தென்னாட்டுப் போர்க்களங்கள்-1 முதற் பதிப்பு - 1957 இந்நூல் 2003இல் பூம்புகார் பதிப்பகம், சென்னை - 108. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. முகப்புரை வடதிசை நாகரிகமாகிய அரை இருளும், மேலை நாகரிக மாகிய அரை யொளியுமே இன்றைய தமிழரால் - கற்றறிந்த தமிழரால் கூட-ஒளியாகக் கொண்டு பின்பற்றப்படுகின்றன. வருங்கால உலகம் பெறவேண்டும் முற்றொளிக்கு இவை படிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், தமிழக அளவில் இந்த அரையிருள், அரை ஒளிகளைவிட, முற்காலத் தமிழகத்தின் முழுநிலவொளி அவ்வருங்கால முழுக் கதிரொளி காணும் வகையில் இன்னும் உயர்ந்த படியாக உதவுவது ஆகும். வடதிசை நாகரிகத்தையும் மேலை நாகரிகத்தையும் சரியான முறையில் நாம் பயன்படுத்துவதானால், அவை முற்காலத் தமிழர் நில வொளிக்கும் வருங்கால உலகின் கதிரொளிக்கும் இட்டுச் செல்லும் மேல்திசை, பண்டைத் தமிழகம், வருங்கால உலகம் என்ற படிகளைத் தலை கீழாக்கி இடைக்கால வடதிசையின் பிற்போக்கு வழியில் சறுக்குவதே இன்றைய இந்திய மாநில ஆட்சிக்கும், மாநில நாகரிகத்துக்கும் உரிய ஒரு பெரிய மாய இடராக உள்ளது. மேலை நாகரிகத்தை அயல் நாகரிகமாகவும், வடதிசை அடிமை இருட்கால நாகரிகத்தை அக உரிமை நாகரிகமாகவும் கொள்ளும் வடதிசையின் இன்றைய போக்குத் தமிழரை மட்டுமன்றி உலகையும் இருளை நோக்கியே இட்டுச் சென்று வருகிறது. தமிழக வரலாறு, தமிழகப் பண்பாடு, தமிழக இலக்கியம் ஆகியவற்றின் ஆராய்ச்சி இன்றும் தமிழகத்திலேயே ஆட்சியாளர் பத்திரிகைகள், கல்வி நிலையங்கள், கல்லூரி, பல் கலைக் கழகங்கள் ஆகியவை அக்கரை கொள்ளாத, கண்ணெடுத் தும் பாராத துறைகளாய் உள்ளன. உலக வரலாறுகூட, பள்ளி கல்லூரிகள் பற்றிய மட்டில் இன்னும் ஒன்றிரண்டு மேலை நாடு களின் ஆதிக்க வேட்டை வரலாறாக உள்ளதேயன்றி, ‘ஓருலக’ இனவரலாறாகக் கருத்துருவாகவில்லை. அக்குறிக்கோளை ‘ஓருலக அவை’ (ஐக்கிய நாடுகள் சங்கம்) கொடியாகத் தூக்கியுள்ளது என்பது உண்மையே. ‘உலக மக்கள்’ என்ற குரல் எழுப்பப் பட்டுள்ளதும் உண்மையே. ஆனால், உலக அவையின் உறுப்பினர் இன்னும் நாட்டாதிக்க அரசுகளும் ஆதிக்க நாடுகளும் மட்டுமே. மக்கள் நேரடிப் பேராட்சி இன்னும் அதைத் தீண்டவில்லை. அது மட்டுமன்று. உலகக் குறிக்கோளை முதன் முதலில் உலகில் உயர்த்திய இனம், வள்ளுவர் இனம், தமிழினப் பண்பாடு அதில் இடம் பெறவில்லை. அதில் வீற்றிருக்கும் அரும்பெரும் உரிமை பெற்றிருந்த ஒன்றிரண்டு தமிழர்; தமிழ் எனற பெயரை மறந்தும் `உச்சரிக்காத’ தமிழர்களே! ஆதிக்க இனங்கள், நாடுகளைக் கட்டுப்படுத்த, மொழி இன சமன்மை காக்க இன்னும் வகை காணப்படவில்லை. இந்நிலையில் இன்றைய உலகக் குறிக்கோள் ‘தமிழகமில்லாத ஒரு உலகக் குறிக்கோள் மட்டுமல்ல, ‘தமிழிகம்’ போன்ற ஆதிக்கமற்ற, உரிமையற்ற இனங்களை விலக்கி வைத்த ஓர் உலகக் குறிக்கோளாகவே உள்ளது; பண்டை நாகரிக நாடுகள் பலவும் இல்லாத இடைக்கால நாகரிகங்களின் மேற் பூச்சு உலக மாகவே உள்ளது. தமிழகத்தின் முழுநிறை வரலாறு வகுத்துக் காண்பது என்பது எளிதன்று. மேல் திசைத் தொடர்புகளிலிருந்தும், மேல் திசை வடதிசையாளர் மேற்கொண்டுள்ள பழம் பொருளாராய்ச்சி, மொழியாராய்ச்சி, கல்வெட்டாராய்ச்சிகளின் உதவிகொண்டும் உலகின் பெரும் பகுதியின் வரலாறும் எழுதப்பட்டு வருகின்றது. இவ்வரலாறுகள் இயற்றியவர் தமிழ், தமிழினம், தமிழகம் ஆகியவை பற்றி எதுவும் அறியாதவர், அறிய முடியாதவர்; அவ்வழி நம்பிக்கையின் நிழலோ, களவோ அற்றவர். அதுமட்டுமன்று. நடு நிலையுணர்வு அவ்வழி அவர்களில் பெரும்பாலாரை நாடச் செய்யவில்லை. மேலைப் பற்றாட்சி முதன்மையாகவும், வடதிசைப் பற்றாட்சி செறிவாகவும் அந்நடு நிலையைத் தடையிட்டு நிறுத்துகிறது. கிட்டிய சான்றுகளைக்கூட, உலகப் பொது மக்களோ, தமிழரோ, அறியாத வகையில் திரையிட்டுள்ளனர் பலர். ஒருசாரார் அறிவதை வேறொருசாரார் அறியாமல் மறைக்கும் தட்டிகள் இட்டுள்ளனர் வேறு சிலர். இக்குறைபாடுகள் இன்று பெரிதாகத் தோற்றுவது இயல்பே. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் இவை இன்னும் பெரிதாகத்தான் இருந்தன. குறைபாடுகளை அகற்றும் முயற்சியே குறைபாட்டையும் காட்டும்; நிறைவை நோக்கியும் நம்மை ஊக்கும். பல இடர்கள், தடைகளுக்கிடையே சென்ற அரை நூற்றாண்டில் பண்டை இலக்கிய ஒளியும் பண்டை வரலாற்றொளியும் சிறிது சிறிதாக ஆய்ந்து பல அறிவுத் தொண்டர்கள் சேகரித்த சேகரத்தின் பயனே நம் இன்றைய அறிவு, இன்றைய குறைபாட்டறிவு! அவ்வனுபவங்களின் விளைவே இச்சிற்றேடு. போர்களும் அரசர் ஆட்சிகளும், வெளி நாட்டுத் தொடர்புகளும் வரலாற்றின் உயிரல்ல என்பதை மேலை வரலாற்றாசிரியர்கள் சுட்டிச் சுட்டிச் சென்றுள்ளனர். அதன் பயனாகவே இலக்கிய வரலாறு, சமய வரலாறு, அரசியலமைப்பு வரலாறு, பொருளியல் வரலாறு முதலிய வாழ்க்கை நாகரிக வரலாற்றுப் பகுதிகள் உலகில் விளக்கமடைந்து வருகின்றன. ஆனால், நம் தமிழகத்தின் நிலை இவ்வகையில் தலைகீழானது. நமக்குக் கிட்டும் வரலாற்றாதாரம் உலகில் வேறெந்த இனத்துக்கும் கிட்டாத ஒன்று. அது உலக வரலாற்றுக்கே ஒரு புதுத் திசை திருப்பியுதவவல்லது. சங்க இலக்கியம் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் அரசியல், சமய, சமுதாய, பொருளியல் வாழ்வை நாம் அறிவது போல், உலகில் வேறு எந்தக் காலத்துக்கும் முழு வரலாற்றோவியம் காண முடியாது. இதை எல்லா வரலாற்றாசிரியர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், இதிலேயே தமிழர் நெடுநாள் சொக்கியிருந்துவிட்டனர் எனலாம். புலமை சான்ற வரலாற்றாசிரியர் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகம் பற்றி அணி அணியாக எழுதினர். நுணுக்க விரிவாக எழுதினர். ஆனால், அதன் பிற்பட்ட 1800 ஆண்டு வரலாற்றுக்கு அது போன்ற இலக்கியம் இல்லை. அதுபோன்ற வரலாறு நீண்ட நாள் எழுதப்பட முடியாது. இது உலக வரலாற்றிலே ஒருபுதிர் - உலக வரலாற்றுக்கே ஒரு புதிர் ஆகும். கல்வெட்டு, பட்டயங்கள், நாணயங்கள் உதவியால் தமிழ கத்துக்கு நாம் காணும் வரலாறு சென்ற ஆயிர ஆண்டு வரலாறே. அது சங்ககால வரலாறு போல் நிறைவுடைய தேசிய வரலாறு அல்லவே அல்ல. ஆனால் அது உலக வரலாறு தொடங்கிய இடத்தில் தொடங்கிற்று - ஆண்டு, நாட்டுப் பெயர், இடம், மன்னர் பெயர் முதலியன அதில் உண்டு. போர் உண்டு, மன்னர் பெயர் வரிசை, செயல் வரிசை உண்டு, இதுவே உண்மை வரலாறு என்று கொண்டவர் - சிறப்பாக மாணவர் பலர்! ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்ற இச்சிற்றேடு மூவகைக் குறிக்கோள்களுடன் எழுதப்பட்டுள்ளது. அது தமிழகத்தை மையமாகக் கொண்டு அதன் அரசியல் விரிவாகிய தென்னாட்டிலும், அதனினும் விரிந்த பண்பு விரிவாகிய தமிழுலகம், அதாவது தென் கிழக்காசியாவிலும் கண்ணோட்டம் செலுத்தித் தமிழகத்தேசிய வாழ்வின் உடலும், உயிர் மையமும் காண முயன்றுள்ளது. அந்நாடுகளின் தேசிய, இன உரிமை வரலாறுகளில் வருங்கால வரலாற்றாசிரியர் மிகுதி கவனம் செலுத்தும்படி அது அவர்களைத் தூண்ட முனைந்துள்ளது. இரண்டாவதாக, போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகியவை தென்னகத்தைப் பற்றிய அளவில் வெறும் நிகழ்ச்சிகளல்ல. வரலாற்றின் எலும்புருவம் மட்டு மல்ல. அவையே தமிழர் தேசீய வாழ்வின் பல திரும்பு கட்டங்கள், பண்பு மாறுபாட்டுக்கணுக்கள் ஆகும். அத்தேசிய வாழ்வுக்கு உருத்தருபவையும், அதன் வளர்ச்சி தளர்ச்சிகள், உறுதி தளர்வுக் கூறுகளை வகுத்தமைக்கும் ஊழ்க்கூறுகளும் அவையே, ஆகவே கூடிய மட்டும் போர்க்கள வரலாறு தேசிய வரலாற்றின் எலும்புமையமாக , கணுமையங்களாக, திரும்பு கட்டங்களாகவே விளக்கப் பட்டுள்ளன. மூன்றாவதாக, போரும் தேசிய வாழ்வும் கூட நாட்டின் எலும்புக்கூடும், உடலும் மட்டுமே. அவற்றின் உயிர் அதன் தேசியப் பண்பும், அப்பண்பு பகல் உலகுடன் கொண்டுள்ள தொடர்புமேயாகும். நாட்டுக்கு மட்டுமன்றி உலகுக்கே வருங்கால வளர்ச்சிக்குரிய வழியும் திசையும் காட்டுவது இவ்வுயிர்ப் பண்பேயாகும். ஆகவே, நிகழ்ச்சி கடந்து அவற்றின் காரண காரியங்களை ஆராய்வதும், அவற்றை நாடுகடந்து உலகில் கண்டு மதிப்பிட முயலுவதும் தேசிய வரலாற்றாசிரியன் இன்றியமையாக் கடமையாகும். தமிழக வரலாற்றின் உயிர் காண்போர் அவ்வரலாறு உண்மையில் உலகவரலாற்றின் ஓர் உட்கூறே என்பதை நெடுநாள் காணாதிருக்க முடியாது. இன்றைய உலகம், ஓருலகம் ஆக முடியாமல் தடுமாறுகிறது என்றால், இன்றைய இந்திய மாநிலமும் கீழ் திசையும் ஒற்றுமை காண முடியாமல், தற்பண்பு உணர முடியாமல் தத்தளிக்கின்றனவென்றால், அது தமிழக வரலாறு காணாத குறையாலும், தமிழக வரலாற்றொளியற்ற உலக வரலாறும், கீழ்திசை வரலாறும் காண முயல்வதாலுமே என்னலாம். மேலும், உலகின் எல்லா நாடுகளின் பழமை வரலாறு களும் தமிழக வரலாற்றுடன் தொடர்பு கொண்டவை. தமிழக வரலாற்றில் கருத்துச் செலுத்தாத உலக வரலாற்றாசிரியர் அத்தகைய பல உலகப் பழமைகளை உலக வரலாற்றுடன் இணைக்க முடியாமல் விட்டுவிட நேர்ந்துள்ளது. உலக வரலாறும் உலக நாகரிகமும் உயிர் பெறாச் சித்திரங்களாய் இயங்குவதன் காரணம் இதுவே. இம் முத்திறத்திலும் தமிழக வரலாற்றுக் கூறுகளைச் சுட்டியே னும் செல்ல இச்சிற்றேடு முயன்றுள்ளது. தமிழுலகும் அறிவுலகும் -தமிழ்ப் பற்றுடைய உலகு மட்டுமன்று, உலக அறிவில் முனைந்தாலும் தமிழினத்தைப் புறக்கணிக்க விரும்பாத அறிவுலகும் -இம்முயற்சியைத் தமிழ்த் தொண்டிலும், உலகத் தொண்டிலும், ஒரு சிறு கணுவாகக் கொண்டு வரவேற்று, இன்னும் இது போன்ற முயற்சிகளை மேன்மேலும் ஊக்கிப் பெருக்கும் என்று நம்புகிறோம். 1. வீரமரபு சங்க காலம் “வீரம் செறிந்த தமிழ்நாடு!” “புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு!” “கல்விசிறந்த தமிழ்நாடு!” “செல்வம் எத்தனை உண்டு புவிமீதே அவையாவும் படைத்த தமிழ்நாடு!” வீரம், புகழ், கல்வி, செல்வம் ஆகிய பண்டைத் தமிழகத்தின் மரபு வளங்களை எண்ணிப் பெருமைப்படுகிறார், கவிஞர் பாரதியார்! இந்நான்கு கூறுகளிலுமே தமிழகம் இன்று அடைந் துள்ள நிலையை எண்ணினால் பாரதியார் உரைகளை நாம் கவிஞர்களுக்கு இயல்பான மிகையுரைகளேன்றோ, புனைந்துரை களென்றோதான் கருத வேண்டி வரும். ‘கொடுக்கிலாதானைப் பாரியே’ என்றும், “போர்க்களங் காணாதவனைப் புலியேறு” என்றும் புகழும் கவிராயர் மரபில் இவையும் சேர்ந்தவைதானோ என்று எண்ணத் தோன்றும். கவிஞர் பாரதியாருக்கே இத்தகைய ஐயங்கள் ஏற்பட்டிருந் தனவோ, என்னவோ? அவர் அவற்றை வரலாற்றுப் புலவன் மரபில் நின்று வகுத்துரைக்க முயன்றுள்ளார். கம்பன், இளங்கோ, வள்ளுவர் ஆகிய கலைச்சிகரங்களை அவர் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார். அக்கல்விக் கடல்களைத் தந்த தமிழ் நாடு ‘கல்வி சிறந்த தமிழ்நாடே’ என்பதை மெய்ப் பிக்கின்றார். இதுபோலவே ‘வீரம் செறிந்த தமிழ்நாடு’ ‘புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு’ ‘செல்வம்...... யாவும் படைத்த தமிழ் நாடு’ என்ற கூற்றுகளையும் அவர் வகுத்து விளக்க முற்பட் டுள்ளார். புனைந்துரையன்று, வரலாறே! தமிழகத்தின் வீரப்புகழ் வெறும் புனைந்துரையன்று, மிகை யுரையன்று; வரலாறு காட்டும் செய்தியேயாகும். கவிஞர் பாரதியார் அவ்வரலாற்றுச் செய்திகளைத் திரைப்படக் காட்சிகளைப் போல நம் முன் ஓடச் செய்கின்றார்; “விண்ணை இடிக்கும் தலைஇமயம் -எனும் வெற்பை அடக்கும் திறலுடையார் -சமர் பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் -தமிழ்ப் பார்த்திபர் நின்ற தமிழ்நாடு” நில எல்லையில் தமிழர் பண்டைப் பெருவெற்றிகள் இமயத்தை அடக்கின. தமிழ் மூவேந்தரும் வில், கயல், புலி ஆகிய முத்தமிழ்க் கொடிகளையும் இமயமலையுச்சியில் பொறித்தார்கள். நில உலகத்தின் கூரை எனப்படும் இமயம் தமிழர் வீரப் புகழை வானகத்துக்கு எடுத்துரைத்தது. அது தமிழர் தம் கொடி மரமாகவே அன்று நிலவிற்று. அத்துடன் இமயத்தையடுத்த வடநாடாகிய கங்கை நாட்டையும் இடை நாடுகளாகிய வங்கத்தையும், கலிங்கத்தையும் வென்று அவர்கள் போர்ப் பரணி பாடினார்கள். கரிகால சோழன் இமயங்கடந்து மேருமலையின் உச்சியையே தாக்கினான்; அதைத் தன் செண்டாயுதத்தால் அடித்து அதன் தருக்கை அடக்கினான்; அதன் முன்புற நெற்றியில் மட்டுமன்றிப் பின்புறத்திலும் தன் புகழ் எழுதுவதற்காக, அவன் அதன் தலையைத் திருகினான்; இருபுறங்களிலும் தன் புலிக்கொடி பொறித்து, வடதிசைப் பெருமன்னரிடம் பெரும் பொருள் நிறைகொண்டு மீண்டான். சேரன் செங்குட்டுவன் கங்கைக் கரைகடந்து ஆரிய அரசர் கனகன், விசயன் ஆகியவர்களை முறியடித்தான், அவர்கள் தலைகள்மீதே இமயமலையின் பெருங்கல்லொன்றை ஏற்றிக் கொண்டு தமிழகத்துக்கு வந்தான். தன் தலைநகராகிய வஞ்சியில் தமிழர் கற்புத் தெய்வமாகிய கண்ணகிக்கு அக்கல்லிலேயே சிலை செதுக்குவித்தான். இது தமிழ்ப் பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் தரும் செய்தியாகும். கடல் கடந்த வெற்றிகள் நில எல்லையில் தமிழர் வெற்றிகள் இவை. ஆனால், ஏனைய கீழ்திசை மன்னரைப்போல, அசோகன், ஹர்ஷன், அலாவுதீன், அக்பர் ஆகியவர்களைப்போலத் தமிழர் நிலப் பேரரசுடன் நின்றவரல்லர். அவர்கள் தமிழ்க் கொடிகள் கடல் அலைகள் மீதும் தவழ்ந்தன. பாரதியார் கவிதைமொழிகளிலே இந்த வெற்றிகளும் எதிரொலிக்கின்றன. சிங்களம், புட்பகம், சாவகம் -ஆதிய தீவுபலவினும் சென்றேறி -அங்கே தங்கள் புலிக்கொடி, மீன்கொடியும் நின்று சால்புறக் கண்ட தமிழ்நாடு. தமிழர் கை வரிசைகள் கடல் கடந்த நாடுகளாகிய இலங்கை, பர்மா, மலாயா, அந்தமான் -நிக்கோபார்த் தீவுகள், சுமத்ரா, ஜாவா, இந்து-சீனா ஆகிய தென்கிழக்காசியப்பகுதிகளிலும் பரவியிருந்தன. அந்நாடுகளிலெல்லாம் பாண்டியர் தங்கள் மீன்கொடியையும், சோழர் தங்கள் புலிக்கொடியையும் நாட்டி, ஆட்சியும் வாணிகமும் கலையும் பரப்பியிருந்தனர். கிழக்கே சென்ற கை மேற்கேயும் செல்லத் தவறவில்லை. சேரரும், பாண்டியரும், சோழரும் மாலத்தீவங்கள், இலக்கத் தீவங்கள், கடம்பர் மூலதளமான வெள்ளைத்தீவு, யவனர்நாடு ஆகியவற்றில் தம் ஆணை பரப்பியிருந்தார்கள். அவர்கள் வாணிக மும், தொழிலும், குடியேற்றங்களும் இவ்வெல்லை கடந்து, கிழக்கே சீனம், சீயம் (சயாம்) நாடுகளையும், மேற்கே சிந்துவெளி, ஏலம், சுமேரிய நாகரிகங்கள், பாபிலோனியா, அஸிரியா, பாலஸ்தீனம், எகிப்து உரோமகம் ஆகிய நாடுகளையும் அளாவி ஒளி வீசினன். கவிஞர் பாரதியாரின் சொற்கள் இவற்றையும் சுட்டிக் காட்டுகின்றன. சீனம், மிசிரம், யவனரகம் -இன்னும் தேசம்பலவும் புகழ்வீசிக் -கலை ஞானம், படைத்தொழில், வாணிகமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு. சிங்களம்- இலங்கையையும், சாவகம்- மலாயா, சுமத்ரா, ஜாவா ஆகிய நாடுகளையும், புட்பகம்- பர்மாவையும், மிசிரம்- எகிப்தையும், யவனரகம்- கிரேக்க, உரோம நாடுகளையும் குறிப் பவை. தவிர, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் மலாயா நாடு- கடாரம் என்றும், காழகம் என்றும், பர்மா- அருமணம் என்றும் அழைக்கப்பட்டன. காழகம், கலிங்கம் என்ற நாட்டுப் பெயர்கள் தமிழிலக்கியத்தில் அந்நாடுகளுக்குரிய துணி வகைகளின் பெயர் களாகவும், வங்க நாட்டின் பெயர், கங்கையாற்றில் செல்ல உதவிய தட்டையான கப்பல் வகையின் பெயராகவும் விளங்கின. இலங்கையின் பெயராகிய ஈழம், பொன்னின் பெயராக வழங்கிற்று. இவை தமிழரின் மிகப் பழமை வாய்ந்த கடல் கடந்த அயல் நிலத்தொடர்புகளுக்குத் தமிழ் மொழியே தரும் அகச் சான்றுகள் ஆகும். ஆரியர் இமயம் கடந்து வருவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே தமிழினத்தவர் எழுத்தும் கலையும் நாகரிகமும் உடையவராய், சிந்து கங்கை வெளியெங்கும் பரவி நாடு நகரங்களும், கோட்டை கொத்தளங்களும் நிறுவி வாழ்ந்தனர். கி.மு. 3000 ஆண்டளவிலேயே அவர்கள் (வணிகர்) சிந்து வெளியிலும் ஏலம், சுமேர் ஆகிய இறந்துபட்ட நாகரிக வெளிகளிலும் வாணிகம் செய்தும் குடியேறியும் நாகரிகம் பரப்பியுமிருந்தனர். ஏலம், சுமேர் மக்களும் எகிப்தியரும் தமிழரின் பண்டைக் கிளையினங்களாகச் சென்று குடியேறியவர்கள் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். திருத்தந்தை ஹீராஸ் தமிழினத்தவரில் ஒரு சாராரான திரையர் அல்லது திராவிடர் நடுநிலக்கடலெங்கும் பரந்து, ஸ்பெயின், பிரான்சு, இங்கிலாந்து முதலிய நாடுகளிலும், நடு அமெரிக்காவிலும்கூட வாழ்ந்து பண்டைப் பெரு நாகரிகங்கள் வளர்த்திருந்தனர் என்று கருதுகிறார். இப்போதுள்ள மனிதஇனம் நாகரிகமடையு முன்பே, உலகெங்கும் பரவியிருந்த, மரபிழந்து போன ஒரு முன்னைய நாகரிக இனத்தின் உயிர்க் கால்வழியே தமிழ் இனம் என்பர் ‘உலக வரலாறு’ எழுதிய எச்.ஜி. செல்ஸ் என்பார். உள் வளர்ச்சி மனித இன வரலாறு எங்கும் பொதுவாக வளர்ச்சியையே காட்ட வேண்டும், வளர்ச்சியையே காட்டுகிறது. ஆனால், கீழை உலக வரலாறு பொதுவாகவும், தமிழக வரலாறு சிறப்பாகவும் இதற்கு மாறான போக்கைக் காட்டுகிறது. வாழ்ந்த தமிழகம், உலகாண்ட தமிழகம், உலகின் செல்வம் திறை கொண்ட தமிழகம் படிப்படியாகத் தாழ்வுற்று இன்றைய அவல நிலையை எட்டி யுள்ளது என்பதையே வரலாறு காட்ட வல்லது. ஆனால், இது தமிழகத்தின் வரலாறு மட்டுமல்ல; தமிகத்துடன் ஊடாடிய பண்டைப் பெரு நாகரிக இனங்கள் அனைத்தின் வரலாறுகளும் இதுவே. உண்மையில் அவ்வினங்களில் பல இன்று தடமற அழிந்துவிட்டன. பண்டை ஃபினீஷியா, கார்தேஜ், ஹிட்டைட் பேரரசு, ஏலம், சுமேர் ஆகியவை இன்று புதை பொருளாராய்ச்சி யால் மட்டுமே அறியப்படவேண்டியவை ஆகியுள்ளன. எகிப்தியர், பாரசீகர், கிரேக்கர், உரோமர் ஆகியோர் தம் நாட்டில் பிற இனங்கள், பிற நாகரிகங்கள், சமயங்கள் வாழவிட்டு தம் புகழை மட்டும் நாகரிக உலகில் தடம் பொறித்துச் சென்றுள்ளனர். சீனரும் தமிழரும் மட்டுமே தம் பண்டைப் புகழைத் தாமே தற்கால உலகிற்கு அளிக்கும் பழமைத் தூதுவராக இன்று தற்கால உலகிலேயே காட்சியளிக்கின்றனர். தமிழர் வரலாற்றுக்கும் சீனர் வரலாற்றுக்கும் ஒரு பெரிய வேற்றுமை உண்டு. சீனர் வரலாறு சீனத்தின் பழம்புகழை மட்டுமே காட்டுகின்றது. தற்காலச் சீனம் அழியாது நின்று புதுவாழ்வும் அவாவிநிற்பது உண்மையே. ஆனால், இன்றைய சீனத்தின் புது வாழ்வு இன்றைய உலகத்தின் புதுவாழ்வில் ஒரு பகுதியே. அது தன் பண்டைப்புகழின் புதுமலர்ச்சியாகப் புதிய வளர்ச்சி பெறவில்லை. ஆனால், தமிழக வரலாறு பழம் புகழைமட்டும் காட்டவில்லை; அந்தப் புகழ் படிப்படியாகத் தளர்ந்து அவலநிலையுற்று உலகப் புதுவாழ்வில் புதுப்பங்கு பெறுவதை மட்டும் காட்டவில்லை. பழம்புகழின் தளர்ச்சியுடன் ஒரு புது நிகழ்ச்சியாக, அந்தப் புகழின் புதுமலர்ச்சியையும் நாம் அருகருகே வரலாற்றில் காணலாம். தமிழகம் இன்று உலகின் புதுவாழ்வில் பங்குகொள்வதுடன் அமையவில்லை. உலகுக்கு ஒரு புது வாழ்வும் புது மலர்ச்சியும் உண்டுபண்ணும் வகையில் அது தன் பழம் புகழைப் புதுப்பிக்க முனைந்துள்ளது. அதுவே தமிழகத்தின் உள்ளேயும் அதற்கு வெளியே அகல் உலகிலேயும் இன்று நாம் காணத் தொடங்கியிருக்கும் இரு திசைப்பட்ட மறுமலர்ச்சித் துடிப்பு ஆகும். தமிழகத்தின் வரலாறு இவ்வகையில் தமிழகத்தில் பற்றுடைய தமிழர்க்கு மட்டுமின்றி, புதிய உலகில் பற்றுக் கொண்ட உலக வாணருக்கும் தனி முக்கியத்துவம் உடையதாகும். வருங்காலத் தமிழகத்துக்கு எச்சரிக்கை தரும் முறையில் அது பண்டைப்புகழ் நலிந்த வகைகளையும் காட்ட வேண்டும். வருங்காலத் தமிழகத்துக்கும் உலகுக்கும் ஊக்கம் தந்து புதுவழி காட்டும் முறையில், அப்பழம்புகழ் அழியாது நீடித்து நின்ற வகைகளையும், அதன் நலிவிடையே உள் விரவி எழுந்து வளர்ந்து வரும் புதுமலர்ச்சியின் வளர்ச்சிகளையும் நன்கு எடுத்துக் காட்டவேண்டும். இவ்விரண்டுக்கும் மூலாதாரமாக உலகம் நெடுநாள் மறந்துவிட்ட, சிற்சில சமயம் உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுவிட்ட, அப் பழம்புகழின் பண்பையும், அளவை யும் நாம் ஆராய்ந்து மதிப்பிட்டுக் கணித்தறிவது இன்றியமையாத முதற்படியாகும். தமிழர் தேசியம், அண்மையில் தன்னுரிமையும், தன்னாட் சியும் பெற்ற தமிழகம் இதில் முனைந்து முன்னேறும் பெரும் பொறுப்புடையது. தமிழர்தம் பழைய வாழ்வை உள்ளவாறறிய விரும்புகிறவர் களுக்குத் தமிழ் இலக்கியம் பொதுவாக ஒரு திரையிட்ட பல கணியாய் உதவுகிறது. சங்க இலக்கியம் இத்திரையின் ஒளியார்ந்த பகுதியேயாகும். ஆனால், காணும் கண்ணொளிக்கு விளக்கமாகப் பழமை ஒளி வந்து திரையில் கூடும் பகுதி புறநானூறே எனலாம். அது தொடர்ச்சியுடைய ஒரே வீர காவியமல்ல; ஆனால், தமிழர் வீர காவியங்களுக்கெல்லாம் அதுவே தலையூற்றி என்னலாம். தமிழர் வீர காவியங்கள் பலவற்றின் சிறு வண்ணப் படிவங்களின் தொகுதியாக அது விளங்குகிறது. புறநானூற்றுக் காலத் தமிழகம்: இரு கருத்துரைகள் தமிழ் வெறியர், தமிழ்ப் பற்றார்வலர்களை மட்டுமன்றி, ஆறியமைந்த தமிழார்வமுடையவர்களைக்கூடத் தட்டியெழுப்ப வல்லவை. புறநானூறு பற்றிக் காலஞ் சென்ற இராவ்பகதூர் எஸ். வையாபுரி அவர்கள் குறிப்பிட்ட இரண்டு கருத்துகள். புறநானூற்றுக் காலத் தமிழினமும் இக்காலத் தமிழினமும் பெயராலும் உடலாலும் ஒன்று; உயிராலும் பண்பாலும் வேறு என்று கருதுபவர் அவர். தமிழார்வலர் இன்று அவ்வாறு கருத முடியாது. பழந்தமிழினமும் இன்றைத் தமிழினமும் உயிராலும் பண்பாலும் ஒன்று; உடலாலும் சூழலாலுமே வேறுபட்டது என்றுதான் நாம் கருதுகிறோம். ஆயினும் இந்நிலையிலும் இராவ்பகதூர் அவர்களின் கருத்துகள் புதுமையுடையன. புத்துயிரும் புத்தூக்கமும் எழுப்புவன என்றே கொள்ளத் தக்கவை. அவற்றில் கருத்துச் செலுத்துவது பெரும் பயனுடையதாகும். என்பதில் ஐயமில்லை. அவர் முதல் கருத்து, வரலாற்று முக்கியத்துவம் உடையது. மொழியாராய்ச்சியாளரின் தனிப்பட்ட கவனத்திற்குரியது. “முதலாவது நாம் கவனிக்கத் தக்கது, திராவிட மொழிகள் பலவும் புறநானூற்றுக்குப்பின், இவ்விரண்டாயிரம் ஆண்டுகளில் தோற்றியவைகளே. மலையாளம் சுமார் கி.பி. 1200-ல் தமிழி லிருந்து கிளைத்தது. இதற்கு 4 அல்லது 5 நூற்றாண்டுகளுக்கு முன்னே கன்னடமும் தெலுங்கு கிளைத்தன. “தமிழுக்கும் இவற்றுக்கும் இடையேயுள்ள தொடர்பு தாய்மை (சேய்மை)த் தொடர்பா, அல்லது தமக்கை தங்கைத் தொடர்புதானா என்ற விவகாரம் இப்போது அவசியமில்லை. ஆசிரியர் சுந்தரம் பிள்ளை, “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளம் துளுவும் உன்னுதிரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்” என்று கூறுவது பெரும்பாலும் உண்மையே என நடுநிலை யாளர் எவரும் ஒப்புக் கொள்வர்...... “இம்மொழிகள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பு புற நானூற்றுச் செய்யுட்கள் தோன்றின என்று அச்செய்யுட்களின் தொன்மையும், அத்தொன்மையின் அளவும் புலப்படுத்தற்கு மாத்திரமே இங்கு இச்செய்தி கூறப்பட்டதாகும்.” ஆசிரியர் இரண்டாவது குறிப்பு நாம் மேலே சுட்டிக் காட்டிய அவர் அடிப்படைக் கருத்தின் விளக்கமேயாகும். இன்று தென்னாட்டவரிடையே தமிழர் அறிவிலும், மலையாளிகள் கலையுணர்விலும், கன்னடியர் பண்பிலும், தெலுங்கர் வீரத்திலும் மேம்பட்டுள்ளனர் என்று எவரும் எளிதில் காணலாம். பண்டைத் தமிழினம் இவ்வெல்லா மொழியினங்களையும் உட்கொண்டிருந்தது போலவே, இவ்வெல்லாத் திறங்களையும் ஒருங்குடன் கொண்டிருந்தது. ஆனால், அதில் மேம்பட்டு முனைப்பாய் இருந்த பண்பு என்று உண்டென்றால், அது வீரப்பண்பே. ஆசிரியர் வையாபுரி இதைத் தெள்ளத்தெளியப் புறநானூற்றிலே காண்கிறார். புறநானூற்றில் காணப்படும் வீரத்துக்கு ஓரளவு இணையாகச் சொல்லத்தக்க வெளியுலக இனங்கள் இந்தியாவில் இராசபுத்திர இனமும், ஐரோப்பாவில் வடதிசையில் முன்பு வாழ்ந்த டேனிய வடஜெர்மனிய இனமுமேயாகும். இவ்வீரமரபின் ஒரு சிறு தடத்தைக்கூடத் தற்காலத் தமிழினத்தில் காணமுடிய வில்லையே என்று இராவ்பகதூர் பெரிதும் கவல்கின்றார். “நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமக்கு நாட்டுப் பற்று என்பது போய்விட்டது. நாட்டுக்காக உயிர் விடுதல் என்பது பழங்கதையே! வீரம், தீரம் என்பவை எல்லாம் அகராதியில் காணும் சொற்களாய் முடிந்தனவேயன்றி, அவற்றுக்கும் இன்றுள்ள நமது வாழ்க்கைக்கும் யாதொரு தொடர்பும் இல்லாமல் சென்றொழிந்தது. நாடு நலம்பெற வேண்டுமாயின் இந்நல்லுணர்ச்சிகளை நாம் மீண்டும் பெறுதல் வேண்டும். இங்ஙனம் செய்வதற்குப் புறநானூற்றுச் செய்யுட்களைவிட உற்றதுணை நமக்கு வேறு யாதும் இல்லை.” புது மலர்ச்சி புறநானூறு பற்றி ஆசிரியர் வையாபுரி அவர்கள் கொண் டுள்ள கருத்து, அவர் ஆர்வம் ஆகிய இரண்டும் யாவராலும் வரவேற்கத்தக்கவையே, ஏற்றுக் கொள்ளத் தக்கவையே. ஆனால், புறநானூற்றில் அவர் கொண்டுள்ள மட்டுமீறிய ஆர்வத்தால் அவர் அப்புகழ்மிக்க வீரத்தின் தேய்வு நலிவுகளை மட்டுமே தமிழினத்திலும், அதன் வரலாற்றிலும் காணமுடிகிறது. தேய்விடையே புதுத்தளிர்விட்டு நலிவிடையே வளரத் தொடங்கியுள்ள புது மலர்ச்சியை அவர் காணவில்லை என்பது தெளிவு. ஏனெனில், தமிழின வரலாற்றிலே நாம் இந்த வீரத்தின் தேய்வைமட்டுமல்ல, அதன் புதுவளர்ச்சியையும் காணலாம். புறநானூற்று வீரம், இலக்கிய வீரம் மட்டுமன்று. வாழ்க்கை யில் தழைத்து இலக்கியத்தில் கனிந்த வீரமே! மதுரைக் காஞ்சி மூலம் அதுவே தலையாலங்கானத்துப் பெரும் போர் வெற்றியாகி இலக்கியத்திலும் வாழ்விலும் மலரக்காண்கிறோம். இப்புகழை இமயம்வரை கொண்டு செல்கிறது, சிலம்புச் செல்வம். இதனை அடுத்து, முத்தொள்ளாயிரத்தில் தமிழில் முன்னோ பின்னோ என்றுமில்லாத வகையில் அது பின்னும் இன்னிலா வொளிபூத்து முறுவலிக்கக் காண்கிறோம். சோழப் பேரரசர் காலத்தில் அது இலக்கியத்தில் மூவருலாவாகவும், கலிங்கத்துப் பரணியாகவும் புதுமுகையவிழக் காண்கிறோம். இவை இலக்கிய முகைகள் மட்டுமல்ல. வங்கம், கலிங்கம், கடாரம் ஆகிய நாடுகள் அப்புது வீரகாவியங்களால் அதிர்வுற்றன. அவற்றிலிருந்து எழுந்த வீர அலைகள் அராபிக் கடலில் மாலத்தீவுகள் என்னும் பழந்தீவுகள் பன்னீராயிரத்தையும், வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் என்னும் மாநக்கவாரத் தீவுகளையும் அலைக்கழித்தன. சோழப் பேரரசைவிட எல்லையில் குறைந்தாலும் வீர தீரத்தில் குறைந்ததல்ல, பிற்காலப் பாண்டியப் பேரரசு! மேலும் செல்வ நிலையில் அது சோழப் பேரரசையும் விஞ்சியிருந்தது என்பதை வெளிநாட்டார் குறிப்புகளே தெரிவிக்கின்றன. முன் என்றும் இல்லாவகையில், அந்நாளைய வரலாற்றாசிரியர் தமிழகத்தைப் பெரிய இந்தியா என்றும், சிந்து கங்கைப் பரப்பைச் சிறிய இந்தியா என்றும் அழைத்திருந்தனர். தமிழகத்தின் இவ்வீரவாழ்வும், கீழ்த்திசை உலகின் விடுதலை வாழ்வும் சரிந்ததற்கே பாண்டியர் திரட்டிய இந்தப் பெருஞ்செல்வந்தான் காரணம் என்று அறிகிறோம். பாண்டியப் பேரரசர் காலத்தில் தமிழகத்திலேயே வந்து குவிந்து கிடந்த உலகின் செல்வம், அதற்குக் காரணமான தமிழகத்தின் உலகப் பெருந் தொழில்கள் ஆகிய வற்றைக் கவரவே போர்ச்சுக்கீசியரும் டச்சுக்காரரும், டேனியரும் ஜெர்மானியரும், பிரஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும், தமிழகத்திலும் தமிழகம் சூழ்ந்த தென்கிழக்காசியாவிலும் வட்டமிடத் தொடங்கினர். தமிழருக்கும் கீழ்திசை யுலகுக்கும் வாழ்வளித்த தமிழர் வீரம், வெள்ளையராட்சியின் தொடக்கத்தில் வெள்ளையருக்கே புதிய வாழ்வும் உலக வாணிக, தொழில் தலைமையும், பேரரச வாழ்வும் தந்தது. வீரம் அழியவில்லை; ஆனால், அது அயலாருக்குப் பயன் பட்டது. ஆயினும் வெள்ளையர் ஆட்சியின் பிற்பகுதியில், இதே வீரம் தம் ஆட்சிக்கு ஆபத்தானதென்று கண்டு, வெள்ளையர் அதை அழிக்க முற்பட்டனர். ஆனால், அது அவர்களை யெதிர்த்துப் பாஞ் சாலங்குறிச்சியிலும், வேலூரிலும், மைசூரிலும் கிளர்ந் தெழுந்தது. தமிழர் மரபில் பிளவுகள் பாண்டியப் பேரரசுக் காலத்திலும், வெள்ளையராட்சி யிலும், புறநானூற்றுக்கால வீரம் மறைந்து விடவில்லை; குறைந்து விடக்கூட இல்லை. ஆனால், அதனால் எதிர்பார்க்கப்படத்தக்க வளம் மட்டும் கிட்டவில்லை. அதுமட்டுமன்று. புறநானூற்றுக் கால வீரம் குன்றாது நின்று நிலவினாலும், புறநானூற்றுக் காலத் தமிழ் இலக்கிய வளம்தான் அதைப் பாடும் தகுதியில் குறைந்து விட்டது என்னல் வேண்டும். ‘வெற்றி வேற்கை வீரராமன்’ என்று தன்னைக் குறித்துக் கொண்ட அதி வீரராமபாண்டியன் தமிழர் வீரம் பாடவில்லை. நளகதையே பாடினார். அல்லது நீதி நூல்கள், காம நூல்கள், கடவுட் கவிதைகள் இயற்றினான். பாஞ்சாலங் குறிச்சி வீரமரபு புது வீரகாவியம் பாடிற்று. ஆனால், அதில் காவியப் பண்பைவிட வீரப்பண்பே மிகுதி. அதைப் பாடிய மரபு வேறு, இலக்கியப் புலவர் மரபு வேறாக அன்று விளங்கிற்று. புறநானூற்று வீரம் பொன்றிவிட்டது என்று புலம்பும் வையாபுரியவர்கள் பிறந்த இடத்துக்கருகிலேதான் பாஞ்சாலங் குறிச்சியின் புகழ் நின்று நிலவிற்று. அது மட்டுமன்று. அவர் அருகிலே, அவர் காலத்திலேதான், புதிய வீர சோதியாக வ.உ. சிதம்பரனாரின் புத்தியக்கம் பழம் புகழ் புதுக்கிற்று. அவர் காலத்திலேதான் திருப்பூர்க்குமரன் புறநானூற்று வீரத்துக்கு ஒரு புத்துருத் தந்தான். ஆனால், இவற்றையெல்லாம் காண முடியாத நிலையில் வையாபுரி போன்றோரின் இலக்கிய மரபு வேறாகவும், திருப்பூர்க்குமரன் வீரமரபு வேறாகவும் தமிழகத்தில் பிரிவுற்று இயங்கின. ஆனால், கவிஞர் பாரதி மீண்டும் தமிழகத்தின் இரு மரபுகளையும் தம் கவிதையில் இணைத்துப் புதிய விடி வெள்ளியாக ஒளி வீசியுள்ளார். அயலாட்சிகளிலும், அயற் பண்புகளிலும் குளிர்காய்ந்த வையாபுரி போன்றாரின் இலக்கிய மரபு பாரதியார் கவிதையைப் போற்றிற்று. ஆனால், அக் கவிதையிலே புதிதாகத் தளிர்விட்டுப் பொலியத் தொடங்கி விட்ட இந்தப் புதிய மெய்ம்மையை அது காணவில்லை. புறநானூற்றுக் கால வீரம் இன்னும் தமிழரிடையே இருக்கிறது; அக்கால அறிவும் இருக்கிறது; கலையும் இருக்கிறது. ஆனால், இவற்றின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்குரிய விடுதலை யுரிமையாட்சியும், ஒன்றுபட்ட இன எழுச்சியும், மரபொற்றுமையும் தான் நம்மிடையே இல்லை. தமிழர் வீரமரபை இன்று தமிழர் அறிவு மரபு அடக்கி ஒடுக்கி அமிழ்த்திக் கங்காணி மரபாய் இயங்குகிறது. தமிழர் கலைமரபு இன்னும் பெரிதும் அயல் மொழி, அயல் இன ஆட்சிகளுக்குப் பரிந்து முன்னின்று உழைக்கும் நிலையிலேயே உள்ளது. தமிழர் ஆட்சியோ, தமிழ் ஆட்சியாகவும் அமையாமல், தமிழர் உரிமைக் குரல் எழுப்பும் ஆட்சியாகவும் அமையாமல், கடமைக் குரல் மட்டும் எழுப்பும் அடிமை ஆட்சியாகவே நிலவுகிறது. வீரமரபில் வந்து அறிவும் கலையும் வளர்த்த தமிழர் மீண்டும் வீரம் வளர்த்த பின்னரே, தம் அறிவையும் தம் கலையையும் தமக்குப் பயன்படும் உயிர் அறிவாகவும், உயிர்க் கலையாகவும் வளர்க்க முடியும். தமிழர் போர்க்களங்களின் வரலாறு, தமிழ் மரபின் உயிர் வரலாற்றை அவர்கள் கண்முன் கொண்டு வருவதுடன், அவ்வீர மரபை வளர்க்கவும் உதவும் என்பது உறுதி. 2. வான விளிம்பு தமிழகத்திலே பல வரலாற்று மரபுகள், புராண மரபுகளிடையே புராண மரபுகளாக மயங்கியுள்ளன. அதே சமயம் பல புராண மரபுகள், வரலாற்று மரபுகளாக மதிப்புப் பெற்றுள்ளன. பழமையின் வான விளிம்பிலேயே இவற்றின் மயக்கங்கள் மிகுதி. எடுத்துக்காட்டாக, தமிழ் மூவேந்தர்களுடைய தலைசிறந்த முன்னோர்களின் அருஞ்செயல்களே, தமிழர் பெருந்தெய்வங்களின் புகழ் மரபுகளாக உலவுகின்றன. சிறப்பாகப் பாண்டியர் வாழ்வுடன் சிவபெருமானும், சேரர் வாழ்வுடன் முருகனும், சோழர் வாழ்வுடன் திருமாலும் இணைகின்றனர். மலையமலைக்குரிய மன்னனாகிய பாண்டியன் வளர்த்த முத்தமிழ் நங்கையே மூன்று மார்பகங்களையுடைய தடாதகைப் பிராட்டி அல்லது மலைகளாகவும், அவளை மணந்த சௌந்தர பாண்டியனே சிவபெருமானாகவும், அவர்கள் பிள்ளை உக்கிர பாண்டியனே முருகனாகவும் திருவிளையாடற் புராணத்தில் காட்சியளிக்கின்றனர். பல ஆராய்ச்சியாளர் சௌந்தர பாண்டி யனை நிலத்தரு திருவிற் பாண்டியன் அல்லது தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாகவும், உக்கிர பாண்டியனை கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியாகவும் காண்கின்றனர். கடன்மா (கடலில் விரைந்து முன்னேறும் மரக்கலம்) ஊர்ந்து சென்று கடற் கடம்பரை அழித்த சேரரின் பெருஞ் செயலிலே நாம் முருகன் வீரப் புகழ் மரபைக் காண்கிறோம், கடல்பிறக் கோட்டிய செல்கெழு குட்டுவனின் இச்செயலை வருணிக்கும் பரணர், புராண மரபினை உவமையாகக் காட்டத் தவறவில்லை. இக்குட்டுவனோ அல்லது அவன் முன்னோருள் ஒருவனோ முருகனாகவும் ‘கடம்பின் வாயில்’ போரில் அவனால் முறியடிக்கப்பட்ட பெண்கொலை புரிந்த நன்னனோ அல்லது அவன் முன்னோருள் ஒருவனோ சூரபன்மனாகவும் உருவகப் படுத்தப்பட்டிருக்கக் கூடும். கடவுளராகக் காட்சியளிக்கும் காவலர் சோழர் தொடக்கக் கால மன்னர் மரபு, வரலாற்று மரபா அல்லது முற்றிலும் புராண மரபுதானா என்று ஐயுறத்தக்கதாகவே உள்ளது. அத்துடன் அவர்களில் சிலர் பெயரும் புகழும் அப்படியே இராமாயணத் தலைவன் இராமன் முன்னோர் சிலரின் பெயருடனும் புகழுடனும் முற்றிலும் ஒன்றுபடுகின்றன. இராமன் திருமாலாகக் கருதப்படுவதற்கு இதுவே வழி செய்திருக்கக் கூடும். புராண மரபுடன் மயங்கும் இந்தச் சோழர் குடி முதல்வர்கள் சிபி, முசுகுந்தன், காந்தமன், செம்பியன், மனு ஆகியவர்கள். இவர்களில் சிபி ஒரு புறாவைக் காப்பதற்காக அதைத் துரத்தி வந்த பருந்தினிடம் தன் தசையையே அரிந்து கொடுத்தான் என்று கூறப்படுகிறது. முசுகுந்தனோ அரக்கர்கள் பலரை வென்று இந்திரனையே காத்தவன் ! காந்தமன் தன் வாளால் குடகு மலையைப் பிளந்து காவிரியைச் சோழநாட்டில் ஓடச் செய்தவன் என்று குறிக்கப்படுகிறான். செம்பியன் அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றைத் தாக்கி அழித்து, உலகு காத்தவனாம்! மனுச் சோழன் ஆவின் கன்றின் மீது தேரை ஏற்றி விட்டதற்காக தன் மகனைத் தானும் தேர்க்காலில் இட்டு அரைத்து நீதியைநிலை நாட்டினான் என்று அறிகிறோம். தமிழில் எவ்வளவு பற்றார்வம் கொண்ட தமிழரும் இந்தக் கதைகளை வரலாறு என்று கூறவோ, நம்பவோ முன் வரமாட்டார்கள். ஆயினும், சிலப்பதிகாரமும் கலிங்கத்துப் பரணியும் மட்டுமன்றி, பல கல்வெட்டுகளும் புகழும் செயல்கள் இவை! இவற்றை முற்றிலும் கற்பனை, வரலாற்றை மெய்மை சிறிதும் அற்றவை என்று ஒதுக்கிவிடவும் முடியாது. மனிதனின் வீரச் செயல்கள், சிறந்த செயல்கள் இங்கே தெய்வச் செயல்களாகப் புனைந்துரைக்கப்பட்டு, அதன் மூலம் வரலாற்று மெய்ம்மைகள் உருத் தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவு. கனவேயாயினும் வியத்தகு கனவே! இருபதாம் நூற்றாண்டில் தான் நம் காலத்தில் நாம் வானூர்திகளையும், பறக்கும் கோட்டைகளையும் பற்றிக் கண்டும் கேட்டும் வருகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் தம் நாளிலும் பழஞ் செய்திகளாக இவற்றைக் கூறும் போது, அவை தமிழன் கண்ட கனவுகளாய் இருந்தால் கூட வியத்தகு கனவுகளேயாகும் என்பதில் ஐயமில்லை. தமிழன் கனவில் கண்ட இந்த வாகனப் போர்க் காட்சி அவனது அரை வரலாறு, அரைப் புராணமரபில் திரிபுறமெரித்த விரிசடைக் கடவுளாகவும் காட்சி தருகின்றது. இதிலும் விந்தையென்னவென்றால் கனவில் கூடத் தமிழ் அரசனோ, தமிழ்த் தெய்வமோ பறந்ததாகத் தமிழன் கற்பனை செய்யவில்லை. அந்த அரசன் எதிரிகளும் அந்தத் தெய்வத்தின் எதிரிகளும்தான் பறக்கும் கோட்டை அல்லது பறக்கும் நகரங்களை ஆண்டனர். வானகப்போரின் புகழை அவ்வரக்க எதிரிகளுக்கே தந்துவிட்டு, தன் அரசனுக்கும் தெய்வத்துக்கும் தமிழன் வெற்றிப் புகழைமட்டுமே தந்தான்! தமிழரசர், தமிழ்த் தெய்வம் பறக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ளாவிட்டாலும், அதைக் கற்றவரை அழிக்கக் கற்றுக் கொண்டிருந்தனர் போலும்! வாழ்விலே கண்டதன்றிக் கனவிலே எதுவும் தோன்றுவ தில்லை என்பர். கண்டதைக் கனவுமிகைப்படுத்தலாம், திரிக்கலாம். ஆனால், குறைந்த அளவு கண்டதை அல்லது காண அவாவியதை அல்லது கண்டஞ்சியதைத்தான் அது உருவகப்படுத்தமுடியும். அப்படியானால் இக்கனவின் மூலம் தமிழர் பழமையில் வருங்கால ஆராய்ச்சி ஒருபடி முன்னேற வழி காணக்கூடும் எனலாம். நாக மரபு புராண மரபில் மறைந்து அல்லது மறைக்கப்பட்டுக் கிடக்கும் இன்னும் சில செய்திகளை இது நம் நினைவுக்குக் கொண்டுவரக் கூடும். இந்தப் பறக்கும் கோட்டைகளுக்கு உரியவர் தமிழ் இனத்தவராலும் ஏனை இனத்தவராலும் நாகர்கள் என்று குறிக்கப்பட்டவரே யாவர் என்று ஊகித்தல் தவறல்ல. தமிழர் பெரு நகரங்களைக் கட்டியவர்கள் என்று தமிழிலக்கியமும், பாண்டவர் தலைநகரைக் கட்டியவர்களென்று பாரதமும் புகழ்வது இவ்வினத்தவரையே. அவர்கள் தமிழகத்திலும் தென்னாட்டிலும் மட்டுமன்றி, இலங்கையிலும், வட இந்தியா விலும், கீழ்கடல் தீவுகளிலும் அன்று வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். நாகரிகத்தில் பிற்பட்டுக்கிடக்கும் நிலையில்கூட அசாமில் தம் இனத்துக்கெனத் தனி நாடு கோருமளவு அவர்கள் இன்றும் தனி வாழ்வும் தனிப் பண்பும் உடையவர்களாகவே உள்ளனர். ஆரியர்க்குச் சமஸ்கிருத எழுத்தை முதன் முதலில் ஆக்கித் தந்தவர்கள் என்றும், நாகரிகம் கற்பித்தவர்களென்றும் நாகர்களை ஆராய்ச்சியறிஞர் போற்றியுள்ளனர். உலகில் முதல் முதல் கடலுள் மூழ்கி முத்தெடுத்தவர்களென்றும், பாம்புகள் போலவும் எறும்புகள் போலவும் நிலத்தின் கரு அகழ்ந்து உலகில் முதன் முதலாகப் பொன் வெள்ளி முதலிய உலோகங்களைக் கண்டவர்கள் என்றும், அருங்கலை வேலைப்பாட்டில் சிறந்தவர்களென்றும் கருதப்படுபவர்கள் அவர்கள். இன்றுகூட இத்தொழில்களில் உலகெங்கும் இவ்வினத்தவரோ அல்லது அவர்களுடன் குருதிக் கலப்புடையவர் களோதான் திறம்பட ஈடுபட்டு உழைக்கின்றனர் என்றும் கேள்விப்படுகிறோம். உலகெங்கும் பாம்பு வழிபாட்டைப் பரப்பியவர்களும் இந்த நாகர்கள் என்றே கருதப்படுகிறது. இது அவர்கள் முற்காலப் பொதுப்பரப்புக்கு மட்டுமன்றி, மலையாள நாட்டில் சிறப்பாகப் பரவிய செறிவுக்கும் சான்று ஆகும். பாம்புக்காட்டு நம்பூதிரிகள் என்று கூறப்படும் மலையாள பிராமணர்கள் உண்மையில் பண்டை நாகரின் பெருங்குடி மரபினரேயாவர். புத்தர் பிறந்த சாக்கியர் குடி நாகமரபு சார்ந்ததென்று அவர் பிறப்பிடத்தின் அகழ்வாராய்ச்சி ஏடுகள் கூறுகின்றன. புத்தமதம் வங்கத்திலும், தென்னாட்டிலும், இலங்கையிலும், பர்மா சீனாவிலும் விரைந்து பரவியதற்கு இவ்விடங்களில் உள்ள மக்கள் பெரும் பகுதியினர் நாக மரபினராக இருந்ததே தலையான காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நாகர்கள் யார்? எந்த இனத்துடன் நெருங்கிய தொடர் புடையவர்கள்? இவர்கள் பண்டைப் பெருவாழ்வு அழிந்து உலகெங்கும் இன்று சிறுமையுற்று நலிவானேன்? இன்னும் ஆராய்ச்சியுலகம் தெளிவாக வரையறுக்க முடியாத கேள்விகள் இவை! ஆயினும், ஆராய்ச்சிக்கு இங்கே கொடி காட்டல் முடியாததன்று. நாகர்களுக்கென்று இன்று தனி மொழி எதுவும் இருப்ப தாகத் தெரியவில்லை. அவர்கள் சில இடங்களில் திராவிட மொழிகளையும், சில இடங்களில் வேற்றின மொழிகளையும் பேசுகின்றனர். ஆனால், எங்கும் அவர்கள் நாகரிகம் ஒன்றே! எங்கும் அவர்கள் தம்மை நாகர்கள் என்றே கூறிக் கொள்கின்றனர். பாம்பு என்ற பொருளில் இப்பெயர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் பொதுவான பெயரேயாகும். ஆனால், நாகமரபினரின் கிளையினத்தவரான வில்லியர் முதலிய பெயர்கள் தென்னாட்டிலும் வட இந்தியாவிலும் ஒருங்கே ‘வில்’ என்ற தமிழ்ச் சொல்லடிப்படையான தமிழ்ப் பெயராகவே காணப்படுகின்றன. நாகர் தமிழினத்தவரே! நாகர்கள் உண்மையில் தமிழகத்தில் நாற்புறமும் செந்தமிழ் அல்லது திருந்திய தமிழ் பரவாத இடங்களில் உள்ள தமிழினத் தவர்களே. செந்தமிழ் பரவாத இடத்திலேயே ஆரியமுதலிய பிற இனத்தாக்குதல்கள் எளிதாகத் தமிழினத்துடன் கலக்கவும் முடியவில்லை. முதன் முதலில் நிகழ்ந்ததனால், அவர்கள் தமிழகத்துக்கு வேலியாய், அயலவர்க்கு எளிதாக இரையாயினர். இக்காரணத்தால் அவர்கள் மதிப்பில் குறைந்து அடிமைப் பட்டனரேயன்றி, பண்பாட்டில் எளிதில் மாறவில்லை. தமிழகம் சூழ்ந்த திராவிட இனத்தவர்கள் மட்டுமன்றி, சிங்களர், வங்காளர், பர்மியர், மலாய் மக்கள், திபெத்தியர், நேபாள காசுமீர மக்கள் ஆகிய பலரும் இந்நாக மரபினரேயாவர். இந்தியா முழுவதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள், கோயில் குருக்களாகவும், மருத்துவ, மந்திர, சோதிட வாணர்களாகவும் உள்ள வகுப்பினர் நாகர்களே என்றே கருத இடமுண்டு. வருங்கால ஆராய்ச்சிகள் இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும். மனித இனத்திடையே மனித இனத்தவரான இந்த நாகரைப் பண்டைத் தமிழர்கூடத் தெளிவாய் அறியாமல், இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியும் தெளிய முடியாமல் மறைத்ததற்கும், மறைப்பதற்கும் புராண மரபுகளும், அவற்றைப் பின்பற்றிய தமிழ், சமஸ்கிருத இலக்கிய மரபுகளுமே யாகும். ஓரிடத்தில் இம்மரபுகள், நாகர் வாழ்வகம் தேவர் உலகம் என்கின்றன; ஓரிடத்தில் நிலவுலகுக்கு அடியில் உள்ள ஒரு கீழுலகம் என்று காட்டுகின்றன. ஒரு சில சமயங்களில் மணிமேகலை போன்ற ஏடுகள் தம்மையறியாமல் புராண மரபை மறந்து அதை மனித உலகமாகக் கூறிவிடுகின்றன. கிள்ளிவளவன் நாக அரசனான வலைவணன் மகளாகிய பீலிவளையை மணந்து தொண்டைமானை ஈன்றதாக மணிமேகலை மூலம் கேள்விப் படுகிறோம். நாகர்கள் மனித உருவினர் என்று சில சமயமும் பாதிமனிதர், பாதி பாம்புருவங்களென்று சில சமயமும் புராண மரபில் குறிக்கப் பெறுகிறார்கள். நாகரிகமுடையவர்களென்று சில சமயமும், ஆடையற்ற, மனிதரைத் தின்கின்ற காட்டு மிராண்டிகள், அரக்கர்கள் என்று வேறு சில இடங்களிலும் அவர்கள் வருணிக்கப்படுகிறார்கள். திருந்திய தமிழ் அல்லது செந்தமிழ் பரவிய இடமெல்லாம் திருந்திய ஆரியம் அல்லது சமஸ்கிருதமும் பரவிற்று. பண்டைத் தமிழர் நாடகக் கலையும், இசைக்கலையும் முதன் முதல் செந்தமிழ் நிலத்திலே அழிவுற்று, பின் சமஸ்கிருதத்தில் பரவி அங்கே உயிர்ப்பும் வளர்ச்சியுமற்று நலிந்ததைக் காண்கிறோம். அது போலவே செந்தமிழ் பரவிய இடமெல்லாம் நிலவிய நாகர் அல்லது பழந்தமிழினத்தவர் விஞ்ஞான அறிவும் அழிவுற்று, சிலகாலம் சமஸ்கிருதத்தில் தலைகாட்டி ஓய்ந்தது. ஆனால், நாகர் வாழ்விழந்த போதும் தொழில் துறையுள் அதை நீண்ட நாள் பேணிவந்தனர். இராவணனின் வானவூர்தி, சிந்தாமணியின் பறக்கும் குதிரை, அராபிக் கதைகளில் வரும் மாயக் கம்பளங்கள், மந்திரங்கள் ஆகியவை படிப்படியாக அழிந்துவந்த பண்டை நாகரின் விஞ்ஞான அறிவின் கனவுலகத் துடிப்புகளே என்னலாம். அந்நாளில் விசையூர்திகள், பறவையூர்திகள், விசைச் செய்திகள் முதலிய பல புதுமைகள் செயலிலேயே நிலவின என்பதைப் பண்டிதமணி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ள சுக்கிரநீதி ஐயத்துக்கிடமில்லா வகையில் குறிப்பிடுகிறது. அதை இயற்றிய சுக்கிராச்சாரியார் அசுரகுரு என்று பின்னாட்களில் கருதப்பட்டுவிட்டார் என்பதும், தென்னாட்டுப் பேரரசன் மாவலிவாணனுக்கு அவரே அமைச்சரும் குருவும் ஆவார் என்பதும் குறித்துக் காணத்தக்கன. எனவே பறக்கும் கோட்டை முதலியன தமிழர் கனவானாலும் நாகர் கனவின் நிழல்களேயாகக்கூடும். நாகர் வாழ்வு பற்றிய மெய்ம்மரபுகளைப் போலவே புராண மரபுகளால் மறைக்கப்பட்ட மற்றொரு வரலாற்றுக் கூறு மாவலி மரபு அல்லது வாண மரபு ஆகும். வாண மரபு மாவலி ஒரு கொடிய அரக்கன் என்றும், திருமாலின் எதிரி என்றும், திருமாலின் வாமன அவதாரத்தால் கொன்றொழிக் கப்பட்டவன் என்றும் பாகவதபுராணம் கூறுகிறது. ஆயினும் வியத்தகு முறையில் திருமால் பக்தர்களேயான திருவாங்கூர், கொச்சி அரசர்கள் இன்றளவும் தம்மை மாவலியின் மரபினர் என்று கூறுவதிலேயே பெருமை கொள்கின்றனர். இது மட்டுமோ? மலையாள நாட்டுப் பொதுமக்கள் மாவலியின் நல்லாட்சியின் நினைவாகவே தம் தேசிய சமுதாய விழாவாகிய திருவோணத்தை ஆண்டுதோறும் இன்றும் கொண்டாடி வரு கின்றனர். தென்னாடெங்கும் ஒரே மொழி நாடாகக் கொண்டு ஆண்ட பேரரசன் என்றும் அவனைக் குறிக்கின்றனர். மலையாள நாடு மட்டுமன்றிப் பண்டைத் தமிழகம் முழுவதுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இவ்விழாவைக் கொண்டாடியதாக அறிகிறோம். மணிமேகலையில் கிள்ளிவளவனின் பட்டத்தரசியான சீர்த்தியும், தஞ்சைவாணன் கோவையில் அதன் பாட்டுடைத் தலைவனும் மாவலி மரபினரே என்று காண்கிறோம். மற்றும் மாவலியின் மகன் வாணன் பெயரால் அவன் மரபினர் வரலாற்றில் தம்மை வாணர் என்றே குறித்துக் கொள்கின்றனர். அவர்கள் மாவலியைப் போல என்றும் பேரரசராக வாழா விட்டாலும், அந்த எண்ணத்தை ஏழேழு தலைமுறைகளாக மறக்கவில்லை ஏனெனில் வாணர் மரபின் குடிகளும் கிளைக்குடிகளும் வல்லமை வாய்ந்த சிற்றரசர்களாகத் தமிழகத்திலும் தென்னாட்டின் பல பல திசைகளிலும் சங்க கால முதல் பிரிட்டிஷ் வாணிகக்குழு ஆட்சிக் காலம்வரை இரண்டாயிரம் ஆண்டு இடையறா ஆட்சி நடத்தினர். எத்தனையோ அரச பேரரச மரபுகள் தோன்றி வளர்ந்து மறைந்த போதும் அவர்கள் அவ்வளவு காலமும் அழியாமல் தம் மரபும் பெருமையும் காத்து வாழ்ந்தனர். எண்ணற்ற பல கல்வெட்டுகள் இதற்குச் சான்று பகர்கின்றன. நம் வரலாற்றாராய்ச்சி ஒளியோ, நமக்கு இன்று அழியாது மீந்துள்ள தமிழிலக்கிய ஒளியோ சென்றெட்டாத தொல் பழங் காலத்தில், மாவலி தென்னாட்டெங்கும் ஒரு குடைக்கீழ் ஆண்ட பேரரசனாயிருந்திருக்க வேண்டும் என்பதை இவ்வரலாற்றுத் தடங்கள் காட்டுகின்றன. ஆனால், புராண மரபின் மாயவண்ணம் இவ்வுண்மையின் தடத்தின்மீது ஆராய்ச்சியாளர் கண்ணொளி கூடப் பரவாமல் தடுத்து வருகின்றது. பாரத இராமாயண மரபுகள் புராண மரபைவிடத் திண்ணிய திரையிட்டுள்ளது இதிகாச மரபு, புராண மரபு மயங்க வைக்கிறது என்றால், ஆராய்ச்சியறிஞர்கள்கூடச் செய்திகளைத் திரித்துணருமாறு செய்கிறது. இராமாயண பாரதக் கதைகள் சிலப்பதிகாரத்திலும் மணி மேகலையிலும், சங்க இலக்கியங்களிலும் பல விடங்களில் சுட்டிக் குறிக்கப்படுகின்றன. ஆனால், கதையுடனன்றி, கதை நிகழ்ச்சி களுடனும் கதை யுறுப்பினர்களுடனுமே தொடர்பு கொண்டு ஒரு சில மிகப் பழமை வாய்ந்த பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் (சிறப்பாகப் புறநானூற்றில்) நமக்குக் கிட்டியுள்ளன. அவற்றுள் ஒன்று பெருஞ் சோற்றுதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் பாடியது ஆகும். “அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! (புறம்2) என்று அப்புலவர் அரசனை நேராக விளித்துப் பாடுகிறார். ‘அலைந்தாடுகின்ற பிடரி மயிருடைய குதிரைகளை உரிமையாகக் கொண்ட ஐவருடன் (பாண்டவருடன்) சினங்கொண்டெழுந்து, அவரிடமிருந்து நாட்டைக் கைக்கொண்டு, பொன்னாலான அழகிய தும்பை மலர் சூடிப் போர்க்கெழுந்த நூற்றுவரும் (கௌரவரும்) போரிட்டுப் போர்க்களத்திலே அழிவுற்ற சமயத்தில், இருசார்பினருக்கும் பெருவிருந்து கொடுத்த அரசனே!” என்பது இதன் பொருள். பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்ததனை ஓட்டியே இச்சேரப் பேரரசன் பெருஞ்சோற்றுதியன் என்றழைக்கப் பட்டான். இப்பாடல், பாரதக்கதையின் வாய்மைக்கே ஓர் அகச் சான்று என்று கூறத்தக்கதாய் உள்ளது. ஏனெனில், மன்னன் உதியன் சேரலாதன் பாரதப்போர் நடந்தபோது போர்க்களத்தில் பாண்டவருடனிருந்தவன். புலவர் அவனை நேரில் சென்று பாடியதனால் அவரும் அரசரும் பாரதப் போர் நிகழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவராவர். பாரதப் போரைக் குறிக்காமல் அதன் முக்கிய உறுப்பினருள் ஒருவரும், பாண்டவர் ஐவருள் முதல்வருமான தரும புத்திரனைச் சோதமனார் என்ற புலவர் பாடியதாக மற்றொரு பாட்டு (புறம் 366) உளது. இதில் புலவர் தரும புத்திரனை ‘அறவோர் மகனே, மறவோர் செம்மால்!’ என்று விளித்து, ‘அறமும் பொருளும் இன்பமும் பெருக்கி நிலையான வீடு பேறு காண்பாயாக!’ என்று வாழ்த்துகிறார். பாரதப் போர்க் காலத்தவராகக் கருதப்படும் மற்றொரு புலவர் மார்க்கண்டேயனார். நிலையாமை பற்றிய அவர் அழகிய பாட்டொன்று புறநானூற்றில் (362)காணப்படுகிறது. அத்துடன் யாப்பருங்கல விருத்தியுரையில் அவரால் பாடப் பட்டதாகத் தெரியவரும் மார்க்கண்டேயனார் காஞ்சியிலிருந்து ஓர் விழுமியபாடலும் ‘தோல்’ என்பதற்கு எடுத்துக் காட்டாகக் குறிக்கப்படுகிறது. பாரதப் போரையும் பெருஞ் சோற்றுதியனையும் தம் காலச் செய்தியாகவே முரஞ்சியூர் முடிநாகராயர் குறிக்கிறார். அதே செய்தியைப் பழங்காலச் செய்தியாகக் குறிப்பவர் மாமூலனார் (அகம் 233). சிலப்பதிகாரமும் ‘ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன் றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன்’ (29-ஆவது வாழ்த்துக் காதை) என்று இதே நிகழ்ச்சியைப் பழங்காலச் செய்தியாகக் குறிக்கிறது. பாரதத்துடன் தொடர்புடைய இப்பாடல்களைப் போலவே, இராமாயணத்துடன் சமகாலத் தொடர்புடையதாகத் தோற்றும் மற்றொரு பாடலும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. இது பொதுவாக நிலையாமை பற்றி வான்மீகியார் என்ற புலவர் பாடிய பாட்டே (புறம் 358). இப்பெயர் சமஸ்கிருதத்தில் இராமாயணம் இயற்றிய வால்மீகியையோ இரமாயணத்திலேயே கதை யுறுப்பினராகக் காணப்படும் வான்மீகியையோ நினைவூட்டுவது ஆகும். ஆராய்ச்சிப் போக்குகள் பாரதம் இராமாயணம் ஆகிய இதிகாசங்களை வரலாற்று நிகழ்ச்சிகளாகக் கொள்பவருள்ளும் பலருக்கு இப்பாடல்கள் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் தந்துள்ளன. அவற்றைக் கற்பனைக் கதையென்று கருதுபவர்களிலும் பலருக்கு இது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் தரத்தவறவில்லை. ஏனென்றால் அவ்விரு சாராருமே இக்கதைகளைச் சமஸ்கிருதத்திற்கும் ஆரிய நாகரிகத்துக்குமே உரியன என்று எளிதாக முடிவுகட்டி வைத்துள்ளனர். இதற்கு மாறான சான்றுகளோ கருத்துக்களோ வந்தால் அவற்றை அவர்கள் செவியில் போட்டுக் கொள்ளுவ தில்லை. அவற்றை மெல்ல நழுவவிடவே எண்ணுவர். அவர்கள் தரும் விளக்கங்களும் இதற்கேற்பச் சுவைகரமானவை. வான்மீகியாரைப் போன்ற புலவர் தேவமொழிக்கே உரியவராதலால் மனித மொழியாகிய தமிழில் அப்பெயர் கொண்ட வேறு யாராவதுதான் பாடியிருக்க முடியும் என்று இத்தகையவர் சிலர் கூறுகின்றனர். அத்துடன் பெருஞ் சோற்றுதியன் சேரலாதன் பாரதப் போர்க்காலத்தில் இருந்திருக்க முடியாதென்றும், அவன் முன்னோர்கள் செயலையே புலவர் அவன்மீது ஏற்றிப்பாடியிருக்கலாம் என்றும் கூறுவர். இன்னும் சிலர் இராமாயண பாரத நாடகங்களில் நடிகர்கள் கூறுவதற்காக இப்புலவர்கள் பாடிய பாடல்களே இவைகளென்று கூறி ஆராய்ச்சித் துறையிலேயே தம் கற்பனைத் திறத்தைக் காட்டுகின்றனர். ஆனால், சங்கப் பாடல்களின் பொது இயல்புகளை ஒரு சிறிது அறிந்தவர்களுக்கு இவ்விளக்கங்கள் பொருந்தா விளக்கங்கள் என்று மட்டுமே தோற்றக்கூடும். இவ் விளக்கங்களை மறுப்பது எவ்வளவு எளிதாயினும் அவற்றினிடமாக வேறு பொருந்தும் விளக்கங்கள் அளிப்பது எளிதாயில்லை. ஏனெனில் பாரத இராமாயணங்கள் வரலாற்று நிகழ்ச்சிகள்; கற்பனைக் கதைகளுமல்ல; ஆரிய திராவிடப் போராட்ட உருவகங்களுமல்ல என்று ஒப்புக் கொண்டாலன்றி இவற்றிற்கு விளக்கம் தர முன்வரவே முடியாது. சமஸ்கிருதப்பற்றில் எவருக்கும் இளைக்காதவரும், அதே சமயம் அது காரணமாகத் தமிழ்ப்பற்றில் பின்னடையாத வருமான விசித்திரப் பிறிவிகள் தமிழகத்தில் ஒரு சிலரே பிறந்துள்ளனர். அத்தகையவருள் ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தின் தமிழ் விரிவுரையாளரான உயர்திரு இரா. இராகவையங்கார். அவர் இராமாயண பாரதங்களின் வாய்மையையும் அதற்குத் துணைசெய்யும் தமிழ்ப்பாடல்களையும் ஏற்று ஆராய்ச்சித் துறையில் ஆரிய திராவிட சமரசம் கண்டுள்ளார். “கௌதமனார் பாடிய புறப்பாட்டும், முடிநாகராயர் புறப்பாட்டும் பாரத காலத்தனவென்று நினைத்தற்கேற்ற அகச்சான்றுகளுடன் சிறந்து விளங்குதல் அவைவல்லார் நன்குணர்வர்” என்பது அவர் முடிவு. திரு இராகவையங்கார் முடிவே திரு.கா. சுப்பிரமணிய பிள்ளை, மறைத்திரு மறைமலையடிகள் ஆகியோரும் ஏற்ற முடிவு எனலாம். ஏனெனில், பாரத நிகழ்ச்சிக்குரிய காலமே புறநானூற்றின் இப்பழம் பாடல்களின் காலம் என்று அவர்கள் கொண்டனர். புராணக் கணிப்பின்படி பாரதப்போர் மூன்றாம் ஊழியிறுதியில் அதாவது கி.மு. 3200-ல் நிகழ்ந்ததாக வேண்டும். ஆனால், சமஸ்கிருத ஆராய்ச்சியாளர் ஆரியர் இந்தியாவிற்கு வந்த காலம் கி.மு. 1500 என்றே கருதுவதால், பாரத காலத்தையும் அதற்கேற்ப கி.மு. 1000 என்று முடிவுசெய்துள்ளனர். மேற்குறிப்பிட்ட சமரஸ முடிவு சமரசமான முடிவு மட்டு மல்ல; தமிழ் சமஸ்கிருத ஆதாரங்களுடனொத்த நேர்மையான முடிவும் ஆகும். ஆயினும் ஆரியர் இந்தியாவுக்குள் நுழைந்து நெடுநாளாகாத அவ்வளவு பழைய காலத்திலேயே, யமுனைக் கரை ஆரியருக்கும் தென்னிந்தியாவின் தென்கோடிக்கும் இடையே அவ்வளவு நட்புறவு ஏற்பட்டிருக்க முடியும் என்று கருதுவது பொருத்தமற்றதாகவே உள்ளது. திருத்தந்தை ஹீராஸ் ஆராய்ச்சி ஒளி இராமாயண பாரதங்களின் மீதும் தமிழிலக்கியத்தின் மீதும் நாகரிகத்தின் மீதும் திருத்தந்தை ஹீராஸின் ஆராய்ச்சிகள் ஒரு புதிய ஒளியை வீசியுள்ளன. இராமாயண பாரதங்கள் இன்று ஆரியருடைய இதிகாசங்கள் என்றும், ஆரியர் ஆக்கியன மட்டுமல்ல, ஆரிய அரசுகள் பற்றியனவே என்றும்தான் பொதுவாகக் கருதப்படு கின்றன. அவை திராவிடரை எதிர்த்து ஆரியர்களடைந்த முன்னேற்றத்தைக் குறிப்பவை என்று கருதுபவர்கூடப் பலர். சமஸ்கிருதத்தில் உள்ள இன்றைய பாரத இராமாயணங்களைப் பொறுத்த அளவில் பிந்திய கூற்றுத் தவறு என்பதற்கில்லை ஆனால்,, அவை உண்மையில் சமஸ்கிருதத்திற்கோ ஆரியருக்கோ மட்டும் உரியவை அல்ல; சமஸ்கிருத பாரத இராமாயணங்கள் அவற்றின் மிகப் பழைய வடிவங்கள், அவற்றின் மூலங்கள் என்பதுகூட உண்மையல்ல; புத்தசாதகக் கதைகளில் இடம் பெறும் இராமாயண பாரதக் கதைகளும் சமணரின் பாரத இராமாயணக் கதைகளும் அவற்றிலும் முற்பட்டவை ஆகும். இராமாயண பாரதங்களும் பல புராண மரபுகளும் உண்மையில் ஆரியர் வருவதற்கு நெடுநாள் முற்பட்ட திராவிடரின் பழங்கதை மரபுகளாகவோ, இலக்கிய மரபுகளாகவோ, வரலாற்று மரபுகளாகவோ நிலவியிருக்க வேண்டுமென்று அறிஞர் திருத்தந்தை ஹீராஸ் கருதியுள்ளார். வருங்கால ஆராய்ச்சிகள் இதற்கு மேலும் விளக்கம் தரக்கூடும். அந்நாளில் கன்னட பாரத இராமாயணங்கள், தமிழ்க் கம்ப இராமாயணம் ஆகியவற்றில் சமஸ்கிருத ஏடுகளினின்றும் மாறு பட்ட கருத்துகள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய தமிழ் சங்க இலக்கியக் குறிப்புகள் ஆகியவை புது விளக்கம் தரும் பழமைக் கருவூலங்கள் என்பது தெரியவருவது உறுதி. புறநானூற்றுப் பாடல்கள் இயற்றப்பட்ட காலம் பொதுவாகத் தென்னாட்டில் மலையாளமோ, தெலுங்கோ, கன்னடமோ தமிழினின்று பிரிவுறாத காலம் என்று இராவ்பகதூர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் கருதுகிறார்கள். இதை மேலே காட்டியுள்ளோம். புறநானூற்றில் பாரத இராமாயணம் பற்றிய பாடல்கள் இயற்றப்பட்ட காலம் தென்னாட்டிலும் வடநாட்டிலும் கிட்டத்தட்ட ஒரே தமிழ் மொழி பேசப்பட்டகாலம். அதாவது ஆரியர் வருகையால் வடநாட்டு மொழிகள் தென்னாட்டு மொழிகளிலிருந்தும் நெடுந்தொலை வேறுபட்டு விடாத காலமாகும். தென்னாடெங்குமிருந்து கடைச் சங்க காலத்தில் மதுரைச் சங்கத்தில் வந்து தமிழ்ப் புலவர் தம் பாட்டுகளை அரங்கேற்றியதுபோல அந்நாளில் மதுரைக்கும் தெற்கே அலைவாயிலும் (கடாவபுரத்திலும்) தென்மதுரையிலும் இருந்த இடைச்சங்க, தலைச்சங்கங்களில் சிந்து கங்கை சமவெளியி லிருந்தும் தமிழ்ப் புலவர்கள் வந்து பாடல்களை அரங்கேற்றி யிருந்தினராதல் வேண்டும். முடிநாகராயர் என்ற பெயரின் கடைசிப் பகுதி ‘இராயர்’ என்றெண்ணிப் பலர் மலைப்பு எய்துகின்றனர். இது ‘ர’ கரத்தை முதலாக உடைய எழுத்து என்பதே மலைப்பின் காரணம். இதனாலேயே அப்பெயர் முடிநாகனாராயிருத்தல் கூடுமென்றும் பலர் கருதியுள்ளனர், அவ்வாறு எழுதியும் வருகின்றனர். ஆனால், கடைசிப் பகுதி ‘ஆயர்’ என்பதே, முடிநாகர் என்பதனுடன் சேர்ந்தே இது முடிநாகராயர் (முடிநாகர் +ஆயர்) ஆகின்றது. கொச்சி அரசர், மாவலி மரபுக்கும் பண்டைச் சேர மரபுக்கும் ஒருங்கே உரிமையுடையவர். அவர் குடிப்பெயர் கடல் மலை நாட்டுப் பெரும் படைப்பு வழியினர் என்பது. அதன் ஐந்துகிளை இனத்தவர்கள் மூத்தவர், இளையவர், பல்லுறுத்தியர், மடத்தின் கீழார் அல்லது முரஞ்சியூரார், சாலியூரார் ஆவர். பரிபாடலில் மதுரையடுத்த நாகர் நகரத்தினர், பூமுடிநாகர் என்று அழைக்கப்படுகின்றனர். எனவே முரஞ்சியூர் முடிநாகர் ஆயர் என்பவர் சேர நாட்டில் முரஞ்சியூர் சார்ந்த ஒரு நாகர் மரபினரே என்று காண்கிறோம். 3. அகல் உலகத் தொடர்பு போர் என்பது இடைக்காலப் புராண மரபில் யானை, குதிரை, தேர், காலாள் என்ற நால்வகைப் படைகளின்போர் மட்டுமே. இது முற்றிலும் நில மீது நடைபெற்ற போர் என்பது தெளிவு. இது கடந்து இடைக்காலக் கனவுகள் கூடச் செல்லவில்லை கடலறியாத, வானகங்கனவு காணாத சில நாகரிக இனங்களின் சின்னமாகவே இம்மரபு இயன்றது. ஆனால், உலகின் புராண காலத் தொடக்கத்திலும், தமிழர், கிரேக்கர் வரலாற்று வானவிளிம்பிலும் நாம் நிலப்போர், கடற்போர், வானகப்போர் என்ற இக்கால மூவரங்கப் போர்களின் சின்னங்களையும் காண்கிறோம். நில உலக நாகரிகங்கள் பலவற்றுக்கு முற்பட, கடலகத்தே பரவி, வானக மளாவி வளர எண்ணிய சில பல பழமைசான்ற நாகரிகங்கள் இருந்தன என்பதை இது குறித்துக் காட்டுகிறது. நாலாயிர, ஐயாயிர ஆண்டுகட்கு முன் வானகப்போரும், வானகச் செலவும் கனவிலேனும் நிலவின என்பதை எவரும் ஒத்துக்கொள்வர். அதே சமயம் தற்கால உலகில் மேலை நாடுகளிலேனும் இக்கனவுகள் காணப்பட்டது சென்ற இரு நூறு ஆண்டுகளுக்குள்ளேயே என்பதும், அவற்றின் பயனாகவே நாம் நீராவிக்கப்பல்கள், விசையூர்திகள், வானூர்திகள், தந்தி, தொலைபேசிகள் பெற்றிருக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கன. முற்காலக் கனவுகள் கனவுகளாகவே நின்று கனவு மரபும் அழிவுற்றதற்கு இடைக்காலப் பண்பே காரணம் என்னல் வேண்டும். அது அக்கனவுகளை மனித அருஞ் செயல் கனவுகள் என்ற நிலையிருந்து படிப்படியாக மாயமந்திரங்கள், தெய்விக அருஞ் செயல்கள், பேய்ச் செயல்கள், அரக்க பூதச் செயல்கள் என்ற நிலைக்கு ஒதுக்கித் தள்ளிற்று. வருங்கால ஆர்வக் கனவுகளாய் வளராமல், சென்ற கால நினைவுகளாய், நாளடைவில் மனித வாழ்க்கையுடன் தொடர்பற்ற மூடக் கருத்துகளாய் அவை தேய்வுற்றன. ‘தமிழர் முதல் வானகப் போர்?’ கனவு கடந்து நனவிலே இவை நிலவின என்பதோ, மீட்டும் நிலவக்கூடும் என்பதோ இடைக் காலம் நம்பாத ஒன்று. மீட்டும் நிலவக் கூடும் என்ற நம்பிக்கையே நம் காலத்தில் மேலையுலகில் அவற்றை நனவாக்கிச் செயல் வெற்றிகளும் ஆக்கிற்று. ஆனால், முன் நிலவியிருக்க முடியாது என்ற இடைக்கால அவ நம்பிக்கையே இன்னும் நீடிக்கின்றது. இந்த அவநம்பிக்கை ஆராயாத, ஆராய்ச்சிப் பக்கமே நாடாத ஒரு முடிந்த முடிபாய், தற்காலத்தவரின் ஒரு புது மூடநம்பிக்கையாக இயங்குகின்றது. இம்முடிபு முற்றிலும் சரியல்ல என்பதைப் பழமை ஆராய்ச்சிகளின் போக்குக் காட்டி வருகிறது. இடைக்காலக் கனவுகளுக்கு எட்டாத அளவில் பண்டைக் கிரேக்கர், உரோமர் இலக்கிய கலை வாழ்வு மேம்பாட்டிருந்தது இடைக்காலக் கனவுகளுக்கு எட்டாத தொலைவிலேயே, தற்காலத்தவர் வியக்குமளவில், பினிஷீயர், எகிப்தியர், அராபியர், தமிழர், மலாய் இனத்தவர் ஆகியோர் பரந்த கடலுலக வாழ்வும், வாணிகத் தொழில் வாழ்வும் பெற்றிருந்தனர். இக்கடலக நாகரிகங்கள் இடைக்கால உலகமறியாத அமெரிக்காக் கண்டத்திலும் சென்று பரவியதாகத் தெரிகிறது. தவிர, இன்றைய நகரங்கள்கூட முழுதும் பெற்றிரா அளவில் பண்டைய பெருநகரங்களில் வடிகால் அமைப்பு, குடிநீர்க்குழாய், குளிப்பறை ஆகிய வசதிகள் மிகுதியாய் இருந்தன. உண்மையில் இவ்வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னரே நகரங்கள் அந்நாளில் திட்டமிட்டுக் கட்டப்பட்டன என்று காணும்போது இக்கால மக்கள் நாணமும் வியப்பும் ஒருங்கே கொள்ள வேண்டும். இந்நிலையில் பண்டை நாகரிகங்கள் பற்றி இக்காலப் பொதுமக்கள் மட்டுமின்றி, அறிஞர் பலரும் கொண்டுள்ள முடிவுகள் புரட்சிகரமாக மாற வேண்டியவை என்பது மிகையன்று. பண்டைத் தமிழரிடையே வானகச் செலவும் வானகப் போரும் இருந்தனவோ இல்லையோ; அவை பற்றிய நினைவு களும்,ஒருவேளை அவை பற்றிய மரபழிந்து விட்ட நனவு முயற்சி களும் இருந்திருக்கக் கூடும் என்று எண்ண இடமுண்டு. இதனைத் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் மரபுரை சுட்டிக் காட்டுகிறது. இச்செம்பியன் காலத்திய பறக்கும் கோட்டைகள் அல்லது பறக்கும் நகரங்கள் தமிழர் கனவில் அல்லது நினைவில் எழுந்த முதல் வானகப் போராக நம் கண்முன் காட்சி யளிக்கின்றன. ஒரு வானகப் போருடன் தொடங்கும் தமிழர் வரலாறு அடுத்து ஒரு கடலகப் போரையும் தொடக்கத்திலேயே நம் பார்வைக்குக் கொண்டு வருகிறது. முதற் கடற்போரும் கடற் பேரரசும் வான விளிம்பு கடந்து, ஆனால், அவ்விளிம்பிலே மயங்கும் இலக்கிய மரபிலே, நாம் தமிழரின் இப்பெருங் கடலகப்போரின் தடத்தைக் காண்கிறோம். அது தடங்கெட்ட இன்றைய தமிழர் வாழ்வுடனேகூடத் தொடர்புடையது என்று கூறலாம். அது பற்றிய இலக்கியக் குறிப்புகளும் மரபுரைகளும் பல. அதற்கு ஆக்கம் தரும் பிற்கால இடைக்கால வரலாற்றுச் செய்திகளும், கல்வெட்டுச் சான்றுகளும்கூட உண்டு, ஆயினும் இவற்றாலும் அத்தொல் பழங்காலச் சித்திரத்தின் முழு உருவத்தை நாம் தெளிவாகக் காணமுடியவில்லை, காணும் அளவிலும் ஆராய்ச்சியாளர் கருத்து வேறுபாடுகளும், அவர்களது ஆராயா நம்பிக்கை அவநம்பிக்கைகளும் அதன் உருவின் மீதே நிழலாடுகின்றன. சங்க இலக்கியத்திலே பழங்காலப் பாண்டியருக்கும், அவர்கள் முன்னோருக்கும் முற்பட்ட பாண்டியனாக நெடியோன் விளங்குகிறான். கடைச் சங்க காலத்திலே பாடல் சான்ற பெரும் புகழ்ப்பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனே. அவன் முன்னோர்களாக மதுரைக் காஞ்சியாசிரியர் மாங்குடி மருதனார் பல்சாலை முதுகுடுமியையும் நெடியோனையும் சிறப்பிக்கின்றார். அதே சமயம் முதுகுடுமியைப் பாடிய நெட்டிமையார் முதுகுடுமியின் முன்னோனாக அவனைக் குறிக்கிறார். எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அது கடந்தும் மிகப்பழங்காலத்துப் பாண்டியனாகவே நெடியோன் கருதப்பட்டிருந்தான். நெடியோன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியன் அல்லன்; ஏனெனில், கடைச்சங்க காலத்தில் மட்டுமே மதுரை பாண்டியர் தலைநகராயிருந்தது. உண்மையில் தலைநகரை முதல் முதல் கொற்கையிலிருந்து தற்கால மதுரைக்கு மாற்றியவன் முதுகுடுமியே. அவனுக்கு முற்பட்ட இடைச்சங்க காலத்தில் கடல் கொண்ட குமரியாற்றின் கடல் முகமான அலைவாய் (கவாடபுரம்) நகரும், தலைச்சங்க காலத்தில் அதற்கும் தெற்கில் கடல் கொண்ட பஃறுளியாற்றின் கரையிலிருந்த தென் மதுரையும் பாண்டியர் தலைநகரங்களாய் இருந்தன என்று அறிகிறோம், நெடியோன் தலைநகர் பஃறுளியாற்றின் கரையிலே இருந்ததென்று சங்கப் பாடல்கள் பகர்கின்றன. ‘பரதன்’ ‘பரதகண்டம்’ ‘ஆதி மனு’ நெடியோனுக்கு நிலத்தருதிருவிற் பாண்டியன் என்றும் பெயர் உண்டு. “நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன்” என்ற மதுரைக் காஞ்சியடிகள் இதை நினைவூட்டுகின்றன. நிலந் தருதிருவிற் பாண்டியன் காலத்திலேயே, அவன் அவைக்களத் திலேயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இது அந்நூற் பாயிரம் தரும் தகவல் ஆகும். நெடியோன் பஃறுளியாறு கடல் கொள்ளுமுன் அவ்வாற்றின் கரையிலே இருந்து ஆண்ட முதற் சங்க காலத்துப் பாண்டியன் என்பதை இது வலியுறுத்துகிறது. அத்துடன் கடல்கோளின்போது அவன் வாழ்ந்ததனால், கடல்கோளுக்குப் பின்னும் அவனே குமரியாற்றின் கடல் முகத்திலிருந்த இரண்டாவது தலைநகரான அலைவாயிலிலும் வந்து ஆட்சி தொடங்கியிருக்க வேண்டும். பஃறுளியாறு கடல் கோளால் அழிந்தபின், இவன் வட திசையில் தன் ஆட்சி எல்லையை விரிவுபடுத்தி, இமயம், கங்கை ஆகியவற்றைக் கைக்கொண்டிருந்ததாகத் தமிழ் ஏடுகள் சாற்று கின்றன. “பஃறுளியாற்றுடன் பனிமலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசையாண்ட தென்னவன்” (சிலப் 11,19,22) என்று சிலப்பதிகாரம் கூறுவது காணலாம். பழந்தமிழகப் பகுதிகள் கடலுள் அழிந்த அக்காலத்திலேயே இமயமும் சிந்து கங்கை வெளிகளும், கடலிலிருந்து புது நிலமாகத் தோன்றி யிருந்தன. நெடியோன் கடல்கோளுக்குத் தப்பி வந்த துணையிலி களையும், ஏலாரையும், துயருழந்தாரையும் அவ்விடங்களில் கொண்டு குடியேற்றியிருக்க வேண்டும். ஏனெனில், இமயம்வரை அவன் நாளில் ஒரே தமிழ்மொழி பேசப்பட்டதென்று கூறப்படுகிறது. “தென் குமரி வடபெருங்கல் குணகுட கடலா வெல்லைத் தோன்று மொழிந்து தொழில் கேட்ப” (மதுரைக் காஞ்சி 70-72) என்ற மாங்குடி மருதனார் கூற்று இதற்குச் சான்று. புதுநிலமாகக் கங்கையும் யமுனையும் இமயமும் உள்ளடங்கிய பரப்பைத் தமிழகத்துக்குத் தந்த காரணத்தாலேயே நெடியோன் நிலந்தருதிருவிற் பாண்டியன் என்று பெயர் பெற்றான். இப்பெயருடன் அவன், இன்று ‘இந்தியா’ என்று அழைக்கப்படும் பகுதி முழுமைக்கும் ஒரே பேரரசன் ஆனான். வெள்ளையர் ஆட்சிக்கு முற்பட, இமய முதல் குமரிவரை ஆண்ட முதற் பேரரசன் மட்டுமல்ல; ஒரே பேரரசன், நெடியோன் என்ற இந்த நிலந்தரு திருவிற்பாண்டியனேயாவன். முன்னும் பின்னும் இல்லாத இவ்வரும் பெருஞ்செயல் இதிகாச புராணங் களில் தன் அருஞ்சுவட்டைப் பதிப்பிக்தத் தவறவில்லை. இந்தியா அல்லது பாரத கண்டம் முழுதும் ஒரு குடைக்கீழ் ஆண்டதாக இதிகாசங்களில் கூறப்படும் பரதன் இவனே என்று பண்டித சவரிராயன் போன்ற அறிஞர் கருதியுள்ளனர். பரதர் அல்லது கடலரசர் என்பது பாண்டியருக்குப் பொதுவாகவும், இவன் மரபினருக்குச் சிறப்பாகவும் ஏற்பட்ட பெயரேயாகும். பரத கண்டம் என்ற பெயரில் அது இன்னும் நிலைபெற்ற வழக்காகி யுள்ளது. மற்றும் மிகப்பழங்காலப் புராணங்களில் இவனே ‘ஆதிமனு’ வாக குறிக்கப்படுகிறான், இந்திய புராணங்களில் காணப்படும் ‘ஆதி மனு’ வரலாறு, மட்டுமன்றி, விவிலிய நூலில் கூறப்படும் ‘நோவா’ வரலாறும், அது போன்ற பிற இனங்களின் ஊழி வெள்ளக் கதைகளும் இவன் பழம் பெரும் புகழ்மரபில் வந்தவையே என்று பல உலகப் பழமையாராய்ச்சியறிஞர் கருதுகின்றனர். பண்டைச் சாவக வெற்றி இமயம்வரை நிலப் பேரரசனாக ஆண்டதுடன் இப்பாண்டியன் பேரவா நிறைவு பெறவில்லை. அவன் மறவன் மட்டுமல்ல, கடல்மறவன் அல்லது பரதவன், தமிழ்ப்பரதவரின் கடலாட்சிக் கொடியாகிய மீன்கொடியை அவன் கடல் கடந்த நாடுகளுக்கும் கொண்டு சென்றான். முந்நீர் விழாவின் நெடி யோன் என்ற இவன் முழுச்சிறப்புப் பெயரும் தமிழ் மரபிலேயும் தமிழ்ப்புராண மரபிலேயும் வழங்கும் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்ற பெயரும், சயமாகீர்த்தி என்ற பெயரும் இக்கடற்பெயரும் போர் வெற்றியைக் குறித்த வழக்குகளேயாகும். “முழங்கும் முந்நீர் முழுவதும் வளை இப் பரந்து பட்ட வியன் ஞாலம் தாளில் தந்து தம்புகழ் நிறீஇ ஒருதாம் ஆகிய உரவோர்”. (புறம் 18) என்று தலையாலங்கானத்து நெடுஞ்செழியனைப் பாடிய குடபுலவியனாரும். “செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணல்” (புறம் 9) என்று முதுகுடுமியைப் பாடிய நெட்டிமையாரும், “வானியைந்த இருமுந்நீர்ப் பேஎ நிலைஇய இரும்பௌவத்துக் கொடும் புணரி விலங்குபோழ - சீர்சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ! (மதுரைக்காஞ்சி 75-7, 87-8) என்று மாங்குடி மருதனாரும் தம் காலத்திலும் பழங்காலப் புகழ்ச் செய்திகளாக இவற்றை விரித்துரைத்துள்ளனர். ‘உயர் நெல்லின் ஊர்’ என்ற மதுரைக் காஞ்சியுரை நெல்லின் பெயரையுடைய ஓர் ஊரைக்குறிக்கிறது. கடலில் கலம் செலுத்திச் சென்று கொண்ட ஊராதலால், அது கடல் கடந்த ஒரு நாட்டின் ஊர் என்பதும் தெளிவு. இத்தகைய ஊர் நெடியோன் வெற்றிச் சின்னங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சாவகம் அல்லது சுமத்ராத் தீவிலுள்ள சாலியூரேயாகும். சாலி என்பது நெல்லின் மறு பெயர். அத்தீவின் பழம் பெயர்களையே சாவகம், பொன்னாடு, ஜவநாடு, யவநாடு ஆகியவற்றில் யவநாடு என்பதன் பொருளும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையதே. ஏனெனில் ‘யவ’ என்பது வாற்கோதுமையின் மறுபெயர் ஆகும். சாலியூர் இன்றளவும் ‘சாரி’ என்றே வழங்துகிறது. சோழர் 12-ஆம் நூற்றாண்டில் கடாரத்தில் அடைந்த வெற்றிகளிலும் சாலியூர் வெற்றி குறிக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் கடாரம் என்பது சீர்விசயம் என்ற கடற் பேரரசாய், மலாயாவையும் பல தீவுகளையும் உட்கொண்டிருந்தது. அதன் தலைநகரான சீர் விசய நகர் சுமத்ராத் தீவிலுள்ள இன்றைய ‘பாலம்பாங்’ நகரமேயாகும். சாலியூர் இந்தச் சீர்விசய நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. பாண்டியன் படையெடுப்பின்போது சாலியூரே தலைநகராய் இருந்ததென்றும் பாண்டியன் வெற்றி குறித்த புதிய பேரரசத் தலைநகரே நீர்விசய நகரென்றும் நாம் கொள்ள இடமுண்டு. ஏனென்றால், சோழர் படையெடுப்பின் போது அங்கே ஆண்ட பேரரசன் சீர்மாற சீர்வியயோத்துங்கனே. அவன் குடிப்பெயரான ‘சீர்மாற’ என்பது ‘மாறன்’ அல்லது பாண்டியன் மரபை நினைவூட்டுகிறது. அவர்கள் கொடியும் மரபுப் பெயருக்கிசைய மீனக் கொடியாகவேயிருந்தது. மன்னர் குடிப் பெயரில் மட்டுமின்றி, மக்கட் பெயர் ஊர்ப் பெயர் ஆகியவற்றிலும் மொழியிலும், வாழ்விலும் நாம் சோழர் படையெடுப்புக்கு முற்பட்ட சாவக நாட்டில் பல தமிழகத் தொடர்புகளைப் பொதுவாகவும், பாண்டி நாட்டுத் தொடர்பு களைச் சிறப்பாகவும் காண்கிறோம். மதுரை பண்டைத் தலைநகரின் பெயராகவும், ஒரு தீவின் பெயராகவும், ஒரு கடலிடுக்கின் பெயராகவும் நிலவுகின்றது. மலாயா என்ற நாட்டுப் பெயர் இன்றும் மலையம் என்ற பொதிகை மலையை நினைவூட்டு வதாகும். இவையன்றிப் பாண்டியன், மதியன், புகார், மலையன் கோ, செம்பூட்சேஎய், குறிஞ்சி, செங்கரை ஆகிய தமிழ்ப் பெயர்களும் அங்கே நிலவுவதாக மகாவித்வான் இரா. இராகவய்யங்காரின் தமிழ் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. சாவகத்தில் சங்க காலத்தில் தமிழ்ப் பேசப்பட்டதாக மணிமேகலை கூறுகிறது. அத்துடன் சோழர் படையெடுப்புக்கு முன்னும் பின்னும் அங்கே பல தமிழ்க் கல்வெட்டுக்களும், பட்டயங்களும், பண்டைத் தமிழக எழுத்துக்களிலேயே வரையப்பட்ட சமஸ்கிருதக் கல்வெட்டுகளும் கிடைக்கின்றன. முந்நீர் விழா சயநாடு அல்லது சாவகத்தை வென்ற பெரும் புகழாளன் என்ற முறையிலேயே நெடியோன் சயமா கீர்த்தி என்றழைக்கப் பட்டான். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவரான இறையனார் அகப்பொருளுரையின் ஆசிரியர் ‘சயமா கீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்று கூறுவதால் இது நெடியோன் பெயரே என்பது தெரியவரும். சயநாடு, ஜவ நாடு என்ற நாட்டுப் பெயர்கள் அமைந்த சாவக நாட்டுக் கல்வெட்டுகள் பல உண்டு ஜயநகரம், சுந்தர பாண்டியன் என்ற பெயர்களை உட்கொண்ட கல்வெட்டும் ஒன்று உளது. ‘ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக’ என்பது அதன் வாசகம் ஆகும். ‘பாண்டிய’ என்ற பெயருக்கேற்ப இந்தக் கல்வெட்டில் மீன் இலச்சினையும் காணப் படுகிறது. வடிம்பலம்ப நின்ற பாண்டியன், முந்நீர் விழவின் நெடியோன் என்ற பெயர்கள் கடற்பேரரசன் என்ற முறையில் கடல் கடந்த நாட்டில் அவன் நடத்திய கடல் விழாவைக் குறிக்கின்றன. அதில் அவன் பாறையில் தன் அடிகளைப் பொறித்து அதன்மீது கடல் அலைகள் வந்து அலம்பும்படி செய்ததாக அறிகிறோம். இதுவே இன்றுவரை அந்நாட்டவ ரிடையே அரசர் முடிசூட்டு விழா மரபாக இருந்து வருகிறது. மன்னர் இவ்வழக்கத்தைத் தலைமுறை தலைமுறையாக மேற்கொண்டிருந்தனர் என்பதைக் கல்வெட்டுகள் பல காட்டுகின்றன. சீர்அருடன் ஆற்றின் நடுவே இங்ஙனம் அடி பொறிப்பதற்குரிய ஒருபெரும் பாறையிருக்கிறது. இதில் பூர்ண வர்மன் என்ற பெரியோன் அடிவைத்த செய்தி குறிக்கப் பட்டுள்ளது. இம் மன்னன் பெயருடன் ‘நெடியோன்’ என்று பொருள்படும் தொடரும் உள்ளது. “தருமா நகர்த் தலைவனும் உலகை ஆள்பவனுமாகிய நெடியோன் ஸ்ரீமான் பூர்ணவர்மனின் (விஷ்ணுவின் அடிகளை ஒத்த) இணையடிகள்” “விக்ராந்தஸ்யா வனிபதே ச்ரீமத; பூர்ண வர்மண; தருமா நகரேந்துஸ்ய விஷ்ணோரிவ பதத்வயம்” என்பதே இந்தக் கல்வெட்டு (இந்தியப் பழமை ஏடு iii 355-58) இதில் தருமா நகர் என்பது கொற்கையே என்று சமஸ்கிருத ஆதாரம் காட்டி முடிவு கொள்கிறார், இரா. இராகவய்யங்கார் அவர்கள். வேறு சிலர் அதைக் கன்னியாகுமரி அடுத்த ஓர் இடம் என்று கூறுவதாகவும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளார். இருவகையிலும் இங்கே காட்டப்பட்ட கல்வெட்டிலும் வேறு பல கல்வெட்டுகளிலும் குறிக்கப்பட்ட பூர்ண வர்மன் முந்நீர் விழாவின் நெடியோன்தானோ என்று கருத இடமுண்டு. அவை நெடியோன் கல்வெட்டுகளானால் அவை ஏன் தமிழில் எழுதப்பட வில்லை, சமஸ்கிருதத்தில் எவ்வாறு எழுதப்பட்டது என்று அறிய முடியவில்லை. ஏனென்றால் இவ்வளவு பழமை யான காலத்தில் சமஸ்கிருத மொழி உருவாகியிருக்க வழியில்லை. நெடியோன் புகழ் மரபு நெடியோன் சங்க காலத்திலே பழம் புகழுடையவனாகப் பல பாடல்களில் (கலி. முல்லை; 4; சிலப்பதிகாரம் அழற்படு காதை 56-61) சிறப்பிக்கப்படுகிறான். பிற்கால இலக்கியங்களிலும் இவன் பெயர் நீடித்து நிலவி வந்துள்ளது. தமிழகத்தில் மிகப் பழமையான அரசன் என்று கூறுவதன்றி, இன்று இவன் காலத்தையோ பழமை யெல்லையையோ நாம் கணித்து வரையறுத்துக் கூற முடியவில்லை. பாரதப் போரை ஒட்டிப் பெருஞ் சோற்றுதியனுக்குக் கி.மு. 1000 எனக் குத்து மதிப்பாகக் கூறுவது போலவே, பல ஆசிரியர்கள் தொல்காப்பியத்துக்கும், நெடியோனுக்கும் கி.மு. 500 என்ற கால மதிப்புத் தருகின்றனர். ஆனால், கடைச் சங்கப் புலவருள் மாமூலனார் முதலிய பலர் அசோகனுக்கு முற்பட்டவர் என்று கருத இடமுண்டு. தவிர பாரதப் போர்க் காலம், தொல்காப்பியர் காலம் ஆகிய இரண்டிலுமே எது முந்தியது, எது பிந்தியது என்று கூறுவது முடியாது. இன்றைய புராண இதிகாச அடிப்படை யிலேயே பாரதப் போர் முந்தியதென்று ஆராய்ச்சியாளர் மதிப்பிட்டுள்ளனர். எப்படியம் தொல்காப்பியர், நெடியோன் காலங்கள் கி.மு. 500க்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டிருத்தல் சாலும். ஏனெனில் இலங்கை வேறு, தற்போதைய தமிழகம் வேறு என்ற நிலை பெரிதும் இடைச்சங்க காலத்தில் ஏற்பட்ட நிலையேயாகும். இது பாரதத்துக்கு மட்டுமின்றி, இராமாயண காலத்துக்கும் முற்பட்ட நிலைமை என்று குறிப்பிடத் தேவையில்லை. நெடியோன் காலத்துக்குரிய, அதாவது பிற்காலச் சோழன் படையெடுப்புக்கு முந்திய தமிழ்க் கல்வெட்டுகளும் தமிழக வாணிக, குடியிருப்புச் சின்னங்களும் சுமத்ரா, மலாயா நாடுகளில் மட்டுமன்றி சீயம், இந்து சீனா ஆகியவற்றிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் பரந்து காணப்படுகின்றன. இந்து சீனாவில் பல நூற்றாண்டுகளாகச் ‘சம்பா’ என்ற தமிழ் பேரரசே நிலவி வந்ததாக அறிகிறோம். சீனத்திலும், சப்பானிலும்கூடப் பண்டைத் தமிழ்த் தொடர்புகளைக் காணலாம் என்று பழமை யாராய்ச்சியாளர் கருதுகின்றனர். கடலக மேலையுலக, தொலைக் கீழையுலகத் தொடர்புகள். தவிர கி.மு. 2000க்கு முன்னிருந்தே எகிப்து, பாலஸ்தீன், பாபிலோன் ஆகிய மேலை நாடுகள் கிழக்கே சீனத்துடன் நிலப் போக்கு வரவுகளும், கடற் போக்கு வரவுகளும், வாணிகத் தொடர்பும் உடையவையாய் இருந்தன. சீனத்தின் பட்டும் மாணிக்கமும் மேலை நாடுகளிலும், எகிப்தின் பவளங்கள், வெள்ளீயம், துணிவகைகள் ஆகியவை சீனத்திலும் பரிமாறப் பட்டன. கி.மு. 1500க்குப் பின்நிலப் போக்கு வரவு திடுமென நின்று விட்டது. ஆரியர் போன்ற பண்படா நாடோடி இனங்களின் இடப் பெயர்வால் ஏற்பட்ட விளைவு இது என்று தோன்றுகிறது. இதனால் கடல் வாணிகமும் கடல் போக்கு வரவுகளும் மிகுதியாயின. தமிழகமும் மலாயாவும் இக்கடல் வாணிகத்தில் நடு இடம் வகித்ததினால் பெரும் பயன் அடைந்தன. மலாயாக் கடற்கரையைச் சுற்றிச் செல்வதற்குப் பதில் கரைக்குக் கரை கடந்தும், தமிழகக் கடற்கரையைச் சுற்றுவதற்குப் பதில் கீழ்க்கரைத் துறைமுகங்களிலிருந்து மேல் கரைத் துறைமுகங்களுக்கு கடந்தும் வந்ததால், மலாயா, தமிழகம் ஆகிய இரு நாடுகளிலும் உள்நாட்டு வாணிக வழிகளுடன் இது இணைந்தது. தொடக்கத்தில் தமிழரே கீழ்க் கோடிக்கும், மேல் கோடிக் கும் இடையே வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், மேற்கே பினீஷியரும், எகிப்தியரும், அராபியரும் படிப்படியாகத் தமிழ் வணிகருடன் அதைப் பங்கிட்டுப் போட்டி வளர்த்தனர். அது போல மேற்கே தொடக்கத்தில் மலாய் மக்களும் பின் சீனரும் பங்கு கொண்டனர். இந்தப் பழங்கால அகல் உலக வாணிகத்தில் தமிழகம் போக்கு வரவு வழியின் மையமாக இருந்தது போலவே, அதன் சரக்குகளும் பேரிடம் வகித்தன. தமிழகத்தின் பண்டைப் பெருஞ் செல்வத்துக்கு இதுவே காரணம். கி.மு. 3000 -லிருந்து உரோமப் பேரரசின் வீழ்ச்சிக் காலமாகிய கி.பி. 500வரை தமிழகமே கடல் வாணிகத்தில் இடைவிடாத நீண்ட வாழ்வுடையதாயிருந்தது. ஏனெனில் தமிழகத்துடன் மேல் திசையில் முதலில் எகிப்தும் பாலஸ்தீனமும், அவர்கள் நாகரிகம் வீழ்ச்சியடைந்த பின் கிரேக்க உரோமரும், கிரேக்க உரோமர் வீழ்ச்சிக்குப் பின் அராபியரும் தொடர்பு கொண்டனர். கீழ்திசையில் இதுபோலவே முதலில் மலாய் இனத்தவரும் அவர்கள் கை தளர்ந்த பின் சீனரும் தமிழருடன் வாணிகத் தொடர்பில் பங்கு கொண்டனர். இக்காலங்களிலே அகல் உலகுடன் தமிழகம் கொண்ட அரசியல் கலை நாகரிகத் தொடர்புகள் மிகப் பலவாயிருந் திருத்தல் வேண்டும். இவற்றின் பெரும்பகுதியை நாம் அறிய முடியவில்லை. ஆனால், அறியத்தக்க அளவிலும் பொதுவாகக் கீழ்திசையையும் சிறப்பாகத் தமிழினத்தையும் புறக்கணிக்கும் வெள்ளை யறிஞர் போக்கு உண்மை துருவிக் காண்பதில் தடை கற்களாய் உள்ளன. எடுத்துக்காட்டாக, கி.மு.2000 ஆண்டள விலேயே எகிப்தியர் ‘பண்ட்’ என்ற நாட்டையும் ‘அதிலுள்ள ‘ஓவிர்’ என்ற துறைமுகத்தையும், அதனருகே கிடைக்கும் தங்கம், தேக்கு, மணப் பொருள்கள் ஆகியவற்றையும் பற்றிக் கூறுகின்றனர். அந்த நாட்டையே தங்கள் மூலத்தாயகமென்றும் குறிக்கின்றனர். பண்ட் என்பது பாண்டிநாடு என்பதும், ‘ஓவிர்’ என்பது ‘உவரி’ என்ற தென் பாண்டி நாட்டுத் துறைமுகம் என்பதும் மேலீடாகவே தெள்ளத் தெளிவாக விளங்கும் செய்திகள் ஆகும். கோலார் தங்கவயல் சங்க காலத்திலும் சிந்துவெளி நாகரிக காலத்திலும் தொழிற் பட்டிருந்த செய்தி இதனை வலியுறுத்தும். ஆனால், ‘வெண்ணாட்டறிஞர்’ அதை அபிஸினியாவிலோ, தென்ஆப்பிக்காவிலோ தம் கற்பனைக் கோல்கொண்டு கிளறித் தேடுகின்றனர். பாண்டியன், மீனன், ஊர், சிவன் முதலிய பேர்களும் இது போலவே நாலாயிர ஆண்டுகட்கு முற்பட்ட உலகெங்கும் காணப்படுகின்றன. உரோமப் பேரரசர் காலங்களில் மேலை நாடுகளில் தமிழகம் வாங்கிய சரக்குகளைவிட அங்கே அனுப்பிய சரக்குகளே மிகுதியாயிருந்ததால் மேலை உலகின் தங்கம் முழுவதும் தமிழகத்திலேயே வந்து குவிந்தன. உண்மையில் தம்பட்ட சாலைகளில் அடிக்கப்பட்ட பொன் காசுகள் தமிழகத்துக் கென்றே அடிக்கப்பட்டன. உரோம் அழிந்து ஆயிரக் கணக்கான ஆண்டுகள் அக்காசுகள் தமிழகத்தில் செலாவாணியில் நீடிக்குமளவு அவை தமிழகத்தில் செறிவுற்றிருந்தன. இவை போக, இன்றளவும், ஒருவேளை இனியும், எடுக்கப்படும் புதையல் பொற்காசுகள் அளவற்றவை. சங்ககாலத் தமிழகத்தின் நகரங்களில், நாகரிக உலகின் எல்லா நாட்டவர்களும் வந்தும் தங்கியும் சென்றும் இருந்தனர். புதுச்சேரியில் உரோமக் குடியிருப்பு ஒன்று அண்மையில் அகழ்ந்து காணப்பட்டுள்ளது. முசிறியில் உரோமக் குடியிருப்புடன் உரோமப் படைத்தளமும், உரோமப் பேரரசர் அகஸ்டஸ் காலக் கோயிலும் இருந்ததாக மேலை நாட்டாசிரியர் குறிக்கின்றனர். காவிரிப்பூம்பட்டினம் முதலிய நகரங்களில் உள்ள பன்மொழி மாந்தர் பற்றிப் பட்டினப் பாலை பகர்கின்றது. கடல்கடந்த கீழை உலகத் தொடர்புகள்: அரசியல் தூதர் தொடர்புகள் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழருக்கும் இலங்கைக்கும் அரசியல், சமுதாய, மணத் தொடர்புகள் இருந்தன. கி.மு.2-ஆம் நூற்றாண்டிலும் 1-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் தமிழ்மரபினர் இலங்கையில் அரசாண்டனர். கி.மு. 26லும் 20லும் பாண்டிய அரசன் உரோமப் பேரரசர் அகஸ்டஸிடம் அரசியல் வாணிகத் தொடர்பும் படைத் துறைத் தொடர்பும் கோரி இரு தடவை தூதர் அனுப்பியிருந்ததாக ஸ்டிராபோ என்ற பண்டை உரோம ஆசிரியர் குறிக்கிறார். கி.மு.2-ம் நூற்றாண்டின் ஹான் பேரரசர் காலத்திலிருந்து முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தி லிருந்து சீனப் பேரரசருக்கு இது போன்ற தூதுகள் சென்றதாகப் ‘பான்கூ’ என்ற கடைச்சங்க காலத்துச் சீன ஆசிரியர் குறித்துள்ளார். சீனப்பேரரசர் ஹுவான் -தி காலத்தில் கி.பி.159லும் 161லும் தமிழகத்தின் ஒரு பேரரசனிடமிருந்து அரசியல் வாணிகத் தூதுக் குழுக்கள் சென்றதாகச் சீனர் குறித்துள்ளனர். தந்தம், காண்டாமா (காண்டா மிருகம்) ஆமை ஓடுகள் ஆகியவற்றை அவர்கள் கொண்டு சென்றதாகத் தெரிகிறது. தமிழர் அந்நாளிலேயே தென் ஆப்பிரிக்காவுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும் இதே செய்தி காட்டுகிறது. ஏனெனில், இன்றும் காண்டாமா அந்நாட்டுக் குரிய விலங்கு ஆகும். காம்போச நாடும், சம்பா நாடும் சீனத்துக்கு அனுப்பிய பொருள்களில் தமிழகத்தின் வைடூரியங்களும், துணி மணி மணப் பொருள்களும், யானையும் இடம் பெற்றனவாம். சம்பாவின் பண்டை எழுத்தும், சப்பானின் பண்டைய ‘கடகம’ எழுத்து முறையும் பண்டைத் தமிழ் எழுத்தையே தழுவியவை என்று மேனாட்டறிஞர் கருதுகின்றனர். தமிழரின் இவ் அகலுலகத் தொடர்பைக் குறிக்காத வரலாற்றாசிரியர் இல்லை என்னலாம். ஆனால், தமிழக வரலாற்றில் இவற்றின் படிப்பினையையும், தொல்காப்பியம் சங்க இலக்கியம் ஆகியவற்றின் படிப்பினையையும் வரலாற்றாசிரியர் மறந்துவிடுகின்றனர். சங்க இலக்கியங்கள் பல வரலாற்று மரபுகளைப் போல் ஆராய்வதற்குரியன அல்லது புதிய ஆராய்ச்சியின் நுனித் தும்புகளாகக் கருதுவதற்கு மாறாக, அவற்றைப் புராண மரபுகளைவிடப் போலி எனப் புறக்கணிக்க இது இடந்தந் துள்ளது. புராண மரபுகளிலும் தமிழ்த் தொடர்பு நீக்கி அயல் தொடர்புக்கே ஆர்வ நாட்டம் காட்டும்படி இது தூண்டி யுள்ளது. தமிழர் -மேலை உலகத் தொடர்பு, தமிழர்-கீழை உலகத் தொடர்பு ஆகியவற்றைவிட, தமிழர் -வட உலகத் தொடர்பையே இந்த அயல் மரபு நாட்டம் பெரிதும் பாதிக்கிறது. 4. வடதிசைத் தொடர்புகள் தமிழகத்தின் மிகப்பழமை வாய்ந்த தொடர்புகள் கிழக்கு, மேற்குத் தொடர்புகளே. அவையே உயிர்த்தொடர்புகளாகவும் வளமான தொடர்புகளாகவும் அமைந்துள்ளன. இது இயல்பே. ஏனெனில், பண்டை நாகரிக உலகம் கிழக்கு மேற்காகவே நெடுந்தொலை பரவியிருந்தது. அதன் தெற்கு வடக்கு அகலம் கிழக்கு மேற்கு நீளத்தை நோக்க இன்றுகூட மிகுதியன்று. இதற்கு இயற்கையான நில இயல் காரணங்களும் வரலாற்றுக் காரணங் களும் உண்டு. முதலாவதாக, உலகின் வடகோடியும், தென் கோடியும், இன்றளவும் உயிரின வாழ்வுக்கே, புல்பூண்டுகளுக்குகே இடம் தராதவை. தவிர மனித நாகரிகம் மலையில் பிறந்ததாயினும், அங்கே சிறு வாழ்வே வாழ்ந்தது. ஆற்றோரங்களில் ஓரளவு தழைத்தாயினும், அவ்வழி உலகில் பரவவில்லை. கடலோர மாகவே, கடல் கடந்தே. அது உலகில் பரவமுடிந்தது. இவ் வகையில் தென்ஆசியா, நடுநிலக் கடல் சூழ்ந்த நிலம், நடு அமெரிக்கா ஆகியவற்றின் வாய்ப்புப் பெரிது. ஏனெனில் உலகின் வடபாதி கடலற்ற முழு நிலப்பரப்பு. தென்பாதியோ நிலமற்ற கடல் பரப்பு, அல்லது தொடர்பற்றுத் துண்டுபட்டுக் கிடக்கும் நிலத் தொகுதி, இவற்றுக்கு மாறாக நடுஉலக, சிறப்பாக, உலக நடு வரைக்குச் சற்று வடக்கிலுள்ள நடு உலகு வளையம் கடலுடன் நிலமும், நிலத்துடன் கடலும் கலந்து உறவாடும் திருநலம் உடையது. தமிழகம் நாகரிக உலகின் நடுமையம். நாகரிக உலகின் உயிர்மையமும் அதுவே; உலகின் கடல்வழி உயிர்ப் பாதைகள் அனைத்தின் நடு இணைப்பாகவும் அது அமைந்துள்ளது.மனித இனநாகரிகக் கொடியும் அதனின்றே பலதிசைகளிலும் கிளைத்துச் செல்வது காண்கிறோம். ஆனால், இந்த நாகரிக ஒளி உலகில் பரவுவதற்கும் பரவி வளர்ந்து நீடிப்பதற்கும் தடையாய் அமைந்த திசை வடதிசையே. பண்டை மேலை நாகரிகங்களில் பெரும்பாலானவையும், கீழை நாகரிகங்களில் பலவும் இவ்வடதிசை வாடைக்கு இலக்காகியே அழிவெய்தியுள்ளன. கீழ் கோடியில் சீனமும், மேல் கோடியில் தற்கால மேலை ஐரோப்பாவும் தமிழகமும் மட்டுமே அவ்வாடைக்கு முற்றிலும் ஆட்படாமல் உயிர்வளர்ச்சி பெறுகின்றன. தமிழக வடதிசைத் தொடர்புகளும், தமிழக - உலகத் தொடர்புகளும் சரிவர உணரப்படாமலும் சரிவரப் பயன்படுத்தப் பெறாமலும் தடை செய்து வருவதும் இவ்வாடையே. தமிழக-உலகத் தொடர்புகளில் மேலையுலகத் தொடர்புக்கே நமக்கு இதுவரை பழமையான சான்றுகள் மிகுதியாகக் கிட்டியுள்ளன. ஆனால், மேல் திசையில் எந்த நாகரிகமும் தொடர்ச்சியான நீடித்த வாழ்வுடையதாயில்லை. நாகரிகங்கள் அத்திசையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி அழிந்து, புதுப்புது நாகரிகங்கள் எழுந்து வளர்ந்து வந்துள்ளன. ஆகவே தமிழகத்தின் மேலைத் தொடர்புகள் ஒரு தலைமுறைத் தொடர்பாயிராமல், பல மேல் திசைத் தலைமுறைகளின் தொடர்பாக இருந்து வருகிறது. ஆனால், கீழ்திசைத் தொடர்புகள் மேல் திசையுடன் ஒத்த பழமையுடையவை மட்டுமல்ல; அவற்றைவிடப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியுமுடையவை. அவற்றுள் பல -சீன சப்பானிய, தென் கிழக்காசிய நாகரிகங்கள் - தமிழகத்துடனொத்த நீடித்த ஒரே தலைமுறைத் தொடர்பாய், தமிழகத்தின் உயிர்த்துணை நாகரிகங் களாக நிலவுகின்றன. தமிழகத்துடன் அவை மூவாயிரமாண்டு தொடர்ந்த உறவுடையன. வடதிசை, தென்திசை வண்ணங்கள் வடதிசையில் கங்கை இமய எல்லைகள் பற்றியவரை, தமிழகத் தொடர்பு பழமையில்குறைந்ததன்று. குறைந்த அளவில் நெடியோன் காலமுதல், ஒருவேளை அதற்கும் முற்பட்டே தமிழக வாழ்வும், நாகரிக ஒளியும் அவ்வெல்லை வரை படர்ந்து, பல சமயம் அது கடந்தும் பரவியதுண்டு, அத்துடன் இது பண்டை மேலை உலகத் தொடர்புகள்போல இடையிடையே அறுபட்டு விடாமல், கிட்டத்தட்டச் சீனத் தொடர்பு போலவே இடையறாது நீடித்துள்ளது. ஆயினும் சீனம், சிறப்பாகத் தென்சீனம் -வடதிசை வாடைக்குப் பெரிதும் ஒதுங்கி வாழ்ந்ததனால், மூவாயிரம் ஆண்டுகளாக ஒரே மொழி, இலக்கியம், கலை, நாகரிகத் தொடர்ச்சியுடையதாய் இருக்க முடிகிறது. ஆனால், சீன, சப்பானிய உலகுகளுக்குப் புத்தநெறி அளித்த சிந்து கங்கைச் சமவெளியிலே அந்தப் புத்தர் கால மொழியோ, இலக்கியமோ, சமய வாழ்வோ கூட நீடித்து நிலவவில்லை. மொழி இலக்கியத் துறையில் புத்தர் கால முதல் இன்றுவரை பாளி பாகத நாகரிகம், சமஸ்கிருத நாகரிகம், அபபிரும்ச மொழி வாழ்வு, தற்காலத் தாய்மொழி வாழ்வு என்ற நான்கு தலைமுறைகள் ஆகியுள்ளன. இவற்றிடையேகூட ஒன்று பட்ட வாழ்வு இல்லாது, இடத்துக்கிடவேறுபாடும், ஓரிடத்துக் குள்ளேயே வகுப்புக்கு வகுப்பு வேறுபாடும் மிகுதி. தமிழகத்தின் தனிப்பெரு வாழ்வைக்கூட இவை அவ்வப்போது தாக்க நேர்கின்றது. தமிழக வடதிசைத் தொடர்புகள் தெற்கினின்றும் வடதிசை செல்லும்போதெல்லாம் நாகரிக ஒளித் தொடர் பாகவும், வடக்கினின்று தெற்கே வரும்போதெல்லாம் நாகரிகச் சீர்குலைவுத் தொடர்பாகவுமே இருந்து வந்திருக்கின்றன, இது தமிழகத்தின் குற்றமன்று; சிந்து கங்கை சமவெளியின் குற்றமுமன்று. ஏனெனில் மிகப்பழமையான அடிப்படைத் தொடர்பில், இரண்டும் தெற்கினின்று பரவிய ஒரே பேரின நாகரிகமேயாகும். குற்றம், சிந்து கங்கைச்சமவெளி வட ஆசியப் பரப்புடன் நிலத் தொடர்பு பட்டு, வாடையின் நடுநேர் வழியில் கிடப்பதேயாகும். இதனால் புத்தர்காலக் கங்கை வெளியுடன் தமிழகத்துக்கு இருந்த நற்றொடர்புகள் புத்தருக்குப் பிற்பட்ட காலத்தில் சீர்குலைந்தும், இஸ்லாமிய காலங்களில் இன்னும் இடர்ப்பட்டும், அதன்பின் முற்றிலும் இடக்குற்றும் வந்துள்ளன. இந்திய மாநிலத்திலே வடக்கு நின்றும் தெற்கு; மேற் கினின்றும் கிழக்கு நோக்கிய வெற்றிகள் குறைவு. தெற்கினின்றும் வடக்கு; கிழக்கினின்றும் மேற்கு நோக்கிய வெற்றிகளே தொகையில் பல. அத்துடன் முந்தியவை அயல் தொடர்பு களாகவும், அழிவுத் தொடர்புகளாகவுமே உள்ளன. பிந்தியவையோ மாநில வாழ்வுக்கு ஒற்றுமையும் ஆக்கமும் பீடும் தரும் தேசியத் தொடர்புகளாக உள்ளன. ஆயினும் இந்திய மாநில வரலாறு எழுதியவர்கள் பெரும்பாலும் அயலினத்தவர் அல்லது அயலின நோக்குடைய வர்கள். அத்துடன் அவர்கள் உலக நாகரிக அலைகளைத்தவறாகப் புரிந்து கொண்டவர்கள். இக்காரணங் களால் அவர்கள் அழிவுத் தொடர்புகளையே நுணுகி நுணுகி விரித்து ஆராய்ந்துள்ளனர். ஆக்கத் தொடர்புகளைப் புறக்கணித்தும் இருட்டடித்துமே வந்துள்ளனர். நெடியோனுக்குப் பின் கங்கையிலும், இமயத்திலும் தம் ஆட்சி அல்லது புகழ்த்தடம் பொறிக்க முயன்ற தமிழரசர் மிகப்பலர். அதன் எதிர் விளைவாக ஒரே ஒரு சமயம் வடதிசை பேரரசுகளும் தெற்கே ஆதிக்கம் பரப்ப முயன்றதுண்டு. ஆயினும் இத்தெற்கு வடக்குத் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஒரு தனிப்பண்பு காணலாம். அது பெரிதும் வடகிழக்குத் தெற்குத் தொடர்பாக இருந்தது. அதில் தமிழகத்துடன் கங்கை வெளியே போட்டியிட்டது. சிந்துவெளி அதில் மிகுதி கலக்கவில்லை. நாலாயிர ஆண்டுகளுக்குமுன் சிந்து வெளியும் பண்டை மாநில நாகரிகத்தில் உயிர்ப் பங்கு கொண்டிருந்தது. ஆனால், ஆரியர் வரவால், அது மாநிலத்தின் உயிர்த் தொடர்பற்ற பகுதி ஆயிற்று. அப்பகுதியும் அதற்கு வாயிலாய் அமைந்த வடமதுரை, தில்லிப் பகுதியும் அயல் நிலவாடைக்கு வழிவிட்டு, அதற்கு மூலதளமாய் அமைந்ததன்றிவேறுஉயிர் நாகரிகத் தொடர்புடையதாய் இல்லை. வடதிசை மகதப் பேரரசர்: சிசு நாகர், நந்தர் பண்டைத் தமிழ் ஏடுகள், பண்டைத் தமிழக வரலாற்றுக் குறிப்புகள் மட்டும் உடையனவல்ல, பண்டைக் கங்கை வெளிக் குறிப்புகளும் அவற்றில் மிகுதி. எடுத்துக்காட்டாக, காஞ்சியும் புகாரும், மதுரையும், வஞ்சியும் குறிப்பிடப்படுவது போலவே வடதிசை பண்டைப் பெருநகரமான பாடலிபுரமும் குறிப்பிடப் படுகிறது; இந்நகரம் கி.மு.500 முதல் 475 வரை ஆண்ட அஜாத சத்துரு என்ற சிசு நாகமரபுப் பேரரசனால் நிறுவப்பட்டது. இது ஆயிரமாண்டு பல பேரரசுகளுக்குத் தலைநகராயிருந்து கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் அழிவுற்றது. இதன் மிகப் பழமையான சமகால இலக்கியக் குறிப்புகள் தமிழ் ஏடுகளிலேயே உள்ளன. “வெண்கோட்டியானை சோனை படியும் பொன்மலி பாடலி பெறீ இயர்” (குறுந். 75) என்ற படுமரத்து மோசிக்கீரனாரின் பாடல் சோனை யாற்றங் கரையிலுள்ள பாடலி நகரத்தையும், அதன் செல்வத்தையும் குறிப்பது காணலாம். இந்தச் செல்வத்துக்குப் பெரிதும் காரணமாயிருந்தவர் பேரரசர் அசோகனுக்கு முன் அந்நாட்டை ஆண்ட நந்தர்கள் ஆவர். அவர்கள் தம் பெருஞ் செல்வத்தைக் கங்கையாற்றின் நடுவே புதைத்து வைத்திருந்தனர். 2500 ஆண்டுகட்கு முற்பட்ட இச்செய்தியைக் கடைச்சங்க காலத்துப் பழம்பெரும் புலவர் மாமூலனார் குறித்துள்ளார். “பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர் முதல்கரந்த நிதியங்கொல்லோ?” (அகம். 265) இந்நகரை நிறுவிய பேரரசனான அஜாகசத்துருவின் பெயரன் உதயணன் என்று கூறப்படுகிறது. இன்று மரபிழந்து மறக்கப் பட்டுவிட்ட ஏதோ ஒரு வடதிசைத் தாய்மொழியில் அவன் குடிமரபின் வரலாறு ஒரு பெருங்காவியமாக எழுதப்பட்ட தென்று அறிகிறோம். அதன் பெரும் பகுதி தமிழிலும் பெருங்கதை என்ற பெயருடன் சிதைவுற்ற ஓர் ஏடாக நிலவுகிறது. பாடலிபுர நகரம் பொன்னுக்கு மட்டுமன்றிப் பொன்னில் நல்ல கலை வேலைப்பாடுடையவர்களுக்கும் பேர்போனதென்று அது குறிக்கிறது. “பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞர்” (பெருங்கதை: உஞ்சைக் காண்டம்) என்பது அந்நூலின் ஆசிரியரான கொங்கு வேள் தரும் தகவல் ஆரும். இக்குறிப்புகள் அசோகனுக்கு முற்பட்ட புத்தர்பிரான் காலத்தைச் சார்ந்தவை. இவற்றில் இறுதிக் குறிப்பு நீங்கலாக, ஏனையவை கி.மு. 6 -முதல் 4 - ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்த புலவரின் சமகாலக் குறிப்புகள் என்பதும் கவனிக்கத்தக்கது. மோரியர் தொடர்: சோழப் பேரரசன் இளஞ் சேட்சென்னி அசோகன் மரபினர் ‘மோரியர்’ ஆவர். இவர்கள் கி.மு. 4 - ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி.மு. 2 - ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஆண்டவர்கள். அவர்களைப் பற்றிய சமகாலக் குறிப்புக்களும் சங்க இலக்கியத்தில் நிரம்ப உள்ளன. இவர்கள் அசோகன் காலத்தவர்களல்லர், பிற்காலத்தில் அதாவது கி.மு. 2ஆம் நூற்றாண்டினர் அல்லது கி.பி. 2-ஆம் நூற்றாண்டினர் என்று கொள்ள ஆதாரம் தேடுபவர் உண்டு. ஆனால், அசோகனைப் பற்றியே வரலாற்றாசிரியர்கள் கொண்ட ஒரு தவறான கருத்துத்தான் இதற்குக் காரணம். அசோகன் பேரரசின் தென் எல்லை மைசூர் என்று அறிகிறோம். ஆனால், அசோகன் கலிங்கத்தை மட்டுமே வென்றான். தென்னாட்டின் வடபகுதியை வெல்லவில்லை. ஆகவே பிந்துசாரனே பண்டைத் தமிழகம் நீங்கிய தென்னாட்டை வென்றிருக்க வேண்டும் என்று பலர் கருதியுள்ளனர். மிக அண்மைக் காலத்தவரான திபெத்திய வரலாற்றாசிரியர் தாரநாதர் குறிப்பை இதற்கு ஆதரவாகச் கொள்கின்றனர். உண்மை என்னவெனில் கலிங்கம், மோரியர் காலத்தில் ஒரு பேரரசு, சிறிய நாடு அன்று. அது அசோகன் பேரரசைவிடப் பரப்பிலோ ஆற்றலிலோ குறைந்ததன்று. பின்னாளைய ஆந்திர பேரரசைப்போலவே அதுவும் கங்கை முதல் வடபெண்ணை வரை பரவியிருந்தது. மோரியருக்கு முற்படக் கலிங்கரும் அவருக்கு முற்பட்ட நந்தரும் சிசுநாகரும் கூடத் தம் பேரரசல்லையை மைசூர் வடஎல்லைவரை பரப்பியிருந்தனரென்றும் இப்போது தெரிய வருகிறது. இப்பேரரசின் விரிவு அஜாதசத்துருவின் காலத்திலேயே நடைபெற்றதாகலாம். தமிழகத்திற்கும் அப்பேரரரசுக்கும் இடையிலுள்ள வடுசுகர் கோசர் என்ற முரட்டு வகுப்பினரே அதன் எல்லையில் வாழ்ந்தனர். அசோகன் கலிங்கத்தை வெல்லா விட்டால், கலிங்கர்களே அசோகனை வென்றிருப்பர். மோரியர் வீழ்ச்சிக்குப்பின் கலிங்கப் பேரரசன் காரவேலனும், ஆந்திரப் பேரரசரும் அவ்வாறே வென்றனர். ஆகவே தமிழக எல்லை வரை அசோகன் பேரரசு பரவியது அவன் முன்னோர் காலத்திலன்று. கலிங்கப் பேரரசின் வெற்றியே அவனை அப்பேரரசின் எல்லையாகிய தமிழக எல்லைக்குக் கொண்டு வந்தது. அது கடந்தும் அவன் சேர, சோழ, பாண்டிய அரசர்களை வெல்ல முயன்றான். அது முடியாததனாலேயே அவர்களுடன் நேசத் தொடர்பு வைத்துக் கொண்டான். பிற்கால வரலாற்றுச் செய்திகள் பல இதனைத் தெளிவுபடுத்தும். அசோகன் காலத்து மோரியப் படைகளைத் தமிழகப் பேரரசனான சோழன் இளஞ்சேட்சென்னி செருப்பாழி என்ற பெரும்போரில் வென்றான். தமிழக வரலாற்றில் நாம் காணும் முதற்பெரும் நிலப்போர் இதுவேயாகும். இதனைப் பற்றிய முழு விவரங்களும் சங்க இலக்கியப் பாடல்களில் சிதறிக் கிடக்கின்றன. முனைவர் எம் இராசமாணிக்கனார் இவற்றை நமக்குத் திரட்டிக் கோவைப்படுத்தித் தந்துள்ளார். இளஞ்சேட் சென்னியின் காலம் ஏறத்தாழ கி.மு. 3 - ஆம் நூற்றாண்டு ஆகும். மோரியர் படையெடுப்பு: வாட்டாற்றுப்போர்: செல்லூர்ப் போர் சங்க காலத்தின் பின்னாட்களில் கல்வெட்டுகளில் நாம் வடுகவழி என்ற கீழ் கடற்கரையோரப் பாதைபற்றிக் கேள்விப் படுகிறோம். பல்லவ சோழ காலங்களில் தமிழகத்தையும் ஆந்திரத்தையும் வட இந்தியாவையும் இது இணைத்தது. ஆனால், சங்க காலத்தில் இவ்வழி காடுகள் நிறைந்ததாகவும் எளிதில் கடக்கக் கூடாததாகவுமே இருந்தது. ஏனெனில் நீலகிரி வழியாகவும் குடகு வழியாகவும் பயணம் செய்வோரும் படை யெடுப்போரும் சென்று வந்தனர். துளுவ நாடே தமிழகத்தின் வடக்கு வெளியாய் இலங்கிற்று. அந்நாளில் அது பொன் விளையும் திருநாடாக விளங்கிற்று படையெடுப்பாளர்களை இந்தப் பொன் வேட்கையும் கவர்ந்திருந்தன என்பதில் ஐயமில்லை. மோரியர் முதற்கண் தம் எல்லைப்புறத்திலிருந்த கோசர் களைத் துளுவ நாட்டின்மீது ஏவினர். இக்கோசர் கோவா அருகிலுள்ள தற்காலக் கோலாப்பூரைச் சார்ந்தவர்கள். சங்க காலத்தில் தமிழர் நிலப் படைகளில் அவர்கள் வீரராகச் சேர்ந்து பணியாற்றிய துண்டு. அவர்கள் சொன்னசொல் காப்பவர் களென்று அந்நாளில் புகழ் பெற்றிருந்தனர் சங்க ஏடுகள் இது காரணமாக அவர்களை ‘வாய்மொழிக் கோசர்’ என்றும், அசோகர் கல்வெட்டுக்கள் ‘சத்தியபுத்திரர்’ என்றும் பரவுகின்றன. துளுவ நாட்டை அந்நாளில் ஆண்டவன் நன்னன் என்பவன். சங்கப் பாடல்களில் பின்னாட்களில் சேரர் போர்களில் மிகுதி ஈடுபட்ட நன்னன் இவன் மரபினன் ஆகலாம். இடைக் காலங்களிலும் இவன் பெயர் மரபை, நன்னிச் சோடர் முதலான பெயர்களின் முதல் பகுதியில் காணலாம். கோசர் நன்னனைப் போரில் முறியடித்து அவனைக் காடுக ளுக்குத் துரத்தினர்; அவன் பட்டத்து யானையைக் கொன்றனர்; துளுவ நாட்டைக் கைப்பற்றி அங்கேயே தங்கினர். அந்நாட்டின் சிறந்த கோட்டை நகராகிய ‘பழி’யை அரணாக்கி வலிமைப் படுத்திக் கொண்டு, அதையே தம் அடுத்த படையெடுப்புக்குரிய மூலதளமாக்கிக் கொண்டனர். பின்அவர்கள் சேரனையும், அதியன் மரபினனாகிய எழினியையும், சோழ நாட்டெல்லை யிலுள்ள அழுந்தூர்வேள் திதியனையும், பாண்டிய நாட்டெல்லையிலுள்ள மோகூர்த் தலைவனையும் படிப் படியாகத் தாக்கினர். சேரர் படைத்தலைவன் குதிரை மலைக் கோமானாகிய பிட்டங்கொற்றன் மோரியருடன் பல தடவை போர் புரிந்தான். இவற்றில் எப்பக்கம் வெற்றியடைந்தது என்பது தெரியவில்லை. ஆனால், மோரியர் கை வலுத்திருந்தது என்றே கூறவேண்டும். ஏனெனில் அவர்கள் எழினியைத் தாக்கி வாட்டாறு என்ற இடத் திலும் செல்லூர் என்ற நகரின் கீழ் திசையிலும் பெரும் போர் உடற்றினார்கள். செல்லூர்க் கீழ்திசைப் போரில் எழினி மார்பில் வேல் பாய்வுற்று மாண்டான். சோழ நாட்டெல்லையிலுள்ள அழுந்தூர் வேள் ஆகிய திதியனிடத்திலும் பாண்டி நாட்டெல்லையிலுள்ள மோகூர்த் தலைவனிடத்திலும் மோரியர் கை வரிசை சாயவில்லை. திதியன் அவர்களை முறியடித்துத் துரத்தினான், மோகூர் பணியாமல் நிமிர்ந்து நின்றது. பாண்டிய நாட்டுக்குள் மோரியர் அடி யெடுத்து வைக்க முடியாமல் இது தடுத்து நிறுத்திற்று. இச்சமயம் வரை மோரியப் பேரரசன், பேரரசுப் படை தமிழகம் புகவில்லை. எல்லைப்படைகளே ஈடுபட்டிருந்தன. துளுவ நாட்டு முதல் வெற்றியின் பின் சிறுசிறு தலைவர்களிடம் ஏற்பட்ட தோல்விகள் அவனைத் தட்டி எழுப்பின. அவன் இப் போது பேரரசின் பெரும்படையையே திரட்டினான். துளுவ நாடு அல்லது குடகையும் மைசூர் அல்லது எருமை நாட்டையும் கடந்து தமிழகத்துக்குள் வரும் வழியிலுள்ள மலைகளை ஆற்றூர்க் கணவாய்ப் பக்கம் வெட்டிச் செப்பனிட்டுத் தேர் செல்லும் பாதை உண்டு பண்ணினான். இவ்வேலை சில ஆண்டுகள் பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் அம்முயற்சி சங்க ஏடுகளில் பல இடங்களில் சுட்டியுரைக்கப்படுகிறது. பாதை முற்றுப் பெற்றபின் கடலெனப் பரந்த மோரியப் பேரரசின் பெரும் படைகள் பேரேரியில் வந்து தேங்குவது போலத் துளுவ நாட்டில் வந்து குழுமிப் பேராறுகளாகத் தமிழகத்துக்குள் வந்து பாய்ந்தன. செருப்பாழிப் போர்: சோழப் பேரரசன் பெருவெற்றி தமிழகத்துக்கு வந்துற்ற பேரிடையூற்றைச் சோழப் பேரரசன் இளஞ்சேட் சென்னி உணர்ந்து கொண்டான். இனித் தமிழகவேளிர் கைகளிலும் சிற்றரசர் மீதும் பொறுப்பைவிட்டு விட்டு ஒதுங்கியிருப்பது தகாது என்று எண்ணினான். அவனும் தன் பேரரசுப் பெரும் படைகளைத் திரட்டினான். அந்நாளில் சேரரும் பாண்டியரும் அவன் ஆணையின் கீழ்ப்பட்ட துணையரசுகளாய் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் போர் தமிழகப் போர் ஆயினும் வெற்றிகள் சோழப் பேரரசன் வெற்றியாகவே குறிக்கப்படுகின்றன. வடவர் புராண மரபில் சேர, பாண்டியரைவிடச் சோழருக்கே பேரிடம் ஏற்பட்டது, இப்பெரும் போரின் புகழ் காரணமாகவே என்னலாம். சோழநாட்டெல்லையிலேயே மோரியர் படைகள் பல தடவை நையப் புடைக்கப் பெற்றன. மோரியர் மீண்டும் மீண்டும் புதுப்புதுப் படைகள் அனுப்பினர். வடதிசைப் பேரரசின் முழு ஆற்றலும் இதில் ஈடுபடுத்தப்பட்டது. ஆயினும் சோழப் பெரும் படையும் பிற தமிழகப் படைகளும் அவர்களைச் சிதறடித்தன. உயிரிழந்தவரும், உறுப்பிழந்தவரும் போக மீந்தவர் சோழ நாட்டின் எல்லையிலிருந்து துளுவ நாடு வரை தப்பினோம் பிழைத்தோம் என்றோடினர். திதியனைப்போல இளஞ்சேட் சென்னி மோரியரை முறியடித்ததுடன் அமையவில்லை. அவர்கள் மறுபடி தமிழகப் பக்கம் திரும்பாதிருக்கும்படி செய்ய அவன் எண்ணினான். ஆகவே தோற்றோடிய படைகளைத் துளுவ நாட்டுக்கே துரத்திக் கொண்டு சென்றான். மோரியர் மூலதளமாகிய பாழிக் கோட்டையையே முற்றுகையிட்டான். தாக்கியவர் இப்போது திருப்பித் தாக்கப்பட்டனர். பாழிக் கோட்டையிலுள்ள தங்கள் பிடியையேனும் காப்பாற்றிக் கொள்ள மோரியர் அரும்பாடுபட்டனர். ஆனால், சென்னி தமிழகத்தின் அன்றைய சென்னியாகிய துளுவ நாட்டிலேயே மோரியர் தடம் அழியும் வரை போரிட்டான். பாழிக் கோட்டை தரை மட்டமாக்கப்பட்டது. செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியின் பெரும்புகழ் இடையன்சேந்தன் கொற்றனாரால் இனிது பாடப்பட்டுள்ளது. “எழுஉத்திணிதோள் சோழர்பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி குடிக் கடனாகலின் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி வம்பவடுகர் பைந்தலை சவட்டிக் கொன்றயானை...........” (அகம் 375) தமிழகத்தைப் போரால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அசோகனுக்குத் தகர்ந்த பின்னரே, சமயப் போர்வையில் ஆட்சிப் புகழ் பரப்ப அவன் முனைந்திருக்க வேண்டும் என்னலாம். சங்க காலத்திலேயே தமிழகம் ஆரிய மயமாகத் தொடங்கியதற்கு அசோகனும் புத்த சமண சமயங்களின் இனிப்பான தலையீடு களுமே காரணம் ஆயின என்னலாம். செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி கி.மு. மூன்றாம் நூற்றாண்டினன் என்றும், சிபி, முசுகுந்தன், காந்தன், தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் ஆகியோர் அவனுக்கு முற்பட்ட சோழர் என்றும் முனைவர் இராசமாணிக்கனார் கருதுகிறார். அவனுக்குப்பின் மனுநீதிச் சோழனும் முதற் கரிகாலனும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டினர் என்றும், பெரும்புகழ்வாய்ந்த இரண்டாம் கரிகாலன் கி.மு. முதல் நூற்றாண்டினன் என்றும் அவர் வகுத்துள்ளார். தமிழரசர் வரிசை முறையும் காலவரையறையும் முற்றிலும் நிறைவுற ஒழுங்குபடும்வரை இவ்வரிசை முறையையே நாம் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளலாகும். முதல் இலங்கை வெற்றி: மனுச்சோழன் மனுநீதிச் சோழனே இலங்கையை ஆண்ட தமிழ்ச் சோழ அரசன் ஏலாரன் என்று முனைவர் இராசாமாணிக்கனார் முடிவு செய்கின்றனர். ஆவின் கன்றுக்குப் பதிலாக மைந்தனைத் தேர்க் காலிலிட்டரைத்த கதை இரு அரசர்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது என்பதே இதன் காரணம். முதற்கரிகாலனைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டினனாக அவர் கொள்வதற்கும் இதுவே வழிவகுத்தது என்னலாம். திருவள்ளுவர் கதை மரபில் அவரின் மாணவராகவும் புரவலராகவும் கூறப்படும் கடல் வணிகன் ஏலேல சிங்கனே- ஏலாரா என்று கருதுபவரும் உண்டு. ‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழி லாண்ட உரவோன் மருக!’ (புறம் 66) என்று வெண்ணிக் குயத்தியார் சோழன் கரிகாலனைப் பாடும் பாட்டில் கரிகாலன் முன்னோனாகக் குறிப்பது இந்த ‘மனுச் சோழனையே’ என்று கருத இடமுண்டு. ஏனெனில் இவ்வடிகள் அம்முன்னோன் கடலில் கப்பலில் சென்று போராற்றியதையும், அச்சமயம் காற்றையே ஆட்கொண்டதையும் குறிப்பிடுகின்றன. இமயத்தில் வில், புலி, கயல் பொறிப்பு தமிழ் மூவேந்தரும் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டு இமயத்தில் வில், கயல், ‘புலிக் கொடிகள் பொறித்தனர் என்று சங்க நூல்கள் பலகாலும் பகர்கின்றன. இவை வெறும் புனைந்துரைகளென்று பல புலவரும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும் கொள்கின்றனர். வரலாற்று வான விளிம்பில் உள்ள தெற்கு வடக்குத் தொடர்புகளையும் தமிழிலக்கியத்தில் தமிழர் கடற் போர், தொலைவடவர் பற்றியும் ஆரியருடன் போர் செய்து பெற்ற வெற்றிகள் பற்றியும் வரும் மிகப்பலவான குறிப்புகள் புனைந்துரைகளாகக் கொள்ளுதற்கு இடந்தராதவை. இவற்றுள் பல புறத்துறையில் அரசரைப் புகழும் பாட்டுகள் மட்டுமல்ல; அகத்துறையில் காதலி கூற்றிலும், காதலன் கூற்றிலும், பாங்கி கூற்றிலும், பாங்கன் கூற்றிலும் உவமை நயம், அடைமொழி நயம் பாடப் பெரும் புலவர் இடைப் பெய்து கூறும் குறிப்புகள் எத்தனையோ உண்டு. நாடறிந்தனவாக மட்டுமன்றி வீடறிந்தனவாகக் கூறப்படும் இவ்வெற்றிகள் இன்று தமிழர் கனவுகாணாத ஓர் உயர் தேசிய வாழ்வையும், அதனூடாகப் பல வரலாற்று நிகழ்ச்சிகளையும் காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. தென்திசை, வட திசைப் போட்டி பெரும்பாலும் கங்கைப் பேரரசுகளும் தமிழகப் பேரரசுகளும் இவற்றுடனே ஆந்திர கலிங்கப் பேரரசுகளும் மட்டுமே ஈடுபட்ட ஒன்றாகும். இதில் தொடக்கக் காலத்தில் ஆந்திரப் பேரரசும் அதன்பின் ஆந்திர கங்கைப் பேரரசுகளும் ஆரிய அரசுகள் என்று கூறப்பட்டி ருத்தல் கூடும். இங்கே ஆரியம் என்ற சொல் இன அடிப்படையான உணர்ச்சி காட்டும் சொல் அன்று; நாட்டடிப்படையாகவும் திசையடிப்படையாகவும் வழங்கிய சொல்லேயாகும். புத்தர் காலங்களில், கங்கை நாட்டினரே தம்மை மிகப் பெருமையுடன் ஆரியர் என்று கூறிக்கொண்டனர். ஆனால், இக்காலம் ஆரிய இன அடிப்படை ஒரு தேசிய அடிப்படையில் வளர்ந்த காலம் ஆகும். தமிழக நாகரிகமே கங்கை நாட்டில் இப்புதிய ஆரிய தேசியத்தை உருவாக்கக் காரணமாய் இருந்தது. ஆந்திரர் கலிங்க நாடு முழுவதும் வென்று இமயம் வரை பரவிய காலத்தில், இந்தத் தேசிய ஆரியர் புகழ் உச்ச நிலையடைந்தது. ஆந்திரர் வங்கத்தை வென்றதுடன் அமையாது பர்மாவின் பெரும் பகுதியையும் கைக் கொண்டபின் ஆந்திர -மகதப் பேரரசு ‘முக்கலிங்கம்’ என்று அழைக்கப்பட்டது. முக்கலிங்கம் என்பது தெலுங்குக் கலிங்கம், வங்கம், பர்மா ஆகிய மூன்றுமே. இம் முக்கலிங்கப் பேரரசர் காலத்தில் தமிழர் கங்கை ஆரியர் போட்டி மறைந்தது. கங்கை ஆரியர், ஆந்திரர், தமிழர் ஒரே நாகரிகத்தின் அடிப்படையில் இணைந்து, பண்படா ஆரியரும் அயலாருமான சிந்து ஆரிய மன்னரை எதிர்க்கத் தொடங்கினர். இதுவே சேரன் செங்குட்டுவன் காலம் (கி.பி. 150 - 200) ஆகும். எனவே மூவேந்தர் வடதிசைப் படையெடுப்புகள் நடந்த காலம் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னிக்கும் (கி.மு. 3 -ஆம் நூற்றாண்டு) செங்குட்டுவனுக்கும் (கி.பி.150) இடைப்பட்ட காலமாய் இருத்தல் வேண்டும். இக்காலத்திலே மூவேந்தர் வடதிசைக் கெதிராக நீண்ட நாள் ஒன்றுபட்டிருந்த செய்தியைக் கலிங்கப் பேரரசன் காரவேலன் கல்வெட்டுகள் குறிக்கின்றன. கலிங்கப் பேரரசன் காரவேலன் படையெடுப்பும் தோல்வியும் காரவேலன் கலிங்கப் பேரரசனாக ஆண்ட காலத்தை நம்மால் வரையறுக்க முடியவில்லை. ஆனால், அவன் ஆந்திரரை அடக்கி மகத நாட்டையும் வென்று புகழுச்சியடைந்திருந்த நாட்கள் கி.மு. 163-க்கும் கி.மு. 153-க்கும் இடைப்பட்ட பத்தாண்டு களே என்று அறிகிறோம். அவன் சமண சமயம் சார்ந்தவன். அசோகன் தன் ஆட்சிப் பரப்புடனே புத்த சமயமும் பரப்பியது போல, தன் ஆட்சிப் பரப்புடன் சமண சமயமும் பரப்பவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் அவன். இக்காரணத்தாலேயே அவன் சமண சமய அசோகன் என்று குறிக்கப்படுகிறான். ஆந்திரப் பேரரசின் நீடித்த ஆட்சிக்கு வழி வகுத்துக் கொடுத்தவன் அவனே. வடதிசையில் பரப்பிய ஆட்சியையும் சமயத்தையும் தென் திசையிலும் பரப்பி, அசோகனையும் தாண்டிப் புகழ்பெற்று விடவேண்டுமென்று காரவேலன் துடித்தான். ஆந்திரப் பேரரசு தற்காலிகமாக அவன் கீழ்ப்பட்டிருந்ததனால் அவன் பேரரசின் எல்லையும் அசோகன் பேரரச எல்லையைப் போலவே தமிழக எல்லையை அளாவியிருந்தது. மோரியர் என்று தலைப்படாத அளவில் அவன் தமிழகத்தில் இடம் கொள்ளப் பல போர்கள் ஆற்றினான். தமிழகத்தில் மூவேந்தர்கள், வேளிர்கள் ஆகிய யாவரும்செருப்பாழி கடந்த இளஞ்சேட் சென்னி கால முதல் வடதிசையை எதிர்த்து ஒரே கூட்டு முன்னணி அமைத்திருந்தனர். இதைச் சூழ்ச்சிகளால் உடைக்கவும் காரவேலன் அரும்பெரும் முயற்சிகள் செய்தான். இவற்றில் வெற்றி பெற்றதாகவும் அவன் தற்காலிகமாக எண்ணினான் என்று தோற்றுகிறது. ஏனென்றால் அவன் கல்வெட்டுகளில் ஒன்றில் அவன் இதுபற்றித் தற்பெருமை கொள்கிறான். 113 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவிவந்துள்ள தமிழக அரசர்களின் கூட்டணியைச் சிதைத்து விட்டதாக அவன் அதில் குறிக்கிறான். கூட்டணி அமைந்த காலம் செருப்பாழி எறிந்த காலாமானால் அதன் ஆண்டு கி.மு. 276 அல்லது கி.மு. 266 ஆக இருக்க வேண்டும் என்னலாம். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடஇமயத்தில் தமிழ்த்தடம் பொறித்த தமிழ் மூவேந்தருள் முதல்வன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே என்று கூறலாம். ஏனெனில் சேரருள்ளேயே செங்குட்டுவன் இமயம்வரை வென்றாலும், பிற தமிழ் வேந்தரும் இமயத்தில் தடம் பொறித்தாலும் அவனே ‘இமயவரம்பன்’ என்ற சிறப்புப் பெயருக்குப் போட்டியில்லாத உரிமையுடையவனாயிருக்கிறான். அவனை பத்துப்பாட்டில் பாடிய குமட்டூர்க் கண்ணனார். ‘ஏம மாகிய சீர்கெழுவிழவின் நெடியோன் அன்ன நல்லிசை ஓடியா மைந்த!’ என்று நெடியோன் புகழை நினைவூட்டி, அதற்கு அவன் உரிய வனாகட்டும் என்று வாழ்த்துகிறார். நெடியோன் இமயம் வரை வென்ற பழம்புகழுடன், இமயத்தில் விற்பொறித்த நெடுஞ் சேரலாதனின் புதுப் புகழை இது ஒப்பிடுவதாகக் காண்கிறது. இது நெடுஞ்சேரலாதன் செயலன்று; அவன் முன்னோர்களின் புகழே என்று சிலர் கருத்துக் கொள்கின்றனர். ஆனால், முன்னோர் செயல் பின்னோருக்குக் கூறப்படுவது மரபானாலும், நெடுஞ்சேரலாதனே முன்னோனாக எங்கும் சிறப்பிக்கப் படுகிறான். அவனும் இமயம் முதல் குமரிவரை ஆண்டதாகப் பத்துப்பாட்டுக் கூறுகிறது. “ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் தென்னங் குமரியோடாயிடை மன்மிக் கூறுநர் மறம்பதக் கடந்தே!” இது நேரடியாட்சியாகவோ, எல்லா அரசராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேலுரிமையாகவோ, அல்லது மாநிலமெங்கும் ஆற்றிய வெற்றி உலாவாகவோ நிகழ்ந்திருக்கலாம். ஆனால், நெடுஞ்சேரலாதன் காலத்தை வரையறுக்கும் வரையிலும், இது பற்றி மேலும் சான்றுகள் அறியப்படும் வரையிலும் இதைத் திட்டப்படுத்திக் கூற முடியாது. இச்செயல் சோழரும், பாண்டியரும் புலி, கயல் பொறிப்பதற்கு முற்பட்டது என்பதில் மட்டும் ஐயமில்லை. சோழருள் இமயத்தில் புலிக்கொடி தமிழ்ச் சின்னம் பொறித்தவன் கரி காலனே என்றும், பாண்டியருள் மீனக்கொடி பொறித்தவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே என்றும் கருத இட முண்டு. முதல் வல்லத்துப் போர் சோழருள் ஓரரசன் ஆரியரைத் தஞ்சையையடுத்த வல்லம் என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் முறியடித்ததாகப் பாவைக் கொட்டிலார் என்னும் புலவர் தெரிவிக்கிறார். “மாரியம் பின் மழைத்தோல் சோழர் வென்வேல் வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக என் நேரிறை முன்கை வீங்கிய வளையே!” (அகம் 336) காதலி காதலனிடம் உள்ள கோபத்தைச் சுழலும் வளையல் மீது செலுத்தி, வல்லத்துப்போரில் உடைந்த ஆரியர் படைபோல் என் வளை உடையட்டும் என்கிறாள்! தமிழக வரலாற்றில் வல்லத்தில் நடைபெற்ற போர்கள் பல. அவற்றுள் முதல் போர் ஆரியர் படை உடையத் தமிழர் ஆற்றிய இப்போரேயாகும். இப்போரில் ஈடுபட்ட சோழமன்னன் யார்? அது செருப்பாழிப் போரையொட்டி நிகழ்ந்ததா? பின் நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை. கரிகாலன், நெடுஞ்செழியன் இமயம் படையெடுப்பு வடதிசையில் படையெடுத்த சோழன் கரிகாலன் இரண்டாம் கரிகாலனே. இவன் காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. வடதிசை வென்ற பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பற்றி நாம் மிகுதி அறிவதற்கில்லை. “வட ஆரியர் படை கடந்து தென் தமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடிஞ்செழியன்” (சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் இறுதிக் கட்டுரை) என்ற இளங்கோவின் முத்தமிழ்க் காப்பியக் கூற்றினும் விளக்க மிக்க சான்று நமக்குக் கிட்டவில்லை. சங்கப் பாடல்களில் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியனைப் பற்றிப் பாட்டுகள் எதுவும் நமக்கு வந்து எட்ட வில்லை. ஆனால், அவன் பெருவீரன் மட்டுமல்ல; சிறந்த சிந்தையும் செழுங்கலைத் திறமும் படைத்தவன் என்பதை அவனே பாடிய பாடல் ஒன்று காட்டுகிறது. அதுவே, “உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! ஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன்வருக என்னாது, அவருள் அறிவுடையோனாறு அரசுஞ் செல்லும்!” (புறம் 183) எனக் கல்விபற்றிப் பாடிய இக்காவலன் உயர் நலங் காட்டுவது ஆகும். மூவேந்தர் வடநாட்டுப் படையெடுப்புடன் நாம் புராண மரபின் வான விளிம்பையும் இலக்கியங் குறித்த மரபுகளின் வானவிளிம்பையும் கடந்து சங்ககால வரலாற்றொளிக்குள் வருகிறோம். 5. சங்ககாலப் போர்கள் - 1 தமிழர் தமக்கென வரலாறு வகுத்துக் கொள்ளவில்லை என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர் சிலர். தமிழருக்கு வரலாற் றுணர்வே கிடையாது என்று முடிவு செய்து விடுபவருமுண்டு. இந்த இரண்டும் இருவேறு வகையில் பிழைபட்ட கருத்துகளேயாகும். ஏனெனில் அறிவியல்போல, வரலாறும் எல்லா நாடுகளிலும் புதுப்படைப்பே. உலகெங்கும் வரலாற்றுக்கான ஆதாரங்கள் தேடி ஆராயப்பெற்று, நாட்டு வரலாறு தொகுக்கப்பட்டு வருவது சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளிலேயே என்னலாம். வரலாற்று ஆதாரங்களைப் பேணுவதிலும் தேடுவதிலும் நாடுகளைத் தூண்டியது தேசிய உணர்வே. தமிழகமும் சீனமும் நீங்கலான உலக நாடுகளில் இத்தேசிய உணர்வு காரணமாக நாட்டெல்லை வகுக்கப்பட்டதும், தேசிய அரசியல்கள் அமைந்த தும் அண்மைக்காலத்தில்தான். இத்தேசிய உணர்வுடன், பண்டை நாகரிகங்களின் தூண்டுதலால் ஏற்பட்ட கலை மறுமலர்ச்சியும், வரலாற்றை உருவாக்கும் முயற்சிக்கு எங்கும் மிகுந்த ஆக்கம் அளித்துள்ளது. தமிழகத்திலோ தேசிய உணர்வும் தேசிய நாட் டெல்லையும், தேசிய அரசியலும் இரண்டாயிரம் மூவாயிர ஆண்டுகட்கு முன்பே ஏற்பட்டுவிட்டன. கலைமலர்ச்சியிலோ, உலகுக்குத் தூண்டுதல் தந்த பண்டை நாகரிகங்களுக்கு முற்பட்டே அதற்கு நீடித்த வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. வரலாற்றுணர்வும் வரலாற்றொளியும் அதன் இலக்கிய வாழ்வு முழுதும் உள்ளூர நின்று ஒளி வீசுகின்றது. ஆனால், காலக்கேடாக, மற்றெல்லா நாடுகளிலும் புதிய தேசியத்தால் வரலாறு காணப்பட்ட நாளிலேயே தமிழகம் தன் தேசிய எல்லை, தேசிய அரசியல், தேசிய உரிமை வாழ்வு, தேசிய உணர்வு ஆகியவற்றை இழந்துள்ளது. எனவே, தமிழகம் தனக்கென வரலாறு வகுத்துக் கொள்ளவில்லை என்பதைவிட, அத்தகைய வரலாறு வகுப்பதற்குரிய சூழ்நிலையை இழந்து அது தடுமாறுகிறது என்பதே உண்மையாகும், தமிழினம் வரலாற்றுணர்வு அற்றது என்பதை விட, அவ்வரலாற்றுணர்வு அயலின, அயல்மொழி ஆதிக்கங்களால் அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டு வருகிறது என்று கூறுவதே பொருத்தமானது. பிரிட்டிஷ் ஆட்சி பொதுவாக, தமிழகம் நீங்கிய கீழ்திசைக்கு முற்றிலும் அயலாட்சியாய் நிலவிற்று என்று கூற முடியாது. உண்மையில் சிந்து கங்கைவெளி போன்ற மாநிலங்களுக்கு வரலாற்று வெளிச்சம் அளித்தது அவ்வாட்சியே. அவ்வாட்சி யிலேயே அம்மாநிலம் புத்தரையும், அசோகனையும், கனிஷ் கனையும் கண்டது. அதற்குமுன் அது வரலாறு என்ற பெயரால் அறிந்ததெல்லாம் பஞ்சதந்திரக் கதைகளும், விக்கிரமாதித்தன் வேதாள பதுமைக் கதைகளும், புராணப் பஞ்சாங்கங்களுமே. அத்துடன் அயலாட்சி என்று கூறப்படும் அவ்வாட்சியிலேயே மாநிலத்தின் பழம் பெருமைக்குரிய சிந்துவெளி, நாலந்தா, பாடலிபுர நகரம், கபிலவஸ்து, வடமதுரை ஆகிய இடங்கள் பழமையாராய்ச்சி ஒளிகண்டன. தவிர, அம்மரபுக்குரிய சமஸ் கிருதமொழி, இலக்கியம் ஆகியவை சார்ந்த ஆராய்ச்சிகளிலும் வெள்ளையர் தத்தம் தாய் மொழிகளில் காட்டிய ஆர்வத்தினும் மேம்பட்ட ஆர்வம் காட்டி, அவற்றைப் பேணி வளர்த்தனர். இவற்றுக்கு நேர்மாறாக, அதே ஆட்சியாளரும், ஓரளவு அவர்களுக்குப் பின் வந்த மாநில ஆட்சியினரும்கூடத் தமிழ், தமிழகம், தமிழின மொழிகள் ஆகியவற்றின் வரலாற்றிலும், ஆராய்ச்சியிலும், பாராமுக முடையவர்களாகவே இருந்து வந்துள்ளனர். தமிழகத்தில் பண்டைப் பெருமைக்குரிய கொற்கை, பழமதுரை, வஞ்சிமூதூர், மண் மூடிய உறந்தை, கடலால் ஓரளவு அழிவுற்ற புகார், பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், புதுவை, மல்லை, காஞ்சி ஆகிய இடங்களின் அகழ்வாராய்ச்சி தமிழக வரலாற்றுக்கும், மாநில வரலாற்றுக்கும்கூடப் பெரும்பயன் அளித்திருக்கும். ஆனால், அறிஞர் துப்ரேய்ல் போன்ற தனி வெள்ளையர் ஒருவர் இருவர் முயற்சியன்றி, ஆராய்ச்சித்துறையோ, ஆட்சியாளரோ அவற்றைக் கருத்தால் கூடத் தீண்டவில்லை. தமிழகம், மாநிலத்தின் ஒரு நேரிய உறுப்பாகக்கூடக் கருதப்படவில்லை. மாநிலத்தின் ஒருபுற உறுப்பாக, அதன் பண்பாட்டுக்கு ஊறு செய்யும் ஒரு நோயுறுப்பாகவே அது ஓரக் கண்ணால் பார்வையிடப்படுகிறது. இந்நிலையில் அதன் வரலாறு வகுக்கப்படாதிருப்பது மட்டுமல்ல குறை; வகுக்கப்படுவதற்குத் தடங்கலான பண்புகளே வளர்க்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஆங்கில ஆட்சித் தொடக்கம்வரை இருந்ததாகத் தெரியவரும் தமிழிலக்கியக்கடலின் பெரும்பகுதி, அயல் பண்பாட்சியினரின் ஆதிக்கத்தால் அணிமைக் காலத்திலேயே அழிந்துள்ளதாக, இன்னும் அழிந்துவருவதாக அறிகிறோம். தமிழர் வரலாற்றுணர்வு தமிழினத்தார் உண்மையில் வேறெந்த இனத்துக்கும் அணிமை வரை ஏற்படாத வரலாற்றுணர்வு மட்டுமன்றி, நில இயலுணர்வும், அறிவியலுணர்வும் உடையவராயிருந்தனர். இதனைத் திரட்டுருவிலும், துண்டுத்துணுக்கு வடிவிலும் நமக்கு இன்று கிடைத்துள்ள இலக்கியமும் கல்வெட்டுகளுமே காட்டப் போதியன. உண்மையில் கல்வெட்டுகள் ஏராளமாயுள்ள பிற்காலத்தின் வகையில் நமக்குக் கிடைக்கும் வரலாற்றொளியை விட, சங்ககாலத்துக்கு அதன் துண்டுத்துணுக்கு இலக்கியத்தால் கிடைத்துள்ள ஒளியே பெரிது. ஏனெனில் கல்வெட்டுகள் தற்செயலாகவே நமக்கு வரலாற்றுக்கு உதவுகின்றன. அவை கிட்டத்தட்ட அத்தனையும் கோயில்களுக்கும் கோயில் குருக்கள் மார்களுக்கும் மன்னர் கொடுத்த மானியங்கள் பற்றியவைகளே. ஆனால், சங்க இலக்கியம்- மன்னர்கள், ஆட்சி முறை, போர்கள், மக்கள் கருத்துகள், வாழ்க்கைச் சூழல் ஆகிய எல்லாத் துறைகளிலுமே பரவியுள்ளன. அது போன்ற வாழ்க்கை இலக்கியத்தை, வரலாற்று நோக்குடைய அறிவியல் நோக்கு வாய்ந்த இலக்கியத்தை நாம் உலகில் வேறு எங்கணுமே காண முடியாது. சங்க இலக்கியத்தில் அந்நாளைய பாண்டியரைப் பாடும் புலவர்கள் அவர்கள் தொலை முன்னோனாகிய நெடியோன் புகழைச் சுட்டிக்காட்டியுள்ளனர். சேரநாட்டில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடும் புலவர் ஒருவர் அவன் முன்னோரை மட்டுமன்றி மூவேந்தருக்குமே சிறப்புத்தரும் புகழ் வாய்ந்த நெடியோனையும் சுட்டி அவன்போல வாழ்வாயாக என்று வாழ்த்துகிறார். மாமூலனார், பரணர் போன்ற பழம் புலவர்கள் தம் காலத் தமிழக வரலாற்றுச் செய்திகளை மட்டுமன்றித் தொலைவிலுள்ள கங்கை நாட்டுச் செய்திகளையும் நமக்குப் பதிவு செய்து சென்றுள்ளனர். இவை வெள்ளையர் வரும்வரை எவரும் அறியாத செய்திகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரிடையே வரலாற்றுணர்வும், நில இயல், அறிவியல் உணர்வுகளும், பண்படாப் பிற இனத் தலையீடுகளாலும் ஆதிக்கங்களாலுமே படிப்படியாக நலிந்துவந்தன என்னல் வேண்டும். ஏனெனில் சோழப் பேரரசர், காலங்கடந்து கூட இவை புராண மரபுகளின் குளறுபடிகளுடன் கலவாது இயங்குவது காணலாம். எடுத்துக்காட்டாக, சங்க காலத்துக்கும் வேள்விக்குடிச் செப் பேடுகளின் காலத்துக்கும் இடையே ஐந்நூறு ஆண்டு இடையீடும் பெருத்த அரசியல் குழப்பமும் மாறுபாடுகளும் ஏற்பட்டிருந்தன. ஆயினும் சங்க காலத்திலேயே முற்பட்டவனான பல்சாலை முதுகுடுமிப் பாண்டியன் அளித்த நன்கொடையை அரசியல் மரபும், அரசியல் அரங்க மரபும் அறிந்து பிற்பட்ட பாண்டியன் உறுதி செய்ய முடிந்தது. இதுபோலவே தேவார காலத்துக்கும், பெரிய புராண காலத்துக்கும் ஐந்நூறு ஆண்டு இடையீடும் பெருத்த அரசியல் மாறுபாடுகளும் இடையே இருந்தன; ஆயினும் பெரியபுராணம் பாடிய புலவர் சேக்கிழாரால், முற்பட்ட கால அரசியல் பின்னணி நிலைகள் சரிவர உணர்ந்து தீட்டப்பட்டுள்ளன. அதே காலத்திலிருந்த சயங்கொண்டாரும் ஒட்டக் கூத்தரும் பெருஞ் சோழருக்கு ஆயிரமாண்டு முற்பட்ட சோழர்கள் வரலாற்றை அவர்களைப்பற்றிய சின்னஞ் சிறு செய்திகளையும் வரலாற்று மரபு வழியே அறிந்து உரைத்துள்ளார். தமிழக வரலாற்றுணர்வுக்குப் பிற்காலப் பாண்டியர் கல் வெட்டொன்று வியக்கத்தக்க நற்சான்று அளிக்கிறது. 12- ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்ட அப்பாண்டியன் சோழர் அரண்மனையையும் தலைநகர் முழுவதையும் அழித்துவிட்டான். ஆனால், பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகாலன் முன் அதனை அரங்கேற்றுவதற்காகக் கட்டப்பட்ட பதினாறு கால் மண்டபத்தை மட்டும் அழியாது காத்தானாம்! இதில் வரலாற்று மரபின் ஆற்றலையும் காண்கிறோம்; தமிழர் கலையார்வத்தின் அருமையையும், ஆட்சியெல்லை கடந்த தேசிய ஆர்வத்தின் பெருமையையும் பார்க்கிறோம்; ஏனெனில் கரிகாலனும் சோழன்தான்; சோழன் மீதுள்ள கோபம் அவன் மீது பாயவில்லை. ஏனெனில் அவன் பாடல் கொண்ட சோழன்! தமிழகத்துக்குத் தேசியப் பழம் புகழளித்த சோழன்! கலையார்வம், தேசிய ஆர்வம், வரலாற்று மரபு ஆகிய மூன்றும் இங்கே பன்னிரண்டு நூற்றாண்டுகள் தாண்டிச் செயலாற்றுவது காண்கிறோம். சங்க இலக்கியத்தின் உதவி கொண்டு நாம் இன்று தமிழர் வாழ்க்கை பற்றியும், அறிவு நிலைபற்றியும், அரசியல் சமுதாயப் பழக்க வழக்கங்கள் பற்றியும் அறியும் செய்திகள் பல. அவற்றால் நாம் அறியவரும் போர்களின் தொகையும் நூற்றுக்கணக்கானது. வரலாற்று மரபு இழந்த நம் நாட்களில் அவற்றுள் பலவற்றின் முன்பின் வரிசை முறை, கால இடச்சூழல்கள் ஆகியவற்றை முற்றிலும் விளக்கமாக அறிய முடியவில்லை. வருங்கால ஆராய்ச்சி களே அவற்றுக்கு மேலும் விளக்கம் அளிக்க வேண்டும். ஆயினும் தேசிய வாழ்வின் பொதுப்போக்கை உணர்த்தும் பெரும் போர்கள் சிலவற்றை நாம் உருவகப்படுத்திக் காணமுடியும். கரிகாலன் புகழ் வளர்ச்சி: மலைப்பளிக்கும் பெரும் புதிர் தமிழிலக்கியத்தில் மட்டுமன்றி, தமிழகம் சூழ்ந்த பல நாடுகளிலுள்ள பல மொழிகளின் இலக்கியத்திலும், அது போலவே பல நாடுகளின் கல்வெட்டுகளிலும் பல நாட்டு மக்கள் உள்ளங்களிலும் புகழ் பரப்பிய பண்டைத் தமிழ்ப் பேரரசன் கரிகாலன். அவன் புகழ் அவன் காலத்தில் மட்டுமன்றி அது கடந்தும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வது கண்டு தமிழார்வலர்கூட வியப்பும் மலைப்பும் எய்து கின்றனர். வரலாற்றாராய்ச்சியாளர்களோ, இவ்வகையில் திகைப் பும் குழப்பமும் அடைகின்றனர். இலக்கியத்திலும் சரி, கல்வெட்டுகளிலும் சரி காலமும் தேசமும் மொழியும் தொலைவாகும்தோறும் புகழ் வளர்வது கண்டு, அவர்கள் பழங்கால இலக்கியச் சான்றுகளை மட்டுமே வரலாற்று மெய்ம்மை எனக் கொள்கின்றனர். பிற்காலக் கல்வெட்டுச் சான்றுரைகள் அத்தனையையும் படிப்படியாக வளர்ந்த கற்பனை எனக் கருதுகின்றனர். ஆனால், மொழி எல்லை, தேச எல்லைகடந்து பலவிடத்தும் பல காலத்தும், பலராலும், கரிகாலன் பெயர் போற்றுப்படுவதை வரலாற்றாசிரியர் முடிவு விளக்கவில்லை. தவிர கரிகாலன் பற்றிய பழந்தமிழ் இலக்கிய உரைகளே ஒன்றுக் கொன்று முற்றிலும் பொருந்தவில்லை. முனைவர் இராசமாணிக்கனார் சங்க காலத்திலே கி.மு. 2-ஆம் நூற்றாண்டின் முடிவில் ஒரு கரிகாலனும், அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு கரிகாலனும் இருந்ததாகக் கொள்கிறார். இரு கரிகாலர்களையும் பற்றிய சங்க இலக்கியச் சான்றுகளையும் பிரித்துக் காட்டுவதுடன், ‘வெண்ணி’ அல்லது வெண்ணில் என்ற இடத்தில் நிகழ்ந்த போர் பற்றிய குறிப்புகளையும் இருவேறு கரிகாலர்களால் ஆற்றபட்ட மூவேறு போர்கள் என்றும் விளக்கியுள்ளார். இவ்விளக்கத்தின் பின்னும் சங்க இலக்கியக் குறிப்புகள் தான் தெளிவடைகின்றன. சங்க காலத்திலேயே இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் தரும் வடநாட்டுப் படையெடுப்பும், கலிங்கத்துப் பரணி, மூவருலாக்கள் குறிப்பிடும் இமயம் அல்லது மேருவைச் செண்டாலடித்துப் புலி பொறித்தல், காவிரிக்குக் கரைகட்டல் ஆகியவையும் இரண்டாம் கரிகாலனுக்குரியனவென்று கொள்ளக் கூடுமானாலும், சங்க இலக்கியம் அது பற்றிக் கூறாதது வியப்பைத் தராமலில்லை. வரலாற்றாசிரியர் பலர் இது காரணமாக இவற்றைப் பிற்காலப் போலிப் புனைந்துரை என முடிவு செய்ய எண்ணுகின்றனர். ஆனால், இவை சங்க காலத்திறுதியிலோ அல்லது புராண வரலாற்று மரபுகளின் வான விளிம்பிலோ உள்ள மற்றொரு கரிகாலன் செயலாகவும் இருத்தல் கூடும். ஏனெனில் பிற்காலச் சோழரின் அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுப் பட்டயங்கள், லெய்டன் பட்டயங்கள் ஆகியன பெருநற்கிள்ளி என்ற சோழனுக்கும், கோச்செங்கணான் என்ற சோழனுக்கும் இடைப்பட்டவனாக ஒரு கரிகாலனைக் குறிக்கின்றன. வடதிசைப் படையெடுப்பு முதலிய செய்திகள் முற்றிலும் புனைந்துரை யென்று கூறத்தக்க தன்று என்பதை 8-ஆம் நூற்றாண்டுக்குரிய மாலேபாட்டுப்பட்டயங்கள் முதற் கொண்ட தெலுங்கு ஆதாரங்களும், சிங்கள வரலாற்றேடான மகாவம்சோவும் காட்டுகின்றன. ஆந்திர நாட்டிலும் மைசூர் நாட்டிலும் ஆண்ட சோழ மரபினர் தம்மைக் கரிகாலன் மரபினர் என்று பெருமையுடன் கூறிக் கொள்வதை நோக்க, கரிகாலன் அப்பகுதியை வென்று ஆண்ட காலத்தில் அவன் ஆட்சியாளராக அமர்த்திய சோழர் குடி இளவல்களாகவே அவர்கள் இருத்தல் கூடும் என்று கருத வேண்டியிருக்கிறது. மிகப் பிற்பட்ட காலங்கள் வரையுள்ள பல மரபினர் - ஹைதராபாதில் உள்ள வாரங்கல் ஆண்ட காகதீய மரபினர், விஜயநகர ஆட்சிக் காலத்தில் கார்வெட் நகர் ஆண்ட சாளுவ மரபினர், ஒரிசா அல்லது கலிங்கம் ஆண்டகங்க சோடர் ஆகியவர்களது பெரும் பரப்பு கரிகாலனின் பரந்த வெற்றிகளுக்குச் சான்று தருவன வாகும். தெலுங்குக் கல்வெட்டுகளில் பலவற்றில் ஒரு சமஸ்கிருதப் பாட்டின் அடிகள் ஓயாது பல்லவியாகக் காதில் மணியோசை போல ஒலிக்கின்றன. மூன்று கண்ணுடைய ஏதோ ஒரு அரசன் கரிகாலனுக்குப் பணியாதிருந்ததையும், கரிகாலன் அவன் மூன்றாம் கண்ணைக் குடைந்தெடுத்துவிட்டதையும் காவிரிக்குக் கரைகட்டிய செய்தியையும் அது புனைந்து புகழ்கின்றது. அப்பாடல், சரண சரோருஹ விஹத விலோசன த்ரிலோசன ப்ரமுகாகில ப்ருதி வீசுவர காரில காவேரி தீர கரிகாலகுல- என்பது, இதையே குலோத்துங்கன் பிள்ளைத் தமிழும் முகுல நதிக்கரசன் முடிகொடு வகுத்தகரை முகில்தொட அமைத்தது அறிவோம்! இருபுறமும் ஒக்க நினது ஒருபுலி பொறிக்க வட இம கிரி திரித்தது அறிவோம். இகல் முகரி முக்கணிலும் ஒருகண் கிழியக் கிழியில் எழுது கண் அழித்தது அறிவோம்! என்று இன்னும் சமத்காரம் படப் புனைந்துரைக்கின்றது. தமிழில் பெரியபுராணம் (12-ஆம் நூற்றாண்டு), சோழவம்ச சரித்திரம் என்ற பிருகதீஸ்வரர் மகாத்மியம் (16-ஆம் நூற்றாண்டு), சோழ மண்டல சதகம். செவ்வந்திப் புராணம் (17-ஆம் நூற்றாண்டு) ஆகியவையும், தெலுங்கில் பண்டிதாராத்யசரிதம் (13-ஆம் நூற்றாண்டு), கன்னடத்தில் நவசோள சரித்திரம் (14-ஆம் நூற்றாண்டு) ஆகியவையும் யாவும் தத்தம் காலங்களுக்கேற்பக் கரிகாலனைப் பற்றிய பல மாறுபட்ட கதைப் பதிப்புகள் தருகின்றன. வெண்ணில் போர் ஐ அல்லது வெண்ணி வாயிற் போர் வெண்ணி அல்லது வெண்ணில் என்பது தஞ்சாவூரை அடுத்த ஓர் ஊர். இது தேவாரப்பதிகம் பெற்ற காலத்தில் நாயன்மாரால் பாடப்பட்டுள்ளது. இப்போது அது கோயிலுண்ணி (கோயில் வெண்ணி) என்ற பெயருடன் நிலவுகிறது. முதல் வெண்ணிப் போரில் முதற் கரிகாலன் பதினொரு வேளிர்கள் அல்லது சிற்றரசர்களையும் சில அரசர்களையும் ஒருங்கே முறியடித்தான் என்று அறிகிறோம். அரசர்கள் யார் யார் என்பது கூறப்படவில்லை யானாலும், பன்மையிலேயே குறிக்கப்படுவதால் சேர பாண்டியர் இருவருமே கரிகாலனை எதிர்த்தனர் என்று கருதலாம். முதற் கரிகாலன் பேரரசனல்லா விட்டாலும் அந்நிலைக்கு உயர்ந்து வருவதையே இது குறிக்கிறது. ஏனெனில் இப்பெருங் கூட்டுவலு இப்போரில் முற்றிலும் முறிந்துவிட்ட தென்று அறிகிறோம். அரசரும் சிற்றரசரும் ஓடிய ஓட்டத்தில் அவர்கள் தத்தம் போர் முரசங்களை உடன் கொண்டு செல்லக்கூட நேரமில்லாது போயிற்று. அவற்றைக் களத்திலேயே கைவிட்டு ஓடினர். இப்போர் பற்றிச் சங்க காலப் பழம் பெரும் புலவர் பரணர் ஒரு கவிதை ஓவியம் தீட்டியுள்ளார், காய்சின மொய்ம்பில் பெரும் பெயர்க்கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பில் இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி அறுத்த ஞான்றைக் தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே! (அகம் 246) பாட்டின் இறுதியில் போர் வெற்றியின் பயனாக அழுந்தூரில் உண்டான ஆர்ப்பரிப் பாராவாரம் பெரிதென்ற குறிப்புத் தரப்பட்டுள்ளது. இது வெற்றி ஆரவாரம் என்பதிலும், அழுந்தூரே போர்க்களத்துக்கு அருகிலுள்ள நகரமோ அல்லது தலைநகரமோ ஆக வேண்டுமென்திலும் ஐயமில்லை. அழுந்தூரே தலைநகரென்றும் முதற்கரிகாலன் இச்சமயம் அழுந்தூர் வேள் அல்லது சிற்றரசன் நிலையில் இருந்தே வலிமை பெற்று வளரத் தொடங்கினான் என்றும் கருதப்படுகிறது. ஆனால், பிற அகப்பாடல்களில் அழுந்தூருடன், இடையாறு, கழார் ஆகிய ஊர்களும் அவனுடன் நெருங்கிய தொடர்புடை யனவாகக் குறிக்கப்படுகின்றன. எனவே செருப்பாழி வென்ற நெடுஞ்சேட் சென்னிக்குப்பின் பேரரசு பழையபடி சரியத் தொடங்கிற்றென்றும் அதைத்தடுக்கும் முயற்சியிலேயே, கரிகாலன் அழுந்தூரிலும், பிற வேளிர் தலையூர்களிலும் ஆதரவு பெற்றுப் போராடினான் என்று கொள்ள வேண்டும். செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னிக்கும் முதற் கரிகாலனுக்கும் உள்ள தொடர்பு மற்றொரு செய்தியாலும் வலியறுத்தப்படுகிறது. முந்தியவன் காலத்தில் சோழர் படைத்தலைவனாயிருந்தவன் அழுந்தூர் வேள் திதியனே. இதே அழுந்தூர் வேள் திதியன் என்ற பெயரே முதற்கரிகாலன் காலப் படைத்தலைவனாகவும் அவன் அறமன்றத் தலைவனாகவும் இருந்ததாகக் காணப்படுகிறது. புகழ்பெற்ற இரண்டாம் கரிகாலன் தாய் அழுந்தூர்வேள் மகள் என்பது காண அழுந்தூர் வேளுக்கும் சோழருக்கும் உள்ள மரபுத் தொடர்பு தெளிவாகும். இத் திதியன் படையில் பல கோசர் வீரராயிருந்தனர். அவர் களில் சிலர் அன்னி மிஞிலி என்ற நங்கையின் தந்தை கண்ணைக் கெடுத்து விட்டனர். திதியன் அழுந்தூர் மன்றத்தில் முறைசெய்து அவ்வீரரைக் கொலைத்தண்டனைக்கு ஆளாக்கினான். இச்செய்தியும் பரணராலேயே (அகம் 196-ல்) குறிக்கப்பட்டுள்ளது. வெண்ணிப்போர் ஐஐ அல்லது வெண்ணிப் பறந்தலைப்போர் வெண்ணியில் நடைபெற்ற இரண்டாவது போரும் முதற் கரிகாலன் ஆற்றிய போரேயாகும். இப்போர் ஒரு வகையில் முன்னைய போரைத் தொடர்ந்து வந்த தமிழக முதன்மைப் பேரரசு நிலைக்கான போட்டிப் போராகவே தோற்றுகிறது. ஏனெனில் இதில் புகழ்மிக்க சேரனான பெருஞ்சேரலாதனே கரிகாலன் எதிரியாகப் போரிட்டான். இந்தப் பெருஞ் சேரலாதனைச் சிலர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனக் கொள்வதுண்டு. அதே சமயம் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கரிகாலன் சேரலாதன் மருமகனெனவும் சில மரபுகள் குறிக்கின்றன. ஆதலால் கரிகாலன் நெடுஞ்சேரலாதன் ஆகிய இரு பெயர்களிலும் உள்ள குழப்பம் இச்செய்திகளிடையே தெளிவு தரத்தக்கதாயில்லை. தலை தடுமாற வைப்பதாகவேயுள்ளது. ஏனெனில் பெருஞ்சேரலாதனும் நெடுஞ்சேரலாதனும் வேறாயிருத்தல் வேண்டும். நெடுஞ்சேரலாதன் தொடர்புடைய கரிகாலனும் முதற்கரிகாலனின் வேறாகல் வேண்டும். வெண்ணிப் பெருவெளியில் நடந்த இப்போர் மிகவும் கோரமான போராயிருந்திருக்க வேண்டும். ஏனெனில் இப் போரின் பயனாகச் சேரநாடே ஒளியிழந்ததென்று புறநானூற்றுப் பாடல் ஒன்று குறிக்கிறது. சேரமன்னன் பெருஞ்சேரலாதன் கரிகாலனுடன் நேருக்கு நேர் நின்று இறுதிவரை போரிட்டான். அவன் மார்பில் பாய்ந்த வேல் முகுதுவரையில் துளைத்ததால், மார்பில் மட்டுமன்றி முதுகிலும் புண்பட்டுவிட்டது; ‘முதுகிற் புண்’ என்பது பொதுவாகக் கோழைமையின் சின்னம். இங்கே சேரன்புண் இத்தகையதல்ல வாயினும் அவன், இச்சொல்லுக்கு இடமேற்பட்டது கண்டு, போரை நிறுத்தி வடக்கிருந்து மானத்துடன் உயிர்விடத் துணிந்தான். இச்செய்திகளைக் கழாத்தலையார் என்ற புலவர் உருக்கமாகப் பாடுகிறார். சேரநாட்டு நிலையும் மன்னன் விழுமிய நிலையும் நம் மனக்கண் முன்னே புலவரால் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றன. “மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப, இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப, சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப, உழவர் ஓதை மறப்ப, விழவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன். (புறம் 65) “முரசு முழங்கவில்லை; யாழ் இசையை மறந்தது; அகன்ற பால் வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன; சுறுசுறுப்பான தேனீக்கள் திரட்டிய தேனை இப்போது தீண்டுவாரில்லை; உழவர் கழனிகளில் உழுதலைத் தவிர்த்தனர்; ஊர்ப்புற வெளிகள் விழாவயரும் கூட்டங்கள் இன்றி வெறிச்சென்றிருக்கின்றன” என்று அவர் சேரநாட்டு நிலையைச் சித்தரிக்கிறார். ‘ஞாயிறும் திங்களும் எதிரெதிர் நின்று போரிட்டுத் திங்கள் சாய்வதுபோல் சாய்ந்தான் சேரன்’ என்று அம்மன்னர் மாண்பையும் புலவர் பெருமித இரக்கத்துடன் குறிக்கிறார். களத்தில் வெற்றியடைந்த கரிகாலனைப் பாடிய புலவர் ஒரு பெண் பாவலர். வெண்ணிக்களத்துக்குரிய வெண்ணி ஊரிலேயே பிறந்தவர். குயவர் தொழில் மரபினர். அவர் வெற்றி வீர அரசனைப் பாடினாலும், அப் பாட்டில்கூடச் சேரன் பெருமித முடியே முனைப்பாக, ஆனால், கரிகாலனின் பெருமை தோன்றப் பாடப்பட்டுள்ளது. கடற்போர் பல செய்த சோழ மரபில் வந்தவனே என்று அப்பெண்பாற் புலவர் அரசனை விளித்துப் பாடுகிறார். “நனி இரு முந்நீர் நாவாய் ஒட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக! களி இயல் யானைக் கரிகால் வளவ! சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே, கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலக மெய்திப் புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே!” (புறம் 66) “கரிகாலன் வெற்றியால் புகழ் பெற்றானாம்! சேரலாதன் வடக்கிருந்து புகழ் பெற்றானாம்! ஒருவனது - வீரத்தின் புகழ்! அடுத்தவனது - வீரத்தின் மானத்தின் புகழ்! எது நல்லது - பின்னது அல்லவா?’ என்று கேட்கும் புலவரின் கேள்வி நயம், வெண்ணிப் போரின் வீரர் வீர நயங்களைவிடச் சிறந்தாகவே காணப்படுகிறது. சேரன் வீரம், மானம் நாடி மாளத்துணிந்த பெருமிதநிலை ஆகிய செய்திகள் ஒரு கணத்தில் தமிழகமெங்கும் பரவின. அப் பெருஞ் சேரனைக் காணும் ஆர்வம் தமிழக மெங்கணும் எழுந்தது சான்றோர்கள் பலர் தீர்த்தயாத்திரைக்குப் புறப்படும் இக்காலப் பத்தர்கள்போலப் போர்களத்துக்கு விரைந்தனர். மன்னனுடன் வடக்கிருந்து மாளும் மாள்வே புகழ்மாள்வு என்று அவர்கள் துணிந்தனர். “கரிகால் வளவ னொடு வெண்ணிப் பறந்தலைப் பொருது புண் நாணிய சேரலாதன் அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் அரும் பெறலுலகத் தவனோடு செலீஇயர் பெரும் பிறிதாகி யாங்கு!” (அகம் 55) என்று இப்புகழார்வத்தை மாமூலனார் தீட்டிக்காட்டியுள்ளார். வாகைப் பறந்தலை முதலாவது கரிகாலன் ஆற்றிய மற்றொரு பெரும் போர் வாகைப் பறந்தலைப் போராகும். விரிஉளைப்பொலிந்த பரியுடை நன்மான் வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் சூடாவாகைப் பறந்தலை ஆடுபெற ஒன்பது குடையும் நண்பக லொழிந்த பீடில் மன்னர் போல ஓடுவை மன்னால்! (அகம் 125) என்ற பாடலில் பரணர் இப்போரை விரித்துரைத்துள்ளார். ‘வாகை’ ஒரு இடத்தின் பெயர் என்பதைக் கவிஞர் - தமிழ்ப் புலவர் மரபுப்படியே - ‘சூடாவாகை’ என்று அடைகொடுத்துத் தெரிவிக்கின்றார். கவிஞர் அப்படிக் கூறவில்லையானால் வாகை ஒரு போர்க்களம் என்பதை உணராமல் ‘வெற்றிக்குரிய பூ’ வாகக் கொண்டு நாம் மயங்க இடமேற்பட்டிருக்கக் கூடும். கரிகாலன் அப்போரில் ஒன்பது மன்னர்களை எதிர்த்துச் சமரிட்டான். அவர்கள் கரி, பரி, தேர், காலாட்படைகளை மிகுதியாகவே உடையவராய் இருந்தனர். ஆனால், அவர்களால் கரிகாலன் முன் நிற்க முடியவில்லை. கரிகாலன் அரும்பெரு வெற்றி பெற்றான். ஒன்பது மன்னரும் தம் கொற்றக் குடைகளையும் புகழ்க் கொடிகளையும் களத்திலே எறிந்துவிட்டு ஓடினர். இப்போரைச் சில வரலாற்றாசிரியர்கள் இரண்டாம் கரிகாலனின் வடதிசைப் படையெடுப்பின் ஒரு பகுதியாகவும், அவன் திரும்பும் சமயம் நடைபெற்றதாகவும் குறிக்கின்றனர். ஆனால், முதற் கரிகாலனின் இப்போர்களைப் பாடிய பரணரும், மாமூலனாரும் மிக முற்பட்ட காலத்தவர்கள். ஆகவே இது இரண்டாம் கரிகாலனாக இருக்க முடியாது. ஆயினும் தமிழகத்தில் வேளிரன்றி ஒன்பது மன்னர் அந்நாளில் இருந்தனர் என்று கூறமுடியாது. தமிழகத்துக்கு வடக்கே கன்னட தெலுங்கு நாடாகிய வடுக எல்லையில்கூட இப்பழங்காலத்தில் ஒன்பது மன்னர் அந்நாளில் இருந்திருக்கக்கூடுமா என்று ஐயுற இடமுண்டு. ஆந்திரர், கலிங்கர், சூடுநாகர் அல்லது சூடுபல்லவர் கடம்பர் ஆகிய பேரரச மரபினரே அக்காலத்தில் நிலவியிருக்கக் கூடும். எனவே முதற் கரிகாலன் வாகைப்பறந்தலை வெற்றி தொலைத் தென்னாடு அல்லது வடநாட்டு வெற்றியாகவே இருத்தல் வேண்டும். ‘பீடில் மன்னர்’ ‘ஓடுவை’ என்ற புலவர் சொற்கள் அயலின அரசரே குறித்த தொனியை உடையன. தவிர பரணர் சங்ககாலப் புலவர்களிலே மிகமுற்பட்டவர்; நீண்ட நாள் வாழ்ந்தவர்; அவர் முதுமைக்காலத்திலே கபிலர் இளைஞராயிருந்தவர். மாமூலனாரோ பரணரிலும் பழமை வாய்ந்தவர். அவர் மோரியருக்கு முற்பட்டு கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர். இவற்றை நோக்க மாமூலனாராலும், பரணராலும் பாடப்பட்ட வெண்ணி முதற் போர், வாகைப் பறந்தலைக்குரிய கரிகாலன் முதற்கரிகாலன் என்று முனைவர் இராசமாணிக்கனார் குறித்த அரசனுக்கும் முற்பட்ட ஒரு மூல முதல் கரிகாலனாயிருந் திருக்கக் கூடும் என்னலாம். இது மேலும் ஆராய்வதற்குரியது. மேருவைச் செண்டாலடித்தல், காவிரிக்குக் கரைகட்டல் முதலிய சிலப்பதிகார, பிற்கால மரபுக்குரிய செயல்களில் சில வேனும் இம்மூல முதல் கரிகாலனுக்குரியன ஆகலாம். ‘பெரும் பெயர்க்கரிகால்’ என்ற சங்க ஏடுகளில் கூற்றுக்கள் மூலமுதல் கரிகாலன் மரபும் பெயரும் உடைய கரிகாலன் என்ற பொருள் கொண்டனவாகவும் இருந்திருக்கக் கூடும். வெண்ணிப்போர் ஐஐஐ சங்கப் பாடல்களிலே பத்துப்பாட்டின் இரண்டு பாட்டுக்கள், கடியலூர் உருத்திரக் கண்ணனார் பாடிய பட்டினப் பாலை, முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப் படையும் மூன்றாம் வெண்ணிப் போர் ஆற்றிய இரண்டாம் கரிகாலனைப் பற்றியவையேயாகும். முனைவர் இராசமாணிக்கனார் குறித்தபடி, கரிகாலனைப் பற்றிய பிற்காலப் பெரும் புகழ் மரபின் செயல்கள் யாவும், முதற் கரிகாலனுக்குரியன என்று ஒதுக்கப் பட்டன போக மிகுந்தவை, இவனுக்கே உரியனவாகலாம். முதற்கரிகாலனுக்குரியன என்று ஒதுக்கியவற்றுட் சிலவும் இவற்றுட் சிலவும் ஒரு மூல முதல் கரிகாலனுக்குரியன ஆயினாலும்கூட, இரண்டாம் கரிகாலனின் வரலாற்றுப் பெருமை ஒரு சிறிதும் குறைந்துவிடாது. ஏனெனில் புனைந் துரையோ என வரலாற்றாசிரியர் ஐயுறாத உறுதிச் செயல்கள் பெரும்பாலும் இவன் செயல்களேயாகும். வடதிசைப் பெருவெற்றிகள், மேருவைச் செண்டாலடித்தல், வடதிசைப் பெருமன்னன் ஒருவன் மூன்று கண்ணில் ஒரு கண்ணைக் கொய்தல், காஞ்சி நகரம் நிறுவுதல் ஆகிய செயல்களே மூன்று கரிகாலனுக்குள் யாருக்குரியன என்று வரையறுக்க முடியாதவை. கல்வெட்டுக்கள் பெருமைபடக்கூறும் கரிகாலன் உறையூரிலே ஆண்டதாகவே நீண்ட கால மரபுரை குறிக்கிறது. ‘இரண்டாம்’ (கடைசிச் சங்ககாலக்)கரிகாலன் உறையூரில் கோட்டை கொத்தளம் பெருக்கினாலும் காவிரிப் பூம்பட்டினத் திலேயே இருந்து அரசாண்ட தாகத் தெரிகிறது. இது முன் இரு கரிகாலருக்கு மட்டுமே பொருந்ததும், காஞ்சி நகரைக் கரிகாலன் வலிமைப் படுத்தியதாக மட்டும் கொள்ளாமல் புதிது நிறுவியதாக, அல்லது பெருநகராக்கியதாகக் கொள்வதனால், இதுவும் முற்பட்ட கரிகாலர்களுக்கே பொருந்தும். ஆயினும், ‘காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி... கோயிலொடு குடி நிறிஇ!’ (பட்,பாலை 244-5. 286) என்ற பட்டினப்பாலை அடிகளும், ‘முதியோர் அவைபுகு பொழுதில் தம்பகை முரண் சொலியவும்’ (பொருந. 187-8) என்ற பொருநராற்றுப்படையின் குறிப்புடன் “இளமைநாணி முதுமை எய்தி உரைமுடிவு காட்டிய உரவோன்” (மணிமேகலை) என்ற மணிமேகலைக் குறிப்பும் இரண்டாம் கரிகாலனே பெரும் பெயர்க்கரிகாலன் என்று சுட்டுகின்றன. ஆயினும் சிலப்பதிகாரத்தின் வஞ்சின மாலை குறிப்பிடும் கரிகாலன் மகள் ஆதிமந்தி வரலாறு பரணர் பாடிய அகப்பாடல் ஒன்றில் (அகம் 222) குறிக்கப்படுகிறது. எனவே புராணப் பெரும் புகழ்க் கரிகாலனும், சிலப்பதிகாரம் மணிமேகலை குறிக்கும் கரிகாலனும், கல்வெட்டுக்களில் புகழப்படுபவனும் இரண்டு கரிகாலர்களும் அல்ல; மூலமுதல் கரிகாலனே என்றும், அவன் புகழும் செயலிற் சிலவும் பிந்திய இரு கரிகாலர்களாலும் மேற் கொள்ளப்பட்டும் அவர்கள் மீது புலவரால் சார்த்தப்பட்டும் வந்தன என்றும் கூற இடமுண்டு. இரண்டாம் கரிகாலன் (மூலமுதல் கரிகாலனை ஏற்றால் அவனிடத்திலிருந்து மூன்றாம் கரிகாலன்) செய்திகள் என்று பட்டினப்பாலை பெருநராற்றுப்படை ஆகிய இருபாக்களாலும் உறுதியாகக் கூறத்தக்கவை கீழ் வருபவையே. இரண்டாம் கரிகாலன் திருமாளவளவன் என்ற புகழ்ப் பெயருடையவன் (பட். பாலை 299). அவன் கரிகாலன் என்ற பெயரும் உடையவன் (பொருநர். 148). அவன் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி (மேற்படி 130). அவன் பிறக்கும்போதே அரசுரிமை பெற்றவன், ஆனால், சிறைப்பட்டு வாளால் விடுதலை யுற்றான். (பொருநர், 132; பட். பா. 221-7) அவன் இளமை கண்டு முறைசெய்யும் ஆற்றல் பற்றி ஐயுற்ற முதுமை வாய்ந்த அமைச்சர் நாணும்படி முதுமை வேடத்தில் வந்து முறை செய்தான் (பொருநர். 187-8). பல சமயச்சார்பான விழாப்பணிகள், வேள்வி முறைகள் செய்தான் (பட். பா. 200-203). ஒளியர், அருவாளர், பாண்டியர், வடவர், மேல்புலத்தவர்கள் ஆகியவர்களை வென்றடக்கியிருந்தான் (பட். பா. 247-277). பொதுவர் மரபையே அழித்தான். இருங்கோவேளை முறியடித்தான் (பட். பா. 282-3). உறையூர்க் கோட்டை கட்டிப் புதுப்பித்தான்; ஏரி, குளம் வெட்டி உழவு பெருக்கி, புதுக்குடியிருப்புகளும் கோயிலும் வகுத்தான் (பட். பா. 284-6). வெண்ணிப்போர் ஆற்றினான் (பொருநர், 143- 148). மூன்றாம் வெண்ணிப்போர் பற்றிப் பொருநர் ஆற்றுப் படையில் முடத்தாமக் கண்ணியார் குறிக்கும் அடிகளாவன. “இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த இருபெரு வேந்தரும் ஒருகளத்தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்” (பொருநர். 143-148) இங்கே கரிகால் வளவன் பனம்பூமாலை அணிந்த சேர வேந்தனையும், வேப்பம் பூமாலையணிந்த பாண்டிய வேந்தனை யும் ஒருங்கே எதிர்த்துப் போர் நிகழ்த்தினான். இருபெரு வேந்தர் களும் முறிவுற்றதன்றி, களத்திலேயே பட்டு வீழ்ந்தனர். இதன் பின்னரே கரிகாலன் தமிழகப் பேரரசன் ஆகியிருக்க வேண்டும். கரிகாலன் வடநாட்டு வெற்றி கரிகாலன் வடநாட்டு வெற்றி பற்றிக் குறிக்கும் நூல் சிலப்பதி காரமேயாகும். இது காரணமாக, அதை வரலாற்று மெய்ம்மை யுடையதன்று எனக் கருதுபவர் உண்டு. சிலப்பதிகாரம் சங்க காலத்து நூலல்ல என்றும், அது வரலாற்று நிகழ்ச்சிகள் விரவிய ஒரு புனைகதையே என்றும் பலவாறாக ஆராயப்புகுபவர் உண்டு. ஆனால், உண்மையில் இது சங்ககால வரலாற்று மரபு முற்றிலும் காணமுடியாத நிலையில் பிற்காலத்தாரும் நம் காலத்தவரும் கொள்ளும் குளறுபடியின் விளைவேயன்றி வேறல்ல. ஏனெனில் பத்துப் பாட்டினுள்ளேயே பொருநர் ஆற்றுப்படை குறிப்பிடும் மூன்றாம் வெண்ணிப்போரை அதே அரசனை விரிவாகப் பாடும் பட்டினப்பாலை குறிப்பிடவில்லை என்பது கூர்ந்து நோக்கத் தக்கது. பாடுவேள் காலத்துக்குப்பின் சில செயல்கள் நிகழ்ந் திருக்கக் கூடும் என்பதும், அக்காலப் புலவர்களிடையே வரலாற்று நோக்குப் பொதுவாக மிகுதியாயினும், மாமூலனார், பரணர், இளங்கோ ஆகியவரிடையேதான் அது முனைப்பாகக் காணப்படுகிறது என்பது கவனிக்கத்தக்க செய்திகள் ஆகும். பொதுவான சங்க ஏடுகளைவிடச் சிலப்பதிகார மணிமேகலைக் காவியங்கள் வரலாற்று முக்கியத்துவம் குறைந்தவையல்ல -ஆம், முக்கியத்துவம் இன்னும் முனைப்பாக உள்ளவையே என்பதை வருங்கால ஆராய்ச்சிகள் கட்டாயம் காட்டும். சங்க காலத்தை அறுதியிட இன்று பல செய்திகள் உதவுகின்றனவாயினும், முதல் முதல் உதவியவை சிலப்பதிகார மணிமேகலைகளே என்பதும், இன்னும் அதை வலியுறுத்த மணிமேகலை பெரிதும் காரணமாய் உள்ளது என்பதும் மறக்கத்தக்க செய்திகளல்ல. கரிகாலன் வடதிசைப் படையெடுப்பைப் பற்றிச் சிலப் பதிகாரம் தரும் சித்திரங்கள் வழக்கப்படி இளங்கோவுக்குரிய சுருக்கி விளக்கும் ஆற்றல் சார்ந்தவையாகும். “இருநில மருங்கில் பொருநரைப் பெறா அச் செருவெங்காதலின் திருமாவளவன்... புண்ணியத் திசைமுகம் பொக்கிய அந்நாள்..... இமையவர் உறையும் இமையப் பிடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையில் பெயர்வோற்கு மாநீர் வேலி வச்சிரநாட்டுக் கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்; மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தள் பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்; அவந்திவேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந் தோங்குமரபின் தோரண வாயிலும்” ஆனால்,, இங்கே வெற்றியின் விளைவுகள் கூறப்படுகின்றன வேயன்றி, வெற்றிகள் வருணிக்கப்படவில்லை. தென்னாட்டில் எவருடனும் போர் செய்யும் வாய்ப்புக்கிடையாமல் தோள்தின வெடுத்ததனாலேயே கரிகாலன் வடதிசை சென்றதாக இங்கே கூறப்படுகிறது. இமயத்தின் நெற்றி அல்லது முன்புறமும் பிடர் அல்லது பின்புறமும் அவன் புலிப்பொறி நாட்டினான். மீளும் போது வச்சிரநாட்டு மன்னன் முத்துப்பந்தரும். மகத வேந்தன் பட்டிமண்டபமும், அவந்திவேந்தன் தோரணவாயிலும் திறையாக அல்லது வெற்றிப்பரிசாக அளிக்க, அவற்றுடன் கரிகாலன் புகார் நகருக்கு மீண்டான். இங்கே குறிப்பிட்ட, வச்சிர, மகத, அவந்தி வேந்தர்கள் கரிகாலன் எதிரிகளாகத் தோன்றவில்லை. அவர்கள் அவன் பெருவெற்றிகள் கண்டு மதித்து அவன் மேலாட்சியை உவந்து ஏற்ற நேய அரசர்கள் என்றே தோன்றுகிறது. இந்த மூவரசர்களும் மோரியர் காலத்துக்குப் பின் குப்தர் காலம் வரை பெரிதும் தமிழகத்துடன் நேசம் பாராட்டித் தம்மை வடதிசையில் வலிமை யுள்ளவர்களாக்கிக் கொள்ள விரும்பியவர்கள் என்னலாம். குப்தர் காலத்தில் எழுந்த வடதிசைப் பகைமை பெருஞ் சோழர் வெற்றியின் பின் மீண்டும் மாறி நேசத் தொடர்பு வளர்ந்தது காண்கிறோம். வடகிழக்குத் தெற்கு சார்ந்த இந்தப் படையெடுப்பும் நேசமும் அடிக்கடி இவ்விரு திசைகளிடையே இருந்த சரிசம அரசியல் போட்டியையும், அதே சமயம் பண்பாட்டு நேசத்தையும் விளக்குவதாகும். முற்காலத்தில் புத்த சமயமும் பிற்காலத்தில் தமிழர் நாகரிகமும் பெரிதும் பரவிய வடதிசை இதுவேயாகும். கரிகால் வளவன் பிற்காலப் புகழ் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்குக் கரிகாலன் பதினாறு இலட்சம் பொன் பரிசளித்தான் என்ற செய்தி. “தழுவு செந்தமிழ்ப் பரிசில் பாணர்போன் பத்தொடாறு நூறாயிரம் பெறப் பண்டு பட்டினப்பாலை கொண்டதும்” (கலிங்கத்துப்பரணி) இதே நூல் அவன் இமய மலையைச் செண்டு அதாவது கைத்தடியால் அடித்து, பம்பரம் போல் திருகிவைத்து இருபுறமும் புலி பொறித்த செய்தியை உயர்வு நவிற்சியணி நயம் தோன்ற உரைக்கிறது. “செண்டு கொண்டு கரிகாலன் ஒருகாலின் இமயச் சிமய மால் வரைதிரித்தருளி, மீள அதனைப் பண்டு நின்றபடி நிற்க இது என்று முதுகில் பாய்புலிக் கொடி குறித்ததும் மறித்த பொழுதே” (கலிங்கத்துப்பரணி) இதே செய்தியுடன் காவிரிக்கரை கட்டிய செய்தியும் பிறவும் சேர்த்து. தென்னருவிச் சென்னிப்புலியேறு இருத்திக் கிரி திரித்துப் பொன்னிக்கரை கண்டபூபதி (விக்கிரம சோழனுலா) என்று மூவருலா முதலிய பிற்கால ஏடுகளும் கல்வெட்டுக்களும் கரிகாலன் புகழை எல்லையறப் பெருக்கிக் கூறுகின்றன. பதினான்காம் நூற்றாண்டில் (கி.பி. 1356) வச்சிரநாடு அதாவது நாகபுரி யடுத்துள்ள பஸ்தர் நாட்டில் ஆண்ட தெலுங்குச் சோட அரசன் பக்திராயன் செப்புப்பட்டயம் கரிகாலன் புகழை வேறு எந்த நூலும் ஆதாரமும் கொண்டு செல்லாத அளவு உச்சி வான் ஏற்றுகிறது. அவன் வடநாட்டில் வென்ற மன்னர் தலைமீதே கங்கை நீர் ஏற்றிக் கொண்டுவந்து தமிழகத்தில் குளித்தான் என்றும், போசராசனை வென்றான் என்றும் முக்கட் பல்லவன் கண்ணொன்றைக் காற் பெருவிரலால் அழுத்திக் குறைத்தான் என்றும் அது கூறுகிறது. பண்டைப் பெருஞ் சோழர் போர்கள் பின்னாளைய பெருஞ்சோழர்களைப் போலவே சங்ககாலத்தில் ஒன்றிரண்டு நூற்றாண்டுகளேனும் சோழர் தமிழக முதற் பேரரசராக இருந்து தமிழகம் கடந்து அண்மை வடதிசையிலும் தொலை வடதிசையிலும் தம் வீரப் புகழ்பரப்ப முயன்றனர் என்பதற்கு ஐயமில்லை. அப்பண்டைப் பெருஞ்சோழர் காலத்துப் போர்களில் செருப்பாழியும் கரிகாலன் வடதிசை வெற்றிகளும் உயர் வான் முகடுகளாகும் என்பதிலும் ஐயமில்லை. இவற்றுக்கு இடையிலோ முன்னோ பின்னோ என்று வரையறுக்க முடியாத பல சோழப் பெரும் போர்களை நாம் சங்க இலக்கியப் பலகணி மூலமாகக் காணலாம். உறையூரிலிருந்து அரசாண்ட தித்தன் என்ற ஒரு சோழன் காலத்தில் வடுகவேந்தன் கட்டியும் மற்றொரு பாணர் குடி மன்னனும் உறையூர் வரை படையெடுத்து வந்து அதனை முற்று கையிட்டதாக அறிகிறோம். இத்தித்தனுக்கு ஐயை என்ற சீர்சான்ற புதல்வியிருந்ததாகவும், அவன் உறையூரை நன்கு அரண் செய்து காத்ததாகவும் அகப்பாடல்கள் சில குறிக்கின்றன. அவன் கோட்டையிலிருந்து எழுப்பிய போர் முரசம் கேட்டே எதிரிகள் ஓடியதாகப் புலவர் ஒருவர் உயர்வு நவிற்சிச்சுவை தோன்றப் பாடியுள்ளார். மற்றொரு பெரும்போரில் சோழன் வேல்பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்ற சோழப் பெருமன்னனும் சேரமான் குடக்கோநெடுஞ்சேரலாதன் என்ற சேரப் பேரரசனும் வேங்கை யுடன் வேங்கை எதிர்த்ததுபோல் எதிர்த்து நின்று பொருதினர். இருபுறத்துப் படைகளும் இருபுறத்தரசரும் முற்றிலும் சரிசம வலிமையுடையவராகவும், சரிசம வீரமுடையவராகவுமே இருந்த தால், இருவருக்குமே வெற்றி கிட்டவில்லை. அது மட்டுமன்று. இரு பேரரசர்களும் ஒருவர் மீது ஒருவர் மும்முரமாகத் தாக்கிப் போர் செய்து இறந்தனர். போர்க்களத்தின் வெற்றி இரு வேந்தருக்குமே கிட்டாமல் கூற்றுவனுக்கும், அவன் போர்ப் படைகளுக்கும், கழுகு பருந்துகளுக்குமே கிட்டிற்று! இப்போர் விளைவாக எழுந்த துயரமிக்க காட்சிகளையும் அதனால் எழுந்த உருக்கமான கருத்துக்களையும் களங்கண்டு பாடிய இரு பெரும் புலவர் நமக்குத் தந்துள்ளனர். ‘யானையும் குதிரையும், தேரும் வீரரும் செயலற்றுக் கிடக் கின்றனரே! வீரர் கண் மறைத்துக் கேடயங்கள் கிடக்கின்றன. அடிப்பாரின்றி முரசுகள் உருளுகின்றன. நெஞ்சில் சாந்துடன் குருதியும் சேர்ந்து வடிய மன்னர் கிடக்கின்றனர். இனிநாடு என்ன ஆவது?” என்று பெரும்புலவர் பரணர் கலங்குகின்றார். எனைப்பல் யானையும் அம்பொருதுளங்கி விளைக்கும் வினையின்றிப் படையொழிந்தனவே! விறற்புகழ் மாண்ட புரவி யெல்லாம் மறத்தகை மைந்தரோடு ஆண்டுப் பட்டனவே! தேர்தர வந்த சான்றோ ரெல்லாம் தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந்தனரே! விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம் பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே! சாந்தமை மார்பில் நெடுவேல் பாய்ந்தென வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்! இனியே என் ஆவது கொல்தானே.............. ......... அகன்தலை நாடே! (புறம் 63) கழாத்தலையார் என்ற மற்றொரு புலவர், ‘வெற்றியை நாடி வெற்றிக்குரிய இரு மன்னரும் இப்படிப் போர் புரிவதனால் என்ன பயன்?’ என்று கேட்டு இறுதியில் இத்தகைய வீரம் பாழப்பாடாது என்று தேறி ‘வாழ்க அவர் புகழ்’ என்று அமைகிறார். வருதார்தாங்கி அமர்மிகல் யாவது?............. அறத்தின்மண்டிய மறப்போர் வேந்தர் தாம் மாய்ந்தனரே! குடை துளங்கினவே! உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே!............... களங்கொளற்கின்றி, தெறுவர உடன்வீழ்ந்தன்றால் அமரே? -பெண்டிரும் பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார், மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே!................ அரும் பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால்! பொலிக நும்புகழே! (புறம் 62) வெற்றி கொள்வார் யாருமில்லாமல் இரு பேரரசர் பெண்டிரும் தத்தம் கணவர் மார்பில் விழுந்து அழுதனராம்! தமிழர் வீரத்தின் பெருமையையும், அது தமிழினத்துக்குச் செய்த அழிவையும் இப்போரும் பாடலும் நன்கு விளக்குகின்றன. 6. சங்ககாலப் போர்கள் ஐஐ தமிழினத்தின் குடி மரபுகளுள் தலை சிறந்தன நான்கு என்று வகுத்துரைத்துள்ளார் தலைமை சான்ற சங்கப் புலவரான மாங்குடி மருதனார். “துடியன், பாணன், பறையன், கடம்பனென்று இந்நான் கல்லது குடியு மில்லை!” (புறம் 355) என்பது அவர் கருத்து. இந்நால் வகையினரும் பழமையும் பெருமையும் உடைய உச்ச உயர் குடியினராகக் கருதப்பட்டிருந் தனர் என்று அறிகிறோம். இந்நால்வரில் பறையரைத்தவிர மற்றவரைப்பற்றி நாம் இன்று தமிழகத்தில் மிகுதி கேள்விப் படவில்லை. பறையரும் இன்று ஒரு குடியினராய் இல்லை. புதிதாக இடைக்காலத்தில் எழுந்துள்ள சாதிகளுள் ஒரு சாதியினர் ஆகியுள்ளனர். அத்துடன் தமிழினத்தில் உச்ச உயர் குடியினராகிய அவர்கள் இன்று தாழ்ந்துவிட்ட தமிழரிடையே யும் மிகத் தாழ்ந்த படியினராக, தீண்டப்படாதவராகக் கருதப்படுகின்றனர். தமிழ், தமிழினம் அடைந்துள்ள இழிவெல்லையை இது குறித்துக்காட்டுகிறது. பாணர் இயற்புலவராக மட்டுமன்றி இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றுக்கும் உரியவரான சங்ககாலப் பாடகர் வகுப்பையோ, மாவலி மரபினரான வாணர் வகுப்பையோ, இரண்டையுமோ குறிக்கக்கூடும். முன்னவர் முத்தமிழ்ப் பாக்களால் மன்னனைப் பாடும் உரிமையிலிருந்து முத்தமிழ்ப் பாக்களால் தெய்வத்துக்கு வழிபாடாற்றும் குருமார் வகுப்பாகி, தேவாரகாலத்துக்குப் பின் அரசியலுரிமையும் சமய உரிமையும் இழந்து, புதிய அயல் மரபு அளாவிய குருமார் கைப்பட்ட கோயில் அடிமைகளாகவும், சமூக அடிமைகளாகவும் இழிவுற்றனர். இன்று அவர்கள் தாழ்த்தப் பட்டவரல்லரானாலும், அவர்களைவிட எவ்வளவோ அவல நிலையிலேயே வாழ்கின்றனர். கலைகாத்த அம்மரபினர் இன்று தம் நிலைகாக்கவே அலமரும் நிலையில் உள்ளனர். உலகாண்ட மாவலி மரபினர் நிலையும் இன்று தடம் காண முடியா நிலையே யாகும். பறையும் முரசும் அறையும் பறையரையும் வள்ளுவரையும் போலவே, துடியரும் துடியடிக்கும் உயர் உரிமைக் குடியினராய் இருந்திருத்தல் கூடும். ஆனால், அவர்களைப்பற்றி நாம் மிகுதி கேள்விப்படவில்லை. நீலகிரியில் வாழும் துதவர் அல்லது தோத வர் பெயரை அவர்கள் பெயர் நினைவூட்டுவதாய் உள்ளது. மலங்குடி மக்களாதலின் அவர்கள் இடைக்காலத்தில் ஒதுங்கி வாழ்ந்து நாகரிக வாய்ப்பற்றுவிட்டனர். அவர்கள் சமுதாயத்தில் தாழ்ந்துவிடாவிட்டாலும், அரசியல் சமுதாய உரிமையும் பண்பாடும் குன்றியுள்ளனர். தமிழகக் கடம்பர் நால்வகைக் குடிகளுள் ஒன்றான கடம்பர் பற்றியும் நாம் தமிழ் வாழ்வில் மிகுதி கேள்விப்படுவதில்லை. ஆனால், கடம்பு என்ற மரப்பெயரை அது நினைவூட்டுகிறது. கடம்பு மரத்தை மரபுச் சின்னமாக உடையவர்களே கடம்பர். பண்டைத் தமிழகத்தில் கடம்பு மரமும், கடம்பரும் மிகுதியாகவே இருந்திருக்க வேண்டும். மதுரையருகிலே முன்பு நாகர் நகரம் இருந்தது போலவே, கடம்பரும் மிகுதியாகவேயிருந்திருக்க வேண்டும். மதுரையே முதலில் கடம்பர் ஆட்சியில் இருந்திருக்கக் கூடும். கடம்பரிடமிருந்து பாண்டியரால் வெல்லப்பட்டு அது கடைச் சங்ககாலப் பாண்டியரின் புதிய தலைநகரமாயிருக்கக் கூடும். ஏனெனில், மதுரையின் கோயில் திருமரம் கடம்பமரம் என்றே அறிகிறோம். மதுரையும் கடம்பவனம் என்றே புராணங்களில் குறிக்கப்படுகிறது. அதன் தலபுராணங்களில் ஒன்றின் பெயரும் கடம்பவன புராணம் என்பதே. தமிழர் தெய்வங்களுள் முருகனுக்குரிய பூ கடப்பம் பூவே. முருகன் கடம்பன் என்றும் குறிக்கப் பெறுகிறான். உண்மையில் சூரபன்மன் மரபினரான கடம்பரை வென்றே அவன் அப்பெயர் பெற்றானாகல் வேண்டும். கடம்பர் பாண்டியரின் பழைய எதிரிகள் மட்டுமல்லர்; சேரர் எதிரிகளும் ஆவர் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. சேரர் எதிரிகளாக மட்டுமே தமிழ் இலக்கிய மரபில் கடம்பர் நம்முன் காட்சியளிக்கின்றனர். ஆனால், தமிழகத்துக்கு வெளியே, தென்னாட்டு வரலாற்றில் கடம்ப மரபினர் மூன்றாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை தனியரசாகவும், பேரரசாகவும், சிற்றரசாகவும் கிட்டத்தட்ட ஆயிர ஆண்டுகளுக்கு மேல் வட கொண்கானப் பகுதியில் பெருவாழ்வு பெற்றிருந்தனர் என்று அறிகிறோம். பல்லவர் வரலாறு எழுதுபவர் இந்தியாவுக்கு வெளியிலும் வடஇந்தியாவிலும் அப்பெயரின் தொடர்புகளைத் துருவித் தேடி அலசிப் பார்க்கத் தவறவில்லை. ஆனால், சேரர் வரலாறு எழுது பவர் தமிழகத்துக்கு வடக்கே நீண்ட காலம் ஆண்ட கடம்பரைப் பற்றிக் கவனிப்பதேயில்லை. அதுபோலக் கடம்பர் வரலாறு எழுதியவர்களும் தமிழிலக்கியமும் சேரர் வரலாறும் அவர்கள் வகையில் தரும் ஒளி மீது கருத்துத் திருப்புவதில்லை. இது வியப்புக்குரியது ஆகும். ஏனெனில் கடம்ப மரபினரின் ஆட்சி முதல்வனாகக் கருதப்படுபவன் மயூரசர்மன் என்பவன். அவன் ஏறத்தாழ நான்காம் நூற்றாண்டில், கி.பி. 345 - க்கும் 370-க்கும் இடையே ஆட்சி செய்தவனாகக் கருதப்படுகிறான். கடம்பரைப் பற்றிப் பதிற்றுப்பத்துத் தரும் சான்றுகள், இதற்குக் குறைந்தது மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. தமிழிலக்கியம் -இவ்வாறு கடம்பரின் தொடக்க வரலாறு கூறுவதுடன். அவர்கள் மூலத் தாயகம் எது என்பதையும், அவர்கள் எவ்வாறு வாழ்வு தொடங்கினர் என்பதையும் காட்டுகிறது. கடம்பரும் தமிழிலக்கியமும் வரலாற்றில் கடம்பர் தலைமைத் தாயகம் வனவாசி பன்னீரா யிரம் என்று குறிக்கப்படுகிறது. இதில் கடற்கரையோரப் பகுதியாகிய கொண்கானம் தொளாயிரமும் உள்நாட்டுப் பகுதியாகிய ஹல்சி பன்னீராயிரமும் சேர்ந்திருந்தன. பின்னாட்களில் அவர்கள் ஹாங்கல் ஐந்நூற்றையும், பேலூர், பயலநாடு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி இந்நாளைய கன்னட நாடு முழுவதும் பரவினர். மைசூரில் உள்ள கிரிபர்வதம் அல்லது பேளுரிலும், பல்லாரி மாவட்டத்தில் உள்ள உச்சங்கியிலும் அவர்கள் கிளைக்குடிகள் ஆண்டன. வரலாற்றுக் கால முழுவதும் அவர்கள் உள்நாட்டில் பரவி உள்நாட்டுக் குடிகளாகவே வாழ்ந்தனர். ஆயினும் அவர்கள் மூலத்தாயகம் கொண்கானக் கடற்கரையே என்றும் பதிற்றுப்பத்தும் சங்க இலக்கியமும் காட்டுகின்றன. சங்ககாலத்தில் தமிழகத்தின் வட எல்லையில் இருந்த கொண்கானப் பகுதியில் ஆண்ட குடித்தலைவன் நன்னன் ஆவன். அவன் தமிழக வேளிர்களுள் ஒருவன். அவன் நாடு, பாலி நாடு என்று அழைக்கப்பட்டது. அது தற்கால மலபார் மாவட்டத்துக்கு வடக்கே, வைநாட்டுக்கு வட கிழக்கில் தற்போது குடகு என்று வகுக்கப்பட்டுள்ள மாவட்டம் ஆகும். இந்நாட்டிலும் இதனை யடுத்த பகுதிகளிலும் இன்னும் ‘நன்னன்’ பெயர் மரபு குடிப் பெயர்களில் பொன்றாமல் நிலவுகிறது. வரலாற்றுக் கால முழுதும் கல்வெட்டுக்களிலும் காணப்பெறுகிறது. அத்துடன் பாண்டி நாட்டில் பெருஞ்சோழர் காலம் வரை நிலவிவந்த பண்டைத் தமிழ் எழுத்துமுறை தமிழகத்தில் வழக்கற்றுப் போய் விட்டாலும் இப்பகுதியில் இன்னும் ‘கோல் எழுத்து’ என்ற பெயருடன் நிலவிவருவதாக அறிகிறோம். குடகு நாட்டு வரலாற்றில் ஹதர் காலம் வரை தமிழ் மூவேந்தர் ஆட்சித் தொடர்பின் சின்னங்கள் காணப்படுகின்றன. சங்க காலங்களில் நன்னன் நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழாயினும், அது அன்றே செந்தமிழிலிருந்து பெரிதும் மாறுபடத் தொடங்கியிருந்தது. சங்கப்புலவர் நன்னனைத் தமிழிலேயே பாடினாரானாலும் அவன் நாடு திருந்தாத்தமிழ் பேசிய நிலம் என்பதைக்குறித்து ‘மொழிபெயர் தேயம்’ என அதை அழைத்தனர். பாலிநாடு சுரங்கத் தொழில் நடைபெற்ற பகுதியில் இருந்தது. ஆகவே அது பொன் வளமிக்கதாயிருந்தது. வியலூர், அரயம் என்பன அந்நாட்டில் உள்ள முக்கியமான கோட்டை நகரங்களாகும். இளஞ்சேட் சென்னியின் செருப்பாழிப் போர் நடந்த இடமாகிய ‘பாழி’ இந்நாட்டின் பழமை வாய்ந்த அரணமைந்த நகரங்களுள் ஒன்றேயாகும். இவை தவிர நன்னன் ஆண்ட தலைநகரம் ‘கடம்பின் வாயில்’ என்ற பெயருடையதாய் இருந்தது. நன்னன் உண்மையில் கடம்ப மரபினன் என்பதையும் அவன் ஆண்ட பகுதியாகிய பாலி நாடு, கடம்பர் தாயகமான கொண்கானத்தின் ஒரு பகுதியே என்பதையும் இது காட்டுகிறது. கடம்பர்கள் மூலத்தாயகம் கொண்கானக்கரை என்பதை மட்டுமே அவர்கள் பிற்கால வரலாறு காட்டுகிறது. ஆனால், சேரர்களின் எதிரிகளாகிய கடம்பர்கள் கடற் கொள்ளைக்காரர் களாக இருந்தனர். அவர்கள் கொள்ளைத் தொழிலுக்குரிய மூலதனம் கடற்கரையில் இல்லை. கடலகத்தே ஒரு தீவிலே இருந்தது. அவர்கள் மரபுச்சின்னமாகிய தாய்க் கடம்ப மரம் இருந்த இடமும் அதுவே. இத்தீவைக் கிரேக்கர் ‘லெயூகெ’ அதாவது வெள்ளைத்தீவு என்று அழைத்தனர். அதுவே மங்களூரை அடுத்துள்ள ‘தூவக்கல்’ என்ற தீவு என்று வரலாற்றாராய்ச்சியாளர் கருதுகின்றனர். லெயூகெ என்ற கிரேக்கச் சொல்லும், தூவக்கல் என்ற பழந்தமிழ்த் தொடரும் இரண்டுமே வெள்ளைத் தீவு என்றே பொருள்படுவன. மேல் கடற்கரையில் ‘பாருகச்சம்’ என்ற பண்டைத் துறைமுகம் தற்காலப் பம்பாய் அருகில் இருந்தது. அதிலிருந்து மலபார்க் கரையிலுள்ள முசிறி வரையிலும் இக்கடற் கொள்ளைக்காரர் நடமாட்டம் மிகுதி என்றும், மேனாட்டுக் கப்பல்கள் இதற்குத் தெற்கேதான் வாணிகம் நடத்த முடியும் என்றும் கிரேக்கர்கள் குறித்துள்ளனர். சேர அரசர் ஆட்சியும், பாண்டிய மன்னர் ஆட்சியும் இதற்குத் தெற்கே பாதுகாப்பளித்த செய்தியையும், சிறப்பாகச் சேரர் இவ்வாணிக எல்லையை மங்களூர் கடந்து கி.பி. முதல் நூற்றாண்டுக்குள் பரப்பினர் என்ற செய்தியையும் கிரேக்க நூலார் குறிப்புகளே தெளிவு படுத்துகின்றன. கடம்பெறிந்த சேரர் பெருமை கடம்பர் எவ்வளவு பழமையானவர். அவர்களுக்கும் சேரர் களுக்கும் இடையேயுள்ள தொடர்பு எவ்வளவு நீடித்த ஒன்று என்று நம்மால் கூறமுடியாது. கந்தபுராணத்தின் முருகன் - சூரபன்மன் போராட்டத்தில் அடங்கியுள்ள மருமம் அது. ஆனால், பதிற்றுப்பத்துத் தரும் ஒளியால், நமக்கு அதன் மூலம் தெரியவரும், முதல் சேரனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலமுதலே அது தொடங்கிவிட்டது என்று காண்கிறோம். நெடுஞ்சேரலாதன் காலத்தையும் நம்மால் இன்னும் வரையறுத்துக் கூறமுடியாது. ஆனால், வரலாற்றாராய்ச்சியாளர் கனவு களையும் இலக்கிய ஆராய்ச்சியாளர் மதிப்பீடுகளையும் தாண்டிய பழமையுடையவன் அவன் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இமயத்தில் புலி பொறித்த சோழன் கரிகாலன் காலம் எதுவாயினும், அவன் அக்கரிகாலனுக்கு முற்பட்டவனாகவே இருக்க வேண்டும். தவிர, அவன் பழமையைச் சுட்டிக்காட்டும் இன்னொரு செய்தியும் உண்டு. சங்ககாலத்திலே சேரர் தலைநகராகப் பெயர் பெற்ற இடம் வஞ்சியே. சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் தலை நகராகவும், பதிற்றுப்பத்தில் அவனுக்கும் பிற்பட்ட சேரன் ஒருவன் தலைநகராகவும் அது குறிக்கப்பட்டுள்ளது. செங்குட்டுவன் காலத்திலேயே அது நீடித்துச் சேரர் தலைநகராய் இருந்திருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இமயவரம்பன் காலத் தில் தலைநகரம் வஞ்சியாகவோ அல்லது கிளைக்குடியினர் வாழ்ந்த தொண்டியாகவோ இல்லை. அது ‘நறவு’ என்ற பெய ரடைய நகரமாய் இருந்தது. இதுவஞ்சிக்கு நெடுந்தொலை வடக்கில் இருந்தது. சோர்தாயக நாடும் இச்சமயம் வட மலபாராகவே இருந்தது. இது சங்க காலத்திலேயே அறியப்படாத தொல்பழமைச் சின்னமாகும். அதே சமயம் ‘நறவு’ தலைநக ராயிருந்த செய்தியைக் கிரேக்க ஆசிரியர் குறிப்பிட்டுள்ளனர். நெடுஞ்சேரலாதன் கடம்பழிப்பு சேரன் செங்குட்டுவன் முன்னோர்கள் புகழ்ச் செயல்களைத் தொகுத்துக்கூறும் இளங்கோவடிகள் அவற்றுடன் மாடலன் கூற்றாக இமயவரம்பன் செயல்களையும் குறித்துள்ளார். “போந்தைக் கண்ணிநின் ஊங்கணோர் மருங்கில் கடற்கடம்பு எறிந்த காவல னாயினும், விடற்சிலை பொறித்த விறலோ னாயினும்.............. வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்” (சிலப் ஒஒஎii 134 -6, 141-2) இதில் கடல் கடம்பெறிந்த செய்தியே முதலாவதாகக் கூறப் பட்டுள்ளது. இமய மலையில் விற்கொடி பொறித்தது; யவனர் நாடு ஒன்றை வென்று திறை கொண்டு ஆண்டது; கடம்பர் நாட்டகத்திலேயுள்ள பொன் விளையும் குடகுமலை புகுந்தது ஆகிய இமய வரம்பனின் மற்றச் செயல்களும் குறிக்கப் பட்டுள்ளன. மற்றும் சிலப்பதிகாரத்திலேயே, “முந்நீரின் உட்புக்கு மூவாக் கடம்பு எறிந்தான் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால்” (சிலப் ஒஎii உள்வரி வாழ்த்து 3) எனக் கடம்பெறிந்த செயல் இனிய முறையிலே புனைந்து பாராட்டப்படுகிறது. பதிற்றுப்பத்திலும் மேற்குறிப்பிட்ட செய்திகளுடனே ஏழு முடிமாலையணிதல், இமய முதல் குமரிவரை ஆட்சி பரப்புதல் முதலியன கூறப்படுகின்றன. அவற்றிடையே, “பலர் மொசிந்து ஓம்பிய திரள்பூம் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்” (பதிற் ஒi 12-13) “கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின வேந்தே!” (பதிற் ணii 3) என்று கடம்பரின் மூலதனத்தில் அவர்கள் சின்னமான கடம்ப மரம் வெட்டப்பட்ட செய்தி குறிக்கப்படுகிறது. மற்றும், “துளங்கு பிசிருடைய மாக்கடல் நீக்கிக் கடம்பு அறுத்து இயற்றிய வலப்படு வியன் பனை. (பதிற் ஒஎii 4-5) என்றதன் மூலம் கடம்பைச் சென்றடைவதற்காகக் கடலில் நாவாய் செலுத்திச் சென்ற செய்தியும், “எங்கோ இரு முந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி” (பதிற் ஒஒ 1-5) என்றதனால் அக்கடம்ப மரம் கடல் நடுவே ஒரு தீவில் இருந்த தென்பதும், அதன்கண் எதிர்த்து நின்று கடம்பரை அழித்து அம்மரம் சிதைத்தான் என்பதும் கூறப்பட்டுள்ளன. இரண்டாம் பத்தின் இறுதியில் உள்ள பதிகம் இச்செய்தி களுடன் ஆரியர்களை அடிபணிய வைத்த செய்தியும், யவனர் கைகளைப் பின்னால் சுட்டித் தலையில் நெய் ஊற்றி அவர்கள் விடுதலைக்கீடாகப் பெரும் பொருள்பெற்ற செய்தியும் குறிக்கப் படுகின்றன. இங்கே யவனர் நாடு என்பது யவனர் குடியேற்றங் களில் ஒன்றாய் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் ஆண்ட உரோமப் பேரரசர் அக்ஸ்டஸ் காலத்தில் இத்தகைய ஒரு கிரேக்கக் குடியேற்றமும் கோயிலும் முசிறியில் இருந்ததாக அறிகிறோம். “வலம்படு முரசின் சேரல்ஆதன் முந்நீர் ஒட்டிக் கடம்பறுத்து, இமயத்து முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, நன்னகர் மாந்தர் முற்றத்து ஒன்னார் பணி திறை தந்த பாடுசால் நன்கலம், பொன் செய் பாவை வயிரமோடு ஆம்பல் ஒன்று வாய் நிறையக் குவைஇ அன்று அவண் நிலத்தினத் துறந்த நிதியம்” (அகம் 127) என்று மாமூலனார் கடம்பெறிதல், இமய விற்பொறித்தல், (யவனர்) பெருந்திறை கொணர்தல் ஆகிய நெடுஞ்சேரலாதன் செயல்களைக் குறித்தது காணலாம். பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்துக்குரிய பல்யானை செல் கெழுகுட்டுவன் சிலப்பதிகாரத்தில் ‘அகப்பா எறிந்த அருந் திறலான்’ (சிலப் ஒஒஎiடை 144) என்று புகழப்படுகிறான். பதிற்றுப் பத்தில் இதனுடன் உம்பற்காடு (ஆனைமலைப்பகுதி) வெற்றி, கொங்கு வெற்றி, மேல் கடலிலிருந்து கீழ்கடல்வரை ஆட்சி பரப்பி இருகடலும் ஆள்வதற்கறிகுறியாக இருகடல் நீரும் ஆடியது ஆகியவை சிறப்பிக்கப்படுகின்றன. கடம்பின் பெருவாயில் போர் கடம்பின் பெருவாயில் என்பது நன்னன் வேண்மான் ஆண்ட பாலி நாட்டின் ஒரு நகரம். அதுவே நன்னன் தலைநகரமாகவும் இருத்தல் கூடும். இந்நாடு பூழிநாடு அதாவது தற்போதைய தென் கன்னட மாவட்டத்தை அடுத்துள்ள குடகு மாகாணம் ஆகும். செருப்பாழிப் போருக்கு முன்பு அப்பகுதியில் கோசரால் கொல்லப்பட்ட ஒரு நன்னனைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். கடம்பின் பெருவாயில் போரில் ஈடபட்ட மன்னன் அவன் மரபினருள் ஒருவனாகவே இருத்தல் கூடும். கடைச் சங்கப் பாடல்களிலே பத்துப்பாட்டில் மலைபடு கடாத்தில் பாடப்படும் நன்னன் வேறு, பதிற்றுப்பத்திற் குறிக்கப்படும் நன்னன் வேறு. முந்தியவன் சோழநாட்டை யடுத்த செங்கண்மா நாட்டு நன்னன். பிந்தியவனோ சேரநாட்டு எல்லையிலிருந்த பாலிநாட்டு நன்னன் அல்லது கொண்கானத்து நன்னன் ஆவன். இக்கொண்கானத்து நன்னனைப் பற்றிப் பரணர் பல பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் சிலவேனும் செருப்பாழிக் காலத்து நன்னனைக் குறித்தன ஆகும். ‘பெண் கொலை புரிந்து நன்னன்’ என்று கொண்கானத்து நன்னன் அழைக்கப்படுவதற்குக் காரணமான நிகழ்ச்சியையே ஒரு பாட்டில் அவர் குறிக்கிறார். மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற்று ஒன்பது களிற்றோடு அவள்நிறை பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன். (குறுந்தொகை 292) நன்னனின் மாளிகையின் பின்னே ஓடியது ஓர் ஓடையில் மிதந்து வந்த அவன் தோட்டத்துப் பசுங்காய் ஒன்றை ஓர் அறியாச் சிறுமி தின்றுவிட்டாள். அதற்காக அவன் அவளைக் கொலை செய்தான். பெண்ணின் பெற்றோர் அவள் பிழைக்காக யானைகள் பலவும், அவள் எடையின் அளவில் பொற்சிலையும் தருவதாகக் கூறியும், அக்கொடுஞ் செயலிலிருந்து அவன் விலக ஒருப்படவில்லை. இச்செயல் காரணமாகப் பல தலைமுறை களாகத் தமிழ்ப்புலவர் அவனையோ, அவன் மரபினரையோ, உறவினரையோ பாடுவதில்லை, வணங்குவதில்லை என்று சூள் செய்திருந்தனர் என்று அறிகிறோம். இந்நன்னன் மரபினர் பாழிக் கோட்டையில் பெரும் பொற்குவை குவித்திருந்தனர் என்றும் பரணர் கூறுகிறார். செருப்பாழிப் போருக்கு உரிய கோட்டை இதுவே ஆகல் வேண்டும். கடம்பின்வாயில் போரில் நன்னனை எதிர்த்தவன் பதிற்றுப் பத்தின் நான்காம் பத்திற்குரிய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்ற சேர அரசன் ஆவான். சேரருக்குரிய மணி முடியை அவன் முடிசூட்டு விழாவின்போது பெறமுடியாதிருந்த தனாலேயே அவன் களங்காய் கோத்த நார்முடி அணிந்திருக்க வேண்டுமென்றும், அது காரணமாகவே அப்பெயர் பெற்றானென்றும் உரையாசிரியர் கருதியுள்ளார். களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் தந்தை சேரல் ஆத னென்றும், தாய் வேளாவிக் கோமான் மகளான பதுமன்தேவி என்றும் பதிற்றுப்பத்து நான்காம்பத்தின் பதிகம் கூறுகிறது. அவன், நீர் கொப்பளிக்கும் நேரி மலையை உடையவன். 25 ஆண்டுகள் ஆட்சி செய்தவன். முன்னும் பின்னும் ஆண்ட சேரர்களைப் போலவே வள்ளன்மை மிக்கவன். நாலாம்பத்தில் அவனைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார். அவருக்கு அவன் அப்பாட்டிற்குரிய பரிசாக நாற்பதினாயிரம் பொற்காசும் நாட்டிற் பாதியும் அளித்தான். புலவர் தன்பாதி அரசையும் அரசனிடமே விட்டு அவனிடம் அமைச்சரானார் என்று அறிகிறோம். பிற்பட்ட சங்ககாலத்தில் தகடூரில் அதிகமான் அஞ்சி ஆண்டது பற்றிக் கேள்விப்படுகிறோம். நார்முடிச் சேரலின் காலம் அதற்கு முற்பட்டது. ஆதலால் அப்போது அதிகமான் அஞ்சியின் முன்னோனான நெடுமிடல் என்பவன் ஆட்சி செய்தான். நார்முடிச் சேரல் இந்நெடுமிடலின் இறுமாப்பை அடக்கி அவனைத் தனக்கு உட்படுத்தினான். நெடுமிடலுக்குப் பின் தகடூர் ஆண்டவர் சேர மரபினரே. ஆகவே அதிகமான் நெடுமான் அஞ்சியும் அவன் மரபினரும் சேரரால் புதிதாகத் தலைமை அளிக்கப்பட்ட குடிகளே என்று அறிகிறோம். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் பூமி நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். பூழி நாடு என்பது இந்நாளைய சேரர் தாயகமான வடமலையாளத்துக்கு வடக்கேயுள்ள தென்கன்னட மாவட்டமே. அதன் ஒரு பகுதியே நன்னனின் பாலி நாடாகிய குடகுப்பகுதி, இப்பூழி நாட்டுப் படையெடுப்பின் ஒரு நிகழ்ச்சியே கடம்பின் வாயிற் போர். அதில் நார்முடிச் சேரல் பொன்னங் கண்ணியும் பொன் மாலையும் சூடிய நன்னனை வென்று அவன் தலையை வெட்டி வீழ்த்தினான். அவனுக்குரிய பொன்னால் அணி செய்யப்பட்ட வாகை மரத்தை வேருடனும் கிளையுடனும் சிதைத்தழித்தான். “பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன் சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த தார்முக மைத்தின் நார்முடிச் சேரல்” (பதிற்: ஓடு 14-16) அகநானூற்றிலுள்ள பரணர் பாடல்களால் நார்முடிச் சேரல் படைத்தலைவன் ஆய் எயினன் என்றும், நன்னன் படைத்தலைவன் மிஞிலி என்றும் தெரியவருகிறது. சேரர் படைத் தலைவனாகிய ஆய் எயினன் நன்னன் படைத்தலைவனாகிய மிஞிலியின் வேற்போருக்கு ஆற்றாது போரில் சாய்ந்தான். “கடும்பரிக்குதிரை ஆஅய் எயினன் நெடுந்தேர் மிஞிலியொடு பொருதுகளம் பட்டென்” (அகம் 148) “ஒன்னார் ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை அடுபோர் மிஞிலி செருவேல் கடைஇ முருகுறழ் முன்பொடு பொருதுகளஞ் சிவப்ப ஆஅய் எயினன் வீழ்ந்தென” அகம் 181) களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலால் நன்னன் முறியடிக் கப்பட்டு வீழ்ந்தபோர் பெருந்துறைப்போர் என்று கல்லாடனார் குறிக்கிறார். “குடா அது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன்பொருது களத்தொழிய வலம்படு கொற்றம் தந்த வாய் வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்!” (அகம் 199) பெருந்துறைப்போர் என்பது கடம்பின் வாயில் பெருந் துறைப் போர் என்ற முறையில் கடம்பின் வாயிற் போருக்கே உரிய மற்றொரு பெயராய் இருத்தல் கூடும். சேரமான் கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் என்ற பெயருடைய ஒரு சேரனைப் பரணர் புறநானூற்றில் (புறம் 396) பாடியுள்ளார். கடலோட்டிய செயலை அதே புலவர் செங்குட்டுவன் செயலாகப் பதிற்றுப்பத்தில் கூறுவதால் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் என்பது சேரன் செங்குட்டுவனுக்குரிய மறப் பெயரே என்ற கொள்ளத்தகும். “பல்செருக் கடந்த கொல் களிற்று யானைக் கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு உடைதிரைப் பரப்பில் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன் ” (பதிற்: ஓடுஏஐ 10 - 13) கடற்கொள்ளைக்காரர் கடற்கரை அடுத்த ஒரு தீவில் கோட்டை கட்டி வாழ்ந்தனர். ஆகவே கடலே தமக்கு முழுநிறை பாதுகாப்பு அளிக்கும் என்று எண்ணினர். ஆனால், குட்டுவன் வீரர்கள் யானை மீதேறிநின்று கடலகத்தில் இறங்கி வேல்களை வீசினர். இதனால் பகைவரின் பாதுகாப்பு உடைபட்டது. மற்றும், “கடும்பரிப் புரவி ஊர்ந்த நின் படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே!” (பதிற்: ஓடுஐ 26 - 27) “கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ!” (பதிற்: ஓடுஏஐஐஐ 3 - 4) என்ற அடிகளில் அவன் அஞ்சா நெஞ்சுடன் கடலகம் புகுந்து தன் எதிரிகளுடன் போரிட்ட பரதவன் அல்லது கடல் மறவன் எனப் பராவப்படுகிறான். “தாங்கிரும் பரப்பில் கடல் பிறக்கோட்டி” எனச் சிலப்பதிகாரமும் (காதை 30. கட்டுரை 12) இச்செயல் குறித்துள்ளது. செங்குட்டுவன் பிற வெற்றிகள் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் பதிகத்தால் செங்குட்டுவன் தந்தை வடநாட்டினருக்கு அச்சந்தரும் கொடியையுடைய நெடுஞ் சேரலாதன் என்றும், அவன் தாய் சோழன் மகள் மணக்கிள்ளி என்றும் அறிகிறோம். அவன் தாய் கரிகாலன் மகள் நற்சோணை என்று சிலப்பதிகாரம் தரும் செய்தியுடன் இது சிறிது முரண் படுகிறது. ஆனால், இரண்டும் ஒரே இளவரசிக்குரிய பெயர் என்று கொள்ளப்பட்டு வருகிறது. செங்குட்டுவன் வெற்றிகளுள் ஒன்று, பாண்டிய நாட்டெல்லையிலுள்ள பழையன் மோகூரை அழித்தது ஆகும். பழைய நாட்டெல்லையிலிருந்த அருகன் என்ற தலைவன் செங்குட்டுவனுக்கு இப்போரில் உதவியாயிருந்தான். பழையன் செங்குட்டுவனை எதிர்த்தழித்து விடுவதாக வஞ்சினம் கூறிக்கொண்டு போர்க்கெழுந்தான். இப்போரில் மோகூர் வீழ்ச்சி அடைந்தது. பழையன் காவல் மரமாகிய வேம்பைச் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தி, அவன் யானைகளின் உதவி கொண்டே அதனைத் தன் நாட்டுக்கு இழுந்து வந்தான். அத்துடன் அதைக் கட்டி இழுப்பதற்கு அவன் பழையன் குடும்பத்துப் பெண்டிரின் கூந்தல்களையே அறுத்து வடமாகத் திரித்துப் பயன்படுத்தினான் என்று அறிகிறோம். மோகூர்ப் போரில் பழையனுக்குச் சில வேந்தரும் பல வேளிரும் துணை நின்றதாகத் தெரிகிறது. தமிழர் வீரத்தோடு கலந்த கறையாகக் கடும்போட்டி உணர்ச்சியும் கொடுமையும் இடம் பெற்று இருந்தன என்பதை இது ஒளிவு மறைவின்றிக் காட்டுகிறது. கொங்கர் செங்களம் நெடுமிடலை அடக்கிய சேரன் செங்குட்டுவன் முன்னோன் இருதிசைக் கடலிலும் நீராடித் தமிழகத்தின் வடதிசை முழுவதும் ஆட்கொண்டிருந்தான். ஆயினும் கொங்கு வெற்றி முழுதும் உறுதியாய் விடவில்லை. கொங்கு நாட்டில் எழுந்த கிளர்ச்சிகளைச் செங்குட்டுவன் செங்களம் என்ற இடத்தில் போர் செய்து அடக்க வேண்டிவந்தது. இதில் சோழர் பாண்டியர் கொங்கருக்கு உதவினர் என்று தோற்றுகிறது. “நும்போல் வேந்தர் நும்மோடு இகலிக் கொங்கர் செங்களத்துச் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தனராயினும், ஆங்கவை திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன” (சிலப்பதிகாரம் ஓஓஏ 152 - 155) என்று சிலப்பதிகாரத்தில் வில்லவன் கூற்றாக இதை இளங்கோ அறிவிக்கிறார். இடும்பில்; வியலூர்; கொடுகூர் வெற்றிகள் செங்குட்டுவன் உள்நாட்டுப் பெரு வெற்றிகளில் கொங்கு நாட்டுப் போருக்கு அடுத்தபடி இடும்பில் கைக் கொண்டதும், வியலூர் கொடுகூர் அழித்ததும் முக்கியமானவை ஆகும். இடும்பில் என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள இடும்பாவனம் என்றும் உரையாசிரியர் அடியார்க்குநல்லார் குறிக்கிறார். ‘மாறா வல்வில் இடும்பில் புறத்திறுத்து’ (பதிற் 5 பதிகம் 9) என்று பதிற்றுப்பத்தும், கொடுந்தேர்த்தானையோடு இடும்பில் புறத்திறுத்து (சிலப் ஒஒஎiii 118) என்று சிலப்பதிகாரமும் இதனைக் குறிப்பிடுகின்றன. வியலூர் தஞ்சையில் உள்ள திருவிசலூர் என்று சிலர் கூறுவர். ஆனால்,, “கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின் சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்” (சிலப். ஒஒஎiii 114 - 5) என்ற சிலப்பதிகார அடிகளால் அது பாலி அல்லது குடகு நாட்டு வியலூரே என்று தெரிகிறது. மிளகு வளர்வதும் யானை மிகுதியா யுள்ளதும் ஒருங்கேயிருப்பது மேல்கரையிலேயேயாகும். இம் முற்றுகையைக் கிட்டத்தட்ட இதே சொற்களிலேயே பதிற்றுப் பத்துப் பதிகம் தருகிறது. ‘உறுபுலி அன்ன வயவர் வீழச் சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி’ (பதிற். 5.பதிகம் 10 -11) வியலூர் கோட்டை நகரம் என்று முன்பே கண்டிருக்கிறோம். அதை அழித்ததை அடுத்து நிகழ்ந்த செய்தியே கொடுகூர் வெற்றி, பதிகம் தரும் குறிப்பால் வியலூரும் கொடுகூரும் ஒரே ஆற்றின் எதிர் எதிர் கரையில் இருந்ததாகத் தெரிகிறது. வியலூர் எறிந்தபின் செங்குட்டுவன் ஆற்றைக் கடந்தே கொடுகூர் சென்று அதை அழித்தான். ‘வியலூர் நூறி, அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து’ (பதிற். 5. பதிகம் 10- 11) என்பது இதனைத் தெளியக்காட்டும். நேரிவாயில் போர் நேரிவாயில் என்பது இன்றைய திருச்சிராப்பள்ளி நகரின் பகுதியாக இருக்கும் பண்டை உறையூரின் தெற்குவாயில் அருகே அமைந்திருந்த ஓர் ஊர் ஆகும். அதில் நடைபெற்ற போர் சோழர் அரசுரிமைக்காகவே எழுந்தது. சேரன் செங்குட்டுவன் தாய்சோழர் குடிப்பிறந்தவளாதலால், அரசுரிமை கோரிய கிள்ளி வளவன் அவன் மைத்துனனாய் இருந்தான். ஆனால், அதே அரசுரிமைக்கு வேறு ஒன்பது சோழர்குடி இளவல்கள் போட்டியிட்டுக் கிள்ளி வளவனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். செங்குட்டுவன் கிள்ளி வளவனை ஆதரித்து ஒன்பது இளவரசரையும் ஒருங்கே யெதிர்த்து நின்று போரிட்டான். போர் ஒரே பகலில் நடைபெற்று முடிந்துவிட்டது. செங் குட்டுவன் ஒன்பது சோழ இளவல்களையும் களத்தில் வென்று முறியடித்தான். தன் மைத்துனன் கிள்ளிவளவனையே சோழ மன்னனாக முடிசூட்டினான். மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெறும் சோழன் இவனே. இப்போர் பற்றிப் பதிற்றுப்பத்துப் பதிகமும் சிலப்பதி காரமும் விரித்துரைக்கின்றன. “வெந்திறல் ஆராச் செருவில் சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்து நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து” (பதிற் 5. பதிகம் 18 - 20) என்று பதிற்றுப்பத்துப் பதிகமும், “ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரி வாயில் நிலைக்செரு வென்று” (சிலப் ஒஒஎiii 116 - 117) என்று சிலப்பதிகாரமும் குறிக்கின்றன. இவையன்றி சிலப்பதிகாரத்திலேயே, செங்குட்டுவனைப் புகழ்ந்து கூறும் முறையில் மாடலன், “நின் மைத்துனவ வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர், ஏவல் கேளார், வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின், ஒன்பது குடையும் ஒரு பகல்ஒழித்து, அவன் பொன் புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்!” என்று இப்போரை விளக்கமாக எடுத்துரைத்துள்ளான். செங்குட்டுவன் நாட்களுக்குள் சேர அரசே தமிழகத்தின் முதற்பேரரசாக நிலவிற்று. சோழப்பேரரசு வலி குன்றியதுடன், ஆற்றல் சிதறி ஆங்காங்கே தனி நகரில் தனி ஆட்சி செலுத்திய சிற்றரசுகளை அடக்கமுடியா நிலைமையடைந்தது. நேரிவாயில் போர் இதனைக் காட்டுகிறது. உறவு முறையை முன்னிட்டு, அதன் உள் நிகழ்ச்சிகளில் தலையிட்டதன் முலம் சேரன் ஆற்றல் அதன்மீது பின்னும் வளர்ந்தது. உறவு காரணமாகவே கிள்ளி வளவன் ஆட்சியைச் சேரர் வளர்ச்சி பாதிக்காமல் இருந்தது. அத்துடன் இச்சமயம் பாண்டியரும் சோழரைப் போலவே சேரனுக்கு அடங்கியிருந்தனர் என்று தோற்றுகிறது. கொங்கர் செங்களத்தில் இரு அரசரும் வேளிருடன் தோல்வி எய்தியதே இதற்குப் பெரிதும் காரணம் ஆகலாம். வடபுல எழுச்சி கங்கைப் போர் ஐ சேரன்செங்குட்டுவன் கண்ணகி சிலைக்காக வடதிசையில் படையெடுத்துச் செல்வதற்கு நெடுநாள் முன்பே கங்கைப் பேராற்றில் தன் முதற்போர் ஆற்றியிருந்தான். அவன் அப்போது வடதிசை சென்றது அவன் அன்னை கங்கையில் நீராடுவற்குத் துணையாகவே. ஆயினும் படையணிகளுடன் சென்றதால் பல ஆரிய மன்னர்கள் திரண்டு வந்து அவன் போக்கைத் தடுத்தனர். செங்குட்டுவன் தனியாக நின்று அத்தனை வேந்தரையும் களத்தில் சிதறடித்தான், ஓடிய ஒரு சிலர் நீங்கலாக மீந்தவர் அனைவரும் உயிர் பிறிதாகினர். கங்கைப்படுகளம் ஒரே குருதிக்களமாவும் பிணக்களமாகவும் ஆயிற்று. சிலப்பதிகாரத்திலே மாடலன் கூற்றாகவே இப்போர் வர்ணிக்கப்படுகிறது. “கங்கைப்பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை ஆட்டிய அந்நாள் ஆரிய மன்னர் ஈரைந்நூற்று வர்க்கு ஒரு நீயாகிய செரு வெங்கோலம் கண் விழித்துக் கண்டது கருங்கட் கூற்றம்!” (சிலப் ஒஒஎ 160 - 164) இப்போரின் கோரக்காட்சியையும் அதில் தனி யொருவனாக நின்று செங்குட்டுவன் வெற்றிக் கூத்தாடியதையும் சாவின் தெய்வமாகிய கூற்றமே கண்ணிமையாமல் வியப்புடன் பார்த்துக் கொண் டிருந்தது என்று கவிஞர் வியந்துரைக்கிறார். இப்போரில் கொங்கணரும் கலிங்கரும், கருநாடரும், பங்களரும், கங்கரும் கட்டியரும், ஆரியரும் பிறரும் எதிரிகளிடையே இருந்தனர். அவர்கள் பலமொழி பேசுபவர்கள், ஆரியமும் தமிழு மாக அவர்கள் மொழிகள் மயங்கிக் குழம்பின. போரின் மறக்கத் தகாத கண்கொள்ளாக் காட்சி செங்குட்டுவன் ஆற்றிய யானைப் படையின் தாக்குதலே என்று இளங்கோ கூறுகிறார். கொங்கணர், கவிங்கர், கொடுங்கரு நாடர் பங்களர், கங்கர், பல்வேற் கட்டியர் வட ஆரிய ரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டம் என் கட்புலம் பிரியாது. (சிலப் ஒஒஎ 156) கங்கைப்போர் ஐஐ அல்லது குயிலாலுவப் போர் சேரன் செங்குட்டுவனின் இரண்டாவது வடதிசைப் படை யெழுச்சி சிலப்பதிகாரத்திலேயே மிகவும் விரிவுபட உரைக் கப்பட்டுள்ளது. அப்படையெடுப்புக்கான இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று; கண்ணகிக்குச் சிலை கொணர்வது. மற்றது; வடதிசையரசர்களில் பால குமாரன் மக்களாகிய கனகனும் விசயனும் தமிழரசரை ஏளனமாகப் பேசியது. பின்னதன் பயனாக, சேரன் செங்குட்டுவன் ஒருநெடு மொழி கூறிப் புறப்பட்டான். “இந்த வடபுல ஆரிய அரசரை முறியடித்து அவர்கள் தலைமீதே கண்ணகி சிலையை ஏற்றிக் கொண்டு வருவேன். அப்படிச் செய்யாவிட்டால், நான் செங்கோலரசனல்ல!” என்று அவன் சீற்றத்துடன் எழுந்தான். முதற் கங்கைப் போர்க் காலத்திலிந்தே வடதிசையில் மகதப் பேரரசராக இருந்து நூற்றுவர் கன்னர் சேரன் செங்குட்டுவனுக்கு உற்ற நண்பராய், அவன் மேலாட்சியை ஏற்றிருந்தனர். சேரன் வடதிசைப் படையெடுப்புப்பற்றிக் கேள்விப்பட்டதும் அவர்கள் அவனை எதிர் கொண்டு வரவேற்கச் சஞ்சயன் என்ற படைத் தலைவனுடன் நூறு ஆடல் நங்கையர், இருநூற்றெட்டுப் பாடகர், நூறு கழைக்கூத்தாடிகள், நூறுதேர், பதினாயிரம் குதிரைகள், இருபதினாயிரம் வண்டிகள், அணிமணிப் பரிசுகள் அனுப்பியிருந்தனர். சேரன் அவர்களை ஏற்று, கங்கை கடக்க நாவாய்ப் படைகளைச் சித்தம் செய்து வைக்குமாறு அவர்களுக்கு ஆணை போக்கினான். கன்னர் உதவியுடன் சேரப் படைகள் கங்கை கடந்து, வடகரை யிலுள்ள உத்தரை நாட்டையடைந்தனர். குயிலாலுவம் என்ற இடத்தில் கன்னன், விசயன் ஆகிய ஆரிய அரசர்கள் பெரும் படையுடன் தமிழ்ப்படையை வந்து எதிர்த்தனர். இக் கனக விசயர் தலைமையில் உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திர சிங்கன், தனுத்தரன், சுவேதன் ஆகிய பல அரசர்கள் தங்கள் தங்கள் படைகளுடன் வந்து குழுமினர். கரையுடைத்த பெரு வெள்ளம் போன்ற ஆரிய அரசரின் படை வரிசைகளைக் கண்ட சேரன் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டான். விரைவில் முரசுகள் முழங்கின; சங்கங்கள் இயம்பின; காளங்கள் ஆர்ப்பரித்தன; வில் வீரர்களும், வேல் வீரர்களும் வாள் வீரர்களும் நீடித்து மும்முரமான போரில் ஈடுபட்டார்கள். அமர்க்களத்தின் ஆர்ப்பரிப்பும் அமலையும் காதுகளைச் செவிடுபட வைத்தன. குருதியும் குறையுறுப்புக்களும் பிணக்குவியல்களும் நிலத்தை மறைத்தன. தூசியும் கொடியும் கண்களுக்குத் திசைகளையே மறைக்கும் மறைதிரைகளாயின. போர்வெறி கொண்ட யானைபோல் சேரன் ஆரிய அரசரின் கடும் படை மாக்களைக் கொன்று களம் குவித்தான். அம்மன்னர் அவன் திசையில் திரும்ப அஞ்சினர். ஆனால், ஆரியர்படை குறையக் குறையத் தமிழ்ப் படை அதைச் சூழ்ந்து நெருங்கிற்று. ஒரு பகல் எல்லைக்குள் அவ்வளவு பெருந்தொகை யான படை வீரர்களைக் கூற்றுவன்கூடக் கொன்று குவிக்க முடியுமா என்று வியந்து ஆரிய அரசர் மலைத்தனர். இறுதியில் படைகளெல்லாம் தோற்றபின் அவர்கள் சிவ வேடம் தவவேடம் பூண்டு ஒளிந்தனர். இளங்கோவின் மொழிகளில், “வாய் வாளாண்மையின் வண்தமிழ் இகழ்ந்த காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும் ஐம்பத்திருவர் கடுந்தேராளரோடு செங்குட்டுவன்தன் சினவலைப்படுதலும் சடையினர் உடையினர் சாம்பற் பூச்சினர்............. ஆடுகூத்தர் ஆகி எங்கணும் ஏந்துவாள் ஒழிய” (சிலப், ஒஒஎi 221 -5, 228 -9) தப்பியோட முயன்றனர். ஆனால், சேரன் வீரர் அவர் களைப் பற்றிக் கொணர, அரசன் அவர்களை விலங்கிட்டுப் பிணித்தான், பின் அமைச்சன் வில்லவன் கோதையுடனும் படைத் தலைவன் கல் கொண்டு வரும்படி பணித்தான். இமயத்திலிருந்து பத்தினிக்கல் கனகவிசயரின் முடிமீதே ஏற்றிக்கொண்டு வரப்பட்டது. மற்ற ஆரிய அரசர்கள் இதற்குள் கங்கையின் தென்கரையில் தமிழ்ப் பேரரசனுக்கும் அவன் படை வீரர்களுக்கும் தங்குவதற்குரியபாடிப் பெருநகர் அமைத்திருந்தனர். இங்கே குயிலாலுவப் போரில் இறந்தவர்களுக்குரிய வினை முறைகள், இறந்தவர் மைந்தர் குடிமரபினருக்கான மட்டுமதிப்புப் பரிசில்கள், வெற்றி வீரர்களுக்குப் பொன்னால் செய்த வாகைப் பூ முதலிய சிறப்புக்கள் நிகழ்த்தப்பட்டன. “நிறப்புண் கூர்ந்து புறம் பெறவந்த போர்வாள் மறவர் வருகதாம் என வாகைப் பொலந்தோடு பெருநாளமயம் பிறக்கிடக்கொடுத்து” (சிலப் - ஒஒஎii 41 -44) என்று இளங்கோ இச்செயல் போற்றியுள்ளார். தமிழரைப் பழித்த கனகவிசயர் கல் சுமந்துவரும் காட்சியைப் பாண்டிய சோழருக்குக் காட்டி வரும்படி அரசன் படைத்தலைவன் நீலனிடம் அவர்களை ஒப்படைத்து அனுப்பிவிட்டு வஞ்சிக்கு மீண்டான். பத்தினிக்கல் வந்ததும் அதற்கு முறைப்படி நீர்ப்படை செய்யப்பட்டது. இச்சமயம் தமிழகத்தின் அரசியல் நிலைகளை அறிந்து வந்து கூறிய மாடலன் என்ற பார்ப்பனனுக்குத் தன் எடையாகிய ஐம்பது துலைப்பொன் நன்கொடையளித்தான். குயிலாலுவப் போர் அல்லது இரண்டாவது கங்கைப் போர் நிகழ்ச்சி பதிற்றுப்பத்தில் பதிகத்தில் குறிக்கப்பட்டுள்ளது. “கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானங் கணையிற் போகி ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி இனந்தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு” (பதிற்: -5, பதிகம் 4-8) என இவ்வெற்றியின் பயனாக வடக்கிலிருந்து பல ஆனிரை களையும் கைக்கொண்டு வந்ததாக இப்பதிகம் குறிக்கிறது. பதிற்றுப்பத்து மூலத்திலோ வேறு சங்கப்பாடல்களிலோ செங்குட்டுவனின் கங்கைப்போர், குயிலாலுவப் போர் ஆகியவை தெளிவாக குறிக்கப்படாவிட்டாலும், அவற்றைப் பொதுவே சுட்டுபவையாகக் கொள்ளக்கூடிய பகுதிகள் பதிற்றுப்பத்திலும் அகநானூற்றிலும் உண்டு. “கடவுள் நிலைஇய கல்ஓங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயமாகத் தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவின ழித்த போர் அடுதானைப் பொலந்தார்க் குட்டுவ!” (பதிற்; -ஓடுiii 6 - 11) “ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்கு விற்பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி” (அகம் -396) இவற்றுள் பிந்திய பாடல் பத்துப்பாட்டில் செங்குட்டு வனைப் பாடிய அதே புலவர் பாட்டே. ஆயினும் மன்னர் பெயர் இல்லாததால் அது செங்குட்டுவன் செயலை மட்டுமன்றி, அவன் தந்தை அல்லது முன்னோனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் செயலையும் பொதுவாகச் சுட்டத்தக்கதாய் உள்ளது. “உடன்று மேல்வந்த ஆரிய மன்னரைக் கடும்புனற் கங்கைப் பேராற்று வென்றாய்!” (சிலப். ஓஓஏiii 120 - 121) என்று சிலப்பதிகாரத்தில் மாடலன் கூற்றாக வரும் அடிகளும் இரண்டு கங்கைப் போர்களுக்கும் பின் பேசப்பட்டது என்ற முறையில் இரு போர்களையும் பொதுவே சுட்டுபவையாகவே உள்ளன. செங்குட்டுவன் வடதிசை வெற்றியின் சூழல் செங்குட்டுவன் காலத்தில் வட கிழக்கிந்தியாவில் ஆண்ட பேரரசர் மகதத்தை ஆண்ட ஆந்திர மரபினராகிய மகா கர்ணர் ஆவர். இவர்கள் சதகர்ணிகள் என்றும் கூறப்படுவர். இவர்களே சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்ட மகதப் பேரரசர் நூற்றுவர் கன்னர் ஆவர். இவர்கள் வடபெண்ணையாற்றின் கரையிலிருந்து மகாநதி வரையிலுள்ள ஆந்திரப் பேரரசின் எல்லையும், இமயம்வரைப் பரவிய கங்கை வெளியெல்லையும் பர்மாவும் சேர்ந்த மூன்று பேரரசெல்லைகளாகிய முக்கலிங்கத்தையும் ஒரு குடைக்கீழ் ஆண்டவர்கள் ஆவர். இத்தகுபெரும்பேரரசர் தமிழக பேரரசன் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவன் ஆர்வ நண்பராயிருந்ததற்கு ஒரு காரணம் உண்டு. இது அந்தநாளைய அரசியல் சூழலால் விளங்குகிறது. அவனுக்கு மேல் திசையில் தமிழக நாகரிகத்துக்கு மட்டுமன்றிக் கங்கை நாகரிகத்துக்கும் முற்றிலும் அயலான ஒரு புற உலகப் பேரரசு காந்தாரத்தைத் தலைநகராகக் கொண்டு சிந்து வெளி முழுவதையும் காசுமீரம், ஆப்கனிஸ்தானம், ஆரியா, அரகோசியா, பாக்டிரியா ஆகிய நடு ஆசிய நாடுகளையும் ஆண்டு வந்தது. சகமரபைச் சார்ந்த அதன் அரசர் குடி சிந்துகங்கை வெளி நாகரிகங்களுக்கு எவ்வளவு அயலானது என்பதை அக்குடியின் முதலரசர் பெயர் ‘காட்பீஸ’ஸே காட்டும். ஆனால், அடுத்த அரசன் கனிஷ்கன் புத்தநெறியைத் தழுவியதனாலேயே அரைகுறையாக இந்திய மாநிலப் பண்பாட்டின் போர்வை போர்த்திக் கொண்டு தன் பெயருக்கு இந்தியக் கனவு கண்டான். இப்புறப்பகையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டே தமிழினத்தவர் அல்லது திராவிடராகிய வடதிசை ஆந்திரப் பேரரசர் தம் இனத்தவராகிய தமிழருடன் அளவளாவி, தமிழகப் பேரரசன் ஆதரவை நாடினர். ஆந்திரப் பேரரசர் ஆட்சியும் பிற்காலச் சோழப் பெரும் பேரரசர் ஆட்சியுமே வங்கத்தின் நாகரிகத்தைத் தமிழக நாகரிகத்தின் ஒரு நறு நிழலாக்கி. அதை வடதிசையில் ஒரு நாகரிகச் செழும் பண்ணையாகத் திகழச் செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். சிலப்பதிகாரத்தில் கனகன் என்று குறிக்கப்படும் அரசன் இந்தச் சகப்பேரரசன் கனிஷ்கனே என்றும், விசயன் என்று குறிக்கப் படும் அரசன் அவனுக்குப் பேராதரவாயிருந்து அவன் பேரரசாட்சியைப் பரப்புவதற்கு உதவியாயிருந்த வலிமை வாய்ந்த காசுமீர நாட்டரசன் விசயாலயனே என்றும், இருவரையும் சேரன் வென் றடக்கிய இரண்டாங் கங்கைப் போர் அவன் பேரரசின் கிழக்கெல்லையும் ஆந்திரப் பேரரசர் மேற்கெல்லையுமாகிய வடமதுரை அல்லது தில்லிநகரப் பகுதிக்கருகிலேயே நடை பெற்றிருக்க வேண்டுமென்றும் கருத இடமுண்டு. பின்னாளைய சோழப் பெரும் பேரரசன் முதலாம். இராசேந்திரன் வெற்றிகளும் மதுரை மண்டலம் அல்லது வடமதுரைவரைக்கும் பரவிச் சென்றன என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. கனிஷ்கனுக்குப் பிற்பட்ட அரசர் தமிழகச் சைவ - வைணவ நெறிகளை ஏற்றுச் சைவ - வைணவப் பெயர்களை மேற் கொண்டிருந் தனர் என்பதும், அவர்கள் பேரரசிழந்து மிகச் சிறு சிற்றரசராகவே இயங்கினர் என்பதும் இவ்விளக்கத்துக்கு வலுத்தருவது ஆகும். ஆயினும் இராசேந்திரன் வெற்றிகளையே மறைத்தும் இருட்டடித்தும் வந்த வடதிசை பாசமும் தென்திசை கலக்கணியும் மிக்க மாநில வரலாற்றாசிரியர்கள் இப்பண்டைச் செய்திகளை ஆராய்ந்து மெய்ம்மை காண விழையாது ஒதுக்குவதில் வியப்பில்லை. கனகவிசயர் ஒரே அரசன் பாலகுமாரன் மக்களாகச் சிலம்பில் குறிக்கப்பட்டுள்ளனர். இது மேற்கூறிய விளக்கத்துடன் முரண்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், கால நிலைமைகள் வடதிசையாளர் உவர்ப்புநீக்கி, அதே சமயம் வேறு உவப்புக் கலவாத நிலையில் ஆராய்தற்குரியதேயாகும். அதுவரையில் ஓரளவு மேற்கூறிய விளக்கமே வரலாற்று நிலைக்கு மிகவும் நல் விளக்கமாகக் கொள்ளப்படல் தவறன்று. 7. சங்காலப் போர்கள் ஐஐஐ சங்க இலக்கியம் ஒரு வரலாற்றுச் சுரங்கம். ஆனால், அது இன்னும் நன்கு அகழ்ந்து பயன் காணப்பெறாத சுரங்கமாகவே உள்ளது. அதன் அறிவு தமிழ்ப் புலவருலகில் செறிந்து கிடக்கின்றது. அதனை ஆராய்வதற்குரிய வரலாற்று வாய்ப்பும் ஆராய்ச்சி வாய்ப்பும் அப்புலவருக்கு எட்டாத அயல் மொழிக் கல்வி நிலையங்களின் ஆராய்ச்சி அரங்கங்களில் இருக்கின்றன. ஆட்சியினத்தின் கலைகளுள் ஒன்றாக வரலாறும், அவற்றின் பண்பாட்சிக் கருவிகளாக சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய அயல் மொழிகளும் இருக்கும்வரை, ஆட்சி நிலையங்களிலும் கல்வி நிலையங்களிலும் தமிழும் தமிழ்ப்புலமைத் துறையும் தாழ்ந்த படிகளிலும் மிகத்தாழ்ந்த கீழ்ப்படியில்தான் இருக்க முடியும். அதேசமயம் வரலாற்றுத் துறையும் அயல் மொழித்துறைகளும் தமிழும் தமிழ் பயின்ற தமிழரும் தமிழ்ப் புலமையும் சென்று எட்ட முடியாத உச்ச உயர் படிகளாகவே நிலவும். இவ்விரண்டும் சரிசம நிலையில் உழைத்துச் சங்க இலக்கிய அடிப்படையில் தமிழக வரலாற்றையோ, தமிழக வரலாற்றடிப்படையில் சங்க இலக்கியத்தையோ வகுக்க முடியாது. மொத்தமாகச் சங்க இலக்கியத்தின் காலத்தை மதிப்பிடு வதிலேயே தமிழராய்ச்சியாளர் முயற்சிகள் இதுவரை பெரிதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்துக்குள்ளேயே கால வரிசை காண முயன்றவர் மிகச் சிலர். இத்துறையில் அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் அரும்பெரு முயற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால், அவர் அடிச்சுவட்டை இதுகாறும் யாரும் பின்பற்றத் துணியவில்லை. இது வியப்புக்குரியது. ஏனெனில் சங்க இலக்கியக் கால வரிசைக்கு வேண்டிய சான்றுகள் எதையும் வெளியே தேட வேண்டிய தில்லை. சங்க இலக்கியத்துக் குள்ளேயே அது வகையில் ஏராளமான சான்றுகள் உள்ளன. இதுவரையில் சங்க இலக்கியத்தை ஆராய்ந்தவர்கள் பெரும்பாலும் -வரலாற்றாராய்ச்சியாளர் மட்டுமன்றிப் புலவர்களும் கூட -சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் சங்க இலக்கிய காலத்துக்குப் பிற்பட்ட ஏடுகளாகவோ, அல்லது சங்க இலக்கிய காலத்திலேயே பிற்பட்ட ஏடுகளாகவோதான் கருதி வந்துள்ளனர். இலக்கியம், பண்பாடு, மொழி ஆகிய துறைகளில் சில மயக்க முடிபுகளை இம்மயக்க முடிவுக்கு ஆதாரமாகக் காட்டியும் அமைத்துள்ளனர். ஆயினும் அவர்களே, அவர்களில் பெரும்பாலானவர்களே, செங்குட்டுவன் காலத்து (ஆரியப் படை கடந்த) நெடுஞ்செழியனுக்குத் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன் பெயரனென்றும், பாண்டியன் கானப்போர்தந்த உக்கிரப் பெருவழுதி பாண்டியர்களுள் கடைசியானவன் என்றும் முடிவு கண்டுள்ளார்கள். இது சரியானால் அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் கொண்டதுபோல மணிமேகலை சிலப்பதிகார ஏடுகளும் செய்திகளும் சங்க காலத்தின் இறுதிப்பகுதிக்கல்ல, நடுப்பகுதிக்கே உரியவை என்பது தெளிவு. விரிவான சங்க இலக்கிய கால வரிசை ஆராய்ச்சிகள் மூலம் புது முடிபுகள் காணப்படும்வரை பதிற்றுப்பத்தின் முதல் நான்கு பத்துக்களும், மாமூலனார், பரணர், கள்ளில் ஆத்திரையனார் முதலிய முற்காலப் புலவர்களும் குறிப்பிடும் செய்திகள் கடைச் சங்கத்தின் முற்காலத்துக்குரியவை என்றும், ஐந்தாம் பத்தும் அதனோடு சமயகாலத் தொடர்புடையவராகத் தெரியவரும் சங்ககாலப் புலவர்கள் குறிப்புக்கள் நடுக்காலத்தன என்றும், பிற சங்கப் புலவர்கள் குறிப்பிடும் செய்திகள் பிற்காலத்தன என்றும் கொள்வதே பொருத்தமானது. இருவகைப் போட்டிகள் தமிழக வரலாற்றில் ஒளிகாண விரும்புபவர்கள் பண்டைத் தமிழர் அரசியல் வாழ்வின் இரண்டு போக்குகளைக் கவனித்தல் வேண்டும். ஒன்று வேளிர் அல்லது குடியரசர் வலிமைபெற்று வல்லாட்சி எய்தி, முடியரசரை எதிர்த்தும் பிற குடியரசரை அடக்கியும் தாமே முடியரசராக விழைந்த போக்கு. கடைச் சங்க காலத்தில் மலையமான் திருமுடிக்காரியும், அதிகமான் நெடுமானஞ்சியும், பறம்புமலைப் பாரியும் இம்முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெறாது அழிந்தவர்களேயாவர். இதற்கு மேம்பட்ட தளத்தில் முடியரசர் மூவர் என்ற நிலை ஏற்பட்டதுடன் மற்ற முடியரசர் இருவரையும் வென்று தமிழக முதல்வர் ஆகும் அவாவும் முடியரசரையும் பேரரசையும் தூண்டின. சேரர் வரலாற்றில் நாம் கேள்விப்படும் ‘எழுமுடியரசர்’, பிற்காலச் சோழபாண்டியர் வரலாற்றிலும் கல்வெட்டுக்களிலும் அடிபடும் ‘மும்முடியரசர்’ ஆகிய வழக்குகளும், புராண இதிகாசங்களில் குறிக்கப்படும் ‘மூவுலகாளும் மன்னர்!’ ‘ஏழுலகாளும் மன்னர்!’ முதலிய புனைந்துரைகளும் தமிழரின் நீடித்த தேசிய அரசியல் வரலாற்று மரபின் தடங்களேயாகும். “போந்தே வேம்பே ஆர்என வருஉம்” என்ற தொல்காப்பிய நூற்பா வாசகத்தில் மூவேந்தர் மலர்ச் சின்னங்களான பனை, வேம்பு, ஆத்தி ஆகியவற்றில் சேரன் மலர்ச் சின்னமான பனை (போந்தையே) முதலில் கூறப்பட்டது. இதனால் தமிழக முதன்மைப் போட்டியில் தொல்காப்பியர் காலத்திலோ, அதற்கு முற்பட்டோ, சேரனே முந்திய முதன்மை யுடையவனாக இருத்தல் கூடும் என்பர், அறிஞர் தேவநேயப் பாவாணர். இது ஆராய்தற்குரியது. ஏனெனில் இது தமிழக முதன்மையின் முந்து நிலையாகவும் இருக்கலாம்; முடியரசு நிலை பெற்றவருள் முந்தியவன் என்ற காரணமாகவும் இருக்கலாம்; தொல்காப்பியம் கேட்ட அதங்கோட்டாசான் ஊராகிய அதங்கோடும் காப்பியக்குடியும் சேரநாட்டுக்கு உரியனவா யிருந்ததாகத் தெரிவதால், தொல்காப்பியர் தன் பிறந்த நாட்டுச் சின்னத்தை முதலில் கூறியதாகவும் கொள்ளலாம். இறுதியாக, தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னும் சேரநாடு தென்கோடியிலோ, தென்மேற்குக் கோடியிலோ பஃறுளியாறு கடந்தே இருந்ததாகத் தெரிவதால், மூவரசுகள் தென்கோடி அல்லது மேல் கோடியிலிருந்து வரிசைப்படுத்தப் பட்டதாகவும் இருத்தல் சாலும். ஐயப்பாட்டுக்குரிய இக்குறிப்பைப் பிற்கால ஆராய்ச்சிக்கு விட்டுவிட்டால், தமிழக முதன்மைப் போட்டியில் வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பழங்கால முதன்மையுடையவர்கள் பாண்டியரே என்பதை நெடியோன் மரபு காட்டுகிறது. கடைச் சங்ககாலத் தொடக்கத்தில் இருந்தவனாகத் தெரியவரும் பல்சாலை முது குடுமிப் பெருவழுதியும் இத்தகைய முதன்மையுடையவனாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இவர்கட்கு இடைப்பட்ட காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை. வரலாற்று வானவிளிம்பிலும் புராண மரபின் அரையொளியிலும் சேரர் சோழர் முன்பின்னாக முதன்மை பெற்றிருக்கக் கூடும். கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கும் 1-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலும் இதுபோலச் சோழரும் சேரரும் தலைமை நிலைக்கு முன்பின்னாகப் போட்டியிட்டிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. இலங்கை வரலாறும் இலங்கைத் தமிழர் பண்பாட்டு நிலை யும் இக்காலப் போக்கைத் தெளியக்காட்டுகின்றன. ஏனெனில் இக்காலத்தில் அரசமரபிலும், மக்கள் மரபிலும் பாண்டிய நாட்ட வரும் இலங்கை நாட்டவரும் ஒரே தமிழ்க் குடிமக்களாக வேற்றுமை யில்லாமல் நேசத்தொடர்பு கொண்டிருந்தனர். இலங்கைத் தமிழ்ப் பண்பாட்டில் இந்த அடிப்படைப் பாண்டி நாட்டுப் பண்பை இன்றும் காணலாம். ஆனால், இதே காலங்களில் சோழரும் சேரருமே பெரும்பாலும் இலங்கைமீது படையெடுத்தும், ஆண்டும், புதுத்தமிழ்க் குடியேற்றங்கள் கொண்டுசென்றும் இலங்கை வாழ்வில் புது மாறுதல்களை உண்டுபண்ணினர். சேர சோழர் வலுவை எதிர்க்கப் பாண்டியர் உதவி போதாதிருந்த காரணத்தினாலேயே தமிழகம் கடந்த தொடர்பு ஊக்கப்பட்டு அதன் பயனாகத் தென்னிலங்கையின் மொழியும், பண்பாடும், அயல் பண்பாடுகளுடனும் மொழிகளுடனும் கலந்து தமிழ் நாகரிகமாகத் திரியலாயிற்று என்னலாம். சேரன் செங்குட்டுவன் நாட்களில் சேரர் தமிழகத்தில் முதன்மை எய்தினர். ஆனால், சங்க இலக்கிய காலத்தில் பிற்பகுதியில் மீண்டும் தலைமைப் போட்டி எழுந்து பாண்டியரும், சேரரும், சோழரும் அடுத்தடுத்துத் தற்காலிகமாக முதன்மை எய்தினர். இப்போட்டியில் மூவருமே தளர்ந்துவிட்ட நிலையில்தான், இறுதியில் மூவருமே கோட்டைவிட நேர்ந்தது. சோழன் நலங்கிள்ளி; நெடுங்கிள்ளி - போராட்டங்கள் நேரிவாயில் போர் மூலம் செங்குட்டுவன் உதவியால் அரசுரிமை பெற்ற சோழன் நலங்கிள்ளி. கரிகாலன் காலமுதல் தலைநகராய் இருந்த காவிரிப்பூம்பட்டினத்திலிருந்தே அவன் ஆட்சி செய்தான். அவன் பெருவீரன், தானே பாடவல்ல புலமை யுடையவன். ஆனால், அவன் போர் வெறியும் இறுமாப்பும் தற்பெருமையும் உடையவன். பண்டைச் சோழரைப் போலவே அவனிடம் சிறந்த நிலப்படையும் கடற்படையும் இருந்தன. அவற்றின் உதவியால் பழம் புகழ்க் கரிகாலனைப்போலத் தமிழக முழுவதும் வென்று வட புலங்களையும் கீழடக்கிப் பேரரசனாக வேண்டும் என்ற பேரவா அவனுக்கு மிகுதியாயிருந்தது. ‘சோணாட்டிலிருந்து வலஞ்சுற்றிப் புறப்பட்டுப் பாண்டிய நாட்டையும், சேரநாட்டையும் நீ வென்றுவிட்டதால் இனி வடக்கே படையெடுக்கக்கூடும் என்று வடதிசையரசர் நடுங்குகின்றனர்’ என்று கோவூர்கிழார் அவன் கால நிலையைச் சுட்டிக்காட்டுகிறார். “குணகடல் பின்னதாகக் குடகடல் வெண்தலைப் புணரியின் மான்குளம்பு அலைப்ப வலமுறை வருதலும் உண்டென்று அலமந்து நெஞ்சு நடுங்கு அவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத்தரசே,” (புறம் 31) இவ்வரசனே பாடிய பாடல்களில் ஒன்று அரச வாழ்வு பற்றிய ஒரு புதுமைவாய்ந்த கருத்தை அறிவிக்கின்றது. அரசுரிமை என்பது தொல்லை வாய்ந்தது; பெரும் பளுவுடையது; என்று அவன் அமைச்சர் கூறி வந்தனர். ‘குடிகளை வருத்திப் பணம் தேடுபவனுக்குத்தான் அரசு பெருஞ்சுமையாய் விடத்தக்கது. வலிமை வாய்ந்த அரசனுக்கு அது நீரில் மிதக்கும் கிடைச்சுப்போல இலேசானது’ என்று அவன் (புறம் -75 ) கூறுகிறான். தான் வலிமை வாய்ந்த அரசன் என்ற அவன் இறுமாப்பை இது நன்கு வெளிப்படுத்துகிறது. போருக்கெழும் சமயம் அவன் சூளுரையாகக் கூறிய ஒரு பாடலும் இதே இறுமாப்பைக் காட்டுகின்றது. ஆனால், இதில் கூட அவன் கால உயர்பண்பு தெற்றென விளங்குகிறது. ‘என் காலைப் பிடித்துக் கெஞ்சினால் இந்நாட்டையும் என்னுயிரையும் கூட என்னால் கொடுக்க முடியும்; எதிர்த்து வந்தாலோ, வந்தவர் புலியை மிதித்த குருடன் ஆவார்கள்; யானைக்காலில் மிதியுண்ட இளமூங்கில் ஆவார்கள்’ என்று அவன் கூறுகிறான். “மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி ஈ யென இரக்குவராயின், சீருடை முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம், இன்னுயிர் ஆயினும் கொடுக்குவென்............. உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதில் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல................. கழைதின் யானைகால் அகப்பட்ட வன்திணி நீள்முளை போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதோ!” (புறம் 73) அவன் ஆட்சியிலும் அவன் பின்னோன் ஆட்சியிலும் சோழரின் அவைப்புலவராய் இருந்தவர் கோவூர்கிழார். பாணர், விறலியர், கூத்தர், பொருநர் என்ற அந்நாளைய நால்வகைப் பாடகரில், அவர் பொருநர் வகுப்பைச் சேர்ந்தவர். பாணர்- அரசவையில் சென்று மன்னனைப் பாடுவோர். விறலியர் - ஆடல் நங்கையர். கூத்தர் - நாடகம் ஆடுபவர். பொருநர் - பாசறையிலும் - போர்க்களத்திலும் மன்னனுக்கும் வீரருக்கும் எழுச்சியூட்டிப் பாடுபவர்கள். நலங்கிள்ளியின் பொருநராய் இருப்பதால் மன்னர் களுக்குக் கிடைக்காத ஒரு பெருமை தமக்கே கிடைத்ததாகக் கோவூர்கிழார் ஒரு பாட்டில் நயமாகக் குறிக்கிறார். அவர் முரசறையக் குணில் எடுத்தாலே அரசர் எல்லோரும் நடுங்கினராம்! ஏனெனில், அது நலங்கிள்ளி படையெழுச்சிக்கு அடையாளமாய் இருந்தது! கோவூர்கிழாரேயன்றி ஆலத்தூர் கிழார், உறையூர் முது கண்ணன் சாத்தனார் என்ற புலவர்களும் இவ்வரசனைப் பாடி யுள்ளனர். இவர்கள் அவன் தற்பெருமையை நயமாகச் சுட்டிக் காட்டினர். ‘போர் வெறி போதாது; அன்பும் அருளும் அரசர்க்கு அணி’ என்று அவர்கள் அவனை இடித்துரைத்து வந்தது குறிப் பிடத்தக்கது. பேரவாவுடைய இந்த அரசனுக்கு அவன் ஆட்சியின் முற்பகுதி முழுவதும் அருகிலேயே எதிர்ப்பு இருந்தது. சோழர் குடியின் இளவரசனான நெடுங்கிள்ளி என்பவன் அவனுக் கெதிராக எழுந்து உறையூர், ஆவூர் ஆகிய நகரங்களைக் கைப்பற்றி ஆண்டு வந்தான். நலங்கிள்ளி பெரும் படைகளுடன் புறப்பட்டுச் சென்று அவனை அடக்கி ஒடுக்க முற்பட்டான். நலங்கிள்ளிக்கு மாவளத்தான் என்று ஒரு தம்பி உண்டு. நெடுங்கிள்ளிக்கெதிராகப் போரிலீடுபடும்படி அவனை நலங் கிள்ளி அனுப்பினான். நெடுங்கிள்ளி அச்சமயம் கோவூரிலிருந் தான். மாவளத்தான் அந்நகரை முற்றுகையிட்டான். இம் முற்றுகை பற்றிய இரண்டு செய்திகள் நமக்குத் தெரிகின்றன. முதலாவது இளந்தத்தன் என்ற புலவன் நலங்கிள்ளியைப் பாடிவிட்டு நெடுங்கிள்ளியையும் பாட ஆவூர் வந்தான். அவனை நலங்கிள்ளியின் ஒற்றன் என்றெண்ணி நெடுங்கிள்ளி கொல்ல முற்பட்டான். கோவூர்கிழார் ஓடோடிச் சென்று புலவர்கள் நடு நிலையுரிமையை எடுத்துரைத்து அவனைக் காத்தார் (புறம் 47) ஆவூர் முற்றுகை நாள் கணக்காக, வாரக் கணக்காக நீடித்தது. நெடுங்கிள்ளி வெளிவந்து போரிடாமல் கோட்டைக் குள்ளேயே அடைபட்டுக்கிடந்தான். இதனால் நகரத்தின் உள்ளிருந்த மக்களுக்கும் உயிரினங்களுக்கும் பெருத்த முட்டுப்பாடு ஏற்பட்டது. கோவூர்கிழார் மீண்டும் நெடுங்கிள்ளியிடம் சென்று வீர அறிவுரை தந்தார். ‘வீரமரபில் வந்தவன் நீ, குடிகள் வருந்த இப்படி அடை பட்டுக் கிடப்பது நன்றன்று; போர் புரிய விருப்பம் இருந்தால், ஆண்மையோடு வெளியே வந்து வெற்றி தேடு; இல்லாவிட்டால் நாட்டுக்குரியவனிடம் கோட்டையை விட்டுவிடு’ என்றார் (புறம் 44). நெடுங்கிள்ளி இச்சுடு சொற்களால் உளங்கிளறப் பெற்று வெளியே வந்து போரிட்டான். அவன் தோற்றுவிடவே, ஆவூரைத் துறந்துவிட்டு உறையூர் சென்று தங்கினான். சில நாட்களுக்குள் நலங்கிள்ளி அங்கும் வந்து முற்றுகை தொடங்கினான். நெடுங் கிள்ளி ஆவூரில் நகருக்குள்ளிருந்து நாட்கழித்தது போலவே, உறையூரிலும் நாட்கடத்தினான். இத்தடவை கோவூர்கிழார் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறவில்லை. நலங்கிள்ளிக்கே கூறினார். “இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன், கடுஞ்சினை வேம்பின் தெரியவோன் அல்லன், நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே! நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே! ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே! (புறம் 45) “நீங்கள் இருவரும் சோழர்; ஆர் அல்லது ஆத்திமாலை அணிந்தவர்களே; எவர் தோற்றாலும் தோல்வியறியாச் சோழர் குடிக்குத்தான் இகழ் உண்டாகும்!” என்று கூறிப்புலவர் இருவரை யும் நண்பராக்கினார். சங்க இலக்கியப் பாடல்களால் நெடுங்கிள்ளி -நலங்கிள்ளி தொடர்பின் வரலாறு நமக்கு இதுவரைதான் விவரமாகக் கிடைக் கிறது. ஆனால், புலவர் அருமுயற்சியால் ஏற்பட்ட நேசம் நீடித் திருந்ததாகத் தெரியவில்லை; இருவருமே மீண்டும் போர்களில் ஈடுபட்டனர். இப்போர்களில் ஒன்றே காரியாற்றுப் போர். இதே இடத்தில் பின்னும் போர்கள் நடந்ததால் இதை நாம் முதற் காரியாற்றுப் போர் எனலாம். காரியாற்றுப் போர் ஐ காரியாறு என்பது ஓர் ஆற்றுக்கும் ஓர் ஊருக்கும் பெயர் என்றும் தெரிகிறது. இது தமிழகத்தின் வட பகுதியில் திருவள்ளூரி லிருந்து காளத்திக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. இவ்வூர் தற்போது இராமகிரி என்று வழங்கப்படுகிறது. இது தேவார காலங்களில் பாடல்பெற்ற பதிகங்களுள் ஒன்றாக இருந்தது. அதில் கோயில் கொண்ட இறைவன் பெயர் காரிக்கரை உடைய நாயனார் என்பது. ஊரின் பழைய பெயரை இது சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் இராமகிரி என்பது ‘காரி மலை’ என்ற தமிழின் இடைக்கால சமஸ்கிருத மொழிபெயர்ப்பேயாகும். காரி என்ற தமிழ்ச் சொல் கருமை நிறம் உடையது என்ற பொருளில் நஞ்சு; நஞ்சுண்ட சிவனார் நஞ்சுண்டு உடல் கரியவனான திருமால்; கருநிறமுடைய இராமன் ஆகிய பொருள்கள் உடையது. முற்காலங்களில் அயிரைபோன்ற பெயர் மலை, ஆறு, ஊர் ஆகியவற்றுக்கு ஒரே பெயராய் வழங்கியது போல, இப் பக்கங்களிலுள்ள மலை, ஆறு, ஊர் ஆகிய மூன்றும் “காரி” என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் இதனருகே ஓடும் இரட்டை ஆறுகளில் ஒன்று காளிந்தி என்றும் மற்றொன்று காலேறு என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாவது பெயர் காரியாறு என்பதன் தெலுங்கு மருஉவேயாகும். காரிமலை என்பது அந்நாள் காளத்தியிலிருந்து திருப்பதி வரை இருந்த மலையைக் குறித்தது. அயிரை மலையிலும் காரி (இராமன் அல்லது திருமால்) அல்லது காரி (கொற்றவை) இடங் கொண்டிருந்திருக்கக் கூடும். காரிநதி என்ற இப்பெயரின் சிதைவே காரிந்தி அல்லது காளிந்தி என்று மருவியிருத்தல் கூடும். நெடுங்கிள்ளிக்கு வடபுல வடுக அரசர்கள் உதவியிருந்தனர் என்று எண்ண இடமுண்டு. போர் சோணாட்டின் வட எல்லையில் நடைபெற்றது என்பது இதைக் குறித்துக் காட்டும். நலங்கிள்ளியின் கை ஓங்கி வருவது கண்டு நெடுங்கிள்ளி தன் வழக்கமான மடிமையை அகற்றிவிட்டு மூர்க்கமாகப் போர் புரிந்தான். ஏழு நாட்கள் வரை இருதிறத்தாரும் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்காமலே கடும்போர் நடத்தினர். இறுதியில் நெடுங்கிள்ளியும் நலங்கிள்ளியும் நேருக்கு நேராக நின்று மற்போர் புரிந்தனர். இதன் பயனாக நெடுங்கிள்ளி களத்தில் சாய்ந்தான். பின்னாளில், இப்போர் காரணமாகவே அவன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்று குறிக்கப்பட்டான். காரியாற்றிலும் அதனையடுத்த தமிழக வட எல்லைப் பகுதியிலும் பின்னாட்களில் மற்றும் பல போர்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த தலைமுறையில் காரியாற்றில் மற்றொரு போர் நடந்ததனாலேயே, நாம் இப்போரை முதற் காரியாற்றுப் போர் என்று குறிக்கிறோம். நலங்கிள்ளி காரியாற்று வெற்றிக்குப்பின் தன் நாட்டை விரிவுபடுத்துவதில் கருத்துச் செலுத்தினான். பாண்டி நாட்டின்மீது படை எடுத்து அந்நாட்டில் உள்ள ஏழு அரண்களை முற்றுகையிட்டு வென்று கைக்கொண்டான் (புறம் 33). இவனிடம் பெருங்கடற்படை இருந்தது. அத்துடன் அவன் காலத்தில் நிலப்படையும் மிகச் சிறந்த முறையில் மூவணிகளாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது (புறம் 225). அவன் நாட்களில் தமிழகத்தில் அறிவியல் (விஞ்ஞானம்) கலைகள் ஆகிய யாவும் நன்கு தழைத்திருந்தன. அந்நாளைய வான நூல் அறிவை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவரும், (புறம் 30) அக்காலக் கடல் வாணிக வளத்தையும், கலைத்துறையில் அல்லியம் என்ற ஊமைக் கூத்து வகையையும் கோவூர்கிழார் என்ற புலவரும் (புறம் 33) குறிப்பிட்டுள்ளார்கள். கூடற் பறந்தலை ஐஐஐ மதுரையையடுத்த வெளியிலே நடைபெற்றதாகச் சங்கப் பாடல்களால் நாம் இரண்டு போர்கள் பற்றி அறிகிறோம். அவற்றுள் முதலாவது இன்ன அரசன் காலத்தில் நடைபெற்ற தென்று நம்மால் வரையறுக்க முடியவில்லை. ஆனால், அதனைக் கடைச் சங்கத்தின் முற்பட்ட காலப் புலவர்களுள் ஒருவரான பரணர் பாடுவதாலும் அதில் சேரரும் சோழரும் முறியடிக்கப் பட்டதாகக் கூறப்படுவதாலும், அது கட்டாயம் செங்குட்டுவன் காலத்துக்கு முற்பட்டதாகவே இருக்க வேண்டும் என்று கூறலாம். இந்தக் காலத்தில் சேர சோழரே முதன்மை வகித்திருந்ததாக நமக்குத் தெரியவந்தாலும், இக்காலத்துக்கு முன்னும் இடையிலும் பாண்டியன் முதன்மை பெற்ற காலங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் பெரும்புகழ்ப் பாண்டியனான பல்சாலை முதுகுடுமி இக் காலத்துக்கு முற்பட்ட பழம் பாண்டியனே. தவிர காலவரை யறைப்படுத்த முடியாத பல பாண்டியர் பெயர்களை நாம் சங்க இலக்கியத்தின் மூலம் அறிகிறோம். இப்போர் அவர்களுள் ஏதாவது ஒரு அரசன் காலத்ததாக இருந்திருக்கலாம். தவிர, பரணர் சேர சோழர்களைப் பற்றியும், எண்ணற்ற வேளிர்களைப்பற்றியும் பிறநாட்டரசர்களைப்பற்றியும் பாடியிருந்தாலும், பாண்டியரைப் பற்றிக் கிட்டதட்ட எதுவுமே கூறவில்லை என்னலாம். பசும்பூட் பாண்டியன் என்ற ஒரு பாண்டியன் பெயரே அவர் பாடல்களில் இடம் பெறுகிறது. பாண்டிய நாட்டு வேளிர்களுள் ஒருவனான பழயனும் குறிப்பிடப் படுகிறான். பசும்பூட் பாண்டியன் என்ற இப்பெயரைச் சிலர் தலையாலங்கானத்துப் பாண்டியன் என்று கொள்ள எண்ணுவர். ஆனால், பரணர் காலத்துக்கும் காலநிலைக்கும் இது ஒவ்வாதது. அது முற்பட்ட ஏதோ ஒரு பாண்டியனாகவும், குறிப்பிட்ட போருக்கு அவனே உரியவனாகவும் இருத்தல் கூடும். “மையணி யானை மறப் போர்ச் செழியன் பொய்யா விழவின் கூடல் பறந்தலை உடனியைந்தெழுந்த இரு பெருவேந்தர் கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி, இரங்கிசை முரசம் ஒழியப் பரந்து அவர் ஓடுபுறம் கண்ட ஞான்று (அகம் 116) என்பது இப்போர் பற்றிய பழம்பாடல், இரு பெரு வேந்தர்கள் படைகளும் கடல்கள் போலிருந்தன. ஆனால், அவர்கள் முறிவுற்ற பின் தத்தம் போர் முரசங்களைக் கீழே போட்டுவிட்டு ஓடினர் என்று இப்பாடலில் பரணர் கூறுகிறார். தலையாலங்கானத்துப் பாண்டியன் காலத்தில் பழயன் மாறன் பாண்டியர் படைத்தலைவனாய் இருந்து அருஞ் செயல்கள் ஆற்றியதாக அறிகிறோம். சேர சோழர் முதன்மைக் காலத்திலும் இம்மரபினரே பாண்டியன் படைத்தலைவனாய் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஏனெனில் பரணரின் மற்றொரு பாட்டுச் சோணாட்டுக்குள்ளேயே வந்து போரிட்ட பழயனைப் புகழ்கிறது. “வென்வேல் மாரியம்பின் மழைத்தோல் பழயன் காவிரி வைப்பில் போர் அன்ன என் செறிவளை உடைத்தலோ இலனே!” இரண்டாம் கூடற் பறந்தலைப்போர் தலையாலங் கானத்துப் பாண்டியன் காலத்தை ஒட்டி, அதற்கு ஒரு சிறிதே முன்னதாக நடந்திருக்க வேண்டும். ஏனெனில், அதில் தோல்வியுற்ற அரசன் சோழன் கிள்ளி வளவன். வெற்றி பெற்றவனோ தலையாலங்கானத்துப் போரிலேயே பாண்டியர் படைத்தலைவனாய் இருந்த பழயன்மாறன். இப்போர் பற்றிய பாடலையும் சிலர் தலை யாலங்கானத்துப் போர் பற்றியதாகவே கொள்வதுண்டு. ஆனால், இதனைப்பாடிய புலவர் பரணர், இதில் சோழன் மட்டுமே போரில் ஈடுபட்டுத் தோல்வியடைந்தான். தவிர, பாட்டின் இறுதியடி கோக்கோதை மார்பன் என்ற சேரனைச் சுட்டுவதுபோலக் காணப்படுகிறது. சேரன் இப்போரில் பாண்டியன் நண்பனாக இருந்திருத்தல் கூடும். தலையாலங்கானத்துப் போரில் அவன் சோழனுக்கு உதவியாயிருந்தான் என்று அறிகிறோம். பழயன் மாறன் இப்போரில் கிள்ளி வளவனை முறியடித்த துடன் அவனிடமிருந்து யானைகள், குதிரைகள் பலவற்றைக் கைக்கொண்டான் என்று அறிகிறோம். இப்போர் பற்றி நக்கீரர் பாடும்பாடல் வருமாறு:- “இழையணி யானைப் பழயன் மாறன் மாடமலி மறுகில் கூடல் ஆங்கண் வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த கிள்ளிவளவன் நல்லமர் சாஅய்க் கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி ஏதில் மன்னர் ஊர்கொளக் கோதைமார்பன் உவகையிற் பெரிதே!” (அகம் 346) இங்கே கோதை மார்பன் என்று குறிக்கப்படுபவன் அப்போது சிறுவனாயிருந்த பின்னாளைய தலையாலங் கானத்துப் பாண்டி யனே என்றும் சிலர் கருதியுள்ளனர். இதுவும் ஆராய்தற் குரியதே. தலையாலங்கானத்துப் போர் தலையாலங்கானம் என்பது, சோழநாட்டில் தற்காலத் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலம் வட்டத்திலுள்ள ஓர் ஊர். பிற்காலங்களில் இது தலையாலங்காடு என்று வழங்கிற்று. தேவார காலங்களில் இது திருநாவுக்கரசரால் பாடப்பட்டுச் சிவநெறிக்குரிய ஒரு திருப்பதியாயிற்று. சங்க இலக்கியகாலப் போர்களில் தலைசிறந்த பெரும் புகழ்ப்போர் தலையாலங்கானத்துப் போரேயாகும். அப்போரின் புகழில் ஈடுபட்டு, அதன் வியத்தகு வீரக்காட்சிகளையும், அதன் பேராரவாரத்தையும், அதன்பின் ஏற்பட்ட அமளிகுமளிகளையும் கண்டும் கேட்டும் அவற்றை வருணனைகளாகவோ உவமை, அடைமொழிகள் வாயிலாகவோ எடுத்தாளாத புலவர் அந்நாளில் இல்லை என்னலாம். இப்போரின் வெற்றி வீரனான பெரும் பாண்டியன் மீதே அந்நாளைய தலைசிறந்த புலவர் களான நக்கீரரும் மாங்குடி மருதனாரும் சிறு பெருங் காப்பியங்கள் என்று கூறத்தக்க நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய பெரும் பாடல்களைப் பாடியுள்ளனர். தவிர அப்போரையும், போர்வலவனான வழுதியையும் பாடிய பிற புலவர்களின் தொகையும் ஏராளம். அரசுரிமை பெறும் சமயம் (இரண்டாம்) நெடுஞ்செழியன் வயதுவராத முதிரா இளைஞனாயிருந்தான். பாண்டி நாட்டைக் கைப்பற்றிவிட இதுவே தருணம் என்று மற்ற அரசர்கள் எண்ணி னார்கள். அவர்கள் ஒருவர் இருவராகத் தாக்கவில்லை. இரண்டு பேரரசர்களும், ஐந்து வேளிர்களும் சேர்ந்து ஒருங்கு திரண்டு தாக்கினார்கள். எதிர்த்த வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் ஆகியவர்கள், பேரரசருள் இப்போரிலீடுபட்ட சேரன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்று அறிகிறோம். போரில் ஈடுபட்ட சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி என்று சிலர் கருதியுள்ளனர். ஆனால், இது பொருத்தமற்றது. அவன் கிள்ளி வளவனாகவே இருத்தல் வேண்டும் என்று கூறலாம். ஏனெனில், தலையாலங்கானத்துக்கு முற்பட்ட கூடற்பறந்தலைப் போர் அவன் முயற்சி யேயாகும். தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம் என்று இப்போர்க் களத்தைப் புலவர் குடபுலவியனார் (புறம் 19) வருணித்துள்ளார். தமிழகத்து வீரமுழுவதுமே போரில் ஈடுபட்டிருந்தது என்பதையும்; இருபக்கத்தும் தமிழர்களே நிறைந்திருந்தாலும், எருமையூரன் போன்ற வடுகரின் படைகளும் இடைகலந்திருந்தன என்பதையும் இது நினைவூட்டுகிறது. இத்தனை அரசர் பாண்டியரை எதிர்க்க ஒன்றுபட்டாலும் போர் நடைபெற்ற இடம் பாண்டிய நாடன்று, சோணாடே என்பது குறிப்பிடத் தக்கது. சோழனே கூட்டுறவின் இயக்கும் உறுப்பாகவும் தலைமை உறுப்பாகவும் இருந்தான் என்பதில் ஐயமில்லை படைதிரண்டு வருவதறிந்து பாண்டியன் முன்னேறிச் சென்று சோணாட்டில் தலையாலங்கானத்தருகே எதிரிகளைத் தாக்கியிருக்கக்கூடும்; அல்லது படையெடுத்த எதிரிகளை முறியடித்துத் துரத்திச்சென்று தலையாலங்கானத்தை யடைந்ததும், நெருக்கித் தாக்கியிருக்கக் கூடும், எவ்வாறாயினும் பாண்டியன் எழுவரையும் விஞ்சிய வீரமுடையவனாய் இருந்தான் என்பது எளிதில் போதரும். எதிரிகள் பல திசையினர் ஆதலால் சோணாட்டில் தலையாலங்கானத்திலேயே அவர்கள் ஒருங்கே கூடிப் புறப்பட ஏற்பாடு செய்திருக்கவேண்டும். அவர்கள் கூடுமிடத்திலேயே நெடுஞ்செழியன் அவர்களைத் துணிவுடன் சென்றெதிர்த்தான் என்பதே பொருத்தமுடையதென்று தோன்றுகிறது. போர் தொடங்கும் சமயம் பாண்டியன் எவ்வளவு இளைஞனாயிருந்தான் என்பதை இடைக்குன்றூர் கிழார் என்ற புலவர் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். “கிண்கிணி களைந்தகால், ஒண்கழல் தொட்டு; குடுமி களைந்த நுதல், வேம்பின் ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து; குறுந்தொடி கழித்தகை, சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்- யார் கொல்?”.................... (புறம் 77) “கிண்கிணி யணிந்து விளையாடும் குழந்தை அதை அவிழ்த்து வீரக்கழல் அணிந்திருக்கிறான்; பிள்ளைக்குடுமி இப்போதுதான் களைந்திருக்கிறது; அதன்மேல் மரபுச் சின்னமாகிய வேப்ப மாலையையும் போர்ச்சின்னமாகிய உழிஞையையும் சுற்றியிருக்கிறான்; கையில் இருந்த காப்பைக் காணோம்; அதற்குப்பதில் வில் இருக்கிறது; இத்தகைய போர்த் தோற்றத்தையுடைய சிறுவன் ஒருவன் தேர் மோட்டைப்பற்றி நிற்கிறானே, அவன் யாரோ?” என்று புலவர் அழகு நயம்படக் கேட்கிறார். சிறு பிள்ளையாயிருந்தாலும் போர் கண்டு அவன் சிறிதும் இமையாடவில்லை. அதே சமயம் அவன் வெற்றிகூட அவனிடம் பெருமையை உண்டு பண்ணவில்லை’ என்றும் புலவர் குறிக்கிறார். ‘மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் இலனே’ என்ற சொற்கள் இந்நிலையைச் சித்திரிக்கின்றன. “மெய்த்திரு வந்துற்றபோதும் வெந்துயர் வந்துற்றபோதும் ஒத்திருக்கும் உள்ளத் துரவோன்” (நளவெண்பா) என்ற தருமனைப் பற்றிய புகழேந்தியார் வருணனையையே இவ்வடிகள் நினைவூட்ட வல்லன. நெடுஞ்செழியன் படைகள் பெரியனவாயிருந்தாலும், ஏழுபடைகள் திரண்ட எதிரியின் படைப்பெருங்கடலை நோக்க, அது மிகச் சிறிதாகவே யிருந்தது. எனவே போர்த் தொடக்கத்தில் எவரும் எதிரிகளின் வெற்றியையே எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால், பாண்டியன் மதுரைவாயில் வெளியிலுள்ள பொய்கையில் குளித்துத் தாரும் கண்ணியும் படைக்கலங்களும் சூடிப்போர்க்களத்துக்கு வந்த சமயம், அவனுடனிருந்த இடைக்குன்றூர்க் கிழார் “எதிரிகள் எத்தனைபேர் பிழைப்பார்களோ” என்றே குறிக்கிறார்!” “மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி.......... வெம்போர்ச் செழியனும் வந்தனன் - எதிர்ந்த வம்ப மன்னரோ, பலரே! எஞ்சுவர் கொல்லோ பகல், தவச் சிறிதே!” (புறம் 79) இளையன் என்று தன்னை ஏளனமாகக்கருதி, வெற்றி தமதே என்ற இறுமாப்புடன் படையெடுத்த எதிரிகளைக் கண்டு பாண்டி யன் கடுஞ்சினம் கொண்டான். “அவர்களைச் சிதறடித்து அவர்கள் முரசங்களைக் கைக்கொள்வேன்; கொள்ளாவிட்டால் நான் கொடுங்கோலனாகுக; புலவர் என்னைப் பாடாதொழிக; இரவலர்க்கு ஈயாத பண்புடையவனாகுக!” என்று வஞ்சினம் கூறுகிறான். இவ்வஞ்சினம் அவனே இயற்றிய ஒரு புறப் பாடலாக நமக்குக் காட்சி தருகிறது. “நகுதக் கனரே நாடு மீக்கூறுநர்! இளையன் இவன் என உளையக் கூறி........... சிறு சொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரச மொடு ஒருங்கு அகப் படேஎன் ஆயின் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!......... புலவர் பாடாது வரைக என் நிலவரை!................ இரப்போர்க் கீயா இன்மை யான் உறவே!” (புறம் 72) தமிழகம் முன் என்றும் கண்டிராத கம்பலை போரில் எதிரிப்படைகள் பல கடல்கள் உடைத்தேரடி வருவதுபோல ஆரவாரித்த வண்ணம் வந்த நிறைந்தன. பாறைகள்மீது மோதும் பேரலைகள்போல அவை பாண்டியன் படைகள்மீது வந்து வந்து மோதின. ஆனால், ஒரு பகலுக்குள் அவ்வணிகள் யாவும் அலைகள் போலவே சிதறின. பாண்டியன் தேர்ப்படை களும், யானைப் படைகளும் எதிரிகளின் படைகளை உழுநிலமாக்கி எங்கும் உழுதன; வில்வீரர் வெற்றி விதைகளாகிய அம்புகளை எங்கும் தூவி விதைத்தனர்; குதிரை வீரர்கள் பொலி எருதுகள் கதிர்களை மிதித்துத் துவைப்பதுபோல எதிரிகளின் உடலங்களை எங்கும் சவட்டி அழித்தனர்; எதிரிகள் சிதறி ஓடத் தலைப்பட்டனர். கிலியினால் ஒருவர் மீதொருவர் உந்தியும் முந்தியும் தாறுமாறாகக் குழம்பி ஆர்ப்பரித்தனர். அவர்கள் எழுப்பிய இந்த ஆரவாரம் போர்க்களத்துடன் நிற்கவில்லை; நாடெங்கும் பரந்தது; அதுபோன்ற கம்பலையைத் தமிழகம் அதற்குமுன் என்றும் கேட்டதில்லை. அத்துடன் இரண்டா யிரம் ஆண்டு சென்ற பின்னும் தமிழர் காதுகளில் அது இன்னும் ஒலிக்கும்படி சங்க இலக்கியப் பாடல்கள் பல அதனை நமக்கு பதிவுசெய்து தந்துள்ளன. “கால் என்னக் கடிதுரா அய் நாடு கெட எரிபரப்பி, ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து, அரசு பட அமர் உழக்கி, முரசுகொண்டு களம்வேட்ட அடுதிறல் உயர் புகழ்வேந்தே!” (மதுரைக் காஞ்சி 125 - 130) என்று போர் வெற்றிகொண்ட மன்னனை மாங்குடி மருதனார் பாராட்டியுள்ளார். ‘பாண்டியன் இளையன்; போர் அனுபவமற்ற முதிராச் சிறுவன்; அவனை எதிர்த்தவரோ களங்கண்ட காவலர்; பேராற்றல் மிக்க பேரரசரும் வீர வேளிரும் ஆவர். அவன் ஒருவன், அவர்கள் எழுவர்! இது கோழமைமிக்க அநீதி; ஆனால், பேராற்றல் மிக்கவர் அநீதிச் செயல்’ என்று அந்நாளைய தமிழர் எண்ணினர். ஆயினும் பாண்டியன் இந்த அநீதியையும் ஆற்றலையும் ஒருங்கே சிதறடித்துத் தமிழ் வானில் இருள் கீண்டெழும் ஒரு புது ஞாயிறாகப் பொலிவுற்றான். இதையே, “ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும் புதுவது அன்று, இவ் உலகத்து இயற்கை! இன்றின் ஊங்கோ கேளலம்!.... பசும் பூட் செழியம் பீடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!” (புறப் 76) என்று ஒருபுலவர் வியந்துரைத்தனர். “புலிகளை அகப்படுத்த வேட்டுவர் பொருத்தி வைக்கும் கல் அடார் அல்லது பாராங்கல் பொறி போன்றவன் பாண்டியன் என்பது தெரியாமல் மாற்றார் அவனிடம் வந்து சிக்குண்டனர்’ என்று ஒரு புலவர் (குடபுலவியனார், புறம் 19-ல்) அவனைப் பாராட்டினார். ‘எதிரிகளாகிய அரசர், வேளிர், வீரர் ஆகியவர்கள் செய்த குற்றத்துக்கு அவர்கள் மனைவியர்கள் தம் கூந்தல் களைந்து கைம் பெண்கள் ஆகும்படி செய்யலாமா?’ என்று வேறொரு புலவர் (கல்லாடனார், புறம் 25-ல்) வசை மொழி கூறுவதுபோல இசைமொழி புகன்றார். மற்றும் ஒரு புலவர் (மாங்குடி மருதனார் புறம் 26-ல்) ‘உன்னுடன் போர் செய்தவர்கள் நற்பேறுடையவர்கள். ஏனெனில் தத்தம் முரசங்களை மட்டும் உன்னிடம் தந்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தாங்கள் பொன்னுலகம் பெற்றுவிட்டனர்!” என்று கேலி நயம்படப் புகழ்ந்தார். படையெடுப்பாளர்களைத் திருப்பி ஓட்டுவதுடன் பாண்டி யன் மனநிறைவு பெறவில்லை. அவர்கள் நாடுகள் தோறும் சென்று தாக்கி அவர்கள் கொட்டம் அடக்கித் தன் ஆற்றலையும் ஆட்சி எல்லையையும் விரிவுபடுத்த எண்ணினான். தலையாலங் கானத்தில் அவனுடன் இருந்து படைத்தலைமை வகித்தவன் பழையன். ஆனால், வேறுபல படைத்தலைவர்களும் அவனிடமிருந்து போர் உடற்றினர். அவர்களில் ஒருவன் அதுகை என்பவன். அவன் தலைமையில் பாண்டியன் ஒரு படையைச் சோழ நாட்டைத் தாக்கும்படி அனுப்பினான். தலையாலங்கானப் போரிலோ அல்லது அதனையடுத்த தாக்குதலிலோ சோழன் பெரும்படைத் தலைவனும் மிழலைக் கூற்றத்தின் வேளுமான எவ்வியை, அதுகை தாக்கிக் கொன்றான் (புறம் 233). அவனுக்குரிய மிழலைக் கூற்றமும் பாண்டிய நாட்டின் எல்லையுடன் சேர்க்கப்பட்டது. இச் சோணாட்டுத் தாக்குதலுக்குப்பின் பாண்டியன் சேர நாட்டின் மீது படையெடுத்தான். சேரமான் யானைக்கட்சேய் சிறைப்பட்டான். அவன் படைத்தலைவனான அழும்பில்வேள் போரில் மாண்டான். அழும்பில் வேளுக்குரிய நாடும் பாண்டிய நாட்டுடன் சேர்க்கப் பட்டது. “நல்லூர்க் கெழீஇய ஒம்பா ஈகை மாவேன் எவ்வி புனலம் புதவின் மிழலையொடு பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய! (புறம் 24) என்ற மாங்குடி கிழாரின் பாட்டு மிழலை, முத்தூற்றுக் கூற்ற வெற்றியையும், ‘அழும்பில் அன்ன நாடிந்தனரும்’ (மதுரைக் காஞ்சி 345) என்ற மதுரைக் காஞ்சியுரை அழும்பில் வெற்றியையும் குறித்துள்ளன. தலையாலங்கானத்துப் போரிலோ, அதற்குப் பிற்பட்ட ஒரு படையெடுப்பிலோ சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை சிறைபட்டான். இச்சேரமான், ஒரு பாடல்சான்ற பெரும்புகழ்ப் பேரரசன். அவன் எப்படியோ தன் ஆற்றல் காட்டிச் சிறையி னின்றும் தப்பியோடித் தன் நாடு சென்று இழந்த புகழை மீட்டும் பெற்றுவிட்டான். அவனைப் பலபடப் பாராட்டிப் பாடியுள்ள புலவர் பலர். அவருள் ஒருவரான குறுங்கோழியூர் கிழார் (புறம் 170-ல்) சிறைப்பட்டபின் விடுபட்ட அவன் திறத்தையும் ஓர் அருஞ்செயலாகச் சிறப்பித்துப் பாராட்டியுள்ளார். ‘குழியகப் பட்ட கொல் களிறு தன் கொம்புகளின் ஆற்றலால் குழிதூர்த்துத் தன் கிளையினத்துடன் சென்று சேர்தலை’ அவன் முயற்சிக் கேற்ற உவமையாக அவர் எடுத்துக் கூறுகிறார். வீறுமிக்க பேரரசனைப் பாடிய விழுமிய சிறுபெருங்காப்பியம் பாண்டியனைச் சிறப்பித்துக் கூறும் சிறு பெருங்காப்பியங்கள் இரண்டினுள், மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சியுடன் போட்டியிடுவதன்றி, அதனை விஞ்சிய, வீறுடைய சிறு பெருங்காப்பியமாகத் திகழ்வது, நக்கீரனார் பாடிய நெடுநல் வாடையே. சங்க இலக்கியமென்னும் ஒப்புயர்வற்ற கலை மாளிகையிலேகூட இதற்கிணையான காப்பிய இலக்கணம் நிறைந்த ஒரு சிறு பெருங்காப்பியம் காணமுடியாது. அதில் நாம் ஒருபுறம் நெடுஞ்செழியன் வெற்றிப் போர்க்களத்திலிருந்து வரும் வரவுக்காகக் காத்திருக்கும் பேரரசியாரின் சோகக்காட்சியை - நள்ளிரவிலே அவள் படுக்கையறையிலேயே சென்று காண்கிறோம். மறுபுறம் போர் வெற்றியின் புகழ் வீறுடைய நெடுஞ்செழியனினும் பெரியோனான மனிதப் பண்புமிக்க பேரரசன் நெடுஞ்செழியனைக் காண்கிறோம். சங்க இலக்கியத்திலேகூட ஓர் அரசன் உள்ளத்தை அரசியின் உள்ளத்தின் பின்னணியுடன் காணும் இது போன்ற காட்சிபிறிதில்லை என்னலாம். மன்னன் இப்போது வெற்றி மகிழ்ச்சியில் இல்லை; தன்னை வரவேற்கக் காத்திருக்கும் தன் ஆருயிர்த் தலைவியான பேரரசியிடம்கூட இல்லை; போரில் புண்பட்ட வீரரிடமே ஈடுபட்டு நிற்கிறது. நள்ளிரவு என்றும் பாராமல், இருட்டையும், குளிர் காற்றையும், மழைத் தூறலையும் பொருட்படுத்தாமல் படை வீட்டிலிருந்து புறப்பட்டு மன்னன் படைக் களத்திலே சுற்றுகிறான். யானையின் அறுந்த துதிக்கைகள்; வீரரின் குறைபட்ட யாக்கைகள் எங்கும் கிடக்கின்றன. பாண்டில் விளக்கேந்தி ஒருவன் அருகே வருகிறான்; விழுப்புண் பெற்ற வீரர், புகழ் பெற்றோர் ஆகியவரை மன்னனுக்குக் காட்டி அறிமுகப் படுத்தும்படி படைப்பெருந்தலைவன் (முன்னோன்) வேலுடன் செல்கிறான்; வெண் கொற்றக் குடையை முதியவன் ஒருவன் சற்றுப் பின்னாக நின்று ஏந்திக்கொண்டு வருகிறான். போரில் வீரம் காட்டிய புதுப்படை வீரன் ஒருவன் இளந்தோள் மேல் அவன் வலதுகை கிடக்கின்றது. இடது தோளிலிருந்து நழுவும் மேலாடையை இடது கை பற்றியும், பற்றாமலும் பிடித்திருக்கின்றது. போர் வெற்றியினால் அவன் உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச் சியை இறந்தவர், புண்பட்டவர் பற்றிய எண்ணம் அகற்றியிருக் கிறது. ஆனால், பிறருக்கு அதைக் காட்டாது மறைத்து அவன் ஒரு முகமலர்ச்சியை வருவித்துக் கொள்கிறான். காயம் பட்டவர் களிடம் அவன் கனிவுடன் அவர்கள் நோவுபற்றியும், உடல்நிலை வாய்ப்புகள் பற்றியும் பேசி ஆறுதல் தருகிறான். புகழ்பெற்ற வர்களை அவன் பாராட்டுகிறான். இக்காட்சி தமிழிலக்கியத்தில் மட்டுமல்ல, உலக இலக் கியத்திலேயே ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை நீள்திரள் தடக்கை நில மிசை புரள, களிறு களம் படுத்த பெருஞ்செய் ஆடவர் ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து வடந்தைத் தணவளி எதிர்தொறும் நுடங்கி......... பாண்டில் விளக்கின் பருஉச்சுடர் அழல, வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு, முன்னோன் முறைமுறைகாட்ட......... எறிதுளி விதிர்ப்ப, புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ வாள்தோள் கோத்த வன்கட் காளை சுவல்மிசை அமைந்த கையன், முகனமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப, நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே! (பத்துப்பாட்டு: நெடுநல் வாடை: 169 - 173, 175 - 177, 180 - 188) திருக்கோவலூர்ப் போர் ஐ : கரூவூர் முற்றுகை தலையாலங்கானத்துப் போரில் பாண்டியனை எதிர்த்த சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியல்ல; கிள்ளி வளவனாகவே இருக்க வேண்டுமென்று மேலே கூறினோம். கிள்ளிவளவன் வகையிலும் ஆராய்ச்சியாளர் பலவகைப்பட்ட குழப்பங்களை உடையவராய் இருக்கின்றனர். முதலாவது நலங் கிள்ளிக்குப் பின் ஆண்டவன் கிள்ளிவளவன் என்று சிலரும், நலங்கிள்ளிக்கு முன் ஆண்ட அவன் தமையனே கிள்ளிவளவன் என்று சிலரும் கொள்கின்றனர். இரண்டாவதாக இக்குழப்பத் திடையே இன்னொரு குழப்பமாக, கிள்ளிவளவனும் மணிமே கலைக்காப்பியத்துச் சோழன் மாவண் கிள்ளியும் ஒருவனே என்று சிலரும், வேறு வேறு என்று பிறரும் கொள்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் கொள்வது போல, தலையாலங் கானத்துப் பாண்டியனைச் சிலப்பதிகாரத்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பின் வந்தவன் என்றும், அவன் பெயரன் என்றும் கொள்வது சரியானால், கிள்ளிவளவன் நலங்கிள்ளிக்குப் பின் ஆண்டவனே என்பதிலும், அவனே மணிமேகலைக் காப்பியத்துக்குரிய மாவண் கிள்ளி என்பதிலும் ஐயமிருக்க முடியாது. மற்றும் கிள்ளிவளவனும் பழயன் மாறனும் ஈடுபட்ட கூடற் பறந்தலை இரண்டாம் போர் பற்றிய நக்கீரர் பாடல் (அகம்846) சிலரால் தலையாலங்கானத்துக்குப் பிற்பட்ட போரைக் குறிப் பதாகவும், வேறு சிலர் கொண்டுள்ளனர். அத்துடன் அது பழயன் வெற்றியன்று; கிள்ளிவளவன் வெற்றியே என்றும் அவர்கள் பொருள்படுத்தியுள்ளனர். பாடியவர் நக்கீரர் என்பதையும் பாட்டின் அடை மொழிகளையும் நோக்க, அப்போர் தலையாலங்கானப் போருக்கு முந்தியதென்றும், வெற்றி பழையனதே என்றும் கொள்ளவதே பொருத்த மானதாகத் தோன்றுகிறது. பிந்திய பொருள்கூட கிள்ளிவளவன் ஆட்சிப் போக்குக்கு மாறுபட்டதன்று. ஏனெனில் தலையாலங்கானத்துப் போரால் சேர சோழர் முதன்மை பெரிதும் பாதிக்கப்பட்டு, பாண்டியனே பெரும் புகழடைந்தது உண்மையானாலும், ஒரு தலைமுறைக்குள்ளேயே சேரசோழர் மீண்டும் தலையெடுத்து, முதன்மைப் பதவிக்குத் தாமே போட்டியிடுவது காண்கிறோம். சங்கப்பாடல்கள் மூலம் நாம் கிள்ளிவளவனின் திருக்கோவ லூர் வெற்றியையும் அவன் கருவூர் முற்றுகையையும் பற்றிக் கேள்விப்படுகிறோம். மணிமேகலையின் மூலம் அவனது இரண்டாம் காரியாற்றுப் போர் பற்றிய விவரம் காண்கிறோம். இவை ஒருங்கு சேர, அவனுக்கு மீண்டும் தமிழக வெற்றி உறுதியாதல் குறிப்பிடத்தக்கது. மலையமான்காரி தென்னார்க்காட்டு மாவட்டத்தில் தென் பெண்ணையாற்றின் கரையிலுள்ள திருக்கோவிலில் இருந்து ஆண்டவன். முள்ளூர் மலைப்பகுதியும் அவன் ஆட்சிக்கு உட் பட்டிருந்தது. சோழன் ஆரியப் படையெடுப்பை வல்லத்துப் போரில் வென்றதுபோலவே, காரியின் முன்னோரும் இம் முள்ளூர் மலையருகே நடந்த போரில் ஆரியரை வென்றதாக அறிகிறோம். நெடுங்கிள்ளிக்கோ அல்லது சோழரின் வேறு எந்த எதிரிக்கோ உதவிய காரணத்தினாலேயே, கிள்ளிவளவன் காரியை எதிர்த்திருக்கவேண்டும். காரி இப்போரில் கொல்லப் பட்டான். அவன் சிறுவர் இருவரைக் கிள்ளிவளவன் யானைக் காலிலிட்டு இடறி அழிக்கும்படி கட்டளையிட்டான்; ஆனால், கோவூர்கிழார் என்ற புலவர் (புறம் 46) அரசனிடம் சோழ மரபின் பெருமையையும், காரி மரபின் வள்ளன்மையையும் எடுத்துரைத்து இதைத் தடுத்தார். கிள்ளிவளவனின் அடுத்த செயல் கருவூர் முற்றுகையேயாகும். மலையமானை வென்றபின் அவன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து வென்றான். பின் கொங்கு நாடு கடந்து சேர நாட்டின் தலைநகரான கருவூரை முற்றுகையிட்டான். சேரமான் கோட்டைக்குள் புகுந்து தற்காப்பிலே கவனம் செலுத்தினான்; வெளியிலுள்ள காவல் மரத்தைச் சோழன் வெட்டும் ஓசை கேட்டும் அவன் வெளிவராதிருந்தான்; சோழன் சுற்றுப்புறம் உள்ள ஊர்களும் கழனிகளும் பூங்காக்களும் எரித்துப் பாழாக்க முனைந்தான்; அப்போது அவனுடன் இருந்த புலவர் ஆலத்தூர் கிழார் அவனுக்கு அறிவுரை கூறினார். “புறாவின் இன்னலை விலக்கிய சிபிச் சோழன் மரபில் வந்தவன் நீ! வீரமின்றி ஒதுங்கி வாழும் இவ் அரசனை எதிர்ப்பதும் அதற்காக அழிவு சூழ்வதும் உனக்கு நன்றன்று” (புறம் 36) என்று உரைத்தார். இறுதியில் சோழன் வஞ்சி முற்றுகையில் வெற்றி பெற்றான். இவ்வெற்றியைப் பெண்பாற்புலவர் மாறோக்கத்து நப்பசலையார் இரண்டு பாட்டுகளில் (புறம்: 37, 39) சிறப்பித்துள்ளார். காரியாற்றுப் போர் ஐஐ கிள்ளிவளவன் அல்லது மாவண் கிள்ளியின் ஆட்சியின் பிற்பகுதியில் சேரரும் பாண்டியரும் மண்ணாசையால் உந்தப்பட்டுச் சோழ நாட்டின் மீது படையெடுத்தனரென்றும், சோழன் தம்பியால் காரியாற்றில் மாற்றரசர் இருவரும் முற்றிலும் முறியடிக்கப்பட்டனரென்றும் மணிமேகலைக் காப்பியம் நமக்குத் தெரிவிக்கிறது. முதற் காரியாற்றுப் போரைப்போலவே இப்போரும் தமிழக வடஎல்லையிலேயே நடைபெற்றது என்பது வியப்புக் குரியது. ஏனெனில் எதிரிகள் இருவருள் பாண்டியன் தென்திசை யிலும் சேரன் மேல் திசையிலும் இருந்தனர். சோழன் தமிழகத்தில் அடைந்துவரும் முதன்மையை வடபுல அரசருடன் சேர்ந்தேனும் சேர பாண்டியர் ஒடுக்க நினைத்திருத்தல் கூடும் என்பதே பொருத்தமாகத் தோற்றுகிறது. எஞ்சா மண் நசைஇ இகல்உளம் துரப்ப வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி முறஞ்செவி யானையும் தேரும்மாவும் மறங்கெழு வயவாள் வயவரும் மிடைந்த தளைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர் சிலைக்கயல் நெடுங்கொடி நெடுவேல் தடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலிகெழுதடக்கை மாவண்கிள்ளி! (மணிமேகலை ஓஐஓ 119 - 127) குளமுற்றத்துப் போர் இரண்டாம் காரியாற்றுப் போருக்குப் பின் கிள்ளிவளவன் பாண்டியரையும் சேரரையும் அவர்கள் நாட்டுக்குத் துரத்திச் சென்றிருக்க வேண்டும். சேர நாட்டில் குளமுற்றம் என்ற இடத்தில் நிகழ்ந்த ஒரு போரில் அவன் உயிர் இழந்தனனாகலாம். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று பின்னாளில் அவனக்கு வழங்கிய பெயர் இதனைக் காட்டுகிறது. குளமுற்றம் ஒரு போர்க்களத்தின் பெயரன்று; சோழன் சென்று தங்கியிருந்த ஓர் இடப் பெயரே என்று கருதுபவரும் உண்டு. திருக்கோவலூர்ப் போர் ஐஐ பேரரசுகளின் வல்லமைப் போட்டிகளிடையே சிறிய அரசு களும் அவற்றை ஒத்த முக்கியத்துவம் பெறுவது இயல்பு, சங்க காலத் தமிழக வேளிர் வகையில் இது முற்றிலும் உண்மையாகும். அதியமான் மரபினர் சங்ககாலத்தில் மட்டுமின்றி, பிற்காலச் சோழ பாண்டியப் பேரரசர் ஆட்சியிலும் வலிமை வாய்ந்த சிறு வல்லரசாய் இருந்தவர்கள். சங்ககாலத்தில் அதியமான் நெடுமானஞ்சி தமிழகத்தின் தலைசிறந்த பெண்பாற் புலவரான ஒளவையாரை அவைப் புலவராகவும், அமைச்சரது நிலையில் அறிவுரையாளராகவும், தன் அரசியல் தூதராகவும் கொண்டிருந்தான். அவன் தலைநகர் தகடூர் என்பது; அது இந்நாளில் சேலத்திலுள்ள தருமபுரிக்கு அருகில் இருந்ததென்று தோன்றுகிறது. இன்று பாழுங் கோட்டையாகக் கிடக்கும் அதமன் கோட்டை என்ற பெயர் அதியமான் கோட்டை என்பதன் மரூஉவே என்று தெரிய வருகிறது. அதியமானைப் போலவே வலிமை வாய்ந்த மற்றொருவேள் மலையமான். அவன் தற்காலத் தென்னார்க்காட்டு மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையிலுள்ள திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டிருந்தான். அவன் பெயர் காரி. இந்தக் காரி கிள்ளிவளவனால் கொல்லப்பட்ட காரியானால், கிள்ளிவளவன் ஆட்சியோ, தலையாலங்கானத்துப் பாண்டியன் ஆட்சியோ நாம் மேலே கொண்டதைவிடப் பிற்பட்டதாயிருக்க வேண்டும். ஆயின் இந்தக் காரி அவன்மரபில் பின் வந்தவனாகவும் இருக்கலாம். அதியமான் தன் நாட்டை விரிவுபடுத்தும் எண்ணத்துடன் கோவலூர் மீது படையெடுத்தான். கோவலூர்ப் போரில் அதியமான் வெற்றி கண்டான். காரி நகர் விட்டு ஓடினான். கோவலூர் அதியமான் நெடுமானஞ்சியின் ஆட்சிக்குள்ளாயிற்று. தகடூர்ப் பெரும்போர் கோவலூர்ப் போரில் தோற்றோடிய காரி சேரனிடம் தஞ்சமடைந்தான். இக்காலச் சேரன் பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்துக்குரிய பெருஞ்சேரல் இரும்பொறை ஆவன். அவன் இச்சமயம் தன் நாட்டெல்லையில் இருந்த வலிமை வாய்ந்த வேளான ஓவியர் தலைவன் ஓரியை வெல்லவும், அவனுக்குரிய கொல்லி மலையைக் கைக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தான். காரி சேரன் படைத் தலைமையில் தானே சென்று ஓரியைத் துரத்திவிட்டுக் கொல்லி மலையைச் சேரனுக்குச் சேர்ப்பித்தான். முன்பு தோற்றோடிய காரி சேரனிடம் தஞ்சம் புகுந்தது போலவே, ஓரி இப்போது அதியமானிடம் தஞ்சம் புகுந்தான். அதன்மீது சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையும் மலையமான் காரியும் சேர்ந்து அதியமான் தகடூர் மீது படையெடுத்தனர். அதியமானுக்கும் ஓரிக்கும் உதவியாகப் பாண்டிய அரசனும் சோழ அரசனும் வந்து துணை தந்தனர் என்று பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது. “கொல்லிக் கூற்றத்து நீர்கூர்மீமிசை பல்வேல்தானை அதிகமானோடு இருபெரு வேந்தரையும் உடன்நிலைவென்று முரசும்குடையும் கலனும் கொண்டு உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு துகள் தீர்மகளிர் இரங்கத் துப்பு அறுத்துத் தகடூர் எறிந்து ...” (பதிற்: பதிகம் 3 - 9) என்று சேரன் அடைந்த பெரு வெற்றியைப் பதிகம் சற்று விரிவாகவே கூறுகிறது. பாட்டு மூலத்திலும், “வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பில் தகடூர் நூறி” என்ற அடிகள் இவ்வெற்றியைக் குறிக்கின்றன. இப்போரைப்பற்றிச் சங்க இலக்கியம் என்ற பாடல் திரட்டில் சேராமல், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தனிப் பாடலான தகடூர் யாத்திரை என்ற பாட்டு ஆக்கப்பட்டிருந்தது என்று அறிகிறோம். இது நமக்கு முழுதும் கிடைக்கவில்லை. ஒரு சில பாக்களே கிடைத்துள்ளன. சங்கப்பாடல்களைப் போலவே இதிலும் பாடல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்களால் பாடப் பட்டன என்று தோன்றுகிறது. பாடிய புலவர்களுள் ஒருவர் பதிற்றுப்பத்தில் இச்சேர மன்னனைப் பாடிய அரிசில்கிழாரே என்பது குறிக்கத்தக்கது. தகடூர்ப் போர்பற்றிய தகடூர் யாத்திரை தரும் வரலாற்றுக் கும், பதிற்றுப்பத்துப் பதிகத்தில் கண்ட வரலாற்றுக்கும் இடையே சில முக்கிய கூறுகளில் வேற்றுமைகள் உள்ளன. பதிற்றுப்பத்துத் தகடூரில் போர் புரிந்த தலைவன் அதிகமான் என்று மட்டுமே குறிக்கின்றது. ஒளவையார் பாடல்கள் மூலம் இது நெடுமான் அஞ்சி என்று தோன்றுகிறது. ஆனால், தகடூர் யாத்திரையில் அது அவன் மகன் எழினி என்று கூறப்படுகிறது. தவிர பதிற்றுப்பத்தின் பதிகம் இரண்டரசர் உதவிபற்றிக் குறிக்கிறது. மற்றப் பாடல்களில் அக்குறிப்பு இல்லை. தகடூர் முற்றுகை அஞ்சி காலத்திலும், சில நாட்களுக்குப் பின் மகன் காலத்திலும் இரண்டு தடவை நடந்ததோ என்று கருத இது இடம் தருகிறது. முதல் முற்றுகையில் அஞ்சி இறந்தான். இதை ஒளவையார் பாடியுள்ளார். சேரமான் வெற்றி பெற்றாலும் நாடு நகர்களை அழிக்கவில்லை. நாட்டைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இரண்டு அரசர்களும் சேர்ந்து படையெடுப்பில் அதிகமானுக்கு உதவி செய்த போர் இதுவே யாதல் வேண்டும். இரண்டாவது முற்றுகை சேரன் ஒருவனால் மட்டுமே நடத்தப் பட்டது. அதன் வெற்றியின் பின்பே கோட்டையழிக்கப்பட்டு, நாடு கைக்கொள்ளப்பட்டதாகல் வேண்டும். எழினியின் தலைமையில் நடைபெற்ற கோட்டைப் பாது காப்புப் போரில், அவன் படைத்தலைவன், பெரும்பாக்கன் என்ற ஒரு வீர இளைஞன் என்று அறிகிறோம். அவன் எதிரிபடைகளைக் கோட்டைக்குள்ளிருந்து தாக்கவில்லை. துணிச்சலுடன், கோட்டைக்கு வெளியே படையுடன் வந்து எதிர்த்தான். அத்துடன் இறுமாப்புடன் தன் படையின் முன் வந்து நின்று எதிரிப்படைகளை எதிர்ப்பார்த்து நின்றான். சேரனுடன் களஞ் சென்றிருந்த அரிசில் கிழார், பொன் முடியார் என்ற இரு புலவர்களும் அவனை அரசனுக்குச் சுட்டிக் காட்டிப் பேசிய பேச்சுக்களையும் போர் விவரங்களையும் தகடூர் யாத்திரை நமக்கு நேர்முகக் காட்சிகளாகத் தருகின்றன. ‘அதோ கருந்தாடியுடைய அந்த அஞ்சா நெஞ்சன் தன்கையில் உள்ள வேலையும் நம்மையும் பார்த்து இறுமாப்புடன் சிரிக்கிறான்,’ என்கிறார் ஒரு புலவர். ‘அந்த வீர இளைஞனால் வீறுமிக்க யானைகளைக்கூட வீழ்த்த முடியும் என்று தோற்றுகிறது’ என்கிறார் மற்றொரு புலவர். முதல் நாளிலேயே கோட்டைக்கு வெளியிலுள்ள போர் முடிந்துவிட்டது. தகடூர்ப் படைகள் பேரழிவுடன் கோட்டைக்குள் பின் வாங்கின. சேர வீரர்கள் காவல் காட்டை அழித்தனர். மறுநாள் கோட்டைக்குள் சென்றனர். போரின் நேர்முகக் காட்சியாக நமக்குக் கிட்டியுள்ள தமிழ்ப் பாடல் தகடூர் யாத்திரை ஒன்றே என்னலாம். ஆனால், அது நமக்கு அரைகுறை வடிவிலேயே கிடைத்துள்ளது. கானப் பேரெயில் அழிவு கானப் பேரெயில் என்பது, பாண்டிய நாட்டில் பண்டைக் காலத்தில் நிலவிய ஒரு வலிமை வாய்ந்த கோட்டை கானப் பேர் என்பது இந்நாளைய காளையார்கோயிலே என்று ஆராய்ச்சி யாளர் முடிவு கண்டுள்ளனர். அதன் கோட்டை மதில்கள் வெல்ல முடியாதவை என்று சங்க காலங்களில் கருதப்பட்டிருந்தன. அதன் தலைவனான வேங்கை மார்பன் இது பற்றிப் பெரிதும் தருக்குடையவனாயிருந்தான். பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அதை வென்று வேங்கை மார்பன் தருக்கை அடக்கினான். இக்காரணத்தாலேயே அவன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்றும், கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதி என்றும், கானப் பேர் தந்த உக்கிரப் பெருவழுதி என்றும் அழைக்கப்பட்டான். கானப் பேர் எயில் எறிந்த வெற்றியை ஐயூர் மூலங்கிழார் என்ற புலவர் (புறம் 21ல்) பாடியுள்ளார். பழுக்கக் காய்ச்சிய இரும்பில் சுவறிய நீரை யாரும் இரும்பிலிருந்து மீட்க முடியாது. கானப் பேரெயிலையும் அதுபோலவே பாண்டியனிடமிருந்து மீட்க முடியாது என்று வேங்கை மார்பன் மறுகினான் என்று புலவர் கூறுகிறார். புலவர் பலர் அவனைப் பாடினாலும் அப்பாடல்களின் புகழ் மாட்சி கடந்து அவன் வெற்றி மாண்புடையதென்றும் அவர் அவனைச் சிறப்பிக்கிறார். சங்க காலப் பாண்டியருள் கடைசிப் பாண்டியன் என்று இவன் கருதப்படுவதுண்டு. தமிழக வாழ்வில் ஏதோ ஒரு மாறுதல் இவனுக்குப் பின் சங்கம் நீடிக்காமல் செய்திருக்க வேண்டும். அகநானூற்றை உப்பூரிகுடிகிழகர் மகன் உருத்திர சன்மனால். தொகுக்கும்படி செய்த பாண்டியன் இவனே என்றும் கருதப் படுகிறது. நற்றிணையும், குறுந்தொகையும் அவன் காலத்துக்கு முன்பே தொகுக்கப்பட்டிருந்தன என்று தெரிய வருகிறது. (பக். 80. தொகை நூல்களின் கால முறை: இலக்கிய தீபம்: எஸ். வையாபுரிப்பிள்ளை) கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் சேரமான் மாரி வெண்கோவும் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியுடன் ஒருங் கிருந்த காட்சியை ஒளவையார் (புறம் 367 )பாடியுள்ளார். கழுமலப் போர் சங்க காலத்திறுதியிலேயிருந்த சோழன் செங்கணான் சேரமான் கணைக்கால் இரும்பொறையுடன் கழுமலத்தில் போர் புரிந்ததாக அறிகிறோம். கணைக்கால் இரும்பொறை சோழனது குடவாயில் கோட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டதாகவும், நீர் கேட்டபோது சிறைக்காவலர் அவனை மதியாது காலந் தாழ்த்தியதால் அவன் தன்மான உணர்ச்சிகொண்டு உணவுநீர் மறுத்து உயிர் விட்டான் என்றும் தமிழ் மரபுரை கூறுகிறது. ஆனால், கணைக்கால் இரும்பொறையின் பாடல் ஒன்று (புறம் 74) சங்க இலக்கிய எல்லையிலேயே அவன் இச்சமயம் கூறிய மாள்வுரையாகக் காட்சி தருகிறது. மற்றொரு மரபு சேரமானை விடுவிப்பதற்காகப் பொய்கை யார் என்னும் புலவர் கழுமலப் போர் பற்றிக் களவழி என்ற ஒரு நூல் இயற்றியதாகக் கூறுகிறது. ஆனால், களவழி இயற்றிய பொய்கையார், சங்க இலக்கியத்திலேயே சேரன் கோக்கோதை மார்பனைப் பாடிய பொய்கையார் அல்லவென்றும் வரலாற்றா சிரியர் பலர் மறுக்கின்றனர். செங்கணான் எழுபதுக்கு மேற்பட்ட சிவன் கோயில்களும், சில திருமால் கோயில்களும் தமிழகம் எங்கும் கட்டியதாகவும் திருமங்கையாழ்வார் குறித்துள்ளார். செங்கணான் சங்ககாலத் தமிழகத்தின் கடைசிச் சோழனாயிருத்தல் வேண்டும். ஆராய்ச்சியாளர் பலர் அவனை ஐந்தாம் நூற்றாண்டினன் என்று கருதுகின்றனர். இங்ஙனம் கருதுவதற்குச் சரியான காரணம் கிடையாது. கோயில்கள் சங்க காலத்தில் கட்டப் பட்டிருக்க முடியாது என்ற அவர்கள் கருத்தே இதற்கு வழி வகுத்தது. இம்மறுப்புச் சங்ககாலத் தொடக்க நிலைக்கே பொருந்தும், கடைசிப் பகுதிக்கன்று என்னலாம். களப்பிரர் படையெடுப்பு சங்ககால இலக்கிய மரபு, பண்பாட்டு மரபு ஆகிய இரண்டும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்குள் தடமில்லாமல் அழிந்தன என்னலாம். சங்க இலக்கியங்கள் அதன் பின் ஒரு சில புலவர்களுக்குள்ளாகப் பூட்டி வைக்கப்பட்டே பேரளவில் அழிந்து ஒரு சிறு பகுதியளவில் நம்மை வந்தெட்டியுள்ளதைச் சங்கத்துக்கும் பிற்பட்ட இலக்கியத்தில்கூட முன்னைய மரபு பேணிய இலக்கிய மரபு தேய்ந்து தேய்ந்து வந்ததால், அதிலும் மிகச் சிறு பகுதியே நம்மை வந்தெட்டியுள்ளது. மரபிலும் பண்பிலும் மிகுதி மாறுபட்ட இலக்கியமே தழைத்துள்ளது. மக்கள் பண்பாடும் சங்க காலத் தமிழர் இனமறிய முடியாத நிலையில் மாறியுள்ளது. இப்பெருமாறுதலுக்குக் காரணமான அரசியல் நிகழ்ச்சி களப்பிரர் படையெடுப்பே ஆகும். இக்களப்பிரர் யார்? என்ன காரணமாகத் திடுமெனத் தமிழகத்துக்குள் படையெடுத்தனர்? என்பது இன்னும் ஆராய்ச்சிக்குரிய செய்தியாகவே இருக்கிறது. ஆனால் அவர்கள், தமிழகத்தின் வட எல்லையில் இன்று கன்னட நாடு என்றும் தெலுங்கு நாடு என்றும் அழைக்கப்படும் வடுக நாட்டின் தென் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிச் சாய்ந்த நாடோடிக் குடிகளாவர். அவர்கள் படையெடுப்பும் ஆதிக்கமும் கி.பி. 250 க்கும் கி.பி. 550 க்கும் இடைப்பட்டவை. களப்பிரர் தமிழ்ப் பண்பாட்டுக்கு முற்றிலும் அயலானவராய் இருந்தனர் என்பதை நாம் ஒத்துக்கொள்ள முடியும். ஏனெனில் படையெடுப்புக்குப் பிற்பட்ட தமிழர் ஆதாரங்கள் அவ்வாறே குறிக்கின்றன. அவர்கள் பெரிதும் சமண சமயத்தவராய் இருந்தனர் என்றும் அறிகிறோம். அசோகன் புத்த சமயத்தையே இலங்கை வரை பரப்பினாலும், சமண சமயமும் அவன் காலத்துக்குள்ளேயே மேல் வடுக நாடு அல்லது தற்காலக் கன்னடநாடுவரை பரவியிருந்தது. புத்த சமயமோ பெரிதும் கீழ்கரை வழியாகவே வந்தது. களப்பிரர் கன்னடப் பகுதியிலிருந்தே வந்தனர் என்பதை இது காட்டுகிறது. பதிற்றுப் பத்துச் சேரர்களில் ஒருவன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன். அவன் தண்டாரணியம் என்ற வடுக புலக் காடுகளை வென்றான் என்று அறிகிறோம். இதுபோலவே ஆந்திரரின் தென்திசை ஆட்சித் தலைவரும், கரிகாலன் காலமுதல் சோழரும், இப்பகுதியில் நிலையான குடி வாழ்வு நிறுவப் பாடுபட்டனர். பிற்பட்ட சங்ககாலச் சோழர் பலர் ஆண்ட நாட்களில் இந் நாடோடிகளின் உதவியே போர்களை வடஎல்லைக்குக் கொண்டு வந்திருந்தன என்று கண்டோம். கி.பி. 250-ல் இப்பகுதியின் முத்திசையிலும் பேரரசுகள் சரிந்தன. அதே சமயம் கி.பி.250 முதலே விந்திய மலைக்கு அப்பாலிருந்தும், சிந்து ஆற்றுக்கு அப்பாலிருந்தும் பண்டை ஆரியரை ஒத்த நாடோடிகள் மேலை இந்தியா, நடு இந்தியா கடந்து தெற்கு நோக்கி நெருக்கினர். இவ்வுந்துதலின் பயனாகவும் முன்னைய எதிர்ப்புக்களின் பயனாகவும் வளமான தமிழகத்தின் மீது சரிந்த வடுக நாடோடிக் குழாத்தினரே களப்பிரர் ஆவர். காஞ்சியில் சோழர் ஆட்சிச் சரிவின்பின் எழுந்த புது ஆட்சியாளரே ஆந்திரர் கீழ்ச்சிற்றரசராக இருந்த பல்லவர். இவர்கள் ஆட்சி தொடங்கியது கி.பி. 250லேயே. அதுவே முதலில் களப்பிரர் தாக்குதலால் சரிவுற்றுச் சிலகாலம் வடக்கே ஒதுங்கி நின்றது. விரைவில் சோணாடும், பாண்டி நாடும் இதே தாக்குதலுக்குள்ளாயின. இடைக்காலப் பாண்டியப் பேரரசருக்குரிய ஆதாரங் களான வேள்விக்குடிச் செப்பேடுகளும், சின்னமனூர் செப்பேடு களும் இக்களப்பிரர் படையெடுப்புப் பற்றியும் அதனால் ஏற்பட்ட தமிழரசுகளின் அழிவைப் பற்றியும் நமக்குக் கூறுகின்றன. களப்பிரர் படையெழுச்சிக்கு முன் ஆண்டதாகப் பல்சாலை முதுகுடுமியையும் தலையாலங்கானத்துப் பாண்டியனையும் மட்டுமே அவை குறிப்பிடுகின்றன. “தலையாலங் கானத்தில் தன்னொக்கும் இருவேந்தரைக் கொலைவாளில் தலைதுமித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும், மாபாரதம் தமிழ்ப்படுத்தும், மதுராபுரிச் சங்கம்வைத்தும், மகாராசரும் சார்வபௌமரும் மகீமண்டலம் காத்திகந்தபின்” என்று சின்னமனூர்ச் செப்பேடுகளும், ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ வேள்விக்குடி என்னும் ஊரைக் கொற்கை கிழான் நற்கொற்றன் என்பானுக்குத் தர, அவன் அதை. நீடு புக்தி துய்த்த பின், அளவரிய அதிராசரை அகல நீக்கி அகலிடத்தைக் “களப்பிரனெனும் கலியரசன் கைக் கொண்டதனை இறக்கிய பின்... “கடுங்கோனெனும் கதிர்வேல் தென்னன்” என்று வேள்விக்குடிச் செப்பேடுகளும் கூறுகின்றன. ஆனால், களப்பிரர் வடுக நிலத்திலிருந்து வந்த தமிழினத்த வரே யன்றி அயலினத்தவரோ, அயல் மொழியினரோகூட அல்ல என்பதை இவ்வாதாரங்களின் தொனியே காட்டுகின்றன. அவர்கள் அயல் பண்பும், அயல் சமயமும் குறிக்கப்படுகிறது; அயல் மொழி குறிக்கப்படவில்லை. அயல் சமயம் என்பது சமய நூல்களாலன்றித் தெரியவில்லை. இன்று களப்பிரர் யார் என்று தெரிய வராததும் இதனை வலியுறுத்தும். இங்கிலாந்தில் பண்டை ஆங்கிலோ சாக்ஸனியருடனும், பிரஞ்சு மக்களுடனும் புடேனியர் கலந்து விட்டதுபோல, அவர்களும் தமிழருடன் இரண்டறக் கலந்துவிட்டனர். அவர்களால் தமிழகத்துக்கு ஏற்பட்ட ஒரே குறை பண்டைத் தமிழர் உயர் நாகரிக மரபும், பண்பாட்டு மரபும் இன்றுவரை முற்றிலும் மீளமுடியாமல் மனம் தடுமாறிப் போனதே யாகும். களப்பிரர் ஆட்சி கலியாட்சி என்றும் அயலாட்சி என்றும் பிற்கால நூல்கள் மிகைப்படுத்தியது சமய வேறுபாடு காரணமாக மட்டுமே. களப்பிரர் படையெடுப்பு மக்களிடையே ஒரு சமுதாய மாற்றமாகவும் பண்பாட்டு மாற்றமாகவும் சில இடங்களில் ஆட்சி மாற்றமாகவும் இருந்ததேயன்றி, ஒரே அழிவாக இருந்ததில்லை. சங்க காலத்துக்குச் சிறிது பிற்பட்ட பாண்டி நாட்டிலேயே மாணிக்கவாசகர் வாழ்ந்து இறவாப் பாடல்கள் பாடியுள்ளார். கல்லாடர், திருமூலர் வாழ்ந்ததும், சேந்தன் திவாகரம் முதலிய புதுநூல்கள் எழுந்ததும், சீவகசிந்தாமணி முதலிய புதிய சமண காவியங்கள் எழுந்ததும், இக்காலத்திலேயேதான். சைவ நாயன்மார், வைணவ ஆழ்வார்களில் முற்பட்ட சிலர் இக்காலத்தவரே. நமக்கு முழு விவரம் தெரியாவிட்டாலும் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை வலி குன்றியவராகவோ வலியுடையவராகவோ பாண்டிய சோழர் இக்காலங்களிலும் ஓரளவு ஆட்சி செய்யாமலில்லை. பொதுவாக தமிழக முதன்மைப் போட்டியின் நலிவுக்குமே காரணமாயிருந்திருக்க வேண்டும். வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ப் பட்டயம் ஆகிய வற்றின் வாசகங்களை நோக்க, பாண்டி நாட்டில் பாண்டியன் கடுங்கோன் ஆட்சியிலேயே களப்பிரர் அரசு கைக் கொண்டனர் என்றும், அவனாலேயே அது மீண்டும் கைப்பற்றப் பட்ட தென்றும் எண்ண இடமுண்டு. அத்துடன், “துன்னு சேனையில் துளங்கிய ஒருகரு நாட மன்னன் அன்ன நான் வதிந்தருள் தென்னனை ஓட்டிக் கன்னிமண்டலம் கொண்டு அமண் கையர் கை விழுந்து முள்னம் நீடிய வைதிக நெறியையும் ஒழித்தான்” என்று திருவிளையாடற் புராணப் பாடல் கூறுவதும் இதனை வலியுறுத்துகின்றது. 8. பேரரசுப் போட்டி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தின் பேரரசு வளர்ச்சிக்குரிய போட்டி தமிழகத்துக்குள்ளேதான் இருந்தது. தமிழகம் கடந்து வேறு புறப் போட்டி இருந்ததில்லை. ஏனெனில் தமிழகத்துடன் ஒத்த, ஒருவேளை தமிழகத்துக்கு அடுத்தபடியான பழமையான புற உலகப் பேரரசுகள் எகிப்திய, ஹித்தைத்திய, அசரிய, சீனப் பேரரசுகளே. இவற்றுடன் தமிழகம் வாணிகம், கலை, நாகரிகம் சார்ந்த நேசத்தொடர்பே கொண்டிருந்தது. ஆனால், நெடியோன் காலத்தில் முதல் முதலாகக் கீழ் திசையில் கடல்கடந்த கடாரத்தின் பேரரசுப் போட்டி எழுந்தது. அதன்பின், கடைச்சங்க காலங்களில், புத்தருக்கு முற்பட்டும் பிற்பட்டும், வடகிழக்கே, ஆந்திர, கலிங்க, மகதப் பேரரசுகள் தொடக்கத்தில் பேரரசுப் போட்டியும், பின் நேசத் தொடர்பும் கொண்டிருந்தன. அந்நாளைய சூழ்நிலையே இந்நேசத் தொடர்புக்குப் பெரிதும் உதவிற்று. இந்திய மாநிலத்தில் நாகரிகக்கொடி தமிழகத்திலிருந்து கிழக்குக்கரையோரமாகவே படர்ந்து செல்வது காணலாம். இதே பண்பைத் தமிழின மொழிகளின் எல்லையும் காட்டுகிறது. வட மேற்கும் மேற்கும் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் இன்றளவும் படிப்படியாகப் பிற்பட்டேயுள்ளன. இதன் காரணங்களை நாம் நில இயலிலும் வரலாற்றிலுமே காணவேண்டும். பண்படா அயலினங்களின் வரவுக்கு வடமேற்குத் திசை எப்போதும் வாயிலாக இருந்து வந்துள்ளது. கி.பி. 150-ல் ஆரியர் அத்திசையி லிருந்து பரவிய நாள்முதல், கி.பி.1500 -ல் முகலாயர் அவ்வழி வந்து புகுந்ததுவரை, அவ்வாயில் அயலினப் படையெடுப்புக் களுக்கும், அயலினக் குடியெழுச்சிகளுக்கும் இடையறாத பாதையாகவே நிலவியுள்ளது. இத்தாக்குதல்கள் நேர் கிழக்காகவும் தென் கிழக்காகவும் தெற்காகவும் பரந்தன. வடமேற்கும் வடக்கும் மேற்கும் பழம் பண்பாட்டு வளத்தில் பிற்பட்டதற்கு இப் பண்படாத் தாக்குதல்களே காரணம் ஆகும். வடமேற்குத் திசையிலிருந்து வந்த இந்த அலைகளில் முதற் பேரலை கி.மு. 5,3-ஆம் நூற்றாண்டுகளில் பாரசீக, கிரேக்க படை யெடுப்புகளுடன் முடிவடைகின்றது. இதனால் தமிழகம் கடந்த மாநில நாகரிக வாழ்வு முற்றிலும் அழிந்துவிடவில்லை. கீழ் கோடியில் மகத நாகரிகம் ஆரிய இனத்துடன் கலப்புற்றுத் தன்னை ஆரிய நாகரிகம் என்றே அழைத்துக் கொண்டாலும், அது பழைய நாகரிகத்தின் ஒரு புதுமலர்ச்சியாகவே நிலவிற்று. இதனைப் பழைய ஆரிய நாகரிகம் அதாவது புத்த -சமண, பாளி-பாகத கால ஆரிய நாகரிகம் என்னலாம். இது தமிழகப் பண்பாட்டுடனும் ஆந்திர -கலிங்கப் பண்பாட்டுடனும் இழைந்து, அவற்றின் நிலவொளியிலும் தென்றலிலும் வளர்ந்ததாதலால், அவற்றுடன் இணைந்து ஒரே நாகரிகக் கொடியாய் இலங்கிற்று. வடமேற்கிலிருந்து வந்த புது அயல் பண்பாடுகளின் தாக்குதலை எதிர்த்துச் சமாளிக்கும் வகையில் அந்நாகரிகங்கள் தமிழகத்தின் உதவியையும் ஒத்தாசையையும் நாடின. கி.மு.3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3-ம் நூற்றாண்டு வரையும் வடமேற்கிலிருந்து யூச்சியர், குஷாணர், பார்த்தியர், படையெடுத்தனர். அவர்கள் வடமேற்கிலும் வடக்கிலும் மேற்கிலும் பல பேரரசுகளையும் அரசுகளையும் அமைத்து விரைந்து பரவினர். மாநில வாழ்வு இதனால் மீண்டும் கலகலத்தது. அது மட்டுமன்று. இதுவரை அயல் அலைகளால் பாதிக்கப்படாதிருந்த கீழ் திசை நாகரிகக் கொடியையும் அவை பாதிக்கத் தொடங்கின. அக்கீழ் திசைக்கொடி இதுவரை தமிழகத்தையே தலைமையகமாகவும் உயிர் நிலையாகவும் கொண்டு, ஒன்றுபட்ட ஒரே நாகரிகமாக வளர்ந்து வந்தது. புதிய அலை அதனைத் துண்டுபடுத்தி, இருவேறு வகைப்பட்ட வளர்ச்சிகளாக்கிற்று. இரண்டிலும் பெருத்த மாறுபாடுகளை உண்டுபண்ணிற்று. வடதிசையில் பாளி-பாகத மொழி சார்ந்தும், புத்தசமண சமய நெறிகள் சார்ந்தும் வளர்ந்த மகத நாகரிகத்தில் முதலில் மொழி மாறுபட்டது. பாளி-பாகத நாகரிகமாயிருந்த சமய வாழ்வும் திரிபுற்று, புத்த -சமணநெறி சார்ந்த நாகரிகமாயிருந்து அது இப்போது வைதிக நெறி சார்ந்ததாயிற்று சோழப் பேரரசின் ஆற்றல் மூலம் மீண்டும் தாய்மொழி சார்ந்த நாகரிகம் மாநிலமெங்கும் பரவும்வரை அது ஒரு புதிய இடைக்கால ஆரிய நாகரிகமாக ஆயிர ஆண்டுக்கு மேற்பட வளர்ந்தது. வடமேற்கு அலை, நாகரிகக் கொடியின் தலையூற்றாக இருந்த தமிழகத்தை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், அது பாதிக்காமலே இருந்திருந்தால், இந்தியாவின் வரலாறும் ஆசியாவின் வரலாறும், கீழ் திசையின் வரலாறும் வேறாய் இருந்திருக்கும். உலக நாகரிக வரலாறே வேறுபட்டிருக்கும். வடமேற்கு அலை தென்னாட்டின் வடமேற்குப் பகுதியில் ஆந்திரப் பேரரசை நிலைகுலையச் செய்தது. அதன் தென் எல்லையிலும் தமிழக வட எல்லையிலும் இருந்த பண்படாத் தமிழின மக்களான களப்பிரரை அது தமிழகத்தின் மீது புரளும்படி செய்தது. இதன் மூலம், தமிழர் நாகரிகம் களப்பிரரை நாகரிகப்படுத்தி மேல் திசையில் பரவுவதற்கு மாறாக, களப்பிரர் நாகரிகமே தமிழ் நாகரிகத்தின் புகழ் மரபைக் கிட்டத்தட்ட அழிக்கும்படி நேர்ந்தது. களப்பிரர் என்பவர் கடலோரமாக முத்திசையிலும் வளர்ந்த தமிழ் நாகரிகத்தில் ஒதுங்கிவிட்ட தமிழின மலங்குடி மக்களே. அவர்கள் திருப்பதிக்கு வடக்கேயுள்ள காடுகளில் வேட்டையாடியும் ஆடுமாடு மேய்த்தும் காடோடிகளாக வாழ்ந்தவர்கள். மேற்கிலிருந்து சேரரும், தெற்கிலிருந்து சோழரும், கிழக்கிலிருந்து புதிய தமிழக அரசரான பல்லவரும், வடக்கிலிருந்து ஆந்திரரும் அவர்கள் நாட்டில் உழவும் குடியும் புகுத்தி நெருங்கி வந்தனர். இவர்களுள்ளும் தமிழக அரசர் களுள்ளும் நடந்த போர்களில் அவர்கள் ஈடுபட்ட தனாலேயே, தமிழகத்தில் சோழநாட்டின் வட எல்லை பல போர்களுக்கு ஆளாயிருந்தது என்று கண்டோம். வடக்கிலிருந்து பண்படா இனங்களின் தாக்குதலே இவர்களை அலையலையாகத் தெற்கு நோக்கிக் கொண்டுவந்து தமிழகத்தின் மீது புரளச் செய்தது. பல்லவர் குடிமரபின் தொடர்புகள் பல்லவர், பண்படா அயலினங்களுள் ஒன்றான பஃலவரே என்று சிலரும், பாளி சமஸ்கிருத நாகரிகத்தையே முதலில் பெரிதும் ஆதரித்ததனால் வடதிசையினரே என்று வேறு சிலரும் கருதியுள்ளனர்; அவர்கள் சோழ மரபினர் என்று எண்ணுபவரும் உண்டு. பல்லவர் என்பது நாடு குறித்த, அல்லது இனம் குறித்த பெயர் அன்று. அது குடிப்பெயரே என்பது தெளிவு. திரையர் இனத்தவரே பெரிதும் வாழ்ந்த தொண்டை நாட்டை அவர்கள் நீடித்து ஆண்டனர். அவர்கள் சோழ மரபுடனோ ஆந்திர மரபுடனோ களப்பிரருடனோ தொடர்புடையவராயிருக்கக் கூடும். ஆனால், மூவகையிலும் அவர்கள் தமிழர் அல்லது தமிழினத்தவர் என்பது தெளிவு. அவர்கள் பாரத்துவாச கோத்திரத்தவர் என்று கூறிக்கொண்டதுண்டு. ஆனால், இது திரையர் அல்லது பரதவர் குலமரபுக்கொத்ததே. அவர்கள் கொடிகளும் சின்னமும் கிட்டத்தட்டச் சோழருக்குரியதே. அவர்கள் பாளி-சம்ஸ்கிருத ஆதரவு உண்மையில் அவர்கள் புத்த -சமண நெறியையே காட்டுகிறது. களப்பிரரும் தமிழகத்தில் பாண்டியர்களும் பல்லவர்களும் ஏழாம் நூற்றாண்டு வரை சமணரே என்பதும், ஆந்திரப் பேரரசர்கள் பலர் புத்த நெறியினர் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கன. களப்பிரர் குடியெழுச்சி கி.பி.3-முதல் 5-ஆம் நூற்றாண்டு வரை பரவியிருத்தல் வேண்டும். பல்லவர் ஆட்சி காஞ்சியில் அமைந்ததும் இக்காலத்தின் தொடக்கத்திலேயே. ஆனால், மூன்றாம் நூற்றாண்டிலிருந்த சோழ அரசும், நான்காம் நூற்றாண்டில் பல்லவ அரசும், ஐந்தாம் நூற்றாண்டில் பாண்டிய அரசும் அவர்கள் படையெடுப்பால் வீழ்ச்சியடைந்திருத்தல் கூடும். தொண்டைநாடிழந்த பல்லவர், தமிழகத்துக்கு வெளியில் இருந்து கொண்டே, தங்கள் பட்டயங்களில் காஞ்சியில் ஆண்டதாகக் குறித்துக் கொள்கின்றனர். ஆறாம் நூற்றாண்டின் இறுதியில்தான் பல்லவன் சிம்ம விஷ்ணு ஒரு புறமும், பாண்டியன் கடுங்கோன் மறுபுறமும் (575-600) களப்பிரரைத் துரத்தித் தமிழகத்தில் தத்தம் அரசை நாட்டியதாகப் பெருமையுடன் கூறிக் கொண்டனர். ஒருவேளை இரு சாராரும் ஒன்றுபட்டே இச்செயலை ஆற்றியிருத்தல் கூடும். களப்பிரர் வீழ்ச்சியின் பின்னும் சோழர் ஒரு சிறு பகுதியில் சிற்றரசராகவே இருந்தனர். பாண்டியரும் பல்லவரும் தமிழகத்தின் புதிய பேரரசராக விளங்கினர். அடுத்த மூன்று நூற்றாண்டுகளின் தமிழக வரலாறு பெரிதும் பாண்டியர் பல்லவர் பேரரசுப் போட்டியாகவே இருக்கின்றது. ஆனால், இப்போது பேரரசுப் போட்டி தமிழகத்துடன் நிற்கவில்லை. தென்னாட்டரசியல் எல்லை முழுவதிலும் அப்போட்டி பரவி விட்டது காண்கிறோம். ஆந்திரப் பேரரசின் அழிபாட்டி னிடையே வடக்கில் சாளுக்கியரும் தெற்கில் கங்கரும் தமிழகத்துக்கு வடக்கிலிருந்து பாண்டிய பல்லவருடன் தலையிட்டுப் போட்டியிட்டனர். அவர்களிடையே தமிழகத்தில் சோழரும், வடக்கே கடம்பர், பாணர், வைடும்பர், நுளம்பர், தெலுங்கச்சோடர் ஆகியவர்களும் போட்டியில் ஒவ்வொரு தரப்பிலும் சேர்ந்து பங்கு கொண்டனர். சாளுக்கியருக்கு வடக்கே சிந்து கங்கை சமவெளியில் கி.பி. 4-5-ம் நூற்றாண்டுகளில் குப்தப்பேரரசும் 7-ஆம்நூற்றாண்டில் ஹர்ஷரின் தானேசுவரப் பேரரசும் இருந்தன. கரிகாலனும் செங்குட்டுவனும் வடதிசை சென்று வீர வெற்றி பெற்றது போலவே, குப்தர்களில் சமுத்திர குப்தன் வெற்றி உலாப்புறப் பட்டான் என்று கூறப்படுகிறது. அவன் காஞ்சிவரை படையெடுத்தான் என்றும், காஞ்சியில் விஷ்ணுகோபன் என்ற அரசன் அவனை எதிர்த்துத் திருப்பியோட்டினான் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷ்ணுகோபன் கி.பி. 4-ஆம் நூற்றாண்டி லிருந்த ஒரு பல்லவனேயாகலாம் என்றும் வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். சிலர் சமுத்திரகுப்தன் அவ்வளவு தென்கோடி வரை வரவில்லையென்றும், விஷ்ணுகோபன் முதலிய அரசர் கலிங்க நாட்டில் சென்றே போரிட்டனர் என்றும் சொல்கிறார்கள். அடுத்த குப்த அரசன் இரண்டாம் சந்திரகுப்தன் அல்லது விக்கிர மாதித்தன் விந்தியத்துக்கு வடக்கே வங்காளத்திலிருந்து கூர்ச்சரம் வரை இருகடலும் அளாவும் பேரரசு ஆண்டான். குப்த ஆட்சி சரிந்தபின் ஊணரை எதிர்த்து வெற்றி பெற்ற அரசன் ஹர்ஷனும் இதுபோலவே இருதிசைக் கடல் அளாவும் பேரரசை நாட்டி, தெற்கே சாளுக்கியரையும் வெல்லக் கனவுகண்டு கொண்டிருந்தார். சாளுக்கியருக்கு இங்ஙனம் வடக்கே ஹர்ஷனும் தெற்கே பல்லவரும் போட்டியாயினர். பல்லவருக்கோ வடக்கே சாளுக் கியரும் தெற்கே பாண்டியரும் போட்டியானார்கள். எனவே 7-ஆம் நூற்றாண்டு ஹர்ஷ - சாளுக்கியப்போட்டி, சாளுக்கிய- பல்லவப் போட்டி, பல்லவ -பாண்டியப் போட்டி ஆகிய பல திசைப் போட்டிகளுக்கு ஆளாயிருந்தது. சாளுக்கிய பல்லவப் போட்டி: புள்ளலூர்ப்போர் பல்லவன் மகேந்திரவர்மன் கி.பி. 610 -லிருந்து 630 வரை ஆண்டான். அவன் தந்தை காலத்திலேயே பல்லவப் பேரரசு தொண்டை நாடு, சோழ நாடு ஆகியவற்றுடன் வடதிசையில் கோதாவரி கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையிலுள்ள வேங்கை (தற்காலக் கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர் அடங்கிய) நாட்டையும் வென்று உட்கொண்டு பரந்திருந்தது. இதே காலத்திய சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியும் கடம்பரையும் மற்ற சிற்றரசர்களையும் வென்று பல்லவன் எல்லைவரை தன் பேரரசைப் பரப்பி, பல்லவர் மீது பாயச் சமயம் பார்த்திருந்தான். பல்லவப் பேரரசுக்குத் தெற்கில் சிற்றரசரான சோழரும் பாண்டியப் பேரரசரும் இருந்தனர். அதன் மேற்கே கங்கர் வலிமை வாய்ந்த சிற்றரசராய் இருந்தனர். புலிகேசி முதலில் கங்க அரசனாகிய துர்வினீதனைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பல்லவப்பேரரசின் மீது படையெடுத்தான். சாளுக்கியர் நம் வெற்றிகளைப் பற்றியும் பல்லவர் தம் வெற்றிகளைப் பற்றியும் மட்டுமே குறித்துள்ளனர் என்று தோன்றுகிறது. இந்தப் போர் பற்றி இருதரப்புகளும் இருவேறுபட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன. புலிகேசியின் ‘ஐஹோளே’க் கல்வெட்டு அவன் வெற்றியை வானளாவப் புகழ்கிறது. அவன் படைகள் பேரரசை முற்றிலும் அலைக்கழித்தன. பல்லவ அரசன் படையுடன் காஞ்சி நகருக் குள்ளே சென்று தஞ்சம் புகுந்தான். சாளுக்கியப் படைகள் காஞ்சி கடந்து தெற்கே வந்தன. பல்லவப் பேரரசு முழுவதையும் ஆட் கொண்டபின் சாளுக்கியப் படைகள் மீண்டன. சாளுக்கியப் படைகள் எழுப்பிய தூசிப்படலம் பல்லவ மன்னரின் ஒளியை மங்கச் செய்தது. இதுவே அப்பட்டயம் தரும் விவரம் ஆகும். சாளுக்கிய ஆதாரங்கள் வெற்றியின் இன்னொரு பகுதியைப் பற்றியும் கூறுகின்றன. சாளுக்கியர் வேங்கை நாட்டைப் பல்லவர்களிடமிருந்து வென்றனர். புலிகேசி அதைத் தன் தம்பி விஷ்ணுவர்த்தனனுக்குக் கொடுத்து, அவனை அங்கே அரசனாக்கினான். இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. ஏனெனில் இந்த விஷ்ணு வர்த்தனனே கீழை சாளுக்கியர் என்ற ஒரு புதிய மரபுக்கு முதல்வனானான். புலிகேசியின் மூல மரபு இதன் முன்பே சாளுக்கியர் என்று பெயர் பெற்றது. சாளுக்கியரின் இந்தப் பிளவு பின்னாளில் சோழப் பேரரசின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிற்று. பல்லவர்களுடைய காசக்குடிப் பட்டயம் போரின் மற்றொரு புறத்தை நமக்குத் தீட்டிக் காட்டுகிறது. ‘மகேந்திரன் தன் நாட்டின்மீது படையெடுத்த பகைவர் களைப் புள்ளலூரில் முறியடித்துத் துரத்தினான்’ என்று கூறுகிறது அது. இரண்டு தரப்புக்கள் தரும் விவரங்களும் சேர்ந்தால் முழு உண்மையும் தெரியவரும். புள்ளலூர் என்பது காஞ்சிபுரத்துக்குப் பத்துக் கல்தொலை விலுள்ள ஒரு ஊர்; புலிகேசியும் துர்வினீதனும் முதலில் பல்லவப் பேரரசு முழுவதும் தாக்கிச் சூறையாடினார்கள். சோழ பாண்டியரையும் புலிகேசி பல்லவருக்கெதிராகத் தூண்டி விட்டிருந்ததனாலேயே இது எளிதில் முடிந்தது. தென் எல்லையில் தென் தமிழரசர் படைகளும், வடதிசையில் சாளுக்கியப் படைகளும் ஒரே சமயத்தில் ஒருங்கே தாக்கியதாலேயே பல்லவன் மகேந்திரன் காஞ்சிக் கோட்டைக்குள் சரணமடைய நேர்ந்தது. இத்தறுவாயைப் பயன்படுத்திச் சாளுக்கியர் பல்லவப் பேரரசின் வடபகுதியையும் கவர்ந்துகொள்ள முடிந்தது. ஆனால், போர் முடிவில், பல்லவன் படைகளுடன் வெளி வந்து காஞ்சிக்கு வெளியே முற்றுகையிட்ட சாளுக்கியப் படை களைத் தாக்கினான். அவர்களைத் துரத்தியடித்து, புள்ளலூர்ப் போரில் அவர்களை முறியடித்துப் பல்லவ அரசின் எல்லையி லிருந்தே அப்புறப்படுத்தினான். புள்ளலூர்ப் போர் பல்லவ வெற்றியானதனாலேயே அதைப் புலிகேசியின் பட்டயங்கள் குறிப்பிடவில்லை. ஆனால், பல்லவப் பேரரசு இதற்குப் பின்னும் தன் பழைய எல்லையில் ஆட்சி செலுத்திவந்தது. இது புள்ளலூர் வெற்றிக்குச் சான்று. அத்துடன் புலிகேசி இதுபற்றிக் குறிப்பிடாவிட்டாலும் அவனுடன் நின்று போரிட்ட துர்வினீதன் கல்வெட்டுக்கள் இதைக் குறிப்பிடுகின்றன. புள்ளலூருடன் முடிவடைந்த போராட்டம் இரு சார்பு களுக்கும் வெற்றி தோல்வியில்லாச் சம நிலைப் போராட்டமே என்று கூறத்தகுமானாலும், பல்லவப் பேரரசு அதனால் வேங்கை நாட்டை இழந்தது. இது அதற்கு ஒரு வலிமைக் கேடே என்று கூறலாம். ஆனால், அதே சமயம் வளர்ந்துவரும் சாளுக்கியப் பேரரசுக்குப் பல்லவப் பேரரசன் புள்ளலூர் வெற்றி, ஒரு தடை யாயிற்று என்றும் கூறவேண்டும். மகேந்திரவர்மன் ஒரு பேரரசன், பெருவீரன், அத்துடன் அவன் ஒரு தலைசிறந்த கலையார்வலனாகவும் கலைஞனாகவும் விளங்கினான். பல கோயில்களை அவன் கட்டியதனால் அவன் சேதகரி (சைத்தியம், கோயில்காரி; செய்தவன் சைத்யகாரி, அல்லது சேதகரி, கோயில் கட்டியவன்) என்றும், ஓவியங்கள் பல அவற்றிலே தீட்டியதால் சித்திரக்காரப்புலி என்றும் அழைக்கப்பட்டான். செங்கற்பட்டுக்கருகிலுள்ள வல்லத்திலும் திண்டிவனத்துக்கருகிலுள்ள தளவனூரிலும், அரக்கோணத்தை அடுத்த மகேந்திரவாடியிலும் இவன் சமணர்களுக்குரிய குகைக்கோயில்கள் கட்டினான். இம்மன்னன் தொடக்கத்தில் சமணனாயிருந்து, தேவாரப் புகழ் வாய்ந்த திருநாவுக்கரசு நாயனார் என்கிற அப்பரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டான். சைவனானபின், இவன் தென்னார்க்காட்டு மாவட்டத்தில் திருவதிகையிலுள்ள சமணப்பள்ளியை இடித்துத் தன் பட்டப் பெயரான ‘குணபரன்’ என்ற தொடரால் குணபரேசுரம் என்ற சிவன் கோயில் கட்டுவித்தான். இச்செய்தியை அவனது திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. தென்னாட்டில் மரம், செங்கல், சுண்ணாம்பு இல்லாமல் முதல் முதல் கற்குடைந்து கோயில் கட்டியவன் இவனே. இதைத் தென் ஆர்க்காட்டு மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டுக் கல்வெட்டுத் தெளிவாக்குகிறது. இதுவரை இருந்த தமிழ்க்கோயில்கள் மரத்தாலோ, சுண்ணத்தாலோ கட்டப்பட்டன வென்பதையும், இதனாலேயே அவற்றை நாம் இன்று காண முடியவில்லை என்பதையும் இது விளக்குகிறது. காஞ்சியில் வயல்களெங்கும் காணப்படும் கல் இலிங்கங்கள் இடிந்து தகர்ந்த இந்தப் பழைய கோயில்களின் மூல இலிங்கங்களேயாகும். அந்நாளைய இசைக்கலையில் இம்மன்னன் தேர்ச்சிபெற்ற வனாயிருந்தான். சில புதிய சுரங்களையும், பண்களையும் அவனே சமைத்தான் என்று அவன் குடுமியாமலைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. நடன ஓவியக் கலைகளில் அவன் சிறப்பையும், அவன் காலச் சிறப்பையும் சித்தன்னவாசல் உயிரோவியங்கள் இன்றும் புலப்படுத்துகின்றன. அவன் சமஸ்கிருதத்தில் பெரும்புலவன். சமண மதத்தினனாக இருக்கும் சமயம் அவன் புத்தரையும் காபாலிக சைவரையும் நகைச்சுவை ததும்பத் தாக்கி, ‘மத்தஹாசப் பிரஹசனம்’ என்ற களிநாடகம் இயற்றினான். சிம்பிகைப் போர் பல்லவப் பேரரசின் மீது தன் அடுத்த தாக்குதலைத் தொடங்குமுன் இரண்டாம் புலிகேசி தன் நாட்டைச் செப்பம் செய்யத் தொடங்கினான். பாணர் தலைவனான இரண விக்கிரமனை முறியடித்து, இரண்டாம் புலிகேசி (606 -642) சிம்பிகைப் போரில் அவன் நாட்டைச் சூறையாடினான். அவன் நாட்டில் பொன்னாகவே நேரடியாக வரிவசூலித்து, அதைத் திறையாகக் கொண்டு சென்றான். இந்தத் திறை திரப்பொன் (திறைப்பொன்) என்று குறிக்கப் பட்டுள்ளது. வடதிசைப் பெரும்போர் புலிகேசி தெற்கே திரும்புமுன் வடதிசையில் ஹர்ஷவர்த் தனஸ் என்ற கன்னோசிப் பேரரசன் தெற்கே படையெடுப்பதாக அவனுக்குத் தெரியவந்தது. அவன் வடதிசை நோக்கிச் சென்றான். ஹர்ஷனும் புலிகேசியும் ஈடுபட்ட போரில் ஹர்ஷன் முறியடிக்கப் பட்டான். புலிகேசி இந்த வெற்றியைப் பயன்படுத்தி வடநாட்டின் மீது படையெடுக்க விரும்பவில்லை. தெற்கேயிருந்த பல்லவப் பேரரசை எண்ணி அவன் வடக்கே சமரசம் செய்துகொண்டு திரும்பினான். கோயத்தார், தண்டக்கல், முனயத்தூர்ப் போர்கள் பாணர்கள் மீண்டும் புலிகேசியை எதிர்த்துப் போரிட்டனர். புலிகேசியின் கீழ்ச் சிற்றரசனாயிருந்த கங்கத்தலைவன் மாதவ முத்தரசன் அல்லது முத்தய்யா என்பவன். அவன் கோயத்தார், தண்டக்கல், முனயத்தூர் என்ற இடங்களில் அவர்களை முறியடித் தான். கோயத்தூர் என்பது சித்தூர் மாவட்டத்தில் புங்கனூர்ப் பெருநிலக் கிழமையைச் சார்ந்த ஓர் ஊர் ஆகும். சாளுக்கிய - பல்லவப் போட்டி பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலாம் மகேந்திர வர்மனுக்குப்பின் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் (630 -668) பேரரசனானான். முந்திய பல்லவனாட்சியில் புள்ளலூரில் அடைந்த தோல்வியைக் கழுவும் எண்ணத்துடன் புலிகேசி இப்போது படையெடுத்தான். இப்போரில் பல்லவனே பெரு வெற்றியடைந்தான். சாளுக்கியர் நாட்டின் மீதே எதிர் தாக்குதல் நடத்திச் சாளுக்கியப் பேரரசன் கொட்டம் ஒரு தலை முறைக்கு மீண்டும் எழாதவாறு செய்தான். இப்போரின் விவரங்களைப் பல்லவர்களின் வேலூர்ப் பாளையம் செப்பேடுகளும், கூரம் செப்பேடுகளும் நமக்கு விரித்துரைக்கின்றன. பரியளம், மணிமங்கலம், சூரமாரம் என்ற மூன்று இடங் களில் தொடர்ந்து பல்லவன் பெருவெற்றி பெற்றான், சாளுக் கியப் படைகளைப் பல்லவப் பேரரசின் எல்லைக்கப்பால் துரத் தினான். மணிமங்கலம் என்பது காஞ்சிக்கு இருபது கல் தொலைவில் இன்றும் உள்ள ஊரே. பரியளமும் சூரமாரமும் அணிமையிலேயே இருந்திருக்கக்கூடும். இப்போர்களில் ‘யானைக் கூட்டத்துக்குச் சிங்கம் போன்றவனும், நரசிங்கப் பெருமானை ஒத்தவனும், வணங்கா முடிமன்னர் மகுடத்தின்மேல் இருக்கும் சூடாமணியைப் போன்றவனுமான நரசிம்மவர்மன் வெற்றியென்னும் பதத்தைப் புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தின் மீது எழுதினான்’ என்று அணியலங்காரமாகக் கூரப் பட்டயம் குறிக்கிறது. வாதாபிப் பேரழிவு கி.பி. 642 சாளுக்கியரை முறியடித்ததுடன் நரசிம்மவர்மன் அமைய வில்லை. அவன் சாளுக்கியர் தாயத்தின்மீதே படையெடுத்துச் செல்ல முனைந்தான். இதே சமயம் முன் சாளுக்கியப் போரில் பாண்டியர் தெற்கில் படையெடுத்ததுபோல, இப்போதும் படை யெடுத்ததாகத் தெரிகிறது. எல்லைப்புறப் படைகளைப் பாண்டியன் வென்றதால், மன்னன் விரைந்து தெற்கே செல்லவேண்டியிருந்தது. அப்படியே மன்னன் சென்று பாண்டியனை வென்று அவனைப் பாண்டிய நாட்டுக்கே துரத்தியதாக அறிகிறோம். ஆனால், தெற்கே புறப்படுமுன், பல்லவன் ஒரு பெரும் படையைச் சாளுக்கியப் படையெடுப்புக்கு வடக்கே அனுப்பி வைத்தான். இச்சமயம் பல்லவப் பேரரசர் நரசிம்மவர்மன் படைத் தலைவர் தமிழர் வரலாற்றிலும், இலக்கியத்திலும், சமய வாழ் விலும் ஒருங்கே இடம் பெற்ற பரஞ்சோதியார் ஆவர். சைவத் திருத்தொண்டர் அறுபத்து மூவரில் ஒருவராகக் குறிக்கப் பட்ட சிறுத்தொண்டர் இவரேயாவர். படைத்தலைவர் பரஞ்சோதியார் தலைமையில் பல்லவப் பெரும்படை சாளுக்கியப் படைவீரரை அவர்கள் தலைநகரான வாதாபிக்கே துரத்திச் சென்றது. பல்லவர் சாளுக்கியப்படை களைக் கொன்று குவித்தனர். சாளுக்கியர் நாடு முழுவதும் திரிந்து சூறையாடினர். தலைநகரான வாதாபியைக் கைப்பற்றி அதை மண்ணோடு மண்ணாக்கி, அதன் எல்லையில் தம் வெற்றித் தூண் நிறுவினர். பல தலைமுறைகளாகச் சாளுக்கியர் சேகரித்து வைத்திருந்த பெரிய செல்வக் குவையையும் பொன்னையும் பரஞ் சோதியார் கைப்பற்றி, அவற்றைத் தம் பேரரசன் நரசிம்மவர்மன் முன் கொண்டு வந்து குவித்தார். தம் வெற்றிச் சின்னங்களுள் ஒன்றாக, பரஞ்சோதியார் வாதாபியிலிருந்து கொண்டு வந்த பெரிய பிள்ளையார் சிலையை அவர் காஞ்சிமாநகரில் நிறுவினார் என்றும், அத்தெய்வம் அதன் பின்னரே தமிழர் வணங்கும் தெய்வங்களுள் இடம்பெற்று, சிவபெருமானின் பிள்ளையாகிய முருகனுக்கு முன் பிறந்த மூத்த பிள்ளையாராக கொள்ளப்பட்டதென்றும் அறிகிறோம். ஏழாம் நூற்றாண்டுக்கு முன் சமய இலக்கியங்களில் பிள்ளையார் என்ற சொல் முருகனுக்குமட்டுமே வழங்கிற்று. முருகன், சிவன், திருமால் ஆகியவர்களே நூலின் காப்புக் கடவுள்களாக முன்பு வழங்கியது போல, இதுமுதல் பிள்ளையார் காப்புக் கடவுளாயினர். பிள்ளையார்- தொடக்கத்தில் மராத்தியர் தெய்வம் என்றும், மூன்று மனைவியர்களை உடையவர் என்றும் அறிகிறோம், முருகனே அந்நாளில் வடதிசையில் மணமாகாக் காளையாய் வணங்கப்பட்டார். எப்படியோ தமிழகத்தில் முருகனுக்கு இரு மனைவியர் இருந்ததாகச் சொல்லப்பட்டிருந்த தனால், பிள்ளையார் மணமாகாக் கடவுளாய்ச் சந்திகள், குளக்கரைகள், கோயில் வாயிற்படிகள் தோறும் இடம் பெற்றார். “வாதாபி கணபதிம் பஜே!” என்ற இக்காலப் பாட்டுக் கச்சேரிகளின் காப்புப் பாடலின் முதலடியில் கணபதி வாதாபியி லிருந்து வந்த இந்தச் செய்தி இன்றும் குறிக்கப்பட்டே வருகிறது! வாதாபி வெற்றியின் பின்னரே பரஞ்சோதியார் வீரப்புகழ் போதும் என்று விடுத்து, அசோகனைப் போல் அருட்புகழ் நாடி, தொண்டர்க்குத் தொண்டனாம் சிறுத் தொண்டரானார். அவர் திருத்தொண்டுகளை விரித்துரைக்கும் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் அவர் வாதாபி வெற்றியையும் திறம் படப் பாடியுள்ளார். “மன்னவர்க்கு தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொல்நகரம் துகளாகத் துணைநெடுங்கைவரை உகைத்தும் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னன எண்ணில கவர்ந்தே இகல் அரசன் முன்கொணர்ந்தார்!” வாதாபி அழிவிலேயே புலிகேசி போரில் இறந்து பட்டிருக்கவேண்டும். போரின் கடுமையும் அழிவும் சாளுக்கிய குலம், முன் என்றும் அறிந்திராத ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். ஏனெனில் வாதாபி நகரம் பின் என்றும் தலைநகரமாக இயங்கியதில்லை. தென்னாட்டின் பாழ்பட்ட நகரங்கள் பட்டியலில் அது நிலையாகவே இடம் பெற்றுவிட்டது. அத்துடன் வாதாபி அழிவின் பின் பதின்மூன்று ஆண்டுகள் சாளுக்கியப் பேரரசு அரசனில்லாப் பேரரசாகவே நிலவிற்று. அரசு நிலையில் பெருங் குழப்பத்துக்குள்ளாகியிருந்த பேரரசை இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தியன் திரும்பத் தந்தை காலநிலைக்குச் சீர்ப்படுத்தி முடிசூட்டிக் கொண்டது கி.பி. 655-லேயே ஆகும். சாளுக்கியருக்கெதிரான பல்லவர் போர்களில் இலங்கை அரசன் ஒருவனும் உதவியதாக விக்ரமாதித்தியன் ஆட்சியில் வெளியிடப்பட்ட கர்நூல் பட்டயத்தால் அறிகிறோம். பல்லவர் இலங்கைத் தொடர்பு நரசிம்மவர்ம பல்லவன் வடபுலமாகிய வாதாபியை மட்டு மல்ல, இலங்கையையும் வென்றான் என்று காசக்குடிப் பட்டயம் கூறுகிறது. இச்செயலைத் தசரத ராமன் செயலுடன் அது ஒப்பிடு கிறது. சாளுக்கியரைத் தோற்கடித்தவர் மூவர் என்று விக்கிரமா தித்தனும் கூறுகிறான். இம் மூவருள் நரசிம்மவர்மனுடனிருந்த மற்ற இருவர், பல்லவர் வடதிசையாண்டு முந்திய சாளுக்கிய வெற்றியால் பதவியிழந்த பல்லவ மாகாணத் தலைவன் ஒருவன். மற்றவன் இலங்கையரசனான மானவர்மனேயாகும். இவன் பகைவர்களால் தன் அரசிழந்து, காஞ்சியில் நரசிம்மவர்மனிடம் தஞ்சம் புகுந்திருந்தான் என்று இலங்கைப் பண்டை வரலாற்று ஏடான மகாவம்சோ கூறுகிறது. சாளுக்கியப் படையெடுப்பில் அவன் உதவி செய்ததன் பயனாக, பல்லவன் நரசிம்மவர்மன் அவனுக்கு ஒருபடை கொடுத்துதவி இலங்கை அரசியலை மீட்கும் படி அனுப்பினான். ஆனால், மானவர்மன் தன் எதிரி அரசனான அட்ட தத்தனுடன் போர் புரிந்து தோற்று விட்டான். பல்லவர்கள் சேர சோழ பாண்டியரைப் போலவே நல்ல கடற்படை உடையவராய் இருந்தனர். வெளிநாட்டு வாணிகம், குடியேற்றம், வெளிநாட்டுக் கல்வெட்டுக்கள் ஆகியவற்றில் முத்தமிழ் அரசர் பெயர்களும் நாட்டுப் பெயர்களும் அடிபடுவது போலவே, பல்லவ அரசர் பெயரும் குடிகள் பெயரும் மிகுதி இடம் பெற்றுள்ளன. மானவர்மன் தோல்வி பற்றிக் கேள்விப்பட்ட நரசிம்மன் ஒருபெரிய கடற்படையை இலங்கைக்கு அனுப்பினான். கடல் தள ஆதரவு பெற்ற இப்படை மானவர்மன் எதிரியாகிய அட்ட தத்தனைப் போரில் முறியடித்துக்கொன்று, மானவர்மனை அரசனாக்கிற்று என்று அறிகிறோம். பெரும்புகழ்ப் பல்லவர் பல்லவர்களில் மிகப் பெரும்புகழ் பெற்றவர்கள் முதலாம் மகேந்திரனும் முதலாம் நரசிம்மவர்மனுமே ஆவர். நரசிம்ம வர்மனுக்கு மாமல்லன் என்று ஒரு பட்டப் பெயரும் உண்டு. மாமல்ல புரத்தில் கடற்கரைக் கோயில்கள் மகேந்திரன் காலத்தில் தொடங்கப்பட்டாலும் இவன் காலத்திலேயே முடிவுற்றன. அதன் துறைமுகத்தையும் அவன் செப்பம் செய்து, அதையே தன் பேரரசின் தலைமைத் துறைமுகமாக்கினான். அவன் கடற் படைத்தளமாக இருந்தது அதுவே. இலங்கைப் படையெடுப்பு அங்கிருந்தே தொடங்கிற்று. அவன்பட்டப்பெயராகிய மாமல்லன் என்பதிலிருந்தே மாமல்லபுரம் அப்பெயர் பெற்றதெனப் பல வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். ஆனால், சங்க இலக்கியங்களிலே இத்துறைமுகப் பட்டினம் கடல் மல்லை எனக் குறிக்கப்படுகிறது. சங்க இலக்கியமே பல்லவர்களுக்குப் பிற்பட்டது என்று கூறுபவர் கூற்றுடன்கூட இது ஒத்துவராத செய்தி. ஏனெனில் அவர்கள் கூட இச் சங்ககாலம் சிம்மவிஷ்ணுவுக்கு முற்பட்ட காஞ்சி இழந்த பல்லவர்களுக்கே பிற் பட்டதென்பர். எனவே மல்லைக்கு அழகும் பெருமையும் உண்டு பண்ணி ‘மாமல்லை’ ஆக்கியவன் என்ற முறையிலேயே நரசிம்மவர்ம பல்லவன் ‘மாமல்லன்’ என்ற புகழ் பெயர் பெற்றான் என்னலாம். மாமல்லபுரம் பிற்காலத்தாரால் ‘மகாபலிபுரம்’ ஆக்கப் பட்டது. மாமல்லையில் அவன் அமைத்த ஐம்பெருந் தெய்வங்கள் (பஞ்சமூர்த்திகள்) கோயில்களும் பிற்காலத்தாரால் பஞ்சபாண்ட வரின் ‘தேர்கள்’ ஆகக் கொள்ளப்பட்டன. சங்ககால இலக்கியக் கலையழகைச் சிற்பத்திலும் ஓவியத் திலும் காட்டிய பல்லவர் சிறப்பை மேனாட்டவர் கண்டு வியந்து பாராட்டும்வரை கவனிக்காதிருந்த தமிழர், தேவார பெரிய புராண காலத்துக்குப்பின் பல்லவர் புகழை மறந்ததில் வியப்பில்லை. அத்துடன் இப்பல்லவர்கள் தமிழில் அக்கரை காட்டாமல் சமஸ்கிருதத்திலேயே மிகுதி ஈடுபட்டிருந்தனர் என்பதைக் கொண்டு அவர்கள் அயலினத்தவர் என்று வரலாற்றாசிரியர் பலர் கருத முனைந்து விடுகின்றனர். ஆனால், முழு உண்மையைச் சரிவரக் காண்பதானால், மரபிழந்து வந்த பழந்தமிழ்க் கலைச் சிறப்புக்களையெல்லாம் சமஸ்கிருதப் பெருமையாக்கிப் புது நிலப்பரப்பில் தவழவிட்டு, அதன் மூலம் பாளி - பாகத காலப் ‘பழைய ஆரிய’ நாகரிகத்தைப் பிற்காலப் ‘புதிய ஆரிய’ மாகிய சமஸ்கிருத ஆரியமாக வளர்த்த பெருமையில் பெரும் பகுதி பல்லவர்களுடையதேயாகும். வாதாபி, மாமல்லபுரம், நாமக்கல், குடுமியாமலை, புதுக் கோட்டையருகிலுள்ள திருமெய்யம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் இப்பல்லவன் குiக்கோயில்கள் கட்டினான். அவன் சில ஆண்டுகளேனும் வாதாபியை ஆண்டான் என்பதை வாதாபிக் குகைக்கோயில்கள் காட்டுகின்றன. லால்குடிக்கு அருகிலுள்ள பல்லாவரத்திலும் காஞ்சியிலும் அவன் கோட்டைகள் கட்டியதாகத் தெரிகிறது. சீனயாத்திரிகன் யுவான் சுவாங் இவ்வரசன் காலத் திலேயே கி.பி. 640-ல் காஞ்சிக்கு வந்து அங்கே நீண்டகாலம் தங்கியிருந்தான். தென்னாட்டை அவன் ‘திராவிடம்’ என்ற பெயராலேயே குறித்துள்ளான். அதன் அந்நாளைய நாகரிகம், சமய வாழ்வு ஆகியவைபற்றியும் அவன் எழுதியுள்ளான். காஞ்சியிலிருக்கும்போதே ஒரு பாண்டியன் இறந்ததாகவும், அதன் பின் பாண்டிய நாட்டையும் அவன் சென்று கண்டதாகவும் தெரிகிறது. இறந்த பாண்டியன் செழியன் சேந்தன் என்றும், அடுத்த பாண்டியன் அரிகேசரிமாற வர்மன் என்றும் தெரிகிறது. பாண்டியப் பேரரசு: நின்ற சீர்நெடுமாறன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்திய பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் என்றும் அவன் ஏறத்தாழ கி.பி. 640 முதல் 670 வரை ஆண்டான் என்றும் தோற்றுகிறது. வேள்விக்குடி, சின்னமனூர்ச் செப்பேடுகளால் அவன் இடைக்காலப் பாண்டியரில் முதல் வராகிய கடுங்கோன், அவனி சூளாமாணி, செழியன் சேந்தன் ஆகிய மூவருக்கும் பின் வந்தவன் என்று அறிகிறோம். தமிழிலக்கிய ஆராய்ச்சியும் வரலாற்றாராய்ச்சியும் தொடக்க நிலையிலிருந்த காலத்தில் பலர் சங்ககாலத்துக்கு முற்பட்ட நெடியோன் அல்லது நிலந்தருதிருவிற் பாண்டியனோடு இப் பாண்டியனை ஒன்றுபடுத்திக் குழப்பி இடக்குற்றனர். மற்றும், இவனை இவனுக்குப் பின் வந்த பாண்டியன் கோச்சடையன் இரணதீசன், பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்ற முதலாம் இராசசிம்மன் ஆகிய இருவருடனோ பின்னவனுடனோ ஒன்றுபடுத்துவரும் உண்டு. தவிர, இறையனாரகப் பொருளுரையில் மேற்கோளாகத் தரப்பட்ட பாண்டிக்கோவையின் தலைவனையே இப்பாண்டிய னாகச் சிலரும் அரிகேசரி பராங்குசனாகச் சிலரும் கொள்வதுண்டு. பராங்குசன் வெற்றி பெற்ற போர்களில் சில பலவற்றின் பெயர் அக்கோவையில் வருவதே இதற்குக் காரணம் ஆகும். ஆனால், ஆசிரியர் மறைமலையடிகள் போதிய காரணம் காட்டி, கோவைத் தலைவன் இரண்டாவது இடைக் காலப் பாண்டியன் அவனி சூளாமணியே என்று நாட்டியுள்ளார். அடுத்துவரும் சேந்தன் வானவன் என்று பெயர் பெறுவதனால், அவனோ, அவன் முன்னோனோ, இருவருமோ சேரநாட்டில் வெற்றிகள் அடைந்தனர் ஆகல் வேண்டும். இந்தப் பாண்டியர் சமணர்களாயினும் தமிழை வளர்ப்பதில் பின்னடைந்ததில்லை என்பதைச் சேந்தன் காலத்தில் இயற்றப்பட்ட தமிழ் நிகண்டாகிய சேந்த திவாகரம் காட்டும். தமிழில் சமண காவியங்கள், ஏடுகள் பல இக்காலத்தன ஆதல் கூடும். முந்தியவர் செய்திகள் எதுவாயினும் நான்காவது இடைக் காலப் பாண்டியன் அரிகேசரி மாறவர்மனே பாண்டிய அரசைப் பேரரசாக்கிய முதற் பெரும்பாண்டியன் என்பதில் ஐயமில்லை. தேவாரத்தாலும், பெரிய புராணத்தாலும் சிவநெறித் திருத் தொண்டர் அறுபத்து மூவருள் ஒருவராகப் பாடப்பட்ட நின்ற சீர் நெடுமாறன், இந்த அரிகேசரி மாறவர்மனே என்பதும் உறுதி. முதல் மகேந்திரவர்ம பல்லவனைச் சமண நெறியிலிருந்து திரு நாவுக்கரசர் சிவ நெறிக்கு மாற்றியருளியதுn பால, இந்தப் பாண்டியனையும் அதே காலத்தை அடுத்து வாழ்ந்த திருஞான சம்பந்தர் சிவ நெறிக்கு மாற்றியதாக அறிகிறோம். இவன் அரசி பாண்டி மாதேவி என்றும் சோழன் மகளாதலால் வளவர்கோன் பாவை என்றும் பாட்டில் பாராட்டப் பெற்றுள்ளார். அரசியாரும் அமைச்சராகிய குலச்சிறையாரும் அரசனைச் சிவநெறிக்குக் கொண்டுவர உதவினதனால், அவர்களும் அறுபத்து மூவருள் இடம்பெற்றுள்ளனர். சாளுக்கிய - பல்லவ - பாண்டியப் போட்டி: நெல்வேலிப் போர் கி.பி. 675 திருத்தொண்டத் தொகைபாடிய சுந்தரமூர்த்தி நாயனார் எட்டாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்தவர். அரிகேசரி கொண்ட நெல்வேலிப் போர் வெற்றியின் புகழ் அவர் காலம் வரை பேரொளி வீசியிருந்தது என்பதை அவர் பாடல் காட்டுகிறது. நூறு ஆண்டுகள் கழித்தும் அவன் தலைசிறந்த பெருஞ் செயலாக அவர் அதையே குறிக்கிறார். “நிறைகொண்ட சிந்தையால் நெல்வேலிகொண்ட நின்ற சீர்நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்!” இப்போர் மன்னனுக்கு வீரப்புகழ் மட்டுமே தருவதாயிருந் தால், சமயவாணராகிய நாயனார் இது ஒன்றையே அவன் பெரும் புகழாகப் பாடியிருக்க மாட்டார் என்று துணிந்து கூறலாம். அது சமயம், மொழி, நாடு ஆகிய மூன்றும் காத்த தேசீயப் போராகவே நாயனார் கண்ணிலும், அவர் காலத்தவர் கண்ணிலும் தோன்றியிருக்க வேண்டும். சுந்தரமூர்த்தி நாயனார் காலம் நெடுமாறன் காலத்திலிருந்து மிகவும் மாறுபட்டதல்ல என்பதும், பல்லவர் பாண்டியப் போட்டி அக்காலத்திலும் ஓய்வுற்று விடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. பேரரசுப் போட்டியின் வரலாற்றில் சாளுக்கிய - பல்லவப் போட்டிக் காலத்துக்கும், பல்லவ - பாண்டியப் போட்டிக் காலத்துக்கும் இடைப்பட்டது நெல்வேலிப்போர். அத்துடன் அது சுந்தரமூர்த்தி நாயனார் கண்ணில் சைவரும் தமிழரும் ஆன இரு பேரரசர் -பாண்டிய பல்லவர் -சமணனும் வடுகனுமான சாளுக்கியப் பேரரசன் முதலாம் விக்கிரமாதித்தனை எதிர்த்துப் போராடிப் பெற்ற வெற்றியாகத் தோன்றியிருக்க வேண்டும். இம்முறையில் வேறெந்தப் போரையும்விட இந்தப் போர் ஒரு பாண்டியனையும் ஒரு பல்லவனையும் நாயன்மாராகப் பாடிய சுந்தரமூர்த்திக்கு முதல்தரத் தேசீயப் போராகவும், நின்ற சீர் நெடுமாறன் தமிழகத்துக்கு ஆற்றிய அரும் பெரும் செயலாகவும் தோற்றியிருத்தல் இயல்பே. நெல்வேலிப் போரைப் பற்றிச் செப்பேடுகள் மிகுதி விவரம் தரவில்லை. அதைக் குறித்த பாண்டியர் செப்பேடு வேள்விக் குடிச் செப்பேடு ஒன்றே. அது, “வில்வேலிக் கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும்” என்ற இரு பாதியடியில் மற்றப் போர்களிடையே ஒரு போராக அதைக் கூறியுள்ளது. இதனால் நெல்வேலி என்பது திருநெல் வேலியே என்றும் நெல்வேலிப் போர் சேரருடன் ஆற்றிய ஒரு சிறுபோரே என்றும் பல ஆசிரியர்கள் கருதிப் போந்தனர். பாண்டியர் ஆதாரங்களை மட்டுமன்றிப் பல்லவர் சாளுக்கியர் முதலிய வெளியார் ஆதாரங்களையும் ஒப்பிட்டுக் கண்ட ஆராய்ச்சியாளர் சுந்தரமூர்த்தி நாயணாரின் கண்கொண்டு நோக்கி மெய்நிலை கண்டுள்ளனர். ‘நெல்வேலி’ திருநெல்வேலியல்ல, தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள நெய்வேலியே என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அது புதுக்கோட்டையருகிலுள்ள நெய்வேலி யாகவும் இருத்தல் கூடும். இப்போரில் பாண்டியன் எதிரி, பாண்டியப் பேரரசின் எல்லையில் இருந்த பல்லவப் பேரரசனல்ல; அப்பேரரசின் எல்லை தாண்டி நிலவிய சாளுக்கியப் பேரரசன் முதலாம் விக்ரமாதித்தியனேயாவன். வாதாபி அழிவால் சாளுக்கிய மரபுக்கு ஏற்பட்ட திண்ணிய கறையைப் புதுவெற்றிகளால் போக்க, வீரனான விக்கிரமாதித்தன் துடித்தான். ஆனால், வீரத்தில் தந்தைக்குப் பிற்படாத விக்கிர மாதித்தன் விவேகத்தில் பிற்பட்டுவிட்டான் என்று கூற வேண்டும். புலிகேசியைப் போல அவன் பல்லவருக்கெதிராகப் பாண்டிய சேர சோழர் கங்கர் உதவி திரட்டத் தவறினான். தன் வலிமையிலேயே செருக்கியவனாய்க் கடல் போன்ற தானைகளுடன் பல்லவநாட்டில் காட்டாறுபோல் பாய்ந்து சூறாவளி போல் சுழன்றடித்தான். பின் தமிழக முழுவதிலும் தன் புகழ் நாட்ட எண்ணி, பல்லவப் பேரரசின் எல்லை கடந்து சோழ நாட்டில் புகமுனைந்தான். பல்லவனை மட்டுமன்றித் தமிழரசர்கள் அனைவரையுமே துச்சமாக மதித்த விக்கிரமாதித்தன் மீது, பாண்டியன் அரிகேசரி நெடுமாறன் கொதிப்படைந்தான். அவன் மீது தன் பேரரசுப் படைகளுடனும் சோழர் துணைப்படைகளுடனும் சீறிப் பாய்ந் தான். இதன் விளைவாக ஏற்பட்டதே நெல்வேலிப் போரின் மங்காப் புகழ் வெற்றி! அடங்கொண்டு தமிழகத்தில் புகுந்த விக்கிரமாதித்தன் வெற்றியெழுச்சிக்கு இது முற்றுப் புள்ளி வைத்தது. அவன் முன்வைத்த காலைப் பின்வைத்து மீட்டும் பல்லவ எல்லை கடந்து தன் பேரரசுக்கு ஓடமுனைந்தான். சாளுக்கிய வெற்றிகளால் திகிலடைந்திருந்த பல்லவன் இப்போது அவனைத் தன் எல்லையில் மீட்டும் முறியடிக்க நல்ல வாய்ப்புக் கிடைத்தது. தமிழகத்தின் தென்திசைப் பேரரசு தமிழர் என்ற பொது உணர்ச்சியினால் உந்தப்பட்டுத் தன் அணிமை எதிரியான பல்லவப் பேரரசின் எதிரியை முறியடித்து அதற்கு வலுத்தந்தது. இவ்வெற்றி பாண்டியன் ஒருவனுடைய வெற்றியன்று; தமிழ் மன்னர் அனைவரின் வெற்றி என்பதைச் சாளுக்கியரின் கேந்தூர்ப்பட்டயம் சுட்டிக் காட்டுகிறது. தமிழ் மன்னர் அனைவருமே கூடப் போரிட்ட போர்கள் பல -இது அத்தகைய முதற்போரும் அல்ல, இறுதிப்போரும் அல்ல; ஆனால், பாண்டியர் தலைமையில் தமிழர் ஒன்றுபட்ட வெற்றிப் போர்களில் இது முதல் போர் ஆகும். ‘வில்லவனை நெல்வேலியிலும் விரிபொழில் சங்கர மங்கைப் பல்லவனையும் புறம் கண்ட பாராங்குசஉன் பஞ்சவர் தொன்றலும்’ என்று சின்னமனூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. இங்கே வில்லவன் என்று கூறியதால் போர், சேரனை எதிர்த்த போர் என்றும், சங்கரமாங்கைப் போரும் பராங்குசனுக்கு உரிமை யாக்கப் பட்டிருப்பதால், அரிகேசரி மாறனும் பராங்குசனும் ஒருவரே என்றும் பலர் கருத இடமேற்பட்டுள்ளது. இங்கே பொதுவாகப் பாண்டியர் செயல் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. பெரியபுராணப் பாட்டு எங்கே? நெல்வேலிப் போர் கி.பி. 675-ல் நடைபெற்றது என்று உறுதியாகக் கூறலாம். ஆகவே நெடுமாறன் கி.பி. 670 வரையன்றி 675 கடந்தும் ஆட்சி செய்திருந்தான் என்றே கொள்ளல் வேண்டும். வரலாற்றுணர்வு மிக்கவரான சேக்கிழார் இப்போரின் முழு உண்மையும் ஆய்ந்துகண்டு பாடியிருப்பது காணலாம், ‘சேயபுலத் தெவ்வர் தம் கடல் போன்ற தானையை நெல்வேலியில் அழித்தார்’ என்றும், ‘வடபுலத்து முதல் மன்னன் படைசரிந்ததும் நெடுமாறன் வாகை புனைந்தான்’ என்றும் அவர் பாடினார். ‘முதல் மன்னர்’ என்ற தொடர் எதிரியான சாளுக்கிய விக்கிரமாதித்தன் வட திசையில் பேரரசாண்ட பேராற்றல் உடையவன் என்றும், அவனை வென்ற வெற்றி அருமை உடையதென்றும் நன்கு குறித்துக் காட்டுகிறது. அரிகேசரி நெடுமாறனின் பிறபோர்கள்: பாழி, செந்நிலம் அரிகேசரி மாறவர்மனுக்குரியனவாக மற்றும் இரண்டு வெற்றிகள் குறிக்கப்பட்டுள்ளன. அவையே பாழி செந்நிலம் ஆகிய இரண்டு போர்க்களங்களின் வெற்றிகள் ஆகும். சூழ் யானை செல உந்திப் பாழி வாய் அமர் கடந்தும், என்று பாழிப் போரைப் பற்றியும், கைந் நிலத்த களிறு உந்திச் செந்நிலத்துச் செரு வென்றும் என்று செந்நிலப்போரைப் பற்றியும் வேள்விக்குடிச் செப் பேடுகள் குறித்துள்ளன. இச் செப்பேடுகளில் நெல்வேலிப் பெரும் போரையும் இந்தப் போர்களையும் ஒரே பொது மொழியில் புகழ்வதே அதன் விளக்கமற்ற தன்மையை எடுத்துக் காட்டும். இப்போர்கள் எங்கே யாரை எதிர்த்து நடைபெற்றன என்பது குறிக்கப்படவில்லை. ஆனால், முன்பின் வரிகளிலே, எதிரிகளாகிய பரவரைப் பாழ்படுத்தியதும், குறுநாட்டவர் குலங் கெடுத்ததும் கூறப்படுகின்றன. அத்துடன் சேரநாட்டு வெற்றி சற்று விரிவாகக் கூறப்படுகிறது. “பார் அளவும் தனிச் செங்கோல் கேரளனைப் பல முறையும் உரிமைச் சுற்றமும் மாவும் யானையும் புரிசை மாவதிப் புலியூர் அப்பகல் நாழிகை யிறவாமல் கோழியுள் வென்றுகொண்டும்” என்ற அடிகளால் கேரளனை வென்று அவன் குடியினரைச் சிறைப்படுத்தி, யானையும் குதிரையும் கைக்கொண்டான் என்றும் அத்துடன் ஒரு பகலிலேயே சோழநாட்டு உறையூரை வென்று கொண்டான் என்றும் அப்பட்டயம் தெரிவிக்கிறது. பாழி, செந்நிலப் போர்கள் பல்லவனை எதிர்த்த போர்களாய் இருக்கலாம் என்று சிலர் கருதியுள்ளனர். ஆனால், இப்பாண்டியன் எதிரிகளுள் இன்னும் பல்லவன் குறிக்கப்பட வில்லை. பல்லவ பாண்டியப் போட்டி அடுத்த ஆட்சியுடனேயே தொடங்குகிறது என்னலாம். எனவே பாழி, செந்நிலப் போர்கள் சேரனையோ, பரவர் முதலிய குடிமரபினரையோ எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போர்களாகவே இருத்தல் கூடும். ஆயினும் மற்ற வெற்றிகளிலிருந்து அவை தனித்தே குறிக்கப்படுகின்றன. அதே சமயம் இப்பாண்டியன் வெற்றிகளுள் உறையூர் கூறப்படுவதால் செந்நிலப் போர் பல்லவனையோ, அவன் சார்பில் சோழனையோ எதிர்த்து வென்ற வெற்றியாய் இருத்தல் கூடும். பாழி என்பது குடகு நாட்டிலுள்ள சங்க காலத்துச் செருப் பாழியாகவே இருத்தல் கூடாததன்று. அடுத்த தலைமுறைப் பாண்டியர்கள் வரலாற்றில் அந்நாட்டுடன் பாண்டியர் முன்னைய போர்த் தொடர்பு குறிக்கப்படுகிறது. ‘உதய கிரிமத் தியத்து உறு சுடர்போலத் தெற்றெனத் திசை நடுங்க மற்று அவன் வெளிப்பட்டு’ என்று வேள்விக்குடிச் செப்பேடு அவன் ஆட்சித் தொடக்கத்தை ஆரவாரமாகக் குறிக்கிறது. இது கவிதைப் புனைந்துரையாயினும், அதன் தொனியே அவன் பாண்டிய மரபுக்குப் பேரரசு நிலை அளித்தான் என்று குறிப்பதாகும். பெருவள நல்லூர்ப் போர் கி.பி.675 பெருவள நல்லூர் என்பது பண்டை உறையூர் அல்லது இன்றைய திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே, பத்துக் கல் தொலைவுக்கு உள்ளேயே இருந்த ஓர் ஊர். இங்கே நடந்த போரில் பல்லவன் முதலாம் பரமேசுரவர்மன் (670 - 685) சாளுக்கியன் முதலாம் விக்கிரமாதித்தனுடன் போர் செய்தார். இப்போர் நெல்வேலிப் போருக்குப் பின், அதே ஆண்டில் நடைபெற்றது. உண்மையில் அது நெல்வேலிப் போருக்கு முன்னாகவும் பின்னாகவும் நிகழ்ந்த சாளுக்கியப் படையெடுப்பின் கடைசிக் கட்டமேயாகும். முதலாம் பரமேசுவரவர்மன் பட்டத்துக்கு வந்த ஆண்டிலேயே சாளுக்கிய விக்கிரமாதித்தன் படையெடுப்புத் தொடங்கி விட்டது. தவிசேறிய புதிய அரசன்மீது விக்கிரமாதித்தன் கடல் போன்ற பெரும் படைகள் திடுமெனப் பாய்ந்து, தலைநகராகிய காஞ்சியையே கைப்பற்றிக் கொண்டன. கி.பி. 670 லிருந்து 674 வரை காஞ்சிநகரும் பல்லவப் பேரரசும் சாளுக்கியப் படைகளின் பேரழிவுக்கு ஆளாயின. இக்காலத்திய சாளுக்கியர் கோலாகலமான வெற்றிகளை அவர்களின் கட்வல், சோர, கேந்தூர்ப் பட்டயங்கள் பலபடத் தெரிவிக்கின்றன. “அகழி சூழ்ந்த காஞ்சிமா நகருக்குள் விக்கிரமாதித்தன் சித்திர காந்தம் என்னும் தன் குதிரை மீதமர்ந்து புகுந்து, பல்லவ மன்னர் தன் திருவடிகளை முத்தமிடும்படி செய்தான். புகழ் மிக்க மாமல்லன் (நரசிம்ம வர்மன்) பெயரனான பரமேசுவர வர்மனைப் புறமுதுகிட்டோடச் செய்ததனால் அவன் ‘இராசமல்லன்’ என்ற பட்டப் பெயர் புனைந்து கொண்டான்” என்று கட்வல் பட்டயம் புனைந்து கூறுகின்றது. விக்கிரமாத்தித்தனுடைய திடீர்த்தாக்குதலைச் சமாளிக்க இயலாது பல்லவப் படைகள் பின்னடைந்து சென்றிருந்தன என்பதிலும், தடுப்பவர் யாரும் இல்லாமல் விக்கிரமாதித்தன் பல்லவப் பேரரசின் எல்லை முழுதும் கடந்து அதன் தென் கோடிவரை சென்றிருக்க வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. ஏனெனில், அவன் படைகள் நிலையாக உரகபுரத்தையே தம் மூலதளமாக்கியிருந்தன என்று கேந்தூர்ப் பட்டயங்கள் கூறுகின்றன. உரகபுரம் என்று இங்கே கூறப்படுவது இன்று திருச்சிராப்பள்ளியின் பகுதியாக உள்ள பழைய உறையூர் மாநகரேயாகும். இதிலிருந்தே சாளுக்கியப் படைகள் பெருவள நல்லூர்ப் போர்க்களத்துக்கு முன்னேறியிருந்தனர் என்று உயர்த்துணரலாம். நெல்வேலிப் போருடன் சாளுக்கிய பல்லவப் போராட்டம் சாளுக்கிய தமிழகப் போராட்டமாயிற்று. ஆனால், அப்போர் முடிவில் அது மீண்டும் பல்லவ சாளுக்கியப் போராட்டமாகவே நடைபெற்றது. ஆனால், சாளுக்கிய பல்லவர் தொடர்பு தலைமாறிவிட்டது. இதுவரை பல்லவப் பட்டயங்கள் மௌனம் சாதித்தன. சாளுக்கியப் பட்டயங்கள் முழங்கின. ஆனால், இதன் பின் பல்லவப் பட்டயங்கள் முழங்கின; சாளுக்கியப் பட்டயங்கள் மௌனம் சாதித்தன; ஆயினும், ‘தமிழரசர் அனைவரும் கூடி விக்கிரமாதித்தனை எதிர்த்தனர்’ என்ற சாளுக்கியரின் கேந்தூர்ப் பட்டயக்கூற்று ஒன்றே போரின் திரும்பு கட்டத்தையும் அதற்கான காரணத்தையும் சுட்டிக் காட்டுகிறது. பாண்டியரின் சின்னமனூர்ச் செப்பேடும் சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடலும் இதற்கு உரை விளக்கம் தருகின்றன. கூரம் பட்டயம், பெருவள நல்லூர்ப் போரைப் பிற்காலச் செயற்கைக் காவியங்களின் பகட்டாரவாரப் பாணியில் சொல் அணி அடுக்குகளுடன் விரிவாக வருணிக்கிறது. “சாளுக்கியப் படைவீரர் தொகை பல நூறாயிரக் கணக்கில் இருந்தது. ஆனால், பல்லவன் பரமேசுரவர்மன் ‘அரிவாரணம்’ என்ற தன் போர் யானை மீது, ‘அதிசயம்’ என்ற தன் போர்க் குதிரை மீதும் அமர்ந்து சுழன்று சுழன்று சென்று சாளுக்கியப் படையணிகளாகிய அலை கடலைக் கலக்கினான். சாளுக்கிய வீரர் வெருண் டோடினர். விக்கிரமாதித்தன் படையிழந்து தன்னந் தனியனாய் ஒரு கந்தலாடையால் தன்னை மறைத்துக் கொண்டு ஓடினான்.” உதயேந்திரப் பட்டயம் போர் முடிவைச் சுருக்கமாகத் தெரிவிக்கிறது. பெருவள நல்லூர்ப் போரில் விக்கிரமாதித்தன் தோற்றுத் தன் தாயகத்துக்கே ஓடிவிட்டான். பல்லவப் பேரரசின் தென்கோடியிலுள்ள பெருவள நல் லூரிலேயே போர் நடந்ததால், சாளுக்கியப் படைகள் அத்தோல்வியின் பின் அப்பேரரசின் பரப்பு முழுதும் தாண்டியே தாயகம் செல்ல முடியும். இந்த அளவுக்கேனும் பெருவள நல்லூர்த் தோல்விக்குப் பின் அவை சீர் குலையா திருந்திருக்க வேண்டும் என்று நாம் நம்பலாம். எனவே சாளுக்கியர், பெருவள நல்லூரிலேயே முற்றிலும் சீர்குலைந் தோடினர் என்பது பல்லவரின் மிகையுரையாகவே இருக்கக்கூடும். அவர்கள் தோற்ற பின்னும் போரிட்டுக்கொண்டே எல்லை தாண்டியிருக்க வேண்டும். ஆயினும், நெல்வேலிப் போரும் பெருவள நல்லூர்ப் போரும் தமிழகத்துக்குத் தெம்பும் வலுவும் தந்தன என்பதில் ஐயமில்லை. களப்பிரர் படையெழுச்சியால் உருக்குலைந்து நின்ற தமிழகம் இடைக்கால முதற் பாண்டியப் பேரரசின் ஆட்சியிலேயே மீண்டும் நிமிர்ந்து நின்று வெற்றி எக்களிப்புடன் மறுபடியும் வடக்கு நோக்கத் தொடங்கிற்று என்னலாம். அடுத்த தலைமுறைகளும் அதனைத் தொடர்ந்து வந்த சோழப் பேரரசர் ஆட்சியும் இதைத் தெளிவாகக் காட்டுகின்றன. பல்லவப் பேரரசில் துளிர்த்துப் பாண்டியப் பேரரசில் தழைத்த இந்தத் தமிழகத்தின் மறுமலர்ச்சி சோழப் பெரும் பேரரசில் கிட்டத்தட்ட மீட்டும் சங்ககால, சங்க காலத்துக்கு முற்பட்ட பெருமையை அடையும் வகையில் புது மலர்ச்சி எய்திற்று என்னல் வேண்டும். நெல்வேலியும் பெருவளநல்லூரும் தரும் படிப்பினைகள் இவையே. மருதூர், செங்கோடு, புதான்கோட்டுப் போர்கள் அரிகேசரி மாறவர்மனுக்குப்பின் பாண்டிய அரியணை ஏறியவன் பாண்டியன் கோச்சடையன் இரணதீரன் என்பவன். அவன் கி.பி. 670-லிருந்து 710-வரை ஆண்டதாகக் கணிக்கப்பட்டி ருக்கிறது. ஆனால், நெல்வேலிப்போர் அரிகேசரிக்கே உரியதாகத் தெரியவருவதாலும், அது 675-ல் நடைபெற்றது என்பது உறுதியாகத் தெரிவதாலும், கோச்சடையன் ஆட்சி அதன் பின்னரே தொடங்கியிருத்தல் என்னலாம். இவன் தென்னவானவன், செம்பியன், சோழன், மதுர கருநாடகன், கொங்கர் கோமான் முதலிய புகழ்ப் பெயர்கள் தாங்கினான். இவை அவன் வெற்றிகளையும், அவன் அரசியல் தொடர்புகளையும், ஆற்றல் எல்லையையும் காட்டுகின்றன. வேள்விக்குடிச் செப்பேடுகள் இவ்வரசனைப் பற்றிக் குறிக்கும் முதற் செய்தி மருதூர், செங்கோடு, புதான் கோட்டுப் போர்களேயாகும். “பொருதுஊரும் கடல்தானையை மருதூரில் மாண்பு அழித்து” என்ற அடிகள் மருதூர் வெற்றியைக் குறிக்கின்றன. ஆயினும், அது யாருக்கெதிரான வெற்றி என்பதை அது வெளிப்படத் தெளிவாகக் குறிக்கவில்லை, இதனால் ஆராய்ச்சியாளர் திரு. டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் இப்போரும் இதற்கடுத்துக் குறிக்கப்பட்ட மங்களாபுரம் போரும் இரண்டுமே சாளுக்கியருக்கெதிராகப் பாண்டியர் ஆற்றிய போர்களே என்று கொண்டுள்ளார். “மேலைச் சாளுக்கிய மன்னனாகிய முதல் விக்கிரமாதித்தனைத் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள மருதூரிலும் மங்களாபுரத்திலும் போரில் வென்று புறங்காட்டி ஓடச்செய்த புகழுடையவன் இவ்வேந்தன்” என்று அவர் குறிக்கிறார். மருதூரும் மங்களாபுரமும் இரண்டிடங்களும் நெல்வேலியையும் பெருவள நல்லூரையும் போலவே திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ளவை என்றும், இரண்டு போர்களுமே நெல்வேலி வெற்றியைத் தொடர்ந்து, ஆனால், பெருவள நல்லூருக்கு முன் நடைபெற்றன என்றும் அவர் கருதினராதல் வேண்டும். ஆனால், வேள்விக்குடிப் பட்டயத்தின் வாசகங் களை நோக்க, மருதூர், செங்கோடு, புதான்கோடு ஆகிய போர் களில் உள்ள எதிரிகள் வேறு, மங்களாபுரத்திலுள்ள எதிரிகள் வேறு என்றே எண்ண இடமேற்படுகிறது. அது போலவே, அவ்விருசார்ப் போர்களும் நெல்வேலியையடுத்தோ, ஒன்றையொன்றடுத்தோ நிகழ்ந்தன என்றும் கொள்ள இடமில்லை. மருதூர்ப்போர் ஆய்வேளை எதிர்த்து வெற்றி கண்ட போரே என்று கருதுவதே நேர்மையானது. ஏனெனில் மருதூர்ப்போரைப் பற்றியே மேலே காட்டிய அடிகளையடுத்து, அதன் தொடர்ச்சி யாகவே, “ஆய்வேளை அகப்படவே என்னாமை எறிந்து அழித்து” என்றும், “செங்கோட்டும் புதான்கோட்டும் செருவென்று அவர் சினம் தவிர்த்து” என்றும் ஆய்வேள் வெற்றியும் செங்கோட்டுப் புதான் கோட்டுப் போர்களும் குறிக்கப்பட்டுள்ளன. பிந்திய இரண்டு போர்களிலும் எதிரியாகச் சுட்டப்பட்ட ‘அவர்’ முன் கூறப்பட்ட ஆய்வேளே யாவன் என்பதில் ஐயமில்லை. ஆய்வேள் எறிந்து அழிக்கப்பட்டதும் முன் போரிலேயே என்பதும் இதனால் தெளிவு படுகிறது. மருதூர்ப் போரில் ஆய்வேளின் ஆட்சி ஆற்றல் அழிக்கப் பட்டாலும், அவன் அதில் பாண்டியன் கைப்படவில்லை. பணியவுமில்லை. அப்போரின் தோல்வியால் அவன் புண்ணேறுண்ட புலி போல் சீற்றங்கொண்டு மீண்டும் மீண்டும் பாய்ந்தெழுந்து வந்தான். செங்கோட்டிலும் புதான்கோட்டிலும் போரிட்டு முறியடிக்கப்பட்ட பின்னர், அவன் உயிரிழந்தோ அல்லது பணிந்தோ சினந்தணிந்தான். இதுவே செப்பேட்டு வாசகங்கள் நமக்குத் தரும் சித்திரம் ஆகும். ஆய்வேள் என்பவன் சங்கப்பாடல்களில் நாம் கேள்விப் படும் பொதிகை மலை ஆய்மரபில் வந்தவனே. சங்க கால ஆய்மரபினரின் தலைநகரம் ஆய்குடி. அது இன்றும் அப்பெயருடன் திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவுகின்றது. கோச்சடையன் காலத்திலும் அதுவே அவன் தலைநகராய் இருந்திருக்கக்கூடும். பின் நாட்களில் இம்மரபினர் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியிலுள்ள நாங்குனேரி வட்டம் முழுவதும் அதன்பின் தென்திருவாங்கூர் முழுவதும் கைக்கொண்டு ஆண்டதுண்டு. அடிக்கடி அவர்கள் திருவாங்கூர் முழுவதும் பரவியதும் உண்டு. ஒரே ஒரு தடவை (14-ஆம் நூற்றாண்டில்) அம்மரபினர் தமிழக முழுவதும் வென்றதும் உண்டு. இன்றைய திருவாங்கூர் மன்னர் இவன் மரபினரேயாவர். சங்ககாலத்தில் ஆய்வேள் வலிமை வாய்ந்த சிற்றரசனாய் இருந்தான். கோச்சடையன் காலத்தில் அவன் இன்னும் வலிமை யுடையவனாக வளர்ந்து வந்திருக்க வேண்டும். ஏனெனில் அவனை வென்ற செய்தி பேரரசரை எதிர்த்துப் பெற்ற வெற்றி களுக்கு ஒப்பாக, அவற்றிலும் முனைப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆய்வேளும் பிறவேளிர்களும் சங்ககாலத்தைப் போலவே இடைக் காலத்திலும் பிற்காலத்திலும்கூட அரசரை வெல்லவும் அரசரைத் தாண்டிப் பேரரசராகவும் விதிர்விதிர்ப்புடைய வராகவே இருந்தனர் என்று காண்கிறோம். அவர்கள் தமிழக வரலாற்றில் ஆற்றியுள்ள துணுக்குறும் செய்திகள் இதற்குச் சான்று தரும். மருதூர், திருச்சிராப்பள்ளியருகிலுள்ள ஊர் என்று தோன்றவில்லை. ஆராய்ச்சியாளர் அது பாண்டி நாட்டிலேயே உள்ள திருப்புடை மருதூரே என்று கருதுகின்றனர். இது உண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அம்பாசமுத்திரம் என்று அழைக்கப்படும் நகரின் பழம்பெயரே என்றும் அறிகிறோம். அடுத்த பாண்டிய அரசர் காலங்களில் அது அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது என்று அறிகிறோம். ஆய்வேளின் சங்ககாலத் தலைநகருக்கு அண்மையிலேயே அது இருந்ததனால், அவ்விடத்தின் பெயரால் புகழ் அடைந்துள்ள போர் அவனை எதிர்த்து ஆற்றப்பட்ட போராய் இருத்தல் இயல்பே என்னலாம். செங்கோடு, புதான்கோடு ஆகிய இடங்கள் எங்கே இருந்தன என்று அறியக்கூடவில்லை. ஆனால், தென் திருவாங்கூர் - திருநெல்வேலி மாவட்ட இணைப்பாய் இயலும் செங்கோட்டையையும் அதங்கோடு முதலிய தென்திருவாங்கூர்ப் பழம்பதிகளையும் அவை, நினைவூட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. அவை, ஆய்வேள் நாட்டின் பகுதிகளாகவே இருந்திருத்தல் கூடும். அதங்கோடு என்பது நாகர்கோவிலை யடுத்த திருவதங்கோடு அல்லது திருவாங்கோடு என்ற திருவாங்கூரின் பழய தலைநகர். அதுவே தொல்காப்பிய காலப் பெரும்புலவர் அதங்கோட்டாசான் பிறப்பகம் என்பதும் இங்கே நினைவிற் கொள்ளத்தக்கது. மங்களாபுரம் போர் “கொங்கலரும் நறும் பொழில்வாய்க் குயிலோடு மயில் அகவும் மங்களாபுரமெனும் மாநகருள் மாரதரை எறிந்தழித்து” என்று கொஞ்சும் கவிமொழியில் மங்களாபுர வெற்றி குறிக்கப்படுகிறது. இங்கும் ‘மாரதர்’ என்ற சொல்லைத் தவிரப் போரில் எதிரி யார் என்பதை அறிய வேறு வழியில்லை. ஆனால், ‘மாரதர்’ என்பது புராண மரபு வழியாகப் பேரரசரைக் குறித்த தொடர் ஆகும். ‘பெருந்தேர் வேந்தர்’ என்பது அதன் பொருளாகும். இதுவும் ‘மதுர கருநாடகன்’ என்ற இப்பாண்டியன் புகழ்ப் பெயருமே எதிரி கருநாடக நாட்டிலுள்ள ஒரு பேரரசன் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. கோச்சடையன் நாளில் இத்தகைய பேரரசு சாளுக்கியப் பேரரசு ஒன்றே. பாண்டியப் பேரரசுக்கும் சாளுக்கியப் பேரரசுக்கும் இயல் பாக நேரடிப் போட்டி இந்நாளில் ஏற்படக் காரணம் கிடையாது. ஏனெனில், சாளுக்கியப் பேரரசின் எல்லையுடன் தொடர்புடைய பேரரசு பல்லவப் பேரரசேயாகும். முதலாம் மகேந்திரவர்மன் நாட்களில் சாளுக்கியப் பேரரசர் பல்லவப் பேரரசுக் கெதிராகப் பாண்டிய சேரசோழர் ஆதரவை பெரிதும் நாடினர் என்று காண்கிறோம். ஆனால், முதலாம் விக்கிரமாதித்தன் பல்லவப் பேரரசின் எல்லை கடக்கத் துணிந்ததாலேயே, சாளுக்கிய பாண்டியக் கைகலப்புக்கு இடம் ஏற்பட்டது. ஆனால், முதல் கைகலப்பே சாளுக்கியர் பேராற்றலுக்கு ஒரு அடியாகவும் அவர்கள் புகழுக்கு ஒரு கறையாகவும் அமைந்தது. அடுத்த சில தலைமுறைகளுக்குச் சாளுக்கிய பல்லவப்போட்டி, பகைமை தாண்டிச் சாளுக்கிய -பாண்டியப்போட்டியும் பகைமையும் ஏற்பட இது காரணமாயிற்று. ஆயினும் கீழ்கரையோரம் பல்லவப் பேரரசைக் கடக்காமல் இரு பேரரசுகளும் மோதிக்கொள்ள வழியில்லாதிருந்தது. உள்நாட்டுப் பகுதியிலோ கங்க அரசர் இருந்தனர். அவர்கள் தொடக்கத்தில் சாளுக்கியரை ஆதரித்துப் பல்லவரைத் தாக்கினர். பின் பல்லவர் நண்பராய் இருந்தனர். கோச்சடையன் காலத்துக்குப்பின்னரே அவர்கள் பாண்டியர் நண்பராய் பாண்டியர் வடபுல எதிர்ப்புக்கு உதவினர். இவற்றை மனதுட்கொண்டால் மங்களாபுரம் போரின் போக்கு விளக்கும். மங்களாபுரம் என்பது தென்கன்னட மாவட்டத்திலுள்ள மங்களூரே என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இடைக்காலப் பாண்டியர் வரலாற்றில் இது அடிக்கடி இடம் பெறுகிறது. குடகு நாட்டு வரலாற்றிலும் பாண்டியர் சோழர் படையெடுப்புப் பற்றிய சின்னங்கள் பல உண்டு. குடகு நாட்டின் மிகப்பழமை வாய்ந்த வரலாறு இத்தமிழகத்தொடர்புகளுடனேயே தொடங்குகிறது என்னலாம். கீழ்க் கரையிலும் உள் நாட்டிலும் இல்லாத சாளுக்கிய பாண்டியத் தொடர்பு, மிகச்சிறு சிற்றரசுகளே மிகுதியாக இருந்த மேல்கரை வழியாக முதலில் பாய்ந்தது என்பதை மங்களாபுரம் போர் காட்டுகிறது. மங்களாபுரம் அல்லது மங்களூரில் பாண்டியன் எதிரி ஒரு மராட்டிய அரசன் என்று பல ஆசிரியர்கள் குறித்துள்ளனர். ‘மாரதர்’ என்பதை அவர்கள் ‘மராடர்’ என்று கொண்டிருக்கக் கூடும், ஆனால், அவர்கள் குறிப்பிடும் செய்தியே ‘மாரதர்’ சாளுக்கியரே என்பதைக் காட்டும். ‘மங்களாபுரத்தை ஆண்ட பேரரசன் தன் இறுதிப் படுக்கை யின்போது தன் பிள்ளைகளை அழைத்தான். பாண்டியர் கையில் தான் அடைந்த அவமதிப்பை எண்ணி எண்ணி அவன் குமுறினான். அந்த அவமதிப்புக்குப் பழிவாங்கி அந்தக் கறையைக் கழுவாமல் இறப்பதுபற்றி அவன் மிகவும் வருந்தினான். அவன் பிள்ளைகள் அதனைத் தாம் கட்டாயம் செய்வதாக வாக்களித்தனர். அதன்படி நடந்த போரே மங்களாபுரம் போர். இது அவர்கள் கூற்று. முன்பு, பாண்டியர் கையில் அவமதிப்படைந்த அரசன் சாளுக்கியனே தவிர வேறு எந்த வடபுல மன்னராகவும் இருக்க முடியாது. பாண்டியரை மங்களாபுரத்தில் எதிர்த்த அரசனும் விக்கிரமாதித்தனுக்குப் பின்வந்த சாளுக்கியப் பேரரசன் விசயாதித்தியனே. மங்களாபுரம் வெற்றியால் மேல்கொங்கு என்று அந்நாள் அழைக்கப்பட்ட வடமலையாள தென் கன்னடக்கரை பாண்டியன் ஆட்சிக்குட்பட்டது. இச்செயலால் கோச்சடையன் தன் பின்னோருக்குப் பெரும் புகழும் பொறுப்பும், அத்துடன் பெருந்தொல்லையும் மரபுரிமையாக விட்டுச் சென்றான். ஏனெனில் சாளுக்கிய - பாண்டியப் போட்டி இப்போது நேரடிப் போட்டியாகவும் அணுக்க போட்டியாகவும் மாறிற்று. சாளுக்கியரைப் பாண்டியரும் என்றும் முற்றிலும் வென்று அடக்கிவிட முடியவில்லை. பிற்காலத்திய சோழப் பெரும் பேரரசரும் கூடக் கீழைச் சாளுக்கியரை முற்றிலும் தமதாக்கியது போல மேலைச் சாளுக்கியரை ஆக்கிவிட முடியவில்லை. இரு பேரரசுகளில் ஏதேனும் ஒன்று இது செய்திருந்தால் தென்னாட்டின் வடமேற்குப் பகுதி தென்னாட்டுக்கு இவ்வளவு அயல் நிலமாகவும், மேலை இந்தியா மாநிலத் தேசிய வாழ்வின் இவ்வளவு பிற்பட்டும் இருக்கமாட்டா என்னலாம். இந்தியாவின் நாகரிகம் என்பது, தமிழர் தொட்ட இடத்துப் பண்பாடு என்பதும், இந்தியாவில் பிற்போக்கு என்பது, தமிழர் விட்ட இடத்துக்குறை என்பதும் இதனால் விளங்கும். தமிழின உரிமையற்ற இந்திய அரசியலும், தமிழ்த் தொடர்பற்ற இந்தியத் தேசியமோ வரலாறோ காண்பவரும் கவனிக்க வேண்டிய செய்தி இது. பாண்டிய பல்லவப் போட்டி: நந்திபுர முற்றுகை; நெடுவயல், குறுமடை, மன்னிக்குறிச்சி, பூவலூர், கொடும்பாளூர், குழும்பூர், சங்கர மங்கை, மண்ணைக்குறிச்சி, பெண்ணாகடம்; மண்ணை நென்மிலி, கரூர், சூதவனம், நிம்பவனம், குரும்பூர், சூரவழுந்தூர். பாண்டியன் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன் என்ற முதலாம் இராசசிம்மன் (710 - 775) ஆட்சியும், பல்லவன் இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மல்லன் (710 - 775) ஆட்சியும் பேரளவில் சமகால ஆட்சியாய் அமைகின்றன. அவர்கள் காலத்திலேயே பாண்டிய பல்லவப் போட்டி உச்சநிலையை அடைந்தது என்னலாம். பல்லவன் முதலாம் பரமேசுரவர்மனுக்குப் பின் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற இராசசிம்மன் (685 - 705) இரண்டாம் பரமேசுரவர்மன் (705 - 710) ஆகியோர் ஆண்டனர். இவ்வரசர் களுடன் முதலாம் மகேந்திரவர்மனின் தந்தையாகிய சிம்ம விஷ்ணுவின் நேர் மரபு தொடர்பற்றுப் போய்விட்டது. அரசகுடிக்கு அண்மை மரபினருள் ஒருவனான சித்திரமாயனே உறவினரால் அரசுரிமைக் குடிவழித் தகுதியுடையவனாகக் கருதப்பட்டான். ஆனால், அவன் பல்லவப்பேரரசின் பெரும் பொறுப்பை - பாண்டிய சாளுக்கியப் போட்டிகளின் நெருக்கடியை -ஏற்றுச் சமாளிக்கத்தக்க ஆற்றலற்றவன் என்று நாட்டின் பொறுப்புடைய பெருமக்கள் எண்ணினர். அவர்கள் சிம்மவிஷ்ணுவின் உடன் பிறந்தனான பீமவர்மன் வழிவந்த இரணியவர்மனை அரசனாகும்படி வேண்டினர். இரணிய வர்மன் முதியவனாதலால் தன் மைந்தரைக் கேட்க, அவர்களுள் மூத்தவர்கள் அப் பொறுப்பேற்க அஞ்சினர். கடைசி இளைஞனான நந்திவர்மனே பொறுப்பேற்று இரண்டாம் நந்திவர்மன் ஆனான். சித்திரமாயனை ஆதரித்தவரை நந்திவர்மன் ஆதரவாளர் எளிதில் முறியடித்துத் துரத்தினர். சித்திரமாயன் பல்லவர் எதிரியான பாண்டியன் அரிகேசரி பராங்குசனிடம் சென்று தஞ்சம் அடைந்தான். இதை அறிந்தே உள்ளூர்ப் பாண்டியப் பேரரசின் மேலாட்சியை விரும்பாத பாண்டி நாட்டு வேளிரான தகடூர் அதிகமான், கங்க அரசன் பெரும்பிடுகு முத்தரசன் ஆகிய இருவரும் பல்லவன் நந்திவர்மனை ஆதரித்தனர். சேரரும் சோழரும் இப்போரில் பாண்டியன் பக்கமே இருந்தனர் என்று தோற்றுகிறது. ஏனெனில் பல்லவப் பட்டயங்கள் பல்லவனைத் தென்தமிழரசர் அனைவரும் சேர்ந்து எதிர்த்தனர் என்று கூறுகிறது. பாண்டிய பல்லவப் பெரும்போர் என்று குறிக்கத்தகும் இப்போராட்டத்தில் முதற் பகுதி நந்திபுர முற்றுகையேயாகும். நந்திபுரம் என்பது கும்பகோணத்தருகிலுள்ள ஒரு பழய நகரம். அது இன்று நாதன்கோவில் என்ற பெயருடையது. இப்பல்லவன் காலத்திலேயே வாழ்ந்து அவனையும் பாடியுள்ள திருமங்கை யாழ்வார் அதிலுள்ள கோயிலை நந்திபுர விண்ணகரம் என்று குறித்தார். இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் அது பல்லவப் பேரரசின் துணைத்தலைநகராகவும் தென்மாகாணத் தலைமையிடமாகவும் இருந்தது. திருமால் ஆர்வலனான பல்லவன் இங்கே அடிக்கடி தங்கி அங்குள்ள திருமால் கோயிலில் சென்று வணங்குவது வழக்கம். கி.பி. 734-ல் அவன் இவ்வாறு தங்கியிருக்கும் சமயம் பாண்டியன் தலைமையில் தென்தமிழரசர் அதனை முற்றுகையிட்டனர். பல்லவரப் பேரரசன் கிட்டத்தட்டச் சிறைப்பட்டவனானான். பல்லவன் படைத்தலைவனான உதயசந்திரன் தமிழகத்தின் தளபதிகளுள் தலைசிறந்தவன். அவன் வேகவதியாற்றின் கரை யிலுள்ள வில்வல நகர்க் கோமான் என்று குறிக்கப்படுகிறான். அவன் ஒப்பற்ற வீரன் மட்டுமல்ல, தலைவனிடம் அசையாத உறுதியும், ஈடுபாடும், தன்மறுப்பும் உடையவன். பேரரசன் நிலை உணர்ந்ததும் அவன் உடனே துடிதுடித்தெழுந்தான். சூறாவளி போலச் சுழன்று எதிரிகள்மீது போர் முரசு முழக்கினான். நெடுவயல் முதலாகச் சூரவழுந்தூர் ஈறாக மேலே குறிப் பிட்ட போர்கள் அத்தனையும் பாண்டியப் பேரரசரின் தலைமை யிலுள்ள தென் தமிழகப் படைகளுக்கும் உதயசந்திரன் தலைமை யிலுள்ள வடதமிழகப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த போர்களேயாகும். உதயசந்திரனுக்கு மேலே கூறியபடி அதிகனும் கங்க அரசன் பெரும்பிடுகு முத்தரசனும் உதவினர். இப்போர்களுள் பாண்டியன் வெற்றிகளும் பலவாயிருந்திருத்தல் கூடும். உதயசந்திரனின் பல்லவ வெற்றிகளுள் பலவாயிருந் திருத்தல் கூடும். எனவே அவரவர் வெற்றிகளையே அவரவர் குறித்துள்ளனர். ஆயினும் பாண்டியரே தாக்குதல் போர் நடத்தினர். அவர்களே அரசியல் நோக்கத்துடனும் போராடினர். இதனால் அவர்களே பெரும் பொருட்குவைகளைக் கைப்பற்றிய தாகவும், நாட்டெல்லையை விரிவுபடுத்தியதாகவும் கூறுகின்றனர். உதயசந்திரன் போர் நோக்கம் தற்காப்புப் போராகவே இருந்தது அவன் தன் பேரரசனை விடுவித்துப் பேரரசைக் காப்பதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தான். இதனாலேயே இருவருமே வெற்றி கண்டதாகக் கூறிக் கொள்ள முடிந்தது. இப்போர்க்களங்கள் யாவும் பெரும்பாலும் புதுக்கோட்டை பகுதியில் உள்ளன. ஒரு சில தஞ்சை திருச்சிராப்பள்ளிப் பகுதி களுக்குரியனவாகவும் இருக்கக் கூடும். நெடுவயல் முதல் குழும்பூர் வரையிலுள்ள ஏழு போர் களைப் பாண்டியனின் வேள்விக்குடிச் செப்பேடு பாண்டியன் பெரு வெற்றிகளாகக் கொண்டாடுகின்றது. இவற்றுள்ளும் முதல் ஐந்தும் பொதுப்படை மொழியிலேயே வருணிக்கப்படுகின்றன. “கடுவிசையால் எதிர்ந்தவரை நெடுவயல் வாய் நிகர்அழித்து, கறுவடைந்த மனத்தவரை குறுமடை வாய்க் கூர்ப்பழித்து, மன்னிகுறிச்சியும் திருமங்கையும் முன்னின்றவர் முரணழித்து, மேவலோர் கடல்தானையோடு ஏற்றெதிர்ந்தவரைப் பூவலூர்ப்புறங்கண்டும் கொடும்பானார் என்பது புதுக்கோட்டைப் பகுதியில் முன்பு ஆண்ட கொடும்பாளூர் வேளின் தலைநகரம் ஆகும். அதற்கேற்ப அது கோட்டை சூழ்ந்த நகராகக் குறிக்கப்படுகிறது. இப்போரில் குதிரைகளும் யானைகளும் பாண்டியரால் பேரளவில் கைப்பற்றப்பட்டன என்று அறிகிறோம். கொடும்புரிசை நெடுங்கிடங்கில் கொடும்பாளூர்க் கூடார் கடும்பரியும் கருங்களிறும் கதிர்வேலில் கைக்கொண்டும் குழும்பூர் வெற்றியே பாண்டியர் கடைசிப் பெருவெற்றி ஆகும். அதிலும் யானை குதிரைகள் கைப்பற்றப்பட்டன. போரில் எதிரி பல்லவன் என்பது இப்போர் பற்றிய செய்தியிலேயே தெளிவாகக் குறிக்கப்படுகிறது. செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூரில் தேசுஅழிய எண் இறந்த மால்களிறும் இவுளிகளும் பல கவர்ந்தும் சங்கரமங்கைப் போர் வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிக்கப்பட வில்லை, ஆனால், சின்னமனூர்ச் செப்பேட்டில் நெல்வேலி சங்கரமங்கை என்ற இரண்டு போர்கள் இம்மன்னன் பெயரால் குறிக்கப்படுகின்றன. உதயேந்திரனின் பல்லவ ஆதாரங்களும் ஒரு நெல்வேலி பற்றிக் குறிக்கின்றன. அது இந்த நென்மிலியா அல்லது நெல்வேலிதானா என்று தெரியவில்லை. நெல்வேலி யிலேயே இரண்டு போர்களும் நடந்தன என்றால், இந்த நெல்வேலிப் போரை நாம் இரண்டாம் நெல்வேலிப் போர் என்று குறிக்க வேண்டும். ‘வில்லவனை நெல்வேலியினும் விரிபொழில் சங்கரமங்கைப் பல்லவனைப் புறங்கண்ட பராங்குசன் பஞ்சவர் தொன்றலும்’ என்ற சின்னமனூர் வாசகம் சங்கரமங்கைப் போர் இப் பாண்டியன் வெற்றி என்று தெளிவாகக் குறிக்கிறது. ஆயினும் பல்லவரும் இதைத் தமது வெற்றியாகக் கூறுவதால், இது வெற்றி தோல்வி உறுதியற்ற சரிசமப் போராய் இருந்திருத்தல் கூடும். மண்ணைக் குறிச்சியில் பல்லவனும், பெண்ணாகடத்தில் பாண்டியனும் வெற்றி பெற்றனர். பெண்ணாகடத்தில் பல போர்கள் நிகழ்ந்திருப்பதனால், இப்போரை நாம் முதலாம் பெண்ணாகடப் போர் என்று கூறலாகும். மண்ணை முதல் குரவழுந்தார் ஈறான ஏழு போர்களும் தம் வெற்றியாகவே பல்லவர் குறிக்கின்றனர். நென்மலியில் வெருவச் செருவேல் வலங்கைப் பிடித்த படைத்திறல் பல்லவர்கோன்’ என்று நென்மலிப் போரைத் திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமொழியில் குறிப்பிட்டுள்ளார். கரூர்ப் போரிலேயே பல்லவப் படைத்தலைவன் உதயசந்த திரன் பல்லவ அரசுரிமைப் போட்டியாளனான சித்திர மாயனைப் போரில் வென்று நந்திவர்மன் ஆட்சிக்கும் அரசுரிமைக்கும் உறுதியளித்தான். இப்போராட்டம் கிட்டத்தட்டச் சரிசமப் போராட்டம் என்னலாம். ஏனெனில் பாண்டியர் வெற்றிகள் பெரும்பாலும் பாண்டிய நாட்டெல்லைக்குள்ளும், பல்லவர் வெற்றிகள் பெரும் பாலும் பல்லவ எல்லைக்குட்பட்ட சோழ நாட்டிலுமே இருக் கின்றன. ஆயினும் போர் முடிவில் பாண்டியன் கையே ஓங்கியும், பல்லவன் கை தாழ்ந்தும் இருந்தன என்றே தோன்றுகிறது. பல்லவனுக்கு உதவி செய்த அதிகன்மீதும் முத்தரசர் மீதும் பாண்டியன் இப்போரின் பின் எதிர் நடவடிக்கை எடுக்க முடிந்தது. ஆனால், பாண்டியப் போராட்டத்துக்கிடையிலேயே பல்லவப் பேரரசு சாளுக்கியர் தாக்குதலுக்கு ஆளாயிற்று. பல்லவப் பேரரசை விட, அதைத் தாக்கி வலுப்பெருக்கி வந்த சாளுக்கியப் பேரரசு ஆபத்தானதென்று பாண்டியர் கருதியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் பல்லவருடன் சேர்ந்தவரைத் தண்டித்ததுடன் அமைந்தனர். பல்லவ பாண்டியப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு பல்லவர்களைப் போலவே சாளுக்கியருக்கெதிராகப் பாய முனைந்தனர். பாண்டியர் மழகொங்க வெற்றி: பெரியலூர், புகலியூர்ப் போர்கள் வேள்விக்குடிச் செப்பேடு பெரியலூர்ப் போரின் வெற்றியை யும் மழகொங்க வெற்றியையும் தனித்தனியாகவே, ஆனால், பெரியலூர் வெற்றியே மழகொங்க நாட்டு வெற்றிக்குரிய போர்கள் வெற்றியாயிருந்த தென்னலாம். “தரியலராய்த் தனித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும்; பூவியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்டு, அழகமைந்த வார்சிலையின் மழகொங்கம் அடிப்படுத்தும்” மழகொங்கர் தலைவன் மகளாகிய பூசுந்தரியைப் பாண்டியன் பராங்குசன் மணம்புரிந்து கொண்டான். அவள் வயிற்றில் பிறந்த புதல்வனே அடுத்த பாண்டியர் பேரரசனான நெடுஞ்சடையன் பராந்தகன் ஆவான். இங்கிலாந்தின் மன்னர் 13-ஆம் நூற்றாண்டில் வேல்ஸ் நாட்டை வென்ற பின், தன் மைந்தனை வேல்ஸ் நாட்டுக் கோமானாக முடி சூட்டியதுபோலப் பாண்டியனும் இந்த இளவரசன் நெடுஞ்சடையனுக்கு வயது வந்தவுடன் ‘கொங்கர் கோன்’ என்ற உரிமையுடன் அவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான். சாளுக்கிய பல்லவப் போராட்டம் பல்லவர் தென்திசைப் போரில் ஈடுபட்டிருந்த சமயம் முதலாம் விக்கிரமாதித்தனுடைய இரண்டாம் புதல்வனும் வினயாதித்தனுக்குப் பின் சாளுக்கியப் பேரரசனானவனுமான இரண்டாம் விக்கிரமாதித்தன் (733 - 746) பல்லவப் பேரரசின் மீது படையெடுத்துக் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இப்படையெடுப்பில் இரண்டாம் விக்கிரமாதித்தன் மகன் கீர்த்திவர்மனுமே அவனுடன் கலந்து கொண்டிருந்தான். காஞ்சி சாளுக்கியர் கையிலிருந்த காலம் சிறிதேயானாலும் அவர்கள் வெற்றி நிறை வெற்றியாகவே இருந்ததென்று தெரிகிறது. போரில் இதுவரை தென்னாட்டு மன்னர் கையாண்டிராத ஒரு வள்ளுவர் பண்பைச் சாளுக்கியப் பேரரசன் கையாண்டு பல்லவப் பேரரசரை நாணவைத்தான். அவன் நகரில் அழிவு செய்யவில்லை; மக்களைத் துன்புறுத்தவில்லை. அது மட்டுமன்று, அவன் தந்தை முதலாம் விக்கிரமாதித்தன் காஞ்சி கைலாசநாதர் கோயிலிலிருந்து கொள்ளையிட்டுச் சென்ற பொற்காசுகளையும் அணிமணிகளையும் அக்கோயிலுக்கே திருப்பிக் கொடுத்தான். இவையன்றி மேலும் பல நன்கொடைகள் அளித்தான். காஞ்சியைக் கைக்கொண்டிருந்த சில நாட்களில் நகர, நாட்டு மக்கள் உள்ளத்தையே அவன் கவர்ந்துகொண்டான் என்று அறிகிறோம். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்” என்ற நீதிப்படி தான் செய்த செயலையும் வாதாபியில் பல்லவர் செய்த செயலுடன் ஒப்பிட்டுக் காட்டி அவன் கைலாசநாதர் கோயில் தூண் ஒன்றில் ஒரு கல்வெட்டுப் பொறிப்பித்தான். விசித்திரமான இவ்‘வள்ளுவத் தண்டனை’க்கு எதிர் செயல் வகை தெரியாமல் பல்லவர் விழித்திருக்க வேண்டும்! பல்லவனைத் தென் தமிழக அரசரிடமிருந்து மீட்ட பின் உதயசந்திரன் வடக்கே திரும்பிச் சாளுக்கியரைத் தம் நாட்டுக்குத் துரத்திப் பல்லவப் பேரரசை மீண்டும் நிலைநிறுத்தினான். கடைசிச் சாளுக்கிய - பாண்டியப் போராட்டம்: வெண்மைப் போர் கி.பி. 740 - 741 மழகொங்க வெற்றியும் அதிகன் வெற்றியும் முடிவுற்ற பின்னர் பாண்டியன் தன் கைவரிசையை இன்னும் வடக்கே செலுத்தினான். தற்கால மைசூரின் பெரும்பகுதியே அன்று கங்க நாடு என்றழைக்கப்பட்டிருந்தது. பல்லவ - பாண்டியப் போரில் கங்கர் பல்லவனுக்கு உதவியாயிருந்ததே இப்படையெடுப்புக்குரிய ஒரு காரணம் ஆகும். படையெடுப்பின்போது கங்க அரசன் சிரீபுருஷ முத்தரசன் என்பவன்; அவன் சில சமயம் சாளுக்கியருக் கும் சில சமயம் பல்லவருக்கும் உதவினாலும், சாளுக்கியப் பேரரசன் இரண்டாம் விக்கிரமாதித்தனையே மேலாட்சியாள னாகக் கொண்டிருந்தான். ஆகவே அவனை எதிர்த்தபோது சாளுக்கியரும் அவனுக்கு ஆதரவாகப் போர்க்களத்துக்கு வந்தனர். கி.பி. 740 அல்லது 741-ல் வெண்பை என்னுமிடத்தில் நடந்த போரில் பாண்டியன் பராங்குசன் பெரு வெற்றி கண்டான் இப் போரில் பாண்டியர் படைத்தலைவன் காரி என்பவன். பாண்டியர் புகழ் இப்போரினால் பெருவளம் உற்றது. பாண்டியப் பேரரசு இதன்பின் தென்னாட்டின் உச்ச உயர் பேரரசாக உயர்ந்தது. இதுவரை சாளுக்கியரிடம் உரிமையும் பல்லவனிடம் பாசமும் காட்டிவந்த கங்கர் இப்போது தெளிவாகப் பாண்டியர் மேலாட்சியையும் ஏற்று, அவர்கள் தேசத்தையும் இருகையேந்திப் பெற்றனர். சிரீபுருஷன் புதல்வி, கொங்கர் கோனான பாண்டிய இளவரசன் நெடுஞ்சடையனுக்கு மணமுடிக்கப்பெற்றாள். கொங்கர் செல்வனுடன் கங்கர் செல்வி கொண்ட இந்த இணைவு சாளுக்கியனுக்கும் பல்லவனுக்கும் பெரிய கண்ணுறுத்தலாக இருந்திருக்க வேண்டும். சாளுக்கியர் வீழ்ச்சி: இராஷ்ட்டிகூடர் எழுச்சி: பாண்டிய - பல்லவ போட்டியின் உச்சநிலை கண்ட அதே தலைமுறையே சாளுக்கிய - பல்லவப் போட்டியின் உச்சநிலையும், பாண்டிய -சாளுக்கிய போட்டியின் உச்சநிலையும் கண்டது. தென்னாட்டின் இந்த முக்கோணப் பேட்டியால் மூன்று பேரரசு களுமே நாளடைவில் நலிவுற்றாலும், முதல் முதல் உரமற்று விழநேர்ந்தது சாளுக்கியப் பேரரசே. சாளுக்கியருக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த இராஷ்டிரகூட குடித்தலைவன் தந்திதுர்க் கனுக்குப் பல்லவன் இரண்டாம் நந்திவர்மன் உதவியாயிருந்தான். கி.பி.754-ல் தந்திதுர்க்கன் கடைசிச் சாளுக்கிய அரசனான கீர்த்திவர்மனை வென்றொழித்துத் தானே பேரரசனானான். அடுத்த ஓரிரு நூற்றாண்டுகள் சாளுக்கியப் பேரரசினிடமாக வடதிசையில் இராஷ்டிரக் கூடப் பேரரசு ஆற்றல் வாய்ந்ததாக வளர்ந்தது. பல்லவன் உதவியைக்கூடப் பொருட்படுத்தாமல் இராஷ்டிர கூடத் தந்திதுர்க்கன் பல்லவப் பேரரசைப் படையெடுத்துக் காஞ்சியைச் சிலநாள் கீழடக்கியிருந்ததாகத் தெரிகிறது. இந்தத் தந்தி துர்க்கன் வயிரமேகன் என்ற சிறப்புப் பெயரால் குறிக்கப்பட்டான். திரு மங்கையாழ்வார் இதனைச் சுட்டியே, “மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடிமாலை வயிரமேகன் தன் வலி தன் புகழ்சூழ்ந்த கச்சி” என்று பாடியுள்ளார். இராஷ்டிரகூடர் எழுத்து மூலங்களும் இதை வலியுறுத்துகின்றன. ஆனால், தந்திதுர்க்கன் காஞ்சியை நீண்ட நாள் கீழடக்கியிருக்கவில்லை. அவன் நோக்கமும் பல்லவப் பேரரசைக் கொள்வதன்று. வசப்படுத்துவதே என்று கருதலாம். ஏனெனில் அவன் தன் மகள் ரீவாவை நந்திவர்ம பல்லவனுக்கு மணஞ்செய்து தந்து, அவ்வுறவால் தன்னை வலுப்படுத்திக் கொண்டு சென்றான் என்று தோன்றுகிறது. இராஷ்ரடிகூடர் - பல்லவரின் இந்த மண உறவு அவர்கள் நேசத்தைவிட அவர்கள் பகைமைக்குப் பின்னால் காரணமாய் அமைந்தது என்னலாம். பாண்டிய பல்லவப் போட்டி: பெண்ணாகடப் போர் இரண்டாம் நந்திவர்ம பல்லவனும் பாண்டியன் அரிகேசரி பராங்குசன் மாறவர்மனும் ஒருங்கே ஆட்சி தொடங்கி நீண்ட காலம் ஆட்சி செய்தாலும், பாண்டியன் ஆட்சியே முதலில் முடிவடைந்தது. அதன்பின் பாண்டிய பல்லவப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திய பாண்டியன் முன் ஆட்சியில் கொங்கர் கோமானாயிருந்த நெடுஞ்சடையன் பராந்தகனேயாவன் (765 - 790) வேள்விக்குடிச் செப்பேட்டைத் தன் மூன்றாம் ஆட்சி யாண்டிலும் சீவரமங்கலம் செப்பேட்டை அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னும் வெளியிட்டுப் பாண்டியர் வரலாற்றுக்குப் பேருதவி புரிந்தவன் இவனே, சென்னைப் பொருட்காட்சி மனையிலும் இம்மன்னன் அளித்த மற்றொரு செப்பேடு உளது. முந்திய பாண்டிய அரசன் காலத்தில் அமைச்சராயிருந்த மாறன்காரியே இவ்வரசன் காலத்திலும் தொடர்ந்து அரசியலைச் செவ்வனே நடத்தினான். ஆனைமலைக் கோயில் கட்டியவன் இவன் என்றே கருதப்படுகிறது. இவனன்றிக் காரி எயிணன், காந்தன், கணபதி என்ற சிறந்த படைத்தலைவர்களும் இவனுக்கு இருந்தனர். மாறன்காரி மாண்டபின், காரி எயினனே அவனுக்குப் பதிலாக அமைச்சனாய் இருந்தான். இப்பாண்டியனது உத்தர மந்திரியான மதுரகவியே பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவராகிய மதுரகவி என்று கருதுவர் சிலர். இப்பாண்டிய மன்னன் வைணவப் பற்றுள்ளவன் என்பதில் ஐயமில்லை. இப்பாண்டியன் பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மனைக் காவிரிக்குத் தென்கரையில் உள்ள பெண்ணாகடத்தில் முறி யடித்துப் பெரும் புகழ் அடைந்தான். “நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக் கருதாது வந்து எதிர்மலைந்த காடவனைக் காடு அடையப் பூவிரியின் புனற்கழனிக் காவிரியின் தென்கரைமேல் தண்நாக மலர்ச்சோலைப் பெண்ணாகடத்து அமர்வென்றும்” என்று இப்போர் வேள்விக்குடிச் செப்பேட்டில் விரித்துரைக் கப்படுகிறது. தகடூர் அதிகன் வீழ்ச்சி: ஆயிரவேலி அயிரூர், புகழியூர் அமர்க்களங்கள் முந்திய பாண்டியன், பல்லவனுக்கு உதவியதற்காகத் தகடூர் அதிகனைப் போரில் தாக்கித் தண்டித்திருந்தான். ஆயினும் அதிகன் முற்றிலும் முறியடிக்கப் படவில்லையென்றோ, அல்லது தப்பிச்சென்று புதுவலிமை தேடினான் என்றோ தெரிகிறது. நெடுஞ்சடையன் ஆட்சியின்போது அவன் பல்லவன் இரண்டாம் நந்திவர்மன் உதவிமட்டுமன்றிக் கேரளன் உதவியும் பெற்றுப் பெரும் படையுடன் பாண்டியப் பேரரசை உதிர்க்க முனைந்தான். திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள புகழியூரிலும், காவிரி வடகரையிலுள்ள ஆயிரவேலி, அயிரூர் என்ற இடங்களிலும் பெரும் போர்கள் நிகழ்ந்தன. மாஇரும் பெரும்புனல் காவிரி வடகரை ஆயிர வேலி ஆயிரூர் தன்னிலும், புகழியூரிலும் திகழ்வேல் அதியனை ஓடுபுறம் கண்டு, அவன் ஒலியுடை மணித்தேர் ஆடல் வெம்மா அவை உடன்கவர்ந்தும் என்ற சீவரமங்கலச் செப்பேடு இப்போரை விளக்கமாக விரித் துரைக்கிறது. போரில் தோற்ற அதிகன் யானைகளும், குதிரைகளும் கைப்பற்றப்பட்டன. இப்போர்களில் பல்லவனும் கேரளனும் உதவியதும், இரு படைகளும் தோற்றோடியதும், வருணிக்கப் பட்டுள்ளன. பல்லவனும் கேரளனும் ஆங்கவற்குப் பாங்காகிப் பல்படையொடு பார்ஞெளியப் பௌவமெனப் பரந்தெழுந்து குடபாலும் குணபாலும் அணுகவந்து விட்டிருப்ப, வெல்படையொடு மேற்சென்று, அங்கு இருவரையும் இருபாலும் இடரெய்தப் படைவிடுத்து. தமிழக அரசர் யாவரும் ஈடுபட்டுப் பாண்டியனை எதிர்த்த இப்போர் ஒரு சிற்றரசனை எதிர்த்த சிறு போர் அன்று; தமிழகப் பேரரசுப் போட்டியின் ஓர் உயிர்ப்பகுதியேயாகும். இப் போராட்டம் வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிக்கப்படாததால், அது வெளியிடப்பட்ட நெடுஞ்சடையனின் மூன்றாம் ஆண்டு (768) சென்றபின் நடந்ததாதல் வேண்டும். இப்போரில் அதிகன் மதுரை யிலேயே சிறைப்படுத்தப்பட்டான். குடகொங்கத்து அடல்மன்னனைக் கொல்களிற்றொடும் கொண்டுபோந்து கொடி அணிமணி நெடுமாடக் கூடல்மதி லகத்து வைத்தும் என்று சீவரமங்கலத்துச் செப்பேடு இதனைக் குறிப்பிடுகின்றது. கொங்கநாட்டு வெற்றியின் பின் இப்பாண்டியன் அந்நாட்டில் (இன்றைய கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள) காஞ்சிவாய்ப் பேரூரில் தன் வழிபடு தெய்வமாகிய திருமாலுக்குக் ‘குன்றமன்னதோர் கோயில்’ கட்டினான். கரவந்தபுரம் என்னும் கோட்டையைத் திருத்தியமைத்தான். இது அதிகன் கோட்டை களுள் ஒன்றாக இருக்கலாம். அது திருநெல்வேலியில் ஆய் வேளின் கோட்டை களுள் ஒன்றான களக்காடு என்பாரும் உளர். வெள்ளூர், விண்ணம், செழியக்குடி, நாட்டுக்குறும்புப் பறந்தலைகள் இவ்வூர்கள் எங்கிருந்தன என்று தெளிவாக அறிய முடிய வில்லை. வெள்ளூர் பின்னாளில் சோழர் பாண்டியப் போர்க் களமாயிருந்த ஊரானால், அது மதுரைக்கருகில் உள்ளதே. இவ் விடங்களில் முறியடிக்கப்பட்ட குறும்பரும் யார் என்று கூற முடியவில்லை. பின்னாட்களில் சோழர் காலத்திலும் விசயநகரப் பேரரசர் காலத்திலும் பாளையக்காரர்களாக நிலவிய பெருங்குடி மக்களாகவே அவர்கள் இருந்திருத்தல் கூடும். பொன்மலர்ப் புறவில் வெள்ளூர், விண்ணம், செழியக்குடி என்று இவற்றுள் தெவ்வர் அழியக் கொடுஞ்சிலை அன்றுகால் வளைத்தும் என்று சீவரமங்கலச் செப்பேடு இவ்வெற்றிகளைக் குறித்துள்ளது. காட்டுக்குறும்பு சென்றடைய நாட்டுக்குறும்பில் செருவென்றும் என்று வேள்விக்குடிச் செப்பேடு நாட்டுக் குறும்பை மட்டும் குறிக்கிறது. நான்கு களங்களிலும் முதல் களம் அதுவே என்பதை அதுகாட்டும். விழிஞப் போர் ஐ நெடுஞ்சடையன் வெற்றிகளில் ஆய்வேளை அடக்கியது தனிச்சிறப்புப்படக் குறிக்கப்படுகிறது. ஆய்வேளையும் குறும்பரையும் அடல் அமருள் அழித்தோட்டி என்று வேள்விக்குடிச் செப்பேடு இதைக் குறிக்கிறது. ஆனால், இந்நிகழ்ச்சியை விரிவுபடக் குறிப்பது சீவரமங்கலத்துச் செப்பேடே. அதன் வாசகங்களால் ஆய்வேள் அப்போது வேண்மன்னானயிருந்தானென்றும், முழுவதும் ஒருவேளை திருவாங்கூர் முழு வதும் ஆண்டிருக்கக் கூடுமென்றும், எப்படியும் திருவனந்தபுரம்வரை அவன் ஆட்சி பரவியிருந்ததென்றும் அறிகிறோம். ஏனென்றால் அவனைத் தாக்கிய போர் திருவனந்தபுரத்துக்குச் சற்றே தெற்கிலுள்ள விழிஞத்திலேயே நடைபெற்றது. அதுஉயர்பெரும் மதில்களுடன் இராவணன் இலங்கை போன்ற அரணங்களுடையதாயிருந்ததென்று செப்பேடு குறிக்கிறது. ஆழிமுந்நீர் அகழ்ஆக அகல் வானத் தகடு உரிஞ்சும் பாழிநீள் மதில் பரந்தோங்கிப் பகலவனும் அகல ஓடும் அணியி லங்கையின் அரணி தாகிய மணியிலங்கு நெடுமாட மதில் விழிஞம் அது அழியக் கொற்ற வேலை உறை நீக்கி வேற்றத்தாயை வேண் மன்னனை வென்று அவன் தன் விழுநிதியொடு குன்றம் அன்ன கொலைக்களிறும் கூந்தல் மாவும் குலதனமும் நன்னாடும் அவைகொண்டும் என, ஆய்வேள் யானை குதிரை செல்வங்கள் கைப்பற்றி அவன் நாடும் கைக்கொண்ட செய்தி தெரிய வருகிறது. வேணாடு என்ற திருவெங்கூரில் ஆய்வேளையல்லாத வேறு குடி மன்னரும் இருந்தனர். மலைநாட்டுக் கருகந்தன் இவர்களில் ஒருவனாய் இருத்தல் வேண்டும். நெடுஞ்சடையன் ஏறத்தாழ கி.பி. 788-ல் அவனை வென்று, அருவியூர்க் கோட்டை, கரைக் கோட்டை என்ற அவனுடைய அரண்காப்புடைய நடிகர்கள் இரண்டை அழித்தான். நெடுஞ்சடையன் ஆட்சி இறுதியில் பாண்டியநாடு, கன்னியாகுமரி முதல் தென்கன்னட மாவட்டம் வரையுள்ள கொங்குநாடு, மைசூர், சேர நாட்டுப் பகுதி ஆகியவை பாண்டியப் பேரரசின் எல்லைக்கு உட்பட்டிருந்தன. திருநெல்வேலி, விழிஞம் ஐஐ, கோட்டாறு, சேவூர், பூலந்தை நாரையாறு, கடையல் போர்க்களங்கள் நெடுஞ்சடையனுக்குப் பின் பாண்டியன் இரண்டாம் இராசசிங்கன் (780 - 800), முதலாம் வரகுணன் அல்லது வரகுண மகாராசன் (800 - 830) ஆகியோர் ஆண்டனர். ‘கொற்றவர்கள் தொழுக சோழற்கால் வரகுணமகாராசன்’ என்று மட்டுமே சின்னமனூர்ச் செப்பேடுகள் இவனைக் குறிக்கின்றன. இவனே இறையனார் அகப்பொருளுரை மேற்கோளில் காட்டிய பாண்டிக் கோவையின் தலைவன் என்ற கருத்துடன், இத்தலைவனுக் குரியதாகக் குறிக்கப்பட்ட இப்போர்கள் இந்த வரகுணன் போரில் ஏற்பட்டுள்ளன. ஆயினும் மறைமலையடிகள் குறித்தபடி, இப் பாண்டிக்கோவைத் தலைவன் இரண்டாவது அல்லது மூன்றாவது இடைக்காலப் பாண்டியன் அவனி சூளாமணியாக இருக்கவேண்டும் என்பதே பொருத்தமானது. ஏனெனில், இப்போர்கள் யாவும் சேரனை எதிர்த்த போர்களே, நெடுஞ்சடையன் நாட்களில் ஆய்வேளுக் குரியதாயிருந்து அவனால் கைக்கொள்ளப்பட்ட நாட்டிலே, அதே இடத்திலும் அருகிலும் இத்தனை போர்கள் நடைப் பெற்றிருக்க வழியில்லை. இக்கோட்பாட்டையே உறுதியாகக் கொண்டபின் பாண்டியர்க்கு கோவையின் முதற்போரே முதல் விழிஞப்போராகவும், நெடுஞ்சடையன் விழிஞப்போர் இரண்டாம் விழிஞப் போராகவும் கொள்ளத்தகும். வாதவூரடிகளாகிய மாணிக்கவாசகர் காலத்திற்கு முன் இருந்தவனும் அவரால் ‘வரகுணனாம் தென்னவன்’, ‘வரகுணன் வெற்பில் வைத்தகயல்’ எனப்பட்டவனும் ஆன வரகுணப் பாண்டியன் இவனே என்பர் சிலர். ஆனால், அப்பாண்டியனும் வாதவூரரும் சங்க இலக்கியம், மணிமேகலை காலத்தவர் என்ற ஆசிரியர் மறை மலையடிகளின் முடிவே இங்கும் முடிவாகக் கொள்ளத்தக்கது. பட்டினத்தடிகளும் நம்பியாண்டார் நம்பியும் இடைக்கால முதல் வரகுணனுக்கு பிந்தியவரே யாதலாலும், இவ்விடைக்கால வரகுணனும் சிவநெறிப் பற்றுடையவனே யாதலாலும், அவர்கள் குறித்த வரகுணன் இவனே என்பது கூடாததல்ல. ஆயினும் கழற்சிங்கனைத் தம் காலத்தவனாகவும் நெடுமாறனை அணிமைக் காலத்தவனாகவும் சுந்தரர் குறித்தது போன்ற தொனி அவர்கள் குறிப்பில் இல்லை. அத்துடன் சிவநெறிப் பற்றுப் பாண்டியர் பெரும்பாலாருக்கும் பொதுவேயாகும். ஆகவே மொத்தத்தில் வாதவூரர் குறித்த வரகுணனையே பின்னோரும் அவர் வழிநின்று குறித்தவர் ஆகலாம். இடைக்காலத்துக்குரிய இம்முதல் வரகுண பாண்டியன் போரும் வரலாறும் நமக்குத் திறம்படத் தெரிய வழியில்லை யாயினும், அவன் காலத்தில் பாண்டியப் பேரரசு உச்ச நிலையி லிருந்ததென்று நாம் உறுதியாகக் கூறமுடியும். அவன் ஆட்சி சோழ நாடுமுழுதும் பரவியிருந்ததென்றும், பல்லவப் பேரரசினிடமிருந்து சோழ நாடு முழுவதும் அவன் காலத்திலோ, அதற்குச் சற்றுமுன்னோ கைக்கொள்ளப்பட்டு விட்டதென்றும் அவன் கல்வெட்டுக்களின் பரப்பே காட்டுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர், இராதா புரம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் அவன் அரும்பெருங் கோயிற் பணிகள் ஆற்றினான். இராஷ்டிரகூட - பல்லவர் போட்டி: விளந்தைப்போர் கி.பி. 788 இரண்டாம் நந்திவர்மன் பல்லவனுக்குப் பின் வந்த தந்திவர் மன் (775 - 826) இராஷ்டிரகூட மரபுடன் உறவுடையவன். ஆனால், இது அவனுக்கும் அவன் பேரரசுக்கும் தொல்லையாகவே முடிந்தது. துருவன் மூன்றாம் கோவிந்தன் என்ற இரண்டு இராஷ்டிரகூடப் பேரரசர் ஆட்சித் தொடக்கத்தில் தன் உறவினரான போட்டி அரசுரிமையாளரை ஆதரித்து அவன் இராஷ்டிரகூட அரசியலில் தலையிட்டுப் பல போர்களில் மாட்டிக் கொண்டான். இதனால் பல்லவப் பேரரசு ஓரளவு தளர்வுற்றதென்னலாம். ஆனால், கி.பி. 788-ல் விளந்தைணனுக் கெதிராகப் பல்லவன் தந்திவர்மன் பெரு வெற்றி பெற்றான். இப்போரில் பாணர்குடி மன்னன் பல்லவன் பக்கமாக இருந்தான். குருக்கோட்டுப் போர்க்களம் (கி.பி. 826 - 836) தந்திவர்ம பல்லவனுக்குப் பின் தெள்ளாறெறிந்த நந்திவர் மன் என்று குறிக்கப்படும் மூன்றாம் நந்திவர்மன் (826 - 850) அரியணை ஏறினான். சுந்தரமூர்த்தி நாயனாராலும் சேக்கிழாரா லும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவனாகக் குறிக்கப் பட்ட கழற்சிங்கன் அல்லது கழல்நந்தி இவனே என்று கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத்தொகையில், கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் என்ற அடிகளில் இவனைத் தம் காலத்தவராக, ‘காக்கின்ற’ என்ற நிகழ்காலம் மூலம் குறித்துள்ளார். இம்மன்னன் மீது பெயர் அறிவிக்கப்படாத அவன் காலத் தமிழ்க் கவிஞர் ஒருவர் ‘நந்திக் கலம்பகம்’ என்ற அழகிய காவியம் புனைந்தியற்றியுள்ளார். தவிர சங்க காலத்தில் ஒரு பாரதம் பாடிய பெருந்தேவனார் இருந்தது போல, இவன் காலத்திலும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் சிலப்பதிகாரத்தைப் போன்ற நடையில் ஒரு பாரதம் பாடிய பெருந்தேவனார் இருந்தார். வெண்பாவால் இயன்ற இந்தப் பாரதத்திலும் ஒரு சில பாக்களே நமக்கு வந்தெட்டி யுள்ளன. குருக்கோடு என்பது துங்கபத்திரை ஆற்றங்கரையிலுள்ள அரண் அமைந்த நகர் என்று அறிகிறோம். பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூட மன்னரால் தன் முன்னோர் அடைந்த தோல்விகளின் கறை நீக்க எண்ணி இராஷ்டிரகூட பேரரசின் மீது படையெடுத்துச் சென்றான். குருக்கோட்டில் எதிரிகளுடன் கை கலப்பு ஏற்பட்டு, ஒரு உக்கிரமான போர் நடைபெற்றது. “கூடலர் முனைகள்சாய வடபுலம் கவர்ந்துகொண்டு” என்று சேக்கிழார் பெரிய புராணமும், குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை அத்தனையும் அஞ்சரங்கள் ஆர்த்தான் அருள் என்று நந்திக்கலம்பகமும் இவ்வெற்றியைப் பாடியுள்ளன. ‘யானைகள் வாளால் துணிக்கப்பட்டன. அவை அணிந்திருந்த முத்துமாலைகள் போர்க்களத்தில் சிதறிக்கிடந்தன. அக்காட்சி போர்க்களமங்கை தன் பற்களைக் காட்டிச் சிரிப்பது போன்றிருந் தது’ என்று வேலூர்ப்பாளையப் பட்டயம் போர்பற்றி அணியழகு படக் கவிதை புனைந்துள்ளது. இப்போரின் பின் பல்லவப் பேரரசின் மதிப்பு உயர்ந்த தென்பதில் ஐயமில்லை. ஏனெனில் இராஷ்டிரகூடப் பேரரசர் களிலே பெரும் புகழ் வாய்ந்த பேரரசனான அமோகவர்ஷன் தன் புதல்வி சங்காவை அவனுக்கு மணம் செய்து கொடுத்தான். அந்நாளைய பெண்பாலாரில் அழகாலும் குணத்தாலும் கல்வி யாலும் சிறந்து ‘நாமகளும் பூமகளும் ஒருங்கு பிறந்தா’ ளென்னும் சிறப்புடையவளாக, இவ்வரசி வருணிக்கப்படுகிறாள். அமோகவர்ஷனைப்போலவே அவளும் சமணநெறி சார்ந்தவளாகவே இருந்திருத்தல் கூடும். சிவன் கோயிலில் பூவை முகர்ந்ததற்காக மூக்கை ஒரு நாயனாரும், அதன்பின் கையை மற்றொரு நாயனாரான அவள் கணவனும் வெட்டினார்கள் என்று பெரிய புராணங் கூறுவது இப்பெண்ணாரணங்கைப் பற்றிய செய்தியே என்று ஆராய்ச்சியாளர் பலர் கருதுகின்றனர். பாண்டிய பல்லவப் போட்டி: தெள்ளாற்றுப் போர் ஐ கி.பி.834 தெள்ளாறு வடஆர்க்காட்டு மாவட்டத்தில் வந்தவாசிக் கருகிலுள்ளது. இதே இடத்தில் சோழப் பேரரசர் காலத்திலும் ஒரு போர் நடந்ததாதலால், இதனை நாம் முதல் தெள்ளாற்றுப்போர் என்று கூறலாம். மூன்றாம் நந்திவர்ம பல்லவனுக்குத் ‘தெள்ளாறெறிந்த நந்திவர்மன்’ என்ற சிறப்புப் பெயரையும் பெரும் புகழையும் அளித்த போர் இதுவேயாகும். முதலாம் வரகுணவர்மனுக்குப் பின் பாண்டிய அரியணை ஏறியவன் சீர்மாறன் சீரீவல்லபன் பரசக்கர கோலாகலன் என்பவன் (830 - 862). பல்லவரிடமிருந்து முந்திய பாண்டியன் சோணாட்டைக் கைப்பற்றிய பின் பாண்டியன் அத்துடன் அமையாமல் பல்லவ நாட்டின்மீதே படையெடுக்க எண்ணினான். பல்லவன் வடதிசைப் படையெழுச்சியைப் பயன்படுத்தி அவன் சேர சோழப் படைகளையும் உடன் கொண்டு தெள்ளாறு வரை முன்னேறினான். அவ்விடத்தில் தென் தமிழ்ப் படைகள் படுதோல்வியடைந்தன. இராஷ்டிரகூட வெற்றியால் உயர்ந்த பல்லவன் மதிப்பு தெள்ளாற்று வெற்றியால் முன்னிலும் பன்மடங்காக வளர்ந்தது. இப்போரால் சோழநாடு பழையபடி பல்லவப் பேரரசுக்கு உட்பட்டதாயிற்று. பெருந்தேவனார் பாரத வெண்பா இத்தெள்ளாற்றுப் போரைக் குறிப்பிட்டு நந்திவர்மனைப் புகழ்ந்துள்ளது. வண்மையால், கல்வியால், மாபலத்தால், ஆள்வினையால் உண்மையால், பாராள் உரிமையால், -திண்மையால், தேர்வேந்தர் வான்ஏறத் தெள்ளாற்றில் வென்றானோடு யார்வேந்தர் ஏற்பார் எதிர்? வெள்ளாறு, பழயாறு, நள்ளாறு, கடம்பூர்ப் போர்க்களங்கள் தெள்ளாறெறிந்த பின்னும், பல்லவன் மூன்றாம் நந்தி வர்மன் பகைவர்களைத் துரத்திச் சென்று, சோணாட்டில் உள்ள வெள்ளாறு, பழயாறு, நள்ளாறு, கடம்பூர் முதலிய போர்க் களங்களில் அவர்களை முறியடித்துத் துரத்தினான். இப் போர்கள் 834 -க்கும் 836-க்கும் இடையே நடைபெற்றிருக்கக் கூடும். தமிழ் வளர்த்த நந்தி தெள்ளாறெறிந்த நந்திவர்வன் தமிழ்ப் புலமையையும் தமிழ்ப் பற்றும் உடையவன், ‘தமிழ் நந்தி’ ‘பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி’ ‘நூற்கடல் புலவன்’ ‘நூல் வரம்பு முழுதும் கண்டான்’ என நந்திக் கலம்பக ஆசிரியர் அவனைப் புகழ்கின்றார். அவன் மறைவு பற்றிய அவர் பாடலுடன் சோகரசத்துக்கும் அணியழகுக்கும் ஈடாகக் கூறத்தக்க பாடல்கள் மிகச் சிலவே. வானுறுமதியை அடைந்தது உன்வதனம்! வையகம் அடைந்தது உன் கீர்த்தி! கானுறு புலியை அடைந்தது உன் வீரம்! கற்பகம் அடைந்தது உன் கரங்கள்! தேன்உறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்! செந்தழல் புகுந்தது உன்மேனி!- யானும் என் கவியும் எவ்விடம் புகுவேம், எந்தையோ! நந்தி நாயகனே! பாண்டியர் இலங்கைப் படையெடுப்பு : சிங்களப்போர்: குன்னூர்ப் போர் 840 சீர்மாறன் சிரீவல்லபன் வெற்றிகளாகச் சிங்களம், குன்னூர், விழிஞம் என்று மூன்று பெயர்களை மட்டுமே சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிக்கின்றன. சிங்களம் என்ற சொல் இலங்கை யைக் குறித்ததென்பதில் ஐயமில்லை. ஆனால், அது இங்கே ஒரு போர்க்களப் பெயராகக் கூறப்பட்டதா, முழு இலங்கைப் போரையும் மொத்தமாகக் காட்டிற்றா என்பது தெரியவில்லை. அதுபோலவே சிங்களம், விழிஞம் ஆகிய இரண்டு வெற்றிகளின் இடையே கூறப்படுகிற குன்னூர் முந்தியதைச் சேர்ந்ததா, பிந்தியதைச் சார்ந்ததா என்பதும் விளங்கவில்லை. கேரளப் பகுதியிலும் நீலகிரிப் பகுதியிலும் குன்னூர் என்ற இடப்பெயர்கள் உள்ளன. ஆனால், சிங்களப் போர் என்ற பொது நிகழ்ச்சியின் முக்கிய உறுப்பாகவே குன்னூர் குறிக்கப்பட்டிருக்கிறது என்று கருத இடமுண்டு. கடலுக்கப்பாற்பட்ட தலைத்தமிழகத்துக்கும் இலங்கைத் தமிழகத்துக்கும் இடையே சங்ககாலஉறவு, பெரும்பாலும் சோழர் படையெடுப்பாகவும் சேரநாட்டவர் குடியேற்றமாகவுமே இருந்தது. பாண்டிய நாட்டுத் தொடர்பு மன்னர் நேசத் தொடர்பாகவும் அத்துடன் மன்னர், மக்கள் மண உறவுத் தொடர்பாகவும் மட்டுமே இருந்தது. நெடியோன் காலத்துக்கு இப்பால், இலங்கைத் தமிழகமும் தலைத் தமிழகமும் கடலால் பிரிவுற்று வேறு வேறு நிலப்பிரிவுகளானபின், சீர்மாறன் ஆட்சியிலேயே நாம் முதல் தடவையாகப் பாண்டிய இலங்கை சரிசமப் போட்டிப் பூசல்பற்றிக் கேள்விப்படுகிறோம். இது உண்மையில் பாண்டியர் பேரரசு விரிவின் ஒரு படியே என்பதில் ஐயமில்லை. ஏனெனில் கரிகாலனுக்குப்பின் அச்சங்ககாலச் சோழனையும் அவன் மரபினரையும் இடைக்காலப் பாண்டியரையும் பின்பற்றிச் சோழப் பேரரசரும் இலங்கையைத் தம் பேரரசு வளர்ச்சியில் கடல்கடந்த பேரரசின் முதற் படியாகக் கொண்டது காண்கிறோம். ஆயினும் இடைக்காலப் பாண்டியர் ஊழியில் மட்டுமே பாண்டியரும் இலங்கையரசரும் சரிசமப் பேரரசுப் போட்டியில் முனைவது காண்கிறோம். பாண்டி நாட்டுத் தமிழக மறுமலர்ச்சி இலங்கையிலும் இந்நாளில் பூப்பெய்தியது என்று தோற்றுகிறது. போருக்குக் காரணமாக இரு திசையிலும் பேரரசுக்குரிய சாக்குப் போக்குகளும் வாய்ப்புகளும் இயல்பாகக் கிடைத்தன. நெடுஞ்சடையன் மழவர்கோன் பாவையன்றி வேறு ஓர் அயல் புலப் பாவையையும் மணந்திருந்தான். அவ்வழியில் பிறந்த ஓர் இளவரசன் சீர் மாறனுக்கெதிராகப் பாண்டிய அரசுரிமை கோரினான். பாண்டியப் பேரரசின்மீது ஆதிக்கம் செலுத்தும் விழிப்புடன் இலங்கை அரசன் தர்மபாலன் அவனுக்கு ஆதரவளித்தான். அதேசமயம் இலங்கை மரபுப்படி தனக்கு அமைச்சர் பதவி அளிக்கவில்லை என்று குறைப்பட்ட தர்மபாலனின் இளவல் மகnந்திரன் சீர்மாறனிடம் தஞ்ச மடைந்தான். போர்த் தினவுகொண்ட இருபெருவேந்தர்களும் இவ்வாறு கடல் கடந்து தம் அரசியல் கரங்களை நீட்ட முனைந்தனர். பாண்டியன் ஒரு படையுடன் மகேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். பாண்டியர் படை இலங்கையில் ‘மகதசித’ என்ற கோட்டையை முற்றுகையிட்டது. இவ்வமயம் தர்மபாலன் இறக்கவே, அவன் மகன் அகபோதி அரசனானான். அரசன் தன் உடன் பிறந்தவனான சிலாமேகசேனனுடன் அவர்களை எதிர்த்துப் போரிட்டான். இந்தப் போரே ஒருவேளைக் குன்னூர்ப் போராக இருந்திருக்கக்கூடும். இப்போரில் பாண்டியன் முழுநிறை வெற்றி பெற்றான். ஆனால், இப்போரில் பாண்டியன் பேரழிவு ஏற்பட்டது. பாண்டியர் தளபதியும் மகேந்தினும் படைவீரர்களில் பெரும்பகுதியினரும் மாண்டனர், அதே சமயம் பாண்டியரிடம் பட்ட அவமதிப்புத் தாங்காமல் இளவரசன் சேனன் தற்கொலை செய்துகொண்டான். இந்நிலையில் இலங்கை மன்னன் தன் அரியணையையும் அணிமணி நிதிகளையும் மட்டும் காப்பாற்றிக் கொள்ள எண்ணி அவற்றுடன் மலாய் நாட்டுக்கு ஓடினான். இப்போரில் பாண்டியர் ஈழ நாட்டில் பல நகரங்களைக் கொள்ளையிட்டனர் என்றும், புத்தப்பள்ளிகளிலுள்ள பொற் படிவங்களையும் விலையுயர்ந்த பல பொருள்களையும் கவர்ந்து சென்றனர் என்றும், சிங்கள மாநிலம் தன் செல்வமெல்லாம் இழந்தது சிறுமையுற்றதென்றும் மகாவம்சோ கூறுகிறது. இலங்கையும் பாண்டியப் பேரரசுக்கு உட்பட்டது. கடலாட்சித் துறையிலும் சங்ககாலப் பண்பின் மறுமலர்ச்சி பாண்டியர் ஆட்சியில் ஏற்பட்டது என்பதை இப்போர் காட்டுகிறது. சேர சோழ பல்லவரும் கடற்படை வைத்திருந்தாலும், பல்லவர்களும் இலங்கைவெற்றி பற்றிக் கனவு கண்டிருந்தாலும், பாண்டியரே இடைக்காலத்தில் தமிழகத்தின் தனிக் கடற்பேரரசராயினர். இவ்வகையிலும் இடைக் காலப் பாண்டிய அரசு நெடியோன் காலக் கடல் ஆட்சியின் மறுமலர்ச்சியாகவும் கரிகாலன் கடல்வெற்றியின் மறுபதிப் பாகவும் அமைந்ததுடன், பின்னாளைய பெரும் பேரரசான சோழ மரபுக்கு வழி காட்டியாகவும் தூண்டுதலாகவும் மிளிர்ந்தது. தொல்பழங் காலத்தையும் சோழப் பெரும் பேரரசுக் காலத்தையும் போலவே, இக்காலத்திலும் தமிழகப் பேரரசு ஒன்றே கடலகப் பேரரசாக விளங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விழிஞப் போர் ஐஐ வேணாட்டில் ஏதேனும் ஒரு கிளர்ச்சியை ஒட்டி இப்போர் நிகழ்ந்திருக்கலாம். விழிஞம் திருவனந்தபுரத்துக்குப் பத்துக்கல் தெற்கிலுள்ள மேல் கடற்கரைத் துறைமுக நகரம் என்பது முன்பே குறிக்கப்பட்டது. தேங்கமழ்பொழில் குன்னூரிலும், சிங்களத்தும், விழிஞத்தும் வாடாத வாகை சூடிக் கோடாத செங்கோல் நடக்க என்ற சின்னமனூர்ப் பட்டய வாசகங்கள் விழிஞப் போருடன் குன்னூர் சிங்களப்போர்களையும் எடுத்துரைக்கின்றன. முன்பே நாடிழந்திருந்த வேணாடாண்ட சேர அரசன் இலங்கைப் போர் நிகழ்ச்சியின் போது கிளர்ச்சி செய்தோ, நேரடியாக இலங்கை அரசனுடன் தொடர்புகொண்டோ இருந்திருக்கலாம். இதுவே இலங்கைப் போரையடுத்துச் சேரநாட்டிலும் ஒரு விழிஞப் போரைத் தூண்டியிருக்கக் கூடும் என்னலாம். குடமூக்குப் போர் கி.பி. 854 முன் எந்தப் பேரரசுக்கும் இல்லாத உச்சதளத்துக்கு ஈழ வெற்றி பாண்டியன் புகழை உயர்த்தியிருக்க வேண்டும் களப்பிரர் எழுச்சியின் பயனாகத் தன்னிலையும் தன்னுணர்வும் கெட்டிருந்த தமிழகம் இப்பாண்டிய வெற்றி மூலம் தன்னைத்தான் உணரத் தொடங்கிவிட்டது. ஆனால், தமிழகம் என்றும் எந்தத் தனி ஒரு தமிழனோ அல்லது தனியொரு தமிழரசனோ உச்ச உயர்நிலை அடைவதைப் பொறுப்பதில்லை இதனால் மற்ற தமிழரசுகள் -பேரரசுகளும், அரசுகளும், சிற்றரசுகளும் யாவும் கலங்கின; எதிர்ப்பில் ஒன்றுபட முனைந்தன. அது மட்டுமன்று. தென்னாட்டின் வடதிசைப் பேரரசுகளும். சிந்து கங்கை வெளியில் வலிமை கெடாதிருக்க ஒரு சில அரசுகளும்கூட நடுங்கின. அவையும் எதிர்ப்புக்கு வலுவூட்டின. பாண்டியப் பேரரசால் மாநிலத்துக்குவர இருந்த ஆபத்து பண்டை நெடியோன் புகழின் நிழலாக, சங்ககாலச் செங்குட்டுவன், கரிகாலன் புகழின் மறுபதிப்பாக அவர்கள் உள்ளத்தில் வீசியிருத்தல் கூடும். அவர்கள் அனைவரும் விரைவில் ஆபத்துக் காலத் தோழர்களாக ஒன்று கூடிப் பாண்டியரை எதிர்க்க முனைந்தனர். குடமூக்குப் போரே அதன் விளைவு. குடமூக்கு என்பது கும்பகோணத்துக்குரிய தமிழ்ப் பெயர். அப்பேராலேயே அது தமிழலக்கியத்திலும் வரலாற்றி லும் குறிக்கப்படுகிறது. அது கி.பி. 854-ல் நடை பெற்றிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சிப் பேரறிஞர் டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் கருதுகிறார். “கொங்கலரும் பொழில் குடமூக்கில் போர்குறித்து வந்தெதிர்த்த கங்க, பல்லவ சோழ, காளிங்க, மாகதாதிகள் குருதிப்பெரும்புனல் குளிப்பக் கூர்வெங்கணைத் தொடைநெகிழ்த்து” என்று சின்னமனூர்ச் செப்பேடு இவ்வெற்றி பற்றி முழக்க மிடுகின்றது. இதில் பாண்டியர் முக்கிய எதிரிகளும் எதிரிகளுக்குத் தலைமை வகித்தவர்களும் பல்லவர்களே என்பதில் ஐயமில்லை. இச்சமயம் பல்லவப் பேரரசை ஆண்டவன் நிருபதுங்கவர்மன். அவனது வாகூர் செப்பேடுகளும் இதைக் குறிப்பிடுகின்றன. பல்லவனுடன் கங்கர், சோழர், கலிங்கர், மகதர் ஆகியவர் படைகளும் பாண்டியனை எதிர்த்தன என்று சின்னமனூர்ச் செப்பேடு கூறுகிறது. தெள்ளாற்றுக்குப் பின் சோழர் பல்லவர் சிற்றரசர்களே. கங்கரும் இச்சமயம் பல்லவருடன் சேர்ந்ததில் வியப்பில்லை. அவர்கள் என்றும் பேரரசராகாவிட்டாலும் அவ்வெண்ணத்துடன் எப்போதும் பக்கமாறி வந்தவர்களே. ஆனால், கலிங்கரும் மகதரும் இதில் இடம் பெற்றிருப்பதை வரலாற்றாசிரியர் மிகையுரை என்று கருதுகின்றனர். மிகையுரை எப்போதும் கவிதையில் இடம் பெறுபவை. ஓர் அரசனுக்கும், ஒரு போருக்கும் மட்டும் அவை உரியவையல்ல, எனவே அது மிகையுரையன்று, கால நிலையைக் கண்ணாடி போலக் காட்டும் மெய்யுரையே. தமிழகத்திலேயே தென்னார்க்காட்டு மாவட்டத்தின் ஒரு பகுதியும் மைசூரை அடுத்த பகுதியும் மகதநாடு என்று குறிக்கப் படுவதுண்டு. தென்னார்க்காட்டு மாவட்டத்தில் பாடலிபுரம் என்ற வடமகதத் தலைநகரப் பெயருடைய பண்டைநகரமும் உண்டு. குடமூக்குப் பேரிலீடுபட்ட மகதர் இப்பகுதிச் சிற்றரசராக இருத்தலும் கூடும். ஆனால், கலிங்கருடன் அவர்கள் இணைத்துக் கூறப்படுகின்றனர். இத்தொடர்புகள் இன்னும் ஆராயத்தக்கன. ஏழாம் நூற்றாண்டின் பின் பன்னிரெண்டாம் நூற்றாண் டில் இஸ்லாமிய அரசு பேரரசுகள் வரும்வரை வடதிசையில் பேரரசுகளே கிடையாது என்பதையும், அச்சமயந்தான் தென்னாட்டில் மாநிலத் தேசியம் தென்னாட்டுப் பேரரசு அவாஉருவில் கரு முளைத்து, தென்னாட்டுப் பேரரசுப் போட்டியில் கருமுதிர்வுற்று, சோழப் பெரும் பேரரசின் உருவில் பிறக்க இருந்ததென்பதையும் தேசியக் கண்ணோட்டமற்ற அயல்புல, அயல் நோக்குடைய வரலாற்றாசிரியர் காணத் தவறியுள்ளனர். அரசிலாற்றுப் போர் கி.பி.862 சீர்மாற சிரீவல்லப் பாண்டியனது கடைசிப் போர்க்களம் அரசிலாற்றுப் போர்க்களமே. அது அரிசிலாற்றங் கரையில் நடைபெற்றதனால் அரசிலாற்றுப் போர் என்றே அழைக்கப் படுகிறது. பாண்டியர் பெருந்தோல்வியாதலால் அது பாண்டியர் செப்பேடுகள் எதிலும் குறிக்கப் பெறவில்லை ஆனால், வெற்றி பெற்ற பல்லவன் நிருபதுங்கனது வாகூர்ச் செப்பேடுகள் அதை விதந்துரைக்கின்றன. இலங்கையில் பாண்டியர் ஆட்சி சில நாட்களுக்குள் அழிந்தது. இலங்கையைக் கைப்பற்றியாண்ட புதிய அரசன் இரண்டாம் சேனன் பாண்டியர் மீது பழிவாங்கும் எண்ணத் துடன் மாயப் பாண்டியனை மீண்டும் கண்டுபிடித்து ஆதரித்தான். அவனுடன் பல்லவன் நிருபதுங்கனையடுத்து, அவன் உதவியால் பாண்டியர் எதிரிகளை மீண்டும் திரட்டினான். இங்ஙனம் பழிவாங்கும் போரை இலங்கையிலோ இலங்கையின் திசை யிலோ நடத்தாமல், பல்லவப் பெருஞ் சேனையுடன் தன் சிங்களப் படைகளையும் சேர்த்து வடக்கிலிருந்து பாண்டி நாட்டின் மீது படையெடுத்தான். கி.பி. 862ல் நடைபெற்ற இப்போரில் பல்லவரும் சிங்களரும் பெரு வெற்றி கண்டனர். பாண்டியப் பேரரசு தற்காப்பில் நின்று தன்னைக் காத்துத் தன் மாநிலங் கடந்த புகழை மின்னலென மறையவிடவே நேர்ந்தது. அடுத்த பாண்டியன் ஆட்சி இதே ஆண்டில் தொடங்குவதால், சிரீமாறன், போரிலோ அல்லது போரின் பின் ஏற்பட்ட மன இடிவிலோ மாண்டிருக்கக்கூடும் என்னலாம். பாண்டியப் பேரரசின் வளர்ச்சிக்கு இப்போர் பேரிடி யானாலும், இப்போர் அப்போரை சிதறடித்து விடவில்லை. அதன் வளர்ச்சியை முற்றிலும் தடுத்துவிடவும் இல்லை. சீர்மாறன் புதல்வர் இருவர் ஆட்சிகளும் இதனைக் காட்டுகின்றன. பாண்டிய - பல்லவப் போட்டி - கி.பி. 862 - 880: கடைசிக் கட்டம்: இடவைப் போர் கி.பி. 862 சீர்மாற சிரீவல்லபனுக்குப் பின் அவன் புதல்வர் இரண்டாம் வரகுணன் என்ற வரகுணவர்மன் (862 - 800), பராந்தகன் வீர நாராயணன் (880 - 900) ஆகிய இரு புதல்வர்களும் அவர்களை அடுத்துப் பராந்தகன் புதல்வனான மூன்றாம் இராசசிம்மனும் (900 - 910) ஆண்டனர். இடவைப் போர் பாண்டியர் வெற்றிகளும் ஒன்று ஆயினும், பாண்டியர் செப்பேடுகள் எதுவும் அது பற்றிக் குறிக்க வில்லை. கல்வெட்டுகளின் சான்றுகொண்டே அதைத் துணிய வேண்டியதாயுள்ளது. ஆனால், அது எந்த அரசனுக்குரியது என்பது பற்றி வரலாற்றாசிரியர்களுக்கிடையே பெருவேற்றுமைக் காணப்படுகிறது. அதை முதலாம் வரகுணன் என்ற வரகுண மகராசனுக்கு உரிமைப்படுத்துபவர்களும் பராந்தகன் வீர நாராயணனுக்கு உரிமைப்படுத்துபவரும் உண்டு. இது பாண்டியப் பேரரசின் சோழநாட்டு வெற்றி குறிப்பதனாலும், முதலாம் வரகுணவர்மன் அரசூர்ப்படை வீட்டிலிருந்து கொண்டே திருப்புடை முருதூர் என்ற அம்பாசமுத்திரத்திலுள்ள கோயிலுக்குக் கொடை வழங்கியதாகத் தெரிவதனாலும், முதலாம் வரகுணன் ஆட்சியுடனேயே இது பெரிதும் இசைவது ஆகும். ஆயினும் கல்வெட்டாராய்ச்சியாளர் தரும் ஆண்டுக் கணிப்பையொட்டியே இதனை இரண்டாம் வரகுண வர்மனுக்குரியதாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. இடவை என்பது சோழ மண்டலத்தில் இராசேந்திரசிங்க வளநாட்டு மண்ணி நாட்டில் இன்றைய கும்பகோணத்துக்கு அருகாமையில் இருந்ததெனத் திரு பண்டாரத்தார், கல் வெட்டுக்கள் மூலம் சுட்டிக் காட்டுகிறார். புலவர் திரு. வை. சுந்தரேசவாண்டை யார் (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 22, பரல் 5 பக்கம் 140 -1) திருப்பனந்தாள் கல்வெட்டுக்களின் உதவியால் அது வடகரை மண்ணி நாடு என்ற பகுதியில் இடவை வாய்க்கால் என்ற வாய்க் காலை அடுத்துள்ள ஒரு ஊர் என்றும் 1447 வரை அவர்வூர் இருந்ததாகக் கல்வெட்டுக்களால் தெரிவதாகவும் அறிவிக்கிறார். ஆனால், ஆதித்த சோழனுடன் போரிட்டு ஒரு பாண்டியன் பின்னடைந்து ஓடிய காரணத்தாலேயே அது இடவை என்று பெயர் பெற்றதென்று குறிக்கிறார். ஆனால்,, ‘இந்நாட்டு இடவையாகிய, பாண்டியனை வெந்கண்ட சோழ சருப்பேதி மங்கலத்து’ என்ற கல்வெட்டுச் சான்றே இடவை என்பது வெந்கண்டதற்கு முன்னுள்ள பெயர் என்பதைக் காட்டும். இடவையிலுள்ள அந்தப் போரை நோக்க, பாண்டியன் வென்ற இந்த இடவைப்போர் முதல் இடவைப்போர் ஆகும் என்னலாம். குரைகழற்கால் அரசு இறைஞ்சக் குவலயம தன தாக்கின வரைபுரையும் மணி நெடுந்தோள் மன்னர் கோன் வரகுணவர்மன் என்று சின்னமனூர்ச் செப்பேடு இரண்டாம் வரகுணனைப் புகழ் கிறது. ஆனால், அவன் செயலாக வேறு எதுவும் கூறப்படவில்லை. திண்டுக்கல் பகுதியிலுள்ள ஒரு கல்வெட்டின் மூலம் இப் பாண்டியன் சோணாட்டின் மீது படையெடுத்து, தென்பெண்ணை யாற்றின் கரையிலுள்ள அரசூரில் தளமிட்டுத் தங்கியிருந்ததாக அறிகிறோம். சோழன் இப்போரில் தோல்வியுற்றான். அத்துடன் இப்பாண்டியன் வேம்பில் என்ற இடத்திலுள்ள கோட்டையை அழித்தான் என்றும் அறிகிறோம். வெம்பில் என்பது தற்கால வேம்பற்றூர் ஆகும். அதுவே சங்ககால விசலூர் அல்லது வியலூர் என்றும் சிலர் கொள்கின்றனர். ஏனெனில் அதுவும் திருவிசலூர் என்றே அழைக்கப்பட்டது. பராந்தகப் பள்ளிவேலன் என்ற நாகமபுல்லன் இடவைப் போரில் பாண்டியனுடன் போர் செய்திருந்தான். இப்போர் பராந்தக நாராயணன் போர் என்று கருதுவதற்கு இப்பெயர் இடம் கொடுத்திருத்தல் வேண்டும். திருப்புறம்பியம் போர் 880 திருப்புறம்பியம் என்பது கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊர். இங்குக் கி.பி. 880-ல் நடைப்பெற்ற பெரும் போர் தென்னாட்டு வரலாற்றிலேயே பெரு முக்கியத்துவம் உடைய ஒரு போராக எல்லா வரலாற்றாசிரியர்களாலும் கொள்ளப்படுகிறது. உண்மையில் அது பாண்டியருக்கும் பல்லவருக்கும் இடையே இருநூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த தமிழக முதன்மைப் போட்டியாகிய சதுரங்கத்தின் இறுதியாட்டம் ஆகும். இது மட்டு மல்ல அது அவ்வாட்டத்தில் எதிர்பாராத திரும்பு கட்டமும் ஆகும். போட்டியில் இரு பேரரசுகளும் இரண்டு பெரிய மதயானைகள் போல் சண்டையிட்டுத் தளர்வுற்றன. அச்சமயம் சங்ககாலத்திலிருந்து ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்குமேல் பேரரசார்வத்தைக் கருவில்வைத்து வளர்த்த சோழர் புலிபோலச் சீறி எழுந்து தமிழக அரசியல் களத்தை விரைவில் தமதாக்கிக் கொண்டனர். அது மட்டுமன்று, நிலத்தில் தமிழகம் கடந்து நெடுந்தொலை செல்லாமலும், கடலகத்தில் இலங்கை கடந்து கனவுகாண முடியாமலும் இருந்த பாண்டியர் போலன்றி, அவர்கள் கரிகாலன் செயலையும் நெடியோன் செயலையும் வரலாற்றுக் காலத்திலேயே மெய்யாக்கி, தென்னாடெங்கும் பரந்து சிந்து கங்கை வெளியிலும் இலங்கையிலும் தென் கிழக்காசியாவிலும் மீண்டும் தமிழகக் கொடியைப் பறக்கவிடத் தொடங்கினர். திருப்புறம்பியப் போர் நிகழ்ச்சியின்போது பல்லவப் பேரரசனாயிருந்தவன் நிருபதுங்கவர்மன் (850 - 882). அவனுடன் அவன் புதல்வன் அபராஜிதனும் ஆட்சியில் பங்குகொண்டிருந் தான். பல்லவன் நெருங்கிய உறவினனாய் இருந்த கங்க அரசன் முதலாம் பிருதிவீபதியும், வளர்ந்துவரும் சிற்றரசுத் தலைவனான சோழன் ஆதித்தனும் பல்லவர் பக்கம் நின்று போரிட்டனர். பாண்டியன் இரண்டாம் வரகுணன் இப்போரில் ஒப்பற்ற வீரம் காட்டினான். ஆனால், கங்கன் பிருதிவீபதி கண்டவர் வியக்கும் வண்ணம் பாண்டியர் படைகளைக் கொன்று குவித்தான். சீற்றம் கொண்ட பாண்டியன் அவன் மீது பாய்ந்து அவனைக் கொன்று வீழ்த்தினான். ஆனால், மாள்வதற்கு முன்பே அவன் தன் வீரத்தால் பல்லவர் பக்கத்துக்கே வெற்றியளித்துவிட்டான். கங்கரின் உதயேந்திரக் கல்வெட்டு இச்செயலைப் பாராட்டிக் கூறுகிறது. ‘தன் உயிர் விட்டும் அபராஜிதனை (பகைவரால் வெல்லப் படாதவன் என்ற அப்பெயரின் பொருளுக்கேற்றபடி) அபராஜித னாகவே ஆக்கிவிட்டான்’ என்று அது குறிக்கிறது. திருப்புறம்பியத்தில் இன்றும் முதலாம் பிருதிவீபதிக்கு நிறுவப்பட்ட வீரக்கோயில் அழியாது நிலவுகின்றதென்று தெரிய வருகிறது. பல்லவர் பக்கத்துக்குப் போர் மிகப் பெரிய வெற்றி, பாண்டி யரோ அதில் கிட்டத்தட்டத் தம் பேரரசு வலுவையே இழந்தனர். ஆயினும் வெற்றிபெற்ற பல்லவரும் அவ்வெற்றியின் பயனைப் பெற முடியவில்லை. வடக்கிலும் தெற்கிலும் இருபேரரசுகளுடன் நீடித்த போட்டியிட்டு அவ்வரசு தளர்ந்து போய்விட்டது. இவ்வெற்றியைப் பயன்படுத்தியிருக்கக்கூடிய வீரமும் வாய்ப்பும் உடையவன் கங்கன் பிருதிவீபதி. அவன் போரில்பட்ட சமயம், வலிமை வாய்ந்த பின்னுரிமையாளர் இல்லாது போயினர். ஆகவே தென்ன கத்தின் பேரூழும், இந்திய மாநிலத்தின் ஆகூழும் போரின் பயனை அப்போது உருவில் சிறிதாய் இருந்த பேரரசுக் குழந்தையாகிய சோழ அரசுக்கே அளித்தன. போரில் உதவியதற்குரிய பரிசாக ஆதித்த சோழனுக்குத் தஞ்சையைச் சூழ்ந்த பகுதி அளிக்கப்பட்டது. அதனை அவன் இறுகப்பற்றினான். அதையே மூலதளமாகக்கொண்டு தன் தலைமுறைக்குள் பல்லவருடைய படையை வீழ்த்தி, பாண்டியர் பக்கம் திரும்புவதற்குச் சோழ அரசைப் பக்குவப்படுத்தினான். கரகிரிப்போர் (880 - 890) பாண்டியன் பராந்தக வீர நாராயணன் இப்போரில் உக்கிரன் என்ற ஒரு தலைவனை வென்று பெண்ணாகடத்தை அழித்தான். நிரவத்யபுரம், வெருவங்கூர்ப் போர்க்களங்கள் (888 - 918) இரண்டாம்புலிகேசிக்குப்பின் சாளுக்கிய மரபு இரண்டாய்ப் பிரிந்தது. பல்லவப் பேரரசின் வடபகுதியாகிய வேங்கிநாட்டை கீழைச் சாளுக்கியர் என்ற பிரிவினர் ஆண்டு வந்தனர். அவர்களில் போரில் வல்லவனெனப் பேர் பெற்றவன் சாளுக்கிய வீமன். அவன் இராஷ்டிர கூடப்பேரரசன் மூன்றாம் கிருஷ்ணனையும் அவனுக்கு உதவியாக வந்த கருநாடக அரசர்களையும் கூர்ச்சர (குஜராத்) நாட்டு அரசரையும் ஒருங்கே இப்போர்க்களங்களில் முறியடித்தான் என்று மசூலிப்பட்டணம் பட்டயங்களால் அறிகிறோம். இப்போர்களில் இராஷ்டிரகூடரின் படைத்தலைவன் குண்டய்யா என்பவன் ஆவன். மாந்தரவு, மதுமதுகு, மண்ணெ, மங்கள், சோரமதிப் போர்க்களங்கள் தென்னாட்டின் தென்கோடியாகிய தமிழகத்திலும், வடகோடி யாகிய கோதாவரி கிருஷ்ணா இடைநிலப் பகுதியிலும் தான் பேரரசுகளின் பெரும் போட்டிகளால் ஏற்பட்ட சுழிகள் சிற்றரசுகளின் வாழ்வைக் கரைப்பது காண்கிறோம். இடைக்காலத்தில் மட்டுமன்றிப் பிற்காலங்களில்கூடத் தென்னாட்டு வாழ்வின் நடுமையச் சுழலாக மைசூரும் தற்கால இராயலசீமாப் பகுதியுமே இயங்கியுள்ளன என்பது காணலாம். இப்பகுதிகள் தான் சங்க காலத்தில் ‘வடுகநாடு’ என்று குறிக்கப்பட்ட குறிஞ்சிமுல்லை நிலப்பகுதிகள் ஆகும். இங்கே கங்கர், கடம்பர், பாணர், வைடும்பர், நுளம்பர் ஆகியோரும், இருங்கோல சோழர், உச்சங்கிப் பாண்டியர், தெலுங்குச் சோடர் போன்ற பாண்டிய, சோழ மரபின் கிளைக்குடிகள் பலவும் சுழலும் சுழற்சியின் வரலாறு தென்னாட்டு நாகரிக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தென்னாட்டு வரலாற்றின் பலபுதிர்களை இப்பகுதி பற்றிய நுணுகிய விளக்க வரலாறு விடுவிப்பது உறுதி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேரரசுப் போட்டிகளில் சிக்கிக் கங்கர் மிகவும் வலுவிழந்திருந்தனர். அவர் களிடையே ஏற்பட்ட பிளவுகள் இதனை மிகுதிப்படுத்தின. இவற்றுள் ஒன்று அரசுரிமைப் போட்டியாகத் தொடங்கிக் கங்க மரபையே இரு மரபுகளாக்கி, இப்பகுதிச் சிற்றரசுகளையும் இரு கட்சிகளாக்கிற்று. அவர்களிடையே ஓயாத போராட்டங்கள் நடைபெற்றன. அப் போராட்டத்தைச் சேர்ந்த போர்களே மேற்குறிக்கப்பட்டவை. கங்க அரசுரிமையாளர்களில் ஒருவன் முதலாம் பிருதிவீபதி திருப்புறம்பியப் போரில் வீர மறைவுற்றவன் இவனே. அவனைப் பாணரும் வைடும்பரும் ஆதரித்தனர். அவனை எதிர்த்த உரிமை யாளன் முதலாம் இராசமல்லன். அவனை நுளம்பரும் தெலுங்க சோடரும் ஆதரித்தனர். இம் மரபினர் நீடித்து ஆற்றிய உட்பகைப் போர்க்களங் களில் சோரமதி முக்கியமானது. இது அனந்தப்பூர் மாவட்டத்தில் பெனுகொண்டா வட்டத்தைச் சார்ந்த தற்காலச் சோளமாரியே யாகும். இப்போர் கி.பி. 878-ல் நடைபெற்றதென்று அறிகிறோம். அதில் வெற்றிபெற்றவன் முதலாம் பிருதிவீபதியும் அவன் தரப்பினருமே. ஆயினும் இராசமல்லன் முற்றிலும் வலுவிழந்து விடவில்லை. திரும்புறம்பியப் போரில் முதலாம் பிருதிவீபதி இறந்ததனால் இராசமல்லன் மரபு மீண்டும் வலுவுறத் தொடங்கிற்று. 9. சோழப் பெரும் பேரரசு தென்னக வரலாற்றிலே சங்க காலத்துடன் போட்டியிட வல்ல காலம் ஒன்று உண்டு. அதுவே சோழப் பெரும் பேரரசர் ஆட்சிக்காலம். அரசியல் துறையில் அது சங்ககாலம் கடந்து பெருவெற்றி கண்டது. ஆனால், வாழ்க்கைத் துறையில் அது சங்ககாலத்தார் பண்பையோ, இனவளத்தையோ சென்றெட்ட வில்லை. இலக்கிய வகையில், பண்பிலும் வளத்திலும் அது குறைபட நேர்ந்தாலும், வீறமைதிமிக்க அகலக் கவிதையளவில் அது புது நிலமும், புது மலர்ச்சியும் கண்டது. தமிழக நாகரிகமும், தேசிய வாழ்வும் பின்னோக்கிய தளர்ச்சி யல்ல, முன்னோக்கிய வளர்ச்சியே என்பதை இது நன்கு எடுத்துக் காட்டுகிறது. தளர்ச்சிக் கூறுகள், வளர்ச்சிக் கூறுகள் அதில் தொன்று தொட்டே உண்டு. அயல் பண்புகள் சில சமயம் அதன் தளர்ச்சிக் கூறுகளை வலியுறுத்தின; சில சமயம் அவை வளர்ச்சிக் கூறுகளை ஊக்கின; இவற்றிடையே அது தளர்ச்சி, மறு மலர்ச்சி, புது மலர்ச்சி ஆகிய மூவகை அலை எதிர் அலைகளாக விழுந்தெழுந்து கிளர்ந்து செல்கிறது என்னலாம். அரசியல் துறையில் பேரரசு நோக்கிய வளர்ச்சியலைகளை நாம் கிட்டத்தட்டத் தொடக்கத்திலிருந்தே காண்கிறோம். கடைச் சங்கத்துக்கு முன்னும் கடைச்சங்க காலத்திலும் வீறார்ந்த பேரரசர் இமய எல்லையும், ஈழ எல்லையும், கடார எல்லையும் காண அவாவியிருந்தனர். அதே அவாவும் அதே அளவில் முனைத் தெழுந்த செயலும் சோழப் பெரும் பேரரசர் காலத்தில் மீண்டும் உச்சநிலை அடைந்தன. அத்துடன் சங்க காலத்தின் மறு மலர்ச்சியுடன் அது அமைந்து நின்று விடவில்லை; அதுகடந்து புது மலர்ச்சியாகவும் பொங்கிப் பொதுளிற்று. சங்ககால அரசியல் வாழ்வின் மூன்று குறைபாடுகள் சங்ககாலப் பேரரசு வளர்ச்சியில் நாம் மூன்று குறைகளைக் காணமுடியும். சோழப் பெரும் பேரரசர் காலம் அம் மூன்றையுமே தவிர்த்துள்ளது. முதலாவதாக, சங்ககாலப் பேரரசுப் பண்பில் இயல்பாக வளம் இருந்தது. ஆனால், உள்ளார்ந்த ஏதோ ஒரு தளர்ச்சிக் கூறு காரணமாக, அந்த வளம் உண்மையான வளமாகச் செயலாற்ற வில்லை, வளரவில்லை, சங்ககாலப் பேரரசுப் போக்கில் இதைக் காணலாம். நெடியோன் கண்ட பேரரசு எல்லையைப் பார்க்கிலும் கரிகாலன் எல்லை குறைபட்டது; கரிகாலன் எல்லையையும் செங்குட்டுவன் எல்லை சென்றெட்டவில்லை; செங்குட்டுவனுக்குப் பின்னோ அது தமிழகத்தின் எல்லைக் குள்ளேயே மேலும் குறுக்கம் அடைந்தது. இறுதியில் அரசியல் அமைதியற்ற ஒரு களப்பிரர் எழுச்சிக்கு அது வழிவிட்டு, அதனால் சீர்குலைவு எய்திற்று. மேலும், நெடியோன் வெற்றிகள் தவிர, மற்றச் சங்க காலப் பேரரசுகள், பேரரசுகள் என்ற பெயரால் நாம் உணரும் நேரடி ஆட்சிகளாய் இருந்தன என்று கூறுவதற்கில்லை. வீரப் புகழ் வேட்டை, மேலுரிமை யாட்சி, தற்காலிகத் திறையிறுப்பு, வீர உலா ஆகிய அளவிலேயே அவற்றில் பலவும் அமைந்திருக்கக் கூடும் இதனாலேயே அவை நிலையான மரபு வளம் காணவில்லை. அந்நாட்களில் பேரரசரும் முடியரசரும் மற்றப் பேரரசர், முடியரசரை வெல்வதற்கு எவ்வளவு சிறப்பு இருந்ததோ, அதே அளவு சிறப்பு அவர்கள் குடியரசரை வெல்வதற்கும் இருந்தது. வீரம் வண்மை ஆகிய இரு பண்புகளிலும் பேரரசர், முடியரசர், குடியரசர் ஆகியவர்களிடையே மக்களோ, புலவர்களோ எந்த வேறுபாடும் காணவில்லை. வீர மிக்கவர், பண்பு மிக்கவர் எந்நிலையினராயினும் உச்சி மேற்கொண்டு போற்றப்பட்டனர். பழைமையான உரிமைப் பேரரசர்களான மூவருக்கும் ஒத்த உணர்மதிப்பு இருந்தது. ஆனால், பாசம் குடியரசர் பக்கமே இருந்ததெனக் கருதுவதற்கு இடமுண்டு. இது நல்ல குடியாட்சிப் பண்பாயிருக்கலாம். ஆனால், வீரப்போட்டியும் புகழ் வேட்டையும் குடியாட்சியைக் கெடுத்தன. அதே சமயம் பேரரசர் செயல்கள் மக்கள் வேடிக்கைக் காட்சி யாகவே இருந்தன. அவை அவர்கள் இன உணர்வைத் தட்டி எழுப்பவில்லை; ஒற்றுமையை வளர்க்கவில்லை; சீட்டுக் கட்டுகளால் வீடு கட்டிக் கட்டி அழித்து விளையாடும் பிள்ளைகளின் விளை யாட்டுக்கள் போல, அவற்றின் எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் தமிழர் வீர விளையாட்டுக்களாய் இருந்தன. இக்காரணத்தாலேயே சங்க காலத்தில் பேரரசர்களின் அருகில் முடியரசுகளும், முடியரசுகளின் அருகிலே குடியரசு களும் இருந்து இடைவிடாப் போட்டியில் முனைவது காண்கிறோம். இறுதியாக அந்நாளைய பேரரசுகளுக்கும் வெற்றி களுக்கும் இலக்கியச் சான்றுகள் தவிர, வேறுபுறச் சான்றுகள் கிட்டவில்லை. தமிழிலக்கியத்தின் தனிச்சிறப்பை எளிதில் அறியாத இந்நாளைய உலகில் வரலாற்றாராய்ச்சியாளர் முதலில் அவற்றின் மெய்ம்மையையே ஏற்கமறுத்தனர். கிரேக்க உரோமச் சான்றுகள் இருந்திரா விட்டால், சங்ககால மென்ற ஒன்று இருந்தது என்பதையே அவர்கள் நம்ப மறுத்திருப்பர். ஆனால், சங்க இலக்கியச் சான்றின் மதிப்பு உணரப்பட்ட பின்பும், புறச்சான்றுகள் இல்லாக் குறை சிறிதன்று; வரலாற்றுச் செய்திகளை ஒழுங்குபடுத்தவும், உறுதிப்படுத்தவும் அவை இன்றியமையாதவையே. புறச்சான்றுகள் இல்லாததற்கும் இலக்கியச் சான்றுகளே வளமிழந்து, மரபிழந்து போவதற்கும் அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான். சங்க காலத்தில் தேசியப் பண்பு வேறெக் காலத்தையும் வேறு எந்த உலகப் பகுதியையும்விட வளமாய் இருந்தது. ஆனால், தேசியக் குறிக்கோள் நாகரிக உலகின் வேறு எந்தப் பகுதியிலும், எந்தக் காலத்திலும் இருந்ததைக் காட்டிலும் குறைவு. இதனால் ஒரே புலவர் இரண்டு அரசரை, சில சமயம் இருதரப்பு அரசரையும் பாடமுடிந்தது. பாடியது பண்பையே யன்றி, ஆளையன்று என்பது உணரப்பட்டது. ஆனால், உலகை ஒரு குடைக் கீழ் ஆளுதல், பொதுவற ஒரு மொழி வைத்து உலகாளுதல் என்பவை அழகு வாய்ந்த புகழ் குறிக்கோள் களாகவே இருந்தன. தமிழ் உலகம் ஒரு குடைக்கீழ் ஆகவேண்டும் என்ற செயற் குறிக்கோள் அல்லது மக்கட் சார்பான தேசியக் குறிக்கோள் இருந்த தில்லை. தென்திசை உயிர் வளம் சங்ககாலப் பேரரசுகள் தாண்டி இப்பண்புகளில் சங்க காலத்துக்குப் பிற்பட்ட பேரரசுகள் பொதுவாகவும், சோழப் பெரும் பேரரசு சிறப்பாகவும் வளர்ச்சி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இவை களப்பிரர் எழுச்சியின் நற்பயன்கள் என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. சங்ககாலப் பேரரசுகள், முடியரசுகள் சிற்றரசுகளின் எல்லையற்ற பலதிசைப் போட்டிகள். சங்க காலத்துடன் ஒழிகின்றன. மூவரசுகளுக்கே பேரரசுக் குத்தகை உரிமை என்ற உயிரற்ற மரபும் ஒழிகின்றது. அடுத்த ஆறு நூற்றாண்டுகளுக்குத் தமிழகத்துக்குள்ளே பாண்டிய பல்லவப் பேரரசுகள் இரண்டு மட்டுமே போட்டியிடுகின்றன. இவை நீங்கிய தமிழ் முடியரசுகள் சிற்றரசாக இயங்கிய சோழ அரசும், கங்க அரசுமே, தமிழகத்துக்கு வடக்கிலும் தென்னாட்டின் வடதிசைப் போட்டியில் ஆந்திர, கலிங்க, கடம்ப, பாண, நாகர் போட்டிகள் ஒடுங்கி, ஆந்திரப் பேரரசில் குறைந்த, ஆனால், அதைவிட நீடித்த நிலையான பேரரசாக, சாளுக்கியப் பேரரசு ஒன்றே நிலவிற்று. இமய எல்லைக்குட்பட்ட வட மாநிலத்திலும் ஆந்திரர் ஒன்றுபடுத்தும் திறனால், குப்தர் அல்லது ஹர்ஷன் பேரரசு ஒன்றே நிலவிற்று. சங்க காலத்தைப்போலவே ஆற்றல் உயர்நிலை தெற்கிலேயே இன்னும் இருந்தது. ஹர்ஷனைச் சாளுக்கிய புலிகேசியும், சாளுக்கிய புலிகேசியைப் பல்லவ மகேந்திரவர்மனும், பல்லவர்களைப் பாண்டியரும் அடிக்கடி வென்றனர். அத்துடன் ஏழாம் நூற்றாண்டின்பின் வடதிசைப் பேரரசுகள் யாவும் சிதறுண்டதனால் அவ்வெல்லை, இஸ்லாமிய இனங்களின் படையெடுப்புக்கே எட்டு நூற்றாண்டுகள் வாயில் திறந்து வைத்துக் காத்துக் கொண்டேயிருக்க நேர்ந்தது. தென்னாடோ, பின்னும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் பேரரசாட்சியைக் கருவில் கொண்டிருந்தது. தமிழகமோ, சோழப் பேரரசுமூலம் மீண்டும் இமயமும், ஈழமும், கடாரமும் பரவத்தக்க வளர்ச்சியை யடைந்து வந்தது. இடைக்கால மறுமலர்ச்சி இடைக்காலத்தில் தமிழகத்தில் இரண்டு பேரரசுகள் இருந் தாலும், பழமையான மரபில் வந்த பாண்டியப் பேரரசே பேரளவில் சோழப் பெரும் பேரரசின் மறுமலர்ச்சிக்கும் புது மலர்ச்சிக்கும் வழிவகுத்த பேரரசு என்னலாம். ஏனென்றால் அது தமிழக முற்றிலும் பரவ முடியாத நிலையிலும், தமிழகம் கடந்து பழந் தமிழகப் பகுதியாகிய மலையாள நாடும் கன்னட நாடும் உள்ளடக்கிக் குடகுவரையிலும் துங்கபத்திராவரையிலும் பரவிற்று. அத்துடன் கடலகத்தில் அது ஈழங் கைக் கொண்டிருந்தது. ஆனால், அதே சமயம் சங்ககால ஆந்திரப் பேரரசு நீங்கலாக தென்னகப் பேரரசுகளில் தமிழகப் பேரரசுகள், அரசுகள் மட்டுமே கடலாட்சி பெற்றிருந்தன. பல்லவப் பேரரசு புதிய தமிழ் மரபாயிருந்தாலும், கடலாட்சியில் முத்தமிழ் அரசுகளுடன் சரிசம பங்கு கொண்டிருந்தது. அதன் தாயகம் தமிழருள் திரையர் அல்லது குறும்பர் குடியாட்சிப் பகுதியாயிருந்தது என்பதையும், இத்திரையர் மரபினரே ஆந்திரர் என்பதையும், இது நினைவூட்டுகிறது. பண்டைக் காலத்திலிருந்தே கீழ்திசைக் குடியேற்றங்களில் முத்தமிழ் அரசர் குடிகளையும் ஆந்திர கலிங்கக் குடிகளையும் போலவே, திரையர் அல்லது பல்லவர் குடிகளும் பெரிதும் பங்கு கொண்டிருந்தனர். தமிழகக் கடலாட்சி வளர்ச்சியில் பிற தமிழரசுகளுடன் பல்லவப் பேரரசர் பங்கு கொண்டிருந்ததன்றி, சிற்பம், இசை ஓவியம் ஆகிய கலைகளிலும் அவர்கள் தனி சிறப்புக்குரிய பங்கு கொண்டிருந்தனர். சங்க காலத்தில் பரிபாடலுக்குப் பண் வகுக்கப் பட்டிருந்தது போல, பாண்டிய பல்லவப் பேரரசர் காலத்திலேயே தேவாரத்துக்குப் பண் வகுக்கப்பட்டது. ஓவிய சிற்பக் கலைகளில் பல்லவர் பங்கு முனைப்பானது. மிகப் பெரியது. அதில் மறுமலர்ச்சி மட்டுமன்றிப் புதுமலர்ச்சியும் கண்டவர்கள் அவர்களே என்னலாம். சங்க கால இசை மரபில் சிறிதளவேனும் தேவாரத்தால் நமக்கு வந்து எட்டியதுபோல, மரமும் சுண்ணமும் செங்கலும் வைத்துக் கட்டப்பட்ட சங்க காலக் கோயிற் பண்புகளை, கல் தளிகளாகப் புதுவது புதுக்கி நமக்கு நிலையான படிவங்களாக்கித் தந்தவர்களும் பல்லவர்களே. இத்துறையில் அவர்கள் சோழ பாண்டிய விசயநகரச் சிறப்பிற்கு வழி காட்டியவர்கள் ஆவர். அது மட்டுமல்ல. சங்க காலப் பண்பைக் கெடாது காத்ததன் மூலம் இன்று அவர்களைவிட முனைப்பான புகழுக்கு உரியவராகின்றனர். பாண்டிய பல்லவர் ஆட்சி இந்தப் பல்வேறு துறைகளிலும் சோழப் பேரரசர் புது மலர்ச்சிக்குரிய மறுமலர்ச்சிப் படியாய் அமைகிறது. சோழப் பெரும் பேரரசின் தனிச் சிறப்புக்கள் சங்க காலப் பேரரசுகளின் தற்காலிக எல்லைகளையும் சிதறிய எல்லைகளையும் சோழப் பெரும் பேரரசு ஒரே தொடர்ந்த எல்லை ஆக்கிற்று. ஒரே நேரடி ஆட்சி எல்லையும் ஆக்கிற்று. இடைக்காலப் பாண்டிய பல்லவர் அரசுகளின் செயல்களையும் கனவுகளையும் தாண்டி அது பரவிற்று. அத்துடன் முத்தமிழ் அரசரும் பல்லவரும் பிறதென்னாட்டு அரசரும் நாடு, மாவட்டம், வட்டம் , சிறுவட்டம் ஆகிய ஆட்சி எல்லைகளையே வகுத்திருந்தனர். நாடு என்ற பெயரைப் பழய குடியாட்சி எல்லையாகிய சிற்றெல்லையாக்கி, அதன் மீது வளநாடும் கோட்டமும் வகுத்தவர்களும், பழய அரசர் நாட்டெல்லைகளையும், பேரரசு நாட்டெல்லைகளையும் தம் பெரும் பேரரசின் மண்டலங்களாக வகுத்தவர்களும் சோழப் பெரும் பேரரசர்களே. அவர்கள் மண்டலத் தலைவர்கள் உள் நாட்டில் தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (ழுடிஎநசnடிசள) போலவும், வெளிநாட்டில் தற்போதைய அரசுப் பேராளரைப் போலவும் (ஏiஉநசடிலள டிக ஊடிளேரடள) ஆண்டனர். சோழப் பெரும் பேரரசின் புது மலர்ச்சியின் இன்னொரு கூறு சமய, பண்பாட்டுத்துறை ஆகும். இவ்விரு துறைகளிலுமே சங்ககாலத்திலிருந்து தமிழர் குடியாட்சிப் பண்பும் தற்பண்பும் பழந் தமிழ் நாகரிக மரபும் கெட்டே வந்தன. ஆனாலும் தமிழகமிழந்த இழப்பு முற்றிலும் வீண் போகவில்லை, தொலை எல்லையில் புறஉலகு தாவி இராட்ச வளர்ச்சியாக வளர்ந்த பழந் தமிழ்ப் பண்பு இப்போது அணிமை எல்லையில் குறைந்த அளவில், தமிழகம் கடந்த மாநிலத் தேசியப்பண்பாக ஓங்கி வளர்ந்தது. சங்க காலத்திலேயே யானை பழக்குபவர் ‘வடமொழி’ என்ற ஏதோ ஒரு குழுமொழியைப் பயன்படுத்தினர் என்று அறிகிறோம். வழக்கிறந்த பழந் தமிழ்த் திரிச்சொற்களும் உரிச் சொற்களும், நாகரின் பழந்தமிழ்த் திசைச் சொற்களும் இதனை உருவாக்கப் பயன்பட்டிருக்கக் கூடும். பிற்காலத்தார் இதனை வடதிசை மொழி என்று கருதுவதற்கேற்ப, இதன் வகைகளாகவும் சங்க காலத்திறுதியிலே சமஸ்திருதமாகவும் வளர்ச்சியுற்றன. ஆந்திர பல்லவர்கள் தொடக்கத்தில் பாளியையும் பின்னரே சமஸ்கிருதத்தையும் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. முதலில் காஞ்சியிலும் காசுமீரத்திலும் வடக்குத் தெற்குக் கோடிகளில் பண்படுத்தப்பட்ட இந்தப் பழய சமஸ்கிருதமே, குப்தர் காலமுதல் கங்கை வெளியிலும் பரவி, அங்குள்ள இன்றைய இந்தி போன்ற ஒரு பழங்காலக் கலவை மொழியுடன் சேர்ந்து பிற்கால இலக்கிய வடிவம் வாய்ந்த சமஸ்கிருதமாயிற்று. தமிழகப் பண்பாட்டின் சிதைவையும் தமிழக இயல்கலை நூல் துறைகளையும், அவற்றின் உயிர் மரபினின்றும் பிரித்து, வளராத ஆனால், பரந்த மரபுகளாக சமஸ்கிருதமூலம் இந்தியா எங்கும் பரப்ப உதவிய பேரரசு பல்லவப் பேரரசே. புத்த சமயத்துக்கு அசோகன் செய்த பணியை சமஸ்கிருதத்துக்கு ஆற்றியவர்கள் பல்லவர்களே. ‘நகரங்களிலே காஞ்சி’ (நகரேஷு காஞ்சி) எனக் காசி முதலிய ஏனைய நகரங்கள் பெறாத பழையபெருமையைக் காஞ்சி மாநகர் சமஸ்கிருத உலகிலே பெற்றதன் காரணம் இதுவே. சமஸ்கிருத மொழிக்குப் பல்லவர் ஆற்றிய இதே தொண்டை, இன்னும் பேரளவாகவும் நிலையாகவும் இந்திய மாநிலப் பண்பாட்டுக்கு ஆற்றி, ‘அசோகர், கனிஷ்கர், குப்தர், பல்லவர்’ ஆகிய அனைவரும் சேர்ந்த கூட்டுக்கு ஒப்பான பெரும் புகழ் நாட்டிய வர்கள் சோழப் பேரரசர்களே. இந்திய மாநிலத் தேசியத்தின் அடித்தளம் சோழப் பெரும் பேரரசர் இல்லையானால், இன்றைய இந்திய மாநிலம் பெயரளவுக்குக் கூட ஒரு தேசமாய் நிலவியிருக்க முடியாது என்னலாம். ஏனெனில் அதன் அடிப்படைப் பண் பாட்டை உருவாக்கியவர்கள் அவர்களே. பிரிட்டிஷ் ஆட்சி ஏடனும், இலங்கையும், பர்மாவும், மலாயாவும் பரந்திருந்தது. ஆயினும் 1947 -ல் புதிய தேசிய எல்லை அமைந்தபோது, அது பெரிதும் சோழப்பேரரசின் எல்லைக்கப்பால் செல்லவில்லை என்பதை வரலாற்றின் தொலை விளைவுகளைக் கணித்துக் காண்பவர் கவனித்தல் வேண்டும், மற்றும் அப்பெரும் பேரரசு பரவாத தென்னாட்டின் வட மேல் திசையும் இந்தியாவின் வடமேல் திசையும் மேலை நாட்டவர் தொடர்பு காரணமாகச் செல்வத்தில் முன்னேறினும், இலக்கியம், கலை பண்பாட்டுத் துறைகளில் இன்னும் பிற்பட்டே இருப்பது காணலாம். மொழியும் இலக்கியமும் இல்லாத வடதிசைக்கு, ஒரு சமஸ்கிருதத்தையே பல்லவப் பேரரசு உருவாக்கித் தரமுடிந்தது. ஆனாலும் பாண்டிய பல்லவப் பேரசுகளின் நிழலிலேயே வளர்ந்த சமயப் பேரியக்க அலைகளின் பயனை -சைவ , வைணவ இயக்கங்களின் விளைவை -சோழப் பெரும் பேரரசே கூர்ச்சரத்துக்கும் கங்கை வெளிக்கும் கொண்டு சென்றது. இதன் பயனாகத் தென்னாடெங்கும் சோழப் பெரும் பேரரசர் காலத்திலேயே மலையாளம். தெலுங்கு, கன்னடம் முதலிய தமிழின மொழிகளில் இலக்கிய வளம் உண்டாயிற்று. அதே காலத்திலேயே மராத்தி, வங்காளி, இந்தி, உருது ஆகிய வடதிசைத் தாய்மொழி இலக்கியங்களுக்குரிய கருவிதைகளும் எட்டி விதைக்கப்பட்டு விட்டன என்பதனைக் காணலாம். சோழப் பெரும் பேரரசர் பரப்பிய இந்தப் பண்பாடு தற் காலிகமானது என்று தோன்றினாலும், வருங்காலத்தின் நிலையானதாகவே அமையக் கூடும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் சங்க காலத்தில் தமிழகத்தில் மட்டுமே வளர்ந்த பண்பாடு, அது கடந்த களர்நிலத்தால் அழிவெய்த நேர்ந்ததுபோல, சோழப் பெரும் பேரரசு பரப்பிய பண்பாடும் அப்பேரரசின் எல்லைக்கப்பால் இருந்த களர்நிலத்தாலேயே அணிமைக்காலத்தில் தளர்வுறத் தொடங்கியிருந்தது. ஆயினும் நாகரிக மேலை ஆட்சியில் சோழப் பெரும் பேரரசர் ஆட்சி எல்லை கடந்து ஆசியா எங்கும் பண்பாடு பரந்து வருகிறது. எனவே சங்க காலத்துக்குப் பின் தமிழகத்திலும், சோழப் பெரும் பேரரசர் ஆட்சிக்குப் பின் இந்தியாவிலும், மேலை நாகரிக ஆட்சியில் தென்கிழக்காசியாவிலும் ஏற்பட்ட தளர்ச்சி இனி நீங்கி, சங்ககாலத் தமிழக ஒளி ஆசியாவிலும் உலகு முழுவதிலும் அணிமை வருங்காலத்தில் எளிதில் பரவி நிறைவுறும் என்னலாம். தன் பண்பும் தன் மரபும் இழந்து சூழ்பண்பு வளரக் காத் திருந்த தமிழகம், சூழ் பண்பின் தளர்ச்சி நீக்க மீண்டும் கிளர்ந் தெழ வேண்டும். கிளர்ந்தெழுவது இன்றியமையாத் தேவை. ஏனெனில் கீழை உலகைத் தட்டி எழுப்பிய மேலை ஐரோப்பிய நாகரிகத்திலும் தளர்ச்சியின் சின்னங்கள் காணப்படுகின்றன. கீழ்திசை நாகரிகங்களின் மறுமலர்ச்சியால் எழுந்த கிரேக்க உரோம நாகரிகங்கள் அழிவுற்றபின் அவற்றின் தொலை மறுமலர்ச்சியாய் எழுந்ததே தொலைமேலை நாகரிகம். அது உயிர்பெற மீண்டும் நாகரிக வேர்முதல் நிலமான தமிழகம், அத்தமிழகத்துடன் அது மீண்டும் புதுத்தொடர்பு கொள்ளுவதும், மீண்டும் புதுமலர்ச்சி பெறுவதும் உயிர் நிலைத் தேவைகள் ஆகும். சோழப் பெரும் பேரரசின் வளர்ச்சிப் படிகள் சோழப் பெரும் பேரரசின் வளர்ச்சியில் நாம் நான்கு படிகளைக் காணலாம். பாண்டிய பல்லவ மறுமலர்ச்சிக் கால முழுதும் சோழர் சிற்றரசராய் அடங்கியிருந்தனர். ஆனால், சங்க காலப்பேரரச அவாவை அவர்கள் பொறுமையுடன் ஆறு நூற்றாண்டு தம் சிற்றரசுக் கருவில் அடக்கி வைத்திருந்தனர் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இக்காலத்திலேயே பாண்டியர், சோழர் மரபுகளின் கிளைகள் தென்னாடெங்கும் பரவிப் பல புதிய சிற்றரசுகளை அமைத்துப் புதுநிலத்தில் வளரப் பெற்றன. இவற்றின் வரலாறு தமிழகம் கடந்த தமிழர் வரலாற்றின் ஓர் உயிர் நிலைக் கூறாக இனித்தான் தொகுக்கப்பெறல் வேண்டும். ஆனால், இடைக் காலப் பாண்டியரால் குடகில் வெல்லப்பட்ட கொங்க மரபினரும், உச்சங்கிப் பாண்டியரும் தெலுங்குச் சோடரும் வடக்கே கலிங்கத்தில் ஆண்ட சோழகங்கரும் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். சோழப் பெரும் பேரரசின் கருநிலைக்காலம் எனப் பாண்டிய பல்லவப் போட்டிக் காலத்தைக் குறிக்கலாம். விசயாலயன் முதல் (9-ஆம் நூற்றாண்டு) இராசராசன் காலம் வரையுள்ள பெரும் பேரரசின் காலத்தை வல்லரசுக் காலம் என்னலாம். இக்காலத்திலேயே இடைக்காலப் பாண்டியப் பேரரசின் எல்லையும் பல்லவப் பேரரசின் எல்லையும் தாண்டிச் சோழப் பேரரசு வளர்ந்து விட்டது காண்கிறோம் ஆனால், பாண்டிய பல்லவ காலத்திலேயே வடதிசைப் பேரரசாகிய சாளுக்கிய அரசினிடமாக, புதிதான இராஷ்டிரகூடப் பேரரசு எழுந்திருந்தது. தென் தமிழகத்தில் புதிய பேரரசான சோழப் பேரரசு ஒன்று மட்டுமே நீடித்தது. அது வடதிசையில் புதிய பேரரசான இராஷ்டிரகூடருடன் போட்டியிட்டது. சோழப் பெரும் பேரரசின் பெரும் பேரரசுக் காலம் அல்லது உச்சவாழ்வுக்காலம் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகிய இருவர் ஆட்சிக்காலமே. இராசேந்திரன் புதல்வர் ஆட்சிகள் இவ்வுச்சப் புகழை உச்ச நிலையிலேயே காத்தன. முதலாம் குலோத்துங்க சோழன் காலமுதல் ஒரு நூற்றாண்டுக் காலம்வரை சோழப் பேரரசு வளர்ச்சியுறாமல் உறுதியுடன் பேரரசாக நிலவிய காலம் என்னலாம். இப்பேரரசுக்கு அச்சமயம் இருந்த பகைகள் உட்பகைகளுமல்ல, புறப்பகைகளும் அல்ல -எல்லைப் புறப் போட்டிகள் மட்டுமே என்னலாம். வடதிசையில் மேலைச் சாளுக்கியர் வென்றடக்கப் படாமலே இருந்தனர். தெற்கிலோ மீண்டும் மீண்டும் வென்றடக்கப்பட்டும், அடங்காதவர்களாகப் பாண்டியர் விளங்கினர். சோழப் பேரரசின் வளர்ச்சியைத்தடுக்க மேலைச் சாளுக்கியர் ஓரளவு காரணமாயிருந்தனர். ஆனால், அவ்வளர்ச்சியைத் தடுப்பதற்கு மட்டுமன்றி, அதன் வீழ்ச்சிக்கே காரணமாயிருந்தவர்கள் பாண்டியர்களே என்னலாம். சோழப் பெரும் பேரரசைத் தடுத்தழித்துப் பாண்டியர் மீண்டும் பேரரசராக முடிந்தது. ஆனால், அவர்கள் பேரரசு சோழப் பேரரசின் எல்லையைச் செயலிலும் சென்று எட்ட எல்லையையும் அது நீடித்துக் காக்கத் தவறிற்று. சோழப் பேரரசு வீழ்ச்சியுறாமல் இருந்தால், இஸ்லாமியப்படையெடுப்பும் ஆட்சியும் மாநிலத்தின் அரசியல் வாழ்வைக் குலைத்திருக்கா தென்னலாம். சோழர் மீட்சி: விசயாலய சோழன் சங்ககாலச் சோழர் புகார் என்ற காவிரிப்பூம் பட்டினத்தையோ, உறையூரையோ தலைநகராகக் கொண்டு ஆண்டனர் என்று அறிகிறோம். ஆனால், இடைக்காலச் சோழர், சிற்றரசராக இருந்த போது கும்பகோணத்துக்கு மூன்று கல் தென்கிழக்கிலிருந்த பழயாறையையே தலைநகராகக் கொண்டிருந்தனர் என்று அறிஞர் பண்டாரத்தார் நிலை நாட்டியுள்ளார். அது அந்நாளில் பெருநகராய், இக்காலத்திய முகையூர், பட்டேச்சுரம், திருச்சத்திமுற்றம், அரிச்சந்திரபுரம், ஆரியப்படையூர், கோணப் பெருமாள் கோயில், திருமேற்றளி, தாராசுரம், நாதன் கோவில் ஆகிய பல சிற்றூர்களை உள்ளடக்கியதாய் இருந்ததென்றும் அவர் கூறுகிறார். இடைக்காலச் சோழர்களைப் பற்றித் துண்டுத் துணுக்கான செய்திகளன்றிக் கோவையாக எதுவும் நமக்குத் தெரிய வரவில்லை. ஏனெனில் பிற்காலப் புகழ்ச் சோழர் பெருமைப் படத்தக்க எச்செயலையும் அவர்கள் செய்யவில்லை. சங்ககாலச் சோழரைத் தம் முன்னோராகக் குறிக்கும் வரலாற்று நோக்குடைய பிற்காலச் சோழர் இவ்விடைக்காலச் சோழரைப் பற்றி வாளாமை சாதித்துள்ளனர். பெருஞ்சோழர் காலத்து இலக்கியத்தில், அப்பெருஞ் சோழர்களின் முன்னோனாக, “மீதெல்லாம், எண்கொண்ட தொண்னூற்றின் மேலும் இருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலன்” (விக்கிரம சோழன் உலா 27 - 32) அடுத்தடுத்துச் சீறும் செருவில் திருமார்பு தொண்ணூறும் ஆறும் படுதழும்பின் ஆரத்தோன்” (குலோத்துங்க சோழன் உலா 38 - 44) “புல்லார் தொழும்புடைய ஆகத்துத் தொண்ணூறும் ஆறும் தழும்புடைய சண்டப்பிர சண்டன்” (இராசராசசோழன் உலா 35 - 40) என்று ஒட்டக்கூத்தப் பெருமானின் மூவருலாக்களும், “புண் ஊறு தன்திரு மேனியில் பூண் ஆகத் தொண்ணூறும் ஆறும் சுமந்தோன்” என்று சங்கரசோழன் உலாவும், அடிக்கடி போர் செய்து மார்பில் 96 புண்களைப் புகழணியாகக் கொண்ட ஒரு பெருஞ் சோழனைப் பற்றிப் புகழ்கின்றன. இது பெருஞ் சோழரில் முதல்வனான விசயாலயனையே (846 - 881) குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. பாண்டியப் பேரரசருக்கோ, பல்லவப் பேரரசருக்கோ அடங்கிய ஒரு சின்னஞ் சிறு குடிவேந்தாயிருந்த சோழமரபை ஒரு வலிமை வாய்ந்த அரசாக்குவதிலேயே அவன் இத்தனை கடும் போராட்டங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், அவற்றுள் முக்கியமான ஒன்றே நமக்குத் தெரியவருகிறது. அவன் ஆட்சித் தொடக்கத்தில் கி.பி 846 - அவன் முத்தரையர் என்ற பெயருடைய குறுநில மன்னரிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான். இடவைப் போரில் இந்தத் தஞ்சையையும் பாண்டியன் இரண்டாம் வரகுணன் அவனிடமிருந்து கைப்பற்றினான். ஆனால், 880-ல் நடைபெற்ற திருப்புறம்பியப் போரில் சோழனுக்குத் தஞ்சை மட்டிலுமன்றி, சோழநாட்டின் பெரும்பகுதியும் மீண்டும் கிடைத்தது. இப்போர்க்காலத்தில் விசயாலயனே சோழ அரசனாயிருந்தபோதிலும், அவன் முதுமை காரணமாக அவன் மகன் ஆதித்தனே போரில் ஈடுபட்டிருந்தான். 871-லேயே அவனுக்கு விசயாலயன் இளவரசுப்பட்டம் கட்டியிருந்தான். போரில் பாண்டியன் படுதோல்வியடைய, கங்கன் பிருதிவீபதி மாள, சோழனும் பல்லவனும் மட்டுமே வெற்றியின் பயனை நுகர்வதற்கு மீந்திருந்தனர். பல்லவனுக்கும் படைவலு மிகவும் குறைந்துவிட்டதால், சோழ நாட்டையும் சேர்த்து ஆளும் ஆற்றலில்லாமல் அதைச் சோழன் வசமே விட்டு விட்டான் இவ்வகையில் ஆதித்தன் ஆட்சித் தொடக் கத்திலேயே சோழர் சோழநாட்டின் மன்னராய் வலுவுற்றனர். சோழர் தொண்டை நாட்டு வெற்றி ஆதித்த சோழன் (871 - 907) ஏதோ ஒரு போரில் ஏறத்தாழ 981-க்கு முன் பல்லவப் பேரரசின் கடைசி அரசனான அஜிராதனை ஒரு போரில் கொன்று, தொண்டைநாடு முழுவதையும் கைப்பற்றிக் கொண்டான். கொங்கு நாட்டையும் அவனே கைப்பற்றினான் என்று அவன் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் தொகைப் பாடல் ஒன்று கூறுகிறது. “சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றம்பலம் முகடு கொங்கின் கனகம் அளித்த ஆதித்தன்” அடுத்த ஆட்சியில் கொங்கு நாடெங்கும் சோழர் கல் வெட்டுக்கள் காணப்படுவது இக்கூற்றை உறுதிப்படுத்துகிறது. இலங்கையையும் அவன் வென்றானென்று அதே புலவர் குறித் துள்ளார். “புலம்மன்னிய மன்னைச் சிங்களநாடு பொடிபடுத்த குலமன்னிய புகழ்க் கோகனநாதன்” எக்காரணத்தாலேனும் அவன் சிங்கள நாட்டின் மீது படை யெடுத்துச் சில வெற்றிகள் பெற்றிருக்கக் கூடும். ஆனால், இது பற்றிய வேறு சான்று எதுவும் தமக்குக் கிட்டவில்லை. மைசூரில் ஆண்ட கங்க அரசன் முதலாம் பிருதிவீபதியின் புதல்வன் இரண்டாம் பிருதிவீபதியுடனும், வடதிசையாண்ட இராஷ்டிரகூடப் பேரரசன் இரண்டாம் கிருஷ்ணனுடனும் ஆதித்த சோழன் நட்புடையவனாகவே இருந்தான். அவன் மனை வியர் இருவருள், பட்டத்தரசியான இளங்கோப்பிச்சி இராஷ்டிரகூடப் பேரரசன் புதல்வியே; மற்ற மனைவி திரிபுவன மாதேவி பல்லவமரபுக்கு உரியவளாய் இருந்தாள். சோழ பாண்டியப் போராட்டம்: வெள்ளூர்ப்போர் கி.பி. 919 சோழ மரபைப் பேரரசநிலைக்குக் கொண்டுவந்த முதற் பெருஞ் சோழன் முதலாம் பராந்தகனே (907 -953). அவன் ஆட்சியின் முதல்செயலும், அவன் ஆட்சியின் பெரும் பகுதியை ஆட்கொண்ட செயலும் பாண்டி நாட்டுப் போராட்டமேயாகும். சோழநாடும் தொண்டைநாடும் கொங்குநாடும் பரந்த தன் வல்லாட்சியுடன் பாண்டி நாட்டையும் சேர்த்து, அவன் தமிழக, முதற் பேரரசனாக அரும்பாடுபட்டான். இப்போராட்டமே இறுதியில் அவனை இலங்கைமீது படையெடுக்கவும் தூண்டிற்று. பராந்தகன் தன் ஆட்சியின் முதல் மூன்று ஆண்டு களிலேயே பாண்டியனைப் பல போர்களில் முறியடித்து மதுரையைக் கைப்பற்றியிருந்தான். 910ஆம் ஆண்டுக் கல் வெட்டுக்களே அவனை மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று பாராட்டுகின்றன. ஆனால், பாண்டிய வெற்றி அவ்வளவு எளிதாக அவனுக்கு நிலையான வெற்றியாகி விடவில்லை. இப்போராட்டத்தில் பாண்டியனக் கெதிராகச் சோழனை ஆதரித்த வேளிர் இருவர் ஆவர். ஒருவன் பாண்டிய நாட்டெல்லையிலேயே தற்காலப் புதுக் கோட்டைப் பகுதியில் ஆண்ட கொடும்பாளூர்த்தலைவன். மற்றவன் கீழைப்பழுவூருக் குரிய பழுவேட்டரையன் கண்டன் அமுதன். இச்சமயம் பாண்டி நாட்டை ஆண்டவன் இடைக்காலப் பாண்டியப் பேரரச மரபின் கடைசி மன்னனான மூன்றாம் இராச சிம்மன் (900 -919). அவன் பதினான்காம் ஆட்சியாண்டில் வெளி யிட்ட சின்னமனூர்ச் செப்பேடு தஞ்சையர் கோனையும் கொடும் பாளூர்த் தலைவனையும் போர்களில் வென்றதாகக் கூறுகிறது. பாண்டியனுக்கும், சோழனுக்கும் 910-க்கு முன்னும் பின்னும் பல போர்கள் நடந்தன என்றும், சிலவற்றில் பாண்டியனும் சிலவற்றில் சோழனும் வெற்றி பெற்றனர் என்றும் இது காட்டுகிறது. 910-இல் அரசிருக்கை இழந்த பாண்டியன் அந்நாளில் இலங்கையை ஆண்ட ஐந்தாம் கஸ்ஸபன் உதவி கோரினான். இலங்கை வேந்தன், சக்கன் என்ற ஒருபடைத் தலைவனை ஒரு பெரும் படையுடன் அனுப்பி உதவினான். அப்படையின் பெருக்கைக் கண்டு அது நாவலந்தீவு (இந்தியா) முழுவதையும் வென்றுவிட முடியுமென்று மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் களித் தாயதாக இலங்கை மகாவம்சோ கூறுகிறது. சங்ககாலத் தமிழர் பேரரசக் கனவார்வம் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பாண்டியப் பேரரசர் உள்ளத்தில் கொழுந்து விட்டெரிந்ததென்பதை இது காட்டுகிறது. ஆனால், தமிழரின் இந்தக் கனவைச் சோழரே பின்னாளில் பெரிதளவு நிறைவேற்ற இருந்தனர் என்பதை அப் பாண்டியன் எண்ணியிருக்க மாட்டான் என்னலாம். வெள்ளூர், மதுரைக்குத் தென்மேற்கே சிறிது தொலைவிலுள்ள ஓர் ஊர். அவ்விடத்தில் கி.பி. 919-ல் பாண்டியப் படைகளும் படைத் தலைவன் சக்கனுடைய சிங்களப் படைகளும் சோழனை எதிர்த்துக் கடும்போரிட்டன. இப்போரில் சோழன் பராந்தகன் பெரு வெற்றி யடைந்தான். கணக்கற்ற யானைகளையும் வீரர்களையும் அவன் போரில் கொன்று குவித்து, மீண்டும் மதுரையைக் கைப்பற்றினான். இப்போரில் சோழர் படைத்தலைவராயிருந்தவர்கள், சோழ மண்டலத்தில் பாம்புணிக் கூற்றத்தைச் சேர்ந்த அரசூருக்குரிய அரசூருடையான் தீரன் சென்னிப் பேரரையன் என்பவனும், பரதூர் உடையான் நக்கன் காத்தனும் ஆவர். நாடிழந்து தோற்றோடிய பாண்டியன் மீண்டும் இலங்கை யரசனிடம் சென்று உதவி கோரினான். அவ்வுதவியை எதிர் பார்த்த வண்ணமே அவன் 923 முதல் 934 வரை பதினொரு ஆண்டுகள் இலங்கையில் கழித்தான். இலங்கை மன்னன் அவனுக்கு எல்லாவகை மதிப்பும் கொடுத்தான். ஆனால், சோழனை எதிர்க்கப் படையுதவி செய்யாமல் காலந் தாழ்த்தினான். பாண்டியன் இலங்கையில் தங்கியிருந்த இடம் ‘மகத சித’ என்ற கோட்டை என்று அறிகிறோம். இலங்கைப் படையெடுப்பு 934 - 944 934-க்குள் பராந்தகன் பாண்டி நாட்டிலுள்ள கிளர்ச்சிகளனைத்தையும் அடக்கிவிட்டான். அதன்பின் அவன் மதுரையில் தன்னைப் பாண்டியமன்னானக முடி சூட்டிக் கொள்ள விரும்பினான். ஆனால், பாண்டியர் தவிசும் பிற சின்னங்களும் மதுரையில் காணப்படவில்லை. தோற்றோடிய பாண்டியன் அவற்றை எடுத்துக்கொண்டு இலங்கை சென்றிருந்தான் என்று அறிந்தான். அவற்றை அனுப்பித் தரும்படி சிங்கள மன்னனுக்கு அவன் தூது அனுப்பினான். உதவிக்குக் காத்திருந்த பாண்டியன் இதற்குள்ளாக மனம் தளர்வுற்று, முடியையும் சின்னங்களையும் இலங்கையரசன் பாது காப்பிலேயே விட்டுவிட்டு, தன் தாய் வானவன் மாதேவியின் பிறந்தகமாகிய சேர நாட்டுக்கு ஓடிவிட்டான். பாண்டியன் தன்னிடம் நம்பிப் பாதுகாப்புக்காக விட்டுச் சென்ற சின்னங்களை இலங்கையரசன் சோழனுக்குத் திருப்பித் தர மறுத்துவிட்டான். இதனால் சீற்றமடைந்த சோழன் பராந்தகன், இலங்கை மீதே படையெடுத்தான். ஈழத்தில் நடைபெற்ற போரில் பராந்தகன் படை வெற்றிபெற்றது. இச்சமயம் இலங்கையரசனாயிருந்த நான்காம் உதயன், இலங்கையின் தென் பகுதியில் மலைகளின் பாதுகாப்பில் இருந்த ரோகண நாட்டுக்கு ஓடிவிட்டான். இலங்கையின் மிகப் பெரும் பகுதி பராந்தகன் கைப்பட்டது. ஆனாலும் ஓடிய இலங்கை வேந்தன், பாண்டியன் சின்னங்களையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு ஓடியிருந்தான். ஆகவே, ஈழத்தின் பெரும் பகுதியையும் வென்றபின்னும், பராந்தகன் ஈழம் சென்ற தன் நோக்கம் நிறைவேறாமலே மீள வேண்டியதாயிற்று. இச்சமயம் வட திசையில் இராஷ்டிர கூடருடன் போர் மூளத்தக்கசூழல், இருந்ததால் அவன் இலங்கைப் போரை நீடிக்காமல், 944-ல் சோழ நாடு திரும்பினான். பாண்டிநாட்டு வெற்றியின் பின் பராந்தகன் ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டம் கொண்டிருந்தான். மதுரை வெற்றியும் ஈழ வெற்றியும் ஒரே தொடர்ந்த போரின் வெற்றிகளாதலால் அவன் இப்போது இரண்டு வெற்றிகளையும் ஒரே விருதுப் பெயராக்கி ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரசேகரி’ என்று தன்னைக் குறித்துக் கொண்டான். இவ்வெற்றிகளைச் சோழர் கல்வெட்டுக்களைப் போலவே சோழ நேசன் கங்கன் இரண்டாம் பிருதிவீபதியின் கல்வெட்டுக்களும் பராவுகின்றன. பெருஞ் சோழர் கால இலக்கியத்தில் இவ்விரு வெற்றிகளும் பல தடவை குறிக்கப்பட்டுள்ளன. ஈழமும் தமிழ்க் கூடலும் சிதைந்து இகல் கடந்ததோர் இசை பரந்ததும் (கலிங்கத்துப் பரணி: இராச பாரம்பரியம்; 23) என்று செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியும், ‘வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல் செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன்’ (9-ம் திருமுறை; கோயிற்பதிகம் 8) என்று பராந்தகசோழன் மகனான கண்டராதித்தனின் 9-ஆம் திரு முறையும், நராதிபர் தாழ முன்சென்று மதுரைத் தமிழ்ப்பதியும் ஈழமும் கொண்ட இகலாளி! (குலோத்துங்க சோழன் உலா: 44 - 46) என்று ஒட்டக்கூத்தப் பெருமானின் மூவருலாவும் பாரந்தகன் வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளன. இராஷ்டிரகூடர் முதலாம் படையெடுப்பு : முற்காட்டுப் போர் 910 பல்லவ இராஷ்டிரகூட மணத் தொடர்புகள் அப்பேரரசுகளுக் குள்ளே பல போர்களுக்குக் காரணமாயிருந்தது போலவே, முதலாம் பராந்தகன் காலத்திலும் மண உறவுகளால் சோழ இராஷ்டிரகூடப் பேரரசுகளுக்கு இடையேயும் பூசல்கள் மூண்டன. இவற்றுள் முதற்போருக்குக் காரணமான தொடர்பு ஆதித்த சோழனின் இராஷ்டிரகூடத் தொடர்பேயாகும். ஏனெனில் இராஷ்டிர கூட இளவரசியே பட்டத்தரசியானதால், அவன் மகன் உரிமையை ஆதரித்து இராஷ்டிரகூட அரசன் பராந்தகனுக்கெதிராக 910-ல் சோணாட்டின் வடஎல்லையின் மீது படையெடுத்தான். இப்போரில் வாணகப்பாடியை ஆண்ட வாணன் இரண்டாம் விசயாதித்தனும் (895 -910); அவன் மகன் இரண்டாம் விக்கிரமாதித் தனும் இராஷ்டிரகூடனுக்கு ஆதரவாய் இருந்தனர். சங்க அரசன் இரண்டாம் பிருதிவிபதியும், கொடும்பாளூர்த் தலைவனும் கீழைப்பழுவூர்ப் பழுவேட்டரையன் காண்டத்தின் அமுதனும் சோழருக்கு ஒத்தாசையாய் இருந்தனர். வாணகப்பாடி தொண்டை நாட்டின் ஒரு பகுதி. அதனை ஆண்ட பாணன் இரண்டாம் விசயாதித்தன். தொண்டை நாட்டைப் பல்லவர் மேலுரிமை ஏற்று ஆண்ட குடி மன்னனே. ஆனால், ஆதித்த சோழன் பல்லவரிடமிருந்து தொண்டை நாட்டைக் கைக்கொண்ட சமயம் அவன் பல்லவர் மேலுரிமையை எறிந்துவிட்டு, ஆதித்தன் மேலுரிமையையும் மேற்கொள்ளாமல் தன் தனியுரிமை கொண்டாடத் தொடங்கினான். ஆனால், சோழருக்கெதிராக இப்போரில் செயலாற்றியதன் மூலம் அவனது தன்னுரிமை ஆட்சிக்கு விரைவில் முடிவு ஏற்பட்டது. முற்காட்டுப் போரில் சோழர் வெற்றி பெற்றனர். போரில் பெரு வீரங்காட்டியிறந்த கசவய்யா என்பவனுக்கு வீரக்கல் நாட்டியதாக ஒரு கல்வெட்டுக் குறிக்கிறது. இரண்டாம் பிருதிவீபதியின் உதவிக்குப் பரிசாக, சோழன் அவனுக்கு இரு பாணர்களின் நாட்டையும் கொடுத்து மாவலி வாணராயன் என்ற பட்டமும் அளித்ததாக அறிகிறோம். ஆனால், இது நிறைவேற்றப்பட்டது அடுத்த போர் முடிவிலேயே யாகும். இப்போரிலேயே சோழன் அதற்கான உறுதிமொழி அளித்திருத்தல் கூடும். வல்லாளப் போர் அல்லது வல்லம் போர் ஐ (910) முற்காட்டுப் போரில் இராஷ்டிரகூடருக்கு உதவிய பாணர் மீது சோழன் பழி வாங்க எண்ணினான். அவர்கள் நாட்டின் மீது படையெடுத்தான். வல்லாளம் அல்லது வல்லம் என்பது வாணர்களின் தலை நகரமேயாகும். இது இன்றைய வட ஆர்க்காட்டு மாவட்டத்தில் குடியாத்தம் வட்டத்தைச் சார்ந்த திருவலம் என்னும் ஊரே என்று அறியப்படுகிறது. இப்போரில் சோழர் வெற்றியடைந்த பின்னரே வாணகப் பாடியின் ஆட்சி முற்காட்டுப் போர் முடிவில் வாக்களித்தபடி இரண்டாம் பிருதிவீபதியின் வசம் ஒப்படைக்கப்பட்டது. மாவலி வாணராயன் என்ற பட்டமும் சோழ அரசனால் முறைப்படி இப்போர் முடிவிலேதான் கொடுக்கப்பட்டதாகச் சோளிங்கர்க் கல்வெட்டுக் கூறுகிறது. வாண அரசர்களை மட்டுமன்றி வைடும்ப அரசனையும் சோழன் பராந்தகன் முறியடித்து அவன் நாட்டைக் கைக் கொண்டு அவனைத் துரத்தினான் என்று தெரியவருகிறது. ஆனால், வைடும்பர் போர் தனியாகக் குறிக்கப்படாததால், பாணருடனே அவர்களும் போர் செய்து தோற்று நாடிழந்திருக்க வேண்டும் என்று தோற்றுகிறது. நாடிழந்த பாணரும் வைடும்பரும் சோழன் எதிரியாகிய இராஷ்டிரவடப் பேரரசனிடம் சென்று அவன் ஆதரவை நாடியிருந்தனர். சோழரின் இராஷ்டிரகூடப் படையெடுப்பு 940 பராந்தகன் தன் ஆட்சித் தொடக்கத்திலேயே தன் தந்தையின் இராஷ்டிரகூடத் திருமணத் தொடர்பு காரணமாக இராஷ்டிரகூடரைப் பகைத்துக் கொண்டிருந்தான். ஆனால், இப்பகைமை நீங்கியபின், நட்பைப் புதுப்பிக்கப் பராந்தகன் செய்த மணத் தொடர்பும் பகைமையையே வளர்த்தது. இப்பகைமை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேலாகச் சோழப் பேரரசின் வளர்ச்சியையே தடுத்துப் பேரிடர் தருவதாக அமைந்தது. இராஷ்டிரகூடப் பேரரசன் இரண்டாம் கிருஷ்ணன் 913-ல் இறந்தபின், அவன் பெயரன் மூன்றாம் இந்திரன் தவிசேறி 934 வரை ஆண்டு வந்தான். அவன் மகன் நான்காம் கோவிந்தன் வனப்பில் வேள்மதன் போன்றவன் என்று கூறப்படுகிறது. மூன்றாம் இந்திரன் 918லேயே அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி வைத்திருந்தான். பராந்தகன் தன் மகள் வீரமாதேவியை நான்காம் கோவிந் தனுக்கு மணம் செய்து கொடுத்து, அதன் மூலம் புதிய இராஷ்டிர கூட நட்பை உண்டுபண்ண எண்ணினான். ஆனால், நான்காம் கோவிந்தன் அரசிருக்கை ஏறி ஓர் ஆண்டாவதற்குள் இராஷ்டிரகூடப் பேரரசில் பெரும் புரட்சிகள் உண்டாயின. கீழைச் சாளுக்கிய அரசு இச்சமயம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. வடதிசைப் பிரிவிலுள்ள யுத்த மல்லனுக்கும் தென் பிரிவிலுள்ள இரண்டாம் வீமனுக்கும் போர் மூண்டது. நான்காம் கோவிந்தன் இதில் தலையிட்டு, யுத்த மல்லனுக்கு உதவியாக நின்று இரண்டாம் வீமனுடன் போர் தொடுத்தான். போரில் நான்காம் கோவிந்தன் ஆதரித்த பக்கம் படுதோல்வியுற்றது. ஏற்கெனவே நான்காம் கோவிந்தன் இராஷ்டிரகூடர் பெரு மக்களிடையே மனக் கசப்பை உண்டுபண்ணியிருந்தான். போரின் தோல்வி அவன் மீது வெறுப்பைப் பெருக்கிற்று. அவன் சிற்றப்பன் மகனாகிய மூன்றாம் கிருஷ்ணன் அவனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்து. தன் தந்தையான மூன்றாம் அமோகவர்ஷனையே 935-ல் இராஷ்டிரகூடத் தலைநகரான மான்யகேத நகரில் பேரரசனாக் கினான். அரசிருக்கை யிழந்த சோழன் மருமகன் நான்காம் கோவிந் தன் தன் மனைவி வீரமாதேவியுடன் மாமனாகிய சோழன் மாளிகையில் தஞ்சையிலேயே வந்து அடைக்கலம் புகுந்தான். 935 முதல் 939 வரை அவன் அங்கேயே தங்கினான். 939-ல் மூன்றாம் அமோக ஷவர்ஷன் இறக்கவே, அவன் தனக்கு உதவும்படி பராந்த கனை வேண்டினான். சோழர் பெரும்படை ஒன்றுடன் நான்காம் கோவிந்தன் இராஷ்டிரகூடப் பேரரசைத் தாக்கப் புறப்பட்டான். கங்க அரசன் இரண்டாம் பூதுகன் மூன்றாம் கிருஷ்ணனின் தமக்கையை மணந்திருந்தான். அவன் இப்படையெடுப்பை அறிந்தவுடன் தன் மைத்துனனுக்கு உதவியாக விரைந்தெழுந்தான். இராஷ்டிரகூடப் படையும் கங்கர் படையும் ஒன்றாகச் சேர்ந்து 940-ல் நான்காம் கோவிந்தனையும் சோழர் படைகளையும் தாக்கிப் போரிட்டன. போரில் சோழர் படை தோற்றது. அதன் மீது மூன்றாம் கிருஷ்ணனே இராஷ்டிரகூட முடிகவித்து 968 வரை ஆண்டான். தன் அரசுரிமையைக் எதிர்த்த சோழர்மீது அவன் உள்ளூரக் கறுவிக் கொண்டிருந்தான். சீட்புலி, நெல்லூர் வெற்றிகள் கி.பி. 941-ல் பராந்தக சோழனின் படைத் தலைவனான சிறு குளத்தூர் மாறன் பரமேஸ்வரன் என்ற செம்பியன் சோழிய வரையன், சீட்புலி நாட்டை வென்று, நெல்லூரை அழித்து விட்டுத் திருவொற்றியூர் வழியாகச் சோணாடு மீண்டான். திருவொற்றியூர்க் கல்வெட்டொன்று இதைத் தெரிவிக்கிறது. நான்காம் கோவிந்தனை முறியடித்த வீரன்மீது பழிவாங்கவே இந்தச் செயல் நடைபெற்றிருக்கவேண்டும் என்னலாம். ஏனெனில் வீமன் ஆண்ட பகுதி அதுவே. இரண்டாம் இராஷ்டிரகூடப் படையெடுப்பு: தக்கோலப் போர் 949 வெற்றி முரசுகொட்டி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவி லிருந்து புகழ் ஏணியில் ஏறிவந்த சோழப் பேரரசுமீது பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இருட் படலங்கள் வீசத் தொடங்கின. சோழர் இராஷ்டிரகூடப் படையெடுப்பின் தோல்விக்குப் பின் இந்நிலை மேலும் நெருக்கடியாகி வந்தது. ஏனெனில் சோழன் வலக்கை நண்பனாயிருந்த கங்க அரசன் இரண்டாம் பிருதிவீபதி இறந்தபின், கங்க அரசில் இருந்த இரு பிரிவினர் ஆட்சியும் இராஷ்டிரகூடப் பேரரசன் மூன்றாம் கிருஷ்ணன் மைத்துனனான இரண்டாம் பூதுகனிடத்திலேயே வந்து ஒன்று சேர்ந்தன. மூன்றாம் கிருஷ்ணன் இனி எந்த நேரத்திலும் படையெடுத்து வரக்கூடும் என்று தெரிந்து பராந்தகன் தன் வட எல்லையை வலுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டான். கி.பி. 936-லிருந்து வடதிசைக் காவலின் பொறுப்புப் பராந்தகன் மூத்த புதல்வனான இராசாதித்தனிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அவன் தென் ஆர்க்காட்டு மாவட்டத்தில் தற்போது திருநாம நல்லூர் என்று அழைக்கப்படும் திருநாவலூரைத் தலைமையிடமாகக் கொண்டு படையுடன் தங்கியிருந்தான். அவன் படைத்தலைவன் சேர நாட்டு நந்திக்கரைப் புத்தூரைச் சேர்ந்த வெள்ளன்குமரன் என்பவன். அவனும் அருகில் தற்போது கிராமம் என்று வழங்கும் முடியூரில் படையுடன் தங்கினான். 940-க்குப் பின் இவ்வேற்பாடுகள் இரட்டித்தன. இராசாதித்தன் தம்பியாகிய அரிகுல கேசரியும் படையுடன் அங்கே அமர்த்தப்பட்டான். இராஷ்டிரகூடப் பேரரசனும் தன் படைகளை உச்ச அளவுக் குப் பெருக்கிக்கொண்டு வந்தான். அவனுக்கு உதவியாக அவன் மைத்துனனான வலிமைமிக்க கங்க அரசன் இரண்டாவது பூதுகனும், சோழனால் முன்பு துரத்தப்பட்ட இரண்டு பாண அரசர்களும், வைடும்ப அரசனும் வந்து குழுமினர். எதிரி படைகள் தொண்டை நாட்டின் வட எல்லைக்கருகே வந்துவிட்டன என்றறிந்தே பராந்தகனின் மூத்த புதல்வனான இராசாதித்தன் தன் சோழப் பெரும்படையுடன் அவனைத் தடுத்து நிறுத்த முயன்றான். இருபடைகளும் தக்கோலப் போரில் ஒன்றை ஒன்று தாக்கிக் கைகலந்தன. தக்கோலம் என்பது அரக்கோணத்துக்கு ஆறுகல் தென் கிழக்கிலுள்ள ஓர் ஊர். இக்களத்தில் இருதரப்பினரும் கடும் போர் புரிந்தனர். இருதிறப் படைகளிலும் ஆயிரக்கணக்கான வீரர் வீழ்ந்துபட்டனர். நெடுநேரம் வெற்றி எப்பக்கமும் சாயவில்லை. எதிரிப் படைகளே தொகையில் மிகப் பெரி தாயிருந்த போதிலும், சோழ வீரர் அஞ்சா நெஞ்சராய் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் பேரிடையூறு களுக் கிடையே போரிட்டனர். ஒரு சிறு நிகழ்ச்சி போரைச் சோழருக்கு எதிராக்கிற்று. இராசாதித்தன் வீரப்போராட்டத்தில் இராஷ்டிரகூடப் படைகள் பலவிடங்களிலும் பூட்டற்றுக் குலைந்தது. கண்ட கங்க மன்னன் பூதுகன், யானைமேலிருந்த இராசாதித்தன்மீது தன் அம்புகளைப் பாய்ச்சினான். ஓர் அம்பு அவன் மார்பில் தைக்கவே அவன் உடனடியாக உயிர்நீத்தான். தலைவனில்லாப் படைகள் கட்டுக் குலைந்து குழப்பமெய்தின. மூன்றாம் கிருஷ்ணன் எளிதில் வெற்றி வாகை சூடினான். ‘இராசாதித்தன் வீற்றிருந்த யானையின் அம்பாரியையே தன் போர்க்களமாக்கி, பூதுகன் அவனை விண்ணுலகேற்றினான்’ என்று பங்களூர் ஆதக்கூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. சோழர் ஆதாரங்களும், இராசாதித்தன் யானைமேல் துஞ்சினான் என்றே கூறுகின்றன. சோழப் பேரரசர் வீர வெற்றி வாழ்விலே தக்கோலப் போரைப் போன்ற பேரிடி வேறு எதுவும் கிடையாது. அந்த வீழ்ச்சியிலிருந்து அது பேரரசு நிலைக்கு மீளக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆயிற்று. இராஷ்டிரகூடப் படைகள் தங்கு தடையின்றிச் சிலகாலம் தொண்டை நாடெங்கும் சுழன்று திரிந்தன. இராஷ்டிரகூடக் கல்வெட்டுக்கள் மூன்றாம் கிருஷ்ணனின் வெற்றியைப் பலபட மிகைபடுத்தத் தவறவில்லை. அவை ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னட தேவன்’ என்ற விருதுப் பெயரை அவனுக்குச் சூட்டுகின்றன. தொண்டை நாடு முழுவதும் வென்றதுடன் நில்லாமல் சோழ நாட்டையும் கைக்கொண்டான் என்று கூறுவன சில. இராமேசுவரத்தில் வெற்றித் தூண் நாட்டினான் என்றும், இலங்கையரசனைப் பணிய வைத்து அவனிடம் கப்பம் பெற்று மீண்டான் என்றும் பிதற்றுகின்றன சில. இவையெல்லாம் ஆதாரமற்ற மிகையுரைகள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் தென்னார்க்காட்டுத் திருவதிகைக்குத் தெற்கே சோழர் கல்வெட்டன்றி இராஷ்டிரகூடக் கல்வெட்டு எதுவும் அகப்படவில்லை. அதற்கு வடக்கில்கூட 955 கழிந்த பின்னரே படிப்படியாக இராஷ்டிரகூடக் கல்வெட்டுக்கள் பெருகுகின்றன. பராந்தகன் ஆட்சியின் நடுப்பகுதியில், வடக்கே நெல்லூர் வரை பரவியிருந்த சோழப் பேரரசு தக்கோலப் போரினால் தொண்டை நாடு முற்றிலும் கிட்டத்தட்ட நிலையாக இழந்து, சோழர் தாயக எல்லையுடன் சில தலைமுறைகள் அமைந்து நின்றது. இப்போரில் கங்கன் இரண்டாம் பூதுகன் இராஷ்டிர கூடருக்கு அளித்த உதவி மிகப்பெரிது. அதற்குப் பரிசாக வனவாசி 12,000மும் பெல்வொளெ 300-ம் அவனுக்கு அளிக்கப்பட்டன. இராஷ்டிரகூடர் தொண்டை நாடு முழுவதும் வென்றடக்க ஆறாண்டுகள் பிடித்தன. ஆனால், அதன்பின் 955 முதல் அது முழுவதும் இராஷ்டிரகூடர் நேராட்சியிலேயே இருந்தது. சிறிது சிறிதாகவே பராந்தகன் பின்னோர்கள் அதை மீட்க முடிந்தது. தும்பைப்பதிப் போர் 938 இக்காலத்தில் சிற்றரசர்களுள் கீழைச் சாளுக்கிய நாட்டின் தென்பகுதியை ஆண்ட மன்னன் வீமன் ஒரு பெரு வீரனாய் இருந்தான். பராந்தகன் ஆட்சியின் போது அவன் இராஷ்டிரகூட அரசன் நான்காம் கோவிந்தனை முறியடித்ததும் பின் சோழரால் தாக்கப்பட்டதும் கண்டோம். இவற்றுக்கிடையே அவன் 938-ல் கங்க மன்னனாகிய எறெயகங்களையும் நுளம்பன் ஐயப்பனையும் தும்பைப் பதிப் போரில் முறியடித்து வெற்றி எய்தினான். சோழ - பாண்டியப் போராட்டம்: சேவூர்ப் போர் ஐ 953 இலங்கைப் படையெடுப்பு; சேவூர்ப் போர் ஐஐ 962. முதற் பராந்தக சோழன் இறக்கு முன்பே தக்கோலப் போரில் பெரு வீரனாகிய அவன் மூத்த புதல்வன் இராசாதித்தன் உயிரிழந்தான். அவன் இரண்டாம் புதல்வனாகிய கண்டராதித்தன் (956 - 957), அப்போரிலேயே கலந்து கொண்டிருந்த மூன்றாம் புதல்வனாகிய அரிஞ்சயன் (956 - 957) ஆகியோர் முதற் பராந்தகன் ஆட்சியிறுதியையே தம் ஆட்சியாகக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக ஆண்டு மாண்டனர். முதற் பராந்தகன் ஆட்சியிலேயே சோழர் தொண்டை நாடு முற்றிலும் இழந்து விட்டனர். அத்துடன் அவ்வாட்சியிறுதியில் கண்டராதித்தன் பட்டத்துக்கு வந்தவுடனேயே மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் மகனாகிய வீர பாண்டியன் இராஷ்டிரகூடத் தாக்குதலால் வலிகுன்றியிருந்த சோழர்களுக் கெதிராகக் கிளர்ந் தெழுந்து தன்னாட்சியைக் கைக்கொண்டான். அத்துடன் 953-ல் சோழருடன் அவன் சேவூரில் தொடுத்த போரில் வெற்றி பெற்றான். இதுவே முதற் சேவூர்ப் போராகும். இப்போரில் அவன் தான் ஒரு சோழனைக் கொன்றதாகவும், அச்சோழன் தலையையே போர்க்களத்தில் கால் பந்தாக வைத்து உருட்டி விளையாடியதாகவும் பெருமை கொண்டான். ‘சோழன் தலைக் கொண்ட வீரபாண்டியன்’ என்ற விருதுப் பெயரும் சூட்டிக் கொண்டான். இங்கே சோழன் என்று பெயர் விவரமில்லாமல் கூறிய தனால் அது சோழ அரசனாகயிருக்க முடியாது. சோழர் குடி இளவரசருள் ஒருவராய் இருக்க வேண்டுமென்று வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். ஆனால், தம் மரபுக்கு இதனால் ஏற்பட்ட கறையை மாற்றச் சோழர் அவன் செயலை அவன் மீதே திருப்பினர் என்பது நோக்க, அந்நாளைய சோழர் இச்செயலைச் சிறு செயலாகக் கொள்ளவில்லை என்று தோற்றும். பாண்டியனால் உயிரிழந்த சோழன் அரிஞ்சயனே என்று சிலர் கூறுவர். முதற் சேவூர்ப் போர் 953-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாயின், அது முதற் பராந்தகனாகவே இருந்திருந்தலும் கூடும் என்னலாம். தொண்டை நாடும் பாண்டிய நாடும் இழந்த நிலையில் கண்டராதித்த சோழன் மீண்டும் விசயாலயன் கால சிற்றரசே எல்லையாகிய சோணாட்டை மட்டுமே ஆண்டிருக்க வேண்டும். ஆனால், இச்சோழன் பெருஞ் சிவ பக்தனானதால், இது பற்றிக் கவலை கொள்ளவில்லை. ஆட்சியெல்லை பரப்புவதை விட ஆண்டவன் பக்தி எல்லையைப் பரப்புவதிலேயே அவன் தன் வாழ்நாளைச் செலவிட்டான். அவன் அரசனாகவும், பக்தனாகவும் இருந்ததுபோலவே. அருங்கவிஞனாகவும் இருந்தான். தேவார ஆசிரியர்கள் போலவே கோயில்கள் தோறும் சென்று அவன் திருப்பதியங்கள் பாடினான். ஆட்சியின் பிற்பகுதியில் அவன் மேற்குத் தமிழகமாகிய இன்றைய மலையாளக் கரை தென்கன்னட மாவட்டம், மைசூர் ஆகிய இடங்களில் திரிந்து சமயப்பணிகளாற்றி, மைசூரிலேயே இறுதி நாட்களைக் கழித்தான் என்று தோற்றுகிறது. அவன் பாடிய பதியங்கள் பலஇருக்கக் கூடுமானாலும் நமக்கு ஒன்றே கிட்டியுள்ளது. பன்னிரு திருமுறைகளையும் தொகுத்த சைவ ஆன்றோரால் அது ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப் பட்டுள்ளது. அதன் கடைசிப்பாட்டு அவன் இக்காலத் திருச்சிராப்பள்ளியாகிய உறந்தை அல்லது கோழி நகரையும், தஞ்சை நாட்டையும் ஆண்டவன் என்று குறிப்பிடுகிறது. “சீரால்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக் காரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த ஆரா இன்சொல் கண்டராதித்தன் அருந்தமிழ்மாலை” சமயத்திருப்பணிபோலவே ஏரி, குளம் முதலிய நாட்டுத் திருப்பணிகளிலும் இவன் கருத்துச் செலுத்தியிருந்தான். கண்டராதித்தப் பேரேரி போன்ற பெயர்கள் இதற்குச் சான்று. இவன் அரசியருள் ஒருவர் மழவர்கோன் பாவையாகிய செம்பியன் மாதேவி. தன் கணவன் இறக்கும் சமயம் சிறுவனாக விட்டுச் சென்ற மதுராந்தகனைப் பேணுவதற்காக இப்பெருந்தேவி அவனுடன் இறவாது வாழ்ந்து, மூன்று ஆட்சிகள் வரை கணவன் வழிநின்று சமயத் திருப்பணிகளை நாடெங்கும் பரப்பி, இராசராசன் ஆட்சியில் 1001-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். சோழர் குலமே பெருமைப்படத்தக்க மூதன்னையாக அவர் வாழ்நாள் அமைந்தது. வீரனான அரிஞ்சய சோழன் முன்னோரிழந்த தொண்டை நாட்டை மீட்பதற்காகப் பல போர்கள் ஆற்றினான். அவன் ‘ஆற்றூர்த் துஞ்சிய பெருமாள்’ என்று அழைக்கப்படுவதால், ஆற்றூரில் போர் புரிந்தே மாண்டிருந்தான் என்று கருத இட முண்டு. அரிஞ்சயனுக்குப் பின் அவன் மகன் இரண்டாம் பராந்தகன் அல்லது சுந்தர சோழனும் (957 - 970)கண்டராதித்தன் மகனான மதுராந்தகன் அல்லது உத்தம சோழனும் (970 - 985) ஆண்டனர். சுந்தரசோழன் காலமுதல் சோழ மரபு புதுப் பேரரசுப் புகழ் வளர்த்தது போலவே, அவன் ஆட்சி முதல் தமிழ்மொழியும் புது மலர்ச்சியுற்றது என்னல் வேண்டும். சங்க காலத்துப் பாடல்களில் பெரும்பகுதி நமக்கு வந்தெட்டாதது போலவே, இச்சோழர் காலத்துத் தமிழ்வளத்திலும் பெரும்பகுதி நமக்கு வந்து எட்ட வில்லை. அந்நாளைய இலக்கண நூலாகிய வீரசோழியத்தின் உரையில் கண்ட மேற்கோள்களில் பல சுந்தர சோழனையும் மற்ற முன் பின் சோழர்களையும் குறிப்பிட்டுள்ளன. இறந்துபட்ட அக்கால நல்லிலக்கிய ஏடுகளையும் நற்பண்புகளையும் அவை நமக்கு நினைவூட்டுகின்றன. இராமாயணம் பாடிய கம்பர் இக்காலத்தவரே என்று கருதுகின்றனர். பல தமிழ்ப் புலவர்கள். இது எப்படியானாலும், சுந்தர சோழன் காலமே கன்னட இலக்கியத்தில் பெருமலர்ச்சி ஏற்பட்ட காலம் என்னலாம். சுந்தர சோழனின் புகழைத் தமிழ் ஏடுகளிலும் பன்மடங்காக மிகைப்படுத்திக் கன்னட காப்பியங்கள், புனை கதைகள் தீட்டியுள்ளன. ஆனால், அவற்றுட்பல நின்றசீர்நெடுமாறனான சுந்தர பாண்டியன் புகழுடன் இவன் புகழை ஒன்று படுத்திக் குளறுபடி செய்துள்ளன. ‘சோழன் முடித்தலைக் கொண்டவன்’ என்று பெருமை யடித்துக் கொண்ட வீரபாண்டியனை வீழ்த்திப் பாண்டிய நாட்டை மீண்டும் கைப்பற்றச் சுந்தர சோழன் பேரவாக் கொண்டான். முன் பாண்டியன் வெற்றிகண்ட அதே களத்திலேயே சோழனும் போரிட்டதால் இதனை நாம் இரண்டாம் சேவூர்ப் போர் என்னலாம். இது சுந்தர சோழனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில், 962-ல் நடைபெற்றதாகத் தெரிகிறது. இப்போர், சோழர்களை இலங்கைப் படையெழுச்சிக்கும் தூண்டிற்று. ஏனெனில் இலங்கையரசன் நான்காம் மயிந்தன் சேவூர்ப் போரில் பாண்டியனுக்கு உதவியாக ஒரு பெரிய இலங்கைப் படையை அனுப்பியிருந்தான். இப்போரிலும் இதன் பின் நடைபெற்ற இலங்கைப் படையெடுப்பிலும் சோழர் படைகளைச் சுந்தரசோழன் மூத்த புதல்வனான ஆதித்தனும், கொடும்பாளூர்க் குறுநில மன்னன் பராந்தகன் சிறியவேளான் என்பவனும், தொண்டை நாட்டுச் சிற்றரசன் பார்த்தி பேந்திர வர்மனும் நடத்திச் சென்றனர். இலங்கைப் படையெடுப்பின் பின் நடைபெற்ற பாண்டியப் போரில் சிறிய வேளான் இடத்தில் அவன் மகன் பூதிவிக்கிரமசேரி படைத்தலைமை வகித்தான். இரண்டாம் சேவூர்ப் போரில் பாண்டியன் தோல்வியுற்று, சோழர் பெருவெற்றி பெற்றனர். பாண்டி நாடும் அவர்கள் கைப்பட்டது. இதன் பின் சோழன் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் ‘மதுரை கொண்ட இராசகேசரி வர்மன்’ என்றும், ‘பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள்’ என்றும் விருதுப் பெயர்கள் மேற்கொண்டான். சேவூர்ப் போரினால் வந்த பாண்டிய நாட்டு வெற்றி நிலையான வெற்றியாக இல்லை. ஏனெனில் 956, 966 - அம் ஆண்டு களுக்குரிய வீரபாண்டியனுடைய 18, 19-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கள் காணப்படுகின்றன. ஓடிச் சென்றவன் மீண்டு வந்து ஆண்டா னென்று தெரிகிறது. இலங்கைப் படையெடுப்பின் பின் சோழர் மீண்டும் பாண்டி நாட்டைத் தாக்கினர். இப்போதுதான் வீர பாண்டியன் போரில் மாண்டான். முன் அவன் சோழர் மீண்டும் பாண்டி நாட்டைத் தாக்கினர். இப்போது அவன் தலையை வெட்டி, சோழர் விருதுப்பட்டம் பூண்டனர். ‘ வீரபாண்டியன் முடித்தலைகொண்ட கோப்பரகேசரிவர்மன்’ என்று சோழ இளவரசன் ஆதித்தன் குறிக்கப்பட்டான். அவனுடனே படைத் தலைவராய் இருந்த கொடும்பாளூர்க் குறுநில மன்னன் பூதி விக்கிரமசேரியும், பார்த்திவேந்திரனும் அதே பட்டத்தைத் தாமும் மேற்கொண்டனர். பெருவீரனான ஆதித்தனுக்குச் சுந்தரசோழன் 966-ல் இளவரசுப் பட்டம் கட்டியிருந்தான். ஆனால், எதிரிகள் சிலரால் அவன் 969-ல் கொலையுண்டான். இலங்கைப் படையெடுப்பு 965 பாண்டியனுக்கு இலங்கை அரசன் நான்காம் மயிந்தன் உதவி செய்ததனால், சுந்தரசோழன் அந்நாட்டின்மீது படையெடுத்த நேர்ந்தது. பாண்டி நாட்டுப் படையெடுப்பில் முதலில் படைத் தலைவர்களாயிருந்த ஆதித்தன். கொடும் பாளூர்த் தலைவன் பராந்தகன் சிறியவேளான், தொண்டை நாட்டுத் தலைவன் பார்த்திபேந்திரவர்மன் ஆகியவர்களே இங்கும் அனுப்பட்டிருந்தனர். ஆனால், சிங்களப்படைத் தலைவன் சேனா என்பவன் சோழர் படைகளை முறியடித்தான். சோழர் படைத்தலைவருள் ஒருவனான பராந்தகன் சிறியவேளான் போரில் உயிர்துறந்தான். கல்வெட்டுக்கள் அவனைக் ‘கொடும்பாளூர் வேளான் சிறிய வேளான்’ என்று குறிக்கின்றன. இத்தோல்வியின் பின் சோழர் இலங்கை மன்னனோடு நேச உடன்படிக்கை செய்து கொண்டு மீண்டனர் என்று இலங்கை வரலாற்றேடான மகாவம்சோ கூறுகிறது. தொண்டை நாடு மீட்பு 962 - 967 தொண்டை நாட்டை அடிப்படுத்திய இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் சார்பாக அந்நாட்டை ஆண்டவன் வைடும்ப மரபினான விக்கிரமாதித்தனும் அவன் பின்னோருமே யாவர். விக்கிரமாதித்தனுக்குப் பின் திருவையன், சீர்கண்டன் என்பவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்சிப் பொறுப்பேற்றனர். பாணரும் தொடக்கத்தில் இராஷ்டிரகூடர் பக்கம் இருந்தாலும். சோழன் அரிஞ்சயன் தன் மகள் அரிஞ்சிகைப் பிராட்டியாரை பாணமன்னனுக்கு மணஞ்செய்து கொடுத்து அவன் நேசத்தைப் பெற்றிருந்தான். ஆயினும் அரிஞ்சயன் போர்கள் முழுதும் வெற்றியடையவில்லை. சுந்தரசோழன் தந்தையைப் பற்றி வடக்கே அடிக்கடி போர்களில் ஈடுபட்டான். இதில் அவன் திடீர் வெற்றி எதுவும் பெறாவிட்டாலும், படிப்படியாகத் தொண்டை நாடு முழுவதும் அவன் கைப்பட்டன என்று தோற்றுகிறது. அவன் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு (962) முதல் அவன் கல்வெட்டுக்கள் தொண்டை நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. அதே சமயம் 967-வரை இராஷ்டிரர்கூடர் கல்வெட்டுக்களும் ஆங்காங்கு இடம் பெறுகின்றன. எனவே 962-லிருந்து 967 வரை தொண்டை நாட்டுப் போராட்டம் மெல்லச் சோழர் பக்கம் வெற்றியாக வளர்ந்தது என்று கூறலாம். சுந்தரசோழன் இறந்தபோது அவன் மனைவியருள் வானவன் மாதேவி என்பவள் பால்குடி குழந்தை ஒன்றை விட்டுவிட்டுக் கணவனுடன் எரிமூழ்கினார். “முலைமகப்பிரிந்து முழங்கு எரிநடுவணும் தலைமகற் பிரியாத் தையல்” என்று அந்நாளைய கல்வெட்டுக்கள் அவர் உயிர் மறுப்பைப் புகழ்கின்றன. இவ்வீர அரச நங்கையே சோழப் பேரரசனான இராசராசனை ஈன்ற மாதேவியாவாள். வீரசோழிய உரைமேற்கோள் செய்யுளான கலிப்பா ஒன்று சுந்தர சோழனின் வண்மையைப் புகழ்ந்துள்ளது. அது புத்த சமயஞ்சார்ந்த ஏடு என்பதையும் கீழே தரப்படும் பாடலின் முதலடி காட்டுகிறது. “போதியந் திருநிழல் புனித! நிற்பரவுதும், மேதகுநந்திபுரி மன்னர் சுந்தரச் சோழர் வண்மையும் வனப்பும் திண்மையும் உலகில் சிறந்து வாழ்க எனவே!” தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் முதலாம் இராசராச சோழனால் அவன் தாய் தந்தையரான சுந்தர சோழன், அரசி வானவன் மாதேவி ஆகியோரின் படிவங்கள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தின் ஒப்புயர்வற்ற இருபெரும் பேரரசர்கள் சுந்தரசோழன் காலமானவுடனே அவன் மகன் முறைப்படி அரசனாகவில்லை. பொதுமக்கள் அவனே அரசனாக வேண்டு மென்று விரும்பியதாகத் தெரிகிறது. ஆனால், அரிஞ்சயனுக்கு முன்பே இளமை காரணமாக அரசுரிமை பெறாதிருந்த கண்டராதித்தன் மகன் மதுராந்தக உத்தம சோழனுக்கு (970 - 985) அவன் அரசுரிமையை விட்டுக் கொடுத்திருந்தான். அதற்குப் பதிலாக, உத்தம சோழனுக்குப் பின் இராசராசனே அரசுரிமை பெறுவது என்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சோழப் பேரரசை ஒரே ஆட்சியில் பெரும் பேரரசாக்கியவன் முதலாம் இராசராசனே (985 - 1014). அவன் பேரரசு விரிவினால் மட்டும் பெரியவனல்லன். பேரரசு வென்றாண்ட வீரத்தால் மட்டும் பெரியவனல்லன். அரசனுக்கும் பேரரசனுக்கும் உரிய எல்லாப் பண்புகளும் நிறைந்த தமிழகப் பேரரசன் மட்டுமல்ல, உலகப் பேரரசன் என்றே அவனைக் கூறலாம். ஏனெனில் உலக வரலாற்றிலேயே இத்தகைய பண்பு நிறைவைக் காண்டல் அரிது. அலக்ஸாண்டர், ஸீசர், நெப்போலியன் ஆகியவர்களுடன் மட்டுமே அவனை ஒப்பிட முடியும். அவன் தொலைநோக்கு அவர்களிடையே அலெக்ஸாண்டர் ஒருவருக்கே இருந்ததெனலாம். ஆனால், ஆட்சித் திறமையிலும் தேய ஆட்சித் திறமையிலும் எந்த அரசர் பேரரசரையும் அவனுக்கு இணையாகக் கூற முடியாது. மன்னர் வெற்றிகளையும் செயல்களையும் கல்வெட்டுக் களின் முகப்பில் மெய்க்கீர்த்திகளாக வகுத்துரைக்கும் வழக்கத்தைப் புதுவது புனைந்து தமிழக வரலாற்றுக்குப் பேருதவி புரிந்ததற்காக அவனைப் புகழாத வரலாற்றாசிரியர் இல்லை. ஆனால், நாட்டு வரலாற்று வகையில் அவன் காட்டிய அதே நுண்மாண் நுழைபுலத்தை அவன் தன் பேரரசின் வீர வெற்றிகளிலும் ஆட்சித் திட்டங்களிலும் காட்டினான். அவன் வெற்றிகள் முன்னைய தமிழரசர், பேரரசர் எவர் வெற்றிகளையும் விட -சங்ககால, பிற்கால அரசர் ஆகிய எவர் வெற்றிகளையும் தாண்டி- நிலையான நீடித்த பயன் தந்தன. அவன் திறமையால் ஒரு நூற்றாண்டுக்கும், அவன் ஒப்பற்ற பின்தோன்றலான முதலாம் குலோத்துங்கன் திறமையால் மற்றொரு நூற்றாண்டுக்கும் சோழப் பேரரசு நிலைத்திருந்தது. தமிழகப் பேரரசுகள் எதுவும் இப்படி நூற்றாண்டுக் கணக்காக உச்ச நிலையிலில்லை. அதுமட்டுமன்று. தந்தை ஆட்சித் தொடக்கத்தை அடுத்துப் பிள்ளையாட்சி தொடங்கவைத்து, தந்தை காலத்திலேயே பிள்ளையும் சரி மதிப்புடன் ஆட்சிப் பயிற்சி பெற்று ஆளச்செய்ததனால் உலகில் எந்தப் பேரரசுமரபும் காணாத அதிசயத்தை, திறமையில் ஒருவருக்கொருவர் குறையாத பல தலைமுறைப் பேரரசர் மரபை அவன் உண்டுபண்ணினான். அவன் ஊக்கியப் போர் ஆர்வம், அவன் ஊட்டிய ஆட்சித்திறம், அவன் எழுப்பிய அரசியல் சூழ்ச்சிநய மரபு ஆகியவையும் பேரரசின் தொடர்ந்த வீர மரபுக்கும், ஆட்சி மரபுக்கும் காரணமாய் இருந்தன. இவற்றில் அவனுக்கு இணையான இன்னொரு பெருஞ் சோழனைக் கூறுவதனால், அது முதலாம் குலோத்துங்கனேயாகும். ஏனெனில் பேரரசை வானளாவ வளரும்படி விசையுடன் உந்தித் தள்ளிய பெருமை இராசராசனுடையதென்றால், அது சரிந்து விழாதபடி விசையுடன் தடுத்தாட்கொண்ட பெருமை கட்டாயம் குலோத்துங்கனுக்குரியது. முதல் திறத்தில் இராசராசன் உலக வரலாற்றிலேயே ஒப்புயர்வற்றவன் என்றால், இரண்டாம் திறத்தில் அதுபோலவே உலக வரலாற்றில் குலோத்துங்கன் ஒப்புயர்வற்றவன் ஆவான். இருவரின் ஒப்புமையையும் இன்னும் ஒரு திசையில் காணலாம், பேரரசில் நேராட்சி எல்லை கடந்த பெரும்பகுதி களை மண்டலங்களாக்கியது. அதன் சிற்றெல்லையிலுள்ள ஊர்களை அடுத்த பேரெல்லையுடன் தொடர்பு படுத்தி இணைக்க ‘வளநாடு’ என்ற புதுப்பிரிவை ஆக்கியது, வரி விதிப்புக் குரிய திட்டமும், வரி அல்லது அரசாங்க வருமானத்தையும் அதற்கீடான மக்கள் வருமான வளர்ச்சியையும் ஒப்பிட்டுக் காண்பதற்குரிய திட்டமும் செய்தது ஆகிய இராசராசன் செயலே பிரிட்டிஷ் ஆட்சிவரையும் கீழ் திசை அறிந்த ஆட்சிப் பெருஞ்செயல்களாகும். குலோத்துங்கன் இவற்றைப் பின்பற்றியவன் மட்டுமல்ல. இதுபோன்ற திட்டத்தை அவன் தமிழ் இலக்கியத்தில் ஊக்கினான். புவிச் சக்கரவர்த்தியைப் பாடும் கவிச் சக்கரவர்த்திகள் அவன் காலமுதல்தான் தொடுத்துச் சில தலைமுறைகள் இருந்தார்கள். கம்பர்கூட உண்மையில் அக்காலத்திலேயேஇருந்திருந்தவராதல் கூடும். ஆனால், தமிழகப் புவிச் சக்கரவர்த்திகளைப் பாடிய தமிழ்ச் சக்கரவர்த்திகள் முற்றிலும் முதற் குலோத்துங்கன் மரபினர் காலத்தில் வாழ்ந்தவர்களே, இராசராசன் வரலாறாக சமஸ்கிருதத்தில் ஒரு காப்பிய ஏடும், தமிழில் ஒரு நாடகமும் அவன் காலத்திலேயே இருந்ததாக அறிகிறோம். பேரரசன் கண் காண யாக்கப்பட்ட தமிழகப் பேரரசு வரலாறுகள் நமக்கு வந்து கிட்டாமற் போனது நம் துரதிருஷ்டமே. காந்தளூர்ப் போர் 988 சோழப் பெரும் பேரரசன் முதலாம் இராசராசன் ஆட்சிக் குரிய எண்ணற்ற பல வெற்றிகளிடையே அவன் காலக்கல்வெட்டுக்களால் பலபடப் புகழ்ந்து பேசப்படுவது ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய’ என்பது அவன் செய லேயாகும். காந்தளூர்ச் சாலை என்பது தற்கால திருவாங்கூர் - கொச்சி கேரள அரசுக்குரிய மண்டலத்தின் தலைநகராகவுள்ள திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி. நகரின் பழம்பெரும் பகுதியும் அதுவேயாகும். அதன் நடுவீதி இன்று சாலை, பழஞ்சாலை அல்லது நெடுஞ்சாலை என்ற பெயருடன் நகரின் பெருங் கடைவீதியாகவும் வாணிகக் களமாகவும் இயங்குகின்றது. தமிழ் வணிகரும் தமிழரும் பேரளவில் இயங்குகின்றது. தமிழ் வணிகரும் தமிழரும் பேரளவில் வாழும் பகுதி அதனைச் சுற்றிலும் உள்ள இடங்களாகவே இன்றும் உள்ளன. சேர நாட்டுத் தமிழ்ப் புலவர் மிகுதியாக அணிமை வரை வாழ்ந்துள்ள கரமனை நகரம் அதன் கீழ்க்கோடியிலும், அவர்கள் பழம்பெரும் புரவலனான ஆய் மரபில் வந்த திருவாங்கூர் மன்னன் அரண்மனை மறுகோடியிலும் உள்ளன. இப் பழஞ்சாலையருகே புதிதாக அமைந்த சிறுசாலை ஆரியச்சாலை என்று பெயர் பெற்றிருப்பதும், பழயசாலை இன்னும் தமிழ் ஒலிபடச் சாலை (ஊhயடயi) என்றும், புதிய ஆரியச் சாலை சமஸ்கிருத ஒலிபட ஆரியசாலை (ஹசலயளாயடய) என்றும் மலையாள மொழியில் எழுதப்படுவதும் குறிப்பிடத் தக்க செய்திகள் ஆகும். இவை ஆயிரம் ஆண்டுகடந்தும் மொழி காட்டும் வரலாற்றுப் பண்புகள் ஆகும். காந்தளூர்ச் சாலை அந்நாளில் சேர அல்லது கேரள மன்னரின் தலைசிறந்த துறைமுகமாகவும் வாணிகக் களமாகவும் மட்டுமன்றி, அவர்கள் கடற்படையின் மூலத்தளமாகவும் இருந்தது. கல்வெட்டுக் கள் அதற்குத் தரும் பெருஞ் சிறப்பின் உயிர் மறை இதுவே. ஆட்சித் தொடக்கத்திலேயே இராசராசன் மேற்கொண்ட தென்திசைப் படையெடுப்புக் காந்தளூர்ச்சாலை நோக்கிய படையெடுப்பாகவே இருந்தது. இப்படையெடுப்பின் காரணமாகக் கூறப்படும் செய்தியும் இராசராசனின் பேரரசுப் பண்பை முனைப்பாகச் சுட்டிக் காட்டுவதாகவே இருக்கிறது. இராசராசன் எக்காரியம் பற்றியோ சேர அரசனிடம் ஒரு தூதனை அனுப்பியிருந்தான். தூதன் யார் என்பதுகூட நமக்குத் தெரியவில்லை. ஆனால், சேரன்தூதன், தூதை மறுத்ததுடன் நில்லாமல் அரசு நெறிக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் தூதனை அவமதித்து, அவனை உதகை யிலிருந்த தன் சிறைக்கூடத்தில் இட்டுப் பிணித்துவைத்தான். இச்செய்தி கேட்ட பேரரசன் செயல், சேர நாட்டை எரித் தழித்தது. அத்துடன் அமையவில்லை. பேரரசெங்கும் சுழன்றடித்தது. பேரரசைக் கீழ்திசை காணாத, கேளாத அளவில் அடங்கொண்ட திண்தோள் அரசாக்கிற்று! சோழர் பெரும்படை பாண்டியனைத் தாக்கிப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய பின்னரே காந்தளூரை நோக்கிப் பாய்ந்தது என்று அறிகிறோம். இதற்கு ஒரு காரணம் உண்டு. காந்தளூர்ச் சாலை ஒரு கடற்படைத்தளம்; அதன் முழுஆற்றலையும் அழிக்க வேண்டுமானால் நிலப்படை மட்டும் போதாது. கடற்படையும் வேண்டும். கடற் கடம்பரை வேரறுத்த பண்டைய நாட்டு சேரர் காலமுதல் சோழர் காலம்வரை சேரரின் பெருஞ் சிறப்பும் பேராற்றலும் அவர்கள் கடற்படையாகவே இருந்தது. பாண்டிய சோழரிடமும் பல்லவரிடமும் கூடப் பெருங் கடற்படை இருந்ததானாலும், அவைப் பாதுகாப்புக்குப் பயன் படவில்லை. சேரருக்கோ நிலத்திசையில் சையமலையின் பேரரண் இருந்தபடியால், கடற்படை புதுவலுவூட்டும் கருவியாயிருந்தது. சேரரை எவர் வென்றாலும் நீடித்து ஆட்சி செய்ய முடியாதிருந்ததன் காரணம் இதுவே. இராசராசன் சேரரின் இந்த நிலையான ஆற்றலை அழிக்க எண்ணியதால், கடற்படையைக் குமரி சுற்றிக் கடல் வழி செலுத்தி, இதற்குத் துணையாகப் பாண்டியநாடு கைப்பற்றிச் செல்ல எண்ணினான். இராசராசன் காலத்துச் சேரன் பாஸ்கர இரவிவர்மன் (978- 1036) என்பவன். காந்தளூர்ப் சாலைப்போர் நிலப்போர் மட்டுமன்று; நிலப் போரும் கடற்போரும் கலந்த கடல்நிலப் போரேயாகும். அப் போரில் சேர மன்னனின் கப்பற் படைகள் அழிந்து போயின என்று அறிகிறோம். தகடூர்ப் போரை நேரே இருந்து கண்டு தீட்டிய அரிசில்கிழார், பொன் முடியார் போன்ற தமிழ்ப் புலவர் அன்றிருந்திருந்தால், தகடூர் யாத்திரை போன்ற, ஆனால், அதுபோல் சிதைந்தழியாத, ஒரு காந்தளூர்க் காவியத்தை நாம் பெற்றிருக்கக்கூடும்! காந்தளூர்ப் போரிலே சேரனுடன் ஏற்கெனவே பாண்டிய நாட்டில் தோற்று நாடிழந்த பாண்டியன் அமரபுயங்கனும் சேர்ந்து போராடினான். போர் முடிவில் இரண்டரசர்களின் பெருஞ் செல்வக் குவை மட்டுமன்றி, அவர்களின் இரு முடிகளும் கைப்பற்றப்பட்டன. இவ்வெற்றி காரணமாகவே ‘மும்முடிச் சோழன்’ என்ற பட்டத்தைச் சோழன் முதன்முதலாக மேற்கொண்டான். இராசராசன் என்ற பெயர் அவன் காலமுதல் இன்றுவரை அவனது இயற்பெயர்போல வழங்கினாலும், இப்போரின் பின் அவனுக்கு நிலையாக வழங்கிய வழக்கேயாகும். காந்தளூர்ப் போர் என்ற பெரும்போரின் பயனாகவே இராசராசன் தமிழக முழுமுதலரசனாகவும், தென்னாட்டின் தலைமையரசனாகவும் ஆய்விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. உதகை அழிவு காந்தளூரையும் சுற்றுப்புறங்களையும் எங்கும் அழித் தொழித்த வண்ணமாகவே சோழர் படைகள் கடுஞ் சீற்றத்துடன் தூதன் சிறைப்பட்டிருந்த உதகை நோக்கிச் சென்றன. சூளிகை களும் மாளிகைகளும் நிறைந்த உதகைக் கோட்டையையும் நகரையும் சோழர் சுக்குநூறாக்கிப் பொடி படுத்தினர். எதிர்த்துச் சாம்பலாக்கினர். சிறையை உடைத்துத் தூதனை அரசன் சென்று விடுவித்தான். இம்பெருஞ் செயலைச் சோழர் காலக் கவிதைகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. “தூதற் காப் பண்டு பகலொன்றில் ஈரொன்பது ‘சுரமும்’ கொண்டு மலைநாடு கொண்டோனும்”. (விக்கிரம சோழன் உலா: 32 -34) “ஏறிப்பகல் ஒன்றில் எச்சுரமும் போய் உதகை நூறித் தன் தூதனை நோக்கினோன்” (குலோத்துங்க சோழன் உலா: 46 -48) “மதகயத்தால் ஈரொன்பது சுரமும் அட்டித்து உதகையைத் தீ உய்த்த உரவோன்” (இராசராச சோழன் உலா: 40 - 41) என்று கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் மூவருலாவிலும், “சதய நாள்விழா உதியர் மண்டலந் தன்னில் வைத்தவன் தனியோர் மாவின்மேல் உதய பானுவொத்து உதகை வென்றகோன் ஒரு கை வாரணம் பல கவர்ந்ததும் (கலிங்கத்துப் பரணி 201) என்று கவிச்சக்கரவர்த்தி சயங்கொண்டாரும் நேரில் காணா விட்டாலும் நேரில் கேட்டு இப்போரை வருணித்துள்ளனர். ‘பகல் ஒன்றில் ஈரொன்பது சுரம்’ (பன்னிரண்டு மணி நேரத்துக்குள் பதினெட்டுக் காடு கடந்து) என்ற தொடர் சோழர் படை சென்ற வேகத்தையும் போரின் உக்கிர வேகத்தையும் நம் கண்முன் கொண்டு வருவனவாகும். ‘உதகை நூறி’ உதகை தீ உய்த்த’ என்பனவும் போர்க் காட்சியைக் கண்முன் நிறுத்து பவைகளே. இராசராசன் பிறந்த நாள் சதயம்: அப் பிறந்த நாள் உதகைப் போரையடுத்து நிகழ்ந்தது: சேர நாட்டிலே, சேரனின் குதிரை மீதேறி, சதய நாள் விழாவை? உதகை வெற்றியாகவே கொண்டா டினானென்றும், அவன் குதிரையேறி உதகைக் கோட்டைக் குள்ளே புகுந்தது உதயசூரியன். அந்நாட்டில் மேற்குத்தொடர் மலையில் எழுவது போன்றிருந்ததென்றும் கவிப்பேரரசரான சயங்கொண்டார் தரும் காவியக் காட்சி தமிழர் வரலாற்று வழியாக வந்த கண்கொள்ளாக் கலைக் காட்சியாகும். உதகை என்பது தற்காலத் திருவாங்கூரில் கோட்டாறு என்ற பழம் பெயரையுடைய தற்கால நாகர்கோவிலுக்கு வட மேற்கே கற்குளம் வட்டத்திலுள்ள ஓர் ஊர்ழூ அது அந்நாளில் மாட மாளிகை கூடகோபுரம் கோட்டை உட்கோட்டைகளை யுடைய சேரரின் பெருநகரமாய் இருந்தது. தூதனைச் சிறையில் வைத்துத் துன்புறுத்தியதால் வந்த கோபத்தாலேயே இராசராசன் இத்தகைய அழிவு வேலையைச் செய்ய நேர்ந்தது என்று சுட்டிக் காட்டியுள்ளார். இராசராசன் பேரரசுப் பண்பில் இது ஒரு கூறேயாகும். ‘கடிதோச்சி மெல்ல எறிக’ என்ற வள்ளுவனாரின் அரசியல் நுண்ணறிவுக்குரிய வாழ்க்கையிலக்கியத்துக்கு இது ஒரு நுனிமுகம் என்னலாம். இராசராசன் ஆட்சி முழுதும் காட்டும் பண்பு இதுவன்று என்பதையும் அவன் பிற செயல்கள் தெரிவிக்கும். அவன் இயற் பெயராகவே அமைந்த ‘அருண் மொழித்தேவன்’ என்ற தொடரும் அதற்குச் சின்னமாகும். உதகை எரியூட்டப்பட்ட செயலை அகவற்பாவில் அமைந்த திருக்கோவலூர்க் கல்வெட்டு ஒன்று. “சாரன்மலை எட்டும் சேரன் மலை நாட்டுத் தாவடிக் குவட்டின் பாவடிச் சுவட்டுத் தொடர் நெய்க்கனகம் துகள் எழ, நெடுநல் கோபுரம் கோவைகுலைய, மாபெரும் புரிசை வட்டம் பொடிபட, புரிசைச் சுதைகவின் படைத்த சூளிகை மாளிகை உதகைமுன் ஒள் எரி கொளுவி உதகை வேந்தைக் கடல்புக வெகுண்டு” எனத் தீட்டிக் காட்டுகிறது. விழிஞப்போர் விழிஞம் திருவனந்தபுரத்துக்குத் தெற்கே 10கல் தொலைவில் மேல் கடல் கரையிலுள்ள ஒரு துறைமுக நகரம். இன்றும் அது அப்பெயருடனே சிற்றூராக உள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அது சேர நாட்டின் தலை சிறந்த துறைமுகமாய் இருந்தது. காந்தளூர்ச்சாலை கலமறுத்த பின் சோழர் படையும் கடற்படையும் சேர்ந்து ஆற்றிய அருநிகழ்ச்சி இது ஆகும். இந்த நகரங்களின் சூறையாகவும் மன்னர் குடிமன்னர் திறையாகவும், சோழன் பெரும் பொன்மணி பொருட் குவைகளும், யானைகளும் சோணாட்டுக்குக் கொண்டு வந்து குவித்தான். சேர நாட்டு வெற்றியில் சோழர் படைத் தலைவனாயிருந்த வன் கம்பன் மணியன் என்ற விக்கிரம சிங்க மூவேந்த வேளான். வென்ற நாட்டிலிருந்து வெற்றிச் சின்னங்களுள் ஒன்றாக அவன் மரகதப் படிமம் ஒன்று கொணர்ந்து திருப்பூவனக் கோயிலில் சேர்த்தான் என்றும் அறிகிறோம். பாண்டி நாட்டு வெற்றி சேர நாட்டுக்குச் சோழப் படைகள் செல்லும் வழியிலேயே, பாண்டியன் அமரபுயங்கனைச் சோழர் போரில் முறியடித்துப் பாண்டி நாட்டைக் கைப்பற்றிக்கொண்டனர். இதன் பயனாக இராசராசன் ‘செழியரைத் தேசுகொள் கோவி ராசகேசரி வர்மன்’ என்ற நீண்ட விருதுப் பெரும் பெயர் மேற்கொண்டான். ‘பாண்டிய குலாசனி’ (பாண்டியர் மரபுக்கு அசனி அல்லது இடி) என்ற பட்டமும் இப்போரின் பயனாகவே அவனுக்குச் சூட்டப்பட்டது. இப்போர் பற்றிய குறிப்புகளில் பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியர்கள் பலராகக் காணப்படுகின்றனர். அமர புயங்கன் தலைமையில் ஐந்து பாண்டியர்கள் ஆண்டிருக்கலா மென்று தோற்றுகிறது. பாண்டிய நாட்டில் இதுவரை சோழர் அடைந்த வெற்றி களுக்கும், இராசராசன் அடைந்த வெற்றிக்கும் பெருவேறுபாடு உண்டு. வென்ற நாடுகள் எங்குமே வென்றவர் நேரடி ஆட்சியை வகுத்த முதல் தமிழ்ப் பேரரசன் இராசராசனே. பாண்டிய நாட்டை சோழப்பேரரசின் ஒரு மண்டலமாக்கி, அதற்கு அவன் இராசராச மண்டலம் என்ற புதுப்பெயர் சூட்டுவித்தான். இதுபோலவே பேரரசின் மற்ற இடங்களும் மண்டலங்களாக்கப் பட்டு அவன் விருதுப் பெயர்களில் ஒன்று மண்டலப் பெயராக வழங்கிற்று. பல நாடுகளும் வளநாடுகளும், பல நகரங்களும் நகரத் தெருக்களும் இவ்வாறு பேரரசர் வெற்றிப் பெயர், விருதுப் பெயர்களாக மாற்றப்பட்டதும் இராசராசன் காலத்திலேயே ஆகும். தமிழக அரசர்களில் அவனை ஒத்த புதுக்கருத்துவளம் மிக்க அரசர்கள் முன்னும் இருந்ததில்லை. பின்னும் இருந்ததில்லை என்னலாம். இரண்டாம் சேரப்படையெடுப்பு : கொல்ல வெற்றி: கொடுங்கோளூர் வெற்றி பாண்டிய நாடு வென்று கொண்ட பின் இராசராசன் மீண்டும் சேரநாட்டுப் பக்கம் திரும்பினான். முதலில் வெல்லப் பட்ட சேரநாட்டு அரசன் அதன் தென்கோடி ஆண்ட திருவாங்கூர் அரசனே. வடபகுதியில் வேறும் பல சிற்றரசர் ஆட்சிகளாகப் பழய சேரநாட்டு மேல்கரைப் பகுதி அன்று அமைந்திருந்தது. அதில் ஒன்றே சோழன் அடுத்த வெற்றிக்குரிய கொல்லநாடு. அது தற்காலக் கொல்ல நகரையே தலைமையிடமாகக் கொண்டது. சங்ககாலச் சேரர் தலைநகரான வஞ்சி இப்போது கொடுங் கோளூர் என்று வழங்குவதுபோலவே, சேரர் காலத்திலும் வழங்கிற்று. அதுவும் அன்றைய கொல்ல நாட்டுடன் சேர்ந் திருந்ததனால், கொல்ல வெற்றியுடன் வெற்றியாகச் சோழர் கொடுங்கோளூரையும் தமதாக்கினர். கொல்ல வெற்றிக்குப்பின் சோழன் தன்னைக் ‘கீர்த்தி பராக் கிரமன்’ என்று அழைத்துக் கொண்டான். குடகு வெற்றி: பணசோகேப்போர் தமிழகப் பேரரசர் தம் வெற்றி உலாக்களை வலமாக வளைந்து சென்று நடத்துவது தமிழக மரபு என்று கருதலாம். சங்கப் புலவராகிய கோவூர்கிழார் சோழன் கிள்ளி வளவனைப் பாடிய பாட்டில் இதனைக் குறித்துள்ளார். இராசராசன் வெற்றிகள் இம் மரபை நினைவூட்டுகின்றன. கொல்லம், கொடும்பாளூர் வெற்றிகளுக்குப் பின் இராசராசன் வடக்கே சென்று குடகுமலை நாட்டை அணுகினான். இது சங்ககாலத்திலும் குடகுமலை நாடு என்றே அழைக்கப்பட்டது. இப்போது குடகு நாடு என்று வழங்குகிறது. இந்நாட்டவரும் அருகிலுள்ள தென்கன்னட மாவட்டத்தின் ஒரு பகுதியினரும் இன்று பேசும் மொழி துளு என்று கூறப்படும். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்; துளு என்று ஐந்து தென்மொழி அல்லது திராவிட மொழிகளுள் அது ஒன்று. அது கன்னடத்திலிருந்து பிரிந்த ஒரு மொழியேயாகும். அதன் சிறு மொழியிலிருந்தும் சிறு பரப்புடைய மொழியாகக் குடகு மொழி பிரிந்து வருவதாக மொழி நூலார் பலர் கருதுகின்றனர். ஆனால், சங்ககாலத்திலிருந்து 12, 13-ம் நூற்றாண்டு வரை கூட இக்குடகு நாடு தமிழகத்தின் வடவெல்லை நாடாகவே குறிக்கப்பட்டுள்ளது. பொன் விளையும் நாடு என்று சங்க காலத்திலும், காப்பிக் கொட்டை விளைவிக்கப்பட்ட நாடென்று 15-ஆம் நூற்றாண்டி லிருந்தும் பெயர் விளங்கிய நிலம் இது. வீரத்துக்கும் வீரசைவ சமயத்துக்கும் அது என்றும் ஒரு கோட்டையாகவும் மூலதளமாக வும் இருந்து வந்துள்ளது. சங்க காலத்துக்குப் பின்னும் அந்நாட்டின் மிகப் பழங் கல்வெட்டுக்களும் மிகப் பழமை வாய்ந்த வரலாற்றுச் சான்று களும் பாண்டியர் சோழர்களின் தமிழ்க் கல்வெட்டுக்களே. இராசராசன் காலத்தில் குடகுமலை நாட்டைக் கொங்காள் வார் என்ற அரச மரபினர் ஆண்டு வந்தனர். பணாசோகம் அல்லது பணசோகே என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இராசராசன் கொங்காள்வ மரபிலுள்ள அரசனை முறியடித்துத் துரத்தினான். நாடு அவன் கைப்பட்டது. ஆனால், தொலை விலுள்ள இந்த மலைநாட்டை நேரடியாக அவன் ஆள விரும்பவில்லை. போரில் சோழருக்குப் பேருதவியாயிருந்த ‘மனிஜன்’ என்ற வீரனுக்கு அவன் ‘க்ஷத்திரிய சிகாமணி கொங்காள்வான்’ என்ற பட்டம் தந்து ‘மாளவ்வி’ என்ற ஊரையும் அவனுக்கு அளித்திருந்தான். திரும்பும் சமயம் நாட்டின் ஆட்சியையும் தன் கீழ்ச் சிற்றரசனாக இருந்து ஆளும்படி அவனிடமே விட்டுவிட்டான். அவன் மரபினரே அங்கே நெடு நாள் ஆண்டனர். கங்கவாடி, நுளம்பவாடி, தடிகைபாடி வெற்றிகள்; 991 குடகு வெற்றியிலிருந்தே சோழர் பெரும்படைத் தலைவனாக, இராசராசன் மூத்த புதல்வனான முதலாம் இராசேந்திரன் அமர்த்தப்பட்டிருந்தான். தற்கால மைசூர்த் தனியரசுடன் அதனையடுத்த சேலம் மாவட்ட எல்லையையும் பெல்லாரி மாவட்டத்தையும் உள்ளடக்கிய கங்கவாடி, நுளம்பவாடி, தடிகைபாடி ஆகியவற்றை -மலையம் கொண்கானம், துளவம் ஆகிய பகுதிகளை -மும்முடிச் சோழன் பெற்ற வெற்றிக்களிறு என்று குறிக்கப்படும் இராசேந்திரன் கைக்கொண்டதாகக் கல்வெட்டொன்று குறித்துள்ளது. இராசேந்திரன் ஏற்கனவே ‘பஞ்சவன் மாராயன்’ என்று தந்தையாரால் பட்டம் சூட்டப்பெற்றிருந்தான். கங்க நாட்டுக்கும் வேங்கை நாட்டுக்கும் உரிய மாதண்ட நாயகன் அல்லது மண்டல ஆட்சித்தலைவனாய் இருந்து பேரரசின் ஆட்சியில் இளமை யிலேயே அவன் பங்கும் பயிற்சியும் பெற்றான். இலங்கைப் படையெடுப்பு: 991 இலங்கை அரசன் ஐந்தாம் மயிந்தன் சேரபாண்டிப் போர் களில் எதிர்தரப்பினருக்கு உதவி செய்திருந்தான். ஆகவே இராசராசசோழன் இராசேந்திரன் தலைமையிலேயே ஒரு சோழப் பெரும்படையை இலங்கையைத் தாக்க அனுப்பினான். சோழர் வெற்றிமேல் வெற்றியடைந்து வந்தனர். இதன் பயனாக இலங்கைப் படைவீரர்களிடையே பெருங்குழப்பம் உண்டாயிற்று. இலங்கை வேந்தன் தீவின் பெரும் பகுதியையும் சோழர் வசமே விட்டுவிட்டு, அதன் தென்கீழ்பாலுள்ள மலைப் பகுதியாகிய ரோகணநாட்டுக்கு ஓடிவிட்டான். ரோகண நாடு நீங்கலான தீவு முழுவதும் சோழர் ஆட்சிக்குட்பட்டது. இலங்கை மன்னர் பழந்தலைநகரான அனுராதபுரம் சோழர் தாக்குதலால் முற்றிலும் அழிந்தொழிந்தது. பல்லவர் அழித்த வாதாபி போல அது இவ்வழிவிலிருந்து எக்காலத்தும் மீண்டும் மீட்சி பெறாமல், இன்றளவும் பாழ் நகராகவே உள்ளது. சோழர் இலங்கை அல்லது ஈழ மண்டலத்துக்கு மும்முடிச் சோழ மண்டலம் என்று பெயரிட்டனர். அதைச் சோழர் ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். அத்துடன் அனுராத புரத்தைப் போலத் தீவின் வடதிசை மையமா யமையாமல் முழுத் தீவின் மைய இடத்திலேயே பொலன்னருவா என்ற புதுநகரம் ஆக்கினர். சோழர் தலைநகராகிய அதுவே பிற்காலங்களில் சிங்கள மன்னர் தலைநகராயிற்று. சோழர் காலத்தில் சோழர் சிற்ப முறைப்படி கட்டப்பட்ட கோயில்கள் ஈழ மண்டலத்தில் எழுந்தன இது கல்வெட்டுக்களால் தெரிகிறது. அத்துடன் இராசராசன் தஞ்சையில் கட்டிய பெரு வுடையார் கோயிலுக்குச் சோழர் ஆட்சியிலிருந்த ஈழநாட்டு ஊர்கள் சில நிவந்தமாக விடப்பட்டிருந்தன என்று அறிகிறோம். பொலன்னருவாக்குச் சோழர் இட்டபெயர் சனநாத மங்கலம் என்பது. குடியாட்சிதழுவி ஆண்டவன் என்ற முறையில் இராசராசனுக்குச் சனநாதன் என்ற விருதுப் பெயர் இருந்தது குடியாட்சிக்குத் தற்போது வழங்கும் புதுப்பெயரான ஜனநாயகம் என்ற தொடரை இவ்வழக்கு நினைவூட்டுகிறது. மாந்தோட்டம் என்ற இலங்கை நகரம் சோழர் காலத்தில் இராசராசபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. கலையூர்ப் போர் 1004 சோழர் படைத்தலைவன் அப்பிரமேயன் என்பவன் கலையூர் என்ற இடத்தில் ஒரு ஹொய்சள மன்னனை முறியடித்தான் என்று தெரியவருகிறது. ஹொய்சள மரபினர் பின்னாட்களில் கங்கர் ஆண்ட பகுதிகளை ஆண்ட வலிமை வாய்ந்த அரசராவர்; ஆனால், இராசராசன் காலத்தில் அவர்கள் மிகச் சிறு மன்னராகவே இருந்திருக்கவேண்டும். அவர்கள் பெயரை நாம் தென்னாட்டு வரலாற்றில் முதல் முதல் கேள்விப்படுவதே இக்கலையூர்ப் போரில் தான் என்று கல்வெட்டாராய்ச்சியாளர் திரு ஸீவெல் குறிப்பிட்டுள்ளனர். கலையூர் என்பது தலைக்காட்டருகில் மேற்கு மலைத் தொடர் அடுத்துக் காவிரியின் தென்கரையில் இருந்த ஓர் ஊர். சோழ சாளுக்கியப் போராட்டம்; தோனூர்ப் போர்; 1007 பாண்டிய பல்லவர் ஆட்சிக்கால இறுதியில் சாளுக்கிய அரசை விழுங்கி வளர்ந்த புதிய இராஷ்டிரகூடப் பேரரசு சோழப் பேரரசர் ஊழியில் சுந்தர சோழன் ஆட்சிவரை நிலவி, பின் சாளுக்கிய மரபினான தைலப்பன் என்பவனால் வீழ்த்தப்பட்டது. அது முதல் இராஷ்டிரகூடப் பேரரசு ஆண்ட திசையில் மேலைச் சாளுக்கியர் வல்லாட்சி செலுத்தினர். அவர்கள் வடக்கே மாளவ நாட்டை ஆண்ட வல்லரசர் பாரமாரருடனும், தெற்கே சோழ ருடனும் இராசராசன் கால முதல் ஓயாத போராட்டத்துக்கு ஆளாயினர். சோழப் பேரரசுடன் இறுதிவரை போராடி அதனால் முற்றிலும் விழுங்கப் பெறாமல் இருந்த தென்னாட்டு வல்லரசு அது ஒன்றே. ஆனால், பேரரசின் தளர்ச்சியுடன் அதுவும் தளர்ச்சியுற்றுப் பிற்காலங்களில் வாரங்கல் (பழந்தமிழ் ஓர் அம்கல், ஒரு கல்) நகரிலிருந்து ஆண்ட காததீய மரபினர், வட கலிங்கத்து (ஒரிசா) கஜபதிகள், தேவகிரியாண்ட யாதவர் ஆகியவர் ஆட்சிப் பரப்புக்கு இடம் தந்தனர். இராசராசன் காலத்தில் மேலைச் சாளுக்கிய அரசனா யிருந்தவன் இரண்டாம் தைலனின் மகனான சத்தியாசிரயன். அவன் கல்வெட்டுக்களும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்களும் இராசேந்திர சோழனால் நிகழ்த்தப்பட்ட மேலைச் சாளுக்கியப் படையெடுப்பைப் பற்றிக் கூறுகின்றன. “சோழர் குலத்துக்கு அணியும், சோழன் இராசராச வித்தியாதரனுக்கு மகனும் ஆன நூர்மடிச் சோழ இராசேந்திர வித்தியாதரன் ஒன்பது இலட்சம் வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் படை யெடுத்து வந்தான். பீசப்பூர் வட்டத்திலுள்ள தோனூர் வரை முன்னேறிப் பெரும் போர் ஆற்றினான். நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள், மறையோர் என்றும் பாராமல் கொன்றான். கன்னியரைக் கைப்பற்றிக் கவர்ந்து சென்றான்” -இவ்வாறெல்லாம் சாளுக்கிய ஹோட்டூர் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. இதில் சோழரை வித்தியாதரர் என்று கவிதைப் புராண மொழியில் கூறப்பட்டுள்ளது. இது சாளுக்கியர் மனிதரிடம் தோல்வியடையவில்லை, மனித எல்லை கடந்த தேவகணத் தாரிடமே தோல்வியடைந்தனர் என்ற உணர்ச்சியை உண்டு பண்ணுவதற்காகவேயாகும். அழிவும் மிகைப்படுத்திக் கூறப்பட் டுள்ளது. வாசகர் அனுதாபத்தைச் சாளுக்கியரிடம் திருப்புவதற் கான மிகை நவிற்சியுரையே இது என்னலாம். ஆனால், சோழர் தோனூர் வெற்றிக்கு இது சிறந்த சான்று. ‘சத்தியாசிரயனை எறிந்து எழுந்தருளி’ என்றுமட்டும் தஞ்சைக் கல்வெட்டுக் கூறுகிறது. ஆனால், தோனூர்ப் போரில் படைத்தலைவன் இராசேந்திரன் கட்டளைப்படி சத்தியாசிரயன் ஏறியிருந்த யானையைத் தாக்க முயன்று வீர மாள்வுற்ற வீரன் ஒருவன் நினைவாகப் பொற்பூக்கள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வீரன் பெயர் சுருதிமான் நக்கன் சந்திரன் என்ற இராசமல்ல முத்தரையன் என்பது. சோழர்கால வீரர் புலவராகவும், புலவர் வீரராகவும் இருந்தனர் என்பதையும் இச்செய்தி குறித்துக் காட்டுகிறது. சீட்புலி நாட்டு வெற்றி:991 தெலுங்குச் சோழன் பீமன் ஆண்ட சீட்புலி நாடு, பாகிநாடு ஆகியவற்றைப் பராந்தகன் வென்றிருந்தான், ஆனால், சோழர் தொண்டை நாடிழந்தபின் அது மீட்டும் கைப்பற்றப் பெறவில்லை. இராசராச சோழன் அவற்றைக் கைப்பற்ற எண்ணினான். 991 -ல் அங்கே ஒரு பெரும் படையை அனுப்பினான். படைத்தலைவனா யிருந்தவன் தஞ்சாவூர் வட்டத்துக் காருகுடியுடையான் பரமன் மழபாடியான் என்ற மும்முடிச் சோழன் ஆவன். தவிர, கீழைச் சாளுக்கிய நாட்டை இழந்து அதனை மீட்டும் பெறும் எண்ணத் துடன் சோழன் உதவிநாடி வந்திருந்த சக்திவர்மனும் அதில் ஈடுபட்டிருந்தான். அவ்வாண்டிலேயே வெற்றி ஏற்பட்டு, சீட்புலி நாடும் பாகிநாடும் சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டன. வேங்கை நாட்டு வெற்றி: 999 பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கீழச்சாளுக்கியர் ஆண்ட வேங்கை நாட்டுப்பகுதியை அம்மராசன், பாடபன் என்ற இருவழியினர் இருபகுதிகளாக ஆண்டுவந்தனர். இருவழியினருக்கும் 925- முதல் ஏற்பட்ட சச்சரவின் பயனாக, 973-ல் இளையோன் வழியினரான பாடபனும் அவன் தம்பி தாழனும் நாடு முழுவதும் கைக் கொண்டனர். அதனை 27 ஆண்டுகள் ஆண்டனர். மூத்தவழி மரபினரான சக்திவர்மன் சோழனிடம் வந்து அடைக்கலம் புகுந் தான். 991-ல் சீட்புலி நாட்டு வெற்றியில் இச்சமயத்திலேயே அவன் பங்கு கொண்டான். 999-ல் இராசராசன் சக்திவர்மனுக்கு உதவி செய்யும்படி வேங்கை நாட்டின் மீது படையெடுத்தான். போரில் இளைய மரபினரை வென்று, அவன் சக்திவர்மனையே வேங்கை நாட்டு வேந்தனாக முடி சூட்டினான். அவன் 999-லிருந்து 1011 வரை ஆண்டான். சக்திவர்மன் இளவல் விமலாதித்தான் இராசராசன் புதல்வியான குந்தவைப் பிராட்டியாரை மணஞ் செய்திருந்தான். ஆகவே சக்திவர்மனை முடிசூட்டும்போதே, அவனுக்குப்பின் அரசுரிமை விமாலதித்தனுக்கே என்ற உறுதிப் பெற்று, அவனுக்கே சோழன் சிற்றரசுப் பட்டமும் கட்டிவைத்தான். இதன் பயனாக 1011-ல் சோழ அரசன் மருமகனே கீழைச்சாளுக்கிய மன்னன் ஆனான். முதற் கலிங்கப் போர் கலிங்கம் என்பது கோதாவரியாற்றுக்கும் மகாநதிக்கும் இடையேயுள்ள கடற்கரைப் பகுதி ஆகும். இது கீழைச்சாளுக்கிய நாடான வேங்கைக்கு வடக்கேயுள்ளது. இங்கே கஞ்சம் மாவட்டத்தை அடுத்துள்ள மகேந்திரம் என்ற மலைக் குவடுகளில் பாதி தமிழ் மொழியிலும் பாதி சமஸ்கிருத மொழியிலும் வரையப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன.அவற்றின் மூலம் இராசேந்திரனும் அவன் மைத்துனன் விமலாதித்தனும் சேர்ந்து குலூதன் என்ற ஓர் அரசனை வென்று, அம்மலையில் வெற்றித் தூண் நிறுவினர் என்று அறிகிறோம். ஆனால், ஆட்சியும் ஆண்டும் அவற்றில் குறிக்கப்படாததால், காலம் கணித்துணர முடியவில்லை. முதலாம் இராசேந்திரன் மெய் கீர்த்தியில் அது குறிக்கப்படவில்லை. ஆகவே அது இராசராசன் காலத்தில், வேங்கை வெற்றிக்குப்பின் நிகழ்ந்திருத்தல் வேண்டும். முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் அல்லது மாலத்தீவு இலக்கத் தீவு வெற்றிகள்: 1007 இராசராசன் பெரு வெற்றிகளுள் கடைசியானது முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்னும் தற்கால மாலத்தீவு வெற்றியே யாகும். இத்தீவுகள் தென்னாட்டுக்குத் தென் மேற்கேயும், இலங்கைக்கு மேற்காகவும் இலக்கத் தீவத்துக்கு தெற்காகவும் இருக்கின்றன.. தென்னாட்டுக் கடற்கரையிலிருந்தும், இலங்கைக் கடற்கரையிலிருந்தும் பன்னூற்றுக் கணக்கான கல் தொலைவில், கடல் நடுவில் அத்தீவுக்குழு அமைந்துள்ளன. முற்காலத்தில் அது ஒரு மலையாளக்கரை இஸ்லாமிய மன்னன் ஆட்சியிலும், தற்போது இலங்கை ஆட்சியிலும் இருக்கின்றது. தமிழ் நிலத்துக்கு வடக்கே கன்னடம், தெலுங்கு முதலிய தமிழ் திரிந்த, தமிழினத் திசைமொழிகளுடனே தெற்கேயும் தமிழ் திரிந்த, தமிழினத்திசை மொழிகள் நிலவிய பகுதிகளாக சிங்களமும், முந்நீர்ப் பழந்தீவும் பழய உரை மேற்கோள்களில் குறிக்கப்படுகின்றன. கடல்கொண்ட குமரி நாட்டில் குமரி யாற்றுக்குத் தேற்கேயிருந்த தமிழகப் பரப்பே அவை என்பதையும் அவ்வுரைகள் குறிக்கின்றன. `கள்ளித் தென்கரைக் கடற் பழந்தீவும்’ என்ற தெய்வச்சிலையார் உரைமேற்கொள் செய்யுளை இதற்குச் சான்றாகக் கூறலாம். இச்செய்யுள் தொல்காப்பியத்திற்கு முன்னிருந்த அகத்தியச் செய்யுள் என்றும் குறீக்கப்பட்டுள்ளது. அதுபோலப் பாண்டியநாடு `கன்னி நாடு’, `கன்னியாறு’ ஓடி வளப்படுத்திய நாடு என்று குறிக்கப்படுகிறது. `கன்னியாறு’ என்பது வைகை, தாமிரவருணி போன்ற சிறிய ஆறு அல்ல. காவிரிக்கு ஒப்பாகவோ, அதனைவிடவோ பெரிய ஆறாக அது இருந்திருக்க வேண்டும் என்னலாம். சிலர் தாமிரவருணியையும், சிலர் தென் திருவாங்கூரிலுள்ள பழயாற்றையும் கன்னியாறாகவோ, கன்னியாற்றின் பகுதியாகவோ கொள்வதுண்டு. இலங்கையில் எதிர்த் திசையிலும் தாமிரவருணியின் தொடர்ச்சி இருந்திருப்பது நோக்க, பண்டைக் கன்னியாறு தற்போதைய தாமிர வருணியையும் பழயாற்றையும் கிளையாறுகளாகக் கொண்டு இலங்கை நடுப்பகுதியினூடாக ஓடிக் குமரி நிலத்தின் வழி தென்கடலில் சென்று விழுந்திருக்க வேண்டும் என்று தோற்றுகிறது. இடைச் சங்ககால அலைவாய் அல்லது கவாட புரமும் முந்நீர்ப் பழந்தீவும் அவ்வாற்றின் கடல் முகத்தருகிலேயே இருந்திருக்கக் கூடும். தென்மதுரையைக் கரையில் கொண்ட பஃறுளியாறு இக்குமரியாற்றிலிருந்து நெடியோனால் வெட்டப்பட்ட ஒரு பெருங் கால்வாயாய் இருத்தல் வேண்டும் என்னலாம். பழந்தீவத்தின்மீது இராசராசன் படையெடுப்பதற்குரிய காரணம் சேரநாட்டவர்க்கு அத்தீவின் மக்கள் கொடுத்த தொல்லையாகவே இருக்கக்கூடும் என்று அறிஞர் பண்டாரத்தார் கருதியுள்ளார். சேரநாட்டுப் பகுதியில் வடக்கே கடம்பர் கடற் கொள்ளைக்காரர் மூலதளமாய் இருந்ததுபோல, இதுவும் இக்காலத்தில் கடற்கொள்ளைக்காரர் மூலதளமாய் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. உலகில் தமிழர் பதின் கூற்று எண்மானம் (னுநஉiஅயட சூடிவயவiடிn) பரவுமுன் இருந்த அறுகூற்று, பன்னிரண்டன் கூற்று மானங்கள் (ளுநஒயபநளiஅயட ளுலளவநஅ) இலக்கத்தீவு, மாலத்தீவுப் பழங்குடியினத்தின் மொழியில் இருப்பதாக மொழி நூலறிஞர் கூறுகின்றனர். பழந்தீவு கடல் நடுவில் பல கல் தொலைவில் கடந்திருந்த தால், பெருங்கப்பல்கள் அடங்கிய கப்பற்படை கொண்டே அதைத் தாக்க முடியும். இருபதாம் நூற்றாண்டின் இயந்திர முன்னேற்றங்களிடையேகூட இது ஒரு பெருங்கடற் செயலேயாகும். இத்தகைய போரை நடத்தத் தக்க முறையில் சோழரிடம் சேரரைப்போலவே ஆற்றல் மிக்க கடற்படை இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. வெற்றிக்குப்பின் இந்நடைமுறையிலும், இதனிலும் விரிவான கடார வெற்றியிலும் கடல் வாழ்வில் தீறமுடைய சேரநாட்டுக் கடற்படை வீரரும் காந்தளூர்ப் போருக்குப்பின் சோழருக்கு உதவியிருத்தல் இயல்பே. இலக்கத் தீவங்கள் என்று இந்நாளில் குறிக்கப்படும் தீவக் கூட்டங்களும் சோழர் காலங்களில் மாலத்தீவின் ஆட்சியிலேயே இருந்தன. ஆகவே சோழர் பழந்தீவு பன்னீராயிரத்தின் வெற்றி யுடனே இலக்கத்தீவங்களின் வெற்றியும் இணைந்துள்ளது என்று தெரிய வருகிறது. இராசராசன் பாரிய வெற்றித் தொகுதி ஆட்சித்திறத்தை ஒதுக்கி வைத்தால்கூட, இராசராசன் வெற்றிகள் மட்டுமே ஓர் ஆட்சியில் எந்தப் பேரரசனும் கண்டிராத அளவு வியக்கத்தக்க வெற்றிகள் ஆகும் என்று துணிந்து கூறலாம். உண்மையில் ஹானிபல், சீசர், அலக்ஸாண்டர், நெப்போலியன் ஆகியோர் வெற்றிகளுடன் ஒப்பிட்டால் கூட, அது எவ்வகையிலும் மதிப்புக் கெடுவதல்ல, அவற்றை விஞ்சுவதேயாகும். ஆனால், அவன் மெய்க்கீர்த்தி ஏதோ, ஒரு சிற்றரசன் வெற்றிகளைத் தொகுத்துச் சொல்லும் பாணியில் சுருக்கமாகவே உள்ளன. “காந்தளூர்ச்சாலை கலமறுத் தருளி, வேங்கைநாடும், கங்கை பாடியும், தடிகை பாடியும், நுளம்ப பாடியும், குடமலை நாடும், கொல்லமும், கலிங்கமும், முரண் தொழில் சிங்களர் ஈழமண்டலமும், இரட்டபாடி ஏழரை இலக்கமும், முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் கொண்டு, தன் எழில்வளர் ஊழியுள் எல்லாயாண்டும் தொழுதக விளங்கும்யாண்டே, செழியரைத் தேககொள் கோராச கேசரிவர்மன்....” வெற்றிகளுள் வியத்தகு வெற்றியாக இங்கே குறித்திருப்பது வடதிசை வெற்றிகளையோ, கடல் கடந்த வெற்றிகளையோ அல்ல. அவை எல்லாம் ஒவ்வொரு ஆண்டு வெற்றிதான் என்றும், ஆட்சி முழுவதும் வென்று பெற்ற வெற்றி செழியரை அல்லது பாண்டியரை வென்று தேசு அதாவது புகழ் அழித்த வெற்றியே என்று இங்கே குறிக்கப்பட்டிருப்பது வியத்தற்குரியது. அக்காலத்திலும் தமிழரின் பெரும் பகைவர் தமிழரே என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பின்னாளில் சோழப்பெரும் பேரரசை மீண்டும் வென்ற பேரரசர் பாண்டியரே என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது. வாணகப்பாடி ஆண்ட தலைவருக்கு வானவன் என்றும், பாண்டி நாடாண்டவர்கட்கு மீனவன் என்றும், சாளுக்கியர் கீழ்ப்பட்டிருந்த பகுதி ஆண்டவருக்கு வல்லவர் என்றும், தென் பாண்டி நாடாண்டவருக்குத் தென்னவர் என்றும், கங்க நாடு ஆண்டவர்கட்குக் கங்கர் என்றும், இலங்கை நாடாண்டவர்கட்கு இலங்கேசன் என்றும், தொண்டை நாடாண்டவர்க்குப் பல்லவர் என்றும் பட்டங்கள் வழங்கிய அழகும், இராசராச வளநாடு (பாண்டி), மும்முடிச் சோழ மண்டலம் (இலங்கை), ஜெயங் கொண்ட சோழ மண்டலம் (தொண்டை நாடு) ஆகிய மண்டலப் பெயர்களும் இராசராசன் ஆட்சிக்குரிய அரசியல் தமிழ் வளம் காட்டும் தொடர்கள் ஆகும். கண்கண்ட தமிழக வெற்றி உலாவீரன்: பாண்டி நாட்டில் பிறந்தவர்கள் தமிழ் வளர்த்த தண்ணளிப் பாண்டியர் பற்றி ஏனையவரினும் பெருமைப்படலாமானால், அத்தமிழுக்கு வானளாவிய பரிசில்கள் வழங்கிய தம்வானவர் ஏந்தல்கள் பற்றிச் சேர நாட்டில் பிறந்தவர்களும், அத்தமிழர் முழு வீறுகாட்டி உலகில் தமிழர் இனப்பெருமையைப் பொறித்த அணியணியான பெருஞ் சோழர் பட்டிகை காட்டிச் சோழ நாட்டில் பிறந்தவரும் தத்தம் தனிப்பெருமை கொண்டாடலாம்! முத்தமிழ் நாடாக விளங்கிய பண்டைத் தமிழரசுகள் ஒத்த தமிழ் நாடுகளாகவே திகழ்ந்த முத்திறத் தேசியங்களே என்னலாம். இம் முத்திசைத் தேசியங்களின் போட்டியாலேயே பண்டைத் தமிழகம் கிட்டத்தட்ட அழிந்து, அதன் மறுமலர்ச்சியாகத் தோன்றிய இடைக்காலத் தமிழகமும் கிட்டத்தட்டத் தன் பெருமை சீர் குலைக்கப் பெற்று நலிந்துள்ளது என்னலாம். இன்றுகூடத் தமிழர் தமிழருடன் ஆற்றும் போட்டியே தமிழகத்தையும் அடிமைக் குழியில் அமிழ்த்தி வைத்துக் கொண்டிருக்கிறது என்பது தவறாகாது. இராசராசன் வரலாறு மட்டும் படித்த எவரும் இதற்கு மேல் ஒரு வீர மன்னன் வெற்றியைக் கற்பனையிலும் புனைந்து காணல் அரிது என்று கருத இடமுண்டு. ஆனால், அவனைக் கடந்த வெற்றி வீரனாக விளங்கியவன் அம் மும்முடிச் சோழன் பெற்ற வெற்றிக்களிறாகிய இராசேந்திரனே! இராசேந்திரன் இராசராசன் மகனாக, அவனை அடுத்து ஆண்டபெருஞ் சோழனாயிராவிட்டால், பெருஞ் சோழர் வரிசையில்கூட அவனுக்கு இடம் போதாது. அவன் வெற்றிகள் சோழகமும் தமிழகமும் கண்டிராத, இன்றுகூடக் கனவு காணாதவெற்றி என்னலாம். அவன் புகழில் பெரும்பாதி தந்தையாட்சியில் தந்தை புகழில் புதையுண்டுவிட்டாலும் தந்தை தனிப்புகழோ அவன் தனிப்புகழோ அதனால் குறைபடவில்லை. இரண்டும் சோழப் பெருமரபின் இரு வேறு திசைப் புகழாகவே இயல்கின்றன. கற்பனையுலகில் தமிழர் கனாக் கண்ட விக்கிராமதித்தன் வெற்றி முழுதும் கட்டுக் கதையல்ல; இராசேந்திரன் வெற்றியின் ஒரு நிழலே என்று கூறலாம். முதலாம் இராசேந்திரன் பட்டத்துக்கு வந்த ஆண்டிலேயே முதலாம் இராசராசனின் வெற்றிகளின் பயனாகச் சோழப் பேரரசின் எல்லை தற்காலத் தமிழகம் முழுவதையும் தற்காலக் கேரளம், ஆந்திரம் ஆகியவற்றையும் கன்னடத்தின் தென்பால் உள்ள பெரும் பகுதியையும் கிட்டத்தட்ட இலங்கை முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அதை இமயம் வரை, கடாரம் வரை கொண்டு சென்று, நெடியோனது பழம் பாண்டித் தொல் கனவைச் சோழரின் புது நனவாக்கியவன் இராசேந்திரனே யாவன். சோழ சாளுக்கியப் போராட்டம்: இடைதுறை நாடு வனவாசி பன்னீராயிர வெற்றி: கொள்ளிப்பாக்கை, மண்ணைக் கடக வெற்றிகள்: 1008 இராசேந்திரன் காலத்துக்குரிய சோழ சாளுக்கியப் போராட்டத்தின் முதற் பெருங்கட்டம் அவனது மூன்றாவது ஆண்டு மெய்க் கீர்த்தியிலேயே இடம் பெறுகிறது. ஆகவே அதன் பெரும்பகுதி அவன் இளவரசனாவதற்கு முன்னோ பின்னோ இராசராசன் ஆட்சிப் பகுதியில் நிகழ்ந்த செயல்களாகவே இருக்க வேண்டும். இப்போரில் இராசேந்திரன் எதிரியாகக் குறிக்கப்படும் மன்னன் சத்தியாசிரயன் ஆட்சி 1008-ஆம் ஆண்டுடன் முடிவதால், இவையும் அவ்வாண்டுக்கே உரிய செய்திகள் ஆக வேண்டும். இவ்வெற்றிகளுக்குரிய இடங்களில் இடைதுறை நாடு என்பது சாளுக்கிய கல்வெட்டுக்களில் இடத்தோர் இரண்டாயிரம் என்று குறிக்கப்படும் நிலமே. அது கிருஷ்ணா, துங்கபத்திரா ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலம் ஆகும். தற்போது அது பம்பாய் மாகாணத்திலுள்ள இரேய்ச்சூர் மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதி ஆகும். இது போல வனவாசி என்பது கல்வெட்டுக்களில் வனவாசி பன்னீராயிரம் எனப்படுவது ஆகும். அது மைசூரின் வடமேற்குப் பகுதியும் அதற்கு வடக்கிலுள்ள கோவாப்பகுதி அல்லது வடகொண்கானக் கரையும் சேர்ந்த இடமாகும். பண்டைச் சேரர்காலத்தில் அது கடம் பர்களின் தாயகமாய் இருந்தது. பின்னாட்களில் அது வாணர்கள் அல்லது பாணர்களின் தாயகமாயிற்று, வனவாசி என்ற பெயர் பாணவாசி, பனவாசி என்பவற்றின் மருஉவே. கொள்ளிப்பாக்கை என்பது ஒரு நகரம். அதுவே பின்னாட் களில் பாமினி மரபினரின் தலைநகரமாகக் குல்பர்கா என்ற பெயர் பெற்றிருந்தது. சோழர் காலத்திலும் அது கொள்ளைப்பாக்கை ஏழாயிரம் என்ற பரப்பின் தலைமை நகரமாகவே இருந்தது. அந்நகரம் தற்கால ஹைதராபாத் நகருக்கு நாற்பத்தைந்து கல் வட கிழக்கிலுள்ளது. சாளுக்கியர் பேரரசிலும் அது துணைத் தலை நகரமாய் இருந்தது. மண்ணைக் கடக்கம் என்பது இராஷ்டிரகூடப் பேரரசுக்கும், அதைத் தொடர்ந்து இராசேந்திர சோழன் காலம் வரை இருந்த மேலைச் சாளுக்கியருக்கும் உரிய தலைநகரமேயாகும். அது அக்காலத்தில் மானியகேதம் என்றும் வழங்கிற்று. இந்நாளில் அது மால்கேட் என்றும் வழங்கப் பெறுகிறது. இவ்வெற்றிகளால் மேலைச் சாளுக்கியப் பேரரசின் தென் பகுதியான வனவாசியும், இரட்டபாடி ஏழரை இலக்கமும் சோழப் பேரரசில் இணைந்தன. கொள்ளிப் பாக்கைப் போரே இப்பெரும் பரப்பை வசப்படுத்தப் பெரிதும் உதவியிருக்கக் கூடும். சாளுக்கியரின் தென் தலைநகரான அந்நகரம் இப்போரில் முற்றிலும் அழிக்கப்பட்டது. ஆனால், சோழர் தென்திசை வெற்றியுடன் நில்லாமல் தலைநகரான மண்ணைக் கடக்கத்தையும் அழித்தனர். சோழரால் அழிவுற்றபின் அது கிட்டத்தட்ட வாதாபி, அனுராதபுரம் கதியை அடைந்தது. ஏனெனில் அது மீண்டும் சாளுக்கியப் பேரரசின் தலைநகராகவோ, வேறு எந்தப் பேரரசின் தலை நகராகவோ அமையவில்லை. மேலைச்சாளுக்கியர் அதன் பின் மண்ணைக் கடகத்துக்கு நாற்பத்தெட்டுக் கல் வடகிழக்கிலுள்ள கலியாண புரத்தைத் தம் புதுத் தலைநகராக்கிக் கொண்டனர். இராசேந்திரன் வென்ற சாளுக்கியப் பேரரசின் பகுதிகளில் துங்கபத்திரைக்குத் தெற்கிலுள்ள பகுதியே நிலையாகச் சோழப் பேரரசில் இருந்தது. இடைதுறை அல்லது இரேய்ச்சூர்ப் பகுதியைச் சாளுக்கியர் விரைவில் மீட்டு வெற்றிபெற்றனர் என்பதை அங்குள்ள கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. ஆனால், துங்கபத்திரை ஆறு மேலைச் சாளுக்கிய, சோழப் பேரரசுகளின் நிலையான இடையெல்லையாயிற்று. “நெடிதுஇயல் ஊழியுள் இடைதுறைநாடும், தொடர்வன வேலிப் படர்வனவாசியும் சுள்ளிச்சூழ்மதில் கொள்ளிப்பாக்கையும் நண்ணற்கு அரு முரண்மண்ணைக் கடக்கமும்” என்று இராசேந்திரன் மெய்க்கீர்த்தி இவ் வெற்றிகளைக் குறிக்கிறது. ஈழப் பெரும் போர்: 1017 இராசராசன் காலத்து ஈழப்போரில் ஐந்தாம் மயிந்தன் நாட்டாட்சியைச் சோழரிடம் விட்டுவிட்டு, ரோகண நாட்டு மலைப் பக்கங்களில் சென்று ஓடி ஒளிந்து கொண்டான். அவன் சில ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்து படை திரட்டிச் சோழர் ஆட்சியை எதிர்க்க முற்பட்டான். இதன் பயனாக 1017-ல் முதலாம் இராசேந்திரன் மீண்டும் ஈழநாட்டுக்குப் படையெடுத்துச் சென்று போர் தொடுத்தான். இத்தடவை சோழர் வெற்றி முன் என்றும் இல்லாத முறையில் நிறைவெற்றியாயிற்று. ஏனெனில் சோழர் ஐந்தாம் மயிந்தனைப் போரில் முறியடித்துச் சிறைப்படுத்தினர். அவனைச் சோழ நாட்டுக்கே அனுப்பிக் காவலிலும் வைத்தனர். அத்துடன் இராசேந்திரன் அவன் முடியையும் அவன் அரசியணிந்த முடியையும் கைக் கொண்டான். தவிர, முதன் முதலாம் பராந்தகன் ஆட்சியில், பாண்டியன் ஈழ அரசனிடம் அடைக்கலமாக வைத்துவிட்டுச் சென்ற சுந்தர முடியும் இந்திரனாரமும் கூட இப்போது சோழன் கைவசமாயின. ஈழத்தீவு முழுவதும், இராசராசன் ஆட்சியில் சோழர் ஆட்சியுட்படாதிருந்த ரோகணநாடு உட்பட, சோழர் ஆட்சிக்கு உட்பட்டது. இத்தகைய ஒரு வெற்றியை உளத்தில் கொண்டே இராசராசன் தன் இலங்கைத் தலைநகரைத் தீவின் மையஇடமாகிய பொலன்னருவா அல்லது சனநாதமங்கலத்தில் தேர்ந்தமைத்தான் என்பது இச்சமயம் இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும். “பொருகடல் ஈழத்து அரசர் தம் முடியும், ஆங்கவர் தேவியர் ஓங்கு எழில் முடியும், முன் அவர் பக்கல் தென்னவன் வைத்த சுந்தரமுடியும் இந்திரன் ஆரமும் தெண்டிரை ஈழமண்டல முழுவதும் என இவ்வெற்றிகளை இராசேந்திரன் மெய்க்கீர்த்திகள் விளக்கமாக அறிவிக்கின்றன. ஈழவெற்றிக்குப்பின் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை இலங்கை மகாவம்சோ குறித்துள்ளது. சிறைப்பட்ட இலங்கைவேந்தன் சோழருக்குப் பணிந்து சோணாட்டிலேயே 1029 வரை வாழ்ந்தான். ஆனால், இலங்கை மக்கள் சிலர் சோழருக்குத் தெரியாமலே அவன் புதல்வன் காசி பனை மறைவில் வைத்து வளர்த்து வந்தனர். தந்தை இறந்தபின் அவன் தன் ஆதரவாளர் உதவியால் படைதிரட்டிச் சோழ நாட்டை வென்று, விக்கிரமபாகு என்ற பெயருடன் அப்பகுதியை 1029 வரை ஆண்டான். பாண்டிய, சேரநாட்டு நிகழ்ச்சிகள் 1018, 1019 சில கல்வெட்டுகள் இராசேந்திரன் சேரநாட்டில் படை யெடுத்தானென்றும், திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அவன் பாண்டிநாட்டிலும் பாண்டியனை ஒட்டி நாட்டைக் கைப்பற்றினான் என்றும் கூறுகின்றன. ஆனால், இவை விளக்கமற்ற குறிப்புக்கள் ஆகும். புதுச்சேரி யடுத்த இராசேந்திரன் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றே அதை விளக்கமாகக் கூறுகிறது. நாட்டாட்சி இழந்த பாண்டிய மரபினர் அடிக்கடி வெளி வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். இதனை ஒழிக்க இராசேந்திரன் ஒரு புதுத்திட்டம் வகுத்தான். கிளர்ந்தெழுந்த பாண்டியனை ஓட்டியபின், அவன்தன் மக்களுள் ஒருவனையே பாண்டி நாட்டில் தன் அரசப் பிரதிநிதியாக நிலையாக அமர்த்தி விட எண்ணினான். இப்புதல்வனுக்கு அவன் சோழ பாண்டியன் என்ற பதவிப் பட்டத்துடன், பாண்டியன் மரபுப்படி சடையவர்மன் என்ற ஆட்சிப் பெயரையும் சேர்த்து, சடையவர் மன் சுந்தர சோழ பாண்டியன் என்ற விருதுப் பெயர் அளித்தான். சோழர் மாறிமாறிப் பரகேசரி, இராகேசரி என்று தொடர்ச் சியாக ஆட்சிப் பட்டம் கட்டிக் கொண்டது போல, பாண்டியரும் மாறவர்மன், சடையவர்மன் என்று மாறிமாறிப் பட்டம் கட்டிக் கொண்டு வந்தனர். தன் மகனையே சடையவர்மன் என்ற பட்டம் ஏற்கச் செய்வதன் மூலம் பாண்டியர் மரபை நிலையாகச் சோழரின் கிளைமரபாக்க இராசேந்திரன் எண்ணினான். சோழ பாண்டியர் அரசிருக்கைக்காகவும், விழாவுக்காகவும் இராசேந்திரன் மதுரைமாநகரில் மிகப் பாரிய அளவில் ஒரு மணி மாடமாளிகை கட்ட ஏற்பாடு செய்தான். அதன் பாரத்தால் பாரே அதிர்ந்ததென்று கல்வெட்டுக்கள் அதைப் பார்த்துப் புகழ்கின்றன. அது கட்டி முடிந்ததும் இராசேந்திரன் 1018-ல் தன் மகனுக்குச் சடையவர்மன் சுந்தரச் சோழ பாண்டியன் என்ற பட்டமளிக்கும் விழாவைப் பேராரவாரத்துடன் மதுரையில் நடத்தினான். அடுத்த ஆண்டில் சேர நாட்டையும் சோழ பாண்டியன் வசமே ஒப்படைத்துவிட இராசேந்திரன் எண்ணினான். சேர நாட்டு ஆட்சி மரபுக்குரிய முடியும் சின்னங்களும் பரசுராமனால் சாந்திமத் தீவுகளில் ஒரு வெல்ல முடியாத கோட்டையில் வைத்துக் காக்கப்பட்டன என்று அந்நாளில் கூறப்பட்டது. இராசேந்திரன் சாந்திமத் தீவைக் கைப்பற்றி அதிலுள்ள சேரர் முடியையும் மாலையையும் கைக்கொண்டான். எறிபடைக் கேரளன் முறைமையில் சூடும் குலதனமாகிய பலர் புகழ் முடியும், செங்கதிர் மாலையும், சங்கு அதிர் வேலைத் தொல் பெருங்காவல் பல் பழந்தீவும், செருவில் சினவி இருபத் தொருகால் அரசுகளை கட்ட பரசுராமன் மேவருஞ் சாந்திமத் தீவு அரண் கருதி இருத்திய செம்பொன் திருத்தகு முடியும் என்று மெய்க்கீர்த்தியடிகள் இவற்றைக் குறிக்கின்றன. இங்கே பல் பழந்தீவு வேறாகவும், சாந்திமத் தீவு வேறாக வும், சேரர் முடி வேறாகவும், பரசுராமன் வைத்த செம்பொன் முடி வேறாகவுமே குறிக்கப்பட்டுள்ளன. பல்பழந்தீவு என்பதை இலக்கத் தீவக்கூட்டம் என்று கொள்வார் திரு சீவெல், சாந்திமத் தீவு அராபிக்கடலிலிருந்த ஒரு தீவாதல் வேண்டும் என்பர் அறிஞர் பண்டாரத்தார். சோழ சாளுக்கியப் போராட்டம் ஐஐ; பளகாம்வேப் போர் 1019: முசங்கிப்போர் 1020 மேலைச்சாளுக்கிய அரசனான ஐந்தாம் விக்கிரமாதித் தனுக்குப் பின் அவன் இளவல் சயசிம்மன் பட்டத்துக்கு வந்தான். தந்தையும் தமயனும் இழந்த நாடுகளை அவன் சோழருடன் போர் செய்து திரும்பவும் பெற்றான் என்று பளகாம்வேயிலுள்ள 1019-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அப்பகுதியில் அவன் சோழர் எல்லைப்படைகளை வென்று இரட்டைபாடி ஏழரை இலக்கம் சார்ந்த வடமேற்கு மைசூர், பெல்லாரிப் பகுதிகளைக் கைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டில் முயங்கி அல்லது முசங்கியில் நடைபெற்ற போரில் இராசேந்திரன் இரட்டைபாடி ஏழரை இலக்கத்தை மீட்டுப் பெற்றான். சயசிம்மன் ஓடி ஒளிந்து கொண்டான். அவன் நிதிக்குவைகளை வாரிக் கொண்டு இராசேந்திரன் மீண்டான். பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு ஒளித்தசய சிங்கன் அளப்பரும் புகழொடு பீடியல் இரட்டபாடி ஏழரை இலக்கமும், நவநிதிக் குலப்பெரு மலைகளும் பெற்றனன் என்று மெய்க்கீர்த்தி புகல்கின்றது. இப்போர்கள் துங்கப்பத்திரை எல்லையை நிலையாக்கும் போர்களாக மட்டுமே இருந்தன. மேலைச்சாளுக்கியர் அது கடந்து தெற்கிலும், சோழர் அது கடந்து வடக்கிலும் வென்றனராயினும், இரண்டும் நீடிக்கவில்லை. சோழர் வடதிசைப் படையெழுச்சி: 1022 -1023 இராசராசன் வெற்றிகளாலும் பத்தாம் ஆட்சி ஆண்டு காலத்துப் இராசேந்திரன் ஆற்றிய போர்களாலும் இராசராசன் காலத்துப் பேரரசின் எல்லை முழுதும் நிலையான எல்லையாயிற்று. பேரரசு வெளிநாட்டுப் போர்களுக்கு மூலதனமாகுமளவு நிலையான வலுப்பெற்றது. இதன் பின்னரே இராசேந்திரனுக்கேயுரிய தனி வெற்றிகள் தொடங்குகின்றன, ‘பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பர கேசரிவர்மன்’ என்ற அவன் நீண்ட விருதுப்பெயர் இவ்வெற்றிகளை ஒரே தொடர் வெற்றியாகக் குறித்துள்ளது. இவை கூட அவன் ஆட்சியில் ஐந்து ஆண்டுகட்கு மேல் பிடிக்க வில்லை என்பது வியப்புக்குரிய செய்தியாகவே உள்ளது. ஏனெனில் அது வடதிசையில் கங்கை வரை சென்று அடைந்த பல நில வெற்றிகளையும், அதன்பின் கடல் கடந்து கடாரம் வரை சென்று அடைந்த பல கடல் வெற்றிகளையும் உள்ளடக்கு கின்றது. வடக்கு வெற்றி 1022-1028 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கீழ்திசை வெற்றி 1025 ஆம் ஆண்டிலும் முடிவு பெற்று விட்டதாகத் தோன்றுகிறது. இவ்விரு வெற்றிகளைப்பற்றித் தமிழர் அந்நாளிலேயே பெருமை கொண்டிருந்தனர் என்பதில் ஐயமில்லை. கல்வெட்டுக் கள் சற்று விளக்கமாகவே இருந்தாலும், மற்ற வெற்றிகளைப் போல இவற்றையும் தொகுத்தே கூறுகின்றன. விளக்கம் தருவதற் குரிய இலக்கியங்களும் இக்காலப் பிரிவுக்குக் குறைவே. சுந்தர சோழன் கால இலக்கியம்போல இக்கால இலக்கியமும் மிகுதி அழிவுற்றிருக்கலாம். கலிங்கத்துப் பரணியோ, மூவருலாவோ தொல்பழ நிகழ்ச்சிகளாகவே, இவற்றையும் குறித்துச் செல்கின்றன. வெளிநாட்டுப் புறச்சான்றுகளே இவற்றைத் துலக்கப் பெரிதும் உதவியுள்ளன. ஆனால், போதிய அளவு வட இந்திய வரலாறோ தென் கிழக்காசிய வரலாறோ ஆராய்பவர் இவ்வகையில் உதவ முடியவில்லை. ஏனெனில் அவர்கள் கீழ்த்திசையிலேயே பொதுவாகவும், தமிழினத்திலே சிறப்பாகவும் அக்கரையற்றவர்கள். நாட்டு மக்கள் சார்பில் நின்று வரலாற்றை நோக்காமல், அயலினத்தவர், அயல்நாட்டவர், மேனாட்டவர் கண்கொண்டு அயலார் வரலாறாகவே அதைக் காண்பவர்கள் ஆகியுள்ளனர். வடதிசைச் சிந்து கங்கைவெளி வரலாறு சிறப்பாகப் படை யெடுப்பாளர், அயலாட்சியாளர் வரலாறாகவே கருதப்பட்டு வருகிறது. கஜினிமாமூது பதினெட்டுத் தடவை படையெடுத்துக் கோயில்களை இடித்துக் கோயில் செல்வங்களைக் கொள்ளை கொண்ட நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி ஆராயும் வடதிசை ஆராய்ச்சியாளர், அதேசமயம் நடைபெற்ற, ஒருவேளை கஜினி மாமூதின் படையெடுப்புடனேயே மோதிக்கொண்ட சோழப் படையெடுப்பில் மட்டும் அக்கரை காட்டாதிருப்பது வியப்புக்குரிய செய்தியேயாகும். வடதிசைப் படையெழுச்சிக்குப் பெயரளவில் காரணமாகக் கூறப்படுவது. புதிய சோழர் தலைநகரான கங்கை கொண்ட சோழ புரத்தைத் திருநிலைப்படுத்துவதற்குக் கங்கை நீர் கொண்டுவர இராசேந்திரன் விரும்பினான் என்பதே, இவ்வகையில் பண்டை முத்தமிழ் அரசர் போல, கரிகாலனைப் போல, வெற்றி வீரனாக உலாவரவேண்டும் என்ற ஆர்வமே முதன்மையாய் இருந்திருத்தல் கூடும். இவற்றைத் தாண்டிய நெடியோன் புகழ் அணிமைக் காலத்தில் மறக்கப்பட்டிருப்பினும், அன்று உயிர் மரபாய் இலங்கி யிருக்கக்கூடும். ஏனெனில் நெடியோன் காலத்திலிருந்து தென் கிழக்காசியாவில் ‘சிரீமாறமரபு’ அன்றுவரையும், 16-ஆம் நூற்றாண்டு வரையும் நிலவிற்று என்று அறிகிறோம். வடதிசை நில வெற்றி உலா மட்டிலுமன்றிக் கீழ்திசைக் கடல்வெற்றி உலாவிலும் இந்நெடியோன் புகழே அவனைத் தூண்டியிருக்கக் கூடும். மெய்கீர்த்தி தரும் வடதிசை வெற்றிப் பட்டியல் மிக நெடு நீளமானதாகும். தனித்தனி வெற்றிகளைக் காண்பதன்மூலம் அதனை கருத்தில் கொள்ளுதல் நலமாகும். விக்கிரமவீரர் சக்கரக்கோட்டமும், முதிர் படவல்லை மதுரை மண்டலமும் காமிடை வளைஇய நாமணைக் கோணமும், வெஞ்சினவீரர் பஞ்சப் பள்ளியும், பாசடைப் பழன மாசுணி தேசமும் அயர்வில் வண்கீர்த்தி ஆதிநகர் அகவையில் சந்திரன் தொல்குலத்து இந்திரரதனை விளை அமர்க்களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத்தொடுநிறை குலதனக்குவையும், கிட்டரும் செறிமிளை ஒட்டவிஷயமும், பூசலர்சேரும் நற் கோசலநாடும், தன்மபாலனை வெம்முனை அழித்து வண்டுஉறைசோலை தண்டபுத்தியும், இரணசூரனை முரண்அறத் தாக்கித் திக்கு அணை கீர்த்தித் தக்கணலாடமும் கோவிந்த சந்தன் மாஇழிந்து ஓடத் தங்காத சாரல் வங்காளதேசமும் தொடுகழல் சங்குகொடு அடல் மகிபாலனை வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி ஒண்திறல் யானையும் பெண்டிர் பண்டாரமும், நித்தில நெடுங்கடல் உத்தரலாடமும் வெறிபுனல் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும் இதில் நாட்டுப் பெயரும் நகரப் பெயருமாக 12-ம், அரசர் பெயர்களாக 3-ம் தரப்பட்டுள்ளன. இக்காலம் தென்னாட்டளவு வடநாட்டில் நாட்டாட்சி முறைகளோ, வரலாறோ பெரிதும் இல்லாத காலம். அத்துடன் மேனாட்டு, வடநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பெயர்களைத் தென்னாட்டு எல்லையருகிலேயே தேடவேண்டும் என்பதிலே முழுக்கவனம் செலுத்தியுள்ளனர். இக்கால வடநாடு தென்னாட்டுத் தொடர்பை உணர்ந்து விளக்க இவை பெருந்தடைகளாய் உள்ளன. வடநாட்டு மக்களும் தென்னாட்டு மக்களும் வேறுவேறு இனத்தவர். வெறுவேறு நாகரிகத்தவர் என்ற உள்ளார்ந்த கருத்தும், அவற்றுள் தென்னாட்டு மக்களும் மக்கள் இனமரபும் துடைக்கப்பட வேண்டும் என்ற ஆர்வமுமே இவற்றுக்கு வாய்விடாக் காரணங்களாக உள்ளன. இச்சூழல்களிடையே வரலாற்றாசிரியர்கள் தரும் ஒளியே கூட இராசேந்திரன் வெற்றிகளின் அளவை விளக்க ஓரளவு போதியன என்னலாம். வடதிசைப்போர் 1. சக்கரக் கோட்டப் போர்: சோழர் காலத்துக்கு நெடுங்கால முற்பட்ட உரை மேற்கோள் பாடல்களிலேயே சக்கரக்கோட்டம் என்ற பெயர் காணப்படுகிறது. அத்துடன் தமிழகத்திலுள்ள இடப்பெயர், மலைப்பெயர். ஊர்ப் பெயர்கள் பல கலிங்கப்பகுதியிலும் வங்கத்திலும் சிந்து ஆற்றங்கரையிலும் மிகப் பழங்காலத்திலிந்தே காணப்படுகின்றன. இவற்றின் தொடர்பு இன்னும் விளங்கவில்லை. இவை நெடியோன் காலத்திற்கு இப்பாற்பட்ட தொடர்புகளா யிருக்க இடமுண்டு. ஏனெனில் இதே தொடர்புகள் தொலைத் தென்கிழக்காசியாவிலும் காணப்படு கின்றன. இராமாயணக் கதையில் வரும் சித்திரக் கூடம், சக்கர கோட்டமே எனப்படுகிறது. சோழர் காலச் சக்கரக் கோட்டம் இந்நாளைய இந்திய மாநிலத்தின் நடுமாகாணத்தில் விசாகப்பட்டணம் மாவட்டத் துக்கு வடமேற்கிலுள்ள பஸ்தர்த் தனியரசில் உள்ள ஒரு கோட்டை நகர் என்று கருதப்படுகிறது. ‘பஸ்தர்’ப் பகுதியில் தம்மை நாகர் என்றும் போக புரத்தரசர் என்றும் குறித்துக் கொண்ட அரசர் கால்வழியினர் 11-12-ஆம் நூற் றாண்டில் இருந்தனர். ‘மாசுணி’ (பாம்பு) என்பது நகர் குறித்த பேராதலால், மாசுணி தேசம் என்பது அவர்கள் ஆண்ட பகுதியாகவே இருக்கவேண்டும் என்று மதிப்பிடப்படுகிறது. மதுரை மண்டலம், நாமனைக் கோணம், பஞ்சப்பள்ளி ஆகியவையும் இந்த எல்லையருகிலேயே இருக்க வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் ஊகிக்கின்றனர். மதுரை மண்டலம் யமுனைக்கரை மதுரையை நினைவூட்டு கிறது. ஆனால், சோழ எல்லையிலிருந்து அது நெடுந்தொலை வானதனால் ஆராய்ச்சியாளர் மதுரை மண்டலம் அதுவா யிருக்கக்கூடும் என்று கருதவில்லை. நாமணைக்கோணம் என்பது பஞ்சப்பள்ளி அருகிலேயே இருக்கவேண்டும் என்பதும் ஊகமேயாகும். இவை வருங்கால ஆராய்ச்சிகளாலன்றித் தெளியக் கூடாதவை. வடதிசைப் போர் 2. ஆதிநகர்ப் போர் ஆதிநகர் வெற்றியின் பயனாகவே ஒட்டர தேசமும் கோசல மும் கைப்பற்றப்பட்டன. ஒட்டர தேசம் என்பது தற்கால ஒரிசா மாகாணம். கோசலம் என்பது இராமாயண இராமனுக்குரிய கங்கைக்கு வடகரையிலுள்ள கோசலத்தையே நினைவூட்டுவது, அதையே இயல்பாகக் குறிப்பது. ஆனால், இது கங்கை கடப்பதற்கு முன் கூறப்பட்டதாதலால், கங்கைக்குத் தெற்கில் ஒரிசாவை ஒட்டிக் கிடக்கும் மகாகோசலம் அல்லது தென்கோசலம் என்று ஆராய்ச்சியாளர் ஊகிக்கின்றனர். இப்போர் வெற்றியிலேயே இந்திரரதன் முறியடிக்கப் பட்ட தாகவும் அறியப்படுகிறது. தென் கோசலமும் ஒட்டர தேசமும் ஆண்டவன் அவனே எனவும் கணிக்கப்படுகிறது. தாரா நகரத்தை ஆண்ட பேரரசன் தன் எதிரிகளுள் ஒருவனாகக் குறிக்கும் இந்திரர தனே இவனாயிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர் சிலர் ஊகிக்கின்றனர். வடதிசை வெற்றி 3. தண்டபுத்திப் போர் தண்டபுத்திப் போர் கங்கையாறு கடந்தபின் நடை பெற்றது. கங்கையாற்றினுள் வரிசையாக யானைகளைப் பாலம் போல நிறத்தி அவற்றின்மீதே சோழப் படைகள் ஆற்றைக் கடந்தன என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. தண்டபுத்தி என்பது தற்கால வங்க மாகாணத்தின் மிதுனபுரி மாவட்டப்பகுதி என்று கூறப்படுகிறது. அதனை ஆண்டவன் தர்மபாலன். வடதிசை வெற்றி 4. தக்கணலாடம் கங்கையின் தென்புறமுள்ள வங்க, பீகார்ப் பகுதிகளின் ஒரு கூறு இது என்று கருதப்படுகிறது. இதனை ஆண்டவனே இரணசூரன். கூர்ச்சரத்தின் (குஜராத்தின்) தென்பகுதி இது என்பாரும் உண்டு. வடதிசை வெற்றி 5. வங்காள தேசம் இதனை ஆண்டவன் கோவிந்தசந்தன் அல்லது கோவிந்த சந்திரன். வடதிசை வெற்றி 6. உத்திரலாடம் இது கடற்கரையிலிருந்தது; இதையும் கங்கைக்குத் தென் கரையிலுள்ள பகுதியே என்பர் ஆராய்ச்சியாளர். இதனைக் கூர்ச்சரம் (குஜராத்) வடபகுதி என்பவரும் உண்டு. ‘தொடுகடல் சங்கு கொட்டல் மகிபாலனை’ என்ற மெய்க் கீர்த்தி வரியைச் ‘சங்குக் கோட்ட மகிபாலனை’ என்று வாசிக்க நேர்ந்ததன் மூலம் ‘சங்குக் கோட்டப் போர்’ என்று ஒரு போரைக் கருதியுள்ளனர். திருசீவெல் முதலிய வெளிநாட்டு ஆசிரியர், இடை மிகும் ஒற்றுக்கள் தமிழ்த் தொடர்களைச் சரி வரப் பிரிக்க எவ்வளவு உயிர்நிலையுதவிகள் என்பதைத் தமிழர் இங்கே காணலாம். உத்தரலாடத்தை ஆண்டவன் மகிபாலன். இந்நாடுகள், அரசர்கள் பெரிதும் சிறு நாடுகள், சிற்றரசர்களே. ஆனால், கடைசி அரசனான மகிபாலன் மட்டும் பேரரசன். சோழ வீரர் இந்தச் சிற்றரசர்களை யெல்லாம் வென்ற பின் பேரரசனையே தாக்கி வென்றனர். இந்நாடுகள் அனைத்திலும் பெருந்திரளான பொருட் குவையும் வெற்றிச் சின்னங்களும் கவர்ந்து கொண்டு சோழர் அவ்வரசர்கள் பலரையும் சிறைப்படுத்தி இட்டுச் சென்றனர். கங்கையில் நீராடியபின், கங்கை நீரைக் குடங்களில் நிரப்பிச் சிறைப்பட்ட அரசர்கள் தலையில் ஏற்றி, அவற்றைச் சோணாட்டுக்கு கொண்டு வந்தனர். இப்படையெடுப்பை நடத்திய படைத் தலைவனைச் சோழப் பேரரசன் இராசேந்திரன் கோதாவரிக் கரைவரை சென்று எதிர் கொண்டு சோணாட்டில் புதிதாகக் கட்டப்பட்ட தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அரச மதிப்புடன் இட்டுச் சென்றான். வடதிசையின் மன்னர் தலையிலுள்ள கங்கை நீர்க் குடங்களால் நகரின் கோயிலும் நகரமும் திருநிலைப் படுத்தப் பட்ட பின், அந்நீர் நகரின் அருகே பத்துக் கல்நீள அகலமுடைய தாகக் கட்டப்பட்ட சோழகங்க ஏரியில் சேர்க்கப்பட்டன. கங்கைகொண்ட சோழபுரம் இராசேந்திரன் கால முதல் இறுதிச் சோழப் பேரரசன் மூன்றாம், இராசராசன் காலம் வரையும் தலைநகராகவே இருந்தது. ஆனால், இப்போது அது முற்றிலும் பாழடைந்து கிடக்கிறது அது பெரிதும் பாண்டியப் பேரரசர் படையெடுப்புகளின் போதே அழிக்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால், வேளாண்மைக்குப் பெரிதும் பயன்பட்டு வந்த சோழகங்க ஏரி பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்வரை கட்டுக் குலையாமல் இருந்ததாக அறிகிறோம். அதற்குத் தொலைவி லிருந்து நீர் கொண்டு வரும் கால்வாய்கள் தூர்ந்த பின்னும் சோழர் கட்டுமானப் பெருமையை அது காட்டியே நின்றது. ஆனால், வரலாற்றுப் பெருமையில் அக்கரையற்ற, கலைப் பெருமையறியாத தொடக்கக் கால வெள்ளை அதிகாரிகள் காவிரிக்கு ஓர் அணைகட்டும் சமயம் அதைச்சாக்கிட்டு இவ் ஏரியின் கரைகளைச் சிதைத்தெடுத்தாகத் தெரிகிறது. அப்பகுதி மக்கள் இது கண்டு கலவரம் செய்ததனால், ஒரு கரையேனும் பழய கட்டுமானம் காட்டி இன்னும் நிலவுகிறது. சோழர் படையெடுப்பும் வடதிசை நிலைமைகளும் சோணாட்டைப் போலவே, ஆனால், அதனைவிட எல்லை குறைந்து, தென்னாட்டின் வடமேல் கோடியில் சோழர் காலங் களில் மேலைச் சாளுக்கிய அரசு வலிமையுடைய அரசாகவே நிலவிற்று. அதன் வடக்கில் பாரமாரரது மாளவ அரசும் வலிமை யுடையதாகவே நிலவியிருந்தது. ஆனால், சிந்து கங்கைச் சம வெளியில் கீழ்க் கோடியிலுள்ள மகிபாவலன் பேரரசு நீங்கலாக, வடமேற்குப் பகுதி முழுவதும் வலிமையற்ற சின்னஞ் சிறு அரசு களே நிலவின இவையும் ஆயிர ஆண்டுக் காலமாகக் குஷாணர், பார்த்தியர், ஊணர், அராபியர் ஆகியவர்களின் படையெடுப் பினால் ஒரே குழப்ப நிலையில் தான் இருந்தன. இராசேந்திரன் காலத்தில் 1000 முதல் 1035வரை கஜினிமாமூது, இராசேந்திரன் தெற்கிலிருந்து படையெடுத்த கங்கைக் கரைவரை, தானும் பதினெட்டுத் தடவை படையெடுத்து, கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி, மக்களைக் கொள்ளையிட்டு, பெரும் பொருட் குவை சூறையாடிச் சென்றான். திரு நீலகண்ட சாஸ்திரியின் முன்னுரையுடன் ‘திராவிடம்’ என்ற ஆங்கில நூல் இயற்றிய ஈழத்து ஆசிரியர் திரு இ.எஸ். தம்பி முத்து அவர்கள் வடநாட்டின் இந்த இருதிசைச் சமகாலப் படை யெடுப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்லாமியருக் கெதிராகத் தெற்கும் வடக்கும் மட்டும் இணைந்திருந்தால், இந்தியா எத்தனை பாதுகாப்புடையதாக இருந்திருக்கும் என்று அவர் ஆற்றாமையுடன் குறிக்கிறார். ஆனால், வரலாற்றாசிரியரின் குறுகிய கண்ணோட்டம் இரண்டு படையெடுப்புக்களும் சமகாலத்தன என்பதைக் கூடக் கவனிக்கவிடாமல் செய்துள்ளது. மகிபாலன் பேரரசாட்சி கன்னோசி வரை எட்டியிருந்தது. ஆகவே வடமதுரை அதன் மேற்கு எல்லையிலேயே இருந்தது. சோழன் வெற்றிகள் அனைத்தையும் தென்னக எல்லையடுத்தே கண்டுவிடும் ஆர்வம் வரலாற்றாசிரியர்கள் கண்களைப் பெரிதும் மறைத்து வந்துள்ளது. அவ்வெற்றிகளுட் பல கஜினியின் படை யெடுப்புடன் கைகலக்கும் வரை வடக்கும் மேற்கும் சென்றிருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் சோழர் தக்ஷிணலாட உத்தரலாட வெற்றி கூர்ச்சர வெற்றியாகவே இருத்தல் கூடும். மதுரை மண்டல வெற்றி வடமதுரையாகவும் இருக்கலாம். சோழனுக்கு முன்னோ பின்னோ கஜினிமாமூதும் இதே பகுதியைக் கொள்ளையிட்டிருக்கலாகும். ஏனெனில் வட திசை யரசர்கள் இருபடை யெடுப்பாளர்களையும் எதிரெதிராக்கிப் பாதுகாப்புத்தேட முயன்றனர் என்பதை ஒரு சில வரலாற்றாசிரியர்கள் சுட்டிச் சென்றுள்ளனர். கன்னோசிப் போர் 1035 கஜினியின் படையெடுப்பு கன்னோசிக்கு இப்பால் வர வில்லை. கன்னோசி மகிபாலன் ஆட்சிக்கு உட்பட்டே யிருந்தது. 1023 லேயே சோழனிடம் தோல்வியுற்ற மகிபாலன் இதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. தன் மேலூரிமையாளன் உதவி யுடனேயே அவன் இப்படையெடுப்புத் தன் பேரரசின் எல்லை கடவாமல் தடுத்திருக்க வேண்டும். சோமநாதபுரம் கோயிலை விடக் காசிக் கோயில் அந்நாள் செல்வ வளத்திலும் புனிதத் தன்மையிலும் குறைந்ததன்று. அதன் பக்கம் கஜினி மாமூது நாடாதது இதனைச் சுட்டுகிறது. 1035-ல் வடதிசையரசர் தலைமையில், மகிபாலன் சோழன் துணையுடனேயே கஜினிமாமூதைத் கடைசித் தடவையாக முறியடித்துத் துரத்தியிருந்தான். இப்போர் சோழன் கடல் கடந்த வெற்றிகளுக்குப் பிற பட்டதாதல் வேண்டும். ஏனெனில் அவ்வெற்றி 1023-க்குள் முடிந்து விட்டது. வடதிசைவெற்றியினும் பரந்தபுகழ் பெற்ற சோழருக்குக் கன்னோசி வெற்றி ஒரு வெற்றியாகத் தோன்றி யிருக்காது. அது சோழர் துணைகொண்டு வட மன்னர் அடைந்த வெற்றியாதலால் சோழர் மெய்க்கீர்த்தி அதனைக் குறிக்காது விட்டிருக்கலாம். சோழர் படையெடுப்பும் இந்திய நாகரிகமும் ‘இப்படையெடுப்பின் பயனாகத் தமிழர் நாகரிகமும் வங்காளத்தில் புகுந்தது என்று ஐயமின்றிக் கூறலாம்’ எனத் திரு பண்டாரத்தார் வடநாட்டுப் படையெடுப்பு வரலாற்றை முடிக்கிறார். சோழர் படையுடன் சென்ற படைத் தலைவர் களுள்ளும் வீரகளுள்ளும் சிலர் திரும்பி வராது வங்காளத் திலேயே தங்கிவிட்டனர். வங்காளத்தில் பாலர் மரபையடுத்து ஆண்ட சேன மரபினர் இத்தகைய ஒரு சோழப்படைத் தலைவன் வழியினரே என்று வங்காள வரலாற்றாசிரியர் ஆர். டி. பானர் ஜி குறித்துள்ளார். மிதிலை அல்லது பீகாரிலும் கருநாடக மரபினர் ஆட்சிசெய்தனர் என்று தெரிகிறது. வங்காளத்திலிருந்து தமிழகத்துக்கும், தமிழகத்திலிருந்து வங்காளத்துக்கும் சைவப் பெரும் புலவர் தொடர்பு இராசேந்திரன் காலத்திலிருந்தே பெருகிற்று. பதினான்காம் நூற்றாண்டில் வங்கத்தில் வாழ்ந்த வைணவப் பெருந்தலைவர் சைதன்னியர் மைசூரிலும் காஞ்சியிலும் நெடுநாள் தங்கித் தமிழர் சமய இலக்கியவளத்தை வடதிசை கொண்டு சென்று பரப்பினார். கடல்கடந்த கடாரப் படையெடுப்பு: 1025 முதலாம் இராசேந்திரன் 13-ஆம் ஆண்டைய மெய்க் கீர்த்தி கடற்படைகளைக் கடல்நடுவில் செலுத்தி அவன் கடாரப் பேரரசின் கடல் கடந்த பல நாடுகளையும் வென்ற செய்தி கூறுகிறது. நெடியோன் காலத்துக்குப் பின் சோழர்களோ, பாண்டியர்களோ இவ்வளவு பாரிய அளவில் கடற்படை யெடுப்பை நடத்தியது கிடையாது. சோழர் கடற்படை எந்த அளவுக்கு வளர்ந்திருந்தது என்பதைக் கடாரத்தின் தொலை மட்டுமன்றி அக்கடாரப் பேரரசின் பரப்பும் சுட்டிக்காட்டும். மேற்கே அந்தமான் நிக்கோபார்த் தீவுகள், வடக்கே பர்மா, தெற்கே சுமத்திரா சாவா, கிழக்கே கீழ்கடல் ஆகிய எல்லைகள் அளாவிய கடாரப் பேரரசும் கடற்படை ஆற்றலில் பெரிதாகவே இருந்திருக்க வேண்டும். சோழர் படையெடுப்புக்கு முன் குறைந்தது 400 ஆண்டுகளும், அதன் பின் 400 ஆண்டுகளும் வாழ்ந்த அந்தப் பேரரசின் ஆற்றலைக் காண, அதனைப் பணியவைத்த சோழர் கடற்படை ஆற்றல் வியக்கத்தக்க தேயாகும். இராசராசன் ஆட்சியின் பிற்பகுதியிலிருந்து இராசேந்திரன் ஆட்சியின் முற்பகுதிவரை சோழப் பேரரசும், கடாரப் பேரரசும் நேசப் பேரரசுகளாகவே இருந்தன. இராசராசன் காலத்தில் கடாரப் பேரரசனான சூடாமணிவர்மன் நாகபட்டினத்தில் கட்டிய புத்த பள்ளிக்கு (சூடாமணி விகாரம்) இராசராசப் பெரும் பள்ளி என்று பெயரிட்டிருந்தான். அதற்கு நிவந்தமாக இராசராசன் ஆனைமங்கலம் என்ற ஊரைப் பள்ளிச் சந்தமாக அளித்திருந்தான். இக் கோயில் இராசேந்திரன் காலத்திலிருந்த பேரரசன் சீர்மாற சீர் விசயோத்துங்கன் காலத்திலேயே முடிக்கப்பட்டது. இரு பேரரசுகளுக்கு மிடையே இருந்து வந்த நட்பு திடுமென முறிவுறக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. சீனதேசத்துடனும் மேலை நாடுகளுடனும் தமிழரும் கடாரத்து மக்களும் கொண்டிருந்த வாணிகத் தொடர்பின் கடும்போட்டியே இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று சில வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். இவ்வெற்றிகளைப் பற்றி மெய்க்கீர்த்தி தரும் விவரங்கள் வழக்கம் போலத் தொகுப்புரையேயாகும். “அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திச் சங்கிராம விசயோத் துங்கவர்மன் ஆகிய கடாரத் தரசனை வாகையும் பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து உரிமையில் பிறக்கிய பருநிதிப் பிருநிதிப் பிறக்கமும் ஆர்த்தவன் அகநர்கர்ப் போர்த் தொழில் வாசலில் விச்சாதிரத்தோரணமும் மொய்த்தொளிர் புனைமணிப்புதவமும் கனமணிக்கதவமும் நிறைநீர் விசயமும் துறைநீர்ப்பண்ணையும், வண்மலையூர் எயில் தொன் மலையூரும், ஆழ்கட லகழ்சூழ் மாயிருடிங்கமும், கலங்காவல்வினை இலங்காசோகமும், காப்புறு நிறைபுனல் மாபப்பளாமும் காவல் அம்புரிசை மேவிலிம்பங்கமும், விளைப் பந்தூருடை வளைப்பந்தூரும், கலைத் தக்கோர்புகழ் தலைத்தக்கோலமும் தீதமர்பல்வினை மாதமார்லிங்கமும் கலாமுதிர்கடுந்திறல் இலாமுரிதேசமும் தேனக்கவார் பொழில் மாநக்கவாரமும் தொடுகடற்காவல் கடுமுரண் கடாரமும் மாப்பொரு தண்டால் கொண்ட” வடதிசையில் வெற்றிகள் அனைத்தும் ஒரே பேரரசன் ஆட்சிப் பகுதிக்குரியனவாதல் போல, இங்கேயும் எல்லா வெற்றிகளும் ஒரே பெரும் பேரரசனான கடாரப் பேரரசன் சங்கிராம விசயோத்துங்கன் ஆட்சிமீது நடத்தப்பட்ட வெற்றிகளேயாகும். அவனிட மிருந்து திறையாகப் பெற்ற பெரும் பொருட்குவையுடன் அவன் நகர்வாயிலான வித்தியாதர தோரணமும் புனை மணிப்புதவமும் கனமணிக்கதவமும் வெற்றிச் சின்னங்களாகக் கொண்டுவந்தான் என்று மெய்க்கீர்த்தி கூறுகிறது. கடார வெற்றி 1. சீர்விசயப்போர் விசயம் அல்லது சீர்விசயம் என்பது சீர்விசயப் பேரரசு என்று அழைக்கப்பட்ட கடாரப் பேரரசின் மைய ஆட்சியிடமேயாகும். இது இக்காலத்தில் சுமத்ரா என்று வழங்கும் பண்டைச் சாவகம் அல்லது பொன்னாட்டில் உள்ள தற்காலப் பாலம்பாங் நகரே என்று அறியப்படுகிறது. கடார வெற்றி 2. பண்ணை பனி அல்லது பனை என்று இப்போது வழங்கும் சுமத்ராத் தீ வின் கீழ்க்கரைப் பகுதியே பண்ணை எனப்படுகிறது. கடார வெற்றி 3. மலையூர் இது எங்கிருந்தது என்று தெளிவாய் அறியப்படவில்லை. சுமாத்ராவிலேயே இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. மலையூர் என்ற ஓர் ஆறு அங்கு இருப்பதால் அதற்கருகில் அது இருந்திருக்கக் கூடும். கடார வெற்றி 4. மாயிருடிங்கம் இது மலாயாத் தீவக் குறையின் நடுவே உள்ள நாட்டைச் சார்ந்தது, கடார வெற்றி 5. இலங்காசோகம் இது கடாரம் (கெட்டாவைப்) போல மலாயாவின் கீழ்க் கரையிலுள்ளது. கடார வெற்றி 6. மாபப்பளாம் மலாயா வடக்கிலுள்ள கிராநில இடுக்கருகிலுள்ள பகுதியே மாபப்பளாமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடார வெற்றி 7. தலைத் தக்கோலம் மலாயா மேல் கரையில் வடபால் தகோபா மாகாணத்தின் தலைநகரான தக்கோலமே இது என்று தெரிகிறது. கடார வெற்றி 8. தமாலிங்கம் மலாயாவின் கீழ் கரையில் தெமிலிங் ஆறு கடலுடன் கலக்கும் இடமே இது எனப்படுகிறது. கடார வெற்றி 9. இலாமுரிதேசம் இது மலாயாவின் வடபகுதி. கடார வெற்றி 10. மாநக்கவாரம் இது நிக்கோபார்த் தீவுகள் ஆகும். கடார வெற்றியின் பின் விளைவுகள் நெடியோன் காலமுதல் கிழக்காசியாவுக்கும் சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையேயிருந்த தொடர்புகள் சோழர் வெற்றி களால் மேலும் பெருகியிருக்கவேண்டும். சோழர் வெற்றிக்குரிய இடங்கள் மலாயா சூழ்ந்தவை என்று மட்டுமே நமக்குத் தெரிய வருகின்றன. ஆனால், இந்து சீனாவிலும் பின்னாட்களில் தமிழ் மரபினர் ஆட்சியும் கலையும், சமயமும் இலக்கியமும் பேரளவில் பரவியிருந்தது காண்கிறோம். வட இந்திய சமயமாகிய புத்த சமயத்தையும், மேலை அரபு நாட்டவர் சமயமாகிய இஸ்லாத்தை யும் தொலைக் கிழக்குத் திசையில் கொண்டு சென்றவர்கள் அவ்வச்சமயம் சார்ந்த தமிழரே என்றறிகிறோம். காம்போசத்துடனும், சீயத்துடனும் உள்ள தமிழ்த் தொடர்புச் சின்னங்கள் இன்றுவரை நிலவுகின்றன. குலோத்துங்கனுக்குப் பின் இருந்த தமிழ்ப் புலவர்கள் காலம் வரை கங்கைப் போரின் புகழும் கடாரப் போரின் புகழுமே இராசேந்திரன் பெரும் புகழாகவும் சோழர் புகழ் வைப்பாகவும் போற்றப்பட்டுள்ளன. “களிறு கங்கைநீர் உண்ண மண்ணையில் காய்சினத் தொடே கலவு செம்பியன் குளிறுதெண் திரைக் குரை கடாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்” (கலிங்கத்துப் பரணி 189) “கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு கங்காபுரி புரந்த கற்பகம்” (விக்கிரம சோழன் உலா 34 - 36) கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் (குலாத்துங்க சோழன் உலா 49 -50) என இப்புவியேற்றின் வெற்றிகளைக் கவியேறுகள் பரவினர். பாண்டியர் விடுதலைக் கிளர்ச்சியின் முறிவு இராசேந்திரன் ஆட்சியின் பிற்பகுதியில் பாண்டிய மரபினர் இழந்த நாட்டை மீண்டும் பெற முனைந்தெழுந்தனர். இராசேந்திரன் மகனாகிய இராசாதிராசன் சோழர் படை நடத்திச் சென்று அவர்களை முறியடித்தான். கிளர்ச்சி செய்த பாண்டியர் மூவருள்ளே. மானாபாரணன் என்பவன் தலைதுணிக்கப்பெற்றான். வீர கேரளன் என்பவன் யானைக் காலிலிட்டு இடறப்பட்டான். சுந்தர பாண்டியன் என்ற ஒருவனே தலைவிரி கோலத்துடன் முல்லையூர் புகுந்து ஒளித்துக் கொண்டான். இராசாதிராசன் மெய்க்கீர்த்தியிலேயே இவை குறிக்கப்பட்டுள்ளன. சேரர் கிளர்ச்சி முறிவு சேர நாட்டிலிருந்த பல அரசர் சிற்றரசர் மரபுகளும் இச்சமயம் விடுதலை நாடிக் கிளர்ந்தெழுந்தன. ஆனால், இராசேந்திரன் புதல்வன் இராசாதிராசன் சேரநாட்டின் மீதும் படையெடுத்துச் சென்று அவற்றை அடக்கினான். வேணாடு அல்லது திருவாங்கூர் அரசன் போரில் கொலையுண்டான். அவனுக்கு உதவியாக வந்த கூபக நாட்டரசன் புறமுதுகிட்டு ஓடி ஒளிந்தான். பரசுராமனால் முடி சூட்டப்பட்ட மரபினரான எலிமலை சார்ந்த இராமகுட நாட்டு மன்னன் தோல்வியுற்றுப் பணிந்து சோழர் ஆதரவு பெற்று நீண்ட காலம் அந்நாட்டை ஆண்டான். ஈழக் கிளர்ச்சி 1029 லிருந்து 1041 வரை ரோகண நாட்டை ஆண்ட ஐந்தாம் மயிந்தன் புதல்வன் காசிபன் என்ற விக்கிரமபாகு இலங்கை முற்றிலும் வெல்லும் அவாவில் பேர்புரிந்து மாண்டான் என்று சோழர் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அவனுக்குப் பின் மூன்று ஆண்டுகள் ரோகணத்தை ஆள முயன்ற மகாலான கித்தி என்ற அவன் மகனும் படியிழந்து முடியிழந்து, சோழரிடம் பெற்ற அவமதிப்புத் தாங்காமல் 1044-ல் தன்கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டு மாண்டான் என்று கேள்விப்படுகிறோம். சோழர் சாளுக்கியர் மூன்றாம் போராட்டம்: 1042 மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் சயசிங்கனுக் குப் பின் 1042-ல் முதல் சோமேசுரன் ஆகவமல்லன் என்பவன் ஆட்சிக்கு வந்தான். அவன் சோழ எல்லை கடக்க முயன்றதால், இராசேந்திரன் புதல்வன் இராசாதிராசன் படையுடன் சென்று அவனை முறியடித்தான். படைத் தலைவர்களாகிய கண்டப் பையன், கங்காதரன் ஆகியோர் கொலையுண்டனர். சோமேசு வரன் புதல்வர்களாகிய விக்கிரமாதித்தனும், விசயாதித்தனும், படைத்தலைவனான சங்கமையனும் போர்க்களத்திலிருந்து ஒளிந்தோடினர். கொள்ளிப்பாக்கை நகரை எரியூட்டி, யானை - குதிரை -பொற்குவை ஆகியபெருந் திறையுடன் இராசாதிராசன் சோணாடு மீண்டான். வெங்கை நாட்டுறவு இராசராசன் மகள் குந்தவைக்கும் கீழைச் சாளுக்கிய விசயாதித்தனுக்கும் பிறந்த மகன் நரேந்தின். இராசேந்திரன் தன் புதல்வியர் இருவரில் இளையளாகிய அம்மங்கை தேவியை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். இவ்விருவர் புதல்வனே பின்னாளைய முதலாம் குலோத்துங்கன் ஆனான். களிறு பெற்றெடுத்த போதகங்கள் பேரரசர் பிள்ளைகள் பெருவீரராய் இருப்பது மனித இனவர லாறு அறியாத ஒரு செய்தி ஆகும். சங்ககாலச் சேரர் மரபும் இடைக் கால, பிற்கால பாண்டியர் மரபும் இதற்கு ஓரளவு விலக்காகலாம். ஆனால், அவ்விரு எல்லையிலும் நிலவிய, இஸ்லாமிய அரசர் குடிகளில் இருந்தது போன்ற இடைவிடாப் போட்டி இதற்குக் காரணம் ஆகலாம். ஆனால், சோழப் பேரரசு இவ்வகையில் வியக்கத்தக்க பெருமரபாய் அமைந்தது. முதலாம் இராசராசன் தன் மரபினரிடையே ஊட்டிய பேரவா ஆர்வமும், வளர்த்த குடிப்பயிற்சி முறை மரபுமே இதற்கு அடிப்படை என்னலாம். மும்முடிச் சோழனாகிய அவன் பெற்ற களிறான முதல் இராசேந்திரன் தந்தையினும் பெரிய வீரனென்றால், அக்களிறு பெற்ற போதகங்களாகிய முதல் இராசாதி ராசன் (1018 -1054), இரண்டாம் இராசேந்திரன் (1051-1063), வீர இராசேந்திரன் (1063 - 1070) ஆகியவர்கள் அவனுக்கு மிகுதி பிற்படாத பெரு வீரராயிருந்தது குறிப்பிடத்தக்கது. தந்தையைப் போல அவர்கள் வெற்றிகள் நிலங்கடந்து செல்லாவிட்டாலும், தந்தையாலும் பின்னோராலும் வெல்லப்படாதிருந்த மேலைச் சாளுக்கியரை முற்றிலும் முறியடித்து அடக்க அவர்கள் காட்டிய தீரம் கொஞ்ச நஞ்சமன்று. அவர்கள் அதில் வெற்றியடையாதது ஒரு குறை யன்று -பாண்டியரைப் போலச் சாளுக்கியரும் விடாப் பிடியுடைய வராய், அச்சமயத்தில் வீர அரசரைப் பெற்றிருந்ததனாலேயே அவர்கள் இப்பெரு வீரச் செயல்களுக்குத் தப்பிப் பிழைத்திருந்தனர். முதற் குலோத்துங்கனுடன் பேரரசு தளர்ச்சியடைந்து விட வில்லையானால், சாளுக்கியர் வீழ்ச்சியடைந்திருப்பது உறுதி. ஏனெனில் சாளுக்கியப் பேரரசும் சில நாட்களில் தளர்ச்சியுற்றது. இலங்கைப் போர்க்களரி 1046 - 1054: 1055, 1067; அனுராதபுரம் போர் 1064 -1065 இலங்கை சோழர் ஆட்சியிலிருந்தாலும், தென் ரோகண நாட்டிலிருந்து மீட்டும் மீட்டும் கிளர்ச்சிகள் முதல் இராசேந்திரன் புதல்வர் மூவர் ஆட்சியிலும் இருந்து கொண்டே வந்தன. அது பற்றிய சோழர் கல்வெட்டுக்களும் இலங்கை வரலாற்றேட்டுச் செய்திகளும் மொத்தத்தில் ஒத்துவரினும் சில்லறை விவரங் களிலும் பெயர்களிலும் அவைஅடிக்கடி முரண்படுகின்றன. இராசாதிராசன் காலத்திலேயே சோழர் மூன்று தடவை படையெடுத்து வெற்றி பெற்றனர். முதல்வெற்றி 1046-க்குரியது. இதில் துளுவ நாட்டில் ஓடி ஒளிந்திருந்த மகாலான கித்தியின் புதல்வன் முடியிழந்து துரத்தப்பெற்றான். இவனை மகாவம்சோ விக்கிரம பாண்டு என்றும், சோழ ஆதாரங்கள் விக்கிரம பாண்டியன் என்றும் கூறுகின்றன. சிங்களத் தாய், பாண்டியத் தந்தையையோ அல்லது சிங்களத் தந்தை பாண்டியத் தாயையோ அவன் கொண்டவ னாக இருக்கக்கூடும். பாண்டிய ஈழ அரசுரிமைகள் இரண்டுக்கும் அவன் உரியவனாக இருந்தான் என்று தோன்றுகிறது. இராசாதிராசன் இரண்டாவது வெற்றி 1046-இல் கன்னர மரபினனான ஈழத்து அரசன் சீவல்லபன் மதனராஜனுக் கெதிரான தென்று சோழர் குறிக்கின்றனர். ஆனால், சோழரிடம் தோற்று1053-இல் உயிரிழந்தவன் விக்கிரமபாண்டுவின் மகன் ராசேந்திர பாண்டு என்று மகாவம்சோ கூறுகிறது. 1047 முதல் 1051 வரை அயோத்தி அரசகுமாரனான ஜகதீ பாலன் ரோகணத்தைக் கைப்பற்றி ஆண்டு, சோழர் கைப்பட்டு மாண்டான் என்றும், அவனது செல்வங்களோடு அவன் மனைவியை யும் மகளையும் சோழர்கள் தம் நாட்டுக்குக் கொண்டு சென்றனர் என்றும் மகாவம்சோ குறிக்கிறது. ஆனால், கொல்லப்பட்டது கன்னியாகுப்ஜத்தை ஆண்ட வீரசலாமேகன் என்றும், அவன் தாய், மனைவி, தமக்கை ஆகியவரைக் கைப்பற்றிச் சோழர் அவமதித்த பின் அவன் மீண்டும் போர் செய்து மாண்டான் என்றும் சோழர் கூறுகின்றனர். இரண்டாம் இராசேந்திரன் ஆட்சித் தொடக்கத்தில் 1054 அல்லது 1055 -லும் கலிங்க மன்னனென்று கூறப்படும் இன்னொரு சலாமேகன் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. அதே போரில் இலங்கை மன்னன் மானாபரணனின் இரு புதல்வர்கள் சிறைப்பட்டனர். வீரராசேந்திரன் ஆட்சியில் ரோகணத்தில் இருந்து கொண்டு இலங்கை மன்னன் விசயபாகு போர் தொடுத்தான். 1064 -65-இல் சோழர் அனுராதபுரப் போரில் இலங்கை மன்னனை முறியடித்தனர். ஆனால், இதன்பின் விசயபாகு தமிழர் கோட்டையாகிய புலத்திசைக் களைப்பற்றித் தமிழரை வெளியேற்றினான் என்று அறிகிறோம். ஆயினும் இதன் பின்னரும் தோற்று ஓடி ஒளிந்தான். சோழர் அவன் மனைவியைச் சிறைப்படுத்திக் கொண்டும் அளப் பரும் செல்வம் திறைகொண்டும் சென்றனர். சோழ - சாளுக்கியப் போராட்டம்: முதற்கட்டம்: கம்பிலிப்போர் 1046 முதல் இராசேந்திரன் ஆட்சியிறுதியில் நடத்தப்பட்ட சோழ சாளுக்கியப் போரில் படைப் பெருந்தலைவனாயிருந்து போர் நடத்தியவன் இராசாதிராசனே. இவ்விரு பேரரசுகளின் இடைவிடா அழிவுப் போர்களின் அலை எதிர் அலைகள் முதல் இராசேந்திரன் ஆட்சி கடந்தே உச்ச நிலை எய்தின. 1046-இல் இராசாதிராசன் முடியேற்றபின் சாளுக்கியப் பேரரசையே வென்று கொள்ளும் ஆர்வத்துடன் அதன் எல்லை மீது படையெடுத்தான். இச்சமயம் நிகழ்ந்த போரில் சோழன் பெரு வெற்றி கொண்டான். சாளுக்கியப் படைத்தலைவர் பலர் களம் விட்டோடினர். ஓடிய அத்தலைவர்களின் பெயர்ப் பட்டியலாகக் கண்டர் தினகரன். நாரணன், கணபதி, மதுசூதனன் ஆகிய பெயர் களையும் மெய்க்கீர்த்தி தெரிவிக்கிறது. இப்போர் முடிவில் கம்பிலிநகரத்திலிருந்த சாளுக்கியப் பேரரசர் மாளிகை தகர்த்தெறியப்பட்டது. அதே இடத்தில் சோழரது வெற்றித் தூண் நாட்டப்பட்டது. இதைக் கலிங்கத்துப் பரணி ‘கம்பிலிச் சயத் தம்பம் நட்டதும்’ என்று குறிக்கிறது. சோழ சாளுக்கியப் போட்டி: 2-ஆம் கட்டம்: பூண்டுர்ப் போர் 1048 இராசாதிராசன் சாளுக்கியர் தாயகமாகிய குந்தள நாட்டின் மீது படையெடுத்து, கிருஷ்ணை ஆற்றங்கரையிலுள்ள பூண்டூரில் நடைபெற்ற போரில் சாளுக்கியரைப் பேரழிவுக்கு ஆளாக்கினான். இப்போரில் இராசாதிராசன் தம்பியான இரண்டாம் இராசேந்திரனும் அவனுடன் படைத்தலைவனாகச் சென்றிருந்தான். எதிர்த் தரப்பில் சாளுக்கியப் படைத்தலைவர் களாயிருந்தவர்கள் தெலுங்க விச்சையன், அத்திராசன், அக்கப்பையன், கொண்டடையராஜன், முஞ்சன், தண்ட நாயகன் தனஞ்சயன், வீரமாணிக்கன் ஆகியவர்கள். அனைவரும் முறியடிக்கப்பட்டதுடன் படைத்தலைவன் விச்சையனின் தாய் தந்தையரும் எண்ணற்ற மகளிரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். பூண்டூர் நகரின் மதில்கள் இடித்துப் பாழாக்கப்பட்டன. மண்ணதி என்ற நகரிலிருந்த சாளுக்கிய மாளிகையைச் சோழர் எரியூட்டினர். அந்நகரிலேயே சோழர் புலிச்சின்னம் பொறித்த வெற்றித்தூண் நாட்டினர். மேலைச் சாளுக்கியர் கிருஷ்ணை, துங்கபத்திரை ஆறுகளில் அழகிய பெரிய மூன்று அரச துறைகள் கட்டியிருந்தனர். சிறுதுறை, பெருந்துறை, தெய்வ வீமகசி என்ற அம்முத் துறைகளிலும் சோழ அரசன் தன் பட்டத்து யானைகளைக் குளிக்கச் செய்து சாளுக்கியரை அவமதித்தான். அருகிலிருந்த வராகமலையில் சாளுக்கியர் தம் வராக (பன்றி) முத்திரை பொறித்திருந்தனர். அதே மலையில் சோழர் தம் புலி முத்திரை பொறித்து, அப்பொறி தாங்கிய வெற்றித் தூணையும் நிறுவினர். இச்சமயம் சோழர் தங்கியிருந்த பாசறையில் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் ஒற்றர்களாக்கிய வீரர் வந்தனர். சோழன் அவர்களைக் கண்டுபிடித்து அவர்களைப் பிடித்துக் கட்டி ஆகவ மல்லனிடமே அனுப்பினான். ஆனால்,, ‘ஆகவமல்லன் எங்கும் போரில் புறங்காட்டி ஓடியவன்’ என்று அவர்கள் மார்பிலேயே எழுதி அனுப்பினான். இவ் அவமதிப்புத் தாங்காமல் ஆகலமல்லன் மீண்டும் போர் புரிந்து தோற்றான். இப்போரில் நுளம்பன், காளிதாசன், சாமுண்டன், பொம்மையன், வில்லவராசன் முதலிய சாளுக்கியப் படைத்தலைவர்கள் தோற்றோடினர். அவர்களுக்கு உதவியாக அவர்களுடன் போர்செய்த கூர்ச்சர மன்னன் ஒருவன் போரிலேயே மாண்டான். சோழ -சாளுக்கியப் போட்டி: கலியாண புரம் அழிவு ஆகவமல்லன் மீண்டும் சோழரிடம் வீம்புடன் தூதனுப் பினான். சோழர் தூதரைக் கேலி செய்து திருப்பி அனுப்பினர். அவர்களுள் ஒருவனுக்கு ஆண் வேடமிட்டு ஆகவமல்லன் என்ற பெயரை ஒட்டியும், மற்றொருவனக்குப் பெண்ணுடை உடுத்து பெண்கள் போல ஐம்பால் கொண்டையிட்டு, ஆகவமல்லி என்று பெயர் ஒட்டியும் அனுப்பினர். இவ்வவமதிப்பின் பின் நடந்த மறுபோரில் சோழர் சாளுக்கிய தலைநகராகிய கலியாணபுரத்தையே கைப்பற்றினர். பல்லவர் சாளுக்கிய வாதாபியை அழித்தது போலவும், முதல் இராசராசன் காலத்தில் சோழர் மேலைச் சாளக்கியரின் முதல் தலைநகரமாகிய மண்ணைக்கடகத்தை (மான்யகேதத்தை) அழித்தது போலவும், இப்போது இராசாதிராசன் அவர்கள் புதிய தலைநகராகிய கலியாண புரத்தை அழித்தான். கலியாணபுர வெற்றியின் சின்னமாகச் சோழர் கொண்டு வந்த பொருள்களில், அந்நகரிலுள்ள துவாரபாலர் படிமம் ஒன்று. அதன் பீடத்தில் “சிரீ ஸ்வஸ்தி சிரீ உடையார் விசயராசேந்திர தேவர் கலியாண புரம் எறிந்த கொண்டுவந்த துவாரபாலர்” என்று வரையப்பட்டுள்ளது. கலியாணபுரத்திலேயே வெற்றிக்கறிகுறியாக இராசாதி ராசன் வீராபிடேகம் செய்து கொண்டானென்றும், அச்சமயம் விசயராசேந்திரன் என்ற வீரப்பட்டம் மேற் கொண்டான் என்றும் அறிகிறோம். கம்பிலித் தம்பம் நட்டது, கலியாணபுர அழிவு, வராக மலைப் புலிப்பொறிப்பு ஆகிய செய்திகள் தமிழ் இலக்கியத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. “கம்பிலிச் சயத்தம்ப நட்டதும் கடி அரண்கொள் கலியாணர்கட்டு அறக் கிம்புரிப் பணைக் கிரி உகைத்தவன் கிரிகள் எட்டிலும் புலிபொறித்ததும் (கலிங்கத்துப் பரணி 8-26) மும்மடிபோய்க் கலியாணி செற்ற தனியாண்மைச் சேவகனும் (விக்கிரம சோழனுலா 37 - 8) என இவற்றைச் சயங்கொண்டாரும் ஒட்டக் கூத்தரும் குறித்துள்ளனர். சோழ - சாளுக்கியப் போட்டி: கொப்பத்துப் பெரும்போர் 1054 கொப்பம் என்பது மேற்கு மைசூர்ப் பகுதியில் மேல் மலைத் தொடருக் கருகிலுள்ளதென்று சிலரும், இன்றைய பம்பாய் மாகாணத்தில் பெல்காம் மாவட்டத்தருகில் கிருஷ்ணையாற்றி லுள்ள ஒரு குடுவை வளைவின் அருகேயுள்ளதென்று வேறு சிலரும் கருதுகின்றனர். இதில் பிந்திய இடமே பொருத்தமானது என்று தோன்றுகிறது ஏனெனில் இவ்விடம் ஒரு தீர்த்தம் என்று கூறப் பட்டுள்ளது. இவ்வளைவினருகே ஒரு தீர்த்தத் தலமும் அதனை அடுத்து ஒரு கோயிலும் இன்னும் உள்ளன. அக்கோயிலும் கொப்பேசுரர் கோயில் என்றே வழங்குகிறது. தவிர, வெற்றியின் பின் சோழர் கோலாப்பூரில் வெற்றித் தூண் நாட்டியதாகக் கூறியுள்ளனர். அவ்வெற்றித் தூண் இன்று காணப்படாவிட்டாலும், கோலாப்பூர் இவ்வளைவிலிருந்து சிறிது தொலைவிலேயே யுள்ளது. முதலாம் இராசாதிராசன் தன் தம்பி இரண்டாம் இரா சேந்திரனுடன் மேலைச் சாளுக்கியர்மேல் படையெடுத்துச் சென்றான். கொப்பத்தில் சோழப் படைகளும் மேலைச் சாளுக் கியப் படைகளும் சந்தித்தன. இருதரப்பினரும் போருக்கு ஆயத்த மாகத் தம் படைகளை அணிவகுத்து நிறுத்தினர். மேலைச் சாளுக் கியர் பக்கம் மன்னன் சோமேஸ்வர ஆகவமல்லன் போர்க்களம் வரவில்லை. ஆனால், அவன் மைந்தர்கள் படைகளைத் தலைமை வகித்து நடத்தினர். சோழர் பக்கத்திலோ மன்னன் இராசாதி ராசனும் இளவரசன் இராசேந்திரனும் படைத்தலைவரா யிருந்தனர். சோழப் படையின் முன்னணியில் இராசேந்திரனே தலைமை வகித்து ஒரு யானைமேல் இவர்ந்திருந்தான். பின்னணியில் அதுபோல யானையின்மேல் மன்னன் இராசாதிராசன் தலைமை தாங்கி இருந்தான். எதிரிகளின் முதல் யானைப் படைத் தாக்குதலிலேயே இராசேந்திரன் முன்னணி சீர்குலைந்தது. ஆனால், இராசாதிராசன் பின்னணி முன் வந்து நின்று எதிரியின் தாக்குதலைச் சமாளித்தது. எளிதாகத் தோற்றிய சாளுக்கியர் வெற்றி தடைப்பட்டு மீட்டும் மும்முரமான தாக்குதல் எதிர்த்தாக்குதல் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சாளுக்கியர் தம் வில்லாளரை இராசாதிராசன் யானையையே ஒரு மிக்கக் குறிவைத்து அம்புமாரி பொழியும்படி ஏவினர். யானை சல்லடையாய்த் துளைக்கப்பட்டது. யானை மீதிருந்த ஆட்களும் ஒவ்வொருவராகக் கொல்லப் பட்டனர். இறுதியில் மன்னனும் யானை மீதிருந்தே சாய்ந்தான். மீகாமனில்லா மரக்கலம் போல் சோழர் படை இப்போது தள்ளாடிற்று. இத் தறுவாயைப் பயன் படுத்திப் போரைச் சாளுக் கியர் முறுக்கவே, சோழர் படை நிலை கலங்கிக் கலைந்து சிதறி ஓடத் தலைப்பட்டது. சோழர் படை நிலை கலங்கிக் கலைந்து கருதி ஆர்ப்பரித்த வண்ணம் சாளுக்கிய வீரர் சோழர் படைகளைத் தொடர்ந்தனர். அண்ணன் போர்களில் எல்லாம் இராசேந்திரன் ஈடுபட்டுப் பயிற்சி பெற்றிருந்தான். அவன் ஒரு சில கணங்களுக்குள் நிலை மையைச் சமாளித்தான்.அண்ணன் விழுந்த இடத்திலேயே மற்றொரு யானைமேல் ஏறினான். அண்ணன் முடியைத் தான் சூடினான். பட்டாபிடேக முழக்கமாகப் போர்முரசு கொட்டுவித்தான். புதிய வீர மன்னனைப் பெற்ற கிளர்ச்சியில் வீரர் மீண்டும் திரண்டனர். அம்புமாரிகள் முன்போலவே பொழிந்தன. இராசேந்திரனுடைய குன்றுபோன்ற புயங்களிலும் துடைகளிலும் அவை தைத்துப் புண்ணாறு பெருக்கின. ஆனால், அவன் தன் போர் வீரர்களுக்கே அதன் மூலம் வீரமூட்டி ஆர்ப்பரித்துப் போரிட்டான். சாளுக்கியர் அடைய இருந்த வீரத் திருநங்கை சோழர் பக்கம் திரும்பி நின்று நகைத்தாள். தோல்வியை வெற்றியாக்கி இராசேந்திரன் புதிய ஆட்சியைப் புகழாட்சியாக்கினான். கொப்பத்துப் போர் வரலாற்றில் புகழ் பெற்ற வெற்றி மட்டுமன்று; தமிழ் இலக்கியம் நெடுநாள் மறவாத போராயிற்று. “ஒரு களிற்றின்மேல் வரு களிற்றை ஒத்து உலகு உயக்கொளப் பொருது கொப்பையில் பொருகளத்திலே முடிகவித்தவன்” என்று கலிங்கத்துப் பரணியில் சயங்கொண்டார் இராசேந்திரன் வீரத்தைப் பாடுகின்றார். “கொலை யானை பப்பத்தொரு பசிப்பேய் பற்ற ஒருபரணி கொப்பத்து ஒரு களிற்றால் கொண்டகோன் (இராசராச சோழனுலா) “பபற்றலரை வெப்பத்து அடுகளத்தில் வேழங்கள் ஆயிரமும் கொப்பத்து ஒரு களிற்றால் கொண்டோனும்” (விக்கிரம சோழனுலா) என மூவர் உலாவில் ஒட்டக்கூத்தர் இதே போரைக் குறிக்கிறார். சாளுக்கியர் பக்கம் கடைசி இளவரசனான சயசிங்கன் போரில் இறந்தான். தவிர, படைத் தலைவர்களாகிய புலிகேசி, தசபன்மன், அசோகையன், ஆரையன், மொட்டையன், நன்னி நுளம்பன் ஆகியோரும் மாண்டனர். மற்றச் சாளுக்கிய இளவரசரும் வன்னியரேவன், துத்தன், குண்டமையன் முதலிய படைத் தலைவர் களும், வீரர்களும் அஞ்சியோடிஒளிந்தனர். சாளுக்கியருடைய பட்டத்து அரசியரான சாங்கப்பை சத்தியவ்வை என்பவர்கள் இருவரும் கைப்பற்றப்பட்டனர். அவர்கள் பட்டத்து யானைகளாகிய சத்துருபயங்கரன், கரபத்திர, மூலபத்திரன் ஆகியவையும் சாளுக்கியரின் வராகக் கொடியும், பெருந்திரளான நிதிக்குவையும் சோழர் வசமாயின. எண்ணிறந்த எதிரிகளின் ஒட்டகங்களும் குதிரைகளும் பிறபொருள்களும் சோழர் கைப்பட்டன. இராசேந்திரன் போர்க்களத்திலேயே வீராபிடேகம் செய்த பின் கோலாம்பூரில் ஒரு வெற்றித் தூண் நாட்டினான். இராசராசன் கல்வெட்டுக்களில் ‘கலியாணபுரமும் கொல்லா புரமும் எரிந்து யானைமேல் துஞ்சின பெருமான்’ என்று குறிக்கப் பெறுகிறான். இப்போரிலே சாளுக்கியர் தாமே சோழரை முறியடித்துக் காஞ்சி நோக்கித் துரத்தியதாகக் கூறுகின்றனர். இப்போர் பற்றிய மட்டில் இது சரியன்று. ஆனால், சாளக்கியர் வலு எப்போதும் பாதுகாப்பில் இருந்தது. சோழர் எத்தனை வெற்றி பெற்றாலும், அவர்கள் போனபின் சாளுக்கியர் தம் கைத்திறம் காட்டித் தம் பழய எல்லைக்கு வர முடிந்தது. சோழர் தாம் வென்ற இடங்களைக் காத்து நிலையாகப் பேண முடியவில்லை. சோழ சாளுக்கியர் போட்டி: முடக்காற்றுப் போர் 1059 கொப்பத்துப் போரில் பெற்ற அவமதிப்பை நீக்கும் எண்ணத் துடன் ஆகவமல்லன் பெரும் படையுடன் சோழநாட்டைத் தாக்கப் புறப்பட்டான். ஆனால், சோழர் படை கிருஷ்ணையாற்றின் பக்கமே அப்படையைச் சந்தித்துப் போர் தொடங்கிற்று. இதுவே முடக் காற்றுப் போர் ஆகும். இதிலும் மேலைச் சாளுக்கியர் பல துன்பங்களுக்கு ஆளா யினர். மேலைச் சாளுக்கிய தண்ட நாயகனாகிய வாலாதேவனும் வேறு பல தலைவர்களும் கொல்லப்பட்டனர். மன்னன் ஆகவ மல்லவனும் அவன் மகன் விக்கிரமாதித்தனும் இருகையன் என்ற தலைவனும் அமர்க்களத்திலிருந்து ஓடினர். தம் மானத்தைக் காக்கவந்த சாளுக்கியர் உள்ள மானத்தையும் இழந்து அவ மானத்தைச் சுமந்து சென்றனர். இப்பெரும் போரில் இரண்டாம் இரசேந்திரன் மட்டுமன்றி, இராசமகேந்திரன், வீரராசேந்திரன் ஆகிய அவன் இரு இளவல் களும் கலந்து கொண்டனர் என்று தெரிகிறது. ஏனெனில் மூவர் கல்வெட்டுக்களுமே அவ்வெற்றிக்குரிய வர்களாக அவ்வவர்களைப் பாராட்டுகின்றன. இவ்விளவல்கள் இருவருள் மூத்தவனாகிய இராசமகேந்திரன் இளவரசுப்பட்டங்கட்டி அரசனாகு முன்பே மாண்டவன் என்று அறிஞர் பண்டாரத்தார் கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளால் நிறுவியுள்ளார். சோழ சாளுக்கியப் போட்டி 1063 -1067: கூடல் சங்கமப் போர் 1064 வீரராசேந்திர சோழன் கால முழுவதும் பெரிதும் போர் களிலேயே கழிந்தன. தன் தமையன்மார் கொண்ட உறுதிகளைத் தான் நிறைவேற்றியதாகவும். ‘ஆகவமல்லனை ஐம்மடி வெந் கொண்டதாக, அதாவது ஐந்து தடவை போரில் முறியடித் ததாகவும் இவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. இந்த ஐந்து போர்களும் கூடல் சங்கம வெற்றியுடனும் விசயவாடா வெற்றியுடனும் நிறைவு பெறுகின்றன. முதற்போர் 1063 ஆகவமல்லன் பெருவீரனான தன் இளைய மகன் விக்கிர மாதித்தனைத் தன் பேரரசின் தென் எல்லையாகிய கொள்ளிப் பாக்கையில் அமர்த்தி, தக்க சமயம் பார்த்துச் சோழரிடமிருந்து கங்க பாடியைக் கைப்பற்றும்படி கூறியிருந்தான். வீரராசேந்திரன் முடிசூட்டு விழாவில் ஈடுபட்டிருந்த சமயம் விக்கிரமாதித்தன் இப்படையெடுப்பில் முறியடித்தான். 2-ஆம் போர் 1064 கீழைச் சாளுக்கிய மன்னன் இராசராச நரேந்திரன் சோழன் இரண்டாம் இராசேந்திரனின் மருமகன், முதல் இராசராசனின் மகன் பிள்ளையாகிய பேரன். அவன் 1064-ல் உயிர் துறந்தான். அத்தறுவாயைப் பயன்படுத்தி, அவன் மகன் இரண்டாம் நரேந்திரன் பட்டத்துக்கு வருமுன்பே, மேலைச் சாளுக்கிய அரசன் ஆகவ மல்லன் தன் கீழ் வனவாசித் தண்ட நாயகனாய் இருந்த சாமுண்டரா யனை அனுப்பிக் கீழைச்சாளுக்கிய நாட்டை வென்று கொள்ள எண்ணினான். ஆனால், வீரராசேந்திரன் அவனுடன் போராடி அவனை முறியடித்து அவன் தலை துணித்தான். சாமுண்டராயன் புதல்வியைக் கைப்பற்றி மூக்கை அரிந்ததாகவும் சோழரது கருவூர்க் கல்வெட்டு கூறுகிறது. 3-ஆம் போர் 1064 இதுவே கூடல் சங்கமப் போர் ஆகும். கூடல் சங்கமம் என்பது, துங்கபத்திரையும், கிருஷ்ணையும் கூடும் இடத்திலுள்ள கூடலியாய் இருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அது கிருஷ்ணையும் பஞ்ச கங்கையாறு களும் கூடும் இடத்தில் பெல்காம் மாவட்டத்தில் கிட்னப்பூர்ப் பகுதியிலே இருந்தது என்று கருத இடமுண்டு. ஏனெனில் இந்தக் களத்திலேயே கொப்பப்போர் நடைபெற்றதாகல் வேண்டும். மற்றும் இதே சங்கமத்துக்குப் பின்னும் ஒரு தடவை ஆகவமல்லன் வீரராசேந்திரனைப் போருக் கழைத்தபோது சோழர் கரந்தை என்ற இடத்திலேயே காத்திருந்தனர் என்று அறிகிறோம். கரந்தை பஞ்ச கங்கை யாற்றுப் பக்கமே உள்ளது. மேலைச் சாளுக்கியர் வடக்கிருந்து பெருகிவரும் கடல் போன்ற ஒருபெரும் படை திரட்டிக் கொண்டு களத்தில் அணியணி யாக வந்தனர். இருதரப்பினரும் வெற்றி எப்பக்கம் சாயும் என்றறி யாத நிலையில் நெடுநேரம் போராடினர். இறுதியில் வீரராசேந்திரனே பெரு வெற்றியுற்று, சாளுக்கிய வேந்தனான ஆகவமல்லன் பாசறையை முற்றுகையிட்டு அவன் மனைவியரையும் பட்டத்து யானையாகியப் புட்பகப் பிடியையும் வராகக் கொடியையும் யானை குதிரைகளையும் மற்ற நிதிக் குவைகளையும் கைப்பற்றிச் சோணாட்டுக்கு அனுப்பினான். போரில் மேலைச் சாளுக்கிய தண்டநாயகர்களான கேசவன், கேத்தரையன், மாரயன், போத்தரயன், இரேச்சயன் முதலியவர்கள் கொலையுண்டனர். படைத் தலைவனாகிய மதுவணனும், மன்னனின் மக்களாகிய விக்கிரமாதித்தன், சயசிங்கன் ஆகியவர்களும், மன்னன் ஆகவமல்லனும் போர்க்களத்திலிருந்து சிதறியோடினர். சோழன் வீரராசேந்திரன் தன் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரம் சென்று வெற்றி மணிமுடிசூடி அபிடேகம் செய்து கொண்டான். “குந்தளரையுந் கூடல் சங்கமத்து வென்ற கோன் அபயன்” (கலிங்கத்துப் பரணி, இராச பாரம்பரியம், 29) என்று சயங்கொண்டாரும்; “கூடலார் சங்கமத்துக் கொள்ளும் தனிப்பரணிக்கு எண்ணிறந்த துங்கமதயானை துணித்தோனும்..........” (விக்கிரமசோழன் உலா 42 - 44) “பாடஅரிய பரணி பகட்டணி வீழ் கூடலார் சங்கமத்துக் கொண்டகோன்” (இராசராச சோழன் உலா 49 - 50) என்று ஒட்டக்கூத்தரும் இப்போரின் முரசு முழக்குகின்றனர். வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியும் கல்வெட்டுக்களும் காவிய முறையில் இப்போரைப் புனைந்து விரித்துரைக்கின்றன. சோழ சாளுக்கியப் போட்டி: 1066 -1067. கிருஷ்ணை ஆற்றுப் போர் 1066. விசயவாடாப் போர் 1067 சோழ சாளுக்கியப் போட்டி கூடல் சங்கமத்துப் போரினால் முற்றுப் பெறவில்லை. இரண்டாண்டுகளுக்குள் மீண்டும் தொடங் கிற்று. நான்காம் போர்: கிருஷ்ணையாற்றுப் போர்: 1066 இது ஏதோ ஓர் ஆற்றின் பக்கம் நடைபெற்றதாக மட்டும் அறிகிறோம். ஆற்றின் பெயரோ, இடமோ திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆயினும் முன் பின் போர்களைப் போலவே இதுவும் கிருஷ்ணையாற்றின் பக்கம் நடந்திருக்கக் கூடும். இப் போரில் சாளுக்கியப் படைத்தலைவர்களான மல்லியண்ணன், மஞ்சிப் பையன், பிரமதேவன், அசோகையன், சத்தியண்ணன், வீமையன், வங்காரன் ஆகியோர் களத்தில் பட்டனர். தவிர, சாளுக்கியருக்கு உதவியாக வந்த கங்கன், நுளம்பன், காடவர் கோன், வைதும்பராயன் என்ற சிற்றரசர்களும் உயிர் நீத்தனர். ஐந்தாம் போர்: விசயவாடாப் போர்: சக்கரக் கோட்ட வெற்றி: 1067 ‘கூடல் சங்கமத்திலேயே இன்னொரு முறை என்னுடன் போர் புரிந்துபார்; அப்போதுதான் நீ வீரன்’ என்று வாய்த்துடுக்காக ஆகவமல்லன் மீண்டும் வீரராசேந்திரனுக்குக் கங்காகேத்தன் என்ற படைத்தலைவன் மூலம் சொல்லியனுப்பிய தாகக் கேள்விப்படுகிறோம். அதன்படி வீர ராசேந்திரன் படையுடன் கூடல் சங்கமத்துக்கு அருகிலுள்ள கரந்தையில் சென்று காத்திருந்தான். ஆனால், ஆகவமல்லன் வரவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்தான். சோழன் சீற்றங் கொண்டு அப்பகுதியிலிருந்த தேவநாதன், சித்தி, கேசி என்ற படைத்தலைவர்களைத் தோற் கடித்துத் துரத்தினான். நகரங்களை எரியூட்டிக் களத்திலேயே வெற்றித் தூண் நாட்டினான். அத்துடன் ஆகவமல்லனைப் போல உருவம் செய்து, கழுத்தில் கண்டிகை பூட்டி, ‘ஐந்து தடவை தோற்று ஓடியவன்’ என்ற விளம்பரப் பலகை எழுதி மார்பில் தொங்க விட்டு, ஊர்வலம் கொண்டு சென்று அவமதித்தான். இதன் பின்னும் ஆகவமல்லன் வராதது கண்டு அவன் வியப்புற்றான். ஆகவமல்லன் வராமைக்குக் காரணம் அவன் மாள்வே என்பது சோழனுக்கு நெடுநாள் தெரியாது. 1068-ல் அவன் நீரில் மூழ்கி உயிர் நீத்தான். ஆறாம் போர் : விசயவாடாப் போர்: 1068 ஆகவமல்லன் இறந்தது அவன் மகன் விக்கிரமாதித் தனுக்கும் தெரியாது. அவன் கீழைச்சாளுக்கியரை வென்று அவர்கள் நாட்டைக் கைக் கொள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தான். சாளுக்கியப் பெரு வீரனான அவன் கீழைச்சாளுக்கியரை வென்றதுடன் அமையாமல் அவர்கள் நாட்டுக்கு வடக்கேயுள்ள சக்கரக் கோட்டத்தையும் கைப்பற்றினான். கூடல் சங்கமத்துப் போர்க் களத்தருகே நின்று விரைந்த வீர ராசேந்திரன் கீழைச் சாளுக்கியர் நாட்டை மீண்டும் கைப்பற்ற முனைந்தான். அவனைத் தடுத்து நிறுத்த முனைந்தனர், சாளுக்கியப் படைத் தலைவர்களான சனநாதன், இராசமய்யன், திப்பரசன் ஆகியோர். இரு தரப்பினருக்கும் 1068-ல் விசயவாடாவில் கடும் போர் நிகழ்ந்தது. அதில் சாளுக்கிய படைத்தலைவர்கள் முற்றிலும் தோல்வியடைந்து காட்டுக்குள் ஒளித்தோடினர். பின்னர் சோழன் சக்கரக் கோட்டம் தாண்டி வேங்கை நாட்டின் வடபகுதியையும் வென்றான். விக்கிரமாதித்தனிடமிருந்து தோற்றோடி தன்னிடம் வந்து அடைக்கலம் புகுந்திருந்த கீழைச் சாளுக்கிய மன்னன் ஏழாம் விசயாதித்தனிடமே அவன் நாட்டை ஒப்படைத்து மீண்டான். சோழ சாளுக்கியப் போட்டி: ஏழாம்போர்: 1068 -1070 இச்சமயம் ஆகவமல்லன் இறந்ததனால் அவன் பிள்ளை களான இரண்டாம் சோமேசுவரன், ஆறாம் விக்கிரமாதித்தன் ஆகியோருக் கிடையே பிளவு ஏற்பட்டது. மூத்தவனான சோமேகவரனே அரசனானான, விக்கிரமாதித்தன் சோழன் உதவி நாடினான். வீர ராசேந்திரன் தற்போதைய அனந்தப்பூர் மாவட்டத் திலுள்ள ஏத்தியை முற்றுகையிட்டான். பின் கம்பிலி நகரை எரியூட்டினான். இடைதுறை நாடு புகுந்து அங்குள்ள கரடிக் கல் என்ற இடத்தில் வெற்றித் தூண்நாட்டினான். இறுதியில் சோமேசு வரனைத் துரத்திவிட்டு, விக்கிரமாதித்தனையே மன்னனாக்கிப் பட்டம் கட்டினான். தன் புதல்வியையும் அவனுக்கு மணம் செய்து கொடுத்து, சாளுக்கியர் பகையரசை நட்பரசாக்கித் தன் வயப் படுத்தவும் முயன்றான். விக்கிரமாதித்தன் வாழ்க்கையைச் சமஸ்கிருத காவியமாக்கிய பில்கணன் விக்கிரமாதித்தன் வெற்றிக்கு அவன் தம்பி சயசிம்மனும், கோவாவிலிருந்து ஆண்ட கடம்பகுல மன்னன் சயகேசி, மைசூர்ப் பகுதியில் ஆண்ட ஆளுபவேந்தன் ஆகியோர் உதவியே காரணம் என்று கூறுகிறான். அவன் வலிமை கண்டு சோழன் அவனை மருமகனாக்கி நேசம் காட்டியதாகவும் குறிக்கிறான். ஆனால், சயசிம்மன் முதலியோர் சோழ அரசன் நட்புப் பெறும் வகையிலேயே முனைந்து உதவியிருந்தன ராதல் வேண்டும் என்னலாம். இராஷ்டிரகூடர் மண உறவால் முன் சோழர் நன்மைக்கு மாறாகத் தீமையே அடைந்தது போல, சாளுக்கியரின் இப்புதிய உறவும் விரைவில் நேசத்துக்கு மாறாகப் பகைமையையே வளர்த்தது. இரண்டாம் கடார வெற்றி: 1068 சோழர் மேலுரிமை ஏற்றிருந்த கடார அரசில் அரசுரிமை காரணமாகப் பிளவு ஏற்பட்டது. அரசிழந்து தன்னிடம் அடைக்கலம் புகுந்த இளவரசனுக்கு உதவியாக, வீர ராசேந்திரன் தன் படைத்தலைவர் களை அனுப்பினான். கடாரத்தை மீட்டு அவன் நட்புக்குரிய வனிடமே தந்தான். கீழைச் சாளுக்கிய அரசன் ஏழாம் விசயாதித்தனின் உறவினன் சாளுக்கிய இரண்டாம் இராசேந்திரன் வீர ராசேந்திரனின் மருமகன். பின்னாளில் முதலாம் குலோத்துங்க சோழனானவன் அவனே. கீழைச் சாளுக்கிய அரசை ஏழாம் விசயாதித்தன் பெற்றதனால், அவன் சிலகாலம் முதலாம் இராசேந்திரன் வடதிசையில் வென்ற நாடுகளில் சிலவற்றைக் கைக் கொண்டு ஆண்டு வந்தான். இக்கடாரப் போரில் அவனும் படைத்தலைவர்களுள் ஒருவனாகச் சென்று போர் செய்து புகழ் பெற்றான் என்று தோற்றுகிறது. ஏனெனில் கடாரப் பேரரசிலிருந்து இச்சமயம் சீனத்துக்கு அனுப் பட்ட தூதுவர் அவனையே கடாரப் பேரரசனாகக் குறித்துள்ளனர். ‘பரக்கும் ஓதக் கடாரம் அழித்த நாள்’ (கலிங்கத்துப் பரணி 618) என்று கலிங்கத்துப்பரணி முதலாம் குலோத்துங்கனுக்கும் கடார வெற்றியை உரிமையாக்கி யிருப்பது இதனாலேயே என்னலாம். முதலாம் குலோத்துங்கன் வடதிசை வெற்றிகள்; வயிராகரப் போர்: சக்கரக் கோட்டம் போர்: சோழப் பேரரசனாகு முன்னும், கடாரம் செல்லுமுன்னும் கீழைச்சாளுக்கிய இரண்டாம் இராசேந்திரனாயிருந்த முதலாம் குலோத்துங்கன் அடைந்த வடதிசை வெற்றிகளில் வயிராகரப் போரும், சக்கரக் கோட்ட வெற்றியும் முனைப்பாக மூவருலாக் களிலும் கலிங்கத்துப் பரணியிலும் குறிக்கப்படுகின்றன. இவற்றில் சக்கரக் கோட்டத்தில் ஆட்சி செய்த அரசன் தாராவிலிருந்து ஆண்டவன் என்று தெரிகிறது. அது தாராவில் ஆண்ட வடதிசைப் பெரும்புகழ் விக்கிரமாதித்தனாய் இருக்கக் கூடும். ஆனால், வென்ற நாடுகளுள் வத்தவநாடு ஒன்று என்று குறிக்கப்படுகிறது. விருதராசபயங்கரன் முன்னொர் நாள் வென்றசக்கரக் கோட்டத்திடை (கலிங்கத்துப் பரணி 6 -14) ‘வளவர்பிரான் திருப்புருவத் தனுக்கோட்டம் நமன்கோட்டம் பட்டத்து சக்கரக்கோட்டம் (கலிங்கத்துப் பரணி 10 -23) மாறுபட்டெழு தண்டெழ, வத்தவர் ஏறுபட்டதும் (கலிங்கத்துப் பரணி 11 -73) புகையெரி குவிப்ப வயிரா கரம்எரிமடுத்தும் (கலிங்கத்துப் பரணி 10 -71) எனச் சயங்கொண்டாராலும். “வஞ்சனை கடந்து வயிராகரத்துக் குஞ்சரக் குழாம் பல வாரி, எஞ்சலில் சக்கரக்கோட்டத்துத் தாரா அரசனைத் திக்கு நிகழத் திறைகொண்டருளி” “விளங்கு சயமகளை இளங்கோப் பருவத்துச் சக்கரக்கோட்டத்து விக்கிரமத் தொழிலால்” “வயிராகரத்துவாரி அயிர்முனைக் கொந்தள வரசர் தந்தளமிரிய” என்று கல்வெட்டுக்களாலும் இவை புகழப் பெறுகின்றன. இளமைக் காலத்திலேயே ஒரு தென்னாட்டு நெப்போலிய னாக விளங்கிய இவ்வீரன் அரசியல் மேதையாகவும் இருந்தான் என்று கூறவேண்டும். ஏனெனில் பேரசனான பின் அவன் தன் வீரப் போரார்வம், பேரவா ஆகிய உட்பகைகளையே அடக்கி, தற்காப்புப் போர்களுடன் பெரிதும் அமைந்து நின்றான். அத்துடன் பேரரசின் எல்லை குறைந்தாலும் வலிமை குறையாமலிருப்பதிலும், நல்லாட்சி யமைப்பதிலுமே அவன் கண்ணும் கருத்துமாய் இருந்தான். இக்காரணங்களாலேயே சோழப் பேரரசரிடையே தலை சிறந்த பெரு வீரனான முதலாம் இராசேந்திரனைத் தாண்டி வரலாற்றாசிரியர் அவனை முதலாம் இராசராசனுக்கு ஒப்பாகக் கருதியுள்ளனர். வீர ராசேந்திரனுக்குப் பின் அவன் மகனும் மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் மைத்துனனுமான அதிராசேந்திரனே அரசுரிமையைப் பெற்றாலும், அவன் முதலாண்டுக்குள்ளேயே உயிரிழந்தான். ஆகவே குலோத்துங்கன் சோழப்பேரரசுரிமை பெற்று கீழைச் சாளுக்கிய மரபிலிருந்த இரண்டாம் இராசேந்திரன் என்ற பெயரை மாற்றிக் குலோத்துங்கன் என்ற பெயருடன் ஆட்சி தொடங்கினான். அவன் ஐம்பதாண்டுக்கால ஆட்சியே (1070 - 1120) சோழப்பேரரசு அமைதியும் வலிமையும் ஒருங்கே பெற்றிருந்த நடுக்காலமும் பொற்காலமும் ஆகும் என்னலாம். சோழ சாளுக்கியப் போட்டி 1075 -6: நங்கிலி, மணலி, அளத்தி, நவிலை, துங்கபத்திரைச் செங்களப் போர்கள் கீழைச் சாளுக்கியரும் சோழரும் முன்னிலும் இணக்கமாக ஒன்றுபடுவது காணப் பொறுக்காமல், மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் சோழர் மீது தாக்குதல் எண்ணத்துடன் ஐந்தாண்டுகளாகப் பெரும்படை திரட்டி வந்தான். சோழனும் அதனை அறிந்து தன் படைகளைச் செப்பம் செய்துவந்தான். நங்கிலிப்போர் 1075: இச்சமயம் மேலைச் சாளுக்கியப் பேரரசு இருபிளவாகியிருந்தது. வடதிசையில் ஆகவமல்லன் முதற் புதல்வனான இரண்டாம் சோமேசுவரனும், தெற்கே அவன் இளவலான ஆறாம் விக்கிரமாதித்தனும் ஆண்டுவந்தனர். இருவரிடையேயும் நல்லுறவு இல்லாததறிந்து, குலோத்துங்கன் மெல்லச் சோமேசுவரனைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். ஆனால், விக்கிரமாதித்தன் பக்கம் அவன் இளவல்களான சயசிம்மனும் விசயாதித்தனும் இருந்தனர். அத்துடன் கோவாவிலிருந்து கொண்டு கொண்கான முழுதும் ஆண்ட கடம்பகுல மன்னன் சயகேசியும், ஹொய்சள அரசன் விசயாதித்தனும் அவன் மகன் எறெயங்கனும், உச்சங்கியிலிருந்து கொண்டு நுளம்பவாடியை ஆண்ட பாண்டியன் திரிபுவன மல்லனும், வட திசையில் தேவகிரியாண்ட யாதவமன்னன் இரண்டாம் சேவுணனும் விக்கிரமாதித்தனையே ஆதரித்தனர். நங்கிலி என்பது மைசூரில் கோலார் வட்டத்திலுள்ளது. இப்போரில் சோழனுக்கு உதவிய இரண்டாம் சோமேசுவரன் தன் உடன் பிறந்தானிடம் சிறைப்பட்டான். விக்கிரமாதித்தன் அவன் நாட்டையும் தன் நாட்டுடனே சேர்த்துக் கொண்டான். இச்செயல் பின்னாட்களில் சாளுக்கியப் பேரரசை மீண்டும் வலுப்படுத்த உதவிற்று. ஆயினும் நங்கிலிப் போரில் சாளுக்கியர் அடைந்த தோல்வியை இது ஈடுசெய்ய வில்லை. சோழர் பெரு வெற்றி எய்தினர். தோற்றோடிய சாளுக்கியரைத் துங்கபத்திரை கடந்தும் துரத்திக் கொண்டு சென்று மீண்டும் பல போர்களில் முறியடித்தனர். கங்கவாடி முழுவதும் சோழர் கைவசமாயிற்று. மணலிப்போர்: தோற்றோடிய சாளுக்கியர் இங்கே மீண்டும் தோல்வியுற்றனர். அளத்திப்போர்: இங்கும் சோழரே பெரு வெற்றிகொண்டு, சாளுக்கியர் யானைகள் பலவற்றைக் கைக்கொண்டனர். தளத்தொடும் பொரு தண்டு எழப் பண்டு ஓர்நாள் அளத்திபட்டது அறிந்திலை, ஐயநீ? (கலிங்கத்துப் பரணி 11:74) என்று சயங்கொண்டாரும், ‘அளத்தியிலிட்ட களிற்றினது ஈட்டமும்’ என்று குலோத்துங்கன் மெய்க் கீர்த்தியும் இப்போருக்குச் சான்று பகர்கின்றன. நவிலைப்போர்: இங்கும் சோழர் வெற்றிபெற்று ஆயிரக் கணக்கான யானைகளைப் பெற்றனர். ‘தண்டநாயகர் காக்கும் நவிலையில் கொண்ட ஆயிரம் குஞ்சரம் அல்லவோ?’ (கலிங்கத்துப் பரணி 11:75) துங்கப்பத்திரைச் செங்களப்போர்: இப்போரில் விக்கிர மாதித்தனும் அவன் தம்பி சயசிம்மனும் ஓடி ஒளிந்தனர். துங்கபத்திரைச் செங்களத்திடைச் சோழசேகரன் வாள்எறிந்தபோர் வெங்கதக் களிற்றின் படத்தினால் வெளியடங்கவே மிசைக்கவித்துமே (கலிங்கத்துப் பரணி 4- 7) என்று இப்போரைச் சயங்கொண்டார் பாடியுள்ளார். இப்போரால் கங்க மண்டலத்துடன் கொண்கானமும் (சிங்கணமும்) சோழப் பேரரசில் நிலையாகச் சேர்ந்தது. இப்போர்களினால் சோழப் பேரரசு புகழும் செல்வமும் பெற்றது. ஆட்சியெல்லையும் ஒரு சிறிதே விரிவடைந்தது. ஆனால், சோமேசுவரன் ஆண்ட பகுதியையும் பெற்றதன் மூலம் விக்கிர மாதித்தன் தன் வாழ்வைப் பெருக்கிக் கொள்ள முடிந்தது. சோழ பாண்டியப் போட்டி : 1081 : செம்பொன்மாரிப் போர் முதலாம் இராசேந்திரன் பாண்டி நாட்டில் செய்த ஏற்பாட்டின் படி அவன் மகன் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியன் 1042 வரையிலும், அதன் பின் அவன் பிள்ளைகள் இருவரும் பேரனும் சோழ பாண்டியராக இருந்து பாண்டிய நாட்டை ஆண்டனர். ஆனால், குலோதுங்க சோழன் ஆட்சித் தொடக்கத்தில் சோழப் பேரரசில் உள்நாட்டுக் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததால், அதனைப் பயன்படுத்திப் பாண்டிய மரபினர் ஐவர் நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர். பாண்டிநாடு கைநெகிழவே, சேரநாடும் ஈழநாடும் அதுபோலவே நெகிழ்வுற்றன. குலோத்துங்கன் வடதிசைப் போர் முடிந்தும், இதுவகையில் அவசரப்படாமல், ஆர அமர இருந்து ஆட்சியை வலுப்படுத்தி, படைகளையும் திரட்டிக் கொண்டு1081-ல் தெற்கே படையெடுத்தான். பாண்டியருடன் செம்பொன் மாரி என்ற போர்க்களத்தில் ஒரு பெரும் போர் நடைபெற்றது. சேரரும் பாண்டியருக்கு இப்போரில் உதவினர் என்று தெரிகிறது. பாண்டியன் ‘தற்கொலைப்’ படை அல்லது மூலதளப் படையான ‘சாவேர்ப் படை’ கடைசி மூச்சு வரைப்போராடி மாண்டது. பாண்டியர் ஐவரும் முற்றிலும் தோற்றுக் காட்டில் புகுந்து ஒளிந்து கொண்டனர். பாண்டியர் ஆண்ட முத்துச்சலாபக் கரையும், சையமலை, பொதியமலைப் பகுதிகளும், கன்னியாகுமரிப் பகுதியும் சோழப் பேரரசுக்குள் மீண்டும் இடம் பெற்றன. ‘விட்டதண்டுஎழ மீனவர் ஐவரும் கெட்டகேட்டினைக் கேட்டிலை போலும்நீ?’ (கலிங்கத்துப் பரணி 11 - 70) என்று பெரும் பரணியும், வடகடல் தென்கடல், படர்வது போலத் தன்பெருஞ் சேனையைஏவி, பஞ்சவர் ஐவரும் பொருத போர்க் களத்தஞ்சி வெரிந் அளித்துஓடி அரண் எனப்புக்க காடு அறத்துடைத்து நாடுஅடிப்படுத்து என மெய்க்கீர்த்தியும் இதனைக் குறிக்கின்றன. சேரநாட்டுப் படையெடுப்பு 1081: விழிஞப்போர் ஐஐ காந்தளூர்ச்சாலைப் போர் ஐஐ : கோட்டாற்றுப் போர் குலோத்துங்கன் ஆட்சித் தொடக்கத்தில் ஏற்பட்டிருந்த குழப்பத்தில் சேரநாட்டுப் பகுதியில் மீண்டும் பல சிற்றரசர் தலை யெடுத்திருந்தனர். அவர்களில் சேரன் அல்லது திருவாங்கூர் அரசன் ஒருவன் என்று தோன்றுகிறது. ஏனெனில் சேரர் கடற்படை பற்றிக் கேள்விப்படுகிறோம். விழிஞத்தில் போர்க்கஞ்சாத மலைநாட்டு வீரர் மிகப் பலர் தம் உயிரைக் காவு கொடுத்தும் இறுதியில் சேரர் தோல்வியே அடைந்தனர். காந்தளூர்ச் சாலையில் கடற்படைகள் இருமுறை அழிக்கப்பட்டன. கோட்டாற்றுப்போர் கடும் போராயிருந்தது. அதன் வெற்றியின் பின் குலோத்துங்கன் அந்நகரை எரியூட்டினான். ஆனால், போரின் முடிவில் அந்நகரே மீண்டும் செப்பம் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் சேர நாட்டிலுள்ள சோழரின் நிலைப்படைக்கு அதுவே தளமாக்கப்பட்டது. கோட்டாறு என்பது நாகர்கோயிலுக்கு அணிமைக் காலம் வரை வழங்கிய பழம்பெயர். கோட்டாற்று நிலப்படை சோழர் பாளையங்களில் முதன்மையுடையதாயிற்று. வேலைகொண்டு விழிஞம் அழித்ததும் சாலைகொண்டதும் தண்டு கொண்டேயன்றோ? (கலிங்கத்துப் பரணி 11; 72) ‘வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட’ (கலிங்கத்துப் பரணி 8; 21) என்று பரணியும், சேலைத்துரந்து சிலையைத் தடிந்து இருகால் சாலைக் கலம் அறுத்த தண்டினான்’ (விக்கிரம சோழனுலா 46 - 48) என்ற உலாவும் பாடியுள்ளன. கலிங்கப்போர் ஐ (தென்கலிங்கம்) ஐ 1096 தென் கலிங்கம் என்பது கோதாவரி ஆற்றுக்கும் மகேந்திர கிரிக்கும் இடைப்பட்ட நாடு. அது வேங்கை நாடாண்ட கீழைச் சாளுக்கியருக்கு உட்பட்டது. ஆனால், தென் கலிங்க நாடாண்ட வீமன் தன்னுரிமையாக ஆள எண்ணிக் கிளர்ச்சிகள் செய்தான். குலோத்துங்கன் தன் புதல்வன் விக்கிரம சோழனை அனுப்பி அவனை மீண்டும் கீழடக்கினான். விக்கிரம சோழனே (1093 - 1113) கலிங்க நாட்டு ஆட்சியையும் ஏற்றான். குலோத்துங்கனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த பாண்டியர் ஐவருள் ஒருவன் தோற்றோடியபின் மீண்டும் வந்து சோழருக்குப் பணிந்து ஆட்சியை மேற்கொண்டிருந்தான். இவனே சடைய வர்மன் பராந்தக பாண்டியன். தென்கலிங்கப் போரில் விக்கிரம சோழனுடன் அவனும் கலந்து கொண்டிருந்தான். அவன் மெய்க்கீர்த்தி இதனால் அவனுக்கும் தென்கலிங்க வெற்றியை உரிமைப் படுத்தியுள்ளது. தெலுங்க வீமன் விலங்கல்மிசை ஏறவும் கலிங்க பூமியைக் கனல் எரிபருகவும், ஐம்படைப் பருவத்து வெம்படைதாங்கி, வேங்கை மண்டலத்து ஆங்கு இனிது இருந்து என விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தியும், ‘தெலுங்கவீமன் குளங்கொண்டு தென்கலிங்கம் அடிப்படுத்துத் திசையனைத்தும் உடனாண்ட சிரீ பராந்தகதேவர்’ எனப் பாண்டியர் மெய்க்கீர்த்தியும் இதனை இயம்புகின்றன. 1098-ல் தென் கலிங்கத்தில் மீண்டும் எழுந்த கிளர்ச்சி யொன்றை நரலோக வீரன் என்ற சோழர் படைத்தலைவன் அடக்கினான். கலிங்கப் போர் (வடகலிங்கம்) ஐஐ 1112 வடகலிங்கத்தை ஆண்ட மன்னன் அனந்தவர்மன் 1074-ல் பட்டம் பெற்று 1150 -வரை எழுபத்தைந்து ஆண்டுகள் அளவில் மிக நீண்டகாலம் ஆண்டவன். அவன் சோடகங்க மரபின் முதல் அரசனாதலால், சோழருடன் தொடர்புடையவன். குலோத்துங்கன் புதல்வியையே அவன் மணந்தான் என்றும் கருதப்படுகிறது. அவன் அரசி தமிழ் இளவரசி என்பதில் மட்டும் சிறிதும் ஐயமில்லை. ஒருவேளை அவன் தாயும் தமிழ் இளவரசியாகவே இருந்திருக்கக் கூடும். ஏனெனில் அவன் ஆட்சியில் தமிழும் தமிழ்ப் புலவர்களும் கலிங்கநாட்டில் பேராதரவு பெற்றனர் என்று அறிகிறோம். அனந்தவர்மனுக்கும் குலோத்துங்கனுக்கும் பகைமை எப்படி, ஏன் உண்டாயிற்று என்று இன்று நம்மால் அறியக் கூடவில்லை. ஒருவேளை தெலுங்க வீமனுக்கோ, சாளுக்கியருக்கோ அவன் உடந்தையாய் இருந்திருக்கக்கூடும். அனந்தவர்மன் இரண்டு தவணை திறை கொடாததே போருக்குரிய காரணம் என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது. இப்போரில் முழுப் பொறுப்பேற்றுச் சோழர் படைகளை நடத்திச் சென்ற மாதண்ட நாயகன் வண்டையர்கோன் கருணாகரத் தொண்டைமான் என்பவன். இவனுடன் வாணகோவரையன், முடிகொண்ட சோழன் என்ற வேறு இரண்டு படைத்தலைவர்களும் துணை சென்றதாகக் கலிங்கத்துப் பரணியில் காணப்படும் ஒரு தாழிசை கூறுகிறது. சோழப்படைகள் காஞ்சியிலிருந்து புறப்பட்டுப் பல காடுகள், மலைகள், நாடுகள் கடந்து சென்று கலிங்க நாட்டிற் புகுந்து பல நகர்களுக்குத் தீயிட்டுக் கொளுத்தின. அனந்தவர்மன் பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்து எதிர்த்தான். கடலுடன் கடல் மோதினாற் போன்ற பேராரவாரத்துடன் இரு படைகளும் மோதின, ஒன்றை ஒன்று வளைத்து மொய்த்தன. நீடித்த கைகலப்பின் பின் கலிங்கவீரர் நாற்புறமும் கலைந்தோடினர். தொண்டைமான் பல யானை, குதிரை, ஒட்டகங்கள், தேர்கள் மணிக்குவியல்கள் ஆகியவற்றுடன் மகளிரையும் கைப் பற்றினான். மலையில் ஓடிஒளிந்து கொண்ட மன்னனையும் மலையையே வில் வேலியால் சூழ்ந்து நின்று தேடிப் பிடித்தனர், சூறைப் பொருளுடனும் கட்டுண்ட கலிங்க மன்னனுடனும் வீரருடனும் சோணாடு திரும்பினர். குலோத்துங்கன் வெற்றித் தளபதியை எதிர் கொண்டழைத்துப் பெருமதிப்பு வரிசைகள் நல்கிப் பாராட்டினான். இப்போரில் மட்டையன், மாதவன், எங்கராயன், ஏஞ்சணன், இராசணன், தாமயன், போத்தயன், கேத்தணன் ஆகிய படைத் தலைவர்கள் உயிர் துறந்ததாகக் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. இவர்களுள் எங்கராயன் என்பவன் அனந்தவர்மன் அமைச்சனென்றும், தாமயன் அவன் தலைமைத் தளபதியென்றும் கலிங்கத்துப் பரணியால் தெரிய வருகிறது. குண்டூர் மாவட்டத்திலுள்ள 1108-ம் ஆண்டைய கல்வெட்டு ஒன்று சோடர் மரபு மன்னன் வீமன் கலிங்கனைவென்று சோழருக்கு உட்படுத்தியதாகக் கூறுகிறது. இச்சிற்றரசன் இரண்டாம் கலிங்கத்துப் போரில் சோழர் பக்கமிருந்து வெற்றியில் பங்கு கொண்டவனா யிருத்தல் கூடும். அனந்தவர்மன் எவ்வளவு நாள் சோழருக்கு வணங்கி நடந்தான் என்பது தெரியவரவில்லை. ஈழவிடுதலை: 1073: அனுராதபுரம் போர் ஐஐ ,ஐஐஐ பொலன்னருவாப் போர் குலோத்துங்கன் ஆட்சித் தொடக்கத்துக்குரிய குழப்பத்தைப் பயன்படுத்தி ஈழநாட்டார் ரோகணத்தில் ஆண்ட விசயபாகுவை இலங்கை முழுமைக்கும் அரசனாக்கினார்கள். அனுராதபுரப் போர் ஐஐ இதில் சோழர் படையெடுத்துச் சென்று போரிட்டு விசய பாகுவை வென்று அந்த நகரத்தைக் கைப்பற்றினர். விசயபாகு பொலன்னருவாவுக்குச் சென்றபோது சோழர் அங்குச் சென்று அவனைத் துரத்தினர். வேறு நகரங்களில் பதுங்கியிருந்து படை திரட்டிக் கொண்டு விசயபாகு மீண்டும் படையெடுத்தான். பொலன்னருவாப் போர் பொலன்னருவாவில் உக்கிரமான போராட்டம் நடை பெற்றது. முடிவில் விசயபாகு வெற்றி பெற்றான். பெற்றதும் அவன் அனுராதபுரத்தைத் தாக்கினான். அனுராதபுரப் போர் : ஐஐஐ விசயபாகுவின் படை இங்கே இறுதியாகச் சோழர் படையை முறியடித்துத் துரத்திற்று. விசயபாகு ஈழநாடு முழுமைக்கும் அரசனானான். சோழர் இலங்கையை நிலையாக இழந்தனர். ஆனால், குலோத்துங்கன் புதிய ஈழ அரசனுடன் நேச உடன்படிக்கை செய்து கொண்டு, தன் புதல்வியருள் ஒருத்தியான சூரியவல்லியை விசயபாகுவின் புதல்வனுக்கு மணஞ் செய்வித்தான் என்று தெரிகிறது. கங்கவாடி இழப்பு : 1116 தகடூரிலிருந்து ஆண்ட கொங்கு நாட்டின் குடி மன்னனான அதிகமானே சோழரால் கங்க நாட்டுக்கும் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டிருந்தான். 1116-ல் ஹொய்சள மன்னன் பிட்டிகவிஷ்ணு வர்த்தனனின் தண்ட நாயகனான கங்கராசன் அதிகமாலைப் போரில் வென்று கங்கவாடியைக் கைப்பற்றிக் கொண்டான். ஹொய்சள மன்னனும் இது முதல் தலைக்காடு கொண்ட ஹொய்சளன் என்று விருதுப்பெயர் சூட்டிக் கொண்டான். இவ்வெற்றி மூலமே இதுவரை கிட்டத்தட்டக் குடி மன்னனாயிருந்த ஹொய்சளன் இப்போது வலிமையுடைய முடியரசனாகத் தொடங்கினான். தும்மேப் போர் : 1117 பேரரசுகளின் போட்டிக் கிடையே ஹொய்சள அரசு மெல்ல வளரத் தொடங்குவதை நாம் இப்போது காண்கிறோம். ஹொய்சளன் பிட்டிக விஷ்ணுவர்த்தனன் சோழரை எதிர்த்தது போல விக்கிரமாதித் தனைக் கூட எதிர்க்க முயன்றான். ஆனால், இரு பேரரசுகளை ஒருங்கே பகைப்பது தவறு என்று கண்டு பணிந்தான். ஆனால், அண்டை அயல் அரசுகளைக் கைப்பற்றி ஆட்சியை விரிவுபடுத்த அவன் தயங்கவில்லை. தும்மேப் போரில் அவன் உச்சங்கியிலாண்ட நுளம்ப பாண்டியனான திரிபுவனமல்லனை முறியடித்தான். உச்சங்கி இவ்வாறு அவன் கைப்பட்டது. இது கடம்பர் பகைமையை அவனுக்குத் தந்தது. ஆயினும் அப்போட்டியைச் சமாளித்து ஒரு தலை முறைக்குள் (1137-க்குள்) அவன் கங்கவாடி, உச்சங்கி, ஹாங்கல் ஆகிய பகுதிகளுக்கு அரசனானான். வேங்கை நாடு இழப்பு 1118 வேங்கை நாட்டில் குலோத்துங்கன் தன் பிரதிநிதிகளாகத் தன் மக்களுள் ஒவ்வொருவரை அனுப்பியே ஆண்டு வந்தான். வட எல்லையில் வேங்கை நாட்டைக் காக்கவே இரு கலிங்கப் போர்களும் எழுந்தன என்னலாம். 1118-க்குப் பின் குலோத்துங்கன் வேங்கை நாட்டைத் தானே வைத்துக் காக்க விரும்பாமல், முதலாம் கொண்கன் புதல்வன் சோடன் என்ற ஒரு தெலுங்குச் சோழனிடமே அதை விட்டுவிட்டான். அந்த ஆண்டே விக்கிரமாதித்தன் அதைக் கைப்பற்றித் தனக்குட்பட்ட அரசாக்கினான். முதலாம் குலோத்துங்கன் வெளிநாட்டுத் தொடர்பு இலங்கை, கங்கவாடி, வேங்கை நாடுகளைக் குலோத்துங்கன் மனமார விட்டுக் கொடுத்தே இழந்திருக்க வேண்டும் என்று எண்ண இடமுண்டு. இராசராசன் காலத்திலிருந்து சோழர் தம் ஆட்சி எல்லையையே ஒரு தமிழகம் கடந்த புதிய தேசீய எல்லையாக்க அரும்பாடுபட்டனர். அதில் அவர்கள் அடைந்த வெற்றியின் அளவே இன்றைய இந்திய மாநிலத் தேசியத்தின் அளவாகும் ஆனால், கங்கை வெளியில் பரவிய அளவு தெக்காணப் பகுதியில் சோழர் வெற்றி தென்னாட்டின் வட மேற்குப் பகுதியான மேலைச் சாளக்கியரின் குந்தள நாட்டையும், அதன் அருகேயுள்ள கீழ்கரை வேங்கை கலிங்க நாடுகளையும் பாதித்தன. இந்நிலையில் குலோத்துங்கன் தன் பேரரசின் எல்லையைத் தேசீய எல்லையிலேயே பேரரசெல்லையைக் குறுக்கி, அதைத் தற்காலிகமாக ஒரு தமிழக வல்லரசாக்க எண்ணியிருக்கக் கூடும் என்னலாம். ஏனென்றால் ஆட்சியிறுதிக் காலத்தில் தமிழகத் தேசிய எல்லையாக்க முடியாமல் கெமால் பாஷதடிவஙப் பேலத் தேசிய எல்லைக்கு வெளியே யுள்ள ஆட்சிப்பகுதியில் அவன் வீரமும் வீம்பும் காட்டாமல், அவற்றை மெல்லக் கை நெகிழவிட்டான். ஆனால், இதனால் பேரரசு வலிமையோ புகழோ சிறிதும் குறைபடவில்லை என்பதைப் பிற்கால இலக்கியங்களின் பெருமிதத் தொனியேகாட்டும். உண்மையில் பேரரசின் குறுக்கத்துக்குப் பின்னரே நாம் இந்தப் பெருமிதத் தொனியைக் காண்கிறோம் என்னலாம். புவிப் பேரரசரைக் கவிப் பேரரசர்கள் பாடிய காலம் குலோத்துங் கனுக்குப் பிற்பட்ட காலமே. குலோத்துங்கன் வெளிநாட்டுத் தொடர்புகளிலேயும் நாம் இந்தப் புதுத் தத்துவத்தின் தடத்தை காண்கிறோம். நிலங்கடந்தும், கடல் கடந்தும் முற்பட்ட சோழப் பேரரச புற உலகில் நிறுவிய பேரரசு மதிப்பைவிட, தமிழகப் பேரரசனாக நின்ற குலோத்துங்கன் மதிப்பு மிகப் பெரிது என்பதை இவை காட்டுகின்றன. ஏனெனில், அது கிட்டத்தட்ட அவன் கால உலகினை அளாவியதாய் இருந்தது. (1) வட இந்தியா: கன்னோசி கன்னோஜ் அல்லது கன்யாகுப்ஜம் என்பது வடஇந்தியாவில் தற்கால உத்தரபிரதேசத்தில் காசிக்கு வட மேற்கிலுள்ள ஒரு நகரம். அதனை யாண்ட அரசனுடன் குலோத்துங்கன் நட்புறவு கொண்டிருந் தான். அவனால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிவந்தம் பற்றிய கல்வெட்டு எக்காரணத்தாலோ முற்றுப்பெறா நிலையில் உள்ளது. குலோத்துங்கன் காலத்தில் அந்நாட்டை ஆட்சிபுரிந்தவர்கள் மதனகோபால தேவனும் அவன் புதல்வன் கோவிந்த சந்திரனும் ஆவர். கங்கை கொண்ட சோழபுரம் கல்வெட்டு 1111-ம் ஆண்டுக்குரியதாதலால் குலோத்துங்கனுடன் நேச உறவு கொண்ட அரசன் கோவிந்த சந்திரனாகவே இருக்கக் கூடும். இந்நட்புக்கு இன்னொரு சான்றும் உண்டு. கன்னோசி அரசன் சூரிய வழி பாட்டினன். அதை மதித்துக் குலோத்துங்கன் ஓர் ஊரில் சூரியன் கோயில் அமைத்ததனால், அது இன்றளவும் அக்கோயிற் பெயரை ஊர்ப் பெயராகக் கொண்டுள்ளது. (2) பர்மா பர்மா தேசத்தில் புக்கம் என்ற நகரிலிருந்து ஆண்ட திரி புவனாதித்த தம்மராசன் (1084 - 1112) என்ற அரசன் ஒரு சோழ இளவரசனைப் புத்தசமயத்தினனாக்கி, அவன் மகளை மணந்து கொண்டான் என்று பர்மா நாட்டுக் கல்வெட்டு ஒன்று உணர்த்துகிறது. இளவரசன் யார் என்று தெரியவில்லை. ஆனால், சோழருக்கும் பர்மாவுக்கும் குலோத்துங்கன் காலத்தில் நேசத் தொடர்பு இருந்தது என்பதை இது காட்டும். பேகன் நாட்டரசன் கியான்ஸித்தாவுடனும் சோழன் தொடர்பு கொண்டிருந்தான். (3) கடாரம் இளமையில் கடாரப் போரில் ஈடுபட்டு அந்நாட்டரசனுக்கு உதவியவன் குலோத்துங்கன். அந்நட்பு நீடித்ததென்பதை அவன் ஆட்சி காட்டுகிறது. 1090-ல் இராச வித்தியாதர சாமந்தன், அபிமான துங்க சாமந்தன் என்ற இரு தூதரைக் கடாரத்தரசன் குலோத்துங் கனிடம் அனுப்பினான். நாகப்பட்டினத்தில் இருந்த இராசராசப் பெரும்பள்ளி, இராசேந்திரப் பெரும்பள்ளி என்ற இரண்டு புத்தப் பள்ளிகளுக்கும் முன்பு அளிக்கப்பட்ட மானியங்களை உறுதி செய்து தரும்படி கடாரத்தரசன் கோரியபடி குலோத்துங்கன் செப்பேடுகள் வழங்கினான். மேலும் இங்கே இராசேந்திரப் பெரும்பள்ளி என்பது, முன்பு இரண்டாம் இராசேந்திரனாயிருந்த குலோத்துங்கன் உதவிக்கு நன்றி யறிதலாகக் கடராத்தரசன் கட்டியதேயாகும் என்பது கவனிக்கத்தக்கது. கடார வெற்றிக்குப் பின் குலோத்துங்கன் தென் கிழக்காசியா வெங்கும் சுற்றுப் பயணம் செய்திருக்க வேண்டும். அவன் காம்போச நட்பு இதன் சின்னம் ஆகும். (4) இந்து சீனா : காம்போசம் காம்போச அரசன் குலோத்துங்கனுக்கு அனுப்பித் தந்த கல் ஒன்று சிதம்பரம் கோயிலில் பதிக்கப் பெற்றுள்ளதை அங்குள்ள ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது. காம்போச நாட்டில் இந்நாளில் ஆண்ட ஜயவாமன், ஹர்ஷ வர்மன் என்ற அரசருள் தென் பகுதியை ஆண்ட ஹர்ஷவர்மனே குலோத்துங்கனுடன் தொடர்பு கொண்டவன் என்று கருதப்படு கிறது. (5) சீனம் கடாரத்திலிருந்தே குலோத்துங்கன் சீனருடன் தொடர்பு கொண்டிருந்தான் என்று கருத இடமுண்டு. சோழப் பேரரசனான பின்னும் 1077-ல் பேர் அடங்கிய ஒரு தூதுக்குழுவை அவன் சீனப்பேரரசுக்கு அனுப்பினான் என்று தெரிகிறது. இது சீனவரலாறு தரும் தகவல். இவ்வுலகத் தொடர்புகள், கங்கத்தகர்த்தல், நாடடின் முழுநில அளவை ஏற்பாடு முதலியன காண, குலோத்துங்கன் உடைய பேரரசன் என்று உறுதியாகக் கூறலாம் உண்மையில் கரிகாலன், செங்குட்டுவன், முதலாம் இராசேந்திரன் போன்ற வீரர்களையும், இராசராசன் போன்ற அரசியல் மேதைகளையும் கூடத் தாண்டிய உலகளாவிய பெருமையுடையவன் குலோத்துங்கன் என்னலாம். தமிழகத்தின் தேசியம் மிகப் பழமையானதானாலும், தத்தம் பேரவாவாலும் போட்டி உட்போட்டிகளாலும் அரசர் பேரரசர் அதைப் பெரிதும் கவனிக்காமலே இருந்தனர் என்னலாம். தமிழக மரபைக் காக்க வடவரைத் தாக்கிய செங்குட்டுவன்கூடக் குலோத்துங்கனளவு தொலை நோக்கை அவன் எழுதி வைக்க வில்லை, அவன் செயல்கள் காட்டும்! முதற் குலோத்துங்கன் பின்னோர்கள் முதற் குலோத்துங்கனுக்குப் பின் விக்கிரம சோழன் (1118 - 1136), இரண்டாம் குலோத்துங்கன் (1133 - 1150) இரண்டாம் இராசராசன் (1146 - 1163), இரண்டாம் இராசாதி ராசன் (1163 - 1178), மூன்றாம் குலோத்துங்கன் (1178 - 1218), மூன்றாம் இராசராசன் (1216 - 1256), மூன்றாம் இராசேந்திரன் (1246 - 1279) ஆகிய ஏழு சோழ மன்னர் ஆண்டனர். இக்கடைசிச் சோழர்களிடையே கூடத் திறமையற்றவன் என்று கூறக் கூடியவன் மூன்றாம் இராசராசனே. மரபுத்திறத்தில் இந்த ஒரு சோடை இல்லாதிருந்தால் ஒருவேளை பேரரசு இன்னும் சிறிது காலம் நீடித்திருக்கக் கூடும். ஆயினும் மேற்கே ஹொய்சளரும் தெற்கே பாண்டியரும், வடக்கே தெலுங்குச் சோடரும் உள்நாட்டிலேயே காடவராயன் கோப்பெருஞ் சிங்கன், வாணகோவரையன், சம்புவராயன், சேதிராயன் ஆகிய சிற்றரசரும் அடைந்து வந்த வளர்ச்சி எப்படியும் சோழப் பேரரசின் தளர்ச்சியை மிகைப்படுத்துவதாகவே இருந்தது. முதற் குலோத்துங்கன் காலத்தில் பேரரசு இழந்த இலங்கை, கங்கவாடி, வேங்கைநாடு ஆகிய மூன்று பகுதிகளில் இலங்கை தவிர மற்ற இரண்டும் தற்கால இழப்புக்களே. ஏனெனில் அடுத்த அரசன் விக்கிரம சோழன் கங்க வாடியையும் வேங்கை நாட்டையும் மீண்டும் தனக்கு உட்படுத்திவிட்டான். ஒரு முழு நூற்றாண்டுக் காலம் (1118 - 1218) பேரரசின் எல்லையும் குறைய வில்லை. உறுதியும் குலையாமலே இருந்தது. பேரரசின் எல்லை தமிழக முழுவதும் பரவியிருந்தது. பேரரசு சிற்றரசர் தயவால் வாழ்ந்து, பாண்டியர் -ஹொய்சளர் போட்டியாலேயே பிழைத்திருந்தது. கடைசி அரசன் மூன்றாம் இராசேந்திரன் பெருவீரனாக இருந்தான். முன் ஆட்சியின் தவறுகளை அவன் ஓரளவு சரி செய்து பழயபடி சோழப் பேரரசை ஒரு வலிமை வாய்ந்த சிற்றரசாகவாவது ஆக்க முனைந்தான். ஆனால், பாண்டியப் பேரரசு இதற்குள் ஹொய்சள அரசையும் வென்று சோழ அரசையும் விழுங்கித் தமிழக முதற் பேரரசாகி சிற்றரசாய், பாண்டியப் பேரரசின் வயிற்றில் நிலையாக அடங்கிவிட்டது. பிற்காலப் பாண்டியப் பேரரசு சோழப் பேரரசின் இந்த மாலைப் போதிலே பாண்டியப் பேரரசு கருவிலடங்காத ஒரு முரட்டுப் பிள்ளையாக, சில சமயம் தனக்கே தீமை செய்து கொண்டும், சில சமயம் உரம் பெற்று வளர்ந்தும் வந்து திடுமெனப் பேரரசு நிலை எய்துவது காண்கிறோம். இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலே, 1132-ல் பட்டம் பெற்ற பாண்டிய அரசன் மாறவர்மன் சீவல்லபன் பாண்டிய நாட்டு ஆட்சியைக் கைப்பற்றியதுடன் நில்லாமல், திருவாங்கூர் அரசரையும் தன் கீழ் அடக்கி மேல் உரிமை பெற்றிருந்ததாக அறிகிறோம். இவன் பாண்டியர் பேரரசு நிலையைக் காட்டும் ஒரு விடி வெள்ளி ஆவன். ஆனால், இவனுக்குப் பின் இரண்டாவது இராசாதிராசன் காலம்வரை நாம் மீண்டும் பாண்டியரைப் பற்றி மிகுதி கேள்விப்பட வில்லை. இரண்டாவது இராசாதிராசன் காலத்தில் தொடங்கிய பாண்டிய உள்நாட்டுப் போர் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியிலேயே முடிவடைகிறது. இப்போர் காரணமாகச் சோழப் பேரரசின் புகழும் வல்லமையும் பின்னும் நீடித்தன. ஆனால், அந்த ஆட்சியிலேயே பாண்டியப் பேரரசு கரு முதிர்ச்சியடைந்து விட்டது. அடுத்த ஆட்சிக்குள் அது தமிழக முழுவதும் பரந்து அதன் எல்லையில் நின்று ஆர்ப்பரிக்கத் தொடங்கிற்று. பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியப் பேரரசு மீண்டும் உள்நாட்டுப் போரால் வீழ்ச்சி யடைந்தது. அதுவே வடதிசையை அலைக்கழித்த ஆப்கானிய இனத்தைத் தென்திசைக் கும் வரவழைத்தது. காந்தமன் புராண மரபில் ஒரு காந்தமன் வரலாற்று மரபு கடைச் சங்க காலத்துக்கு முற்பட்ட ஆதி சோழருள் ஒருவன் காந்தன் அல்லது காந்தமன். அவன் குடமலையில் அடை பட்டுக் கிடந்த காவிரியை வாளால் தளைத்துத் தமிழகத்தில் ஒழுக விட்டான் என்று புராண மரபு புனைந்துரைக்கிறது. அது வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு செயலேதானோ என்று எண்ண வைக்கிறது. வரலாற்றுக் காலத்திலே அதே செயலை அதே சோழ மரபில்வந்த இரண்டாம் இராசராசன் செய்தது! இதை இலக்கிய மூலம் நாம் அறிகிறோம். மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன் வரராச ராசன்கை வாள் என்னவந்தே! (தக்கயாகப் பரணி 549) சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள் காணவாரீர்! (இராசராச சோழனுலா 169 - 170) என்று ஒட்டக்கூத்தர் இது குறித்துள்ளார். சைய மலைச்சிறைதீர் வாள் கண்டன் வெள்ளணி நாள் வாழ்த்திக் கொலைச் சிறைதீர் வேந்துக் குழாம் என்ற தொல்காப்பிய நச்சினார்க்கினியருரையின் மேற் கோள்பழம் பாடலடிகளும் இவ்வரலாற்று மரபே குறித்ததாதல் வேண்டும். ‘இயற்கை காரணமாகவே, படைவேந்தர் செயலாலோ காவிரி சையமலைப் பக்கம் அடைப்புண்டு, சோணாட்டு வளம் சுருங்குவதாயிற்று’ என்று விளக்கம் உரைத்துள்ளனர், அறிஞர் பண்டாரத்தார். ‘வாள்’ கொண்டு வெட்டினான் என்ற குறிப்பு பகையரசர் செயலையே குறிப்பதாகும் என்றும் அவர் கருதியுள்ளார். கி.மு. 6-ம் நூற்றாண்டில் பாபிலோன் நகரத் தாக்குதலில் மீடியர் செய்த செயலை இது நினைவூட்டுகிறது. பேரறிஞர் திருத்தந்தை ஹிராஸின் சிந்து வெளி எழுத்து விளக்கம் சரி என்று உறுதி காணப்பெறுமாயின், காந்தமன் பற்றிய மரபுரையும் ஐயாயிர ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு தமிழகப் பேரரசன் செயலைக் குறிப்பதாகலாம். இரண்டாம் இராசராசன் பெயர் அம்மரபில் வந்த செயலாகவே காணப்படுகிறது. பாண்டியர் உள்நாட்டுப் போர் ஐ : ஈழ - சோழ - பாண்டியப் போட்டி 1167 - 1175 வடலி, பராக்கிரமபுரம், குண்டானிகா, அமராவதி, தொண்டி, பாசிப்பட்டணம் போர்கள் சடையவர்மன் குலசேகர பாண்டியன் 1161-ல் அரியணையேறினான். அவன் திருநெல்வேலியிலிருந்து கொண்டு பாண்டி நாட்டின் தென் பகுதியை ஆண்டு வந்தான். அதே சமயத்தில் வடபாதியை மதுரையி லிருந்து கொண்டு பராக்கிரம பாண்டியன் என்ற மற்றொரு பாண்டியன் அரசாட்சி செய்து வந்தான். இருவருக்குமிடையே எக்காரணத்தாலோ போட்டியும் பூசலும் எழுந்தன. அதன் பயனாக, குலசேகரன் பராக்கிரமனை மதுரையில் முற்றுகை யிட்டுத் தாக்கினான். முற்றுகையைச் சமாளிக்க முடியாமல், பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவி செய்யும்படி இலங்கையரசன் பராக்கிரமபாகுவுக்கு வேண்டுதல் விடுத்தான். பராக்கிரமபாகு இலங்கையின் பெரு வேந்தன், பெரியான் என்று விதந்துரைக்கப் பட்டவன். மற்றத் தமிழக அரசர்களைப் பின்பற்றிக் கடற்படை ஏற்படுத்திக் கொண்ட முதல் அரசன் அவனே. பாண்டிய சோழரைப் போலவே அவனுக்கும் கடல் கடந்த ஆட்சியில் ஆர்வம் உண்டாயிற்று. அவன் உதவி செய்ய இணங்கி, இலங்காபுரன் என்ற படைத்தலைவனுடன் ஒரு பெரிய இலங்கைப் படையைப் பாண்டி நாட்டுக்கு அனுப்பினான். ஆனால், அது வந்து சேருவதற்குள், குலசேகரன் முற்றுகையை முறுக்கினான். பராக்கிரமனையும் அவன் மனைவி மக்களையும் கொன்றழித்துத் தன்னையே பாண்டி நாடு முழுமைக்கும் அரசனாக மதுரையில் முடி சூட்டிக் கொண்டான். பராக்கிரமன் குடும்பத்தில் கொலைக்குத் தப்பியது அவன் புதல்வன் வீரபாண்டியன் என்ற ஒரு சிறுவன் மட்டுமே, அவனை உறவினர் சிலர் எப்படியோ ஒளித்துக் காத்து, பல இடங்களில் சுற்றித் திரிந்த பின், இறுதியில் பொதிகைமலையில் வைத்துப் பேணினர். இச்செய்திகளை அறிந்த இலங்கை வேந்தன் பராக்கிரமபாகு கடுஞ் சீற்றமடைந்தான். குலசேகரனை அழித்து, பராக்கிரமன் புதல்வன் வீரபாண்டியனையே அரசனாக்கும்படி படைத்தலைவன் இலங்காபுரனுக்கு கட்டளை பிறப்பித்தான். மாதண்டநாயகன் இலங்காபுரன் படைகளுடன் பாண்டி நாடெங்கும் சூறாவளிபோலச் சுற்றித் திரிந்தான். குண்டுக்கல் என்ற மூவரணுடைய நகரைக் கைப்பற்றி அதைத் தன் மூல தளமாக் கினான். அதற்குப் பராக்கிரமபுரம் என்று பெயர் சூட்டி, அதிலிருந்து கொண்டு, குலசேகரன் ஆதரவாளர்களான நாகநாடாள்வான், சீலமேகன், நரசிங்கபிரமாதிராயன், கடக்குடராயன் ஆகியவர்களை முறியடித்தான். குலசேகரனுக்கு ஆதரவாயிருந்த நகரங்கள் பலவும் எரியூட்டப்பட்டன. குலசேகரன் அவனைத் தாக்கும்படி சுந்தரபாண்டியன், பாண்டியாதிராசன் என்ற தலைவர்களை அனுப்பினான். அவர்களை முறியடித்து இலங்காபுரன் வீர கங்கை நகரைத் தீக்கிரையாக்கினான். வடலிப் போர்: வடலியில் நடைபெற்ற போரில் இலங்காபுரன் குலசேகரனின் ஆதரவாளனான ஆனவந்தான் என்ற தலைவனைக் களத்தில் முறியடித்துக் கொன்றான். பராக்கிரமபுரப் போர்: குலசேகரன் திருநெல்வேலி யிலுள்ள தன் நிலைப்படைகளைத் திரட்டினான். மாவடி ராயர் உட்படத் தன் துணைவர்களான முப்பத்திரண்டு தலைவர் களையும் துணைக் கொண்டான். பராக்கிரமபுரத் தருகிலே அவன் இலங்காபுரனுடன் முப்பத்து மூன்று நாட்கள் கடும்போர் நிகழ்த்தினான். புதியதொரு பாரதப் போராக அது அந்நாளில் வருணிக்கப்பட்டது. ஆனால், போர் முடிவில் இலங்கைப் படைத் தலைவன் இலங்காபுரனுக்கே வெற்றி கிடைத்தது. இதற்கடுத்து நிகழ்ந்த மற்றொரு போரில் பாண்டியன் குலசேகரன் படையின் பெரும் பகுதியுமிழந்து களம் விட்டோடினான். இலங்காபுரன் எரிகாவூருக்கு நெருப்பிட்டு, தேவிப் பட்டணத்தைக் கைப்பற்றினான். குண்டனிகாப் போர்: குண்டனிகா என்ற இடத்தில் நடை பெற்ற போரில் இலங்காபுரன் பல தலைவர்களைத் தனக்கு அடங்கிப் பணியும்படி செய்தான். வடமண், மேற்குடி, மணமேற்குடி, மஞ்சங்குடி ஆகிய இடங்களை எரியூட்டியவாறு முன்னேறினான். அமராவதிப் போர்: அமராவதியில் நடைபெற்ற போரில் குலசேகரனுக்கு உதவியாகக் கொங்கு நாட்டிலுள்ள அவன் மாமன் படைகளும், சேரன் படைகளும் போரிட்டன. பல நாட்கள் நடந்த இந்தப் போரில் தொடக்கத்தில் குலசேகரன் பக்கமே வெற்றி சாய்வதுபோல் தோன்றிற்று. ஆனால், இறுதியில் இலங்காபுரனே அவன் படைகளையும் அவன் ஆதரவாளர் படைகளையும் சிதறடித்தான். குலசேகரன் உயிரைக்காக்க ஓடி ஒளிந்தான். இலங்காபுரன் நெட்டூரில் பாளையமிட்டிறங்கினான். இங்கிருந்து பொதிகைமலைப் பக்கம் பதிவிருந்த பராக்கிரமன் புதல்வன் வீரபாண்டியனைத் தருவித்து, அவனுடன் மதுரை நோக்கிச் சென்றான். மதுரை எளிதில் அவன் கை வசப்பட்டது. அவன் வீரபாண்டியனையே அரசனாக முடிசூட்டினான். அதுமுதல் சில நாட்கள் பாண்டிய நாட்டாட்சி இலங்கைப் படைகளின் ஆட்சியாயிற்று. எங்கும் இலங்கை நாணயமாகிய காகபணமே செலாவணியாயிற்று. இலங்கை வேந்தன் ‘பாண்டிய விஜயன்’ என்ற பட்டம் தாங்கி அவ்வெற்றிச் சின்னமாக இலங்கை யில் ‘பாண்டு விஜயம்’ என்ற ஊர் நிறுவினான். பாண்டி நாட்டின் பெரும் பகுதியை நாட்டுப் பெருந்தலைவர்களுக்கே விட்டுத்தந்து இலங்காபுரன் அவர்கள் ஆதரவைப் பெற்றான். ஆனால், குலசேகரன் படையெடுத்த போது இத்தலைவர்கள் அவனுடன் சேர்ந்து கொண்டனர். இலங்கைப் படை வீரரிடம் பாண்டிய நாட்டு மக்கள் கொண்ட வெறுப்பே இதற்குக் காரணம் என்னலாம். புதிய வலிமைபெற்ற குலசேகர பாண்டியன் இலங்கைப் படைத்தலைவன் இலங்காபுரன் இலங்கை வேந்தனுக்கு நிலைமை யறிவித்து, மேலும் உதவிப் படை கோரினான். இலங்கை யரசன் தண்டநாயகன் ஜகத்விஜயனுடன் மற்றொரு படை அனுப்பினான். இலங்கைப் படைத்தலைவர் இருவரும் சேர்ந்து மீண்டும் குலசேகரனைத் துரத்தி விட்டு, வீர பாண்டியனைத் தவிசேற்றினர். குலசேகரன் துணையற்ற தொண்டைமான் கோட்டை, சாந்தனேரிக் கோட்டை ஆகிய இடங்களில் திரிந்து இறுதியில் சோழன் இராசாதிராசனை அடைந்து தனக்கு உதவும்படி வேண்டினான். சோழன் வேண்டுகோளை ஏற்று, திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பி பல்லவராயன் என்ற தன் படைத்தலைவனை ஒரு படையுடன் குலசேகரனுக்கு உதவும் படி அனுப்பினான். தொண்டிப் போர் : பாசிப்பட்டணம் போர்: இந்த இரு போர்களிலும் சோழப் படைத்தலைவன் பல்லவ ராயன் இலங்கைப் படைகளை முறியடித்தான். இலங்கைப் படைத் தலைவர் இருவர் தலைகளையும் வெட்டி, மதுரைக் கோட்டை வாயிலில் யாவரும் காணக் கட்டித் தூக்கினான். பின் தலைவன் பல்லவராயன் சோழ அரசன் கட்டளைப்படி குலசேகரனையே பாண்டிய நாட்டின் அரசனாக மதுரையில் முடிசூட்டினான். பேராவலும் பேரார்வமும் உடைய இலங்கை வேந்தன் பராக்கிரமபாகு இச்செய்திகளைக் கேட்டுக் கடுஞ்சினம் கொண்டான். அவன் உடன் தானே தமிழகத்தின் மீது படை யெடுக்கத் திட்டமிட்டான். ஈழ நாட்டிலுள்ள ஊராத்துரை, புலைச்சேரி, மாந்தோட்டம், வல்லிக்காமம், மட்டிவாழ் முதலிய துறைமுகப் பட்டினங்களிலே படைகளைக் குவித்தான். அவற்றைத் தமிழகம் கொண்டுவரக் கப்பல்களுக்கும் திட்டம் செய்தான். இத்திட்டங்களை உணர்ந்த சோழன் எதிர்த் திட்டங் களிட்டான். ஈழநாட்டு அரசுரிமை கோரிப் பராக்கிரம பாகுவுடன் போட்டி யிட்ட அவன் மருமகன் சீவல்லபன் சோழனிடம் உதவி வேண்டிச் சோணாட்டிலேயே தங்கியிருந்தான். அண்ணன் பல்லவராயன் என்பவன் அறிவுரைப்படி சோழன் சீவல்லபனுடன் ஒரு பெரும் படையை இலங்கைக்கு அனுப்பினான். அப்படை ஈழத் துறை முகத்தில் இருந்த கப்பல்களையும் படைகளையும் அழித்து நாடெங்கும் சூறையாடிற்று. கைக்கொண்டு, படைத் தலைவர்களில் பலரைக் கொன்று மீந்தவரைச் சிறைப்பற்றிச் சோழனிடம் கொணர்ந்து ஒப்படைத்தான். பராக்கிரம பாண்டியனையும் அவன் மகனையும் ஆதரிக்கப் போனதனால் விளைந்த தீங்குகளைக் கண்டு பராக்கிரமபாகு மனக் கசப்புற்றான். அவன் இப்போது படைக் கருவியைக் கைவிட்டுச் சூழ்ச்சிக் கருவியை மேற்கொண்டான். குலசேகரனையே ஆதரிப்பதாகக் கூறி அவனுக்குப் பரிசில்கள் அனுப்பினான். குலசேகரனும், சோழன் தனக்குச் செய்த நன்றிமறந்து அதை ஏற்றுக் கொண்டான். கோட்டை வாயிலிலுள்ள இலங்கைப் படைத் தலைவர் தலைகளை அகற்றினான். சோழனிடம் பற்றுடைய தலைவர்களைத் தண்டித்தான். பாண்டியனது நன்றிக் கேடான இந்தப் போக்கைக் கண்ட சோழன் அவனை அழித்து வீர பாண்டியனையே அரசனாக்கும் படி அண்ணன் பல்லவராயனுக்குக் கட்டளையிட்டான். அண்ணன் பல்லவராயன் குலசேகரனைப் போரில் முறியடித்துத் துரத்தி விட்டு, வீர பாண்டியனையே அரசனாக்கினான். அவன் 1175 முதல் 1180 வரை ஆண்டான். இப்போரில் சோழன் இரண்டாம் இராசாதிராசன் பாண்டி நாட்டில் தன் பெருமையை நாட்டியதன்றி, இலங்கை யிலும் போர் செய்து வெற்றிகள் பெற்றதனால், ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோவிராச கேசரிவர்மன்’ என்ற பட்டம் மேற் கொண்டான். பாண்டியர் உள்நாட்டுப் போர் ஈழ - சோழ - பாண்டியப் போட்டி : ஐஐ 1180 -1188 : திருவேடகப் போர் 1180: நெட்டூர்ப் போர் 1188 : இலங்கைவேந்தன், குலசேகர பாண்டியனை வசப்படுத்தியது போலவே வீரபாண்டியனையும் வசப்படுத்தத் தொடங்கினான். குலசேகரனைப் போலவே அவனும் நன்றி மறந்து இலங்கைப் பாசத்தில் இழைந்தான். இதே சமயம் தோற்றோடிய குலசேகரன் தன் செயல்களே தன்னை அழித்ததை எண்ணி எண்ணி மனமுடைந்து மாண்டான். அவன் புதல்வன் விக்கிரமன் மூன்றாம் குலோத்துங்க சோழனிடம் சென்று பணிந்து, தந்தையிழந்த அரசுரிமையைத் தனக்கு மீட்டுத் தரும்படி வேண்டினான். வீரபாண்டியன் நன்றிக் கேட்டால் அவன் மீது சீற்றங்கொண்டிருந்த சோழன், தன்படைத் தலைவனான அம்மையப்பன் இராசராச சம்புவராயனை அழைத்து, வீர பாண்டியனை ஒழித்து அவனையே மதுரையில் முடி சூட்டி வரும்படி ஏவினான். சோழர் பாண்டி நாட்டின் மீது படை யெடுத்தனர். திருவேடகப் போர் 1180 வீரபாண்டியன் திருவேடகத்தில் சோழர் படையை எதிர்த்தான். இலங்கை வேந்தனும் அப்போரில் அவனுக்கு உதவியாக இலங்கைப் படைகளை அனுப்பியிருந்தான். இப்போரில் பாண்டி நாட்டில் ஏழகப் படைகளும் மறவர் படைகளும் வியத்தகு வீரசூரச் செயல் களாற்றி முழுமுச்சுடன் போர் செய்து அழிந்தன. இலங்கைப் படைகளோடு இலங்கைக்கு அடித்துத் துரத்தப்பட்டன. பாண்டிய இளவரசன் ஒருவன் போரில் கொல்லப்பட்டான். அண்ணன் சம்புவராயன் மதுரையும் அரசும் கொண்டு வெற்றித் தூண் நிறுவி விக்கிரம பாண்டியனைப் பாண்டி நாட்டின் அரசனாக்கினான். நெட்டூர்ப் போர் 1188 முடியிழந்த வீர பாண்டியன் கேரள அரசன் உதவியுடன் மீண்டும் பாண்டி நாட்டின் மீது படையெடுத்தான். நெட்டூர் என்னுமிடத்தில் சோழர் படைக்கும் அவனுடன் வந்த சேரர் படைக்கும் போர் நிகழ்ந்தது. நெட்டூர் என்பது தற்போதைய இராமநாதபுர மாவட்டத்தில் சிவகங்கை வட்டம் சார்ந்த இளையான்குடிக்கு அருகில் உள்ளது. இப்போரில் வீர பாண்டியன் படையும் சேரநாட்டுப் படையும் முற்றிலும் தோல்வியுற்று அழிந்தன. சேரன் சோழ போரில் வாகை சூடியதுடன், பாண்டியருக்கு வழி வழி உரிமையாயிருந்த முடியைக் கைப்பற்றினான். வீரபாண்டியன் பட்டத்தரசி சிறைப்பிடிக்கப்பட்டு வேளம் ஏற்றப்பட்டாள். வீர பாண்டியன் மீண்டும் சேரனிடம் அடைக்கலம் புகுந்தான். ஆனால், சோழர் பகையினும் நட்பே சிறந்ததென்று கொண்டு, சேரன் வீர பாண்டியனையும் அவன் புதல்வர் இருவரையும் அழைத்துக் கொண்டு அவனிடம் ஓப்படை கோரினான். சோழன் அவர்களை மதித்து ஆதரவு காட்டினான். வீரபாண்டியனுக்குப் பாண்டி நாட்டின் ஒருபகுதி கொடுத்து ஆளச் செய்தான். சேரன் நன்னம்பிக்கையையும் பாராட்டி அவனுக்கும் பரிசில்கள் வழங்கினான். ஈழநாட்டுப் படையெடுப்பு 1188 பாண்டியனுக்கு உதவியதற்காக ஈழ அரசன் மீது வெகுண்டு மூன்றாம் குலோத்துங்கன் ஈழத்தின் மீது படையெடுத்தான். அவன் பெற்ற வெற்றிகள் பராக்கிரமபாகுவுடன் மதிப்பான தொடர்புடன் மீளப் போதியவையாயிருந்தன. கொங்கு வெற்றி 1194 கொங்கு நாட்டைச் சோழர்கீழ் கொங்குச் சோழர் ஆண்டு வந்தனர். சோழன் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் அவர்கள் சோழருக்குத் திறை செலுத்துவதை நிறுத்தித் தன்னுரிமை பெற முயன்றிருந்தனர். மூன்றாம் குலோத்துங்கன், கொங்கு நாட்டின் தலை நகரான கரூர்மீது படையெடுத்து, அதைக் கைப்பற்றினான். அவ்விடத்திலேயே சோழ கேரளன் என்ற பட்டம் மேற்கொண்டு அவ்வகையில் சிறப்பு முடி சூட்டிக் கொண்டான். தெலுங்குச் சோடர் நெல்லூர், கடப்பை சித்தூர்ப் பகுதிகளில் ஆண்ட தெலுங்குச் சோடர்கள் சோழப் பேரரசின் மாலைப்போதில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக வளர்ந்தார்கள். ஆனால்,, அவர்கள் எப்போதும் சோழருக்கு நண்பர்களாகவே இருந்ததுடன், சோழருக் கெதிராக அடிக்கடி கிளர்ந்தெழுந்து தொல்லை தந்த சம்புவராயர், காடவராயர், சேதிராயர் ஆகியவர்களிடமிருத்து சோழ அரசனைக் காத்தனர். மூன்றாம் குலோத்துங்கசோழன் வலிமை வாய்ந்த அரசனே யானாலும் இத்தொல்லைகளிலிருந்து காப்புப் பெற உதவும்படி காஞ்சிப் பகுதியை அவர்கள் வசமே விட்டிருந்தான் என்று தெரிகிறது. 1192-க்குள் இக்காரணத்தால் அவர்கள் கிட்டத் தட்டத் தன்னாட்சி யுடையவர்களாய், காஞ்சியையும் தம் வசத்திலேயே கொண்டிருந்தனர். நல்ல சித்தரசன், தம்முசித்தரசன், திருக்காளத்தி தேவன் என்பவர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் காஞ்சி யாண்ட அரசரென்ற இவ்வுரிமை கொண்டாடினர். வடதிசைத் தொடர்பு மூன்றாம் குலோத்துங்கனின் குடுமியாமலைக் கல்வெட்டு, அவ்வரசன் வேங்கை நாட்டைவென்று உறங்கைமாநகர் (ஓரங்கல்) அல்லது வாரங்கல் புகுந்தான் என்று கூறுகிறது. சோழர் இச்சமயம் இவ்வளவு நெடுந் தொலைவிலுள்ள ஒரு நகரை இத்தகைய படையெடுப்புக் குரியதாக்கும் ஆற்றல் உடையவர்களாய் இருந்திருக்க முடியாது. ஆனால், ஓரங்கல் ஆண்ட பேரரசன் வேங்கை நாடு கடந்து சோணாட்டுக்குள் படையெடுத் திருக்கக் கூடும். தெலுங்குச் சோடருடன் சேர்ந்து குலோத்துங்கன் அவனை முறியடித்தனுப்பியிருக்க வேண்டும். இதனையே வேங்கை வென்று உறங்கை (ஓரங்கல்) புகுந்ததாக அக்கல்வெட்டுக் குறித்திருக்கலாம். புதிய பேரரசுப் போட்டி: சோழ - பாண்டியப் போராட்டத் தொடக்கம்: மட்டியூர், கழிக்கோட்டைப் போர்கள்: 1202 மூன்றாம் குலோத்துங்க சோழன் உதவியால் அரியாசனம் ஏறிய விக்கிரமம பாண்டியன் பிற்காலப் பாண்டியப் பேரரசின் முதல்வன் ஆவன். தற்கால மதுரை, இராமநாதபுரம், திருநெல் வேலி மாவட்டங்களடங்கிய பாண்டிநாடு முழுவதும் அவன் ஆட்சிக் குட்பட்டிருந்தது. பழய பாண்டியப் பேரரசரின் கனவு களும் எண்ணங்களும் அவன் உள்ளத்தில் உலவி அவன் ஆட்சிப் போக்கி லேயே ஒளிவீசுகின்றன. அவன் அரசியல் தலைவன் களவழி நாடாள்வானான சயங்கொண்ட சோழ வள்ளுவன் என்பவன். தன் அரசிருக்கைகளுக்கு அவன் மழவராயன், முனைய தரையன் என்ற பெரும் பெயர்கள் வழங்கினான். சேரமான் கோதை இரவிவர்மன் அவன் மைத்துனன். தன் ஆட்சிப் பெருமையால் அவன் தான் சோழர் கீழ், சிற்றரசன் என்பதை மறந்து, திறைகொடுக்க மறுத்தான். மூன்றாம் குலோத்துங்க சோழன் கடுஞ் சீற்றத்துடன் பாண்டி நாட்டின் மீது படையெடுத்தான். மட்டியூர்ப் போர்: கழிக்கோட்டைப் போர் 1202: பாண்டியன் ஏழகப் படையும் மறப் படையும் இப்போர் களில் புறங்காட்டி ஓடின. பாண்டியனும் தன் இளவலுடன் நகரைவிட்டே ஓடி ஒளிந்து கொண்டான். சோழன் குலோத்துங்கன் ஐஐஐ தன் முதற்கோபத்தில் நகரின் பல மண்டபங்களை அழித்தான். ‘வழுதியர் தம் கூடமாடம் கழுதை ஏரிட உழுது புகழ்க் கதிர் விளையக் கவடி விதைத்தான்’ என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அத்துடன் சோழன் சோழ பாண்டியன் என்ற பட்டம் சூட்டிக் கொண்டு, வீரமாமுடி புனைந்து வெற்றி விழா (விசயாபிடேகம்), வீரவிழா (வீராபிடேகம்) ஆற்றினான். பாண்டிய மண்டலத்துச் சோழ பாண்டிய மண்டலம் என்றும், மதுரைமா நகருக்கு முடித்தலை கோண்ட சோழபுரம் என்றும், மதுரைக் கொலு மண்டபத்துக்குச் சேர பாண்டியர் தம்பிரான் என்றும் பெயர் வழங்க வைத்தான். முப்பெருந் தமிழ் நாடுகளிலும் ஒப்பற்றவன் சோழனாகிய தானே என்ற தருக்குடன் மூன்றாம் குலோத்துங்கன் திரிபுவன வீரதேவன் (மூவுலக அரசன்) என்று பட்ட மேற்கொண்டான். வணங்கா முடியினராகிய பாண்டிய மரபினன் உள்ளத்தில் சோழப் பேரரசை வீழ்த்தும் துடுக்கையும், பாண்டியப் பேரரசு காணும் ஆர்வத்தையும் உண்டு பண்ணியவை இந்த அவமதிப்பும் வீறாப்பும் கலந்த பெயர் ஆரவாரங்களே என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அடுத்த தலைமுறையிலேயே பாண்டியர் மீது சோழர் சுமத்திய அனைத்தும் சோழர்மீது பாண்டியராலும் திருப்பி வட்டி யுடன் சுமத்தப்பட்டன. ஹொய்சளர் வளர்ச்சி,- ஹாங்கல், குறுக்கோடு, குத்திவோலில், உத்தரா, சோரட்டுர், யெல்பர்காப் போர்கள்: 1190 -1191 சோழப் பேரரசைப் போலவே சாளுக்கியப் பேரரசும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தகர்ந்து வந்தது. அவர்கள் கீழிருந்தாண்ட தேவகிரி யாதவர்கள் அவர்களை விழுங்கி வளர்ந்தனர். சாளுக்கியப் பேரரசையே எதிர்க்கத் துணிந்த ஹொய்சளர் சாளுக்கியப் பேரரசின் தென் எல்லை கடந்து வந்தனர். ஹொய்சள இரண்டாம் வல்லாளன் ஹாங்கல் முதலிய போர்களங்களில் யாதவரையும் முறியடித்துத் தன் ஆட்சி யெல்லையை மாலப் பிரபை கிருஷ்ணை ஆறுகள் வரை பரப்பினான். புதிய பேரரசுப் போட்டி: சோழ பாண்டியப் போராட்டம்: தஞ்சைப் போர்: 1219 சோழப் பேரரசர் மரபிலேயே மிகவும் வலிமை குன்றிய அரசன் மூன்றாம் இராசராசன். அவன் 1216-லே பட்டத்துக்கு வந்தான். அதே ஆண்டிலேயே புதிய பாண்டியப் பேரரசின் அடலேறு ஆன மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஐ (1216 - 1238) அரசிருக்கை ஏறினான். இவன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஐஐ தம்பியே யாதலால், மூன்றாம் குலோத்துங்க சோழனால் அண்ணன் காலப் பாண்டிய அரசும், நாடும், மரபும் பட்டபாட்டைப் பார்த்துப் பார்த்துப் புழுங்கி யிருந்தான். இதனால் சோழப் பேரரசை வீழ்த்திப் பழிக்குப் பழி வாங்குவதே அவன் வாழ்வின் முதற் குறிக்கோள் ஆயிற்று. தஞ்சைப் போர் பாண்டியன் 1219-ல் சோணாட்டின் மீது படையெடுத்தான். தஞ்சையில் நடைபெற்ற போரில் இராசராசன் படைகள் அவன் வீரத்தாக்குதல்களுக்கு ஆற்றாது வெருண்டோடின. பாண்டியன் வெற்றி வெளிகொண்டு தஞ்சையையும் உறையூரையும் எரியூட்டிப் பாழாக்கினான். எங்கும் மாடமாளிகைகள், கூடகோபுரங்கள் தவிடுபொடி யாக்கப்பட்டன. சோழன் மூன்றாம் இராசாதிராசன் ஓடி ஒளித்து கொண்டான். சோழரின் ஆயிரத்தனி அபிடேக மண்டபத்தில் சென்றிருந்து சுந்தர பாண்டியன் வீரமா முடிவிழா (வீராபிடேகம்) நிறை வேற்றினான். வெற்றி மகிழ்வுடன் தில்லை சென்று அம்பல வாணனுக்கு வழிபாடாற்றினான். இவ் வெற்றியின் பின் பாண்டியன் தற்போதைய புதுக் கோட்டைப் பகுதியிலுள்ள பொன்னமராவதி நகரில் சென்று வெற்றிக் கொலு வீற்றிருந்தான். அச்சமயம் சோழப் பேரரசர் மரபில் வந்த மூன்றாம் இராசராசன் மனைவி மக்களோடும் சென்று அவனைப் பணிந்து வேண்ட அவனும் சோழ நாட்டை அளித்தருளியதாகப் பாண்டியர் கல்வெட்டுக்களும் மெய்க்கீர்த்தி யும் கூறு கின்றன. ‘சோணாடு கொண்டருளிய பாண்டிய தேவர்’ எனவும் ‘சோணாடு வழங்கி யருளிய சந்தர பாண்டிய தேவர்’ எனவும் அவன் விருதுப் பெயர்கள் மேற்கொண்டான். கடுஞ் சீற்றத்தை யடுத்துத் திடுமென வந்த இந்த அருட்பண்பு அரசியல் வெற்றி வீரருக்கு இயல்பே. ஏனெனில் அந்த பாண்டியன் அருட் பண்புக்கு உண்மையில் வேறொரு காரணம் இருந்தது. சோழப் பேரரசு படுவீழ்ச்சி யடைந்து பாண்டிய பேரரசு எல்லை மீறி வளர்வதை ஹொய்சளர் விரும்பவில்லை. அத்துடன் ஹொய்சளன் இரண்டாம் வல்லாளனின் புதல்வன் வீர நரசிம்மன் ஒரு சோழகுல இளவரசியை மணந்திருந்தான். இந்த இரண்டு உரிமையாலும் ஹொய்சளர் சோழருக்கு அவன் நாட்டைத் திருப்பித் தந்ததன் பின்னணிக் காரணம் இதுவே. ஆயினும் சோழர், பாண்டியப் பேரரசருக்கு அடங்கிக் கப்பம் கட்டும் நிலையை இவ்வாட்சியில் அடைந்தனர். அத்துடன் ‘முடிகொண்ட சோழபுரம்’ என்று இப்போது பெயர் தாங்கிய இடைக்காலச் சோழச் சிற்றரசர் தலைநகரான பழயாறையிலிருந்தே சோழன் இச்சமயம் ஆண்டு வந்தான். இம்முயற்சியில் சோழனுக்கு உதவிய ஹொய்சள வல்லாளனும், வீர நரசிம்மனும் தம்மைச் ‘சோழராஜ்ய பிரதிஷ்டாசாரியர்’ (பாண்டியனாகிய யானைக்குச் சிங்கம் போன்றவர்) என்றும் குறித்துக் கொள்கின்றனர். பாண்டிய ஹொய்சளப் போட்டி: சோணாட்டு உள்கிளர்ச்சிகள்: உறத்திப் போர்: 1221 வட ஆர்க்காட்டுப் பகுதியிலுள்ள மகத நாடாண்ட சிற்றரசன் வாண கோவரையன் சோழருக் கெதிராகக் கிளர்ந்தெழுத்து தென் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். தென்னார்க்காட்டில் சேந்த மங்கலத்திலிருந்து ஆண்ட பல்லவர் குலக் குறுநில மன்னனான கோப்பெருஞ் சிங்கனும் அவனுடன் சேர்ந்து கொண்டான். சோணாட்டின் பெரும்பகுதி அவர்கள் கைப்பட்டது. இக்கிளர்ச்சிகளுக்குப் பாண்டியன் ஆதரவும் ஊக்கமும் அளித்து வந்ததாகத் தெரிகிறது ஆனால், இந்நிகழ்ச்சி யறிந்த ஹொய்சள வீர நரசிம்மன் உடனே ஒரு பெரும் படையுடன் சோணாட்டின் மீது படையெடுத்தான். உறத்திப் போரில் வாணகோவரையனும் கோப்பெருஞ் சிங்கனும் முறியடிக்கப்பட்டனர். அவர்கள் ஆட்சிப் பகுதிகளில் வீரநரசிம்மன் கொள்ளையிட்டுப் பெரும் பொருளுடன் மீண்டான். சோழப் பாண்டியப் போராட்டம்: இரண்டாம் படையெழுச்சி: 1231 முதற்பாண்டியப் படையெடுப்பின் பின்பு ஆண்டுதோறும் பாண்டியனுக்குச் சோழன் திறைகொடுத்து வந்தான். பின்திறையை நிறுத்திப் போரிட்டுத் தன் உரிமைபெற எண்ணினான். 1231-ல் பாண்டியன் மீண்டும் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். இத்தடவை சோழப் படையின் அழிவும் குழப்பமும் முந்திய தடவையை விடப் பன்மடங்கு மிகுதியாயிற்று. உயிருடன் தப்பிப் பிழைப்பதே சோழனுக்கு அருமுயற்சியாய்ப் போய்விட்டது. அவன் மனைவியர் சிறைப்பட்டு அவதியுற்றனர். சோழர் தலைநகராகிய முடிகொண்ட சோழபுரத்தில் பாண்டியன் வெற்றி விழாவும் வீர விழாவும் முழக்கினான். ‘சீ கோமாற வர்மன் திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டு முடி கொண்ட சோழபுரத்து வீராபிஷேகம் பண்ணியருளிய ஸ்ரீசுந்தர பாண்டிய தேவர்’ என்ற நீண்ட விருதுப் பெயரை அவன் சூட்டிக் கொண்டான். பாண்டிய ஹொய்சளப் போட்டி: சோணாட்டு உட்கிளர்ச்சிகள்: தெள்ளாற்றுப் போர் ஐஐ 1232: பெரம்பலுர்ப் போர் 1232 மகேந்திர மங்கலம் போர் 1232 பாண்டியர் இரண்டாம் படையெடுப்பில் தப்பியோடிய சோழன் மூன்றாம் இராசராசன் தன் பழைய எதிரிகளான சாளுக்கியர் உதவியையே கோருவசென்று வடக்கே சென்றான். ஆனால், அவன் அந்த நாடு போய்ச் சேரவில்லை. தெள்ளாற்றுப் போர் ஐஐ 1232 தனியாகக் குடும்பத்துடன் மறைந்தோடிய அவலையும் பரிவாரத்தையும், அவன் கீழ்ச் சிற்றரசனாயிருந்த கோப்பெருஞ் சிங்கன் என்ற பல்லவக் குடி மன்னன் தெள்ளாறு என்ற இடத்தில் போர் செய்து மடக்கினான் பேரரசன் என்று சிறிதும் மதியாமல் அவன் இராசராசனைச் சேந்தமங்கலத்திலுள்ள தன் கோட்டையில் சிறைவைத்தான். இச்செயலை அவன் கல்வெட்டுக்கள் பெருமை யுடன் கூறுகின்றன. தன் மைத்துனன் சிறைப்பட்டிருப்பது கேட்ட ஹொய்சள வீர நரசிம்மன் வெகுளியும் பதைபதைப்பும் கொண்டான். தானே சென்று வாணகோவரையனையும் அவன் சுற்றத்தினரையும் சிறைப் பிடித்தான். திருவரங்கத்துக்கு அருகிலுள்ள கோப்பெருஞ் சிங்கன் நாட்டை அழித்துச் சோழனை விடுவித்து வரும்படி அப்பண்ணன், சமுத்திர கொப்பையன் என்ற படைத்தலைவர் களை அனுப்பினான். அவர்கள் நாடு நகர்களை அழித்துக் கொண்டே முன்னேறிப் பெரம்பலூர்ப் போரில் கோப்பெருஞ் சிங்கனை முறியடித்தனர். அவர்கள் சேந்தமங்கலத்தை முற்றுகையிட்ட பின்னரே, கோப்பெருஞ்சிங்கன் சோழச் சக்கரவர்த்தியை விடுவித்தான். சோழப் பேரரசின் நலிவுற்ற சின்னமான இராசராசனை வீர நரசிம்மன் வரவேற்று ஆதரவு செய்தான். ஆனால், அவன் அத்துடன் நிற்கவில்லை. சோணாட்டையும் அவனுக்கு மீட்டுத் தரத் துணிந்தான். மகேந்திர மங்கலப் போர் : 1232 படைத்தலைவர்கள் சோழனை மீட்கச் சென்றிருந்த சமயத்தில் ஹொய்சள வீர நரசிம்மன் நேரே பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்தான், மகேந்திர மங்கலப் போரில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கடுந்தோல்வி யடைந்தான். பேரரசனாகக் கிளர்ந் தெழுந்த அவன் இப்போரால் ஒருகணத்தில் தற்காலிக மாகச் சிற்றரசனாய் விட்டான். ஹொய்சளருக்குப் பணிந்து திறை தருவ தாகக் கூறித் தன்னைக் காத்துக் கொண்டான். அதேசமயம் அத்தறுவாயைப் பயன்படுத்திப் பாண்டியன் முன்பு சோணாட்டில் வென்று கொண்ட பகுதிகளை யெல்லாம் வீர நரசிம்மன் மீட்டு, சோழனிடமே தந்தான். கோப்பெருஞ் சிங்கனும் வாணகோ வரையனும் தற்காலிகமாகவேனும் அடக்கப்பட்ட தால், தன் மீந்த ஆட்சிக் காலத்திற்கு மூன்றாம் இராசராசன் பெயரளவில் பேரரசனாக வாழ முடிந்தது. சோழப் பேரரசின் இறுதிச் சுடர் வீச்சு மூன்றாம் இராசராசன் தன் ஆட்சி இறுதிக்குள் தன் ஏலாமையை உணர்ந்து கொண்டான், ஆகவே அவன் 1246-ல் தன் புதல்வன் மூன்றாம் இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி அவனிடமே பொறுப்பு ஒப்படைத்து விட்டு ஒதுங்கி வாழ்ந்தான். மூன்றாம் இராசேந்திரன் தந்தை ஏலாமை கண்டு புழுங்கியவன். பாண்டியர் மீது பழிவாங்கத் துடித்தவன். சோழ மரபின் வீரக் குருதி அவன் நாடிகளில் ஓடிற்று. அவன் ஒரு சில ஆண்டுகளுள் நினைத்ததைச் சாதிக்கும் பேறு பெற்றான். ஆனால், அவன் திடீர் வளர்ச்சி பாண்டிய எதிரியை மட்டுமன்றி, உறவினனான ஹொய்சளன் பொறாமையையும் தூண்டிற்று. பெரும் பாண்டியருள் ஒருவனான மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஐ மகேந்திர மங்கலத் தோல்விக்குப் பின் 1238-ல் மாண்டான். சில மாதங்களே ஆண்ட சடையவர்மன் குலசேகரன் ஐஐ பாண்டியனைத் தொடர்ந்துவந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஐஐ ஹொய்சளர் கைப்பிள்ளையாகவே வாழ்ந்தான். ஆகவே மூன்றாம் இராசேந்திரன் திடுமெனப் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அவனைப் போரில் வென்று அடிமைப் படுத்தி, தனக்குக் கீழ்ப்பட்ட ஒரு சிற்றரசன் ஆக்கினான். ‘இருவர் பாண்டியர் முடித்தலைக் கொண்ட மகா ராசாதி ராச நரபதி’ என்றும் அவன் பட்டம் சூட்டிக் கொண்டான். இருவர் பாண்டியர் என்றது சுந்தரபாண்டியன் ஐஐ -ம் அவன் முன்னோனுமாக இருந்தல் வேண்டும். திக்க நிருபதி அல்லது கண்ட கோபாலன் என்ற வலிமை வாய்ந்த தெலுங்குச் சோடன் சோழன் நண்பராயிருந்ததால், அவன் உதவியுடன் சம்புவராயன், சேதிராயன், காடவராயன் ஆகியவர்களை இவன் அடக்கினான். சம்புவராயன் நாடு சங்ககால முதல் மாவிலங்கை என்றழைக்கப்பட்டது. சம்புவராயரும் சில சமயம் தம்மை இராட்சதர்கள் என்று கூறிக் கொள்வதுண்டு. இதை அடிப்படையாகக் கொண்டு ‘வட இலங்கை இராட்சதர்களை வென்ற வீரராமன்’ என்று மூன்றாம் இராசேந்திரன் தன்னை அழைத்துக் கொண்டான். ஹொய்சளர் சோழருக் கெதிராகத் திரும்பிய போதும் கண்டகோபாலன் உண்மையான சோழ நேசனாயிருந்து ‘சோழ ஸ்தாபனா சாரியன்’ என்று தன்னைப் பெருமையுடன் அழைத்துக் கொண்டான். தெலுங்குப் பெருங்கவிஞன் திக்கணனை ஆதரித்த அரசன் இந்தத் திக்க நிருபதி அல்லது கண்ட கோபாலன் என்ற தெலுங்குச் சோடனே. ஹொய்சளர் சதுரங்க ஆட்டம் பாண்டியர் வளர்ச்சி கண்டு அஞ்சி ஹொய்சளர் சரிந்து வரும் சோழ அரசை ஆதரித்தனர் சோழ அரசு மீண்டும் தலைதூக்குவது கண்டதே. அவர்கள் பாண்டிய அரசுக்கு உதவத் தொடங்கினர். முன்பு ‘சோழ குலரட்சகர்’ என்று தம்மைக் குறித்தது போலவே, இப்போது ‘இராசேந்திரனைப் போரில் வென்றவர்’ என்று விருது கூறிக் கொள்ளத் தயங்கவில்லை. வீர நரசிம்மனின் புதல்வனான வீர சோமசுவரன் இரா சேந்திரன் மீது படை யெடுத்துப் பாண்டிய நாட்டை அவனிட மிருந்து மீட்டுப் பாண்டியனுக்கு அளித்தான், முந்திய தலை முறையின் பட்டங்களைத் தலைகீழாக்கியது போலவே, இச்செயலும் இவ்வாறு முந்திய செயலைத் தலை கீழாக்கிற்று. ஹொய்சளப் படைத்தலைவன் சிங்கணன் 1249-ல் சோணாடு முழுவதையும் படை யெடுத்துச் சூறையாடினான். இரவி வர்மன் என்ற மற்றொரு படைத்தலைவன் கானாட்டை வென்று கைக்கொண்டான். உண்மையில் சோணாட்டின் ஒரு பகுதியை வீர சோமேசுவரனின் புதல்வனான வீரராமநாதன் வென்று, திருவரங்கத்துக் கருகிலுள்ள கண்ணனூரிலிருந்து ஆளத் தொடங்கினான். அடுத்த சில தலை முறைகளுக்கு அது ஹொய்சளரின் ஒரு தென்மாகாணமாயிற்று. ஆனால், ஹொய்சளரின் இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் என்றும் ஒரு நிலையாய் இல்லை. அவர்கள் சில சமயம் பாண்டிய சம்ரட்சகர்களாகியும், சிலசமயம் சோழ சம்ரட்சகர்களாகியும் ஊசலாடி வந்தனர். சோழருக்கும், பாண்டியருக்கும் ஹொய்சளன் இச்சமயம் மாமனாதலால், திடீர் திடீர் என்று இருதிசையில் ‘மாமன் பாசம்’ மாறி மாறி அல்லாடிற்று. சோழப் பேரரசின் வீழ்ச்சியும் மறைவும் : பாண்டியர் பேரெழுச்சி: 1257 சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஐ (1251-1270) காலத்தில் சோழர் ஆட்சி விழுந்து மறைந்து, ஹொய்சளர் ஆட்சி பெரிதளவு மங்கிற்று. பாண்டியப் பேரரசு இடைக்காலப் பாண்டியப் பேரரசை யும் சோழப் பெரும் பேரரசையும் கூடச் சில கூறுகளில் வென்று சீறு வாணம்போல் தமிழக வரலாற்றில் கண் கூசவைக்கும் ஒளியுடனும், விரை அதிர்ச்சியுடனும் பாய்ந்து உயர்ந்தது. சடையவர்மன் சந்தரபாண்டியன் அவன் காலத்தில் தென் னாட்டிலேயே தலை சிறந்த வீரனாகவும் படைத்தலைவனாகவும் இருந்தான். அத்துடன் பாண்டிய மரபில் அவன் காலத்துக்கு முன்னும் பின்னும் இருந்து வந்த உள்நாட்டுப் போட்டி அவன் சூழலில் இல்லை. இந்நிலையில் அவன் ஆற்றல் தென்னா டெங்கும் சென்று பரவ முடிந்தது. முடியேற்ற சில ஆண்டுகளில் அவன் தன் படை வலிமையைப் பெருக்கிக் கொண்டான். 1257-ல் அவன் சோழப் பேரரசின் மீது தண்டெடுத்துச் சென்று, சோழன் மூன்றாம் இராசேந்திரனைப் போரில் முறியடித்துச் சோழ அரசைத் தனக்குக் கப்பம் கட்டும் சிற்றரசுகளுள் ஒன்றாக அடக்கினான். இப்போரில் ஹொய்சளரும் சோழனுக்கு ஆதரவாக நின்று போராடி யிருந்தனர். ஆனால், சோழர்களைப் போலவே அவர்களும் தோற்றோட வேண்டிய வந்தது. மூன்றாம் இராசேந்திரன் 1279வரை ஆண்டான். அவனுக்குக் குழந்தை இல்லை. அவனுடன் சோழ மரபும் மறைந்தது. சோணாடு பாண்டியப் பேரரசின் ஒரு மாகாணமாகிவிட்டது. பாண்டிய -ஹொய்சளப் போராட்டம் : கண்ணனூர்ப் போர் 1264 ஹொய்சள சோமேசுவரன் தன் தோல்விக்குப் பின் ஆர அமரத் தன் முழு வலிமையையும் திரட்டிக் கொண்டு பாண்டியன் மீது படையெடுத்து வந்தான். 1264-ல் கண்ணனூர் அருகில் கடும் போராட்டம் நிகழ்ந்தது. இப்போர் கிட்டத் தட்டப் பேரரசாக வளர்ந்து வந்த ஹெராய்சளருக்கு ஒரு பேரிடியாயிற்று. அவர்கள் படைத்தலைவர்கள் பலர் கொலைப்பட்டனர். படைகள் சிதைந்தன. பல களங் கண்ட அவர்கள் சிறந்த படைத் தலைவன் சிங்கணன் இப்போரிலேயே மாண்டான். ஹொய்சளரிடமிருந்து பாண்டியர் யானை குதிரைகளையும், நிதியங்களையும், படைக் கலங்களையும் களத்திலிருந்தே ஏராளமாகப் பெற்றனர். தவிரக் கண்ணனூரையும் தமிழகத்திலுள்ள தம் தென்மாகணத்தையும் ஹொய்சளர் இழந்தனர். அவற்றில் குவித்து வைத்திருந்த ஹொய்சளர் பெருஞ் செல்வக் குவையும் பாண்டியர் கைக்குட்பட்டது. அடுத்துப் பாண்டியருடன் நிகழ்த்திய மற்றொரு போரில் ஹொய்சள மன்னன் சோமேசுவரனும் உயிர் நீத்தான். நண்ணுதல் பிறரால் எண்ணுதற்கரிய கண்ணனூர்க் கொப்பத்தைக் கைக்கொண்டருளி என்று அவன் மெய்க்கீர்த்தி இப்போரைச் சுட்டுகிறது. பாண்டிய நாட்டு நெப்போலியன்: சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஐ ன் கல்வெட்டுக்கள் கிருஷ்ணையாறு வரையிலுள்ள எல்லாநாடுகளிலும் காணப்படுகின்றன. அவன் ஆட்சி வரலாற்றின் முழுவிவரங்களும் இன்னும் விளக்கம் அடையா விட்டாலும் அவன் அந்நூற்றாண்டில் தென்னாட்டின் ஒரு நெப்போலியனாக விளங்கினான் என்பதில் ஐயமில்லை. சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழரையும் வென்று ஹொய்சளரையும் வெல்வதற்கு முன்பே மேல்கரையிலுள்ள கேரள அரசன் வீரரவி உதய மார்த்தாண்டவர்மனைத் தன்னடிப்படுத்தி மலைநாடு முழுவதிலும் சுற்றி வீர உலா ஆற்றியிருந்தான். இலங்கைப் படையெடுப்பு: 1255 சோழரை வென்றபின் மீண்டும் வடக்கே ஹொய்சளரை எதிர்க்குமுன், சுந்தர பாண்டியன் 1255-ல் தெற்கே இலங்கை சென்று, அங்கும் வீர உலா வந்தான். இலங்கையில் இச்சமயம் இரண்டு அரசர் இருந்தனர். ஒருவன் போரில் மாண்டான். மற்ற இலங்கை மன்னனைப் பணிய வைத்துப் பெருந் திரளான யானைகளும் தந்தங்களும் முத்துக் குவைகளும் திறையாகப் பெற்றான். கோண மலையிலும் திரிகூடமலையிலும் பாண்டியர் கயற்கொடி பொறிக்கப் பட்டது. சேந்தமங்கல அழிவு: சோழருக்கும் ஹொய்சளருக்கும் பெருந் தொல்லை கொடுத்தவர்கள் கொங்கரும் மகதர் அல்லது வாணரும் பல்லவன் கோப்பெருஞ் சிங்கனுமே யாவர். தமிழகத் தில் சோழப் பேரரசர் ஆண்ட பகுதியும் ஹொய்சளர் ஆண்ட பகுதியும் இப்போது பாண்டியப் பேரரசின் ஆட்சிக்கு வந்து விட்டதால், அவர்களை அடக்குவது இப்போது அவன் இன்றி யமையாக் கடமையாய் விட்டது. ஆகவே அவன் முதலில் கொங் கரையும் மகதர் அல்லது வாணரையும் வென்றுவிட்டு, கோப் பெருஞ்சிங்கன் ஆண்ட பகுதிமீது படையெடுத்தான். கோப்பெருஞ்சிங்கன் அவனுக்குத் திறை செலுத்தித் தன் வலிமையைக் காத்துக் கொள்ள விரும்பினான். ஆனால், பாண்டியன் அவன் ஆற்றலடக்கியே அவனைத் தன்னடிப் படுத்துவதென்று துணிந்தான். பேரரசர்களும் அஞ்சும் ஆற்றல் படைத்த வல்லரச னாகிய அவனைப் பாண்டியன் பல போர்களில் வென்று அலைக் கழித்தான். இறுதியில் அவன் தலை நகராகிய சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டு அழிவுக்காளாக்கினான். அவன் பெருங் செல்வத்தை யும் படைவலிமையும் தனதாக்கிய பின்னரே, ஆட்சியைத் திரும்ப அவனிடம் ஒப்படைத்தான். திறை செலுத்தும் சிற்றரசனாக அவனை ஆக்கியபின் சிலநாள் திருவரங்கத்திலும், தில்லையிலும் கடவுட் பணிகள் செய்திருந்து, பின் மீண்டும் வடதிசை செல்ல எழுந்தான். வேந்தர் கண்டறியா விறல் திண்புரிசை சேந்தமங்மலச் செழும்பதி முற்றிப் பல்லவர் நடுங்கப் பலபோராடி நெல்விளை நாடும் நெடும்பெரும் பொன்னும் பருமயானையும் பரியும் முதலிய அரசுரிமைகைக் கொண்டு அரசு அவற்கு அளித்து என்று அவன் மெய்க்கீர்த்தி இதனைக் குறிக்கிறது. முடுகூர்ப்போர் : நெல்லூர் வீரமாமுடி விழா பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை இரண்டு நூற்றாண்டு களாகத் தென்னாட்டில் இரண்டு பேரரசுகளே இருந்தன. ஒன்று தென்னாடு கடந்த உலகப் பேரரசாகிய சோழப் பெரும் பேரரசு. மற்றது தென்னாட்டில் மீந்த பகுதியை ஆண்ட சாளுக்கியப் பேரரசு. ஆனால், பதின்மூன்றாம் நூற்றாண்டில் இரு பேரரசுகளும் சரிந்தன. தென்னாட்டின் ஒரே பேரரசாகப் பாண்டியப் பேரரசு வளர்ந்து வந்தது. அதற்குப் போட்டியாக வளரத்தக்க வல்லரசுகள் ஹொய்சள அரசு, யாதவ அரசு, காகதீய அரசு ஆகிய மூன்றுமே. அவற்றுள் ஹொய்சளரைப் பாண்டியர் வென்றபின், வடதிசை அரசுகள் யாவும் தென்கோடியில் எழும் அப்புதிய பேராற்றலைத் தடுக்கத் தம்மை வரிந்து கட்டிக் கொள்ளலாயின. தெலுங்குசோடர் தம் வரலாற்றிலே உச்ச நிலை அடைந் திருந்த காலம் இதுவே. திக்கண மாகவிஞனின் புரவலனான கண்டகோபாலன் ஆட்சியில் அது தெற்கே காஞ்சியையும் வடக்கே நெல்லூரையும் உட்கொண்டு ஒரு வல்லரசாய் இருந்தது. கோப்பெருஞ் சிங்கன் வெற்றிக்குப் பின் சடையவர்மன் சுந்தர பாண்டியன் எதிர்க்க முனைந்தது அவ்வல்லரசனையே. ஆனால், அப்போரில் கண்ட கோபாலனுக்கு வடதிசை வல்லரசர் பலரும் உதவியாயிருந்தனர். முடுகூர், நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது. மற்ற வடதிசை அரசர் உதவியை எதிர்பார்த்தே கண்ட கோபாலன் தன் ஆட்சிப் பகுதியில் வட எல்லையிலுள்ள அவ்விடம் வரை பின் வாங்கிக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஏனெனில் ,அப்போரில் காகதீய மரபின் புகழ்மிக்க பேரரசனான கணபதியும் வேறு பல தெலுங்க ரசரும் ஆரிய அரசரும் கண்ட கோபாலனுடன் சேர்ந்து போராடி னார்கள். இப்போரில் பாண்டியன் தென்னகமே அதிரும்படியான பெரு வெற்றியடைந்தான். போரில் ஈடுபட்டிருந்த ஒரு வாண அரசனை அவன் நாடு விட்டே துரத்தினான். மற்ற வடதிசையரசர்கள் பலரையும் பணியவைத்து, நெல்லூரிலே வீரமாமுடிவிழா (வீரா பிஷேகம்) நிகழ்த்தினான். சடையவர்மன் சுந்தர பாண்டியன் போர்களில் வீர பாண்டியன், விக்கிரம பாண்டியன், சடையவர்மன், குலசேகர பாண்டியன் ii ஆகிய பிற பாண்டியத் துணையரசர் அவனுக்கு உற்ற துணையா யிருந்தனர் என்று அறிகிறோம். கர்நூல், திராட்சாராமம் வரை பாண்டியப் பேரரசெல்லை இப்போரினால் விரிவுற்றது. ‘எம் மண்டலமும் கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவன்’ என்ற விருதுப் பெயரை இப்பாண்டியன் மேற் கொண்டான். பாண்டியர் ஈழப்படையெழுச்சி : காரிக்களப் போர் : 1284 சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பின் பேரரசு ஆண்டவன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் i (1268 - 1311) பிற்காலப் பாண்டியப் பேரரசருள் கடைசியானவன் இவனே. ‘கோனேரின்மைக் கொண்டான்’ ‘புவனேக வீரன்’ என்ற விருதுப் பெயர்கள் இவன் பேரரசு மாண்புக்கு இசைந்தவையே. பாண்டி நாட்டுக்கு இச்சமயம் வருகை தந்த மேலை நாட்டு யாத்திரிகன் மார்க்கோ போலோ, இஸ்லாமிய வரலாற்றறிஞன் வசப் ஆகியவர்கள் விரிவுரைகளால் இவனைப் பற்றியும், இவன் காலப் பாண்டி நாட்டு நிலைகள் பற்றியும் நாம் பல செய்திகளை விளக்கமாக அறிகிறோம். இப்பாண்டியன் தன் தம்பிமார் சிலருடன் ஆரியச் சக்கரவர்த்தி என்ற தம் தம் படைத்தலைவனுடனும் ஈழ நாட்டில் படையெடுத் தான். இலங்கைப் படைகள் காரிக்களப் போரிலும் மற்றும் பல போர்க்களங்களிலும் தோல்வியுற்றன. பாண்டியர் பல நகரங் களையும் கோட்டைகளையும் அழித்து விலையுயர்ந்த பொருள்கள் பலவற்றைக் கைப்பற்றிக் கொண்டு தம் நாட்டுக்கு மீண்டனர். அவர்கள் கைப்பற்றிய மற்ற எல்லா பொருள்களையும் விட அவற்றுடன் சேர்த்துக் கொண்டு செல்லப்பட்ட புத்தர் பல் சின்னத்தையே இலங்கை மக்கள் பெருத்த இழப்பாகக் கருதி வருந்தினர். பாண்டியரை எதிர்த்துப் போரிட்டு அதை மீட்பது அரிது என்று கருதிய இலங்கை வேந்தன் மூன்றாம் பராக்கிரமபாகு 1304-ல் பாண்டியனிடம் பணிந்து வேண்டி அதைப் பெற்றுக் கொண்டதாக இலங்கை வரலாறு கூறுகிறது. பாண்டியர் படை யெடுப்பின் போது மூன்றாம் பராக்கிரம பாகு இளவரசனாகவே இருந்தான். அச்சமயம் இலங்கை மன்னாக இருந்தவன் முதலாம் புவனேகபாகு என்பவனே. பாண்டியர் படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தியே யாழ்ப்பாணத்தில் இருந்து ஜெயவீர சிங்கை ஆரியன் என்ற பெயருடன் வட இலங்கையை ஆண்டான். அவன் தன்னாலிலேயே இலங்கை முழுவதும் ஒரே ஆட்சியாக்கி, புத்தப் பற்சின்னத்தைப் பாண்டியன் அளித்த சமயம் உரிமையிழந்த இளவரசனுக்கு முழு ஈழ ஆட்சியையும் அளித்தான் என்று அறிகிறோம். பாண்டியப் பேரரசின் வீழ்ச்சி : இஸ்லாமிய வரலாற்றாசிரியர் கூற்று மாறவர்மன் குலசேகர பாண்டியனுடன் பாண்டிய மரபு முடிவுறவில்லை. ஆனால், பாண்டியப் பேரரசு அவனுடன் முடிவுறு கிறது. இஸ்லாமிய வரலாற்றாசிரியர் கூறுகிறபடி மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு புதல்வர் இருந்தனர். அவர்களிடையே சுந்தரபாண்டியன் உரிமை மனைவியின் புதல்வனென்றும், வீர பாண்டியன் துணைப் பெண்டிர் புதல்வன் என்றும் கூறப்படுகிறது. வீரபாண்டியனையே குலசேகரன் இளவரசனாக் கியதால் சுந்தர பாண்டியன் கடுஞ்சினங் கொண்டு தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்ற முயன்றான். இதில் தோல்வி யெய்தவே அவன் நாமக்கல் சென்று அங்கிருந்து ஆண்டான். தலைச்சிக் குளங்கரைப் போர் இரண்டு பாண்டிய அரசுரிமையாளரும் மோதிக் கொண்ட போர் இது. இதில் வீரபாண்டியன் படுகாயம் உற்றான். உடலும் பனி நடுக்க முறத் தொடங்கிற்று. ஆகவே, அவன் இறந்தானென்று கருதிக் களத்தில் போட்டு விட்டு சுந்தரபாண்டியன் சென்று முடி சூட்டிக் கொண்டான். வீரபாண்டியன் மாளவில்லை. பிழைத்தெழுந்து மீண்டும் சுற்றினான். சுந்தரபாண்டியன் தந்தையைக் கொன்ற செய்தி கூறி மற்ற உறவினரைத் திரட்டினான். மீண்டும் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான். நாடிழந்த சுந்தர பாண்டியன் வட திசையில் தில்லியில் ஆண்ட பேரரசன் அலாவுதீனிடம் உதவி கோரினான். அவன் மாலிக்காபூர் என்ற படைத்தலைவனை அனுப்பினான். மாலிக்காபூர் தென்னாட்டின் அரசரான தேவகிரியாதவர் துவார சமுத்திரத்து ஹொய்சளர், பாண்டியர் ஆகிய எல்லா நாடுகளும் கடந்து இராமேசுவரம் வரை கொள்ளையடித்துச் சென்றான். மெய்ந்நிலை இஸ்லாமிய வரலாற்றாசிரியர் கூற்றில் ஓரளவு உண்மை உண்டு. ஆனால், முழுதும் உண்மையாய் இருக்க முடியாது அரசுரிமைப் போட்டி இருந்ததும் அதற்கான காரணங்களும் உண்மை நிகழ்ச்சியே. தலைச்சிக்குளங் கரைப்போர் முதலிய செய்திகளும் மெய்ந் நிகழ்ச்சிகளே. ஆனால், இரு பாண்டியர் களுள் ஒருவர் வடதிசையாண்ட அரசனை அழைத்ததினாலேயே மாலிக்காபூர் படை யெடுத்தான் என்பதோ, அது தலைச்சிக் குளங்கரைப் போர் முதலிய நிகழ்ச்சிகளுக்குப் பிற்பட்டு நடந்தது என்பதோ உண்மையாய் இருக்க முடியாது. ஏனெனில் மாலிக்கா பூர் படையெடுத்த ஆண்டு 1310. இரு பாண்டியரும் 1319 வரையும், சுந்தர பாண்டியன் 1342 வரையும் ஆண்டதாக அறிகிறோம். தவிர மாலிக்காபூர் பாண்டியர் உரிமையில் தலையிட்டதாகவே தெரிய வில்லை. வீரபாண்டியன் அச்சமயம் தான் ஆண்ட நகரமான வீர தவளப் பட்டணத்தை விட்டோடி விட்டான். அவன் பெரு நிதியமுழுதும் மாலிக்காபூர் கைப்பட்டது. சுந்தர பாண்டியனும் மதுரையைவிட்டு வெளியேறினாலும், அவன் உறவினரான பாண்டியர் ஒருங்கு சேர்ந்து மாலிக்காபூரை முறியடித்ததாகவும் அறிகிறோம். மாலிக்காபூர் படையெடுப்பு, கொள்ளையிட்ட செல்வக் குவை ஒன்றிலேயே வெற்றி கண்டது; அது அரசியல் துறையில் வெற்றிகாணவில்லை. கொள்ளைச் செல்வமும் வீர பாண்டிய னிடம் பெற்றவை தவிர மீந்தவையும் மன்னர் மக்கள் வாழ்வில் ஈடுபடுத்தாமல் கோயிலில் கொட்டிக் குவித்துவைத்தவை மட்டுமே. அது தென்னாட்டின் அரசர் சேமிப்பின் ஒரு பகுதியே என்பதை நோக்க அதன் அளவு நம்மை மலைக்க வைப்பதாய் இருக்கிறது. ஏனெனில் அதில் 612 யானைகள், 96000 மணங்கு பொன், 20,000 குதிரைகள், யானை குதிரைகள் மீது ஏற்றிச் செல்லப் பட்ட முத்து அணி மணிப் பெட்டிகள் பல்லாயிரம் ஆகியவை அடங்கியிருந்தன வென்று அக்கால வரலாற்றாசிரியர் குறித்துள்ளனர். திருவாங்கூர் நெப்போலியன் இரவிவர்மன் குலசேகரன் சுந்தரபாண்டியன் முஸ்லிம் ஆதரவு கோரியிருக்கக் கூடு மானால், அது பெரிதும் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பிற்பட்ட வேறு ஏதேனும் படையெடுப்பாளரிடமே ஆதல் கூடும். ஆனால், அதில் பயன் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. 1312 வரை சுந்தர பாண்டியன் மேலுரிமையை ஏற்றிருந்த திருவாங்கூர் அரசன் இரவிவர்மன் குலசேகரன் திடுமென வீர பாண்டி யனுடன் சேர்ந்து கொண்டு சுந்தர பாண்டியனை எதிர்க்கக் காண்கிறோம். இரவிவர்மன் குலசேகரன் முதல் முதல் அந்நாளைய திரு வாங்கருக்கு வடக்கேயிருந்த கொல்லத்தையும் பிற வடமலை யாள நாடுகளையும் வென்று கொல்லத்தில் தன்னைப் பேரரசனாக முடிசூட்டினான். அதன் பின் அவன் 1312-ல் சுந்தரபாண்டியனை வென்று சீகாழியில் சென்று மூவேந்தரும் வென்ற தமிழகப் பேரரசன் என்று திரும்பவும் முடிசூட்டிக் கொண்டான். இறுதியில் தெலுங்குச் சோடரையும் கீழடக்கிக் காஞ்சி புரத்தில் மூன்றாவது முடி சூட்டி விழா நடத்தினான். சிற்றரசனாயிருந்த திருவாங்கூர் அரசுமரபில் தமிழக மலை யாளப்பகுதி முழுதும் தெலுங்கு நாட்டின் ஒரு கூறும் வென்று சில ஆண்டுகளேனும் ஆண்ட பேரரசன் - திருவாங்கூர் நெப்போலியன் -அவன் ஒருவனே. ஆனால், அவன் ஆட்சி ஒரு சில ஆண்டுகளுக்கு மேல் நிலைக்க வில்லை. சுந்தர பாண்டியன் இப்போது காகதீய அரசன் இரண்டாம் பிரதாபருத்திரன் உதவி கோரினான். அவன் முப்பிடி நாயகன் என்ற தலைவனை அனுப்பி 1317-ல் இரவிவர்மன் குலசேகரனை முறிய டித்து அவனைப் பழைய திருவாங்கூர் எல்லைக்கே துரத் தினான். வீர பாண்டியனும் இத் தோல்வியால் ஆற்றலிழந்தான். சுந்தர பாண்டியன் ஆட்சியே உறுதிப்பட்டது. அப்பாத்துரையம் - 16 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) ஆய்வுகள் தென்னாட்டுப் போர்க்களங்கள் -1 ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 16 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 20+324 = 344 விலை : 430/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 344  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் முகப்புரை ... 3 1. வீரமரபு ... 8 2. வான விளிம்பு ... 19 3. அகல் உலகத் தொடர்பு ... 33 4. வடதிசைத் தொடர்புகள் ... 47 5. சங்ககாலப் போர்கள் - ஐ ... 64 6. சங்ககாலப் போர்கள் ஐஐ ... 86 7. சங்காலப் போர்கள் ஐஐஐ ... 109 8. பேரரசுப் போட்டி ... 141 9. சோழப் பெரும் பேரரசு ... 201