பிறமொழி இலக்கிய விருந்து - 2 இந்நூல் 2003இல் சாரதா மாணிக்கம் பதிப்பகம், சென்னை - 43. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. 1. அறக்கோட்டம் முதற் பதிப்பு - 1952 அறக்கோட்டம் பிரேம்சந்தின் ‘அறக்கோட்டம்’ அவருடைய மற்ற எல்லாப் புனை கதைகளையும் போலவே தெள்ளிய இனிய கவர்ச்சியுடைய இழுமென் நடையில் எழுதப்பட்டுள்ளது. தமிழில் வெண்பா ஈற்றடி ஈற்றுச் சீருக்குரிய நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டு வடிவங்களுள்ளேயே தூய இந்திச் சொற்களின் வடிவமைதியும் அமைகின்றது என்பதைப் பிரேம்சந்திரன் இந்தி நடை எடுத்துக்காட்டுகிறது. தனித் தமிழ்ச் சொற்களிலும் இதே பண்பு நிலவுவது காணலாம். அமர்காந்த், சுகதா ஆகிய இருவரும் வாழ்க்கைத் தொடக்கத்தில் ஒருசில தனிப் பண்புவேறுபாடுகள் உடைய பொது மனிதராயிருக்கின்றனர். சூழ்நிலைகளின் காரணமாக இருவரும் படிப் படியாக உயர்குறிக்கோளுடைய சமூகத் தொண்டராகவும், வீரராகவும், தியாகியாகவும், காந்தீய வழி கடைப்பிடிக்கும் அருளாளராகவும் மாறினர் என்று ஆசிரியர் காட்டும் திறன் பெரிது. கதிரவனுந் திங்களுமான இவ்விரு பண்போவியங்களின் வளர்ச்சிச் சுழற்சியால் சகீனா, சமர்காந்த் முதலிய மற்ற பல உறுப்பினரும், மாறும் திடீர் மாறுபாடுகளும், கவர்ச்சியும் அதிர்ச்சிச் சுவையும் தருவன. முன்னியின் பெருந்தியாகமும், அதன் பிற்பட்ட கனிவு முதிர்ச்சியும் ஒருபுறம்; கொலைஞன் காலேகானின் உள்ளத்தின் உறுதி, ஒப்பற்ற பக்தி வீறாக மாறும் காட்சி மற்றொருபுறம், ‘அறக்கோட்டம்’ காவியத்துள் இவை கவிதைச் சுவை பொதிந்த உருக்கமான சிறு காவியங்களாகும். மடாதிபதி ஆணவம், வைதீகம், சாதிபேதம் ஆகியவற்றின் கொடுமைகள் அரசியலாரின் அடக்குமுறை ஆகியவை ஆசிரியர் கைத்திறத்தில் முழுவிளக்கம் பெறுகின்றன. மொத்தத்தில் ‘அறக்கோட்டம்’ நாட்டு வாழ்வுச் சித்திரம் தீட்டும் ஓர் ஒப்பற்ற திரை ஓவியம் ஆகும். மூல ஆசிரியரைப் பற்றி இந்தி மொழியின் தலைசிறந்த புனைகதையாசிரியர் பிரேம்சந்த். அவரைப் புனைகதைப் பேரரசர் என்று இந்தி உலகம் போற்றுகிறது. அவர் முதலில் தம் தாய்மொழியாகிய உருதுவிலேயே எழுதத் தொடங்கி, பின் தம் கலைத்திறனை இந்திக்கு மாற்றினார். வங்காளியில் புனைகதை இலக்கிய மன்னரான பங்கிம்சந்திரரும் துவிஜேந்திரலால் ராயும் வரலாற்றுப் புனைகதையையும், கவிஞர் தாகூர் உள்ளுணர்ச்சிக் கவிதையையும் தமதாக்கினர். மராத்தியில் காண்டேகர் உளப்பாங்குகளின் வளர்ச்சி தளர்ச்சி நாடகப் பண்பை உச்ச நிலைக்குக் கொணர்ந்தார். பிரேம்சந்த் சமூகச் சித்திரங்கள் வரைவதில் ஒப்புயர்வற்றவர். ‘பிரேம்சந்த்’ என்பது ஆசிரியர் தமக்கென மேற்கொண்ட புனை பெயர். அவர் இயற்பெயர் பாபு தன்பத் ராய் என்பது. அவர் புனைகதை மட்டுமன்றி நல்ல சிறுகதைகளும் இலக்கியம் பற்றிய கருத்துரைக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். புனைகதை சமூகத் தொடர்பற்ற கருத்தியல் சித்திர மாகவோ, சமூகப் பின்னணி வண்ணம் காட்டும் வாழ்வியல் சித்திரமாகவோ அமையலாம். பிரேம்சந்த் இந்திமொழியின் முதல் வாழ்வியல் புனைகதையாளர். அத்துறையில் அவர் பெரு வெற்றியும் கண்டார். ஆயினும் அவருக்குப் பிற்பட்ட புனைகதை யாளரைப்போல அவர் வாய்மையை வாய்மை தவறாது படம் பிடித்துக் காட்டுவதுடன் நின்றுவிடவில்லை. அதில் சீர்திருத் தத்தையும் உயர் குறிக்கோள் வண்ணங்களையும் பெய்தார். அவரது முதல் இந்திப் புனைகதை ‘சேவாசதன்’ 1924-ல் எழுதப் பட்டது. முதல் கதையுடனேயே அவர் உடனடிப் புகழ்பெற்றார். அதனையடுத்து ரங்கபூமி, சேவாசிரமம், காயகற்பம், கபன், கோதான், ‘அறக்கோட்டம்’ (கர்மபூமி) ஆகியவை எழுதப் பட்டன. அறக்கோட்டம் எழுதப்பட்டது 1932-ல் ஆகும். அறக்கோட்டம் கண்ட கண்ட இடமெல்லாம் கடவுளர் கோட்டங்களாகக் காட்சி யளிப்பது காசிமாநகரம். அதன் முக்கிய கலைக் கோட்டமாகத் திகழ்ந்தது அரசியார் கல்லூரி. மாதத்துக்கு ஒரு நாள், ஆண்டுக்குச் சில நாட்கள் கல்லூரி ஒரு முதல் தரப்பணிமனையாகவே காட்சியளிக்கும். அந்நாட்கள் தாம் மாணவர்கள் சம்பளங் கொடுக்க வேண்டிய நாட்கள். கல்வியைப் பற்றிக் கவலைப்படாத மாணவர் பலர் அந்நாட்களில் கவலைப்படுவர், கல்விக்காகச் செலுத்த வேண்டிய கூலியைக் குறித்து! அதுபோலவே, மாணவர் கல்வியில் காட்டும் கருத்தையும் கண்டிப்பையும்விட, ஆசிரியரும் ஆட்சியாளரும் அந்தக்கூலியில் கருத்துச் செலுத்துவர்; கண்டிப்புக் காட்டுவர்! பிற்பகல் பொழுது ஏறி உச்சியை அணுகிவிட்டது. ஏவலாட்களின் விரைந்த நடை தவிர, புறவாரங்களில் வேறு எவர் நடமாட்டமும் கிடையாது. கதவுகளின் வழியாகவும் பலகணிகள் வழியாகவும் புற்றின் புழைவாயில் களில் காணும் எறும்புகள் போல, மாணவர் தலைகளும் உருவங்களும் முன்னும் பின்னும் அசைந்தாடின. வெண்பொற் காசுகளின் கணகண நாதத்திலீடு பட்டுக் கலைக்கோட்டம் பகற்கனவு கண்டுகொண்டிருந்தது. சிறைக்கோட்டத்தில் கைதிகளை வரிசை முறையில் அழைப்பது போல, ஆசிரியர் ஒவ்வொருவராகப் பெயர்கூறி அழைக்கிறார். பணம் கொடுத்தவர் அமர்கின்றனர். கொடுக்காத வர்களிடம் கேள்விகள், குறுக்கு வினாக்கள் பாய்கின்றன. மாணவர் இன்று வராமலிருப்பது அருமை- இன்று சம்பளம் கொடுக்காமலிருந்தால் பெயரடிக்கப்பபடும். வராமலிருந்தால் வேறு தண்டனையும் உண்டு. பணம் கொடுக்க வேண்டிய கடைசி நாள் அது. அத்தகைய நாளுக்குரிய கண்டிப்பு ஆசிரியர் மூக்குக் கண்ணாடி கடந்து அவர் கண்களில் நிழல் வீசிற்று. பெயர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீறிட்டு முழங்கின. “அமர்காந்த்!” அரவமில்லை... ஆசிரியர் மீண்டும் முழங்கினார். “அமர்காந்த்!!” மாணவர்களின் இருக்கைகளை நோக்கி அவர் கண்கள் சுழன்றன. “இன்று அமர் ஏன் வரவில்லை? இன்று கொடுக்காவிட்டால், பெயரடிக்க வேண்டுமே!” என்று அவர் கேட்டார். அவர் குரலில் இப்போது கண்டிப்பு மட்டுமல்ல, சிறிது கவலையும், ஓரளவு கனிவும் கலந்திருந்தன. ஏனெனில் அமர் பணந்தர முடியாமல் ஓடி விடக்கூடிய மாணவனல்ல. கோடி குவித்த செல்வ வீட்டுப் பிள்ளை, அதேசமயம் மற்ற செல்வர் வீட்டுப் பிள்ளைகளைப் போல அவன் ஆகா வழியுமல்ல; படிப்பில் மசணையுமல்ல. ஒரு மாணவன் எழுந்து நின்றான். “ஐயா, அமர் பணம் வாங்கத்தான் போயிருக்கக்கூடும். நான் போய்ப் பார்த்து வருகிறேன்” என்றான். அவன் அமர்காந்தின் நண்பன் சலீம். அவனும் செல்வர் வீட்டுப் பிள்ளைதான். படிப்பில் அமர்காந்த் அவனுக்குக் குரு. விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் உலகியல் காரியங் களிலும் அவன் அமர்காந்துக்குக் குரு. புறவாரங்களில் எங்கும் தேடியாய் விட்டது. இனி வீட்டுக்குத்தான் போய்ப் பார்க்க வேண்டும். ஆனால் கல்லூரியில் புறவெளியில் மரநிழலில் யாரோ முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. அது யார்? ஆம். அது அமர்காந்த் தான். சலீம் கால்கள் விரைந்து அப்பக்கம் நாடின. “ஆசிரியர் அங்கே உன் பெயரை அழைக்கிறார். நீ இங்கே நிற்கிறாய். இன்னும் நேரம் தாழ்த்தினால், பெயரை அடித்து விடுவாரே!” என்றான் அவன். அமர்காந்த் ஒன்றும் மறுமொழி கூறவில்லை. ஆனால் கலங்கி யிருந்த அவன் கண்களிலிருந்து கங்கையும் யமுனையும் பாய்ந்தன. சலீம் நெஞ்சம் துடித்தது. “சம்பளத்திற்காகவா நீ கண்ணீர் விடவேண்டும்? அமர்! உன்னிடம் இல்லாவிட்டால் என்ன? நான் கொடுக்க மாட்டேனா? என்னிடம் ஏன் கேட்கக் கூடாது?” என்று அவன் கெஞ்சலாகக் கேட்டான். அமர்காந்த் இப்போதும் வாய்திறக்கவில்லை. அவன் தொண்டை கம்மியிருந்தது. ஆனால் கலக்கம் தெளிந்து விட்டது என்பதைக் கண்கள் காட்டின. அவன் சலீமின் கைகளைப் பற்றிக்கொண்டு “கேட்க முடிய வில்லை. உனக்கு மட்டற்ற நன்றி” என்று தழுதழுத்துக் கூறினான். “என்னிடம் கேட்க ஏன் வெட்கம்? நான் உன் நண்பன்; அயலான் அல்ல; மைத்துனன் கூட அல்லவே” என்றான். அமர்காந்த் இக்கேலிப்பேச்சின் பயனாகத் தன்னுணர்வு பெற்றுச் சிரித்தான். இருவரும் கைகோத்துக் கொண்டு வகுப்புக்குச் சென்றனர். அமர்காந்தின் தந்தை சமர்காந்த் ஒரு சேட். நகரின் தலைசிறந்த செல்வருள் அவர் ஒருவர். அவர் தந்தை குடிசையில்தான் வாழ்ந்திருந்தார். ஆனால் அவர் இன்று வாழ்ந்திருந்த இடமகன்ற மாளிகை அந்தக் குடிசையையும், தெருக்களையும் விழுங்கி, வானளாவிய மாடகூடங்கள் மூலம் ஏப்பமிட்டது. நகரின் பொதுமக்கள் வாழ்வை முழுதும் தம் காலடியில் போட்டு அடக்கியாண்ட ஒன்றிரண்டு செல்வருள் அவர் இடம்பெற்றிருந்தார். ஆயினும் இச் செல்வ வாழ்வினால் கூட அவர் குடும்பம் வளம் பெறவில்லை. அவர் முதல் மனைவி, அமர்காந்த் பிறந்த சில ஆண்டுகளுக்குள் உயிர்நீத்தாள். இரண்டாவது மனைவி செல்வர் மனையிற் பிறந்து, புதுச் செல்வம் ஆளவந்தவள். அவள் குடும்ப ஆட்சியில் அமருக்கு ஏற்பட்ட வறுமை ஏழைக் குடிசையிலுள்ள பிள்ளைகள்கூடக் காணாதது. ஏனெனில் அது அன்பு வறுமை. தந்தையோ, மனைவி மக்களைவிடச் செல்வத்திலேயே கருத்துச் செலுத்தியிருந்தார். குடும்பத்துக்காக அவர் செல்வம் ஓம்பவில்லை. செல்வத்துக்காகவே குடும்பம் ஓம்பினார். பிள்ளைகள் வாய்திறந்து கேளாமலே அவர்கள் தேவைகளறிந்து வழங்குபவள் தாய். அமருக்குத் தாய் இல்லை. தந்தையாரிடம் எதையும் கெஞ்சிக் கேட்டுத்தான் வாங்க வேண்டும். மாற்றாந்தாயிடமோ கெஞ்சினாலும் கிடையாது. அமரோ, யாரிடமும் எதையும் கேட்க பழகிக்கொள்ள வில்லை. தாய் தந்தையர் அவனை அசட்டைசெய்து வெறுக்க வெறுக்க, அவன் அவர்கள் பணம் அவர்கள் போக்கு ஆகியவற்றை வெறுத்தான். அவர்கள் விருப்பமறிந்து நடக்க அவன் முயலவில்லை. அவர்கள் வெறுப் பறிந்து நடந்தான். அவன் வளர வளர இந்த வெறுப்பும் வளர்ந்தது. தாய்க்கு அடுத்த உறவு தாரம் என்பது பழமொழி. அவ்வுறவுடைய ஒரு குழந்தை மனைவியும் அமருக்கு அம்மாளிகைக்குள்ளேயே இப்போது இருந்தாள். ஆனால் சமர்காந்த் பணத்தையே நாடிக்கொண்ட மருமகள், அந்தப் பணத்தின் எல்லைக்கோட்டைத் தாண்டாதவளாயிருந்தாள். அவள் பெயர் சுகதா. அவளுக்குத் தந்தை இல்லை. தாய் இரேணுகா ஆண்பிள்ளை இல்லாக் குறை தீர, அவளை ஆண் பிள்ளையாகவே- குடும்பக் கவலையும் பொறுப்பும் அறியாத வளாகவே- வளர்த்திருந்தாள். இன்பத்திலேயே திளைத்த அந்நங்கையும் மணமில்லாத, ஆனால் அழகுடைய ஒரு வாடாமலராக விளங்கினாள். மணமாகி ஆண்டுகள் இரண்டாகியிருந்தன. அதற் கிடையில் அவள் இரண்டு தடவைகள் கணவன் வீட்டுக்கு வந்தாள். இரண்டு தடவைகளிலும் ஒன்றிரண்டு நாட்களே தங்கினாள். கணவன் வீட்டுடன் தனக்குத் தொடர்பு உண்டு என்று அவள் நினைத்திருந்தாளே தவிர, அவள் கணவனுடன் வேறு தொடர்பு நாடவில்லை. எவரும் அதுபற்றிக் கவலைப் படவும் இல்லை. அமரும் மனைவி என்றால் தந்தைக்கு ஒரு மருமகள் என்ற அளவிலேயே மதித்திருந்தான். அமர் மாற்றாந்தாய் இப்போது இல்லை. இதனால் அவனை வெறுத்த ஒரு ஆள் குறைந்தது. ஆயினும் தந்தையும் அவனும் இன்னும் தண்ணீரும் எண்ணெயும் போலவே வாழ்ந்தனர். மாற்றாந்தாய்க்கு நைனா என்று ஒரு பெண் இருந்தாள். அவள் அமரைவிட ஏழாண்டு இளையவள். அமர்காந்த் தன் உள்ளத்தின் அன்பு முழுவதையும் இத்தங்கை மீதே கொட்டியிருந்தான். அவளும் அவன்மீது உயிராயிருந்தாள். அவள் அன்பு வெற்று அன்பு அல்ல. குழந்தையன்பின் எல்லையுட்பட்டதும் அல்ல. அவன் உள்ளத்தின் நிலையை அவள் அவன் முகக்குறிப்பாலறிந்து அவனை மகிழ்விக்க அரும்பாடு படுவாள். அவனுக்கு விருப்பமான தின்பண்டங் களைச் செய்து, பாசத்துடன் அவனை உண்ண அழைப்பவள் அவளே. அவன் தேவைகளை ஒன்று விடாமல் கவனித்து நிறைவுசெய்து மகிழ்வாள். அவள் அன்பில் தாய்மையின் பரிவும் பெண்மையின் கனிவும் கலந்திருந்தன. கல்லூரியின் சம்பள நாளை அமர் கவனிப்பதுமில்லை. யாரிடமும் பணம் கேட்பதுமில்லை. கையில் பணம் இருந்தால் கொடுப்பான், இல்லா விட்டால் என்ன செய்வது என்பதை அவன் சிந்தித்ததே கிடையாது. ஆனால் நைனா அவனுக்காக அந்நாளைக் கணக்கிட்டு வந்தாள். அந்த நாள் வரும்போது அவள் யாரிடமோ, எப்படியோ பணம்பெற்று, சட்டைப்பையில் போட்டு வைத்திருப்பாள். இந்த மாதமும் அவள் வழக்கம் போலக் கணக்கு வைத்திருந்தாள். ஆனால் அவள் கணக்கு நாட்டு மாதத்தில்! பள்ளிக் கணக்கோ, ஆங்கில மாதப்படி! ஆங்கில மாதத்தின் நாட்களைத் தெரிந்து கொண்டு, அதை நாட்டு மாதப்படி அவள் கணக்கிட்டு வந்தாள். ஆனால் முந்திய ஃபெப்ரவரிக்கு இருந்த 29- நாட்களையே இந்த ஆண்டு ஃபெப்ரவரிக்கும் அவள் கணக்கிட்டுவிட்டாள். இதனால் ஒருநாள் பிந்திவிட்டது. அமர்நாத்திடம் அன்று பணம் இல்லாததின் காரணம் இதுவே. அமர் கல்லூரியிலிருந்து வீடுவந்ததும் தன் அறையில் சோர்ந்து சாய்ந்தான். சலீம் பணம் கொடுத்துதவியது பற்றி அவன் நன்றியுடைய வனாயிருந்தாலும், அவன் கைக்குப் பாரமாய் விட்டோமே என்று அவன் கவலைப்பட்டான். இதற்கிடையில் நைனா வந்து, “அண்ணா, நாளைத் தானே உன் சம்பள நாள்?” என்று கேட்டாள். அமர் “இன்றுதான் சம்பள நாள். உனக்கு அந்தக் கவலை இப்போது எப்படி ஏற்பட்டது?” என்று எதிர் வினவினான். கவலை ஏற்பட்ட வகையை நைனா விளக்க விரும்பவில்லை. ஆயினும் பேச்சைத் தொடர்ந்தாள். “சம்பளத்துக்கு உன்னிடம் பணம் இல்லை. என்ன செய்தாய்?” அமர் தன்னிடம் இல்லாதிருந்ததை ஒத்துக்கொண்டு, சலீம் கேளாது செய்த உதவியைப் பாராட்டினான். தன் கணக்கு எங்கோ, எப்படியோ தவறிவிட்டது என்பதை நைனா உணர்ந்தாள். ஆனால் சலீமின் கடனை எப்படியும் தீர்க்கச் செய்ய வேண்டுமென்று விரும்பினாள். அவள் உடனே “நீ ஏன் என்னிடத்தில் கேட்க வில்லை. இதோ பணம் இருக்கிறது. நாளை சலீமிடம் கொடு” என்றாள். “உன்னிடம் பணம் ஏது?” “அப்பாவிடம் உன் சம்பளத்துக்கு என்று கேட்டுத்தான் வாங்கினேன்.” “அப்பாவிடம் எனக்காக நீ கேட்டிருக்கக்கூடாது. அவரிடம் கேட்டுவாங்கித்தான் படிக்க வேண்டுமென்றால், எனக்கு படிப்பே வேண்டாம்.” நைனா சிரித்துக்கொண்டு “தருவது அப்பா அல்ல, நான்தான்” என்று கூறி அவன் சட்டைப்பையில் பணத்தைப் போட்டாள். நைனாவிடம் அவன் என்றும் கோபம் காட்டியதில்லை, இன்று காட்டினான். அந்தப் பணத்தை எடுத்து வீசி எறிந்தான். வெள்ளிக்காசுகள் மூலைக்கொன்றாக உருண்டோடிச் சிதறின.* பாவம்! நைனா ஒன்றும் கூறாமல் குனிந்து வெள்ளிகளைப் பொறுக்கலானாள். அவள் வாய்பேசாப் பொறுமை அவன் சீற்றத்தைத் தணிய வைத்தது. ஆனால் அதற்குள் சமர்காந்த் அந்தப் பக்கம் வந்தார். “என்ன திமிரடா உனக்கு. பணத்தை இப்படி வீசி எறிய! சம்பாதித் தாலல்லவா தெரியும் உனக்கு. அதன் அருமை?” என்று அவர் உறுமினார். அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டு, “உங்கள் பணத்தின் அருமை உங்களோடு இருக்கட்டும். எனக்கு வேண்டாம்.” என்றான். “என் பணம் இல்லாமலா நீ சாப்பிடுகிறாய்? படிக்கிறாய்? உனக்காகப் பணம் சம்பாதிக்க நான் பாடுபடுகிறேன். உனக்குக் கொஞ்சமும் நன்றியில்லை.” “என் நன்றியை நீங்கள் எதிர்பார்க்கவும் வேண்டாம். எனக்காக எந்தப் பாடும் படவும் வேண்டாம். நான் உழைத்துப் பாடுபட்டுப் பொருள் சம்பாதித்துக் கொள்வேன். மண் வெட்டுவேன், அல்லது இராட்டை சுற்றுவேன். உழைப்பாளரைச் சுரண்டிச் சேர்த்த சோம்பேறிச் செல்வம் எனக்கு வேண்டாம்.” அறையில் நூற்கும் வட்டும் இராட்டையும் இருந்த திசையில் இருவர் கண்களும் சென்றன. அவர் சிரித்தார். “மண் வெட்ட உனக்கு வராது. நூற்பு வட்டும் இராட்டையும் சுற்றும் ஏழைக்கு ஒருநாள் முழுதும் வேலை செய்தால் நான்கணாக் கிடைக்கும். அதைக் கொண்டு உன் இன்ப வாழ்வும் ஒய்யாரப் படிப்பும் எப்படிக் கைகூடும்? காந்தி பெயர் கூறிச் செல்வர் மதிப்புப் பெறத்தான் அவை உதவும். ஏழைகள் பிழைப்புக்கே அவை உதவ முடியாதே!” அமர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. சேட்டுக்களின் இவ்வேதாந்தம் அவன் கனவுக் கோட்டையை ஊறுபடுத்திற்று. “எனக்கு இன்ப வாழ்வும் வேண்டாம். ஒய்யாரக் கல்வியும் வேண்டாம். உழைத்த கூலி கொண்டு வாழும் வாழ்வும் கல்வியுமே போதும். தங்கள் பணம் இல்லாமல் வாழ நான் பழகிக்கொள்வேன்” என்றான். “நீ பக்கிரி மனப்பான்மை கொண்டிருக்கிறாய். ஏன், பக்கிரி யாவதுதானே,” என்று ஏளனமாகக் கூறிவிட்டு சமர்காந்த் வெளியேறினார். ‘காந்தி பக்கிரிதானே’ என்று எண்ணிக்கொண்டான் அமர். ஆயினும் இப்பேச்சு அவன் உள்ளத்தில் மேனாப்பைக் கலைத்துவிட்டது. “இனி தந்தை பணத்துக்கேற்ற வாழ்வு வாழவோ, அதற்குரிய கல்வி கற்கவோ கூடாது” என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் சொற்கள் வாய்மூலம் வெளிவந்தன. நைனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் மிரள மிரள விழித்தாள். “அண்ணன் ஏன் அப்பாவை எதிர்க்க வேண்டும், அப்பா ஏன் கோபிக்க வேண்டும்!” என்று அவளுக்கு விளங்கவில்லை. ஆனால் அவன் கவலைப் படுவது கண்டு, அவள் கவலைப்பட்டாள். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு “அண்ணா அண்ணா! எழுந்திரு. சூடாகப் பக்கடா செய்து வைத்திருக்கிறேன், ஆறிவிடும். வந்து உண்” என்றாள். “நான் இனி இத்தகைய பண்டங்கள் தின்னக்கூடாது. இனி உழைத்துத்தான் சாப்பிட வேண்டும்.” “என்ன அண்ணா, இது. உனக்காகத்தானே நான் சமைத்தேன். நான் செய்த பண்டத்தை நீ ஏன் தின்னக் கூடாது?” “நீ சமைத்திருக்கலாம். ஆனால் இது அப்பா பணம்.” “பிள்ளை அப்பா பணத்தைச் செலவு செய்யாமல் வேறு யார் பணத்தைச் செலவு செய்வது?” “அவர் பணம் உழையாது சம்பாதித்த பணம். உழைப்ப வரைச் சுரண்டிச் சம்பாதித்த பணம். அதை நான் தொட மாட்டேன்.” நைனா காந்தியடிகளைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. செல்வர்கூட அவரை மதித்தனர் என்று அவள் அறிவாள். ஆனால் ‘காந்தீயம்’ என்பது என்ன என்று அவளுக்குத் தெரியாது. அமரின் தத்துவத்திலோ காந்தீயம் கடந்த சமதருமக் கருத்துக்கள் இருந்தன. அவள் உள்ளம் அதை அறியக்கூட வில்லை. சூடான பக்கடா வீணாக ஆறுகிறதே என்று மட்டும் அவள் கவலைகொண்டாள். இச்சமயம் சுகதா அழைப்பதாக பணிப்பெண் அமரிடம் வந்து கூறினாள். அவன் மனைவி அவனை அழைத்தது அதுதான் முதல்தடவை; அதற்குமுன் அவ்வப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் காண்பதுண்டு. அவசியமான பேச்சுக்கள் பேசியதுண்டு. அவ்வளவுதான். ‘போகவேண்டுமா, வேண்டாமா?’ என்று அவன் தயங்கினான். ஆனால் பணிப்பெண் அவனை இட்டுப்போகவே காத்திருந்தாள். அவள் பெயர் கௌசல்யா. அவளை எல்லாரும் சில்லு என்று கூப்பிட்டனர். அவள் அறிவு மந்தமுடையவள். அழவேண்டிய நேரம் சிரிப்பாள், சிரிக்க வேண்டிய நேரம் அழுவாள். நைனா நீங்கலாக, அமர் அன்பு செலுத்திய ஒரே ஆள் அவ்வீட்டில் அவளே. அவளிடம் அமர் கொண்ட பரிவில் பாசம் கலந்திருந்தது. அவள் அழைப்பைத் தட்ட மனமின்றி அவன் உடன் சென்றான். சுகதா முற்றிலும் அறிவற்றவளும் அல்ல, குடும்பப் பாசம் அற்றவளும் அல்ல. கணவனைப் பற்றி அவள் இதுவரை கவலைப்பட்டதில்லை; சிந்தித்ததுமில்லை. கணவனுக்கும் மாமனுக்கும் உரிய வீடு அது என்பதை மட்டும் அவள் அறிந்திருந்தாள். ஆனால் தந்தையும் மகனும் பேசிய வகை அவளுக்குப் புதிதாயிருந்தது. அமர் பேச்சு இன்னும் புதுமையாக இருந்தது. புதுமையில் அவளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சமர்காந்த் சுகதாவிடம் வந்து, “உன் கணவனை நீதான் சென்று திருத்தவேண்டும். அவனுக்குக் குடும்பக் கவலை தெரியவில்லை. எனக்கு வயதாகிவிட்டது. இனி அவன்தானே என் அலுவலைப் பார்க்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு மணி நேரமாவது கடையிலிருந்து பழகினால் என்ன? நாள் முழுதும் ஒன்று பள்ளியில் இருக்கிறான் அல்லது இராட்டை சுற்றுகிறான்” என்று கூறியிருந்தார். “நைனா உங்களுக் காகப் பாடுபட்டுப் பக்கடா செய்து வைத்துக் கொண்டிருக்கிறாள். ஏன் சாப்பிட வரவில்லை?” என்று தொடங்கினாள் சுகதா. “எனக்கு பசியில்லை.” “நைனாவுக்குப் பசிக்காதா?” “அவள் சாப்பிடட்டுமே?” “நீங்கள் சாப்பிடாமல் அவள்தான் சாப்பிடமாட்டாளே!” அவன் பேசாதிருந்தான். ‘நீயும் அவளும் சாப்பிடுங்கள். எனக்கு வேண்டாம்” என்றான். “நைனா சாப்பிட்டாலும் நான் சாப்பிடப் போவதில்லை. அவளாவது அவள் அப்பா பணத்தைச் செலவு செய்து சாப்பிடப் போகிறாள். நான் நீங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தைத்தானே சாப்பிட முடியும்!” “நேற்றுவரை எப்படிச் சாப்பிட்டாய்?” “நேற்றுவரை நீங்கள் சாப்பிட்டீர்கள். நீங்கள் சாப்பிடும் இடத்தில் நானும் சாப்பிட்டேன். இனிமேலும் நீங்கள் சாப்பிடும் இடத்தில்தான் நான் சாப்பிடுவேன்.” “உனக்கு உன் அம்மா பணம் இருக்கிறதே?” “அம்மா வீட்டுக்குப் போனால்தான்...” “போவதுதானே!” “என் வீடு இதுதான், அம்மா வீடல்ல. அது தெரிந்துதான் நான் இத்தடவை திரும்பப் போகவில்லை.” அவள் வந்து பல வாரமாகியும் போகாமலிருப்பது அவனுக்கு இப்போதுதான் நினைவுக்கு வந்தது. அவள் மீண்டும் பேசினாள். “இரண்டு ஆண்டுகளாக நான் அம்மா வீட்டைத்தான் என் வீடு என்று நினைத்திருந்தேன். அம்மாவே ‘உன் வீடு, என் வீடு’ என்று பேசியது என் கருத்தை மாற்றிவிட்டது.” “இனி நீ அம்மா வீட்டுக்குப் போகமாட்டாயா?” “நீங்கள் வந்தால் உங்களுடன் போவேன்.” சுகதா வெறும் இன்ப வாழ்க்கைப் பிராணி என்றுதான் அமர் இதுவரை நினைத்திருந்தான். அவளிடம் இவ்வளவு பேச்சுத்திறமும் வழக்கறிஞர் மாதிரி வழக்காடும் திறமும் இருக்கும் என்று அவன் எண்ணியது கிடையாது. இத்திறம் அவனுக்கு வியப்பூட்டிற்று. வேறு பேச வகையின்றி “என்னை என்ன செய்யவேண்டும் என்கிறாய்” என்றான். “நைனாவைச் சாப்பிடச் சொல்ல வேண்டும், எனக்குச் சாப்பாடு போட வேண்டும்!” என்று கூறி அவள் சிரித்தாள். சிரிப்பு அவனை முற்றிலும் பரவசப்படுத்திற்று. அவன் தானே சென்று நைனாவை இழுத்து வந்தான். இருவருக்கும் சுகதா தின்பண்டங்களை வட்டித்தாள். நைனா அவளை இழுத்து உட்கார வைத்து, இருவரிடையிலும் இருந்து இரு தட்டுகளிலிருந்தும் தான் உண்டு மகிழ்ந்தாள். நைனாவின் கவலைகள் தீர்ந்தன. சுகதா முகத்தில் வெற்றிக் களிப்பு. முழுநிறைமதி எனக்களை வீசிற்று. கட்டுப்படாத குதிரை போலத் திமிறிக் கொண்டிருந்த அமர், அதன் நிலவொளியில் செயலற்று உலவினான். அவனது புதிய கட்டுப்பாட்டில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. சுகதாவின் அன்பணைப்பில் அடங்கி அவள் விருப்பப்படியெல்லாம் குழைந்து நடந்தான். தந்தை கடையில்கூட அவன் இருக்கத் தொடங்கினான். அவ்வாண்டுத் தேர்வில் அமர் மெட்ரிக்குலேஷனில் முதல்வனாகத் தேறினான். சுகதா வழக்கம் போல ஒரு நாள் கணவன் வீட்டில் இருந்துவிட்டு வநதுவிடுவாள் என்றே அவள் தாய் இரேணுகா நினைத்திருந்தாள். ஒரு நாளில் வராது போகவே ஒவ்வொரு நாளும் நாளை வருவாள், மறுநாள் வருவாள் என்று காத்திருந் தாள். வாரம் பலவானபின் அவளால் இருக்க முடியவில்லை. முதலில் வாராததில் சிறிது மகிழ்ச்சிகூட இருந்தது. ‘கணவன் வீட்டிலுள்ள பாசம் வளரத் தொடங்கிவிட்டது. இது நல்லதுதானே’ என்றும் அமைந்தாள். ஆனால் நாள் செல்லச் செல்லக் காணவேண்டும் என ஆவல், தன்னை மறந்து விட்டாளே என்ற கோபம், அங்கே என்ன நிலையில் இருக்கிறாளோ என்ற கவலை- இம்மாதிரி பல உணர்ச்சி அலைகள் அவள் உள்ளத் திலெழுந்தன. இறுதியில் அவள் தானே லக்னோவிலிருந்து புறப்பட்டு, காசிவந்து சேர்ந்தாள். சம்பந்தி வீட்டுக்கு நேரே வர விரும்பாமல், கோயில் அறநிலையங்களுக்கு வரும் முறையில் வந்து, மகளையும் பார்த்தாள். “அம்மா, நீ என்னை மறந்தேவிட்டாய். புக்ககம் உனக்கு அவ்வளவு சர்க்கரையாய்ப் போய்விட்டது அல்லவா?” என்று தாய் கேட்டாள். சுகதாவுக்கு உண்மையிலேயே வெட்கமாய்விட்டது. ஆனாலும் முன்போல் அம்மாவிடம் ஆவலுடன் சென்று அவளைக் கட்டிக் கொள்ள முடியவில்லை. அயலாரிடம் கூறும் விளக்கம்தான் அவளுக்கும் தரமுடிந்தது. “நான் என்ன செய்யட்டும், அம்மா. இப்போது அங்கே இங்கே விலக வழியில்லாமல் ஆய்விட்டது.” “அப்படி என்னம்மா வேலை ஏற்பட்டுவிட்டது உனக்கு? இப்போது வீட்டுவேலைகளை நீயே செய்யத் தொடங்கி விட்டாயா?” என்றாள். “அதொன்றும் இல்லையம்மா. மாமாவுக்கும் அவருக்கும் ஏதாவது சச்சரவு ஏற்படுகிறது. அது முற்றிவிட்டால் என் நிலை என்ன ஆகும்?” மகளிடம் ஏற்பட்ட மாறுதல், அவள் பிரச்சினைகள் தாய்க்குப் புரிய வில்லை. “என்ன சச்சரவு? அதனால் உனக்கு என்ன கவலை?” என்றாள். “அவருக்கு வட்டித்தொழில் என்றால் வெறுப்பு. உலக வாழ்விலேயே பற்றுதலற்றவர் போல என்னென்னவோ பேசுகிறார். தந்தையையும் தொழிலையும் உதறிவிட எண்ணுகிறார். இப்படிப்பட்ட இடத்தில் என்னைத் தள்ளிவிட்டாய் என்று முதலில் நான் உன்னைத்தான் நோகத் தொடங்கினேன்; பின்னால் எப்படியும் நான்தானே சமாளிக்கவேண்டும் என்று கருதி அதில் முயன்றேன். ஆனால் இந்தப் பொறுப்பு எனக்கு ஓய்வொழிவு இல்லாமல் வேலை கொடுக்கிறது.” இரண்டு வாரத்தில் தாயைக் குற்றம் சொல்லும் அளவுக்கு மகள் வளர்ந்துவிட்டாள். தாய் உள்ளம் அவள் புதிய வாழ்வும் பாசமும் கண்டு சிறிது பொறாமை கூட அடைந்தது. ஆனால் தாய் அறிவு விரைவில் மாறுதலின் எல்லையை மதிப்பிட்டு விட்டது. சுகதாவை ஊன்றிக் கவனித்தபோது அவளும் ஒரு தாயாகிவிட்டாள் என்று தெரிந்தது. தாய் எவ்வளவு வற்புறுத்தியும் சுகதா புக்ககம்விட்டு லக்னோ வர மறுத்துவிட்டாள். பிள்ளை தாயைப் பிரிந்திருந் தாலும் தாய்க்குப் பிள்ளையை மறந்திருக்க முடியவில்லை. அவள் நிலையாகவே காசியில் வந்திருக்கத் திட்டமிட்டாள். தான் கோயில் குளங்களில் திருத்தொண்டு செய்து கொண்டு காசியில் இருக்க விரும்புவதாகவும், அதற்கு வசதியாக ஒரு சிறு வீடு அமர்த்தி வைக்கும்படியும் அவள் மருமகனுக்கு எழுதினாள். அது வகைச் செலவுக்காக அவள் ஆயிரம் ரூபாயும் அனுப்பினாள். அமருக்குச் சுகதாவின் மீதுள்ள பாசம் சுகதாவின் தாய்மீதும் படர்ந்தது. அத்துடன் சுகதா சோம்பேறியான அவனைச் சுறுசுறுப் புடையவனாக்கியிருந்தாள். அவன் நகரெல்லாம் தானே அலைந்து, சிறிய, ஆனால் வசதியுடைய ஒரு வீடு அமர்த்தினான். அதை அழகுபடுத்துவதற்குரிய இன்பப் பொருள்கள் வருவித்து அதைச் செம்மைப்படுத்த அவன் அருமுயற்சி எடுத்துக் கொண்டான். எல்லாம் முடிந்ததும் கடிதம் எழுதினான். இரேணுகா வந்து பார்த்தாள். வீடு மிகவும் பிடித்திருந்தது. அதுபற்றி எடுக்கப்பட்டிருந்த ஏற்பாடுகள் கண்டு அவள் திகைத்தாள். மருமகன் தன் ஆயிரத்துடன் மற்றும் ஓராயிரத்துக்கு மேல் போட்டுத்தான் இத்தனையும் செய்திருக்க வேண்டும் என்று அவள் கருதினாள். ஆனால் அமர்காந்த் மாமியை வரவேற்று முகமனுரைத்தபின், தன் செலவுக் கணக்கை அவள்முன் வைத்தான். ஐந்நூறு ரூபாய்தான் செலவாயிருந்தது. மீதி ஐந்நூறையும் அவன் அவளிடம் தந்தான். அவள் வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையில்லை. “பணம் உங்களிடமே இருக்கட்டும்” என்று அவள் அன்புடன் மறுத்தாள். “வேண்டும் போது நான் வாங்கிக் கொள்ளமாட்டேனா? நீங்களே வைத்திருங்கள்” என்று கூறி அவன் வற்புறுத்திக் கொடுத்தான். அவனிடம் அவள் மதிப்பு மிகுந்தது. இயற்கையிலேயே இரேணுகாவுக்கு ஆண்குழந்தை இல்லை. சுகதாவை ஆணாகக் கற்பனை செய்து வளர்த்திருந்தாள். அக்குறை இன்று அவளுக்குத் தீர்ந்தது. இடையே சுகதாவின் அன்பு குறைந்துவிட்டதே என்று அவள் வருத்திய வருத்தமும் தீர்ந்தது. அமர்மீது அவள் கொண்ட உரிமை அன்பு, சுகதா மீதுள்ள பாசத்தையும் புதுப்பித்து இரட்டைப் பாசமாக்கிற்று. அவள் சுகதாவிடம் முன்னிலும் உரிமையுடன் மனந்திறந்து பேசினாள். “உன் கணவனுக்கு எந்தக் குறையும் இனி வேண்டாம். நான் இனி இங்கேயே இருந்துவிடப் போகிறேன். அவனுக்கு வேண்டிய எதற்கும் தந்தையிடம் போக வேண்டியதில்லை. நீயே கொடுப்பது தெரியாமல் கொடுத்துவிடு. அதற்காக என் பணத்தை உன் பணமாக எடுத்துச் செலவிடத் தயங்காதே” என்றாள். கேட்கத் தெரியாத அமருக்கு இப்போது கேட்கும் தேவை அற்றது. அவன் ஆடைகள் அவனையறியாமல் மாறின. அவன் செலவும் மதிப்பும் பெருகிற்று. அவன் கனவுகள் பல நனவாயின. நண்பர்களுடன் அவன் அளவளாவினான். நாடகம், இசை, விருந்துகளில் அவன் கலந்தான். காங்கிரஸ் கூட்டம், அற நிலையங்களில் அவன் பெயர் அடிபட்டது. சொற்பொழிவுகள் ஆற்றினான். அவன் வாழ்க்கைத்தரமும் மதிப்பும் உயர்ந்தன. பத்திரிகைகள் படிப்பதன் மூலம் அவன் உள்ளமும் கருத்தும் விரிவடைந்தன. ஏழைமக்கள் வறுமை, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் துன்பங்கள் ஆகியவற்றில் அவன் கருத்துச் சென்றது. கல்லூரி ஆசிரியருள் ஒருவரான டாக்டர் சாந்தி குமாரும் சலீமும் அமர்காந்துடன் அடிக்கடி சேரிகளையும் பொது நிலையங்களையும் சுற்றிவருவதுண்டு. சாந்திகுமார் இங்கிலாந்தில் படித்தவர். ஆனால் சமூகச் சீர்திருத்தத்திலும் மக்கள் தொண்டிலும் பெரிதும் கருத்துடையவர். மணம் செய்து கொள்ளாமலே அவர் இத்தொண்டுகளைச் செய்து வந்தார். மணம், ஆண் பெண்களின் உயர் வாழ்வுக்கு ஒரு கால்கட்டு என்ற கொள்கையையே அவர் கடைப்பிடித்து வந்தார். நண்பர்கள் நகரைவிட்டு வெளியே உலாவுவதற்கு ஒருநாள் புறப் பட்டிருந்தனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத நேரம். பாதையில் ஒரு புறம் வயல்களும், மறுபுறம் ஊரடுத்த சாலையும் இருந்தன. சாலையோரத்தில் ஓரிடத்தில் சிற்றூர்வாசிகள் சிலர் கும்பலாகக்கூடி வயலின் பக்கமாக எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் அச்சமும் கவலையும் குடிகொண்டிருந்தன. படைவீரர் சிலர் வயலின் பக்கமாக இருந்து ஒவ்வொருவராக வந்தனர். செய்தி என்னவென்று டாக்டர், கும்பலில் ஒருவனைக் கேட்டார். அவன் வாய் திறந்து படைவீரரைச் சுட்டிக் காட்டி நடுங்கினான். ஆனால் அதற்குள் விட்டுவிட்டு ஒரு பெண்ணின் அலறல் வயற்காட்டினுள்ளிருந்து கேட்டது. ஒவ்வொரு தடவையும் அலறலின் ஓசை கம்மிற்று. நண்பர் செய்தியை ஊகித்து வயற்பக்கம் திரும்பினர். படைவீரர் தடுத்தனர். டாக்டர், ஒருவனைக் கைமுட்டியால் தாக்கினார். அவன் எதிர்த்துத் தாக்கி அவரை வீழ்த்தினான். ஆனால் அமரும் சலீமும் தம் வளைகோற் பந்து மட்டையால் அவனைத் தாக்கினர். மற்ற படைவீரர் இதற்குள் நண்பரைச் சூழ்ந்தனர். டாக்டர் காயமடைந்து விழுந்தார். மற்ற நண்பர்கள்மீது படைவீரர் தாக்குதல் மும்முரமாயிற்று. டாக்டர் விழும்வரை பார்த்துக் கொண்டிருந்த சிற்றூர்வாசிகள் இப்போது ஒருங்கே கிளம்பிவந்தனர். விழுந்து கிடந்தவர் தவிர மற்றவர் இப்புதுநிலையைக் கண்டதும் ஓடினர். மக்கள் உதவியால் நண்பர்கள் டாக்டரை ஒரு வண்டியில் வைத்து மருத்துவமனை செல்லப் புறப்பட்டனர். ஆனால் டாக்டர் “இந்தப் படைவீரரை விட்டுவிட்டா போவது? அவர் களையும் இட்டுச் செல்ல வேண்டும்” என்றார். அவர்கள் புறப்படும் சமயம் வயற்காட்டிலிருந்து அலங்கோலமாக ஓரிளமங்கை ஓடினாள். படைவீரர் கொடுமைக்கு அஞ்சியது போலவே, அவள் பிறர் பார்வைக்கும் அஞ்சினாள். தாறுமாறாகக் கிழிந்து குருதிக் கறைபடிந்த ஆடையால் முகத்தை மறைத்துக் கொண்டு அவள் அப்பால் ஓடினாள். இதைக் கண்ட சலீம் சிற்றூர் மக்களைப் பார்த்து, “முதலிலேயே நீங்கள் இந்தப் பெண்ணின் மதிப்பைக் காக்கப் போராடியிருக்கலாம். படைவீரர் கொடுமையை விட உங்கள் கோழைமை எனக்கு வெறுப்பைத் தருகிறது” என்றான். டாக்டர் “நம் போன்ற படித்தவர் அயல்மொழி கற்று அயலாட்சியை ஆதரிக்கும்போது, இந்த ஏழை மக்கள் என்ன செய்யமுடியும்?” என்றார். படைவீரர் காயங்கள் விரைவில் குணமடைந்தன. டாக்டர் ஒரு மாதம் வரை மருந்தகத்தில் இருக்க வேண்டியதாயிற்று. அமர் அடிக்கடி சென்று அவரைப் பார்த்தான். குணமானபின் டாக்டர் படைவீரர் பாடிசென்று காயமுற்ற படைவீரரை விசாரித்தார். படைத்துறைத் தலைவர் இது கண்டு வெட்கி, அவரிடம் தம் வீரர் கயமைத்தனத்துக்கு மன்னிப்புக் கோரினர். இனி இத்தகைய செயல்கள் நிகழாமல் தடுப்பதாகவும் உறுதி கூறினார். ஊரெங்கும் இச்செய்தி பரந்தது. டாக்டர் புகழ் எங்கும் பரவிற்று. அமரின் நண்பர் குழு அதில் பங்கு கொண்டது. அமரின் குடும்ப அமைதியும் உயர்வாழ்வும் சமர்காந்துக்கு மிகவும் பிடித்திருந்தன. சுகதா, இரேணுகா ஆகிய இருவர் மூலம் அவர் விரும்பிய படியெல்லாம் அமரை ஆட்டி வைக்க முடிந்தது. அத்துடன் அவர் கைச் செலவில்லாமலே அவன் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. இப்போது படைவீரர் நிகழ்ச்சியின் பின், அவன் புகழ் இன்னும் உயர்ந்தது. அது அவர் மதிப்பையும் தொழில் வளத்தையும் பெருக்கிற்று. ஆயினும் எதிர்பாராவகையில் இப்புகழே அவருக்கும் அமருக்கும் இடையே மீண்டும் சிறு தொல்லைகளை உண்டு பண்ணிற்று. முதலில் அமர் காங்கிரஸ் கூட்டமொன்றில் தீவிரமாக ஆட்சியாளரை எதிர்த்தும், ஏழைகள் நிலையை விரித்தும் சொற்பொழிவாற்றினான். செல்வர்வீட்டுப் பிள்ளையே இதனைச் செய்தது கண்ட போலீஸ் அதிகாரி சமர்காந்திடம் இதுபற்றி முறையிட்டார். சமர்காந்தின் தூண்டுதலின்பேரில் சுகதா மீண்டும் கணவன் போக்கில் தலையிட்டாள். அமர்காந்துக்குத் தன் பேச்சில் நாட்டுப்பற்றுத் தவிர வேறு எதுவும் இருந்ததாகத் தோற்றவில்லை. ஆனால் சுகதா அதுபற்றியெல்லாம் வாதிட விரும்பவில்லை. “அரசாங்கத்தை எதிர்ப்பது தப்பு என்று நான் சொல்ல வரவில்லை. எதிர்ப்பவர் எதிர்க்கட்டும். உங்களுக்கு நான் ஒரு கால்கட்டு இருக்கிறேன். எனக்கும் இப்போது ஒரு கால்கட்டு வந்துவிட்டது. என்னை நினைக்காவிட்டாலும் என்...” அமர் அவளை மேலும் பேசவிடவில்லை. “உன் குழந்தை என் குழந்தைதானே, சுகதா. நீயும் எனக்குக் கால்கட்டல்ல; குழந்தையும் கால்கட்டல்ல. உனக்கும் குழந்தைக்கும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் என்ன செய்யவேண்டுமென்கிறாய்?” பெண்கள் உரிமைபற்றி அமர் படித்திருந்தான். குழந்தை பெற்றால் அவர்களைத் தொல்லைக்காளாக்குவது ஆடவர் கொடுமை என்று புதிய எழுத்தாளர் கூறியிருந்தனர். ஆகவே இளமையிலேயே சுகதா பேறுக்காளானது தன் குற்றம் என்று அமர் எண்ணி வருந்தினான். அவன் மனம் அவ்வளவு எளிதில் திரும்பியது கண்டு சுகதா மகிழ்வுற்றாள். “நீங்கள் இந்தக் காங்கிரசுக்காரர் பக்கமே போக வேண்டாம்” என்றாள். அமரின் உள்ளத்தில் மக்கள் தொண்டார்வம் வேரூன்றித்தான் இருந்தது. ஆனால் குடும்பக் கடமையார்வமும், சுகதாவின் தாய்மைக் கவர்ச்சியும் அதை வென்றன. அதேசமயம் சுகதாவின் உள்ளத்தில் அவன் பெருந்தன்மை ஒரு மாறுதலை உண்டுபண்ணிற்று. ‘அவன் தந்தை தொழிலை வெறுத்தான்; ஆனால் தனக்கு இணங்கி, அதைக் கடிந்து கொள்ளாமல் இருக்கிறான்; ஏழைகளிடம் அவனுக்குப் பாசம்; ஆனால் தன்னை எண்ணி, அதையும் கைவிடுகிறான்; தன் கணவன் கருத்தும் செயலும் நேர்மையானவை என்ற எண்ணம் அவளிடம் வேர்க்கொண்டது. தன்னால் அவன் உள்நெஞ்சம் அடைந்த நைவையும் அவள் ஆற்ற முற்பட்டாள். படைவீரர் நிகழ்ச்சியில் துயருக்காளான பெண்ணிடம் அவள் இயற்கையிலேயே இரக்கம் கொண்டிருந்தாள். அச்செயலைப் புகழ்ந்து, “அப்பெண் யாரென அறிந்து கூறுங்கள். சமூகம் அவளை ஏற்காவிட்டால்கூட, நான் ஏற்று, என் வீட்டில் வைத்துக்கொள்கிறேன்” என்றாள். பிறக்கவிருக்கும் குழந்தை அவர்களை ஏற்கெனவே இணைத்திருந் தது. சுகதாவின் புதிய கருத்துக் கனிவு அவ்விணைப்பில் பின்னும் இனிமை ஊட்டிற்று. அமர் ஒருநாள் கடையிலிருக்கும்போது பறட்டைத் தலையும், நீண்டு வளைந்த மீசையும் கறுத்துத் தடித்த உடலுமுடைய ஒருவன் பழக்கமானவன் போலக் கடையில் வந்து ஏறினான். தந்தையை விசாரித்து, அவர் இல்லை என்று அறிந்ததும், அவன் முதலில் தயங்கி நின்றான். பின் தன்னிடமிருந்த கெட்டி வளையல் ஒன்றை நீட்டி, “என்ன கொடுப்பீர்களோ, விரைவில் கொடுங்கள்” என்றான். வந்தவன் காலேகான் என்பவன். தகாவழியில் துணிகரமாக அவனைப் போன்றவர் கைக்கொண்ட பொருளை, சமர்காந்த் போன்ற துணிகர வணிகர் பெற்றனர். இதனால் அவர்கள் தம் பெட்டியை நிரப்புவதுடன், அவனைப் போன்றவர்களையும் அவ்வப்போது போலீஸினிடம் சிக்காது காத்துவந்தனர். அமர் பொருளை வாங்காமல் குறுக்குக் கேள்விகள் கேட்டான். காலேகான் ஒன்றும் ஒளிக்கவில்லை. தன் அவசர நிலையையும் கூறி, தடயம் நானூறு பொன் பெறுமானாலும், கொடுத்ததை அன்று பெற்றுப் போவதாகக் கூறினான். அவன் நூறு பொன்னிலிருந்து ஐந்து பொன் வரை இறக்கிக் கேட்டும், அமர் அதைத் தீண்ட மறுத்து, அவனையும் கண்டித்து அனுப்பினான். சமர்காந்தின் தொடர்புகளுள் இதற்கு நேர்மாறான மற்றொன்றும் அதே நாள் அமர் அறிவுக்கு எட்டியது. அது ஒரு வயது சென்ற பட்டாணிக் கிழவி. அவள் கணவன் சமர்காந்திடம் பணிபார்த்தவர். கணவன் இறந்து அவள் வறுமையின் வடிவில் அவதியுற்றாள். அவளுக்கு யாரும் உதவி கிடையாது. சமர்காந்த் அவளுக்குக் கணவன் இருக்கும்போது கொடுத்த தொகையிற் பாதி கொடுத்து வந்தார். சமர்காந்த் வர நேரமாகவே, அமர்தானே அத்தொகையைக் கொடுத்தான். அத்துடன் அவள் நடக்க முடியாதவளாயிருந்ததனால், அவளை வண்டி வைத்து அழைத்துச் சென்று, வீட்டில் கொண்டுவிட்டான். பட்டாணிச்சிக்குச் சகீனா என்று ஒரு புதல்வி இருந்தாள். அவள் அந்த வறுமையிலும் எப்படியோ தானாகப் பின்னல் வேலை கற்று அழகிய கைக்குட்டைகள் பின்னியிருந்தாள். பட்டாணிச்சி அமரின் பெருந்தன்மை கண்டு அவனிடம் ஒரு கைக்குட்டையை அன்பளிப்பாகத் தந்து “அதனை யாராவது வாங்கினால், ஏழைகளாகிய நாங்கள் பிழைப்போம். தவிர, உன் பட்டாணி நண்பரில் யாராவது இருந்தால், என் சகீனாவை மணம் செய்வித்து உதவு” என்று கூறினாள். ஏழைகள் வறுமைபற்றி மேடையில் பேசிவந்த அமருக்கு, அது உண்மையில் தன் கற்பனை கடந்தது என்பது அவ்வீட்டின் காட்சியினால் தெரிந்தது. வறுமையை மறைக்க வறியோர் மேற்கொள்ளும் முயற்சியே அதன் கொடுமையை எடுத்துக் காட்டத்தக்கது. கொலைசெய்தவனும் வஞ்சகனும் தம் கொலையையும் வஞ்சகத்தையும் மறைக்கப் பாடுபடுவதை விட, ஏழை தன் ஏழ்மையை மறைக்கப் பாடுபடவேண்டியிருப்பதை அவன் கண்டான். தன்னாலியன்றமட்டும் ஏழைகளுக்கு உதவும் உறுதியுடனும், அதுபற்றிய மனக்கோட்டையுடனும், அவன் வீடு திரும்பினான். காலேகானின் செய்தி கேட்டதும் சமர்காந்துக்கும் கோபம் வந்தது. அவர் திருட்டுகளைக்கூட ஆதரிப்பது கண்டு அமருக்கு அதற்குமேல் கோபம் வந்தது. வட்டித் தொழிலால் ஏழைகள் கழுத்தை நெரிக்கும் முறையையே அவன் வெட்கக்கேடாக நினைத்தான். கல்விச் சாலை களுக்குப் பணமில்லாதபோது, இவ்வட்டிக்கடை முதலாளிகள் ஏன் கோயில்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பதும்; ஏன் மதச் சடங்குகள், கிரியைகள், பூச்சுமெழுக்குக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக் கிறார்கள் என்பதும் இப்போது அவனுக்கு நன்கு விளங்கின. தந்தைமீது அவனுக்கு ஆத்திரம் பொங்கிற்று. மீண்டும் இருவரும் வேங்கைப் புலியும் பன்றியும் போல் வாதப் போரிட்டனர். சுகதா இத்தடவையும் அமரை மெல்லக் கண்டித்தாள். ஆனால் இப்போது அமர் முற்றிலும் பழைய அமராயிருக்க முடியவில்லை. அவன் வாதாடினான். இந்தத் தொழிலில் நான் இனி ஈடுபட முடியாது. நான் இம்மாளிகையில் வாழ்ந்து, உயர்தர வாழ்வும் கல்வியும் நுகர்வதும் இத்தொழிலில்லாமல் முடியாது. எனவே நான் இனி ஏழை வாழ்வு வாழப் போகிறேன்” என்றான் அமர். சுகதா தன்னையும் தன் பிள்ளையையும் நினைவூட்டினாள். அமர் திடுக்கிட்டான். தான் வெளியேறினாலும் அவர்கள் வீட்டிலிருக் கலாம் என்றுதான் அவன் எண்ணினான். “நீங்கள் வெளியேறினால் நானும் வெளியேறுவேன். குழந்தையும் என்னுடன்தான் இருக்க நேரிடும்” என்ற அவள் குறிப்பு அவனைக் குலுக்கிப் போட்டது. “நீ தாய்வீட்டில் போய் இரு” என்றான் அவன். “நீங்கள் போனால்கூட, நான் போக இணங்க முடியாது.” “ஏன்?” “மாமன் வீட்டில் இருப்பது ஆண்களுக்கு அழகல்ல. தாய் வீட்டிலிருப்பது பெண்களுக்கும் அழகல்ல. மேலும் என் தாய் தூண்டுதலால் தான் நீங்கள் அவரை எதிர்ப்பதாக மாமா நினைப்பார்.” பெண்கள் எல்லாரும் பிறக்குமுன்பே வக்கீல் தொழில் படித்திருக்க வேண்டும் என்று அமர் நினைத்தான். அவனுக்கு வேறு வழி தோன்றவில்லை. அவன் மீண்டும் பணிந்தான். “அப்பா வழி சரியோ, தப்போ?” நான் இனி எதிர்க்கவில்லை. ஆனால் என்னால் கூடியவரை நான் மக்கட் சேவையில் ஈடுபடுவதில் உனக்குத் தடையில்லையே” என்று கேட்டான். அவள் மகிழ்ந்தாள். அவனை அணைத்துக் கொண்டாள். ஆனால் அவள் வயிற்றின் பாசம் அவ்வணைப்பை விட அவன் மனத்தில் இரக்கப் பண்பை வளர்த்தது. அவன் முன்னிலும் பன்மடங்கு குடும்பத்திலீடுபட்டான். அவ்வாண்டு கல்லூரித் தேர்வுக்கு அவன் உட்காரவேயில்லை. ஆனால் அதற்கு எவரும் வருந்தவில்லை. அவன் பொதுவாழ்வில் முன்போல் ஈடுபட்டான். அதற்காகவும் எவரும் வருந்தவில்லை. ஏனென்றால் பொது வாழ்வுப் பற்றுக் கடந்த குடும்பப்பற்று அவனை ஈர்த்தது. ஆனால் அக்குடும்பப் பற்றிலும் உள்ளூற ஒரு சமூகப் பற்றுத் தொக்கியிருந்த தென்பதை எவரும் அறியவில்லை. சுகதா வெறும் செல்லப் பிள்ளை என்று அவன் நினைத்திருந்தான். அவள் வாதத் திறமையை அவன் பிற்பட்டுத்தான் கண்டான். இப்போது அவளும் தியாகம், துணிச்சல், தன் மதிப்பு ஆகிய வற்றின் ஒரு சின்னம் என்பதைக் கண்டான். தான் கற்றறிந்த உயர் குறிக்கோளைவிட அவள் கல்லாதறிந்த குறிக்கோள் உயர்ந்ததாகுமென்று அவன் மனத்துக்குப் பட்டது. தன் உயரம்பற்றிக் கர்வம் கொண்ட ஒட்டகம் மலையருகே வந்து தன் உண்மை உயர்வளவை அடக்கமாக அறிந்து கொண்டது என்னும் பழமொழிக்கு அமர் இலக்காயினான். மறுநாள் அமர் கடையில் அமர்ந்திருக்கும் சமயம் ஒரு ஐரோப்பிய மாதும் இரண்டு மூன்று வெள்ளையரும் அங்கே வந்தனர். சமர்காந்த் இல்லாதது கண்டு, சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் செல்ல இருந்தனர். இருவர் இறங்கியாயிற்று. ஒருவர் இறங்கயிருந்தார். அதற்குள் பிச்சைக் காரியாகவும் பைத்தியக்காரியாகவும் அலைந்த ஒரு இளம்பெண் அவர்கள் அருகே பிச்சை கேட்பது போல் வந்தாள். திடீரென அவள் கையில் உடைவாள் மின்னிற்று. வெள்ளையருள் ஒருவர் குத்துண்டு உடனே மாண்டார்; மற்றொருவர் குத்துண்டு தள்ளாடிக் குற்றுயிராய் விழுந்தார். மூன்றாவது ஆளையும் ஐரோப்பிய மாதையும் அவள் குத்தத் தொடங்குமுன், அமர் தடுக்க முன் சென்றான். அவளை அவள் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாள். உடனே அவள் முகத்தின் கோர உருவம் மாறிற்று. கத்தியை வீசி எறிந்தாள். தானே தன்னைப் போலீசிடம் ஒப்படைத்துக் கொண்டாள். அவள் வேறு யாருமல்ல. வயல்கரையில் படைவீரர் கொடுமைக்கு ஆளான நங்கையே? அவள் எதிர்பாராச் செயலும் எதிர்பாரா ஆற்றலும் எல்லாரையும் முதலில் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் எவரும் அவளைக் கண்டிக்கவில்லை. வெள்ளையர்மீது பரிதாபப்படவுமில்லை. அவள் செயலை எல்லோரும் போற்றினர். அவள் பெற்ற தண்டனைக்காக மட்டுமே பரிதாபப்பட்டனர். படைவீரர் நிகழ்ச்சி, டாக்டர் முதலிய நண்பர் செயல்கள் ஆகியவற்றைக் கேட்டது முதல், மக்களிடையே பெருத்த விழிப்பு ஏற்பட்டிருந்தது. அது இப்போது பெருக்கெடுத்தோடிற்று. கொலைசெய்த நங்கையின் பெயர் முன்னி. அவள் திடீரென்று மக்கள் வணங்கும் வீரமாது ஆனாள். அவளுக்கு என்ன ஆகும்? அவள் பக்கம் நேர்மை கிடைக்குமா? என்பதே எங்கும் பேச்சு. போலீஸ் கோர்ட்டில் பலர் சான்று கூறினர். டாக்டர் தமக்குத் தெரிந்த விவரங்களை அப்படியே கூறினார். அவர் முன்னி சார்பாகப் பேசவில்லை என்று மக்கள் அவர் மீது சீறி எழுந்தனர். அமரோ அவளைத் தான் அங்கங்கே பார்த்ததுண்டு என்றும், அவள் நல்அறிவு நிலையில்லாதவள் என்றே தெரிவதாகவும் கூறினான். இது முற்றிலும் உண்மையல்ல. அவள் மீது கொலைக் குற்றமும் தண்டனையும் ஏற்படாமல் தடுக்கவே அவன் இவ்வாறு கூறினான். ஆனால் பொதுமக்களும் இதையே விரும்பினதினால், அவனை யாவரும் போற்றினர். முன்னியின் வழக்கு காசிமாநகரின் மிகப் பெரிய வழக்காயிற்று. அதன் ஆரவாரம் மாவட்டம் கடந்து மாகாணச் செய்தித்தாள்களையும் நிறைத்தது. பலர் அவளுக்காக வழக்கு நடத்த முன்வந்தனர்... கூலி யில்லாமல் உழைக்க வழக்கறிஞர் போட்டியிட்டுக் கொண்டு வந்தனர். வழக்குக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அறச்செயல்களில் ஈடுபட்டிந்து இரேணுகா அதன் தலைவியாளாள். சுகதாவும் அமரும் டாக்டரும் பிற நண்பரும் உடனிருந்து ஏற்பாடுகள் செய்தனர். வழக்கு மூன்று மாதமாக நடைபெற்றது. வழக்கு மன்றத்தில் மக்கள் பெருந்திரளாக மொய்த்தனர். கடைசி நாளன்று கூட்டத்திடையே பட்டாணிச்சியும் சகீனாவும் இருந்தனர். சகீனா முன்னியைப் பார்க்க விரும்பியதால், அவள் தாய் அமரை அடுத்துத் தங்களை முன்னணியில் நிற்க வைக்கும்படி கோரினாள். அவன் இரேணுகாவுடனேயே அவளை உட்காரவைத்தான். பஞ்சாயத்தார் அன்று முன்னி குற்றவாளியல்ல என்றுதான் கூறினர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. எங்கே தலைவர் அரசாங்க ஆளாதலால் வெள்ளையர் பக்கம் தீர்ப்புச் சொல்வாரோ என்று எல்லாரும் அஞ்சினர். ஆனால் தலைவர் மனைவியே மக்களில் ஒருவராய் மக்களிடையே இருந்தால் அவள் சுகதாவின் பக்கம் இருந்து கொண்டு, “முன்னிக்கு விடுதலை கிடைக்கவில்லை யானால், தலைவர் திரும்ப வீட்டுக்குள் வரப்போவதில்லை! இதை நான் உறுதி கூறுகிறேன்” என்றாள். அமர் நண்பன் சலீம் இம்முயற்சிகளில் பங்கு கொண்டிருந்தான். அவன் உணர்ச்சி வசப்பட்டவன். ஆத்திரப் போக்குடையவன். தலைவர் தீர்ப்பு ஒருவேளை எதிராகக் கூடும் என்று கருதினான். அதைத் தடுக்க முடியாமல் போய்விட்டால், அவருக்கு நல்ல பாடம் படிப்பிக்க எண்ணினான். தீர்ப்பு எதிராயிருந்தால், ஒருவரை அமர்த்தி, தலைவர் மீது செருப்புமாரி பொழிவிக்க அவன் விரும்பினான். “இதை யார் செய்ய முன்வருவார்கள்?” என்றான் அமர். “பணம் கொடுத்தால் அதற்கா ஆள் கிடையாது. காலேதான் என்ற ஒருவன்...” அமர் “காலேதான் திருடனாயிற்றே!” என்றான். சலீம், “அதுபற்றி உனக்குக் கவலை ஏன்? காரியம் ஆகட்டும். நீ பணத்துக்கு வழி பார்” என்றான். பணம் பெறவே அமர் வீடு சென்றான். ஆனால் அன்றிரவு பார்த்து சுகதா பிள்ளைப் பேற்று வலியில் உழலத் தொடங்கினாள். சமர்காந்த் இன்று தம் முழுத் திறமையும் காட்டிப் பரபரப்புடன் செயலாட்சி செய்தார். மருத்துவ மாதையும் மருத்துவரையும் அழைக்க அமரை அனுப்பினார். அரசாங்க மருத்துவரை அவர் அழைத்து வருமுன் குழந்தை அழுகையொலி அவன் காதில் கேட்டது. பேற்றின்போது சுகதாவின் துடிப்பு, அலறல், அதன் பின் அவள் மெலிவு ஆகியவை அவன் இதயநாடிகளை அதிர வைத்தன. தனக்காக அவள் செய்த தியாகங்களால் அவன் மதிப்பையும் அன்பையும் அவள் பெருக்கினாள். அழகிய இளங்குழவியைக் கண்டதும் அவன் இன்பம் இன்னும் கரைகடந்தது. பிள்ளைப்பேற்று விழாவைச் சேட்களின் வழக்கப்படியும் தம் குடும்ப மதிப்புக்கேற்றபடியும் தேவதாசியர் ஆடல் பாடல் களுடன் நடத்த சமர்காந்த் திட்டமிட்டார். புதுமைவாதிகள், இளைஞர் ஆகியோர் தேவதாசி முறைக்கு இத்தகைய ஆதரவு தரக்கூடாதென்று கண்டித்து வந்தனர். அமரும் இதே கருத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் உள்ளம் இப்போது எதிர்ப்புக்குச் சித்தமாயில்லை. அவன் முன்னி வழக்கைக்கூடக் கவனிக்கமுடியாமற் போயிற்று. குடும்பப் பொறுப்பு என்னும் நீரோட்டம் அவனை இழுத்துச் சென்றது. மறுநாள் விழாவுக்கு அவன் இரவில் நெடுநேரம் இருந்து பட்டியல் வகுத்தான். மறுநாள் முழுவதும் விழாவென்னும் சுழலிடையே அவன் பம்பரமாய்ச் சுழன்றான். வழக்கை நடத்துபவருள் சுகதா, அமர், இரேணுகா ஆகியவர்கள் செல்ல முடியவில்லை. சலீம் செய்த ஏற்பாட்டை டாக்டர் சாந்திகுமார் கண்டித்தார். அத்துடன் அவர் “தீர்ப்பு முன்னி பக்கம்தான் இருக்கும். நான் சொல்கிறேன், பார். ஆயினும் அது எப்படியிருந்தாலும் நமக்கு வேலை இருக்கிறது. தீர்ப்பு எதிராயிருந்தால், முன்னிக்கு மக்கள் மதிப்புக்கேற்ப விடைகொடுத்தனுப்ப வேண்டும். கண்டனக் கூட்டம் நடத்த வேண்டும். தீர்ப்பு சாதகமாயிருந்தால், தக்க நல்ல வரவேற்புக் கூட்டம் அளிக்க வேண்டும்” என்றார். அவர் கூறி வாய்மூடுமுன் ஓர் இளைஞன் தோளில் ஒரு சிறுவனுடன் அவர் முன்வந்து நின்றான். “நான்தான் முன்னியின் கணவன். இது அவள் பிள்ளை. ஊர் நண்பர் சிலருடன் நகரில் சந்தைக்கு வந்தவள் திரும்ப வரவில்லை. கவலைப்பட்டேன். ஆனால் கூடச் சென்றவர் உண்மை கூறவில்லை. இவ்வூர் வழக்கைப்பற்றிக் கேள்விப்பட்டபின் அவள் செய்தியைச் சிலர் கூறினார்கள். ஊர் அவளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நான் ஏற்று அதன் பயனை அனுபவிக்கத் தயாராயிருக்கிறேன். உங்களைப் போன்ற பெரிய மனிதர் அவளைப் போற்றும்போது, என் குருதிப் பாசத்தை நான் விட முடியுமா? நான் பக்கத்திலிருந்து நீங்கள் பேசியது கேட்டேன்.அவள் தண்டனை பெற்றுவிடுவாள் என்றுதான் எல்லாரும் கூறினர். நீங்கள் ஒருவர் விடுதலைபற்றி நம்புவது எனக்கு ஊக்கம் தருகிறது. அவள் விடுதலை பெற்றவுடன்வந்து அழைக்க வருவேன்” என்றான். “சமூகத்திலுள்ள மனிதர் அனைவரும் இவளைப் போற்றுகின்றனர். தனி மனிதர்கள் நல்லவர்களே. ஆயினும், அந்தச் சமூகம் இப்படிப் பட்டவர்களை ஏற்க முடிகிறதில்லை. நம் சமூகம் கெட்டது. அதில் நல்லவர்களுக்கு இடம் இல்லை” என்று எண்ணினார் டாக்டர். டாக்டர் எதிர்பார்த்தபடியே முன்னி விடுதலை பெற்றாள். மக்கள் ஆரவாரித்தனர். டாக்டரும் நண்பரும் கூட்டத்துக்கு அவளை இட்டுச் செல்ல ஏற்பாடு செய்தனர். அவள் மக்களைக் காணவே மறுத்தாள். இறுதியில் தானே வந்து மக்களிடம் “என்னை நீங்கள் போற்றுவது கண்டு நன்றி. ஆனால் உங்கள் போற்றுதலுக்கு நான் தகுதியற்றவள். நான் அதைக் கண்டு அஞ்சுகிறேன். என்னைப் பக்கத்து இருப்புப்பாதை நிலையம் அனுப்பிவிடுங்கள். என் பாழும் வாழ்வை அரித்துவாரத்தில் சென்று கழிக்க விரும்புகிறேன்” என்றாள். மக்கள் விருப்பத்திற்கெதிராக டாக்டர் அவளை அனுப்ப வேண்டி வந்தது. கணவனையும் பிள்ளையையும் பற்றிக் கூறிய போது அவள் அழுதாள். ஆனால் அவர்களைப் பார்க்க நேருமுன் போகவேண்டுமென்றே விரைவுபடுத்தினாள். மோட்டார் புகைவண்டி நிலையம் நோக்கி விரைந்தது. வழியில் உடையவன் குழந்தையுடன் நின்று வண்டியை நிறுத்த வேண்டினான். மனைவியை மன்றாடிக் கெஞ்சினான். அவள் வண்டியை இன்னும் விரைவாக ஓட்டும்படி கேட்டாள். “நான் முன்னியை இப்படி விட்டிருக்க மாட்டேன். நானிராமல் போனேன்” என்று இச்செய்திக்கு அமர் விளக்கம் கூறினான். குழந்தைக்கு இரேணுகாவின் பெயரை ஒட்டியே இரேணுகாந்த் என்று பெயரிடப்பட்டுள்ளது. இரேணுகாந்தின் மழலைப் பேச்சிலும் புன்சிரிப்பிலும் சுகதாவும் அமரும் ஒன்றுபட்டு உலகையே மறந்து ஈடு பட்டிருந்தனர். குழந்தைக்கு நீர் கோத்துக் கொண்டால், அல்லது சிறிது மந்தம் கண்டால், சுகதாவின் முகத்தில் கவலை நிழலாடும். அமரின் உள்ளத்தில் பீதிப்புயல் வீசும். இத்தகைய தறுவாயில் ஒருநாள் பட்டாணிச்சி கோலூன்றி நடந்து அமர் வீட்டில் நுழைந்தாள். அமர் மூலம் அவள் இன்னார் என்று தெரிந்ததும் சுகதா வரவேற்றாள். அவள் அமரைப் புன்முறுவலுடன் நோக்கி “அப்பா, குழந்தை வந்தவுடன் ஏழைகளை மறந்துவிட்டாயாக்கும்! பிறந்தநாள் விழாவுக்கு எத்தனை பேரையோ அழைத்தாய். ஏழையை மட்டும் எண்ணவில்லை” என்றாள். அமர் உள்மனம் அவனைச் சுட்டது. பட்டாணிச்சி சகீனா அரும்பாடுபட்டுப் பின்னிய தலைக்குட்டை ஒன்றைப் பிள்ளைக்குப் பரிசளித்தாள். ஏழையின் அம் மனமார்ந்த அன்புச்சின்னம் அமரைப் பணிவித்தது. சுகதாவும் பிறந்த நாள் தின் பண்டங்களில் ஒரு பொட்டலம் எடுத்துக் கிழவியின் முந்தானையில் முடிந்தாள். சிற்றுண்டி தந்தாள். பின் குழந்தை உடல் நலம் பற்றிய பேச்சு எழுந்தது. தாய் தந்தையாகியும் அனுபவமற்ற இளைஞர்கள் கவலை கண்டு கிழவி அதற்கு என்ன மருந்து தரவேண்டும், என்ன உணவு தரவேண்டும் என்ற விவரங்கள் கூறினாள். அன்றே மருந்து கொடுத்தனுப்புவதாகக் கூறினாள். அமர் அவளுடன் தானே சென்று மருந்தை வாங்கி வந்தான். அப்போது அவள் வீட்டில் வறுமை முன்னிலும் கோர தாண்டவம் செய்வது கண்டான். அவளும் மீண்டும் ஒரு தடவை கைக்குட்டை, சகீனா திருமணம் ஆகியவை பற்றி நினைவூட்டினாள். பிள்ளைப்பாசம் அவனை மறக் கடித்ததுபற்றி அமரும்வெட்கமடைந்து மன்னிப்புக் கோரினான். இரண்டையும் விரைவில் கவனிப்பதாக உறுதி கூறினான். பட்டாணிச்சி சில கைக்குட்டைகளையும் இவ்வேற்பாட்டுக்காகக் கொண்டு கொடுத்தாள். பட்டாணிச்சியின் மருந்தால்குழந்தை முற்றிலும் உடல் குணமாயிற்று. அன்றே சலீம் அமரை அழைக்க வந்தான். அவனிடம் அமர் பட்டாணிச்சி பற்றிய விவரங்களைக் கூறினார். சலீம் தனக்கு வழக்கமான குறும்புக் குரலில் “கைக்குட்டை நன்றாயிருக்கிறது. ஆயினும் அதைக் கிழவி பின்னினாளா அல்லது இளமங்கை சகீனா பின்னினாளா என்று தெரியாமல் அதன் விலையை மதிக்க முடியாது. கிழவி பின்னியிருந்தால் அதன் விலை ஐந்து செப்புக் காசுகள், சகீனா பின்னியிருந்தால் அதற்கு விலை ஐந்து வெள்ளிகள்” என்றான். “சகீனாதான் பின்னியிருக்கிறாள்.” “அப்படியானால் எத்தனை கைகுட்டை வேண்டு மானாலும் கொண்டு வா. ஐந்து வெள்ளி விழுக்காடு நானே கொடுக்கிறேன். பிறரையும் கொடுக்கச் செய்கிறேன்” என்றான் சலீம். அவன் அத்துடன் விடவில்லை. “அது சரி, நீ அப்பக்கம் அடிக்கடி போவது எனக்குப் பிடிக்கவில்லை. இந்த இந்து முஸ்லீம் சமுகங்கள் இருக்கின்றனவே, அவை இரண்டுக்குமே உள்ளத்தில் கருணையே இராது. ஆனால் ரோஷம் மட்டும் நிறைய உண்டு. ஏதாவது அவகீர்த்தி வந்தால், அவர்களை அது அவ்வளவாகப் பாதிக்காது. வீட்டுப் பிள்ளையாகிய உன் மதிப்புக் கெடும்” என்றான். “எனக்கு அத்தகைய போலி மதிப்பைப்பற்றிக் கவலை இல்லை” என்று அமர் அசட்டையாகக் கூறினான். ‘சகீனா வீட்டின் வறுமை இனித் தீர்ந்துவிடும்’ என்ற நம்பிக்கையில் அவன் பட்டாணிச்சியிடம் முதல் கைக்குட்டையின் விலைதரச் சென்றான். வீட்டில் பட்டாணிச்சி இல்லை. கதவு சார்த்தி யிருந்தது. அவன் தட்டினான். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. ஆனால் உள்ளே ஒரே இருட்டாயிருந்தது. ஓர் இனிய பெண்குரல் ‘அது யார்’ என்று கேட்டது. அவன் குரல் அறிந்ததும் “அம்மா வெளியே போயிருக்கிறாள்” என்றாள். “சரி நான் போகிறேன். ஆனால் வீட்டில் ஏன் இருட்டாய் இருக்கிறது, விளக்கு ஏற்றக்கூடாதா?” என்றாள். அடுத்த கணம் அவ்வீட்டு வறுமை நினைவுக்கு வந்தது. “விளக்கில் எண்ணெய் இல்லையா?” என்று கேட்டான். “இருக்கிறது.” “தீப்பெட்டி வேண்டுமா?” “அதுவும் இருக்கிறது.” “பின் ஏன்?” மறுமொழி இல்லை. தயக்கம். தேம்பி அழும் குரல் கேட்டது. “ஏன் அழவேண்டும் சகீனா! என்ன செய்தி?” என்றான். “எனக்கு நல்ல ஆடைகள் இல்லை. எங்கள் வறுமையை நீங்கள் பார்க்க வேண்டாம் என்று எண்ணித்தான் விளக்கணைத்தேன்” என்றாள். “அவ்வளவுதானா? இதோ உனக்கு ஆடை வாங்கி வருகிறேன். அதற்கிடையே உன் முதல் கைக்குட்டையின் பணம் இதோ” என்று நீட்டினான். இருட்டில் ஒரு கை அதைவாங்கிக் கொண்டது. அப்போது மணி எட்டுக்கு மேலாய்விட்டது. அது நகரின் மூலை யாதலால் கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. அமர் விழித்தான். ஆடை தருவதாகச் சொல்லிச் சகீனாவை ஏமாற்றவும் அவன் விரும்பவில்லை. நேரே வீட்டுக்கு வந்தான். சுகதாவின் சேலைகளில் நான்கு எடுத்துக்கொண்டு சென்றான். சகீனா சேலைகளைக் கண்டு மலைப்படைந்தாள். அமரைக் கைகூப்பி “அண்ணலே, அம்மா முதலில் உங்களிடம் ஆளறியாமல் பேசியபோது அவள் மீது கோபம் கொண்டேன். தாங்கள் உண்மையில் அவள் கூறியதை விட உயர்குணம் படைத்தவர்கள். உங்கள் அன்புக்கு நன்றி, ஆனால் நான் இத்தகைய சேலைகளை உங்களிடமிருந்து பெறக்கூடாது. அம்மாவும் ஏற்கமாட்டாள். ஆகவே இதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்” என்றாள். அதைத் திரும்ப வாங்கும்போது அவள் முகம் சுண்டிப் போய் விட்டது. “இதைத் தருவதில் எனக்கு மகிழ்ச்சியிருந்தது. திரும்பப் பெறுவதில் எவ்வளவு துன்பம் என்பது உனக்குத் தெரியாது. உண்மையில் நான் வருவது கூட உனக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும், நான் இனி இங்கே வர மாட்டேன்” என்றான். அவள் “அன்பரே, உம் குணத்தை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனை நான் நன்கு அறிவேன். என் கெட்ட பெயருக்காகவும் நான் அஞ்சவில்லை. தங்கள் குடும்ப மதிப்புக்காகத்தான் அஞ்சுகிறேன். தாங்கள் வர வேண்டாம் என்று நான் கூறுவதால் தங்கள் நினைவு எனக்கு இராது என்று நீங்கள் நினைக்கவேண்டாம். நான் எப்போதும் உங்களை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் இருள் சூழ்ந்த வாழ்வின் ஒளியாக உங்களைக் கருதுகிறேன்” என்றாள். அமர் சேலைகளுடன் சென்றான். அவன் மீண்டும் அந்த வழி நாடவேயில்லை. பலநாள் சென்றும் அவன் வராததால் சகீனாவின் உள்ளத்தில் அவனைப் பற்றிய மதிப்பு உயர்ந்தது. அன்பு கலந்த அமர் உள்ளத்தில் தங்கை நைனா தவிர எவரும் இதுவரை இடம்பெறவில்லை. தாய்,தந்தை அன்புக்குரிய இடத்தில் அவளே முழுதும் இடம்பெற்றிருந்தாள். சுகதா அழகு மிக்கவள். அவள் அறிவும் ஆற்றலும் அவன் மதிப்பைப் பெற்றன. குழந்தைப் பாசம் அவளுடன் அவனை இணைத்தது. ஆனால் சுகதா அவனைத் தன் குடும்பக் கோட்டையில் சிறைப்படுத்தி யிருந்தாள். அவன் அவள் வளர்த்த பச்சைக்கிளி, அதற்கு வேளாவேளைக்குப் பாலும் பழமும் கிடைத்தது. அடிக்கடி அவள் அதற்குத் தன்னைப்போல் பேச அரும்பாடுபட்டுக் கற்றுக் கொடுத்தாள். ஆனால் கிளிக்குப் பச்சைப்பசுஞ் சோலையில் உலவும் இன்பம் கிடைக்கவில்லை. அமர் காதலில் தவழ விரும்பினான். ஆட்சிக்கு ஆளாக விரும்பாமல் ஆள விரும்பினான். சகீனா அழகில் மட்டானவள். ஆனால் அவள் கைம்மாறு விரும்பாத அன்பு, தியாக உள்ளம் பெண்மையில் அவன் அறியாத மற்றொரு பக்கத்தை அவனுக்குக் காட்டின. அவன் உள்ளம் சுகதாவிடம் பேசுஞ் சமயத்திலும் குழந்தையிடம் கொஞ்சும் நேரத்திலும் கூட அவள் திசை நோக்கிப் பறந்து சென்று வந்தது. அவன் அவளைப் பார்க்கவில்லை, அவளிடம் பேசவில்லை. அவள் திசையை அவன் கால்கள் நாடவில்லை. ஆயினும் அவள் நினைவு அவன் உள்ளத்தை நிறைத்தது. ஆழ்ந்து வேரூன்றிய மரம் நீருற்றாமலே வளர்வது போல, அவன் உள்ளத்தின் ஆழத்தில் பதிந்த காதல் நினைவூட்டும் பொருளின்றித் தழைத்து வளர்ந்தது. அவள் வாழ்வில் அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சகீனா வாழ்வில் இப்போது மாறுதல் ஏற்பட்டது. சலீம் வீட்டிலும் பிற செல்வர் வீட்டிலுமிருந்து அவளுக்குக் கைக்குட்டை மட்டுமன்றி, குழந்தைகள் சட்டை, மேலங்கி பின்னும் வேலை நிறையக் கிடைத்தது. வறுமை மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து அவர்கள் வீட்டைவிட்டு விடைகொண்டு சென்றது. வீடு முற்றும் பெரிதாகக் கட்டப்பட்டது. நல்ல கட்டில்கள், படுக்கைகள், வாயில் திரைகள், துணிமணி, கலங்கள் வீட்டில் இடம்பெற்றன. அமர் வாழ்விலும் மாறுதல்கள் நிகழ்ந்தன. ஏழைகள் சேவை இப்போது அவன் கனவாகமட்டும் இல்லை, நனவாயிற்று. டாக்டர் சாந்திகுமாரின் சேவாசிரமத்தில் அவன் சம்பளமில்லாத ஆசிரியத் தொண்டருள் ஒருவனாய், முற்பகல் முழுதும் அங்கே கழித்தான். அவன் தொண்டார்வம் டாக்டரின் தொண்டையும் ஆர்வத்தையும் கடந்தது. டாக்டர் கல்லூரியில் பேராசிரியரா யிருந்து கொண்டே, சேவாசிரமும் நடத்தினார். கல்லூரிச் சம்பள உதவி இல்லாமல், வெறும் பொதுமக்கள் உதவியாலேயே அதை நடத்த முடியும் என்று அவர் துணியவில்லை. அமர், அவர் கல்லூரிப் பணியில் ஒரு காலும், தொண்டில் ஒரு காலுமாக இருப்பதைக் கண்டித்தான். அமரின் பணியும் புகழும் அவன் குடும்ப மதிப்பும் அவனை நகரின் பொதுமக்கள் தலைவனாக்கின. நகரசபைத் தேர்தலில் அவனைக் கேளாமலே அவன் நண்பர் அவனை நிறுத்தினார்கள். எதிர்த்தவர் பேர்போன வழக்கறிஞரானாலும், அவருக்குமேல் நாலுபங்கு வாக்குகள் அவனுக்குக் கிடைத்தன. அடுத்தபடி நகர் ஆணையாளர் பதவிப் போட்டியிலும் அவன் பக்கமே வாக்குகள் குவிந்தன. அவன் நகர் ஆணையாளர் ஆனான். இச்சமயம் நெடுநாள் தந்தை மகன் இடையே இருந்து வந்த அமைதிக்கு மீண்டும் ஊறுவந்தது. அமர் வண்ணான் வீட்டு நாய் மாதிரி, வீட்டிலும் நிலைக்காமல் நீர்த்துறையிலும் நிலைக்காமல் திரிகிறான் என்று சமர்காந்த் சீறிவிழுந்தார். பேச்சு வலுத்தது “என் வேலையில் பங்கு கூடக் கொள்ளாமல் நீ ஊர் வேலை செய்கிறாய். அதைக்கொண்டே நீ பிழைக்கப் பார். என் வீட்டில் இருந்து கொண்டு எனக்கெதிராக நடப்பானேன்?” என்றார். அவன் உடனே சென்று வேறு சிறிய வீடமர்த்தினான். சுகதாவின் தன்மதிப்பும் இத்தடவை புண்பட்டது. அவள் இத்தடவை கணவனை அடக்கி இயக்கவில்லை. நேர் மாறாக அவனை ஊக்கி அவனுடன் வெளியேறினாள். அது மட்டுமன்று, தன் தாய்வீட்டுப் பணத்தை நாடியே தன்னை மாமன் இவ்வீட்டில் கொணர்ந்தார். ஆதலால், தன் நகைகளையும் அவள் கழற்றி எறிந்து வெளியேறினாள். அவள் உயர் குறிக்கோள் ஒருகணம் அமரைக்கூட வியப்படையச் செய்தது. அண்ணன், அண்ணி, குழந்தை இரேணுகாந்த், ஆகியவர்களிடமே உயிர் வைத்திருந்த நைனாவும் புறப்பட்டாள். ஒருவர் இருக்க இடம் போதாத ஏழைக் குடிசையில் அத்தனை பேரும் தங்கினர். சமர்காந்தும் கோபத்தில் வெளிக்கதவை அடைத்துக் கொண்டு தன் அறையில் சென்றுபடுத்தார். வீடு வெறிச்சென்றிருந்தது. சில்லூ கூட அடிக்கடி சுகதா வீட்டுக்கு வந்துவிடுவாள். இச்செய்தி கேட்டு இரேணுகா ஓடிவந்தாள். அவள் சமர்காந்தின் மீதே முதலில் முழுக்கோபம் கொண்டாள். ஆனால், அவள் எவ்வளவோ வற்புறுத்தி வேண்டியும், மருமகனோ மகளோ அவன் வீடு செல்லவும் மறுத்தனர்; அவன் பணம் பெறவும் மறுத்தனர். மறுநாள் அமர் சேவாசிரமம் சென்று வழக்கம்போல் திரும்பினான். வருவாய்க்கு என்ன வழி என்று சுகதா சுண்டிக் கேட்டாள். “இதோ வழிபார்க்கிறேன்” என்று அவன் வெளியே புறப்பட்டான். இதுவரை முதலாளி இனத்தவனாயிருந்து குனியாது நிமிராது உயர்வாழ்வு கழித்த அவன் துணிமணி விற்பனையாளாக இருந்து தெருத் தெருவாகத் துணிவிற்றான். மக்கள் மலைப்புற்றனர். சிலர் கேலி செய்தனர். பல செல்வர் தடுத்தனர். ஆனால் அவன் செல்வரைத் திட்டிக்கொண்டே தொழிலாற்றினான். என்றாலும் செல்வர் ஆதரவு காட்டினர். வருவாய் சிறிதானாலும் அவனுக்குப் பெரிதாயிருந்தது. சுகதாவின் தியாகம் கணவன் தன் மதிப்பைவிட்டுச் செல்வதை விரும்பவில்லை. அவள் வழக்குமன்றத் தலைவர் மனைவியை அடுத்து, அவள் ஆதரவால் மாதம் 50 வெள்ளி ஊதியத்தில் ஓர் ஆசிரியை ஆனாள். இதன் உதவியால் அவள் ஓரளவு செல்வ வாழ்விலேயே வாழ முடிந்தது. அமர் ஏழை போல வாழ விரும்பினான், அவள் மறுத்தாள். அமருக்கு உள்ளம் சுட்டது. அதே சமயம் அவளுக்கும் அவன் வெறுப்புத் தியாகமும் அவ மதிப்பான செயல்களும் பிடிக்கவில்லை. கணவன் மனைவியரிடையே பெரும் பிளவு ஏற்பட்டது. அவள் சுகபோக அவா, உயர்குடிப் பெருமையை அவன் உளமார வெறுக்கத் தொடங்கினான். சமர்காந்த் குடும்ப இறுமாப்பினாலேயே மகனையும் மருமகளையும் துரத்தியிருந்தார். அவர் என்றும் வீட்டுணவன்றி விடுதி உணவு உண்ணு வதில்லை. இப்போது அவர் கடையையும் வெறுத்து அடைத்துவிட்டார். பழழும் பாலும் உண்டு நோய்ப்பட்டார். இதுகேட்டுச் சுகதா மனமிளகினாள். அங்கொரு வேளையும் தன் வீட்டிலொரு வேளையும் சமைத்துத் தொழிலும் ஆற்றினாள். ஆனால் அமர் தந்தை திசைநாட மறுத்தான். தந்தையையும் அவர் போன்ற பணக்காரரையும் அவ்வாழ்வு வாழும் சுகதாவையும் ஒருங்கே வெறுத்தான். அவன் எப்போதும் வெடிமருந்து நிறைந்த ஒரு உயிர்வாணமாக இயங்கினான். புறவாழ்வு புயலாயினும் அமரின் அகவாழ்வில் சகீனா வடமீனாய்த் திகழ்ந்தாள். ஆனால் இத்துறையிலும் புயல் வீசத் தொடங்கிற்று. ஒருநாள் பட்டாணிச்சி அவனிடம் வந்து சகீனாவின் திருமணம் ஏற்பாடாகி வருகிறது என்று கூறினாள். தந்தையிடம் பரிந்துரைத்துப் பணம் வாங்கித் தருவா னென்றே அவள் எண்ணினாள். ஆனால் அவன் காட்டிய மனக்கசப்பும் வெறுப்பும் அவளுக்கு இன்னதென்று புரியவில்லை. அவன் சரேலென்று சகீனா வீட்டிற்குச் சென்றான். வீட்டின் புதுமாறுதல் அவனுக்குத் தெரியாது. ஆயினும் விசாரித்தறிந்து கதவைத் தட்டினான். சகீனா அவனை எதிர்பார்த்தே இருந்தாள். கதவு தட்டியதும் திறந்ததும் ஒரே கணமாயமைந்தன. அவள் அவன் கையைப் பற்றிக் கொண்டு, “என்னை மறந்தே போனீர்கள். இதற்குத்தான் அன்பு என்று பெயரா?” என்றாள். “நீதானே வருவது நல்லதல்ல என்றாய்?” “ஆம். ஆனால் அது என் விருப்பமல்ல. உங்கள் நன்மையைக் கருதித்தான் சொன்னேன். ஆனால் சொன்னபடியே நீங்கள் நடந்து விடுவீர்கள் என்று நான் கனவிலும் கருதவில்லை.” “சொன்னபடியே நடப்பவரைக் கண்டால் எவருக்கும் பிடிக்காது தான்.” “அப்படியல்ல, என் உள்ளத்தின் நடுவிடத்தில் அதனால் தான் நீங்கள் இடம் பெற்றிருக்கிறீர்கள்.” “அப்படியானால் உன் திருமணம்பற்றி இன்று கேள்விப்பட்டேனே அதன் பொருள்...” “பொருள் என்ன? ஏழை வாழ்வு ஏழையுடன் சேர்கிறது. உங்கள் அன்பு வடிவம் என் உள்ளத்தில் இடம் பெறுவதை அது தடுக்காது.” “அது முடியாது சகீனா, நான் உலகையே வெறுத்தாலும் வெறுப்பேன். உன்னை நான் மணந்தே தீருவேன்.” அவள் முதலில் சிரித்தாள். பின் ஆழ்ந்து சிந்தித்தாள். “நீங்கள் உலகை வெறுக்கலாம். சுகதாவை?” “அவள் நான் வெறுக்கும் உலகின் ஒரு பகுதி. பணக்காரர் வகுப்பின் பெருமை அவளை ஆட்டுகிறது. அவளும் என்னை ஆட்டிவைக்க விரும்புகிறாள். என் வீட்டில் எனக்கு அன்பு கிடையாது. ஆர்வமில்லை. நான் உன்னுடன் எங்கேனுஞ்சென்று கூலிப்பிழைப்பு பிழைக்கத் தயார்.” “சுகதாவை நீங்கள் குற்றஞ் சொல்லக்கூடாது. அவள் உங்கள் நன்மையைத்தான் நாடுகிறாள். நான் கேள்விப்பட்டேன். நீங்கள் மூட்டை சுமந்து விற்கிறீர்கள் என்று, சுகதா உங்களைத் தடுக்க விரும்புவது இயற்கையே, அதை நான் கேட்டபோது வருந்தினேன். எனக்கு முடிந்திருந்தால் உங்கள் மூட்டையை நான் தலையிலேற்றுக் கொண்டு உங்கள் பின்னால் வந்திருப்பேன்.” அவள் தூய களங்கமற்ற அன்பும் பணிவும் அமர் உள்ளத்தில் மின்சாரம் போலப் பாய்ந்தன. அவள் அவனை அணைக்கத் தாவினாள். அவன் பின்னடையவில்லை. அவளைத் தன் பிடியில் அணைத்துக் கொண்டே, நீ எனக்காகக் காத்திருந்தால் நான் உன்னுடன் வெளியேறத் தயார்” என்hறன். இதற்குள் பட்டாணிச்சி வந்துவிட்டாள். அவள் பெண் புலியென அமர்மீதும், மகள்மீதும் சீறினாள். காலி, வீணன் என்று வைத்தாள். ஆனால் சகீனா அவளைச் சட்டை பண்ணாமல் அவனை வாயிற்படி விரைவில் தொடர்ந்து, “நாளை வாருங்கள்” என்று கூறி அனுப்பினாள். அமர் உள்ளமும் உடலும் துடித்தன. அவன் சலீமிடம் சென்று தன் முடிவும் துணிவும் உரைத்தான். சலீமுக்கு இம்முடிவு பிடிக்கவில்லை. ஆனாலும் ஒன்றும் செய்யத் துணியாமல் பேச்சுக் கொடுத்துக் கொண்டே மறைவாகத் தன் பணியாளைச் சமர்காந்தை வரவழைக்க அனுப்பினான். பட்டாணிச்சியும் மகளை வாயார வைதுவிட்டு அவளை வீட்டினுள் விட்டுப் பூட்டிவிட்டுச் சமர்காந்திடம் சென்று அமர் செய்தியைப் பன்மடங்கு பெருக்கித் தூற்றினாள். சமர்காந்த் ஒழுக்கம் வேறு, மதிப்பு வேறு, தொழில் வாழ்வு வேறு, மதம் வேறு என்று எண்ணியவர். அவர் எல்லா வழிகளிலும் ஈட்டினார். மதத்தின் புறவினைகள் பேணித் தன்னை உண்மைப் பக்தனாகவும் கருதிக் கொண்டார். மனைவி மக்கள் மதிப்புக்கு, இன்பம் நாடுவோர் மறைவாகக் காதற் கிழத்தியர் கொள்ளலாம் என்பது அவர் வகுப்பு நீதி. ஆகவே அமர்காந்த் சிக்கிய இக்காதல் மூலமே அவனை அடக்கித் திருத்த எண்ணினார். பட்டாணிச்சிக்குப் பொருள் கொடுத்து அவள் வாயடைத்துவிடவும் எண்ணினார். சலீம் வீட்டில் அமர்காந்தினை அவர் சந்தித்துப் பேசினார். தந்தை மகன் வேறுபாடு, அக வேறுபாடாக விரிவுற்றது. அமர், “நான் உங்கள் வீம்பு வாழ்வும், போலி மதிப்பும் விரும்பவில்லை. பொம்மை மனைவிகளும் வேண்டாம். சகீனாவுக்காக மதம், உலக மதிப்பு, பணம் யாவும் இழக்கத் தயங்கமாட்டேன்” என்றான். சமர்காந்த் மனம் பிளவுபட்டது. ஆனால் அவன்மீது கோபம் கொள்ளவில்லை. அவன் வழி வேறு, தனது வழி வேறு என்பதை இப்போது முழுவதும் புரிந்து கொண்டார். “சரி, உன் விருப்பப்படி நட. ஆனால் இன்பத்திலும் துன்பத்திலும் நான் உன் தந்தை என்பதை மறக்காதே. என்னை நீ காண விரும்பா விட்டாலும் கூட எனக்கு எழுத மறக்காதே. உனக்குப் பணம் வேண்டும்போது கேட்கத் தயங்காதே. இப்போது பட்டாணிச்சி வாயடக்க என்னால் முடியாது. ஊர் முழுதும் எழும் தீ உன்னைக் கவியுமுன் எங்காவது ஓடிப்போ” என்றார். ஊர்வாய் மறுநாளே அமர் குடும்பத்தின் மதிப்பைச் சுக்கு நூறாக்கியது. சுகதாவின் கோபம் வெறுப்பாக மாறிற்று. குழந்தையுடன் அவள் பழையபடி மாமன் வீட்டில் அடங்கிக் கிடந்தாள். அமர்காந்த் அறையைவிட்டு வெளிவருவதில்லை. நைனா ஒருத்தி மட்டுமே உள்ளத்தில் அண்ணன் நினைவு மாறாமல் அவனைப் பற்றிய தூற்றலிடையே கூட அவனை வெறுக்காமல் இருந்தாள். அண்ணன் அன்பையும் அவன் தூய உயர் கொள்கையையும் அவள் போற்றினாள். அமர் இப்போது நாடோடியாய் ஊர் ஊராய் அலைந்தான். இன்று கண்ட முகம் நாளை காட்சியில் மறைகிறது. இன்று இருந்த ஊரில் அவன் நாளை இல்லை. நாடும் காடும் மலையும் ஆறும் மக்கள் முகங்களும் ஆற்று வெள்ளம் போல் அவனைக் கடந்து செல்கின்றன. அலைந்து காலலுத்தது. தொலை செல்லுந்தோறும் சகீனா நினைவு உள்ளத்தை அறுத்தது. எந்த ஊரிலாவது தங்கி, வாழ்விடம் ஆக்கி, சகீனாவை அங்கே அழைத்து வந்து தனிவாழ்வு வாழ அவன் விரும்பினான். மாதம் மூன்றாகியும் எந்த ஊரும் பிடியாமல் அலைந்தான். இரவுகூடத் தங்காமல் அலைந்து ஒரு நாள் காலை அரித்து வாரத்துக்கு அருகிலுள்ள ஒரு ஊரை அடைந்தான். இமயமலையின் அடிவாரம் ஒரு பக்கம் அவன் காலடியிலிருந்து பல அடி கீழே கிடந்தது. அதன் அடர்த்தியான, மங்கிய புகைப்படலங்கள் போன்ற கொடுமுடிகள் ஒன்றன் மீதொன்றாக வடதிசை வானை மறைத்தன. மெல்லருவிகள் தென்றலின் இளமணம் உண்டு இசைபாடின. ஊர்வெளியில் கிணற்றருகில் ஒரு கிழவி நீர்க்குடத்துடனும் கயிற்றுடனும் வந்தாள். அமர் அவளிடம் “தாயே, நான் நெடுந்தூரம் அலைந்தலுத்தேன். ஒரு நாள் இங்கே தங்க இடங்கிடைக்குமா?” என்றான். “ஏன் கிடைக்காது, குழந்தாய். என்னுடன் வா. என் வீட்டிலேயே தங்கிச்செல்” என்றாள். அமர் அவள் தலையிலிருந்த குடத்தை இறக்கி வைத்தான். தானே நீர் இறைக்கத் தொடங்கினாள். மற்றோர் இளம்பெண் அவ்விடம் வந்து “அத்தை, இது யார்? நம் வீட்டுப் பிள்ளையா” என்று கேட்டுச் சிரித்தாள். கிழவி “ஆம்” என்றாள். இளநங்கை “மாப்பிள்ளை வேலை செய்யலாமா? நான் இறைக்கிறேன்” என்று கயிற்றை வாங்கினாள். இளநங்கை வேறு யாருமல்ல, காசியில் வெள்ளையர் பழிக்காளாகி அவர்களைக் கொன்று நகரமக்கள் உள்ளத்தலைவியான முன்னிதான். அவள் அரித்துவாரத்தில் பணியாளாயிருந்து அங்கும் கணவன் வந்து மன்றாடியும் அவனை ஏற்க மறுத்தாள். கணவன் பைத்தியம் பிடித்தவன் போலலைந்து மாண்டான். பிள்ளையும் தாயறியாது நலிந்து மாண்டது. இதைக் கேட்ட முன்னி உயிர் வெறுத்துக் கங்கையில் சென்று குதித்து விட்டாள். அவளைச் செம்மார் வகுப்பு இளைஞன் ஒருவன் கரையேற்றினான். அவன் அவளை மனமாரக் காதலித்தும் அவள் அசட்டையாயிருந்தாள். அவளுக் காகவே ஆற்றைக் கடந்து மருத்துவரை அழைக்கச் சென்றபோது, அவன் படகு புயலில் அகப்பட்டுக் கவிழ்ந்தது. முன்னி புயல்களை எழுப்பியும் புயல் இடையே ஒரு மின்னற் கொடியாகச் செம்மாரச் சேரியில் தங்கினாள். அமருக்கு அவ்வூரும் அவ்வூர் மக்களும் பிடித்திருந்தன. அவ்வூர் மக்களுக்கும் அவனைப் பிடித்தது. முன்னியால் ‘அத்தை’ என்ற அழைக்கப் பட்ட கிழவியின் பெயர் சலோனி. அவள் வீட்டிலேயே அமர் தங்கினான். அவன் அவளை ஒரு வேலையும் செய்ய வொட்டாமல் எல்லாம் தானே செய்தான். குழந்தைபோல எல்லாரிடமும் பழகினான். எனவே அவள் அவனைத் தன் மகன்போலப் பாவிக்கத் தொடங்கினாள். முன்னிக்கு அவனை இன்னாரென்று அடையாளம் தெரியவில்லை. அவன் அறிந்து கொண்டான். ஒரு நாள் அவன் அவள் வரலாறு கூறும்படி கேட்டான். அவள் அவனிடம் கூறினாள். ஆனால் அவன் தன் கதை கூறும்போது தான் யார் என்பது மட்டும் கூறாமல், தானும் காசிவாசியே என்றும், தான் தந்தை குடும்பத்தினர் வெறுப்பால் வந்திருப்பதாகவும் மட்டும் கூறினான். அவன் தனக்கு மேம்பட்ட குடியினன் என்பதை முன்னி அறியத் தவறவில்லை. ஆனால் அவனிடம் அவள் முதலில் மதிப்பும், பின் வரவரப் பாசமும் கொண்டாள். அவனுந் தன்னிடம் ஈடுபடுவது கண்டு நாளடைவில் அவனைத் தான் பெற முடியும் என்றே கனவுகாணத் தொடங்கினாள். அமர் சேரியின் பிள்ளைகளுடன் பழகி அவர்கள் அழுக்கடைந்த தோற்றத்தையும் அதற்குரிய பழக்கவழக்கத்தையும் படிப்படியாக மாற்றினான். சேரியின் தலைவன் கூதட் என்பவன். அவன் கிழவனானாலும் புதுமை விருப்பும், சமூகப் பழக்க வழக்கம், சமய ஆசாரம் ஆகியவற்றில் வெறுப்பும் உடையவன். தன் வகுப்பினர் சமூகத்திற்கான அடிப்படைத் தொழில் செய்து பிறருக்குச் செல்வம் தந்தும் அவர்களால் தீண்டப்படாதவரென ஒதுக்கப் படுவது கண்டான். இக் கருத்துக்கள் நிறைவேற வழி காணாமல் அவன் மனக்கசப்பும் வாழ்வில் வெறுப்பும் அடைந்தான். இந்நிலையை மறக்க அவன் குடியையே நம்பியிருந்தான். குடிவெறியில் அவன் பிறருக்குச் சிறிது தொல்லை கொடுத்தாலும், நல்ல நேரத்தின் அறிவமைதியால் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டான். குடிக்குமுன் வீட்டினுள் சென்று பிறரிடம் சொல்லிவிட்டே குடிப்பான். கூதட் அமரை அவ்வூரிலேயே நிலையாக வைத்துக் கொள்ளும் விருப்பத்துடன் அவனைப் பிள்ளைகள் கல்விக்கான பள்ளிச்சாலை வைக்கும்படி கூறினான். முதலில் சலோனி அதற்காகத் தன் வீட்டையே கொடுத்தாள். கொஞ்ச நாட்களுக்குள் வம்பு செய்து திரிந்த பிள்ளைகள் வாழ்வு சமூகத் தொண்டு, நல்ல பழக்க வழக்கம் யாவும் பிள்ளைகளிடமும் பிள்ளைகள் மூலம் ஊராரிடையேயும் பக்கத்து ஊர்களிலும் பரந்தன. எவர் கூறியும் குடியை விடாத கூதட், அவன் பிள்ளைகளிடம் குடியர் வாழ்வுபற்றிய கதை கூறுவது கேட்டு நிறுத்தினான். இதுகண்டு ஊராரும் குடியைவிட்டனர். அவன் கல்விமுயற்சியில் அக்கம்பக்க ஊர்ப்பிள்ளைகளும் கலந்தனர். அவன் புகழ் அவ்வட்டாரம் எங்கும் ஏழை மக்களிடையேயும் சேரிகளிடையேயும் பரந்தது. அவன் அச்சேரி மக்கள் உள்ளத்தில் முடிசூடா மன்னனாகவும் பக்க வட்டாரங்களின் கலைத் தெய்வமாகவும் விளங்கினான். கல்வியோடு குடிசைத் தொழில்களிலும் அமர் கருத்துச் செலுத்தினான். வீட்டுக்கு வீடு நூற்பு வட்டு, இராட்டைகள் கொடுத்து நூற்கச் செய்தான். நூல்கள் வாங்கிக்கொண்டு புடவைகளைக் கொடுத்தான். தறிகள் அமைத்துச் சேலைகள் நெய்ய ஏற்பாடு செய்தான். ஊர் மக்களிடையே சேமிப்புப் பண்பு வளர்த்து, சிறுசேரிப்பொருளகங்கள், சீட்டுக்கோப்புகள், ஊர் முன்னேற்ற நிதிகள் வகுத்தான். அவன் புகழ் எங்கும் பரந்தது. ஆயினும் காசியில் சகீனா காதுக்குமட்டும் எதுவும் எட்டவில்லை. ஒருநாள் அவன் சகீனாவுக்கும் சலீமுக்கும் நைனாவுக்கும் கடிதங்கள் எழுதினான். சகீனாவின் கடிதத்தைச் சலீமின் கடிதத்துக்குள் வைத்து எழுதியிருந்தான். சலீம் கடிதத்துக்கு மறுமொழி எழுதினான். அதில் சகீனா தந்த மறுமொழியின் சுருக்கம் மட்டும் இருந்தது. உண்மையில் சகீனா அமரைக் கைப்பற்றிக் கொள்ள விரும்பியிருக்க மாட்டாள் என்றும் அவன் அவள் காதலின் பெருமையில் உள்ளமும் உயர்வும் பெற்று மட்டுமே நின்றிருக்க வேண்டுமென்றும் சலீம் மதித்தான். சகீனாவைக் கடிதம் தர கண்ட போது அவள் உள்ளத்தைத் தெரிந்தறிந்தான். சகீனாவின் பேச்சும் அதை உறுதிப்படுத்திற்று. “அவர்தான் என்னை மணப்பதாகக் கூறி என் போற்றுதலைப் பெற்றார். நான் அவர் விருப்பத்தை மீறமாட்டேன். அவருக்காக உயிர் மானம் எல்லாம் விடவும் தயங்கவில்லை. ஆனால் அவரை நான் காதலனாகக் கருதவில்லை. நான் கண்ட மனிதத் தெய்வம் அவர். அவர் வாழ்வில் ஏதோ ஒரு குறையிருப்பதனால்தான் அவர் என் போன்ற தகுதியற்ற ஏழையின் அன்பை நாடினார். நானாக அவருக்கு மறுப்பளிக்க மாட்டேன். ஆனால் சுகதாவை அவருடன் சேர்த்து அவர் வாழ்வை இன்பமயமாக்க முடியுமானால் என்னைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். அமர் என் தெய்வமாதலால் யாரை மணந்தாலும் அவரை நான் பூசிக்கத் தடையிராது” என்றாள். சலீம் சகீனாவைப் பெண் தெய்வமாகக் கருதினான். எப்படியாவது அமர் வாழ்வை நிறைவுபடுத்தி, சகீனாவுக்கு அன்பு விடுதலை வாங்கித் தந்து, அவளைத் தன் உள்ளக் கோயிலில் அணியவேண்டும் என்று அவன் திட்டமிட்டிருந்தான். அதன்படியே சகீனாவின் உள்ளத்தையும் அவன் படம்பிடித்துக் காட்டி “அவளை நீ மணமுடிக்க விரும்பினால், நான் அதற்கு உதவியாயிருப்பேன். ஆனால் அவள் வாழ்வை வேறு வழியில் அமைக்க நீங்கள் விரும்புவதாக அவளிடம் தெரிவிப்பதானால், அதனால் அவள் மனம் வருத்தப்படமாட்டாளென்று உறுதி கூறுகிறேன். பெருந்தன்மை வாய்ந்த அப்பெண்ணரசியை நானே ஏற்கத் தவங்கிடக்கிறேன்” என்று எழுதியிருந் தான். நைனா அவன் கடிதத்தைச் சுகதாவுக்குப் படித்துக் காட்டினாள். அதற்கு அவள் மறுமொழி எழுதவோ எழுதும்படி கூறவோ விரும்பவில்லை. ஆனால் நைனா தன் உள்ளத்தைப் பாகாய் உருக்கி அன்புக் கடிதம் வரைந்திருந்தாள். சுகதா பகட்டும் இன்பவாழ்வும் விரும்பினதினால்தான் தான் வீட்டுவாழ்வில் தரிக்கமுடியவில்லை என்று அவன் அதில் எழுதியிருந்தான். சுகதா அதை மறுக்கவுமில்லை; ஏற்கவுமில்லை. தன்னைப்பற்றி அமர் கொண்ட கருத்து சுகதாவின் வெறுப்பைக் கோபமாகக் கிளறியிருந்தது. “வேண்டாம் என்று மனைவியை ஒதுக்கி வைப்பது போதாதாம். அதற்குக் குற்றமும் விளக்கமும் கூறி மேலும் அவமதிக்க வேண்டுமாம். ஆண்கள் குற்றம் செய்தால் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தண்டனை பெறப்பட்டது, பெண்களிடம் குற்றம் இருந்தாலும் தண்டிக்கலாம்; இல்லாவிட்டாலும் தண்டித்து அதற்கு ஒரு குற்ற விளக்கம் செய்யலாம்” என்று அவள் உள்ளுற முணுமுணுத்துக் கொண்டாள். ஆனால் கூறப்பட்ட குற்றத்தைக் கோபம் அகற்றியே விட்டது. அவள் ஆடையணிமணி வெறுத்தாள். குழந்தையிடம் கொஞ்சுவதைக்கூட நைனாவிடம் விட்டுவிட்டாள். இவையிரண்டும் பெண்கள் அடிமையின் சின்னங்கள் என்று இதற்கு அவள் விளக்கம் கூறினாள். பெண்கள் இயக்கம் பற்றிய நூல்கள், கட்டுரைகள் வாசித்தாள்; எழுதினாள். அவளே பெண்களுக்காகப் பொதுவாகவும் ஏழைப் பெண்களுக்குச் சிறப்பாகவும் உழைக்கவும் கருத்துக் கொண்டாள். கணவன் சமூகத் தொண்டை நோக்கித் தான் செல்லத் தொடங்கியிருப்பதை அவள் கவனிக்கவில்லை. சமர்காந்தின் உள்ளத்திலும் அமர் போனபின் பெரிய மாற்றம் ஏற்பட்டது. காலிகள் அவரைக் கேலி செய்ய விரும்பியும் அஞ்சியிருந்தனர். உறவினர் ஆறுதல் கூறுவதுபோல் அவர் நிலையில் தாம் இரக்க உரை பேசி ஆறுதல் பெற வந்தனர். சமர்காந்த் அவர்களுக்குப் பிடிகொடுக்காமல் பேசினார். ஆனால் வைதிக சாஸ்திரி ஒருவர் “என்ன கலிகாலம் போங்கள். உங்கள் பையன் ஒரு பட்டாணிச்சியிடம் அல்லவா காதல் கொண்டிருக் கிறானாம்” என்றார். தாம் நல்ல காலத்தில் வளர்த்த புராணப் பாடகர் கூடத் தம்மை இகழ்வது சமர்காந்துக்குப் பொறுக்கவில்லை. “போமையா போம். நீர்தான் புராணம் படித்தவராயிற்றே. இது ஒன்றும் புதிதல்லவே. உங்கள் கிருஷ்ணன் கோபிப் பெண்களை...” அவர் வாய் மூடுமுன் புராணிகர் ஓடிவிட்டார். பிறரும் அவர் அபாரக் கோபம் கண்டு வாய்மூடினர். வாழ்க்கை அவருக்குக் கசந்து போயிற்று. ஆனால் கசப்பு முதலில் விசித்திர வழிகளிலெல்லாம் பாய்ந்தது. சமூகச் சீர்த்திருத்தமும் புத்தறிவியக்கங்களும் பரவுவது கண்டு சேட்களும் செல்வர்களும் ஒருபுறம், புராணிகரும் மதவாதிகளும் ஒருபுறம் புழுங்கினர். ஆகவே வியாஸ்ஜி என்ற பழம் புராணிகர் ஆதரவுடன் பண்டித மதுசூதன்ஜி என்ற புதுப் புராணிகரின் கதைக் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது. சமர்காந்த் எவ்வளவு போடுகிறார் என்று பார்த்துப் பின் மற்ற சேட்கள் போட எண்ணினர். தலைவராக வந்த சேட்டிடம் சமர்காந்த் எவ்வளவு செலவாகும் என்றார். அவர் பதினாயிரம் ரூபாய் என்று மதிப்பிட்டு “நீங்கள் எவ்வளவு கூடுதல் போட முடியுமோ அவ்வளவும் நல்லது” என்றார். சமர்: நீங்கள் எவ்வளவு போடப்போகிறீர்கள்? சேட்: நான் நூறு ரூபாய் போட இருக்கிறேன். சமர்: அவ்வளவுதானே. இதற்குப் பலரிடம் போவானேன்? போக மீதி முழுவதும் நான் போட்டுவிடுகிறேன். போங்கள். எதிர்பாராத இவ்வுள்ளன்பைக் கண்டு யாவரும் விழித்தனர். அது அவர் பொறுப்பின் ஒரு கூறு என்று எவரும் அறியவில்லை. பக்தி இருவகை. இன்பவாணர் பக்தி அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது. துன்ப வாணரின் பக்தி நம்பிக்கை அடிப்படை யானது. சமர்காந்த் பக்தி இன்ப வாணரின் பக்தி. ஆதலால் அச்சம் தீர்ந்து வெறுப்பும் கோபமுமாக மாறிற்று. கோவிலில் கதைக் கச்சேரி முன்னிரவிலேயே தொடங்கிற்று. பண்டிதர் பேச்சில் புராணத்தோடுகூட சாதி மகத்துவம், வைதிகர்கள் சேவையின் பெருமை ஆகியவை விளக்கப்பட்டன. ஆனால் எவரும் புராணத்தைக் கவனித்ததை விட, வெளி வாயிலையே கவனித்துக் கொண்டிருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் எவராவது வந்துவிடக்கூடும் என்ற கவலையே அவர்கள் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. வியாஸ்ஜி முன்னும் பின்னும் சுற்றி வந்தார். பிரம்மச்சாரிஜி கையில் தோல்வாருடன் எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். வெளியே வேறு வகைப்பட்ட பக்தர்கள் இருந்ததாக இடையிடையே செய்தி வந்தது. திடீரென்று கூட்டத்தில் கலைசல் ஏற்பட்டது. பேச்சாளர் “இலங்கையில் இராவணனும் இராட்சசரும்...” என்றார். அதற்குள் யாரோ “கோயிலுக்குள்ளேயும் இராவணனும் இராட்சசரும்” என்றார்கள். அடிதடி ‘ஐயோ, ஐயோ’ என்ற கூக்குரல் ‘போடா, பிடிடா, கடிடா’ என்ற கூச்சல், பெண்டு பிள்ளைகள் அலறல்! கோயில் அமளி துமளிப்பட்டது. திடீரென்று அமளியில் ஒரு அமைதி ஏற்பட்டது. டாக்டர் சாந்திகுமார் கூட்டத்தின் நடுவில் வந்து நின்றார். அவரும் ஆவேசம் கொண்டவர் போல “பக்தர்களே நன்றாக அடியுங்கள். இன்று அடிப்பவரை அரசாங்கம் ஒன்றும் செய்யாது. கடவுளும் இதற்கு வெகுமதி கொடுப்பார். இன்று இப்புண்ணிய வேளையில் கொடுக்கும் ஒவ்வொரு அடிக்கும் வானுலகில் உங்களுக்கு ஒரு வீசை அல்வா தரப்படும். இன்று கொடுக்கும் ஒவ்வொரு குத்துக்கும் ஒரு முந்திரிக்கொத்துத் தட்டு தரப்படும்” என்று முழங்கினார். ஐந்து கணத்துக்குள் கோயில் வெறிச்சென்றாய் விட்டது. கதைக் கச்சேரியின் தடமே யில்லாமற் போயிற்று. மறுநாள் போலீஸ் பாதுகாப்புடன் கச்சேரி தொடங்கிற்று. ஆனால் பேசுபவர் நீங்கலாகக் கூட்டத்தில் நான்கைந்து பேருக்கு மேல் இல்லை. அவர்களும் பேச்சாளர் கூட வந்தவர்கள். சுண்டல் வாங்கவரும் பிள்ளை களைக்கூட அன்று காணவில்லை. ஆனால் அதே சமயம் வெளியே ஊர்வெளியில் காசி நவ ஜவான் சபாவின் ஆதரவில் டாக்டர் சாந்திகுமாரே கதைக் கச்சேரி தொடங்கினார். இங்கே புராணம் வேறு மாதிரியாய் இருந்தது. “கடவுள் ஒரு மனித இனத்தைத்தான் படைத்தார். சாதியைப் படைக்கவில்லை.” “உயர்ந்தவர் புண்ணியவான்களுக்குக் கடவுள் அவ்வளவு தேவையில்லை. தாழ்ந்தவர், பாவிகளுக்குத்தான் தேவை,” “செல்வர் உள்ளத்தில், செருக்குடையவர் நெஞ்சில்தான் ஒளி துலங்காது. பணிவுடையார் உள்ளத்தில், துன்பப்படுபவர் உள்ளத்தில்தான் ஈசன் துலங்குவான்.” இத்தகைய உரைமணிகள் டாக்டர் சாந்திகுமாரின் புராணப் பேச்சில் உதிர்ந்தன. ஆனால் பேச்சாளர் வெறும் பேச்சாளர் அல்ல. அவர் தாம் ஒரு புரட்சித் தலைவர் என்பதைக் காட்டினார். “நேற்று அடிக்கு அஞ்சி ஏழைகள் வெளியேறிவிட்டார்கள். அவர்கள் ‘கடவுள் அன்பையே உணவாகக் கொள்பவர். உங்கள் அன்புக்குக் காத்திருக்கிறார்.’ அடிபட்டும் உதைபட்டும் ஆண்டவனைப் பார்ப்போம். வாருங்கள் ஏழை மக்கள் உரிமை பெறப் போராடு வோம். புறப்படுங்கள். நாம் கடவுளைக் காணப்பெறாவிட்டால், நம் பிள்ளைகள் காணட்டும். இப்போதே அணியணியாக வாருங்கள்” என்று கூறி அவர் நடந்தார். அவர் பின் ஆவேசம் கொண்ட ஆண் பெண் குழந்தைகள் அவரைப் பிடிக்க ஓடுபவர் போல் ஓடினர். கோயில் முன் புரோகிதர், சேட்கள் கூடினர். போலீஸ் அவர்களைச் சூழந்து நின்றது. தடியடிக் குண்டர்கள் இருபுறமும் அணிவகுத்துத் தடியைச் சுழற்றி நின்றனர். கூட்டம் வாயிலின்முன் வந்தது. பலர் அடிபட்டனர். கூட்டம் சிதறத் தொடங்கிற்று. டாக்டர் முன்வந்து நிற்கிறார். தடியடியில் தயக்கம் ஏற்பட்டது. சமர்காந்த் சேட்களுடன் நின்றார். தடியடி நின்று துப்பாக்கி வேட்டுத் தொடங்கிற்று. டாக்டர் அடிபட்டு விழுந்தார். பலர் மாண்டனர். கூட்டம் வெருண்டோடிற்று. குண்டரும் போலீஸும் அடித்தும் சுட்டும் அவர்களை ஊரெங்கும் துரத்தினர். சுகதா ஓடிச்சென்று கூட்டத்தைக் கண்டாள். நைனா அன்று கதை கேட்கச் சென்றிருந்தாள். கூட்டத்தில் தப்பித்தட்டி வீட்டுக்கு வந்தாள். “அண்ணி, பொதுமக்களைச் சுட்டுத் தள்ளுகிறார்கள் பாவிகள்” என்றாள். “சுடச் சொல்வது உன் தந்தைதான்” என்றாள் சுகதா. “தந்தையா?” என்று மலைப்புடன் கேட்டாள் நைனா. சுகதா மக்கள் ஓடுவது கண்டு இரக்கம் ஒருபுறமும் கோபம் ஒருபுறமும் கொண்டாள். ஆண் பெண்களின் கோழைத்தனம் கண்டு அவள் புலிபோல் வெகுண்டெழுந்தாள். நைனா ஒன்றும் தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தாள். சுகதா தெருவில் ஓடும் கூட்டத்தின் முன் சென்று “ஏன் ஓடுகீறிர்கள் மக்களே! எதிர்த்து நில்லுங்கள். கடவுள் நம்மைச் சுடச் சொன்னால், நாம் அவருக்காகச் சாவோம். துப்பாக்கி ஏந்திகளுக்கே அவர் அருள்பாலிக்கட்டும். வாருங்கள், நானும் வருகிறேன். கடவுளைப் போய்க் கேட்போம். கோயிலில் அவர் இல்லாவிட்டால், மேலுலகம் சென்றே பார்ப்போம்” என்று வீறிட்டுக் கொண்டு முன் சென்றாள். அவள் கூட்டத்தை எதிர்த்துச் சென்றாள். துப்பாக்கி வேட்டுக்கள் நோக்கிச் சென்றாள். ஒரு பெண்ணின் துணிச்சல் கண்டு யாவரும் மலைத்தனர். அவளைப் பாதுகாக்கச் சிலர் அவளைப் பின்பற்றினர். படிப்படியாக யாவருமே துணிந்து, படை ஊர்வலம் செல்வதுபோல் திரண்டு சென்றனர். அணிகள் தெருக்களை நிறைத்துப் பல கல் தொலை நீண்டன. முன்னணி மீண்டும் கோயில்வாசல் வந்தது. இருபுறமும் மீண்டும் தடியடிகள், துப்பாக்கிக் குண்டுகள் மழையாகப் பொழிந்தன. பலர் வீழ்ந்தனர். ஆனால் விழுந்த இடங்கள் படையணிகளில் நிரப்பப்படுவது போல நிரப்பப்பட்டன. கூட்டம் குண்டுகளுக்கு மார்பு தர முன் வந்தது. உறவினர் உற்றார் இறந்தும், மற்றவர் வீறுடன் முழங்கிக் கொண்டு முன்னேறினர். சுகதா ஒப்பற்ற படைத்தலைவர்போல் அஞ்சா நெஞ்சுடன் அவர்களை முன்னின்று நடத்திச் சென்றாள். அது சேமப் போலீஸ்படை. போலீஸ் தலைவர் சுகதாவை நோக்கிச் சுட இருந்தார். அச்சமயம் அவளை அவர் அடையாளம் கண்டார். கண்டதுமே சுடுவதை நிறுத்தினார். படைகள் சுடுவதை நிறுத்தி பின் வாங்கும்படி உத்தரவிட்டார். கூட்டம் பின்னும் முன்னேறிச் சென்றது. தலைவர் இப்போது பின்சென்று சிலருடன் பேசினார். கோயில் வாசலில் காவல் செய்த கூட்டம் கலைந்தது. கோயில் திறக்கப்பட்டது. ஆவேசத்துடன் முன்வரும் கூட்டத்தின் முன் ஒருவன் முரசறைந்தான்: ‘கோயில் வாசல் திறந்து விடப்பட்டது யாவரும் உள்ளே செல்லலாம்’ என்றான் அவன். ‘பகவன் வாழ்க, சுகதா வாழ்க, அறம் வெல்க அன்னை சுகதா வெல்க’ என்று கூட்டம் முழங்கிக்கொண்டு சென்றது. வெற்றிக் களிப்பு மாடமாளிகை முதல் ஏழைக் குடிசைவரை எதிரொலித்தது. அன்றுமுதல் சுகதா வேறு புதிய சுகதாவாக மாறினாள். அவள் நகரின் முடிசூடா அரசியானாள். அவள் பெயரால் கழகங்கள் நூல்நிலையங் கள் தோன்றின. எல்லா அறநிலையங் களும் அவள் சொற்பொழிவை, ஆதரவை நாடின. மக்கள் டாக்டர் சாந்திகுமாரைக் கூட மறந்தனர். மருத்துவ விடுதியில் ஒரு மாதமாக மீண்டும் கிடந்த அவரை வந்து பார்ப்பவர் தொகை குறைந்தது. புதிய தலைவரின் புகழ்கண்டு டாக்டர் பொறாமை யடைந்தார். அது தன் பழைய நண்பன் மாணவனின் மனைவியே என்ற ஒன்றுதான் அவருக்கு ஆறுதலாயிருந்தது. ஆனால் அத்தலைவர் பழைய தலைவரைப் பார்க்க வராதது கண்டு, அவர் உள்ளுற மனம் புழுங்கினார். ஆனால் டாக்டரிடம் மிகவும் ஈடுபட்ட நைனா, தனித்து அவரை அடிக்கடி பார்க்க வந்தாள். ஒரு தடவை சுகதா போனபோதும் அவள் உடன் சென்றாள். இதுவரை அமர்தான் ஒப்பற்ற தியாகி என்று டாக்டர் நினைத்திருந்தார். சுகதா அவன்வழி நின்றதுடன், அவனையும் மிஞ்சிவிட்டதை அவர் ஒப்புக்கொண்டார். ஆயினும் பேர்பெற்ற அக்கணவனை அவள் ஏன் வெறுக்க வேண்டும் என்று அவர் உணரமுடியவில்லை. சுகதா பேச்சுடன் பேச்சாக அவர் ஏன் மணம் புரியவில்லை என்று கேட்டாள். “சுகதா போன்ற பெண்களுடனேயே அமர் போன்ற தியாகிகள் வாழ முடியவில்லையே!” மணவாழ்வு சமூகச் சீர்திருத்தத்துக்கு உகந்ததன்று என்று அவர் வாதித்தார். சுகதா அவர்மீது சினங்கொண்டாள். “பெண்கள் ஆண்களை விட உறுதியில், தியாகத்தில் குறைந்தவர்களல்ல. ஆனால் தங்களைப் போன்ற ஆண்கள்கூட எங்கள் குறை அறிவதில்லை. அவர் இன்னொரு பெண்ணைக் காதலித்தாலும், எங்களைக் குறைகூறுகிறீர்கள். நான் அதே குற்றம் செய்தால்...!” டாக்டர் மன்னிப்புக் கேட்டார். பெண்கள் பேசத் தொடங்கினால், அவர்களுக்குச் சமத்துவம் கிட்டிவிடும் என்று உணர்ந்தார். ஆனால் ஏழைகள் துயரை நேரே காணுந்தோறும் அமர் உரைகளும் அவன் முகமும் சுகதா கண்முன் நின்று அவளைக் கேலி செய்தன. அவள் உள்ளூற மாறிவந்தாள். நைனா அண்ணனைப் புகழ்ந்தபோது அவள் இப்போது மிகுதி கடியவில்லை. சமர்காந்துக்குக் குடும்பத்தில் இப்போது ஒரு கவலைதான் இருந்தது. அது நைனா திருமணம். பணத்தை விரும்பிய அவர், இப்போதும் ஒரு பணமூட்டைக்கே அவளைக் கட்டினார். அது தனிராம் என்ற செல்வச் சேட்டின் பிள்ளை மணிராம். தந்தை, நகரவையின் துணைத் தலைவர். மகன் தந்தை செல்வத்திலும் பன்மடங்கு பணம் திரட்டி, நகரில் பொருளாட்சி செய்து வந்தான். அவன் ஏழைகளைத் துரும்பாகக் கருதி ஒடிப்பவன். பெண்களை அவன் மலராகக் கசக்குபவன். அவன் வாழ்வில் அவள் படும் துன்பங்கள் அவள் குடும்பத்துக்குத் தெரியாமல் இருப்பதற்காக, அவன் அவளைத் தாய் வீடனுப்பாமலே வைத்திருந்தான். அத்துடன் அவள் பணத்துக்காகவே அவன் அவளை மணந்திருந்தான். பணம் மணவினை மூலம் வந்து விட்டதால், இனி அவள் தேவையில்லை. சுகதாவின் புகழால் நகரில் செல்வர் சுரண்டுதலுக்குப் பங்கம் வருவது கண்டு, அவன் அவளைப் போல் பேச்சாளர், கல்விகற்றவர் ஆன பெண்ணை மணந்து, சமூகத்தை வசப்படுத்த எண்ணங் கொண்டிருந்தான். அத்தகைய ‘பெண் இரை’க்காக அம்மனிதப் பாம்பு காத்துக் கொண்டிருந்தது. சுகதா நைனாவை ஒரு நாள் பார்க்கச் சென்றாள். அவள் உடல் நலமில்லை என்று கூறி மணிராம் அவளை அணுகி, தன் செல்வ இறுமாப்பையும் இறுமாந்த திட்டங்களையும் அளந்தான். சுகதாவின் தற்பெருமை புண்பட்டது. அவள் பெண்களியக்கத்தில் பேசுவது போல் பேசிவிட்டு, கோபத்துடன் மீண்டாள். தனிராம் இச்செய்தி கேட்டு மகன் மீது வெகுண்டான். அவளை அமைதிப்படுத்த நைனாவையே அனுப்பினான். சுகதா இச்செல்வருக்கு ஒரு பாடம் படிப்பிக்க விரும்பினாள். இப்போது அவள் டாக்டருடன் சேவாசிரமத்தை நடத்திவந்தாள். இரேணுகா அதற்குத் தன் பெருஞ்செல்வத்தையே கொடுத்திருந்தாள். இருவர் முயற்சியாலும் அது ஒரு முதல்தர கல்லூரி ஆகியிருந்தது. கல்வித்துறையில் மட்டுமன்றி தொழில் துறை, ஏழைகளுக்கு வீடு, வாழ்க்கை வசதி ஆகியவற்றுக்கும் அவர்கள் திட்டங்கள் வகுத்திருந்தனர். அதற்காக அவர்கள் வாங்க எண்ணிய நிலத்தை நகரசபையின் துணைத்தலைவரான தனிராமும் தலைவரான ஹாஸ்விஸ் ஹாலம் என்பவரும் தாமே குறைந்த விலையில் வாங்க முனைந்தனர். நகரசபைக்குழு அவர்கள் கையிலிருந்ததால், அவர்கள் அதை ஏழைகளுக்குக் கொடுக்க மறுத்தனர். இத்துறையில் பெரிய தொழிலாளர் வேலை நிறுத்தமும் புரட்சியும் நடத்தச் சுகதா எண்ணினாள். டாக்டர் புரட்சிக்கு அஞ்சினார். அவர் தம் பேராசிரியர் வேலையை இப்போது துறந்திருந்தார். பெருஞ்செல்வமிட்டு வெற்றிகரமாக நடந்துவரும் தன் சேவாசிரமத்துக்குப் புரட்சியால் ஊறு ஏற்படக்கூடாதே என்று அவர் கலங்கினார். ஆனால் சுகதா தானே சென்று தொழில் தலைவர்களை ஊக்கினாள். முதலில் தொழிலாளர் தலைவர்களில் ஒரு சிலர் தவிர, மற்றவர்கள் தயங்கினர். சுகதா தலைவர்களை அசட்டை செய்து, நேரடியாகத் தொழிலாளர்களிடமே பேசினாள். “தலைவர்கள் தங்கள் வாழ்வு சற்று வளமானவுடன் போராட்டத்துக்குத் தயங்குகின்றனர். ஆனால் உங்கள் வாழ்வுக்காகப் போராடவேண்டும். நான் என் இறுதி மூச்சுவரை உங்களுடன் நிற்பேன். என் உயிருக்கு நீங்கள் விலைவைத்தால் எழுங்கள். வேலை நிறுத்தம் இல்லாவிட்டால், நேரே நானே வேறு நடவடிக்கை எடுப்பேன்” என்றாள். சுகதாவின் உறுதி முழுப்பயன் தந்தது. மக்கள் எழுந்தனர். தொழிலாளர் பின்பற்றினர். தலைவர்களும் பின்பற்றினர். மறுநாள் உச்சிவேளைக்குள் நகர் அல்லோல கல்லோலப்பட்டது. சுகதா அன்று கைது செய்யப்பட்டாள். போலீஸ் தலைவர் அமர்காந்தின் நண்பர். அத்துடன் அவர் மக்கள் இதயம் அறிந்து கடமையாற்றுபவர். அவர் மோட்டாருடன் வந்து அவளை ஏற்றிச் சென்றார். நைனா இறுதி நேரத்தில் அவளுக்குக் குழந்தைக்கு ஊட்டுவது போல் உணவு ஊட்டிக் கண்ணீருடன் வழியனுப்பினாள். மக்கள் கடல்போல ஆரவாரித்து ‘வாழ்க அன்னை சுகதா, வெல்க வீரநங்கை சுகதா’ என வானளாவ முழக்கினார். நைனா சுகதாவின் அரும்பணி, தியாகம், சிறைப்பாடு ஆகியவைபற்றி அமருக்கு எழுதினாள். காசிமாநகர் நகரசபைத் தலைவரான ஹாஃவிஸ்ஹாலம் சலீமின் பெரியப்பா. அவர் உதவியால்தான் அவன் படித்தான். படிப்பில் அவன் அமரைவிடப் பிற்பட்டவனாயினும், அமரைப் போல் தாய்தந்தையர் பிடியை உதற முடியவில்லை. அவர்கள் ஆதரவு படிப்பின் குறையை வென்றது. அவன் ஐ.ஸி.எஸ். தேர்வுக்கு அமர்ந்து அதில் தேறினான். தன் நண்பன் அமர் இருந்த மாவட்டத்திலேயே அவனுக்குப் பணியும் கிடைத்தது. அவ்வாண்டு வடபுல முழுவதும் பஞ்சநிலையிலிருந்தது. அரித்து வாரப் பகுதியிலுள்ள குடியானவர்கள் நிலை இன்னும் கொடியதாயிருந்தது. உணவு விலைவாசிகள் இறங்கியிருந்தன. மற்ற பொருள்கள் ஏறியிருந்தன. விளைச்சல் முழுவதையும் விற்றும் வரிசெலுத்தப் பணம் போதவில்லை. உணவு இல்லாமலும் மற்ற செலவுகளுக்குப் பணம் இல்லாமலும் அவர்கள் வாடி வதங்கினர். இந்நிலையிலும் வரி முதல்வர்கள் இரக்கமின்றி வரிபிழிந்து அடக்குமுறை தொடங்கினர். அரித்துவாரப் பகுதியில் குடியானவர்கள் நிலமுழுதும் ஆண்ட நில முதலாளி, வெறும் நிலமுதலாளி மட்டுமல்ல, அவர் ஒரு மடாதிபதி அல்லது மஹந்து; மக்கள் பொருளியல் வாழ்வு மீது மட்டுமன்றி, அவர்கள் குடும்ப வாழ்வின் எல்லாத் துறையிலும் அவர் ஆட்சி செலுத்தினார். குடியானவருக்குக் குடிக்கக் கஞ்சியில்லை. அக்காலத்திலும் அவர் சோறும் கறியும் பழவகை களும் மலைமலையாகக் குவித்து வைத்துக் கொண்டு அவர் புகழ்பாடும் பக்தகோடிகளுக்கு உணவும் உடையும் வாரியிறைத் தார். அமர் இதுவரை அயலாட்சியை எதிர்த்திருந்தான். செல்வரை, உயர்குடியினரை எதிர்த்திருந்தான். மதத்தலைவர் களை அவன் அறவோர் என்று கருதினான். ஆதலால் அவர்களை எதிர்க்காமல், அவர்கள் நல்லெண்ணம் பெற்றே உய்திபெற எண்ணினான். ஆகவே அமருடன் வந்து உழைத்த இராமானந்த அடிகள் மஹந்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும்படி கூட்டத்தில் பேசியபோது, அமர் மறுத்துரைத்தான். பொதுமக்கள் முனைப்பான கருத்துடைய இராமானந்தரையே பின்பற்ற லாயினர். இதனால் அமர் மனக்கசப்படைந்து தன் அறையில் வந்து ஓய்வு பெற்றிருந்தான். அமர், மக்கள் பணியில் ஈடுபட்டுத் தன்னிடம் மிகுதிப் பற்றுடைய முன்னியைப் புறக்கணித்திருந்தான். அவன் மனக்கசப்பிடையே அவள்பால் அவன் கருத்தும் சென்றது. மூதாட்டி சலோனி, இருவரையும் இணைத்து வைத்தாள். அவள் கருத்துக்குச் சேரித்தலைவன் கூதடும் இணங்கினான். சமயத் தலைவரான மஹந்தை எதிர்ப்பது பாவம் என்றும், வேண்டுகோள் செய்து சரிப்படாவிட்டால் எதிர்ப்பது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் கூதாடும் அமரும் மஹந்தினிடம் சென்றனர். அன்று மஹந்து ஒரு திருவிழாவில் ஈடுபட்டிருந்தார். போன இருவருள் மடத்தின் எல்லையிலேயே ஒருவர் நிற்கவேண்டியதாயிற்று. ஏனென்றால் கூதட் தாழ்த்தப்பட்ட வகுப்பினன். சமயத்திருவிடத்தில் அவன் புகமுடியாது. ஆயிரம் அரண் மனையின் செல்வம், படைபடையாகக் குதிரை, ஒட்டகை, யானை, துணிமணிகள் ஆகியவை எங்கும் சிதறிக் கிடந்தன. மஹந்தின் திருமுன்பு செல்ல அவர்கள் அரும்பாடுபட்டு இரவு முழுதும் காத்திருந்தனர். பார்க்க முடியாததனால் வேண்டுகோள் எழுதி அனுப்பிவிட்டு மீண்டனர். சேரியில் இராமானந்த அடிகள் செய்துவந்த பிரசார வேகம் மஹந்தின் கவனத்தை ஈர்த்தது. அவர் அமரை நேரே வந்து பார்க்கும்படி எழுதினார். வந்தபோது அவர்களை மதித்துத் தேனொழுகப் பேசினார். ஆனால் அரசாங்கத்தார் இணக்க மளித்தபின்தான் சலுகையளிக்க முடியும் என்று கூறினார். அவர் இன்னுரை கேட்டு அமர் மகிழ்ந்து மீண்டு வந்தான். அவன் மதிப்பு உயர்ந்தது. அது கண்டு இராமானந்த அடிகளும் அவனுடன் வந்து சேர்ந்தார். இறுதியில் எல்லாரும் விரும்பியபடி முழுவரிக் குறைப்பும் வரவில்லை. பலர் எதிர்பார்த்தபடி அரையளவும் குறைக்கவில்லை. காலளவே குறைத்ததாக மஹந்து அறிவித்தார். இது அரசாங்கம் குறைத்துக் கொள்ள இணங்கிய அளவு மட்டுமே. மஹந்து தன் பங்கில் குறைவு செய்ய விரும்பவில்லை. மேலும், பணியாளர் முடிந்த மட்டும் பிரிக்கத் தொடங்கினர். அமரும் இராமானந்தரும் இணைந்து புரட்சிக்குச் சட்டம் கட்டினர். அமர் பேச எழுமுன் நைனாவின் கடிதம் வந்தது. அதில் சுகதாவின் பெருந்தியாகம், அவள் சிறைப்பட்டது ஆகியவை வரையப்பட்டிருந்தன. அமருக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் பன்மடங்கு பெருகின. அவனை அறியாமலே அவன் ஆவேசத்துடன் பேசினான். பேசி முடியுமுன் மக்கள் உள்ளங்களில் புத்தூக்கமும் புதுவேகமும் எழுந்தன. இராமானந்த அடிகள் முதலிய பிற தலைவர்களும் அதே புயல் வேகத்தில் பாய்ந்து முன் சென்றனர். புதிய மாவட்ட முதல்வர் சலீமுடன் மாவட்ட முதல் நீதிபதி கஃசன்வீ, அமரின் புதிய போக்குப்பற்றி ஆராய்ந்தார். அவரை இதற்கு முன் இருவரும் வரவேற்றுப் பேசியிருந்தனர். அவன் முன்னேற்றக் கருத்துக்களை அவர்களும் மதித்தனர். ஆனால் அவன் மக்கட்கிளர்ச்சி செய்வது அவர்களுக்குப் புதிதாயிருந்தது. அது அவர்களுக்குப் புரியவில்லை. இப்போது கஃசன்வீ அமரைக் கட்டாயம் சிறைசெய்யவேண்டும் என்று விரும்பினார். அமர், சலீமின் நண்பனாதலால் சலீமே சென்று சந்தடியின்றி அமரை அழைத்துவரும்படி அவர் கூறினார். சலீமும் மோட்டாரில் சென்று அமரை அழைத்துவந்து சிறைப்படுத்தினான். வழியில் முன்னி அவர்களைக் கண்டாள். அமர் தன் சலவை ஆடைகளை வாங்கி அனுப்பும்படி அவளிடம் தெரிவித்ததிலிருந்து அவள் உண்மையை ஊகித்துக் கொண்டாள். உடனே அவள் சென்று ஊர்திரட்டி மோட்டாரை வழிமறிக்க முயன்றாள். அமர் அவர்களிடம் “நீங்கள் சட்டத்தை மதித்து உரிமைக்குப் போராடுங்கள். என் தொண்டை விடாது செய்யுங்கள்” என்று கூறிச் சென்றான். சலீமின் அடக்குமுறையை ஊர்மக்கள் உக்கிரமாக எதிர்த்தனர். சலீமும் பொறுமையிழந்தான். சலோனி அவனையே அடக்குமுறையின் பொறுப்பாளராகக் கொண்ட, அவன் மீது கல்மாரி வீசி வைதாள். அவன், அவள் கிழவி என்றும் பாராமல் அடித்துத் துன்புறுத்திக் குற்றுயிராக்கினான். அவள் உடலெல்லாம் நைந்திருந்தது. முகம் உப்பியிருந்தது. கால் எலும்புகள் முறிந்துவிட்டன. பலநாள் படுக்கையில் கிடந்து அவள் உயிருக்கு மன்றாட வேண்டி வந்தது. ஆயினும் படுக்கையிலும் சரி, அதிலிருந்து எழுந்து கட்டைக்காலுடன் தண்டின்றி நடக்கும்போதும் சரி, சலீமைப் பழிப்பதும் அவன் மீது பழிவாங்கத் துடிப்பதும் அவள் உடலில் ஒட்டியிருந்த உயிரின் ஒரே வாதனையாயிருந்தன. சுகதா சிறை செல்லுமுன்பே, சகீனாவைப் பார்த்திருந்தாள். அமர் தன்னைப் புறக்கணித்து அவளைக் காதலித்தான் என்று நினைத்தும், அவள் சகீனாவின் துயரம் ஆற்ற முனைந்திருந்தாள். ஆனால் சகீனாவிடம் நெருங்கி உரையாடியதனால், அவர்கள் காதல் உடல் தொடர்பற்றதாகவே இருந்ததென்றும், சகீனா அக்காதலை ஒரு காதலாகக் கொள்ளாமல், அவனிடம் பூசிக்கத்தக்க உயர்பண்பாகவே அதனைக் கொண்டாள் என்றும், சுகதாவின் பாசமற்ற நடவடிக்கையே அக்காதலுக்குரிய காரணம் என்றும் தெரிய வந்தது. இப்போது சிறையில் சுகதாவின் உள்ளம் இவையெல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தது. அமர் வகையில் அவள் கருத்து மாறிவந்தது. ஒருநாள் அவள் அறையைப் பெருக்குவதற்கு மற்றொரு பெண் கைதி கொண்டுவரப்பட்டாள். அவள் ஏழைப்பெண். கைதிகளிலும் ஏழை என்பதற்காக, தான் ஒரு உயர்குடிக் கைதிக்கு வேலை செய்யவேண்டி வந்தது குறித்து அவள் சீறினாள். சுகதா உடனே அவளை அணைத்து, ‘நீ என் தோழி, உன் மூன்றாம் வகுப்பு அறைக்கே நான் வருகிறேன்’ என்று கூறித் தன் முதல் வகுப்பை விட்டு அவள் மூன்றாம் வகுப்புக்கு மாறினாள். சிறையாளிகள் தடுத்தும் அவள் கேட்கவில்லை. ஏழைக் கைதி வேறு யாருமல்ல, முன்னியே. அவளும் அமரின்பின் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைபுகுந்தாள். பின் காசிச் சிறைக்கு மாற்றப்பட்டாள். அவள் கதை கேட்டபின், சுகதாவுக்கு அமரைப்பற்றிய இன்னும் பல விவரங்கள் தெரிந்தன. அவன் சிறை வாழ்வு, முன்னி அவனை மனமாரக் காதலித்தும் அவன் அகக்கனிவன்றி உடற் காதலிலீடுபடாதது ஆகியவற்றை அறிந்ததே, அவள் உள்ளத்தில் அமர் அமர்ந்த இடம் மேலும் உயர்வுற்றது. அவள் அவனுக்காகத் துடித்தாள். குடும்பத்தின் தியாகத்தீ சமர்காந்தின் துன்ப உள்ளத்தைத் துறவுள்ளமாக மாற்றியிருந்தது. அவர் தம் பெருமைகளை உதறிவிட்டுச் சுகதாவைப் பார்க்க வந்தார். சுகதாவின் தியாகத்தை அவர் பாராட்டிப் புகழ்ந்து, தன் கொடுமைகளுக்காக வருந்தினார். அவர் மனமாற்றமறிந்த சுகதா, தானும் அமரிடம் கொண்ட புதுமதிப்பை வெளியிட்டு, “அவர் சிறையில் மூன்றாம் வகுப்பில் இருந்து அவதியுறுகிறாராம். அவர் நண்பன் சலீமே இக்கொடுமை செய்கிறானாம். சென்று அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ய ஏற்பாடு செய்வீர்களா?” என்று கேட்டாள். சமர், “அதுவே என் திட்டமும். அதுபற்றிப் பேசவே வந்தேன்” என்றார். “நீங்களே போகிறீர்களா? மிகவும் மகிழ்ச்சி. எப்போது புறப் படுகிறீர்கள்?” “இதோ, சிறையிலிருந்து நேரே போகிறேன்.” சமர், அரித்துவாரம் சென்று அதன் வழிபாட்டைக் கண்டு மனம் வெதும்பினார். சலோனியின் நிலைகண்டு பின்னும் உளம் நைந்தார். ஏழைகள் துயரம் என்ன என்று இப்போது அவருக்குத் தெரிந்தது. சலீமை நேரே சென்று பார்க்க அவர் புறப்பட்டார். அதற்குள் சலீமுடன் சில குதிரை வீரர் ஊர் மக்களை அடித்துத் துவைப்பது கண்டார். சலீம், சமரையும் ஊர் மக்களுள் ஒருவராக நினைத்து அடிக்கப் போகும்போது, திடுமென அடையாளம் கண்டு திடுக்கிட்டாள். அடிதடியை நிறுத்தும்படி உத்தர விட்டு, “சேட் அவர்களே! நீங்களுமா இதில் கலக்கிறீர்கள்?” என்றான். “நான் மனிதனல்லவா? பணம் என் மனிதத் தன்மையை முன்பு மூடியிருந்தது. ஆனால் குடும்பத் தியாகத்தின் தீ, என் துயர்களின் உள்வெப்பு ஆகிய இரண்டிற்குமிடையில் அம்மூடாக்குக் கலைந்தது. ஆனால் நீ, அமரின் நண்பனாகிய நீ, சீர்திருத்த இளைஞனாகிய நீ என்ன செயல் செய்கிறாய்?” என்று சமர் கேட்டார். மனமாறிய செல்வரும் மலைப்புற்ற இளமை அதிகாரியும் நட்புறவுடனே வாதாடினர். நீதி ஆய்ந்தனர். பின் அளவளாவினர். சலீமின் கடமையில் கடுமை இருக்கக்கூடும். ஆனால் கொடுமைக்குக் கடமை காரணமன்று. கடமையின் கடுமை யிடையே ஏழையிடம் கருணையும், அவன் நிலைபற்றிய அறிவும் அனுதாபமும், அவன் ஆத்திரத்தில் பொறுமையும் இருக்க வேண்டும் என்று சமர் விளக்கினார். அத்துடன், சலோனி வீட்டுக்கு அவனை இட்டுச் சென்று காட்டி, அவள் கோபத்தையும் கண்டித்து, இருவரையும் நட்பாக்கினார். பின் அவர் தம் சாதி சமயக் கண்டிப்பை வெறுத்தவராய், சலீமுடன் உடனிருந்து உண்ணும் அளவுக்குச் சாதிகடந்த மனித அன்பு கொண்டு காசிக்கு மீண்டார். சலீம் ஏழையர் வறுமை நிலையை நேரில் கண்டாராய்ந்து அதற்காகத் தான் கோரும் பரிகாரங்களையும் வகுத்தெழுதி அரசியலாளருக்கு அனுப்பினான். அதன் பயனாக அவன் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, கோஷ் என்ற ஒருவர் பதவி ஏற்றார். மக்கள் இதற்குள் சலீமிடம் பற்றுதல் கொண்டு விட்டனர். தம்மை கல்வியற்ற நிலையில் விட்டுச் செல்லாது தம்முடனிருக்க வேண்டினர். அவன் அவர்கள் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தினான். அரசாங்கம் அவனையும் சிறையிட்டு முன்னியைப் போலவே காசிக்குச் சிறை மாற்றியது. சலீமின் தண்டனை கேட்ட சகீனா, தாயிட மிருந்து திமிறி விடுபட்டு, தானும் மக்கள் தலைமை பூண்டு தியாகம் செய்து கைதியானாள். சுகதா சிறைப்பட்ட அன்றிலிருந்து, ஏழையர் விடுதிக்காகக் கோரப் பட்டிருந்த இடத்தில் மறியல் நடைபெற்று வந்தது. அந்த இடத்தைப் பெற நினைத்துத் துணைத்தலைவர் தனிராமும் தலைவரான சலீமின் பெரிய தந்தை ஹாஃலிஸ் ஹாலமும் நகரவைக் குழுவை இயக்கி அதை வாங்கி விட்டனர். ஆனால் அவர்கள் அதில் கட்டடக் கடைகால் எடுக்க எடுக்க, அது மக்களால் அழிக்கப்பட்டது. அதற்கான சேமப் பொருள்களும் தவிடு பொடியாக்கப்பட்டன. சகீனா மக்கள் தொண்டில் காட்டிய துணிச்சல் கண்ட பட்டாணிச்சி, சுகதாவின் இடத்தில் நின்று தானே மறியலை நடத்தினாள். ஒரு கிழவி காட்டிய வழியில் இளநங்கையரும் வீர இளைஞரும் பல்லாயிரக் கணக்கில் திரண்டனர். துப்பாக்கி வேட்டும் தடியடியும் நடந்தன. பலர் வீழ்ந்தும் கிழப்பட்டாணிச்சி ஒரு வீரன் போல உறுதியாய் நின்றாள். அவள் தலையிலிருந்து குருதி ஒழுகிற்று. ஒரு கால் ஒடிந்தது. அவள் ‘அல்லாஹோ அக்பர், கரீபோங்கா ராஸ் ஹோ, அமீர் சாஸ் முர்தாபாத்’ (வாழ்க ஆண்டவன், ஏழை அரசு ஓங்குக, செல்வராட்சி ஒழிக) என்று கூவி இறுதி மூச்சு வரை போராடினாள். மக்கள் கடல் பெருகி அவள் உடல் சுமந்து அடக்கம் செய்தது. அவ்வீரக் கிழவி விழுந்த இடம் தியாகக் கோயிலாயிற்று. எண்ணற்ற வீரர் சூழ்ந்தனர், மறியல் நீண்டது. கிழவியின் இடத்தில் இப்போது ஒரு கிழவர்- ஆனால் நகரின் செல்வக் கோமானான கிழவர் நின்றார். அவர்தான் சமர்காந்த். மக்கள் முதலில் தம் கண்களை நம்பவில்லை. ஆனால் அவர் பேசினார். “ஏழைகள் நலனைச் செல்வர் கெடுக்கின்றனர். இது அவர்கள் மடமை. குடிசைகளின் அழுக்கும் வறுமையும் நோயை வளர்க்கும். அந்நோய் செல்வர் மாளிகையையும் தாக்கும். செல்வர் உங்களுக்குச் செய்யும் கொடுமையால் உங்களை அழித்துத் தாமும் அழிகின்றனர். இனி உலகில் கொடுமைப் படுத்துவது மட்டுமன்று பாவம்; கொடுமையைத் தாங்குவதும் பாவம் என்ற எண்ணம் எழவேண்டும். அவர் விரைவில் கைது செய்யப்பட்டார். அவரை அடுத்து அவர் சம்பந்தினி இரேணுகாவும் டாக்டர் சாந்தி குமாரும் போராட்டம் நடாத்திச் சிறைசென்றனர். ஆனால் மக்கள் சோர்ந்தழியுமுன் மற்றொரு செல்வ நங்கை- இத்தடவை செல்வர் இறுமாப்புக் கோட்டையின் பூங்கொடி - எதிரியின் பாசறைக்குரிய இளஞ்செல்வம்- நைனா- முன் வந்தாள். அவள் பேசிய சொற்கள் மிகச் சில. ஆனால் அது சொற்பொழிவல்ல, அன்புக் கட்டளை! “மறியல் செய்தது போதும், மக்களே! ஏழைகளாகிய நாம் பலர். நம் எதிரிகள் ஒன்றிரண்டு பேர். அவர்கள் நகரவைக் குழுவில்தான் இருக்கிறார்கள். நம் நன்மைக்காகவே, நாம் தேர்ந்தெடுத்தவர்கள் அவர்கள். அவர்களிடம் சென்று முறையிடுவோம். அவர்கள் நமக்கு நம் உரிமை தரும்வரை அங்கேயே நிற்போம். அவசியமாயின் அங்கேயே நின்று உயிர்ப்பலி கொடுப்போம்” என்று கூறி முன்சென்றனள். நைனா தன் தாய்க் குடும்பம் முழுவதன் தியாகத்தில் பழுத்து விட்டாள். வெளியே உலவப் போவதாகத் தன் கணவனிடம் கூறிவிட்டு வந்து தந்தையின் இடத்தில் நின்று கடமையாற்றினாள். அவள் பின் நகரமக்களே படைதிரண்டு அணி அணியாகப் பல கல் தொலை சென்றனர். படை நகரவையை அணுகிற்று. நகரவை நடுக்கமுறத் தொடங்கிற்று. பணிமனைக்குப் பணிமனை, பணியறைக்குப் பணியறை போலீஸ்- சேமப் போலீஸ்- படைத்துறை யாவும் தொலை பேசியில் குரல் பரிமாறிள. அதற்கிடையே ஒரு கோரநிகழ்ச்சி நகரவையையே அதிரவைத்தது. தன் கொடுமைகளுக்கெல்லாம் பணிந்து வளைந்து நின்ற அப்பாவி மனைவியே தன்னை எதிர்த்துப் படைத்தலைவியானது கேட்டான், பாதகன் மணிராம். அவன் அவள்முன் கோப வெறியுடன் சென்றான். அவளை அச்சுறுத்தினான், தடுத்தான். கைபற்றி இழுக்க முயன்றான். அவள் “இது வீடல்ல நகர். நான் வீட்டில் உம் மனைவி. இங்கே நீர் நகரின் எதிரி, என்னைத் தீண்ட வேண்டாம்” என்றாள். அவனால் அவமதிப்புப் பொறுக்க முடியவில்லை. கையிலுள்ள கைத்துப்பாக்கி வெடித்தது. நைனா, அமைதித் தெய்வம், அடிவீழ்ந்து சாய்ந்தது போல் சாய்ந்தாள். கூட்டம் கொந்தளித்தது, மணிராம் மோட்டார் ஏறித் தப்பினேன் பிழைத்தேன் என்று ஓடினான். நைனாவின் பிணந்தாங்கிய வண்ணம், ஏழைகள் படைகோர அமைதிப் படையாய், புயல் சுமந்து செல்லும் கடல் போலப் புரண்டு நகரவை நோக்கிற்று. நகரவையின் உறுப்பினர் உடலில் குருதி ஓடவில்லை. யாரும் ஒன்றும் தெரியாமல் விழித்தனர். தனிராம் வாய் திறந்தான். “அன்பரே, ஏழைகள் குருதி குடிக்க உங்களைத் தூண்டிய இருவருள் நான் ஒருவன். நான் மாடிவீடு கட்ட எண்ணினேன். என் குடியை மண் ஆண்டது. இனி உங்கள் விருப்பமானால் என் போல மக்கள் துயரால் வாழ்வு வாழ எண்ணிய தலைவரும் என்னை ஒத்த மனமாற்றம் பெறுவதானால், ஏழையர்க்கு ஏழையர் மனையைத் தருவதாக இப்போதே போய் வாக்குக் கூறுவோம். இல்லையென்றால் இறைவன்தான் நம்மைக் காக்க வேண்டும்” என்றார். “இனி இறைவன் கூட நம்மைக் காக்கமாட்டார். அவர், ஏழையின் பொறுமையில் குடியிருந்தார். இப்போது அவர் கோர உருவில் நம்மீது பாய்கிறார்” என்றார் தலைவர் ஹாஃவிஸ். நகரவைக் குழுவினர் குனிந்த தலையுடன் முன்னேறினார். ஏழைப் படையணி முன், செல்வர் ஆதிக்க அணி வந்து நின்றது. “உடன் பிறந்தார்களே, உங்களைத் துயரப்படுத்தி உருக்குலைத்து வந்த எங்கள்மீது கருணை காட்டுங்கள். நீங்கள் போராடிப் பெற்ற நிலம் இனி உங்களுடையது. இனி நீங்களே நகரின் மன்னர், உங்கள் உரிமைகள் எதிலும் நாங்கள் இனிக் குறுக்கிடமாட்டோம்” என்று மன்றாடினார் தனிராம். மக்களிடையே களிப்பு இல்லை. ஆனால் வெற்றியின் பெருமிதம் துயரை வீறுபடுத்தியது. ‘வாழ்க தியாக அணங்கு நைனா! வாழ்க அமர்காந்த்’ என்று மூலையில் எழுந்தது ஒரு குரல். ‘வாழ்க நைனா! வாழ்க அமர்! வாழ்க சுகதா!’ எனத் தியாகிகளின் பெயர்கள் மக்கள் உள்ளத்திலிருந்து எழுந்து முழங்கின. உள்ளே சிறையில் சுகதாவுடன் அமரும் வந்திருந்தான். ஆனால் இருவரும் சந்திக்கவில்லை. அமர் கடுங்கொலைக் குற்றவாளிகளுடன் இருந்தான். பாரச் செக்குகளை ஒவ்வொரு வரும் இழுக்கவேண்டியிருந்தது. அவரால் முடியவில்லை. ஆனால் பக்கத்திலிருந்த ஒருவன் அவன் வேலையை நொடியில் முடித்தான். அவன் தன் வேலையையும் முடித்து, முடியாதிருந்த கைதிகளின் வேலைகளையும் முடித்தான். அவன் திறமை, அவன் தியாகம், அமரை மலைப்படைய வைத்தது. அவன் ‘காலேகான்’ என்று கண்டபோது மலைப்பு மலையினும் பெரிதாயிற்று. காலேகான் ஏழை. உழைப்பறியாதவன். கொலை, களவே, தொழிலாகக் கொண்டவன். ஆனால் முன் அமர் அவன் திருட்டைக் கண்டித்ததும்,, திருடிய பொருளை வாங்கி ஆதாயமடைய மறுத்ததும் மெள்ள மெள்ள அவன் உள்ளத்தை மாற்றியிருந்தன. ஆனால் திருட்டு, கொலை ஆகியவற்றை மீண்டும் மீண்டும் செய்து தேறிய அவன் மனமாறியதை யார் நம்புவர்? அதிலும் சிறையாளரா நம்புவர்? கொலைஞருடன் பழகிய அவர்கள் உள்ளங்கள் கொலைகாரர் உள்ளங்களினும் கொடிதாயிருந்தன. காலேகான் எல்லாருக்கும் உதவி செய்தான். மாலைப் போதானதால் வழிபாட்டுக்கு அமர்ந்தான். திருடும் போது கூட அவன் வழிபாட்டு வகையில் நல்ல முஸ்லிமாகவே இருந்தான். சிறையாளர் வந்ததும் எவரும் வேலையில் குறை வைக்காதது கண்டு பொருமினர். யாரையாவது புடைக்க அவர்கள் கைகள் துடித்தன. “கைதிக்கு கடவுள் வழிபாடு வேறா?’ என்று சீறி அவர்கள் காலேகானை அடித்தனர். பல அடிக்கொரு தடவை அவன் ‘அல்லாஹோ அக்பர்’ என்றான். ஆனால் அசையவில்லை. அடிமேலடி தொடர்ந்தது. குருதியாறு ஓடிற்று. சதைகள் சிதைந்து சிதறின. அவன் உணர்வற்று விழுந்தான். கைதிகள் கலவரம் செய்ய விரும்பினர். அமரும் குமுறி எழுந்தான். அச்சமயம் காலேகான் கண் திறந்தான். “இதுவரை அடைந்த தண்டனை மனிதர் தண்டனை. அது என் பாவம் போக்கவில்லை. இது அல்லா தண்டனை. என் பாவம் போக்கிற்று. சிறையாளருக்கு என் நன்றி தெரிவித்து எனக்கு உய்தி தாருங்கள்” என்றான் அவன். அவன் கண்கள் அமரை நோக்கி மூடின. அமர் வாழ்வில் அன்று புதிய ஒளி தோன்றிற்று. ஏழையைப் படைத்த இறைவன் மீது அவன் சீற்றம் கொண்டிருந்தான். காலேகானின் அமைதி, பொறுமை, நம்பிக்கை அவனை வென்றது. மறுநாள் அனைவரும் விடுதலை அடைந்தனர். அரசாங்கமும் சலீமை மீண்டும் ஏற்றுத் தன் கோட்பாட்டை மாற்றிற்று. அமர் சகீனாவிடம், “இனி நீ என் தங்கை. நீ சலீமை மணந்து வாழ்க” என்றான். ‘தங்கை பெரிதா, தாரம் பெரிதா’ என்று கூறி அவளைத் தழுவிக் கொண்டாள் சுகதா. 2. கடல் மறவர் முதற் பதிப்பு - 1952 இந்நூலைப்பற்றி விக்டர் ஹியூகோ கெர்ஸ்னித் தீவில் இருக்கும்போது எழுதிய புனைகதையே கடல் மறவர். நூலின் பின்னணி கெர்ஸ்னித் தீவிலுள்ள மக்கள் வாழ்வும் கடல், பாறை, புயல் ஆகியவற்றின் கொந்தளிப்புமேயாகும். இவற்றிடையே வீரம், தியாகம் ஆகியவற்றின் உருவான கதைத் தலைவனின் போராட்டமும் வெற்றியும் அவன் காதல் வாழ்வில் தோல்வியாக முடியும். அதன் முடிவும் நம் உள்ளத்தில் பெருமித வியப்பையும் அவல உணர்ச்சியையும் தூண்டுகின்றன. பல கடல் மறவருள் தலைசிறந்த, ஆனால் முரண்பட்ட சமூகச் சூழலில் சிக்கிய, கடல் மறவனாக அவ்வீரன் நம் உள்ளத்திரையை நிரப்புகிறான். கிட்டத்தட்ட மனித உணர்ச்சியும் அதேசமயம் மனித எல்லைகடந்த அகண்ட ஆற்றலும் உடையவையாய்ப் பாறை களும் கடலும் புயலும், இந்நூலில் சித்தரிக்கப்படுகின்றன. அறிவு, விடாப்பிடி, திட்டம் ஆகிய வற்றின் துணையால் அவ்வியற்கை யின் ஆனால் மனிதனின் சிறுமுயற்சி, ஆற்றலைக்கூட வெல்லுகிறது. இப்போராட்டம் கடலின் ஒரு வீர காவிய மாகத் தீட்டப்பட்டுள்ளது. கெர்ஸ்னி மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கைப் பண்புகள் திறம்படத் தீட்டிக்காட்டப்படுகின்றன. கடலகத்தில் அது பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடைப்பட்ட தீவாயிருப்பது போலவே, வரலாற்றிலும் அது 19-ம் நூற் றாண்டுப் பரப்பிலுள்ள ஒரு 12-ம் நூற்றாண்டு பிரிட்டன்- பிரான்சு ஆகியவற்றின் பண்பாட்டுக் கலவைத் தீவாகக் காட்சி தருகிறது. பண்போவியங்கள் மிகச் சில. அவையும் ஒரு தனித் துறைப்பட்டவை. ஆயினும் அவர்களுக்குள் காணப்பெறும் சிறு நுட்ப வேறுபாடுகள் கதைப் போக்கிற்குச் சுவை தருகின்றன. மூல ஆசிரியரைப் பற்றி விக்டர் ஹியூகோ பிரஞ்சு இலக்கியப் பூங்காவினிடையே ஒரு செய்குன்றில் அமைந்த ஒருசிறு செயற்கைக் காடு. அவ்விலக்கியத்தின் தென்றலிடையே அது ஒரு சிறு புயலாகச் சுழித்துச் செல்கிறது. அவர் பிரஞ்சு இலக்கியப் புனைவியல் இயக்கத்தின் முதல்வரும் தலைவரும் ஆவார். கவிதை, புனைகதை ஆகிய இருதுறைகளில் அவர் முதல் வரிசையில் இடம்பெற்றவர். ஆனால் புனைகதையிலும் கூட அவர் கவிதைப் பண்பே தலைதூக்கி நிற்கிறது. அத்துடன் காவிய முறையில் சோர்வு தட்டாத வகையில் பத்து நூறுக் கணக்கான பக்கங்கள் வர்ணனை களால் நிரப்புவதில் அவர் தனித்திறம் உடையவர். கவிதையில் அவர் சந்தங்கள் பலவற்றில் திளைத்தது போலவே, உரை நடையில் இயற்கையின் பின்னணிக்கு உயிர் தருவதில் அவர் சிறப்புடையவர். விக்டர் ஹியூகோ 1802-ல் பிறந்து 1885 வரை வாழ்ந்தார். அவர் தந்தை ஒரு படைத் தலைவர். 14 வயதிலிருந்தே அவர் கவிதையும் கதையும் நாடகங்களும் எழுதத் தொடங்கினார். நோத்ரெதாம், லாமிராப்ளே (ஏழை படும்பாடு), லாதிரவாயே, தேலாமெர் (கடல் மறவர்), கத்ர்விங்த் த்ரெஸ் (இருபது ஆண்டுகளுக்குப் பின்) ஆகியவைகள் அவரது சிறந்த புனை கதைகள். அவர் வாழ்வில் பல தடவை அரசியல் கட்சி மாறியவர். 1830 வரை மன்னர் கட்சியிலிருந்து 1848-ல் நெப்போலியனின் ஆதரவாளராக மாறினார். 1852-லிருந்து பல ஆண்டுகள் அவர் கெர்ஸ்னித் தீவில் தங்கினார். சில காலம் பெல்ஜியம் சென்று அங்கும் மன்னருடன் முரணி வெளியேற்றப்பட்டார். கடல் மறவர் பனிமீது படிந்த பாவையின் பரிசு பால் குழம்பில் குளித்ததுபோல, நிலவுலகெங்கும் வெண்பனியாடை போர்த்திருந்தது. பழய ஆண்டு துயின்றது. புதிய ஆண்டு இன்னும் பிறக்கவில்லை. அன்று கிருஸ்துமஸ் விழா நாள்! கடிகாரத்தின்படி காலை ஏறிவிட்டது. ஆனால் குளிர்காலமாதலால் கதிரவனொளி இன்னும் பரவவில்லை. வெண்கரடி போலவும் வெள்ளானை போலவும் வெள்ளையான பிறவிலங்கு வடிவங்கள் போலவும் காட்சியளித்த கட்டடங் களிடையே தெருக்கள் ஆளற்ற பனிக்காட்டுப் பாதை போல வெறிச்சென்றிருந்தன. யாரும் நடமாடவில்லை. முன் ஒன்றும் பின் ஒன்றுமாக இரண்டு உருவங்கள் மட்டும் நகர்ந்து சென்றுகொண்டிருந்தன. ஒன்றன் நடைபனியிடையே பனியாக மிதந்து சென்றது. அது ஒரு பெண். பின்னால் எட்டி நடந்தது ஒரு ஆண் உருவம். இருவரும் தொடர்பற்ற யாரோ இருவர் போலத்தான் சென்றனர். ஆனால் பெண் அடிக்கடி குனிந்து நிலத்தில் ஏதோ கையால் கீறிக் கொண்டே சென்றாள். ஆடவன் அதில் கருத்துச் செலுத்தவில்லை. அவள் யார் என்றும் கவனிக்கவில்லை. தற்செயலாக அவன் பார்வை நிலத்தில் ஒரு தடவை படிந்தது. அவன் முகம் வியப்புக் குறி காட்டிற்று. கில்லியட்! ஆம். ‘கி-ல்-லி-ய-ட்!’ அது தன் பெயர்தான்! அப்பெண் யார்? அவள் ஏன் தன் பெயரை எழுதவேண்டும்? அதுவும் பனியில்! அவன் விரைந்து முன் சென்றான், அவள் யாரென்று பார்க்க! அவள் சட்டென ஓடி எங்கோ மறைந்தாள். அவள் டெரூசெட்தான் என்று அவன் ஊகித்தான். அவன் இளைஞன்தான். ஆனால் பெண்கள் பக்கம் அவன் உள்ளம் என்றும் சென்றதில்லை. அவன் அறிந்த பெண்ணினத்தவள் அவன் அன்னை ஒருத்திதான். அவளைக் கூட அவன் மறந்து நெடுநாளாயிற்று. அவன் தனிவாழ்வு வாழ்ந்தான். ஆடவர்கூட அவன் பக்கம் நாடியதில்லை. ஆடவர், பெண்டிர் எவரையும் அவனும் இதுவரை சட்டை செய்ததில்லை. அவன் நிலத்தில் உருண்டு புரண்ட ஒரு நல்விலங்கு. அவள் வானத்தில் பறந்து திரிந்த ஓர் இசைப்பறவை. அவன் எல்லாருக்கும் பறந்து திரிந்த ஓர் இசைப்பறவை. அவன் எல்லாருக்கும் பயன்படத்தக்க, ஆனால் எவர் உள்ளத்தையும் ஈர்க்காத எஃகு உருளை. அவள் கண்ணைக் கவரும் பத்தரைமாற்றுப் பசும்பொன். அவள் எங்கே, அவன் எங்கே? ஆனால் அவளை அவன் அடிக்கடி கண்டிருக்கிறான். அவளைக் காண்பதிலேயே- தொலைவிலிருந்து கவனிப்ப திலேயே- அவன் இதுவரை உள்ளத்தில் அமைதியான மகிழ்ச்சி கொண்டிருந்தான். அவள் தன்னைப் பொருட்படுத்தினாள்- தன் பெயர் அறிந்திருக்கிறாள்- பெண்மையின் இளமைப் பருவத்துக்குரிய குறும்பிடையே தன் உள்ளக் குறிப்பை வெளியிட்டுக் காட்டியிருக்கிறாள்! இவ்வெண்ணங்கள் வழக்கமான அவன் வறண்ட உள்ளத்தைக் கனிவு படுத்தின. அவன் உள்ளத்தில் அவள் செயல் அவனையறியாமல் ஆழ்ந்து பதிந்தது. கில்லியட் கில்லியட், ஸென்ட் ஸாம்ப்ஸன் ஊர் வட்டத்திலேயே வாழ்ந்தான். கெர்ஸ்னித் தீவு முழுவதும், ஆங்கிலக் கடற்கால்வா யிலுள்ள கடற்கால் வாய்த் தீவுகளெங்குமே, அவன் நன்றாக அலைந்து திரிந்து பழகியிருந்தான். ஆனால் கடலும் பாறையும் அவனுடன் பழகினவே தவிர, மக்கள் நன்கு பழகவில்லை. அவன் இருந்த வீடும் அவன் குடும்ப மரபும் இதற்குப் பெரிதும் காரணமாயிருந்தன. அவன் சிறுபிள்ளையாயிருக்கும்போது அவன் தாய் அவ்வூருக்கு வந்தாள். அவன் தந்தை யார் என்பது அவனுக்குத் தெரியாது. மாது கில்லியட்டிடம் நிறையப் பணம் இருந்தது. சிறு நிலப் பண்ணைகள் இரண்டை அவள் வாங்கினாள். அவள் கைத்திறத்தால் அவை வளமாயின. தவிர ஸெண்ட் ஸாம்ப்ஸன் துறைமுகத்தை அடுத்திருந்த ‘பூதேலாரூ’ என்ற வீட்டையும் அவள் வாங்கினாள். அது கிட்டத்தட்ட நூறு நூற்றிருபது வெள்ளிக்கே அவளுக்குக் கிடைத்தது. ஏனென்றால் அது பேய் குடியிருந்த வீடு என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அத்தகைய வீட்டில் அவள் பிள்ளையுடன் அச்சமின்றிக் குடியிருந்தாள். பேய் அவளை ஒன்றும் செய்யவில்லை. அதனால் அவளும் ஒரு பேயாயிருக்கவேண்டுமென்று கெர்ஸ்னி மக்கள் தீர்மானித்தனர்! தாய் இறந்தபின் பிள்ளை தாய் மரபு கெடாமல் தனி வாழ்க்கை வாழ்ந்தது. பேயுறவு அவனையும் விடவில்லை. ஒரே ஒரு தடவை சமயகுரு அவன் வீட்டிற்குச் சென்றிருந்தார். அவன் அறையில் வால்ட்டேர் எழுதிய நூல் ஒன்று இருந்தது. பேய்க்கும் கத்தோலிக்க சமயத்துக்கும் தொடர்பு உண்டு என்று கடற்கால் தீவுகளிலுள்ள மக்கள் கருதியிருந்தனர். ஆனால் வால்ட்டேரோ கத்தோலிக்கரால்கூடப் பேயுடன் நேரடி உறவுடையவர் என்று கருதப்பட்டார். அத்துடன் கடற்பாசி வகைகள்பற்றிய ஒரு நூலும், மருந்துச் சரக்குகள், கனிப்பொருள்கள் அடங்கிய கலங்களும் அவனிடம் இருந்தன. கந்தகப் புகையும், பலவகை ஆவிகளும் அவன் அறையில் அடிக்கடி நடமாடின. பேயின் தொடர்புடைய சூனியக்காரரின் சின்னங்களாக இவை கருதப்பட்டன. சூனியம் வைப்பதும், அதை அகற்றுவதும் பேயின் உதவிபெற்ற செயல்கள் என்று நாட்டுப்புற மக்கள் எண்ணினர். முன்னது நம்பிக்கை அடிப்படையானது! பின்னது சோதித்துப் பார்க்கக்தக்கது. கில்லியட்டின் சூனியத்தாலேயே தன் வீட்டுக் கிணற்றிலுள்ள தண்ணீர் கெட்டு வருவதாக ஒரு பெண் கருதினாள். அவனை இட்டுச் சென்று அவள் அதைக் காட்டினாள். அவன் சில கேள்விகள் கேட்டான். “கிணற்றருகே சாக்கடை செல்கிறதா?” “ஆம்” “அதை வேறுபுறம் வெட்டிவிட்டா லென்ன?” அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “சாக்கடையின் போக்குக்கும் கிணற்றுத் தண்ணீருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? தொடர்பு இருந்தாலும் ஒரு பேயின் ஆற்றல் உதவிசெய்தாலல்லாமல் அதை எப்படி காணமுடியும்” என்று அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். கில்லியட் மறுமொழி கூறவில்லை. தானே சென்று அதை வெட்டித் திருப்பினான். தண்ணீர் இரண்டு நாளில் செம்மைப்பட்டது. “மாயத்தால்தானே அவன் கிணற்று நீரை மாற்றினான்; மாயத்தாலேயே அவன் அதைக் கெடுத்திருக்க வேண்டும்” என்பது இதன் மூலம் அவளுக்கத் தெளிவாயிற்று. பெண்களை விரும்பாதிருப்பதும், திருமணம் செய்யா திருப்பதும் பேய்ச் சூனியக்காரர்களுக்குரிய இலக்கணங்களுள் சில. இதையும் ஒரு பெண் தேர்ந்து பார்த்துவிட்டாள். “அயலில் குடியிருக்கும் அன்பரே! நீர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்றைக்குத்தான் ஒரு மனைவியைக் கட்டிக்கொள்ளப் போகிறீர்?” என்று அவள் கடிதம் எழுதினாள். இதற்கு அவன் “கடற்கரைக் குத்துக்கல் என்றைக்குக் கணவனை அடையும், அன்றே நானும் ஒரு மனைவியை மணப்பது உறுதி” என்று மறுமொழி எழுதியனுப்பினான். கடற்கரைக் குத்துக்கல் ஒரு பெண் பேய் வாழும் இடம். அதனருகே பல விலங்குகளின் ஒலிகள் கேட்கும்; விலங்குகள் அருகில் இருக்கமாட்டா. கில்லியட்டிடம் எல்லாருக்கும் அச்சம். ஆனால் அதே சமயம் அவன் தொட்டால், பல நோய்கள் நீங்கும் என்று அவர்கள் நம்பினர். அவன் தொட மறுத்தான். மருந்து கொடுத்தே நோய்களைக் குணப்படுத்தினான். இதனால் அவனை ஆட்கொண்ட பேய் நல்ல பேயல்ல என்று மக்கள் உணர்ந்துகொண்டனர்! அவன் குடிப்பதில்லை; புகைப்பதில்லை; புகையிலை கூடத் தொடுவதில்லை. இதுவும் சூனியத்தின் அடையாளமாகவே கொள்ளப் பட்டது, ஏனென்றால் அவன் கோயிலுக்குப் போவதில்லை! பறவைகளிடமும் விலங்குகளிடமும் அவன் மிகவும் அன்பாயிருந்தான். ஆனால் இதுவும் பேய்களின் கட்டளைப் படிதான் இருக்கவேண்டும் என்று கருதப்பட்டது. ஏனென்றால் அவன் மீன்களிடம் கருணைகாட்டுவதில்லை. மீன்பிடிப்பதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருந்தான். டெரூசெட் டெரூசெட், லெத்தியரி என்ற கப்பலோட்டியின் ஒரே வளர்ப்புப் புதல்வி. அவளுக்குத் தாயும் தந்தையும் இளமை யிலேயே இறந்து விட்டார்கள். சிற்றப்பனான லெத்தியரி அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வந்தான். லெத்தியரி பத்து வயதிலிருந்தே கப்பலில் குற்றேவற் பையன் நிலையிலிருந்து படிப்படியாக எல்லாப் பணித் தரங்களிலும் வேலை பார்த்து உயர்வடைந்து, இறுதியில் மீகாமனானவன். ஐம்பதாண்டு கடும்பணியாற்றி வெற்றி பெற்றபின், அவன் ஸெண்ட் ஸாம்ப்ஸனில் பிராவே என்ற பெயருடன் தன் இல்லத்தில் வந்து தங்கினான். கில்லியட்டின் இல்லமான பூ தேலா ரூவும் லெத்தியரியின் இல்லமான பிராவேயும் கடலில் உந்தி நிற்கும் ஒரு நிலமூக்கின் இரு கரையிலும் ஒன்றை ஒன்று அடுத்து இருந்தன. லெத்தியரி என்றும் மணம் செய்யாமலே இருந்து விட்டான். அத்துடன் அறுபது வயதில்கூட அவன் இளமையின் முறுக்கும் சுறுசுறுப்பும் கனவார்வங்களும் மாறாமலே இருந்தான். கப்பலோட்டியா யிருக்கும்போது அவன் வாழ்ந்த எளிய உழைப்பு வாழ்க்கையை அவன் விடவில்லை. ஆனால் இப்போது அவன் பேரளவு பணம் சேர்த்து வைத்திருந்ததனால், அவ் வுழைப்பை வேறு வகையில் திருப்பினான். பணத்தை முதலிட்டுக் கப்பற் கழகம் நடத்துவதில் அவன் கருத்துச் செலுத்தத் திட்ட மிட்டிருந்தான். கிலியட்டைப் போலவே லெத்தியரியும் சற்றுப் பண்படாத உள்ள முடையவன். அன்பும்தன் மறுப்பும் பண்பட்ட உள்ளங்களைவிட இருவரிடமும் மிகுதி. கெர்ஸ்னித் தீவைச் சுற்றிலும் ஸென்ட் ஸாம்ப்ஸன், ஸென்ட் பீட்டர்ஸ் போன்ற பல துறைமுகங்கள் இருந்தன. அதுபோலவே கப்பல் களுக்குக் காலனான கொடும் பாறைகளும் பல இருந்தன. நாள் தவறினாலும் வாரந்தவறாமல் அக்கடற்கரையருகே படகுகளும் கப்பல்களும், கடற்பாறைகளுக்கும் புயலுக்கும் இரையாகத் தவறுவதில்லை. இவ் அழிவுகளை யெல்லாம் கவனித்து அப்பக்கங்களில் கடலோடிகளுக்குத் தோன்றாத் துணையாக லெத்தியரி இருந்து வந்தான். அவனால் உயிர் அளிக்கப்பெற்றுக் காப்பாற்றப்பட்டவர் பலர். லெத்தியரியின் ஆதரவுபெற்ற இளைஞருள் ராந்தேன் ஒருவன். பாரிஸிலிருந்த அவன் தாயும் தந்தையும் பல தீய தொழில்களில் ஈடுபட்டு அதன் காரணமாக மீளாக் கடுஞ்சிறைப்பட்டனர். சிறுவன் ராந்தேன் பாரிஸ் தெருக்களில் அலைந்துகொண்டிருந்தான். லெத்தியரியின் கடற்பயணங் களின் போது, அவன் அச்சிறுவனைக் கண்டு இரங்கி, அவனைத் தன்னுடன் கொண்டுவந்தான். அவன் உடல் வலிமையும் அறிவுக்கூர்மையும் உடையவன். அவனிடம் லெத்தியரியின் பாசம் வளர்ந்தது. அவனை லெத்தியரி தன் கப்பற்றொழிலில் அமர்த்திப் படிப்படியாக உயர்த்திப் பங்காளி ஆக்கியிருந்தான். ராந்தேனும் நாள்தோறும் உழைத்து ஈட்டி அதில் சிறிது பணம் போட்டிருந்தான். ஆனால் திடுமென ஒருநாள் ராந்தேனைக் காணவில்லை. லெத்தியரியின் பணத்திலும் நாற்பதினாயிரம் வெள்ளி அவனுடன் மறைந்தன. லெத்தியரியின் செல்வ நிலைக்கு இது ஒரு பேரிடியாயிற்று. தளரா உள்ளமுடைய லெத்தியரி இதிலிருந்து தன் மதிப்பை மீட்கப் புதிய திட்டங்களிட்டான். அது பாய்க் கப்பல்களின் காலம். நீராவிப் படகுகள் அப்போதுதான் உலகில் தோன்றியிருந்தன. கப்பல், படகுத் தொழிலில் ஈடுபட்டவர் யாவரும் புதிய கப்பலை எதிர்த்தனர். சமயவாதிகள் தீயும் நீரும் கலந்த இந்நீராவிச் சக்தியை கடவுளுக்குப் பகைவனான பேய்மகன் ஆற்றல் என்று தூற்றினர். அதுமட்டுமன்று. அந்நாளைய அறிவியற் கழகங்கள்கூட இப்புதுமுறையைக் கண்டித்தன. கெர்ஸினியிலோ பழமையின் பிடி மக்களை இன்னும் மும்மடங்காகப் பிணித்திருந்தது. ஆயினும் லெத்தியரி துணிந்து புதிய நீராவி இயந்திரம் ஒன்று தருவித்தான். அதைச் செய்ய லெத்தியரியே திட்டம் தந்தான். ஃபிரஞ்சுப் பொறியாளன் ஒருவன் அதைச் செய்து கொடுத்தான். லெத்தியரியே நேரில் இருந்து கப்பல் கட்டினான். பழமைப் புயலையும் புதிய கடற்புயலையும் ஒருங்கே சட்டை பண்ணாது எதிர்த்து வாரந்தோறும் ஸெண்ட் ஸாம்ப்ஸனிலிருந்து ஃபிரஞ்சுக் கடற்கரையிலுள்ள ஸெண்ட் மலோத் துறைக்கு நீராவிக் கப்பல் வாணிகச் சரக்குகளும் ஆட்களும் ஏற்றிச் சென்றது. விரைவில் கப்பல் கழகம் வளர்ந்தது. எதிர்ப்புக்களும் பழைய கப்பல் தொழில்களின் எதிர்ப்பளவில் குறைந்தன. ரார்தேன் கொண்டு சென்ற பணம், புதிய முயற்சிக்கு வாங்கிய கடன் ஆகிய இரண்டுமே ஆதாயங்களால் அடைபட்டன. ஆண்டுக்கு ஆயிரம் பொன்னுக்குக் குறையாமல் லெத்தியரிக்குக் கிட்டிற்று. அவன் பெயரும் வெறும் லெத்தியரி என்ற நிலையி லிருந்து திரு.லெத்தியரி ஆக உயர்ந்தது. ‘உயர்திரு’ ஆகவும் தொடங்கியது. திருத்தகு, பெருமகனார், கோமகனார் ஆகிய படிகளும் வருங்காலத்தின் கருவில் காத்திருந்தன என்று பலர் கூறத் தொடங்கினர். புதிய கப்பலுக்கும் தன் வளர்ப்புப் புதல்விக்கும் லெத்தியரி ஒரே தெய்வ குரவரின் இரு பெயர்களை வைத்தான். டெரூசெட் என்பதன் மறுபெயரான டியூராண்டு கப்பலின் பெயராயிற்று. டெரூசெட் தனக்கு ஒரு புதல்வியானால், டியூராண்டு தனக்கு இன்னொரு புதல்வியென்று அவன் கருதினான். அவன் உயிர் கப்பல் மகவின் மீதும் பெண் மகவின் மீதும் ஒரு படியாகப் படர்ந்திருந்தது. கப்பல்மகவுக்குக் கணவனாகத் திரு. குளுபின் அமர்த்தப்பட்டான். ராந்தேன் தெறுதலைத் தனத்தை முன்கூட்டி அறிந்து அவன் எச்சரித் திருந்தான். ராந்தேனைப் போலவே அவன் உடல் வலிமையும் திறமும் உடைய கப்பலோட்டி. அத்துடன் தன் குடும்ப மதிப்பிலும் நேர்மைப் புகழிலும் அவன் ஓயாத அக்கரை செலுத்தியிருந்தான். எனவே லெத்தியரி தன் கப்பலுக்குரிய பொறுப்பை அவனிடம் விடத் தயங்கவில்லை. ஆயினும் குளுபினைவிடத் தகுதி வாய்ந்த ஒரு ஆளை அவன் தேடாமலிருக்க முடியவில்லை. குளுபின் தன் கப்பல்மகவுக்கேற்ற மருமகன், ஆனால் தன் பெண்மகவுக்கேற்ற மருமகனல்ல. இரு மகவுகளையும் ஆண்டு இயக்கவல்ல ஓர் இளைஞனை அவன் உள்ளம் நாடிற்று. லெத்தியரியின் எளிய முரட்டு வாழ்க்கைக்கோட்பாட்டிற்கு ஒரே ஒரு விலக்கு இருந்தது. பெண்கள் எப்போதும் மென்மையான, அழகிய, தூய வெண்ணிறக் கரங்கள் உடையவராயிருக்கவேண்டுமென்று அவன் கருதினான். அத்தகைய கையைத் தேடியே அவன் இளமைக்காலக் காதல்கள் கருகின. இரண்டே இரண்டு பெண்கள்தான் அவன் குறிக் கோளுக்குரிய கைகளை உடையவராயிருந்தனர். ஆனால் ஒருத்தி குணங்கெட்டவள். மற்றொருத்தி குடிகெட்டவள். இருவரையும் அவன் மறுத்து ஒதுக்கினான். காதலின் தோல்வி புதல்வி வளர்ப்பில் அவன் ஊக்கத்தைப் பெருக்கிற்னு. அவள் கையழகே அவனை அவளிடம் பாசம் கொள்ளச் செய்தது. அதை எவ்வகையிலும் பாதுகாக்க அவன் முனைந்தான். தோட்ட வேலையின் பயிற்சி தவிர, டெரூசெட்டை அவன் எதுவும் செய்ய விடுவதில்லை. கடலுடன் போராடும் விலங்காக அவன் வாழ்ந்தான். வானிற் பறக்கும் பறவையாக அவளை வளர்த்தான். வகைவகையான ஆடை அணிகள், கவலையற்ற இன்பக் கேளிக்கைகள், ஆடல் பாடல்கள் ஆகியவற்றில் குறைவற்று, டெரூசெட் மனித உருவம் படைத்த ஓர் இன்பப் பறவையாகவே வளர்ந்தாள். கடலோட்டப் பந்தயம் கில்லியட்டிடம் கெர்ஸ்னி மக்கள் கொண்ட வெறுப்பு அணிமையில் ஒரு சிறிது மாறியிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் கடலோட்டப் பந்தயத்துக்கு இவ்வாண்டு ஒரு புது முறுக்கு ஏற்பட்டது. பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு டச்சுப் பாய்க்கப்பலே பரிசாகக் குறிக்கப்பட்டிருந்தது. பந்தயத்துக்கான படகு அடித்தளமில்லாத தட்டைப் படகு. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் சென்று படகு நிறையக் கல் ஏற்றிக்கொண்டு மீளவேண்டும். குறைந்த நேரத்திற்குள் மீள்பவனே வெற்றி பெற்றவனாவான். மிகப் பலர் போகும் பயணத்திலேயே சோர்ந்துவிட்டனர். மீதிப்பேரும் திரும்பு பயணத்துக்கு உடைந்தனர். கில்லியட் இப்படகின் பண்பறிந்து பாய்களின் தொங்கல்களைத் தளர்த்தியாகப் பிடித்துக் கொண்டான். இதனால் காற்றின் அளவுக்குத் தக்கபடி பாய்கள் விரிந்து சுருங்கின. போகும் பயணமும், வரும் பயணமும் வெற்றிகரமாக முடிந்தன. திரும்பு பயணத்தில் பந்தயத்துக்குக் குறிக்கப்பட்ட கற்களைமட்டுமன்றி, அவற்றிடையே கிடந்த ஒரு சிறிய பீரங்கியையும் விழாக்காலக் கேளிக்கைப் பொருளாக அவன் கொண்டு வந்தான்! பந்தயத்தில் குறிக்கப்பட்ட பாய்க்கப்பல் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அது உறுதிவாய்ந்த பழைய கட்டுமானமுடைய கப்பல். அதை ஓட்டும் திறமுடைய பழைய கப்பலோட்டி இறந்த பின், யாரும் அதை ஓட்டவோ வாங்கவோ முன் வரவில்லை. பயன்படுத்தத்தக்கவர் விலைக்கு வாங்காதது கண்டே, அதைப் பரிசுப் பொருளாக்கிப் பயன்படுத்தக்கூடியவருக்கு அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர். எனவே இப்பரிசு, பரிசு மட்டுமல்ல; கில்லியட்டின் தனிப்பட்ட அருந்திறத்துக்கும் அது ஒரு சான்றாயிற்று. கெர்ஸ்னி மக்களில் இன்னும் ஒரு சில பேய் பக்தர் இருந்தனர். அவர்கள் இந்தத் தனித்திறத்தைக்கூட அவன் தனித்திறம் என்று ஏற்க மறுத்தனர். “படகை மனிதன் ஓட்ட வில்லை. பேய்தான் ஓட்டிற்று. படகில் ஏறுமுன் அதில் அவன் ஒரு மாத்திரைக்கோலை நட்டுவைத்திருந்தான்” என்று அவர்கள் கூறினர். மாத்திரைக்கோலை யாரும் காணவில்லை. கண்டிருக்கவும் முடியாது. ஆனால் நம்பிக்கை இதனால் மாறவில்லை. மாத்திரக்கோல் மாயமாத்திரைக் கோலாக வல்லவா இருக்கவேண்டும் என்று அவர்கள் விளக்கங்கூறினர். கனவுக் காதல் கில்லியட் செயல் வீரன்; ஆனால் வாய் பேசாதவன். அவன் உள்ளத்தின் காதலும் ஊமைக்காதலாகவே உள்ளூர முதிர்ந்து வளர்ந்தது. ஆனால் மற்றச் செயல்களை வாய் பேசாமல் நிறைவேற்றிவிடலாம். வாய் பேசாமலே கனவுலக எண்ணங்களை நனவுலகச் செயல்களாக்குபவர் உண்டு. கில்லியட் அத்தகையவன். அவன் ஒரு கனவாளன். ஆனால் காதல் கனவு நாகரிக சமூகத்தில் பேச்சு மூச்சின்றி எங்ஙனம் நனவாகும்? அவன் அடிக்கடி அவளைச் சந்திக்க விரும்பினான்- ஆனால் அவன் நாடியது, தான் அவளைக் காணவே யன்றி அவள் தன்னைக் காண்பதன்று. அவள் கால் பதிந்த இடத்தை அவன் கண்களில் ஒத்திக்கொண்டான். அவள் சென்ற திக்கை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு மிங்கும் நின்று அவள் வீட்டு வாயிலை, சாளரங்களை அவன் உற்றுக் கவனித்தான். பலமணிநேர முயற்சியின் பின் அவள் தலையணியின் தும்பு தெரிந்தால், பின்தானை அருகு தெரிந்தால், அவன் முயற்சிக்கு நிறைவு ஏற்பட்டுவிடும். மறுதடவை காண அவன் நாள் கணக்கானாலும் பொறுத்திருப்பான். ஆனால் காட்சியை அடுத்துச் சந்திப்பு, சந்திப்பை அடுத்துப் பழக்கம், பழக்கத்தையடுத்து நட்பு என்ற படிகள் அவனுக்கு எட்டாப் புதிய அனுபவங்களாயிருந்தன. அவன் வீட்டுத் தோட்டமும் அவள் வீட்டுத் தோட்டமும் அடுத்தடுத்தே இருந்தன. இடையே கொடி படர்ந்த ஒரு இரும்பு முள் வேலி தானிருந்தது. வேலியின் இப்புறமிருந்த குத்துக்கல்லில் அவன் சென்று கல்லுடன் கல்லாய்க் காத்திருப்பான். மாலையில் அவள் உலவும்போது அவள் ஆடையின் சலசலப்பு அவன் உள்ளத்துக்குத் துடிப்பூட்டும். நிலவில் அவள் நிழலுருக்கண்டு அவன் மெய் மறந்திருப்பான். அவள் அடிக்கடி ஸ்காட்லந்து இசைக்கருவி யொன்றைக் கைக் கொண்டு, ‘என்னினிய டண்டி’ என்ற பாடலைப் பாடுவாள். அவனும் அதை ஆர்வத்துடன் கேட்டுப் பாடப் பழகினான். சில சமயம் அவனும் அதே பாட்டைப் பாடுவது அவள் காதில் விழும். தன் குறும்புச் செயலை அவன் தவறாகக் கருதினான் என்று சில சமயம் அவளுக்குக் கோபம் வரும்; சில சமயம் பழைய குறும்புணர்ச்சி அவனைக் கண்காணாமலே நையாண்டி செய்யத் தூண்டும். உண்மையில் அவள் உடல் வளர்ச்சியடைந்த அளவு அவள் உள்ளம் வளர்ச்சியடையவில்லை. காதலின் இடத்தில் இன்னும் சிறுமியின் குறும்புதான் நிரம்பியிருந்தது. ‘என்னினிய டண்டி’யின் இசை சிலசமயம் லெத்தியரியின் காதிலும் படும். முதலில் அவன் அதனை இயல்பாக யாரோ பாடுவது என்று நினைத்திருந்தான். ஆனால் பல இடத்திலும் பல திசையிலுமிருந்து ஒரே குரலில் பாட்டு ஒலிப்பது கேட்டதும், அவன் அதைப் புரிந்து கொண்டான். ‘காதல் என்பது மறைந்து விளையாடும் விளையாட்டன்று; நேராகப் பெண்களிடம் சென்று காதலிப்பது நல்ல இளைஞர்களுக்கு அழகுமல்ல’ என்ற கோட்பாடுடையவன் லெத்தியரி. ஆகவே கில்லியட் காதலிப் பதானால், தன்னிடமே ‘நேரில் வருவதற்கென்ன? இப்படி பாடுவதால் என்ன பயன்?’ என்று அவன் முணுமுணுத்துக் கொண்டான். நேரில் வந்திருந்தாலும் உண்மையில் பயன் இருந்திருக்க முடியாது. மறைவாகச் செயலாற்றினாலும் எந்தப் பயனும் ஏற்பட்டிருக்கமுடியாது. ஏனென்றால் டெரூசெட் உண்மையில் எந்த இளைஞனுடனும் தன்வாழ்வை இணைத்துவிட எண்ணவில்லை. அவள் வாழ்க்கையைப் பொழுது போக்குப் போன்ற சிறுவர் விளையாட்டாக மட்டும் எண்ணினாள். ஆகவே தன்னை நாடிவந்தவர்கள் எல்லாரையும் அவள் குறும்பு செய்து நையாண்டி பண்ணினாள். லெத்தியரியும் எவரிடமும் பாசம்கொள்ளவில்லை. உண்மையில் அவன் விரும்பிய மருமகன் இலக்கணத்தை மகளும் அறிய வில்லை; எவரும் அறியவில்லை. அம்மருமகன் நன்றாக உழைத்துப் பொருள் திரட்டவேண்டும். அவள் வேலை செய்யாதபடி பார்த்து எல்லா வேலையையும் அவனே செய்யவேண்டும். அவளைத் தான் பார்ப்பது போலப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வளவும் போதாது. அவன் அவளுக்குக் கண வனாய், அவள் உடன் பிறந்தாளான டியூராண்டுக்கும் ஒரு திறமை வாய்ந்த மீகாமனாய் இருக்கவேண்டும்! அவள் கணவனாயிருக்கப் போதிய இளமையும், டியூராண்டின் மீகாமனாயிருக்கப் போதிய பயிற்சித்திறமும் அவனிடம் இருக்க வேண்டும். இந்த இலக்கணத்தை நினைத்துப் பார்த்தால் எந்த இளைஞனையும் அவன் டெரூசெட்டிடம் அணுக விடவில்லை என்பதில் நாம் வியப்படைவதற்கில்லை. வந்த ஒரு இளைஞனைக்கூட அவர் மறுத்துவிட்டார்! ஆனால் அதேசமயம் காதலே இல்லாத கில்லியட்டின் உள்ளத்தில் டெரூசெட் காதலை எழுப்பினாள். திருமணத்தை நினையாத அவன் நெஞ்சத்தில் அவள் திருமண எண்ணத்தைத் தூண்டினாள். கில்லியட்டினிடம் அவள் தாய் இறக்கும்போது கொடுத்த ஒரு இரும்புப் பெட்டி இருந்தது. அதில் ஓர் இளம் பெண்ணுக்கு வேண்டிய ஆடை அணிமணிகள் யாவும் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றின்மீது ஒரு அட்டைத் துண்டில் “உன் மனைவிக்கு, நீ திருமணம் செய்துகொள்ளும்போது!” என்று அன்னை தன் கைப்பட எழுதியிருந்தாள்! கில்லியட் இப்போது அதை அடிக்கடி எடுத்துத் திறந்துப் பார்ப்பான். அவ் ஆடை அணிமணிகளை அவன் தன் மனக்கண்முன் டெரூசெட்டுக்கு அணிவித்து அழகு பார்ப்பான்! காதலின் ஆற்றல் பெரிது. படையின் ஆற்றல், நகர் காவல் படையின் ஆற்றல், வேவுப்படையின் ஆற்றல் ஆகிய எதுவும் அதற்கு ஈடல்ல. கில்லியட் அவ்வாற்றலால் டெரூசெட் என்ன நேரம் என்ன செய்வாள், என்ன நேரம் என்ன உடை உடுத்திருப்பாள் என்பதை அறிந்தான். அவள் விருப்பு வெறுப்புகள் யாவும் அவன் கற்றுணர்ந்தான். அவன் விரும்பிய மலர்கள், அவள் விரும்பிய காய்கறி கிழங்குகள் அவன் தோட்டத்தில் பயிராயின. யாரிடமிருந்து வந்தனவென்று தெரியாமலே டூஸ் கிரேஸ் என்ற பிராவேயின் பணிப் பெண்டிர் மூலம் அவை பக்தனிட மிருந்து தெய்வத்திடம் சென்று சேர்ந்தன. “உறங்கினவன் விழிப்பதில்லை” ஸென்ட் ஸாம்ப்ஸனில் சமய ஊர்வட்டத் தலைவராயிருந்த தூய திரு. ஜாக்கெமின் ஹொட் வின்செஸ்டர் மாவட்ட முதல்வரின் துணைவராக உயர்வு பெற்றிருந்தார். அவரிடத்தில் புதிய ஊர்வட்டத் தலைவராக திரு. எபினிஸர் காட்ரே என்ற ஓர் இளைஞன் வரவிருந்தான். லென்ட் பீட்டர்ஸ் துறைமுகத்தில் சென்று மக்கள் அவனை வரவேற்கக் காத்திருந்தனர். ஆனால் அன்று கடலில் புயலும் பனியும் அடித்துக்கொண்டிருந்தன. இங்கிலாந்திலிருந்து புதிய தலைவரை இட்டுவரவிருந்த காஷ்மீர் என்ற கப்பல் வர நேரமாயிற்று. வழியில் புயலால் அழிந்து அமிழ்ந்த மற்றொரு கப்பலின் ஆட்களை மீட்பதில் ‘காஷ்மீர்’ ஈடுபட்டிருந்ததனால், வருகை தாமதப்பட்டது. புதிய தலைவர் வந்து பதவி ஏற்ற சில நாட்களுக்குள் ஒருநாள் கில்லியட் கடற்கரையில் உலாவிக்கொண்டிருந்தான். ஸென்ட் சாம்ப்ஸன் துறைமுகத்தை அடுத்துத் தீவின் ஒரு நில மூக்கின் நுனியில் காண்டாமிருகத்தின் கொம்பு போல ஒரு பாறை இருந்தது. வேலி இறக்கத்தின்போது அது கரையுடன் சேர்ந்தும், வேலி ஏற்றத்தின்போது கரையிலிருந்து பிரிந்து கடலுக்குள் பாதிக்குமேல் அமிழ்ந்தும் இருந்தது. செங்குத்தாகப் பல ஆள் உயரம் உயர்ந்திருந்தது அப்பாறையின் நடுப்பகுதி ஒரு சாய்வு நாற்காலிபோல அலைகளால் செப்பம் செய்யப்பட்டிருந்தது. அதைக் கண்ட எவரும் அதிலிருந்து கடற் காட்சிகளைக் காண விரும்பாதிருக்க முடியாது. அந்த அவாவை இன்னும் தூண்டும் முறையில் அந்நாற்காலியைச் சென்றெட்டுவதற்கென்றே படியமைக்கப் பட்டதைப் போல் பாறையில் பல படிகள் அமைந்திருந்தன. மனிதர் கலையுடன் போட்டியிடும் இயற்கைக் கலைப்படைப்பாக அது தோற்றமளித்தது. ஆனால் வஞ்சகமிக்க எந்த மனிதரும் திட்டமிடாத வஞ்சகத் திட்டமும் அதில் அமைந்திருந்தது. எவரும் அதில் ஏறி உட்கார்ந்ததும், அலைதவழ்ந்து வரும் தென்றல் அவர்கள்மீது விசிறும் சங்கு சோழிகள் நீரில் சுழன்று அவர்களுக்கு இசைபாடும். நீர்த்திவலைகளை அவர்கள் மீது தூவிக் கடல் அவர்கள் உடலில் மாறி மாறி வெதுவெதுப்பும் குளிர்ச்சியும் ஊட்டும. கடலின் தொலைக்காட்சிகள், வான விளிம்பில் மறையும் கப்பல்களின் பாய்கள், அவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். இந்த இன்பங்களிடையே அவர்கள் மெய்ம் மறந்திருப்பர், அல்லது தூங்குபவர். ஆனால் அவர்களே அறியாமல் அலைகள் படிப்படியாய் எழுந்து வரும். காலடியில் நீர் வந்தபின்கூட அதில் இருப்பவர் நிலைமையை உணரமாட்டார். அவர் உணர்ந்தாலும் அப்போது பயன் எதுவுமில்லை. முன்னுள்ள படிகளில் இறங்கிச் செல்லமுடியாது அவை கடலில் மூழ்கி விடும். அதைத் தவிர வேறு இறங்கும் வழியோ அடையும் வழியோ கிடையாது. நாற்காலி ஒரு நாற்காலி அல்ல. ஒரு மாயச்சிறை என்பது அப்போது தான் இருப்பவர்களுக்குத் தெரியும். முதுகுக்குச் சாய்வாயமைந்து பின்புறப் பாறையோ இருபது முப்பது அடிஉயரமுள்ளது. அது செங்குத்தாகவும் வழவழப்பாகவும் இருந்ததால் அலைக்குத் தப்பி அதில் ஏறுவதோ தொற்றிக் கொண்டு சிறிது மிதப்பதோ கூட முடியாது. நாற்காலியில் அகப்பட்டவர் அலைக்கு இரையாவது தவிர வேறுவழியிராது. அவர் கூக்குரலிட்டால் கூட, அவர் தவிர வேறு யாருக்கும் அது கேளாது. அப்பாறையைச் சுற்றிக் கடல் அவ்வளவு இரைச்சலிடும். யாரும் அவரைக் கண்டு காப்பாற்ற வரவும் முடியாது. மக்கள் கண்களிலிருந்து அப்பாறை கரையில் மற்றொரு பாறையால் மறைக்கப்பட்டிருந்தது. மேலும் எளிதில் எவரும் படகில் அந்தப் பக்கம் வரமுடியாதபடி பாறையைச் சுற்றி அலைகளின் குமுறலும் வெள்ளத்தின் சுழற்சியும் மிகுதியாயிருக்கும். அப்பாறையின் பெயர் ‘கில்டால்மா’ என்பது. பண்டைக் காலத்திய மொழிகளில் அதன் பொருள் “உறங்குபவன் மீண்டும் விழிக்கமாட்டான்” என்பது. கில்லியட் கடற்கரையில் உலவும்போது அவன் கடல் ஏறிவருவதைக் கவனித்தான். சற்றுமுன் யாரோ புதிய ஆள் கில்டால்மரை நோக்கிச் செல்வதை அவன் பார்த்திருந்தான். ஆள் திரும்பி வந்ததா அல்லவா என்பதை அவன் கவனிக்கவில்லை. ஆனால் போய்ப் பார்க்கவும் நேரம் தவறி விட்டது. கடல் பாறையைச் சூழ்ந்து கொண்டது. கில்லியட் உடனே சென்று தன் படகைக் கொண்டுவந்தான். கடலடித் தடத்தின் மேடுபள்ளங் களை வளைவு நெளிவுகள் எல்லாவற்றையும் இளமை முதல் அறிந்தவன் அவன். ஆகவே அவன் திறம்படப் படகைக் கில்டால்மருக்கு முன்புறமாகச் செலுத்தினான். இன்னும் நாற்காலியில் அமர்ந்த ஆள் அசையவில்லை. தனக்கு நேர்ந்த இடரை அவன் உணர்ந்ததாகவும் காணவில்லை. உண்மையில் அவன் கண்களை மூடிக்கொண்டேதான் இருந்தான். “யாரையா அது; சாகத் துணிந்த பேர்வழி?” என்று கேட்டான் கில்லியட். கண்கள் திறந்தன. ‘என்ன செய்தி?’ என்றான் அவன். “உன்னைச் சுற்றிப் பார், என்ன செய்தி என்று!” புதிய ஆள் பார்வை கடலில் விழுந்ததோ அவன் உடல் நடுங்கிற்று. “ஐயோ, தெரியாமல் சிக்கிவிட்டேனே” என்றான். தண்ணீர் இதற்குள் படிகள் அனைத்தும் கடந்து விட்டன. இருப்பவன் காலை மேலே தூக்கிக்கொண்டான். இருக்கை வரையும் தண்ணீர் ஏறிவிட்டது. கில்லியட் படகைப் பாறைக்கு நேர் கீழே கொண்டு சென்றான். ஒரு காலைப் படகில் ஊன்றி, பாறைமீது படகு மோதாமல் ஒரு கையையும், அதைக் கொண்டு ஒரு காலையும் பிடித்துக் கொண்டான். பின் பாறைமீது இருப்பவனை நோக்கி “அஞ்சவேண்டாம். என் படகில் குதித்து விடுங்கள்” என்றான். பிழைப்போம் என்ற நம்பிக்கையில்லாமலே அவன் கைகால்களை நீட்டினான். ஆனால் ஒரு கால் கில்லியட்டின் பிடிக்கு அகப்பட்டது. கில்லியட் அவனைப் படகிற்குள் பிடித்திழுத்து அமர்த்திக்கொண்டு கரை சோர்ந்தான். அந்த ஆள் வேறுயாருமல்ல. புதிதாக வந்த ஊர்த்தலைவர் காட்ரே தான். அச்சந் தெளியந் தொடங்குமுன்பே அவன் ஓடினான். சிறிது தொலை சென்றபின் அறிவு சற்றுத் தெளிந்து ஏதோ நினைத்துக்கொண்டு அவன் மீண்டும் கில்லியட்டிடம் வந்தான். முகம் நன்றி கூற விரும்பிற்று. ஆனால் நாக்குக் குழறிற்று. சட்டைப் பையில் கையிட்டு அவன் ஒரு புத்தகத்தை எடுத்து கில்லியட்டிடம் அளித்தாள். அது ஒரு விவிலியநூல். அவன்தான் புதிய தலைவன் என்பதை கில்லியட் இப்போது உணர்ந்தான். குருட்டு நம்பிக்கையும் குருட்டு யோகமும் ராந்தேன் காணாமற்போய்ப் பத்து ஆண்டுகள் ஆய்விட்டன. பேய்க்கப்பல் என்று பழிக்கப்பட்ட டியூராண்டு, ஸென்ட் ஸாம்ப்ஸனின் வாழ்விலும் கடற்கால் தீவுகளின் வாழ்விலும் நன்றாகப் பழகி ஒரு நிலையான இடம்பெற்று விட்டது. லெத்தியரி இப்போது ஸென்ட் ஸாம்ப்ஸன் மக்களின் முழு ஆர்வத்துக்கும் உரியவனாய்விட்டான். ஏனென்றால் ஃபிரான்சு நாட்டுக்கும் கெர்ஸ்னிக்குமிடையேயுள்ள வாணிகம், போக்குவரத்து முழுவதும் இப்போது ஸென்ட் ஸாம்ப்ஸன் மூலமே நடக்கத் தொடங்கிற்று. ஸென்ட் பீட்டர்ஸ் அத்தீவின் தலைநகரமாயிருந்தும் அதன் மதிப்புக் குறையத் தொடங்கிற்று. இதை உணர்ந்த ஸென்ட் பீட்டர்ஸ் நகரத்தார் லெத்தியரியின் நீராவிக் கப்பலைத் தம் துறைக்கு மாற்றவேண்டுமென்று அவனிடம் வேண்டினர். அதற்காக அவன் அவாவைத் தூண்டவும் முனைந்தனர். ஆனால் லெத்தியரின் தன் தாயக ஊர்ப்பற்றில் உறுதியாக நின்றுவிட்டான். ஸென்ட் ஸாம்ப்ஸன் மக்களிடையே இது அவன் மதிப்பை மிகவும் உயர்த்திற்று. அவன் அவர்களின் முடிசூடா மன்னன் ஆனான். தொழில் துறையில் தோல்வியுற்றவர்கள் வெளிப்படையாக லெத்தியரியைப் பாராட்டினாலும், உள்ளூர அவன் கப்பலுக்கு ஏதேனும் கெடுதல் வருவது உறுதி என்று நம்பிக் காத்திருந்தனர். சமயவாதிகளும் இவ்வெண்ணத்துக்கு மறைமுக உதவியா யிருந்தனர். ஏனெனில் லெத்தியரியின் சமயத்துறை பற்றிய கட்டற்ற பேச்சு அவர்களுக்கு பிடிக்கவில்லை. லெத்தியரி சமயத் துறையினர் என்றால் வெறுப்பவன். இது துறவுக் கோலமுடைய கத்தோலிக்க குருமார் கடந்து மற்ற இல்லறக் குருமாரிடமும் பரவியிருந்தது. நம்பிக்கையும் மதிப்புமற்ற அவன் அவர்கள் குற்றங் குறைகளை எளிதில் கவனிக்கவும் சுட்டிக் காட்டவும் முடிந்தது. இது அவர்களுக்குச் சினமூட்டியது. ‘பூசனை செய்யும் குருமா ரெல்லாரும் பண்பில் பூனையைப் போன்றவர்கள்’ என்று வால்டேர் கூறுகிறார். லெத்தியரி இதை வாசித்த போது, ‘அப்படியானால் அப்பூனைகளை வெறுக்கும் நாயின் பண்பு என்னிடம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றான். குருமார் பொதுவாக அவன் புது நீராவி கப்பலை எதிர்த்தார்கள். இது அவன் வெறுப்பை இன்னும் மிகுதி ஆக்கிற்று. ஊர்வட்டத் தலைவன் விவிலிய நூலுக்கு விளக்க உரை பகரும்போது நரகத்தின் கோர தண்டனைகளை விரித்துரைத்துக் கொண்டிருந்தான். கேட்பவர்கள் உள்ளத்தில் இவற்றின் படிப்பினைகளை உறுதிப்படுத்த அவன் “கடவுளின் முழு நிறைவல்லமையை இவை காட்ட வில்லையா?” என்று கேட்டான். லெத்தியரி ஒரு மூலையிலிருந்து “கடவுள் கருணையுடையவர் என்றல்லவா நான் நினைத்தேன்” என்றான். டியூராண்டின் வெற்றிகூட இந்நிலையில் கப்பல் தொழிலில் நீராவிக் கப்பலின் வெற்றியாக மாறவில்லை. பாய்க்கப்பல் கழகங்களுக்குச் செல்வர் முதலிடந்தர இன்னும் தயங்காது முன்வந்தனர். நீராவிக் கப்பலென்றால் இன்னும் தயங்கவே செய்தனர். ஒரு செல்வர் “நீராவிக் கப்பலா? அதில் ஒருநாள், இரண்டுநாள் பயணம் செல்வதற்குக் கேடில்லை. என்றேனும் ஒருநாள்தானே சாக வேண்டிவரும். ஆனால் முதலிடுவதானால், புகையிலும் கரியிலும் யார் முதலிடுவார்கள்” என்றார். லெத்தியரியின் வெற்றி நீராவியின் வெற்றி என்று எவரும் கொள்ளவில்லை. அவர் திறமையின் வெற்றி என்றும் எவரும் கருதவில்லை. அது அவருக்கு ஒரு நல்ல காலம்; அது அவர் குருட்டுயோகம் என்றுதான் பலரும் எண்ணினர். குருட்டுயோகம் என்று பிறர் நினைப்பதற்கேற்ப, ஒரு குருட்டு இடையூறு அதன்மீது தன் அம்பை எய்தது. குளூபினின் மறை திட்டங்கள் செவ்வாய்க்கிழமைதோறும் டியூராண்டுடன் குளூபின் கெர்ஸ்னியி லிருந்து புறப்பட்டு மாலையில் ஸென்ட் மலோ போய்ச் சேர்வான். சரக்கிறக்கவும் ஏற்றவும் அங்கே இரண்டுநாள் தங்கிவிட்டு வெள்ளிக்கிழமை புறப்பட்டு மீண்டும் கெர்ஸ்னி வருவான். டியூராண்டின் தலைமை அலுவலகம் ஸென்ட் ஸாம்ப்ஸனின் லெத்தியரியின் வீட்டில் அவன் அறையாகவே இருந்தது. ஃவிரஞ்சுப் பக்கத்து அலுவலகம் ஸென்ட் மலோவிலுள்ள ஜீன் ஆபெர்ஜ் என்ற அருந்தகத்திலமைந்திருந்தது. குளூபின் ஸென்ட் மலோவில் தங்கும் பொழுதைப் பெரும்பாலும் இங்கேயே கழித்தான். இரு நாடுகளின் சுங்கச் சாவடிக்காரரும் கரையோரக் கப்பலோட்டிகளும் வந்து கலக்கும் இடம் இதுவே. ஃவிப்ரவரி மாதத் தொடக்கத்தில் குளூபின் ஸென்ட்மலோ சென்றிருந்தபோது, அருந்தகத்தில் எத்திறத்தவர்களிடையேயும் ஒரே பேச்சுத்தான் ஊடாடிற்று. மூன்று பாய்களையுடைய கப்பலான தமோலி பாஸில் மீகாமன் ஜூலாசிலி நாட்டிலிருநது வரவிருக்கும் செய்தியே அது. பத்து நாட்களுக்குள் அவன் திரும்பவும் தென் அமெரிக்காவிலுள்ள அந்நாட்டிற்குப் போவான் என்றும் தெரிந்தது. அடுத்த தடவை குளூபின் ஸென்ட் மலோ வந்தபோது கப்பலி லிருந்து இறங்குமுன்பாக கடல் தொலைநோக்கி மூலம் கரையைக் கவனித்தான். தொலையில் மீகாமன் ஜூலாவுடன் யாரோ ஒருவர் பேசியது தெரிந்தது. பேசியவர் கள்ள வாணிகத்துறை சார்ந்தவர் என்பது குறாபினுக்குத் தெரியும். அவன் எப்போதும் தன் நேர்மையுடைமையைப் பகட்டாகக் காட்டி வந்ததால், எத்தகையவருடனும் அச்சமின்றிப் பழக முடிந்தது. பிறர் எவரும் கவனிக்காமலே அவன் தன் திட்டங்களைத் தன் மனம்போல இடைஞ்சலின்றி நடத்தவும் முடிந்தது. ஜூலாவைக் கண்டது முதல் அவன் முகம் வெளிப்படையாக எப்போதும் போலவே இருந்தாலும், அது ஒரு செயலற்ற திரைபோல், அதன் பின்னுள்ள சுறுசுறுப்பான திட்டங்களை மறைக்க மட்டுமே உதவிற்று. அவன் துப்பாக்கி செய்யும் கருமானிடம் சென்று “உன்னிடம் சுழல் துப்பாக்கி இருக்கிறதா?” என்று கேட்டான். கருமான் வாளா இருந்தான். “சுழல் துப்பாக்கி என்றால் என்ன என்று தெரியுமா?” “தெரியும். அது ஒரு அமெரிக்க ஆயுதம்.” “அது கிடைக்குமா?” “கைத்துப்பாக்கி கிடைக்கும். அது கிடையாது. அது இன்னும் வாணிகச் சரக்காகவும் வரவில்லை. ஃவிரஞ்சுக்காரர் அதை இன்னும் செய்வதில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் தருவித்துத் தரமுடியும்.” “அது ஆறு முறைகள் சுடுவதாயிருக்கவேண்டும்.” “சரி” “மிக நல்ல தரமாயிருக்கவேண்டும்” “கொடுக்கிற பணம் எவ்வளவு நல்லதோ அந்த அளவு சரக்கின் உறுதிக்கும் நாங்கள் உத்திரவாதிகள். “எப்போது வர? எப்போது தருவீர்கள்?” “அடுத்த தடவை வரும்போது?” “ஓஹோ, என்னைத் தெரியும்போலிருக்கிறது, உங்களுக்கு. சரி வாங்கியது நான் என்று யாருக்கும் தெரியவேண்டாம்.” குளூபினின் அடுத்த தனிப்பட்ட செயல் கப்பல் நடுக்கடல் சென்ற பின் தொடங்கிற்று. அப்போது அவனுக்கு ஓய்வு கிட்டிற்று. அவன் தன் கப்பல் உள்ளறைக்குச் சென்று வழிப் போக்கர் பை ஒன்றை எடுத்து அதில் நீண்ட பயணத்துக்குரிய உணவுப் பண்டங்கள், கப்பல் நாழிகை வட்டில், கப்பலோட்டி களின் முடிச்சுகளிட்ட ஏறுவடம் ஆகியவற்றை அதில் வைத்துக் கட்டினான். பின் பையைக் கவண்கட்டி எறிவதுபோல எறியத்தக்க ஒரு கயிற்றில் கட்டினான். கெர்ஸ்னி சென்றபின் அவன் துறைமுகத்திலிருந்து கையில் பையுடன் எங்கோ கிளம்பினான். நெடுநேரம் சென்று அவன் திரும்பி வந்தான். ஆனால் அப்போது அவன் கையில் பை இல்லை. மறுதடவை ஸென்ட் மலோ வந்தபோதும் குளூபின் மீண்டும் துப்பாக்கி செய்யும் கருமானை அடுத்தான். அவள் குளூபினை நகரின் மிகப் பாழடைந்த பகுதியிலுள்ள ஒரு அரும்பொருள் விலையகத்துக்கு இட்டுச்சென்றான். அதன் பெயர் ஜாக்ரிஸேட் என்பது. ஜாக்ரிஸேட் வெளிப்படையாகப் பழம்பொருள் வாணிகக் களமாகக் காட்சியளித்தது. ஆனால் விலாசமுடைய உலகத்துக்கும் விலாசமற்ற உலகத்துக்கும் ஒரு பாலமாக அது விளங்கிற்று. தங்க இடமற்ற ஏழைகள், விடுதலைபெற்ற குற்றவாளிகள், சிறுதிருட்டு, வழிப்பறி செய்பவர், மோசடிக்காரர் ஆகியவர் ஒதுங்கி, குடிவரி கொடுத்தோ, கொடுக்காமலோ, வறுமையை மறைக்கு மிடமாகவும் அது இருந்தது. அவ்விடுதியில் பொன் வெள்ளி மாற்றுச் சித்து வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவன் இருந்தான். சித்து வெற்றிபெறும் என்ற நம்பிக்கையால் ஏழையர்களிடமிருந்து பிழிந்த பணத்திலிருந்து விடுதித் தலைவி அவன் தொழிலுக்கு இடமும் உதவியும் கொடுத்தாள். வீட்டின் எரிக்கத்தக்க பொருள் எதையும்- நாற்காலிகள், பெட்டிகள், ஏணிகள், விட்டம், வரிச் சுல்கள் யாவும்- அவனால் உலோகப் புடங்களுக்காக எரிக்கப்பட்டு வந்தன. கருமான் வந்த செய்தி கூறவே, சித்தன் சுழல் துப்பாக்கி ஒன்றை எடுத்துவந்தான். அவன் அதற்கு ஆறு ஆங்கிலப் பொன்விலை கூறினான். கருமான் குறைத்துக் கேட்டும் அவன் இணங்கவில்லை. ஆனால் குளூபின் பேசாது அவனிடம் அவன் கேட்ட ஆறு பொன் கொடுத்துவிட்டு மீண்டாள். பேயடைந்த மாடம் பிளீன்மாண்ட் கெர்ஸ்னி ஒரு முக்கோண வடிவுள்ள தீவு. மூன்று மூலைகளிலும் நிலமுனை ஒவ்வொரு நில மூக்காக நீண்டிருந்தது. டார்டிவல் இம் மூலைகளில் ஒன்று. குளூபின், பிறந்து வாழ்ந்த இடம் இதுவே. இந்த இடம் கள்ள வாணிகக்காரருக்கு ஒரு சந்திப்பாகவும் அமைந்தது. அதற்கு வேண்டிய பல வசதிகளும் அங்கே இருந்தன. நிலமூக்கின் கோடியில் ஒரு அழகிய மாடம் இருந்தது. அது ஒரு சிறுகுடும்பம் வாழத்தக்கதாய் அந்தசந்தாயிருந்தது. அதன் மூன்றுபுறம் கடல். மறுபுறம் ஒரு தோட்டப்பகுதி. தோட்டப் பகுதி பாழாய்க் கிடந்தது. மாடமும் பாழாகவே கிடந்தது. கடற்புரத்திலுள்ள மூன்று மதில்களில் ஒரு மதிலில் கதவோ சாளரமோ எதுவும் இல்லை. முன்னாலுள்ள கதவும் சாளரங்களும் செங்கலால் அடைபட்டிருந்தன. மற்ற ஒரு பக்கத்தில் இரண்டு சாளரங்கள் இதுபோலவே செங்கலால் அடைபட்டிருந்தன. ஒரே ஒரு பக்கம், தென்புறம் மட்டும் பலகணிகளில் கதவுகள் அகற்றப்பட்டுத திறந்தமேனியாய் இருந்தன. கிட்டத்தட்ட மாடத்தின் நாற்புறமும் கடல் இருந்தது. வேலி இறக்கத்தின்போது மட்டுந்தான் ஒரு சிறு இடைவழி இடுக்கு அதை நிலத்துடன் இணைத்தது. இம்மாடத்தின் பெயர் பிளீன்மாண்ட். யாரும் அதன் பக்கம் நாடு வதில்லை- அதன் பெயர்கூடக் கூறுவதில்லை. ஏனென்றால் அதில் பட்டப் பகலில்கூடப் பேய்கள் நடமாடிய தென்று மக்கள் நம்பினர். இடமும் சூழலும் இந்நம்பிக்கையும் சேர்ந்து கள்ள வாணிகக் காரருக்கு அதை ஒரு முதல்தர மூலதளமாக்கிற்று. எப்போதாவது யாராவது உள்ளே நுழைவதை மக்கள் கண்டாலும் கூட, அவர்கள் அதை எவரிடமும் கூற மாட்டார்கள். கூறினாலும் எவரும் அதைப் புலம் விசாரிக்கத் துணியமாட்டார்கள். உண்மையில் புலிக்கும் சிங்கத்துக்கும் அஞ்சாத ஊர்காவலர்களும் படைவீரர்களும் கூடப் பேய் என்றால் எட்டிப்பார்க்க மாட்டார்கள். திருடர், கள்ளக் காதலர், கள்ள வாணிகக்காரர் ஆகியவர்களின் செல்வாக்கினாலேயே உலகில் பேய்பற்றிய நம்பிக்கை நீர்வார்த்து அழியாமல் பேணப்படுகிறது எனலாம். ஆனால் அச்சமும் சில தரத்தவருக்கு ஒரு ஆர்வத்தை ஊட்டுவதுண்டு. பண்டைக்கால மனிதன் அச்சத்திடையே அன்பு செலுத்தினான். அச்சத்திடையேதான் அவன் இன்பமடைந்தான். ஆகவே அஞ்சிய பொருளையெல்லாம் அவன் கடவுளாகக் கண்டு வணங்கினான். இன்னும் அதனாலேயே பக்தியை நாம் பயபக்தி என்கிறோம். அச்சத்தைப் போலவே துன்பமும் பலரால் விரும்பப்பட்டு இன்பமூட்டுவதுண்டு. சாவுக் காட்சி கொலைக் காட்சிகளையும் துயரக் கதைகளையும் நாடகங்களையும் நாம் காணவிரும்புவது இதனாலேயே. இதே வகையான ஆர்வங்கலந்த அச்சம், அச்சங்கலந்த ஆர்வம் டார்டிவலிலுள்ள மூன்று சிறுவர்களை ஒருநாள் இயக்கிற்று. அவர்கள் தொலைவிலிருந்தே அஞ்சி அஞ்சி, பதுங்கிப் பதுங்கி, பிளீன்மாண்ட் பக்கமாக வந்தார்கள். அச்சம் கால்களைப் பின்னிழுத்தன. ஆர்வம் தலையை முன்தள்ளின. சிறுவரில் இருவர் கெர்ஸ்னிக்காரர். அவர்கள் திண்ணிய உடலுடையவர்கள். ஆனால் அச்சம் அவர்களைக் கோழைகளாக்கிற்று. மூன்றாவது சிறுவன் ஃவிரஞ்சுக்காரன், ‘நோஞ்ச’லான உடலுடையவன்; ஆனால் அச்சம் அவன் ஆர்வத்தைத் தூண்டி அவனை வீரனாக்கியிருந்தது. அவர்கள் இரவெல்லாம் பதுங்கிப் பதுங்கி மாடத்தைச் சுற்றிவந்தனர். திரும்பச் செல்லும் பாதையைக் கடல் அடைத்தது. அவர்கள் முதலில் உள்ளே ஒரு பேயைக் கண்டார்கள். எப்படியோ மற்றொரு பேயும் உள்ளே வந்தது. பேய்கள் பேசின. பேய்கள் பேச்சுச் சிறுவர்களுக்கு எப்படி புரியும்! ஆயினும் ஒருவன் வெளிநாட்டுக்குப் போக விரும்பினான். அடுத்தவன் அவனை இவ்விடத்திலேயே காத்திருக்கும்படி கூறினான். முதல்வன் கையில் கொண்டுவந்த பயணப்பையை அங்கே விட்டு விட்டுச் சென்றான். பேய்களும் மனிதர்களைப் போலவே நடந்துகொண்டன. சிறுவர்கள் இவ்வளவு செய்தியும் கேட்டார்கள். ஆயினும் அவர்கள் தாம் கண்டது பேய்களே என்று கருதிச் சென்றனர். கரை காவலன் எண்- 618 ஸென்ட் மலோவையடுத்த கடற்கரையெங்கும் கள்ள வாணிகக் காரரும் சமயச் சட்டங்கள், அரசியற் சட்டங்கள் ஆகியவற்றுக்குத் தப்பியவரும் ஓடிவிடாமற் காக்கக் கடற்காவற்காரர் அமர்த்தப்பட்டிருந்தனர். பொதுவாக அக்காலத்தில் எங்கும் இந்நிலைமை இருந்தது. சிறப்பாக ஃவிரான்சில் அரசியலும் சமயமும் மக்கள் வாழ்வின்மீது இன்ன சமயம் என்றிராது விழும் இடி மின்னல்களாகவே இருந்தன. கத்தோலிக் கராயிருந்தால் ஒரு அரசாங்கத்துக்கு அஞ்ச வேண்டும். புரோட்டஸ்டாண்டாயிருந்தால் மற்றொரு அரசாங்கத்துக்கு அஞ்சவேண்டும். பலர் இரண்டுக்கும் தப்பிப் பிழைக்கவேண்டும். ஃவிரஞ்சுப் புரட்சிக்கால முதல் அரசியல் கட்சிகளும் கொள்கைகளும் சமயத்தைப்போல் மக்களைப் பிரிவினைசெய்து அலைக்கழித்தன. இத்தகைய வாழ்விலிருந்து தப்பியோடியவர்கள் பலர். தப்பியோடிய வர்கள் அமைத்த நாகரிகங்கள்தான் புதிய அமெரிக்காவை வளர்த்தது. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமய அகதிகள், அரசியல் அகதிகள், கள்ள வாணிக அகதிகள் ஆகியவர்கள் தப்பிப் பிழைத்தோடாமல் காக்கவே கடல் காவலர் அமர்த்தப்பட்டிருந்தனர். தப்பியோடுபவர்கள் நேரே கப்பலில் ஏறாமல், கடற்கரை யிலுள்ள பாறைகளிலிருந்து படகில் சென்று கப்பலேறுவர். இதைத் தடுக்கும் எண்ணத்துடன் ஸென்ட்மலோவை அடுத்த பாறையொன்றின்மீது கரை காவலன்- 618 நின்றிருந்தான். அவன் தொலை நோக்கி வழியாக வெளிநாடு புறப்பட்ட தமோலிப்பாஸை நாடிப் பார்வையைச் செலுத்தியிருந்தான். கப்பலிலிருந்து ஒரு படகு பாறையை நோக்கி வந்துகொண்டிருந்தது. அது எங்கே யாரை ஏற்றிக்கொண்டு போகிறதோ என்று அவன் தனக்குள் ஆராய்ந்து கொண்டிருந்தான். படகைச் சந்திப்பதற்காகப் பாறைக்கு வந்த வடிவம் அவன் பின்னால் பதுங்கி வருவதை அவன் அறியவில்லை! கப்பலைப் பார்த்தபடியே கரைகாவலன்- 618 பாறை கடலை எட்டிப் பார்க்கும் இடம் வரை வந்திருந்தான். அதற்குள் பின்னாலிருந்தவன் மெல்ல வந்து அவனைக் கடலினுள் தள்ளிவிட்டான்! கப்பலை உளவு பார்க்க வந்த பகைவன் ஒழிந்தான் என்று அவன் மகிழ்ந்தான். தன்னையே உளவு பார்த்து வந்த மற்றொருவன் தன்னை எதிர்க்கப் பின்னாலிருப்பது அவனுக்குத் தெரியாது. படகு அருகில் வந்துவிட்டது. இன்னும் சில கணங்களில் அவன் கப்பலேறி அயல்நாடு சென்றுவிடலாம். ஏற்கெனவே நிரம்பப் பணம் திரட்டியாய்விட்டது. இனி இன்னும் பெரும்பொருள் திரட்ட அவன் திட்டமிட்டான். பின்னாலிருந்து ஒரு குரல் ராந்தேன் என்று கூவிற்று! அவன் திரும்பிப் பார்த்தான். அது குளூபின் குரல்! முதலில் இன்னது செய்வதென்று அவனுக்கு விளங்கவில்லை. பின் எப்படியும் அவன் உளவுக்கு ஒரு முடிவு கட்டுவது என்று முனைந்தான். அதற்குள் குளூபின் கையிலிருந்த சுழல் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு “ஒரு அடி முன் வைக்காதே! அப்படியே நில்!” என்றான். அவன் நின்றான். “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். “உன்னிடம் என்னவெல்லாம் இருக்கின்றன? சொல்!” “நீ யார் கேட்க?” “நான் சொல்கிறேன், வலதுபுறப் பையில் கைக்குட்டை, சாவி கொத்து, இடது பையில் கைத்துப்பாக்கி, ஒரு புகையிலைப் பெட்டி. அதில்... எழுபத்தையாயிரம் வெள்ளிக்கு மேற்பட்ட தொகை... சரிதானா?” “ஆம்.” “அத்தனையும் கொடு.” “இது வழிப்பறி கொள்ளையா?” “கொடு என்றால் கொடு” “பாதி கொடுக்கிறேன். பங்கிட்டுக் கொள்வோம் குளூபின்!” “நான் வழிப்பறிக்காரனென்றா நினைத்தாய்?” “பின்!” “என் கப்பல் தலைவரிடமிருந்து நீ ஐம்பதினாயிரம் திருடிச் சென்றாய். வட்டி முதலுடன் அது எழுபத்தையாயிரம் ஆகிறது. அதையே அவர் சார்பில் கேட்கிறேன்.” புகையிலைப் பெட்டி எறியப்பட்டது. “முதுகுகாட்டி நில்” செய்யவே நேர்ந்தது, ராந்தேன் சொன்னபடி. ராந்தேனைக் குறி பார்த்துக்கொண்டே குளூபின் குனிந்து புகையிலைப் பெட்டியைத் திறந்தான். ஒரு பத்திருபது வெள்ளி மிகுதியாயிருந்தது. அதை எடுத்துக் கொண்டு பெட்டியை மூடினான். “திரும்பி நிற்கலாம்!” ராந்தேன் திரும்பினான். “இதோ, எனக்குச் சேரவேண்டியது எழுபத்தையாயிரம் தான் இதை எடுத்துக்கொள்” என்று சில்லறையைச் சுழற்றி எறிந்தான். ராந்தேன் முகஞ் சுளித்துக் கொண்டு சீறி அதைக் கடலில் வீசினான். “சரி, உன் விருப்பம் அது. இனி நீ போகலாம்.” என்றான் குளூபின். ராந்தேன் படகை நோக்கிச் சென்றான். குளூபின் பணத்துடன் வேறு திசையில் திரும்பினான். டியூராண்டின் முடிவு தமோலிபாஸ் கப்பல் புறப்பட்டுச் சென்ற நாளைக்கு மறுநாள் டியூராண்டு கெர்ஸ்னியை நோக்கிப் புறப்பட்டது. இத்தடவை குளூபின் கப்பலுக்குச் சரக்குகள் ஏற்றுவதைக் கவனிக்க வேயில்லை. ஜீன் ஆபர்ஜில் அவன் இல்லாததால் சரக்குகள் ஏற்றப்படாமலே போயின. கப்பலில் மீகாமனுக்கடுத்த தலைமைப் பணியாள் தங்க்ரூவில் என்பவன். அவன் கெர்ஸ்னியிலேயே பிறந்தவன். நல்ல உயர்குடியைச் சேர்ந்தவன். கப்பலின் முழுப்பொறுப்பும் அவனுடையதாதலால் கப்பலை விட்டு அவன் வெளியே செல்வதேயில்லை. அவனுக்கென்று பிறரறியாத ஒரு தனியறை இருந்தது. முழு ஓய்வு கிடைத்தபோது அவன் யாருமறியாமல் அங்கே சென்று தூங்குவான். குடிவகை கிடைத்தபோது அவ்விடத்திலேயே சிறிது குடியாறுதல் அவனுக்கு வழக்கம். ஆனால் இந்த ஒரு குற்றத்தை அவன் யாரும் அறியாமல் மறைத்து வைத்திருந்தான். கப்பல் புறப்படுமுன் தங்க்ரூவில் சிறிது ஓய்வு கொள்ளத்தன் அறை சென்றபோது, அங்கே ஒரு குடிவகைப் புட்டி இருந்தது கண்டான். அங்கே யார் வைத்திருப்பார்கள் என்று சிந்தித்தான். யார் வைத்தாலென்ன, ஒளித்து வைத்ததை ஒளித்தே குடிக்கலாம் என்று அவன் நினைத்தான். மறுநாள் கப்பலை அவன் சரியாக ஓட்டமுடியவில்லை. ஆனால் இது தெரியவிடாமல் அவன் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டினான். நாள்பட்ட தேர்ச்சியுடைய கப்பலோட்டிகள் எச்சரித்தனர், அன்று கடல் கொந்தளிப்பும் மூடுபனி மறைப்பும் உடைய தாயிருக்குமென்று. ஆனால் மீகாமன் புறப்படவே துணிந்து கட்டளையிட்டான். பயணம் அமைதியாக, அமைதியான கடலிலேயே தொடங்கிற்று. கப்பல் பிரயாணிகளும் கப்பலோட்டிகளும் இன்பமாகப் பொழுதுபோக்கி உரையாடிக் கொண்டிருந்தனர். மூடுபனியைப்பற்றியும் கரையோரமுள்ள பலவகையான கொடும் பாறைகளைப்பற்றியும் கூட அவர்கள் காரசாரமாகப் பேசினர். மினிக்கியர்ப் பாறைகள், சூவாஸ், மங்க், டக், சூவஸ்டு ஆகிய பெயர்கள், ஒவ்வொன்றிலும் எத்தனை பாறைகள், அவற்றின் பண்புகள் எவை என்பனவெல்லாம் பேச்சில் அடிக்கடி விவாதிக்கப்பட்டன. கடலாராய்ச்சியில் கப்பல் அறிஞர்கள் மூழ்கியிருந்தார்கள். திடீரென மீகாமன் முழங்கினான், தலைமைக் கப்பலோட்டியைப் பார்த்து. “அட குடிகாரா! கப்பலை எங்கே ஓட்டுகிறாய்?” அந்த முழக்கம் கேட்டுக் கப்பல் கலகலத்தது. தங்க்ரூவில் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு நின்றான். மீகாமன் கப்பலின் ஆணைச் சக்கரத்தைத் தானே மேற் கொண்டான். கப்பல் ஸென்ட் ஸாம்ப்ஸனை நோக்கிச் செல்வ தற்கு மாறாக, ஜெர்ஸியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவன் அதை நேர்வழிக்கு மீண்டும் திருப்பினான். அச்சமயம் கடலகமெங்கும் புயலின் எச்சரிக்கை அமைதி வடிவில் படர்ந்தது. ஜெர்ஸி அருகில் செல்லும் கப்பல்கள் எந்தத் திசையில் சென்றாலும் ஜெர்ஸித் துறைமுகத்தின் பாதுகாப்பை நாடி ஓடின. ஆனால் டியூராண்டு ஜெர்ஸிப் பக்கமிருந்து தலை திருப்பிச் சென்றது. முழுவேகத்துடன் கப்பல் இயந்திரங்கள் முடுக்கப் பட்டன. அந்தப் பழிகேடன் செய்துவிட்ட தாமதத்தைச் சரிக்கட்ட முனைந்தான் மீகாமன். கப்பலின் போக்கில் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஆனால் நெருக் கடிக்கேற்ற அளவில் மீகாமன் செயல்வீறு உயர்ந்தது. மீகாமனின் அச் செயல்வீறு கண்டு எல்லாரும் வியந்து பாராட்டினர். அவன் இயந்திரத்தினுடன் ஒரு இயந்திரம்போல உழைத்தான். சிப்பந்திகள் ஒவ் வொருவர் செயலையும் அவன் கவனித்து நின்று அவர்கள் நாடி நரம்பாய் இயங்கினான். கப்பல் விரைந்து சென்றது. கதிரவன் வான விளிம்பை முற்றினும் அணுகவில்லை. ஆனால் வானகத்தில் எவருக்கும் தெரியாத ஒரு சிறு வெண்புள்ளி மீகாமன் கண்ணுக்குத் தெரிந்தது. அது விரைவில் பெரி தாயிற்று. மேல்திசை வானகத்தை அது மறைத்தது. பின் வான விளிம் பெங்கும் பரந்து நடுவே ஒரு இடைவெளியில் மட்டும்தான் கதிரவனொளி தெரிந்தது. மற்ற இடமெங்கும் மூடுபனித் திரையின் மூடாக்கு நிலைத்தது. கப்பலோட்டிகளுக்கு மின்னல், இடி, புயல், காற்று எதையும் விட ஆபத்தானது இந்த மூடுபனிதான். அதில் சிக்காமல் மீகாமன் கப்பலை மீண்டும் திருப்பித் திருப்பிச் செலுத்தினான். ஆனால் இறுதியில் கப்பலிலேயே ஒருவரை ஒருவர் காணமுடியவில்லை. கீழே கடல் கொதித் தெழுந்தது. மேலே கார்முகில்கள், இடியும் மின்னலும்! நாற்புறமும் பனி மூடாக்கு! கப்பல் அவற்றினிடையே திசை தெரியாது விரைந்து சென்றது. திசை தெரியவில்லை. திசைகாட்டி புயலின் மின்னாற்றலால் திசைகாட்டவில்லை. கடிகாரங்கள் நின்றன, நேரம் தெரிய வில்லை. கப்பல் கண்ணைக் கட்டிக்கொண்டு இடர் நோக்கிச் சென்றது. பிரயாணிகளிடையே கெர்ஸ்னியிலுள்ள ஒருவன் இருந்தான். அவன் கெர்ஸ்னிக் கடற்கரையையும் பாறைகளையும் நன்கறிந்தவன். அவன் மீகாமனிடம் வந்து ‘மீகாமன் குளூபின்!’ என்று விளித்தான். “என்ன செய்தி” “ஹான்வேப் பாறையை நோக்கி நாம் செல்லுகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது.” “நான் அப்படி நினைக்கவில்லை” “எனக்குப் பாறை தெளிவாய்த் தெரிகிறது, கட்டாயம் கப்பல் செல்லும் திசையைச் சிறிது மாற்றம் செய்ய கோருகிறேன்.” “எனக்குத் தெரியாதா ஹான்வே, அஞ்சவேண்டாம்...” மீகாமன் வாசகத்தின் கடைசி ஒலி ‘டாம்’ என்று முடியுமுன் ‘டாம்’ என்ற ஓசை இடியோசை போலக் கேட்டது. கப்பலின் அடித்தளம் பிளவுண்டது. ஆனால் கப்பல் தாழவும் இல்லை. முன் செல்லவும் இல்லை. பாறை ஆப்பறைந்தது போல் கப்பலினுள் பதிந்து கொண்டது. தண்ணீர் இலேசாகக் கப்பலினுள் வந்தது. ஆனால் பாறை கப்பலினுள் புகுந்து பதிந்திராவிட்டால் வேகம் இன்னும் மிகுதியாயிருக்கும். நீர் பாதிக் கப்பல் வரை வந்துவிட்டது. ஏவலாளர் உடல்களும் வெடவெடத்தன. ஆனால் மீகாமன் அமைதி பாறையின் அமைதியாயிருந்தது. கப்பலில் ஒரு படகு இருந்தது. அதை இறக்கும்படி கட்டளையிடப்பட்டது. நீ முந்தி, நான் முந்தி யென அனைவரும் அதில் ஏறினர். கப்பல் உடைவதற்குக் காரணமாயிருந்த தங்க்ரூவில் ஏறத் தயங்கினான். மீகாமன் அவனையும் ஏறும்படி கட்டளையிட்டான். ஆனால் மீகாமன் படகில் வர மறுத்தான். படகில் பதின்மூன்று பேர் இருந்தனர். இன்னும் ஒருவர் வந்தால் அது கவிழ்ந்துவிடக்கூடும். அதனாலேயே மீகாமன் ஏறவில்லை என்று அவர்கள் எண்ணினர். ஆயினம் அவ் ‘வீரமீகாமனை’ விட்டுச் செல்ல அவர்கள் விரும்பவில்லை. அவனை விட்டுச் செல்வதை விட அவனுடன் இறப்பது மேல் என்று கருதினர். ஆகவே அவனை வற்புறுத்தினர். ஆனால் அவன் முடிவாக மறுத்துவிட்டான். ‘கப்பலுக்கு நான் பொறுப்பு. அது அமிழ்ந்தபின் நான் வாழமாட்டேன். அதனுடன் என் உயிர் முடியட்டும்’ என்றான். தங்க்ரூவில்லைத் தான் குற்றம் சாட்டவில்லை என்று கூறி அவர்களை மீகாமன் அனுப்பினான். கப்பலின் கணக்கு வழக்கு ஏடுகளையும் பத்திரங்களையும் படகில் கொண்டு செல்லும்படி ஒப்படைத்தான். கண்களில் நீர் ததும்பக் கதறியழுதவண்ணம் டியூராண்டையும் மீகாமன் குளூபினையும் விட்டுப் படகு சென்றது. மீகாமன் பாறைமீது பாறையாக நின்று கப்பலின் கதியைப் பார்த்துக் கொண்டிருந்தான். இறுமாப்பும் ஏமாற்றமும் பாறையில் அமர்ந்திருந்த மீகாமன் முகத்தில் வீரமும் தியாகமும் நிழற்படும் என்றுதான் கப்பலோட்டிகள் எண்ணியிருப்பர். ஆனால் அதில் மகிழ்ச்சி தாண்டவமாடிற்று; அமைதி நிலவிற்று. வெற்றி எக்களிப்பு நடனமிட்டது! ஒரு முதல் தர நடிப்பில் அவன் வெற்றி பெற்றிருந்தான். வாழ்க்கை முழுதும் அவன் நடித்த ஆஷாடபூதி நாடகத்தின் முத்தாய்ப்பு அந்நாள். அவன் தியாகி என்று பெயரெடுத்தான். வீரன் என்று பெயரெடுத்தான். மக்கள் உள்ளத்தில், டியூராண்டின் முதலாளி உள்ளத்தில், அழியா இடம் பெற்றான். நடிப்பு அவ்வளவு முதல்தரம். கப்பலின் பத்திரங்கள் முதற் கொண்டு அனுப்பிவிட்டான். ஆனால் அவன் சட்டைப்பையில், புகையிலைப் பெட்டியில், எழுபத்தையாயிரம் வெள்ளி இருந்தது. இதை எண்ணி அவன் சிரித்தான். அது ஒரு பேய்ச் சிரிப்பு! பிளீன்மாண்டில் அவன் பயணப்பை இருந்தது. அது ஹான்வேயிலிருந்து ஒருகல் தொலைதான். முன்பே அவன் அத்தொலைவை நீந்திக் கடந்திருக்கிறான். உலகில் அவன் இறந்ததாகக் கருதுவார்கள். பிளீன் மாண்டில் அவன் எத்தனை நாள் இருந்தாலும் உணவுண்டு. பேயாட்டத்துக்கு அஞ்சி யாரும் வரமாட்டார்கள். கள்ளவாணிகக்காரர் வந்து அவனை இட்டுச் செல்வர். பல தலைமுறைக்குப் போதிய பணம் பையிலிருக்கிறது. அவன் தன் வருங்கால வாழ்வின் வெற்றிக் கோட்டைகளை அச்செல்வத்தின் அடிப்படையில் கட்டினான். அதன்மீது அவன் மாய நடிப்புத் திறத்தின் வீரப் புகழ்க்கொடி பறந்தது! அவன் எக்களித்தான். அது கூளிப்பேயின் எக்களிப்பு! ஆனால் இத்தனை எக்களிப்பிடையேயும் சடுதியில் ஓர் ஏமாற்றம் அவனை நோக்கிச் சிரித்தது. மூடுபனி அகன்றது. வெயில் இன்னும் எறித்தது. தான் வந்து சேர்ந்திருந்த பாறை ஹான்வேப் பாறை அல்ல. கொடும் பாறைகளும் அஞ்சும் காலகூடப் பாறை டூவ்ரே! ஹான்வேயிலிருந்து ஒருகல் தொலைவை அவன் நீந்திவிடலாம். டூவ்ரேயிலிருந்து கரை இருபத்தைந்துகள்! பிறரறியாமல் நீந்திச் செல்லும் எண்ணத்தில் மண் விழுந்தது. அதுமட்டுமல்ல. இப்பக்கம் கப்பல் வருவதே அரிது. அதற்குப் பலநாள் காத்திருக்கவேண்டி வரலாம். அதுவரையில் தங்குவது எப்படி- உணவுக்கு- குடிநீருக்கு என்ன செய்வது? ஒரு துண்டு அப்பம், ஒரு துளி தண்ணீர் இல்லாத இடத்தில் எழுபத்தையாயிரம் வெள்ளி இருந்து என்ன பயன்? அவன் உள்ளம் உடைந்தது. அவன் நடிப்புக் குலைந்தது. நெடுநேரம் சிந்தித்த பின் எப்படியாவது பாறையின் உச்சி சென்று அப்பக்கம் கடந்து செல்லும் கப்பல்களைச் சைகை காட்டி அழைப்பது என்று முடிவு செய்தான். டூவ்ரே இரண்டு வரிசையாக நீண்டு கிடந்தது. கப்பல் முட்டியது அதன் வெளி முனையிலேயே. இரண்டு வரிசைக்கும் இடையே இடுங்கிய கடற்கால் கிடந்தது. அதன் மறுகோடியில் இரு வரிசைகளையும்விடப் பலமடங்கு உயர்ந்த ஒரு பாறை இருந்தது. அதன் உச்சியில் முன் ஒரு மனிதன் உணவின்றிக் கிடந்து மாண்டு எலும்புக்கூடானான். அது முதல் அது மனிதப் பாறை எனப்பட்டது. இந்த மனிதப் பாறைக்கு நீந்திச் செல்லும் எண்ணத்துடன் குளூபின் அமிழும் கப்பலிலிருந்து கடலில் குதித்தான். குதித்த வேகத்தில் அவன் கடலின் ஆழமற்ற அடித்தலம் வரை சென்றான். அதன்பின் அவன் நீர்ப்பரப்புக்கு வர இருந்தான். அதற்குள் யாரோ, எதுவோ, காலைப்பற்றி இழுத்தது. அவன் மீண்டும் கடலினுள் சென்றான். எழுபத்தையாயிரம் வெள்ளியை அரையில் சேர்த்த வண்ணம் அவன் கடலில் அமிழ்ந்து சென்றான். கடற்பரப்பில் அலைகள் பேய்ச்சிரிப்புச் சிரித்தன. காதல்வீரன் பெற்ற கட்டளை “டியுராண்டு கடலில் உடைவுற்றது!” இச்செய்தி ஊரில் பெருங் கிளர்ச்சி உண்டுபண்ணிற்று. சிலர் இம்முடிவை விரும்பியிருந்தனர். அவர்கள் உள்ளூர மகிழ்ந்தனர். பெரும்பாலோர் வருந்தினர். ஆனால் லெத்தியரிக்கு அது இடியேறாயமைந்தது. அவன் வாழ்வின் ஆர்வம், நம்பிக்கை, உயிர்த்துடிப்பு யாவும் ஒரு நொடியிலகன்றது. அவன் தசைகள் தளர்ந்தன. உடல் சோர்ந்தது. டெரூசெட் அனுதாபத்துடன் அவன் கையைப்பற்றி ஆறுதல் கூற முயன்றாள். ஆனால் முதல் இடியை அடுத்து வேறு செய்திகள் வந்தன. அவை துன்பம் போக்கவில்லை, ஆனால் மரத்துப்போன உணர்ச்சிகளைக் கிளறின. கப்பலோட்டிகள் குளூபினின் வீர முடிவுபற்றி வானளாவப் புகழ்ந்தனர். பெருந்தன்மையுடன் கப்பலின் கணக்குக் குறிப்பேடுகளை அவன் தந்ததைக் குறிப்பிட்டனர். கப்பல் உடைந்தாலும் தாம் வரும்வரை மூழ்கவில்லை என்றும் கூறினர். அடுத்த, தங்க்ரூவில் கைது செய்யப்பட்டான் என்ற செய்தி வந்தது. ஆனால் லெத்தியரி அவன்மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை. அவன் விடுதலை பெற்றான். படகிலுள்ள கப்பலோட்டிகளைக் ‘காஷ்மீர்’ கரைக்குக் கொண்டு வந்தது. அதற்குச் சில மணி நேரங்களுக்குப் பின் டூவ்ரேப் பாறை வழியாக ஷீல்டீல் என்ற கப்பல் வந்தது. டியூராண்ட் அடுத்த கடலெழுச்சியால் பாறையிலிருந்து தூக்கி எறியப்பட்டு உடைந்ததென்றும், ஆனால் அதன் இயந்திரப் பகுதிகளும் நடுச்சட்டமும் உறுதியாயிருந்ததனால், உடையாமல் டூவ்ரே வரிசையின் இருபாறைகளிடையே அவை சிக்கிக் கொண்டிருந்ததைத் தான் பார்த்ததாகவும் அதன் மீகாமன் கூறினான். ‘இரவினுள் யாராவது சென்றால் இயந்திரத்தைப் பழுதுபடாமல் மீட்கலாம்’ என்றும் அவன் சொன்னான். “யார் போவார்கள், இந்நேரத்தில்?” “போனாலும் ஒருவர் போய் என்ன பயன்? கப்பல் தச்சர்கள் பலர் அல்லவா வேண்டும்?” “இயந்திரம் தான் கப்பலில் விலையுள்ளது அதை மீட்டால், கப்பலழிந்தாலும் அழிய வில்லை என்றே கூறலாம்!” - இவ்வாறாகப் பலர் பலவாறாகப் பேசினர். “டியூராண்டின் இயந்திரம் ஒரு இரவு முழுவதும் கெடாது இருக்கும் என்று நான் உறுதி கூறுவேன். ஆனால் அதை மீட்டுக்கொண்டு வரத்தக்க வீரன் உலகில் இருக்க முடியாது” என்றான், டியூரான்டின் ஒரு கப்பலோட்டி. லெத்தியரி இப்போது முதல் முதலாக வாய் திறந்தான். “மீட்டுக் கொண்டு வரத்தக்க வீரன்மட்டும் இருக்கக்கூடுமானால்... அவன் முடிப்பதற்குள், டெரூசெட் “அவனை நான் மணந்து கொள்வது உறுதி” என்றாள். கில்லியட் அருகில் நின்றிருந்தான். “இது உறுதி தானா, டெரூ!” என்றான். அவள் வியப்புடன் ‘ஆம்’ என்று தலையசைத்தாள். லெத்தியரியின் கண்களில் ஒளி வீசிற்று. அவன் “அத்தகைய வீரனுக்குக் கட்டாயம் டெரூசெட் சொந்தமாவாள். கடவுளறிய இதை நான் உறுதி கூறுகிறேன்” என்றான். அடுத்த கணம் கில்லியட் அங்கே இல்லை! எங்கும் கில்லியட் மயம்! இரவில் முழுமதி வானில் ஒளி வீசிற்று. ஆயினும் கடலகத்தில் படகுகள் எதுவும் செல்லத் துணியவில்லை. டியூராண்டின் முடிவு அவ்வளவு அச்சம் ஊட்டியிருந்தது. அத்துடன் நண்பகலில் சேவல் கூவிற்று என்று செய்தியும் பரவிற்று. இது தீமையின் அறிகுறி என்று கெர்ஸ்னி மக்கள் எண்ணினர். ஆனால் ஒரே ஒரு படகு இந்த இரவிலும் துணிச்சலாக நடுக்கடலை நோக்கி விரைந்து சென்றது. கரையை நாடி விரைந்துவந்த மீன் படவர் அதைக் கண்டு வியந்தனர். கடற்கரையில் மீன்படவர் சேரிகள்தோறும் கடலில் அதன் பாய்கள் கண்டு பெண்டிர் மூக்கில் கை வைத்தனர். ‘பேய்போல, கடலில் செல்வது, அதுவும் நள்ளிரவில் செல்வது யார்?’ என்று அவர்கள் மலைத்தனர். ஸெண்ட் பீட்டர்ஸ் நோக்கி விரைந்து கொண்டிருந்தது ஒரு கப்பல். தான் அஞ்சி ஒதுங்கும் இடத்தில், ஒரு சிறு பாய்க்கப்பல் துணிந்து முன்னேறுவது கண்டு கப்பலோட்டிகள் துணுக்குற்றனர். பாறைகளின் பின் ஒரு பாய்க்கப்பல் செல்வது கண்ட பல ஊர்ப்புற மக்கள் அது பாய் என்று உணரமாட்டாமல் கடலகத்தில் ஒரு கரும் பூதம் உலவுகிறது என்ற புரளியைக் கிளப்பினர். ஒரு காதலன் மன உறுதி கெர்ஸ்னி மக்கள் எண்ணாத எண்ண மெல்லாம் எண்ணி எண்ணிக் கற்பனை செய்யும்படி தூண்டிற்று. ஆனால் உண்மைச் செய்தி அவர்கள் கற்பனைகளையெல்லாம் கடந்த ஒரு புதிர். தன்னந் தனியாக யார் உதவியுமின்றி, எவரும் தன் புகழில், வெற்றியில் பங்கு கொள்ள விடாமல், எவரும் தனக்கு முன் சென்றுவிடக் கூடாதே என்ற அவசரத்துடன் கல்லியட் டூவ்ரேயை நோக்கி, பாறைகளிடையே காலகாலன் என்று கருதப்படும் டூவ்ரேயை நோக்கி, விரைந்து சென்றான். அவன் உணவு கொள்ளவில்லை, நன்கு உடுத்தவில்லை. அவ்வளவு படபடப்புடன் விரைந்துசென்றான், டெரூசெட்டைப் பெறுவதற்கான வீரச்செயல் செய்ய, தனி ஒருவனாய் டியூரான்ட் கப்பலின் இயந்திரத்தைத் தூக்கிக் கொண்டுவர! வேலையின் கடுமை அவன் அறியாததல்ல. பல மனிதர், பல கருவிகள், சாதனங்களுடன் செய்வதற்குக்கூட அரிய செயல் அது என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அச்செயலுக்கான பரிசு டெரூசெட் என்ற எண்ணம் அவன் துணிச்சலுக்கு இறக்கை தந்தது. அவன் அப்பரிசு பெற, கடலைப் பாயாகச் சுருட்டத் தயார்! வானத்தை வில்லாக வளைக்கத் தயார்! கடலும் அலையும் அவன் கடந்து சென்றான். பாறையும் புயலும் அவனை அச்சுறுத்தவில்லை. டூவ்ரேயின் பாழ்ந்தடத்தைக் காணும்வரை அவன் ஓயவில்லை. அச்சுறுத்தும் அப்பாறையில் சென்றுதான் அவன் அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினான். திட்டமும் ஏற்பாடும் தான் மேற்கொண்ட வேலையை வேறு எவரும் செய்ய முடியாது என்பதையோ, அதற்குத் தன்னைத் தூண்டிய பரிசு வேறு எவரையும் தூண்டியிருக்க முடியாது என்பதையோ, கில்லியட் அறியமாட்டான். அறிந்தால் டூவ்ரேயே அடைய அவசரப்பட்டிருக்கவேண்டியதில்லை. கரையோரமான நேர் குறுக்கு வழியில் வந்திருக்க வேண்டியதுமில்லை. எவரும் தனக்கு முன்சென்று பரிசுக்குப் போட்டியிடக்கூடாதே என்று கவலைப்பட்டிருக்க வேண்டியதுமில்லை. அத்துடன் தன் அவசரத்தில் அவன் தன் பாரிய வேலைக்குரிய கருவிகளையும் ஆய்ந்து எடுத்துக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட வெறுங் கையுடனேயே வந்தான். நல்ல காலமாக அவன் கப்பலில் எப்போதும் இருந்து வந்த சில ஆயுதங்கள் அவன் எடுக்காமலே அதில் கிடந்தன. டூவ்ரேயின் இருவரிசையான பாறைகளில் வலப்புறப் பாறை பெரிது. இடப்புறம் சிறிது. அவற்றின் இடைவெளி ஒரு இருபது இருபத்தைந்தடி அகலமேயிருக்கும். டியூரான்ட் பொங்கிவரும் கடலில், புயலின் வேகத்தில் தொலைவிலிருந்து வானவெளியி லேயே தூக்கி எறியப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அது பாறை வரிசைகளின் உச்சியை அடுத்த இடைப் பள்ளத்தில் உத்தரம்போல மாட்டிக்கிடந்தது. ஷீட்டீல் கப்பல் மீகாமன் கூறியபடியே இயந்திரம் ஒரு சிறிதும் உருக்குலையாமல் இருந்தது. ஆனால் கப்பலின் நடுச் சட்டம் தவிர மற்றப் பகுதிகள் நொறுங்கியும் முறிந்தும் கடலில் வீழ்ந்து போயிருந்தன. இயந்திரத்தின் புகைப்போக்கி அந்தரத்தில் நீண்டிருந்தது. துடுப்புக் கட்டைகள் சிறிது தாழ்ந்திருந்தாலும், பெருவாரி சேதமடையாமல் இருந்தன. பல பாரக்கல் எடையுடை இயந்திரத்தைக் கீழே எப்படி இறக்குவது? அச்சட்டத்திலிருந்து எப்படி பெயர்ப்பது? இவற்றைச் செய்யக் கருவிகள் வேண்டுமே! உளி, சுத்தி, ஆணிதிருகி, முடுக்கி, ஆணிகள், பணிமரங்கள் இரும்பு ஆகியவற்றுக்கு எங்கே போவது? இவ்வளவும் செய்ய ஓராள் போதுமா? எத்தனை நாள் பிடிக்கும்? உணவுக்கு என்ன செய்வது, குடி தண்ணீருக்கு எங்கே போவது? காற்றுக்கும் மழைக்கும் எங்கே ஒதுங்குவது? இரவு துயில்வது எங்கே? இவ்வண்ணம் எண்ணற்ற கேள்விகள் கில்லியட்டின் உள்ளத்தைத் துளைத்தன. இத்தனை வேலையும் கூடிய விரைவில் ஆகவும் வேண்டும். கப்பலை ஆங்கார வேகத்தில் அன்று அழித்த கடலும் புயல் காற்றும், இயந்திரத்தை நீடித்து நின்று அழிக்க முடியும். அதன் பளுவே காற்றடிக்கும்போது அதை விழச்செய்து விடலாம். கடலில் விழுந்தால் அதை மீட்பது அரிது. எப்படியும் வேலையில் இறங்கியாய்விட்டது. இனி இயந்திரத்தை மீட்க முடிந்தால், அதனுடன் ஊர்செல்ல வேண்டும். இல்லாவிட்டால் கடலுக்கும் புயலுக்கும் தன்னை ஒப்படைத்து விடுவது என்று அவன் துணிந்தான். சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்காலளவு என்பார்கள். சமுத்திரமும் அதனிலும் கொடிய புயலும் அவற்றிலும் கடுமைவாய்ந்த அப்பாறையும் அவன் துணிச்சல் கண்டு கறுவுவதுபோல் தோன்றிற்று. அவனிடம் ஒரு கத்தியிருந்தது. கப்பலில் சில சுத்தி, ஒன்றிரண்டு ஆணிகள், முடிச்சிட்ட ஒரு ஏறுவடம் ஆகியவை இருந்தன. சில மாப்பண்டச் சில்லுகள் (பிஸ்கோத்துகள்) சிறிது தண்ணீர் இருந்தது. அவன் முதலில் உண்டு களையாறினான். பின் தங்கிடம் தேடினான். உயிரை வெறுத்து, அதேசமயம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அவன் நீந்தியும், வழுக்கலான பாறைகளில் நடந்தும், எங்கும் சுற்றிப் பார்வையிட்டான். தன் கப்பல் தங்குவதற்குரிய இடம் எது; கைப்பிடிக்கும் வேலைப்பாட்டுக்கும் உரிய பாறை விளிம்புகள் எங்கெங்கு உள்ளன; தங்க, இருந்து வேலைசெய்ய, உணவு, கருவிகளை வைத்துக் காக்கத்தக்க இடம் எங்கே என்று தேடினான். மனிதப் பாறையருகிலுள்ள சிறிய குடாவளைவில் அவன் தன் பாய்க்கப்பலைச் சேர்த்தான். வரிசைப் பாறைகளில் உள்ள சிறுகுகைகள் இரண்டில் ஒன்றைத் தன் கொல்லுலைக் கூடம் ஆக்கினான். மற் றொன்றினைச் சேம அறையாக்கினான். பெரிய டூவ்ரேயின் உச்சிக்குப் பெருமுயற்சியில் ஏறிப்பார்த்தான். அதனுச்சியில் பாறையின் முறிந்த பகுதிகளிடையே ஒரு ஆள் உடல் செல்லத்தக்க நீண்ட புழை கண்டு அதில் இரவு தங்கினான். இவ்விடத்தில் இதுவரை இருந்துவந்த பறவைகள் இரவில் நெடுநேரம்வரை அவனைச் சுற்றி வட்டமிட்டு அவனைத் துரத்தப்பார்த்தன. பின் தம் குடியிருப்பை மனிதனிடம் விட்டுவிட்டு அவை தம் குடியிருப்பை மனிதப் பாறைக்கு மாற்றின. கடலில் வேலியிறங்கிய சமயம் பாறைகளுள் படிந்தும் அலைகளில் ஒதுங்கியும் கிடந்த கப்பலின் கட்டைகள், கயிறுகள், சங்கிலிகள், நங்கூரக் குண்டுகள் ஆகியவற்றை அவன் சேகரித்தான். இயந்திரச் சட்டத்தில் தன்பளு தாக்காதபடி மெல்ல ஏறிச்சென்று அதிலுள்ள பொருள்களை அகற்றி அதன் பளுவைக் குறைத்தான். அவன் சேர்த்த கட்டைகளே அவனுக்கு விறகாயின. இரும்புத் துண்டுகளே தீக்குச்சிகளாயின. கப்பலில் தொங்கிய கயிறுகளை முறுக்கி வடங்களாக்கினான். கப்பல் சட்டத்தின் நடுப்பாலம் இரும்புக் கம்பியாலானது. அதைப் பிரித்தெடுத்து, அரமாகவும் ஆணிகளாகவும் சிறுகச் சிறுக மாற்றினான். பாறையில் சுழன்றடித்த காற்றை அவன் கொல்லுலைக் குகையில் நுழையாமல் மரத்தட்டிகளால் தடுத்து சிறு புழைகள் வழியாக வரச்செய்து அதன்மூலமே ஊதுலை உண்டு பண்ணினான். ஒரு வார வேலைக்குப்பின் இயந்திரத்தை இறக்கும் திட்டம் ஒருவகையில் உருவாயிற்று. எதிரெதிராயிருந்த பாறைகளின் இடுக்கில் கட்டைத் துண்டுகளை வைத்து அடைத்து அதில் ஆணிகள் அடித்தான். இவற்றின் உதவியால் இயந்திரச் சட்டத்துக்கு மேலும் கீழும் பல குறுக்கு விட்டங்கள் பூட்டினான். அவற்றில் கப்பிகளிட்டு வடங்களின் மூலம் இயந்திரத்திலும் சட்டத்திலும் மாட்டினான். எல்லாக் கப்பிகளின் வடங் களையும் ஒரே ஒரு கயிற்றால் இழுக்கும்படி அமைத்ததுடன், தன் பளுவுக்கு மேற்படாத பளுவுடனே இயந்திரம் இயக்கப்படும்படி பல நிலையான கப்பிகளையும் இயங்கு கப்பிகளையும் இடையிட்டு வைத்தான். ஒருநாள் காலையில் உணவு இருக்குமிடத்தில் அவன் உணவைத் தேடினான். அதைக் கட்டோடு காணவில்லை. காற்று அதைக் கீழே தள்ளிருந்தது. அதன் சிந்தல் சிதறல்களைப் பறவைகள் கொத்தித் தின்றுவிட்டன. தங்கிடத்தைத் தான் பறித்ததற்கு மாறாக, அவை அவன் உணவைப் பறித்தன. அவன் இதுமுதல் சிப்பி, நண்டு, கடற்காளான் ஆகியவற்றையே தேடி உணவாகக்கொள்ளவேண்டியதாயிற்று. தண்ணீர், உணவைவிடப் பெரிய பிரச்னை ஆயிற்று. கடல் நீரில் நனைந்து உடைகள் ஈரம் உலராதிருந்தன. ஈர உடைகளிடையே அதன் உப்பு விடாயைப் பெருக்கிற்று. அச்சமயம் அவன் பறவைகளை நினைத்துப் பார்த்தான். அவை செல்லுமிட மெல்லாம் கூர்ந்து கவனித்துப் பின்பற்றினான். பாறையில் மழைநீர் தங்கிய இடத்தில் அவை நீர் குடுத்தன. அவனும் அவற்றையே நாடிச் சென்று குடித்தான். இதற்குள் அவன் தாடி மீசை வளர்ந்து காட்டு மனிதன் போலத் தோன்றியதனால், பறவைகள் அவனைக் கண்டு அஞ்சாமல் பழக்கமாயின. அவனும் கடும் பசியிலும் அவற்றை உணவாக நாடாமல், அவற்றுடன் நேச உடன்படிக்கை செய்து கொண்டான். ஒருநாள் கடற்பாசி தேடிப் பாறைகளிடையே ஒரு குகையில் நெடுந்தொலை சென்றான். குகையின் கோடியிலுள்ள இடுக்கால் நீரின் கீழுள்ள ஒரு அழகிய குகைக் காட்சியைக் கண்டான். நீரின் கீழுள்ள ஒளிக்கதிர் பன்னிற வண்ணங்களாய்க் காட்சியளித்தன. குகையினுள் உட்குகை ஒன்று இருந்தது. அதில் ஏதோ ஒன்று ஒரு மனித உருவம்போல் காட்சியளித்தது. தொலைப்பார்வைக்கு குகை கோவிலாகவும், உருவம் அமைந்த உட்குகை அதன் மூலச் சிலையாகவும் தோன்றிற்று. எல்லா வேலையும் முடிந்த பின் கில்லியட் தன் பாய்க் கப்பலைப் பாறைக்கிடையில் கொண்டுவந்து நிறுத்தினான். அவன் கப்பிகளின் மூலமும் வடங்கள் மூலமும் இயந்திரத்தை மெள்ளப்பாய்க் கப்பலின்மீது இறக்கினான். முன்பே இரண்டையும் அளந்திருந்ததனால், இயந்திரமும் சட்டமும் அதில் பொருந்தின. ஆனால் எதிர்பார்த்தபடி அவன் வெளியே வர முடியவில்லை. ஏனென்றால் அப்போது வேலியேற்றமா யிருந்ததால், டியூராண்டின் புகைப்போக்கி பாறையிலுள்ள மேலிட இடுக்கில் மாட்டிக் கொண்டது. தண்ணீர் மட்டம் தாழ்ந்த பின்பே அது இடுக்கிலிருந்து விடுபட்டு, அவன் வெளியேற முடியும். அதற்காக அவன் காத்திருந்தான். புயலுடன் போராட்டம் இரவில்தான் இனி கடல் தாழும். காலையில்தான் புறப்பட முடியும். அதுவரை ஓய்வு கொள்வதென்று அவன் பாய்க் கப்பலிலேயே படுத்து உறங்கினான். நள்ளிரவு இருக்கும். ஏதோ ஒன்று உடலை நெட்டித் தள்ளிற்று. எழுந்து பார்த்தான். கதிரவனொளியுமில்லை. நிலவொளி, விண்மீனொளியு மில்லை. ஆயினும் எங்கும் ஒரே நீலநிற ஒளி படர்ந்திருந்தது. அது கடல் நீரிலிருந்தே வந்ததென்று கண்டான். பட்டை பட்டையான ஒளிக் கீற்றுக்களும் அவற்றினிடையே நிழற்பிழம்புகளும் நீர்ப் பரப்பில் தள தளவென்று பிறங்கின. இது கனவா, நனவா என்ற ஐயத்துடன் கில்லியட் மீண்டும் மீண்டும் கண்களைத் துடைத்துக்கொண்டு பார்த்தான். நனவுதான். ஆனால் அது ஒரு கோர நனவு என்பதை அவன் விரைவில் உணர்ந்தான். கடலின் இவ்வொளி அடுத்துவரும் பெரும் புயலுக்கு அறிகுறி என்று அவன் அறிவான். கடலின் ஆற்றல் பெரிது. ஆனால் காற்றின் ஆற்றல் அதனினும் பெரிது. இரண்டும் சந்திக்கும் பரப்பிலே மனிதன் மிதப்பது இந்நிலையை நெருக்கடி ஆக்கிற்று. ஆனால் கடல், காற்று இரண்டும் கரையை அடுத்தே முழு உயிர் பெறுகின்றன. கரை பாறையாயிருந்தால், டூவ்ரே போன்ற இடுக்கமான பாறையாயிருந்தால் நீரும் காற்றும் சேர்ந்த ஆற்றல் இன்னும் பன்மடங்காகப் பெருக்கம் அடையும். நேற்றுவரை இந்தப்புயல் வந்திருந்தால், இந்த ஆற்றலுக்கு டியூராண்டுதான் ஆளாயிருக்கும். அவன் பாறையின் குகைக்குள் பாதுகாப்பாக இருந்து தப்பிப் பிழைத்திருக்கலாம். பாய்க்கப்பல் மனிதப்பாறையின் பாதுகாப் பிலும் இருந்திருக்கும். ஆனால் அவன் இரு பாறைகளின் இடுக்கில் பாய்க்கப்பலுடனும் டியூராண்டுடனும் அகப்பட்ட இந்த நேரம் பார்த்து, அது தன்னை அழிக்கத் திட்டமிட்டிருக்கிறது என்று அவன் கண்டான். காற்றின் ஆற்றல் நீர்ப்பரப்பிலேயே பெருங் கொந்தளிப்பு உண்டு பண்ணும். நீர்ப் பரப்பிலும் எல்லா அலைகளும் குறுகிய பாறையிடுக்கில் நுழையும்போதுதான் நீர் பேயாட்டமாடும். அதற்குத் தப்பிப் பிழைக்க அந்நீர்ப் பரப்பில் அலைகளின் வேகத்தைத் தடுப்பது ஒன்றுதான் வழி என்று கில்லியட் கருதினான். நீரிடுக்கினுள் அலைகள் மூன்று திசைகளிலிருந்து தான் வரமுடியும். ஏனெனில் ஒரு திசையில் மனிதப் பாறை இருந்து அதை அடைத்து விட்டது. அம்மூன்று வாயில்களுள், தெற்கிலுள்ள பாறையின் முன்வாயில் வழி ஒன்று. இதுவே தலைவாயில். மனிதப் பாறையருகில் கிழக்கிலும் மேற்கிலும் பாறை வரிசையில் இரண்டு இடைவெளிகள் இருந்தன. இவ்வாயில்கள் அலைகளுக்குமட்டும் அடைபட்டு, தண்ணீர் உள்ளே வர இடம் உண்டு பண்ணிவிட்டால், அலையின் வேகம் உள்ளே வராது. அதேசமயம் நீரின் வேகமும் குறையும். இதற்கான ஏற்பாடுகளில் அவன் முனைந்தான். டியூராண்டின் சட்டங்களிலுள்ள பலகைகளை நீண்ட விரிச்சல் களாகப் பிளந்து அவற்றால் அவன் அலைமோது சட்டங்கள் உருவாக்கினான். ஆணிகள் மூலம் அவற்றை இரு பாறைகளின் வாயிலும் நீர்ப்பரப்புக்குச் சற்று மேலும் கீழுமாகப் பொருத்தினான். இரண்டு சட்டங்களால் முன்வாயில் அடைப்பட்டது. அதன் பக்கமாக முழு இடர் பாதுகாப்பு ஏற்பட்டது. கிழக்கு வாயிலிலும் அதுபோல் இரண்டு சட்டங்கள் அடைத்தான். மேற்கு வாயிலிலும் அடைக்க முற்பட்டான். இரண்டாவது வாயிலின் சட்டம் முடிப்பதற்குள் வானம் முழங்கி விட்டது. முகில் வானை மறைத்து விட்டது. அடிவான எல்லைக்கு அப்பாலிருந்து புயல் உறுமிக்கொண்டுவந்து கடலில் அமளி செய்து பாறையைச் சுற்றி வட்டமிட்டது. அலைகள் மலைகளும் மலைக்கும் வண்ணம் எழுந்தலறிக்கொண்டு கடலிடுக்கில் திருவிளையாடல் தொடங்கின. ஆனால் தெற்கு வாயிலின் சட்டத்தில் மோதி அலைகள் நொறுங்கின. ஆற்றலழிந்தது, நீர் உள்ளே சென்றது. புயலும் அலையும் மீண்டும் மீண்டும் படையெடுத்தன. கில்லியட்டின் மரக்கோட்டை முன் காற்றின் சம்பம் சாயவில்லை. இரண்டு மூன்று நாழிகைக்குப் பின் மீண்டும் அமைதி ஏற்பட்டது. இவ்வமைதி திசைமாற்றத்துக்கான ஒரு ஓய்வு மட்டுமே என்று கில்லியட்டுக்குத் தெரியும். அடுத்த வீச்சு மேற்கிலிருந்து வந்தால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது. கிழக்கில் வந்தால் ஒரு சட்டம் அதைத் தடுத்து நிற்கக்கூடும். கிழக்கிலேயே வரவிருந்தது என்று அவன் உய்த்துணர்ந்தான். ஆகவே தான் செய்து முடித்த இரண்டு சட்டங்களில் ஒன்றைக் கிழக்கிலே மாட்டி ஒன்றை மேற்கில் முதற்சட்டமாக அடைத்தான். கிழக்கே கடலின் படையெடுப்புத் தொடங்கிற்று. இங்கே சட்டங் களின் உறுதி குறைவு. பாறைகளும் முன்னுள்ளவை போல உறுதியல்ல. ஆயினும் தெற்கும் மேற்கும் அடிக்கும் காற்றைவிட இங்கே காற்றுக் குறைவு. சட்டங்கள் அதைத் தாங்கிக்கொண்டன. காற்று இறுதியில் மேற்கே அடிக்கத் தொடங்கிற்று. இவ்வாயிலில் சட்டம் ஒன்றுதான் இருந்தது. அது புயலின் தாக்குதலைத் தணித்தது. ஆனால் சட்டம் வளைந்து நெளிந்தது. புயலின் இடை ஓய்வில் கில்லியட் அவசர அவசரமாக தான் செய்த இரண்டாம் சட்டத்தை அண்டை கொடுத்தான். ஆனால் முதல் சட்டத்தைப் புயல் சிதைத்த பின் அதன் துண்டுகளே இரண்டாவது சட்டத்தைத் தகர்க்கும் உதைகுண்டுகளாயின. இரண்டாவது சட்டமும் தளர்ந்தது. எந்த நொடியிலும் புயலின் தாக்குதல் தன்னை அழிக்கலாம். தான் அரும்பாடுபட்டு இறக்கிய டியூராண்டையும் அதைத் தாங்கிய பாய்க்கப்பலையும் மூழ்கடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. தன் கப்பல் அழிவதானால், தான் அழிந்தபின் அழியட்டும் என்று அவன் தனக்குள் உறுதி செய்துகொண்டான். கடைசிப் பேரலை ஒன்று பாய்க் கப்பலைப் பாறைமீது மோதிற்று. கப்பல் பாறையில் நேரடியாக மோதியதாகத் தெரியவில்லை. அதன்மீதிருந்த டியூராண்டின் சட்டமே மோதுதலின் பெரும்பகுதியை ஏற்றது. அதன் புறப்பகுதிகள் அகப்பகுதியிலிருந்து பிளவுபட்டு, கப்பலுக்குப் பாரமாய்த் தொங்கின. புயல் ஓய்ந்துவிட்டது. ஆனால் பாய்மரத்துக்கு எந்த நேரமும் இடர் நேரக்கூடும் இரண்டாகப் பிளந்த டியூராண்டின் பகுதி அதன் சம நிலையைக் கெடுத்தது. ஆகவே கில்லியட் அவசர அவசரமாகக் கைக்கோடரி எடுத்துப் பிளவுற்ற பகுதியை முழுதும் வெட்டிப் பிரித்தான். இதனால் தொங்கிக் கொண்டிருந்த பகுதிகள் கடலில் வீழ்ந்தன. பாய்க்கப்பலின் பளுவும் குறைந்தது. இப்போது வேலை முற்றிலும் முடிந்துவிட்டது. புறப்பட வேண்டிய குறை ஒன்றுதான். ஆனால் காலையில் புறப்பட்டால் தான் கெர்ஸ்னியில் பகலில் சென்றுசேர முடியும். ஆகவே அதற்கிடையே உணவுதேடி அவன் புறப்பட்டான். இங்கே ஏற்பட்ட தடை பயணத்தை இன்னும் ஒருநாள் சுணக்கிற்று. ஆனால் அது தடையாகமட்டுமில்லை. நற்பேறு ஆகவும் அமைந்தது. தீமையின் கருவில் நன்மை உணவில்லாமல் நண்டும் சிப்பியும் காளானும் உண்டு கில்லியட் பழகிவிட்டான். ஆனால் இப்போது சமைக்கத்தக்க உணவு எதற்கும் வழியில்லை. ஏனெனில் அவன் கொல்லுலை முழுதும் நீர்மயமாய்ப் போயிற்று. இரண்டு நாளாகப் புயலில் நண்டும் சிப்பியும் கடல்பாறைகளை விட்டகன்று சென்று விட்டன. அவற்றைத் தேடி அவன் பாறையிடுக்கில் நெடுந்தொலை சென்றான். ஓரிடத்தில் காலடியிலிருந்து நீருக்குள் ஒரு பெரிய நண்டு ஓடிற்று. அதை அவன் தொடர்ந்து வேட்டையாடினான். அது நீரடியிலுள்ள ஒரு குகையில் சென்றது. நீருள் மூழ்கி அவனும் பின் தொடர்ந்தான். உள்ளே குகை நீர்மட்டத்துக்கு மேலே உயர்ந்திருந்தது. அதைக்கண்டதும் அது முன் வேறு ஒரு குகையின் கோடியிலுள்ள விளிம்பின்மூலம் அவனுக்குக் காட்சியளித்த அதே குகையே என்பது தெரிந்தது. அதன் அழகு முன்பே அவனைக் கவர்ச்சிசெய்திருந்தது. இப்போது நேரிலேயே காண, அது கண்கொள்ளாக் காட்சியாகவே இருந்தது. சுற்றிலும் பாறையில் நீருக்கு வெளியே மங்கிய நீலநிறமும், நீருக்குள்ளாகப் பவளவண்ணமும் உடைய கொடிகள் ஒட்டிக் கொண்டிருந்தன. நீரின் அசைவால் அவை அடிக்கடி நிறமாற்றமடைந்தன. தளமட்டத்திலுள்ள கூழாங்கற்கள் உருண்டு திரண்டு பளபளப்பாய், குருதி நிறமாயிருந்தன. குகையினுள் குகையாயிருந்த பகுதியும் பெரிதாகவே இருந்தது. அதில் முன் பகுதியில் ஏதோ ஒன்று நண்டுப் புதைபோல் தென்பட்டது. தான் துரத்தி வந்த நண்டு அதில்தான் பதுங்கியிருக்கக் கூடும் என்று அவன் எண்ணினான். பசியார்வத்தால் அதைப் பிடிக்க அவன் துடித்தான். கையை உட்குகை வழியாகச் செலுத்தி அதில் துழாவினான். துழாவியவுடன் கையில் ஏதோ கடித்தது மாதிரி இருந்தது. நண்டுதான் கடித்ததென எண்ணி அதைப் பற்ற முனைந்தான். அதற்குள் பனி போன்ற குளிர்ச்சியும் மின்விளக்கு போன்ற மின்வெட்டும் பாம்புபோன்ற நெகிழ்ச்சியுமுடைய ஏதோ ஒன்று அவன் கையைச் சுற்றிக்கொண்டது. கையை எடுக்க நினைத்தான்; எடுக்க முடியவில்லை. அத்துடன் அதேபோன்ற பிற வடிவங்கள் மூன்று அவன் தோள்களையும் கால்களையும் சுற்றின. மறு கையையும் ஒன்று சுற்றத் தொடங்கிற்று. கில்லியட் தலை சுழன்றது. அவன் கிட்டத் தட்டச் செயலற்றவனானான். குகையில் நுழையும்போது அவன் கத்தியை எடுத்து வாயில் கவ்வியிருந்தான். இப்போது அவன் வழங்கத் தகுந்த ஆயுதம் அது ஒன்றே. பிடிபடாத கையில் அதை எடுத்து ஓங்கினான். அவனைப் பிடித்த உருவம் சிலந்திபோன்ற ஒரு உருவம். உடல் சிலந்தி போலவே வெறும் தோலாயிருந்தது. தலையைச் சுற்றிப் பாம்பு போல ஐந்தடிவரை நீளமுள்ள எட்டு உடற்பகுதிகள் இருந்தன. இவை ஒவ் வொன்றிலும் இருபுறமும் ஊசிபோல் குருதியைக் குத்தி உறிஞ்சும் சிறு முட்கள் இருந்தன. இச்சிலந்தி மீன் சிலந்திபோல உடலைக் குடைவடிவில் சுருக்கிப் பதுங்கியிருக்கும். இரைகளைக் கண்டால் மூன்று உடற் கூறு களால் பாறையைப் பற்றிக்கொண்டு மற்றக் கூறுகளால் இரையைச் சுற்றி இழுத்து உறிஞ்சும். குருதி முற்றும் உறிஞ்சியபின் இரை வெறும் சக்கையாக விழுந்துவிடும். கில்லியட் கத்தியை ஓங்கும்போது சிலந்திமீன் அவனைப் பாறையின் பக்கம் இழுக்கும் முயற்சியில் தலையை வெளியே சாய்த்தது. இது நல்லதாயிற்று. தலை தவிர மற்றப் பகுதிகள் வெறும் தோலாதலால், கத்தியாலும் வெட்டப்படக் கூடியவை யல்ல. ஆனால் தலை கத்தியால் துண்டிக்கப்பட்டது. உடற் பகுதிகள் செயலற்றுச் சோர்ந்து விழுந்தன. கில்லியட் தப்பினான். அழகிய கோயில் போல இருந்த அந்தக் குகை உண்மையில் இந்தப் பேய் மீன் வாழும் கோயில்தான் என்று அவன் இப்போது கண்டான். சிலந்தி மீன் அல்லது பேய் மீனால் குருதி உறிஞ்சப்பட்ட உயிரினங் களின் உடல்களும் உடற் கூறுகளும் எங்கும் கிடந்தன. ஆனால் நண்டுகள் அவற்றின் சதையை அரித்துத் தின்று விட்டன. அந்நண்டுகளையும் பேய் மீன் தின்றுவிடுவதால்தான் நண்டுகளையும் எளிதில் அங்கே காண முடியவில்லை. ஆனால் குகையின் உட்புறம் செல்லும்தோறும் நண்டுகள் பதுங்கி அவ்விரைகளைத் தின்பது கண்டான். குகையின் அரை ஒளிக்கு அவன் கண்கள் இப்போது பழகிவிட்டன. அதனால் அவன் குகைக் கோடியில் தன்னை நோக்கிச் சிரிக்கும் ஒரு மனித உருவைக் கண்டான். அது உண்மையில் ஒரு முழு மனித எலும்புக் கூடு. அதன் சதைகள் முற்றிலும் அரித்துத் தின்னப்பட்டிருந்தன. அதைக் காண கில்லியட்டுக்கு அச்சமும் துயரும் மிகுந்தது. தானும் அம்மனிதன் நிலைக்கு மிகவும் அருகாமையிலேயே வந்திருந்ததை அவன் எண்ணித் திடுக்குற்றான். அவ்வுருவம் யார் என்று அறிய ஏதேனும் உடைகள் எச்சமிச்சம் இருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் காணவில்லை. ஆனால் அரை யிலுள்ள தோல் கச்சை நீரிலூறிக் கெட்டிருந்தாலும், அரையைச் சுற்றி அப்படியே தொங்கிக் கிடந்தது. கத்தியால் அவன் அதை வெட்டி எடுத்தான். அதன் நடுவில் சதுரமான கெட்டிப் பொருள் ஏதோ இருந்தது. அது ஒரு இரும்புப் பெட்டி. துருவேறி அது திறக்க முடியாததாயிருந்தது, அவன் அதைப் பாறையில் மோதி உடைத்தான். உள்ளே இருந்து சில வெண்காசுகள் விழுந்தன. எழுபத்தையாயிரம் வெள்ளிகளுக்குச் சரியான மூன்று நோட்டுக்களும் இருந்தன. அதிலிருந்த ஒரு சிறு துண்டில் குளூபின் என்ற பெயரும் இருந்தது. எலும்புக்கூடு குளூபினுடையதே என்றும் நீந்திப் பாறைக்கு வருமன் பேய்மீனுக்கு அவன் இறையானான் என்றும் கில்லியட் அறிந்து கொண்டான். பேய்மீன் குகை அவனுக்குக் காலன் குகையாக முதலில் தோன்றிற்று. இப்போது காலத்தின் பரிசும் அவனுக்குக் கிட்டிற்று. மறுநாள் அவன் காலையிலேயே பாய்க் கப்பலுடன் புறப்பட்டு கெர்ஸ்னி வந்தான். கில்லியட்டின் தன் மறுப்புப் பண்பு ஸென்ட் ஸாம்ப்ஸனில் கில்லியட் சென்றபின் யாரும் அவன் பயணம்பற்றி எதுவும் நினைக்கவில்லை. அது ஒரு பித்தன் முயற்சி என்று கருதி அதை மறந்துவிட்டனர். லெத்தியரி எதிலும் பற்றின்றி அறையில் அடைபட்டுக் கிடந்தான். ஆனால் டெரூசெட் வாழ்வில் இப்போது புதிய மாறுதல் ஏற்பட்டிருந்தது. லெத்தியரிக்கு ஆறுதல் கூறப் பழைய ஊர்வட்ட முதல்வர் ஹொடும் புதிய முதல்வர் காட்ரேயும் வந்திருந்தனர். ஹொடு ஆறுதல் தரும் விவிலிய நூற்பகுதி ஒன்றை வாசித்தான். அதில் “ரெபெக்கா கண்களை உயர்த்தினாள். ஈசாக்கை அவள் கண்டாள்” என்ற பகுதியை ஹொடு வாசிக்கும்போது டெரூசெட் கண்ணை உயர்த்தினாள். காட்ரே அவளைப் பார்த்தான். அவள் உள்ளத்தில் அவளை அறியாமல் அதுமுதல் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அவளையும் அறியாமல் அது சமயப் பற்றாக வளர்ந்தது. அவள் வாரம் ஒருமுறைகூடக் கோயிலுக்குப் போகாதவள். வாரம் இருமுறை செல்லத் தொடங்கினாள். விவிலிய நூலில் அக் கரையற்றவள் அது பற்றிய காட்ரே விளக்கவுரையை எழுத்துவிடாமல் கேட்டாள். வீட்டில் அதே பகுதியை மீண்டும் மீண்டும் படித்தாள். குளூபின் ராந்தேனிடமிருந்து பெற்ற பணத்தை லெத்தியரியிடம் கொடுக்கமாட்டாள் என்பது ராந்தேனுக்குத் தெரியும். ஆகவே லெத்தியரியிடம் குளூபின் பணம் பெற்ற செய்தியைக் கூறுவதே அவளிடம் பழிவாங்க வழி என்று அவள் எண்ணினாள். ஆகவே தொலைசென்றதும் இது செய்தியை லெத்தியரிக்கு எழுதியிருந்தான். அதை வாசித்த லெத்தியரி மீண்டும் அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும் கொண்டான். இதனால் அவன் உறங்க முடியவில்லை. பலகணி வழியாகக் கடற்காற்று வாங்கிய வண்ணம் துறைமுகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் கண்களில் அவன் உயிரினும் அரிய டியூராண்டின் புகைப்போக்கி தெரிந்தது. அவன் ஓடிச்சென்று பார்த்தான். இயந்திரமும் கப்பற் சட்டமும் அப்படியே இருந்தன. இதனை இங்கே கொண்டுவந்த அராபிக் கதைப் பூதம் எதுவோ என்று திகைத்தான். அது பூதமாயிராமல் மனிதனாயிருந்தால், கில்லியட்டே யாக வேண்டும் என்று கருதி, அவனை அழைக்கத் துறைமுகத்தின் மணியை அவசர அவசரமாக அடித்தான். கில்லியட் இதேசமயம் உள்ளத்தை முழுதும் டெரூசெட்டின்பால் ஓடவிட்டுக்கொண்டு தோட்டத்தில் இருந்தான். வேலியின் மறுபுறம் எதிர்பாராவகையில் டெரூசெட்டும் வந்தாள். இருவரும் எதிர்பாராவகையில் காட்ரேவும் அங்கே வந்தான். அவன் உறவினர் ஒருவர் இறந்து அவனுக்குத் திடுமெனப் பெருஞ்செல்வம் உரியதாயிற்று. மறுநாளே அவன் காஷ்மீரில் பயணமாகச் செல்லவேண்டும். இதைக் கூறி டெரூசெட்டிடம் விடை பெறவே அவன் எண்ணினான். ஆனால் இறுதி விடைபெறும் சமயமாதலால் தன் உள்ளக் காதலை அவன் அவளிடம் கொட்டினான். அவளும் தன் உள்ளம் அவனிடமே ஈடுபட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். காதலரிருவரும் ஒருவருடன் ஒருவர் மாறா உறுதி கூறிக் காதலில் இணைந்தனர். லெத்தியரி மணியடித்ததைக்கூட அவர்கள் கவனிக்கவில்லை. கில்லியட்டின் உள்ளம் உடைவுற்றது. அவன் காதல் தெய்வம் அவளை அசட்டைசெய்து வேறிடத்தில் உள்ளம் பறிகொடுத்தது. அவன் அவள்மீது சினம் கொள்ளவில்லை. அவன் வாழ்வின் ஆர்வம் முழுதும், அவன் தியாகம் முழுவதும் கசப்பாக மாறிற்று. ஆயினும் கசப்பிலும் காதல் அவன் உள்ளப்பண்பை உயர்த்திற்று. அவன் காதலர் நலனில் அக்கரை கொண்டு வெளியேறினான். லெத்தியரி கில்லியட்டை ஆரத் தழுவிக்கொண்டான். செய்தியாவும் கேட்டான். குளூபினின் மாயமுடிவுபற்றிய கதை கேட்டபின் அவன் மகிழ்ச்சி கரைகடந்தது. அந்நிலையில் அவன் “ஆகா, நான் விரும்பிக் காத்துக் கிடந்த என் மருமகன் நீயே. டெரூசெட் இனி உன் மனைவி. புதிய டியூராண்டுக்கும் நீயே மீகாமன்” என்றான். அவன் பயணக் கோலத்திலிருந்தான். ஆடை மாற்றவில்லை. அதையும் பாராமல் அவன் டெரூசெட்டை அழைத்து அவளிடம் “இதோ உன் கணவன். நாளை உன் திருமணத்திற்குத் தயாராயிரு” என்று ஆணை யிட்டான். காட்ரே அருகிலேயே நின்றான். காதலர் உள்ளத் துடிப்பை லெத்தியரி அறியவில்லை. ஆனால் கில்லியட் அறிந்தான். தன் காதல் தெய்வம் தனக்குரியதாகாவிட்டாலும் அதன் வாழ்வு பாழாக அவன் பார்க்க முடியவில்லை. லெத்தியரி மணவினைக்கான ஏற்பாடுகள் செய்யும்படி கில்லியட்டிடம் கூறினான். கில்லியட் ஏற்பாடுகள் செய்தான். ஆனால் மணமகன் பெயரைக் கில்லியட் என்று பதிவு செய்யவில்லை. காட்ரே என்று பதிவு செய்தான். அத்துடன் காட்ரே மறுநாளே வெளிநாடு செல்வதால், உடனே திருமணத்துக்குத் தனி இணக்கமும் பெற்றான். கப்பலில் ஏறுமுன் காட்ரேயுடன் டெரூசெட் கடற்கரை சென்றாள். அவள் தானும் தந்தையில்லம் விட்டு வருவதாகப் பிடிமுரண்டு செய்தாள். அவன் அவளைவிட்டுச் செல்வது தவிர வழிகாணாது திகைத்தான். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த கில்லியட் முன்வந்து, அவர்களைத் தானே மணம்செய்து அனுப்புவதாகக் கூறினான். காதலருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவர்கள் தம் நெருக்கடி நிலையில் அதை ஏற்றனர். திருமணம் உடனே கோயிலில் நிறைவேறிற்று. “லெத்தியரி உடல் நலமின்மையால் வர முடியவில்லை. எனவே கில்லியட், அவருக்குப் பதிலாகவே நான் வந்திருக்கிறேன்” என்று கூறி அவன் கையெழுத்தைத் தானே இட்டு அதற்கான அத்தாட்சிக் கடிதமும் கொடுத்தான். கில்லியட் தாய் அவனுக்கு வரவிருக்கும் மனைவிக்காகக் கொடுத்த பரிசுகளடங்கிய பெட்டியை அவன் மணமக்களுக்குப் பரிசாகக் கொடுத் தான். இது உன் மனைவிக்கல்லவா கொடுக்க வேண்டும் என்றாள் டெரூசெட். “நான் இனி மணம் செய்யப்போவதில்லை” என்றான் அவன். காதலர்கள் அவனுக்காக வருந்தினர். டெரூசெட் தான் பனியில் அவன் பெயர் எழுதி அவனை நையாண்டி செய்த குறும்பையும், டியூ ராண்டைத் தேடிட அனுப்பிய அவசர ஆர்வ உரையையும் நினைத்து வருந்தினாள். காட்ரே, தன்னை கில்டாமரிலிருந்து காத்தவன் வாழ்வைத் தன் கையால் அழிக்க நேர்ந்ததே என்று வருந்தினான். காஷ்மீர் கப்பலில் காதலர் கைகோத்துக் கொண்டிருந்தனர். கப்பல் கில்டால்மர் கடந்துசென்றது. கில்டால்மர் மீது கடல் பொங்கி வந்து கொண்டிருந்தது. அதில் தான் இருந்த இடத்தில் மற்றொருவன் இருப்பதையும், அவன் நெஞ்சுக்கு மேல் தண்ணீர் ஏறிவிட்டதையும் கண்டு காட்ரே “ஆ” என்றான். டெரூசெட்டும் அவ்வுருவை நோக்கினாள். “ஆ, கில்லியட்” என்றாள். கவலையற்ற அவள் உள்ளத்தில்கூட அவன் தியாகமும் பெருந்தன்மையும் ஆழ்ந்து பதிந்தன. இரண்டு கண்ணீர்த் துளிகள் அவள் கண்களிலிருந்து காட்ரே தோள்களில் விழுந்தன. ‘ஒரு கடல் மறவன் பெற்ற கன்னி நான். மற்றொரு உடல் மறவன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட கன்னியானேன்’ என்று அவள் பெருமூச்சுவிட்டாள். கடல் மறவர் மரபுக்குத் தன் காதல் ஒரு களங்கமாயிற்று என்று காட்ரே எண்ணினான். அவ்வெண்ணம் அவன் கையினூடாகச் சென்று டெரூ செட்டின் கைகளை அழுத்திற்று. 3. கல் மனிதன் முதற் பதிப்பு - 1952 கல் மனிதன் ஸ்ட்ரின்ட்பர்க்கின் ‘கல் மனிதன்’ சிறைச் சீர்திருத்தத்தைப் பற்றிய ஓர் அழகிய கனவுலகச் சோகச் சித்திரம். அரை நூற்றாண்டுக்கு மேல் சிறைக்கூடத்திலிருந்த ஒரு கைதியின் உள்ளத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாறுபாடும் திறமாகப் படம்பிடித்துக காட்டப்படுகிறது. கதையில் தனி மனிதன் பண்போவியம் இக்கைதி ஒருவனேயானாலும், அவன் உள்ளத் திரையூடாக நாம் ஒரு நாட்டு வாழ்வின் பல கோணங்களையும் பல மாறுதல்களையும் அரசியல் வட்டாரங்களின் தவறுகளையும் நல்லெண்ணங்களையும் ஒன்றுவிடாமல் காண்கிறோம். ஆசிரியர் கலைத்திரையில் கடலலையும், கப்பற் பிரயாணிகளும், புங்கமர நிழலும், பசுந்தழைக் கொப்பும், தனித்தனிப் பண்புகளுடையவை யாகக் காட்சியளிக்கின்றன. ‘கானாறு’ ‘லைலா- மஜ்னூன்’, ‘ரோமியோ - ஜூலியட்’ போன்ற காதற் கற்பனைச் சித்திரம். ஆனால் லைலாவின் காதல் பாலைவனத்தையும், ஜுலியட்டின் காதல் உரோம நகர வாழ்வையும் பின்னணியாகக் கொண்டது. கானாற்றின் காதல் சித்திரம் குறிஞ்சிநில நாட்டின் இயற்கையையும் வாழ்வையுமே பின்னணியாகக் கொண்டது. லைலா- மஜ்னூனையும் ரோமியோ-ஜூலியட்டையும் விட இப்பின்னணிகள் கதையுடன் நன்கு பின்னப்பட்டுள்ளன. கதை வாசிப்பவர் கானாற்றையும் அதன் நடுவிலுள்ள எல்லைக்கல்லையும் நீர்த்தேக்கத்தையும் காதல் போட்டி -ஊர்ப் போட்டி களின் சின்னமாக எதிரெதிர் நிற்கும் மலைகளையும் பனிப்புயலின் மயிர்க் கூச்செறியும் நிகழ்ச்சி களையும் மறக்க முடியாது. ‘புயலிடைப் பூத்த புதுமலர்’ போரின் கோரக்காட்சியைக் கண்முன் கொண்டு வருகிறது. தாயின் தியாகமும், குழந்தையின் நகைமுகமும் போரின் அழிவுக்கும், மனித வாழ்வின் ஆக்க உயர்வுக்கும் சின்னமாகத் துலங்குகின்றன. இச்சிறுகதை ஒரு கதையல்ல; ஒரு சிறு கவிதை என்னலாம். மூல ஆசிரியரைப் பற்றி ஐரோப்பிய இலக்கிய உலகில் காலவரிசைப்படி தென்திசை முன்னணியில் நின்று வழிகாட்டிற்று. ஆனால், 19-ம் நூற்றாண்டுக்குள் நார்வேயில் இப்ஸனும், ஸ்வீடனில் ஸ்ட்ரின்ட்பர்க்கும் வடதிசையிலும் இலக்கியப் புகழ்க்கொடி நாட்டினர். ஆகஸ்ட்ஸ்ட் ரின்ட்பர்க் 1849-ல் பிறந்து 1912வரை வாழ்ந்தார். ஸ்வீடனில் அவர் தோற்றுவித்து வழிகாட்டிய வாழ்வியல் இயக்கம் 1880 முதுதல் 1890 வரை போட்டியற்ற நிலையில் இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அவர் புகழ் குன்றாமல் வளர்ந்து வருகிறது. அவர் ஸ்வீடனின் தலைசிறந்த நாடக ஆசிரியர். ஆனால் புனைகதையிலும் சிறுகதையிலும் அவர் புகழ் சிறந்ததன்று. வாழ்வியல் கலைஞர்களுள் அவர் தனியிடம் பெறத்தக்கர். அவர் தீமையைத் தீமையாகக் காட்டிக் களிக்கும் கலைஞரன்று. அதைத் தீமை என்று விளக்கி, அதை ஒழிக்கும் வகையில் மக்கள் ஆர்வத்தைத் தட்டியெழுப்பும் முறையில் அவர் கலை அமைந்தது. 1890 முதல் 1900 வரை வாழ்வியல் இயக்க அலைக்கு எதிரான புனைவியல் இயக்க அலை வீசிற்று. இக்கால எழுத்தாளர்களுள் பெல்லே மோலின் ஒருவர். இவர் 1864-ல் பிறந்து தம் 32-ம் ஆணடிலேயே இயற்கையெய்தினார். இக்குறுகிய காலத்திற்குள் இவர்தம் தாயகமான வடக்கு ஸ்வீடனிலுள்ள பனிமலைநாட்டு வாழ்வைச் சித்தரித்துக் காட்டி இலக்கியத்தில் இறவா இடம்பெற்றார். இருபதாம் நூற்றாண்டின் கலைஞர் மீண்டும் ஸ்ட்ரின்ட் பர்க்கின் வாழ்வியல் முறையையே நோக்கினர். ஆயினும், ஸ்ட்ரின்ட்பர்க் ஆர்வம் காட்டிய சீர்திருத்தங்கள் செயல் வெற்றி பெற்றதால், அவ்வார்வம் வரவரக் குறைந்தது. ஆனாலீனா எங்க்ஸ்ட்ராம் மீட்டும் ஏழைகள், துன்புற்றவர் பக்கம் ஒத்துணர்வு காட்டிய பெண் எழுத்தாளர். முதல் உலகப் போர்க்காலத்தில் வாழ்ந்த இவர் அமைதியியக்கத்திலும் சமூக சேவையிலும் கருத்துடையவர். அவர் எழுத்துக்களில் இந்த ஆர்வத்தைக் காண்கிறோம். 1. கல் மனிதன் இன்று படகுத் துறையிலிருந்து கடலின் திசையில் பார்ப்பவர்களுக்கு இடதுகைப் பக்கமாகப் பச்சைப் பசேலென்று காடுகள் நிறைந்த ஒரு குன்று தென்படும். பல ஆண்டுகளுக்கு முன் இம்மலை பச்சைப் பசேலென்றில்லை. காடுகளோ புல்லோ கூடக் கிடையாது. ஒரே கட்டாந்தரையாகவும் கற்பாறையாகவும் அது காட்சியளித்தது. அப்பாறையின் பின்புறம் ஒரு இடமகன்ற கட்டடத்தைக் காணலாம். அது ஒரு விசித்திரமான கட்டடம். தூரப் பார்வைக்கு அது ஒரு சிலந்தி போலவே தோன்றும். ஏனென்றால் சிலந்தியின் உடற்பகுதி போன்ற நடுக்கட்டடத்தைச் சுற்றி எட்டுக் கட்டடங்கள் சிலந்தியின் கால்கள்போல் நீண்டு கிடந்தன. சிலந்தியின் வடிவம் போலவே, அதன் பண்புகளிலும் சில அந்தக் கட்டத்துக்கு உண்டு. அதற்கு நாற்புறமும் காணவல்ல எண்ணற்ற கண்கள் உண்டு. நாடெங்கும் அது வலை விரித்திருந்தது. அதில் சிக்கி அச்சிலந்திக் கட்டடத்திற்குள் செல்கிறவர்கள் திரும்பி வருவதே கிடையாது. அதன் அருகே ஆள் நடமாட்டம் காண்பதரிது. அது ஒரு சிறைக்கூடம். சிறு சிறைக்கூடமன்று; தலை நகரத்திலுள்ள அரசாங்கச் சிறைக்கூடம். மனித உலகின் நடுவிலே, மனித உலகுடன் தொடர் பில்லாமல் இருந்த ஒரு தனிச் சிற்றுலகம் அது. அதில் வாழ்பவர்- வாழ்பவர் என்ற சொல் அவர்களுக்குப் பொருந்தாது- அதில் காலந் தள்ளுபவர் பலர் தாங்கள் வெளியுலகில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டவர்கள். மறக்கா விட்டாலும் பிறந்த உலகைப் பகைத்து வெறுத்தவர் சிலர். வெளி உலகின் நீதி வேறு; அவ்வுலகின் நீதி வேறு. வெளி உலகில் மன்னன் ஆட்சி உண்டு. கடவுள் ஆட்சியும் உண்டு. உள்ளே இரண்டும் கிடையாது. ஒரு வேளை உள்ளே போவதும் வெளியே வருவதும் மட்டும் கடவுள் விருப்பமாயிருக் கலாம். மன்னன் ஆணையாயிருக்கலாம். உள்ளே போனபின் கடவுள் கண்களுக்கும் மன்னன் கண்களுக்கும் திரையிடப்படும். ஸ்வீடனின் மன்னன் முதலாம் ஆஸ்கார் காலத்தில் இளைஞனா யிருந்த ஒருவன் ஒரு மனிதனைக் கொன்றுவிட்ட காரணத்துக்காக உயிருடன் இவ்வுலகிலிருந்து சிறை உலகுக்கு அனுப்பப்பட்டிருந்தான். அவன் அன்று தூக்கிடப்பட்டிருந்தால் அவன் கதை அத்துடன் முடிந் திருக்கும். நம் கதையும் இத்துடன் நின்றிருக்கும். ஆனால் இந்த உலகத்தின் வாழ்வை முடித்துச் சிறையுலகத்தில் இன்னொரு வாழ்வை வாழ அவன் அனுப்பப்பட்டிருந்தான். அவனுடைய இரண்டாவது உலக வாழ்வின் வரலாற்றையே நாம் இங்கே குறிக்கிறோம். இந்த உலகில் புதிதாகப் பிறந்த உயிருக்கு நாம் நம்மிடையே அவனை அடையாளந் தெரியும்படி ஒரு பெயரிட்டழைக்கிறோம். அவனுடைய குணங்குறைகளுக்கேற்ப அவனை மதித்து நடத்துகிறோம். பெயரையோ அவன் மதிப்புத் தரத்தையோ அவன் முதுகில் எழுதி ஒட்டுவதில்லை. ஆனால் இது இந்த உலக நீதி. சிறை உலக நீதி வேறு. நம் இளைஞனுக்குச் சிறை உடை என்ற ஒரு தனி உடை தரப்பட்டது. அதில் பின்புறம் அழகாக வாழ்க்கைக் கைதி என்ற குறிப்புத் தெரியும்படியாக வா கை. என்ற எழுத்துக்கள் அழகிய கறுப்பு வண்ணத்தில் தீட்டித் தைக்கப்பட்டிருந்தன. இது அவன் மதிப்புத்தரம் அல்லது சிறை வகுப்பைக் குறித்தது. அதனடியில் அவனுக்கே உரிய குறியீடு அல்லது பெயராக 65 என்ற எண்ணும் தரப்பட்டிருந்தது. வாகை. என்ற வகுப்பு சிறையின் வகுப்பு. உயர்வு தாழ்வு முறைப்படி கை என்ற வகுப்பை விட உயர்ந்தது. ஆனால் வெளி உலகில் வகுப்பின் உயர்வு வாழ்வின் இன்ப வாய்ப்புக்களின் உயர்வுக்கு அறிகுறி. இங்கே அவ் உயர்வு, துன்ப வாய்ப்புக்களின் உயர்வுக்கு அறிகுறி. பொதுக் கைதிகள் சிலந்திச் சிறைக்கூடத்தின் விருந்தினர் உரிமைமட்டுமே தரப்பட்டவர்கள். வாழ்க்கைக் கைதிகள் அதன் நிலையான குடிகள். உணவை எதிர்பார்த்து வாகை. 64 வாழவில்லை. தரப்பட்டால், தரப்பட்டபோது, தரப்பட்டதை அவன் உண்டாக வேண்டும். உறக்கத்தை அவன் எதிர்பார்த்து வாழவில்லை. உறங்கவிடப்பட்டபோது விடப்பட்ட நேரத்திலும் இடத்திலும் அவன் உறங்கியாக வேண்டும். இன்பம் எப்படி இருக்கும் என்பதையே அவன் மறந்துவிட்டான். ஆகவே அவனுக்குத் துன்பமும் கிடையாது. துன்பம் என்று வெளியார் கூறுவதுதான் அவனுக்கு வாழ்க்கையாக இருந்தது. அதில் இல்லாத இன்பம் என்ற ஒன்றை அவன் காணும்போது, அவன் நினைவுகொள்ளும் போதுதான் அவனுக்குத் துன்பம் ஏற்பட முடியும். அவனுக்குத் தரப்பட்ட வேலை கல்லுடைப்பது. காலை, நண்பகல், காலை, சில சமயம் இரவு சென்ற பின்னும் அவன் இயந்திரம்போல அதே வேலையைத் தொடர்ந்து செய்தான். மழைகாலம், வெயிற்காலம், பனிக் காலம் மூன்றிலும் அவன் வேலையில் மாற்றம் இல்லை. உணவும் உறக்கமும் இந்த வேலையிடையே ஒரு வேலையாகவே அவனுக்கு இருந்தது. இன்ப துன்ப வேறுபாடற்ற அவனுடைய இந்த வாழ்வின் போக்கிலும் அவன் ஒரு புதிய இன்ப நாட்டத்தை வகுத்திருந்தான். அதுவே வெளி யுலகத்தில் முன்பு அவனுக்குப் பழக்கமான காட்சிகளைப் பார்ப்பது. குளிர் காலத்தில் இத்தகைய காட்சி மிகுதியில்லை. சிறைக்கூடத்திலிருந்து பார்க்கும்போது துறைமுகம் வெறும் துறைமுகமாகமட்டுமே இருந்தது. ஆனால் வேனிற் பருவத்தில் புத்தம் புதிதாக வண்ணச் சாயமடிக்கப்பட்ட படகுகள் அலைகள்மீது தவழ்ந்தன. அவற்றில் ஸ்வீடனின் அழகிய கொடிகள் பறந்தன. அவன் அவற்றில் ஏறிச் செல்லா விட்டாலும் அவன் பார்வை அவற்றில் ஏறிச் சென்று மகிழும். கரையோரத்தில் குளிர் காலத்தில் கப்பும் களையுமாயிருந்த புங்க மரங்கள் தளிர்த்துத் தழைக் கைகளை ஆட்டி நடனமாடும். சின்னஞ்சிறு பையனாயிருக்கும்போது அவன் தந்தையுடன் அத்தகையதொரு புங்கமரத்தடியில் இருந்து மகிழ்ந்தது அவன் நினைவிற்கு வரும். அந்த இலைகளின் நறுமணமும் அந்தத் தழைகளின் மெல்லிய இசையும் அன்று வாழ்க்கையுடன் வாழ்க்கையாக இருந்தது. இன்று அவற்றின் நினைவே இன்ப நினைவுகளின் சின்னமாயிருந்தன. அவன் புலன்கள் அவ்வின்பக் காட்சிகளையும் நுகர்ச்சிகளையும் தொலைவி லிருந்து இப்போது நாடும். சில சமயம் கடலிடையே ஒரு சிறு நகரம் ஊர்வது போலத் துறை முகத்தை நோக்கிக் கப்பல்கள் ஊர்ந்து வரும். கப்பலின் பக்கங்களை அலைகள் மோதித் தழுவி விளையாடும். துறைமுகத்தை அணுகும்போது நிலத்தை வரவேற்கும் மகிழ்ச்சிக் கீதம் கப்பலில் எழும். மக்கள் முகங்களில் களிப்புத் தாண்டவமாடும். இக்காட்சிகளை வா. கை. 65 கண்குளிர, கண்நிறையக் காண விரும்பினான். ஆனால் அவன் காண அவாவிய அந்தக் கப்பலின் மனிதர்கள் கண்களில் அவனோ அவன் தோழர்களோ, சிறைக்கூடமோ பட்டவுடன் அவர்கள் இன்ப முகத்தில் சட்டென ஒரு மாறுபாடு ஏற்படுவதையும், சிறையின் காட்சியும் நினைவும் மாறிய பின்பே அவர்கள் முன் நிலையடைவதையும் அவன் கண்டான். அந்தோ! அவன் காண விரும்பிய இன்பங்கள் கூட அவன் கண் பட்டவுடன் துன்பமாகுமளவு அவன் துன்பத்தின் சின்னம் ஆயிருந்தான். இவ் எண்ணம் அவனைச் சுட்டுக் கருக்கிற்று. கப்பல் போனபின் அவன் அக்கப்பலையும், அதிலிருந்த மனிதர்களையும் அவர்களை வரவேற்கும் வெளியுலகத்தையும் வாயார வைதான்- மனமாரப் பழித்தான்! உலகம் ஆண்டு தோறும் அவனை வெறுத்தது. ஆண்டுதோறும் அவனும் உலகத்தைக் கண்டு சீறிப் புகைந்தான். அவன் வெளியுலகத்தைப் பழித்ததுடன் அமையவில்லை. அடிக்கடி அவனும் மற்றக் கைதிகளும் ஒருவரை ஒருவர் பழித்தனர். வெளியுலகில் துன்பம் மக்களை இணைக்கிறது. சிறையுலகில் அது மக்களைப் பிரிக்கிறது. அவனைக் காணாமல் அவன் மட்டும் காணும் புங்கமரமும், அலை களும், படகுகளும் இல்லாவிட்டால், அவன் மனக் கசப்பு ஒரே இடையறா மனக்கசப்பின் சின்னமாகியிருக்கும். தொடக்கத்தில் சிறை வாழ்வு கடுமையாயிருந்தது. ஆனால் அக்கடுமையில் கைதிகள் மரத்துப் போய் இருந்தனர். மரங்களுக்கு இருக்கும் உயிரீரம்கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் உடைக்கும் கல்லுடன் அவர்களும் கற்களாய் இருந்தனர். ஆனால் திடுமென சிறை வாழ்வின் உள்வெப்பை எடுத்துக்காட்டுவது போல, இளந்தென்றலின் ஒரு மூச்சு அவர்களிடையே வீசிற்று. உணவின் தரம் சற்று உயர்ந்தது. கட்டுப்பாடு சிறிது தளர்ந்தது. பலர் ஒரு கொட்டிலில் அடைபட்டிருந்த முறை மாறி ஆளுக்கு ஒரு அறை தரப்பட்டது. வெளி உலக நீதியின் முதல் தாக்குதல், மன்னன் உள்ளத்தில் மலர்ந்த அன்பு மலர்ச்சியின் முதல் விளைவு அது. அம்மலர்ச்சிக்குச் சீர்திருத்தவாதிகள் எழுத்தாளர் பலர் உதவியிருந்தனர். ஆனால் இரு சாராரிடமும் கைதிகளுக்கு நன்றி ஏற்படவில்லை. இன்பம் அளிக்கப் பட்டவன். துன்பந்தரப்பட்ட போது எப்படிச் சீறுவானோ அப்படி அவர்கள் துன்பமாற்றிச் சிறிது இன்பந் தரப்பட்ட போது சீறினர்! நம்பிக்கைக்கு இடமில்லாத நிலையில், இருள் சூழ்ந்த வாழ்வில் இருந்து அவர்கள் பழகிவிட்டனர். சிறிது ஒளிவந்தபின் அவர்கள் அரை ஒளி முன்னைய இருட்டை விடக் கொடியது என்று நன்றி கெட்டவர்களாய், நாக்கில் நரம்பற்றவர்களாய்க் கூறினர். முன் கேட்கப்படாத குறையீடுகளும் முறையீடுகளும்- உணவு மோசம். உடை மோசம். காவல் கொடுமை என்பன போன்ற குற்றச் சாட்டுகளும் எழுந்தன. ஒருநாள் நகரெங்கும் பைத்தியக்காரர்கள் சேர்ந்து விழாக் கொண்டாவது போன்றிருந்தது. நகரின் மணிகள் யாவும் கலகலத்தன. சிறுமணிகள் சிற்றொலிகளுடன் குலவின. அவற்றிடையே பெரிய மணிகள் முழங்கின. நகரக் கோவிலின் பாரியமணி அவை அனைத்தையும் உள்ளடக்கி வீறிட்டு முழங்கிற்று. அதுமட்டுமன்று. சிறைக் கைதிகளுக்குக் கூட ஓய்வு தரப் பட்டது. ஒருநாள், அவர்கள் வாழ்நாளிலேயே முதல் நாளாக, அவர்கள் கல்லுடைக்காதிருந்தனர். அன்று மன்னன் ஆஸ்கார் உலகு நீத்த நாள்- முதன்முதல் சிறைக்கைதிகள் நிலையைச் சீர்திருத்திய மன்னன் உயிர் நீத்த நாள். இந்நாளில் அவர்கள் கட்டுப்பாடு பின்னும் தளர்ந்தது- ஒருவருடன் ஒருவர் பேசக்கூட அனுமதிக்கப்பட்டனர். அதனை அவர்கள் பயன்படுத்திய வகை விசித்திரமாயிருந்தது- அவர்கள் மாண்ட மன்னனைப் பழித்துத் தூற்றினர்! “மன்னன் நீதியுடையவனல்ல. நீதியுடையவனாயிருந்தால், நம்மை விடுவித்திருப்பானல்லவா?” என்றான் ஒருவன். மற்றொருவன் “ஒளிந்து திருடுகிற நம்மை விடுவித்துப் பட்டப் பகலில் கொள்ளையடிப்பவர்களையல்லவா அடைத்து வைக்க வேண்டும்?” என்றான். “உண்மையான குற்றவாளிகள் உள்ளேயுமில்லை, வெளியே யுமில்லை. நம்மை அடைத்து வைத்துத் தொல்லைபடுத்துகிற இந்தக் காவலாளிகளை விடக் கொடியவர்கள் கிடையாது. அவர்களை அடைத்து வைத்துத் தண்டிக்க வேண்டும். நாம் காவலாளிகளாயிருந்து அவர்கள் பழியை அவர்களிடமே காட்டவேண்டும்” என்றான் மற்றொருவன். வா.கை. 65 ஒன்றும் பேசவில்லை. அவனுக்கு யார் மீதும் கோபமில்லை. பழி வாங்கும் உணர்ச்சியுமில்லை. அவன் சிறையைத் துன்பமென்று கூட எண்ணவில்லை. நாடிய இன்பத்திலிருந்து அது தன்னை அடைத்து வைக்கிறது என்று மட்டும் எண்ணினான். விடுமுறை ஓய்வு நாள் மாலையில் அவன் குன்றின் மீது உலவினான். அங்கே மலர்ச் சோலையாக இல்லாவிட்டாலும் பச்சைத் தழையாக ஏதேனும் இருந்தால்கூட அவன் வெம்பிய உள்ளத்துக்கு ஆறுதலாக இருக்கும். ஆனால் குன்று ஒரு வற்றல் பாறையாகத்தான் இருந்தது. அவன் தழை இலைகளைப்பற்றி உள்ளத்தில் கனவு கண்டுகொண்டே கடற்கரையடுத்து உலவினான். மலை தராத வளத்தை அலைகள் தந்தன. ஒரு பச்சை யிளங்கொப்பு இலையும் தழையுமாய் மிதந்து கரையில் ஒதுங்கிற்று. அவன் அதைப் பாறையில் கொண்டுசென்று நட்டுவைத்தான். மாலை வெயிலில் அதன் நிழல் நீண்டு படர்ந்தது. அதில் அவன் படுத்துக் கனவு கண்டான். பச்சையிலையின் மணம் அவன் மூச்சுடன் மூச்சாக உடலில் உலவிற்று. காற்றில் அது அலையும் ஓசை அவன் செவியின் வழி உள்ளத்தில் சென்று பாட்டாய் இசைத்தது. பாறை! பாறை! பாறை; உள்ளங் கொள்ளா வற்றற் பாலை!! சேறு! சேறு! சேறு! அருவருப் பூட்டும் முடைநாறும் அளறு!! இவையே நாளை சோலை! சோலை! சோலை! பசுந்தழை, பொன்மலர் இன்கனிப் பொழிலே!! பாட்டை யார் பாடினார்கள்? அது எப்படி உறக்கத்தில் கனவில் தனக்குக் கேட்டது? எதுவும் அவனுக்குத் தெரியாது. அதன் பொருள்கூட அவனுக்குத் தெளிவாய் விளங்கவில்லை. ஆனால் பாறை, சேறு, சோலை என்ற சொற்கள் அவன் உள்ளத்தில் பதிந்தன. பாறையை வெறுத்தது போலவே அவன் சேற்றையும் வெறுத்தான். சோலையே அவன் கனவு. பாறையும் சேறும் சோலை யாகுமா? ஆவது எப்படி? எண்ண அலைகள் அவனை உணர்வுலகுக்கு இழுத்து வந்தன- பாறை பாறையாகத்தான் இருந்தது. அவன் கனவுக்குக் காரணமான பசுங்கொம்புகூடச் சற்று வாடித்தான் இருந்தது. அடுத்த நாள் ஆவலுடன் மாலையில் அவன் அப்பக்கம் எட்டிப் பார்த்தான். கொம்பு முற்றிலும் உலர்ந்து போய் விட்டது. அவன் மீண்டும் துன்பத்தில் ஆழ்ந்தான். பழைய வாழ்க்கை மீண்டும் தொடங்கிற்று. இது நெடுநாள் நீடிக்கவில்லை. ஒரு புது மாறுதல் ஏற்பட்டது. சிறைக் கைதிகள் சிறைக்கூடத்தை விட்டுப் பகல் நேரங்கள் தோறும் கொண்டு செல்லப்பட்டனர். வற்றற் பாறையை விட்டு நெடுந்தொலை கொண்டு செல்லப்பட்டனர். நகர்ப்புறத்திலுள்ள ஒரு பழைய குளம் சேறும் கூளமும் படிந்து நாறிக்கிடந்தது. கைதிகள் அதைத் தூர்த்தெடுக்கும்படி ஆணையிடப்பட்டனர். சேறு, அழுகிய இலை தழைகள், உடைந்த கலங்கள் பக்கத்திலுள்ள மெழுகுதிரிச் சாலையிலிருந்து வழிந்தோடிய கொழுப்பின் அழுகிய இழுதுக்குழம்பு, மற்றொருபுறமிருந்து மருந்துச் சரக்குச் சாலையின் நெடிவீசும் செத்தை, தோல் தொழிற்சாலையின் தோல் துணுக்குகள், வண்ணார் சேரியிலிருந்து வந்த சவுக்கார நீரழுக்கு, தையல் கடை களிலிருந்து எறியப்பட்ட கிழிசல் கந்தல் கூளங்கள், ஊர்ச் சாக்கடைச் சேறு, நீரில் விழுந்திறந்த நாய், பூனை, எலிகளின் பலபடி மாறுபட்ட தோல் தசைகள்- இங்ஙனம் நகரின் அழுகல் பொருட்காட்சி சாலையாகக் குளத்தின் வண்டல் விளங்கிற்று. சேறுகளை வண்டிகளில் நிரப்பினர். இதை எதற்கு, எங்கே கொண்டு போகின்றனர் என்று கைதிகள் வியப்புற்றனர். அவை யாவும் அவர்கள் சிறைக்கூடத்துக்கு வெளியிலுள்ள வற்றற் பாறையிலேயே கொட்டப்பட்டது. ஊர் திருந்துவதற்காகத் தங்களை உழைக்கவைத்து, அதன் அழுக்கைத் தங்கள்மீதே எறிகிறது இந்த நன்றி நேர்மைகெட்ட அரசியல் என்று பல கைதிகள் முணுமுணுத்தனர். வர வர ஊரில் அழுக்கு அகன்றது. சிறையின் வற்றற்பாறை மலை சேறுமலையாயிற்று. நம் சிறையை நரகமாக்குகின்றனர் என்றனர் கைதிகள். ஆனால் வா. கை. 65-க்குப் பசுங் கொம்பின் நிழலிலிருந்து தான் கேட்ட பாடல் நினைவுக்கு வந்தது. பாறை! பாறை! பாறை; உள்ளங் கொள்ளா வற்றற் பாலை!! சேறு! சேறு! சேறு! அருவருப் பூட்டும் முடைநாறும் அளறு!! இவையே நாளை சோலை! சோலை! சோலை! பசுந்தழை, பொன்மலர் இன்கனிப் பொழிலே!! ஆம். பாறை, பாறை, பாறை! அது இப்போது சேறு, சேறு, சேறு ஆகிவிட்டது. ஆனால் இது தீமையை இரட்டிக்கவல்லவோ செய்தது? முன் நல்ல காட்சியில்லை. நல்ல காற்றிருந்தது. இப்போது நல்ல காட்சியுமில்லை. நல்ல காற்றுமில்லை. முன்னில்லாத அருவருப்பான தோற்றமும் முன் இல்லாத நாற்றமும் வந்தடைந்திருக்கிறது. அதுவும் இத்தனையையும் அகற்றிய உழைப்பாளர் உழைப்புக்கு நன்றியாக. அவன் மனம்கூடக் கசப்புற்றது. பாட்டின் மூன்றாம் பகுதி, ‘சோலை, சோலை, சோலை! என்பதை அவன் நினைத்துப் பார்க்க மறந்தான். இளைஞனாக வந்த வா. கை. 65 இப்போது கிழவன் ஆய்விட்டான். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு சிறையில் கழித்துவிட்டான். வெளியிலிருந் திருந்தால் இளந்தளிர் தழைப்பது போல, தழைத்து மலர்ந்து கனி வளந் தருவதுபோல, அவனும் மணவாழ்வு, மக்கள் மழலைச் சொல்லின்பம் பெற்று வாழ்வின் வளமும் பெருக்கமும் அடைந்திருக்கலாம். ஆனால் அவன் பாலைநிலக் கற்பாறையாக வாழ்ந்தான். வயதானதால் வா. கை. 65-க்கு இப்போது சாக்குத் தைக்கும் வேலை தரப்பட்டது. வேலை குறைந்தது, ஆனால் அவனுக்கு அதில் நன்றியுணர்ச்சி ஏற்படவில்லை. வெறுப்பாலும் மனக்கசப்பாலும் அவன் உள்ளமும் கல்லாய்ப் போயிருந்தது. சிறையில் சமயப் பணி செய்யும் குருக்கள் ஒரு தடவை சிறைக்கு வந்தார். செய்த குற்றத்திற்கு வருத்தந் தெரிவிக்கும் கைதிகளையெல்லாம் விடுவிக்கும்படி அரசியலார் தீர்மானித்திருந்தனர். மற்றக் கைதிகளெல்லாம், தாங்கள் குற்றம் செய்ததை ஒத்துக் கொள்வதாகவும், அதற்கு வருந்துவதாகவும் கூறி மன்னிப்புக் கேட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்படும்படி உத்தரவு வந்தது. வா.கை. 65-னிடம் குருக்களுக்கு எவ்வளவோ இரக்கம் ஏற்பட்டது. இப்போது அவன் தண்டனைக் காலம் அரை நூற்றாண்டு கழிந்து ஐந்தாண்டு ஆகிவிட்டது. ஆனால் கைதியின் மனம் வயிரமாகியிருந்தது. அவன் தன் குற்றத்i ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. மன்னிப்புக் கோரவும் மனம் இடந்தரவில்லை. தன்னை இத்தனை நாள் அடைத்து வைத்து வதைத்தது குற்றமல்லவானால், தான் ஒரு மனிதனைக் கொன்றது என்றபடி குற்றமாகும் என்று அவன் உள்ளூரக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் கல் மனத்தை உடைப்பதற்காகத்தானோ என்னவோ அவன் பாதையில் கல் உடைத்துப் போட அனுப்பப்பட்டான். அவன் கல்லை உடைத்து நெடுநாளாயிற்று. முதலில் அவன் வேலையை விரைந்து, ஆனால் வெறுப்புடன் செய்தான். உடல் சோர்ந்தது. ஆனால் உள்ளத்தின் வெறுப்பும் உள்ளடக்கிய வெஞ்சினமும் அவனுக்குப் புதுத் தெம்பு தந்தது. உலகின்மீதுள்ள கோப முழுவதையும் உலகைப் படைத்த கடவுள்மீதுள்ள வெப்ப முழுவதையும் அவன் கல்லின்மீது காட்டினான். அவனுடன் பல தொழிலாளர் உழைத்தனர். கூலிக்கு உழைக்கும் அவர்கள் கூலியில்லாமல் அவன் உழைக்கும் வேகம் கண்டு நடுங்கினர். ஆனால் அவன் மனம் மெல்ல மாறிற்று. அவன் உடைத்தது சிறு கற்களை. ஆனால் பழைய பாறையருகில் பெருங்கற்களை உடைத்தனர் வேறு வேலையாட்கள்- அவர்கள் கூலிபெற்ற தொழிலாளர்களே. அவர்கள் வேலையில் மலை சமநிரப்பாகி வந்தது. அழுக்கு மலையும் சேற்றுக்குழம்பும் இப்போது பாறையருகில் காணவில்லை. வெயிலில் சேறு வற்றிற்று, நாற்றம் அகன்றது. குளிர் காலந்தோறும் பனி அதைப் போர்த்து அதை மண்ணுடன் மண்ணாக்கிற்று, ஆனால் அழுக்கு நல்ல உரமாயிருக்கவேண்டும். பல களைகள், முள்செடிகள் அதில் வளர்ந்திருந்தன. மலை உடைந்து நிலப்பரப்பாயிற்று. அழுக்கு மலை வளமான காட்டுப் புதராயிற்று. மலையின் கற்கள் உறுதியான வண்டிப் பாதைகளாகி, நாட்டில் நூற்றுக்கணக்கான ஊர்களை இணைத்தன. அவன் உள்ளம் பாறையையும் சேற்றையும் மறந்தது. தொழிலாளர் பின்னும் வேலை செய்தனர். புதர்க்காடு வெட்டித் தள்ளப்பட்டது. பாறை அகற்றப்பட்ட வெளியில் அதன் மண் தூர்த்துத் தள்ளப்பட்டது. அதில் படிப்படியாக நிழல் மரங்கள், பூஞ்செடிகள், காய்கறித் தோட்டங்கள் நிரம்பின. அது இனிய சோலை வனமாயிற்று. சிலந்திக் கட்டடம் அழகுபடுத்தப்பட்டது. அதன் எட்டுக் கால்களும் தாமரைமலரின் எட்டு இதழ்கள் ஆயின. அருகே சிறிதுசிறிதாகப் புதுக் கட்டட அமைப்புக்கள் ஏற்பட்டு எட்டு இதழ் எண்பது இதழாயிற்று. நடுக் கட்டடம் தாமரைமலரின் பொருட்டாயிற்று. இனிய வண்ணங்கள் தீட்டப் பட்டன. வா. கை. 65 இருந்த அறை நீங்கலாக மற்றவற்றில் பல அரசியல் அரங்கங்கள் ஒவ்வொன்றாகக் குடியேறின. வா.கை. 65 இவற்றைக் கண்டு வியப்புற்றான். அவன் மட்டும் இன்னும் மாறவில்லை. தன்னை என்ன செய்யப் போகிறார்களோ என்று மலைப்படைந்தான். ஆனால் எதிர்காலம் பற்றிய கவலை அவனுக்கு இல்லை. சிறைக் கூடம் அவனுக்கு இப்போது சிறைக்கூடம் அல்ல. அவன் விரும்பிய சோலைவனங்களின் நடுவேயுள்ள ஒரு மாளிகையாக அது காட்சியளித்தது. அவன் சிறைக் கைதிகளைத் தவிர, இதுவரை யாரையும் பார்த்த தில்லை. ஆகவே ஒருநாள் ஒரு இளம்பெண் ஒரு கூடையுடன் வந்தது கண்டு அவன் ஒன்றும் தோன்றாமல் விழித்தான். ‘தாத்தா’ என்றது குழந்தை. ‘நீ யாரம்மா?’ என்று அன்புடன் கேட்டான் அவன். “நான் உன் பேர்த்தி!” அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நீ சிறையிலேயே காலம் எல்லாம் கழித்துவிட்டாய். என் தாய் என்னை இங்கு வரச்சொன்னாள். நீ அவள் பெரியப்பாவாம்” என்றாள் அவள். தானும் ஒரு மனிதன் என்பதை அவன் இதுவரை மறந்திருந்தான். தனக்குக் குடும்ப வாழ்வு இல்லாவிட்டாலும், தான் பிறந்த குடும்பம் பெற்றுப் பெருகி வாழ்கிறது என்ற எண்ணம் அவன் உள்ளக் கனிவைப் பெருக்கிற்று. “நீ எப்படி இங்கே வந்தாயம்மா? எதற்காக வந்தாய்?” என்று அவன் கேட்டான். “உனக்கு இன்னும் தெரியாதா, தாத்தா, இப்போது இது சிறைக்கூட மல்ல. இதிலேயே அரசாங்க நிலையங்கள் சிலவற்றைக் கொண்டு வந்துவிட்டார்கள். நீயும் இப்போது கைதியல்ல. இந்த அரசாங்கக் கட்டடத்தையும் தோட்டங்களையும் மேல்வேலை பார்க்கும் வேலைக் காரர்களுள் உன்னை ஒருவனாக்கியிருக் கிறார்கள்” என்றாள் சிறுமி. அத்துடன் அவள் கூடையிலிருந்து சிற்றுண்டிகளும் பாலும் பழமும் எடுத்துவைத்து உண்ணும்படி உபசரித்தாள். அவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை. ஆனால் அவன் சிறை வந்தபின் வாழ்க்கையில் முதல் தடவையாகக் கனிந்த உள்ளத்துடன் உண்டுகளைப்பாறினான். அன்று அவனுக்குப் புதிய ஆடை தரப்பட்டது. மாலையில் பல நன்மக்களும் பெருமக்களும் கூடிய கூட்டத்தில் அவன் கொண்டுவரப்பட்டு, தனி மதிப்புடன் தனி இருக்கையில் அமர்த்தப்பட்டான். “சிறைக்கூடங்கள் இனி தண்டனைக் கூடங்களாக இருக்கக் கூடாது. தீமையைத் தடுத்து நன்மையை வளர்க்கும் அறக்கூடங் களாக இருக்கவேண்டும். நம் புதிய மன்னர் பழைய முறையிலமைந்த சிறைக் கூடங்களை ஒழித்திருக்கிறார். அதன் சின்னமாக இந்தக் காட்டுச் சிறைக்கூடம் நல்ல நாட்டு மலர்த் தோட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதில் தேவைக்கு மேற்பட்ட தண்டனையை அரை நூற்றாண்டுக்கு மேலாய் பொறுமையுடன் தாங்கிய ஒரு நல்லானை இப்போது இங்கே காண்கிறீர்கள், நாடு திருந்திவிட்டது. முன்னைய தீங்குகளை நம்மைப்போல மறந்து, நம் புது வாழ்வில் நம்முடன் ஒத்துழைக்கும்படி முதுமையடைந்தும் பொறுமையிழக்காத இந்நல்லானை எல்லாரும் கேட்டுக் கொண்டு, எல்லார் சார்பாகவும் அவருக்கு இந்தப் பரிசளிக்கிறேன்” என்று ஒரு பெருமகன் பேசினார். வா.கை. 65 இப்போது நன்மகனாக மாலை சூட்டப் பட்டான். அவன் கையில் அவன் உற்றார் உறவினருடன் நல்வாழ்வு வாழ உதவும்படி நூறு வெள்ளிகள் அடங்கிய பை தரப்பட்டது. மக்களிடம் தன் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளும்படி அவன் கோரப்பட்டான். அவன் மனம் மகிழ்ந்தது. நா எழவில்லை. பலர் முன் பேசவேண்டிய நாள் வரும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை. ஆயினும் அவன் கனவில் கேட்ட பாட்டு அவன் நினைவிற்கு வந்தது. அதை அவன் பாடினான்: பாறை! பாறை! பாறை; உள்ளங் கொள்ளா வற்றற் பாலை!! சேறு! சேறு! சேறு! அருவருப் பூட்டும் முடைநாறும் அளறு!! இவையே நாளை சோலை! சோலை! சோலை! பசுந்தழை, பொன்மலர் இன்கனிப் பொழிலே!! 2. புயலில் பூத்த புதுமலர் தென்றலுக்கே ஆற்றாத பூங்கொம்பு திடுமெனப் புயலுக்கு ஆளாயிற்று. பூங்கொம்பு மரத்திலிருந்து ஓடித்தெறியப்பட்டது. அது உடனே பூ வேறு, காம்பு வேறாயிற்று. மரங்கள் சாய்ந்தன. பூங்காவனம் புயற் பாலைவனமாயிற்று. தழை குழைகள் குப்பை கூளங்களாகக் கிடந்தன. மலர்கள் சருகுகளாயின. மலரிழந்த பூங்கொம்புக்கு இப்போது எதுவுமே அடையாளம் தெரியவில்லை. தான் ஒரு பூங்கொம்பு என்பதையே அது மறந்துவிட்டது. அவள் இப்பூங்கொம்பின் நிலை அடைந்து தவித்தாள். துன்பத் தீ அவளைச் சருகாக்கிற்று. அவள் உணர் விழந்தாள். அத் துன்பத்தைக் கூட அவள் உணர முடியவில்லை. அவள் கண்கள் பார்த்தறியாத காட்சிகள்! மனிதர்களின் தலைகள் கிடந்தன, உடலில்லை! உடல்கள் கிடந்தன, உறுப்புக்கள் கிடந்தன, தலை இல்லை! செங்குருதி எங்கும் சிந்திக் கிடந்தது- அதில் குடல்கள் மிதந்து துவண்டன! எரிந்த கரிக்கட்டைகள் ஒருபுறம்- உடைந்த கூளங்கள் ஒருபுறம்- புகைநாற்றம் ஒருபுறம்- பிணங்களின் முடை நாற்றம் ஒருபுறம்! கண்ணுக் கெட்டியவரை வேறு எதுவுமே தென்படவில்லை. இருள் சூழ்ந்திருந்தது. அவள் கண்கள் சுழன்றன. அவளுக்கு எதுவுமே புலப்படவில்லை. தான் இருப்பது எங்கே, காண்பது என்ன என்பதையே அவள் அறிய முடியவில்லை. அவள் மங்கிய கண் பார்வையில் ஏதோ ஒரு உருவம் அவளை நோக்கி வருவதுபோன்றிருந்தது. ஆனால் அவளால் அசைய முடியவில்லை. உருவம் அவளருகில் வருமுன்னே வேறு திசையில் திரும்பிற்று. கீழே கிடந்த தசைக் குப்பையை அது கிளறிற்று. ஒன்றொன்றாகப் பிணங்களைப் புரட்டிற்று. ஒன்றை இழுத்துத் தன் அருகே கொண்டுவந்து வைத்து அது ஊளையிட்டது. அவள் கண்கள் இப்போதுதான் கண்டன- அவ்வுருவம் அவள் நாய் என்று! அவள் உணர்வு இப்போதுதான் வந்தது- அது இழுத்து வந்த தசைப்பிண்டம் தன் கணவன் என்று அவள் உணரலானாள். அவள் அலறினாள், துடித்தாள். அவள் உள்ளத்தில் இப்போதுதான் உணர்வு பாய்ந்து வந்தது- தான் யார், தன் துயர் என்ன என்ற எண்ண அலைகள் இப்போதுதான் அவள் உள்ளத்தில் எழுந்தன. அவற்றின் தாக்குதல் தாளாமல் அவள் மீண்டும் உணர்விழந்தாள். அன்று காலையில்தான் அவள் தன் வீடுவிட்டு, தன் ஊர்விட்டு அயலூரிலுள்ள தன் தந்தை வீடு சென்றிருந்தாள். நேற்றிரவுதான் நிலவொளியில் கணவருடன் அவள் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தாள்- வீட்டில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. கணவன் போரைப் பற்றிப் பேச்செடுத்தான். பகைவர் படைகள் விரைந்து முன்னேறி வருகின்றன, போர் நெருங்குகிறது என்று அவன் கூறியதுமே ‘அவள் அப்படியா, வந்தால் வரட்டுமே, நமக்கு என்ன? என்று கூறியிருந்தாள். கணவன் போரின் கொடுமைகளை மனைவியின் உள்ள மறிய விரித்துரைக்க அரும்பாடுபட்டான். ‘வீரர்களுக்குக்கூட அச்சந்தருவது போர். பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள் அதன் கொடுமைகளைத் தாங்க முடியாது’ என்று அவன் எச்சரிக்க முனைந்தான். அவள் குழந்தையை நினைத்து உடனே ஓடிப்போய்ப் பார்த்தாள். போர்க்காற்று அதன்மீது படவில்லை என்று சற்றுத் தேறுதல் அடைந்தாள். அவள் பெண், அவளைப்பற்றிய அச்சம் இல்லை, அவள் கணவனு டனிருந்தாள். குழந்தை பிள்ளைப் பருவத்திலிருந்தது. போர் வந்தால் அதை மடியில் எடுத்து வைத்துக் கொள்வது என்று அவள் திட்டமிட்டுக் கொண்டாள். ஆனால் அவள் தந்தை முதியவர். முதியவர்களுக்கும் போர் அச்சந் தருமாமே. அவரை எப்படியாவது காக்க வேண்டுமென்று அவள் துணிந்தாள். பகைவர் தெற்கிருந்து வருகிறார்கள். தந்தை ஊர் தெற்கேதான் இருக்கிறது. இது அவள் கவலையைப் பெருக்கிற்று. கணவன் தொழிலகம் சென்றிருந்தான். அவனிடம் அவள் சொல்லவில்லை. குழந்தையை வைத்துக்கொள்ளும்படி வேலைக்காரியிடம் சொன்னாள். உச்சிவேளை கணவன் வீடு திரும்புமுன், தந்தையின் ஊர்சென்று அவரைப் போர்ப் புயல்பற்றி எச்சரித்துவிட்டு வர அவள் புறப்பட்டாள். அந்தோ, போர் என்பது காற்று, வெயில் போன்ற ஒரு கொடுமை என்றுதான் அவள் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ஆனால் அதன் மெய்யுருவத்தை அரை நாளைப் பொழுதுக்குள் அவள் வேறு எவரையும் விட நன்கு உணர்ந்து கொண்டுவிட்டாள்! அவள் போகுமுன்பே அவள் தந்தையிருந்த ஊர் எதிரி கைப் பட்டுவிட்டது. அவள் அங்கே போக முடியவில்லை. அவள் வேகமாக ஊர் திரும்பினாள். திரும்பி வரும்போது ஊரையே காணவில்லை! வீடுகள் எல்லாம் எரிந்தும் இடிந்தும் கிடந்தன. தெருக்களையே அடையாளங்கண்டுபிடிக்க முடியவில்லை. கையிழந்தவர், காலிழந்தவர ஆங்காங்கே அலறினர். அவள் கேள்விகளுக்கு அவர்கள் எப்படி பதில் கூற முடியும்! சிலர் ஓடிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பேச, மூச்சு விடக்கூட நேரமில்லை. எரிந்தணைந்த தீக்கட்டைகள், குருதியில் மிதந்த தசைப்பிண்டங்கள்தான் அவள் முன் ஆர அமரப் பதில் கூறவேண்டிய நிலையில் இருந்தன. ஆனால் அவை கூறின - அவள் திகைக்குமளவுக்கு- உணர்வு இழக்குமளவுக்குப் போரின் உண்மை உருவத்தை அவளுக்கு எடுத்துக் கூறிக் கொக்கரித்தன. தன் கணவன் என்ன ஆனான்- தன் அருமைக் குழந்தை என்ன ஆயிற்று? யார் கண்டார்கள்! கணவனை எங்கே தேடுவது? குருதிக் குப்பையிலா? குழந்தையை எங்கே தேடுவது? எரிந்து கருகிய சாம்பலிலா? அவள் கேள்விகளே அவள் தொண்டையை அடைத்தன. அவள் எண்ணங்களே அவள் இதயத்தை அடைத்தன. அவள் ஒரு பிணத்தின்மீது தடுக்கி விழுந்தாள். அவள் உணர்விழந்தாள். எவ்வளவு நேரம் அவள் உணர்விழந்து கிடந்தாள் என்று கூற முடியாது. கண்மூடி உணர்விழந்து கிடந்த அவள் கண்கள் நெடுநேரம் சென்று திறந்தன. ஆனால் அப்போதும் உணர்வு தன்னிலை அடையவில்லை. தன் முன் வந்த நாயை அவள் நாய் என்று உணர்ந்தது அதனாலேயே. அவள் முன்னிலையில் கிடந்த பிண்டம் அவள் கணவனாயிருக்க வேண்டும்! இதைக் குறித்துக் காட்டியது அந்த நாய்தான். முகத்தில் அவன் அடையாளமே இல்லை- அது முகமாயில்லை. குருதியும் தசையும் குழைந்த ஒரு குழைவா யிருந்தது. ஆனால் அது அவன் முகம்தான் என்பதை அவள் இப்போது காணமுடிந்தது. அவன் தனிச் சிறப்பான பசிய பொன்நிற முடிகள் இதைச் சுட்டிக்காட்டின. பொன்நிற முடி மாறாதிருந்தது; முகம்...! அவளால் மேலே எதுவும் எண்ண முடியவில்லை. அவள் மீண்டும் சோர்ந்து விழுந்தாள். துன்பத்தை மறைப்பது மறப்பு ஒன்றே. நினைவும் உணர்வும் அதைப் பன்மடங்கு பெருக்குபவை. அவள் உணர்விழந்த போதெல்லாம் அதை மறந்துகிடந்தாள். ஆனால் உணர்வு வந்ததும் துன்பம் வட்டியுடன் மீண்டது. கணவனைப்பற்றிய துன்பம் அவளைச் செயலற்றதாக்கி யிருந்தது. ஆனால் திடுமென அவள் நினைவு குழந்தைமீது சென்றது. குழந்தையும் கணவன் கதியை அடைந்து விட்டதா? அவள் நாடி நரம்புகளில் புதிய துடிப்புத் தோன்றிற்று. அது தாய் பிள்ளையை எண்ணித் துடிக்கும் துடிப்பு. அவள் தெருத் தெருவாக அலைந்தாள், தெருவின் அடையாளம் தெரியாதபடி! வீடு வீடாகப் புகுந்து துருவித் தேடினாள். வீடும் வீட்டு அறைகளும் அடையாளம் தெரியாத நிலையில், தன் வீடுபோலத் தோன்றிய ஓரிடம், முற்றிலும் எரிந்து சாம்பல மேடாய்க் கிடப்பது கண்டாள். அவள் உள்ளம் மீண்டும் வெறிச்சிட்டது. அவள் பேயறைந்தவள் போலச் சமைந்து நின்றாள்- பின் மீண்டும் அலறினாள், துடித்தாள், புலம்பினாள்- இறுதியில் துன்பம் வெறியாயிற்று! வெறிச் செயலில் தன்னைப் புதைக்க விரும்பிற்று. குழந்தையைக் காணத் துடித்த கண்களைத் தாண்டி, அதனைத் தேடக் கைகள் துடித்தன. எங்கே தேடுவது? சாம்பலில்தான்! அவள் சாம்பலில் மண்டியிட்டு உட்கார்ந்து, சாம்பலைக் கிளறித் தோண்டினாள். அம் முயற்சி ஒன்றே அவளுக்கு ஆறுதலாயிருந்தது. அவள் பரபரப்புடன் ஓய்வொழிவின்றித் தோண்டினாள். அவள் குனிந்த தலை நிமிராமல் தோண்டினாள்- உள்ளே குழந்தை சாம்பலுக்குள்ளிருந்து தலை நீட்டிப் புன்முறுவலுடன் வெளிவரும் என்ற நம்பிக்கை இருந்தால் எப்படி ஆவலுடன் தோண்டுவாளோ, அவ்வளவு ஆவலுடன் சாம்பலை ஒதுக்கிக் குழியை ஆழமாகவும் அகலமாகவும் ஆக்கித் தோண்டினாள். குழி அரையளவு ஆழமாயிற்று, அவள் அதன் உள்ளிறங்கித் தோண்டினாள். நாற்புறமும் சாம்பல் உதிர்ந்தது. அவள் இன்னும் அகலமாக, இன்னும் ஆழமாகத் தோண்டினாள்; குழியின் பக்கம் சரிந்து தன்னை மூடிவிடும் என்ற கவலையுமில்லாமல் தோண்டினாள். குழி அவள் தலை தவிர உடல் முழுதும் மறைத்தது. அவள் இன்னும் அதனடியில் சாம்பலைப் பறித்தாள். அவள் கைகள் ஓய்ந்தன. நகக்கண்கள் தேய்ந்தன. கட்டையும் குச்சியும் கற்களும் பீறிக் கைகள் குருதி தோய்ந்தன. பின்னும் அவள் உளம் சோராது வேலையில் முனைந்து நின்றாள். ஆனால் அழிவிடையே அவள் தன் இன்னுயிரின் நகைமுகத்தைத் தேடி அலைக்கழிவுற்ற அதே வேளையில், அந்த நகைமுகம் அவளை, அவள் நகைமுகத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. பக்கத்திலேயே அவளை நாடி நகர்ந்து கொண்டிருந்தது. பிணத்தின் குவியலுக்கிடையே அக்குழந்தை ஒரு சிறு பிணமாய்க் கிடந்தது. அதன் கால் ஒன்று கட்டைகள் விழுந்து நைந்திருந்தது. குருதி ஒழுகி அது குற்றுயிராகக் கிடந்தது. காலைமுதல் மாலைவரை அதற்கு உணவு இல்லை. நாவரட்சி தீர நீர் அளிப்பாரில்லை. அது நோய் பொறுக்காமல் அழுதுழுது ஓய்ந்தது. பிணங்களைத் தடவித் தடவிப் பார்த்து அவற்றில் பேச்சும் மூச்சும் இல்லாதது கண்டு வியப்பும் மலைப்பும் அடைந்தது. பின் பசி, நோவு, நீர் வேட்கை தாங்காமல் தனக்குள்ளாக மறுகிற்று. யாரும் கவனிப்பாரில்லை. அக்குழந்தைக்கும் உலகில் ஒரு மாறுதல் ஏற்பட்டது என்பது தெரிந்ததுதான். தேடாமல் தன்னைத் தேடிவரும் தாய்முகம்- கேட்குமுன் உணவு தரும் தாயின் கை- நோவுடன் அழுவது கேட்டு அழும் தாயின் அணைப்பு ஆகிய யாவும் இப்போது எப்படியோ எங்கோ போய்விட்டது என்பதை அது உணர்ந்தது. தான் கவனிக்காவிட்டாலும் தன்னைக் கவனிக்கும் தாயைத் தான் என்ன பிழையாலோ இழந்துவிட்டதை அது உணர்ந்தது. அதன் கவலை,. அதன் துடிப்பு, சோர்ந்து தளர்ந்த அதன் ஒரே அவா தாயைத் தேடுவதிலேயே ஈடுபட்டிருந்தது. கால் நடக்க முடியவில்லை- அது நகர்ந்தது; நகரவும், தன் உடலில் வலுவில்லை. ஆனால் தூக்கி எடுத்துச் செல்ல ஆளில்லாததால், அது வேறு வகையின்றி நகர்ந்து வந்தது. ஆனால் அதன் முகத்தில் இன்னும் புன்முறுவல் தவழ்ந்தது. தாயை அது தேடிற்று- அந்த நினைப்பு அல்லது தாய்க்கு அது விடுத்த மறை அழைப்பு புன் முறுவல் வடிவத்தில் அதன் தளர்ந்த முகத்தில் ஒளி வீசிற்று. தாய்மையின் தளர்ந்த முகத்தில் வயது கவலை தந்தது. குழந்தையின் இளமுகத்தில் தளர்விலும் நம்பிக்கை இருந்தது. எங்கிருந்தாவது தாய் முகம் தன்னை நாடி வரும் என்று அது நம்பிக்கொண்டிருந்தது. அது நகர்ந்து குழியை அணுகிற்று. பிணங்களைக் கண்டு அது முதலில் அஞ்சிற்று. ஆனால் அவை அசைவற்றுக் கிடப்பது கண்டபின் அதன் அச்சம் தீர்ந்தது. அதற்குமேல் அஞ்ச அது இன்னும் பழகவில்லை. ஆனால் குழியைக் கண்டு அது இன்னும் அஞ்சிற்று. குழியிலிருந்து தூசியும் சாம்பலும் வெளிவந்தன. காண அச்சம் இன்னும் மிகுதியாயிற்று. குழியினுள் ஏதோ ஒன்று குடைந்து கொண்டிருப்பது கண்டு அது மேலும் அஞ்சிற்று. ஏனெனில் அது உயிருடையது என்று தோன்றிற்று. அதுதன் தாயாயிருக்கக்கூடும் என்று அது தன் கனவிலும் கருத முடியவில்லை- மண்ணைக் கிளறும் மூஞ்சுறு, பெருச்சாளி முதலிய உயிரினங்களையே அது எண்ணிப் பார்க்க முடிந்தது. இவ்வடிவம் அவற்றைப் போல இல்லை- அவற்றைவிடப் பொல்லாத ஏதேனும் விலங்காயிருக்கலாம் என்று எண்ணி அது நடுங்கிற்று. தாய் தற்செயலாகக் குழியிலிருந்து எட்டிப் பார்த்தாள். அவள் தேடிய செல்வம் அவள் முன்னால் நகை முகத்துடன் நகர்ந்து வந்துகொண்டிருந்தது. அவள் ஆவலுடன் வெளியேற முயன்றாள். ஆனால் அவளைக் கண்டதும் குழந்தையின் புன்முறுவல் மறைந்தது. அவள் வெளியேற முயன்றபோது அதன் முகத்தில் பேயைக் கண்டது போன்ற அச்சம் தென்பட்டது. தாயைத் தேடிய பிள்ளை தாயைக் கண்டு அஞ்சிற்று! அவள் உருவம் இப்போது அந்த நிலை அடைந்திருந்தது. களையிழந்த முகம், தாறுமாறாகக் கிழிந்த ஆடை, கணவன் உடலின் குருதி தோய்ந்த உடல், இவ்வளவுக்கும் மேலாகச் சாம்பலும் புழுதியும் படிந்த தோற்றம்-இவற்றிடையே குழந்தை அவளை எப்படித் தாய் என்று, மனித வடிவம் என்று அடையாளம் காண முடியும்? சாவினிடையே சிரித்து வந்த குழந்தை தன்னைக் கண்டதும் அஞ்சுகிறது. அதை அவள் அணுகினால், அச்சமே அதைக் கொன்றுவிடும் என்பதை அவள் உணர்ந்தாள். தாய் உள்ளம் தாய்மை அவாவைக் கொன்றது. குழந்தை வாழும், வாழட்டும்! தாயில்லாமலே சமூகத்தில் தாய்மையைத் தேடி உயிர் காணும், காணட்டும்! அவள் குழந்தையின் அச்சத்தைப் போக்கத் தன்னை மீண்டும் குழியில் அமிழ்த்த எண்ணினாள். அவள் மீண்டும் குழியினடியில் தோண்டினாள். இப்போது குழந்தையைப் பற்றிய கவலையின்றித் தோண்டினாள். குழி ஆழ்ந்தது. குழியின் பக்கங்கள் சரிந்தன. அவள் உடலில் கடைசித் துளி ஊக்கம் இருக்கும் வரை ஆழமாக நிலத்தைக் கிளறிக்கொண்டே அதனடித்தளங் காண முயன்றாள். நிலம் அவளை வரவேற்றது. குழி அவளை முற்றிலும் மூடிற்று. அவள் மாண்டாள். குழந்தை காலத்தின் அழிவு கடந்து, தாய்மையை நாடித் தாயை இழந்தும், நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்திருந்தது. பிணங்களைத் தேடியெடுத்து அடக்கம் செய்ய வந்த தொண்டர்கள், புயலின் அழிவிடையே மீண்டு உயிர் பெற்ற இந்நறுமலரையும் அவற்றினிடையே கண்டெடுத்தார்கள். குழந்தை புதிய உலகில் வாழ்ந்தது. தாய் பழைய உலகின் சாம்பலில் புதையுண்டாள். குழந்தை புதிய உலகின் வாழ்வில் இடம் பெற்றது. அதன் தந்தை அடையாளமற்ற பிணங்களுள் ஒன்றாய், பழைய உலகின் மண்ணுள் ஒரு பிடி மண்ணானான். சாவு கோர நடனம் ஆடிற்று. ஆனால் அதனிடையே புதுவாழ்வு மலர்ந்து புன்னகை பூத்தது. 3. கானாறு மங்கிய நீலநிறமுடைய மலைகள் ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டு நின்றன. இடையே கானாறு ஊடறுத்துக் கொண்டு சென்றது. கானாறு நிலத்தை வளப்படுத்தவில்லை. ஆனால் மக்கள் வாழ்வுக்கு அது வளந்தர முடிந்தது. அதில் மீன்கள் ஏராளம். மீன்பிடிக்கும் உரிமைக்காக இருபுறமும் மலையடிவாரங் களிலுள்ள சிற்றூர்கள் போட்டியிட்டன. மலைகளின் தோற்றத்திலிருந்த போட்டியை இது மெய்யான போட்டி ஆக்கிற்று. ஆற்றின் நடுவே இருந்த பாறை ஒன்று இரண்டு ஊர்களின் மீன்பிடி உரிமைகளுக்கிடையே வழிவழி மரபாக ஒரு எல்லைக் கல்லாகக் கருதப் பட்டிருந்தது. ஆனால் இந்த எல்லைக்கல்கூட அவ்வூர்களினிடையே நட்பை வளர்க்கவில்லை. ஆற்றின் நீரோட்டம் அப்பாறையால் தடைபட்டு, அதன் கீழே ஒரு நீர்த்தேக்கம் ஏற்பட்டிருந்தது. அதில் மீன்கள் இளைப்பாறின. மக்களும் அவற்றை அங்கே ஏராளமாக வலைபோட்டுப் பிடிக்க முடிந்தது. ஆனால் வடபுற அருகு செவ்வாகவும் தென்புறம் வளைந்து மிருந்ததால், தென்புறத்திலேயே மிகுதி மீன் அகப்பட்டது. இதனால் வடபுறத்தாரிடையே பொறாமையும் புழுக்கமும் ஏமாற்றமும் வளர்ந்து வந்தன. பிடித்த மீனில் ஊர்த்தலைவனுக்குப் பாதி மகமை யுரிமை இருந்தது. தென்மலையூரில் தலைவர் ஜக்ரிஸ் என்பவன். வடமலைத் தலைவன் கெர்ஸ்டாப். பாறையின் இந்த ஒருதலை நீதியால் ஜக்ரிஸின் செல்வ வளம் பெருகிற்று. மலைவட்டத்தின் நாட்டாண்மைக் கழகம் வரை அவன் செல்வாக்கு வளர்ந்தது. ஆனால் இந்தச் செல்வாக்கே எதிரிக்கு ஒரு புதிய வகையில் உதவிற்று. பொறித்துறை வல்லான் ஒருவன் ஜக்ரிஸின் எதிரி யானான். அவன் அறிவுரை கேட்டு கெர்ஸ்டாப் பாறையின் ஓரத்தில் ஒரு சக்கரப் பொறியை அமைத்தான். அது வடபுறமுள்ள நீரோட்டத்தின் வேகத்தைக் குறைத்தது. தென்புறமுள்ள ஒழுக்கை மிகுதியாக்கிற்று. இதனால் பாறையின் அநீதி தலைமாறிவிட்டது. வடபுறம் மீன் மிகுதி அகப்பட்டது. தென்புறத்தார் நிலையில் ஏமாற்றம் உண்டாயிற்று. போட்டி பொச்சாப்பு ஆகியவற்றுக்கிடையே வெற்றி தோல்விகள் எப்போதும் நிலையாயிருக்க முடியாது. கெர்ஸ்டாப்பின் வெற்றி அவன் உயிருக்கே உலைவைத்தது. ஜக்ரிஸ் ஆள்வைத்துத் தன் முழு வைரத்தையும் அவன் மீது தீர்த்துக்கொண்டான். அடிகள் உயிர்நிலையைத் தாக்கின. அவன் விரைவில் பாயும் படுக்கையுமாகி, சில நாட்களில் உயிர் நீத்தான். ஜக்ரிஸின் வெற்றி கிட்டத்தட்ட நிலையான வெற்றியாகவே தோன்றிற்று. ஏனெனில் கெர்ஸ்டாப்பின் ஊரார் அவன் முடிவுகண்டு அஞ்சி அடங்கி நின்றனர். உள்ளூரப் பகைமை நிலவிற்று. ஆனால் அது செயலாக மாறவில்லை. கெர்ஸ்டாப்பின் ஒரே மகன் ஓலா இதில் ஈடுபடவேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. அவன் உள்ளத்தை அவன் உறவினரின் அடங்கிய பகைமை சென்று எட்டவும் இல்லை. ஆனால் உள்ளூர இதயத்தின் ஆழத்தில் கெர்ஸ்டாப்பின் ஆட் களுக்கு இருந்த நம்பிக்கையைவிட, ஜக்ரிஸின் ஆட்களுக்கு இருந்த நம்பிக்கை வரவரக் குறையத் தொடங்கிற்று. ஏனெனில், கெர்ஸ்டாப்பின் குடி மதிப்பைக் காக்க ஒரு புதல்வன் இருந்ததுபோல், ஜக்ரிஸுக்குப் புதல்வன் இல்லை. அழகில் சிறந்த இம்பார் என்ற புதல்விமட்டுமே இருந்தாள். அவள் குடும்பத்தின் செல்வ உரிமை காக்க முடியும். ஆனால் மலைநாட்டு வீரப் போராட்டங்களிடையே, குடிமதிப்பை ஒரு வீரப் புதல்வன் காப்பதுபோல, மகளோ மருமகனோ காக்க முடியாது. ஓலாவிடம் மலைநாட்டு வீரனுக்குரிய எல்லாப் பண்புகளும் நிரம்பி இருந்தன. அவனிடம் அந்தசந்தமான உடல்வனப்பும், உறுதி வாய்ந்த உடல் வலுவும் வீரமும் ஒருங்கே பொருந்தியிருந்தன. பதினாறு வயது இளைஞனாயிருக்கும் போதே மலைவாணரும் வியக்கும்படி அவன் ஒரு கரடியைக் கழிகொண்டு தாக்கித் துரத்தியிருந்தான். இவ்வீரத்தின் புகழை அவன் பகைமையற்ற உள்ளமும் களங்கமில்லா நடத்தையும் பெருக்கின. அதன்முன் பகைவர்கள் கூட அவனிடம் தம் உள்ளப் பகைமையைக் காட்ட வெட்க மடைந்தனர். அவன் ஆற்றின் இருபுறமும் இரண்டு மலைகளிலும் தங்கு தடையின்றித் திரிந்து வந்தான். போர் வெறியும் பகைமைப் பூசலும் மலைநாட்டு மக்களுக்கு உடன்பிறந்த குணங்கள். ஆனால் அவர்களுக் கிடையில் இருந்த சில பழக்க வழக்கங்கள் இவற்றைக்கூட அவ்வப்போது மட்டுப்படுத்த உதவின. ஞாயிற்றுக் கிழமைதோறும் கிருஸ்தவ உலகில் வழிபாட்டு உரிமை நாளாகக் கொள்ளப்படுவதுபோல, இம்மலை நாட்டில் சனிக்கிழமை தோறும் காதலர் உரிமை நாளாகக் கொள்ளப்பட்டு வந்தது. சனிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலைவரை எந்த இளைஞனும் குடும்ப மதிப்பெல்லை, ஊரெல்லை, தாண்டி, எந்தப் பெண்ணையும் எவர் தடையுமின்றிக் காதலிக்கலாம். பெண்களுக்கும் இதனால் கெட்ட பெயர் வருவதில்லை. தாய் தந்தையர், உறவினர் ஆகிய எவரும் அதைத் தடுக்க முனைவதும் இல்லை. ஆயினும் இந்த இயற்கைப் பழக்கத்திற்குக்கூட கெர்ஸ்டாப்- ஜக்ரிஸ் குடிகளின் பகைமை பல தலைமுறைகளாகத் தடை விதித்திருந்தது. எல்லாக் கிழமைகளையும் போல, சனிக்கிழமையிலும் எவரும் ஆற்றைக் கடந்து செல்வதில்லை. ஓலா ஊரெல்லையை மதியாததுபோலவே, இந்தப் பகைமையின் எல்லைக் கோட்டையும் மதிக்கவில்லை. அவன் உள்ளத்தில் இம்பாரின் அழகும் அமைதியும் எப்படியோ காதலலைகளை எழுப்பியிருந்தன. தன் தந்தையின் பகைவன் மகள் என்றுகூடப் பாராமல், அவன் அவளைக் காணவும், கண்டு பேசவும் துணிந்தான். ஆனால் புறப்பகைமை இல்லாத இடத்திலும், அகப்பகைமை இக்காதலுக்குத் தடையாகவே இருந்தது. இம்பார் அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் நாட்டத்தைக் கவனித்த ஜக்ரிஸ் குடியினரும் அவனை முறைத்துப் பார்க்கத் தொடங்கினர். எனினும் ஓலா இவற்றைச் சட்டைபண்ணவில்லை. ஆற்றின் இக்கரையிலுள்ள தனி மாளிகையிலிருந்த அவன் கூரிய கண் பார்வை ஆற்றைக் கடந்து இம்பாரின் இல்லத்தையும் அதில் அவள் அறையின் பலகணியையும் துருவித் துருவி நோக்கும். அவள் போக்கும் வரவும் அவன் ஓயாக் கவனத்துக்குரிய செய்திகளாயின. அப் போக்கு வரவுகளை நாளடைவில் அவன் ஒருமுகப்பட்ட தன் கருத்தாற்றலால் அகக்கண் பார்வையாலேயே ஆய்ந்து வரத்தொடங்கினான். அவ்வளவு தொலைவிலிருந்து அவன் அவள் அசைவினால் அவள் உள்ள நிலை, வாழ்க்கைத் தொடர்புகள், இயல்புகள் யாவும் அறிய முடிந்தது. ஜக்ரிஸின் மாளிகை ஆற்றோரமாகவே இருந்தது. இம்பாரின் அறையிலுள்ள பலகணி ஆற்றை நோக்கியே அமைக்கப்பட்டிருந்தது. ஓலா ஒரு சனிக்கிழமையன்று படகில் ஏறி ஆற்றைக் கடந்தான். ஆற்றுப் பக்கத்தில் பாறையும் சுவரும் செங்குத்தாகவும் மிக உயரமாகவுமே இருந்தன. ஆனால் அவன் துணிந்து இரண்டிலும் தாவியேறினான். பலகணியில் அவன் அடுத்தடுத்துப் பலதடவை தட்டினான். இம்பார் உள்ளே இருந்தாளென்பதை அவன் அறிவான். ஆனால் கதவு தட்டியதுகேட்டு யாரும் வந்து திறக்கவில்லை. அவள் தூங்கியிருக்கக் கூடும் என்று நினைத்து அவன் திரும்பி வந்துவிட்டான். ஆனால் அடுத்த சனிக்கிழமையும் அதற்கடுத்த சனிக்கிழமையும் அவன் இது போலவே தொடர்ந்து சென்று பலகணிக் கதவைத் தட்டினான். மூன்றாவது தடவை அவன் முன்கூட்டியே பற்றுக் குறடு, சுத்தி, உளி ஆகியவற்றுடன் சென்றிருந் தான். கதவு தட்டியும், யாரும் திறக்காதது கண்டு, அவன் உளியால் பலகணிக் கதவின் ஆணியைச் சுற்றிச் சீவி, குறட்டால் ஆணியைப் பேர்க்க முனைந்தான். உள்ளே யாவும் கவனித்துக்கொண்டிருந்த இம்பார் கடுஞ்சினத்துடன் பலகணி திறந்து, “யாரது! உனக்கு இங்கே என்ன வேலை! மதிப்பாகப் போய்விடுகிறாயா அல்லது...” என்று அதட்டினாள். ஓலா புன்னகை தவழ அவளைப் பேச்சிலிழுக்க முயன்றும், அவள் கண்டிப்பாக “நீ ஆறுகடந்து வரவேண்டாம்; நான் எச்சரிக்கிறேன், போ” என்றாள். அவன் பேசாது திரும்பிவிட்டான். ஆனால் வாரந்தோறும் இதே போன்ற காதல் படையெடுப்புத் தொடர்ந்தது. இம்பாரின் சீற்றம், கண்டிப்பு, வசையுரை எதுவும் ஓலாவின் முயற்சியைத் தடுக்கவில்லை. அவன் காதல் பற்றிய பேச்சு எங்கும் பரந்தது. ஒருநாள் வழக்கம்போல அவன் கதவைத் தட்டினான். இம்பாரின் தடையை மீறி அவன் உட்சென்று அவளுடன் நயமாக, விடாப்பிடியாக மன்றாடினான். அச்சமயம் திரைமறைவில் காலடிகள் கேட்டன. வேட்டை விலங்கின் அரவங்கேட்ட புலியேறுபோல் அவன் நிமிர்ந்து நின்றான். சிலர் அவனைச் சூழ்ந்து கை ஓங்கத் தொடங்கினர். அடுத்த கணம் அவர்களே திடுக்கிட்டனர். அவன் கைக் குத்துகள் அவர்களை அண்டவிடாமல் துரத்தின. அவன் கண்களில் அனல் தெறித்தது. ஆனால் இம்பாரின் பக்கம் அவன் கண் சென்றதும், அதன் நிறம் மாறிற்று. அவன் அவளைப் பற்றி இழுத்து முத்தமிட முயன்றான். ஆனால் இம்பார் அவனுக்குப் பிடி கொடுக்காமல் விலகியதுடன், அவன் கன்னத்தில் தன் மெல்லிய கரத்தால் ஓரடி அடித்தாள். அவன் அவள்மீது சீறவில்லை. புன்னகையுடன் அதை வரவேற்று, “இது நம் முதல் தொடர்பு. இதுவே என் உரிமையின் முதல் சின்னம்” என்று கூறித் திரும்பினான். திரும்பும் வழியில் இம்பாரின் தந்தை ஜக்ரிஸ் நின்று அவனைத் தடுத்து, “இங்கே, அவ்வளவு எளிதாகத் தப்பி விடலாம் என்று நினைக்காதே; என் குடும்பத்தின் எல்லையில் வந்து எங்களை அவமதித்ததற்குச் சரியான தண்டனை பெறாமல் உன்னை விடமாட்டேன்” என்றான். அவனையும் அறியாமல் அவன் குடும்ப மரபின் பகைமை செயலாற்றிற்று. அவன் தன் காதல் நங்கையின் தந்தை என்பதை அவன் மறந்தான்! அவன் இளமை, வீரத்தின்முன் முதுமை வாய்ந்த ஜக்ரிஸ் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று. “என் காதலுரிமையில் குறுக்கிட்டதற்கு இது- ஒரு குத்து. மறைந்து நின்று வஞ்சகமாக ஆட்களை ஏவியதற்கு இது-ஒரு இடி. என் தந்தையை ஆள்விட்டு அடித்த கோழைமைக்கு இது-ஒரு அடி. என் தந்தையைக் கொன்ற பழிக்கு இது-ஒரு உதை. உன் செல்வ இறுமாப்புக்கு இது-ஒரு குத்து. இவ்வாறாக இடியும் உதையும் குத்தும் சரமாரியாகப் பொழிந்தன. பழிக்குப்பழியாக அவன் ஜக்ரிஸைக் கொன்றிருப்பான். இம்பாரின் அழுகையும் அவள் இடையே வந்து தடுக்க முன்வந்ததும் இதைத் தடுத்தன. இனி இக்கோபச் செயல்கள் ஒவ்வொன்றின் விளைவும் தன்னை அவளிடமிருந்து தொலைவாக்கும் என்ற எண்ணம் அவன் மனநிலையை முற்றிலும் மாற்றியது. வெட்கத்தின் சாயல் அவன் முகத்தில் படர்ந்தது. அவன் பேசாது வெளியேறினான். அன்றுமுதல் அவன் ஆற்றைக் கடந்து வரவில்லை. அதுமட்டுமன்று. அவன் போக்குவரவு எங்கும் குறைந்தது. அவன் கூடியமட்டும் வீட்டிற் குள்ளேயே அடைபட்டுக் கிடந்தான். எவரிடமும் அவன் சிரித்துப் பேசுவதில்லை. அவன் முகத்தில் புன்னகையாடியதை யாரும் பார்த்த தில்லை. இந்த ஒரு நிகழ்ச்சி அவன் இளமைத் துடுக்கை மாற்றிவிட்டது. இம்பாரிடமும் மாறுதலில்லாமலில்லை. ஆனால் அதை எவரும் கவனிக்கவில்லை. அவள் ஆடல் பாடல்களில் கலப்பதை அடியோடு நிறுத்திவிட்டாள். நண்பர் தோழியருடன் உரையாடி மகிழ்வதைக் கூட யாரும் கண்டதில்லை. இம்மாறுதல்களைக் கவனித்த ஒரு சிலர்கூட, அவள் தன்னைப் பற்றிய பேச்சுகளுக்கு நாணியதாக மட்டுமே எண்ணினர். கெர்ஸ்டாப் குடும்பத்தைப் பற்றி அல்லது ஓலாவைப் பற்றி அவள் பேச்செடுக்காதது இயல்பே. ஆனால் எவராவது பேசியதைக் கேட்டாலும் அவள் விலகிவிடத் தொடங்கினாள். இதுவும் வெட்கத்தாலும் வெறுப்பாலுமே என்று பலர் எண்ணினர். எப்படியும் இரு குடும்பங்களின் தொடர்புகளிலும் இனி பகைமை வளர்வது உறுதி என்றுதான் எல்லாரும் நினைத்தனர். இரு குடும்பத் தினரும் உண்மையில் அதற்குத் தம்மைச் சித்தமாக்கிக் கொள்ளவும் தொடங்கியிருந்தனர். ஆயினும் ஓலாவால் இம்பாரை மறந்து இருக்க முடிய வில்லை. அவன் அவளுக்கென்று பல காதற் கடிதங்கள் எழுதினான். ஆனால் கடிதங்களை அனுப்ப வகையில்லாமல் போயிற்று. எவரும் அதற்கு முன்வரமாட்டார் என்பது அவனுக்குத் தெரியும். தானே நேராகப் போகவும் துணிவு வரவில்லை. அது இன்னும் தொல்லையைப் பெருக்கும் என்ற உணர்வு அவ்வெண்ணத்தையே தடுத்தது. கடிதங்களைக் கிழித்தெறிந்துவிட்டுச் செயலற்றிருப் பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவன் கானாற்றின் நீரோட்டத்தினிடம் தன் மனக்குறைகளைத் தெரிவித்தான். மலங்காற்றைத் தூதாக அனுப்பினான். அவள் இருக்கும் திசைநோக்கித் தவங்கிடந்தான். அவள் காணக்கூடும் நிலாச் செல்வனிடம் தன் கண் பார்வையைச் செலுத்தி, அதில் அவள் மதி முக நிழலை உருவகித்துப் பார்த்து மகிழ்ந்தான். இவை தவிர அவனுக்குச் செய்வகை எதுவும் தென்படவில்லை. அவன் தனியே ஒதுக்குப்புற இடங்களில் திரிவான். தனி இடங்களில் நீண்டநேரம் இருப்பான். தனி மொழிகள் கூறுவான். அல்லது வழியில் நின்றும் வேற்றிடங்களில் நோக்கியும் தன்னை மறந்திருப்பான். இவை ஊர்ப்பேச்சை வளர்த்தன. ஆனால் அவன்முன் எல்லாரும் அஞ்சினர். அவனைவிட்டு எல்லாரும் கூடியமட்டும் விலகிச் சென்றனர். காதலால் எப்படியும் நெடுநாள் செயலின்றி இருக்க முடியாது. ஓலா மீண்டும் இம்பாரைக் காண முற்பட்டான். ஆனால் இத்தடவை அவன் ஒளித்துச் செல்லவில்லை. பலர் ஆறிய ஆற்றில் படகேறிக் கடந்தான். தான் செல்லுமிடமும் நோக்கமும் எல்லாருக்கும் ஐயத்துக்கிடமில்லாமல் தெரியும்படி மெள்ள பலதடவை முன்பின் வந்து திரும்பி, சுற்றுவழிகளில் உலாவிச் சென்றான். அவன் எதிர்பார்த்தது- துணிந்து எதிர்பார்த்தது- நடந்தது. ஊரார் சூழ்ந்து அவனைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். எண்ணிக்கை அவனுக்கு எதிராக இருந்தது. அவன் அடிபட்டுத் திரும்ப வேண்டியதாயிற்று. ஆனால் இத் தோல்வியிலும் வெற்றி இருந்தது. இம்மாதிரி வெற்றி ஊருக்கு மதிப்பல்ல; என்றும் அதைக் கையாளவும் முடியாது. ஏனென்றால் அவன் நாள்தோறும் இதையே திருப்பித் திருப்பிச் செய்ய முற்பட்டான். அவன் வீட்டின் விலையுயர்ந்த பொருள்கள் பல அடிக்கடி காணாமற் போயின. அவற்றின் அளவு குறைந்தது. புதிய புதிய உருப்படிகள் வாங்கப் பட்டன. ஆனால் அவையும் வெளியேறிச் சென்றன. எல்லாம் இம்பாரை அடைந்தன என்று கூறத் தேவையில்லை. அவன் தாக்குதல் இம்பாரின் பகைமைக் கோட்டையையும் சீற்றக் கோட்டையையும் துளைத்திருந்தது. இப்போது ஊரடக்கி, ஊரறிய வரும் ஆரவாரக் காதலனை அவள் முற்றிலும் வெறுத்துத் தள்ளத் துணியவும் இல்லை; விரும்பவும் இல்லை. பரிசுகள் இதனாலேயே வரவேற்கப்பட்டன. ஜக்ரிஸின் சீற்றம்மட்டும் இன்னும் மாறவில்லை. ஓலாவின் வல்லமைக் கெதிராகத் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென்பதை அவன் அறிவான். ஆனால் வெளிப்படையாக அவன் முன்னேறி வருவதைத் தடுக்கா மலிருப்பது தன் குடும்பத்திற்கு அவமதிப்பு என்று அவன் எண்ணினான். ஆகவே குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழிபோல அவன் தன் வீட்டைக் காக்க நினைத்தான். இக்காரணத்தால் அடிக்கடி அவன் ஓலாவைக் காண நேர்த்தது. ஒரு தடவை அவன் தன்னாலியன்ற மட்டும் தடுக்க முயன்றபோது மும்முரமான சண்டை ஏற்பட்டது. மறுபடியும் ஓலா தன்னை மறந்தான். ஜக்ரிஸைக் கையால் தூக்கி எடுத்து ஆற்றில் எறிந்து விடலாமா என்று நினைத்தான். ஜக்ரிஸ் இச்சமயம் தன் வலுக்கொண்டமட்டும் அவனைக் கடிக்கத் தொடங்கினான். ஓலா அவனை இறுக்கிப் பிடித்து அழுத்தினான். கிழவன் வலிதாங்கமாட்டாமல் அலறினான். அத்துடன் காலைத் தூக்கி அவனை உதைத்துத் தள்ளிவிடவும் முற்பட்டான். இச்சமயம் ஓலா அவனைக் கொல்லவே இருந்தான். இம்பாரும் அவள் தாயும் எதிர்ப்பட்டதால் அவன் தப்பினான். ஆனால் அவன் விட்டாலும் ஜக்ரிஸ் விட்டபாடில்லை. இன்னது செய்வதென்று தெரியாமல் அவனைச் சிறிதுநேரம் அங்குமிங்கும் எலியைப் பூனை ஆட்டி அலைப்பதுபோல் அலைத்து இறுதியில் சூட்டப்பத்திற்காக அரைத்து வேம்பானையில் வேகவிடப் பட்டிருந்த மாவில் அவனைத் திணித்து வைத்துவிட்டுச் சென்றான். மற்றுமொருமுறை இம்பாரின் பக்கம் நாடமுடியாத நிலை அவனுக்கு ஏற்பட்டது. சீற்றத்தால் தன் காரியத்தைத் தானே கெடுத்துக் கொண்டு விட்டதை எண்ணி அவன் தன்னைத்தானே கடிந்து கொண்டான். அவன் மனநிலை, அவன் நடத்தை ஆகியவை கண்டு அவன் தாய் வருந்தினாள். ஆனால் அவன் அதைக் கவனிக்கவில்லை. தாய் அதுபற்றிப் பேச வாயெடுத்தபோது அவன் எரிந்துவிழுந்தான். கணவனுக்கு அஞ்சி யதைவிட இந்த மலைநாட்டுப் புதல்வனைக் கண்டு அவள் நடுங்கினாள். அவன் சீற்றத்துக்குத் தாயின் அன்புகூட அஞ்சிற்று. ஆனால் எவர் சீற்றத்தையும் சட்டைசெய்யாத ஓலாவை அவன் உள்ளமே சுட்டது. அவன் இப்போது தன்னை வெறுத்த அளவு என்றும் எவரையும் வெறுத்ததில்லை. ஒரு நாளிரவு அவன் சிறிது பணத்துடனும் ஒரு நல்ல குதிரையுடனும் இரவோடிரவாக வெளியேறினான். மறுநாள் அவன் எங்கே சென்றான் என்று எவரும் அறிய முடியவில்லை. சிலநாள் எல்லாரும் தேடினர். சிலநாள் அவன் வரவை எதிர்பார்த்தனர். பின் எல்லாரும் அமைந்து மறந்தனர். கெர்ஸ்டாப் குடும்பத்தில் ஆண் மரபு இருந்த பெருமை தற்காலிகமாகக் குலைவுற்று இருந்தது. இரண்டாண்டுகள் சென்றன. இரண்டு தடவை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடிற்று. இரண்டு தடவை ஆறுபனிப்புயலின் சறுக்கு மேடையாயிற்று. வழக்கம்போல இயற்கை ஆண்டுதோறும் தூங்கி எழுந்தது. ஆனால் ஓலாவின் செய்தி எதுவும் மலைநாட்டை எட்டவில்லை. ஓலா தன் மலைநாட்டு முரட்டுத்தனத்துக்கும் மலை நாட்டுக்கும் ஒருங்கே நீண்ட விடை தந்துவிட்டான். தொலைவில் ஸ்டாக்ஹோம் நகரில் கலைப்பயிற்சிக்கூடங்களில் சென்று அவன் கலைகள் பயின்றான். அரசியல் கழகங்களில் சேர்ந்து அரசியல் நடைமுறைகளில் கருத்துச் செலுத்தினான். தன் முரட்டுக் குணங்கள் இவற்றால் பண்படைய வேண்டும் என்பதே அவன் முனைத்த எண்ணமாயிருந்தது. பயிற்சி காரணமாகவாயினும் சரி விருப்பம் காரணமாக வாயினும் சரி, அவன் இயற்கைப் பண்புகளில் பெருத்த மாறுதல் ஏற்பட்டது மட்டும் உண்மை. வீரத்தின் வெற்றிகளுக்கு ஒரு எல்லை உண்டு. பொறுமை, அன்பு, தியாகம் ஆகியவற்றின் வெற்றியே எல்லையற்ற ஆற்றலுடையவை என்ற புதிய கருத்தமைதி எப்படியோ அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. இரண்டாண்டுகளுக்கு பின் ஓலா திரும்பிவந்தான். அவன் மாறுபாட்டை எல்லாரும் கவனித்தனர். அவன் புதிய தகுதிகளும் விரைவில் வெளிப்பட்டன. ஆனால் இது காலத்தின் செயல் என்றோ நீண்ட வருத்தத்தின் விளைவு என்றோ நினைத்தனர்; அல்லது நகர வாழ்வு, கலைப்பயிற்சி ஆகியவற்றின் பயன் என்று மட்டுமே அனைவரும் நினைத்தனர். மாறுதல் ஜக்ரிஸ் குடும்பத்தின் தொடர்பிலும் ஏற்படக்கூடும் என்று அவர்கள் எண்ணவில்லை. ஓலாவின் புதுப் பண்பு, புதுக் கருத்துக்கள், புதுத் தகுதி அவனுக்கு மாவட்ட வாழ்வில் உயர்வு தந்தன. முதியவனான ஜக்ரிஸுடன் அவன் இப்போது இத்துறையிலும் சரிநிகரானான். இது அவன் குடும்பப் போராட் டத்தின் ஒரு புதிய துறை என்றுதான் எல்லாரும் நினைத்தனர். அதற்கேற்ப ஜக்ரிஸ் பொதுக் காரியங்களில் அவனுடன் முட்டியபோதெல்லாம் மும்முரமான தாக்குதலில் ஈடுபட்டான். ஆனால் ஓலா எல்லோரும் எதிர்பார்த்தபடி எதிர்க்கவில்லை. பின் வாங்கினான் அல்லது ஆதரித்தான். இப்போதும் மக்கள் ‘புலிபாயப் பதுங்குகிறது’ என்று மட்டுமே கூறினர்- புலி பசுவாயிற்று என்று கருதவில்லை. ஒரு நாள் ஜக்ரிஸ் தென்மலையூராருடன் நின்று உரையாடிக் கொண்டிருந்தான். ஓலா அவ்வழி வந்தவன், வியக்கத்தக்க முறையில் அமைதியுடன் அவனை அணுகி “நான் தங்களிடம் கல்லா முரடனாக நடந்துகொண்டதைப் பற்றி வருந்துகிறேன். இப்போது கல்வி கற்றுத் திருந்தி விட்டேன். ஆகவே பழைய பகைமையை முற்றிலும் மறந்து விடும்படி வேண்டுகிறேன்” என்றான். ஜக்ரிஸ் இவ் எதிர்பாரா நட்புப் பண்பை ஏற்கவில்லை. அவன் இறுமாந்த மறுமொழியில் ஏளனமும் வசையும் கலந்திருந்தன. ஓலா மேலும் பேச்சுக் கொடுக்கத் துணியாமல் வசைக்கு எதிர்வசை பாடாமல வாளா சென்றான். ஓலாவின் இம் முதல் முயற்சியின் தோல்வி நீடித்து நிலவ முடிய வில்லை. ஏனென்றால் கழக மேடைகளிலும் பொது மன்றங்களிலும் அம்பலங்களிலும் எங்கும் ஜக்ரிஸ் ஓலாவை வையத் தவறவில்லை. ஆனால் ஓலா அதற்கு எதிர் மொழி கூறாததுடன், தன்னைக் குறைத்து அவரைப் புகழ்ந்து பாராட்டத் தொடங்கினான். ‘இன்னாச் செயலுக்கு எதிராக இனியனவே செய்’யும் இப்பண்பு உள்ளூற ஜக்ரிஸையும் மாற்றி வந்தது. ஆனால் வெளிப்படையாக அவன் தன் பழைய எதிரியின் புது முறைக்கு இணங்கிவிடத் துணியவில்லை. மேலும் இணக்கத்தின் முடிவு இம்பாரைப் பொறுத்தது என்பதையும் அவன் அறிவான். அவள் உள்ளத்தை அவன் அறியவில்லை அறிய விரும்பவும் இல்லை. தன் குடி மரபு இதை விரும்பி ஏற்க முடியாது என்பதை அவன் அறிந்தான். அடுத்த தேர்தலில் இரண்டு ஊர்களின் சார்பாக ஓலா நாட் டாண்மைக் கழக உறுப்பினனாக நிறுத்தப்பட்டிருந்தான். ஜக்ரின் குடியினர் உடனே ஜக்ரிஸையும் அதே தொகுதியில் போட்டிக்கு நிறுத்தினார்கள். தேர்தலைச் சாக்கிட்டுப் பழைய குடும்பப் பகைமைப் போராட்டம் மீண்டும் நிகழும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் இருசாரரும் வியக்கும் வண்ணம் ஓலா நடந்து கொண்டான். ஜக்ரிஸ் பத்திரிகைகளில் தானே தகுதி யுடையவன் என்றும் ஓலா தகுதியற்றவன் என்றும் காட்டி எழுதியிருந்தான். ஆனால் ஓலாவோ, ஜக்ரிஸ் தகுதியையும் தன் தகுதியின்மையை யும் ஒத்துக்கொண்டு, தேர்தலிலிருந்து பின்வாங்கியதாக எழுதியிருந்தான். தன்னை ஆதரிக்க விரும்புபவர்கள் எல்லாரும் ஜக்ரிஸையே ஆதரிக்கும்படி அவன் கோரினான். ஜக்ரிஸை அவன் வாயாரப் புகழ்ந்து பாராட்டினான். இதுமட்டுமன்று, தேர்தலில் அதுவரை யாரும் கையாளாத ஒரு புது முறையையும் அவன் ஜக்ரிஸ் பக்கமாகக் கையாண்டு தன் ஆதரவின் மீதுள்ள அவநம்பிக்கைக்கே இடமில்லாமல் செய்தான். வாக்குச்சீட்டுத் தாள்களை ஜக்ரிஸ் பெயருடன் அச்சடித்து வாக்காளரிடையே பரப்பினான். அப்போது பனிக்காலம். பனிப்பருவம் கழிந்தபின்பே தேர்தல் நாள் குறிக்கப்பட்டிருந்தது. பனியையும் பாராட்டாமல் ஜக்ரிஸ், ஆற்றைப் படகில் தாண்டிவந்து எதிரியின் ஊரெங்கும் தேர்தல் பிரசாரம் செய்திருந்தான். மாலையாயிற்று. வானங் கறுத்தது. மலையின் சாம்பல் நீலம் பனிப்புகையுள் மூழ்கிற்று. பனிப்புயலும் பனிமழையும் பெய்தன. ஆற்றில் வெள்ளம் ஒருபுறம் புரண்டது. பனிக்கட்டிகள், பனிப்பாளங்கள் வேறு மிதந்துவந்தன. நீர்ப்பரப்பு பல இடங்களில் திடுமெனப் பனி நிலமாயிற்று. அதேசமயம் நீரோட்டத்தால் பனித்தளம் நொறுங்கிற்று. பனிக்கட்டிகள் ஒன்றுடனொன்று மோதி உடைந்தன. சுழலிலகப்பட்டும் நெக்குண்டும் பனிப்பாளங்கள் வளைந்து நெளிந்து சுருண்டன. பனி நொறுங்கும் இரைச்சலும் பனி ஊதைக்காற்றின் ஊளையும் காதுகளைத் துளைத்தன. முன் பகலில் ஆறுகடந்து வந்த ஜக்ரிஸ், மாலையில் ஆறு கடந்து வீடுசெல்ல முடியவில்லை. கடந்தால் கட்டாயம் சாவுதான் என்று படகோட்டிகள் ஜக்ரிஸை அச்சுறுத்தினர். ஜக்ரிஸ் செய்வது இன்னது என்று தெரியாமல் விழித்தான். எதிர் திசையில் புயலையும் சட்டைபண்ணாமல் இம்பார் தந்தைக்காகக் கவலையுடன் வந்து காத்திருந்தாள். புயலில் கடந்து வரவேண்டாம் வரவேண்டாம் என்று அவள் துடிதுடிப்புடன் கைமறித்துக் காட்டியது பனிப்புகையிடையே கூடத் தெரிந்தது. வரவில்லை என்று கூறி அவனும் கையசைத்தான். ஆனால் இக்கரை முற்றும் எதிரியின் இடம். என்ன செய்வது? ஓலா சிறிது தொலைவில் மரம் அறுத்துக்கொண்டே இத்தனையையும் கவனித்துக்கொண்டிருந்தான். ஜக்ரிஸ் கரையோரமாக நடந்துவந்தான். ஓலா மரமறுத்துக் கொண்டிருக்கு மிடத்திற்கு வந்ததும், தன்னையறியாமலே நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.சிறிது நேரம் நின்றபின் அவனாகவே பேச்சுக் கொடுத்தான். “மரம் அறுப்பதில் என்ன இவ்வளவு ஈடுபாடு?” “ஆற்றையொட்டி வாழ்க்கை நடத்துபவன். படகுக்கான வேலைகளில் கருத்துச் செலுத்தாமலிருக்க முடியுமா?” இருவரும் பேசும் நிலைக்கு வந்துவிட்டனர். பேச்சு இப்போது கருத்துக்களின் பரிமாற்றமாயிற்று. “பத்திரிகைகளில் இப்படி ஏன் எழுதினாள், ஓலா!” “பத்திரிகையிலேயே விளக்கமும் கொடுத்திருக்கிறேனே!” “பத்திரிகையிலேயே விளக்கமா!” “ஆம்” ஜக்ரிஸ் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டான். எதிர்கரையில் நின்றிருந்த இம்பார் இருவரையும் இமையாது நின்று பார்ப்பதை அவன் கவனித்தான். “படகோட்டுவதிலும் நீ வல்லவன்தானே!” “ஓரளவு. ஏன்!” “ஒன்றுமில்லை. இந்நேரம் ஆற்றைக் காணவே அச்சமாயிருக்கிறது. படகோட்டிகள் எவரும் ஆற்றைக் கடக்கத் துணியவில்லை. ஜக்ரிஸ் கருத்து என்ன என்று ஓலாவால் உணர முடியவில்லை. ஆனால் அவன் திரும்பிப் போக வகையற்ற வனாயிருக்கிறான் என்பதை மட்டும் உணர்ந்தான். “ஆம், இன்று நீங்கள் ஆற்றைக் கடந்து செல்ல முடியாது. என் வீட்டுக்கு வந்து இரவு தங்குவதுதானே! இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி உங்களை விருந்தினராக அழைக்கிறேன்” என்றான் ஓலா. ஜக்ரிஸ் அதை ஏற்க விரும்பவில்லை. வேண்டாம் என்று தலை யசைத்து மறுத்துவிட்டான். பின்னும் சிறிது நேரம் இருவரும் வாளா இருந்தனர். மீண்டும் ஜக்ரிஸே பேச்செடுத்தான். “இன்று சனிக்கிழமை என்று நினைக்கிறேன்!” என்றான். ஓலாவின் நாடி நரம்புகளில் மின்வேகம் பாய்ந்தது. “அதற்கென்ன?” என்றான், உள்ளக் கருத்துக்களை மறைத்துக் கொண்டு. “ஒன்றுமில்லை, அதோ அக்கரையில் ‘இம்பார்’ நிற்பதைப் பார். அவள் வகையில் நீ விடாப்பிடியாய் இருக்கிறாய். நான் அவள் தந்தை. அவள் வாழ்க்கையை நான் ஒரு வகையாக வகுத்தாகவேண்டும். அத்துடன் என்ப பழைய பகைமையையும் நான் மறந்துவிடவில்லை. அதற்கும் ஒரு வகையான முடிவு காணவேண்டும். இரண்டுக்கும் பொதுவாகச் செல்கிறேன்- ஆற்று நீரில் இப்போது காலன் வலைவிரித்திருக்கிறான். நீ துணிச்சல்காரன். உயிருக்கு அஞ்சாதவன். இன்று நீ ஆற்றைக் கடந்துசென்று அவளை அடைய முடியுமானால், நான் இனி உனக்குக் குறுக்கே வந்து தடுக்க மாட்டேன்.” ஓலா இப்போது சிந்தனையிலாழ்ந்தான். அவனுக்கு அவன் புதிய நட்பில் ஐயம் தட்டுப்பட்டது. ஆனால் நம்பிக்கை மீண்டும் நகரத் தொடங்கிற்று. “இது உண்மைதானா?” “ஏன் ஐயப்படுகிறாய்? நான்தான் என் கருத்து முழுவதையும் கூறிவிட்டேனே! நீ உயிருடன் கடந்து செல்ல முடியாது என்றுதான் நினைக்கிறேன். நீ துணிந்துசென்று கரையேறாவிட்டாலும் என் பகைமை தீரும், சேர்ந்தாலும் இன்னொருவகையில் பகைமை தீரும்.” அவன் ஐயம் இன்னும் முற்றிலும் மாறவில்லை. “நான் மாண்டால் என்ன நேரும் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இம்பாருக்காக இதுவரை எத்தனை இன்னல்களைத் தாங்கியிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனால் கரையேறிய பிறகு நீங்கள் இந்தச் சொல்லிலிருந்து மாறிவிட்டால்...” “இதுவரை நானும் என் மக்களும் தலையிட்டதே மலைநாட்டு வழக்கத்திற்கு மாறானது, தவறானது. இனி அதே தவறுதலை நானும் செய்யமாட்டேன். யாரையும் செய்ய விடவும் மாட்டேன். இது உறுதி. ஆனல் ஒன்று நினைவிருக்கட்டும். நான் இப்போதும் பகைவன்தான்- வஞ்சகமற்ற பகைவன். உன்னை இடருக்கு ஆளாக்கவேண்டும் என்று தான்- சாவிற்குள் தள்ளிவிட வேண்டுமென்றுதான் கூறுகிறேன். ஆகவே ஏமாறவேண்டாம். அவன் குரலில் கண்டிப்பும் வீறும் இருந்தன. ஆயினும் அவன் நாத் தழுதழுத்தது என்பதை ஓலா கவனிக்காமலில்லை. அவன் குரலில் அடங்கிய உள்ளுணர்ச்சியின் கனிவும் ஈரமும் தோய்ந்திருந்தன. அவன் இப்போது அவர் பேச்சுக்குக் காத்திருக்கவில்லை. ‘இதோ’ என்று பாய்ந்தான். தன் படகைப் போய்த் தேடக்கூட அவனுக்கு நேரமில்லை. ஆற்றைக் கடக்கும் படகு ஒன்று அருகே இருந்தது. படகோட்டியும் அதைக் காத்துக்கொண்டு இருந்தான். ஓலா எதுவும் பேசாமல் அவனைப் படகிலிருந்து பிடித்துத் தள்ளிவிட்டு, அவன் திரும்பிப் பார்க்குமுன் படகை ஆற்றினுள் செலுத்தினான். அன்று ஆற்றில் செல்லுவதற்குப் படகுகளே உதவ முடியாது. ஏனென்றால் ஆற்றின் பரப்பில் ஒரு பகுதி பனிக்கட்டியால் உறைந்திருந்தது. அதே சமயம் அதில் நடக்கவும் முடியாது. ஏனென்றால் பனிப் பாளங்கள் முறிந்து தகர்ந்தும் கவிழ்ந்து உருண்டும் சில இடங்களில் இடையே ஆற்றொழுக்குக்கு இடம் விட்டு விலகியும் தாறுமாறாக மிதந்து சுழன்றன. ஓலா கரையோரத்தில் பனிக்கட்டிகளின்மீது படாமல் படகைச் சுற்றிச் சுற்றி வளைத்து உதைத்தான். சில சமயம் பெரிய பனிக்கட்டிகளிலிருந்து விலக ஆற்றின் போக்கிலும் அதை எதிர்த்தும் சுற்றியும் செல்லவேண்டியிருந்தது. இந்நிலையில் அவன் ஆற்றின் பரப்பில் ஒரு பகுதி கடக்குமுன்பே பனிமூடிய ஆற்றுச்சுழிப்புக்கு இரையாகிவிடக்கூடும் என்றே எவரும் நினைத்தனர். ஆனால் அவன்மட்டும் உள்ளங்கலங்காமல், ஒருமுகப்பட்ட கருத்துடன் ஆற்றுடனும் பனிப் பாறையுடனும் போராடினான். சில சமயம் அவன் படகைத் தண்டோச்சி இயக்குவான். பனிப் பாறைகள் வந்தவுடன் அதன்மீது இறங்கிப் படகை இழுத்துச் செல்லுவான். மீண்டும் பாறை உடைந்த இடத்தில் படகிலிருந்து ஓட்டுவான். சில இடங்களில் இரண்டு முறையும் பயன்படாமல் போயின. ஆற்றைக் கடக்க முடியாமல், சுழல்களையும் வேக நீரோட்டங்களையும் விலக்கி ஆற்றில் மேலும் கீழுமாக அலைந்தான். நெடுநேரம் இப்படி மல்லாடி ஆற்றின் நடுப்பகுதி அடையுமுன் இருள் கவிந்துவிட்டது. ஆற்றின் கருமையும் இருளின் கருமையும் ஒருங்கே ஆட்சி செய்தன. அவற்றிடையே பனிக் கட்டிகளின் பளபளப்பும் மின்னல்களும் தான் அவ்வப்போது ஒளிகாட்டின. அம் மின்னொளியிடையே ஓலாவின் போக்கைக் கண்கொட்டாது கவனித்துக் கொண்டிருந் தாள், இம்பார். ஓலாவும் தன் போராட்டத்திடையே அவளைக் கண்டான். அவன் முயற்சிகள் இன்னும் ஊக்கம் பெற்றன. நடு ஆற்றொழுக்கு ஒரே பனிப் பாறையின் சறுக்காயிருந்தது. அதில் படகு செல்ல முடியாது. ஆனால் அதன்மீது நடக்கவும் முடியாது. ஓலா படகை அதில் சறுக்க விட்டுக்கொண்டு பின்னால் ஓடினான். பனிப் பாறை முறிவுற்ற இடத்தில் அவன் படகில் ஏறிக்கொண்டான். சறுக்கிய இடங்களில் படகைப் பிடித்துக்கொண்டு எழுந்து சமாளித்தான். படகு கவிழ்ந்து நீரில் அமிழத் தொடங்கியபோது, பனிப்பாறையில் காலூன்றி நின்று படகை அதன்மீது இழுத்துச் சமநிலைக்குக் கொண்டுவந்தான். ஆறு முக்கால் பங்கு கடந்துவிட்டது. அடுத்த கால் பகுதியே இடர்நிறைந்த இடம். இதுவரை மனஉறுதியுடன் கடந்து வந்த ஓலாவின் உள்ளத்தைக்கூட இது அச்சுறுத்துவதாயிருந்தது. அது ஆறு வளைந்து திரும்புமிடமாயிருந்ததால், முழு ஆற்று வேகமும் கரைமீது தாக்கிற்று. சுழல்களும் சுழிகளும் மிகுதியாயிருந்தன. இம்பார் இப்போது ஓலாவின் கண்முன்னால்தான் நின்றாள். பனிப்புயலில்லாதிருந்தால் ஒருகணத்தில் அவளை அடைய முடியும். இதை அவனும் அறிவான். ஆனால் இன்று அவன் கடப்பது உயிரை இழப்பதாகவே முடியக்கூடும் என்று அவள் கண்டுகொண்டிருந்தாள் என்பதை அவள் தோற்றம் காட்டிற்று. அவள் முகத்தில் கண்ட கவலைக் குறி அவனை முன்னிலும் பன்மடங்கு ஊக்கிற்று. ஆனால் நீரோட்டத்தை நேராகக் கடக்கத் துணியவில்லை. ஆற்றின் போக்குக்கு எதிராக அவன் படகைச் செலுத்திச் சென்று, தொலைவில் கடக்க எண்ணினான். அவன் செல்லும் திசையில் அவன் எதிரே கரையில் இம்பார் நடந்து உடன் சென்றாள். அவன் பேசினால் இம்பாருக்குக் கேட்கும். அவ்வளவு அருகே கரையை அவன் அணுகிவிட்டான். ஆனால் ஆற்றின் தலைப்பிலிருந்து ஒரு இரைச்சல் கேட்டது. நீரோட்டத்தில் கருநாகம் போன்று ஒரு உரு தொலைவிலிருந்து அவனை நோக்கி வந்தது. ஆற்றை நன்கு அறிந்திருக்க அவன் அதுகண்டு நடுங்கினான். அது ஆற்றின் அப்பகுதியில் சில சமயம் ஏற்படும் ஒரு சுழி. மற்ற நாட்களிலேயே அதில் சிக்கியவன் மீள்வது அரிது. இன்று அது புயலின் கருவில் முதிர்ந்து வெறிகொண்டு வீறிட்டு வந்தது. அவன் இம்பாரின் பக்கம்கூடப் பார்க்கவில்லை. அவள் இருந்த திசைக்கு எதிர் திசையில் விழுந்தடித்து ஓடினான். ஓடிய இடம் நீர்ப்பரப்பா, பனிப்பாறையா என்றுகூடப் பார்க்காமல் ஓடினான். ஆற்றில் விழுந்தால் கூடக் கேடில்லை. அச்சுழி எமனுக்குத் தப்பினால் போதும் என்று ஓடினான். படகையும் அவன் கைவிட்டு ஓடினான். இம்பார் அஞ்சி அலறினாள். இக்கரையில் ஜக்ரிஸ் கவலையுடன் நின்றிருந்தான். ஓலாவை அவனால் பார்க்க முடியவில்லை. ஆனால் இம்பார் கரையோரமாக மேல்நோக்கிச் சென்றது கண்டு, அவனும் கவலையுடன் ஆற்றங்கரை யோரமாக அத்திசையில் நடந்து வந்தான். உடைந்த பனிப்பாறைகளால் ஓலாவின் உடலும் முகமும் கீறிக் குருதி கொப்புளித்தன. நீந்தும்போது மிதக்கும் பனித்துண்டுகளைக் கைகளால் நெக்கித் தள்ளியதால் கைகள் காயமுற்றுச் சோர்ந்தன. குளிரால் நரம்பு நாடிகள் தளர்ந்தன. எங்கே நீந்திச் செல்கிறோம், என்ன செய்கிறோம் என்ற உணர்வுகள் படிப்படியாக நீங்கின. அவன் சிந்தனை ஓய்ந்தது. ஆனால் அவன் சோர்பு அவன் காதலின் வெற்றியாயிற்று. அவன் வீரப் போராட்டத்தைக் கவலையுடன் இதயத் துடிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த இம்பார், அவன் சோர்ந்து செயலற்றது கண்டதே, தானும் அவனைக் காப்பதில் உயிர் நீக்கத்துணிந்தாள். அடங்கிக் கிடந்த அவள் பெண்மையின் ஆற்றல், தயங்கிக் கிடந்த அவள் காதலின் வேகம் ஆகிய இரண்டும் ஒரு கணத்தில் செயலாற்றின. அவள் நீரில் குதித்து அவனை நோக்கி நீந்தினாள். உயிரை மறந்த அவள் ஆர்வவேகத்தின் முன் ஆறு வழிவிட்டது. பனிப்பாறைகள் விலகின. ஓலாவின் செயலற்ற உடலைத் தாங்கிய பின்பே அவள் மூச்சுவிட்டாள். இனி இறந்தால் ஒருங்கிறப்பது, மீண்டால் ஒருங்கு மீள்வது என்று அவள் துணிவு கொண்டாள். இருட்டினிடையேயும் தந்தையின் கண்கள் நடந்தவற்றை ஒருவாறு கவனித்தன. ஓலாவின் உயிருக்காக அவன் நெஞ்சம் இதுகாறும் துடித்துக் கொண்டுதானிருந்தது. இப்போது ஓலா, இம்பார் ஆகிய இருவருக்காகவும் அவன் உடல் முழுதும் துடித்தது. அவன் தன் தொலையை மறந்து, அவர்களுக்காகக் கதறினான். இக்கரையிலிருந்த பலரும் வந்து கூடினர். ஓலா கண்விழித்தபோது, அவன் தன் கண்முன் கண்ட காட்சிகளை அவனால் நம்ப முடியவில்லை. இரவு முழுதும் அவன் உயிருக்காக ஊசலாடியிருந்தான். அவனைப் பலிகொள்ள இருந்த புயல் விடியுமுன் ஓய்ந்திருந்தது. ஜக்ரிஸும் கெர்ஸ்டாப் குடும்பத்தவர் பலரும் ஆறு கடந்து வந்திருந்தனர். ஓலா, இம்பாரின் இல்லத்தில், அவள் அறையில் அவள் மடிமீது கிடந்தான். இம்பாரின் தாய் ஒருபுறமும், தந்தை ஒருபுறமும் இருந்து அவன் உயிர்பெற்றெழுவானோ என்று கவலையுடன் காத்திருந்தனர். ஓலாவின் தாய்கூட அங்கே வந்து கண்ணீரும் கம்பலையுமாக நின்றாள். அவன் கண்கள் இம்பாரின் கண்களை நோக்கின. அவற்றில் அவன் கண்ட ஆழ்ந்த உணர்ச்சி அவனுக்குப் புத்துயிர் தந்தது. அவன் எழ முயன்றான். அவள் அவன் தலைநீவி அவனைத் தாங்கி எடுத்தாள். ஜக்ரிஸ், “என் பிழையால் உன்னையும் இழக்க இருந்தேன். என் இம்பாரையும் இழக்க இருந்தேன். ஆனால் இருவரும் எனக்கு வாழ்வு தந்தீர்கள்” என்று கூறி அவனை மகிழ்வுடன் அணைத்துக்கொண்டான். தன் துணிச்சலுக்கு ஜக்ரிஸே காரணம் என்று ஓலா கருதினான். ஆனால் ஓலா உயிர் பிழைத்ததற்கு இம்பாரின் துணிச்சலே காரணம் என்று ஜக்ரிஸ் நினைத்தான். எல்லாவற்றுக்கும் ஓலாவின் வீரக் காதலே காரணம் என்று இம்பார் கருதினாள். ஜக்ரிஸ் கெர்ஸ்டாப் குடும்பங்களின் வழிவழிப் போட்டிப் பகைமை இம்பார்- ஓலாவின் காதல் நிறைவால் இணையறா நட்பாக மாறிற்று. கானாறு முன்போல ஓடிற்று. ஆனால் அது மலைநாட்டு மக்கள் காதில் புதுப் பண் இசைத்தது. மலைகள் முன்போல முறைத்தன. ஆனால் இப்போது நகை முகத்துடன் கேலி முறைப்பு முறைத்தன. 4. கைக்கடிகாரம் இந்த நூலைப் பற்றி ரஷ்யச் சிறுகதை எழுத்தாளர் சிறுகதைகள் என்னும் நுண்மணியில் என்னென்ன இழைத்துக் காட்டமுடியும் என்பதை இந்த மூன்று சிறு கதைகளும் எடுத்துக் காட்டுகின்றன. அறிஞர் பெர்னாட்ஷாவின் நாடகமொன்றில் ஒரு ‘இப்ஸன் சிலை’ கிட்டத்தட்ட ஒரு உறுப்பாகக் காட்டப் பட்டிருப்பது போல, இங்கே கைக்கடிகாரமும் கதை உறுப்பினர்களுள் ஒரு உறுப்பினர்போல உருவகப் படுத்திக் காட்டப்படும் நயம் பாராட்டி நாம் மகிழாதிருக்க முடியாது. மாயக் கணவன் (நுவநசயேட ழரளயெனே) பற்பல பண்போவியங்களின் உறைவிடம்; மிக்க விருவிருப்புடையது. மெல்லியலாள் (ஹ ழுநவேடந ளயீசைவை) ஒரு பெண்ணின் சோக வாழ்க்கைச் சித்திரம்! ஷேக்ஸ்பியரின் கார்டீலியா போல அவள் உலகறியாது, உலகியல் கடந்த வான் முகட்டில் வெண்துகிலாகத் தவழ்ந்து, புயலாய் சித்தரிக்கப்படுகிறாள். கைக்கடிகாரம் (கூhந றுயவஉh) துர்கெனிவின் கதைகளில் காணப்படும் பொதுப் பண்புகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு: காட்சி விளக்கம்! சிறுகதை எழுத்தாளர்கள் இன்றியமையாத தாகக் கருதும் காதல் கட்டம் இதில் வாழ்க்கைப் புயலினிடையே காணும் ஒரு பாதையாகவே வகுத்துக் காட்டப்பட்டிருக்கிறது; மதிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த மூன்று சிறுகதை முத்துக்களைத் தொகுத்துத் தமிழர் உள்ளந்தோறும் களிப்பு ஒளி படர, ஐந்தாம் விருந்து மலர்ந்திருக்கிறது. உயர் தமிழர் சுவை பெறுவார், மகிழ்வார் என்று நம்புகிறோம். மூல ஆசிரியரைப் பற்றி ஐரோப்பிய இலக்கியக் குடும்பத்தில் பிந்திப் பிறந்த ரஷ்ய இலக்கியம், இன்று இலக்கியத்தில் பொதுவாகவும் உரைநடை இலக்கியத் துறையில் சிறப்புப் பெற்றும் முன்னணித் தலைமை நிலையை எட்டிப் பிடித்து நிற்கிறது. இந்த அளவுக்கு ரஷ்ய இலக்கியத்தை வள்ர்க்க அரும்பாடு பட்டுழைத்த பெருமக்கள் துர்கெனில், டாஸ்டோயெவ்ஸ்கி என்ற இருவருமே என்று கூறுவது மிகையாகாது. உரை நடை ஷேக்ஸ்பியர் எனக் கருதப்பட்ட டால்ஸ்டாய், புரட்சியுகக் கலைஞரான கார்க்கி போன்றாருக்கு வழி காட்டியவர்களும் அவர்களே. உணர்ச்சிகளைக் கோர்வையாகப் படம் பிடித்துக் காட்டும் அருந்திறன் வாய்ந்தவர் துர்கெனிவ். அவர் ரஷ்யாவின் ஹார்டி, ரஷ்யாவின் விக்டர் ஹியூகோ! டாய்டோயெவ்ஸ்கி, சார்லஸ் டிக்கன்ஸ், பல்ஸாக் போன்ற சமூக சித்திரக் கலைஞர். சிறப்பாக ஏழை மக்கள், சிறை வாழ்க்கை, குற்றத்துறை ஆகிய மனித வாழ்வின் அல்லல்களையே பெரும்பாலும் அவர் பேனா தீட்டித் தந்திருக்கிறது. மாயக்கணவனில் ஏமாளியாகவும், கோமாளியாகவும் அதே சமயம் உணர்ச்சிச் சித்திரமாகவும் தோன்றும் கணவன், அதற்கு நேர்மாறான, ஆனால் உணர்ச்சிப் பிழம்பாக வரும். வெல்ச்சானினாவ் ஆகிய இருவருமே இருண்டு ஒப்பற்ற படைப்புக்கள். இரு வேறு முனையில் நின்று போராடும் நல்ல மனோதத்துவ ஆராய்ச்சிகள்! ‘ஏமாளி முற்றிலும் ஏமாளியல்ல; ஏமாற்றியவனும் முற்றிலும் தீயவனல்ல’ என்ற பேருண்மை நன்கு புனைந்து தீட்டப்பட்டிருக்கிறது. ‘மனித சமூகம் உள்ளார்ந்த அடிப்படையில் ஒன்றே’ என்பதே டாஸ்டோயெவ்ஸ்கியின் முழு நோக்கம் என்பதை அவரது கதைகள் தெளிவு படுத்துகின்றன. 1. கைக்கடிகாரம் துர்கெனிவ் என் வாழ்க்கையின் பெரும் பகுதி ஒரு கைக்கடிகாரத்தின் கதையாகவே முடிந்துவிட்டது. என் பிறந்த நாளன்று நாஸ்டஸி யால் அது எனக்களிக்கப்பட்டது. நாஸ்டஸி என்றுதான் நாங்கள் அவரை அழைப்பது வழக்கம். எங்கள் வெறுப்பிற்கேற்ப அவர் பெயரும் அனஸ்டாஸி அனஸ்டாஸியேவிச் புச்சாவ் என்று முழங்கிற்று. ஆயினும் என்னைப் பொறுத்தமட்டில் நான் அவரை வெறுக்க முடிந்ததே தவிர, அவரைக் காணாமலும் அணுகாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் என் நற்றந்தை. எனக்கு அலக்ஸி என்ற பெயர் வைத்தவரும் அவர்தான். அந்தக் கைக்கடிகாரம் வெள்ளியாலானது; பளபளப்பானது. நாஸ்டஸி அதைக் கையில் வைத்துக்கொண்டு “அலக்ஸி, இதோ பார். உன் நற்றந்தை இதுவரை உனக்குப் பரிசு எதுவும் தரவில்லையல்லவா? அதற்கெல்லாம் சேர்த்து இப்போது இதைத் தருகிறேன்” என்றார். நான் அவரிடமிருந்து எட்டியே நின்றேன். ஆனால் கைக்கடிகாரம் என் கண்ணைப் பறித்தது. நான் கையேந்தி அதை வாங்கிக் கொண்டேன். அதற்குள் என் அத்தை பெலகேயா பெட்ரோவ்னா குறுக்கிட்டாள். வழக்கம் போல அவருடைய நீளமான பெயரை ஆவலுடன் வாய்நிறைய உச்சரித்துக் கொண்டு அவள், “அனஸ்டாஸி அனஸ்டாஸியேவிச், இந்த நன்றி கெட்ட பயலுக்கு ஏன் இத்தனை விலையுயர்ந்த பரிசு? இதை வைத்துப் பேணக் கூட இவனுக்குத் தெரியாதே! இப்படி யெல்லாம் நீ தூக்கி வைப்பதால்தான் அவன் விரைவில் கெட்டுப்போகிறான்” என்றாள். இச்சொற்கள் என்னைச் சுட்டன. நான் கலவரமடைந்து பேசாமல் நின்றேன். அவள் தொடர்ந்து “இதைப் பெறும்போது கூட நன்றி தெரிவிக்கிறானா, பார்!” என்று கூறி என்னை அதட்டி “வணக்கம் செய்து நன்றி கூறடா, மட்டி!” என்றாள். நான் வேண்டா வெறுப்பாக ஒரு சொல்லில் ‘நன்றி’ என்று கூறிவிட்டு ஓடிவிட்டேன். ந்ந்ந் ரயாஸானின் ஒகா ஆற்றங்கரையருகே ஒரு சிறு மரக்குடிசை! அங்கேதான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். எனக்கு நினைவு ஏற்படுவதற்கு முன்பே என் தாய் இறந்து போயிருந்தாள். ஆகவே அத்தைதான் எங்கள் வீட்டுத் தலைவி. அவள் எல்லோரையும் திறம்பட அடக்கியாண்டாள். அதற்கேற்ப அவளிடம் கண்டிப்பும் கடுகடுப்பும் மிகுதி. சமயப் பற்று அவள் நகக்கண்களிலெல்லாம் வழிந்தோடும். அன்புப் பாசம் என்னவோ அவள் வாழ்க்கையை எட்டிப் பார்க்கவேயில்லை. என் தந்தை பார்ஃவிரி பெட்ரோவிச்சுக்கும் அத்தையைப் பிடித்த தென்று கூற முடியாது. ஆனால் பெரும்பாலும் அவள் வழிக்கு அவர் வருவது மில்லை; போவதுமில்லை. அவர் அமைதியான பண்பும் அஞ்சிய நடையு முடையவர். அவர் உள்ளம் எப்போதும் ஏதோ ஒன்றில் ஈடுபட்டுக் குழம்பிக் கொண்டிருக்கிற தென்பதை அவர் கண்கள் ஓயாது எடுத்துக் காட்டின. iக்கடிகாரத்தின் செய்தியை அவர் கேட்டபோது அவர் முகத்தில் மகிழ்ச்சிக் குறி எதுவும் தோன்றவில்லை. அடுத்த தடவை நாஸ்டஸியைக் கண்டபோது அவர் பார்த்த பார்வை’ “இதைக் கொடுத்தாடா ஏமாற்றப் பார்க்கிறாய்?” என்று கேட்பது போலிருந்தது. எங்கள் சிற்றப்பா பிள்ளை டேவிடும் எங்களுடன் வாழ்ந்து வந்தான். சிற்றப்பா யெகோர் 1797-இல் நடைபெற்ற அரசியல் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு, ஸைபீரியா பாலைவனத்துக்கு நாடு கடத்தப் பட்டிருந்தார். தந்தையைப் போலல்லாது அவர் எடுப்பான தோற்றமும், சுறுசுறுப்பும், துணிவும் உடையவர். டேவிடிடமும் அவரைப் போலவே தன்னம்பிக்கையும் துணிவும் மிகுதி. நான் டேவிடைவிட ஒரு வயதே குறைந்தவன். பள்ளியில் அவனைவிடச் சிறிது முற்போக்காக, அவன் வகுப்பிலேயே பயின்றவன். ஆயினும் எப்போதும் நான் அவன் நிழலாகவே நடந்து வந்தேன். அவன் கருத்து அறியாமல் நான் எதுவும் செய்வதில்லை. ந்ந்ந் கடிகாரம் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அதைப் பெறுவதிலிருந்த மகிழ்ச்சி முழுதும் பறந்தோடிவிட்டது என்னைவிட்டு. கடிகாரம் எத்தனை நல்லதாக இருந்தாலும் அதைக் கொடுத்தது நாஸ்டஸியல்லவா என்று எண்ணும் போது அந்த நினைவு என்னைத் தீப்போல் சுட்டது. ‘அத்தையும் ஒரு மனுஷியல்ல; நாஸ்டஸியும் ஒரு மனிதனல்ல’ என்று எப்போதோ டேவிட் ஒரு முறை கூறியது என் நினைவிற்கு வந்தது. “ஆம்; பெண்களைப் போல் பகட்டாக ஆடையணிந்து கொண்டு, மணத்துளிகளும் முகப்பொடிகளும் தூவிக்கொண்டு திரியும் பகடி அவன். அவன் பரிசு தர, அதை வாங்கியது எத்தனை கேவலம்!” என்று நான் அவலமுற்றேன். டேவிடிடம் அதைக் காட்டியபோது அவன் அதை அப்புறமும் இப்புறமுமாகத் திரும்பிப் பார்த்தான்; கூர்ந்து ஆராய்ந்தான். அவன் பொறிவேலைகளில் நல்ல பயிற்சியுடையவன். ஆகவே அதை உட்புறம் திறந்து பார்த்ததும் ‘பூ, இவ்வளவு தானா’ என்ற ஏளனக்குறிப்பு அவன் முகத்தில் படர்ந்தது. “என்ன, நாஸ்டஸியிடமிருந்து தானே!” என்று கேட்டான், அதே பாவத்துடன். “ஆம்!” நான் வெட்கத்துடன் விடையளித்தேன். அவன் மறித்து எதுவும் பேசவில்லை. பிறகு தயங்கிக் கொண்டே, “உனக்குப் பிடித்தமில்லையா?” என்றேன். “பிடித்தமோ பிடித்தமில்லையோ? நானாயிருந்தால் அந்த நாஸ்டஸிப் பயலிடமிருந்து எதையும் வாங்கியிருக்கவே மாட்டேன்!” பரிசு எனக்கு முழுதும் கசந்துவிட்டது. அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாமா அல்லது விற்றுவிடலாமா என்று எண்ணினேன். இரண்டுக்கும் என்னிடம் துளியேனும் துணிவில்லை. டேவிடிடமே “என்ன செய்யலாம்?” என்று கேட்டேன். “பிறர் அறிவுரையை நான் கேட்பதுமில்லை. பிறருக்கு அறிவுரை கூறுவதுமில்லை; இனிக் கூறப்போவது மில்லை” என்று அவன் வெட்டிப் பேசிவிட்டான். அறிவுடையவர்கள் தானாக வழி காண்பார்கள், பிறர் அறிவுரையை நாடமாட்டார்கள் என்ற அவன் மதிப்புரை என் நெஞ்சைக் கருக்கியது. நான் தனித்திருந்து ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தேன். இறுதியில் இதை யாருக்காவது நன்கொடையாகவே வழங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். ‘ஏழையாகப் பார்த்துக் கொடுத்தால், அவனிடம் அது அதிக நாள் தங்காது. விரைவில் விற்றுச் செலவு செய்துவிடுவான். வீட்டுக்கும் விபரம் தெரியாமற் போய் விடும்’ என்று என் மனம் ஒத்தூதியது. நான் துணிவு பெற்றேன். துணிவு செயலாக மாறிற்று. வெளியே இறங்கினேன்; என் எதிரே கந்தலாடை போர்த்திய ஒரு சிறுவன் காணப்பட்டான். அவன் என் வகுப்பிலே உடனிருந்து படித்தவன். எனவே எனக்கு அறிமுகமானவன். “அடே தம்பி, இங்கே வா!” என்று அச்சிறுவனைக் கைகாட்டி அழைத்தேன். அவன் என்னவோ, ஏதோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டே என்னருகில் வந்தான். கடிகாரத்தைக் காட்டி, “இந்தா, இதை உனக்கு அன்பளிப்பாகத் தருகிறேன். பெற்றுக்கொள்” என்று கூறினேன். பையன் கடிகாரத்தைக் கண்டு மகிழ்ந்தான். வாங்கிப் பார்த்தான். ஆனால் அதை அவன் தன்னிடமே வைத்துக் கொள்ளவில்லை. திருப்பிக் கொடுத்துவிட்டான். “ஏன், உனக்குத்தானே தந்தேன், சும்மா எடுத்துக்கொள்” “எனக்கா?” “ஆமாண்டா ஆமா; உனக்கேதான்!” பையன் இன்னும் பரக்கப்பரக்க விழித்துக்கொண்டிருந் தான். நான் அவன் கையில் கடிகாரத்தைத் திணித்து விட்டுப் பேசாமல் வந்துவிட்டேன். ந்ந்ந் நான் டேவிடைக் கண்டு இச்செய்தியைக் கூறினேன். அவன் அந்நேரம் தலை கோதிக் கொண்டிருந்தான். சீப்பைத் தலையில் செருகிக் கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்தான். முகத்தில் வியப்புக் குறி காணப்பட்டது. சீப்புச் சட்டென்று நழுவிக் கீழே விழுந்தது. என் செயலுக்கு ஒரு விளக்கம் தேவை என்று எனக்குப்பட்டது. “பையன் அதை விற்று ஏதேனும் வாங்கிக்கொள்வா னல்லவா?” என்றேன். டேவிட் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. விளக்கத்தை ஏற்றுக் கொண்டதாகவும் காணவில்லை. பேசாது வெளியே சென்று விட்டான். என் செயலில் எனக்குச் சற்றுமுன் ஏற்பட்டிருந்த மன நிறைவு, அமைதி குலைந்தது. போதாக்குறைக்கு ஒரு பித்தளைக் கடிகாரத்தை அன்பளிப்பாகப் பெற்ற மற்றொரு பையன் அதை வைத்துப் பள்ளியில் வீம்படித்துக்கொண்டிருந்தான். பலர் அவனைச் சூழ்ந்துகொண்டு இன்னும் மிகைப்படுத்திப் பேசினர். இது என் செயலின் ஏமாளித்தனத்தைக் கேலிசெய்வது போலிருந்தது. எப்படியாவது செய்துவிட்ட பிழையைத் திருத்த வேண்டும் என்று தீர்மானித்தேன். ஏனெனில் ஒரு பைத்தியக் காரத்தனமான செயலைச் செய்து, நான் டேவிட் போன்ற நன்மதியாளர் மதிப்பை இழந்துவிட்டதாக எண்ணினேன். ஏழைக்குக் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பக் கேட்பதும் சரியல்ல. ஆனால் கடிகாரத்தை எப்படியும் திரும்பப் பெற்றாகவேண்டும். எனவே நான் சேமித்து வைத்த தொகையிலே ஐந்து வெள்ளிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அந்தப் பையனை நாடிப் புறப்பட்டேன். பையன் அதை விற்கத் தானே செய்வான். அதற்குள் இந்த நல்ல தொகையைக் கொடுத்து நானே வாங்கிவிட எண்ணி விட்டேன். பையனின் தந்தை ஏழை. ஆனால் கெட்டுவிடக் கூடாதென்ற எண்ணமுடையவர். அவர் குடிசை, நடையுடை பாவனை எல்லாம் ஏழ்மை, புறமதிப்பு ஆகியவற்றிடையே நிகழும் போராட்டங்களுக்குரிய சின்னங்களாகவே இருந்தன. அவர் பையன் அன்பளிப்பாகப் பெற்றானென்று நம்பாமல், திருடினான் என்று அவனைக் குற்றஞ்சாட்டி விட்டார். அதனால் இப்போது நான்தான் பரிசாகக் கொடுத்தேன் என்பதையும் நம்ப மறுத்து விட்டார்! நான் சற்று விழித்தேன். பின் “பரிசைத் திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நான் வரவில்லை. அதற்குரிய பணம் தந்து மீட்டுப் போகத்தான் வந்திருக்கிறேன்” என்றேன். என் பொருளுக்கு நான் தரும் விலையைப் பெறுவது தகாது என்ற எண்ணம் அவர் மூக்குக் கண்ணாடிக்குள்ளாக நிழலாடியது. கடிகாரத்தை அவர் கீழே வைத்தார். பணத்தை எடுக்க மனமில்லாதவர் போலக் கைமறித்துக் காட்டினார். இதற்குள் உள்ளிருந்த பையனின் தாய் “உங்களுக்குப் பணத்தின் அருமை தெரிகிறதா? கடிகாரத்தைக் கூட நான் கூறியபடி அன்றே விற்றிருக்கலாம்” என்றாள். அவள் பக்கம் சற்றுக் கடுமையோடு பார்த்துக்கொண்டே, பையனின் தந்தை வெட்கத்துடன் பணத்தை எடுத்துக் கொண்டார். கடிகாரத்துடன் நான் வெற்றிகரமாக வீடு திரும்பினேன். கடிகாரத்தைத் திரும்பப் பெற்றதை நெடுநாள் நான் டேவிட்டிடம் கூறவில்லை. அவனாகவே ஒருநாள் அதைக் காண நேர்ந்துவிட்டது. “நீ தவறாகக் கருதாதே, டேவிட்! இதை நான்...” நான் கூறி முடிப்பதற்குள் “அது உன் கடிகாரம் உன் பரிசு. அதை நீ என்ன செய்தால் எனக்கென்ன?” என்று ஒட்டறுத்துக் கூறினான் அவன். கடிகாரத்தை முதலில் அதன் பயன் தெரியாத ஒருவனிடம் கொடுத்தது பைத்தியக்காரத்தனம். இப்போது அதைத் திரும்பப்பெற்றது சிறுமை என்று டேவிட் எடுத்துக்காட்டுவது போலிருக்கிறது. இனி தக்க இடம் பார்த்துக் கொடுக்கவேண்டும் என்று எண்ணினேன். இழந்த மதிப்பை மீண்டும் பெற என் உள்ளம் துடித்தது. எங்கள் வீட்டு வேலைக்காரச் சிறுவன் யுஷ்காவுக்கு அதை மீண்டும் பரிசளித்தேன். அவன் மறுத்தான். நான் வற்புறுத்திக் கொடுத்தேன். அடுத்த தடவை நான் டேவிடை அணுகிய போது அவன் புத்தகம் புரட்டிக் கொண்டிருந்தான். புரட்டியபடியே நான் கூறியதைக் கேட்டான். இப்போதும் அவன் முன் கூறியது போலவே “கடிகாரம் உன்னுடையது. நீ அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று தான் கூறினான். ஆனால் சொற்கள் பழைய சொற்களானாலும், தொனியில் பெருத்த வேறுபாடு இருந்தது. என் இறுதிச் செயலால் என்மீது அவனுக்கிருந்த அவமதிப்புப் பாதியளவாகக் குறைந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். கடிகாரத்தின் கதை தொடங்கியபின் முதல் தடவையாக என் மனத்தில் அமைதி நிலவிற்று. டேவிடும் நானும் முன்பு இருந்ததைவிட நெருங்கிய நண்பர்களானோம். இச்சமயம் சிற்றப்பா யெகோரும் புதிய அரசியலாரால் விடுதலை பெற்றுத் திரும்பிவரக் கூடும் என்ற நம்பிக்கைக்கு இடமேற்பட்டிருந்தது. இப் புத்தவா எங்கள் புது நட்பின் மீது தன் இனிய நிலவொளியைப் பரப்பிற்று. ந்ந்ந் பூனைமீது எலி பாய்வதுபோல ஒருநாள் அத்தை என் மீது பாய்ந்தாள். “அடே குறும்புக்காரப் பயலே! உன் அப்பன் மாடியில் உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான், போ! உன் குறும்புக்கேற்ற பரிசு காத்துக்கொண்டிருக்கிறது!” என்று அலறினாள். செய்தி இன்னதென்று அறியாமல், நான் கால்நடுக்கத்துடன் சென்றேன். யுஷ்கா அங்கே நடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தான். “அடே! நீ கடிகாரத்தை யுஷ்காவுக்கா கொடுத்தாய்?” என்று குமுறினார் தந்தை. என்றும் அனல் கக்காத எரிமலை இன்று கனல் கக்கத் தொடங்கியிருந்தது. நான் பேசாது யுஷ்கா பக்கம் திரும்பிப் பார்த்தேன். “சொல்லுடா! அவனை ஏன் பார்க்கவேண்டும்?” என்று மீண்டும் அதட்டினார். நான் அஞ்சிக்கொண்டே, “ஆம்” என்றேன். ஆந்தையறைந்தால்போல் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. கை கன்னத்தில் பதிந்து தடமெழுந்தது. நான் அழவில்லை. ஆனால் அந்த அடி என்னை அரையுணர்வாக்கி விட்டது. புயல் இப்போது யுஷ்கா பக்கம் திரும்பிற்று. “அவன்தான் கொடுத்தான். அதை விற்க என்ன திமிரடா உனக்கு?” என்று அவர் யுஷ்காவை நோக்கிச் சீறினார். ஆனால் அவர் கோபம் இதற்குள்ளாகத் தணிந்து போய்விட்டது. அவருக்கு முன்கோபம் உண்டு. ஆனால் கோபம் அவரது இயல்புக்கே மாறானது. முன்கோபத்தின் சீற்றத்தை யடுத்து அவருக்கு உடம்பில் உதறல் எடுக்கும்; கழிவிரக்கம் உண்டாகும். இப்போதும் விரைவில் அச்சின்னங்கள் தோன்றலாயின. அவர் பெருமூச்சு விட்டுக் கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். அத்தை அவரை மீண்டும் சினமூட்ட முயன்றாள். ஆனால் அவர் எரிச்சல் அவள் மீதே பாய்ந்தது. “இந்தக் கேடுகெட்ட கடிகாரத்தால் நேர்ந்த இடர் இவ்வளவு போதும். இன்னும் புயலைக் கிளப்பாதே” என்று கூவி இரைந்தார். அத்தை முணுமுணுப்புடன் கறுவிக்கொண்டாள். “சரி, சரி. இந்தக் கடிகாரம் இனி இந்த நன்றிகெட்ட பயலுக்கு வேண்டாம். வேறு நல்லவர் யாருக்காவது கொடுத்து விடுகிறேன்” என்று முனங்கிக்கொண்டே அதை எடுத்துச் சென்றாள். ந்ந்ந் அத்தை அந்தக் கடிகாரத்தை யாருக்குக் கொடுக்க எண்ணியிருக் கிறாள் என்பது எனக்குத் தெரியும். நாஸ்டஸியைப் போலவே அவனும் அவளுக்குப் பிடித்தமான ஒரு சில தவறு களுள் ஒருவன். அவன் பெயரும் நெடு நீளமாக, அருவருப்பாகவே இருந்தது; ஃரிஸான்ஃவ் லூக்கிச் ட்ராங்க்வில்லிட் டாட்டின் என்பது அவன் பெயர். நாஸ்டஸியைப் போலவே அவனையும் அத்தை அடிக்கடி எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து தாக்காட்டிக்கொண்டிருந்தாள். ‘எதற்கு’ என்று கேட்பவர்களுக்கு அவள் “பிள்ளைகள் படிப்புக்கு மிக்க உதவியாயிருப்பான்” என்பாள். உண்மையில் நாங்கள் கற்றுக் கொடுத்தால் கூட அவன் மண்டையில் கடுகளவும் ஏறாது. அவன் ஒரு இடுதடியன்; படுமட்டி. இத்தகையவனிடம் கடிகாரம் போய்ச் சேரப்போவது எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. நல்லகாலமாக ஃரிஸான்ஃவ் ஊரிலில்லை. அவன் வந்து அதைப் பெறுமுன் அதை அத்தையிடமிருந்து தட்டிப் பறித்துவிடுவதென்று நான் முடிவு செய்தேன். டேவிடிடம் கூடக் கலக்காமல் இதில் துணிந்து திட்டமிடவும் தீர்மானித்தேன். பகலில் அதை அத்தையிடமிருந்து பெறுவது முடியாத காரியம். ஆகவே இரவில் அவள் அதை எங்கே வைத்திருந்தாலும் திருடன்போலச் சென்று கைப்பற்றிவிடவேண்டும் என்பது என் திட்டம். அத்தை அறைக்கதவு எப்போதும் தாழிடப்படாமலே இருக்கும். அதை மெதுவாகத் திறந்து, கதவு திறக்கும் ஓசையோ, நடக்கும் காலடியோசையோ கேட்டு யாரேனும் விழித்துவிடக் கூடாதே என்ற அச்சத்துடன் மெல்ல மெல்ல நடந்தேன். நடுவிலே ஒரு நாற்காலி இடறிவிழுந்து என்னைக் காட்டிக் கொடுக்க இருந்தது- காட்டிக் கொடுத்துவிட்டது என்றே நினைத்தேன். நல்லவேளை! யாரும் எழுந்துவிடவில்லை. விளக்கு மங்கி மங்கி எரிந்துகொண்டிருந்தது. அதன் நிழல்கள் ஆட்கள்போல் நடமாடின. அவை நிழல்கள் தான், ஆளல்ல என்று படிப்படியாகத் தேறினேன். ஆனால் நான் தேடிப்பிடிக்க எண்ணிய கடிகாரம் என் கண்முன்னே சுவரில் ஒரு ஆணியில் தொங்கிக்கொண்டிருந்தது. இது என்னை ஊக்கிற்று. அத்தை படுக்கையில் புரண்டாள். நான் அவளைத் தாண்டிச் சென்றேன். கைக்கடிகாரம் என்கையில் சிக்கியது. சிறிதும் தாங்காமல் நேரே ஒரே ஓட்டமாக நான் ஓடிவந்து விட்டேன். வழியில் யாரும் என்னைப் பார்த்ததாகத் தெரியவில்லை. டேவிட் கூடத் தூங்கிக்கொண்டிருந்தான். நான் அவனைத் தட்டி எழுப்பிக் கடிகாரத்தைக் காட்டினேன். அவன் கருத்து அறிந்து, இணக்கம் பெற எனக்கு அவ்வளவு துடிப்பாயிருந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு டேவிட் கடிகாரத்தைப் பார்த்தான். முதல் தடவையாக அவன் என்னை வாய்விட்டுப் பாராட்டினான். “அலக்ஸி, இந்தத் தடவை உன் கெட்டிக் காரத்தனத்தை நான் மெச்சத்தான் வேண்டும். இனி அடுத்த வேலையையும் உடனே செய்ய வேண்டும். இன்றே இதைத் தோட்டத்தில் புதைத்துவிடுவோம்” என்று அவன் ஆர்வத்தோடு கூறினான். இருவருமாக அந்த இரவே கடிகாரத்தைத் தோட்டத்தில் ஓர் இலந்தை மரத்தடியின் பக்கமாகப் புதைத்து வைத்து விட்டோம். நாஸ்டஸியின் நச்சுப்பரிசும், ஃரிஸான்ஃவின் நினைப்பும் தோட்டத்து மண்ணில் புதையுண்டன. மறுநாள் நாங்கள் எதிர்பார்த்தபடியே அத்தை பெரிய அமளிகுமளி செய்தாள். ஆயினும் நாங்கள் அஞ்சியபடி எங்கள் இருவரையும் அது தாக்கவில்லை, “கடிகாரம் ஒழிந்தது, ஒழிந்து போகட்டும். அது வீட்டில் புகுந்த நாள் முதல் தொல்லைகளுக்குக் குறைவில்லை’, என்று தந்தை இரைந்துவிட்டுத் தம் அறைக்குச் சென்றுவிட்டார். ந்ந்ந் என் தந்தையின் இணைபிரியா நண்பர்களுள் லாட்கின் ஒருவர். அவருக்குக் கால் நொண்டி. அஞ்சி ஒடுங்கி நடக்கும் இயல்பு உடையவர் ஆயினும் நினைவாற்றலும் சட்டத்தேர்வு அனுபவமும் அவருக்கு மிகுதி. தந்தைக்குத் தொழில் துறையில் அவர் மிகவும் உடந்தையாயிருந்து வந்தார். காற்று இடைபுகாத அவ்வளவு நெருக்கமான இந்நட்பிலும் எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு தளர்ச்சி ஏற்பட்டது. இருவரும் தம் தொழில் காரணமாகக் கட்சிக்காரர்களிடம் கூறிய பொய்கள், செய்த சிறுசதிகள் பல. அம் முறிவின் போது லாட்கின் தந்தை செய்த சதியை ஒரு கட்சிக்காரச் செல்வரிடம் காட்டிக் கொடுத்து விட்டார். தந்தை மனம் இதனால் அவர்மீது இரும்பாய் இறுகிப்போயிற்று. லாட்கின் பின்னால் எத்தனையோ தடவை தவறுணர்ந்து ஒத்துப்போக விரும்பியும் தந்தை ஒரே நிலையாய் அவர் திசையையே நாடாதிருந்துவிட்டார். லாட்கின் நண்பராயிருக்கும்போது அவர் புதல்வி ரயீஸா அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள். நாங்களும் அவர்கள் வீட்டுக்குப் போவதுண்டு. அவள் ஒடுங்கிய, ஆனால் வனப்பும் உறுதியும் வாய்ந்த உடலுடையவள். அவள் பேசுவது குறைவு. ஆனால் பேசும் சொற்கள் அறிவின் ஆழத்தைச் சுட்டி நிற்கும். பேசாமல் நூல் பின்னல் பின்னிக்கொண்டே அவள் எங்களுடன் இருப்பாள்; அந்நிலையிலேயே நாங்கள் மகிழ்வுடன் நேரம் போக்குவதுண்டு. ஆனால் குடும்பநட்பு முறிந்தபின் அவளும் வருவதில்லை; நாங்களும் அத்திசை நாடக்கூடாதென்ற கட்டுப்பாடு ஏற்பட்டது. நான் இதற்கு இணங்க வேண்டிய தாயிற்று. ஆனால் டேவிட் இதனை மதிக்க வில்லை. அவன் ரயீஸா வீடு செல்வான்; ரயீஸாவும் வேலியண்டை நின்று அவனை வரவேற்கத் தவறுவதில்லை. இருவரும் வேலிக்கப்புறமும் இப்புறமும் நின்று நெடுநேரம் பேசுவார்கள். அவர்கள் நட்பு அவ்வளவு இணைபிரியாத தாயிருந்தது. தந்தையின் ஒத்துழைப்பின்றி லாட்கினின் அறிவும் அனுபவமும் பயன் பெறவில்லை. வறுமை அவரைப் பிடுங்கித் தின்னத் தொடங்கிற்று. அத்துடன் அவர் திண்ணிய உடல் வாதத்துக்கு இரையாகிக் கிட்டத்தட்டச் செயலிழந்தது. அவர் மூளை முன்போலவே சுறுசுறுப்பாயிருந்தது. ஆனால் மூளையின் ஒலிநாளங்களில் வாதக்கூறு காரணமாக ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர் சொற்களையெல்லாம் ஒன்றுக் கொன்றாகத் தலைமாற்றிக் கேட்பவர்க்குப் பெருங்குழப்பம் உண்டுபண்ணி வந்தார். அவர் பேச்சு கேட்பவருக்கு மலைப்பைத் தரும் ஒரு புதுத் தனிமொழியாயிருந்தது. ஓரளவுக்கு இதை ரயீஸா புரிந்துகொண்டு வந்தாள். ‘கத்தி’ என்பது அவர் மொழியில் ஆப்பத்தின் பெயர். கசாப்புக் கடைக்காரன் என்பது என் தந்தையைக் குறிக்கும் சொல். வழக்கமான இம்மொழி பெயர்ப்புகளின் உதவிகூட ரயீஸாவுக்குச் சில சந்தர்ப்பங்களில் பயனற்றுப் போய்விடுவதுண்டு. ரயீஸாவின் தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாள். அவள் தங்கையோ அறிவு மந்தமான ஊமை அவள் எந்த வேலையும் செய்வதில்லை. அத்துடன் எவரும் உரத்துப் பேசவோ, சிரிக்கவோ செய்தால் அவளுக்குப் பொறுக்காது. இது தவிர அண்டை அயலார் அல்லது வேறு யாராவது குறும்பர் அவள் காரியத்தில் தலையிட்டு, அவளை நையாண்டி செய்து வதைத்துவிடாமல் தடுக்க, அவளை எப்போதும் யாராவது ஒருவர் பாதுகாத்துக்கொண்டிருக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் குடும்பப் பொறுப்பின் பெரும் பகுதியும், தாய், தந்தை, தங்கை ஆகிய யாவரையும் பேணும் கடமையும் ரயீஸா ஒருத்தி தோளிலேயே விழுந்தது. கடன்காரர் தொல்லைகளையும் அவளே சமாளித்துக்கொள்ள வேண்டும். டேவிட் தான் அவளுக்கிருந்த ஒரே நண்பன். அவனிடம் தன் அல்லல்களைக் கூறி அவள் அடிக்கடி ஆறுதலும், அறிவுரையும் ஒரு சில சமயங்களில் இன்றியமையா உதவியும், ஒத்துழைப்பும் பெற்றுவந்தாள். ஒருநாள் ரயீஸா தன் தாய் திடீரென்று இறந்துவிட்டாள் என்ற செய்தியுடன் வந்தாள். உடலை அடக்கஞ் செய்யத் தாயின் திருமணப் புடவையை விற்கவேண்டியிருந்தது. அதில் கிடைத்த தொகை பன்னிரெண்டு வெள்ளிகள்தான். இதைக் கொண்டு பிணப்பெட்டிக்கு ஏற்பாடு செய்யச் சமையற்காரியையே அனுப்பவேண்டியிருந்தது. சமையற்காரி அந்தப் பணத்தைக் குடித்துத் தீர்க்காதிருக்கும்படி பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ரயீஸா டேவிடிடம் ஒப்படைத்தாள். மற்றொரு சமயம் விறகுக்குப் பணமில்லாமல் காட்டிலிருந்து வேலையாள் விறகு வெட்டிக்கொண்டு வந்தான். விறகு தூக்கிக்கொண்டு வந்த சுமையாள் தனக்குரிய கடனுக்காக அந்த விறகை எடுத்துக் கொண்டான். ரபீஸா கூறிய இத்துயரங்களைக் கேட்டு டேவிட் உருகினான். ஆயினும் அவன் அவளை ஊக்கப்படுத்தித் தன் மனஉறுதியை அவளுடன் பங்கிட்டுக் கொண்டான். டேவிட்டுக்கும் ரயீஸஃhவுக்குமிடையே உள்ள நட்பு மிக நெருக்கமானது என்றும், மேன்மேலும் வளர்ந்து கொண்டே வருவது என்றும் எனக்குத் தெரியும். ரபீஸாவிடம் எனக்குக் கூட நேசமிருந்தது. ஆனால் நான் அவ்வளவு நெருக்கமாகப் பழகவில்லை. ஆனால் டேவிட் அவள் குடும்பத்துக்கு உதவுவது அவன் பெருந்தன்மைக்குரிய சின்னம் என்றுதான் கருதியிருந்தேன். ஆயினும் அவன் பேச்சிலிருந்தே ஒரு நாள் அவன் உள்ளக் கிடக்கையை நான் கண்டு கொண்டேன். சிற்றப்பா திரும்ப வீடு வருவது பற்றிப் பேசிக் கொண்டி ருந்தோம். தன் தந்தை வருவது பற்றியும், இந்தப் பாழும் ரயாஸானை விட்டு நீங்குவது பற்றியும் டேவிட் எழுச்சியுடன் பேசினான். பிந்திய செய்தி என்னைப் புண்படுத்திற்று. “நீ போய் விட்டால் நான் என்ன செய்வேன்?” என்று கேட்டேன். “உன்னையும் என்னுடன் அழைத்துக் கொண்டு போகிறேன்.” “என் தந்தை?” “அவரை விட்டு நீ விலகுவது தான் உனக்கும் நல்லது. அவருக்கும் நல்லது.” டேவிடின் பாசம் எனக்குப் பெரிது. தந்தையிடம் எனக்கு அவ்வளவு பாசம் கிடையாது. ஆயினும் அவரைப் பிரிந்து செல்வது எப்படி என்று தயங்கிப் பேசாமலிருந்தேன். “மேலும் எப்போதும் நீ தந்தையுடனே இருக்க முடியுமா? நீ திருமணம் செய்து கொள்ள வேண்டாமா?’ என்று அவன் மீண்டும் தன் கோட்பாட்டுக்கு உறுதி தேடினான். நான் பேச்சைமாற்ற “நீ எப்போது மணம் செய்து கொள்வாய்?” என்று கேட்டேன். “தந்தையுடன் சென்று நான் ஒரு நல்ல பதவி பெற்று விடுவேன். அதன்பின் காலதாமதமின்றி உடனே மணம் புரிந்து கொள்வேன்” “அவ்வளவு திடீரென்றா?” “ஆம், ஏன்?” “மனைவியாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா?” “பெண்ணா? அது தான் ஏற்கனவே தேர்ந்து வைத்து விட்டேனே!” “அது யார்?” “இன்னும் இது தெரியாமலா இருக்கிறாய். சுத்தப் பைத்தியம். அது தான் ரயீஸா!” இளைஞனாக வளர்ந்தும் இன்னும் குழந்தையாயிருந்த என் உள்ளத்தில் ஒரு மின்னொளி பாய்ந்து பரந்தது. டேவிடின் வாழ்க்கைத் திட்பத்துக்குரிய மூல ஆற்றல், இதோ, இப்போது எனக்கு விளங்கிவிட்டது. அவ்வாழ்க்கைப் பயணத்துக்கு ஒரு குறிக்கோள்- ஒரு வடமீனாக ரயீஸா விளங்கினாள்! எங்கள் அமைதியான வாழ்வில் நெடு நாட்களாகக் கைக்கடிகாரத்தின் நிழல் இல்லாமலிருந்தது. நாங்கள் அதை மறந்தே போய்விட்டோம். அது தானாகத் தன் இறுதிக் காட்சியை அனுப்பி எங்கள் அமைதியைக் கலைத்தது. ஒருநாள் தோட்டத்தில் உலாவும்போது கடிகாரம் புதையுண்ட இடத்தை அணுகினேன். அது இன்னும் அந்த இடத்தில் தான் செயலற்று இருக்கிறதா என்று அறியும் ஆர்வம் எனக்கு எழுந்தது. சிறுபிள்ளைத் தனமாக, கடிகாரம் இன்னும் ஓடிக் கொண்டிருக்குமா அல்லது நின்று போயிருக்குமா என்று பார்க்க விரும்பினேன். ஆனால் இடத்தை நோக்கி என் பார்வையைச் செலுத்திய போது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நிலத்திலுள்ள மண் புதிதாகத் தோன்றிற்று. யாரோ அதை அணிமையில் கிளறியிருக்கவேண்டும் என்று பட்டது. நான் பரபரப்புடன் அதைத் தோண்டிப் பார்த்தேன். மீண்டும் மீண்டும் தோண்டினேன், ஆழமாக, கடிகாரத்தைக் காணோம்! எங்கள் இரகசியம் முற்றிலும் எங்கள் இரகசியமாகவே இருந்திருக்க முடியாது; அதை யாரோ அறிந்து சமயம் பார்த்துக் கடிகாரத்தை எடுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். யார் இரகசியத்தை அறிந்திருக்கக் கூடும்? யார் எடுத்திருப் பார்கள்? எங்களிருவரைத் தவிர வேறு யார்? எண்ணி எண்ணி அலைப்புற்ற என் மனத்தில் ஒரு கொடிய ஐயம் தோன்றிற்று. “என்னைத் தவிர இவ்விரகசியத்தில் பங்கு கொண்டவன் டேவிட் ஒருவனே. அவன் காதலி வறுiமையால் உழல்கிறாள். அவளுக்கு அவன் பூரணமாக உதவமுடியாது; அவன் கையிலும் பணம் மிகுதி இல்லை. ஒருவேளை- ஒருவேளை அவளுக்காக அவன் அதை எடுத்து விற்றிருக் கலாமோ? “என்னிடம் இதைத் தெரிவிக்காமலா எடுத்திருப்பான். எங்கள் நட்பின் தன்மையைப் பார்க்க, இதற்கு நான் இணங்குவது ஒரு பெரிய காரியமல்லவே, ஆனால் யாரறிய முடியும்? நட்பின் தன்மையை அவன் மதியாமலே, காதலுணர்வால் தூண்டப்பட்டு எடுத்திருக்கவும் கூடும்!” இவ்வாறு என் உள்ளத்தில் கருத்தலைகள் எழுந்து ஒன்றோடொன்று மோதின. இறுதியில் என் ஐயம் உறுதியாக உருவெடுத்தது. டேவிட்டிடம் இது சம்பந்தமாகக் குறிப்பாகக் கூறினேன். அவன் நான் கூறிய சிறு சிறு குறிப்புரைகளைப் புரிந்து கொள்ளவில்லை. வேண்டுமென்றே உணராதது போல் நடிக்கின்றானோ என்று மீண்டும் ஐயுற்றேன். அவன் நட்பை உதறித்தள்ளிவிட்டு நகர்ந்தேன். அவன் பொருட் படுத்த வில்லை. இதுவும் என்னைப் புண்படுத்திற்று. அவன் நட்பிலும் தற்சார்புடையவன் என்று எண்ணிப் பார்க்கச் சக்தியற்றவனாயிருந்தேன். ஆனால் ஒருநாள் தற்செயலாக அதுபற்றிய உண்மையை நான் உணர்ந்துகொள்ள நேர்ந்தது. உண்மையில் எங்கள் இரகசியத்தை அறிந்த மற்றொருவன் இருந்தான். அவனே வாஸிலி என்ற எங்கள் அயல்வீட்டு வேலையாள். அவன் பெருங்குடியன்; பெண் பசப்பன். அவன் ஒருநாள் தேறல் விடுதியில் வயிறு முட்டக் குடித்துவிட்டு, விடுதி நங்கை ஒருத்தியுடன் எல்லாவற்றையும் உளறிக் கொட்டிக் கொண்டிருந்ததை நான் கேள்விப் பட்டேன். நாங்கள் கடிகாரத்தைப் புதைத்தபோது பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, பிறகு அதை அவன் எடுத்து மறைத்து வைத்திருக்கிறான். வீணாக டேவிடை ஐயுற்றது எனக்குச் சுருக்கென்றது. டேவிடிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு செய்தியை அவனிடம் விளக்கினேன். மன்னிக்க எதுவுமில்லை என்று டேவிட் கூறிவிட்டான். ஆனால் செய்தி முழுவதும் கேட்டபின் அவன் சீறிவிழுவான் என்று நான் எதிர்பார்க்க வில்லை. “ஆகா, இவ்வளவுக்கு ஆய்விட்டதா? இதைச் சும்மா விடக்கூடாது. அந்தப் பயலைக் கொன்றாவது நாம் கடிகாரத்தைத் திரும்பப் பெறவேண்டும்” என்று புறப்பட்டுவிட்டான். எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. திருட்டுப் பொருளைத் திருடியவன் மீது இப்படி வெளிப்படையாகச் சீறி என்னபயன் என்று மலைத்தேன் ஆனால் வேறு வழியின்றி டேவிடைப் பின்பற்றிச் சென்றேன். டேவிட் நான் போவதற்குள் வாஸிலியைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தான், கடிகாரத்தைக் கொடுக்கிறாயா அல்லது உன்னைக் குத்திக்கிழிக்கட்டுமா என்று என்னிடம் உரத்த குரலில் “அலக்ஸி, போய் என் கத்தியை எடுத்து வா” என்று முழங்கினான். உலுக்குவதுடன் நிற்கவில்லை; அடி உதையும் விழுந்தன. வாஸிலி அலறித் துடித்துக் கடிகாரத்தைத் தர ஒத்துக்கொண்டான். சொன்னபடியே கடிகாரமும் வந்து விட்டது. நான் இன்னும் எதுவும் பேசக்கூடிய நிலையில் டேவிட் இல்லை. ஆயினும் மேலே செய்யவேண்டியது பற்றிப் பேசினான். “இந்தக் கடிகாரத்தை இனித் திரும்ப மீளாத இடத்துக்கு அனுப்பவேண்டும். எனக்கு ஒரு புது எண்ணம் தோன்றுகிறது. பஞ்ச உதவிக்காக அரசியலார் பணம் மட்டுமன்றி, பல்வகைப் பொருள்களும் பெற்றுக் கொள்கிறார்களாம். அவ்வகையில் இதையும் சேர்த்து அனுப்பிவிடுவோம். மாகாண முதல்வருக்கு ஒரு மனு எழுது” என்றான். நான் போய்த் தாளும் மைக்கோலும் கொண்டுவந்து எழுதத் தொடங்கினேன். இதற்குள் எங்களைச் சுற்றிலும் பேரிரைச்சல் எழுந்து விட்டது. அத்தையின் குடி படைகளும் தந்தையும் வந்து எங்களை வளைத்துக் கொண்டனர். அத்தை என்மீது வசையம்புமாரி பொழிந்து கொண்டிருந்தாள். டேவிட் கையில் கடிகாரம் இருப்பதைக் கண்ட தந்தை “அட திருட்டுப் பயல்களா! உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள். முதலில் கடிகாரத்தை இங்கே ஒப்படைத்து விடுங்கள்” என்றார். அதுமுதல் டேவிட் செய்த ஒவ்வொரு செயலும் நான்மட்டுமல்ல, அங்குள்ளோர் எவரும் எதிர்பாராதவையா யிருந்தன. அவன் கடிகாரத்தைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஊடத்தொடங்கிவிட்டான். பலகணி வழியாகத் தாவிக் குதித்துத் தோட்டத்தைக்கடந்து தெரு வழியாக ஓடினான் நானும் ஒன்றும் தோன்றாமல் அவன் பின்னால் ஓடினேன். ஏதோ பித்துப் பிடித்தவர்கள் போல இருவரும் ஓடினோம். எங்களைப் பின் தொடர்ந்து அத்தையின் படை குடியும் தந்தையும் திருடரைத் துரத்தும் காவலர்போல, ‘திருட்டுப் பயல்கள், பிடி, அடி’ என்று கூவிக்கொண்டு ஓடிவந்தனர். தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லை. நடமாடியவர்கள் எங்கள் ஓட்டத்தின் வேகத்தைக் கண்டு திடுக்கிட்டு முதலில் விலகினர். பின் துரத்துபவர்களுடன் சேர்ந்துகொண்டு எங்களைத் துரத்தினர். ‘அடி, பிடி’ என்ற குரல்கள் எங்களை மேலும் ஊக்கி விரட்டின. படைவீரர் ஒருவர் மட்டும் எங்களைக் கண்டு மாடியி லிருந்து விரைந்து இறங்கி ‘போதும், நிறுத்துங்கள், நிறுத்துங்கள்’ என்று கூவிக் கொண்டே ஓடிவந்தார். அந்த ஓட்டப் பரபரப்பில் நான் அதைக் கவனிக்க முடியவில்லை. தெரு ஆற்றுத் துறையில் கொண்டுவிட்டது. அது படகுத் துறையாதலால் பாலம் போன்ற பிடிச்சுவர் உடையதாயிருந்தது. டேவிட் ஓடின வேகத்திலேயே அதில் ஏறினான். தூக்கிய கையுடனேயே அவன் நெட்டை உருவம் பிடிச்சுவரின் மேல் ஒரு கணம் நின்றது. அப்புறம் என்ன நடந்த தென்று யாரும் அறிய முடியவில்லை. ஏதோ ஒன்று வானவெளியில் மின்னிற்று. அது டேவிட்ஆற்றில் வீசியெறிந்த கடிகாரம் என்று பின்னால் அறிந்தோம். ஆனால் அதை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கும் போதே டேவிட்டின் உருவமே வானில் எழுவதுபோலிருந்தது. அனைவரும் ‘ஆ’ என்று வாயைப் பிளந்து கொண்டு நின்றனர். அவன் தலை குப்புறக் கவிழ்ந்து நடு ஆற்றில் மறைந்தான். துரத்திக்கொண்டு வந்தவர்களும், அங்கு நின்றிருந்தவர்களும் ஒரே கூக்குரலிட்டுக் கூவினர். என்னளவில் இன்னதென்றறிய முடியாத கிலி என்னைப் பிடித்துக் கொண்டது. நான் ஓவென்றலறி வீழ்ந்தேன். அதன்பின் என்ன நடந்த தென்று எனக்குத் தெரியாது. நான் எழுந்திருந்தபோது என் பக்கத்தில் யாரும் இல்லை. ஆற்றின் மற்றொருபுறம் கூட்டம் சென்று சாய்ந்திருந்தது. டேவிடின் உடல் அங்கே ஒரு படகினின்றும் தூக்கி இறக்கப்பட்டு வீட்டுக்குக்கொண்டு செல்லப்பட்டது. அவன் உடலில் இன்னும் உயிர் இருந்து கொண்டிருப்பதற்கு அறிகுறியாக நெஞ்சு மெதுவாக விம்மித் தணிந்துகொண்டிருந்தது. நானும் அழுது கொண்டே உடன் சென்றேன். கம்பளியில் வைத்து டேவிடின் உடலை உருட்டினர். வாய்வழியாகவும் மூக்குவழியாகவும் நீர் கசிந்தோடிற்று. சில மணி நேரத்திற்குள் அவன் நேர்மூச்சு வாங்கினான். இரவு வந்தபோது அவன்எழுந்து உட்காரத் தொடங்கினான். ‘நிறுத்துங்கள், நிறுத்துங்கள்’ என்று கூவிய படை வீரரே, டேவிட் ஆற்றின் பிடிச்சுவரில் நின்று சமநிலை தவறி விழுந்ததைக் கண்டு, விரைந்து படகேறிச் சென்று அவனை எடுத்தார் என்று பின்னால் அறிந்தேன். அவன் உயிரைக் காக்கும் பணியில் வாஸிலியும் பங்கெடுத்துக் கொண்டான். ஆனால் டேவிட் முழுதும் உணர்வுபெறுமுன் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் ஒவ்வொருவராகக் கலைந்து போயினர். வீட்டாட்களும் பிழைத்தவன் திருட்டுச் செயலை நினைத்துத் தீண்டத்தகாதவனைப் போல் விட்டு அப்பால் சென்றனர். நானும் டேவிடுமே மீந்தோம். டேவிட் விழித்தெழுந்தபின் என்னிடம் அவன் கேட்ட கேள்விகள் எனக்கு அதிர்வேட்டுப் போலிருந்தன. ஆனால் அதுவும் அதன்பின் நடந்த செய்திகளும் அவன் காதலின் ஆழத்தையும், ரயீஸாவின் காதலுறுதியையும் எனக்கு நன்கு எடுத்துக்காட்டின. “நீ ரயீஸாவைப் பார்த்தாயா?” என்றான் அவன். கேள்வி எனக்குப் புரியவில்லை. “இல்லையே, ஏன்?” என்றேன் நான். “வேறொன்றுமில்லை. நான் தடுமாறி விழும்பொழுது என் பின்னால் கறுப்பு உடை, மஞ்சள் தலைக்கட்டுடன் ஒரு உருவம் நின்றதாகத் தெரிந்தது. அது ரயீஸா வாகத்தானிருக்க வேண்டும். ‘ஆ’ என்று அவள் அலறியதை நான் காதாரக் கேட்டேன். அதன் பின் அவள் என்னானாளோ தெரியவில்லை. அதுபற்றிக் கவலைப்படுகிறேன்.” டேவிட் மூளை குழம்பியிருக்கிறது. அவன் கனவு காண்கிறான் என்று நான் நினைத்துக்கொண்டேன். ஆனால் அவன் முகத் தோற்றம் அவன் கொண்டிருக்கும் கவலை உண்மையானதென்றே காட்டிற்று. “அலக்ஸி, ரயீஸாவுக்கு அடுத்தபடி நீதான் என் உயிர்த் துணை. நான் இறந்துவிட்டேன் என்று அவள் நினைத்து விட்டால், அவள் நிலை என்னவாகுமோ தெரியாது. நான் இப்போது பிழைத்து விட்டேன், நலமாயிருக்கிறேன் என்பதை அவள் உடனடியாக அறியவேண்டும். நாளையே சற்று உடல் தேறியதும் அவளை நான் வந்து பார்க்கிறேன் என்று அவளிடம் நீ போய்ச் சொல்லி விட்டு வருவாயா?” என்று வேண்டினான். அத்தொனி என்மீது ஆட்சி செலுத்திய டேவிடின் தொனியன்று. அது இப்போது கெஞ்சும் டேவிடின் தொனியாக மாறியிருந்தது. ஆனால் இந்த மாறுதல் அதன் இயல்பான ஆற்றலைக் குறைக்கவில்லை; பெருக்கவே செய்தது. நான் உடனே எழுந்தேன். எங்களை உறுத்து நோக்கிக் கொண்டிருந்த அத்தை, தந்தை கண்களில் படாமல் சுற்றி வளைந்து சென்றேன். லாட்கின் குடிசை ஒரு தாழ்ந்த அகல் வெளிக்கு அப்பால் இருந்தது. தொலைவிலிருந்தே நான் கண்ட காட்சி சிலைகளின் காட்சியைப் போல அசைவற்றுக்காணப் பட்டது. ரயீஸா தன் வீட்டு வாசற்படியின் கடைசிப் படியிலிருந்துகொண்டு எதையோ முறைத்துப் பார்த்தவண்ணமிருந்தாள். லாட்கின் எனக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ரயீஸாவின் அருகிலுள்ள ஊமைத்தங்கை மட்டும் சாட்டையடித்து விளையாடிக்கொண்டிருந்தாள். அருகே சென்றபோது லாட்கினைக் கண்டு நான் திகைத்து விட்டேன். அவரை நான் பார்த்து நெடுநாட்களாகிவிட்டன. இப்போது அவரடைந்துள்ள மாறுதல் என்னை வியப்புக் குள்ளாக்கியது. அவர் திண்ணிய உருவம் கரைந்துவிட்டது. அவர் பேச்சுத் திறம் ஒரு பேச்சுக் கோளாறாக இருந்தது. ரயீஸாவும் கண் விழித்துக்கொண்டிருந்தாளே தவிர, எத்தகைய உணர்வுடனும் இருந்ததாகத் தெரியவில்லை. வாய் பேசவில்லை. அவள் நிலையை எனக்கு விளக்க நினைத்த லாட்கின் என்னென்னவோ உளறிக் கொட்டினார். அவள் கண்ணடைத்து விட்டது என்று அப்போது கூறினார். அவளுக்கு வாயடைத்துப் போய்விட்டது என்பதையே அவர் இவ்வாறு தம் மொழியில் மொழி பெயர்த்துக் கூறினார் என்பதை ரயீஸாவின் நீடித்த மௌனத்தின் மூலம் ஊகித்து உணர்ந்து கொண்டேன். நான் பேசியது எதையும் அவள் கேட்கவேயில்லை என்று கண்டு கலங்கினேன். லாட்கினோ அறிந்து எனக்கு ஆறுதல் தர முனைந்தும் விளங்காப் பேச்சுப் பேசித் தொல்லைதான் தந்தார். நிலைமையை டேவிட் அறிந்தால் அவன் மனம் என்ன பாடுபடும் என்று ஏங்கினேன். இறுதியாக என்னால் இயன்ற அளவு உரத்து ரயீஸாவின் காதில் “டேவிட், டேவிட், டேவிட்!” என்று இரைந்தேன். அவள் சிறிது விழித்துப் பார்த்தாள். அந்த ஒரு பெயருக்கு அத்துணை ஆற்றல்! மீண்டும் உரத்த குரலில் “டேவிட், டேவிட்... டேவிட் உயிருடன் இருக்கிறான்... உயிருடன் இருக்கிறான். டேவிட்” என்றேன். ‘ஆ’ என்று அவள் வாய் திறந்தாள். அடுத்த கணம் அவள் முயல் குட்டிபோல் எழுந்து அகல்வெளியைக் கடந்து தலைவிரிகோலமாக ஓடினாள். ஊமை நங்கையும் ‘கிறீச், கிறீச் என்ற ஒலியுடன் அவளைப் பின் தொடர்ந்து ஓடினாள். நான் விபரம் அறியாமல், ஒன்றுமே விளங்காமல், கூடியமட்டும் விரைந்து அவளைப் பின்தொடர்ந்தேன், எங்கே போகிறாள் அவள், ஏன், என்பதை ஊகிக்க முடியாமலேயே! அவள் எங்கள் வீட்டு வேலியைக் கடந்தாள். அவளைக் கண்டு வெருவி நிற்கும் அத்தை, தந்தை ஆகியவர்களைக் கடந்து சென்றாள். டேவிட் இருக்கும் இடம் தாவினாள்! டேவிடும் தாவி எழுந்து வந்து அவளை தாவி அணைத்தான். ‘ஆ, என் டேவிட்’, ‘ஆ, என் ரயீஸ்’ என்ற குரல்கள் இருவரிடமிருந்தும் ஒரே நேரத்தில் மீண்டும் மீண்டும் எழுந்தன. தந்தையும் அத்தையும் எங்களைப் பின்தொடர்ந்து வந்தனர். ரயீஸா வெட்கி வெளியேற விழைந்தாள். ஆனால் டேவிட் இடைநின்று தந்தையை எதிர்த்துப் பேசத் துணிந்துவிட்டான். “ரயீஸாவை அவமதிப்பாகப் பேசினால், நான் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்றான். “என் வீட்டில் என்மீது கட்டளை வீச நீ யார்?” அவளுக்குப் பரிந்து பேசத்தான் உனக்கென்ன உரிமை?” மனைவி” என்று அவர் கொதித்தெழுந்தார். “அவள் என் காதலி. என் காதற் பிணைப்புக்கு உரியவள். என் வருங்கால வாழ்க்கைத் துணைவி” என்றான் டேவிட். அவன் துணிச்சல் கண்டு நான் நடுங்கினேன். “அடே, நீ வயது வராத சிறுவன். என் இணக்க மில்லாமல் அவள் உன் மனைவியாக முடியாது.” “நாங்கள் வயது வரும்வரைக் காத்திருக்க முடியும். அதுமட்டுமல்ல. நான் மண இணக்கம் கோரப்போவது உம்மிடமல்ல, என் தந்தையிடம், அத்தகுதி உமக்குக் கிடையாது.” அத்தையின் வாய் துடிதுடித்துக்கொண்டிருந்தது. எதிர்த்துப் பேச வாயெடுத்தவள் அப்போது அங்கே வேறோர் உருவத்தைக் கண்ட கிலியினால் அப்படியே கல்லாய்ச் சமைந்து போய்விட்டாள்! மகளைப் பின்பற்றி லாட்கின் தன் வாதக்காலையும் பொருட்படுத்தாது வந்து நின்றார். “மகளே, நான் திருடன். நீ திருடன் மகள். இவர்கள் எல்லாம் புண்ணியாத்மாக்கள். அதோ (டேவிட்டைக் காட்டி) அவனும் புண்ணியாத்மா வீட்டான் தான். ஆகவே நாம் இங்கே வரக்கூடாது. ஆனால் நானும் இந்தப் புண்ணியாத்மாவும் திருடின பொருள்கள் இந்த வீட்டிலுண்டு. அதில் இயேசு சிலையும் ஒன்று அதோ இருக்கிறது. அந்தச் சிலை நம் எல்லோரது குற்றத்தையும் மன்னிக்கட்டும்” என்று மகளை அழைத்தேகினார். இவ்வுருக்கமான காட்சி கண்டு ஒரு நொடியில் தந்தையின் மனம் மாறிற்று. “உமக்கு மீளாத் தீங்கு செய்தேன். உமக்கு மீளாத் தீங்கு செய்தேன்” என்று அவர் முனகினார். லாட்கின் மறுநாளே உயிர் நீத்தார். ஆனால் அவர் இறுதி விழாவுக்கு முன் நாங்கள் நெடுநாள் எதிர்பார்த்த என் சிற்றப்பா யெகோர் திடீரென வந்து சேர்ந்தார். அவர் போதிய பணத்துடன் வந்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் லாட்கினின் அடக்கச் செலவை ஏற்று அவர் குடும்பத்தைத் தன் குடும்பமாக்கிக் கொண்டார். முன்னறிவிப்புக்கடிதமெதுவும் போடாமல் சிற்றப்பா வந்ததால், அவரை வரவேற்கத் திடீரென்று எப்படி ஏற்பாடு செய்வது என்று அத்தையும் தந்தையும் மயங்கினர். ஆனால் அவர் எங்கள் வீட்டுக்கு வராமல் லாட்கின் வீட்டிலேயே இருந்து விட்டார். மேலும் ரயாஸானை விட்டு டேவிடுடன் மாஸ்கோவுக்கே சென்றுவிடப் போவதாக அவர் சொல்லி யனுப்பினார். உண்மையில் தன் குற்றங்களறிந்தும் தன்னை அவர் கண்டியாததைக் கண்ட தந்தை அவரைக் காணக் கூசினார். ஆகவே தம்பி ரயாஸானை விட்டு மாஸ்கோவுக்குச் செல்வதில் அவருக்கு உள்ளுற மகிழ்ச்சி. டேவிட் தன் வாழ்க்கைச் செய்தி முழுவதையும் தந்தைக்கு எடுத் துரைத்தான். அவர் அரசியலிலும் வாழ்வியலிலும் முற்போக்கான கொள்கையுடையவர். வால்ட்டேரிடம் அவருக்குப் பெருத்த ஈடுபாடு. அப்பகுத்தறிவாளர் நூல்களைப் படிக்கவே ஃபிரஞ்சு மொழி கற்று வந்தவர். எனவே அவர் டேவிடைத் தட்டிக் கொடுத்து ரயீஸாவையும் ஆர்வத்துடன் மருமகளாக வரவேற்றார். ஆற்றில் மறைந்த கடிகாரம் திரும்பவும் எங்கள் வாழ்வமைதியைக் குலைக்க வரவேயில்லை. ஆனால் என் கள்ள மற்ற இளமைக்கால வாழ்வின் இன்பங்களும் அத்துடன் போய் விட்டன என்று தான் சொல்ல வேண்டும். யெகோருடன் டேவிடும் ரயீஸாவும், அவள் ஊமைத் தங்கையும் இப்போது மாஸ்கோவிலிருக்கின்றனர். டேவிட் என்னைப் போகும் போது அழைத்தான். ஆனால் இனி அவன் வாழ்வில் என் தேவை குறைவு. நான் உடன் செல்ல மறுத்து விட்டேன். என் வாழ்வு இப்போது உவர்ப்பாகத் தோன்றுகிறது. எனக்கும் ஒரு வாழ்க்கை குறிக்கோள் ஏற்படும் வரை இந்த உவர்ப்பு நீங்க முடியாது. 2. மாயக்கணவன் டாஸ்டோவ்ஸ்கி வெல்ச்சானினாவ் ஒரு விசித்திரமான மனிதன். அவன் வாழ்க்கைப் போக்கு இன்னும் விசித்திரமானது. ஆனால் அதையெல்லாம் சுருட்டி மடக்கிக்கொண்டு, பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்து, தான் புதிதாக ஈடுபட்டிருக்கும் வழக்கிலேயே அவன் தன் முழுநேரத்தையும், ஊக்கத்தையும் செலவழித்து வந்தான். பெருஞ் செலவில் திறமையுள்ள வழக்கறிஞரை அமர்த்திவிட்டு, அவரிடம் வழக்கை விடாமல், தானே இருந்து உழைத்து வந்தான். அப்படியும் சென்ற பதினைந்து நாளும் அவன் மனம் படும்பாட்டை அவனால் அறிய முடியவில்லை. அது அவனுக்கே பெரும் புதிராகத் தோன்றியது. இளமையில் அவன் இருதடவை மணம் செய்திருக்கிறான். இரு தடவையும் அவன் குடும்பவாழ்வில் பங்கு கொள்ளவில்லை. ஏனெனில் அவன் மணந்துகொண்டதே மனைவியை நாடியல்ல; பணத்தை நாடி. ஒன்றன்பின் ஒன்றாக மனைவியர் மூலம் இரண்டு செல்வப் பண்ணைகளைக் கைக்கொண்டு, அவற்றை ஊதரித் தனமாக வாரிச் செலவு செய்து, அதன் விரைவில் ஓட்டாண்டியானான், அவன் தொட்டதெல்லாம் தோல்வி. அவன் நட்பும் நாடவில்லை, நல்ல பெயரும் தேடவில்லை. மதிப்பு என்பது இன்னதென்று தெரியாமலே- அதுபற்றிய கவலையுமில்லாமலே அவன் வாழ்ந்து வந்தான். அவன் வாழ்க்கையே வியப்புக் குறிகளின் ஒரு தொகுப்பு! பெரிய வீடொன்றில் ‘உள்ளே நுழையாதே’ என்று அவனைத் துரத்தியதுண்டு; கீழ்மக்கள் அவனை முகத்துக் கெதிரே இகழ்ந்ததுண்டு; பெண்டிர் முன்னிலையில் அவன் மூக்கறுபட்ட கட்டங்கள் ஏராளம்; குறும்பனொருவன் கேலிச் சிந்திசைத்து அவனைக் கேவலப்படுத்திய நாட்கள் பலப்பல. இது, தவிர கடன்காரர் ஓயாது தொல்லை தந்து வசைபாடினார். சிறு சிறு கடன்களைக் கூட அவன் மனதாரக் கொடுத்து விடத் துணிவதில்லை; இவ்வளவையும் அவன் ஒருநாளும் சட்டை பண்ணியதில்லை. அதற்காக வருந்தியதுமில்லை. ஆனால் இப்போது அவன் ஏனோ கலங்கினான்! சில நாட்களுக்குப் பின் அவன் வாழ்க்கை மாறியது. தீமைகளை ஏற்றதுபோல் இப்போது அவன் தீமைகளைத் துணிந்து இயற்றினான். தீமை நிறைந்த வாழ்க்கையில் சிறிது வெற்றியும் பெற்றான். ஒரு வயதுசென்ற கணக்கனைக் காரணமில்லாமலே அவன் உதைத்து, அவமதித்தான். ஓர் ஏழை ஆசிரியர் மனைவி அவனை நண்பனாக நடத்தினாள்- அவள் இரகசியங்களை வெளியிட்டுப் பல பேர் முன்னிலையில் பழி தூற்றி, அவள் வாழ்க்கையைப் பாழாக்கி மகிழ்ந்தான். இளவரசனாகப் பிறந்த ஒரு இளைஞன்- தாய்க்கு ஒரே பிள்ளை- அந்த அப்பாவியுடன் வல் வழக்காடி, அவனைத் துப்பாக்கியால் தாக்கிக் கால் முடமாக்கினான். இவற்றிலெல்லாம் அவன் கழிவிரக்கம் கடுகளவும் கொள்ளவில்லை- அவன் இப்போது எதற்காகவோ மறுகினான்! பகலெல்லாம் வேண்டுமென்றே அலைந்தான். ஆயினும் அவன் மனம் ஒருநிலைப்படவில்லை. இரவு துயில் அவன் கண்ணை மருவ மறுத்தது; வயிறு உணவை மறுத்தது; வாய் சுவையை மறுத்தது. உள்ளம் ஓயாது இறந்த காலத்தை நோக்கித் திரிந்தது. எதை எதை எல்லாமோ நினைத்தது. ஆனால் துயரந்தரும் நினைவு எது என்று அவனால் கூற முடியவில்லை. அவன் கண்ட காட்சிகளில் ஒன்றே ஒன்று அவன் உள்ளத்தை ஓயாது வருத்திக்கொண்டிருந்தது. அவனை அறியாமல் அது அவனை மீண்டும் துயிலிலும் விழிப்பிலும் அலைக் கழித்துவந்தது, கறுப்பு நாடா அணிந்த ஒரு மனித உருவம்- அதைப் பதினைந்து நாட்களுக்கு முன்தான் முதன் முதலாக அவன் சந்தித்தான். ஆனால் அப்போதே அது எங்கோ இதற்கு முன் கண்ட- மிக மிக நெருங்கிப் பழகிய முகம் மாதிரி இருந்தது. கண்ணுக்கு அவ்வுருவம் மறைந்ததும் அவன் அதை மறந்துவிட்டதாகவே எண்ணினான். ஆனால் மனம் எப்படியோ மீண்டும் மீண்டும் அதைச் சுற்றிச் சுற்றி, விட்டு விட்டு, வட்டமிட்டு வந்து கொண்டிருந்தது. அந்நினைவை மனத்தினின்றும் அறவே விலக்க வழியில்லாது விழித்தான். அடுத்த நாள், இரண்டாவது நாள், ஐந்தாவது.... இப்படி அடுத்தடுத்து அவ்வுருவத்தைக் கண்டான். கண்டது ஒரு தடவையானால், காணாது நினைப்பது பல நூறு தடவை. ஆள் அடையாளம் மூக்கு நுனிவரை வரும்; பின் மறைந்துவிடும். பெயர் தொண்டை வரை வருவதாகத் தோற்றும்; அதுபோலவே பின் இறங்கி விடும். வெல்ச்சானினாவுக்கு வழக்கிலிருந்த அக்கறை குறைந்தது. அது அவன் முயற்சியினாலேயே தோல்வி நோக்கி முன்னேறிற்று. இதற்கு முன்பு தோல்வியை அவன் பொருட்படுத்தியதில்லை. இப்போது அது அவன் உள்ளத்தை அரித்தது. வழக்கை விரைவில் சமரசம் செய்து முடித்துவிட எண்ணி, அவன் சட்டசபை உறுப்பினர் ஒருவரைக் காண முயன்று கொண்டிருந்தான். அவர் அவனைச் சந்திக்க விரும்பாமல் நாட்டுப்புறப் பண்ணைக்கும் நகருக்குமாக, அவனுக்குப் பிடி கொடாமல் அலைந்து கொண்டிருந்தார். கடைசியில் அவன் அவரைக் கண்டு மகிழ்ந்தான். அச்சமயம் நான்காவது சந்திப்பு நிகழ்ந்தது. எனவே அச்சமயமும் சட்டசபை உறுப்பினரின் சந்திப்புக் கைகூடாது போயிற்று. இன்று ஐந்தாவது தடவையாகக் கறுப்பு நாடாப் பேர்வழியைச் சந்தித்தான். இன்னது செய்கிறோம் என்று தெரியாமல் என்ன உணர்ச்சியாலோ தூண்டப்பட்டு, சிறிது தொலை சென்ற பின் அழைத்துக் குறுக்குக் கேள்வி கேட்டான். அவன் சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டுப் பின் ஒன்றும் பேசாது போய்விட்டான். இரவில் தூக்கம் வரவழைப்பதற்கென்றே அவன் மீண்டும் சட்டசபை உறுப்பினரைக் காணும் சாக்கில், அவர் நாட்டுப்புறப் பண்ணைவரை நடந்துசென்று மீண்டான். இரவு பத்துமணிக்கு இரண்டாவது தளத்திலிருந்த தன் அறை சென்று படுத்தான். இரவு முழுவதும் கறுப்பு நாடா அணிந்த உருவமும் அதன் மாயப் பார்வையும் அவனை அலைத்தன. அவன் மிகப் பெரிய குற்றமொன்றைச் செய்திருந்ததாகவும், கறுப்பு நாடாக்காரனது ஒரு சொல் அவனைக் காட்டிக் கொடுத்துவிடுமென்றும் அவனுக்குத் தோன்றியது. அவன் வாய் பேசாதிருந்ததினால் அவனை வெல்ச்சானினாவ் அடிமேலடியாக அடித்தான். இதனிடையே கதவு பலமாகத் தட்டப்பட்டது. இது மட்டும் கனவல்ல, ஆனால் உண்மை என்ற உணர்ச்சியுடன் அவன் விழித்தெழுந்து சென்றான். கதவைத் தாழிடாமலே தூங்கப் போய்விட்ட தவறு அவனுக்கு அப்போது தான் தெரிந்தது. மணி அப்போது இரண்டரை இருக்கும். அப்படியானால் அவன் மூன்று மணி நேரம்தான் தூங்கியிருக்க வேண்டும். மீண்டும் தூக்கம் வரவில்லை. இங்குமங்கும் உலாவினான். கனவை உதறித்தள்ள முயன்றான். அவனுக்கு இப்போது முப்பத்தெட்டு அல்லது முப்பத்தொன்பது வயது தானாகிறது. ஆனால் தள்ளாத கிழப் பருவம் தன்மீது திடுமென வந்து குந்திக் கொண்டு மூளையைக் கலக்குவதாக அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான். உள்ளுற ஏதோ பிணி ஒன்று தன்னை நலிவித்து வருத்திக் கொண்டிருப்பதாக அவன் தன் நிலைக்கு அவனாக விளக்கம் கொடுத்துப் பார்த்துக் கொண்டான். காற்றுக்காகப் பலகணியைத் திறந்துவிடச் சென்றான். அங்கே அவனுக்கு எதிராக அந்த முகம், அந்த நாடா, அந்தக் கண்கள் அவன் முன் நின்று பார்த்துக் கொண்டிருந்தன! கறுப்பு நாடாப் பேர்வழி அருகே வர விரும்பினான்; ஆனால் வரத் தயங்கினான். அவன் ஒவ்வொரு அங்க அசைவையும் பலகணி வழியாக வெல்ச்சானினாவால் பார்க்க முடிந்தது. அவன் உள்ளே படிப்படியாக வருவது தெரிந்தது. இறுதியில் அவன் உள்ளே வந்துவிட்டான். வெல்ச்சானினாவ் முன்வந்து அவன் சிறிது நேரம் பேசாமல் நின்றான். அவன் முகம் முழுவதும் ஒரு புன்னகை பரந்து ஒளி வீசிற்று. “அலக்ஸி ஐவனோவிச் சைக் காணும்பேறு எனக்குக் கிடைத்தது பற்றி மகிழ்ச்சியடைகிறேன்” என்றான். அது வெல்ச்சானினாவின் பழைய பெயர். ஒரு கணத்தில் அப்பெயர் புது வரவினனின் பெயரையும் மறதி என்னும் திரையை நீக்கி இழுத்துக்கொண்டு வந்துவிட்டது. “ஆ, பாவல் பாவ்லோவ்ஸ்கி ட்ரூஸோட்ஸ்கி யல்லவா இது!” என்று அவன் வியப்புடன் கூறினான். “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நாம் நெருங்கிய நண்பர்கள். அவ்வுரிமையால்....” இத்தொனி சந்தர்ப்பக் கேடானதென்று வெல்ச்சானி னாவுக்குப் பட்டது. “இப்போது இரவு மணி மூன்று. ஏற்கனவே நீங்கள் வந்து கதவு தாழிடப்பட்டிருக்கிறதா, இல்லையா என்று தட்டிச் சோதித்திருக்கிறீர்கள்” என்றான். பாவ்லோவ்ஸ்கி சிறிது நடுங்கினான். பின் படபடத்து அங்குமிங்கும் கண் சுழற்றினான். இறுதியில் நகைத்துப் பசப்பிக் கொண்டு ஒருவாறு சமாளித்தான். “அது சரியே. பார்க்க வேண்டுமா, பார்க்கலாமா என்ற தயக்கத்தில் பல நாள் சுழித்திருக்கிறேன். என்னை முதன் முதலில் நீங்கள் தான் அடையாளம் கண்டீர்கள். மூன்று வாரமாக இப்பக்கம் தான் சுற்றுகிறேன். எனக்கு உங்களைப்போன்ற நண்பர்கள் அதிகமில்லை. என் மனநிலையில் நான் இனி நகரிலேயே தான் இருக்க வேண்டும்” “என்ன மனநிலை?” “இதோ!” -அவன் கறுப்பு நாடாவைச் சுட்டிக் காட்டினான். வெல்ச்சானினாவ் உள்ளத்தில் மீண்டும் ஒரு மின்னல்! பாவ்லோவ் ஸ்கியின் மனைவி - நடல்யா வாஸிலியேவ்னா- அவளாயிருக்கக் கூடுமா? மனத்தின் கேள்வி அவன் வாய் வழியே உரக்கப் பாய்ந்துவிட்டது. “ஆம். அவளேதான். சென்ற மார்ச் மாதம் எலும்புருக்கி நோய். இரண்டு மூன்று மாதமாக ஒரே படுக்கை. இப்போது அவளில்லை. நான்தான் இருக்கிறேன்.” பாவ்லோவ்ஸ்கி நல்லவன். மிகவும் நல்லவனாகத்தான் இருந்தான். நடல்யா அவன் மனைவி. உணர்ச்சியற்ற வெல்ச்சானி னாவிடம் அவளைக் கவர ஏதோ கவர்ச்சியிருந்திருக்கவேண்டும். அவன் நடல்யாவின் வட்ட மதிமுகத்தில், அவண் அமைந்த இன்பத் துடிப்பில், விண்மீனொளியைக் கேலிசெய்த அவள் கண்ணொளியில் ஈடுபட்டு, முதல் தடவையாகத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்டான். அவள் தன் கணவனுக்கு அப்பழுக்கற்ற மனைவியாகவும் அதே சமயம் அவனுக்கு உணர்ச்சி என்னும் வான்முகட்டில் இருந்து நடனமிடும் காதல் தெய்வமாகவும் விளங்கினாள். அவள் ஆட்டிவைக்கக் கணவனும் காதலனும் ஒருங்கே ஆடினர். இருவரும் அவளிடம் குறைகாண முடியவில்லை. உலகமும் அவளைப் போற்றவே செய்தது. அவன் உள்ளத்தில் இத்தனையும் நிழலாடின. இன்பமும் துன்பமும் கலந்த காட்சிகள் படக்காட்சித் திரையில் ஓடுவதுபோல் ஓடின. கணவன் பார்க்க முடிந்ததோ முடியவில்லையோ, அவள் வெல்ச்சானினாவின் கண்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்- பாம்பாட்டியினுடைய மகுடியின் அசைவைப் பின்பற்றும் பாம்புபோல் அவள் அவ் விழிகளில் இலயித்திருந்தாள். பல ஆண்டுகள் அவன் கழுத்தைச் சுற்றிப் பொன்னாரம் போல் வளைத்த தளிரிளங் கைகள்- ‘அதோ கணவன் வருகிறான்’ என்று கூறி அச்சுறுத்தி நடுங்கவைத்துப் பின் அணைத்து மகிழ்ந்த அந்தக் குறும்பு நகைமுகம்- அவன் நாடி நரம்புகளின் துடிப்பாக வெளியே நின்று துடித்த அந்த மாய உயிர்ப்பாவை இப்போது மண்ணைக் கவ்வினாள். ஆம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. கடைசியில் அவள் அவனை வெளியே வலியத் தள்ளினாள். பீட்டர்ஸ்பர்க்குக்கு அவள்தான் அவனை அனுப்பினாள். திரும்பி வரவேண்டாமென்று எச்சரிக்கவும் செய்தாள். அவளுக்குத் தன்னால் ஒரு குழந்தை பிறக்கப்போகிற தென்றும், அது தெரிவதற்கு முன்னால் போய்விட வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். வெல்ச்சானினாவ் போக விரும்பவில்லை. அது பொய்யான சாக்குப்போக்கு என்று அவன் நினைத்தான். ஏனெனில் ஸ்டெப்பான் மிஹலாவிச் பாகுட்டாவ் என்ற செல்வ இளைஞனிடம் அவள் மனம் சிறிது திரும்பியதாக அவனுக்குத் தோன்றிற்று. ஆயினும் அவள் சொல்லையும், அவள் அதன்பின் பீட்டர்ஸ்பர்க்குக்கு எழுதிய கடிதத்தையும் அவனால் புறக்கணிக்கவே முடியவில்லை. வேண்டா வெறுப்பாக அவளை மறக்க நினைத்து- திறமையினால் கிட்டத்தட்ட மறந்து- ஒன்பது ஆண்டுகளைக் கழித்தாய் விட்டது. கறுப்புநாடா வந்து இப்போது மீண்டும் அவன் அமைதியை- போலியாயினும் ஓரளவு பொருந்தியிருந்த அமைதியைக் கலைத்தது. அத்துடன் இப்போது அவள் இறந்துவிட்டாள். முன்பே இவனைப் பொறுத்த வரையில் அவள் இறந்தவளாகவே இருந்தாள். இப்போது உலகுக்கும் - கணவனுக்கும்- எல்லாவற்றையும் விட முக்கியமாக புதிய காதலனுக்கும் அவள் மீண்டும் இறந்து போய்விட்டாள். புதிய காதலன் யார்? மிஹலாவிச்சேதான்! கணவன் மனைவியைப்பற்றி அளக்கும்போது அவனைப்பற்றியும் அளந்தான். உண்மையில் அவர்கள் தொடர்பு பற்றி வசை புதைந்த கேலிக்குறிப்புக்களை அவன் வெட்கமில்லாமலே கூறினான். தன் தொடர்பு பற்றி அவனுக்குத் தெரியுமோ, தெரியாதோ அறிய முடியவில்லை. உண்மையில் அவன் ஆழம் பார்க்கவே வந்திருக்கக் கூடும். யார் அறிவார்கள்? ஆனால் அவள் இருக்கும்போது அவனுக்கு இல்லாத ஆராய்ச்சி, அவள் இறந்துவிட்ட பின் இப்போது எதற்கு? அதுவும் யார் கூற முடியும்! ஒருவேளை அதன் காரணமாக, ஆறுதலை நாடியே அவன் வந்திருக்கவும் கூடும்! வெல்ச்சானினாவ் அவனை வெறுத்தான். ஆனால் ஏதோ ஒன்று அவனைப் பாவ்லோஸ்கியின் பக்கம் தள்ளியது. அவன் சமூகப்படியில் தாழ்ந்த நிலையில் இருப்பவன். அவனாக வெல்ச்சானினாவை அணுகவோ, அவன் பழக்கத்தைப் புதுப்பிக்கவோ மாட்டான். ஆனால் வெல்ச்சானினாவ் உணர்ச்சி வசப்பட்ட சமயத்தில் அவன் தன்னைப்பற்றிய தகவலைக் கூறிவந்தான். அவனை விரைவில் அனுப்பி விடுவதற்காக வெல்ச்சானினாவ் “நாளை வந்து உன்னைக் காண்கிறேன். இப்போது நான் ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்றான். பாவ்லோவ்ஸ்கி அச்சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு முகவரியைக் குறிப்பிட்டுக் கூறினான். ஆனால் இனிமேல் அவன் திரும்பிவரவே மாட்டானென்றே ஐயுற்றான். உண்மையில் மறுநாள் வெல்ச்சானினாவ் தன் மதிப்பை விட்டு அமைதியை மறந்து அவன் இருந்த அழுக்கடைந்த நகர்ச்சேரியில் நுழைந்து அவன் அறையில் நின்றான். அறைக்குள் நுழையும்போதே அவன் ஒரு குழந்தையின் அழுகைக் குரலையும் அதனை அடக்க முயலும் ஒரு முரட்டுக் கூச்சலையும் கேட்டான். அடங்கிய அழுகை விம்மலும் விக்கலுமாகத் தேம்பித் தேம்பிக் கேட்பவர் உள்ளத்தைத் துணுக்குற வைத்தது. காட்டுப் பூனையின் கையில் சிக்கிய வெள்ளெலியின் நிலையையே அது நினைப்பூட்டிற்று. உள்ளே நுழைந்ததும் அக்காட்டுக்குரல் எழுப்பியது பாவ்லோவ்ஸ்கியே என்பதை வெல்ச்சானினாவ் கண்டான். அக்குழந்தை யார் என்று அறியத் துடித்தான். அதுதான் தன் குழந்தை- நடல்யா விட்டுப்போன குழந்தை என்று பாவ்லோவ்ஸ்கி அறிமுகப்படுத்தினான். ஒரு நொடியில் நடல்யா மீது தான் கொண்ட ஐயம் தவறு என்பதை வெல்ச்சானினாவ் உணர்ந்தான். அதுவே தான் வரும்போது பிறந்ததாக நடல்யா கூறிய தன் குழந்தை என்பதை அவன் இப்போது கண்டுகொண்டான். அது தன் குழந்தை! அது இப்போது தாயற்றுத் துடிக்கிறது! அவன் உடலும் உள்ளமும் துடித்தன. “லிஸா! இது அம்மாவின் நண்பர். என் நண்பர்.உனக்குச் சிற்றப்பா. அழுகையை நிறுத்தி அவருக்கு வணக்கம் செய்!” என்று மெதுவாகக் கூறினான் பாவ்லோவ்ஸ்கி. லிஸா பாவ்லோவ்ஸ்கியைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டே வெல்ச்சானினாவுக்கு வணக்கம் செலுத்தினாள். அந்தச் சிறிய முகமும் கண்களும் நடல்யாவை அப்படியே உரித்து வைத்தாற்போலிருந்தது. ஆனால் முகம் விளறிப் போயிருந்தது- உடல் புயலில் ஆடும் சருகுபோல் நடுங்கிற்று. பாவ்லோவ்ஸ்கி என்ன காரணத்தாலோ தாய் மீதுள்ள பகைமை முழுவதையும் இந்தத் தாயில்லாப் பிள்ளையிடமே காட்டத் தொடங்கி யிருந்தான் என்று தெரிந்தது. வேலைக்காரி, வீட்டுக்காரி ஆகியவர்கள் மூலம் பாவ்லோவ்ஸ்கி குழந்தையிடம் தந்தை என்ற பாசத்தோடு நடந்துகொள்ளவில்லை என்றும்; வேண்டுமென்றே குடித்து விட்டு வந்து, தாயைப்பற்றி அக்குழந்தை முன் அவதூறாகப் பேசி அதை வைதும், அடித்தும் பேயாட்டமாடி வந்தான் என்றும் தெரியவந்தது. இந்தப் பேயின் கையிலிருந்து குழந்தையை மீட்க அவன் துடித்தான். வெல்ச்சானினாவிடம் மட்டும் பாவ்லோவ்ஸ்கி இன்னும் நல்லவனாக, ஒப்பற்ற நண்பனான, அன்பு கனியும் தந்தையாகவே நடிக்க முயன்று கொண்டிருந்தான். “எனக்கு ஒரு குழந்தை இருக்கக்கூடும் என்று நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள்- இருக்க முடியாது என்றுதான் எவரும் சொல்வார்கள். ஆனால் கடவுள் அனுப்பினார். கடவுளுக்கு நான் நன்றி செலுத்தவேண்டும். உமக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்” இறுதி மூன்று வாசகங்களையும் அவன் கூறும்போது அவன் முகம் தழலாகக் கொழுந்துவிட்டெரிந்தது. “எனக்கு ஏன் நன்றி தெரிவிக்கவேண்டும்?” என்று வெல்ச் சானினாவ் ஒப்புக்குக் கேட்டுவைத்தான். “நீங்கள் எங்கள் இருவருக்கும் நண்பர். உங்கள் நட்பின் கனி வினால்தான் எங்கள் வாழ்வில் இந்தப் புத்தொளி ஏற்பட்டிருக்க முடியும்” என்று அவன் மெட்டு விடாமல் பேசினான். அத்துடன் அவன் நிறுத்தவில்லை. “அப்பிள்ளை தான் லிஸா. சில சமயம் நான் நினைப்பேன். அது என் பிள்ளைதானா, மிஹலாவிச்சின்....” அவன் பேசுமுன் வெல்ச் சானினாவ் குறுக்கிட்டு “ இது என்ன பேச்சு, பாவ்லோவ்ஸ்கி!” என்றான். அவன் உடனே குழைந்து விட்டான். “தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் வெல்ச்சான்! என் நடல்யாவிடம் எனக்கு ஒரே ஒரு கோபம்தான். நான் உங்களிடம் ஈடுபட்டிருந்தேன். உங்களைத் தள்ளிவிட்டு அந்தப் பெரிய மனிதனின் நட்பை நாடினாள்....” வெல்ச்சானினாவ் பேச்சை வளரவிடவில்லை. பாவ் லோவ்ஸ்கியின் பேச்சு சர்க்கரை பூசிய நஞ்சு.... கவர்ச்சிகரமாக ஆடிக்கொத்தவரும் பாம்பு என்று கண்டான். ஆகவே லிஸாவைப்பற்றி- தன் உயிர்ப்புதல்வி லிஸாவின் வளர்ப்புப் பற்றித் தன் பேச்சைத் திருப்பினான். அவன் என்ன நினைத்தானோ? குழந்தையை வளர்ப்பது தன்னால் முடியாத பெருஞ்சுமை என்பதை வற்புறுத்தினான். “இதோ பாருங்கள். தாய் இல்லை. வீட்டில் யாரும் துணை யில்லை. நானோ நாடோடி. அவளை யார் கவனிப்பது?” என்றான். “ஏதேனும் உறவினராகப் பார்த்து...” வெல்ச்சானினாவ் சமாதானம் கூறினான். “உங்களுக்குத் தெரியுமே, நடல்யா தன் குடும்பத்தை விட்டுவிட்டு என்னை மணந்துகொண்டாள். அவள் உறவினர் ஒருவரும் எங்களைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் துணியவில்லை. எனக்கோ உறவினர் எவர் உதவியும் கிடையாது. நீங்கள், மிஹலாவிச் போன்ற நண்பர்களை நெருங்கும் நிலையில் நான் இல்லை. என்ன செய்வது நல்ல குடும்பங்கள் ஏற்றால்....!” “அப்பா!” குரல் கேட்டு வெல்ச்சானினாவ் திடுக்கிட்டுத் திரும்பினான். “எனக்கு நீங்கள் போதும் அப்பா!” பாவ்லோவ்ஸ்கி உறுமினான். “உன்னை யார் கேட்டது. போய், உள்ளேயிரு!” பின் அவன் பேசினான். “நல்ல குடும்பத்தில் அதைப் பழகவிட்டால் நல்லது என்று நினைக்கிறேன். தங்களிடம் அதற்காகத்தான் வர எண்ணினேன். துணிவில்லை!” இந்தப் பேயிடமிருந்து எப்படியும் தன் ஒரே செல்வத்தை - தன் லிஸாவை மீட்க வெல்ச்சானினாவ் எண்ணினான். “பாவ்லோவ்ஸ்கி, கிளாவ்டியா பெட்ரோவ்னா எனக்குத் தங்கை போன்றவள். அவளுக்கு எட்டுப் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவள் கணவர் அலெக்ஸாண்டர் பாவ்லோவிச் போகார் யெல்ட்ஸெவ் மன்னவை உறுப்பினர். அவர் உமக்குத் தொழிலில்கூட உதவுவார். நான் ஒரு சொல் உரைத்தால் போதும். அவர்கள் வீட்டில் பிள்ளைகளுடன் பிள்ளையாக லிஸாவைச் சேர்த்து வளர்க்க இணங்குவார்கள்” என்றான். பாவ்லோவ்ஸ்கியும் இணங்கினான். அன்றே கிளாவ்டியா பெட்ரோவ்னாவிடம் வெல்ச்சானினாவ் பேசினான். அவள் அவனிடம் அளவற்ற பாசம் கொண்டவள். உண்மையில் அவள் அவனைக் காதலித்து மணக்க விரும்பியிருந்த காலம் ஒன்று உண்டு. அவன் குறைகளை அவள் அறிந்ததினால், அங்ஙனம் செய்யாததற்காக இப்போது வருத்தமில்லை. ஆனால் அதே சமயம் பழைய பாசத்துடன் புது மதிப்பும் நட்பும் வைத்திருந்தாள். எனவே அவள் குழந்தையின் பொறுப்பை மகிழ்வுடன் ஏற்றாள். மறுநாள் வெல்ச்சானினாவ் பாவ்லோவ்ஸ்கி தங்கி யிருக்குமிடம் சென்றான். பாவ்லோவ்ஸ்கி லிஸாவை அனுப்ப மிக எளிதிலே ஒருப்பட்டான். சின்னஞ் சிறு குழந்தையான லிஸா தன்னுடைய சூழ்நிலைகளினால் கூரிய அறிவும் அதே சமயம் மிகுந்த தன்மதிப்பும் உடையவளா யிருந்தாள். தன் தந்தையின் கொடுமையைக்கூட அவள் அவ்வளவாகப் பொருட் படுத்தவில்லை. அவன் தன்னை இவ்வளவு எளிதாக ஒரு அயலானிடம் ஒப்படைத்தது கண்டு அவள் வெட்க முற்றாள். போகமாட்டேனென்று வாதாடினாள். ஆனால் பாவ்லோவ்ஸ்கி வழக்கமான முரட்டுத்தனம் காட்டி அவளை அடக்கி, வெல்ச்சானினாவிடம் கொண்டுவந்து ஒப்படைத்தான். அவள் ஒன்றும் பேசாமல் வெல்ச்சானினாவுடன் வண்டியில் அமர்ந்தாள். ஆனால் அவனைத் தீண்ட அஞ்சியவள் போல் அவள் வண்டியின் ஒரு ஓரத்தில் ஒதுங்கியிருந்தாள். அணுகிய போது அவள் அவனைப் பார்த்த பார்வை, அவன் தன்னை இட்டுச் செல்வதற்காக அவனை அவள் வெறுப்பது போலிருந்தது. அவனை அயலான் என்று அவள் நினைத்துத் தான் பேச மறுத்தாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. வெல்ச்சானினாவ் தான் அவள் தாயின் நண்பன் என்றும் அதனாலேயே தன் நெருங்கிய நண்பன் வீட்டுக்கு அவளை இட்டுச் செல்வதாகவும், தந்தை அடிக்கடி வந்து பார்த்துப் போவாரென்றும், தானும் தந்தை போல் அவளை நடத்துவதாகவும் கூறினான். அவள் சிறிது வெறுப்பு மாறினாள் தாய் மீது பாவ்லோவ்ஸ்கி அவளுக்கு வெறுப்பை ஊட்டி யிருந்தான். ஆகவேதான் தாயைவிடத் தந்தையிடமே பாசம் வைத்திருப்பதாக அவள் கூறினாள். இருந்தாலும் இயற்கைப் பாசம் தாயிடம் இருந்தது. வெல்ச்சானினாவை அவள் தந்தை என்று அறிந்து கொள்ளவில்லை. உள்ளுற அவன் தந்தைமனம் அவள் துன்பம் கண்டு துடித்தது. அவன் நோக்கமற்ற வாழ்க்கை முழுதும் அவள் மீது பொங்கி வழிந்தது. ஆனால் அவன் இதை வெளிப்படையாக அவளுக்கு அறிவிக்க முடியவில்லை. அவளும் சிறிது மனம் விட்டுக் குழந்தை இயல்புடன் பேசியபின், அயலானிடம் பேசிவிட்டதாக நினைத்து நாணி ஒதுங்கினாள். அப்போது அவன் புழுவாய்த் துடித்தான். பெட்ரோவ்னா குடும்பத்தார் குழந்தையை மனமார வரவேற்றனர். வெல்ச்சானினாவின் உணர்ச்சி மிகுதி கண்டு கிளாவ்டியா பெட்ரோவ்னா வியப்புற்றாள். வெல்ச்சானினாவ் அவளைத் தனியாய் அழைத்துச் சென்று, தனக்கும் அக்குழந்தைக்குமுள்ள உண்மையான மறைமுகத் தொடர்பை விளக்கிக் கூறினான். அவள் முன்னிலும் பன்மடங்கு குழந்தையிடம் அன்பு காட்டினாள். ஆயினும் குழந்தை அயலார் என்று கருதியவர்களிடம் அன்பை எதிர்பார்க்கவில்லை. அவள் தன் அனாதை நிலைக்கான அதை இரக்கம் என்று கருதி அவமதிப்பாகக் கொண்டு, மேலும் உள்ளமழிந்தாள். குழந்தையிடம் பேசுவதிலிருந்து வெல்ச்சானினாவுக்குப் பல செய்திகள் வெளிப்பட்டன. பால்லோவ்ஸ்கியின் கொடுமையை அவள் ஒத்துக் கொண்டாள். ஆனால் கொடுமையின் எல்லை வெல்ச்சானினாவைத் தூக்கி வாரிப் போட்டது. தாயின்மீது பழி தூற்றி அவன்தான் தூக்கி லிட்டுக் கொள்ளப் போவதாக அடிக்கடி அந்தப் பச்சை மதலை முன் நடித்தானாம்! வேறிடம் வந்தும் தனக்கு இன்னும் அந்த அச்சம் இருந்து கொண்டிருப்ப தாகக் குழந்தை கூறிற்று. பாவ்லோவ்ஸ்கியின் முழு உள்ளமும் அறிய வெல்ச்சானினாவ் துடித்தான். அவனைத் தேடியும் அவன் வரவுக்காகக் காத்தும் பல நாள் கிடந்து அவதியுற்றான். எதிர்பாராது நெடுநேரங்கழித்து அவன் வருவான். வந்தால் குடிவகைக்காகவே நயமும் பயமும் காட்டி கெஞ்சுவான். வெல்ச்சானினாவ் இல்லாதபோதுகூட அவன் வேலையாளிடம் நட்புரிமை பாராட்டி, குடித்துவிட்டு வெறியுடன் வீழ்ந்து கிடப்பான். குடிவெறியில் பேசியபோதும் அவன் ஆழ்ந்த சூழ்ச்சியுடனேயே பேசியதால், அவன் உள்ளத்தை உய்த்துணர வெல்ச்சானினாவினால் முழுதும் முடியவில்லை. ஆனால் நடல்யா இறக்கும்வரை அவள் இரகசியம் எதையும் அவன் அறியவில்லை என்றும், அவள் திடீரென்று இறந்ததால் அவள் காதற் கடிதங்களை அவன் வாசிக்க நேர்ந்ததென்றும், அதன் மூலம் பல செய்திகள் அறிந்ததாகவும் உணர முடிந்தது. அத்துடன் அவன் வெல்ச்சானினாவிடம் கொண்ட பகைமை ஒருபுறமும், அதனுடன் மாறுபட்டு அவனிடம் அவனுக்கு இருந்த கவர்ச்சி ஒரு புறமும் போரிட்டன என்றும் தோன்றிற்று. ஏனெனில் சில சமயம் பகைப் பார்வை விடுத்து அவன் காதலன் காதலியைப் பார்ப்பது போலப் பார்ப்பான். ஒரு தடவை வெல்ச்சானினாவ் அவனை உதைத்தபோது, அவன் சிறிதும் சீற்றங்கொள்ளாது அவன், காலுக்கு முத்தமிட்டுச் சென்றான். இருந்தாலும் அவன் மிஹலாவிச்சின் செய்தியை மட்டுந்தான் அறிந்தானா, தன் செய்தியை அறிந்தானா, தன்னையும் அறிந்தா னென்றால் எந்த அளவுக்கு? இவற்றை இன்னும் உணர முடியவில்லை. தன்னிடம் அவனுக்கிருந்த உணர்ச்சிகளையும் மதிப்பிட்டு அறிய முடியவில்லை. லிஸா புதிய சூழ்நிலையில் எவ்வளவோ அன்பாக நடத்தப்பட்டாலும், அவள் தற்பெருமைக்கு மாறா ஊறு ஏற்பட்டது. அவள் வர வர நலிந்து நோய்வாய்ப்பட்டாள். நோய் முற்றிற்று. மருந்து எதுவும் பயன்தராது அவள் உயிர் கவலைக் கிடமாய் விட்டது. அவள் ஒரே ஆசை தந்தையிடம் போகவேண்டு மென்பது. “என்னைக் கொண்டுபோய் விடுங்கள். என்னைக் கொண்டு போய் விடுங்கள்” என்று அவள் பேசமாட்டாத நிலையிலும் முனங்கினாள். வெல்ச்சானினாவும் எப்படியாவது பாவ் லோவ்ஸ்கியைத் தேடிக்கொண்டு வருவது என்று புறப்பட்டான். நகரெல்லாம் திரிந்தும், அலைந்தும் அவனைக் காண முடியவில்லை. அச்சமயம் மிஹலாவிச் இறந்துவிட்டானென்று வெல்ச்சானினாவ் கேள்விப் பட்டான். அங்கே போயிருக்கலாம் என்று நினைத்துத் தேடினான். ஊர் வலத்தில் பாவ்லோவ்ஸ்கி ஒரு மூடுவண்டியில் சென்று கொண்டிருந்தான். வண்டிகளின் கூட்டத்தில் இடையே நுழைந்து செல்ல இடமில்லை. அப்படியும் சமாளித்து அருகில் சென்று “லிஸா சாகக் கிடக்கிறாள். உடனே வா” என்றான். இதற்குள் வண்டிகளின் நெருக்கம் அவனுக்கு உயிராபத் தாயிருந்தது. அவன்மீது பாய இருந்த ஒரு வண்டியிலிருந்து தப்பி ஓடிவருவதே பெரிய காரியமாயிற்று பாவ்லோவ்ஸ்கியை வைதுகொண்டே வீடு திரும்பினான். அன்று இரவில் பால்லோவ்ஸ்கியின் வீடு தேடிச் சென்று வெல்ச் சானினாவ் திரும்பி வருகையில் அவன் தன் அறையிலி ருப்பது கண்டான். இரவு முழுவதும் அவன் குடித்துத் தொந்தரவு செய்தான். விடிந்ததும் அவனைக் கூட்டிக்கொண்டு போக எண்ணினான். ஆனால் விடிந்த போது அவன் காணவில்லை. விடியுமுன்பே போய்விட்டான்! வெல்ச்சானி னாவுக்குக் கோபம் பாய்ந்துவந்தது. ஆனால் செய்வது இன்னதென்றறியாது துடித்தான். இதற்குள் பெட்ரோவ்னா இல்லத்திலிருந்து குழந்தை லிஸா இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. வெல்ச்சானினாவின் துன்பம் இப்போது கரைகடந்து அவனை மறதியில் ஆழ்த்தப் போதியதாயிருந்தது. ஆனால் இப்போதும் அவன் பாவ்லோவ்ஸ்கியைத் தேடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. உலகின் பார்வையில் இன்னும் பாவ்லோவ்ஸ்கியே லிஸாவின் தந்தை. அவன் தலைமையில்லாமல் பிண அடக்கம் செய்ய முடியாது. எனவே வெல்ச்சானினாவ் அவனைத் தேடிப் புறப்பட்டான். நாள் முழுதும் தேடிச் சடைவுற்று ஓரிடத்தில் கண்டான். கண்டும், அவன் தன்னால் வரமுடியாதென்று கண்டிப்பாக மறுத்துக் கூறிவிட்டான். வேண்டுமானால் அடக்கம் செய்யும் மதகுருவுக்குத் தான் இணக்கமும் வரமுடியாமைக்கு வருத்தமும் தெரிவித்து எழுதுவதாகக் கூறினான். இவ்வகையில் உலக நோக்குப்படி தந்தையான ஒருவன் சார்பில் உண்மைத் தந்தை இருந்து குழந்தையை, அடக்கம் செய்யவேண்டியதாயிற்று. பாவ்லோவ்ஸ்கி கண்ணில் இனித் தான் விழிக்கவே கூடாது என்ற வெறுப்புடன் வெல்ச்சானினாவ் இடுகாட்டில் லிஸாவின் கல்லறையிலிருந்து வந்துகொண்டிருந்தான். அச்சமயம் பாவ்லோவ்ஸ்கி வந்து, இடையில் நடந்தவற்றை யெல்லாம் மறக்கடிக்கும் முறையில் வணக்கம் பலகூறினான். வெல்ச்சானினாவ் அவன்மீது சீறிவிழுந்தான். “உன் நட்பு எனக்கு வேண்டாம். என் கண்ணில் விழியாது அப்பாற் சென்றால் போதும். அதுவே நீ செய்யும் உதவி” என்றான். பாவ்லோவ்ஸ்கி “நானும் இதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இன்று எனக்கு நீங்கள் ஒரே ஒரு உதவி செய்ய வேண்டும். நம்மிருவருக்குமிடையே இருந்த அன்புள்ளம்- நடல்யா- பேரால் இதைக் கேட்கிறேன்” என்றான். வெட்கங் கெட்ட முறையில் அவன் பேசினாலும், நடல்யாவின் பெயருக்கு வெல்ச்சானினாவ் மதிப்புக் கொடுக்காதிருக்க முடியவில்லை. ஆகவே அவன் ஒப்புக்கொண்டான். மிஹலாவிச்சின் நட்பைக் கூறி அவன் உறவினர் பரிந்துரைமீது பாவ்லோவ்ஸ்கிக்கு உயர்ந்த ஊதியத்தில் ஒரு பதவி கிடைத்தது. அவன் லிஸாவை எப்படியாவது வெல்ச்சானினா வினிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் மணம் செய்ய எண்ணியிருந்தான். வெல்ச்சானினாவ் தன் வழக்கில் சமரசம் செய்வதற்காகத் தேடிய சட்டசபையுறுப்பினர் ஃஜாலிபினை அவன் இதற்காகவே சுற்றிக் கொண்டிருந்தான். அவர் சட்டசபை உறுப்பினராயினும் கடன்காரர். அத்துடன் அவருக்குப் பெண்கள் பலர். அவர்களை எப்படியாவது நல்ல இடத்தில் தள்ளிவிட அவர் ஆவலாயிருந்தார். அவர் ஆறாவது பெண் நாடியா இப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். அவளைப் பாவ்லோவ்ஸ்கிகேட்டு அவள் தந்தை இணக்கமும் பெற்றான். மணமகன் சார்பில் பெண்பார்க்கும் துணைவனாகவே அவன் வெல்ச்சானினாவின் துணையைப் பெரிதும் நாடினான். வெல்ச்சானினாவ் வேண்டா வெறுப்புடன் சென்றான். நாடியாவுக்கோ, அவள் அக்காள் தங்கையருக்கோ, தோழியருக்கோ பாவ்லோவ் ஸ்கியைச் சிறிதும் பிடிக்கவில்லை என்பதை வெல்ச்சானினாவ் கண்டு கொண்டான். உண்மையில் நாடியா அலெக்ஸண்டர் லோபாவ் என்ற இளைஞனிடமே காதல் கொண்டு அவனுடன் மாறா உறுதியும் பூண்டிருந்தாள். அத்துடன் நாடியாவும் அவள் தோழியரும் மணமகனை விட அவன் தோழனையே பெரிதும் கிளர்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டினர். நாடியா ஒரு தோழியுடன் வந்து வெல்ச்சானினாவ் கவனத்தைத் திருப்பி அவனைத் தனியே கண்டனர். அத்துடன் பாவ்லோவ்ஸ்கிக்குப் பெண்ணின் வெறுப்பைத் தெரிவிக்கும் படியும் அவன் கொடுத்த மணஉறுதிக் காப்பைத் திருப்பிக் கொடுத்து விடும்படியும் வெல்ச்சானினாவை வேண்டினர். நாடியாவின் காதலன் செய்தியறிந்து பாவ்லோவ்ஸ்கியை அச்சுறுத்தத் தொடங்கினான். ஆனால் தாய் தந்தையர் பணத்தையும் குடும்ப மதிப்பையும் எண்ணி மண உறுதி செய்ய மனைந்திருந்தனர். வெல்ச் சானினாவ் பாவ்லோவ்ஸ்கியைத் திருத்தும் துணிவில்லாமலும், அவன் போக்குக்கு உதவும் துணிவில்லாமலும் இருதலைப்பட்டு உழன்றான். வீட்டுக்குத் திரும்பி வந்த பின் பாவ்லோவ்ஸ்கி ஒரே ஒருநாள் இரவு வெல்ச்சானினாவின் வீட்டில் இருந்து குடித்து மகிழவேண்டுமென்று வற்புத்தினான். அது அவன் மணஉறுதி விழாவுக்கு அடுத்த நாள். ஆகவே வெல்ச்சானினாவ் இணங்கினான். வெல்ச்சானினாவிற்கு வழக்கமாக வரும் வயிற்றுவலி அன்றிரவு உச்ச நிலையடைந்தது. அதனால் அவன் நோவு பொறுக்க முடியாமல் புழுப்போலத் துடித்தான். பாவ்லோவ்ஸ்கி தன் பழைய கெட்ட குணம்யாவும் மறந்து அவனுக்குத் தக்க மருந்து கொடுத்தும், நோய் முற்றிய சமயம் அவன் உயிர் காக்கும் நண்பனாயிருந்து பேணியும் உதவினான். வெல்ச்சானினாவும் பழமையை மறந்து அவனிடம் நன்றி கூறத் தொடங்கினான். ஆனால் நோவு நீங்கி அவன் தன்னை மறந்து தூங்கும் போது மீண்டும் கறுப்பு நாடாபற்றிக் கனவு கண்டான். கனவினிடையே பாவ்லோவ்ஸ்கி தன் கழுத்தை அறுக்க வருவதாகக் கனவு கண்டு அலறி விழித்தான். விழித்தபோது பாவ்லோவ்ஸ்கி உண்மையிலேயே ஒரு கத்தியுடன் அவன் மீது பாய்ந்து வருவது கண்டான். திடுமென அவன் உடலில் மின் ஆற்றல் பாய்ந்த உணர்வு தோன்றியது. அவன் எதிரி கையைப் பலமாகப் பற்றி உயிருக்குப் போராடினான். நெடுநேரம் போராடியபின் வெல்ச்சானினாவ் பாவ்லோவ்ஸ்கியின் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கி எறிந்துவிட்டு அவனை அடக்கினான். பாவ்லோவ்ஸ்கி இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அப்பாற் சென்று விட்டான். இனி பாவ்லோவ்ஸ்கி வந்து தன் வாழ்நாளில் குறுக்கிட மாட்டான் என்றே வெல்ச்சானினாவ் நினைத்தான். ஆனால் இரண்டாண்டுகளுக்குப் பின் எதிர்பாராத வகையில் மீண்டும் அவன் பழைய நாடகத்தைத் திருப்பிப் படித்தான். வெல்ச்சானினாவ் நூறு ஆயிரமாகக் கொடுத்துத் தன் பழைய வழக்குக்கு ஒரு முழுக்குப் போட்டிருந்தான். நாடோடி வாழ்வை இப்போது அவன் விட்டு விட்டான். பழைய இன்ப வாழ்க்கை ஓடம் மீண்டும் சிறகு விரித்துச் சென்றது. ஒடெஸ்ஸாவில் சென்று சில காலம் இன்பமாகக் கழிக்கத் திட்டமிட்டான். வழியில் ஒரு புகைவண்டி நிலையம் வந்ததும் அவன் மனம் அதிலிருந்து அடுத்த புகை வண்டிச் சந்திப்புக்குத் தாண்டிச் சென்றது. அச்சந்திப்பிலிருந்து பிரிந்து செல்லும் கிளைப்பாதையில் சென்றால், இன்பப் பயணத்தின் இனிமை யிடையே மற்றோர் இன்பத் தடங்கல் ஏற்படுத்திவிடலாம் என்று அவன் எண்ணினான். அங்கே அவனிடம் நேசங்கொண்ட ஒரு செல்வமாது இருந்தாள். அவள் அவனை அடிக்கடி அழைத்ததோடு அவன் வரவுக்காக எதிர்பார்த்துக்கொண்டு மிருந்தாள். திடீரென்று சென்றால், அவளுடன் பல நாள் இன்பப் பொழுது போக்கலாம். இவ்வாறு இருமுனை இன்பப் பொறியில் வெல்ச்சானினாவ் ஆழ்ந்து சிக்கியிருந்தான். அவன் இருந்தது முதல் வகுப்பு வண்டி. மூன்றாம் வகுப்பு வழிப் போக்கர் ஆற்று வெள்ளம் போல் வந்து கொண்டும் போய்க்கொண்டு மிருந்தனர். இரண்டாம் வகுப்பிலிருந்த, பகட்டான ஆடையுடுத்திய ஓர் அழகி தன் உறவினனாகிய ஓர் இளைஞனைப்பற்றி இழுத்துக் கொண்டிருந்தாள். இளைஞன் குடி வெறியிலிருந்தான். இச்சமயம் குடித்திருந்த மற்றொரு வணிகன் முதலில் இளைஞனுடன் சண்டையிட்டு, அவன் பக்கம் பரிவு காட்ட வந்த அந்த அழகியையும் இரக்கமின்றிப் பிடித்திழுத்து அவ மதித்தான். அவள் எவ்வளவோ கெஞ்சியும் யாரும் உதவ முன்வரவில்லை. கணவன் பெயர் கூறி “மீதெங்கா, மீதெங்கா” என்று புலம்பித் துடித்தாள் அவள். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த வெல்ச்சானினாவ் குதித்தோடி வணிகனிடமிருந்து அவளை விடுவித்தான். அழகியும் இளைஞனும் அவனுக்கு நன்றி பாராட்டியதுடன், தம் வண்டிக்கு இட்டுச் சென்று உபசரித்தனர். சற்று நேரத்திற்குப் பின் கணவன் வந்தான். அவன் அவனை ‘மீதெங்கா’ என்று அழைத்தாள். ஆனால் வெல்ச்சானினாவ் அவனைத் திரும்பிப் பார்த்தபோது, அவனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஏற்பட்டது. அவனே பாவ்லோவ்ஸ்கி! அவன் மனைவியும் வேறு யாருமல்ல. தான் தோழனாகச் சென்று பார்க்கப் போன நாடியாவே என்று உணர்ந்தான். நாடியா அவனை அடையாளமறியா விட்டாலும் இப்போதும் அவன் கவர்ச்சியில் ஈடுபட்டுவிட்டாள் என்றே தோன்றிற்று. தன்னைக் கண்டது பாவ்லோவ்ஸ்கிக்குப் பிடிக்கவில்லை என்பதை அவன் முகக் குறியிலிருந்தே வெல்ச்சானினாவ் உணர்ந்தான். தனியே அவனைப் பாவ்லாவ்ஸ்கி அழைத்துச் சென்று, “நாம் பழைய நண்பர்கள். ஆனால் முன்மாதிரி நட்பை நான் விரும்பவில்லை. நீ தயவு செய்து என் திசைக்கு வரக்கூடாது” என்று கெஞ்சினான். வெல்ச்சானினாவ் அவன் கலக்கந் தெளிவித்துத் தான் வேறு வண்டிக்குப் போய்விடுவதாக உறுதி கூறினான். ஆனால் திரும்பி வந்த பொழுது அழகி அவனை மீண்டும் தன்னுடனே இருக்கும்படி வற்புறுத்தினாள். பாவ்லோவ்ஸ்கி ஏலமாட்டாக் கோபத்தால் துடித்தான். வெல்ச்சானினாவுக்குத் தான் நாடிச் சென்ற இன்பத்திலும் பாவ் லோவ்ஸ்கியைத் தொடர்ந்து செல்வது மிகவும் கவர்ச்சி கரமாகவே தென்பட்டது. ஆயினும் லிஸாவின் எண்ணம் அவனை அடக்கியது. அதே சமயம் லிஸாவுக்காக அவன் மீது சிறிது கடுமை காட்டவும் அவன் எண்ணினான். அவனிடம் காதுடன் காதாக “நீ ஒரு தடவை என் கழுத்தை அறுக்க வந்தாய். இதை உன் மனைவியிடம் கூறினால் நல்ல வேடிக்கை யாயிருக்குமல்லவா” என்றான். பாவ்லோவ்ஸ்கி பதறினான். “வெல்ச்சானினாவ், வேண்டாம். என்னைப் போகவிடு. நான் உன் திசைக்கே இனி வரமாட்டேன்” என்றான். “நானும் உன் திசைக்கு இனி வரவில்லை. ஆனால் நினைவிருக்கட்டும். நீ என் திசைக்கு இனி வந்தால், உன் பழைய தொடர்புகளையெல்லாம் வெளியே அவிழ்த்துவிட்டு விடுவேன்” என்று வெல்ச்சானினாவ் எச்சரித்தான். குழல் ஊதிற்று. புகைவண்டி நகரத் தொடங்கியது. வெல்ச்சானினாவ் வேறு வண்டியில் ஏறிகொண்டான். சந்திப்பில் அவன் முன் திட்டமிட்டபடியே வேறு கிளைப் பாதையில் சென்றான். பாவ்லோவ்ஸ்கியின் மனைவியைக் கண்ட நிலையில் தான் பழய நாடகத்தை மீண்டும் ஆடுவதற்குரிய சூழ்நிலை இன்னும் மாறவில்லை என்பதை அவன் உள்ளம் உணர்ந்துகொண்டது. பாவ்லோவ்ஸ்கி இன்னும் பழய பாவ்லோவ்ஸ்கியே. அவள் புதிய மனைவி பழய நடல்யாவின் புதுப் பதிப்புத்தான் ஆனால் மாறுதலடைந்திருப்பது இப்போது வெல்ச்சானினாவ் மட்டுமே- லிஸாவின் சோகச்சின்னம் இப்போது அவனை மனிதவேட்டைக்காரன் நிலையிலிருந்து மனிதன் நிலைக்கு மாற்றியிருந்தது. ஆனால் பாவ்லோஸ்கியை மட்டும் அவன் இப்போதும் முழுதும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவன் இன்னும் மாயக்கணவனாகவே இருந்தான். 3. மெல்லியலாள் டாஸ்டோவ்ஸ்கி ஆ! வாடா மலர் வாடிக் கிடக்கிறது. வாடிவிட்டதென்று காட்ட எந்தச் சின்னமும் காணவில்லை. ‘இன்று காண்கிறேன்; இனிக் காண முடியாது’ என்ற எண்ணம் ஒன்றுதான் அது வாடியதற்கான அறிகுறி! அது ஆடவில்லை, அசங்கவில்லை. ஆனால் என் உள்ளம் துடியாய்த் துடிக்கிறது. அது வந்த விதம், இருந்த விதம், போன விதம் எல்லாம் என் மனத் திரையிலே ஒன்றையொன்று தொடர்ந்து பாய்கின்றன. அதை வார்த்து உருவாக்க நான் ஒரு சிறுகதை எழுத்தாளனல்ல; ஆனால் அது தானாக வளர்ந்து உருவாகி என்னை அத்தகைய எழுத்தாளனாக்கியுள்ளது. அவள் முதன் முதலில் என் வாழ்க்கையில் புகுந்த நாளை நான் என்றும் மறக்க முடியவில்லை. அல்லி மலர் போல நீண்டு ஒடுங்கிய ஒல்லி உருவம். கசிந்த மொழி, ஒசிந்த நடை, வெளியுலகில் மசிந்து மிகுதி பழகாத குனிந்து நாணிய கன்னல் பார்வை! அவள் கையில் அவசர அவசரமாகத் துலக்கிக் கொண்டு வரப்பட்ட ஒரு பழய வீட்டு விளக்கு. அடகுக் கடை வைத்திருப்பவன் வேறொருவனாயிருந்தால், அடகு வைக்க வருபவர் வேறொரு ஆளாயிருந்தால், அத்தகைய பொருள் கடைக்குள் ஏறவும் செய்யாது; கொண்டு வந்தவர் கைக்குப் பணமும் போயிருக்காது. ஏனெனில் பொன், வெள்ளி தவிர எதுவும் அடகுக்காகப் பெறும் வழக்கம் அடகுக் கடைக்காரருக்குக் கிடையாது. ஆனால் நான் கொடுக்கும் அழகுடன் கொடுத்தேன்; அவள் வாங்கும் அழகுடன் வாங்கினாள். மற்றவர்களைப் போல அவள் பேரம் பேசுவது கிடையாது பணத்தைக் கை நீட்டி வாங்குவதற்கே அவள் கை கூசியது போலத் தோன்றிற்று. நான் பெண்களிடம் பசப்புபவனல்ல; ஆனால் பண்புடையவன் அவள் கொண்டுவந்த பொருள்களை வாணிக மரபுப்படி நான் ஒரே ஒரு தடவைதான் தட்டிக் கழித்துக் குறை கூறினேன். அப்போது அவள் முகம் பட்ட பாட்டைக் கண்டு நான் துடியாய்த் துடித்தேன் உடனே பேச்சை மாற்றினேன். அடிக்கடி கொண்டு வந்ததை வாங்கி வைத்து விட்டுப் பேசாது பணம் கொடுப்பேன். அவள் பேசாது கொண்டு போவாள். அவள் தன் கடைசிக் கந்தையைக் கொண்டுவந்தாள்- அது உண்மையிலேயே ஒரு கந்தை- அதிலுள்ள கம்பளி மயிர்கள் சுக்குச் சுக்காகப் பிய்ந்துபோயிருந்தன. என்னால் அதை அலைக்கழித்துக் கேலி செய்யாமலிருக்க முடியவில்லை. “இதுவும் வந்துவிட்டதா, அடகுப் பொருளாக!” என்றேன். அவள் முகம் கூம்பிவிட்டது. அதை உடனே கையிலெடுத்துக் கொண்டு பேசாது திரும்பிவிட்டாள். அவளை நான் தனிப்பட, உன்னிப்பாகக் கவனித்தது அன்றுதான். அவளுக்கு அப்போது பதினாறு வயது இருக்குமென்று மதிப்பிட்டேன். அதற்கு ஒரு மூன்று மாதம்தான் குறை என்று பின்னால் அவளிடமிருந்து அறிந்தேன். ஆனால் அவள் உள்ளம் இதனினும் இளமையானது என்று எனக்குத் தோன்றிற்று. ஒரு பதினான்கு வயதுச் சிறுமியின் உள்ளம் அது என்று நான் அன்று கருதினேன். அவளைத் திருப்பியனுப்பியதற்காக அவள் கொண்ட கோபம் நிலைக்கவில்லை. நிலைக்காது, நிலைக்க முடியாது என்று எனக்குத் தெரியும். வேறு எந்த அடகுக் கடைக்காரனும் என்னளவுகூட அவள் பொருளுக்குச் சலுகை தர முடியாதென்று நான் அறிவேன். அன்றுதான் அவளும் வேறு கடைக்குச் சென்று என் அருமையை அறிந்து கொண்டிருப்பாளென்று என்னால் நினைக்காமலிருக்க முடியவில்லை. அடுத்த தடவை அவள் கொண்டுவந்த பொருள் முந்தியவற்றைப் பார்க்க அவ்வளவு மோசமாயில்லை. அது ஒரு மெருகு போன பித்தளைப் புகைக் குழாய். கோபத்துக்குப் பின் அவள் வந்த முதல் நாளாததால் சற்றுக் கடுமையாகவேதான் வரவேற்றேன். ஆனால் கொடுத்தது இரண்டு வெள்ளி, அதைப் பெற்றுக்கொண்டு வழக்கம் போலப் போக இருந்தாள். நான் “இப்படியெல்லாம் தருவது பொருளுக்காக அல்ல; உனக்காகத்தான்” என்றேன், உனக்காகத்தான் என்பதைச் சிறிது புன்னகையுடன் வற்புறுத்திக் கொண்டு. எதிர்பாராத இந்தக் கேலிக்கு நான் உடனே வருந்தினேன். அவள் முகம் சிவந்தது. வெட்கம் அவள் வாயை அடைத்தது. ஆயினும் வாட்டி வதைக்கும் வறுமை காரணமாக, அவள் அப்பணத்தை எடுத்துக் கொண்டு மறைந்துவிட்டாள். என் கேலி மொழிக்கு முதலில் நான் வருந்தினேன், ஆனால் அதன் பயன் கண்டு நான் என் செயலைப் போற்றவே செய்தேன். அவள் அதை உள்ளூர வெறுத்திருக்க முடியாதென்று எனக்குத் தோன்றிற்று. நான் எதிர்பார்த்தபடியே, அவள் மீண்டும் என்னை நாடி வருவதை அது தடுக்கவில்லை. வறுமை மட்டுமின்றி, இதுவும் அவள் வரவை எளிதாக்கி விட்டது போலும். அவள் வெட்கம் குறைந்து விட்டது. நான் முன்னை விட நயமாக- ஆனால் மிகத் தாராளமாக அவளுடன் கலந்து உரையாடத் தொடங்கினேன். இதனால் அவள் வாழ்க்கைபற்றிய பல செய்திகளை நான் படிப்படியாக அறிந்துகொள்ள முடிந்தது. அவள் தாய் தந்தையற்றவள். உயர்ந்த குடி மரபு. அதற்கேற்ற உயர் கருத்துக்கள் உடையவள். ஆனால் உலக அனுபவம் இல்லை. குடும்ப ஆசிரியையாயிருக்க எண்ணி அந்த அனாதை விளம்பரம் செய்து பார்த்தாள். முதல் விளம்பரங்கள் பொது முறையி லமைந்தன. அவற்றை யாரும் கவனிக்கவில்லை. விவரமான விளம்பரங்கள் தொடர்ந்தன. உயர் தொனி குறைந்தது. வேலை கிட்ட வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தது. ஆனால் முயற்சிகள் யாவும் வீணாயின. அவள் என் துறையை உதவிக்கு நாடியது இதன் பின்தான். ஒருநாள் அவள் தன் வீட்டு வழிபாட்டுக்குரிய அன்னை வடிவத்தையே கொண்டு வந்தாள். சிலை வாணிக முறையில் விலையேற்றது- குடும்ப முறையில் அதன் விலை வரம்பற்றது. “சிலையை எடுத்து வைத்துக் கொள்ளலாமே!” என்று ஒரு மாதிரியாகச் சொன்னேன். “ஏன், அது பெறுமானமற்றதா?” என்று முதன் முதலாக அவள் செவ்விதழ் வாய்மலர்ந்தது. “சரி, அதை அப்படியே என் வழிபாட்டுக்குரிய மற்ற சிலைகளுடன் வைத்துக் கொள்கிறேன்” என்றேன். அதற்குப் பத்து வெள்ளிகள் கொடுக்கப் போனேன். அது பத்து வெள்ளிகள் பெறாதென்பது அவளுக்குத் தெரியும். நான் முன் கூறிய கேலி அவள் நினைவுக்கு வந்தது. “நீங்கள் என் வறுமையை அவமதிக்க வேண்டாம். எனக்கு வேண்டியது ஐந்து வெள்ளிகள் தான். நான் அதை விரைவில் மீட்டுக் கொள்ளப் போகிறேன்.” என்றாள். நான் ஐந்து வெள்ளிகள் கொடுத்தேன். “வறுமையை அறியாதவன் அல்ல; நான் அதை நன்கு அறிந்தவன். அதனால் தான் இந்தத் தொழிலுக்கு வந்தேன்.” ஒருவாசகத்தில் நான் அவள் மதிப்பை உயர்த்தினேன். என் மதிப்பையும் உயர்த்தி விட்டேன் ஆனால் பேச்சு அத்துடன் முடியவில்லை. “உலகு உங்களுக்களித்த வறுமைக்கு நீங்கள் பழி வாங்கும் வழி இது போலும்!” என்றாள். அவள் படிப்பை அவள் காட்டினாள், படியாதவருள் என்னைச் சேர்த்து. நான் உடனே கூறினேன். “அம்மணி, உலகில் தீமையை நாடும் தொகுதியில் நான் ஒரு பகுதியாகத் தான் இருக்கிறேன். ஆனால் அப்பகுதி தீமை நாட்டத்தினிடையே நன்மை செய்யும் பகுதி” இச்சொற்களின் பகட்டாரவாரமும் சொற்செறிவும் அவளைத் திடுக்கிடவைத்தன. “ஆ! இது ஒரு சீரிய உரை. எங்கோ கேட்டிருக்கிறது போல் தோன்றுகிறது.” என்றாள். இதற்குத்தான் நான் காத்திருந்தேன். “ஆம் கவிஞன் கெதேயின் ஃவாஸ்டஸில் வருகிறது; மெஃலிஸ்டா ஃவிலிஸின் கூற்று இது. ந்ந்ந் அவள் வாழ்வின் குறைபாடுகள், உள்ளத்தின் உயர் நோக்கம், சீரிய நற்பண்புகள் யாவும் நான் அறிந்தேன். முந்திய வகையில் அவள் நிலையை விட என் நிலை மேம்பட்டது என்பதை நான் அறிய நாளாகவில்லை. அவள் சிற்றன்னையார் பிள்ளைகளுக்குப் பாடங் கற்றுக் கொடுத்து வந்தாள். அவர்கள் வீட்டு வேலையையெல்லாம் செய்து, பெருக்கி மெழுகுதல் வரை ஒன்று கூடப் பாக்கி விடாமல் செய்தாள் அவளை இவ்வாறு அவமதித்த சிற்றன்னையார் நான் என் வறுமையில் மேற்கொண்ட அடகுக்கடையைக் கூட உயர்வாக மதிக்கத் தக்கவர்களே. ஆனால் நானோ இதனை பட்டாளத்திலிருந்து விலகி மேற்கொண்டவன்; உயர் அறிவும் அவாவும் உடையவன். இத்தனைக்கும் அவள் ஏற்றவளாகத் தான் தோன்றினாள். ஏனெனில் இவ்வளவு வறுமையிடையேயும் ஊழியங்களிடையிலேயும் அவள் தனிமுறையில் ஒரு தேர்வுக்குப் படித்து எழுதி, அதில் தேறியிருந்தாள். நான் அவளை மணந்துகொள்ளத் திட்டமிட்டேன். இவ்வெண்ணத்தை அவள் மீது புகுத்தியவன் நான் அல்ல; ஒரு பணங் கொழுத்த வணிகன். இரண்டு மளிகைக் கடைகளுக்கு அவன் உரிமையாளன். வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். அவனுக்குப் பிள்ளைகள் வேறு இருந்தனர். பிள்ளைகளுக்கு ஒரு ஆயா, ஒரு ஆசிரியை; வீட்டுக்கு ஒரு வேலைக்காரி; தனக்கு ஒரு போக்கிடம்; இத்தனையும் சம்பளம், இதர செலவு இல்லாத முறையில் அவள் மூலம் பெறத் திட்டமிட்டு அவன் அவளை மணங்கோரினான். சிற்றன்னையர் அவன் செல்வத்தை எண்ணியும் அவள் துன்பத்தில் மகிழ்ந்தும் எளிதில் இணங்கினர். பாவம், ஏழைப் பெண் வெளியே சொல்ல வாயின்றி வெம்பி வெதும்பினாள். இச் சமயத்தில் நான் அவளிடம் கேட்டேன், “நான் உன்னைக் காதலிக்கிறேன். என்னை நீ மணந்து கொள்வாயா?” என்று. கரடியாக வந்த அந்த வணிகன் அவளை அச்சுறுத்தியிரா விட்டால், அவள் என்னை நாடியிருப்பாளோ, மாட்டாளோ? எனக்குத் தெரியாது. அந்தச் சைத்தான் ஒரு புறம், வறுமைமற்றொருபுறம் அவளை வழி மறித்து என்னை நோக்கித் துரத்தின என்பதை நான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நான் உள்ளூர என் தகுதியை மதித்தேன். அதைக் காட்டி அவள் முழு உள்ளன்பையும் மதிப்பையும் பெற நான் விரும்பினேன். அதில் நான் வெற்றியடைந்தேனா, இல்லையா? என் கதை. நான் அதற்கு விடை தர வேண்டும்! என் இல்லத்தில் அவள் வரவு மதிப்புத் தரும் என்று காட்டவே நான் என் சிறுமைகளைக் கூறினேன். அவள் நிலைமை தெரிந்துதான் அவளிடம் காதல் கொள்ளத் துணிந்தேன் என்றும் கூறினேன். அவள் இணங்கினாள். தயங்கித் தயங்கி- ஆனால் இறுதியில், “சரி” என்றாள். சிற்றன்னையர் என்னை மதித்தனர். வணிகனிடம் எதிர்பார்த்ததை விட, அவன் கொடுத்திருக்கக் கூடியதை விடப் பன்மடங்கு நான் அவர்களுக்குக் கொடுத்தேன். அவள் தற்பெருமையுடையவள் என்று அவர்கள் எச்சரித்தனர். அதை நான் விரும்பும் பெண்ணுக்குரிய ஒரு உயர்பண்பு என்று கருதுகிறேன் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? அவள் தயங்கிக் கொண்டே, “ஆம்” என்றாள். இது தற்பெருமை தான். ஆனால் தயங்காதிருந்தால் நான் அவளை அவ்வளவு உயர்வாக எப்படி மதிக்கமுடியும்? அவளை நான் பெறத் துடிக்கவில்லை. அவள் உயர்வு காணத்துடித்தேன். என் உயர்வு காட்டத் துடிக்கவில்லை. காணத் தாமதிக்குந் தோறும் அதன் விலை உயரும் என்று கருதினேன். நான் உயர்த்தினேன்; படுகுழியிலிருந்து தூக்கி நிறுத்தினேன். இதைநான் கூறவில்லை- செயலால் அறியச் செய்தேன். திருமணத்தை அவள் பகட்டாரவார சமூக மணமாக்க எண்ணியிருந்தாள். இரண்டு சான்றாளர்களுடன் நாங்கள் நால்வராக நின்று பதிவுத் திருமணம் ஆக்கி நான் வெற்றி கண்டேன். என் கோட்பாடுகளை அவள் பண்பாக்க எண்ணினேன். அதற்காக அவளுக்கு அவற்றை எடுத்து விளக்கினேன். அவள் அவற்றை நன்கு தெரியாமலிருந்திருக்க முடியாது. அவள் பணத்தைச் செலவு செய்ய விரும்பினாள். நான் அதன் விலையை அவளுக்கு எடுத்துக் காட்டினேன், காட்ட எண்ணினேன். நானும் அவளைப் போல ஏழைதான். வருந்தித்தான் முன்னுக்கு வந்தேன். அவளும் அப்படியே தான் என்னை உணர முடியும் என்று நான் கருதினேன். என் தேர்வு கடுந் தேர்வு. நான் புடமிட்டேன், தங்கமா என்று பார்க்க. அந்தோ, தங்கத்தினும் விலை மதிப்பேறிய ஒப்பற்ற மணியைச் சுட்டெரித்தேன்! ந்ந்ந் என் பேரில் குற்றமில்லை. மணநாளுக்கு முன்பே அவள் அடகுக் கடையைப் பார்த்துக் கொள்ள வேண்டிவரும் என்று நான் கூறியிருந்தேன். அவள் மறுக்கவில்லை. ஆடையணி, வீட்டு இன்பப் பொருள்களில் நான் மிகுதி செலவிடவில்லை. ஆனால் இதுவும் அவள் நன்மையை எண்ணித் தான்! மூன்று ஆண்டுகளில் முப்பதாயிரம் வெள்ளி ஈட்டி வைத்து விடுவதென்று நான் தீர்மானித்திருந்தேன். இதை அவளுக்குச் சொல்லவில்லை. இதன் மூலம் அவளுக்குத் திடீரென்று களிப்பூட்ட எண்ணியிருந்தேன். மணமாகுமுன் நாடகத்திற்கே நான் அழைத்துச் செல்ல மாட்டேன் என்று கூறியிருந்தேன். அவளும் கேட்பதில்லை. ஆனால் நானாக மாதம் ஒரு தடவை இட்டுச் சென்றேன். எங்களிருவரிடையே சண்டை, சச்சரவு, வாக்கு வாதம் இல்லை. ஆனால் பேச்சுக் குறைவு. ஒரே மௌனம்! அவள் உள்ளத்தில் முதலில் தளர்ச்சியும், பின் கிளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட முடியாதென்பதில்லை. ஆனால் இது அவள் பயிற்சிக் காலம் வருங்காலம் இதன் பயனைத் தராதிராது. அவள் எதிர்த்துப் பேசாவிட்டாலும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வாள். ஏளனக் குறிப்புக் காட்டுவாள். அவளாக அறியும் காலம் அறியட்டும் என்று ஆண்மையுடனும் பொறுமையுடனும் இருந்தேன். அவள் காதலைப்பற்றி எனக்கு ஐயமே இல்லை. அது என் புலத்துப் பயிர்! நான் பொறுத்திருந்து அதை மலர்வித்துக் களிக்க முடியும் என்றிருந்தேன். அந்தோ! அவள் முதலில் என் ஆணை மீறினாள். முப்பது வெள்ளிக்கு வைத்த பதக்கத்தை மாற்றி எட்டு வெள்ளி கூடப்பெறாத வளையைத் தர வந்தாள் கிழவி ஒருத்தி. நான் மறுத்து விட்டேன். ஆனால் நான் இல்லாத சமயம் என்மனைவி அதை மாற்றிக் கொடுத்துவிட்டாள். நான் கண்டித்தேன். என் பணத்தை என்னைக் கேட்டுத்தான் செலவு செய்யவேண்டுமென்று கண்டிப்பாகக் கூறினேன். அவள் சீற்றங் காட்டினாள். அவள் வேலையை நிறுத்திவிடுவதாக எச்சரித்தேன். அவள் பகல் தோறும் வெளியேறிச் சென்றுவிடுவாள். சிற்றன்னையர் வீட்டுக்கு நான் போகிறதேயில்லை. இப்போது அவளைத் தேடி அங்கே சென்றேன். அவள் அங்கில்லை. உடனே நான் கடையைக் கவனித்துக் கொள்ள இளைய சிற்றன்னையை அழைத்து வந்தேன். அவளுக்கு மாதம் நூறு வெள்ளி சம்பளம்! எஃவ்வினோவிச் என்ற பட்டாளத்திலுள்ள பணியாளன் ஒருவன் அடகுவைக்கும் சாக்கில் கடைக்கு அடிக்கடி வருவதுண்டு. எனக்கு அவனைக் கட்டோடு பிடிப்பதில்லை. என் மனைவியுடன் அவன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பல முறை கண்டிருக்கிறேன்; கண்டித்திருக்கிறேன். அவனுடன் தான் அவள் இப்போது கூடித் திரிகிறாள் என்று சிற்றன்னை என்னிடம் குறை கூறினாள். சிற்றன்னை ஏற்பாட்டின்படி நான் ஒளிந்திருந்து, அவள் அவனுடன் பேசிய முதற் பேச்சைக் கேட்டேன். ஒருமுறை அவள் என் பழங்கதை ஒன்றை வெளியாரிட மிருந்து கேள்விப்பட்டு என்னிடம் கேட்டாள். நான் பட்டாளத்திலிருந்து கோழைத் தனத்துக்காகத் துரத்தப்பட்டது. உண்மையா என்பதே அக்கேள்வி. நான் விளக்கம் கூறினேன். என்னை அவமதிக்காத ஒருவனை அவமதித்தாகக் கூறும்படி மேலதிகாரி என்னை மூட்டி விடப்பார்த்தான். அவனுக்காகச் சண்டை பிடிப்பதைவிடக் கோழை என்ற பெயருடன் வெளியேறுவது வீரம் என்று நான் நினைத்தேன். இதுவே என் விளக்கம். அவள் நான் கூறியதைக் கேட்டுச் சிரித்தாள். “பணம் இருக்கிறது இப்போது உங்களுக்கு, எதையும் தர” என்று குத்தலாகப் பேசினாள். “மணத்திற்கு முன் இதை ஏன் கூறவில்லை?” என்று குறுக்குக் கேள்வி கேட்டாள். நான் மறுமொழி கூறவில்லை. பேட்டியின் போது அவள் எஃவ்வினோவிச் கூறிய காதல் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் என் கோழைமையைப் பார்த்துச் சிரித்தது போலவே சிரித்தாள். காதல் மொழியின் முன் ஏளனத்தை விட மாறான பண்பு வேறில்லை என்பதை நான் அறிவேன். ஆகவே என் மீதுள்ள கோபம் தான் இம்மட்டுக்கு அவளை இணங்க வைத்ததே தவிர வேறல்ல என்று கண்டேன். என் தேர்வில் அவள் மதிப்பு உயர்ந்தது. நான் சட்டென முன் வந்து என் மனைவி கையைப்பற்றி “வா, வீட்டுக்குச் செல்லலாம்” என்றேன், எஃவ்வினோவிச் விழித்தான்; ஆனால் நழுவி விட்டான். ந்ந்ந் அன்றிரவு நான் திடுமென விழித்தேன். அவள் என்முன் நின்றிருந்தாள். அவள் கையிலிருந்த துப்பாக்கி என் நெற்றியின் மீது குறியாய் நின்றது நான் அவளைக் கண்டேன். அவள் என்னைக் கண்டாள். கண்ணோடு கண்ணிணைந்தபின் நான் மீண்டும் கண்ணை மூடினேன். நான் அசையவில்லை. நான் கோழையல்ல என்று காட்ட எண்ணினேன். அவள் ஒரு வேளை நான் தூங்கினேன் என்று நினைத்திருப்பாளோ, என்னவோ? சில கணங்கள் சென்ற பின் கண் திறந்தேன். அவள் நகர்ந்து அப்பால் சென்றிருந்தாள். நான் வெற்றி யுற்றேன். அதன் பின் அவள் கையால் வழக்கம்போல் நான் தேநீர் உட்கொண்டேன். ஆனால் அவள் முகம் விளறிப் போயிருந்தது. நான் அவளைப் பார்த்துத் தான் இருந்தேனா இல்லையா என்று அவள் இன்னும் ஐயுற்றதாகத் தெரிந்தது. பார்த்திருந்ததாக நினைத்தால், நான் கோழையல்ல என்பது உறுதியாயிருக்கும். பார்க்க வில்லை யென்றால் அவள் அமைதியுடனிருக்கலாம். ஆனால் அவள் ஊசலாடினாள். நான் அறிந்தேனென்று காட்டச் சந்தைக்குச் சென்று இரும்பினாலான தனிப் படுக்கை ஒன்று வாங்கி வந்தேன். அதில் நான் படுத்தேன். அவள் படுக்கை வேறாயிற்று. எங்கள் மணத்தொடர்பு எங்களுக்குள்ளாகவே அறுந்தது. நானாக அதைத் திரும்ப ஏற்படுத்தி, அவளை மகிழ்விக்கத்தான் எண்ணியிருந்தேன். அவள் நோய் வாய்ப்பாட்டாள். மருத்துவர் அழைத்து வரப்பட்டார். அவர் கடற்பயணம் வேண்டுமென்றார். நான் அதற்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினேன். உடம்புக்கு ஒன்றும் கோளாறில்லை என்று அவள் மறுத்தாள். ஆனால் அவள் முகம் நாணத்தால் சிவந்தது. நான் இன்னும் கணவனாகத்தான் நடந்து கொள்கிறேன். என்று கண்டதினால் அவள் வெட்கப் பட்டிருக்க வேண்டும். இதை நான் அப்போது அறியாமலில்லை. சில சமயம் கழித்து அவள் பாடினாள். அவள் என்னை மறந்து பாடுவதாக நினைத்தேன். ஆகவே எனக்காக அவள் பாடாத பாட்டை நான் கேட்க வேண்டாமென்று ஆடையுடுத்தி வெளியே சென்றேன். நெடுநேரம் சென்று திரும்பியிருந்தேன். அவள் பாட்டை நிறுத்தியிருந்தாள். என்னை அவள் மறந்து விட்டது என் நிலையைச் சுட்டது. அவள் அருகில் சென்றேன். அவள் நடுங்கினாள். அவளை நான் எவ்வளவு நேசித்தேன், மதித்தேன் என்று என்னால் காட்டாமலிருக்க முடியவில்லை. “இந்தப்படியே எப்போதும் இருக்க அனுமதிப்பீர்கள் என்றுதான் நம்பியிருந்தேன்” என்றாள் அவள். நான் அவளைத் தொட அஞ்சினேன். ஆனால் அவள் காதல் நரம்பும் முறிந்தது. அமைதியும் குலைந்தது. அவளுக்குப் புடமிடுவதாக நான் அவளைச் சுட்டுக் கருக்கி விட்டேன். என் முழு முயற்சியையும் அளித்து எப்படியாவது அவளைப் பிழைக்க வைத்துவிட்டால் போதும் என்று காத்திருந்தேன். நாள் செல்லச் செல்ல அவள் முன்னேறுவாள் என்று நம்பினேன். நான் என் காதலுக்காகக் போராடவில்லை- அவள் உயிருக்காகப் போராடினேன்- கடவுளை வேண்டினேன். என் புத்தார்வம் கண்டு அவள் கவலைப்பட்டாள். என் காதல் பற்றி, பழைய செய்திகள் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்றாள். நான் வேறு என்ன பேச முடியும்? அவள் கொதிப்படைந்தாள். என் தவறுகள் யாவும் நான் இப்போது கண்டேன். அவளிடம் முழு உண்மை கூறத் துடித்தேன். சிறிது சிறிதாக எல்லாம் கூறினேன். காதல் என்ற பெயரில்லாமல் அவள் பண்பு பாராட்டினேன். அவள் மகிழ்ந்தாள்; வெட்கினாள்; ஆனால் மகிழ்ச்சி கொதிப்பேறிற்று. அவள் உடல் நடுங்கிற்று. மறுநாள் காலை, அவள் என்னிடம் மனந்திறந்து கூறினாள். “நான் கொடுமை செய்துவிட்டேன். நீங்கள் எவ்வளவோ பெருந்தன்மை உடையவர்கள். இனியாவது நான் உங்களுக்குக் கடமை தவறாத மனைவியாயிருப்பேன். உங்களை மதிப்பேன்” என்றாள். இதுகேட்ட மகிழ்ச்சியில் நான் என்னை அடக்கிக் கொள்ள முடியவில்லை பாய்ந்து சென்று அவளை அணைத்தேன். முத்தமாரி சொரிந்தேன். ஆனால்.... ஆனால்.... நான் ஏனோ இன்று காலை வெளியே சென்றேன். சென்றிராவிட்டால்..... இரண்டு மணி நேரங்கழித்துத் திரும்பினேன். நான் ஐந்து கண நேரம் முந்தி வந்திருந்தால்..... அவள் வேலைக்காரியுடன் பேசியிருந்தாள். முன்பு அவள் வீட்டிலிருந்த அன்னை வடிவத்தை இறக்கி மேடையில் வைத்து அவள் வணங்கினாள். வேலைக்காரியும் அவளும் கணவனுடன் தான் சமாதானமானது பற்றியும் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவள் முகம் மிகவும் மாற்றமடைந்திருந்ததை அது பழய நோயின் மெலிவு என்று தான் வேலைக்காரி நினைத்திருக்கிறாள். நான் வரும்போது அவள் பலகணி அருகே நின்றிருந்தாள். ஒரு கை பலகணியைப் பிடித்திருந்தது. ஒரு கை நெற்றியைத் தாங்கியிருந்தது. அவள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். அன்னை உருவை வழிபட்டுக் கொண்டிருந்தாள். “அம்மணி, குளிர்காற்று, உள்ளே வா” என்றேன் நான். அவள் போனாள், உள்ளே அல்ல; வெளியே. பலகணி வழியே போவதைக் கண்டேன். என் கண்களை நான் நம்பமுடியவில்லை. அஞ்சினேன். ஆம்; அவள் அன்னை யுருவை அணைத்துக்கொண்டே பலகணி வழியாகச் சரிந்து விழுந்து விட்டாள். நான் வாயில் வழி சென்று பார்த்தபோது அவள் உடலில் இன்னும் கதகதப்பு நீங்கவில்லை. அவள் உடலில் காயமெதுவும் இல்லை. ஆனால் அவள் உடல் இறகு போலாய் விட்டது. விழுந்து முறிய ஒன்றுமில்லை; அவள் விழுந்த இடத்தில் ஒரு சிரங்கை குருதி சிந்தியிருந்தது. அவள் உடலிலிருந்த குருதி முழுதும் அதுதான் போலும்! அவள் பலகணி வழி சென்றதை நான் கண்டேன்- பலர் கண்டிருந்தனர்- இல்லை என்றால் அவள் மறைவு இயற்கை என்று யாரும் நம்ப முடியாது. நேர்மாறாக அவள் இறந்த உடலைக் கண்டு யாரும் அவள் விழுந்து இறந்தாள் என்று கூறமுடியாது. நான் இழந்தேன்- என் தற்பெருமையால், பேரவாவால் இழந்தேன், மெல்லியலாளை என் வல்லமை எல்லாம் பயிற்றுவிக்க எண்ணி, வீணாக இழந்தேன்- உலகையறிந்த நான் அவளை அறியாமற் போனேன். பணத்தை மதித்த நான் அவள் பண்பை மதிக்கத் தவறினேன். 5. துன்பக்கேணி இந்த நூலைப் பற்றி யாமதா தகாஷி 1850-ம் ஆண்டில் ‘துன்பக்கேணி’ யை நாடக உருவில் இயற்றினார். ஜப்பானின் தலைசிறந்த நாடகப்புலவரும், முதல் நாடகப் புலவருமான சிகமத்சு மான்ஸா யெமோனின் நாடகக் கதைகளுக்கு இணையாக இது ஜப்பானிய நாடக அரங்கில் இடம் பெற்றிருக்கிறது. ககாஷி இக்கதையை சிக்கமத்சு தாக்குஸோ என்பாரின் காலையழகு நாடகத்தினைத் தழுவி எழுதினாராயினும், முதல் நூலைவிட இது சிறப்புப் பெற்று விளங்குகிறது. ஆனால் இரு நாடகக் கதைகளுக்கும் மூலமாயிருந்தவை குமாஸாவா பன்ஸன் என்பாரின் காலை அழகுப் பாட்டும் ஜப்பானியப் பழங்கதைத் திரட்டிலுள்ள ஒரு கதையுமே என்று அறிகிறோம். ககாஷியின் வருணனைத் திறத்தையும் கதைக்கட்டுக் கோப்பு அமைப்பையும் ‘துன்பக்கேணி’ நன்றாக எடுத்துக் காட்டுகிறது. பொன்னில் பதித்த மணிபோல் ஜப்பான் நாட்டுப் பழம்பாடல்களுள் காலையழகுப் பாட்டுப் போன்ற சில பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. அவை காட்சி வருணனைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் முறையை இக்கதை நன்கு எடுத்துக்காட்டுகிறது. உஜி ஆற்றின் மாய மின்மினிக் காட்சி. மியூகியின் முதற்காதற் சந்திப்பு ஆகியவை அப்பாடலுக்கேற்ற நல்ல பின்னணி வண்ணங்கள்! ஜப்பானியப் பெண்மணிகளின் களங்கமில்லாத தூய கற்புநெறிக்கும் உறுதிக்கும் மியூகியின் பண்போவியம் ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டு. மிசாவா, அஸாகே இருவரும் மாதர் வீரத்தை விளக்கும் கலங்கரை விளக்குகள்! அஸோஜிரோவிடம் ஜப்பானியர் வீரப் பண்பும், புத்த துறவியிடம் அவர்கள் அருட்பண்பும், இருவரிடமும் அவர்கள் கலைப்பண்பும் மிளிர்கின்றன. கதை முழுவதும் அந்நாளைய ஜப்பானின் அரசியல் நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. உலகின் கீழ்க்கோடி நாடான ஜப்பானின் இப்புனைவியற் கதை நாகரிக உலகின் தென் கோடியான தமிழகத்துக்கு ஒரு நல்ல விருந்தாகவும் கலைத் தொண்டாகவும் இருக்குமென நம்புகிறோம். மூல ஆசிரியரைப் பற்றி இந்நூலாசிரியர் யாமதா ககாஷி 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ‘துன்பக்கேணி’ அவரது இனிய காப்பிய நாடகங்களிலொன்று அவருடைய நாடகங்கள் தலைசிறந்த பழங்கால நாடகங்களுடன் ஒப்பாக மக்களால் பெரிதும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டுள்ளன. நாடகக் காப்பியத்தை முதன்முதலாக ஜப்பான் நாட்டில் தோற்று வித்தவர்கள் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த கவிஞரான சிகமத்சு மான்சா யெமோனும், ஒப்பற்ற ஆடல்பாடல் கலைஞரான தாகெமோதோ கிடயூவுமாகும். ககாஷி காலத்தால் அவர்களுக்குப் பிற்பட்டவரானாலும் புலமையால் அவர்களுக்கு இணையாக விளங்கினார். கதையோட்டத்தோடு கருத்தோட்டமும் சிறிதும் தடைப்படாது காப்பிய உறுப்பினர்களின் பண்புகளைப் படம்பிடித்துத் தரும் அவரது கலையுணர்வே தனிப் பண்பு வாய்ந்தது. ஜப்பான் நாட்டின் மீதும், நாட்டு மக்கள் பாலும், மொழியிடத்தும், மற்றும் நாட்டின் தலைவன், அவனுக்கு நல்லுரை கூறும் அமைச்சர், படைத்தலைவர் ஆகிய நாட்டின் முதல்வர்களிடமும் ஆசிரியர் அன்புள்ளமும் பற்றும் மிக்கவர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்கிறோம். வீரப்பண்பும் தியாகப் பண்பும் ஆசிரியரின் மனதிற்குகந்த மன நிலைகள். ஆனால் அவர் தம் காவியங்களிலே பூரணமாக மனப் போராட்டங்களை மட்டும் சித்தரிப்பதோடு சரித்திர நிகழ்ச்சிகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து, ஆங்காங்கே அரசியல் குறிப்புகளையும் அள்ளித் தெளித்திருக்கிறார். அதன் மூலம் அவரது ஆராய்ச்சித் திறனையும் அறிவாற்றலையும் உணர்ந்து கொள்ளலாம். ஜப்பான் இலக்கிய வளர்ச்சிக்கு உழைத்த நல்லிசைப் புலவர்கள் பல்லோரில் யாமதா ககாஷியும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் உலகெங்கும் புகழ் பெற்ற சிறந்த நாடகக்காப்பிய ஆசிரியர். 1. படகுகள் பிரிந்தன ஜப்பான் நாட்டின் கண்கவரும் அழகுக் காட்சிகளுள் உஜி ஆற்றுப் பள்ளத்தாக்கு ஒன்று. அதன் இரு கரைகளிலும் பச்சைக் கம்பளம் விரித்திருந்தது போல, காடும் கழனியும் பரந்து காணப்பட்டன. இரவில் ஆற்றங்கரையின் காட்சியை ஆண்டு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அத்தனை அற்புதமாகக் கண்கொள்ளாக் காட்சியாக அது இருந்தது! பகலவன் மறைந்துவிட்டான். அது கண்ட மின்மினிகள் காடு கழனி களிலிருந்து தோன்றி வானவெளி எங்கும் பரந்தன. பறக்கும் இவ்வொளிமணிகள் வானகத்து விண்மணிகளுடன் போட்டியிட்டு நீரில் நிழலாடின. இன்பமயமான வேளை! எம்மருங்கும் எழிலின் ஆட்சி! கியோட்டோ நகரத்தின் இளைஞரும் இளநங்கையரும் இந்த அரிய காட்சியைக் கண்டு உள்ளம் களித்தவண்ணம் இன்பப் படகுகளில் அமர்ந்து, ஜப்பானிய யாழாகிய சாமிசனில் இன்னிசை எழுப்புவார்கள். அந்த நல்லிசை எங்கும் பரவும். அது கேட்டு அனைவரும் மகிழ்வது வழக்கம். உஜி ஆற்றின் வனப்புக்குக் கலங்கரை விளக்கம்போல ஒரு பெரிய பாலம் கம்பீரமாக நின்றது. விசிறி போன்ற வேலைப்பாடமைந்த அது அழகிய வளைவுகளை உடையது. வளைவுகளின் கீழே ஆற்று நீர் குமிழியிட்டுக் கலகலவென்று ஓடிக்கொண்டிருந்தது. இப்பால முகப்பில் ஆற்றுக் காட்சியைக் கண்டு களிப்படைய எண்ணும் இன்ப வாணருக்கென ஒரு தேநீர் மாளிகை! தேநீர் அருந்திய படியே இளைஞர் தென்றலை நுகர்ந்து அழகை அள்ளிப் பருகுவதற்காக, அம்மாளிகையின் புறக்கூடத்தில் சில விசிப்பலகைகள் போடப்பட்டிருந்தன. அங்கிருந்து, ஆற்றில் மிதந்து செல்லும் படகுகளும், அழகை வழங்கி நிற்கும் வளைவுப் பாலமும் கூப்பிடு தொலைவிலேயே இருந்தன. இங்கிருந்தபடியே ஆறு முழுவதையும் கண்களால் அளந்துவிடலாம். எனவே திரள் திரளாக மக்கள் இம் மாளிகைக்கு வந்து கூடித் தங்கள் பொழுதை இன்பமாகக் கழிப்பார்கள். ஒருநாள் மாலை, இம்மாளிகையிலுள்ள விசிப்பலகை ஒன்றில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து இனிமையாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் உயரமானவன். பரந்த மார்பும், கட்டழகும் வாய்க்கப் பெற்றவன். அவன் நடையுடை பாவனை, பேச்சு வழக்கு ஆகியவற்றிலிருந்து அவன் ஜப்பான் நாட்டின் உயர்குடிப் பரம்பரையாகிய சாமுராய் வகுப்பைச் சார்ந்தவன் என்று கூறி விடலாம். உருண்டு திரண்டு விளங்கும் அவனுடைய இரண்டு தோள்கள் போர்ப் பயிற்சியின் சின்னங்கள்! சிங்க ஏறு போன்ற அக்காளை சின்சி மாகாணத் தலைவனின் அரசியல் துணைவன். பெயர் மியாகி அஸோஜிரோ என்பது. பிறந்தகத்தில் தொடக்கப் பயிற்சியும் படைப் பயிற்சியும் பெற்ற பின் அவன் தன் தாய்மொழி இலக்கியப் பயிற்சிக்காகக் கியோட்டாப் பல்கலைக் கழகம் நாடி வந்திருந்தான். அவன் இதயத்தில் ஜப்பானியக் கவிதைக்குத் தனி இடம் உண்டு. அம்மொழியில் கவிதை இயற்றுவதிலும், அதுபற்றி உரையாடுவதிலும் அவனுக்கு ஆர்வம் மிகுதி. அவனியற்றிய அழகிய இனிய பாடல்கள் பல. அவற்றுள் ஒன்றைத் தான் தன் இன்னுயிர்த் தோழனிடம் அவன் அப்போது படித்துக் காட்டிக் கொண்டிருந்தான். அஸோஜிரோவின் தோழன் உருவிலும் உடையிலும், அவனிடமிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காணப்பட்டான் குள்ளமான அவன் உருவம் காவியாடையால் மறைக்கப் பட்டிருந்தது. அவன் ஓர் இளந்துறவி. புத்தமதத் துறவிகளின் கோட்பாட்டின்படி அவன் முகமும் தலையும் கண்ணாடிபோல் வழவழப்பாக மழிக்கப்பட்டிருந்தன. காவித் துண்டில் சுருட்டி வைக்கப்பட்ட ஒரு பொட்டலம் போலவே அவன் தோற்றம் காணப்பட்டது. ஆனால் இந்தக் காவித் தோற்றத்தின் மூலம் அத்துறவியின் உள்ளத்தையும் உயர்நலப் பண்புகளையும் ஊகித்து உணர்ந்து கொள்ள முடியாது. அவன் அஸோ ஜிரோவின் நண்பன்; அவனுக்கும் கவிதையில் ஈடுபாடு மிகுதி. எனவே அஸோஜிரோவின் இதய ஊற்றிலிருந்து எழுந்த இனிய கவிதையை அவன் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அஸோஜிரோ ஆனந்தக் கடலில் தன் கவிதைக் கலத்தை மிதக்கவிட்டான். அவன் நண்பன் அது கேட்டு மகிழ்ந்தான். தனிப்பாடல் வரைந்த தாள்நறுக்கை ஜப்பானியர் தன்சாக்கு என்று கூறுவார்கள். தன்சாக்கு இயற்றுவதில் அஸோஜிரோவுக்கு இணை அஸோஜிரோவே. அத்தகைய ஒரு தன்சாக்கு இப்போது துறவியின் கையிலிருந்தது, பால முகப்பிலிருந்து ஆற்றுக் காட்சிகளைக் கண்டு அனுபவித்த ஒருவன் பாடுவதாக அது அமைந்திருந்தது. அதைத் துறவி இப்போது உரத்த குரலிலே பாடினான். “விழாவார்ந்த மக்கள் அணிசாயும் இந்தநற் பாலத்திலே அழகார்ந்த பால வளைவு கடந்து பரந்த வெள்ளம் இழையோடி யாடும் அதுகண்டு தென்றல் அயர்ந்துலவும் நிழலார்ந்த இன்பம் இதற்கீடு வேறு நிலத்தில் உண்டோ?” பாடி முடித்ததும் அவன், “ஆகா, எவ்வளவு அழகான பாட்டு! எத்துணை இன்பம்!” என்று தன்னை மறந்து தன் நண்பனைப் பாராட்டினான். இளந்துறவியின் துறவுள்ளத்தைக் கூட இப்பாடலின் இனிமை சொக்க வைத்துவிட்டது. வழக்கமாக அஸோஜிரோ இயற்றும் பாடல்களை விட இது ஒரு படி சுவை மிக்கதாகவே இருந்தது. நண்பர்கள் இருவரும் பாட்டின் மயக்கத்தில் தங்களை மறந்திருந்த சமயம் பார்த்துத் தென்றல் தன் குறும்பைக் காட்டிற்று. பாடல் வரையப் பட்டிருந்த தாள்நறுக்கு காற்றில் சுழன்று சுழன்று வளைந்து சென்றது. ஆற்றங்கரையில் ஒதுங்கி நின்றிருந்த பூம்படகில் அமர்ந்திருந்த ஒரு இளநங்கையின் முன் தென்றல் அதனைக் கொண்டு இட்டது. பறந்து சென்ற பாட்டைப் பின்பற்றி அஸோஜிரோவின் கண்கள் படகுமீதும், படகில் அமர்ந்த அழகிய நங்கையின் மீதும் தாவின. அவளும் ஏறிட்டுப் பார்த்தாள். அவள் பார்வை அவன் மதியைக் கொள்ளை கொண்டது. தென்றலுடன் கலந்து வந்த அவள் குரலினிமை அவன் காதின் வழியே பாய்ந்து அவன் நாடி நரம்புகளைத் தடவிச் சென்றது. அவனால் இருக்கை கொள்ள முடியவில்லை. தன் பாடல் நறுக்கைப் பெறும் சாக்கில் படகு நோக்கிச் செல்ல அவன் உள்ளம் துடித்தது. நண்பனின் முகத்திரையிலே கணத்திற்குக் கணம் தோன்றிமறையும் மாறுதல்களைத் துறவி கண்டான். அவன் சிறிது புன்முறுவல் தவழ, “அன்ப, உன் பாடல்களில் ஈடுபட்டு, மயங்கி நான் என் மாலைக் கடன்களை மறந்து இருந்து விட்டேன். என் புத்த தேவனுக்கு நான் வணக்கம் செலுத்த வேண்டும். மற்றொரு சமயம் உன்னை வந்து காணுகிறேன். இப்போது நான் போய் வருகிறேன்” என்று கூறிப் புறப்பட எழுந்தான். குறிப்பறியும் தன் நண்பனின் உள்ளப்பாங்கிற்கு மகிழ்ந்து அஸோஜிரோ நன்றியுணர்வுடன் அவன் கையை மெல்ல அழுத்தி விடைதந்துவிட்டு, படகின் பக்கமாகத் தன் நடையைத் திருப்பினான். படகிலமர்ந்திருந்த பெண்மணி மியூகி என்னும் பெயர் உடையவள். அவள் தந்தை யூமினோசுகே சின்சி மாகாணத்தை அடுத்த அகி மாகாணத் தலைவனுக்கு நல்லமைச்சரயிருந்து வந்தார். அவர் தலைவனுடன் சிறிது மாறுபட்டு, தற்சமயம் கியோட்டா நகரின் மறுகரையிலுள்ள ஒரு சிற்றூரில், செல்வப் புதல்வி மியூகியுடன் வாழ்ந்து வந்தார். கியோட் டோப் பாலத்தருகிலுள்ள காட்சிகளைக் காணவே இன்று மியூகி தன் தோழி அஸாகேயுடன் வந்திருந்தாள். அஸோஜிரோ படகில் வந்து ஏறு முன் வேறு இருவர் அழையா விருந்தாய் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் துணையற்ற பெண்களை வேட்டையாடித் திரியும் வம்பர்கள். அவர்கள் மியூகியிடம் “தேன்மொழிப் பாவையே, உன் அழகு எங்களைக் கொல்லுகிறது. உன் திருக்கையால் எங்களுக்கு ஒரு கோப்பை இனிய தேறல் தந்து, உன் குளிர்ந்த சொற்களால் எங்களை மகிழ்விப்பாய்” என்று வற்புறுத்தத் தொடங்கினர். ஜப்பான் நாட்டுப் பெண்கள், தங்கள் உறவினர், அன்புக்குரியவர் ஆகியவர்களுக்கு மட்டுமே இத்தகைய வரவேற்பு அளிப்பது மரபு. ஆகவே மியூகி மென்மொழிகளால் மறுப்புக் கூறி, அவர்களைப் படகை விட்டு வெளியேறும்படி குறிப்புக் காட்டினாள். அவளுடைய தோழி அஸாகேயும் முன்வந்து, “பெண்கள் தனித்திருக்குமிடத்தில் இப்படி அழையாவிருந்தாய் நுழைந்து, பிதற்றுவது சாமுராய்களாகிய உங்களுக்கு அழகா?” என்று கண்டித்துக் கேட்டாள். அவர்கள் எதற்கும் துணிந்த கயவர்கள். அவள் சொற்களைச் செவியேற்காது அவளை அப்பால் தள்ளிவிட்டு மியூகி அருகே வந்து அவள் கையைப் பற்ற முனைந்தனர். பெண்கள் தனித்து இருக்குமிடத்தில் அவர்கள் அனுமதி பெறாமல் எவ்வாறு உள்ளே போவது என்று தயங்கி நின்றான் அஸோஜிரோ. ஆனால் மனித உருவிலே இரு விலங்குகள் புகுந்து ஆதாளி செய்வது கண்டு அவன் உத்தரவு கேளாமலே படகில் புகுந்தான். “ஐயன்மீர், பெண்கள் கலவரப்படும்படி நடப்பது நன்மக்களாகிய உங்களுக்குத் தகுமா? அருள்கூர்ந்து அப்பாற் செல்லுங்கள்” என்று அஸோஜிரோ மெல்லக் கண்டித்துப் பார்த்தும் வம்பர்கள் அவன் சொற்களுக்குச் சிறிதுஞ் செவி சாய்க்கவில்லை. அவர்கள் கண்ணில்பட்ட ஒரே பட்டுப்பூச்சி மியூகி- அதையே எட்டிப் பிடிக்க முயன்றனர் இருவரும். மியூகி நடுநடுங்கிக் கொண்டே பின் நகர்ந்து கொண்டிருந்தாள். ஆனால் அடுத்த கண்ணிமைப் போதில் அங்கே என்ன நிகழ்ந்ததென்று யாரும் கவனிக்க முடியவில்லை. வம்பர்கள் இருவரும் மியூகியின் காலடியிலே, படகின் தளத்தின் மீது பட்டமரம் போல் சாய்ந்து கிடந்தனர். அஸோஜிரோ தனக்குத் தெரிந்த மற்போர் முறைகளுள் ஒன்றைக் கையாண்டு அந்த ‘மரங்களை’ அடியற்று வீழச் செய்திருந்தான். அவன் கைத்திறங்கண்ட அவர்கள் இனித் தங்கள் பருப்பு இங்கு வேகாது என்று கண்டு படகிலிருந்து தங்கள் கடையைக்கட்டிக் கொண்டனர். மியூகி நன்றியும் அன்பும் கலந்த நோக்குடன் அஸோஜி ரோவை வரவேற்றாள். அவன் தன் பாடல் நறுக்கைப் பின்பற்றி அவளை நோக்கிய போது, அவளும் எதிர்நோக்கி அவனிடம் ஈடுபட்டிருந்தாள். அவள் பாட்டு அத்துடன் நின்றிருந்தது. பாடல் நறுக்கை அஸாகே எடுத்து அவள் கையில் கொடுத்த போது, அவள் முதலில் அதன் முத்துப் போன்ற எழுத்துக்களைக் கண்டு வியந்தாள். அப்பாடலின் சுவை எழுத்தழகை வென்றது. அவள் கண்களிலுள்ளே அஸோஜிரோவின் முகம் நிழலாடிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அவன் படகை நோக்கி வந்ததை அவள் கவனிக்கவில்லை. இடையே வம்பர்கள் தாக்குதல் அவளை முற்றிலும் கலவரப்படுத்தியிருந்தது. இப்போது மீண்டும் அவளைக் காண அவள் பெருமகிழ்ச்சி அடைந்தாள். அத்துடன் அவனே அந்த வம்பர்களிடமிருந்து தன்னைக் காத்தான் என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் களிப்பும் கனிவும் ஊட்டியது. மியூகி புன்னகை தவழும் முகத்துடன், “அன்பரே, உங்கள் உளப் பண்பை உங்கள் பாடல் மூலம் முன்பே அறிந்து கொண்டேன். உங்கள் கைவண்ணத்தையும் இப்போது கண்டேன். உங்களுக்கு நான் எவ்வளவோ நன்றி கூறக் கடமைப்பட்டிருக் கிறேன். என்னுடன் சிறிது அமர்ந்து ஒரு கோப்பை தேறல் அருந்தும்படி வேண்டுகிறேன்” என்றாள். வம்பரின் அடாதடி நுழைவு இன்னும் அவன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்தது. மேலும் அவளது நன்றியுணர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, உடனமர்ந்து விருந்தயர்வது பெருந்தன்மையாகாது என்று அவன் எண்ணினான். ஆகவே அவன் “அம்மணி, நான் என் பாடல் நறுக்கைப் பெற்றுப்போகத் தான் வந்தேன். தங்கள் நல்லெண்ணத்துக்கும் அன்பாதரவுக்கும் என் நன்றி. இன்னொரு சமயம் வந்து தங்களைக் காணுகிறேன்” என்று கூறினான். அவன் பெருந்தன்மையையும் உள்ளக் குறிப்பையும் ஒருங்கே உணர்ந்துகொண்டே அஸாகே, “ஐயா, ஆண் துணையற்ற பெண்களுக்கு ஏற்படக்கூடும் இன்னலை நீங்கள் நேரிலேயே பார்த்தீர்கள். ஆகவே எங்கள் படகோட்டிகள் வரும் வரையாவது இங்கிருந்து எங்களைப் பெருமைப்படுத்த வேண்டுகிறேன்” என்றாள். “அப்படியானால் சிறிது தங்கிச் செல்கிறேன். தங்களைப் போன்ற பண்புடைய நங்கையருடன் பழகி அளவளாவுவதில் எனக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் இல்லாமலில்லை” என்று அஸோஜிரோ இணக்கம் தெரிவித்தான். ஜப்பானியப் பெண்கள் தங்கள் இன்பப் பொருள்களுள் ஒன்றாக அழகிய விசிறி ஒன்றை எப்போதும் கையில் வைத்திருப்பார்கள். பொற்பூ வேலைகள் நிரம்பிய அத்தகைய விசிறி ஒன்று மியூகியிடமும் இருந்தது. அதை அவள் தன் கையில் வைத்துக் கொண்டு மெல்லத் தன் முகத்தின் மீது வீசிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் சிறிதுநேரம் இன்னது பேசுவது என்றறியாமல் வாளா இருந்தனர். பின் மியூகி பேச்சுத் தொடங்கினாள். அவள் பேச்சு இயல்பாகவே அஸோஜிரோவின் பாடலைப் பற்றி எழுந்தது. அவள் அதன் இனிமையைப் புகழ்ந்து விட்டு, “இத்தகைய இளங்கவிஞரைச் சந்தித்ததற்கு மகிழ்கிறேன். இந்நாள் என்றும் என் நினைவிலிருக்க வேண்டும்”என்று கூறி ஒரு பெருமூச் செறிந்தாள். “அம்மணி, நானும் அப்படித்தான் எண்ணுகிறேன். என் மனமும் இன்றைய நிகழ்ச்சியை என்றென்றும் எண்ணி மகிழவே விரும்புகிறது” என்று அஸோஜிரோ தன் ஆவலை ஒலி பரப்பினான். “அப்படியானால் இதன் நினைவுக்குறியாக, நிகழ்ச்சிச் சின்னமாக, இவ்விசிறியில் தங்கள் குறிப்புரை ஏதேனும் ஒன்று எழுதித் தருவீர்களா?” என்று அன்புக் கோரிக்கையிட்டாள் மியூகி. ‘என் இதயத்தையே எழுதித் தருகிறேன்’ என்று அஸோஜிரோ வெளிப்படக் கூறவில்லை. ஆனால் உள்ளம் இப்படிக் கூறிற்று. அவன் அவ்வழகிய விசிறிக் கேற்றவாறு தன் காதல் உள்ளத்தை ஓர் அழகிய பாடலாக வார்த்து உருவாக்கினான். அவன் கவிதையார்வம் தென்றலையும் தன் உள்ளத்தில் புதிதாக எழுந்து அலையோடி நிற்கும் காதலையும் மகிழ்ச்சியை யும் குழைத்து ஒரு மாயப் பாடலைத் தோற்றுவித்தது. “கண்கவரும் காலை அழகு வெள் ளொளியினிலே, நுண்பனித் துளிகளெலாம் சுடரிடுகின்றனவே! நுண்பனித் துளிகளெலாம் வெங்கதிரோன் சாடாமே, நண்பினொடு மழைபொழிய வாராயோ நன்முகிலே! ஒண்பவள மலர்தழைப்ப வாராயோ தண்முகிலே!” அஸோஜிரோ தந்த புது விருந்தில் மியூகி ஈடுபட்டு அதைப் பருகினாள். கவிதையின் மாய அழகில் மறைந்துலவும் காதல் குறிப்பினையும் அவள் கூரிய அறிவு கண்டுகொண்டது. தன்னுள்ளத்திலுள்ள தற்காலிக நல்லுணர்ச்சி காலைப் பனித் துளிகளைப் போல விரைந்து மறைந்து விடாமல் நீடிக்க வேண்டும் என்ற கருத்தை உவமை அழகில் புதைத்து அப்பாடல் தெரிவித்தது. பாடலை வாசித்துக் கொண்டே அவள் அவ் விசிறியால் தென்றலைத் தன் முகத்தில் அள்ளி வீசிக் கொண்டாள். ஒரு புன்முறுவலின் சாயல் அவள் முகம் முழுவதும் படர்ந்து ஒளி வீசிற்று. “அன்பரே, தாங்கள், தங்கள் கவிதையாகிய இவ்வுயிரோ வியம், இவ்வளவுக்கும் ஏதுவாக அமைந்து நிற்கும் இவ்வினிய மனோகர மாலை நேரம் ஆகிய இவைகளின் நினைவாக, கவினும் கற்பனையும் கலந்த காலையழகுப் பாட்டைத் தாங்கிய இவ் விசிறி என் உயிருள்ளளவும் என்னிடம் இருக்கும். இது உறுதி” என்று கூறி, அக்காதற்பாட்டுக்கு எதிர்ப்பாட்டாக அவளும் ஒரு பாடல் இயற்றி அவனிடம் தந்தாள். அவனைப் போலவே அவளும் தன் உள்ளத்தில் ஊடாடிய காதலை மெல்ல நயம்பட வெளிப்படுத்தி யிருந்தாள். “உள்ளக் கதவம் திறந்து உட்புகுந்த என் கள்ளன் என் கண்ணில் கரந்தான், இது என்கொலோ? கள்ளன் தன் கண்ணில் பட மலராய், எனை மெள்ளக் கொண்டேகி இடாயோ மென்தென்றலே! அள்ளிக் கொண்டேகி இடாயோ இன்தென்றலே!” அவன் முதற்பாட்டு நறுக்கைத் தென்றலே மியூகியிடம் கொண்டு வந்து, அவனையும் அவள் பக்கம் நாட வைத்திருந்தது. அத்தென்றலையே அவள் இப்போது தன் காதல் தூதுவனாக் கினாள். அவனிடம் தன்னை ஒரு மலராக்கி அப்பாட்டு நறுக்கைத் தன்முன்னிட்டது போலத் தன்னை அவன் முன்கொண்டு இடும்படி அவள் நயம்படத் தென்றலிடம் கோரினாள். அஸோஜிரோவின் கவிதையுள்ளத்தையும் காதலுள்ளத்தையும் இவ்வேண்டுகோளின் நயம் ஒருங்கே கவர்ந்து தன்வயப் படுத்திற்று. “பெண்மணி, நான் ஒரு சாதாரண சாமுராய் மட்டுமே. இந்நிலையில் நீங்கள் எனக்கு இவ்வளவு மதிப்புத் தருவீர்கள் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை” என்று அஸோஜிரோ அவள் நலம் பாராட்டினான். நாணத்தால் அவள் முகம் சிவந்தது. கண்ணிமைகள் படபடவென்று துடித்தன. கண்பார்வை தானாக நிலத்தை நோக்கிப் படிந்தது. ஆனால் நரம்புக்கு நரம்பு தாவித் தாவி ஊடும் உணர்ச்சியார்வங்களை அவள் அங்கங்களின் துடிப்பு எடுத்துக் காட்டிற்று. இருவரது உள்ளக் குறிப்பையும் அறிந்த தோழி அஸாகே படகின் மற்றொரு புறம் சென்று ஆற்றுக் காட்சியில் தன் பார்வையைச் செலுத்தியிருந்தாள். “அன்பரே...” - மியூகி அழைத்தாள். “என்ன அம்மணி”- அஸோஜிரோ நிதானமாகப் பதிலளித்தான். “அன்பரே, என் நெஞ்சம் தங்களையே அவாவுறுகிறது. அது எனக்கு முன்பே தங்களை நாடி வந்துவிட்டது. என் உடலும் இப்போது என் வசமில்லை. என் உள்ளத்தைப் பின்பற்றி இதோ நான் என்னையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அவன்முன் மண்டியிட்ட மர அவள் முனைந்தாள். உண்மைக் காதலின் அருமையறிந்த அஸோஜிரோ அவளை மண்டியிட விடாமல் தன்னிரு கைகளாலும் தாங்கி ஏற்று, இறுக அணைத்துக் கொண்டான். இன்ப அணைப்போடு, “அன்பே, உன் உள்ளம் என்னை நாடி வருமுன், என் உள்ளம் உன்னை நாடி வந்துவிட்டது. நீ உன்னை என்னிடம் ஒப்படைக்கு முன்பே தென்றல் என்னை இழுத்துவந்து உன்னிடம் ஒப்படைத்து விட்டது” என்று தன் காதலை அவளுக்குப் புலப்படுத்தினான். போர்முழக்கம் கேட்டுத் தினவெடுக்கும் அவன் தோள்கள், மூங்கிலின் பசுமையை வென்ற அவள் மெல்லிய தோள்களின் அணைப்பில் குழைவுற்றுச் செயலற்றிருந்தன. பாலுடன் தேன் கலந்தது போல, அவர்கள் நெஞ்சங்கள் கலந்து ஒன்றுபட்டன. அவர்கள் ஒதுங்கி நின்றிருந்த அஸாகேயை மறந்தனர். ஆறும் படகும் அக்கம் பக்கக் காட்சிகளும் நினைவில் மறைந்தன. அவர்கள் தம்மையே மறந்து உலகையும் மறந்து காதல் நினைவிலேயே ஆழ்ந்து ஈடுபட்டு இருந்தனர். ஆனால் விரைந்து மலர்ந்த அவர்கள் காதலின் மலர்ச்சியில் திடுமெனப் பிரிவெனும் பனித்துளி வீழ்ந்தது. அஸோஜிரோவின் மாகாணத் திலிருந்து தூதன் ஒருவன் அவனைத் தேடிக்கொண்டு, விரைந்து படகை நோக்கி வந்தான். கடிதத்திலிருந்த விரைவுக் குறிகளைக் கண்ட அஸாகே தூதனைக் காதலர் முன் கூட்டிக் கொண்டு வந்தான். அஸோஜிரோ கடிதத்தைச் சட்டெனப் பிரித்துப் பார்த்தான். அஸோஜிரோவின் மாகாணத் தலைவன் சார்பில், அம்மாகாணத் தலைவனின் பேராளாயிருந்த அவனுடைய சிற்றப்பன்தான் அக்கடிதத்தை அனுப்பியிருந்தார். “நம் மாகாணத்தில் முதல்வனை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்கின்றனர். நான் பலவகை நடவடிக்கைகள் எடுத்தும் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. உங்கள் ஒருவரால் - தான் தக்க வகை காணமுடியும். ஆகவே உடனே புறப்பட்டு வருக” என்று அதில் எழுதியிருந்தது. காதல் அரிது; ஆனால் கடமை அதனினும் பெரிது! இந்த உண்மையை முற்றும் உணர்ந்தவன் அஸோஜிரோ. ஆகவே பிரிவு தனக்கு எவ்வளவு கசப்பாகக் காணப்பட்டாலும், பிரிந்து சென்றேயாகவேண்டும் என்று அவன் துணிந்தான். ஆகவே அவன் தன் உள்ளங் கவர்ந்த காதலியிடம் தன் நிலையையும் கடமையின் நெருக்கடியையும் எடுத்துக் கூறி விடைதர வேண்டினான். அத்துடன் பிரிந்து செல்லும் போது, “அன்பே, எப்படியும் நான் என் கடமைகளை முடித்துக் கொண்டு, விரைவில் உன்னை நாடி வந்து மணமுடித்துக் கொள்வேன். இது உறுதி. அதுவரை என்னை மறவாது, காலையழகுப்பாட்டு வரையப்பெற்ற இவ்விசிறியை என் நினைவுக் குறியாக ஏற்றுப் பொறுத்திருப்பாயாக” என்று கூறிவிட்டுப் படகைவிட்டுப் புறப் பட்டான். அஸோஜிரோ சென்ற சிறிது நேரத்திற்குள், மியூகியின் தந்தையிட மிருந்து அவளுக்கும் ஒரு அவசரச் செய்தி பறந்து வந்தது. அவள் தந்தை அமைச்சராயிருந்த மாகாணத்தின் முதல்வன் பெண்வழிப்பட்டு ஆட்சியைப் புறக்கணித்துவிட்டு, மட்டற்ற இன்ப வாழ்வில் பெரிதும் ஈடுபட்டிருந்தான். நாடு சீரழிவுற்றது. நாட்டு மக்கள் நலிந்தனர். நல்லறிஞர் இதயம் துன்புற்றுத் துடித்தது. இது போதாமல் அவன் காதற் கிழத்தியின் உடன்பிறந்தவனான டென்ஸோ, முதல்வன் பேரால் மக்கள்மீது தாங்கொணாத வரிப்பளுவைச் சுமத்தினான். டென்ஸோவின் அடக்குமுறை தாளாத மக்கள் கிளர்ச்சி செய்தனர். அக்கிளர்ச்சிப் புயலின் பொருமலையும், மக்கள் உள்ளமாகிய எரிமலையின் குமுறலையும் கண்டு, செய்வது இன்னதென்றறியாது முதல்வன் தத்தளித்தான். இந்நிலையில் முன்பு தன் போக்குப் பிடிக்காமல் பதவியிலிருந்து விலகி ஓய்வு பெற்று வரும் மியூகியின் தந்தை யூமினோ சுகேயே அவன் மீண்டும் அழைத்தான். யூமினோசுகே மியூகியை விரைவில் அழைத்துக் கொண்டு தன் நகருக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. கியோட்டோ பாலத்தருகே அஸோஜிரோவை மியூகியுடன் இணைக்க உதவிய உஜி ஆறு, மீண்டும் ஒருமுறை அவர்கள் எதிர்பாராமல் சந்திக்கக் காரணமாயிற்று. விரைவில் தங்கள் தலைநகரம் செல்ல அஸோஜிரோவின் ஆட்கள் விதிர்விதிர்த்தனர். ஆனால் அன்றிரவு காற்று அவர்கள் போக்குக்கு எதிர்முகமாக வீசிக் கொண்டிருந்தது. எனவே மீண்டும் காற்றுத் திரும்பும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆற்றோரமுள்ள ஒரு துறையில் மற்ற படகுகளுடன் படகாக அஸோஜிரோவின் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படகுகளிடையே மியூகியும் அவள் தந்தையும் தம் மாகாணம் நோக்கிச் செல்லும் படகும் தங்கியிருந்தது. இது அவர்களுக்குத் தெரியாது. ஒருவரை ஒருவர் அறியாமல் மியூகியும் அஸோஜிரோவும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையிலே, அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளிலேயே இருந்தனர். அன்று இரவு விண்ணில் முழு நிலா எரித்துக் கொண்டிருந்தது. உஜி ஆற்றின் சிற்றலைகளெல்லாம் வெற்றித் தகடுகள் போலத் தகதகவென்று மின்னின. ஆற்றின் வெதுவெதுப்பான நீர்த்திவலைகளைச் சுமந்து கொண்டு இராக்காற்று படகின் தளத்தில் வீசியது. அஸோஜிரோ தன் உள்ளத்தில் குமுறிய புதுக் காதலுணர்ச்சியையும், பிரிவுத் துயரின் வெம்மையையும் தாளமாட்டாமல் தளத்தின்மீது இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தான். அவன் உள்ளம் உஜி ஆற்றின் வழியே சென்று கியோட்டோப் பால முகப்பின் மின்மினிக் காட்சிகளிடையே ஊடாடிக் கொண்டிருந்தது. அச்சமயம் ஒரு இனிய இசை எழுந்து வந்து அவனைத் தட்டி எழுப்பியது. அவன் வரைந்த காலையழகுப் பாட்டு அவன் காதுகளில் எதிரொலித்தது. திடுக்கிட்டுப் பின்புறமாகத் திரும்பினான். என்ன வியப்பு! என்ன இன்பம்! அவன் கண்ட காட்சியை அவன் கண்கள் நம்ப மறுத்தன. அடுத்த படகின் தளம்- அங்கே மற்றொருபுறம் பார்த்த வண்ணம் மியூகி- அவள் உள்ளமுருகிப் பாடிக் கொண்டிருந்தாள். காதும் கண்ணும் ஏதோ கூட்டி ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி மியூகியின் உருவெளித் தோற்றத்தைத் தன்முன் கொண்டு வந்து காட்டுகின்றனவோ என்று அவன் நினைத்தான். ஆயினும் அவனையறியாமல் அவன் நா ‘மியூகி’ என்று உரத்துக் கூவிற்று. மியூகி கண்துயில் கொள்ள முடியாமல் கழிந்துபோன காதல் நினைவுகளில் மனம் ஆழ்ந்து பாடிக் கொண்டிருந்தாள். அந்நேரம் அவளுக்குப் பழகிய குரல், உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒலி அவள் பெயர்கூறி அழைப்பது கேட்டுத் திரும்பினாள். எதிரில் காதலனைக் கண்டதும் அவள் உடலைவிட்டு அவளது உயிர் அவனிடம் தாவிச் செல்வது போலிருந்தது. தன் படகிலிருந்து அஸோஜிரோவின் படகிற்கு அவள் ஒரே தாவாக தாவிக் குதித்து வந்து அவன் தோள்களைப் பிடித்துக் குலுக்கினாள். கண்ணின் இடைக் கடையோரத்தில் சிறு நீர்த்துளிகள் துளிர்த்தன, இருவருக்கும், இருவர் உதடுகளும் ஒத்த அசைவோடு “ஆ, என்ன எதிர்பாராத சந்திப்பு” என்று துடித்தன. பிறகு சொற்கள் வெளிவரவில்லை. நெடுநேரம் ஒருவரை யொருவர் இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டே நின்றனர். “ஆ, என் மியூகிதானா?” என்று அவன் அவளை வாரி அணைத்துக் கொண்டான். அவன் பேசி வாய் மூடுமுன் அவள் இதழ்கள் அவன் இதழ்களோடு சென்று பொருந்தின. “என் பெயர் உங்கள் இதழ்களில் இப்படியே எப்போதும் இருக்கட்டும்” என்று கூறி மியூகி நகைத்தாள். காதலரிருவரும் சிறிது நேரம் மனங்கலந்து பேசினர். ஆனால் மியூகி இத்தடவை மீண்டும் அவனிடமிருந்து பிரிந்து, காதலனைக் காணாத வாழ்க்கை யெனும் வறண்ட பாலைநிலத்திலே வதிந்து வதைபட மனம் ஒப்பவில்லை. “அன்பரே, நீங்கள் என்ன சொன்னாலும் என் செவிகள் அவற்றை ஏற்றுக் கொள்ளாது. என் மனமும் ஒரு நிலையில் நில்லாது. நான் இனி உங்களை விட்டு ஒரு கண்ணிமைப் போதும் பிரிந்திருக்க முடியாது. பிரிவதானால், இதோ இந்த உஜி ஆற்றுக்கே என் உயிரை ஒப்படைத்து விடுகிறேன்” என்று கூறி ஆற்றில் குதிக்கத் துணிந்தாள். அஸோஜிரோ அவளைச் சிறுபிள்ளை போலத் தடுத்து எடுத்துத் தன் மார்புறத் தழுவிக் கொண்டு “என் உள்ளமே! உன்னை நான் தூக்கிக் கொண்டு நெருப்பாற்றின் மீது ஓடக்கூடத் தயங்க மாட்டேன். உனக்காகப் பட்டம், பதவி, நாடு, நகரம் யாவும் துறக்கவும் நான் அஞ்சவில்லை. ஆனால் உன்னைக் காணாமல் உன் பெற்றோர் தீயிற் புழுப்போலத் துடிப்பரே! அவர்களுக்கு ஆறுதலாக ஏதாவது எழுதி வைத்துவிட்டாவது செல்லவேண்டாமா?” என்று கேட்டான். பெற்றோர் கடமையைக் கூட மறக்கும்படி செய்துவிட்ட தன் காதல் ஆர்வத்தை எண்ணி அவள் நாணமடைந்தாள். பிறகு “இதோ என் தந்தைக்குச் சிறு குறிப்பொன்று எழுதி வைத்துவிட்டு விரைவில் வருகிறேன்” என்று கூறிவிட்டு அவள் தன் படகுக்கு ஓடினாள். மியூகி படகுக்குள் நுழைந்தது தான் தாமதம். மிக விரைவில் கடிதம் எழுதிவைத்துவிட்டுத் திரும்பவும் ஆவலோடு ஓடிவந்தாள். ஆனால் அவள் திரும்பிவந்து சேர முடியவில்லை. அவள் படகினின்றும் அஸோஜிரோவின் படகு விரைந்து அகன்று கொண்டிருந்தது. அங்கே அஸோஜிரோ மியூகிக்காக ஆவலோடு காத்துக் கிடந்தான். இங்கே மியூகி அசைவற்றுச் சிலைபோல நின்றிருந்தாள், செய்வதின்னதென்று அறியாமல்! உண்மை, யாதெனில், காதலர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே காற்று திரும்பியடிக்கத் தொடங்கியிருந்தது. அதை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. ஆனால் அதற்காகவே அதிக விழிப்புடன் காத்துக் கிடந்த அஸோஜிரோவின் படகோட்டிகள் படகின் தளைகளை அறுத்து விட்டிருந்தனர். மியூகி தன் படகு சென்று திரும்பிவரும் சமயம் காற்று சற்றுப் பலமாக வீசியதால், யாரையும் எதிர்பாராமல் அஸோஜிரோவின் படகு பாய் விரித்துப் பறந்தது. இருஉள்ளங்கள் அப்போது பட்ட பாட்டை இறகு எழுத மறுக்கும்; ஏடு கூட ஏற்க மறுத்துவிடும். பழம் நழுவிப் பாலில் விழுந்து, பிறகு மீண்டும் நழுவி நஞ்சில் விழுந்த கதையாகி விட்டது. இதுமட்டுமா? ஒருவர் படும் வேதனையை மற்றொருவர் உணர முடியாமலும் போய்விட்டது. இதுதான் பொறுக்க முடியாத துன்பம். என் செய்வர் காதலர்? படகுகளினிடையே உள்ள தொலைவு விரைந்து நீண்டுகொண்டே போயிற்று. நடந்தது இன்னதென அஸோஜிரோதான் முதன் முதலில் ஊகித் துரை முடிந்தது. அவன் தன்னைத்தானே ஒருவாறு தேற்றிக் கொண்டான். விலக்க முடியாத இக்கொடூரப் பிரிவை வீரத்துடன்ஏற்றுப் பொறுமை யுடனிருக்கும்படி அவன் சைகை காட்டினான். மியூகி இதனை உணர முடியவில்லை. அவளுக்கு வந்த மனக்கசப்பில் அவள் அதில் கருத்தைச் செலுத்தவும் முடியவில்லை. அவள் தன் துயர்வெறியினால் தன் கையிலிருந்த விசிறியை- அஸோஜிரோவின் காதல் நினைவுச் சின்னத்தை மிகுந்த வலிவோடு வீசியெறிந்தாள். அஸோஜிரோ அதை எடுத்துக் கொண்டான். தன் காதலி அனுப்பும் அவசர விடையென்றே அவன் அதனைக் கருதினான். அவளும் அதுபற்றி அப்புறம் ஒன்றும் சிந்திக்கவில்லை. இளங்காற்று உஜி ஆற்றில் அன்று அவர்களை இணைத்தது; அதே உஜி ஆற்றில் இராக் காற்று அவர்களைப் பிரித்துவிட்டது! 2. துன்பம் தொடர்ந்தது மியூகியின் வாழ்க்கையில் காலம் தன் திருவிளை யாடல்களை நடத்தத் தொடங்கிற்று. அவள் தந்தை யூமினோசுகே நடத்தத் தொடங்கிற்று. அவள் தந்தை யூமினோசுகே மீண்டும் அமைச்சர் பதவியேற்று, நாட்டில் உலவிய குழப்பத்தை அடக்கினார். அவர் புகழும் செல்வமும் முன்னிலும் பன்மடங்கு வளர்ந்தன. ஆட்சியின் தலைவன் தன் போக்கை முற்றிலும் மாற்றிக்கொள்ளா விட்டாலும் யூமினோசுகேயின் ஆற்றல் காரணமாக அவருக்கு எப்போதும் தனிப்பட்ட மதிப்பு அளித்து வந்தான். அவர்கள் நட்பும் வளர்ந்து வந்தது. தந்தையின் வாழ்வு வளம் பெற்றது; ஆனால் மகள் உள்ளம் நலிந்தது. அழுது அழுது அவள் கண்களும் கன்னங்களும் கண்ணீரால் நனைந்து போயிருந்தன. ஆனை நோயுண்ட விளங்கனி போல அவள் உள்ளமழிந்து பொலிவிழந்து கிடந்தாள். கோள்மறைப்புக்கு ஆளான திங்களஞ் செல்வன் போல அவள் முகம் வாடி வெதும்பிற்று. மியூகியின் துயரறிந்த அஸாகே, அவள் படும் அல்லல் பொறுக்காமல் அவள் தாய் மிசாவாவிடம் மெல்லத் தோழியின் மனநிலையை எடுத்துரைத்தாள். மிசாவா பெருந்தன்மையுள்ளம் படைத்தவள். மகளிடத்தில் மாறாத அன்புடையவள். ஆகவே அவள் மியூகியின் தந்தை வந்தவுடன் இதற்காவன செய்வதாகக் கூறி அவர் வரவுக்காகக் காத்திருந்தாள். அதற்குள் தாயின் பாசத்துக்கும் புதல்வியின் நேசத்துக்கும் புதுப்புதுச் சோதனைகள் கிளம்பின. அம்மாகாணத் தலைவன் தீயொழுக்கத்திற்குக் காரணமான அவன் காதற்கிழத்தியின் அண்ணனான டென்ஸோவைப் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறோம். அவன் தீமைகள் பல. பிறருக்கு இன்னல் விளைவித்து அது கண்டு மகிழ்வதே அவன் இதயத்திற்கு இதமான இன்ப விளையாட்டு. அழகிய பெண்களைக் கண்டால் அவர்களை அடையும் வரை அவன் தன் திறந்த கண்களை மூடுவதே இல்லை. அந்தப் புல்லனின் தீய பார்வையில் மியூகியின் அழகு பட்டுவிட்டது. அவள் பருவ எழில் அவன் கண்களை உறுத்திற்று. எப்படியும் மியூகியை அடைந்தே தீருவது என்று அவன் கச்சைகட்டிக் கொண்டான். அவளைத் தனக்கு உரிமையாக்கும்படி அவன் மிசாவாவைப் பன்முறை வற்புறுத்தி நெருக்கினான். பாவம்! மிசாவா மகளின் உள்ளக் காதலை அவள் தந்தையிடம் கூறுமுன், டென்ஸோவிடம் அதை வெளியிட்டுக் கூற முடியாமலும் அவனை மறுக்க வேறு காரணம் காட்ட முடியாமலும் தத்தளித்தாள். ஒரு பக்கம் கண்ணீர்க் கடலில் மிதந்து நிற்கும் மியூகி! மறுபுறம் புயல் போல இரைந்து வந்து தொல்லைப்படுத்தும் டென்ஸோ! இவை இரண்டுக்குமிடையே மிசாவா ஊசலாடினாள். இந்நிலையில் தன் கணவன் யூமினோசுகே திரும்பி வரும் வரை எப்படியும் பொறுத்திருக்கும்படி அவள் அவனை வேண்டினாள். காமுகர்களிலும் கடைகெட்டவனாகிய அக்கொடியோன் மிசாவாவின் சொல்லை எள்ளளவும் மதியாமல், அவள் முன்னிலையிலேயே மியூகியை வலிந்து பிடித்து இழுக்கத் தொடங்கினான். தாய்க் கோழியின் முன் குஞ்சை எவரேனும் தாக்க வந்தால், தாய்க்கோழி சும்மா இருக்க முடியுமா? உயர்குடி நங்கையரின் வழக்கப்படிப் படைக்கலப் பயிற்சி உடைய மிசாவா வாளெடுத்து டென்ஸோவைத் தாக்க முனைந்தாள். டென்ஸோ காமுகன் மட்டுமல்ல, கொடுவாள் என்றால் குலைநடுங்கி விழிபிதுங்கும் கோழை. ஆகவே மிசாவா வாளை ஓங்குமுன் அவன் அவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, உயிர் பிழைக்க ஓடினான். கழுகினிடமிருந்து அவள் தன் குஞ்சைக் காத்தாள். ஆனால் மற்றொருபுறமிருந்து காலவேடன் குஞ்சின் வாழ்வில் தன் மாயவலையை விரித்தான். ஆட்சித் தலைவனிடம் ஒரு நாள் அடுத்த மாகாணத் தலை வனிடமிருந்து தூதுவன் ஒருவன் வந்திருந்தான். கோமஸாவா ஜிராஸா யெமோன் என்பது அவன் பெயர். அவன் தோற்றமும் நாகரிகமும் தலைவனின் மனத்தைக் கவர்ந்தன. அவனுடன் தன் உறவை மிகுதிப்படுத்தத் தலைவன் முனைந்தான். அதே சமயம் அவன் உள்ளத்திலே ஒரு பேரவா மலர்ந்தது. தான் பகைத்தும், தன் நலமே பெரிதெனப் பேணித் தன்னைக் கடுகளவும் பகைக்காது தன் நன்மைக்கெனவே உழைத்து வரும் யூமினோசுகேக்கும் அவன் ஏதாவது ஒரு கைம்மாறு செய்யக் கருதினான். இரண்டையும் இணைக்கத் தலைவன் ஒரு புதுவழி வகுத்தான். மியூகியையும் கோமஸாவாவையும் மணவினையில் பிணைக்க முடியுமானால், அது இருவருக்கும் ஏற்ற நலமாகும் என்று அவன் திட்டமிட்டான். கோமஸாவா ஜிராஸா எமோன் என்பது உண்மையில் அஸோ ஜிரோவின் மறுபெயரேயாகும். அவன் நாட்டுக் கிளர்ச்சியை அடக்கி வெற்றியும் புகழும் பெற்றான். அத்துடன் மன்னன் கேளிக்கை வாழ்க்கையிலீடுபட்டிருப்பதைத் தவிர்க்க வேறுவகை காணாமல், அவன் இன்ப வாழ்க்கைக்குரிய காதற்கிழத்திக்கே நயம்பட நல்ல பல அறிவுரைகள் கூறி அவள் ஒத்துழைப்புடன் தலைவனின் போக்கையும் மாற்றியமைத்துப் பேரும் பெருமையும் பெற்றான். இதற்குப் பின் தலைவனும் மக்களும் அவனைப் பெரிதும் பாராட்டிப் போற்றினர். புகழின் எல்லையிலே நின்ற அஸோஜிரோ, இந்தப் புதுப் பெயரும், அதற்குரிய பட்டம் பதவிகளும் பெற்றான். “மியூகியை மணஞ்செய்து கொள்வீரா?” என்ற வினா, “அமுதுண்ண வருவீரா?” என்று அழைப்பது போலிருந்தது. இந்த அழைப்பை அவன் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டதில் வியப்பில்லை. அவன் உடனடி ஒப்புதல் கேட்டுத் தலைவன் மகிழ்ந்தான். கோமஸாவாவின் உடற்கட்டும் எடுப்பான தோற்றமும், அப்பழுக்கற்ற நாகரிகப் பண்பாடுகளும் யூமினோ சுகேயின் மனத்தைக் காந்தம்போல் கவர்ந்து விட்டன. அவரும் ஆர்வத்துடன் தலைவனின் விருப்பத்துக்கு இணங்கினார். எப்போது வீட்டுக்கு விரைவோம். இவ்வின்பச் செய்தியை மனைவிக்குக் கூறுவோம் என்றே நினைத்துக் கொண்டிருந்தார் யூமினோசுகே. அவர் வீடு சென்றதும் முதல் செய்தியாக மிசாவாவிடம் இதைத் தெரிவித்தார். மிசாவா தான் சொல்ல வேண்டுமென்றிருந்த மியூகியின் காதற் செய்தியைச் சொல்ல இப்போது வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதே சமயம் அஸோஜிரோ தான் கோமஸாவா என்பது அறியாமல், தாயும் மகளும் எல்லையில்லாத் துன்பத்திற்கு இரையாயினர். தந்தையோ தான் விரும்பி ஏற்ற ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது என்று கண்டிப்பாகக் கூறி விட்டார். மிசாவா தழுதழுத்த குரலில், “என் செல்வமே, எப்படியும் நீ உன் மனதை மாற்றிக் கொள்வதுதான் நல்லது. கோமஸாவாவைக் கண்டால் உனக்குப் பிடித்துப் போகும்” என்று மியூகியைத் தேற்றினாள். அந்தோ! கோமஸாவாவை மியூகி கண்டால் உண்மையிலேயே அவளுக்குப் பிடித்துப் போயிருக்கும் என்பது உறுதி. உண்மையில் ஒருவேளை அவள் உள்ளம் மகிழ்ச்சிக் கடலிலேயே ஆழ்ந்திருக்கும். ஆனால் கோமஸாவாவே, அஸோஜிரோ என்பதை அறியாத நிலையில் அந்த வாய்ப்பும் ஏற்பட இடமில்லாது போய்விட்டது. எனவே தனக்கு மிக மிக அருகில் வர இருந்த காதல் வெற்றியை அறியாது மியூகி அதிலிருந்து தப்பியோடும் எண்ணத்துடன் தாய் தந்தையருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இரவோடிரவாக வீட்டை விட்டு வெளியேறி மறைந்து விட்டாள். அவள் கடிதம் இது: “அன்புள்ளம் வாய்ந்த அருமை அம்மா, அப்பா இருவருக்கும் துன்பச் சேற்றில் அழுந்தித் தவிக்கும் மியூகி வணக்கத்துடன் வரைந்து கொண்டது. “மியாகி அஸோஜிரோ என்ற இளைஞரை நான் காதலித்து அவரையே மணந்துகொள்ள உறுதி செய்து கொண்டிருக்கிறேன். அம்மா இதை அறிவாள். “தாய் தந்தையர் மனங் கோணாதபடி பெண்கள் நடந்து கொள்ள வேண்டியதுதான். நானும் இதுவரை அவ்வாறு நடந்து கொள்ளக் கனவிலும் தவறியதில்லை. ஆனால் இந்த ஒரு செய்தியில் நான் உங்கள் மனங் கோணாதவாறு நடந்துகொள்ள முடியாதவளாயிருக்கிறேன். ஆகவே எனக்கிருக்கும் ஒரே வழி சாவின் மூலம் தங்கள் கட்டளையையும் என் உறுதியையும் ஒருங்கே காப்பாற்றிக் கொள்வதுதான். “கற்புடைய மங்கையர் ஒரே ஒரு தடவைதான் காதலிக்க முடியும். இரண்டாந்தடவை காதலித்தல் என்பதோ காதலித்த காதலரை மறப்ப தென்பதோ முடியாத காரியம். சாவுகூடக் காதலைப் பிரிக்க முடியுமே தவிர அதை அழிக்க முடியாது. மேலும் காதலற்ற மணம் செய்துகொள்ளும் மங்கையர் கற்புடையவர்களாக வாழமுடியாது. காதலைப் புறக்கணித்து மணஞ்செய்து கொள்வதினால் கற்புநெறி தவறிவிடும். அத்துடன் அந்நிலை பெண்மையின் தற்கொலையும் கைப்பிடித்த கணவனுக்குச் செய்யும் வஞ்சனையும் நம்பிக்கைக் கேடுமாகும். இவற்றையெல்லாம் எண்ணினால் என் உயிர்போவது ஒரு பெரிய காரியமல்ல. நான் இருந்து உங்களுக்குத் தரும் நல்ல பெயரைவிட, இறந்து தரும் பெயர் பெரிதாயிருக்கும். என் பெண்மைக்கு இழுக்கு வராமல் காப்பது என் புகழுக்கு மட்டுமல்ல, உங்கள் மரபின் புகழுக்கே நன்று. “என்னை நீங்கள் மறந்துவிட வேண்டுமென்றும் மனமார என்னை மன்னிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். இறுதி மூச்சுவரை உங்கள் அன்பு மறவாத புதல்வி மியூகி” இக்கடிதம் கண்டு தாய் புழுவாய்த் துடித்தாள். தந்தை மனம் உடைவுற்றது. சோமஸாவாலோ நிகழ்ச்சியின் போக்கு இன்னதென்றே உணர்ந்துகொள்ள முடியாமல் மனம் புழுங்கினான். படகுத் துறையில் படகுகள் விலகிச் சென்றபோது அவள் விசிறியை எறிந்தது அவனுக்கு இப்போது ஒரு புதுக் கருத்தைத் தந்தது. தான் அவளைத் தந்தையின் படகுக்கனுப்பி விட்டு வேண்டுமென்றே விட்டோடியதாக நினைத்தே, அவள் வெறுப்புடன் தன் காதல் சின்னமான விசிறியை அன்று வீசியெறிந்திருக்க வேண்டுமென்று அவன் நினைத்தான். அவன் காதல் மனம் இடிந்தது. சுவரின்றிக் கடமை எனும் தூண்கள் மட்டுமே தாங்கும் மேற்கூரையாக அவன் உலவினான். அமைதி அவன் அகத்தைவிட்டு அகன்றது. மியூகியின் தோழி அஸாகே அவள் தாய் தந்தையரின் துயரை ஓரளவு போக்கினாள். “என் தோழி உயிரை வெறுத்திருப்பது உண்மையாயிருக்கலாம். ஆயினும் அவள் காதலை உதறிவிட்டுப் போய்விடமாட்டாள். எப்படியும் அவள் மனம்போல் நாம் நடப்பதானால், அவளைத் தேடிக் கண்டு பிடித்து விடலாம்” என்று கூறினாள். தாய் தந்தையர் அவள் அறிவுரையை ஏற்று எங்கும் மியூகியைத் தேட ஆளனுப்பினர். அஸாகேயும் அதே நோக்கத்துடன் புறப்பட்டு ஊர் ஊராக அலைந்தாள். வீட்டை விட்டு இரவில் வெளியேறிய மியூகி நேரே ஆற்றை நோக்கித்தான் நடந்தாள். காதலில்லா வாழ்வை விடச் சாதலே மேல் என்ற எண்ணமே அச்சமயம் அவள் உள்ளத்தில் மேலெழுந்து நின்றது. ஆனால் செல்லும் வழியிலேயே இரு வீணர்கள் அவளை இடைமறித்துத் தொல்லை தரத் தொடங்கினர். உயிரையே இழந்துவிடத் துணிந்து சென்ற அவளுக்கும் வழியில் உயிரினும் அரிய மானத்தைக் காக்கும் அவசியம் ஏற்பட்டது. மியூகி அந்த வீணர்களிடமிருந்து தப்ப ஒரு சூழ்ச்சித் திட்டம் வகுத்தாள். இருவரில் வலிமை மிகுந்தவன் எவனோ அவனைத் தான் பின்பற்றிச் செல்லத் தடையில்லை என்று கூறி அவள் அவர்களைப் போட்டியிட வைத்தாள். இருவரும் ஒருவர் பிடியில் ஒருவர் சிக்கிக் கிடக்கும் சமயம் பார்த்து அவள் மெல்ல நழுவி மறைந்தாள். ஆற்றின் செங்குத்தான கரை அவள் மனதில் அச்சத்தை வார்க்கவில்லை. கரைமீது ஏறி நின்றுகொண்டு அவள் தன் வாழ்க்கைக்கு ஒரேயடியாய் முடிவுகட்டிவிட இருந்தாள். சுழித்துச் சுழித்துச் செல்லும் நீர், ஆற்றின் ஆழம், அங்கே மறைந்து கிடக்கும் ஆபத்துக்கள் அவள் மனதிலே சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. அவள் கால்கள் தண்ணீரில் தாவ மெல்ல எழுந்து நிமிர்ந்தன. இன்னும் ஒரே ஒரு அடியெடுத்து வைத்து விட்டால்...? ஆனால் அதற்குள் ஒரு இரும்புப்பிடி அவளைப் பின்னால் இழுத்துக் கொண்டது. எங்கே இன்னொரு ஆடவன் கையில் சிக்கி விட்டோமோ என்று அவள் திகிலடைந்தாள். ஆனால் அது ஆடவனல்ல; பெண்! அதுவும் ஒரு கிழவி. ஒரு கிழவியின் கைக்கு இத்தனை வலிமை எப்படி வந்தது என்று மியூகி வியந்தாள். அடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவ் வியப்பை மிகுதிப்படுத்தின. கிழவி இனிக்க இனிக்கப் பேசினாள். “பெண்ணே, இந்த இளவயதில் நீ ஏன் உன்னையே மாய்த்துக் கொள்ள வேண்டும்? ஏதோ ஒரு காதலனை அடைய முடியாமல் தான் நீ இப்படி மனம் கசப்படைந்திருந்தாய். நீ கடுகளவும் கவலைப்படாதே. அவன் யாராயிருந்தாலும் நான் அவனைக் கண்டுபிடித்து உன்னை அவனுக்கே மணம் முடித்துத் தருகிறேன். என்னுடன் வா” என்று ஆதரவாகக் கூறிக் கிழவி மியூகியை அழைத்துச் சென்றாள். சூதுவாதற்ற மியூகி இவ்வினிய மொழிகளில் நம்பிக்கை வைத்து அவளுடன் சென்றாள். முன்பு மியூகியின் சூழ்ச்சியில் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த வீணர்கள், தம்மை ஏய்த்துவிட்டு அவள் தப்பியோடி விட்டதை உணர்ந்தனர். அவர்கள் சண்டையும் நின்றது. அவர்கள் மீண்டும் அவளைத் தேடிப் புறப்பட்டனர். அப்போது அவர்களுக் கெதிராக மியூகியும் கிழவியும் வந்து கொண்டிருந்தனர். முதலில் கிழவியை அவர்கள் கவனிக் காமல் மியூகியைக் கடுஞ்சீற்றத்துடன் தாக்கிப் பற்றி இழுக்க முயன்றனர். கிழவி அவர்களை அணுகி, “ஐயன்மீர், அவளைத் தொடவேண்டாம். அவளை நான் அழைத்துச் செல்கிறேன்” என்றாள். “நீ இப்போது இட்டுச் செல்லலாம். ஆனால் அது எங்கள் கைப்பிடியிலிருந்து தப்பிய பறவைதான்” என்றனர் வீணர்கள். கிழவி அதைக் கேட்டதுமே கூழாங்கற்களை எடுத்து வீசுவது போலத் தன் இடுப்பிலிருந்து பொற்காசுகள் மூன்றை எடுத்து வீசியெறிந்து, “உங்கள் பறவைக்கான விலையைப் பொறுக்கிக் கொண்டு போகலாம்” என்றாள். அவர்கள் கிழவியிடம் அவ்வளவு பொன் இருப்பது கண்டு வியப்படைந்தனர். ஆயினும் அவர்கள் பொன் விரும்பிகள் அல்ல; பெண் விரும்பிகள். அவர் அப்பொற்காசுகளைக் கண்ணெடுத்தும் பாராமல் மீண்டும் மியூகியின்மீதே பாய்ந்தனர். மியூகி அஞ்சி நடுங்கினாள். ஆனால் வீணரும் அவளும் வியக்கும்படி கிழவியின் இரும்புக்கரம் இருவர் மீதும் இரண்டு குத்துக்கள் விட்டது. அவர்கள் வலிபொறுக்க மாட்டாமல் வீறிட்டு விழுந்தடித்துக் கொண்டு ஓடினர். முன்பு அஸோஜிரோ வினால் துரத்தியடிக்கப்பட்ட வீணர்களை அவர்கள் நினைவூட்டினார்கள். கிழவி கயவர்களைத் தாக்கி வீழ்த்திய முறையும் முன்னைய அஸோஜிரோவின் தாக்குதலை மியூகியின் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. கிழவியிடமிருந்த செல்வம், எதிர்பாராத அவள் உடல் வலிமை ஆகிய இரண்டும் மியூகிக்குப் புரியாத புதிர்களாயிருந்தன. உண்மை என்னவென்றால் அவள் சின்சி மாகாணத் தலைவரை எதிர்த்த ஒரு சதிக் கும்பலின் தலைவி. அவள் பெயர் அறத்தாயி என்பது. அவள் முந்திய கிளர்ச்சிக்காரத் தலைவனின் அரண்மனைச் சேடியாயிருந்து, அக் குடும்பமழிந்தபின், அதன் பெயரால் தான் தலைமை தாங்கிப் பழிவாங்கப் புதிய பாதை வகுத்தாள். நீடித்த போராட்டங்களால் அவள் உடல் ஒரு எஃகுச் சட்டமாகவும், உள்ளம் காழ்ப்புடைய வயிரமாகவும் இறுகியிருந்தது. அவள் தன் சதியாட்சியின் மூலதளத்தை மியாஸான் மலையிலுள்ள ஒரு குகையில் அமைத்துக் கொண்டாள். வழிப்போக்கர்களைக் கொன்றும் கொள்ளையடித்தும் பொருள் பறித்து அவள் ஆட்சிக்கு வேண்டிய பொருள் திரட்டிக் கொண்டாள். இளம் பெண்கள் அகப்பட்டால், அவர்களைச் சிறைப்பிடித்துப் பெண்வாணிக விடுதிகளுக்கு விற்பதும் அவளுக்கு வழக்கமாயிருந்தது. உஜியாற்றின் துறை ஒன்றில் சதியாட்சியாளர்க்குரிய படகு ஒன்று எப்போதும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். அறத்தாயி மியூகியை அப்படகில் ஏற்றி, ஆறு கடந்து, காடும் மேடும் சுற்றி இறுதியில் மியாஸான் மலைக்குகை போய்ச் சேர்ந்தாள். ஏதுமறியாத மியூகி அங்கே குகையின் உள்கிடங்கொன்றில் சிறைவைக்கப்பட்டாள். சாவினின்றும், கொடிய வீணர் களிடமிருந்தும் தன்னை மீட்ட கிழவி அவர்களினும் பன்மடங்கு கொடியவள் என்பதை மியூகி அப்போதுதான் உணரத் தொடங்கினாள். ஆனால் கிழவியின் கொடுமை எல்லையை அவள் வரவரத்தான் காணமுடிந்தது. சில நாட்களுக்குள் அறத்தாயியின் வாடிக்கைக்காரர்களுள் ஒருவன் அவளைப் பார்க்க மியாஸான் வந்திருந்தான். அவன் நாகாசாகி நகரத்திலுள்ள ஒரு பெண்விடுதியாளன். அவனிடம் மியூகியை நூறு வெள்ளி (ஜப்பானிய ‘ரியா’க்)களுக்குக் கிழவி விற்றுவிட்டாள். நாகசாகியில் பெண் வாணிகம் நடத்திவரும் அந்தப் புல்லன் மியூகியைத் தன் தொழிலில் ஈடுபடுத்த எவ்வளவோ நயந்தும் பயமுறுத்தியும் பார்த்தான். மானத்துக்காக உயிரையே விடத் துணிந்த மியூகி எப்படி இழிவிலும் இழிந்த இந்தத் தரங்கெட்ட வாழ்க்கைக்கு உட்பட முடியும்? அவள் உடும்புப் பிடியைக் கண்டு விடுதியாளன் தன் வாணிபத்துக்கு அவள் தக்கவளல்லவென்று தேர்ந்து விட்டான். ஆகவே அவன் மீண்டும் கிழவியிடமே மியூகியை ஒப்படைத்துவிட்டு வல்வழக்காடி, அவளுக்காகத் தான் கொடுத்த நூறு வெள்ளிகளையும் பெற்றுக்கொண்டு போய்விட்டான். தனக்கு வந்த வருவாயையும் கெடுத்துத் தன் மதிப்பையும் குலைத்து விட்டாளே என்று மியூகி மீது கிழவி கடுஞ்சினங் கொண்டாள். மியூகி அவள் காலைப்பிடித்துக் கொண்டு, “அம்மா, என் கற்பைக் கெடுக்கும் வகையில் மட்டும் என்னைத் தூண்ட வேண்டாம். நான் என் உயிரை விட்டாலும் விடுவேனேயன்றி என் மானத்தை இழக்க ஒரு போதும் ஒருப்படமாட்டேன். ஆயினும் நான் உடல் வருந்தி உழைக்கத் தயங்க வில்லை. உங்களிடமோ அல்லது நீங்கள் விற்கும் எவரிடமானாலும் இருந்து கடுமையாக உழைத்துப் பொருள் திரட்டித் தருவேன். ஆகவே என் மீது அருள்பாலியுங்கள்” என்று கல்லும் கரையக் கெஞ்சினாள். அந்தோ! பெண்கள் மானத்துக்கு ஆடவர் உலகம் தரும் விலையை வேறு எத்தகைய உழைப்புக்கும் அது தருவதில்லை என்பதை மியூகி எப்படி அறிவாள்? கிழவி நகைத்தாள். செத்த பிணம் சிரிப்பது போலிருந்தது அந்தக் காட்சி! “கற்பாம், கற்பு! பெண்களுக்கு ஏதடீ கற்பு! ஏதோ புத்தகத்தில் படித்துவிட்டு உன் புத்தியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாய். பணம் வருகிற இடத்தில் உன் அழகின் விலையைக் கெடுக்கிறதல்லவா அந்தக் கற்பு? உனக்குக் கற்பு எனக்குக் கால் தூசி! அந்தக் கற்பென்னும் களியை விட்டு நேர்வழிக்கு வருகிறாயா அல்லது உன்னையும் உன் அழகையும் இளமையையும் சந்துசந்தாகச் சூறையாடட்டுமா?”- கிழவி குமுறினாள், ஆங்கார ஆரவாரத்துடன்! அவள் சீற்றம் சொல்லளவோடு நின்றுவிடவில்லை. இரும்புக் குறடுகளை எடுத்தாள். எரியும் தணலில் அவைகளைப் பழுக்கக் காய்ச்சினாள். அவற்றின் சின நாக்குப் போன்ற அலகுகளை மியூகியின் முகத்துக்கு நேரே நீட்டி, “இதோ பார், உன் கண்களும் முகமும் உனக்கு இனிப்பாயிருந்தால் என் சொல்லுக்கு இணங்குவதாக உறுதி கூறு, அல்லது இந்தத் தீக்கோல்கள் அவைகளைத் தீய்த்து விடும். பார், இரும்பையும் உருக்கும் எரி நாக்குகளை” என்று கூறிக் குறடினால் அவனை அடித்து இழுத்தாள். மியூகியின் அலறல் கேட்டு அறத்தாயியின் புதல்வி சீசாட்டோ ஓடிவந்தாள். அவள் அறத்தாயியின் வயிற்றில் பிறந்தவளாயினும் கனிந்த உள்ளம் கொண்டவள். அவள் கள்ளி வயிற்றில் தோன்றிய அகில்; நத்தை நல்கிய முத்து; புயலில் பிறந்த தென்றல் போன்ற பண்பு அவளிடம் அமைந்திருந்தது. அவள் தாயைக் கடிந்து “அம்மா, இந்த அப்பாவியை இப்படி வதைப்பதால் என்ன பயன்? சென்ற செல்வம் திரும்பப் போவதில்லை. உழைப்பவளாகவாவது அவள் இருந்துவிட்டுப் போகட்டுமே” என்று கூறி மியூகியைத் தன்னறைக்கு இட்டுச் சென்றாள். அறத்தாயிக்கு அவளை விட்டுவிட விருப்பமில்லை. இருந்தாலும் வேறு அவசர வேலையொன்று குறுக்கிட்டதால் அச்சமயம் விட்டுவிட்டாள். வழக்கத்திற்கு மாறாகச் சில வழிப்போக்கர்கள் அறத்தாயியின் கொள்ளைக் குழுவினரை எதிர்த்துத் தாக்கி வளைத்துக் கொண்டதாகச் செய்தி வரவே தம் ஆட்களைக் காப்பாற்றுவதற்காக அவள் மியூகியை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. சிசாட்டோ மியூகிக்கு வேண்டிய பண்டுவங்களெல்லாம் செய்து, அவளைப் பலவாறு தேற்றினாள். இரக்கமற்ற தன் தாய் திரும்பிவிட்டால் அப்போதுள்ள சூழ்நிலையில் அவள் மியூகிக்கு என்னென்ன கொடுமைகள் புரிவாள் என்பது அவளுக்கு நன்கு தெரியும். ஆகவே அவள் மியூகியிடம் கொஞ்சம் பணம் கொடுத்துத் தப்பிப்போய் விடும்படி வேண்டினாள். எட்டி மரத்தடியில் தளிர்த்த கட்டிக்கரும்பு போன்ற அந்நங்கையிடம் ஆயிரம் நன்றி தெரிவித்து விட்டு மியூகி குகையை விட்டு வெளியேறினாள். மியூகிக்கு முதலில் எப்பக்கம் போவதென்றே ஒரு திட்டமில்லாமலிருந்தது. ஆனால் நெடுந்தொலைவு சென்றபின், அஸோஜிரோவின் நகரமாகிய காமகூராவுக்கு வழி எது என்று அவள் வினாவி அறிந்து, அத்திசை நோக்கி நடந்தாள். அவள் உள்ளம் முற்றிலும் உடைந்துவிட்டது. அவள் கண்கள் ஓயாது ஆறாக நீர் உகுத்தன. ஹமாமத் என்ற இடத்துக்கு வருவதற்குள், அவை ஓயாத அழுகையினால் ஒளியிழந்து குருடாயின. சிசாட்டோ தந்த சிறுதொகையும் அதற்குள் செலவாகிக் கரைந்துவிட்டது. காயங்களால் ஏற்கனவே நலிந்து, மெலிந்திருந்த உடல், பசிக்கு உணவும் பருக நீரும் கிடைக்கப் பெறாமல் பின்னும் வற்றி வலுவிழந்தது. உடல் நோவு உள்ளத்தின் பெயரையும் வென்றது. இந்நிலையில் அவள் பிழைப்புக்கு வேறு வழியின்றி, ஒரு பாழுங் குடிசையில் அன்று இரவைக் கழித்தாள். பொழுது புலர்ந்ததும் நகரை நோக்கித் தட்டுத்தடுமாறி நடந்துவந்து தெருத் தெருவாகப் பிச்சை எடுக்கலானாள். பழைய மியூகியின் சின்னமாக இப்போது அவளிடம் வேறு எதுவும் மீந்திருக்கவில்லை; அவள் குரலும், அவள் யாழுமே எஞ்சின. இவற்றின் உதவியால் அவள் தன் காலையழகுப் பாட்டை எங்கும் சென்று பாடி, இரந்து உண்டாள். ‘காலையழகுப் பாட்டுப் பாடும் கண்ணிழந்த பிச்சைக்காரி’ என்றே பலரும் அவளை அழைக்கலாயினர். அவள் கண்ணைக் கவரும் அழகும் நாகரிகமும் இப்போது பழங் கதையாயின. அவள் கோலமும், ஆடை அலங்கோலமும் கண்டு சிறுவர் சிறுமியர் கல்லெறிந்து எள்ளி நகையாடினர். அறியாச் சிறுவர் சிலர் அவளைத் தம் பொல்லாக் குறும்புகளுக்கு ஆளாக்கி நையாண்டி செய்தனர். இதனால் அவள் பகலில் வெளியே நடமாடுவது கூடக் குறைந்துவிட்டது. ஆகவே அவள் கால் பட்டினி அரைப்பட்டினியாக இருந்து தன் காலத்தைக் கழித்து வந்தாள். ஒரு நாள் ஒரு துறவித்தாய் அப்பக்கமாக வந்தாள். “அழகிய அரசிளஞ் செல்வி போன்ற ஒரு உயர்குடி நங்கை இப்பக்கமாக, வந்த துண்டா?” என்று அவள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டே வந்தாள். மியூகி விடுதியின் வாயிலில் உட்கார்ந்து வெயில் காய்ந்து கொண்டிருந்தாள். துறவித்தாய் அவளிடமும் இதே கேள்வியைக் கேட்டாள். அக்கேள்வி அவளைத் தூக்கிவாரிப்போட்டது. “அழகிய பெண்மணி என்றால் எப்படித் தெரியும், அம்மே! அவள் பெயர் என்ன, ஊர் என்ன? தங்களுக்கு அவள் என்ன உறவு?” என்று மியூகியின் கேள்விகள் வளர்ந்தன. துறவித்தாய் அவைகளுக்கெல்லாம் தந்த விளக்கத்தின் மூலம் அவள் தேடியது மியூகியைத் தான் என்றும், அவள் உண்மையில் மியூகியின் இன்னுயிர்த் தோழி அஸாகேதான் என்றும் தெள்ளத் தெளிய விளங்கின. அவள் முதலில் தன் தோழியைக் கட்டிக் கொள்ளத் துடித்தாள். ஆனால் தன் அவல நிலையைத் தன் தோழியிடம் கூடத் தெரிவிக்க அவள் மனம் ஒப்பவில்லை. ஆகவே “அம்மா, நீ குறிப்பிட்ட அடையாளமுள்ளவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. மேலும் நான் கண்ணற்றவள். எவரையும் நான் காணவும் முடியாது” என்றாள். சற்று நேரம் சென்றதும் அஸாகே போய்விட்டதாக மியூகி எண்ணிக் கொண்டாள். ஆகவே அவள் தன் தோழியை எண்ணி வாய்விட்டழுதாள். “அந்தோ, அஸாகே, நீ என்னைத் தேடி எத்தனை நாள் எங்கெங்கெல்லாம் அலைந்தாயோ? ஐயோ, கடைசியில் என்னைக் கண்டுபிடித்தும், நான் பொய் கூறி உன்னை ஏய்க்கும்படி நேர்ந்துவிட்டதே! என் அவல நிலையல்லவா என் உயிர்த் தோழியாகிய உன்னிடமும் இப்படிப் பொய்கூறத் தூண்டி விட்டது, என்ன செய்வேன்? அஸாகே.... அஸாகே...” என்று அவள் தன்னை மறந்து புலம்பினாள். மியூகி எண்ணியபடி அஸாகே போய்விடவில்லை. மியூகியின் உருவமும் உடல் தோற்றமும் முற்றிலும் மாறிக் காணப்பட்டாலும், அவள் குரலும் அவள் பெருந்தன்மையும் அவளை விட்டு அகன்றுவிடவில்லை. அவள் வைத்திருக்கும் ‘சாமிசன்’ யாழும் அவளுடைய அவல நிலைக்கு ஒத்ததாக இல்லை. ஆகவே அஸாகே சற்றுத் தயங்கி அப்பால் போய் நின்றிருந்தாள். மியூகியின் புலம்பல் அவள் மயக்க தயக்கங்களையெல்லாம் போக்கிவிட்டது. அவள் ஓடோடி வந்து மியூகியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு “அம்மா, இந்த நிலையிலா நான் உங்களைப் பார்க்க வேண்டும்? யார்தான் உங்களை இந்நிலையில் கண்டு சகித்துக்கொள்ள முடியும்? ஐயோ, உங்கள் தாய் தந்தையர் உங்களை இக்கோலத்தில் கண்டால், உயிரையே விட்டுவிடுவார்களே” என்று கோவெனக் கதறி அழுதாள். அஸாகே துயர் கண்டு மியூகியும் அழுதாள். மியூகி அழுவதைக் கண்டு தோழியின் துயர் மீண்டும் பீறிட்டெழுந்தது. அவள் தன் அழுகையை நிறுத்த வழிதெரியாமல் வாய்விட்டுக் கதறிக் கதறி அழுதாள். பிறகு ஒருவர்க்கொருவர் ஒருவாறு ஆறுதல் கூறித் தேற்றிக் கொண்டனர். ஒருநாள் பொழுதும் ஓடி மறைந்துவிட்டது. அஸாகே தான் மியூகியைத் தேடியலைந்த கதையைக் கூறினாள்; மியூகி தன் துயர்களையெல்லாம் ஒளிக்காமல் தன் தோழியிடம் கூற அஸாகே, “அம்மணி, நம் துன்பங்களுக்கு விரைவில் விடிவு ஏற்பட்டுவிடும். என் தந்தை சாமுரோபி உன் தந்தைக்கு மிகவும் வேண்டியவர். அவர் இப்பக்கம் அருகாமையில்தான் இருக்கிறார். அவரை உசாவி அறிந்து கொண்டால், அவர் உங்களைக் கட்டாயம் அஸோஜிரோ விடம் கொண்டு போய்ச் சேர்ப்பார். உங்கள் உடல் நலமடையட்டும். நாம் சென்று அவரைக் காண்போம்” என்று மியூகிக்கு ஆறுதல் கூறினாள். துணையற்ற மியூகிக்கு இறுதியில் வந்த அஸாகேயின் துணையும் நீண்ட நாள் நிலைத்து நிற்கவில்லை. ஒரு நாள் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், முன் அவளை விலைக்கு வாங்கிச் சென்றிருந்த விடுதி வணிகன் அந்த வழியாக வந்தான். அவன் மியூகியை அவளது உருமாறிய நிலையிலும் அடையாளம் கண்டு கொண்டான். அறத்தாயியின் ஆதரவில் அவள் அப்போது இல்லாததால் விலைதராமலே அவளைக் கைப்பற்றிச் செல்லுவதென்று முடிவும் செய்துவிட்டான். வணிகன் அவளை அணுகி வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போக எண்ணியபோது அஸாகே குறுக்கிட்டு, “அவள் என் தோழி, அவளை விடு” என்றாள். அஸாகே ஒரு பெண்தானே என்ற எண்ணத்தில் அவ்வெறியன் அவளை அசட்டை செய்து விட்டு, மியூகியை மீண்டும் பற்றி இழுத்தான். அது காணப்பொறாத அஸாகே தன் உடைவாளை உருவி அவனைத் தாக்கினாள். மியூகியிடம் அஸாகேக்கு இருந்த பற்று அவள் கைக்குப் பெருத்த வலுவளித்து, நீண்ட நேரம் அந்த மனித மிருகத்தினிடம் அவள் போராடினாள். அவள் உடலெல்லாம் காயமடைந்து, குருதி பீறிட்டது. ஆயினும் அவள் கை ஓயவில்லை. குட்டியைக் காக்கும் பெண்புலி போல அவள் சுழன்று சுழன்று தாக்கினாள். இறுதியில் வணிகனை அவள் வாள் வெட்டிச் சாய்த்தது. ஆனால் அவன் ஒரு புறம் சாயுமுன், அவளும் மற்றொருபுறம் வலுவிழந்து சோர்ந்து விழுந்து விட்டாள்; காயங்களால் அவள் உடலும் குற்றுயிராய் விட்டது. மியூகி தாவிச் சென்று அவளை எடுத்துத் தன் மடிமீது கிடத்திக் கொண்டு அழுதாள். அரையுணர்விலும் அஸாகே மெல்லக் கண் திறந்து “அம்மணி, என் காலம் குறுகிவிட்டது. ஆனால் நான் ஓரளவு மகிழ்ச்சியுடன் தான் சாகிறேன். ஆம், உங்களைத் தேடிக் கண்டுகொண்டேன். உங்களுக்கு வந்த இடையூற்றிலிருந்தும் உங்களைக் காத்தேன். தங்களை என் தந்தையிடம் சேர்த்துத் தக்க பாதுகாப்பளிக்கு முன் செல்கிறேனே என்ற வருத்தம் ஒன்று மட்டுமே எனக்கு இருக்கிறது. ஆயினும் அவர் அருகிலேயே இருக்கிறார். அவரை உசாவிச் சென்று கண்டுவிட்டால், உங்களுக்கு நேர்ந்துள்ள இடுக்கண்களெல்லாம் தீர்ந்துவிடும். அந்த நம்பிக்கை ஒளியுடன் தான் செல்கிறேன். எனக்காக நீங்கள் வருந்த வேண்டாம். யாருக்கும் இப் பாரில் கிடைக்காத பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. என் கடமையைச் செய்துமுடித்த மகிழ்ச்சி என் அகமெங்கும் பொங்கி நிறைந்திருக்கிறது. அதுபோல என் விருப்பப்படி என் தந்தையிடம் சென்று உடனே அவரைக் காணுங்கள். நான் வருகிறேன்” என்று கூறி அவள் கண் மூடினாள். உயிர் பிரிந்த உடலை வைத்துக் கொண்டு மியூகி துடி துடித்தாள். ஏற்கனவே இழந்த கண்ணை மீண்டும் பெற்றுப் பறிகொடுத்து விட்டது போலிருந்தது அவள் நிலை. தனது கண்ணீராலேயே அஸாகேயின் உடலை நீராட்டித் தன் துயரிலேயே அவளை அடக்கம் செய்தாள். அதன் பின்னும் அவள் அவ்விடம் விட்டுப் பெயர மனமில்லாமல், மனமொடிந்து, சில நாள் அங்கிருந்து தனக்கு அடுக்கடுக்காக விளைந்த கொடுமைகளை எண்ணிப் புலம்பினாள். அவள் அழுகை கேட்டு வானங் கறுத்தது; மேகங்கள் குமுறின; கடுங்காற்று அலறி ஏங்கிற்று; அவள் உள்ளம் போல் உறுமிக் கொண்டு புயல் வாரியடித்தது. 3. காதல் வென்றது! கோமஸாவா ஜெராஸா யெமோன் என்ற புகழ்ப் பெயருடன் அஸோஜிரோ காமகூரா நகரில் பீடுடன் வாழ்ந்து வந்தான். ஆட்சித் தலைவனைத் திருத்த அவன் மேற்கொண்ட முறைகள் மிகப் புதுமையானவை. ஆனால் அவை எதிர்பாராத வெற்றிகளை அவனுக்கு வழங்கின. மக்களின் தலைவனை மயக்கி ஆட்கொண்ட மங்கைக்கே நல்லறம் காட்டி அவள் துணைக் கொண்டே தலைவனை நல்வழிப்படுத்தினான். மக்களும் மக்களின் தலைவனும், தலைவனை ஆட்கொண்ட தலைவியும் மற்றும் யாவரும் அஸோஜிரோவைப் பாராட்டிப் புகழ் நீராட்டினர். அனைவரது உள்ளத்திலும் அவன் அன்பு மாறா நல்லிடம் பெற்றான். ஆயினும் அவன் உள்ளத்தில் மட்டும் அமைதியில்லை. மியூகியின் மறைவு அவன் அகத்தளத்திலிருந்து கொண்டு அவனை ஆழ அழுத்திக் கொண்டிருந்தது. தன்னையே முழுமனதுடன் காதலித்தாள். அவள் தனக்காக உயிர் விடவும் துணிந்தாள்! ஆனால் அவள்- தன்னையே மணக்க மறுத்து வெளியேறிய மாயம் என்ன என்று அறியக் கூடாமல் அவன் கலங்கினான். ஆகவே தன் கடமைகள் முடிந்ததுமே தன் நாட்டுப்புற மனையேகி ஓய்வும் அமைதியும் பெறப் புறப்பட்டான். செல்லும் வழியிலெல்லாம் மியூகியின் சிந்தனையே அவன் மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது. அவன் அஸோஜிரோவாக இருந்து மியூகியைப் பற்றிய சிந்தனையிலே மூழ்கி விடும்போது, அவள் பாற்செல்லும் ஆர்வம் சந்திரனைத் தழுவத் துடிக்கும் கடலலை போல் எழும். கோமஸாவாவாக இருந்திடும்போது மியூகியே அவனுக்கு ஒரு புதிர் மயமாக, மர்ம வெளியாக இருந்தாள். அவள் ஏன் காணாமற் போய்விட்டாள்? அவள் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்க முடியுமா? அத்தகைய முடிவுக்கு அவள் வர, அவள் கண்ட அல்லல் தான் ஏது? உயிரை மாய்த்துக் கொள்ளவில்லையானால் எப்படி அவள் தன் காதலை மறந்து உயிர்வாழ்கிறாள்? இவ்வாறு பல குழப்ப வினாக்களுக்கு இடையிலே அவன் அகப்பட்டுத் தத்தளித்தான். சிந்தனை வளர வளர, சிக்கல்களும் வளர்ந்தனவே தவிரக் குறைவதாகத் தெரியவில்லை. அலைமோதும் உளக் கடலில் அவள் சிந்தனை ஒரு சிறு துரும்பு! அது இங்குமங்கும் ஊசலாடி அலைக்கழிந்து கொண்டிருந்தது. இரவாகிவிட்டபடியால் அஸோஜிரோ வழியில் ஒரு நகரத்தில் விடுதியொன்றில் தங்க எண்ணினான். அவன் நண்பர் குழுவில் எப்போதும் அவன் இணைபிரியாத் தோழனான இவாசிரோ தாக்கித்தோ என்ற ஒருவன் இருந்தான். அவன் அஸோஜிரோவிடம் அதிகப் பற்றுள்ளவன் போல் நடித்தாலும், உண்மையில் ஒரு பசப்பன்; பாசாங்குக் கள்ளன்; அறத்தாயியின் சதிக்கும்பலைச் சார்ந்த சழக்கன். தலைவனைத் தீவழியிற் செலுத்தி, ஆட்சியை அலங்கோலமாக்க அட்டூழிய அட்டவணை இயற்றியவனே அக்கொடியோன் இவாசிரோதான். அஸோஜிரோ தன் நட்பை உதறித் தள்ளாமலே தலைவனைத் திருத்தி நல்வழி காட்டியது கண்டு அவன் மனம் புழுங்கினான். ஆகவே அவனை ஒழித்தாலன்றித் தங்கள் கும்பல் பதவி பெற முடியாதென்றெண்ணி அவன் சமயம் பார்த்திருந்தான். தலைநகரிலிருந்து மிகத் தொலைவிலுள்ள நகர்ப் பொது விடுதி! இரவு நேரம்! இவை தன் திட்டத்துக்கு உகந்தவைகளாக இருப்பதை எண்ணி அந்த எத்தன் இறுமாந்திருந்தான். சதித் திட்டமியற்றுவதில் சகலகலாவல்லவனான இவாசிரோ, அஸோஜிரோவைத் தீர்க்கச் சரியான திட்டம் தீட்டினான். அத்துடன் அது இரட்டைத் திட்டமாகவும் அமைந்தது. அவனது முதல் திட்டப்படி, அஸோஜிரோவுக்கு அவன் கண்முன்னேயே ஒருவன் நஞ்சு கலந்த பாலைத் தர வேண்டும். நஞ்சுக்கு மாற்று நஞ்சை முன்பே இவாசிரோ உட்கொண்டிருக்க வேண்டும். தங்கள் நட்பு முறைக்குப் பங்கம் வராமல் அவனும் குடித்து அஸோஜிரோவையும் குடிக்கும்படி தூண்ட அப்போது தானே முடியும்! இவாசிரோவின் இரண்டாவது திட்டம் இன்னும் புதுமையானது. ஜப்பானின் கட்டடங்களெல்லாம் பெரும்பாலும் தாளாலும் அட்டையாலுமே கட்டப்பட்டிருக்கும். கீழ்த்தளமும் அட்டையாலேயே அமைக்கப்படுவதினால் நிலத்திற்குச் சற்று மேலே தான் அமைப்பார்கள். விடுதியின் கீழ்த் தளத்துக்கு அடியில் இவாசிரோ ஒரு கொலைகாரனை மறைத்து வைத்தான். கீழ்த்தளத்தின் மேலுள்ள அறைகளையும், அதில் நடப்பவரையும், படுப்பவரையும் கீழிருந்து பார்ப்பவன் ஓரளவு ஒளி நிழல்களாலும், குரல் ஒலியாலும் உணர முடியும். அஸோஜி ரோவின் இயக்கங்களைக் கவனித்து அவன் படுக்கையில் சாய்ந்தபின் நெஞ்சின் பக்கம் குறிபார்த்துக் கீழிருந்து குத்திவிடவேண்டுமென்பதே இவாசிரோவின் திட்டம். முதல் திட்டம் எதிர்பாராத வகையாகத் தோல்வியுற்றது. இவாசிரோ ஏற்பாட்டின் படி வேலையாள் பாலில் நஞ்சு கலந்து கொண்டிருக்கும்போது விடுதிக்காரர் அடுத்த அறையிலிருந்து கவனித்துவிட்டார். அவர் தலைவனிடமும் அஸோஜிரோ விடமும் மிகுந்த பற்றுக் கொண்டவர். மக்கட் பணியாளனுக்கு இருக்கவேண்டிய கூரிய அறிவும், மருந்துச் சரக்கறிவும் அவருக்கு இருந்தன. இவாசிரோவின் திட்டத்தைத் தகர்க்க அவர் தன் அறிவைப் பயன்படுத்தினார். அவர் ‘சிரிப்பூட்டும் மருந்து’ ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தார். நஞ்சூட்டிய பாலைக் கொட்டிவிட்டு அக்கலத்தை நன்றாகக் கழுவிப் பின் சிரிப்பூட்டும் மருந்துடன் பாலைக் கலந்து வைத்து விட்டுச் சென்று விட்டார். சிறிது நேரங்கழித்து அஸோஜிரோவும் இவாசிரோவும் வந்தமர்ந்து பேசத் தொடங்கினர். அவர்கள் உரையாடலில் விடுதிக்காரரும் கலந்துகொண்டார். இவாசிரோ மனம் புழுங்கினான். விடுதிக்காரர் போகட்டும், போனபின் பாலை எடுத்துக் கொடுக்கலாம் என்று பரபரப்போடு காத்துக் கிடந்தான். அவர் போகும் வழியாய்க் காணவில்லை. ஆகவே துணிந்து அவர் முன்னிலையிலேயே பாலை எடுத்து அஸோஜிரோவுக்கு அளித்து அருந்தும்படி வேண்டினான். விடுதிக்காரர் பின்புறமாக இருந்துகொண்டு அஸோஜிரோவை நோக்கிக் கண்சிமிட்டினார். அஸோஜிரோவுக்குச் செய்தி இன்னதென்று தோன்றாவிட்டாலும் அவன் அரசியல் சூழ்ச்சி களிடையே அடிபட்டு, எப்போதும் முன்னெச்சரிக்கை உடையவனாதலால், சற்று விழிப்போடிருந்தான். பாலைப் பருகும்படி இவாசிரோ மீண்டும் தூண்டினான். அஸோஜிரோ அவ்வேளை வேறு ஏதோ ஒரு கருத்தை மனதிற்கொண்டு கவனிக்காதவன் போலிருந்தான். வஞ்சக நெஞ்சம் படைத்த இவாசிரோவின் உள்ளம் சஞ்சலத்தால் தடுமாறிற்று. இவ் வளவையும் விடுதிக்காரர் கவனித்துக் கொண்டிருந்தார். தன்மீது ஐயம் ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் இவாசிரோவைத் தாக்கியது. அஸோஜிரோவின் ஐயம் நீங்கி அவன் அடுத்த தாக்குதலில் விழிப்பிழந்து இருக்க வேண்டு மென்பதற்காக இவாசிரோ தானே அந்தப்பாலை எடுத்துப் பருகினான். முன்பே நஞ்சு முறிவு உட்கொண்டிருந்ததால் அவனுக்கு இத்துணிவு ஏற்பட்டிருந்தது. ஆயினும் இம்மாற்று நஞ்சுக்குச் சிரிப்பூட்டும் மருந்தின் மீது எப்படி ஆற்றல் இருக்க முடியும்? எனவே அது தன் விளைவுகளைப் படிப்படியாகக் காட்டத் தொடங்கிற்று. இவாசிரோ பேச்சின் இடையே அடிக்கடி சிரித்தான். பேச்சுக் குறைந்தது. சிரிப்பு மிகுந்தது. அருகிலுள்ளோர் அவனை வியப்புடன் நோக்குவதை அவன் கவனித்தான். ஆனால் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துச் சிரித்து விலா நோவெடுத்தது. ஆனால் சிரிப்பு அடங்கவில்லை; இவாசிரோவால் அடக்கமுடியவில்லை. தன் கேலிக்குரிய நிலையை மறைக்க அவன் சிரித்துக்கொண்டே வெளியேறினான். நடந்தவை எல்லாவற்றையும் விடுதிக்காரர் இப்போது அஸோஜிரோவுக்கு விளக்கினார். நஞ்சு கலந்த பாலையும் அவர் எடுத்துக் காட்டி, இனி விழிப்புடன் இருக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொண்டு விடைபெற்றார். அஸோஜிரோவும் அவருக்கு மனமார்ந்த நன்றி கூறி, “உம்மை நான் என்றும் மறவேன். இன்று முதல் நீர் என் உயிர் நண்பர்” என்று கூறி அனுப்பினான். இயற்கையிலேயே துன்பந் தோய்ந்து, தொல்லை பல ஏந்தி நிற்கும் அஸோஜிரோவின் உள்ளம் முன்னிரவின் நிகழ்ச்சியால் பின்னும் கலவர மடைந்தது. அவனால் ஓரிடத்தில் நிலையாக உட்கார்ந்திருக்க முடியவில்லை; படுக்கையில் சாய நேரமும் ஆகவில்லை. ஆகவே அவன் அரைத்துயில் நேரத்துக்குரிய மங்கிய பச்சை விளக்கேற்றி வைத்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான். அவன் பார்வை அச்சமயம் தற்செயலாக எதிரிலிருந்த சுவரின் மீது விழுந்தது. சுவரில் அவன் கண்ட காட்சி அவனைத் தூக்கி வாரிப்போட்டது. பச்சைக் கண்ணாடி போல் துலங்கிய சுவரில் எங்கும் காலை அழகுப்பாட்டு எழுதப்பட்டிருந்தது. உஜி ஆற்றையும் தன்னை மறந்து மாயமாய் மறைந்த தன் காதலியையும் நினைவுபடுத்தும் இப்பாட்டு எதிர்பாராது இவ்விடத்தில் தோன்றுவானேன் என்று அவனுக்கு விளங்கவில்லை. அவன் உடனே சென்று விடுதிக்காரரை வரவழைத்தான். சுவரிலே தோன்றும் அவ்வருங்காட்சியைக் காண்பித்து, அப்பாட்டு யாரால் அங்கே தீட்டப்பட்டது என்று கேட்டான். விடுதிக்காரர், “ஐயா, அடுத்த ஊரிலிருந்து கண்ணிழந்தாள் ஒருத்தி- ஒரு பிச்சைக்காரி- இந்நகருக்கு அவ்வப்போது வருவாள். ஒரு நாள் அவள் நெடுநேரம் தங்கி விட்டதால், திரும்பிப் போக முடியாமல் மறுகினாள். நான் அவளுக்கு இரங்கி இங்கே தங்க இடம் கொடுத்தேன். காலை அழகுப் பாட்டைத் தான் எப்போதும் அவள் தன் யாழில் பாடுவாள். அவள் தான் இரவெல்லாமிருந்து அதைச் சுவரில் எழுதி வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு விளக்கொளியில் அவை புலப்பட்டிருக்கலாம்” என்றார். அப்பிச்சைக்காரியைக் கண்டு அப்பாட்டு அவளுக்குத் தெரிந்த வகையை அறிய வேண்டுமென்று அஸோஜிரோ எண்ணினான். அத்துடன் பலவகையிலும் கலங்கிய தன் மனநிலையில் அப்பாட்டு ஓரளவு தன் உள்ளத்துக்கு ஆறுதல் தரும் என்று அவன் நம்பினான். ஆகவே அவன் விடுதிக்காரரிடம் “ஐயா, ஏற்கனவே நான் தங்களுக்குப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன். இன்னும் எனக்கு ஒரு உதவி செய்யும்படி கோருகிறேன். அந்தப் பிக்சைக்காரியை நான் காணவேண்டும். அவளை வரவழைத்து என் அறையில் வந்து, சிறிது பாடச் செய்ய வேண்டுகிறேன். அரசியல் தொல்லைகளால் அலைக்கழிவுறும் என் உள்ளத்திற்கு அது சிறிது அமைதி தரும்” என்றான். காலை அழகுப்பாட்டுப் பாடும் கண்ணிழந்த பிச்சைக்காரியாகிய மியூகி அச்சமயம் நகரிலேயே இருந்தாள். விடுதிக்காரர் அனுப்பிவைத்த பணியாள் அவளை அழைத்து வந்தான். ஆனால் அஸோஜிரோவின் அறையில் அச்சமயம் இவாசிரோ மீண்டும் வந்திருந்தான். அறைக்குள் மற்றொருவர் வருவது தன் திட்டங்களுக்குத் தடை என்ற எண்ணத்துடன் அவன் பிச்சைக்காரியுடன் அமர்ந்து பாட்டுக் கேட்பது தம் மதிப்புக்குத் தகாது என்று வாதாடினான். அஸோஜிரோ இக்கருத்தை ஏற்க விரும்பவில்லை. ஆயினும் அவனுக்கு விட்டுக் கொடுத்துத் தோட்டத்திலேயே அவளைப் பார்க்க ஏற்பாடு செய்தான். பிச்சைக்காரியின் உருவம் அவன் கண்ணிலிருந்து மியூகியின் தோற்றத்தை மறைத்தாலும், அவள் பாட்டும், குரலும் அவள் மியூகி என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி விட்டன. அவள் பாட்டில் அவன் பெரிதும் ஈடுபட்டு நேரங் கடத்துவது பிடிக்காமல் இவாசிரோ அதைக் குறை கூறினான். அஸோஜிரோ அவன் கூறியதைச் சிறிதும் கவனிக்காமல், அப்பாட்டை வானளாவப் புகழ்வது கேட்டதும் அவன் வேறு வகையில்லாமல் பிச்சைக்காரியை வெறுத்தொதுக்கும்படி செய்ய எண்ணினான். அவன் மியூகியை நோக்கி “உன்னைப் பார்த்தால் இயல்பாகவே பிச்சையெடுத்து வாழ்பவள் போலத் தோன்றவில்லை. உன் பாட்டும் நடையும் ஏதோ உயர் குடிப்பெண் என்று காட்டுகின்றன. நீ ஏன் இப்படித் தரங்கெட்டு அலைய நேர்ந்தது?” என்று கேட்டான். மியூகி தன் குழிவிழுந்த கண்களை அவனை நோக்கித் திருப்பி, “ஐயா, அறிவுடையவரே! தாங்கள் கூறுவது ஓரளவு உண்மையே. நான் சின்சி மாகாணத்திலுள்ள ஒரு உயர்குடி நங்கைதான். நான் விரும்பாதவரை மணக்கும்படி தாய் தந்தையர்கள் என்னை வற்புறுத்தினர். நான் வெளியேறி விட்டேன். நான் விரும்பிய என் காதலரையும் அடைய முடியவில்லை. அதற்கிடையே என் துன்பங்கள் வட்டியும் முதலுமாகப் பெருகின. அழுது நொந்த கண்கள் பார்வையிழந்தன. கண் போயிற்று. கண்ணிலும் அரிய என் தோழியும் என் பொருட்டு அரும்பாடு பட்டு, எனக்காகவே ஒரு கொடியோனுடன் போராடி மாண்டாள். இதனால்தான் நான் துணையற்று அலைகிறேன். என் மீது வேறு தப்பெண்ணம் கொள்ள வேண்டாம். நான் பிச்சைக்காரிதான். ஆனால் நான் காலை அழகுப் பாட்டைப் பிச்சை எடுப்பதற்காக மட்டும் பாடவில்லை. அப்பாட்டு என் உயிர்; உள்ளத்தோடு உள்ளமாக ஒன்றிவிட்ட ஓவியம். அதுவே என் காதலன் எனக்கு எழுதித் தந்த பாட்டு” என்று கூறினாள். துன்பத்திலும் அவள் குணமும் மனமும் மாறவில்லை என்று அறிந்ததே அஸோஜிரோவின் உள்ளத்திலுள்ள ஒரு பெரும்பாரம் குறைந்து போலிருந்தது. ஆயினும் அதே சமயம் அவள் கதையின் புதிர் அவனுக்கும் முற்றிலும் விளங்கவில்லை. காதலனை மதிப்பதாகக் கூறுகிறாள் அவள். ஆனால் தாய் தந்தையர் குறித்த அதே மணமகனை வெறுத்தேன் என்று உரைக்கிறாள். இது என்ன புதிர்?- இவ்வாறு திகைப்பும் மலைப்பும் மலையளவாக அவன் மனத்தில் இடம் பெற்றன. அவளிடம் இன்னும் அதுபற்றி விவரமாகக் கேட்கவும் அவனால் முடியவில்லை. அவன் உள்ளம் விரும்பியபடி அவளை ஏற்றுத் துயர்களையும் வழியில்லாமல் இவாசிரோ அருகிலிருந்தான். ஆகவே அஸோஜிரோ தன்னைப் பெரிதும் அடக்கிக் கொண்டு, பிச்சைக்காரியாகிய மியூகிக்குக் கனிவுடன் நன்றி கூறி அனுப்பி வைத்தான். காதலியைச் சந்தித்தபின் அஸோஜிரோவின் கண்களில் இருந்த சிறிது துயிலும் நீங்கிற்று. அவன் படுக்கையிலே உட்கார்ந்து கொண்டு மனத்துடன் போராடிக் கொண்டிருந்தான். அச்சமயம் திடுமென ஒரு ஓசை கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். அவன் பின்புறமாக ஒரு உடைவாள் மேல்நோக்கிப் பாய்வது கண்டான். அரசியல் சூழ்ச்சிகளில் பழகிய அவன் கைகள் உடனே விரைந்து வேலைசெய்தன. தேநீர்க் கெண்டியில் இருந்த வெதுவெதுப்பான நீரை அவன் அதன்மீது கொட்டினான். உடைவாள் தன் முதுகு இருக்கவேண்டிய இடத்திலே குத்தப் பட்டதால், தன்னை குத்துவதற்காகவே யாரோ திட்டமிட்டிருக் கிறார்கள் என்று அவன் அறிந்து கொண்டான். குத்துத் தவறிய தென்பதைக் கொலைகாரன் அறியாமல் செய்ய வேண்டு மானால், குத்திய இடத்திலிருந்து குருதி ஒழுகுவதாக அவன் எண்ணவேண்டும். இரவில் குருதி நிறம் தெரியாது. எனவே வெதுவெதுப்பான நீரைக் குருதி எனக் குத்தியவன் நினைத்துக் கொள்ளட்டும் என்று கருதியே அவன் தேநீர்க் கெண்டியிலுள்ள நீரை ஊற்றினான். இவாசிரோவின் இரண்டாவது திட்டப்படிதான் கீழ்த் தளத்திலிருந்து உடைவாள் நகர்ந்தது என்று கூறத் தேவையில்லை. ஆனால் முதல் திட்டம் குலைந்தது கண்ட அவன் இரண்டாவது திட்டத்தை இன்னும் திறமையுடன் தீட்டியிருந்தான். கீழிருந்த குத்த ஒருவனை ஏற்பாடு செய்திருந்ததுடன், அவன் மற்றொருவனையும் அறைக்குள் நுழைந்து அஸோஜிரோவைக் கொலைசெய்யத் தூண்டியிருந்தான். இவ்விரண்டாம் கொலைகாரன் முகமூடியணிந்த வண்ணம் திடீரென்ன அறைக்குள் நுழைந்து எதிர்பாராத நிலையில் தாக்கினான். அஸோஜிரோவிடம் அச்சமயம் விசிறியைத் தவிர வேறு படைக்கலம் எதுவும் இல்லை. ஆயினும் அவன் எதிரி ஓங்கிய உடைவாளைத் தன் விசிறியால் தட்டியெறிந்துவிட்டு, மற்போர் முறைகளினால் தாக்கியவனைச் சமாளித்து மல்லாடிக் கொண்டிருந்தான். உடைவாள் எதிரியின் கைப்பிடியிலிருந்து தொலைவில் விழுந்து கிடந்தது. அதை எடுக்க இருவரும் ஒருவரையொருவர் புரட்டிப் புரட்டி நெடுநேரம் போராடினர். இவ்வியக்கத்தக்க போர் முறையினிடையே விடுதிக்காரர் ஓடிவந்து, செய்வது இன்ன தென்றறியாமல் மலைத்து நின்றிருந்தார். அஸோஜிரோ எதிரியின் கைப்பிடிக்கு உடைவாள் எட்டாதவாறு செய்ததுடன், அவனை அப்பக்கம் உருட்டிச் சென்று அதை எடுத்துக் கொண்டான். அதன்பின் அவன் வேலை எளிதாயிற்று. எதிரியின் உடல் குருதிச் சேற்றில் புரண்டது. விடுதிக்காரர், “ஐயா, தங்கள் உயிர் மாய உயிர் என்பதில் வியப்பில்லை. கையில் படையின்றிப் படையுடன் வந்தவனை வெல்லும் மற்போர் முறையை உங்கள் ஒருவரிடத்தில்தான் கண்டேன்” என்று புகழ்ந்து பாராட்டினார். ஆனால் அஸோஜிரோ “பாராட்டுக்கு இது சமயமில்லை. அன்பரே! இந்த உடலை விரைவில் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யுங்கள்” என்றான். விரைவில் பணியாள் ஒருவனை அழைத்துவந்து விடுதிக்காரர் இறந்த எதிரியின் உடலை அப்புறப்படுத்தினார். அவன் இவாசிரோவின் ஆள் என்பதும் உறுதிப்பட்டது. இவாசிரோவும் தன் தோல்வியை உய்த்துணர்ந்து கொண்டு அவர்கள் பக்கம் நாடாதிருந்தான். தன் காரியங்கள் ஒருவகையாய் முடிந்ததும் அஸோஜிரோ மியூகியின் பக்கம் தன் கருத்தைச் செலுத்தினான். அவன் மீண்டும் விடுதிக்காரரை அழைத்து “அன்பரே, எனக்கு இன்னும் ஒரே ஒரு உதவி செய்ய வேண்டும். தாங்கள் எனக்குச் செய்த நல்லுதவிகள் பலவாயினும், இப்போது நான் கோருவது இன்னும் முக்கியமானது. இங்கே வந்து பாடிச்சென்ற கண்ணிழந்த பிச்சைக்காரியிடம் என் கலவர நிலையில் முறைப்படி நன்றி தெரிவிக்காது போய்விட்டேன். அவள் வறுமை தீர அவளுக்கு ஒரு பணமுடிப்புப் பரிசளிக்கவும் எண்ணியிருந்தேன். இன்றிரவே நான் செல்ல வேண்டியிருப்பதால் அவளைக் கண்டுபேசி விட்டுச் செல்லலாம் என்றிருக்கிறேன். இன்னும் ஒரு தடவை அவளை வரவழைப்பீர்களா?” என்றான். விடுதிக்காரர் “பெருந்தகையீர். இவ்வளவு பீடிகை எதற்கு? நாட்டுத் தொண்டராகிய தங்களுக்கு நான் என்ன உதவி செய்யவும் காத்திருக்கிறேன். ஆயினும் இப்போது இரவு நெடுநேரமாகி விட்டது. அவள் இப்போதுதான் ஊர் போயிருப்பாள். நாளைக் காலை அழைத்துவரத் தடையில்லை” என்றார். தன் காதலியைக் கண்டும், அவள் அவல நிலையை நேரிலறிந்தும் அவளுக்கு ஆறுதல் கூற வழியில்லை; உதவி புரிய முடியவில்லை! இதை நினைத்தபோது அஸோஜிரோ மிகவும் வருந்தினான். ஆயினும் வேறு வகையின்றி அவன் ஒரு விசிறியில் காலை அழகுப்பாட்டை எழுதி, மறுபுறம் தன் பெயர்விளக்கம் குறித்தான். அத்துடன் இழந்த பார்வையைத் திரும்பத் தரத்தக்க ஒரு மருந்தையும், அதைப் பயன்படுத்தும் விவரத்தையும் உள்ளடக்கி, நூறு வெள்ளியுடன் பொதிந்து கட்டினான். அம்மூட்டையை அவன் விடுதிக்காரரிடம் கொடுத்து, “ஐயா, இதில் ஒரு கடிதமும், கண்பார்வை தரும் மருந்தும், மருந்து முறையும் இருக்கின்றன. அத்துடன் அவளுக்காக நூறு வெள்ளிகளும் வைத்திருக்கிறேன். இதனை அவள் வந்ததும் தந்து, என் நன்றியையும் மறவாமல் தெரிவிக்கக் கோருகிறேன்” என்று உரைத்தான். விடுதிக்காரர் இப்பொறுப்பை மனமுவந்து ஏற்றார். அவருக்கும் ஏழைப் பிச்சைக்காரியிடம் இன்னதென்று கூறமுடியாத பாசம் ஏற்பட்டிருந்தது. அஸோஜிரோ புறப்பட்டுச் சென்ற சில வினாடிகளுக் கெல்லாம் மியூகி திரும்ப வந்தாள். அவளைக் கண்டதும் விடுதிக்காரர் “அந்தோ, நீ சற்றுமுன் வந்திருக்கக்கூடாதா? உன் பாட்டைக் கேட்ட பெருமகனார் உன்னை மீண்டும் கண்டு நன்றி தெரிவித்துப் போகவேண்டுமென்று துடி துடித்துக் கொண்டிருந் தாரே. ஆயினும் இதோ அவர் உனக்குச் சிறிது பணம் தந்து போயிருக்கிறார். அத்துடன் உன் பாடலுக்காக உனக்குப் பெரிதும் நன்றி தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்ல, உன் கண்ணிழந்த நிலைக்கு இரங்கி, அதற்கு மீண்டும் ஒளியூட்டவல்ல ஒரு மருந்தையும் தந்து சென்றிருக் கிறார்” என்று சொல்லி அஸோஜிரோ தந்த மூட்டையை அவளிடம் கொடுத்தார். அஸோஜிரோவின் பெருமித நடையில் மியூகி முன்பே பெரிதும் ஈடுபட்டிருந்தாள். அவன் குரலும் அவருள்ளத்தை எங்கெங்கோ இழுத்துச் செல்வது போன்றிருந்தது. ஆனால் தெளிவாக அதனை அவள் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவனே அஸோஜிரோவாக இருக்கக் கூடும் என்ற ஐயம் அவளுக்கு ஏற்படவில்லை. “இந்த ஏழையிடம் அவருக்கு ஏன் இவ்வளவு பரிவு? ஆம். அவர் மிகவும் நல்லவர் என்பதை ஏழையாகிய என்னிடம் அவர் காட்டிய மதிப்பே தெரிவித்தது. என் வறுமைக்கும் மருந்து; என் கண்ணுக்கும் மருந்து. என்ன தாராளமான கருணை” என்று அவள் அஸோஜிரோவைப் பாராட்டினாள். பின் விடுதிக்காரரை நோக்கி “ஐயா, நான் கண்ணற்றவள். நீங்களே மூட்டையை அவிழ்த்து எனக்கு அவர் எழுதிய செய்திகளை வாசித்துக் கூறுங்கள்” என்று வேண்டினாள். விடுதிக்காரர் முதலில் பணத்தை எண்ணிக் கொடுத்தார். பின் மருந்து மூட்டையில் சுற்றியிருந்த சீட்டை வாசித்தார். அம்மருந்து மருத்துவர் குடியினைச் சார்ந்தவளாகிய தம் தாயின் நன்கொடை என்றும், உயிர்க் குருதியுடன் அதைக் கலந்து கண்ணில் பூசினால் கண்ணொளி பெற முடியுமென்றும் அதில் எழுதியிருந்தது. இதை வாசித்துத் தெரிவித்த பின் விடுதிக்காரர் “அம்மணி, இம்மருந்துச் சீட்டுத் தவிர வேறு செய்தி எனவும் அறிவிக்கவில்லை என்றே எண்ணுகிறேன். ஆனால் ஏதோ எழுதப்பட்டுள்ள ஒரு நல்ல அழகிய விசிறி இத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது” என்றார். விசிறி என்ற பெயர் கேட்டதுமே மியூகி பரபரப்புடன் “அதில் எழுதியவற்றை ஒன்று விடாமல் வாசிக்கக் கோருகிறேன், ஐயா” என்று துடித்தாள். விடுதிக்காரர் “அம்மா, விசிறி மிக அழகாயிருக்கிறது. பொன் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. அதன் ஒருபுறத்தில் முத்துப்போன்ற வண்ண எழுத்தில் உன் காலை அழகுப்பாட்டு எழுதப்பட்டிருக்கிறது. மறுபுறம் சின்சி மாகாண முதல்வன் அஸோஜிரோ என்ற கோமஸாவா ஜெரோஸா யெமோன் என்று எழுதப்பட்டிருக்கிறது” என்றார். இதைக் கேட்ட மியூகி ‘ஓ’ வெனக் கதறி நிலத்தில் வீழ்ந்தாள். விடுதிக்காரர் ஒன்றும் தோன்றாமல் பணியாட்களைக் கூவியழைத்து, அவர்கள் உதவியால் அவளைத் தூக்கி எடுத்து நீர்தெளித்து அவளைத் தேற்றினார். மயக்கத் தெளிந்த நிலையில் அவர் “அம்மா, அவரை உனக்கு இதற்குமுன் தெரியுமா?” என்று கேட்டார். மியூகி “அவர்தான் நான் தேடித் திரியும் என் காதலர். என் தந்தை யூமினோசுகே தேர்ந்தெடுத்த கணவரும் அவர்தான். பெயர் மாறாட்டத்தால் அவரை மறுத்தேன். இத்தனை அல்லல்களுக்கும் ஆளானேன். அந்தோ, கோமஸாவாவே அஸோஜிரோ என்பதை இதுவரை அறியாமல் போனேனே” என்று அலறிப் புலம்பினாள். விடுதிக்காரர் “அம்மா, உங்களை யாரோ என்று நினைத்தேன். எனக்கும் இன்னும் எத்தனையோ பேருக்கும் அருள்பாலித்துள்ள சான்றோன் யூமினோசுகேயின் புதல்வியே நீங்கள் என்று இன்றுவரை அறியாமல் போனேன்” என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். மியூகி இப்போது அவரிடம் பேசக் காத்திருக்கவில்லை. அவள் வெறி பிடித்தவள் போலத் தன் காதலனைப் பின்பற்ற எண்ணி ஓடினாள். அப்போது கருக்கிருட்டு! வானம் மின்னி மின்னி அச்சுறுத்திக் கொண்டிருந்தது. பகலிலேயே கண் தெரியாத மியூகி இருட்டிலே எப்படிச் செல்வாளோ என்று அஞ்சி விடுதிக்காரம் பின் தொடர்ந்தார். ஆயினும் அவள் வேகத்தை அவரால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. அவள் கால்விட்டபடி நடந்தாள்; ஓடினாள்; ஓடுவதும் நடப்பதுமாக இருந்தாள். எப்படியோ அவள் அஸோஜிரோ சென்ற வழியிலேயே சென்றாள். வழியில் ஒய் ஆறு குறுக்கிட்டது. அவள் அதன் இக்கரையிலிருந்த போது அஸோஜிரோ முன்னால் சிறிது தொலைவில் காலை அழகுப் பாட்டைப் பாடியது கேட்டது. ஆனால் இதற்குள் புயலும் மழையும் வாரியடிக்கத் தொடங்கின. மியூகியின் கந்தலாடை முழுதும் நனைந்து போயிற்று. அவள் அதைச் சட்டை செய்யாமல் தலைதெறிக்க ஓடினாள். அவள் ஆற்றில் காலடி வைக்குமுன் மலையில் பெய்த மழையால் ஆறு பெருகி வந்தது. ஆற்றின் இறங்கு துறையில் வெள்ளம் இமைக்க முடியவில்லை. வெள்ளம் வருமுன்பு அஸோஜிரோ கடந்து சென்றிருந்தான். அவள் பின்பற்றுமுன் வெள்ளம் வந்து அவர்களைப் பிரித்தது. தன் காதல் வாழ்வு தன்னை இதுவரை அலைக்கழித்தும் அமையாமல், இப்போது கைக் கெட்டியதும் வாய்க்கொட்டாமல் தட்டிவிட்டதே என்று அவள் பின்னும் மனம் வெம்பினாள். இனியும் இந்த வாழ்வை நீடித்துக் கொடிய துன்பமனுவிப்பதைவிட, ஆற்றில் இறப்பது நன்று எனத் துணிந்து அவள் நீரில் குதிக்க முனைந்தாள். இத்தடவையும் அவள் சாக முடியவில்லை. விடுதிக்காரர் விரைந்து அவளைப் பின்பற்றிவந்து அவளைத் தடுத்தார். “அம்மா, நீங்கள் பொறுத்தது பொறுத்தீர்கள், இன்னும் ஒருசில நாட்கள் பொறுத்தால் போதும். இதுவரை நீங்கள் துணையற்றவராயிருந்தீர்கள். இனி உங்களுக்கு எல்லாவகைத் துணையும் கிடைத்துவிட்டன. நீங்கள் இனி எனக்குப் பிள்ளை போன்றவர்கள்” என்றார். மியூகி ஒன்றும் புரியாமல் விழித்தாள். விடுதிக்காரரும் ஒன்றும் பேசாது அவளை விடுதிக்கு அழைத்துச் சென்றார், அதன்பின் அவர் அவளுக்குத் தான் இன்னார் என்று விளக்கம் கூறினார். “அம்மா, உன் துயரில் நான் முன்பே கூறியதை நீ கவனிக்கவில்லை. நான் இப்போது ஒரு விடுதிக்காரனாக இருந்தாலும் நீங்கள் நினைப்பது போல ஏதிலான் அல்ல, நான்தான் உன் தோழி அஸாகேயின் தந்தை சாமிரோபி” என்றார் அவர். மியூகி அவர் காலில் விழுந்து மன்னிப்புக்கோர முயன்றாள். அவர் அவளை ஆதரித்தெடுத்து அமர்த்தித் தன் சோக வரலாறு முழுவதையும் அவளுக்கு மீண்டும் விரித்துரைத்தார். “எனக்கு அஸாகே என்றொரு மகள் உண்டு என்று தெரியுமே தவிர, அவளை நான் என்றுமே பார்த்தது கிடையாது. அஸாகேயின் தாய் அகி மாகாணத் தலைவர் மாளிகையில் ஒரு தாதியாக இருந்தாள். நானும் அரண்மனை மேலாளாயிருந்தேன். நான் அவளை மனமாரக் காதலித்தேன். அவளும் என்மீது உயிராய் இருந்தாள். தலைவர் இணக்கம் பெற்று இருவரும் மணம் செய்து கொள்ள எண்ணியிருந்தோம். ஆனால் அதற்குள் எங்கள் தொடர்பு பற்றிய வம்புரை தலைவர் காதுக்கு எட்டிவிட்டது. அரண்மனைக் கட்டுப்பாட்டை மீறிய என்மீது தலைவன் சீற்றம் கட்டுக்கடங்காததாயிற்று. அவன் என்னைத் தூக்கிலிடும்படிக் கட்டளையிட்டுவிட்டான். நானும் அஸாகேயின் தாயும் கெஞ்சினோம். பலன் எதுவுமில்லை. அச்சமயம் உன் தந்தைதான் தலையிட்டுத் தம் திறமையினாலும் நயமிக்க நல்லுரையினாலும் என் உயிரைக் காத்தார். காதலர்களுக்குத் தூக்கைவிடப் பிரிவே கொடுந்தண்டனை என்ற புதிய வாதத்தால் அவர் தலைவனின் சீற்றத்தையே வேறு திசையில் மாற்றிவிட்டார். அத்துடன் கள்ளக்காதலுக்கு உடந்தையாயிருந்த குற்றத்திற்காக அஸாகேயின் அன்னையை அரண்மனையிலிருந்து நீக்குவதாகப் பாவித்துத் தன் ஆதரவில் வைத்துக்கொண்டார். “உன் தந்தையின் நயமிக்க வாதம் பொய்க்கவில்லை. உண்மை யிலேயே சாவைவிட என் பிரிவுவாழ்வு எனக்குப் பெரிய தண்டனையாகத் தான் ஆகிவிட்டது. என் காதலியும் உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்மகவை விட்டுவிட்டுத் துன்பம் தாளாமல் இறந்துவிட்டாள். காதலி இறந்தபின் புதல்வியைக் கூடக் காணப்பெறாமல், அவளை உன் தந்தையின் பாதுகாப்பிலேயே விட்டுவிட்டேன். “நான் இத்தனை தொல்லைகட்கு ஆளானாலும் என் உயிரையும் காத்து என் காதலியின் இறுதி நாளில் ஆதரவுந் தந்த உங்கள் குடிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? என் ஒரே கவலை இப்போது நான் என் மகளைக் கண்டு வாழ்த்த வேண்டியதுதான்.” சாமுரோபியின் இச்சொற்கேட்ட மியூகி கண்கலங்கி “அந்தோ, அவளை நீங்கள் இழக்கவும் நானே காரணமாக இருந்தேன். எனக்காகத்தானே அவள் உயிர் நீத்தாள்.” என்று கதறினாள். பின் சிறிது சிறிதாக அவள் அழுது கொண்டே அஸாகே தன்னைத் தேடிவந்ததும், தன்னைக் காக்க உயிர் நீத்ததுமாகிய வரலாறு முழுவதும் கூறினாள். சாமுரோபி கண்கலங்கவில்லை. அவள் எதிர்பார்த்ததற்கு மாறாகக் களிப்புடனும் அமைதியுடனும் “ஆ, என் மகளே என் கடனில் பாதியை உயிர்கொடுத்துத் தீர்த்தாள். அவள் பிறந்தது முதல் இறப்பதுவரை அவளை நான் காணக் கொடுத்துவைக்கவில்லை. ஆனால் தன் தந்தையின் மரபை அவள் மெய்ப்பித்துவிட்டாள். அவள் எனக்காக விட்டுப் போன மீதிப் பங்கையும் நான் இதோ ஆற்றுகிறேன்?” என்று அப்பாற் சென்றார். ‘அவர் எங்கோ, ஏதோ காரியமாகப் போயிருக்கிறார்; வருவார்’ என்று யாவரும் காத்திருந்தனர். ‘ஆ’ என்ற ஒரு அலறல்கேட்டு அனைவரும் திடுக்கிட்டோடினர். அடுத்த அறையில் சாமிரோபி தன் வாளினாலேயே தன்னைக் குத்திக் கொண்டு குருதி வெள்ளத்தில் கிடந்தார். மியூகி மீண்டும் துடிதுடித்தாள். ஆனால் சாமிரோபி அவளை அருகில் அழைத்து, “அம்மா நான் இனி இருந்து என்ன பயன்? என் பிரிவுக்கு நீ வருந்தாதே நான் மகிழ்ச்சியுடன் சாகிறேன். இதோ இங்கே வா?” என்று கூறி அவள் கையிலிருந்த மூட்டையை அவிழ்த்துக் கண்ணொளி தரும் மருந்தைத் தன் உயிர்க் குருதியில் தோய்த்து அவள் கண்ணில் தடவினார். மியூகி கண்ணொளி பெற்று யாவும் கண்ணெதிரில் கண்டாள். ஆனால் கண்பார்வை அவளுக்குக் களிப்பூட்ட வில்லை. தன் தோழியின் தந்தை குருதிக்காட்டில் கிடப்பது அவள் கண்பார்வைக்கு ஒரு தண்டனையாயிற்று. மியூகியின் தந்தையிடமிருந்து முன்னால் வந்திருந்த ஸெகிசுகே என்ற தூதனிடம் சாமுரோபி, மியூகியை ஒப்படைத்து விட்டு உயிர் நீத்தார். இறக்கும்போது அவர் மியூகியிடம் “மகளே, உனக்கு வருத்தம் ஊட்டியதற்காக என்னை மன்னிக்கக் கோருகிறேன். மனைவியாகப் பெற வேண்டிய என் காதலியை இழந்தேன். மகளை என்றென்றைக்கும் இழந்தேன். ஆனாலும் நான் அவ்விருவர் சென்ற இடமே செல்கிறேன். அவர்களிரு வரையும் காத்து என் உயிரையும் தூக்குக்கயிற்றினின்றும் விடுவித்து உதவிய உத்தமனின்குடி என் குடிதான். தன் உயிரால் அஸாகே என் மரபின் கடமையில் பெரும்பகுதியை நிறைவேற்றினாள். என் உயிர்க் குருதியால் நான் அவள் கடனும் மீந்த உங்கள் கடனும் ஆற்றினேன். இதோ ஸெகிசுகேயிடம் உன்னை ஒப்படைத்துச் செல்கிறேன். எங்கள் அனைவர் பெயரும் காத்து நீ நல்வாழ்வு வாழ்வாயாக” என்று கூறினார். அப்புறம் அவர் உதடுகள் அசையவில்லை; இதயம் துடிப்பதும் நின்றுவிட்டது. ஸெகிசுகேயுடனிருந்து மியூகி சாமுரோபியின் இறுதிக் கடன்களை ஆற்றினாள். அதன்பின் ஸெகிசுகே அவளைப் பெற்றோரிடம் இட்டுச்சென்று நடந்தவை யாவும் எடுத்துரைத்தான். இழந்த செல்வத்தைத் திரும்பவும் பெற்ற தாய் தந்தையர் இன்பத்துக்கு ஓர் எல்லை இல்லை. மகள் துயரங்களைக் கேட்டு அவர்கள் பாகாய் உருகினர். மகள் விருப்பத்தை அறியாமல் மணம் பேசிய தம் தவறுக்காக யூமினோசுகே பெரிதும் வருந்தினார். ஆனால் மியூகியின் தாய் மிசாவா “இனி சென்றதை எண்ணிப் பயனில்லை. இனிமேலாவது மகளைக் காதலனுடன் இணைத்து மகிழ்விக்க விரைவில் வழிகாணுங்கள்” என்றாள். முன்பு அஸோஜிரோவே கோமஸாவா என்பதைத் தாங்களும் அறியாமல், மியூகியும் அறியாமல் போனதால் நேர்ந்த இடையூற்றை விளக்கி யூமினோசுகே அஸோஜிரோவுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதன் இறுதியில் இப்போது மியூகி மீண்டும் தாயகம் வந்துவிட்டாள் என்றும் அஸோஜிரோவின் மருந்தினாலும் சாமுரோபியின் பெருந்தன்மையினாலும் அவள் கண் குணமடைந்து விட்டதென்றும் அவளை வந்து மணந்து செல்ல வேண்டு மென்றும் எழுதினார். கடிதத்தைக் கொண்டு செல்லும்படி யூமினோசுகே ஸெகிசுகேயை அனுப்பினார். அவனும் புறப்பட்டான். ஆனால் அவன் புறப்படுமுன் மியூகி தன் தாயிடம் கலங்கிய கண்களுடன் வந்து “அம்மா, எனக்கு உங்களையும் அப்பாவையும் விட்டுப்பிரிய மனமில்லையானாலும், என் காதலனிடமிருந்து இன்னும் நான் தொலைவில் இருப்பது சரியன்று, நானும் ஸெகிசுகேயுடன் சென்று அவரை நேரில் காண விரும்புகிறேன்” என்றாள். இத்தடவை பெற்றோர் சிறுதடையுஞ் சொல்ல விரும்பவில்லை. “அம்மா, நீ அவரை அடைந்து விரைவில் மணமுடித்துக் கொண்டு வருவாயாக” என்று வாழ்த்தி அனுப்பினர். அஸோஜிரோ இப்போது தன் தலைவனின் எதிரிகளான அறத்தாயியின் கும்பல்மீது இறுதி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தான். இவாசிரோ வழக்கப்படி அது வகையில் நாள் கடத்தும்படி தூண்டிவந்தான். ஆயினும் அஸோஜிரோவின் நற்பெயரின் முன்னும், அவன் செல்வாக்கின் முன்னும் இவாசிரோவின் கெடுமுயற்சி பலிக்கவில்லை. படையெடுப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் அஸோஜிரோ தலைநகரின் புறக்கோட்டையில் அமர்ந்திருந்தான். ஆனால் இவாசிரோவின் இடையீட்டினும் இனிய, ஆனால் விலக்க முடியாத ஓர் இடையீடு- யூமினோசுகேயின் கடிதம்- இம்முயற்சியிடையே வந்து குறுக்கிட்டது. அஸோஜிரோ கடிதத்தை வாசித்தான். அவன் முகம் மலர்ச்சியடைந்தது. “என் இன்பம் இப்போது எங்கே இருக்கிறது?” என்று அவன் ஸெகிசுகேயைக் கேட்டான். ‘இதோ’ என்று அவன் பின் நின்று ஒரு குரல் கேட்டது. அஸோஜிரோ அதுவரை பின்னின்ற உருவத்தைக் கவனிக்கவில்லை குரலைப் பின்பற்றி உருவத்தை நோக்கியவுடன், அதன் முகமூடி கடந்து அவன் உணர்வு அவனைத் தட்டியெழுப்பிற்று. அவளும் முகமூடியை விலக்கினாள். முகிலைக் கிழித்துவரும் மின்னொளிபோல அவள் அழகு மீண்டும் புத்துருவில் அவன் பார்வையில் பாய்ந்தது. அவர்களில் யார் முதலில் தாவி எழுந்தனர் என்று கூறமுடியாது. இருவரும் ஒருவரையொருவர் பற்றி இறுகத் தழுவிக் கொண்டனர். அருகிலிருக்கும் தூதனை இருவரும் மறந்தனர்; மியூகியும் தன் துயரங்களை மறந்தாள். ஸெமிசுகே புன்னகை செய்தான். ஆனால் கண்ணிழந்த பிச்சைக்காரி யார் என்பதுகூட மியூகியின் நினைவிலிருந்து மறைந்தது. கரைகடந்த வெள்ளமும் அணைகடந்த வெள்ளமும் ஒருங்கு கூடினாற்போல் அவர்கள் காதல் கொந்தளித்தெழுந்து ஒன்றோடொன்று பிணைந்தது. உஜி ஆற்றின் மெல்லிய கலகலப்பும் தென்றலும் மின்மினிக் காட்சிகளும் அவர்களைச் சூழ்ந்து நடனமாடின. காலை அழகுப்பாட்டு - அது எய்திநின்ற இன்பக்கணை - ஈருடலையும் ஓருடலாக்கிற்று. அஸோஜிரோ தன் ஏக்கம் மறந்தான். தன் கடமைகளைக் கூட மறந்துவிட்டான். அவன் உள்ளத்தில் காதல் கடமைப் போராட்டம் நீடிக்கவில்லை. தலைவனிடம் சென்று தன் காதலுக்காகப் போராடித் தன் கடமையிலிருந்து சிறிது ஓய்வு பெறவே அவன் துணிந்தான். அஸோஜிரோவின் வாழ்வில் இதுவரை கடமை காதலை வென்றது. இப்போது காதல் கடமையை வென்றுவிட்டது. தலைவன் தன் காதலியுடன் அரியணையில் வீற்றிருந்தான். அஸோஜிரோவை அவன் எதிர்பார்க்கவில்லை யென்றாலும், அவனைக் காண அவன் சிறிதும் தயங்கவில்லை. தலைவனின் காதலியும் புன்முறுவலுடன் “எங்கள் காதல் வாழ்வில்தான் நீர் இதுவரை அரசியல் கடமைகளைப் புகவிட்டீர். இப்போது நீரே அதில் புகுந்துவிட்டீர்” என்றாள். இத்தடவை அஸோஜிரோவின் முறையீடு கடமை முறையீடல்ல காதல் முறையீடு என்று கண்ட அவர்கள் இருவரும் தாமும் தம் அரசியல் கடமைகளை மறந்து கைகொட்டி மகிழ்ந்தனர். “அஸோஜிரோ, உமக்குக்கிட்டிய ‘தண்டனைக்கு’ மகிழ்ச்சியடை கிறோம். கடமையால் எங்கள் காதலைக் கடிந்து, எங்களைத் திருத்தினீர். உங்கள் காதலால் உங்கள் கடமையை மனமாரத் திருத்துகிறோம். சென்று மணமகளை அழைத்து வருக. நாங்களே மணமுடித்து வைக்கிறோம்” என்று தலைவன் மகிழ்ச்சி ததும்பக் கூறினான். தலைவன் காதலருமை அறிந்தவன். தலைவனின் காதலியோ அஸோஜிரோவின் தூண்டுதலால் கடமை அளவுகோல் கொண்டு காதலை அளந்து பார்த்தவள். இருவரும் அஸோஜி ரோவின் காதலாழத்தை அவன் கடமையுணர்ச்சியின் அளவினாலேயே அளவிட்டுப் பார்த்து வியந்து பாராட்டினர். “அன்பரே, உமக்காக மட்டுமல்ல. உம்மைப் போன்ற தூய வீரரை ஆட்கொண்ட அந்த அழகு நங்கைக்காகவும் நாங்கள் இம்மணத்தை விரைவில் முடிக்க எண்ணுகிறோம். உம் வீரம் எத்தகைய காதலையும் விலைக்கு வாங்கத்தக்கது. ஆனால் அந்நங்கையின் ‘துன்பக்கேணி’ எத்தனையோ வீரர்களின் வீரத்தையும் கடந்த ஆழமுடையது. அவள் இன்ப ஊற்றுக்கு இனி எந்த இடையூறும் கூடாது” என்று அவர்கள் மியூகியைப் பாராட்டினர். மியூகியின் துன்பக்கேணி இன்பக்கேணியாயிற்று. அவள் பெற்றோர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அரசியல் வாழ்வின் அல்லல்கள் யாவும் மறந்து எல்லோரும் புதுமண விருந்தில் பங்குகொண்டு களித்தனர். அஸோஜிரோவையும் அவன் திட்டங்களையும் எதிர்த்தழிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்த இவாசிரோ கூட இப்போது மனமாற்ற மடைந்தான். அஸோஜிரோவின் பண்பில் தன்னைத் தவிர எல்லோரும் ஈடுபடுவது கண்டு அவன் முதன்முதலில் புழுங்கியிருந்தான். புழுக்கம் பொறாமையாக, பொறாமை வஞ்சகமாக, வஞ்சம் பகையாக, பகை பழியாக உருமாறியது. ஆயினும் அவன் வஞ்சம் அவனை வாட்டி வதைத்தது. தான் நஞ்சிட்டுக் கொல்ல எண்ணியதை அறிந்தும், தன் சூழ்ச்சிகளையெல்லாம் உணர்ந்தும், அஸோஜிரோ தன் திட்டங்களைக் குலைத்ததன்றித் தன்னைப் பகைக்காதிருந்த நயநாகரிகம் அவன் உள்ளத்தைத் தைத்தது. அவன் மணவிழாவிற்கு முன் அஸோஜிரோவின் காலடியில் வீழ்ந்து “தங்கள் வாழ்க்கை நிறையின் போது அதன் சின்னமாக என்னை மன்னித்து, வருங்காலத்தில் நான் ஆற்றும் நட்புக்கடனையும் ஏற்க வேண்டும்” என்று வேண்டினான். பெருந்தன்மைமிக்க அஸோஜிரோவுக்கு இது எளிய, இனிய செயலாயிற்று. அவன் இவாசிரோவையே தன் மணவிழாத் தோழனாகக் கொண்டு, தன் நட்புறுதியைக் காட்டினான். இவாசிரோ உண்மையிலேயே அவன் உயிர் நண்பனானான். அறத்தாயியின் கும்பல் வலிவுள்ளதாயினும் இவாசிரோ சூழ்ச்சிகளினாலேயே அது நீடித்திருந்தது. அவன் மனமாற்றங் காரணமாக அவர்களிற் பலர் மனமாற்றமும், மற்றும் பலர் தடுமாற்றமும் கொண்டனர். அறத்தாயி தன் குகையில் தானே தனித்து இருந்து நோய்வாய்ப்பட்டு, புதல்வியின் மடியில் கிடந்து மாண்டாள். புதல்வி சிசாட்டோவும் எஞ்சிய செல்வத்துடன் புதிய வாழ்க்கை நடத்தத் தொடங்கினாள். தன்னால் காப்பாற்றப்பட்ட பெண்ணின் உயர் புகழும் நல்வாழ்வும் கேட்டு அவள் எல்லையில்லாத களிப்பில் மூழ்கினாள். எனவே மியூகி அஸோஜிரோ திருமணம் குடும்ப மணமாக மட்டுமின்றி அரசியல் மணமாகவும் திகழ்ந்தது. காதலை அடக்கி வென்ற கடமையின் வெற்றி போலல்லாமல், கடமையை நிறைவேற்றி வெற்றி பெற்ற அவர்கள் காதலால் அவர்கள் வாழ்க்கைப் பண்பு மிளிர்ந்தோங்கிற்று. உஜி ஆற்றங்கரையில் அடுத்த இளவேனிற் பருவத்தில் மீண்டும் எப்போதும் போல் மின்மினிகள் தம் மாயக் களியாட்டம் நிகழ்த்தின. அவற்றின் இன்ப ஒளிமணிகளிடையே இப்போது மியூகியின் கண்மணி ஒளிகளும் அஸோஜிரோவின் வீரவாவொளியும் கலந்து ஒளி வீசின. மீண்டும் பூம்படகு மிதந்து சென்றது. ஆனால் அதனைப் படகோட்டிகள் இயக்கவில்லை. கடக மணிந்த கைகள் சிலபோதும், வளையலணிந்த கைகள் சில போதுமாக மாறி மாறி அதனை உகைத்தன. யாழிசையுடன் இப்போது இரண்டு குரல்கள் பின்னி ஒலித்தன. இந்த இன்பக்காட்சிகளைக் கண்டு களிக்கும் கண்களும் இப்போது இரண்டல்ல, நான்கு. அவர்கள் காதல் வாழ்வின் மாலைப்போது இப்போது அவர்கள் நறுமணவாழ்வின் காலைப் போதாயிற்று. காலை அழகுப் பாட்டு அதைக் குறித்துக் காட்டுவது போலத் தென்றலில் கலந்து, பாலமுகப்பில் மோதி மெல்லென எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவன்: கண்கவரும் காலை அழகுவெள் ளொளியினிலே அவள்: நுண்பனித் துளிகளெலாம் சுடரிடு கின்றனவே அவன்: நுண்பனித் துளிகளெலாம் வெங்கதிரோன் சாடாமே அவள்: நண்பினொடு மழைபொழிய வாராயோ நன் முகிலே! இருவரும்: ஒண்பவழ மலர்தழைப்ப வாராயோ தண் முகிலே! அஸோஜிரோவின் முதற்பாடலை உடனிருந்து கேட்டின்புற்ற இளந்துறவி இப்போது ஜப்பானியப் பேரரசர் அவையில் முதல் மதகுருவாயிருந்தான். அவன் காதலர் திருமண வாழ்வை வாழ்த்தி ஓர் இன்பப் பாடல் வரைந்து அனுப்பி யிருந்தான். புத்தர் பிரானின் பேரின்ப வாழ்வில் ஈடுபட்ட அந்த அருட்காதலன் பாடல் அவர்கள் தூய காதலின்பத்துக்கு ஒப்பற்ற அன்பளிப்பாயிருந்தது. அதன் இறுதி அடிகள், “புத்தர் அடித்தலத்தில் நித்தம் தருமமுடன் மொய்த்த மெய்ச் சங்கமென ஒத்து வாழ்வீர்! வாழ்க புத்தர் வாழ்க தருமம் வாழ்க சங்கம்” என்று அவர்களை வாழ்த்தின. புத்தர் சரணங்களில் தருமசக்கரமும் சங்கத்தின் சின்னமும் இணைந்து நின்று காதலர்களுக்கு வழிகாட்டி வாழ்த்துக் கூறுவது போலிருந்தது. இன்னா செய்தாரை இனியனவே செய்து வெல்லுஞ் சால்புடை அண்ணலும், இன்னலெனும் புயலிடையே மின்னலெனும் காதலொளியாய் விளங்கிய நங்கையும் இன்பப்பயிர் தழைய இனிது வாழ்ந்திருந்தனர். 6. எண்ணிய வண்ணமே முதற் பதிப்பு - 1953 தமிழ் வாழ்க! எண்ணிய வண்ணமே பஃறொடை வெண்பா வையக மெல்லாம் உருவாக்கிப் பண்ணமைக்கும் மெய்யகம் உள்ளமே வேறில்லை;-மெய்யகத்தே ஆன்ற கருத்தே கருவியாக் கொண்டியக்கித் தோன்றுபல் லாயிர இன்பதுன்பந் தோற்றுவிக்கும் சான்ற கருத்தன் மனிதனே;-ஊன்றி மறைவில் அகத்துலவும் எண்ணங்கள் தாமே நிறைவுற் றுலகில் நிகழும்-கறையிலா ஒண்பளிங்கின் தண்ணிழல் ஒத்து. “எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்.” - திருக்குறள்: 441 1. கருத்தும் தற்பண்பும் “ஒருவன் உள்ளத்தில் கருதும் கருத்து எவ்வாறு இருக்குமோ, அவ்வாறே அவனும் இருப்பான்” என்று ஒரு மூதுரை உண்டு. இது மொத்தமாக மனித வாழ்வுக்குமட்டுமன்று. அதன் ஒவ்வொரு பகுதிக்கும் தனி நிகழ்ச்சிக்கும் பொருத்த மானதேயாகும். மனிதன் இயல்பு அவன் கருத்தைப் பொறுத்தது என்பதும், அவன் பண்பு அவன் மொத்தக் கருத்துத் தொகுதியைச் சார்ந்தது என்பதும் முழுவதும் எழுத்துக்கு எழுத்து உண்மை. வித்தில்லாமல் செடி தோன்றாது. அதுபோலக் கருத்தில் லாமல் செயல் தோன்றுவதில்லை. வித்து வெளிப்படத் தோன்றாமல் நிலத்தில் மறைந்து கிடக்கலாம். அதுபோலக் கருத்தும் சிலசமயம் வெளிப்பட முனைப்பாகத் தோன்றாமல் மறைந்து இருப்பதுண்டு. முனைந்து திட்டமிட்டுச் செய்யப்படும் செயல்களுக்குக் கருத்து எப்படித் தூண்டுதல் தருகிறதோ, அதுபோலவே, “கருதாதவை.” “தன்னியல்பானவை” என்று கூறப்படும் செயல்களுக்கும் கருத்தே மூலத் தூண்டுதல் தருகிறது. செயல் என்பது கருத்தின் மலர்ச்சி; இன்பமும் துன்பமும் அதில் முதிரும் காய்கனிகள். அவை இனிமை பயப்பனவாகவும் இருக்கலாம். கசப்பு அல்லது இன்னாமை பயப்பனவாகவும் இருக்கலாம். இரண்டும் கருத்து விதையிட்டுப் பயிர் விளைவித்தவருடைய உழைப்பின் விளைவுகளே. உள்ளக் கருத்தே நமைஉரு வாக்கிப்பின் மெள்ள அதுவே நமதியல்பாம்-கள்ளக் கருத்தின்பின் மேவும் கடும்பிணிகள்; ஓடும் எருத்தின்பின் சக்கரம் என்னத்-திருத்தகு தூய கருத்தைத் தொடருமே நல்லின்பம் சாயல் கழல்தொடரு மாறு. மனிதன் பண்பு திடுமெனப் படைக்கப்பட்ட ஒரு குருட்டுப் படைப்பன்று. அது ஒழுங்கமைதியுடைய, ஒரு வளர்ச்சிப் பண்பு. காட்சிக்குரிய புறப் பொருளுலகில் நாம் காணும் காரணகாரியத் தொடர்பு எவ்வளவு வழுவாக் கட்டாய நிகழ்ச்சியாய் இயங்குகிறதோ, அதுபோலவே கண்காணாத நினைவுலகி லுள்ள இப்பண்பும் விலக்கமுடியாத தனியாற்றல் வாய்ந்தது; காரண காரியத் தொடர்புக்கு உட்பட்டது. மேம்பட்ட அதாவது தெய்வத்தன்மையுடைய மனிதப்பண்பு எவர் தயவு நாடியோ அல்லது தற்செயலாகவோ வந்து கிட்டுவதன்று. நல்லெண்ணங் களின் பயனாகவும் தெய்வீகக் கருத்துக்களுடன் விடாது பழகிய நீண்ட பயிற்சியின் பயனாகவும், நீடித்த கடுமுயற்சியின் பயனாகவுமே அது தோன்றுகின்றது. இதற்கு மாறாக, குள்ளநரித் தன்மை வாய்ந்த இழிதன்மையுடைய எண்ணங்களுக்கு உள்ளத்தில் நீடித்த இடம் தருவதனால் ஏற்படும் பயனே கீழ்த் தரமான, விலங்குத்தன்மை வாய்ந்த பண்பு ஆகும். மனிதன் ஆவதும் தன்னாலே; அழிவதும் தன்னாலே. அவனைக் கொல்லும் கருவிகளை அவனைத் தவிர வேறு யாரும் செய்வதில்லை; அவனே செய்கிறான். தன் இன்பத்துக்கும் உறுதிக்கும் அமைதிக்குமாக வானளாவும் நன்மாளிகை கட்டும் அதே கைகளாலேயே, அவன் இவ்வழிவுக் கருவிகளையும் இயற்றுகின்றான். நினைவாற்றல்களைச் சரியாகத் தேர்ந்து எடுத்து அவற்றை வாய்மையுடன் செயல்முறைப்படுத்துவதனால், மனிதன் தெய்வப் பண்பு அதாவது முழு நிறைநலம் அடை கின்றான். அவற்றைத் தவறாகத் தேர்ந்தெடுத்துத் தீய முறையில் பயன்படுத்துவதனால் அவன் விலங்குநிலைக்கும் கீழாக இறங்க நேர்கிறது. இந்த இரண்டு கோடிகளுக்கும் இடையே பண்பின் பலதரப்பட்ட படிநிலைகள் இருக்கின்றன. ஒரு கோடியை அணுகுந்தோறும் மனிதன் பண்புகளை ஆட்கொள்ளும் பண்பாளனாகிறான். மறுகோடியை அணுகுந்தோறும் அவன் பண்புகளுக்கு அடிமையாகி, அவற்றால் ஆளப்படும் பண்புகேடன் ஆகிறான். மனிதன் எண்ணங்களின் ஆட்சித்தலைவன்; மனிதனே. பண்புகளை உருவாக்குபவனும், சூழ்நிலைகளையும் நிகழ்ச்சி களையும் ஆக்குபவனும் அவனே. தவிர, அவன் தன் ஊழுக்குத் தானே முதல்வனாகவும் அமைகிறான். இவ்வுண்மைகளைத் தற்கால மனித நாகரிகம் அணிமையில் நன்கு காட்டியுள்ளது. இவ்வகையில் இக்காலத்தில் கண்டுணரப்பட்ட உண்மைகளை விட ஆன்மிகத்துறையின் மெய்ம்மைகளுக்குள்ளே அழகுப் பண்பும் திறமும் அமைந்த உண்மைகள் வேறு எவையும் கிடையா. இவற்றைவிட மனித வாழ்வை வருங்காலத்தில் தெய்வீக வாழ்வாக்கும் பண்புகளும் மனிதனுக்குத் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஊட்டும் பண்புகளும் வேறு எவையும் இல்லை. வல்லமை, அறிவொளி, அன்பு ஆகியவை மனிதன் உயிர்நிலைத் தெய்வீகப் பண்புகள். இவற்றின் மூலமே அவன் எண்ணங்களின் இறைவன் ஆகிறான். இவற்றின் மூலமே அவன் வாழ்வின் ஒவ்வொரு நெருக்கடியிலும் நெருக்கடியின் பூட்டவிழ்க்கவல்ல ஒவ்வொரு திறவுகோலை உடையவனாகிறான். விரும்பிய விரும்பிய வகையிலெல்லாம் தன்னை மாற்றி யமைக்கவும். தளராது எப்போதும் தனக்குப் புத்துயிர் ஊட்டிக்கொள்ளவும் இவையே அவனுக்கு வல்லமை தருகின்றன. எப்போதும் எந்த நிலையிலும், மிகத் தாழ்வான அடிமைப்பட்ட நிலையிலும்கூட, மனிதன் தனக்குத் தானே முதல்வனாகத்தான் இருக்கிறான். ஆனால் அடிமைப்பட்ட நிலையில் அவன் ஒரு குடும்பத்தைத் தவறான முறையில் ஆட்சி செய்யும் அறிவற்ற மூடமுதல்வனை ஒத்தவன். தன்னிலையைப் பற்றி அவன் எப்போது சிந்திக்கத் தொடங்குகிறானோ. தன் ஆன்மிக வாழ்வினை இயக்கும் மூல ஆற்றல் எது என்பது பற்றி அவன் எப்போது ஆராயமுற்படுகிறானோ, அப்போதிருந்து அவன் அறிவுள்ள ஆட்சித்தலைவன் ஆகிறான். அது முதல் அவன் தன் ஆற்றலை அறிவின் உதவிகொண்டு செயலாற்று விக்கிறான்; தன் கருத்துக்களை நற்பயன் அளிக்கும் முறையில் இயக்க முனைகிறான். இத்தகைய மனிதனையே நாம் தன்னுணர்வு பெற்ற மனிதன், தனக்குள்ளே தன் கருத்தின் மூலமுதலைக் கண்டுணர்ந்த மனிதன் என்கிறோம். இக்காட்சியுணர்வு முற்றிலும் தன்முயற்சி, தன்னாராய்ச்சி, தன்செயலறிவு ஆகியவற்றின் முதிர்பயன் ஆகும். முயற்சியில்லாமல் எந்த நற்பொருளும் கிட்டுவதில்லை. பொன்னும் வைரமும் கடுமுயற்சியினாலேயே கல்லி எடுக்கப்படுகின்றன. அதுபோலவே மனிதன் தன் அறிவுநிலையாகிய சுரங்கத்துக்குள் ஆழ்ந்து அகழ்ந்து, தேடினாலன்றி எந்த மெய்ம்மைகளையும் கண்டு கிட்ட முடியாது. அறிவு , உணர்வு, ஆற்றல் ஆகிய மூன்றும் இத்தன்னாராய்ச்சியின் விளைவுகள். இவற்றைப் பெற அவன் தன் கருத்துக்கள் ஒவ்வொன்றின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவற்றைத் தூண்டியும் அடக்கியும் மாற்றியமைத்தும் பழக்கி, அச்செயல்களால் தன்மீதும் பிறர்மீதும், தன் வாழ்வின்மீதும் பிறர் வாழ்வின்மீதும் ஏற்படும் தாக்குதல் விளைவுகளை அவன் கூர்ந்து கவனித்து, அவற்றின் காரண காரியத்தொடர்புகளை அறிய வேண்டும். பின் இவ்வறிவை அவன் தன் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும், மிக நுட்பமான நாள்முறைச் செய்திகளிலும் ஈடுபடுத்திச் செயலின் பயனைப் பெருக்குவதுடன் அறிவையும் மேன்மேலும் வளர்க்க வேண்டும். “நாடுபவன் காண்கிறான்; தட்டுபவனுக்குக் கதவம் திறக்கப்படும்”* என்ற மெய்ம்மை இம்முறையிலேயே தனிச் சிறப்புடையது. அறிவுக்கோயிலன் கதவு பொறுமை, நீடித்த பயிற்பு, இடைவிடாச் செயலுறுதி ஆகியவற்றின் பயனாகவே திறக்கப்படும். அடிக்குறிப்பு: 1. விவிலிய நூல் உரை 2. சூழ்நிலைகளை வெல்லல் மனிதன் உள்ளம் ஒரு தோட்டத்தைப் போன்றது . அதை அறிவுடன் பண்படுத்தி ஒரு பூங்காவனம் ஆக்கலாம். அல்லது அதைக் கவனிக்காது புறக்கணித்து அதை ஒரு புதர்க்காடாக வளரவிடவும் செய்யலாம். ஆனால் எப்படியும் அது வளர்ந்தே தீரும். வளர்வதுஅதன் உயிர்ப்பண்பு. நாமாக நல்ல வித்திட்டுப் பேணினால், நல்ல பயிர் விளையும். நல்ல வித்திடாவிட்டால், தீய களைவித்துக்கள் தாமாக வந்து விழுந்து, களைப்பயிர் காடாக வளரும். இதுபோல, உள்ளத்திலும் நல்லெண்ணங்களையும் நற்பயிற்சிகளையும் வளர்க்காவிட்டால், தீய எண்ணங்களும் தீய வழக்கங்களும் தாமாக எழுந்து பெருக்கமடையும். தோட்டக்காரன் ஒருவன் எப்படிக் களைகளை நீக்கித் தான் விரும்பும் மலர்கள், கனிகளை வளர்க்கிறானோ, அதுபோலவே மனிதன் தன் உள்ளத்திலுள்ள களை போன்ற பயனற்ற, தவறான, தீய கருத்துக்களை ஒழித்துப் பயனுடைய நேர்மையான நல்ல கருத்துக்களாகிய மலர், கனிவகைகளை முழுநிறைவுற வளர்க் கின்றான். இம்முறையைப் பின்பற்றிச் சின்னாட்களின் அவன் தன் உள்ளத்தின் தோட்டக்காரனும் அதன் வளர்ச்சியை இயக்கு பவனும் தானே என்ற உண்மையைக் கண்டுணர்கிறான். அத்துடன் தன்னுள்ளிருந்து இயங்கும் எண்ணங்களின் இயல்பமைதிகள் அவனுக்குப் புலனாகின்றன. அவற்றின் அடிப்படையில், தன் நினைவாற்றல்களும் மன ஆற்றல்களும் எங்ஙனம் தன் பண்பையும், தன் சூழல்களையும், தன் வருங்கால வாழ்வையும் மாற்றி அமைக்கின்றன என்பதை அவன் வரவரக் கணித்துக் காண்கிறான். கருத்தும் பண்பும் பொருண்மைக்குப் புறம்பானதோ வேறானதோ அல்ல. ஆனால் சூழல்களிடையேயும் சூழ்நிகழ்ச்சி களிடையேயும்தான் பண்பு உருவாக முடியும். அவற்றினிடையே தான் அது தன்னைத் தானே உணர முடியும். எனவேதான் ஒரு மனிதனின் புறச் சூழல்கள் எப்போதும் அவன் அகப்பண்புடன் ஒத்தவையாக அமைக்கப்பட்டு விடுகின்றன. ஆயினும் எந்தக் குறிப்பிட்ட சமயத்திலும் புறச்சூழல்கள் மனிதன் அகப் பண்புக்கு முற்றிலும் ஒத்ததாயிருந்துவிடும் என்று கூற முடியாது. பொதுவாக மட்டுமே புறச்சூழல்களின் கூறுகள் ஒவ்வொன்றும் அகப்பண்பின் ஓரோர் உயிர் நிலைக் கூறுடன் ஒத்ததாயிருக்கும். அப்புறக்கூறுகள் மாறாதவையல்ல; ஆனால் மாறுமுன் அவை தற்காலிகமாக அகக்கூறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. வளர்ந்த அக்கூறுகள் மீண்டும் புறக்கூறுகளை மாற்றியமைத்து விடுகின்றன, அல்லது வளர்த்துப் புத்துருவாக்குகின்றன. வாழ்வில் மனிதன் நிலை அவன் உள்ளார்ந்த ஒழுங் கமைதியைப் பொறுத்தது. அதன் பண்பின் கட்டமைப்புக் கூறுகளாக அவன் உருவாக்கிச் சேர்த்த எண்ணங்களே அவனை அவ்விடத்தில் நிலைபெறச் செய்பவை. அதுபோலவே அந்நிலையில் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலும் அவன் உருவாக்கும் கருத்துக்களின் விளைவே. எனவே எண்ணங்கள் பண்பாகி, பண்பு வாழ்வாகின்றது. வாழ்வு சூழல்களை மாற்றியமைத்து உருவாக்குகின்றது. இதில் எல்லாம் இம்மியும் பிழையாத ஒரு சட்ட அமைதிக்கு உட்பட்டவை. தற்செயல் நிகழ்ச்சி என்று எதுவும் இயற்கையிலும் கிடையாது; மனித வாழ்விலும் கிடையாது. இது சூழலைத் தம் வயப்படுத்துபவர்கள் வகையில் மட்டுந்தான் சரியான உண்மை என்றில்லை. சூழல் தம் கட்டுக்கடங்காதது என்று கருதுபவர்கள் வகையிலும் இவ்வமைதி செயலில் சிறிதும் மாறுபடவில்லை. மனிதன் இயற்கைப்பண்பு எப்போதும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் நாடியே செல்லும் திறமுடையது. அவன் மனிதனாக வாழ்வில் நிலைகொள்வது கூட அறிய வேண்டுவன வற்றை அறிந்து அவ்வழி நின்று வளர்வதற்காகவே. சூழ் நிகழ்ச்சிகள் அவனுக்காக இவ்வறிவைத் தம்முள் அடக்கி வைத்திருக்கும் பெட்டகங்கள். அத்துடன் அவை ஒருபோதும் நிலையாயிருப்ப தில்லை. அவன் மாற்றியமைத்தாலும், அமைக்காவிட்டாலும் அவை மாறவே செய்கின்றன. புதுப்புதுச் சூழ்நிலைகள் அவனிடம் புதுப்புது அறிவை ஏந்தி நிற்கின்றன. அவற்றை அவன் அறிந்தால், புதிய சூழ்நிலைகள் தாமாக அமையும் நிலையைத் தனக்குச் சாதகமாக்கி, அவற்றைத் தன் விருப்பப்படி அமைக்கலாம். இயற்கைச் சூழ்நிலைகள் தரும் காட்சியறிவு அல்லது புலனறிவு மட்டுமன்றி அவன் மாற்றிய மைக்கும் புதுச்சூழல்களும் அவன் அறிவை வளர்க்கும். சூழ்நிலைகளுக்குத் தான் ஆளாவதாக மனிதன் நம்பும் வரை, அவன் அவற்றால் அலைக்கழிக்கவே படக் கூடும். ஆனால் ஆக்கத்திறன் அல்லது படைப்புத்திறன் தனக்கு உண்டு என்பதை உணர்ந்து, தன்னுள் அமைந்து கிடக்கும் தன் ஆக்கத்திற்கான நிலத்தையும் விதையையும் தான் ஆட்கொண்டியக்க முடியும் என்று கண்டதன் பின், அவன் தன்னைத்தானே இயக்கும் தலைவனாய் அமைகிறான். தன்னடக்கம், தன் தூய்மைப்பாடு ஆகியவற்றில் நீடித்த பயிற்சி மேற்கொண்ட ஒவ்வொருவனுக்கும் தன் எண்ணத்தி லிருந்தே சூழ்நிலைகளின் அமைதி பிறக்கின்றது என்ற உண்மை தெரிய வராமலிராது. ஏனெனில் தன்னடக்கம் மனஅமைதியை உண்டுபண்ணுகிறது. சூழ்நிலையைக் கவனித்து நோக்கும் ஆற்றலை வளர்க்கிறது. எனவே, தன் மனநிலையில் ஏற்படும் மாறுபாட்டின் தன்மைக்கும் அளவுக்கும் ஏற்பத் தன் சூழ்நிலைகள் மாறியமைவதை அவன் கவனிக்கத் தொடங்குகிறான். தன் பண்புத்திறங்களின் குற்றங் குறைபாடு கண்டு அவன் அதில் விரைந்த, குறிப்பிடத்தக்க மாறுபாடுகளை உண்டுபண்ணுந் தோறும், அம்மாறுபாட்டுடன் மாறுபாடாக அவன் சூழல் களிலும் பெருத்த மாற்றங்கள் விரைவாகத் தொடர்கின்றன என்பதை அவன் காண்பான். ஒருவன் தன்னுள் மறைவாக வைத்துக் காக்கும் பண்புக் கூறுகளின் கவர்ச்சியாலேயே அவன் உள்ளத்தின் உயர் நிலை யாகிய ஆன்மா பெரிதும் ஈர்க்கப்படுகிறது. அது நேசிக்கும் பொருள்களும் கண்டு அஞ்சி ஒதுக்கும் பொருள்களுமே இங்ஙனம் உள்ளத்தின் மறைவில் இடம்பெறுவன. இப்பொருள்கள் தூண்டும் நல் அவாவின் அளவுக்கு ஒருவன் உள்ளம் உயர்கிறது. அதன் அச்சம், அதன் திருந்தா அவாக்கள் ஆகியவற்றின் அளவுக்கு அது தாழ்வுறுகின்றது. இருவகை அவாக்களிலும் ஆன்மாவைத் தூண்டும் அறிவுக் கருவிகளா யிருப்பவை சூழல் நிகழ்ச்சிகளே. எண்ணங்களாகிய விதைகள் உள்ளத்தில் செப்பமுற விதைக்கப்படலாம், அல்லது அவை தாமாக அதில் விழும்படி விடப்படலாம். எந்தவகையில் நிலத்தை அடைந்தாலும் அவை வேர்கொள்கின்றன. வேர்கொண்டு அவ்வவைக்குரிய காலத்தில் அவ்வவைகள் பயன்களைத் தருகின்றன. இப் பயன்களே வாய்ப்புக்கள், சூழ்நிலைகள். நல்லெண்ணங்கள் நல்ல பயன்களை அதாவது நல்ல வாய்ப்புக்களையும் சூழ்நிலைகளை யும் உண்டு பண்ணுகின்றன. தீய எண்ணங்கள் தீய வாய்ப்புக் களையும் தீய சூழ்நிலைகளையுமே தரும். இங்ஙனம் புறஉலக நிகழ்வுகள் யாவும் அக உலகுக்கு இணங்கவே அமைகின்றன. புறஉலகில் இன்பமுள்ள நிகழ்வுகளும் துன்பமுள்ள நிகழ்வுகளும் இரண்டும் இறுதியில் மனிதன் நலத்தையே குறியாகக் கொண்டவை. தன் பயிரைத் தானே அறுவடை செய்பவன் என்ற முறையில் மனிதனுக்கு இன்ப துன்பங்களிரண்டும் நல்லறிவு கொளுத்தும் பண்புக் கூறுகளே. ஒருவன் உள்ளார்ந்த அவாக்கள், கருத்துக்கள், கனவார் வங்க ள் ஆகியவை துப்புரவற்ற மாயமின்னொளிகளாக நின்று அவனை ஏய்க்கலாம். அல்லது உலையா நல்லொளியாக இருந்து நன்முயற்சிப் பாதையில் அவனை ஊக்கலாம். இவ்வொளிகளுள் எதனை இயங்க விட்டாலும் அது இயங்கவிடுபவனை இயக்குவது உறுதி. தத்தம் பயனிறைவையும் அதற்கேற்ற சூழ் நிகழ்வுகளையும் உண்டுபண்ணுவதும் உறுதி. இங்ஙனம் வளர்ச்சியோடொத்த சூழல் வளர்ச்சியும் ஒரே வளர்ச்சிச் சட்ட அமைதியின் செயல்கள் ஆகின்றன. ஒருவன் சாராயக்கடைக்குச் செல்லுவது சாராயக் கடையின் குற்றத்தினாலன்று. அவன் உள்ளார்ந்த குடி விருப்பத்தினாலேயே. ஒருவன் சிறைக்குச் செல்வதும் அதுபோலச் சிறையாட்சி அல்லது கொடுங்கோன்மையின் குற்றத்தினாலன்று; அவன் தன் உள்ளத்தின் கீழ்த்தரமான குள்ள அவாக்கள் காட்டிய வழியில் சென்றதன் பயனாகவே. ஏனெனில் தூய உள்ளம் படைத்த எவனும் திடுமென வெளிக்காரணங்களால் குற்றத்தின் பக்கம் பாய்ந்துவிட முடியாது. குற்ற எண்ணங்கள் நீண்ட நாள் உள்ளேயிருந்து குறுகுறுத்துக் கொண்டிருந்தாலல்லாமல், வெளிவாய்ப்பு ஏற்பட்டவுடனே அது பாய்ந்து அவற்றைப் பற்றிவிடாது. எனவே சூழ்நிலைகள் மனிதனை ஆக்குபவையல்ல. அவை அவன் இயல்பை அவனுக்குக் காட்டுபவை மட்டுமே. நற்செயல்களுக்கும் சரி, தீச்செயல்களுக்கும் சரி, புறவாய்ப்புக்கள் மட்டும் போதமாட்டா. அவை இரண்டிலும் அவை வருமுன் அவற்றை எதிர்நோக்கிய நீடித்த ஆர்வமும் பயிற்சியும் இருக்க வேண்டும். புறநிகழ்ச்சிகள் இப்பயிற்சி யில்லாமல் சூழ்நிலைகள் ஆய்விடமாட்டா. ஆகவேதான் மனிதன் சூழ்நிலைகளை ஆக்கும் இயல்புடையவன் ஆகின்றான். அதே சமயம் புறநிகழ்ச்சிகள் தான் அவன் உள்ளார்ந்த இயல்புகளை அவனுக்கே காட்ட வல்லனவாகின்றன. ஏனெனில் உலக வாழ்வில் தோன்றும்போதே ஆன்மாவுக்குத் தன் உள்ளார்ந்த தூய்மை, தூய்மையின்மை ஆகியவற்றுக்கேற்ற சூழ்நிலை வண்ணங்களைக் கவர்ந்தீர்க்கும் ஆற்றல் உண்டு. தடுக்கப்படாத அல்லது தடுத்து மாற்றப்படாத அல்லது திரித்து உருவாக்கப்படாதவிடத்தில் இக்கவர்ச்சியாற்றல்கள் தக்க சூழ்நிலைகள் பெற்று வளர்ச்சி யடைகின்றன. இவ்விடத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு செய்தி உண்டு. நாம் பொதுவாக விருப்பங்கள் என்று கூறுவது புறவிருப்பங்களையே. இவற்றையே நாம் பரு வடிவில் உணர அல்லது காண முடிகிறது; இவற்றுக்கெதிரான அகவிருப்பங்கள் நம் இயல்புடன் இயல்பாக, இயல்புக் கூறுகள் அல்லது தன்மைகளாக இயங்குகின்றன. எனவே சூழல்களினிடையே நம்மைக் கவரும் தன்மையுடைய செய்திகள் நம் புறவிருப்பங்கள் சார்ந்தவையல்ல. அவை நம் உள்ளார்ந்த அகவிருப்பங்களையே சுட்டிக் காட்டுபவை. இவற்றை உணர்ந்தவனே உண்மையில் தன்னை உணர்ந்தவன் ஆகிறான். இவற்றை இயக்குபவனே உண்மையில் தன்னை இயக்குபவன் ஆவான். அடிக்கடி மனிதர் நைப்பாசைகள், அவாக்கள், பேரவாக்கள் ஆகியவை மீட்டும் மீட்டும் தடைப்பட்டு முறிவடைவதைக் காண்கிறோம். இதன் காரணம் என்ன? இவ்விடங்களில் இவ்வவாக்கள் தம் சூழ்நிலையைத் தாமே மாற்றி அமைத்து வளரத்தக்கவை என்பதே. புறவிருப்பங்கள் மனிதன் புறமனம் அதாவது மேலீடான அறிவுநிலை சார்ந்தவை. அகவிருப்பங்களோ அகமனம் அல்லது உள்ளம் சார்ந்தவை. புறவிருப்பங்கள் போலிச்செயல் அல்லது நடிப்பையே உண்டுபண்ணும். அவை உண்மையில் மனிதனையும் இயக்காது; புறச்சூழல்களையும் மாற்றியமைக்காது. அக விருப்பம் இரண்டையும் செய்யும். அதைக் கண்டுணர்ந்து அகஅறிவு அல்லது உள்ளுணர்வுமூலம் அவற்றை மாற்றியமைப்பதனால், மனிதன் தன்னையும் மாற்றியமைத்து உலகையும் படிப்படியாக மாற்றியமைக்க உதவுகிறான். அக விருப்பங்கள் இரண்டு வகைப்படும். பிறப்பிலேயே அல்லது இளமைப் பயிற்சியிலேயே அமைபவை சில. இவை கிட்டத்தட்ட இயற்கையின் ஆற்றல் வாய்ந்தவை. இன்னொரு வகை மனிதன் செயலறிவு மூலம் மாற்றியமைத்து நீடித்துப் பயில்பவை. தன்னடக்கமுடையவன் உள்ளுணர்வின் ஆற்றலாலும் பயிற்சியாலும் இவையும் கிட்டத்தட்ட இயற்கை யாற்றலாகத் தக்கன. அத்துடன் இயற்கையாற்றலையும் இவை நாளடைவில் மாற்றியமைக்கத்தக்கவை. பழக்க வழக்கங்கள், தோழர் கூட்டுறவு கள் ஆகியவை மக்கள் பண்பை இவ்வாற்றலாலேயே மாற்றி யமைக்கின்றன. பழக்கம் இயற்கை யோடொத்த இரண்டாவது இயற்கை என்ற பழமொழி எழுந்தது இதனாலேயே. நம்மை நாமே ஆக்கும் தெய்வீக ஆற்றல் நமக்குள்ளேயே இருக்கிறது. அதுவே நம் ஆன்மா. அது நம்மை விடுதலை நோக்கி இட்டுச் செல்கிறது. அதேசமயம் நம்மை அழிக்கும் அல்லது செயல் செய்யாமல் தடுக்கும் அடிமை ஆற்றலும் நமக்குள்ளேயே இருக்கிறது. அது நம் ஊழ்; நம் சிறைக்காவல். அது நம் எண்ணங்கள், செயல்கள் மூலம் நம்மைக் கட்டுப்படுத்துகிறது. எனவே மனிதன் செயல் வெற்றியடைய விரும்பினால் போதாது; தெய்வத்தை வணங்கினால் போதாது; இவை இரண்டுடன் எண்ணங்களும் செயல்களும் ஒத்து இணைந்தாலல்லாமல் வெற்றி கிட்டமாட்டாது. சூழ்நிலைகளை ஆக்கும் ஆற்றல் இங்ஙனம் மனிதனிட மிருக்கும்போது, சூழ்நிலைகளை எதிர்த்து ஒருவன் போராடுவ தாகக் கூறப்படுவதெங்ஙனம்? உண்மையில் சூழ்நிலைகளின் காரணத்தை அகத்தே வளர்த்துக் கொண்டு, அதன் புறத்தோற்ற மாகிய புறவிளைவை வெளியே எதிர்ப்பதாகத் தான் இது முடிகின்றது. இவ்விடங்களில் சூழ்நிலைகளின் அகக்காரணம் சிலசமயம் மனமாரத் தெரிந்த ஒரு குற்றங்குறை யாயிருக்கலாம்; அல்லது வெளிப்படப் புலப்படாத, தன்னறிவற்ற குறைபாடா யிருக்கலாம். இக்காரணத்தை உள்ளூர வளர்த்துக் கொண்டு, புறவிளைவை எதிர்த்துத் தோல்வியடைந்து வருந்துபவன் முயற்சி, ஒரு கயிற்றை இரு கால்களால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, ஒரு கையால் இழுத்துவிடப் பார்க்கும் முயற்சி போன்றதாகும். சூழ்நிலைகளைத் திருத்தியமைக்க விரும்புபவர் பலர். ஆனால் அவர்கள் தம்மைத் திருத்திக்கொள்ள நாடுவதில்லை. அவர்கள் தன்னையும் அகலுவதில்லை. சூழ்நிலைகளைத் திருத்த, தன்னைத்திருத்த, தன்முனைப்புகளை ஒறுத்தடக்கத் தயங்காத வனுக்கு முடியாத செய்தி என்று எதுவுமிருக்க முடியாது. உலகியல் வாழ்வில் பெரும்பொருள் திரட்டவிரும்பும் ஒருவன்கூட அதைப் பெறுமுன் அதற்காகப் பெருந் தன்மறுப்பு செய்தாக வேண்டும். உலகியல் கடந்த உயர்வாழ்வில் தன் சரிசமநிலை பெற விரும்புபவன் இதனிலும் எத்தனையோ மடங்கு தன்மறுப்புச் செய்வது இன்றியமையாதது என்று கூறத் தேவையில்லை. சூழ்நிலைகளை மாற்றியமைக்காமல் வாழ்வை மாற்றி யமைக்க விரும்புபவர்களுள் மிக இரங்கத்தக்க எடுத்துக்காட்டு ஆகின்றவன் செல்வனாக விரும்பும் ஏழையே. அவன் வறுமையின் சேற்றில் உழல்கிறான். தன் வறுமைச் சூழ்நிலைகள் மாறிக் கூடும் வாய்ப்புநலங்கள் திருந்த வேண்டுமென்பதில் அவன் எவ்வளவோ அக்கறையுடையவனாய்த்தான் இருக்கிறான். ஆனாலும் அவன் வேலையில் கருத்துச் செலுத்துவதில்லை. தன் ஊதியம் குறைவாயிருப்பது ஒன்றைமட்டும் காட்டி வேலை முதல்வரிடம் தன் குறைபாடுகளையெல்லாம் மறைக்கிறான். உண்மையான செல்வத்தின் தொடக்க மூலதத்துவங்களை அவன் உணர்வ தில்லை. வறுமைச் சேற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான தகுதி அவனுக்குச் சிறிதுங் கிடையாது. அதுமட்டுமன்று; ஆக்கத் தகுதிக்கு நேர்மாறான தன் ஏமாற்று, மடிமை, கோழைமை எண்ணங்கள் ஆகியவற்றில் உழன்று அவன் இன்னும் மிகுதியான வறுமையை வலிந்தழைத்துக் கொள்கிறான். மேற்கூறிய ஏழையுடன் சரிசமமாக எடுத்துக் காட்டக்கூடிய மற்றொரு பேர்வழி உண்டு. அவனே ஓயா நோய்க்காளான செல்வன். அவன் நோய்க்குக் காரணம் பேரூணேயாகும். தன் நோயிலிருந்து விடுதலைபெற அவன் பெருந் தொகைகளை எவருக்கும் கொடுக்க அல்லது செலவழிக்க முன்வருவான். ஆனால் நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரே ஒரு செயலை - தன் பேரூணை நிறுத்திக்கொள்வதை - அவன் செய்வதில்லை. இயற்கைக்கு மாறுபட்ட இன்பப் பொருள்களில் உள்ள தன் அவாவை வளர்த்துக்கொண்டே அவன் உடல் நலத்தையும் எதிர்பார்க்கிறான். உடல் நலத்தின் முழுமுதல் தத்துவத்தை அறியாததனால், அவன் உடல் நலம்பெறும் தகுதியை என்றும் அடைவதில்லை. தொழிலாளரை உழைப்பில் ஊக்கவல்ல நல்லூதியம் தர விரும்பாமலே, ஆதாயத்தை மேன்மேலும் பெருக்க விரும்பும் செல்வனும் மேற்கூறிய இருவருடன் சேர்த்து எண்ணத்தக்கவனே யாவான். சம்பளத்தைக் குறைப்பதன்மூலம் மிகுதி ஆதாயம் பெறலாமென அவன் எண்ணுகிறான். இத்தகையவனும் ஆக்கத்தின் மூலதத்துவத்தை உணராதவன் ஆகிறான். அவன் பொருட்செல்வம் மட்டுமின்றிப் புகழ்ச்செல்வத்தையும் விரைவில் இழக்கிறான். இழந்த பின்னும் அவன் சூழ்நிலைகளைக் குறைகூறுகிறானேயன்றி, தன் நிலைக்குத் தானே மூலகாரணம் என்பதை அறிவதில்லை. மனிதன் தன் சூழ்நிலைகளுக்குத் தானே காரணம் என்பதை அறியாமல், மரத்தின் கிளையிலிருந்து கொண்டு அடிமரத்தை வெட்டுபவன்போல, நன்னோக்கங்களைப் புற முயற்சியில் கொண்டு, தன் அகமுயற்சியால் தானே அப்புறமுயற்சியை அழிக்கிறான் என்பதற்கு மேற்கூறிய மூவரும் நல்ல சான்றுகள் ஆவர். ஒவ்வொரு துறையிலும் இவர்களைப் போலச் செயலாற்றுபவர்களைக் காண முடியும். ஆனால் எல்லாருடைய தவறும் ஒரு தன்மையனவே; காரணமாகிய கருத்தைத் திருத்துவதைவிட்டு, காரியமாகிய சூழல் மாறுபாட்டை மட்டும் திருத்தலாம் என்று அவர்கள் வீணே எதிர்பார்க்கிறார்கள். அகப்பண்புகளை அதாவது காரணமாகிய கருத்தை நற்பண்புகளாக்குபவர்கள் காரியமாகிய சூழல்களையும் மாற்றியமைத்து வெற்றிபெறுவார்கள். புறப்பண்புகளை அதாவது சூழல்நிகழ்ச்சிகளைமட்டும் மாற்றியமைக்க எண்ணுபவர்கள் இரண்டிலும் தோல்வியே அடைவார்கள். இவ்விரண்டும் மெய்ம்மைகள் ஆகும். ஆனால் செயலுலகில் மாறா இம்மெய்ம்மைகளை எப்போதும் எளிதில் காணமுடியாது. ஏனெனில் புறப்பண்புகள் மிகமிகப் பல. அவற்றைத் தனித்தனி பிரித்தறியக்கூட முடியாதபடி, அவை ஒன்றுடன் ஒன்று பின்னிச் சிக்கலாயிருக்கின்றன. அத்துடன் அகப்பண்புகளாகிய கருத்துக்களும் உள்ளத்தின் ஆழத்தில் வேரூன்றி நிற்கின்றன. நற்கருத்துக்களும் தீய கருத்துக்களும் அடிக்கடி ஒன்றிலொன்று மறைந்தும் உள்ளன. மக்கள் அகப்பண்பில் ஒருவருக்கொருவர் பெரிதும் மாறுபடுகின்றனர். இக்காரணங்களால் அகப்பண்பு களுக்கு உரியவரைத் தவிர மற்றவர்கள் அப்பண்புகளைச் சரிவரக் காணமுடியாது. பண்புகளை உடையவனும் தன்னடக்கமுடைய வனாய் உள்முகமாகத் தன்னை ஆராய்ந்து பார்த்துத்தான் அவற்றை எளிதில் உணர்வான். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட நல்ல அகப்பண்பின் பலனைப் புறப்பண்பிலோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நல்ல புறப்பண்பின் காரணத்தை அகப்பண்பிலோ, தன்னாராய்வில்லாமல் தொடர்புபடுத்துவது அரிது. காரண காரியத்துடன் அகப் புறப் பண்புகளைத் தொடர்புபடுத்தியபின், அவற்றின் செயலை உடனின்று கெடுக்கிற பிற பண்புகளைப் படிப்படியாக விலக்க வேண்டும். இவ்வகை முறைகளாலேயே ஒருவன் தன் அகப்பண்பையும் புறச்சூழல்களையும் மாற்றி யமைக்க முடியும். 3. எண்ணங்களின் ஆற்றல் வெளியுலகில் நல்லார் தீமைகளடைவதையும் தீயார் நலம் அடைவதையும் நாம் காண்பதுண்டு. நன்மை தீமை ஆகியவற்றில் இம்முரண்பட்ட தொடர்பு பலருக்கு மனக்குழப்பத்தையும் சிலருக்கு மனக் கசப்பையும் உண்டுபண்ணுவதுண்டு. மேலீடாக முரண்பாடாகக் காணப்படும் இச்செய்தி கூட “எண்ணிய வண்ணமே எல்லாம் எய்துறும்” என்ற மெய்ந்நெறிக்கு விலக்கல்ல. நல்லவர் என்று நாம் கருதும் மக்கள் நம் பார்வையில் முனைப்பான நற்குணம் உடையவர்கள் என்பதும், தீயவர் என்று நாம் கருதும் மக்கள் நம் பார்வையில் முனைப்பான தீய குணம் உடையவர்கள் என்பதும் உண்மையே. ஆனால் முனைப்பான அந்நற்குணங்களுக்கு அடியில் தீய பண்புகள் கரந்திருக்கலாம். அல்லது தீய பண்பே நற்பண்பாகப் புறத்தே தோன்றலாம். இதுபோலவே முனைப்பான தீய பண்புகளுக்கு அடியில் நல்ல பண்புகள் மறைந்துகிடக்கலாம். அல்லது நல்ல பண்பே தீய பண்பாகத் தோற்றந்தரலாம். அதாவது சமூக நற்பண்புகளுக் குள்ளே தனிமனிதக் குறைபாடுகளும் சமூகத் தீப்பண்புகளுக் கடியில் தனிமனித நற்பண்புகளும் இருந்து, சமூக வெற்றிக் கிடையே தனிமனிதத் தோல்வியையும் சமூகத் தோல்விக் கிடையே தனிமனித வெற்றியையும் உண்டுபண்ண இடமுண்டு. நல்லார் தீமைக்கு ஆளாகும்போது, தம் நற்பண்பு காரணமாகவே தீமையடைவதாக எண்ணி இன்னலிடையேயும் தற்பெருமையும் ஆறுதலும் கொள்வதுண்டு; உலகத்தில் தலைசிறந்த நற்பண்புடைய பெரியார் வாழ்வில் இதைக் காணலாம். ஆனால் இதுகூட நம் பொதுமெய்ம்மைக்கு மாறானதல்ல. இந்த நல்ல பெரியார்களின் நன்மையும் பெருமையும் சமூக நற்பண்புகள் மட்டுமே; தனிமனித நற்பண்புகள் அல்ல. அதனால்தான் அவை சமூகத்துக்கு வெற்றியும் அவர்களுக்குத் தோல்வியும் ஒருங்கே தந்தன. அவர்கள் அடையும் ஆறுதலின் தன்மையும் இதுவே. ஆனால் தீமையிடையே நல்லவர் அடையும் இந்த நல்ல ஆறுதல் உண்மையில் அதன் அடிப்படைத் தன்மையில் நன்மை, தீமை ஆகியவற்றில் தீயவர் அடையும் ஆறுதலிலிருந்து வேறுபட்டதன்று. தீயவர் நன்மையடையும்போது தீமையே நன்மை எனத் தருக்குவர். ஆனால் அந்நன்மை அவர்கள் சமூகத் தீமையில் சார்ந்திருக்கும் ஒருசில தனிமனித நற்பண்புக் கூறுகளின் தற்காலிகப் பயன்கள் மட்டுமே. தீமையடையும்போதோ, அவர்கள் உள்ளம், அடிக்கடி தீமையிடையே நல்லார் உள்ளம் பெறும் ஆறுதலைப் போன்ற ஆறுதலையே பெறுகிறது. தங்கள் சமூகத் தீமையைத் தனிமனித நன்மையாகக் கொண்டு, அவர்களும் தங்கள் நற்பண்புக்காகத் தாங்கள் துன்பமுறுவதாக எண்ணி ஆறுதலும், சில சமயம் தற்பெருமையும்கூடக் கொள்ளுகின்றனர். இவ்வுணர்ச்சியுடையவர்களையே உலகம் தீமையில் மரத்துப் போன மக்கள் என்றும் நிலையான தீமைப்பண்புடையவர் என்றும் கொள்கிறது. அகப்பண்புகளை விடுத்துப் புறப்பண்புகளை மட்டும் குறியாகக் கொண்டு நன்மை தீமைகளைப் பாகுபடுத்துவது தவறு என்று முன்பே காட்டியுள்ளோம். அதே சமயம் புறப்பொருளின் தொடர்பை அறவே விடுத்து அகப்பண்புகளை மட்டும் குறியாகக் கொண்டு நன்மை தீமைகளைப் பாகுபடுத்துவதும் முற்றிலும் சரியன்று. ஏனெனில் நிலத்தின் தன்மை நீரிலும், மரத்தின் தன்மை பழத்திலும், வித்தின் தன்மை பயிரிலும் உள்ளவாறு விளங்குவதுபோல, அகப்பண்பின் தன்மைகள் முழுவதும் புறச்சூழல்களினாலேயே விளக்கம் பெறும். நல்லார் பெரியார்களுக்கு ஏற்படும் இன்னல்கள் அவர்கள் நற்பண்புகளை இல்லாதனவாக்குபவையல்ல. ஆனால் அவை அந்நற்பண்புகளில் இருக்கும் குறைபாடுகளை அல்லது அவற்றுள் கரந்திருக்கும் அல்பண்புக் கூறுகளைக் கட்டாயம் காட்டுபவையேயாகும். எனவே தன்னாராய்வால் பொதுமனிதன் அடையும் நன்மையைப் போலவே நல்லார் பெரியாரும் நன்மையடையாமலிருக்க மாட்டார்கள். நிறை அகப்பண்பினால் சமூக நற்பண்பும் தனிமனித நற்பண்பும் முழுவதும் கைவரப்பெற்று, சமூகப் புகழுடன் தனிமனித நலமும் முற்றிலும் அடைவது முடியாத செயலன்று. அது அரும் பண்புதான், ஆனால் இல்பண்பு அன்று. அதனைச் செய்பவரே செயற்கரிய செய்யும் பெரியார் ஆவர். அவர்கள் பண்புடையவர்கள்; அதாவது சமூக நற்பண்புகள் உடையவர்கள். அத்துடன் அவர்கள் திறமையுடையவர்கள், அதாவது தனிமனித நற்பண்புக் கூறுகளும் உடையவர்கள். இன்னலடையும் நல்லவர்களுக்கு நேர்மாறான உள்ளமைப்புடையவர்கள் நலமடையும் தீயவர்கள். தனிமனித நற்பண்பு அல்லது திறமை அவர்களுக்கு உடனடி நலம் தருகிறது. அதில் அவர்கள் இறுமாந்து வாழ்கின்றனர். தற்காலிக நலன் என்பது சில சமயம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம். இதனால் அவர்கள் இறுமாப்பு செம்மாப்பாகிறது; தீமையே நன்மை என அவர்கள் தருக்கி விடுகிறார்கள். சமயங்கள் இத்திறத்தவரை அச்சுறுத்தவே மேலுலகம். பழிபாவம் என்ற கருத்துக்களைப் பரப்பியுள்ளன. ஆனால் தீயவர் பலர் இதனைப் பொருட்படுத்துவதில்லை. எனினும் மேலுலகம் உண்டோ இல்லையோ, இவ்வுலகத்திலேயே அவர்கள் தீமை சமூகத்தைப் பொதுவாகவும் அவர்களைச் சார்ந்த இனம், குடும்பம், நண்பர் ஆகிய அவர்கள் பற்று நலச்சூழல்களைச் சிறப்பாகவும், விரைவில் பாதிக்கிறது. நல்லவர் தீயவர் என்பதை மேலுலக வாழ்வில் காண முடியாதவர் அந்நல்லவர் தீயவர் பின்எச்சம் அதாவது பின் மரபுகளில் கட்டாயம் காணலாம். நன்மையடையும் தீயவர் அந்நன்மையால் மரமரப்பு அடைகின்றனர் என்றால், தீமையடையும் தீயவர் அத்தீமையால் அதைவிட மிகுதியாக மரமரப்பு அடையக் கூடும். இது தீ.மையடையும் நல்லார் அடைகின்ற ஆறுதல் அல்லது தன்னிறைவு போன்றதென்று மேலே காட்டினோம். தீமையடையும் நல்லவர் தாம் அழிந்தும் உலகைத் திருத்திவிடக்கூடும் என்றால், தீமையடையும் தீயாரும் இம்மனப்பான்மையை வளர்த்தபின், தம் தீமையைப் பன்மடங்கு பெருக்கிச் சமூகத்தின் மேல் ஏற்றிவிட்டுச் செல்லமுடியும். தீயவரை இந்த எல்லைக்குச் செல்லும்படி சமூகம் ஒருநாளும் விடக்கூடாது. எனினும் கடுந்தண்டனைகள் மூலம் சமூகம் இச்செயலையே செய்கிறது; ஏனென்றால், இத்தண்டனைகள் தண்டனையடைந்தவனைப் பாதிப்பதன்றி, அதைவிடப் பன்மடங்காகத் தண்டித்த சமூகத்தையே பாதிக்கிறது. கொலைஞனுக்குக் கொலைத் தண்டனை, பழிக்குப்பழி, பகைமைக்குப் பகைமை என்ற பழைய உலகநீதியின் கேடு இது. இன்றும் இந்நீதி உலகில் முற்றிலும் அகலவில்லை. உலகில் அழிவுற்ற நாகரிகங்களின் வரலாற்றை ஆராய்ந்தால், அவற்றின் அழிவுக்காரணங்களாகிய பண்புக் கூறுகளுள் இதுவும் ஒரு முக்கியமான கூறாயமைந்திருப்பது காணலாம். இப்பண்புகள் முனைப்பாகவிருக்கும் நாகரிகங்கள் இன்றும் அழிந்துவரும் நாகரிகங்களே என்னலாம். நம் உள்ளார்ந்த நற்பண்பின் பயனாகவேதான் இன்னல் அடைகிறோம் என்று ஒரு மனிதன் நம்புவதற்கு முன், அவன் தன் உள்ளமைப்பை நன்காராய்ந்து, அதன் தீய பண்புக் கூறுகளைத் துருவித்தேடி அகற்ற அரும்பாடுபட வேண்டும். தூய்மையற்ற எண்ணங்களின் தூசு, நோயுற்ற கருத்தின் ஒரு நுண்பொடி, கடுகளவேனும் சிறுத்த மனக்கசப்பு ஆகிய எதுவும் இல்லை என்ற உறுதி ஏற்பட்டபின்பே அம்மனப்பான்மை கொள்ளத் தகும். ஆனால் அப்போதும் அவன் சமூகப் பண்பின் உச்ச உயர்வை எண்ணித் தனிமனிதப் பண்புகளில் சிலவற்றைப் புறக்கணிப் பவனேயாக முடியும். ஆயினும் மனமாரத் தெரிந்து பொதுப் பண்புக்காகத் தனிப்பண்பை விட்டுக்கொடுப்பவனை நாம் தன்மறுப்பாளன் என்று போற்றுதல் தக்கதென்பதில் ஐயமில்லை. அவ்வுச்ச உயர் திறமுடையவனை மனிதன் என்பதைவிடத் தெய்வம் என்று கருதுவதே சால்பு. ஏனெனில் அது அத்தனை உயர்வும் அருமையும் உடையது. அந்நிலையை அடைந்து விட்டோம் என்று எவரும் எளிதாகக் கொள்ளுதல்மட்டும் அருமையினும் அருமையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் தகாதவரும் அங்ஙனம் எளிதில் ஆராயாமல் கருத்தில் கொண்டு தருக்க இடமேற்பட்டுவிடும். நல்ல எண்ணங்களும் கருத்துக்களும் நன்மையே பயக்கின்றன என்றும்; தீய எண்ணங்களும் கருத்துக்களும் தீமையே தருவன என்றும்; புறஉலக இயற்கையைப் போலவே, அகஉலக இயற்கை அல்லது ஒழுக்கமுறையும் மாறாச்சட்ட அமைதிக்கு உட்பட்டதென்றும் விளக்கமாகக் காட்டிவிட்டோம். வெளிஉலகில் இயற்கையின் சட்டங்களை உணர்பவன் இயற்கையை அடக்கியாண்டு வானிற் பறக்கவும், கடலில் மூழ்கிச் செல்லவும், அணுவைப் பிளக்கவும், தொலைபேச்செழுப்பவும் தொலைக்காட்சி காணவும் ஆற்றல் பெறுவதுபோல, (அக இயற்கையின் சட்டங்களை உணர்பவனும் மக்களால் செயற்கரிய காரியங்களை எளிதில் செய்பவன் ஆகிறான்.) இன்பதுன்பங்கள் யாவும் எய்துபவர் எண்ணிய வண்ண மேயன்றி வேறன்று. ஆனால் எண்ணுபவர் திண்ணிய எண்ணம் உடையவராயிருத்தல் வேண்டும். எல்லார் எண்ணங்களிலும் திண்ணிய கூறும் உண்டு. திட்பமற்ற கூறும் உண்டு. முந்திய கூறு இன்பத்தையும், பிந்திய கூறு துன்பத்தையும் தருகிறது. முன்னது நாடிய பயன் தருகிறது; பின்னது எச்சரிக்கை தருகிறது; ஆனால், சூழல்கள் பற்றியமட்டில், இரண்டு கூறுகளிலும் மிக முக்கியமானது பிந்தியதேயாகும். ஏனென்றால் அது புத்தறிவைத் தந்து இன்பநிறைவுக்கு வழி காட்டுகிறது. உள்ளத்தில் பண்புகளின் இணக்கமாகிய நல்லிசைக்கு அது வழிசெய்கிறது. புறச்சூழல்களை ஒருவன் அகப்பண்புகளால் மாற்றியமைக்க வேண்டுமென்று கூறும்போதும், அகத்தைப் புறத்தின் உடைமை யாளாக்க வேண்டுமென்று கூறும் போதும், நாம் உலகியல் முறையில் செல்வஉடைமைகளைக் குறிக்கவில்லை. எவ்வளவு செல்வமுடையவனாயினும் ஒருவன் அகப்பண்பின் செல்வன் ஆகமாட்டான். அது ஒரு தனிச்செல்வம். புறச்செல்வத்தில் பற்றுடையவன் அதற்கு அடிமைப்பட்டவனே யன்றி, அதன் இறைவன் ஆகான். புறச்செல்வத்தை ஆள்பவன் என்பவன் அதனிடம் பற்றுக்கொள்வதையோ, அதை அடைவதையோ, பெருக்குவதையோ விட அதைப் பயன்படுத்தி இயக்குவதையே பெரிதாக எண்ணுவான். ஏனெனில் எவ்வளவு குறைந்த செல்வம் ஒருவனுக்கு இருந்தாலும் அதை நன்கு பயன்படுத்தி, அதன் பற்றற்று வாழ்ந்தால், அத்தகையவன் உள்ளத்தில் அகப்பண்பு களின் இசை நிலவும். செல்வப்பற்றுடையவனாய், அதனை ஈட்டுவதிலும் பெருக்குவதிலும் ஈடுபட்டவன் உள்ளத்தில் இவ் அகஇசைக்கு மாறாக அகமுரண்பாடே மிகுதியாயிருக்கும். செல்வத்தில் தற்பற்றற்று அதன் பயன்நோக்கி அதனை ஈட்டி இயக்குபவன் உலக நோக்கில் மட்டுமன்றி அகநோக்கிலும் செல்வனாவான். அதேசமயம் தற்பற்றற்றவனிடம் வறுமைகூட அவனது அகச்செல்வமாகிய செவிலியை ஒரு சிறிதும் ஊறுபடுத்த முடியாது. உண்மையான செல்வம் அகச்செல்வம். அதுபோல உண்மையான வறுமை அகவறுமையே. இவ்வறுமையின் இருவகைகளையே அகச்செல்வமற்ற ஏழையும் செல்வரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஏழையின் அகவறுமை மிடிமை என்றும் செல்வரின் அகவறுமை மடிமை என்றும் உலகில் வழங்குகின்றன. இரண்டும் இயற்கைக்கு மாறான அகக் குழறுபடியின் விளைவுகள். மிடியன் புறவறுமையை வெறுத்தாலும் அதை நீக்கும் முயற்சிகளிலீடுபடாமல் அகவறுமையையும் விலைக்கு வாங்குகின்றான். செல்வத்தினிடம் அவன் கொள்ளும் மட்டிலாப் பற்றும் அங்கலாய்ப்பும் காரணமாக அவன் மனிதரையும் மனிதப்பண்புகளையும் வெறுக்கிறான். வெறுப்பு வெறுப்பை வளர்த்து, ஏளனத்தை உண்டு பண்ணுகிறது. மடியனோ தன்செல்வத்தின் உண்மைப் பயனறியாமல், சோம்பல் வாழ்விலும் மட்டற்ற இன்ப வாழ்விலும் அதை ஈடுபடுத்தித் தன்னை விலங்காக்கிக் கொள்கிறான். உடல்நலம், உளநலம் ஆகிய இரண்டும் அவனை விட்டகல்கின்றது. அவன் புறச்செல்வம் அவனைப் புதைக்கும் செல்வமாகவே அமைகிறது. (நல்வாழ்வை ஒழுங்குபடுத்தும் உள்அமைதிப் பண்பைக் கண்டபின்பே மனிதன் மனிதனாகிறான். அவ்வமைதிக்கேற்பத் தன் உள்ளத்தையும் வாழ்வையும் அமைத்துக் கொண்டபின், அவன் தன் வாழ்வின் குறைபாடுகளுக்காக எதையும் அல்லது எவரையும் குறைகூற வேண்டிய நிலை ஏற்படுவதில்லை.) தன்னை வளர்த்துத் தன் சூழலையும் வாழ்வையும் வளர்ப்பதுடன் நில்லாமல், அவன் பிறருக்கும் வளர்வதற்கான, சூழல்களை அமைத்து வழிகாட்டுகிறான். ஓருடலில் வளர்ந்து அதைக்கூட இயக்கமாட்டாது அதற்கு அடிமைப்படும் மாவிலங்குகளையும் மனித விலங்குகளையும் போலன்றி, அவன் தன்னுடலையும் பிற பல உடலங்களையும் உயிர்களையும் வாழ்வுகளையும் இயக்கி, இயற்கையின் செல்வனாகவும், உலகின் ஒரு சிறிய இறைவ னாகவும் இயங்குகின்றான். அவன் கருத்தும், வாழ்வும் இறைவன் எல்லையாகிய முழுநிறை செம்மையை நோக்கி என்றும் வளர்ச்சியுறுகின்றன. அமைதியே இயற்கையின் உயிர்: நேர்மை வாழ்வின் உயிர்நிலை. இரண்டும் சேர்ந்ததே உலகின் ஒழுங்கு. அகப்பண்புகள் இந்நேர்மையுடன் ஒத்து நின்றால். உயிர் வளர்ச்சிபெறும். அதனுடன் முரணினால், அழிவுநோக்கிச் சென்று அலமரும். அமைதி, ஒழுங்கு ஆகியவற்றின் முழுநிறை தொகுதியே கடவுள். அதற்கு வழிகாட்டும் நேர்மையைக் கடவுள் நெறி அல்லது சமயம். உள்ளப் பண்புகளும் அப்பண்புகளின் நல்லிசைவும் இவ்வழியில் உள்ளத்தை உய்க்கும் ஆற்றல்களே. உள்ளத்தின் கருத்துக்களை ஒருவன் பிறரிடமிருந்தும் மறைக்கலாம். தன்னிடமிருந்துங்கூட மறைக்கலாம். ஆனால் அது வாழ்வில் மறைந்திராது. அது கட்டாயம் செயலாக உருவாகித் தீரும். செயலிலிருந்தே ஒருவன் உள்ளத்தின் கருத்தமைதிகளை ஆராய்ந்து அதனை உலகின் ஒழுங்கினுடன் இணைக்க முடியும். புற உலகில் இயற்கை தன் அமைதியைத் தானே காக்கிறது. இயற்கையின் ஒரு பகுதி அவ்வியற்கை அமைதியை மீறினால், அடுத்த பகுதியிலும் அமைதி மீறப்படும். ஆனால் அக்குழப்பத் தால் மீண்டும் அமைதி ஏற்பட வழி பிறக்கிறது. எனவே இயற்கையில் நாம் “குழப்பம்” என்று கூறும் நிலைகள்கூடக் குலைந்த அமைதியின் சரியீடேயன்றி வேறல்ல. எனவே, மனிதன் அகப்பண்புகள் இயற்கையின் புறப்பண்பு களுக்கு ஒத்திராவிட்டாலும், இயற்கை அதிலும் ஒப்பீட்டைச் செய்தே தீரும். அகப் பண்புகளுக்கேற்ற புறப்பண்புகளை அது மாற்றியமைத்து, அகத்தின் மாறுதல் அல்லது வளர்ச்சிப் பண்பை அதாவது உயிர்ப்பண்பை நலிவிக்கும். இந்நிலை ஏற்பட்டால், அறிவுப் பண்புடையவர் புறச் சூழலமைதியறிந்து அதனை அகப்பண்புகளின்மூலம் இயக்க வேண்டும். உயிர்கள் யாவுமே இப்பண்புக்குரியவை. அறிவுடை உயிராகிய மனிதன் இங்ஙனம் மற்ற உயிர்களின் செயல்தாண்டி இயற்கையை இயக்க முடியும். தீய கருத்துக்கள் தீய பழக்கங்களையும் நற்கருத்துக்கள் நல்ல பழக்கங்களையும் படியவைக்கும். பேரூண், மயக்கக் குடி, மட்டிலின்ப நுகர்வு ஆகியவை முன்னைய வகை சார்ந்தவை. இவற்றால் உடல்நலிவு, நோய், இளமையில் முதுமை ஆகியவை வந்தெய்தும். மேலும் இவை மனிதன் பிறருடன் கொள்ள வேண்டிய அன்புப் பாச இணைப்பைக் கெடுத்து, வெறுப்புச் சூழலை உண்டுபண்ணும். இவற்றின் எதிரொலியாக அகத்தே அச்சம், ஐயம், கோழைமை, உறுதியின்மை, ஆகிய வேறு தீய கருத்துக்கள் ஏற்பட்டு, அவற்றின் பயனாக சூழல்களும் பெருகும். நற்கருத்துக்கள் இவற்றுக்கு நேர்மாறான இன்சொல், நயநாகரிகம், அன்பாதரவு ஆகிய செயல்களையும் சூழல்களையும் கருத்துக்களையும் வளர்க்கும். தீய கருத்துக்கள் பிறரிடமும் தீய கருத்துக்களைத் தூண்டிப் பகைமையை வளர்க்கும். அவற்றை ஒழித்தால் எங்கும் நட்பும், நட்புச் சூழலும் பெருகுவது காணலாம். ஏனெனில், ஊழ் என்பது அவன் சூழலின் சூழ் ஆற்றல். அதனை ஆக்குவது நன்மை தீமைப்பண்புகளுக்குரிய கருத்துக்களே. தன் கருத்தை இயக்குபவன் இதன் மூலம் தன் ஊழைத் தானே ஆக்கி ஊழை வென்றவன் ஆகிறான். தன் ஊழைத் தான் ஆக்குபவன் ஒருவகையில் தன் உலகத்தைத் தானே படைப்பவன் ஆகிறான். விரும்பிய நிலையே வரும் பிறி திலையே; பொருந்துறு சூழலின் பொறுட்பெதும் இலையே; வருந்துவர் சூழலை ஊழெனக் கொண்டவர்; திருந்திய பண்பினர் கொளார்அதன் விலையே! காலமும் இடமும், சூழலின் மடமும், மாலுற அடக்கி ஆண்டிடும், பண்பே! ஆலித் தரற்றும் ஊழதன் அடமும், காலுற மடக்கிக் கொளும்அதன் பணியே! மாளா உயிரின் தாளாம் உறுதி கேளாக் கொள்ளாப் பொருளிலை உலகில்; நாளால் எந்தத் திண்ணிய தடையையும் வாளால் என்னத் துளைத்திடும் அதுவே! மட்டிலா விரைவில் முட்டிடா தொழிக! கட்டிநெய் உருகக் காத்திடல் நலமே! கட்டளை வல்ல கருத்தெழுந் திடினே, தட்டற வானமும் தாளுற வருமே! 4. உளநலமும் உடல்நலமும் உடல் உள்ளத்தின் பணியாள்: உள்ளம் உடலின் பணியாளன்று. உள்ளம் கிளர்ந்தெழுந்து செயலாற்றும் போதும் சரி, தன்னியல்பாக இயங்கும்போதும் சரி, உடல் அதன் வழியேதான் நிற்கும். ஒழுங்கமைதி மீறிய எண்ண அலைகளுக் கிணங்கி உடல் நோவும் நலிவும் அடைகின்றது. ஒழுங்கமைதி வாய்ந்த கருத்துக்களே உடல்நலம், இனநலம், அழகுநலம் ஆகிய மூவகை நலங்களையும் உடலுக்கு அளிக்கின்றது. மற்ற எல்லாச் சூழல் நிகழ்வுகளையும்போலவே நோயும் உடல்நலமும் கருத்தில் கருக்கொண்ட நிகழ்வுகளே. நலிவுற்ற எண்ணங்கள், உணர்ச்சிகள், நோயுற்ற உடல்மூலமாகவே புறந்தோன்றுகின்றன. துப்பாக்கிக் குண்டுகள் ஒருவனைக் கொல்வதுபோலவே அச்ச எண்ணங்களும் மனிதனைக் கொல்வதைக் காணலாம். துப்பாக்கிக் குண்டுகள் எப்போதும் எல்லாமனிதரையும் கொல்வதில்லை. அச்சம் எப்போதும் எத்தனையோ பேரைப் படிப்படியாகக் கொன்றுகொண்டு வருகிறது. நோய் அச்சம் நோயைத் தருகிறது. அதை வளர்க்கிறது. கவலைகள் உடலைக் கரைக்கின்றன. இவை நோய்க்கு வாயில் திறந்து வைப்பதுடன், உடலில் குடியிருக்கவும் வளரவும் வகைசெய்து கொடுக்கின்றன. துப்புரவற்ற கருத்துக்களோ நரம்புமண்டலத்தைத் தாக்கி அதிர்ச்சியுறச் செய்து, அதன் மூலம் உடல்நிலை முழுவதையும் கெடுக்கிறது. உடல் புறத்தே கெட்டிமையுடையதாகத் தோற்றுகிறது. ஆனால் உண்மையில் அதனினும் நொய்ம்மையும், தொய்வும், களிமண் போன்ற குழைவும் உடைய இன்னொரு பொருளைக் காண முடியாது. ஏனெனில் அது கண்காணா எண்ண அலைகளின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் இசைந்து இழைந்து இயங்குகின்றது. மட்பாண்டங்கள் செய்பவன் கலையுள்ளத்தின் ஒவ்வோர் அசைவும் அவன் கையை இயக்கிக் களிமண்ணில் படிவதுபோல, உள்ளத்தின் ஒவ்வொரு கருத்தசைவும் நரம்பு களின் மூலமாக இயங்கி உடலை உருவாக்கி, உடற்பண்பு களை வளர்க்கின்றன. எனவேதான் நற்கருத்துக்கள், நல்லுணர்ச்சிகள் உடல் நலத்தையும், அல்கருத்துக்கள், அல்லுணர்ச்சிகள் உடல் நலிவையும் நோயையும் உடற்கோளாறுகளையும் உண்டுபண்ணு கின்றன. துப்புரவற்ற கருத்துக்கள் நெஞ்சத்திலிருந்து துப்புரவற்ற நீலநிறமான நச்சுக்குருதியை நரம்பு நாடிகளில் ஓட வைக்கிறது. தூய எண்ணங்கள் உடலில் துப்புரவான குருதியை ஓடவைத்து, உள்ளத்தையும் வாழ்வையும் ஒருங்கே வளர்க்கின்றன. வாழ்வின் ஊற்றாகிய எண்ணங்கள் தூயவையானால், வாழ்வு முழுவதுமே இங்ஙனம் தூய்மை அடைகின்றது. உள்ளக்கருத்தை மாற்றாத நோயாளி உணவு முறையை மாற்றியும் பயனில்லை. மருந்து உட்கொண்டும் பயனில்லை. அவை செயலாற்றமாட்டா. ஆனால் கருத்துக்கள் தூயன ஆக்கப்பட்டால், மருந்த தேவைப்படாது. உணவே மருந்தா யமையும். ஏனெனில் தூய கருத்துடையவன் துப்புரவற்ற உணவில் நாட்டமே செலுத்தமாட்டான். நல்லுணவு கொள்பவனுக்கு அதனின் வேறாக நன்மருந்து பிறிது எதுவும் வேண்டாம். நோயகற்றும் மருந்தும் உண்டு. நோய்வராமல் தடுக்கும் நன்மருந்தும், உடல்நலம் வளர்க்கும் மருந்தமுதும் உண்டு. நற்கருத்துக்கள் இத்தகைய நன்மருந்தாகவும், இயங்குகின்றன. ஏனெனில் அவற்றின் துப்புரவு துப்புரவான பழக்க வழக்கங்களை உண்டுபண்ணுகிறது. ஞானியருள் குளிப்பும் முழுக்கும் துறந்த ஞானியர் உண்டென்று கேள்விப்படுகிறோம். உண்மையில் இது ஞானியர் இலக்கணமேயல்ல. உள்ளந் தூய்மையாயிருப்பவன் புறத்தூய்மையை வெறுப்பவனாயிருக்கமாட்டான். அதேசமயம் அவன் புறஅழுக்கைக் கழுவுவதுடன் நில்லாமல், அக அழுக்கையும் தூய எண்ணங்களால் கழுவி, அகமும் புறமும் துப்புரவுடையவன் ஆகிறான். நோயணுக்கள் மட்டுமின்றி நோவணுக்களும் அவனை அணுகமாட்டா. நீ உன் உடலைப் பாதுகாக்க விரும்பினால், உன் உள்ளத்தைக் காத்துப்பேணு. உன் உடலைச் செம்மையுறச் செய்ய வேண்டினால், உன் உள்ளத்தை ஒளி திகழச் செய். வன்மம், அழுக்காறு, மனக்கசப்பு, சோர்வு ஆகியவை உள்ளத்தில் ஒளி மழுக்கி உடலின் நலத்தையும் செவ்வியையும் உருக்குலைக்கும். யாரிடமாவது நீ தூங்கிய அல்லது வீங்கிய அல்லது ஏங்கிய முகத்தைக் கண்டால், அது அம்முகத்தின் இயல்பு என்று ஒரு போதும் கருதிவிடாதே. அது தற்செயலாக நேர்ந்தது என்றும் எண்ணவேண்டாம். எண்ணத்தின் தூக்கம், வீக்கம், ஏக்கம் ஆகியவற்றாலேயே அந்நிலை ஏற்பட்டது என்று திட்டமாக உணரலாம். முகத்தில் சுரிப்பும் சுளிப்பும் கண்டால், அவை முதுமை அல்லது துன்பத்தின் சின்னங்கள் என்று கருதவேண்டா. அவை உண்மையில், மடமை, தன்னடக்கமின்மை, இறுமாப்பு ஆகியவற்றின் அடையாளங்கள் என்று அறிக. சிறுமிக்குரிய ஒளி திகழும் நன்முகம் உடைய தொண்ணூற் றாறு வயதுடைய மூதாட்டி ஒருவரை நான் அறிவேன். நடுத்தரவயது செல்லாமுன்பே நெரித்துச் சுரித்து அருவருக்கும் தோற்றமுடைய முகங்கொண்ட ஒருவரையும் அறிவேன். முன்னது எப்போதும் மகிழ்ச்சி குலாவும் இனிய பண்புக்குச் சான்று; பின்னது ஆரா ஆவல். தங்குதடையற்ற உணர்ச்சிக் கொம்மாளம் ஆகியவற்றின் பழிச்சின்னம். வாழும் மனையின் வாழ்வுநலம் பெருக்கவேண்டுமானால், அதன் வாயில்களும் பலகணிகளும் காலதர்களும் தங்குதடையற்ற காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்கும் வகை செய்வன வாயிருக்க வேண்டும். அதுபோலவே உயிர்வாழும் உறையுளாகிய உடல் நலமுடையதாயிருக்க வேண்டுமானால், அது மகிழ்ச்சியும் நல்லெண்ணமும் அமைதியும் தன்னூடாக உலவ விடத் தக்கதாயிருத்தல் இன்றியமையாதது. கருத்து எத்தனை இளமையுடையதாயிருந்தாலும் முதுமையின் கடுமூப்பு இதில் சுரிப்புக் கொண்டு வராமலா இருக்கும் என்று யாரேனும் வினவுதல் கூடும். ஆம். முதுமையின் மூப்பு எப்படியும் சுரிப்பைக் கொண்டுவரக்கூடும். ஆனால் தூய்மையான உறுதியான நல்லெண்ணம் கொண்டவரும், எல்லாரிடமும் பரந்த உள்ளன்பு கொண்டவரும் மூப்பிலடையும் சுரிப்புக்கும், மீச்செலவுணர்ச்சிகளால் காலங்கடந்துவரும் சுரிப்புக்கும் யாரே வேறுபாடறிய முடியாதவர்? முன்னது நல்லிலையின் பழுப்பையும் நற்கனியின் கனிவையும் முற்றிய பயிரின் மணத்தையும் போல இனிமை பயப்பது. அது இளமை நலத்துடன்கூடப் போட்டியிடத் தக்க முதுமை நலம். பின்னது காண்பவர்க்கு அதனையுடையவர் துன்பத்தினும் மிகுதி துன்பந்தருவது. நேர்மை, அன்பு, தூய்மை ஆகிய நற்பண்புகளின் தோழமை யுடன் வாழ்ந்தவரின் முதுமை இளமையிலும் காணமுடியாத மூதமைதியுடையது. அது படிஞாயிற்றின் மாலைச்செவ்வான வண்ணத்தின் பண்ணமைவுடையது. அண்மையில் ஒரு மெய்யறிவாளரின் இறுதி ஓய்வை நான் கண்ணுற நேர்ந்தது. அவர் வயதில்தான் முதுமை அடைந் திருந்தார். தோற்றத்திலன்று. அவர் மாள்வின் அமைதி நலம் வாழ்வின் அமைதி நலத்துடன் போட்டியிடுவதாயிருந்தது. முன்னதன் இனிமை பின்னதன் இனிமையிற் சற்றும் குறைபட வில்லை. பெரும்பாலும் சாவுக்காட்சியைக் காண்பவர் எவரும் தம் சாவை நினைத்து வருத்தத்தின் சாயல் அடையாமல் இருப்ப தில்லை. ஆனால் அப்பெரியார் மாள்வில் நான் அடைந்த உணர்ச்சி இதுவன்று. அது இதனின் வேறான பல உணர்ச்சி களின் கூட்டமைதியாயிருந்தது. அவர் மாள்வின் நலத்துக்கு முன் நான் என் வாழ்வு நலத்தை ஒப்பிட்டு வெட்கமடைந்தேன். என் வாழ்க்கைப் பண்பை உயர்த்தி அத்தகைய மாள்வுநலம் பெற வேண்டும் என்ற அவாவே என் மனதில் முனைப்பாயிருந்தது. அத்துடன் இத்தகைய பெரியார் வாழ்வுக்கும் மாள்வுக்கும் உரிய உலகம் பெருமையுடையது என்ற எண்ணமும், அத்தகைய உலகில் அவருடன் வாழ்ந்து அவர் வாழ்வு மாள்வுகண்டு பயன்பெறும் பேறும் எனக்குக் கிட்டின என்ற தன்னிறைவும் என்னிடம் நிலவின. உடலுரிமையால் வரும் இயற்கைத் துன்பங்களில் கூட உள உரிமையால் பெறத்தகும் நல்லுவகையுணர்ச்சியைப் போல நோவகற்றும் நன்மருத்துவனும் ஆறுதலளிக்கும் நல்ல நண்பனும் வேறு கிடையார். அவ்வுணர்ச்சியால் நோவுநொம்பலங்கள் சிதறடிக்கப்படுகின்றன. நோவு எண்ணங்கள் அகற்றப்படுகின்றன. துன்பத்தினும் கொடியன துன்பத்தின் சாயல்களான தீயுணர்ச்சிப் படலங்கள். ஏனெனில் அவை இயற்கைத் துன்பத்திலிருந்து செயற்கைத் துன்பங்களை வித்திட்டு வளர்ப்பவை. சில சமயம் இக்களைப்பயிர் தன்னைத்தானே பெருக்கி நிலையாகத் தழைத்து இன்பங்களையும் இன்பங்களுக்குக் காரணமான நல்லெண்ணங் களையும் நிலையாக ஒதுக்கித் தடுத்து வைத்துவிடும். இந்நிலையில் மனிதன் ஓர் அழுகை வேதாந்தியாகிறான். கண்டதிலெல்லாம் ஐயமும் வெறுப்பும், அச்சமும் அழுக்காறும், சினமும் வன்மமும் கொண்டு தன் வாழ்வைத் தானே மீளாப் பழிக்கூடம் ஆக்கிக் கொள்கிறான். துன்பத்தில் அமைதியும் உவகையும் துன்பந்தடுப்பதுடன் நில்லாமல், துன்பம் இங்ஙனம் படிந்து தோய்ந்து பெருக்கமுற்றுத் துன்பப் படலங்களாக வாழ்க்கை வானத்தை மறைக்காமல் காக்கின்றன. நீடித்த நல்லெண்ணமும் அன்பும் துன்பத்திரையை விலக்குவதுடன் அமையாது, இன்பப் பண்ணையின் வாயிலும் கடந்து பேரின்பக் கோயிலுக்கு இட்டுச் செல்லும். அவற்றை உடையவனை மட்டுமன்றி அது அவன் சூழ்நிலையையும் உயர்வு படுத்தி அவன் காற்சுவடு பட்ட இடத்தையும் பொன்னியல் புடைதாக்கும். 5. எண்ணமும் நோக்கமும் கருத்துச் செயலுருவாகி நிறைவெய்த வேண்டுமானால், அது கருத்தாக மட்டும் நின்றால் போதாது. கருத்துடன் நோக்கமும் இணைய வேண்டும். கருத்தையும் செயலையும் அறிவுடைக் கருத்தாகவும் அறிவுடைச் செயலாகவும் ஆக்குவது இந்நோக்கமே. மிகப் பெரும்பான்மையான மக்கள் நோக்கமில்லாக் கருத்துடையவர்கள். வாழ்க்கையென்னும் அகன்ற கடற்பரப்பில் இத்தகைய கருத்து. மீகாமனும் பாயும் இல்லாது நெறியற்று மிதந்து தத்தளிக்கும் மரக்கலம்போல அலைக்கழிவடையும். அது செயல்நிறைவு என்னும் கரையில் பயன் என்னும் துறைசென்று சேர்வதரிது. மேலும் நெறியில்லாது எல்லையில்காலம் மிதக்கும் மரக்கலத்துக்குக் கடலில் ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கு எல்லையிராது. அவற்றிலிருந்து விலக முயற்சி செய்யும் மீகாமனில்லாமல் அது அவற்றால் அழிவுறுதற்கே காத்திருக்க நேரும். நோக்கமற்ற கருத்தும் இதுபோல நெறி கெட்டலைவதால், இடையூறுகளின் மீதே குருட்டுத்தனமாகத் திரியும். இதனால் வாழ்வின் தோல்வி களுக்குரிய காரணங்களுள் மிக முக்கியமானது நோக்க மில்லாமையே. அதனினும் பெரிய குற்றம் எதுவும் கிடையாது. சிலரிடம் நோக்கங்கள் பலவாயிருக்கும். அவற்றை ஒழுங்குபடுத்தி ஆட்கொள்ளும் வாழ்க்கையின் தலை நோக்கம் இராது. மீகாமனில்லாது பாய்கள் மட்டும் உள்ள மரக்கலம்போல, அது வீசுகின்ற ஒவ்வொரு காற்றின் போக்கிலும் சென்று சீரழியும். நோக்கமில்லாத வாழ்வைவிட இவ்வாழ்வின் அலைக்கழிவு மிகப் பெரிது. மேலும் முன்னதைவிட அது பேரளவில் இடையூற்றுக்கு ஆளாக வேண்டியிருக்கும். ஒரு நோக்கத்தை இன்னொரு நோக்கம் தடுத்துக் கெடுப்பதால், அவர்கள் வாழ்வு முழுவதிலும் பற்பல சின்னஞ்சிறு நச்சுத்தடைகள், அச்சங்கள், பொருமல்கள், தொல்லைகள், ஆற்றாமைகள் ஏற்படும். இவையனைத்தும் தலை நோக்கமற்ற தன்மையின் பயன்கள் மட்டுமல்ல. உள்ள உரமற்ற நோய்மைக்கும் அவை சின்னங்களாகும். தலை நோக்கத்தின் ஆட்சியே நோக்கங்களுக்கு ஒழுங்கு தந்து உள்ளத்துக்கு உரம் உண்டுபண்ணும். தலைமை நோக்கம் இல்லாதவன் வாழ்வு உண்மையில் நோக்கமில்லாதவன் வாழ்வையோ, திட்டமிட்ட தீய நோக்கங்கள் உடையவன் வாழ்வையோ விடச் சிறப்புடையதன்று. தீய நோக்கங்கள் தீநெறி என்னும் திசையில் சென்று விரைந்து அழிவடையுமானால், தலை நோக்கமற்றவன் வாழ்வும் நோக்கமற்றவன் வாழ்வும் நெறியற்று அல்லது நெறிபிறழ்ந்து அலைக்கழிவுற்று, நீண்ட நாளைக்குப்பின் தீயநெறியிற் சென்றவர் அடையும் நிலையையே தானும் அடையும். முன்னது தரும் தோல்வி, துன்பம், பொருளிழப்பு ஆகியவற்றுடன் அது மேலும் அலைக்கழிவைத் தந்துவிடும். திட்டமற்ற நல்ல நோக்கங்கள் தரும் இத்தீமையை உன்னியே “நரகத்திற்குச் செல்லும்வழி நன்னோக்கங்களினாலேயே பாவப்பட்டிருக்கிறது” என்ற பழமொழி எழுந்துள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய ஒரு நேரிய நோக்கத்தைத் தெரிந்தெடுத்து அதைச் செயல் வெற்றியுடையதாக்க வாழ்நாள் முழுவதும் பாடுபட வேண்டும். அத்துடன் அவன் அந் நோக்கத்தையே தன் கருத்துக்கள் அனைத்திற்கும் நடுநாயகக் குறிக்கோளாக்க வேண்டும். இந்நோக்கம் ஆன்மிகத்துறை சார்ந்ததாயிருக்கலாம். அல்லது உலகியல் சார்ந்ததாயிருக்கலாம். இது நோக்கம் ஏற்படும் காலத்திலுள்ள அவன் இயல்பையும் பண்பையும் பொறுத்தது. ஆனால் நோக்கம் எத்துறை சார்ந்ததாயிருந்தாலும் அத்தனை கேடில்லை. அவன் அதனை நாடியே தன் கருத்தாற்றல்களை யெல்லாம் ஒருமுகப்படுத்தி, அதையே தன் கடமையாகக்கொண்டு, அதன் செயல் வெற்றியில் முனையவேண்டும். அதை நோக்கிச் செல்லும் நேர் பாட்டையிலிருந்து கிளைத்துச் செல்லும் வழிகள் எவ்வளவு கவர்ச்சியாய், மனத்துக்குகந்ததாய் இருந்தாலும், அவற்றில் தன் முயற்சிகளைச் சிதறடிக்கப்படாது. ஒருமுகப்பட்ட இம்முயற்சிமூலம் அவனுக்குத் தன்னடக்கம், நினைவாற்றல் ஆகியவை வளர்கின்றன. அத்துடன் முயற்சியில் ஏற்படும் தோல்விகள் ஒவ்வொன்றும் அவன் உள்ளார்ந்த நலிவுகளைச் சுட்டிக்காட்டி, வருமுயற்சிகளிலே அவனுக்கு உள்ள உரத்தையும் அளிக்கும். தன்னடக்கம், நினைவாற்றல், உள்ள உரம் ஆகிய இந்த மூன்று திறங்களின் முழுக்கூட்டே தற்பண்பு எனப்படுகிறது. அதைப் பெற்றுவிட்டால் மனிதன் வெற்றியடைந் தவன் ஆகிறான். அவன் செயல் வெற்றிக்கு இவை உதவும். ஆயினும் செயல்வெற்றி முக்கியமானதன்று. செயல் வெற்றிக்கு மதிப்பும் விலையும் தருவது பண்பே. மனிதன் புறப்பார்வையில் செயல் வெற்றி நோக்கமாகவும், பண்புவெற்றி கருவியாகவும்தான் தோற்றக் கூடும். ஆனால் அவற்றின் மெய்ப்பயன் உணர்ந்தோர் பார்வையில் செயல்வெற்றிதான் ஒரு கருவியாகிறது. பண்பு வெற்றியே வாழ்க்கைக்குரிய உண்மை வெற்றிக்கூறாய் அமைகிறது. ஏனென்றால் செயல்வெற்றி தற்காலிகமானது; செயல் முடிந்ததும் அதன் மதிப்புக்கு ஒரு முடிபு ஏற்பட்டுவிடுகிறது. தமக்கெனத் தம் உரிமையுடன் ஒரு நோக்கத்தைப் படைத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களே பெரியார்கள். அது முடியாதவர்கள் அல்லது முடியாதவிடத்தில், தத்தமக்கு ஏற்பட்டுள்ள அல்லது தரப்பட்டுள்ள கடமையையே நோக்கமாகக் கொள்ளுதல் பயனுடையது. கடமை எவ்வளவு சிறுதிறப்பட்டதாகக் காணப்பட்டாலும், அதனை வழுவின்றிப் பேணி உழைப்பதனால், நோக்கநாடி உழைப்பவன் அடையும் வெற்றியைக் கடமையாளனும் பெறுவது அரிதன்று. ஏனெனில் இங்கும் நோக்கத்தால் ஏற்படும் முயற்சியைப்போலவே, ஒருமுகப்பட்ட முயற்சி, தன்னடக்கம், உள்ளுறுதி ஆகியவை வளர இடமுண்டு. வலிமையுடைய உள்ளங்களெல்லாம் மிகப் பெரும் பான்மையாக வலிமை பெற்ற உள்ளங்களாகவே இருக்கும். ஏனெனில் ஆற்றவும் வலிமை குறைந்த, நலிந்த உள்ளமுடையவர் உள்ளங்கூட வலிமைத் தத்துவத்தை உணர்ந்தால் வலிமை பெறலாகும். அத்தத்துவமாவது: முயற்சியினாலும் நீடித்த இடைவிடாப் பயிற்சியினாலும் வலிமை பெறத்தக்கது என்பதே. இத்தத்துவத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு முயற்சிமீது முயற்சி, பொறுமையுடன் பொறுமை, வலிமைமீது வலிமை என அடுக்கிச் சென்றால், உடலும் உள்ளமும் உரம்பெறுவது உறுதி. அவ்வுரமே தெய்வப்பண்பின் அதாவது நிறை மனிதப் பண்பின் முதற்கூறு. நோக்கமின்மையையும் நலிவையும் புறங்கண்டு முன்னேறிச் செல்பவன் நோக்கமாகிய வானமுகட்டையும் வானவெளியையும் மறைத்துக்கொண்டிருக்கும் இருஞ் சிறைக்கூடங் கடந்து அகல்வெளியிலுலவும் உரம்பெற்றவர்களின் தோழமையில் வாழ்வுதொடங்குகிறான். சிறைக்கூடத்துக்கும் உள்ள உரமுடையவர் வாழும் இவ்வானுலகுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான். சிறைக்கூடத்தில் தோல்விகள் தோல்விக்குத் தான் வழிகாட்டும். அகலுலகில் தோல்விகள் வெற்றிக்குரிய படிகள் ஆய்விடும். அதுமட்டுமன்று. சிறைக்கூடத்தின் வெற்றிகள் தற்காலிக மின்னல் வெற்றிகள், அவை வெற்றிப் பயிரின் விதைகளாகமாட்டா. ஆனால், உரவோர் உலவும் அகலுலகின் வெற்றிகள் தம்மினும் மாபெரு வெற்றிகளுக்கான நூற்றுப் பண்ணைகள் ஆகின்றன. அவை தோல்விகளுடன் சேர்ந்து வெற்றிப்பயிர் வளர்க்கும். வெற்றி தோல்விகள் இரண்டுமே இங்ஙனம் உள்ளார்ந்த நலம் பயக்கின்றன. அத்துடன் உரமிக்க நல்லோர் வெற்றியையும் தோல்வியையும் பற்றிக் கவலைப் படாமல், ஆற்றலுடன் கருத்தாண்டு, அச்சமின்றிச் செயலாற்றி, தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் தம் நோக்கம் முற்று விக்கின்றனர். நோக்கத்தைக் குறிக்கோளாகக் கொள்பவன் அதனை நோக்கிச் செல்லும் பாதைகளில் நேர்பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டும். வேறு கிளைப்பாதைகளில் பிறழ்ந்து செல்லாமல், அதன் வழியாக நெடுக நேரே செல்ல வேண்டும். ஐயங்கள் அச்சங்கள் அவனிடம் தயக்கத்தை உண்டுபண்ணக் கூடாது. அவன் மனஉறுதியை அவை முறித்து நொறுக்கவோ, வளைத்து நெளிக்கவோ, முனைமுறித்து மழுக்கவோ இடந்தரக்கூடாது. ஏனெனில் நன்முயற்சியின் தோல்விகளைப் போல இத்தகு தோல்விகள் வெற்றிக்குப் படிகள் ஆகமாட்டா. அவை முயற்சியின் கால்கைகளையே முறித்து உயிரின் முன்னேற்றத்தை நிலையாகத் தடுக்க முனைபவை. உள்நின்ற உள்ளத்தின் வலிமையை இவை அரிப்பதனால், புதிதாக வலிமை வாய்ந்த கருத்துக்கள் எழுவதைக்கூட இவை தடைசெய்து விடுகின்றன. செயல்முனைப்பு செயல்நம்பிக்கையைப் பொறுத்தது. தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை முடியாதவற்றையும் முடியவைப்பவை ஆகும். ஐயமும் அச்சமும் தொடக்கத்திலேயே ஒருவன் முயற்சியைச் சூழ்ந்தால், அது பிறப்பிலேயே கொல்லப்பட்ட குழந்தை போன்ற தாய்விடும். கருவில் மாளும் குழவி தாயின் உடல் நலத்தையும் பெரிதும் கெடுப்பதுபோல, பிறப்பில் மாள்வுற்ற இக்கருத்துக்கள் கருத்துக்குரியவன் வாழ்விலும் சீரழிவு உண்டுபண்ணும். அவன் முயற்சிகள் ஒவ்வொன்றிலும் இதே போன்ற கருச்சிதைவுப் போக்கு வலுப்படும். தொடக்கத்திலேயே ஐயத்துக்கும் அச்சத்துக்கும் இடந்தராதவன் முயற்சியில் இடையே அவை புகுந்தாலும், அவை இவ்வளவு சீரழிவை உண்டுபண்ண மாட்டா. முதல் நம்பிக்கையார்வம் ஓரளவு இடையிடைப்பட்ட அவநம்பிக்கை, அச்சம் ஆகியவற்றை எதிர்த்து ஒழிக்கும் ஆற்றலுடையது. தொடக்கத்திலிருந்து ஐயமாகிய சுழல்காற்றும், அச்ச மாகிய வறட்சியும் தாக்காத வாழ்வுமரம் காலமறிந்து விதைத்த விதைபோலத் தழைத்து வளர்ச்சியுற்று இனிய விளைவுளம் நல்கும். ஐயமோ அச்சமோ தலையிட்ட வாழ்வுமரம் பயன்தர நேர்ந்தாலும் அது பிஞ்சில் பழுத்த கனியாகவோ, கனியாது உதிரும் வெம்பிய காயாகவோதான் இருக்கும். நினைவாற்றலும் நோக்க ஆற்றலும் சேர்ந்தே படைப் பாற்றல் ஆகிறது. இது உயிர்ப்பண்புடைய ஆற்றலாத லால், தாமே இயங்காத, ஒழுங்கு முறையற்ற, ஒன்றுடன் ஒன்று இணைந்து செயலாற்றாத எண்ணக் குவியல்களையும் எண்ண அலைப்படலங்களையும் அது இணைத்து ஒழுங்குபடுத்தும். அவற்றை இயங்க வைத்து, அது உயிர்த்துடிப்பும் ஒன்றுபட்ட செயலார்வமும் வளர்ச்சிப்பண்பும் உடைய உயிர்க்கோப்பு ஆக்கும். இப்படைப்பாற்றலை உடையவன் நிறை உலகைப் படைத்தளிக்கும் இறைவனின் பேரொளிப் பிழம்பின் ஒரு சிறு நுண் அணுக்கதிராய், தன்னைச் சுற்றியுள்ள சிற்றலுலகுக்கு ஓர் உள்ளுயிராய் நின்று அதனைப் படைத்தளித்து இயக்குகின்றான். அவன் கற்பனை அவனை மீறிச் செல்லாது. அவன் உள்ளம் அவன் கற்பனையை மீறிச் செல்லாது. அவன் செயல்கள் அவன் உள்ளத்தைக் கடந்து செல்லாது, உலகச் சூழல்கள் அவன் செயல்மீறி நிகழமாட்டா. அவன் இத்தனையையும் கடந்து உள்நின்றியக்கும் கடவுளாற்றல் கூறாக இயங்குவான்! அவனாட, உலகாடும்! 6. செயல் வெற்றி மனிதன் வெற்றிகள் யாவும், அவன் தோல்விகள் யாவும், அவன் கருத்தின் கருவில் பிறப்பனவே; அக்கருவின் முதிர்ச்சியாக, அவற்றின் பயன் விளைவாக அவை இயங்குவனவே. ஒழுங்கமைதி யுடைய உலகில் ஒழுங்கமைதி கெடுக்கும் எல்லாப் பொருள்களும் அழிவுறுவது உறுதி. இது உலக ஒழுங்கமைதியின் நெறிமுறை. எல்லையற்ற உலகின் ஒழுங்கமைதிக்கு இயற்கையாற்றல் அல்லது கடவுள் பொறுப்பு வகிப்பதுபோல, மனித எல்லையிலுள்ள உலகின் ஒழுங்கமைதிக்குத் தனி மனிதனே பொறுப்புள்ளவனாக வேண்டும். அவன் சூழலிலும் சூழலுக்கும் அவனுக்கும் இடையே உள்ள தொடர்பிலும் அவனாக ஒழுங்கமைதி வகுக்கத் தவறினால், சூழலை இயக்கும் ஆற்றலாகிய அவன் உயிர்ப்பண்பை அவன் இழக்கிறான். இயற்கையே நேரடியாக அவன் சூழலின் ஒழுங்கமைதியை ஏற்று, அவனுடைய இயக்குமாற்றலாகிய உயிர்ப்பண்பை ஒழிக்கிறது. இயற்கையின் அழிக்குமாற்றல் இங்ஙனம் தன் அழிவாற்றலாகாமல் தனிமனிதன் தடுக்கவேண்டு மானால், அவன்தன் உயிராற்றலை, அதாவது இயக்கு மாற்றலை யும் படைக்குமாற்றலையும் பயன்படுத்தி, இயற்கையின் இயக்கு மாற்றலிலும் ஒழுங்கமைதியிலும் தனக்குரிய பொறுப்பையும் பங்கையும் சரிவர ஏற்க வேண்டும். மனித ஆற்றலுக்கும் இயற்கை ஆற்றல் அல்லது கடவுட் பேராற்றலுக்கும் உள்ள வேற்றுமை ஒன்று தான். இயற்கைக்குப் படைத்தல், இயக்குதல், அழித்தல் ஆகிய மூன்று திறங்கள் உண்டு. மனிதனுக்குப் படைத்தல், இயக்குதல் ஆகிய இரு திறங்கள்தான் உண்டு. அழிக்கும் திறம் கிடையாது; அழியும் திறன் மட்டும் உண்டு. ஆனால் இது இயற்கையின் அழித்தல் திறத்தின் மறுகூறு மட்டுமே. இதைத் தடுக்க வேண்டுமானால், இயக்கும் திறனையும் அதன் மூலம் படைக்கும் திறனையும் அவன் வளர்க்கலாம். இதை அவன் செய்யும் வரை அவன் இயற்கையின் பேரண்டத்தில் ஒரு சிற்றண்டமாய், இயற்கை நின்றியங்கும் பேரம்பலத்தில் ஒரு சிற்றம்பலமாய்* இயங்க முடியும். பேரம்பலத்தில் என்றும் நின்றியங்கும் பேருயிர் போலச் சிற்றம்பலத்தில் சிற்றுயிர் தற்காலிகமாக இயங்க வேண்டும். அத்துடன் சிற்றுயிர் அப்பேருயிரின் ஆற்றலின் கூறாதலால், தானும் தொடர்ந்தியங்க முயன்று, தன் தோல்விகளினின்று வெற்றியடையவும், தன் மாள்வினினின்று அல்லது முதிர்வாழ்வினின்று மற்றும் புதிய இன உயிர்களைத் தோற்றுவிக்கவும் ஆற்றல் பெற்றுப் படைப்பாற்றலிலும் காக்கும் ஆற்றலிலும் பங்கு கொள்கிறான். ஒரு மனிதன் வலிவும் நலிவும், தூய்மையும் நோய்மையும், பெருமையும் சிறுமையும் அவனையே பொறுத்தவை; வேறு எவரையும், பொறுத்தவையல்ல. அவனாலேயே ஆக்கப் பெறுபவை; வேறு எவராலும் ஆக்கப் பெறுபவை அல்ல. அவன் ஒருவனால் மட்டுமே அவை மாற்றியமைக்கத் தக்கவை; வேறு எவராலும் மாற்றியமைக்கத்தக்கவை அல்ல. ஆகவே, ஒவ்வொரு மனிதன் சூழலுலகும் அவனவன் தனி உலகே. செடியினத்தின் வளர்ச்சி தளர்ச்சி புறவளர்ச்சி தளர்ச்சியிராமல், உள்வளர்ச்சி தளர்ச்சியாயிருப்பதுபோல. அவன் வளர்ச்சி தளர்ச்சிகள், வாழ்வு தாழ்வுகள் யாவும் அவனுள்ளிருந்து வெளிப்படும் அகப்பண்பு களேயன்றி, புறத்தேயிருந்து வளரும் புறப்பண்புகளல்ல. இந்நிலையில் புறச்சூழல்களைப் பற்றியவரை மனிதருள் எவரும் ஒருவருக்கு ஒருவர் உதவுவது என்பது முடியாதகாரியம். ‘தன் கையே தனக்கு உதவி’ என்கிற பழமொழி இவ்வகையில் புதுப்பொருளுடையது. ஒருவர் மற்றொருவர்க்குச் செய்யத்தகும் உதவியாவதெல்லாம், அகப்பண்பு உதவி மட்டுமே என்பது தெளிவாகும். ஒருவருக்கு ஒருவர் பொருள் தந்துதவுவது, இடர்காப்பது, மகிழ்வூட்டுவது என்பதெல்லாம் மேலீடாகப் பார்ப்பவருக்குப் புற உதவி அல்லது புறச்சூழலை மாற்றி யமைப்பது என்று தோற்றக் கூடும். ஆனால், உண்மையில் இது புறச்சூழலை மாற்றுவதன் மூலம் அகப்பண்பை மாற்றுவதாகவே முடியும். பெரும்பாலும் புறத்தே நின்று செய்யப்படும் இவ்வுதவி அகப்பண்பறிவுடன் அதாவது மெய்யறிவுடன் செய்யப்படாத விடத்தில், நற்பயன் தரும் உதவியாயிருக்கமாட்டாது. பயன் கேடுடையதாகவே இருக்கும். இது எவ்வாறெனில், ஒருவனுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் அவன் பணம் சுட்டும் பண்பு நலிகிறது; இடர் காப்பதன் மூலம் இடரைத்தடுக்கும் அவனது ஆற்றல் நலிகிறது. மகிழ்வூட்டுவதன் மூலம் துன்ப எதிர்ப்பாற்றல் குறைகிறது. புற உதவி இங்ஙனம் எதிர்பார்ப்பதற்கு மாறாக இயங்குகிறது. ஏனெனில் இச்செயலுதவிகள் சூழல்களை மாற்றுவதாக அமைவனவே யன்றிச் சூழல்களை மாற்றியமைக்கும் ஆற்றலைத் தருபவை ஆகவில்லை. உண்மையாக ஒருவன் மற்றொருவனுக்குச் செய்யும் நட்புதவி அவன் அகப்பண்பறிந்து அதன் நலிவுகளை அகற்றத்தக்க சூழ்நிலைகளையும் அவனியல்புக் கேற்ற சூழலையும் உண்டுபண்ணுவதேயாகும். நல்ல பண்புகளை வளர்க்கும்படி ஒருவனுக்கு அவன் நண்பர்கள் உதவலாம். நண்பர்கள் போலவே நல்ல நூல்கள், நல்லார் வாழ்க்கை வரலாறுகள், நல்ல அகப்பண்புக் கூறுகளுக் கேற்ற சூழல்கள் அல்லது தீய அகப்பண்புக் கூறுகளுக்கு மாறுபட்ட சூழல்கள் ஆகியவை உதவக்கூடும். ஆனால் இத்தகைய தறுவாய்களிலும் வளர்ச்சிக்குரியவனிடம் தன்னார்வம், தன்முயற்சி, தன்னடக்கம் ஆகிய பண்புகள் இருந்தாலன்றிப் பயன் ஏற்பட மாட்டாது. தீமைக்குத் தீயவர் ஒருவரையோ சிலரையோ காரணமாகக் காட்டும் பண்பு உலகில் இருந்து வருகிறது. அடிமைத் தனத்துக்குக் காரணமாக அடிமை முதலாளியை அடிமைகள் காட்டுவர். பொதுத் தீமைகளுக்குக் காரணமாகக் கொடுங்கோன்மையைக் குடிமக்கள் காட்டுவர். ஆனால் இக்குற்றச்சாட்டை மிக எளிதில் எதிர்க் குற்றச்சாட்டாக்க முடியும். ஆக்கப்படுவதையும் காண்கிறோம்; அடிமைகளின் அடிமைத் தன்மையைச் சுட்டிக் காட்டி அதுவே தன் அடக்குமுறைக்குரிய காரணம் என்று அடிமை முதலாளிகள் கூறலாம். கூறுகின்றனர்; குடிமக்கள் கோளாறுகளைக் காட்டி கொடுங்கோன்மையை இன்றியமை யாததாகும் மூலகாரணம் என்று கொடுங்கோலாட்சியாளர் கூறலாம், கூறுகின்றனர்; இரு குற்றச்சாட்டுகளும் ஓரளவு உண்மையே; ஆனால் முற்றிலும் உண்மையல்ல. இருகையும் தட்டினாலன்றி ஓசை ஏற்படாது. அதுபோல, இத்தீமைகளுக்கு இரு சாராரிடையேயும் உள்ள வெவ்வேறு வகைப்பட்ட மடமையே காரணம் என்றல் தவறாகாது. இரு சாராரும் தங்கள் தற்கால நலன், அல்லது தற்காலப் பாதுகாப்பை எண்ணி, உயர்அறிவு இல்லாத காரணத்தால் தங்கள் நிலையான பொதுநலனைக் கெடுத்துக் கொள்கின்றனர் என்று காண்பது அரிதன்று. அடிமைகளின் அடிமைத்தனத்துக்குக் காரணம் அடிமை களிடம் உள்ளத்தின் உரமில்லாமையும், அவர்களை ஆள்பவ னிடம் ஆற்றலிருந்தும் அதைப் பயன்படுத்தும் அறிவில் லாமையுமே ஆகும். அடிமைகள் பக்கம் சார்ந்து அவர்கள் மீது பரிவு காட்டுபவர் நல்லவராயிருக்கலாம். ஆனால், அவர் அறிவுடையவர் ஆகமாட்டார். இருவர்மீதும் பரிவுகாட்டி இருவர் தீமைகளுக்கும் காரணமான அறியாமை நீக்குபவரே தீயவர் யார் என்று நாடாமல் தீமை எது என்று கண்டு அகற்றும் அறிவுடை நல்லோர் ஆவர். அவர்களே பெரியார் என்னும் பெயருக்குரிய சான்றோர். உலகியல் சார்ந்த செய்திகளில்கூட மனிதன் தன் கீழ்த்தர இன்பநாட்டங்களை அடக்காமல் வெற்றிகாண முடியாது என்பதை எல்லாரும் அறிவார்கள். ஏனென்றால் இன்பங்களில் ஒரு இன்பத்தை நோக்கமாகக் கொள்ளாதவன் இன்பங்களை ஆள்வதற்கு மாறாக அவற்றுக்கு அடிமைப்படுகிறான். இன்பத்தை நோக்கமாகக் கொண்டு செயலாற்றுபவன் போக்கு அலை எழுப்பிக் குறித்த இன்பம் நோக்கி நீந்துபவன் போக்குக்கு ஒப்பாகும். இன்பத்தைக்கூட நோக்கமாகக்கொள்ளாதவன் போக்கு அலைகளில் தன்செயலற்று மிதக்கும் கட்டையின் போக்கையே ஒக்கும். இன்பங்களிலேயே ஓரின்ப நோக்கமும், அவ்வின்ப நோக்கத்திற்கு ஏற்பப் பிற இன்பங்கள் வகையில் தன்னடக்கமும், தன்மறுப்பும் கொள்வது வெற்றிக்கு இன்றியமையாதது. ஆனால் இன்பத்தை ஆள விரும்புபவன் இன்பநோக்குடையவனைவிட ஒருபடி முன்சென்றவனாயிருக்கவேண்டும். பேருலகில் தான் ஓர் உறுப்பு என்பதை அவன் காணவேண்டும். அதாவது அவன் நோக்கம் உலக நோக்கில் ஒரு பகுதியாய், அவன் நாடும் இன்பமும் நலமும் உலக இன்பம், உலக நலம் ஆகியவற்றின் ஒரு பகுதியாய் இருத்தல் சிறப்பு. அது தன்னைக் கடந்த உலக நலமாயிருந்தால், அது இன்னும் கடந்த சிறப்புடையது ஆகும். அத்தகையோர் தோல்வியடைந்தால் கூட, அது அவர்கள் தனிப்பட்ட தோல்வியாக மட்டுமே இருக்கும். உலகத்துக்கு அத்தோல்விகளே பெருவெற்றிகளாயமையும். ஆனால் அவர்கள் வெற்றிகளும் அவர்கள் தனி வெற்றிகளாகமட்டும் இருக்கமாட்டா உலகத்துக்கும் அவை பெருவெற்றிகள் ஆகும். இதுமட்டுமன்று. அவர்கள் உலகுக்காக வாழ்பவராதலால், அவர்கள் தனி வெற்றியும் உலக வெற்றியாகவே முடியும். இம்முறையில் சான்றோர் வெற்றி உலகுக்குப் பன்மடங்கு பெருக்கமும் வளமும் உடைய நிறை வெற்றியாகும். உலக நோக்குடன் ஒருவன் தன்நோக்கையும் கருத்தையும் உயர்த்துவதனாலேயே, தனி ஒரு மனிதன் உயர்வு பெற, அதே சமயம் பலரும் உயர்வுற்று, அவன் உயர்வைப் பலர் பாராட்டும் நிறைவெற்றி நாடி அவன் செல்ல முடியும். இவ்வெற்றி அடைய அவனுக்குத் தன் சூழலால் விளையும் சிற்றவாக்களை மறுக்கும் தன்மறுப்பு மட்டுமின்றி, தன் தனிநலம் மறுத்த தன்மறுப்பும் தேவைப்படும். தன்னடக்கம், தன்மறுப்பு ஆகிய இவ்விரண் டாலும் மனிதன் நொய்மைகள், அடிமைப் பண்புகள், அவலத் தன்மைகள் ஆகிய யாவும் அகலும். இதனால் அவன் தோல்விகள் கூடப் பிறர் வெற்றியைவிட உயர்வுடையவை ஆகும். அவன் குற்றங் குறைவுகள் கூடப் பிறர் குணச்சிறப்புக்களை மங்கவைக்கத் தக்கவையாகும். தன் இன்பநாட்டத்தையும் தன் நலத்தையும் ஒருவன் அறவே விட்டொழித்தால்தான் பொதுநல நோக்கு ஏற்படும் என்று கொள்வது தகாது. ஏனென்றால் பொதுநலத்துள் தன்னலமும் ஒரு உறுப்பே. தன்னலத்திலும் இன்பநாட்டம் ஒரு பகுதியே. அவன் அடக்க வேண்டியது, மறுத்தொழிக்க வேண்டியது பொதுநலத்துக்கு மாறான தன்னலத்தையும் தன்னலத்துக்கு மாறான இன்ப நாட்டத்தையும், பெருநலத்துக்கு மாறான சிறு நலனையும் தீங்குக்கு விதையான போலி நலங்களையும் மட்டுமே. அதாவது அவன் பேணும் தன்னலத்தில் பொதுநலக்கூறான உண்மையான தன்னலம் இருக்க வேண்டும். அதற்கு மாறான தற்பற்று அல்லது தனிநலம் இருக்கக்கூடாது. தீமைகள் என வகுக்கக்கூடிய இன்ப துன்பப் பண்புகள் பல. அவை அனைத்தும் அறியாமையின் பயனாக இக்குறுகிய தற்பற்றின் விதையிலிருந்து தோன்றிய களைகளே என்னலாம். இன்பங்களுக்கு அடிமையானவன் தெளிவான சிந்தனை யுடையவனாயிருக்க முடியாது. அவன் எதிலும் திட்டமமைத்து முன்னேற முடியாது. அவன் இன்பங்களை ஆய்ந்தறியாதது போலவே, துன்பங்கள், தோல்விகள் ஆகியவற்றின் படிப்பினைகளையும் பயன்படுத்த மாட்டான். தன்னடக்கத்தால் தன்னை இயக்கப்பழகாததால் அவன் துன்பங்களில் மிதந்து பெருந்துன்பங்களில் சென்று விழுவான். இன்பங்களில் மிதந்து, இன்ப துன்ப வேறுபாடறியாமல் துன்பங்களை அணைப்பான். ஓரளவு தன் இன்ப மறுப்பு இருந்தாலல்லாமல், மனிதன் இன்ப துன்ப வேறுபாடுகளையோ, அவற்றின் காரண காரியத் தொடர்புகளையோ உணர்ந்து செயல்வெற்றி அடைய முடியாது. செயல் வெற்றியைவிட முக்கியமான பண்பு வெற்றியை அவன் கனவு காணவும் முடியாது. பொறுப்புடைய வாழ்வு என்ற கப்பல் அறிவுப் பண்பாகிய சுக்கானில்லாமல், பொறுப்பற்ற வாழ்வாகிய சூறாவளியால் தாக்கப்பட்டு ஓயாது உழலும். தன்மறுப்பின் அளவே ஒருவன் வெற்றியின் அளவு, அவன் தகுதியின் அளவு. அறிவு நிறைவுடைய தன் மறுப்பையே நாம் பண்பு என்கிறோம். அது அவனை வளர்ப்பதுடன் சமூகத்தையும் வளர்த்து, இரண்டின் வளத்தையும் நலத்தையும் ஒருங்கிணைக்கும் கூறாக இயல்கின்றது. ஆகவே தன்மறுப்பு என்பது தன்னை அழிக்கும் அழிவுக்கூறு அன்று; அது தன்னைச் சமூக வாழ்வுடன் இணைத்து இரண்டையும் ஒன்றுபட வளர்க்கும் ஆக்கக் கூறு. தன்மறுப்புப் பண்பு பெருகுந்தோறும் தன்னம்பிக்கை பெருகுகிறது; உள்ளம் உரமடைகிறது; கருத்து உயர்வு பெறுகிறது. பேரவா, வஞ்சகம், குறும்பு ஆகியவற்றுக்கு இயற்கை இடந்தருவதாகவே மேலீடாகப் பார்ப்பவருக்குத் தோற்றக்கூடும். உண்மையில் இயற்கையின் அமைதியே நல்லார் அமைதியாத லால், இயற்கை அவர்களுக்கே இறுதியில் இடந்தந்து உதவுவது உறுதி. எல்லா உலக ஊழிகளிலேயும் எல்லாப் பெரியார்களும் இதனைப் பலபட வலியுறுத்தியுள்ளார்கள். நல்லறிவு, நல்லழகு, நல்வாய்மை ஆகிய இயற்கையின் உள்ளார்ந்த நற்பண்புகள் நோக்கிச் செலுத்தப்படும் கருத்துக்களே மனித நாகரிகத்தில் அம்முத்திறச் செல்வங்களையும் வளர்த் துள்ளன. முயல்வோர் உள்ளங்களில் இம்முத்திறக் கூறுகளில் எதன் முழுநிறைபடிவமும் என்றும் தெளிவாக உருவானது கிடையாது. ஆகவே எது அறிவு முயற்சி, எது கலை அல்லது அழகு முயற்சி, எது வாய்மை அல்லது ஒழுக்கத்துறை முயற்சி என்று செயல்வேளையில் கூறமுடியாது. ஆயினும் அம்முத்திசை நோக்கிய முயற்சிகளே அறிவுநூல், அழகுக்கலை, ஒழுக்கப் பண்பு ஆகியவை. அவை அவ்வத்துறைப்பண்புகளின் முழுநிறை படிவங்கள் நோக்கி வளர்ந்துவருகின்றன. நிலையான செயல்கள் யாவும் இம்முத்திசை நோக்கியவையே ஆகும். இம்மூன்றும் இறுதி எல்லையில் ஒன்றுதானா. மூன்றா என்பதைக்கூட இன்றைய மனித நாகரிகத்தின் அறிவுநிலையில் நுனித்துணர முடியுமேயன்றி வரையறுத்துக் கூறமுடியாது. மூன்றும் ஒன்றை ஒன்று தழுவியவை என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்.* ஆன்மிக வெற்றி என்பது மேற்கூறிய மூவகை வெற்றி களையும் கடந்தது. அது அம்மூன்றின் ஒருமைப்பாடுணர்ந்து அவற்றை ஒரே திசையில் நாடுவது. இதில் கருத்துச் செலுத்து வோர் அறிவும் பண்பும் தூய்மையும் ஒருங்கேகொண்ட கருத்தினராய், அக்கருத்துத் தூண்டும் வழி உள்ளத்தின் பண்புகள் யாவற்றையும் செலுத்திச் செயலாற்றுபவர் ஆவர். செயல் வெற்றி எத்தகையதாயினும் அது முயற்சியின் தலைமீது அணியப்பெற்ற அணிமுடி. அணிமுடியின் மீதுள்ள மணிக்கற்களாகக் கருத்து இயங்குகிறது. இன்ப நாட்டம், தளர்ச்சி, துப்புரவின்மை, பொய்ம்மை ஆகியவை இவற்றைக் கீழ்நோக்கி இழுக்கும் நில ஆற்றல்கள். தன்னடக்கம், உறுதி, தூய்மை, நேர்மை, கருத்தாற்றல் ஆகியவை அதைக் கீழ்நோக்கி விழாது தடுத்து நிறுத்தி உயர்த்தும் பண்புகள். ஆன்மிக வெற்றி கண்டவன் பெரும்பாலும் கீழ் நோக்குவதில்லை. ஆயினும் வளர்ச்சிப்பண்பு செயலாற்றாத இடத்தில் தளர்ச்சிப்பண்புகள் தலைகாட்டத் தொடங்கும். உள்ளார்ந்த, முற்றிலும் தடமழிக்கப்படாத தீமையின் தூசுகள் இப்போது நிறைமதியின் கறை மறுகளாக வளர்ந்து அதை ஒளி மழுங்கச் செய்யும். ஆகவே ஆன்மிக வெற்றியடைந்தவர்கள்கூட அதனைப் பாதுகாக்கும் முறையில் எப்போதும் அவ்வெற்றிச் சக்கரத்தைச் சுழற்றிக்கொண்டேதான் இருந்து தீரவேண்டும்.* முயற்சி என்பது உண்மையில் உயர்ச்சியே. ஆனால் அந்த உயர்ச்சி குறிக்கோளின் தன்மையையும் உள்ளத்தின் பண்பு களையும் அப்பண்புகளை இயக்கும் தன்னடக்கக் கூறினையும் பொறுத்தது. எனினும் வெற்றியின் எல்லைமட்டுந்தான் முயற்சியைப் பொறுத்தது. அதன் தன்மை குறிக்கோளையும், அதன் அளவு உள்ளப் பண்பையும் தன்னடக்கக் கூறினையும் பொறுத்தது ஆகும். * பேரம்பலத்தின் எதிர்ப்பதமாகிய சிற்றம்பலமே பிற்கால வடமொழியாகிய சம்ஸ்கிருதத்தில் சிதம்பரம் என மருவியுள்ளது என்று காணலாம். இதுபோலப் பேருயிரின் எதிர்ப்பதமாகிய சிற்றுயிரே சத்தின் எதிர்ப்பதமாகிய ‘சித்’தாக நிலவுகின்றது. பேருயிர் இங்கே இறைவனல்ல; இறைவனின் சத்தும் சத்தியம் ஆக இயங்கி நெறிஅகல் பெருவெளியாகக் குறிக்கொள்ளப் படுகிறது என்று காணலாம். வைணவ நெறி பேருயிரை இறைவன் நுண்ணுடலாகவும் உலகை இறைவன் பருவுடலாகவும் கொள்வதும் காண்க. * அழகு, வாய்மை, நேர்மை ஆகிய நிலப்பண்புகள் ஒரு பண்பின் முக்கூறுகளே என்னலாம். அழகே வாய்மை, வாய்மையே அழகு என்று பாடினார் ஆங்கிலக் கவிஞர், கீட்ஸ். * அழகு, வாய்மை, நேர்மை ஆகிய முக்குணங்கள் சார்ந்த நிறைவெற்றி ஒருபுறமும் அவை கடந்த ஆன்மிக வெற்றி மறுபுறமும் கிட்டத்தட்டப் பழந்தமிழர் கொண்ட சார்பு வெற்றி (ஜீவன் முக்தி). சார்பிலா வெற்றி (விதேகமுத்தி) ஆகியவற்றை நினைவூட்டுபவை ஆகும். 7. கனவார்வங்களும் கருத்தார்வங்களும் கனவாளர்களே உலகின் காப்பாளர்கள். கண்கண்ட புறஉலகுக்குக் கண்காணா அகஉலகே ஆதாரமாயிருப்பதுபோல, செயல்துறையில் தன்னலச் சூழலில் உழன்று பழி சூழ்ந்து தேர்ந்து பயிலும் உலகவாழ்வு, அதனினின்று அகலவிலகித் தனித்துநின்று கனவு காண்பவர்களின் புனைவாற்றலொளியினாலேயே புரக்கப் பெறுகிறது. மனித இனம் இக்கனவாளர்களை மறக்க முடியாது. அவர்கள் புனைகருத்துக்களின் படிவங்களும் மனித உலகில் மங்கி மறுகக்கூடாது. உலகம் வாழ்வதும் வளர்வதும் அவற்றிலேயே! அவற்றை என்றேனும் ஒருநாள் பகலொளியாகக் காண்போம் என்ற நம்பிக்கையாலேயே - புறவாய்மையின் போலித் தோற்றம் கடந்த அவற்றின் அக வாய்மை மெய்ம்மைகளை எய்தப்பெறுவோம் என்ற இன்னார்வத்தாலேயே - உலகம் உயர்பண்பு பெற்று இயங்குகிறது. இசைவாணர், சிற்பிகள், ஓவியக்கலைஞர், கவிஞர், அறிவர், முனிவர் - வருங்கால உலகை ஆக்குபவர்களும் வான உலகெனும் கனவுலகைக் கண்டு அதற்கு உருவும் மெய்ம்மையும் அளிப்பவர்களும் இப்பலதரப்பட்ட கனவாளர்களே. அவர்கள் உலகில் வாழ்வதனாலேயே உலகம் பொலிவெய்துகின்றது. அவர்களில்லாவிட்டால், உலகம் இயற்கையின் மாயும் புறப்பகுதியுடன் புறப்பகுதியாய், மாய இயக்கம் இயங்கும் ஒரு மாய உலகமாகவே அமையும்; மாயா உலகமாக மலராது. கவினுடைக்கனவொளியை அகக்கண்ணாற் காண்பவன், உள்ளத்தில் உயர் கருத்துப் படிவங்களுக்கு இடமளித்துப் பேணுபவன் ஆவான். அவன் ஒருநாள் அதனை மெய்ம்மையாகச் செயலுலகிற் கொண்டுவந்து தருதல் உறுதி. புதியதோர் உலகைக் காண கனாக்கண்டான் கொலம்பஸ்; புத்துலகக் கனா புத்துலகாக அவன் புறக்கண்முன்னும் மலர்ந்தது! கொப்பர்னிகஸ் பல்லுலகளாவிய பேரண்டத்தை அகத்தே கண்டான். அது உலகின் புற அறிவின்முன்னும் அவனாலேயே புலப்படுத்தப் பட்டது. கறையற்ற நிறையழகும் களங்கமற்ற முழு அமைதியும் வாய்ந்த ஓர் அகஉலகைப் புனைந்துருவாக்கிக் காட்டினார் புத்தர் பெருமான்; அல்லற்படும் மனிதர் பின்தொடர, அதில் அவர் நுழைந்தார்! கனவாளர் கனவுகள் கனவாற்றலற்றவர்க்கு நனவில் எப்போதும் வழிகாட்டத் தவறவில்லை. கனவொளியால் நனவுலகை அவர்கள் ஒளியுலகாக்கி யுள்ளனர், ஆக்கி வருகின்றனர். கனவார்வம் வளர்க்க; கருத்தார்வம் பேணுக. கருத்தகத்தே அடங்கி இசைக்கும் இசையை - மனத்தில் ஒளிக்கரங்க ளியக்காது ஒளியூட்டும் அழகொளியை - தூய கருத்துக்களின் சூழொளி வட்டமான மாயா ஓயிலை-அகச்செவிப்புலனாகக் கேட்டும், அகக்கண்ணால் கண்டும், அகத்தின் மெய்ம்மையூடு பரவப்பெற்று மகிழ்ந்தும், வாழ்வின் நிறையின்பம் நுகர்க. இவற்றிலிருந்தே நிலையான இன்பச் சூழல்கள், வானுலக வளிமண்டலங்கள் எழுகின்றன. இவற்றினிடம் உண்மையாயிருக்கப் பயிற்சி பெற்றவன் வானகத் தந்தையின் உரிமைபெற்ற செல்வனாய், அத்தந்தை படைத்த உலகத்தில் தானும் தனக்கென ஓர் உலகு படைத்தளிப்பவனாக இயங்குவான். மெய்யறிவுடையவர்களுக்கு அவாவுவதென்பது பெறுவதே! அவாஆர்வமுறுவதென்பது செயல்முற்றுவிப்பதே. மெய்யறிவர் பின்பற்றும் முறைகளைப் புல்லறிவுடைய கயவர் பின்பற்றினால்கூட, அவர்கள் புல்லறிவு நாடியநோக்கம் நிறைவேறப் பெறுமென்றால், அதே சட்ட அமைதியால் மெய்யறிவர் பெறும் வெற்றியின் தன்மை இது எனக் கூறவும் வேண்டுமா? ‘வேண்டுவ வேண்டின் வேண்டிவேட்டுப் பெறுவீர்’ என்ற மறையுரை *நிறையுரை என்பதில் ஐயமில்லை. கருத்துலகின் உச்ச உயர் கனவுகளே ஆர்க. கனவின் உயர்வே கருத்தை உயர்த்தி நனவுலகையும் செம்மைப்படுத்த உதவும். தொலை வருங்காலத்தில் உன் வாழ்வின் தொலை எதிர்நோக்குப் படம், உன்கனவு; அதுவே உன் குறிக்கோள்; நீ வருங்காலத்தில் காணும் புறக்காட்சியின் அகச்சின்னம் அதுவே. உலகத்தின் மாபெரிய நீள்செயல்கள் யாவுமே தொடக்கத்தில் கனவாய்த்தான் இருந்தன. - கனவின் கருவிலேயே சிலநாள் தங்கியிருந்து விளைவுற்றன. வானகத்தே கிளையளாவி நிலத் தகத்தே ஆழ்ந்து வேரூன்றி வளரும் ஆலமரம், தொடக்கத்தில் மண்ணகத்தே சிறு மீன் சினையளவான ஆலவிதையினுள்ளேயே இருந்தது. அதுபோல கனவில் தங்கியிருந்த ஆற்றல் நனவில் முதிர்ந்து பின் வளர்ச்சி பெறுகிறது. எனவே கனவுகள் மாயப் போலித் தோற்றங்களோ, செயல் தொடர்பற்ற மின்மினிகளோ அல்ல. அவை மெய்ம்மையின் வித்துக்கள், வெற்றியின் கருவூலங்கள், மனித நாகரிகத்தின் ஆக்கத்துறைப் போர்க்கருவிகள்! உன் சூழல்வளி தொடக்கத்தில் உனக்குச் சாதகமற்றதாக இருக்கலாம். ஆனால் நீ ஒரு குறிக்கோள் வழிநின்று கனவுகாண முனைந்தால், அது உனக்கெதிராக நீடித்து நிற்கமாட்டாது. அகத்தே கனவில் உலவும் நீ புறத்தே சும்மா கைகட்டிக் கொண்டிருக்கப் போவதில்லை. முனைந்து செயலாற்றுவது உறுதி. நீ வறுமை, கடுஉழைப்பு ஆகியவற்றால் கடுந்துயருழக்கும் தொழிலாளியாயிருக்கலாம். உடல் நலத்துக்கு ஒவ்வாத ஆலைக்கிடங்கில் கிடந்து ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் அவதியுறுபவனாயிருக்கலாம். கல்விப் பயிற்சியின் நலனுக்கோ, கலைப்பண்பின் நலத்துக்கோ, உன் வாழ்வில் வாய்ப்பில்லாது போகலாம். ஆனால் நீ மட்டும் ஒரு நல்வாழ்வுக் கனவை இவ்வெதிர் சூழ்நிலைகளிடையேயும் சுமந்துலவினால், அறிவு, பண்பு நயம், அழகு நயம் ஆகியவற்றின் அவாக்களை உன் உள்ளக்கருவில் அடக்கிக்கொண்டு செயலாற்றினால், அக்கனவுகளும் அவாக்களுமே உன்னை உள்நின்று இயக்கி, உன் வாழ்வை நீயறியாமலே மாற்றிவிடும். அக்கனவுகள் உன் சிறு வருவாயின் ஒரு சிறுபகுதியை உன் வருங்கால வாழ்வின் செல்வத்துக்குரிய விதையாக்கிவிடும். உன் கடு உழைப்பிடையே நீ அரிதிற்பெறும் ஓய்வின் ஒரு சிறு பகுதியை அவை அப்பயிர் வளர்வதற்கான நீராகவும் உரமாகவும் மாற்றியமைத்துவிடும். கனவுகளால் ஏற்பட்ட இப்புறச்சூழல் மாறுபாடு பின்னும் கனவை ஒருபுறமும் அதன் வாயிலாகச் சூழலை மற்றொருபுறமும் மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால், உன் கனவுகள் உன் வாழ்வின், உலகவாழ்வின் எல்லைக்கோட்டில் நின்று மிளிரத் தொடங்குகின்றன. சிறு குடிலிலிருந்துகொண்டே உன் உள்ளம் அகன்ற வானவெளியில் உலவுகிறது! கந்தலாடையால் தன்னைப் போர்த்திக்கொண்டே நீ வானவில்லின் வண்ணங்களில் எண்ணங்களை இழைப்பாய்! இந்நிலையில் வறுமையும் சோர்வும் உன்னை வாட்டமறுத்துவிடும். கடுஉழைப்பு எளிய உழைப்பு ஆகிறது. அதனிடையே உன் சிந்தனை ஊர்தி சேணுற ஓங்கி முகில்களிடையே தவழ்ந்து செல்கிறது. உழைப்பு இன்பகரமாய், அதன் சிறுபயன் திரள்பயனாய் பெருகுகிறது. உழைப்புக்கிடமான ஆலையின் பட்டடையுள் இந்நிலையில் நீ நெடுநாள் அடங்கி யிருக்கமாட்டாய்! உன் பண்பாட்டுக் கொவ்வாத அப்புறச்சூழல் இற்றுப்போன சட்டையாய் கழன்றுவிடும். உள்நின்று வளரும் பாம்பின் புத்துடல்போல் புது வளர்ச்சி, புதுச்சூழல் உன்னை வந்து அடையும் பட்டடைத் தொழிலாளியாகிய நீ பாரில் கலைத்தொழிலாளனாக மாறுவாய். உன் கனவுகள் எப்போதும் முற்றிலும் பொன் வண்ணக் கனவுகளாயிராமற் போகலாம். அதன் பொன்னுடன் மாசு கலந்திருக்கலாம். ஆனால் அதன் பொன்னும் மாசும் உன் சூழல்களில் ஏற்படுத்தும் மாற்றத்திலும் நீ அதைப் பொன் வண்ணத்தையும் மாசுவண்ணத்தையும் தெளிவாகக் காணலாம். அக்கலவைக் கூறுகளறிந்து நீ உன் கனவுகளைத் தூய்மை யாக்கலாம், கனவின் உயர்வு தாழ்வுகளுக்கேற்ப உன் வாழ்வும் உயரவும் தாழவும் செய்யும். சிற்றவாக்களுக்கு நீ இடங்கொடுத் தால் அவற்றின் சிறுமைக்குள் நீயும் உன் வாழ்வும் சிறைப்பட நேரிடும். பாரிய அவாக்களுக்கு இடமளித்தால் அவற்றின் பாரிய அகலத்தில் உன்வாழ்வு பரந்துலவும். அகப்பண்பின் மாறுதல் புறப்பண்பை எங்ஙனம் எதிர்பாரா வகையில் மாற்றக்கூடும் என்பதைக் கிர்க்கம் டேவிஸ் என்ற பெரியார் சுட்டிக்காட்டுகிறார். “கணக்கெழுதும் ஒருவனுக்குக் கணக்கேடும் அலுவலக அறை வாயிலுமே நிலையான உலக எல்லையாகத் தோன்றுவது இயல்பு. ஆனால் ஒருநாள் குறிப்பிட்ட கணக்கன் அவ்வாயில் கடந்ததும் அவனுக்குப் பொதுமக்களின் ஒரு பெரிய கூட்டம் வரவேற்பளிக்கக் காத்திருந்தது. கணக்கன் தொழிலுக்கு மட்டுமன்றி அத்தகுதிக்கும் சின்னமான எழுதுகோல் இன்னும் அவன் காதைவிட்டு அகல வில்லை. அதை எடுக்காமலேயே அவன் மக்களிடையே செல்கிறான். அவர்கள் நடுவில் சென்று அவன் தன் கனவார் வங்களை அவர்கள்முன் கொட்டுகிறான். கூட்டல் கழித்தல் பயின்ற நாக்குக்கு எங்கிருந்தோ சொல்லாற்றலும் கலையாற்றலும் வந்துவிடுகிறது. கனவாற்றல் நாவையும் உள்ளத்தையும் முன்னமே பயிற்று வித்திருந்தது. “நாட்டுப்புறத்தில் ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் நாட்டுப்புற ஆடையிலேயே நகரத்துக்குச் செல்கின்றான். நகர்க் காட்சி களிடையே எப்படியோ ஒரு கலைக்கூடம் மட்டும் அவன் கல்லா உள்ளத்தைக் கவர்ந்துவிடுகிறது. கலை ஆசானும் என்ன கண்டோ, கருதியோ அவனை ஏற்றுக்கொள்கிறான். ஒருசில நாட்களுக்குள் ஆசிரியர் அவனிடம் அன்புடனும் நன்மதிப் புடனும் ‘அன்பனே, உனக்கு இனி கலைத்துறையில் நான் கற்றுத் தர வேண்டியது எதுவுமில்லை. நீ இப்போது தானே ஓர் ஆசானாய் விட்டாய். வாழ்க உன் கலை.” என்கிறான். ஆசான் முதியவனாய் விட்டதால் ஆசான் கலைக்கூடத்தில் அவனே ஆசானாகிறான். பழைய ஆசான் புகழு க்குப் புதிய ஆசான் புகழ் புது விளக்கமும் புது ஆற்றலும் தருகிறது.” இங்ஙனம் ஆடு மேய்க்கும்போது கண்ட கனவார்வமே அவனை நகருக்கு இழுத்துத் தன் புறஉள்ளத்துக்கும் கூடத் தெரியாத வகையில் அவன் அக்கனவை மெய்யாக்கிற்று. பொருளை உணரமாட்டாது பொருளின் நிழலைப் பொருளாகக் கொள்ளும் அறிவிலிகள் உண்டு. அறிவும் ஆராய்ச்சியும் முயற்சியும் அற்ற இத்தகைய பேடியர்களே செல்வரின் செல்வங் கண்டு குருட்டுயோகம் என்றும் தற்செயல் நிகழ்ச்சி என்றும் கூறுவர். அறிவு மேம்பாடுற்றவரைக் கண்டு ‘ஆ, செல்வாக்கின் பயன் இது’ என்று கூறுபவரும் இத்தகையரே. ஏனெனில் அந்தச் செல்வத்தையும் அந்த அறிவையும் பெற்றவர் அவற்றுக்காக என்னென்ன பாடுபட்டனர். எவ்வளவு கடுஉழைப்புச் செய்தனர் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். இடர்களை எதிர்த்துப் போராட அவர்கள் செய்த தன் மறுப்பு, விட்டுக்கொடுப்பு, தன்னடக்கம் ஆகியவற்றை இத்தகையோர் உணர்தல் இன்னும் அரிது. இவை இரண்டையும்விட அவர்கள் அறிவுப்புலனுக்கு அப்பாற்பட்டவை ஆக்கச் செயல்கள், அறிவாளர் வெற்றிகளுக்கு மூலகாரணமான அவர் கனவார்வங்கள். வெற்றி என்னும் இன்ப இலக்கைக் கண்டு அழுக்காறுகொண்டு அதைக் குருட்டுயோகம். தற்செயல் நிகழ்ச்சி என்பவர் அதனைச் சென்றடைவதற்குரிய நீடித்த பயணத்தின் கடுந்தொல்லைகளைக் கவனிப்பதில்லை. பிறரிடம் அவர்கள் கற்பிக்கும் குருட்டுயோகம் அவர்கள் அறியாமையின் நிழலேயாகும். முயற்சியின்றி அதன் பயனாகிய திரு. அதாவது செல்வமும் திறமைகளும் பண்புகளும் கைவரமாட்டா. வரம் பெற்றவர், தெய்வ அருள் திறம் பெற்றவர் என ஒருவரைக் கருதுவதும் இதே அறியாமடமையின் மற்றொரு கூறேயாகும். தெய்வ அருள்திறம் என்பது புறத்தேயிருந்து புறத்தெய்வம் எதுவும் அருளிய திறம் அன்று. கனவார்வம், இலக்கு ஆகிய தெய்வீக ஆற்றல்கள் உள்நின்று அருளிய திறங்கள் மட்டுமே. கட்டடத்தின் அடிப்படை நிலத்தின் கீழுள்ளது. செடியின் வாழ்வின் அடிப்படை ஆதாரம் நிலத்தின் கீழுள்ளது. அதுபோல மனித வாழ்வின் ஆதாரமும் புறப்பொருள் எதிலும் இல்லை. அகத்தேயுள்ள அழகொளியில், நெஞ்சத்தின் ஆழ்ந்த குறிக்கோளிலேயே அதனைக் காணலாம். * இது விவிலிய நூலுரை. இத்துடன் “எழுமின், விழுமின், விரும்பிய நலங்களைப் பெற்று வாழுமின்” (உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்ய வரான் நிபோததி என்னும் கடோரிபரிடத உரையையும் “எண்ணியார் எண்ணியாங் கெய்துப, எண்ணியார் - திண்ணியராகப் பெறின்” என்ற தமிழ்ப் பொய்யா மொழி உரையும் ஒப்பிட்டுக் காண்க. 8. அமைதி மெய்யறிவின் மணிமகுடத்தில் உள்ள தலைசிறந்த மணி மனஅமைதியே. மணியின் செறிவுப்பண்பு இயற்கையின் கருவில் அது கீழே இருந்து முதிர்ந்ததன் பயன். அப்பண்பு போதாமல் மனிதனும் தன் முயற்சியை அதில் ஈடுபடுத்தி அதனைப் பட்டையிட்டு ஒளிப்பண்பு பெருக்கியிருக்கிறான். மணியைப் போலவே மனஅமைதியும் நீடித்த பயிற்சியின் சின்னமாகவே அமைந்துள்ளது. நாட்பட்ட செயலறிவு, கருத்துக்களின் செயலமைதி பற்றிய தீர்க்க அறிவு ஆகியவற்றின் நிறைவிளை வாகவே மனஅமைதி உருவாகியுள்ளது. ஒருவன் தன்னைத்தான் உணர்ந்தபின், அவன் கருத்தின் உருவாகவே அவன் தற்பண்பு அமைகிறது. இதைக் கண்டபின்தான் மனிதன் மனஅமைதி உடையவன் ஆகிறான். ஏனெனில் தன்னையும் தன்இயல்பையும் கொண்டுதான் அவன் பிறரையும் அவர்கள் இயல்புகளையும் உணர்ந்து செயலாற்ற முடியும். தன் செயல்களைப் போலவே, பிறர் செயல்களும் அவர்கள் கருத்துக்களையும் பண்புகளையும் சார்ந்தவை என்று அறியுந்தோறும் அவன் யார் மீதும் எதற்காகவும் எரிந்து விழவோ, புகைந்தழலவோ மாட்டான். தன்னடக்கமும் பொறுமையும்காட்டி அவர்களிடமும் அவன் அதே பண்புகளை உண்டுபண்ணுவான். அமைதி காட்டாமல் சீற்றங்காட்டி யிருந்தால் அவர்களிடமும் சீற்றமே வளர்ந்திருக்கும். ஆனால் சீற்றம் சீற்றத்தை வளர்ப்பதுபோல் அமைதி. பொறுமை, தன்னடக்கம் ஆகிய பண்புகள் அதே பண்புகளை வளர்க்கும். அமைதியான மனிதன் தன்னை அடக்கக் கற்றுக் கொண்டது போலவே, பிறருக்கிசைய நடக்கவும். அதன் மூலம் பிறரை இயக்கவும் வல்லவனாகிறான். இது பிறரிடம் அவன் மதிப்பையும் நேசத்தையும் பெருக்குகிறது. இங்ஙனம் அமைதி வளருந்தோறும் வெற்றியும் செல்வாக்கும் மிகுதியாகிறது. நன்மை செய்வதற்கான ஆற்றல் வளர்ச்சிபெறுகிறது. மனிதரின் வெற்றிக்கு அவர்கள் பெரும்பாலும் புற உணர்ச்சிகளை அடக்குவதே காரணம் என்பதை எல்லாரும் அறிவர். அக உணர்ச்சிகளையும் அடக்கியவன் இன்னும் பெருவெற்றியடை வான் என்பதில் ஐயமில்லை. தன்னடக்கம், அமைதி ஆகியவற்றை உடையவனுடனேயே எவ்வகைப்பட்ட மக்களும் பழக விரும்புவர்; எளிதாகப் பழகுவர். அப்பாத்துரையம் - 24 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) மொழிபெயர்ப்பு  பிறமொழி இலக்கிய விருந்து - 2 ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 24 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+312= 328 விலை : 410/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 328  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் 1. அறக்கோட்டம் ... 2 மூல ஆசிரியரைப் பற்றி ... 4 அறக்கோட்டம் ... 5 2. கடல் மறவர் ... 60 மூல ஆசிரியரைப் பற்றி ... 62 கடல் மறவர் ... 63 3. கல் மனிதன் ... 110 மூல ஆசிரியரைப் பற்றி ... 112 கல் மனிதன் ... 114 4. கைக்கடிகாரம் ... 153 மூல ஆசிரியரைப் பற்றி ... 155 1. கைக்கடிகாரம் ... 156 2. மாயக்கணவன் ... 178 3.மெல்லியலாள் ... 197 5. துன்பக்கேணி ... 209 மூல ஆசிரியரைப் பற்றி ... 211 1. படகுகள் பிரிந்தன ... 212 2. துன்பம் தொடர்ந்தது ... 226 3. காதல் வென்றது! ... 240 6. எண்ணிய வண்ணமே ... 260 1. கருத்தும் தற்பண்பும் ... 262 2. சூழ்நிலைகளை வெல்லல் ... 266 3. எண்ணங்களின் ஆற்றல் ... 275 4. உளநலமும் உடல்நலமும் ... 283 5. எண்ணமும் நோக்கமும் ... 288 6. செயல் வெற்றி ... 294 7. கனவார்வங்களும் கருத்தார்வங்களும் ... 302 8. அமைதி ... 308