. இரண்டாவதாக விடுதலைப் போர்கள் அவன் உள்ளத்தைப் புண்படுத்தின. வீரத்தால் எதிரிகளை வென்றுவிடலாம். ஆனால் சமுதாயக் கோளாறுகள் வீர வெற்றிகளால் அகல்பவை அல்ல. இவ்வுண்மையைப் பாரத வீரன் கைதிகள் வகையில் தெளிவாக, உடனடியாகக் கண்டான். விடுதலை முயற்சியின் இன்னொரு விளைவும் இதே பாடத்தை அவனுக்குக் கற்பிக்க நேர்ந்தது. கரிசல் காடுகள் வழியே பாரத வீரனும் பட்டிமந்திரியும் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிரே ஒரு இளைஞன் வந்தான். அவன் உடலெல்லாம் சூடிட்டிருந்தது. அவனால் நடக்கக்கூட முடியவில்லை. கிழவனைப்போல் ஒரு கம்பை ஊன்றிக்கொண்டு வந்தான். பாரதவீரன் அவன் நிலைமைக்குக் காரணம் என்ன என்றிய விரும்பினான். அவன் இளைஞனை அழைத்தான். பாரத வீரன் குதிரை முகத்தைக் கண்டதும் இளைஞன் ‘கோ’ வென்றழுதான். வீரனுக்கும் பாங்கனுக்கும் ஒன்றும் புரியவில்லை. “ஏன் அழுகிறாய்? தம்பி. நாங்கள் உன் நண்பர்கள். உன் துன்பத்தை எங்களிடம் சொல்லு. எங்களாலான உதவி செய்கிறோம்” என்று பாரத வீரன் கனிவுடன் சொன்னான். இளைஞன் அழுகை நிற்கவில்லை. ஆனால் அழுகையோடு அழுகையாக அவன் பேசினான். “அண்ணலே, நான் உங்களை அறிவேன். உங்களைப் போன்றவர் உதவி செய்திராவிட்டால், நான் இந்த அளவு இழிநிலைக்கு வந்திருக்கமாட்டேன்” என்றான். பாரத வீரனுக்கு இளைஞன் கூறுவது முன்னிலும் புதிராயிருந்தது. ஆனால் பட்டி மந்திரி உண்மையைச் சட்டென்று ஊகித்துவிட்டான். “ஆண்டே, இவன் தான் நம்மை செல்வனிட மிருந்து காப்பாற்றிய இளைஞன். நாம் வந்தபின் அவனுக்கு என்ன நேர்ந்ததோ, அறிய வேண்டும்” என்றான். சிறுவன் பட்டி மந்திரியை ஆதரவாகப் பார்த்தான். “ஆம், அண்ணா! நீங்கள் கூறுவது சரியே. நீங்கள் போகும் போதே நான் சொன்னேன். உங்கள் அடி உதை ஒன்றைத்தான் செல்வன் மதித்தான். நீங்கள் போனால் அவன் வாக்குறுதிகள், கையொப்பங்கள் எதற்கும் விலை இல்லை. நான் சொன்னது முற்றிலும் சரி. ஆனால் நான் துன்புற்றதற்குக் காரணம் இதுவல்ல. ஏனென்றால் வாக்குறுதியையும் நான் நம்பி, ஏமாற வில்லை. கையொப்பத்தையும் நம்பியிருக்கவில்லை. நான் இலங்கைக்கு மீண்டும் ஓடிவிட எண்ணினேன். அதற்காகவே விரைந்தேன். “செல்வன் என்னைப் பிடிக்கக் காவலர் உதவிதேடினான். நான் திருடன் என்று அவன் அவர்களிடம் சொன்னான். என் நிழற்படம் ஒன்றையும் கொடுத்தான். நான் இலங்கைக்கு ஓடிப்போகக்கூடும் என்றும் அறிவித்தான். காவலர் நிழற்படத்தின் படிகளை எங்கும் அனுப்பியிருந்தனர். எங்கே போனாலும் அவர்கள் என்னைப் பிடித்திருப்பார்கள். போதாக் குறைக்கு என் கையில் பணம் இல்லை. ஆகவே என்னால் இலங்கை செல்லவும் முடியவில்லை. இக் காட்டில் இருக்கவும் முடியவில்லை. என்னை அவர்கள் பிடித்துச் செல்வனிடமே அனுப்பி வைத்தார்கள். காவலரிடம் நான் உண்மை கூறினேன். உங்கள் நன் முயற்சியைப் பற்றிக் கூட நான் சொன்னேன். அவர்கள் என்னை நம்பவும் இல்லை. நம்பினாலும் கூட மிகுதி வேறுபாடு இராது. ஏனென்றால் “அடிமை ஓடிப்போவதும் தவறு தானே!” என்று காவல்துறைத் தலைவர் கூட என்னைக் கடிந்தார். “செல்வரிடம் பட்ட அடியைவிட மிகுதியாகக் காவல் துறையினர் கையில் அடிபட்டேன். குற்றுயிராய் செல்வனிடம் ஒப்படைக்கப்பட்டேன். குறையுயிரையும் போக்கவே அவன் திட்டமிட்டான். ஒவ்வொரு நாளைக்கு ஓரிடமாக உடலெல்லாம் சூடிட்டான். நான் உயிருக்கு அஞ்சி, ஓடமுயன்றேன். முடியவில்லை. ஆனால் அவனுக்கு வந்த ஒரு கெட்ட காலமே எனக்குத் தப்ப வழி தந்தது. ஒரு கொள்ளைக்கூட்டம் அவன் மாளிகையைச் சூறையாடிற்று. அந்தக் குழப்பத்திற்கிடையிலே நான் ஓடிவந்தேன். “எனக்கு இப்போது இலங்கை போகப்பணமும் இல்லை. இருந்தாலும் போக முடியாது. வண்டியிலும் கப்பலிலும் இந்நாட்டுக் காவல் துறையினர் என்னைப் பிடித்துக் கொள்வார்கள். அத்துடன் இந்த நாட்டிலும் நான் எந்த ஊரிலும் வாழ முடியாது. காடுகளில் நரி செந்நாய்கள் போல ஒளிந்துதான் திரியவேண்டும். “இவ்வளவுக்கும் என் குற்றம் என்ன? ஒன்றே ஒன்றுதான். அடிமைகளின் பிள்ளையாய்ப் பிறந்ததுதான். அதிலிருந்து தப்ப முயன்றதற்கு அந்தப் பிறப்பிற்கான தண்டனையைவிடக் கொடிய தண்டனை அடைந்தேன், அடைகிறேன். உங்கள் நல்ல முயற்சிக்கு உங்களுக்கும் நற்பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. செல்வர் மட்டுமல்ல, காவல் துறையினர் கூட உங்களைக் காதகன், சண்டாளன் என்கிறார்கள். இதற்கு என்னை விடுவித்ததும் ஒரு காரணம். ஆனால் அவர்களுக்கு மிகவும் கோபமூட்டிய செயல் ஒன்றைக் கேள்விப் பட்டேன். கொலைக் கைதிகளை நீங்கள் விடுதலை செய்தீர்களாம். “உங்கள் உதவி எனக்கு உதவியாயில்லை. ஓயாத் தொல்லை யாகத்தான் ஆயிற்று. ஆயினும் உங்கள் நல்லெண்ணத்தை நான் அறிகிறேன். அதனாலேயே இந்தச் செய்தியை உங்களுக்குக் கூறினேன். “அடிமை நிலையைவிட, வறுமைதான் கொடியது என்று நான் கண்டுவிட்டேன். நீங்கள் என்னை விடுவித்ததைவிட, எனக்கு ஒரு காசு கொடுத்திருந்தால், அது பயனுடைய உதவியாயிருந் திருக்கும். நிறையப் பணம் இருந்திருந்தால், நான் கொலை செய்திருந்தால்கூட, தப்ப முடிந்திருக்கும். “இப்போது கூட, உங்களால் முடிந்தால், எனக்கு ஒன்றிரண்டு துட்டுக் கொடுத்து உதவுங்கள்” என்றான். பாரத வீரன் செலவுக்காக முந்நூறு வராகன் கொண்டு வந்திருந்தான். அது பட்டிமந்திரியின் கையிலேயே இருந்தது. அத்துடன் இறந்த குதிரைச் செல்வன் பணமான ஐம்பது வெள்ளியும் அவனிடமே இருந்தது. “அந்த ஐம்பது வெள்ளியையும் இளைஞனுக்கே கொடுத்து விட எண்ணுகிறேன். உங்கள் இசைவு கோருகிறேன்” என்று அவன் பாரத வீரனிடம் கேட்டான். “உன் உள்ளம் இவ்வளவு கனிவுடையதாயிருப்பது கண்டு மகிழ்கிறேன். அப்படியே செய்’ என்றான் பாரத வீரன். இளைஞன் அவர்கள் இருவரையும் விழுந்து விழுந்து வணங்கினான். பாரத வீரன் உள்ளத்தை இந்நிகழ்ச்சி பெரிதும் சுட்டது. புதிய போர் எதிலாவது ஈடுபட்டு, இதை மறக்க அவன் துடித்தான். அதற்கேற்ப, பட்டிமந்திரியின் பேச்சு அவனை அத்துறையில் தூண்டிற்று. “அண்ணலே! இந்தக் காடு முழுவதும் கரிசல் நிறமாக இருக்கிறதே! மரங்களே மிகுதி இல்லாமல் தூளும் செத்தையும் அடமர்ந்திருக்கிறதே! இதற்குக் காரணமென்ன? இங்கும் ஏதாவது அரக்கர் செயல் உண்டா?” என்று அவன் தொடங்கினான். பாரத வீரன் முகத்தில் துயர மேகங்கள் சற்றே அகன்றன. “ஆம், பட்டி, தாடகையும் கரன் தூஷணர் என்ற அவன் உறவினரும் வாழ்ந்த இடம் இது. அதோ புல் பூண்டற்றுக் கிடக்கும் பாறைகள் தாடகையின் உடல் பகுதிகளே. கரன் சென்ற இடமெல்லாம் கரிசல் காடாயிருக்கிறது. தூஷணன் இருந்த இடமெல்லாம் தூள் அடர்ந்து கிடக்கிறது, என் அவதாரத்துடன், கரனும் தூஷணனும் இதே இடத்தில் அவதாரமெடுத்திருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நான் அவர்களை எதிர்பார்க்கலாம்” என்றான். பட்டி மந்திரியின் கழுதை அச்சமயம் பாரத வீரன் கோவேறு கழுதைக்கு மிகவும் பின்னடைந்திருந்தது. அரக்கர் பெயர் கேட்டதும் அவன் கழுதையைக் கோவேறு கழுதையை அடித்து விரைந்து ஓட்டினான். கழுதையின் தலை கோவேறு கழுதையின் காலை முட்டும்வரை அவன் உள்ளத்தின் படபடப்புப் பெரிதாயிருந்தது. அவர்கள் ஒரு மேட்டில் ஏறினர். உச்சியடைந்து கீழே இறங்கப் போகும் நேரம், பள்ளத்திலிருந்து தூசியும் புகையும் எழுந்தது கண்டனர். பாரத வீரன் அதைச் சுட்டிக் காட்டினான். “அதோ பார், பட்டி! தூஷணன் பெரும்படையுடன் வருகிறான். தூசி எழும்பகுதி அதுதான். அதன்பின் புகை தெரிகிறதே. அதுதான் கரன்படை. இருவரும் இரு திசையிலிருந்து வந்து நம்மை முற்றுகையிடப் பார்க்கிறார்கள். இச்சமயம் நாம் மிகவும் விழிப்பாயிருக்க வேண்டும். இருவரும் ஒன்று சேருமுன் நாம் ஒவ்வொருவராகத் தாக்கி, அவர்களைச் சிதறடித்து விட வேண்டும்” என்றான். “இப்போதே போர் செய்யவா போகிறீர்கள். ஆண்டே! அப்படியானால் நான் எங்கே போய் ஒளிவது? மேட்டில் இருக்கிறேனே! எல்லாருக்கும் என்னைத் தெரியுமே!” என்றான். “உனக்கு அறிவு இருக்கிற அளவுக்கு கோழைத்தனமும் இருக்கிறது. மேடுதான் நல்ல பாதுகாப்பு. நீ இங்கேயே இருந்தால் போதும். இந்தப் போரில் எனக்குப் புகழ் கிட்டலாம். உனக்கு அதில் பங்கு உண்டு. தவிர...” “சரி, சரி. நான் இங்கேயே இருக்கிறேன். ஆனால் நீங்கள் முன்போல் ஆபத்தில் சிக்கி என்னைத் தவிக்க விடாதீர்கள். என்னையும் ஆபத்தில் சிக்கவைத்து விடாதீர்கள்” என்றான். பாரத வீரன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. அவன் கோவேறு கழுதை மீது காற்றாய்ப் பறந்து சென்றான். தூசிப்படலம் அணுகி வந்தது. அத்துடன் பாரத வீரனும் அதனை அணுகிச் சென்றான். பட்டிமந்திரி கண்களுக்கு இப்போது தூசிப் படலத்தின் மெய்யுருவம் தென்பட்டது. ஒரு பெரிய ஆட்டு மந்தையினால் எழுப்பப்பட்ட தூசியே அது. சற்று அப்பால் தெரிந்த புகை ஆட்டிடையர் தங்கிச் சமையல் செய்த இடமே. இதைக் கண்டபின் அவனுக்கு மீண்டும் கவந்தன் போர் பற்றிய கவலை எழுந்தது. ஆட்டு மந்தையை அவசரத்தில் தலைவன் தூஷணன் படை என்று கருதிவிட்டாரே! என்ன நேருமோ என்று கவலைப்பட்டான். இடையே வந்த அச்சத்தை அகற்றிவிட்டு, அவனும் கழுதைமீதேறிப் பாரத வீரனை நோக்கி விரைந்து சென்றான். அவனை எட்டிப்பிடிக்கப் பல கண நேரம் ஆயிற்று. ஆயினும் எட்டியும் பயனில்லை. பாரத வீரன் அதற்குள் போர் தொடுக்க ஆயத்தமாய் விட்டான். “ஐயனே! இது தூஷணன் படையல்ல. வெறும் ஆட்டு மந்தை. முன்போல இதைத் தாக்கி இடருக்கு வழி வகுக்க வேண்டாம். திரும்பி விடுங்கள்” என்றான். பாரத வீரன் சிரித்தான். “இந்தக் காரியங்களில் உன் மூளையை நம்பாதே பட்டி, தூஷணன் மாயம் வல்லவன். உன்னை ஏமாற்றவே, உன் கண்ணுக்கு அவன் தன் படையை ஆட்டு மந்தையாக்கிக் காட்டுகிறான். நான் பாரத இராமாயண புராணங்களை நன்றாக வாசிக்காதவனாயிருந்திருந்தால் என் கண்ணுக்கும் இதே மாயத் தோற்றம் ஏற்பட்டிருக்கும். ஆகவே உன்னிடம் தவறு இல்லை. நீ நான் சொல்வதை நம்பு. போய் மேட்டிலேயே காத்துக் கொண்டிரு. நான் விரைந்து வெற்றியுடன் வருகிறேன்” என்றான். பட்டி மந்திரி வேறு வழியில்லாமல் திரும்பிச் சென்றான். கோவேறு கழுதையின் பாய்ச்சலால் ஆட்டு மந்தையின் முன்னணி சின்னாபின்னப்பட்டது. குட்டிகள் குளம்பு பட்டு நைந்தன. ஆடுகள் ஒன்றன் மீது ஒன்று மோதின. பல ஆடுகள் அவன் ஈட்டிக்குத்துக்கு ஆளாயின. பின்னே நெடுந்தொலைவில் வந்த ஆயர்கள் இதை முதலில் கவனிக்கவில்லை. கவனிக்குமுன் முன்னணி ஒரே இறைச்சிக் காடாயிற்று. பாரத வீரன் ஆயர்களைப் படைத் தலைவர்கள் என்றே கருதினான். ஆடுகளின் இரைச்சல் தாண்டி அவர்கள் கூக்குர லிட்ட சமயம் உண்மை நிலை கிட்டத்தட்ட அப்படித்தா னிருந்தது. அவர்களில் சிலர் அவனை வைதனர். சிலர் ‘கொல்லாதே விடு, விடு’ என்று கெஞ்சினர். சிலர் அவனை நோக்கிக் கல்லையும் கம்பையும் வீசி எறிந்தனர். ஒன்று இரண்டு பேர் அவனைப் பிடித்து கட்டி நையப் புடைக்கும் எண்ணத்துடன் அருகே வந்தனர். அவர்கள் கையில் கயிறும் கழிகளும் இருந்தன. இவற்றைப் பாரத வீரன் பாசப் படை, சூலப் படைகளாகக் கருதினான். அருகிலுள்ள ஆட்டெதிரிகள் அகன்ற பின், பாரத வீரன் வில்லும் அம்பும் எடுத்துப் போரிட்டான். இதனால் ஆயர்கள் அருகில் வர முடியவில்லை. தொலைவிலிருந்தே கல்லும் கம்பும் எறிந்தனர். ஆயர்கள் நெடுந்தொலை செல்லாதது கண்டு, பாரத வீரன் வில்லைக் கீழே எறிந்தான். உலாவிலேயே முதல் தடவையாக அவன் வெடிப்படையை எடுத்தான். அது போருக் குரிய வெடிப்படை அல்ல, ஆனாலும் மந்தைகளிலும் ஆயர் குழுவிலும் அது அச்சமும் பெருங்கிலியும் உண்டு பண்ணிற்று. எதிர்த்து அவனை வெல்லும் ஆற்றல் அவர்களுக்கில்லை. ஆனால் அவர்களில் சிலர் இறந்த ஆடுகளின் திரளிடையே ஊர்ந்து வந்தார்கள். தொலைவிலிருந்து இதைக் கண்ட பட்டி மந்திரி, பாரத வீரனைத் தொலைவிலிருந்தே எச்சரிக்க முயன்றான். ஆனால் அவனருகில் ஓடி வந்த சில ஆயர்கள் அவனைப் பிடித்துக் கட்டி உருட்டினர். கூச்சலிட முடியாதபடி வாயில் துணிவைத்தடைத்தனர். பாரத வீரனையும் பின்னிருந்து அவர்கள் திடுமெனச் சூழ்ந்தனர். வெடிப் படையை உதறி விட்டு அவனையும் கட்டினர். இதற்குள் சிதறிப் பரந்து நின்ற ஆயர்கள் அனைவரும் திரண்டனர். நடந்த குருதிக்களரியைக் கண்டும் கேட்டும் அவர்கள் சீற்றம் பெருக்கெடுத்தோடிற்று. கட்டுண்ட வீரனையும், பாங்கனையும் அவர்கள் ஆத்திரங் கொண்டு அடித்தனர், குத்தினர், உதைத்தனர். அவர்கள் இறந்து விட்டனர் என்ற எண்ணம் ஏற்பட்ட பின்னரே, கட்டை அரைகுறையாக அவிழ்த்து விட்டுத் தம் வழியே சென்றனர். தம் வாழ்வு இத்துடன் முடிவுற்றது என்றே வீரனும் பாங்கனும் கூட எண்ணினர். காயங்கள் உடலில் குறைவாக இருந்தன. ஆனால் உடலின் ஒவ்வொரு பகுதியும் கன்னிப் புடைத்துக் குருதி கக்கிக் கொண்டிருந்தது. பட்டி மந்திரியின் பருத்த உடல் பின்னும் பருத்து வீங்கி இருந்தது. உடலின் எரிவாலும் நோவாலும் அவர்கள் இரவெல்லாம் புரண்டு புரண்டு துடித்தனர். தன்னுணர்வு எப்போது வந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. இரவின் பனியையும் பகலின் வெயிலையும் அவர்கள் அறியவில்லை. யாரும் வந்து அவர்களுக்கு உதவவுமில்லை. அவர்கள் அப்படியே பசியாலும் வெப்பத்தாலும் இறந்தே போயிருக்கக் கூடும். ஆனால் ஓர் ஆண்டி அவர்கள் நிலை கண்டு அவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவி செய்தான். அவன் ஊட்டி அவர்கள் உண்டனர். கம்பு கோல்களின் உதவியால் பந்தர் செய்து அவனே அவர்களுக்கு வெயிலிலிருந்து பாதுகாப்பு உண்டு பண்ணினான். அதன்மீது ஒரு போர்வை கூரையாக விரிக்கப் பட்டது. அவனே பச்சிலையும் எண்ணெயுமிட்டுக் காயங்களை ஆற்றுவித்தான். இரண்டு நாட்களில் பட்டி மந்திரி எழுந்து நடக்க முடிந்தது. அவன் உதவியால் பாரத வீரனும் பின்னும் இரண்டு நாளில் முன்னேற்றம் அடைந்தான். கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் பக்கத்தில் நிறையப் புல்லும் புதரும் நீரும் கிடைத்தன. இந்த நாலைந்து நாட்களும் அவற்றிற்கு நல்ல ஓய்வாய் அமைந்தன. அவர்களை அடித்த ஆயர்களில் சிலர் அவர்களை அந்நிலையிலேயே மீண்டும் வந்து கண்டார்கள். ஆயர்கள் அவர்களால் அடைந்த நட்டமும் அழிவும் பெரிது. ஆயினும் அவர்கள் இதற்குள் தம் கோபத்தை மறந்து விட்டார்கள். அவர்கள் உடல்நிலை கண்டு இரக்கமுற்றார்கள். அத்துடன் பாரத வீரன் உண்மையில் கொடியவனல்ல! அறிவு திரிவுற்ற கோமாளி என்று அவர்கள் இப்போது தெரிந்தனர். அவர்கள் இரக்கமும் கனிவும் இன்னும் மிகுதியாயிற்று. அவர்கள் பாலும் தயிரும் உணவும் கொண்டு வந்து கொடுத்தார்கள். பாரத வீரன் இன்னும் அவர்களை மாயக் கரதூஷணரின் ஒற்றர்களாகவே கருதினான். அவர்கள் தந்ததைத் தொட மறுத்தான். ஆனால் பட்டி மந்திரி மனமார யாவும் உண்டான். அவனிடமிருந்த உணவு இதனால் முற்றிலும் மீந்தது. அதையே முழுதும் பாரத வீரனுக்குக் கொடுத்தான். பாரத வீரனின் விசித்திரப் போக்கு ஆயர்களுக்குப் பின்னும் அவன் மீது பாசத்தையும் ஆர்வத்தையும் பெருக்கவே உதவின. அவர்கள் பாரத வீரனறியாமல் பட்டி மந்திரி மூலம் அவனுக்குப் பலவகை உதவிகள் செய்தனர். வேளாளர் வண்மையை அனுபவித்த கம்பர், தம் பாராட்டை ஒரு ஏரெழுபதாகப் பாடி வைத்தார். பட்டி மந்திரிக்கு ஒரு சிறிது கவிதையாற்றல் இருந்தால் கூட, அவன் ஒரு ஆயர் காப்பியம் அல்லது ஒரு ஆயர் எழுபது எழுதி அவர்களைச் சிறப்பித்திருப்பான். ஆயர்களைப் போலக் கண் கண்ட தெய்வ இனம் வேறு இருக்க முடியாது என்பதை அவன் உள்ளூர நம்பினான்! 12. பொன்முடி கரதூஷணர் கையில் பட்ட துன்பத்தைப் பட்டிமந்திரி, அறவே மறந்தான். முதலில் அத்தொடர்பு அவனுக்குத் துன்பமாகவே தொடங்கிற்று. ஆனால் அது அவன் வகையில் முழுதும் நன்மையாக முடிந்தது. அவனுக்கென்றும், பாரத வீரனுக்கென்றும் ஆயரும் ஆயர்மகளிரும் வகை வகையான உண்டி, வகை வகையான பொருள்கள் கொண்டுவந்து கொடுத்தனர். அவர்கள் பழம் புகழ் முழுவதும் இதற்குள் அவ்விடம் எட்டி விட்டன. பாரத வீரனைப் பற்றியும் பட்டி மந்திரியைப் பற்றியும் பேசும் ஆர்வம் அவர்களிடையே மிகுதியாயிருந்தது. பாரத வீரனுடன் பேச முடியாததனால், அவர்கள் அவனிடமே சென்று மொய்த்தனர். அவனை அடிக்கடி தம் இல்லத்துக்கு இட்டுச் சென்றனர். பல வீட்டுக்கு ஒரே மருமகப் பிள்ளையாக அவன் நடத்தப்பட்டான். பாரத வீரன் உள்நிலை இதற்கு நேர்மாறாயிருந்தது. கரதூஷணர் நேராக அவன்முன் இன்னும் வரவில்லை. ஆனால் மாயத்தாலேயே அவனைத் திணறடித்திருந்தனர். பட்டி மந்திரியைத் தம் வலைக்குள் போட்டுக் கொண்டு, நட்பு நடிப்பால் அவர்கள் தன்னை இன்னும் வெல்ல நினைக்கின்றனர். இந்த எண்ணம் ஆயரின் நேயத்தை மாயமாக்கி, அவன் உள்ளக் கிளர்ச்சியைக் கெடுத்தது. அவன் அவ்விடம் விட்டுப் போகும் நாளை எதிர்பார்த்தான். ஆனால் இப்போது பட்டி மந்திரி அவன் சோர்வை அகற்றத் தன்னாலியன்ற மட்டும் முயன்றான். “நிழலை யடுத்து வெயிலும், வெயிலை யடுத்து நிழலும் வருவது இயற்கைதான், வெற்றி நம்மை விரைவில் அடுத்து வருவது உறுதி. என்னைச் சிற்றரசனாக்கி, நீங்கள் பேரரசனாகும் நாள் தொலைவில் இல்லை” என்று அவன் ஊக்குரைகள் கூறினான். சில நாட்களுக்குள் பாரத வீரன் மீண்டும் எழுந்து செல்லப் புறப்பட்டான். பட்டி மந்திரி தன் ஆயர் குடித்தோழரிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டான். இருவரும் இச்சமயம் மதுரை நோக்கிச் செல்லும் பெருஞ்சாலை வழியே சென்றனர். பாரத வீரனுக்கு இப்போதிருந்த முதற் கவலை, தகர்ந்து போன தலையணி பற்றியதாகவே இருந்தது. தன் அடுத்த போராட்டம் புதிய தலையணி தந்து, தன் புகழை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று அவன் எண்ணினான். இந்திரன் வாளைப் போலவே, இந்திரன் பொன் முடியும் தன் கைப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று அவன் மனக்கோட்டைகள் கட்டினான். பட்டி மந்திரியிடம் இது பற்றிய தன் கருத்துக்களை அவன் கூறினான். “அன்புமிக்க பட்டி! நாம் இப்போது செல்லும் பகுதி பாண்டிய மன்னர் கடைசியில் ஆண்ட பகுதி ஆகும். இந்திர வாளைப் போலவே இந்திரன் பொன்மாலையும் இந்திரன் பொன்முடியும் இந்திரன் பொன்தவிசும் பாண்டியரிடமே இருந்தது. இது வரலாறு தரும் செய்தி. பொன் மாலையையும் பொன் தவிசையும் பெறச் சோழ மன்னர் அவர்களுடன் பல போர்கள் செய்ய வேண்டி வந்தது. பாண்டியர் அவற்றை ஈழநாட்டிலும் சேரநாட்டிலும் பத்திரப்படுத்தியிருந்தனர். இதற்காகவே ஈழநாட்டையும் சேர நாட்டையும் சோழர்கள் எதிர்த்து வென்றனர். ஆனால் பொன்முடி யார் கையிலும் படவில்லை. அது இப்பக்கத்திலேயே எங்காவது பதுக்கப் பட்டிருக்க வேண்டும். எவ்வாறாவது அது நம் கைப்பட்டால், நம் உலா மீண்டும் கிளர்ச்சிகரமாயிருக்கும்” என்று பேசினான். “அது எங்கே இருக்கும்? எப்படி நம்மையடைய முடியும், ஆண்டே!” என்று பாங்கன் கேட்டான். “அது எனக்குத் தெரியாது. அவ்வளவு சிறந்த பொருள் புதைபட்டிராது என்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். அதை வைத்திருப்பவர் எவ்வளவு சிறு குடிப்பட்டவரானாலும், அவர்கள் செல்வம் கொழிக்கும். அதற்காகவே யாராவது அதைக் கைப்பற்றி இருப்பது இயல்பு. அத்தகையவரை நாம் காணக்கூடும். கண்டால், போர் முறைப்படி நாம் அதை வென்று கைப்பற்ற உரிமை உண்டு” என்றான். “இப்படி விரும்பிய பொருள்களை எல்லாம் வீரர் கைப்பற்றலாமா?” என்று பட்டி மீண்டும் கேட்டான். “வீரருக்குரியவற்றையே வீரர் கைப்பற்ற உரிமையுண்டு. ஆனால் போரில் வீழ்ந்தவர் உடைமைகளை மட்டுமே வீரர்கள் கைப்பற்றித் தம்பாங்கருக்கும் கொடுக்கலாம்” என்றான் வீரன். பட்டி மந்திரிக்குப் புதுக் கிளர்ச்சி தோன்றிற்று. அவன் தன் கழுதையைப் பாரத வீரன் கழுதையுடன் நெருங்கித் தட்டிவிட்டான். ஆனால் பாரத வீரன் சட்டென்று நின்றான். அவன் முகத்தில் வியப்புக் குறியும் மகிழ்ச்சிக் குறியும் தாண்டவமாடின. “அதோ! தொலைவில் ஏதோ மின்னுகிறதே! அது என்ன பார்த்தாயா?” என்று கேட்டான். தொலைவில், சாலை திரும்பிய இடத்தில், பேரொளி தெரிந்தது. ஆனால் அது சட்டென மறைந்தது. சில சில சமயம் விட்டு விட்டு மின்னிற்று. அருகே வர வர, அது ஒரு வீரன் தலையிலுள்ள தலையணி என்று கண்டனர். அந்த வீரனும் ஒரு கழுதை மேல் ஏறிக் கொண்டே வந்தான். ‘அதுதான் பாண்டியரிடமிருந்த இந்திரன் பொன் முடியாயிருக்கக் கூடுமா?’ என்று பட்டி மந்திரி பணிவுடன் கேட்டான். அவன் முகத்தில் நம்பிக்கை ஒளி வீசிற்று. பாரத வீரன் தயங்காமல், “சரியாக ஊகித்தாய், அறிவுடைய மந்திரி! வெற்றியும் புகழும் நம்மை நோக்கி விரைந்து ஓடி வருகிறது. பார்த்தாயா? நீ இப்படியே நில், நான் போருக்கு முந்துகிறேன்” என்றான். பாரத வீரன் பொன்முடி வீரனை நோக்கி விரைந்தான். அவன் அருகே வந்தவுடன், சாலையை விட்டு, ஒரு ஒற்றையடிப்பாதையில் இறங்கப் போனான். பாரத வீரன் ஐயம் உறுதிப்பட்டது. “அடே, ஓடிப்போகாதே நில். அந்தப் பொன்முடி எனக்கு உரியது. நான் தான் கண்கண்ட கற்கி, கலியுகராமன்! அதைக்கொடுத்துவிட்டுப் போ, அல்லது உன்னைக் கொன்று விடுவேன்!” என்றான். “ஏது பொன்முடி! இது என் தண்ணீர்க் குடுவை ஆயிற்றே! நீங்கள் பேசுவது ஒன்றும் எனக்குப் புரியவில்லையே” என்று வீரனாக வந்தவன் விழித்தான். “இந்தப் பாசாங்கெல்லாம் வேண்டாம். என்னைக் கும்பிட்டு அதை என் முன் வைக்கிறாயா? இல்லையா?” என்று பாரத வீரன் அதட்டினான். வீரன் தயங்கினான், பின் துணிந்து, ‘மாட்டேன்’ என்றான். பாரத வீரன் வீரத்தை அவன் அறிந்தவனல்ல. ஆனால் வெடிப்படையின் மொட்டைப் பகுதி இதை அவன் தோள் பட்டைக்கு அறிவித்தது. அவன் கழுதையிலிருந்து கீழே விழுந்தான். எழுமுன் ஈட்டி அவன் மறு தோள்பட்டையைத் தாக்கிற்று. அவன் கிலிகொண்டு கழுதையையும் பொன் முடியையும் போட்டுவிட்டு ஓடினான். ஓடியவன் திரும்பி வருவான் என்று பாரத வீரன் சிறிது நேரம் காத்திருந்தான். அவன் வரவே இல்லை. பாரத வீரன் பொன்முடியை இறுமாப்புடன் எடுத்துத் தலைமீது வைத்துக் கொண்டான். “கழுதையையும் கழுதை மீதுள்ள பொருள் களையும் நான் எடுத்துக் கொள்ளலாமா?” என்று பட்டி கேட்டான். ஓடி விட்டவன் திரும்பி வந்து கேட்டால் கழுதையை நீ திருப்பிக் கொடுக்க வேண்டிவரும். அதுவே போர் முறை ஒழுங்கு. ஆனால் வெற்றி அடையாளமாகக் கழுதையின் மீதுள்ள பொருள்களை மட்டும் நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். அல்லது உன் கழுதைக்கு அதை மாற்றிக் கொள்ளலாம். இராமாயண காலத்திலிருந்து, வீரர் பின்பற்றும் மரபு இதுதான்” என்றான். “பட்டி சிறிது சிந்தித்தான். பின் அவன், தன் கழுதைச் சேணத்துடன், வீரன் விட்டுச் சென்ற கழுதைச் சேணத்தை மாற்றிக் கொண்டான் ஏனென்றால் அது மிகச் சிறந்ததாயிருந்தது. தவிர ஓடிய வீரன் சேணத்தில் இருபது வெள்ளியும் சில செப்புக் காசுகளும் இருந்தன. உலாவிலே முதல் தடவையாக, வீரனும் பாங்கனும் ஒரே வெற்றி எக்களிப்புடன் சென்றனர். ஓடிச் சென்ற வீரன் மூலம் பாரத வீரன் புகழ் முன்னிலும் விரைவாகப் பறந்தது. ஆனால் இத்தடவை அந்தப் புகழின் தன்மை பட்டி மந்திரிக்குக்கூடத் தெரியாது. ஏனெனில் அந்த வீரன் உண்மையில் வீரனல்ல. ஆயினும் தற்செயலாக ‘வீரன்’ என்பதே அவன் பெயராயிருந்தது. அவன் உண்மையில் ஓர் அம்பட்டன். அந்தப் பகுதியிலுள்ள சிற்றூர்களுக்கு தனித்தனி அம்பட்டன் கிடையாது. வீரன் ஒருவனே பத்துப் பன்னிரண்டு ஊர்களுக்குரிய ஒரே அம்பட்டனாயிருந்தான். அவனுக்கு வருவாய் மிகுதியாயிருந்தது. தண்ணீர்க் குடுவையாக அவன் ஒரு பளபளப்பான பித்தளைத் தட்டம் வாங்கினான். கிழமைதோறும் ஒரு ஊர், காலையில் ஓர் ஊர், மாலையில் ஓர் ஊர் என்று அவன் செல்ல வேண்டியிருந்தது. அதற்காகவே ஒரு நல்ல கழுதையையும் அவன் வாங்கினான். அதற்குச் செம்மரம், உயர்ந்த தோல் ஆகியவற்றால் செய்த சேணமும் செய்வித்தான். போகும்போதும் வரும்போதும் வெற்றுக் குடுவையை அவன் தலைமீது கவிழ்த்துக் கொண்டு செல்வது வழக்கம். பாரத வீரன் பொன்முடி என்று கருதிக் கைப்பற்றியது இந்தப் பித்தளைக் குடுவையையே. எப்போதும் அவன் அதைப் புளியிட்டுத் துலக்கியதனால், அது பொன் போலப் பளபளப்பா யிருந்தது. அம்பட்ட வீரனுக்கு அன்று நடைபெற்ற நிகழ்ச்சி புரியா நிகழ்ச்சிகளாகவே இருந்தது. பாரத வீரனை அவன் திருடன் என்று கருதிவிட முடியவில்லை. ஏனென்றால், அன்று அவன் உடுப்பில் நூற்றுக்கணக்கான வெள்ளிகள் இருந்தன. பொருளகத்தில் அவன் சேமித்து வைத்த தொகை அது. மகன் திருமணத்துக்காக அதை அவன் நகரிலிருந்து எடுத்துக் கொண்டு சென்றிருந்தான். திருடனானால் அதைக் கைப்பற்றாமல் விட்டிருக்க மாட்டான். அவன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும். நடையுடை பேச்சுக்கள் அப்படியே இருந்தன. கற்கி, ராமன் என்ற பெயர்களும் இதையே வலியுறுத்தின. ஆகவே மொத்தத்தில் பாரத வீரன் மீது அவனுக்கு அவ்வளவு கோபமில்லை. திரும்ப அவன் பலமணி நேரம் கழித்துத்தான் அவ்விடம் வந்தான். கழுதைகூட அருகில்தான் நின்றது. அவன் இன்னும் ஆறுதல் பெற்றான். கழுதையின் சேணம் மட்டும்தான் காணவில்லை. அது அவனுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. ஆயினும் அவன் வந்த நாட்டத்தை எங்கும் பறைசாற்றவே எண்ணினான். அவன் மீது பொறாமைப் பட்டவர்களுக்கு அது ஒரு ஆறுதலாயிருக்கட்டும் என்று அவன் நினைத்தான். பத்து ஊர்களிலும் அவன் ஏறாத வீடு, பேசாத ஆள் இல்லை. எங்கும் அவன் கற்கியின் புகழ் பரப்பினான். கதை சொல்லச் சொல்ல, அதற்கு வால் நீண்டது. தலை வளர்ந்தது. வக்கணையும் வரிசையும் மிகுந்தன. ஒரு சிறிய கற்கி ராமாயணமாக, கற்கி பாரதமாக, அது தென் பாண்டி நாடெங்கும் பரந்தது. சில நாட்களில் அந்த இனிய கதையை அதன் வீரனும் பாங்கனுமே கேட்க நேர்ந்தது. அவர்கள் அருமை பெருமைகளை அவர்கள் அறிந்த அளவைவிட அது உயர்வு படுத்திற்று. அவர்கள் எல்லையில்லா இறும்பூதும் மகிழ்ச்சியும் எய்தினர். 13. வாகைப் போர் பாரத வீரனும் பட்டி மந்திரியும் சென்ற பாட்டை திடுமென மேல் நோக்கிற்று. இருபுறமும் உள்ள சாலைகளின் தன்மையிலும் மாறுதல் காணப்பட்டது. மரங்கள் வானளாவி ஓங்கி நின்றாடின. அவர்கள் உலாவில் ஒரு புதிய திருப்பத்துக்கான சின்னமாக அவர்கள் புகுந்த நாடு அவர்களுக்குக் காட்சியளித்தது. அக்காடுகள் தனிக்காட்டுப் பண்ணையைச் சேர்ந்தவை. தமிழகத்திலே அது போல வளமான காடோ, பண்ணையோ வேறு கிடையாது. அதன் தலைவரான மாக்கோதைக்கு அதன் பல பகுதிகளில் பல மாளிகைகள் இருந்தன. அவர் தாமே பெரும்புலவர். அருங்கலைஞர். புலவர்களையும் கலைஞர் களையும் ஆதரிப்பதில் அவர் ஒரு கற்பகத் தருவாயிருந்தார். அவர் வீர வேட்டையிலும் ஆர்வமிகுந்தவர். தனிக் காட்டிலுள்ள காட்டானைகள் அவர் குதிரைக் காலடியினோசையைக் கேட்டாலே நடுங்கின. புலவர்கள் அவர் வீரத்தைப் புகழ்ந்து பாடினர். அதனால் செல்வமும் புகழும் சுமந்து சென்றனர். கலைஞர்கள் அவரையும் அவர் வேட்டைக் காடுகளையும், வேட்டைக் காட்சிகளையும் தீட்டினர். வேட்டைக் காடுகளிலிருந்து வரும் பெருஞ் செல்வத்தின் ஒரு பகுதியை அவர்கள் கலையின் திறமைக்குப் பரிசாகப் பெற்றனர். பாரத வீரன் வீரத்தைப் பற்றிய பல வீரக் கதைகள் அவர் காதுக்கு எட்டின. பட்டி மந்திரி பற்றிய இனிய செய்திகளும் அவருக்குத் தெரிய வந்தன. ஏனெனில் அணைகரை விடுதிச் செல்வர் அவர் மைத்துனர். அவர் மாக்கோதைக்கு வரையும் கடிதங்களில் அவர்களைப் புகழ்ந்திருந்தார். சிங்கத்தின் கதையை அவர் கேட்டதே அவர் அடைந்த வியப்புக்கு எல்லையில்லை. ஏனென்றால் சிங்கம் உண்மையில் அவர் பண்ணைக்குரிய சிங்கமே, அதை அவர் நாங்குனேரியில் நடைபெற்ற விடுதலை விழாக் கொண்டாட்டத்துக்காகவே காவலுடன் அனுப்பி யிருந்தார். சிங்கத்தை ஓட்டிய வண்டியோட்டி தெரிவித்த செய்தியை அவர் முதலில் நம்பவில்லை. அத்துடன் நம்பிய போதும், அதை அவர் பொருட்படுத்த வில்லை. சிங்கம் கூண்டுக்குள்ளே கட்டப்பட்டிருந்த செய்தியை அவர் அறிந்திருந்தார். ஆனால் நிகழ்ச்சியின் முழுவர்ணனை கேட்டபின், அவர் கருத்து மாறிற்று. சிங்கம் வெளிவராததற்கும், பாரத வீரன் வீரத்துக்கும் முரண்பாடு எதுவுமில்லை என்று அவர் கண்டார். ஆகவே சிங்கத்தைப் பாரத வீரன் எதிர்த்து நின்ற காட்சியை அவர் தீட்டுவித்தார். அவனை நேரில் காணும் ஆர்வம் உடையவராக இருந்தார். தம் ஒற்றர்கள் மூலம் அவர் பாரத வீரன், பட்டி மந்திரி ஆகிய இருவரின் செயல்களையும் பண்புகளையும் நன்கு உசாவியறிந்தார். கவந்தன் போர், கரதூஷணர் போர், பொன்முடி வெற்றி முதலியவைகளையெல்லாம் பலர் வாய் மொழியால் அவர் அறிந்தார். இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு கற்கி பாரதம் வகுக்கத்தக்க பெரும் புலவனையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் பாரத வீரன் தடத்தை உசாவிக் கொண்டு மணிப்புலவன் அவரிடம் வந்தான். பாரத வீரன் நாமாவளிகளை அவன் பல வண்ணங்களாகப் படித்துக் காட்டினான். பாரத வீரன் காவியத்தை எழுதத்தக்க பெரும் புலவன் அவனே என்று அவர் முடிவு கட்டினார். மணிப்புலவன் காவியம் இயற்றும் பொறுப்பை மகிழ்வுடன் ஏற்றான். ஆனால் காவியக் கதையை இனிது முடிக்கும் பொறுப்பை அவன் மாக்கோதை மீதே சுமத்தினான். பாரத வீரன் வீரகாவியத்திற்கு, பாரத வீரன் வெற்றிகள் மட்டும் போதாது என்று அவன் கருதினான். பட்டி மந்திரிக்கு அதில் போதிய பங்கு ஏற்படுத்த வேண்டும். அத்துடன் ஒரு சிற்றரசன் ஆக வேண்டும் என்ற அவன் ஆர்வமும் நிறைவேற வேண்டும். அவன் ஆட்சித்திறமும் வீரக்கதையில் ஒரு வீரமமைந்த உறுப்பாயிருக்க வேண்டும் என்று மணிப்புலவன் கருதினான். மாக்கோதையின் கலையார்ந்த நகைச்சுவையை இது தூண்டிற்று. அவர் இதற்கு இசைந்தார். இதற்கான திட்டமும் வகுத்தார். பாரத வீரன் தன் காட்டெல்லைக்கு வரும் சந்தர்ப்பத்தை அவர் இதற்குப் பயன்படுத்தினார். மாக்கோதையின் வாழ்க்கைத் துணைவி வேண்மாள் பாரத வீரனைவிடப் பாங்கனிடம் பரிவு மிகுதி கொண்டு இருந்தாள் அரண்மனைக்குப் பால் கொண்டுவந்த ஆய் நங்கை ஒருத்தி அவன் சீரிய அரசியலறிவு பற்றிப் புகழ்ந்திருந்தாள். அதில் ஈடுபட்டு வேண்மாள் கணவன் திட்டத்துடன் ஒத்துழைக்க மனமார இசைந்தாள். தனிக் காட்டுச் சாலையில் மரங்களிலெல்லாம் ‘வெல்க பாரத வீரன், வாழ்க பட்டி மந்திரி’ என்ற வாசகங்கள் பொறித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றைப் பட்டி மந்திரியே முதலில் கவனித்தான். அவன் மகிழ்ச்சியுடன் அதைப் பாரத வீரனுக்குக் காட்டினான். “ஆயர்களாக வந்தவர்கள், கர தூஷணர்களாயிருக்க முடியாது. அவர்கள் தேவர்களே என்பதில் எனக்கு ஐயமில்லை. நம் புகழை விளக்கவே அவர்கள் இந்த மாயம் செய்திருக்கிறார்கள். இல்லையென்றால் தங்கள் பொருள்கள், ஆட்கள் இவ்வளவு அழிவுற்ற பின்னும், அன்பு காட்டுவார்கள்? அவர்களால்தான் நம் புகழ் இவ்வளவு விரைந்து பரவி இருக்க வேண்டும்” என்றான். பாரத வீரன் உள்ளம் இப்போது ஒரு மகிழ்ச்சியலையில் மிதந்து கொண்டிருந்தது. அது பட்டி மந்திரி கருத்தை எளிதாக ஏற்றுக் கொண்டது. மரந்தோறும் இந்தப் புகழ் வாசகம் எழுதப்பட்டிருப்பது கண்டபின் இந்தப் புதுக் கருத்து வலியுற்றது. வழியிலுள்ள விடுதிகளில் காவலர்கள் அவர்களைக் கண்டதும், “வருக! வீரவீர பாரத வீரரே வருக. வருக வெற்றிவீர மேதை பட்டி மந்திரியே வருக” என்று வரவேற்றனர். பாரத வீரன் இத்தகைய ஆரவாரத்தை என்றும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் தன் வீர உலாவில் கூடியமட்டும் விடுதிகளில் தங்கக் கூடாதென்று அவன் நினைத்திருந்தான். ஆகவே அவன் உள்ளே செல்ல மனமில்லாமல் நின்றான். ஆனால் பட்டி மந்திரி “அன்புடன் மதிப்பவரை அசட்டை செய்வது அழகல்ல. ஆண்டே! அன்புக்கு அன்பு செலுத்திவிட்டுச் செல்வோம்” என்று இழுத்துச் சென்றான். வகை வகையான உண்டிகள் வழங்கப் பட்டன. பாரத வீரன் அவற்றைத் தொட்டுத் தொடாமலுமே இருந்தான். ஆனால் பட்டி வயிறு கொள்ளு மட்டும் உண்டு பருகினான். பாரத வீரன் உணவுக்கான செலவைக் கொடுக்க முனைந்தான். ஆனால் விடுதியாளர் இதைப் பெற மறுத்தனர். “தாங்கள் வழிப்போக்கரல்ல, விருந்தினர். தங்களுக்கு வேண்டும் வசதிகளை நாங்கள் குறைவில்லாமல் செய்ய வேண்டியவர்கள். நாங்கள் கோருவதெல்லாம் எங்கள் விடுதியில் இரண்டொரு நாளாவது தங்கிச் செல்ல வேண்டுமென்பதுதான்” என்றார்கள். வரவர உபசரிப்பும் வரவேற்பும் வளர்ந்தன. சிற்றூர் களிலெல்லாம், தெரு வளைவுகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் மீது வரவேற்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. மக்கள் ஆங்காங்கு குழுமி நின்று, முதற் சீடர்கள் முழங்கிய அதே முழக்கங்கள் எழுப்பினர். சில இடங்களில் சீடர்களின் இசைக் குழு பாடிய அதே பாடல்களை இசைக் குழுக்கள் பாடின. அதே பாணியில் சில புதுப்பாடல்கள் கூடப் பாடப்பட்டன. மணிப்புலவன் புலமை மணத்தை அதில் கண்டு பாரத வீரன் வியப்படைந்தான். தலை நகரத்தின் வழியாக அவர்கள் செல்ல எண்ணியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் போக்கு இப்போது மெல்ல மெல்ல ஊர்வலப் போக்காயிற்று. மக்கள் திரள் அவ்வளவு பெருகிற்று. அது அவர்களை அறியாமல் அவர்களைத் தலைநகருக்கு இட்டுச் சென்றது. அதன் வாயில் முகப்பில் அரசவை மதிப்புடன் அவர்கள் எதிர்கொண்டழைக்கப்பட்டனர். ஆனை அம்பாரி பல்லக்குகள் அவர்களுக்காக வந்தன. பாரத வீரன் தன் கோவேறு கழுதையைவிட்டு ஆனை மீதேற விரும்பவில்லை. வற்புறுத்தலின் பேரிலேயே அதில் ஏற ஒத்துக் கொண்டான். ஆனால் தனக்கு முன்னால் செல்லும் பெருமையை அவன் தன் கோவேறு கழுதைக்கு அளித்தான். பட்டி மந்திரி தனக்கு அளிக்கப்பட்ட பல்லக்கில் மனமுவந்து ஏறினான். ஆனால் தன் பின்னாலேயே தன் கழுதையை அணி செய்து வர ஏற்பாடு செய்து கொண்டான். பண்ணை வேந்தனும், பண்ணை அரசியும் அரச மதிப்புடன், ஆனால் கால் நடையாகவே அவர்களை எதிர் கொண்டனர். அரண்மனையில் அவர்களுக்காக விருதுகள், ஆடல்பாடல்கள், சிறப்புகள் நடந்தன. வீரனுக்கும் பாங்கனுக்கும் மட்டுமின்றி, கோவேறு கழுதைக்கும், கழுதைக்கும் கூட மாளிகைச் சிறப்புகள் தரப்பட்டன. ஒரு நாள், இரண்டு நாள் கழிந்தவுடன் பாரத வீரன் திரும்பவும் உலாவைத் தொடர எண்ணினான். “வந்த அரண்மனை வாழ்வை நாமாக இவ்வளவு விரைவில் விட்டுச் செல்வானேன்!” என்றான் பட்டி. பாரத வீரனுக்கு முகம் கடுத்தது. “பட்டி! உன்னை எவ்வளவோ அறிவுடையவனென்று நினைத்தேன். நான் அரசனாகப் பிறக்கவில்லை. அரண்மனையிலும் வாழவில்லை, நீயும் அந்நிலையில் பிறக்கவோ, வாழவோ இல்லை. அப்படியிருக்க, அரசராகப் பிறந்து வாழ்பவர்கள் நம்மை ஏன் இப்படிப் பெருமைப்படுத்துகிறார்கள் என்பதை நீ மறந்துவிட்டாய். நாம் அரண்மனை வாழ்வை விரும்புவதனாலா நம்மை இவ்வளவு அருமையாகப் பாராட்டுகிறார்கள்? வீர வாழ்வு மூலம் மக்கள் வாழ்க்கையை நாம் உயர்த்துகிறோம். மக்கள் உள்ளங்களில் அரசரைவிட உயர்ந்த இடம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் பெருமையை விட்டு நாம் இங்கே இருக்க எண்ணுவது அழகல்ல” என்றான். பட்டி மந்திரி மிகுதி விருப்பமில்லாமலே இணங்கினான். பாரத வீரன் அன்று மாக்கோதையிடம் தனக்கு விடை கொடுக்கும்படி கேட்டான். “நாடோடியாகவும் காடோடி யாகவும் வாழ்பவன் நான். எனக்கு அரண்மனை வாழ்வு தந்து பெருமைப்படுத்தினீர்கள். உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக் கிறேன். ஆனால் என் வீர உலாவை நான் விரைந்து சென்று தொடர வேண்டும். ஆகவே விடைகொடுத்தனுப்ப வேண்டுகிறேன்” என்றான். விருந்தினரிடம் வற்புறுத்துவது போல மாக்கோதை பாரத வீரனை இன்னும் சில நாள் தங்கிச் செல்லும்படி வற்புறுத்தினான். வேண்மாளும் பட்டி மந்திரியிடம் இதுபோல வற்புறுத்தினாள்,” வீரன் எங்கள் விருப்பத்துக்கு எளிதில் கட்டுப்படாவிட்டாலும், உன் விருப்பத்துக்குக் கட்டுப்படக்கூடும். எங்களுக்காக அவரை வற்புறுத்தி இன்னும் இரண்டொரு நாள் இருக்கும்படி கூற வேண்டுகிறேன்” என்றாள் அவள். பாரத வீரன் பின்னும் தயங்கினான். “மன்னர் விருந்தினராக இரண்டு நாள் இருந்தோம். அரசி விருந்தினராக இன்னும் ஒரு நாள் இருந்து விட்டுப் போவோம் ஆண்டே!” என்று பட்டி பாரத வீரனிடம் நயமாக வேண்டினான். பாரத வீரன் ஒருவாறு இணங்கினான். இதனால், பட்டியின் மதிப்பு இன்னும் உயர்ந்தது. பாரத வீரன் இதைப் பட்டி மந்திரியிடம் சுட்டிக் காட்டினான். பார்த்தாயா உனக்காகத்தான் இதை ஒத்துக் கொண்டேன். ஆனால் அடுத்த தடவை நீ வற்புறுத்தக் கூடாது” என்றான். ஆனால் மறுநாள் அவர்கள் விடைபெறவே முடியவில்லை. அவர்களுக்குச் சிறப்பளிக்க இசைக்கச்சேரிகள், நாடகக் கச்சேரிகள், ஆடலரங்குகள் நடந்த வண்ணம் இருந்தன. அவற்றின் முடிவில், மன்னனும் அரசியும் அவர்களைத் தம் தவிசண்டை இருதவிசுகள் இட்டு அமர்த்தினர். அரசன் அரசியைப் பார்த்தான். அரசி புன்முறுவல் செய்தாள். பின் அரசன் பாரத வீரனை நோக்கிப் பேசினான். “சிங்கத்தை வென்ற வீரசிங்கமே! கற்கியின் கண் கண்ட திரு வுருவமே! உம் வருகையால் எம் தனிக்காடு தனிப்பெருமை அடைந்தது. மூன்று நாட்களையும் நானும் அரசியும் மற்றும் எல்லாரும் மூன்று கணங்களாகக் கழித்தோம். எங்கள் விருந்தை ஏற்றதற்காக என் சார்பிலும், அரசி சார்பிலும், மற்ற எல்லார்சார்பிலும் உங்களுக்கு எம் நன்றி, உங்களை இரண்டு நாள் கழித்து மற்றொரு நாள் இருக்கும்படி வேண்டியருளிய பட்டிக்கும் என் தனி நன்றி உரியது.” பேச்சு இத்துடன் முடியவில்லை என்பதை பேச்சின் தொனியே காட்டிற்று. ‘இனி என்ன சொல்ல இருக்கிறாரோ’ என்று யாவரும் எதிர்பார்த்தார்கள். சிறிது நேரம் வாளா இருந்த பின் அவர் மீண்டும் தொடங்கினார். “வீரகற்கியே! உங்களை நாங்கள் வீரர் என்ற முறையிலேயே அழைத்தோம். அது உங்களைப் பெருமைப்படுத்துவதற்கல்ல. எங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளவே அத்துடன் எங்களுக்குத் தங்களால் ஆக வேண்டிய காரியம் ஒன்றும் இருக்கிறது. நானும் அரசியும் நாட்டு மக்களுடன் அதற்காக உங்களிடம் மனுதாரராகவே இருக்கிறோம். முன்பு உங்கள் தயவை ஒரு நாள் எங்களுக்கு வாங்கித் தந்த பட்டி மந்திரியை இதுவகையிலும் பயன்படுத்திக் கொள்ள எண்ணுகிறோம். உண்மையில் எங்கள் வீரப்பணியை நீங்கள் செய்தபின், அதற்காக எங்கள் சார்பில் அவருக்காக ஒரு சிற்றரசையும் தர எண்ணியிருக்கிறோம்” என்றான். பாரத வீரன் நிமிர்ந்திருந்தான். ‘வீரப்பணி’ என்ற சொல் உலாவின் உயிர்ப்பை அரண்மனைக்குள்ளும் கொண்டு வந்திருந்தது. பட்டி மந்திரிக்கோ தலை சுழலத் தொடங்கிற்று. அவன் ஆவலுடன் சிற்றரசுப் பதவியைக் கனவு கண்டிருந்தான். இப்போது கனவாகவே அது அவன் முன் வந்து ஆடிற்று. ஆனால் அந்த நனவு அவனைக் கனவு மண்டலத்திற்கே அனுப்பி அதில் சுழல வைத்தது. பாரத வீரன் வணக்கம் செய்தான். “பால் குடிப்பது பூனைக்கு ஒரு தொழிலல்ல அரசே! பழந்தின்பதற்குக் குரங்குக்குக் கூலியா வேண்டும். அதுபோலவே வீரப்பணி செய்ய எனக்குத் தூண்டுதல் எதுவுமே தேவையில்லை. ஆனால் உங்களுக்கு அதனால் என் அன்பையும் மதிப்பையும் காட்ட ஒரு வாய்ப்புக் கிடைத்தது பற்றி மகிழ்கிறேன். எனக்கு இதுவரை மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் உண்மை தவறாமல் நடந்து கொண்ட பாங்கன் பட்டி மந்திரி. அவன் வாழ்க்கையின் ஆர்வத்தையும் தாங்கள் இதனாலேயே நிறைவேற்றத் திருவுளம் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே தங்கள் வீரப்பணி எதுவானாலும் கூறுக. அதற்காக என் உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்படைக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன். “வெற்றி வெற்றி, பாரத வீரனுக்கு மும்முறை வெற்றி! வெற்றி, மேதை பட்டி மந்திரிக்கு மும்முறை வெற்றி” என்ற குரல்கள் அவையோரிடையேயிருந்து எழுந்தன. வேண்டுகோள் அரசன் அரசி வேண்டுகோள் மட்டுமல்ல; நாட்டு மக்கள் அனைவரின் வேண்டுகோள் என்பதை இது விளக்கிக் காட்டிற்று. அரசன் அரசியை நோக்கினான். அரசி பேசினாள். “வீர கற்கியே, தனிக்காட்டின் எல்லையில் என் தாய் வழியாக வந்த ஒரு சிற்றரசு இருக்கிறது. என் மரபினம் பழைய பாண்டியர் மரபின் ஒரு கிளை. அங்கே பன்னிரண்டு ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. சுற்றியுள்ள இடமெல்லாம் பெய்யும் மழையில் அங்கே ஒரு துளிகூட விழுவதில்லை. இடம் மேடானதால் வெளியிலிருந்து தண்ணீரும் வருவதில்லை. ‘மாந்துவாய்’ என்ற ஒரு பூதம் அப்பக்கம் வரும் முகில்களை உறிஞ்சிவிடுகிறது என்று ‘கணி’கள் கூறுகிறார்கள். அதற்கு ஒரே ஒரு கழுவாய்தான் இருப்பதாய் அவர்கள் கூறுகிறார்கள். அங்குள்ள சாத்தன் கோயிலில் ஒரு வெண்கலக் குதிரை இருக்கிறது. அதன் மீதுள்ள ஒரு பொறியைத் திருகினால், அது முகில் மண்டலம் சென்று விடுமாம்! ஆனால் செல்பவர்கள் கண்களைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டுமாம்! முகிலைக் குடிக்கும் மாந்துவாய்ப் பூதம் முகிலுடன் அதை விழுங்குமாம். உள்ளே செல்பவர் வீரராக இருந்தால் அச்சமயம் முகிலையும் பூதத்தையும் கிழித்துவிட முடியுமாம்! இந்த வீரப்பணியை நீங்கள் இருவரும் செய்து, என் தந்தையர் நாட்டுக்கு மழை பெய்விக்க வேண்டுகிறேன்” என்றாள். பாரத வீரன் இதற்கு இணங்கினான். பட்டி மந்திரி கலக்கமடைந்தான். “ஆண்டே, இந்த வேலையை உங்களைப் போன்றவர்கள்தான் செய்யமுடியும். எனக்குக் கேட்கவே பயமாயிருக்கிறது. நான் வரமாட்டேன்” என்றான். பாரத வீரன் முதல் தடவையாகப் பட்டி மந்திரியை எரிப்பது போலப் பார்த்தான். ஆனால் அரசன் பட்டி மந்திரியை எளிதில் மாற்றினான். “இந்த வீரப்பணியில் பாரத வீரனை ஊக்குவதற்காகத்தானே உனக்குச் சிற்றரசு தருகிறோம். நீ பாரத வீரனுடன் செல்லவில்லையானால், சிற்றரசு எப்படி கிடைக்கும்?” என்றான். பட்டியின் அச்சம் பெரிதாயிருந்தது. ஆனால் சிற்றரசின் ஆவல் இன்னும் பெரிதாயிருந்தது. அவன் வேண்டா வெறுப்பாக இணங்கினான். இந்த ஏற்பாடினால் அவர்கள் மீண்டும் சில நாள் அரண்மனையிலேயே தங்க வேண்டியதாயிற்று. ஆனால் பட்டி மந்திரி முன்போல அரண்மனை வாழ்வை அனுபவிக்க முடியவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள், பறந்து வானில் செல்ல வேண்டுமே என்ற கவலை, உண்ணும் ஒவ்வொரு பிடியின் சுவையையும், பருகும் ஒவ்வொரு மடக்கின் குளிர்ச்சியையும் கெடுத்தது. குறித்த நாளில் அரசியின் மரபுரிமைப் பகுதிக்கு எல்லோரும் சென்றனர். பறக்கும் குதிரையை அவ்வூரார் ‘நம்பிரான்’ என்று அழைத்தனர். அது குதிரையைவிடப் பெரிதா யிருந்தது. ஆனால் குதிரையைவிட உயிர்த் துடிப்புடையதாகத் தீட்டப்பட்டிருந்தது. அது ஒரு சுழலும் அடுக்குச் சட்டத்தில் ஓர் இருப்புலக்கை மீது மாட்டப்பட்டிருந்தது. கீழடுக்கில் மக்கள் தூக்கும் தண்டயங்கள் இரண்டு மூன்று நாற்றிசையிலும் இருந்தன. இதை மக்கள் முழந்தாளளவாகத் தொங்கும் கையில் தூக்கிக் கொண்டு சுற்றுவர். சுழற்சி வேகமான பின், தொங்கும் கை இடுப்புயரம், நெஞ்சுயரம், தோளுயரம் என்று உயரும். வேகம் இன்னும் மிகுதியான பின் கைகள் தலைக்கு மேல் முழு நீளமாக உயரும். அடுக்குச் சட்டத்தின் அடி அடுக்கிலும் ஒவ்வொரு மேலடுக்கிலும் தனித் தனி சுழல் பொறிகள் இருந்தன. அவற்றை இயக்கும் ஆட்களும் இருந்தனர். ஒவ்வொரு அடுக்கின் பொறியும் மேலடுக்கைச் சுழற்றிற்று. இங்ஙனம் சுழற்றிச் சட்டத்தின் மேல் சுழற்சிச் சட்டமாகச் சுழன்று கொண்டே தொங்குகை உயரத்திலிருந்து தூக்குகை உயரமாக விரைந்து சுழன்று உயரும் குதிரை முற்றிலும் பறப்பது போலவே தோற்றமளிக்கும். குதிரை தலையுச்சியில் ஒரு திருகு முனை இருந்தது. இதைக் குதிரைமேலிருப்பவர் திருப்பினால், குதிரை சட்டத்தை விட்டே பறந்து முகில்மேல் செல்லும் என்று பாரத வீரனிடம் கூறப்பட்டது. இவ்வண்ணம் பறப்பதற்குரிய நேரத்தை ஒரு குழலூதி அறிவிப்பதாகவும் அவனுக்குக் கூறப்பட்டது. பாரத வீரன் ‘நம்பிரான்’ முதுகின்மேலும், பட்டிமந்திரி அவன் பின்னும் ஏற்றப்பட்டனர். குதிரையுடன் இருவர் உடலும் மிக உறுதியாகப் பிணிக்கப்பட்டன. பின் இருவர் கண்களும் மிக இறுக்கமாகக் கட்டப்பட்டன. ‘நம்பிரான்’ இதன் பின்னரே சுழலத் தொடங்கிற்று. அச்சுழற்சியைக் காண்பவர்கள் தலைகளே சுழன்றன. அதன் மீதிருப்பவர் நிலையைக் கேட்க வேண்டிய தில்லை. சுழற்சிப் பொறிகளை இயக்குபவர்கூட நீடித்த பயிற்சியின் பின்பே அத்தொழிலில் அமர்ந்தனர். ஆகவே பட்டி மந்திரி அச்சுழற்சியிலேயே நிலை கலங்கினான். கண்ணைக் கட்டும்போதே கண்கள் கலங்கியிருந்தன. கவலையால் குரல் கம்மியிருந்தது. சுழற்சியின்போது அவன் கோவென கதறினான். ஆனால் தொண்டை கம்மியிருந்தாலும் அந்தக் கதறலின் ஒலியலைகள் சுழன்று சுழன்று வந்ததாலும் அது கீழிருப்பவருக்கு ஒரு புதுவகை இசையலையாகத் தோற்றின. குதிரைப் பொறியைத் திருகுவதற்குரிய குழலூதிற்று. பாரத வீரன் பொறியைத் திருகினான். அக்கணமே குதிரை மேலெழுந்து பறப்பதாக அவர்கள் எண்ணினார்கள். பட்டி மந்திரி பொறி கலங்கினான். பாரத வீரன் செயற்கரிய செய்யும் பெருமித வீறுடன் நிமிர்ந்து, கட்டிய கண்ணுடனே பத்துப் திசைகளையும் பரக்க நோக்கினான். உண்மையில் குதிரை சுழற்சித் திட்டத்திற்கு மேல் பறக்கவில்லை. அரசனும், அரசியும் வகுத்திருந்த மாயத் திட்டம் இதுவே. வானத்தில் பறப்பதாக அவர்கள் நம்பும்படி எல்லாம் செய்யப்பட்டிருந்தன. பூதம் அவர்களை விழுங்குவதாகத் தோன்றும் மாயத்துக்கும் திட்டம் செய்யப்பட்டிருந்தது. இதனால் வானகத்தில் அவன் செய்யும் போரை மண்ணகத்திலிருந்தே மக்களெல்லோரும் பார்க்க முடிந்தது. பறக்கும் குதிரையின் உயரத்துக்கு மேல் உயர்ந்த கம்பங்கள், கோபுரங்கள் நாலு திசையிலும் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வண்ண வண்ண விசை ஒளி விளக்குகள், விசை ஆவித்துரத்திகள் வைத்து இயக்கப்பட்டன. இவற்றால் நம்பிரான் மீது வெப்பக் காற்று, குளிர் காற்று, புழுக்கக் காற்று, மூடிய கண்ணை உறுத்தும் ஒளிக் கதிர்கள் ஆகியவை செலுத்தப் பட்டன. இவற்றால் பாரத வீரனும் பட்டி மந்திரியும் பலபடி உயரத்திலுள்ள காற்று மண்டலம், வான மண்டலங்களைக் கடப்பதாக எண்ணினார்கள். இறுதியிலுள்ள புழுக்கக் காற்றுத் துருத்தி அவர்களை மேகமண்டல உணர்ச்சியுடையவராக்கிற்று. போகும் வழியிலேயே கண்மூடிய வண்ணம் காணும் காட்சிகளை எல்லாம் பாரத வீரன் பட்டி மந்திரிக்குச் சுட்டிக் காட்டினான். “பட்டி, மனிதர் எவரும் செல்லாத இடங்களுக்கு நாம் செல்கிறோம், பார்த்தாயா? இப்போது நாம் காற்று மண்டலம் கடந்து விட்டோம். இதோ பார், ஆவி மண்டலம். மூச்சைக் கெட்டியாக்கிக் கொள். ஆம்! இப்போது நெருப்பு மண்டலத்தை அணுகுகிறோம். ஆ, தோலை செருப்புப் பொசுக்குகிறது பார்! சற்றுப் பொறுத்துக் கொள். ஆகா, இனி சந்திர மண்டலத்தருகில் வந்துவிட்டோம். என்ன குளிர்ச்சி பார். இங்கேயே வாழ்நாள் முழுதும் இருந்துவிடலாம் போலிருக்கிறது. அப்பாடா! வந்துவிட்டோம் முகில் மண்டலத்திற்குள், இனி எந்தக் கணமும் பூதம் நம்மை விழுங்கிவிடும்! விழிப்பாயிரு” என்றான். அவன் கையில் வாள் இருந்தது. பூதத்தின் வயிற்றில் எளிதாகச் செல்லும்படியும், பின் அதை எளிதாகக் கிழிக்கும் படியும் அவன் அதை வாய்ப்பாகப் பிடித்துக் கொண்டிருந்தான். அவர்கள் வாகை நாடகத்தைப் பார்த்த மக்கள் தங்கள் சிரிப்பை, அடக்கமாட்டாமல் மிகவும் தவித்தார்கள். அரசனும் அரசியும் “உரக்கச் சிரிக்காதேயுங்கள்” என்று கைச்சாடை செய்துகொண்டே இருந்தார்கள். “சிரிக்காதேயுங்கள்” என்று அட்டை விளம்பரம் தாங்கிய காவலர் தங்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டே நாலாபுறமும் சென்றார்கள். போராட்ட நாடகத்தின் கடைசிக் காட்சி உண்மையிலேயே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. பட்டுத்துணிகளாலும் மெழுகுக்கம்பிகளாலும் ஒரு பெரிய மேகம் செய்யப்பட்டிருந்தது. அதைவிடப் பெரிய இன்னொரு பூதமும் செய்யப்பட்டிருந்தது. இரண்டும் இரண்டிரண்டு பாதிகளாக இரண்டு கோபுரங்களி லிருந்து இரண்டு சட்டங்களால் நீட்டிப் பிடிக்கப்பட்டிருந்தன. முதலில் மேகச் சட்டம் பாரத வீரனையும் பட்டி மந்திரியையும் கவிந்து கொண்டது. வெளியேயுள்ள பட்டுக்கள் வெண்மையா யிருந்தன. அவற்றின் வழியே ஒளிகள் ஊடுருவின. ஆகவே மேகத்தின் வயிற்றுக்குள் அவர்கள் இருக்கும் நிலையை எல்லோரும் காண முடிந்தது. அடுத்தபடி பூதத்தின் இருபாதிகள் வந்து பொருந்தின. அவை வீரனையும் பாங்கனையும் மேகத்துடன் சேர விழுங்கின. பூதத்தின் வாயாக அமைந்த மின்சாரச் சங்கு அச்சமயம் பூதத்தின் குரல் போலவே ஊதிற்று. அச்சமயம் சிரிப்பை அடக்கியிருந்த மக்களை அதை ஏக்கக் குரலாகவும், அழுகைக் குரலாகவும் மாற்றி நடித்தார்கள். பாரத வீரன் பட்டி மந்திரியிடம் நடப்பதெல்லாம் விளக்கினான். “இதோ, நாம் மேகத்துக்குள் வந்து விட்டோம், பட்டி? இதோ, பூதம் நம்மை விழுங்குகிறது, விழுங்கிவிட்டது. ஆகாகா, எத்தனை பெரிய பூதம், பார்! அதன் வயிற்றுக்குள் நாம் போகப் போகிறோம். உஷார்? விழிப்பாயிரு!” என்று அவன் பேசினான். மக்கள் அழுகுரல் அவன் காதில்பட்டது. “அந்தோ, இது என்ன? நாம் விழுங்கப்பட்டது கண்டு தேவர்களெல்லாமா அழுகிறார்கள்” என்று அதற்குப் பாரத வீரன் சிறந்த விளக்கம் தந்தான். அழுகை நடிப்பின் போது கூட மக்களால் சிரிக்காம லிருக்க முடியவில்லை. “சில தோழர்கள் சிரிக்கிறார்கள். ஞான திருஷ்டியால் நம் வெற்றியை எதிர்பார்க்கும் உயர்தரத் தேவர்கள், முனிவர்கள் இவர்கள்” என்று அவன் இதற்குமுன் புது விளக்கம் தந்தான். அதற்குள் மின்சாரச் சங்கு ஊதிற்று. “பார், பூதம் நம்மை வேகத்துடன் விழுங்கி எக்காளமிடுகிறது. அதை ஒழிக்கிறேன், பார்” என்று அவன் வாளை நாலாபுறமும் மேகப்பை, பூதப்பை ஆகியவற்றிலுள்ளிருந்து வீசினான். வேடிக்கையிடையே கூட, அவன் வீரம் கண்டு மக்கள் வியப்படைந்தார்கள். அவன் வாளால், மேகப்பை முதலில் சின்னாபின்ன முற்றது. அதன் மெல்லிய தூள்கள் வாளைச் சுற்றிப் பின்னை அதன் கூரை மழுக்கின. இதனால் பூதத்தைத் துண்டு படுத்தும் செயல் மிகவும் தடைபட்டது. ஆனால் காற்றையே வெட்டிவிடும் அளவுக்குப் பாரத வீரன் வாளைச் சுழற்றினான். அவன் கைகள் நோவுற்றன. உடல் தளர்ந்தது. அவன் நம்பிரான் குதிரை மீது சாய்ந்தான். பாரத வீரன் உயிர் போயிற்றோ என்று பட்டி மந்திரி நடுக்கம் மிகுதியாயிற்று. அவன் கலங்கினான். வானத்தின் உச்சி மண்டலங்களுக்கிடையில், தனிமையாய் விட்டோமோ என்று திகில் கொண்டான். துயரமும் திகிலும் சேர்ந்து அவன் யாவரும் இரங்கும் வண்ணம் கதறியழத் தொடங்கினான். இச்சமயம் வாகைப் போர் நாடகத்தின் இறுதிக் காட்சி நடைபெற்றது. மக்கள்கூட எதிர்பாராத தனி நிகழ்ச்சி அது. படாரெனப் பறக்கும் குதிரை வெடிப்பது போன்றிருந்தது. பல இடிகள் ஒன்றாய் முழங்கினதுபோல மண்ணும் விண்ணும் அதிர்ந்தது. குதிரை இத்தடவை உண்மையிலேயே வானத்தி லெழுந்து தூவிற்று. பாரத வீரனும் பட்டி மந்திரியும் நம்பிரான் ஆடற்களத்திலிருந்து அரைக் கல் தொலைவிலுள்ள ஒரு கயிற்று வலையில் போய் விழுந்தனர். தொய்யும் இழையால் வலை செய்யப்பட்டிருந்தது. ஆகவே அவர்கள் உடலுக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. ஆனால் அதிர்ச்சி, அச்சம் திகில் ஆகியவை பட்டி மந்திரியின் உயிரைக் குற்றுயிராக்கின. உணர்வற்ற நிலையில் குதிரை மீது சாய்ந்திருந்த பாரத வீரன், வெடி அதிர்ச்சியால் உணர்வு பெற்றான். அடுத்த கணம் விழுந்த அதிர்ச்சியால் அவன் மீட்டும் உணர்விழந்தான். கடைசி நிகழ்ச்சிக்குரிய தனித்திட்டம் யாருமறியாமல் அரண்மனை முதல்வன் செய்தது. அவன் குதிரையின் உடலுக்குள் மிக ஆற்றல் வாய்ந்த வாணவெடிகள் வைத்திருந் தான். வால் வழியாக அது சரியான நேரத்தில் தீ வைக்கப்பட்டது. இடி அரவமும் அதன் விளைவும் இந்த வாண வெடிகளின் செயல்களே. ஆனால் முன்னெச்சரிக்கையாக விழும் இட முழுவதும் அரண்மனை முதல்வன் தொய்வுடைய இழைகளால் வலையிட்டுக் காப்புச் செய்திருந்தான். அரன், அரசி, மக்கள் ஆகியவர்களுக்குக் கூட இறுதி நிகழ்ச்சி அச்சத்தையும் கலக்கத்தையும் ஊட்டிற்று. ஆனால் முதல்வன் இடர் எதுவுமில்லை என்று அவர்கள் அச்சம் அமைத்தான். திட்டத்தை அவர் விளக்கிய பின்தான் அவர்கள் அனைவரும் அடக்கிய வேகமெல்லாம் சேர்த்து விலாப் புடைக்கச் சிரித்தார்கள். அதிர்ச்சியிலிருந்து வீரனும் பாங்கனும் மீளப் பல மணி நேரம் ஆயின. பாரத வீரன் போராட்டத்தில் மிகவும் சோர்ந்து விட்டான். அவன் உடல் தேற இரண்டு மூன்று நாளாயிற்று. ஆயினும், பூதம் ஒழிந்தது என்று கேட்டு அவன் மகிழ்ந்தான். இச்செய்திக் கேற்ப அரசியின் நாடாகிய நிலப்பகுதியில் எங்கும் மழை பொழிந்தது. பாரத வீரன் மகிழ்ச்சியை இது இன்னும் பெருக்கிற்று. மழை பெய்ததும் அரசர் திட்டத்தில் ஒரு பகுதியே, கோபுரங்களிலிருந்து ஆற்றல் வாய்ந்த விசையூற்றுக்கள் திவலைகளை வானளாவ வாரி இறைத்தன. அவை திரும்பவும் விழும் சமயம் முற்றிலும் செயற்கை மழையாயிற்று. அது இயற்கை மழைபோலவே இருந்தது. அதனிடையே வீசிய ஒளி விளக்கங்கள் மின்னலைப் பறித்தன. வாணவெடிகள் இடியாக நடித்தன. அரசனும் அரசியும் வாக்களித்தது போல, பட்டி மந்திரிக்கு ஒரு நாடு அளிக்க ஏற்பாடாயிற்று. மணிப்புலவன் இச்சமயம் பாரத வீரனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டான். அவன் இளவரசியிடமிருந்து செய்தி கொண்டு வந்ததாக அறிவித்தான். “உலாவை இத்துடன் முடிக்கலாம். இளவரசி விரைவில் இங்கேயே வருவாள். இங்கேயே பட்டி மந்திரியின் சிற்றரசுப் பட்டம் நடைபெறும். இச்சமயத்திலேயே உங்களுக்கும் இளவரசிக்கும் திருமணம் நடைபெறும். பேரரசராக உங்கள் முடிசூட்டும் நடைபெறும். பட்டி மந்திரி சிற்றரசாளச் சென்ற பின், இங்கிருந்தே பேரரசாட்சியை நீங்கள் தொடங்கலாம்” என்றான் அவன். இரட்டை முடிசூட்டு, திருமணம் ஆகியவற்றுக்கான விழா ஏற்பாடுகள் தொடங்கின. 14. பட்டி மன்னன் பாரத வீரனுக்கும் இளவரசிக்கும் திருமணம் அரச ஆடம்பரங்களுடனே நிறைவேறிற்று. பாரத வீரன் சார்பில் தனிக்காட்டுப் பண்ணை வேந்தன் எல்லாச் செலவும் ஏற்றான். இளவரசி சார்பில் அதுபோல யாவும் அரசியே ஏற்றாள். மணப்பந்தலிலேயே மணிப்புலவன் பாரத வீரனுக்கும் இளவரசிக்கும் பொன்முடி சூட்டினான். அதையடுத்துப் பாரத வீரனே பட்டி மந்திரியை மன்னனாக்கி முடிசூட்டு விழா ஆற்றினான். விழாக்காலத்தில் கூட இளவரசி கிளர்ச்சியற்றவளா யிருந்தாள். பாரத வீரன் அக்கரையுடன் என்ன கவலை என்று உசாவினான். அவள் தேம்பித் தேம்பி அழுதாள். எதுவும் கூறவில்லை. ஆனால் மணிப்புலவன் பாரத வீரனைத் தனியாக அழைத்து விளக்கம் கூறினான். பாரத வீரன் வெற்றிப் புகழால் வஞ்சிப் பூதம் என்ற அரக்கன் பொறாமை கொண்டிருந்தான். அவன் தன் மாயத்தால் இளவரசியை ஒரு ஆண்டுக் காலத்துக்கு ஆணாக்கிவிட்டான். அந்த ஆண்டு முடிவில், பட்டி மந்திரிக்குப் பத்தாயிரம் அடிகொடுத்தால்தான், மாயம் தீரும் என்றும் கூறினான். பட்டி மந்திரி இதைச் சிறிதும் ஏற்கவில்லை. ஆனால் ஆண்டு முடிவில் தான் ஏற்கச் செய்வதாக மணிப்புலவன் வாக்களித்தான். பட்டி மன்னன் ஒரு சில நாட்களில் தன் நாட்டுக்குப் புறப்பட்டான். அந்த நாடு, மலை நாடு, அதன் குடிகள் வேட்டுவக் குடிமக்களாகவே வேட்டைக் காடேயாகும். குடிபடைகளும் குறவர் குறத்தியராகவே இருந்தனர். அவர்கள் புடைசூழ அவன் தந்தப் பல்லக்கில் புறப்பட்டான். நன்றி மறவாமல் அவன் தன் பழைய கழுதை நண்பனை இப்போதும் தன் பின்னால் அணி செய்வித்து இட்டுச் சென்றான். பாரத வீரனிடமும், அரசன் அரசியிடமும், மணிப்புலவனிடமும் மற்றச்சீட நண்பர்களிடமும் அவன் பிரியா விடை பெற்றுச் சென்றான். பட்டி மன்னனுக்கு அளிக்கப்பட்ட நாட்டின் பழைய பெயர் மலைப்பட்டி. அது இப்போது பட்டி நாடு என்று புதுப் பெயரிடப்பட்டது. அதன் குடிகள் ஆயிரத்துக்கு மேற்பட்டிருந் தனர். தலைநகரில் நூறு வீடுகள் இருந்தன. அதைச் சூழ நூற்றுக்கு மேற்பட்ட சிற்றூர்கள் அல்லது சிறு குப்பங்கள் இருந்தன. மானும், மிளாவும், முயலும், தேனும், தினைமாவும், புல்லரிசியும் அங்கே மக்கட் செல்வங்களாயிருந்தன. நரிப்பல்லும் புலிநகமுமே அணிமணிகளாயிருந்தன. உப்பும் அரிசியும் மிளகும் நாணயங்களாயிருந்தன. இப்புதுமைகள் கண்டு பட்டி மகிழ்ந்தான். புது மன்னனை வரவேற்கும் ஆரவாரம் மலைகளுக்கும் காடுகளுக்கும் உயிர் கொடுத்தன. பட்டி மன்னன் வாழ்க, பாரத வீரன் கண்டெடுத்த மணிமுத்து மாண்புறுக! என்ற எழுத்துக்களுடன் விருதுக்கொடிகள் எங்கும் பறந்தன. குறவர் கோமான், வேளிர்குடி விளக்கு, நாட்டுக் குடியரசன் எனப் புலவர் அவனைப் புதுப் பெயர்களிட்டுப் புகழ் பாடினர். பட்டி மந்திரியின் முதல் அரசியல் ஆணை எல்லாரையும் அதிர்ச்சியுறச் செய்தது. ஆயினும் அது குடி மக்களுக்கு ஒரு புதுக்கிளர்ச்சி தந்தது. அவன் அமைச்சரை விளித்தான். “நம்மிடம் புகழ் பாடும் புலவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று அவன் கேட்டான். “நூறு பேருக்கு மேல் உள்ளனர். மணிப்புலவர் இன்னும் பலருக்குப் பயிற்சி அளித்து வருகிறார்” என்றான் அமைச்சன். “விழாக் காலத்துக்குத்தான் புகழ்ப் பாடல்கள் தேவை, விழா முடிந்து விட்டது. நம் நாடு மலை நாடு, இங்கே உழைத்தால்தான் செல்வம் பெருகும். புகழ் பாடினால் பெருகாது. இது உங்களுக்குத் தெரியுமல்லவா? மன்னரை உண்மையாகப் பெருமைப்படுத்தும் புலவர்கள் பாட்டாளிகள் தான். ஆகவே புதுப்புலவர்களை உண்டு பண்ண வேண்டும். உழைப்பவர் மட்டும் நம் நாட்டில் இருக்கட்டும். மற்றவர்களை மணிப்புலவன் தலைமையில் தற்போது ஏதேனும் பரிசு கொடுத்து பாரத வீரனையே பாடும்படி அனுப்பிவிடுங்கள்” என்றான். அமைச்சன் முதலில் மிரள மிரள விழித்தான். பின் ஏதோ கூற நாவெடுத்தான். பட்டி, “நான் மன்னனா? நீங்கள் மன்னரா?” என்று கேட்டான். அமைச்சன் மறு பேச்சுப் பேசவில்லை. புலவர்களாகக் கருதப்பட்ட அத்தனை பேரையும் மணிப்புலவனையும் பாரத வீரனிடமே அனுப்பிவைத்தான். “ஆயிரம் குடி மக்களாம், அதில் ஒரு நூறு புகழ் பாடும் சோம்பேறிகளாம் இந்நிலை ஒழிந்தது. “தோட்டத்தில் பாதி கிணறாயிருந்தால் கூடப் பயனில்லை. அது குத்துக் கல்களா யிருந்தால் என்ன ஆகும்?” என்று பட்டி மன்னன் தன் செயலுக்கு அரசியல் விளக்கம் தந்தான். அவன் அடுத்த செயல் மன்னனான தனக்கு அளிக்கப்பட்ட விருதுப் பெயர்களை ஒழிப்பதாயிருந்தது. இதுவும் அரசர் ஆணை விளம்பரமாக்கப்பட்டது. “தாய் தந்தையரிட்ட பெயரை விட உயர்ந்த பெயர் ஒருவருக்கு எப்படி இருக்க முடியும்? விருதுப் பெயர்கள் நம் மனைவி மக்கள் நாவில் ஏறாதே? அவற்றை உச்சரிப்பதற்குள் அவர்கள் உண்ட சோறு வீணாய் விடுமே. ஆகவே இந்த வீண் பெயர்கள் வேண்டாம். மன்னரும் மனிதராகவே இருக்கட்டும்” என்றான். பாரத வீரன் பாங்கன் பாரத வீரன் தத்துவங்களுக்கு அடிமைப்பட்டவனல்ல. பாரத வீரன் வீரத்தைத் தாண்டிய புரட்சிக் கருத்துக்கள் அவன் கல்லா உள்ளத்தில் தாண்டவ மாடின என்று குடிகள் கண்டார்கள். அமைச்சர்கள் அவனிடம் பேச அஞ்சினார்கள். பட்டம் விருதுகளைப் போலவே பகட்டாடை அணிமணிகளையும் பட்டி மன்னன் விலக்கினான். பதவியின் சின்னமாக ஒரே ஒரு பட்டாடையை மட்டும் மேற்கொண்டான். அதையும் மன்னனாக வீற்றிருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவன் வெறுத்தான். மனிதருள் மனிதனாக உடுத்து, உண்டு மற்றவர்கள் போல வேலை செய்யத் துணிந்தான். அத்துடன் அவன் வேலை குடி மக்கள் ஐவர் செய்யும் வேலைக்கு இணையாய் இருந்தது. தன் வருவாயை அவன் தனியாக ஒதுக்கி வைத்தான். அத்துடன் ஆட்சிக்காக அமைச்சன் ஊதியத்தில் மூவிரட்டி எடுத்துக் கொண்டான். மன்னர் ஆடம்பரச் செலவு குறைந்ததால், இந்தத் தொகை விரைவில் பெருகிற்று. “முதல் கொலு மன்றத்தையே அவன் தன் முறை மன்றம் ஆக்கினான். என் குடி மக்களிடையே குறைப்பட்டோர் வருக, வழக்காடுபவர் வருக” என்று அவன் அறிக்கையிட்டான். நிலப்பூசல், உரிமைப் பூசல்களை அவன் தீர்த்த வகை புதுமை வாய்ந்ததாயிருந்தது. “உன்னால் எவ்வளவு உழமுடியும்? அதை நீ வைத்துக் கொள், உன் உழைப்பால் எவ்வளவு பலன் வரும்? அது உன் வருவாய்” என்று அவன் எளிதாகத் தீர்ப்பு வழங்கினான். வழக்குரைஞர், அறிஞர் அடிக்கடி இடைமறித்தார்கள். “சட்டம், பழயை வழக்கம், மரபு” என்று பேசினர். “இவற்றுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள். “கட்டாயம் கொடுக்க வேண்டும். அவை நமக்குத் தரும் மதிப்பு என்ன? அவற்றால் பொதுவாக மக்களுக்கு என்ன நன்மை?” என்று அவன் கேட்டான். அவன் பேதமையை எதிர்க்க எல்லாரும் அஞ்சினார்கள். தனி மனிதர் வழக்குகளில் அவன் மிரட்சியடைவது உறுதி என்று அரசியல்வாதிகள், சட்ட அறிஞர்கள் கருதினர். முதல் வழக்கை அவர்கள் ஆவலுடன் கவனித்தனர். ஒரு கிழக்குறவனும் தையல்கார இளைஞனும் வழக்காளராக வந்தனர். இளைஞன் தன் வழக்கைக் கூறினான். “அறிவாற்றல் மிக்க அரசே சில நாட்களுக்கு முன் இந்தப் பெரியார் ஒரு முழுச் சதுக்கமுள்ள ஒரு துணியைக் கொண்டு வந்தார். ‘இது ஒரு தொப்பிக்குப் போதுமா?’ என்றார். ‘தாராளமாகப் போதும் என்றேன். ‘இரண்டு’ தொப்பிகளுக்கு வருமா!” என்றார். ‘தட்டிக் கட்டி வரும் என்றேன். அவர் அதனுடன் விடவில்லை. ‘மூன்று கூடத் தைக்கலாமே!’ என்றார். ‘தைக்கலாம்’ என்றேன். அதன் பின் ‘நாலு’ ஐந்து, எனத் தொப்பிகளின் எண்ணிக்கை ‘ஏழு’ வரை சென்றது. ‘ஏழு போதுமா?’ என்றேன். ‘போதும்’ என்றார். நான் அவர் கூறியபடியே தைத்துக் கொடுத்தேன். ஆனால் தைத்தபின் அவர், தொப்பிகள் வேண்டாம். கூலியும் தரமாட்டேன். துணியைக் கொடு’ என்று மல்லுக்கு நிற்கிறார்’ என்றான். ‘இவன் கூறுவது உண்மைதானா?’ என்று கேட்டான், பட்டி மன்னன். “ஆம், அரசே! ஆனால் முழு உண்மை அறிய அந்தத் தொப்பிகளைக் காட்டச் சொல்லுங்கள்” என்றான், கிழவன். இளைஞன் தன் சிறு சட்டைப்பைக்குள்ளிருந்து ஏழு சிறு துணுக்குகளை எடுத்துக்காட்டினான். ஐந்து தொப்பிகள் ஐந்து விரல்களிலும் போடத் தக்கவையாயிருந்தன. இரண்டு பச்சைக் குழந்தைளின் சுண்டுவிரலுக்கே பொருத்தமாயிருந்தன. ‘இவை தான் தொப்பிகள்’ என்று கூறியவுடனே, எல்லாரும் சிரித்தனர். ஆனால் பட்டிமன்னன் சிரிக்கவில்லை. “உன் நாட்டு மக்கள் இளைஞன் செயலைத்தான் பாராட்டுகிறார்கள், பார்த்தாயா? நீ என்ன சொல்கிறாய்” என்று மன்னன் கிழவனைப் பார்த்துக் கேட்டான். “நான் எனக்கென்று கூறித் தானே கேட்டேன்? இவை எனக்கு என்ன பயன்? தீர ஆராய்ந்து நீதி கூறுங்கள் அரசே!” என்றான் கிழவன். “தனக்கென்று கூறித்தான் கேட்டார். அரசே! தன் தலைக்கென்று கூறவில்லை. இது அவருக்குப் பொருத்தமாகத் தான் இருக்கிறது. ஐந்து விரல்களுக்கும் ஐந்து பொருந்தும். இரண்டை அவர் குழந்தைகளுக்கே சுண்டு விரல்களில் போடலாம்” என்றான் இளைஞன். சிரிப்பு இன்னும் அவையெங்கும் கலகலத்தது. இளைஞன் அத்துடன் விடவில்லை. மேலும் பேசினான். “என்மீது குற்றமில்லை, ஆண்டே! கொடுத்த துணியில் நான் ஒரு தணுக்குக்கூட எடுக்கவில்லை. அத்தனையும் எடைக்கெடை சரியாய் இருக்கும். சொல்லப் போனால் நூலெடை தான் சற்றுக் கூடியிருக்கும்” என்றான். அவன். “நீ முன்பே துணியை நிறுத்துப் பார்த்தாயா?” “ஆம், அரசே!” என்று இளைஞன் முன் பின் எடைக் கணக்கைக் காட்டினான். மன்னன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவன் மூளை என்ன முடிவு காணக்கூடுமோ என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அவன் அமைச்சரை நோக்கினான். “இதில் முடிவு கூறுவது மிக எளிதே. இதற்குச் சட்ட அறிஞர் உதவி தேவைப்படாது. கிழவன் பேராசைப்பட்டான். அவன் துணியை அவன் இழக்கட்டும். இளைஞன் குறும்புக்காரன், அவன் செய்த உழைப்பை அவன் இழக்கட்டும். தொப்பிகள் அரசியல் உடைமையாகட்டும்” என்றான். “அவை எதற்குப் பயன்படும், அரசே!” என்று அமைச்சன் ஆவலுடன் கேட்டான். “ஏழைச் சிறுவர் குழந்தைகளுக்கு அவை விளையாடக் கொடுக்கப்படும்!” என்றான் மன்னன். மன்னன் முடிவை வழக்காடிகளே முனகாமல் ஏற்று மகிழ்ந்தனர். மக்கள் மகிழ்ச்சிக்குக் கேட்கவேண்டியதில்லை. சட்ட அறிஞரும் அமைச்சரும் வியப்புற்றனர். அடுத்தபடியாகக் கோலேந்திய கோமான் ஒருவனும் குழைந்து நடந்த குள்ளன் ஒருவனும் வந்தனர். குள்ளன் பேசினான்: “மதி மன்னரே நான் இந்தக் கோமானுக்குச் சில நாட்களுக்குமுன் பத்து மாணிக்கங்களை இரவலாகக் கொடுத்தேன். அதைக் கேட்கச் சென்றேன். ‘கைப் பிரம்பால் என்னை ஓங்கி, கொடுத்துவிட்டேன்டா, போ’ என்றான். தேவரீர் உண்மை கண்டு என் பொருளை எனக்கு வாங்கித் தரும்படி வேண்டுகிறேன்” என்றான். மன்னன் கோமானை நோக்கினான். அவன் “நான் கொடுத்துவிட்டேன், அரசே! வேண்டுமானால் சத்தியம் செய்து சொல்கிறேன்” என்றான். மன்னன் இப்போது குள்ளனை நோக்கினான். “அவன் தரவேயில்லை அரசே. எங்கே அவன் சத்தியம் செய்யட்டும், பார்ப்போம்! சத்தியம் செய்துவிட்டால், நான் என் பணத்தை இழக்க ஒப்புகிறேன்” என்றான். கோமான் முகம் குளிர்ந்தது. அதை மன்னன் கவனித்தான். அவன் குழைவுடன் குள்ளன் பக்கம் திரும்பினான். “அப்படியே நான் சத்தியம் செய்கிறேன். நீ இந்தக் கோலைச் சற்று வைத்துக்கொள்” என்றான். குள்ளன் கோலை ஏந்தினான், “கடவுள் சான்றாக, நான் மாணிக்கங்களை, இவன் கையில் கொடுத்துவிட்டேன். இது மெய், மெய், முக்காலும் மெய்” என்று கோமான் சத்தியம் செய்தான். குள்ளன் முகம் வியப்பில் ஆழ்ந்தது. ஆனால் அவன் கம்பைப் கோமான் கையில் கொடுத்துவிட்டுத் தன் வாக்குறுதிப் படி மன்னரை வணங்கிச் சென்றான். கோமானும் மன்னனுக்கு வணக்கம் தெரிவித்து விடை பெற்றான். குள்ளன் தளர்ந்த நடையையும், கோமான் நிமிர்ந்த நடையையும் பட்டி மன்னன் கூர்ந்து கவனித்தான். அவன் இருவரையும் திரும்பவும் அழைப்பித்தான். அவன் கோமானிடம், “அந்தக் கோலை இப்படிக் கொடுங்கள்” என்றான். வியப்புடன் கோமான் அதைக் கொடுத்தான். மன்னன் குள்ளனிடம் அதைக் கொடுத்தான். “தம்பி, உனக்கு இதன் தேவை பெரிது. எடுத்துக்கொள். உன் மாணிக்கங்கள் இப்போது உண்மையிலேயே உன்னை அடைந்துவிட்டன” என்றான். குள்ளனுக்கு ஒன்றும் புரியவில்லை. “அது எப்படி, அரசே! இந்தக் கோல் எங்கே, என் ஒப்பற்ற மாணிக்கங்கள் எங்கே?” என்றான். ‘எங்கே என்று காட்டுகிறேன் பார்” என்று கூறி மன்னன் கோலை வாங்கி முறித்தான். மாணிக்கங்கள் தெறித்து விழுந்தன. எடுத்துப் பார்த்த போது பத்து மாணிக்கங்கள் சரியாய் இருந்தன. குள்ளன் மன்னனுக்கு வணக்கம் செய்து மாணிக்கங் களுடன் சென்றான். இத்தடவை மக்கள் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அமைச்சரும், சட்ட அறிஞரும் இப்போது அவன் காலடியில் விழுந்தனர். “இனி எங்களுக்குச் சட்டமும் வழக்கும் தேவையில்லை அரசே! நீங்களே இனி எங்கள் சட்டம், நீங்கள் இனி இந்த நாட்டின் வழக்கத்துக்கு மூல முதல். இனி உங்கள் சட்டம்தான் நாட்டுச் சட்டம்” என்றனர். பட்டி மன்னன் சிரித்தான். “ஆம். ஆனால் இதைச் சொல்லும் நீங்கள்தான் அந்தச் சட்டத்துக்கு மேல்வரி. இதைப் பார்த்து ஆரவாரத்துடன் வரவேற்றார்களே இந்த மக்கள்தான் அதன் அடிவரி” என்றான். பட்டி மன்னனிடம் வந்த மூன்றாவது வழக்குக் குடும்ப வழக்காயிருந்தது. பொது வழக்குகளில் இருதரப்புகள்தான் இருக்கும். இந்தப் புதுமையான வழக்கில் மூன்று தரப்புக்கள் இருந்தன. ஒரு பெண்ணை ஒரு இளைஞன் புலியிடமிருந்து காப்பாற்றினான். இளைஞன் அவளை மணம் செய்து கொள்ள விரும்பினான். அவளும் இணங்கினாள். ஆனால் அவள் அன்னை அவளைத் தன் அண்ணன் பிள்ளைக்கு வாக்களித்திருந்தாள். அவள் தந்தையோ அவளைத் தன் தங்கை மகனுக்கு வாக்களித்திருந்தான். பெண் தன்னைக் காதலித்தவனுக்குத்தான் மாலையிட வேண்டும் என்றாள். தந்தை தன் மடியில் தவழ்ந்த தன் தங்கை மகனுக்கே அவள் உரிமையாக வேண்டும் என்றான். “என் அண்ணன் மகன் பிறந்த பின்பே மற்ற இருவரும் பிறந்தனர். முதல் வாக்குறுதி அவனுக்கே உரியது” என்றாள். பட்டி பெண்ணை நோக்கிப் பேசினான்: “நங்கையே! இப்போது இதன் தீர்ப்பு உன்னையே பொறுத்திருக்கிறது. நான் சொல்கிறபடி செய்தால் உன் விருப்பமும் நிறைவேறும். தாய் தந்தையர் மனமும் குளிரும். அதன்படி செய்வாயா?” என்றான். “என் விருப்பம் நிறைவேறினால் எதுவும் செய்கிறேன்” என்றாள் நங்கை. மன்னன் அவள் காதலனை நோக்கினான். “அன்பனே, நீ அவளைக் காப்பாற்றினாய். அவள் உள்ளத்தை உனதாக்கினாய். அவள் தாய் தந்தையர் விருப்பத்தை நீ மதிக்க வேண்டுமல்லவா?” என்றான். “என் காதலியைப் பெறுவதனால், அதற்காக எதுவும் செய்யத் தடையில்லை” என்றான் அவன். மன்னன் தீர்ப்புக் கூறினான். “பெண் அவள் காதலனை மணந்து கொள்ளலாம். ஆனால் மணக்குமுன் தாயின் அண்ணன் மகன் திருமணத்தை அவள் செய்து வைக்க வேண்டும். அதற்கான செலவை அவள் தேடிப் பெறவேண்டும். அத்துடன் தந்தையின் உடன் பிறந்தாள் மகன் திருமணத்தை அவள் காதலன் முடிக்க வேண்டும். அதற்கான செலவை அவன் தேடிப் பெற வேண்டும். இந்த இரண்டும் முடிந்தபின் தாய் தந்தையர் அவர்கள் மணத்தைத் தம் பொறுப்பிலேயே முடிக்க வேண்டும்” என்று அவன் முடிவு தெரிவித்தான். மன்னர் முடிவு உடனடியாகவே நிறைவேறிற்று. ஏனென்றால் தாயின் மருமகனும் தந்தையின் மருமகனும் காதலனின் தங்கையரையே மணக்க ஒப்புக் கொண்டனர். எல்லாத் திருமணங்களும் ஒருங்கே நிறைவேறின. மன்னனே அனைத்தையும் உடனிருந்து நடத்தி வைத்தான். மன்னன் ஆட்சித்திறமை கண்ட அமைச்சர்கள் அவன் போர்த்திறமும் காண அவாவினர். நாள்தோறும் மன்னன் அலுவல்கள் காலையில் பத்து நாழிகையையும் மாலையில் பத்து நாழிகையையும் கொள்ளை கொண்டன. ஊணுடை முதலிய நாள்முறை வேலைகளும், தனக்கென வகுத்துக் கொண்ட தனிவேலை முறைகளும் மற்றும் பதினைந்து நாழிகைகளை நிறைத்தன. போக இருபத்தைந்து நாழிகையும் அவன் அயர்ந்து தூங்கினான். ஒருமாத ஆட்சிக்குப் பின் மன்னனது அயர்ந்த தூக்கத்துக்கு உலை வைக்கப்பட்டது. “நள்ளிரவில் திருடர், திருடர்! தீவட்டிக் கொள்ளைக்காரர்” என்ற கூக்குரல் எழுந்தது. காவலர் அரசனை வந்து எழுப்பினர். அவன் சீறினான். “நான் பட்டி மந்திரி, பாரத வீரனல்ல. போய்த் திருடரை நீங்கள் வேட்டையாடுங்கள்” என்றான் மன்னன். அமைச்சர்களுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அதை மறைத்தனர். வெளிப்படையாக அவர்கள் மன்னர் கடமையை நினைவூட்டினார்கள். “மற்றெல்லாக் கடமைகளையும் போலவே, இவற்றிலும் நீங்கள் நேர் நின்று நடத்த வேண்டும். இது மன்னர் கடமை” என்றனர். பட்டி மன்னன் புறப்பட்டான். கொள்ளையிட்டவர்கள் ஒரு சிலர்தான். பட்டி மன்னன் வீரர்களே அவர்களைப் பிடித்து வந்தனர். “நீங்கள் ஏன் திருடினீர்கள்!” என்று மன்னன் கேட்டான். “வறுமைதான் காரணம்” என்றனர் அவர்கள். “என் நாட்டில் குடியேறுங்கள். உங்கள் வறுமை போய் விடும். இங்கே உழைப்பவர்களுக்கெல்லாம் ஊதியமுண்டு” என்றான். அவர்கள் விழித்தனர். ஒருவன், “நாங்கள் ஏழைகளாக உழைத்து வாழமாட்டோம். அதைத்தான் வறுமை என்கிறோம்” என்றான். ‘ஓகோ! நீங்கள் முதலில்லாமலே முதலாளிகளாக விரும்புகிறவர்களா? சரி, உங்களுக்கு உழைத்து வாழ விருப்ப மில்லையென்றால், இந்நாட்டில் உங்களுக்கு இடமில்லை. உங்களைத் தூக்கிட உத்தரவிடவேண்டும்!’ என்றான். அவர்கள் இப்போது வழிக்கு வந்தனர். காவலிலிருந்தே இவர்கள் முதலில் தங்கள் பிழைப்புக்கு உழைக்கட்டும். ஊதியத்தில் பாதி அவர்கள் நன்னடக்கைக்காக அரசியலார் வைத்துக் கொள்வார்கள். இவ்வாறு மூன்றாண்டு ஒழுங்குடன் வாழ்ந்தால், நன்னடக்கைத் தொகையுடன் விடுதலையும் தரப்படும். அரசியலார் நம்பிக்கையைப் பெற்றால் மேலும் உதவிகள் தரப்படும்” என்று மன்னன் முடிவு செய்தான். அடுத்த நாள் முதல் கொள்ளைக்காரர் தொகை பெருகிற்று. அவர்கள் பெரும் படையுடன் நாட்டையே தாக்க வந்து விட்டதாக ஓரிரவு செய்தி வந்தது. போரும் மும்முரமாக நடைபெற்றது. வேண்டா வெறுப்பாக மன்னன் களம் சென்றான். அன்றும் வெற்றி கிடைத்தது. ஆனால் மன்னன் உடலெல்லாம் குத்தும் இடியும் பட்டு நொந்தன. “போர் செய்யாத அரசைத்தான் நான் விரும்பினேன். இது எனக்கு வேண்டாம். நாளையே இதைத் துறந்து விட்டு, வந்தபடியே மீண்டு விடுகிறேன்” என்று மன்னன் முடிவு செய்தான். அவன் கொலுமன்றம் கூட்டினான். முடிவைத் தெரிவித்தான். குடிகளும் அமைச்சரும் மனமார வருந்தினர். “இனி நீங்கள் களத்துக்குச் செல்லாமலே நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களைப் போன்ற நல்ல அரசர் நூற்றுக்கு ஒருவர். ஆகவே நீங்கள் எங்கள் மன்னராகவே என்றும் இருக்க வேண்டும்” என்று அவர்கள் தொழுது வேண்டினர். “என்னிடம் உங்களுக்கு உள்ள பற்றுக்கும் மதிப்புக்கும் நன்றி. அந்த அளவுக்குக் குறுகிய காலத்திற்குள் என் ஆட்சியில் நான் அடைந்த வெற்றி பெரிதுதான். நான் அரசு துறக்கும் நேரத்தில், இப்படி மகிழ்ச்சியுடன் செல்லும் இந்த வாய்ப்புக்கு நான் மகிழ்கிறேன். ஆனால் என் செல்வப் பேராசையா லேயே ஆட்சியை விரும்பினேன். உங்கள் ஆட்சியிலேயே எனக்கு ஒரு நல்ல படிப்பினைக் கிடைத்துவிட்டது. உழைத்து வரும் செல்வம்தான் உண்மைச் செல்வம். உழையாத செல்வத்தை நாடித்தான் திருடர், கொள்ளைக்காரர், செல்வச் சீமான்கள், மன்னர் பாடுபடுகின்றனர். முதலிரு வகையினரையும் அடக்குவதற்காகவும், மூன்றாவது வகையினரை அவர்களிடமிருந்து காப்பதற்காகவுமே மன்னர் காவற்படை வைத்திருக்கின்றனர் என்பதைக் கண்டு கொண்டேன். “ஒரு மன்னரைப் போலவே உழையாதவர் கூட்டுறவின் தலைவனான இன்னொரு மன்னன் வருகிறான். இருவரும் உழையாத செல்வத்துக்காகப் போரிடுகின்றனர். எனக்கு இந்த உழையாத செல்வமும் வேண்டாம். அதற்கான ஆட்சியும் வேண்டாம். “பாரத வீரனைப்போல நான் வீரனல்ல. ஆனால் அந்த வீரம் என்னிடம் இல்லாவிட்டாலும் அதை நான் மதிக்கிறேன். உங்கள் மன்னர் வீரமும் எனக்கு வேண்டாம், அதன் செல்வத்தையும் நான் இனி நாட மாட்டேன். “குடியானவனாக நான் வந்தேன். குடியானவனாகவே நான் உங்களை விட்டுச் செல்வேன். “இங்கே நான் உழைத்து ஈட்டிய செல்வத்தைக்கூட நான் உங்களுக்குத் தந்துவிட்டுப் போகிறேன். என்னை மறவாத என் கழுதையை மட்டும் இட்டுக் கொண்டு நான் செல்கிறேன்” என்று பட்டி கூறி முடித்தான். “அந்தோ, நம் நல்வினைப்பயனால் ஒப்பற்ற ஒரு முனிவனை அரசனாகப் பெற்றோம். அறியாமையால் அவரை இழந்தோம்” என்று மக்களும் அமைச்சர் குழுவும் அழுதனர். ஆனால் பட்டி மன்னன் அசையவில்லை. முடி, பட்ட அணிமணி, உரிமைகள் யாவும் அகற்றினான். பழைய பட்டி மந்திரியாக நின்றான். தன் தனிப்பட்ட வருவாயின் கணக்குடன் வருவாயையும் அமைச்சரிடமே கொடுத்து விடைபெற்றான். தன்னுடன் வழிகாட்ட ஒருவரன்றி வேறு யாரும் வரவேண்டாம் என்றும் உத்தரவிட்டான். காட்டு வழியே அவன் தனியே நடந்து வந்தான். தனிக்காட்டுப் பண்ணை மன்னன் ஒற்றர் சிலர் மட்டும் அவனை அறியாமலே அவனுக்குக் காவலாகச் சென்றனர். மூன்று நாட்கள் பட்டிநாடெங்கும் மக்களனைவரும் ஆராத்துயரில் அழுந்தியிருந்தனர். அதன்பின் அமைச்சர் குழுவே ஆட்சி ஏற்றது. பட்டி மந்திரியின் உருவம் அவன் இன்றியமையாத் தோழனான கழுதையுருவுடன் நகரத்தின் நடு நாற்சந்தியில் எழுப்பப்பட்டது. அதை மக்கள் கிட்டத்தட்ட தம் நாட்டின் தெய்வமாகப் பேணினர். கால்நடையாக வந்த பட்டி மந்திரியைப் பாரத வீரன் ஆர்வத்துடன் எதிர்கொண்டு அழைத்தான். அரசு துறந்ததற்கான விளக்கங்களைக் கேட்டதும், அவன் பின்னும் ஆர்வத்துடன் அவனைத் தழுவிக் கொண்டான். “இராமாயண பாரத வீரரின் வீரம் உனக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் அந்த வீரம் போற்றிய வீட்டுமாச்சாரி சனகர் முதலிய பெரியோர் மரபில் உனக்குக் கட்டாயம் இடம் உண்டு. உன்னைப் பாங்கனாகப் பெற்றதில் நான் பெருமை அடைகிறேன்” என்றான். மக்கள் பாராட்டைவிடப் பன்மடங்கு தன் தலைவன் பாராட்டுப் பட்டி மந்திரிக்கு அகமகிழ்வளித்தது. 15. சிங்கமுகாசுரனும் தங்கமுகாசுரனும் பாரத வீரன் வரலாறு வீர பாரதமாக மணிப்புலவனால் எழுதப்பட்டது. தனிக் காட்டு மன்னன் அவைப் புலவன் ஒருவன் அதையே நாடகக் காட்சிகளாக்கினான். புதிய படக்காட்சிக் கழகமொன்று அதையே படம் எடுத்தது. மக்கள் இவற்றைக் கண்டு களித்தனர், புகழ்ந்தனர். அரசனும் அரசியும் அதைத் தாமே திறந்து வைத்தனர். வீரனையும் பாங்கனையும் விட அவர்கள் வந்திருந்து விரும்பி அழைத்துச் சென்றனர். பாரத வீரனும் பாங்கனும் தத்தம் கதையைத் தாமே கண்டு களித்தனர். பாரத வீரன் அதைப் பெருமித எக்களிப்புடன் பார்த்தான். ஆனால் பட்டி மந்திரியோ, மிகுந்த பணிவுடனும், பண்புடனும் அதை நோக்கியிருந்தான். ‘காட்சி உனக்குப் பிடிக்கவில்லையா?’ என்று வீரன் பாங்கனைக் கேட்டான். ‘இப்போது எனக்கு இருக்கும் அறிவு முன்பே எனக்கு இருந்தால், பல பிழைகளை நான் விலக்கியிருப்பேன்” என்றான் பட்டி. “ஒருவேளை பாங்கனாக நீ பணி செய்ய ஒத்துக் கொண்டிருக்கமாட்டாய் போலும்!” என்றான் பாரத வீரன், குறும்பாக. “தாங்கள் கூறுவது முற்றிலும் சரியல்ல. ஆண்டே, ஏனென்றால் அது ஒரு பிழை என்று நான் முன்பும் கருதியதில்லை. இப்போதும் கருதவில்லை. மூலகாரணங்கள் பணம் திரட்டும் ஆசையும், அரசனாகும் பேராசையும்தான். இரண்டும் இப்போது அகன்றுவிட்டன. இந்த ஆசைகளில்லா விட்டால் நான் பாங்கனாயிருக்கமாட்டேன் என்பது உண்மை. ஆனால் இப்போது நான் அந்த ஆசைகளை விட்டுவிட்டேன். ஆனால் பாங்கன் பணியை இன்னும் உயர்வுடையதென்றே கருதுகிறேன்” என்றான். தனிக்காட்டு மன்னன் இப்போது பட்டியின் வாயைக் கிளறினான். “மன்னரையும் மன்னர் வீரத்தையும் போரையும் நீங்கள் விரும்பவில்லை. அப்படியிருக்க, ஒரு வீரன் பாங்கனா யிருப்பதை மட்டும் எப்படி விரும்பமுடியும்?” என்று கேட்டான். பட்டியின் விளக்கம் இருவருக்கும் ஒரு புதிய அரசியல் தத்துவ போதனையாய் அமைந்தது. “மன்னிக்கவும் அரசே! நான் மன்னரை வெறுக்கவில்லை. தங்களைப் போன்ற மன்னரிடம் நான் கொண்ட பற்றும் மதிப்பும் பெரிது. வீரரை வெறுக்கவில்லை. பாரத வீரனை நான் தெய்வீக வீரனாகவே கருதுகிறேன். ஆனால் மன்னர் பதவியை நான் விரும்பவில்லை. வீரர் நிலையையும் விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் உங்கள் இருவரிடமும் நான் விரும்பும் பண்பு மன்னர் பண்போ, வீரர் பண்போ அல்ல. மன்னர் செல்வமும் அதிகாரமும் விரும்புகின்றனர். தாங்கள் அதை நன்கு பயன் படுத்து கிறவர் மட்டுமே. வீரரும் செல்வம், அதிகாரம் ஆகியவற்றுக்காகவேபுகழ்விரும்புகின்றனர். அவற்றுக்காகவும், அவற்றைப் பெற்ற பின்னும் கொடு மைகள் செய்கின்றனர். பாரத வீரனோ புகழ் ஒன்றுக்காகவே பாடுபடுகின்றார். அதுமட்டுமல்ல! வீரர் அச்சமற்றவர் போல நடிக்கின்றனர். கட்டாயம் சாவு என்றால் துணிந்து செல்ல மாட்டார்கள். பாரத வீரன் அப்படியல்ல. சிங்கப்போரும் வாகைப்போரும் அதற்குச் சான்றுகள் தரும்!” என்று பட்டி மந்திரி விளக்கம் தந்தான். மன்னன் பட்டி மந்திரியின் அறிவு விளக்கத்தின் உண்மை கண்டான். தான் விளையாட்டாகவே இருவரையும் பெருமைப் படுத்தினாலும், அவர்கள் தகுதி அவர்களை நாடகமாட்டு விப்பவர் காணாத அருந்தகுதி என்பதை அவன் உணர்ந்தான். மனமார மன்னன் அவர்களை விட்டுப்பிரிய விரும்ப வில்லை. ஆயினும் பாரத வீரன் உலாவைத் தொடர வேண்டும் என்று வற்புறுத்தியபோது, தொடங்கிய காவிய முடிவை எண்ணி ஒத்துக் கொண்டான். பாரத வீரனும் பட்டி மந்திரியும் தனிக்காட்டு மக்களிட மிருந்தும், மன்னர் அரசி முதலியவரிடமிருந்தும் விடைபெற்றனர். அவர்கள் இப்போது கிழக்கு நோக்கித் திரும்பினர். பாரத வீரனுக்கு இப்போது ஒரே ஒரு கவலைதான் இருந்தது. இளவரசியின் மீதுள்ள மாயம் அகலவேண்டுமானால், பட்டி மந்திரியின் மனமார்ந்த இணக்கம் வேண்டும். அதைப்பெற என்ன வழி என்பதே அவன் சிந்தனையாயிருந்தது. பாரத வீரன் சிந்தனையைப் பட்டி மந்திரி அறிந்தே இருந்தான். ஏனென்றால் அதை மணிப் புலவன் பக்குவமாக அவனுக்கு எடுத்துரைத்திருந்தான். அதைப் பாங்கன் ஒத்துக் கொள்ளும் வகையில் அவன் பட்டிக்குத் திட்டத்தின் எதிர் திட்டம் வகுத்துக் கொடுத்திருந்தான். “நான் பத்தாயிரம் அடி பெற வேண்டுமானால், நீங்கள் உலாவை முடித்து வீடு திரும்பி விட வேண்டும்” என்று எதிர் திட்டம் போடும்படி அவன் பட்டி மந்திரியைத் தூண்டி யிருந்தான். வீடு திரும்பியபின் தானே மெல்ல அடித்துக் கணக்குத் தீர்த்துவிடுவதாகவும் அவன் கூறியிருந்தான். பட்டிமந்திரி இதை ஏற்றான் என்று கூற வேண்டுவதில்லை. அவன் பாரத வீரனிடம் பாங்கனாயிருக்க விரும்பினாலும், உலாவில் சலிப்புக் கொண்டிருந்தான். உலாவை முடிக்கும் முறையில் மணிப்புலவனை விட இன்னொரு சாராரும் தீவிரமாக முயன்று வந்ததுண்டு. அதுவே கோமாறனும் நன்னயப்பட்டரும், செல்லாயியும் செங்காவியும் இதில் அவர்களுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்தனர். “பாரத வீரனுடன் யாராவது ஒருவர் சென்று வீரராகவே மல்லாட வேண்டும். தோற்றவர் முயன்றவர்க்குக் கீழ்ப்படிந்து அவர்கள் சொற்படி நடப்பது என்ற உறுதியை மற்போருக்கு முன்பே பெற வேண்டும். கூடிய மட்டும் பாரத வீரனை எப்படியாவது வென்று உறுதிப்படி அவனை மீட்டு வர வேண்டும்,” இந்தத் திட்டத்தை எல்லாரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் யார் போவது? எப்படி வெல்வது? இதற்கென்று பயிற்சி செய்து தேர்ச்சி பெற்றவன் போகலாம் என்றான் கோமாறன். நன்னயப்பட்டரோ சூழ்ச்சியாலேயே வெல்லலாம் என்றார். இறுதியில் சமரசத் திட்டமே உருவாயிற்று. முதலில் கோமாறன் தேர்ச்சி பெற்றுச் சென்று முயலலாம். அதில் வெற்றி கிட்டாவிட்டால், பின் நன்னயப்பட்டர் தக்க சூழ்ச்சி முறையைக் கையாளலாம். இதுவே அவர்கள் சமரசத் திட்டம். கோமாறன் ஆறு மாதம் மற்போர், வில்வித்தை, பயின்றான். பின் பாரத வீரனைப்போலவே கவசம், தலையணி ஆகியவை அணிந்தான். ஆனால் குதிரைத் தலைக்கு பதிலாக அவன் சிங்கமும் அணிந்தான். கவசத்தின் மீது வேங்கையின் வண்ணவரிகள் தீட்டப்பட்டிருந்தன. அத்துடன் சின்னஞ்சிறு கண்ணாடித் துண்டுகள் செய்து, அவற்றில் அவன் பாதரசம் பூசினன். அவை எண்ணற்ற நுண்ணிய முகக்கண்ணாடிகளாயின. அவற்றை அவன் புலியின் வண்ண வரிகளிடையே ஒட்டினான். இந்நிலையில் அவன் உருவம் அச்சமிக்கதாயிருந்தது. பாரத வீரனும் பட்டி மந்திரியும் வழியில் ஒரு மரத்தடியில் தங்கியிருந்தனர். அதே இடத்தில் கோமாறனும் தங்கினான். ஆனால் அவர்கள் சந்தித்த நேரம் இருட்டாயிருந்தது. வீரர் என்ற முறையில் அவர்கள் அளவளாவிப் பேசினர். கோமாறன் பாங்கனாக ஒரு முரட்டு வேலையாள் வந்திருந்தான். அவன் பட்டி மந்திரியுடன் அளவளாவ விரும்பினான். ஆனால் இருட்டிலும் அவன் கைப்பிடி கண்டு பட்டி அவனிடம் அச்சங்கொண்டான். இருந்த போதிலும் புதியபாங்கன் பட்டியை எளிதில் தன் இனிய தின்பண்டங்களால் வசப்படுத்தினான். கோமாறன் பேச்சிடையே தன் வெற்றிகளைப் பற்றிப் புகழ்ந்தான். தன் காலத்து வீரர்கள் அனைவரையும் தான் வென்றுவிட்டதாக அவன் வீம்படித்தான். பாரத வீரன் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ‘பாரத வீரன் என்று ஒரு வீரன் இருக்கிறான்’ என்று தொடங்கித் தன் வீரக் கதையைத் தானே கூறினான். கோமாறன் சிரித்தான். “உனக்குப் பாரத வீரன் சேதி எட்டியிருக்கிறது. அவனை வென்றவன் சேதி எட்டவில்லை. என் பெயர் சிங்கமுகாசுரன். என்னைக் கண்டவுடன் பாரத வீரன் அஞ்சி ஓடப்பார்த்தான். நானா விடுகிறவன்! நான் அவனை முறியடித்துப் ‘பாரத வீரன்’ முதலிய அவன் விருதுகளை என்னுடையன ஆக்கிக் கொண்டேன். ஆகவே நான்தான் இப்போது பாரத வீரன்” என்றான். பாரத வீரன் உடனே இருட்டிலேயே அவன்மேல் போர் தொடுத்தான். “நீ அண்டப்புளுகன். இதோ பார் நான்தான் பாரத வீரன். எங்கே, உன் புளுகுகள்? இதோ பாரத வீரன் குத்து! இதற்குப் ‘பதில் கூறு!’ என்று தொடங்கினான். கோமாறன் இவ்வளவு விரைவில் போரை எதிர்பார்க்க வில்லை. அவன் திட்டத்தின் பாதி தோற்றது. ஆயினும் அவன் தன் முழுத்திறம் காட்டிப் போரிட்டான். பாரத வீரனை நேருக்கு நேர் போரில் வெல்வது எளிதல்ல என்று அவன் கண்டான். இதற்குமுன் நண்பனாகவே இருந்ததால், பாரத வீரன் கையாற்றலை அவன் சரியானபடி மதிப்பிடவில்லை. அவர்கள் போர் முடியுமுன் கிழக்கு வெளுத்துவிட்டது. பட்டி மந்திரி அவன் பயங்கரத் தோற்றம் கண்டு நடுங்கினான். ஆனால் அச்சமயத்தில் சிங்க முகத்தின் பூட்டுக் கழன்றிருந்தது. கோமாறன் வேலையாள் அதைச் சரிசெய்ய அணுகினான். ஆனால் மற்போரினிடையே கை தட்டி முகம் கீழே விழுந்து உடைந்தது. மாற்றுருவம் நீங்கி, சிங்கமுகாசுரன் கோமாறனாய் நின்றான். பாரத வீரன் வியப்புற்றான், போரை நிறுத்தினான். போரில் இருவர் நோக்கமும் பாழாயிற்று. கோமாறன் திட்டமே குலைவுற்றது. பாரத வீரனுக்கோ சிங்கமுகாசுரனை வென்ற புகழ் வீணாயிற்று. ஆயினும் நண்பர் பகைமை விட்டுக் கலந்துறவாடினர். ஒருவருக்கொருவர் விளக்கங்கள் கூறினார்கள். கோமாறன்மட்டும் திட்டமுழுவதையும் கூறவில்லை. நன்னய பட்டர் திட்டத்திற்குள்ள இடத்தைக் கெடுத்துக் கொள்ள வில்லை. உலா முடித்துத் திரும்பி வரும்படி அவன் பாரத வீரனை கெஞ்சிக் கேட்டுவிட்டு மீண்டான். அவன் கெஞ்சுதல் பயன்தரவில்லை. கோமாறன் வீரத்தால் நிறைவேற்ற முடியாததை நன்னயப் பட்டர் சூழ்ச்சியால் நிறைவேற்றினார். அவர் இராமாயண பாரத ஏடுகளை ஒரு பெட்டியில் அடைத்துக் கொண்டார். மாற்றுருவுடன் கோமாறனைப் போலவே அதனுடன் சென்றார். பாரத வீரனுடன் அவரும் அளவளாவிப் பேசினார். “அன்பரே உம் வீரம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது வீர உலகின் உச்சியை அடைந்து விட்டது என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இதை உடைத்து, இதனுள் இருப்பதைச் சுக்கு சுக்காகக் கிழிக்கும் ஆற்றல் உமக்கு இருக்க முடியாது. ஏனெனில் அத்தகைய மாய வீரம் இதில் இருக்கிறது. இதில் உம்மைச் சோதிக்க எண்ணுகிறேன்” என்றார். “அது பெட்டியாய் இல்லாமல் மலையாய் இருந்தாலும், நான் உடைத்துவிட முடியும். அதனுள் இருப்பது வைரப் பாளங்களானாலும் நான் என் வாளால் கிழித்து விடுவேன். இது உறுதி! என்ன சொல்கிறீர்?” என்றான் பாரத வீரன். நன்னயப்பட்டர் இத்தறுவாய்க்கே காத்திருந்தார். “நீர் இதைக் கிழித்தால், நான் உம் பாங்கருக்கும் பாங்கராய் உம் பின்வருவேன். என் புகழ் முழுதும் உமது ஆய்விடும். உம் புகழ் பாடும் கடமையை ஏற்பேன். ஆனால் கிழிக்காவிட்டால். நான் சொல்கிறபடி நீர் கேட்க வேண்டிவரும். உம் உலாவை நிறுத்தி, என் ஆளாய் என்னுடன் வந்து வாழ வேண்டும்” என்றார். பாரத வீரன் இதை ஏற்றான். நன்னயப் பட்டர் பின்னும் தன் திட்டத்தை வலியுறுத்தினார். “நான் இன்னொரு முறை எச்சரிக்க விரும்புகிறேன். பெட்டியினுள் இருப்பதை நீர் காணவில்லை. கண்டால் உம் கருத்து மாறலாம். வேண்டுமானால் பார்த்து விட்டுப் பந்தயத்துக்கு எடுத்துக் கொள்ளும்” என்றார். “அது மலைப்பாம்பாயிருந்தாலும் அதைக் கண்டு நான் மயங்க மாட்டேன். பார்க்காமலே பந்தயத்துக்கு ஒத்துக் கொள்கிறேன்” என்றான். நன்னயப் பட்டர் தம்மிடமிருந்த ஒரு குழலை எடுத்து ஊதினார். கோமாறனும் செல்லாயியும் செங்காவியும் வேறு பல செல்வமருதூர் நண்பர்களும் அருகிலேயே வந்து காத்திருந் தார்கள். குழல் ஊதியதும் அவர்கள் வெளி வந்தார்கள். பாரத வீரன் ஒன்றும் தோன்றாமல் தயங்கினான். நன்னயப்பட்டர் அவர்களைப் பேசவிடவில்லை. “இவர்கள் இப்பக்கம் சென்ற பிரயாணிகள். சான்றாளர்களாக முன்பே அவர்களைத் திட்டம் செய்திருக்கிறேன். அவர்கள் முன் என் உறுதிமொழி நிறைவேற்று” என்றான். பாரத வீரனுக்கு உண்மையில் எதுவும் தோன்றவில்லை. ஆனால் உறுதிப்படி, அவன் செயலில் முனைந்தான். அவன் வாளின் ஒரு வீச்சிலேயே பெட்டி உடைந்தது. ஆனால் உள்ளிருந்த ஏடுகளைக் கண்டதுமே அவன் திடுக்கிட்டான். ஒரு வேளை நன்னயப்பட்டர் தன் ஏடுகளையும் நூலகத்தையும் கொண்டு சென்ற பூதமோ, அல்லது அதன் ஆளோ என்று மலைத்தான். ஆனால் எப்படியும் அந்த ஏடுகளைக் கிழிக்க அவன் மனம் ஒப்பவில்லை. அவன் உலா, நிறுத்த ஒத்துக் கொண்டான். நன்னயப் பட்டர் சொற்படி நடக்க இசைவளித்தான். நன்னயப்பட்டர் உடனே தம் கவசமும் தலையணியும் நீத்து, தம் உருவில் அவன் முன் நின்றார். பாரத வீரன் தோற்றம் எண்சாணும் ஒரு சாணாகக் குன்றிற்று. அவன் முகம் ஒரு நொடியில் விளறிற்று. நன்னயப்பட்டர் என்னவோ, ஏதோ என்று அஞ்சினார். பாரத வீரன் கீழே சாய இருந்தான். கோமாறன் சட்டென வந்து தாங்கினான். செல்லாயி “ஐயோ, கண்மணி! நான் உன்னைக் கூட்டிவரப் பட்டபாட்டின் பயன் இதுவா? உன் தோல்வியை எங்களுக்காக மறந்து விடு. வா வீட்டுக்குப் போவோம்” என்றாள். செங்காவியும், “மாமா? நாங்கள் செய்த சூழ்ச்சி அன்பு காரணமானதுதான். எங்களை மன்னித்துவிடுங்கள்! எங்களுக்கு நல்வாழ்வளியுங்கள்” என்று குழைந்தாள். பாரத வீரன் உருவுடன் குணமும் சட்டென மாறியதுபோல் காணப்பட்டது. அவனால் எழுந்திருக்க முடியவில்லை. உடலின் ஊக்கம் தளர்ந்தது. ஆனால் அவன் முகம் வலியப் புன்முறுவலை வருவித்துக் கொண்டது. அத்தை, மருமகள் ஆகிய இருவரிடமும் அவன் இன்மொழி புகன்றான். அத்துடன் பட்டி மந்திரியை அவன் கூப்பிட்டான். “அன்பனே, உலா முடிந்தது. இனி என் கவசத்தையும் தலையணியையும் மெல்ல அகற்றிவிடு. நாம் வீட்டுக்குப் போவோம்” என்றான். பட்டி மந்திரி இத்திடீர் மாறுதலை நம்பக்கூடவில்லை. இது தோல்வியின் கசப்பா, உள்ளார்ந்த மாறுதலா என்று அறியாது அவன் தயங்கினான். பாரத வீரன் மீண்டும் உறுதி கூறினான். “வீரத்தால் நான் இதுவரை வென்றேன். ஆனால் அறிவால் தோற்றேன். நான் இதுவரை அறிவைப் பறிகொடுத்திருந்தேன். இனி என் திட்டங்களை நான் திருத்தியமைக்க வேண்டும், அல்லது கைவிடவேண்டும். ஒன்று மட்டும் உறுதி. இனி நான் அறிவைத்தான் தீட்ட வேண்டும். இத்தோல்வி என் உடலின் ஊக்கத்தையே அகற்றிவிட்டது” என்றான். செல்லாயி, “அப்படிச் சொல்லாதே, தம்பி! இரண்டு நாளில் உடம்பு சரியாய்விடும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். போதாக்குறைக்குச் செங்காவி இருக்கிறாள்” என்றாள். செங்காவி முகம் கோணிச் சிணுங்கினாள். பாரத வீரன் மேலும் பாங்கனிடம் பேசினான். “உனக்கும் இந்த ஆறு மாதத்திலும் நான் என் பழைய வாக்குப்படி, முந்நூறு வெள்ளி தரவேண்டும். அதை நான் இரட்டிப்பாக்குகிறேன். இது உனக்காக அல்ல. உனக்குத்தான் செல்வப் பற்றுப் போய் விட்டதே. இது உன் குடும்பத்துக்காக பெண்களை...” “அண்ணலே! உங்கள் அன்புக்கு நான் என்ன கைம்மாறு தருவேன். அது செல்வத்தைவிட அருமையானது. செல்வத்தின் பற்றை அகற்றியது அதுவே, இனியும் அந்த அன்புக்கே நான் அடிமை” என்றான். எல்லாரும் செல்வமருதூர் சென்று சேர்ந்தனர். சீடர்களில் பலர் அங்கிருந்தனர். மற்றவர்களும் பாரத வீரன் வரவு கேட்டு வந்து சேர்ந்தனர். பாரத வீரனை அவர்கள் ஆர்வத்துடன் வந்து கண்டார்கள். அவன் மாறுதல் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் உள்ளூர மகிழ்ச்சியும் கொண்டார்கள். அவன் உடல் நலிவு கண்டு கவலையுடன் அவர்கள் அவனுக்குப் புது வகையான பணிவிடைகள் செய்தார்கள். 16. மங்கல வாழ்வு பாரத வீரன் வள்ளன்மை கேட்டு, பட்டி மந்திரியின் மனைவி மக்கள் ஓடோடி வந்தனர். ஆனால் அவன் உடல் நிலை கண்டு கலங்கினர். “ஐயனே! உம் பெருமையை அறியாமல், நாங்கள் என்னென்னவோ கூறினோம். வீரகவசத்துக்குள்ளே இவ்வளவு அன்புக்கனிவுடைய உள்ளம் இருந்ததென்பதை இப்போதுதான் உணர்ந்தோம். தாங்கள் நீடுழி வாழ வேண்டும். உங்கள் உடலை எங்கள் உடலாகப் பேணிக் காக்க விரும்புகிறோம். உங்கள் நலனே இனி எங்கள் நலன்” என்றனர். பாரத வீரன் புன்முறுவல் பூத்தான். “எனக்கும் இப்போது புதிய பாதை தோன்றியிருக்கிறது. அம்மணி! நான் புகழ் தேடி அலைந்தேன். உங்கள் பொன்னார் அன்பு அதைவிட எவ்வளவோ பெரிது என்பதை உணர்ந்தேன்” என்றான். பட்டி மந்திரி இப்போது தானாக இளவரசியின் சாபத்தை நினைவூட்டினான். அதை நீக்கத் தான் பத்தாயிரம் அல்லது நூறாயிரம் அடிகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வதாக உறுதி கூறினான். பாரத வீரன் முகத்தில் சற்றே களை வந்தது. ஆயினும் முந்திய முழு மகிழ்ச்சி முகத்திலில்லை. மணிப்புலவன் இப்போது இதைக் கவனித்தான். நாடக வாழ்வுக்கு ஒரு முடிவுகாண இதுதான் தக்க சமயம் என்று அவன் எண்ணினான். அவன் பாரத வீரன் முன் வந்து வணங்கி நின்றான். “அண்ணலே! தங்கள் வாழ்வு உண்மையிலேயே புது வாழ்வாக மலர வேண்டுமென்று எண்ணுகிறேன். அதற்கு முன், நான் உங்களிடம் நானும் என் தோழர்களும் ஒரு பெரிய மன்னிப்புப் பெற வேண்டும். விளையாட்டை வினையாக்கி, நாங்கள் உங்களுக்கு எல்லையற்ற தொல்லை தந்துவிட்டோம். ஆனால் பத்தரைமாற்றுத் தங்கம் தீயிலிடுவதால் எரிந்து போவதில்லை. உங்கள் உண்மைப் பெருமை எங்கள் பிழையாலும் நன்கு விளங்கிவிட்டது. ஆனால் நாங்கள் வெட்கப்படுகிறோம். வருந்துகிறோம். எங்களை மன்னித்தால், வாழ்நாள் முழுதும் நன்றியறிதலுடன் உங்களுக்குத் தொண்டு செய்வோம்” என்றான். “அன்பனே! நீயும் தோழர்களும் என்ன பிழைகளும் செய்பவர்களல்ல, செய்தாலும் நான்மன்னிக்க ஒரு சிறிதும் தடை இராது. ஆகவே சொல்லுங்கள். சென்ற ஒரு வாரத்தில் நான் எவ்வளவோ மாறிவிட்டேன். உடல்தான் தளர்ந்திருக்கிறது. ஆனால் மூளை தெளிவாய் இருக்கிறது - ஆகவே பிழையறிந்து, நான் உங்கள் கவலையை மாற்றக்கூடும்” என்றான். “அண்ணலே! பிழைகளைக் கூற இன்னும் ஒரே ஒரு தயக்கம்தான். தங்கள் உடல் நிலையில், தங்கள் மன அதிர்ச்சி எதுவும் கேடுதந்தால் நாங்கள் இன்னும் வருந்துவோம். இதுவரை பிழைசெய்த எங்களுக்கு இன்னும் நீண்டநாள் உங்கள் நல்வாழ்வு ஆறுதல் தர வேண்டும். ஆகவே எங்கள் பிழைக்காக நீங்கள் அதிர்ச்சி பெறாமல் இருக்கக் கோருகிறேன். “நீங்கள் உண்மையிலேயே ஒப்பற்ற வீரர் என்பதை நாங்கள் முன்பு அறியவில்லை. இப்போது அறிந்தோம். அத்துடன் உங்கள் குணம் பொன்னானது. வீரத்தைவிட அது எவ்வளவோ விலைமதிக்க முடியாதது. ஆனால் இதையும் நாங்கள் உணரவில்லை. உங்கள் கற்பனை ஆர்வத்தை தூண்டி விட்டு, நாடகம் நடித்தோம். உங்கள் நம்பிக்கையைக் கண்டு மேலும் மேலும் ஏமாற்றினோம். உங்கள் வீர உலாவின் வீரம் உங்களுடையது. ஆனால் எங்கள் பொய் நாடகத்தால் அதில் பல இன்னல்கள் உங்களுக்கு ஏற்பட்டது. இதை நீங்கள் உணர்ந்து கொண்டு, உலாவை மறந்து, நடிப்புக்கும் மன்னிப்புத் தர வேண்டும்” என்றான். நோயுற்றபின் முதல் தடவையாக பாரத வீரன் சற்று எழுந்தான். “மன்னிப்பு மட்டுமல்ல தோழரே! உங்கள் செய்தி எனக்குப் போன உடல் நலத்தில் பாதி தந்துவிட்டது. உலாவை நான் என் தோல்வியால்தான் விட்டேன். அத்தோல்விதான் உடல் நலத்தைக் கெடுத்தது. ஆனால் உண்மையறிந்தேன். இப்போது மனமாரவே உலாவை விட்டுவிடுகிறேன். உங்கள் திருந்திய நல்லுரைக்காகவும் என் அத்தை, மருமான், நண்பர் புதுவாழ்வுக்காகவும் நான் இனி வாழ்வேன், இது உறுதி. “ஆனால் எனக்கு இன்னும் சில ஐயங்கள் போகவில்லை. எல்லாம் நாடகமென்றால், நூலகம் எப்படி போயிற்று? இளவரசியின் வாக்குறுதிகள் என்னவாயிற்று? ஒளிக்காமல் இனி இவற்றைக் கூறலாம். என் உடலுக்கு இவை அதிர்ச்சி தரமாட்டா. நேர்மாறாகத் தேற்றிவிடும் முழு உண்மையை நான் அறியக்கூடும்” என்றான். அன்பர்கள், உறவினர் உள்ளங்கள் குளிர்ந்தன. முகங்கள் தெளிந்தன. “அண்ணலே! எங்கள் வயிற்றில் பால் வார்த்தீர்கள். இனி முழு உண்மையைக் கூறச் சிறிதும் தயங்கமாட்டேன். உங்கள் நூலகம் எங்கும் போகவில்லை. நூல்கள் கோவிலில் ஓர் அறையில் இருக்கின்றன. அறையும் எங்கும் போகவில்லை. நாலு பக்கமும் ஒரே இரவில் அடைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏமாற்றுக்கும் நீங்கள் உங்கள் உண்மையுள்ள நண்பர் சிலரைத்தான் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் உலாவாழ்வை எப்படியும் தடுக்கும் எண்ணத்துடன் கோமாறனும் நன்னயப்பட்டரும், உங்கள் அத்தையும் மருமகளுந்தான் இதைச் செய்தனர். பாரத வீரன் பெருமூச்சு விட்டான். அவர்கள் அவன் உடல் நிலைக்கு அஞ்சினர். ஆனால் அவன் முகம் மலர்ந்தது. “என் வீர வாழ்வு போகட்டும். அந்நூல்களும் நூலகமும் பிழைத்தது பற்றி மகிழ்கிறேன். அவற்றின் கற்பனை இனி என்னை ஒன்றும் செய்யாது” என்றான். மணிப்புலவன் மீண்டும் தொடர்ந்தான். “அருங்குணச் செல்வரே! இளவரசி வகையில் ஏமாற்று இன்னும் பெரிது. இளவரசி என்று யாரும் கிடையாது. இளவரசியாக எங்கள் தூண்டுதலால் நடித்தது மாரியின் மகன் மருதுவே. அவன் உங்களுடன் முன்பு பெண் வேடமிட்டு நடித்தவன் தான். தாங்கள் அவனுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அத்தனையும் இதனால் முறிக்கப்பட வேண்டியவையே. இதை அவனே காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு வேண்டிக் கொள்வான். அத்துடன் அதனால் உங்கள் உள்ளத்தில் எவ்வித துன்பத்துக்கும் இடம் ஏற்பட்டு விடக்கூடாது” என்றான். பாரத வீரன் மீண்டும் பெருமூச்சு விட்டான். “அன்பனே! இங்கும் உண்மை அனுகூலமானதே! இளவரசிக்குக் கட்டுப்பட்டே நான் என் உள்ளத்தின் இயற்கை உணர்ச்சிகளைக் கொன்றே அடக்கி வந்தேன். இந்த நாடக முறிவால் என் புதுவாழ்வு உடனே தொடங்கி விட்டது” என்றான். பாரத வீரன் வள்ளி பற்றித்தான் குறிப்பிடுகிறான் என்பது மணிப்புலவனுக்குத் தெரிந்தது. “செங்கோடனும் அவன் குடும்பத்தவரும் உங்களை வந்து பார்க்க விரும்பினர், அண்ணலே! இந்த உண்மைகளைக் கூறும் வரை அவர்களை காக்க வைத்திருக்கிறேன். அத்துடன் அவர்கள் வருமுன், மருதுவை நீங்கள் காண்பது நல்லது என்று எண்ணுகிறேன்” என்று அவன் கூறினான். பாரத வீரன் ஆர்வத்துடன் இணங்கினான். மருது வந்து பாரத வீரனைக் கட்டிக் கொண்டு அழுதான். பாரத வீரன் அவனை ஆணுருவிலேயே ஆவலுடன் அணைத்துக் கொண்டான். “நீ பெண்ணாக நடித்த என்னைத் திறமையாக ஏமாற்றினாய். இனி ஆணாக நடித்து ஒரு பெண்ணை ஏமாற்ற முடியுமானால்...” என்று தயங்கினான். “உங்கள் விருப்பம் எதுவானாலும் அதை நிறைவேற்றத் தடையில்லை. அது வேம்பானாலும் உட்கொள்வேன்” என்றான். பாரத வீரன் செங்காவியை ஒரு கையில் இழுத்து மடிமீது சாத்தினான். “இந்தப் பிள்ளை கவலை ஒன்றுதான் எனக்குக் குடும்பத்தில் இருக்கிறது. இது உனக்கு வேம்பாயிருக்குமோ, கரும்பாயிருக்குமோ தெரியாது. அவள் விரும்பி நீயும் விரும்பினால், அவளை நீ ஏமாற்றலாம்” என்றான். “செங்காவி எனக்குப் புதியவளல்ல. அவளுக்குப் பிடித்திருந்தால், மிகவும் மகிழ்ச்சியே!” என்றான் மருது. மணிப்புலவன் இப்போது தலையிட்டான். மருது இனி இந்த வீட்டு வாசலில் காத்திருக்கட்டும். செங்கோடனே உள்ளே வரட்டும்” என்றான். செங்கோடனுக்குப் பாரத வீரன் மனமார்ந்த வணக்கம் தெரிவித்தான். “உங்களைக் குருவாக்கி எத்தனையோ தொல்லை தந்தேன். ஆனால் நீங்கள் என்னை மருமகனாக்கப் பாடுபட்டீர்கள். மருமகனாகவே உங்களுக்கு இப்போது வணக்கம் தெரிவிக்கிறேன்” என்றான். வள்ளி பின்னால் நின்றாள். பாரத வீரன் தன்னையறியாமல் அவளைத் தன் கட்டிலண்டை இழுத்தான். அத்தையை எழுந்து நோக்கித் திரும்பினான். “அத்தை, நம் செங்காவியை வெளியே துரத்தப் போகிறோமல்லவா? அந்த இடத்தில் இனி இவள் இருப்பாள்?” என்றான். செங்காவியின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவள் வள்ளியை ஆவலுடன் கட்டிக் கொண்டாள். பாரத வீரன் வாழ்வு புது வாழ்வாயிற்று. ஆனால் அவன் நடிப்பில் காட்டிய வீரம், புகழார்வம், துணிச்சல் அவனை விட்டு நீங்கவே இல்லை. அவன் பழம் புகழ் கேட்டவர்கள் அடங்கிய புன்முறுவல் செய்ததுண்டு. புதுப்புகழ் அதை மலர்ந்த புன் முறுவலாக்கிற்று. மணிப்புலவன் மீண்டும் மணிவண்ணனானான். பட்டி மந்திரியின் மூத்த பெண்ணை அவன் மணந்து இனிது வாழ்ந்தான். ஆனால் அவன் காவியத்தை விடவில்லை. மாரியப்பன் புதுவாழ்வையே அவன் பாரத வீரன் பொன்னுலக வாழ்வாகத் தீட்டி முடித்தான். பாரத வீரன் மீண்டும் மாரியப்பனானான். பாரத வீரன் வாழ்வு அவன் வாழ்வின் ஒரு சீரிய கனவுப்படலமாக ஒளி வீசிற்று. முற்றும் அப்பாத்துரையம் - 39 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) இளையோர் வரிசை  பொன்னின் தேட்டம்  மன்பதைக் கதைகள்  மருதூர் மாணிக்கம் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 39 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 20+284= 304 விலை : 380/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 304 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் பொன்னின் தேட்டம் 1. பொன்வேட்கை ... 3 2. பண்பும் பயனும் ... 9 3. வாணிப வாழ்வு ... 18 4. பொன்னின் வரலாறு ... 24 5. சுரங்கத் தொழில் ... 33 6. பொன்னின் பரப்பு ... 44 7. பொன் தேட்டம் ... 51 மன்பதைக் கதைகள் 1. மார்கழி ... 59 2. அன்பரசி ... 71 3. பண்பார்ந்த செல்வி ... 92 4. நயத்தக்க நாகரிகம் ... 101 மருதூர் மாணிக்கம் 1. மருதூர் மாணிக்கம் ... 109 2. இளவரசி ... 117 3. கொலுமன்றம் ... 124 4. மருதவாணன் கோட்டை ... 131 5. குருவருளும் திருவருளும் ... 142 6. பட்டிமந்திரி ... 158 7. சிங்கத்தை வென்ற வீரசிங்கம் ... 167 8. அணைகரையாறு ... 183 9. கவந்தன் போர் ... 190 10. விடுதலைக் கீதம் ... 200 11. கரதூஷணர் மாயம் ... 216 12. பொன்முடி ... 225 13. வாகைப் போர் ... 231 14. பட்டி மன்னன் ... 245 15. சிங்கமுகாசுரனும் தங்கமுகாசுரனும் ... 258 16. மங்கல வாழ்வு ... 267