பிறமொழி இலக்கிய விருந்து-1 இந்நூல் 2003இல் சாரதா மாணிக்கம் பதிப்பகம், சென்னை - 43. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. மாமனார் வீடு இந்த நூலைப் பற்றி ஆங்கில அறிஞர் ஆலிவர் கோல்டுஸ்மித் தீட்டிய இரு நாடகங்களுள் இதுவும் ஒன்று. இந்நூல் ஆங்கிலத்தில் புகழ்பெற்ற ‘ளுhந ளுவடிடியீள கூடி உடிnளூரநச’ என்ற நாடகத்தின் தமிழாக்கமேயாகும். ஆங்கில நாடக மரபுப்படி, பொதுவாக நாடகங்களை இன்பியல் நாடகமென்றும் துன்பியல் நாடகமென்றும் இரு பிரிவாகப் பிரிப்பார்கள். அவற்றுள் இந்நாடகம் இன்பியல் பகுதியைச் சேர்ந்தது. அக்காலத்தில் இன்பியல் நாடகமென்றால் கோமாளிக் கூத்துக்கள்தாம் மிகுதியாக இருக்கும். அதற்கு முற்றிலும் மாறாகச் சமுதாயத்தை ஒட்டிய குடும்ப நாடகமாக இது அமைந்திருக்கிறது முற்றும் கற்பனை நாடகமாயிராமல், வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் ஒரு காலக் கண்ணாடி யாக இது விளங்குகிறது. இத்தகைய நாடகங்களை முதன்முதல் மேடைக்குக் கொண்டுவந்த பெருமை ஷெரிடன், கோல்டுஸ்மித் ஆகிய இருவரையுமே சாரும். ‘விக்கார் ஆப் வேக்பீல்டு’ (ஏiஉயச டிக றுயமநகநைடன) தலை சிறந்த குடும்பப் புனைகதை, ‘மாமனார் வீடு’ ஒப்பற்ற நாடகம் இரண்டும் இலக்கியத் தராசில் ஒரே நிறைபெறுவன இரண்டிலும் ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்புகள் நிறைய இடம்பெற்றுள்ளன என்று சொல்லலாம். கலை கலைக்காக மட்டுமல்ல, வாழ்க்கையின் நிலையையும் படம் பிடித்துக் காட்ட வேண்டுமென்பதே இந் நூலாசிரியரின் நோக்கம். சிறந்த இக்குறிக்கோள் தமிழ் நாட்டவருக்குப் புதிதல்ல. புராணகாலக் கற்பனை களை விட நிகழ்காலத்தை ஊடுருவிப் பார்க்கும் சமுதாயச் சிற்பங்களையே, நாடக ஓவியங்களையே மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். எனவே ‘விருந்து’ இரண்டாம் புத்தகமாக இந் நகைச்சுவை நாடகம் வருகிறது. ஆங்கில மொழி வழக்கிற்கும் தமிழ் உரைநடை வழக்கிற்கும் அதிக வேறுபாடு காண முடியாதவாறு முதல் நூலின் சுருக்கம் இங்கே தரப் பட்டிருக்கிறது. உலக இலக்கியச் செல்வங்களுள் ஒன்றாக மதிக்கப்படும் ஆலிவர் கோல்டு ஸ்மித்தின் கைவண்ணமான ‘மாமனார் வீடு’ தமிழகத்திற்கும் இனிய விருந்தாக அமையு மென்று நம்புகிறோம். அறிமுகம் சார்ல்ஸ் மார்லோ : மணமகன். திருத்தகை சார்ல்ஸ் மார்லே : சார்ல்ஸ்மார்லோவின் தந்தை. ஹேஸ்டிங்ஸ் : சார்ல்ஸ் மார்லோவின் நண்பர் திரு ரிச்சர்டு ஹார்ட்காசில் : திருத்தகை சார்ல்ஸ் மார்லோவின் நண்பர். டானி லம்ப்கின் : திருமதி ஹார்ட்காசிலின் தமக்கை புதல்வன். ரோஜர்ஸ், டிக்கரி : திரு.ஹார்ட் காசில் பணியாட்கள் செல்விகேட் (காதரின் ஹார்ட் காசில்) : மணமகள். திரு. ஹார்ட்காசியின் புதல்வி. திருமதி ஹார்ட்காசில் : கேட்டின் தாய் செல்வி கான் ஸ்டன்ஸ் நெவில் : திருமதி. ஹார்ட் காசிலின் அண்ணன் மகள்; ஹேஸ்டிங்ஸின் காதலி. பணிப்பெண் : மற்றும் பலர். மாமனார் வீடு முதலாம் காட்சி களம் 1. (திரு. ஹார்ட்காசில், திருமதி ஹார்ட் காசில், இருவரும் தங்கள் பழமையான நாட்டுப்புற மனையில் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். நேரம்; முற்பகல்.) திருமதி ஹா: ஆண்டுக்கு ஒரு தடவையாவது லண்டன் பட்டணம் போய் இன்பமாகப் பொழுது போக்காதவர்கள் இந்த வட்டாரத்திலேயே வேறு யாரும் இருக்க மாட்டார்கள். லண்டன் நாகரிக சமூகமும் நாகரிகமும் எப்படியிருக்குமென்று கண்ணாரப் பாராமலேயே நான் என் வாழ்நாளைக் கழிக்க வேண்டி இருக்கிறது. திரு.ஹா: லண்டன் நாகரிகத்தைப் பார்க்கப் பட்டணம் போக வேண்டுமா? அதன் போலிப் பகட்டுக்களும் பசப்புக்களும் இங்கேதான் குவிந்து கிடக்கின்றனவே. நேரேபோய் வந்து விட்டால் போதும்; ஒரு தலைமுறைக்கு வேண்டிய முகப்பூச்சுக்கள், வண்ணச்சாயங்கள், நறுமயிர் நெய்கள் எல்லாம் வந்து குவிந்துவிடும். நல்ல மனிதருக்கு வேறு தலையிடி வேண்டியதே யில்லை. திருமதி ஹா: போதும், போதும்! நீங்கள் ஒருவர்தான் இப்படிப் பழமையைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள். இந்த வீட்டைத்தான் பாருங்களேன். மார்ல்பரோக் கோமகள் காலத்திலிருந்தது போலவே இருக்கிறது. பார்ப்பவர்கள் இதைப் பெரிய குடும்பத்து வீடு என்று கூறமாட்டார்கள். ஏதோ பழங்கால வழிப்போக்கர் விடுதி என்றுதான் கூறுவார்கள். திரு.ஹா: பழமையை ஏன் பழிக்கிறாய்? பழைய நண்பர்கள், பழைய நூல்கள், பழைய அமுது ஆகிய எவற்றிலும் பழமைதானே சிறப்பு உடையது! இதோ பார், டாரதி! நீ கூட ஒரு பழைய மனைவிதான் உனக்கு வயதாகி விட்டாலும் நான் உன்னை இன்னும் என் பழைய டாரதியாகத்தான் பாவித்து நடத்துகிறேன். திருமதி ஹா: போதுமே உங்கள் டாரதியும் பழைய மனைவியும்- எல்லாம் பேசி மெழுகுவதுதான்! ஒரு நல்ல புத்தாடை, ஒரு நல்ல நகைநட்டு உண்டா? அதுதான் போகட்டும். பழமைப் பற்றுக் காரணமாக நீங்கள்தான் கிழட்டு வேதாந்தத்தையும் கிழத்தனத்தையும் வருந்தி வரவழைக்கிறீர் களென்றால், என்னையும் வயது வந்தவள், வயது வந்தவள்’ என்று பழிப்பானேன்? நீங்கள் சொல்வதைக் கேட்டு என்னை மற்றவர்கள் கிழவி என்று நினைத்துக் கொள்வார்கள். திரு.ஹா: ஏன், உனக்கென்ன இருபது முப்பதா நடக்கிறது? திருமதி ஹா: இருபது முப்பது அல்ல. இன்னும் ஒரு பத்து இருக்கலாம். என் தமக்கை மகன் டானி பிறக்கும் போது எனக்கு வயது இருபது. அவனுக்கு இன்னும் ஆமான வயது ஆகவில்லை. அவனுக்கு இருபது வந்தால்தான் எனக்கு நாற்பது ஆகும். திரு.ஹா: இருபதும் இருபதும் சேர்ந்துதான் உனக்கு ஐம்பத்தேழு ஆகிறது போலிருக்கிறது. இருபதைக் கண்டு உன் வயதும் சற்று நீள இளைப்பாறியிருக்க வேண்டும். உன் பிள்ளை டானிக்கும் இப்போது பதினெட்டுக் கடந்து சில பல ஆண்டுகளாகியும், இருபது ஆக்காமல் வைத்துக் கொண்டிருக் கிறோம். சரி, சரி எப்படியாவது போ, நீ அவனைக் கோவேறு கழுதையாக்கி வைத்திருக்கிறாய். படிக்க வேண்டிய வயதில் அவன் கண்ட கேளிக்கை விடுதிகளிலெல்லாம் சுற்றிக்கொண்டு திரிகிறான். (டானி ஆர்ப்பரித்துக் கொண்டு வருகிறான்) திருமதி ஹா: வாடா கண்ணே! நீ வீட்டிலேயே இருப்ப தில்லை என்று உன் பெரியப்பா குறை கூறுகிறார். இப்படி அம்மா அப்பாவுடனிருந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தா லென்ன? டானி: அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. என் நண்பர்கள் எனக்காக ‘முப்புறா’ விடுதியில் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் போக வேண்டும். திருமதி ஹா: சற்று இருந்துவிட்டுப் போ, அப்பா. (கையைப் பற்றுகிறாள். டானி கையை இழுத்துக்கொண்டு போகிறான்) டானி: (திருமதி ஹார்ட்காசிலை இழுத்தபடி) விடு, அம்மா, விடு, நானென்ன பழம்பஞ்சடைந்த சோம்பேறியா, உங்களைப் போல வீட்டிலே அடைந்துகிடக்க? (இருவரும் மறைகின்றனர்.) திரு.ஹா: (தனக்குள்) பிள்ளையைக் கெடுக்கிறாள் தாய். தாயைக் கெடுக்கிறது பிள்ளை. மறைவுற்ற அவன் தாயின் செல்வம் அவன் தந்தையைச் சோம்பேறி யாக்கிற்று. இப்போது அது மகனை ஊதாரியாக்குகிறது. எப்படியாவது போகட்டும். காலம் பொதுவாகச் சீர்கெட்டு வருகிறது. பாழும் லண்டன் மூலமாக ஃபிரெஞ்சு நாட்டின் புதுமைப்பூக்களும் பொய்மைகளும் நம் பழைய இங்கிலாந்தைக் கெடுத்து வருகின்றன. என் செல்வி கேட் கூட இந்தக் கால மாயையில் சிக்கி வருகிறாள். (செல்வி கேட் வருகிறாள்.) (தனக்குள்ளேயே ஆ, அதோ வருகிறது என் பட்டுக் குஞ்சலப் பொம்மை! இப்போதும் அவள் உருத் தெரியாதபடி பட்டு ஆடை அணிந்து தான் வருகிறாள். (வெளிப்படையாக) ஏனம்மா, இந்தச் சிறுவயதில், இத்தனை வல்லா வட்டா? உடலை மறைக்க முழு ஆடை இல்லாத எத்தனையோ ஏழை மக்கள் நாட்டில் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஆடை வாங்கித் தரப் போதிய விலையுள்ள இந்தப் பகட்டுடை எதற்கம்மா? செல்வி கேட்: அப்பா, நீங்கள் உங்கள் ஒப்பந்தத்தை மறந்து பேசுகிறீர்கள். காலையில் என் மனம் போல் உடுப்பது. மாலையில் உங்கள் மனம்போல் உடுத்திக் கொள்வது என்பதை மறந்து விட்டீர்களா? திரு.ஹா: சரி சரி. காலையில் பின்பற்றும் கட்டுப்பாட்டை மாலையில் மறந்துவிடாதே. அதிலும் உன் கட்டுப்பாட்டை வலியுறுத்த இன்று ஒரு தனி அவசியம் ஏற்பட்டிருக்கிறது. செல்வி கேட்: அது என்னப்பா? திரு.ஹா: என் பழைய நண்பன் திருத்தகை சார்ல்ஸ் மார்லோபற்றி நான் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பாயே! அவர் புதல்வன் மார்லோ இப்போது வயதுவந்தவன். அவன் உன்னைப் பார்க்க வருகிறதாக எழுத்து வந்திருக்கிறது. எதற்காக என்பதை நீ ஊகித்துக்கொள்வாய் என்று எண்ணுகிறேன்... (செல்வி கேட் சிறிது புன்முறுவலுடன் தலைகவிழ்ந்து கொண்டு நிற்கிறாள்.) .... திருத்தகை சார்ல்ஸும் பின்னாடியே வந்து உடனிருந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாக எழுதியிருக்கிறார். செல்வி கேட்: அதற்குள்ளாகவா அப்பா! இப்படித் திடுமென்று சொன்னால், அதற்கிசைய நான் எப்படியப்பா நடந்துகொள்ள முடியும்? இந்த அவசரத்தினால் என்னைப் பிறருக்குப் பிடிக்காமல் போய்விடலாம்; அல்லது ஒரு சமயம் எனக்கே அவனைப் பிடிக்காமலும் போகலாம். மேலும் நீங்கள் செய்யும் இந்த ஆசார முறைகளில் மனமொத்த நட்புக்கோ அன்புணர்ச்சிக்கோ இடம் இருக்க முடியுமா, அப்பா! திரு. ஹா: நீ அப்படி ஒன்றும் அஞ்சவேண்டாம், குழந்தாய்! உன் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடந்து விடாது. உன் குணமும் அவன் குணமும் அறிந்து இருவரும் ஒத்து இசைந்து கொள்வீர்களென்று எதிர்பார்த்தே இந்த ஏற்பாட்டைச் செய்கிறோம். மார்லோ நல்ல கல்வி கற்றவன். நீயும் படித்தவள் இருவரும் கட்டாயம் ஒத்துப் போவீர்கள். செல்வி கேட்: ஊம். திரு.ஹா: மார்லோ நல்ல வீரமுடையவன்; நல்ல பெருந்தன்மையான குணம். செல்வி கேட்: சரி. திரு.ஹா: அத்துடன் அந்த சந்தமானவன். செல்வி கேட்: அப்படியானால் அவரை எனக்குப் பிடிக்கும் அப்பா. திரு.ஹா: ஆனால்- செல்வி கேட்: ஆனால் என்ன அப்பா! திரு.ஹா: அவன் மிகவும் அமைதியும் கூச்சமும் உடையவனாம். பெண்களிடம் எப்படிப் பேசுவதென்றே அவனுக்குத் தெரியாதாம். இது ஒரு குற்றமல்ல- குணம் என்றுதான் நான் நினைக்கிறேன். செல்வி கேட்: குணமா? அத்தனை குணங்களையும் இந்தப் பெருங் குற்றம் கெடுத்து விடுகிறதே அப்பா. எனக்கு அவரைப் பிடிக்காது. வேண்டாம் அவர். திரு.ஹா: அவசரப்படாதே அம்மா. நீ சிறுமி. என் அனுபவத்தைக் கேள். கூச்சப்படுதல் ஒழுக்கத்திற்கு ஒரு நல்ல அடையாளம்; உயர்ந்த கருத்துக்களுக்கு அவனிடம் குடிகொண்டிருக்கும் நாணம் ஒரு சின்னம். செல்வி கேட்: அப்பா, உங்கள் வேதாந்தம் இருக்கட்டும். மற்றவை எல்லாம் சரியாக இருந்தால், இந்த ஒரு குற்றத்தை நாளாவட்டத்தில் சரிப்படுத்தி விடலாமல்லவா? அநேகமாக அவர் எனக்குப் பிடித்த மாயிருக்கலாம் என்றே எண்ணுகிறேன். திரு.ஹா: அது சரி. ஆனால் அவனுக்கு உன்னைப் பிடிக்காமல் போய்விடப்போகிறது. ஆகவே சற்று விழிப்பா யிருந்துகொள். நான் போய் மற்ற அலுவல்களைக் கவனிக்கிறேன். (செல்கிறார்.) செல்வி கேட்: (தனக்குள்) அவருக்கல்லவா என்னைப் பிடிக்காமல் போய்விடப் போகிறதாம்! நான் அழகுபடுத்திக் கொள்வது பிடித்தமில்லை- அவர் வெறுத்து விடுவாரோ என்ற அச்சம். அப்பப்பா இந்த ஆண்கள், அதிலும் பெற்றோர்கள்... அவர் குணங்களை முதலில் கூறி, அழகைக் கடைசியில் கூறுவானேன்? அங்கேயும் பெற்றோரின் பேதமை! அழகை யல்லவா முதலில் சொல்லவேண்டும்! பெண்களுக்கு மற்றவையெல்லாம் அதற்கப்புறந்தான். சரி, இனிநான் ஆடை உடுத்திக் கொள்வதில் முனைந்து கவனஞ் செலுத்த வேண்டும். (செல்வி நெவில் வருகிறாள்.) செல்வி நெவில்: என்னடி கேட், இப்படி ஆழ்ந்த ஆராய்ச்சி யிலிருக்கிறாய்? என்ன நேர்ந்தது? உன் பூவைகளிடையே பூனை புகுந்து விட்டதா? அல்லது அந்தக் கோமாளி டானி ஏதாவது குறும்பு செய்து தொல்லை கொடுத்தானா? செல்வி கேட்: நெவில், இன்று உன் கற்பனைகள் எதுவும் பயன்படாது. என்னை அச்சுறுத்தும் பொருள் பூனையுமல்ல, டானியுமல்ல; மற்றொரு புதுமாதிரி உயிரினம்; என் மீது அப்பா ஒரு காதலனை ஏவிவிடப் பார்க்கிறார்! செல்வி நெவில்: காதலனா, யாரடி அது? செல்வி கேட்: இப்போது எனக்கெப்படித் தெரியும்? செல்வி நெவில்: பெயர்? செல்வி கேட்: மார்லோவாம். செல்வி நெவில்: யாரது, மார்லோவா? செல்வி கேட்: ஆமாம். திருத்தகு சார்ல்ஸ் மார்லோவின் புதல்வர். செல்வி நெவில்: அப்படியா! கேட், இது எனக்கு நல்ல சந்தர்ப்பம்! என் காதலர் ஹேஸ்டிங்ஸுக்கு அவர் நண்பர்; இணைபிரியாத் தோழர். உன் தயவால் நானும் என் காதலரைக் காணப்போகிறேன்! செல்வி கேட்: நெவில், எல்லோரையும் போல நீயும் ஏன் கவலைப்படுவதாக நடிக்கிறாய்? ஹேஸ்டிங்ஸ் உன்னைக் காதலிக்கிறார். நீ அவரைக் காதலிக்கிறாய். உனக்குப் பெற்றோர்களுமில்லை. வயது வந்தால் உன் விருப்பப்படியே மணமும் செய்து கொள்ளலாம். செல்வி நெவில்: நீ சொல்வது உண்மைதான், கேட். எனக்கு இன்னும் வயது வராததால் உன் அம்மாவுக்கு அடங்கியிருக்க வேண்டியிருக்கிறது. என் தந்தையாகிய அவன் தமையனார் என்தாயின் நகைகளை அவள் கையில் ஒப்படைத்துவிட்டார். தன் தமக்கை மகன் டானியை மணந்தால்தான் அதைக் கொடுப்பதாக உன் அம்மா பிடிவாதம் செய்கிறாள். இவ்வளவும் உனக்குத் தெரியும். இருந்தும்... எனக்கு என்ன கவலை என்கிறாய். உனக்குக்கூட நான் அவ்வளவு இளக்காரமாய்ப் போய் விட்டேன், இல்லையா? செல்வி கேட்: நெவில், கவலைப்படாதே. எல்லாம் விரைவில் சரியாகிவிடும். இப்போது அவர்கள் வருவதற்கு முன் நான் உடைகளைச் சரிசெய்து கொள்ள வேண்டாமா? செல்வி நெவில்: சரி வா, நம் அறைக்குப் போவோம். (இருவரும் செல்கின்றனர்.) களம் 2. (முப்புறா விடுதியில் நீண்ட மேஜையைச் சுற்றிலும் உள்ள ஒடிந்த நாற் காலிகளில் தாறுமாறாகக் கந்தலாடை அணிந்துள்ள இளைஞர்கள் இருக்கின்றனர் அனைவர் கரங்களிலும் மதுக்கிண்ணங்கள்! உயர்ந்த முதுகற்ற ஆசனத்திலிருந்து டானி லம்ப்பின் பாடுகிறான். மேடையின் மேல் ஒரு பெரிய கருநிறமுள்ள பீப்பாய் நிறைய மது வைக்கப் பட்டிருக்கிறது. நேரம் பிற்பகல்.) டானி: தன்னான தானன்னா தானதன தன்னா தனதானா தனதானா தனதானா தன்னா! எல்லோரும்: தன்னான... டானி: அண்ணாவி மார்களெல்லாம் ஆர்ப்பரிக்கட்டும். ஆண்பாலும் பெண்பாலும் அளந்து கொட்டட்டும்! கண்ணான பாடம் இங்கே நாம் படிக்கும் பாடம் கலத்தோடு கலம் மோதிக் கலகலக்கும் பாடம்! எல்லோரும்: (கூடவே) தன்னான... டானி: கண்ணோரம் பார்க்கின்ற காரிகையார் அழகைக் கலத்திலே தெளிதேறல் வண்ணத்தில் கண்டே எண்ணாத எண்ணங்கள் எண்ணிடுவோம் நாமே ஏடறியாப் பாட்டியற்றிப் பாடிடுவோம் நாமே! எல்லோரும்: (கூடவே) தன்னான... ஒருவன்: ஆகா! என்ன பாட்டு! டானி: பஞ்சடைத்த கோயிலிலே நெஞ்சடைத்த பேர்கள் படபடத்துக் குடிபழித்துப் பேசிடட்டும்! அவரும் கொஞ்சமிதைக் குடித்த பின்பு பேசிப் பார்க்கட்டும்! குதித்த மொழி கடகடெனக் குரைத்திடுதல் காண்பார் எல்லோரும்: (கூடவே) தன்னான... மற்றொருவர்: அடாடா, பாட்டுன்னா இதுல்ல பாட்டு! நம்ம டானி துரை கவிஞருடா, கவிஞரு! உடனுக்குடனே கட்டுறாரு பாரு, பாட்டு...! டானி: வருந்துபவர் வருத்தமெல்லாம் போக்கடிக்கும் மருந்து வாழவழி யற்றவர்க்கு வாழ்வளிக்கும் மருந்து! அருந்துபவர் அல்லல்களை மறக்கடித்து, மேலாம் அருங்கனவுப் பொன்னுலகைக் காட்டுகின்ற மருந்து! எல்லோரும்: (கூடவே) தன்னான... சில இளைஞர்: நம்ம டானி துரைக் கவிஞருக்கு எந்தக் கவிஞரும் ஈடில்லைடா! அவர் பாட்டிலே எழுத்துக்கு எழுத்து தங்கக்கட்டி தரலாண்டா! இன்னொருவர்: அவர் கவிஞர் மட்டுமில்லை அண்ணே. அவர் நம்ம வள்ளல். அந்தக் கிழவி மட்டும் பருவ வயதைக் கடத்திக்கட்டுப் போகாட்டி அவரிப்போ பட்டமேறிப் பெரிய வல்லரசா யிருப்பாரண்ணே! எல்லோரும்: நம் கவிஞர், நம் வள்ளல் டானிலம்ப்கின் துரை அவர்கள் கவிதைக்கும் வள்ளல் தன்மைக்கும் கரங்கொட்டி முழக்கி மது அருந்துவோம்! வாழ்க கவிஞர் டானி! வாழ்க வள்ளல் டானி! வாழ்க நறுந்தேறல்! (குடித்து ஒருவரையொருவர் கட்டித் தழுவுகின்றனர்) டானி: (தனக்குள்) தேறல் தரும் தோழமை இனிது. மிகமிக இனிது. ஆனால் இந்த ஏழைகள் அதில் அழுந்தி விடுகிறார்கள். பாவம், வயிற்றுக் கில்லாமல் கடுமையாக உழைத்த அயர்வில் குடி அவர்கள் தலைக்கு வெளியேற்றி விடுகிறது. சரி, (விடுதிக்காரர் வருகிறார்) என்ன அண்ணா, என்ன சேதி? விடுதிக்காரர்: ஒன்றுமில்லை, அண்ணா. இங்கு யாரோ இரண்டு இளைஞர்கள்- நல்ல மனிதர்களாகத்தான் தெரிகிறது- வண்டியில் வந்து இறங்கி உங்கள் பெரியப்பா பேர் கூறி வழிகேட்கிறார்கள். உங்களை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மறுமொழி தரலாமென்று இங்கே வந்தேன். டானி: நீங்கள் செய்தது மிகவும் நல்ல காரியம். அவர்கள் பெரும் பாலும் பெரியப்பா வீட்டுக்கு வர இருக்கும் புதுமாப்பிள்ளை வகையறா வாகத்தான் இருக்க வேண்டும். அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அந்தக் கிழங்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க இது சரியான சந்தர்ப்பம். நீங்கள் மட்டும் என் பேச்சுக்கு மாறாக எதுவும் இடையிலே சொல்லாமலிருக்க வேண்டும், தெரிந்ததா? விடுதிக்காரர்: சரி, அப்படியே ஆகட்டும். அவர்களை வரச் சொல்லலாமல்லவா? டானி: ஆம். வரச்சொல்லுங்கள். (விடுதிக்காரர் செல்கின்றார்; தனக்குள்) ஆகா, சந்தர்ப்பம் எனக்களிக்கும் வாய்ப்பு எவ்வளவு பொருத்தமாய் அமைந்திருக்கிறது. பாட்டுக் கட்டி என் நண்பர்களை மேய்ச்சல் காட்டுவதை விட இது எவ்வளவு ஒய்யாரமான வேடிக்கை! (விடுதிக்காரருடன் மார்லோவும் ஹேஸ்டிங் ஸும் வருகின்றனர்.) விடுதிக்காரர்: இதோ நம் வழிப்போக்கர்கள் வந்திருக்கிறார்கள், அண்ணா! டானி: அப்படியா, மகிழ்ச்சி! (வந்தவர்களை நோக்கி) அன்பர்களே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகவேண்டும்? ஹேஸ்டிங்ஸ்: ஐயா, நாங்கள் தொலைவிலிருந்து வருகிறோம். என் பெயர் ஹேஸ்டிங். இவர் என் நண்பன் மார்லோ. நாங்கள் திரு. ஹார்ட் காசிலின் பண்ணை மனைக்குப் போக வேண்டும். டானி: இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஹேஸ்: தெரியாது. டானி: அப்படியானால் நீங்கள் வழி தவறிவிட்டீர்கள் என்பதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். மார்லோ: அதுதான் சொல்லாமல் விளங்குகிறதே! டானி: ஓகோ அப்படியா சரி. அப்படியானால் வழியும் சொல்லாமல் விளங்கட்டும். நான் போகிறேன். ஹேஸ்: சும்மா இரு, மார்லோ. (டானியை நோக்கி) ஐயா, சினம் வேண்டாம். எங்களுக்கு நல்ல வழியை விளக்கும்படி கோருகிறேன். டானி: டானி காட்டும் வழி எப்போதும் நல்ல வழிதான்! ஹேஸ்: ஆகா! சொல்லுங்கள். டானி: நீங்கள் காணவிரும்பும் திரு. ஹார்ட் காசில் ஒரு வயது சென்ற கஞ்சப்பேர்வழிதானே? அவருக்கு அழகு, இளமை, படிப்பு, காரியம், நல்ல குணம் ஆகியவை இல்லாத ஒரு பெண்ணும், சாந்தமான நாகரிகமுள்ள நற்குண ஆண் மகன் ஒருவனும் இருக்கிறார்களல்லவா? மார்லோ: திரு. ஹார்ட்காசில் நல்லவரென்றும், அவர் பெண் அழகும் குணமுடையவள் என்றும்தான் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். மகன்தான் ஊதாரி, கெட்ட நடத்தையுள்ளவன் என்று கேள்வி... டானி: (தனக்குள்) ஓகோ, இவன்தான் புது மாப்பிள்ளை போலும். முறுக்கோடு பேசுகிறான். சரி நான் ஒருகை பார்க்கிறேன். (வெளிப் படையாக) யாரையா நீ, தரங்கெட்ட பேர்வழியாயிருக் கிறாய். வழி தெரிந்து வைத்திருப்பது மாதிரித்தான் ஆட்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக் கிறாய். போ. உனக்கு நான் வழிகாட்ட முடியாது. ஹேஸ்: என்ன மார்லோ, சிறுபிள்ளைமாதிரி நடந்து கொள்கிறாய்? (டானியை நோக்கி) ஐயா, நீங்கள் கூறுவதுதான் உண்மையாக இருக்க வேண்டும். ஒருவரைப் பார்க்குமுன் அழகும், குணமும் எங்களுக்கு எப்படித் தெரியும். நீங்கள் திரு. ஹார்ட்காசில் மனைக்குப் போகும் வழி... டானி: அப்படிச் சொல்லு. சரி, நான் காட்டுகிறேன். அது அருகில் இல்லையே. அது தொலைவில் படுகர்ப்பள்ளத் தினருகில் இருக்கிறது. அதற்குப் போகும் வழியிலிருந்து நெடுந்தூரம் தவறான வழியில் வேறு வந்து விட்டீர்கள். ஹேஸ்: நேர்வழி செல்வது எப்படி என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். டானி: நீங்கள் வரும் வழியில் ஒரு மலையடிவாரத்தைப் பார்த்தீர்களா? ஹேஸ்: ஆமாம். டானி: அதிலிருந்து நேர்மேற்கே ஒரு வழி செல்லுகிறது. அதன் வழியே செல்லாமல் நீங்கள் கிழக்கே நெடுந்தூரம் வந்துவிட்டீர்கள் இனி நீங்கள் மேற்கு முகமாகப் போய், வடக்கே திரும்பி, அதிலிருந்து கிழக்காகவும் அதன் பின் மீண்டும் வடக்காகவும் திரும்ப வேண்டும். அப்போது தான் நேர்வழி செல்லலாம். மார்லோ: அப்பாடா...! சரி, அதன் பின்? டானி: அதற்குப் பின் கொஞ்ச தூரம் செல்ல வேண்டும். நாலு பாதைகள் சந்திக்கும் இடம் ஒன்று வரும். அந்த நாலு பாதைகளில் ஒரு பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். மற்ற பாதைகளில் செல்லக் கூடாது. மார்லோ: அந்த ஒரு பாதை எது? டானி: ஏனையா அதற்குள் அவசரம்? வந்த பாதையும் விட்டு அதற்கு நேர் எதிர்பாதை, இடதுபுறப் பாதை ஆகியவற்றையும் விட்டுவிட்டு, வலதுபுறம் செல்லும் பாதையைப் பின்பற்ற வேண்டும். பிறகு அதிலிருந்து பிரிந்து ஒரு வண்டிப் பாதை போகிறது. அதன் வழியாக நெடுந்தூரம் போய் மண்டையுடைத்தான் திடலை அடைய வேண்டும். அங்கிருந்து பிரியும் கிளைப்பாதையில் சென்றால் முரேன் களஞ்சியம் வரும். பின் இடது புறமாகத் திரும்பி அப்புறம் வலதுபுறமாகப் போய், அதற்கப்புறம் மீண்டும் இடதுபுறமாகத் திரும்பிச் சென்றால் உங்கள்முன் ஒரு மாவாலை தெரியும். அதைக் கடந்து விட்டால் ஹார்ட்காசில் பண்ணை மனை உங்கள் கண்முன் படும். மார்லோ: சரிதான். நாசமாய்ப் போச்சு. நீங்களும் உங்கள் வழியும் வழி விளக்கமும்... டானி: நீங்கள்தானே ஐயா, வழியை விளக்கும்படி கேட்டீர்கள். ஹேஸ்: மார்லோ, பேச்சை வளர்க்காதே. ஆக வேண்டிய காரியத் தைப் பார்ப்போம். (டானியை நோக்கி) ஐயா, நீங்கள் சொல்லும் வழியின் நீளத்தைப் பார்க்க இன்று பொழுது போவதற்குள் பண்ணை மனை போய்ச் சேர முடியுமென்று தோன்றவில்லை. ஆகையால்... டானி: நீங்கள் கூறுவது உண்மையே. மேலும் இவ்வழியில் திருடர், கொள்ளைக்காரர் தொல்லை நிரம்ப உண்டு. அவர்கள் கத்தி, ஈட்டி, துப்பாக்கி வைத்துக் கொண்டு எங்கும் மறைந்திருப்பார்கள். மார்லோ: (நடுக்கத்துடன்) இனி என்ன செய்வது, ஹேஸ்டிங்ஸ்? ஹேஸ்: பொறு, மார்லோ! (டானியை நோக்கி) இரவு தங்கிப்போக இடமிருந்தால் நலம் என்று எண்ணுகிறேன். விடுதிக்காரர்: இங்கே... டானி: (முறைத்துப் பார்த்து) நீங்கள் கூறவேண்டியதை நானே கூறிவிடுகிறேன். (வழிப்போக்கர்களைப் பார்த்து) ஐயா, இங்கே மூன்று அறைகள்தாம் வழிப்போக்கர் தங்க இருக்கின்றன. மூன்று அறைகளிலுள்ள ஐந்து படுக்கைகளில் பத்துப்பேர் வந்து நிரம்பிவிட்டார்கள். அதுவுமல்லாமல் படுக்கைக்குக் கீழே சிலரும் படுத்திருக்கிறார்கள். மூட்டைப்பூச்சியும் இங்கே கொஞ்சம் அதிகம். அதனால் உங்களைப் போன்றவர்கள் இங்கே தங்க முடியாது. (விடுதிக்காரர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுகிறார்.) ஹேஸ்: சரி, வேறு நல்ல விடுதி ஏதாவது...? டானி: இப்பக்கத்தில் இல்லை. ஆனாலும் ஒரு எட்டுத் தொலைவில் ஒரு முதல்தரமான விடுதி இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் அதில் ஒருவேளை தங்க அனுமதிக்கப்படலாம். மார்லோ: அதென்ன இடையிலே தனிப்புதிர்? டானி: ஒன்றுமில்லை. அதன் மேலாளருக்குச் செல்வம் அதிகம் சேர்ந்துவிட்டது. அதனால் இப்போது பெரிய மனிதர் ஆகப்பார்க்கிறார். அரசாங்கப் பட்டம், தேர்தல் முதலானவை களுக்கு அடிபோட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே விடுதிக்காரர்போல் நடந்து கொள்ள மாட்டார். விருந்தினருடன் பழகுவது போலச் சரிசமமாகப் பழகுவார். ஹேஸ்: ஐயா, இப்பிரயாணத்தின் போது எங்களுக்கு ஆயிரம் புதிய அனுபவங்கள்! அவற்றுள் இதுவும் ஒன்றாக இருக்கட்டும். அங்கேயே செல்லுகிறோம். அவ்விடுதிக்கு நீங்கள் வழிகாட்டலாம். டானி: அதோ அந்த மேட்டின் உச்சியில் ஒரு கட்டடம் தெரிய வில்லையா? அதுதான். நீங்கள் போகலாம். அந்த விடுதிக்காரர் உங்களை ஒரு மாமனார் வரவேற்பது போல் வரவேற்று, மாப்பிள்ளையை நடத்துவது போல் உபசரிப்பார். ஹேஸ்: நன்றி, நாங்கள் வருகிறோம் (போகிறார்கள்) டானி: (தனக்குள்) சரியாக மாட்டிக் கொண்டார்கள். பட்டிக் காட்டைப் பார்க்கவந்த பட்டணத்தைச் சரியான பட்டிக்காடாக்கிவிட்டேன். இனி நானும் மறைந்திருந்து எல்லாக் கூத்துக்களையும் அனுபவிக்கலாம். இரண்டாம் காட்சி களம் 1. (சூழ நின்று கொண்டிருக்கும் வேலைக்காரர்களுடன் திரு ஹார்ட்காசில் கலந்து பேசிக்கொண்டிருக்கிறார். நேரம் மாலை.) திரு.ஹா: நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா? பிழையேதும் நேர்ந்துவிடாமல் அவரவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும். எல்லோரும்: அப்படியே செய்கிறோம். திரு.ஹா: வருகிறவர்களில் ஒருவர் நம் மனைக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறவர். மற்றவர் அவர் தோழர். எப்போதுமே நீங்கள் நாகரிக மக்களுடன் பழகிக் கொண்டிருப்பவர்கள் என்பதை உங்கள் நடத்தையின் மூலம் காட்ட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம்மை மதிப்பார்கள். (வண்டிவரும் ஓசை கேட்கிறது) இதோ அவர்கள் வந்துவிட்டார்கள். எல்லோரும் அவரவர் இடங்களுக்குச் செல்லுங்கள். நான் போய் வர வேற்கிறேன். (ஒன்றிரண்டு வேலைக்காரர்களுடன் வெளியே செல்கிறார்.) டிக்கரி: உன் இடம் இதுவல்ல. நீ வாசலுக்குப் போய்க்காத்து நில். ரோஜர்ஸ்: என் இடம் எனக்குத் தெரியும். நீ சும்மா கனைக்காதே. அதோ அவர்கள் வந்துவிட்டார்கள். (மார்லோவும் ஹேஸ்டிஸ்ஸும் உள்ளே வருகிறார்கள். பின்னால் திரு.ஹார்ட் காசில் பரபரப்புடன் தொடருகிறார்.) திரு.ஹா: இளைஞர்களே, வண்டியிலிருந்து இறங்கும் போதே உங்களை வரவேற்றேன். நீங்கள் அதைக் கவனிக்காது வந்துவிட்டீர்கள். எளியேனின் இச்சிறு குடிசைக்கு உங்களை மட்டற்ற மகிழ்வுடன் மீண்டும் வரவேற்கிறேன். இரு வேலையாட்கள்: (முன்வந்து தலைதாழ்த்தி) வணக்கம், ஐயன்மீர்! வருக, வருக! ஹேஸ்: (மூவர் வரவேற்பையும் மதியாது, மார்லோவை நோக்கி) பகல் முழுதும் அலைந்த அலைச்சலுக்கு இராத்தங்கல் மோசமில்லை. கட்டடம் நன்றாக, இடமகன்றதாகவே இருக்கிறது. மேசைகளும், நாற்காலிகளும் ஒழுங்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. மார்லோ: ஆம். இந்தக் கட்டடமே தன் வரலாற்றை எடுத்துச் சொல்லுவது போலக் காட்சியளிக்கிறது. விருந்தினரை வரவேற்க அமைந்த கலைப்பண்பு, சிக்கன அறிவின் காரணமாகப் பணம் புரட்டுவதையே தொழிலாகக் கொண்ட மற்றொருவனின் கைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. திரு.ஹா: (தனக்குள்ளாக) தன் பிள்ளை நாணமுடையவன், ஒழுக்க சீலன், அப்படி இப்படியென்று நண்பர் அளந்திருந்தார். ஆனால் இங்கே அவர் பிள்ளையும், பிள்ளையின் நண்பரும் என் வரவேற்பைக்கூடக் கவனிக்காமல் தமக்குள் பேசிக்கொண்டே வருகின்றனர். உம்... இன்னும் பொறுத்துப் பார்ப்போம். (வெளிப்படையாக) அன்புடையீர், உங்களுக்கு என் அன்பு கலந்த வணக்கம். இதோ, இந்த நாற்காலிகளில் அமருங்கள். மார்லோ: (ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அதன் குறுக்கே உட்கார்ந்து கொண்டு) ஹேஸ்டிங்ஸ், நீயும் உட்கார். (தனிப்பட்ட ஹேஸ்டிங் ஸிடம்) இந்த விடுதிக்காரரின் வரவேற்பு ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தாயா? ஹேஸ்: அந்தப் பருப்பெல்லாம் நம்மிடம் வேகாது. வரவேற்பை வானளாவத் தூவுவதெல்லாம் தொழில் தந்திரம்- அது நம்மிடமா? மார்லோ: இந்த வரவேற்புக்கெல்லாம் சேர்த்து நம் பட்டியலில் பற்று எழுதினாலும் எழுதிவிடுவான்! ஹேஸ்: சந்தேகமே வேண்டாம். இம்மாதிரிப் பேர்வழிகள் தாராளமாகச் செய்வார்கள். அவன் வேண்டுமானால் பெருமிதமாகப் பேசிக் கொள்ளட்டும். நாம் பெருமிதத்தோடு பேசப்போவதுமில்லை; அதற்காக நம் செலவுகளைப் பெருக்கிக் கொள்ளவும் விரும்பவில்லை. இதோ; இந்த வரவேற்பு வள்ளலுக்குக் கைவரிசையையும் கொஞ்சம் காட்டுகிறேன் பார். (நேரிடையாக திரு ஹார்ட்காசிலை நோக்கி) ஐயா, நீர் ஏன் வெறும் வாய் உபசாரம் செய்து நிற்கிறீர்? இரண்டு கோப்பைத் தேநீர் அளித்துக கையுபசாரம் செய்தால், அது இதை விட நலமாயிருக்குமல்லவா? (திரு ஹார்ட்காசில் திகைப்படைந்து மார்லோ பக்கம் திரும்புகிறார்.) மார்லோ: ஆம், அன்பரே! ஒரு கோப்பைத் தேநீருக்கு நிகர் எதுவும் இல்லை! ஆயிரம் வரவேற்பைவிட ஒரு கோப்பைத் தேநீரே மேல் என்று நாங்கள் கருதுவோம். போம். கையுபசாரம் ஆரம்பமாகட்டும. திரு.ஹா: (தனக்குள்) ஆகா, எப்பேர்ப்பட்ட நாணம்! இவர்கள் நாணத்தைக் கண்டு நான்தான் வெட்கித் தலை குனியவேண்டும்! இப்பேர்ப்பட்ட மாப்பிள்ளைக்கா இதுநாள் வரை காத்திருந்தேன்? (வெளிப்பட) அப்படியே செய்கிறேன், அன்பர்களே! (போகிறார்) மார்லோ: பேர்வழி முறைப்பதைப் பார்த்தாயா? இவனுக்கு நாம் இம்மியும் விட்டுக் கொடுக்கக்கூடாது. இத்தகைய உருமாறிகளுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். ஹேஸ்: ஆம். அந்த விடுதி இளைஞன் செய்த எச்சரிக்கை முற்றிலும் சரிதான். ஆனால் இவன் கொட்டத்தை மட்டந்தட்ட எனக்கா தெரியாது? (வேலையாட்கள் மூன்று கோப்பை தேநீர் கொண்டு வந்து வைக்கின்றனர். அடுத்துப் பல்வேறு சிற்றுண்டித் தட்டுகள் வருகின்றன. திரு. ஹார்ட்காசில் வந்து அமருகிறார்.) திரு.ஹா: (ஒரு கோப்பைத் தேநீரைக் கையிலெடுத்து மார்கோவை நோக்கி) நீங்கள்தான் மார்லோ என்று நினைக்கிறேன்; உங்கள் நலத்திற்காக இந்தக் கோப்பையை அருந்துகிறேன். (ஹேஸ்டிஸ்ஸை நோக்கி) நீங்கள் மார்லோவின் நண்பர் ஹேஸ்டிங்ஸ் எனக் கருதுகிறேன். உங்கள் நலத்திற்காகவும் இதை அருந்துகிறேன். மார்லோ: (கண்ணைச் சிமிட்டிக்கொண்டே) நம் பேர்கள் இவனுக்கு எப்படித் தெரிந்தது? ஹேஸ்: நம் வேலையாட்கள் அல்லது விடுதி நண்பர்களிடம் கேட்டு அறிந்திருப்பான். மார்லோ: (மறைவாக) உடனிருந்து இவனை உண்ணவும் பேசவும் விடக்கூடாது. (திரு. ஹார்ட்காசிலை நோக்கி) ஐயா, உங்கள் உணவு மேசையிலிருந்தே உங்கள் தொழில் நயமும் வளமும் எங்களுக்குத் தெரிகிறது. பலே சமர்த்தரான தாங்கள் இப்போது தேர்தல்களிலும், அரசியல் துறையிலும் உங்கள் கைவரிசையைக் காட்டப் புறப்பட்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். திரு.ஹா: ஒருகாலம் அவற்றின்மேல் அக்கறை கொண்டி ருந்தேன். மார்ல்பரோக் கோமகன் காலத்திலெல்லாம்... மார்லோ: (மறைவாக) நண்ப, பழங்கதை தொடங்குகிறது! காதுகள் பத்திரம். ஹேஸ்: ஓகோ, அரசியல் பொறுப்பைவிடச் சமூக வாழ்வின் இன்பம் நல்லதென்று கொண்டு அதை நாடுகிறீர்கள் போலிருக்கிறது. சிறிது பணமும் சேர்ந்து விட்டது. இனியென்ன கவலை? மாடியில் உண்டு பருகியும், கீழே படுத்து உருண்டும், உள்ளே விருந்தினரை வரவேற்றும், வெளியே சென்று விருந்தாடியும், வந்தால் வாழ்க்கையை இன்பமாகக் கழித்து விடலாம்! திரு.ஹா: அன்பரே, தங்கள் கூற்று முற்றிலும் சரியல்ல. நான் பெரும்பாலும் வெளியே போவது கிடையாது. ஆனால் இந்தக் கூடந்தான் நான் சமூகத்தொண்டு செய்யும் மாளிகை. இந்த வட்டாரத்தின் வழக்குகள், பூசல்கள் எல்லாம் தீர்த்து வைக்கும் நீதிமன்றமும் இந்தக் கூடத்தில்தான் நடைபெறுகின்றது. மார்லோ: ஓகோ சரிதான். உங்களிடந்தான் மன்ற வாதங்களை விட வலுவுள்ள தேநீர்வாதம் இருக்கிறதே, அது போதும் தங்களுக்கு. திரு.ஹா: (சிறிது புன்முறுவலுடன்) முற்றிலும் தேநீர் வாதமல்ல; என் வாழ்க்கை வேதாந்தமும் சிறிது கலந்திருப்பதால் தான் என் தொண்டு எனக்கு வெற்றியைத் தேடித் தருகிறது. மார்லோ: (மறைவாக) வாழ்க்கை வேதாந்தமா? நாசமாப் போச்சு; விடுதிக்காரனின் வாழ்க்கை வேதாந்தம் என்று நான் கேள்விப்படுவது இதுதான் முதல் தடவை? ஹேஸ்: சரிதான், தேநீர்வாதத்தை முன்னணியில் அமைத்து, வாழ்க்கை வேதாந்தத்தைப் பின்னணியில் தாக்க விடுகிறீர் போலும்; நீர் தேர்ச்சிபெற்ற சரியான படைத் தலைவர்தாம்! திரு.ஹா: படைத் தலைவன் என்றவுடனே நினைவுக்கு வருகிறது,- பெல்கிரேட் போரில் யூஜீன் கோமகன்... மார்லோ: (மறைவாக) இவன் பேச்சை வளர்க்கிறான். இவன் கதைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். (வெளிப்பட) ஐயா பெல்கிரேட் தாக்குதலைப் பற்றிக் கதையளக்க வேண்டாம். முதலில் எங்கள் பசித் தாக்குதலைப் பற்றிக் கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள். இந்தச் சிற்றுண்டி எங்கள் பசியைத் தணிக்க முடியாது. இராச் சாப்பாட்டுக்கு விரைவில் ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள். திரு.ஹா: (தனக்குள்) அட நாணமே. வெட்கங்கெட்ட இந்தத் தறுதலைத்தனம் நாணமென்று கூறப்பட்டால், நாணமற்ற நிலை எப்படியிருக் குமோ? (செல்கிறார்) ஹேஸ்: மார்லோ, இங்கே நடப்பதெல்லாம் புதிராகத்தான் இருக்கிறது. பொதுவாக விடுதிகளை மாமனார் வீடுகள் என்பார்கள். இங்கே பரிமாறப்படும் உணவுவகைகளையும், உயர்வையும் பார்க்கும் போது இது உண்மையிலேயே மாமனார் வீடு போலத்தானிருக்கிறது. பணமும் பட்டியலும் இல்லாவிட்டால்... (திரு. ஹார்ட்காசில் வருகிறார்) மார்லோ: ஐயா, நல்ல காற்றோட்டமான அறையில் எங்கள் படுக்கைகளை உதறி விரித்துத் தூய்மைப்படுத்த ஏதேனும் ஏற்பாடு செய்திருக்கிறீர்களா? திரு.ஹா: தங்கட்கு அந்தக் கவலை வேண்டாம். வேலையாட்கள் எல்லாம் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள். மார்லோ: இப்படிப்பட்ட காரியங்களிலெல்லாம் நான் வேலைக் காரர்களை நம்புவது கிடையாது. நேரில் சென்று கவனித்தால்தான் மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் உடன்வந்து ஆவன செய்தால் நலம். திரு.ஹா: (தனக்குள்) என் ஆரூயிர் நண்பருக்காக இந்த மானங் கெட்ட போக்கிரிகள் செய்யும் பைத்தியக்காரச் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் இந்தக் கழுதைகளை இரவோடிரவாக ஏதேனும் அடித்துத் துரத்திவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். (வெளிப்பட) சரி, வாருங்கள், போகலாம். (திரு. ஹார்ட்காசிலும் மார்லோவும் செல்லுகின்றனர்.) ஹேஸ்: (தனக்குள்) எப்படியோ இந்த ஒரு இரவைக் கழித்துத் தள்ளுவோம். இது என்ன விருந்தினர் விடுதியா அல்லது விநோத மாளிகையா? அராபிக்கதைகளில் அடிக்கடி காணப்படும் மாயக்குகை போலத் தோன்றுகிறது. உம்... எந்த நொடியில் எந்தப் பூதம் கிளம்புமோ?... ஆ, என்ன இது? என் கண்களே, உங்களை நான் நம்பலாமா? நான் காண்பது என்ன? என் கண்கள் காணுவது யாரை? (செல்வி நெவில் வருகிறாள்) என் நெவில் போலல்லவா தோன்றுகிறது. ஆம் நெவிலேதான்! (வியப்புடன் வெளிப்பட) நெவில், என் அருமை உயிரோவியமே, நீ எப்படி இங்கு வந்தாய்? செ.நெ: நானும் அதே கேள்வியைத் திரும்பக் கேட்கலாம். ஹேஸ்டிங்ஸ்! ஆனால் உண்மையில் இது என் அத்தைவீடு. நான் அடிக்கடி கடிதங்களில் குறிப்பிடுவேனே, திருமதி ஹார்ட்காசில் என்று- அதுதான் என் அத்தை, என் அத்தை மகள் செல்வி கேட்டைத் தான் தங்கள் நண்பர் இப்போது நாடி வந்திருக்கிறார். இங்கே நாமும் எதிர்பாராது... ஹேஸ்: என்ன நெவில், நீ கூறுவதெல்லாம் உண்மையா? உன்னை இங்கே கண்டதும், என் கண்களை நம்பாமல் திகைத்தேன். இப்போது என் காதுகளையும் என்னால் நம்ப முடியவில்லை. இது விடுதியல்லவா? இதைத் திரு.ஹார்ட்காசில் மனை என்கிறாயே பொருந்துமா? செ.நெ: (புன்முறுவலுடன்) அருமை ஹேஸ்டிங்ஸ், இதை விடுதி யென்று உங்களிடம் யார் சொன்னார்கள்? சந்தேகமே வேண்டாம். இது திரு ஹார்ட்காசில் மாளிகையேதான். ஹேஸ்: ஆகா, அப்படியா செய்தி! அடுத்துள்ள விடுதியிலிருந்த ஒரு குறும்புக்கார இளைஞன் எங்களை இப்படி ஏமாற்றி இருக்கிறான். ஐயோ, விடுதிக்காரரென்று எண்ணித் திரு. ஹார்ட்காசிலை நானும் மார்லோவும் எப்படி எப்படி யெல்லாமோ நடத்தி, அவர் மனம் புண்படும்படி பேசிவிட்டோம். இப்படி எங்களை அந்தப் பயல் ஏன் ஏமாற்ற வேண்டும்? செ.நெ: (பொங்கிவரும் சிரிப்பை. அடக்கிக் கொண்டு) அட பாவமே, இப்போதுதான் எனக்கும் உண்மை புரிகிறது. நீங்கள் டானியின் கையில் சிக்கிக் கொண்டுவிட்டீர்கள் போலும்! அவன் செல்வி கேட்டின் சின்னம்மா பிள்ளை; திருமதி, ஹார்ட் காசிலுக்குப் பிரியமான வளர்ப்புப் பிள்ளை. அவன் குறும்பு பெரிது; ஆனால் சூதுவாது தெரியாதவன், அவன் அம்மாவைப் பழிவாங்க இப்படியெல்லாம் செய்திருக்கிறான், கோமாளி! ஹேஸ்: அம்மாவோடு அவனுக்கென்ன பகை? செ.நெ: பகை ஒன்றும் பிரமாதமில்லை. அவளிடம் என் பெற்றோர்கள் வைத்துச் சென்ற அணிகள் இருக்கின்றன. அவள் டானியை என் காலில் கட்டி அதை இருவரிடமும் கொடுக்க எண்ணியிருக்கிறாள். இதனால் எங்களிருவருக்கும் ஓயாத தொல்லைகள். டானிக்கும் அதன் காரணமாக அவள்மீது வெறுப்பு. ஆனால் எங்களிருவரிடையேயும் நட்பும் ஒற்றுமையும் மிகுதி. ஹேஸ்: உங்களிடையே நட்பும் ஒற்றுமையுமா? தேனே, என்னிடம் வேறுமாதிரி எழுதியிருந்தாயே. செ.நெ: அதற்குள் அவசரப்படுகிறீர்களே. எங்களுக்குள் நட்பும் ஒற்றுமையும் மிகுதிதான். ஏனென்றால் நான் அவனை வெறுக்கிறேன். அவனும் என்னை வெறுக்கிறான்! என்னை எவ்வளவு விரைவில் ஹேஸ் டிங்ஸ் என்ற இதயமற்ற கொலைகாரனிடம் ஒப்புவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் என் தொல்லை தீரும் என்று அவன் எண்ணுகிறான். ஹேஸ்: நெவில், என் காதற் களஞ்சியமே! நீ இப்போது என் குடும்பக் களஞ்சியமாகவும் இருக்கிறாய். சற்று நேரத்திற்குள் என்னை வாட்டி வதைத்துவிட்டாயே? சரி, அப்புறம்! செ.நெ: இருவரும் ஓயாது சண்டைதான் பிடிக்கிறோம். ஆனால் பகை இல்லை; வெறுப்புத்தான் உண்டு. அது மட்டுமா? அத்தை முன்னிலையிலும் காதல் நாடகமாடி அவள் பேராசைக் கோட்டைக்கு ஒத்தூதிக் கொண்டு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது நீங்களும் இங்கே வந்து விட்டீர்கள். எப்படியாவது அத்தையை ஏமாற்றி நகைகளையெல்லாம் தட்டிப்பறித்துக் கொண்டு உங்களுடன் ஓடி வந்து விடுவதென்று முடிவு செய்திருக்கிறேன். ஹேஸ்: ஆரூயிரே, உன் திட்டம் கண்டு மகிழ்கிறேன். ஆனால், செல்வமும் வருவாயுமற்ற நிலையில் நீ திடீரென்று என்னுடன் வருவது சரியல்ல. செ.நெ: அந்தக் கவலை தங்களுக்கெதற்கு? எனக்கு என் ஹேஸ்டிங்ஸ் மட்டுமே போதும். மற்ற செல்வங்கள் எதுவும் வேண்டாம். என்றோ தங்களை நாடி வந்திருப்பேன். ஆனால் என் தாயின் நகைகளை எப்படியும் பெறாமல் இதைவிட்டு ஒரு அங்குலம் கூடப் பெயரக்கூடாது என்றுதான் இத்தனை நாள் காத்திருந்தேன். இனியும் என்னால் காத்திருக்க முடியாது. ஹேஸ்: என் அன்பே! செ.நெ: என் உயிரே! (முத்தமிடுகிறாள்) அதிருக்கட்டும், ஹேஸ் டிங்ஸ்! இப்போது நாம் இன்னொரு நாடகத்துக்கு அடிபோட வேண்டும். என் தோழி கேட் இப்போதுதான் என்னோடு உலாவிவிட்டு அடுத்த அறையில் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். நான் என் இன்பத்தைச் சந்தித்துவிட்டேன். என்தோழி தன் காதலனைக் காண வேண்டாமா? ஹேஸ்: ஐயோ, மார்லோ பெண்ணென்றால் நடுங்கு கிறவனாயிற்றே, நாணமும் வெட்கமுமே அவனைப் பிடுங்கித் தின்றுவிடும். செ.நெ: என் தோழியும் இதைத் தன் தந்தையிடமிருந்து கேள்விப் பட்டிருக்கிறாள். ஆனால் உங்கள் நண்பர் அவளுக்குப் பிடித்தமாயிருந்தால் போதுமாம். அவர் வெட்கத்தைத் தானே நேரில் மாற்றி அவரை ஏற்க எண்ணுகிறாள். ஹேஸ்: சரி, நாங்கள் ஏமாற்றப்பட்டதை உன்மூலம் நான் தெரிந்து கொண்டேன். ஆனால் நண்பனிடம் எப்படிச் சொல்லுவது? உண்மை தெரிந்தால் அவன் துணிவோடு தலையைத் தூக்கமுடியுமா? செ.நெ: நடந்தது நடந்துவிட்டது. ஆனால் இப்போது உங்கள் நண்பரிடம் சென்று உண்மையைக் கூறினால், அவர் வெட்கத்தினால் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவார். உங்கள் நண்பரிடம் உண்மையைச் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. ஹேஸ்: ஆமாம். அதுதான் சரி. நான் நண்பனைக் கவனித்துக் கொள்ளுகிறேன். நீ செல்வி கேட்டை அழைத்து வா. அதோ நம் கோமாளி மாப்பிள்ளை வருகிறான். நெவில், விழிப்போடிரு. நம் நாடகம் வெளியாகி விடக் கூடாது. செ.நெ: அப்படியே, ஹேஸ்டிங்ஸ்! நான் வருகிறேன். (செல்வி நெவில் செல்கிறாள், மார்லோ வருகிறான்.) ஹேஸ்: மார்லோ, உனக்கு ஒரு நல்ல சேதி. இப்போது ஒரு பெண் போனாளே பார்த்தாயா? மார்லோ: ஆமாம், பார்த்தேன். ஏன்? ஹேஸ்: அது யார் தெரியுமா? அவள் என் காதலி நெவில்! மார்லோ: அவள் இங்கே எப்படி வந்தாள்? ஹேஸ்டிங்ஸ்! உன் யோகமே யோகந்தான். ஹேஸ்: மார்லோ, யோகம் எனக்கு மட்டுமா? உனக்கும்தான். உன் காதலியும் என் நெவிலும் உறவினர்களாம். இருவருக்கும் நீண்டநாள் நட்பு உண்டாம். அவர்கள் வீடுகள் ஒன்றுக்கொன்று அருகிலிருப்பதால் இன்று மாலை உலாவ வந்தவர்கள் இந்த விடுதியில்தான் தங்கியிருக்கிறார்களாம். உன்னை உன் காதலியுடன் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று நெவில் போயிருக்கிறாள். கொஞ்சம் பொறு, வந்து விடுவார்கள். மார்லோ: ஐயையோ! நண்பா, ஏனிப்படித் திடீர் ஏற்பாடு செய்தாய். முதல் தடவை பார்ப்பதென்றால்... ஹேஸ்: எப்படியும் முதல் தடவை பார்த்துத்தானே ஆக வேண்டும். மேலும் விடுதியில் இருப்பதால் விடுதிக்காகப் பெண்களைப் பார்ப்பது மாதிரி... மார்லோ: வேண்டாம் ஹேஸ்டிங்ஸ். விடுதிக்காரப் பெண்களென்றால் நம்மைப் போலப் பழகிக்கொள்வார்கள். நமக்கும் அதிகச் சிரமமில்லை. இந்த உயர்குடிப் பெண்கள் சட்டதிட்டம் வகுத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் கட்டுக்கோப்பும், நாகரிகப் பேச்சும் எனக்குச் சுத்தமாக ஒத்துவராது. ஹேஸ்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ வந்துதான் ஆக வேண்டும். இதோ... அவர்களும் வந்துவிட்டார்கள். (செல்வி நெவிலுடன் செல்வி கேட் வருகிறாள். மார்லோ கண்களைப் பாதி மூடி நிலத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். அவன் கை கால்கள் நடுங்குகின்றன.) செ.நெ: அன்புக்குரிய ஹேஸ்டிங்ஸ், இதோ என் தோழி செல்வி கேட்! ஹேஸ்: (நெவிலையும் கேட்டையும் நோக்கி) நெவில் மிஸ் கேட், இதோ என் நண்பன் திரு. சார்லஸ் மார்லோவை உங்களுக்குப் பெருமையுடன் அறிமுகம் செய்து வைக்கிறேன். (மார்லோவை நோக்க) சார்லஸ், இதோ செல்வி கேட். (நாணத்தால் முகம் சிவக்க மயங்கி நிற்கும் மார்லோவிடம்) பேசுடா, காதலி முன்னால் இப்படியா மரம் போல நிற்பது? மார்லோ: (மறைவாக) என்ன பேசுவதென்றே தெரியவில்லை; நாக்கு எழவில்லையே. ஹேஸ்: (மறைவாக) உன் படிப்பையெல்லாம் கொட்டி உருட்டி... உம்... மார்லோ: அம்... அம்மணி... நான்... நான்... நான்... செல்வி கேட்: ஆம். அன்பரே! தங்களைக் காண நானும் மகிழ்ச்சியடைகிறேன். மார்லோ: (தனக்குள்) ஆகா, நான் பேசாததைப் பேசியதாகக் கொண்டு அதற்கு மறுமொழியும் பகர்ந்து விட்டாள் மாதரசி. இனியும் நான் பேசாதிருந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பாள்? நான் ஏதாவது பேசித்தான் ஆகவேண்டும். செல்வி கேட்: (தொடர்ந்து) உங்கள் பிரயாணத்தில் பல தொல்லை கள் ஏற்பட்டதாக அறிந்தேன். ஹேஸ்: (மறைவாக) உம். பேசு. மார்லோ: (தலை கவிழ்ந்தபடியே) அப்படி... அப்படி ஒன்றும்... உம்... என்னை மன்னிக்கவும். செல்வி கேட்: அப்படி ஒன்றும் இல்லை என்று கேட்க நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், நாகரிக சமூகத்தில் நன்கு பழகிய தங்களுக்கு இந்த நாட்டுப்புறம் அவ்வளவு பிடிக்காதோ என்றுதான் அஞ்சுகிறேன். மார்லோ: நாகரிக சமூகத்தில்... நாகரிக சமூகத்தில் நான் பழகியிருக்கிறேன். ஆனால்... அதில்... நான் (தாழ்ந்த குரலில்) என்னால் புரியும்படி சொல்ல... மன்னிக்க வேண்டும். செல்வி கேட்: புரிகிறது. நீங்கள் சொல்வது சரியே. நாகரிக சமூகத்தோடு பழகியதுண்டு; ஆனால் அதில் அழுந்திடவில்லை என்று கூறுகிறீர்கள், இல்லையா? ஆம். நாகரிகம் கண்டு இன்புறத் தக்கது. அதில் அழுந்திவிடக் கூடாது என்பது முற்றும் உண்மையே. (செல்வி நெவிலும் ஹேஸ்டிங்ஸும் நழுவுகின்றனர்.) மார்லோ: நான் நினைத்ததைச் சொல்லிவிட்டீர்கள்... நாகரிகம்... வெறும் வெளிப்பகட்டு, அதில் பெண்கள்... எனக்குப் பேசத் தெரியவில்லை. மன்னிக்க வேண்டும். செல்வி கேட்: மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை. தங்கள் பேச்சு எனக்கு ரொம்பவும் பிடித்தமாயிருக்கிறது. பெண்கள் நாகரிகத்தின் வெளிப்பாட்டைக் கண்டு மயங்கி விடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் எல்லாப் பெண்களும் அப்படியல்ல. வெளிவேஷத்தைக் கண்டு மயங்காமல், உள்ளழகைக் கண்டு மகிழ்பவர்களும் உண்டு. மார்லோ: அதுதான் நானும் சொல்ல வந்தேன்... ஆனால் பெண்களுக்கேற்றபடி... பேச... நடிக்க என்னால் முடியவில்லை... நான்... நான்... என் நண்பன்... (திரும்பிப் பார்த்து நண்பனைக் காணாமல்) ஹேஸ்டிங்ஸ் போய்விட்டான். உங்களை இன்னும் தொல்லைப்படுத்த நான் விரும்பவில்லை. ஹேஸ்டிங்ஸைப் பார்த்து வருகிறேன்... நீங்கள், வருகிறீர்களா? செல்வி கேட்: ஆம், நானும் உங்களுடனேயே வருகிறேன். (தனக்குள்) அந்தோ, புத்தகப் பூச்சியாய் இருந்திருக்கிறார். பெண்களுடன் எப்படிப் பழகுவதென்றே தெரியவில்லை. அது ஒன்றுதான் குறை. அதையும் நான் விரைவில் போக்கி விடுகிறேன். (செல்கின்றனர்) களம் 2 (திரு.ஹார்ட்காசில் மனை. டானியும், செல்வி நெவிலும் வருகின்றனர். பின்னால் திருமதி கேட்காசிலும் ஹேஸ்டிங்ஸும் வருகின்றனர். நேரம்: மாலை) டானி: ஏன் இப்படி என் மடியைப் பிடித்துக் கொண்டு, விடேன் தொடேனேன்று பின்பற்றிக் கொண்டு வருகிறாய். ஒரு ஆடவனைப் பின் தொடர உனக்கு வெட்கமாயில்லை! செ.நெ: டானி, நீ என் மைத்துனன்தானே! உறவினருடன் பேசுவது தவறாகுமா? (தணிந்த குரலில்) அம்மா பின்னால் வருகிறாள். இப்போது சிறிது நட்பாகத்தான் நடிக்க வேண்டும். (உரத்த குரலில்) நாம் இந்தச் சோலைக்குள் செல்வோமா? டானி: ஆகா, அதற்கென்ன, வா, செல்வோம். (இருவரும் போகின்றனர்.) திருமதி ஹா: அதோ போகின்றன, என் குஞ்சுகள், என்னிடம் கூட இதுகளுக்கு எத்தனை ஒளிவுமறைவு! எத்தனை கபடம்! ஹேஸ்: அம்மணி, அந்த இளைஞன் உங்கள் தம்பியா யிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். திருமதி. ஹா: (முகமலர்ச்சியுடன்) இல்லை, அன்பரே அவன் என் தங்கை மகன். எனக்கு அவர்களைச் சேர்த்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவல், இந்த வயதில்... ஹேஸ்: தங்களுக்கென்ன அப்படி வயதாகிவிட்டது? திருமதி ஹா: நாற்பது, நாற்பத்திரண்டு ஒரு வயதில்லை தான்! ஆனால் நீங்கள் லண்டன் நகர நாகரிகமறிந்தவர்கள். நானோ நாட்டுப் புறத்தில் இருந்து கொண்டு அதைப்பற்றிக் கனவு கண்டுகொண்டிருப்பவள். ஹேஸ்: இதை நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது. உங்களைப் பார்க்கும் போது, நேற்றுவரை லண்டனில் பார்த்த மாதரில் ஒருவரைப் பார்ப்பது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. திருமதி ஹா: (முகமெங்கும் மகிழ்ச்சி பொங்க) நீங்கள் முகப்புகழ்ச்சி செய்கிறீர்கள் உங்கள் வாய்க்குச் சர்க்கரை இடவேண்டும். அது கிடக் கட்டும்...! அதோ என் டானி வருகிறான். (பாடிக்கொண்டே டானி வருகிறான்.) டானி: ராரா ராரா ராராரா (ராரா) திருமதி ஹா: வாடா, டானி. உன் பெட்டைக் கோழியை எங்கே விட்டாய்? டானி: (பாடுகிறான்) ராரா ராரா ராராரா (ராரா) குதிரைஏறிக் காளை ஒருவன்- மனங் கொண்ட கன்னி கொண்டுமென்றே (ராரா) மதுரை நோக்கிப் பறந்துவிட்டான்- மங்கை மாளிகைதன்னை அடைந்துவிட்டாள்! (ராரா) திருமதி ஹா: ஏண்டா டானி, இம்மாதிரிப் பாட்டுப் பாடி அந்த அப்பாவி நெவிலை ஏமாற்றிவிட்டு, என்னிடம் அவளை வெறுப்பதாய்ப் பாசாங்கு செய்கிறாயாக்கும். டானி: அம்மா, உன் மூளை பொல்லாத மூளை. அது நேராக ஓடவே ஓடாது; வளைந்து வளைந்துதான் ஓடும். திருமதி ஹா: இந்த மாதிரி நன்றிகெட்ட பிள்ளையை வேறு எங்காவது பார்த்திருக்கிறீர்களா? அன்பரே, இவன்... டானி: அம்மா, போதும். இந்தப் பட்டணத்து அப்பாவியிடம் உன் சொற்பொழிவு வேண்டாம். நான் அவனிடம் கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது. நீ போய் உன் மருமகனிடம் உறுமிக்கொண்டிரு. திருமதி ஹா: (ஹேஸ்டிங்ஸை நோக்கி) உங்களை மீண்டும் காண்கிறேன். அன்பரே, போகுமுன் எப்படியும் எனக்கு லண்டன்நகர் ஆடை அணி நாகரிகங்களைப் பற்றி நன்றாகச் சொல்ல வேண்டும். இப்போது போய் வருகிறேன். (போகிறாள்) ஹேஸ்: (மறைவாக) லண்டன் பைத்தியமே, போய் வா, (வெளிப்பட) ஐயா, வழிகாட்டியாரே, எங்களைத் தப்பு வழிகாட்டி ஏய்த்தது சரியா? அதனால் எத்தனை அவதிகள் தெரியுமா? டானி: பட்டணத்துப் பட்டிக்காட்டான்களே இப்படித் தான். நான் தப்புவழி காட்டினேன். தப்புவழியில் வந்ததாக நீர்தானே முதலில் சொன்னீர். நான் வேண்டுமென்று செய்தால் உம்மைச் சுற்றிச் சுற்றியடித் திருக்கப்படாதா? அப்படியும் நீர் எதிர்பாராமலே சேரவேண்டிய இடத்தில் சேர்த்தேனா இல்லையா? மேலும் உன் நண்பனின் காதலி என் தங்கை. மைத்துனன் கைவரிசைகளை அவர் தொடக்கத்திலேயே அறிந்து கொள்ள வேண்டாமா? ஹேஸ்: (தனக்குள்) இந்தக் கோமாளியுடன் வழக்காடி வெல்ல முடியாது. ஆதரித்துப் பேசியே காரியத்தைச் சாதிக்க வேண்டும். (வெளிப்பட) எங்களைத்தான் இப்படி அலைக்கழிக்கிறாய், போகட்டும்; உன் சிற்றன்னையை ஏன் இப்படிப் பாடாய்ப்படுத்த வேண்டும்? டானி: அவள் என்னைப் படுத்தும் பாடு உங்களுக்கென்ன தெரியும்? என்னென்ன காட்டுமிராண்டிப் புத்தகங்களெல்லாம் அவள் அப்பன் அவளுக்குக் கொடுத்தானோ, அதையெல்லாம் என் தலையை உடைத்துப் புகுத்தப் பார்க்கிறாள். அது போதாதென்று அந்தச் சீனத்துப் பொம்மையிருக்கே, என் மச்சி- அதான் நெவில்- அதைக் காசுக்காகக் கட்டிக்கொண்டு சாகவேண்டுமாம்! ஹேஸ்: அந்தச் சீனப் பதுமையை என்னதான் செய்ய விரும்புகிறாய்? டானி: எந்த முட்டாளாவது அதைப் பார்த்து ஏமாந்து, இழுத்துக் கொண்டு போய்விட மாட்டானா என்று தான் தவியாய்த் தவிக்கிறேன். ஹேஸ்: டானி, அந்தக் கவலை உனக்கு வேண்டாம். நீ மட்டும் எனக்கு உதவி செய். நானே அதை இழுத்துக் கொண்டு போய்விடுகிறேன். டானி: இதற்காக நான் எந்த உதவியும் செய்யத் தயார். (போகின்றனர்.) மூன்றாம் காட்சி களம் 1 (கேட்காசில் மாளிகை; திரு. கார்ட் காசில் சிந்தனையில் வாழ்ந்திருக் கிறார். செல்வி கேட்காசில் எளிய சாதாரண உடையணிந்து வருகிறாள். நேரம்: மாலை) வாம்மா, கேட்! உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் கூறியபடியே எளிய உடையில்தான் வந்திருக்கிறான். நன்று. ஆனால் இப்போது நான் நினைக்கிறேன். உன்னை நான் அவ்வளவு கட்டுப் படுத்தியிருக்க வேண்டியதில்லையென்று. செல்வி கேட்: ஏனப்பா அப்படி? திரு ஹா: பேர்வழி அடக்க ஒடுக்கமாயிருப்பான். பெரியோர் முன்னிலையில் பயந்து பழகுவான், அப்படி இப்படி என்று சொன்னதை நம்பி, நீ பகட்டாடை உடுத்துவது தவறு என்று நினைத்தேன். ஆனால் நேரில் பார்த்தால் அவர்கள் மானம், மரியாதை தெரியாத துணிச்சல் பேர் வழிகளா யிருக்கிறார்கள். செல்வி கேட்: நீங்கள் சொல்வது எனக்கொன்றும் விளங்கவில்லை. நான் பார்த்தமட்டில் அவர்... பன்மடங்கு நாணமுள்ளவராகத்தான் காணப்படுகிறார். திரு.ஹா: செல்வி, நீ அறியாது கூறுகிறாய். நீ குறிப்பிடும் ‘அவர்’ கொஞ்சங்கூட ரோஷஉணர்ச்சி இல்லாதவர். செல்வி கேட்: அப்பா, நான் அறிந்துதான் கூறுகிறேன். அவர் மிகவும் நாணமுடையவர். திரு ஹா: நம் இருவரில் ஒருவர் கூறுவது எப்படியும் தவறாகத் தானிருக்க வேண்டும். ஆனால் நான் கூறுகிறபடி யிருந்தால், நீ அவரை மணந்துகொள்ள நான் இணங்க மாட்டேன். செல்வி கேட்: நான் கூறுகிறபடியிருந்தால், நான் அவரைக் கட்டாயம் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் ஒருவேளை நாம் இருவர் கூறுவதும் சரியாகவும், அல்லது இருவர் கருதுவதும் தவறாகவும் இருக்கலாம். அப்போது இருவருக்குமே அவர் பிடித்தமானவராயிருக்கவும் கூடும்! திரு. ஹா: யார் சொல்வது சரியென்பதைப் பொறுத்துப் பார்ப்போம். (இருவரும் செல்கின்றனர். டானி வருகிறான்.) டானி: (தனக்குள் கையிலுள்ள நகைப் பெட்டியைக் குலுக்கிப் பார்த்து) நிறைய பொன் அணிமணிகள் இவற்றை அந்த ஹேஸ்டிங்ஸிடம் கொடுத்துவிட்டால், நெவில் இன்றே மகிழ்ச்சியோடு அவனுடன் ஓடிப்போய் விடுவாள். இதோ அவனும் வருகிறான். (ஹேஸ்டிங்ஸ் வருகிறான்.) ஹேஸ்: டானி, நாங்கள் இன்றிரவே போக ஏற்பாடுகள் செய்து விட்டாயா? டானி: டானியிடம் சொல்லிவிட்டால் போதும். செய்து விட்டாயா என்று கேட்கவேண்டியதேயில்லை. வண்டியும் குதிரையும் தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த டானியே வண்டியைச் செலுத்தி உங்களைத் தொலைவில் கொண்டு வந்து விடுவான். அதோடு என் ஏற்பாடு முடிந்து விடவில்லை. அந்த நெவிலின் நகைப் பெட்டியையும் கொண்டு வந்து விட்டேன். இதையும் அவனைக் கொண்டு போகவிருக்கும் உன்னிடமே தந்துவிடுகிறேன். ஹேஸ்: இதை எப்படித் தம்பி எடுத்தாய்? அப்புறம். சின்னம்மா தேடுவார்களே? டானி: அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த மச்சி நெவில் மட்டும் தொலைந்துவிட்டால் போதும், நான் சின்னம்மா கோபத்தைச் சுலபமாக சமாளித்துக் கொள்வேன். ஹேஸ்: அது சரி, டானி. நீ இதை எடுப்பது தெரியாமல் நெவில் தன் அத்தையிடம் கேட்கப் போயிருக்கிறாளே? டானி: அட பைத்தியமே! பார்த்தாயா! அவள் நகைப் பைத்தியந்தான் எனக்குத் தெரியுமே, சரி, முன்னே போய்க் காத்திரு. நான் அவளை நயமாகப் பேசி அனுப்பி வைக்கிறேன். (ஹேஸ்டிங்ஸ் போகிறான், தனக்குள்) இந்த டானிக்கு உள்ள மூளையில் பத்தில் ஒரு பங்காவது அதுகளில் எதற்காவது இருந்தால்தானே! முட்டாள்கள்! (திருமதி ஹார்ட்காசிலும் நெவிலும் வருகின்றனர்.) திருமதி ஹா: உனக்கென்ன இப்போது அவசரம் வந்துவிட்டது. நீ என் செல்வன் டானியை மணஞ் செய்து கொள்ளும் போது... செல்வி. நெ: இப்போது நான் சற்றுப் போட்டுப் பார்த்துவிட்டுத் தருகிறேன். டானி: (மறைவாக) சும்மா இப்படி வா! (தனியே அழைத்துச் சென்று) தொலைந்துவிட்டது என்று கூறிவிடேன். திருமதி.ஹா: சொன்னால் நம்புவாளா? டானி: அது தொலைந்தது என்பதற்கு நானே சான்று கூறுகிறேன். திருமதி. ஹா: (நெவிலியிடம் சென்று அவளை நோக்கி) நெவில், இப்போது நான் என்ன செய்வதென்றே தோன்றவில்லை. உன் நகைப்பெட்டி காணாமற் போய்விட்டதே. செ.நெ: அம்மா, நீங்கள் இட்டுக் கட்டிச் சொல்லுகிறீர்கள். நான் அதை நம்பமாட்டேன். திருமதி ஹா: நான் சொல்வதில் நம்பிக்கையில்லையா? இதே டானியைக் கேள். டானி: ஆமாம், நகைப்பெட்டி இல்லையென்பதை நானே நேரில் கண்டேன். (நெவில் விழித்துப் பார்க்கிறாள். திருமதி. ஹார்ட்காசில் திடுக்கிட்டுச் சென்று பார்க்கப் போகிறாள். நெவிலை நோக்கி) அட பைத்தியமே! நகை ஹேஸ்டிங்ஸிடம் போய்விட்டது. அம்மா அதைப் பார்க்கப் போய்விட்டாள். நீ ஹேஸ்டிங்ஸிடம் ஓடிப் போய் விடு; போ, விரைந்து செல். (நெவில் செல்கிறாள். திருமதி. ஹார்ட்காசில் அங்கலாய்த்துக் கொண்டு வருகிறாள்.) திருமதி ஹா: (கையைப் பிசைந்துகொண்டே) ஐயையோ, ஐயையோ! நகை காணாமற் போய்விட்டதே. டானி. நான் என்ன செய்வேன். டானி: ஆமம்மா! நானும் பார்த்தேனே! திருமதி ஹா: என்னடா பார்த்தாய்? டானி: காணாமற் போனதை அம்மா! நீதான் அப்போதே சொன்னாயே! திருமதி ஹா: விளையாட்டுக்கல்லவா சொன்னேன்; இப்போது உண்மையிலேயே காணாமற் போய்விட்டது, டானி. டானி: அம்மா உங்கள் நடிப்பு அபாரம். தத்ரூபமா யிருக்கிறது. திருமதி. ஹா: நடிப்பா...? ஓகோ, இவ்வளவும் உன் வேலைதானா? நன்றி கெட்ட பயலே, உன்னை என்ன செய்கிறேன் பார். (அடிக்க ஓங்குகிறாள். டானி ஓடிவிடுகிறான், தனக்குள்) நன்றி கெட்ட பயல், இவனுக்கு இப்பொழுது என்ன கேடு? தங்கமான பெண்ணை தங்கத்தோடு அவனிடம் சேர்க்க நினைத்தால்... (போகிறாள்.) களம் 2 (ஹார்டுகாசில் மாளிகை: செல்வி கேட்டும், பணிப்பெண்ணும், நேரம் முன்னிரவு.) பணிப்பெண்: அம்மா கேட்டீர்களா? நான் இப்போது வரும்போது உங்கள் காதலர் யாருடி என்றார். நான் வேலையாள் என்றேன். அவர்... அவர்... செல்வி ஹா: என்னடி, சொல்லேன். பணிப்பெண்: அவர் உங்களைச் சுட்டிக்காட்டி அதுவும் விடுதிப் பெண்தானே என்றார். (குலுங்கச் சிரிக்கிறாள் தோழி) செல்வி கேட்: (தானும் சிரித்து) அப்படியா, அவரை நான் முதன் முதல் பார்த்தபோது அவர் என்னை ஏறிட்டுப் பார்க்கவேயில்லை. சரி, அப்படியானால் ஒன்று செய்வோம். நான் விடுதிப் பெண்ணாகவே நடித்து, அவர் போக்கு எப்படியிருக்கிற தென்று பார்க்கிறேன். இதோ, இப்பக்கம் தான் அவரும் வருகிறார். (பணிப்பெண் போகிறாள். மார்லோ தன்னை மறந்து உள்ளே நுழைகிறான்.) மார்லோ: (தனித்திருப்பதாக எண்ணி) இந்தச் செல்வி கேட் ஹார்டு காசிலோடு நாம் வாழ முடியாது. செல்வி கேட்: (திடுக்கிட்டு, தனக்குள்) ஓகோ, அப்படியா! பார்க்கிறேன் ஒரு கை! (வெளிப்பட) ஐயா, ஐயா! நீங்க கூப்பிட்டிங்களா ஐயா! மார்லோ: நான் கூப்பிடவில்லையே... (உற்றுப் பார்த்த வண்ணம் தனக்குள்) ஆ, என்ன அழகு! எந்த விடுதியிலும் இவ்வளவு மிடுக்கும் துடுக்கும் உள்ள அழகிகளை நான் பார்த்ததில்லை. (உரத்து) ஆம், ஆம். கூப்பிட்டேன். கொஞ்சம்... கொஞ்சம் (தயக்கம்) செல்வி கேட்: கொஞ்சம் என்ன வேண்டும். மார்லோ: என்ன வேண்டும் என்பதையே மறந்து விட்டேன், உன்னை- உன் அழகைக்- கண்ட பிறகு. செல்வி கேட்: இப்படியெல்லாம் பேசினால், பெண்கள் உங்கள் பக்கம் வரவும் வெட்கப்படுவார்கள். நான் வருகிறேன் (போக முயல்கிறாள்) மார்லோ: இதோ, இதோ நினைவுக்கு வந்துவிட்டது. இங்கே... ஊம்... உங்களிடம் இது... இது... இருக்கிறதா? செல்வி கேட்: பெயரில்லாத பொருள் எதுவும் இங்கே எங்களிடம் கிடையாது. மார்லோ: கேட்பது எதுவும் இந்த இடத்தில் இராது போலும்! ஆனால் தான் இருப்பதையே கேட்கிறேன். உன்... உன்... இதழமுதம்... சிறிது... செல்வி கேட்: (தெரியாத பாவனையில்) ஐயா, அப்படி ஒரு சரக்கின் பெயர் நான் கேட்டதில்லை... அது ஏதோ நீங்கள் பட்டணத்தில் பெறும் புது ஃபிரெஞ்சுச் சரக்குப் போலிருக்கிறது. மார்லோ: நான் கேட்பது பிரிட்டிஷ் சரக்கைத்தான். செல்வி கேட்: சென்ற பதினெட்டு ஆண்டுகளில் நான் கேள்விப் பட்ட மது வகைகளில் இப்படி யாரும் கேட்டதில்லை. மார்லோ: சென்ற பதினெட்டு ஆண்டுகளா? அப்படி யானால் உன் வயது என்ன? செல்வி கேட்: நல்ல பெண்ணுக்கும் நல்ல இசைக்கும் வயது கிடையாது என்பார்கள். இரண்டும் காண்பவர், கேட்பவர் தூரத்தைப் பொறுத்தவை என்று சொல்லலாம். மார்லோ: ஓகோ, அப்படியா, சரிதான். இங்கே இவ்வளவு தூரத்தில் நின்று நோக்கும் போது நாற்பது போல் தோன்றுகிறது (அணுகிவந்து) இப்போதுதான் நன்றாகத் தெரிகிறது முப்பதுக்கும் குறைந்ததென்று (பின்னும் வந்து) ஆகா, என்ன எடுப்பான கட்டிளம்பாவை! கண்ணே, நான் கேட்டதை எடுத்துக் கொள்கிறேன். (கையைப்பற்றி இதழோடு இதழ் இணைக்க முயலுகிறான்.) செல்வி கேட்: (பின்னால் விலகி) நீங்கள் தொலைவிலிருந்து பார்த்தால் போதும். பெண்களென்ன மாடா, குதிரையா- பல்லைப்பிடித்து வயது பார்க்க, (குறும்பு நகை தவழ) சற்றுமுன் செல்வி கேட்காசில் இங்கே வந்திருந்தார்களே, அவளை நீங்கள் இப்படியெல்லாம் பார்க்கவில்லையே. இங்கே துணிச்சல், அவளைக் கண்டால் அச்சம்! மார்லோ: (தனக்குள்) ஆகா, என்ன சாதுரியமான கிண்டல். (வெளிப்பட) அவளைக் கண்டால் அச்சமா? பெண்களைக் கண்டு யாராவது அஞ்சுவார்களா? ஆனால் குறுகுறுத்த பார்வையும் வெட்டிப்பேசி அழைக்கும் இளமை அழகுமுள்ள நீ எங்கே? அந்த மாறுகண் மண்பொம்மை எங்கே? செல்வி கேட்: (தனக்குள்) என் காலடியைக் கூடப் பார்க்கவில்லை. கண் மாறு கண்ணாம். ஆம் இப்போது மாறுகண்ணுடன் தான் பார்க்க வைத்திருக்கிறேன். (வெளிப்பட) ஐயா! தாங்கள் பெண்களுடன் மிகவும் பழகியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். மார்லோ: எல்லாம் உன்னைப் போன்ற அழகிகள் நட்பால் தான். உண்மையில் லண்டன் நகரத்திலுள்ள பல கலைக்கழகங்கள் எனக்கு அறிமுகம். அங்கே திருமதி மந்திராப், திருமதி ஸிகோ கோமாட்டி, பெருமாட்டி பிளாஸ்ஸிங் முதலிய நாகரிகப் பெண்மணிகளின் நட்புக்குரியவன் நான். அவர்கள் என்னைக் கேலியாக ‘வெண்கல முரசு’ என்பார்கள். ஆயினும் என் பெயர் சாலமான். செல்வி கேட்: அங்கே கலைக்கழகங்களெல்லாம் நல்ல பொழுது போக்குவதற்குரிய களியாட்டக் கூடங்களாகத்தான் இருக்குமென்று நான் எண்ணுகிறேன். அங்கே பெண்கள் வேலை எதுவுமே செய்ய மாட்டார்களோ? மார்லோ: ஏன் செய்ய மாட்டார்கள். அழகுக்கு அழகு செய்யும் பூ வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். நீ கூட நன்கு பூ வேலை செய்வாய் போலிருக்கிறதே. உன் கையுறையில் சொருகியிருக்கிறதே கைக்குட்டை, அதில் காணப்படும் பூ வேலைகள் எல்லாம் உன் கைவேலை தானா? செல்வி கேட்: ஆம் இதோ பாருங்கள். மார்லோ: (கையைப்பற்றி) ஆகா, அருமையான வேலை. இது ஆயிரம் முத்தம் பெறும் (கைக்கு முத்தம் கொடுக்கிறான்) செல்வி கேட்: போதும், போதும், யாராவது வந்து விட்டால்... மார்லோ: அப்படியானால் யாரும் வருமுன்பே... (இழுத்தணைத்து முத்தம் கொடுக்கிறான்) (திரு ஹார்காசில் நுழைந்து வியப்புடன் ‘ஆ’வெனக் கூவுகிறார். மார்லோ மறைந்து விடுகிறான்) திரு ஹா: வேலிக்கு ஓணான் சான்று கூறியது போல் நீ அவன் நாணத்துக்குச் சான்று கூறியது எதற்காக என்பது இப்போதுதான் விளங்குகிறது. செல்வி கேட்: அப்பா, அவரைக் குறை கூறத் தொடங்கி இப்போது என் மீது பாய்கிறீர்கள். அவர் நாணமுடையவர் என்று தான் இப்போதும் நான் நினைக்கிறேன். அவரைத் தூண்டித் துணிச்சலை உண்டு பண்ணியது நான்தான். எல்லாம் நீங்கள் விரைவில் அறிவீர்கள். (போகிறாள்) திரு.ஹா: (தனக்குள்) இப்போது அதுகள் துணிச்சல் இவளுக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது. எல்லாம் காலத்தின் கோளாறு. மார்ல்பரோக் கோமகன் காலத்துப் பெருமை யெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இந்த லண்டன் மாநகரம் பிரிட்டனின் பழம் பெருமைகளைக் கெடுக்கிறது. நாட்டுப் புறக் குடும்ப வாழ்க்கை கூட அலைக்கழிவுறத் தொடங்கிவிட்டது. (போகிறார்) நான்காம் காட்சி களம் 1 (திரு. ஹார்ட்காசில் மாளிகை. ஹேஸ்டிங்ஸும் செல்வி நெவிலும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். நேரம்: மாலை.) ஹேஸ் திருத்தகை சார்ல்ஸ் மார்லோ இன்று வருகிறாரென்று உனக்கெப்படித் தெரியும்? செ.நெ: அவரே இரண்டாவதாக எழுதிய கடிதத்தில் குறிப் பிட்டிருக்கிறார். ஹேஸ்: அவருக்கு என் செய்திகளெல்லாம் தெரியும். ஆகவே அவர் வருவதற்குள் நாம் விரைந்து சென்று விடவேண்டும். செ.நெ: சரி, நகைகளையெல்லாம் பத்திரப்படுத்தி விட்டீர்களா? ஹேஸ்: ஆம். அவை மார்லோவிடமே பத்திரமாக இருக்கின்றன. டானி வண்டி குதிரையுடன் வந்து ஏற்றியனுப்புவ தாகக் கூறியிருக்கிறான். நான் சென்று அவனைத் துரிதப்படுத்து கிறேன். நீ முன்னேற்பாட்டுடன் எனக்காகப் போய்க் காத்திரு. (போகிறாள். மார்லோ வருகிறான்) ஹேஸ்: வா மார்லோ, சரி, என்ன சேதி? நான் அனுப்பிய பேழையைப் பத்திரப்படுத்திவிட்டாயா? மார்லோ: நீ எதிர்பார்ப்பதைவிட மிகமிகப்பத்திரமான இடத்திற்கே அனுப்பிவைத்திருக்கிறேன். இத்தனை விலையுயர்ந்த பொருளைப் பெட்டியில் வைப்பது சரியா? ஆகவே நமது விடுதித் தலைவியிடமே அதை அனுப்பிவிட்டேன். ஹேஸ்: (தனக்குள்) திருமதி ஹார்ட்காசிலிடமிருந்து டானி அரும்பாடுபட்டுக் கொண்டு வந்த நகைப் பெட்டியை இந்தக் கோமாளி திரும்பவும் அவளிடமே கொடுத்து விட்டான். ஆனால் கோபப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை. தற்சமயம் அவள் நகையில்லாது வந்தாலென்ன, குடியா முழுகிப் போய்விடும். (வெளிப்பட) சரி, ஏது இத்தனை குஷி? மார்லோ: என் வாழ்விலும் காதல் இடம் பெற்று விட்டது! ஹேஸ்: என்ன, மீண்டும் செல்வி ஹார்ட்காசில்... மார்லோ: அந்த வரிந்து சுற்றிய துணிப் பொம்மையா? அவளைச் சொல்லவில்லை நான். இங்கே இடுப்பில் சாவிக்கொத்துடன் வருவாளே, ஒரு நல்ல துடுக்குக்காரப் பெண்... ஹேஸ்: இருந்திருந்து... மார்லோ: என் காதலி ஒரு விடுதிப் பெண்ணாகவேதான் இருக் கட்டுமே. ஆனால் அவள் அழகு, ஆகா! என்ன கரிய பெரிய விழிகள்! எத்தனை குறுகுறுப்பு! ஹேஸ்: போதும், அந்த அழகிக்காக நீ காத்திரு. நான் விரைவில் வருகிறேன். (செல்கிறான்) (செல்விகேட் அப்பக்கமாகச் செல்கிறாள்.) (வெளிப்பட) என் அன்பரசி, ஏன் இத்தனை வேகம். சற்று நில். உன்னிடம் ஒரு செய்தி கேட்க வேண்டும். செல்வி கேட்: கேட்பதை விரைவில் கேளுங்கள். நேரமாகிறது. நான் போகவேண்டும். மார்லோ: வேறொன்றுமில்லை, ஒரே ஒரு விளக்கம் வேண்டும். நீ யார்? இங்கே என்ன வேலை உனக்கு? செல்வி கேட்: (தனக்குள்) சிறிது சிறிதாகத்தான் விளக்க வேண்டும். அப்போதுதான் ஆளின் இயல்பை நன்றாக அறிந்து கொள்ள முடியும். (வெளிப்பட) நான் இங்கே வேலை செய்பவள்தான். ஆனால் வேலைக்காரியல்ல. இந்த வீட்டுப் பெருமாட்டிக்குத் தூர உறவு. மார்லோ: இந்த வீட்டுப் பெருமாட்டிக்கா? எந்த வீட்டுப் பெருமாட்டி? செல்வி கேட்: வேறு எந்த வீட்டுப் பெருமாட்டி இங்கே இருக்க முடியும்? திருமதி ஹார்ட்காசில்தான் இந்த வீட்டுக்குரிய பெருமாட்டி. மார்லோ: ஐயோ, இது ஹார்ட் காசில் குடும்ப மாளிகையா? விடுதியல்லவா? செல்வி கேட்: (குலுங்க நகைத்து) என்ன, விடுதியா? யாரையா அப்படிச் சொன்னது? இதைப் பார்த்தால் விடுதியைப் போலல்லவா இருக்கிறது உங்களுக்கு? மார்லோ: அந்தோ, யாரோ சரியாக ஏமாற்றிவிட்டார்கள். இது தெரியாமல் நான் முட்டாள்தனமாக அல்லவா நடந்து கொண்டு போய் விட்டேன்! ஏமாந்து நான் எத்தனை முறை திரு ஹார்ட்காசில் முன்னிலையில் மடத்தனங்கள் செய்துவிட்டேன்! இனி அவர் முகத்தில் எப்படி விழிப்பது...? ஆம் இன்றிரவே ஒருவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குப் புறப்பட வேண்டியதுதான்! செல்வி கேட்: ஊருக்கா? ஏன் போக வேண்டும்? உங்களுக்கு யாராவது தீங்கு செய்தார்களா? மார்லோ: ஒருவரும் ஒரு கெடுதலும் செய்யவில்லை. நான்தான் கோமாளித்தனமாக நடந்துவிட்டேன். உன்னைக் கூட ஒரு விடுதிக்காரப் பெண் என்று கருதித்தான் தவறாக நடத்திவிட்டேன். செல்வி கேட்: ஐயா, நீங்கள் சொல்வதைக் கேட்க எனக்குத் திகிலாயிருக்கிறது. என்னை ஒரு விடுதிக்காரப் பெண் என்று நினைக்கும்படி நான் ஏதாவது தப்பிதமாய் நடந்து கொண்டேனா? சொல்லுங்கள். மார்லோ: நீ ஒன்றும் அப்படி நடந்து கொள்ளவில்லை. நான் உன் கள்ளங் கபடமற்ற நடத்தையை உணர முடியாமல், உணர்ச்சி வசப்பட்டு உன்னை மதியாமல் நடந்து கொண்டேன். செல்வி கேட்: ஐயா, நீங்கள் என்னை எவ்வளவோ மதிப்பாகத்தான் நடத்தினீர்கள். எவ்வளவோ இனிய மொழிகளைப் பேசினீர்கள். ஆனால் இப்போது நீங்கள் மனம் வெறுத்துப் பேசும்படியாக நான் என்ன செய்து விட்டேன் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. என்மீது... என்மீது வெறுப்புக் கொண்டு (தேம்பித் தேம்பி அழுது கொண்டே) நீங்கள் இப்போது போய்விட்டால் என் நிலை என்னவாகும்? மார்லோ: (தனக்குள்) ஆ, இவள் உள்ளக் கனிவு என்னை உருக்குகிறது. இவள் கள்ளங் கபடமற்ற தன்மை, கனிவுறுங் கருணைமொழி கவருகிறது என்னை. (வெளிப்பட) அன்பே, என்னை மன்னிப்பாய். நான் இவ்வீட்டை விட்டுப் போய்த் தீரவேண்டும். ஆனால் காரணம் நீயல்ல, நான் உன்னை வெறுக்கவுமில்லை. மாறாக முன்னிலும் பன் மடங்கு என் விருப்பம் பெருகியிருக்கிறது. என் அகத்திலே அன்பு மலர்ந்திருக்கிறது. உண்மையில் இந்த வீட்டை விட்டுப் போகும்போது என் நிறைவில் என்றென்றும் நின்று நிலவுந் தகுதிபெற்ற பொருள் ஒன்று உண்டென்றால் அது நீதான் கண்ணே! செல்வி கேட்: (மகிழ்வுடன்) உண்மையாகவா? மார்லோ: ஆம். உண்மைதான். ஆனால் மாதரழகில் ஈடுபட்டு அந்த அழகுக்காகப் பெண்களைத் தண்டித்து, அழிக்க என் மனம் விரும்பவில்லை. பிறப்பு, கல்வி, செல்வம் ஆகியவற்றால் வேறுபாடு காணுமிடங்களில் நேரிடையாகத் தொடர்பு கொள்வதற்கு சமூகமதிப்பும், பெற்றோராணையும் இருபெருந் தடைக் கற்கள் என்பது உனக்குத் தெரியாதா? அவற்றை மீறிச் செயலாற்றும் ஆற்றலும் தற்போது என்னிடம் இல்லை. செல்வி கேட்: (தனக்குள்) இவர் உள்ளக்கனிவு, பெருந்தன்மை, நேர்மை ஆகிய யாவும் என் நெஞ்சில் நிறைந்து விட்டன. இவர் தகுதியில் ஒரு பகுதியைக்கூட என் கனவுகள் எட்டியதில்லை. (வெளிப்பட) அன்பரே, குடும்பத்திலும், கல்வியிலும் நான் செல்வி ஹார்ட்காசிலுக்கு இளைத்தவளல்ல. ஆனால் நான் ஏழை. என் ஏழ்மை இது வரை எனக்கு ஒரு குறையாகத் தோன்றவில்லை. இன்றுதான் அதுவும் ஒரு குறையாகத் தோன்றுகிறது. ஆனால் என்னளவில், எனக்கு இன்று ஆயிரம் பொன் வருமானம் இருந்தாலும்கூட அதை நான் செல்வி ஹார்ட்காசிலுக்கே விட்டுக் கொடுத்துவிடுவேன், அவள் தகுதியைப் பெற. மார்லோ: (தனக்குள்) என்ன அரும் பண்புகள் வாய்ந்த பெண்மை யுள்ளம்! ஆனால் என் உறுதியை நான் இழந்துவிடக் கூடாது. (வெளிப்பட) அன்பே என் உள்ளத்தை உனக்கு விளக்கமாக எடுத்துக் கூறிவிட்டேன். தற்போது நானும் செல்வந்தனாக இருக்கிறேன். ஆகவே என்னை மன்னித்து விடு. மறந்தும் விடு. (போகிறான்.) செல்விகேட்: (தனக்குள்) என் பெண்மைக்கு ஆற்றலிருக்கு மானால், இறங்கிவந்து நாடகமாடி அவர் மன ஆழமறிந்தது போல, அவரை மணந்து இன்பம் பெறவும் வழி காண்பேன். இது உறுதி. (செல்கிறாள்.) களம் 2 (திருமதி ஹார்ட்காசிலின் அறை; திருமதி ஹார்ட்காசில் நினைவில் ஆழ்ந்திருப்பது போல் அமர்ந்திருக்கிறாள். அவளுக்குத் தெரியாமல் ஒளிந்து காதல் புரிகிற பாவனையில் டானியும் செல்வி நெவிலும் நடிக்கின்றனர். நேரம் முன்னிரவு) திருமதி ஹா: (தனக்குள்) என்ன விந்தை! நகைப்பெட்டி திடீரென்று காணாமற் போனது, எப்படி மார்லோ மூலமாக என் கைக்கு வந்தது? இந்த மர்மம்தான் சிந்தைக்கு விளங்கவில்லை. எல்லாம் வேலைக்காரர்களின் குறும்புதான் என்கிறான் டானி. ஆனால் இவர்களை ஒரு முடிபோட்டு ஒன்று சேர்த்து வைக்காதவரை இம்மாதிரி கவலைகள் எனக்கு இருந்து கொண்டுதானிருக்கும், அவர்களும் காதலித்துக் கொண்டு தானிருக்கின்றனர். ஆனால் இளம் பிஞ்சுகள்! அவர்கள் கொஞ்சுவது எனக்குத் தெரியாதென்று நினைத்து என் பின்னாலேயே இருந்து குலாவுகின்றனர். (அவர்கள் பக்கம் திரும்பி, வெளிப்பட) இப்போதே என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். இனி மணமும் முடிந்து விட்டால்... டானி: அம்மா, அப்படியானால் நான் மணம் செய்யாமலே இருந்து விடுகிறேன். திருமதி ஹா: வேண்டாம்டா கண்ணு. எனக்காக நீ திருமணம் செய்யாமலிருக்க வேண்டாம். மேலும் நெவில் வருந்துவாள். (நெவில், டானியைக் கிள்ளுகிறாள்.) டானி: அடேயப்பா! என்ன நெவில், இப்படியா கிள்ளுவது? நீ எனக்கு உண்மையிலேயே வேண்டாம். திருமதி ஹா: பார்த்தாயா, அவளைக் கட்டமாட்டேன் என்றால் அவள் இப்படித்தான் கிள்ளுவாள். (டிக்கரி வருகிறான்.) டானி: வா டிக்கரி, என்ன செய்தி? டிக்கரி: உங்களுக்கு ஒரு கடிதம். டானி: யாரிடமிருந்து? டிக்கரி: இது இரகசியம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். செ.நெ: (தனக்குள்) ஆ, இது ஹேஸ்டிங்ஸ் அனுப்பியதாகத் தான் இருக்கவேண்டும். எங்கே அத்தை பார்த்து விடப் போகிறாளோ தெரிய வில்லையே! டானி: (வாசிக்கிறான்) “தோழர் அந்தோனி லம்ப்கின் அவர்களுக்கு,” முகவரி மட்டும் தெரிகிறது. மற்ற ஒன்றும் புரியவில்லை... இது... அ... இது... செ.நெ: வாசித்துவிட்டான். வாசித்து! அது எப்படி உனக்குப் புரியும்? எழுதப்படிக்கத் தெரிந்தால்தானே! நீ வாசித்தது போதும். இப்படிக் கொடு. டானி: அம்மாவிடம் கொடு. விபரமாக வாசிப்பாள். செ.நெ: (பல்லை நெறித்து) சும்மா கிடடா. டானி: (அவள் குறிப்பறியாமல்) சும்மா அம்மாவிடம் கொடு. திருமதி ஹா: (பறித்து வாசிக்கிறாள், செல்வி நெவில் நடுங்கு கிறாள்.) அருமை நண்பா, என் கண்மணி நெவிலுக்காகத் தோட்டத்தின் கோடியில் காத்திருக்கிறேன். அவளை இப்பக்கம் அனுப்பிவிட்டு நீ கூறியபடி குதிரை, வண்டியுடன் விரைந்து வா. சில காரணங்களை முன்னிட்டு உடனே புறப்பட்டுப் போக வேண்டியிருக்கிறது. கிழவிக்குத் தெரியாமல் காரியம் நடக்கட்டும். என் நெவிலும் நானும் உன் உதவியை என்றும் மறவோம். என்றும் உன் நண்பன், ஹேஸ்டிங்ஸ். (உரக்க) அட போக்கிரிகளே! பட்டப்பகல் வேசம் போட்டா என்னை ஏய்க்கிறீர்கள். (செல்வி நெவிலை நோக்கி) நீலி, என் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவ எங்கிருந்து வந்தாய்? வா, உனக்கு இனி வரிசை செய்கிறேன். (டானியை நோக்கி) அட மானங்கெட்ட பயலே! உன்னை வளர்த்து ஆளாக்கினதற்கு நீ செய்யும் நன்றியா இது? வறட்டுப்பயலே, இரு, இதோ வந்து உங்களை என்ன செய்கிறேன், பார். (கடுஞ்சீற்றத்துடன் போகிறாள்.) செ.நெ: நான் எத்தனை தடவை குறிப்புக் காட்டினேன், கடிதத்தைக் கொடுக்காதே என்று. நீ குறிப்பறியாத கும்மட்டிக்காய். குறும்பு பண்ணத் தான் தெரியும். இப்பொழுது கடிதத்தைக் கொடுத்துவிட்டு மண்கூவை மாதிரி விழிக்கிறாய். (மார்லோவும் ஹேஸ்டிங்ஸும் வருகின்றனர்.) ஹேஸ்: திருமதி ஹார்ட்காசில் வெறிபிடித்தவளைப் போல் என்னைத் திட்டுகிறாள். இதற்குக் காரணம் (டானியை நோக்கி) நீதான். இது முழுதும் உன் கையாலாகாத்தனம், டானி. மார்லோ: அது மட்டுமா? இந்த வீட்டிலே தலை காட்ட முடியாதபடி செய்துவிட்டாய்! குறும்புக்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கவேண்டும். டானி: ஓகோ, மூன்று பேரும் கூடிக்கொண்டு குற்றஞ் சாட்டு கிறீர்களோ? சரி, நான் குறும்பன்தான். ஆனால் உங்களை விட அறிவில் கொஞ்சமும் குறைந்தவனல்ல என்பதைப் பொழுது விடிவதற்குள் புலப் படுத்துகிறேன். போங்கள். (மூவரும் செல்கின்றனர்.) (தனக்குள்) இந்த உலகத்திலே மூளையுள்ளவனுக்குக் காலமில்லை. அனுபவிக்கத் தெரியாத பேராசைக் கிழங்களிடம் பணம். கையாலாகாததுகளிடம் படிப்பு, பகட்டு, பாமர மக்களோ வெறும் ஆட்டுக் கூட்டங்கள். ஒரு டானி இருந்து இதுகள் பூராவையும் ஆட்டி வைக்காவிட்டால்?... ஆம். அதுதான் சரியான வழி. என்னை நாவாரத் திட்டிய இதே மூவரும் என்னைப் புகழாவிட்டால் என் பெயர் டானி இல்லை. ஐந்தாம் காட்சி களம் 1 (திரு. ஹார்ட்காசில் மாளிகை: திரு. ஹார்ட் காசிலும், திருத்தகை சார்லஸ் மார்லோவும் உரையாடுகின்றனர். நேரம்: முன்னிரவு) திரு.ஹா: ஆகாகாகா! அஃகஃகஃ! என்ன நாடகம், சார்ல்ஸ் என்ன நாடகம்! உங்கள் மகன் பண்ணின அட்டகாசத்தையும், அதிகார உத்தரவு களையும் நினைக்க நினைக்கச் சிரிப்பாயிருக்கிறது. நீங்கள் விளக்கம் தருவதற்கு முன் அவன்மீது என் உள்ளத்தில் ஒரே கவலையும் கொந் தளிப்பும்தான். திருத்தகை சார்ல்ஸ் மார்லோ: கவலை எதற்கு ரிச்சர்டு! அடக்கத் தையும் அமைதியையும் காணோமென்றா? என்னளவில் அவன் அடக்கத்தாலும், அளவுக்கு மீறிய அமைதியாலும் எங்கே பெண்ணின் உள்ளத்தைக் கவரமுடியாமல் போய்விடுகிறதோ என்பதுதான் என் ஓயாத சிந்தனை. திரு.ஹா: நண்பரே, இனி அந்தக் கவலை வேண்டாம். நம் பிள்ளைகள் இணைப்பால் நம் நட்பு மணம் பெறும் என்ற மகிழ்ச்சி கடந்த நிகழ்ச்சிகள் யாவற்றையும் என் உள்ளத்திலிருந்து மறக்கடித்து விட்டன. அத்துடன் இருவர் செல்வநிலையும் ஒரே நிறைபெறாது காணப்பட்ட போதிலும் என் மகள் தம் புதல்வன் நேசத்தைப் பரிபூரணமாப் பெற்றுள்ள தாகக் கூறுகிறாள். திரு.சா. மார்லோ: செல்வநிலைப்பற்றிச் சிந்தனை ஏன் நண்பரே. பிள்ளைகள் முற்றிலும் மனமொத்துப் போகிறார்களா என்பதை இன்னும் கவனிக்க வேண்டும். தங்கள் செல்வி ஏனைய பெண்களைப் போலத் தன் அழகின் செருக்கால் அவசரப்பட்டு அதிக நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதற்கு முற்றும் அவன் சொற்களை நம்பி விடலாமா? திரு.ஹா: மார்லோவின் காதல் உறுதியைப் பெற்று விட்டதாக அவள் பூரிப்போடு நேரிடையாகக் கூறுகிறாள். திரு.சா. மார்லோ: எனக்கென்னவோ அதை நம்ப முடியவில்லை. (மார்லோ வருகிறான்.) மார்லோ: (திரு ஹார்ட் காசிலை நோக்கி) ஐயா, தவறாகக் கருத்துக் கொண்டு இங்கே தாறுமாறாக நடந்து கொண்டதற்கு வருந்துகிறேன். அதற்காக அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, மனமார மன்னிக்கும்படி உங்களையும் வேண்டுகிறேன். திரு.ஹா: நீங்கள் அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். வரப்போகும் இனிப்புக்குச் சுவையூட்டும் சாரம் என்றே இதை நாங்கள் கருதுகிறோம். அதிருக்கட்டும். செல்வி ஹார்ட்காசிலுடன் நீங்கள் உளங்கலந்து பேசிக் கொண்டீர்கள் என்பதை உங்கள் தந்தை நம்ப மறுக்கிறார். மார்லோ: செல்வி ஹார்ட்காசிலை நான் இன்னும் நேரில் சரியாகக் கூடக் காணவில்லை. திரு.ஹா: என்ன நேரிடையாகக் கண்டது கூட இல்லையா? ஏன் இவ்வளவு வெட்கப்படுகிறீர்கள். இரண்டு குடும்பமும் ஒத்துப் போன பின்பு உங்கள் சந்திப்பைக் கூறுவதற்கு அஞ்சுவானேன்? மார்லோ: நமது ஆசார முறையில் ஒரு தடவை சந்தித்தேன். ஆனால் முகத்தைக்கூட நான் ஏறிட்டுப் பார்க்கவில்லை. வெட்கத்தினால், உளங்கலந்து பேசவும் முடியவில்லை. நீங்கள் கருதும் அத்தகைய உணர்ச்சி ஏற்படுமென்றும் எனக்குத் தோன்றவில்லை. நான் போய் வருகிறேன். (செல்கிறான்) திரு. ஹா: (தனக்குள்) ஏது, பேர்வழி புளுகுவதிலும் மிகவும் வல்லவனாயிருப்பான் போலும்! இவன் கையால் அவளைப் பற்றியதை நானே நேரில் பார்த்தேன். நான் பார்த்ததை இவனும் பார்த்தான். அப்படியிருந்தும் நேரில் பார்த்த என்னிடமே எவ்வளவு துணிவோடு புளுகுகிறான். இருக்கட்டும். (வெளிப்பட) அவன் கூறுவது எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது. திரு.சா. மார்லோ: அவன் நேரிடையாகத்தான் பேசுகிறான். அவன் பேச்சில் கபடம் கடுகளவும் இல்லை. அப்படி இருப்பதாக எனக்கு இதுவரை எண்ணமும் கிடையாது. நீங்கள் பேசுவதுதான் எனக்குப் புதிராக இருக்கிறது. திரு.ஹா: இருக்கலாம். ஆயினும் கேட் என்னிடம் நேரிடையாகக் கூறியதையும் என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அவளும் துணிந்து பொய் கூறுபவளல்ல. ஆயினும் பரவாயில்லை. இன்னும் பார்க்கலாம். (செல்வி ஹார்ட்காசில் வருகிறாள்.) கேட், சார்லஸ் மார்லோ உன்னுடன் கலந்து பேசிக் கொண்ட துண்டல்லவா? செல்வி கேட்: ஆம், அப்பா, ஒரு முறை அல்ல, பல தடவை உள்ளங் குழைந்து பேசியிருக்கிறார். திரு. ஹா: அவன் உன்னிடம் நேசமும் பாசமும் என்ற உறுதி மொழிகள்... செல்வி கேட்: ஆயிரம் தந்துள்ளார். அப்பா, உண்மையில் அவர் என்னிடம் மாறாக் காதல் கொண்டிருக்கிறார். திரு. சா. மார்லோ: (செல்வி ஹார்ட்காசிலை நோக்கி) அப்படி என்னதான் உன்னிடம் பேசினான்? செல்வி கேட்: காதலர் வழக்கமாகப் பேசுகிறபடியேதான் அவரும் பேசினார். மதியே, மலரே , மாங்குயிலே என்று இனிக்க இனிக்கப் பேசி என்னையே மணப்பதாகக் கூறினார். திரு.ஹா: சரி, நீ போய் உன் அறையிலிரு. நாங்கள் பின்னால் வருகிறோம். (போகிறாள்) திரு. சா. மார்லோ: நண்பரே, நீங்கள் நினைக்கிறபடி இட்டுக் கட்டி அழகாகப் பேசுவது சார்லஸ் அல்ல. உங்கள் செல்வி கேட்தான். சார்ல்ஸுக்கு இத்தகைய பேச்சுக்களே பேசத் தெரியாது. திரு. ஹா: எல்லாம் விரைவில் வெளிச்சமாகிவிடும். வாருங்கள் உணவுண்ணச் செல்வோம். (போகிறார்கள்) களம் 2 (திரு ஹார்ட்காசில் மாளிகையைச் சார்ந்த தோட்டம். ஹேஸ்டிங்ஸ் யாரையோ எதிர்பார்த்து நிற்கும் பாவனையில் இருக்கிறான். காலம்: இரவு.) ஹேஸ்டிங்ஸ்: (தனக்குள்) சே, எவ்வளவு நேரம் காத்திருக்கிறது! அவள் இனி எங்கே வரப்போகிறாள்? கைக்கு வந்த கனியைத் தட்டி யெறிந்தவன் மீண்டும் கனி கொண்டு வருவான் என்று நானும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு மடையன். (திடுமென டானி முன் வந்து நிற்கிறான். சேறும் அழுக்கும் படிந்த ஆடையுடன்) டானி: நிச்சயம் நீர் ஒரு மடையர் தாம். ஆனால் என்னை நம்பியதால் அல்ல; நம்பாததால். ஹேஸ்: நீதான் உண்மையான நண்பன். சொன்னபடி தவறாமல் வந்து விட்டாய். ஆமாம், உன் ஆடையில் ஏன் சேறும் அழுக்கும் படிந்திருக்கின்றன? டானி: இரவு முழுவதும் ஆறு குளம் என்று பாராமல் வண்டி யோட்டியதன் விளைவுதான்! ஹேஸ்: இரவில் யார் யாரை வண்டியில் அழைத்துச் சென்றாய்? அவ்வளவு அவசரமான வேலை என்ன? டானி: எல்லாம் உங்கள் காரியத்தில் தலையைக் கொடுத்ததால் வந்த வம்பு- நான் பம்பரமாய்ச் சுழலுகிறேன். பறிகொடுத்த நகைப் பேழை திரும்பவும் என் சின்னம்மாவுக்குக் கிடைத்தாலும் கிடைத்தது, என் உயிரையே வாங்கி விட்டாள்! அவளைப் பிடித்திருந்த கிலியைப் போக்க, தன் தாய் வீட்டுக்கே நெவிலுடன் ஓடிப் போய் விடத் துடியாய்த் துடித்தாள். வேறு வழியின்றி அழைத்துச் செல்கிறேன். ஹேஸ்: இன்னும் பயணம் முடியவில்லையா? டானி: அதற்குள்ளாகவா? அது நாற்பது நாழி தொலைவு இருக்கிறது. இரவு பூராவும் பிரயாணம் செய்தாலும் போய்ச் சேருவது முடியாத செயல். ஹேஸ்: டானி, நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை. பயணம் இனித்தான் துவங்க வேண்டுமென்கிறாய். பயணத்தால் ஆடை சேறாகி விட்டதென்றாய். இதில் எது உண்மை? டானி: இரண்டும் உண்மைதான். பயணத்தின் நடுவில் தான் இங்கே வந்திருக்கிறேன். சென்ற இரண்டரை மணி நேரத்தில் இருபத்தைந்து நாழி தொலை ஓட்டியிருக்கிறேன். ஹேஸ்: இருபத்தைந்து நாழி சென்றவன் இங்கே எப்படி வந்து தொலைந்தாய்? டானி: விபரம் புரியாமல் அவசரப்படுகிறீர்களே, இருபத்தைந்து நாழியும் நான் ஒழுங்காகச் சின்னம்மா விருப்பப்படி வண்டியைச் செலுத்தியிருந்தால், இங்கே வந்து உங்களைப் பார்க்கவும் முடியாது; உங்கள் நெவிலும் இங்கே திரும்பி வந்திருக்க முடியாது. எல்லாம் உங்கள் நன்மையைக் கருதித்தான் இந்த இடத்தைச் சுற்றி இருபத்தைந்து நாழியும் ஓட்டியிருக்கிறேன். ஹேஸ்: உன் பேச்சு இன்னும் புதிராகத்தான் இருக்கிறது. டானி: (தனக்குள்) இந்தப் படித்த முட்டாள்களுக்கெல்லாம் இப்படித்தான், கொஞ்சமும் குறிப்புத் தெரிவதில்லை. (வெளிப்பட) ஐயா, உங்களை ஏமாற்றி எங்கள் சிற்றப்பா வீட்டுக்கு அனுப்பியது போல, எங்கள் சின்னம்மாவையும் ஏமாற்றி இவ் வீட்டையே சுற்றிச் சுற்றி வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கிறேன். உங்கள் நெவிலும் இங்கேயே தானிருக்கப் போகிறாள். இப்போது புரிந்ததா? ஹேஸ்: அடேயப்பா! நீ புத்தியில் முதல் தரப் புலிதான்! டானி: இப்போது தெரிந்ததா? ஆனால் நான் இதனால் படும்பாடு அந்த நாய்கூடப் படாது. ஹேஸ்: டானி, நீ என் ஒப்பற்ற நண்பன். உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்! டானி: நேற்றுத் திட்டினீர்கள். இப்போது காரியம் விளங்கும் போது, நான் நண்பனாகக் காணப்படுகிறேன். உங்கள் நன்றி பொறுமையுடனும் திறமையுடனும் காரியம் முடிப்பது தான். நான் நெவிலை உங்களுக்காகக் காக்க வைத்திருக்கிறேன். பிரயாணத்தில் வெறுப்படைந்து சிற்றன்னை இடையில் தங்க நினைக்கிறாள். இச்சமயம் உங்களுக்குத் திரானியிருந்தால் நெவிலை அழைத்துச் சென்று விடுங்கள். கிழவியை நான் சரிப்படுத்திக் கொள்கிறேன். களம் 3 (திரு. ஹார்ட்காசில் மாளிகையிலிருந்து சிறிது தொலைவில் திருமதி ஹார்ட் காசில் வண்டியில் அமர்ந்திருக்கிறாள். டானி வண்டியை ஒட்டிக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறான். காலம்: இரவு.) திருமதி ஹா: அப்பா எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. நெவிலை இறக்கிவிட்டு அவளை எங்கேயோ ஓடவிட்டுவிட்டாய். வண்டி தடால் தடாலென்று தூக்கிப் போட்டு எலும்புகள் அதிகமாக மீதியில்லாமல் நொறுங்கி விட்டன. போதும் பயணம். இங்கேயே தங்கிவிடலாம் என்று எண்ணுகிறேன். டானி: எல்லாம் உன்னால்தானம்மா? பகல்வரை பொறுத்திருக்க மாட்டேனென்னு இரவில் பயணம் செய்து, இப்போது நாற்பது நாழிக்கு அப்பால் நடுக்காட்டுக்கு வந்திருக்கிறோம். உனக்கு மண்டையுடைச்சான் திடல் தெரியுமா? திருமதி ஹா: ஐயய்யோ, அது திருடர், கொலைகாரர் மிகுந்த இடமாயிற்றே! அங்கா வந்திருக்கிறோம்? டானி: அங்கேதான் வந்திருக்கிறோம். ஆனால் அஞ்ச வேண்டியதில்லை, அம்மா. இங்குள்ள ஐந்து கொள்ளைக் காரர்களில் இருவரைத் தூக்கிலிட்டு விட்டார்கள். போக மூன்று பேர்கள்தான் இருக்கிறார்கள் அவர்களால் நம்மைக் கண்டுபிடிக்க முடியாது... ஆ அதோ நம்மைப் பின்னால் தொடர்வது யார்?... அடடா, அது வெறும் மரந்தான். நான் ஆளென்று எண்ணி விட்டேன். அம்மா, நீ ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம். திருமதி ஹா: அப்பா, அச்சமே போதும். என்னைக் கொல்ல! டானி: அம்மா, அதோ அந்தப் புதருக்குள் ஒரு தலைப்பாகை தெரிகிறதே. திருமதி ஹா: ஐயோ, நான் என்ன செய்வேன்? டானி: அம்மா அது ஒன்றுமில்லை. நீ கலவரப்பட வேண்டாம். திருமதி ஹா: டானி, அதோ பார். உண்மையிலேயே ஒரு மனிதன் வருகிறான். அவன் கண்ணில் பட்டால் போச்சு, போ! டானி: (தனக்குள்) ஓகோ, வருகிறது சிற்றப்பாதான். சரி, வரட்டும். சரியான நாடகம் ஆடிவிட வேண்டும். (வெளிப்பட) அம்மம்மா, அவனிடம் துப்பாக்கியிருப்பதாகத் தெரிகிறது. நீ இறங்கிப் புதரில் மறைந்துகொள். நான் அவனைச் சரிப்படுத்தி விடுகிறேன். ஆனால் ஆபத்து வருவதாயிருந்தால் நான் செருமுவேன். மூன்று தடவை செருமினால் மிகவும் ஆபத்து என்று பொருள். நீ மட்டுமாவது ஓடிவிடு. திருமதி ஹா: (அழுகுரலில்) அப்படியே செய்கிறேன், டானி. (சிறிது தொலைவிலுள்ள ஒரு புதருக்குள் சென்று மறைந்து கொள்கிறாள். திரு ஹார்ட் காசில் வருகிறார்) திரு ஹா: ஆ, டானி! நீ எங்கே இப்படி? அம்மாவையும் நெவிலையும் அழைத்துச் சென்றதாக அல்லவா கேள்விப்பட்டேன். நீ மட்டும் வருகிறாய். அவர்கள் எங்கே? டானி: அவர்களை பெடிக்ரி அம்மாமி வீட்டில் கொண்டு விட்டிருக்கிறேன். அஃகஃ...! (செருமுகிறான்) திருமதி ஹா: (தனக்குள்) ஐயய்யோ, பையனுக்கு ஆபத்து வருகிறது போலிருக்கிறது. திரு.ஹா: என்னடா எல்லோரிடமும் புளுகுவது மாதிரி என்னிடமும் புளுகுகிறாய். பெடிக்ரி அம்மா வீடு நாற்பது நாழி தூரத்திலிருக்கிறது. மூன்று மணி நேரத்திற்குள் எப்படிப் போய்த் திரும்ப முடியும்? புளுகினாலும் கூடப் பொருந்தும் படியாகப் புளுக வேண்டாமா? டானி: ஓடுகிற குதிரை அரபிக் குதிரையாயிருந்தால் நீண்ட தூரமும் கிட்ட வந்துவிடும் என்பார்கள். அதிலும் ஓட்டுபவன் டானியாயிருந்தால் தூரமே தோன்றாது. அஃகஃ! திருமதி ஹா: ஐயோ, பையனுக்கு மிகவும் ஆபத்துப் போலிருக்கிதே (உரத்து) ஐயோ! டானி: வேறு யாருமல்ல. அஃகஃ! ‘நான் எனக்குள்ளேயே பேசிக்கொண்டிருக்கிறேன். அஃகஃ- நாற்பது நாழி தூரம் மூன்றுமணி நேரத்தில் நடந்து வந்ததால் உடல்நலமில்லை. மேலும் குளிர் மிகுதி. வீட்டுக்குச் செல்வோமா அப்பா? அஃகஃ. திருமதி ஹா: ஐயோ, ஐயோ! திரு.ஹா: கட்டாயம் மற்றொரு குரல்தான். புதரிலிருந்து கேட்கிறது. போய்ப் பார்க்கிறனே. டானி: ஐயோ, அங்கே போகவேண்டாமே! (திரு-ஹார்ட்காசில் புதர் நோக்கிச் செல்கிறார்.) திருமதி ஹா: (எழுந்து வந்து) ஐயா, என் பிள்ளையை விட்டுவிடு. இதோ என் பணத்தையும் நகையையும் தந்து விடுகிறேன். காவலரிடம் ஒன்றும் சொல்லமாட்டேன். என் பிள்ளையை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடு. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. திரு.ஹா: இது யாரது? - ஆ, டாரதி! இது என்ன கோலம்? என்ன நாடகம் இது? திருமதி ஹா: டிக், நீங்களா? நான் திருடன் என்றல்லவா நடுநடுங்கினேன். நீங்கள் எங்கே இவ்வளவுதூரம் வந்தீர்கள்? அந்தோ என்னைத் தேடிக் கொண்டா வந்தீர்கள்? திரு.ஹா: டாரதி உனக்கென்ன பைத்தியமா? நம் வீட்டுத் தோட்டத்தின் பின் இருக்கிறாய். இவ்வளவு தூரம் என்று எந்த அர்த்தத்தில் கேட்கிறாய்? திருமதி ஹா: ஆ, நம் வீட்டுப் பக்கமாக இருக்கிறேனா? (சுற்று முற்றும் பார்த்துவிட்டு) ஆம், இதோ நம் தோட்டத்துப் பின்பக்க வாசல். எல்லாம் இப்போதுதான் தெரிகிறது! இந்த டானிப்பயல் வண்டியைச் சுற்றிச் சுற்றி ஓட்டி எங்களை ஏமாற்றியிருக்கிறான். அடே, டானி! திரு ஹா: அவனை ஏன் குறை சொல்லுகிறாய்? எல்லாம் நீ செல்லங் கொடுத்துக் கொடுத்துக் கெடுத்த கேடுதான். திருமதி ஹா: (சீற்றத்துடன்) ஏண்டா டானி, போக்கிரிப் பயலே! உன்னை வளர்த்த பாவத்திற்காகவா இப்படி ஏமாற்றுகிறாய்? இதோ உன் எலும்பை முறிக்கிறேன், பார். டானி: (சுற்றி ஓடி) அம்மா, அப்பாவே சொல்கிறார், நீதான் என்னைக் கெடுத்தாயென்று, ஊரிலும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. (ஓடுகிறான். திருமதி ஹார்ட்காசிலும் பின்பற்றுகிறாள்.) திரு ஹா: பையன் பைத்தியக்காரக் கோமாளிதான். ஆனால் அவன் சொல்வதிலும் பொருள் இருக்கிறது. (செல்கிறார்.) களம் 4 (ஹார்ட் காசில் மாளிகை. திருத்தகை சார்ஸ் மார்லோவும் செல்வி ஹார்ட் காசிலும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். நேரம்: இரவு.) திரு.சா. மார்லோ: கேட், நீ சொல்வதுதான் உண்மை என்று ஒப்புக்கொண்டால், சார்லஸ் மனந் துணிந்த பொய்யன் என்று ஒப்புக் கொள்ளத் தயாராயிருக்க வேண்டும். அல்லது இதற்கு நேர்மாறாக அவன் நேர்மையுடையவன் என்று நம்பலாமென்றாலோ, நீ கூறுவது பொய்யென்று கருதியாக வேண்டும். இரண்டும் எனக்கு மனவருத்தம் தரக்கூடியவைகளாக இருப்பதுதான் பெரிய தொல்லையாக இருக்கிறது. செல்வி கேட்: தாங்கள் கூறுவது உண்மையே. அதற்குத் தான் நீங்களும் அப்பாவும் மறைந்திருந்து எங்கள் பேச்சைக் கேட்கும்படி கோருகிறேன். அதோ அப்பாவும் வந்து விட்டார். (திரு. ஹார்ட்காசில் வருகிறார்.) திரு. சா. மார்லோ: வாருங்கள் தோழரே, கேட் கூறும் திட்டந்தான் உண்மை நிலையை உணரச் சரியான வழியாகத் தோன்றுகிறது. நாம் இப்படி திரைக்குப் பின்னால் அமர்ந்து கவனிப்பது நலமெனக் கருதுகிறேன். (திரைக்குப்பின் போய் இருவரும் அமருகின்றனர்) செல்வி கேட்: (தனக்குள்) இதுவரை என் வெற்றிக்காக ஆள் மாறாட்டமும், குரல் நடிப்பும் தேவைப்பட்டன. இப்போது அவர் வெற்றிக்காக இந்த ஏற்பாடு தேவைப்படுகிறது. அதற்காக என் காதலரை இப்படிப் பொறிக்குள் கொண்டு வந்து சிக்க வைத்திருக்கிறேன். டானி மாட்டி வைத்த பொறியை விட என்பொறி ஒன்றும் கெடுதல் செய்யப் போவதில்லை. எல்லாம் அவர் நன்மைக்குத்தான். இதோ அவரும் வந்து விட்டார். நான் எதிர்பார்த்தபடியே என்னிடம் விடைபெற்றுப் போக வருகிறார். (மார்லோ வருகிறான்) மார்லோ: அன்பே, நான் யாரிடம் விடைபெற்றுக் கொண்டு போனாலும் போகாவிட்டாலும், என் ஆருயிரைத் தனிமையில் கண்டு விடைபெற்றுச் செல்லாவிட்டால் என் மனம் ஒரு நிலையில் இராது. எனவே என் உயிரை நாடி ஓடி வந்தேன். விடைகொடு, கண்ணே! இந்த வீட்டில் என்னால் நிகழ்ந்த எதிர்பாராத அமர்க்களத்திற்குப் பின் நான் இனி இருக்க முடியாது. ஆகவே போகிறேன். ஆனால் உண்மையாய்ச் சொல்கிறேன். இம்மாளிகையை விட்டுப் போகும் போது, உன்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கிறதே என்ற ஒன்றுக்குத்தான் நான் மிகவும் வருந்துகிறேன். செல்வி கேட்: அன்பரே, தவறுவது மனித இயல்பு. நீங்கள் வேண்டுமென்று தவறு செய்யவில்லை. தவற்றைக் கண்டதும் வருந்துகிறீர். இன்னும் இரண்டு நாளில் எல்லாம் சரிப்பட்டு விடும். இன்று நீங்கள் காட்டும் வருத்தமே உங்கள் நிலையைச் சரிப்படுத்தித் தவறுகளை எல்லாம் மறக்கடிக்கும். இது உறுதி. மார்லோ: (தனக்குள்) ஆ, இவள் அறிவு எத்தனை நிறைவுடையது. இவளுடன் பழகும் ஒவ்வொரு வினாடியும் இவள் தகுதியும் வளருகிறதேயன்றிக் குறையவில்லை. (வெளிப்பட) என் தவறுகள்தான் தற்சமயம் என்னைக் கட்டுப்படுத்துகின்றன. நான் போய்த் தீரவேண்டும். ஆனால் என் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்ட ஆர்வத்தை இனி நெடுநாள் அடக்கி அழித்து விடமுடியாது. பெரியோர்களுக்காக நான் எப்போதும் வாழ முடியுமா? என் உணர்ச்சி என்னை மீறி வளர்கிறது. இதற்குமுன் செல்வம், கல்வி, சமூக மதிப்பு ஆகிய எத்தனை தடைகள் இருந்தாலும் நான் அவற்றை மீறத் துணிந்துவிட்டேன். இதுவே என் முடிந்த முடிபு. செல்வி கேட்: சரி, உங்கள் உணர்ச்சி எவ்வழி நாடுகிறதோ அவ்வழி தாங்கள் செல்லுவது பற்றி எனக்கும் மகிழ்ச்சியே நான் வருகிறேன். (போக முயல்கிறாள். மார்லோ மெல்லத் தடுக்கிறான்.) மார்லோ: (கனிந்த குரலில்) அம்மணி, என் உள்ளம் நாடிய இடம் வேறு எங்கும் இல்லை. இதோ என் முன் நிற்கும் அழகு வடிவத்தைச் சுற்றித்தான் என் உள்ளம் ஓடுகிறது. இதில் குற்றம் என் கண்ணினுடையது அன்று; உன் அழகினுடையது. உன்னைக் கண்ட வினாடியிலேயே என் கண்கள் உனக்கு அடிமையாகி விட்டன. உன்னுடன் போய் பேச, பழகப் பழக என் உள்ளமும் உணர்வும் அது போலவே உன் வசமாகி விட்டன. இதிலும் குற்றம் என்னுடையதல்ல; உன் நடையழகு. பண்பழகு. அறிவுத் திறம் ஆக யாவும் என்னைச் சிறை செய்கின்றன. உன் எளிமையில் புதிய புதிய நளின நயம் காண்கிறேன். உன் இயற்கை எழிலில் புதிய புதிய நெளிவு நயங்களைக் காண்கிறேன். உன் துணிச்சலில் நான் என் காதலுக்காக உறுதியைப் பெறுகிறேன். வாய்மையின் நேர்மையை அது எனக்குக் காட்டுகிறது. செல்வி கேட்: (தனக்குள்) என் காதுகள் என்னை ஏமாற்று கின்றனவா? முகம் கவிழ்த்து நின்ற செல்வர் எங்கே, கைப்பிடித்திழுத்துக் கவிதையை வாரிப்பொழியும் இக்கலைக் கடல் எங்கே? மார்லோ: உன் வாய் மொழி கேளாமலே என் வாய் திறந்து நான் பேசிவிட்டேன். உன் முடிவு எதுவாயினும் பரவாயில்லை. பெரியோர்கள் விருப்பம் அறியாமலே நான் எதிர்த்து நிற்க துணிந்து விட்டேன். உன் எண்ணத்தில் ஒத்துழைப்பு, கனியிதழ் பூத்த ஓர் ஆதரவுச் சொல்- கிட்டினால், அவர்களை அடிபணிந்து கெஞ்சியோ, உதறித் தள்ளியோ, உன்னுடன் என் வாழ்க்கையைப் பிணைத்து ஒன்றுபடுத்த நான் தயங்க மாட்டேன். உன் வாய்மொழிக்குக் காத்திருக்கிறேன். (திரைக்குப் பின்) திரு.சா. மார்லோ: நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆ, இந்தப் பயலுக்கு என்ன துணிச்சல்! என்ன இரண்டகம். திரு.ஹா: பொறுத்தது பொறுத்தோம். இன்னுஞ் சற்றுப் பொறுப்போம். செல்வி கேட்: அன்பரே, உங்கள் முதல் துணிவு உங்கள் கடமையுடன் இணைந்தது. இப்போதைய துணிவு உணர்ச்சியடிப் படையானது. எங்களைப் பற்றிய தங்கள் நல்லெண்ணத்துக்கு நான் நன்றியுடைவள்தான். ஆனால் உணர்ச்சித் தூண்டிலில் உங்களைக் கண்ணியிட்டுப் பிடிக்க நான் விரும்பவில்லை. சிறிதளவுகூட எதிர்காலத்தில் நீங்கள் பின்னோக்கி வருந்தத்தக்க எச்செயலுக்கும் உங்களை நான் உடந்தையாக்க மாட்டேன். மேலும் நாங்கள் இன்பத்தை ஒரு சிறிது குறைத்துப் பெறும் இன்பம்கூட எனக்கு எப்படி இன்பமாக இருக்குமென்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? மார்லோ: என் உள்ளத்தின் இன்ப அரசி. உன்னை இல்லாமல் நான் எந்த இன்பமும் அடைய முடியாது. நான் என்றேனும் கழிவிரக்கம் கொள்வதானால், அது இப்போதுதான். முன்பே உன் அழகைமட்டுமன்றிப் பண்பையும் உணர்ந்து முழுமனதுடன் உன்னைக் காதலால் பிணைத்திருக்க வேண்டும். நான் வருங்காலத்தில் ஓயாது கழிவிரக்கம் கொள்ளப் போவது காதலை எண்ணியன்று; அதனைக் கெடுக்க ஒரு சாக்காயிருந்த பாழும் கடமையைப் பற்றித்தான். அது உண்மையில் கடமைகூட அல்ல, நிறை காதலறியாத நிலையில் ஏற்பட்ட மனத்தளர்ச்சி மட்டும்தான். ஆகவே நீ போகப் போவதில்லை. உன்னை மீறியும் உன் காதலுக்காகப் போராடவே போகிறேன். செல்வி கேட்: ஐய, ஏன் இப்படித் தவறான உணர்ச்சிகளைத் தண்ணீர்விட்டு வளர்க்கிறீர். நம் பழக்கம் எப்படித் தொடங்கிற்றோ அப்படி முடியட்டும். ஏதோ ஒன்றிரண்டு கணநேரம் நானும் உம்மைப்போல் உணர்ச்சி வசப்பட்டு உம்போக்கை ஒத்துக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் தவறுதலைப் பயன்படுத்த வேண்டாம். மேலும் என் சிறு தவறுதலை நீடிப்பதால் எனக்கு என்ன பயன்? அதனால் ஏற்படும் தொடர்பு என் பெயரைக் கெடுத்து என் வாழ்க்கையைப் பாழாக்கும். ஆகவே தங்கள் காதல் வேட்டை யிலிருந்து எனக்குத் தயவு செய்து விடுதலை தாருங்கள். மார்லோ: (அவள் காலடியில் மண்டியிட்டு) நான் வேட்டையாட வில்லை. மன்றாடுகிறேன். நான் என் இன்பத்துக்காக வாதாடவில்லை. என் வாழ்வுக்காகத்தான். நீ என்னைக் காதலிக்காமலில்லை. ஆனால் என் காதலை ஐயுற வேண்டாம். உன் காதலுறுதி பெற்றாலன்றி நான் வாழ்க்கையில் நம்பிக்கை பெறப்போவதில்லை. திருத்தகை சார்லஸ்: திரு. ரிச்சர்டு, விடு; இனி என்னால் பொறுத்திருக்க முடியாது. (திரையைத் திடீரென நீக்கி) அட அண்டப்புளுகா, என்னிடம் என்ன சொன்னாய்? இங்கே என்ன நாடகம் ஆடுகிறாய்? இத்தனை பொய்யன் என்று தெரிந்திருந்தால் உன்னை இந்த வீட்டிற்கு அனுப்பியேயிருக்க மாட்டேனே? மார்லோ: இது என்ன புது நிகழ்ச்சிகள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! திருத்தகை சார்லஸ்: ஆகா, அடுத்த காட்சி! இத்தனை நாடகம் எங்கிருந்தடா கற்றாய். திரு.ஹா: அன்பரே, நீர் குற்றமொன்றும் செய்து விடவில்லை. ஆனால் ஏன் இத்தனை இரண்டகம். என் புதல்வியைக் கண்டதேயில்லை என்று என்னிடமும் உம் தந்தையிடமும் கூறினீர். இப்போது அவளிடம் கடமை மீறிக் காதலில் குதிப்பதாகக் கவிதை அளக்கிறீர். மார்லோ: தங்கள் மகளா, இதுவா? இவள் செல்வி ஹார்ட்காசில் அல்லவே. திருத்தகை சார்லஸ்: என்னடா உனக்குக் கண்மாறாட்டம் ஏதாவது உண்டா? செல்வி கேட்: என் அருமை மார்லோ! நான் செல்வி ஹார்ட் காசில்தான். நீங்கள் முகம்பார்த்துப் பேச அஞ்சிய அதே செல்வி ஹார்ட்காசில்தான். ஆனால் செல்வி ஹார்ட்காசில் என்ற நிலையில் காண அஞ்சிய நீர் விடுதிக்காரப் பெண் என்று நினைத்த போது கையைப் பிடித்தீர். வேலைக்காரி என்று நினைத்துக் காதலித்தீர். இப்போது என்னென்ன நினைத்தோ என்னை மணம் செய்து கொள்ளத் துணியும் அளவுக்கு வந்துவிட்டீர். திரு ஹா: என்ன கேட், அவருக்கு மேல் நீ நாடகம் தொடங்கி விட்டாயே இது என்ன? செல்வி கேட்: ஆம், அப்பா. இவர் பெண்களிடம் வகைவகையாக நடக்கிறார். நானும் இவரை வகைவகையாகத் தோன்றி அளந்து பார்க்கிறேன். மார்லோ: அம்மணி, நான் ஒன்றும் தவறாக உங்களிடம் நடக்க வில்லை. முதலில் உங்களைக் காணாதது என் கூச்சம். உங்களை விடுதிகாரப் பெண் என்று நினைத்தது ஏமாற்றம். ஆனால் அப்போதுதான் நான் ஆளைக் கண்டேன். பின் பழகப்பழக என் காதலுரிமை கோரினேன். இதில் தவறு என்ன? செல்வி ஹார்ட்காசில் என்று அறியாமையினால்தான் நான் நம் பெற்றோரிடம் பொய் சொல்லும் குற்றத்திற்கு ஆளானேன். திரு.ஹா: இவர் கூறுவது சரிதானா, கேட். செல்வி கேட்: (தலைக்கவிழ்ந்த வண்ணம்) ஆம், அப்பா உண்மையில் அவர்பேரில் குற்றம் இல்லை. அவர் கூச்ச முடையவர் என்பதை நீங்கள் நம்பவில்லை. அவர் துணிச்சல் பேர்வழி என்பதை நான் நம்பமுடியவில்லை. இப்போது எல்லாரும் எல்லாவற்றையும் கண்டு கொண்டோம். டானியின் குறும்பு நாடகம் இப்படியெல்லாம் எல்லாரையும் ஆட்டி வைத்து வருகிறது. (கூக்குரலிட்ட வண்ணம் திருமதி ஹார்ட் காசில் நுழைகிறாள்.) திருமதி ஹா: ஐயோ, ஐயோ; என் செல்வமருகி போய் விட்டாளே என் செய்வேன். என் கண்மணி போய் விட்டதே? திரு ஹா: மருகியா, நெவிலா. ஏன், ஏன், என்ன? திருமதி ஹா: அந்தப் பாவி ஹேஸ்டிங்ஸ் கொண்டு ஓடிப் போகிறானே. யாராவது போய்ப் பிடிக்கக்கூடாதா? அந்தப் பயல் டானி கூட உடந்தையாய் விட்டானே! திருத்தகை சார்லஸ்: யார்? மார்லோவின் நண்பன் ஹேஸ்டிங்ஸா? அவன் தங்கமான பிள்ளையாயிற்றே. அவனைத் தானே நான் என் பண்ணையை மேல்பார்க்க அமர்த்த எண்ணியிருக்கிறேன். அவனா இப்படிச் செய்கிறான். திரு. ஹா: அவனைவிடத் தான் நெவிலுக்கு வேறு நல்ல கணவன் யார் வரப்போகிறார்கள்? (ஹேஸ்டிங்ஸும் நெவிலும் வருகின்றனர்) ஹேஸ்டிங்ஸ்: (திரு. ஹார்ட்காசில் முன் மண்டியிட்டு) ஐயா, தங்கள் மருகியைக் காதலித்து நான் இட்டுச் செல்ல முனைந்திருந்தேன். அதற்காக வருந்துகிறேன். நான் எவ்வளவு சொல்லியும் அவள் என் காதலைவிட அத்தையிடமிருக்கும் தன் நகையையே பெரிதும் விரும்பி வர மறுக்கிறாள். உங்கள் மருகியாயிற்று, அவள் ஆசையாயிற்று இனி எனக்கு இரண்டின் தொடர்பும் வேண்டாம். செ.நெ: (திருமதி ஹார்ட் காசில்முன் மண்டியிட்டு) அத்தை, அத்தை! என் குடும்ப நகையை விட்டும் எனக்குப் பிரியமனம் வரவில்லை. என் காதலரை விட்டும் என்னால் வாழ முடியாது; இரண்டும் உங்கள் பிடியில் தானிருக்கிறது. உங்களை மன்றாடிக் கேட்கிறேன். அவர் போகுமுன் தடுத்து எனக்கு இரக்கம் காட்டுங்கள். திருமதி ஹா: அப்படியே. என் டானி உங்கள் கட்சி, இனி யாருக்காக நான் குறுக்கே நிற்கவேண்டும். திரு ஹா: (ஹேஸ்டிங்ஸை நோக்கி) அன்பரே, அவசரப்பட வேண்டாம். நெவிலை நான் நன்கு அறிவேன். அவள் நகைப்பித் துடைய வளல்ல. அவள் தன் தாயின் பரிசைவிட்டுச் செல்ல விரும்பாதது இயல்பே. அதைத் தான் இப்போது டாரதி கொடுக்க இணங்கினாள். ஆகவே அவளை ஏற்றுக் கொள்வதுடன், எங்கள் விருந்தினராகவே தங்கியிருக்க வேண்டுகிறேன். ஹேஸ்டிங்ஸ்: அப்படியே. மார்லோ: அன்ப, வெற்றிகரமான உங்கள் காதலைப் பாராட்டுகிறேன். ஹேஸ்டிங்ஸ்: (திருத்தகு சார்லஸை நோக்கி) எங்களுடன் நண்பன் மார்லோவும் பல மாறாட்டங்களுக்கு ஆளானவனே. அவன் பிழைகளைப் பொறுத்து அவன் காதலியை அவனுடன் சேர்த்து வைக்கக் கோருகிறேன். திருத்தகை சார்லஸ்: கரும்பு தின்னக் கைக்கூலியா? என்னளவில் அவன் நிலையை உணர்ந்தேன். திரு ஹார்ட் காசில் மனப்படி யாவும் நடக்கட்டும். திரு. ஹா: எனக்கும் முழுதும் மகிழ்ச்சியே. கேட் மனமிருந்தால் அவர்கள் மணத்துக்குத் தடையில்லை. மார்லோ: கேட், இப்போது மீண்டும் கேட்கிறேன். என் வாழ்க்கைத் துணையாக நின்று என் காதலை ஏற்க வேண்டுமென்று கோருகிறேன். செல்விகேட்: அப்படியே சார்லஸ். திருத்தகை சார்லஸ்: நாளையே சார்ல்ஸ்-கேட் திருமணத்தையும் அத்துடன் ஹேஸ்டிங்ஸ்- நெவில் திருமணத்தையும் நடத்திவிடுவோம். இவ்விரவின் கோளாறுகள் இரவுடன் கழிந்து நாளை புதுவிழா மலர்க. ஹேஸ்டிங்ஸ்: அத்துடன் ஒரே ஒரு வேண்டுகோள். நம் நாடகம் முழுவதற்கும் தோன்றாத் துணையாயிருந்த டானி லம்ப்கினை நாம் மறந்துவிட முடியாது. திருமதி ஹார்ட்காசில் அவன் மீதுள்ள கோபத்தை மாற்றி அவனை ஏற்றருளும்படி கோருகிறேன். திரு. ஹா: அவனுக்கு உண்மையில் இருபது வயதாகி விட்டது. அவனை நெவிலுக்கு மணம் செய்வதற்காகவே அவள் வயதுரிமையை டாரதி மறைத்து வைத்திருந்தாள். அவன் மோசமான வாழ்க்கையை வெறுத்தே நானும் தலையிடவில்லை. ஆனால் இன்று அவன் கூரிய அறிவை எல்லாரும் கண்டுகொண்டோம். அவனுக்கு அவன் உரிமையை அளித்தால் அவன் திருந்துவது உறுதி. ஆகவே இன்றே அவன் தந்தை உரிமையை அவனுக்குத் தருகிறேன்- டாரதியும் அதற்கு இசைவாள் என்று நம்புகிறேன். திருமதி ஹா: எனக்கு இப்போது எல்லாம் முழுச் சம்மதமே. அவன் திருந்துவதில் எனக்கும் மகிழ்ச்சியே. டானி: என் திருத்தம்பற்றிக் கவலைவேண்டாம். உங்கள் அனை வரையும் திருத்தியவன் நான். நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயம் வீண்போகாது. என் உரிமை வந்து விட்டதால் நான் இனிக் கருத்தற்ற வாழ்வு வாழப் போவதில்லை. கள்ளமிலா உள்ளமுடைய குறும்பு வாழ்க காதலர் மடமை வெல்க. பிறர் கடமை பாராது தம் கடனாற்றும் பித்தர் நீடூழி வாழ்க. 2. நூர்ஜஹான் இந்த நூலைப் பற்றி வங்க இலக்கியத்தின் சொக்கத் தங்கமாக விளங்குகிறது நூர்ஜஹான் நாடகம்! இன்று உலக இலக்கிய அரங்கிலே அதற்குரிய ஒப்பற்ற பெருமை அது. வங்கநாட்டின் தலைசிறந்த கலைப் பண்பைக் காட்டுவதாலேயே ஆகும். ‘நூர்ஜஹான்’ கற்பனைக் காவியமல்ல. சரித்திரம் தழுவிய நாடக ஓவியம்! இந்திய வரலாற்றிலே முக்கிய பங்கு பெறும் ஒரு சரித்திரத் தலைவியின் வாழ்க்கையை வடித்துத் தருகிறது. படிக்கப் படிக்கச் சுவைபயக்கும் சம்பவங்கள் பலப்பல நிறைந்து காணப்படும் இந்நாடக நூலில், நூர்ஜஹான், லைலா, மகபத்கான் ஆகியோர் மக்கள் உள்ளமென்னும் வானிலே என்றென்றும் நின்று நிலவிவரும் நிலைபெற்ற உயரிய பண்போவியங்கள்! உயிர்த்துடிப்புகளை ஒலிபரப்பும் உன்னத உணர்ச்சிச் சித்திரங்கள்! “ஓர் இனம் மற்றோர் இனத்தை அடக்கியாளல் நிலையல்ல; இனப் போராட்டத்தில் வெற்றி பெற்றவர் எளிதில் தோல்வியே ஏற்கின்றனர்...” என்று அறிஞர் நவகிருஷ்ண கோஷ் கழறிய கருத்துக்களை விளக்கும் இனிய காவியமாக இந்நாடகம் அமைந்திருக்கிறது. மூல ஆசிரியரைப் பற்றி வங்க நாடு நிலவளமுடையது; கலைவளமுடையது. ஆனால் இலக்கியத் துறையிலே மிக இளமை வாய்ந்தது. அது இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டத் துவங்கி ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலமே ஓடி மறைந்திருக்கிறது. ஆனால் இதுவரை வங்கம் வழங்கிய நிலைபேறான இலக்கிய மணிகள் எண்ணற்றவை. வங்க இலக்கியத்தின் தலையூற்றை வளப்படுத்திய பெருமை பங்கிம்சந்திரர், துவிஜேந்திரலால் ராய், கவிதாகூர் ஆகிய மூவரையே சாரும். மூவரும் சிறந்த புலமை மிக்கவர்கள். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு துறையில், சந்திரர் புனைகதை மன்னர்! தாகூர் கவிஞர்! ராய்பாபு நாடகப் பேரறிஞர்! 19-ஆம் நூற்றாண்டில் பிறரால் எள்ளி நகையாடப்பெறும் இழிநிலை ஏந்திய வங்க இலக்கியக் குடிலைத் திருத்தி, சந்திரரும், ராய்பாபுவும் இலக்கிய மாளிகைக்கு உறுதியான அடித்தள மிட்டனர். வங்க இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ராய்பாபுவே என்று அறுதியிட்டுக் கூறலாம். அவர் மறுமலர்ச்சித் தூதுவன்! காவிய மன்னன்! நாடக அறிஞன்! சரித ஓவியன்! வங்க இலக்கியம், வங்க மொழி, வங்க மக்கள், அவர்கள் வாழும் வங்காளம் உள்ளளவும் போற்றப்படும் பெரும் புகழ் அவர் பெற்று விட்டார். நாடக உறுப்பினர் ஜெஹாங்கீர் - *(சலீம் இளவரசர்) பேரரசர் ஆயஷ் - பேரரசின் பொருளாளர் மகபத்கான் - முகலாயப் படைத்தலைவன் அஸஃவ் - ஆயஷின் புதல்வன் குஸ்ரூ (பேரரசி ரேவா பிள்ளை) பர்வேஜ் ஷாஜகான் (குர்ரம்) ஜெஹாங்கீர் சஹரியார் பிள்ளைகள் ஷேர்கான் - நூர்ஜஹானின் முதல் கணவன் கர்ணசிங் - மேவார் ராணா விஜயசிங் - மேவார் படைத்தலைவன் நூர்ஜஹான் - (மேஹர் உன்னிஸா) முதலில் ஷேர்கான், பின் ஜெஹாங்கீர் மனைவி பேரரசி ரேவா - ஜெஹாங்கீர் மனைவி லைலா - (நூர்ஜஹான் ஷேர்கான்ஆகியோர் புதல்வி) சஹரியாரின் காதலி கதிஜா - (அஸஃவ் மகள்) ஷாஜகான் காதலி மற்றும் அரசவைச் செல்வர், படைவீரர், தோழிகள் நூர்ஜஹான் காட்சி 1 (பர்துவான் நகரடுத்த தாமோதர் ஆற்றங்கரையிலுள்ள ஷேர்கான் இல்லத்தின் தோட்டம்; கன்னியர் லைலாவும் கதிஜாவும் ஆடிப்பாட, ஷேர்கானும், மேஹர் உன்னிஸா என்னும் நூர்ஜஹானும் கண்டு மகிழ்ந் திருக்கின்றனர். காலம். 1605-ஆம் ஆண்டு, ஓர்நாள் மாலை.) லைலாவும் கதிஜாவும்: பொன்னாடு! பொங்குவள வங்கநாடு (பொன்) பூவையர்போல் பூங்கொடிகள் பூத்துக் குலுங்கும் (பொன்) தென்மலையந் தேன்கமழும் தமிழ்த் தென்றல் வீசும், திரளருவி இசை யெழுப்பித் தீங்கவிதை பேசும்! (பொன்) பொன் மிலைந்த பூங்கொன்றை பொலியும் வள நாடு, புகழ்நாடு பொருவில் எழில் பொங்கும் வங்க நாடு! (பொன்) ஷேர்கான்: மிக நல்ல பாட்டு, குழந்தைகளே! சரி பாடியது போதும். இனி நீங்கள் போய் விளையாடலாம். (குழந்தைகள் கலகலப்புடன் ஓடிச்செல்கின்றனர்.) நூர்ஜஹான்: நாடு உண்மையிலேயே மிக அழகு வாய்ந்த நாடுதான். இயற்கை தன் முழுஎழிலையும் கொட்டிக் குவிக்கின்ற நறும்பொழில் இதுவே என்னலாம்! ஷேர்: எழில் மட்டுமென்ன, மேஹர், செல்வங்களும் கூடத்தான். ஆனால் இந்நாட்டன்னை தன் மக்களுக்கு இத்தனை செல்வமளித்துச் செல்லங்கொடுத்து அவர்களைக் கெடுத்துவிடுகிறாள். நூர்: அப்படியல்ல, அன்பரே! எவரும் மட்டற்ற இன்பம் நுகர்வது இயற்கைக்குப் பொறுப்பதில்லை. இன்பத்தின் எல்லை துன்பத்தைக் கைகாட்டி அழைக்கிறது. அது கிடக்கட்டும். அதோ அண்ணா அஸஃவ் வேகமாக வருகிறார். ஏதோ அவசரச் செய்தியாகத்தானிருக்க வேண்டும்! (அஸஃவ் வருகிறான்.) ஷேர்: வா, அஸஃவ்! ஏன் இத்தனை விரைவு? என்ன செய்தி? அஸஃவ்: இளவரசன் சலீம் பேரரசனாகிவிட்டான், ஜெஹாங்கீர் என்ற விருதுப் பெயருடன். ஷேர்: அப்படியானால் அக்பர்...! அஸ: அவர் காலமாகிவிட்டார். நூர்: நடுநிலைப் புகழ் வாய்ந்த அரசியல் கதிரவன் மறைந்தான்! அஸ: நிலவொளி வீசும் ஜெஹாங்கீர் ஆட்சி தொடங்கி விட்டது! ஷேர்: அதற்குள் புத்தாட்சிக்கு இத்தகைய கவிதை பாடிவிட்டாயே. அது எத்தகைய ஒளி என்பது இனியல்லவா விளங்க வேண்டும்! அஸ: தங்களுக்கு அது நிலவொளியாக இப்போதே வீசத் தொடங்கி விட்டது, ஷேர்! (மாறிய குரலில்) அத்தான், பட்டத்துக்கு வந்தவுடனே அவரது முதற் கட்டளைப் படி நீங்கள் ஐயாயிரம் குதிரைப்படை வீரருக்குத் தளபதி ஆக்கப்பட்டிருக் கிறார்கள்! நூர்: நாசமாய்ப் போச்சு! அஸ: அத்துடன் உங்களை உடனடியாக ஆக்ரா அரண்மனைக்கு அழைத்தும் இருக்கிறார். ஷேர்: மகிழ்ச்சி! நான் உடனே புறப்பட விரும்புகிறேன். (நூர்ஜஹான் நோக்கி) நீ வரத் தயாராயிரு. (ஷேர்கானும் அஸஃவ்வும் சிரித்துக் கொண்டு போகின்றனர்.) நூர்: ஆ, என் நெஞ்சம் ஏன் கொந்தளிக்கிறது! என் கணவர் ஒப்பற்ற வீரர், தூய உள்ளம் படைத்தவர்; அவர் காதல் பெரிது; ஆனால் பெறுதற்குரிய அப்பேற்றை நான் எதிர்பார்க்கவுமில்லை; அவாவவுமில்லை. கடமை ஆற்றுகிறேன், முழுதும் கடமை ஆற்ற விரும்புகிறேன். அவ்வளவுதான்! ஆனால் என் கட்டுமீறிக் கோட்டை இடிகிறதே! காட்சி 2 (ஆக்ரா அரண்மனை பேரரசி ரேவா தூய வெள்ளாடையுடன் வீற்றிருக்கிறாள். புதிய பேரரசன் ஜெஹாங்கீர் அமர்ந்து உரையாடுகிறான்.) ரேவா: உண்மையை ஒளியாது கூறும், அரசே! வங்காளத்திலிருக்கும் ஷேர்கானை உயர்த்தவும் அவசர அவசரமாக அழைக்கவும் காரணமென்ன? ஜெஹாங்: உண்மையைத்தான் கூறுகிறேன், ரேவா! என் பொருளமைச்சர் ஆயஷின் மருமகனாயிற்றே அவன். அவன் வீரமும் புகழும் உனக்குக் கூடத் தெரியாதவையல்லவே! ரேவா: அது சரி, அவன் மனைவியிடத்தில் உங்களுக்கு இப்போது... ஜெஹாங்: உனக்கு ஏன் இத்தனை ஐயம், ரேவா? உனக்காக நான் என் உள்ளத்தை ஆழ்ந்து அலசிப் பார்த்துத் தான் கூறுகிறேன், அங்கே வேறு எந்தவகை எண்ணமும் இல்லை. மேலும் அவள் மற்றொருவன் மனைவி. ரேவா: நானும் அதற்காகத்தான் இத்தனை கவலையும் அச்சமும் கொள்கிறேன், அரசே. இல்லையானால் என் இடத்தை இன்னொரு பெண் வந்து பங்குகொள்வதிலோ அல்லது முழுவதும் என் இடம் பெறுவதிலோகூட நான் அவ்வளவு அக்கறை காட்ட மாட்டேன். பேரரசின் புகழில் மாசு ஏற்படக் கூடாது என்றுதான் அஞ்சுகிறேன். ஜெஹாங்: நீ என் கையில் காட்டும் அக்கறையும் பெருந் தன்மையும் என்னைப் பரவசப்படுத்துகின்றன. ஆனால் இதே அளவுக்கு உன் காதலின் பாசமும் நேசமும் இருந்தால்... ரேவா: நான் தங்களுக்கு என்ன குறை வைத்திருக்கிறேன், அரசே? ஜெஹாங்: குறை எதுவும் வைக்கவில்லை. ஆனால் நிறைவுபடுத்தவும் இல்லை. உன் உள்ளத்தின் பாசம் நாடித்தானே நான் அன்று உன் தந்தையில்லம் வந்தேன். வந்து எளிதில் உன்னைப் பெறவும் செய்தேன். ஆனால் இன்னும் நான் உன் உள்ளத்தில் இடம்பெற முடியவில்லையே! ரேவா: நான் எத்தனை தடவை விளக்கம் கூறுவது, அரசே! இந்துப் பெண்களாகிய எங்களுக்குக் கடமை உண்டு, கற்பு உண்டு; காதலுக்கு ஏது இடம்? இந்து முஸ்லீம் நேசத்தை நாடித்தானே என் தந்தை என்னைத் தங்களுக்கு அளித்தார்! அந்த மணம் இந்து முஸ்லீம் மணமாயிருக்கலாம்; உங்களுக்குக் காதல் மணமாயிருக் கலாம். எனக்குக் கடமை மணம் மட்டுந்தானே! அக்கடமை வழியில் நான் காதல் குறுக்கிடாமல் தடுக்க முடியும். அதுவே எங்கள் கற்புநெறி. அது காதலை எப்படி உண்டு பண்ணமுடியும்? எங்கள் காதலைக் கேட்டா மணம் செய்கிறார்கள்? ஜெஹாங்: அப்படியானால் எனக்கு நீ எப்போதும் ஒரு தெய்வமாக மட்டுமே இருக்கமுடியும் அல்லவா? ரேவா: இல்லை, அரசே! தங்களுக்கு நான் மனமுவந்த பணியாள், அடிமை; உள்ளத்தில் கள்ளமில்லாத நண்பன்; கடமை தவறாத மனைவி. என் உடலுயிர் யாவும் உங்களுக்கே பலியிடவும் நான் தயங்கமாட்டேன். காட்சி 3 (ஆக்ரா நகர் நாற்சந்தி, நகரமாந்தர் நடமாட்டம். ஒருபுறம் வானர ராஜா, கராமத்கான்.) வா-ரா: கராமந்கான்! கரா: அரசே! வா-ரா: பேரரசர் கூறியது நினைவிருக்கிறதா? கரா: ஆம், அரசே! வா-ரா: ஷேர்கான் இலேசுப்பட்ட பேர்வழியல்ல, நினைவிருக்கட்டும் ஏற்கனவே ஒரு முயற்சி தோற்றுவிக்கப் பட்டது. பூங்காவில் நம் ஏவலால் திறந்துவிடப்பட்ட சிங்கம் அவனைக் கொல்லவில்லை. அவன் பெயருக்கேற்ற படி அவனே சிங்கத்தைக் கொன்றான். காயப்பட்டாலும் அவன் தப்பி விட்டான். கரா: ஆனால் என் யானைக்கு அவன் தப்பமுடியாது. வா-ரா: சரி, ஆள்வரும்போது அடையாளம் தவறாது பார்த்து, யானையைக் கிளறி இயற்கையாகக் கட்டுமீறியது போல் ஏவி அவனைத் தொலைத்துவிடு. வெளியே மெய்ப்புக்கு உனக்குச் சிறுதண்டனை தரப்படலாம். ஆனால் பேரரசர் தயவு முழுவடிவில்..... கரா: இதற்குமேல் சொல்லவேண்டாம், எசமான்! எல்லாம் நான் சரிவரச் செய்துவிடுவேன். போய்வருகிறேன். (போகிறான்.) காட்சி 4 (ஷேர்கான் மாளிகை மேல்மாடி. நூர்ஜஹானும் ஒரு தோழியும் அமர்ந்து உரையாடுகின்றனர்.) நூர்: தோழி, நீ ஒருத்திதான் எனக்கு ஆறுதல் கூறத்தக்க வளாயிருக்கிறாய். நான் என் நிலையை இதுவரை வேறு யாரிடமும் கூறவில்லை. உன்னிடம் மட்டும் கூறுகிறேன், நீ எனக்குத் தக்க நல்லுரை கூறி வழிகாட்டுவாய் என்ற நம்பிக்கையுடன். தோழி: தங்கள் நம்பிக்கை வீண்போகாது. என்னாலியன்ற வரை தங்கள் துயர்களைய முயல்கிறேன். நூர்: நான் ஆக்ராவுக்கு வராமலே இருந்திருக்க வேண்டும். வந்ததற்கு இப்போது படுகிறேன். தோழி: என்ன நடந்தது அம்மா? நூர்: தெருவில் ஆரவாரம் கேட்டது. யாரோ இது தான் ஷேர்கான் வீடு என்று கூறியது கேட்டுப் பலகணி வழியே வெளியில் பார்த்தேன். வேட்டையாடையுடன் சலீம் பேரரசர் நின்றார். நான் அவரைப் பார்த்தேன். அவர் உடனே என்னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நின்றுவிட்டார். எல்லோரும் கவனித்தார்கள்; வெட்கம் என்னைப் பிடுங்கித் தின்றது. ஆனால் நான் மனம் குழம்பி அப்படியே நின்றுவிட்டேன். தோழி: இதில் தாங்கள் ஏன் கலவரப்பட வேண்டும், அம்மணி? அவர் பேரரசர். தங்கள் கணவர் அவர் நண்பர். மேலும் அவர் உங்களைப் பார்த்தபோது நீங்கள் ஏன் விலகியிருக்கக்கூடாது? நூர்: (சிறிது ஆழ்ந்து நினைந்து பெருமூச்சுவிட்டு) அது பழங்கதை அம்மா! உன்னிடத்தில் கூறுவதற்கென்ன? முன்பு ஒரு தடவை அவர் இதைவிடத் துணிச்சல் காட்டியிருந்தார். அப்போது, பேரரசர் அக்பர் காலம். எனக்கு மணமாகவில்லை; மணப்பேச்சு நடந்துகொண்டிருந்தது. அச்சமயம் அரண்மனை யில் ஒரு விருந்து நடந்தது. அதன் முடிவில் மன்னவையோர் தங்கள் குடும்பப் பெண்களை முகமூடியுடன் அரசர் முன் ஆடிப்பாட ஏற்பாடு செய்திருந்தனர். நானும் சென்றிருந்தேன். தோழி: பார்க்கவா? ஆடல்பாடலில் கலக்கவா? நூர்: பார்க்கத்தான் விரும்பினேன். ஆனால் தந்தை தடுத்து விட்டார். பின் ஏதோ அவர் கருத்து மாறி முகமூடியுடன் ஆடவே அனுப்பினார். சுழன்று சுழன்று ஆடும் ஆடலிலும், கலந்தும் தனிப்பட்டும் பாடும் பாடலிலும், இளவரசர் சலீம் என்னைத் தனிப்படக் கவனிப்பதை நான் உணர்ந்தேன். இதனால் அடிக்கடி என் ஆடலும் பாடலும் தடைப்பட்டன. தோழி: உங்கள் மனம் அவரிடம் ஈடுபட்டதா? நூர்: அது எனக்குத் தெரியவில்லை. ஆனால் மனம் குழப்பமடைந்தது. ஒரு நொடி என் முகமூடி சட்டென்று விழுந்தது. அவர் என் முகத்தைப் பார்த்துப் பித்துப் பிடித்தவர் போல் என்னை நோக்கிப் பாய்ந்துவந்தார். அருகிலிருந்தவர்கள் இளவரசரைத் தடுத்து இழுத்துச் சென்றனர். தோழி: இளவரசர் தங்களைக் காதலித்தார் என்பது விளங்குகிறது. ஆனால் நீங்கள்...! நூர்: என் நிலையைத்தான் இன்றுவரை என்னால் உணர முடிய வில்லையே. ஆனாலும் மனம் ஏனோ குழம்புகிறது? தோழி: தங்கள் மனம் விசித்திரமானது, அம்மா? நூர்: என் கணவரிடம் எல்லாம் கூறவும் முடியவில்லை. கூறியிருந்தால் அவர் ஆக்ரா வருவாரா? அவரையும் இச்சூழல் இலேசில் விடவில்லை. இன்னும் என்னவெல்லாம் நேருமோ? எது நேர்ந்தாலும், உன் ஆறுதல் அன்றி எனக்கு வேறு வகையில்லை. நீ இதை யாரிடமும் கூறாதே. இப்போது போய் வா. அதோ தந்தையுடன் அவர் வருகிறார். தோழி: அப்படியே, அம்மா. (இருவழியே இருவரும் போகிறார்கள்; ஆயஷும் ஷேர்கானும் வருகின்றனர்) ஆயஷ்: என் அருமை ஷேர்! பேரரசர் குணத்தை நான் நன்கறிவேன். சிங்கம் தற்செயலாகப் பாயவில்லை என்பது உண்மையே. இப்போது யானையை உம்மீது ஏற்றியது இன்னும் பட்டப்பகல் கொடுமை. ஆயினும் கோபத்தை அடக்கிக் கொண்டு காரியத்தில் கண்ணாயிருங்கள். பேரரசரிடம் விடைபெறாமலே கடிதம் அனுப்பிவிட்டு மேஹருடன் வங்காளம் செல்லுங்கள். காட்சி 5 (ஆக்ரா அரண்மனை; ஜெஹாங்கீருடன் வானரராஜா உரையாடுகிறான்.) ஜெஹாங்: ஆம், இனி ஒளிவுமறைவு தேவையில்லை. நான் குறிப்பாக வங்காள முதல்வனுக்கே கட்டளை அனுப்பியிருக் கிறேன். ஆனால் அவன் ஒரு துடைநடுங்கி. நீ போய் அவனிடம் நேரிடையாகவே சொல்லி அவனிடமிருந்து காரியத்தை முடி, ஷேர்கானைக் கூப்பிட்டனுப்பியோ, அவன் வராவிட்டால், அவன் வீடேகியோ, எப்படியாவது அவனைத் தொலைத்து விடுங்கள். அதன்பின் நயமாக அவன் வீட்டுப் பறவையை இங்கே கொண்டு வரலாம். வா-ரா: தங்கள் உத்தரவுப்படியே செய்கிறேன். (போகிறான்.) ஜெஹாங்: அன்று தடை, தந்தை. அவர் பேசாது எனக்கு மேஹரை மணஞ்செய்து வைத்திருந்தால் அன்றே நான் மனிதனாயிருந்திருப்பேன். இப்போது உலகின் நல்லெண்ணத் தடை ஒரு கணவன் உருவில் என்முன் நிற்கிறது. நான் இப்போது என் கருத்தை நிறைவேற்றக் கொலைகாரனாக மாறவேண்டும். ரேவா பிறிதொரு தடை. ஆனால் ரேவா... ஒரு அழகிய நிழல்! மற்றும் நீதி, நேர்மை, பேரரசின் மதிப்பு ஆகியவைகளை யெல்லாம், இந்த ஒரு வகையில் என்னால் ஒரு பொருட்டாக மதிக்க முடியாது. எப்படியும் பார்க்கிறேன், ஒரு கை! காட்சி 6 (பாண்டியாவிலுள்ள ஷேர்கானின் நாட்டுப்புற மாளிகை. லைலா பாட, ஷேர்கானும் மேஹரும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.) லைலா: வானம் பொழியுது, பூமி குளிருது; மாதிவள் உள்ளத் தீ ஆறவில்லை! மதியம் எழுந்தது, வண்புயல் மாறிற்று; மாதிவள் உட்புயல் மாறவில்லை! நூர்: போதுமடி, உன் சனியன் பிடித்த பாட்டு. போய் உறங்கித் தொலை! (லைலா முகங்கடுத்த வண்ணம் அறைக்குள் செல்கிறாள். நூர்ஜஹானும் போகிறாள்.) ஷேர்: ஆக்ராவிலிருந்து வந்ததுமுதல் மேஹர் என்னவோ போல் தான் இருக்கிறாள். என்னவென்று தெரியவில்லை. அன்று என் இல்வாழ்க்கை அமைதியாகத் தானிருந்தது. அப்போது அவள் கூறினாள், இன்பத்தின் எல்லை துன்பத்தை அழைக்கும் என்று. அது சரியாய்ப் போய்விட்டது. ஆனால் இது அவளுக்கு எப்படி முன் கூட்டித் தெரியும்? (படுக்கையில் சாய்ந்து கண்மூடுகிறான். கொலையாளிகள் முக மூடியணிந்து வருகின்றனர்.) ஒருவன்: இங்கே, இப்படி உடைவாளைக் கொடு. மற்றவன்: பேர்வழி இதோ தூங்குகிறான், வெட்டு! (ஷேர்கான் கண்விழித்துத் திடுக்கிட்டெழுகிறான்.) ஷேர்: யாரடா அது, கொலைசெய்யவா பார்க்கிறீர்கள்? இதோ (வெட்டுகிறான்) இதோ (மீண்டும் வெட்டுகிறான்.) (தலைவன் தவிர யாவரும் வீழ்கின்றனர்) தலைவன்: ஐயா என்னை விட்டு விடுங்கள், நான் போய்விடுகிறேன். (நூர்ஜஹான் அரவம் கேட்டு வருகிறாள்.) நூர்: ஆ, இது என்ன? ஷேர்: சற்றுப் பொறு. (தலைவனை நோக்கி) உன்னை விட்டு விடுகிறேன். உன்னை யார் அனுப்பினார்கள், சொல். தலைவன்: வங்காள முதல்வர். ஷேர்: அவர் ஏன் என்னைக் கொல்ல முயலவேண்டும்? தலைவன்: பேரரசர் உத்தரவு. நூர்: ஆ! ஷேர்: அப்படியா! சரி, நீ போகலாம். நூர்: அன்பரே! ஷேர்: காலையில் பேசிக் கொள்ளலாம், மேஹர், போய் உறங்கு. காட்சி 7 (பர்துவானில் ஷேர்கான் மாளிகை அறை. நூர்ஜஹான் தனியே இருக்கிறாள்.) நூர்: (பெருமூச்சுடன்) பர்துவான், அதே பர்துவான் தான்! ஆனால் அன்றைய அமைதி எங்கே? (முன்னும் பின்னும் தாவி நடந்தவண்ணம்) இளமையின் துடிப்பை அடக்கித்தான் இருந்தேன். அது ஒரு குழந்தை விளையாட்டுப் போல மறைந்து தானிருந்தது. நான் தூயவீரன் ஷேர்கானின் மனைவி. ஒப்பற்ற நங்கை லைலாவைப் பெற்றெடுத்த தாய்! ஆனால், இவ்வளவிற்கும் பிறகா, அமுங்கிக் கிடந்த என் மனஎழுச்சி எழுந்துவந்து என்னை அலைக்கழிக்க வேண்டும்? கடவுளே, பெண்ணின் காதலைப் புயலாக்கி, அவள் நெஞ்சை ஏன் இப்படி மலராக்கி இருக்க வேண்டும்? (ஷேர்கான் வந்து நுழைகிறான்.) ஷேர்: மேஹர், என் நாள் நெருங்கிவிட்டது. வங்காள முதல்வர் பர்துவான் வந்திருக்கிறார். என்னை நேரில் அழைத்திருக்கிறார். நான் போகிறேன். நூர்: போகவேண்டாம், அன்பரே! போகவேண்டாம். இப்போது போனால்... திரும்பி வரமாட்டீர். ஷேர்: அது தெரியாமலா போகிறேன்? நான் திரும்பாவிட்டால் என்ன, மேஹர்? நீ அதன் பின் பரந்த மாநிலத்தின் பேரரசியாகப் போகிறாய்! நூர்: இதென்ன பேச்சு, கண்ணாளா! ஷேர்: நான் இறக்கத்தான் விரும்புகிறேன், மேஹர். இனி எனக்கு வாழ விருப்பமில்லை. நூர்: ஏன் அன்பரே! ஷேர்: ஏனா! உனக்குத் தெரியாததல்ல, இப்போது நானும் உணர்ந்து கொண்டேன். நீ என்னைக் காதலிக்கவில்லை. நூர்: உங்களுக்கு நான் என்ன குறை செய்தேன்? ஷேர்: ஒரு குறையும் செய்யவில்லை. ஆனால் உனது இந்தக் கேள்வியே போதும், உன்னிடம் காதல் இல்லையென்பதைக் காட்ட. காதல் ஆயிரம் குறை செய்யும், ஆயிரம் குறை ஏற்கும்! நீ ஒப்பற்ற மனைவியாகத் தான் இருந்திருக்கிறாய். ஆனால் நான் விரும்பித் தவங்கிடப்பது மனைவிக்காக அல்ல, மனைவியின் காதலுக்காக, வேட்கையுற்றவன் விரும்புவது தண்ணீர். அது பொன் கலத்திலிருக்க வேண்டுமென்பதில்லை; மண் கலத்தி லிருந்தாலும் போதும், என் உள்ளத்தின் வேட்கையை மேஹருடன் வாழும் வாழ்வு தணிக்காது. அவளை விட்டுச் சாவது ஒருவேளை தணிக்கலாம். போய் வருகிறேன், மேஹர்! (செல்கிறான்) நூர்: என் தெய்வமே, என்னை மன்னிப்பாயாக. நீ மனிதனல்ல, தெய்வம். நீ என்னை உணர்ந்துவிட்டாய். போய் வா. (பெருமூச்சு விட்டு) காதலுக்கு பக்தி எந்த அளவு ஈடுசெலுத்தக் கூடுமோ, அந்த அளவு உன்னை என் நெஞ்சில் வைத்து வணங்குகிறேன். ஆனால் தெய்வங்கள் கூடப் பக்தியை விரும்புமா? உன்னைப் போலவே காதலைத்தானே விரும்பக் கூடும்! (ஆழ்ந்து நினைந்து) ஆனால் நான் காதலிக்கிறேனா? யாரை- அந்தோ, அந்தோ! காட்சி 8 (பர்துவான் நகர்ப்புறப் பாதை. ஷேர்கான் குதிரை மீதும், வங்காள முதல்வர் குதூப் யானைமீதும் செல்கின்றனர்.) குதூ+ப்: பர்துவானை நான் இதற்குமுன் கண்டதில்லை. மிக நல்ல காட்சி. ஷேர்: ஆம் குதுப்: ஒரு வார்த்தையிலேயே பேசுகிறீர்கள் இன்று உங்களிடம் ஏன் மகிழ்ச்சி இல்லை? ஷேர்: மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சி எதனையும் நான் எதிர்பார்க்க வில்லை, ஐயனே! குதுப்: (யானையை நிறுத்திச் சட்டென) வீரர்களே எழுங்கள்! (திரை மறைவில்) குரல்கள்: எழுங்கள்! எழுங்கள்! ஷேர்: எல்லாம் நான் எதிர்பார்த்ததுதான். நான் இன்று திரும்பும் எண்ணத்துடன் வரவில்லை. ஆகவே இதோ! (ஷேர்கான், குதுப்பைத் தாக்குகிறான். மறைவிலிருந்து வீரர்கள் வந்து சூழ்ந்து தாக்குகின்றனர். வீரர்கள் யாவரும் ஷேரின் தாக்குதலால் வீழ்கின்றனர். குதுப் தனியனா கிறான்) குதுப்! இன்று நீ தோற்றுவிடுவாயென்று அஞ்சவேண்டாம். இதோ நானே என்னைச் சாவுக்கு ஒப்படைக்கிறேன். என் வாளை இதோ வீசியெறிந்துவிடுகிறேன். பேரரசர் ஆணையை நிறைவேற்றிக் கொள். (ஷேர் வாளையெறிந்து மண்டியிடுகிறான். அவன் தலை நிலத்தில் புரளுகிறது.) குதுப்: ஆ! ஈடும் எடுப்புமில்லாத சிங்க ஏறு சிறு நரியாகிய என் கையின் பெயரால் தன்னை மாய்த்துக் கொண்டது. சரி, பேரரசர் ஆணைக்கு இனி அஞ்ச வேண்டியதில்லை. காட்சி 9 (ஆக்ராவில், அஸஃவ் வீடு, அஸஃவ், அரசவைச் செல்வர்.) அஸஃவ்: கேட்டீர்களா, செய்தி? எல்லோரும்: என்ன, என்ன? அஸஃவ்: இளவரசன் குஸ்ரூ தில்லியை வந்து முற்றுகையிட முயன்றானாம். தோல்வியுற்று லாகூர் நோக்கி அவன் ஓடிப்போக வேண்டியதாயிற்றாம். 1-ம் அ செ: அய்யோ, பாவம். சொல்வார் சொல்கேட்டுத் துன்பத்திற்காளானான் குஸ்ரூ. (அரசவைச் செல்வர் அனைவரும் போகின்றனர்.) அஸஃவ்: ஆம். எல்லாம் ஒரே கொந்தளிப்பாயிருக்கிறது. என்ன வாகுமோ தெரியவில்லை. அதோ அப்பா வருகிறார். அவர்தான் நிலைமையை எப்படிச் சமாளிக்கிறாரோ தெரியவில்லை. (ஆயஷ் வருகிறான்) ஆயஷ்: அஸஃவ்! அஸஃவ்: அப்பா! ஆயஷ்: நம் இருவருக்கும் பெரிய சோதனை வந்திருக்கிறது. அஸஃவ்! பேரரவர் நயம் பாதி, பயம் பாதி காட்டி நம்மை வசப்படுத்தப் பார்க்கிறார். மேஹரை அவருக்கு இணங்க வைத்தால் நமக்கு இன்னும் உயர்ந்த பதவியாம். இல்லாவிட்டால் எனது இப்போதைய பதவிக்கும் இடையூறாம். அயா: நீங்கள் என்ன சொன்னீர்கள், அப்பா! ஆயஷ்: நான் இப்போதே பதவி துறந்துவிடுகிறேன் என்றேன். அஸ: அதற்கு அவர் என்ன சொன்னார்? ஆயஷ்: ‘சரி, இப்போதிருக்கட்டும். பார்ப்போம்’ என்றார். அஸ: நானும் கூறுகிறேன். சரி, இப்போது இருக்கட்டும் பார்ப்போம்! காட்சி 10 (ஜெஹாங்கீர் கொலுவிருக்கை; குற்றவாளிக் கூண்டில் குஸ்ரூ; பர்வேஜ், குர்ரம், சஹரியார் முதலிய மற்ற புதல்வர்கள்; ஆயஷ், படைத்தலைவன் மகபத்கான், அவைச் செல்வர் முதலானோர்) ஜெஹாங்: குஸ்ரூ, நீ எந்தக் குற்றத்திற்காக இங்கே கூண்டில் நிற்கிறாய் என்று தெரியுமா? குஸ்ரூ: தெரியும் ஜெஹாங்: உனக்கு நான் எத்தனையோ தடவை எச்சரிக்கை செய்ததுண்டு. குஸ்ரூ: ஆம். செய்ததுண்டு. ஜெஹாங்: அப்படி இருந்தும் குற்றம் செய்திருக்கிறாய். இதை நீ ஒத்துக்கொள்கிறாயா?? குஸ்ரூ: ஆம். ஒத்துக் கொள்கிறேன். ஆயஷ்: மன்னர்மன்ன! இவன் தங்கள் புதல்வன்; சிறு பிள்ளை, இம் முதற்குற்றத்திற்கு மன்னிப்பருளும்படி வேண்டுகிறேன். குறைந்த அளவு தண்டனையாவது அளிக்கக் கோருகிறேன். ஜெஹாங்: பேரரசின் நடுநிலை நீதியிலிருந்து அதற்காக நான் பிறழ முடியாது. வேண்டுமானால் அவன் மனதைக் கலைத்த சதிகாரர் யாரென அவன் கூறட்டும், அவனை மன்னித்து விடுகிறேன்! குஸ்ரூ: தன் பிள்ளையை மன்னிக்க, மற்றவர்களைத் தண்டிப்பது தான் பேரரசின் நடுநிலை நீதியோ? என் உயிருக்காக என்னால் யாரையும் காட்டிக்கொடுக்க முடியாது. நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். ஜெஹாங்: ஆகா, அப்படியே! ஏவலர்களே, இதோ இவனை விலங்கிட்டு உட்கார முடியாமல் சிறையில் நாள் முழுதும் நிறுத்திவைத்து அடித்து நொறுக்குங்கள். சாகும்வரை தண்டனை அடையட்டும்! (ஏவலர் முன்வருகின்றனர்.) மகபத்கான்: (முன்வந்து) அரசே, ஒரு வேண்டுகோள். ஏவலர்களே, சிறிது பொறுமை காட்டுங்கள். (பேரரசை நோக்கி) நான் என்றும் தங்கள் ஆணைக்கிடையே குறுக்கிட்டதில்லை. எனக்கென்று எந்த மனுவும் கோரியதில்லை. இன்று ஒரு மனுக் கோருகிறேன். ஜெஹாங்: கேள், மகபத்! யாருக்கும் ஜெஹாங்கீர் நீதி மறுத்ததில்லை. அதுவும், மகபத்கானுக்குக் கட்டாயம் மறுக்கப் போவதில்லை. மகபத்: நன்றி, மகிழ்ச்சி. குற்றஞ்சாட்டப் பட்டவர் இளவரசர். எனவே இளவரசருக்குரிய தண்டனையையே அவருக்குத் தரக் கோருகிறேன். ஜெஹாங்: ஆளைக்கண்டு நீதிசெலுத்துபவன் ஜெஹாங்கீரல்ல. மகபத்: ஆளைக்கண்டு நீதிசெலுத்தக் கோரவில்லை, அரசே! பதவிகண்டு நீதிசெலுத்த வேண்டுகிறேன். குஸ்ரூ நாளை பேரரசராகக் கூடியவர். ஜெஹாங்: அப்படியானால் அவன் குற்றம் இன்னும் பெரிது! மகபத்: ஆம். ஆனால் பேரரசர் அக்பர் காலத்தில் இதே குற்றத்திற்குத் தங்கள் மீது கருணை காட்டப் பட்டதை நினைவு கூருங்கள் அரசே. அதன் பயனாகத் தான் தாங்கள் இந்தத் தவிசின் மீது வீற்றிருக்கிறீர்கள். ஜெஹாங்: (சீற்றத்துடன், நிலத்தில் காலை அறைந்து) மகபத்! மகபத்: அரசே, மகபத் சண்டையிடத் தெரிந்தவன் மட்டுமே. அரசவையில் பேசத்தக்க நாநய வல்லுநன் அல்லன். இளவரசர் மாட்டுக் கருணை காட்டும்படி மீண்டும் கோருகிறேன். பிறர் தூண்டுதலால்தான் அவர் குற்றம் செய்ய நேர்ந்தது. அவர் உயர் பண்பாளர் என்பதை எண்ணக் கோருகிறேன். ஜெஹாங்: உயர் பண்பா? என்ன பண்பை நீர் கண்டீர்? மகபத்: தம் உயிர் காக்க, அவர் பிறரைக் காட்டிக் கொடுக்க இணங்கவில்லை, அரசே! அவர் கோழையல்ல. ஜெஹாங்: ஆனால் பேரரசைச் சரிவினின்றும் காக்கச் சதிகாரர்களின் பெயர்ப்பட்டியல் தேவை. மகபத்: அவர் துரோகம் இல்லாமலே நான் அதைக் கண்டு பிடிக்கிறேன். அவரை மன்னியுங்கள். ஜெஹாங்: சரி, அவன் சிறையிலிருக்கட்டும். பின்னால் கவனிப்போம். காட்சி 11 (ஆக்ரா அரண்மனை, மேஹர் கண்ணாடி முன் நின்றுகொண்டு தனக்குத் தானே பேசுகிறாள்.) நூர்: ஆ, இந்த ஒரு முகம் உலகை என்ன பாடுபடுத்துகிறது! இதை நாடித்தானே என் கணவர் உயிருடனிருக்கும்போது என் அடிமையாயிருந்தார். அதற்காகத் தானே உயிரையும் விட்டார். சிங்க ஏற்றைப் பழித்த மாவீரர் அவர். அன்னையினும் தயவுடையவர். குழந்தை போன்ற தூய உள்ளம் படைத்தவர். அத்தனையும் இந்த முகத்தின் முன் தானே பாழாய்ப்போயிற்று. அவர் அத்தனையும் பலி கொடுத்தார். இதன் மாய அழகுக் கவர்ச்சிக்காக! நாடு நகைக்க, மக்கள் விழிக்க, என்னை மன்னர் அரண்மனையில் வைத்துக் காக்கிறார். நான்கு ஆண்டுகளாக என் செருக்கை அவரிடம் காட்டி வருகிறேன். அவர் அனலில் மெழுகாய்த் துடிக்கிறார். ஆனால் இம்முகத்துக்கு அவர் அஞ்சிக் கிடக்கிறார். ஆ, என் மகள் லைலா, அதோ வருகிறாள். அவள் இளமை முகம் உலகைப் படுத்தாத பாடு, தாயான என் முகம் படுத்துகிறது! சரி, முகம் ஆட்சி செலுத்தட்டும்! லைலா! (லைலா வருகிறாள்.) லைலா: அம்மா. நூர்: கண்மணி, இப்படி என் அருகில் உட்கார். (கட்டியணைத்துக் கொள்கிறாள்) உன் முகம் ஏன் விளறிப் போயிருக்கிறது? லைலா: இந்தக் கேள்வியைக் கேட்பது என் அம்மாதானா? அம்மா தானா கேட்க வேண்டும்? நூர்: டட், டட்! இதுமாதிரி பேசாதே. உனக்குத் தெரியாதா என் நிலைமை? நான் என்ன செய்ய முடியும்? லைலா: நீ என்ன செய்யமுடியுமா? கணவனிறந்த பின், அவன் உயிரைக் கருக்கிய கயவனை நாடி ஆக்ராவுக்கு வரமுடியும்! உன் நிலைமையில் வேறு எந்தப் பெண்ணாவது இருந்தால், நாக்கைப் பிடுங்கிக் கொண்டிருப்பாள்; நஞ்சைத் தின்றிருப்பாள்; கணவனைக் கொன்று விட்டானே பாதகன் என்று பழிதூற்றிப் புயலெழுப்பியிருப்பாள். நூர்: தாயிடமா இப்படிப் பேசுகிறாய், லைலா? லைலா: தாயானதால்தான் இந்த அளவுக்குப் பேசுகிறேன். இல்லையென்றால் கண்ணில் விழித்துக் கூட இருக்க மாட்டேன். இப்போது கூட உன் கடமையை நினைவுபடுத்த எச்சரிக்கை தரத்தான் வந்தேன். நீயாக இங்கே வந்து மாட்டிக் கொண்டாய். போகட்டும். இங்கேயே இருந்தால் நம்மைப் பற்றி யார்தான் என்ன சொல்ல மாட்டார்கள்? வேண்டாம், நாம் வங்கம் சென்றுவிடுவோம். நூர்: போக உத்தரவில்லையே, லைலா! லைலா: என்ன வெட்கங்கெட்ட பேச்சுப் பேசுகிறாய், அம்மா, அவர் யார், உனக்கு உத்தரவிட? நூர்: அவர் பேரரசர். நம்மைத் தடுத்து நிறுத்த முடியும். லைலா: நீ அவர் வேலைக்காரியா? அல்லது அவர் சிறைக்கைதியா? நூர்: தெரியாது. லைலா: (சிறிது நேரம் வாளாவிருந்து) தாயே! நீ உன்னையே வஞ்சித்து நடக்கிறாய். இங்கே நீ உன் விருப்பப் படி வராதிருக்கலாம். ஆனால் உன் விருப்பத்திற்கெதிராகவும் வந்து விட்டதாகக் கூறமுடியாது. நீ பேசாதிருந்தால் உன் விருப்பப்படி இருக்கிறாய் என்றுதானே பொருள் படும்? கணவனையிழந்து, பின் கணவனைக் கொன்றவனிடத்தில், அனாதைப் பிச்சைக்காரி அரண்மனை இன்பத்துக்கு அலைந்தவள் போலக் கிடப்பதா? நான் இப்போது கேட்கிறேன், நீ உண்மையில் இங்கிருந்து போக விரும்புகிறாயா? நூர்: ஆம். விரும்புகிறேன். லைலா: அப்படியானால் பேரரசி வாயிலாகப் பேரரசரை கேட்டுக் கோரிக்கையிடு. நூர்: அவர் சம்மதிக்கமாட்டார். லைலா: (தரைமீது காலை அறைந்து) உனக்கு விருப்ப மில்லை என்று வேண்டுமானால் சொல். அவர் சம்மதிக்கிறாரா இல்லையா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கேட்டால் அவர் கொடுக்காதிருக்க முடியாது என்பதை நான் அறிவேன். நீ கேட்பாயா? நூர்: கேட்கிறேன். லைலா: சரி, பெறும் பொறுப்பு இனி எனது. வருகிறேன். (போகிறாள்.) நூர்: ஆ, என் மகள், அவள் நம்பிக்கையை இழந்து விட்டேன்! அவள் கூரிய அறிவு என்னைத் துளைத்துப் பார்த்து விட்டது! ஆ, லைலா! நான் ஷேர்கானின் மனைவியல்ல; நீ ஷேர்கானின் மகள்தான்! தந்தையை இழந்த பின் உன் முகத்தில் புன்முறுவலின் ஒரு நிழலைக் கூட நான் கண்டதில்லை. நீயும் பெண்தான், நானும் பெண்ணாகத்தான் இருக்கிறேன். ஆனால் என்னைப் பெண்மை ஆட்டிப்படைக்கவில்லை. பெண்மை எனக்கு ஒப்பற்ற அழகாற்றலைக் கொடுத்திருக்கிறது. அதை வைத்து நான் ஆண்களை ஆட்டிப் படைக்க, அவர்கள் கையிலுள்ள ஆதிக்கத்தைப் பெற்று அவர்கள் மீது பழிவாங்கத் துடிக்கிறேன். (கதிஜா அவ்வழியாகச் செல்கிறாள்.) இதோ இன்னொரு பெண்மையின் பிம்பம்! நான் மட்டுமா அழகை ஆதிக்கமாக்கப் பார்க்கிறேன்? அண்ணா அஸஃவ் தன் புதல்வியாக இவளைத் தூண்டிலாக வைத்து அரசவைக் காளை யரிடையே நீந்தி ஆதிக்க விலாங்குகளைத் தேடிப் பிடிக்க வில்லையா? ஆ, பெண்மையே, ஆதிக்கம் வசிக்கவேண்டிய நீ அடிமையானாய்! நீ ஆதிக்கக்காரரை அலைக்கழிக்க வைக்கிறாய்! காட்சி 12 (ஆக்ரா அரண்மனை அந்தப்புறம், ரேவாவும் ஜெஹாங்கீரும் உரையாடு கின்றனர்.) ஜெஹாங்: ரேவா, நீ எல்லாம் அறிந்துகொண்டாய். நான் அவளைக் கைது செய்ய வைக்கவில்லை. ஆனால், ஆம்... என்றேனும் அவளாக மனம் இளகி வந்து என்னை மணம் செய்துகொள்ள நாடலாம் என்ற நம்பிக்கையால் என் அரண்மனையில் கொண்டுவந்து வைத்திருக்கிறேன் - நாலு ஆண்டுகளாக! ரேவா: நாலு ஆண்டுகளாகக் கனியாத கனியா இனிக் கனியப் போகிறது? அவளை இனி வைத்திருக்கலாகாது. ஜெஹாங்: ஒரு தடவை அவளைச் சந்திக்கக் கேட்கலாமா? உன் ஆணையால் தான் இதுநாள்வரை நான் சந்திக்கவில்லை. ஆனால் என் மனம் அவளை எப்படியும் சந்தித்துவிடத் துடியாய்த் துடிக்கிறது. ரேவா: அவளாக விரும்பினாலன்றி நீங்கள் அவளைப் பார்க்கக் கூடாது- பார்க்க முடியாது. மேலும், மனத்தின் விருப்பத்தை அடக்குவது தான் மனிதத் தன்மை- சிறப்பாக ஆண்கள் அதை அடக்கியாள வேண்டும். ஜெஹாங்: மேஹரைச் சந்திக்க அவள் விருப்பம் அறிய வேண்டுமானால், அவளை வங்கம் அனுப்பவும் அவள் விருப்பம் தெரியவேண்டாமா? ரேவா: அவள் விருப்பம் எனக்குத் தெரியும், அரசே! ஜெஹாங்: அந்தோ, நீ என்ன கேட்கிறாய் என்று உனக்குத் தெரியுமானால்... ரேவா: நன்றாகத் தெரியும், அரசே, ஆயினும் நான் உயிருடனிருக்கும் வரை ஒரு குடும்பப் பெண்ணுக்கு என் அரண்மனையில் அவமதிப்போ, அவதூறோ ஏற்பட நான் உடந்தையாயிருக்கமாட்டேன். ஜெஹாங்: ரேவா, உன்னைத் தெய்வமாகப் போற்றுகிறேன். ஆயினும், ஆயினும்... (லைலா வருகிறாள்.) லைலா: ஆயினும் என்ன பேரரசே! (ஜெஹாங்கீர் மலைப்படைந்து விழிக்கிறான்.) அரசே, நான் ஷேர்கானின் மகள், என் தாயைத் தாங்கள் என்ன குற்றத்திற்காக வாழ்நாள் முழுதும் கைதியாக்கி வைக்க எண்ணியிருக் கிறீர்கள் என்று தெரியவில்லை. ஷேர்கானின் குடியின்மீது இவ்வளவு அடக்கு முறை, அட்டூழியம் செய்ய உமக்கு என்ன துணிவு? உலகத்தில் நீதிச்சக்கரம் சுழலாது நின்றுவிட்டது என்ற எண்ணமா? ரேவா: உங்கள் நன்மைக்காகத்தான் மன்றாடுகிறேன், அரசே. மேஹருன்னிசாவுக்காக அல்ல. ஜெஹாங்: (பெருமூச்சுடன்) சரி, அப்படியே ஆகட்டும். லைலா: பேரரசர் வாழ்க. வெல்க நீதி. ரேவா: ஆடவர்க்கேற்ற செயல் செய்தீர்கள், அன்பரே. பேரரசைக் காத்தீர்; இனியேனும் கடமைவழி கடைப்பிடித்து, இவ்வீணான காதல் தீயை ஆண்மை நீரால் அவித்துவிடும். (லைலாவும் ரேவாவும் செல்கின்றனர்) ஜெஹாங்: நான் எத்தனை கேவலமான பொருளாகி விட்டேன். ஒரு பெண்ணின் அழகு என்னைச் சுட்டெரிக்கிறது. தந்தை இருக்கும்போது தந்தைதான் தடை என்று நினைத்தேன். பின் ஷேர்கான் தான் தடை என்று நினைத்து அவனைக் கொன்றேன். மற்றொரு பெண்ணின் அடம், அழுகை, கண்ணீர்- நாலு ஆண்டுகள் என்னைத் தடுத்து அடக்குகிறது... ஆம். சரி, இதுதான் வழி. அஸஃவ்வை அடுத்துக் கேட்போம். இதில் கடைசி மூச்சு வரை முயலாமலிருக்கப் போவதில்லை. காட்சி 13 (அரண்மனை, இரவு நேரம், நூர்ஜஹானும் தோழியும் உரையாடுகின் றனர்.) நூர்: லைலா மூலம் இறுதியாக என் கோரிக்கை ஈடேறிவிட்டது. இப்போது எங்கே போவேன்? எனக்கு யார் இருக்கிறார்கள்? ஆனால் நான் போவேன் - போகாத உயிரை வைத்துக் கொண்டு நான் எனக்குத் தெரிந்த ஏதேனும் தொழில் செய்தாவது பிழைக்கிறேன். என் ஈடெடுப்பற்ற கணவன் வீடு சென்று, அவர் அடித்தாமரையில் என் உள்ளம் பதித்து எஞ்சிய என் வாழ்நாளைக் கழிப்பேன். இதுவே எனக்கு உள்ள வழி. தோழி: அம்மா, பேரரசி ரேவா வருகிறார்கள். நூர்: (தனக்குள்) ஆ... - உள்ளமே பொறுத்திருந்து பார். (வெளிப்பட) சரி, பார்க்கிறேன், வரச்சொல். (தோழி செல்ல, ரேவா வருகிறாள்) ரேவா: மேஹர், உனக்கு ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறேன். நூர்: என் விடுதலை உங்கள் அன்புப் பரிசு என்பதை அறிவேன், அரசியே. உங்கட்கு என் நன்றி. ரேவா: மன்னிக்க வேண்டும். நான் இதுகூற வரவில்லை. பேரரசியாக உனக்கு விருப்பம் உண்டா? உண்டானால் சொல். அப்பதவி உனக்கு எளிதாக வந்திருக்கிறது. இதில் உன் விருப்பம் அறியவே வந்தேன். நூர்: நான் எதுவும் விரும்பவில்லை, அம்மணி. பர்துவானுக்குப் போக மட்டுந்தான் விரும்புகிறேன். ரேவா: யோசித்துச் சொல், மேஹர்! நீ விரும்புகிறாயா, விரும்ப வில்லையா? உன் விருப்பமறிந்து அதன்படி செய்ய ஒருப்பட்டே வந்திருக்கிறேன். நூர்: கணவன் அன்பு, பேரரசு- இரண்டையும் எத்துணை எளிதாக இன்னொருவருக்கு அளிக்கத் துணிந்து விட்டீர்கள்? இது எப்படி முடிந்தது அம்மா உங்களுக்கு? ரேவா: (சோகப் புன்னகையுடன்) இந்துப் பெண்கள் இதையும் செய்ய முடியும், இதற்கு மேலும் செய்ய முடியும் அம்மா! எங்கள் இன ஆடவர் பேரரசையும் வெளியாருக்குத் தந்து, எம்போன்ற பெண்களையும் தந்து தியாக மூர்த்திகளாயிருக்கவில்லையா? பிறர் ஆள்வதற்கென்றே அமைந்த இனத்தில், பெண்களும், ஆண்கள் ஆள்வதற்கென்றே வாழ்வதில் என்ன வியப்பு! நூர்: இந்து இனம், பெண்கள் இனம் ஆகிய இரண்டின் தோல்வியையும் நீங்கள் நன்கு நிழற்படுத்திக் காட்டுகிறீர்கள். அது கிடக் கட்டும். நான் உங்கள் கோரிக்கையை ஏற்றுப் பேரரசியாகிவிட விரும்பவில்லை. உங்கள் சிரமத்திற்கு நன்றி. ரேவா: அவ்வளவுதான். நான் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்து விட்டேன். வருகிறேன். (போகிறாள்) நூர்: மாநிலத்தின் பேரரசி! எத்தனை பெரும்பேறு! சீச்சீ, இதை நினைப்பதே தவறு!......... ஆனால், ஆனால், நான் அழுது மூலையில் இருக்கமட்டும்தானா பிறந்திருப்பேன்? அப்படிப் பிறந்திருந்தால், இந்த முகம் இவ்வளவு சாதித்திருக்க முடியுமா? ஆ, என் நெஞ்சத்தில் இரண்டு உள்ளங்கள் இருக்கின்றன போலும்! இதைச் செய் என்கிறது ஒரு உள்ளம்! அதைச் செய், இதைச் செய்யாதே என்கிறது பிறிதொரு உள்ளம்! ஒரு உள்ளம் லைலா பக்கம் கனிகிறது, ஷேர்கானை நினைத்துப் பெருமூச் செறிகிறது. மற்றொன்று பேரரசினை நோக்கி கும்மாள மடிக்கிறது. (பல கணியை அகலத் திறந்துவிடுகிறாள்) ஆ, என்ன வெப்பு! இது புறவெப்பா அல்லது அக வெப்பா? (அஸஃவ் வருகிறான்) என்ன சேதி அஸஃவ்? ஏன் இரவோடிரவாக இத்தனை அவசரம்? அஸஃவ்: ஏனென்று உனக்குத் தெரியாதா? நூர்: ஊகிக்க முடியும். சரி, நான் விரும்பவில்லை என்று சொல்லிவிடு. அஸஃவ்: என்ன, போகுமுன் ஒரு தடவை பார்க்கக் கூடாதா? நூர்: கூடாது. அஸஃவ்: மேஹர், நீ இப்படிப் பட்டிக்காட்டுப் பெண்ணாயிருப்பாய் என்று நான் எண்ணவில்லை. உன் சோக நடிப்பு மதிப்புடையது தான். ஆனால் சோகத்திலேயே மிதக் கும் நேரமல்ல இது. பெரிய பேரரசு- பெருஞ் செல்வம் பெரிய அதிகாரம் இப்போது உன் காலடியில் வந்து தவழ்கிறது. நீ எடுத்தணியலாம். காலால் மிதித்துத் துவட்டியும் எறியலாம். எது செய்யப் போகிறாய்? நூர்: எறிகிறேன். என்ன துணிச்சல்! கூட்டுச் சதியில் இறங்கியிருக்கிறாய், அஸஃவ். இதற்கா இந்த இரவில் வரவேண்டும்? போ, போ! அஸஃவ்: நான் போகத் தடையில்லை. ஆனால் பின்னால் வருந்தப் போகிறாய். பேரரசியாக நீ விரும்பாதிருக்கலாம். தெருவில் பிச்சைக் காரியாக... நூர்: (உக்கிர கோபத்துடன்) சீ, உனக்கு வெட்கமில்லை, உன் தங்கை நீ இருக்கும்பொழுது ஏன் பிச்சைக்காரியாக வேண்டும்? அப்படியே உன்னுடன் சேர்ந்து நான் பிச்சைக் காரியாக இருக்க நேர்ந்தாலும், அப்போது நான் உன்னைக் குறைகூற மாட்டேன். நான் ஒரு பிச்சைக் காரியாயிருக்கவே விரும்புகிறேன். அஸஃவ்: நீ மட்டும் பிச்சைக்காரியாவது பற்றி இப்படிக் கூறவில்லை, மேஹர். பேரரசர் கூறிவிட்டார், நீ அவரை ஏற்றால், அப்பா பதவியும் என் பதவியும் உயரும். இணங்காவிட்டால், இருக்கும் பதவியும் போய் விடுமாம். நூர்: ஓகோ, நீ என்னுடன் பிறந்தவன்! என்னை விற்றுக் குடும்பத்தை உயர்வுபடுத்தத் தயங்கவில்லை. அப்படித்தானா? அஸஃவ்: உனக்கு எப்படி வேண்டுமானாலும் வாயடி அடிக்கத் தெரியும். உன் லைலா உன்னையும் அதில் தோற்கடித்து விடுவாள். என்னைப் பேச்சில் வெல்வது இருக்கட்டும். நான் நீ சொல்வதைப் பேரரசிடம் சொல்ல வேண்டும். என்ன சொல்கிறாய், மேஹர், முடியாதா? நூர்: (சட்டென மாறி) எனக்குச் சொல்ல என்ன இருக்கிறது? என் மனம் போலவா எல்லாம் நடக்கிறது, என் மனம் போலவா என் கணவர் ஆக்ராவுக்கு வந்தார்? உன் மனம் போலத்தான் வந்தார். என் விருப்பப் படியா அவர் இறந்தார்? என் விருப்பப்படியா நான் ஆக்ராவுக்கு வந்தேன்? இப்போதும் நான் என் விருப்பப்படியா போகிறேன்? அல்லது நீ இங்கே பேசிக் கொண்டிருக்கிறாய்? எல்லாம் என் விதியின் சுழல். அதன்படி நடக்கட்டும். அஸஃவ்: என்ன சொல்கிறாய். மேஹர்; ஒன்றும் புரியவில்லையே. நூர்: புரியத் தேவையில்லை. நீ விரும்புகிறாயா? அப்பா விரும்புகிறாரா? முதலில் அதைச் சொல். அஸஃவ்: எதை? நூர்: பேரரசரை நான் மணம் புரிவதை. அஸஃவ்: ஆம். விரும்புகிறார். நூர்: அப்படியானால் உங்கள் விருப்பப்படி நடக்கட்டும். அஸஃவ்: உன் விருப்பம்? நூர்: என் விருப்பம் எனக்கே தெரியவில்லை, அஸஃவ், விட்டபடி நடக்கட்டும். அஸஃவ்: நீ முதல்தர அரசியல்வாதி, மேஹர். உன் கையில் பேரரசு சிக்கிவிட்டது. அதில் புயல் எழும்; பூகம்பம் எழும். இது உறுதி. (போகிறான்.) காட்சி 14 (அரண்மனை மண்டபம்; மணவிழாக்கோலம். அரசவைச் செல்வர், ஆடல் மங்கையர்.) 1-ம் அ.செ: ஆடு, பாடு, இரவும் பகலும் ஆடுங்கள், பாடுங்கள். இன்றைய விருந்து இனி என்றும் கிடையாது. 2-ம் அ.செ: மணமகள் அழகு போலவும் எந்த அழகும் கிடையாது. பேரரசர் அவளுக்கு நூர்ஜஹான், உலகின் ஒளி என்ற சிறப்புப் பெயர் சூட்டியுள்ளாராம். 3-ம் அ.செ: ஆம். இத்தகைய திருமணத்தில் விருந்தயராமல் பின் எப்போது அயரப் போகிறோம்? ஆடு, பாடு, விருந்தாடு. அனைவரும்: சரி பாடுவோம். புதுமை, புதுமை புதிய விருந்தின் அருமை! (புதுமை) பொன்னொடு வெள்ளி பூவொடு விதானம் அமையுங்கள் இன்னிசை யியம்ப இனிய சிற்றுண்டி (புதுமை) சமையுங்கள் மாதரும் மைந்தரும் மகிழ் நறவாடிக் களியுங்கள் மன்னன் ஜெஹாங்கீர் மங்கை நூர்ஜஹான் புகழ் (புதுமை) குளியுங்கள் (அரசவைச் செல்வர் செல்கின்றனர்.) காட்சி 15 (நூர்ஜஹாவின் புதிய மாளிகை. நூர்ஜஹானும் ஜெஹாங்கீரும் உரையாடுகின்றனர்.) ஜெஹாங்: நூர்ஜஹான்! நூர்: (வணக்கம் செய்து) வணக்கம், பேரரசே! ஜெஹாங்: நூர், நீ பேரரசி யாவதற்கென்றே பிறந்தவள், உன் வணக்க முறை பேரரசிக்குரிய இயற்கை வீறு உடையதாயிருக்கிறது. நூர்: அரசே, ஏனிந்த வீண் புகழ்ச்சி? நானும் பேரரசிதான். ரேவாவும் பேரரசிதான். ஆனால் பசப்பு இங்கே; பாசம் அங்கே. உண்மையில் நான் பேரரசரின் மனைவி என்று மட்டும்தான் கருதப்படுகிறேன். அவள்தான் பேரரசி. ஜெஹாங்: ஏன் அப்படிச் சொல்கிறாய், நூர்? நூர்: ஏனா, இளவரசன் குஸ்ரூ குற்றவாளியாகத் தண்டிக்கப்பட விருந்தும் தாங்கள் தண்டிக்கவில்லை. ரேவாவின் பிடிவாதத்திற்காகத் தானே? ஜெஹாங்: ரேவா அப்படி என்னிடம் வாய்திறந்து கேட்கக்கூட இல்லை. அவள் கண்ணீர் அவள் துயரத்தை எடுத்துக்காட்டிற்று. அவள் வருந்தாதிருக்கத் தண்டனையை மாற்றினேன். நூர்: அவள் வாய்திறவாமலே அவள் பக்கம் தீர்ப்பு. என் வளர்ப்புப் பிள்ளை சபீ உல்லாவுக்காக நான் வற்புறுத்தி வாதாடினேன். அப்போது உங்கள் நடுநிலைநெறி பற்றி வீம்படித்தீர்கள். ஜெஹாங்: சபீஉல்லா உன் வளர்ப்புப் பிள்ளைமட்டும் தான். குஸ்ரூ ரேவாவின் வயிற்றுப் பிள்ளை; என் பிள்ளை! இதை இவ்வளவு பெரிதாகக் கருதலாமா? உனக்கு ரேவா மீது பொறாமை மிகுதியாயிருக்கிறதென்று கருதுகிறேன். நூர்: பொறாமை ஏற்பட இருவரும் சமநிலையுடைய வர்களா, என்ன? ஜெஹாங்: இதில் ஒப்பிடுவதற்கே ஒன்றுமில்லை, கண்ணே! ரேவா நம்மிடமிருந்து உயரத்தில் நெடுந்தொலைவிலுள்ள ஒரு விண்மீன். நீ என் அருகிலிருக்கும் முழு நிலா, அவளை மதிக்கிறேன். உன்னிடம் அன்பு செலுத்துகிறேன். நூர்: ஓகோ! சரி, சரி. (தோழி வருகிறாள்.) தோழி: ஐயா, பேரரசி ரேவா தங்களைக் காண விரும்புகிறார். ஜெஹாங்: வருகிறேன் நீ போ. இதோ போய் வருகிறேன். (தோழியும் ஜெஹாங்கீரும் போகின்றனர்.) நூர்: ஆகா, அவள் விண்மீன்; நான் நிலா. அங்கே மதிப்பு; இங்கே அன்பு மட்டும், நான் காதலுக்கு, அவள் ஆட்சிக்கா? பார்க்கிறேன். (லைலா வருகிறாள்.) லைலா: என்னைக் கூப்பிட்டதாகக் கேள்விப்பட்டேன். எதற்காகக் கூப்பிட்டீர்கள்? நூர்: இது என்ன கோலம் லைலா, என்னவோ மாதிரி பேசுகிறாயே? நான் உன் தாய் அல்லவா? கூப்பிடக் கூடாதா? என்னிடம் இப்படியா வந்து பேசுவது? லைலா: உனக்கும் எனக்கும் இப்போது அத்தகைய தொடர்பு கிடையாது. நான் ஷேர்கானின் மகள், மேஹரின் மகள். நீ இப்போது நூர்ஜஹான், என் தந்தையைக் கொன்ற கொலைகாரனின் மனைவி. பண ஆசையினாலும், பதவிப் பேராசையினாலும் என் தந்தையின் கொலைக்கு உடந்தையா யிருந்து, அக் கொலைகாரனுக்குக் காமக் கிழத்தியாயிருக்கும் பேய். நூர்: (முகத்தைக் கைகளால் மூடி அழுகிறாள்) அந்தோ, லைலா! (ஜெஹாங்கீர் வருகிறான்.) ஜெஹாங்: இது என்ன லைலா, நீ உன் தாய் என்றும் பாராமல் பேரரசியை அவமதிக்கிறாய். நானும் நீ நூர்ஜஹான் புதல்வி என்று பாராமல்... லைலா: நான் நூர்ஜஹான் புதல்வியல்ல, ஷேர்கான் புதல்வி- நயவஞ்சகனாகிய உன்னால் கொல்லப்பட்ட மாவீரனின் மகள். ஜெஹாங்: பேச்சு அவ்வளவுக்கு வந்துவிட்டதா? இதோ, கவனிக்கிறேன். சேவகா! லைலா: கூப்பிடு சேவகரை, தண்டி; ஆனால் நினைவிருக்கட்டும். இது சிங்கத்தை வென்ற வீரனின் புதல்வி என்பது! நூர்: (மண்டியிட்டு) அரசே, எனக்கு ஆண் மகவு இல்லை. இவள் என் ஒரே மகள். அவள் என்ன கூறினாலும் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். ஜெஹாங்: சரி, இனியாவது அவள் அத்துமீறாமல் பார்த்துக் கொள். (போகிறான்) லைலா: அம்மா! நூர்: லைலா! லைலா: நடந்தது நடந்துவிட்டது. இனி உன்னைத் திட்டியும் பயனில்லைதான். ஆனால் ஒரு காரியம் செய்வாயா? அது இந்தப் பழிக்கு ஒரு கழுவாயாகவும் இருக்கும். நூர்: என்ன? பழியா, கழுவாயா? லைலா: பழியோ, பழியில்லையோ? இப்போது நீ வானுலகில் ஒரு தேவியாக இருப்பதாகவே வைத்துக் கொண்டால்கூட, இதற்கு நேர்மாறான பேயாக நீ மாறிச் செயலாற்ற வேண்டும். இந்தப் பேரரசர் பரம்பரை முழுவதையும் கருவறுக்க வேண்டும். இதைச் செய்வாயா? நூர்: (லைலா கைகளைப் பற்றிக்கொண்டு) கட்டாயம் செய்கிறேன். இனி நீ கவலையில்லாமல் வேண்டிய முயற்சிகளைச் செய். லைலா: அப்படியானால் நான் உன்னுடன் ஒத்துழைக்கிறேன். (போகிறாள்.) காட்சி 16 (அரண்மனைப் பூங்கா. கதீஜா பாடிக் கொண்டிருக்கிறாள்.) என் உளம் கவர்ந்தாய் நீ-ஓ ஓ என் உளம் கவர்ந்தாய் நீ! எழிலெலாம் உன் எழில் இசையெலாம் உன் இசை (ஓ ஓ என்) முழுமதி வடிவிலும் முளரியின் நிறத்திலும் விழுமிய நின்திரு மேனியே காண்பேன் (ஓ ஓ என்) பொதியைத் தென்றலின் மணத்தினில், குயிலின் இசையினில் உன்உளம் காண்பேன் (ஓ ஓ என்) (குர்ரம் வருகிறான்.) குர்ரம்: யாரது, உன் உள்ளம் கவர்ந்தது? கதிஜா: (திடுக்கிட்டு) யார்?- ஆ, என் காதலரேதான். வாருங்கள். குர்ரம்: எளிதாகத் திருட்டுப் பட்டம் சுட்டிவிட்டாய்! உன் உள்ளங் கவர்ந்தவன் நான் என்று இதுநாள்வரை எனக்குத் தெரியாதே! கதிஜா: (அவன் இரு கைகளையும் தன் இரு கைகளால் பற்றி இழுத்து) பேரரசர் மரபின் உள்ளத்தைத்தான் யார் கவர்வார்கள் என்று தெரிவது கடினம். எங்கள் உள்ளமெல்லாம்.... குர்ரம்: போதும், கதிஜா, உங்கள் பரம்பரையும் அதில் குறைந்த புதிர்அல்ல. கதிஜா: ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? குர்ரம்: உன் தந்தை அஸஃவ்வும் நூர்ஜஹானும் உடன் பிறந்தவர்கள். ஆயினும் நூர்ஜஹானின் பிள்ளை லைலா எங்கள் பரம்பரையைக் கருவறுக்க எண்ணுகிறாள். அதே பரம்பரையில் பிறந்த நீ என்னைக் காதலித்து மணம் செய்யத் துணிந்து விட்டாய். நீ பெண்மையிலும் காதலிலும் உள்ளத்தை ஈடுபடுத்துகிறாய். அவள் புதியதோர் அலெக்ஸாண்டர் ஆக எண்ணுகிறாள். கதிஜா: நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையன்று. லைலா சஹரியாரைக் காதலிக்கிறாள் என்பதை நான் அறிவேன். குர்ரம்: அப்படியானால் சஹரியாருக்காக நான் இரங்கு கிறேன். இந்த எரிமலையைக் கட்டிக்கொண்டு அத்தென்றல் என்ன செய்யும்? இயற்கையின் இந்த மாயப்புதிர் கண்டு நான் வியப்படைகிறேன். சஹரி யாரை அவள் காதலித்து, என்னை நீ காதலிக்கவைத்த காதல் செல்வன் குறும்பு கண்டு என்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை! கதிஜா: எனக்கு அந்தக் குறும்பு ஒன்றும் விளங்க வில்லையே! குர்ரம்: விளங்கவில்லையா? என் அரசியல் வாழ்வு ஒரு புயலாயிருக்கப் போகிறது. ஆனால் என் காதலியாகிய நீ ஒரு தென்றல். எனவே இங்கே ஒரு புயலுடன் தென்றல்! அங்கே லைலா ஒரு எரிமலை, சஹரியார் ஒரு கவிதைமலர். எனவே எரிமலையுடன் ஒரு மலர் அங்கே! இவை பொருந்துமா? புயலுடன் எரிமலையும், தென்றலுடன் மலரும் இணைவதல்லவா பொருந்தும்? கதிஜா: பொருத்தமாயிருக்கலாம். எனக்கு அது பிடிக்கவில்லை. குர்ரம்! (போகிறாள்.) காட்சி 17 (லாகூர் அரண்மனை, நூர்ஜஹான் தனித்திருக்கிறாள்.) நூர்: ஆதிக்க மது அருந்தியிருக்கிறேன். அது எத்தனை இனிது! நாடி நரம்புகளில் அது எத்தனை சுறுசுறுப்புடன் ஓடுகிறது! தலைதெறிக்க ஓடும் குதிரை மீதமர்ந்தவன் போல் சொல்லுகிறேன் நான்! பழைய நனவுலகின் காட்சிகள், காற்று, நிலா, மரஞ்செடி, மனிதர் எல்லாம் எனக்கு இப்போது புதுத்தோற்றம் அளிக்கின்றன. உலகம் என்னைக் கண்டு புன்முறுவல் கூர்கின்றது! (அஸஃவ் வருகிறான்.) அஸஃவ்: பேரரசி வாழ்க! ஆங்கில நாட்டுத் தூதர் ரோ வந்து பேட்டிக்குக் காத்திருக்கிறார். சூரத்தில் கோட்டை கட்டப் பேரரசின் இணக்கம் கோருகிறார். நூர்: பேரரசர் இன்றே இணக்கம் தருவார் என்று சொல்லு. அவர் வந்ததும் ஆணை பிறப்பிக்கிறேன். (அஸஃவ் போகிறான்.) இதுவரை என் ஆட்சியினால் பேரரசரைத்தான் ஆட்டிப் படைத்தேன். என் வல்லமை காட்டி இனிப் பேரரசையே ஆட்டிப் படைக்க வேண்டும். (குர்ரம் என்னும் ஷாஜஹான் வருகிறான்.) ஷா: வாழ்க பேரரசி. பேரரசரை நான் காண விரும்புகிறேன். தெக்காண அரசர் மீண்டும் கிளர்ச்சி செய்திருக்கிறாராம். அவர் என்னைத் தெக்காணத்துக்குப் போக ஆணையிட்டிருக்கிறார். அதுவகையில் அவரிடம் சில செய்திகள் கூறவேண்டும். நூர்: அவர் எங்கோ வெளியே சென்றிருக்கிறார். ஷா: சரி. நான் போய்ப் பார்த்து வருகிறேன். நூர்: சற்றுநில், குர்ரம்! உன்னிடத்தில் ஒன்று கூற வேண்டுமென்று நினைக்கிறேன். நீ என் மருமகள் கணவனல்லவா? பேரரசருக்குரிய பிள்ளை. ஆனால் அவர் அன்பு கவர்ந்த மகன் நீயல்ல, குஸ்ரூ. ஷா: பெற்றோர்க்கு ஒரு பிள்ளையைவிட மற்றொரு பிள்ளையிடம் பற்று மிகுதியிருப்பது இயற்கைதானே! நூர்: அதைச் சொல்லவில்லை, குர்ரம். வருங்காலப் பேரரசன் நீ அல்ல, அவன்தான். ஷா: இது எப்படித் தெரியும், தங்களுக்கு? நூர்: நீ பெரிய வீரன், நீதான் பேரரசின் வலது கை ஆனால் தந்தையின் இறுதிக் காலத்தின் போது நீ தெக்காணத்திலிருப்பாய். நீ வருமுன் அவன் பேரரசனாக்கப் பட்டுவிடுவான். ஷா: குஸ்ரூ என்னுடனே வரவிருக்கிறான், அதுவும் அவனாக விரும்பி. ஆனால் பேரரசர் இணக்கம் தரமாட்டாரே. நூர்: அதுவகையில் கவலை வேண்டாம், குர்ரம். நான் இணக்கம் தரச் செய்கிறேன். (ஷாஜஹான் போகிறான்.) இந்தக் குர்ரம் ஒருவன்தான் இதுவரை என் வல்லமைக்கு அப்பாற் பட்டிருந்தான். விரைவில் இவனை ஒரு முடிச்சுக்குள் கொண்டுவந்து விடுகிறேன்... அஸஃவை வரவழைத்தேன். இன்னும் காணவில்லை. (அஸஃவ் வருகிறான்.) வா அஸஃவ், வானர ராஜாவை என்னிடம் வரச் சொல்லு. அஸஃவ்: வானர ராஜாவையா? அந்தக் கொலைகாரனை நீ பார்ப்பதா? நூர்: அதெல்லாம் உனக்கென்னத்திற்கு? அவனைப் பேசாது வரச் சொல்லு. அந்தக் கொலைகாரனில்லாவிட்டால் நான் எப்படிப் பேரரசியாயிருக்க முடியும்? நீ எப்படி அமைச்சனாக்கப்பட்டிருப்பாய்? நினைத்துப் பார். (அஸஃவ் போகிறான்.) காட்சி 18 (தெக்காணம்; ராவண துர்க்கம். ஷாஜஹான், வானரராஜா) வா-ரா: என்னை வரவழைத்ததாக அறிந்தேன். ஷா: என் தம்பி குஸ்ரூவை இங்கேயே விட்டுவிட்டுப் போருக்குச் செல்ல எண்ணுகிறேன். அவனைக் காத்துப் பேணும்படி தான் உம்மை வரவழைத்தேன். வா-ரா: மிக நன்று. நான் பார்த்துக் கொள்கிறேன். (குர்ரம் போகிறான்) சேவகா! சேவகன்: எசமான்! வா-ரா: கோட்டைக் கதவைப் பூட்டித் திறவுகோலை என்னிடம் கொடு. என் உத்தரவின்றி யாரும் வெளியே போக வேண்டாம். போ. சே: அப்படியே. (போகிறான்) வா-ரா: பேரரசர் கையாளாயிருந்து பேரரசியின் கணவனைக் கொன்றேன். பதவி உயர்ந்தது. இப்போது பேரரசியின் கையாளானேன். அத்துடன் குர்ரமின் பணியும் கிடைத்தது. இருவர் ஆணையில் ஒரு செயல், இருபுறமிருந்து பாராட்டு. இன்னும் உயர்வு, ஆகா! (குஸ்ரூ வருகிறான்.) குஸ்ரூ: யார் இங்கே? வானர ராஜாவா? குர்ரம் எங்கே? வா-ரா: ஆம். போருக்குச் சென்றிருக்கிறார். என்னை உன் காப்பாளனாக்கிச் சென்றிருக்கிறார். குஸ்ரூ: எனக்கு ஏன் காவல்? கோட்டைவாயிலுக்கு வெளியே நான் போகாமல் ஏன் அடைக்க வேண்டும்? வா-ரா: காவல் அல்ல பாதுகாப்பு. தாங்கள் கவலையற்றுத் தூங்கலாம். (போகிறான்) குஸ்ரூ: ஆ, என் உடன் பிறந்த அண்ணனே என்னை இப்படி நடத்துகிறான். அவனுக்கு நான் என்ன செய்தேன்? தந்தையை விட அவன் மீது பாசம் வைத்தல்லவா வந்தேன்? (குஸ்ரூ தூங்குகிறான். கொலைகாரருடன் வானரராஜா வருகிறான். கொலைகாரர் குஸ்ரூவைக் குத்துகின்றனர்.) குஸ்ரூ: ஆ, அப்பா...! இது என்ன! என்னை யார் கொலை செய்வது? வானரராஜா? இப்போது புரிகிறது! (விழுகிறான். அனைவரும் மறைகின்றனர்.) (அரண்மனை: நூர்ஜஹான், அஸஃவ்) அஸஃவ்: மேஹர், இது முழுவதும் உன் திருவிளையாடல். வானர ராஜாவை ஏவிவிட்டுக் குர்ரம் மீது பழியைச் சாட்டி அவனையும் ஒழித்து விடப் பார்க்கிறாய். நூர்: அஸஃவ், நீ என் அண்ணனாயிருக்கலாம்; ஆனால் உனக்கு அரசியல் தெரியாது. இதிலெல்லாம் நீ தலையிட வேண்டாம். எச்சரிக்கை! என்னைப் பேரரசியாகும்படி நீ தான் தூண்டினாய். நினைவிருக்கட்டும். அஸஃவ்: (தலையைக் கவிழ்ந்தவண்ணம்) சரி, ஆவது ஆகட்டும். (போகிறான்) நூர்: தீ கொழுந்துவிட்டெரிகிறது. குஸ்ரூ முதல் பலி. இனி அடுத்த பலி..... (அழுது சிவந்த கண்களுடன் ரேவா வருகிறாள்) ரேவா: பேரரசி நூர்ஜஹான்! நூர்: பேரரசி ரேவா! ரேவா: என் பிள்ளை குஸ்ரூ- அவனைக் கொலை செய்தது நீ தானா? நூர்: உனக்கு யார் அப்படிச் சொன்னார்கள்? ரேவா: என் உள் நெஞ்சந்தான். வேறுயாருமில்லை. நான் அறிய விரும்புகிறேன், கொன்றது நீ தானா? நூர்: நானே கொன்றிருந்தால்... ரேவா: அது பெரும் பழி. அடாப்பழி. (நடுங்கித் துடிக்கும் குரலில்) பிள்ளை ஒன்றிருந்தாலல்லவா உனக்குத் தெரியும், பிள்ளையையிழந்த தாயின் துயர்? ஆனால்... ரேவா: நான் தாய். என்னிடம் விளக்கம் எதுவும் வேண்டாம், பேரரசி. பேரரசையும் மனமுவந்து உனக்குத் தந்தேன். என் கணவரையும் மனமுவந்தே கொடுத்தேன். ஆனால் தாய்மை- என் பிள்ளை- அதை ஏன் பறிக்க வேண்டும்? (இருகைகளாலும் முகம் பொத்திக் கதறுகிறாள். லைலா வருகிறாள்) லைலா: இளவரசர் குஸ்ரூவை நீயா அம்மா கொன்றாய்? நூர்: ரேவாவுக்கு ஒரே பிள்ளை. ஏன் அவன் மீது அட்டூழியம்? நூர்: லைலா! மறந்துவிட்டாயா, நீ கூறியதை? நீ தானே என்னைத் தூண்டினாய், பேயாக மாறி இந்தப் பேரரசின் பரிவாரத்தைப் பழிவாங்கு என்று? நீ ஒத்துழைப்பதாகக் கூடக் கூறினாயே? லைலா: போதும். நான் உன்னைப் பேயாட்டமாடச் சொன்னேன். நான் நினைத்தேன், நீ மனிதப் பேயாவாய் என்று. நீ கணவனைக் கொல்லச் செய்து கொலைகாரனை அணைத்த பேய் உருவின் பேய் வடிவம் கொண்டவள் என்பதை மறந்தேன். இனி உன் பாதை வேறு, என் பாதை வேறு. என்னை இனி உன் பகை என்று நினைத்துக் கொள். நூர்: லைலா! லைலா: ஆம், அம்மணி! நீ பழிக்குப் பழிவாங்கவில்லை. பழி சூழ்கிறாய். உன் வழியில் இனி எனக்குத் துளியும் தொடர்பு வேண்டாம். (போகிறாள்) நூர்: பேரரசி! ரேவா: நூர்ஜஹான், எனக்கு உன்மீது கோபமில்லை. என் பிள்ளை இறந்த துக்கம் போதும் எனக்கு. நீயும் கொலை செய்ததற்கு வருந்துகிறாய் என்று காண்கிறேன். கடவுள் உன்னை மன்னித்தருள்வாராக. ஆனால் தாய் இன்பம் ஒன்றன்றி வேறின்பம் காணாத எனக்கு ஏன் இப்பேரிடியைக் கடவுள் தரவேண்டும், ஏன் இந்தப் பேரிடி எனக்கு? (போகிறாள்.) நூர்: பேரரசி ரேவாவின் பகைமையை நான் வெல்ல முடியும். ஆனாலும் அவள் பொறுமை என்னைச் சிறிது நேரமாவது மலைக்க வைத்து விடுகிறது. போதும் இது. காட்சி 20 (அரண்மனைத் தோட்டம். லைலா பாடுகிறாள்.) லைலா: இருளிலும் பூத்து வாடுமோ- இன்ப நறும்பூ இருளிலும் பூத்து வாடுமோ (இரு) காதலின் புன்னகை பூத்திடு முன்னே காரிருள் நஞ்சுபடர்ந்து கவிந்தது தென்றல்வாவி மென்மலர் நகைக்கத் திரள்புயல் அடர்ந்து திடுமெனப் பகைக்க (இரு) (சஹரியார் வருகிறான்) சஹ: உன் இனிய பாட்டுக் கூடத் துயரமூட்டுகிறது. துயர்ச் செய்திகளை நீ அறிவாயா? லைலா: என் துயர் அகத்துயர்தான். ஆனால் புறத்துயர். எதிர்பாராததல்ல. என்ன செய்தி? சஹ: குர்ரம் ஷாஜஹான் என்ற பெயரில் தன்னைப் பேரரசனாக அறிவித்துத் தில்லிமீது படையெடுத்தானாம். ஆனால் படைத் தலைவன் மகபத்கான் அவனை வென்று தெக்காணத்துக்கு ஓட்டி விட்டானாம்! லைலா: பாவம். அவன் பிடிபட்டால் கொன்று விடுவார்கள். ஆயினும் பேரரசராக விரும்பினால், உம் உயிருக்கு ஆபத்து வரும். நான் பேரரசராக விரும்பவே மாட்டேன் என்று என்னிடம் ஆணையிட்டுக் கொடுங்கள். சஹ: இதோ! (ஆணையிடுகின்றான்; தோழி வருகிறாள்.) தோழி: அம்மா, பேரரசி ரேவா தன் மகனிறந்த வெந்துயரால் வாடித் தன் உயிரை விட்டு விட்டாள். (போகிறாள்) லைலா: அந்தோ, ரேவா. நீ ஒரு தெய்வம். செயலற்ற பதுமைத் தெய்வம்! உன் பெயர் நீடூழி வாழ்க. (போகிறாள்.) சஹ: போர் என்ற ஒன்று உலகில் என்று ஒழியும்? அழகான காட்சிகள் உலகிலிருக்கின்றன. கவிதையுள்ளமற்ற இந்த மக்கள் சோலையில் உலாவுவதை விட்டு அதில் கண்ணீரும் செந்நீரும் சிந்தி மடிகிறார்களே. என்னே பேதமை! காட்சி 21 (மேவாரைச் சார்ந்த உதயப்பூர் ராணா கர்ணாசிங் கொலுவிருக்கை; ஷாஜஹான்.) ஷா: புகழ்மிக்க ராணா! மகபத்கானுடைய வீரத்தாக்குதல் எனக்கு மாநிலமெங்கும் நிற்க இடமின்றி என்னை வேட்டை யாடுகிறது. தில்லியில் தோற்று தெக்காணம்! தெக்காணத்தில் தோற்று வங்கம்! வங்கத்தில் படை முழுதும் இழந்து, நான் பரஹம்பூரைக் கைப்பற்றுமுன் அங்கும் வந்து என்னைத் துரத்தினான் மகபத். தங்களிடம் தான் தஞ்சம் நாடுகிறேன். கர்ண: பேரரசின் வலக்கரமே! மகபத்கானுக்குத் தோற்றோடுவது ஒரு தோல்வியன்று. இத்தனை தடவை அவர்கள் எதிர்ப்பைச் சமாளித்த உம் திறமையே திறமை. நீர் இனிக் கவலைப்படவேண்டாம். மேவார் தான் கடைசி மனிதன், கடைசி மனிதனின் கடைசித்துளிக் குருதி இருக்கும் வரை உமக்காகப் போராடும். ஷா: மேவாரின் பெருமையே பெருமை. காட்சி 22 (நூர்ஜஹான் மாளிகை. நூர்ஜஹான், ஜெஹாங்கீர், மகபத்கான்.) ஜெஹாங்: மகபத், உம் வீரங்கண்டு எல்லையிலா மகிழ்ச்சி யடைகிறேன். வியந்து பாராட்டுகிறேன். பல களங்களில் வெற்றி பெற்று. இப்போதும் ராணாவின் படை வீரரைக் காசிப் போரிலே பணிய வைத்து, கிளர்ச்சி செய்த குர்ரத்தையும் எம்முன் கொண்டு வந்திருக்கிறீர். உம் வெற்றிகளைப் புகழ்ந்து பாராட்டுகிறேன். (மகபத் தலைசாய்த்து வணக்கமளிக்கிறான்.) நூர்: உம் வெற்றி கண்டு நானும் மகிழ்ந்து பாராட்டுகிறேன், மகபத். (மகபத் மீண்டும் வணக்கம் தெரிவிக்கிறான்.) ஆயினும் நீர் வெற்றி பெற்றும், நமக்கெதிராகக் குர்ரத்திற்கு தவிபுரிந்த ராணாவைச் சும்மா விட்டுவைத்திருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். மகபத்: சரண் புகுந்தவனைக் காக்கவே அவர்கள் முயன்றதாகக் கூறுகின்றனர். அவர்கள் நியாயத்தை நான் ஒத்துக்கொள்ள வேண்டிய வனாகிறேன். ஜெஹாங்: சரி, குர்ரத்தை- ஷாஜஹானைத் தக்க மதிப்புடனே அழைத்து வருக. (மகபத் செல்கிறான்.) நூர்: அரசே, ஒழுங்கான விசாரணையில்லாமல் விடு வித்தால், மக்கள் பின்னர் நேர்மையில் மாசு காண்பார்கள். ஜெஹாங்: மாசு உன் பேரிலும்- ஏன் என் பேரிலுங் கூடக் காணலாம். ஆயினும் நான் இப்போது தந்தையாகவே தான் நடந்துகொள்ள முடியும். மேலும் நான் முன்பே மன்னித்து அவ்வுறுதியிலேயே வருவித்திருக்கிறேன். நூர்: நீங்கள் தந்தையாகப் பின்னால் நடந்துகொள்ளலாம். ஆனால் மக்கள் மதிக்கும்படி விசாரணை நடத்தாமலிருக்க முடியாது. உங்களால் இயலாதானால், அதை நான் ஏற்று நடத்துகிறேன். ஜெஹாங்: சரி, (அமைச்சர் பெருமக்கள், படைத்தலைவர் முதலிய புடையர் குழுவினருடன் ஷாஜஹானும் மகபத்கானும் வருகிறார்கள்.) ஜெஹாங்: குர்ரம் வருக! நண்பர்களே வருக! குர்ரம்: வாழ்க பேரரசர்! நூர்: நீ குற்றவாளி; அம்முறையில் விசாரிக்கப்பட விருக்கிறாய். ஷா: (வியப்புடன்) விசாரிக்கப்படவா நூர்: ஆம்; உன் பேரிலிருக்கும் குற்றச்சாட்டுக்களாவன: ஒன்று, நீ வானர ராஜாவுடன் சேர்ந்து உன் தம்பி குஸ்ரூவைக் கொன்றது. இதை நீ மறுத்தால், வானர ராஜாவின் சாட்சி இருக்கிறது. இரண்டாவது நீ பேரரசருக்கெதிராகக் கிளர்ச்சி செய்தது. இதை நீயும் மறுக்கமாட்டாய் என்று நம்புகிறேன். மூன்றாவது நீ கொள்ளைக்காரப் படையை வைத்துக் கொண்டு பேரரசின் பரப்பெங்கும் சென்று தொல்லைகள் விளைவித்தது. இதற்கெல்லாம் நீ விளக்கங் கூறியாக வேண்டும். ஷா: விளக்கம் எழுதியனுப்பினேன். இங்கே திருப்பிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நூர்: அவசியம் உண்டு. எழுதியனுப்பியதை வேண்டு மானாலும் இந்தப் பேரவை முன் கூறலாம். ஷா: (சிறிது விழித்து) முதலில், விசாரணை செய்வது யாரென்றும், பேரரசின் தலைமையில் இங்கே இருப்பது ஜெஹாங்கீரா, நூர்ஜஹானா என்றும் அறிய விரும்புகிறேன். நூர்: நீ குற்றவாளி! கேள்விக்கு மறுமொழி கூறவேண்டி யவனே யன்றிக் கேட்க வேண்டியவனல்ல. ஷா: (உரக்க ஜெஹாங்கீரை நோக்கி) உண்மையில் உங்களுக்கே விளக்கம் வேண்டுமா? ஜெஹாங்: ஆம். வேண்டும். ஷா: மன்னிப்பதாகக் கூறி அழைத்து வந்தது பேரரசரின் சூழ்ச்சி தானோ? நூர்: யாரிடம் பேசுகிறாய் என்பது நினைவிருக்கட்டும். ஷா: நினைவிருக்கிறது. என் தந்தையுடன்தான் பேசுகிறேன். (ஜெஹாங்கீரை நோக்கி) ஐயா, நான் பகைத் தெழுந்ததுண்டு. ஆனால் நான் வாள் எடுத்துத்தான் போர் செய்தேன்; மறைந்து கொலைசெய்யவில்லை. போரில் தோற்றேன்- அதுவும் மகபத்கான எதிர்த்ததால், இல்லாவிட்டால் நான் வென்று இந்த ஆதிக்கக்காரியைத் தீயிலிட்டிருப்பேன். ஜெஹாங்: (சீற்றத்துடன்) நாவையடக்கிப் பேசு, குர்ரம்! ஷா: ஆணை! நூர்: (ஜெஹாங்கீர் சீற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு) இந்தப் பெண் இப்போது பேரரசி. நீ உன் மற்ற குற்றங்களுடன் பேரரசியை அவதூறாகப் பேசிய குற்றமும் இழைத்துவிட்டாய். உன் குற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராண்டுக் கடுங்காவல் தண்டனையிடுகிறேன். (மகபத்கானை விளித்து) உம். இழுத்துச் செல்லுங்கள். மகபத்: மன்னிக்க வேண்டும். நான் ஒப்புதல் தந்தே ஷாஜகானை அழைத்து வந்தேன். இச் சொல் மாறாட்டத்தில் நான் ஒரு போதும் பங்கு கொள்ளமாட்டேன். நூர்: மகபத், நீ அந்தக் கேள்வி கேட்க வேண்டியதில்லை. நீ பேரரசின் ஆணைக்கு அடிமை. சொன்னதைச் செய். மகபத்: அப்படியானால் வேலையைத் துறந்துவிடுகிறேன். ஆணையை ஏற்று நடத்தவும் மறுக்கிறேன். நூர்: (கடுஞ்சினங் கொண்டு) படைவீரரே, இம்மகபத் கானைக் கைது செய்யுங்கள். (எல்லோரும் கைகட்டி நிற்கின்றனர்.) நூர்: என்ன? எவருக்கும் இவனைக் கைது செய்ய வீரம் இல்லையா? ஜெஹாங்: மகபத்கானைக் கைது செய்ய வல்லார் எவரும் கிடையாது. மகபத், உன்னை விடுவிக்கிறேன். நூர்: அது முடியாது அரசே. இதனால் உயிரிழக்க நேர்ந்தாலும் நான் பின்வாங்கமாட்டேன். நானே போய்க் கைது செய்கிறேன். (அரசிருக்கையிலிருந்து குதிக்கிறாள். அச்சமயம் லைலாவின் வருகை கண்டு அனைவரும் மலைக்கின்றனர்.) லைலா: இது அரசவை, பேரரசி, (ஜெஹாங்கீரை நோக்கி) பேரரசே, நீர் அரசிருக்கையிலிருந்து கொண்டே ஒரு பெண்ணின் ஆதிக்க அட்டூழியத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதா? வெட்கமில்லை! (ஷாஜஹானை நோக்கி) பேரரசர் எப்போது மன்னித்துவிட்டாரோ அதற்கு மேல் விசாரணையில்லை. நீர் போகலாம். (மகபத்தை நோக்கி) நீர் செய்தவை யாவும் போற்றத் தக்கதே. நீர் மதிப்புடனேயே செல்லலாம். (அனைவரையும் நோக்கி) பேரரசரை வாய் மூடவைத்த ஒரு பெண்ணை விட, அவரைத் தட்டி எழுப்பும் என் ஆணை மோசமல்ல. இதை நிறைவேற்றுங்கள். (எல்லோரும் தலைகவிழ்ந்து செல்கின்றனர்.) காட்சி 23 (நூர்ஜஹான் மாளிகை) நூர்: ஆதிக்கப் பாறையின் உச்சிக்கு வந்துவிட்டேன். நூர்ஜஹான், இனிக் குதிரைப் பாய்ச்சலைக் கொஞ்சம் நிறுத்து. மெள்ள மெள்ளக் கவனமாக முன்னேறு!... ஏன் மெள்ள முன்னேற வேண்டும்! குதிரைப் பாய்ச்சலிலே செல். நாலுகால் பாய்ச்சலிலேயே செல். விழுந்தால் கேடில்லை. என்றைக்கேனும் ஒருநாள் விழுந்துதானே ஆகவேண்டும். ஏனென்றால் வென்றால் இன்னும் பிறர் கண்டு வியக்கக் கொடும் பாறைகளின் உச்சியில் பாய்ந்து ஓடலாம், போ. (அஸஃவ், ஜெஹாங்கீர் வருகின்றனர்.) அஸஃவ்: பேரரசி, மகபத்கானிடம் விளக்கம் கேட்டால் அவர் தர மறுக்கலாம். அல்லது கிளர்ச்சி செய்யலாம் என்று நினைக்கிறேன் நூர்: கிளர்ச்சி செய்தால் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும். ஜெஹாங்: மன்னர் தந்தைபோல்தான் ஆளவேண்டும். நூர், ஒரே அடக்குமுறையாயிருக்கக் கூடாது. மேலும் வீரர் மகபத்கானிடந்தான் பற்றுடையவர். நூர்: அரசே, ஆபத்து இல்லாமல் எந்தப் போராட்டமும் இல்லை. ஆபத்துக்கு அஞ்சினால் அரசராயிருக்க முடியுமா? மகபத்கானை நாம் வங்காளத்துக்கு அனுப்பினோம். அவன் அங்கிருந்து நமக்கெதிராகவே ஒரிஸ்ஸாவைத் தாக்கித் தன்னை வலுப்படுத்துகிறான். இனி சும்மா விடப்படாது. ஜெஹாங்: அமைதியாயிருக்கும் பேரரசில் போர் ஏன் நூர்? நூர்: இவ்வமைதி புயலுக்கு முந்திய போலி அமைதி. நாம் முந்திக் கொண்டால் எதிரி வீழ்வது உறுதி. ஜெஹாங்: சரி, இப்போது என்ன செய்யப் போகிறாய்? நூர்: அவனைப் பேசாமல் பஞ்சாபுக்கு மாற்றப்போகிறேன். அத்துடன் லாகூர்க் கோட்டைமீது அவனுக்கு உரிமை இல்லாமல் செய்யப் போகிறேன். ஜெஹாங்: சரி, நூர்: அஸஃவ், நீ போய்க் காரியங்களைப் பார். (போகிறான்) ஜெஹாங்: நீ என் அழகரசி. நீ இனி என்னைக் கேட்காமலே நாட்டை ஆண்டுகொள். எனக்கு உன் இனிய முகமும் குயில் மொழிகளும் போதும். நூர்: அப்படியே அரசே! தோழியீர்! (தோழியர் வருகின்றனர்) மன்னர் மகிழப் பாடுக. தோழியர்: தேனிசையள்ளிப் பருகுவோம்- அதில் செம்மாந்துள்ளம் உருகுவோம் வானிடைத் தென்றலில் குலவுவோம்- வண்ண மாமயிலென்ன உலவுவோம் ஜெஹாங்: ஆகா, ஆகா! வில்லென வளைந்தே ஆடிவருவோம்- நல்ல வீணைகளெனவே பாடி வருவோம் கொல்லுமதனுடன் ஊடி வருவோம்- பின்னர்க் குலவு மகிழ்வுடன் கூடி வருவோம். நூர்: மன்னர் அயர்ந்து விட்டார். போங்கள். (போகிறார்கள்) ஜெஹாங்: (கண்விழித்து) நூர்ஜஹான்! நூர்: அரசே! ஜெஹாங்: நீ நிலமாதுதானா அல்லது தேவமாதா? நூர்: இரண்டுமில்லை அரசே. நான் கோமாது? காட்சி 24 (லாகூர் அரண்மனை: நூர்ஜஹான், அஸஃவ், ஜெஹாங்கீர்.) நூர்: என்ன செய்தி, அஸஃவ். அஸஃவ்: மகபத்கான் வெளியே படைவீடமைத்துத் தங்கியிருக் கிறான். பேரரசரை ஒரு தடவை காண விரும்புகிறான். நூர்: போ. காண முடியாதென்று கூறிவிடு. அஸஃவ்: பேரரசர் கருத்து யாது? ஜெஹாங்: போ. கூறியபடி செய். (அஸஃவ் போகிறான்) நூர்: நீ நாலுகால் பாய்ச்சலில் செல்கிறாய். அவனைக் காணா விட்டால் என்ன? நூர்: கூடாது, அரசே. இப்போது அது தேவை. மகபத் கானின் திமிர் உங்களுக்கென்ன தெரியும்? தன் மாப்பிள்ளை யிடமே தூது அனுப்பியிருந்தான். நான் மாப்பிள்ளையின் தலையைத் திருகி அதையே மறு மொழியாக அனுப்பினேன். ஜெஹாங்: இந்தக் கொடுமையில்லாமலே காரியமாற்றி யிருக்கலாம். நூர்: அவன் எப்போதும் சரிசம அடிப்படையில் ஏன், எதற்குமே பேச முனைகிறான். இனி அவ்வாறு உரிமை கோரமாட்டான். காட்சி 25 (மேவாரில் உதயப்பூர் அரண்மனை: கர்ணசிங் ஷாஜஹான், விஜயசிங்.) விஜய: முகலாயப் படைத்தலைவர் மகபத்கான் வெளியே வந்திருக்கிறார். கர்ண: மகபத்கானா? மதிப்புடன் வரவேற்று அழைத்து வா! (விஜயசிங் செல்கிறான்.) ஷா: மகபத்கான் இப்போது இங்கே வரக் காரணமென்ன? (விஜயசிங்கும் மகபத்கானும் வருகின்றனர்.) மகபத்: வணக்கம்; ராணா அவர்களே! வணக்கம் இளவரசே! ஷா: வணக்கம், மகபத்கான்! ராணா: வணக்கம், தளபதி! மகபத்: நான் இப்போது தளபதியல்ல, ராணா! கர்ண: அப்படியானால் வங்காள முதல்வர்! மகபத்: நான் இப்போது அதுவுமல்ல. தங்கள் அருள் நாடிவந்த ஒரு முஸ்லிம் மட்டுமே. ஷா: என்ன இது, என்ன மகபத்கான்! மகபத்: முகல் பேரரசைத் துறந்து புண்பட்டு வந்திருக்கிறேன். எனக்குத் தாங்கள் மேவாரிலேயே ஒரு பதவி தந்து ஆதரவு காட்டக் கோருகிறேன். ஷா: ஆகா, அந்தப் பெண் பேய் என்னைச் சாடியது போல் உம்மிடமும் தன் கோர உருவைக் காட்டியிருக்க வேண்டும். உம்மை அவமதித்த இந்த முஸ்லிம் பேரரசை எதிர்த்து, இந்தப் பேரரசு நிறுவ நீர் விரும்பினாலும் நான் ஒத்துழைக்கத் தயார். மகபத்: உங்கள் பெருந்தன்மையைக் கண்டு உளம் மகிழ்கின்றேன். ஆனால் ராணா எனக்கு ஐயாயிரம் படைவீரரும், பதவியும் தந்தால் போதும். என் தன்மதிப்பை அது நிலைநாட்டும். கர்ண: மனமாரத் தருகிறேன். விஜயசிங்! விஜ: அரசே! கர்ண: மகபத்கான் இதுமுதல் நம் படைத் தளபதி. அவரிடம் ஐயாயிரம் துணிச்சல் மிக்க படைவீரர்களை ஒப்படைத்து நீரும் இருந்து அவர் இட்டபணி செய்வதுடன் அவர் உயிரை எம் உயிர்போல் காக்கக் கடவீராக. விஜ: மகிழ்ச்சியுடன் உம் ஆணையைக் காப்பேன். (மகபத்கானும் விஜயசிங்கும் போகின்றனர்) கர்ண: மகபத்கானைப் போன்ற தூய வீரமும் உயர் குணமும் உடைய மகாத்மாக்களைத் தன்னிடமிருந்து உதைத்துத் தள்ளிய இந்து இனம் ஏன் அழியாது? ஆனால் நூர்ஜஹான் பிடியில் அகப்பட்ட பேரரசர் இதே தவற்றை இப்போது செய்துள்ளார். அத்தவறு மகபத்கானின் ஒப்பற்ற துணையை மீட்டுத் தந்திருக்கிறது. ஷா: ஆம், ராணா. உயர் பண்பை மதிக்காத மதம், பேரரசு நாடு, எதுவும் அழிந்துதான் தீரும். காட்சி 26 (சிந்து ஆற்றங்கரை: முதல் படைவீடு; இருபுறமும் படைகள்; நூர்ஜஹான், அஸஃவ்.) நூர்: ஐயாயிரம் வீரர்தானே கொண்டு வந்திருக்கிறான், மக பத்கான், அதனைக் கண்டு ஏன் இத்தனை நடுக்கம்! எங்கே நம் தளபதி? அஸஃவ்: அக்கரை சென்றிருக்கிறார். நூர்: கொஞ்சமேனும் அக்கரையில்லாதவர். இக்கரையில் தானே நம் படையிருக்கிறது. அக்கரை செல்வானேன் அந்த உதவாக்கரை? கிடக்கட்டும். நாம் ஏன் அக்கரைக்குச் சென்றே தாக்கக் கூடாது? அஸஃவ்: பாலம் சிறிது; இராஜபுத்திரர் அதனைக் காக்கின்றனர். நூர்: நம்படை அதனை ஊடுருவிச் செல்லட்டும். அஸஃவ்: வீரர் பெரிதும் இறந்துபடுவர். நூர்: படட்டும், கேடில்லை; தாக்கும்படி தளபதிக்கு உத்தர விடுகிறேன். அஸஃவ்: தளபதி இல்லையே இங்கு. நூர்: உன்னையே தளபதியாக்கியிருக்கிறேன் போ. (அஸஃவ் போகிறான்) என்ன திண்ணக்கம் இந்த மகபத்கானுக்கு! ஐயாயிரம் வீரர்களுடன் நம் படையை எதிர்க்க வருகிறான். (படைவீரன் ஒருவன் வருகிறான்) படைவீரன்: பேரரசி, நம்படையில் பெரும் பகுதி மகபத்கானுடன் போய்ச் சேர்ந்துகொண்டது ‘வாழ்க மகபத்’ என்ற போர்க்குரல் இரு படைகளையும் ஒருபடையாக்கி விட்டது. நூர்: பேரரசர் எங்கே? ப.வீ: அக்கரையில்! நூர்: மீதிப்படைகளுடன் தாக்கும்படி ஆணையிடு! என் யானையைக் கொண்டுவரச் சொல், நானே நேரில் செல்லுகிறேன். (போகிறாள்) காட்சி 27 (படைவீடு: காவலர் குழப்பம். திரை மறைவில் பீரங்கி கேட்டு இரு திறப்படைகளும் வருகின்றன. மகபத்கான் வருகை.) மக: இரஜபுத்திர வீரரே! போதும். சற்று நிறுத்துங்கள். முகல் வீரரே, படைக் கலங்களைக் கீழே வைத்து விட்டால், போரை நிறுத்திவிடுகிறேன். என் வீரரை நானே வீணில் அழிக்க விரும்பவில்லை. (முகல் வீரர் படைக்கலம் தாழ்த்தி நிற்கின்றனர். ஜெஹாங்கீர் வருகிறார்.) ஜெஹாங்: மகபத்கான்! மக: பேரரசே! ஜெஹா: இதென்ன கோல்மால்களெல்லாம் பண்ணிக் கொண்டிருக்கிறாய்? மக: இல்லாவிட்டால் தங்களை எப்படிக் காண முடியும், பேரரசே? என்னை மன்னிக்க வேண்டும். பேரரசின் ஆட்சியிலே நேர்மை, மனிதத் தன்மை இரண்டையும் விட, பீரங்கிக் குண்டே வலிமை வாய்ந்ததாயிருக்கிறது. ஜெஹா: உன் தவற்றை நான் மன்னித்துவிடுகிறேன் இப்படையைக் கலைத்துவிடு. மக: என் உயிரின் பாதுகாப்புக்குச் சரியான பிணை இல்லாமல் அவர்கள் கலையமாட்டார்கள், பேரரசே! ஜெஹா: நீ என்ன கூறுகிறாய்? மக: பேரரசே, மகபத் தங்கள் நாயாயிருந்த காலம் மலையேறி விட்டது. நாய்க்கும் தொண்டனுக்கும் நன்றியில் ஒற்றுமை. ஆனால் தொண்டனுக்குத் தன்மதிப்பு உண்டு. நாய்க்கு அது இல்லை. நாயொத்த இனத்தார்க்கும் அது இருக்க முடியாது. நேரமாகிறது. தங்கள் பொழுது போக்கு வேட்டை ஏற்பாடாயிருக்கிறது. முன் செல்லக் கோருகிறேன். ஜெஹா: ஓகோ, உன் உயிருக்கு நானும் பேரரசுமே பிணை அல்லவா? காட்சி 28 (முதல் படைவீடு: மகபத்கான், ஜெஹாங்கீர், விஜயசிங்.) மக: பேரரசே, நான் இவ்வாறு நடக்கவேண்டியிருப்பது பற்றித் தவறாக எண்ணாதிருக்கக் கோருகிறேன். எனக்குத் தங்கள் முன்னிலையில் ஒரு குற்ற விசாரணை செய்ய வேண்டும். ஜெஹா: யார்மீது? மக: யார்மீதாயினும் ஆள், பதவி, தொடர்பு பாராது நீதி வழங்க வேண்டுகிறேன். ஜெஹா: சரி, யார்மீது? மக: பேரரசி நூர்ஜஹான் மீது. ஜெஹா: இது முன்பே தெரியும். குற்றச்சாட்டுக்கள் யாவை? மக: ஒன்று இளவரசர் குஸ்ரூ கொலை. இதன் பயனாகவே தாங்கள் பேரரசி ரேவாவை இழந்தீர்கள். இரண்டாவது இப்பழியை ஷாஜகான் மீது ஏற்றி அவரைக் கிளர்ச்சிக்குத் தூண்டியது. மூன்றாவது பேரரசர் பெயரால் தன்மனம்போல் ஆட்சி நடாத்தி உங்கள் பெயரைக் கறைப்படுத்தியது. ஜெஹா: மூன்று குற்றங்களும் நிரூபிக்கப்பட்டால்! மக: அவள் தண்டிக்கப்படட்டும். ஜெஹா: (மௌனம்) மக: மூன்றும் உண்மை என்பதைத் தாங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஜெஹா: (மௌனம்) மக: இவற்றிற்குச் சரியான தண்டனை கொலைத் தீர்ப்புத்தானே? ஜெஹா: மகபத்கான்....! மக: உணர்ச்சிகள் வேண்டாம், பேரரசே. நீதி மட்டும் கோருகிறேன். ஜெஹா: (மௌனம்) மக: தண்டனை பொருத்தமற்றதா? ஜெஹா: பொருத்தமே. மக: அத் தீர்ப்பில் கையெழுத்திடக்கோருகிறேன். ஜெஹா: ஆனால்... மக: தீர்ப்புச் சொல்லிவிட்டீர்கள், பேரரசே. (ஜெஹாங்கீர் வாய் பேசாமல் கையெழுத்திடுகிறான். விஜயசிங், பேரரசியைக் கண்டு இதைக் காட்டிக் கட்டளையை நிறைவேற்று. (விஜயசிங் போகிறான்.) பேரரசர் ஜெஹாங்கீர் என்றும் நீதி தவறியதில்லை. பேரரசர் அக்பர் மரபுக்குத் தாங்கள் ஒரு விளக்கம். (விஜயசிங் வருகிறான்) விஜய: சாகுமுன் கணவனைக் காண்பது பெண்கள் உரிமை என்று பேரரசி கூறுகிறாள், தளபதி! மக: (பெருமூச்சு விட்டு) சரி, போய் அழைத்து வா. (விஜயசிங் போகிறான்) பேரரசே, பேரரசியின் தோற்றமும் பசப்பும் உம் நடுநிலை நேர்மையை அசைக்காதிருக்க வேண்டுகிறேன். ((நூர்ஜஹானுடன் விஜயசிங் வருகிறான்) நூர்: பேரரசே, இந்தக் கையெழுத்து உங்களுடையது தானா? ஜெஹா: (மௌனம்) நூர்: ஆம். தங்களதுதான். உங்கள் மௌனம் கூறுகிறது. இனி நான் கேட்கவேண்டியது ஒன்றுமில்லை. நான் சாகத் தயார். என் கணவன் கையாலேயே சாவதானால் நான் மகிழ்ச்சியுடன் சாகிறேன். அவருக்குக் காதல் வேண்டியிருந்த நாள்வரை காதல் தந்தேன். உயிர் வேண்டும்போது இன்னும் மகிழ்ச்சியுடன் உயிர் கொடுக்கிறேன். ஆயினும் என் இறுதி அவா ஆம்-கையெழுத்திட்ட தங்கள் கரத்திற்கு என் இறுதி முத்தம் தர விரும்புகிறேன். (கையை எடுத்து முத்தமிடுகிறாள்.) ஜெஹா: நூர்ஜஹான், இந்தக் கையெழுத்து என்னுடைய தன்று. நூர்: ஆ, உங்களுடையதன்றா? ஜெஹா: நீ எத்தனையோ குற்றம் செய்தது உண்மை. என் கண்களில் அவை குற்றமாகப்படவில்லை. என் பிள்ளையை நீ கொன்றதை அறிவேன். அன்று குறை காணவில்லை. பேரரசி ரேவாவை இழந்தேன். அன்றும் உன்மீது குறைகாண முடியவில்லை. ஆகவே நானே இக் கையெழுத்தை இட்டிருக்க இயலாது என்பதை நீ உணர்வாய். ஆனால்... இந்தக் கைதான்... நீ இறுதி முத்தமீந்த இதே கைதான் கையெழுத்திட்டது. ஆனால் அது இப்போது மகபத்கானின் கை! நூர்: மகபத்கான் நீ வென்றது இப்போதுதான்! ஆயினும் நான் வருந்தவில்லை. பேரரசை நீ எடுத்துக் கொள்ளலாம். என்னிடமிருந்தல்ல, பேரரசரிடமிருந்து. நான் அவர் பேரரசை ஆட்டிப் படைத்தேன், அவரைப் புண்படுத்தியல்ல. நான் ஒரு பெண். பெண்மையால் அவரை, பேரரசை ஆட்டிப்படைத்தேன். நீர் இப்போது அத்துறையில் என்னை வென்றுவிட்டீர். நீர் ஆட்டிப் படைக்கிறீர். ஆயினும் பெண்மை ஆட்டிப் படைத்த போது அம்முகம் எப்படியிருந்தது? இப்போது எப்படியிருக்கிறது, பாரும். உம் வெற்றியில் நீர் மகிழலாம். என் தோல்வியில் நான் வருந்தவில்லை. நான் தோற்றேன். மகிழ்ச்சியுடன் என் கணவன் கடமையைக் காக்கச் சாவைத் தழுவுகிறேன். பேரரசரே, சாவிலும் உம்மை மறவாது செல்கிறேன், விடைதருவீர். ஜெஹா: (உகுத்த கண்ணீருடன் அவளை அணைத்து) நீண்ட விடை வேண்டியதில்லை, பேரரசி! உன்னையடுத்துப் பேரரசரும் விரைந்து வருவது உறுதி. கடமைக்காக நீ சற்று முன் செல். காதலுக்காக நான் சற்றே பின்தங்கி வருகிறேன். நூர்: ஆ, தாங்கள் பேரரசர் மட்டுமன்று. என் காதற் பேரரசின் ஜோதி. (அணைத்து முகம் திருப்பிக் கொண்டு செல்கிறாள்.) ஜெஹா: மகபத்! மக: பேரரசே! ஜெஹா: எனக்கு ஒரு வேண்டுகோள். மக: ஆணையிடுங்கள், அரசே. ஜெஹா: இப்போது பேரரசர் ஆணையல்ல, மகபத்! ஜெஹாங்கீர் வேண்டுகோள். மண்டியிட்டு வேண்டுகிறேன். என் நூர்ஜஹானின் உயிருக்கு மன்றாடுகிறேன். மக: அரசே, நான் தங்கள் நாட்டுக் குடி, தங்கள் பக்தன்; நீங்கள் என் தெய்வம். நூர்ஜஹான் உங்கள் தெய்வம். அவள் தண்டனையை நீங்களே அகற்றிவிட்டீர்கள். இப்போது அவர்களே பேரரசர்! காட்சி 29 (காபூல் மலைப்பாதை: மகபத்கான் முன்னே பின்னை விஜயசிங்.) மக: ஆ என்தன் மதிப்பைப் பேண வந்தேன். ஒரு பேரரசின் சுமை என் மீது விழுந்தது. துறவி குளிர் காயப்போய்க் குடும்பம் வளர்த்த கதையாகிவிட்டது என் நிலை. அது கிடக்கட்டும்... ஆ, இதென்ன? (கொள்ளைக்காரர் தடுத்தல்) முதல் கொ. கா: நில்லுடா, நில்லு. மக: உங்களுக்கு என்ன வேண்டும்? 2-ம் கொ.கா: உன் தலை (ஓங்கி வெட்டப்போகிறான்.) விஜயசிங்: நில், நில் (அடியை வாங்குகிறான். கொள்ளைக்காரர் ஓடுகின்றனர்.) மக: அந்தோ விஜயா, நீ முந்திக் கொண்டாயா? விஜய: அரசே, காயம் நெஞ்சுப்பையை ஊடுருவி விட்டது. ஆனால் தங்களைக் காத்தேன். உயிருள்ளளவும் காத்தேன். ராணாவிடம் நான் இறுதி விடை பெற்றதாகக் கூறுக. மக: ஆ, என் அருந்துணைவனை இழந்தேன். இதில் ஏதோ சூது இருக்கத்தான் வேண்டும். இருக்கட்டும். பார்க்கிறேன். இதற்குப் பழிக்குப் பழி வாங்காமற் போவதில்லை. காட்சி 30 (படைவீடு: நூர்ஜஹான் தனியே.) நூர்: மனிதர் அனைவரும் இயற்கையின் விளையாட்டுப் பொருள்கள் தாம். இயற்கை சில சமயம் நம்மை மடிமீது வைத்துக் கொஞ்சுகிறது. அடுத்த நொடி நம்மை மண்மீது அறைந்து வீசுகிறது. பொம்மையின் வாழ்வு தாழ்வில் குழந்தைக்கு எவ்வளவு அக்கறை- அதே அக்கறைதான் இயற்கைக்கும் நம் வாழ்வு தாழ்வில் இருக்கமுடியும்! நமக்கு வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கலாம். இயற்கைக்கு அது விளையாட்டே! இதோ என் விளையாட்டு மகபத்கான் செயலாகி, மக்கள் மடிகின்றனர். (கூக்குரல் கேட்கிறது. ஜெஹாங்கீர் வருகிறான்) ஜெஹா: இது என்ன கூக்குரல், நூர்ஜஹான்? நூர்: இதுவா, சாவின் கீதம். காபூலிகளின் கொலை நடக்கிறது. ஜெஹா: கொலையா? யார் செய்கிறார்கள்? ஏன்? நூர்: ஏன்? உங்களுக்கு வேண்டியது இன்பவாழ்வு தானே? இதில் ஏன் கவலை செலுத்த வேண்டும்? ஜெஹா: பேரரசை நீயும் விட்டுவிட்டால் கவனிக்காம லிருக்கலாம். இப்போது... நூர்: அப்படியானால் சொல்கிறேன். கொலை செய்வது மகபத்கான். ஜெஹா: ஏன்? நூர்: ஏனா? மகபத்கான்தான் பேரரசரென்பது அவர் களுக்கு வேறு எப்படித் தெரியும்? படைத்தலைவர் என்று நினைத்தார்கள். தண்டனை பெறுகிறார்கள். ஜெஹா: அது தவறு தானே? நூர்: இருக்கலாம். ஆனால் யார், யாரைத் தண்டிப்பது? ஜெஹா: எனக்குப் புரியவில்லை... நூர்: யாரோ சில காபூலி வீரர்கள் மகபத்கானைத் தாக்கினார்கள். அதற்குக் காபூலிகளின் ஊர்களைத் தீக்கிரையாக்கி, அவர்களைக் கொன்று குவித்துப் பழிவாங்குகிறான் மகபத்கான். குற்றம் செய்யாதவரைத் தண்டிக்கிறான்! தண்டிப்பது மகபத்! இது அவர் பேரரசர் நடுநிலை நீதி! ஜெஹா: ஆனால் முதலில் தாக்கியது எதனால்? நூர்: என் உத்தரவு! ஜெஹா: உன் உத்தரவு? நூர்: ஆம். நான் மகபத்கானைக் கொல்ல உத்தரவிட்டேன். ஜெஹா: உனக்கு உயிர்ப் பிச்சை தந்த மகபத்கானைக் கொல்ல நினைக்கலாமா? நூர்: நானா உயிர்ப்பிச்சை கேட்டேன்; பேரரசர் அல்லவா? ஜெஹா: சரி, தவறு என்னுடையது தான். (மகபத் வருகிறான்.) மகபத், ஏன் இம்மக்களைக் கொலை செய்கிறாய்? மக: இது என் குற்றமன்று, கொற்றவா! அவர்கள் காரணமில்லாது என்னைத் தாக்கினர். (காவலன் வருகிறான்.) காவலன்: ஊர்ப் பெரியார்களும், பெண்டிரும் வந்திருக்கிறார்கள், முறையிட. ஜெஹா: அழைத்து வா. மக: அப்போரில் என் தளபதி, என் உயிர் நண்பன் விஜயசிங் கொலையுண்டான். என் இரஜபுத்திர வீரர் ஐந்நூறு பேர் மாண்டனர், மன்னரே! (ஊர்ப் பெரியார், பெண்டிர் ‘கோ’வெனக் கதறியவண்ணம் வருகின்றனர்.) மக்கள், பெண்டிர்: வெல்க பேரரசர், வாழ்க பேரரசி. எங்களைக் காப்பாற்றுங்கள். பெண்டு, பிள்ளைகள் கொலை செய்யப்படுகின்றனர். ஜெஹா: படைத்தலைவரை நீங்கள் தாக்கியதேன்? மக்கள்: நாங்கள் ஒரு குற்றமும் அறியோம். எங்கள் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள். ஜெஹா: மகபத், இவர்களுக்கு அஞ்சல் அளித்துக் காப்பாற்று. மக: அரசே, அவர்கள் தாக்குதலுக்கு மறுமொழி கூறாதவரை கொலை நடந்தே தீரும். மக்கள்: ஐயோ, ஊர் எரிகிறதே! பிள்ளைக் குட்டிகள் உயிரைக் காப்பாற்றுவாரில்லையா? இங்கே பேரரசரில்லையா, நீதி, கருணையில்லையா? நூர்: பெண்களே, பேரரசர் ஜெஹாங்கீர் அல்ல, மகபத்கான். அவரிடம் முறையிடுங்கள். பெண்கள்: பேரரசர் மகபத், பிள்ளைகள் உயிர்ப்பிச்சை தாருங்கள். கருணை காட்டுங்கள். மக: (மனமுடைந்து) சேவகா, தளபதிகளிடம் சென்று கொலை நிறுத்த அனுமதியிட்டதாகக் கூறு. (காவலன் செல்கிறான்) இனி என்ன வேண்டும், வேந்தே! ஜெஹா: (சிறிது நேரம் மௌனமாயிருந்து) மகபத்! மக: பேரரசே! ஜெஹா: இதோ உடைவாள். என்னைக் கொன்று விடு. இத்தகைய காட்சிகளை இனி என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. மக: உங்கள் உணர்ச்சியை உணர்ந்துகொண்டேன், அரசே, நான் ஆணை செலுத்துவது உங்களை உறுத்தாமலிருக்க முடியாதுதான். ஆனால் நான் என்னையே பேரரசர் என்று நினைத்துக் கொள்ளவும் இல்லை. தங்களை மீறி எதுவும் செய்ய விரும்பியது மில்லை. நூர்: பேரரசர் என்று நீர் எதைக் குறிப்பிடுகிறீர் மகபத்! நம்பிக்கைக்குக் கேடு செய்வது, எங்களை அரண்மனையிலிருந்து வெளியேற்றிக் கொண்டுவந்து, கூடவே காவலிருந்து, பேரரசு அதிகாரம் முழுவதும் செலுத்துவது பேரரசர் உரிமையல்ல வென்றால் வேறு எது பேரரசர் உரிமை? (மகபத் தலைகவிழ்ந்து நிற்கிறான்) ஜெஹா: அப்படியும் நீர் நீதியுடன் நடக்கும்வரை நான் தலையிட விரும்பியதில்லை. ஆனால் என்பெயரால் மக்கள் மீது அநீதி நடப்பதை, என் கண்முன்னாலே நடப்பதை நான் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. மக: தாங்கள் கட்டளையிடுங்கள், அரசே! ஜெஹா: மேலும் ஒருவர் குற்றத்திற்காக மற்றவர்களை நான் இதுவரை பழிவாங்கியது கிடையாது. என் மனைவி, என் உயிர்க்காதலியின் கொலைத் தீர்ப்புக்குக் கூட உம் அதிகாரப்படி கையெழுத்திட்டேன். நினைவிருக்கட்டும். மக: (கண்ணீருடன் மண்டியிட்டு) அரசே, தங்கள் பேரரசும் என் தளபதிப்பதவிக்குரிய வாளும் இதோ! நான் இனிவெறும் மகபத். என் குற்றங்களுக்கும் இனி நீங்களே தக்க தண்டனை கொடுக்கலாம். (உடைவாளைத் தருகிறான்) ஜெஹா: ஆ, இது என்ன மகபத்! நீ மனிதனா, தெய்வமா? மக: அரசே, நான் அரசியல் புயலில் பறக்கும் ஒரு தூசி! காட்சி 31 (அஸஃவ் மாளிகை; அஸஃவ், கர்ணசிங்.) கர்ண: அஸஃவ், பேரரசர் உடல்நிலை எப்படி இருக்கிறது? அஸ: மிக மோசமே. இன்னும் மணிக்கணக்கிலேயே முடிவு இருக்கக் கூடும். பர்வேஜ் இதற்குள் வங்காளத்திலேயே உயிர் நீத்துவிட்டான். குர்ரம்- பேரரசனானால் தன் ஆட்சிக்கு வழியிராது என்று எண்ணி நூர்ஜஹான் சஹரியாரைப் பேரரசனாக்கும்படி ஜெஹாங்கீரிடம் ஆணைப் பத்திரம் எழுதி வாங்கியிருக்கிறாள். கர்ண: ஷாஜஹான் எங்கே இருக்கிறார்? அஸ: கோலகொண்டாவில்! கர்ண: மகபத்கான்? அவர் அரசியலிலும் படைத்துறையிலும் வெறுப்புற்றுப் பக்கிரியாய்ப் போய்விட்டதாக அறிகிறேன். (பக்கிரி உருவில் மகபத்கான் வருகிறான்.) கர்ண: மகபத்! என்ன மாற்றம்! என்ன கோலம்! மக: பக்கிரி உருவிலும் பேரரசியால் நாடு கடத்தப் பட்டிருக்கிறேன். பேரரசியின் அண்ணன் வீடு இது. எனக்கு இங்கே புகலிடம் கிடைக்குமா? கிடைக்காவிட்டால் நான் போகிறேன். அஸ: நெஞ்சில் மனிதத் தன்மையுள்ள எவரும் உம் உறவினர், மகபத். வீரம், பெருந்தன்மை, அன்பு இவற்றுக்கு இடமுள்ள பகுதியிலெல்லாம் உமக்குக் கோயில் எழுப்பலாம், வீரரே! (ஆரத் தழுவிக் கொள்கிறான்.) மக: ராணா அவர்களே, நான் தங்களைத் தேடி முதலில் உதயப்பூர் சென்றேன். காணாமல் திரும்பி வரவேண்டிய தாயிற்று. என் பதவியை உங்களைக் கேளாமல் நான் விட்டிருக்கக் கூடாது. ஆயினும் இக் கோலத்தில் அதைத் தங்களிடம் மீண்டும் ஒப்படைக்கிறேன். தங்கள் தளபதி விஜயசிங் உயிர்கொடுத்து என்னைக் காத்தார். அவரை இழந்ததற்கு மிக வருந்துகிறேன். கர்ண: விஜயசிங் புகழ்நாட்டினான். தம் போன்ற மகாத்மாவுக்காக இறக்கும் பேறு சிறிதன்று. அஸ: பேரரசைக் கைக் கொண்டு உங்களைத் தவிர, வேறு யார் வீசியெறிய முடியும்? பற்றற்ற உயர் கடமை வாதி நீங்களே! மக: ஆயினும்.... ஆயினும்.... கர்ண: ஆயினும் என்ன, மகபத்? மக: நீங்கள் இழந்த இந்துப் பேரரசை மீட்க விரும்பினால், நான் உங்களுக்கு மீண்டும் ஏற்படுத்தித்தர முடியும். நான் இப்போது இந்து அல்ல. முன் நொந்த இந்துவாயிருந்து பின் முஸ்லிம் ஆனேன். இப்போது நொந்த முஸ்லிம் நான். இந்து ஆக முடியாது. ஆனால் இந்துப் பேரரசை ஏற்படுத்தித்தர இயலும். நீங்கள் அதை ஏற்க விரும்பினால் கூறுங்கள். கர்ண: உங்கள் பெருந்தன்மை, நல்லெண்ணத்திற்கு நன்றி, பெருமகிழ்ச்சி. ஆயினும் அந்த எண்ணம் இல்லை, எனக்கு. மக: ஏன்? கர்ண: நான் அனுபவமூலம் பார்த்துவிட்டேன். இந்த சமூகம் இன்னும் தன்னைத்தானே ஆளுந் தகுதி உடையதா யில்லை. இந்துக்கள் மனிதப் பண்புடையவராய், மற்ற மனிதர்களை மனிதர்களாக நடத்தப் படிக்கும்வரை இந்து அரசு நிலைக்காது. தற்போதைய இந்துக்களினும் ஈனப்பபண்பு உடைய ஓரினம் காண முடியாது. அவர்கள் ஒருவர் நன்மையை ஒருவர் நாடாதது மட்டுமன்று; ஒருவர் நன்மையை ஒருவர் காணப் பொறாத வராயிருக்கின்றனர். அன்னிய ஆட்சியே அவர்களிடம் நாளடை வில் ஓரளவாவது மனிதப் பண்பைப் படிப்படியாக ஏற்படுத்த முடியும். காட்சி 32 (கோலகொண்டா: இரவு நேரம்; கதிஜா பாடிக் கொண்டிருக்கிறாள்.) கதிஜா: உற்றேனே காதல் அதைப் பெற்றே னில்லை! நெஞ்சம்வந்தே அமர்ந்தான் எனில் கணத்தில் வஞ்சம் செய்தே எங்கோ ஒளிந்தோடிப் போனான் (உற்) காதலை நாடிஎன் உள்ளம் இழந்தேன் காதலை உணராதென் நெஞ்சம் உழந்தேன் (உற்) (ஷாஜஹான் வருகிறான்) ஷா: கதிஜா, அப்பா உயிர்நீத்துவிட்டார் என்று செய்தி வந்திருக் கிறது. இறக்குமுன் அவர் எழுதிய கடிதம் இதோ! கதி: என்ன எழுதியிருக்கிறார்? ஷா: நூர்ஜஹான் பேரரசை எளிதில் கைவிடமாட்டாள், அதற்காகப் போராடுவாள் என்று எச்சரித்திருக்கிறார். கதி: இளவரசே, நாம் ஏன் இந்தத் தொல்லைபிடித்த பேரரசுக்குப் போராட வேண்டும், எங்கேனும் தொலைவில் சென்று அமைதியான காதல் வாழ்வு வாழலாமே? காதல் புறாக் களாக மாறி நல்வாழ்வு வாழலாமே? ஷா: கதிஜா, நீ இன்னும் மிகச் சிறுபிள்ளை போலத் தான் இருக்கிறாய். உன்னை வருந்திக் கேட்டுக்கொள்ளுகிறேன். சற்று வீரமும் ஊக்கமும் மேற்கொள். புறாக்களாக நாம் வாழ வேண்டாம், மனிதர்களாக வாழ்வோம். காட்சி 33 (நூர்ஜஹான் அறை: நூர்ஜஹான், சஹரியார்.) சஹ: என்னை அழைத்தீர்களா, பேரரசி? நூர்: ஆம், பேரரசர் இறக்குமுன் உன்னையே தம்பின் உரிமையாளராக்கிச் சென்றிருக்கிறார். படை வீரருடன் ஆக்ரா சென்று அரசிருக் கையைக் கைப்பற்று. சஹ: நானா? நூர்: ஆம். சஹ: நான் போர் செய்யவா? நூர்: நீ ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம். படைவீரருக்கு நான் கட்டளையிடுகிறேன். (செல்கிறாள்.) சஹ: (களிப்புடன்) ஆகா, நான் பேரரசுக்காகப் போரிடப் போகிறேன். (லைலா வருகிறாள்) லைலா: சஹரியார்! சஹ: லைலா! லைலா: நீங்கள் போரிடப் போகிறீர்களா? பேரரசுக்காகவா? சஹ: ஆம், இதில் வியப்புக்கிடமென்ன? லைலா: மகபத்கானுடன்? சஹ: ஆம், லைலா. நீ என்னவென்று நினைத்துக் கொண்டாய்? லைலா: வேண்டாம், சஹரியார், இந்தப் பேரரசியின் சுழலில் விழவேண்டாம். நன்கு ஆய்ந்து பாருங்கள். சஹ: நான் பார்த்துவிட்டேன். நான் போரிடத்தான் போ கிறேன். நான் என்ன மனிதனல்லவா? ஆண் பிள்ளையல்லவா? லைலா: அன்பரே, நான் கேட்டுக் கொள்ளுகிறேன், இந்தத் தொந்தரவுகள் உங்களுக்கு வேண்டாம். என்னிடம் நீங்கள் முன்பே உறுதிமொழி கூறியிருந்தீர்களே. நினைத்துப் பாருங்கள். (நூர்ஜஹான் திடுமென நுழைகிறாள்) நூர்: எனக்கெதிராகச் சஹரியாரை ஏன் தூண்டுகிறாய், லைலா? லைலா: என் காதலரைக் காக்கும் உரிமை எனக்கு உண்டு. பேரரசுக்குப் போரிடும் வல்லமை அவருக்கு இல்லை. அவர் கவிஞர். நூர்: உதவ நானிருக்கும் போது அந்தக் கவலை உனக்கு ஏன்? லைலா: உனக்குத்தான் இப்போது என்ன வல்லமை? உன் வல்லமைக்குக் காரணமான ஆள் இப்போது போய்விட்டார். நூர்: நீ பேசியது போதும். சஹரியார் உன் அறிவுரையை விரும்பவில்லை. கேட்டுப்பார். லைலா: அப்படியா, சஹரியார்? சஹ: ஆம். லைலா: சரி, அன்பரே. என் எச்சரிக்கையைப் பின்பற்றா விட்டால், வருவதை அனுபவியும். பிற்பட்டு என்னால் உதவிசெய்ய முடியாமற்போகும். உம்மைக் காலனிடம் விட்டுச் செல்வது போல் செல்கிறேன். (போகிறாள்.) நூர்: சஹரியார், நீ துணிந்து ஆக்ரா செல். நான் பின்னிருந்து உதவுகிறேன். நீ பேரரசர் மாப்பள்ளை; பேரரசர் கட்டளை உன்னைப் பேரரசராக்கியுள்ளது. போ. (போகிறான்.) இனி எல்லாம் வீண், வெறும் பாழ்தான். ஆனால் இறுதி வரை அட்டகாசத்துடன், நிமிர்ந்த நோக்குடன், அழிவு நோக்கிச் செல், நூர்ஜஹான்! காட்சி 34 (உதயப்பூர் ‘முகில் மாளிகை’: மகபத்கான், கர்ணசிங், வானரராஜா, அவையோர், ஷாஜஹான் வரவேற்பு.) எல்லோரும்: பேரரசர் ஷாஜஹான் வாழ்க! வெல்க பேரரசர்! மக: பேரரசே இதோ எதிரியின் கொடி! இதோ அவர்கள் வசமிருந்த பேரரசர் மணிமுடி! (ஷாஜஹானிடம் தருகிறான்.) ஷா: மகபத், எனக்காக நான் வந்து சேருமுன்பே என் வேலை முழுவதையும் முடித்த உம் பதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்! ஆயினும் பேரரசைக் கைக்குள் பெற்றும் வீசியெறிந்த பெருந்தகை வீரருக்குப் பரிசளிக்கும் தகுதி என்னிடம் என்ன எஞ்சியுள்ளது? கர்ண: பேரரசே, மகபத்கானின் பணி பேரரசாள்வதன்று; பேரர சாளம் பேரரசரை ஆக்குவதே. ஷா: நன்று சொன்னீர், ராணா! வீரரை வீரரே அறிவர். மகபத், பேரரசி வசப்பட்டுவிட்டார்களா? மக: ஆம், அரசே? ஷா: அரச குடும்பத்துக்கு வேண்டிய பாதுகாப்புகள் செய்து விட்டீர்களா? வா-ரா: தக்க பாதுகாப்புகள் நானே செய்துவிட்டேன், பேரரசே! ஷா: நீயா, பாதுகாப்பா? நாசமாய்ப் போச்சு! வா-ரா: ஆம், அரசே. இனிக்கவலை வேண்டாம். பர்வேஜின் இரண்டு பிள்ளைகள் இறந்து விட்டார்கள். குஸ்ரூவின் பிள்ளைகளையும் நான் கொன்றுவிட்டேன். அதுமட்டுமல்ல, சஹரியாரின் இருகண்களும் குருடாக்கப் பட்டுவிட்டன. ஷா: (தலையிலடித்துக் கொண்டு) பாவி! இத்தனையும் உண்மை யாகவே செய்துவிட்டாயா? ஆ, என்ன பயங்கர மனிதன்! எத்தனை கொடுமை! எத்தனை கொடும் பழி! ஆ, நூர்ஜஹான்! நீ எத்தனையோ பழிபாவங்களைச் செய்திருக்கிறாய். ஆனால் இந்தப் பேய் மனிதனை இயக்கிவிட்டதுபோல் ஒரு பழியை நீ நேரிடையாகச் செய்ய முடியாது... சேவகா, இவனைக் கொண்டு சென்று, இப்போதே நிறுத்தி வைத்துச் சுடு. வா-ரா: ஆ, என்ன, என்ன? (வானர ராஜாவை விலங்கிட்டு அழைத்துச் செல்கிறான், சேவகன்.) ஷா: ஆ, சஹரியார்! சூதுவாதற்ற இளங்கவிஞனாகிய உனக்குமா இந்த நிலை? (துப்பாக்கி வேட்டோசை கேட்கிறது) சரி, ஒரு பெருஞ்சனியன் ஒழிந்தது. கர்ண: ஆம், அரசே. ஷா: ராணா, உமக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? புகலிடமற்ற நிலையில் எனக்கு அரண்மனையும், அரச வாழ்வும், ஆதரவும் தந்த நீர் என் குலதெய்வம்! உமக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்? கர்ண: பேரரசே! நீங்கள் இருந்த அரண்மனையை நாங்கள் உங்கள் தொடர்பின் சின்னமாக ஒரு மசூதியாக்கிப் போற்றுவோம். இதற்கு இணக்கம் அளிப்பதே தாங்கள் செய்யும் கைம்மாறு! ஷா: மசூதியா? இந்துக்கள் மசூதி பேணுவதா? கர்ண: ஆம். மதவெறியும் இனவேறுபாடும் கடந்த அன்புதானே எங்களுக்கு மனித தத்துவத்தின் சின்னம். ஷா: ஆகா, இந்த மாநிலம் தரும் அன்புப் பாடமே பாடம்! காட்சி 35 (அரண்மனை: சஹரியார், லைலா, அஸஃவ்) சஹ: இந்த உலகம் எனக்கு ஒரே இருளாய்விட்டது. மண், விண், மதி, ஞாயிறு, விண்மீன், முகில் என்பன யாவும் இனி எனக்கு இல்லை. பறவைகள் இன்னும் பாடும். ஆனால் எனக்கு அவை பறவைகள் அல்ல. அருவிகள் இன்னும் கலகலக்கும். ஆனால் அந்த அருவியின் காட்சியை என் கண்கள் கண்டு ஆனந்திக்க முடியாது. அந்தோ, அந்தோ! (அலறுகிறான்) லைலா: (விம்மி அழுகிறாள்) அந்தோ! கொடுமை, கொடுமை! சஹ: லைலா, நீ எத்தனை தடவை தடுத்து எச்சரித்தாய். முன்கூட்டி என்னிடம் ஆணை வாங்கி அதையும் நினைவு படுத்தினாய். ஆனால் நான் கண்ணிருந்தபோது மதியிழந்திருந்தேன். இப்போது கண்கெட்டுக் கதிகெட்டேன். ஆ, என் வாழ்வை நான் பாழ்படுத்திக் கொண்டேனே. இனி என் நிலையாது? எனக்கு யார் புகலிடம் தருவர்? லைலா: என் அன்பே, உங்களுக்கு ஏன் புகலிடம் இல்லை? நீங்கள் கண்ணிழந்ததற்காக வருந்தவேண்டியதில்லை. இனி நான் உங்கள் கண்களாயிருப்பேன். ஞாயிறு, மதியம், வான்காட்சி, மண்காட்சி, மலர், பறவை யாவும் இனி என்மூலம் மீண்டும் உங்கள் உள்ளத்திரையில் நிழலாடும். நீங்கள் கண்ணிழந்து உதவியற்ற நிலையில் எனக்கு முன்னிலும் பன்மடங்கு கருந்தனமாய்விட்டீர்கள். சஹா: ஆ, லைலா! என் தெய்வமே (லைலா அவனை எடுத்து மார்பில் சாய்த்து மயிர் நீவுகிறாள்.) அஸஃவ்: அன்பு பெண்கள் உள்ளத்தில் நிறைந்து இடம் பெற்றால், அவர்கள் தெய்வங்களாகி விடுகின்றனர். லைலா, பேரரசி ரேவா அத்தகைய ஒரு தேவியாயிருந்தாள். நீயும் அத்தகைய ஒரு தெய்வமாய்விட்டாய். (கதிஜா ஓடிவருகிறாள்.) கதிஜா: ஆ, இதோ, பேரரசி! (பித்துப் பிடித்தவள்போல் நூர்ஜஹான் வருகிறாள்.) நூர்: ஆகாகா! பேரரசாம், பேரரசு! ஒரே ஒரு பேரரசர். ஒரு பேய் உருமாறி அவரிடம் பேரரசியாய் வந்தமர்ந்தது! எப்படியிருக்கிறது கதை, ஆகாகா! அஸஃவ்: நூர்ஜஹான்! தங்கையே! என்ன நிலை இது உனக்கு! நூர்: நூர்ஜஹான்! அது யார்? அந்தப் பேய் மகள் இறந்து போனாளே, ஆகாகா! அந்தப் பேய் மகள் ஜெஹாங்கீரைக் கொன்றாள். அழகென்னும் நஞ்சிட்டு அணுவணுவாகக் கொன்றாள். ஆகாகா! ஜெஹாங்கீர் ஒரு அன்புத் தெய்வம்! அவள் ஒரு பேய்! கஜிதா: அத்தை! லைலா: அம்மா! நூர்: நீங்கள் யார்? நூர்ஜஹானுக்கு நீங்கள் என்ன வேண்டும். லைலா: அம்மா, உன் நிலையைக் காணப் பொறுக்க வில்லையே, அம்மா? (தலையிலடித்துக் கொள்கிறாள்) (புயல், இடி, மின்னல்) நூர்: ஆ, லைலா, நீயுமா அழுகிறாய்? சீச்சி! இதோ நான் போக வேண்டும். ஷேர்கான் வானத்திலிருந்து கர்ஜிக்கிறார். சிங்கம் கர்ஜிக்கிறது. நான் போக வேண்டும். (மழையில் வெளியேறுகிறாள்) லைலா: அம்மா, இது என்னம்மா? அது ஷேர்கானுமல்ல, சிங்கமுமல்ல. மழையும், மின்னலும் அம்மா! இங்கே வா. (இழுக்கிறாள்) நூர்: லைலா! நான் உனக்கு யார்? என்னை ஏன் இழுக்கிறாய்? நான் துணையற்றவள்; துணைவரை அழித்தவள். என் துணை என் ஷேர்கான் மட்டுமே. நான் போகிறேன். உன் அன்பைத்தான் அன்றே நான் இழந்து விட்டேனே! லைலா: இல்லை, அம்மா! அன்று நீ வீரமாது. உனக்குத் துணை தேவையில்லை. இன்று நீ துணையற்றிருக்கிறாய். இனி நீ என் தாய். நான் உன்னைப் பேணுவேன்! வழிபடுவேன்! வா, அம்மா. நூர்: இது என்ன, உலகந்தானா? (இடி, மின்னல்) மாலதி - மாதவன் முதற் பதிப்பு - 1951 மாலதி - மாதவன் வடமொழி என்ற பொதுப் பெயரால் தமிழர் வேத மொழி, புராண இதிகாச மொழி, இலக்கியமொழியாகிய சம்ஸ்கிருதம் ஆகிய மூன்றையும் குறித்தனர். மற்ற இரண்டு மொழிகளும் வரலாற்றுச் சிறப்பும் சமய ஆராய்ச்சிச் சிறப்பும் உடையவை. இவை சம்ஸ்கிருத இலக்கியத்தின் புகழை ஓரளவு நிழலடித்துள்ளன. சம்ஸ்கிருத இலக்கியத்துக்குப் பெருஞ்சிறப்பளிப்பது நாடக இலக் கியம். உலக நாடக இலக்கியத்துக்குரிய மொழிகளில் அது முதல் வரிசையில் இடம்பெறுகிறது. முதல்தர நாடக ஆசிரியரும், முதல்தர நாடகங்களும் அதில் மிகப் பல. பெரும்பாலான சம்ஸ்கிருத இலக்கியம் போலவே, சம்ஸ்கிருத நாடகமும் புராண இதிகாசம் தழுவியவை. இப்பொதுவிதிக்கு விலக்கான நாடகங்கள் மூன்று உண்டு. அவை முத்ராராக்ஷஸம், மிருச்சகடிகா, மாலதி மாதவம் என்பன. முதலது சம்ஸ்கிருதத்தின் ஒரே வரலாற்று நாடகம், மற்ற இரண்டும் இந்தியாவின் பண்டைப்பெருங்காப்பியமான குணாட்டியரின் பெருங்கதை அல்லது பிருகத்கதாவை மூலமாகக் கொண்ட சமூக கற்பனைச் சித்திரமும் காதற் கற்பனைச் சித்திரமும் ஆகும். பூந்தோட்டத்தில் கட்டவிழ்த்து உறுமுன் புலியுடன் மகரந்தன் போராட்டம், காளி கோயிலின் பயங்கரப் பலிக்காட்சி ஆகியவை சம்ஸ்கிருத இலக்கியத்தில் பொதுவாகக் காணப் படாத சமூகச் சித்திரங்கள். அன்னை காமந்தகி, சௌதாமினி ஆகிய பெண் பண்போவியங்களும் மகரந்தன், கலகம்சன் முதலிய ஆண் பண்போவியங்களும் ஆசிரியர் பண்போவியத் திறனுக்கும் உயர் மனிதப் பண்போவியத் திறனுக்கும் சான்றுகள். மூன்று காதற் கதைகள் ஒருங்கே முறுக்கப்படும் திறனும், கதை சோடனையும் மகாகவி காளிதாசனையும் வெல்லும் திறமுடையவை. மூல ஆசிரியரைப் பற்றி சம்ஸ்கிருத இலக்கியத்தின் தலைசிறந்த முதல் வரிசைக் கவிஞர்களுள் பவபூதி ஒருவர். காளிதாசன் சமஸ்கிருதத்தின் ஷேக்ஸ்பியரானால், பவபூதி அதன் மில்ட்டன். காளிதாசன் உலகப் புகழ்பெற்ற சமஸ்கிருத கவிஞர். ஆனால், இந்தியாவில் இலக்கியவாணர் பலர் காளிதாசனை விடப் பவபூதி பெருங்கவிஞர் என்று கருதுகிறார்கள். பவபூதி தன் ‘உத்தரராம சரித’த்தைக் காளிதாசனுக்கு காட்டினா ரென்றும், காளிதாசன் அதை வியந்து பாராட்டி, பின் ஒரு பாட்டில் ஒரே ஒரு புள்ளிமட்டும் மிகுதி என்று கூறினாரென்றும் புலவர்களைப் பற்றிய பழங்கதை ஒன்று கூறுகிறது. இது பவபூதியின் பெருஞ்சிறப்பைக் காட்டு கிறது. ஆயினும் இச்செய்தியில் வரலாற்று உண்மை இருக்க முடியாது. ஏனென்றால் பவபூதி எட்டாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்தவர். காளிதாசன் இதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர். பவபூதிகாலத்துச் சம்ஸ்கிருதம் காளிதாசன் காலத்துச் சமஸ்கிருதம் போன்ற எளிமை நயம் உடையதன்று. காளிதாசன் இயற்கையணிகள் தமிழ்ச்சங்க இலக்கியத்தை நினைவூட்டுவன. ஆயினும் எளிமையில்லாக் குறையைப் பவபூதியின் வீறுநடையின் அமைதி நிறைவுபடுத்தி விடுகிறது. காளிதாசன் உவமைச் சிறப்புக்கெதிராக இவரிடம் உருவகச் சிறப்பும்; அவர் காதல் திறத்துக்கெதிராக இவரிடம் கருணைத் திறமும்; அவர் உளப் பண்பியல் ஓவியத்துக்கெதிராக இவரிடம் பண்போவியச் சிறப்பும் சற்றும் பின்னிடாது போட்டியிடுகின்றன. பவபூதி ‘தம் உத்தர ராமாயணத்தில், வால்மீகியின் இராமரை, வால்மீகியின், ‘திறம்தாண்டி ஒப்பற்ற வீறுடைய மனிதப் பண்புடைய வராக்கியுள்ளார். இவர் எழுதிய மூன்று நாடகங்கள் மகாவீர சரிதம், மாலதி மாதவன், உத்தர ராம சரிதம் என்பன. முதலதும் கடைசியும் இராமாயணக் கதையின் நாடகப் படிவங்கள். மாலதி மாதவம் ஒன்றே அவர்தம் ஒப்பற்ற சமூகக் கற்பனைச் சித்திரம். மாலதி- மாதவன் காட்சி 1 (பத்மாவதி நகர்: முல்லைவனத்தை அடுத்த புத்த அறநிலையம். காலைப்போது: அறநிலையத் தலைவி காமந்தகியும் மாணவி அவலோகிதாவும்) காமந்: குழந்தாய், அவலோகிதா? இங்கே வா. அவலோ: இதோ, தாயே! தங்கள் விருப்பம் எதுவோ? காமந்: குழந்தை மாதவனை நான் கூறிய இடத்துக்கு அனுப்பி வருகிறாயா? அவலோ: ஆம், அம்மணி. காமந்: அவன் வகையில் எனக்கு இப்போது கவலை மிகுதியா யிருக்கிறது. அவலோ: மாணவர்களிடம் உங்களுக்குள்ள அக்கரையை நான் அறிவேன், அம்மா. ஆனால் மாதவன் வகையில் நீங்கள் கொள்ளும் கவலை எல்லை கடந்தது என்று எண்ணுகிறேன். அது உங்கள் உடலையே வாட்டி வருகிறது. காமந்: உன் ஊகம் சரியே. பத்மாவதியின் அமைச்சரான பூரி வசுவின் புதல்வி மாலதியுடன் அவனை மணம் செய்விக்கும் வகையில் நான் கண்ணாயிருக்கிறேன். ஆனால் இந்நாட்டரசன் தன் தோழன் நந் தனனுக்கு அவளை மணம் புரிய எண்ணுகிறான். இது நடைபெறுவதற்குள் மாலதி, மாதவன் ஆகிய இருவரிடையே காதல் மணம் முடிக்கத்தான் நான் வகைநாடுகிறேன். அவலோ: மாலதியின் தந்தையல்லவா இதுபற்றி நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்? துறவிகளாகிய நமக்கு ஏன் இந்தப் பொறுப்பு? காமந்: உலகப்பற்றற்றவர் என்றால், தம்மைப்பற்றிய பற்றில்லாதவர் என்றுதான் பொருள். குழந்தாய்! நற்செயல்களை வளர்ப்பதிலும் நல்லோரைப் பாதுகாப்பதிலும் தனிப் பொறுப்பும் கவலையும் கொள்ள வேண்டியவர்கள் துறவிகள் தாம். மேலும் மாதவன், மாலதியின் பெற்றோர்கள் இந்தப் பொறுப்பை என்னிடம்தான் விட்டிருக்கிறார்கள். அவலோ: அப்படியா? இது ஒன்றும் எனக்குத் தெரியாதே! காமந்: ஆம். என் மூத்த மாணவி சௌதாமினி இங்கே இருந்த வரையிலும், அவளே எல்லாம் கவனித்து வந்தாள். இனி நீதான் கவனிக்க வேண்டும். செய்திகளை உனக்கும் நான் கூற வேண்டும். அவலோ: கூறுங்கள், அம்மணி. காமந்: மாதவன் தந்தை தேவரதன் விதர்ப்ப நாட்டின் அமைச்சன். தேவநாதனும் பூரிவசுவும் ஒருங்கே பள்ளியில் படித்த தோழர்கள். தம்முள் ஒருவருக்கு ஆணும் மற்றவருக்குப் பெண்ணும் பிறந்தால், இருவரையும் காதற்பிணைப்பில் இணைப்பதென்று அவர்கள் உறுதி கூறியிருந்தனர். மாதவனும் மாலதியும் பிறந்தபின் இதனை நிறைவேற்றும் பொறுப்பை என்னிடம் அளித்து விட்டு,தேவரதன் தருக்கம் முதலிய நூல்கள் கற்கும்படி மகனை என்னிடம் அனுப்பினான். அவலோ: அப்படியா? ஆனால் அமைச்சன் பூரிவசு இதுபற்றிக் கவலை எடுத்துக் கொள்ளக் காணோமே! நண்பன் பிள்ளை இங்கே மாணவனாயிருக்கிறான் என்பதைக்கூட அவன் தெரிந்து கொள்ளாதவன் போலல்லவா இருந்து வருகிறான்? காமந்: வெளித்தோற்றம் அதுதான். மன்னர் விருப்பத் துக்குத் தான் இணங்குவதாகக் காட்டிக் கொண்டு, அதே சமயம் மீறும் பொறுப்பை என்னிடமும் காதலர் மறைகாதலிடமும் விட்டுவிடவே அவன் எண்ணு கிறான். அவலோ: இப்போது எல்லாம் புரிகிறது, தாயே! மாதவனை அமைச்சர் வீடு கடந்து செல்லும்படி நீங்கள் அடிக்கடி அனுப்புவது இதற்காகத்தான் என்று எண்ணுகிறேன். காமந்: ஆம். இதனால் மாதவனிடம் ஏற்படும் மாறுதல்களையும் கவனித்து வருகிறேன். சீர்பருப்பதத்தில் யோகம் பயின்று கொண்டிருக்கிறேன், என்ற மற்றொரு மாணவி கபாலகுண்டலா இப்பக்கம் அடிக்கடி வருகிறாள். அவள் சௌதாமினியிடமிருந்து செய்தி கொண்டுவந்து எனக்கு உதவுகிறாள். அவலோ: அது சரி. ஆயினும் தொலைவிலிருக்கும் அவள் என்ன செய்ய முடியும்? காமந்: அவளை நீ முற்றிலும் இப்போது அறிந்து கொள்ள மாட்டாய். அவள் என் மாணவியாயினும், என்னை விட மிகுதியான மனித இனப் பற்றும், சமூகப் பணியாற்றலும் உடையவள். பெற்றோர் தம் உறுதிமொழியைக் கூறும்போது, அவளும் என்னுடன் இருந்தாள். நீ இப்போது எங்கள் இருவர் சார்பிலும் இருந்து காதலர் இருவருக்கும் வேண்டிய தூண்டுதல் தந்து அவர்களை இயக்க வேண்டும். நாம் நடத்தும் இக்காதல் நாடகத்தின் வெற்றியைப் பொறுத்தது, பத்மாவதி, விதர்ப்பம் ஆகிய இரு நாடுகளின் வருங்கால வாழ்வு நலம். அவலோ: அப்படியே எல்லாம் கவனித்துச் செய்கிறேன், தாயே! காட்சி 2 (முல்லைப் பூங்கா: முற்பகல்: கையில் ஒரு அட்டைப் படத்துடன் கலகம்சன் காத்திருக்கிறான், மறைவில்) கலகம்சன்: (தனக்குள்) பணியாளாக இருந்தால், என்னைப் போல் மாதவனை ஒத்த நிறைசீராளனின் பணியாளாயிருக்க வேண்டும். என் காதலி மந்தாரிகாவுக்கு இன்று அறநிலையத்திலேயே பணி கிடைத்தது. அறநிலையமோ என் காதலி மூலமே எனக்கு இந்த இனிய பணியைத் தந்திருக்கிறது. என் காதலை நானறியாமலே வளப்படுத்திய தலைவருக்கு. அவரறியாமலே அவர் காதலை வளப்படுத்தும் வேலை எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தை அவர் பார்க்கட்டும். இது பேசும் காதல் மொழியில் அவர் உருகாமல் இருக்க முடியாது... இதோ மகரந்தர் வந்து விட்டார்! மணியோசை வந்துவிட்டது. இனியானை வர நேரமாகாது. (மகரந்தன் வந்து அமர்கிறான்) மகரந்தன்: (தனக்குள்) மாதவன் இங்கே வருவான் என்று கூறினான், அவலோகிதா. அவனை இட்டுக் கொண்டு மன்மதன் விழாவுக்குச் செல்ல வேண்டும். பகல் உச்சி வேளை அணுகுகிறது. எங்கே அவன் இன்னும் வரக் காணோமே! (மாதவன் பின்நின்று மெல்லப் பாடுகிறான்) மாதவன்: கலைநிறை மதி எனும் கன்னியைக் கண்டே, கலைநிறை உள்ளம் கலங்குவது ஏனோ? நிலைபெறும் மதிப்பும் நிறையும் அழிந்தேன், உலைவுறுகின்றேன் உய்த்துணர்கில்லேன், கண்டதும் இன்பக் கடல்திளைப் புற்றேன்; கண்டு மறைந்ததும் கனல்மிதித்தவனென, மண்டுறுதுன்பம் மலைப்ப மலைந்தேன். உண்டுகொல் துன்பம் உட்கொண்ட இன்பம்? மக: (திரும்பிப்பார்த்து) என்ன மாதவா, இப்படி வந்து மறைந்து நிற்கிறாய். மாத: என் மகரந்தனா! நான் உன்னைக் கவனிக்கவே இல்லையே. மக: எங்கே கவனிப்பாய்? நீதான் கண்ட இன்பத்திலும், காணாத துன்பத்திலும் கருத்தைச் செலுத்தியிருக்கிறாயே! சரி, நீ எங்கே போயிருந்தாய்? மகரந்தத்தைக் கூட மறக்கும்படி நீ என்ன கண்டாய்? என்னிடம் கூறலாமல்லவா? மாத: ஏன் கூறக்கூடாது! முல்லைப் பூங்காவில் சென்று அற நிலையத்துகு மலர் பறித்தேன். மகிழ மரத்தடியில் நின்று அதை மாலையாகத் தொடுக்கத் தொடங்கினேன். ஆனால் கண்கள் மாலையில் பதியவில்லை. மங்கையர் சூழ வந்த ஒரு கலைமாமதி என் கண்களைக் கவர்ந்தது ஈர்த்தது. இங்கொரு கண்ணும் அங்கொரு கண்ணுமாக மாலை தொடுத்தேன். அம் மாமதியும் இன்னொரு நகைமுக நிலவும் அங்கொரு மறைமுக வெயிலுமாக ஒளிவீசிற்று. மக: (தனக்குள்) ஏது தருக்கவாதம் முற்றிக் கவிதையாகி விட்டது போல் இருக்கிறதே! அப்பெண் மாலதியாகத்தான் இருக்க வேண்டும். (உரக்க) அந்த மாமதி எந்த வானத்துக் குரியதோ? மண்ணுலகுக்கு எதை நாடி வந்ததோ? மாத: கேள், நண்பனே! நான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் கூறி விடுகிறேன். என் கலங்கிய மூளையில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. நீயே எனக்காகச் சிந்தித்து வழிகாட்டு. மங்கையர் குழுவுடன் அம்மாது நல்லாள் சென்று, தனக்கென்று அணிசெய்வித்து நிறுத்தப்பட்டிருந்த பெண் யானையின் மீது ஏறிக்கொண்டாள். ஆனால் அவள் குழுவிலிருந்து ஒரு தோழி என்னிடம் வந்து, “இம்மாலையின் மலர்கள் இயற்கை அழகுடையன. மலரின் பண்புடன் இழையின் பண்பொத்ததனால் மாலை பயனுடன் கவர்ச்சியும் தருகிறது. அதன் கைத்திறத்தில் இப்போது புதுமையைக் காணும் ஒருவர் உளர். அவருக்கே அதனை உரிமையாக்கக் கூடுமோ?” என்று கேட்டாள். மக: ஆகா, அத்தோழியின் தலைவி கல்வித்திறம் உடையவள். இருபொருள்படப் பேசியிருக்கிறாள். மலர்கள் அவள் பண்புகள். இழை நீ. இரண்டும் ஒத்த வாழ்வு மாலை. இதை அமைப்பவர் கடவுள். ‘மாலையை எனக்குத் தருவாயா?’ என்று உன்னிடம் கேட்கும் கேள்வியிலேயே ‘எங்கள் இருவரையும் இணைத்து வைப்பாயா?’ என்று கடவுளிடம் கேட்டிருக்கிறாள்! என்ன அழகு, என்ன திறம், என்ன சொல்நயம்! மாத: அப்படியா? எனக்கு அந்த நேரத்தில் இத்தனை பொருளும் தோற்றவில்லை. நான் என் கைமாலையை அவளிடம் கொடுத்துவிட்டு நின்றேன். யானை மீதமர்ந்த பெண் அதை விருப்புடன் வாங்கி அணிந்து கொண்டு சென்றாள். மக: ஆகா, மிக நன்று. மிக நன்று. அவள் பெயரென்னவோ? மாத: வந்த பெண் தன்னை இலவங்கிகா என்று கூறினாள். தலைவியின் பெயர் மாலதி என்று அறிந்தேன். மக: சரி, சரி. இது அமைச்சர் பூரிவசுவின் புதல்விதான். அன்னை காமந்தகி அவள் குணமும் அழகும் புகழ்ந்து பாராட்டுவதுண்டு. நீ அவள் மீது காதல் கொண்டு விட்டது போலவே அவளும் உன்மீது காதல் கொண்டு விட்டாள் என்பதில் ஐயமில்லை. உன் மாலையைக் கேட்டதுடன் அதை ‘அணிந்து கொண்டது இதைத் தெளிவாகக் காட்டுகிறது. கலகம்சன்: (மறைவிலிருந்து) ஆம். இதோ இன்னொரு சான்று. (கலகம்சன் அட்டைப்படத்தை ஏந்திக்கொண்டு மறைவிலிருந்து வெளி வருகிறான்.) மாத: கலகம்! நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இது ஏது அட்டைப் படம்? மக: (படத்தை வாங்கிப் பார்த்து) ஆகா, மாதவன் படம்! என்ன நேர்த்தியான கைவண்ணம். இது யார் வரைந்தது, கலகம்சா? கல: அவரிடம் மாலையைக் கேட்டு வாங்கிய அதே ஆள்தான்! மக: மாதவா, இதோ உன் காதலியின் காதலுக்கு இன்னம் ஓர் சான்று. கலகம்சா! இது உனக்கு எப்படிக் கிடைத்தது? கல: அவள் தோழி இலவங்கிகா மந்தாரிகாவிடம் தந்தாளாம். அவள் இதை என்னிடம் கொடுத்து ‘இது உங்கள் தலைவர் கண்ணில் படும்படி செய்யவேண்டுவது உங்கள் பொறுப்பு’ என்றாள். என் பொறுப்பு இதோ தீர்ந்துவிட்டது. இனி... மாத: அதை என் கையில் கொடு. பார்க்கிறேன். (மாதவன் அட்டைப் படம் வாங்கி, அதில் தன் வடிவத்தினருகில் தான் கண்ட மாலதியின் வடிவத்தைத் தீட்டுகிறான்) மக: ஆகா, ஓவியக்காரிக்கேற்ற ஓவியக்காரன்தான் நீ! (மாதவன் படத்தின் கீழே ஒரு பாட்டும் எழுதுகிறான்) கல: ஐயா,வேறு என்னென்னவோ எழுதுகிறாரே! மக: கலகம்சா! நீ என்ன நினைத்தாய் என் நண்பனை! மலர் ஒரு கை வண்ணம் காட்டினால், மலரிழை இரண்டு கைவண்ணம் காட்டாதா? இதோ பார், பாட்டை! வன்மலர் மணியொளி அழகவை தாமே, மருவுறு பிறர்க்கவை மனமகிழ் வாமே! எனதுள முலவுறு நிலவது இதுவே, எழில்திகழ் இவள்விழிப் போதவிழ் மதுவே! என கலைக்கவிஞனுக்கு நான் என்ன கொடுப்பேன்? நான் மட்டும் மாலதியாயிருந்தால்...! மாத: போதும், மகரந்தா! நீ மாலதியாய்விடாதே. மாலதி இரட்டை யாய்விடப் போகிறாள். என் துணைக்கு மகரந்தன் இல்லாமற் போய் விடப்போகிறான். கல: படத்தையும் பாட்டையும் என்னிடம் கொடுங்கள். நான் உங்கள் கண்ணிற் படும்படி காட்டத்தான் கொண்டு வந்தேன்! (மந்தாரிகா வருகிறாள். அவள் மற்றவரைக் காணாமல் கலகம்சனை மட்டும் காண்கிறாள்) மந்தா: கலகம், நீ நடந்து வந்த அடிச்சுவட்டைப் பின்பற்றிக் கொண்டே உன்னை வந்து பிடித்துக் கொண்டேன். இனி நீ... (மற்றவரைக் கண்டு வெட்கமுற்று)... நான் உங்களைக் காணவில்லை. மன்னிக்க வேண்டும், ஐயன்மீர்! மாத: அதனால் கேடில்லை. உன் நல் முயற்சிக்கு நன்றி. மக: இதோ படம், வாங்கி வந்தவளிடமே கொடுத்து விடுகிறேன். மந்தா: இது என்ன ஒன்றுக்கு இரண்டாய்விட்டது! இது யார் வரைந்தது? மக: முதற் படத்தை வரைந்தவர் யாரை நினைத்துக் கொண்டு வரைந்தார், அவரேதான்! மந்தா: அப்படியா? சரி,சரி. தான் ஒரு தடவை கண்டதை வைத்துக் கொண்டே இவர் மாலதியின் படத்தை வரைந்து விட்டாரே! இவர் திறமை கண்டு மாலதி உண்மையில் வியப்படைவாள்! மக: அப்படியானால் மாலதி எப்படி வரைந்தாளோ? மந்தா: அவளும் பார்த்துத்தான் வரைந்தாள். ஆனால் ஒரு தடவைக்கு மேல் பார்த்துத்தான் வரைய முடிந்தது. முல்லைப் பூங்காவில் பார்க்குமுன் தன் மாடிப் பலகணி வழியாக அவள் அவ்வப்போது அவரைக் கண்டு, அவர் வடிவத்தைத் தன் உள்ளத்தில் பதித்திருந்தாளாம்! என் தோழி இலவங்கிகா இதை என்னிடம் கூறியிருக்கிறாள். மக: கலகம்! நீ உன் காதலியை அழைத்துக் கொண்டு படத்துடன் செல். நேரம் உச்சியாகிவிட்டது. நாங்கள் நிலையத்தின் உணவகம் செல்கிறோம். காட்சி 3 (அறநிலையம்: காமந்தகியும் அவலோகிதாவும்) காமந்: குழந்தாய், அவலோகிதா! மாலதி இப்போது என்ன நிலையிலிருக்கிறாள்? அவலோ: அவள் மாலையைக் கையில் வைத்துக் கொண்டு மாதவனை எண்ணி எண்ணிக் கலங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் இவ்வருத்தம் அவள் காதலை வளர்க்க உதவும் வருத்தம் மட்டுமே. ஒவ்வொரு பிரிவும் ஒரு கோடை வேனிற்பருவமாகவும், ஒவ்வொரு சந்திப்பும் ஒரு கார்கால மழைப்பருவமாகவும் அமைந்து அம்மரத்தை வளர்ப்பது உறுதி. ஆனால் இப்போது அவளறியாத இன்னோரிடையூறு நேர்ந்துள்ளது. காமந்: என்ன அது? அவலோ: பத்மாவதி நாட்டு அரசரின் ஆள் அமைச்சர் பூரிவசுவை அணுகி நந்தனனுக்கு மாலதியைத் தரவேண்டும் என்ற மன்னர் விருப்பத்தைக் கூறினானாம். அதற்கு அமைச்சர்... அமைச்சர்... காமந்: சும்மா சொல்லு. அமைச்சர் என்னதான் கூறினார்? அவலோ: ‘பெண்கள் விருப்பம் பெண்களுக்குத்தான் தெரியும். ஆனால் தந்தை விருப்பம் மகள் விருப்பம். மன்னன் விருப்பமும் என் விருப்பமே. எப்படியும் மன்னர் விருப்பம் ‘அவர்’ மகள் விருப்பமாகவே இருக்க முடியும் என்று கூறுக. இதுவே அமைச்சர் அனுப்பிய வாய்மொழி. காமந்: (புன்முறுவலுடன்) அமைச்சர் சொல் பழுது போகாது. அவலோ: என்ன அம்மணி, இப்படிக் கூறுகிறீர்கள்? காமந்: அவலூ, அமைச்சர் உரையின் ஆழத்தையும் இருபொருள் நயத்தையும் நீ கவனிக்கவில்லை. பெண்கள் தம் விருப்பம் வேறு ஆனாலும் தந்தை விருப்பத்தை ஏற்க வேண்டியவர்கள் என்றும்; ஆனால் அவ்வப்பிள்ளைகள் விருப்பமறிந்தே அவ்வவர் தந்தையர் விருப்பம் தெரிவிப்பாராத லால், தந்தை விருப்பமே மகள் விருப்பமாகுமென்றும்; மன்னர் விருப்பம் அமைச்சர் விருப்பமாகும் என்றும் வாய்மை கூறியுள்ளார் அமைச்சர். ஆனால் இறுதியில் மன்னன் விருப்பம் ‘அவர்’ மகள் விருப்பம்மட்டுமே என்று சுட்டிக்காட்டினார். ஆனால் நீ பொருள்கொண்டது போலவே மன்னன் ஆட்களும் ‘அவர் மகள் விருப்பம்’ என்பதை அமைச்சர் மகள் விருப்பம் என்று கொண்டிருக்கின்றனர். ‘மன்னர் மகள் விருப்பம்’ என்று அவர் மனத்தில் குறித்திருக்கிறார் என்பதை எண்ணியிருக்க மாட்டார்கள்! அவலோ: இப்படிப்பட்ட இரண்டகப் பேச்சால் என்ன பயன்? மன்னர் தம் மனம் போல் நடப்பதை இது எப்படித் தடுக்கும்? காமந்: நீ பைத்தியக்காரி. மன்னர் மனம்போல்தான் எல்லாம் நடக்க வேண்டும், நடக்கும். ஆனால் அமைச்சர் மனமறிந்து அறிவுடையோர் நடக்கலாம் அல்லவா? அவலோ: அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? காமந்: வா. நாமும் இருபொருள்படப் பேசி மாலதிக்கு எச்சரிக்கையும் தேறுதலும் உதவியும் ஒருசேரத் தருவோம், வா. காட்சி 4 (அரண்மனை வெண்மனை மாடி: உச்சி வேளை: மாலதியும் இலவங்கி காவும்) மால: இலவூ, என் உரைகளில் பொதிந்த இரண்டகப் பொருளை அவர் உணர்ந்திருக்கக்கூடுமா? அவர் என் காதலை உணர்ந்து, காதற் குறிப்புடன் தான் முல்லைமலர் மாலையைக் கொடுத்தார் என்று எப்படி நம்புவேன்? இல: அம்மணி, மட்டற்ற ஆர்வம் இருக்குமிடத்தில் நம்பிக்கை எளிதில் பிறப்பதில்லை. நான் எத்தனை தடவை கூறியாய்விட்டது, அவர் உங்களைப் பார்த்து மதிமயங்கி யிருந்தார் என்று! மால: அவர் தந்தனுப்பிய மாலையில் ஒருபுறம் சிறிது கோணலா யிருக்கிறதே! அதுகண்டு என் காதலிலும் ஏதேனும் கோணல் ஏற்படுமோ என்று என் உள்ளம் கலங்குகிறது. இல: அவர் மதி மயங்கியது போலத்தான் நீங்களும் மதி மயங்கி யிருக்கிறீர்கள், அம்மணி. இல்லையென்றால், இதன் பொருளை நீங்கள் அறியாமல் தவிக்கமாட்டீர்கள். அவர் உங்களைப் பார்த்துக் கொண்டே தொடுத்த இடம்தான் இது, அம்மா! மால: (புன்முறுவலுடன்) போடீ, இதிலுமா கேலி! இல: இது கேலியல்ல. நீங்களும் அறிவீர்கள் இது கேலியல்ல என்று. இதை உங்கள் புன்முறுவலே காட்டுகிறது. மால: அது கிடக்கிட்டும். மந்தாரிகையை நீ அவரிடம் அனுப்பிய தாகக் கூறினாயே. அவள் திரும்பி வந்தாளா? என்ன சொன்னாள்? இல: ‘படத்தை அவர் பார்த்தாரா? கைவண்ணத்தைப் பாராட்டினாரா?’ என்று கேளுங்களேன்! மால: நீ என்னைச் சமயம் பார்த்து ஆட்டங் காட்டுகிறாய், அம்மா. என் உள்ளம் படும் பாட்டை நீ அறியமாட்டாய். இல: அறிந்துதான் மருத்துவரிடமிருந்து கையோடு மருந்தை வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். (ஒளித்து வைத்திருந்த அட்டைப் படத்தைக் காட்டுகிறாள்: மாலதி வாங்கிப் பார்த்து வியப்படைகிறாள்) மால: ஆ, என் கனவை அப்படியே படம் பிடித்திருக்கிறார். என் உருவம் இன்றுவரை இதுபோல் என்னை மகிழ்வித்ததில்லை. இல: இன்று அவரையும் மகிழ்வித்திருக்கிறது. இருவர் படமும் எங்களை மகிழ்விக்கிறது. இனி... மால: இதோ அவர் கையெழுத்து வேறு இருக்கிறது? பார்த்தாயா? (படிக்கிறாள்) வன்மலர் மணியொளி அழகவை தாமே. மருவுறு பிறர்க்கவை மனமகிழ் வாமே! எனதுள முலவுறு நிலவது இதுவே, எழில்திகழ் இவள்விழிப் போதவிழ் மதுவே! இல: திரும்பவும் படியுங்கள் அம்மா! இப்போது உங்கள் ஐயங் களெல்லாம் தீர்ந்துவிட்டனவா, அல்லது இன்னும் உண்டா? படம் பேசாததைப் பாட்டுப் பேசட்டும்; பாட்டுப் பேசாததைப் படம் பேசட்டும்! (கதவு மெல்லத் திறக்கிறது. வாயில் காவற்பெண்டு தலைநீட்டுகிறாள்.) காவற்பெண்டு: அம்மா, அன்னை காமந்தகி வந்திருக்கிறார்கள்; அம்மாவைக் காணவிரும்புகிறார்கள். மால, இல: உடனே உள்ளே வந்தருளும்படி கூறு. (வாயிற்பெண்டு செல்கிறாள். கதவு மூடித் திறக்கிறது. காமந்தகியும் அவலோகிதாவும் நுழைகின்றனர்.) மால: வணக்கம், தாயே! இல: வணக்கம், அன்னையே! மால: உங்கள் உடல் நலந்தானே! காமந்: (பெருமூச்சுடன்) நலத்துக்கென்ன குறை, அம்மா? மாலதி: தங்கள் குரல் கம்மியிருக்கிறது. முகம் வாடியிருக்கிறது. தங்களுக்கு என்ன கவலை, அம்மணி? காமந்: கவலை பற்று அடிப்படையானது, குழந்தாய்! துறவிக்குப் பற்றும் இருக்க முடியாது. கவலையும் இருக்க முடியாது. ஆனால் துறவியின் இந்த உடைக்குப் பொருந்தாத வகையில், நான் ஒரே ஒரு பற்றுக் காளாய்விட்டேன்- அது உன்மீது கொண்ட பாசம். அதனால்தான் இன்று கவலைப்படுகிறேன். இல: அப்படி எங்கள் தலைவியைப் பற்றிக் கவலைப்பட என்ன இருக்கிறது,தாயே! காமந்: மாரன் மலர்க்கணையே தாளாது மறுகும் மெல்லியல் வாய்ந்த என் பெண்ணுக்கு, ‘உள்ளங் கவராத கணவன்’ என்ற பேச்சு எழுந்தால், என்ன நேருமோ என்று கலங்குகிறேன்... இல: அம்மா, தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? அது கேளாமுன்னமே என் இளந்தலைவி அனல் வெப்புற்ற இளங்கதலிபோல் சோர்ந்துவிட்டாளே! அவலோ: (சோர்ந்து சாய்ந்துவிழும் மாலதியைத் தாங்கி விசிறிய வளாய்) அமைச்சர் எப்படித்தான் மன்னன் வற்புறுத்தலுக்கு மனம் பணிந்தாரோ? காமந்: மனம் பணிந்திராது. குழந்தாய். அமைச்சர் பதவிதான் பணிந்திருக்க வேண்டும். அரசன் உள்ளம் முதல் ஆண்டி உள்ளம் வரை அறியவல்ல அமைச்சருக்குத் தன் மகள் உள்ளம்தானா தெரியாதிருக்கும்? மால: (கம்மிய குரலில்) என் தந்தை என்னைப் பலியிட ஒப்புக் கொண்டாரா? அவலோ: மன்னர் விருப்பம் அது, அம்மணி. மால: மன்னர் விருப்பத்துக்கு என் தந்தை பணியலாம். நான் பணியவேண்டியதில்லையே! அவலோ: (காமந்தகியை நோக்கி) அன்னையே! அமைச்சர் மாலதிக்குத் தந்தையாயிருக்கலாம். ஆனால் நீங்களும் அவளுக்கு ஒரு தாய் போன்றவர்தானே! மேலும், அமைச்சர் அரசனுக்குக் கட்டுப்படவேண்டி வரலாம். தாங்கள் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. ஆகவே, மகளுக்குத் தாங்கள் ஆறுதல் கூறி அவளைப் பாதுகாக்க வேண்டும் என்று கோருகிறேன். காமந்: துறவியாகிய நான் எனக்காகத் துயரடையாத வளானாலும் என் மகளுக்காகத் துயரடையக்கூடும். வேறு என்னசெய்யமுடியும். குழந்தாய்! பெண்கள் வாழ்வை ஆள்வது விதியும் தந்தையர் விருப்பமுமே யல்லவா? ஆயினும் நூலுணர்ந்தோர் அறிவர். சகுந்தலை துஷ்யந்தனை அடைந்ததும், வாசவதத்தை உதயணனையடைந்ததும் விதியாயிருக்கலாம்; தந்தையர் விருப்பத்தால் அல்ல. இதை நான் எண்ணுவது துடுக்குத்தனம்; என் மகள் விருப்பம் இதுவாயின் அது துடுக்குத்தனமாகாது. மால: (தனக்குள், ஆனால் உரத்து) என் விருப்பத்தைத் தந்தை கவனிக்கவில்லை. ஆனால் நான் தந்தையை எப்படி மீறுவேன்? பதவியின் ஆசையால் அவர் என் விருப்பத்தை மீறினார். இன்பத்தின் ஆசை அதைவிடச் சிறிதாகுமா? (காமந்தகியும் அவலோகிதாவும் விடைபெற எழுவதாகப் பாவிக்கின் றனர்.) இல: (மாலதியை நோக்கி) அன்னையும் அக்காளும் புறப்பட எழுகிறார்கள் அம்மா. அவர்களைக் கவனித்து அவர்களை வணங்கி விடைகொடுங்கள். அவலோ: ஆம், அம்மா. நேரமாகிவிட்டது. தம்பி மாதவனுக்கு உடம்புக்குச் சரியில்லையாம். அன்னையும் நானும் சென்று பார்க்க வேண்டும். மால: (திடுக்கிட்டு) மன்னிக்க வேண்டும், அம்மையீர்! நான் உங்களைக் கவனிக்காமலிருந்து விட்டேன். பெரும் பிழை செய்துவிட்டேன். இல: (மாலதியிடம் மறைவாக, மெல்ல) அவர்களைப் பேச்சுக் கொடுத்துத் தாமதிக்க வையுங்கள் அம்மணி. மாதவனைப்பற்றி அவர்களிடம் பேசி விவரம் அறியலாம். மால: (மறைவாக, அரையுணர்வுடன்) அப்படியே. இல: அம்மா, மாதவனுக்கு உடம்புக்கு நலமில்லை என்றீர்களே, என்னசெய்கிறது உடம்புக்கு? அவலோ: அதைச் சொல்லிக்கொண்டிருக்க நேரமில்லை யம்மா. நாங்கள் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும். அவரை அவர் தந்தை அன்னையின் முழுப் பாதுகாப்பிலும் பொறுப்பிலுமே விட்டிருக்கிறார். இல: அன்னைக்கு அவ்வளவு வேண்டியவராயுள்ளவர் பற்றி நானும் என் இளந் தலைவியும் அறிந்து கொள்ள வேண்டாமா? சற்று விவரமாய்க் கூறுங்கள். காமந்: (தனக்குள்) இலவந்திகை திறமே திறம்! நாமே கூறவந்ததை அவள் கூற வைத்துவிடுகிறாள். (உரக்க) விதர்ப்ப நாட்டின் அமைச்சர் தேவரதனைப்பற்றி நீ கேள்விப்பட் டிருக்கலாம். அவர் வீரருள் வீரர். அறிவருள் தலைசிறந்த அறிவர். ஒப்பற்ற பண்பாளர். மால: ஆ, என் தந்தை அவரைப்பற்றி எவ்வளவோ பேசியிருக்கிறார். இல: ஆம். இருவரும் பள்ளித் தோழர்களாகக்கூட இருந்தவர்களாம். காமந்: மலையில் பிறந்த மாணிக்கம்போல், அவர் குடியின் புகழ் பெருக்கவந்த செல்வன்தான் என் மாதவன். மால: (தன்னையறியாமல்) ஆ! இல: மாணிக்கம் மலையிற் பிறக்கிறதானால்... அவலோ: முத்து கடலில்தானே பிறக்கும்? (மாலைச்சங்கு கேட்கிறது) காமந்: மாலைச்சங்கு ஊதிவிட்டது. பின் ஒரு தடவை வருகிறேன். இப்போது நாங்கள் போகிறோம். (காமந்தகியும் அவலோகிதாவும் மாடிப்படியிறங்கிச் செல்கின்றனர்.) காட்சி 5 (சிவன்கோயில் பின்பக்கத்துத் தோட்டம்: அவலோகிதாவும் அவள் தோழி புத்தரட்சிதாவும்) புத்த: என்ன அக்கா, அறநிலையத்திலேயே உன் கால்கள் இப்போதெல்லாம் பாவமாட்டேனென்கிறதே! அவலோ: அன்னை இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி வெளியே வேலை கொடுக்கிறாள். அதனால்தான் நிலையத்தில் அடிக்கடி தங்கியிருக்க முடிகிறதில்லை. புத்த: இப்போது எங்கே இப்பக்கம்? அவலோ: அன்னை விருப்பப்படியே நான் மாதவனைக் காணச் செல்கிறேன். அருகே இருக்கும் சிவன் கோவில் பக்கம் வந்து முல்லைப் பந்தலிடையே மறைந்திருக்கும்படி அன்னை அவனுக்குக் கூறியனுப்பியிருக்கிறாள். புத்த: எதற்காக இந்த ஏற்பாடு, நான் அறியலாமா? அவலோ: நீயும் அன்னையின் மாணவிதானே; ஏன் அறியக்கூடாது; இலவங்கிகாவையும் மாலதியையும் கூட்டிக் கொண்டு அன்னை சிவன் கோயிலுக்கு வருகிறாள். மாதவனையும் மாலதியையும் சந்திக்க வைக்க வேண்டும் என்பதே அன்னையின் திட்டமாயிருக்க வேண்டும். புத்த: அவர்களிடம் உண்மையான காதல் இருக்குமானால், பிறர் சந்திக்க வைக்க வேண்டிய அவசியம் இருப்பானேன்? அவலோ: இருவரும் ஒருவர்மீதொருவர் காதலால் மருகத்தான் செய்கின்றனர். ஆயினும் மாலதியைக் காதல் ஒருபுறமும், கடமை ஒரு புறமும் இழுக்க, அவள் அலமுறுகிறாள். தந்தையின் உள்ளார்ந்த விருப்பம் தன் பக்கம் இருக்கிறது என்பதோ, பெண்கள் முதல் கடமை தங்கள் காதற் கடமைதான் என்பதோ அவளுக்கு இன்னும் தெளிவாக விளங்கவில்லை. அதே சமயம் மாதவனும் அவளைக் காண முடியாமல் துடிக்கிறான். புத்த: அன்னை இதில் என்ன செய்ய முடியும்? அவலோ: இருவர் உள்ளமும் பிரிவுத் துன்பத்தில் உடைந்து விடாமல்தான் பாதுகாத்து வருகிறாள் அன்னை! ஆனால் மாலதியினுடைய தந்தையின் உள்ளக் கருத்தை வெளிப்படுத்தாமலே, மாலதிக்குத் தன் பெண்மையின் கடமையை வலியுறுத்த அன்னை எண்ணுகிறாள் என்று நினைக்கிறேன். புத்த: மெத்த மகிழ்ச்சி. விரைவில் காதலர் ஒளி காணட்டும். அவலோ: நீ இப்போது எங்கே போகிறாய்? புத்த: அன்னையின் இன்னொரு சிறிய பணிதான் என்னையும் இட்டுச் செல்கிறது. அவலோ: என்ன அது, நான் அறியலாமா? புத்த: ஓகோ, தடையின்றி! அது உண்மையில் அதே காதல் நாடகத்தின் மற்றொரு கிளைக்காட்சிதான். மன்னனால் மாலதிக்கு வரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நந்தனனுக்கு மதயந்திகா என்று ஒரு தங்கை இருக்கிறாள். மகரந்தன் அவளைக் காதலிக்கிறான். அவளும் அவனைக் காதலிக்கும்படி செய்ய முடியுமானால், மாலதி காரணமாக நந்தனனுக்கு மாதவன்மீது ஏற்படக்கூடும் பகைமை தணியுமல்லவா? அவலோ: ஆம். அது ஒரு நல்ல கருத்துத்தான். புத்த: மதயந்திகாவை இப்பக்கம் அழைத்து வந்து, மாதவனோடு வரும் மகரந்தனுடன் சந்திக்க வைக்கவே நான் செல்கிறேன். அவள் என் பள்ளித் தோழி. ஏற்கெனவே மகரந்தனைப் பற்றி நான் அவளுக்குக் கூறியிருக்கிறேன். அவலோ: சரி, நேரமாகிறது. இருவரும் போய் அவரவர் வேலையைப் பார்ப்போம். (இருவரும் செல்கின்றனர்) காட்சி 6 (கோயில்புற மாடத்தில் மாலதியும் இலவங்கிகாவும் வந்து அமர்ந்து உரையாடுகின்றனர். மறைவில் மாதவன்) மாலதி: (தனக்குள்) கடமை துன்பத்தை நோக்கி இழுக்கிறது. அவ்வழியில் பாழ்ங்கசம் என் தலையைச் சுழல வைக்கிறது. எதிரே காதல் கண்காட்டி அழைக்கிறது. ஆனால் குடும்ப மதிப்பு, பெற்றோர் மன அமைதி, பெண்மையின் கற்பு வரம்பு ஆகிய வற்றை மீறுவதா?... இல: என்ன ஆழ்ந்த சிந்தனை! அம்மணி, இதற்கு ஒரு ஓய்வு கொடுக்கத்தானே அன்னை இங்கே வரச்செய்தாள். தீவினை களை வேரற அழிக்கும் சங்கரன் உன் சங்கைகளையும் துன்பங் களையும் அறுப்பார்! ஆனால் அவராலும் அழிக்க முடியாத ஒரு ஆற்றல் உண்டு. அதுதான் ஐங்கணைத் தெய்வத்தின் ஆற்றல். அந்தச் சங்கரனும் அதற்கு ஆட்பட்டவரே! மால: என் மனம் ஒரு நிலையில் வரமாட்டேனென்கிறது. தோழி! அலைகடல் துரும்பாக அது முன்னும் பின்னும் ஓடுகிறது. இல: அதோ பாருங்கள் மன்மதன் தேர் என்று கூறப்படும் மலையத் தென்றல் செண்பகப் போதுகளை இதழவிழச் செய்கிறது. பொன்வண்டுகளும் கருவண்டுகளும் மொய்த்து முரலுகின்றன. உன் காதுகளையும் அவற்றின் இசை கவர வில்லையா? மாம்பூவின் இனிய சாறு நுகர்ந்து மாங்குயில் பாடுகிறது. இவற்றைக் காணும் யார்தான் துயரத்துக்கு உள்ளத்தில் இடந்தர முடியும்? மால: ஆயினும் என் மாதவன்... மாத: (மறைவிலிருந்து தனக்குள்) ஆகா, என் காதல் தெய்வத்தின் கடமைக் கோயிலில்கூட எனக்கு ஒரு மறைவிடம் இருக்கிறது! இல: மாதவனுக்கு என்ன, அம்மணி?... (அன்னை காமந்தகி வருகிறாள்) வாருங்கள் தாயே. வேனிலில் தங்கை வெதும்புகிறாள். மாதவனும் மறந்தேவிட்டான் போல் இருக்கிறது. காமந்: அப்படியல்ல, குழந்தாய், கடமைக் கோயிலின் கதவு தானாகத் திறக்க மாலதி காத்திருப்பது போல, மாலதியின் காதல் அவன் உள்ளக் கதவைத் துணிந்து திறப்பதற்காக அவன் காத்துத் தவங்கிடக்கிறான். அவலோ: அப்படியானால் குற்றம் யாருடையது? காமந்: யாருடையதுமல்ல. அவலோ: அமைச்சர் பூரிவசுதான் குற்றவாளி என்று நான் கருது கிறேன். காமந்: ஒரு நாளும் இல்லை. உண்மைக் குற்றவாளி வேனிலான் தான். அவலோ: அது எப்படி? காமந்: அவன் காதலரைச் சும்மாவிடாது துன்பப்படுத்து கிறான். ஆனால் அதேசமயம் அவர்களுக்குத் துணிச்சலும் வீரமும் தரப் போதிய அளவு துன்பம் தராதிருக்கிறான். மாத: (மறைவில், தனக்குள்) அன்னை பேச்சின் போக்கு எனக்குக் கூடப் புரியவில்லை. துணிச்சல் யாருக்கு இல்லை, எனக்கா, மாலதிக்கா? மாலதி: (தனக்குள்) கடமைக்கெதிராக அன்னை தூண்டமாட்டாள். ஆனால் தந்தை விருப்பம் இதுவாயிருந்தால், ஏன் என்னிடம் கூறக்கூடாது? (உரக்க) அம்மா, துணிச்சல் என் அறிவுக்குத்தான் இல்லை. என் உள்ளம் என்னையும்மீறி மாதவனையே சுற்றி ஓடுகிறது. காமந்: அறிவு ஏன் தடுக்கிறது? மால: குடும்பக்கட்டிலிருந்து எப்படி விடுபடுவது? என் கற்புநெறி என்னாவது? காமந்: தந்தை விருப்பப்படி நடந்தால் அது சரியாகுமா? அவலோ: ஆகும் என்றுதான் மாலதி எண்ணக்கூடும். காமந்: ஒருநாளுமில்லை. மாலதியின் உள்ளம் ஒரு கொடிபோல மாதவன் உள்ளத்தின் மீது படர்ந்துவிட்டது. அவனை மணந்து அவனுடன் கூடி வாழ்ந்தால்தான் அவள் கற்புநெறிக்கு இடமுண்டு. இல்லாவிட்டால்... அவலோ: இது அவள் தந்தைக்கு ஏன் தெரிய வரவில்லை? காமந்: மகள் உள்ளத்தை அவர் எப்படி அறிய முடியும்? அவர் கடமை மற்றொரு புறமிருக்கும் போது அவர் அதை எப்படி அறியத்தான் முயற்சி செய்ய முடியும்? அவலோ: அப்படியானால் தங்கையின் கடமைதான் என்ன? காமந்: காதல் சென்ற இடத்தில் தன்னை ஒப்படைக்கும் உறுதியான காதல் துணிவு, அதாவது கற்பு அவளுக்கு வேண்டும். மால: (தனக்குள்) என் விருப்பமே என் கடமை என்று அன்னை குறிப்பிடுகிறாள். தத்துவம் எனக்கு இனிதுதான். அன்னை துறவி. அவள் கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். என் உள்ளக் கதவை இனி நான் திறந்துவிடலாமா? என் மாதவன் மட்டும இனி என்னை இப்போது சந்திப்பதானால்...! (வெளியே பேரரவம் கேட்கிறது. அதனிடையிடையே பயங்கர உறுமல். மாலதி நடுங்குகிறாள்) காமந்: ஆ, இது என்ன, புலியின் உறுமல்போல் அல்லவா இருக்கிறது. அவலோ: மாந்தர், பெண்கள் கூக்குரலும் இடையிடையே கேட்கிறது. மாலதி, நீ உட்புறம் செல். மாத: நீங்கள் அஞ்சவேண்டாம். நான் போய்ப் பார்க்கிறேன். (போகிறான்) மால: (தனக்குள்) இவர் இங்கேயா இருக்கிறார்! ஆ! மனமே பொறுத்திரு. என்னை மீறி ஓடாதே! காமந்: (மாதவனை நோக்கி) உன் உயிரைப் பாதுகாத்துக் கொள். மாலதியின் நிலையைக் கவனித்துக் கொள். மாத: (தனக்குள்) அந்தோ, என் விருப்பத்தை அன்னை தெரிவித்து விட்டாள்! (தலைவிரிகோலத்துடன் புத்த ரட்சிதா வருகிறாள்) புத்த: அந்தோ! ஆபத்து, ஆபத்து! மதயந்திகா மீது புலி பாய்கிறது. பாதுகாப்பாரில்லையா? பாதுகாப்பார் இல்லையா? காமந்: ஐயோ,குழந்தை மதயந்திகாவா? அந்தோ! அவலோ: கவலைப்பட வேண்டாமம்மா, அதோ மகரந்தன் இடையே வந்து அவளைக் காப்பாற்றிவிட்டான். ஆனால் புலி அவன்மீது பாய்கிறது. மாதவன் அதனை நோக்கி ஓடுகிறான். (மீண்டும் உறுமல்) காமந்: மீண்டும் உறுமல் கேட்கிறதே. குழந்தைகள் என்னவாயிற்றோ? இல: அம்மா, புலி காயப்பட்டு வீழ்ந்துவிட்டது. அதன் கடைசி உறுமல்தான் இது. காமந்: மகரந்தன்? இல: அவனும் குருதி தோய்ந்த காயங்களுடன் சோர்ந்து விழுந்து விட்டான். ஆனால் மாதவன் அவனைத் தூக்கிக் கொண்டு இப்பக்கமாக வருகிறான். அவலோ: மதயந்திகா நடுக்கம் தீர்ந்து கண்ணீரும் கம்பலையுமாய் மகரந்தனைத் தொடர்ந்து வருகிறாள். காயம்பட்ட மானைத் தூக்கிக் கொண்டுவரும் வேடருக்குப் பின்னால் தொலைவில் தொடர்ந்துவரும் பெண்மான் போன்று, அவள் தன் கால் பின்னிழுக்க, உள்ளம் முன்னிழுக்க ஆவலுடன் வருகிறாள். மால: இறைவனே புலியாய் வந்து மகரந்தனிடம் மதயந்திகாவைக் கூட்டுவித்திருக்க வேண்டும். இல: உன் வகையிலும் இதுமாதிரி ஒரு புலி... மால: போ, கேலி செய்யாதே இலவம்! (காயம்பட்ட மகரந்தனைத் தூக்கிக் கொண்டு மாதவனும், பின்னால் மதயந்திகாவும் பிறரும் வருகின்றனர்.) மதய: அன்னையே, என் உயிர் காக்கப் புலியுடன் போராடிக் காயம் பட்டிருக்கிறார், இவ் இளைஞர். துறவோராகிய நீங்கள் இத்தகையவரைக் காப்பாற்றக் கூடாதா? காமந்: கட்டாயம் காப்பாற்றுகிறேன். எங்கள் கடமைக்காக அன்றாயினும், அந்தக் குழந்தைக்காக அன்றாயினும்கூட, உனக்காகக் கட்டாயம் காப்பாற்றுவோம். வாருங்கள், நிலையம் போகலாம். (போகின்றனர்) காட்சி 7 (அறநிலையம், காமந்தகீ, அவலோகிதா) காமந்: அவலோகிதா, மகரந்தன் இப்போது எப்படியிருக்கிறான்? அவலோ: அம்மணி, காயங்கள் முழுதும் ஆறவில்லை. ஆனால் அறைபட்ட இடங்களுக்கு வேது இட்டதனால் நோவு அகன்றுவிட்டது. நல்லுணவு, குடிநீர் அளிக்கத் தெம்பும் ஏற்பட்டுவிட்டது. அத்துடன் மதயந்திகாவின் மனமார்ந்த கவனிப்பு அவனுக்குப் புத்துயிர் கொடுத்திருக் கிறது. காமந்: மாதவனெங்கே, காணோம். அவலோ: நண்பன் காயங்களைக் கழுவும்போது ஏற்பட்ட குருதி கண்டதும், அவனும் உணர்விழந்து விட்டான். மாலதி உடனே கவலை கொண்டாள். நாங்கள் தடுத்தும் கேளாமல், அவளே அவனைக் கவனித்து உணர்வு வருவித்தாள். அவன் உணர்வு பெற்றெழுந்ததும், உயிரிழந்து பெற்றவன் போல் அவள் ஆர்வத்துடன் அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். புலி எப்படியோ அவள் நாணத்தைத் திரும்ப வராமல் சாகடித்து விட்டது. காமந்: இது கேட்க நான் மகிழ்ச்சியடைகிறேன். மகரந்தன் நல்ல நேரத்தில் எப்படி வந்தான் என்பதுதான் தெரியவில்லை. (மகரந்தன், மதயந்திகா, மாதவன், மாலதி, இலவங்கிகா, புத்த ரட்சிதா ஆகிய அனைவரும் வருகின்றனர்.) நீ எப்படிச் சரியான நேரத்தில் வந்தாய், மகர்? மக: மாதவன் சிவன்கோயில் தோட்டத்திற்கு வருகிறானென்று கேட்டேன். அவனைப் பார்க்க விரைந்து வந்து கொண்டிருந்தேன். புலி உலாவுவது தெரியாது. ஆனால் பலர் ஓடுவது கண்டு திரும்பிப்பார்த்தேன். ஒரு பெண்ணின்மீது புலி பாய்வது கண்டு தாக்கினேன். மால: புலியைக் கொன்றுவிட்டார். ஆனால் இந்தமானிடம் அகப் பட்டுக் கொண்டார். புத்த: உன்னை நான் அவரிடம் காட்டுமுன்பே, புலி உன்னை அவரிடம் காட்டிவிட்டது, மதயி. மக: புலி மாலதியின் காதலையும் மாதவனிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. இனி நண்பன் காதலில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. காமந்: உன் உயிர்காத்த வீரனுக்கு உன் உடல்பொருள் ஆவியைக் கொடுக்கிறாயா, மதயந்திகா! மதய: என் மனமறிய முன்பே கொடுத்தேன். தாங்கள் அறிய இதோ உறுதி தருகிறேன். (மகரந்தன் கையைப்பற்றி அழுத்துகிறாள். மகரந்தன் கையில் மெள்ளக் கிள்ளுகிறாள்) காமந்: மிக நன்று. மாலதி! மாதவன் உணர்விழந்தபோது, நீ அவனுக்கு உணர்வு வருவித்தாய். நீ இனி அவனைப் புறக்கணித்தால், அவன் இன்னும் உணர்வையோ, உயிரையோ இழந்துவிடப் போகிறான். மால: இரண்டும் இனி என்வசம். அதை இனி அவர் இழந்துவிட முடியாது. (மாதவனை அருகிழுத்துப் பற்றிக்கொள்கிறாள். மாதவன் முகம் மகிழ்ச்சியில் திளைக்கிறது) காமந்: அனைவரும் இனி இன்பத்தில் இணைந்து மகிழ்ந்தும் துன்பத்தில் பகிர்ந்து ஆற்றியும் வாழ்வீராக! (திரைப்பின், குரல். “மன்னனிடமிருந்து ஒரு தூதன் வருகிறான்”- தூதன் வருகை.) தூதன்: பூரிவசுவின் இணக்கம் பெற்று மன்னர் மாலதியைத் தம் தோழர் நந்தனருக்கு உரிமையாக வழங்கியுள்ளார். இம்மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் கலக்க மதயந்திகாவும் மற்ற யாவரும் வரும்படி நந்தனன் அழைக்கிறார். காமந்: (தனக்குள்) ஆ! என் குழந்தைகள் முகங்கள் ஒளியிழக்கின்றன! மதயந்திகா: என் தமயன் நல்வாழ்வுக்காக மகிழ்ச்சியடை கிறேன். (மாலதியை நோக்கி) என் மனைக்கு வரவிருக்கும் தோழீ, உன் நல் வாழ்வைப் பாராட்டுகிறேன். (மகரந்தனை நோக்கி) நான் போய்வருகிறேன், அன்பரே. விரைவில் காண்கிறேன். (போகிறாள்) மாத: நண்ப, மகரந்தா! இத் தற்காலப் பிரிவுக்கு வருந்தாதே. கம: என் பிரிவுக்கு நான் வருத்தவில்லை, தோழ! உன் காதலுக் கேற்பட்ட இடையூறு கண்டுதான் வருந்துகிறேன். மால: என் அவாவையும் அன்னையின் கனவையும் என் தந்தை தகர்ந்துவிட்டார்! காமந்: அவ்வளவு எளிதாக மனமுடைந்துவிடாதே, மாலதி. மன்னன் விருப்பமும் முடிவும் புதிதல்லவே. மாத: இன்னும் நம்பிக்கைக்கு இடமிருக்கிறதா, அம்மா! என்னளவில் என் உயிர்நாடி இனி அறுந்து விட்டது போலத்தான். மால: என் மனமீறி என்னை வாழவைக்க என் தந்தையாலும் இனி ஆகாது. வாழ்ந்தால் இருவரும் கூடி வாழ்வோம். பிரிக்கப்பட்டால், உயிர் நீத்து ஒன்று கூடுவோம். இது உறுதி காமந்: குழந்தைகளே! உங்கள் கவலை என் கவலை. என் மனமும் உங்கள் கவலையில் ஈடுபட்டுவிட்டது. ஆயினும் பொறுத்திருப்போம்; காலம் மாறக்கூடும். காட்சி 8 (மயானக் காளிகோயிலின் சுற்றுப்புறம்; மாதவன், காபாலிக நங்கை கபாலகுண்டலா) கபால: ஜெய் சாமுண்டி சண்டேசுவரி. கராளம்பா! ஜெய் ஜகன் மர்த்தனி சதாசிவ நாசினி! - அடே யாரது இந்த வேளையில் துணிந்து காளி கோயில் சுற்றுவது? மாத: காளியிடம் வரம் பெறுவதற்காகக் கோயில் வலம் வரும் ஓர் இளைஞன். என் பெயர் மாதவன். கபா: ஓ. காமந்தகியின் பாதுகாப்பிலுள்ளவனல்லவா நீ? இங்கே இந்நேரம்... உன் போன்ற இளைஞருக்குரிய இடமல்லவே இது! மாத: உரிய இடம் அல்லதான். ஆனால் உரிய நேரமும் மன நிலையும் வந்துள்ளது. எனக்கு வாழ்வு வெறுத்துப் போய்விட்டது. என் விருப்பம் நிறைவேறவேண்டும். அல்லது நான் உயிர் விட வேண்டும். வேறு பற்றற்ற என் உள்ளத்தை அரிக்கும் இந்த ஒரு பற்றை அன்னை காளி அளிக்கட்டும், அல்லது அந்தப் பற்றுடன் என்னையே பலியாக ஏற்கட்டும் என்று துணிந்துவிட்டேன். கபா: இது ஒரு ஆத்திர வைராக்கியம், தம்பி. ஒன்றிரண்டு நாள் பொறுமையாயிரு. காரியம் காளியருளால் கைகூடலாம். அல்லது உன் மனமும், அதன் இயற்கைப்படி மாறலாம்! மாத: என் மனம் நிலைபெற்றுவிட்டது. அதை மாற்றப் போவதில்லை. சரி நீங்கள் யார்? நீங்கள் ஏன் இந்நேரம் இங்கே சுற்றுகிறீர்கள்? உங்களுக்கு அன்னை காமந்தகியை எப்படி தெரியும்? கபா: நானும் முன்பு அவ் அற நிலையத்தில் படித்தவள்தான். என்னுடன் சௌதாமினி என்று இன்னொரு நங்கையும் படித்தாள். நூலறிவிலும் நற்குணத்திலும் அவள் என்னைத் தாண்டிவிட்டாள். உலகியல் அறிவிலும், செயல் திறத்திலும் நான் அவளைத் தாண்டினேன். ஆனால் இருவருமே யோகத்துறைப் பயிற்சியை நாடி, சீர்ப்பருப்பதம் சென்றோம். அதிலும் அவள் ஞானயோகத்தில் முதன்மையடைந்து கடும்பணியாற்றி வருகிறாள். நான் அடயோகம் பயின்று, பின் அகோரகண்டர் என்ற காபாலிக குருவிடம் பயில்கின்றேன். சௌதாமினி பற்றிய செய்திகளை அன்னை காமந்தகியிடம் வந்து கூறுபவள் நானே. மாத: அப்படியா, இங்கே உங்கள் வேலை? கபா: என் குரு அகோரகண்டர் இந்தச் சாமுண்டிகராளம்பா கோயிலில் கடுநோன்பாற்றி வருகிறார். இன்று கடைசிநாள். யாரும் இன்று கோவிலுக்குள் வரக்கூடாது, நான் காவலிருக்கிறேன். ஆகவே நீ இன்று போய், நாளை வந்து கோயிலில் உன் நோன்பாற்று. மாத: நான் கோயிலுக்குச் செல்லாமலே வலம்வந்து செல்கிறேன். நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கலாம். கபா: சரி, அப்படியே. (போகிறாள்) மாத: (தனக்குள்) கோயில் எல்லாருக்கும் பொது, காளியும் எல்லாருக்கும் பொது. தன் நோன்புக்காக இதைக் கோட்டை கட்டியாள இவர்களுக்கு உரிமை ஏது? இதில் ஏதோ சூது நடக்கிறது. பார்ப்போம். நாமோ சாகத் துணிந்து வந்திருக்கிறோம். வருவது வரட்டும். (கோயிலினுள் மணி அடிக்கிறது. உரத்த குரல்கள்) இது வழக்கமான பூசையாகத் தெரியவில்லையே. அகோரகண்டர் வழிபாட்டு நோன்பாகத்தான் இருக்க வேண்டும். குரல்களில் ஒரு பெண்ணின் கீச்சுக்குரலும் கேட்கிறதே! (பெண் குரலின் கீச்சிட்ட அலறல்) ஆ, இது என்ன அலறல்! குரல் பெண் குரல். கேட்டுப் பழகிய மாதிரியும் இருக்கிறது. ஓஹோ, இது காளிகோயிலல்லவா? ஏதேனும் மனிதப்பலியாய் இருக்குமோ! எதற்கும் உள்ளே போய்க் காண்போம்! (செல்கிறான்) காட்சி 9 (காளிகோயில்: உருத்திரமணிகளும் கடகங்களும் உடைவாளும் கூடிய கோர உருவத்தில் அகோரகண்டர் ஒருகால் ஊன்றி மறுகால் தலை நோக்கி செங்குத்தாய் உயர்த்தி நிற்கிறார். உடுக்கைகள் சேண்டைகள் மணிகள் ஒலிக்கின்றன. எதிரே புலிக்குட்டியின் பிடியில் சிக்கி நிற்கும் இளமான் போலக் கணியான் பிடியில் திமிறிக்கொண்டு துடித்து அலறுகிறாள் மாலதி. குருவினருகில் பணிவுடன் அமர்ந்திருக்கிறாள் கபாலகுண்டலா.) மால: ஐயோ! ஐயோ! மன்னன் மனம் மகிழ, என்னை ஒரு மனிதப் பேய்க்குப் பலியிட இருந்தார், தந்தை மனிதப் பேய்க்குப் பதில், அன்னையே நீ பலிகொள்ளத் துணீந்து விட்டாயா? உன் வீரம் இவ்வளவுதானா? கணியான்: சட், சும்மாயிரு. அகோ: பேதைப் பெண்ணே, அண்ட சராசரங்களை அழித்துருட்டும் அன்னை பராசக்திக்குப் பலியாவதைவிட மனிதப்பிறவிக்கு வேறென்ன உயர்பதம் கிடைக்கமுடியும்? அப்பதம் பெறும் நேரத்தில் என் அன்னையைப் பழிக்காதே! அது நன்றிகெட்டதனம்; அத்துடன் அது அடாப்பழியும் ஆகும். (உடுக்கை, சேண்டை முழங்குகிறது, அகோர கண்டர் காளியின் ஆயிர நாமங்களையும் அர்ச்சித்துப் பாடுகிறார்.) மாத: (மறைவிலிருந்து) ஆ, என்ன கோரக்காட்சி! என் மாலதி இங்கே எப்படி வந்தாள்? ஒன்றும் புரியவில்லையே! மால: ஆ, அன்னை காமந்தகியே, பெற்ற அன்னையினும் நீ எத்தனை உற்ற அன்னையாயிருந்தாய்! என் துயரால் துறவியாகிய உன் தசையற்ற உடல் வாடிற்றே! அத்தகைய உன்னை நான் இனி என்று காணப்போகிறேன்... அன்னை காளியே! நீ என் அன்னை காமந்தகியைப் போலிருப்பாய் என்றல்லவா நான் இதுவரை எண்ணியிருந்தேன்! உன்னைச் சொல்ல என்ன குறை? எல்லாத் தந்தையும் ஒரு மாதிரியா இருக்கிறார்கள்? என்னைப் பலிகொடுக்க நினைத்த தந்தையும் ஒரு தந்தைதானே!... அந்தத் தந்தையின் பகற்பலிக்குத் தப்பி, உன் இராப்பலிக்கு இரையாக இருக்கிறேன்!... ஐயோ, ஐயோ! கணியான்: அன்னையைப்பற்றி மீண்டும் என்ன உளறுகிறாய்? நீ படித்த பெண், ஓர் அமைச்சர் மகள், இவ்வளவுதானா உன் படிப்பு? அகோர: அவள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். படித்தவர் கள் எல்லாம் என் அன்னை அருளிய ஆகமத்தையா படித்திருக்கிறார்கள்? நீ அவளைக் கவனிக்காதே. உன் வினைமுறைகளை ஆகம முறைப்படி பிசகாமல் நடத்து. மாத: ஆ, என் மாலதி பலியிடப்படுவதா? அதுவும் நான் உயிரோடிருக்கும்போதா? அருகிலேயே இருக்கும்போதா? ஒரு நாளும் இல்லை! வரட்டும் பார்க்கிறேன். ஒரு கை! (உடுக்கை முழக்கி அடிக்கிறது. சேண்டைகள், மணிகள் கல்லென இரைகின்றன. கணியான் ஹா, ஹூ என்று குதிக்கிறான்) கபால: பெண்ணே! இது உன் இறுதி நேரம். உலகில் உன் அன்புக்கு மிகுதி உரிய எவரேனும் இருந்தால், அவரை நினைத்துக்கொள். அன்னை அவருடன் மறு உலகில் உன்னைச் சேர்த்து வைப்பது உறுதி. மால: என் அருமை மாதவா? நான் இறப்பது பற்றி இனிக் கவலப்படமாட்டேன். எந்த உலகிலும் நான் உனக்காகக் காத்திருப்பேன். நான் போனாலும் நீ உன் நெஞ்சகத்தில் என்னை மறவாமல் வைத்து இடம் தருவாய் என்பது உறுதி. அன்புக்குரியவர் உள்ளத்தில் இடம் பெறும் ஒருவர் இறப்பு இறப்பாகாது. கபால: இவ்விறுதி எண்ணம் உனக்கேற்றது, பெண்ணே.... (அகோரகண்டரை நோக்கி மெள்ள) இவ்வெண்ணம் அவள் இறுதிக்கும் ஏற்றது, குருநாதா! அகோர: ஜெய் சாமுண்டி! கராளேசுவரீ! இதோ என் காணிக்கை. (உருவிய வாளுடன் எழுந்து மாலதியை நோக்கிப் பாய்கிறான். மாலதி குற்றுயிராய் உணர்வற்று நிற்கிறாள். அவளையும் மீறி ஒரு கீச்சுக் குரல் கிளம்புகிறது. அச்சமயம் மாதவன் வாளுருவித் திடுமெனப் பாய்கிறான்) கபா: ஆ, மாதவன்! இது என்ன? மாத: (மாலதியை இழுத்து ஒதுக்கி) அடே சண்டாளா, நிறுத்து, இது பலியல்ல, கொலை! இராஜத் துரோகம்!! பஞ்சமா பாதகம்!! அகோ: அன்னை பலிக்கும் அன்னையருள் பெற்றவனுக்கும் இடையே வர நீ யாரடா? அகலப் போ! இல்லாவிட்டால், முதலில் உன் தலை உருளும், உன் முண்டத்தின் குருதியை அன்னை முதலில் சுவை பார்ப்பாள். மாத: எட்டி நில் நீ! இல்லாவிட்டால், அன்னை முதலில் உன் குருதியைத்தான் சுவை பார்ப்பாள்! கபா: என்ன மாதவா இது? அவர் யார் தெரியுமா? பெயர் கேட்டு அண்டமெல்லாம் நடுங்கும் அகோரகண்டர் அவர்; என் குருநாதர். மாத: இருக்கலாம். ஆனால் நான் யார் தெரியுமா? ஒரு மனிதன், அது மட்டுமல்ல. ஒரு காதலன். (கபாலகுண்டலாவின் முகத்தில் கவலைக்குறி காணப்படுகிறது. இதற்குள் வெளியே அரவம் எழுகிறது. என்ன என்று பார்க்கக் கபால குண்டலா வெளியே செல்கிறாள்.) அகோ: இப்பழிகேடனை இதோ தீர்த்துவிடுகிறேன். ஆனால் வெளியில் என்ன அரவம், இந்நேரத்தில்? (கபாலகுண்டலா திரும்பி வருகிறாள்) கபா: விதர்ப்ப மன்னன் படைவீரர்கள் கோயிலைச் சூழ்ந்துவிட்டனர். மாலதியைத் தேடி வந்திருக்கிறார்கள். அமைச்சர் பூரிவசுவும் மன்னனும் கோயில் வாசலை நோக்கி வருகிறார்கள். இப்போது மாலதியை விட்டு விடவேண்டும். வேறு வழியில்லை. மாத: மாலதியை நான் கொண்டு விட்டுவருகிறேன். ஆனால் உடனே திரும்பி வது உனக்கும் பதில் தருகிறேன். ஓடிவிடாதே! (மாதவன் மாலதியைக் கட்டவிழ்த்து வெளியே கொண்டு விட்டுவிடச் செல்கிறான். அகோர கண்டர் மாதவனைப் பின் தொடருகிறான்) கபா: குருநாதரே, அவன் சிறுவன். காரியமும், கெட்டது கெட்டுப் போயிற்று. இனி அவனைத் தாக்க வேண்டாம். அகோ: முடியாது போ. அவன் இல்லாவிட்டால் இதற்குள் பலி முடிந்திருக்கும். பலநாள் நோன்பை இப்பாதகன் கெடுத்து விட்டான். அவனைத் தொலைக்கிறேன் பார்! (மாதவன் திரும்பி வருகிறான். மாலதி அவனைத் தடுக்க எண்ணிப் பற்றிய மேலாடையை அவன் அவளிடமே விட்டுவிட்டு வருகிறான்) அடே, இதோ வந்தது உன் முடிவுகாலம். (வாளை வீசுகிறான்) மாதவன்: (வாளால் வாளை ஏற்று உடைத்து) இதோ உன் நோன்பின் முடிவில் நீயே பலியாகு! (அகோரகண்டன் தலை அன்னை காலடியில் சென்று விழுகிறது. கபாலகுண்டலா அதைக் கைக்கொண்டு அலறிய குரலில் பேசுகிறாள்) கபா: பழிக்கஞ்சாத சிறுவனே! கோயிலுக்குள் வர வேண்டாம் என்றேன், வந்தாய். மாலதியுடன் சென்றவன் போய் விடாமல் மீண்டும் வந்து, என் குருநாதனை - என் கண்கண்ட தெய்வத்தைக் கொன்றாய். வேதாளத்தைக் கொன்றுவிட்டோம் என்று வெற்றிக்களிப்புடன் செல்லாதே. நான் பெண்தான். ஆனால் இனிப் பெண் நாகம்! எச்சரிக்கையாயிரு. நான் உன்னைப் பழிவாங்கவே இனி வாழ்ந்திருப்பேன் என்பது நினைவிலிருக் கட்டும். (போகிறாள். மாதவன் அவளை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு மெல்லச் செல்கிறான்) காட்சி 10 (நகரவீதியின் நாற்சந்தி. முதலில் பெருமுரசு அறைவோர் இருவர் ஒருவருக்குப் பின் ஒருவராக வந்து முரசறைகின்றனர். இதன் மூலம் மன்னர் அமைச்சர் கட்டளை முதலிலும், அமைச்சர் மனைவி கட்டளை அடுத்தும் திரையின் பின்னிருந்து முழக்கப்படுகின்றன. முதல் முரசு கேட்கிறது, திரை மறைவில்) “மன்னர் விருப்பப்படி அமைச்சர் பூரிவசு இடும் ஆணையாவது: “மணமகள் மாலதியும் மணமகன் நந்தனனும் ஊர்வலமாக வரவிருக் கின்றனர். குறித்த நேரத்தில் அதாவது காலை பத்தரை நாழிகைக்குள் அவர்கள் திருமண வினைமுறைகள் நடத்தப்படும். “நீணில மன்னர், குடியானவர் முறைப்படி விழாவயர்க அறவோர், புலவோர்க்கு உண்டியுடையும் உறுபொருள் பரிசுகளும் வரையறையின்றி வழங்கப்படும்.” (முரசொலி: மக்கள் ஆரவாரம், இரண்டாவது முரசு கேட்கிறது, திரை மறைவிலேயே) “அன்னை காமந்தகியின் விருப்பப்படி மணமகள் மாலதியின் தாயான அமைச்சர் பூரிவசுவின் மனைவி இடும் ஆணையாவது: “மற்ற உறவினர் வருமுன்பே மாலதி ஊரம்மன் கோயிலுக்குச் செல்வாள். தான் விரும்பிய மணவினை இனிது முடிய அம்மனை வேண்டி வழிபட்டதும், மணவணி சூட்டிக் குறித்த நேரம்வரை அங்கேயே இருப்பாள். அங்கிருந்தே மணப்பெண் ஊர்வலம் தொடங்கும்.” காட்சி 11 (ஊரம்மன் கோயில்: சிறிது மறைவில் மாதவனும் மகரந்தனும். வெளியே கலகம்சன். கலகம்சன் கண்கள் தெருவை ஆவலுடன் நோக்கியுள்ளன) கல: (தனக்குள்) அன்னை காமந்தகி எங்கள் மூவரையும் இங்கே இருந்து ஊர்வலத்தைப் பார்க்கச் சொல்லியிருக்கிறாள். பாவம். என் இளந் தலைவர் உள்ளமும் அவர் நண்பர் உள்ளமும் துடியாய்த் துடித்துக் கொண்டுதானிருக்கும். அவர்கள் அன்னை வகுத்த வாழ்க்கை நாடகத்தின் நடிகர், நாடகக் கவிஞர் குறிப்பை அவர்கள் அறிய முடியாது. ஆனால் நான் நாடகம் பார்ப்பவன். என்னைவிடப் படித்தவர்கள் பலர் அன்னை குறிப்பை அறியமாட்டார்கள். என்னால் ஓரளவு அறிய முடியும். நாடகத்தை நுகரவும் முடியும்... சரி, குறித்த நேரம் ஆய்விட்டது. மக்கள் குழுமுகின்றனர். மாத: தான் இறந்தபின் தன் உடலை உறவினர் அழுது கொண்டு தூக்கிச் செல்வதாகக் கனவு காண்பவன் நிலையில் நான் இருக்கிறேன். மாலதியைக் கண்டது முதல் நான் வேறு ஒரு மனிதனானேன். என் உடலில் வேறு ஒரு உயிர் புகுந்து இருந்தது. அது இப்போது காணும் காட்சியுடன் என் உடல் விட்டு விடைகொண்டு செல்லும். அதன்பின் இவ்வுடல் இயங்குமோ, இயங்காதோ, அறியேன். மக: மக: துன்பத்தில் துன்பத்தை எண்ணுவது அத்துன்பத்தைப் போக்க உதவாது, நண்பா, பெருக்கத்தான் உதவும். நம் வகையில் அன்னை காமந்தகிக்கு இருக்கும் அக்கரை நம் அக்கரையை விடக் குறைவல்லவே. அவள் அன்பும் பெரிது. அறிவும் பெரிது. அவள்தளருமுன் நாம் ஏன் தளரவேண்டும்? பேசாதிரு. எப்படியும் உலக அன்னையின் அருள் நம் அன்னையின் அருள் வடிவில் நம்மை வந்து காக்கும். மாத: நானும் அன்னையை எண்ணித்தான் உயிர் தாங்கி இருக் கிறேன், இக்காட்சி காணவல்ல. கல: ஆண்டே, தங்கள் கண்களுக்கு நல்விருந்து வரப்போகிறது. மாலதி ஊர்வலமாக வருகிறாள். மாத: இங்கா? மக: ஆம். அதோ வந்துவிட்டாள். அதோ! முகில்கள் முழங்குவது போல முரசங்கள் முழங்குவது காதில் கேட்கின்றதே! கல: அதோ பாருங்கள், ஐயன்மீர்! அகன்ற ஏரியின் நீல நிறப் பரப்பில் எழுந்து தோன்றும் வெண்டாமரை மலர்கள் போல, வெண்கொற்றக் குடைகள் வான்பரப்பில் தெரிகின்றன. காற்றில் தவழும் கொடிகள் அலைகள்போல மடிந்து மடிந்து சுருள்கின்றன. அரசவன்னங்கள் போலச் சாமரங்கள் முன்னும் பின்னும் இயங்குகின்றன. ஊர்வலம் இன்னும் அருகே வந்துவிட்டது. பிடியானைகள் மீது குழுமிக் குந்தியிருக்கும் பெண்டிர் வாயில் தாம்பூலம் நிறைந்த காரணத்தால், வாழ்த்துப் பாடலைக் குளறிக் குளறிப் பாடுகின்றனர். அவர்கள் அணிமணிகள் மண்மிசை தவழும் வானவில் போலக் காட்சியளிக்கின்றன. மாத: கவிதையளக்காதே, கலகம்சா, இன்று உனக்கு ஏன் இத்தனை கொந்தளிப்பு? மந்தாரிகா இனிப்புப் பேச்சினால் உன்னை ஊக்கிவிட்டாள் போலிருக்கிறது! கல: உங்கள் கவிதைக்கும் இடமிருக்கிறது. அதோ விண்மீனாரமிட்ட ஆனைமீது வருவது யார் பாருங்கள்! மாத: ஆகா! மேலே மலர் குலுங்க வளம் காட்டும் கொடி, வேரில் நோய் அரிப்ப வெம்பியிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது என் மாலதியின் தோற்றம். மணவிழா ஆடையணிமணி ஆரவாரங்களினூடாக என் உள்ளத்தை அரித்து எரிக்கும் துன்ப வெந்தீ அவள் உள்ளத்தையும் எரித்து வருகிறது என்பதை எவ்வளவு தெளிவாகக் காண்கிறேன்! மக: மாலதியுடன் அருகிலேயே பல்லக்குகளில் அன்னையும் இலவங்கிகாவும் வருகிறார்கள்.. பார், மாதவா! மாத: என்ன வியப்பு! அவர்கள் இங்கேயே இறங்குகின்றனரே! கல: ஆம். அன்னையும் இலவங்கிகாவும் இறங்கி வந்து விட்டனர். மாலதியும் இறங்குகிறாள். கோவிலுக்குள்தான் வருகிறார்கள் போலிருக்கிறது. நாம் ஒதுங்கி இருப்போம். (மறைவில் ஒதுங்குகின்றனர். அன்னை காமந்தகி, இலவங்கிகா, மாலதி நுழைகின்றனர்) காமந்: விரும்பிய வினைமுறைகள் நிறைவேறத் தெய்வம் அருளு மாக! என் நண்பர்களின் செல்வங்கள் இணைந்து பயனிறைவுற்று மகிழுமாக! மால: (தனக்குள்) நான் விரும்பும் வினைமுறை இயற்கையுடன் ஒன்றுபடுவதுதான். என் மாதவனை விட்டு என் தந்தை விருப்பப்படி நடப்பதை நான் விரும்புகின்றேனில்லை. தந்தை புண்பட மாதவனை அடைவதும் புதல்வர் கடமைக்கு அழகன்று. இல: சர்க்கரையை நஞ்சென மயங்கி உண்ணாது மாழ்குறும் ஒருவரை ஒத்தனள் என் இளந்தலைவி. (அமைச்சர் மாளிகைப் பணிநங்கை ஒரு தங்கப் பேழையுடன் வருகிறாள்) பணிநங்கை: அம்மா, அமைச்சர் இதை உங்களிடம் தரும்படி அனுப்பியுள்ளார். இதில் மன்னர் அனுப்பிய மணவாடை அணிமணிகள் உள்ளன. நந்தனனை மணக்கும் மணமகள் இவற்றை அணிந்துவரக் கோரப்படுகிறாள். காமந்: நந்தனனை மணக்கும் மணமகள்தானே! மிக நன்று. அமைச்சர் அறிவே அறிவு. அங்ஙனமே செய்வேன் என்று அறிவி. (பணிநங்கை செல்கிறாள்.) மால: (தனிமுகமாக) நான் வருந்தாமுன் வருந்துறும் அன்னையிடம் இன்று என் வருத்தத்தின் நிழல்கூடக் காணாதது என்னோ? காமந்: இலவங்கிகா, நீ உன் தோழியுடன் சென்று அம்மனுக்கு வழிபாடு செய்க. (இலவங்கிகா மாலதியை இழுத்துக்கொண்டு அம்மன் திருமுன் சென்று வழிபடுகிறாள்) இல: என் அரசி! தாங்கள் விரும்பிய கணவனுடன் அம்மன் நீடுழி வாழ்வளித்துத் தம் காதலை நிறைவுபடுத்த வேண்டுமென்று வணங்குவீராக. மால: நீயும் ஏன் இந்த நாடகம் நடிக்கிறாய், இலவூ? நான் விரும்புவது இப்போது கணவனுடன் இணைவதன்று. இயற்கை யுடன் ஒன்றுபடுவதே. என் வாழ்க்கையின் இறுதிப்போதில் என் நட்பிற்காக நீ ஒன்று செய்ய வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் ( அவனை ஆரத்தழுவிக் கொண்டு) நான் பிரிவுற்றபின் என் ஆருயிர் நாடிய அன்பரிடம் இதனைக் கூறுவாய்: “என் காதலை நீங்கள் மதித்தால், என்னை மறவாது உள்ளத்தாமரையில் வைத்துப் போற்றுங்கள். எனக்காக நீங்கள் என்றும் வருந்தவும் கூடாது. எனக்கு நீங்கள் ஒரு நாள் மகிழ மரத்தடியிலிருந்து அனுப்பி அணிவித்த முல்லை மாலையையே நான் என்று பாவித்து அதனை அணிந்து நீடூழி வாழ்ந்து, என் காதலுக்குரிய நற்பெயர் தரும்படி கோருகிறேன்.” (மாலதியின் கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது.) காமந்: என் குழந்தையின் துயரை என்னால் காணப் பொறுக்க வில்லை. ஆனால் அதை ஈடில் இன்பமாக மாற்றும் அமுத சஞ்சீவி என்னிடம் இருக்கும்போது, குழந்தை கண்ணீர் விடுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். இல: இப்போதும் ஏன் இதெல்லாம் கூறவேண்டும், அம்மணி! மணவணி... நேரமாகிறது. மால: அந்நேரம் வரப்போவதில்லை, இலவங்கிகா. அந்நேரத்தில் உன் தோழி எங்கிருப்பாள் என்பதை நீ அறியமாட்டாய். நான் உன் தாள் பணிந்து கேட்கிறேன். (முழந்தாளிட்டு மண்டியிடுகிறாள்) என் உடலை யன்றாயினும் உயிரை என் மாதவனுடன் இணைப்பதாக உறுதி கூறு. அதன்பின் நான் உன்னை ஆரத் தழுவிக்கொண்டு என் முடிவை எதிர்பார்ப்பேன். (இலவங்கிகா தலைவி காலில் விழுவதை விரும்பாது விலக முனைகிறாள். அதற்குள் காமந்தகி மாதவனை அழைத்துவந்து அவள் நின்ற இடத்தில் நிறுத்தி விடுகிறாள். இதை அறியாது மாலதி அவனை இலவங்கிகா என்றே எண்ணி மீட்டும் பேசுகிறாள்.) என் மாதவன் நினைத்து வருந்தும் போதெல்லாம் என் இறுதி வாசகங்களை நினைவூட்டித் தம் நல்வாழ்வால் எனக்கு நற்பெயர் தரும்படி அவரிடம் கூறு. என் உடல் போனாலும் உயிர் அவரைப்பற்றியே ஊசலாடிக் கொண்டிருக்கும். என் மாலையை அவர் அணிந்திருக்கும் போதெல்லாம், என் ஆவி அவரை நோக்கிப் புன்னகை செய்து மகிழும். மாத: (தனக்குள்) ஆகா, அன்னை நாடகத்தினால் எனக்கு ஏற்பட்ட துன்பக் காற்று என் மாலதியின் உள்ளத்தில் மலை போன்ற அலைகளை எழுப்பி அதன் ஆழ்ந்தடங்களைக் காட்டி என்னை எல்லையிலா மகிழ்ச்சியுள் ஆழ்ந்தடங்குகிறது. ஆனால் அவள் துயர் எனக்கு இனி தெனினும் அதனை நீடிக்க என்னால் முடியாது. (உரத்து) அப்படியே செய்கிறேன், மாலதி. எழுந்து என்னைத் தழுவிக்கொள். மால: (வியப்புடன்) ஆ, என் இலவங்கிகாவின் பெருந்தன்மையே பெருந்தன்மை. (எழுந்து அணைத்துக் கொண்டு) என் கண்களில் ஒழுகும் கண்ணீரினால் என் வடிவைக்கூடக் காண முடியவில்லை. என் உள்ளத்தில் அவரே நிறைந்திருப்பதனால் தானோ என்னவோ, என்னை அணைக்கும் போதுகூட அவரையை அணைப்பதாகத் தோன்றுகிறது. இந்த எண்ணத் துடனேயே என் உயிர் பிரியட்டும். மாத: (அவள் கண்ணைத் துடைத்து) இதோ பார் நீ அணைத்துக் கொண்டது இலவங்கிகாவை அல்ல, என்னைத் தான். உன் உயிர் பிரியவேண்டாம். என்னிடமே ஒன்று படட்டும். (மாலதி விழிக்கிறாள்.) காமந்: கண்மணி, ஒன்றும் தவறிவிடவில்லை. நீ விரும்பிய காதலனையே நீ மணந்துகொள்ளவிருக்கிறாய். அதற்காகத்தான் உன்னை இங்கே வரவழைத்திருக்கிறேன். மால: அது எப்படி முடியும் அம்மணி? காமந்: அதை என்னிடம் விட்டுவிடு. மாதவனுடன் நீயும் புத்த ரட்சிதாவும் சென்று என் நிலைமையைச் சொல்லுங்கள். உங்கள் மணவினை அங்கு நடைபெற ஏற்பாடு செய்திருக்கிறேன். மால: (வியப்புடன் ஒன்றும் புரியாமல்) அந்தோ, தந்தையின் ஏற்பாடுகள் என்ன ஆகும்? அவர் அவமதிக்கப்பட்டால், உயிர் தாங்க மாட்டாரே! காமந்: அவர் உன் தந்தை மட்டுமா? என் நண்பரல்லவா? நான் பார்த்துக்கொள்கிறேன். (மகரந்தனை நோக்கி) குழந்தாய் மகரந்தா, நீ, எங்கள் பள்ளியில் ஒருநாள் பெண் வேடமிட்டிருக் கிறாயே, நினைவிருக்கிறதா? மக: ஆம். காமந்: அன்று சௌதாமினி என்னிடம் வந்து, மாலதியின் நடிப்பு நன்றாயிருக்கிறது என்றாள். நான் அது மாலதியுமல்ல, பெண்கூட அல்ல. மகரந்தனே என்றேன். சௌதாமினி வியப் படைந்தாள். இன்னும் உன்னை மதயந்திகா கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி மாற்றி, ஒன்றிரண்டு நாள் பெண்வேட மிடப் போகிறேன். மக: ஏன்? காமந்: ஏனா, இதோ நந்தனனை மணக்க இருக்கும் பெண் அணிந்து செல்வதற்கென்று அமைச்சர் இந்த மணவாடை அணிமணிகளை அனுப்பியிருக்கிறார். மாலதியோ மாதவனை மணக்கப்போகிறாள். இதை யார் அணிந்து செல்வது? புத்த ரட்சிதா: (குறும்புடன்) நீர்தான் இனி நந்தனன் பெண்ணாக இருக்க வேண்டும்; நாடகக்காரர் அல்லவா? முதலில் அங்கே பெண்ணாயிருந்து நடித்துக் காட்டும். பின் ஆணாகி மதயந்திகாவை... காமந்: ஆம். இலவந்திகா, இப்போது நீ புதிய மாலதியுடன் போகவேண்டும். பழைய மாலதியிடம் விடைபெற்றுக் கொள். மாலதியுடன் இப்போது புத்த ரட்சிதா சென்று உன் இடத்தில் இருந்து செயலாற்றுவாள். இல: அன்னையின் நாடகத்தில் இப்போது ஒரு காட்சி முற்றுப் பெற்றது. இனி அடுத்த காட்சி. அதற்கிடையே பாருங்கள் மேடையில், என் ஆட்டத்தை (ஆடுகிறான்) மதய: ஒருவர் ஆட்டம் இருவர் களிப்புக்கு உதவாது. இதோ ஆட்டத்துககு இணையான ஆட்டம். (உடனாடுகிறாள். ஆடியபடியே செல்கின்றனர். அனைவரும் பின்செல்கின்றனர். மகரந்தனும், இலவங்கிகாவும், சில பெண்களும் நீங்கலாக.) மக: (பெண் ஆடையணிந்துகொண்டு) என் புதிய தோழி! இனி நான் மணப்பெண். இனி நீ வாய் திறக்க வைத்துத்தான் நான் வாய் திறக்க வேண்டும். இல: அது சரி. நடிப்புக்கிடையே, நான் வாயில் விரலை வைத்தால் கடித்துவிடாதே. அப்புறம் நான்... மக: என்ன செய்வாய்? இல: நந்தனனிடம் உண்மையைக் கூறிவிடுவேன். மக: ஹா, ஹா, ஹா! (இருவரும் நிலையப் பெண்கள் சிலர் சூழ மண ஊர்வலத்தில் சேர்கின்றனர்.) காட்சி 12 (அறநிலையத்தின் தோட்ட மாளிகை; எளிய மணவாடையில் மாதவனும் மாலதியும், புத்த ரட்சிதா, காமந்தகி.) காமந்: குழந்தை மாதவா! உன்னைப் பிரியப் பொறாத வளாயினும், தந்தையைப் புண்படுத்தவும் பொறாதவள் இம்மெல்லியலாள். சமூக மதிப்பின் கோட்டைத் தாண்டும் துணிச்சலுமற்றவள்; நான் துணிந்தபோது என்னை மீறும் ஆற்றலும் அற்றவள். உள்ள உறுதி படைத்தும் பெண்மையால் இத்தகைய மெல்லியல் வாய்ந்த இந்நங்கையின் உரம் இனி உன் உள்ள உரம் சார்ந்ததே. இதுவரை அவள் தந்தை கண்ணாகவும், என் கண்ணாகவும், சமூகத்தின் கண்ணாகவும் இருந்தாள். இனி உன் கண்ணாகக் கருதிப் பேணுவாயாக. அவள் மனம் கோணாது குறிப்பறிந்து நடப்பாயாக. மாத: அப்படியே அம்மா. என் கடமையும் இன்பமும் அது. தங்கள் ஆணையும் அதுவே. இல: தலைவரே, இனி நீங்கள் எனக்குப் பாதி தலைவர் மட்டும்தான். மறு பாதித் தலைமை, உங்களையும் சில சமயம் கடந்த செம்பாதித் தலைமை இனி இந்த அம்மையாருக்கே உரியது. மாத: நானும் அத்தலைமைக்கே உரியவன். ஆகவே, முழுத் தலைமையும் இனி ஒரு இடத்தில்தான். ஆனால் உன் பணியிலும் இனிப் பங்கு பெற ஆளுண்டு. மந்தாரிகா விரைவில் அப்போட்டிக்கு வந்து விடுவாள். காமந்: குழந்தாய் மாலதி! இதோ என் வளர்ப்புப் பிள்ளையை ஆயிரமுயன்று உன்னிடம் சேர்த்துள்ளேன். அவனிடம் காதலிலீடுபட்ட உன் கண்கள் இனி அவன் கண்களாயிருக்கட்டும். அவன் கண்கள் இனி உன் கண்களாயிருக் கட்டும். நெஞ்சுடன் நெஞ்சு, கருத்துடன் கருத்துப் பரிமாறி. இருவரும் ஓர் உருவிற் கலந்து இனிய மக்களின்பத்திடையே உலவுவீராக. தந்தையை நினைத்து நீ அவனை ஏற்கத் தயங்கி அவனுக்கு இழைத்த துன்பங்களை இனி இன்பத்தில் பொதிந்து மறக்கடிப்பது உன் கடமை. மால: அன்னையின் அருள் நெறி என் காதலின் சிறு மயக்கத்தினைக் கூட என்றும் தெளிவுபடுத்தி வழிகாட்டும். அவர் உயிர் எனக்கு இனிது. தங்கள் அருளாடை அதனை இன்றும் ஒளிப்படுத்தும். புத்த: அம்மணி, அவர் துடுக்குத்தனம் உடையவர். உன் காதல் பெற்றும், மணம் பெறாதபோது, உன்னை உலகில் விட்டுக் காளியிடம் உயிர் கொடுக்க நினைத்தவர் அவர் என்பதை நீ மறவாதே. ஆனால் அவர் தம் உயிர் கொடுப்பதற்கு மாறாக, உன் உயிர் காத்தார். கணவனாக மட்டுமன்றி, காதலனகாகக்கூட உன் உயிரின் முதல் உரிமை அவருக்குத்தான் என்பதை நீ மறக்கக்கூடாது. காதலிக்குக் காதலைத் தவிரக் கடமை கிடையாது. அதுவே கற்பு என்பதை அன்னை எடுத்துக்காட்டியிருக்கிறாள். இனி மனைவியின் கடமையும் அதுவேயாதலால், இரட்டிப்புக் கடனாற்றுவாயாக. மால: அன்னை ஆணையினும் தோழியர் விருப்பத்தினும் இனிய கடமை எது? ஆனால் இக்கடமை, என் இன்ப வாழ்வு ஆதலால், அதனை நினைவூட்டி வலியுறுத்திய உங்களுக்கு என்றும் நன்றியுடையவளாய் இருப்பேன். இந்நாளை என்றும் மறவேன். காமந்: கணவனுக்கு மனைவியைவிட, மனைவிக்குக் கணவனை விட இனிய, விலையுயர்ந்த பொருள் வேறில்லை. பொன்னணிமணியும் நட்புறவுகளும் உலக நன்மதிப்புக்களும் சமூகத்தின் கட்டுதிட்டங்களும் எதுவும் அதற்கு ஈடல்ல என்று அறிவீராக! இதற்குமேல் நான் உங்களுக்குக் கூறவேண்டுவது ஒன்றுமில்லை. ஆனால் இருவரும் எத்தனை இன்பத்தினிடை யிலும் என்னை மறந்துவிடாதிருக்கும்படி வேண்டுகிறேன். மாத, மால: நாங்கள் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. காமந்: என் சிறு பணியை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இதன் உள்ளுயிராயிருக்கும் மாலதியின் தந்தை, என் நண்பரான அமைச்சர் பூரிவசுவின் கருத்தை நீங்கள், சிறப்பாக மாலதி- அறியாமல் இதுவரை மறைத்து வைத்திருந்தேன். அவர் முழு விருப்பத்துடனேதான்- அவர் திட்டத்துடன் அவர் ஒத்துழைப் புடனேதான் நான் இக்காதல் நாடகம் நடத்தினேன். ஆனால் மாலதி அவர் ஒப்பற்ற பிள்ளைதான். தன் கடன் நினைத்து அவள் தயங்கினாள். அமைச்சரும் அப்படியே. ஆனால் அவர் அமைச்சராதலால், அமைச்சர் கடன் வேறு, தந்தை கடன் வேறு என்று தெரிந்து, அமைச்சர் கடனைத் தான் ஆற்றி, தந்தை கடனை நான் ஆற்றவைத்தார். மால: ஆகா, என் ஒப்பற்ற தந்தை அறிவை அறியாது இத்தனை துன்பத்துக்கு ஆளானேன்! புத்த: அதனால்தான் இத்தனை இன்பத்துக்கும் ஆளானாய்? காமந்: சரி, நேரமாகிறது. நாம் உணவுண்ணச் செல்வோம். மகரந்தனும் தன் கடமையை யாற்றிவிட்டு ஆணுருவிலேயே மதயந்திகாவுடன் விரைவில் வந்து சேருவான். (அனைவரும் செல்கின்றனர்) காட்சி 13 (அறநிலையம், அவலோகிதா, புத்த ரட்சிதா) அவலோ: தாமரைத் தண்டில் முள் உண்டு. அன்னையின் அழகிய நாடகத்தில் முள்குத்தும் ஒரே ஒரு கட்டம் இருக்கிறது. அதை நீதான் தீர்க்க வேண்டும். புத்த: அது என்ன? அவலோ: நந்தனன் உண்மையை இதற்குள் உய்த்துணர்ந் திருப்பான். அவன் சீற்றம் மன்னனுக்கு அவமதிப்பைத் தரும். அதற்குள் ஏதாவது வழிசெய்து அவனை வழிக்குக் கொண்டுவர வேண்டும். புத்த: ஆம். ஆனால் நிலைமை அவ்வளவு மோசமில்லை. நான் காலையில் இலவங்கிகாவைப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். நம் புதிய மாலதி பழைய மாலதியைவிட நன்றாகவே நடித்துள்ளாள். அவலோ: என்ன செய்தி? புத்த: அவள் நாணம் என்னும் கோட்டையில் தன்னைக் காத்துக் கொண்டாள். நந்தனன் பணிந்தானாம், கெஞ்சினானாம். அவள் பிடிவாதம் செய்தாள். அதன்பின் அவனும் முரடனாகத் தோற்றமளித்தான். அதன்பின் போர்த்த போர்வைக்குள்ளிருந்தே அவள் கால்கள் அவனை உதைத்தனவாம்! அவலோ: ஐயோ, காரியம் கெட்டுப்போய்விட்டிருக்குமே. புத்த: இல்லை, மாதவனிடம் அவளுக்குள்ள பாசத்தை அவன் கேள்விப்பட்டிருக்கிறான். பிடிவாதத்தின் காரணம் அது என்று அவன் சீறிச் சென்றான். “உன்னை இனி என் வீட்டில் ஏறாமல் விரட்டுகிறேன், பார்” என்று உறுமிக் கொண்டு போனானாம். அப்பொழுதும் அவள் “நான் போகப் போவதில்லை” என்று பெண் குரலிலேயே கூறினாளாம்! அவலோ: ஆகா, மிக நன்று, மிக நன்று. ஆனால் இனி நடப்பது என்ன? புத்த: நடப்பதென்ன? எல்லாம் தான் நடத்தியாயிற்று. மதயந்திகா இரவெல்லாம் கனவுகண்டாளாம். மகரந்தன் புலிநகத் தழும்பு பட்ட மார்பின்மீது தான் கவலையற்றுச் சாய்ந்து கிடந்ததாக அவள் கனவு கண்டு, விழித்ததும் ஏமாற்றத்துடன் புலம்பினாள். நான் அவளிடம் சென்று அண்ணன் புதுமனையின் கோலாகலங்களைக் கூறினேன். அவள் நாத்தியை அமைதிப் படுத்தச் சென்று, அவள் அணைப்பில் யாவும் மறந்தாள். இதனால் மகரந்தனும் அவளும் தனிப்பட்ட காதல் மணத்துக்கு இசைந் தனர். அவலோ: சரி, நந்தனன் கோபத்துக்கு என்ன செய்வது? புத்த: பெண் நினைத்தால் முடியாதது என்ன இருக்கிறது, அதுவும் காதல் அம்பேறுண்ட பெண் நினைத்தால்! மகரந்தனுக் காக, மதயந்திகா தன் தமையனை அமைதிப்படுத்தி வழிக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டாள். அவலோ: அவள் எப்படிப் புண்பட்ட கணவனை அமைதிப்படுத்த எண்ணுகிறாள்? புத்த: அண்ணனிடம் சென்று அவள் தன் மனத்துயரை மெல்ல மெல்ல வெளியிடுவாள். பின் மகரந்தன் தன் காதலுக்கு இணங்கினாலும், மாலதியை மாதவன் மணக்க வழி செய்தாலல்லாமல் அவன் தன்னை மணக்க முன்வரமாட்டான் என்பதாகக் கூறுவாள். தாய் தந்தையற்ற தந்தையிடம் அண்ணனுக்குள்ள அன்பு யாவரும் அறிந்ததுதானே! எல்லாம் இனிது முடிவது உறுதி. அவலோ: (புத்தரட்சிதாவைக் கட்டிக்கொண்டு) அன்னைக்கு அடுததபடி கெட்டிக்காரி நீதான் புத்தூ! (திரை வீழ்கிறது) காட்சி 14 (நிலையப் பூந்தோட்டம். ஊடியிருக்கும் மாலதியிடம் மாதவன் காதல்கூர் மொழிகள் பகர்ந்து கொண்டிருக்கிறான்) மாத: கண்மணி மாலதி, உன் உள்ளம் என் பக்கமாகத் திரும்பி என்னை உன் கடைக்கண்மூலம் அழைத்தாலும், உன் முகம் மட்டும் என் முகத்தைப் பார்க்க விரும்பாதிருக்கிறதே! என் முகம் செய்த தவறென்ன? அது உன்னை நினைத்துத்தானே வாடியிருக்கிறது! (மாலதி கால் நகத்தால் நிலங்கீறிக் கோலமிடுகிறாள்) நிலம் என் உள்ளமல்லவே, அதைக் கீறுவதற்கு! மால: என் உள்ளம் என் பிடியிலில்லை. நான் ஏன் உங்கள்... மாத: சரியாகத்தான் சொன்னாய். ஆனால் நீ உள்ளத்தை அதன் விருப்பத்துக் கெதிராகப் பிடித்து நிறுத்த எண்ணுகிறாய். நான் என் உள்ளத்தை யாரிடமோ பறிகொடுத்துவிட்டேன், அது துடிக்கிறது. மால: யாரிடம் பறிகொடுத்திருக்கிறீர்கள்? மாத: தன்னைத்தானே ஏமாற்றும் ஒரு கன்னியிடம்! மால: அந்தக் கள்ளி உங்கள் உள்ளத்தில்தான் இருக்கிறாள். போகட்டும். கள்ளியாக வேடமிட்ட ஒருவருடன் போயிருக் கிறாளே, என் இலவங்கிகா. அவள் செய்தி ஒன்றும் தெரிய வில்லையே! (இலவங்கிகா உள்ளே வருகிறாள்.) இல: ஏனம்மா என்னை இன்னும் தேடுகிறாய்? மால: உன் துணையில்லாமல் இவருக்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்? இல: ஏன், இவர் பாட்டுக்கு எதிர்ப்பாட்டெழுத இப்போது அவசிய மில்லையே! மாத: அதுகூடத் தெரியுமா உனக்கு? இல: எனக்கு வேண்டுமானால் இருபொருள்படும் பாட்டுக்கள்கூட என் தலைவி எழுதித் தருவாள். மால: சரி, மதயந்திகா காரியம் என்னவாயிற்று? இல: அவள் நம் நிலையத்துக்கே வந்துவிட்டாள். இதோ! (மதயந்திகாவுடன், அவலோகிதா, புத்த ரட்சிதா முதலியோர் வருகின்றனர்) மாத: என் மாலதி! மால: என் மதயந்திகா! (இருவரும் கட்டித் தழுவிக்கொள்கின்றனர். கலகம்சன் கலவரத் தோற்றத்துடன் உள் நுழைகிறான்) மாத: என்ன செய்தி கலகம்சா! கல: எழுங்கள், உடனே செல்லுங்கள். ஐயனே! மகரந்தனுக்கு மீண்டும் இடர் ஏற்பட்டிருக்கிறது! மத: என்ன, என்ன? மாத: விவரம் என்ன, கலகம்? கல: நந்தனன் மனமாறு முன்பே, யாரோ நம் திட்டத்தை மன்னனிடம் அறிவித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. நகர்க் காவலர் மகரந்தன் மீது பற்றுச் சீட்டுடன் வந்து அவனை வளைத்துக் கொண்டனர். அதனால் அவன் இங்கே வர முடியவில்லை. புறப்படுங்கள். மாத: மதயந்திகா, நீ கவலையில்லாமலிரு. நான் இதோ போய் விடுவித்து அழைத்து வருகிறேன். மாலதி, நான் இதோ வருகிறேன். கல: நானும் வருகிறேன். (செல்கின்றனர்) மால: அவர் ஏதேனும் அடிதடியில் கலந்து கொள்ளப் போகிறார், இலவங்கம்! நான் கூறியதாக அவரை எச்சரிக்கைப் படுத்திவிட்டு வா. இல: இதோ! (போகிறாள்) மால: அக்கா, அவலோகிதா! புத்த ரட்சிதா! நீங்கள் இதுவரை செய்த உதவி பெரிது, இப்போது மகரந்தனுக்கு நடந்த இடரை, அன்னைக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். மதயந்தி காவையும் அவர்களிடம் இட்டுச் செல்லுங்கள். மதய: நீ தனியே இருக்கிறாயே, மாலதி. மால: நானும் இலவங்கிகா வந்ததும் அவளுடன் பின்னாலேயே வருகிறேன். (போகிறார்கள்) (தனக்குள்) அனைவர் வாழ்விலும் மலர்ச்சி தொடங்கி விட்டது. ஆனாலும் புயலின் கடைசித் தூறல் இன்னும் விடவில்லை. (கபாலகுண்டலா நுழைவு) ஆ, யார் இது? கபா: காமந்தகியின் பழைய மாணவிதான், ஆனால் இன்னு உன் கணவனின் உயிர் வைரி! அன்று காளிகோயிலில் என் குருநாதரை அவன் கொன்றான். நான் பழிக்குப்பழி வாங்க வேண்டும். மால: (அவள் காலில் விழுந்து) அன்னையே, அவரை இப்போது மணந்த எனக்கு இரங்கியாவது மன்னித்தருளக் கோருகிறேன். கபா: உனக்காக அவரை மன்னிக்க முடியாது. நேர்மாறாக, உன்னால்தான் அவன் என் குருநாதர் உயிரை வாங்கினான் என்பதையும் நான் மறக்கமுடியாது. அவனைப் பழிவாங்க நல்ல வழி உன்னைப் பழி தீர்ப்பதுதான். உன்னை இட்டுச் சென்று சித்திரவதை செய்கிறேன் பார், இதோ! (மாலதி, பருந்து கண்ட கோழிக் குஞ்சு போல் நடுங்குகிறாள். கபாலகுண்டலா அவளை வாரிச் சுருட்டித் தூக்கிச் செல்கிறாள். மாலதி கத்தமாட்டாமல் அவள் வாயில் துணியடைக்கப்படுகிறது) காட்சி 15 (அறநிலைய நடுமாடம்: காமந்தகி, புத்த ரட்சிதா, அவலோகிதா) காமந்: குழந்தைகளே, கவலை வேண்டாம். மன்னன் அவசரப்பட்டுச் செய்த காரியம் இது. ஆனால் அமைச்சர் பூரிவசு இதை எளிதாகச் சமாளித்துவிடுவது உறுதி. (கலகம்சன் வருகிறான்) என்ன சேதி கலகம்சா! கல: எல்லாம் சுமுகமாக முடிந்தது, அம்மா! அமைச்சர் பூரிவசுவும் நந்தனனும் வந்து மன்னனை அமைதிப்படுத்தினர். இதற்குள் மக்கள் மாதவனையும் மகரந்தனையும் காக்க எண்ணி நகர்க் காவலரை எதிர்த் தனர். மாதவனும் மகரந்தனும் முன்வந்து மக்களை அமைதிப்படுத்தினர். மன்னன் நகர் காவலரிடம் தந்த உத்தரவைத் திரும்ப வாங்கிக்கொண்டு, அவர்கள் உயர்பண்பு பாராட்டி மதிப்புடன் அவர்களை அனுப்பியுள்ளனர். இதோ, அவர்கள் வெற்றியுடன் வருகின்றனர். (மாதவன், மகரந்தம் ஆகியவருடன் இலவங்கிகா வருகிறாள்) மாத: அம்மா, உங்களுக்கு அறிவிக்காமல் சென்றதற்கு மன்னிக் கவும். காமந்: உன் கடமையுணர்ச்சி கண்டு மகிழ்ந்தேன். மகரந்தா, உனக்காக மதயந்திகா காத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் போயிரு! சரி, மாலதி எங்கே? இல: தோட்டத்தில் தானே இருந்தாள். வரவில்லையா? புத்த: நாங்களும் விட்டு வந்தோமே. மதயந்திகா, போய்ப் பார். மாத: எங்கே போயிருக்கக்கூடும்? நானும் போய்ப் பார்க்கிறேன். (செல்கிறான்) அவலோ: அருகேதான் இருப்பாள் அம்மணி. கவலைப்படாதீர்கள். (புத்த ரட்சிதா வருகிறாள்) புத்த: எங்கும் பார்த்தாய்விட்டது. காணவில்லை. மாலதிக்கு ஏதோ இடைஞ்சல்தான் நேர்ந்திருக்கிறது என்று எண்ண வேண்டும். (மாதவன் வருகிறான்) மாத: ஐயோ, மாலதியைக் காணோமே. என்ன நேர்ந்ததோ? காமந்: அமைச்சருக்குச் சொல்லியனுப்பு, எங்கும் தேடச் சொல்லு. நானும் சௌதாமினிக்குச் சொல்லியனுப்புகிறேன். புத்த: ஆ, கபாலகுண்டலா! மாதவன்மீது பழி கூறியிருந்தாளே, அவள்தான்... காமந்: பார்ப்போம். எதற்கும் சௌதாமினிக்கு எழுதுகிறேன். (எழுதுகிறாள்: திரை வீழ்கிறது) காட்சி 16 (மதுமதி மலைக்குவடு, காமந்தகி, அவலோகிதா, இலவங்கிகா, மதயந்திகா) காமந்: நான் எழுப்பிய இன்பக் கோட்டை கலைந்தது. மாதவனும் மகரந்தனும் பித்துப் பிடித்தவர் போல அலைகிறார்கள். மன்னனும் அமைச்சர் பூரிவசுவும் நந்தனனும் ஊர் ஊராக, காடு மேடாக ஆள் விட்டும் நேரிலும் தேடுகின்றனர். என் குழந்தைகள் யாவும் தாயின்றித் துடிக்கும் கன்றுகள் போலக் கரைகின்றன. நான் இனி என்ன செய்வேன்? அவலோ: அம்மா, தாயாகிய தாங்களே கவலைப்பட்டால், நாங்கள் என்ன செய்யக்கூடும்? ஆனாலும் எனக்கு இன்னும் ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. தங்கள் பழைய மாணவியான கபாலகுண்டலாவின் வேலைதான் இது என்பதில் ஐயமில்லை. அவளை வெல்ல வல்லவள் சௌதாமினி ஒருத்திதான். தாங்கள் அவளுக்கு முழு விவரமும், தங்கள் ஐயமும் தெரிவித்து எழுதியிருக்கிறீர்கள். அவள் ஒருத்தி முயற்சியில்தான் இன்னும் நம்பிக்கைக்கு இடமுண்டு. திரைக்குப் பின் ஒரு குரல்: ஆம். இடமுண்டு. (அனைவரும் அப்பக்கம் நோக்குகின்றனர். திரை விலகுகிறது. சௌதாமினி கையில் மாலதியைப் பிடித்துக் கொண்டு முன்வருகிறாள். அனைவர் உடலிலும் உயிர் வருகிறது.) காமந்: ஆ சௌதாமினி! ஆ, மாலதி! சௌதா: அன்னையே, தாங்கள்கூட இவ்வளவு கவலைப் பட்டு விட்டீர்கள். தங்கள் கடிதம் வந்ததும் கபால குண்ட லாவைத் தேடினேன். அவள் அகப்படுவது அரிதாயிருந்தது. கடைசியில் அவளைக் கண்டு பிடித்தும் உண்மை கூற மறுத்தாள். இறுதியில் நானும் நயத்தை விட்டுப் பயமுறுத்த தொடங்கினேன். நான் என்றும் யாரிடமும் சீற்றங் கொள்வ தில்லை. ஆனால் சீற்றங் கொண்டால், அச்சீற்றத்தின் ஆற்றலை அவள் நன்கு அறிவாள். ஆகவே அவள் நடுநடுங்கினாள். அதன்பின் அகோர கண்டருக்கும் தெரியாத யோக வித்தைகளைக் கற்றுக் கொடுப்பதாக நான் அவளுக்கு ஆசை காட்டினேன். இங்ஙனமாக, இறுதியில் அவளை வென்றேன். மாலதியை இவ்வகையில் மீட்டபின் தங்களைக் காண ஓடோடி வந்தேன். அவலோ: அன்னைக்கு அடுத்தபடி நீயே எங்கள் புதிய அன்னை, சௌதா. சௌதா: இப்போதுகூடப் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. நீங்கள் மலைமுகட்டில் வந்து மனக்கசப்பில் எங்கே மாளத் துணிந்து விடுவீர்களோ என்றுதான் முதலில் இங்கே ஓடிவந்தேன். இன்னும் மாதவனையும் மகரந்தனையும் தேடவேண்டும். நான் செல்கிறேன். மாலதியைப் பார்த்துக் கொள்ளுங்கள். மால: அந்தோ என் கணவர் நிலை, நண்பர் மகரந்தர் நிலை என்னாயிற்றோ? நானும் உடன் வருகிறேன். மதய: நானும் வருகிறேன். சௌதா: தங்கையரே! நீங்கள் வந்தால் என் பயணவிரைவுதான் குறையும், நான் போகும் காரியம் பெரிது, நிலையத்தில் போய் இருங்கள். இதோ வருகிறேன். காட்சி 17 (நிலையம். காமந்தகி முதலியோர். பத்மாவதி, மன்னன், அமைச்சர் பூரிவசு, விதர்ப்ப நாட்டமைச்சரும், மாதவனின் தந்தையுமான தேவரதன்.) தேவரதன்: நண்பர் பூரிவசுவின் கடமை அன்புப் போராட்டம் இத்தனை புயலாகிவிட்டது. புயல் ஓய்ந்து வருகிறது. ஆனாலும் மாதவனைக் காணும்வரை என் உடலில் உயிர் இல்லை. பூரிவசு: இதுவரை அன்னை காமந்தகியே நம் எல்லார் பொறுப் பையும் நடத்தி வைத்தார். அவருக்கு எம் நன்றி. இப்போதும் அவர் மாணவி சௌதாமினி ஒருவர் உதவியைத் தான் நம்பியிருக்கிறோம். மாதவனும் மகரந்தனும் மாலதியைத் தான் தேடியலைந்தனர். மாலதி வந்துவிட்டாள். ஆனால் அவர்களைத்தான் இன்னும் காணவில்லை. (சௌதாமினி வருகிறாள்.) சௌதா: அன்பரீர், என் விரைந்த வருகைக்கு மன்னிக்க வேண்டும். மாதவனும் மகரந்தனுங் கிட்டத்தட்டப் பைத்தியம் பிடித்தவராய்விட்டனர். காடெல்லாம் அலைந்து ஒருவரை ஒருவர் அடையாளம் தெரியாமல் மாலதி, மாலதி என்று பிதற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை நிலைய மருத்துவரிடம் ஒப்படைத்து, நல் உணவுடையளித்து அனுப்பும்படி கூறியிருக்கிறேன். காமந்: என் ஆருயிர் மாணவி! உன்னால் என் நிலையத்தின் உயிர் தழைத்தது. அவலோ: எங்கள் கண்கண்ட தெய்வம் நீ. அனைவரும்: அன்னை காமந்தகி பெற்றெடுத்த அருங்கலை மாணிக்கம், நம் சௌதா. (மாதவன், மகரந்தன் வருகின்றனர்.) தேவரதன்: மாதவா? உன்னை இழந்துவிட்டதாகவே நினைத்தேன். எங்கே, இப்படி வா; மாத: அப்பா! (தழுவிக்கொள்கின்றனர்) தேவ: இதோ மாலதி! மால: என்னை எங்கெல்லாம் தேடினீர்கள்? சௌதா: அன்னையே, நிலையத்தின் கடமையை நான் முடித்துவிட்டேன். நான் இன்று உங்கள் விருந்தினராயிருந்து நாளை சீர்பருப்பதம் செல்லவேண்டும். அதற்குள் மாதவன் திருமண நிறைவையும், மகரந்தன்- மதயந்திகா திருமணத்தையும் இன்றே நடத்திப் பார்த்துவிட எண்ணுகிறேன். மகரந்: கலகம்சன்- மந்தாரிகா திருமணம் வேறு இருக்கிறது. அதுவும் இன்றே நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மாதவன்: அவர்கள் காதல்தான் எங்கள் எல்லார் காதலுக்கும் உரிய உயிர்க்காதல். காமந்: அனைவரும் உணவகம் செல்வோம். உணவுக்குப் பின் திருமண விழாக்கள், அதன்பின்... தேவரதன், பூரிவசு: கிழவர்களாகிய நாம் இந்த இளங்காதலர் தொல்லைகளிலிருந்து விடுபட்டு நம் காரியங்களைப் பார்ப்போம். புத்த: ஆம். இளைஞர் காதல் வெல்க. அன்னையர், தந்தையர் அருள் ஒளி எங்கும் பரவுக. முத்து மாலை அறிமுகம் யூவந்தி - ஹான் கால்வழியில் வந்த பேரரசன் ஹான் சென்யூ- வடபுலத் தார்த்தாரியர் கோமான் மயூவென்ஷோ- பேரரசனின் பழிசேர் அமைச்சன் ஷங்ஷு - மன்னர் பேரவைத் தலைவன் சங்ஷு - தோழமைப் பணியாளர் ஃவன்ஷே -தார்த்தாரியக் கோமான் தூதன் சௌகூன் -பேரரசியாக உயர்த்தப்பட்ட ஏழைச் சீன அணங்கு மற்றும் பலர் 1 .சௌகூன் பேரரசி (யூவன்) காட்சி 1 (தார்த்தாரியர் கூடாரம். கோமான் ஹான் சென்யூ கொலுவிருக்கை. காலம்; காலை) கோமான்: தார்த்தாரிய குலத்தின் வீர விளக்கங்களே! உங்கள் வெற்றிகளால் என் மரபு என்றும் புகழேணியில் உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. உங்கள் வெற்றிகள் என்னை இறும்பூதெய்தச் செய்கின்றன. பேரவையோர்: வாழ்க எம் கோமான்! ஓங்குக தார்த்தாரியர் புகழ்! கோமான்: பேரரசர் ஹான் மரபினருடன் தலைமுறை தலை முறையாக நம் கோமரபு போரில் வெற்றி கண்டு, அதன் பின் நேச உடன்படிக்கையால் உறவுத் தொடர்பும் பெருஞ் செல்வச் சிறப்பும் அடைந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். முதல் வெற்றியின் விளைவாக நம், சீன மரபின் பகைமை ஒழித்து, ஹான் மரபினர் நம் மரபைக் கோமரபாக மதித்தனர். இரண்டாவது தடவை படையெடுப்பு நீண்ட நாள் நிகழ்ந்தது. ஏழு நாள் முற்றுகைக்குப்பின் சீன இளவரசியை நம் மரபு அரசியாகப் பெற்றது. அதன்பின் பலமுறை பல தலைமுறைகளில் இதே நேச உறவு காரணமாக நம் மரபு உயர்ந்துள்ளது. இப்போதும் அம்முறையிலேயே நாம் செயலாற்ற எண்ணியுள்ளோம். பேரவை: கோமான் விருப்பம் நிறைவேறுக! காட்சி 2 (சீனப் பேரவை. தனியே அமைச்சன் மயூவென்ஷோ புறங்கைகட்டி உலவிக் கொண்டிருக்கிறான்) மயூ: ஆம். பழிசேர் பருந்தின் இதயம் வேண்டும் பாயும் கழுகின் கூர்நகம் வேண்டும் இழிந்தோர் தம்மை அழுத்தி எழுச்சிகள் எல்லாம் அடக்கி உயர்ந்தோர் தம்மைப் புகழ்ச்சியால் நயஞ்சேர் வஞ்சக நடத்தையால் பொறாமையும் பூசலும் தூண்டிப் பற்றுவேன் ஆட்சிப் பதவியை! இது உறுதி! (ஏவலாளர் புடைசூழப் பேரரசர் வருகிறார்) பேரரசருக்கு வணக்கம்! பேரரசர்: அமைச்சரேறே! நானூறு மாவட்டங்களடங்கிய உலக முழுமையும் நம் மரபினர் பத்துத் தலைமுறைகளாக ஆண்டு வருகின்றனர். அமைதி நிலவுகிறது. இனிப் படையும் போரும் தேவையில்லை என நீரும் மற்ற அமைச்சரும் கூறியவாறே படைகளை அழகணிகளாய் விடும் அளவில் குறைத்துவிட்டோம். ஆனால் நம் மரபு பெருக்க நம் மாளிகையிலே நல்ல மங்கையரில்லை. நாட்டின் நல்லழகிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உமக்களிக்கிறோம். மயூ: சீரிய முடிவு, பேரரசே, நாட்டின் புகழ்ப் பேரரசராகிய தங்களுக்குப் பெண்மையின் அழகுப் பேரரசி யாகும் தகுதியுடையவளே தகுந்தவள். பேரரசு முழுவதும் பறைசாற்றித் தேர்ந்தெடுக்கிறேன். பேரரசர்: அத்தகைய அழகரசியைத் தேர்ந்தெடுப்பதற் குரிய சிறப்பமைச்சராகத் உம்மையே அமைத்தோம். விரைந்து காரியமாற்றுக! காட்சி 3 (மயூவென்ஷோ தனிமையில்) மயூ: தங்கம்! தங்கம்! சுரங்கக் கனிகளிலே தூங்கிக் கிடக்கும் தங்கம் அனைத்தும் இன்று என்னிடம் குவிந்து கிடக்கிறது. எங்கும் குருதி! குருதி! எல்லோரையும் வீழ்த்தினேன். என் செல்வமும் ஆற்றலும் பெருகியுள்ளன. ஆம், இனி அடுத்த செயல்! அரண்மனைக்கு அனுப்பப்படவிருக்கும் பெண்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினரும், எனக்கு வேண்டிய பணம் கொடுத்து விட்டார்கள். ஆனால் அந்தக் கர்வம் பிடித்த வாங்சவ் மறுக்கிறான், பணம் கொடுக்க. தன் மகள் ஆரணங்குகளின் அழகுப் போட்டியிலே வெல்வது உறுதி என்ற இறுமாப்பல்லவா அவனுக்கு! இருக்கட்டும்... இதோ இந்தப் படத்தில் மறுவிட்டுக் கெடுத்துவிடுகிறேன். (படத்தைக் கறைப்படுத்துகிறான்) ஆகாகா! என்ன கோரம்! அழகியின் முகம் அழுது வழிகிறது! மன்னருக்கு இந்தச் சௌகூன் இனிச் சலித்துப் போவது உறுதி. ஆகாகா! காட்சி 4 (அரண்மனை அந்தப்புரம். காலம் நள்ளிரவு) சௌகூன்: (துயர் தோய்ந்த முகத்துடன்) அந்தோ அரண்மனைக்கு அழைக்கப்பட்டதுதான் மிச்சம். நாங்கள் ஏழைகள். என் தந்தையால் அமைச்சர் அவாவும் பணந்தர இயலவில்லை. அவர் என்ன செய்தாரோ? எல்லோரையும் அழைத்த மன்னர் என்னை அழைக்கவில்லை. வீட்டில் வறுமையுடன் வாழ்ந்தேன், பாராட்டுவாரில்லை. வெந்துயரில் வதையுற்றேன். இங்கே வரவழைக்கப்பட்டேன், அழைப்பா ரில்லை. பொறுமையுடனிருக்கிறேன்; போற்றுவாரில்லை. வானத்தில் ஒன்றிரண்டு விண்மீன்கள் என்னைப் பார்த்துக் கேலி செய்வது போல் தோன்றுகின்றன. உறக்கம் கண்களை அணைக்க மறுக்கிறது. இதோ இருக்கும் யாழெடுத்துப் பாடினால், இசையாவது என் துயரத்தைப் போக்காதா? (யாழ் மீட்டிப் பாடுகிறாள்.) (தூக்கு விளக்கேந்திய பேடிப்பெண்ணுடன் பேரரசர் வருகிறார்) பேரரசர்: அழகிகள் எல்லாம் அழகிகள்தான். ஏனோ எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. படத்தின் அழகு முகத்தில் இல்லை. எத்தனை படங்கள்- எல்லாம் ஏமாற்றம். ஒரே ஒரு பெண்ணை இன்னும் பார்க்க வில்லை. படத்தில் அழகில்லாததால். அவளையும் நாளைப் பார்த்து விடவேண்டும்... ஆ, நள்ளிரவில் இனிய இசை! இதை எழுப்புவது யார்? பாடுவது பெண் குரல்தான். இந்தப் பக்கமாகத்தான் பாட்டொலி படர்ந்து வருகிறது. எதற்கும் போய்ப் பார்க்கிறேன். (அரவங் கேட்டு சௌகூன் யாழை நிறுத்தி விட்டு, முன்வந்து வரவேற்கிறாள்) சௌ: வாழ்க பேரரசர்! இந்த ஏழைக்கும் தங்கள் திருமுன்பைக் காணும் பேறு கிடைத்தது, வணக்கம். (ஒதுங்கி நிற்கிறாள்) பே: தோழி, விளக்கைத் தூக்கிப் பிடி. இந்த ஆரணங்கை என் விழிகள் நன்கு பார்க்கட்டும். சௌ: தங்களைக் காணும் பேற்றை எதிர்பாராமல், அசட்டையாய் இருந்துவிட்டேன், அரசே! பே: ஆ, என்ன பேரழகு! உன் அழகுக்கு ஒப்பனை வேண்டியதில்லை பெண்ணே! நீயே எனக்கேற்ற அழகரசி, அன்பரசி! உன் படத்தை ஏனனுப்பவில்லை. அமைச்சர்? சௌ: என் தந்தை அனுப்பித் தந்திருந்தார், மன்னரே! பேடி: இதோ, இதுதான் அரசே! பே: ஆ, அழுக்காறு கொண்ட யாரோ படத்தைக் கறைப்படுத்தியிருக்கிறார்கள். யார் இந்த அரசுப் பகைவர்? சௌ: அரசே, யார் குற்றமும் இல்லை. நாங்கள் மிக மிக ஏழைகள். அமைச்சர் ஒவ்வொரு பெண்ணுக்கும் கோரிய பணத்தை நாங்கள் கொடுக்க முடியவில்லை. எங்கள் வறுமையை எண்ணி எங்களை மன்னிக்க வேண்டும். பே: ஆகா, அப்படியா! அமைச்சன் பேரரசுக்கே பழி சூழ்ந்துள்ளான் (பேடியை நோக்கி) தோழி, (சௌகூனைச் சுட்டிக் காட்டி) நம் பட்டத்தரசிக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடு. காட்சி 5 (தார்த்தாரியப் பேரவை: கோமான் கொலு) கோமான்: தார்த்தாரியக் குலபதிகளே, எடுத்த எடுப்பிலேயே பேரரசர் நாட்டைத் தாக்குவதற்கு மாறாக, நேச மனப்பான்மையிலேயே ஒரு சீன இளவரசியை நமக்கு மணமுடித்துத் தரும்படி கோரி நாம் ஆளனுப் பினோம். பேரரசன் மறுக்கவில்லை. மறுக்கத் துணியவில்லை. ஆனால் மழுப்பியிருக்கிறான். எந்தப் பெண்ணும் தக்க பருவம் எய்தவில்லை என்று! போர் வெப்பத்தில்தான் அரசவைக் கன்னிகள் பருவமடைவர் போலும்! உங்கள் விருப்பம் என்ன, கூறுவீர்! குருதியை வீணாகக் கொட்டுதல் கூடாதென்ற விருப்பினால்தான் நான் அமைதி குலைக்காமலிருந்து வருகிறேன். எல்லோரும்: போருக்கு நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம்; கோமானே! (பணியாள் வருகை) பணி: அரசே! சீனப் பேரரசின் அமைச்சர் ஒருவர் தங்களைக் காண விரும்புகிறார். கோ: வரும்படி கூறு. (மயூவென்ஷோ நுழைகிறான், பணியாள் போகிறான்) மயூ: தார்த்தாரிய மன்னர் மன்ன, வளர்க நின் கொற்றம்! கோமான்: வருக, அமைச்சரே! நீர் வந்த செய்தி யாது, கூறும். மயூ: மன்னர் மன்ன! தங்கள் தூதர் வந்தபோது, பேரரசர் தம் அரண்மனையில் தமக்குத் தக்க பருவ அழகி இல்லையென்று பார்த்து விட்டார். ஆனால் பகலவராகிய தங்களுக்கு இணையாக ஒளி வீசக்கூடிய இளவரசியாக மேற்கு மாடத்தில் அவரிடமே சௌகூன் என்ற ஒப்பற்ற அழகி இருக்கிறள். அவளிடம் மயங்கிய மன்னர் நாட்டாட்சியிலும் மனம் ஈடு பாடின்றி இருந்துவருகிறார். தங்களிடமும் உண்மையை மறைத்துவிட்டார். அவளைத் தங்களுக்கு அர்ப்பணிப்பதன் மூலம், இரு பேரரசுகளின் அமைதியைப் பாதுகாப்பதற்கு மாறாக, மங்கையின் மையலிற் சிக்கிய மன்னர் அவ்வமைதிக்கு ஊறு விளைவிக்கிறார். இதை எடுத்தியம்பியதற்கே நானும் நாடு கடத்தப்பட்டுத் தங்களிடம் வந்திருக்கிறேன். கோ: அப்படியா? மகிழ்ச்சி, நீர் கூறும் பெண் அவ்வளவு அழகுடைய வளா? மயூ: (தனக்குள்) கறைப்படுத்தப்படாத படமொன்றை நான் வைத் திருப்பது நல்லதாகப் போயிற்று. (வெளிப்பட) தார்த்தாரியப் பேரொளியே! இதோ அந்த அழகுப் பேரொளியின் படம்! இன்று நீங்கள் அனுப்பி அவளை வரவழைக்கலாம். கோ: ஆம், உண்மை, உண்மை! சீன நாட்டு மண்ணில் இத்தகு அழகுமணி இருக்கிறாளா? இந்த முத்துக்காக நான் சீனத்தையே விலைகொள்ளவும் தயங்கமாட்டேன். (ஏவலரை நோக்கி) இனி இவரை நம் அமைச்சராகக் கருதுக, நடத்துக. சீனப் பேரரசர் அவைக்குப் புதிய தூதர்கள் செல்லட்டும். காட்சி 6 (சீன அரண்மனை அந்தப்புரம்) பேரரசர்: (கொலுமண்டப உடையில்) மதுவுண்ட வண்டு மலரை விட்டுச் செல்லாது அதைச் சுற்றிச் சுற்றித்தான் வரும். நானும் மதுவுண்ட வண்டானேன். சௌகூன் என்னுள்ளத்தில் வேறெதற்கும் இடம் வைக்காமல் வந்து நிறைந்து விட்டாள்; முன்பெல்லாம் கொலுமண்டபத்தில் யாவரும் கலைந்த பிறகே நானும் வெளிவந்து என் இன்பவாழ்வில் நாட்டம் செலுத்துவேன். இப்போது இன்ப வாழ்வு வேறு, அரசியல் வாழ்வு வேறு என்ற பேதம் அற்றது. கொலுத் தொடங்கியவுடனே தொடர்ந்திருக்க இயலாமல் என் நிலவொளியை நாடிச் செல்கிறேன். இதோ திறந்த வாயில் என்னை அழைக்கிறது, உள்ளே என் பசிக்கு உணவு, வேட்டைக்கு நறுநீர், நோய்க்கு மருந்து என் வரவு காத்திருக்கிறது. (செல்கிறார்) காட்சி 7 (பேரவை மண்டபத்தின் பக்க மாடி; பேரரசர், பேரவைத் தலைவர் ஷக்ஷு, தோழமைப் பணியாளர் சங்ஷி) பேரவைத் தலைவர்: அமைச்சர்கள் பேரரசின் திட்டங்களில் கருத்துச் செலுத்த வேண்டியவர்கள். அவர்கள் இப்போது அரண்மனை மகளிர் வண்ணப்பூங்காத் திட்டங்களில்தான் கருத்துச் செலுத்துகிறார்கள். படை அணிவகுப்புத் துறைகளுக்கு, அவர்கள் உள்ளம் அடைத்துவிட்டது. அரண்மனை விருந்துக் கேளிக்கைகளுக்கு வாயும் வயிறும் திறந்து கிடக்கின்றன. பேரரசர்: இது அமைதிக் காலம், அன்பரே, போர் வரும் போது நம் மறவர் யாவற்றையும் மாற்றியமைப்பர். பே.த: அரசே, அது அவ்வளவு எளிதல்ல. அதன் விளைவை நாம் விரைவில் காணுத்தறுவாயும் வந்திருக்கிறது. அதைக் கூறவே வந்தேன். பே: அதென்ன புதுச் செய்தி, அன்பரே! பே.த: அரசே, நம்மால நாடுகடத்தப்பட்ட அமைச்சன் மயூவென்ஷோ நம் அரசியின் கறைபடாப் படமொன்றை எடுத்தேகி வடபுலத்தானிடம் காட்டிப் பழி சூழ்ந்திருக்கிறான். அந்தப் படத்துடன் வடபுலத்தரசுத் தூதுவன் வந்திருக்கிறான். அரசியை அவனுக்குக் கொடுத்தாலன்றித் தான் அமைந்து போக முடியாதென்று போர் முழக்கங் கொட்டுகிறான். பே: அப்படியா, பகைகாரப்பயல்! வரட்டும. பேரரசியின் பேச்சை அவர்கள் எடுக்க நான் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. படைகளை அனுப்பி அந்த வடவர்களை விரட்டி அடியுங்கள். பே.த: பழைய மன்னர்கள் விடாது போரியற்றி வெற்றி முழக்கினாலும் அமைதியை நிலை நாட்ட முடியாமல் மணவுறவு ஒப்பந்தங்களே செய்து கொண்டனர். அது தவிர இப்போது நம் படைகள் சீரழிந்துக் கிடக்கின்றன. ஆகவே மண உறவைத் தவிர வேறு வழியில்லை. பே: அதற்காக என் உயிரினுமினிய பேரரசியைக் கொடுப்பதா? உங்கள் மன்னர் மானம் பறித்தா நீங்கள் அமைதியை விலைக்கு வாங்க வேண்டும்? இந்த நாட்டுப் பகைவன் மயூவென்ஷோவுக்கு உங்கள் செயல் ஆதரவல்லவா? பே.த: அரசே, அவன் செயலால்தான் இந்த அவதி. ஆனால் அதை இப்போது கூறிப் பயனென்ன? தங்கள் காதற்பற்றாலும், இன்பப்பற்றாலும் தாங்கள் மயங்கி நாட்டின் அமைதியைக் கெடுத்துவிடக்கூடாதென்றே நான் கூறவேண்டியிருக்கிறது. மன்னிக்க வேண்டும். பே: உங்கள் அறிவுரை நன்றாயிருக்கிறது! நான் அதற்கு இணங்க விரும்பவில்லை. எதற்கும் தூதருக்கு இடவசதி செய்து கொடுங்கள். வேறு வழி ஏதேனும் புலப்படுமா என்று பார்ப்போம். காட்சி 8 (அரண்மனை வெளிமாடம். பேரரசன், பேரரசி சௌகூன், பேரவைத் தலைவர்) பேரரசர்: தூதுவரிடம் முடிவு கூறுமுன், நம் அரசியல் தலைவர் களுடனும் படைத் தலைவர்களுடனும் கலந்து வெளியார்களைத் துரத்த வேறு வழியுண்டா என்று பாருங்கள். பேரரசியின் எளிமை காரணமாக அவளைப் பலியிடப் பார்க்கிறீர்கள். பேரரசி லியூஹோ போன்ற அரசர்குடிக் கோமகளாயிருந்தால், நீங்கள் கூறும் கருத்துரையின் வீறு வேறு வகையாயிருக்காதா?...இப்போது நீங்கள் கூறுவதைப் பார்த்தால் வருங்காலத்தில் அமைச்சர் வேலைக்கும் போர்முறை அறிந்த வீரரோ அரசியல் அறிவுடைய ஆண்களோ தேவையில்லை; அழகுடைய பெண்டிரே போதும் போலிருக்கிறது! பேரரசி: பேரரசே! தாம் என்னிடம் காட்டும் பெருந்தன்மைக்கும் பரிவுக்கும் மாறாக நான் என் உயிரையும் பலிகொடுக்கத் தயங்கமாட்டேன். தங்களை விட்டு ஒரு கணம் பிரியவும் என் மனம் தாளவில்லைதான். ஆயினும் தங்கள் நாட்டுப் பொறுப்புக்காகவும், தங்கள் நலனுக்காகவும் இப்பலியை நான் மேற்கொள்ளத் தடையில்லை. பே.த: பேரரசியின்பெருந்தன்மைக்கு நன்றி. அரசே, பேரரசியே முன்வரும்போது தாங்கள் ஏன் தயங்க வேண்டும்? பே: பேரரசி முன் வருவது அவள் பெருந்தன்மை, அதை நீங்கள் ஆதரிப்பது கோழைமை. நான் ஏற்றால் அது கயமை. ஆனால் உங்களிடம் கூறி என்ன நன்மை? (தோழமைப் பணியாளன் வருகிறான்) தோ.ப: அரசே, தார்த்தாரியத் தூதர் தங்கள் முடிவறியக் காத்திருக் கிறார். பே: (பெருமூச்சுவிட்டு) வரச்சொல்லு போ!... உயிரைப் பிரித் தனுப்புவதுபோல அரசியை அனுப்ப வேண்டியிருக்கிறது. தூதரிடம் அவனை ஒப்படைக்க இணங்குகிறேன். ஆனால் என் அரசியை நான் மதிக்க அவளுக்கு ஒரு பாரிய பிரிவு விருந்தாவது அளிக்க வேண்டும்; அவளை நானே சென்று வழியனுப்ப வேண்டும். பே.த: வேண்டாம் அரசே! அதனால் அரசிக்கு நன்மை எதுவும் இல்லை. மாறாக, அந்த முரட்டுத் தார்த்தாரியர் தங்கள் துயரங்கண்டு தங்களைக் கேலிசெய்யத்தான் இடமேற்படும். பேரரசி: ஆம், அரசே, தங்கள் பெயருக்கு இழுக்கு வராமலேயே என்னை அனுப்பிவிட்டு மறந்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். பே: உன்னையா?... மறப்பதா? காட்சி 9 (நகர்ப்புறவெளி, பேரரசி சௌகூனும் பேரரசரும் கண்ணீருடன் விடைபெற்றுக் கொள்கின்றனர். பேரரசியின்பின் வழியை முன்னோக்கிக் கொண்டு பரபரப்புடன் நிற்கிறான், தார்த்தாரியத் தூதன். பேரரசர் பின், அதே போன்று விரைந்து திரும்பிச் செல்லும் குறிப்புடன் பேரவைத் தலைவர். தோழமைப் பணியாளர், படைவீரர் முதலியோர் நிற்கின்றனர்.) பேரரசர்: அன்பே, ஆருயிரே! உயிரைவிட்டு உடல் வாழுமா? உன்னை விட்டு நான் எப்படி வாழப்போகிறேன். ஐயோ! பேரரசி: அரசே, என் துன்பத்தை எண்ணி ஆறுதல் அடையுங்கள். நீங்கள என்னைப் பிரிந்து வாழும் அளவுகூட நான் உங்களைப் பிரிந்து வாழப்போவதில்லை. ஆனால் இப்போதைய துயர் அதுவல்ல. நான் இனித் தங்கள் திருமுகத்தை. அன்பகத்தை எப்போது காணப்போகிறேன்? இனிக் காண முடியாது என்றே கலக்கமடைகிறேன். எண்ணி என்ன பயன்? போய் வாருங்கள். மன உறுதியுடன் கடமை எண்ணி விடைதாருங்கள். (தூதர் களும் இளவரசியும் வீரர்களும் செல்கின்றனர்) பே: அந்தோ, உயிரே! நீ போய்விட்டாயா? அரசியாகிய உன்னைப் பேணமுடியாமல், எனக்கு அரசு இருந்து என்ன பயன், படையிருந்து என்ன பயன்? உன் உள்ளமே என் உள்ளம், என் படைவீரருக்கு உன் உள்ளமிருந் தால்... பே.த: அரசே மனமுடைய வேண்டாம். தங்களுக்கேற்ற அழகரசியார் வேறு ஒருவர் கிடைக்காமலா போய்விடுவார்? அதற்காக நாங்கள் பாடுபடுவோம். பே: அன்புடைய குடிமக்களே! நான் அவளழகிலீடு பட்டுத்தான் அவளை விரும்பினேன். அந்த அழகை மட்டும்தான் நீங்கள் காண்கிறீர்கள். அவளை ஒத்த அழகியை வேறிடத்தில் காணலாம். அவள் அறிவை, அவள் பெருந்தன்மையை, வீரத் தியாகத்தை இனி நான்தான் எங்கே காணப் போகிறேன்! நீங்கள்தான் எங்கே காணப்போகிறீர்கள்! பே.த: அரசே, தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. பேரரசி தன் கடமையைச் செய்தாள். நாம் இனியேனும் நம் கடமையாற்றுவோம், வாருங்கள். (செல்கின்றனர்) காட்சி 10 (ஆமூர் ஆற்றங்கரை. சிறு தொலைவில் பாலம், தார்த்தாரியப் படைகள் கூடாரத்தை அழித்தெடுத்துக் கொண்டு செல்கின்றன. முன்னணி முகப்பில் தார்த்தாரியக் கோமான், குலபதிகள், வீரர்கள் செல்கின்றனர். கோமான் அருகே பேரரசி சௌகூன் ஒளியிழந்த, ஆனால் வீறார்ந்த முகத்துடன் செல்கிறான்.) கோமான்: ஹான் மரபின் பேரரசர்க்குச் சீன மரபின் பேரரசர் தம் மரபு வழக்கப்படி பெண் கொடுத்துவிட்டார். சௌகூன் பெருமாட்டியை நானும் தார்த்தாரிய அரசியாக ஏற்றுக்கொண்டேன். இதோ நம் நாடடு எல்லையும் வந்து விட்டது. சௌகூன்: எது ஹான் நாட்டின் எல்லை, அரசே? கோ: இதோ பாரிய கார்நிறப் பரப்புபோல நீண்டகன்று வளைந்து செல்கிறதே, ஆமூர் ஆறு! இதுதான் ஹான் நாட்டின் வட எல்லை; சீன நாட்டின் தென் எல்லை. இடையேயுள்ள இந்தப் பாலத்தைக் கடந்துவிட்டால், இனி நம் நாடுதான். சௌ: மன்னர் மன்ன, என் பழைய வாழ்க்கையை விட்டுப் புத்துலகுக் கேகுமுன் அதற்கு வாயிலான இந்த ஆமூர் ஆற்றுப்பாலத்தின் நடுவிலே நின்று, பிரிவுச் சின்னமாகத் தேறல் மாந்தி, என் நாட்டிடம் பிரியாவிடை பெறத் தங்கள் இணக்கமருளக் கோருகிறேன். கோ: இனித் தாங்களே தார்த்தாரிய குலப் பேரரசி! தங்கள் விருப்பம் எங்கள் கட்டளை. (பேரரசி சௌகூன் பால நடுவில் ஆற்றை நோக்கி நிற்கிறாள், கையில் ஒரு தேறல் குவளையுடன்) சௌ: மன்னர் மன்ன, இதோ இந்தத் தேறல் குவளையைப் பருகுகிறேன். இத்துடன் ஹான் நாட்டிலிருந்தும், ஹான் மரபிலிருந்தும் மீளாப் பெருவிடை கொள்கிறேன். அதே பெருவிடை உமக்கும் பொருந்து மாக. அதோ அவ்வுலகில் விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன். இதோ! (பேரரசி ஆற்றில் குதித்து மறைகிறாள். கோ: ஆ, என்ன இது! எல்லோரும்: ஆகா, மோசம் போனோம்! ஓடு, பிடி... ஓடு... கோ: நம் அரசியைக் காக்க யாருமில்லையா? காக்க வழி யில்லையா? குலபதிகள்: அரசே, இது ஆமூர் ஆறு! இதை அறிவீர்! அரசியார் குதித்தது அதன் நடுவில்! படகுகளிருந்தாலும் ஆற்றின் நடுப்பகுதி வரையாவது செல்லலாம். பாலத்தை நம்பிப் படகுகள் கொணரவில்லை. என்ன செய்வது, ஹான் அரசர் நிலை, தம் நிலையாயிற்று. கோ: ஆகா, அழகைக் கண்டுதான் ஏமாந்தேன். ஆனால் என்ன வீரம், என்ன நெஞ்சுறுதி! எத்தனை அன்புள்ளம், எத்தனை தியாக உணர்வு! அந்தோ, ஹான் மரபினரிடமிருந்து இந்த மாசற்ற மணியைப் பறித்தேன், நானும் இழந்தேன். இத்தகைய நன்முத்தை அன்பினாலன்றி வேறு எப்படிப் பெற முடியும்? அமைச்சர்: தார்த்தாரிய வீரத் தளபதியா, இப்படி பேசுவது? கோ: ஆம், அவள் உள்ள உறுதி, மனத் திட்பம் என்னை வென்று விட்டது. அவள் அன்பு கவர்ந்த ஹான் பேரரசர் இனி என் மாறா நண்பர். அவளுக்கும் எங்களிருவருக்கும் மாறாக தீங்கிழைத்த அக்கொடிய நயவஞ்சகன் நாட்டுப் பகைவன் மயுவென்ஷோவைத்தான் இனிப் பழிவாங்க வேண்டும்... ஆனால் அந்தப் பொறுப்பு என்னுடையதன்று. என் நண்பர் ஹான் பேரரசருடையது. அவருக்கு நாம் செய்த தீங்குக்குக் கழுவாயாக இப்பழிகேடனை அவர் சீற்றத்துக்கே பலியாக்குகிறேன். ஏவலாளர்களே, அந்தக் கயவனைக் கட்டி விலங்கிட்டு ஹான் பேரரசரிடம் அனுப்புக. அத்துடன் என் நேச உறுதியையும் கழிவிரக்கந் தோய்ந்த மன்னிப்புக் கோரிக்கையையும் தூதர் அறிவிக்க! ஏவலர்: அப்படியே! (செல்கின்றனர்) காட்சி 11 (பேரரசர் படுக்கையறை) பேரரசர்: அந்தோ, பேரரசியைப் பறிகொடுத்த பின் பகலே இரவாயிற்று. இரவின் தனிமை என்னை அறுக்கிறது. நோவகற்றும் நோவாக... ஏவலனே, நறும் புகைத்தட்டில் தூள் குறைந்துவிட்டது. இரவு முழுதும் புகையெழத் தூளிட்டுவை. அவள் நுகரா விட்டாலும் அவள் படம், அவள் நிழல் நுகரட்டும். காணக் கொடுத்துவையாத கண்களே! மூடித் தொலையுங்கள். கனவிலாவது அவள் காட்சி தரலாம். (கண்ணயர்கிறார். கனாத்தோற்றத்தில் பேரரசி சௌகூன் வருகிறாள்) சௌகூன்: தம் நலனும் தம் நாட்டு நலனும் கோரி அயலானிடம் பலியாகச் சென்றேன். அரசே, ஆனால் உம்மைக் காணும் அவாவால் அவர்களை ஏய்த்துவிட்டு வந்திருக்கிறேன். நீர் தானே எம் பேரரசர், என் ஹான் மரபு வாழ்விக்க வந்த ஏந்தல்! மீண்டும் என்னைப் பாருங்கள். ஆ, இதென்ன, அதற்குள்! (கனாத் தோற்றத்திலேயே ஒரு தார்த்தாரிய வீரன் வருகிறான்) தார்த்தாரிய வீரன்: நான் சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன். அதற்குள் தப்பிவந்து விட்டாய்? வா, இப்படி. (வீரன் அவளை இழுத்தேகுகிறான். இருவரும் மறைகின்றனர்.) பேரரசன்: (திடுக்கெட்டெழுந்து) ஐயோ, என் பேரரசி அதற்குள் எங்கே போய்விட்டாள்? திரும்பி வந்தும், மீண்டும் போய்விட்டாளா? கனவிலும் என் கண்மணியைக் காணவிடாது இழுத்துச் செல்கிறார்களே! (அன்றிலின் சிறு அலறல் கேட்கிறது) சிறிது நேரம் இணையிழந்த அன்றில் அலறுகிறது. நிலையாகப் பறிகொடுத்த என் உள்ளம் வேகின்றது. தோழமைப் பணியாள்: அரசே, இரவெல்லாம் தாங்கள் உறக்கமின்றிப் புலம்புகிறீர்களே, தாங்கள் பேரரசரல்லவா? சென்றதை நினையாது இனி வருவதை உன்னி உறுதியைக் கடைப்பிடிக்கக் கோருகிறேன். பே: அன்பனே, சென்றது உயிர் வாழ்வு. வருவது உயிரற்ற சாவு. அதில் நினைக்க என்ன இருக்கிறது? (பேரவைத் தலைவர் வருகிறார்) பே.த: அரசே, இனிப் புலம்ப வேண்டாம். பேரரசியின் அருமையை நாங்க்ள அறியவில்லை. நீங்கள் அறிந்து கொண்டீர்கள். ஆம், இனி நமக்கு மாளாத் துன்பம் உண்டு. ஆனால் சிறுமை போயிற்று. இழிவு போயிற்று. பேரரசி நமக்கு மட்டுமின்றி, நாட்டுக்குப் பேரொளி விளக்கமானாள்! பே: நீங்கள் கூறுவது ஒன்றும் விளங்கவில்லையே! பே.த: இன்று காலைப் பேரவை முடிய இருக்குந் தறுவாயில் மீண்டும் தார்த்தாரிய தூதன் வந்தான். இத்தடவை பகைவனாக அல்ல, நண்பனாக. நம் நாட்டுப் பகைவன் மயூவென்ஷோவை விலங்கிட்டுக் கொண்டுவந்து விட்டு அவன்மீது நம்பழியையும் சீன மரபின் பழியையும் ஒருங்கே வாங்கும்படிக் கோரியுள்ளான். பே: ஓரளவு மகிழ்ச்சிக்குரிய செய்தியே. பேரரசியின் செய்தி எதுவும் தெரியவந்ததா? பே.த: அரசே தங்கள் மனத்தை இன்னுஞ் சற்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பேரரசி ஹான் மரபை மட்டுமின்றிச் சீன மரபையும் விட்டுச் சென்றுவிட்டாள். தங்களிடமும் தம் நாட்டிடமும் பிரியாவிடை பெறுவதாகக் கூறி ஆமூர் ஆற்று நடுவில் குதித்துப் புகழுடம்பு பெற்றுவிட்டார்களாம். பே: ஆ, என் உயிரே! என் அழகுத் தெய்வமே! சிறியேன் நாட்டை மட்டுமன்றி உலகையே விட்டுச் சென்றுவிட்டாயா? ஆம்: நீ மனித வடிவமல்ல! தெய்வமேதான்! உன் உலகம் சென்றுவிட்டாய்! பே.த: உண்மை. தங்கள் புகழ்க்கொடியை உயர்த்தி, தங்கள் காதற் பெருமையைக் காக்கச் சென்று விட்டார்கள். சீன நாட்டுக்கும் ஹான் நாட்டுக்கும் இருந்த பகையை நிலையாக ஒழித்து, பகைவரையும் அன்பால், தியாகத்தால் வென்று நண்பர்களாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். சீனமரபின் கோமான் இப்பொழுது அவளைத் தங்கள் மறைந்த பேரரசியாக, தம் குல தெய்வமாகக் கருதிப் பூசிக்க எண்ணியுள்ளாராம். பே: அப்படியா! சௌகூன், வாழ்க நின் அன்புப் பேரொளி! உனக்கு வீரச் சிலையெழுப்பிப் பூசிப்பேன் நான் போற்ற மட்டுமல்ல, உலகத்தவர் யாவரும் போற்ற! பே.த: அரசே, அத்தெய்வத்தின் பேரால், சீன மரபுக் கோமானே வற்புறுத்திக் கேட்கிறார், அவளுக்குத் தீங்கிழைத்தத் தீயோனைத் தண்டிக்கும்படி! பே: ஆம். எம் இருவர் ஒன்றுபட்ட பகைமையே அவன் உயிரைக் கொல்லப்போதும். ஆனால் அவ்வுயிரைத் தாங்கிய உடலுக்கும் உரிய தண்டனை நடக்கட்டும். அவனைத் தூக்கிடுக. பே.த: அரசே, நம் நாட்டைப் பிடித்த பீடை இனி ஒழிந்தது. இனி நல்லாட்சிக்கு வழி வகுப்பது எளிது. சௌகூன் பேரரசி நம் பேரரசின் கோடிச் சின்னமானாள். பேரரசுக் குடிகளுக்கு இப்போது வாழ்வின் ஒரு குறிக்கோள், ஒரு பொதுப் பற்றுக்கு இடம் ஏற்பட்டுவிட்டது. வாழ்க சௌகூன் திருப்பெயர்! 2. முத்துமாலை (வேங்-மெங்- லுங்) சூவான்தே அரசர் காலத்தில் சிங்கன் என்ற நகரில் ஹோ தாச்சிங் என்ற ஓர் இளைஞன் இருந்தான். அவன் கட்டழகன். மேலும் இளமையிலேயே திருமணமானவன். திருமதி தாச்சிங் அழகும் நன்னடத்தையும் உடையவள். ஆனால் அவளாலும் அவனைக் கட்டுப்படுத்தவோ திருத்தி நல்வழிப்படுததவோ முடியவில்லை. இரவு பகல் அவன் பெரும்பாலும் நகர்சுற்றிப் புதுப்புது இன்பங்களை நாடித் திரிந்தான். உணவு உண்ணும் வேளைகளில்தான் வீடு திரும்புவான். அவன் வடிவழகிலும் பேச்சுத் திறத்திலும் மிடுக்குதுடுக்கு நடையிலும் பெண்கள் இயல்பாக வசப் பட்டனராதலால் அவன் வேட்டைக் காடு வரவர விரிந்து கொண்டே வந்தது. இளவேனில் காலம்! அன்று அவனுக்கு இன்ப வேட்டை எதற்கும் வழியில்லாது போயிற்று. தன் ஏமாற்றத்தை மறக்க அவன் மட்டின்றி குடித்தான். குடி மயக்கமும் மனக் கசப்பும் சேர்ந்து இன்ன இடம் செல்கிறோம் என்ற நினைவின்றி அவனை அலையவைத்தன. நண்பகல் திரியுமுன் நகர்விட்டு அவன் நெடுந்தொலை வந்துவிட்டான். களைப்பால் அவன் உடல் சோர்ந்தது. வெயிலில் அலைந்ததால் நா வறண்டது. மாலை நேரத்தில் இன்னதென்று பாராமலே எதிர்ப்பட்ட ஒரு மாளிகையினுள் நுழைந்தான். அம்மாளிகையின் உள்ளே... பல வாயில்கள் இருந்தன, திறந்தவாறு. பருக நீர் கோரும் எண்ணத்துடன் அவன் நுழைந்து, பல வாயில்களைக் கடந்து உள்ளே சென்றான். என்ன விந்தை! அது உண்மையில் மாளிகையன்று; ஆடவர் உள்ளே நுழையக் கூடாத ஃவெய்குங் கன்னிமாடம்! அதன் இரு சிறகங்களிலும் இரண்டு கன்னித் துறவியர் மடங்கள் இருந்தன. அவன் இப்போது புகுந்திருப்பது கிழக்குச் சிறகிலுள்ள மடம். உள் வாயிலை நெருங்கிய போதுதான் அது கன்னிமாடமெனத் தாச்சிங் உணர்ந்தான். ஆனால் இந்த உணர்வு அவன் போக்கைத் தடுக்கவில்லை. எதிர்ப்பு ஏதும் இல்லாததால் மேலும் நடந்தான். அவன் சிந்தனையில் ஆயிரம் ஐய உணர்வுகளும் அதற்குரிய அறிவுரைகளும் எழுந்து மறைந்தன. கன்னித் துறவியரிலும் அழகிய உடல்கட்டமைந்த இளமங்கையர் உண்டு என்றும், ஆண் தொடர் பில்லாக் கட்டுப்பாட்டினால் அவர்கள் இளமை உணர்ச்சி சில சமயம் கட்டுமீறவும் துணிந்திருக்கும் என்றும் அவனுக்குத் தெரியும். இன்று அத்தகைய தறுவாய் ஒன்றைக் காணும் வாய்ப்புக் கிடைத்தால்...? துணிவுடன் அவன் மேலும் நடந்தான். கடைசி வாயிலில் அவன் சென்று மெதுவாகத் தட்டினான். கதவு உடனே திறக்கப்பட்டது. இது அவன் எதிர்பாராதது. கதவு திறந்ததும் ஓர் இளநங்கை என்று காணவே அவன் இன்னும் வியப்படைந்தான். ஆனால் அவன் வியப்போ வெறுப்போ எதையும் காட்டிக் கொள்ளவில்லை. நிலைமை சாதகமாக இருக்கும் போது அதை ஏற்று இன்னும் மிகுதி சாதகமாக்கிக் கொள்ள வழி வகுப்பதே அவன் கோட்பாடு. அடுத்தடுத்து எழுந்த நிலைமைகளும் அவனை மென்மேலும் வரவேற்றன. ஆடவன் கதவு தட்டியது கண்டு கண்டிப்பும் வெறுப்பும் காட்ட வேண்டிய நங்கை புன்முறுவலுடன் “நீங்கள் யார், என்ன நாடி வந்தீர்கள்?” என்று ஆவலோடு வினவினாள். தாச்சிங் குரல்வளைகள் முறுக்கேறின. அவன் தன் வரவுக்குத் தகுந்த காரணங்களைத் திறம்படக் கூறினான். “அம்மணி, புத்த சமய நூல்கள் பயிலும் மாணவன் நான். உங்கள் மடத் துறவியரின் ஒழுக்கமும் நல்லறிவும் பற்றிக் கேள்விப்பட்டேன். என் உள்ளத்திலே உள்ள ஒரு சில ஐயப்பாடுகளை அகற்றிப் போகவே இவ்விடம் நாடி வந்தேன். மன்னிக்க வேண்டும்.” “அப்படியா! மகிழ்ச்சி. உள்ளே வந்து சிறிது தேநீர் அருந்துங்கள். பின் விரிவாகப் பேசிக் கொள்ளலாம்.” எதிர்பாரா இவ்வன்பழைப்பை மகிழ்வுடன் ஏற்று அவன் அவளுடன் உள்ளறை ஒன்றை அடைந்தான். அவ்வறை மடத்தைச் சார்ந்ததாயினும் உண்மையில் ஒரு இன்ப மாளிகைபோல் சிங்காரிக்கப்பட்டிருந்தது. அவன் அதைச் சுற்றிப் பார்த்துக் கூர்ந்து கவனித்தான். அவள் கண்களும் அதை நோட்டம் பார்த்துக் கொண்டன என்பதை அவன் அறிய முடிந்தது. பணிப்பெண்ணாக வேலை பார்ப்பவளும் ஒரு இளம் பெண். அவளே தேநீர் கொண்டு வந்தாள். கன்னித் துறவியும் தாச்சிங்கும் எதிரெதிரே அமர்ந்து சிறுகச் சிறுகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தேநீர் பருகினர். அவளும் படபடக்கவில்லை, அவனும் சிறிதும் விரைவு காட்டவில்லை. தேநீர் கொணர்ந்த பெண்ணைச் சுட்டிக்காட்டி அவன் “இது யார்?” என்றான். அவள் புன்முறுவலுடன் “இது என் புது மாணவியர் இருவருள் ஒருத்தி. அவர்கள் கன்னித் துறவியாகப் பயிற்சி பெறுவதால் பணியாளரா யிருந்து உதவுகின்றனர். இம்மடத்தின் தலைவி முதுமையாலும் நோயாலும் பாயும் படுக்கையுமாய்க் கிடக்கிறாள். ஆதலால் நானே தலைமைப் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறேன். மடத்தில் அவள் நீங்கலாக நாங்கள் மூவரே இருக்கிறோம். வெளியிலிருந்து வந்து போகும் வேலைக்காரரும், இதே கன்னி மாடத்தின் மேற்குச் சிறகிலுள்ள மடத்திலிருந்து எங்களைப் பார்க்கவரு;ம அதன் தலைவியையும் தவிர வேறு யாரையும் பெரும்பாலும் நாங்கள் காண்பதில்லை” என்று மடத்தைப் பற்றிய முழு விவரத்தையும் கூறினாள். அதோடுகூட இலைமறை காயாக அவள் தனிமையையும், தனக்கு அவள் விருப்பமன்றி வேறு தடங்கலெதுவும் இல்லை யென்பதையும் அவன் அறிந்து கொண்டான். இப்போது அவன் தன் பேச்சை நேரிடை யாகத் துறவி நங்கையிடமே திருப்பினான், அவள் விருப்பம் உணர... “தங்கள் பெயர் என்ன? மன்னிக்க வேண்டும். தங்களை என்ன வென்று அழைப்பது அம்மணி!” “என் பெயர் குங்சாவ்.” “தாங்கள் இந்த மடத்திற்கு வந்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன, அம்மணி?” “என் பெயர் குங்சாவ்.” “தாங்கள் இந்த மடத்திற்கு வந்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன, அம்மணி?” “பத்தாண்டுகளுக்கு முன்- அதாவது நான் ஒன்பது வயதாயிருக்கும் போது என் தந்தை இறந்தார். அதுமுதல் இம்மடத்திலேயே இருக்கிறேன்.” இம்மறுமொழி மூலம் அவள் தான் பத்தொன்பது வயதுடையவள் என்பதைக் குறிப்பாக அறிவித்தாள். இந்நயம் கண்டு அவன் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டான். “தங்களைப் பார்த்தால் பத்தொன்பது வயதுடையவர் என்று தோன்றவில்லை. அறிவில் அதற்கு மேம்பட்டிருக்கிறீர்கள். தோற்றத்தில் அதை விடக் குறைவு” என்று புகழ்ந்து பசப்பினான் அவன். பேச்சு நெடுந்தொலை சென்றுவிட்டதைக் கவனித்தவன் போல் அவள் “நாங்கள் துறவிகள். வயது துறவிகளைத் தாக்காது” என்று தடுத்துரைத்தாள். “துறவு வயதைத் தாக்காது என்று கூறுங்கள்; வயது துறவைக் தாக்காதிருப்பது அரிது” என்று அவன் குத்திக் காட்டினான். தேநீர்க் கோப்பை தீர நெடு நேரம் ஆயிற்று. எப்படியும் அவள் பேச்சை வளர்த்து நேரத்தை நீட்டவே அவன் உள்ளுற நினைத்தான். “இன்னொரு கோப்பை தேநீர் அருந்துகிறீர்களா?” என்று அவள் கனிவுடன் வேண்டவே, அவன் களிப்புடன் “தேநீர் இவ்வளவு சிறந்ததாய், அளிப்பவர் இவ்வளவு அறிவு நயமுடைய அழகியாய் இருக்கும் போது, யார்தான், எத்தனை கோப்பைதான் வேண்டாம் என்பார்கள்?” என்று ஆர்வமீதூர உரைத்தான். அவள் முக முழுதும் புன்னகை தவழத் தவழத் தானே சென்று, ஒரு பெரிய ‘கலம்’ நிறையத் தேநீர் கொணர்ந்தாள். அவன் வேண்டுமென்றே மெல்லப் பருகினான். அவளும் ஊற்றி ஊற்றி நிரப்பித் தானும் அவனுடன் போட்டியிட்டு மெல்லப் பருகினாள். அத்துடன் தானே தேநீர் கொண்டு வரச் சென்றதற்கு விளக்கங் கூறுபவள் போல, “புது மாணவிகள் சிறுமி களானதால் சிற்றுண்டியருந்தி ஓய்வுபெற அனுப்பி விட்டேன். அதனால் தான் நானே உங்களைக் கவனிக்க வேண்டியதாயிற்று” என்று தமக்குத் தடங்கலற்ற இடவாய்ப்பும் ஏற்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டினாள். நேரமும் சென்றுவிட்டது. ஒருவர் மனப்போக்கை ஒருவர் கிட்டத்தட்ட அறிந்தும் ஆயிற்று. இனி நேரிடையாகப் பேச வேண்டும் என்று தாச்சிங் முடிவு செய்து கொண்டான். அவளும் அதே முடிவுடன்தான் இருந்தாள் என்பதை அவன் ஊகிக்க முடிந்தது. “அம்மணி, தங்கள் கைஒழுங்கின் அழகை இவ்வறை நன்கு காட்டுகிறது. மடம் முழுவதிலும் தங்கள் திறமை இவ்வாறே விளங்கும் என்று நம்புகிறேன். மற்ற அறைகளையும் நான் பார்க்கலாமா?” என்றான். அவள் எழுந்து முன்சென்று “வாருங்கள்” என்று கூட்டிக் கொண்டு போனாள். ஒன்றிரண்டு அறைகளை மேற்போக்காகக் காட்டிவிட்டு நாற்புறமும் மெல்லிய திரையிட்டு, கவர்ச்சி கரமான முறையில் அலங் கரிக்கப்பட்டிருந்த ஓரறைக்கு அழைத்துச் சென்றாள். வழியிலிருந்த பலகணி மூலம் மற்ற இரு பணிப்பெண்களும் ஓரறையில் உறங்குவதையும் அவன் பார்த்துக் கொண்டான். அவர்கள் சென்ற அறை அரண்மனைப் படுக்கையறை போல இன்ப வாய்ப்புடையதாயிருந்தது. எனினும் அதில் ஒரே ஒரு படுக்கைதானிருந்தது. இது இயல்பே; ஆனால் தாச்சிங்குக்கு அது இன்னும் மகிழ்ச்சியையே அளித்தது. நறும்புகைத் தட்டுக்கள், மெழுகுதிரி விளக்குகள் பல இருந்தன. ஒன்றிரண்டு விளக்குகளே எரிந்து கொண்டிருந்தன. அவள் மீதியையும் ஏற்றி நறும்புகையையும் எழுப்பினாள். பன்னீர்த்துளிகளை அறை யெங்கும் தெளித்தாள். பிறகு அவள் அவனிடம் அவ்வொரே படுக்கையைக் காட்டி, ‘அமருங்கள்’ என்று மொழிந்தாள். அவனால் அதற்குமேல் பசப்பிக் கொண்டிருக்க முடியவில்லை. “தாங்கள் நெடு நேரம் நடந்துவிட்டீர்கள். நீங்களும் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்றான் பாசமும் பரிவும் விரவிப் பரந்த குரலில். ஆண்களையே இதுவரை அணுகி அறியாது உள்ளத்தில் மட்டும் புழுங்கிக் கொண்டிருந்த அவள் நாடி நரம்புகள் முழுவதும் உள்ளூரத் துடிதுடித்துப் பொங்கின. அவள் ஒப்புக்கு “இல்லை, நிற்கிறேன்” என்று மழுப்பினாலும் அவள் கால்கள் படுக்கையின் பக்கமாக தாமாகச் சாய்ந்தன. அவன் தயக்கம் விடுத்து அவளைக் கையால் பற்றி அருகே இழுத்து “முகமூடி நீக்கிக் கன்னங்களில் அழுத்தி முத்தமிட்டான். அவள் முகத்தைச் சற்றுத் திருப்பிக் கொண்டு வெட்கத்துடன் “நான் துறவியாயிற்றே!” என்றாள். அவன் நகைந்து “அப்படியா! அதற்கென்ன, இன்னும் சில முத்தம் சேர்த்துத் தருகிறேன்” என்று இதழிலும் நெற்றியிலும் கன்னங்களிலும் மாறி மாறி முத்தமாரி பொழிந்தான். அவள் உடல் கட்டுக்கடங்காது அவன் மீது சாய்ந்தது. அவன் அவளை இறுக அணைத்துத் தன்னோடு படுக்கையில் பிணைத்தான். புத்தர் அடி நிழலில் ‘பேரின்பம்’ நாட வேண்டிய துறவி அவன் காலடியில் என்று மறியா இன்பம் நுகர்ந்தாள். அவனும் வேறெங்கும் இதுவரை பெறாத தங்கு தடையற்ற இன்ப அலைகளில் மிதந்தான். நேரஞ் செல்லச் செல்ல ஒருவர் மீதொருவர் கொண்டுள்ள பாசமும் நேசமும் வளர்ந்தன. உரிமையும் துணிச்சலும் மிகுந்தன. துறவியின் துறவாடைகளை அவன் ஒவ்வொன்றாக அகற்றி எறிந்தான். அவளும் போட்டியாக அவன் ஆடைகளையும் துணிந்து தானே எடுத்தகற்றிவிட்டு அவனுடன் இரண்டறக் கலந்து மகிழ்ந்தாள். இரவு நீங்கிற்று, பகலவன் கதிர்கள் எங்கும் பரந்தன. உள்ளறையில் கிடந்த இருவருக்கும் இன்பம் இருளுடன் கலந்திருந்தது. பணிப்பெண் களிருவரும் தேநீர் கொண்டு வந்த போதும் அவர்கள் ஆடையில்லாமலே ஈருயிர் ஓருடலாகப் பிணைந்தே கிடந்தனர். அக்காட்சியைக் காணச் சகியாத பணிப் பெண்கள் நாணி அப்பால் ஒதுங்கினர். இதற்குள் குங்சாவ் வெறி தெளிந்து, அலறிப் புடைத்தெழுந்து அவர்களைப் பின்பற்றிச் சென்றாள். இன்னும் அலங்கோலமாக உறங்கிக் கிடந்த தாச்சிங்கினிடம் இருவரையும் இழுத்து வந்து, “நான் கண்டு நுகர்ந்த பேரின்பத்தை நீங்களும் இனித் தடையின்றிப் பங்குகொண்டு மகிழலாம். இதனை நமக்குள் அடக்கிவைக்கும் பொறுப்பிலும் பங்கு கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு ஆர்வமூட்டினாள். பணிப் பெண்களிருவரும் உள்ளூற இணங்கியது போல தோன்றினாலும் நாணி நிற்பது கண்டு அவள் தாச்சிங்கை எழுப்பி, “இதோ இன்னும் இரண்டு கனிகள் உனக்காகக் காத்திருக்கின்றன” என்றாள். கயமைத்தனத்தில் கைதேர்ந்த தாச்சிங்குக்கு அதற்குமேல் அழைப்புத் தேவைப்படவில்லை. அவன் அவள் முன்னிலை யிலேயே இருவரையும் அருகருகே இழுத்து அணைத்து முத்தமிட்டான். இனி அச்சமில்லை என்ற நிச்சயத்துடன் குவ்சாவ் அகன்றாள். இரு மாணவியரும் தலைவியின் அச்சம் தீர்த்து அவனை மாறி மாறிக் கட்டிக் களித்தனர். தாச்சிங் வீட்டையும் மனைவியையும் மறந்தான். நகரத்து இன்ப வேட்டைகளையும் மறந்தான். நாடிய இன்பங்கள் எதுவும் தேடாது கையில் வந்து சிக்கும் இம் மடம் அவனுக்கு நிலவுலகத் துறக்கமாக அமைந்தது. இரவும் பகலும் இடைவிடாது இன்பக்கடலில் நீந்தினான். இவ்வாறு நாட்கள் பல பறந்தன. புத்தத் துறவியர் கொலை வெறுத்தவர், புலால் உணவு மறுத்தவர். ஆனால் தாச்சிங் ஊனுணவு கழிந்த உணவை வெறுப்பது கண்ட கன்னித் துறவியர் மறைவில் கலந்து பேசி, இனி மறைவாக ஊனுணவு வருவித்துத் தருவதென்றும், தாமும் மறைவாக அதில் பங்கு கொள்வதென்றும் முடிவு செய்தனர். வெளியேயிருந்து சரக்கு மூடை சுமப்பவனிடம் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு மடங்களிலுமுள்ள பணியாளர்களிடையே போட்டியும் பூசலும் இருந்தன. அதன் பயனாக மேற்கு மடத்தின் வேலைக்கார னொருவன், கிழக்கு மடத்து வேலைக்காரன் ஊன் உணவு கொண்டு செல்வதைக் கண்டு அதனைத் தன் தலைவியாகிய சிங்-சேனுக்குத் தெரிவித்தான். சிங்சேன் புத்த மதப் போர்வையில் உலவியவளே அன்றி உண்மைத் துறவொழுக்கங்கூடி வாழும் கன்னித் துறவியல்ல. உள்ளூற இன்ப நினைவால் எழும் புழுக்கமும் இன்ப நாட்டமும் வேட்கையும் உடையவள். ஆகவே அவள் எளிதாக உண்மை நிலையை மோப்பம் பிடித்து உணர்ந்து கொண்டாள். முன்னறிவிப்பில்லாமல், அவள் திடீரென்று குங்சாவைப் பார்க்க வருவது போல் வந்து அவர்களைக் களியாட்டக் கட்டத்தில் கையும் களவுமாகப் பிடித்துவிட்டாள். புது மாணவியரை வசப்படுத்தியது போலவே குங்சாவ் சிங்சேனையும் வசப்படுத்தினாள். தாச்சிங்கும், சிங்சேன் மற்றவர்களைக் காட்டிலும் அழகும் மிடுக்கும் உடையவளா யிருப்பது கண்டு, குங்சாவையும் அவளையும் தன் கைப்பிடியால் ஒற்றுமைப்படுத்தினான். தாச்சிங்கின் இன்பக்கனிகளின் எண்ணிக்கை வளர்ந்தது. ஆயினும் சிங்சேன் குங்சாவைப் போன்ற நெகிழ்ந்த உள்ளம் உடையவளல்ல. குங்சாவ் தன் பணிப்பெண்களுக்கு இடமளித்தது போல்,அவன் தன்னைத் தவிர வேறு யாருக்கும் களிப்பில் பங்கு அளிக்க விரும்பாது, தன் பணிப்பெண்களை ஒதுக்கி வைத்திருந்தாள். அப் பணிப்பெள் ஏக்கத்துடன் காத்திருந்து உள்ளூற வெதும்பினர். நாட்கள் பல சென்றபின், தாச்சிங்குக்குக் கூட இன்ப நாட்டம் தளரத் தொடங்கிற்று. உடையும் குடியும் குறைவில்லாமல் அவனுக்குத் தரப்பட்டாலும், ஓய்வும் உறக்கமும் கிடைக்க வழியில்லாமல், இரவு பகல் நான்கு இளம்பெண்களின் மட்டற்ற அவாக்களுக்கு அவன் இரையாக வேண்டியிருந்தது. இதற்கிடையில் அவன் நகர் சென்று தன் மனைவி மக்களைப் பார்த்து வரவும் விரும்பினான். இதுவகையில் ஒவ்வொருவராகக் கேட்டு அவர்கள் மனம் கரைத்தான். அவர்களுக்கு அவனை அனுப்ப மறுக்கவும் விருப்பம் இல்லை, அனுப்பிவைக்கவும் துணிவில்லை. எங்கே மடத்து மறைவிலே நடந்தவைகள் நகரத்து வெளியிலே பலரறியப் பறைசாட்டப்பட்டுப் பரவிவிடுமோ என்ற அச்சம் பயங்கரமாக எழுந்தது. இந்நிலையில் துணிகரத் தீமைகளில் பழக்கமுடைய சிங்சேன் புது வழி வகுத்தாள். “தாச்சிங் விருப்பப்படி சிலநாள் அனுப்புவதாகக் கூறி, பிரிவு நாளன்று பெரியதோர் விருந்தொன்றளிக்க வேண்டும். விருந்தில் அவனை மட்டுமீறிக் குடிக்க வைத்து, நல்ல மயக்கத்துடனிருக்கும் போது, அவன் தலையைக் கன்னித் துறவிப் போல் மழுங்கச் சிறைத்துவிட்டு அவனுக்கும் கன்னித் துறவியாடை அணிவிக்க வேண்டும். அவனது இயல்பான பெண் தோற்றமும் எடுப்பாக முக வசீகரமும் அப்புது உருவத்தை நிலைக்க வைக்கும். அப்போது அவன் வெளியே போகவும் முடியாது. முன்னிலும் பன்மடங்கு பெண்கள் அவனுடன் கூடி மருவவும் பழகவும் எந்தத் தடையும் இடையில் நிற்காது” என்று சிங்சேன் வகுத்துத் தந்த திட்டத்தை அனைவரும் வரவேற்றனர். தாச்சிங் கன்னித் துறவி உருவம் பெற்றான். முதலில் அவன் தன் உருமாற்றங் கண்டு பொறாது சீறினான். ஆனால் சிங்சேன் சிறு குழந்தை போல் அவன் மடியில் அமர்ந்து கொண்டு, நா நயத்துடன் தேமொழியில் “அன்பனே, உனக்குப் போக எவ்வளவு அடங்கா விருப்பமோ, அதை விட ஆயிரம் மடங்கு எங்களுக்கு உன்னை இடையறாது வைத்துக் கொள்ள அடங்கா விருப்பம்; தணியா அவா. இத்தனை பேருடைய விருப்பம் உன் ஒருவனுடைய விருப்பத்தை விடப் பன்மடங்கு பெரிதல்லவா? உன்னை ஏமாற்றி விட்டோமென்று எண்ண வேண்டாம். உன்னை என்றென்றும் எங்கள் அருகிலே வைத்துக் காணவே இந்த ஏற்பாடு செய்திருக்கிறோம். அப்படியே உனக்கு இந்தச் செயல் ஏமாற்றத்தைத் தந்தாலும், மட்டற்ற மாறா அன்பு காரணமாக இந்த ஏமாற்றத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம். நாங்கள் அனைவரும் நீ செய்துள்ள இந்தத் தியாகத்துக்குக் கழுவாயாக உனக்கு உள்ளம் நிறைந்து குற்றேவல் புரிகிறோம்” என்று கொஞ்சலுடன் கூறினாள். உண்மையிலேயே அவர்களும் அது முதல் ஒருவர்க்கொருவர் போட்டியிட்டு அவனது ஒவ்வொரு சிறு குறிப்பும் நிறைவேற்றப் பாடுபட்டனர். அவர்கள் அவன் காலுக்குச் செருப்பாயும், தலைக்குத் தலையணையாயும், அவன் வேண்டும்போது உவந்தமர்ந்தும், வேண்டாதபோது அண்டையிலிருந்து காத்து நின்றும் அவன் பிணக்குத் தணித்தனர். தாச்சிங் மனச்சான்றுமட்டும் தன் மனைவியைக் காணவேண்டு மென்னும் பேரவாவால் துடிதுடித்தது. ஒரு நாள் அவன் தன் மனைவியை அழைத்து அவளிடம் தான் நயமொழிகள் கூறவேண்டுமென நினைத்தான். எனவே குங்சாவிடம் தன் முத்துமாலையைக் கொடுத்து, “இதை அடையாள மாகக் காட்டி, என் மனைவியிடம் என்னைப் பற்றிய விபரமனைத்தையும் கூறி, இங்கே அழைத்து வாருங்கள். ஒரு முறை நேரில் பார்த்து நானும் விடை பெற்றுக் கொள்ளுகிறேன்” என்றான். இணக்க மனமுடைய குங்சாவ் இதற்கு ஒப்பினாள். சிங்சேனிடம் முத்துமாலையைக் காட்டிச் செய்தி கூறியபோது, அவள் “இது பித்துக்கொள்ளித்தனம்” என்று கூறிக் குங்சாவின் அறியாமையைக் கண்டு நகைத்தாள். துறவியர் எப்படிக் காதல் செய்தியை வெளியிடுவது என்று மறுத்தாள். அத்துடன் அந்த முத்து மாலையை அவள் மாடத்தின் மீது வீசியெறிந்துவிட்டு, தாச்சிங் மனைவி யிடம் செய்தி கூறியதாகவும், அவள் அழைப்பிற்கிணங்கி வர மறுத்து விட்டதாகவும் அவனிடம் கூறிவிடும்படி அறிவுரையும் கூறி அவளை அனுப்பிவிட்டாள். தாச்சிங்கும் இது கேட்டு ஒருவாறு மனைவி பற்றிய சிந்தனையை மறந்து, இன்ப வாழ்விலே முழு மனமும் செலுத்திவிட்டான். புத்தர்பிரான் அருள் திருவிளையாடல்களுடன் போட்டி யிட்டு அவன் காதல் திருவிளையாடல்களில் பகலும் இரவும், வேனிலும் கோடையும் போக்கிச் சில மாதங்கள் கழித்தான். *தகாக் காதல் கவர்ச்சியுடையதாயிருக்கலாம். ஆனால் அதன் இன்பம் எத்தனை நாள் நீடிக்கும்? குடும்பக் காதலின் நிறை இன்ப அமைதியும் நலமும் அதில் எப்படி இருக்க முடியும்? விரைவில் தாச்சிங் உடல் தளர்ந்தது. நரம்புகள் தெறிக்கத் தொடங்கின. முதலில் பெண்டிர்கள் இதனை அவன் நடிப்பு நயம் என்று கருதினர். ஆனால் விரைவில் அவன் கைகால்கள் ஓய்ந்தன. வாத பித்த சிலேத்தும நோய்கள் உடலில் கருக்கொண்டு வளர்ந்தன. உடலெல்லாம் புண்பட்டு அணுகுபவர் அருவருக்கும்படியாக நெடியும் சீழும் வடிந்தன. பெண்டிர்கள் அவன் தம் இன்ப வேட்டையால் இந்நிலை ஏற்றான் என்பதறிந்து, தாயர்கள் போல் அவனைப் பேணினர். விரைவில் உடல் குணம் அடையும் என்று ஆறுதல் கூறினர். ஆனால்... ஒருநாள் இரவு, தாச்சிங் உடலை விட்டு உயிர் பிரிந்துவிட்டது. மடத் தலைவியரிருவரும் உண்மையிலேயே கொண்ட மனைவி யரினும் பன்மடங்கு தம் இறந்த காதலனுக்காக விக்கி விக்கி அழுதனர். பணிப் பெண்கள் கண்ணீர் வடித்துக் கதறினர். ஆனால் உடலை என்ன செய்வது என்பது பற்றிய கவலை கண்ணீருக்கு ஒரு முடிவு கட்டியது. பலர் கருத்துரைகள் பகர்ந்தாலும் சிங்சேனின் திட்டமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்புறத் தோட்டத்தில் ஆழ்ந்து நீண்ட குழியொன்று தோண்டப் பட்டது. அதன் அடித்தளத்தில் சுண்ணாம்புத் தூளை நன்கு அறையவிட்டு, அதன் பின் உடலைக் கழுவி, நெய்யும் மணப்பொருளும் மலரும் இட்டு, ஒப்பனை செய்து இறக்கி, மேலும் சுண்ணாம்பு தூளிட்டு மூடினர். இறுதியில் மண்ணிட்டு நிலம் சமதளமாக்கப்பட்டது. பெண்ணாடையுடனே, கன்னித் துறவிக் கோலத்திலேயே கல்லறை எதுவுமின்றி தாச்சிங் உடல் மண்ணுள் கிடந்தது. தாச்சிங் போனநாள் முதல் திருமதி ஹோ தாச்சிங் கணவன் இன்னு வருவான், நாளை வருவான் என்று நாட்கணக்கில் காத்திருந்தாள். மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மறைந்தும் செய்தி எதுவும் தெரியவில்லை. தன் ஆட்களை எங்கும் சென்று தேடவிடுத்தும் பயனில்லை. மேலும் தாச்சிங்கின் நில உடைமைகள் பார்ப்பாரில்லாமல் பாழடைந்து வந்தன. இறுதியில் திருமதி ஹோ தாச்சிங் தனது துயர வாழ்வை விடுத்துத் தானே சென்று மேற்பார்வையிட்டாள். அப்போது வேலையாட்களுள் ஒருவன் தன் கணவின் முத்துமாலையை அணிந்திருப்பது கண்டு திகைத்தாள். அவனிடம் அதை வாங்கி, “இதை நான் உடைத்துப் பார்க்க விரும்புகிறேன். உனக்குற்ற விலை தருகிறேன்” என்றான். அவன் ஒப்பு கொள்ளவே அதை உடைத்துப் பார்ததாள். அதனுள்ளிருந்து முத்துக்கள் தெறித்தன. பின் அவள் தன் அரை மேகலைஞானையும் உடைத்தாள். அதிலும் அதே முத்துக்கள் தெறித்தன. அது கண்டு வியந்த வேலையாளிடம் அவள் “இது என் கணவன் அணிந்திருந்த முத்துமாலை. இரண்டிலும் ஒரே வகை முத்து இட்டுச் செய்யப்பட்டிருந்தது. இது உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டாள். அவன் தான் ஃவெய்குங் கன்னி மாடத்தில் வேலை செய்யச் சென்று மேல் முகட்டைச் சீர்திருத்தும் போது அங்கே அகப்பட்டதென்று கூறினான். அகப்பட்ட இந்தத் துப்பை விளக்க அவள் விரும்பினாள். ஆகவே ‘குவே’ என்ற அந்த வேலையாளுக்குப் பொருள் கொடுத்து ஊக்கி “அந்த இடத்தில் என் கணவர் இருக்கிறாரா, அல்லது அவரைப் பற்றி ஏதாவது செய்தி கிடைக்குமா என்று அறிந்து வா, இன்னும் உனக்குப் பணம் தருகிறேன்” என்றாள். அடுத்த நாள் குவே தனக்கு வரவேண்டிய கூலியைக் கேட்கப் போகிறவன் போலக் கன்னிமாடம் சென்றான். தலைவியைக் காணவில்லை. ஆன் நடமாட்டமும் இல்லை. ஆகவே ஒவ்வொரு கட்டாகப் பார்த்துக் கொண்டே வந்தான். ஓரிடத்தில் பெண்கள் நகையொலி கேட்டு எட்டி நின்று கேட்டான். இரு பெண்களுள் ஒருத்தி ஆடவனாக நடித்துக் காதல் விளையாட்டு விளையாடி, மற்றொரு பெண்ணுக்கு முத்தமிட்டாள். அவள் அதை வெறுத்து, ஒதுங்குவது போலப் பாசாங்கு செய்தாள். அப்போது முத்தமிட்ட பெண் “உனக்குத்தான் ஆடவர் முத்தம்பெற்ற அனுபவம் உண்டே, நான் முத்தமிடும் போது மட்டும் ஏன் நாண வேண்டும்?” என்றாள். சுவை பயக்கும் இக்காட்சியினிடையே குவேக்கு ஒரு தும்மல் வந்து தொலைத்தது. உடன் பெண்கள் கலவரமடைந்து ஓடிவந்து அவனைக் கண்டு “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று எரிந்து விழுந்தனர். அவன் கூலி கேட்க வந்ததாகச் சாக்குப் போக்குச் சொல்லி அகன்றான். ஏதோ ஒரு ஆண் கன்னிமாடத்தில் காதல் விளையாட்டு விளையாடியிருக்கிறான் என்றமட்டில் குவேக்குத் துப்புக் கிடைத்தது. முழு விபரமும் அறிய அவன் காத்திருந்தான். மறுநாள் விளக்கேற்றும் பணிப்பெண் சிங்சேன் மீது விளக்கைப் போட்டுவிட்டாள். சிங்சேன் அவளை நையப் புடைத்து விட்டாள். குவே அச்சமயம் அவளை விலக்க முயன்றும் முடியாமல், பணிப்பெண் தலைமயிர் கையில் வரும் அளவு அவள் இழுத்து நொறுக்கப்பட்டாள். சிங்சேன் போனபிறகு அப்பணிப்பெண் அவளைத் தன் வாயில் வந்தவாறெல்லாம் திட்டினாள். முன் தாச்சிங்குடன் அவளைச் சிங்சேன் நெருங்க விடாததால் அவளுக்கு ஏற்கெனவே சிங்சேன்மீது அழுக்காறு ஏற்பட்டிருந்தது. இப்போது கோபமும் நோவும் சேர்ந்து கொள்ளவே அவள் வாயில் வந்ததெல்லாம் கொட்டினாள். “ஒரு விளக்கைக் கைவிட்ட எனக்கு இந்தத் தண்டனை யானால், கொலைசெய்த இந்தக் கொடுமைக்காரிக்கு என்ன தண்டனை கொடுப் பது?” என்ற சொற்கள் குவேயைத் தட்டி எழுப்பின. அவன் அப் பணிப் பெண்ணிடம் நயமாகப் பேசிக் கிண்டி கிளறினான். அவள் திரு. ஹோ தாச்சிங்கின் கன்னி மாடத் திருவிளையாடல்களையும், அதன் மட்டற்ற போக்கால் அவன் இறந்ததையும், தோட்டத்தில் புதையுண்டதையும் கூறிவிட்டாள்! திருமதி ஹோவுக்கு இவ்வளவும் தெரிந்ததுதான் தாமதம் அவள் ‘கண்ணகி’ உருவம் கொண்டாள். ஊர்திரட்டிக் கன்னிமாடத்தின் மீது படையெடுத்தாள். குவே குடும்பத்தார் வழிபாட்டுக்காக வருவதாக எண்ணி மடத்துத் துறவியர் அமைந்திருந்தனர். ஆனால் அவர்களோ தோட்டத் திற்குச் சென்று மண்வெட்டிகளால் நிலமகழ்ந்து பிணப்பெட்டியைக் கண்டனர். சவக்குழியைக் கண்டதும் அதை மூடிவைத்துவிட்டு அனைவரும் வழக்குமன்றத்திற்கு விரைந்து சென்று முறையிடப் புறப்பட்டனர். மன்றத் தலைவர் வர வெகு நேரமாகியும் அவர்கள் கலங்காது அவர் வரவிற்காகக் காத்திருந்தனர். ஊர் முழுதும் இதற்குள் திரண்டுவிட்டதனால் கன்னி மாடம் முற்றுகையிடப்பட்டது. குங்சாவும் சிங்சேனும் மற்ற துறவிப் பெண்களும் செய்வது இன்னதென்றறியாது மயங்கித் திகைத்தனர். தப்பியோட முயன்றனர். எல்லா வாயில்களும் மக்களால் முற்றுகையிடப்பட்டிருப்பதை அறிந்ததும் பின்னும் கலவரமடைந்தனர். அச்சமயம் சிங்சேன் மீண்டும் தலைமை ஏற்க, அவர்கள் தோட்டத்திலுள்ள மறைக்கதவு வழியாக வெளியேறிக் காட்டுப் பாதை வழி சென்று அருகிலிருந்த ‘பேரின்பக் கன்னி மாட’த்தில் அடைக்கலம் புகுந்தனர். அதன் தலைவர் சிங்சேனின் தோழி. அவளும் மறைகாதலில் ஈடுபட்டுத் திருவிளையாடல்கள் நடத்தி வந்தவள். ஆனால் ஃவெய்குங் திருவிளையாடல்கள் அம்பலமாய்விட்டதறிந்த அவள் அடைக்கலம் தரத் தயங்கினாள். ஆயினும் சிங்சேன் ஒன்றிரண்டு நாளைக்குமட்டும் இடங் கொடுக்கும்படிக் கோரி, கைநிறையப் பொன்னும் கொடுத்த பின் அவள் இணங்கினாள். திருமதி ஹோ பிணப்பெட்டியைத் திறந்து பிணத்தைக் கண்டதும் வழக்கு மன்றத்திற்குச் சென்றுவிட்டாள். ஆயினும் குவே அவ்வுடலைப் பார்த்ததும் திடுக்கிட்டான். தாச்சிங் பெண் உடையிலேயே புதைக்கப் பட்டிருந்ததாலும், பெண் உருவிலும் நோய் தோற்றத்தை மாற்றியிருந்ததாலும் அவன் அதைத் தாச்சிங்கின் உடலாகக் கருத முடியவில்லை. இது ஒரு கன்னித் துறவியுடல்தான் என்று எண்ணி அவன் இதைத் திருமதி ஹோவிடம் தெரிவிக்கக் கிளம்பினான். இதற்கிடையில் பிணத்தில் அணிமணிகள் ஏதேனும் இருந்தால் எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் கயவனொருவன் ஆடைகளைக் கலைத்துப் பார்த்திருக்கிறான். அவன் மூலம் கிடைத்த செய்தியில் பிணம் ஒரு ஆண் துறவியினுடையதே என்ற எண்ணம் வலியுறுத்தப்பட்டது. எனவே ‘குவே’ கிடைத்துள்ள செய்திகளையெல்லாம் சேகரித்துக் கொண்டு திருமதி ஹோவை அடைந்தான். இது மீண்டும் ஒரு சிக்கலுக்கு இடந்தந்தது. வேறொரு மடத்திலுள்ள சூஃவி என்ற இளந்துறவி ஒருவனைக் காணாததால், அவன் தந்தை மடத் தலைவன் மீது வழக்குத் தொடுத்திருந்தான். விசாரணைக்காக அவனைக் காவலுடன் மன்றம் கொணர்ந்திருந்தனர். உண்மையிலேயே அவன் யாதொரு குற்றமும் செய்யவில்லை. அவன் குற்றத்தை ஒப்புக் கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல், தப்பவும் வழியில்லாமல் கிடந்து அவதியுற்றான். இந்நிலையில் புதையுண்ட பிணம் ஆண் துறவி என்றதும், அவன், “ஆ- அது என் மாணவனாகத் தானிருக்க வேண்டும். படுபாவிப் பெண்கள் கொலை செய்திருக்கிறார்கள். இந்தப் பாவி எனை இட்டலைக் கிறான்” என்று கூறிக்கொண்டு எழுந்தான். காணாமற் போன துறவியின் தந்தையும் அது தன் மகனாகத்தானிருக்க வேண்டும் என்றெண்ணிப் புறப்பட்டான். அனைவரும் சென்று பார்த்து, அது ஆண் துறவியே என்ற முடிவுடன் மீண்டும் மன்றம் வந்தனர். திருமதி ஹோவும் அவள் ஆட்களும் இறந்தவன் ஹோ தாச்சிங் அல்ல என்ற முடிவை ஏற்றாலும், மன்றம் முடிவுகாணும்வரை இருந்து போவதெனத் தீர்மானித்தனர். முத்துமாலை அந்த மடத்திலேயே கிடந்ததால் அதுபற்றிய வேறு ஏதாவது துப்பு விளங்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். விசாரணையில் சூஃவியின் தலைவனும், தந்தையும் பிணம் சூஃவி யினுடையதே என்று உறுதி கூறினர். அதன் மீது மடத் துறவியரைச் சிறைப்படுத்தக் காவலரை அனுப்பினர். மடத்தில் வேறு எவரையும் காணாமல், அங்கிருந்த ஊர்க் காவலரை மட்டும் பிடித்து வந்தனர். அவர் தமக்கு எதுவும் தெரியவழியில்லை என்றும், தாம் ஊர்க் காவலர் என்றும் கூறினார். மன்றத் தலைவர் “உன் ஊரில் இத்தனை தீங்கு நடக்கப் பார்த்துக்கொண்டிருந்தாய். அந்தக் குற்றம் உன்னுடையதே. குற்றவாளியை விரைவில் கண்டுபிடிக்காவிட்டால் உம்மையே நான் தண்டிக்க வேண்டி நேரிடும்” என்று அறிவுறுத்தினார். ஊர்க்காவலர் விரைந்து மீண்டும் மடம் சென்றார். அதன் நாற்புறமும் காவல் வைத்தார். குங்சாவ் மடத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த கிழத் தலைவியை யாரும் கவனிக்காததால், அவளுக்கு உணவு, தண்ணீர் கொடுக்க ஆளின்றி அவள் இறந்துவிட்டாள். அவள் உடல் காவலரால் அடக்கம் செய்யப்பட்டது. பேரின்பம் கன்னிமாடத்தின் தலைவி லியோ யூவான் ஆதரவில் குங்சாவ், சிங்சேன் முதலியோர் இருந்தனர். லியோ யூவானும் மறைவில் தீ நடத்தை உடையவளாதலால், ஒரு ஆண் துறவியைப் பெண் வேடமிட்டுக் கன்னித் துறவி உருவில் தன்னுடன் வைத்துக் கொண்டிருந்தாள். தாச்சிங்கைப் போன்ற கயவனாகிய அவன் புது மடத்தலைவியரைக் கண்டதும், சமயம் பார்த்துத் தன் ஆண் உருவம் காட்டி, அவர்களையும் தன் வசப்படுத்த வேண்டுமென்று அவர்கள் மீதே குறியாயிருந்தான். ஆனால் லியோ யூவான் அவனுக்கு இடந்தராமல் மிகுதி உன்னிப்பாயிருந்தாள். மாலையில் ஃவெங்குங் மடத்தலைவியர் இருவரும் தம் மடத்தில் என்ன நடக்கிறது என்று அறிய, தவறுதலாக ஒரு படுமட்டியை அனுப்பி வைத்தனர். அவன் மடத்தைச் சுற்றி வந்து வாயிலுக்குள் தலைநீட்டியதும் காவலர் அவனைப் பிடித்துக் கொண்டனர். அவன் “ஐயோ, என்ன நடக்கிறதென்று பார்த்து வருவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன். இந்த மடத்துத் தலைவியரே என்னை அனுப்பினர்” என்று கெஞ்சினான். “அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டான் தலைவன். அந்த மட்டி எளிதாக “பேரின்ப மடத்தில் அடைக்கலம் புகுந் திருக்கிறார்கள்” என்று உண்மையை உளறி விட்டான். உடனே பேரின்ப மடமும் முற்றுகையிடப்பட்டது. காவலர் உள்ளே நுழையும் போது பெண்ணுடையில் உலவிய ஆண் துறவி மட்டும் படுக்கை யடியில் ஒளியப் போனான். எல்லோரையும் விலங்கிடும் போது லியோ யூவான் “அவள் புது மாணவி. அவளை மட்டும் விட்டு விடுங்கள்” என்றாள். ஆனால் மற்றொரு காவலன் இடைமறித்து “அவள் குற்றமற்றவளானால் ஏன் ஒளிய வேண்டும்? அவளும் வந்து தானாக வேண்டும்” என்று கூறவே அவளையும் விலங்கிட்டு, அனைவரையும் மன்றம் கொண்டு சென்றனர். ஆண் துறவி வேறுயாருமல்ல! கிழ மடத்தலைவன் தேடிக் கொண்டிருந்த மாணவத் துறவியே. அவன் லியோ யூவானின் காதலில் சிக்கி, உருமாறி அவளுடன் களித்து மகிழ்ந்து வந்தான். இப்போது வாதி, பிரதிவாதிகளிடையே தன் மடத் தலைவனையும் தங்கையையும் காண அவன் விழித்தான். லியோயூவானும் பேரிடையூற்றில் சிக்கிவிட்டதை உணர்ந்து நடுங்கினாள். ஆயினும் தாச்சிங்கின் உடலையே யாவரும் சூஃவியின் உடலென்று நினைத்ததால் தாம் தப்பலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். குங்சாவும் சிங்சேனும் தீ நடத்தை உடையவர்களானாலும் இடுக்கிப் பொறியிலிட்டு மாட்டப்பட்ட போது அது பொறாமல் தம் முழுக் குற்றத்தையும் ஒப்புக் கொண்டுவிட்டார்கள். இறந்தது தாச்சிங் என்று தெரியவே அவன் மனைவி திருமதி ஹோ கோவென்று அழுதாள். மன்றத் தலைவர் அவளுக்கக் கணவன் உடலை எடுத்து அடக்கஞ் செய்ய உரிமையளித்தார். ஃவெய்குங் மடத்தலைவியருக்குத் தூக்குத் தண்டனையும், பணிப் பெண்களுக்கு வாழ்நாள் தண்டனையும் அளித்தார். சூஃவி செய்தி வெளிப்படாததால் கிழ மடத் தலைவன் வழக்கைத் தள்ளிவிட்டார். லியோ யூவானும், அவள் காதலனான சூஃவியும் தாம் தப்பியது கண்டு மகிழ்வுற்றனர். ஆனால் சூஃவியின் தந்தை கிழ மடத்தலைவன் மீதுள்ள சீற்றத்தால் அவனை வெளியில் சென்று நையப்புடைத்தான் மடத்தலைவனின் மாணவர்கள் அது கண்டு பொறுக்காமல் அவனைத் திருப்பித் தாக்கினர். பெண்ணுருவில் நின்ற சூஃவி தன் பெண் உருமறந்து “என் தந்தையை அடியாதேயுங்கள்” என்று தடுக்க முன் வந்தான். தந்தை அன்பு காரணமாகவும் மடத்தலைவன் சீற்றம் காரணமாகவும் அவனை அடையாளமறிந்து பிடித்துக் கொண்டனர். அத்துடன் காவலர் பேரின்பக் கன்னிமாடத் தலைவி லியோ யூவானையும் விலங்கிட்டனர். மன்றத் தலைவர் வழக்கின் போக்குக் கண்டு வியந்தார். லியோ யூவானையும் அவள் மடத்துறவிகளையும் அவர் தண்டித்தார். மற்றும் மக்களுக்கு இவை ஓர் எச்சரிக்கையா யிருக்கும்படி அவர்கள் முகத்தில் கரிபூசி, நகர் வலம் வரக் கட்டளையிட்டார். இரண்டு கன்னிமாடங்களும் நிலமட்டமாகத் தகர்க்கப் பட்டன. தெருளுறும் தேமலர் வண்டது போலச் சுருளுறும் குளவியும் தூயதேன் நாடி வெருளுறும் நச்சு மலரது சூழ்ந்தே இருளுற மடிந்தது போன்றனன் தாச்சிங் அருள்நிறை புத்தன் அவன்பெயர் தாங்கி மருள்தரு வாழ்வு வாழ்மட நங்கையர் திரன்பழி யோடுவெந் துயரமடைந் தனரே. 3. நந்தா விளக்கு வேங்- மெங்- லுங் ஃவேனிஸியேன் என்ற ஊரில் சேன்சிங், சூ. ஷியூவான் என்ற இரண்டு இன்னுயிர்த் தோழர்கள் இருந்தனர். இருவருக்கும் வயது நாற்பதுக்கு மேலிருக்கும். இருவருக்கும் மட்டான செல்வமிருந்தது. ஆகவே அவர்கள் உண்ணும் நேரம் தவிர மற்ற சமயங்களில் சதுரங்கமாடிக் களிப்பர். அவ்வப்போது ஒருவரையொருவர் உணவுக்குத் தம் வீட்டுக்கு அழைப்பதும் உண்டு. வாங்ஸன்ஹோ என்ற அறுபது வயது சென்ற கிழவர் ஒருவர் அவர்கள் விளையாட்டில் கலக்காமலே அடிக்கடி அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார். சதுரங்கத்தில் அவர் தேர்ந்தவராயினும் அதிலுள்ள உணர்ச்சியார்வம் தம் வயதுக்கு ஒத்துக் கொள்ளாது என்று நினைத்தே அதில் கலவாமல் பார்த்து மகிழ்ந்து வந்தார். விளையாட்டிடையே அவர் எதுவும் பேசாது ஆட்டம் முடிந்ததும் அதுபற்றிப் பிறருக்கு விளக்கம் தந்து உதவுவார். அவ்விளக்கத்தை ஆட்டத் தேர்ச்சியாளர் அனைவரும் போற்றி மகிழ்வர். ஒரு நாள் அந்தரங்கமான, கவர்ச்சிமிக்க சிறுவனொருவன், கிழவருக்கும் ஷியூவானுக்கும் நாகரிக முறைப்படி வணக்கம் செய்தான். அவன் சேன்சிங்கின் புதல்வன். அவன் தந்தையையும் வணங்கி, “அப்பா, இன்று பள்ளி மூடிவிட்டனர். நான் வீட்டாசிரியரிடம் சென்று பாடம் கற்கப்போகிறேன், விடை தாருங்கள்” என்றான். தந்தை அப்படியே அவனை அணைத்து ஆதரவுடன் அனுப்பிவிட்டு நண்பரிடம் அவன் நற்குணம் பற்றிப் புகழ்ந்தார். கிழவரே அவனுக்கு நற்பெயரிட்ட நற்றந்தையாவார். அவனுக்கு அப்போது ஒன்பது வயது ஆகிவிட்டது கண்டு அவர் வியந்தார். சூஷியூவான் தன் மகளுக்கும் அதே வயதுதான் என்றான். கிழவர் உடனே இரு குடும்பமும் பிள்ளைகள் மணத்தால் ஒன்றுபட்டால், இன்னும் எவ்வளவு நன்றாயிருக்கும் என்றார். இரு தந்தையரும் மகிழ்வுடன் ஏற்கவே மணஉறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆறு ஆண்டுகளுக்குள் சிறுவன் சென்தோஷுவும், சிறுமி தோஃபுவும் இளைஞனாகவும் இளநங்கையாகவும் மணவினைக் குரிய பருவமெய்தினர். ஆனால் இச்சமயம் தோஷுவின் உடலில் மெல்ல மெல்லத் தொழுநோயின் சின்னங்கள் தோன்றலாயின. நோவு மிகுதியால் அவன் துடித்தான். சீழும் நெடியும் மிகுந்து அவனை யாரும் பார்க்கவோ அணுகவோ முடியாத நிலை ஆயிற்று. தாயும், தந்தையும் தம் ஒரே மைந்தன் நிலை கண்டு உருகித் துடித்தனர். மருத்துவர் பலரைத் தேடிப் பெரும் பொருள் இறைத்துக் குணப்படுத்தத் தம்மாலியன்ற மட்டும் முயன்றனர். ஆனால் எதுவும் பயன்படாது போயிற்று. மூன்றாண்டுகள் சென்றும் நிலையில் மாற்றமில்லை. எப்போதுமே கொடுநோக்குடைய திருமதி சூ ஷியூவான் தன் கணவனை இப்போது பாடாய்ப்படுத்தினாள். இந்த ஏற்பாட்டுக்குக் காரணமான கிழவரை அவள் பல கடும் பெயரிட்டுத் தூற்றினாள். “சூதாட்டமாடி ஆடி, என் பிள்ளையையும் வைத்துச் சூதாடிக் கெடுத்துவிட்டாயே” என்று தன் கணவனை இடித் துரைத்தாள்.” திருமதி சூவின் தூற்றலும், சூ ஷியூவான் அடைந்த துன்பமும் சேன்சிங்குக்கு எட்டிற்று. மைந்தன் நிலையை விட இது அவனை மிகவும் சுட்டது. பெருந்தன்மை மிக்க அவன் உள்ளம் தன் தீங்கு தன்னுடன் நிற்கட்டும், நண்பன் வாழ்வையும் அதற்கு உட்படுத்துவானேன் என்று எண்ணிற்று. ஆகவே அவன் மணஉறுதிக்கு அடையளாமாகத் தான் பெற்ற பெண்ணின் பிறப்புப் பட்டிகையைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி கிழவன் ‘வாங்’கிடம் கூறினான். கிழவன், ‘இணைப்பதே என் தொழில், பிரிப்பதல்ல” என்று மறுத்துரைத்தாலும் தேவ்சிங்கின் நயமிக்க வற்புறுத்தலால் ஒப்புக் கொண்டான். கிழவன் வாங்கை நண்பன் சூ அன்பாக வரவேற்றாலும் அவன் மனைவி அவனை அசட்டையாக நடத்தத் தயங்கவில்லை. ஆனால் வாங் வந்த காரியத்தைக் கூறிய போது மனைவி மகிழ்ந்தாள். கணவனும் வேண்டா வெறுப்போடு அவளுக்காக இசைந்தான். ஆனால் பெண் ணுரிமைப் பொhருளையும், தலையணியையும் திருப்பி வாங்கிச் செல்லும்படி திருமதி சூ செப்பவும் கிழவன் மறுத்து “பிறப்புப் பட்டிகையை இப்போதே ஏற்றுக் கொள்ளுங்கள். அதைப் பிறகு தாருங்கள். நான் திரும்ப வருகிறேன்” என்று விடை பெற்றுக் கொண்டான். மணஉறுதியை கத்தரிக்கும் ஆர்வத் தில் திருமதி சூ தன் நகைகளை அடகு வைத்துப் பெண்ணுரிமைப் பொருளைக் கொடுக்க ஏற்பாடு செய்ததுடன் இம்மகிழ்ச்சிச் செய்தியைக் கூறிப் பெண்ணின் தலையணியையும் வாங்க முயற்சி செய்தாள். ஆனால் தாய் எவ்வளவு புகன்றும் தோஃபு அதை மகிழ்ச்சிச் செய்தியாக ஏற்கவோ, அன்றித் தலையணியைத் திருப்பித் தந்து, மண உறுதியிலிருந்து விடுபடவோ மறுத்தாள். மணஉறுதி ஆன அன்றே அகத் திருமணம் ஆய்விட்டது என்ற கற்புறுதிக் கோட்பாட்டை அவள் வற்புறுத்தினான். தன் காதலன் வாழ்வு தாழ்வுகளில் தானும் தங்கு தடை யின்றிப் பங்கு கொள்ளத் தயங்கப் போவதில்லை என்றும் கூறினாள். தாய் தந்தையர் மகள் உறுதி கண்டு மனம் மாறினர். திரு சூ. வாங் வரவுக்குக் காத்திராமல் தானே சென்று பிறப்புப் பட்டிகையைத் திருப்பிக் கொடுத்துத் தன் மகள் உறுதியைக் கூறினாள். மணஉறுதி அப்படியே இருக்கட்டும் என்றும் சொல்லி அனுப்பினான். மருமகளாகக் குறிக்கப்பட்ட பெண்ணின் உயர்பண்பு கேட்டுச் சேன்சிங் மகிழ்ச்சி அடைந்தானென் றாலும், அத்தகைய உயர்பண்புடைய பெண்ணை மீளா நோய்வாய்ப்பட்ட தன் மகனுடன் இணைக்க அவன் துணியவில்லை. ஆனால் மென்னெஞ் சுடைய கிழவன் வாங் திரும்பவும் தூது எடுத்தேக மறுத்துவிட்டான். சேன்சிங் மகளின் நலங் கருதித் தானே பல மருத்துவரை அனுப்பித் தோஷுவைக் குணப்படுத்தப் பார்த்தான். எதனாலும் எவராலும் குணம் தோன்றவில்லை. மருத்துவர், அவன் குணமடையவானென்று தாம் நம்பவில்லை என்ற கைவிரித்து விட்டனர். தனியே தோஷு மீளா நோய்வாய்ப்பட்ட தன்னை விடத் தன்னுடன் மனஉறுதியால் கட்டப்பட்ட இளம் பெண்ணின் நிலையை நினைத்தே பெரிதும் மனமுடைந்தான். அவன் தந்தையை அழைத்து “நான் பிழைக்கப் போவதில்லை. பிழைத்தாலும் என் வாழ்வு நரக வாழ்வாகத்தானிருக்கும் ஆகவே அந்த அபலைப் பெண்ணை என்னுடன் சேர்த்து நரகில் தள்ள வேண்டாம். அவளுக்குக் கட்டாயம் விடுதலை அளித்து, வேறு மணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று வேண்டினான். சேன்சிங் அவனை அன்புடன் நோக்கி, “உன் பெருந்தன்மையும் ஈர நெஞ்சும் கண்டு மகிழ்கிறேன். ஆனால் உன்னைக் கேளாமல் நானே இந் நடவடிக்கையை எடுத்துப் பார்த்து விட்டேன். அதற்கு மறுப்பும் வந்துவிட்டது. மறுப்பு என் நண்பரிடமிருந்தல்ல, அந்த ஒப்பற்ற பெண் கொடியினிடமிருந்து வந்துவிட்டது. பெண் உறுதியாய் இருக்கும் போது நான் வேறு என்ன செய்வது, ஆகவே நீ இதிலெல்லாம் கருத்துச் செலுத்தி உன் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமலிரு” என்று ஆறுதலுரை வழங்கினார். “அப்பா, பெண்ணின் பெருந்தன்மை என்னை மிகவும் புண்படுத்து கிறது. அந்தப் பெருந்தன்மையைப் பயன்படுத்தி அதற்குத் தண்டனையா நல்குவது? மண உறுதியிலிருந்து மாசில்லாளை விடுவிக்க நானே விரும்புவதாக அறிந்தால், அம்மலர்க்கொடியாள் மனச்சான்று மாறி என் உறுதியை ஏற்பாள் என்பதுறுதி” என்று வற்புறுத்தினான் தோஷு. தந்தையும் “சரி, அப்படியானால் நீயே பெண்ணின் தந்தை உனைக் காண வரும்போது இதைத் தெரிவி” என்றார். திரு சூ வந்த போது தோஷு மனம்விட்டு யாவும் வாய்மலர்ந்து கூறி ஓரளவில் அவனை இணங்குவித்து அவன் கையில் ஒரு தாள்சுருளையும் தந்தான். அதில் கீழ்வரும் பாடல் வரையப்பட்டிருந்தது. மீளாத வெந்நோய்க் கிரையாகி என்னுடல் மாளாது மாளும் வகைகண்டும், மங்கையே! வாளாக நின்றுன் வாழ்வறுக்க நானிணங்கேன் கேளாக நல்லகிளைபடர்ந் தோங்குதியே! தோஷுவின் சொற்களால் சிறிது மனம் மாறி, அவன் திட்டத்துக்கு இணங்க நினைத்த திரு. சூ இப்பாடலைப் படித்து மனம் கலங்கினான். ஆனால் நண்பன் சிங்சேன் அவனிடம் மைந்தன் கருத்துப்படியே நடக்கும் படி வற்புறுத்தவே, அவன் மீட்டும் மகள் நலத்தை எண்ணி அவள் மனத்தை மாற்ற எண்ணினான். மணமவாவிய மைந்தனும், அவள் தந்தையும் மனமொப்பி வற்புறுத்தித் தம் உறுதியையே வலியுறுத்தும்போது, மங்கையும் மறுக்கமாட்டாள் என்ற நம்பிக்கையுடன் அவன் சென்றான். ஆனால் தோஃபு இப் புதுச் செய்தி கேட்டதும் எதுவும் பேசவில்லை. தன் அறைக்குள் சென்றுவிட்டாள். அவள் உள்ளத்தில் அலைகள் கடலாக எழுந்து பொங்கின. காதலன் பாட்டு அவள் உள்ளத்தடம் சென்று அதிர்வித்தது. அவன் பாட்டின் எதுகை மோனையைத் தொடர்ந்து, அவள் கீழ்வரும் பாட்டினை எபதினாள். கேளான என்றன் மணாளனைக் கெட்டநோய் வாளா யறுப்பின் அறுக்கும்இம் மங்கையொடு கேளாம் ஒருபரிக் கொரு சேணமல்லது நாளால் இரண்டு நவிலார்என் நல்லுயிரே! தோஃபுவின் அழகும் குணமும் பல குடும்பங்களிடையே பரவியிருந்தன. அவன் தோஷுவுக்கு உரிமையாகி விட்டா னென்று வெம்பிக்கிடந்த தாய் தந்தையர் தோஷுவின் முடிவு கேட்டு, நான் முந்தி, நீ முந்தி என அவன் தந்தையிடம் பெண்கேட்டுக் குழுமிவிட்டனர். அவரவர் தத்தம் பிள்ளைத் தகுதியையும், தாம் தர இருக்கும் பெண்ணுரிமைச் சீர்வகை களையும் அகல விரித்துரைத்தனர். பெண் சற்றுத் தயங்கினாலும் தங்கள் முடிவுக்கே வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் திரு. சூவும் திருமதி சூவும் அவர்களுடன் பேரம் பேசத் தொடங்கியிருந்தனர். அறைக்குள்ளிருந்த தோஃபுவின் இரு செவிகளிலும் இவை விழுந்தன. தாய் தந்தையரை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி மறுத்துரைக்க அவள் விரும்பவில்லை. மணங்கொண்ட மணாளனையும் கடமையையும் கைவிடவும் அவள் துணிய வில்லை. இந்நிலையில் தனக்கிருந்த ஒரே வழி தற்கொலைiயே என்று அவள் தீர்மானித்தாள். இரவு மூன்றாவது யாமம் இருக்கும். எத்தகைய அரவமும் இல்லை. எல்லோரும் உறங்கிவிட்டார்கள் என்று நினைத்துத் தோஃபு தன் அரைஞாணை உத்தரத்திலிட்டுக் கட்டி, அதில் தன்னைச் சுருக்கிட்டுக் கொண்டாள். ஆனால் தோஃபு நினைத்த மாதிரி எல்லோரும் உறங்கி விட்டார் களானாலும், அவள் தந்தை மட்டும் ஏதோ கனாக்கண்டு விழிததிருந்தார். மகள் அறையிலிருந்து அரவம் வருவது கேட்டு மனைவியை எழுப்பினார். அவள் “தூங்குகிற பிள்ளை குறட்டை விடுகிறது. நீங்கள் வேண்டுமென்றால் போய்ப் பாருங்கள்” என்று கூறிவிட்டாள். தந்தை சென்றபோது கதவு தாழிடப்பட்டிருந்தது. தட்டியும் ஓசையில்லை. உடனே அவர் காலாலுதைத்துக் கதவைத் தள்ளி உட்சென்றார். மகள் நிலை கண்டு அவர் கூக்குரலிட்டார். தாயும் உடனே எழுந்து ஓடிவந்தாள். சுருக்கு உடனே அவிழ்க்கப் பட்டது. பெருமுயற்சியின் பின் தோஃபு உயிர்வாதையிலிருந்து மீண்டாள். ஆனால் மீண்டதும் அவள் பெற்றோரிடம் “என்னை ஏன் மீண்டும் பிழைக்க வைத்தீர்கள்? நான் இனி வாழப் போவதில்லை” என்று தேம்பினாள். அவர்கள் “அம்மா, உன் மனப்படியே இனி நடப்போம். அதற்காக நீ சாக வேண்டாம்” என்ற உறுதி கூறியபின்பே அவள் அமைந்திருந்தாள். மகள் உடல் தேற அவளுக்கு அமைதி மட்டும் போதாது. அவள் மனத்தில் ஐயம் முற்றும் அகன்றாக வேண்டும். அவள் மணஉறுதிக்கு இனித் தடை ஏற்படாத வண்ணம் உறுதிப் படுத்தும் செயல் மணவினையே தவிர வேறில்லை என்று எண்ணித் திரு.சூ தம் மனைவியுடன் இதுபற்றிக் கலந்து முடிவு செய்தார். அது கேட்டது முதல் தோஃபு முகம் முற்றிலும் களை பெற்றது. திரு. சூ. வாங்கிடம் சென்று மணவினைத் தூது செல்லும்படிக் கோரினார். ‘இணைக்கும் வேலைக்கு நான் என்றும் தயங்கேன்’ என்றனர். அகமுக மகிழ்வுடன் சென்றார். அவர் முடிவுக்குத் தோஷுவின் பெற்றோரும் இணங்கியதுடன் அவனையும் இணங்கச் செய்தனர். முதலில் தோஷுவின் பெற்றோரும் இணங்கியதுடன் அவனையும் இணங்கச் செய்தனர். முதலில் தோஷு சிறிது தயங்கினாலும், தோஃபு தன் பாட்டுக்கு எதிர்ப்பாட்டாக எழுதிய வரிகளைக் கண்ணுற்றதும் அவள் வேறு வகையில் அமையவே மாட்டாள் என்றறிந்து இணங்கினான். ஊரார் புகழ, பொறுப்பற்ற பலர் தொழு நோயாளியை காதலித்த பெண்ணின் புதுப் பித்துப்பற்றிக் கேலிச் சிந்துகளைப் பாட, இரு குடும்பத் தினரும் ஒத்து மணவினை நடந்தேறியது. *ஆண்டுகள் இரண்டு கழிந்தன. தோஃபு தன் கணவனுக்குப் பணிவிடையிலும் ஆதரவிலும் ஒப்பற்ற செவிலியாய் விளங்கினாள். ஆனால் மனைவியான பின்னும் தோஷு அவ்விளம் பெண்ணின் உடல் தீண்டத் துணியவில்லை. தான் இறப்பது உறுதி; அவள் தொழுப்பிணியாளனின் மனைவி என்று வெறுத்தொதுக்கப்படாது மறுமணம் செய்யும் அளவில் கன்னியாகவே இருக்கட்டும் என்று மனங் கனிந்தான். இறக்கப்போகும் தறுவாயில் இதனைத் தாய் தந்தையர் அறியக் கூறிச்செல்லவே அவன் உறுதியுடனிருந்தான். தோஃபுவும் கணவன் குறிப்பின்வழி நின்றதன்றி அவன் மனங்கலைக்க ஒருப்படவில்லை. ஒவ்வொரு நாளும் நாம் நாளை இறந்து விடுவோம். அடுத்த வாரம் இறந்துவிடுவோம் என்று தோஷு ஆவலுடன் சாவை எதிர்பார்த்து வந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த ‘சாவென்னும் சோலைவனம்’ அணுகவில்லை. ‘வாழ்வென்னும் பாலைவனம்’ நீண்டு நீண்டு சென்றது. தன்னுடன் பிணைக்கப்பட்டிருக்கும் காரிகையின் நல்வாழ்வுக்கான விடுதலை நாளை இன்னும் நீட்டிப்போட அவன் விரும்பவில்லை. ஆகவே மூன்றாண்டு சென்ற பின் அவன் ‘நான் என்று சாவேன்’ என்று ஒரு சோதிடனிடம் வினவினான். சோதிடன் கணித்துக் கணித்துப் பார்த்து, இறுதியில் பதின்மூன்று வயது முதல் இருபத்து மூன்று வயதுவரை சாதகனுக்குப் பெருநோய் இருக்குமென்றும், அதன்பின் முப்பத்துமூன்று வரை இன்னும் பல வகைப்பட்ட துன்பம் தொடருமென்றும் அதன் முடிவில் முப்பத்து மூன்றாம் ஆண்டில் அவன் இறப்பான் என்றும் கூறினான். முப்பத்தி மூன்றில் சாவதுபற்றித் தோஷூவுக்குக் கவலையில்லை. அடுத்த பத்து ஆண்டுகள் இன்னும் துயரடைந்து மனைவியாக வாழத் துணிந்த பெண்ணின் நல்வாழ்வுக்கு இடையூறாக இருக்க வேண்டுமே என்று வருந்தினான். எப்படியும் சோதிடத்தையும் தன் உறுதியால் எதிர்த்து மாளத் துணிந்து விட்டான். மனைவியிடம் அவன் “நங்கையே, என்னை மணக்குமுன் இரு தடவை உனக்கு விடுதலை பெற வாய்ப்புத் தந்தேன். ஏனோ மறுத்தாய்? உன் உள்ளம் கருணையுள்ளம். பெருந்தன்மையுள்ளம். பேருள்ளம். ஆனால் நான் கல் நெஞ்சனாயில்லையே! மூன்றாண்டுகளாக நீ என் மனைவியாக வாழ்ந்தும் நான் உன்னைத் தீண்டவில்லை. நீ இன்னுங் கன்னியே என்பதை உன்னிப்பார். என் தாய் தந்தையரும் இதையறிவர். ஆகவே நீ இனிச் செய்யும் மணம் மறுமணமன்று; புதுமணமாக, திருமணமாகவே இருக்கும்” என்றான். அவள் கண்ணீர் உகுத்தாள். “மணம் உடலுக்கல்ல, உயிருக்கு அன்பரே!” “நீ எனக்காக மிகப் பெருந் தியாகமியற்றியுள்ளாய். மாபெருந் தியாகம் செய்து கொண்டும் வருகிறாய். ஆனால் நான் அதற்குத் தகுதியற்றவன். இவ்வளவு தியாகத்துக்கு எந்தக் கணவனும் தகுதியற்ற வனே. இதற்கு இறைவன்தான் ஏற்ற பலன் வழங்க முடியும்” “அன்பரே, கணவன் மனைவியர் இத்தகைய செய்திகளி லெல்லாம் மனம்விட்டுப் பேசக்கூடாது” என்று அவள் தாய் பிள்ளையைக் கடிவது போலக் கடிந்துரைத்து விட்டு அப்பால் சென்றுவிட்டாள். மறுநாள் காலை அவன் குடிக்கத் தேறல் கொண்டுவரும்படி மனைவியைக் கோரினான். அவளிடம் அவன் வேறு ஒன்றும் கூறவில்லையாயினும் முந்திய இரவு முதல் அவன் செயலையும் சொல்லையும் அவள் கூர்ந்து கவனித்தே வந்தாள். அவன் திட்டத்தை எதிர்பார்த்து அவளும் திட்டமிட்டிருந்தாள். ஆகவே “ஏன் இன்று புதிதாகத் தேறல் கேட்கீறீர்கள்?” என்று கேட்டாள். “மனதுக்குக் கிளர்ச்சியில்லை. ஒரு கெண்டி தேறல் வெதுப்பித் தருவாயா?” என்றான் மீண்டும் அவன். தேறல் கொண்டுவரப்பட்டது. சிறு கிண்ணிகளும் அருகில் வைக்கப் பட்டன. “எனக்குப் பெரிய கிண்ணி வேண்டும். அம்மாவிடம் சென்று வாங்கி வா” என்றான் தோஷு. சற்றுமுன் கொண்டிருந்த விழிப்புடன் அவள் உடனே சென்று விரைந்து கொண்டு வந்தாள். தானே அவனுக்குத் தேறல் ஊற்றிக் கொடுக்கவும் செய்தாள். அதற்கவன் “நானே ஊற்றிப் பருகிக்கொள்கிறேன். சிறிது பழச்சாறு இருந்தால் கலந்து கொள்ளலாம். பழமிருந்தால் கொண்டு வா” என்று அவளை மீட்டும் அனுப்பினான். அவள் வேறு வகையின்றி எழுந்து சென்றாள். அவள் வருமுன் தோஷு கிண்ணியில் பச்சைநாவிப் பொடியிட்டுக் கலந்து ஒரு கிண்ணி குடித்துவிட்டான். இரண்டாவது வாய் குடிக்குமுன் அவள் வந்து அவன் முகமாற்றத்தையும் தேறல் நிறத்தையும் கண்டுபிடித்துக் கொண்டாள். “அன்பரே, நீங்கள் இறக்கத் துணிந்ததை நான் அறிவேன். நானும் இறக்கத் திட்டமிட்டிருக்கிறேன்” என்று அவன் மறுமொழி எதிர்பாராமலே அவள் மற்றொரு கிண்ணியை வாங்கிப் பருகினாள். இருவரும் இருபுறம் சாய்ந்து கிடப்பதைத் திருமதி சேன் கண்டு அலறினாள். சேன்சிங் உடனே ஓடி மருத்துவரைக் கொண்டு வந்தான். தேறல் கிண்ணியிலிருந்து இருவர் உட்கொண்டதும் பச்சைநாவி என்று தெரியவே, இருவருக்கும் மாற்று மருந்து உட்செலுத்தப்பட்டது. இருவர் குருதியிலும் பாய்ந்து பரவியிருந்த பச்சை நாவி, மாற்று மருந்தின் ஆற்றலால் பச்சை பச்சையாக வெளியே கசிந்து ஓடிற்று. சிறிது நேரத்தில் தோஃபு தெளிந்தாள். தோஷுவின் உடலினின்றும் பச்சைக் குருதி நெடுநேரம் வழிந்தோடிற்று. ஆனால் வியக்கத்தக்க முறையில் புதிய நஞ்சுடன் பழைய தொழுநோய் நஞ்சும் கலந்து வெளிவந்ததினால் சில நாட்களுக்குள் உடல் தழும்புகள் முற்றிலும் ஆறி, அவன் சிறுமைப் பருவத்திலிருந்த வனப்பைக் காட்டிலும் மிகு வனப்புடையவனானான். சோதிடர் சோதிடம் முழுவதும் பொய்த்தது! தோஷு உடல்நலம் பெற்று அடுத்த பத்தாண்டுகளில் தோஃபுவுடன் நல்லின்ப வாழ்வு வாழ்ந்து, அழகும் இளமையும் அறிவும் குணமும் நிரம்பப்பெற்ற ஒரு ஆண் மகனையும், இரு பெண் மகவுகளையும் பெற்றான். இருவர் பெற்றோரும் மனமகிழ அவன் பெரும் பொருளீட்டி அறங்கள் பல நிறுவினான். “சோதிடர் கூற்றுப்படி பத்தாண்டுகளில் எனக்கு வரவேண்டிய தீமைகள என்ன தெரியுமா? ஒன்று என் உடல்நலம். மற்றொன்று நல்ல மனைவியாகிய நீ, பிற தீங்குகள் இந்த மூன்று குறும்புக்காரப் பிள்ளைகள்” என்று தோஷு தோஃபுவிடம் கூறிக் கிண்டல் செய்தான். “அந்தச் சோதிடரிடம் சோதிடம் கேட்ட அப்பாவியை ஏன் சேர்க்கவில்லை?” என்றாள் அவள். ஆண்டி மடம் முதற் பதிப்பு - 1952 நாடக உறுப்பினர் ஆடவர்: திரு பீச்சம் தரகன் மாக்ஹீத் படைத் தலைவன் லாக்கிட் சிறைக் காவலன் ஃவில்ச் திரு பீச்சமின் கையாள் மாட் ஓ தி மின்ட் ஆண்டிமடக் குழுவினர் பென்பட்ஜ் விரல்நொண்டி ஜாக் (நடிப்பவர்) ஹாரி பாடிங்டன் பிரௌன் வில் பாப்பூட்டி நிம்மிங் நெட் நடிக்காதவர் காவலர்கள் விடுதிப் பையன் சிறைக் காவலன் சிறைக் கடைக்காப்பாளர்கள் பெண்டிர்: திருமதி பீச்சம் செல்வி பாலி பீச்சம் செல்வி லூஸி லாக்கிட் திருமதி கோக்ஸார் செல்வி ஜென்னி டைவர் ஆண்டிமடப் பெண்டிர் செல்வி ஸூசி டாடி (நடிப்பவர்) திருமதி விக்ஸன் செல்வி டாலி டிரல் செல்வி பெட்டி டாக்ஸி செல்வி மோளி பிரௌன் நடிப்பில்லாதவர் பெண்களும் பிள்ளைகளும் ஆண்டி மடம் காட்சி 1 (பேரேட்டை மேசையில் அகல விரித்து வைத்துக்கொண்ட திரு.பீச்சம்) திரு.பீச்சம்: (பாட்டு) நாணமில் லாஇந்த உலகத்திலே - நல்ல நாகரிகம் என்பது ‘குண்டாமுட்டி’!* (நாண) ஒண்டிப் பெண்ணோடு ஒரு ஆணைக் கண்டால் விண்டி என்பார் விபசாரி என்பார்! திண்டிக் குருக்களும் வழக்காளனும்- மாறிமாறித் திசைவீணன் எத்தன் என்றேசிக் கொள்வார்! அண்டிப் பிழைக்கும் அரசியலான்- அவன் நம்மையே ஆண்டிஎன் றழைக்கின்றான். (நாண) ஆனால் வழக்காளன் தொழில் ஒரு நல்ல தகுதிவாய்ந்த தொழில் தான். ஆம். என் தொழிலும் அதுபோலவே. இரண்டு தொழிலிலும் சிறிது இரண்டகம் உண்டு. இருவரும் போக்கிரி களுக்காக உழைத்தும், அவர்களுக்கெதிராகவும் செயலாற்று கிறோம். என்றாலும் இது தொழிலின் இன்றியமையாத அடிப்படை. போக்கிரிகளை நாங்கள் காப்பாற்றி ஊக்கி வளர்க்கவேண்டியிருக்கிறது; ஏனென்றால் அவர்களை நம்பியே நாங்கள் இருதிறத்தவரும் வாழ்கிறோம். (ஃவில்ச் வருகிறான்) ஃவில்ச்: அண்ணேன்! கறுப்பி மோளி சொல்லி அனுப்பியிருக் கிறாள். அவள் விசாரணை இன்று பிற்பகல் வருகிறதாம், வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமாம். திரு.பீச்: ஆகா, மோளி தொழிலில் நல்ல சுறுசுறுப்புடையவள். அவள் சார்பில் நான் சான்றுரைகளை மழுப்பி விடுகிறேன். அவளுக்குக் கவலை வேண்டாமென்று சொல்லி அனுப்பு. ஃவில்ச்: ‘டாம்கா’குக்குத் தண்டனை வந்துவிடும் போல் இருக் கிறது. திரு.பீச்: கிடக்கிறான், சோம்பேறிப்பயல். அவன் சாகவேண்டியது தான். ஆனாலும் ஒருவேளை அவன் சாகாமல் தப்பிவிடவும்கூடும். எதற்கும் அவன் பேருக்கு நம் ஊதியமாக நாற்பது பொன் கணக்கில் போட்டுவை. ஃவில்ச்: நம் பேரேட்டின்படி இந்த ஆண்டு நமக்கு நிறைய- ஐந்து ஆண்களைவிட மிகுதியாக- பொருள் கொண்டு வந்தது. செல்வி பெட்டிதான். திரு.பீச்: நம் வாடிக்கைக்காரர் எவரேனும் அடித்து விடாவிட்டால் பாவம், அவள் இன்னும் ஒரு பன்னிரண்டு மாதமாவது இருந்துவிட்டுப் போகட்டும்! அவள் இறந்தால் நமக்கென்ன கிடைக்கிறது, அவள் நம் மனைவி அல்லவே! மேலும் பெண்களை ஒழிப்பது பண்புடையவர் செயலல்ல. ஏன்? புறாக்களை வளர்ப்பவர்கள்கூட, ஆணைத்தான் கொல்வர், பெண்ணைத் திரியவிடுவர். இல்லாவிட்டால் முட்டைகளும் குஞ்சுகளும் எப்படிப் பெருகும்? ஃவில்ச்: நன்றாய்ச் சொன்னீர்கள். அவள் பழக்கித் தொழிலில் இறங்கியவர்கள் எத்தனையோ பேர்! நான்கூட... திரு.பீச்: உண்மையில், ஃவில்ச், அறுவை மருத்துவனுக்கும் நமக்கும் பெண்களில்லாமல் முடியாது, தவிர, பெண்கள் இல்லாமல் பழி பாவங்களே இருக்க வழி ஏது? ஃவில்ச்: உண்மையே. பழிபாவ மென்ப தெல்லாம் அண்ணேன், அண்ணேன்! - இந்தப் பாவையரால் வந்த கூத்து! சொன்னேன், சொன்னேன்! (பழி) வெட்டி வெட்டி ஏய்ப்பதவள் கண்ணே, கண்ணே- அது வேண பணந் தான் பறிக்கும் எண்ணே, எண்ணே! (பழி) கொட்டிக்கொட்டி அளப்பதெல்லாம் வீணே, வீணே- நங்கை கொண்டேகிச் செல்வாள் உன்றன் நெஞ்சம், நெஞ்சம்! (பழி) அஞ்சி அஞ்சி நீ சேர்ப்பாய் தங்கம், தங்கம் - உனக்கு மிஞ்சி மிஞ்சிச் செய்திடுவாள் பங்கம், பங்கம்! (பழி) கெஞ்சிக் கெஞ்சி நின்றிடுவாய் நித்தம், நித்தம்- அந்தக் கெடுவழக்கு மன்றத்திலே கெட்டாய், கெட்டாய்! (பழி) திரு.பீச்: என்ன இங்கேயே பாடத் தொடங்கிவிட்டாயே! போ, எங்காவது, யார் செலவிலாவது குடித்துப் பாடிக் கொண்டுபோய், எல்லாரிடமும் விவரம் சொல்லிவிடு. ஃவில்ச்: (தனக்குள்) ஆம், இன்று நிறையக் கிடைக்கும்! நல்ல காலம், நல்ல செய்தியே கொண்டுபோகிறேன். (போகிறான்.) திரு.பீச்: (தனக்குள், உரத்து) வருவாய் தராத சோம்பேறிப் பசங்கள் பெருகிவிட்டார்கள்! பார்த்துக் காலாகாலத்தில் களையகற்றவேண்டும். (பேரேட்டைப் புரட்டிக்கொண்டு) விரல்நொண்டி ஜாக்- நல்ல பேர்வழி; ஒன்றரையாண்டு சேவை; அதற்குள் ஐந்து தங்கக் கைக் கடிகாரம், ஏழு வெள்ளிக் கைக்கடிகாரம், ஐந்து தங்கப் பொடி டப்பி, ஆறு வெள்ளி... சரி, சரி, நல்லது. நீடித்து வாழட்டும்! புரௌண் வில்- திருட்டுப்பயல், இன்னும் நன்றாகத் திருடப் பழகவில்லை. இன்னும் ஒரு ஆண்டுக்காலம் நன்னடக்கை கொடுத்துத் திருந்துவானா என்று பார்ப்போம். ஹாரி பாடிங்டன்- கணிசமாகத் தூக்குக்குச் செல்லக் கூட உதவாதவன்; வாரிசுப் பணம்கூட வைக்காதவன் -அவனை நாடுகடத்தச் செய்யவேண்டும்! விலாங்குப்பயல், சாம்; மாட்-ஒ-திமிண்ட்; தடியன் டாம் டிப்பிள்; பாப் பூட்டி... அடுத்த பருவத்துக்குள் ஒழித்து விடவேண்டும், இத்தனை பேரையும். சவறுகள்! (திருமதி பீச்சம் வருகிறாள்) திருமதி பீச்சம்: பாய் பூட்டியை ஒழிக்கவா போகிறீர்கள், அன்பரே! nவ்ணடாம், உங்களுக்குத் தெரியும், அவன் என் நல்தோழனென்று! இதோ பாருங்கள், அவன் எனக்குக் கொடுத்த கணையாழி. திரு.பீச்: இதிலெல்லாம் பெண்கள் தலையிடக் கூடாது, *ஃவ்ளோரி! திருமதி பீச்: உயிர்போக்குகிற காரியமாயிருந்தால் நாங்கள் தலையிடப்படாதுதான். தூக்குமரம் ஏறுபவர்களை எல்லாம் பெண்மனம் வீரரென்று நினைத்துத் தாவிவிடுகிறது. அது கிடக்கட்டும். நமக்கு நிறையப் பணம் கொண்டுவந்து கொட்டுகிறானே, அந்த மாக்ஹீத் எப்படி? நல்ல கைதானா? திரு. பீச்: நல்ல பைதான். ஆனால் என்னளவில், நல்ல கை என்று கூறமுடியாது. நம்மிடம் கொட்டுவதுபோல, அவன் எல்லாரிடமும் கொட்டினால், எத்தனை நாளைக்குத் தாங்குவான்? நம்மைப்போல ஆண்டியாயிராமல் அவன் உண்மையிலேயே ஆண்டியாய் விடுவான். அதற்குள்- திருமதி பீச்: எல்லாரையும் ஒன்றுபோலக் கறுப்புக் கணக்கில் சேர்த்துவிடாதேயுங்கள், அன்பரே! நம் கண்மணி பாலி... திரு.பீச்: பாலிக்கென்ன? திருமதி பீச்: ஒன்றுமில்லை. பாலி அவரிடம் சிறிது மயங்கத் தொடங்கியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. திரு.பீச்: மூடத் தாய்க்கேற்ற முட்டாள் பிள்ளை! பணப்பையைப் பார்த்தல்லவா மயங்கத் தொடங்கவேண்டும்? திருமதி பீச்: எனக்கென்னவோ, அவள் காதல் கொள்ளத் தொடங்கிவிட்டால், என்ன செய்வதென்று தெரியவில்லை. திரு.பீச்: (சிரித்துக்கொண்டு) அட பைத்தியமே, காதலிக்க வேண்டியவர்கள் பெண்களல்ல, ஆண்கள். அத்தகைய ஆண்களை நான் கவனித்துக் காசு பறித்துக்கொள்கிறேன். உனக்குக் கவலைவேண்டாம். திருமதி பீச்: நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அவள் பெரிய இடத்துப் பெண்கள் போல திருமணத்திலிறங்கிவிட்டால், என்ன செய்வது? திரு.பீச்: பெரிய இடத்துப் பெண்களெல்லாம் பணப்பையைப் பார்த்துத்தான் காதலிலேயே இறங்குவார்கள். அப்படி வந்தால், அவள் கணவனுக்கு அவள் விரைவில் வாரிசாகும்படி நான் பார்த்துக் கொள்கிறேன். அதுவரையில் மணப்பேச்சு வேண்டாம். காதல்மட்டும் நடக்கட்டும், அத்துடன் காரியத்தில் கருத்து இருக்கட்டும். (போகிறான்) திருமதி பீச்: (தனக்குள்) பெண்கள் காரியமே என் கணவன் போன்ற காசாசை பிடித்தவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைத்துவிடுகிறார் கள். பெரிய இடத்துப் பெண்களைப்போல, பாலியும் மணம் செய்து கொண்டால் என்ன? அதற்குப் பின்னும் வேண்டுமானால் காதல் வாழ்வு வாழட்டுமே! (ஃவில்ச் வருகிறான்) வா,ஃவில்ச்! நீதான் என் மனதுக்குகந்த பையன்! உன்னைத்தான் என் ஆண்மகனாகத் தெரிந்துகொள்ள எண்ணியிருக்கிறேன். வா, என் அருகே வா. ஃவில்ச்: ஏனம்மணி! (தனக்குள்) ஏது. வலை பெரிதாயிருக் கிறதே. ஏதோ பெரிய காரியம் ஆகவேண்டும்போல் இருக்கிறது! திருமதி பீச்: நான் உன்னிடம் பாசமாயிருக்கிறேன். நீ என்னமோ பாராமுகமாக இருக்கிறாயே. உன்னை நல்ல இடங்களுக்கு அனுப்பித் தொழிலில் பழக்குகிறேன்- அத்துடன் கொலைமரம் உன்னை அண்டாமல், அப்பாவிடம் சொல்லி வைத்துக் காத்துவருகிறேன். அதிருக்கட்டும், நீ... ஃவில்ச்: (தனக்குள்) ஆ, காரியம் தலை நீட்டிக்கொண்டு வருகிறது, இப்போதுதான்! விழிப்பாயிருக்கவேண்டும்! திருமதி பீச்: நீ மாக்ஹீத்தை அடிக்கடி பார்க்கிறாயே! பாலி அவருடன் எப்படி பழகுகிறாள்? ஃவில்ச்: ஒரு குடும்பப் பெண் ஆணுடன் பழகுவது போலத்தான் பழகுகிறாள். திருமதி பீச்: ஏண்டா, நன்றிகெட்ட பயலே! நான் கேட்பதென்ன, நீ பசப்புவதென்ன? ஃவில்ச்: நான் சொல்லமுடியாதம்மா! செல்வி பாலியிடம் சொல்ல மாட்டேனென்று உறுதி கூறியிருக்கிறேன். திருமதி பீச்: என்னிடம் நீ உண்மையாய் இருக்க வேண்டாமா? ஃவில்ச்: செல்வி பாலியிடம் உண்மையாயிருப்பதைக் கெடுத்தா? மேலும் சொல்லிவிட்டு நான் செல்வி பாலியிடம் படாதபாடு படவேண்டும். திருமதி பீச்: வா, என் அறைக்கு வந்து சொல்லு. திரு, பீச்ச முக்குக்கூடத் தெரியாமல், எனக்கென்று நான் வைத்திருக்கும் உயர்ந்த வகுப்புத் தேறல் ஒரு கிண்ணி தருகிறேன். உண்மையை ஒளியாமல் சொல்லு. ஃவில்ச்: ஆகா, தேறல் தந்தால், கூறுகிறேன். திருமதி பீச்: சரி, வா, உள்ளே போய்விடுவோம். பாலி இதோ வருகிறாள், அவள் வருமுன் போய்விடுவோம். (போகிறார்கள். பாலி பாடிக்கொண்டே வருகிறாள்) பாலி: (பாட்டு) கன்னியர்களே- உலகில் நன் மலர்களே! (கன்) எழி லார்ந்த பொழி லிடையே வன்ன மலர் உண்டு; வன்ன மலர் தான் மலரக் காத்தி ருக்கும் வண்டு. சொன்ன மலர்த் தேனதனைச் சொகு சாக உண்டு, சுழன் றாடி இசை பாடித் தூங்கும் பொறி வண்டு! (கன்) மலர் நீங்கி, மலர் நாடித் திரியும் பொறித் தும்பி; மலர் தங்கி ஏமாந்து காத்திருக்கும் நம்பி! வந்த தென்றல் மீளும்; வெவ் வாடை வரும் பிந்தி; வாய்த்த மணம்: மாறும்; மலர் வாடும் இதழ் சிந்தி! (கன்) (திரு. பீச்சம் வருகிறான்) திரு.பீச்: ஏது, பாலி! காதலில் உண்மையிலேயே அமிழ்ந்து விடாதே, பார்த்துக்கொள். காதல், திருமணம் என்றெல்லாம் வந்துவிடப்படாது. காதல் பிறருக்கு வெற்றியாயிருக்கலாம், நமக்கு அது விளையாட்டு. அதிலும் தொழிலுக்கு நல்ல பலன் தரும் விளையாட்டு. யாரிடமிருந்தாவது மறை செய்திகளைப் பசப்பி அறிய, செல்வ இளைஞரிடம் காசு பறிக்க அது மிகச் சிறந்த கருவி. அதோடு இருக்கட்டும். நினைவிருக்கிறதா? பாலி: (நடுங்கிக்கொண்டு) ஆம். (திருமதி பீச்சம் வருகிறாள், கோபத்துடன்) திருமதி பீச்: (பாட்டு) அட காலங் கெட்ட கேடே!- இந்தப் பாலி தரும் பாடே! (அட) பட்டுடுத்திப் பணிபொருத்திப் பார்த்தேனே இவளை; பாவிஎவ னோபகட்டிக் கெடுத்தானே மகளை! (அட) கண்ணாக, மணியாகப் பெண்மக்கள் தம்மை எண்ணிஇனி வளர்ப்பவர்கள் இவ்வுலகில் யாரே? காசுபெறாக் கைக்குட்டை, பூசுவண்ணப் பொடிக்கே தேசுடைய தனமதிப்பைத் தூசிபட எறிந்தாள்; (அட) நாண்கெட்டஇவ் ஆண்களுடன் நங்கைக்கென்ன நாட்டம்? பூண்கேட்டுப் பொருள்கேட்டுப் போவதென்ன சாட்டம்? (அட) அட குடிகெடுத்த நாயே! கோடாலிக் காம்பே! உனக்குத் திருமண மென்ன கெட்டுவிட்டது? இது தெரிந்திருந்தால், முன்னமே உன்னைத் தூக்குமரத்துக்கு அனுப்பியிருப்பேனே! திரு.பீச்: என்ன, திருமணமா? திருமதி பீச்: பின்னே என்ன என்கிறீர்கள்? அந்தப் பயல் படைத்தலைவன் மாக்ஹீத் இருக்கிறானே, அவனை இவள் மணஞ் செய்துகொண்டுவிட்டாளாம்! திரு.பீச்: நீ வீணாகக் கோபப்படாதே, ஃவ்ளோரி! படைத்தலைவன் மாக்ஸீத் தானே? அதில் கேடில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். எப்படியும் பழம் நழுவிப் பாலில்தான் விழுந்திருக்கிறது. பாலியை அவன் வாரிசாக்கி விடுகிறேன். பாலி: அப்பா!... (அழுகிறாள்) திருமதி பீச்: மூஞ்சியைப்பார், அழுகிற மூஞ்சியை! பணம் வருகிற தென்று மகிழ்ச்சியடையாமல் அழுகிறாள், குந்திக் கொண்டு! (விலாவில் குத்துகிறாள்) பாலி: ஆ, ஐயோ! (கத்துகிறாள்- மேலும் அழுகிறாள்) திரு.பீச்: நன்றிகெட்ட பெண்ணே, பெற்றுவளர்த்த தாயை அழவைத்துவிட்டு... சரி, கிடக்கட்டும். இனியாவது பெற்றோர் அறிவுரை கேட்டு நட. பாலி: (பாட்டு) பெற்றோர் நல்லுரைக் கோட்டை!-அது தடுக்குமோ காதலின் வேட்டை! (பெற்) உற்றார் உரைகள் நிறையும்- பனிக் கட்டிபோல் உள்ளத்தில் உறையும்- காதல் கற்றான் உரையில் உருகும்- அவன் உள்ளத்தில் சென்று பெருகும். (பெற்) நாணமும் கையும் தடுக்கும்- ஆயின் நல்லிதழ் அதுவோ துடிக்கும்- உடன் ஆணழகன் எனை எடுக்கும்- இன்பப் புன்னகை முத்தம் கொடுக்கும். (பெற்) இணங்குவார் பெற்றவர் என்றே- பேதை எண்ணி இருந்தனன் நன்றே- இன்று மனங்கொளும் காதல் நன்மணமே-கொண்டு மாற்றினன் கவலையைக் கணமே. (பெற்) திருமதி பீச்: நம் குடும்ப மதிப்பு கெட்டுவிட்டது. பெண்ணின் திமிரைப் பார்! மணமே செய்வதாயிருந்தால், எத்தனையோ பெருங்குடிச் செல்வர் சுற்றுகிறார்களே; அவர்களையெல்லாம் விட்டுவிட்டு... (அழுகிறாள்) பாலி: அம்மா, நான் மதிப்புக்கோ பணத்துக்கோ அவரை மணம் புரியவில்லை அம்மா! நான் அவரைக் காதலிக்கிறேன்! திருமதி பீச்: ஆ! என்ன சொன்னாய், காதலா! திருமணத்தோடு இழவு ஒழிந்ததென்றல்லவா நினைத்தேன்! காதல் வேறா? அதுவும் காதலித்த இடத்தில் திருமணம் செய்யும் மடமை பெண்களிடத்தில் இருக்குமென்று நான் இதுவரை எண்ணவில்லையே! (கையை பிசைகிறாள்.) திரு.பீச்: போகட்டும் இப்போது விடு. பார்ப்போம்! திருமதி பீச்: என்ன பார்ப்பது? என் மனம் தாளவில்லையே! என் மகள் மடமையை எண்ணினால் மனம் பதறுதே! மூளை குழம்புதே! ஆகா, ஆ, ஆ! (உணர்விழந்து சாய்கிறாள்.) பாலி: (பதைபதைத்து) அம்மா, அம்மா! திரு.பீச்: இதோ இந்த தேறலைக் குடி, ஃவ்ளோரி! மனத்தை அலட்டிக்கொள்ளாதே. பாலி: இன்னும் ஒரு கிண்ணம் ஊற்று, அப்பா! அம்மாவுக்குச் சோர்வு வந்தால், இரண்டு கிண்ணம் வேண்டும். (ஊற்றிக் கொடுக்கிறாள்) திரு.பீச்: என் மகள் நன்றிகெட்டவள் அல்ல. அவளுக்கேற்றவகை செய்யவேண்டும். பார்க்கிறேன். (போகிறார்) (திருமதி பீச்சம் உணர்வு வந்து மகளைத் தழுவிக்கொள்கிறாள்) திருமதி பீச்: (பாட்டு) அந்தோ, பாலி! என் செல்வமே! தேனே!- ஆண்கள் மாயவலை தன்னை அறியாமல் என்றன் மானே- அதில் துள்ளிவிளையாடுகின்ற பேதைமதி வந்ததுனக் கேனோ? (அந்) பாலி: ஐயோ, என்னதான் நான் செய்வேன் அம்மா!-அவர் ஓயாமல் எனைச்சுற்றி ஆடுகிறார் வாடுகிறார் சும்மா- என்றன் உள்ளம்எனை விட்டோடி அவருடனே பாடுகிறதம்மா- அவரை மனங்கொண்டு மணாளராக மணங்கொண்டு விட்டேனடி அம்மா. (ஐயோ) திருமதி பீச்: ஆ, என்னடி இன்னுமதே பல்லவியைப் பாடுகிறாய்? பாலி: அம்மா அவர்தான், (பாட்டு- தொடர்ச்சி) என்னை வலையிட்டதுபோல், உன்னை வலையிட்டிருந்தால், நீஇருக்க மாட்டாயம்மா, சும்மா! (அம்மா) திருமதி பீச்: ஏது, காதல் பாடத்தை என்னிடமே ஒப்பிப்பாய் போலிருக்கிறதே. (திரு.பீச்சம் வருகிறார்) திரு.பீச்: உன்னிடம் ஒரு செய்தி, ஃவ்ளோரி! (காதில்) தன்னை மறந்து குழந்தையைக் கடிந்துகொள்ளாதே. உன் இளமையை நினைத்துக் கொள். திருமதி பீச்: ஆம், மறந்துவிட்டேன். (உரக்க) காதலில் பெண்ணினமே வலிமையிழந்துதான் விடுகிறது. சரி, பாலி! இந்த ஒரு குற்றத்துக்கு உன் தாய் உன்னை மன்னிக்கிறாள். போய் இனியாவது நல்ல பிள்ளையாயிரு, போ. (போகிறாள்) பாலி: (பாட்டு) புயலில் உழலும் கலம்போலே- கரை அயலே வரநான் கலங்கினேன்- ஆகா! புயலின் கடுமை தணிந்ததே!- என் கனவே நனவாய் அமைந்ததே! (புயலில்) கள்ளச் சரக்குக் கொண்டு செல்லும் கப்பல் புயலில் சிக்கினால் மெள்ளக் கரைக்கு வரத்தயங்கும் விரிகடலகத்தில் நிற்க அஞ்சும். (புயலில்) மன்னவன் சரக்கை ஏற்றுவிட்டான்! வன்புயல் தென்றல் ஆயிற்றே? இன்நில வின்பம் இதுவன்றோ? பொன்னுலகின்பம் அது ஒன்றோ! (புயலில்) திரு.பீச்: கண்ணே பாலி, உன் தாயைப்போல நீயும் பைத்தியக்காரியா யிருப்பாய் என்று நினைத்தேன். நீ கெட்டிக்காரி! சரி; இப்போது மணமான பெரிய பெண்ணாகி விட்டாயே! இனி செலவுகளுக்கு என்னைக் கேட்க மாட்டாயல்லவா? பாலி: மாட்டேனப்பா! திரு.பீச்: அதற்கு என்ன செய்ய எண்ணம்? பாலி: எல்லாப் பெண்களையும்போல என் கணவன் வருவாயை நம்பி... திரு.பீச்: போடி, பைத்தியம்! படைவீரர் மனைவியரும், வழிப் பறிக்காரர் மனைவியரும் கணவன் வருமானத்தில் பங்குபெற முடியாது. அவர்கள் செல்வத்தைத்தான் கைப்பற்ற முடியும். பாலி: நீங்கள் சொல்வது புரியவில்லையே, அப்பா! திரு.பீச்: புரியவில்லையா? என் தொழில்முறைப்படி நான் உனக்கு உதவப்போகிறேன். நீதானே அவனுக்கு வாரிசு? பாலி: (திடுக்கிட்டு) அப்பா, நான் உங்கள் குழந்தை. என்னிடம் இதைச் சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? திரு.பீச்: இதில் உனக்கென்ன துன்பம்! பாலி, நீ சற்று அழுவதாக நடிக்க வேண்டும். அவ்வளவுதான்! எல்லாம் பின் நன்மைக்குத்தானே! பாலி: அப்பா, அவர் என் கணவர்மட்டுமல்ல. என் காதலர். அவரைப் பிரிந்து சிறிது இருப்பதே எனக்குத் தாளவில்லை. அவர் போனால் நான் உயிர் வாழேன். அவரைக் கொலை செய்ய... திரு.பீச்: காதலித்த இடத்தில் மணம் செய்யக்கூடாது என்று இதனால்தான் சொல்கிறது, தெரிகிறதா? போகட்டும், எல்லாம் சில நாளைக்குள் மாறிவிடும். பெண்மனம் உணர்ச்சி வசப்பட்டது. அதுவும் உன் நடிப்புக்கு பயன்படும். நான் போய் மாக்ஹீத்துக்கு வேண்டியவற்றைச் செய்கிறேன். (போகிறான்) பாலி: (தனக்குள்) அந்தோ என் நிலை! அந்தோ என் காதலரே! என் பெற்றோர் சதிக்கு நான் என்ன செய்யப் போகிறேன்? அதுகண்டு நீரும் என்னை வெறுத்துவிட்டால், என்ன செய்வேன்? (பாட்டு) கடுமையாக என்றனையே நோக்காதீர்! கண்ணாளரே நீர் காதல்கொண்ட என்றனையே தூற்றாதீர்! கொடுமைகயான கயிறுஉம் உடலைத் தாக்காமுன் கண்ணாளரே என் துடிக்கும்உயிர் இவ்வுடலை விட்டுப்போம், காண்பீர்! (கடு) (கண்ணீர் வடிக்கிறாள். மாக்ஹீத் ஒரு பக்கமிருந்து வருகிறான்) மாக்: (பாட்டு) கண்ணே பாலி, கட்டுரைப்பாய்! காதலன் நான்அகன் றேகியபின் கண்மணி வேறிடம் நோக்குவையோ? கட்டிளை ஞர்கண்டு சொக்குவையோ? (கண்) பாலி: கண்மணி, உள்ளங் கலங்கவேண்டாம்- என் காதலன் நோக்கி என்காதல் நிற்கும்; நோதலும் வேதலும் வெவ்வுயிர்ப்பும் உன்னை ஆவி உலகிலும் வந்தெழுப்பும்! (கண்) மாக்: கண்ணே பாலி, கண்மணி வாழி! கண்கெட்டும் கண்பெற்ற காளை நானே! (கண்) பாலி: ஆ, என் காதலன் என்னை மறக்கவில்லை! மாக்: என் வீரத்தில் நம்பிக்கை இழக்க நேரலாம், வாய்மையில் நம்பிக்கை இழக்க நேரலாம். கண்ணே! காதலில் நம்பிக்கை இழக்க வேண்டாம்! உன்னை நான் மறந்தால், என் துப்பாக்கி தான் சுடுவதையும் மறக்கக்கூடும்! பாலி: உம்மிடம் எனக்கு இம்மியளவுகூட அவநம்பிக்கை இல்லை, கண்ணாளா! தாங்கள் தந்துதவிய காதல் கதைகளிலெல்லாம், காதல் வீரர் என்றும் தவறியதாகத் தெரியவில்லை. ஆனாலும் அழகிய பெண்கள்... மாக்: உனக்கு இனி அந்தக் கவலை வேண்டாம், பாலி! (பாடுகிறான்) (பாட்டு) களிகொடு திரிந்தது தும்பி கண்கவர் பலமலர் நம்பி. (களி) கண்டேன் என்பாலி, செந்தாமரையே கருதும் அம்மலர்களின் ஒருநிரையே- இனி காண்பது ஒருசெழுந் தாமரையே! பன்மலர்த் தேனை நுகர்ந்தேன் ஒன்றினுக்கு ஒன்று பகர்ந்தேன்-யாவும் ஒருமல ரகமென் றுணர்ந்தேன்- இனி நுகர்வது ஒரு செழுந் தாமரையே (களி) பாலி: என்றாவது நீங்கள் நாடுகடத்தப் பட்டால்கூட, என்னை இங்கே விட்டுவிட்டுப் போய்விடமாட்டீர்களே? மாக்: உன்னை விட்டு என்னைப் பிரிக்கும் சக்தி இந்த உலகத்தில் எதுவும் இருக்கமாட்டாது. மன்னவையோர் தங்களுக்கு வரும் உம்பளங்களை விட்டுவிட இணங்கலாம்; வழக்காளர் தம் வழக்குக்கான ஊதியத்தைக் குறைத்துக் கொள்ள இணங்கலாம்; மங்கையரை முகக்கண்ணாடியின் அருகிலிருந்து பிரித்து விடலாம்; ஆனால் என்னை உன்னிடமிருந்து பரித்துககொள்ள ஒருநாளும் இணங்கேன். பாலி: ஆ, என் காதல் நிறைவுடையது! மாக்: ஆம். (பாடுகிறான்) (பாட்டு) மாக்: நீலமலை மேலே, வீசுதென்றல் மீதே! பாலி: சீலமுடன் யாமே, தவழ்ந்து செல்லுவோமே மாக்: வடமுனை வளர்குளிர் பனியிடையே- என்றன் மனங்கவர் மங்கையின் துடியிடையே- சேர்த்துப் பொங்கின வேனிலில் மிதந்திடுவேன் (நீல) பாலி: பாலையின் பதைகடு வெப்பிடையே- என்றன் பாங்கில்என் அன்பன் அணைப்புடனே-நான் பைந்தளிர்ச் சோலையில் திளைத்திடுவேன் (நீல) மாக்: ஒளிதிகழ் பகலெலாம் ஓடியாடுவோம். பாலி: குளிர்நில விரவெலாம் கூடியூடுவோம். மாக்: கனவுல கதனிலே கலந்து பாடுவோம். பாலி: நனவுல கதனிலே இணைந்து கூடுவோம் (நீல) மாக்: கண்ணே, நம் களிப்பிடையேகூட உன் முகம் ஏன் வாடியிருக்கிறது. பாலி: ஆம், நம் கனவுகள்தான் நம் நனவுலகத் துயருக்கு ஆறுதல் தரவேண்டும். பிரிவு... மாக்: பிரிவா! ஏன்? பாலி: என் தாய் தந்தையர் நம் திருமண வாழ்வைச் சிதைத்துத் தங்கள் தொழில் வளர்க்கப் பார்க்கிறார்கள். உங்களைக் கொலைமரத்துக்கு அனுப்பத் தந்தை இப்போதே சூழ்ச்சிசெய்து வருகிறார். மாக்: ஆ! பாலி: (பாடுகிறாள்) பிரிவெனும் ஊழித்தீ, சூழ்ந்து துள்ளுதே- உயிர் கொல்லுதே- இன்பம்- வெல்லுதே! (பிரி) ‘மாக்’ எனும் நிலத்தில் பதிந்திருக்கும் ‘பாலி’ எனும் மலை பறித்திழுக்கும் பிரிவெனும் ஒருபுயல் உண்டெனப் பாவிநான் நினைத்திடல் எங்ஙனம்? (பிரி) கொலைமரம் உன்னைக் கொள்ளாமுன் பிரிவெனும் பாலையில் உளம்சாமே! பிரிவெனும் பாலையில் செல்லாமல்- இதோ பிரித்திடுவோம் உயிர் உடல்களையே! (பிரி) ஆம். உம் உயிர் உம் உடலைவிட்டுப் பிரியத் தரிக்க மாட்டேன். அதைத் தடுக்கத்தான் உம் உயிராகிய நான் என்னை உம் உடலைவிட்டுப் பிரிக்க ஒருப்பட்டேன். ஆம், நீங்கள் உடனே ஓடிமறைய வேண்டும்- பிரியவேண்டும். ஒரு நீண்ட பிரிவு முத்தம் தந்துவிட்டு! மாக்: ஆ, பிரியவேண்டுமா? எப்படிப் பிரிவேன். உன் கண்கள் என் கண்களைப் பிடித்திழுத்து நிறுத்துகின்றனவே! உன் அழகுவலையில் நான் சிக்க இருக்கிறேனே! இதோ பார், என் கைவிரல்கள் உன் கைவிரல்களை முறுக்கிப் பின்னி யிருப்பதை! நான் பிரிக்க எண்ணினாலும் அவை எப்படிப் பிரியும்? பாலி: அன்பே, என் தந்தை வந்தால் எல்லாம் கெட்டுவிடும். பிரிந்துதானாகவேண்டும்! பிரிவில் ஆண்களைவிடத் துயரப்படப்போவது பெண்கள்தான், ஆனாலும் எனக்கு உம் உயிர் பெரிது. அதற்காகத்தான் நான் பிரிய ஒருப்பட்டிருக்கிறேன். மாக்: (பாட்டு) காசாசை பிடித்த ஒரு கஞ்சன்- ஒரு காசைக் கொடுக்கும் நேரம் நெஞ்சம்- நிறை ஆசைகொடு பிடிக்கும் படியே- இந்தப் பாசக் கரம்பிடிக்கும் பிடியே (காசா) கொல்லன் உலை தோற்கும்- படி நெட்டு யிர்ப்பு வார்க்கும்- இந்த நல்லஉயிர் பேர்க்கும்- நிலை நம் உடல்கள் வேர்க்கும் (காசா) பாலி: கைதவறவிட்ட பறவை யதன்மேலே களித்துவிளை யாடுபையன் கண்ணூ ர்தல் போலே கைக் கணையை விட்ட என்றன் காளைஉன்றன்மேலே காதலிஎன் கண்கள்கருத் தூன்றிநிற்கும் பாரே (காசா) கண் மறைந்த பின்னும்என் கண்கூர்ந்து பார்க்கும் கண்மறைத்துக் காரிகையின் கண்ஊற்றுப் பாயும் கையணையை விட்டஎன்றன் காளைபின்னும் வந்தென் கருத்தணைய நின்றுலவிக் கருத்தழித்து நிற்பாய் (காசா) காட்சி 2 (நியூகேட் அருகில் ஒரு வழி அருந்தகம்; ஜெம்மி டுவிச்சர், விரல்கொண்டி ஜாக், புரௌன் வில், பாப் பூட்டி, நிம்மிங் நெட், ஹாரி பாடிங்டன், மாட்-ஓ-தி-மின்ட், பென்பட்ஜ் முதலிய ஆண்டிக் கூட்டக் குழுவினர். மேசையில் இன்தேறல், கடுந்தேறல், புகையிலைச் சுருள்கள்!) பென் பட்ஜ்: ஆ, மாட்! நான் நாடுகடத்தப்பட்டுத் திரும்பி எத்தனை நாளாயிற்று? இன்றுதானே உன்னைக் காண்கிறேன்! வேலைகளெல்லாம் சுறுசுறுப்பாகத்தானே நடக்கின்றன? மாட்-ஒ-தி-மின்ட்: ஆம். என்வரையில் சுறுசுறுப்புக்குக் குறைவில்லை. பென்: மகிழ்ச்சி. உன் அண்ணன் டாம் காரியம் என்ன வாயிற்று? அவனையும் நெடுநாளாகக் காணவில்லையே! மாட்: பன்னிரெண்டு மாதமாகிறது, அவன் காரியம் கெட்டு! நல்லவர் களாகப் பார்த்துத் திருடாமல், பொல்லாத வர்கள் திசை நாடிவிட்டான். வறுமைவாய்ந்த இந்த உலக வாழ்விலிருந்து தோழமை இல்லாத சிறை வாழ்வுக்கும், அதிலிருந்து இன்னும் கொடிய மருத்துவ விடுதிக்கும் சென்றான். மருத்துவர் கைப்பட்டால், பின் நம்போன்ற ஏழைகள் தப்பு வதில்லை என்பதுதான் உனக்குத் தெரியுமே! ஜெம்மி: செத்தவர்களைப் பற்றியும் சாவைப்பற்றியும் பேசாதே, மாட் சாவு உலகத்துக்கு, வாழ்வு நமக்கு! வறுமை சூழ்ந்த இந்த உலகத்தில், சாவுக்குத் துணிந்தவன் வாழ்வான். ஆறிலும் சாவுதான், நூறிலும் சாவுதான். அது பற்றி அறியுடையவர் முன்கூட்டிக் கவலைப்படமாட்டார்கள். ஜாக்: நம் ஆண்டிமட வேதாந்தம் அதுதான், அண்ணேன்! மாட்: வேதாந்தம் என்ற பெயர் கூறாதே, தம்பி! அது நமக்கு அடுக்காது. நாம் என்ன, ஆட்டைக் கழுதை என்றும், கழுதையை ஆடல்லவென்றுமா வழக்கிட்டு வாதாடி நிலை நிறுத்தப் பார்க்கிறோம்? நாம் வேதாந்திகளல்ல, வீரர்கள்; சாவுக்கஞ்சா வீரர்கள்! வாழவகையறிந்த முழுநிறை மனிதர்கள்! ஹாரி: ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கும் நயவஞ்சகக் கோழைகள் நம்மிடத்திலே கிடையாது! நம்மைப் போலத் தன்மதிப்பையும், தன்னலத்தையும் பேணும் மன்னவைகளை வெளி உலகில் பார்க்கலாம். ஆனால் நம் அன்பு ஒற்றுமை நமது தான்; அது ஆண்டிமடத்திற்கே உரிய தனிப்பண்பு. மாட்: உலகின் களையறுப்பவர்கள், மட்டுமீறிய வீக்கங்களைச் சரிசெய்து சமன்செய்யும் சமத்துவவாதிகள் நாம்! உலகம் பேராசை பிடித்தது; ஆயிரம் வந்தால் பதினாயிரம், பதினாயிரம் வந்தால் நூறாயிரம் என்று பேராசைகொள்ளும். சிலசமயம் அண்டங்காக்காய்களைப்போலத் தமக்கு வேண்டா ததைக்கூடப் பலர் பறித்து வீணாக்குகின்றனர். நாம் அப்படி யல்ல. உயிரைப் பணயம்வைத்துத் துணிவுடனும் திறத்துடனும் வலக் கையால் உழைத்து ஈட்டுகிறோம். ஈட்டியதில் இடக் கையால் எல்லாருக்கும்- அரசியல், காவல் துறையினருக்கும்- நம்முடன் இரகசியத் தோழமை கொண்ட பெரிய மனிதர் களுக்கும்- பங்கிட்டுக்கொடுத்து உண்டு களிக்கிறோம்! மீந்ததை எத்தனையோ ஏழைகளுக்கு மனமாரக் கொடுத்து விட்டு மீண்டும் உழைக்கிறோம்! உலகில் ஆண்டியர் வாழ்வுக்கு ஒப்பாவது எது? மன்னாதி மன்னர்களும் ஆண்டிகளிடம் மண்டியிடத்தான் வேண்டும்- திறமைக்கு, நேர்மைக்கு, அன்பிரக்கத்துக்கு! ஜெம்மி: பேச்சுப் போதும். அண்ணே! இன்றைக்கு வேலைகள் யாவும் திட்டமாகிவிட்டன. முதலில் சற்றுக் குடித்து மகிழ்வோம். மாட், நம் வீரப்புகழ் பாடிய நீயே நம் வீரச் செங்கலத்தைப் பற்றிப் பாடு. மாட்: ஆகா! (பாடுகிறாள்) (பாட்டு) கண்ணாடிக் கலங்களிலே நிறைப்பீரே- நிறைப்பீரே, கனிந்தசெந்தீ வண்ணமுள்ள செந்நீரே- செந்நீரே! (கண்) காதல், வீரம், களிப்புக் கலந்து (கண்) கனிவுடைய காரிகையர் ஒருகையிலே, கள்ளமில்லாச் செந்நீர்க்கலம் ஒருகையிலே கொண்டுசென்று துன்பமெல்லாம் தாக்கித்தள்ளுவீர் கொள்ளுமட்டும் இன்பமெல்லாம் வாக்கிக்கொள்ளுவீர்! (கண்) (மாக்ஹீத் வருகிறான்) மாக்: அன்பர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்! உங்களுடன் சேர்ந்து விருந்தயரவே நான் துடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில இன்றியமையாத் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தன. மாட்: அதற்கென்ன? நாங்கள் இப்போதுதான் கலைய இருந்தோம். அதற்குள் நீங்கள் வந்ததுபற்றி மகிழ்ச்சி. இதோ உங்கள் நலத்துக்கு ( ஒரு கிண்ணம் கையேற்கிறான்) இதோ உங்களுக்கு (மற்றொரு கிண்ணம் மாக்ஹீத் பக்கம் வைக்கிறான்) இன்று மாலை என்னுடன் ஊர் வெளியில் உலாவ வரும்படி உங்களை அழைக்கிறேன். வருகிறீர்களா? மாக்: மகிழ்ச்சியாக வருவேன், நான் அதுவரை சுதந்தரத்துடன் இருந்தால்! மாட்: ஏன் அப்படி? ஏதாவது நிகழ்ந்ததா? மாக்: நம் வாழ்வில் அது பொது நிகழ்ச்சிதானே! ஆனால் ஒரு ஒற்றுமையில்தான் நம் ஒவ்வொருவர் வலிவும் இருக்கிறது? மாட்: அதற்குச் சிறிதும் ஐயமில்லை. உங்களுக்கு ஏதாவது அதற்கு மாறான ஐயம் ஏற்பட்டிருக்கிறதா? மாக்: எனக்கு நம் குழுவில் யார்மீதும் ஐயமில்லை. ஆனால் வெளியே ஒருவர்மீது ஐயம் ஏற்பட்டிருக்கிறது- ஒரு நண்பர்மீது. ஆகவே நம்மவர் ஒத்துழைப்பைக் கோர விரும்புகிறேன். மாட்: நம் குழுவில் எல்லார் சார்பிலும் நான் உறுதி கூறுகிறேன். பலர்: நாங்களும் உறுதி கூறுகிறோம். மாட்: வெளியே யார் உன் பகைவர்? மாக்: நம் நண்பர்தான். ஆனால் சில சமயம் காட்டிக் கொடுப்பவர்-திரு.பீச்சம். சிலர்: ஆ! மாக்: ஆகவே, நான் சிலகாலம் இவ்விடம் வராமல் மறைவாயிருப்பேன். இருப்பிடத்தை மாட்டிடம் மட்டும் கூறுவேன். வேண்டுவோர் சந்திக்கலாம். ஜெம்மி: சரி, அப்படியே செய்வோம். இப்போது நேரமாயிற்று. கடமையாற்றப் புறப்படுவோம். முரசு முழங்கட்டும். மாட்-ஒ-தி-மின்ட், நீ நம் படையணிப் பாட்டைப் பாடு. மாட்: அப்படியே (பாடுகிறான்) (பாட்டு) முன்னணிக்கே, முன்னணிக்கே முன்னேறிச் செல்வீர்! (முன்) அணிஅணியாய்ப் படைகள் செல்லும் அழகைப் பாருங்கள்! மளமளவெனப் பீரங்கிமுழங்கும் முழக்கங் கேளுங்கள்! துப்பாக்கியைத் தோளிலேந்தித் தொடர்ந்து செல்லுங்கள்! (முன்) இரும்பை உருக்கிப் பொன்னாக்குவோர் இருந்து சாகட்டும்! விருந்து உண்டு மருந்து கொள்வோர் உண்டு சாகட்டும்! மனிதர்நாமே மனிதராக முன்னேறிச் செல்வோம்! மனிதர் களத்தில் மனித ராக நின்று உயிர்கொடுப்போம். (முன்) மாயமாட்டா உடல்களையெல்லாம் ஈயக்குண்டாலே- நல்ல ஈயக்குண்டாலே மாய்த்து அழிக்கக் களம்செல்லுவோம். (முன்) ஈயமாட்டா ஈனரை எல்லாம் ஈயக்குண்டாலே- நல்ல ஈயக்குண்டாலே மாய்த்து அழிக்கக் களஞ்செல்லுவோம். (முன்) (அணிவகுத்துச் செல்கின்றனர் யாவரும், மாக்ஹீத் தவிர.) மாக்: (தனக்குள்) ஆ, நான் காதல் விளையாட்டு விளையாடினேன். காதலின் பயன் இப்போதுதான் தெரிகிறது. அதிலும் பெண்கள் காதல்! காதற்பெண்கள்! வானம் இடிந்து வீழட்டும், நிலம் வெடித்துப் பிளக்கட்டும். பெண்ணின் காதல் ஒன்றே மனிதனுக்கு நிலையான புணை ஆயிருக்கும். பெண்ணின் பெருமையே பெருமை! (பாடுகிறான்) (பாட்டு) நெஞ்சங் கலங்கி நிலைதளரும் வேளைக்கே வஞ்சி இளமுகம்ஓர் நன்மருந்தாம் காளைக்கே! (நெஞ்) கொஞ்சும் கிளிமொழி நரம்பூர்ந்து மெள்ளமெள்ள விஞ்சி எழுந்துநம் வீறுபட்டும். நல்ல நல்ல முல்லை, மகிழ், அல்லிப் பூக்களை அள்ளி அள்ளி வல்லி மணம் வீசி வாழ்விக்கும். செவ்விதழ்கள் செந்தேன் கனிதந் தின்னமுதம் தானூட்டும்! (நெஞ்சம்) முத்தமழை பொழியும் சித்தம் இழை அவிழும் நித்தம் நிறை இன்பம் நீங்காத நல் இன்பம் ஒத்த குணத்தோடு ஒருங்குறை நல்லோர்க்கே! (நெஞ்சம்) துன்பத்தில் மரத்துப்போன மனிதரை இன்பத்தில் இழையவைக்கும் சாதனம், ஆயிழை தேர்ந்தணியும் சேயிழை யாரன்றி வேறில்லை! அவர்களால் நான் எனக்குப் பாதுகாப்பான இன்பக்கோட்டை ஒன்று கட்டுவேன். யாரது, பையன்! (விடுதிப் பையன் வருகிறான்) நான் அழைத்துவரச் சொன்ன பெண்கள் எல்லாரையும் அழைத் தாய்விட்டதா! பையன்: ஆளனுப்பி யிருக்கிறேன். சிலரைக் காணவில்லை. சிலர் தொலைவிலிருந்ததால், தேடப்போன ஆள் இன்னும் வரவில்லை. ஆனால் பலர் இங்கேயே இருக்கிறார்கள். விரைவில்- இதோ வருகிறார்கள். (பையன் போகிறான். திருமதி கோக்ஸர், திருமதி ஸ்லாம்கின், செல்வி ஜென்னி டைவர், செல்வி டாலி டிரல், செல்வி பெட்டி டாக்ஸி; செல்வி ஸூகி டாடி, திருமதி விக்ஸன், செல்வி மோளி பிரேஸன் முதலிய பல பெண்கள் வருகின்றனர்.) மாக்: ஆகா, என் ஓருயிரின் பல வடிவங்களே! உங்கள் ஒவ்வொரு வருக்கும் என் தனித்தனி அன்பும் வணக்கமும்! எல்லாரும் வேண்டுமட்டும் நம் ஒற்றுமைக்குக் குடித்துக் கூடியிருக்கலாம். யாழ்வாணரே, யாழ் நரம்புகள் அதிரட்டும். எல்லாரும் ஆடுங்கள், பாடுங்கள், இன்ப நாடுங்கள். (ஆடற்பாடல்) அழகு மின்பமு நுகர்வதற்கே, அமைந்ததிவ் இளமை நல்வேளை! (அழ) அழகது இன்பம் பகர்வதற்கே, அவ்வின்பம் அழகை நுகர்வதற்கே! இன்பமே அழகின் கடமையே இன்பமில் அழகு மடமையே! (அழ) அழகுள்ள போது இன்ப நுகர்வோம்! மலருள்ள போது மண நுகர்வோம்! அழகும் மணமும் ஒருகணமே! மலரும் இளமையும் ஒருமணமே! (அழ) நாளை என்பதை நம்பாதீர், இன்றே குடித்தாடி விளையாடுவீர்! வேளையில் வரும்வேள் மதன்கணையே! வேகத்தில் சென்றிடும் அதன் துணையே! (அழ) நாளை என்பதை நம்பாதீர், இன்றே குடித்தாடி விளையாடுவீர்! வேளையில் வரும்வேள் மதன்கணையே! வேகத்தில் சென்றிடும் அதன் துணையே! (அழ) காளையர், கன்னியர் கருத்திற்கொண்டு களித்தாடுவீர் கைகள் கோத்துக்கொண்டு: “வேளை யகன்றிடில் மீளாது வேதனை வந்திடும் தாளாது” (அழ) மாக்: உயிர்த் தோழியரே, ஆடியது போதும், அமர்ந்து கலம் அயருங்கள். சீமாட்டிகள் யாராவது கடுந் தேறல் விரும்பினாலும் பருகலாம். அதற்கும் அட்டியில்லை. ஜென்னி: என்னைப் பார்த்துக்கொண்டே ஏன் சொல்கிறாய், மாக்! நான் கடுந் தேறலை சாப்பிடுவதில்லையே. ஒவ்வொரு சமயம் வாத சூலைக்காக அதைக் கொள்வதுண்டு. ஆனால் அது எனக்குப் பிடிக்காது. மாக்: பகட்டான, பாவையருக்குப் பழக்கமான சாக்குபோக்குத்தான்! நானறிய வாதசூலை உயர்குடி மங்கையர் எல்லாருக்கும் உண்டுதான்! அது கிடக்கட்டும். நீ ஏன் இப்போது என்னிடம் முன்போல் பேசக்கூடமாட்டேன் என்கிறாய். ஜென்னி: இப்போது எத்தனை பேரை நீ கவனிக்க வேண்டும்! என் ஆர்வத்தை மிகுதிகாட்ட வேண்டாமென்று நீ தானே கேட்டுக்கொண்டது? மாக்: சரி, சரி! அதற்காகக் கேட்கவில்லை- திருமதி கோக்ஸர், பட்டு வணிகர் குழுவுடன் சென்றிருந்தீர்களே, வெற்றி கிட்டிற்றா? திருமதி கோக்ஸர்: வெற்றிக்குக் குறையில்லை. ஆனால் இப்போதெல்லாம் எதிலும் போட்டிவந்து, பலனைக் குறைத்து விடுகிறது. ஆனால் எந்தப் போட்டியிலும் சமாளிப்பவள் நம் ஜென்னிதான். ஜென்னி: அது கிடக்கட்டும், மாக். நீங்கள் பெருவழியில் எடுத்த படையெடுப்பில் உங்களுக்கு நிறையப் பணம் கிடைத்திருக்குமே! மாக்: பெருவழியில் பணம் கிடைக்கத்தான் செய்கிறது. அது சிறுவழியில்- சீட்டாட்டத்தில் போய்விடுகிறது. ஜென்னி: வீரமுள்ளவர்கள் ஊரைப் பணயம்வைத்துப் போராடலாம். வேறு எதையும்- பொருளைக்கூட- பணயம் வைப்பது கோழைகள் வேலை. என்னிடம் கேட்டால் இவை எனக்கு வேண்டாம் (பகடைகளைத் தள்ளு கிறாள்); நண்பர்களை ஏய்க்கத்தான் இவை உதவும்! (மாக்ஹீத்தை முறைத்துப் பார்க்கிறாள்) இதுவேண்டும்! (மாக்ஹீத்தின் கைத் துப் பாக்கியைக் கைப்பற்றுகிறாள்.) ஹூகி: ஜென்னிக்குத் துப்பாக்கி. எனக்கு இது! (ஒரு புறம் இழுத்து முத்தமிடுகிறாள்.) திருமதி கொக்ஸர்: எனக்கு இது! (இன்னொரு புறமாக இழுத்து முத்தமிடுகிறாள்.) (பல பெண்களும் முத்தமிடுவது போல வளைந்து சூழ்கின்றனர்) மாக்: போதும். என்னை விட்டு விடுங்கள். ஜென்னி: இதோ விடுவிக்க ஆண்கள் வருகிறார்களே! (கையால் வெளியே ஏதோ சாடை காட்டுகிறாள்) (காவலர்களுடன் திரு. பீச்சம் நுழைகிறான்) திரு.பீச்: இதோ இருக்கிறான், மாக்ஹீத்! காவலன் ஒருவன்: உன்னைக் கைதுசெய்கிறேன், மாக்ஹீத்! வழிப்பறி, குத்துச்சண்டை, கொலை ஆகிய குற்றங்கள் உன்மீது சாட்டப் பட்டுள்ளன. (கைவிலங்கிடுகிறான்.) மாக்: (ஜென்னியை நோக்கி) இது தகுமா உனக்கு, ஜென்னி. ஆண்கள் திருடினாலும், காட்டிக்கொடுக்க மாட்டார்களே பெண்கள்... (பெண்கள் சிரித்துக்கொண்டு வெளியேறுகின்றனர். மாக்ஹீத் நெறு நெறென்று பல்லைக் கடிக்கிறான்.) திரு.பீச்: வீரர்களுக்கு இது புதிதல்லவே, மாக்! வாள்வீரர் வாளால் வீழ்வர். உன்னைப்போல் பெண்வீரர் பெண்ணால் தானே வீழ்ச்சியடைய வேண்டும். மாக்: வீழாக்கியிலும் எனக்கு ஆறுதல் அதுதான்! (பாடுகிறான்) (பாட்டு) கொலைமரமே கலைமரமாய் அமைந்த தெனக்கே! (கொலை) கொலைமரத்தில் களிப்புடனே தூங்கிடுவேன் நான்- இந்தக் கொலைமரத்தில் மாயா இன்பம் ஆர்ந்திடுவேன் நான் (கொலை) மங்கையர்கள் கண்பார்வை மனத்தில் நிற்குமே- ஓயாமலே மனத்தில் நிற்குமே- மாயாமலே மனத்தில் நிற்குமே (கொலை) களம் 2 (நியூகேட் சிறை! லாக்கட்டும் கடைகாப்போரும் நிற்கின்றனர், உள்ளே. மாக்ஹீத்துடன் காவலர் உள்ளே வருகின்றனர்.) லாக்கிட்: வருக, படைத்தலைவர் அவர்களே, வருக வருக! ஒன்றரை ஆண்டுகளாயிற்று, நீங்கள் இந்த மாளிகைப் பக்கம் வந்து! நீங்கள் மறந்தாலும் நான் மறக்கவில்லை. ஆயினும் எங்கள் நல்ல பழக்க வழக்கங் களை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். (கடை காப்பாளனைப் பார்த்து) அடே சோம்பேறி, ஐயா கைக்கு அந்தக் கனத்த இரும்புக் காப்பை எடுத்துவா! மாக்: அன்பர் லாக்கிட், அவ்வளவு கனமுள்ளது வேண்டாம். சற்று இலேசானதாயிருக்கட்டும். லாக்கிட்: அன்பரே, இது ஆண்டிமடமல்ல, சிறைக் கூடம். ஆண்டி மடத்திலாவது காசில்லாமல் ஏதாவது தயவு பெற்றுவிடலாம்; இங்கே பெற முடியாது. இது அரசியலாரின் மேற்பார்வையிலுள்ள இடம். ஆயினும் ஒருபொன் முதல் பத்துப்பொன்வரை வகைவகையான காப்புகள் இருக் கின்றன. கடைகளில் விலை கூடக்கூடப் பொருள்களின் பளு ஏறும். இங்கே விலை கூடக்கூடப் பளு குறையும். வேற்றுமை அவ்வளவுதான்! எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்? மாக்: இதோ, ஐந்துபொன். சற்று இலேசானதாகப் பாரும். லாக்கி: காசுக்கேற்ற தோசை அன்பரே, குறையுமில்லை, மிகுதியும் கிடையாது. (கடைகாப்போனிடம்) அதோ அந்த நடுத்தர விலங்கை எடுத்துப் பூட்டு. மாக்: (தனக்குள்) அந்தோ விலைகொடுக்க முடியாமல் இந்த உலகத்தில் எதுவும் பெற முடியவில்லை. திருடும் உரிமைக்கு ஒரு விலை; அதில் அகப்படாதிருக்கும் உரிமைக்கு ஒரு விலை. பெண்கள் ஒழுக்கத்திற்கு ஒரு விலை, அதேசமயம் நற்பெயருக்கு வேறொரு விலை. மனச்சான்றுக்கு ஒரு விலை. கொலைஞர் ஒழுக்கத்துக்குக்கூட ஒரு விலை. உயிருக்கு விலை, சாவுக்கு விலை! விலையில்லாத பொருள்தான் எதுவோ?... ஆனால் விலை கொடுத்தும் ஏமாந்தேன், பெண்களிடம்! எதற்குத் தப்பினாலும் மனிதன் இந்தப் பெண் மாயைக்குத் தப்ப முடியாது போலிருக்கிறது! (பாடுகிறான்) (பாட்டு) துப்பாக்கிக் குண்டுக்குத் தப்பியவர் உண்டு; தூக்குமரக் கயிறுக்குப் பிழைத்தவர்கள் உண்டு; மெய்ப்பவழ நகைகாட்டி மினுக்கிய இப்பெண்கள் மின்னும் இடிப்புயலுக்கு வீழாதார் உண்டோ? (துப்) பல்வண்ணம் காட்டும்நச்சுப் பாம்புக்குத் தப்பிப் பதைந்தோடி தப்பிப் பதைந்தோடி யவர்உண்டு; பாகினிடை அளைந்து மெல்லெனவே அதிலழியும் சில்புழுக்கள் போல, கொல்வனப்பில் பெண்மாயைக்கு உடையாதார் உண்டோ? (துப்) அவர்கள் என்ன கேட்டாலும் நாம் கொடுப்போம். நாம் கேட்பதையோ அவர்கள் கேளாமலே கொடுக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு நாம் எத்தகைய உறுதியும் தருவோம்- அதை நிறைவேற்றுவதும் நிறைவேறா திருப்பதும் நம் செயல்! அவர்கள் எதையும் நம்புவர். நம்பி நடப்பதும் நடவாததும் அவர்கள் சமய விருப்பம்! இதில் யார் யாரைக் குறைசொல்வது? ஆனால் நம்பாத நான் நம்பினேன், கெட்டேன்...அதோ இந்த லாக்கிட்டின் செல்வி, என் முன்னாள் காதலி வருகிறாள். அந்தோ, அவளை என் கண் பார்க்காதிருக்கலாகாதா, காது கேட்காதிருக்கலாகாதா? (லூயி லாக்கிட் வருகிறாள்) லூயி: அட ஏய்த்துத் திரியும் வஞ்சக உருவே! எனக்குச் செய்த துரோகத்துக்குப் பின் என் கண்ணில் விழிக்க உனக்குத் தைரியம் இருக்கிறதா? சிறையில் வந்து பிடிக்கா விட்டால் ஓடிக்கூடப் போய்விடுவாய் போலிருக்கிறதே! மாக்: வீழ்ந்துவிட்ட ஒருவனை இப்படி அவமதித்துப் பழிவாங்க உனக்கு உள்ளத்தில் இரக்க உணர்ச்சி என்ற ஒன்று இல்லையா லூயி! (பாடுகிறான்) (பாட்டு) எண்ணாப் பழிக்கே- ஏந்திழையார் எண்ணிப் பழிசெய்வாரோ? (எண்) இல்லக் கிழத்தியாள் வைத்தபொறி தன்னில் மெல்லவே சிக்கிய எலியதுவே தொல்லைகள் தந்து தன் காய்கறி உணவெலாம் தின்று தொலைத்ததை எண்ணி எண்ணி கொல்லாமற் கொன்றுமே தல்லிச் சிதைத்தபின் கொடியநாய் பறவைக்கே அளிப்ப தைப்போல், பலவகை இன்னல்கள் யான்படும் வேளையில் பார்த்துக் களித்தும் பின் பழி சூழ்கிறாய். (எண்) கணவனை இந்நிலையில் பார்க்க உன் உடல் துடிக்கவில்லையா? லூஸி: என்ன, கணவனா? மாக்: ஆம், மண உறுதி செய்திருக்கிறேனே. மணவினை ஒன்று தானே பாக்கி! பண்புறுதியுடைய மனிதனின் உறுதிச் சொல் செயலுக்குச் சமமானதல்லவா? லூஸி: நல்ல உறுதிமொழி. மலரைக் கசக்குவது வரை உறுதிகூறிக் கடத்திக்கொண்டு போவதுதானே? அப்புறம் உறுதிமொழிக்குத் தேவை இல்லை! மாக்: நான் உறுதிமொழியைக் கடத்தவில்லை. இப்போது இந்தக் கணத்திலும் நிறைவேற்றத் தயார். லூஸி: உன் வஞ்சகம் இங்கே செல்லாது. செல்வி பாலி பீச்சமின் செய்தி எனக்குத் தெரியாதென்று நினைக்கிறாயாக்கும்! மாக்: (தனக்குள்) ஓகோ, இது தெரிந்து போச்சா? (வெளிப்பட) நீ அவளை நம்புகிறாயா? அவள்மீது பொறாமைப் பட்டுவிட்டாயா? லூயி: நீ அவளை மணம் செய்யவில்லை என்றா சொல்கிறாய்? மாக்: உனக்கு ஆத்திரமூட்ட அவள் அப்படிக் கூறிக் கொண்டிருக் கலாம். நான் காதல் விளையாட்டு விளையாடியதை அவள் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கலாம். ஆனால் உன் நிலையிலுள்ள பெண்கள் அவளைப் பொருட்படுத்திக் கோபங்கொள்ளல் தகாது. லூயி: அதெல்லாம் சரி! பாலியின் உரிமைக்கு இடமிருக்கும்வரை என் வகையில் உன் நேர்மை பயன்பட முடியாது. மாக்: பொறாமை பெண்களை எதையும் நம்பச்செய்து விடுகிறது. நரி, குருக்களை அழைக்க முடியுமானால் உன் ஒரு குறையைத் தீர்த்து விடுகிறேன். லூயி: அப்படியானால், நீ உண்மையாகவே பாலியைத் திருமணம் செய்யவில்லை என்று சொல்லு! அவள் கூறுவ தெல்லாம் வெறும் முரட்டடி தானா? அல்லது நீதான் இரண்டு மனைவியைக் கட்டும் அடாப்பழிக்குத் துணிந்து விட்டாயா? மாக்: நான் எத்தனை தடவை சொல்ல! பெண்கள் தங்கள் முக அழகின் தற்பெருமையால் எதையும் கூறி நம்ப வைக்கப் பார்க்கிறார்கள். (பாடுகிறான்) (பாட்டு) கண்ணாடியே, முகக் கண்ணாடியே (கண்) பெண்ணா ரணங்கினைப் பேயாட்ட மாட்டுவிக்கும் (கண்) சின்னஞ் சிறுமிதன் தாய்காட்டத் தன்முகம் தன்னை அழகிதெனத் தான்கருதினாள்! (கண்) தன்னழகுக் கற்பனையைத் தான்செய்து அதன்நிரையில் தற்பெருமை, தற்காதல் கொண்டே தருக்கினாள்! (கண்) பார்க்குந் தொறும்அழகுக் கற்பனை வளர்ந்ததே! பார்ப்பவர்க் கதுதளர்ந்தும் கட்டடம் மிகுந்ததே! (கண்) காதலர்கள் நீங்குமட்டும் காதல்அவள் செய்கிறாள்! காதல்என்ற போர்வையில் தற்காதல் கொள்கிறாள்! (கண்) லூஸி: சரி, எப்படியும் நான் குருக்களைக் கூட்டி வருகிறேன். நீ உன் உறுதியை நிறைவேற்றி என் பெண்மையின் நன்மதிப்பைக் காப்பாற்றித்தா னாகவேண்டும். அதற்கிடையே, கவனமாயிரு. அதோ என் தந்தையும் பீச்சமும் வருகிறார்கள். நீ உள்ளே போ! நானும் போகிறேன்! (லூஸி போகிறாள். மாக்ஹீத் உள்ளே செல்கிறான். கையில் பேரேட்டுடன் திரு. பீச்சமும் லாக்கிட்டும் வருகிறார்கள்) லாக்: இநத் மாக்ஹீத்தின் வகையில் ஊதியத்தைப் பாதிப் பாதியாகப் பங்கிட்டுக்கொள்ள உமக்கு இணக்கம்தானே? திரு.பீச்: இணக்கம்தான். என் பற்றில் போன ஆண்டுக் கணக்கில் பாக்கி எவ்வளவோ? லாக்: பெருந்தொகை இருக்கிறது! தெளிவான கணக்கு இதோ? திரு.பீச்: அரசியலார் ஊதியவகையில் பாக்கிகள் வைத்திருப்பதனால் தான் நாமும் பாக்கி தீர்க்கமுடியாம லிருக்கிறது. அதுமட்டுமா? நாமாவது காசு வாங்காமல் நம் தோழரைத் தூக்குமேடைக்குக் கொண்டு வந்து விடுவோம். நம்மைவிடப் பெரியவர்களான அவர்கள் தம் திருக்கையில் காசு வாங்காமல் எந்தச் சிறு காரியமும் செய்வதில்லை! லாக்: நமக்கு என்னத்திற்கு இந்த வெளியார் பேச்சு, அண்ணே! பொதுவாகக் காலநிலைபற்றிப் பேசினால்கூட ‘என்னையா சொன்னாய், என்னையா சொன்னாய்’ என்று யார் யாரெல்லாமோ சீறி வந்துவிடு கிறார்கள். (பாடுகிறான்) (பாட்டு) குற்றங் குறைகண்டு நல்வழி காட்டிடும் நல்லோரே!- உம்மைச் சுற்றிநீர் பார்த்துக் குறைகூற வேண்டுமே நல்லோரே! (குற்) வஞ்சம் பொய்சூது குடிகொலை செய்பவர் தம்மையே- நீர் கண்டித்திட நேரில், மன்னவை யோர்சீற நேருமே! (குற்) கைப்பணம் வாங்கு பவரைக் கயவர்கள் என்னவே- செப்ப நேர்ந்திடில் துன்பமாம் நீள்பெரி யோர்அவை நேர்வரே! (குற்) திரு.பீச்: சரி, பேர்வழியை நன்றாகப் பார்த்துக்கொள். அவன் தூக்குமரம் ஏறும்வரை அவனால் நம் முயற்சிக்குக் கேடு வந்துவிடப்படாது. (போகிறான். லூஸி வருகிறாள்) லாக்: ஏது லூஸி இப்பக்கம் எதற்காக வந்தாய்? லூயி: (கலங்கிய கண்களைக் காட்டி) என் கண்கள் இதற்கு மறுமொழி கூறும்! லாக்: எதற்காக அழுகிறாய்? உன்னை அவமதித்தானே, அவனுக் காகவோ இந்த மானங்கெட்ட கண்ணீர்? லூயி: காதல், மானத்தை எங்கிருந்தப்பா கவனிக்க முடியும்? கன்னியர்கள் காதல்வயப்பட்டால், காதலரை வெறுக்கவும் முடியாது; தாய் தந்தையருக்கேற்ப நடக்கவும் முடியாது. லாக்: சரி, சரி! கணவன் இறப்பதுவரை உன் கடமை எளிது. நடிப்பழுகையை விட, உன் இயற்கை அழுகை நல்லதுதான்! அதற்குப்பின் பார்ப்போம். லூஸி: ஆ, முடிவு இதுதானா? (பாடுகிறாள்) (பாட்டு) மாளவோ அவர், இவள் தாளவோ? (மாள) மாளவிட் டெனது மன்னவன்தனை மாதுநான் பிரிய லாவதோ? (மாள) ஆறாநாள்முதல் கனவு கண்டுநான் ஏங்கலால் நெஞ்சு வீங்குதே (மாள) லாக்: இதோபார் லூஸி, இந்த வீண் அழுகை எல்லாம் வேண்டாம். எல்லா மனைவியரையும்போல, கணவன் இறந்த போது கடமைக்கேற்ற வகையில் அழுது, பின் அறிவுடையவளாய், மகிழ்ச்சியுடன் இருக்கப் பார்! (பாட்டு) தீமையின் போர்வையில் நன்மையே, தேறுவாய் என்றன் குழந்தையே! (தீமை) அரசன் மாண்டனன் அரசி நீ இனி- உன் அரசன் மாள்வினுக்கு அழுதல் உன்கடன் (தீமை) அழுகைக் கடலிலுன் கவலைகள் போக்கு-அவன் இழக்கும் செல்வம்உன் வறுமையைப் போக்கும்! (தீமை) தூக்கி நான் செல்வதுன் துணைவனை அன்று-நின் ஆக்கக் கேட்டினை என்று நீ காண்பையே! (தீமை) நானன நன்னன நானனா நானனா நன்னன்ன நன்னனா (தீமை) (செல்கிறான். மாக்ஹீத் வருகிறான்) லூஸி: அன்பரே, இன்று குருக்களைக் காணவில்லை. விரைவில் காண்பேன். அது கிடக்கட்டும். நான் மணநாடுவது என் அன்பனுடன் வாழவேயன்றி, மாளக்கொடுப்பதற்கல்ல. என் தந்தையின் மனம் இரங்கு மென்று எண்ணி ஆனமட்டும் பார்த்தேன். இரங்கவில்லை. இனி என்ன செய்வேன்? மாக்: இரங்காத மனம் பணத்தால் இரங்கும். இதோ இந்த இருபது பொன்னை வைத்துக்கொள். சமயம் பார்த்து வேண்டியதைச் செய். லூஸி: பணமோ, பசப்போ, சூழ்ச்சியோ எது செய்தும் என் இன்னுயிர்த் தலைவனைக் காக்க முயற்சி செய்வேன். இது உறுதி. ஆனால் இதோ- (பாலி வருகிறாள்) பாலி: எங்கே என் இன்னுயிர்க் கணவன்? (மாக்ஹீத்தைக் கண்டு) என் கண்ணாளா, தூக்குக் கயிற்றுக்கா உம்மைப் பலிகொடுப்பேன்? ஆ, உம் உயிரைக் காக்கவல்லவா பிரிந்து செல்லச் சொன்னேன்! இப்படி அகப்படுவீர்களென்று நினைத்திருந்தால், என் காதலாலேயே கோட்டை கட்டியிருப்பேனே! மாக்: (தனக்குள்) அந்தோ என் நிலைமை? லூஸி: ஆ, வஞ்சகத்திலும் இத்தகைய வஞ்சகத்தைக் கண்டவர் உண்டா? பாலி: என்னிடம் ஏன் பேசாமல் இருக்கிறீர், கண்ணாளரே? லூஸி: என்னிடம் பேசியதை ஏன் நிறுத்திவிட்டீர், அன்பரே! மாக்: (தனக்குள்) நான் இருவருக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டேன். இருவரையும் ஏற்கமுடியாது. ஆகவே இருவரையும் புறக் கணிப்பேன். இருவருக்கும் பொதுவாகப் பேசி ஒருவரை அகற்றப் பார்ப்பேன். (வெளிப்பட) இந்தப் பெண்களுக்குப் பித்தம் தலைக்கேறிவிட்டது போலிருக்கிறது! லூஸி: ஆ, எனக்கா பித்தம்? என் பெண்ணுரிமை என்னாவது? பாலி: ஆ, என்னையா கூறினீர்கள்? இருக்காது! ஆயினும், நான் உம் மனைவியல்லவா? என்னிடம் பேசாமல் இருக்கலாமா? லூஸி: சிறுக்கி, அவரிடம் ஏனடி பசப்புகிறாய்? மாக்: லூஸி! பாலி: என்ன பண்பற்ற கணவன்! மற்றொரு பெண் என்னை அவமதிக்கப் பார்த்துக்கொண்டு தவளை விழுங்கிய பாம்பு போலிருக்கிறீர்! லூஸி: தானே மனைவியென்று முகத்துக்கு நேரே ஒருத்தி சொல்ல வைத்துக்கொண்டிருக்கிறீரே! என்ன மானக்கேடு! தூக்குமரம் உம்மை ஒரு ஐந்து மாதத்துக்கு முன் தேடி வந்திருக்கப்படாதா என்றுகூட எண்ணத் தோற்றுகிறது எனக்கு! பாலி: சாகும்வரை அன்பு மாறாதிருந்தால், செத்த பின் தெய்வமாக எண்ணியிருப்பேனே! கடைசி நேரத்திலா, இப்படி மனைவியிடம் பாரா முகமாயிருப்பது? லூஸி: (மாக்ஹீத்தை நோக்கிப் பல்லிளித்து) ஆ, அவளும் மனைவியா? இரண்டு மனைவியா நீ கொள்ள நினைந்தாய், பாவி! மாக்: நான் பேசத் தொடங்குமுன்பே இருவரும் பேசினால்- பெண்கள் நாக்கு நீளத்துக்கு வரம்பே கிடையாது! சிறிது பொறுங்கள். லூஸி: என்னால் பொறுத்திருக்க முடியாது. மனித சக்தியால் இத்தனையும் பொறுக்க முடியாது. பாலி: தன் உரிமையைத் தான் கேட்கவா முடியாது? இதற்கு ஏன் அவள் சண்டை, இவர் மூடாக்கு! மாக்: அந்தோ! (பாடுகிறான்) (பாட்டு) இருநல் அமுதக் கலசங்கள்! இடையே இருந்துநான் வாடுகிறேன் (இரு) ஒருநல் கலசம் குறைவானால்- என் இன்பம் முழுதும் நிறைவாகும்! ஒருநல் கலசம் மிகையாகி- என் இன்பம் துன்ப மாயிற்றே! (இரு) இரண்டு பேரும் எனக்காக- இங்கே எதிரெதிர் நின்றுமல் லாடுகின்றீர் இருவர் தம்மையும் ஒன்றாக- நான் ஏதில ராய்விட் டகல்வேனே! (இரு) தனனத் தனனா தன்னன்னா தனனா தனன்ன தானனனா (இரு) பாலி: நீர் என்ன பிதற்றுகிறீர், அன்பரே! இரண்டு பெண்களில் மனைவிக்கு ஒரு சிறு சிறப்புக்கூடக் கிடையாதா?உள்ளத்தில் இல்லா விட்டாலும் மெய்ப்புக்காவது காட்டக் கூடாதா? இல்லை. நீர் இப்படி நடத்துவீரென்று நான் நம்ப முடியாது. உம் துன்பங்களால் உம் அறிவு தடுமாறியிருக்க வேண்டும்! உம் நிலைமை அறியாமல் நான் சீறியதுதான் தவறு. லூஸி: ஓகோ, அப்படியா செய்தி! ஆ, நயவஞ்சகா! போக்கிரி! நான் உன்னை இனி என்ன பாடுபடுத்துகிறேன் பார். பழிவாங்குகிறேன் பார். பாலி: இதுவரை அவருக்காகப் பார்த்திருந்தேன். மனைவி முன் னால் கணவனிடம் இப்படிப் பேச உனக்கு என்ன துணிச்சல்! சீ வெட்கம் கெட்ட பெண்ணே! லூஸி: நானா வெட்கங்கெட்டவள்! இன்னொருவளுக் குரியவரை மணம்செய்துகொண்ட மனைவியாக நடித்து நானா ஏய்க்கிறேன்! மாக்: (தலையிலடித்துக்கொண்டு) அந்தோ, தெய்வமே! (பாட்டு) பாலி: ஆ, ஏமாற்றினாய்! லூஸி: நீ ஏமாற்றினாய்! பாலி: ஆ, ஏமாளி நான்! லூஸி: ஏஏ, ஏமாளியானேன் நான் சோமாறியே! பாலி: போடீ நீ என் தொல்லை இரண்டாக்கினாய்! லூஸி: போடி உன்மீதிலென்ன கோபமெனக்கு- இந்தச் சோமாறி சொன்ன சொல்லை நம்பியே கெட்டேன்அடி. கொலைமரத்தில் கொலைகாரன் கைநடுங்கினால்இந்த ஐந்து விரல் கொண்டவனுக்கு உதவ நான் தயங்கேன்! பாலி: ஆ, ஏமாற்றினாய்! லூஸி: நீ ஏமாற்றினாய்! மாக்: (தனக்குள் லூஸியின் கோபம்தான் பெரிதாய் விட்டது. அவளை ஆற்றுவோம். (வெளிப்பட) வீணே கோபப்படாதே. லூஸி! அவள் வீணே உன்னை என்மீது கிளறிவிடுகிறாள். (பாலியை நோக்கி) இதுவல்ல சமயம், பாலி இம்மாதிரி விளையாட்டு வாதங்களுக்கு. என் பிரச்னை, இப்போது திருமணப் பிரச்னையல்ல. தூக்குமேடைப் பிரச்னை. பாலி: அப்படியானால் மனைவி என்ற என் உரிமையையே மறுக்கிறீரா? மாக்: என் துன்ப நேரத்தில் மனைவி உரிமை கோரி என்னைத் தொல்லைப்படுத்தவேண்டுமா? லூஸி: உண்மையாகச் சொல்கிறேன் செல்வி பீச்சம், நீ உன் குடும்ப மதிப்பை இப்படிக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. பாலி: ஆகா, அவ்வளவுக்கு வந்துவிட்டதா? (பாடுகிறாள்) (பாட்டு) பொறாமையே- பெண்குலத்தை அராவும் கொடிய அரமே! (பொறா) கேலி செய்யவும் வேண்டாம்- பாலிமீது போலி காட்டவும் வேண்டாம்! (பொறா) பெண்ணின் மனமும் விரும்புமோ, பெண்ணைக் கேலி செய்யவே! காதல் அதுவோர் சாதல், அதுவோர் விளையாட் டல்லவே! (பொறா) ஆணின் கடுமை போதாதோ, அவர்கள் சபலம் காணாதோ! பெண்ணும்கூட வேண்டுமோ, பெண்ணின் உலைவு காணவே! (பொறா) தனது காதல் பேணவே தனது திறங்கள் போதாவே! மற்றோர் பெண்ணின் காதலை மறிக்கப் பெண்கள் வருவதேன்? (பொறா) மாக்: தூக்குமேடையின் நிழலிலே, சிறைக்கூடத்திலே, நீ உன் விளையாட்டு வீம்பை நெடுந்தொலை நீட்டுகிறாய், பாலி! போதும், நிறுத்திக்கொள்! லூஸி: நீ குழப்பம் ஏற்படுத்தவே கச்சைகட்டிக் கொண்டிருந்தால், நான் இதோ போய்ச் சிறைகாவலரைக் கூட்டிக்கொண்டு வர வேண்டியிருக்கும். பாலி: ஆடவரைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்தத் துணிச்சல் உனக்கு ஆகாது, லூஸி! (பாட்டு) லூஸி: சிறுக்கி! மேனாமினுக்கி! பார்-உன் செல்லங்கள் என்னிடம் செல்லாது-நீ கிறுக்கியாய் என்னிடம் பேசினால்- பின் கிளர்ந்திடும் என்கோபம் பொல்லாது! (சிறு) பாலி: ஆகா, மாமாரியே குடிகேடி-நீ அடங்கொண்டு வெறியிலென்னைச் சாடுகிறாயோடீ-என் அன்பன் சலுகைஎண்ணி வம்பிட்டு ஆடுகிறாயோடீ-ஆ அன்பனிதைப் பார்த்திருக்க வம்பியுனக்கேதுவரம்போடீ! (திரு. பீச்சம் வருகிறார்) திரு.பீச்: எங்கே என் குறும்புச் சிறுமி? வா இங்கே, உன் கணவன் தூக்குமேடை ஏறட்டும். உன்னையும் அதில் ஏற்றி என் குடியைப் பிடித்த பீடையைத் தொலைக்கிறேன். வா, இப்படி என்னுடன், பாலி: ஆ, அருமை அப்பா! அவரிடமிருந்து என்னைப் பிரிக் காதேயுங்கள். நான் எவ்வளவோ பேசவேண்டும்! (மாக்ஹீத்தை நோக்கி) அன்பரே, உம் விலங்கை என் காலிலும் கோத்து மாட்டிக் கொள்ளும்! அவர் உம்மையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போகட்டும்! திரு.பீச்: (தனக்குள்) பெண்கள் ஒரு பொய்யை ஒன்பது பொய்யால் மறைப்பார்கள். ஒரு மடமையை ஒன்பது மடமையால் அண்டைகொடுக்கப் பார்ப்பார்கள். (வெளிப்பட) உன் செல்லப் பேச்சுக்கள் கேட்க இது நேரமுமல்ல, இடமுமல்ல. வா இப்படி. பாலி: மாட்டேன், மாட்டேன். (பாட்டு) காதலர் பிணைப்பில் ஒருமுடிப்பே காசினி பெயர்த்திடா ஒருபிடிப்பே! (காத) பெற்றோர் எதிர்த்து வந்தாலும் பிணைப்பில் முடிப்புத் தளராதே (காத) ஆரா அரரா அரராரா லாரா லாரரா லலராரா! (காத) (மாக் ஹீத்தைப் பாலி பற்ற, திரு.பீச்சம் அவரை இழுக்க, சிறிது நேரப் போராட்டத்துக்குப்பின் பாலியை உடன்கொண்டு திரு. பீச்சம் செல்கிறார்) மாக்: (நெடுமூச்சு விட்டு) லூஸி, என் கண்மணி! பெண்ணென்றால் பேயும் இரங்குமல்லவா? அவள் தகுதிக்கேற்ப அவளைக் கண்முன்னே நடத்த எனக்கு மன உறுதி போதவில்லை. அதற்கு நான் வருந்துகிறேன். லூஸி: அன்பரே, நான் உம் மனநிலை சிறிதும் புரியாமல் திண்டாடிப் போனேன். மாக்: அதனால்தான் நீ உணர்ச்சி வேகத்தில் சிந்தனையற்றாய். நான் அவளை மணந்திருந்தால் அவள் தந்தையே என்னைத் தூக்கு மரத்துக்குக் கொண்டுவந்திருப்பாரா? லூஸி: (ஐயந் தீர்ந்து கலக்கம் தெளிந்து) ஆ, இப்போது நான் மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு வேண்டுவது திருமணத்தின் கடமையல்ல. என் அன்பனின் உள்ளம் மட்டுமே. நீங்கள் தூக்குமரத்தில் தொங்குவதைக்கூட என்னால் பார்த்திருக்க முடியும். இன்னொருத்தி அணைப்பில் உம்மைக் காணப் பொறுக்கமாட்டேன். மாக்: அப்படியானால் இரண்டு வகையிலும் நீ திருப்தியடையப் போகிறாய். லூஸி: இல்லை. ஒருநாளும் இல்லை. இனி உம்மைத் தூக்கு மேடையிலிருந்து தடுக்காமலிருக்கமாட்டேன். உம் உயிரை நான் காக்கும் உரிமை தாரும். அது இனி எனக்கே உரியதாயிருக்க வேண்டும். காதலுடன் நன்றியும் உம்மை என்னோடு பிணைக்கவேண்டும். மாக்: மிக நன்று. ஆனால் ஒவ்வொரு சமயம், ஒரு கண நேரத்தில் அந்த உயிர் உன் கையில் என்ன பாடுபடுகிறது? லூஸி: இனி உமக்கு இத்தகைய இக்கட்டு வராது. இப்போது என் சிந்தனையெல்லாம் இன்னல் பொறிகளில் சிக்கித் தவிக்கும் உம்மை விடுவிப்பது எப்படி என்பது பற்றித்தான். அந்தோ! (பாடுகிறாள்) (பாட்டு) மாறாக்காதல் துணையன்றி-என் மன்னனுக் கினித்துணை வேறில்லை (மாறா) வேட்டை நாய்கள் பின்துரத்த விழுப்புண் குருதி அதுசோர்ந்து காட்டில் ஓடித் தளர்ந்துவிட்ட நரிபோல் ஏய்த்தான் என்கணவன் (மாறா) தங்கும் புகலிட மொன்றின்றித் -தவி தவிக்கும் என்உயிர் காத்திடுவேன் எங்கும் திரியும் நாய்க்கோட்டை இடைவழி கண்டால் உயிர்மீட்பேன் (மாறா) காட்சி 3 (நியூகேட் சிறை, லாக்கிட், லூஸி) லாக்: வெட்கங்கெட்ட பெண்ணே! நீதான் அந்தப் பயல் தப்பும்படி உதவிசெய்திருக்கவேண்டும். என் திறவு கோலைத் திருடி எடுத்து நீதான் திறந்துவிட்டிருக்கிறாய். இதனால் தந்தை வேலைக்கு இடையூறு நேரு மென்றுகூடப் பார்க்கவில்லை. ஆனால் நீ லாக்கிட்டை இன்னும் அறியவில்லை. என்னையா ஏமாற்றமுடியும்? அதுவும் ஒரு மூளையில்லாத பெண்ணால்! பார், அவனைத் தூக்கிட்டபின் உன்னை என்ன செய் கிறேனென்று! லூஸி: (நடுங்கிக்கொண்டே) நான் இல்லையப்பா! நான் ஒன்றும் செய்யவில்லை. லாக்: அதெல்லாம் என்னை ஏய்க்கமுடியாது. அவனிடம் பணம் வாங்கிக்கொண்டு எனக்கு நட்டம் வருவிக்கப் பார்த்தாய். இப்போதாவது ஒப்புக்கொண்டுவிடு. நீ அவனிடம் எவ்வளவு வாங்கினாய்? லூஸி: அவரிடம் நான் ஏன் பணம் வாங்கப்போகிறேன். அப்பா! நான் அவரைக் காதலிக்கிறேன் என்று உமக்குத் தெரியாதா? லாக்: சீச்சி, நீ படித்த பெண். உனக்கு இப்படியா புத்தி கெட்டுப் போயிற்று- காசில்லாமல் ஒருவனைக் காதலிக்க! நீ என்னைவிடப் புத்தியுடையவள் என்றல்லவா நான் நினைத்தேன். காசு இல்லாமலே காரியம் கெடுத்தாயா? சரி, சரி! போ, போ! என் கண்முன் நில்லாதே! லூஸி: உங்களிடம் முழு உண்மையையும் சொல்லி விடுகிறேன். அவரைக் காதலித்து நான் ஏமாந்தேன். அப்பா, நான் எவ்வளவு செய்தும் அவருக்கு நன்றியில்லை. அவரை ஒரு தடவைக்கு மூன்று தடவை தூக்கிட்டால்கூட நல்லது என்று நினைக்கிறேன், இப்போது! லாக்: அத்தகைய காதல் அரசாட்சி இன்னும் உலகில் ஏற்படவில்லை, லூஸி! நம் ஆட்சியில் ஒரு ஆளை ஒரு தடவை தான் தூக்கிட முடியும். ஏனென்றால் முதல் தடவையிலேயே அவன் செத்துவிடுவான்! (போகிறான்) லூஸி: நன்றிகெட்ட பயல்! அவனுக்குத் தூக்குத் தண்டனை போதாது. என் கைகளால் அவன் கழுத்தை நெரிக்கவேண்டும்! என் உதவியால் தப்பலாம். என்னைக் காதலிக்கலாம். மணம் செய்வதுமட்டும் இன்னொருத்தியை யாம்! அந்தோ! (பாடுகிறாள்) (பாட்டு) என் அழகெலாம் வீணாயிற்றே, அவள்அழகு வண்ணம் மேவிற்றே! (என்) பித்தம் என்காதலின் சித்தமே, பேதைமையால் நொந்தேன் நித்தமே- இங்கே தனியே- உருண்டு- சுருண்டு கிடந்தேன் அத்தனே- ஆனால் அவள் சித்தம் குளிரஎன் காதலில் நித்தம் குளித்து மகிழ்கிறாள்- அவளைக் கனியே- கற்கண்டே- தேம்பழமே எனப் புகழ் பாடியே அத்தன் மகிழ்கிறான் ஊடியே! (என்) நேசித்த என்றனைச் சாடியே-அந்த வேசச் சிறுக்கியோ டாடியே மகிழ்ந்து குலாவினான் கூடியே!-நான்துயர் விழுங்கி- அழுங்கி- புழுங்கி மனம் வேகிறேன்- ஆனால் அவள் முழங்கை கொட்டி என்காதலை ஆள்கிறாள். (என்) (லாக்கிட் வருகிறான்) லாக்: என்ன இன்னும் நின்று சிணுங்கிக் கொண்டிருக் கிறாய்? செய்வதெல்லாம் செய்துவிட்டு அழுகைக்கென்னகேடு? அவனைத் திருமணம் செய்துகொண்டிருப்பதாகக் கூறி என்னை ஏய்த்தாய்! அதுவும் பொய்யென்று தெரிகிறது. எல்லாப் பெண்ணும் உன்னைப் போல மதி கெட்டதுகளா? அந்தப் பாலி அவனை எப்படியோ கைப்பற்றிவிட்டாள். அவன் செத்தால் கூட, உனக்குப் பணம் வராது; அவளுக்குத் தான் போகுமாம்! லூஸி: என்னைத் தூக்குக்கு அனுப்புங்கள் அப்பா. அதில் ஏதாவது உங்களுக்குக் கிடைக்கலாம். லாக்: சீ,போ. அதற்கும் உன்னிடம் என்ன இருக்கிறது! (போகிறான்) லூஸி: காதல், ஏமாற்றம், புழுக்கம், கோபம், எரிச்சல்! எத்தனை உணர்ச்சிகள் என் உள்ளத்தில் குமுறுகின்றன! ஆனால் பழி, பழிக்குப்பழி! இதுவே உன் உள்ளத்தை எரிக்கிறது. (பாடுகிறாள்) (பாட்டு) பழியே, பழியே, பழியே! பழியே என்ஆவியின் வழியே! (பழி) தண்டின்றித் திருப்பு கட்டை அதுவின்றிக் கடலில் திண்டாடும் படகெனவே சீர்குலைய லானேன் (பழி) அலைஎழவே எழுந்து அலைதாழத் தாழ்ந்து நிலைகுலைந்தேன் கடலில் ஒருதுணையும் காணேன் (பழி) துன்பத்தில் எனைத்தள்ளி இன்பத்தில் மிதந்தாள் வம்புற்ற சிறுகள்ளி மணாளன் மனங்கவர்ந்தான் (பழி) (ஃவில்ச் வருகிறான்) ஃவில்ச்: அம்மணி, செல்வி பாலி உங்களைக் காண வருகிறார்கள். லூஸி: ஆ!-சரி- இங்கே அனுப்பு. (ஃவில்ச் போகிறான்) அவளிடம் இனிப்பாகப் பேசித் தேறலால் உள்ளம் திறக்கச் செய்து பின்... (பாலி வருகிறாள்) பாலி: கண்ணே, லூஸி, நான் மதி கெட்டுக் கோபத்தால் உன்னைத் தாறுமாறாகப் பேசிவிட்டேன். என்னை மன்னிப்பாயா? லூஸி: ஆகா! ஆனால் ஒன்று. காதலர் ஊடிய கோபம் கூடினால் தீரும். நம் கோபம் நாம் ஒன்றாக இருந்து கலம் அருந்தினால்தான் போகும். (பாட்டு) இணக்கம் அளிக்கும் நன்கலமே எழிலார் தேறலின் இன்கலமே! (இண) மணந்த மனைவி பிணங்கினால் இணங்கு கணவன் இழைவுடன் அணைந்தே அன்னவள் விருப்பெலாம் அளிப்பான் இன்பில் குளிப்பான் (இண) கலைந்த இன்பத்தின் அமைதி கழிந்த துன்பத்தின் மறதி! தொலைந்த இன்பத் துக்கீடு கலந்த தேறலின் நன்கலமே! (இண) பாலி: (தனக்குள்) ஓகோ! இனிக்கப் பேசிக் குடிக்க வைத்து ஏதோ ஏமாற்றிப் பார்க்கிறாள். மெட்டு விடாமலே இவள் வலைக்குத் தப்பவேண்டும். (வெளிப்பட) எனக்கு இரண்டு நாளாய்த் தலைவலி, லூஸி! தேறல் வகைகள் தலைவலியைப் பெருக்கும். ஆகவே மன்னிக்கவேண்டும். லூஸி: நாகரிகமிக்க பெண்டிரிடம்கூடக் கிடைக்காத நல்ல வகைகள் என்னிடம் இருக்கின்றன, பாலி. சற்றுச் சுவைபார், கண்ணே! (பாட்டு) வா, என் கண்ணே, வா! வன்துயர் போக்குவோம், வா! (வா) நாளைக் கவலை நாளைக்கு, நேற்றைக் கவலை நேற்றைக்கு இன்றைக் கவலை போக்குவோம் (வா) கணகண கணகண கலங்கொட்டுவோம் (வா) கவலையின் நுண்ணிய திவலை களிப்பினை மறைத்திடும் உறைபனியே! கவலை அகற்றிடும் நன்மருந்தே களிப்பருள் தேறலின் செவ்விருந்தே (வா) பாலி: உன் அளவற்ற அன்புக்கு நன்றி, கண்ணே, ஆயினும் இன்று என்னை மன்னிக்கவேண்டும். அதிலும் நான் கணவனை இழப்பதுடன் அவர் அன்புக்கும் திண்டாடுபவள். நீயோ அவரால் கொண்டாடப்பட்டவள். லூஸி: நானல்லவோ அந்நிலையில் இருக்கிறவள், பாலி. ஆனால் கணவன் சாகுந்தறுவாயிலும் உன்னிடமே பாசமுடைய வராயிருக்கிறார். பாலி: நீ பொறாமைப்படத்தக்க அவ்வளவு பாக்கிய சாலியாக நான் இல்லை, லூஸி. (மாக் ஹீத்துடன் லாக்கிட்டும் திரு. பீச்சமும் வருகின்றனர்.) லாக்: பணம் கொடுத்தால் வாங்கும் நேரம் தவறிவிட்டது. மாக்ஹீத்! இனி அந்தப் பேச்சு வேண்டாம். பணம் தராமலே நீ தப்பியோடப் பார்த்தபின், நாங்கள் ஏமாறப்போவதில்லை. திரு. பீச்: ஆம், மாக். இனி நீ வீரத்துடன் உன் முடிவை ஏற்க வேண்டியதுதான். (பெண்களை நோக்கி) நீங்கள் ஏன் இங்கே நிற்கிறீர்கள், பெண்களே! இது நீங்கள் பார்க்கத்தக்க காட்சியல்ல. நீங்கள் போங்கள். லூஸி: (மாக் ஹீத்தின் ஒரு கையைப்பற்றி) கண்ணாளரே, கண்ணாளரே! உம் மனைவி உம்முடனிருந்து பார்க்க இணங்குங்கள். இது என் கடைசி விருப்பம். பாலி: கண்ணாளரே, என்னை நம்பும். இப்போதும் நான் உம் உயிரைப் பாதுகாப்பேன். அதை என்னிடம் ஒப்படையும். லூஸி: அவர் மனைவி நான். அவர் உயிரை அவர் முன்பே என்னிடம் ஒப்படைத்தாய்விட்டது. (பாட்டு) பாலி: கண்ணாளா, இப்பக்கம் பாருமே! லூஸி: கண்மணி என்றனையே சாருமே! பாலி: கண்ணொளி உமக்கென மாளுதே! லூஸி: காரிகை என்றன்சொல்லைக் கேளுமே! பாலி: உம் பாலி இதோ! லூஸி: உம் லூஸி இதோ! பாலி: இங்ஙனம் ஏன் வாளா இருப்பதுவோ! என்றன் இன்னுயிர்க் காதலுக்கு ஈடிதுவோ? லூஸி: என்றன் நெஞ்சம் துடிக்குதே. பாலி: என்றன் உள்ளம் வெடிக்குதே. லூஸி: என்மீது- பாலி: -கோபமா? லூஸி: கண்டீரோ இவ்- பாலி: -அவமதிப்பு? லூஸி: கண்ணாளா என்றனைப் பாருமே! பாலி: கண்மணி என்றனைச் சாருமே! மாக்: அருமை நங்கையீர், நீங்கள் ஏன் சச்சரவிடவேண்டும்? நான் யார் கணவனாயிருந்தாலென்ன? ஒரு சில கணங்களில் என் காரியம் முடிந்துவிடப் போகிறது. திரு.பீச்: ஆனால், அவர்கள் வழக்கு நீதிமன்றத்தில்கூட உம் சாட்சியில்லாமல் முடியாதே. அதற்கு ஒரு வழிசொல்லும். மாக்: என்ன இக்கட்டான நிலை! (பாட்டு) எங்கு திரும்புவேன் நான்- இப்போது ஏது கூறுவேன்? (எங்) ஒருவர்க் களிக்கும் அமுதம்- மற் றொருவர்க் களிக்கும் நஞ்சாம் ஒருவர்க் களிக்கும் ஆறுதல்- மற் றொருவர்க் கிங்கே சீறுதல்! (எங்) பாலி: தந்தையே! நான் அவர் மனைவி; உம் மகள். இரண்டு வகையிலும் வேண்டுகிறேன். எத்தனையோ தடவை சாட்சியுரைகளை மாற்றிச் சொல்லியிருக்கிறீரே! எனக்காக இந்தத் தடவை சாட்சியை மாற்றிச் சொல்லி என் கணவனைக் காப்பாற்றுங்களேன்! என் துன்பங்களை எண்ணிப் பாருங்களேன்! (பாட்டு) உயிரெரியப் பார்த்திருக்கும் உடலானேன் நானே! (உயி) கண்முன்னே உயிர்நாதன் கண்கலங்கி நிற்கிறார்! கண்ணீரின் திரையூடே கருத்தழிந்து நிற்கிறேன் (உயி) கையற்றுக் கைதூக்கிக் கணவன் உயிர்க்காக நைவுற்றுப் போராட நான்பார்த்து நிற்கிறேன். (உயி) வாழ்வளிக்க வல்லதெனக் காதலைநான் மதித்தேன் வாழ்வளிக்கும் காதல்தீ வளர்த்ததனில் குதித்தேன் (உயி) திரு. பீச்: வீணில் அலட்டிக்கொள்ளாதே, பாலி. உன் கணவன் இறப்பது உறுதி. அதை இனி யாரும் தடுக்க முடியாது. லாக்: கொலை மரமேற நேரமாயிற்று; இனிப் போங்கள், போக வேண்டியதுதான். (இடம்: நியூகேட் சிறை) மாக்: ஆ, உயிருக்குயிராக என்னுடன் ஊடாடியிருந்த நங்கையர் எத்தனை பேர்? அத்தனை பேரையும் நான் விட்டுச் செல்கின்றேன். அவர்கள் வடிவங்கள் என் கண்ணீரில் நிழலாடுபவை போலிருக்கின்றன. அவர்களிடம் நான் விடைபெற வேண்டாமா? (பாடுகிறான்) (பாட்டு) விடைதருவீர் என்றன் இன்னுயிர் நங்கையீர் கடைகாத்து நிற்கின்றான் காலன்-நீர் (விடை) இன்னுயிர்க் கடனாற்றி ஏகுகின்றேன் ஏக்கமொன் றின்றிநான் மாளுகின்றேன் என்னுயிர் மாளப்பார்த் திரங்கிநிற்கும் நங்கையீர் கண்பனி நீரிடையே (விடை) பிணக்கில்லை வழக்கில்லை வாதமில்லை, கணக்கெலாம், தீர்ந்தது, காரிகையீர்! மனக்குறை யில்லாமல் மாறாகின்றேன் மங்கையீர், வாழ்திர், நான்ஏகுகின்றேன். (விடை) என் துயர்களுக்கு எல்லையில்லை. ஒரு பெண்ணை மணந்து மற்றொரு பெண்ணை மணப்பதாக ஏய்த்துச் சச்சரவிடச் செய்து, வேறு பல பெண்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு, இரண்டு பெண்களின் தந்தை யராலேயே தூக்குமரத்துக்கு அனுப்பப்படுகிறேன். இத்துன்பத்தை மறக்க இது ஒன்றுதான் (கலத்தை எடுத்து) துணை. (பாடுகிறான்) (பாட்டு) கொடுமை, கொடுமை, கொடுமை!-ஏனோ எனக்கித் தாங்காக் கடுமை! (கொடு) அடுத்து வரும் சாவினிழல் கடுத்து வரும் பொல்லாத் தொடுத்த உருவங் களிடை அடுத்த துணை இதுவே-துயர் துடைக்கும் கல மதுவே. (கொடு) இறப்பது மெய்யென்னில்- அதை மறப் பதுவே நலமாம் இறப்பிக்கும் அவர் மலைக்கச் சிறப்பு அமைதிப் பேறே- இக்கலத்தின் மறப்பு அமைதி வீறே. (கொடு) மாள்வு கொடிது. அதிலும் இளமையில் மாள்வு!- ஆ, மீண்டும் அதே எண்ணங்கள். இவற்றை முற்றிலும் கரைத்து விடுகிறேன். (பாட்டு) இளமையின் எழிலிடை மாளவோ- எனில் இன்பநல் மதுவிடை மாளுவேன்! (இள) கொடுமை, கொடுமை, கொடுமை- அது மாற்றும் செழுமை, செழுமை, செழுமை அடுக்கும் சாவின் நிழலில்- அச்சம் அகற்றும் இதன்நற் குளிர்மை இறுதி உறு ஆயின்- அதன் மறதியே நல் அமைதி! (இள) நம்மினும் உயர்ந்தவர்கள் உண்டு. சட்டத்தை நாம் இரவில் மீறு கிறோம்; பல்லைக் கடித்துக்கொண்டு மீறுகிறோம்; அவர்கள் நம்மைவிட எத்தனையோ மடங்கு எத்தனையோ தடவை மீறுகிறார்கள்; அத்துடன் அவர்கள் பகலில் மீறுகிறார்கள்; புன்னகையுடன் மீறுகிறார்கள். இந்தச் சட்டம் அவர்கள்மீது பாயாது. இந்தக் கொலைமரம் அவர்கள்மீது பாயாது. (பாட்டு) சாயாதுயர்ந்த நல்ல கொலைமரமே! - நீ காசுகண்டு சாய்ந்து நெளிவதென்ன கொலைமரமே? மேடுபள்ளம் பாராது மழை பொழியுதே காடுகரை ஓராது வெயி லெரிக்குதே தகுதியுற்றோர் தகுதியற்றோர் யாவருக்குமே சாக்காடும் நோக்காடும் வந்தடையுதே! (சாயா) வாடுமென்னின் மேலோர் என்னசெய்தாலுமே கூடஇங்கே அன்னவரின் தோழமைகாணேன் நீடுசட்டவலை எவர்க்கும் பொதுவானாலும் தேடுபணம் அவர்க்கு விடுதலையளிக்குதே (சாயா) அஞ்சு கொலைமரமே! நீ விலைமரம்தானோ? விஞ்சுமுன்றன் வாணிகமும் விசித்திரம்தானே மிஞ்சுவிலை தருபவரை விட்டுமற்றோரைத் துஞ்சுவிக்கும் உன்றன் ஒரவஞ்சகமென்னே! (சாயா) (சிறைக்காவலன் வருகிறான்) சிறைக்காவலன்: ஐய, உம் நண்பர், இவர் உம்மைக் காண வந்திருக் கின்றாராம். (செல்கிறாள் பென்பட்ஜ், மாட் ஒதிமின்ட் வருகின்றனர்) மாட்: உம் இடர் கேட்டு மிகவும் வருந்துகிறோம், நண்பரே! ஆண்டியுலகில் எல்லாருக்கும் ஒருநாள் இடர் வருவது இயல்பே. ஆயினும் உம் வகையில் எங்கள் வருத்தமும் கோபமும் பீறிட்டுவருகிறது. பென்: ஆம். உமக்கு நாங்கள் உறுதி தந்திருந்தோம். நாங்கள் அதை மீறவில்லை. ஆனால் இந்தப் பெண்கள் மீறியது கேட்டு வருந்துகிறோம். மாக்: ஆம், ஆனால் பெண்கள் பாவம். அவர்கள் குற்றம் பொறுங்கள். அவர்கள்மீது கோபம் வேண்டாம். எனக்குத் துரோகம் செய்த பீச்சமும் லாக்கிட்டும் உங்களுக்கும் நாளை துரோகம் செய்யக்கூடும்: அவர்களைக் கொலைமரத்துககு அனுப்பத் தவறாதீர்கள். நான் இறந்தாலும் என் ஆவி அமைதி பெறாது, அவர்களை நீங்கள் கொலைமரத்துக்கு அனுப்பும் வரை! மாட்: ஏன், இப்போதே பார்க்கிறோம். நாங்கள் வெல்லுமுன் நீ செத்தால்கூட உன் ஆவிக்கு அமைதி கிடைக்கட்டும்! (சிறைக்காவலர் வருகிறார்) சிறைகா: இரண்டு பெண்கள் வந்திருக்கிறார்கள். (செல்கிறான்) மாக்: ஐயோ, பாலி, லூஸி தானோ என்னவோ? (பாலி ஒருபுறம், லூஸி ஒருபுறம் வருகின்றனர்) லூஸி: கண்ணாளரே! பாலி: அன்பரே! (பாட்டு) லூஸி: உம்மொடு நான் சாவேன்! பாலி: உம்முடனே சாவேன்! லூஸி: என்னுடலும் உடன் தொங்கும்! பாலி: நானும் உடன் தொங்குவேன்! மாக்: சாவிலும் தாரீரோ ஆவியினுக் கமைதி? ஊனுடல் நடுங்குதே! உள்ளுயிர் துடிக்குதே! லூஸி: காதலுக்கொரு மாற்றம் காந்தனே இல்லையா? பாலி: உயிர்த்துணைக் கோரின்னுரை உத்தமரே வேண்டாமா? மாக்: ஆண் எமனே நீவாராயோ?- இந்தப் பெண் எமன்கள் துயர்தீர்க்கப் பாராயோ? (ஆண்) லூஸி: பெண் எமனா நான்? பாலி: பெண் எமனைப் பார்! லூஸி: இரக்கமற்ற ஆடவரே, போய்வரு கிறேன்! பாலி: கொடிய மனம் படைத்தவரே, கோபம் வேண்டாம் வருகிறேன் மாக்: ஆகா மணியோசை! (சிறைக்காவலன் வருகிறான்) சிறைகா: ஐயா, இன்னும் பல பெண்கள் பிள்ளைகளுடன் வந்து நிற்கிறார்கள். மாக்: இன்னுமா தூக்குநேரம் வரவில்லை. (செல்கிறான்) பிள்ளை களுடன் பெண்கள் வேறு வந்துவிட்டார்களோ? நல்லது சாகுமுன் எல்லாரழகையும் சிறிது பருகுகிறேன். (பெண்களும் பிள்ளைகளும் வந்து சூழ்கின்றனர்) ஆகா, கறுப்புப் பெண், சிவப்புப் பெண், நெட்டைப் பெண், கட்டைப் பெண் எல்லாவகையிலும் வேறு வேறு அழகு வடிவங்கள். எல்லாரையும் கீழ்நாட்டுச் சுல்தான்கள் மணந்துகொண்டு வாழ்ந்தனர். இங்கே எல்லாரும் ‘என்னை மட்டும் ஏற்றுக்கொள்’ ‘என்னைமட்டும் ஏற்றுக்கொள்’ என்கின்றனர். (பாட்டு) ஏழிசையில் ஒரிசையைத் தேரச்சொல்கிறீர் ஏழிசையும் செவிமடுத்தால் இன்பமாகாதோ! பொன்மலர் செம்மலர் நீலமலர் யாவுமே நன்மாலை ஒன்றிலே கோப்ப தில்லையோ? வாழவில்லையோ மன்னர் வானவர் போலே கீழ்நாட்டில் வண்ணவண்ண மாதருடனே பாழான வாதங்கள் போட்டிகள் வேண்டாம் பண்புடைய மாதரே வாரீர் வாரீர்! (மாதர் மருண்டு ஓடுகின்றனர். சிறைக்காவலன் வருகின்றான்) சிறைகா: அன்பரீர், உம் நண்பர்கள் திரண்டு திரு.பீச் சமையும் லாக்கிட்டையும் தாக்கத் தொடங்கினர். அவர்கள் உம்மை விடுவிக்க இணங்குகின்றனர். ஆனால் ஒரு கட்டுப்பாடு -நீர் பெண்ணை மணந்தால் தான் விடுவதாகக் கூறுகின்றனர். இதோ மாதரெல்லாம் வந்துவிட்டனர். இனி உம் விருப்பம் அறிய ஆடவரும் காத்திருக்கின்றனர். (ஆடல் பாடல் தொடங்குகிறது.) மாக்: சரி, தூக்குக் கயிறைவிட ஒரு பெண்ணுடன் வாழ்தல் ஓரளவு நல்லதே. உண்மையிலேயே இனி மற்ற பெண்களை விட்டுவிட்டு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதான். மல்லிகை, முல்லை, மகிழம் இனி வேண்டாம். செந்தாமரை ஒன்றே போதும். (பெண்கள் சாரிசாரியாய் வருகின்றனர். ஆண்கள் மற்றொருபுறம். மாக் ஹீத் முன் வந்து பாலியைக் கைக்கொள்கிறான். மற்ற பெண்களையும் முறைமுறையாக ஆடவர்கள் கைக்கொள்கின்றனர்.) ஆடல் பாடல்- வாழி பன்னிற மலர்கள் வாழி அதனிடைச் செம்மலர் வாழி அப்பேருல காண்டவர்கள் வாழி இச்சிற்றுலகா ண்டியரே வாழி நம் சிறிய குடியரசு வாழி எம் பெரிய அன்புறவே! அப்பாத்துரையம் - 23 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) மொழிபெயர்ப்பு  பிறமொழி இலக்கிய விருந்து - 1 ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 23 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 24+288= 312 விலை : 390/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 312  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் 1. மாமனார் வீடு ... 2 இந்த நூலைப் பற்றி ... 3 அறிமுகம் ... 5 முதலாம் காட்சி ... 6 2. நூர்ஜஹான் ... 64 இந்த நூலைப் பற்றி ... 65 மூல ஆசிரியரைப் பற்றி ... 66 நூர்ஜஹான் ... 68 3. மாலதி - மாதவன் ... 129 மாலதி - மாதவன் ... 130 மூல ஆசிரியரைப் பற்றி ... 131 மாலதி- மாதவன் ... 132 4. முத்து மாலை ... 179 அறிமுகம் ... 180 1 .சௌகூன் பேரரசி ... 181 2. முத்துமாலை ... 196 3. நந்தா விளக்கு ... 213 4. ஆண்டிமடம் ... 223 நாடக உறுப்பினர் ... 224 ஆண்டி மடம் ... 226