அப்பாத்துரையம் - 2 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) தமிழ் --தமிழர் --தமிழ்நாடு தென்மொழி தமிழன் உரிமை ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 2 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+336 = 352 விலை : 440/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலையிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும்கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் தென்மொழி 1. மறுமலர்ச்சி ... 3 2. நாடும் மொழியும் ... 22 3. மொழியின் இயல்பு ... 40 4. மொழியின் வளர்ச்சி ... 65 5. தமிழ் இலக்கணமும் மொழி நூலும் ... 96 6. தனித் தமிழ் ... 119 7. முத்தமிழ் ... 147 8. திருக்குறள் மாண்பு ... 181 9. மூவா மொழி ... 214 தமிழன் உரிமை 1. உரிமையும் கடமையும் ... 227 2. இன வாழ்வு ... 232 3. தமிழின வளர்ச்சி ... 238 4. மொழி உரிமை ... 243 5. வாழும் மொழியில் வாழா மொழி! ... 254 6. தமிழ்த் தேசியம் ... 286 7. கடல் கடந்த தமிழர் ... 293 8. தமிழகமும் தென்னாடும் ... 303 9. குடியாட்சி ... 314 10. பொருளியல் வாழ்வு ... 323 11. முடிவுரை ... 331 தென்மொழி முதற் பதிப்பு - 1955 இந்நூல் 2001 இல் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. மறுமலர்ச்சி தமிழர் வாழ்வில் இன்று மறுமலர்ச்சி மேலோங்கியுள்ளது. அது தமிழர் விடுதலைப் போராகக் குமுறுகிறது. தமிழக நாட்டுக் குரலாக முழங்குகிறது. தமிழர் நரம்புகளை முறுக்கேற்றி அதிரவைக்கிறது. நாட்டுரிமைப் பண்ணாகி, அஃது அவர்கள் உள்ளத்தில் களிவண்டாக முரல்கிறது. அவர்கள் வாழ்வென்னும் தோட்டத்தில் இன்னிசைக் குயிலாகப் பாடுகிறது. புதுமலர்ச்சிக் குரிய மறுமலர்ச்சித் தென்றலாக அஃது உயிர் மணம் வீசுகிறது. வாழ்க்கைப் பரப்பில் மேலோடிய மற்ற இயக்கங்களைப் போன்றதல்ல, மறுமலர்ச்சி இயக்கம்! அஃது இயக்கங்களாகிய அலைகளை இயக்கும் கடலின் உள் இயக்கம் போன்றது. கண் காணாது வந்து, அறிவு கடந்து அது மக்களை ஆட்கொள்கிறது. அணுவுக்குள்ளிருந்து எழும் அணு ஆற்றலைப் போன்றது அது. அணு ஆற்றலை அணு அறிய முடியாது. ஆனால், அதன் வயப்பட்டு அணு அருஞ் செயல்களாற்றுகிறது. அண்டத்தை ஆக்குகிறது; அழிக்கிறது; மாற்றியமைக்கிறது. தமிழக மறுமலர்ச்சி இத்தகைய அணு ஆற்றலாய், அலைகளின் உள்ளலையாய், தமிழர் வாழ்வின் ஆழ்தடத்திலிருந்து எழுகின்றது. தமிழர் உள்ளங்களின் கருவிலிருந்து அது மின் ஆற்றலாய் உயிர்த்து, தன் உள வலிமையால் தமிழனைப் புதுத் தமிழன் ஆக்கி வருகிறது. தமிழகத்தைப் புதிய தமிழகமாக்கத் துணிந்துள்ளது. மறுமலர்ச்சியின் திருவிளையாடல் மறுமலர்ச்சியின் திருவிளையாடல்களை நாம் தமிழகம் எங்கணும் காண்கிறோம். பள்ளிப் பயிற்சி முற்றுப் பெறாத பாலகனை அது பாவலனாக்குகிறது; நாவலனாக்குகிறது! இலக்கணம் பயிலாமலே அது இளைஞர் பலரை இலக்கியம் ஆக்கும் பணியில் ஊக்குகின்றது. தரத்தில் உயர்ந்த பழைய எழுத்தாளர் நாண, அது தன் வரத்தால் புது எழுத்தாளரைப் படைத்து உருவாக்குகின்றது. பிறமொழி ஆண்ட மேடைகளில் அது தமிழின் ஆட்சி ஏற்றுகிறது. ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் கருத்தளித்து, அஃது அவர்களை மேடை அதிரப் பேசவைக்கிறது. ஆர்வம் மேடை கடந்து மக்கள் வெள்ளத்தில் பாய்ந்து சுழித்தோடுகின்றது. இந்த ஆர்வத்தை எப்படி அணைகட்டி உருப்படுத்துவது? எப்படிப் பயன்படுத்துவது? இவற்றின் வகை காணாமல் திகைப்பவர் பலர். இவ்வார்வத்தைக் கண்டு மிரளுபவர்கூட உண்டு. தவிர, மறுமலர்ச்சியில் எக்களிக்கும் மாணவருலகைப் பார்த்து, மகிழ்ந்து இறும்பூது எய்தும் ஆசிரியரும் உண்டு. அது கண்டு கருத்தழிபவரும் இருக்கின்றனர். கருத்தழிந்து, ‘இஃது என்ன காலத்தின் கோலம்? என்று அங்கலாய்ப்பவரும் உண்டு. தவிர, சுழித்தோடும் மறுமலர்ச்சி வெள்ளத்தில் மிதப்ப வரிடையேகூட, அதன் தன்மையும் திசையும் அறியாமல், திகைத்துத் திண்டாடு பவரையும் காணலாம். மறுமலர்ச்சிக் காலத்திலும், தாமரைக் குளத்தின் தவளை களாக, அந்நறுந்தேனின் சுவையறியாதவர் சிலர் உள்ளனர். அவர்களே அதை மதியாதவர்; அதில் மகிழாதவர். ஆனால், அதைக் கண்டு அஞ்சுபவர்; அதன் தன்மை அறியாதவர்! அதைக் கண்டு மிரளுபவர், திகைப்பவர், அதன் இயல்பு உணராதவர்! தவிர அதன் பாய்ச்சலுக்கு எதிர்ப்பாய்ச்சலிட எண்ணுபவர், அதன் இனிய பயனையும், எல்லையற்ற ஆற்றலையும் எண்ணிப் பாராதவர். ஏனெனில், அஃது இனத்தில் பிறந்தவர்க்கும், இனத்துடன் தொடர்பு கொண்டவர்க்கும் ஒருங்கே எழில் வாழ்வளிப்பது. இன வாழ்வை வளப்படுத்தி, மனித இனத்தின் வாழ்வையே வளர்க்க வல்லது அது! பாரதி கண்ட கனவு மறுமலர்ச்சி கருவுயிர்த்து, மின்னொளியாக இருந்த காலத்தவர் கவிஞர் பாரதியார். ஆனால், அவர் இம் மறு மலர்ச்சியை முழு உருவத்திலே கனவு கண்டார். அதை எப்படிப் பயன்படுத்துதல் வேண்டுமென்றும் அவர் மறுமலர்ச்சி யார்வம் பொங்கக் கவிதை மொழியிலே நமக்குக் கட்டுரைத்துள்ளார். ‘இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே இயந்திரங்கள் வகுத்திடுவீரே! கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே!’ என்று அவர் நமக்குக் கட்டளையிடுகிறார். வேறு சில சமயம் அவர் தம்மையுமறியாமல் மறுமலர்ச்சி யார்வத்தில் நம்முடன் இழைந்துவிடுகிறார். ‘காவியம் செய்வோம்-நல்ல காடு வளர்ப்போம்! கலை வளர்ப்போம்-கொல்லர் உலை வளர்ப்போம்! ஓவியம் செய்வோம்! என்று அவர் வெறியாட்டயர்கிறார். பாரதிதாசன் நனவுத் திட்டம் பாரதி கண்ட கனவுகள் இன்று நனவாகிவருகின்றன. மறுமலர்ச்சி வேர்கொண்டுவிட்டது என்பதற்கு இது ஒரு சான்று. ஆனால், கனவெல்லையை நாம் இன்னும் எட்டவில்லை; அணுகவில்லை. அஃது இன்னும் தொலை தூரத்திலேயே இருக்கிறது. தவிர, அவர் கனவுகள் ஆர்வக் கனவுகளாகவே நின்றன. நனவுருவில் பயன்படத்தக்க கனவுத் திட்டங்களாக அவை உருப்பெறவில்லை. அத்தகைய திட்டத்துக்கு அடிகோலியவர், அடிகோலி வருபவர், மறுமலர்ச்சியின் நிறை கவிஞர் பாரதிதாசனே யாவார். அவர் அமைச்சர், ஆசிரியர், வணிகர், எழுத்தாளர் ஆகிய அனைவரையும் அத்துறையில் ஒத்துழைக்கும்படி அறைகூவி அழைக்கின்றார். அதற்குரிய தகுதிகளை அவர் அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறார். ‘தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்! என்ற தமிழ்க் கனவை முதல் முதல் காணும் தமிழ்க் கவிஞர் அவரே. முதன் முதல் துணிந்து காணும் தமிழர்கூட அவரே என்னலாம்! ‘கடல்போலும் எழுக!கடல் முழக்கம்போல் கழறிடுக, ‘தமிழ்வாழ்’ கென்று! கெடல்எங்கே தமிழின்நலம், அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’ என்று அவர் கட்டளையுமிட்டுப் போர் முரசும் கொட்டுகிறார். ‘தமிழ்ப் பற்று, தமிழார்வம் போதா, தமிழறிவும் வேண்டும். புதிய தமிழகத்தை ஆக்க’ என்று வீறிடுகின்றார், கவிமத வேழனார்! ஆம்; மறுமலர்ச்சியார்வத்தில் மிதந்து, அதன் போக்கில் இழைந்து சென்றால் போதாது! அதன் தன்மையையும் இயல்பையும் காணுதல் வேண்டும். அதன் முழு ஆற்றலும் பயனும் கண்டு திட்டம் வகுத்தல் வேண்டும். ஏனெனில், மறுமலர்ச்சியின் ஆற்றலும் பயனும் உணர்ந்தால்தான் வருங்காலத்துக்குரிய நம் பொறுப்பை நாம் சரிவர ஆற்ற முடியும். இதற்குத் தமிழகச் சிற்பிகளாக மட்டும் நாம் இருந்தால் போதாது. தமிழகச் சிற்பிகளின் மரபில் வந்த தமிழகச் சிற்பிகளாதல் வேண்டும். நம் முன்னோர்கள் வகுத்த பண்பாட்டின் அடிப்படையை விட்டுப் புதிய கட்டடம் எழுப்புவது பேதைமை. முன்னோர் பண்பாட்டின் அடிப்படை மீது, அதன் அனுபவ அறிவின் உதவி கொண்டு, கட்டடம் எழுப்புவதே நம் சீரிய வாழ்வை மேலும் சீரியதாக்க, நீடித்த உயிராற்றலை மேலும் நீடித்ததாக்கச் சிறந்த வழி ஆகும். மறுமலர்ச்சியின் தன்மை மறுமலர்ச்சியின் தன்மை அறியாதவர் அதைப் பல வாறாகக் கண்டு மிரளுவதுண்டு. தவிர, தமிழக மறுமலர்ச்சிக் குரிய தனிச்சிறப்புகள் பலப்பல. தமிழின வரலாற்றையும் தமிழ் வரலாற்றையும் தமிழ்ப் பண்பு வாயிலாகக் காணாதவர் அதனை முற்றிலும் பயன்படுத்த முடியாமல், தாமும் இடர்ப்படுவர், பிறரையும் இடர்ப்படுத்துவர். மறுமலர்ச்சி புதுமை நாடுவது. அது பழைமையின் எல்லையில் நில்லாது. ஆனால், மறுமலர்ச்சி இன வாழ்வின் உள்ளியக்கம். உள்ளாற்றலால் எழுவது. அது நாடும் புதுமை அகப்புதுமை; புறப்புதுமை யன்று. அயல்மொழி, அயல் பண்பு அதை ஊக்கலாம். அதை ஆக்காது. அதற்கு உதவலாம். அதை வளர்க்காது. அதுமட்டுமன்று. ஊக்கும் அளவில்கூட, அது இனத்தொடர்புடைய, இனப் பண்போடிணைந்த இயல்புடைய அயற்பண்பாய் இருத்தல் வேண்டும்; உயிரோடிணைந்த உயிர்மருந்தாய் உதவல்வேண்டும். அஃது இனத்துக்குப் புதுமையாய் இருத்தல் சால்புடையதே. ஆனால், அதேசமயம் அஃது இனக் குறைபாடுகளைப் பெருக்குவதாய் அமையக் கூடாது; இனத்தருகே பிறந்த இனநோயாய் இயங்கி விடக்கூடாது. அக்குறை நிரப்புவதாய், குறையகற்றுவதாய், கூடுமானால் இனத்தின் வளம் பெருக்குவதாய் அஃது அமைதல் வேண்டும். அது நோய் அகற்றுவது மட்டுமன்றி, நோய் வாராமல் தடுத்தல் வேண்டும். நோய் வாராது தடுப்பதுடன், நோயற்ற நல் வாழ்வும் ஊக்கமும் பெருக்கும் நன்மருந்தாய், அரு மருந்தாய் அது விளங்குதல் வேண்டும்! செடியின் வளர்ச்சி பெரிதும் வித்தின் இயல்பையும் நிலத்தின் இயல்பையுமே பொறுத்தது. அதுபோல இனத்தின் வருங்கால வளர்ச்சி மிகப் பெரும்பாலும் இனத்தின் பண்பையும் இனச் சூழலையுமே அடிப்படையாகக் கொண்டதாய் அமையும். அயற் பண்புகள் வான மழையையும் தட்ப வெப்பச் சூழலையும், உரத்தையும் போன்றவை. மட்டான அளவில், வான மழை வளம் பெருக்கும். அதில் மிக்க அளவிலும், குறைந்த அளவிலும் அழிவு செய்யும். உரத்திலும் பண்பும் அளவும் ஒத்தால் அது வளம் பெருக்கும். அதில் மிகுதியோ குறைபாடோ ஏற்பட்டால் தீங்கு நேரும். அயற் பண்புகளும் இதுபோலவே இனப் பண்புடனும், இனப் பண்பின் அளவுடனும் இசைந்திருந்தால் மட்டுமே ஊக்கம் அளிக்கும். அன்றேல், அழிவு தரும். உயிரினங்களில் மலர்ச்சி, மறுமலர்ச்சி கீழின உயிர்களில் நாம் உயிர்த்தன்மையை மட்டுமே காணக்கூடும். மலர்ச்சியைக் காணமாட்டோம். ஏனெனில், அவை புத்துயிர்கள். நீடித்த வளர்ச்சி அனுபவத்தால், இன வாழ்வின் பழைமையால் சேமிக்கப்படும் பண்புரம், பண்புச் செல்வம் அவற்றுக்குக் கிடையாது. ஆனால், உயிரின் படி உயர உயர, ஒவ்வோர் உயிரின் வாழ்விலும் கரு உயிர்ப் பருவம் அல்லது முதிரா இளமை, மலர்ச்சிப் பருவம் அல்லது கட்டிளமை என்ற இரு பகுதிகளைக் காண்கிறோம். தவளை, வண்டு ஆகிய உயிர்களில் இப்பருவ மாறுதல்கள் புரட்சிகரமான உடல் மாறுதல், உரு மாறுதல்களுடன் நடைபெறுகின்றன. தவளை, வண்டு ஆகிய இரண்டின் மூல மரபும் புழுவினமே. இளமையில் இரண்டும் புழுக்கள் போலவே நெளிகின்றன. ஆனால், கட்டிளமைப் பருவத்தில் தவளை தவளையாகத் தத்தி நடைபோடத் தொடங்குகிறது. வண்டு ‘அறுகாற் சிறு பறவை யாக’ச் சிறகடிக்கத் தொடங்குகிறது. உயிரின் படி உச்ச உயர்வை அணுகுந்தோறும், உடல் மாறுதல்கள் முற்றிலும் கருப்பைக்குள்ளேயே நிகழ்கின்றன. மணிவாசகரின் வாசகப்படி, முன்னை உயிர்மரபை மெய்ப்பித்து, ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி எல்லாப் பிறப்பும்’ கரு வளர்ச்சியின் உருவிலே நிகழ்கின்றன. அதனை அடுத்து இனத்தின் உடலியக்கப் பண்புகளும் உளப் பண்புகளும் வளருகிற, வளர்க்கப்படுகின்ற பருவமாக முதிரா இளமைப் பருவம் அமைகிறது. இப் பருவத்தில் உயிரினம் பெரிதும் இயற்கை யாகவே வளர்கிறது. ஆனால், இந்த மரபு வளர்ச்சியுடன் வளர்ச்சியாக, இனத்தின் பழைய தலைமுறை தான் புதிதாகப் பெற்ற நற்பண்புகளைப் புதிய தலைமுறைக்கு ஊட்டுகிறது. பழைய தலைமுறை இவ்வாறு புதிய தலைமுறையை வளர்க்க, ‘பயிற்றுவிக்க,’ உருவாக்கிப் பயன்படுத்தும் பண்புகளே கல்விமுறைகள், கலைகள், அறிவியல்கள். இவை இனத்தின் வளர்ச்சியைப் புதிய உயிர்க்கு, புதிய தலைமுறைக்குத் தொகுத்தளிக்கும் கருவிகளேயாகும். தவிர, உயிரின வளர்ச்சி உயர் படி நோக்கிச் செல்லுந்தோறும், ஒரு தலைமுறைக்குள்ளேயே இனமலர்ச்சி அலைகள் பலவாதல் காணலாம். உடல் வளர்ச்சி அலை, உணர்வு வளர்ச்சி அலை, அறிவு வளர்ச்சி அலை என மறுமலர்ச்சி அலைகள் பல்கிப் பெருகுகின்றன. இம் மூன்றலைகளையுமே நாம் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கட்டிளமை கடந்த முதிர்ச்சிப் பருவம் என வகுத்துணர்கிறோம். மலர்ச்சியும் மறுமலர்ச்சியும் உயிர்களுள் பல படிகள் இருப்பது போலவே மனித உலகின் இனங்களிலும் பல படிகள் உண்டு. இந்தப் படிகள் அவ்வவ்வினங்களின் நீடித்த பழைமைச் செல்வம் அல்லது பண்பாட்டைப் பொறுத்தது. பழைமையின பண்பாட்டு வளமற்ற இனங்களில் நாம் மலர்ச்சியையே காண முடியாது. இன்றைய உலகின் மிகப் பல இனங்கள் இத்தன்மையவை ஆகும். இவற்றினும் ஒரு படி உயர்ந்த இலத்தீன், கிரேக்க, சமற்கிருத மொழியினங்களில் நாம் மலர்ச்சியைக் காண்கிறோம்-ஒரே ஒரு மலர்ச்சியைக் காண்கிறோம். இலத்தீன் வாழ்வில் அக°ட° காலமாகவும், கிரேக்க வாழ்வில் பெரிக்லிக்° காலமாகவும், சமற்கிருத மொழிவாழ்வில் காளிதாசன் காலமாகவும் அது காட்சியளிக்கிறது. இப் பண்டைச் செம்மொழிகளுக்கு ஒருபடி மேற்பட்ட வளர்ச்சியுடைய தற்கால மேலை உலக மொழிகள் ஆங்கிலம் பிரஞ்சு ஆகிய இரண்டும் மட்டுமே. இவற்றில் நாம் ஒரு முதல் மலர்ச்சியை மட்டுமன்றி, இரண்டாவதாக ஒரு மறுமலர்ச்சியையும் காண்கிறோம். முன்னதே சிறப்பு முறையில் மறுமலர்ச்சிக் காலம் என்று வழங்கப்படுகிற எலிசபெத் அரசி காலம். பின்னது ஃபிரான்சின் பிரஞ்சுப் புரட்சிக் காலமும், இங்கிலாந்தின் விக்டோரியா அரசி காலமும் ஆகும். மேலை நாடுகளின் வாழ்வுகள் தொடக்கத்தில் இலத்தீன் வாழ்வின் நிழல்களாகவே இருந்தன. நிழலாகத் தொடங்கிய வாழ்வின் முதல் மலர்ச்சி மறுமலர்ச்சியாகவே அமைந்தது. ஆனால், அது கிரேக்க மலர்ச்சியின் தூண்டுதலால் நிகழ்ந்த அரை மலர்ச்சியே. ஆகவே, முழுநிறை வாய்மை கூறுவதனால், இரண்டாவது மறுமலர்ச்சிப் பருவங்கூட காலங்கடந்து மலர்ந்த ஒரே இனமலர்ச்சி என்று கூறத் தகும். எனவே, மாண்ட பிற பண்டை நாகரிகங்களின் தூண்டுதலால் அவை இரண்டு மறுமலர்ச்சிகள் கண்டனவாயி னும், இரண்டும் ஒரே மலர்ச்சிப் பருவத்தின் இரண்டு முதிரா நிலைகளே என்னலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மலர்ச்சி அல்லது மறுமலர்ச்சி இயக்கங்களைக் கண்ட நீடித்த பழைமை வாழ்வுடைய உலக மொழி இனங்கள் மூன்றே மூன்றுதான்-சீனம், பாரசீகம், தமிழகம். பாரசீகத்தின் மறுமலர்ச்சிகள் அப் பழம்பெரு நாகரிகத்தின் மாள்வைப் பல தடவை ஒத்திப்போட்டன. ஆனால், அம் மாள்வைத் தடுக்கவில்லை. சீனத்தின் மறுமலர்ச்சிகள் அப் பேரினத்தின் வாழ்வை நீட்டித்தன. புது வாழ்வைத் தரவில்லை. தமிழக மறுமலர்ச்சிகள் சில காலம் பாரசீக மறுமலர்ச்சிகள் போல மாள்வை எதிர்த்துப் போராடின. சிலகாலம் சீன மறுமலர்ச்சிகள் போல வாழ்வை நீட்டித்தன. ஆனால், இன்று அஃது இரண்டு வகைகளையும் தாண்டிப் புதுவாழ்வு தரத் தொடங்கியுள்ளது! இனமரபு மொழியினங்கள் எல்லாவற்றையும் தாண்டிப் பழை மையையும், பழைமைச் செல்வமாகிய பண்பாட்டையும், பழைமையின் உயிர்வளமாகிய உயிராற்றலையும் இன்றும், இன்னும் தளராது கொண்டியங்கும் இனம் தமிழினம் ஒன்றே! அது வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு, வரலாற்றுக் காலத்தினூடாக, இன்றளவும் கண்ட, கண்டு வருகிற மலர்ச்சிகளும், மறுமலர்ச்சிகளும் பல. வரலாற்றில் தெளிவாகக் காணும் அளவிலேயே அது மூன்று மலர்ச்சிகளைக் கடந் துள்ளது. அவையே சங்க இலக்கியக் காலம், தேவார காலம், கம்பர் காலம் என்பன. பாரதி, பாரதிதாசன் காலமாகிய இன்றைய அணிமை ஊழியிலும் அது புதிய மறுமலர்ச்சியில் நம்மை மிதக்க வைக்கிறது. தமிழகத்தின் நான்காம் மறுமலர்ச்சியே நாம் இன்று காணும் இப் புதுமலர்ச்சி. இப் புதுமலர்ச்சி புத்தம் புதிய இயக்கம்தான்! ஆனால், அதன் வேர்கள் உலகின் புதுமை எல்லை தாண்டி, வரலாறு தாண்டி, வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பழைமையின் கருவில் ஆழ்ந்து ஊடுருவிச் செல்வன. அதன் பண்பாட்டுச் செல்வம் ஒரு மொழி, ஒரு இனம், ஒரு நாட்டின் பண்பாட்டுச் செல்வம் கடந்தது. மனித இன நாகரிகத்தின் ஒரு முழுநிறை பண்புச் செல்வம் அது. உலகப் புதுமை வரலாற்றையும் பண்பையும், தமிழகப் பழைமை வரலாற்றையும் பண்பையும் உணராவிட்டால், நாம் மறுமலர்ச் சியில் மிதப்பவர்களாக மட்டுமே இருப்போம்! அதை இயக்க, அதைப் பயன்படுத்தி இனம் வளர்க்க இயலாதவர்களாய் விடுவோம்! மேலும், எவ்வளவு வளமான பேரினமும் இனமரபு பேணாவிட்டால் அழியும். வரலாற்றில் வாழ்ந்து வளமிழந்த இனங்களின் அடிக்சுவடுகள் இவ்வுண்மையைக் காட்ட வல்லன. எகிப்து, பினீஷியா, சால்டியா, கிரீ°, உரோம் போன்ற மாண்ட இனங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் நாம்! அவர்கள் வரலாற்றுடன் நம் வரலாறு தொடர்பு கொள்ளாதிருக்க வேண்டுமானால், நாம் ‘தன்னறிவு’ப் பண்பில் முன்னேறுதல் வேண்டும். அதாவது நம் இன வரலாற்றறிவும் இனப் பண்பறிவும் உடையவர்களாக நாம் திகழ்தல் வேண்டும். வளர்ந்த வகை: முதல் மறுமலர்ச்சி ஊழி தமிழர் மலர்ச்சி இயக்கங்கள் வளர்ந்த வகை யாது? மலர்ச்சி, மறுமலர்ச்சி இயக்கங்களினூடாகத் தமிழன் வளர்ந்த வகை என்ன? தமிழ் முத்தமிழாகப் பொங்கிப் பொலிவுற்ற காலம் ஒன்று உண்டு. அது குடியாட்சியும் குடியரசும் ஓங்கிய காலம். வரலாறும் வரலாறு கடந்த ஆராய்ச்சிகளும் இன்னும் சென்று எட்டாத, தொலைவிலிருந்தே தன்னூகமாக காண்கின்ற காலம் அது. கனவு சென்றெட்டாத அதன் வளத்தை-ஆராய்ச்சி இன்னும் அகழ்ந்து காணாத அதன் புத்தார்வத்தை-நனவாகவே காண்போம் என்ற நம்பிக்கை உறுதி இன்று நம்மிடையே எழுந்துள்ளது. இந் நம்பிக்கையே நம் மறுமலர்ச்சியின் வித்து. புது மலர்ச்சியின் புது முளையும் அதிலேயே அடங்கிக் கிடக்கின்றது என்னலாம். இந் நம்பிக்கை நமக்கு எவ்வாறு ஏற்பட்டது? அது திடுமெனத் தோன்றிய மின்னொளியா? அன்று! அயலினப் பண்புகளின் தூண்டுதலா? அன்று. முழு அளவில் அன்று! அப்படியாயின் அது எவ்வாறு தோன்றி வளர்ந்தது? தொன்று தொட்டு நாம் தமிழரிடையே மொழியார்வத்தைக் காண்கிறோம். தீந்தமிழ், திருவார்ந்த தமிழ், தெய்வத் தமிழ் என்று தமிழர் அதைப் போற்றாத நாள் கிடையாது. ஆனால், இன்றைய உலக மக்களின் மொழியார்வம் சில சமயம் மொழியுடன் நின்றுவிடுகிறது. பண்டைத் தமிழர் மொழியார்வம் அவ்வாறு நின்றுவிடவில்லை. மொழி தன் சிற்றெல்லையாகிய வீட்டில், குடும்ப வாழ்வில், காதலறம் வளர்த்தது. அகல் எல்லையாகிய நாட்டில், அது வீர அறம் அதாவது மறம் பேணிற்று. தமிழர் நீண்டகாலம் இவற்றில் ஈடுபட்டு வீறமைதியுடன் வாழ்ந்தனர். இந்நிலையைச் சங்க இலக்கிய ஏடுகள் நமக்குத் தெளியக் காட்டுகின்றன. நாம் அறிந்தவரை, அறிந்த அளவில், தமிழகத்தின் முதல் மறுமலர்ச்சி ஊழி இதுவே. முதல் மறுமலர்ச்சி யூழியைப் பின்பற்றி, புதிய எழுச்சிகள் தோன்றித் தமிழரை விரைவில் தம்வயப்படுத்தின. அரசியல் ஊழி வாணிகமும் தொழிலும் வளர்ந்தன. தொழிற் பாகுபாடும் தொழிற் கூட்டுறவுக் கட்டுப்பாடுகளும் பெருக்கமுற்றன. கடலக வாழ்வு பொலிவுற்றது. தமிழர் கிளர்ந்தெழுந்து அரசுகள், பேரரசுகள் அமைத்தார்கள். கடலக ஆட்சியும் கடற் பேரரசுகளும், நிலங்கடந்த கடல்கடந்த குடியேற்ற நாடுகளும் நாட்டினர். தமிழ் மொழி இவற்றைப் பின்பற்றிப் புதுப் பரணிகள் பாடியது. பேரரசுக்குரிய புதிய பெருங்காப்பியங்கள் எழுந்தன. பேரரசின் அகல் விரிவும் வீறும், பாரித்த பண்புகளும் அப்பெருங்காப்பியங் களில் இடம்பெற்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய ஐம்பெருங் காப்பியங்களும் நிகண்டுகளும், நுணுக்க விரிவான புதிய யாப்பியல், அணியியல் நூல்களும் இக்காலத்தன. காலத்தால் பிந்தினாலும் மூவருலாவும், கலிங்கத்துப் பரணியும் பண்பு வகையால் இவ்வரிசையுட்பட்டவையேயாகும். சமய ஊழி : தெய்விகப் பேரரசுகள் அரசியலுணர்ச்சி வரவரத் தளர்ந்தது. மன்னர், பேரரசர் கைகள் அயர்வுற்றன. இக்காலத்திலே முந்திய வாழ்வின் சமநிலை மீறி, சமயஉணர்ச்சி மீக்கூரலாயிற்று. நனவில் கிட்டாத பேரரச வாழ்வைத் தமிழ்மக்கள் கனவில் கட்டமைக்க முனைந்தார்கள். வாழ்க்கையில் காணமுடியாத பேரரசன் ஆற்றலை அவர்கள் கற்பனையில் படைத்து உருவாக்கினார்கள். இதன் பயனாக, பேரரசனுடன் பேரரசன் மோதிக்கொள்வது போல, முழு முதற்கடவுளுடன் முழு முதற் கடவுள் மோதிக்கொள்ள நேர்ந்தது. சிற்றரசரை வென்று பேரரசர் தம் ஆட்சி பரப்பியதுபோல, சிறு தெய்வங்களைக் கீழடக்கி, முழு முதற் கடவுளின் ஆற்றல் பெருகிற்று. இத்தகைய தெய்விகப் பேரரசைப் பின்பற்றித் தமிழில் பாசுரங்கள் தோன்றின. இவை தேவார திருவாசகங்கள், திருக்கயிலாய உலா, திருவாய்மொழி முதலிய ஏடுகளாகக் காட்சி தந்தன. இவற்றைப் பின்பற்றிப் புதிய ‘பெருங்காப்பிய மாதிரி’கள் உருவாயின. தமிழில் ஐம்பெருங்காப்பியங்களும், ஐம்பெருந் துணைக் காப்பியங்களும் தோன்றித் தொகைப்படுத்தப்பட்டபின், இவை தோன்றின. எனவேதான் இன்றளவும், அவை பெருங் காப்பியங்களாக வகுக்கப்படாத பெரு நூல்களாக, காப்பிய இலக்கணங் கடந்த உருவிலாக் காப்பியங்களாக இயல்கின்றன. பிற்காலக் கோயில்களைப் போல அவை பாரிய யானையுரு வுடையவை. ஆனால், யானையின் மொத்த அழகினிடமாக, அவற்றுக்குச் சிற்றுறுப்பின் அழகே இருந்தது. அமராவதியிலோ, கடல் மல்லையிலோ, சிற்றன்ன வாசலிலோ சங்க இலக்கியக்கால நூல்களிலோ காணப்படும் வடிவமைதியை அவற்றில் நாம் காணமுடியாது. கற்பனைப் பேரரசின் இப் பெருங் காப்பியங்கள் கற்பனைப் பெருங் காப்பியங்களாகவே இயன்றன. காவியக் கட்டுக்கோப்பில் அவை ‘மாதிரி’களாய் அமைந்தது போலவே, பொருளிலும் கற்பனைத் திறம் வாய்ந்த ‘மாதிரி உருக்’களாகவே இழைந்தன. அவற்றின் வாழ்க்கை, கற்பனை வாழ்க்கை. அவற்றின் போர்கள் கற்பனைப் போர்கள். அவற்றின் காதலும் கற்பனைக் காதலே! அணிகள், சந்தங்கள், கருத்துகள் எல்லாமே கற்பனை வானில் தவழ்ந்து நெளிந்தன! காப்பியப் பண்பிலடங்காத இத்தகு கற்பனைக் காப்பியங்களே சேக்கிழார் பெரிய புராணம், கம்பர் இராமாயணம், வில்லிப்புத் தூரார் பாரதம் ஆகியவை. தமிழ்ப் புராணங்கள் சமற்கிருதப் புராணங்களைப் போல முற்றிலும் கட்டுக்கோப்பற்றவை யல்ல. அதே சமயம் அவை பெருங்காப்பியங்களும் அல்ல. அவை உண்மையில் ‘பெருங் காப்பிய மாதிரி’களைப் பின்தொடர்ந்து வந்த ‘துணைப் பெருங்காப்பிய மாதிரி’களே. சமற்கிருத புராண இதிகாசங்களைப் பார்க்க, அவை காப்பியக் கோப்பு மிக்கன. பண்டைத் தமிழ்க் காப்பியங்களை நோக்க, அவை உருவற்றவை. தளர்ச்சிப் பருவம் கம்பர் காலத்துக்குப் பின் மொழிவாழ்வு மீண்டும் மாறுதலுற்றது. அரசியலெழுச்சி துவண்டது. சமயக் கிளர்ச்சிகள் சிதறின. நனவு அகன்றது. கனவும் குலைந்தது. தமிழர் சிதறிய சில்லறை உணர்ச்சிகளுக்கு ஆளாயினர். தமிழும் இந்நிலையைப் பின்பற்றியது. ஆனால், இப்போதும் அதன் உயிர்ப்பு முற்றிலும் அடங்கவில்லை. அது பலவகைச் செப்படிவித்தைகள் பயின்றது. சில நல்ல பயிற்சிகளும் மேற்கொண்டது. மடக்கணி, சித்திர அணிகளில் சிலர் விளையாடினர். அதேசமயம் சிலர் குறவஞ்சியும் பள்ளும் பாடினர். அந்தாதிகளும் யமகமும் சிலேடைகளும் நெளிந்தன. அதே சமயம் சமய விளக்கங்கள், பாடல் தொகுப்புகள், திரட்டுகள் ஏற்பட்டன. தமிழர் சமய அறிவின் கருவூலங்களான சித்தாந்த சாத்திரங்கள் இக்காலத்தவையே. தவிர பழைய ஏடுகளுக்கான புதிய விளக்க உரைகள் இக் காலத்தில் எழுந்தன. அவை பழைய மரபுகளை நமக்கு விடாது பேணித் தந்தன. அத்துடன் அவையே புதிய உரைநடைச் செல்வத்துக்கும் அடிகோலின. இக் காலத்தில் பெரிதும் தழைத்த ஏடுகள் தல புராணங்களே. ஆனால், அவற்றின் அருகே சித்தர் பாடல்கள் புதிய சிந்து பாடின. நாகரிக ஒளி இப்போது தெற்கே தளர்ந்தது. வடக்கே சிறிது சிறிது நிழலாடத் தொடங்கிற்று. ஆனால், வடக்கேயும் அது நெடிது தங்கவில்லை. மேற்காகச் சாய்ந்தது. கிழக்கே பிறங்கிய கதிரவனொளி மேற்கே தன் அழல்திறம் காட்டத் தொடங்கிற்று. அதன் நேய ஒளி வட முனையின் மாய ஒளியுடன் மயங்கிற்று. அதே சமயம் கிழக்கே, மறுபடியும் தென்சாய்வாக, புதிய தாரகை எழுந்துள்ளது. அதைப் பின்பற்றி, புதிய முழு ஒளியாக, புத்துயிர்க் கதிரவனாக, புதுவாழ்வின் பொன்னிழைகள் கால்வீசத் தொடங்கி யுள்ளன. தமிழகத்தில் புது மலர்ச்சியின் தொடக்கமாகிய மறு மலர்ச்சி இதுவே. புத்தம் புது மலர்ச்சி தமிழில் இப்போது புதுக் கவிதை பூத்துள்ளது. புத்தறி வியக்கங்கள் பொங்கல் வாழ்வளித்துவருகின்றன. புதிய உரைநடைத் தென்றல் தாலாட்ட, புத்துயிர் வாழ்வு மெல்லத் துயிலெழுந்து மழலையாடத் தொடங்கியுள்ளது. மறுமலர்ச்சி இதழ் அவிழ்த்துள்ளது. புதுமலர்ச்சியின் கருவில் தேனூறத் தொடங்கியுள்ளது. வீர வாழ்வு, காதல் இன்பம், அரசியல் வீறு, சமய ஆட்சி, ஒவ்வோர் உணர்ச்சியும் இங்ஙனம் தமிழகத்தை ஒவ்வொரு காலம் ஒவ்வொரு பருவத்தில் ஆட்கொண்டுள்ளது. உணர்ச்சியின் பின் உணர்ச்சியாக, அலைகள் போல அவை எழுந்தெழுந்து கிளர்ந்து மேலோங்கியுள்ளன. அலைகள் போலவே அவை கிளர்ந்து தளர்ந்து ஒடுங்கின. பழைய அலைகள் உருமாறிப் புதிய அலைகளில் சென்று கலந்துள்ளன. இந்த எல்லா உணர்ச்சியலைகளினூடாகவும் நாளடைவில் ஓர் அடிப்படை உணர்ச்சி உரம்பெற்றது. வேரினின்று தளிர்த்துப் பழுத்த வேர்ப்பலாவாக அது பழம் புதுச்சுவை கனிந்தது. அலை இயக்கங் கடந்த கடலியக்கமாக அது தமிழகத்தின் கருவில் உருப்பெற்றது. அதுவே தமிழியக்கம். தமிழியக்கத்தின் மகவே, மலர்ச்சியே மறுமலர்ச்சி. இன எழுச்சியும் நாட்டு உணர்வெழுச்சியும் வீர உணர்ச்சியுடனும் காதலுணர்ச்சியுடனும் தமிழுணர்ச்சி தொடக்கத்தில் விளையாடிற்று. ஆனால், அதுவே வீர உணர்ச்சியின் வீரப் பண்பாகவும், காதலுணர்ச்சியின் காதற் பண்பாகவும் மிளிர்ந்தது. அரசியல் கொந்தளிப்புகளிடையே அஃது அரசியலாகக் கொந்தளித்தமைந்தது. சமய அலைக ளிடையே அது சமயமாக வளம் பெற்றது. அரசியல், வீரப் போட்டிகளிடையே தமிழுணர்ச்சி இனப் பண்பு ஊக்கி உறுதி அளித்தது. சேர சோழ பாண்டியரும் பல்லவரும் ஆதிக்கப் போட்டியில் முனைந்தனர். ஆனால், பாண்டியர் தமிழ்ச் சங்கத்துக்குப் போட்டிச் சங்கம் ஏற்படவில்லை. சமய வேறுபாடுகளிடையிலும் தமிழ்ப் பண்பு நடுநின்று ஒற்றுமை நாட்டத் தவறவில்லை. புத்தம், சமணம், சைவம், வைணவம் ஆகிய எல்லாப் பழஞ் சமயங்களும் ஒன்றுடன் ஒன்று அழிவுப் போட்டியிட்டன. ஆனால், தமிழ் யாவும் இணைத்தது. தமிழ்க்கு அவை யாவும் முதலிடமும் தந்தன. அவற்றை அளாவித் தமிழ் அவை அனைத்திலும் ஒரு ‘தென் கலையை’ உருவாக்கிற்று. அவ்வெல்லாச் சமயங்களிலும் அதுவே ‘பழைய கலை’ ‘தமிழ்க் கலை!’ ஆனால், அதுவே புது வாழ்வளித்த கலை. அத்துடன் தமிழை மட்டுமன்றித் தாய்மொழிகள் யாவற்றையும் வளர்த்ததுவும் அதுவே. தமிழகத்துடன் நில்லாது இமயம்வரை பரவிய கலையும் அதுவே என்பது நினைவுகூரத்தக்கது. வடகலை என்பது வடநாட்டில், சிந்து, கங்கை வெளியில் தோன்றிய கலை அன்று. தமிழகத்தின் வடகோடியில், வட தமிழகத்திலும் தென் தெலுங்கு நாட்டிலும் தோன்றிய கலையே அது. அது தமிழகத்தின் தென்கோடியை என்றும் சென்றெட்ட வில்லை. இயம வரைப்புக்கும் என்றும்-இன்றுவரை-அது சென்று சேரவில்லை! தெலுங்கு நாட்டின் தென் பகுதியுடன் அது நின்றுவிட்டது! இங்ஙனமாக, வெவ்வேறுபட்ட உணர்ச்சியலைகளின் வளர்ச்சி தளர்ச்சி தாண்டித் தமிழ்ப் பண்பு மக்கள் உள்ளுணர்ச்சியை, அக ஒற்றுமையைத் தட்டி எழுப்பியுள்ளது. காலநிலை கடந்து, இடச் சூழ்நிலை கடந்து அது தமிழர் நாட்டு வாழ்வையும். இன வாழ்வையும் உரமூட்டி வளர்த்து வந்துள்ளது. சமயங் கடந்த சமயம், கட்சி கடந்த கட்சி இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேலாக, தமிழகத்தின் எல்லா இயக்கங்களிலும் தமிழுணர்ச்சியும் தமிழ்ப் பண்பும் இவ்வாறு உள்ளியக்கமாக வேரோடி வந்திருக்கிறது. இப்போது அதுவே ஒரு தனியியக்கமாக, முழுநிலை இயக்கமாக, மறுமலர்ச்சியும் நறுமலர்ச்சியும் கலந்த புதுமலர்ச்சியியக்கமாக வளரத் தொடங்கியுள்ளது. அதுதான் இன்று தமிழரிடையே சமயங் கடந்த சமயம்; கட்சி கடந்த கட்சி; அரசியல் கடந்த அரசியல்; இயக்கம் கடந்த உள்ளியக்கம்; தேசிய இயக்கம்; தெய்வங்கள் கடந்த முழுமுதல் தெய்வமாய், அது தமிழர் வாழ்வைக் கால எல்லை தாண்டி வளர்க்க முனைந்தெழுந்து நடமிடுகின்றது. நம் மறுமலர்ச்சி புதுமலர்ச்சியாயினும் நிலப்பரப்பின் மீது நட்டு வைக்கப்பட்ட தாள் செடியோ, நீர்ப்பரப்பின்மீது மிதக்கும் மிதப்புக் கட்டையோ அல்ல. நிலத்தின் மீதுள்ள வளர்ச்சிக்கு ஆதாரமாக நிலத்தடியிலும் வேர்வளர்ச்சி யுடைய மரம் அது. புதிது புதிதாக வேரினின்று மரமும் மரத்தினின்று வேரும் கிளைக்கவிடும் படரால மரம் அது! முக்காற் பங்கு நீரில் அமிழ்ந்து காற்பங்கு நீர்ப்பரப்பைக் கிழித்துச் செல்லும் ஆண்டகைக் கப்பல் போன்றது அது! தமிழகம் தட்டுக்கெட்ட வகை பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் நம் முன்னோர் முதிரா இயற்கை நிலையினின்று பயணம் தொடங்கினர். நாகரிகத்தின் எல்லாப் படிகளும் கடந்து முன்னேறினர்-உலகெங்கும் நாகரிகப் பண்பாட்டலைகள் பரப்பி, நாகரிக உலகை அளாவி நின்று, உலக நாகரிகம் வளர்த்து முன்னேறினர். அவர்கள் சென்ற வழியில் சென்று இன்று நாம் ஒரு முக்கிய திருப்பத்தை அடைந்திருக் கிறோம். நம் பின்னே நம் மரபின் பிழைகள்-நம் முன்னே நம் இனத்தின் பெருமைகள் காட்சியளிக்கின்றன! பிழைகளகற்றி, பெருமைநோக்கி, பீடுநாடி நாம் முன்னேறுதல் வேண்டும்! தமிழ் தொன்று தொட்டு நம் குடும்ப மொழி, சமுதாய மொழியாயிருந்து வந்துள்ளது. தாய் மொழி என்ற அளவில், அஃது இன்னும் இத்துறைகளில் நிறைவுடையதாகவே இயங்குகின்றது. ஆனால், மற்றத் துறைகளில், நம் இடைக்கால அடிமைப் பண்பு காரணமாக அது தன் நிலையினின்று ஓரளவு நழுவியுள்ளது. கீழையுலகின் தலை சிறந்த இலக்கிய மொழியாய், கலை மொழியாய், அறிவு மொழியாய் அஃது ஒரு காலத்தில் இயங்கியிருந்தது. இத் துறைகளில் வரலாற்றுக் காலங்களில் தன் பெருமையை அது சமற்கிருதத்தடனும் மற்ற உலகத் தாய் மொழிகளுடனும் பகிர்ந்துகொண்டு வந்திருக்கிறது. இது தவறன்று! ஆனால், அது தன் நிலையைச் சீர்ப்படுத்தி வளர்த்துக் கொள்ளத் தவறியுள்ளது; சிறப்பை இழக்காவிட்டாலும் சீரை இழந்துள்ளது! அது மட்டுமன்று; முன் தமிழரின் தெய்வ மொழியாய், கீழை உலகின் தெய்வ மொழியாய் அது விளங்கிற்று. அப்பெருமையை அது சமற்கிருதத்துக்கு அளிக்கத் தொடங்கியுள்ளது. முன் அதுவே தமிழர் அரசியல் மொழியாய்த் தவிசேறி உலகாண்டது. இப்போது அஃது அந்தப் பெருமையைச் சிதறடித்து, கண்ட கண்ட, மொழிகளுக்கெல்லாம்-அணிமையில் பண்பட்ட மொழிகளுக்கும், இனிப் பண்பட இருக்கும் மொழிகளுக்கும் அப்பெருமையைத் தர, அவற்றின் காலடி வருட முன்வந்துள்ளது. இச்சூழ்நிலைகளால் ஏற்பட்ட அவல நிலைகள் பல. நம் கோயில்கள் இப்போது நம் கோயில்களாயில்லை. இனித்தான் நம் கோயில்கள் ஆதல் வேண்டும். இனித்தான் நம் தெய்வங்கள் இயங்கும் கோயில்கள் ஆதல்வேண்டும். இனித்தான் நம் மொழி உலவும் கோயில்கள், நம் தேவார திருவாசகங்களுக்கு, நம் திருவாய் மொழி, திருப்புகழ் ஒலிகளுக்கு இடமளிக்கும் தமிழ்க் கோயில்கள் ஆதல்வேண்டும். இது போலவே நம் ஆட்சி இனித்தான் தமிழ் ஆட்சி ஆதல்வேண்டும். பிறமொழிகளின் ஆதிக்கமோ உரிமையோ தலையிடாத நிலையில், தமிழ் தனியுரிமை செலுத்தும் ஆட்சி இப்போது நம் கனவுக்குக்கூட எட்டாத ஒன்றாகியுள்ளது. நம் கல்வி நிலையங்கள் இனித்தான் தமிழின் தன்மானங் காக்கும் தமிழ்க் கல்வி நிலையங்கள் ஆதல்வேண்டும். தமிழ்க்கு இடம் அளிப்பதற்கே, இடம் விரிவுபடுத்துவதற்கே நாம் போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலையில் அவை இருக்கக் கூடாது! நம் பத்திரிகைகள், நம் தொழில்கள், வாணிக நிலையங்கள். பொருளகங்கள் இனித்தான் நம் பெயரும், தமிழ்ப் பெயரும் கூறுபவை ஆதல்வேண்டும். இனித்தான் தமிழ், தமிழகம், தமிழ்ப்பண்பு ஆகியவற்றின் நாட்டம் அவற்றில் தலையெடுத்தல் வேண்டும். அது மட்டுமன்று; அறிவுத் துறையில் தமிழ் மட்டுமன்று, தமிழரும் பிற்பட்டுவிட்டனர். உலகாண்ட தமிழர் இங்கே உலகின் அடிவருடிகளுக்கு அடிவருடிகள் ஆகிவிட்டனர். இந்நிலை மாறத் தமிழர் அறிவு நூல்களில் முன்னேறுதல் வேண்டும். தொழில்களுக்கு வேண்டிய அறிவியல் ஏடுகளைத் தமிழர் ஆக்குதல் வேண்டும். தமிழில் ஆக்குதல் வேண்டும்! தமிழ், தமிழர் வளர்ச்சியில் ஆர்வமும் நம்பிக்கையும் வீறுணர்வும் மிக்க தமிழர் தமிழறிவுடன் இவற்றின் ஆக்கத்தில் முனைதல் வேண்டும்! அடிமைச் சங்கிலி தமிழகத்தில் உயிர் நிலையான இடம் தமிழகத் தொழிலாளர் களுக்கு உரியது. தமிழர் வாழ்விலும் தமிழகச் சமுதாயப் படியிலும் அவர்கள் இடம் இன்று கடைப்பட்டதாகி யுள்ளது. ஆனால், இந்தக் கடைப்பட்ட நிலையில்கூட அவர்கள் வாழ்வைத் தமிழ் சென்று தீண்டவில்லை! தமிழின் அவலக் கேடான நிலை இது! இந் நிலையைத் தவிர்க்க முயன்ற பெரியார் திரு.வி. கலியாணசுந்தரனார்! அவர் தமிழகத்தில் மட்டுமன்று, கீழை உலகிலேயே தொழிலாளர் இயக்கத்தைத் தொடங்கி வைத்த பெருமை உடையவர். ஆனால், தமிழகத் தென்றல் தொழிலாளர் இயக்கத்தைத் தொடங்கி வைத்தாலும், தொழிலாளர் இயக்கம் தமிழ்த் தென்றலை ஒதுக்கிவிட்டுப் பிற புல வாடைகளையே அளாவியுள்ளது. தொழிலாளர் உள்ளங்களில் அவர் வீற்றிருந்தார். ஆனால், தலைமை அவரை மறைத்தது. தமிழ்த் தென்றலாகிய அவரை மறக் கடித்தாலன்றித் தமிழை ஒதுக்க முடியாதென்றறிந்து, தமிழரைச் சுரண்டும் இனங்களை வளர்க்க முடியாதென்று உணர்ந்து தொழிலகத் தலைமை அவர் நினைவை மறக்கடிக்க அரும்பாடுபட்டு வந்துள்ளது. அன்று தமிழகத்தைத் தமிழர் ஆண்டனர். தமிழரைத் தமிழ் ஆண்டது. இரண்டு நிலைகளும் இன்று பெரிதும் மாறியுள்ளது. இன்று தமிழகத்தைத் தமிழர் ஆளவில்லை. தமிழகம் என்ற பெயரும் பழைய ஏடுகளில்தாம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தைத் தமிழரும் ஆளவில்லை. ஆள்வோர் விருப்பத்துக்குகந்த தமிழரையும் தமிழ் ஆட்சி செய்ய முடியவில்லை. அறிவுலகில்கூட, தமிழ் மொழி ஆட்சி வகுப்பினரை அணுகும் இடங்களில், அணுகுந்தோறும், தமிழ்ப் பற்றும் தமிழ்ப் பண்பும் தமிழை ஆளவில்லை; இயக்கவில்லை! தமிழகம் தமிழர், தமிழ், தமிழ்ப்பற்று, தமிழ்ப்பண்பு என்ற உரிமைச் சங்கிலி அறுபட்டு, அதற்கு நேர்மாறான அடிமைச் சங்கிலி உருவாகி ஆண்டுவந்துள்ளது. ஆண்டு வருகின்றது! இதன் பயனாகச் சமயத்துறை, அரசியல் துறை, கல்வித்துறை, பத்திரிகைத் துறை, பொருளியல் துறை ஆகிய எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் அயற்பண்பின் ஆட்சியே ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்ப் பண்பின் வளமும் தமிழ் வளமும் குன்றி வருகிறது. தமிழகத்திலேயே அப்பண்பு குன்றியவர், தமிழ் மொழியை விட்டு அயல் மொழியை அளாவியவர் ஆகியோரின் பதவியும் செல்வமும் மேலோங்கி யுள்ளன. மேலோங்கி வருகின்றன. அவர்களுக்கே அத்துறைகளிலே மேலோங்கும் வாய்ப்பும், வளமும், தகுதிவாய்ந்த சூழலும் அமைந்துள்ளன; அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகச் செல்வர் ஆட்சி வகுப்பினர் தமிழ்க்கு உரிமையற்றவராக இருக்கும் நிலை இன்று ஏற்பட்டிருப்பதன் காரணம் இதுவே. மறுமலர்ச்சியின் குறிக்கோள் ஆள்பவர், ஆள்பவரை ஆளுவோராக இக்குடியாட்சிக் காலத்தில் கருதப்படும் மக்கள், அம்மக்கள் உள்ளத்தை ஆட்கொள்ளும் தலைவர்கள், அத்தலைவர்களை வளர்க்க, வயப்படுத்திக்கொள்ள முன்வரும் ஆட்சி வகுப்பினர், செல்வ வளமிக்கவர் ஆகியோர் அனைவரும் பாரதி, பாரதிதாசன் வழிநிற்க முன்வருதல் வேண்டும். அவ்வகையில் தமிழை, தமிழரை இயக்குவதே மறுமலர்ச்சியின் குறிக்கோள். அக்குறிக்கோள் மறுமலர்ச்சியின் வழியாக ஏற்கெனவே தமிழகத் தலைவர்களை ஆட்கொண்டுவிட்டது, ஆட்கொண்டு வருகிறது, அது தமிழர் உள்ளங்களை நிறைத்துவிட்டது. நிறைத்து வருகிறது. தமிழர் அறியாமலே அது தமிழர் நாடி நரம்புகளில் பெருக்கெடுத்துத் துடித்தோடத் தொடங்கியுள்ளது. வருங்காலத் தமிழகத்தை ஆக்கும் புதிய ஆகூழாக, தமிழகத்தை உள்நின்று இயக்கும் புதிய அரசாக, புதிய கடவுளாக அஃது இசை பாடத் தொடங்கிவிட்டது. தமிழகம் பாரதி, பாரதிதாசன் வழிநின்று மறுமலர்ச்சியை வளர்த்தூக்க முன்வருதல் வேண்டும். முன்வந்தால் மறுமலர்ச்சியின் வேகம் அச்சமூட்டும் காட்டுவெள்ளமாகக் காட்சி தாராது. பசுங் கழனியும், பூங்காவும், ஒளி தரும் சோலை வனமும் விரித்தியங்கும் தண்புனற் காவிரியாகக் காட்சியளிக்கும். தமிழர் வாழ்வு அப்போதுதான் உதிர்ந்தும் மணங் கெடாம லிருக்கும் காட்டுமலர்க் குப்பையாகத் தோற்றமளிக்காமல், நாரில்லாமலே தொடுத்த வண்ண மலர் மாலையாக வயங்கும். தமிழகத்தில் இன்று ஆளப்படும் மக்களாக நிலவும் தமிழரே, தமிழின் தாழ்நிலையில் முழுப்பங்கு கொண்ட தமிழ்மக்களே, தமிழகத்தின் தலைவிதியையும், தமிழின் படித்தரத்தையும், தமிழக வாழ்க்கையையும், ஆட்சித் திட்டத்தையும் வகுத்தமைக்கும் நிலையை மறுமலர்ச்சியியக்கம் தான் உருவாக்குதல் வேண்டும். அந்நாள் விரைவில் வருதல் வேண்டும் என்பதே தமிழார்வலர் தணியாத வேணவா. மறுமலர்ச்சி நாடிச்செல்லும் இத்திசையில் தமிழ் இளைஞர், நங்கையர், பிறமொழி பயிலவேண்டிய நிலையிலிருந்தாலும், தமிழ்ப்பற் றார்வத்தில் பின்னடையாத மாணவ, மாணவியர், பிறமொழி யறிவில் பீடுற்றாலும் தமிழை மறவாத அறிஞர், தலைவர், ஆட்சித் துறையில் இடம்பெற்ற தமிழார்வலர், செல்வவளம் குன்றாத தமிழ்ப் பற்றாளர் ஆகியோர் முன்வரல் வேண்டும். தமிழக மறுமலர்ச்சியின் தேவைகள் இவை-மறுமலர்ச்சியே அத் தேவைகளை நிரப்பி வளம்தேடும் ஆற்றலுடையது, அவ்வாற்றல் பெருக்கி விடுகிறது! வாழ்க தமிழ், வளர்க தமிழ்ப் பண்பு! வெல்க தமிழக மறுமலர்ச்சித் தென்றல்! 2. நாடும் மொழியும் தமிழ், தமிழ்நாடு, தமிழகம், தமிழுலகம்! மொழி, நாடு, இனம், பண்பு ஆகிய எல்லைகள் குறிக்க எழுந்த வழக்குகள் இவை! நான்கு வழக்குகளுக்கும் அடிப்படைச்சொல் `தமிழ்’ என்பதே. அது நான்கு பொருள்களையும் ஒருங்கே காட்டுவது. இலக்கண இலக்கியங்களில் நான்கு பொருள்களிலும் அது வழங்குகிறது. தொல்காப்பியக் காலமுதல் இன்றுவரை ‘தமிழ்’ என்ற சொல் தமிழரது மொழியின் பெயராய் வழங்குகிறது. சங்க இலக்கியத்திலே அது முனைப்பாக இனப் பெயராகவும், நாட்டுப் பெயராகவும் இடம்பெறுகிறது. தவிர, ‘தமிழ்’ தமிழிலக்கியம் முழுவதும் இனிமை என்ற பொருளுடன் தமிழரது பண்பின் பெயராகவும் பயன்படுத்தப்படுகிறது. சொற்பொருளில் இந்நான்கு வழக்குகளும் இன்றளவும் மரபு மாறாமலே இயங்குகின்றன. ஆனால், சொல்காட்டுகிற பொருளின் பரப்பில் நான்கு சொற்களுமே மிகவும் மாறுபட் டுள்ளன. எல்லை குறுகித் தேய்ந்துள்ளன. இக் குறுக்கங்களில் நாம் கவனம் செலுத்தாவிட்டால், அவற்றின் பின்னணியிலுள்ள இனத்தளர்ச்சிச் சூழல்களை அறிய முடியாது. அச்சூழல்களறிந்த பின்னரே நாம் நம் குறைபாடுகளை நிறைவுபடுத்தி, வருங்கால வளம்நோக்கி நம் பார்வையைச் செலுத்த முடியும். முத்தமிழ்ப் பாகுபாட்டின் சிறப்பு தமிழ் என்ற சொல் இன்று மொழி, நாடு, இனம், பண்பு என்ற நாற் பொருளும் சுட்டவில்லை. மொழி என்ற ஒரே ஒரு பொருள்தான் சுட்டுகிறது. நாடிழந்த, இனமிழந்த, பண்பிழந்த, உரிமையிழந்த, ஒற்றுமை தட்டுக்கெட்ட தமிழன் வாழ்வில், இன்று அவனுக்கு எஞ்சியிருப்பது மொழி ஒன்றே! அது மட்டுமன்று. மொழியின் பெயர் என்ற முறையிலும், அதன் பொருளெல்லையில் மாறுபாடுகள், தேய்வுகள் குறுக்கங்கள் பல ஏற்பட்டுள்ளன. தமிழ்க்குப் பழந்தமிழ், நற்றமிழ், இன்றமிழ், வண்டமிழ், தண்டமிழ், கன்னித்தமிழ், சங்கத்தமிழ், பைந்தமிழ், செந்தமிழ், முத்தமிழ் எனும் பலவண்ணப் பண்புப் பெயர்கள் இலக்கிய மரபில் வழங்குகின்றன. இவற்றுள் வேறெம் மொழிக்கு மில்லாத தனி மரபும் தனிச்சிறப்பும் வாய்ந்த பெயர் ‘முத்தமிழ்’ என்பதே. தமிழ் மரபுப்படி, முத்தமிழ் என்பதன் பொருள் மூன்று தமிழ் என்பதாகும். அவை இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்பவை. இயல் தமிழ் மூன்று பிரிவுடையது. முதற் பிரிவு, இசையும் நாடகமும் சாராத இலக்கியம் முழுவதையும் உள்ளடக்கும். இரண்டாவது பிரிவு, மொழியின் இலக்கணமும் இசை நாடகச் சார்பற்ற இலக்கியத்தின் இலக்கணமும் அடங்கியது. இவ்விரண்டு மன்றி, மூன்றாவதாக ஒரு பிரிவும் உண்டு. அதுவே மொழியை வாயிலாகவும் பின்னணி வண்ணமாகவும் கொண்ட அறிவு நூல்கள், கலை இலக்கண நூல்கள் ஆகியவற்றின் தொகுதி. இதனை நாம் பொதுவில் ‘நூல்’ எனலாம். இதற்கெனத் தமிழர் வகுத்த பாவே ‘நூற்பா’ அல்லது சூத்திரம் அல்லது உரைச் செய்யுள். இசைத் தமிழ் இசை சார்ந்த கலை, இசை சார்ந்த இலக்கியம், இசைக் கலை இலக்கணம், இசை சார்ந்த இலக்கியத்துக்குரிய இலக்கணம், இசை சார்ந்த கருவி நூல்கள், இசைக்கலை நுணுக்கத் துறை ஆகியவற்றை உள்ளடக்கியது. நாடகத் தமிழ் நாடகக்கலை, நாடகக் கலைக்குரிய இலக்கியம், நாடகக் கலை இலக்கணம், நாடகக் கலை சார்ந்த இலக்கியத்துக்குரிய இலக்கணம், நாடக அரங்கியல், கருவி இயல், நாடகக் கலை நுணுக்கத் துறை ஆகியவற்றை உள்ளடக்கியது. இம் முத்தமிழ்ப் பாகுபாடு உலகில் வேறெந்த மொழியிலும் இன்றுவரை காணப்படாத, கேட்கப்படாத, கருதப்படாத ஒன்று. அதில் கரந்துள்ள நுண்ணயம் வாய்ந்த கலைத்திறமும், அறிவுத் திறமும்கூட இன்றைய நாகரிக உலகத்தினரால் கனவு காணப்படாதது என்னலாம். ஏனெனில், இம் மூன்றுமே மொழி சார்ந்த முழு நிறை கலைகள்! இவ்வுண்மையைத் தமிழர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்னரே அறிந்திருந்தனர். இயல் தமிழ் இசைத் தமிழ், நாடகத்தமிழ் என்ற பெயர்களிலுள்ள `தமிழ்’ என்ற சொல்லே இதை எடுத்துக்காட்டும். முன்னைய முத்தமிழ் இன்று ஒரு தமிழாய்விட்டது ஓவியம், சிற்பம் முதலிய கலைகள் இயக்கமில்லா அழகுணர்ச்சியுடைய கலைகள். அவை கட்புலனுக்கு மட்டுமே தூண்டுதல் தருபவை; நிலையான தோற்றங்களையே காட்டுபவை. அத்துடன் அவை மொழி சாராத கலைகளாதலால், எல்லா மொழிக்கும் பொதுவாக இயல்பவை. ஆனால் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைகளும் இவ்வகையில் தனி வேறுபாடும், தனிச்சிறப்பும் உடையன. அவை கண்ணுக்கும் செவிக்கும் மட்டுமன்றி, ஐம்புல அறிவுக்கும், ஆறாம் அறிவாகிய உள்ளத்துக்கும் தூண்டுதல் தருபவை. உள்ளத்திலும் உணர்ச்சியலைகளையும், அறிவலைகளையும், கலைப் பண்பலை களையும் ஒருங்கே இயக்குபவை. அவற்றின் கலைப்பண்பு எழுச்சி தளர்ச்சிகளையும், ஒடுக்க அகலங்களையும் உடையது. வாழ்க்கை முழுவதையும் பொருளாகக் கொண்டது. சுருங்கக் கூறின், அவை மொழி வளர்த்த இனக் கலைகள்! அறிவார்ந்த இம் முத்தமிழ்ப் பாகுபாடு தமிழர் பழம் பாகுபாடு. இன்று அது மரபளவில் நமக்கு வந்து எட்டிய ஒரு பழங்கதையே தவிர, நம் வாழ்வின் சூழலில் வளர்ச்சியடைந்து வரும் ஓர் உயிர் மரபு அன்று. ஆயினும், அஃது ஒரு காலத்தில் தழைத்திருந்ததென்பதற்குச் சிலப்பதிகார ஏடும், அதன் உரைகளும், அவற்றின் குறிப்புகளும் சின்னங்களாய் உதவுகின்றன. அவை இல்லாவிட்டால், அதை ஒரு கற்பனைச் சரடு என்றுகூடத் தள்ளிவிட முடியும்! இசையும் நாடகமும் மட்டுமல்ல! இயலின் முக்கூறுகளுள் ஒன்றாகிய நூல்துறையும், இன்று நம்மிடையே பெரும்பாலும் மேலை உலகிலிருந்து இறக்குமதியாக்கப்பட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. நமக்கு இன்று அத்துறைக்குச் சான்றாக இருப்பது ‘நூற்பா’ என்ற பெயரும், வளர்ச்சியற்றுப் போன வற்றல் பாலைகளான மருத்துவர் சித்தர் நூல்துறையும், வானூலின் ‘காட்சி நெறித்துறை’ அல்லது ‘திருக்கு கணிதமுமே’ யாகும். இவ்வாறு மூன்று தமிழாகப் பரந்தகன்று வாழ்ந்த பழம்பெருந் தமிழ், இன்று ஒரு தமிழிலும் குறைந்து ஒடுங்கிய நிலையில் குறுகியுள்ளது. தமிழ் என்ற சொல் மரபளவிலும், சொல்லளவிலும் மாறாமலே இருந்தாலும், சொற் பொருள ளவிலும் பொருளெல்லையளவிலும் மாறியுள்ளது; குறுகி யுள்ளது. முத்தமிழகத்தின் பரப்பு தமிழ் என்ற சொல்லின் மற்றொரு பொருட்குறுக்கம் இட எல்லை சார்ந்தது. இன எல்லை சார்ந்த ‘தமிழகம்’ என்ற பழைய பெயரை, அஃது இக்கால மொழி எல்லை, நாட்டெல்லை சார்ந்த ‘தமிழ்நாட்டின்’ அளவில் குறுக்கியுள்ளது. முத்தமிழ் என்ற பெயரே இந்நிலையையும் சுட்டிக் காட்டுகிறது. தமிழ் மரபுப்படி, ‘முத்தமிழ்’ என்ற சொல் தமிழ் மூன்று தமிழாக இயங்கிய நிலையைக் குறிக்கும். இதை நாம் ‘பழம் பெருந்தமிழ்’ நிலை என்னலாம். இதே ‘முத்தமிழ்’ என்ற சொல் மலையாள நாட்டு மரபில் முன்னைய தமிழ் அல்லது முந்திய தமிழ் என்று பொருள்படு கிறது. முன்னைய தமிழே மூன்றாய் இயங்கிய தமிழாதலால், சொல்லின் இருநாட்டு மரபுகளும் அடிப்படையில் முரண் பட்டவை அல்ல. இலக்கண முறையிலும் மூன்று+தமிழ்=முத்தமிழ் என்றாவதுபோலவே, முன்+தமிழ்=முத்தமிழ் என ஆகக் கூடும். இத்தகைய புணர்ச்சி இலக்கணக் காலத்துக்கு முற்பட்ட அதாவது தொல் பழங்காலப் புணர்ச்சிமுறையே யாகும். இதே வகைப் புணர்ச்சியை நல்+கீரன்=நக்கீரன்; நல்+பின்னை= நப்பின்னை என்ற சங்ககால வழக்குகளில் காணலாம். ‘முத்தமிழ்’ என்ற சொல்லுக்கு மலையாள நாட்டவர் தரும் முழு விளக்கமும், அதன் பின்னணியிலுள்ள மலையாள நாட்டவர் வரலாற்று மரபும் குறிப்பிடத்தக்கவை. தென்னாடு முழுவதும் ஒரே தமிழாகப் பரந்து நிலவிய பழம் பெருந்தமிழே முத்தமிழ் என்றும், அது இன்றைய தமிழ் நாடு, மலையாள நாடு, கன்னட நாடு, துளு நாடு, தெலுங்கு நாடு ஆகிய ஐந்து நாடுகளையும் அளாவியிருந்த தென்றும் மலையாள மரபு குறிப்பிடுகிறது. ஐந்து நாடுகளும் அரசியல் வேறுபாடு முதலிய காரணங்களால் வேறுபட்ட பின், தமிழ் நாட்டின் தமிழ் ‘செந்தமிழ்’ஆயிற்று. மற்ற நாட்டுத் தமிழ் வழக்குகள் கொடுந்தமிழ் வழக்குகளாக நிலவி, நாளடைவில் அவை நாட்டுப் பெயர் கொண்ட தனி மொழிகளாயின. இதற்குப் பின்னணியான மலையாள வரலாற்று மரபு மாவலி(மகாபலி) கதையுடனிணைந்தது, மாவலி தென்னாடு முழுவதும் ஆண்ட பேரரசன், அவன் பழம் பாண்டியர் குடியினன்; அவன் நாளில் தென்னாடு முழுவதும் ஒரே தமிழ் மொழி வழங்கிற்று. அவன் மக்கள் ஐவரின் சூழ்ச்சியால் பேரரசு ஐந்தாகச் சிதறுண்டது. சேர சோழ பாண்டியரும் கன்னட ஆந்திரரும் தனித்தனி அரசுகளாகவும் மொழி இனங்களாகவும் பிரிவுற்றனர். மீண்டும் நாடு வருங்காலத்தில் ஒற்றுமையாவதற்கான கனவுத் திட்டங்களை நாட்டு மக்களுக்களித்து, மாவலி மாண்டான். அவன் வகுத்த திட்டங்களே மலையாளிகளின் தேசியத் திருவிழாவான திருவோண விழாவாக இன்றளவும் கொண்டாடப்பட்டுவருகிறது. ஐந்து தமிழகம் ஒரு தமிழகமாயிற்று ஐந்து தமிழகமும் அளாவிய பழம் பெருந் தமிழாகிய முத்தமிழ் ஐந்து மொழிகளாகப் பிரிவுற்றதற்குத் தமிழின ஒப்பியல் மொழிநூல் அதாவது திராவிட மொழிநூல் சான்று பகர்கிறது. ஆனால், மலையாள நாட்டு மாவலி மரபு குறிப்பது போல, இது திடுமென நேர்ந்த ஒரு மாறுபாடன்று. ஒரே ஆட்சியிலோ, ஒரே நூற்றாண்டிலோகூட நிகழ்ந்த செய்தியன்று. ஏனெனில், இப்பிரிவினை தொல்காப்பியக் காலத்துக்கு முன்னே, அதாவது குறைந்த அளவில் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கி கி.பி. 12, 16ஆம் நூற்றாண்டிலேயே முற்றுப்பெற்றது. தொல்காப்பியக் காலத்துக்குமுன் பழம் பெருந்தமிழ் இரு மொழிக் குழுவாகப் பிரிந்தது. ஒன்று ‘தென் பெருந்தமிழ்’ இஃது இன்றைய தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளையும், உட்கொண்டது. மற்றொன்று ‘வடபெருந் தமிழ்’. இது தெலுங்கு, கன்னட துளு மொழிகளை உட் கொண்டது. இப்பிரிவினைக் கோடு மங்களூரிலிருந்து மைசூர் வழியாகவும் இராயலசீமா வழியாகவும் பழவேற்காட்டு ஏரிவரை சென்றது. இரண்டாவது பிரிவினை 12ஆம் நூற்றாண்டிலேயே முற்றுப்பெற்றது. இக்காலத்தில் மலையாள மொழி தமிழிலிருந்து பிரிந்தது. அதே சமயம் ‘தெலுங்கு கன்னடம்’ இருமொழியாகப் பிரிவுற்றது. கன்னடம் தெலுங்கைவிடத் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது. கன்னட எல்லை இக்காரணத்தால் தென்கன்னட மாவட்டம், மைசூர் ஆகியவற்றில் பரவிற்று. அதே சமயம் இராயலசீமாப் பகுதியும் படிப்படியாகத் தெலுங்காயிற்று. இம்மாறுபாடுகள் கி.பி. 16ஆம் நூற்றாண்டுக்குள் நிறைவேறின. அதே நூற்றாண்டுக்குள் துளுமொழி கன்னடத்திலிருந்தும் மலையாளத்திலிருந்தும் பிரிவுற்றுத் தனிமொழியாக வளர்ந்தது. இன்று குடகு மொழி துளுவிலிருந்தும் பிரிவுறத் தொடங்கியுள்ளது. தெலுங்கு கன்னட மொழிகள் ஒரு மொழியாக இருந்ததற்கு இன்றும் கண்கூடாக ஒரு சான்று உண்டு. இரண்டுக்கும் எழுத்து முறை கிட்டத்தட்ட ஒன்றே. இருமொழிக்கும் பொதுவாக 12ஆம் நூற்றாண்டு வரை இருந்த ஆந்திர-கன்னட எழுத்திலிருந்து இன்றைய தெலுங்கெழுத்து அந்நூற்றாண்டில் புதிதாகத் தோன்றிற்று. துளுவுக்கும் குடகுக்கும் இன்னும் தனி எழுத்தமைய வில்லை. 12ஆம் நூற்றாண்டுவரை பாண்டிய நாட்டில் தமிழும், சேர நாட்டில் மலையாளமும், தென்கன்னட மாவட்டத்தில் துளுவும் பண்டைத் தமிழ் எழுத்து முறையாகிய வட்டெழுத்திலேயே எழுதப்பட்டன. அந்நூற்றாண்டில் அதாவது கம்பர் காலத்தை அடுத்துப் பாண்டிய நாட்டுப் பழந்தமிழ் எழுத்து கைவிடப்பட்டு, சோழநாட்டுக்குரிய எழுத்து தமிழகம் முழுதும் பரந்தது. ஆனால், இன்றளவும் துளுநாட்டில் பழந்தமிழ் வட்டெழுத்து நிலவுகிறது. மலையாள எழுத்துத் தனியாக எழுந்தது 16ஆம் நூற்றாண்டிலேயே. ஐந்து தமிழகமளாவிய முத்தமிழ் அல்லது பழம்பெருந்தமிழ் இன்று இவ்வாறு சிதறுற்றுத் தேய்ந்து, ஒரு தமிழக எல்லையிலும் குறைவுற்று, ஒடுங்கிய ஒரு தமிழ் ஆகியுள்ளது. பண்டைத் தமிழ் எல்லைக் குறுக்கம் சங்ககாலத்தில் தமிழ் மொழி பேசிய செந்தமிழகம் அதாவது தமிழ்நாட்டின் எல்லை இன்றைய தமிழ் நாட்டின் எல்லையைவிட விரிவானது. இன்றைய தமிழ் நாட்டின் எல்லை வடக்கே திருப்பதி அல்லது திருவேங்கடம், கிழக்கும் தெற்கும் கடல், மேற்கே ஏறத்தாழ, மேற்கு மலைத் தொடர் என்பனவாகும். “குண கடல் குமரி குடகம் வேங்கடம்” என்ற நன்னூற் பாயிரக் குறிப்பு இவ்வெல்லையையே காட்டுகிறது. நன்னூலார் காலம் 12ஆம் நூற்றாண்டு. அது முதல் இன்றைய எல்லையே நிலவி வந்துள்ளது. ஆனால், இதற்கு ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்ககால எல்லை, மேற்கு மலைத்தொடர் கடந்து இன்றைய மலையாள நாட்டையும் அதன் வடக்கேயுள்ள தென் கன்னட மாவட்டத்தையும் உள்ளடக்கியதாயிருந்தது. அத்துடன் தென் மைசூரும் இராயலசீமாவின் ஒரு பகுதியும் அன்று செந்தமிழகத்தின் கூறுகளாயிருந்தன. சங்ககாலத்துக்கு முற்பட்டு, தொல்காப்பியக் காலத்தில் தமிழ்நாடு இன்னும் பரந்தகன்றதாயிருந்தது. குமரி முனைக்குத் தெற்கே இன்று கடல் அலைபாயும் இடத்தில் ஒரு பழம் பெருமாநிலம் பரந்து கிடந்தது. தொல்காப்பியர் பிறந்து வளர்ந்த பரப்பு அதுவே. அவர் காலப் பாண்டியர் தலைநகரான அலைவாய் அல்லது கபாடபுரம் அப்பரப்பிலேயே குமரியாற்றின் கடல் முகத்தில் இருந்தது. தொல்காப்பியர் தமிழ்கூறும் நல் உலகின் வட எல்லையாக வேங்கடத்தையும் தென் எல்லையாகக் குமரி யாற்றையுமே குறித்தார். செந்தமிழ் நிலக் குறுக்கம் தொல்காப்பியர் காலத்தில் குமரியாற்றுக்குத் தெற்கே தமிழின்றி வேறு மொழி பேசப்பட்டதென்று நாம் கொள்ள முடியாது. ஏனெனில், முதற் சங்ககாலப் பாண்டியன் தலைநகரான தென் மதுரை குமரியாற்றுக்குத் தெற்கே, பஃறுளியாற்றின் கரையிலேயே இருந்தது. முதற் சங்க காலத்தில் செந்தமிழ் நிலமாகக் கருதப்பட்ட குமரியாற்றின் தென் பகுதி, தொல்காப்பியர் காலத்துக்குள் தலைநகரின் மாறுபாட்டால் கொடுந் தமிழ்ப் பகுதியாகக் கருதப்பட்டது என்பதே பொருந்தும். செந்தமிழ் அல்லது திருந்திய பண்பட்ட தமிழ் கொடுந்தமிழ் அல்லது திருந்தாத பண்படாத தமிழ் என்ற பாகுபாடு தொல்காப்பியக் காலத்துக்கு முற்பட்டே தொடங்கி விட்டது என்று கூறலாம். ஆனால், தொல்காப்பியக் காலத்திலும் சங்க காலத்திலும் ‘செந்தமிழ்’, ‘கொடுந்தமிழ்’ என்ற சொற்கள் சுட்டிய பொருளும் எல்லையும் வேறு. இவற்றுக்குப் பிற்பட்ட உரையாசிரியர் காலங்களில் அவை கொண்ட பொருளும் எல்லையும் வேறு. இன்று நாம் தமிழ்நாடு என்று கூறும் பகுதியும் அது கடந்த பண்டைத் தமிழ்நாட்டுப் பகுதியும் சேர்ந்து அன்று செந்தமிழகம் என்று கருதப்பட்டது. இன்று பிறமொழிகள் என்று நாம் கருதும் தமிழின மொழிப் பகுதிகளே அன்று கொடுந்தமிழ் நாடுகளாகக் கருதப்பட்டன. ஆனால், உரையாசிரியர் காலங்களில் பழைய செந்தமிழகமே தமிழகமாகக் கருதப்பட்டது. செந்தமிழ் கொடுந்தமிழ் இரண்டையும் அவர்கள் தமிழ் நாட்டுக்குள் தேடினர். உரையாசிரியர்கள் இச்சொற்கள் வகையில் தொல்காப்பியர் காலப் பொருளெல்லை காணாமல் திகைத்துத் திண்டாடியுள்ளனர். தொல்காப்பியர் காலச் செந்தமிழக எல்லைகள், கிழக்கு மேற்கு இருபுறமும் கடல், வடக்கே வேங்கடம், தெற்கே குமரியாறு என்பவை. சங்ககாலத் தமிழக எல்லை இதில் மிகுதி குறைந்தது. குமரி நாடு சங்க காலத்துக்குள்ளாகக் கடல் கொள்ளப்பட்டதே இதற்குக் காரணம். ஆனால், சங்க காலத்துக்குப் பிற்பட்டு மலையாள, தென்கன்னடப் பகுதிகளின் பிரிவால் தமிழ்நாடு மேலும் குறுகிற்று. சொல் மாறுபாடுகள் கால வேறுபாடு, இட வேறுபாடு, நிலைவேறுபாடு ஆகியவற்றால் பொருள்கள் திரிபடைவதுண்டு. பொருளின் பெயர், இவ்வேறுபாடுகளை எப்போதும் சுட்டுவதில்லை. சொற்பொருளில் திட்ப நுட்ப வரையறை வேண்டும்போது மட்டுமே அவை சுட்டப்படும். வேறுபாடுகள் பொருளின் அடிப்படைத் தொடர்பை மறக்கடிப்பதும் உண்டு. அப்போது ஒரே பொருள் இரு வேறு நிலையில் இரு வேறு பெயர்களைப் பெற்றியங்கும். மாரிக் காலத்தில் இருகரையும் புரண்டோடும் காவிரியும் கோடைக் காலத்தில் மணலிடையே நெளிந்து செல்லும் காவிரியும், ஒரே காவிரியின் இரண்டு கால நிலை வேறுபாடுகளே. இவற்றை வேறு வேறு பெயர்கொண்டு நாம் குறிப்பதில்லை. அதே சமயம் தலைக் காவிரியும் அகண்ட காவிரியும் இடநிலை வேறுபாடுகள். இவற்றை ‘தலைக் காவிரி’, ‘அகண்ட காவிரி’ எனக் ‘காவிரி’யுடன் அடைமொழி தந்து குறிக்கிறோம். ஆனால், காவிரியில் இரு கிளைகள் ‘காவிரி’, ‘கொள்ளிடம்’ என இரு வேறு பெயர்கள் கொள்கின்றன. ‘தமிழ்’, ‘தென்மொழி, ‘திராவிடம்!’ இவை ஒரு பொருள் சுட்டியவை. ஆனால், ஒரே பொருளின் பல்வேறு வகை உருவங்களையும் கால இடநிலை வேறுபாடுகளையும் அவை சார்ந்த திரிபுகளையும் இவை குறிக்கின்றன. தலைக் காவிரியையும் அகண்ட காவிரியையும் ‘காவிரி’ என்ற ஒரு சொல்லே குறிக்கமுடியும். அதுபோலத் தமிழர் வழக்காற்றில் பழம் பெருந்தமிழ், குறுகிய இன்றைய தமிழ் ஆகிய இரண்டும் ‘தமிழ்’ என்ற ஒரே சொல்லால் சுட்டப்பட்டு வருகிறது. ஒரே பொருளின் கருமூலத் தொடர்பை இது தெளிவுபடுத்துகிறது. ஆனால், பொருள் திட்ப நுட்பம் வேண்டிய இடங்களில், வேறுபாடும் திரிபும் சுட்ட அடை கொடுத்த தொடரோ அல்லது தனிச்சொல்லோ தேவைப்படுகின்றன. ‘முத்தமிழ்’, ‘பழம் பெருந்தமிழ்’ என்பன தமிழின் முன்னை நிலையைத் திட்பம்படக் குறிக்க எழுந்த அடைசார்ந்த பெயர்கள். ஆனால், அடையடுத்த இப்பெயர்களாலும் பொருள் மயக்கம் ஏற்பட இடமுண்டு. முன்னைய தமிழ்க்கும் இன்றைய தமிழ்க்கும் உள்ள தொடர்பை மட்டும்தான் அவை குறிக்கின்றன. இவற்றுக்கும் மலையாளம், துளு, கன்னடம், தெலுங்கு முதலிய பிரிவுற்ற இனப் பகுதிகளுக்கும் உள்ள தொடர்பை அவை சுட்டவில்லை. அது மட்டுமன்று; அவற்றின் பொது மூலமான ‘முத்தமிழை’ச் சுட்டுவதிலும் அவை குழப்பம் தருகின்றன. திராவிடம் என்ற தனி வேறு சொல் இக் காரணங்களால் இனம் சுட்டிய பொதுப் பெயராய் இன்று மேலை உலக அறிஞராலும், ஏனை உலக அறிஞராலும் வழங்கப்படுகிறது. திராவிடம், தமிழ் : சொல் மரபு திராவிடம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் அணிமைக் கால ‘வழக்கே’; வழங்குமிடங்களிலும் அது சமற்கிருதவாணர் வழக்கை ஒட்டியே கையாளப் பட்டுள்ளது. ஆனால், சொல் முன்பு வழங்காவிட்டாலும் சொல் குறித்த பொருளும் பண்பும் மிகப் பழைமை வாய்ந்தவை. ‘தமிழ்’ என்ற சொல்லாலேயே இது பெரிதும் சுட்டப்பட்டுள்ளது. மொழி குறித்த குறுகிய பொருளுடன் அது தமிழர் வழக்கில் இன்று மயங்கினும் அன்று மிகுதி குழப்பம் விளைவிக்கவில்லை. ஏனெனில், தமிழரிடையே தமிழ்க்கு மாறான அயற்பண்பு, அன்று ஆரியம் ஒன்றே. ‘ஆரியம் திராவிடம்’ என இன்று நாம் சுட்டும் எதிர்ப்பண்பு வழக்கு அன்று ‘ஆரியம்-தமிழ்’ என்று கையாளப்பட்டது, நக்கீரர் பாடலாகத் தொல்காப்பிய உரையாசிரியர் தரும் இரு வெண்பாக்களிலும். “ஆரியம் நன்று, தமிழ் தீது” என்றும் “ஆரியம் நன்று, தமிழ்நன்று” என்றும் இச்சொற்கள் எதிரெதிர் வழக்காக உறழப்பட்டுள்ளன. அப்பர் தேவாரத்திலும், “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என இதே உணர்ச்சி காணப்படுகிறது. சமற்கிருத மொழிவாணரிடையே திராவிடம் என்ற சொல் புராணங்களில் தமிழகத்தைக் குறிக்க வழங்கியுள்ளது. ஆனணால், அன்றைய சூழ்நிலையில் தமிழகம் என்ற சொல் பொதுவாகத் தென்னாட்டையே குறித்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து அது தென்னாட்டையும் தென்னாட்டு மொழிகளையும் பொது வாகச் சுட்டிற்று. சில சமயம் அஃது ஆந்திரம் என்ற சொல்லுடன் இணைந்து ஆந்திரம் உட்பட்ட தென்னாடு முழுவதையும் அதன் மொழி அல்லது மொழிகளையும் பொதுவாகச் சுட்டிற்று. ஆனால், பெரு வழக்காக அது தென்னாட்டின் ஒரே பழம் பெரும் மொழியும், தலைசிறந்த பண்பட்ட மொழியுமாய்த் திகழ்ந்த தமிழையும் தமிழகத்தையும் சிறப்பாகக் குறித்தது. இருசொற்களின் பழைமை மூலங்கள் ‘திராவிடம்’, ‘தமிழ்’ ஆகிய சொற்கள் பொருள் தொடர் புடையவை. அத்துடன் சொல் தொடர்பும் உடையன என்னலாம். சமற்கிருதப் பற்றாளர் சிலர் ‘திராவிடர்’ என்ற சமற்கிருத வழக்கே திராமிளர், தாமிளர் எனச் சிதைந்து தமிளர், தமிழர் என்றாயிற்று என்று கூறுவதுண்டு. இது நமக்குக் கிட்டும் கல்வெட்டுச் சான்றுகளுக்கு முரணானது. ஏனெனில், சமற்கிருதக் கல்வெட்டு களில் ‘திராவிட’ என்ற சொல்லுக்கு முற்பட்டே ‘தாமிள’, ‘திராமிள’ என்ற வழக்குகள் காணப்படுகின்றன. இதனால், இச்சொற்களின் வரலாறு நேர்மாறானதென்று தமிழ்ப் பற்றாளர் பலர் கருதுகின்றனர். ‘தமிழ்’ என்பதே சிதைந்து தாமிளர், திராமிளர், திராவிடர் என ஆயிற்று என்று அவர்கள் கொள்கின்றனர். ஆனால், மொழி நூல் இன்று அடைந்துள்ள வளர்ச்சிப் படியில் இம் மாறுதல் இயல்பான மாறுதலாக முற்றிலும் விளக்க முடியாத நிலையில் உள்ளது. எப்படியும் ‘திராவிடம்’ என்ற சமற்கிருதவாணர் வழக்கை விடத் தமிழ் என்ற வழக்குத் தமிழகத்தில் பழைமை யானது என்பதில் ஐயமில்லை. கிரேக்கர் ‘தமிழகம்’ என்ற சொல்லை வழங்கியதும், தொல்காப்பியம் ‘தமிழ்’ என்ற சொல்லைத் தமிழ்ச் சொல்லாகவே கொண்டு இலக்கணம் கூறுவதும் இதற்கு மறுக்க முடியாத சான்றுகள் ஆகும். உலகப் பழைமையாராய்ச்சியாளர் ‘தமிழ்’ என்ற சொல்லைப் போலவே ‘திராவிடம்’ என்ற சொல்லும் மிகப் பழைமையானது என்று கருதுகின்றனர். மேலை ஐரோப்பாவில் பிரிட்டன், பிரான்சு, °பெயின் ஆகிய நாடுகளில் வாழ்ந்த பண்டைப் பழங்குடி மக்களிடையே குருமார் ‘துருயிதர்’, என்று வழங்கப்பட்டனர். இம் மக்களுடனும், நடுநிலக் கடலக மக்களுடனும், தமிழினத்தவர் தொடர்புடையவர் ஆவர். துருயிதர் என்ற பெயருடனும் நடுநிலக் கடலகமெங்கும் காணப்படும் எட்ர°கானர், திரேனியர் என்ற இனப்பெயர் களுடனும் ‘திராவிடம்’ என்ற சொல் தொடர்புடையதென்று அவர்கள் கருதுகின்றனர். உண்மையில் ‘திராவிடம்’, ‘தமிழ்’ ஆகிய இரு சொற்களும் ஒரே வேர்ச்சொல் அடிப்படையானவையேயாகும். திராவிடம் ‘திரு’ அல்லது ‘திரை’ என்னும் சொல்லடியுடன் ‘இடம்’ சேர்ந்த இணைப்பு என்னலாம். அதுபோலத் தமிழ் ‘தம்’ என்ற சொல்லடியுடன் ‘இழ்’ என்ற வேர்ச்சொல்லின் இணைப்பு ஆகும். ‘இழ்’ என்பது தமிழர் இனமும் மொழியும் பண்பும் குறிக்கும். ‘இடம்’ அதன் திரிபாய்த் தமிழர் வாழும் பகுதிக்குப் பெயராய், இன்று பரந்த பொதுப் பொருளாகிப் பரப்பைக் குறித்துள்ளது. ‘இழ்’ என்பதன் தொடர்பை ‘ஈழம்’ ‘இலங்கை’ என்ற இலங்கைத் தீவின் பெயர்களிலும் பண்டைப் பாரசிகத்தின் தொல் பழங்காலப் பழங்குடியினரான ‘ஏலமியர்’ பெயரிலும் காணலாம். ‘திரு’, ‘திரை’ என்பவை தமிழில் தொடர்புடைய சொற்கள். ‘திரை’ அலையையும் கடலையும் குறிக்கும். தமிழர் பெருஞ் செல்வம் பெரிதும் கடலும், கடல் வாணிகமும் சார்ந்த தாதலால், ‘திரு’ செல்வம் குறித்தது. கீழைக் கடலோரத்தில் கடல் வாணிகம் நடத்திய தமிழினத்தவர் திரையர் எனக் குறிக்கப்பட்டனர். சங்க இலக்கியங்கள் இப்பெயரைப் பல்லவர் பெயராக வழங்கியுள்ளன. திரையரும் ஆந்திரரும் இனத் தொடர்புடையவர். இரண்டு இனங்களின் பெயரிலும் ‘திரை’ பொது வேர்ச் சொல்லாய் இருப்பதும் கூர்ந்து நோக்கத்தக்கது, ஆந்திரர் இரட்டைப் பாய்மரக் கப்பலையே தம் நாணயங்களில் பொறித்துத் தம் பெயரின் சொற்பொருளில் அமைந்த இனப் பண்பைக் காட்டியுள்ளனர். மேலை, கீழைத் தொடர்பு முந்தியது; வடக்குத் தொடர்பு பிந்தியது தமிழகம் முத்திசையில் கடல் சூழ்ந்தது. ஆயினும், இன்று தமிழர் உள்நாட்டில் அடங்கிய குறுகிய வாழ்வினராகவே அமைகின்றனர். இஃது அவர்கள் பண்டைநிலைக்கு நேர் மாறானது. ஏனெனில், உலகின் பழம்பெருங் கடலோடி இனங்களுள் தமிழினம் தலைசிறந்தது. அதன் வெளியுலகத் தொடர்புகளும் பெரிதும் கடல் தொடர்புகளாக, மேல்திசை கீழ்த்திசைத் தொடர்புகளாகவே இருந்தன. நிலச் சார்பான வடதிசைத் தொடர்பு மிக அணிமைக் காலச் செய்தியே யாகும். திசை குறித்த பெயராகத் ‘தென்மொழி’ என்ற சொல்லும் தமிழ்க்கு மிக அணிமைக்கால வழக்கே என்பது தெளிவு. ‘தென்மொழி’ என்ற சொல் தொடக்கத்தில் திசை குறிக்காத சொல்லாகவே இருந்திருக்கக்கூடும் என்னல் வேண்டும். ஏனென்றால், கம்பர் காலம்வரை ‘தென் சொல்’ இனிமையான சொல் என்ற பொருளில் வழங்கப் பட்டிருப்பது காண்கிறோம். “தென் சொற் கடந்தான் வடசொற் கடற் கெல்லை கண்டான்” என்ற கம்பராமாயண அடியில் `தென் சொற் கடந்தான்’ என்பது உண்மையில் `தென்சொற்கள் தந்தான்’ என்றே பொருள்படுவதாகும். ஆனால், அதே சமயம் கம்பநாடர் `வடசொல் என்பதைத் திசைப் பொருளில்’ `வடமொழி’ என்றும், `சமற்கிருதம்’ என்றுமே கொண்டார். பழைய பண்புப் பொருளும் புதிய திசைப் பொருளும் இங்கே கம்பரால் அணி அழகுபட மயங்க வைக்கப்பட்டுள்ளன என்று காணலாம். தென்மொழி என்பதன் பழம் பொருள் இனிமையுடைய மொழி என்பதே. தமிழ் என்ற சொல் இனிமை என்ற பொருளில் வழங்கப்பட்டிருப்பது இதனை வலியுறுத்தப் போதியது. அத்துடன் தமிழின மொழிகளின் பெயர்களும்கூட இதே துணைப்பொருள் வாய்ந்தவையாய் உள்ளன. மலையாளம் என்ற சொல் மலையம் அல்லது தென்றல் என்ற பொருளையும்; கன்னடம் என்ற சொல் கன்னல் அல்லது கரும்பு என்ற பொருளையும்; தெலுங்கு அல்லது தெனுகு தேன் என்ற பொருளையும்; துளு என்பது துளி அல்லது தேன் துளி என்ற பொருளையும்; குடகு என்ற சொல் குடம் அல்லது குளம் அதாவது சருக்கரை என்ற பொருளையும் அளாவி இயங்குவது காணலாம். இனிமைப் பொருளுடைய ‘தென்’, ‘குட’ என்ற சொற்களே பின்னாள்களில் அவ்வம்மொழி யடிப்படையாகத் ‘தெற்கு’, ‘மேற்கு’ எனத் திசைப் பொருள்களையும் கொண்டனவோ என்று ஐயுற இடமுண்டு. மேற்கு, கிழக்கு என்பது தமிழகப் பெரும்பகுதியின் நில இயலுக் கேற்ப மேல், கீழ் அதாவது மேடு பள்ளப் பெயராக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தொல்காப்பிய சங்ககால வழக்குகள் தொல்காப்பியக் காலத்திலும் சங்க காலத்திலும் தென் மொழி என்ற வழக்குக் காணப்பெறவில்லை. ஆனால், ‘வட சொல்’, ‘வடமொழி’ என்ற வழக்கு இரண்டிலுமே காணப்படுகிறது. அத்துடன் தென்னவன், தென்னாடு என்ற வழக்குகளும் பாண்டி நாடர், பாண்டிய நாடு குறித்த வழக்குகளாகவே காணப் படுகின்றன. ‘தென்றல்’, இனிய காற்று, தென்காற்று என்று மயங்குவதுபோல, இங்கே இனிய தமிழ்க்குரிய நாடு தென்னாடு என்ற பொருளில் மயங்கிற்று என்னலாம். இதற்கேற்ப, தொல்காப்பியத்திலும் ‘வடசொல்’ திசை குறித்த சொல்லாகக் காணப் பெறவில்லை. இக்காலத்தவர் அதை எளிதாக ‘வடமொழி’ என்றும் ‘சமற்கிருத’மென்றும் தம் வழக்கின் பொருள் கொண்டு விடுகின்றனர். ஆனால், அறிஞர் பா.வே. மாணிக்க நாயகர் குறித்துள்ளபடி, இங்கே வடக்குத் திசைப் பெயராகத் தெரியவில்லை. ‘வடக்கிருத்தல்’ முதலிற் பண்பையும் பின் திசையையும் குறித்ததுபோல, இங்கும் ‘வட’ என்பது ‘மேல் நோக்கு’ அதாவது ‘சமய நோக்கே’ குறித்திருத்தல் சாலும். வடசொல் என்பது சமயத்துறை, மந்திரம் ஆகியவற்றுக்காகத் தமிழ் முனிவர் வகுத்த சொல் தொகுதியே என்னல் இழுக்காகாது. தெற்கே தமிழகத்தைக் கடல் கொண்டபோது, தமிழர் வடக்கே குடியேறித்தான் புதுவாழ்வு கண்டனர். வடக்குப் புதுவாழ்வும் சமய வாழ்வும் குறித்தது இதனாலேயே என்னலாம். சங்க இலக்கியத்தில் வடமொழி திசை குறிக்கத் தொடங்கி யுள்ளது. வடதிசையிலிருந்து வந்தவர் வழங்கிய வேதமொழி, பாளி, பாகத மொழிகளை அது குறித்தது. சமற்கிருதம் சங்ககாலத்தில் வழக்குக்கு வரவில்லை, கருவிலேயே இருந்தது. என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சங்ககாலம் வரை தென்மொழி, வடமொழி என்ற வழக்கு பெருவழக்கல்ல என்பது தெளிவு. வழங்கியபோதும் அவை பெரிதும் திசை வழக்காக நிலவவில்லை; பண்பு வழக்காகவே நிலவின என்றும் காண்கிறோம். இடைக்கால, தற்கால மரபு தமிழ்க்குத் ‘தென்மொழி’ என்ற பெயரும், சமற்கிருதத்துக்கு ‘வடமொழி’ என்ற பெயரும் வழங்கிய காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பிரிவேயாகும். இதற்கு முற்பட்ட தொல்காப்பிய, சங்க இலக்கிய காலங்களிலெல்லாம், தமிழ் கீழை யுலகிலே போட்டியற்ற ஒரே பண்பட்ட மொழியாகத் தனியாட்சி செய்தது. ‘தென்மொழி’, ‘வடமொழி’ என்ற எதிரெதிர் வழக்குக்குரிய மொழி எதுவும் அன்று நாகரிக உலகில் இல்லை. இக்காலப் பிரிவுக்குப் பின்னரோ, தென்னாட்டு மொழிகள் எல்லாமே பண்பட்ட மொழிகளாய் இலக்கிய வளம் பெறத் தொடங்கின. அத்துடன் சமற்கிருத மொழி மட்டுமன்றி, அதன் இலக்கியப் பெருவாழ்வும் சாயத் தொடங்கிவிட்டது. தமிழ் ‘தென்மொழி’ என்ற நிலை இழந்து ‘தென் மொழிகளுள்’ ஒன்றாய் வளர்ச்சி குன்றிவிட்ட சமற்கிருதத்தின் நிழலில் ஒதுங்கிப் பதுங்கத் தொடங்கிற்று. ‘தென்மொழி’, ‘வடமொழி’ என்ற வழக்கு இப்போதும் நீடித்ததாயினும், அது மரபுவழக்காக நிலவிற்றேயன்றி, கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை நிலவியதுபோல உயிர் வழக்காய் உலவவில்லை. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றைய 20ஆம் நூற்றாண்டு வரை ஒவ்வொன்றாகச் சிந்து கங்கை வெளியிலுள்ள மொழிகளும் மேலை ஐரோப்பிய, வடஐரோப்பிய மொழிகளும், ஏனைய உலக மொழிகளும் பண்பட்டு இலக்கிய மொழிகளாகியுள்ளன. இந்நிலையில் ‘தென் மொழி’, ‘வடமொழி’ என்ற எதிரெதிர் வழக்கு தமிழர் ‘பழங்குடுவை’ மரபு சார்ந்த வழக்கன்றி, மாநில வழக்காகவோ உலக வழக்காகவோ சிறக்கும் தகுதியுடையதன்று. ஆயினும், ‘தென்மொழி’ என்ற சொல் இன்று தமிழின் பெயராக வழங்குவதில் ஒரு புதுப்பொருளும் புது வாய்ப்பு வளமும் உண்டு. தென்னாட்டு மொழிகள் அனைத்துக்கும் பொதுவான இனிமைப் பண்பையும், தென்னாட்டை யும் அது நன்கு சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் மரபு முறையில் தமிழையும், பண்பு முறையில் தமிழினத்தையும், நாட்டையும் குறிக்கும் சொல்லாக அது திகழ்கின்றது. தமிழ் தன் இன மொழிகளை அளாவி தான் இழந்துவிட்ட பழம் பண்புகளை மீட்டும் பெற்று முன்னேறுந்தோறும், தென்மொழி என்ற அதன் பழம் பெயர்க்கு அது மீண்டும் புதுப்பொருளும், புதுத் தகுதியும் தருவதாயமையும்! அது தென்னாட்டின் வருங்கால வளம் பெருக்கும் மொழியாய், தென் ஆசியாவின் மொழியாய் வளரும். தென்னுலகின் மொழியாய் உலகில் தேனிலாவொளி பரப்புவதாய் இலங்கும். இலங்குதல் வேண்டும். அஃதை அவ்வாறு இலங்கச் செய்யும் இனிய கடமையும், எழிலார்ந்த பொறுப்பும், ஈடிலா உரிமையும் வருங்காலத் தமிழகச் சிற்பிகளுக்கு உரியதாகும். வருங்கால வளம் இன்றைய ‘இந்தியா’, `பாகி°தான்’ இரண்டும் அடங்கிய மாநிலத்தின் மொழிகள் இரண்டு மொழி இனக் குழு சார்ந்தவை யாய் இயல்கின்றன. ஒன்று இந்திய - ஆரிய மொழிக்குழு. மற்றொன்று தமிழின அதாவது திராவிட மொழிக்குழு. இவற்றுள் திராவிடமொழிக் குழுவில் தமிழ், மலையாளம், துளு, கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னாட்டின் ஐந்து மொழிகளும் பண்பட்ட இலக்கிய மொழிகள். மற்றும் பிராகுவி, கோண்டு, இராசமகால் முதலிய பண்படா மொழிகள் சிந்து கங்கை வெளியெங்கும் பரந்து சிதறிக்கிடக்கின்றன. தமிழ் பண்பட்ட திராவிடமொழிகளுள் தலைசிறந்த மொழி; அவற்றின் நடுநாயகமொழி. அதுமட்டுமன்று. பண்பட்ட மொழிகளுக்கும் பண்படா மொழிகளுக்கும் இடையே பாலமாகவும் அது அமைந்துள்ளது. திராவிடப் பண்புகளில் ஒவ்வொரு கூறு ஒவ்வொரு திராவிட மொழியில் சிறிதுள்ளதாயினும், மொத்த அளவில் தமிழே இன்றும் திராவிடப்பண்பின் மூலத் தனமாகவும், மூலத் திராவிடம் அல்லது பழம் பெருந்தமிழின் தலைமரபாகவும் சிறந்த மரபாகவும் உள்ளது. இவ்வகையில் மாநிலத் தேசிய வாழ்விலும், பண்பாட்டு வாழ்விலும் அதன் பங்கு மிகப்பெரியது. அது தென்னாட்டுத் தேசியத்தின் கருமுதலாகவும், மாநிலத் தேசியத்தின் ஊக்கு முதலாகவும் ஒருங்கே இயல்கின்றது. வேத மொழியிலும் சமற்கிருதத்திலும் சிந்து கங்கை வெளியிலுள்ள மற்ற இந்திய-ஆரிய மொழிகளிலும் ஆரிய இனமொழிக் கூறு அடிப்படைச் சொல் தொகுதியின் அளவில் பெரியதேயாகும். அவை தனி இனமாக வகுக்கப்படுவது அதனாலேயே. ஆனால், இலக்கண வளங்கள், சொல்லொழுங்கு, மரபு ஒழுங்கு ஆகியவற்றிலும், ஒலிப்பு முறையிலும், ஒலி மாறுபாடுகளின் பண்பிலும் இவ்வெல்லா மொழிகளும் மாநிலத்தின் அடிப்படை இனமான திராவிட இனப் பண்புடையவை என்று மொழி நூலார் அனைவருமே ஒருதலையாகக் கூறுகின்றனர். அத்துடன் அவற்றின் வளர்ச்சிப் போக்கும், வளர்ச்சியின் திசையும் பெரிதும் தமிழ் நாடியதாகவே காணப்படுகின்றன என்று பல மொழி யாராய்ச்சி அறிஞர் கருதுகின்றனர். இவைமட்டும் அல்ல. உண்மையில் சொல்வளத்தில்கூட வேத மொழியைவிட சமற்கிருதமும், இரண்டையும்விடத் தாய்மொழிகளும் பேரளவில் அடிப்படை இனச் சார்புடையவையே. சிறப்பாக இந்திய நாகரிக வாழ்வு, சமய வாழ்வு, அறிவியல், கலைவாழ்வு குறித்த சொற்கள் எல்லாத் தாய் மொழிகளிலும் பெரிதும் தமிழ், தமிழினச் சொற்களேயாகும். மாமலை மருந்தும் வளந்தரும் விருந்தும் தமிழ், சமற்கிருத இலக்கிய இலக்கண நூல்களை ஒப்பு நோக்குபவர் களுக்கு, இரு துறைகளிலும் தொடக்கத்தில் சமற்கிருதம் தமிழைப் பின்பற்றுவதையும்; இடைக்காலத்தில் இரண்டும் ஒரே உயிரோட்டத்தின் இரு கிளைகளாகப் போட்டியிட்டு நடைபோடுவதையும்; அணிமைக் காலத்தில் சமற்கிருதத்தைத் தமிழ் பின்பற்ற முயன்று குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடுவதுபோல் இரண்டும் உயிர்ப்பாற்றல் இழப்பதையும் காணலாம். மேலை உலக ஒளி, சிறப்பாக ஆங்கில மொழியின் ஒளி. அஃது உடன் பிறவா மாமலையிலுள்ள மருந்தேபோல் இன்று மயக்கம் தரும் அயல் பண்பகற்றி, தற்பண்பை எழுப்பியுள்ளது. மறுமலர்ச்சியைத் தூண்டியுள்ளது. நச்சணுக்களாய் அமைந்த கீழை மரபுகளுக்கும், நன்மருந்தாயமைந்த மேலை மரபுக்கும் ஒருங்கே வருங்கால விருந்தாய் அமையத் தக்கது தமிழ் என்னலாம். தூண்டுதல் தரும் மேலை உலகுக்கும் மறைப்புத் திரையிட்ட கீழை யுலகுக்கும் புத்தொளி தரும் ஆற்றல் தமிழ்க்கு உண்டு. தென் கிழக்காசியாவெங்கும் தமிழர் இன்று வாழ்கின்றனர். தென் கிழக்காசியா வெங்கும் தமிழகம் இன்று புத்தொளியும் புத்தார்வமும் எழுப்பி வருகிறது. மேற்கே தமிழினத்துடன் தொடக்கக் காலத்தில் உறவு கொண்டிருந்த நாடுகள், இனங்கள், பண்பாடுகள் அழிந்தொழிந்த பின்னும் கிழக்கே அவை நீடித்து நிலவுவதன் மறை மெய்ம்மை இதுவே. அயலின ஆட்சிக்கு அடிமைப்பட்ட தமிழினம் அந்நாட்டின் புதுத் தேசியங்களால் துவைத்துத் துரத்தப்படினும், அத்தேசியங்களைத் தமிழினமே தன் உயிர்ப்பாற்றலால் ஊக்கிவருகிறது. வருங்காலத் தமிழகத்தின் வளத்துக்குரிய சூழலாக, வருங்கால உலகில் மீட்டும் தென்கிழக்கிலிருந்து ஒளி வீசும் கதிரவனுக்குரிய செவ்வானொளியாக அது திகழத் தொடங்கியுள்ளது. மாநில மொழிகளிலோ, தென்னாட்டு மொழிகளிலோ, தமிழ் ஒன்றே பேரளவில் இன்றும் கடல் கடந்து ஐந்து கண்டங்களிலும் பேசப்படும் மொழி ஆகும். ஐந்து கடலலைகளுடனும் அதன் குரல்கள் இன்னும் இணைகின்றன. இக்குரல்கள் இன்று தமிழன் அடிமை வாழ்வின் அவலக் குரல்களாயினும் வருங்காலத்தில் அவை வள்ளுவர் அருளறக் குரல்களாக மலர்ச்சியுறுவது உறுதி என்னலாம். ஊழிகடந்து ஊழி உலகுக்குப் புத்துயிரளிக்கும் கடவுட் கூறாகத் தமிழகத்தின் மறுமலர்ச்சி தளிர்க்கத் தொடங்கியுள்ளது. 3. மொழியின் இயல்பு மனித இனத்தின் சாதனைகள் பல. மனிதனே கண்டு வியக்கும் அரும் பெருஞ் சாதனைகள்கூட அவற்றிடையே உண்டு. ஆயினும், அவ்வெல்லாச் சாதனைகளுக்கும் அடிப்படையாய் உதவுவது மொழியே. அறிவுநூல் வளர்ச்சி, ஆட்சி, சமுதாய வாழ்வு, சமயம், கலை, நாகரிகம்-எதுவுமே மொழி யில்லாவிட்டால் இல்லை. மொழி மனித நாகரிகத்துடன் நாகரிகமாக வளர்வது. மனித நாகரிகத்தை வளர்ப்பது. மனிதனின் அறிவையும், உணர்வையும் அனுபவத்தையும் தலைமுறை கடந்து தலைமுறை, ஊழி கடந்து ஊழி கொண்டுசெல்வது. காலத்தையும், இடத்தையும் தாண்டி, இயற்கையை மனிதன் வென்று ஆட்கொள்ள உதவுவது அதுவே. சமுதாய வாழ்வுக்கு மட்டுமன்று, குடும்ப வாழ்வுக்கும் மொழிதான் உயிர் மூச்சு! நாகரிகம் முன்னேறுந்தோறும் அரசியல், சமயம், சமுதாயம் சார்ந்த பிரிவினைகள், எல்லைக் கோடுகள் மங்கி மறைந்து வருகின்றன; மங்கி மறையும். உலகம் ஓருலகமாக வளர்ச்சி யடையுந்தோறும் சாதி வேறுபாடுகள், நிற வேறுபாடுகள், பிறப்பு வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் யாவும் தடமழிந்து ஒழிவது உறுதி. ஆனால், மொழியும் மொழி சார்ந்த இனமும் தேசமும் அவ்வாறு மங்கி மறைவதில்லை; மறைய முடியாது. ஏனெனில், நாகரிகத்துக்கே அடிப்படையான பண்புகளை உருவாக்குவதும், பேணுவதும், வளர்ப்பதும் மொழியே. இன நாகரிகமும் மொழியும் மனித இன வாழ்வில் நாகரிகம் அதன் அலைகடற்பரப்பு மட்டுமே. மொழியே அதன் ஆழ்கடற் பண்பு. நாகரிகம் மனித இனத்தின் உயர்குடிகள், ஆட்சி வகுப்பினர், செல்வர் ஆகியோர் வாழ்வை மட்டுமே அளாவி மேலோடிச் செல்லும் ஒரு படர்கொடி. மொழியோ கோமக்கள், குடி மக்கள்; ஆண்டான், அடிமை; முதலாளி, தொழிலாளி; கற்றறிந்த புலவோர், கல்வியில் பிற்பட்டோர்; செல்வர், ஏழைகள் ஆகிய எல்லா இனப் பரப்புகளையும் ஊடுருவி இன வாழ்வின் அடிநிலத்தில் ஆழ்ந்து ஊன்றிப் பரவிய ஒரு வேர்ப் பண்பு. சமயம், இனம். தேசம் ஆகியவற்றில் உயர்வு தாழ்வுக்கும் இடம் இருக்கலாம். இருந்தே வருகிறது. ஆனால், மொழியில், தாய்மொழியில் எத்தகைய அடிப்படை உயர்வு, தாழ்வும் இருக்க முடியாது. எத்தகைய உயர்வு தாழ்வும் நீடித்து நிற்கவும் முடியாது. பேச்சுத் திறத்தில் குன்றிய பண்டிதரையும் அதில் விஞ்சிய குதிரைக்காரரையும் தாய்மொழியிலே மட்டும்தான் காணமுடியும்! உலகெங்கணும் புரோகிதர், உயர்குடியினர், ஆட்சி வகுப்பினர் ஆகியோர் அயல்மொழி ஆட்சியையே பெரிதும் ஆதரித்து வந்திருப்பதன் மூலக்காரணம், ஆதரித்து வருவதன் உள்ளார்ந்த நோக்கம் இதுவே! நாட்டு வாழ்வில், மக்கள் வாழ்வில் இப்பேருண்மையை வெள்ளிடை மலைபோல் காணலாம். தாய்மொழி நாட்டு மொழியாக, கல்வி மொழியாக, சமய மொழியாக நிலவும் நாடுகளில்தாம் நாம் மலர்ச்சியை, மறுமலர்ச்சிகளைக் காண்கிறோம். அந்நாடுகளிலும் அவ்வாறு நிலவும் காலங்களில்தாம் அந்நிலை மலர்கிறது. மற்றும் அந்த உரிமைநிலை முற்றிலும் ஏற்பட்டுள்ள மேலை ஐரோப்பாவே, இன்று அறிவுநூல் துறைகளில் முன்னேறியுள்ளது; முன்னேறி வருகிறது! அந்நிலை இன்னும் ஏற்படாத கீழை உலகமும் தமிழ்நாடும் அந்நிலை ஏற்படும் வரை, அத்துறையில் பிற்பட்டே இருக்கமுடியும்; பிற்பட்டேயுள்ளன. நடையுடை பாவனைகளில் அவை மேலை யுலகத்தின் அடிநிழலைப் பின்பற்றுவது போல, அறிவுத் துறையிலும் மேலையுலகத்தைப் பின்பற்றி யுழன்று போலி வாழ்வுதான் வாழமுடியும்; தற்பண்புடைய உயர் நாகரிகம் வளர்க்க முடியாது. மொழியின் சமதர்மம் தாய்மொழி வாழ்வில் அரசனும் ஆண்டியும், புலவனும் புலமையற்றவனும், வணிகனும் துறவியும் ஒரு நிலைப்பட்ட வர்களே. அவர்கள் யாவருமே எவ்வகை ஏற்றத் தாழ்வுமில்லாமல் அதன் புகழில் தங்கு தடையின்றிச் சரிசம நிலையில் போட்டியிட முடியும்; போட்டியிட்டிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, இரந்து திரிந்த ஹோமர் புகழை உலகாண்ட ஜூலிய° ஸீஸர் அத் துறையில் வென்றுவிடவில்லை. கல்லா நடிகனாகிய ஷேக்°பியர் புகழுடன் கற்றறிந்த புலமைக் கவிஞனான மில்ட்டன் போட்டி யிட முடிந்ததே தவிர, வெல்ல முடியவில்லை. வணிகராகிய கூலவாணிகன் சாத்தனாருடன் அரச துறவியாகிய இளங்கோவும், துறவியாகிய திருத்தக்கதேவரும் சரிசமமாகவே போட்டி யிட்டுள்ளனர். உலகின் கவிஞர், எழுத்தாளர், அறிவியல் புதுப் புனைவாளர் ஆகியோரிடையே எத்தனை பேர் ஆட்சி வகுப்பினர், உயர்குடியினர்? எத்தனைபேர் செல்வர், கல்வி கற்றவர்? கல்விக் கோயில்களாகிய கல்லூரி பல்கலைக் கழகங்கள் தரும் பட்டங்களைப் பெற்றோர்தாம் எத்தனை பேர்? இக் கேள்வி களுக்குரிய விடை உலகப் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிப்ப தாயிருக்கும்! உண்மையில் இக்கல்வி நிலையங்கள் கல் வியூற்றுகளல்ல. கல்வியூற்றின் அறிவு நீரை எங்கும் கொண்டு பரப்பும் குழாய்கள் மட்டுமே! அவை அறிவின் வான்மழையோ உயிராறுகளோ அல்ல; வான்மழை நீரையும் உயிராற்று நீரையும் தேக்கி வைத்து வளம் பேணும் ஏரி குளங்கள் மட்டுமே! பொதுவுடைமை அரசாக, முழுநிறை தேசிய அரசாக நாடு நிலவாத இடத்தில், அறிவுக் குழாய்களாகக்கூட அவை இயங்குவதில்லை. அறிவு பரவாமல் ஆட்சி வகுப்பினர்க் குள்ளேயே இருக்கும்படி பேணும் அறிவுப் புதைவிடமாகவோ, அறிவையும் விற்பனைச் சரக்காக்கும் அறிவுக் கடையாகவோ தான் இன்றைய உலகில் அவை இயங்குகின்றன. அறிவு ஊற்றாகவும், அறிவு மழையாகவும் உயிர்க்கலையா றாகவும் பயன்படுபவை உயர்குடி வாழ்வுமல்ல; கல்விக் கடைகளு மல்ல; தாய்மொழியின் உயிர் வாழ்வாகிய பொதுமக்கள் வாழ்வே. செல்வத்தைப் படைப்பவர் செல்வரல்லர், ஏழைத் தொழி லாளிகளே! அதுபோல, அறிவுச் செல்வத்தைப் படைப்பவர்கள் அறிவுக் கடை வணிகராகிய போலி அறிஞரல்லர், ஏழை மக்கள் சமுதாயத்துக்கு உழைக்கும் உத்தமர்களே என்பதும் குறிப் பிடத்தக்கது! மொழியே மக்கட் செல்வம் பொன்னுக்குப் பாடிய கம்பன் திறத்தைவிட, கூழுக்குப் பாடிய கம்பன் கால அவ்வையார் திறம் குறைந்ததன்று. அதுமட்டு மன்று. பொன் புகழ்க் கம்பனையும் பொதுப்புகழ் அவ்வை யாரையும் விஞ்சியதாயிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது! அந்த அவ்வையார் செவியுற்ற ஏற்றப்பாட்டு என்று நாம் கேள்விப்படுகிறோம்! ‘ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை’ என்று அந்த அவ்வையார் மக்கட் பாடலைப் பாராட்டியதாகவும் அறிகிறோம். அறிவார்ந்த அவ்வன்னையின் பாராட்டைப் பின்பற்றியே இன்றைய நம் அறிவு ஊழியும், அறிவார்ந்த மேலை உலகமும் மக்கட் பாடல்களுக்கு உயர்மதிப்பளிக்கின்றன. கம்பன் பாட்டைவிட, அவ்வை பாட்டைவிட, ஏற்றப்பாட்டு, தமிழினத்தின் கவிதைப் பண்புக்கு, கவிதை இன ஊற்றுக்கு நல்ல சான்று. ஷேக்°பியரைவிட, மில்ட்டனைவிட, நாட்டுப் புறப்பாடலான ‘செவீசே°’, ஆங்கில மக்கள் இனக் கவிதை ஊற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். கீழ்நாட்டின் இடைக்கால அவ்வையாரைப் போலவே மேல்நாட்டின் கதையுலக ஷேக்°பியரான °காட் இம் மக்கட் பாடலைச் செவிமடுத்துக் கேட்டார். அதன் பழம் புதுச் சுவையில் ஈடுபட்டு அவர் உலகுக்குப் புதுப் பழச்சுவை அளிக்க முடிந்தது! உலக இலக்கியத்திலே, வேறு எம்மொழி இலக்கியத்துக்கும். கிரேக்க இலக்கியத்துக்குக்கூட இல்லாத ஒரு தனிச் சிறப்பு, தமிழ்ச் சங்க இலக்கியத்துக்கு உண்டு. அஃது ஒன்றே உலகின் உயர் இலக்கியங்களுள் ஒரு மக்கள் இலக்கியம்; உலகின் மக்கள் இலக்கியங்களுள் ஓர் உயர் இலக்கியம்! ஏற்றப்பாட்டைப் பாராட்டிய பிற்கால அவ்வையார் போற்றும் ஓர் ஒப்பற்ற பண்டைக்கால அவ்வையார், மக்கட் கவிஞர் போற்றும் ஒரு மக்கட் கவிதைத் தெய்வமான திருவள்ளுவர் ஆகியோர் அச்சங்க இலக்கிய வானில் தண்கதிர். ஒண்கதிர்களாக விளங்கினர். தாய்மொழியின் தனிச் சிறப்பு உலகில் மொழிகள் பலப்பல; எண்ணிறந்தன என்று கூறலாம். அவற்றின் இலக்கிய இலக்கண வளங்களில் உயர்வு தாழ்வு உண்டு-மலைமடு அளவான வேறுபாடு உண்டு. அவற்றின் பண்புகளில், அமைப்புகளில், வாழ்க்கை வரலாறுகளில் எவ்வளவோ நிறைவு குறைவுகள் உண்டு. ஆனால், மொழி என்ற நிலையில், தாய்மொழி என்ற நிலையில் - எல்லா மொழியும் ஒரு நிலைப்பட்ட மொழியே. அவ்வத் தாய்நில மக்களுக்கு அவ்வத்தாய் மொழி உடலைப் பெற்ற அன்னையினும் சிறந்த உயிர் அன்னையே. ஒவ்வொரு மொழியும் அவ்வம் மொழிக் குரிய எல்லையில் மனித இனத்தின் அறிவு ஊற்றே. மனித இனப் பண்பாடு வளர்க்கும் கலைப் பண்ணையேயாகும். பழைமையிற் சிறந்த தமிழ்க்கும், புதுமையிற் சிறந்த வங்காள மொழிக்கும் உருசிய மொழிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு ஒன்றே ஒன்றுதான்-தமிழ் வாயிலாகத் தமிழர் உலகுக்குச் சிறந்த பண்பளிக்க முடியும்; வங்காள மொழி, உருசிய மொழி வாயிலாகவே வங்காளிகளும் உருசிய மக்களும் உலகுக்கு அத்தகைய பண்பை அளிக்க முடியும்! வங்காளி மூலம் வளர எண்ணும் தமிழன், தமிழ்மூலம் வளர எண்ணும் உருசியன், உருசிய மொழி மூலம் வளர எண்ணும் வங்காளி-இம் மூவரும் உலகில் தத்தம் மரபைத் துடைத்தழிப்பவர்-உலக நாகரிகத்துக்கு ஊறு விளைவித்துத் தாமும் இன மரபழித்து அழிந்தொழிபவரே யாவர்! மொழி வரலாற்றின் படிப்பினை மொழிக்கு-தாய்மொழிக்கு - தாய் மொழிகளுள் கடைப்பட்ட தாய்மொழிக்குக்கூட மனித இன வளர்ச்சியில் இவ்வளவு அரிய பெரிய பங்கு எப்படி ஏற்பட்டது? பல இனங்கள் அழிந்து விட்டபின்கூட, அவற்றின் மொழிகள் அவ்வினப் பண்புகளின் புகழ் வாழ்வு வளர்த்து, இனமழிந்த பின்னும் மனித இனத்தை வளர்க்க எவ்வாறு முடிந்துள்ளது? மொழி வரலாறு இவ்வுண்மைகளை நமக்குக் காட்ட முடியும். வரலாறுகளில் சிறந்த வரலாறு-உயிர் வரலாறுகளில் சிறந்த உயிர் வரலாறு, மொழி வரலாறே! மனித இன வரலாற்றின் உயிர் மூலப் பகுதி அதுவே. ஆனால், மொழி வரலாறு, மொழி நூல், உலகின் வரலாறுகளுள் புத்தம் புதிய வரலாறு, இயல் நூல்களுள் புத்தம் புதிய இயல்நூல். அது பிறந்தது 19ஆம் நூற்றாண்டிலேயே. அது தமிழைத்தீண்டியது, தமிழை அளாவி வருவது 20ஆம் நூற்றாண்டிலேயே. அது தரும் படிப்பினைகளில் கருத்துச் செலுத்துவோம். மொழியின் பிறப்புப் பற்றிய கோட்பாடுகள் மொழியின் பிறப்புப் பற்றி ஆராய்ந்த மொழி நூலறிஞர் அதுபற்றிய கற்பனைகளிலேயே பெரிதும் ஆழ்ந்துள்ளனர். கற்பனைக் கோட்பாடுகள் பலவற்றை உருவாக்கித் தந்துள்ளனர். மொழி கடவுளின் படைப்பு என்பதே உலகின் பழங்கால, மரபு வழக்கு. தமிழகத்தின் இடைக்கால மரபாகவும் இஃது அமையும். அறிவார்ந்த சமயவாதிகளுக்குக்கூட இக் கோட்பாடு கேலிக் கூத்தாக முடிவது. ஏனெனில், கடவுளின் படைப்பில் அடங்காத பொருள் இருந்தாலல்லவா, மொழியை மட்டும் கடவுளின் படைப்பு என்று கூறுதல் வேண்டும்? கடவுளின் படைப்பு என்ற தொடர்க்குரிய நேர் பொருள் மனிதனால் ஆக்கப்படாதது; இயற்கையாய் அமைந்தது என்பதே. இப்பொருளில் கடவுளின் படைப்பு என்பதில் அரை உண்மை உண்டு. ஏனெனில், மொழியை மனிதன் வளர்ப்பது உண்மையாயினும், அதன் படைப்பில் அவனுக்குப் பங்கு இருப்பது உண்மையாயினும், இரண்டிலும் பெரும்பகுதி அவனையறியாது நிகழ்ந்துள்ள நிகழ்ச்சியே யாகும். கடவுட் கருத்தைப் போலவே மொழியும் மனிதன் அறிவு நிலை கடந்தது. உணர்வு நிலையைக்கூடப் பல இடங்களில் தாண்டியது. இரண்டும் கடந்த மனிதன் செயல்நிலை அதாவது இயல்வாய்ப்பு (iளேவinஉவ) நிலையைக் கவிதைப் புனைவாற்றல் மிக்க அறிஞர் கடவுள் செயல் என்று சுட்டினால் தவறில்லை. ஏனென்றால், இத் திறத்தில் மனிதனும் மற்ற உயிரினங்களும் இயற்கையின் ஒரு கூறாக மட்டுமே செயற்படுகின்றனர் என்னலாம். மொழி பற்றிய சமயச் சார்பற்ற கோட்பாடுகளை மொழி வரலாற்றறிஞர் அழகான செல்லப்பெயர்களிட்டு வழங்கியுள்ளனர், ‘கூகூக்’ கொள்கை (க்ஷடிற-ஏடிற வாநடிசல), `ஆகாகா’க் கொள்கை (லுடிhடிhடி வாநடிசல), ‘மணி ஓசை’க் கொள்கை (னுiபே னுடிபே கூhநடிசல), ‘தில்லானாக் கொள்கை ’ அல்லது `ஆடல்பாடற் கொள்கை’ (ழநலnடி-ninடி வாநடிசல) `சைகைக் கொள்கை’ (ழுநளவiஉரடயவiடிn வாநடிசல), `மழலைக் கொள்கை’ (ஊhடைன டயபேரயபந வாநடிசல), என இவை பெயரிடப்பட்டுள்ளன.* விலங்கொலிகளைக் கண்டு பின்பற்றிய எதிரொலிக் குறியீடுகளாக மொழி தொடங்கிற்று என்பது ‘கூகூக்’ கொள்கை. மக்கள் மகிழ்ச்சி, வியப்பு உவகை ஆகிய உணர்ச்சிகள் காரணமாக இயற்கையாக எழுந்த மெய்ப் பாட்டொலிகளே மொழியாயிற் றென்பது ‘ஆகாகா’க் கொள்கை. மணியின் செயற்பாடு ‘டாண்டாண்’ என்ற ஒலியாக எழுவதுபோல, ஒவ்வொரு பொருளிலும் செயலிலும் எழும் ஒலியையே மக்கள் முதலில் சொல்லாகக் கொண்டனர் என்பது ‘மணி ஓசை’க் கொள்கை. இதைப் புனைந்துரைத்தவர் சமற்கிருதப் பெரும்புலவரும் ஆரிய இன மொழியாராய்ச்சியாளருமான மாக்° முல்லர். மக்கள் மகிழ்ச்சிப் பாடல்களிலிருந்து மொழி பிறந்த தென்பது ‘தில்லானா’க் கொள்கை. குழந்தைப் பேச்சிலிருந்தும் சைகையுடன் எழும் ஒலிகளி லிருந்துமே மொழி தோன்றிற்று என்பது ‘மழலைக் கொள்கை’, ‘சைகைக் கொள்கை’ ஆகும். மேற்கூறிய எல்லாவகையிலுமே மொழியில் சொற்கள் தோன்றியுள்ளன என்பது உண்மை. மொழியின் தொடக்க நிலைகளைக் குழந்தைகளின் மழலை சுட்டிக்காட்டும் பண்புடையது என்பதும் ஒத்துக்கொள்ளக் கூடியதே. ஆனால், இவற்றுள் எந்த ஒரு கொள்கையும் தனியாகவோ, எல்லாக் கொள்கையும் கூட்டாகவோகூட, மொழியின் பிறப்பை விளக்கப் போதியன அல்ல; அவை முற்கால வளர்ச்சிப் படிகளையே சுட்டிக்காட்டுவன. மனித இனப் பிறப்புக்கு முந்தியது மொழியின் பிறப்பு மொழியின் பிறப்புப் பற்றி மொழி நூலறிஞர்கள் குழப்பமடைவதற்கு ஒரு முனைப்பான காரணம் உண்டு. மொழியின் பிறப்பு உண்மையில் மனித இனத்தின் பிறப்புக்கு முந்தியது. அதனைஆராய்ந்து முடிவுகாணும் நூல் துறை மொழி நூலும் அன்று. மனித இன நூலும் அன்று; உயிர் நூலே! அதன் முடிவுகாண வேண்டியவரும் மொழி நூலறிஞரல்லர், உயிர் நூலறிஞரே! மொழி இயற்கையோடு ஒன்றுபட்டு மனிதனை இயக்கு வதன் மறை திறவு இதுவே. தவிர, மனித இனத்துக்குத் தாய்மொழி உயிரினும் இன்றியமையாச் சிறப்புடையதா யிருப்பதும் இதனாலேயே. தாய்மொழி எவ்வளவு பண்படாத மொழியாய் இருந் தாலும் அதற்குரிய இனத்துக்கு அதனினும் சிறந்த உயிர்ப்பண்பு பிறிதில்லை. எவ்வளவு அரும்பெரும் பண்புகளை உடையதாயிருந்தாலும் அயல் மொழி உயிர்ப் பண்போ, ஊக்கும் பண்போகூட உடையதாக மாட்டாது. அஃது இனத்தை அழிக்கும் பண்புகளுள் தலைசிறந்ததாகவே அமையும். மொழியின் நான்கு வடிவங்கள் மொழியின் வளர்ச்சியில் நாம் நான்கு வடிவங்களைக் காணலாம். அவை உணர்ச்சி வடிவம், கருத்து வடிவம், ஒலி வடிவம், வரிவடிவம், அல்லது எழுத்து வடிவம் என்பன. நான்கும் மனித நாகரிகத்தில் திரிந்து வளர்ந்துவருகின்றன. ஆனால் நான்கில் இறுதியான எழுத்துவடிவம் மனித நாகரிகத்தில் மிகவும் அணிமைக்காலத்திய செய்தி என்னலாம். மனித இனத்தின் நூறாயிரக் கணக்கான ஆண்டைய வாழ்வில், தமிழில்கூட எழுத்து ஏற்பட்டு எண்ணாயிரத்துக்கும் ஐயாயிரத்துக்கும் இடைப்பட்ட ஆண்டுகளே ஆகியுள்ளன என்று மேலையுலக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிகப்பல இனங்கள் வகையில், எழுத்து வடிவம் ஏற்பட்டு நூற்றாண்டுக் கணக்குகளே ஆகியுள்ளன. சிலவற்றுக்கு இன்னும் எழுத்து அமையவில்லை. தமக்கென்று தனியாக எழுத்தமைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட இனங்கள் உலகில் மிக மிகச் சில-தமிழினம், சீனம், சுமேர், எகிப்து ஆகியவை மட்டுமே! இன்றைய உலகின் எல்லா மொழிகளின் எல்லா எழுத்து முறைகளும் இவ்வினங்கள் வகுத்த எழுத்து முறைகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய விரிவுகளே யாகும். எழுத்து நீங்கலான மொழியின் மூன்று வடிவங்களும் மனித நாகரிகத்தில் மிகவும் திருத்தமுற்று வளர்ந்துள்ளன வாயினும், தோற்றத்திலும் வளர்ச்சியின் பெரும் பகுதியிலும், அவை மனிதர்க்கும், உயிரினங்களுக்கும் பொதுவானவை ஆகும். அவற்றின் பிறப்பு மனித இனத்தின் பிறப்புக்குப் பல்லூழி, பன்னூறாயிர ஆண்டு முற்பட்டது. ஒலி வகைகள்: சைகைகள் ஒலி வடிவை ஒலி, ஓசை, குரல், பேச்சு என நால் வகைப்படுத்தலாம். மனிதன் பேச்சு பொருளுடைய, கருத்துடைய, கருத் தாராய்வுத் திறனுடைய ஒலி. கிளி, பூவை ஆகிய பறவைகளின் பேச்சும், குயில் முதலிய பறவைகளின் பாடலும் போன்றவை பொருளற்ற பேச்சுப்போலி; பாட்டுப் போலி. ஏனைய விலங்கொலிகள், பறவை ஒலிகள் எல்லாம் வெறுங் குரல்கள். காக்கையின் கரைவு, கோழியின் கூவல், சிங்கத்தின் முழக்கம், புலியின் உறுமல், காளையின் உக்காரம் அல்லது எக்காளம், யானையின் பிளிறல், குரங்கின் சலசலப்பு என நாம் இவற்றை அவற்றின் ஒலியுருவின் வகையினாலேயே வேற்றுமைப் படுத்து கிறோம். எனவே, இவ்வொலிகள் பொருளற்றனவை யாயினும் உருவற்றவை அல்ல என்பது தெளிவு. காற்றொலி, நீரொலி, அலையொலி ஆகியவற்றைப் போன்றதல்ல அவைகள். அவை உயிர்ச் சின்னங்கள்; உயிரின் முயற்சியால் இன உணர்ச்சி காட்டி எழுபவை. எல்லா உயிரினங்களுக்குமே குரல் உண்டு என்று பலர் எண்ணிவிடுவ துண்டு. இஃது உண்மை நிலை அன்று. மிகச் சிறிய உயிரினங்களில் தவளை கத்தும், பாம்பு சீறும், பல்லி பேசும், கொசு இரையும்! தேனீக்கள்கூட முரலும்! சிற்றுயிர்களுள் எறும்புகள் ஏதோ ஒரு வகை மெல்லொலியும் சைகை முறைகளும் உடையவை என்று தெரியவருகிறது. ஆனால், எறும்பு உருவில்தான் சிறிது; சிற்றினங்களின் வளர்ச்சி முறையில் அஃது இழிநிலைப்பட்டதன்று. ஆயினும், இவ்வுயிரினங்களுக்கு அடுத்தபடியிலுள்ள கீழின உயிர்களில், புழுவினங்களில், நீர்ப் பாம்பினங்களில்கூட நாம் ஒலியையும் கேட்க முடியாது, குரலையும் கேட்க முடியாது. பொருள் நோக்கி வளரும் குரலைத் தமிழ் மொழி குழந்தைகளின் குதலைப் பேச்சு, மழலைப் பேச்சு என வேறு பிரித்து எடுத்துக்காட்டுகிறது. மொழி சைகைகளிலிருந்து பிறக்கக் கூடுமானாலும், அதன் உயிர் வடிவம் ஒலியே. மேலும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகளுள் தாம் சைகை முற்பட்டதாயிருக்க முடியும். உணர்ச்சியை இன உயிர்க்குத் தெரியப்படுத்தும் குறியீடு என்ற முறையிலோ, இன உயிர்க்கு அது தெரிய வரும் குறியீடு என்ற முறையிலோ சைகை முற்பட்டதாயிருக்க முடியாது. ஏனெனில், சைகை உள்ளத்தில் எண்ணி முன் நிற்பவர்க்கு மட்டும் அறிவுறுத்தத் தக்கது. ஒலி எண்ணாமலே எழுவது; நாற்றிசை யிலும் அருகிருக்கும் இனப் பரப்புக்குத் தந்தியடிக்கத் தக்கது. மொழியின் பிறப்பு ஒலி வடிவிலேயே என்றும், சைகை அதன் தொடக்க வளர்ச்சிக்கு உதவிய பண்பு மட்டுமே என்றும் இதனால் காணலாம். ஊமரும் செவிடரும் இன்று சைகை மொழியாடுகின்றனர். இதுபோலவே தொடக்க உயிர்கள் ஒலியால் தெரிவிக்க முடியாத கருத்துகளைச் சைகை மொழியால் வளர்த்திருக்கக் கூடும் என்னலாம். சைகைகள் ஒலி வளர்ச்சிக்கு முற்பட்ட இடமும் இதுவே. உணர்ச்சிப் படியிலுள்ள இயற்கை மொழிநிலை கடந்து, கருத்து நிலையிலுள்ள அறிவுப்படிக்குச் செல்லும் கட்டத்தில், சைகையே மொழியை இட்டுச்சென்று வளர்க்க உதவியிருக்க முடியும். ஒரு மொழியாளர் இன்னொரு மொழியைப் பேச முயலும் இடங்களில், இன்றும் ஒலியின் குறைபாட்டைச் சைகையும், சைகையின் நுண்ணுருவான ஒலியழுத்தமும் சேர்ந்து நிறைவுபடுத்துவது காணலாம். ஒலி வடிவின் பிறப்பு : குடும்பம் : சமுதாயம் உயிரினங்களுள் ஒலியின் பிறப்புக்கும் வளர்ப்புக்கும் உதவிய பண்புகள் இரண்டு-ஒன்று குடும்பம், மற்றொன்று சமுதாயம். முதன் முதல் ஒலி, குரல் பிறப்பது குடும்ப வாழ்விலேதான். ஆண், பெண் நேசத் தொடர்பிலேதான்! இது குறிப்பிடத்தக்க, கவனிக்கப்படவேண்டிய, முக்கியத்துவம் உடைய செய்தி ஆகும். ஒலியிலாத் தொடக்க உயிரினங்களில் ஆண், பெண்பாலின வேறுபாடே கிடையாது. அவ்வேறுபாடு ஏற்பட்ட பின்னரும் குடும்ப வாழ்வு-ஓர் ஆண், ஓர் பெண் இணைவு-அரியதொரு முன்னேற்றமாகவே காணப்படுகிறது. “காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்” என்று தொடங்கித் திருநாவுக்கரசர் சிவன்-சக்தி வடிவாக ஆண், பெண் சோடி உயிரினங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்றார். இவற்றுள் யானையும் விடையும், மானும், பன்றியும் போன்ற விலங்குகளும்; கோழி, குயில், நாரை, மயில், மகன்றில், கிளி முதலிய பறவைகளும்; பூச்சியினத்தில் வண்டும் இடம் பெறுகின்றன. இவ்வாறு இணையிணையாகக் குறிக்க முடியாத உயிரினங்கள் பல உண்டு. தவிர எறும்பு, தேனீ முதலிய இனங்கள் இணையிணையாக வாழ்வதில்லை. சமுதாயமே ஒரு குடும்பமாக வாழ்கின்றன. சமுதாயக் குடும்பத்தில் சில சமயம் ஒரு பெண்ணுக்குப் பல ஆண்கள் அல்லது ஓர் ஆணுக்குப் பல பெண்கள் அல்லது ஓர் ஆணுக்கு எல்லாப் பெண்களும் என்ற ஒழுங்கமைதி முறைகள் பயில்கின்றன. குடும்ப உயிர்களிலும், சமுதாய உயிர்களிலும் காதற் பருவமே தனிக் குரலுக்குரிய பருவமாய் அமைகிறது. குடும்ப வாழ்வில் சிறந்த பல்வகைப் பறவையினங்களிலும் இத்தகைய ஆண், பெண் அழைப்பு எதிர் அழைப்புக் குரல்களைத் தெளிவாகக் கேட்கலாம். தவிர, மழைக் காலத்தில் இரட்டைக் கதறலாகச் செவிகளைத் துளைக்கும் தவளையின் இரைச்சல், உண்மையில் ஆண் தவளைகளின் அன்பழைப்பும், பெண் தவளைகளின் அன்பேற்புமாகிய குரல்களேயாகும். பறவைகள் : யானை : குரங்கு : மனிதன் ஆண், பெண் தொடர்பில் வளர்ந்த குரல் தாய், பிள்ளை தொடர்பிலும் தந்தை, பிள்ளைகள் தொடர்பிலும் கிளைத்து, இன வாழ்வு அல்லது சமுதாய வாழ்வில் படர்ந்தது. இந்நிலையில் ஒலிகள் பெருகின. சைகைகள் ஒலியுடன் இணைந்து நாளடைவில் ஒலி மாறுபாடுகளுக்கும், திரிபுகளுக்கும் வழிசெய்தன. குடும்ப வாழ்வின் உணர்ச்சியில் பிறந்த ஒலிகள் சைகை பாவனைகள் ஆகியவை அவற்றுடன் தொடர்பற்ற வாழ்வின் உணர்ச்சி களிலும் பயன்பட்டன. இதுபோலவே, இனவாழ்வில் தொடங்கிய ஒலிகளும், சைகைகளும், பாவனைகளும் இனங்கடந்து பிற உயிரினத் தொடர்புகளில்கூடப் பயன்பட்டன. நாயின் கண்ணொளியிலும், வால் குழைப்பிலும், முணுமுணுப்பிலும் குடும்பச் சூழல், இனச்சூழல் கடந்த நட்புணர்ச்சியின் சைகை, பாவனை ஒலிகளைக் காணலாம். குடும்ப வாழ்வு மட்டும் உடைய உயிரினங்களும் உண்டு. சமுதாய வாழ்வு மட்டும் உடைய உயிரினங்களும் உண்டு. இரண்டும் ஒருங்கு வாய்ந்த உயிரினங்களும் உண்டு. குடும்ப வாழ்வுச் சிறப்புமட்டும் உடையவையே பறவைகளுள் பெரும்பாலானவை. அவை மூளை வளர்ச்சியில் சிறக்கவில்லை. ஆயினும், அவற்றின் பாட்டில் பொதுவாகவும், சிலவற்றின் பேச்சிலும் மனிதன் ஈடுபடுவதுண்டு. பேசும் பறவைகளுக்கு மனிதனுக்குரிய ஒலியுறுப்புகள் வளர்ந்தும், சில சமயம் மனிதனைவிட அவை மேற்பட்டிருந்தும், மூளை வளர்ச்சி யில்லாமையினாலேயே மொழி அவற்றிடையே முதிர்ச்சி யடையவில்லை. குடும்ப வாழ்வும் சமுதாய வாழ்வும் இணையும் இடத் திலேயே மூளை வளர்ச்சி மிகுதி. இத்தகைய இணை வாழ்வுயிர் களுள் முக்கியமானவை யானை, குரங்கு, மனித இனம் ஆகிய மூன்றுமே. விலங்குகளிடையே யானையின் மூளை வளர்ச்சியும் அறிவும் கிட்டத்தட்ட மனிதனுக்கு அடுத்தபடியாயுள்ளது. இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட அதன் நீண்ட வாழ்வும் இதற்குப் பேருதவியாயுள்ளது. மனிதன் மூளை வளர்ச்சிக்கும் அறிவுக்கும் ஒருங்கே உதவிய பண்பு சைகைகளுக்குரிய அவன் உடல் வாய்ப்பே. இதனைக் குரங்கினத்தில் மிகுதி காண்கிறோம். தொழில் செய்வதற்கென்றே தங்கு தடையற்ற வாய்ப்புடைய இவ்விரண்டினங்களின் கைகளும் நிமிர்ந்த உடலும் சைகைகளை ஊக்கி மூளை வளர்ச்சிக்கு உதவின. மூளையின் கருத்துப்படி செயலாற்றி வாழ்வை வளமாக்கவும் இவை உதவின. பறவையளவு உணர்ச்சி நயமோ, குரல் வாய்ப்போ, யானையளவு மூளைத்திறமோ குரங்கினத்துக்குக் கிடையாது. ஆனால், இரண்டு இனத்துக்கும் இல்லாத அளவில் உணர்ச்சி, குரல் நயம், மூளை ஆகிய மூன்றையும் வளர்க்க மனித இனத்துக்கு உதவிய பண்பு குரங்கின் சைகைப் பண்பு அல்லது செயற்பண்பேயாகும். மொழியின் ஒன்றுபடுத்தும் பண்பும் வேறுபடுத்தும் பண்பும் சமுதாய வளர்ச்சியில் ஒற்றுமைப் பண்பும் கட்டுப்பாடும் எவ்வளவு தேவையோ, அதே அளவுக்கு வேற்றுமைப் பண்பும் அதாவது தனி உரிமைப் பண்பும் மிகவும் இன்றியமையாத் தேவையேயாகும். தனிமனிதரின் தங்கு தடையற்ற வளர்ச்சியி னாலேயே ஒற்றுமை பயனுள்ள ஒற்றுமையாய், பல்வகைப் பெருக்கமுள்ள வளமான ஒற்றுமையாய் அமையும். ஒற்றுமை அல்லது கட்டுப் பாடு பல்வகைப் பெருக்க வாய்ப்பு அல்லது தன்னுரிமை ஆகிய இந்த இரண்டு பண்புகளும் சேர்ந்ததே கூட்டுழைப்பு. மனித நாகரிகத்தின் அடிப்படை இதுவே. மொழியில் நாம் இந்த இரண்டு பண்புகளையும் வளமாகக் காண்கிறோம். இரண்டு பண்புகளையும் மொழி இயல்பாக வளர்க்கிறது. ஒரே மொழி பேசும் மக்களை மொழியே ஓர் இனமாக ஒற்றுமைப்படுத்தி வளர்க்கிறது. இவ்வொற்றுமை தனி மனிதர் எண்ணிக்கை கடந்த பொது ஒற்றுமை மட்டுமன்று; அது தலைமுறை கடந்த தலைமுறையான மரபு ஒற்றுமையும், மொழியின் இந்த ஆற்றல் மிக்க அக ஒற்றுமையே ஆகும். மொழிக்கு வெளியே மற்ற மொழியினங்களிலிருந்து ஒவ்வொரு மொழியினத்தையும் வேறுபடுத்தவும் உதவுகிறது. இவ் வேறுபாடு கடந்து நாகரிகமாகிய படர்கொடி வளரும். ஆனால், பண்பில் இருமொழிகள் எளிதில் இணையாது. எனினும், மிக நீண்ட காலத் தொடர்பினால் மொழிகளின் பண்புகள் சரிசமநிலையில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு உடல்மாறிப் புகுந்து, நாளடைவில் இரு மொழியினங்களும் இருமொழிகளில் இணைந்த ஓர் ஒட்டுச் செடியாய், இரு பண்புகளும் இணைந்த புதுப் பண்பாக வளர இடம் உண்டு. இது பொதுமுறை நிகழ்வன்று, அருநிகழ்வே. அத்துடன் இணைவின் கால நீட்டிப்பின் அளவிலேயே புதுவாழ்வின் நீட்டிப்பும் அமையமுடியும். மொழி எல்லை கடந்த ஒற்றுமை வேற்றுமைப் பண்பைப் போலவே, மொழியினுள்ளும் ஒற்றுமை வேற்றுமைப் பண்புகளைக் காணலாம். மொழியில் காலத்துக்குக் காலம் உரு வேறுபடுவதுண்டு. இடத்துக்கு இடம் உரு வேறுபாடு ஒரு காலத்திலேயே நிகழ்வது முண்டு. சிலசமயம் ஒரே காலத்தில் ஒரே இடத்திலும்கூடக் குழுவுக்குக் குழு வேறுபாடு ஏற்படக்கூடும். இம் மூவகை மாறுபாடுகளிலும் காலமாறுபாடு ஒன்றே இயற்கையாய் எழுவது. மற்ற இரண்டும் மக்கள் வாழ்வின் நெருக்க நெகிழ்வுத் தொடர்புகளின் புறச் சின்னங்களாகவே இயல்கின்றன. மொழியின் கால மாறுபாடும் வேறுபாடும் கால மாறுபாட்டை இலக்கணம் உணர்த்தாது. மொழி நூல் மட்டுமே உணர்த்தும். அடிக்கடி மொழி நூலார் கால மாறுபாட்டை அடையடுத்த பெயரால் சுட்டுவர். இரண்டாயிர ஆண்டுக்கு முன்னிருந்த தமிழ் வடிவைப் பழந்தமிழ் என்றும், ஆயிர ஆண்டுக்கு முற்பட்ட தமிழ் வடிவை இடைக்காலத் தமிழ் என்றும் இன்றைய தற்காலத் தமிழிலிருந்து பிரித்துணர்வர். இவை ஒரே மொழியின் தொடர்வடிவானதால் தமிழர் வழக்கில் ஒரே பெயர்கொண்டன. ஆனால், மலையாளம் முதலிய தமிழின மொழிகளிலும் இந்தி, ஆங்கிலம் முதலிய பிற உலக மொழிகளிலும் பழைய இந்தி, பழைய ஆங்கிலம் முதலியன இன்றைய வழக்கு மொழியிலிருந்து மிகப் பேரளவில் வேறுபட்ட அயலின மொழிகள் ஆகியுள்ளன. பழைய மலையாளம் என்ற தொடர் உண்மையில் பழந்தமிழையே குறிக்கும். பழைய ஆங்கிலமோ ஆங்கிலத்தைவிட ஜெர்மன் மொழிக்கே அணித்தானது. இன்றைய ஆங்கிலத்திலிருந்து பழைய ஆங்கிலம் ஒலிப்பு முறை, சொல் தொகுதி, பொருள், பண்பு ஆகிய எல்லா வற்றிலுமே வேறுபட்ட ஒரு மொழியாகும். ஐந்நூறு ஆண்டு களுக்கு முற்பட்ட சாசர் கால மொழிகூட, இன்றைய ஆங்கில மொழியிலிருந்து ஒலிப்பில் எவ்வளவு வேறுபட்டது என்பதைக் கீழ்வரும் சாசரின் முதலடிகளால் காணலாம். அவ்வடிகளின் சாசர் கால, இக்கால ஒலிப்பு முறைகள் கீழே தரப்படுகின்றன. Whan that Aprille with his shoures soote The droughte of Merche hath perced to the roote. பொருள்: ஏப்ரல் மாதத்தின் மழை மார்ச்சு மாத வறட்சியை முற்றிலும் ஊடுருவிய காலத்திலே—. தற்கால ஒலிப்புமுறை வென் தெட் ஏப்ரில் வித் ஹி° ஷவர்° °வீட் தெ ட்ரௌட் அவ் மார்ச் ஹத் பியேர்°ட் டு தி ரூட் சாசர் கால ஒலிப்பு முறை ஹ்வன் தட் அப்ரில்லே வித் ஹி° ஷூர° ஸோட்டே, தெ ட்ரூஃட் அவ் மெர்ச் ஹத் பெர்ஸட் டோ தெ ரோட்டே! இருகால வழக்கினிடையே யாப்பு முறையும் சந்தமுமே முற்றிலும் மாறுபட்டுவிட்டன என்று காணலாம். சாசரின் அழகிய இன்னோசைப் பாடல் இன்றைய ஒலிப்பு முறையில் அந்தச் சந்தங் கெட்ட ஓர் உரைநடைத் துணுக்காக மாறிவிட்டிருக் கின்றது! சாசரின் சந்தம் இன்றைய ஆங்கில மொழியின் சந்தத்i தவிட நம் தமிழ்ச் சந்தத்துக்கே அணிமையுடையது என்னலாம்! கால மாறுபாட்டால் மொழியின் வடிவம் மட்டுமன்றிப் பெயரும் மாறுபட்டுவிட்டால், ஒருமொழி இன்னொரு மொழியாகிவிட்டதாக நாம் கொள்கிறோம். மலையாள நாட்டுப் பழந்தமிழ் இன்று மலையாளமாகவும் அது போலவே கன்னட நாட்டு, ஆந்திர நாட்டுப் பண்டைத் தமிழ் வழக்குகள் இன்று கன்னட தெலுங்கு மொழிகள் ஆகவும் மாறியது இவ்வாறேயாகும். திசை வழக்குகள் மொழி வழங்கும் எல்லைக்குள் இடத்துக்கிடம் வேறுபாடு ஏற்படுவது இயல்பு. வாழ்க்கைத் தொடர்பு நெருக்கமாய் உள்ள இடங்களில் இவ்வேறுபாடு குறைவு. இது தளர்வுற்ற இடங்களிலும், தொடர்பு குன்றிய இடங்களிலும், வேறுபாடு படிப்படியாக வளர்கிறது. யாழ்ப்பாணத் தமிழ், திருநெல்வேலித் தமிழ், தஞ்சைத் தமிழ், கோயமுத்தூர் தமிழ் ஆகிய வேறுபாடுகளும், தென் திருவாங்கூர் மலையாளம், வட திருவாங்கூர்-கொச்சி மலையாளம், மலபார் மலையாளம் ஆகிய வேறுபாடுகளும் இத்தகையவையே. பல கூறுகளில் மொழிகடந்து திசை வழக்குகள் இன மொழிகளை இணைப்பதுகூட அரிதன்று. யாழ்ப்பாணத் தமிழும் தென் திருவாங்கூர் மலையாளமும் ஒருபுறம், கோயமுத்தூர்த் தமிழும் மலபார் மலையாளமும் மற்றொரு புறம் சிலபல கூறுகளில் ஒத்தியல்வது காணலாம். நில இயல்கூறு இதன் காரணங்களைத் தெளிவாகக் காட்டுகிறது. தெற்கே ஆரல்வாய்மொழி, ஆரியங்காவுக் கணவாய்களின் மூலம் தென்தமிழ்க்கும் தென் மலையாளத்துக் கும் தொடர்பு ஏற்பட வழி உண்டு. அதுபோல வடக்கே பாலக்காட்டுக் கணவாய் மூலம் வடதமிழ்க்கும் வட மலையாளத்துக்கும் தொடர்பு ஏற்பட வழியுண்டு. மற்ற இடங்களில் இடை நின்று பிரிக்கும் மேற்கு மலைத் தொடரே, மொழியின் வாழ்வு தளர்ந்த காலங்களில் தமிழ்-மலையாள மொழி வேறுபாட்டுக்குப் பெரிதும் காரணமாயிற்று என்பதையும் இது தெளிவுபடுத்தும். தொல்காப்பியர் தம்காலப் பண்டைத் தமிழ் மொழியின் இடவேறு பாடுகளைத் ‘திசைமொழி’, ‘திசைச் சொல்’ என்று குறித்தனர். சமற்கிருத இலக்கண உரையாசிரியர்களும் இப்பொருளுணர்ந்து இவ்வழக்கைத் ‘தேச்யம்’ என்றனர். ஆனால், இடைக்காலத்தார் இம் மரபுணராமல் தடுமாறித் ‘திசைமொழி’ என்றால் வேறுமொழி அதாவது அயல்மொழி என்று மயங்கினர். குழு மொழி, செயற்கை மொழி தொழில், செல்வநிலை, பண்பாடு, மரபு காரணமாகத் தனித்தொதுங்கி வாழ்பவரும் கலந்து வாழ்பவரும் உண்டு. கீழையுலகில் பிறப்பினமும் சாதியும் இத்தகையவை. இதனால், பொதுவாக எங்கும் தனிச்சாதி வழக்குகளும், நாட்டுப்புற வழக்கு நகர வழக்கு என்ற வேறுபாடுகளும் தோன்றியுள்ளன. தவிர புலவர் வழக்கு, மாணவர் வழக்கு, தொழிலாளர் வழக்கு, குழந்தைகள் வழக்கு எனப் பருவ, தொழில், பண்பு மாறு பாட்டுக்கேற்பத் தனிவழக்குகள் உண்டு. நூல்கள் எழுதுவோர் இன்றும் பல துறைச் சொற்கள், துறை வழக்குகளை உடையவராவர். இலக்கியத்துக்கே பெரிதும் உரிய சொற்களைத் தொல்காப்பியர் உரிச் சொற்கள் என வகுத்தார். பிற்காலத்தார் இங்கும் அவற்றைப் பண்புச் சொற்கள் என்று கொண்டு மயங்கினர். இலக்கியத்திலும் பழைமைப்பட்டு அருவழக்கான வற்றைத் தொல்காப்பியர் திரிசொல் என்றார். தவிர, அறிவு நூல்களுக்குப் பொதுவாகவும் சமய அறிவு நூல்களுக்குச் சிறப்பாகவும் பண்டைத் தமிழறிஞர் வழங்கிய சொற்களையும், வழக்குகளையும் தொல்காப்பியர் காலத் தமிழர் ‘வட மொழி’,‘வடசொல்’ என வகுத்தனர். பிற்காலத்தார் இதனையும் சமற்கிருத மொழியைக் குறிப்பதென்று மயங்கி இடர்ப்பட்டனர். தாமும் இடறித் தமிழரையும் வழிவழி இடறுவித்தனர். உலக மொழியினங்கள் தெரிந்த பொருளிலிருந்தே தெரியாத பொருளை நோக்கி ஆராய்ச்சி செய்தல் வேண்டும். இஃது ஆராய்ச்சி முறையின் அடிப்படை இலக்கணம். இதனை நன்கு உணர்ந்தவர்கள் மேலை உலக முறையில் ஆராய்ச்சியை மேற் கொண்டவர்கள். மொழியின் பிறப்பில் அவர்கள் உடனடியாகக் கருத்துச் செலுத்தாததற்குக் காரணமும், பழைமையிலிருந்து மொழி வரலாறு தொடங் காமைக்கு விளக்கமும் இதுவே. மொழியாராய்ச்சிக்குத் தொடக்கநிலை ஆதாரங்களாய் உதவத்தக்க மூலங்கள் இரண்டு வகைப்பட்டவை. ஒன்று இன்றிருக்கும் மொழிகள், மொழி வழக்குகள், அவற்றில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் ஆகியவை. இன்னொன்று மொழிகளின் பழைமைச் சின்னங்களான இலக்கியங்களும், பழங்கால மொழிகளின் வேறு வகையான (இடப்பெயர், ஆட்பெயர், கல்வெட்டு கள்) முதலிய சின்னங்களும் ஆகும். இவற்றினடிப்படையாக உலக மொழிகளை அறிஞர் மொழிக் குழுக்களாகவும், மொழியினங்களாகவும் வகுத்துள்ளனர். உலகின் முக்கியமான மொழியினங்கள் வருமாறு 1. பிரிட்டன் முதல் வங்காளம் வரையுள்ள நூற்றுக்கணக்கான மொழிகள் இந்திய-ஆரிய மொழிகளை உள்ளடக்கிய இந்து-ஜெர்மானிய மொழி இனம் ஆகும். ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு முதலிய தற்கால ஐரோப்பிய மொழிகளும், இலத்தீன், கிரேக்கம் முதலிய பண்டை ஐரோப்பிய மொழிகளும் பண்டைப் பாரசீகமும் சமற்கிருதமும் இன்றைய வட இந்தியத் தாய்மொழிகளும் இதனுட்பட்டவை. 2. இன்று ஆரிய இன மொழிகள் நாகரிக உலகில் எவ்வளவு பரந்துள்ளனவோ அவ்வளவு வரலாற்றுக்கு முற்பட்ட (கி.மு. 3000 முதல் கி.மு. 500 வரை) உலகில் பரவியிருந்த இனம் செமித்திய இனம் ஆகும். இன்றைய எகிப்திய, அராபிய, யூத இனங்கள் இதன் வழி வந்தவை. இவ்வின மொழிகள் ஆரிய மொழிகளைவிடப் பழைமை வாய்ந்தவை. ஐரோப்பிய ஆரிய மொழிகளின் எழுத்து முறைகளும் இலக்கியங்களும் இவற்றினிட மிருந்து பிறந்தவையே. ஐரோப்பியர் பண்பாடும் கலையியல்களும் சமய வாழ்வும்கூடப் பெரிதும் இவ்வினங்களின் வழிவந்தவையே. மாண்டொழிந்த நடுநிலக் கடலக நாகரிகங்களில் பல இவ்வின மரபு சார்ந்தவையே. 3. தமிழ், மலையாளம், கன்னடம், துளு, தெலுங்கு முதலிய தென்னாட்டு மொழிகளும் பிராகுவி, கோண்டு, கூயி, இராஜ்மகால் முதலிய இந்திய மாநிலப் பண்படா மொழிகளும் திராவிட இனம் சார்ந்தவை. செமித்திய இனத்துடனும் பண்டைக் கால நடுநிலக் கடலக இனத்துடனும் இவை நெருங்கிய தொடர்புடையவை என்று கருதப்படுகின்றன. 4. ஐரோப்பாவில் பின்லாந்து முதல் கிழக்கு உருசியா வரையில் பரந்து சிதறிக் கிடக்கும் மொழிகள் இந்திய மொழிகள் என்றும் இரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையே பரந்து சிதறிக் கிடக்கும் மொழிகள் துரானிய மொழிகள் என்றும் குறிக்கப்படுவதுண்டு. இவை அனைத்தும் ஓரினமாகலாம் அல்லது ஓரினத் தொடர் புடையனவாகலாம். அறிஞர் கால்டுவெல் திராவிட மொழி இனம் இந்தச் சித்திய, துரானிய இன மொழிகளுடன் தொடர்புடையவை என்று கருதினார். இம்மொழிகளும் திராவிட மொழிகளும் பொதுப் பண்புடையவையாயினும், அவற்றை இனத் தொடர் புடையவை என்று கொள்வதற்கில்லை என்பதே இன்றைய அறிவு உலகின் கருத்து ஆகும். 5. சீனமொழி மங்கோலிய இனமாகக் கருதப்படுகிறது. தென்கிழக்காசி யாவிலுள்ள கொச்சின் சீனா, கம்போடியா, சயாம், பர்மா ஆகியவற்றின் மொழிகள் இத்துடன் தொடர்புடையவை. இவை அன்னமிய இனமென்றும் குறிப்பிடப்படுகின்றன. 6. வங்கம் முதல், அந்தமான் முதலிய தீவுகளின் வழியாகத் தென்கிழக்காசியாவில் பரவிய ‘மான்கிமோ’ மொழி இனம் திராவிட மொழிகளுடன் முற்காலங்களில் கலந்த ஓரினமாகக் குறிக்கப்படுகிறது. இவை ஆ°திரேலியப் பழங்குடியினத்துடன் தொடர்புடையவை எனக் கருதப் படுகின்றன. 7. ஆப்பிரிக்கப் பழங்குடி மொழிகள். 8. அமெரிக்கப் பழங்குடி மொழிகள். 9. ஆ°திரேலியப் பழங்குடி மொழிகள். 10. வடஆப்பிரிக்க ஹாமித்திய இனம். 11. ஜப்பான் மொழி. மொழி மூலம் மனித இனத்தில் மொழியின் பிறப்புப் பற்றிக் கற்பனை செய்தவரும் கற்பனையுடன் ஆராய்ச்சியைக் கலக்க விட்டவரும் பலர். உண்மை எதுவாயினும் இது வகை முயற்சி மனித உள்ளத்தில் ஆர்வம் தூண்டிச் சுவையூட்டுவதாகும் என்பதில் ஐயமில்லை. மனித இனத்தின் மொழி முதலில் ஒரு மொழியாகத் தோன்றி, இடைக் காலத்திலேயே பலவாகத் திரிந்த தென்ற கற்பனை விவிலிய நூலில் ஓர் அழகிய கதை உருவில் காணப்படுகிறது. தொடக்கக் கால மனித இனம் வானுலகுக்கு ஒரு குறுக்கு வழி காண முற்பட்டது. இந் நோக்கத்துடன் எல்லா மனிதரும் ஒருங்கு சேர்ந்து திட்டமிட்டு, பாபிலோனில் ஒரு பாரிய கோபுரம் எழுப்பினர். கோபுரம் படிப்படியாக உயர்ந்து வானுலகையே அணுகத் தொடங்கிற்றாம்! அது கண்டு சீற்றம் கொண்ட கடவுள் இடிப்படையை அனுப்பி அதைச் சிதறடித்தாராம்! மீண்டும் மனித இனம் ஒன்றுபட்டுக் கடவுள் விருப்பத்தை எதிர்க்காதபடி, கடவுள் மனித இனத்தின்மீது பழியுரை வீசினாராம்! ‘மனிதர் ஒருவர் பேச்சை ஒருவர் அறியாது போகக் கடவர்! அவர்கள் மொழி பலவாகச் சிதறக் கடவது!’ என்று! அவர் விதித்தாராம்! மேலை நாடுகளில்கூட உலகின் மூலமொழி எபிரேய மொழி என்று நம்பியவர், அந்நம்பிக்கை ஆர்வத்துடன் ஆராய்ச்சியிலிறங்கி அதற்கு ஆதரவு தேடியவர் பலர். 18ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரிய இன எழுச்சி மேலை நாடுகளிலும் பரந்தது. அதன் பயனாக மற்றோர் ஆர்வ நம்பிக்கை எழுந்தது. உலக மொழிகளின் மூல முதன் மொழி சமற்கிருதம் என்பதை நாட்டப் பல மேலை உலக அறிஞர்கள் தலைப்பட்டனர். கீழையுலகில் ஆரிய இனப் பற்றாளர் ஆர்வத்தை இது புதுப்பித்தது. இந் நம்பிக்கைகளும் ஆர்வ ஆராய்ச்சிகளும் இன்று போலி ஆராய்ச்சிகளாகக் காணப்பட்டுவிட்டன. கன்னித் தாய்மொழி தமிழே உலகின் மூல முதன் மொழி என்று தமிழ்க் கலைஞர், தமிழறிஞர் தொன்றுதொட்டு இன்றுவரை கருதி வந்துள்ளனர். வாதிட்டும் அதற்கு ஆராய்ச்சியடிப்படையான ஆதாரங்கள் தேடியும் வந்துள்ளனர். இத்தகைய ஆராய்ச்சிகள் பெருகத் தொடங்கிய காலத்தில்வாழ்ந்தவர்கவிஞர் பாரதியார். “தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்று ணராத இயல்பின ளாம் எங்கள் தாய்!” என்று அவர் கடவுளையும் தமிழகத்தையும் தமிழையும் ஒரு நிலையில் வைத்துப் பாடுகிறார். மற்றும் பிறவா மொழி, இறவா மொழி, மூவாக் கன்னித் தாய்மொழி என்று தமிழைப் போற்றாத கவிஞரில்லை. தமிழ் பற்றிய ஆராய்ச்சிகள் எழுமுன்னரே அவற்றைக் கனவு கண்ட கவிஞர் ஒருவர் உண்டு. அவரே கவிப் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார். பல்லுயிரும் பல உலகும் படைத் தளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல், கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னு தரத் துதித் தெழுந்தே ஒன்று பல ஆயிடினும், ஆரியம் போல் உலக வழக்கு அழிந் தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே. என்று அவர் இறவா மொழியில் தமிழின் மாறா இளமை நலனைப் போற்றி யுள்ளார். உலக ஆராய்ச்சிப் போக்குகளும் பழைமை யாராய்ச்சிகளும் சுந்தரனார், கவிஞர் பாரதி கால முதலே இவ்வார்வக் கோட்பாட்டுக்கு ஆதரவு தருபவையாக உள்ளன. ஆயினும், மொழியாராய்ச்சி முறைப்படி இக்கருத்து முடிவான கருத்தாக வலியுறவு பெற்றுவிட்டதாகக் கூறமுடியாது. ஏனெனில், நாம் மேலே குறிப்பிட்டபடி ஆராய்ச்சிகள் தெரிந்த அறிவிலிருந்தே தெரியாத அறிவுக்கு, முடிந்த முடிவிலிருந்தே முடிவுபெறா மெய்ம்மைக்கு, கண்கண்ட இன்றைய வாழ்விலிருந்தே இறந்தகால நிலைக்குச் செல்லுதல் வேண்டும். மனித இனத் தொடக்கம், மொழித் தொடக்கம்வரை இத்தகைய ஆராய்ச்சி இன்னும் நம்மை இட்டுச் செல்லவில்லை. ஆராய்ச்சியுலகின் இன்றைய நிலையிலும் நாம் இம் முடிவு நோக்கிய கீழ்வரும் கூறுகளை ஐயந்திரிபின்றி ஏற்றுக்கொள்ள முடியும். 1. தமிழும் தமிழ் மொழியும் மிகமிகப் பழைமை வாய்ந்தவை. இன்று உலகில் உயிருடன் இயங்கும் மொழிகளுள் அதன் பழைமையையோ, பழம் பெருமையையோ எம்மொழியும் அணுகியுள்ளதாகக் கூறமுடியாது. பழைமையில் சீனமொழியும், பழம்பெருமையில் கிரேக்க மொழியும் மட்டுமே அதனுடன் தொலைவான நிலையில் ஒப்பிடக் கூடியவை. 2. தமிழ் சமற்கிருதத்துக்கு ஊழி பேரூழிக் கணக்கில் முற்பட்ட மொழி, அத்துடன் அஃது ஆரிய இன ஊழிக்கு முற்பட்டே உயர் நாகரிக வாழ்வு பெற்றிருந்தது. 3. தமிழ் ஆரிய இன ஊழிக்கு முற்பட்ட செமித்திய நடுநிலக் கடலக இனங்களுடன் சமகாலத் தொடர்புடையது. அவற்றைத் தாண்டிய பழைமையும் பழம் பெருமையும் உடையது. முடிவுறாத இந்த ஆராய்ச்சிப் போக்கை நாம் இன்னொரு கோணத்திலிருந்தும் காணலாம். மொழிக்கு முற்பட்டநிலை மனித உலகில் நாட்டுக்கு நாடு ஏற்பட்டுள்ள வேறுபாடும் நாடுகளின் எல்லைக் கோடுகளும் தொன்று தொட்டு உள்ளன அல்ல. நாடாக உருவாகாத, நாட்டினமாக உருப் பெறாத நிலப் பரப்புகளையும் மக்கட் பரப்புகளையும் இன்றுகூட நாம் உலகில் காணலாம். நாடுபற்றிய இந்த மெய்ம்மை, மொழி வகையிலும் பொருந்துவதேயாகும். ஏனென்றால், மிகப் பெரும்பாலும் மொழி யடிப்படையாகவே நாடும், நாட்டினமும் உருவாகின்றன. இன்று இந்தி அல்லது ஹிந்தி என்று வழங்கும் மொழி அப்பெயர் பெற்றது, இந்தி அல்லது ஹிந்தி, என்ற நிலப்பரப்பின் அடிப்படையாகவும் ‘சிந்து’ என்ற ஆற்றுப்பெயரின் அடிப் படையாகவுமே. ஆயினும், இந்தி பேசப்படும் பரப்பு சிந்து ஆற்றுப் பரப்பன்று, கங்கையாற்றின் பரப்பே. இம்முரண் பாட்டுக்குக் காரணம் என்ன? சிந்து, கங்கை வெளிமுழுதும் அணிமைவரை நாடாக உருவாகா நிலப்பரப்பாகவும். மொழியுருவம் பெறாத பேச்சுப் பரப்பாகவுமே இருந்தது. சிந்து ஆற்றுக்கு மேற்கேயுள்ள நாகரிக மக்கள் இரு நிலப்பரப்பையும் சிந்து அல்லது இந்து என்றும், அதன் உருவாகா மொழிப் பரப்பை ‘இந்தி’ என்றும் வழங்கினர். அவ்வுருவாகாப் பரப்பின் உயிர்மய்யம் அல்லது கருமுதலா யிருந்து, முதன் முதல் உருவான மொழி கங்கை நிலமொழியே. அஃது இந்தி என்று பெயர் பெற்ற வகை இதுவே. ‘இந்தி’ மொழியின் பெயருக்குக் காரணமான சிந்து ஆற்றுப் பகுதி இன்னும் பெரிதும் உருவாகாத மொழிப் பரப்பாகவே இருக்கிறது. மேலை ஐரோப்பாவும், தென்னாடும், சீனமும் நீங்கலான உலகின் மிகப் பெரும்பகுதியின் இன்றைய நிலை சிந்து ஆற்றுப்பகுதியின் நிலையே. மொழிக்கு முற்பட்ட உலகின் பேச்சுப் பரப்பு நிலையை இப்பரப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. இன்றைய உலக மொழிகளின் உருவாகா மூலப் பொது மரபாகவே மனித உலகின் பேச்சு நிலை தொடக்கத்தில் இருந்திருந்தது என்னலாம். மூவா முதலரும்பு உருவாகா மொழி மூலத்திலிருந்து உருவாகி முகிழ்த்த முதல், முதல் மொழியரும்பு தமிழ். அதனை உயிர் மய்யமாகக் கொண்டே பிற அரும்புகள் நேர்கிளை அரும்புகளாகவும் பக்கக்கிளை அரும்பு களாகவும் பல்கிப் பெருகின. எல்லாக் கிளைகளின் வாழ்வுக்கும் பக்கக் கிளைகளின் வாழ்வுக்கும் அது மய்யமாக நின்று, அவற்றின் வாழ்வு தாழ்வுகளில் தொடர்பு கொண்டிருந்த தனால்தான், அஃது அவை எல்லாவற்றின் உயிர் அனுபவங்களையும் பண்பாகக் கொண்டு, அவை எல்லாவற்றின் வாழ்வையும் கடந்து வாழும் தகுதிபெற்றிருக்க வேண்டும் என்னலாம். மனித இன மொழிகளின் பல தலைமுறைகள் வந்து வந்து மாறியும், வாடாத் தனியரும்பாகத் தமிழ் என்றும் நின்று நிலவுவதன் மறைதிறவு இதுவே ஆகலாம். மொழி கடந்த இந்த மொழியின் வாழ்வில் உலக மொழி நூலார் இன்னும் சரிவரக் கவனம் செலுத்தவில்லை. அதன் தனிப் பண்புகளையும் உணர்ந்து கொள்ளவில்லை. இவ்விரண்டிலும் ஈடுபடுபவர் மனித இனம் கடந்த ஒரு மனித உலகப் பண்புக்கு வழிவகுத்தவராவர் என்பது உறுதி. தமிழ் மொழி, தமிழிலக்கண இலக்கியம், தமிழ்ப் பண்பு ஆகியவற்றி னூடாக அப்பண்புகளைத் தேடி ஆராய்வது தமிழ் வளர்ப்பவர்க்கு மட்டுமன்றி, உலகப் பண்பு வளர்ப்பவர்க்கும் தலையாய கட்டுப்பாடு ஆகும். அடிக்குறிப்பு : * இவற்றின் விரிவை டாக்டர் மு.வரதராசன்அவர்களின் மொழி வரலாறு இயல் 21. மொழியின் தோற்றம் என்ற பகுதியில் காண்க. அறிஞர் தேவநேயப் பாவாணரின் முதல் தாய் மொழி முன்னுரை பக்கம் 24-இல் இவற்றை ஒப்பொலி, உணர்வொலி, குறியொலி என்றும் வாய்ச் செய்கையொலி, குழந்தை வளர்ப்பொலி என்றும் பிரித்துத் தமிழ்ச் சொற்களில் மிகப் பெரும் பாலானவற்றையும் அவற்றினடிப்படையில் விரிவாக வகுக்கிறார். அவர் வகுப்புமுறை ஆராய்தற்குரியது. 4. மொழியின் வளர்ச்சி உலகப் பொருள்களை உயிருடையன, உயிரில்லாதன என்று பகுத்தல் மரபு வழக்கு. ஆயினும், பொருள் என்ற வகையில் எல்லாம் ஒரேவகைத் தனிப் பொருள்களின் கலவை, சேர்க்கைகளாலானவையே. திட்டமமைந்த கலவை, சேர்க்கை, அவற்றின் மூலமான வளர்ச்சி தளர்ச்சி, இவை கடந்த இனப் பெருக்கம், இன வளர்ச்சி ஆகியவையே உயிர்ப்பண்பின் வேறுபாட்டுக் கூறுகள் என்னலாம். உயிரிலாப் பொருள்களிலிருந்து உயிர்ப்பொருள்கள் திடுமெனத் தோற்றுவதில்லை. அவற்றின் தோற்ற வளர்ச்சிக்கு உதவும் இயற்கையின் புற உயிர்ப் பண்புகளும் உண்டு. இயற்கை வழி நின்று உயிரினங்களும் மனிதனும் பெறும் அக உயிர்ப் பண்புகளும் உண்டு. கதிரவனொளி, காற்று, தீ, மழை, பொருள்களின் கலவையாற்றல்கள், சேர்க்கையாற்றல்கள் ஆகியவை புற உயிர் ஆற்றல்கள். இவற்றையே பண்டைத் தமிழர் ஐம்பெரும் பூதங்கள் என வகுத்தனர். இடைக்கால சமற்கிருதப் பழைமை வாணரும் முற்கால மேனாட்டுப் பழைமை வாணரும் இவற்றைத் தனிப் பொருள்கள் என்று கொண்டு மயங்கினர்-இன்றளவும் மயங்கி வருகின்றனர். உயிர்களின் தன்னுணர்வு, அவா, உணர்ச்சி, அறிவு, ஆராய்ச்சி ஆகியவை அக உயிர் ஆற்றல்கள். அக உயிர் ஆற்றல்களின் அடிப்படையாகவே குடும்பம், சமுதாயம், இனம் எழுந்துள்ளன. இவை புதிய இன ஆற்றல்களைப் படைக்கின்றன. மொழி, சமயம், கலைகள், இயல்கள், மெய்விளக்க ஆராய்ச்சி (ஞாடைடிளடியீhல) ஆகியவை இத்தகைய இன ஆற்றல்கள். இவற்றுள் மொழி அடிப்படை இன ஆற்றலாகவும், பிற இன ஆற்றல்களைத் தோற்றுவித்து வளர்க்கும் உயிர்ப்பாற்றலாகவும் அமைகின்றது. மொழி ஓர் உயிரியக்கம் மொழி ஓர் உயிரியக்கம் என்பர் மொழி நூலார். இஃது ஓர் அழகிய சொல்லணி உவகை மட்டுமே என்று கொள்பவர் உண்டு. ஆனால், அஃது உவமை யுருவில் உள்ள உவகை கடந்த உண்மை. ஆய்வு நோக்குடையவர்க்குச் சொல்லணி உருவில் அமைந்த சொல்லணி கடந்த ஒரு மெய்ம்மை. அஃது ஆழ்ந்தபொருள் பொதிந்த ஓர் அறிவார்ந்த வழக்கு. மொழி மெய்ம்மையிலேயே முற்றிலும் உயிர்ப்பண்புவாய்ந்த ஓர் உயிர் இயக்கம் ஆகும். மனிதன் திட்டப்படுத்தினாலும், திட்டப்படுத்தா விட்டாலும், அறிந்தாலும் அறியாவிட்டாலும், மொழி அவன் திட்டமும் அறிவும் உட்படுத்தி, பலசமயம் அவன் திட்டமும் அறிவும் கடந்து தானும் வளர்வது, மனித இனத்தையும் வளர்ப்பது. மொழியையும், மொழி சார்ந்து வளரும் நாட்டையும் இனத்தையும் நாம் ‘தாய்’ என்று குறிப்பது மிகையணி வழக்கன்று. குறையணி வழக்கே என்பதை இது காட்டும். உண்மையில் தாயின் பணிகூட மொழி, நாடு, இனம் ஆகியவற்றின் பணிகளைச் சுட்டிக்காட்டுமேயன்றி அவற்றுக்கு ஈடாகமாட்டாது. தாய் பிள்ளையைப் பெறுகிறாள். வளர்த்துவிடுகிறாள், அவ்வளவே, பிள்ளையின் வாழ்வுடன் தாய் வாழ்வதில்லை. பிள்ளையின் பிள்ளைகளை, பிள்ளையின் பிள்ளைகள் தலைமுறைகளை வளர்ப்பதில்லை. மொழியும், நாடும் இனமும் இவற்றைத் திறம்பட ஆற்றுகின்றன! உயிர்களறியாமலே வளரும் உயிர்போல, மொழியும் திட்டப்படுத்துவாரில்லாமலே திட்டமமைந்து திட்டம்பட வளர்வது. அது வளர்ச்சி தளர்ச்சிகள் உறுவது மட்டுமன்று. வளர்ச்சி தளர்ச்சிகள் தாண்டி இனம் பெருக்குவது, இனப் பெருக்கம் கடந்து இனம் வளர்ப்பது. உயிரினங்களை அது மனித இனம் நோக்கி வளப்படுத்தி, மனித இனத்தை கனவுலகக் குறிக்கோளான மீ-மனித இனம் நோக்கி உருவாக்கி வருகிறது. பாரிய குறியீட்டு இயந்திர அமைப்பு உணர்ச்சி, அறிவு, ஒலி எழுத்து ஆகிய மொழியின் நான்கு படியான வடிவங்களில் மிகப்பிந்திய கடைசி வடிவம் எழுத்தே. எல்லாப் படிகளிலும் நாம் அதன் தோற்ற வளர்ச்சிகளை முழுதும் கணித்துக் காண முடியாது. ஆயினும், எழுத்து வடிவின் வளர்ச்சிகளே மற்றவற்றையும் சுட்டிக் காட்டுவன. பாரிய இயந்திரங்களை இயக்கும் சின்னஞ் சிறு குமிழ்களை நாம் பார்த்திருக்கிறோம். இங்கே குமிழ்கள் தம்மளவில் ஆற்றலுடையவை அல்ல. ஆற்றலுடைய இணைப்புகளுக்கு அவை ஒரு குறியீடு மட்டுமே, ஒலிபேசி இணைப்பு நிலையங்களில் பல மனித இல்லங்கள், கிளை நிலையங்கள் எண்களால் குறிக்கப்பட்டு, எல்லா எண்களும் ஒரே முகப்புப் பலகையில் கொண்டு பதிக்கப்பட்டுள்ளன. அந்த ஒரு முகப்புப் பலகையை இயக்கி ஒரு நகரம் முழுவதையும் அல்லது ஓர் உலகப் பகுதி முழுவதையும் இயக்க முடிகிறது. மொழி இத்தகைய ஒரு பாரிய ஒலிபேசி இணைப்பு நிலையமே. மனித மூளை அதன் குறியீட்டெண்களை இணைக்கும் ஒரு முகப்புப் பலகை போன்றதே யாகும். அதன் ஒவ்வொரு சொல்லும் ஒரு குறியீட்டெண். ஒவ்வொரு சொல் தொகுதியும் ஒரு கிளை நிலையம். அதன் இலக்கணம் அந் நிலையத்தின் பின்னலிணைப்புகளின் மாதிரிப் படமேயன்றி வேறன்று. அது மொழிக்குத் திட்டம் அமைப்பதில்லை. மொழியின் திட்டத்தை ஆராய்ந்து மனிதனுக்கு அறிவுறுத்துகிறது. மனிதன் கண்டுபிடித்துள்ள, இயற்றியுள்ள, வகுத்துள்ள எந்தப் பாரிய இயந்திரத்தின் குறியீட்டு முறையும் மொழியின் குறியீட்டுமுறைக்கு ஈடாகாது. ஏனென்றால், அது மிகமிகப் பாரிய, மிகமிகச் சிக்கல்கள் நிறைந்த ஒன்று. உண்மையில் அது குறியீடுகள், குறியீட்டின் மறு குறியீடுகள், அவற்றின் மறுபடிக் குறியீடுகள் எனப் பன்மடியான, பல்லடுக்கான குறியீட்டு முறைகளை உடையது. பொருள்களின் குறியீடாகப் புலன் உணர்வுகள் அமைகின்றன. அவற்றின் குறியீடுகளான உள்ளத்தின் உணர்வுகளே கருத்துகள். கருத்தின் குறியீடுகள் ஒலி வடிவம்; ஒலிவடிவத்தின் குறியீடாக எழுத்து வடிவம் அமைகின்றது. ஒவ்வொரு படியிலும் மொழி இயற்கையாய் வளர்ந்த படிமுறைகளை, எல்லாப் படியிலும் பிந்திய எழுத்து வடிவப் படியே நமக்கு நன்கு சுட்டிக் காட்டுகிறது. எழுத்து வடிவின் வளர்ச்சி : ஓவிய எழுத்து வரிவடிவமைதியில் இன்றைய உலகின் தலைசிறந்த மொழிகள் தமிழும் தமிழ் சார்ந்த ஏனைய இந்திய மொழிகளுமே யாகும். இவற்றில் மட்டும்தான் ஓர் ஓலிக்கு ஓர் எழுத்து. ஓர் எழுத்துக்கு ஓர் ஒலி என்ற ஒலி நூலின் உயிர் குறிக்கோள் அமைதி கிட்டத்தட்ட முழு அளவில் காணப்படுகிறது. அத்துடன் இவற்றில் மட்டுமே உயிர் ஒலி, மெய் ஒலி ஆகிய வகுப்பு முறையும், ஒலிப் பிறப்படிப்படையாக அவற்றின் வரிசை முறையும் அமைந்துள்ளன. இத்தகு திட்டங்கள் மேலை ஐரோப்பிய மொழிகளிலோ, நடு நிலக் கடல் சார்ந்த எபிரேய, எகிப்திய, இசுலாமிய மொழிகளிலோகூடக் கிடையாது. இவ்வளவு சிறந்த வரிவடிவ முறை எவ்வாறு தோன்றிற்று? எவ்வாறு வளர்ந்தது? உலகப் பண்பாடு வரலாறுகளில் இது சுவை மிகுந்த ஒரு வரலாற்றுக் கூறு ஆகும். எழுத்தின் வளர்ச்சிப் படிகளைப் பண்டைய எகிப்திய எழுத்து முறைகள், பண்டைய சீன எழுத்து முறை, தொல் பழங்காலச் சுமேரிய எழுத்துமுறை, சிந்து வெளி எழுத்து முறை ஆகியவையே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், எல்லாப் படிகளையும் விளக்கிக் காட்டுவது எகிப்திய முறை ஒன்றே. ஒலியின் குறியீடாகவும் ஒலி வடிவின் குறியீட்டுத் தொகுதியாகவும் விளங்குவது இன்றைய நாகரிக உலகின் எழுத்து முறை. ஆனால், உலகின் தொடக்கக் காலத்திய முதல் எழுத்து முறை ஒலியின் குறியீடாகவோ ஒலி வடிவின் குறியீடாகவோ அமையவில்லை. நேரடியாகக் கருத்தின் குறியீடாகக் கூட அமையவில்லை. கருத்தையும் கடந்து பொருளின் குறியீடாகப் பொருளின் ஓவிய வடிவமாகவே அது தோன்றிற்று. எகிப்தின் மிகப் பழைமையான எழுத்து முறை இதைக் காட்டுகிறது. இம் முதற்படி வரி வடிவை நாம் ஓவிய எழுத்து வடிவு என்கிறோம். தமிழகத்தில் சங்ககாலம் வரை இந்த ஓவிய எழுத்து முறை கைவிடப்படாமல் நீடித்திருந்தது. இதனைத் தமிழ் இலக்கியம் ‘கண்ணெழுத்து’ என்றும், இதை எழுதியவரைக் ‘கண்ணெழுத்தாளர்’ என்றும் குறித்தது. சுங்கத் துறையில் இராண்டாயிர ஆண்டுகளுக்கு முன் இந்த எழுத்தே சுங்கக் குறியீடாக வழங்கப்பட்டது. தமிழில் எழுதுதல் என்ற வினைச் சொல் இலக்கிய மரபில் இன்றளவும் எழுத்து எழுதுவது, ஓவியம் தீட்டுவது, கண்ணுக்கு மை தீட்டுவது ஆகிய செயல்களை ஒருங்கே குறிப்பது காணலாம். இதனடிப்படையாக அமைந்த ஓர் உவமை திருக்குறளிலும் காட்சியளிக்கிறது. ``எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல், கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து’’ (திருக். 1285) ஓவிய எழுத்து மரபின் பண்பு ஓவிய எழுத்து முறையில் ‘காக்கை’ என்பதைக் காக்கையின் படமும் ‘மீன்’ என்பதை மீனின் படமும், ‘எருது’ என்பதை எருதின் படமுமே குறித்தன. இம்முறை நாகரிகம் வளராத காலத்திய முறையே. ஆயினும், இன்றும் இதுவே கல்வியறி வற்றவர்க்கும் கல்வி கற்றவர்க்கும் பொதுவான ஒரே முறை யாகவும், மொழிக்கு மொழி பொதுவான, மொழி சாராத ஒரே முறையாகவும் அமைந்துள்ளது. ஊர்திகளிலும் தேர்தல் பெட்டிகளிலும் பெயர்களைவிட எண்ணும், எண்ணைவிடப் படமும் நிறமும் கல்லாதவர்களும் உணரும் சிறந்த குறியீடுகளாய் அமைகின்றன. அத்துடன் தமிழரும் தெலுங்கரும், ஆங்கிலேயரும் சீனரும் வேறுபாடின்றி அவற்றை உணரக்கூடும்! சீனத்தின் பண்டைய எழுத்துமுறை ஓவிய எழுத்துப் படியிலிருந்து நெடுந்தொலை செல்லவில்லை. அணிமை வரை இலக்கிய வழக்கில் அம்முறையே இருந்து வந்துள்ளது. இதனால் சீனத்துக்குச் சில நன்மைகள்கூட ஏற்பட்டுள்ளன. பண்டைய சீன இலக்கிய ஏடொன்றைப் ‘பீக்கிங்’ நகரத்தாரும், ‘கண்டோன்’ நகரத்தாரும் வாசிப்பர். கேட்பவர்க்கு இரண்டும் வேறு வேறு மொழியாய் ‘ஒலி வடிவில்’ தோன்றினாலும், ‘வரிவடிவில்’ அது சீன மக்கள் எல்லார்க்கும் ஒரே பொருளுடைய ஒரே இலக்கிய மாய் அமைந்திருந்தது. சீனமும் ஒலிக்குறியீட்டு எழுத்துமுறையைப் பின்பற்றி இன்று நாகரிகத்தில் முன்னேற்றம் பெற்று வருகிறதானாலும், பழைய முறையால் ஏற்பட்ட ஒற்றுமை பேரளவில் கெட்டுள்ளது என்னலாம். எகிப்தியரிடையே ஓவிய எழுத்து முறை கி.மு. 3000-க்கும் கி.மு. 2000-க்கும் இடையே தோன்றி அதன்பின் உருவெழுத் தாகவும் ஒலிக் குறியீட்டெழுத்தாகவும் வளர்ச்சியடைந்தது. ஓவியப் படியிலேயே, பல கருத்துகளில் பொருள் குறியீட்டுக்கு இடமில்லா திருந்தது. நீர்வேட்கை, வீரம் முதலிய பண்புகளையும் ‘செய்தான்,’ ‘குடித்தான்’ முதலிய வினை களையும் நேராகப் படம் பிடிக்க முடியாது. நாக்கை நீட்டி நீர்த்துளி காட்டுவதால் நீர் வேட்கையும், வேலை உயர்த்திக் காட்டுவதால் வீரமும், கையைத் தனியே காட்டுவதால் செயலும், ஊமை இன்றும் சைகை காட்டுவதுபோல் பெருவிரலை வாயில் வைத்துக் காட்டுவதால் குடித்தலும் குறியீடுகளாகக் காட்டப்பட்டன. புகழ் ஒளியைக் கதிரவனொளியாகக் காட்டுவது இவ்வகையில் மிக உயர்ந்த குறியீட்டு மரபுப் பண்பு ஆகும். ஓவிய எழுத்துக் காலத்தின் குறியீட்டு மரபே தமிழகத்தின் பரதநாட்டிய, நாடக மரபுகளாக வளர்ந்தன என்னலாம். உருவெழுத்தும் ஒலிக் குறியீடும் ஓவிய வடிவைத் தெளிவாக வரையாமல், சிறு குழந்தைகள் குறித்துக் காட்டுவதுபோல ஒன்றிரண்டு வரைகளால் குறித்துக் காட்டுவதே உரு எழுத்து ஆகும். இந்தப் படியில் பொருளுக்கும் வரிவடிவுக்கும் உள்ள தொடர்பு படிப்படியாகத் தேய்வுற்றது. ‘மீன்’ குறியீடு இரண்டு வளைகோடுகள் ஆயிற்று. காக்கைக் குறியீடு உடல் குறித்த சாய் வரையும் கால் குறித்த இரண்டு குறு வகைகளும் ஆயிற்று. மீன் படத்தையும், காக்கைப் படத்தையும் யாரும் பயிற்சி யில்லாமலே கண்டவுடன் மீன் என்றும் காக்கை என்றும் வாசித்துவிட முடியும். ஆனால், அவற்றின் உருவரைகளைப் பயிற்சியற்றவர் வாசிக்க முடியாது. இன்றைய உலகில் ஆங்கில எழுத்துப் பயிற்சியற்றவன் ஆங்கிலத் தையோ, தமிழ் எழுத்துப் பயிற்சியற்றவன் தமிழையோ படிக்க முடியாது. இந்த இக்கால மொழி நிலையை உரு எழுத்துகள் அடைந்து விட்டன. பண்புக் குறியீடுகளில் குறியீடு பொருளிலிருந்து இன்னும் மாறுபட்டது. இந்நிலையில் குறியீடுகள் பொருள்கள் சுட்டுபவை என்பது மறக்கப்பட்டது. சொல்லை அதாவது சொல்லின் ஒலிவடிவைச் சுட்டுவதாக மாறுபட்டது. பொருளின் குறியீடு சொல்லின் குறியீடானது இன்று ஒரு பெரிய சீர்திருத்தமாகத் தோன்றாதிருக்கக்கூடும். ஆனால், மொழி வளர்ச்சியில் அஃது ஒரு பெரும் புரட்சி ஆகும். ஏனெனில், இதனால் ‘எரு’, ‘மை’ என்ற இரு பொருள்களின் குறியீடுகளே, ‘எரு’ என்ற இரு எழுத்துகளையும், ‘மை’ என்ற எழுத்தையும் குறித்த குறியீடாய், இணைந்து ‘எருமை’ என்பதன் இணைக் குறியீடாக முடிந்தது! ‘மா’, ‘காய்’ என்ற குறியீடுகள் இதுபோலவே ‘மாங்காய்’ என்ற சொல்லின் இணைக் குறியீடாக முடிந்தது! சொற் குறியீடுகள் நாளடைவில் அசைக் குறியீடாகவும் ஆயிற்று. அதாவது ‘அம்மி’ போன்ற சொல் ‘அம்’ என்ற முதலசையையும் பின் ‘அ’ என்ற முதலெழுத்தையும் குறிக்கத் தொடங்கிற்று. மீன் என்ற சொல்லின் குறியீடு `மீ’ என்ற எழுத்தின் குறியீடாயிற்று. மொகஞ்சதரோவிலுள்ள சிந்துவெளி எழுத்துகள் முதலெழுத்துக் குறியீட்டு நிலையை கி.மு. 3000-த்திலேயே அடைந்திருந்தன. எகிப்திய எழுத்துகளுக்கும் சுமேரிய எழுத்துகளுக்கும் அவை முற்பட்ட வளர்ச்சி பெற்றிருந்தன. அவற்றுக்குச் சிந்து வெளி எழுத்துகளே வழி காட்டிகளா யிருந்தன என்பதை இது காட்டுகிறது. சீன எழுத்துகளுக்கும் அவையே தூண்டுதலாய் இருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு. ஏனெனில், நாகரிக உலகில் ஆரியர் வரவால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, உலகத் தொடர்புகள் அழிந்து சீனம் துண்டுபட்டபின், சீன எழுத்து முறை வளர்ச்சியற்று நின்றுவிட்டது. தமிழ் எழுத்துகளும் ஏனைய எல்லா இந்தி எழுத்துகளும் சமற்கிருத எழுத்துகளும் சிந்துவெளி எழுத்தின் திரிபு வளர்ச்சி வகைகளே. ஆனால், தமிழ் எழுத்துகளே சிந்து வெளி எழுத்துகளின் நேர்மரபில் வந்தவை. இன்றைய தமிழ் எழுத்துகளைப் போலவே அவையும் முப்பதாய் இருந்தன. எழுத்து முறைமை, வகுப்பு, வரிவடிவு ஆகிய மூன்றிலும் தமிழ் எழுத்தொலிகளை மூல ஒலிகளாகக் கொண்டே சமற்கிருதம் முதலிய ஏனைய இந்திய மொழிகளின் எழுத்துகள் வகுக்கப்பட்டுள்ளன என்று காண்டல் எளிது. தமிழ், எபிரேய, அரபு மொழிகள் சீனமரபு, தமிழ்மரபு, மேலை மரபு ஆகிய உலகின் மூன்று எழுத்து மரபுகளுள், சீன மரபு ஒலிக் குறியீட்டு வளர்ச்சியை என்றும் சென்றெட்ட வில்லை. சொல் குறியீடு அல்லது அசைக் குறியீடாகவே நின்றது. மற்ற இரண்டு மரபுகளும் இதன் பின்னும் பேரளவில் பொதுவளர்ச்சியுடையவை. இப் பொதுமரபுப் பண்பைத் தமிழ் மரபு சார்ந்த இந்திய மொழிகள், ஒரு புறமும் மேலை மரபின் பண்டைமொழிகளான அரபு, எபிரேய மொழிகள் மற்றொரு புறமும் காட்டுகின்றன. அரபு, எபிரேய மொழிகள் உண்மையில் பழைமையைத் தமிழ்மரபு அல்லது இந்திய மரபைவிட முனைப்பாகவே சுட்டிக் காட்டுகின்றன. தமிழ் இலக்கணத்தில் எழுத்துகள் அல்லது ஒலிகளில் முதன்மையிடம் உயிர்களுக்கே தரப்பட்டுள்ளது. ‘உயிர்’ என்ற பெயரே இதைச் சுட்டிக் காட்டுகிறது. உயிர்கள் தாமே இயங்குபவை, மெய்கள் உடல் போன்றவை. உயிர் சார்ந்தே இயங்குபவை என்று தமிழ் இலக்கண நூல்கள் விளக்குகின்றன. நாகரிக உலகின் பெரும்பாலான மொழிகள் இக்கருத்தை இன்று ஏற்றுக் கொண்டுள்ளன. ஆயினும், இஃது ஒலிவடிவு பற்றி எழுந்த தமிழர் ஆராய்ச்சியின் பயனே. வரிவடிவ அடிப்படையாக எழுந்த கருத்தை அரபு, எபிரேய மொழி இலக்கண அறிஞர் கருத்தும், அம்மொழிகளின் வரிவடிவமும் நன்கு காட்டுகின்றன. தமிழ் மரபில்கூட அக்கருத்தின் சுவடு இல்லாமலில்லை. அரபு, எபிரேய இலக்கண நூலார் கருத்துப்படி, ஒலிகளுள் முதன்மை வாய்ந்தவை உயிர்களல்ல; மெய்களே. தனித்தியங்கு பவையும் உயிர்களல்ல, மெய்களே என்று கொள்ளப்படுகின்றன. மெய்களை அடிப்படையாகக் கொண்டே உயிர்கள் இயங்குகின்றன என்று அவர்கள் கருதியுள்ளனர். மேலீடாகப் பார்ப்பவர்களுக்கும், அரபு, எபிரேய இலக்கண மரபில் பயிலாதவர்களுக்கும் இது பொருந்தாக் கூற்று என்றே தோன்றும். ஆனால், தமிழ் முதலிய மொழிகளிலேயே தனி மெய்களை இக், இங் என்றோ, க, ங என்றோ கு, ஙு என்றோதான் ஒலிக்க முடியுமேயன்றித் தனித்து ஒலிக்க முடியாது. அதுமட்டுமன்று, இ, எ முதலிய உயிர் ஒலிகளை யி, யெ என்ற உயிர் மெய்கள் போன்றும், உ, ஒ முதலிய உயிர் ஒலிகளை வு, வொ என்ற உயிர் மெய்கள் (அல்லது ஆங்கில முறைப்படி (றர,றடி) போன்றுமே நாம் ஒலிக்கிறோம். தெலுங்கர் எழுத்து மரபிலேயே இந்த இயற்கை மாறுபாட்டைக் காணலாம். அவர்கள் உப்பு என்பதை வுப்பு என்றும் இல்லு என்பதை யில்லு என்றுமே எழுதுகின்றனர். எல்லா உயிர்களுமே ய்,வ் (ற) போன்ற ஓர் அடிப்படை மெய்யின் உதவிகொண்டே ஒலிப்பதாக அரபு, எபிரேய இலக்கண நூலார் கொள்கின்றனர். உயிரின் அடிப்படை மூல ஒலி என்று கூறத்தக்க இந்த ஒலியே எழுத்துகளுள் முதலெழுத்தாக அம்மொழிகளில் காணப்படும் அரபு ‘அலிஃவ்’ அல்லது எபிரேய ‘ஆல்ஃவா’ எழுத்து ஆகும். இந்த அடிப்படை மெய் (அலிஃவ்) எழுத்துடன் அகர வுயிர் சேர அகர ஒலியும், ஆகார, இகர முதலிய உயிர்கள் சேர ஆகார இகரம் முதலிய ஒலிகளும் எழுகின்றன. எல்லா ஒலிகளும் ‘உயிர் மெய்’ ஒலிகளே பண்டை உலக எழுத்துகள் எல்லாமே உயிர் மெய் எழுத்துகளாகக் கருதப்பட்டிருந்தன என்பதை இது காட்டுகிறது. ‘காடு’ என்ற சொல் ‘கா’ என்ற முதலெழுத்தையும் ‘ஆடு’ என்ற சொல் ‘ஆ’ என்ற முதலெழுத்தையும் குறித்தபோது, ‘கா’ ‘ஆ’ என்ற இரு ஒலிகளும் ஒரு தன்மையுடையவை (அதாவது உயிர் மெய்கள்) என்றே கருதப்பட்டிருந்தன என்று தோன்றுகிறது. இது போலவே ‘கீரி’யிலிருந்து ‘கீ’யும் ‘ஈட்டி’யிலிருந்து ‘ஈயும் தோற்றியபின்தான் ‘கா-கீ’ தொடர்பும், ஆ-ஈ தொடர்பும் வெளிப்பட்டனவாகலாம். இதன் பயனாக, ‘க’ முதல் கௌ’ வரையுள்ள எழுத்துகள் ஒரே மெய்த் தொடர்புடைய உயிர் மெய்களாக வகுக்கப்பட்டு, ‘க’ என்ற அடிப்படை வடிவின் திரிபுகளாக அவை அமைந்தன. ஆனால், இதே சமயம் ‘க’ முதல் கௌ’ வரையுள்ள தொகுதி போலவே ‘அ’ முதல் ஒள’ வரையுள்ள தொகுதியும் கருதப்பட்டன. ‘க-கௌ’ தொகுதி உயிரில்லாத ‘க்’ என்ற (மெய் ஒலி) அடிப்படை ஒலியிலிருந்து உருவாயிற்று. அதை உயிர் மெய்களின் அடிப்படை ஒலியான ‘மெய்’ ஆக்கி நெடுங்கணக்கில் இறுதியில் சேர்த்தனர். இதுபோலவே ‘அ-ஒள’ தொகுதி முடிவிலும் தமிழில் ஃ என்ற வரி வடிவு ஏற்பட்டது. அரபு-எபிரேய மொழிகளில் ‘அலிஃவ்’ என்ற எழுத்து இத்தகையதே. ஒலியியல் முறையில் ‘க்’ என்ற எழுத்து ‘க-கௌ’ தொகுதிக்கு மூலமாயிருந்ததுபோல், ‘அ-ஒள’ தொகுதிக்கு ஆய்தம் (ஃ) அல்லது அலிஃவ் மூலமாகக் கருதப்பட்டது. அரபு-எபிரேய மொழியில் ‘அலிஃவ்’ உயிரல்ல, மெய். ஆனால், கிரேக்கர் இந்த எழுத்தை ‘ஆல்ஃவா’ என்ற முதலெழுத்தாக்கி அதை உயிராகவே கொண்டனர். ஆனால், ‘அலிஃவ்’ என்ற மெய் வல்லொலியான ஓர் ஆய்தமாகவும் (வடமொழி ஹ்), மெல்லொலியான ஓர் ஆய்தமாகவும் (அரபு-எபிரேய ஆலிஃவ்) இரு குறியீடுகளாக அமைந்தன ஸகிரேக்கரின் வல்லாய்தம் ளுயீசைவைரள யளயீசையவரள (‘), மெல்லாய்தம் ளுயீசைவைரள டுநnளை (’)] தமிழ் ஆய்தம் வடமொழி வல்லொலியைவிட வலிமை யுடையதாக இன்று ஒலிக்கப்படுகிறது. ஆனால், தொல்காப்பியர் காலத்தில் அது மெய் ஒலிகளுக்கு உயிர்ப்பண்பு அல்லது அங்காப்புப் பண்பூட்டும் ஒரு சார்புக் குறியீடாகவே கொள்ளப் பட்டது. உயிர்மெய்த் தொடர்பு உயிரில்லாமல் உடம்பு இயங்காது என்ற தமிழ் இலக்கண நூலார் கருத்து உண்மையின் ஒரு பகுதி-ஓர் அரை உண்மையே யாகும். அரபு-எபிரேய இலக்கண நூலார் கூற்று அதன் மற்றொரு பாதியை, மற்றோர் அரை உண்மையைத் தெரிவிக்கிறது. உடலில்லாமல் உயிர் இயங்காது என்பதே அது. உலகில் உயிரில்லாமல் உடல் உண்டு. ஆனால், அஃது இயங்காத உடல். அதைப் பிணம் என்போம். நேர்மாறாக, உடல் இல்லாத உயிர் எங்கும் கிடைக்கவே கிடையாது. அஃது உண்மையில் மனிதன் கற்பனை மட்டுமே. ஆகவே, உலகில் ‘உயிர்-உடல்’ இயைந்த ஒரு பொருள்தான் மெய்யாக இயல்கிறது. இதுபோலவே ஒலிகள் எல்லாமே மெய்ம்மையில் ‘உயிர்-மெய்’ ஒலிகளே. ‘மெய்’ ஒலிகளையும் ‘உயிர்’ ஒலிகளையும் மனிதன் நுண்ணறிவாராய்ச்சியால் மெய்யார்ந்த கற்பனை வடிவுகளாகவே பிரித்துணர்கிறான். ‘கா’ போன்ற ‘மெய்யின் பின் உயிர் இணைவு’ போலவே ‘ஆல்’ என்பதில் ‘உயிரின் பின் மெய் இணைவும்’ ‘கால்’ என்பதில் ‘மெய்யின் பின் உயிரும் அவற்றின் பின் மெய்யும்’ (மெய்-உயிர்-மெய் ஆக) இணைந்துள்ளன. இவற்றைச் சேர்த்து ஒலிக்க முடியும். பிரித்துணரவும் முடிவும். ஆனால், தனித்தனி ஒலிகளாக ஒலிக்க முடியாது. மேலை மரபில் கிரேக்கரும் கீழை மரபில் தமிழரும் மட்டுமே உயிர்களைத் தனி ஒலிகளாகக் கண்டனர்; கண்டு வகுத்தனர். இம்முறை மேலை மரபில் பண்டை மொழிகளில் கிடையாது. இன்றைய இசுலாமிய மொழிகளிலும் இல்லை. இதுபோலவே மெய் ஒலிகளைத் தனியாகக் கருதிய முதலினங்களும் தமிழரும் கிரேக்கருமே. ஆனால், இங்கே தமிழரும் கிரேக்கரும் வரிவடிவில் வகுத்துக் கொண்ட முறை வேறுபட்டது. கிரேக்கர் பழைய ‘உயிர் மெய்’ மூலவடிவையே மெய் ஆக்கினர். தமிழர் பழைய ‘உயிர்மெய்’ மூலவடிவை அகரம் சார்ந்த ‘உயிர்மெய்’ வடிவாகக் கொண்டு, அதிலிருந்து மெய் ஒலியை மேலே புள்ளியிட்டு வருவித்துக்கொண்டனர். இங்கே தமிழர்தாம் வரிவடிவில் பிற்பட்டுவிட்டனர் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தமிழர் முறை எபிரேய, அரபு வரிவடிவுகளின் முறையே. அவை கடந்த வளர்ச்சியல்ல. வளர்ச்சி குன்றிய இத்தமிழர் முறையே இன்றைய எல்லா இந்திய எழுத்துகளின் கீழை உலக மரபாகவும், கிரேக்கரின் திருந்திய முறையே எல்லா ஐரோப்பிய எழுத்துகளின் மேலை மரபுகளாகவும் அமைந்தன. வரிவடிவெல்லை யில் இந்த ஒரு கூற்றில் மட்டும் கீழைநாடு பிற்பட்டு மேலை நாடுகள் முற்பட்டுள்ளன என்று கூறலாம். ஆயினும், இம்முற்போக்குக்குக் கிரேக்கரே முற்றிலும் காரணராவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் மரபின் வளர்ச்சி வரிவடிவில்தான் இங்ஙனம் தடைப்பட்டது. ஒலிவடிவாராய்ச்சியில் அவர்கள் கிரேக்கரையும் மேலை உலகையும் தாண்டி முன்னேறிவிட்டனர். ஒலியியல் முறைப்படி உயிர்களையும், மெய்களையும், உயிர்க்கு மூல ஒலியான ஆய்தத்தையும் மட்டுமே தனி ஒலிகளாக்கி, உயிர்மெய்களைக் கூட்டொலிகளாக வகுத்த பண்பில் அவர்கள் உலகின் மற்ற மொழியினங்களனைத்தையும் மூவாயிர ஆண்டுகட்கு முன்பே விஞ்சிவிட்டனர். ஏனெனில், இன்றைய இந்திய மொழிகளின் வரிவடிங்களனைத்தும்-சமற்கிருதம் உட்பட-தமிழ்மரபு கடந்து வளர்ச்சி பெறாமல் அதையே வளைய வளையப் பின்பற்றி நிற்பது காணலாம். பல கூறுகளில் அது தமிழ் மரபிலேகூடக் குறைபடுகிறது. கீழ் வருவன இதற்குச் சான்றுகளாகும். 1. உயிரொலிகளுள் மெய்போன்ற உயிர் என்ற முறையில் ஆய்தம் தமிழில் உயிரின் பின்வைக்கப்பட்டது. இந்நிலையில் உள்ள இரண்டு எழுத்துகள் (அனு°வாரம், விசர்க்கம் ஆகியன) சமற்கிருதத்திலும் அப்படியே. ஆனால், உயிர் நிலையுடைய மெய்களாகிய நான்கு ஒலிகள் (ரு, ரூ, லு, லூ.) இடையே ஊகாரத்துக்கும் ஏகாரத்துக்கும் நடுவில் வைக்கப்பட்டன. இவை குற்றியலுகரம் போன்றன என்ற எண்ணமே இவ்வரிசை முறையின் காரணமாகலாம். 2. தமிழில் வலி, மெலி, இடை என்பன ஆறு ஆறாக அமைந்துள்ளன. இதுபோல சமற்கிருதத்தில் ஐந்தைந்தாக அமைக்கும் முயற்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக இடைச்சொல் நான்குடன் சீறொலிகள் மூன்றனுள் ஒன்று (ஃச்ய) உடன் தரப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு சீறொலிகளும் ஆய்தம் போன்ற ஒலி (ஹ) ஒன்றும், இரண்டு கூட்டொலி களுடன் (த்ர,க்ஷ) சேர்த்து ஐந்தாகப் பின்னி வைக்கப்பெற்றுள்ளன. 3. ஒலி வடிவிலிருந்து வந்த வரன்முறையின் இயல்புக்கு மாறாக, இடைவரு மெய்கள் பின்வரும் உயிர் மெய்களுடன் சேர்த்துக் கூட்டெழுத்துகளாக வரி வடிவிலே கொள்ளப் படுகின்றன. எண்மானம் எழுத்துகள் ஒலிவடிவின் குறியீடுகள். ஆனால், மொழியில் குறியீட்டு முறைமை இத்துடன் நிற்கவில்லை. எழுத்துத் தொகுதியின் மற்றொரு படிக் குறியீட்டு முறை உலகில் ஏற்பட்டுள்ளது. இதுவே எண் முறை அல்லது எண்மானம். ஒன்று, இரண்டு என்று எழுத்தில் எப்போதும் எழுதுவது வாய்ப்பு வளமுடையதல்ல. எழுத்தைவிட எண்களுக்குச் சுருக்கக் குறியீடு தேவைப் பட்டது. 1,2,3 என்ற குறியீடுகள் இதனால் எழுந்தன. ஏதோ ஒரு மூலமொழியில் ஒன்று, இரண்டு என்ற எண்ணுப் பெயர்களின் முதலெழுத்துக் குறியீட்டின் தேய்வாகவே அவை தோற்றியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர் சிலர் கருதியுள்ளனர். அம் மூலமொழி எது என்பதை நாம் இன்றும் உறுதியிட்டுக் காண முடியவில்லை. ஆயினும், மூலமொழிக்கு அணிமையினம் அல்லது அணிமையினங்கள் யாவை என்று உணர முடிகிறது. அம் மூலமொழியினம் வாணிகம், வான நூல் முதலிய அறிவுத் துறைகளைத் தன் வாழ்வின் உயிர் நிலையாகக் கொண்ட மொழியினமாக இருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், எழுத்தைவிட மிகுதியாக எண் குறியீடு தேவைப் பட்டது இதனாலேயே. எண்களை நாம் ஒன்று முதல் பத்துவரைதான் தனிச் சொல்லாகக் குறிக்கிறோம். அதற்கு மேல் பதினொன்று (பத்துடன் ஒன்று) பன்னிரண்டு (பத்துடன் இரண்டு) என்றும், பத்துடன் பத்தடுத்த பின் இருபது (இரண்டு பத்து), முப்பது (மூன்று பத்து) என்றும் பத்தடுக்கிய பத்தை (பத்துப் பத்தை) நூறு என்றும் குறியீட்டுப் பெயராக்கி மேற்சென்றெண்ணுகிறோம். இம்முறை பத்தடுக்கிய முறை அல்லது பதின்மான முறை (னுநஉiஅயட ளுலளவநஅ) எனப்படும். வரிவடிவில் ஒன்று முதல் பத்துவரை ஒரு தனிக் குறியீடாய் அமைய வில்லை. ஒன்று முதல் ஒன்பது வரையே அவ்வாறு அமைந்துள்ளது. பத்தென்னும் தானத்தை ஒரு சுன்னமும் ‘ஒரு’ பத்து என்னும் அதன் பெருக்கத்தை இடது புறம் ஒன்று (1) என்ற குறியும் காட்டுகின்றன. இதுபோல இருபது, முப்பது போன்ற பத்தின் பெருக்கங்களைத் தானக் குறியீடான சுன்னத்துக்கு முன் ஒன்று இரண்டு என்ற பெருக்க எண் குறியிட்டுத் தெரிவிக்கிறோம். நூறு, ஆயிரம் என்ற பத்தடுக்குகளைத் தான அடுக்குகளின் எண்ணளவான சுன்னங்களிட்டுப் பெருக்க எண்களுடன் குறிக்கிறோம். எடுத்துக்காட்டாக நூறு என்பது பத்து இரண்டடுக்கிய இரண்டாவது தான மாதலால் இரண்டு சுன்னமும் ஆயிரம் என்பது பத்து மூன்றடுக்கிய மூன்றாவது தானமாதலால் மூன்று சுன்னமும் பெறுகின்றன. பதின் பெருக்கமும், பத்தடுக்கும் கடந்த நூற்றெட்டு நூற்று இருபது போன்ற எண் தொகைகளை, எண்களையும் பெருக்க எண்களையும் சுன்னத்திடமாக அவ்வத்தானத்திலிட்டு நிரப்புகிறோம். பதினடுக்கு முறையின் வரிவடிவம் இது. பதினடுக்கு முறைக்கு இவ்வாறு ஒரு கருத்து வடிவம் வேறாகவும், வரிவடிவம் வேறாகவும் அமைந்துள்ளது. பலர் இந்த இரண்டு வடிவங்களையும் ஒன்றாகக் கருதிவிடுகிறார்கள். இது தவறு. ஏனென்றால் கருத்து வடிவத்திலும் ஒலி வடிவத்திலும் பதினடுக்கு முறை உடைய மொழிகள் வரிவடிவத்தில் அதனை ஏற்காதிருப்பதையும், வரிவடிவில் அதனை ஏற்ற மொழிகளில் அதற்கு முற்பட்ட ஒலிவடிவம் நிலவுவதையும் காணலாம். வரிவடிவம், கருத்து வடிவம் இரண்டிலும் பதின்முறையை ஏற்காத பல இனங்கள் உலகில் இருந்ததுண்டு. பின்னாள்களில் அவையும் பதின் முறையை ஏற்றமைந்தாலும் முன்னைய முறையின் தடங்கள் அவற்றுட் சிலமொழிகளில் உள்ளன. மாலத்தீவின் மொழியிலும் ஆங்கிலத்திலும்கூடப் பன்னிரண்டின் முறையின் தடங்கல் உள்ளன. ஆங்கிலத்தில் பன்னிரண்டுக்கு இன்று தனிச்சொல் (டுவெல்வ்வ்கூறநடஎந) இருத்தல் காணலாம். நூற்றிருபதுக்கு ஒரு சொல்வழக்கும் (வறநடகவல) பன்னிரண்டு பன்னிரண்டுக்கு (144 பசடிளள) ஒரு தொகுதியும் உண்டு. உலக இலக்கமுறை பற்றிய கோட்பாடுகள் இன்று உலக முழுவதும் வழங்கும் பதின்முறையின் வரிவடிவம் மேனாட்டினரால் அராபிய எண் முறை (ஹசயbiஉ nடிவயவiடிn) எனக் குறிக்கப்படுகிறது. இதில் ஒன்று முதல் ஒன்பது வரை இலக்கங்களும் (1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9) தானக் குறியீடாக ஒரு சுன்னமும் (0) இருக்கின்றன. ஆராய்ச்சியாளர் இன்று இதனை ‘இந்திய எண்முறை’ என்று திருத்தமாகக் குறிக்கக் கருதுகின்றனர். ஏனென்றால், இந்த எண் முறையை இந்தியரிடமிருந்து மேற்கொண்டதாக அராபியரே குறித்துள்ளனர். சுன்னத்துடன் கூடிய பதின்மானத்தின் இந்த வரிவடிவத்தை வழங்கிய முதல் உலக இனம் இந்தியாவிலுள்ள சமற்கிருதம் வழங்கிய இனமே என்றும் கருதுகிறார்கள். சிலர் வரிவடிவ இலக்கங்கள் சமற்கிருதத்தின் இலக்கப் பெயரின் முதல் எழுத்துகளின் திரிபே என்றுகூடக் கருதியுள்ளார்கள். தமிழ்ப் பேராசிரியர்கள் கருத்து உலக எண் (அராபி அல்லது இந்திய எண்) தமிழ் எண்களின் திரிபே என்றும், அவற்றின் குறியீடுகள் தமிழ் இலக்கப் பெயர்களின் முதலெழுத்துகளின் திரிபே என்றும் கருதுபவர் உண்டு. ஒப்புமைக்காக டாக்டர் மு.வரதராசன் அவர்களின் மொழி வரலாறு பக்கம் 444-ல் கண்ட பட்டியலை அடிப் படையாகக் கொண்டு, இக்கருத்தை விளக்குகிறோம். இலக்கங்களின் மூல முதல் மொழி எதுவாயினும், அது சமற்கிருதம் என்பதனை வலியுறுத்தவும், தமிழ் என்பதனை வலியுறுத்தவும் காட்டப்பட்ட விளக்கங்கள், வரலாற்று முறையில் தெளிவுடையவை அல்ல. ஏனென்றால், இன்றைய தமிழின் எழுத்து வடிவமோ சமற்கிருதத்தின் எழுத்து வடிவமோ இலக்க வடிவங்களோகூட அவற்றின் தொல் பழைமை வடிவங்களல்ல; இக்கால அச்சு வடிவங்களே. அவற்றுக்கு முற்பட்ட வடிவ மாறுதல்கள் முதலெழுத்துடன் இலக்க வடிவத்துக்குள்ள இவ்வொப்புமைகளைப் பொருளற்றவை ஆக்கி விடுகின்றன. வானத்து முகிலினங்களை நோக்கி இது யானை, இது குதிரை என எண்ணுவது போல, ஆராய்ச்சியாளர் ஆர்வக் கற்பனைகளை இத்தகைய விளக்கங்கள் குறித்துக் காட்டிவிடத்தக்கவையாய் உள்ளன. எழுத்து வடிவின் மூலமொழியை நாம் சிந்துவெளியில் காண்கிறோம். எண் வடிவமும் அம்மொழியிலேயே தொடங்கிற்று என்று பொதுமுறையாக உய்த்துணர்வதில் தவறில்லை. வரலாற்று முறையான பல இயல்வாதங்கள் இதை நோக்கியவையாய் உள்ளன. பதின்மான வளர்ச்சி இன்று அரபு இலக்கம் அல்லது இந்திய இலக்கம் என்று குறிக்கப்படும் உலக இலக்கமே கிட்டத்தட்ட எல்லா மொழிக்கும் பொதுவாக, ஓவிய எழுத்துப்போல மொழி சாரா உலகப் பொதுக் குறியீடாக வழங்குகிறது. இது தவிர, இதனுடன் தொடர்புடையதாகவோ, தொடர்பற்றதாகவோ பல மொழிகளிலும் வேறு வேறு இலக்க முறைகள் நிலவிவந்துள்ளன. எழுத்தின் வரிவடிவ வளர்ச்சியைவிட, இலக்கத்தின் வரிவடிவ வளர்ச்சி மிகவும் பிற்பட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால், எழுத்தின் வரிவடிவில் எகிப்துப் பல தொடக்கப் படிகளைத் தொடர்ச்சியாகக் காட்டுகிறது. இலக்க வகையில் படிகளை ஒரே தொடர்பாக எந்த இனமும் காட்டவில்லை. ஆயினும், உலகில் வழக்கிலிருந்த வரிவடிவ இலக்க முறைகளை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால், அவற்றின் வளர்ச்சிப் படி முறைகளையும் தோற்றத்தையும் ஒருவாறு உய்த்துணரலாம். இலக்க வரிவடிவங்களை அவற்றின் பண்பும் படியும் நோக்கி நான்கு மரபுகளாக வகுக்கலாம். ஒன்று அரபு எண் என்று வழங்கும் புதிய அரபு முறைக்கு முற்பட்ட பழைய அரபு இலக்க முறையும், கிரேக்க இலக்க முறையும் ஆகும். இதுவே நடுநிலக் கடலகத்தின் பழைய முறை ஆகும். மற்றொன்று உரோம முறை. மூன்றாவது தமிழ் இலக்க முறை. இதனை அடுத்து வளர்ச்சியடைந்த சமற்கிருதத்தின் தேவநாகரியிலும், புதிய அராபிய வழக்கிலும் தற்கால மேலை உலகிலும் பரந்த முறையே உலக இலக்கமுறை என்று நாம் வழங்குவது. இவ்வெல்லா இலக்க முறையின் வரிவடிவப் பண்பு களையும் கீழேயுள்ள அட்டவணையில் ஒப்பிட்டுக் காணலாம். கிரேக்க, நடுநிலக் கடலக மரபு கிரேக்க இலக்கமுறையின் பண்பு முற்றிலும் பழைய அரபு இலக்க முறையை ஒத்ததே. மேலை உலகில் எழுத்து முறையில் புதுவதாக உயிர் ஒலிகளைத் தனி எழுத்தாகக் குறித்த புகழினம் கிரேக்க இனம். ஆனால், வரிவடிவில் அது நடுநிலக் கடலக மரபை அப்படியே மேற்கொண்டதாகத் தெரிகிறது. அதனின்றும் ஒரு சிறிதும் முன்னேறவில்லை. நடுநிலக் கடலக, கிரேக்க இலக்க மரபுகள் வரிவடிவில் பதின்மான முறையல்ல. ஆயினும், ஒலிவடிவில் அவை பதின்மான முறையை முழுதும் எட்டியிருந்தன. அவற்றுக்கு அம்மொழிகளில் பதின்மான முறையில் சொற்கள் அமைந்திருந்தது மட்டுமல்ல; வரிவடித்திலும் பத்துக் கடந்த எண்கள் (11, 12 முதலியன), பத்தின் அடுக்குக் கடந்த எண்கள் (21, 22, 31, 32 போல்வன), நூறு நூற்றடுக்குக் கடந்த எண்கள் (101, 102, 114, 142, 201, 202 போல்வன) ஆகியவற்றுக்குத் தனி இலக்கம் இல்லை. கூட்டு இலக்கக் குறியீடுகளே (10+1, 20+1, 100+1, 100+10+1 போல்வன) வழங்கின. கூட்டு எண்களில் இலக்கங்களிடையே கூட்டல் கருத்தே தொக்கி நின்றது. அதாவது பத்தின் குறியுடன் ஒன்றின் குறியீட்டால் அது பதினொன்றென்று உணரப்பட்டது. இம்முறையின் வரிவடிவத்திலுள்ள பெருங்குறைபாடு பத்தடுக்குகளான இருபது, முப்பது முதலியவற்றுக்கும் நூற்றடுக்குகளான இருநூறு, முந்நூறு முதலியவற்றுக்கும் தனிக்குறியீடுகள் அமைந்தன. இலக்கக் குறியீடுகள் தெளிவான தனிக்குறியீடுகளல்ல. நெடுங் கணக்கின் எழுத்துகளே எண்மானக் குறிகளாகவும் கொள்ளப்பட்டன. இஃது இம்முறையின் மற்றொரு குறைபாடு ஆகும். இம்முறைகளில் 1457 என்பதை இலக்கமாகக் குறிக்க வேண்டுமானால், ஆயிரத்தின் குறியீடு நாநூற்றின் குறியீடு, ஐம்பதின் குறியீடு, ஏழின் குறியீடு இடலாம். 2000, 3000 முதலிய இலக்கங்களை எழுத ஆயிரக் குறியீட்டை இரண்டு தடவை, மூன்று தடவை எழுதிக்கொண்டேதான் போதல் வேண்டும். ஏனென்றால், இரண்டு பத்து, இரண்டு நூறு, இரண்டு ஆயிரம் என்பவற்றில் சிறு எண்ணுக்கும் பெரு எண்ணுக்கும் இடையேயுள்ள பெருக்கற் குறிப்பு அன்று உணரப்பட்டதாகத் தெரியவில்லை. கிரேக்க, அரபு முறைகள் உலகெங்கும் பரந்திருந்த முறைகள் என்பதில் ஐயமில்லை. தமிழிலும் சமற்கிருதத்திலும் அதன் தடங்கள் உள்ளன. உயிரெழுத்துகளுக்கோ, மெய் எழுத்து களுக்கோ ஒன்று முதல் சுன்னம் வரை எண் மதிப்புக் கொடுத்து, இலக்கங்களை வேண்டிய சொல்லாக்கும் முறை இரு மொழிகளிலும் உண்டு. எடுத்துக்காட்டாக அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ ஆகியவற்றுக்கும் முறையே 1,2,3,4,5,6,7,8,9,0 என்ற மதிப்புக்கொடுத்தால் திருவாவினன்குடி என்ற சொல் 35, 23, 153 (முப்பத்தைந்து இலக்கத்து இருபத்து மூன்றாயிரத்து நூற்றைம்பத்து மூன்று) ஆகிறது. இது இன்று கிரேக்கரைப்போல எண் கூட்டு முறையைப் பின்பற்றாமல், பதின்மானத்தின் தானமுறையையே பின்பற்றுகிறது. ஆயினும், பதின்மான முறைக்கு முன்னிருந்த எண் கூட்டு முறையின் மரபில் இவ்வழக்கு ஏற்பட்டது என்று கூற இடமுண்டு. பாரசீகரும் அராபியரும் எழுத்து - எண்ணில் இதை எண்கூட்டு முறையாகவே கவிதையில் திறம்பட வழங்கியுள்ளனர். உரோம இலக்க மரபு பதின்மானத்தின் வரிவடிவ வளர்ச்சியில் உரோம இலக்க முறை கிரேக்க, பழைய அரபு முறைகளினின்றும் ஒரு படி முன்னேறி யுள்ளது. அதே சமயம் அது கை விரல்களை அடிப்படையாகக் கொண்டு இயற்கையாக வளர்ந்ததாகவும் தெரிகிறது. ஒன்று முதல் நான்கு வரையுள்ள இலக்கங்கள் விரல் குறிகளே (I,II,III,IIII). ஐந்து (V) நான்கு விரல்கள் சேர்த்து ஒரு புறமும் பெரு விரல் ஒருபுறமாக விரித்த கையின் வடிவம். பத்து (X) ஐந்துவிரல்களும் சேர்த்து ஒரு கைமேல் ஒரு கை குறுக்காகிய வடிவம். இந்த விளக்கம் ஓர் அழகான இயற்கை வளர்ச்சி குறித்த விளக்கமே. ஐம்பது (L),, நூறு (C),, ஐந்நூறு (D), ஆயிரம் (M), ஆயிவற்றின் குறிகள் அவ்வவற்றுக்குரிய இலத்தீன் மொழிச் சொல்லின் முதலெழுத்தென்பது தெளிவு. இதுவும் இயல்பான ஓர் அழகிய முன்னேற்றக் குறியீடே. கிரேக்க, அரபு முறைகளைவிட இயல்பான இந்த முறை அவற்றைவிடப் பதின்மானம் நோக்கிய முன்னேற்றமுடைய முறையாகவும் அமைந்துள்ளது. பத்தடுக்குகளுக்கும் (20, 30 முதலியவற்றுக்கும்) நூறடுக்குகளுக்கும் (200, 300 முதலிய வற்றுக்கும்) தனிக் குறியீடுகளைவிட அடுக்கிய, பத்துப் பதின்மானப் படிகளே சிறப்புடையன (20=XX, 30=XXX, 200=CC, 300=CCC என்றவாறு), அத்துடன் பேரெண்ணின் பின் சிற்றெண் வரும்போது கூட்டற்குறிப்பும் (VI=5+1=6, XI=10+1=11 என்றவாறு), பேரெண்ணின் முன் சிற்றெண் வரும்போது கழித்தற்குறிப்பும் (V=5-1=4, IX=10-1=9 என்றவாறு) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றெல்லா வகைகளிலும் கிரேக்கரை நிழல்போலப் பின்பற்றிய உரோமர்கள், இலக்கவகையில் தனி முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், கிரேக்கர் நடுநிலக் கடலக இனத்தின் கீழ்த்திசை யிலுள்ள ஒரு மரபைப் பின்பற்றியது போலவே, அதே இனத்தின் ஒரு மேல்திசை மரபை அவர்கள் பின்பற்றினர் என்றும் உய்த்துணரலாம். அவர்கள் சிற்பக் கலைக்குத் தூண்டுதல் தந்த அழிந்துபட்ட தொல்பழங்கால எட்ர°கான இனத்தின் மரபாகவும் அஃது அமைதல் கூடும். உரோம முறையின் குறைபாடுகளும் பல. ஒன்று முதல் ஒன்பது வரை யுள்ள அடிப்படை இலக்கங்கள் அனைத்துக்கும் தனிக் குறிகளமையாமல் பலவற்றுக்கும் (VI, VII போல) கூட்டுக் குறிகள் உள்ளன. பத்தைப் போலவே ஐந்துக்கும், நூற்றைப்போல ஐம்பதுக்கும், ஆயிரத்தைப் போல ஐந்நூறுக்கும் தனிக்குறிகள் உள்ளன. பதின்மானத்தின் தானமதிப்பை இவை கெடுக்கின்றன. இன்றைய பதின்மானமுறை உலகெங்கும் பரந்த பின்கூட, மேலை உலகில், அதற்கடுத்தபடியாக, துணைவடிவாக உரோமமுறை இன்றும் வழங்குகிறது. அதன் அடிப்படைத் தகுதிக்கும், மதிப்புக்கும் இஃது ஒரு சான்று ஆகும். தமிழ் இலக்க முறை தமிழ் இலக்க முறையின் தொடக்க வளர்ச்சியையோ, சமற்கிருத தேவநாகரிக முறையின் தொடக்க வளர்ச்சியையோ நாம் காணமுடியவில்லை. ஆனால், தமிழ் இலக்கமுறை பின்னதனைவிட ஒருபடி முற்பட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது. உலகின் முதல் பதின்மான முறை அதுவே என்னலாம். கிரேக்க, அரபு முறைகளின் படிகளையும், உரோம முறையின் படியையும் கடந்தே தமிழ், தேவ நாகரிக முறைகள் முன்னேறின என்று கூறத்தடையில்லை. ஆனால், மற்ற முறைகள் தொடக்கப் படிகளில் இருக்கும்போதே இவை கிட்டத்தட்ட முழுநிறை பதின்மான முறைகளாய் இயங்கின. மற்றவற்றின் படிகளை இவை வரலாற்றுக் கெட்டாத முற்பட்ட காலத்திலேயே கடந்தன என்றும் தொலை நாடுகளிலுள்ள தொடக்கப் படிகள் இங்கிருந்து பரவிய தொடக்கப்படிகளாகவே இருக்கக் கூடுமென்றும் கூற இடமுண்டு. கிரேக்க அரபு முறைகள் தாண்டியும் உரோமமுறை தாண்டியும் தமிழ்முறை பதின்மானத்தில் பல படிகள் முன்னேறியுள்ளது. முதலாவதாக ஒன்று முதல் ஒன்பது வரை இலக்கங் களுக்குத் தனிக்குறியீடுகள் உள்ளன. இவை கடந்து, பத்து, நூறு, ஆயிரம் ஆகிய தானங்களுக்கே தெளிவான தனிக் குறியீடுகள் உள்ளன. மூன்றாவதாக, தானக் குறியீடுகளாக வழங்கிய பேரெண்களுக்கு முன் சிற்றெண்கள் அவற்றின் மடங்குகளாக வழங்குகின்றன. எடுத்துக்காட்டாகப் பத்தடுக்குகள், நூறடுக்குகள், ஆயிர அடுக்குகள் யாவும் (உ)=2ஒ10=20, (உள)=2ஒ100=200, (உசூ )=2ஒ1000=2000 என்றவாறு) பெருக்கக் குறிப்புகளாவது காணலாம். இன்றைய உலகின் பதின்மான வரிவடிவ முறைக்கு இது மிகவும் அணுக்கமானது. ஆயினும், இதற்கும் அப்பதின்மான முறைக்கும் இடையே ஒரு மிக முக்கியமான வேறுபாடு உண்டு. அதுவே தானஎண்கள் தனிக் குறியீடுகளாய் அமையாமல், சுன்னங்களின் எண்ணிக்கையால் இடக்குறியீடு ஆக அமைவது ஆகும். தமிழின் மாற்று இலக்க முறை தமிழ் இலக்கத்திலேயே, மேலே அட்டவணையில் அடைப்புக் குறிகளுக்குள் காட்டப்பட்ட இலக்கமுறை இவ்வகையில் அமைந்ததே. அது தமிழகத்தில் பெருவழக்காக முன்பு வழங்காத முறையாயினும், சிறுபான்மை வழக்காகத் தமிழகத்திலேயே தோற்றிய ஒரு மாற்று முறையே என்னலாம். கீழ்வரும் செய்திகள் இதைச் சுட்டிக்காட்ட உதவுகின்றன. 1. இலக்கங்களின் எழுத்துமுறைக் குறிப்புத் தான இலக்கங்களையே வழங்குகிறது. எடுத்துக்காட்டாக முந்நூற்று இருபத்து ஏழு என்ற எண்ணில் 3,2,7 ஆகிய இலக்கங்களையும் முந்நூற்று ஏழு என்பதில் 3,0,7 எனச் சுன்னம் உட்பட்ட இலக்கங்களையுமே அது வழங்குகிறது. 2. வானூற் கணிப்பில் பரல் எண்ணுமிடத்தில் பரற்கோடுகள் தானங் களாகவும் இலக்கங்கள் தான இலக்கங்களாகவுமே குறிக்கப்படுகின்றன. உண்மையில் பதின்மான முறையின் கடைசிப் படியான சுன்ன மரபு தோற்றிய வகையே இஃது என்று கூறலாம். 3. பிற தென்னாட்டுத் தமிழின மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை சுன்ன மரபுடன் கூடிய மாற்றுமுறையே வழங்கு கின்றன. இவற்றைச் சமற்கிருத தேவநாகரியிலிருந்தோ உலக மரபிலிருந்தோ அவை பெறவில்லை. ஏனெனில், இவை அம் மொழிகளுக்கே யுரிய தனி இலக்க முறைகள். 4. தென்னாட்டில் அணிமையிலேயே தேவநாகரிக எழுத்து முறை பரவத் தொடங்கியுள்ளது. அணிமைவரை சமற் கிருதத்தின் எழுத்து முறையாக இருந்து வந்துள்ள எழுத்து முறை கிரந்த எழுத்து முறையே. இதன் இலக்க முறையில் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள இலக்கக் குறியீடுகள் தமிழ் இலக்கக் குறியீடுகளே. ஆயினும், தமிழின் மாற்று முறையாகிய சுன்னமுறையே தானங்களுக்குப் பயன் படுத்தப் படுகிறது. 5. தமிழ் இலக்கமுறை முழு எண்களாகிய மேல்வாய் எண்களுக்கு மட்டுமின்றி, கீழ்வாய் எண்களுக்கும் விரிவான முறையில் அமைந் துள்ளது. அரை, கால் என்ற முறையில் இரண்டிரண்டான பாகுபாட்டு முறை கால்வீசம் அல்லது அறுபத்து நாலில் ஒன்றுவரை செல்கிறது. இதில் ஐந்தில் ஒரு பங்கான முந்திரி முந்நூற்றிருபதில் ஒன்றாகும். இதில் முந்நூற்றிருபதில் ஒன்றான கீழ் முந்திரியும், .இதில் இருபத்தொன்றில் இரண்டு பங்கான இம்மியும் தமிழின் சிற்றெல்லைக் கீழ்வாய் ஆகும். இவற்றில் முந்திரிவரை இலக்கக் குறியீடு உண்டு. கீழ்வாயிலும் பதின்மானத்துக்கு அடிப்படையான குறியீடு தமிழில் உண்டு. மூன்றில் ஒன்றும் ஏழில் ஒன்றும்கூட இம்மிவரை சென்று அளவிடக் கூடியவையே. பாதி பாதியான தமிழ்க் கீழ்வாய்ப் பாகுபாடு கிட்டத்தட்ட உலகெங்கும் பரந்துள்ளது. ஆனால், கால் அல்லது நாலில் ஒன்றுடன் பெரும்பாலான இந்திய, உலக மொழிகளும், வீசம், கால்வீசம், கால் வீசத்தின் மூன்றில் ஒன்று (அதாவது நூற்றுத் தொண்ணூற்றிரண்டில் ஒன்றான பை) வரை குசராத்தியும் தமிழ்க் கீழ்வாய் மரபைப் பின்பற்றியுள்ளன. கீழ்வாயில் எல்லா மொழிகளையும் தொன்று தொட்டிருந்தே கடந்த தமிழ் மொழியே மேல்வாயிலும் முன்னோடிச் சென்று, உலக மொழிகளில் அப்பண்பைப் பரப்பின என்னலாம். உலக எண்மானம் மேலே காட்டிய பருநிலைச் செய்திகள், உலக எண்மானத்தின் தோற்றம் மட்டுமின்றி, வளர்ச்சியும் முற்றிலும் தமிழகம் சார்ந்ததென்பதை நிலைநாட்டப் போதியன அல்லவாயினும், அதைச் சுட்டிக்காட்ட போதியவை. வருங்கால ஆராய்ச்சி அதனைத் தெளிவுபடுத்தி மேலும் விளக்கம் தரலாம். மேலையுலகம் எண்மானத்தைச் சமற்கிருத தேவ நாகரி மூலமும் புதிய அரபு எண்மூலமுமே பெற்றது என்பது தெளிவு. பதின்மானத்தின் வரிவடிவிலும் எழுத்தின் வரிவடிவிலும் இந்தியாவுக்கு வெளியே ஆரிய இனத்தின் பங்கு எதுவும் இல்லை. அத்துடன், இந்தியாவிலும் அஃது ஆரிய மொழியினத்தினால் தோற்றுவிக்கப்பட்டதன்று; வளர்க்கப்பட்டது கூட அன்று என்பதை இது குறித்துக் காட்ட வல்லது. தென்னாட்டு வரலாறு, பழம்பொருள் ஆராய்ச்சி, மொழியாராய்ச்சி போதிய வளர்ச்சி யடையாமலும், வளர்ச்சியடைந்த அளவிலும் வெளியுலகத் தொடர்போ, விளக்கமோ காணாமலும் இருப்பதனால், இதனை முழுதும் நிலைநாட்டப் போதிய ஆதாரங்கள் கிட்ட வழியில்லாதிருக்கிறது. ஆனால், பதின்மானக் கருத்துப் படிவத்திலும் ஒலிப் படிவத்திலும் இன்றைய நாகரிக உலகின் ஒற்றுமை வியத்தற்குரியது. இவ்வடிங்கள் வரி வடிவத்துடன் முற்றிலும் ஒத்து விளங்குவது இரண்டு மொழிகளில் மட்டுமே. ஒன்று இக்கால மேலை மொழிகளில் ஒன்றாகிய ஆங்கிலம், மற்றொன்று பண்டைக் கீழை மொழிகளுள் ஒன்றான தமிழ், மற்ற எந்த மொழியிலும் இவை ஒத்து இயலவில்லை. எடுத்துக்காட்டாக இருபத்து நாலு என்பதில் தமிழ்ச் சொல்லிலும் ஆங்கிலச் சொல்லிலும் இருபது முதலிலும் நான்கு பின்னும் வருகின்றன. எழுத்து வடிவிலும் இப்படியே எழுதுகிறோம். இரண்டு முதலிலும் நாலு பின்னுமே உலக எண்மானத்தில் உள்ளன. ஆனால், ஐரோப்பாவின் மற்ற இக்கால மொழிகளிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் சமற்கிருதத்திலும் தமிழினம் நீங்கலான இந்திய மொழிகளிலும் ஒலிவடிவில் நான்கு முதலிலும் இருபது பின்னுமே வருகின்றன. எடுத்துக்காட்டாக சமற்கிருதத்தில் இருபத்துநான்கு சதுர்விம்சதி ஆகும். சதுர் என்பது நான்கு; விம்சதி என்பது இருபது. அரபு முதலிய மேலை ஆசிய மொழிகளில் எழுதுவது இடமிருந்து வலமல்ல; வலமிருந்து இடம். எனவே, அம்மொழிகளில் எண்மான ஒலி மரபும் வரிவடிவு மரபும் ஒன்றாய் அமைகிறது. பதின்மான இலக்கமுறை அரபு மூலம் உடையது என்பதற்கு இது முன்பு ஆதாரமாகக் கொள்ளப்பட்டது. ஆனால், ஊன்றிக் கவனித்தால் இது முற்றிலும் சரியன்று. இம்மொழிகள் உட்பட எல்லா மொழிகளிலும் பத்தடுக்கிலும் நூறடுக்கிலும் (இருபது, இருநூறு போல்வனவற்றில்) சிற்றெண் முதலிலும் பேரெண் பின்னுமே வருகின்றன. வலமிருந்து இடம் செல்லும் முறையில் இங்கே ஒலிவடிவத்துக்கு வரிவடிவம் மாறாகி விடுகிறது. தமிழும் சுன்ன முறையும் தமிழர் சுன்ன முறையைக் கண்டு மாற்று இலக்க முறையை வகுத்தாலும், அதைப் பெருக்கமாக வழங்காததற்கு ஒரு காரணம் உண்டு. மாற்று முறையைவிடப் பழைய முறை கருத்து வடிவத்துடனும் அவ்வடிவத்துடனும் மிகவும் இயைவது. வரிவடிவக் கணக்கு முறையில் முன்னது வாய்ப்பா யிருந்தாலும், மனக்கணக்கு முறையில் பின்னதே மிகுதியும் வாய்ப்புடையது. தவிர கீழ்வாய் இலக்க முறை முழுதும் பதின்மான முறை ஆய்விடாத நிலையில், பழைய இலக்க முறை அதனுடன் எளிதில் இயைபுடையதாய் அமைந்தது. மனக்கணக்கு முறையில் தமிழர் அணிமைவரை திறமைமிக்கவரெனப் பெயர் பெற்றிருந்தனர். வாணிகத்தில் அது மிகவும் பயன்பட்டது. மேல்வாய் எண் பதின்மான அடிப்படையாக்கப்பட்டு உலகெங்கும் தொடக்கப்பள்ளிகளில் எண்சுவடி உருவில் இன்று மனப்பாடம் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மேனாட்டுக் கல்விமுறை வந்து இப்பண்பு கெடுக்கும் வரை, கீழ்வாயிலும் இதேவகை நுண்மான முறைப் பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல். பதின்மானத்தான ஏற்றம், தற்பெருக்கம் அல்லது குழிப்பெருக்கம் ஆகியவை பயிலப்பட்டுவந்தன. கீழ்வாய் இலக்கத்தில் இன்றுகூட, மற்ற முறைகளுடன் தமிழ் முறை பயன்படுத்தப்பட்டால் அதற்குத் தனிச்சிறப்புண்டு. குறிப்பாகக் கீழ்வாய்ப் பொது எண்ணைப் பதின்மானக் கீழ்வாயாக்குவதில் தமிழ்க் கீழ்வாய் எண்-முறையும் அதன் எண்சுவடியும் பதின்மான ஏற்றமும் பெரும்பயனுடையனவாகும். எடுத்துக்காட்டாக எட்டில் மூன்றில் (3/8) பதின்மானம் காணக்காண அதன் தமிழ் நுண்மானத்தைப் (காலேயரைக்கால்) பதின்தானங்களால் முழு எண் ஆகும் வரை, (காலே அரைக்கால், மூன்றேமுக்கால், முப்பத்தேழரை, முந்நூற்றெழுபந்தைந்து என்று) ஏற்றினால் பதின்மானம் (375) எளிதில் கிடைக்கும். எண்ணும் எழுத்தும் ‘எண்ணும் எழுத்தும் இரு கண்ணெனத் தகும்’ என்பது அவ்வை திருவாக்கு.``எண்ணென்ப, ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும்-கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே வகுத்துச் சென்றுள்ளார். இவ் வாய்மொழியில் எவ்வளவு பேருண்மை பொதிந்துள்ளது என்பதை உலக மொழியாராய்ச்சியாளர் மட்டுமே தெள்ளத் தெளியக் காணக்கூடும். தமிழுலகம் உலகுக்குத் தந்த செல்வங்கள் பலப்பல. ஆனால், அவற்றில் தலைசிறந்த செல்வங்கள் எண்ணும் எழுத்துமே. அவற்றைத் தமிழினம்போலப் பேணிய இனமும் பிறிதில்லை என்னலாம். இன்று உலகில் கீழ்நாடுகளும் தமிழகமும் கல்வியில் மட்டுமன்றி அடிப் படைக் கல்வியான எண்ணெழுத்தறிவிலும் மிகவும் பிற்பட்டேயுள்ளன. ஆனால், இது நேரடியாகத் தமிழினத்தின் குறையன்று. தமிழர் குடியாட்சிக் காலத்தில் வளர்த்து உலகெங்கும் பரப்பிய சீரிய பண்புகள், முடியாட்சி ஏற்பட்ட காலமுதல் படிப்படியாகச் சீரழிவுற்று, அயலின அயல் பண்பாடுகளுக்கும், பண்பாட்டில் குறைந்தோரின் ஆதிக்கத்துக்கும் வழிவகுத்துள்ளது. இன்றைய நிலை நீடித்த அடிமைப் பண்பின் விளைவேயாகும். பழைய கால நிலையைச் சங்க இலக்கியங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இக்காலத்தவர் அதை உள்ளவாறு காணாததும் காண எண்ணாததும் அடிமை மனப்பான்மை யினாலேயே என்னலாம். அச்சுப் பொறி ஏற்படாத அந்நாளில் பனையோலையன்றி எளிய எழுதுபொருள் காணப்படாத நிலையில், கல்விக்குரிய வசதிகள் உலகெங்கும் குறைவாகவே இருந்திருக்க முடியும் என்பது தெளிவு. ஆனால், இத்தகைய காலத்திலும் தமிழர் பேரிலக்கிய இலக்கண வளம் எய் தியிருந்தனர். அதன் ஒரு சிறு பகுதியே தொல்காப்பிய வடிவிலும், சங்க இலக்கிய வடிவிலும் நம்மை வந்தெட்டியுள்ளன. எட்டியுள்ள பகுதியே இன்றளவும் உலகில் ஈடிணையற்ற வியத்தகு பண்புகளை உடையன. சங்க இலக்கியம் குறிப்பிடத்தக்க நிலையிலும் அளவிலும் உலகின் மிகச் சிறந்த சமயஞ் சாரா உயர் இலக்கியமாகக் காட்சியளிக்கிறது. அதேசமயம் ஓர் உயர்ந்த நாகரிகத்தையும் அறிவு ஒழுக்கப் பண்புகளையும் விளக்கும் ஒப்பற்ற காலக் கண்ணாடியாகவும், மக்கள் இலக்கியமாகவும், தேசிய இலக்கியமாகவும் அது விளங்குகிறது. கல்வி சிறந்த தமிழகம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகத்தில் கல்வி எந்த அளவு நாடெங்கும், சமுதாயப்படி முழுவதும் ஆண், பெண் வேறுபாடின்றிப் பரவியிருந்தது என்பதைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. கிட்டிய இலக்கியத்தின் கிட்டிய பகுதி இரண்டு மூன்று தலைமுறைக்கு உட்பட்டதே. ஆயினும், தமிழகத்தின் இன்றைய மாவட்டம் ஒன்று தவறாமல் இன்றைய தமிழகத்துக்கு வெளியேயுள்ள பகுதிகள்கூட அதில் புலவரின் தாயகமாய் இருந்துள்ளன. புலவர்கள், பாணர் வகுப்பிலும் அரசரிளவசரிடை யிலும் வணிகரிடையிலும் மருத்துவரிடையிலும் வேற்றுமை யின்றிப் பரவியிருந்தது. சங்கப் புலவர் ஐந்நூற்றுக்குச் சிறிது மேற்பட்டவரிடையே முப்பதுக்கு மேற்பட்டவர் அதாவது நூற்றுக்கு ஆறு விழுக்காடு பெண்டிராகக் காணப்படுகின்றனர். அவர்களும் எயினர், பேயர், குறவர், அரசிளஞ்செல்வியர் ஆகிய எல்லாச் சமுதாய வகுப்புப் படிகளுக்கும் எல்லா மாவட்டங்க ளுக்கும் உரியராகவே காணப்படுகின்றனர். மேலை உலகில் இன்றுள்ள அரசியல், அறிவியல் மொழித்துறை வாய்ப்பு வளங்களிடையேகூட, இதற்கொப்பான நிலையை எந்த நாடாவது காட்ட முடியுமா என்பது ஆய்ந்து காணத்தக்க செய்தியே யாகும். இப்பாரிய கல்வி முயற்சிக்கு அடிப்படையானது சங்க வாழ்வு. சேர சோழ பாண்டியர் வகுத்த கல்விக் கோட்டையின் கொடுமுடியே, கொடிக்கம்பமே அது. அதுவே கல்வித் துறையில் ஒரு தேசிய, இனப் பல்கலைக்கழகமாகவும், அறிவுத் துறையில் ஓர் ஆராய்ச்சிக் கூடமாகவும், இலக்கியத் துறையில் உலகளாவிய அருளறச் சாலையாகவும் இருந்து நாடு கடந்த தமிழர் தேசிய வாழ்வையும் உலகப் பண்பையும் வளர்த்தது. சேர சோழ பாண்டியர் ஆட்சிக்கு வெளியேயும், அவ்வாட்சிக் காலங் கடந்து, தேசிய வாழ்வின் தளர்ச்சிக் காலங்களிலும், இக்கல்வி ஏற்பாடுகள் படிப்படியாகத் தளர்வுற்றன. ஆனால், இன்றும் தமிழரசர்களுள் சேரர் குடி இருபதாம் நூற்றாண்டுவரை நீடித்துள்ள திருவாங்கூர் கொச்சியில் கல்வி மிக முனைப்பாகவும், பாண்டியர் சோழர் நீடித்தாண்ட தமிழகப் பகுதியில் அடுத்த படி முனைப்பாகவுமே உள்ளன என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. தமிழர் தட்டுக்கெட்ட காலத்தில் கல்விமுறையை வகுத்துப் பேண நல்லரசுகள் இல்லை. ஆனால், அச்சமயத்திலும் கல்வியில் மக்களும் மக்கட் கவிஞரும் பெருமுயற்சி மேற்கொண்டிருந்தனர். பிற்கால அவ்வையாரது ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநீதி, மூதுரை, நல்வழி ஆகியவையும், அதிவீரராம பாண்டியரது வெற்றி வேற்கையும், சிவப்பிரகாசரது நன்னெறியும், குமரகுருபரது நீதிநெறி விளக்கமும் இம்முயற்சிக்குச் சான்றுகள் ஆகும். பள்ளி வகுப்புகளை எதிர்நோக்கிப் படிப்படியாகத் திட்டமிடப்பட்ட இத்தகைய ஏடுகள், இன்றும் இலக்கியத் துறையில் எம்மொழியிலும் எளிதில் காணமுடியாதவை ஆகும். மக்கட் கவிஞரின் இக்கல்வி மறுமலர்ச்சி ஆங்கில ஆட்சி தொடங்கு வதற்கு முன், 16-17ஆம் நூற்றாண்டுக்குரியதாகும். மறுமலர்ச்சிக்கு ஆங்கில ஆட்சி உதவிற்றாயினும், அதன் வேர்முதல் அதுவன்று என்பதை இது காட்டுகிறது. 5. தமிழ் இலக்கணமும் மொழி நூலும் காற்று மண்டலத்தில் பறக்கும் பறவை காற்றைப்பற்றி எண்ணாது. நீராழத்தில் இயங்கும் மீனினமும் நீரையறியாது. அதுபோலவே மனிதன் மொழியில் பிறந்து, மொழியில் இயங்கி வளர்ந்தாலும், மொழியைப்பற்றிப் பெரும்பாலும் எண்ணுவ தில்லை. தனக்கென ஒரு மொழி உண்டு என்பதைக்கூட, இன்னொரு மொழியைக் காணும்போதுதான் அவன் உணர முடியும். பல மொழிகளுக்கு அயல் மொழியாளர் தொடர்பு ஏற்பட்ட பின்பே பெயர் அமைவதன் காரணம் இதுவே. மொழியைப் பற்றி எண்ணாமலே மனிதன் தலைமுறை தலைமுறையாக மொழியை ஆக்குகிறான். ஆக்கி வளர்க்கிறான். இவை அவன் அறியாச் செயல்கள். உண்ட உணவைச் செரிமானம் செய்வது வளர்வது ஆகிய உயிர்ச் செயல்கள் போன்றவை இவை. மொழியில் இயங்கும் இவ்வறியாச் செயல்களை யடுத்து, மொழியை யியக்கும் அறியாச் செயலிலும், மொழியை உணர்ந்தாராயும் அறிவுச் செயலிலும் அவன் ஈடுபடுகிறான். மொழியை இயக்கும் அவன் அறியா உணர்வுச் செயலே இலக்கியம். மொழியை உணர்ந்தாராயும் அவன் அறிவுச் செயலே இலக்கணம், மொழி நூல். இலக்கிய ஊழி : இன, சமுதாய, தனி மனித இலக்கியப் படிகள் மனிதன் எழுத்தைக் காணுமுன், குடிவாழ்வு பெற்றுச் சமுதாயமாக அமையுமுன், நாடோடி வாழ்க்கையிலேயே எழுதா இன இலக்கியம் ஆக்கினான். இது பெரிதும் அவன் விளைமுறைச் சமய வாழ்வு சார்ந்ததாயிருந்தது. பாரசீக ஆரியரின் மறை நூலாகிய அவெ°தாவும், இந்திய ஆரியரின் மறைநூலாகிய இருக்கு வேதமும் மனித இன வரலாற்றில் காலத்தால் பிந்திய இடைக்காலத் தவையானாலும், தன்மையால் இம் முதற்படி சார்ந்த இன இலக்கியங்களேயாகும். குடிவாழ்வும் சமுதாயமும் அமைந்தபின் இன இலக்கியம் சமுதாய இலக்கியமாகிறது. இஃது எழுதாச் சமுதாய இலக்கியமே. ஏனெனில், இதுவும் எழுதப்படாமல் மரபு வழியே வளர்ந்து வந்ததாகும். நாட்டுப் பாடல்கள். வீரக் கதைகள், சமூகப் பழங் கதைகள், சமய விளைமுறை இலக்கியங்கள், ஆடல்பாடல், நாடக இலக்கியங்கள் ஆகியவை இந்தப் படியைச் சார்ந்தவை. தமிழன்னையாகிய அவ்வையார் போற்றிய ஏற்றப்பாடல் இவ்வகைப்பட்ட சமுதாயப் பாடலேயாகும். குறவஞ்சி, பள்ளு, அம்மானை முதலிய தமிழ்த் துறைகளும் இம்மரபினவே. இவ்விரண்டு படிகளிலும் மொழியின் உயிரைக் காணலாம். இனம் அல்லது சமுதாயத்தின் வளர்ச்சியைக் காணலாம். ஆனால், இவற்றில் தனி மனிதன் இடம் பெறுவதில்லை. இனத் தலைமுறைகளும் சமுதாயத் தலைமுறைகளுமே அவற்றை ஆக்கியியக்கி வளர்க்கின்றன. சமற்கிருத புராண, இதிகாச, சுமிருதிகள் சமுதாய இலக்கியங்களில் பிற்காலத் தொகுப்பேயாகும். இன ஆட்சியிலும் சமுதாய ஆட்சியிலும் வீரர், மன்னர், குருமார் இடம் பெற்றனர். ஆனால், இவர்கள் சமுதாயத்தில் ஒரு மரபினராக ஆண்டனரேயன்றி, இன வாழ்வை இயக்கவில்லை. தனித் தன்மையும் பெறவில்லை. இவர்களுள் எவர் பெயர்களும் நம்மை வந்து எட்டாததன் காரணம் இதுவே. ஆட்சி செய்தவர் தம் ஆட்சிக் காலத்துடன் மறைந்தனர். புதிய ஆட்சியாளர் புகழ் புதிய ஆட்சிக் காலத்தில் நிலவிற்று. முதல் முதல் இன வாழ்வையோ சமுதாய வாழ்வையோ தலைமுறை கடந்து தலைமுறையாக இயக்கத் தலைப்பட்ட தனி மனிதர்கள் பலர். இவர்களே இன முதல்வர், குலமுதல்வர் என்றும், தெய்வங்கள் என்றும், சமய முதல்வர் அல்லது இலக்கிய முதல்வர் என்றும் பல பெயர்களால் சிறப்பிக்கப்பட்டனர். பாரசீக நாட்டில் ஜரதுஷ்டிரர், சீனத்தில் கன்பியூசியசு, யூதரிடையே, மோசே ஆபிரகாம் ஆகியோர் இத்தகைய இனப் பெரியார் ஆவர். இவர்களிடையே கன்பியூசியசும் ஜரதுஷ்டிரரும் இலக்கிய முதல்வராகவும் விளங்கினர். கிரேக்க நாட்டாரது வாழ்வு ஹோமர் என்ற சமுதாயக் கவிஞரை இலக்கிய முதல்வராகக் கொண்டே தொடங்கிற்று. எழுத்தமைந்த பின்னரே சமுதாயத்தில் தனி மனிதன் மொழியை இயக்கி இலக்கியம் வளர்க்கத் தொடங்கினான். அச்சுப்பொறி ஏற்பட்டபின் தனி மனிதன் இலக்கியம் நாட்டிலக்கியம், உலக இலக்கியமாக வளர்ந்து வருகிறது. மனித உலகிலே, தமிழ் மிகப் பழைமை வாய்ந்த மொழி என்பதிலே ஐயமில்லை. ஆனால், மனித இனப் பழைமையின் படிகளைத் தமிழில் தெளிவாகக் காணமுடியாது. இருக்கு வேதப் படி, ஜரதுஷ்டிரர் கன்பியூசியசு படிகளையோ ஆபிரகாம் ஹோமர் படிகளையோ வரலாற்றுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டாத தொல் பழங் காலத்திலேயே தமிழ் கடந்துவிட்டது. இருக்கு வேதக் காலத்துக்கு முன்னரே தமிழர் எழுத்து முறைகளிலும், தனிமனிதன் இலக்கிய இலக்கண வளர்ச்சியிலும் நெடுந்தொலை முன்னேறிவிட்டனர். மனித இனத்தின் முற்பட்ட இலக்கிய, மொழிப்படிகளை நாம் நாகரிகத்தில் பிந்திவிட்ட பிற நாடுகளிலும் இனங்களிலுமே தேட வேண்டியிருப்பதன் காரணம் இதுவே. தமிழில் இவற்றின் தடங்கள் உண்டு. விளக்கங்களைப் பிற மொழிகளிலேயே நாடுதல் வேண்டும். இலக்கியத்துக்குரிய படி மனிதர் இன உணர்வைச் சுட்டுகிற ஒரு படியேயாகும். இலக்கணத்தின் படியோ அதற்கப்பாற் பட்டது. அதுவே மனிதன் மொழியுணர்வு பெற்ற பருவம் ஆகும். இலக்கணமின்றி இலக்கியம் மட்டுமே வளர்ச்சியடைந்திருந்த காலத்தை நாம் இலக்கிய ஊழி என்றும், இலக்கணம் தோன்றிய பின்னுள்ள காலத்தை இலக்கண ஊழி என்றும் கூறலாம். இலக்கண ஊழி: மேலை மொழிகள் தொல்காப்பியக் காலத்துக்கு நெடுநாள் முற்பட்டே இந்த இலக்கிய ஊழியையும் இலக்கண ஊழியையும் தமிழ் கடந்துவிட்டது. தமிழரோடொத்த பழைமையுடைய தொல்பழங்கால இனத்தவரான எகிப்தியரும் சுமேரியரும் சால்டியரும் பிற நடுநிலக் கடல் இனத்தவரும் இலக்கண ஊழியை எட்டவே யில்லை. இலக்கிய ஊழியில்கூடத் தனிமனித ஊழியை அவர்கள் அடையவில்லை. இன இலக்கிய, சமுதாய இலக்கியப் படியிலேயே அவர்கள் வாழ்ந்து மாள்வுற்று மடிந்தனர். கிரேக்கரும் உரோமரும் இலக்கிய ஊழியில் நெடுந் தொலை சென்று முன்னேறினர். இலக்கண ஊழியை இறுதி யிலேயே சென்று எட்டினர். இலக்கண இலக்கியமில்லாத பண்படா மொழிகளுடன் அவர்களுக்கு ஏற்பட்ட தொடர்பே வேர்களிடையே இலக்கண உணர்வை வளர்த்தது. சிறப்பாக இம்மொழிகளில் வாழ்வு அழிந்த பின், மேலைநாட்டுப் பண்படாத் தாய்மொழியாளர் அவற்றை அயல்மொழிகளாகக் கற்பிக்கவேண்டி வந்தது. பெரும்பாலும் ஒரு மொழியாளர் களின் கண்ணோட்டத்துடன் காணும்போதுதான் அதன் இலக்கண வடிவம் இன்றியமையாச் சிறப்புடையதாயமையும். இலத்தீன் மொழி தனிப்பட்டும், கிரேக்கமொழி அடுத்தபடியாகவும் இவ்வகையில் தம் பண்படா அயல்மொழி மாணவராலேயே பெரிதும் இலக்கண வகை தொகைச் சிறப்பு அடைந்தது. இன்றைய மேலைநாட்டு மொழிகள் தொடக்கத்தில் இலத்தீன் கிரேக்க மொழிகளுக்கு அமைந்த இலக்கணப் படிவங்களையே தம் வகையிலும் பின்பற்றின. இத் தவறுணர்ந்து தாய்மொழிகள் தனித்தனி இலக்கணங்கள் வகுத்தபோதும், அவற்றின் அடிப்படை அமைதிகள் இலத்தீன் கிரேக்கமொழி அமைதிகளாகவே அமைந்தன. வேண்டிய வேண்டிய இன்றியமையா மாறுதல்களுடன் அவை அவ்வத் தாய்மொழிகளின் இலக்கணங்களாய் அமைந்தன; அமைந்துவருகின்றன. மேனாட்டு மொழிகளில் இலக்கணங்களின் உயிர்ப் பண்பும் தொடக்கப் பண்பும் இங்ஙனம் இலத்தீன் கிரேக்க இலக்கணப் பண்புகளாகவே அமைந்துள்ளன. எபிரேய, அரபுமொழி இலக்கணங்கள் நடுநிலக் கடலுலகின் இடைக்கால மொழிகளுள் எபிரேய மொழியும் அரபுமொழியும் மட்டுமே இலக்கண இலக்கிய வளர்ச்சி பெற்றன. கிறித்துவ மறைக்கும் இசுலாமிய மறைக்கும் அவை தாயக மொழிகளாய் அமைந்திருந்தன. ஆகவேதான், அவை இவ்வளர்ச்சியில் ஊக்கம் மிகுதி பெற்றன. ஆனால், இவ்விலக்கணத்தில் பெரும்பகுதி எழுத்திலக்கணமாகவும், அடுத்த சிறுபகுதி சொல்லாக்க இலக்கணமாகவும் மட்டுமே அமைந்தது. மொழியின் ஒலி மாறுபடுந்தோறும் வரிவடிவு அடிப்படையில் மாறுபடாமல் திரிபுற்றதால், காலஞ் செல்லச் செல்ல, எழுத்தறிவுக்கு இம்மாறுபாட்டறிவு தேவைப்பட்டது. இந்நிலையை ஆங்கில மொழி ஓரளவு சுட்டிக் காட்டும். இன்றைய ஆங்கில எழுத்துமுறை 14ஆம் நூற்றாண்டின் ஒலிப்பு முறைப்படி அமைந்தது. அதன்பின் அச்சு ஏற்பட்டது. ஒலிகள் மாறின. ஆனால், எழுத்து முறை மாறவில்லை. கத்தி என்று பொருள்படும் ஆங்கிலச் சொல்லின் பழைய ஒலிப்பு க்நீஃவே (மnகைந) என்பது, எழுத்து வடிவில் இன்றும் அஃது இப்படியே எழுதப்படுகிறது. ஆனால், இன்றைய ஒலிப்பு முறைப்படி அது நைஃவ் என்ற சொல் ஆகிறது. இப் புதிய சொல்லில் ‘க்’என்ற மெய் ஒலி மறைந்து ஊமை எழுத்தாய்விடுகிறது. ‘ஈ’ என்ற உயிரொலி ‘ஐ’ என மாறுபட்டுவிட்டது. இறுதி ஏகாரம் ஒலிப்பிழந்து ஊமை எழுத்தாயிற்று. இத்தகைய ஒலி மாறுபாடு களால் சொற்களும் மொழியும் கிட்டத்தட்ட புதுச்சொற்கள், புதுமொழி ஆயின. இம் மாறுபாடுகளை ஆங்கிலேயர் தம் எழுத்துமுறையில் காட்ட வில்லை. எனவேதான், இன்றும் அயல்மொழியாளர் மட்டுமன்றி ஆங்கில நாட்டுப் பள்ளிச் சிறுவர், சிறுமியரும் ஒவ்வொரு சொல்லின் எழுத்தையும் ஒலிப்பையும் நெட்டுருச் செய்யவேண்டியுள்ளது. எபிரேயரும் அராபியரும் ஆங்கிலேயரைப்போல் எழுத்து முறையில் பிற்பட்டுவிடவில்லை. ஆனால், பழைய எழுத்து முறையைக் கைவிட்டு விடவுமில்லை. பழைய எழுத்தை அப்படியே வைத்துக்கொண்டு மாறுபாட்டைக் குறியீடுகளால் காட்டினர். இதுவே அவர்கள் பாரிய எழுத்திலக்கணமாயிற்று. பள்ளிச் சிறுவரும் மொழி கற்போரும் சொல்லின் எழுத்துகளை நெட்டுருச் செய்யவேண்டுவதில்லை; ஆனால், எழுத்திலக்கணம் கற்றாதல் வேண்டும். இம்மொழிகளின் சொல்லாக்க இலக்கணமும் பெரிதும் அயல் மொழி யாளர் மொழி கற்பதற்கு பயன்படுவதாயிற்று. இதனால், அஃது இன்றி யமையா இயற்கை வளர்ச்சி பெற்றது. சமற்கிருத இலக்கணமும் பாணினியும் இந்தியாவிலுள்ள மொழிகளுள் பழைமையான இலக்கிய இலக்கணம் வாய்ந்த மொழிகள் இரண்டே இரண்டுதாம். ஒன்று சமற்கிருதம், மற்றொன்று தமிழ், இவற்றுள் சமற்கிருத இலக்கணத்தின் சிறப்பும் புகழும் வரலாறும் ஓரளவு உலகறிந்தவை. தமிழிலக்கணத்தின் சிறப்பும் புகழும் வரலாறுமோ இன்னும் போதிய அளவு தமிழகமே அறியாதவை. உலகம் அவற்றை அறியும் நாளிலேயே தமிழகமும் அவற்றின் சிறப்பை அறியக்கூடும் என்னலாம். நல்ல காலமாக, இருபதாம் நூற்றாண்டில் உலகம் அம்முறையில் விழிப்புறத் தொடங்கியுள்ளது. உலக இலக்கணங்களுள் சமற்கிருத இலக்கணத்தின் சிறப்பும் மதிப்பும் பெரிது. இதற்கு மூல காரணமான சமற்கிருத இலக்கணம் பாணினி முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் பாணினியம் அல்லது அஷ்டாத்யாயியே யாகும். இது சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதில் உலகின் ஒப்புயர்வற்ற நூல். இதற்கெனப் பாணினி வகுத்துக் கொண்ட குறியீட்டுமுறை இன்றும் கணக்கியல் முதலிய உயர் அறிவு நூல்களுக்கு இன்றியமையாத ஒரு கருவி முறை ஆகும். இதனைத் திறம்படக் கையாண்டவர்களுள் காலத்தால் முதல்வரும், தன்மையால் முதன்மையானவரும் பாணினியே என்பதில் ஐயமில்லை. ஒரு சில நூறு சூத்திரங்கள் அல்லது நூற்பாக் களுக்குள் அவர் வேறு எம்மொழிக்கும் இன்றுவரை இல்லாத ஒரு முழுநிறை இலக்கணத்தைச் சமற்கிருத மொழிக்கு ஆக்கி அளித்துள்ளார். பாணினியத்தை ஒத்த ஓர் இலக்கணம் இன்றும் எம்மொழிக்கும் எழுதப்பட்டு விடவில்லை என்று கூறுவது மிகையாகாது. சென்ற நூற்றாண்டில் சமற்கிருத இலக்கணப் புலவராகவும், ஆங்கில முறை மொழி நூலறிஞ ராகவும் விளங்கிய இராசராசவர்மா மலையாள மொழிக்கு இலக்கணமாக இயற்றிய கேரள பாணினியம் உண்மையில் பாணினியத்தை விட உயர் வானதே. ஆனால், அதன் சிறப்புக்குப் பாணினியின் முன்மாதிரியும் மொழி நூல் வளர்ச்சியுமே பெரிதும் காரணமாயமைந்தன. அஃது இருமரபுகளின் ஒரு சிறந்த இணைப்பேயன்றி, ஒரு புதுப் பாணினியின் தனிச் சிறப்பு மரபன்று. பாணினி வகுத்த இலக்கணம் ஓர் இலக்கணம் மட்டுமன்று. அஃது உலகுக்கு ஒரு புதிய இலக்கணக் கோட்பாட்டையே வகுத்துக் கொடுத்தது. அந்தக் கோட்பாட்டின் கூறுகளைக் கீழ்வருமாறு வகுக்கலாம். 1. எல்லாச் சொற்களுக்கும் வேர்முதல் (தாது) உண்டு. 2. வேர்முதல்களிலிருந்து எல்லாச் சொற்களும் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளிணைந்து தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் முறைப்படி ஆக்கப்படுபவை. 3. ஒரு மொழியின் இலக்கணம் அந்த மொழியின் எல்லாச் சொற்களின் சொல்லாக்கத்தையும், அதற்கு உதவும் எழுத்து அல்லது ஒலித்திரிபுகளையும் விளக்குதல் வேண்டும். வியக்கத்தக்க முறையிலே, இம் மூன்று தத்துவங்களையும் அப்பழுக்கின்றி முழுவதும் பின்பற்றி, அவர் காலத்தில் உள்ள பழைய சமற்கிருத மொழி அல்லது ‘பாஷை’க்கு முழுநிறை இலக்கணம் வகுத்த அறிவு மேதை பாணினி. கூடியமட்டும் எல்லாச் சொற்களுக்கும் வேர்முதல்கள் கண்டு பிடித்து அவர் தம் இலக்கண நூலில் தந்துள்ளார். எல்லா வேர்ச் சொற்களிலிருந்தும் எல்லாச் சொற்களையும் ஆக்கிக் காட்டப் போதிய சொல்லுறுப்பிலக்கணம், சொல்லிலக்கணம், ஒலி அல்லது எழுத்துத் திரிபிலக்கணம் ஆகியவற்றையும் தந்துள்ளார். அவர் காலத்தில் வழங்காத சொற்களையும் மரபுகளையும் உரையாசிரியர்கள் உரைச் சூத்திரங்களாலும் உரையிற்கோடல் மரபுகளாலும் விரித்துள்ளர். கிரேக்க இலத்தீன் இலக்கணப் புலவரின் அறிவுத் திறத்தையே உச்சநிலை அறிவுத் திறமாகக் கருதிவந்திருந்த மேலை உலகத்தார், பாணினி இலக்கணத்தைக் கண்டு மூக்கில் கை வைத்தனர். பாணினிக்கு உச்ச அறிவாராய்ச்சி உலகம் நீண்டநாள் தலை வணங்கிற்று! பாணினியும் மொழி நூலும் பாணினிக்குரிய இன்னொரு சிறப்பும், அதற்குத் தாய்க் காரணமான சமற்கிருத மொழியின் ஒரு சிறப்பும் மேலை உலகத்தார் வியப்பை இன்னும் பெருக்கின. இவையே பாணினி தந்த எழுத்தின் பிறப்பிலக்கணமும், சமற்கிருத நெடுங்கணக்கின் எழுத்துமுறை வரிசையும் ஆகும். சமற்கிருத எழுத்துகளை உயிர்கள், மெய்கள், உயிர் மெய்கள், கூட்டு எழுத்துகள் என நான்காகப் பகுத்து, உயிரும் மெய்யுமே அடிப்படை ஒலிகள் என்று பாணினி காட்டினார். அது மட்டுமோ? அவற்றின் பிறப்பிடம், முயற்சி, திரிபு ஆகியவற்றையும் விளக்கினார். இதில் பாணினியின் சிறப்பு மட்டுமன்றி, சமற்கிருதத்தின் சிறப்பும் பெரிதாகவே இருந்தது. ஏனெனில், பாணினிக்கு முற்பட்டே மொழியின் எழுத்துவடிவும், நெடுங் கணக்கின் எழுத்து வரிசைமுறையும் இவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தன. பாணினி காட்டிய மொழி சார்ந்த புத்தறிவு மேலை உலகில் ஒலிநூல் (ஞாடிநேவiஉள), மொழிநூல் (ஞாடைடிடடிபல) என்ற இரு புதுநூல் துறைகள் தோன்றக் காரணமாய் அமைந்தது. கிரேக்க மொழியில் உள்ள மூன்று ககரங்கள் (ம,ஒ,ல,)* இலத்தீன் முதலிய பிற மேலை மொழிகளிலுள்ள இரண்டு ககரங்கள் (ஊஅல்லது மு,ழு) ஆகிய இவை ஒரே ஒலியின் வன்மையும் மென்மையுமே என்பதைப் பாணினி இலக்கணமும் சமற்கிருத மொழியுமே மேலை உலக இலக்கணப் புலவர் களுக்கும், மொழிப் புலவர்க்கும் காட்டின. கிரேக்க மொழி யிலுள்ள எகர ஏகாரங்கள் (நு ற)ஙீ ஒகர ஓகாரங்கள் (டீ,று)ங ஒரே உயிரின் குறில் நெடில் அளவைகளே என்பதையும் மேல்நாட்டினர் பொதுவாகவும், ஆங்கிலேயர் சிறப்பாகவும் இதன் பின்னரே உணர்ந்தனர். கிரேக்கர் இதனை ஒரு சிறிதே ஊக முறையில் உய்த்துணர்ந் திருந்தனர். இந்திய இலக்கணப் புலவர்போல அளவையிட்டு உணரவில்லை. 19ஆம் நூற்றாண்டில் மேலையுலகில் புதிய இலக்கண வளர்ச்சிக்கும் புத்தம் புதிய நூல்களாகிய ஒலி நூல், மொழிநூல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் பாணினி இலக்கணம் தலை யூற்றாயிற்று. ஆரிய இனத்தின் மிகப் பழைமை வாய்ந்த மொழி, ஆரிய சமய இனப் பண்பாடுகளைக் காட்டும் மொழி என்ற முறைகளில் சமற்கிருதத்துக்கு ஏற்கெனவே ஏற்பட்டிருந்த சிறப்புடன், பாணினியின் இலக்கணச் சிறப்பும் பாணினிக்குப் பின் ஏற்பட்ட சமற்கிருத இலக்கியச் சிறப்பும் உலக அரங்கில் அம் மொழியின் மதிப்பை வானளாவ உயர்த்தின. பாணினிக்கு முற்பட்ட வடபுல இலக்கணங்கள் சமற்கிருதவாணர் பாணினியே சமற்கிருதத்துக்கு முதல் முதல் இலக்கணம் வகுத்தவர் என்று கருதினர். தமிழரும் இடைக்காலத்தில் இதற் கிணையாக அகத்தியரே தமிழ்க்கு முதல் இலக்கணம் வகுத்தார் என்று கூறினர். இரண்டு கருத்துகளும் இன்று வலியுறவு குன்றியுள்ளன. ஏனென்றால், தமிழில் அகத்தியர் இலக்கணம் என்றோர் இலக்கணம் இன்றில்லை. அஃது இருந்தது என்பதற்கான உறுதியான சான்றுகளும் கிடையா. அதே சமயம் வடபுலத்தில் பாணினிக்கு முற்பட்ட இலக்கணம் இருந்ததுண்டு. இவை வேதங்களோடு அங்கமாக இணைக்கப்பட்ட பிராதிசாக்கியங்கள் ஆகும். மேனாட்டு அறிஞர் பலர் பிராதிசாக்கியங்களுடன் பாணினி இலக் கணத்தை ஒப்பிட்டனர். பிராதிசாக்கியங்களில் பல பாணினிக்கு முற்பட்டவை என்றும், சிலவே பிற்பட்டவை என்றும் கண்டனர். அத்துடன் ஒப்புமையால் பாணினி பற்றிய பல புதிய செய்திகள் வெளிப்பட்டன. உயிர் எழுத்து, மெய் எழுத்து வினையின் பல்வேறு காலப் பொருண்மைத் திரிபுகள் ஆகியவற்றுக்குப் பாணினி பெயரிட்டு வழங்கவில்லை. குறியீடு களிட்டே வழங்கினார். எடுத்துக் காட்டாக உயிர்எழுத்து ‘அச்’ எனப்படும். இஃது ஒரு சொல்லன்று. பாணினி இலக்கணத்தின் தொடக்க சூத்திரங்களில் ‘அ’ முதல் தொடங்கி ‘ச்’ என்ற அடையாளக் குறியீடு வருமிடம் வரையுள்ள எழுத்துகள் என்பதன் சுருக்கக் குறிப்பே ‘அச்’ என்பது. இதுபோலவே ‘ஹல்’ என்பது மெய். ‘ஹ’வில் தொடங்கி ‘ல்’ என்ற அடையாளக் குறிப்பு வருவது வரை உள்ள எழுத்துகள் என்பதன் சுருக்கக் குறிப்பாகவே ‘ஹல்’ வழங்கிற்று. வினைவடிவங்களுக்கும் பாணினியின் இலக்கணத்தில் பெயர்கள் சொற்களாக அமையவில்லை. ‘லிட்,’ ‘லுட்’. ‘லேட்,’ ‘லிங்,’ ‘லுங்’ எனப் பாணினி ஒலிக் குறியீடாக வகுத்த அடையாளக் குறிப்புகளே பெயர்களாய் அமைந்தன. இவை உருக்கணக்கில் பயன்படுத்தப்படும் ‘எக்°’ ‘ஒய்’ குறியீடுகள் போன்ற இடுகுறிகளேயன்றி வேறல்ல. அவை மொழியின் சொற்களல்ல, பாணினியின் படைப்புகள். பாணினி விரும்பிய சுருக்க விளக்கத்துக்கு இக்குறியீட்டு முறைகள் மிகவும் உதவின. ஆனால், பிராதிசாக்கியங்களில் தமிழிலும் மற்ற மொழிகளிலும் அமைந்தது போலப் பெயர்கள் சொற்களாகவே அமைந்திருந்தன. தவிர, பிராதிசாக்கியங்களுடன் பாணினியை ஒப்பிட்டுப் பார்த்ததில், எழுத்துகளின் பிறப்பில் பாணினிக்கும் பிராதிசாக்கியங் களுக்கும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் இருந்தன. பாணினி ஒலிகளின் பிறப்பைப்பற்றிப் பல தவறான கருத்துகளைக் கொண்டிருந்தார் என்றும், பிராதிசாக்கியங்கள் ஒலிகளின் பிறப்பை விளக்குவதில் மேம்பட்டிருந்தன என்றும் கண்டனர். ஒலி நூலின் தந்தை என்று பாணினி இதற்கு முன் கருதப் பட்டிருந்தார். அப்பெருமை சமற்கிருத மரபுக் குரியதேயன்றிப் பாணினிக் குரியதன்று என்று அவர்கள் கண்டனர். பாணினியை விட மிகுதியாகப் பிராதிசாக்கியங்களை இயற்றிய ஆசிரியர் களுக்கே அதில் பெரும் பங்கு உண்டு என்று 19-ஆம் நூற் றாண்டிறுதியிலிருந்து காணப்பட்டது. ஐந்திர இலக்கணம் பாணினிக்கு முற்பட்ட இன்னோ ரிலக்கணத்தைப் பற்றிச் சமற்கிருத வாணரும் தமிழ் உரையாசிரியரும் குறிப்பிடுகின்றனர். இதுவே ஐந்திரம் என்ற இலக்கணம். தமிழில் அகத்தியம் என்ற இலக்கணம் இருந்ததாக மரபுரை குறிப் பிட்டாலும் அதுபற்றிய தெளிவான சான்றுகளில்லாதது போல, வடபுலத்திலும் ஐந்திரம் என்ற இலக்கணம் இருந்ததாக மரபுரை இருக்கிறதேயன்றி, தெளிவான சான்றுகள் இல்லை. தொல்காப்பியப் பாயிரத்தில் பாயிரம் எழுதியதாகக் குறிக்கப்படும் பனம் பாரனார் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ எனத் தொல்காப்பிய ஆசிரியரைக் குறிக்கிறார். இதில் ஐந்திரம் என்பது பாணினிக்கு முற்பட்ட ஐந்திர இலக்கணமே என்று உரையாசிரியர் பலர் கருதுகின்றனர். தொல்காப்பிய வேற்றுமையியலில் ‘வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை’ என்ற சூத்திரத்தில் ‘ஏ’ காரத்தை மறுப்பு ஏகாரமாகக் கொண்டு உரையாசிரியர்கள் அகத்தியர் சூத்திரமொன்றை மேற்கோள் காட்டுகின்றனர். அதில் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்ற குறிப்புக் காணப்படு கின்றது. அகத்தியர் கதையை அடிப்படையாகக் கொண்டு அகத்தியர் ஐந்திரத்தை எதிர்த்துப் பாணினியை ஆதாரமாகக் கொண்டாரென்றும், தொல்காப்பியர் ஐந்திரத்தை ஆதரித்தாரென்றும் உரையாசிரியர் சிலர் கருதுகின்றனர். அகத்தியர் கதை மரபுபோலவே ஐந்திரமரபும் போதிய தெளிவான சான்றுகளற்றதாயுள்ளது. ஏனெனில், அகத்தியர் சூத்திரத்தில்தான் ‘இந்திரன்’ என்று ஐந்திர ஆசிரியர் பெயர் காணப்படுகிறது. தொல்காப்பியப் பாயிரம் ஐந்திரத்தைத்தான் குறிக்கிறது. இந்திரனைக் குறிக்கவில்லை. ஐந்திரம் இந்திரன் எழுதிய இலக்கணம் என்றும் தெளிவாகக் கொள்ள வழியில்லை. ஐந்திரம் என்பது ஐந்திரம் அல்லது ஐந்திலக்கணமே, (அதாவது எழுத்து, சொல், பொருள், மரபு, அணி என்ற ஐந்து இலக்கணத் துறைகளே) என்று சொல்லுவதும் உண்டு. தொல்காப்பியர் முன்னூல்களைப் பொதுவாகக் குறித்த தன்றி. அகத்தி யரையோ, பாணினியையோ, இந்திரனையோ, ஐந்திரத்தையோ குறிப்பிட வில்லை. சில உரையாசிரியர்கள், சிறப்பாக நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் பாணினிக்கு முற்பட்டது என்றும், இன்றைய வேதங்களை நான்காக வகுத்த வேதவியாசர்க்கும் முற்பட்டது என்றும், ஆனால் ஐந்திரத்துக்குப் பிற்பட்டது என்றும் கட்டுரைத்துள்ளார். ஐந்திரம் பற்றிய புத்தொளி தமிழில் அகத்தியர் மரபையும் வடபுலங்களில் ஐந்திர மரபையும் போற்றியவர்கள் சமணர்களே. ஐந்திரத்தின் வழிநூல்களாகப் பல மொழி களிலும் அவர்கள் இலக்கணங்கள் இயற்றினர். அவற்றுள் ஒன்று காதந்திர மென்ற பிராகிருத இலக்கணம். பெருங்கதை அல்லது பிருகத் கதாவின் முன்னுரை ஐந்திர இலக்கணத்தை ஒரு புத்தம் புதிய இலக்கணமாகக் குறிப்பிடுகிறது. ‘அதற்கு முன்னிருந்த இலக்கணங்களைவிட அது சமற்கிருதத்தை எளிதில் கற்க உதவும் சிறந்த இலக்கணம் என்றும், அதன் புகழ் பரந்தபின் முன்னைய இலக்கணங்கள் ஒளியிழந்தன வென்றும் அது குறிப்பிடுகிறது. தமிழ்ப் பெருங்கதையோ, சமற்கிருதத்தின் பிருகத்கதையோ முதல் நூல்களல்ல. இதை அந்நூலே குறிப்பிடுகிறது. முதல் நூலை எழுதியவன் ‘குணாட்டியன்’ என்ற பண்டைப் பெருங்கவிஞன். அவன் எழுதிய மொழி ‘பிசாசமொழி’ என்று நூல் குறிப்பிடுகிறது. பிசாசமொழி எது என்பது பற்றியும் ஊகக் கோட்பாடுகளே உள்ளன. உண்மை வரையறை காணப்பட முடியவில்லை. ஆனால், அம்மொழியை வளர்த்த அரசர் ஆந்திரப் பேரரசர் என்று தெரிய வருகிறது. அஃது ஆந்திரர் கல்வெட்டுக்களில் கண்ட பாளிமொழியாகவோ, பண்டைத் தெலுங்கு மொழியாகவோ, அல்லது நாகபுரியை யடுத்து இன்று பண்படா நிலையில் நிலவும் திராவிட மொழிகளுள் ஒன்றாகவோ இருந்திருக்க வழியுண்டு. அதைத் திராவிடம் மிகுதி கலந்த அல்லது மிகுதி நிறைவுற்ற பிராகிருத வகை என்றும் சிலர் கொள்கின்றனர். பிருகத் கதையின் சமற்கிருத மொழிபெயர்ப்பில் சமற்கிருத இலக்கணம் என்று குறிப்பிடப்பட்ட ஐந்திரம் பைசாசமொழி அல்லது தெலுங்கு மொழி அல்லது இன்று பண்படா நிலை யிலுள்ள திராவிட மொழிகளின் இலக்கணமாகவே இருத்தல் சாலும். ஏனெனில், இம்மொழியில் பிருகத் கதை போன்ற உலகக் கதைப் பேரிலக்கியம் வளர இடமிருந்தது. பாரத இராமாயணங்களும், சமற்கிருத இலக்கிய இலக்கணங்களும் தோன்றுமுன் ஓங்கியிருந்த ஒரு தாய் மொழி இலக்கியம் என அறிஞர் சி.ஆர்.ரெட்டி குணாட்டியன் காலத் தாய்மொழி இலக்கியத்தைக் குறிக்கிறார்.* ஐந்திரம் பாணினிக்கு முன்னும் பாணினிக்குப் பின்னும் நிலவிய ஒர் இலக்கண மரபு. அதை வளர்த்தவர் அகத்தியர் மரபைப் பேணிய சமணர். எனவே, அகத்தியர் கதையைப் போலவே, இந்திரன் எழுதிய ஐந்திரம் என்ற விளக்கமும் சமணர்களின் மெய்கலந்த கற்பனையேயாயிருக்கக்கூடும். ‘ஐந்திறம்’ அல்லது ‘ஐந்திலக்கணம்’ என்ற தமிழ்மரபே ஐந்திர மரபாக இந்தியா முழுவதும் பரவிற்று என்றும், இறந்துபட்ட ஒரு பண்டைத் தாய் மொழியிலும், சமற்கிருதத்திலும், பிற்காலத் தாய்மொழிகளிலும் அது வழங்கியிருத்தல் வேண்டும் என்றும் கூற இடமுண்டு. தமிழ் இலக்கண மரபு இன்றைய மேனாட்டு இலக்கணங்களில் எழுத்து, சொல், சொற்றொடர், யாப்பு, அணி என்ற ஐந்து பேருறுப்புகள் காணப்படுகின்றன. ஆயினும், யாப்பும் அணியும் சிறப்புடையவை யல்ல. முன் அவை தனி நூல்களாகவே கருதப்பட்டு வந்தன. எழுத்தும் சொல்லும் சொற்றொடருமே மேலை மரபுப்படி இலக்கணத்தின் தாய் உறுப்புகள் ஆகும். சமற்கிருத, தமிழ் இலக்கணங்களில் சொற்றொடர் என்ற உறுப்புக் கிடையாது. அதைப் புதிதாகத் தமிழ் இலக்கணத்தில் சேர்த்தவர் வீரமாமுனிவர் என்ற டாக்டர் பெ°கி, ஜி.யூ.போப் ஆகிய மேலைப் புலவர்களே. சமற்கிருதத்தில் வேத மொழிக்கு யாப்பியல் உண்டு. அது சந்த° அல்லது சந்தோபிசிதம் எனப்படும். ஆனால், சமற்கிருதத்தில் யாப்பும் அணியும் வேறு வேறாகக் கொள்ளப்பட வில்லை. இரண்டும் ஒரே படியாக அலங்கார சாத்திரம் என வகுக்கப்பட்டது. கி.பி. 9ஆம் நுhற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டளவும் அது சமற்கிருதத்தின் ஒரு தனிச் சிறப்புக்குரிய கலைத்துறையாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால், அஃது இலக்கணம் அல்லது வியாகரணத்தின் பகுதியாக அன்றும், இன்றும், என்றும் சமற்கிருத வாணரால் கொள்ளப்படவில்லை. பாணினியாலும் சமற்கிருத இலக்கண வாணராலும் இலக்கணத்தின் கூறுகளாகக் கொள்ளப்பட்டவை எழுத்தும் சொல்லும் மட்டுமேயாம். 12-ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ் நன்னூலில் இந்த இரண்டு கூறுகள் மட்டுமே உள்ளன. இஃது அவர் சமற்கிருதத்தைப் பின்பற்றியதன் பயன் என்று பலர் கருதுகின்றனர். அதேசமயம் நன்னூற் சிறப்புப்பாயிரம் ‘அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணர’ என ஐந்திலக்கண மரபைக் குறிப்பிடுகிறது. இலக்கண விளக்கம் இலக்கணக் கொத்து முதலிய பிற்கால இலக் கணங்களில் மட்டுமன்றி இடைக்காலத்திய (கி.பி. 9ஆம் நூற்றாண்டைய) இலக்கணமாகிய வீரசோழியத்திலும் ஐந்திலக்கண மரபு தெளிவாகக் காணப்படுகிது. தொல்காப்பியத்தில் அதிகாரங்கள் அல்லது பால்கள் மூன்றாயினும், இலக்கணங்கள் ஐந்தும் அதில் அடங்கியுள்ளன. எழுத்தும் சொல்லும் ஒரு தனிப் பால்களாகவே இயங்குகின்றன. ஆனால், பொருள், யாப்பு, அணி மூன்றும் பொருள் என்ற அகலப் பிரிவின் துணைக் கூறுகளாகவே அடக்கப்பட்டுள்ளன. ஐந்திலக்கண மரபின் உட்பொருள் பொருளிலக்கணம் தமிழ்க்கே சிறப்பான இலக்கணம் என்பதைக் குறிக்காத ஆராய்ச்சியாளர் இல்லை. ஆனால், யாப்பும் அணியும் அதுபோலவே தமிழிலக்கணத்துக்குச் சிறப்புத் தருபவையே என்பதை மிகப் பெரும்பாலோரும் கவனித்திலர். பிற மொழிகளில் அவை இலக்கணக் கூறுகளாக அமையாதது அவற்றின் தனிச் சிறப்புக் காரணமாகவே என்று மட்டும் அவர்கள் வாளா கருதியமைந்தனர். பாணினி இலக்கணம் சமற்கிருதத்தின் முழுநிறை இலக்கண மாயினும் அதில் பொருள், யாப்பு, அணி மூன்றுக்கும் இடமே இல்லை என்பது இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. பொருள் தமிழிலக்கணத்துக்கே சிறப்பாயிருப்பதற்கும், யாப்பு, அணியும் தமிழில் மட்டுமே இலக்கணத்தின் கூறாய் அமைந்ததற்கும் வரலாற்று முறைக் காரணம் ஒன்று உண்டு. இலக்கியம் அமைந்து நெடுநாள் கழிந்தபின்பே மொழிக்கு இலக்கணம் அமைதல் இயல்பு. ஆனால், உலகின் பெரும்பாலான மொழிகளில் இலக்கணம் பிறமொழித் தொடர்பினாலேயே ஏற்பட்டது. இத்தகைய இடங்களில் இலக்கணம் மொழி கற்பவர்க்கு ஒரு துணைக் கருவியாக இருந்ததால், அது மொழியின் இலக்கணமாக மட்டுமே அமைந்தது. கிரேக்க இலத்தீன மொழிகள், அரபு எபிரேய மொழிகள், சமற்கிருதம் முதலிய எல்லா உலகமொழிகளின் நிலையும் இதுவே. ஆனால், தமிழ் ஒன்றில் மட்டுமே தொடக்கக் காலத்திலிருந்து மொழிக்கும் இலக்கியத்துக்கும் ஒருங்கே இலக்கணம் அமைந்தது. தமிழில் இலக்கணம் என்ற சொல் மொழிக்கும் இலக்கியத்துக்கும் உரிய இலக்கணம் என்று பொருள்படும். மற்றெல்லா மொழிகளிலும் இலக்கணம் என்பதற்குச் சரியான சொற்கள் (ஆங்கிலம்: கிராமர், ழுசயஅஅநச; சமற்கிருதம் வ்யாகரணம்) மொழியின் இலக்கணம் அல்லது இயல்பு மட்டுமே குறிக்கும். ‘உலக வழக்கும் செய்யுள் வழக்கும்’ இலக்கணத்துக்கு இலக்கியமாகக் குறித்த இலக்கண மரபு தமிழ் இலக்கண மரபு ஒன்றே. சமற்கிருத இலக்கண இலக்கியங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பின்பற்றியவையே பிராதிசாக்கியங்கள் வேதமொழிக்குரிய இலக்கணம். அதனையடுத்த முதல் சமற்கிருத இலக்கணம் பாணினியமே. பாணினியின் காலத்தில் வேத உபநிடதங்கள் தவிர வடபுலத்தில் இலக்கியம் கிடையாது. இலக்கிய மொழியாகிய சமற்கிருதம் அன்று பிறக்கவும் இல்லை. பாணினியின் இலக்கணம் சமற் கிருதத்தின் இலக்கணமாய்ப் பிற்காலத்தில், கருதப்பட்டாலும் சமற்கிருதம் என்ற பெயரே அவர்காலத்தில் இருந்ததில்லை. அவர் இலக்கணத்தைப் பின்பற்றிச் சமற்கிருதம் வளர்ந்தது உண்மையாயினும், அவர் இலக்கணம் எழுதியது சமற் கிருதத்துக்குமன்று, சமற்கிருதத்துக்கு முற்பட்ட, ஆனால், வேதமொழிக்குப் பிற்பட்ட ஒரு மொழியிலேயே அவர் வேதமொழியைக் ‘கீர்வாணம்’ என்றும் தம் இலக்கணத்துக்குரிய ‘புது’ மொழியைப் ‘பாஷா’ என்றுமே குறிப்பிட்டார். ‘பாஷா’ என்ற சொல் இன்னும் சமற்கிருதத்தில் தாய்மொழியைக் குறிக்கும். பாணினியின் ‘பாஷா’ சமற்கிருதத்தின் தாய்மொழியான அந்நாளைய ஒரு பாகத மொழியே யாகும். இதுவே பின்னாளில் இலக்கிய மொழியானபின் சமற்கிருதமாக வளர்ந்தது. பாணினி இலக்கணம் அமைந்த காலத்தில் எழுதா இன இலக்கியமான வேத உபநிடதங்கள் இருந்தன. எழுதாச் சமுதாய இலக்கியமான இதிகாசங்கள் ‘பாஷா’வில் இயற்றப்பட்டோ, பாடப்பட்டோவந்தன. இலக்கியமில்லாத காரணத்தால் இலக்கியத்தின் இலக்கணமான யாப்பியலோ, அணியியலோ. பொருளியலோ ஏற்படவில்லை. சமற்கிருதவாணர் என்றும் பொருளியலின் தேவையை உணரவில்லை. இன்றுகூட மேலை உலகத்தினர் பொருளிலக்கணம் போன்ற ஒரு துறையை ‘இலக்கிய ஆராய்ச்சி’ என்ற பெயரால் கொண்டுள்ளனராயினும், அதைத் தமிழரைப் போல ஒரு நூலாக இன்னும் வகுக்க எண்ணவில்லை. வகுக்க முனைந்தவர் அதை வடமொழியாளர் போல ‘அணிநூல்’ (சுhநவடிசiஉ) என்று தனி நூலாக்கியுள்ளனர். அது கலையுணர்வு அறிவாராய்ச்சியுடன் எழுதப்படாததால் நூலாக மதிப்புப் பெறவும் இல்லை. ஆங்கிலத்தில் ஹட்ஸன் இயற்றிய ‘இலக்கியம்’ என்ற நூல் கிட்டத்தட்ட தமிழர் பொருளியலுக்குச் சரியான இக்காலப் பதிப்பு என்னலாம். யாப்பும் அணியும் தொல்காப்பியர் காலம்முதலே தமிழில் இருந்தன வானாலும், அதில் தமிழர் தனிக்கருத்துச் செலுத்திய காலம் 9ஆம் நூற்றாண்டே. இக் காலத்திலேயே சமற்கிருதத் திலும் அது தனிநூலாகப் புது வளர்ச்சி யடைந்தது. அதன் முதல் ஆசிரியர் காஞ்சியில் வாழ்ந்த சமற்கிருதக் கவிஞர் பாரவியின் கொள்ளுப் பேரன் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கவை. சமற்கிருத யாப்பணி நூலான அலங்கார சாத்திரம் என்பது தொல் காப்பியமும் தமிழும் தமிழரும் சமற்கிருதத்துக்கு அளித்த செல்வங்களுள் ஒன்றேயாகும். சமற்கிருதத்தில் மிகச் சிறந்த அலங்கார நூல்கள் எழுதி யவர்களுள் மிகப் பலர் தமிழரும் பிற தென்னாட்டவருமேயாவர். சமற்கிருத இலக்கியக் காலம் தமிழ்ச்சங்க இலக்கியக் காலத்துக்குப் பிற்பட்டது. அதை வளர்த்த முதற் பேரரசரும் தமிழ் மூவேந்தர் ஆட்சிக் காலத்துக்குப் பின் வட சோழ நாட்டை அடக்கியாண்ட பல்லவப் பேரரசரேயாவர். இதே காலத்தில் வடக்கிலும் குப்தப் பேரரசர் சமற்கிருதத்துக்கு ஆதரவளித்து அதை வளர்த்தனர். தமிழ்ச் சங்க இலக்கியத்தின் முன்மாதிரி இக்காலத்தில் புதிய தமிழிலக்கியத்தையும் அதைப் போலவே சமற்கிருத இலக்கியத்தையும் வளர்த்தது. இரண்டிலக்கியங் களிலும் அதாவது சங்க காலத்துக்குப் பிற்பட்ட தமிழிலக்கியத்திலும், சமற்கிருத இலக்கியத்திலும் நாம் ஒரேவகைப்பட்ட இலக்கியப் பண்பாட்டையும், ஒரேவகைப் பண்பாட்டிலக்கியங்களையும் காணலாம். தொல்காப்பியமும் ஒலி நூலும் உலகின் எந்த மொழிக்குமில்லாத ஒலியியல் எழுத்தமைதி சமற்கிருதத்துக்கு உண்டு என்பதை, இந்தியாவுக்கு வெளியே யுள்ள மேலை உலக அறிஞர் சமற்கிருதத்தின் சிறப்பாகவே கண்டு வியந்து பாராட்டினர். அதுபோல, பாணினியின் இலக்கண முறைமை, நிறைவு ஆகிய இரண்டையும் சமற்கிருத மரபுக்கே உரியதென்று ஆர்வம்மீதூரக் கொண்டாடினர். ஆனால், பாணினி கடந்து பிராதிசாக்கியங்களிலும் சமற்கிருதம் கடந்து தாய்மொழிகளிலும் கருத்தூன்றிய அறிஞர் தமிழும் தொல்காப்பியமும் இவற்றை விஞ்சிச் சென்றிருப்பது கண்டு இறும்பூதெய்தினர். ஆங்கிலத்தின் இரண்டு ககரங்கள், கிரேக்க மொழியின் மூன்று ககரங்கள், சமற்கிருதத்தின் நான்கு ககரங்கள் ஆகியவற்றின் ஒலிகள்போலத் தமிழிலும் மூன்றுக்கு மேற்பட்ட ககரவொலிகள் உண்டு. ஆயினும், மூன்றையும் ஓர் ஒலியின் திரிபாகக் கொண்டு ஒரே ஒலிக் குழுக்குறி (ஞாடிநேஅநள) தமிழில் அமைக்கப்பட்டது. சமற்கிருத எழுத்துகள் ‘க’ வர்க்கம், ‘ச’ வர்க்கம் எனப் பிரிக்கப்பட உதவிய கூறு இதுவே என்று அறிஞர் கண்டுவருகின்றனர். பாணினி அடிப்படையாகவும், சமற்கிருத அடிப்படை யாகவும் அமைந்த 19-ஆம் நூற்றாண்டின் மேலை உலக ஒலியியல் தொடக்கத்தில் சமற்கிருதத்தைப் பின்பற்றிக் ககார ஙகாரங்களைத் தொண்டை ஒலிகள் (சமற்கிருதம் கண்ட்யம், ஆங்கிலம் ழுரவவரசயட) என்றும், சகார ஞகாரங்களை அண்ண ஒலிகள் (சமற்கிருதம் மூர்த்தன்யம், ஆங்கிலம் ஞயடயவயட என்றும்; டகார ணகாரங்களை நாவொலிகள் (சமற்கிருதம், தாலவ்யம்; ஆங்கிலம் டுiபேரயட) என்றும் வழங்கினர். இப் பெயர்களே இலத்தீன கிரேக்க இலக்கணங்களிலும் வழங்கின. ஆனால், ஒலி நூலாராய்ச்சி முன்னேறுந்தோறும் மூன்று வகை ஒலிகளும் நா முதல், இடை, கடை ஒலிகள் என்பது கண்டுணரப்பட்டது. அதன் பின்பே, “ககார ஙகாரம் முதல்நா அண்ணம்” “சகார ஞகாரம் இடைநா அண்ணம்” “டகார ணகாரம் நுனிநா அண்ணம்” என்ற தொல்காப்பியச் சூத்திரங்களின் அருமைப்பாடு தெரியவந்தது. பாணினியைவிடப் பிராதிசாக்கியங்களும், பிராதிசாக்கியங் களைவிடத் தொல்காப்பியமும் ஒலி நூலுணர்வில் திட்பநுட்ப அறிவுச் சிறப்புடையன என்பதை மேலை உலகத்தார் கண்டு வருகின்றனர். ஒலியுணர்வில் மட்டுமன்றி, மொழி நூலுணர்விலும் தொல்காப்பியர் பாணினியையும் பிராதிசாக்கியங்களையும் தாண்டிய சிறப்புடையவர் என்பது அறியப்படும் நாள் தொலைவில் இல்லை. உண்மையில் பாணினியின் சிறப்புகள் என்று கொள்ளப்பட்டவைகூடப் பாணினி மூலமாக மேலை உலகம் கண்ட தொல்காப்பியப் பண்பாட்டுச் சிறப்பே என்னலாம். தொல்காப்பியத்தின் காலம் தொல்காப்பியப் புலமையுடன் சமற்கிருத வேதமொழி ஆர்வமும் பெரும் புலமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இக்காலப் புலவர்களுள் ஒருவர் திரு.பி.எ°.சா°திரி ஆவார். அவர் தொல்காப்பியத்துடன் பிராதிசாக்கியங் களையும் ஆய்ந்து ஒப்பிட்டுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொல்காப்பிய உரையாராய்ச்சி விளக்கங்கள் தந்துள்ளார். மேலை உலகத்தவர் கவனத்தைத் தொல்காப்பியம் ஈர்த்துவிட்ட தறிந்ததனாலேயே, ஆங்கில மொழியில் ஆராய்ச்சி எழுதுவது தேவைப்பட்டது என்னலாம். `தொல்காப்பியம் பாணினியுடன் மிகுதி தொடர்பற்றது. பிராதி சாக்கியங்களுடனேயே தொடர்புடையது’ என்று திரு. சா°திரி கருதுகிறார். தொல்காப்பியம் பாணினிக்கு முற்பட்ட தென்றும் அவர் கொள்கிறார். ஆனால், பிராதிசாக்கியங்களும் தொல்காப்பியமும் ஒலி இலக்கணத் துறையில் மிகவும் ஒப்புமையுடையனவாக இருப்பதைக் காட்டி, அவர் பிராதி சாக்கியங்களை முன்மாதிரியாகக் கொண்டே தொல்காப்பியர் எழுத்துகளின் பிறப்புக் கூறுவதாகக் கொள்கிறார். அதே சமயம் பிராதிசாக்கியத்தின் சொற்களுக்கு ஆங்கில அறிஞரின் இன்றைய முடிவுக்கேற்பவும், தொல்காப்பியச் சூத்திரங்களுக்கேற்பவும் அவர் பொருள் கொள்ள முனைகிறார். பாணினியம் பிராதிசாக்கியங்களுக்குப் பிற்பட்ட தென்பதில் யார்க்கும் ஐயமில்லை. பிராதிசாக்கியங்களைத் தாண்டிப் பாணினி சமற்கிருத இலக்கணத் துறையில் நெடுந்தொலை முன்னேறியிருந்தார் என்பதையும் எவரும் மறுக்க முடியாது. ஆயினும், ஒலியுணர்விலும் ஒலியியல் நுட்பத்திலும் அவர் ஏலாமையுடையவர் என்ற முடிவுக்கே மேலை அறிஞர் வந்துள்ளனர். அவ் வுணர்வுகளுக்கு அவர் அயலானவர் என்றே கூறலாம். இதுபோலவே பிராதி சாக்கியங்களைவிட இவ்வகையில் தொல்காப்பியர் கூரிய நுண்ணறிவுடையவர் என்று காண்கிறோம். எனவே, ஒன்று அவர் பிராதிசாக்கியங் களுக்குப் பின் வாழ்ந்தவராயிருந்து தம் ஆராய்ச்சியால் இந்த முன்னேற்றங்களைக் கண்டிருத்தல் வேண்டும். அல்லது பாணினியைப்போல் பிராதிசாக்கிய ஆசிரியர்கள் ஒலியியல் நுட்பங்களில் பிற்பட்டவராயிருந்து அவர் முடிவுகளைத் தெளிவாய் உணர்ந்து மேற்கொள்ளத் தவறியிருத்தல் வேண்டும். மேற்கூறிய இரண்டு முடிவுகளுள் பிந்தியதே உண்மை என்று கூற இடமுண்டு. ஏனெனில், பாணினியத்தைவிட, பிராதிசாக்கியங்களைவிடத் தொல் காப்பியம் பாரிய விரிவகற்சியுடைய இலக்கண நூல். அஃது ஐந்திலக் கணங்களையும் அளாவியது. அது மட்டுமன்று. தமிழ்மரபின் விரிவகற்சியில் தொல்காப்பியம் ஒரு கூறாகவே காணப்படுகிறது. இயல், இசை நாடகம் என்னும் முத்திறத் தமிழிலக்கணத்தில் தொல்காப்பியம் இயல் இலக்கணம் என்ற ஒரு துறையையே விரித்துரைக்கின்றது. தொல்காப்பியப் பண்பும் சூத்திரநடைப் பண்பும் ஒலியுணர்வைப் போலவே மொழி நூலுணர்விலும் வேறுபல கூறுகளிலும் தொல்காப்பியர் பாணினியைக் கடந்த அறிவுப் பண்புடையவர் ஆவார். இப்பண்புயர்வு காலத்திற் பிற்பட்ட பண்புயர்வன்று. ஏனெனில், அதை நாம் தமிழகத்திலும் சரி, வட புலங்களிலும் சரி, இறங்கு வரிசையிலேயே காண் கிறோம். காலப்போக்கில் நாம் இலக்கண நிறைவு, வகை தொகை விரிவு, தருக்கமுறை ஒழுங்கு, சுருக்கச் செறிவு ஆகியவற்றிலேயே இருமொழிகளிலும் வளர்ச்சி காண்கிறோம். இவ்வகையிலும் தொல்காப்பியம் முற்பட்டதாகவே காணப்படுகிறது. அது பண்பில் உயர்வுடையதாயினும், சொற்செறிவிலோ அதற்குரிய புதிய வகை துறை முறைகளிலோ, எடுத்துக் கொண்ட மொழியின் இலக்கணத்தில் முழு நிறைவு எய்துவதிலோ, தருக்கமுறை வரிசைப் பண்பிலோ பாணினிக்கு ஒரு சிறிதும் இணையாக மாட்டாது. பாணினிக்குப் பின் அப்பண்புகளைப் பின்பற்றிய 12-ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழிலக்கணமாகிய நன்னூலுக்குக்கூட ஈடாகமாட்டாது. ‘பெயரும் வினையும் தம்முள் புணருங்காலை’ என நன்னூலார் எளிதாகச் சுருக்கிக் கூறும் செய்தியைக்கூடத் தொல்காப்பியர், ‘பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் ஆங்கு அந் நான்கே....’ என விரிப்பது காணலாம். குற்றியலுகரம், புணர்ப்பு விதிகள் முதலியன கூடிய மட்டும் நன்னூலில் ஒரு சூத்திரம் அல்லது இரண்டு சூத்திரத்தில் அடங்கும்படி கூறப்படும் இடங்களில் தொல்காப்பியர் அதைப் பார்க்கப் பல இடங்களில் பல சூத்திரங் களில் மட்டுமல்ல, பல இயல்களில் கூறுவது காணலாம். இன்று உரைநடை எழுதுவோர் “இதை இன்னோர் இயலில் விளக்குவோம்”. என்று இடவிரிவுக் கஞ்சாமல் கூறுவர். இத்தகைய கூற்றுகளுக்குக்கூடத் தொல்காப்பியர் சூத்திரம் இடம் தருகிறது. பல இடங்களில் தன் சூத்திரத்துக்கு விளக்கம், ஐயுறவு நீக்கம் கருதிப் பின்னும் ஒரு சூத்திரம் எழுத அவர் தயங்கவில்லை. பாணினிக்குப் பின் சூத்திரமுறை வளர்ந்த காலத்தில் இப் பண்புகளை இரு மொழிகளிலும் காண முடியாது. ஓர் எழுத்தைக் குறைக்கச் சூத்திர எழுத்தாளர் அரும்பாடு பட்டுள்ளதுண்டு. மேலும், மொழியின் பொது இயல்புகளைத் தொல்காப்பியர் விளக்குவதன்றி, எல்லாச் சொற்களையும் அல்லது எல்லாச் செய்திகளையும் ஒரு நூலில் அடக்கிக் காட்டச் சிறிதும் முயன்றதாகக் காணவில்லை. பலவிடங்களில் முந்து நூல்களில் காணுமாறு விட்டும் பலவற்றைச் சாடையாகக் குறித்தும் செல்கிறார். சூத்திரங்கள் வடபுலங்களிலும் தமிழிலும் கிட்டத்தட்ட ஒரே கால வளர்ச்சியுடையவை என்னலாம். தமிழில் சமற்கிருதத்தைப் பின்பற்றி நன்னூலாரும் சமய நெறிகளில் மெய்கண்டாரும் பின்னாளில் அதே செறிவு கண்டனர். ஆனால், பாணினிக்கு முற்பட்ட சூத்திர நடைப் பண்புக்குத் திருக்குறளின் குறட்பாக்களும் தொல்காப்பியர் சூத்திரங்களும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். அழகு குன்றாத செறிவை வள்ளுவர் குறட்பாக்களிலும், அழகும் எளிமையும் ததும்பும் சுருக்கத்தைத் தொல்காப்பியத்திலும் காணலாம். பாணினியின் காலத்தைக்கூட வடபுல ஆராய்ச்சியாளர் முடிவுபடுத்திக் கூறிவிடவில்லை. அவர் கி.மு. நான்காம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் அல்லர் என்று தெளிவாகக் கூறலாம். தொல்காப்பியர் காலத்தை வரையறுத்துக் கூறத் தமிழர்க்குரிய வாய்ப்பு இன்னும் குறைவு. ஆனால், பாணினியின் பின்னெல்லைக் காலமாகிய கி.மு. 4-ஆம் நூற்றாண்டுக்கு அவர் பின்னெல்லை மிகவும் முற்பட்டதாயிருத்தல் வேண்டுமென்று மட்டும் இப்போது நாம் தோராயமாகக் குறிக்கலாம். சங்க இலக்கியத்துக்கும் திருக்குறளுக்கும் உள்ள மொழி நடை பண்புவேறுபாடு, திருக்குறளுக்கும் சங்க இலக்கியத்தில் உட்பட்ட சில பழம் பாடல்களுக்கும் உள்ள தொலை, இவையனைத்துக்கும் தொல்காப்பியத்துக்கும் உள்ள தொலை ஆகியவற்றை நோக்க, நாம் கொண்ட பின் எல்லை மிகப் பிந்தியதென்பதில் ஐயமில்லை. பிராதிசாக்கியங்கள் கால எல்லையையோ தொல்காப்பியக் கால எல்லையையோ இன்று வரையறுக்க முடியவில்லை, அவை வரையறுக்கப்படும் காலத்தில்,தொல்காப்பியமே முந்திய தென்பது அகச் சான்றடிப்படையான ஊகமுறையாலன்றி வேறு வகைச் சான்றுகளாலும் நிலைநாட்டப் பெறக்கூடும் என்னலாம். மொழிநூற் பண்பு இலக்கணம் மொழியின் உருவப்படம். அஃது அதன் வடிவம், உறுப்பாக்கம், உறுப்புகளின் தொடர்பு, பண்பு ஆகியவற்றை உணர்த்துவது. ஆனால், இலக்கணம் இக்கடமையைச் சரிவர எப்போதும் ஆற்ற முடியாது. ஏனென்றால், மொழி உயிருடைய, வளர்ச்சியுடைய ஒரு பொருள். ஒரு மனிதனை ஐந்து வயதில் கண்டு படம் வரைபவன் அல்லது நிழற்படம் எடுப்பவன், அதே மனிதனை ஐம்பது வயதில் கண்டால், படம் மனிதனது அன்றைய வடிவத்தை ஒத்திராது. ஏனெனில், படம் வளராது. மனிதன் வளர்கிறான். இலக்கணம், மொழி ஆகியவற்றின் தொடர்பு இதுவே. இலக்கணம் ஒரு காலத்திய மொழியின் வடிவம். மொழி காலத்தின் ஒவ்வொரு கூறிலும் திரிபுற்று வளர்வது. காலந்தோறும் புதுப்புதுப் படம் அல்லது நிழற்படம் தேவைப்படுவது போல, காலந்தோறும் புதுப்புது இலக்கணங்கள், அல்லது புதுப்புது இலக்கண மாறுபாடுகள் ஏற்படுவது இன்றியமையாதது. மேற்கண்ட உவமை மொழி, இலக்கணம் ஆகியவற்றின் தொடர்பு வகையில் ஓர் அடிப்படை உண்மையைக் குறிக்கிறது. ஆனால், அதுவே முழு உண்மையன்று. குழந்தை மனிதனாகும்போது உருவம் மாறுபடுகிறது. சில சமயம் உருவ மாறுபாடு அறியமுடியா வகையில் பெரிதாயுள்ளது. ஆயினும், சாயல் மாறுபடாதிருப்பதுண்டு. ஆளும், ஆளின் அடிப்படைப் பண்பும் மாறுபடுவதில்லை என்பது உறுதி. இதுபோலவே மொழியின் வளர்ச்சியில் மாறுபடாப் பண்பு உண்டு. தவிர, இலக்கிய இலக்கண வளம் பெற்ற மொழியில் இம் மாறுபடாப் பண்பு மிகுதி. காட்டாறாக ஓடும் இயற்கை மொழி வளர்ச்சிக்கு இலக்கண இலக்கியங்கள் இரு கரைகளாக அமைந்து அதன் உருவுக்கு நிலையான அடிப்படைப் பண்பு வகுக்கிறது. மாறுபாடுகள் இந்த அடிப்படைப் பண்புக்கு உட்பட்டே நிலவும். தமிழ் தொல்பழங் காலத்திலேயே பண்பட்டு இலக்கிய இலக்கண வளர்ச்சி பெற்றதாதலால், அதன் மாறுபாடு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பேரளவில் தடைப்பட்டிருந்தது. ஆனால், இந்த இலக்கண இலக்கிய அறிவு இன மக்கட் பரப்பு முழுவதும் பரவாததாலும். ஆட்சியுரிமை கெட்ட அடிமைக் காலங்களில் கல்விநிலை சீர்கெட்டு வந்ததாலும், திசை வழக்குகளும் காட்டு வளர்ச்சியும் மீண்டும் சென்ற ஆயிர ஆண்டுகளாக மிகுந்துள்ளன. தொல்காப்பியர் காலத்துக்குள் திசை வழக்குகள் தோன்றிவிட்டன. ஐந்து நாட்டின் ஒரு மொழியாயிருந்த நிலைமாறி ஐந்து நாட்டின் இருமொழியாகி ஐந்து மொழியாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. சென்ற இரண்டாயிர ஆண்டுகளில் கல்வியின்மையாலும், சென்ற சில நூற்றாண்டுகளில் கல்வி தமிழ்க் கல்வியாயில்லாததாலும், மொழி மீண்டும் காட்டு வளர்ச்சியில் புகுந்துள்ளது. நம் மறுமலர்ச்சி அதை மீண்டும் இலக்கிய இலக்கணப் பண்பாட்டுக் கரை வகுத்து வளம்பெற வளர்த்தல் வேண்டும். அடிக்குறிப்பு : 1. K(Kappa), X(chi), Y (Gamma) 2. E (Epsilon) H (Eta) 3. O (Omicron), W (Omega). 6. தனித் தமிழ் தமிழகத்தின் மறுமலர்ச்சி இயக்கத்தில் தனித் தமிழியக்கம் ஓர் உட்கூறு; ஓர் உயிர்க் கூறு. அதற்குப் பெயரும் உருவும் தந்து ஊக்கியவர் தனித் தமிழியக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளார். அதனைத் தோற்றுவிக்கத் தூண்டுதலளித்தவர் பரிதிமாற் கலைஞர். இருவரும் மறுமலர்ச்சிக்கு முற்பட்ட அடிமையிருட் காலத்தில் பிறந்தவர்கள். அடிமையிருட் காலத்தில் வாழ்ந்த பெற்றோர்கள் அவர்களுக்கு இட்டு வழங்கிய பெயர்களை அவர்கள் அயல் மொழிப் பெயர்களென ஒதுக்கித் தள்ளினர். இதன் பயனாகவே சுவாமி வேதாசலம் என்ற மதிபெறும் பெயர் மறைமலையடிகள் என்ற மாண்புறு பெயராயிற்று. சூரியநாராயண சா°திரியார் என்ற வீறுடைப் பெயர் பரிதிமாற் கலைஞர் என்ற விழுமிய பெயராயிற்று. அவர்கள் தோற்றுவித்த இயக்கக் குறிக்கோளை அவர்கள் மேற்கொண்ட இச் செந்தமிழ்ப் பெயர்களே சுட்டிக் காட்டின. அவையே அதை எங்கும் பரப்பவும் உதவின. தனித் தமிழ்ப் பெயர்களும் தமிழ்ப் பண்பாடு சுட்டும் பெயர்களும் இன்றைய இளைஞர் உலகில் பரவிவருகின்றன. அன்பழகன், நெடுஞ் செழியன், தமிழ் வேந்தன், புகழேந்தி, இளமாறன், கோவூர்கிழார் போன்ற பெயர்கள் இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழினப் பெயர்கள். இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னைய தமிழ்க் கடலிலிருந்து புதுமைத் தமிழர் குளித்தெடுத்த தமிழ்ப் பண்பின் முத்துகளாக இவை பிறங்குகின்றன! தனித் தமிழியக்கம் அயல்மொழி வெறுப்பைத் தூண்டுவதென்று கூறுபவர் உண்டு. அயல் மொழியை இன மொழியாகக் கொண்ட வகுப்பினர் மீது வெறுப்பூட்டத் தூண்டுவதென்று கருதுபவரும் உண்டு. இரண்டு கருத்துகளும் தவறு என்பதை இவ்விரு பெரியார்களின் பண்பும் சூழலுமே காட்டப் போதியன. இயக்கத்தைத் தோற்றுவித்த முதல்வர் என்று கூறத்தக்கவர் பரிதிமாற் கலைஞர். சரியாகவோ, தப்பாகவோ, சமற்கிருதத்தை இனமொழியாகக் கொண்டு போற்றும் வகுப்பில் பிறந்தவர் அவர். அது அவ்வினத் தாய்மொழி என்பதை மறுக்கவோ, அம்மொழியை வெறுக்கவோ அவர் முனைந்தவரல்லர். ஆயினும், தமிழின் உரிமையையோ, சிறப்பையோ வேறு எந்த மொழியும் தாக்கத் தமிழனாகிய அவர் ஒருப்படவில்லை என்பது தெளிவு. மறைமலையடிகளோவெனில், ஆங்கில மொழியையே உலகின் அறிவுத் தாய்மொழியாகப் போற்றியவர். சமற்கிருதத் திலும் அவர் பற்றுச் சிறிதன்று. ஆயினும், தமிழையே அவர் பண்புத் தாய்மொழியாகக் கொண்டார். தமிழனிடமும் பற்றுக்கொண்டார். தமிழைத் தாழ்த்தித் தமிழனுக்கு இழுக்குத் தரும் எந்த மொழியாட்சியையும் அவர் எதிர்க்கத் தயங்கவில்லை. அவர் தனித்தமிழ் இயக்கத்துக்காகத் தறுகண் வீரராய்ப் போரிட்டு, அதன் முடிசூடா மன்னராக விளங்கியதன் காரணம் இதுவே. பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்-சமயமொழியாக, இன மொழியாக, பண்பாட்டு மொழியாகப் பிற மொழிகளை மேற்கொண்ட வர்கள்-தமிழகத்திலுண்டு; தனித் தமிழியக்கத்திலுமுண்டு. பார்ப்பனர் மட்டுமன்றி, கிறித்தவ, இசுலாமிய நெறி தழுவிய தமிழர், தமிழ் நாட்டில் பழைமை நாள் தொட்டு வாழ்ந்து தமிழையே நாட்டு மொழியாக ஏற்றுள்ள தெலுங்கர், கன்னடியர், மலையாளியர், மராத்தியர், இந்து°தானியர், வங்காளியர், ஆங்கிலேயர் ஆகியோர் தனித் தமிழியக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய பல்வேறு வகைப்பட்ட மக்களும் தனித் தமிழில் பற்றுக்கொள் வானேன்? வெறுப்புணர்ச்சி பார்ப்பனரையும், ‘பிற தமிழினத் தமிழரையும், தெலுங்கரையும், மலையாளியரையும், ஆங்கிலேயரையும் மராத்தியரையும், இந்து°தானியரையும், வங்காளியரையும் ஒரு துறைப்படுத்துமா? அங்ஙனம் செய்யத் தனித் தமிழ்க்கு உள்ள தனித் தன்மை யாது? தனித் தமிழின் மறைதிறவு தாய்மொழியின் தூய்மையை விரும்புபவர் தமிழர் மட்டுமல்லர். அதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு உழைத்தவர் எல்லா மொழிகளிலும் உண்டு. குறிக்கோளாகக்கொண்டு உழைக்காதவர்களும், அக் குறிக்கோளையே நாடாதவர்களும், அக் குறிக்கோளை எதிர்ப்பவர்களும்கூடத் தம்மையறியாமல் தூய தாய்மொழி பயில்வதும், அதன் கவர்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு. ஷேக்°பியர் போன்ற மக்கட் கவிஞர் கவிதைகளில் ஈடுபட்டு அதை ஆராய்ந்தவர்கள், அவர் நடையில் தாய் மொழிச் சொற்களே மிகுதி என்றும், கவிதை உணர்ச்சி மேம்படுமிடங் களில் அச்சொற்களின் விழுக்காடு இன்னும் மேம்பட்டுள்ளது என்றும் எடுத்துக் காட்டுகின்றனர். தமிழ்க் கவிதையிலும் பிறமொழி கலந்து எழுதும் பழக்கமுடையவர்களின் நடையில் கூட ஆசிரியர்கள் தம்மையறியாது தனித் தமிழில் வாசகரை மெய்மறக்கவைக்கும் இடங்களைக் காணலாம். “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே!” என்ற அப்பர் பெருமானின் பத்திப் பெருக்கக் கவிதையிலும், “தண்டலை மயில்க ளாட, தாமரை விளக்கம் தாங்க, கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளைகண் விழித்து நோக்க, தெண்டிரை எழினி காட்ட, தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட, மருதம்வீற் றிருக்கும் மாதோ!” என்ற கம்ப நாடரின் இயற்கை வருணனையிலும் தனித் தமிழ் இயல்பாகத் தமிழ்ச் சுவையூட்டி நிற்பதைக் காணாதவர் இருக்கமாட்டார்கள்! சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மற்றத் தமிழ்க் காவியங்களைவிட இனிமையும் செம்மையும் உடையன. திருக்குறள் வேறு எந்தத் தமிழ் நூலையும் விட இனிமையும் சொல்லாற்றலும் உடையது. தொல்காப்பியம் எளிமை, இனிமை, செறிவு, செப்பம் ஆகிய யாவும் ஒருங்கே பொருந்தியது. சங்க இலக்கியத்தின் நயம் பிற்கால இலக்கியங்களுக்கு எட்டாதது. இவற்றின் மறைதிறவு யாது? தனித் தமிழே என்னலாம்! தவிர, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிப் பண்பு, தனி ஓசை நயம் உண்டு. ஜெர்மன் மொழிக்கு ஆற்றல், ஆங்கில மொழிக்கு வலிமை, °பானிய மொழிக்கு வீறு, பிரஞ்சு மொழிக்கு நயம், இத்தாலிய மொழிக்கு இனிமை ஆகியவை அவ்வம் மொழித் தனிப்பண்புகள் ஆகும். சமற்கிருதத்துக்கு வீறமைதி, இந்து° தானிக்கு ஆண்மை, பாரசீக மொழிக்குச் சந்த நயம் ஆகியவை முயற்சியின்றி அமைபவை. அதுபோலவே, தெலுங்குக்கு இன்னோசை, கன்னடத்துக்கு மென்மை, மலையாளத்துக்குக் கவர்ச்சியுணர்வு, தமிழ்க்கு நுண்ணயம் ஆகியவை இயல்பானவை. பிறமொழிக் கலப்பு இவற்றைச் சற்றுக் குலைக்கலாம். அழிக்கமாட்டாது. கவிஞர் கையில், சிறப்பாக உணர்ச்சி மிக்க கவிதைக் கட்டங்களில் தாய்மொழிச் சொற்கள் இயல்பாக மேம்பட்டு, தாய்ப்பண்பு ததும்பிப் பொங்கி விடுவது காணலாம். இந்தப் பண்பைக் காக்க, அதை வளர்க்க, அதில் வெறிகொள்ளக்கூட எவரேனும் முயன்றால், அது தவறா? கவிதையுணர்வுடையவர் தம்மையறியாது அவ்வப்போது வளர்க்கும் இப்பண்பை மொழியார்வலர், எழுத்தாளர் தெரிந்து திட்டமிட்டுச் செய்வது தவறாகமாட்டாது! தனித்தமிழ் வெற்றி, தமிழின் வெற்றியே ஒவ்வொரு மொழியிலும் அதன் தூய தாய்மொழிச் சொற்களே தாய் இனத்துடன் நீடித்துப் பழகி ஊடாடிய மிகப் பழைமையான சொற்கள். தாய் இன மரபில் வந்த மக்களின் நாடி நரம்புகளையும் உள்ளத்தையும் அத்தகைய சொற்களைப்போல் இடையில் வந்தேறி இடையிலே அழிந்துவிடத்தக்க வேரற்ற சொற்கள் தடவி உணர்ச்சி எழுப்ப முடியாது. தூய தாய்மொழியை விரும்பியவர்கள் எல்லாரும் அதைப் பயின்று வெற்றி காணவில்லை. இஃது இயல்பே. ஆனால் இஃது அவர்கள் கலைப்பண்பின் குறைபாடேயன்றி அவர்கள் கோட்பாட்டின் தவறுதலன்று. தூய தாய்மொழி இயக்கம் பல மொழிகளில் வெற்றி பெறவில்லை. அதைச் சிறப்பாகத் தமிழின் வெற்றி என்று கூறலாம். ஆங்கிலத்தில் ஓரளவு 19-ஆம் நூற்றாண்டில் வெற்றி ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழிலேயே பேரளவில் 20-ஆம் நூற்றாண்டில் வெற்றி கிட்டியுள்ளது. மற்ற மொழிகளில் ஏற்பட்ட தோல்விகளுக்குத் தூய்மை இயக்கக் கோட்பாடே காரணமாகாது. அவ்வம் மொழி சார்ந்த மக்களின் இயல்பு, சூழல், மொழியின் வலு, மொழியின் பண்பு ஆகிய பல்வேறு கூறுகள் பலபடி வெற்றி தோல்விகளை உண்டுபண்ணுகின்றன என்னலாம். தமிழில் தமிழ் மொழியின் இயற்கைப் பண்பு, மறைமலையடிகளார் போன்ற தனித்தமிழ்த் தலைவர்களின் அயரா உழைப்பு, தனித்தமிழ் எழுத்தாளரின் தனிப்பட்ட எழுத்தாண்மைத்திறன், தமிழர் உள்ளத்தின் ஆழத்தில் கெடாது இன்னும் இயங்கும் தமிழ்ப் பண்பு ஆகியவை தூய தாய்மொழி இயக்கத்துக்கு வெற்றி தந்துள்ளன; தந்து வருகின்றன. தனித் தமிழ் இயக்கத்தின் வெற்றிக்குத் தனித் தமிழ்க் கோட்பாடு பெரிதளவு காரணம் என்பது உண்மையே. ஆனால், தமிழின் பண்புக்கும், தனித்தமிழ்த் தலைவர் முயற்சிக்கும், தனித்தமிழ் எழுத்தாளர் திறமைக்கும், தமிழரிடம் முற்றிலும் தட்டுக்கெட்டு விடாத அடிப்படைத் தமிழ்ப் பண்புக்கும் அவ்வெற்றியில் உருப்படியான பங்கு உண்டு. தமிழ்ப் பண்பு தனித் தமிழ் இயக்கம் அயல்மொழி வெறுப்பால் ஏற்பட்டது என்றோ, அயலின மொழிப்பற்றை எதிர்த்துத் தோன்றியதென்றோ கருதுபவர் தமிழ்ப் பண்பில் கருத்துச் செலுத்தாதவர் என்னலாம். ஏனெனில், தனித்தமிழ் இயக்கம் தோன்றுவதற்குரிய தோற்றுதற் காரணங்களிலும், அது வளர்ந்து வெற்றி பெற உதவிய ஆக்கக் காரணங்களிலும், அதன் மூலம் மறுமலர்ச்சி ஓங்கி வளர உதவிய உள்ளுயிர்க் காரணங்களிலும் தமிழ்ப் பண்பே முதலிடம் பெறத்தக்கதாகும். தமிழ், தமிழரின் தாய்மொழி. ஆனால், தமிழியக்கமும் தனித் தமிழியக்கமும் முற்றிலும் தமிழரின் தாய்மொழி இயக்கங்கள் மட்டுமல்ல. தமிழகம் சூழ்ந்த பிற தாய் மொழியாளரும் இந்தியாவிலுள்ள ஏனைத் தாய்மொழியாளரும் அதன் இயல்பை இன்னும் உள்ளூர உணர்ந்துகொள்ள முடியாததன் காரணம் இதுவே. தமிழ், தமிழரின் இலக்கிய மொழியாகவும், அரசியல் மொழியாகவும், அறிவுத்துறை மொழியாகவும், தொழில்துறை மொழியாகவும் தொன்று தொட்டு இயங்கிவந்துள்ளது. இடையிருட்கால அடிமைச் சூழல்களிடையே தமிழர்தாம் தட்டுக் கெட்டுவிட்டனர். ஆனால், தமிழும் தமிழ்ப்பண்பும் தட்டுக் கெடவில்லை, அவற்றின் தங்கு தடையற்ற வளர்ச்சிதான் தடைப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் தாய்மொழி இயக்கங்கள் தாய்மொழியாளர் புத்தவாவின் சின்னங்களாகவே அமைவன. ஆனால், தமிழ் நிலத்திலே அது மறுமலர்ச்சி இயக்கம், இழந்துவிட்ட உரிமைகளை மீட்டும் பெறுவதற்கான போர்முழக்கம் ஆகியுள்ளது. அதன் தனித்தன்மையும் தனி வலுவும் இதுவே. இனப் பண்பு தவிர, தமிழ் தமிழரின் தனித் தாய்மொழி மட்டுமன்று; தமிழர்க்கும் தமிழினஞ் சார்ந்த ஏனை மொழியாளர்க்கும் ஒருங்கே பொதுவுரிமையுடைய இனத்தாய் மொழியும் அதுவே. இவ்வகையில் அதன் நிலை சமற்கிருதத்தின் நிலைபோன்றது. தாய்மொழி என்ற வகையில் சமற்கிருதத்துக்கு என்றும் தனிவாழ்வு இருந்ததில்லை. ஆயினும், தமிழ் இனத்தார் நீங்கலான, ஏனைய இந்தியத் தாய்மொழியாளர் அனைவர்க்கும் அதுவே இலக்கியமொழி. இது மட்டுமோ? இந்தியாவில் தம்மை உயர் குடியினர் என்று கருதும் இந்தியர்க்கும், ஐரோப்பிய மொழிகள் பலவற்றைத் தாய் மொழிகளாகக் கொண்ட மேலைநாட்டவர்க்கும் ஆரியர் என்ற முறையில் அதுவே இனமொழியாகும். உலகெங்கும் யூதர்கள் தங்கள் தங்கள் தாய்மொழி கடந்து எபிரேய மொழியை இனமொழியாகப் பாராட்டுவது போல, உலகெங்குமுள்ள ஆரிய இனத்தவர் சமற்கிருதத்தைத் தங்கள் இனப் பெருமைக்குரிய பண்டைமொழியாகப் போற்றுகின்றனர். இனப் பண்படிப்படையாகத் தமிழினத்தின் போற்றுதலைத் தமிழ் இன்னும் முழுஅளவில் பெறவில்லை யென்பது உண்மையே. இது தமிழ் நாடும், தமிழினமும் தன்னாட்சியுரிமை பெறாதிருப்பதன் விளைவன்றி வேறன்று. தமிழியக்கத்தில் தமிழ்மொழியுணர்ச்சி மட்டுமன்றித் தமிழின உனர்ச்சியும் ஈடுபட்டிருப்பதன் காரணம் இதுதான். தமிழியக்கத்திலிருந்து கிளைத்த அரசியல் கிளர்ச்சிகள் தமிழ்க்குத் தன்னாட்சியுரிமை கோருவதுடன் அமையாமல், தமிழினச் சார்பிலும் தன்னாட்சியுரிமை கோருவதும் இதனாலேயே. இந்நிலையில் தமிழ்ப் பண்பில் தமிழுணர்வு, தமிழின உணர்வு ஆகிய இந்த இரு உணர்ச்சி களும் ஒருங்கே இடம் பெறுகின்றன. பல இடங்களில் இணைபிரிக்க முடியாமல் இரண்டும் பின்னிப் பிணைந்துள்ளன. உலகப் பண்பு சமற்கிருத மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் இன எல்லை கடந்த சிறப்புகள் உண்டு. இனப் பழைமை, சமயப் பழைமை ஆகியவற்றின் ஆராய்ச்சித் துறையாளர்க்கு சமற்கிருதமும் அதன் முன்னோடியான வேதமொழியும் சேர்ந்து ஒரு பழைமைக் கருவூலம் ஆகிறது. அதுபோல இலக்கியப் பண்பாராய்ச்சியாளர், கலைப் பண்பாராய்ச்சியாளர், அறிவுத்துறைப் பழைமை யாராய்ச்சியாளர் ஆகியோர்க்குக் கிரேக்கமொழி ஓர் இன்றியமையா மூல பண்டாரம் ஆகும். தமிழ்க்கும் இவை போன்ற உலகப் பொதுப்பண்பு உண்டு. அது சமற்கிருதத்திலும் பழைமை மதிப்பு வாய்ந்த மனித இனத்தின் ஒரு பழைமைக் கருவூலம். அதே சமயம் அது கிரேக்க மொழியினும் பாரிய, சீரிய, தொல்பழம் பெருமை வாய்ந்த கலைப்பண்டாரம் ஆகும். வருங்கால உலகை வளர்ப்பதற்குரிய பண்புக் கூறுகளில் மற்ற இரு மொழிகளையும்விட, உயிர்ப் பண்புடைய கருமுதற் கூறுகள் பல அவற்றுள் உண்டு. தாய்மொழிப் பண்பு, இலக்கிய மொழிப் பண்பு, அறிவு மொழிப் பண்பு, நாட்டுமொழிப் பண்பு, உலகப் பண்பு ஆகிய இத்தனை கூறுகளும் அடங்கிய தமிழின் தன்மையே தமிழ்ப் பண்பு. இதை அறியாதவர் தமிழை உணராதவர். இதனை அறிந்தவர் தமிழகத்தை மட்டுமன்றி, தமிழ் இனத்தை மட்டுமன்றி, உலகையே இயக்க வல்லவர் ஆவர். தனித் தமிழ்ப் பண்பு தனித் தமிழியக்கம் தமிழை வளர்க்கும் இயக்கம் மட்டுமன்று; தமிழ் கடந்து தமிழனையும், தமிழினத்தையும் உலகையும் வளர்க்கும் இயக்கம் ஆகும். தனித் தமிழ் இயக்கத்துக்குத் தூண்டுதல் தந்த பெரியாரான பரிதிமாற் கலைஞர் தனித் தமிழியக்கத்தைத் தமிழ் வளர்க்கும் இயக்கம் என்று மட்டுமே கருதினார். தனித் தமிழ் இயக்கத்துக்கு வெளியே தமிழ்ப் பற்றில் தனித் தமிழாளர்க்குச் சிறிதும் பின்னடையாத அறிஞர், எழுத்தாளர் பலர் உண்டு. தமிழியக்கம் பற்றி இவர்கள் உணர்வதும் கருதுவதும் இந்த அளவேயாகும். ஆனால், தனித் தமிழியக்கத்தைத் தமிழனை வளர்க்கும் ஓர் இயக்கமாக, தமிழினத்தை வளர்க்கும் இயக்கமாக, மறைமலை யடிகள் குறிக்கொண்டார். குறிக்கொண்டபடி பேரளவில் செய்தும் முடித்தார். இக் காரணத்தாலேயே தோற்றுவித்த முதல்வரை விஞ்சி, அவர் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். தனித் தமிழ் இயக்கம் அதன் மூதாதையைவிட, தந்தையைவிடப் பெரிது என்னல் வேண்டும். ஏனெனில், அஃது அவர்கள் குறிக்கோள்கள் தாண்டி வளர்கிறது. இஃது அவர்கள் பெருமையைத் தணிப்பதன்று, அதைப் பெருக்குவது. “தம்மில் தம்மக்கள் அறிவுடைமை, மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது” என்பது வள்ளுவர் கண்ட புதிய உண்மை. வளமான பெருமை, உயிர்ப் பெருமை என்பது பெருமை கடந்து வளர்ச்சி தரும் பெருமையே யாகும். பரிதிமாற் கலைஞரும், மறைமலையடிக ளாரும் கண்ட குறிக்கோள்கள் உயிர்க் குறிக்கோள்க ளாதலால், அவை தத்தம் தலைமுறை கடந்து முன்னிலும் உயர் குறிக்கோள்களாக, பாரித்தகன்று உலகளாவிய குறிக்கோள் களாக வளர்ந்துவருகின்றன. தனித் தமிழியக்கம் இன்னும் தமிழ் வளர்த்து வருகிறது. தமிழனையும் தமிழினத்தையும் வளர்க்கத் திட்டமிடுகிறது. அத்துடன் உலகளாவிய வளர்ச்சிக்கும் அது வித்தூன்றத் தொடங்கியுள்ளது. மறைமலையடிகளாரின் தனித் தமிழியக்கம் தனித் தமிழ் என்ற பெயரை மாற்றிக்கொண்டு, தமிழகம் கடந்து, கீழையுலக எல்லை கடந்து, ஒரு பெரிய உலக இயக்கத்தைத் தோற்று வித்துள்ளது. அதுவே அடிப்படை மொழி இயக்கம் என்று கூறப்படும் உயிர் மொழி இயக்கம் ஆகும். தனித் தமிழ் இயக்கம் அவ்வுலக இயக்கத்தை ஈன்று, இப்போது அவ்வுலக இயக்கத்தின் உயிர்க் கூறாக நிலவத் தொடங்கியுள்ளது. அடிப்படை மொழியியக்கத்தின் விளக்கமே தனித் தமிழ் இயக்கத்தின் புதிய வளர்ச்சிக்குரிய புது விளக்கம் ஆகும். கலப்பு மொழி இயக்கம் ஒரு மொழியின் வளத்துக்கு அதன் சொற்களின் எண்ணிக்கை ஒரு சின்னம் என்று சிலகாலம் கொள்ளப்பட்ட துண்டு. ஒரு பொருட் பல சொற்களின் வளமும் மொழியின் தனிவளம் என்று கருதப்பட்டு வந்தது. இத் தன்மைகள் உயர்தனிச் செம்மொழிகளாகிய இலத்தீனம், கிரேக்கம், சமற்கிருதம் ஆகிய வற்றில் நிரம்ப உள்ளன. ஏனைய மொழிகளைவிடச் சமற்கிருதத்திலும், சமற் கிருதத்தைவிடத் தமிழிலும் அவை தனிச் சிறப்புடையவையே என்று காணலாம். உலகின் தற்கால நாகரிக மொழிகளான ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகள் இப்பண்புகளை, சிறப்பாக முதல் பண்பைப் பெரிதும் அளாவின. அவற்றைப் பேரளவில் பெற்றும் உள்ளன. ஆனால், அவை உயர்தனிச் செம் மொழிகளின் சொற்களைத் தமதாக்கிக்கொண்டே அவ்வளவும் பெற முடிந்தன. அயல்மொழிச் சொற்களால் பெற்ற வளத்தை அயல்மொழிச் சொற்களைக் கலப்பதனாலேயே, அவற்றைப் பெருக்குவதனாலேயே வளர்க்கமுடியும். ஆகவே, அயல்மொழிச் சொற்கலப்பு ஒரு நாகரிக முறையாயிற்று. தமிழ் நீங்கலான இந்தியத் தாய்மொழிகள் மேலை உலக மொழிகளைப் போலவே வளர்ந்துவந்துள்ளன. சமற்கிருதச் சொற்களைக் கலப்பதாலேயே அவை வளம் நாடின. மேன்மேலும் சமற்கிருதத்தைக் கலப்பதனாலேயே அவை வளர்ச்சியும் நாடிவந்துள்ளன; வருகின்றன. தமிழகம் தவிர்ந்த ஏனைய இந்தியாவில் இன்று அக் கலப்பே நாகரிக முறையாகக் கருதப்பட்டு வருகிறது. ஒரே இலத்தீன, கிரேக்க மூல பண்டாரங்களிலுள்ள சொற்கள் எல்லா மேலை மொழிகளிலும்; ஒரே சமற்கிருத மூலப்பண்டாரத்திலுள்ள சொற்கள் தமிழ் நீங்கலான எல்லா இந்திய மொழிகளிலும்; ஒரே அராபிய, பாரசீக மூலப்பண்டாரங் களிலுள்ள சொற்கள் எல்லா இசுலாமிய மொழிகளிலும் பரவுவதனால், அம்மொழிகளிடையே ஒற்றுமை வளரும் என்று கருதப்பட்டு வந்தது; கருதப்பட்டுவருகிறது. ஆனால், அணிமை நிகழ்ச்சிகள் இதைப் பொய்ப்பித்து வருகின்றன. இந்தி-உருது-இந்து°தானி என்ற கூட்டுக் கலவை மொழி எல்லா மூலப் பண்டாரங்களையுமே பயன்படுத்தியும் முழு ஒற்றுமை காண்பதற்கு நேர்மாறாக முழுக் குளறுபடி செய்து, இருக்கின்ற ஒற்றுமையையும் அமைதியையும் சின்னாபின்னப் படுத்தி வந்துள்ளது, வருவது காணலாம்! எல்லா மொழிகளும் ஒரு பொது மொழியை உயர் மொழியாகக் கருதுமிடத்தில், பொது மொழியே அம் மொழிகள் ஒன்றுடனொன்று நெருங்கி யுறவாடாமலும், அன்பொப்புரவு நாடாமலும் செய்துவிடுகின்றது! ஒரே தலைவனுக் கடங்கிய அடிமைகளிடையே அக்காரணத்தால் ஒற்றுமை ஏற்பட்டுவிடும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. அந்நிலையில் வேற்றுமைதான் வளர இடம் ஏற்படும். தமிழ், சீன, ஜெர்மன், இரஷ்ய மொழிகள் கீழ்த் திசையில் தமிழும் சீனமும், மேலை உலகில் ஜெர்மனும் இரஷ்ய மொழியும் பிறமொழிச் சொற்களைக் கடன் பெறாமல் ஒரு புதிய முறையைப் பின்பற்றி வந்துள்ளன. தாய்மொழிச் சொற்களை வைத்துக்கொண்டே அவை புதிய புதிய கருத்துகளைத் தெரிவித்துவந்தன. தொடர் ஊர்தி, நெய்யாவி வண்டி, மின் ஆற்றல், வானொலி, தொலைபேசி, தொலைக்காட்சி ஆகிய சொற்களைத் தமிழ் ஆக்கிக் கொண்டதுபோலவே, சீனம், ஜெர்மன், இரஷ்ய மொழிகளும் ஆக்கிக்கொண்டுள்ளன. இந்நாடுகள் பொதுவாகவும் இரஷ்யா சிறப்பாகவும் தொடக்கத்தில் அறிவியல் வளர்ச்சியில் பிற்பட்டே இருந்தன. ஆனால், இத் தாய்மொழிப் பண்பு காரணமாக, ஏனை நாடுகளைத் தாண்டி அறிவியலறிவைத் தேசிய அறிவாக்கிக் கொள்வதில் ஜெர்மனி நெடுந்தொலை விரைந்து முன்னேற முடிந்தது. இரஷ்யாவும் சீனமும் முன்னேறத் தொடங்கியுள்ளன. புதிய அயல்மொழிச் சொற்களைவிடப் புதிய தாய்மொழிச் சொற்களைத் தாய்மொழியினம் விரைவில் செரிமானம் செய்துகொள்ள முடிவதே இதற்குக் காரணம். பிற நாடுகளில் உயர்தரப் படிப்புடைய ஒருசில உயர்குடி மக்களிடமே பரவமுடிந்த அறிவு, இங்கே ஒரு சிறிது கல்வியே பெறும் வாய்ப்புடைய அல்லது படிப்பு வாய்ப்பற்ற மிகப் பெரும்பான்மை மக்களிடையே பரவ இடமேற்பட்டது. இதன் அருமை அவன் தொகையளவைவிடப் பெரிது. ஏனெனில், பொதுமக்கள் ஒரு நாட்டு வாழ்வில் தொகையளவில் மட்டும் சிறப்புடையவர்கள் அல்லர். நாட்டு வாழ்வை ஆக்கி வளர்க்கும் உயிர்ப் பண்புக் கூறு அவர்களே. தாய்மொழிப் பண்பின் வளர்ச்சியில் தேசிய வாழ்வின் இவ்வுயிர்க் கூறு வளம்பெற்று வளரமுடிந்தது. மொழியறிஞர் இப் பண்புபற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். மொழி வாழ்வின் இயற்கைப் போட்டியில் தாய்மொழிப் பண்புமிக்க மொழிகளே வெல்லத் தொடங்குவது கண்டனர். அதன் காரணங்களையும் அவர்கள் நுணு கியாராய முற்பட்டனர். சொல்வளமும் சிக்கனமும் மொழியின் வளம் என்பது அதன் தனிச் சொற்களின் பெருந் தொகை யல்ல; கருத்துக் குறியீட்டு வளமே. பல கருத்துகளைக் குறிக்கப் பல சொற்கள் இன்றியமையாதவையே. ஆனால், அக்குறியீடுகள் பல தனிச் சொற்களாக மட்டுமே அமைவதைவிட, சில தனிச்சொற்களின் அடிப்படையி லமைந்த திரிபுச்சொற் குடும்பங்களாய் அமைவதே மொழிக்கு வளமும் சிக்கனமும் ஒருங்கே பயக்கும். தாய் மொழிப் பண்புடைய மொழிகள் தெரிந்தோ, தெரியாமலோ இவ்வளத்தையும் இச்சிக்கனத்தையும் ஒருங்கே வளர்க்கின்றன. எடுத்துக்காட்டாக மின் ஆற்றலுக்கு ஒரு புதிய சொல் வகுக்கப்பட்டால் மின்னல், ஆற்றல், மின்னாற்றல் என்ற மூன்று கருத்துகளுக்கு மூன்று வேறு வேறு தொடர்பற்ற சொற்கள் இருக்கும். ஆங்கிலத்தின் நிலை இதுவே. (டுiபாவniபே, ஞடிறநச, நுடநஉவசiஉவைல). மூன்று கருத்துகளுக்கு மூன்று சொற்களை மொழியினத்தின் மூளை சுமத்தல் வேண்டும். தாய்மொழிப் பண்புடைய மொழிகளிலோ இவை இருசொற்களாலேயே குறிக்கப்படும். இது சிக்கன வழிமட்டுமன்று. இயற்கை அறிவு வழியும் இதுவே. ஏனெனில், மின் ஆற்றலில் புதிய அறிவை, மின்னல், ஆற்றல் என்ற பழைய அறிவுடன் தொடர்புபடுத்தி, புதிய சொல்லுடன் பொருளையும் பொருட் பண்பையும் அது மொழியினத்தில் ஆழப் பதியவைக்கிறது. வேரூன்றிய இவ்வறிவின் வளர்ச்சி மேலீடான பிற மொழியினங்களின் வளர்ச்சி தாண்டி முன்னேற முடிகிறது. வருங்கால உலக மொழிப் பண்பு ஒருசில வேர்ச் சொற்களின் அடிப்படையாக, சில பல சொற்குடும்பங் களாக, பல திரிசொற்கள் அல்லது கருத்துக் குறியீடுகள் அமைவதே வருங்கால உலக மொழிக்குரிய பண்பு என்று கண்டனர், அடிப்படைமொழி இயக்கத்தார்! இப்பண்பை ஆங்கிலத்திலும் இந்து°தானியிலும் புதுவதாக வளர்க்கவே அவர்கள் அடிப்படை ஆங்கில இயக்கம், அடிப்படை இந்து°தானி இயக்கம் கண்டு, அவற்றை வளர்த்துவருகின்றனர். ஆனால், தமிழ்க்கு இத்தகைய அடிப்படைத் தமிழ் இயக்கம் புதிதாக வளர்க்கப்படவேண்டுவதில்லை. ஏனென்றால், தனித்தமிழ் இயக்கம் உலகின் முதல் அடிப்படையியக்கம் மட்டுமன்று, இன்றும் உலகின் தலை சிறந்த அடிப்படை மொழி இயக்கமாகவே இயங்கிவருகின்றது. உலகின் அடிப்படைமொழி யியக்கத்துக்குத் தனித் தமிழ் இயக்கம் தந்த தூண்டுதல் இன்னும் தமிழரே அறியாத ஒன்று. ஏனெனில், அது நேரடித் தூண்டுதலன்று. தனித் தமிழ்ப் பண்புடன் இயைந்த தாய்மொழிப் பண்பில் இரஷ்யா சிறப்பாகவும்; ஜெர்மன், சீனம் பொதுவாகவும் அடைந்த முன்னேற்றத்தின் மூலமான சுற்றுமுகத் தூண்டுதலே அது! தமிழும், தமிழுடன் தமிழினமும் இன்னும் உலகமொழி யினங்களில் உரிமையிடம் பெறாததால், தமிழ்க்கு நேரடித் தூண்டுதல் வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை. ஏற்பட்டால் அடிப்படை மொழியியக்கத்தில் இன்னும் வளமாக வளராத பல பண்புகளைத் தனித்தமிழ் இயக்கம் முனைப்பாகச் சுட்டிக்காட்டி, அதை வளர்க்க முடியும். உயர்தனிச் செம்மொழிப் பண்பு அடிப்படை மொழி இயக்கம் ஏற்படுமுன் நிலவிய கலப்புமொழி இயக்கத் தவர் அடைந்த சிறிதளவு வெற்றிக்குக்கூட, உயர்தனிச் செம்மொழிகளாகிய இலத்தீனம், கிரேக்கம், சமற்கிருதம், அரபு, பாரசீகம் ஆகியவையே மூலக் காரணம் ஆகும். இவ்வுயர்தனிச் செம்மொழிகளின் வளங்கள் முற்றிலும் மொழிக் கலப்பால் வந்த வளங்களல்ல என்பது தெளிவு. உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்றான தமிழின் தனித் தமிழ் வளம் போன்ற அல்லது அவ்வாறு கருதப்படுகிற தூய தாய்மொழி வளங்களே அவை. இதனைக் கலப்புமொழி இயக்கத்தார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எண்ணிப் பார்க்கவில்லை. தமிழ் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்றாக நின்று தனித்தமிழ் வளர்த்ததனாலேயே, உயர்தனிச் செம்மொழிகளைச் சார்ந்து வளரவேண்டிய தேவையில்லாமல், உயர் தனிச் செம்மொழிகளுடன் சரிஒப்பாக வளர முடிந்துள்ளது. ஏனை மொழிகள் உயர்தனிச் செம்மொழிகளின் உயிர்ப் பண்பை மறந்து அவற்றின் அடிமைகளாக வளர்ந்தன. தாமரைக் குளங்களில் தாமரையின் தேனை நுகரும் உணர்வின்றித் தேனுண்ணும் வண்டுகளை உண்டு வாழ்ந்த தவளைகளாகவே அவை இயங்கின. ஆனால், தமிழோ, தானே உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்றாதலால் அவற்றின் உயர்பண்பைத் தன் பண்பாகக் கொண்டு இயங்கி வந்தது;, இயங்கி வருகிறது. உயிர்ப் பண்புக் கூறு தமிழ் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்று மட்டுமன்று. அவற்றில் அதுவே தலைசிறந்தது. ஏனெனில், உயிர்தனிச் செம்மொழிகளின் உயிர்ப் பண்பை அது முற்றிலும் பேணியத னாலேயே, உலகின் மற்றெல்லா உயர் தனிச் செம்மொழிகளும் மாண்டழிந்ததுபோல, அது மாண்டழியவில்லை. உயர்தனிச் செம்மொழிகளிடையே உயிர்வளமுடைய, வளர்ந்து வருகிற ஒரே உயர்தனிச் செம்மொழியாய்த் தமிழ் இலங்குகின்றது. அதே சமயம் உலகத் தாய்மொழிகளிடையேயும் அது ஒரே உயர்தனிச் செம்மொழியாய் இயங்குகிறது. பண்டு முதிரா நாகரிகமுடைய மிக முற்பட்ட காலத்தில் தமிழ் உலகப் பொதுமொழியாயிருந்திருத்தல் வேண்டுமென்று அறிஞர் பலர் உய்த்துக் காண்கின்றனர். அஃது எப்படியாயினும், வருங்கால உலகப் பொது மொழி யாவதற்குரிய பண்பு அதற்குக் கட்டாயம் உண்டு என்பதில் ஐயமில்லை. வேறு எம்மொழிக்கும் - ஆங்கிலம், சீனம், இந்து°தானி ஆகியவற்றுக்கு இருக்கும் உயிர்ப் பண்பைவிட, அதற்குரிய உயிர்ப் பண்பின் தகுதி பெரிதாகும். உயர்தனிச் செம்மொழிகள் கடந்த, தாய்மொழிகள் கடந்த இவ்வுயிர்ப் பண்புக்குக் காரணமென்ன? அதுவே தமிழ் வளர்த்துக்கொண்டுள்ள தனித் தமிழ்ப் பண்பு ஆகும். இதனை வரலாற்றில் பின் சென்றும் முன் சென்றும் காண்டல் வேண்டும். செம்மொழி கடந்த செம்மொழி உயர்தனிச் செம்மொழிகளின் சிறப்புக்கு அவற்றின் சொல்வளம் மட்டும் காரணமன்று. அச்சொல் வளம் வேர்ச்சொற்க ளடிப்படையாக, சொற் குடும்பங்களாக வகைப்படுவதே அவற்றின் தனித் சிறப்பு ஆகும். இச் சிறப்பை இலத்தீனம், கிரேக்கம், சமற்கிருதம், அரபு, பாரசீகம் ஆகிய எல்லா உயர்தனிச் செம்மொழிகளிலும் தமிழிலும் காணலாம். உயர்தனிச் செம்மொழிகளுள் மாதிரிக்காக சமற்கிருதத்தை எடுத்துக் கொள்வோம். இதில் தாண்டுதல் (க்ரம்) என்ற பொருளுடைய ஒரு வேர்ச் சொல்லிலிருந்து, கடக்கிறான் (க்ரமதி), எட்டு, படிமுறை (க்ரமம்), படிப்படியாக (க்ரமேண), குறும்பு (அக்ரமம்), தகாத்தனம் (அதிக்ரமம்), வெற்றி (விக்ரமம்), வீரச்செயல் (பராக்ரமம்), முன்னேற்றம் (க்ராந்தி), கதிரவன் திசை முனைப்பு (சங்க்ராந்தி) முதலிய பல சொற்கள் தோன்றி ஒரே சொல் குடும்பமாக இயங்குகின்றன. இப்பண்பு தமிழிலும் உண்டு. மற்ற உயர்தனிச் செம்மொழிகள் தாண்டி மிகுதியாக உண்டு. கல் (பாறைத் துண்டு) என்ற தமிழ் வேர்ச் சொல் அல்லது பகுதி கல்லுவது (தோண்டுதல்), கலித்தல் (தோன்றுதல், கணீரென ஒலித்தல், உணர்ச்சி மிகுதல், மிகுதல், நுரைத்தல், உவர்நீரில் உப்புத் தோன்றுதல், செம்பு முதலியவற்றில் மாசு தோன்றுதல்), கலி (உணர்ச்சி மிகுதி, உணர்ச்சித் தெய்வமாகிய சனி, உணர்ச்சிப் பாடல்), கற்றல் (ஆழ்ந்தாராய்தல்) கற்பித்தல் (படிப்பித்தல்), கற்பனை (படித்தவர் இட்டுக்கட்டும் எண்ணக் கோட்டை), கல்லூரி (கல்வி நிலையம்), கல்வி (படிப்பு), கலை (கற்றவர் திறமை காட்டும் துறை; உருத்திரிபு உண்டு பண்ணு என்னும் ஏவல்)களை (உணர்ச்சிப் பொலிவு, தானாக வளரும் வளர்ச்சி, விலக்கு என்னும் ஏவல், தொலைத்துவிடு, தொலைந்துபோ, விலக்குதல் வேண்டும் பண்பு உணர்ச்சி மிகுந்து சோர்வுறு) முதலிய எண்ணற்ற சொற்களைத் தோற்றுவித்துச் சொற் குடும்பமாக இயங்குகின்றது. தமிழில் வேர்ச் சொற்கள் சொற் குடும்பமாக விரிவுறுவதுடன் நிற்ப தில்லை. வேர்ச் சொற்கள் சொல் திரிந்தும் பொருள் திரிந்தும் மாறுபடுவதால், இன வேர்ச் சொற் குடும்பங்கள் உண்டாகின்றன. இவற்றின் வழியாகப் பல சொற் குடும்பங்கள் சேர்ந்த சொற் குலங்கள் காணப்படுகின்றன. போதிய அளவில் ஆராய்ந்தால் தமிழின் எல்லாச் சொற் குலங்களும் ஒரே சொல் இனமாக, அதாவது அடிப்படை மொழியினச் சொற்களாக அமையக் கூடும் என்னலாம். இனச் சொல் தொகுதி தமிழ்ச் சொற்கள் யாவுமே ஓரினச் சொற்றொகுதியாக அமைந்திருக்கக் கூடும் என்று தமிழர் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே கருதியிருந்தனர் என்னலாம். ஏனெனில், எல்லாச் சொற்களுக்கும் மொழியினத்தின் உள்ளம் கருதிய சுட்டுக் காரணம் ஒன்று உண்டு என்ற கருத்தை உலகமொழிகளுள் முதன்முதலாக, பின்னாள்களில்கூட எவரும் கனவு காணாத முறையில் தொல்காப்பியர் குறித்துள்ளார். “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே” என்ற சூத்திரம் இதைக் காட்டுகிறது. இஃது ஒரு குறிக்கோள் மட்டுமன்று. இதன் வழி தமிழர் அத்தொல் பழங்காலத்திலேயே பாரிய மொழி நூலாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர் என்றும் எண்ண இடமுண்டு. ஏனெனில், அத்தகைய ஒரு கடு முயற்சியின் பயனையே அடுத்த தொல்காப்பியச் சூத்திரம் தெரிவிக்கிறது. “மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா” என்பதே அது. தொல்காப்பியர் முன்னோரும் அவர் காலத்தவரும் அவரும் சொற்பொருட் காரணத்தை முழுதும் காண அவாவினர். முயன்று ஓரளவு வெற்றியும் கண்டனர். ஆனால், இதில் தொல்காப்பியர்கூட முழுவெற்றி காணவில்லை. பகுத்தறிவு நூலாரின் மரபு வழாமல், அத்தோல்வியையும் அதன் பயனாக ஏற்பட்ட நம்பிக்கை யையும் அவர் மேற்கண்ட சூத்திரத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். “சொற்கள் எல்லாவற்றின் காரணமும் தெரியவில்லை” என்று மட்டும் அவர் கூறவில்லை. “வெளிப்படையாகத் தோன்றாது, மறைவாகவே உள்ளது. போதிய அறிஞர், போதிய அளவு முயற்சி செய்தால் காணக்கூடும்” என்றே பதிவு செய்துவிட்டுச் சென்றார். தமிழர் மொழிநூல் மரபு தொல்காப்பியர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து தமிழ் மொழி நூலறிஞர் பலர் மொழி முதற்காரணம் அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நம் அணிமைக் காலத்திலேயே மாகறல் கார்த்திகேய முதலியார் ‘சுல்’ என்ற வேர்ச் சொல்லடியாகவே எல்லாத் தமிழ்ச் சொற்களும் மட்டுமன்றி, தமிழ்வழி எல்லா உலக மொழிச் சொற்களுமே தோன்றின என்று காட்ட முயன்றார். ஈழத்தறிஞர் அருள்திரு ஞானப்பிரகாசர் அ, இ, உ என்னும் சுட்டுடன் எ என்னும் வினாவும் சேர நான்கெழுத்திலிருந்தே எல்லாத் தமிழ்ச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் வந்ததாகக் காட்ட முனைந்துள்ளார். சேலம் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் தேவநேயப் பாவாணர் அவர்கள் ‘முதல் தாய் மொழி’ என்னும் நூலில் அ,இ,உ எனும் முச் சுட்டிலேயே மூல முதல்வேர்ச் சொற்களைக் காட்டப் புகுந்து, அவற்றினடிப்படையிலே சொற்களை வகுத்துத் தொகுத்துள்ளார். தனித் தமிழியக்கத் தந்தையாகிய மறைமலையடிகளாரும் தொல்காப்பியர் மரபை ஏற்றார். முகம், முனைப்பு, முந்து, முகடு முதலிய சொற்களுக்கு ‘முன்’ என்பதே வேர்ச்சொல் என்று கொண்டார். குடம், குவளை, குழைவு, குனி, கூன், கூனை ஆகிய சொற்களுக்கும் இதுபோல் வளைவு என்று பொருள்படும் கு, கூ வேர்ச்சொற்கள் எனக்கொண்டார். எல்லாத் தமிழ்ச் சொற்களும் ஓரின மொழிச் சொல் தொகுதியே என்ற கருத்தை நோக்கியே யாராய்ச்சிகளும் சென்றன. தொல்காப்பியர் கால முதலேயுள்ள தமிழரின் பழைமை வாய்ந்த மொழிநூல் சார்ந்த இந் நீள்மரபு இன்னும் ஒரு கோட்பாடாக வளர்ந்து வருகிறதேயன்றி, ஒரு முடிவாய்விட வில்லை. ஆனால், தொல்காப்பியர் காலத்திலேயே அது கோட் பாட்டெல்லை கடந்து சொற்குடும்பம் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுவிட்டது என்னலாம். மேலும் தமிழ் இலக்கணத்தின் வளர்ச்சியில் நாம் இம்மொழி நூல் கருத்தில் உயிர்ப்பைக் காணலாம். வேர்ச் சொற்கள் வேர்ச் சொற்கள் காண முயன்ற முதல் மொழியினம் எது என்று இன்று திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஆனால், பழங்காலத்திலிருந்து மூன்று மொழியாளர் மூன்று வகையில் அதைக் காண முயன்றுள்ளனர். எபிரேய, அராபிய இனத்தவர் அம்மொழிகளின் இயல்பைக் கூர்ந்து கவனித்து, சொற்களில் (கிதாப்-புத்தகம்; குதுப்-புத்தகங்கள்; காதிப்-எழுத்தாளன் என்பன போன்றவற்றில்) மெய் மாறாது உயிர் மாறுவது கண்டு, மெய் ஒலிக் கூட்டையே (க்த்ப் அல்லது கதப) வேர்ச்சொல்லாகக் கொண்டனர். அத்துடன் உயிரொலிக்கு மூல மெய் என்று இருந்ததாக அவர்கள் கொண்டதனால், மூன்று மெய் இல்லாத சொற்களிலும் வலிந்து மூன்று உண்டுபண்ணிக் கொண்டனர். ஏனெனில், பெரும்பாலான சொற்களில் மூன்று மெய்கள் இருந்தன. (எ-டு இல்ம் கல்வி என்பதில் அலம, பாத்-பிற்பாடு என்பதில் ப அத வேர்ச் சொற்கள்; இரண்டிலும் அ உயிரன்று, உயிர்மெய் என்பது கவனிக்கத் தக்கது.) சமற்கிருதவாணர் எல்லாச் சொற்களுக்கும் வினை வடிவிலேயே வேர்ச்சொல் காணமுடியாது, ஒரே உயிரெழுத் தமைந்த ஓரசையாக அதைப் பிரித்தெடுத்தனர். உயிர்களிலும் கூடியமட்டும் ‘அ,இ,உ’ என்ற அடிப்படை உயிரொலிகளையும் அதற்கினமான ரு, லு என்ற குற்றியலுகரம் சார்ந்தியங்கும் ரகர லகரங்களையுமே அவர்கள் வேர்ச்சொல் வடிவாகக் கொண்டனர். வேர்ச்சொல் நீங்கிய சொற்பகுதிகளை உருபுகள் (பிரத்யயங்கள்) என வகுத்தனர். அராபியரும் சமற்கிருதவாணரும் வகுத்த முறை செயற்கை முறை. ஏனெனில், வேர்ச்சொற்கள் அவர்கள் கண்டாக்கிக் கொண்டவை. மொழியில் இயல்பாக உள்ள சொற்களல்ல. ஆனால், பண்டைத் தமிழர் இயற்கைச் சொற்களையே வேர்ச்சொற்களாகத் தேடினர். அவ்வேர்ச் சொற்கள் சொல்லின் மூல உறுப்பாதலால், அதனைப் பகுதி (பகுத்துக் காண்பது, அதாவது கூறு அல்லது உறுப்பு) என்றனர். சமற்கிருதத்துக்குப் பாணினியும், அரபு மொழிக்கு அம்மொழி இலக்கண நூலாரும் செயற்கை வேர்ச் சொல்லே நாடினதால், கிட்டத்தட்ட மொழியின் சொற்கள் யாவற்றுக்கும் வேர்ச்சொற்கள் காட்ட முடிந்தது. சிறப்பாக, மொழி நூல் உணர்வோ, மொழி மரபுணர்வோ அற்றவராகப் பாணினி விளங்கியதனாலும், சம°கிருதம் பேச்சு வழக்கற்ற செயற்கை மொழியாக வளர்ந்ததாலும், அவர் மனம்போல எந்தச் சொல்லுக்கும் செயற்கை வேர்ச்சொல் ஆக்க முடிந்தது. வெளியுலகில் இன்று சமற்கிருதத்தின் வேர்ச்சொல் முயற்சியே உணரப்பட்டுள்ளது. அதுவே முதன் முதல் முயற்சி என்றும் கருதப்படுகிறது. ஆனால், இது சரியான முடிபன்று. தமிழ் மரபும் தொல்காப்பிய மரபும் உலகில் உணரப்பட்டால், பாணினிக்குத் தூண்டுதல் தந்த மரபு தொல்காப்பியர்க்கும் முற்பட்ட, தமிழ் மரபே என்பது தெரியவரும். தொல்காப்பியர்க்கு முற்பட்ட, தொல்காப்பியர் காலத் தமிழ் மொழி நூல் மரபு படிப்படியாக மறக்கப்பட்டுத் தளர்வடைந்த படிகளையே பாணினியும் சமற்கிருத மரபும் காட்டுகின்றன என்னலாம். பாணினிக்குப் பிற்பட்ட நன்னூலார் தொல்காப்பிய மரபை மேலும் பிழைபட உணர்வது இதனைச் சுட்டிக் காட்டும். மேலை மொழிநூல் முறை மறைமலையடிகள், மாகறல் கார்த்திகேய முதலியார், ஈழத்து அருள்திரு ஞானப்பிரகாசர், சேலம் தேவநேயப் பாவாணர் ஆகியோர் மரபு மேலீடாகப் பார்ப்பவர்களுக்குத் தொல்காப்பிய மரபுக்கும் மேலை மொழி நூல் மரபுக்கும் மாறுபட்டதாகத் தோன்றக்கூடும். ஆனால், அவர்கள் முயற்சி உண்மையில் இரு மரபுகளின் இணைப்பாகவே வளர்ந்து வருகிறது. தொல்காப்பியர் காலம் முதல் தமிழர் முழுச்சொல் லாகவே வேர்ச் சொற்களைத் தேடினர். இது கிட்டாத இடத்தில் அவர்கள் பகுதி, விகுதி என்ற சொற்களை வழங்கவே தயங்கினர். எடுத்துக்காட்டாக வந்தமை என்ற சொல்லில் ‘மை’ பண்பு சுட்டிய தொழிற் பெயர் விகுதி என்று தமிழ் இலக்கண நூலார் கூறத் தயங்கமாட்டார்கள். பொன்மை, தன்மை என்ற விடங்களில் அதனைப் பண்புப் பெயர் விகுதி என்று கூறவும் தயங்க மாட்டார்கள். ஆனால் செம்மை, சிறுமை ஆகிய சொற்களில் மை ஈறு என்றனர். மை விகுதி என்று கூறத் தயங்கினர். விழிப்பு என்ற சொல்லில் ‘பு’ தொழிற் பெயர் விகுதி என்றனர். பொற்பு என்ற சொல்லில் அது பண்புப் பெயர் விகுதி என ஒப்புவர்; ஆனால் கறுப்பு என்ற சொல்லில் அவ்வாறு குறிக்க மறுப்பர். காரணம் பண்புப் பெயர்களில் வேர்ச்சொல் இயற்கைச் சொல்லாக வரையறுக்கப்படாமையேயாகும். செந்தமிழ் என்பதில் முதற்பகுதி ‘செம்’ என்று கூறல் எளிதாயினும் செவ்வலரி என்றவிடத்தில் அதைச் ‘செவ்’ என்றே கூறத் தகும். ம, வ இரண்டுக்கும் இடைப்பட்ட ‘மூக்கியல் மகரம்’ வேர்ச் சொற்பகுதி என்று இன்றைய மொழி நூலார் கூறிவிட முடியும். பொற்பு, பொலிவு என்ற இரு பண்புப் பெயர்களிலும் இவ்வாறு பொன், பொல் என்ற இரு வேர்ச்சொல் திரிபுகள் உள்ளன. மூலவேர்ச் சொல்லில் இறுதி மெய் ல், ன் இரண்டுக்கும் இடைப்பட்டது. அதாவது மூக்கியல் லகரம் என்று இன்றைய மொழிநூலார் ஒலி மாறுதலறிந்து கூறமுடியும். மெல்யாழ், மென்கரும்பு என்பதிலும் இவ்வாறே வேர்ச்சொல்லின் லகரம் மூக்கியல் லகரம் என்று கூறலாம். யான், என் என்ற மாறுபாடும், யாறு, ஆறு போன்ற திரிபுகளும் மூலத் திராவிட மொழியில் ஆ, ஏ ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஓர் ஒலி இருந்ததையே காட்டும். இஃது ஆங்கிலத்தில் மிகப் பொதுவாக வழங்கும் (ய என்ற எழுத்தின்) ஒலி ஆகும் (குறில்: உயயீ, அயn; நெடில்: கயசை, ளாயசந) மொழியின் ஒலித்திரிபு, ஒலி ஒப்புமை, இனமொழி ஒப்புமை ஆகியவற்றின் மூலம் இயற்சொல்லல்லாத வேர்ச் சொல்லில் தமிழர், ஆராய்ச்சி இப்போது முன்னேற முடிகிறது. இது பாணினியின் மொழி நூற்பண்பற்ற செயற்கை முயற்சியன்று; இன்னும் முழுநிறைவுறாத முதிரா மொழி நூற்பண்பே யாகும். ஒரு பொருட் பல சொற்கள் இடைக்காலத் தமிழ்,சமற்கிருதப் புலவர்கள் ஒரு பொருட் பல சொற்களின் வளத்தில் எவ்வளவோ பெருமை கொண்டார்கள். இது புரியக்கூடியதே. ‘எங்கள் மொழியில் ஆனைக்கு அறுபது சொற்கள் உண்டு. எருமைக்கு இருபது சொற்கள் உண்டு’ என்று தமிழ்ப் பற்றாளர் ஒரு புறமும், சமற்கிருதப் பற்றாளர் மற்றொரு புறமும் போட்டியிடுவதுண்டு. உண்மையில் உலகின் வேறெம் மொழிகளையும்விட இந்த இரண்டு மொழிகளும் இந்த வகையில் போட்டியற்ற சிறப்புடையவை என்பதில் ஐயமில்லை. உலகின் மற்றப் பண்டை மொழிகளோ அல்லது இக்கால மேலை உலக, கீழை உலக மொழிகளோ, எதுவும் ஒரு பொருட் பல சொல் வளத்தில் அவற்றின் முன் நிற்க முடியாது, அருகே வரவும் முடியாது! இவ் வளத்தைக் காட்டவே, அல்லது அதை எழுத் தாளர்க்கு அறிமுகப்படுத்தவே இரு மொழிகளிலும் நிகண்டுகள் எழுந்தன. உலகில் எம்மொழியிலும் சொல் தொகுதியோ, அகர வரிசைகளோ ஏற்பட்டிராத, கருவிலும் கனவு காணப்பட்டிராத அந்நாளில் செய்யப்பட்ட இம்முயற்சி, மிக மிகப் போற்றுதற் குரியதே யாகும். இன்று இது மிகவும் பயன் தருவதுமாகும். இரு மொழிகளிலும் இம் முயற்சியில் முனைந்தவர் சமற்கிருதப் பற்றாளராகவே காணப்படுகின்றனர். ஆயினும், இதில் முந்திக்கொண்டவரும் முனைப்பாக நின்றவரும் தமிழரே என்னலாம். ஏனெனில், நாம் அறிந்தவரை சமற் கிருதத்தின் முதல் நிகண்டு 12-ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்டதாகத் தெரியும் அமரமேயாகும். தமிழிலோ அதற்கு முற்பட்டே திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி நிகண்டு ஆகியவை எழுந்தன. அதன் பின்னர் நம்நாள் வரை இயற்றப் பட்டனவும் பல. தவிர சோதிடம், மருத்துவம் ஆகியவற்றுக்கென அமைந்த கலைச்சொல் அல்லது துறைச்சொல் நிகண்டுகளும் பல. ‘ஒரு பொருட் பல சொல் வளம் உண்மையில் மொழிக்கு வளம் தருவதா, வீண் சுமையா’ என்று இன்று மொழியறிஞர் கேள்வி எழுப்புகின்றனர். அடிப்படை மொழி இயக்கத்தை மனத்தில் கொண்டு நோக்கினால் இது பெருமைக்குரியதாகலாம். வளமாகாது என்றே சொல்லத் தகும். ஆனால், இங்கும் தனித் தமிழ் இயக்கம் தமிழில் புது வளமே காண்கிறது. தேவநேயப் பாவாணர் சொல்வள ஆராய்ச்சி சொல்லாராய்ச்சி மொழிநூல் சார்ந்தது. சொற் பொருளாராய்ச்சி இலக்கியம் சார்ந்தது. ஆனால், சொற்பொருள் வரலாற்றாராய்ச்சி இரண்டுக்கும் இடைப்பட்டது, இரண்டுக்கும் உரியது. இதில் கோவையாகக் கருத்துச் செலுத்திய முதல் தமிழ் மொழியறிஞர் தேவநேயப் பாவாணரேயாவார். வாங்குதல் என்ற சொல் இன்று பெறுதல், விலைக்குக் கொள்ளுதல் என்னும் பொருளுடையது. முன்னதே சற்றுப் பழைமையுடையது. ஆனால், சங்க காலப் பொருள் நீண்டு வளைதல் என்பது. பெறும்போது கை நீண்டு வளைவதாலேயே வாங்குதல் பெறுதல் என்னும் பொருள் பெற்றது. ‘அகலுதல்’ என்ற சொல் விரிதல், விலகுதல் என்ற இரு பொருளும் உடையது. அகன்ற என்னுமிடத்து முன்னைய பொருளும், அகன்றான் என்னுமிடத்துப் பின்னைய பொருளும் மட்டும் இன்று வழங்குகிறது, எல்லா இடத்தும் முன்னைய பொருளே முந்தியது என்று பழைய இலக்கியங்கள் காட்டுகின்றன. இத்தகைய பொருள் மாறுபாடுகளைப் பொருள் விரித்தல், சுருங்குதல், இறத்தல், இழிதல், பருத்தல், நுணுகுதல் என விரித்துக் காட்டுவார் பாவாணர் தேவநேயர். பேராசிரியர் அறிவு முனைவர் மு. வரதராசனாரும் இவற்றைக் கூர்ந்துணர்ந்து விளக்கியுள்ளார். இவ்வகைகளால், பண்டைத் தமிழில் ஒரு பொருட் பல சொற்கள் முற்றிலும் ஒரே பொருள் பல சொற்களல்ல என்று அவர் காட்டியுள்ளார். தமிழர் அறிவுப் பண்பும் கலைப்பண்பும் மேலோங்கியிருந்த காலத்தில், அவை தந்த நுண்பொருள் வேறுபாடுகளை அவர் சுட்டிக்காட்டிப் புத்தொளி தந்துள்ளார். எடுத்துக் காட்டாக, சொல்லுதல் என்ற வினைக்கே தமிழில் செப்புதல், கூறல், இயம்பல், பகர்தல், உரைத்தல், கிளத்தல், நவிலல், நுவலல், புகலல், பகர்தல், விளம்பல், கழறுதல், சாற்றுதல், அறைதல், பறைதல், விளக்கல் முதலிய எண்ணற்ற சொற்கள் உள்ளன. நிகண்டுகள்கூட இத்தகைய தமிழ்ச்சொல் வளங்களை விளக்கச் சிறிதும் போதமாட்டா. அருஞ் சொல்லிலும் சமற்கிருதச் சொல்லிலுமே அவை குழைந்து நெளிந்தன. நாளதுவரை வெளிவந்துள்ள அகர வரிசைகளும். சிறப்பாக வெள்ளைய ரல்லாத நம் தமிழர் வெளியிட்ட அகர வரிசைகளும் எக்காரணத்தாலோ தமிழ் மொழிக்கு அகர வரிசை என்று கூறத் தக்கவையாய் அமையவில்லை! வேறு எந்த மொழிக்கு அகர வரிசைகள் என்பதையும் பராபரம்தான் அறிதல் வேண்டும்! ஒரு பொருட் பல சொற்கள் ஒவ்வொன்றும் உண்மையில் ஒரு நுண் கருத்தை, கருத்து வேறுபாட்டைக் குறிப்பதே என்று பாவாணர் அவர்கள் திறம் பட எடுத்துக் கூறியுள்ளார். நுட்ப வேறுபாடுகள் கூறுதல் வகுத்துரைத்தல், கூறுபடுத்திச் சொல்லுதல் ஆகும். விளம்பல் விளம்பரப்படுத்தல் ஆகும். விளம்பரம் விளம்பு என்பதன் தொழிற் பெயரே. பகர்தல் கூறியதைக் கூறல். பகர்ப்பு எடுத்தெழுதிய படி ஆதல் இதனாலேயே. கழறுதல், அறைதல் மறுப்பை மறுத்து அழுத்திக் கூறுதலாகும். சாற்றுதல் முறைப்படி கூறல். இயம்பல் இசைப்பட ஒலித்தல். இவை போல்வன பிறவும் காண்க. ஈதல், தருதல், கொடுத்தல் என்ற முச்சொல் மரபின் நுட்ப வேறு பாடுகளைத் தொல்காப்பியர் சுட்டிக் காட்டியுள்ளார். மரபுடன் பொருள் மாறுபாடும் உண்டு என்று பாவாணர் காட்டியுள்ளார். ஈதல் பகிர்ந்து கொடுத்தல். தருதல் வரவினம். கொடுத்தல் செலவினம். தமிழ் ஒரு பொருட் பல சொல்வளம் இங்ஙனம் உண்மையில் தமிழர் நுண்ணறிவு வளர்ச்சியின் விரிவு காட்டும் கருத்து வளக் குறியீடேயாதல் காணலாம். இடைக்காலத் தமிழர் இவ்வுயர் பண்பின் பயனைப் பெரிதும் இழந்து விட்டனர். துறைமுக நகரத்தின் பெயராகிய பட்டினம் பட்டணமாகி நகரைக் குறித்தது. நகரமோ பெரிய பட்டணம் என்று முறைபிறழ உணரப்படுகிறது. ஆராய்ச்சித்துறை, அறிவுத்துறை என்று பொருள்பட்ட சீரிய சொல் நூல் என்பது. அதற்குரிய பாவாகவே நூற்பா இயன்றது. அதன் வகைகளே பனுவல், பட்டாங்கு என்பன. இச்சொல் நுட்பமும் நயமும் பண்பும் கெட்டு ; ஏடு, புத்தகம் என்ற சிறு பொருளும் பருப்பொளும் கொண்டுள்ளது. பகுத்தலின் மறு படிவம் பாத்தல் ; பாத்தீடு பாத்து இடுதல். அதாவது பங்கிட்டு வழங்குதலே யாகும். பாதுகாத்தல் என்ற சொல்லில் ‘பாது’ என்பது ‘பாத்து’ என்பதன் மரூஉவே. விடு, கொடு என்பன விழு, கொள் என்பவற்றுடன் ‘து’ விகுதி பெற்ற பிறவினைப் பகுதிகளே. விழச்செய், பிறனொருவன் கொள்ளச் செய் என்பதே அவற்றின் குறிப்பு ஆகும். தனித்தமிழ் இயக்கம் தமிழின் வளத்தை மட்டுமல்ல, அதன் சீரிய உயர் பண்பையும் காட்டிவருகிறது. ஒரு பொருட் பல சொற்கள் இங்ஙனம் கருத்து வளத்திலும் கருத்து நுட்பத்திலும் சிறந்தவை மட்டுமல்ல. அவையும் தனித் தமிழின் ஒரு சில வேர்ச் சொற்களில் அடங்குபவையே யாதலால், அடிப்படை மொழிப் பண்பின் சிக்கனத்தை அவை இன்னும் பன்மடங்காகப் பெருக்குபவை ஆகும். மேலும் ஒரு பொருட் பல சொற்கள் தமிழர் பண்டைய அறிவு வளத்தை விளக்குவன. நிலம் நிலவுவது, நிலை பெற்றது என்ற கருத்தையும், உலகம் உலவுவது, இயங்குவது என்ற கருத்தையும் தரும். அதே சமயம் இவற்றின் மறு பெயர்களாக விளங்கும் குவலயம், வளாகம் ஆகியன அது வளைந்து வட்டவடிவம் அல்லது உருண்டை வடிவமானது என்ற கருத்தையும். ஞாலம் அது ஞால்வது உருண்டையாக வானவெளியில் தொங்குவது என்ற வானநூற் கருத்தையும் சுட்டுபவை ஆகும். ஆட்சி வகுப்பின் வேண்டா வெறுப்பு தனித் தமிழ் இயக்கத்துக்கு முதல் முதல் பேராதரவு தந்தவர்கள் தமிழ்ப் புலவர்களே. இஃது ஓரளவு இயல்பே. ஆனால், மற்ற மொழிநிலங்களின் தாய் மொழிப் புலவர்களை நோக்க இது முற்றிலும் இயல்பென்று கூறி விடுவதற் கில்லை. தமிழ் மொழியும் இலக்கியமும் நீடித்து வளர்த்த பண்புகளே புலவர் ஆதரவைத் தனித் தமிழ் பெறப் பெரிதும் காரணமாயிருந்தது என்னலாம். மேலும், இந்தியாவெங்கும் கல்வி கற்றவரும், கல்வித் துறையாட்சியாளரும் சமற்கிருதப் பற்றுமிக்க உயர் வகுப்பினரே யாவர். தமிழகத்திலும் அயல்மொழி கற்றவர்களிடையே அவர்கள் விழுக்காடு மிகுதியே. ஆயினும், ஊதியமும் ஆட்சியுயர்வும் தாராத மொழி என்ற வகையிலும், தமிழினத்துக்கு உயர் மதிப்பளிக்கும் மொழி என்ற வகையிலும், உயர் குடியினர் பொதுவாகவும், சமற்கிருதப் பற்றில் முனைத்த பார்ப்பன வகுப்பினர் சிறப்பாகவும் தாய் மொழிக் கல்வியை ஒதுக்கி வந்தனர். மேலும், அயல் மொழிக் கல்வியில்கூடப் பிற மொழியினங்களைப் பார்க்கத் தமிழர் மிகுதியாக வகுப்பு வேறுபாடற்ற சரிசம நிலையுடன் ஈடுபட்டுள்ளனர். தமிழ்ப் பற்றிலும், தமிழ்க் கல்வியிலும் புலமையிலும் இந்நிலை முனைப்பாகியுள்ளது. புலவர்கள் தனித் தமிழ்க்குப் பேராதரவு தர இந்தச் சமுதாயச் சூழ்நிலையும் ஒரு பெருங் காரணம் என்னலாம். மற்றத் தாய்மொழிகளின் கல்விபோலன்றி, தமிழ்க் கல்வி தமிழரிடையே பெரிதும் தமிழினத்தவர் கையிலேயே நீண்டகாலம் ஒதுக்கப்பட்டது தமிழின் தனிப் பண்பு வளரப் பெரிதும் உதவியுள்ளது. பத்திரிகை முதலிய ஆட்சித் துறைகளிலும் இந்நிலை ஏற்பட்டிருந்தால் மறு மலர்ச்சி இன்று நெடுந்தொலை சென்றிருக்கும் என்னலாம். புலவர் ஆதரவு பெற்றும் தனித் தமிழ் சிலகாலம் கடுமையான வாழ்வு மாள்வுப் போராட்டம் நடத்த வேண்டியிருந்நது. ஒருபுறம் புலவர் துறையில் இருந்த ஆதரவு மற்ற ஆசிரியர், பள்ளி கல்லூரி ஆட்சியாளர், பத்திரிகை உலகம், பல்கலைக் கழகங்கள், வானொலி, தொலைபேசி முதலிய பணித்துறை ஆட்சிக் குழாம் ஆகியவற்றில் இன்றுவரை கிட்டவில்லை. தனித் தமிழ் பொதுமக்கள் ஆதரவு பெற்றபின்கூட, ஆட்சியாளரிடையே இன்னும் மனமாறுதல் ஏற்படவில்லை. ஆனால், பொதுமக்கள் தொடர்புடைய பேச்சு மேடையும், அதனை யடுத்துப் பத்திரிகை உலகமும், புது எழுத்தாளர் உலகின் ஒரு பகுதியும் தனித் தமிழ் இயக்கத்தின் வெற்றி கண்டு, கொள்கையளவில் எதிர்த்துக்கொண்டே செயலளவில் வேண்டா வெறுப்புடன் அதற்கு விட்டுக் கொடுத்துவருகின்றன. இவ்வளவு எதிர்ச் சூழ்நிலைகளிடையே தனித் தமிழ் இயக்கம் வளர்ந்துள்ளது; வளர்ந்துவருகிறது. புலவர் ஆதரவு, மாணவர் மாணவியர் ஆதரவை ஒருபுறமும், பொதுமக்கள் ஆதரவை மறுபுறமும் இயக்கியுள்ளன என்பதே இதற்கும் காரணம் ஆகும். எளிய நடை தனித் தமிழியக்கத்தை எதிர்த்தவர்களும்கூடத் தம்மை அறியாமல் அதற்கு ஓர் உதவி செய்துள்ளனர். புலவர்கள் ஆதரவால், தனித் தமிழ் கடுநடையும் இலக்கிய நடையும் பேணி வந்தது. மாணவர் ஆதரவாலும் தமிழ்ப் பற்றில் முனைந்தெழுந்த இயக்கங்களின் சார்பில் எழுந்த பத்திரிகையாளர், எழுத்தாளர்கள் ஆகியோர் ஆதரவாலும், தோன்றிய தமிழ் இயக்கம் வலுப் பெற்றதுடன், எளிய நடைப் பக்கமாகவும் அது திரும்பிற்று. எளிய நடையின் போர்வையில் நின்று தனித் தமிழ் எதிர்ப்பாளர் ஒருபுறம் அதனை எதிர்த்தனர். அதே போர்வையில் புகுந்து பிறமொழிக் கல்வியால் உயர்ந்தவர் அம்மொழிகளில் எதிர்பார்க்க முடியாத ‘கல்லா எளிமை’யை இலக்கியத் துறை, அறிவுத் துறைகளில்கூடக் கோரினர். ஆனால், இதே எளிய நடை நல்ல தனித் தமிழ் எழுத்தாளர்க்கும் உதவிற்று. குடியாட்சி நாள்களில் பொதுவாகவும், அடிமைக் குடியாட்சி நாள்களில் சிறப்பாகவும் எளிய நடையே சிறந்த கருவி என்பதை அவர்கள் கண்டார்கள். எளிய நடையில் கலப்புமொழி வெல்லுமானால், அதே எளிய நடையில் தனித்தமிழ் இரட்டிப்பு மடங்கு வெற்றி தரும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். வேண்டுமென்று கடுநடை பயிலாத இடத்திலும், வேண்டு மென்று இலக்கியநடை பயிலாத இடத்திலும், தனித் தமிழே மிக எளிய நடை, தனித் தமிழே மிக இனிய இலக்கிய நடை என்பதும் தனித் தமிழ் எழுத்தில் பயின்ற எழுத்தாளர் கண்ட உண்மையாகும். நகர மக்கள் பேச்சைவிட நாட்டுப்புறப் பேச்சுத் தனித் தமிழ்ப் பண்பு மிகுதியுடையது. ஒருசிலராயினும் ஆட்சி வகுப்பினரான உயர் குடியினர் எனப்படுபவர் பேச்சிலுந்தான் கலப்புத் தமிழை மிகுதியாகக் காண்கிறோம். செல்வர் ஆகியவர் பேச்சிலும் மிகப் பெரும்பாலான பொதுமக்கள் பேச்சிலும் தாழ்ந்தவர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் பேச்சிலும் தனித் தமிழையே மிகுதியாகக் காணலாம். ஆகவே, தனித் தமிழ்த் தேசம் வளர்க்கும் இனத் தேசியத் தமிழ்; அதுவே குடியாட்சித் தமிழும் ஆகும் என்பது தெளிவு. இலக்கியத் தமிழும் மக்கள் தமிழும் தனித்தமிழ் இயக்கம் கண்ட, கண்டுவரும் கடைசிப்படி, தமிழ்கடந்தபடி. அதே சமயம் மொழிநூலார் தமிழகத்திலேயே இன்றும் காணவேண்டிய ஒருபடி ஆகும். பேசுகிறபடி எழுதுவது, எழுதுகிறபடி பேசுவது என்பது எந்த மொழியிலும் முடியாத ஒரு செயல். முற்றிலும் முடிவதாக அமைய வேண்டும் என்றும் இல்லை. ஆனால், பேசுபவன் அறிய எழுதுவது, எழுதுபவன் அறியப் பேசுவது என்பது முடியாத செயலும் அல்ல, விரும்பத் தகாத நிலையும் அல்ல; ஆனால், உலகில் பெரும்பாலான மொழிகளில் இஃது இன்று அரிதான செய்தி. ஆயினும் இரஷ்ய மொழி போன்ற ஒரு சில மொழிகள் இந்நிலையை அணுகியுள்ளதாக அறிகிறோம். சிறப்பாக டா°டாயெவ்°கி டால்°டாய் போன்ற இலக்கியக் கலைஞர் தாம் இயற்றிய எத்தகைய சீரிய இலக்கியத்தையும் பேசுபவர் உணரத்தகும் இனிய, எளியமுறையில் எழுதி அம்மொழியின் குடியாட்சிப் பண்பை வளர்த்துள்ளனர் என்று தெரியவருகிறது. தமிழில் இலக்கியத்தில் இல்லாத சொல், இலக்கணத்தில் குறிக்கப்படாத வழக்கு ஆகியவை மொழியில் பழம் பண்புடைய சொற்கள் அல்லவென்றும், அவை இருத்தல் தகாது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். உலக வழக்கில் அத்தகையவை இன்று உள்ளன என்பது வெளிப்படை. ஆனால், சில மொழி நூலறிஞர் நிகழ் காலத்தின் படிப்பினையை மறந்து, கம்பர் கால இலக்கியத்தி லில்லாத வழக்கு அவர் காலத்தில் இல்லை என்றோ, சங்க இலக்கியத்தில் இல்லாத வழக்கு சங்க காலத்தில் இல்லை என்றோ முடிவுகட்டிவிடுகின்றனர். இது முற்றிலும் தவறு என்பதை இலக்கியம் வாயிலாகவே காட்டலாம். இடைக்கால இலக்கியத்தில் வழங்காமல், இலக்கண விதியுமில்லாமல், இன்றுவரை உலக வழக்கில் உள்ள பெண்டாட்டி, மண்ணாங்கட்டி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலுள்ளன. தமிழிலக்கியத்தில் வழங்காத பல வழக்குச் சொற்கள் தமிழின மொழிகளான தெலுங்கு, கன்னட, மலையாளங்களிலும், வடபுலப் பண்படா மொழிகளிலும் உள்ளன. இவை இம்மொழிகள் தமிழிலிருந்து பிரிவதற்கு முன்னுள்ள சொற்கள். ஆகவே, இவை தமிழிலக்கியத்தைவிட எத்தனையோ மடங்கு பழைமையுடையவை ஆகும். பேச்சுத் தமிழின் வளம் இலக்கணம் இலக்கியம் கண்டியற்றுவது. இலக்கியம் உலக வழக்கை அடிப்படையாகக் கொண்டதே. ஆகவே, இலக்கிய இலக்கணத்துக்கு எழுத்து வடிவின் இயல்பான சிறப்பின்றி வேறு சிறப்புக் கிடையாது. தனித் தமிழியக்கத்தின் இன்றைய தலைவர்களான தேவநேயப்பாவாணர் போன்றோர் உலக வழக்காகிய பேசுந்தமிழின் சிறப்பறிந்து, தனித்தமிழ் எல்லைக்குள் அதனைக் கொண்டுவந்துள்ளனர். பேசும் தமிழ் உயிர்த் தமிழ்! இலக்கியத்தில் காண முடியாத வளம் அதற்குண்டு. எடுத்துக்காட்டாகத் தொழிலாளர் கருவிகள், வீட்டுத் தட்டுமுட்டுப் பொருள்கள், பழைமை வழக்குகள், திணை நில வழக்குகள் ஆகியவை இலக்கியம் சார்ந்த மொழிக்கும் மொழி நூலுக்கும் வளம் தருவன ஆகும். இத்துடன் வழக்கத்திலுள்ள சொற்கள் பொருள் தருவதுடன் உணர்ச்சியைத் தட்டி எழுப்பி, மரபுப் பண்பு பேணி, உயிர்த்துடிப்புடையனவாக இயலும். வருங்காலத் தமிழரின் கலைச்சொல் ஆக்கத்தில் தனித்தமிழின் இலக்கிய வழக்கு மட்டுமன்றி அதன் உயிர் முதல் வழக்கும் பேரிடம் பெறவேண்டும், பெறுவது உறுதி. தமிழ்ச் சொற்களே யன்றித் தொலைத் தமிழினச் சொற்களும் தொல் பழந்தமிழ்ச் சொற்குவையின் கூறேயாதலால், தக்கவழி பயன்படுத்திக் கொள்ளக் கூடியவை என்பதில் ஐயமில்லை. சமற்கிருதப் பற்றிலும் அயல் மொழித் தொடர்பிலும் அறிவிலும் மிகக் குறைந்த மக்கள் நாட்டுப்புற மக்களும், தாழ்ந்த குடியினராகக் கருதப்படும் இனப் பொது மக்களுமேயாவர். அவர்கள் பேச்சு நடை இன்றும் தனித் தமிழ் நடையாகவும், சங்க இலக்கியத்துக்கு மிகவும் அணிமை உடைய நடையாகவுமே உள்ளது. வருங்காலத் தனித் தமிழ் இயக்கம் தமிழையும் அவர்களையும் முன்னிலும் நெருக்கமுடைய தொடர்புடைய வராக்கும் என்று நம்பலாம். அப்போதுதான் அது மக்கள் தமிழ், தேசியத் தமிழ், குடியாட்சித் தமிழாக இயங்கும். அது தமிழ்க்கும் தமிழகத்துக்கும் உலகுக்கும் வளந்தரும் பொங்கற் பண்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கலாம். 7. முத்தமிழ் முத்தமிழ் முச்சங்க மரபுகள் தமிழகத்தின் மாண்ட மரபுகள்-‘மாண்ட’ என்ற சொல்லின் இரண்டு பொருள்களிலுமே மாண்ட மரபுகள் ஆகும். அவை தொடர்ந்த வாழ்வும் வளர்ச்சியுமற்றுப் போனவை மட்டுமல்ல. தமிழர் பெருவாழ்வுக் கால மாண்புக்கும் அவை மாளாச் சின்னங்கள் ஆகும். மறுமலர்ச்சி ஊழி அவற்றைப் புதுப்பிக்க அவாக்கொண்டுள்ளது. வளர்க்கக் கனாக் கண்டு வருகிறது. ஆனால், புதுப்பிக்குமுன் நாம் அவற்றின் மெய்ம்மையை வரையறுத்துணர்தல் வேண்டும். மாண்பை மதிப்பிடுதல் வேண்டும். இம் மரபுகளின் தடங்களும் எச்ச மிச்சங்களுமே நமக்கு இன்று மீந்துள்ளன. இந்த எச்ச மிச்சங்களிலிருந்து முழு மரபு களைப் புனைந்து காண்பது என்பது எளிதன்று. அவ்வகையில் நமக்கு இருதிறப்பட்ட இடர்கள் ஏற்பட வழி உண்டு. முதலாவதாக, நம் தமிழ்ப் பற்றார்வம், தமிழ்ப் புகழார்வம் அவற்றை மிகைப்படுத்திக் காட்டக்கூடும். அதே சமயம் இதற்கெதிரான ஒரு விளைவும் ஏற்படலாம். தன்மதிப்போ, தன்னம்பிக்கையோ அற்ற அடிமை மனப்பான்மை அயல் மொழிகளுக்குத் தரும் உரிமையைத் தாய் மொழிக்குத் தர மறுத்து விடலாம். தவிர, மரபிழந்து போன காலத்திய அயல் மரபுகள் தாய் மரபை மறைத்துவிட முடியும். அவை ஆராய்ச்சிக் கெதிரான சூழல்களை, மயக்க தயக்கங்களை, தப்பெண்ணங் களை உண்டுபண்ணலாம். அறியாமைகளை, அவநம்பிக்கைகளை வளர்க்கலாம். மறுமலர்ச்சியின் தமிழார்வமும் மெய்ம்மை யார்வமும் இவ்விரு திசை இடர்களையும் தவிர்த்தல் வேண்டும். வருங்கால வளத்துக்குரிய மெய்ப்புகழறிவும் மெய்க் குறைபாட்டு விளக்கமும் காணல் வேண்டும். முச்சங்க, முத்தமிழ்ச் சுவடுகள் மறுமலர்ச்சிக்கு முற்பட்ட காலம்வரை, அதாவது இருபதாம் நூற்றாண் டின் தொடக்கம் வரை, முச்சங்கம், முத்தமிழ் என்ற சொற்கள் இலக்கிய மரபின் அழகுச் சொற்களாக மட்டுமே இருந்தன. தேவாரக் காலத்திலிருந்து தமிழ்ப் புராணங்கள் காலம் முடிய (7முதல் 18ஆம் நூற்றாண்டு வரை) இலக்கிய ஏடுகள் யாவும் இருசொற்களையும் புகழ்பட வழங்கியுள்ளன. பாண்டியன் முச்சங்கம் வளர்த்த பண்பை அவை பாடின. சங்கத் தமிழ் முத்தமிழாய்ப் பொலிவுற்ற மாண்பை அவை பாராட்டின. இறையனார் அகப்பொருள் உரை நக்கீரரால் இயற்றப் பட்டதாகக் குறிக்கப் படுகிறது. ஆயினும், அது நமக்குக் கிடைத்துள்ள அளவில் ஏட்டுருவடைந்தது, ஆறாம் நூற்றாண்டிலேயே. முச்சங்கம், முத்தமிழ் என்ற அழகுச் சொற்களுக்கு அது கட்டுரை விளக்கம் அளித்துள்ளது. முச்சங்கம் என்பது, முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்ற மூன்று சங்கங்கள். முதலிரண்டு சங்கங்களும் கடல் கொண்ட பழந் தமிழகத்தில் நிலவின. கடைச்சங்கம் ஒன்று மட்டுமே தற்கால மதுரையில் நடைபெற்றது. முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்ற தமிழின் முத்துறைகள். இவையே, இந்த மரபுகள் பற்றி இறையனார் அகப் பொருள் உரைதரும் விளக்கங்கள். இரு மரபுகள் பற்றியும் அன்றுவரை புலவர்கள் அறிந்த செய்திகளின் அளவும் இதுவே. ஆராய்ச்சியின் உரைகல் வரலாறு, ஆராய்ச்சி என்னும் உரைகற்களில் இரு மரபுகளும் உரைக்கப்பட்ட காலத்தில், இவ்வழக்குத் தொடர்கள் வலிவிழந்தன. இஃது ஓரளவு இயல்பே. ஏனெனில், இறையனாரகப்பொருளுரை தரும் கட்டுரை புராணங் கடந்த புனைவியல் தோற்றமுடையதாய் இருந்தது. அதன் ஆயிர பதினாயிர அளவான ஆண்டுக் கணக்கு, வட்ட வட்டமான தொகைக் கணக்கு, அடுக்கடுக்கான சொற்கள், பகட்டார வாரமான பட்டியல்கள் ஆகியவை வரலாற்று நம்பிக்கையோ, மெய்ம்மைத் தோற்றமோ அளிப்பவையாய் இல்லை. தவிர, சங்க இலக்கியமோ, சிலப்பதிகாரமோ வெளிவாராத காலம் அது. ஏட்டுருவில்கூட அவை முற்றிலும் மறக்கப் பட்டு விட்டன. கிட்டத்தட்ட மாளும் நிலையிலேயே அவை எங்கெங்கோ புதையுண்டு கிடந்தன. ஒரு சிலர் அவற்றைத் தேடி அச்சுக்குக் கொண்டுவர நேர்ந்திராவிட்டால், மாண்ட இலக்கியங் களுடன் அவையும் மாண்டே போயிருக்கும் என்பதில் ஐயமில்லை. 19ஆம் நூற்றாண்டு, 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து பொதுமக்கள் மட்டுமல்ல. தலைசிறந்த ஆராய்ச்சி அறிஞர்கூட அவற்றைப் பற்றிய தகவலே இல்லாதவர் களாய் இருந்தனர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவை வெளிவரத் தொடங்கிய பின்னும், பொதுமக்கள் கவனத்தையோ, அறிஞர் கருத்தையோ அவை சிறிதும் ஈர்க்கவில்லை. இதற்கு அடிப்படை யான காரணம் தமிழ்மொழி இந்தியாவின் தாய்மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்டதே என்னலாம். எந்தத் தாய்மொழி இலக்கியமும் பழைமையானதல்ல என்றும், எந்தப் பழைமையும் 12ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாயிருக்க முடியாதென்றும், அக்காலக் கீழை உலக அறிஞர்களும் மேலை உலக அறிஞர்களும் கருதினர். தமிழகத்துக்கு வெளியே இன்னும் இந்நிலை மாறுபட்டு விடவில்லை. இக்காரணங்காளால் முச்சங்க வாழ்வு ஒரு கட்டுக்கதை என்று அந்நாள்களில் பொதுவாகக் கருதப்பட்டது. முத்தமிழ்ப் பாகுபாடும் ஓர் அழகுக் கற்பனை என்றே ஒதுக்கப்பட்டது. இன்றுகூடப் பலரால் அவ்வாறு ஒதுக்கப்பட்டே வருகிறது. சங்க வாழ்வு சங்க வாழ்வு ஒரு கட்டுக் கதையன்று என்பதைக் கடைச்சங்க நூல்களின் வெளியீடு மெய்ப்பித்தது. இறையனார் அகப் பொருளுரையின் தோற்றம் எதுவாயினும், அதன் ஒரு பகுதிக்கு அவை மறுக்க முடியாத சான்றுகள் ஆயின. “கடைச் சங்கத்தில் பாடப்பட்ட நூல்கள் நெடுந்தொகை நானூறு (அகநானூறு), குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன.” இஃது உரையிற் கண்ட கூற்று. முதற்சங்க, இடைச்சங்கப் பட்டியல் போலவே இதுவும் வட்ட வட்டமான ஆரவாரப் பெயர்களும் தொகைகளும் உடையது. ஆயினும், இறுதி நான்கு நூல்களையும், பதிற்றுப்பத்து, எழுபது பரிபாடல் ஆகியவற்றையும் தவிர மற்றவை யாவும் கிட்டத்தட்ட முழுவடிவிலேயே கண்டு வெளியிடப்பட்டுள்ளன. வியத்தகு முறையில் வட்டவட்டத் தொகைகளும் திட்ட வட்டப் பெயர்களும் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக இப்பகுதியிலே மெய்ச் செய்திகளாகவே உள்ளன. கற்பனைப் போலிகளாய் இல்லை! பட்டியல் மிகைப்பட்டதாகத் தோற்றினாலும் உண்மையில் குறைபட்டதே யாகும். திருக்குறளை உள்ளடக்கிய கீழ்க்கணக்கு நூல்கள் 18, பத்துப்பாட்டு ஆகியவை அதில் இடம்பெறவில்லை. சங்ககாலத்திய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களும் அதில் குறிக்கப் பெறவில்லை. தவிர, எழுபது பரிபாடலில் எழுபதும் முழுதுமில்லா விட்டாலும், மூன்றி லொரு பங்குக்கு மேற்பட்ட பாடல்களும், பதிற்றுப்பத்தில் பத்துப் பத்துகளில் முதலும் ஈறும் நீங்கலான எட்டுப் பத்துகளும் நமக்கு வந்து சேர்ந்துள்ளன. வெளிவந்த நூல்களின் விடுபட்ட சில பகுதிகளும் சிதைவுற்ற சில நூல்களும் இடைக்கால உரையாசிரியர்கள் மேற்கோள்களிலிருந்தும், புறத்திரட்டுப் போன்ற இடைக்காலத் தொகுப்புகளிலிருந்தும் எடுத்து நிரப்பப்பட்டுள்ளன. இறையனாரகப் பொருளுரையிற் காணாத சங்க காலத்துப் பாடல் நூல் பகுதிகள்கூட அதில் இருக்கின்றன. முத்தொள்ளா யிரமும் தகடூர் யாத்திரையும் அவற்றுட் சில. முன்னது மூவேந்தரையும் பாடிய 2700 அல்லது 900 பாடல்களைக் கொண்டது. அதில் நமக்கு வந்து சேர்ந்துள்ளவை, ஒரு நூறு பாடல்களே. பின்னது சங்ககாலப் போர் ஒன்றின் மாளாச் சித்திரத்தில் ஒரு சில கீற்றுகள் மட்டுமே! இந்நிலையில் முச்சங்க மரபில் கிட்டாத நூல்கள் நமக்கு இன்னும் வந்து எட்டாத, அல்லது வழக்காறு குன்றிப் புறக்கணிப்பால் அழிந்துபட்ட நூல்களே என்று கொள்வதில் தவறிருக்க முடியாது. இடைக்கால நூல்களிலேயே உரையாசிரியர்களின் மேற்கோள்கள், குறிப்புகள் மூலம் இறந்துபட்டவை என்று கட்டாயமாக அறியத்தக்க நூல்கள் பலப்பல. அவற்றின் ஒரு பட்டியலை அறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள் தொகுத்துள்ளார்கள். அந்நூல்களின் தொகை ஆயிரத்துக்கு மேற்பட்டது என்று அவர் கூறுகிறார்.* முச்சங்க வாழ்வில் இங்ஙனம் கடைச் சங்கத்துக்கு மறுக்க முடியாத ஆதாரம் ஏற்பட்டுள்ளது. மறைமலை ஊழி மாண்ட தமிழின் புகழை மாளாத் தமிழ்ப் புகழாக்கிய தலைவர்களுள் மாண்ட புகழ்க்கு இலக்காகிய மறைமலை யடிகளே முதல் வரிசையில் முதலிடம் பெறத்தக்கவராவார். சங்க இலக்கிய ஏடுகளும் சிலப்பதிகாரமும் வெளியிடப்பட்ட பின்னும் கேளாக் காதினராகவும் காணாக் கண்ணினராகவும் இருந்த தமிழர்க்குக் கேட்கும் காதையும் காணும் கண்ணையும் அளித்தவர் அவரே என்னலாம். ஈழத்துத் தமிழகச் செல்வர் சி. வை. தாமோதரம் பிள்ளை, தென்னாட்டுத் தமிழகச் செல்வர் முனைவர் உ.வே. சாமிநாதய்யர், ச.பவானந்தம் பிள்ளை முதலியோர் ஏடுகளைத் தந்தனர். பதிப்பித்தனர். ஆனால், அவ்வேடுகளை உணரும் உணர்வையும், அவற்றின் மூலம் தமிழின் மெய்ப் பண்பாட்டை இடைக்காலப் போலிப் பண்பாட்டிலிருந்து பிரித்தறியும் பகுத்தறிவுப் பண்பையும் ஊட்டியவர் அடிகளேயாவார். அவர் காலம் மறைமலை ஊழி என்று சிறப்பித்துக் கூறத்தக்கது. ஏனெனில், அவர்க்கு முன்னைய இடைக்காலப் போலித் தமிழகம் உணராத வகையில், ஆனால், சங்க காலத் தமிழகமும் அதற்கு முற்பட்ட முத்தமிழ்க் காலத் தமிழகமும் உணரத் தொடங்கும் நிலையில், அது தமிழகத்தை மாற்றியமைத் துள்ளது. அதன் வழி வந்த மறுமலர்ச்சியூழி அதை இன்னும் மாற்றியமைத்து வருகிறது. புலவருலகின் புலமைக் கண்களுக்கு மறைமலையடிகளார் ஒரு சங்க இலக்கியக் கண்ணாடி மாட்டினார் என்னலாம். அக் கண்ணாடி மூலம் சங்க இலக்கியப் பண்பையும். சங்ககாலத் தமிழகப் பண்பையும் அவர் புலவர்களுக்கும் எடுத்துக் காட்டினார். புலவர்கள் மூலமாகப் பொது மக்களிடையே அவற்றின் மதிப்பை வளர்த்து, ஆர்வத்தை ஊட்டினார். அவ்வார்வமே மறைமலை யூழியை அடுத்து ஒரு மறுமலர்ச்சி யூழியைத் தொடங்கி வைத்துள்ளது. முச்சங்க மரபில் முதல் முதல் கருத்துச் செலுத்தி அதன் சீரிய தனித் தமிழ்ப் பண்பைக் கண்டுணர்ந்து நமக்கு எடுத்துரைத்தவர் பேராசிரியர் சுந்தரனாரேயாவார். அவர் இயற்றிய மனோன்மணிய நாடகத்தின் முகப்பில் இது பற்றிய தம் இரண்டகமற்ற தீர்ப்பை அவர்தம் அழகிய தாழிசை வண்ணங் களில் தந்துள்ளார். “பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ, எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே! வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள், உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி! மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள், கனஞ்சடையென்று உருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ!” என்ற அடிகள் அறிவுத் துணிவுமிக்க அவர் உள்ளத்திலிருந்து பீறிட்டெழுந்துள்ளன! பேராசிரியர் சுந்தரனாரும் அவர்பின் வந்த மறைமலை யடிகளாரும் பிற ஆராய்ச்சியறிஞரும் கால வரையறையற்றுக் கிடந்த தமிழ் இலக்கிய மரபுக்கு அடிப்படையான சில கால வரையறைகள் கண்டனர். கம்பராமாயணமும் பெரிய புராணமும் பெருஞ் சோழர் காலம். அதாவது 12ஆம் நூற்றாண்டுக்குரியன என்றும், தேவாரக் காலம் அதாவது அப்பர் சம்பந்தர் காலம், இதற்கு ஐந்து நூற்றாண்டுகள் முற்பட்ட பாண்டிய பல்லவப் பேரரசர் காலம், அதாவது 7ஆம் நூற்றாண்டென்றும்; கடைச்சங்க சிலப்பதிகாரக் காலம் கம்பர்க்கு ஆயிர ஆண்டுகளுக்கும், தேவாரத்துக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட மூவேந்தர்கள் காலம், அதாவது 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலமென்றும் அறுதி செய்யப்பட்டன. இந்த மூன்று காலத் தூபிகளையும் சார்ந்தே முன் பின்னாக எல்லாக் காலக் கணிப்புகளும் கட்டமைக்கப்படுகின்றன. ஆராய்ச்சியாளர் மயக்க தயக்கம் முச்சங்க வாழ்வு முழுவதுமே ஒரு கட்டுக்கதை என்ற வாதம் மறைமலை யூழியில் தகர்ந்தது. சங்க வாழ்வே தமிழர்க்கு இருந்ததில்லை என்றும் இன்று யாரும் வாதிப்பதில்லை. ஆயினும், கடைச்சங்க நூல்களை மட்டும் ஏற்று ஆராய்ச்சியாளர் வாளா அமைந்தனர். கடைச் சங்க நூல்கள் வெளிப்படுவதற்கு முன்பே தொல்காப்பியம் என்ற பண்டைத் தமிழிலக்கியம் தமிழகத்தில் நிலவி வந்துள்ளது. அது முச்சங்க மரபில் இடைச் சங்கத்தைச் சேர்ந்ததென்று குறிக்கப்பட்டுள்ளது. கடைச்சங்க நூல்களுக்கு அது முற்பட்டதென்பதும் ஏற்கப்பட்ட செய்தியே. இந்நிலையிலும் மூன்று சங்கங்கள் இருந்தன என்பதையோ, அவற்றின் கால அளவையோ ஆராய்ச்சியாளர் ஏற்காத நிலையிலேதான் சங்க மரபு நிலவிற்று; நிலவுகின்றது. தொல்காப்பியத்தையும், கடைச்சங்க இலக்கியத்தையும் முச்சங்க வாழ்வுக்குச் சான்றாகவே மறைமலையடிகள் கொண்டார். ஆனால், கடைச்சங்க வாழ்வை ஆராய்ச்சியாளர் ஏற்கும்படி நிலை நாட்டிய மறைமலையடிகள், முச்சங்க வாழ்வுபற்றிய தம் கருத்தை அவ்வாறு பிற அறிஞர் ஏற்கும்படி நிலை நாட்ட முடியவில்லை. இதற்கு அவர் முச்சங்க வாழ்வில் அகத்தியர் மரபை மறுக்க நேர்ந்ததே ஒரு முக்கிய காரணமாய் அமைந்த தென்னலாம். தொல்காப்பியத்துக்கு முற்பட்டதாக அகத்தியம் என்ற இலக்கணத்தை முச்சங்க மரபு குறிக்கிறது. அத்துடன் தொல்காப்பியம் இயல் தமிழ்க்கு மட்டும் இலக்கணம் என்றும், அகத்தியம் முத்தமிழ்க்கும் உரிய, தொல்காப்பியத்திலும் விரிவான முழுத் தமிழ் இலக்கணமென்றும் அம்மரபுரை கூறிற்று.* அகத்தியர் மரபு இவ்வாறு முச்சங்க மரபுடன் முத்தமிழ் மரபை இணைக்கிறது. சங்க இலக்கிய வெளியீட்டைப் போலவே, சிலப்பதிகார வெளியீடும் முத்தமிழ் மரபின் விளக்கத்துக்கு இன்றியமையாதது. அகத்தியர் மரபை மறுத்த மறைமலையடிகள் சிலப்பதி காரத்திலும் கருத்துச் செலுத்தத் தவறினார். இங்ஙனம் வியத்தகு முறையில், மறைமலையடிகள் முச்சங்க மரபை ஏற்று நிலை நாட்டினார். ஆனால், அதனை வலியுறுத்த உதவும் முத்தமிழ் மரபை மறுத்து, முச்சங்க மரபும் புறக்கணிக்கப்படுவதற்குக் காரணமானார். அகத்தியர் மரபில் ஏற்பட்ட ஒரு மயக்கமே இவ்விசித்திரச் சூழலுக்குக் காரணமாய் அமைந்தது. முச்சங்க மரபில் கண்ட அகத்தியர் மரபை உருத்தெரியா மரபாக்கிய பண்பு புராண அகத்தியர் மரபே. விழுதுகள் பல ஓடிய ஆலமரத்தில், எது தாய் மரம் என்று காண்பது அரிது. புராண அகத்தியர் மரபுடன் இணைந்து பின்னிய முச்சங்க அகத்தியர் மரபும் கிட்டத்தட்ட இந்நிலை அடைந்துள்ளது. மறைமலையடிகள் இவ்விரு மரபுகளையும் பிரித்துக் காணத் தயங்கியதனாலேயே, புராண அகத்தியர் மரபை மறுத்தபோது, முச்சங்க அகத்தியர் மரபையும் மறுக்க, மறக்கடிக்க நேர்ந்தது. புராண அகத்தியர் மரபு முச்சங்க மரபும் முத்தமிழ் மரபும் அகத்தியத்தைப் பற்றித் தரும் சான்றுகளை நாம் தனியாகக் கலப்பின்றிக் காண்டல் இன்றியமையாதது. ஏனெனில் பிற அயல் மரபுகளுடன் விரவியதனாலேயே அஃது உருத்தெரியா மரபு ஆகியுள்ளது. அகத்தியர் என்பது ஒரு புலவர் பெயர். அவர் செய்த நூல் அகத்தியம். அது இயல், இசை, நாடகம் என்ற முத்துறைத் தமிழ்க்கும் உரிய முழுத்தமிழ் இலக்கணம். அது தொல் காப்பியத்துக்கு முற்பட்டது. முதற் சங்க காலத்துக்குரியது. இவற்றையன்றி, அகத்தியத்தைப் பற்றியோ, அகத்தியரைப் பற்றியோ முச்சங்க முத்தமிழ் மரபுகளில் நாம் எதையும் காண முடியாது. முச்சங்க, முத்தமிழ் மரபுகள் தரும் இந்த அகத்தியர்மீது, வேத, புராண, இதிகாச மரபுகளுக்குரிய அகத்தியர்களைத் தமிழ்ப் புராணங்கள் ஒன்றாக்கிக் குழப்பின. இக்குளறுபடி போதாமல் தமிழ்ப் புராணங்கள் தாமாக வேறு புதுப் புராண மரபுகளையும் படைத்து, குழப்பத்தின் மேல் குழப்பம் உண்டுபண்ணின. வேத, இதிகாச, புராண, தமிழ்ப் புராண மரபுகளை நாம் வேறு பிரித்துத் தனித் தனியாகக் காண்போம். வேதகால முனிவருள் அகத்தியர் ஒருவர். புராண அகத்தியர் குடத்தில் பிறந்தவர்; பெருவிரல் அளவானவர்; கடலைக் குடித்தவர். இராமாயண அகத்தியர் பஞ்சவடிக்கருகில் வாழ்ந்தவர். பஞ்சவடி என்பது இன்றைய நாசிக் என்று கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் மேற்குக் கரையில் கன்னட நாட்டுக்கு வடக்கே மராத்தி அல்லது கொங்கணமொழி பேசப்படும் பகுதியில் உள்ளது. இராவணனை அழிக்கும்படி இராமனைத் தூண்டித் தெற்கே அனுப்பியவர் இந்த அகத்தியரே என்று கூறப்படுகிறது. தமிழ்ப் புராணங்களுள் தலைசிறந்தது திருவிளையாடற் புராணம். இத்திருவிளையாடற் புராண அகத்தியர் கயிலை யிலேயே வாழ்ந்தவர். அவரும் ஆரிய முனிவர். தமிழ்க் கடவுளுடன் வாழ்ந்தாலும் தமிழே தெரியாதவர். சிவ பெருமான் திருமணத்தின்போது, மணவிழாவின் பளுவால் வடக்குத் தாழ்ந்ததாம்; தெற்கு உயர்ந்ததாம்! ஆகவே, அகத்தியர் தெற்கே அனுப்பப்பட்டாராம்! இமய மலையைத் தாண்டி உயரமாக வளர்ந்திருந்த விந்தியத்தைக் கீழே அழுத்தித் தாழ்த்திவிட்டு வந்தாராம்! அகத்தியர் தொல்காப்பியர் கதையிணைப்பு கடைசிப் புராணத்துடன் தமிழ் மொழிக்கும் தமிழகத் துக்கும் ஒரு தொடர்பைக் கொண்டு ஒட்டினர் பிற்காலத்தார். தமிழ்ப் புராணங்களுள் ஒரு சிலவும் கம்பராமாயணமும் மராத்தி நாட்டில் பஞ்சவடியிலிருந்த அகத்தியரைத் தமிழகத்தில் பொதிய மலைக்குக் கொண்டு வந்து தமிழ் முனிவராக்கின. பிற தமிழ்ப் புராணங்கள் அகத்தியர் மரபை இன்னும் முனைப்பாகத் தமிழக நோக்கி வளர்த்தன. காவிரியைக் கமண்டலத்திலடக்கி அந்தப் பேராற்றைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்து ஓட விட்டவர் என்றன சில புராணங்கள். தமிழ்ப் புராண மரபிலேயே திருவிளையாடற் புராணம் அவரை வைகைக் கரைக்கும் பிற சில புராணங்கள் தாமிரவருணிக் கரைக்கும் பொதிய மலைக்கும் வேறு சில காவிரிக் கரைக்கும் கொண்டு வந்து சேர்த்தன! முச்சங்க மரபும் வாய்ப்பிட மறிந்து இக்குளறுபடியில் இரண்டு வகையாகச் சேர்க்கப்பட்டது. முதலாவது, தமிழ் தெரியாத அகத்தியர் சிவபிரானிட மிருந்து தமிழைக் கற்று, அத்தமிழைத் தென்னாட்டுக்குக் கொண்டுவந்து தமிழகத்தில் உலவவிட்டார் என்று புராண மரபு கூறிற்று. இங்ஙனம் தமிழ்க் காவிரியைப் போலவே தமிழ் மொழியும் ஆரிய அகத்தியன் தந்த பரிசு ஆக்கப்பட்டது. சிறிது, பொது அறிவின் மணமுள்ள ஆராய்ச்சிப் புராணிகர் கதையைச் சற்று மாற்றி விளக்கினர். அகத்தியர் சிவபிரானிடம் தமிழைக் கற்றுத் தமிழகத்தில் முதல் தமிழிலக்கணம் வகுத்தார் என்றோ, சிவபிரானிடம் தமிழிலக்கணம் கற்றே அதைத் தமிழகத்துக்குக் கொடுத்தார் என்றோ கூறினர். கடைசிக் கருத்தே தற்காலப் புராணக் கருத்தென்னலாம். மேற்குறிப்பிட்ட கதைகூட முத்தமிழ் மரபுடன் புராண மரபை நன்றாக ஒட்டவைக்கவில்லை என்பதை மிகப் பிற்பட்ட காலப் புராணிகர் கண்டனர். அவர்கள் துணிகரமாகத் தொல்காப்பிய ஆசிரியரையும் இந்தப் புளுகுக் கோட்டைக்குள் இழுத்தனர். அகத்தியரை ஆரிய முனிவராக்கினர். தொல்காப்பியரையும் ஆரிய முனிவராக்கினர். அகத்தியர்க்குப் பன்னிரண்டு மாணவரைப் படைத்து, அதில் தொல்காப்பியரை ஒருவராக்கினர். அவர்க்குத் திருணதூமாக்கினி என்ற ஆரியப் பெயரும் சூட்டி, திருணதூமாக்கினிதான் தொல்காப்பியர் என்றனர்! ஆசிரியர் மாணவரைச் சாபமிட்டாராம்! மாணவர் ஆசிரியரைச் சாபமிட் டாராம்! இம்முடிவுடன் தற்காலப் புனைகதையாசிரியரையும் நாணவைக்கும் முறையில் ஓர் அகத்தியர்-தொல்காப்பியர் புனைகதை சோடிக்கப்பட்டது. அஃது அகத்தியர் அறிவுக்கோ, தொல்காப்பியர் பெருமைக்கோ, கதை வாசிப்பவர் பொது அறிவுக்கோ ஒரு சிறிதும் மதிப்பு வைக்கவில்லை. இவ்வளவும் பழைய அகத்தியர் மரபு என்று மறைமலை அடிகளாரையும் நம்பவைத்தது ஆரியப் புராண மரபு! தொல்காப்பியத் தமிழ் மரபு தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் காலத் தமிழ் மொழி, தமிழ் இலக்கண இலக்கிய நிலைகள், பண்பாடுகள், கோட்பாடுகள் ஆகியவை பற்றிய மிகப் பல குறிப்புகள் உண்டு. தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்ட நிலைகளைச் சுட்டிக் காட்டும் குறிப்புகள்கூட உண்டு. ஆனால், தொல்காப்பிய ஆசிரியரைப் பற்றிய நேரடியான குறிப்பு எதுவும் கிடையாது. தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் அவருடன் பயின்ற ஒரு சாலை மாணாக்கரான பனம்பாரனாரால் இயற்றப் பட்டதாகக் குறிக்கப்படுகிறது. ஆசிரியர் பெயர், காலம் முதலிய சில விவரங்களை அது தருகின்றது . தொல்காப்பிய ஆசிரியர் பெயர் தொல்காப்பியனார். அவர் ஐந்திரம் நிறைந்தவர். அவர்கால அரசன் நிலந்திரு திருவிற் பாண்டியன். அவ்வரசன் அவைக்களத்திலேயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. அவைக் களத்தில் தலைவராயிருந்து அதைக் கேட்டவர் அறம் கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்! புராண மரபுகள் தரும் கதையை நாம் கூறு கூறாய்ப் பிரித்தால், ஒரு கூறுகூட முச்சங்க மரபிலோ, தொல்காப்பிய நூலிலோ பாயிரத்திலோ இடம் பெறவில்லை. ஆதரவு பெறவில்லை என்று காணலாம். அதுமட்டுமன்று. புராண மரபில் கிட்டத்தட்ட எல்லாக் கூறுகளுமே அவற்றில் காணப் பெறாதவை, அவற்றுக்கு மாறானவை. குறிப்பாகத் தொல்காப்பியனாரின் ஆசிரியர் அகத்தியர் என்பது முற்றிலும் இட்டுக்கட்டிய கதையென்றே பாயிரம் காட்டுகிறது. ஏனெனில், ஆசிரியர் பெயர் கட்டாயம் கூறப்பட வேண்டிய இடம் பாயிரம். அப்பாயிரமோ தொல்காப்பியர் உடன்மாணவரே பாடியதாகக் கூறப்படுகிறது. பாயிர ஆசிரியர்க்கும் நூலாசிரியர்க்கும் ஒருங்கே ஆசானான ஒருவர் இருந்திருந்தால் அவர் பெயர் அந்த இடத்தில் குறிப்பிடப்படாம லிராது. ஆனால், அங்ஙனம் எப்பெயரும் குறிக்கப்படவில்லை. அதுமட்டுமன்று; ஆசான் பெயர் குறிக்கப்பட வேண்டுமிடத்தில் அதனினும், உயர்வாகவும் முனைப்பாகவும் அதங் கோட்டாசான் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. அவ்வாசான் தொல்காப்பிய னாராலும் பனம்பாரனாராலும், மட்டுமன்றி, அந்நாளைய புலவர்களாலும், மக்களாலும், மன்னனாலும் ஒருங்கே மதிக்கப்பட்டவர் என்றும் அறிகிறோம். அதங்கோடு திருவாங்கூர்த் தமிழகத்தில் நாஞ்சில் மாவட்டத்தில் நாகர்கோவிலையடுத்து இன்றுமுள்ள ஓர் ஊர். அதங்கோட்டாசான் குடி இன்றும் அங்கே ஒரு மருத்துவக் குடியாய் உள்ளது. தொல்காப்பியர் பெயருடன் சேரநாட்டுப் பழைய காப்பியக் குடியை ஒட்டவைப்பதில் ஆர்வம் காட்டும் ஆராய்ச்சியாளர், அதனினும் நீடித்த இப்புகழ்த் தொடர்பின் மரபில் கருத்துச் செலுத்தாதது வியப்புக்குரியதேயாகும். செங்குட்டுவன் முன் சாக்கைக் கூத்தாடிய பறையூர்ச் சாக்கையர் குடியும் இது போல் வட திருவாங்கூரிலுள்ள பறவூரில் இன்றும் உள்ளது. அக்குடியினர் இன்றும் அதே சாக்கைக் கூத்தை, அதே சேர மரபின் இந்நாளைய கிளை மரபினரான திருவாங்கூர் அரசர் முன் நின்று ஆடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய மாளாநீள் மரபுடைய தமிழர் வாழ்வில் அயல் மரபுக் கதைகள் எளிதில் இணைந்து ஒட்ட முடிகிறது. தாய்மரபு மட்டுமே புறக்கணிக்கப்படுகிறது! தமிழகத்தின் கோலம் இன்னும் இத்தகைய அலங்கோலங்கள் நிறைந்ததாகவே உள்ளது. மறைமலையடிகள் முடிவு தொல்காப்பிய ஆசிரியர் ஓர் ஆரியர் என்பதற்கோ ஆரிய முனிவர் என்பதற்கோ, அவர் ஒரு முனிவரின் சீடர் என்பதற்கோ, அகத்தியரின் சீடர் என்பதற்கோ, அவர் திருணதூமாக்கினி என்ற ஆரிய மறு பெயர் அல்லது இயற்பெயர் கொண்டவர் என்பதற்கோ, இட்டுக் கட்டிய கதை தவிர வேறு ஆதாரம் இல்லை. அந்த இட்டுக்கட்டிய கதையும் பொருத்தமாக, திறமையாக இட்டுக் கட்டப்பட்ட கதை அன்று. தொல்காப்பியத்தையும் அதன் பாயிரத்தையும் பொறுத்தவரை, அகத்தியம் என்ற ஒரு நூல் இருந்ததென்பதற்கோ; அகத்தியர் என்று ஒரு புலவர் இருந்தா ரென்பதற்கோ; அவர் ஓர் ஆரியர் அல்லது ஓர்ஆரிய முனிவர் என்பதற்கோ ஒரு சிறு சான்றின் நிழல்கூடக் கிடையாது. தொல்காப்பியம் ஒரு வழிநூல் என்பதற்குக்கூட நூலோ பாயிரமோ ஒரு சிறிதும் இடம் தரவில்லை. இந்நிலையில் மறைமலையடிகளார் தொல்காப்பியத்தை முதல் நூலாகவே கொண்டதில் சிறிதும் தவறில்லை. அஃது இடைச் சங்க நூலன்று, முதற்சங்க நூலே என்று அவர் கருதினார். இதுவும் ஏற்கக்கூடாத முடிபன்று. அது வேறு எம்மொழிக்கும், சமற்கிருதத்துக்கும்கூட அமையாத, தமிழின் சிறந்த தனித்தமிழ் முழுமுதல் இலக்கண நூல் என்று அவர் அறுதியிட்டுக் காட்டினார். புராணக் கதை படிந்துத் தோய்ந்த அகத்தியர் மரபை அவர் அறவே போலி என்று ஒதுக்கித் தள்ளினார். இங்ஙனம் அப் பேரறிஞர் ஒதுக்கித் தள்ளியதில் வியப்பு எதுவுமில்லை. உண்மை வியப்பு எதுவெனில் இது செய்ய ஒரு மறைமலையடிகளும், ஒரு மறைமலையடிகளின் முழு வாழ்நாளின் அயரா உழைப்பும், ஒரு மறைமலையூழியின் இடைவிடாத வாத எதிர்வாதங்களும் தேவைப்பட்டன என்பதே. அகத்தியர் மரபுக்கு மறைமலையடிகள் எதிர்ப்புடன் தாக்குப் பிடித்து நீடித்து நிற்கும் வலு இருந்தது. இது தமிழ்மரபின் வலுவன்று. முச்சங்க முத்தமிழ் மரபின் வலுவன்று. இவை இன்னும் பொது மக்கள்வரை சென்று எட்டாதவை. இன்னும் வெளியுலகம் அறியாதவை. அது தமிழ்ப் புராண மரபின் வலுக்கூட அன்று. ஏனெனில், ஆரியப் புராணங் களளவில் தமிழ்ப் புராணங்கள் இன்னும் தமிழரிடையேகூடப் பரவவில்லை. உண்மையில் ஆரியப் புராண மரபின் வலுவே. காற்றுச் செல்லாத இடத்திலும், கடவுட் பற்று ஊடுருவாத இடத்திலும் அது சென்று ஊடுருவிப் பரந்துள்ளது. ஆயிர ஆண்டுகளுக்கு மேற்பட அஃது அரசியல், சமய, சமுதாய ஆட்சி வகுப்பினராலும், கல்வி நிலையங்களாலும் பரப்பப்பட்டு மக்கள் அறியாமையுடன் கலந்து பரவி அறிவு கெடுக்கும் ஒரு மாயையாகி உள்ளது. தமிழ்ப் புலவரிடையிலும் அவர்கள் மூலமாக மாணவரிடையிலுமாவது ஆராய்ச்சித் துறை மூலம் இந்த மாயையை ஒரு சிறிது அகற்றிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. மறைமலையடிகளின் அருஞ்சாதனையும், மறைமலை யூழியின் பெருஞ் சிறப்பும் இது. புதிய மாயை அகத்தியர் மரபு ஒழிக்கப்பட்டபோது, அதன் புராண மரபும், கதை மரபும் மட்டுமன்றி, முச்சங்க மரபும் பெரிதும் மறக்கப்பட்டுவிட்டது. முத்தமிழ் மரபும் கருத்தினின்று ஒதுக்கப்பட்டது. இறையனாரகப் பொருள் தரும் முச்சங்க மரபுடனும், முத்தமிழ் மரபுடனும் அதற்குத் தொடர்பு உண்டு. புராண மரபை ஒழிக்கும் ஆர்வத்தில் இது மறக்கப்பட்டது. முச்சங்க மரபு, சங்க வாழ்வு, முத்தமிழ் மரபு ஆகியவற்றின் சார்பில் ஏற்கெனவே இருந்து வந்த ஆராயா அவநம்பிக்கை இம்மறக்கடிப்பினால் வலியுறுத்தப் பெற்றது. கடைச்சங்க நூல்கள் வெளிவந்த பின்னும்,சிலப்பதிகாரம் வெளிவந்து உலவத் தொடங்கிய பின்னும் முச்சங்க, முத்தமிழ் மரபுகள் இயல்பாக மீண்டும் ஆராய்ச்சிக்கு எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இன்றுவரைஅவை அவ்வாறு எடுக்கப்பட வில்லை. ஆராய்ச்சியாளர் கவனம் எக்காரணத்தாலோ அப்பக்கம் செல்லவேயில்லை. மறைமலையடிகளார் ஆர்வ முடிவு ஒரு தமிழ் மாயையாயிற்று. ஆரிய மாயையைத் திருத்தவந்த தமிழ் மரபு அதனுடன் கலந்து ஒரு புதுத் தமிழக மாயையாகப் பரவியுள்ளது. மறுமலர்ச்சி ஓங்கி வளர்தல் வேண்டுமானால், மறுமலர்ச்சி ஆராய்ச்சி யாளர் இவற்றை மீண்டும் மறு ஆய்வுக்குக் கொண்டு வரல் வேண்டும். வரலாற்று நோக்கு என்னும் உரைகல்லில் அவற்றின் மழுங்கிய முனைகளை மீட்டும் தீட்டுதல் வேண்டும். தொல்காப்பியம் ஒரு வழிநூலன்று என்பதையும் அதன் ஆசிரியர் ஆரியரோ, ஆரிய முனிவரோ, அகத்தியர் மாணவரோ அல்லர் என்பதையும் விளக்கிய மறைமலையடிகளார் முடிவு அப்பழுக்கற்றதே. தொல்காப்பிய நூலும் பாயிரமும் இவற்றை நிலைநாட்டப் போதியன. மேலும், அகத்தியர் என்ற ஆரிய புராண முனிவர் பற்றிய கதைகளுக்கும் தமிழ்க்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. தொடர்பு உண்டுபண்ணியவை ஆரிய புராணங்கள்கூட அல்ல, தமிழ்ப் புராணங்களே. மறைமலையடிகள் கொண்ட இம்முடிவும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தக்க, அறிவுக்கொத்த முடிவே. ஆனால், அகத்தியம் என்ற ஒரு நூலே இருந்ததில்லை, இருந்திருக்க முடியாது என்பதையோ, அதன் ஆசிரியராக அகத்தியர் என்ற ஒரு தமிழ்ப்பெரும் புலவர் இருந்திருக்க முடியாது என்பதையோ தொல்காப்பிய ஆராய்ச்சி ஒன்று மட்டுமே முடிவுகட்டிவிட இயலாது. அஃது அவற்றைப் பற்றிய தகவல் எதுவும் தரவில்லை. அதே சமயம் அவற்றுக்கு எதிரான சான்றுகளையும் அளிக்க வில்லை. இந்நிலையில் அகத்தியர் மரபு மட்டுமன்றி, அதனுடன் இணைவான முச்சங்க, முத்தமிழ் மரபுகளும் புதிய ஆராய்ச்சிக்கு உரியவை மட்டுமே ஒதுக்கித் தள்ளிவிடத்தக்கவை ஆகிவிட மாட்டா. தமிழ்ப் புராணங்களின் போக்கு புராண அகத்தியர் மரபுடன் முச்சங்கத் தமிழ் மரபின் அகத்தியரை இணைக்க முனைந்தவர்கள் தமிழ்ப் புராணிகர்களே. இதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், தமிழ்ப் புராணங்களை எழுதியவர்கள் தமிழ் நாட்டவர்கள், தமிழர்கள். ஆரிய நம்பிக்கைகளுடனும், ஆரிய புராண ஆர்வத்துடனும் அவர்கள் உள்ளத்தில் தமிழார்வமும், முத்தமிழ் மரபில் உள்ள நம்பிக்கையையும் போட்டியிட்டிருத்தல் வேண்டும். ஈர் ஆர்வங்களையும் இணைத்து அதன்மூலம் சமற்கிருதத்துக்கு ஒப்பாகவோ, அல்லது குறைந்த அளவில் அதற்கடுத்த படியாகவோ புராண உலகில் தமிழ்க்கு ஓர் இடம் தேடித்தர அவர்கள் விரும்பினர். இந்த எண்ணமே ஆரியப் புராணத்துடன் தமிழ் மரபை இணைக்க அவர்களைத் தூண்டிற்று என்னலாம். இவ்வாறு புராணப் பற்று, தமிழ்ப் பற்று ஆகிய இரண்டையும் ஒரே பற்றாக்கத் தமிழ்ப் புராணிகர்கள் விழைந்தார்கள். ஆனால், இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இதுவும் இயல்பே. ஏனெனில், புராணப் பற்றுடைய தமிழினத்துக்கு வெளியே இரு மரபுகளும் இருவேறு பற்றுகளுக் குரியவையாக, எண்ணெயும் தண்ணீரும் போலவே இயங்கின, இயங்குகின்றன. இதன் பயனாகத் தமிழ்ப் புராணங்களில் இரு மரபுகளின் போட்டி வளர்வதைக் காணலாம். ஆராய்ச்சிக்காலத் தொடக்கத்தில் ஆராய்ச்சியின் போக்கிலேயே அவை பிளவுற்று வேறுபடுவதையும் உணரலாம். தமிழ்ப் புராணங்களுக்கு முற்பட்டுப் பக்தி நூல்களில் பொதுவாகவும், ஆழ்வார்கள் பாசுரங்களிலும் அவற்றின் உரைகளிலும் சிறப்பாகவும், சமற்கிருதந் தாண்டித் தமிழ்க்குச் சிறப்புத் தரப்பட்டுள்ளது. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் இக்கருத்தையே மேற்கொண்டுள்ளது. தமிழ் ஒன்றே இலக்கண வரம்புடையமொழி, தெய்விக மொழி என்று அது வலிறுத்துவது காணலாம். கண்ணுதற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத்தெரிந் தாய்ந்தஇப் பசுந்தமிழ், ஏனை மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ! இங்கே முத்தமிழ் மரபு சுட்டப்படுகிறது. முச்சங்க மரபும் குறிக்கப் படுகிறது. அவற்றின் மூலம் சமற்கிருதத்துக்கு அமையாத புராணச் சிறப்பை இப்பாட்டுத் தமிழ்க்குத் தேடித் தருகிறது. சிவபெருமான் முதற் சங்கத்தில் புலவராக வந்தமர்ந் திருந்ததாக இறையனார் அகப்பொருளுரை குறித்த செய்தியே அது. தவிர சமற்கிருதமும் இலக்கண வரம்பிலா மொழி என்று இங்கே சுற்று முகமாகப் பழிக்கப்பட்டுள்ளது. இலக்கணத்தின் உயிர் நிலையாகிய பொருளிலக்கணம் சமற்கிருதத்துக்கு இல்லை என்பதை இங்கே கவிஞர் நமக்கு நினைவூட்டுகிறார். உலகின் எல்லா மொழிகளையும் வென்று ஆரியம் அதாவது சமற்கிருதத்துடன் போட்டியிடும் பெருமையுடையது தமிழ் என்கிறார், காளத்திப் புராணம் பாடிய கருணைப் பிரகாசர். சமற்கிருதத்தைத் தாண்டிய தமிழின் முன்னைய சிறப்பு இங்கே அதனுடன் போட்டியிடும் சிறப்பாகத் தளர்ந்துவிட்டது காணலாம். மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை உள்நினைந் தேத்தல் செய்வாம். மேலும், இங்கே சிவபெருமான் தமிழ்ப் புலவராயிருந்தது போய் தமிழ் இலக்கணம் அருளியவராய்விடுகிறார். நம் காலத்துக்கு மிக அணிமையில் வந்த புராண ஆசிரியர் காஞ்சிப் புராணம் பாடிய சிவஞானமுனிவர். அவர் சமற்கிருதம் அல்லது வடமொழிக்கு முதலிடம் தந்து, தமிழ்க்கு இரண்டாம் இடம் தந்துள்ளார். “வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்” என்றும் “இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்........... இரு மொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ?” என்றும், அவர் பாடியுள்ளார். இங்கே வடமொழி என்றது சமற்கிருத மொழியை என்பது தெளிவு. சிவபெருமான் தமிழ்ப் புலவராகவில்லை. தமிழ் இலக்கணம் அருளவில்லை. தமிழ் மொழியையே தந்திருக்கிறார். ஆனால், அகத்தியர்க்குத் தமிழைத் தருமுன் பாணினிக்குச் சமற்கிருதம் அருளியதாக இவர் குறிக்கிறார். இரண்டாம் பாட்டில் இருமொழியும் நிகர் என்றுகூட அவர் கூறவில்லை. நிகரல்ல எனறு கூறுபவரை மறுப்பவர் போல நிகர் என்பதில் ஐயமுமுண்டோ என்று கேட்கிறார். தொல்காப்பியத்துக்கு அகத்தியம் முற்பட்டது. அகத்தியத்துக்கும் பாணினியம் முற்பட்டது என்ற கருத்தையும், ஆசிரியர் இங்கே மெல்லப் புகுத்தியுள்ளது காணலாம். தவிர, ஒரு தமிழ்ப் புராணத்திலேயே தமிழர் வணங்கும் ஒரு தெய்வம் சமற்கிருத மொழியைத் தன் மொழியாகக் கொண்டு அதற்கு உரிமையிடமும், தமிழ் மொழிக்குத் தமிழரது மொழி என்ற முறையில் சலுகையிடமும் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்ஙனம் புராண மரபும் சங்க மரபும் தமிழ்ப் புராணங்களிலும் இணைக்கப்பட்டாலும், அவற்றில் வர வரத் தமிழ் மரபும் சங்க மரபும் தளர்ந்தும் தேய்ந்தும், ஆரியப் புராண மரபும் சமற்கிருத மரபும் வளர்ந்தோங்கி வளம் பெற்றும் வந்துள்ளது கண்கூடு. கால வரிசை முறைப்பட மேலே தரப்பட்டுள்ள புராணப் பாடல்கள் இதைத் தெளிவாகக் காட்டும். அவநம்பிக்கையும் அடிமை மனப்பான்மையும் சங்க வாழ்வில் அவநம்பிக்கை கொண்டவர்கள்தாம் அகத்தியர் மரபில் ஆர்வம் காட்டிவந்தனர். அம்மரபைப் பொதுமக்களிடையே பரப்பவும் ஆராய்ச்சித் துறையில் அதை ஆதரித்து வாதமிடவும், முனைந்தவர்கள் அவர்களே. அவர்கள் ஆர்வ முடிபுகள் பொதுமக்களிடையே எளிதில் பரவுவதற்குரிய சூழ்நிலைகளும் இருந்தன; இருந்து வருகின்றன. முச்சங்க மரபில் அவநம்பிக்கை கொண்டவர்கள் வாய்மொழி வாதத்தைத் தான் மறைமலையடிகள் ஆராய்ச்சி எதிர்த்து முறியடிக்க முடிந்தது. ஆயினும், அவர்கள் அவநம்பிக்கையை அஃது அகற்ற முடியவில்லை. அது பொது மக்களிடையே பரவுவதையோ, தமிழகத்துக்கு வெளியே அறிவு உலகில் பரவுவதையோ அவ்வாராய்ச்சி தடுக்கவில்லை. இச்சூழ்நிலைக்கு ஆட்சியாளர் அயல் மரபார்வமும், மக்கள் அடிமைத் தனமும் பேரளவில் காரணம் என்பதில் ஐயமில்லை. அச்சூழலை முற்றிலும் மறைமலையடிகள் போன்ற அறிஞரே நேரடியாக மாற்றியமைத்து விடமுடியும் என்றும் கூறமுடியாது. ஆயினும், சூழலை மாற்றியமைக்க வல்ல அறிவையும் மக்கள் ஆற்றலையும் அவர் போன்ற அறிஞர் படைக்க வழிகண்டிருக்க முடியும். இதை அவர் இருவகைகளிலே செய்யாது விட்டனர் என்னலாம். முதலாவதாக ஆரியப் புராண மரபை ஆராய்ச்சித் துறையில் அகற்றிய துடன் நில்லாமல் தமிழ் மரபை அவர் விளக்கும் ஆராய்ச்சி முறையைத் தொடங்கி வைத்திருக்க முடியும். புராண அகத்தியர் மரபுடன் முச்சங்கம் அகத்தியர் மரபை ஒன்றுபடுத்தியதன் மூலம் இதை அவர் புறக்கணித்து, சங்க மரபிலுள்ள பழைய அவநம்பிக்கை நிலையை நீடிக்க வைத்துவிட்டார். இரண்டாவதாக, தமிழ் மரபை ஆரிய மரபின் நிழலாகவே அறிவுலகு காணும்படி முன்னதன் இருட்டடிப்பும் மறைப்பும், பின்னதன் ஒளிவிளக்கமும் எங்கும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ் மரபை மற்ற மரபுகளுடன் பொதுவாகவும் ஆரிய மரபுடன் சிறப்பாகவும் ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமை காட்டினாலன்றி, உலகம் தமிழ் மரபில் ஒரு சிறிதும் கருத்துச் செலுத்தும் என்று கூறமுடியாது. மூன்றாவதாக, ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சி வாதங்களை அவர் எதிர்த்தபோது, அவ்வாராய்ச்சிகளின் உள்ளீடாக ஆராய்ச்சியாளர் உள்ளத்தில் தோய்ந்து கிடந்த அவ நம்பிக்கையையும், அதற்கு உதவிய மக்கள் அடிமை மனப்பான்மையையும், இரண்டுக்கும் வலிமை தந்த தமிழ் மரபு பற்றிய வெளியுலகின் அறியாமையையும் அவர் கண்டு விலக்க முயலவில்லை. மறைமலையடிகளும் மறைமலையூழியும் செய்யாது விட்டவற்றை, மறுமலர்ச்சி யறிஞரும் மறுமலர்ச்சி யூழியும் கட்டாயம் செய்தாதல் வேண்டும். தமிழினத்தின் வாழ்வு தாழ்வு மட்டுமல்ல; வாழ்வு மாள்வே அதில் அடங்கியுள்ளது. அயல் மரபார்வம் முச்சங்க மரபை ஆராய முற்பட்ட அறிஞர் யாவருமே ஆராய்ச்சியில் புகுமுன்பே ஓர் ஆராயா முடிவுடனும், ஆராய்ச்சிக்குத் தடையான ஓர் அவநம்பிக்கையுடனும் அதை அணுகினர்; அணுகுகின்றனர். எந்தத் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர் வாதங்களையும் குறிக்காமல், மாதிரிக்காக, முச்சங்க மரபுக்கு எதிரான வாதங்களைக் குறித்து, அவற்றில் தொனிக்கும் ஆராயா முற்கோள்களை அலசிக் காண்போம். ‘மொழி வளர்க்கச் சங்கம்’ அமைத்து நடத்துவது என்பது இன்றைய நாகரிகம்மிக்க மேலை நாடுகளில்கூட அரிதான ஒரு செயல். இதை அவ்வளவு பழைமையான நாள்களிலேயே தமிழர் ஏற்படுத்தியிருந்தனர் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று! இவ்வாதம் இன்னும் பல இடங்களில் வலிமையுடைய வாதமாகவே கருதப்படத்தக்கது. கடைச்சங்க வெளியீட்டால் சங்க வாழ்வு உறுதிப்பட்டதே யன்றி, முச்சங்க வாழ்வு உறுதிப்படவில்லை. அதில் அவநம்பிக்கையுடைய வர்களுக்கு அவநம்பிக்கையையே ஒரு முடிவாக்கிவிட இது போதும். ஆயினும், இவ்வாதம் அரைகுறை மெய்ம்மைகளுடன் பொய்ம்மைகளும் முரண்பாடுகளும் நிறைந்தது. ஆராயுமுன் ஆராயா அவநம்பிக்கையை முடிவாகக் குறிப்பது. அடிமை மனப்பான்மையும் தமிழ் மரபில் அவமதிப்பும் கொண்டது. முதலாவது, சங்கவாழ்வு மேலை நாடுகளில் அரிதாயினும் இல்லாததல்ல. பிரான்சு நாட்டில் நீடித்த பல நூற்றாண்டுப் பழைமையுடையது. மேலை நாடுகளில் பல்கலைக் கழகங்கள் ஆயிர ஆண்டுகளுக்குட்பட்ட வாழ்வே. அதுவும் அராபியர் தந்த வாழ்வே. அதற்கு முற்பட அராபியரும் உரோம கிரேக்கருமே அம் மரபை ஓரளவு கொண்டிருந்தனர். ஆனால், புத்தர் கால இந்தியாவில் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டே நாலந்தா, விக்கிரமசீலா, வலபி முதலிய இடங்களில் பல்கலைக் கழகங்கள் இருந்தன. இவற்றை மேற்குறிப்பிட்ட அவநம்பிக்கைவாதி அறிந்திருக்கலாம். அறியாதிருக்கலாம். ஆனால், இவை தம் வாதத்தை மறுப்பதாக அவர் கருத மாட்டார். ஏனென்றால், உயர் பண்பாடு புதிய மேலை நாடுகளுக்கும் பழைய ஆரிய இனத்துக்கும் மட்டுமே உரியன என்ற நம்பிக்கை அவர் வாதத்தில் தொனிக்கிறது. அவ்வளவு பழைமையான நாள்களிலேயே தமிழர் என்ற அவர் சொற்களின் தொனி இது. மேலை நாடுகளிலோ, ஆரிய இனத்திலோ உயர் பண்பாடு இருப்பது நம்பகமான செயல் என்று அவர் கொள்கிறார். தமிழரிடத்தில் அஃது இருந்திருக்க முடியாது என்பது அவர் முடிந்த முடிவு. ‘அவ்வளவு பழைமையான நாள்களிலேயே’ என்பது இதை வலியுறுத்துகிறது. மேலை நாகரிகம் தமிழகத்தில் பரவிய இக்காலத்திலோ, ஆரிய நாகரிகம் பரவிய இடைக் காலத்திலோ இப்பண்பு இருந்தது என்று கூறினால், அவர் அதை ஆராய்ச்சிக் குரியதாக ஏற்பார். இரண்டும் பரவாத ‘அவ்வளவு பழைமையான காலத்திலேயே’ தமிழர் கலப்பற்ற தனிச் சரக்காக உயர்பண்பாடு இருக்க முடியாது என்பதே அவர் ஆழ்ந்த உறுதி. இது எந்த அளவுக்கு உண்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதை மேலே பார்ப்போம். ஆரியமும் தமிழும் “முத்தமிழ், முச்சங்க மரபுகளுக்கு ஏழாம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட சான்றுகள் இல்லை” இஃது இரண்டாவது வாத வகை. இச் செய்தி உண்மையே. அதனால் ஏற்படும் முடிவை மேலே ஆய்வோம். ஆனால், முதல் வாதத்துக்கு இவ்வாதம் முரண்பட்டது. ‘அவ்வளவு பழைமையான காலத்திலேயே’ இருந்திருக்க முடியாதென்றால், ஏழாம் நூற்றாண்டென்ற ‘இவ்வளவு பழைமையான காலத்தில்’ இருந்ததென்று எப்படி ஏற்கலாம்! ஏழாம் நூற்றாண்டில் ஆரியர் தொடர்பு ஏற்பட்டதனால் இருந்திருக்க வழியிருக்கலாம் என்று கருதுகிறார் போலும்! பாவம்! சங்க காலத்திலேயே ஆரியர் தொடர்பு குறைவே தவிர , இல்லாத தல்ல. அதை மிகைப்படுத்திக் காட்டும் ஆரியப் பற்றாளர் பலர். தனித் தமிழ் மூதாதையான பரிதிமாற் கலைஞர் ஆரிய நாகரிகம், தமிழ் நாகரிகம் இரண்டின் சீரிய இணைப்பையே அதில் காண்கிறார். இவற்றை நம்ப முடிந்தால் அவநம்பிக்கை வாதி அவ்வளவு பழைமையான காலத்திலும் ஏற்பார் போலும்! ஆனால் ‘இன்றைய மேலை நாடுகளில்கூட அரிதான’ என்று மேலே கூறியவர் ‘பழைமையான ஆரிய நாகரிகத்தில்கூட’ என்பதைக் கூறாது விட்டுவிட்டார். ஆரிய நாகரிகத்தில் புத்தர்கள்தாம் சமயம் வளர்க்கச் சங்கம் நிறுவியிருந்தனர். ஐந்தாம் நூற்றாண்டில் புத்தர் தமிழ்க்காகச் சங்கம் நிறுவிய துண்டு. அதை, தமிழ்ச் சங்க மரபின் மூலம் என்று காட்டி ஆறுதலடைய நம் அவநம்பிக்கையாளர் எண்ணி யிருக்கலாம். ஆனால், புத்தர் நெறியாளர் தமிழகத்திலேதான் தமிழ்க்குச் சங்கம் நிறுவினர். ஆரிய நாட்டிலோ ஆரிய மொழிக்குச் சங்கம் அமைத்ததில்லை. மதத்துக்கே அமைத்திருந்தனர். ஆகவே புத்தருக்குத் தமிழக மரபு உதவிற்றேயன்றி, புத்த மரபு தமிழ கத்துக்கு உதவவில்லை என்பதை அவநம்பிக்கைவாதி மறந்தார். மூன்றாவது வாதம் அவநம்பிக்கைவாதியின் அடி வயிற்றிலிருந்து வருகிறது. ‘சங்கம் என்ற சொல்லே சமற்கிருதச் சொல்.’ சங்க மரபு சமற்கிருத மரபு என்பது தமிழரால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டால், அவநம்பிக்கைவாதியால்கூட அது ஏற்கத் தக்கதாக அமையும் என்று நாம் கருத இஃது இடமளிக்கிறது. தமிழில் சங்கம் என்ற பொருளுடைய தனித் தமிழ்ச் சொற்கள் பல. கழகம், கூடல், மன்றம் ஆகியவை தமிழ்ச் சங்கத்தின் பெயர்களாகவே தேவாரத்திலும் புராணங்களிலும் வழங்கியுள்ளன. இச்சொற்களை மறைமலையடிகள் எடுத்துக் காட்டியுள்ளார். மன்றம் என்ற சொல் சங்கத்தை மட்டுமன்றிச் சிவபிரான் ஆடற்களத்தையும் குறிக்கும். இம்மரபுடைய சமற்கிருதச் சொல் கிடையாது. இதே மரபும் பொருளும் அம்பலம், பொதியில், கோட்டம் ஆகியவற்றுக்கும் உண்டு. ‘பட்டிமண்டபம்’ தமிழ்க்கு மட்டுமேயுரிய பண்பு. சங்கம் என்ற சொல்லே கூடிவாழும் இயல்புடைய சங்கை நினைவூட்டும் தமிழ்ச்சொல் ஆகும். எப்படியும் அது சமற்கிருதச் சொல் அல்ல என்பது தெளிவு. ஏனெனில், ஆரிய இனத்தின் மூலத் தாய்மொழியாகிய இந்து-ஜெர்மானி யத்துக்கு அஃது அயலானது. மற்ற இந்து-ஜெர்மானிய அல்லது ஆரியக் குழு மொழிகளில் அது இல்லை. தமிழ் மரபின் மாண்பு உயர் பண்பாடு தனித் தமிழினத்துக்குரியதன்று. ஆரிய இனத்தின் பழைமைக்கோ, மேலை நாகரிகத்தின் புதுமைக்கோ உரிய குத்தகை என்று எந்த ஆராய்ச்சியாளரும் கூறுவதில்லை. ஆனால், அதுவே மேலைநாட்டினர் பலரின் இன்றைய எண்ணம். ஆரிய இனப்பற்றாளர்கள் அனைவரின் எண்ணமும் அதுவே என்னலாம். அஃது அவர்கள் ஆராய்ச்சிகள் கடந்த, ஆராய்ச்சிக்கு அடிப்படையான ஆராயா வாதம். ஆராய வேண்டிய அவசியமே யில்லாத மெய்ம்மையாக அவர்களால் அது மேற்கொள்ளப் படுகிறது. இது ஆராய்ந்து கண்ட முடிபானால், தமிழர் மெய்ம்மையார்வத்துடன் இதை ஏற்று அயல் இனப்பண்புகளைப் பின்பற்றியேனும் முற்போக்கடைய வேண்டு மென்பதில் தடையில்லை. ஆனால், ஆராயா முடிவு என்ற முறையில் அது தமிழரைப் பற்றிய அறியாமை அல்லது தமிழ் இனத்தைப் பற்றிய அவமதிப்பு என்று கூறத்தக்கதேயாகும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆராய்ச்சியாளரிடம் தமிழரைப் பற்றிய அறியாமை இருக்க முடியாது. தமிழரை அவமதிக்கும் எண்ணம் ஆராய்ச்சிப் பார்வையில் விளையாடுகிறது என்றுமட்டுமே கொள்ளலாம். ஆனால், இம்முடிவு உண்மையன்று. உண்மைக்கு நேர்மாறானது. இன்றைய மேலைநாட்டைவிட, பண்டைய ஆரிய நாகரிகத்தைவிட மிகப்பல கூறுகளுள், தமிழினப் பண்பு மேம்பட்டது. அஃது அவற்றைத் தாண்டிய பழைமையுடையது. அவற்றுக்கே வழிகாட்டியாய் இருந்து பண்பளித்தது. கருத்து வேறுபாடுகளுடைய ஆராய்ச்சிகளில் செல்லாமலே கீழ் வரும் செய்திகள் இவ்வகையில் கவனிக்கத் தக்கவை. ஆரிய இன நாகரிகங்கள் வடக்கைவிடத் தெற்கிலும் மேற்கைவிடக் கிழக்கிலும் பழம்பெருமையும் முற்போக்கும் உடையன. தமிழகத்தை அணுகும் அளவிலேயே மேனாட்டின் பழைமையும் கீழ் நாட்டின் பழைமையும் பெருமை யுடையன. இந்தியாவில் வடஇந்திய மொழிகளைவிடத் தென் இந்திய மொழிகள் பழைமையான இலக்கியப் பண்புடையவை. அவை ஒன்றிரண்டு நூற்றாண்டு களுக்கல்ல, ஆயிர நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. வட இந்தியாவிலேயே ஆரியர் புகுந்த வடமேற்குத் திசையிலிருந்து அதற்கெதிராகத் தென்கிழக்குத் திசையாகச் செல்லுந்தோறும் நாகரிகப் பழைமை மேம்பட்டுள்ளது. இருக்கு வேதம் பயின்ற வடமேற்குப் பகுதியில் ஆரியரின் இலக்கிய மொழியாகிய சமற்கிருதம் வளரவில்லை. திராவிட நாகரிகம் நீடித்து நிலவிய கங்கைக் கரையிலேயே வளர்ந்தது. ஆரியத் தொடர்புமிக்க பிற தென்னாட்டு மொழிகளைவிட அத் தொடர்பு குன்றிய தமிழ் மொழியின் இலக்கியம் ஆயிர ஆண்டு முற்பட்ட பழைமையும், அளக்க முடியாத பழம் பெருமை யும் உடையது. சங்க இலக்கியமும் திருக்குறளும் இலங்கிய காலத்தில் சமற்கிருதத்துக்கு இலக்கியமே கிடையாது. சைவ, வைணவத் திருமறைகள் தமிழ் மொழி ஒன்றில் மட்டும் உள்ளன. இந்தியச் சமய வாழ்வின் மூலப் பண்புகளுக்குத் தலையூற்றான இந்தியச் சமயத் திருநூல்கள் இவையே. சமற்கிருதத்திலோ வேதமொழியிலோ இந்தியச் சமய வாழ்வின் தடம் எதுவும் கிடையாது. தமிழ், இந்தியாவின் ஒரே முழுநிறை தேசிய மொழி, இந்தியாவின் பல நூற்றாண்டுக் கணக்கான வாழ்வுடன் வாழ்ந்து மூவாயிர ஆண்டு வளர்ச்சியுற்ற இந்தியாவின் இலக்கியமுடைய மொழி அஃது ஒன்றே. இந்தியாவுக்கு வெளியே எல்லாக் கடல் கடந்த நாடுகளிலும் பரவிய இந்திய மொழி தமிழ் ஒன்றே. புராணச் சார்பற்ற, சமயச் சார்பற்ற இலக்கியம் உடைய இந்திய மொழி வேறு இல்லை. திருக்குறள் உலகப் பொதுமறை. அது தமிழின் தனிச் சிறப்பே. புத்தமதக் காவியமாகிய மணிமேகலை, தமிழ் ஒன்றில் மட்டும் உண்டு. சமணக் காவியமாகிய சிந்தாமணியும் அப்படியே. தமிழினமும் மேலை நாகரிகமும் தமிழினத்தின் மேம்பாட்டை ஆரியத்துடன் ஒப்பிட்டு மட்டுமன்று, இன்றைய மேலை நாகரிகத்துடன் ஒப்பிட்டும் காட்டலாம். மேலையுலக மொழிகள் யாவும் சமற்கிருதம் போல இலக்கணப் பால் அதாவது சொற்பால் உடையது. ஆனால், ஆங்கிலம் ஒன்றுமட்டும் 15ஆம் நூற்றாண்டிலிருந்து பகுத்தறிவுக் கொத்த இயற்கைப் பால் மேற்கொண்டுள்ளது. தமிழ் தொன்றுதொட்டே இயற்கைப் பால் உடையது. இன்றைய நாகரிக உலகில், இப் பண்புடைய மொழிகள் ஆங்கிலமும் தமிழும் மட்டுமே. இவற்றுள் தமிழிலேயே இப்பண்பாடு பழைமையான இனப் பண்பாய் உள்ளது என்று கூறத் தேவை யில்லை. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து, ஓர் எழுத்துக்கு ஓர் ஒலி என்பதே உயர் எழுத்து முறை என்று கூறப்படுகிறது.இவ்வகையில் மேனாட்டு எழுத்து முறைகள் மோசமானவை. ஆங்கிலம் அவற்றுள்ளும் மிக மோசமானது. தமிழோ குறிக்கோள் நிலையிலுள்ள இந்திய எழுத்து முறைகளுள் தலைசிறந்தது. இந்தியாவில் மட்டுமன்றி, உலகிலேயே தனக்கென எழுத்துமுறை உடைய மொழி தமிழ் ஒன்றுதான். மேலை உலக மொழிகளெல்லாம் இலத்தீன் எழுத்து வடிவத்தையே கொண்டுள்ளன. இதுவும் கிரேக்கர் முறையையும் நடுநிலக் கடலக முறையையும் பின்பற்றியது. வட இந்திய மொழிகளோ சமற்கிருதத்தின் தேவ நாகரி எழுத்தையே மேற்கொண்டுள்ளவை. தமிழ் நீங்கிய தென்னாட்டு மொழிகள் தமக்கென எழுத்து வடிவுடையவையானாலும் சமற்கிருத எழுத்தைப் பின்பற்றியவை. இந்தச் சமற்கிருதமும் வடக்கே தேவநாகரியையும் தெற்கே கிரந்தத்தையும் கொண்டுள்ளது. தமிழிலிருந்து எழுத்து மேற்கொள்ளு முன், வேத மொழிக்கு எழுத்து இருந்ததில்லை. இன்றைய உலகில் மதங்கள் பல. ஆனால், உலகில் தமிழ் நீங்கலான எந்த மொழியிலக்கியமும் ஓரிரு மத முனைப்பே யுடையன. கன்னடம் இரண்டு மூன்று மதங்களின் சார்புடையன. உலக மொழிகளுள் தமிழில் மட்டுமே கிட்டத்தட்ட எல்லா மதங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வாய்ந்த இலக்கியம் உண்டு. தவிர மதச் சார்பற்ற திருக்குறள், சங்க இலக்கியம் போன்ற இலக்கியமும் உலகில் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. உலகில் தமிழளவு தலைசிறந்த பெண் கவிஞர்களையுடைய மொழி வேறில்லை என்னலாம். சங்க இலக்கியக் காலத்திலேயே பல இனம், பல மாவட்டம், பல சமூகப் படியிலுள்ள 31 பெண் புலவர்கள் இருந்தனர். பிற்கால அவ்வையார்கள், காரைக் காலம்மையார் போன்றவர்களும் தமிழ்க்குத் தனிச் சிறப் பளிப்பவர்களே. திருக்குறள் உலகின் ஒப்புயர்வற்ற வாழ்க்கைமுறை நூல். முச்சங்க மரபின் மெய்ம்மை தமிழ் மரபின் தனிப் பண்பும் உயர்வும் நிலைநாட்ட மேலே காட்டியவை போதியன. ஆனால், அவை மேலீடான சில மெய்ம்மைகளே. முச்சங்க, முத்தமிழ் மரபுகளின் மாண்புகள் அவற்றை மிகப் பெரியதும் விஞ்சிய மேம்பாடுகள் ஆகும். சங்க நூல்களுள் வெளிவந்தவையும் இறந்துபட்டன என்று அறியப்படும் நூல்களும் நூற் பகுதிகளும் சங்க காலத்தவை என்று அச் சான்றுகளால் அறியப்படும் தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் கடைச்சங்க காலத்துக்குப் போதிய சான்றுகளாய் உள்ளன. தொல்காப்பியம் இடைச் சங்கத்து இலக்கண நூல் என்று மரபுரையில் கூறப்படுகிறது. அது முதல் நூலே என்றும் முதற் சங்கத்தது என்றும் மறைமலையடிகளார் குறித்துள்ளார். இவ்விடத்தில் சங்க மரபின் சான்றைத் தாண்டி அடிகளார் கூற்றே வலிமையுடையதென்று கொள்வதுகூடத் தவறில்லை. ஏனெனில், தொல்காப்பியத்தை அரங்கேற்றுவித்த அரசன் நிலந்தரு திருவிற் பாண்டியன் அல்லது மாகீர்த்தி அல்லது நெடியோன் அல்லது முடத்திருமாறன் ஆவான். அவன் முதற் சங்கத்தின் இறுதியி லிருந்து முதற் கடல்கோளுக்குப் பின் இடைச்சங்கம் தோற்று வித்தவன் என்று மரபுரை குறிக்கிறது. கடைச் சங்கத்தின் தொகுப்பில் இடம்பெற்ற மிகப் பழைமையான பாடல்கள் அவனை மிகப் பழைமையான முற்கால அரசன் என்றே புகழ்கின்றன. தவிர அவன் பெயருடன் பஃறுளி ஆறே எண்ணப்படுகிறது. ஆகவே, அவன் பஃறுளி ஆற்றின் கரையிலிருந்த தென்மதுரையில் ஆண்ட முதற்சங்கப் பாண்டியனே யாதல் வேண்டும். இடைச் சங்கத்தை அவன் தொடங்கியிருந்தாலும், அவன் புகழ் வாழ்வு தலைச்சங்கத்துக் குரியதேயாகும். தலை இடைச் சங்கத்தைப் பற்றிய இறையனார் அகப் பொருளுரைக் குறிப்புகள் சில வருமாறு: “தலைச் சங்கத்தில் பாடப்பட்ட நூல்கள் முத்தமிழ் இலக்கணமாகிய அகத்தியம், முதுநாரை, முதுகுருகு போன்ற இசை நூல்கள், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போன்ற நாடக நூல்கள், மற்றும் பரிபாடல், களரி யாவிரை, காக்கைபாடினியம், அவிநயம், நற்றத்தம், வாமனம், புறப்பொருள், பன்னிருபடலம் ஆகியவையும் இச்சங்க காலத்தவை.” “இடைச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்ட நூல்கள் இயல் தமிழ் இலக்கண மாகிய தொல்காப்பியம், கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் முதலியன. தவிர, மேற்கோள் நூல்களாக (இலக்கியங்களாக) மாபுராணம், இசை நுணுக்கம், பூதப்புராணம் ஆகியவையும் கொள்ளப்பட்டன.” கடைச்சங்க நூல்களின் பட்டியலிலிருந்து இவை எவ்வகையிலும் மாறுபட்டவையல்ல. கடைச்சங்க நூல் வெளிவந்த பின்னரே கடைச்சங்க நூல்கள் வாய்மையுடையன என்பது புலப்பட்டது. அத்துடன் அவை மிகைப்பட்ட பட்டியலே. குறைப்பட்ட பட்டியலல்ல என்பதும் கண்டோம். தலை இடைச் சங்கத்தின் நிலை கடைச் சங்க நிலையிலிருந்து வேறுபட்டன என்று புதிய அவநம்பிக்கை கொள்வதற்கு எத்தகைய புதிய காரணமும் இல்லை. தவிர, அதன் ஒரு முழுமுதல் நூலாகத் தொல்காப்பியம் கடைச்சங்க நூல்களைவிடத் தொடர்ச்சியான மரபுடன் நமக்குக் கிடைத்துள்ளது. பரிபாடல், காக்கை பாடினியம், புறப்பொருள், பன்னிரு படலம் ஆகிய முதற்சங்க ஏடுகளின் பெயர்களும் கலி, குருகு என்ற இடைச்சங்க ஏடுகளின் பெயர்களும் பிற்கால நூற்பெயர் அல்லது முற்கால நூற்பெயர் மரபுடையவை என்று தோற்றுகின்றன. மாபுராணம் ஒரு காவியம் என்றே கொள்ள இடமுண்டு. இந்திய மரபில் பெருங்கதை, மகாபாரதம் இராமாயணத்தின் பெயராகக் கம்பர் தரும் மாகதை, சேக்கிழார் பெரிய புராணம், இலங்கை வரலாற்றின் பெயராகிய மகாவம்சோ ஆகியவற்றின் பெயர்களின் மூலமாக அது தோற்றுகிறது. இடைச்சங்க நூல்களின் பண்பறிந்து கொங்குவேள் தம் மாகதை பாடியதாக அடியார்க்கு நல்லார் குறிக்கிறார். பெருங்கதையின் காலம்வரை இடைச்சங்க நூல்கள் நிலவின என்றும், அதன் காப்பிய மரபுகளையும் சொல்வழக்கு மரபுகளையும் கொங்குவேள் பின்பற்றின ரென்றும் கருத இஃது இடந்தருகிறது. அகத்திய மரபின் வாய்மை அகத்தியம் என்ற ஒரு நூல் இருந்தது என்பதை முற்றிலும் மறுக்க எந்த ஏதுவும் இல்லை. தொல்காப்பியக் காலத்துக்குச் சற்று முற்பட அவர் ஆசிரியர் செய்த நூல் அஃது என்ற கட்டுக்கதைதான், அப்படி ஒரு நூல் இருக்க முடியாது என்பதை மறைமலையடிகள் நிலைநாட்டும்படி செய்தது. தொல்காப்பிய ஆசிரியருடன் தொடர்பற்ற, அவர் காலத்திலேயே வழக்கிறந்த அல்லது சிதைவுற்ற ஒரு நூலாக அஃது இருந்திருக்க வழியுண்டு. ஏனெனில், மிகப் பிற்கால உரையாசிரியர்கள் அகத்திய மரபில் நம்பிக்கை கொண்டதுடன் நிற்கவில்லை. அதிலிருந்து மேற்கோள்களும் காட்டியுள்ளனர். சில சூத்திரங்கள் அகத்தியர் சூத்திரமாக நன்னூலார்வரை பொன்னே போலப் போற்றப்பட்டு வந்துள்ளன. பொருள் மரபிழந்துபட்டபின் பிற்காலத்தவர் புதுச் சூத்திரம் செய்து இடர்ப்படாமலிருக்கவே பழஞ் சூத்திரத்தை இடைப்பெய்து சென்றனர் என்று கொள்ளலாம். ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்’ என்ற முதனூல் இலக்கணச் சூத்திரம் இத்தகையதென்று கொள்ள இடமுண்டு. இன்றுகூட அச்சூத்திரக் கருத்து மொழியிலக்கண மரபுடன் பொருந்தாத ஏதோ பழைமைப்பட்ட ஒரு மரபாகவே உள்ளது. தமிழர் கடவுளாக மதித்த ஒரு முதல்வன் வாய் மொழியையே இவ்வாறு குறித்தனர் என்று கொள்ளல் தகும். அந்நூல் நம் திருக்குறளாகவோ அல்லது திருக்குறளுக்கு முற்பட்ட அது போன்ற ஒரு மூல நூலாகவோ இருத்தல் கூடும். திருக்குறளின் காலம் கடைச் சங்கத்துக்கு முற்பட்டது என்பது தவிர, வேறு வகையில் நாம் வரையறுத்துக் காணாத ஒன்று இங்கே நினைவுகூரத் தக்கது. கடைச்சங்க நூல்களிலேயே பல பாடல்கள் தலை இடைச்சங்க காலத்தில் சங்க நூலாக ஏற்கப்படாதிருந்த உதிரிப் பாடல்களாகவோ, இறந்துபட்ட நூல்களின் துண்டுகளாகவோ இருத்தல் கூடும் என்று எண்ண இடமுண்டு. புறநானூற்றில் சில பழம் பாடல்கள் தொல்காப்பியத்துக்கு முற்பட்டவையா யிருந்திருக்கக்கூடும். அகத்தியத் திரட்டு என்றும், சிற்றகத்தியம் என்றும் ஒரு நூல் வெளி வந் துலவியதுண்டு. மேற்கோள் சூத்திரங்களில் சில அதில் காணப்படுகின்றன. அகத்தியர் மரபை மறைமலையடிகள் மறுத்ததாலும், அதன் சொல்லும் பொருளும் உயர்பண்பற்றவை யாகத் தோற்றியதாலும் அதனைப் போலி என அறிஞர் ஒதுக்கியுள்ளனர். ஆனால், அது காலத்தில் அடிபட்டு உருத் திரிந்து சிதைந்த மூல நூற்பகுதிகளாகவோ, அல்லது அப்பெயர் மரபில் எழுந்த ஒரு பின்னூலாகவோ இருக்கலாம். அகத்தியர் மரபு ஒரு கட்டுக் கதை என்று கருதினால்கூட, அயல் மரபினர் கட்டுக்கதைக்கு எப்போதும் ஒரு தாய் மரபு இருந்திருத்தல் வேண்டும். முத்தமிழுடன் அதன் இணைப்பு இதை வலியுறுத்துகிறது. ஏனெனில், இதுவும் முச்சங்கமும் ஆரிய மறியா மரபுகள். முத்தமிழின் மெய்ம்மை முச்சங்க மரபுக்குரிய சான்றுகளுள் தலைசிறந்த சான்று முத்தமிழ் மரபேயாகும். முச்சங்க மரபு கற்பனை என்று கூறுபவர்கள்கூட முத்தமிழ் மரபு கற்பனை என்று கூற முடியாது. ஏனெனில், அக் கருத்தோ, மரபோ பிற்காலத்த தாயினும், முற்காலத்ததாயினும் வேறெந்த நாட்டிலும், மொழியிலும், இனத்திலும் இன்றுவரை இயலாத ஒன்று ஆகும். அத்தகைய ஒரு கற்பனைகூடத் தமிழினத்துக்குப் பெருஞ் சிறப்பளிப்பதாகும். ஆனால், அது வெறும் கற்பனையன்று என்பதைச் சங்க மரபு காட்டு கிறது. முதல் நூலான அகத்தியமே முத்தமிழின் இலக்கணம் என்று குறிக்கப்படுகிறது. தவிர, முதற் சங்கத்தின் நூற்பட்டியலிலேயே முதுநாரை, முதுகுருகு போன்ற இசை நூல்களும்; முறுவல், சயிந்தம். குணநூல், செயிற்றியம், அவிநயம் போன்ற நாடக நூல்களும்; இடைச் சங்கத்தில் இசை நுணுக்கம் போன்ற இசைநூல்களும்; கடைச் சங்கத்தில் கூத்து, வரி முதலிய இசை நாடக நூல்களும் இருந்தனவாகக் குறிக்கப்படுகிறது. இந்த நூல்கள் ஒன்றும் இன்று இல்லாமல் அழிந்துபட்டன. அவை இல்லாதனவல்ல. அழிந்துபட்டவை என்பதைச் சிலப்பதிகாரத்தின் அடியார்க்கு நல்லாருரையும் அதனைப் பதிப்பித்த முனைவர் உ.வே. சாமிநாதய்யர் முன்னுரையுமே தெளிவாகக் காட்டப் போதியன. சிலப்பதிகார நூலும் உரையும் தரும் சான்றுகள் அடியார்க்கு நல்லார் உரை எடுத்துக் காட்டிய இசை நாடக மேற்கோள் சூத்திரங்கள் பல எந்நூலிருந்து எடுத்துக் காட்டப்பட்டவை என்று தெரியவில்லை. அவற்றுள் பல தலை இடை கடைச் சங்கத்தின் இறந்துபட்ட பல நூல்களிலிருந்து அவர் எடுத்த சூத்திரங்களாயிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், அவரே தம் காலத்தில் இறந்த நூல்களின் பட்டியல்கள் தருகிறார். தொன்னூல்கள் என்று அவரால் குறிப்பிடப்பட்ட இசைத் தமிழ் நூல்களான ‘பெருநாரையும் பெருங்குருகும் பிறவும் பஞ்சபாரதியம் முதலியனவும்; இவை போலவே தொன்னூல்களாகக் குறிக்கப்படும் நாடகத் தமிழ் நூல்களான பரதம், அகத்தியம் முதலியவையும் முழுதும் இறந்துபட்டன’ என்று அவர் குறிக்கிறார். அத்துடன் நாடகத் தமிழ் நூல்களான முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்பவவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணாமையின், அவையும் இறந்தன போலும்! என்று கூறுவதுடன், ‘இறக்கவே வரும் பெருங்கலம் முதலிய பிறவுமாம்!’ என்று தம் காலத்திலிருந்தே நூல்கள் இறந்துகொண்டிருந்த சூழ்நிலையையும் விளக்கி யுள்ளார். இறையனார் அகப்பொருளுரையின் கடைச்சங்கப் பட்டியலைப் போலவே, முதல் இடைச்சங்கப் பட்டியலும் நிறை பட்டியலன்று, குறை பட்டியல் என்றே தோற்றுகிறது. ஏனெனில், இந்த இறந்துபட்ட பட்டியலில் சங்க மரபில் கண்ட முதற் சங்க இசைத் தமிழ் நூல்களான முதுநாரையும் முதுகுருகும், முதற் சங்க நாடகத் தமிழ் நூல்களான முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் ஆகியவையும் உள்ளன. ஆனால், சங்க மரபில் குறிக்கப்படாத இசைத் தமிழான பஞ்ச பாரதியமும் நாடகத் தமிழ் நூல்களான பரதம், அகத்தியம் (இது முத்தமிழ் அகத் தியமாயிருக்கலாம்) ஆகியவையும் தொன்னூல்களாகவே இங்கே குறிக்கப்பட்டன. ‘ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணாதவை’ என்று அடியார்க்கு நல்லார் குறித்த நூல்களுள் முதற்சங்க நாடகத் தமிழ் நூல்களான செயிற்றியம், குணநூல் ஆகியவற்றிலிருந்தும், இடைச் சங்க கால இசை நூலாகிய சிகண்டியார் இயற்றிய இசை நுணுக்கத்திலிருந்தும்; கடைச் சங்க நாடக நூலாகிய கூத்து நூலிலிருந்தும் அவரே நிரம்ப மேற்கோள் சூத்திரங்கள் தந்துள்ளார். இச் சங்க மரபுக்கு வெளியேயும் அவர் கடைச்சங்க நாடகத் தமிழ் நூலான மதிவாணனார் முதல் நூல் ஒன்றைக் குறிப் பிட்டுள்ளார். அடியார்க்கு நல்லார் காலத்தில் நடு இறுதி காணாத நூல்களுள் ஒன்றான, இசை நுணுக்கம் அல்லாமல், பாரசவ முனிவருள் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம், அறிவனார் செய்த பஞ்சமரபு, ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதியம், மதிவாணனார் நாடகத் தமிழ் நூல் ஆகியவை இறவாது நிலவியதாகவும் அவற்றையே அவர் சிலப்பதிகார ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியதாகவும் குறிக்கிறார். மேற்குறிப்பிட்டவற்றுள்ளே முதற் சங்க நாடகத் தமிழ் நூல்களான செயிற்றியம், குணநூல், அவிநயம், இடைச்சங்க இசைத்தமிழ் நூலான சிகண்டியார் இயற்றிய இசை நுணுக்கம்; இடைச்சங்க நாடகத் தமிழ் நூல்களெனத் தோற்றும் ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதியம்; அறிவனார் இயற்றிய பஞ்ச மரபு; கடைச் சங்க நாடகத் தமிழ் நூல்களான மதிவாணனார் நாடகத்தமிழ் நூல், கூத்துநூல் ஆகியவற்றிலிருந்தும்; இனமறியப் படாத நாடக நூல், நூல் சொல்லகத்தியம், ஆசிரியமாலை ஆகியவற்றிலிருந்தும் அடியார்க்கு நல்லார் மேற்கோள் சூத்திரங்கள் பல எடுத்தாளப்பட்டுள்ளன. முனைவர் உ.வே. சாமிநாதய்யர் அனுபவ உரைகள் முனைவர் உ.வே. சாமிநாதய்யர் தம் மூன்றாம் பதிப்புரையில் ‘அடியார்க்கு நல்லார் கால நூல்களும் இறந்து பட்டன என்பது தெளிவு’ என்று குறிக்கிறார். பதிப்பு வேலைக்குரிய தம் உரையாராய்ச்சி பற்றிய அவர் அனுபவத்தைக் குறித்து அவர் கூறுவதாவது: “இவற்றிலுள்ள இசை நாடகப் பகுதிகள் எனக்குக் கிடைத்த கச்சபுட வெண்பா, தாள சமுத்திரம், சுத்தானந்தப் பிரகாசிகை முதலிய தமிழ் நூல்களைக் கொண்டும், இசையிலும் பரதத்திலும் வல்லோரை வினாவியும் ஒருவாறு ஆராய்ச்சி செய்யப்பெற்றன.” இசை நாடகத் தமிழ் மரபு அழிந்துவந்துள்ள வகையையும் அவர் இதன் பின்கூறும் சொற்களே சுட்டிக் காட்டுகின்றன. “அங்ஙனம் செய்யப்பட்டும் சில பாகம் மட்டும் சற்றே விளங்கின. இசை நாடகங்களுக்குரிய பரிபாஷைகள் (துறைச் சொற்கள்) பெரும்பாலன வடமொழியிலும் (சமற்கிருதத்திலும்) தென்மொழியிலும் (தமிழிலும்) வேறு வேறு உருவங்களோடு கூடியிருந்ததால் இவற்றிலுள்ள சொற்கள் பல வட (சமற்கிருத) நூல்களால் தெரிந்து கொள்ளக்கூடவில்லை. இந்நூலில் அடியார்க்கு நல்லார் ஒவ்வொன்றையும் பழைய தமிழ்நூல் மேற்கோள்களைக் கொண்டு நன்கு புலப்படுத்தியிருந்தும், அப்பழைய நூல்களும் அவற்றின் கருத்தை ஒருவாறு எடுத்துச் சொல்வோரும் இக்காலத்து இல்லாமையால், அவை அறிதற்கரிதா யிருக்கின்றன. “அன்றியும் இவற்றில் வந்திருக்கிற இயற்றமிழ்ச் சொற்களுட் சில இக்காலத்து வழங்காதொழிந்தமையால், அவற்றுக்குப் பொருள் ஒரு தலையாகப் புலப்படவில்லை. அவற்றினுருவமும் விளங்கவில்லை. “ஆயினும், இப்படியே முன்பு விளங்காதவை பல பின்பு இந்நூலாலும் இவ்வுரையாலும் ஒருவாறு விளங்கி வருதலால்...ஆராய்ச்சி செய்யச் செய்ய விளங்குமென்பது என் துணிபு” “மேற் கூறியவற்றால் முத்தமிழ் மரபின் மெய்ம்மையும் முச்சங்க மரபின் மெய்ம்மையும் உறுதிப்படுகின்றன. முச்சங்க வாழ்வின் காலம் ஒன்றினுக்கே இன்னும் இறையனார் அகப்பொருளுரையின் வட்ட வட்டக் கணக்கின் வாய்மை, வாய்மையின்மைக் குரிய சான்றுகள் தேவைப் படுகின்றன. இங்கும் மேனாட்டு, ஆரிய நாகரிக மரபுகளால் வந்த அவநம்பிக்கையே அம்மரபினை முற்றிலும் தள்ளிவிட எண்ணுகிறது என்னலாம். இந்த அவநம்பிக்கைகளை அகற்றித் திறந்த மனத்துடன் மொழி, பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிப் படிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால், அவநம்பிக்கைக்குரிய காரணம் நாம் காலக் குறைபாடே யன்றி மரபின் பொய்ம்மை யன்று என்பது தெளிவாகக்கூடும். 8. திருக்குறள் மாண்பு தமிழிலக்கியம் ஒரு பல்வண்ணப் பட்டடை. அதன் பல்வேறுபட்ட வண்ணங்களில் வெளிப்படக் கண்காணும் வண்ணங்களும் உண்டு. வெளிப்படக் காணப்பெறாத நுண்ணிய வண்ணங்களும் உண்டு. அத்துடன் எல்லா வண்ணங்களும் எல்லாருக்கும் எல்லாக் காலங்களிலும் ஒரு நிலையாகத் தெரிவதில்லை. பார்ப்பவர் கோணத்துக் கேற்ப, பண்பாட்டுக் கேற்ப கால இடச் சூழ்நிலைகளுக் கேற்ப ஒவ்வொரு வண்ணமும் அல்லது ஒவ்வொரு வண்ணத்தின் ஒவ்வொரு சாயலும் ஒவ்வொரு சமயம் உணர்ந்து கொண்டாடப்படுகிறது என்னலாம். தமிழ்த் தாயகத்திலேயே ஒவ்வொரு காலத்தில் சிறப்புற்று வளர்ந்த பண்புகள் உண்டு. தாயகம் கடந்து தென்னக மொழியின நாடுகளின் எல்லையிலோ, இமயம் அளாவிய பண்பின் எல்லையிலுள்ள நாடுகளிலோ, நாகரிக உலகிலோ படர்ந்து பரந்த பண்புகளும் உண்டு. தாயகத்திலே மரபற்று அயலினங்களிலும் தொலையினங்களிலும் வளர்ந்து பரவிய பண்புக் கூறுகள்கூட உண்டு. இந்நிலையில் தமிழகத்தின் இலக்கியச் செல்வக் கூறுகள். தமிழகத்திலேயே எல்லாராலும் எல்லாக் காலத்திலும் ஒரு நிலையாகப் போற்றப் பெறுவதில்லை. உலகிலும் அவ்வாறே. தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை. சீவகசிந்தாமணி. தேவார திருவாசகங்கள், திருக்கோவையார், திருநாலாயிரம்; மூவருலா, கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், பெரியபுராணம்; பிள்ளைத்தமிழ், கலம்பகம் முதலிய துறை நூல்கள்; குறவஞ்சி, பள்ளு, காவடிச் சிந்து முதலிய மக்கள் நாடகத் தமிழ்நூல்கள்; திருப்புகழ், திருவருட்பா, பாரதி, பாரதிதாசன் பாடல்கள்-இவற்றுள் ஒன்றும் பலவும் ஒவ்வொரு காலத்தில் எழுந்து வளர்ந்தன. ஒவ்வொரு காலத்தில் புகழ் பரப்பிப் பாராட்டப் பெற்றுள்ளன. ஆனால், எல்லாக் காலத்திலும் எல்லாராலும் எல்லாவகைப் பட்டவராலும் எப்போதும் போற்றப்பட்டு வரும்நூல்-தமிழகத்திலும் வெளியுலகிலும் ஒருங்கே புகழ் பரப்பிய தனிநூல் திருக் குறளேயாகும். கம்பராமாயணச் சிறப்பு இந்திய மொழிகளுள் இராமாயணம், பாரதம் இல்லாத மொழிகள் கிடையா. சமற்கிருதம் உட்பட எல்லாப் பிற மொழிகளிலும் இராமாயணமோ, தவறினால் பாரதமோதான் முதல் இலக்கியப் படைப்பாக அமைந்துள்ளது. ஆனால், இவை அனைத்திடையேயும் கூடத் தமிழ்க் கம்பராமாயணத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதன் மூலம் தமிழ்க்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஏனெனில், அது தாய்மொழி இராமாயணங்கள் அனைத்திலும் காலத்தால் முற்பட்டது. அளவில் அது வால்மீகி இராமாயணத்துக்கு ஒப்பானது; பெருமையில் வால்மீகி இராமாயணத்துடன் போட்டியிட்டுவருவது. மற்ற மொழி இலக்கியங்களில் இராமாயணம் முதல் நூல். ஆனால், தமிழில் கம்பராமாயணம் முதல் நூலும் அன்று. முதல் முதல்நூலும் அன்று. முதற் காலமாகிய பண்டைக்கால நூலும் அன்று. இடைக்கால நூல்களில்கூட அதுவே கடைசிநூல் என்னலாம். அதன்பின் எழுந்த தமிழிலக்கியம் தளர்ச்சிக் கால இலக்கியம். அல்லது இக்காலப் புதுமலர்ச்சி இலக்கியமே. கம்பராமாயண ஆர்வலர் அறியாத இன்னும் சில சிறப்புகள் அந்நூலுக்கு உண்டு. தாய்மொழி இராமாயணங்களுள் அது பழைமை மிக்கது மட்டுமன்று; வால்மீகி இராமாயணத்தைப் போலவே அது தாய்மொழி இராமாயணங் களுக்கெல்லாம் மூல முதல் நூல் ஆகும். தமிழகத்தில் உலவிய பழைய இராமாயணக் கதை மரபுகளைத் திரட்டி வால்மீகியின் இராமாயணத்துடன் அஃது இணைத்தது. அத்துடன் தமிழகத்திலிருந்து எழுந்த வைணவ மறுமலர்ச்சிக் கருத்துகளை உடன்கொண்டு அஃது எல்லாத் தாய்மொழி இராமாயணங்களுக்கும் வழி காட்டிற்று. சமற்கிருதத்திலும் ஒரு புதிய இராமாயணம் கம்பராமா யணத்தின் தழுவல் மொழிபெயர்ப்பாக எழுந்தது. அதுவே அத்தியாத்ம இராமாயணம். இதுவும் வால்மீகியினால் இயற்றப் பட்டதாகவே குறிக்கப்பட்டாலும், இந்த வால்மீகி பழைய வால்மீகியல்லர்; கம்பர்க்குப் பின் வாழ்ந்த ஒரு புதிய வால்மீகியே யாவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் துளசிதாசரின் இராமாயணமும் (18ஆம் நூற்றாண்டு) மலையாளத்தில் எழுத்தச்சன் இராமாயணமும் (16ஆம் நூற்றாண்டு) இரண்டுமே பழைய வால்மீகி, கம்பர், புதிய வால்மீகி ஆகிய மூவர் இராமாயணங்களின் வழிவந்த நூல்கள் ஆகும். கம்பராமாயணத்தின் மற்றோர் அருஞ் சிறப்பு அஃது ஒன்றே தமிழகத்தின் பண்டைய இசைமரபு, நாடக மரபுகளின் கூறுகளை இணைத்து, நாடகக் காப்பியமாக இயன்றது என்பதே. கம்பராமாயணமும் திருக்குறளும் கம்பராமாயண ஆர்வலரும் ஆராய்ச்சியாளரும் இவற்றைக் கண்டுணர்ந்து பரப்பினால் இந்திய இராமாயணங்களுள் கம்பராமாயணத்துக்கும், அதன்மூலம் இந்திய மொழிகளில் தமிழ்க்கும் ஒரு தனிச்சிறப்புத் துலங்க வழி ஏற்படலாம். ஆனால், கம்பராமாயண ஆர்வம் இன்று சமற்கிருத ஆர்வமாகவும், தமிழ்ப் பண்பாடு மறைத்து ஆரியப்பண்பாடு போற்றும் ஆர்வமாகவுமே வளர்ந்து வருகின்றது. கம்பராமாயணத்தின் இச் சிறப்புகள்கூடத் தமிழ்க்குத் தமிழகத்துக்கு வெளியே மிகுதியான பெருமை அளிக்கமாட்டா. அதைக் கையில் கொண்ட தமிழன் தமிழகத்திலேயே முனைப்பாகத் தமிழ்ப் பண்பு வளர்க்க இயலாது. தமிழகத்துக்கு வெளியிலும் தமிழ்ப் பண்பின் பிரதிநிதியாக விளங்க முடியாது. கம்பர் கால இலக்கியத்திலேயே கம்பராமாயணத்தைவிடப் பெரியபுராணமும், இரண்டையும்விட மூவருலாவும், கலிங்கத் துப் பரணியும் அச்சிறப்புக்கு மிகுதியான தகுதியுடையன. சமயத் துறையிலும் கம்பராமாயணத்தை விஞ்சிய தனித் தமிழ்ச் சிறப்புத் தேவார, திருவாசகங்களுக்கும், திருநாலாயிரத்துக்கும் உண்டு. கம்பர் காலத்துக்கு முற்பட்டு, சீவகசிந்தாமணி, பெருங்கதை, மணிமேகலை, சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் ஆகியவை தமிழ்ப் பண்பின் தலைக்கோயிலுக்கு ஏறிச் செல்லும் தமிழ்ப் பண்பாட்டுப் படிகளாக விளங்குகின்றன. திருக்குறள் அத் தமிழ்ப் பண்பாட்டின் தலைக் கோயிலாகவும் தொல்காப்பியம் அத்தலைக் கோயிலின் தலைக் கோபுரமாகவும் விளங்குகின்றன என்னலாம். சீவக சிந்தாமணியும் பெருங்கதையும் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் (குண்டலகேசி, நீலகேசி, யசோதர காவியம் போன்ற) பிற பண்டைத் தமிழ்க் காவியங்களும் இந்தியா கடந்து ஆசியாவெங்கும் சிறப்பாகவும், நாகரிக உலகில் பொதுவாகவும் தமிழ்க்குத் தனிப் பேராண்மையும் தனிச் சிறப்பும் தருவனவாகும். சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் கிரேக்க மொழியையும் சமற்கிருத மொழியையும் தாண்டித் தமிழ்க்குப் பழம்பெருமையும் புதுச் சிறப்பும் அளிக்க வல்லன. ஆனால், திருக்குறள் தமிழகத்துக்குத் தந்துள்ள, தருகிற, தர இருக்கிற சிறப்புக்குத் தமிழின் ஏனைய நூல்கள் அனைத்தின் தொகுதியும் ஈடு செலுத்துவனவல்ல. அத்துடன் அதன் வருங்காலப் புகழ்வளத்தின் ஒரு சிறு பகுதியையே உலகம் இன்றுவரை கண்டுள்ளது என்னலாம். புகழ் மரபின் வரலாறு தமிழகத்திலே தொல்காப்பியம் வழக்கில் தளர்வுற்ற காலம் உண்டு. இன்றைய மறுமலர்ச்சியில்கூட அது வெளிநாடுகளில் புகழ்க்கதிர் தோற்று வித்துள்ளதேயன்றித் தமிழகத்தில் இன்றும் மறுமலர்ச்சியைத் தீண்டவில்லை. சங்க இலக்கியம் மறுமலர்ச்சிக் காலத்துக்கு முன்வரை நீடித்து மறக்கப்பட்ட காலம் உண்டு. சிலப்பதிகாரம் மறக்கப்பட்ட நூற்றாண்டுகள் இன்னும் மிகப் பல. இது போலவே சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம் முதலிய எந்தத் தமிழ் நூலின் புகழ்மரபிலும் வளர்ச்சித் தளர்ச்சிகள் உண்டு. ஆனால், வளர்ச்சி, தளர்ச்சிகள் எதுவுமின்றி, ஒரே நிலையில் என்றும் புகழ் வளர்த்து வந்துள்ள ஒரே நூல், திருக்குறள். மணிமாலையில் மணிகளைக் கோத்த சரடுபோல், அது நூற்றாண்டு கடந்து நூற்றாண்டு, ஊழிகடந்து ஊழி தமிழர் வாழ்வையும் இலக்கியத்தையும் கோத்துள்ளது. கோத்து வருகிறது! அத்துடன் தமிழகத்தில் மட்டுமன்றி, உலக முழுவதுமே அதன் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. இன்னும் வளர்ந்துவரும் என்பது உறுதி. தொல்காப்பியத்தைப் போலவே, திருக்குறளுக்குத் தமிழிலக்கிய வரலாற்றில் மிகப் பழைமை வாய்ந்த உரைகள் பல வழங்கின என்று அறிகிறோம். அவற்றுள் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பழிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், கவிப்பெருமான், காளிங்கர் ஆகிய பத்துப்பேரின் உரைகள் பெயரளவில் நம்மை வந்தெட்டியுள்ளன. இவற்றுள் பரிமேலழகர் உரையொன்றே பெருவழக்காய் உள்ளது. மணக்குடவர், காளிங்கர், கவிப்பெருமான் உரைகள் போன்றவை ஒருசில வெளிவந்தும் அருகியே வழங்குகின்றன. பழைய உரைகளுள் பலவும், புதிய உரைகள் விளக்கங்களில் சிலவும் ஒருசேர, அண்மையில் தருமையாதீனத்தார் வெளியிட்ட பல்லுரைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இப் பழைய உரைகளும் புதிய உரை விளக்கங்களும் நம் காலத்தில் எழுந்துவரும் பல்வேறு புத்துரைகளும் ஆராய்ச்சி நூல்களும் திருக்குறளின் இடையறா நீடித்த புகழ்க்குச் சான்றுகளாகும். சங்க காலத்திலிருந்து நம் காலம் வரை கவிஞர் பெருமக்கள் கிட்டத்தட்ட எல்லாருமே வள்ளுவர் குறட்பாக்களை எடுத்தாண்டும், அவர் பெயரைத் தலைமேற்கொண்டும், அவர் புகழிலீடுபட்டுப் பாராட்டியும் வந்துள்ளனர். புலவரைப் புலவர் புகழ்ந்த இரண்டாயிர ஆண்டுக்கு மேற்பட்ட இந்த நீடித்த மரபைத் தமிழிலோ ஏனைய மொழிகளிலோ, எந்த ஒரு நூல்வகையிலும், நாம் எளிதாகக் காணமுடியாது. முன்பின் வாழ்ந்த சங்ககாலப் புலவர்கள் அதைப் புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுதியாகத் திருவள்ளுவ மாலை ஒன்றும் வழங்குகின்றது. உலகளாவிய புகழ் திருக்குறளின் பாக்களை முதலிரண்டு அடியாக உள்ளடக்கி அதன் விளக்கமாகப் பின்னடிகள் வகுத்து இயற்றப்பட்ட புகழ் நூல்களும் நீதிநூல்களும் தமிழில் பல. மேனாடுகளிலும் கீழை நாடுகளிலும் திருக்குறள் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலுமே மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. பல உலக மொழிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மொழி பெயர்ப்புகள் போட்டியிடுவதையும் காணலாம். தமிழகத்தில் கல்வி பரவாத இந்த நாள்களிலும் திருவள்ளுவர் திருக்குறளை எல்லா உலகமொழிகளிலுமாக வாசிப்பவர் தொகை, உலகில் தமிழர் தொகையைவிட மிகுதியாக இருத்தல் உறுதி என்னலாம். ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!’ என்று கவிஞர் பாரதியார் பாடியதன் வாய்மையை இச்செய்தியால் காணலாம். இந்தியப் பெரியாரும் சீனப் பெரியாரும் ஆங்கில, பிரஞ்சு, ஜெர்மன் அறிஞர்களும் ஒருதன்மையாகவே திருவள்ளுவரை உச்சிமேற்கொண்டு புகழ்ந்துள்ளனர். திருக்குறள் உலகின் ஒப்புயர்வற்ற தலைசிறந்த நீதிநூல். முக்காலத்துக்கும் உரிய சமயப் பொதுநூல். சமயச் சார்பற்ற அல்லது சமயங் கடந்த ஒழுக்கமுறைநூல் என்று அவர்கள் அனைவருமே அதை வாயார மனமாரப் போற்றியுள்ளனர். கிறித்துவ, இசுலாமியத் திருநூல்கள் மட்டுமே புகழ்ப் பரப்பில் திருக்குறளுக்கு இணையாகக் கூறத்தக்கவை. ஆனால், அவற்றின் பரப்புக்கும் வளர்ச்சிக்கும் அவ்வச் சமயச் சார்பே பெரிதும் உதவிற்று என்பதில் ஐயமில்லை. அத்துடன் அவற்றின் பரப்புக்கு ஆட்சி யினத்தார் ஆற்றலும் துணைதரல் இயல்பு. இவற்றுக்கு மாறாகத் திருக்குறளுக்கு இத்தகைய சமயச் சார்பு இல்லை என்பது மட்டுமன்று; அப்புகழ் வளத்தில் தமிழகத்தின் முயற்சி ஒரு சிறிதும் பங்கு கொண்டதன்று. தமிழினமும் உலகில் ஆட்சியினமாகவோ, ஆட்சியினத்தவர் சார்புடையதாகவோ இல்லை. தமிழக மறுமலர்ச்சிகூடத் திருக்குறளின் வெளிநாட்டுப் புகழைத் தூண்டுதலாகக் கொண்டுள்ளதேயன்றி, அதன் உலகப் புகழ் வளர்ப்பதில் இன்னும் இனியும் பங்கு கொள்ளவில்லை. தமிழினத்தின் வளர்ச்சி கருதியும், உலகப் பண்பாட்டு வளர்ச்சி கருதியுமே தமிழக மறுமலர்ச்சி அறிஞரும் கலைஞரும் அதில் இனி கருத்துச் செலுத்துதல் வேண்டும். யாழின் உட்கீறல் தொல்காப்பிய உரைகளுக்கும் தொல்காப்பியத்துக்கும் இடையே ஒரு நீடித்த இடைவெளி உண்டு. அஃது இடைவெளி மட்டுமன்று, காலங் கடந்த பண்பாட்டு இடைவெளி. இது காரணமாக, தொல்காப்பியர் கால மரபுகளை உணர மாட்டாமலும், அவர் இலக்கண விதிகளின் பொருள் உணரமாட் டாமலும், உணர்ந்த விதிகளுக்கு இலக்கியத்திலிருந்தோ உலக வழக்கி லிருந்தோ சான்றுகள் எடுத்துக்காட்ட மாட்டாமலும் எல்லா உரையாசிரியர் களும் குழம்பியுள்ளனர். தெரிந்து குழம்பிய இக்குழப்பத்தைவிடத் தெரியாமல் குழம்பிய குழப்பம் இன்னும் மிகுதி என்னலாம். கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் இலக்கணத்தைச் சமற்கிருத மொழியுடனும் இலக்கணத்துடனும் கொண்டு பொருத்தச் சமற்கிருத ஆர்வலர்களால் அரும்பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. மொழியின் இலக்கணமான தொல்காப்பியத்தின் இந்த மரபுப் பிளவும் மரபுக் குழப்பங்களும் திருக்குறளையும் பாதிக்காமல் விடவில்லை. ஏனெனில், இருநூல்கள் வகையிலும் கி.பி.3, 5ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலமே மரபுப் பிளவுக்கும், 9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலமே மரபுக் குழப்பத்துக்கும் காரணமாயின.மொழியின் இலக்கணத்தில் முன்னைய மரபுப் பிளவு மிகுதியாயிருந்ததென்றால், வாழ்வின் இலக்கணத்தில் பின்னைய மரபுக் குளறுபடிக்கு மிகுதி இடமேற்பட்டது. தொல்காப்பியத்தில் பிசி, அங்கதம், தொன்மை, தோல் முதலிய சொற்கள் மரபுப் பொருள் இழந்தபோது, கூடியமட்டும் சூத்திரத்தின் சொற்களையே உரையாசிரியர்கள் கிளிப் பிள்ளைகள் போலத் திருப்பித் திருப்பிக் கூறினர். அதனைத் தம் காலத்துக்குரிய புதுப் பொருள்களுடன் ஒட்டி மனநிறைவடைய அவர்கள் எண்ணவில்லை. ஆனால், திருவள்ளுவர் பயன்படுத்திய சொற்கள் மக்கள் வழக்கிலும் இலக்கிய வழக்கிலுமே புது மரபுகளால் புதுப்பொருள் கொண்டு பொருள் பிறழ்ச்சிக்கு எளிதில் இடம் தந்தன. இரண்டு சொற்கள் வகையில் மரபுப் பிறழ்ச்சியைச் சமற்கிருத வழக்குச் சுட்டிக் காட்டுகிறது. ‘இறை’ அல்லது ‘இறைவன்,’ ‘பகவன்,’ ‘தெய்வம்’ ஆகிய சொற்களைத் திருவள்ளுவர் ஒரே பொருளில் வழங்கவில்லை என்பது தெளிவு. இறைவன் மன்னன் பெயராக வழங்காத இடங்களில், கால இடங்கடந்த நோக்கம் அல்லது குறிக் கோளாகிய கடவுளைச் சுட்டி இரண்டே குறட்பாக்களில் வழங்கப்பட்டுள்ளது. அவை இருள்சேர் ஒரு வினையும் சேரா இறைவன் (குறள் 5), இறைவன் அடி சேராதார் (குறள் 10) ஆகிய இடங்களே. நாட்டின் மன்னுயிர்களைக் காக்கும் அதன் ஒருமுக ஆற்றலாக மன்னன் விளங்குகிறான். அதுபோல மன்பதையுலகு காத்தோம்பும் ஒருமுக ஆற்றலே கடவுள். இக்கருத்தை “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்” என்ற குறட்பா சுட்டிக் காட்டுவது காணலாம். பகவன் என்ற சொல் ஆதிபகவன் என முதற்குறளில் மட்டுமே வழங்குகிறது. தெய்வம் என்ற சொல் பல குறட்பாக்களில் (43, 50, 55, 619, 702, 1023) வருகின்றது. பரிமேலழகர் ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற ஒரு குறளில் மட்டும் (குறள் 619) ‘தெய்வத்தான்’ என்பதற்கு ஊழ்வலியால் என்று பொருள்கூறி, மற்ற இடங்களிலெல்லாம் வாளா தெய்வம் என்றே உரை கூறினார். ‘பகவன்’ என்ற சொல்லுக்கும் அவர் பகவன் என்றே உரை கூறியுள்ளார். ஆயினும் பாட்டின் குறிப்புரை முடிவில் ‘இப்பாட்டில் முதற் கடவுளதுண்மை கூறப்பட்டது’ என்று குறிப்பிட்டார்! உண்மையில் பகவன் என்ற சொல் கடவுட் கருத்தை விளக்கிய உலக ஆசான், கடவுட் பண்புகளைக் கொண்ட முதல்வன் என்ற பொருளிலேயே வழங்கப்பட்டுள்ளது. சமற்கிருதப் பொருள் இதைச் சுட்டிக் காட்டுகிறது. சமற்கிருத உரையாசிரியர்கள் பகவன் என்பதற்குக் ‘கலியாண’ குணங்களை யுடையவன். அதாவது நற்குணக் கடல் என்றே பொருள் கூறினர். திருவள்ளுவரின் `அறவாழி அந்தணன்’ இதை நினைவூட்ட வல்லது. தெய்வம் என்பதனை ஊழ் என்று பொருள் கொள்வது முற்றிலும் தவறன்று, ஆனால், முற்றிலும் சரியுமன்று, ஊழ் என்பது இயற்கையாற்றல், சமுதாயச் சூழல், காலச்சூழல் அல்லது உயிர்மரபு ஆகிய மூன்றன் தொகையே யாகும். பிற்காலத்தார் இறுதிப் பண்பையே வினைப் பயன் என்றனர். திருவள்ளுவர் கருத்துப்படி அது முற்பிறப்பின் பயனன்று, முந்திய தலைமுறையின் பயன். ‘தெய்வம்’ என்பது ஊழின் முதற் கூறாகிய இயற்கை யாற்றல். எனவேதான், திருவள்ளுவர் அதை ஊழ், இயற்கை யாற்றலின் உருவங்களான சிறு தெய்வங்கள், இயற்கையாற்றல் போல ஆற்றல் உடையவன் என்ற மூன்று பொருள்களில் வழங்கியுள்ளார். இவ் வேறுபாடுகளைப் பரிமேலழகர் உய்த்துணர்ந்துள்ளார். ஏனெனில், சமற்கிருதத்தில் தெய்வம் (தைவம்) என்பதன் பொருள் இன்றும் `தற்செயல் நிகழ்வு,’ ‘இயற்கையாற்றல்’ என்ற இரண்டுமே, சமற்கிருத அகரவரிசை தரும் பொருள்கூட இவையே. தமிழ் இழந்துவிட்ட முன்னைப் பொருளை முற்காலத் திலிருந்தே தமிழிலிருந்து இச்சொற்களை மேற்கொண்ட சமற்கிருதம் இன்னும் காத்து வருகிறது. சமற்கிருதம் பழம் பொருள் சுட்டிக் காட்டுமிடங்களில் பரிமேலழகர் ஏனைய உரையாசிரியர் கடந்து அவ்வப்போது தம் சமற்கிருதப் பேரறிவால் மெய்ப் பொருள் காண்கின்றார் அல்லது உய்த்துணர்கின்றார். சமற்கிருதப் பிற்காலச் சமற்கிருதக் கருத்துகளைத் திணிக்கும் போதுமே அவர் யாவும் பிறழக் காண நேர்கிறது என்று காணலாம். பரிமேலழகரின் பண்பு பரிமேலழகர் பெருவழக்காகப் போற்றப்பட்டு வந்ததற்கு நேர்மையான காரணங்களும் உண்டு; இயல்பான காரணங்களும் உண்டு . முந்தியவை அவர் தனிப்பட்ட நற்பண்புகள் சார்ந்தவை. பிந்தியவை காலத் தளர்ச்சிக்கேற்ற அவருடைய அவலப் பண்புகள். அவர் தனிப்பட்ட நற்பண்புகளுள் ஒன்று அவர் தீந்தமிழ் நடை, உரை நடையில் அவர்க்கு ஒப்பான செறிவு, இனிமை, தெளிவு, நயம் ஆகியவற்றின் இணைவை நாம் வேறெங்கும் காண முடியாது. கவிதையில் திருக்குறளுக்கு இருக்கும் சிறப்பை உரைநடையில் தாம் பெற அவர் எண்ணினார் என்னலாம். அதை அவர் மிகுந்த அளவிலே பெற்று வெற்றி கண்டுள்ளார் என்பதில் ஐயமில்லை. கருத்தில் சமற்கிருதச் சாய்வாகவே இருந்தவர் அவர். ஆயினும், சொல் நடையில் வியக்கத்தக்க முறையில் அவர் சீரிய தனித்தமிழ் நடை பேணினார். சமற்கிருதச் சார்பாக வலிந்து பொருள்கொண்ட இடங்கள் நீங்கலாகப் பிற இடங்களில், அவர் திருவள்ளுவர் உள்ளங் கண்டு அவர் சொற்போக்குப் படியே பொருள் நாடுவது காணலாம். தாம் கருதிய பொருளில் ஐயப்பாடு கண்டவிடத்தில், கூடியமட்டும் திருவள்ளுவர் சொல்லுக்கு மாறுசொல் தாராது சொல்வது அவர் வழக்கம். மேலே தெய்வம் என்ற சொல்லுக்கு அவர் உரை கூறியிருக்கும் முறை இதற்கொரு சான்று ஆகும். பிறவும் காண்டல் எளிது. இச் சிறப்புகள் பரிமேலழகரின் அடிப்படைக் குறை பாட்டை மறுமலர்ச்சிக் காலத் தமிழரிடமிருந்து மறைக்கப் பயன்பட வில்லை. திருவள்ளுவர் விலக்கியதாக அவரே உரைப்பாயிரத்தில் குறிப்பிடுகிற சுமிருதிகளில், கண்ட கூறுகள், வழக்கு, தண்டம் ஆகியவை, அருவருப்பான இக் கருத்துகளைத் திருவள்ளுவர் கருத்துகளுக்குப் பின்னணியாகவும், இடைப்பெய்தலாகவும், விளக்கமாகவும் அவர் தெரிந்தும் தெரியாமலும் புகுத்தி இடர்ப்படுகிறார். திருக்குறளில் காணப் படாத பெண்ணடிமை, பிறப்பு வேறுபாடு, சாதி வருண ஆசிரம மரபுகள் வெறுப்புத் துறவு, கொலை வேள்வி, சிரார்த்தம் முதலிய சடங்குகள் ஆகிய கருத்துகளை அவர் வலிந்து திருக்குறட் கருத்துகளுடன் பொருத்திக் காட்ட முயல்கிறார். இதில் அவர் கண்ட இடர்ப் பாடுகளும் தோல்விகளுமே மறுமலர்ச்சி ஊழியை ஊக்கும் உயிர்விதைகளாய் இருந்தன என்னலாம். இந்நிலையிலும், சுமிருதிகள் முதலிய சமற்கிருத மரபுகள் திருக்குறளுக்கு மூலமாவன என்று தம் கால நிலைக்கொத்துப் பரிமேலழகர் கொண்டாலும், சிற்றறிவுடைய மாந்தர் இயற்றிய அவ்வேடுகளைக் காட்டிலும், தெய்வப்புலவர் திருவள்ளுவரது தெய்வத் திருக்குறள் மேம்பட்டதென்றே அவர் கருதியதாகத் தோற்றுகிறது. சுமிருதி அடிப்படையில் அறம் (சமற்கிருதம்: தருமம்) என்பது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூன்று கூறுடையது என்றும், இவற்றுள் வழக்கும் தண்டமும் கால தேய மாறுபாட்டுக்கேற்ப மாறுபவை என்றும், அதனாலேயே திருவள்ளுவர் அவற்றை விலக்கி நிலையான பயனுடைய ஒழுக்கம் மட்டுமே கூறினாரென்றும் பரிமேலழகர் உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “இவற்றை ஒழித்து, ஈண்டு தெய்வப் புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடை ஒழுக்கமே அறமென எடுத்துக் கொள்ளப்பட்டது” என்கிறார். சமற்கிருதத்தைத் தெய்வமொழி எனக் கருதியிருந்தவர் அவர். ஆனால், சமற்கிருத சுமிருதிகளை அவர் அவ்வாறு கருதவில்லை. “அவற்றை அவர் மனித ஏடுகளென்றே கருதினார். ஆனால், தமிழ் மனித மொழியானாலும், அதில் அறநூல் இயற்றிய திருவள்ளுவரை அவர் தெய்வப்புலவர் என்று கருதினா ரென்பது தெளிவு. சமற்கிருதப் புராண இதிகாச ஆர்வம் மேலிட்டு, சுமிருதி யார்வலர் ஆதிக்கம் வலுத்துவந்த காலத்தில், திருக்குறளுக்கு மறைமுகமான எதிர்ப்பும் புறக்கணிப்புத் திரையும் இருந்துவந்திருத்தல் இயல்பு. அத்தகைய காலத்தின் போக்கை 9ஆம் நூற்றாண்டுக்குப்பின் வந்த வீர சோழியம், இலக்கணக் கொத்துப் போன்ற இலக்கணங்களும் சேனாவரையர் போன்ற உரையாசிரியரும் காட்டுகின்றனர். பரிமேலழகர் அவர்கள் சார்பில் நின்றே திருக்குறளுரையில் திருக்குறளுக்கு விளக்கம் செய்கிறார் என்னலாம். அவர் சமற்கிருதச் சார்புக்குக் காரணம் இதுவே. ஆனால், அவர்க்குத் திருவள்ளுவரிடம் இருந்த மதிப்பு, சேனாவரையர்க்கும் இலக்கணக் கொத்து ஆசிரியர்க்கும் தமிழ் மொழியில் இருந்த மதிப்பைவிடப் பெரிது என்பதில் ஐயமில்லை. கதை மரபு தொல்காப்பியத்தின் பெருமையை மறைக்க அகத்தியர் கதை மரபு பயன்பட்டது. அதுபோலவே திருக்குறளின் பெருமையைப் பொதுமக்கள் கண்களிலிருந்து மறைக்கவும், அறிஞர் கருத்தைக்கூட அதிலிருந்து திருப்பவும் வள்ளுவர் கதை மரபு பயன்பட்டது. வள்ளுவரைப்பற்றி அகச்சான்று புறச்சான்றுகளால் நமக்குத் தெரியக்கூடியது ஒன்றுமில்லை என்று கூறலாம். அவர் இயற்பெயர் இன்ன தென்றுகூட நமக்குத் தெரியவில்லை. வள்ளுவர் என்பதே அவர் இயற்பெயரா, குலப் பெயரா, தொழிற்பெயரா என்று வரையறுத்துணர வகை எதுவும் கிடையாது. பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை பற்றிய நிலையும் இதுவே. ஆனால், இதைப்பற்றியெல்லாம் கதை மரபாளர் கவலைப்படவில்லை. அவர்கள் துணிந்து அவர்க்கு ஒரு மனைவி கொடுத்தனர்-மனைவிக்கு வாசுகி என்ற பெயரும் கொடுத்தனர். அவர்க்கு உடன் பிறந்தார்களாக அவ்வையார், உப்பை, உறுவை, வள்ளி, கபிலர், அதிகைமான் ஆகிய அறுவரை இணைத்தனர். அவர்களுள் சிலர் பெயர்கள் கற்பனைப் பெயர்கள்; மற்றவர்கள் திருவள்ளுவருடனோ. ஒருவர்க்கொருவரோ தொடர்பு அற்றவர்கள். அது மட்டுமன்று, அவர்கள் எவரும் திருவள்ளுவர் காலத்திலே வாழ்ந்தவர்களல்லர். அவர்க்குப் பிற்பட்டவர்கள். ஆனால், அவை பற்றியும் கதை மரபாளர்கள் கவலைப் படவில்லை. அவர்கள் துணிந்து அவர்க்குப் பகவன் என்ற பார்ப்பனத் தந்தையையும், ஆதி என்ற புலைச்சித் தாயையும் படைத்துத் தம் கருத்துக் கேற்றதொரு புனைகதை கட்டினர். இக் கதையைத் தரும் புலவர் புராணம் கதைக்கு நாடகச்சுவை அளிக்கும் முறையில் கதையுடனிணைந்த பல தனிப் பாடல்களையும் தருகிறது. தவிர, கதை மரபுக்கு ஒரு சான்றளிப்பதுபோல, ‘கபிலர் அகவல்’ என்ற பெயருடன் ஒரு நூல் உலவுகின்றது. அதன் ஆசிரியர் தம்மைத் திருவள்ளுவரின் உடன்பிறந்தார் என்று கூறுவதுடன், புலவர் புராணத்தின் கதையையும் கூறி, அதற்குச் சான்று பகர்கிறார். இவ்வளவும் செய்தபின் அவர் சாதி முதலியவற்றை எதிர்த்து அவர் காலத்துக்கேற்ற சில சீர்திருத்தக் கருத்துகளையும் குறித்துச் செல்கிறார். கபிலர் அகவல் ஓர் இடைக்காலத்துச் சித்தர் பாடல் என்பதில் ஐயமில்லை. சித்தர்கள் முற்போக்கான கொள்கை யுடையவர்களே. கபிலரகவல் கதை வழங்கிய காலத்தில் ஒரு சித்தர் கபிலர் வாய்மொழியாக அதைக் கூறினாராதல் வேண்டும். திருவள்ளுவர் பிறப்பு வளர்ப்புக் கதை முற்றிலும் போலியானது என்பதற்கு நீண்ட ஆராய்ச்சி தேவையில்லை. பல்வேறுபட்ட நிலையில் விடப்பட்டு வளர்ந்து புகழ்பெற்ற அதிகைமானும் கபிலரும் அவ்வையாரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதைக் கதை எழுதியவர் எப்படி அறிந்திருக்கக் கூடும் என்பதைக் கதை காட்டவில்லை. கபிலரகவல் தவிர, மற்றக் கபிலர் பாடல்களிலிருந்தும் அவ்வையார் பாடல்களிலிருந்தும் அதை அவர்கள் அறிந்திருந்ததாகவோ, அறிந்து செயலாற்றிய தாகவோ தெரியவில்லை. உண்மையில் அவர்கள் காலப் புலவர்கள் திருவள்ளுவர் புகழைப் பழம் புகழாகவே குறித்துள்ளனர். திருவள்ளுவர் அதிகைமாற்கும் அவ்வையார்க்கும் கபிலர்க்கும் காலத்தால் மிக முற்பட்டவர் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், அம் மூவர் காலத்து அரசர்களுக்கும் முற்பட்டவன் செங்குட்டுவன். அவனைப் பாடிய சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் அவர் பாடலையும் குறிப்பிட்டு அவர் புகழையும் நிலைநாட்டிவிடுகின்றன. திருவள்ளுவர் கதை மரபு வழங்கிய காலம் பிறமொழிப் புலவர்களுக்கும் இதே போன்ற கதைகள் வழங்கிய காலமே ஆகும். மலையாளக் கவிஞன் எழுத்தச்சனும் சமற்கிருதக் கவிஞன் காளிதாசனும் தம் மரபு புலமை ஆகியவற்றைத் தாமே குறித்துச் சென்றுள்ளனர். எழுத்தச்சன் தன்னை உயர்குடி நாயர் மரபினர் என்று கூறுகிறான். காளிதாசன் தன்னைப் புலவர் மரபில் வந்த பார்ப்பனப் புலவன் என்கிறான். ஆனால், கதை மரபுகள் எழுத்தச்சனைப் பார்ப்பான், இழிகுல நாயர் நங்கை மகன் என்கின்றன. காளிதாசனை உவச்சன், காளியருளால் வாயும் புலமையும் பெற்ற ஊமை மூடன் என்கின்றன. திருவள்ளுவரின் மற்றொரு கதை மரபு திருக்குறள் அரங்கேற்றம் பற்றிய கதை. அதில் அரசனாகப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதியும் புலவர்களாகக் கபிலரும் இடைக்காடரும் இடம் பெறுகின்றனர். பிறப்பு வளர்ப்புக் கதையை மறுத்த சில ஆராய்ச்சியாளர்கூட இவ்வரசன் தொடர்பை ஏற்கின்றனர். ஆனால், கபிலர் பிற்காலப் புலவர். அவரைக் குறிக்கும் கதை மரபின் ஏனைய பகுதிகளும் பிற சான்றுகளின்று ஏற்புடையவை என்று கொள்ள முடியாது. திருவள்ளுவ மாலை என்ற பாடல் தொகுதி கதையுடன் பொருந்த அமையும் ஒரு நூலே. ஆனால், அதிலும் எல்லாக் காலப் புலவர்களும் இடம் பெற்றுள்ளனர். அரசன் உக்கிரப் பெருவழுதியும் இடம் பெறுகிறான். இது திருவள்ளுவ மாலை அரங்கேற்றக் கதை மரபை உறுதி செய்வதற்கு மாறாக, அதன் போலித் தன்மையை விளக்குவதாகவே அமைகிறது. திருவள்ளுவர் பற்றிய மற்றொரு கதைமரபு ஏலேலசிங்கன் மரபு ஆகும். ஏலேலசிங்கன் அவரை ஆதரித்த வணிகச் செல்வனாகவும் அவர் அன்பு மாணவனாகவும் இருந்ததாக அம் மரபு கூறுகிறது. அவன் கடல் வணிகச் செல்வன். சோணாட்டிலிருந்து இலங்கைமீது படையெடுத்து அதை ஆண்ட ஏலாரா என்ற இலங்கையரசன் அவனே என்பர் ஆராய்ச்சியாளர் சிலர். இது பற்றி மேலே கூறுவோம். திருவள்ளுவர் பெயரால் சென்னை மயிலாப்பூரில் ஒரு கோவில் இருக்கிறது. அவர் மயிலையில் பிறந்து வளர்ந்தவர் என்று இதனடிப்படையில் பல ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஆனால், அவர் மதுரையில் வாழ்ந்து பாண்டியனிடம் வள்ளுவச் சாக்கையனாக உயர்பணியில் அமர்ந்திருந்தவர் என்று வேறு சிலர் கருதுகின்றனர். கதைமரபு அவரை நெசவுத் தொழில் செய்தார் என்றும் குறிக்கிறது. வள்ளுவர் காலம் திருவள்ளுவர் காலம் இன்னது என்று நம்மால் திட்ட வட்டமாகக் கூற முடியவில்லை. ஆனால், சங்க காலத்திலிருந்து இந்நாள் வரை எல்லாக் கால நூல்களும் திருவள்ளுவர் பெயரைச் சுட்டிக் காட்டிப் புகழ்ந்தும், அவர் கருத்துகளை எடுத்து வழங்கியும் அவரைப் பெருமைப்படுத்தி யுள்ளன. திருக்குறள் சங்க காலத்திலோ, அதற்கு முற்பட்டோ இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை இது தெள்ளத் தெளியக் காட்டுகிறது. திருக்குறள் பிற சங்க நூல்கள் கடந்து பெருமைபெற்ற பெருநூல். ஆயினும், அது சங்க நூல்களுள் ஒன்றாகவே குறிக்கப்பட்டுள்ளது. சங்கத் தொகை, பத்துப் பாட்டு என்றும், எட்டுத் தொகை என்றும் பதினெண்கீழ்க் கணக்கு என்றும் வகுத்துள்ளனர். இவற்றுள் திருக்குறள் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வகுக்கப்பட்ட 18 நூல்களுள் ஒன்று ஆகும். “நாலடி, நான்மணி, நால் நாற்பது, ஐந்திணை, முப் பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம் மெய்ந்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே கைந்நிலையவாம் கீழ்க் கணக்கு” ‘முப்பால்’ என்ற பெயரால் இவ்வெண்பாவில் திருக்குறள் குறிக்கப் பட்டுள்ளது. சங்கப் பாடல்களின் பெருந்தொகுதி இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டுக்கு உட்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியக் கதையின் காலமும், காவியக் காலமும் இதனை அடுத்ததே. ஆனால், சங்கப் பாடல்களுள் சில அக்கால நூல்களுடன் தொகுக்கப்பட்டாலும், அக்காலத்துக்கு மிகவும் முற்பட்ட பழைமையுடையன ஆகும். திருக்குறள் கடைச்சங்க காலத்திய நூலானால், பெரும்பகுதி பாடல் களுக்குரிய இரண்டு மூன்றாம் நூற்றாண்டுக்கு மிக முற்பட்ட தாகவே இருத்தல் வேண்டும். திருக்குறள் என்ற நூற்பெயரோ, அதன் ஆசிரியர் பெயரோ சுட்டியும் சுட்டாமலும் அவர் கருத்தை மேற்கொண்டு கூறிய கீழ்வரும் சங்க காலப் பாடல்கள், சங்க காலத்தை அடுத்த சிலப்பதிகார மணிமேகலைக் குறிப்புகள் இதனைத் தெளிவுபடக் காட்டும். செங்களம் துழவுவோன் சிதைந்து வேறாகிய படுமகள் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே - புறம் 278 ஒரு வீரத் தாயைக் குறிக்கும் இப் புறநானூற்றுப் பாடலில், காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற சங்ககாலப் பெண்பாற் புலவர், ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்ற குறட்பாவைக் கருத்திலும் சொல்லிலும் நினைவூட்டுகிறார். வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவே, நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் செய்திகொன் றார்க்கு உய்தி இல்லென அறம்பா டிற்றே, ஆயிழை கணவ! - புறம் 34 இப் புறநானூற்றுப் பாட்டில் ஆலத்தூர் கிழார், ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ என்ற குறட்பாவின் கருத்தும் சொல்லும் தழுவியதன்றி, மேற்கோளாக எடுத்தாண்ட நூலை ‘அறம்’ என்று சிறப்பித்துக் கூறுகிறார். இப்பாட்டுச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியதாகும். சிலப்பதிகார ஆசிரியர் குறள் நூலின் பெயரோ ஆசிரியர் பெயரோ சுட்டாமலே ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’ என்ற குறளின் கருத்தைப் பொதிந்து கூறியுள்ளார். “முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண்” -சிலப்பதிகாரம், 21ஆவது வஞ்சினமாலை 3-4 சோழன் நலங்கிள்ளியையும் அவன்கால நிகழ்ச்சிகளையும் எடுத்துரைக்கும் காவியம் மணிமேகலை. அஃது ஒரு குறட் பாவையே உட்பொதிந்து மேற்கோளாகக் காட்டி ஆசிரியரையும் ‘பொய்யில் புலவன்’ என்று சுட்டியுள்ளது. “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை’ என்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!” மற்றும் ‘தெய்வந் தொழாஅள்’ என்ற குறட்பாவின் திரண்ட கருத்து திருவள்ளுவர்க்கே உரிய கருத்து என்ற இலச்சினை பொறித்த ஒன்றாகும். அதனை வலியுறுத்தும் இரண்டு பாடல்கள் (39, 16) கலித்தொகையில் உண்டு. முதற் பாட்டில் (கலி 39) தலைவன் தலைவி தொடர்புபற்றி ஊர் அலர் தூற்றுகிறது. தலைவி கவலைப்படுகிறாள். ஆனால், தோழி அவள் உள்ளத்தை வேறு வகையில் திருப்பிக் களிப்பூட்டுகிறாள். ‘ஊர் எது வேண்டுமானாலும் பேசட்டும், நாங்கள் களிப்புறுகிறோம். இனி எப்போதாவது ஊரில் மழையில்லை என்றால், நாங்கள் உன் உதவி பெறலாம். அந்தக் காலம் விரைவில் வரப்போகிறது’ என்கிறாள். இது கற்புடையவள் மழை பெய்யச் சொன்னால் அது பெய்யும் என்ற வள்ளுவர் கருத்தைக் காட்டுகிறது. இரண்டாவது பாட்டில் தலைவன் பிரிவு பற்றிக் கவலைப்படும் தலைவிக்குத் தோழி வள்ளுவர் கருத்தை இன்னும் தெளிவுபடக் கூறுகிறாள். ‘பாலையில் மழை பெய்விக்கும்படி மேகத்தையோ, வெப்பந் தணிக்க வீசும்படி காற்றையோ, வெயில் தணிக்கும்படி கதிரவனையோ வேண்டும் கற்பல்லவே நம் கற்பு. அங்ஙனம் வேண்டாமலே மழை பெய்விக்கும் ஆற்றல் நமக்குண்டு என்பதனால்தானே அத் தெய்வங்கள் பிரிவையும் அதனால் வரும் பசப்பையும் நம்மீது அனுப்பிப் பழி வாங்குகின்றன’ என்று கூறுகிறாள். கற்புடைய பெண்கள் மழை வருவிப்பர் என்ற கருத்துடன் கற்புடையவர் கணவனை யன்றிப் பிற தெய்வங்களைத் தொழார் என்ற கருத்தும் இப்பாட்டில் ஊடாடி நிற்பது காணலாம். குறளின் கருத்தும் சொல்லும் மட்டுமன்றி, அதன் உலகளாவிய தனிச் சிறப்பும் கி.பி. 2, 3ஆம் நூற்றாண்டுகளிலேயே சங்ககால நூல்களில் பரவி விட்டதைக் காண்கிறோம். ஆகவே, அது 2ஆம் நூற்றாண்டுக்கு மிக முற்பட்ட தென்றும், அதன் பின்எல்லை கி.பி. முதல் நூற்றாண்டு என்றும் நாம் காலவரையறை செய்யலாம். ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டுக்கு அஃது எவ்வளவு முற்பட்டது என்று பழைமை எல்லை வகுக்கத் தக்க உறுதி வாய்ந்த சான்றுகள் நமக்கு எதுவும் கிட்டவில்லை மறைமுகச் சான்றுகளையே நாம் தேடி ஆராய்தல் வேண்டும். பழைமை எல்லை திருவள்ளுவர் கதை மரபுகளில் ஏலேலசிங்கனுடன் அவர் நெருங்கிய தொடர்புடையவர் என்று குறிக்கப்பட்டது. கதை மரபு தவிரத் திருவள்ளுவருடன் அவனைத் தொடர்புபடுத்த எத்தகைய சான்றும் இல்லை. அரசரையோ வேளிரையோ பாடாமல், பிற்காலத்தவர் போல எத் தெய்வத்தைக்கூடப் பாடாமல், நடுநிலை நின்று தற்சார்புடன் அறமும் அன்பும் பாடிப் பகுத்தறிவுக் கண்ணோட்டமுடைய அருட் சான்றோராகத் திருவள்ளுவர் விளங்கியிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏலேலசிங்கன் போன்ற ஒரு வணிகச் செல்வனைப் புரவலனாக மட்டுமன்றி மாணவனாகவும் கொண்ட ஒருவரிடம் நாம் இத்தகைய சார்பிலா அறிவுநிலையை எதிர்பார்க்கலாம். நம் அணிமைக்கால இணைச்சான்று ஒன்று கூறுவ தானால், புரட்சிகரமான புதுக் கருத்துகளைப் பரப்ப முயன்ற ஜெருமானிய அறிஞர் கார்ல்மார்க்சை நாம் குறிக்கலாம். அவர் கருத்துகள் உலகில் நின்று நிலவ அவர் புரவலனாகவும் மாணவனாகவும் ஒருங்கே அமைந்த ஏங்கெல்° என்ற செல்வனே காரணமாயினான். ஓர் ஏலேலசிங்க னில்லாத திருவள்ளுவரும் திருக்குறளும் ஒரு எங்கெல்° இல்லாத கார்ல்மார்க்சையும் கார்ல்மார்க்சின் நூலான ‘முதலீட்’டையும் ஒக்கும் என்று காண்பது எளிது. ஏலேலசிங்கன் பெயர் கற்பனைப் பெயரன்று. தமிழக வாழ்விலும் தமிழகத்துக்கு வெளியே இலங்கையிலும் அவன் தன் புகழ் பொறித்தவனாகவே தோன்றுகிறான். ஏலேலசிங்கன் கடல் வணிகன் மட்டுமல்லன். கடல் மறவனாகவும் இருந்தான். கடல் மறவரைத் திரட்டிக் கொண்டு சென்று வட இலங்கையில் அவன் தனி அரசு அமைத்தான். நாளடைவில் இலங்கை முழுவதையும் ஆண்டான். ஏலாரா என்ற பெயருடன் அவன் கி.மு. 205 முதல் கி.மு. 161 வரை ஆண்டதாக இலங்கை வரலாறு குறிக்கிறது. தமிழக மரபில் ஏலேலசிங்கன் துணிகர வீரத்தின் நினைவு ஆழப் பதிந்துள்ளது. இன்றளவும் கப்பல் தொழிலாளர் பாடும் கப்பல் பாட்டின் மெட்டு ‘ஏலேலோ’ என்றுதான் தொடங்குகிறது. இஃது ஏலேலன் புகழ்ப் பெயரே என்று கருதப்படுகிறது. இதனை வலியுறுத்தும் முறையில் “ஏழுகடல் கடந்தாலும் ஏலேலசிங்கன் கப்பல் திரும்பி வரும்” என்ற பழமொழியும் தமிழகத்தில் உலவுகிறது. செல்வ வணிகனாயினும் கடல் மறவர் தலைவனானவன் ஏலேலசிங்கன். திருவள்ளுவர் போன்ற அருட் சான்றோரின் சுவடு அவன்மீது உண்டா என்று கேட்கத் தோன்றலாம். இலங்கை வரலாறு இதற்கும் சான்று பகர்கிறது. அந்நாட்டின் பழ வரலாற்று ஏடுகளை எழுதியவர்கள் புத்தநெறியினர். அதுமட்டு மன்று; புத்தநெறி சார்ந்த மடத்துத் துறவியர். ‘ஏலாரா’ தமிழனாயினும் புறச் சமயத்தவனாயினும், தமிழர்-சிங்களர் என்ற வேற்றுமையின்றித் தன் சமயத்தார் புத்த சமயத்தார் என்ற வேற்றுமையின்றி இன்னலத்துடனும் நடுநிலையுடனும் அன்புள்ளத்துடனும் ஆண்டவன் என்று அவர்கள் கூறுகின்றனர். ஏலேலசிங்கன் மரபு உறுதிப்படக்கூடுமானால் திருவள்ளுவர் காலம் கி.மு. இரண்டாயிரம் நூற்றாண்டின் தொடக்கம். அதாவது அசோகன் காலத்துக்குச் சற்று பிற்பட்டது என்று கூறலாம். ஏலேலசிங்கன் மரபு திருவள்ளுவர் காலத்தைப் பழைமைப்படுத்தும் மரபு அல்லவே யல்ல. உண்மையில் ஏலேலசிங்கனுடன் அவரைத் தொடர்புபடுத்திய கதை மரபு தவறானால், அவர் பழைமை எல்லை இன்னும் முற்படச் செல்வதே இயல்பு. கடைச்சங்க மரபு அவர்க்குத் தரும் புகழ் உரை நோக்க, அவர் கடைச் சங்க காலத்தில் இருந்தவர் என்று கூறுவதே இயல்புக்கு மாறானது. கடைச்சங்க காலத்திலேயே அவர் புகழ் வளர்ந்தது. அவர் நூல் தொகை நூல்களில் இடம்பெற வழி வகுத்த காலமே இஃது என்று கூற இடமுண்டு. சமய நடுநிலைப் பண்பு எல்லாச் சமயத்தவரும் ‘இது எம் நூல், இது எம் நூல்’ என்று கூறுகிற, கூற விரும்புகிற நூல் உலகில் வேறு இல்லை; திருக்குறள் ஒன்றே. அது மட்டுமன்று. ‘கடவுள் உண்டு’ என்பவர் மட்டுமன்றி, ‘கடவுள் இல்லை’ என்பவர் கூட உவந்து ஏற்கும் அருளருமை சான்ற பெருந் திருநூலாக அஃது அமைகின்றது. திருவள்ளுவர் சமயச் சார்பற்றவர். ஆகையினாலேதான் இந்த நடு நிலையைக் காண்கிறோம் என்று சிலர் எண்ணக்கூடும். இதுவும் மெய்ம்மை யன்று. ஏனெனில், மெய்யாகவே சமயச் சார்பற்ற ஒரு நூல் சமயத்துக்கு எதிரானதாய் இருந்தால் அதனைக் ‘கடவுள் இல்லை’ என்பவர்தாம் ஏற்கமுடியும். கடவுட் பற்றுடையவர் ஏற்க முடியாது. அது சமயத் தொடர்பே அற்றுக் கணக்கு நூல், இயல்நூல் போன்றதா யிருந்தால், சமயவாணர் அதை ‘இஃது எமது’, ‘இஃது எமது’ என்று கூறவோ, கூறிப் பெருமையடையவோ முனையமாட்டார்கள். ‘திருவள்ளுவர் அருட் சான்றோர். ஆகவே, எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படையையே அவர் எடுத்தாண்டுள்ளார்’ என்று திருக்குறளின் தனிப் புகழ்க்கு நாம் விளக்கம் காணலாம். இதுவும் ஒருபுடை உண்மை மட்டுமே; முழு உண்மை யாகாது. தம் காலச் சமயங்களின் பொது அடிப்படையைத்தான் திருவள்ளுவர் எடுத்துரைத்திருக் கிறார் என்று கூற முடியும். நம் காலக் கிறித்துவநெறி, இசுலாமிய நெறிகளை அவர் முன்னறிந்து எடுத்துரைத்திருக்கிறார் என்று கூற முடியாது. ‘எல்லாச் சமயங்களின் அடிப்படையும் உண்மையில் ஒன்றே. ஆகவேதான், அந்நாளைய சமயங்களின் அடிப்படையாக வள்ளுவர் வகுத்த பண்புகள் இந்நாளைய சமயங்கள் உட்பட எல்லாவற்றின் அடிப்படையாக விளங்குகிறது’ என்று நாம் மேற்கண்ட கூற்றைத் திருத்திக் கொள்ளலாம். இக் கருத்தின் மூலம் திருவள்ளுவரின் உள்ளத்தை நோக்கி நாம் ஒரு படி முன்னேறுகிறோம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இதில் ஓரளவு உண்மை உண்டு. ஆனால், அது முழு அளவில் உண்மையன்று. கால தேயச் சுவடுகள் திருவள்ளுவர் நடுநிலைமீது பொறிக்கப்படாமல் இல்லை. காலம் கடந்த தனித் தன்மையின் சுவடுகளும் அவரிடம் உண்டு. அவர் பெருமையில் இவையும் பகுதிகளேயாகும். காலதேயக் சுவடுகள் திருவள்ளுவர் புகழும் பெருமையும் காலதேயங் கடந்தவை. ஆனால் கருத்திலும் உரையிலும் காலதேயச் சுவடுகள் இல்லாமலில்லை. அவற்றில் பொதுப் பண்பாகக் காணப்படும் செய்திகளிலேயே தனிச் சிறப்புகள் உண்டு. கொல்லாமையைத் திருவள்ளுவர் உச்சிமேற் கொள்கிறார். இது சமண நெறிக்கே முழுவதும், புத்த நெறிக்குப் பேரளவும் சிறப்பான கருத்து. இக்காலச் சைவத்துக்கும் வைணவத்துக்கும் அஃது அடுத்தபடியாகப் பொருந்தும். கிறித்துவ இசுலாமிய நெறிக்கும் அது பொதுவகையில் பொருந்துமாயினும், அப்பொருத்தம் தொலைப் பொருத்தமே. ஆரிய வேத நெறிக்கு அஃது இன்னும் மிகுதியான தொலைத் தொடர்புடையது என்னலாம். ஏனெனில், வேள்வியில் கொலையை ஒரு சமயக் கடமையாக்கிய சமயம் அஃது ஒன்றே. இக் கருத்துக்கொண்ட குறட்பாக்களின் உரை விளக்கங்களில் பரிமேலழகர் பாம்பு வளைந்து நெளிவது போல நெளிந்து வலிந்து வேள்விக்கு ஆதாரம் தேடுவது காணலாம். கொல்லாமை பற்றிய பகவத் கீதையின் பகுதி இதே வகையில் திருக்குறட் கருத்தையும் கூறிப் பரிமேலழகர் நெளிவையும் மேற்கொண்டுள்ளது. பகவத் கீதை பரிமேலழகர்க்கு முற்பட்ட நூல் என்று அறியாதவர்கள் பரிமேலழகர் உரைதான் பகவத்கீதைக்கு வழி காட்டிற்றோ என்று கருதிவிடக்கூடும்! பற்றறுத்தல், துறவு, நிலையாமை ஆகிய கருத்துகள் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாயினும், கீழ்த்திசைச் சமயங்களுக்குச் சிறப்பு வகையில் பொருந்துபவை. மானம், ஈகை, விருந்தோம்பல் ஆகியவை உலகுக்குப் பொதுப் பண்பு களாயினும், தமிழகத்துக்குச் சிறப்புவகைப் பண்புகளாய் அமைபவை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்தும் அத்தன்மையதே. வரைவின் மகளிர், கள்ளாமை, சூது ஆகியவை வள்ளுவர் தனிப்படக் குறிப்பிட்டுத் தாக்கும் தீங்குகள். இவை எல்லா நாடுகளுக்கும் பொருத்தமாயினும், ஒரு குறிப்பிட்ட சமுதாய வளர்ச்சிப் படியைக் காட்டுவன. அப் படியை உலகம் இன்னும் கடந்துவிடவில்லை. வானவர், மேலுலகம், இந்திரன், தாமரைக் கண்ணான், செய்யவள், தவ்வை ஆகிய சொற்கள் குறித்த மரபுகள் தேயவழக்கு மட்டுமன்றி, கால வழக்காகவும் எழுந்தவை. ‘பெண்வழிச்சேறல்’ என்ற அதிகாரம் ஓரளவு காலச் சுவட்டைக் குறிப்ப தாகலாம். சிலர் இங்கே ‘பெண்’ என்பது பொது மகளிரைக் குறித்தது என்று கருதலாம். ஆனால், குறட்பாக்கள் ‘இல்லாள்’, ‘மனை’ என்ற சொற்களையே வழங்குகின்றன. முனைவர் வரதராசனார் முற்போக்குக் கருத்துகளை இதில் காண முடியாமல் உளைவுறுகின்றார். இப்பகுதியைக் காலத்தின் சுவடு என்றே கொள்கின்றார். இது காலத்தின் சுவடு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால், திருவள்ளுவர் பெண்மைக்குத் தரும் உயர்வு மேனாட்டினரும் இன்று தாராத ஒன்று. எனவே இங்கே வள்ளுவர் பெண்ணுக்கு இழுக்கம் கூறுவதாக எண்ணுதல் பொருந்தாது. பெண்ணுக்குப் பொதுக்கடமை புறம், சிறப்புக்கடமை அகம்; ஆணுக்குப் பொதுக்கடமை அகம், சிறப்புக்கடமை புறம் என்ற பாகுபாட்டையே இவ்வதிகாரம் வற்புறுத்துகிறது என்பது தெளிவு. திருவள்ளுவரின் பொதுப்பண்பை இந்தக் காலத் தேயச் சுவடுகள் கெடுக்கவில்லை. ஏனென்றால், இச்சுவடுகள் அப்பொதுப் பண்பின் மீதே பொறிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர்க்குத் தனிப் பண்புகளும் உண்டு. ஆனால், இவை பொதுப் பண்பு. கால தேயப் பண்புகளுக்கு மாறுபட்டவை யல்ல. ஏனெனில், அத் தனிப் பண்புகளும் அவ்விரண்டின் மீது கட்டி எழுப்பப்பட்டவையே. தனிப் பண்பின் தடம் கொல்லாமை நெறி சைவ, வைணவங்களைவிடப் புத்த சமண நெறிகளுக்குச் சிறப்புரிமை யுடையதென மேலே கூறினோம். ஆனால், இது மேலீடான உண்மை. முழு உண்மையன்று. அதன் மீது திருவள்ளுவரின் தனிப் பண்பின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. சமணர்க்கும் புத்தர்க்கும் மட்டுமன்றி மற்றச் சமயத்தவர்களுக்கும் அஃது ஒரு கோட்பாடு. தனி உயிர் உலகக் கட்டிலிருந்து விடுபட்டுத் தனி விடுதலை (மோட்சம்) அடைவதற்கு அஃது ஒரு படியாகவே அச்சமயங்களில் கொள்ளப்படுகிறது. ஆனால், திருவள்ளுவர்க்கு அதுவே அவர் கோட்பாட்டின் அடிப்படை. அது தனி விடுதலை கோரவில்லை. உலகப் பொதுநலனும் உயிர்ப் பொதுநலனும் ஆக்கமுமே நோக்கமாகக் கொண்டது. இன்பமே அதன் குறிக்கோள். கொல்லாமை அன்பின் அடிப்படை. அன்பு அறத்தின் அடிப்படை. அறம் பொருளின் அடிப்படை. பொருள் இன்பத்தின் அடிப்படை. இதை இன்னொரு வகையில் சொல்வதானால் தனி மனிதன் வாழ்வு, பொது மனித அதாவது சமுதாய வாழ்வு இரண்டுக்கும் இன்றியமையா அடிப்படையான நிலத்தளம் கொல்லாமை. அவற்றின் சுவர்கள் பல்வகை அன்பு நிலைகள். பல்வகை அன்பு நிலைகளையும் இணைக்கும் வாயில்கள், பலகணிகளே அருள். இவை இரண்டும் சேர்ந்ததே அறம். இவற்றின் மீது இவற்றின் பாதுகாப்பாக அமையும் கூரையே பொருள். கட்டடத்தை வாழ்க்கைக் களமாக்க உதவும் காற்று முதலிய வாய்ப்புகளே இன்பம். திருவள்ளுவரின் தனிப் பண்பின் பொறிப்பு இல்லாத கூறு திருக்குறளில் இல்லை என்னலாம். கொல்லாமையையும் அன்பையும் அறத்தின் இன்றியமையா அடிப்படையாகக் காட்டிய வள்ளுவர், அதுபோலவே கல்வியையும் கல்வியை வகுக்கும் அரசையும் பொருளின் இன்றியமையா அடிப்படை யாகக் காட்டினார். கற்றார் உயர்ந்தவர், கல்லார் தாழ்ந்தவர் என்பதே உலகம் முழுவதும் நீதி வகுத்தவர் கோட்பாடு. திருவள்ளுவரோ கல்வியை மனித இனத்தின் அறிகுறி யாக்கி, மனித இனத்தின் இன்றியமையாப் பொதுவுரிமையாக்கி, அஃது இல்லாத மனிதன் மனிதனல்லன் என்றார். ஆண்களுக்கு மட்டுமே கல்வியுரிய தென்னும் பரிமேலழகர் கருத்துக்கும், ஆரியக் கருத்துக்கும் இது முற்றிலும் நேர்மாறானது. தற்காலக் குடியாட்சியும் பொதுவுடைமையும்கூட இன்னும் கூற முற்படாத அளவில் வள்ளுவர் கல்வியை மனித இனத்தின் குறைந்த அளவுத் தகுதியாக்கி, அஃது இல்லாதவர் கண்ணற்றவர், விலங்கு என்று பழித்தார். நம் தாய்மார்கள் விலங்குகள்தாம் என்று யாருமே சொல்லமாட்டார்கள். ஆனால், வள்ளுவர் கருத்துப்படி, நாம் தாய்மார்களை விலங்குகளாக நடத்துவது மட்டுமன்று, விலங்குகளாகவே ஆக்கி வைத்திருக்கிறோம் என்னலாம். அவர்கள் பெறும் பிள்ளைகளும் பெரும்பாலும் விலங்குகளாய் இயங்குவதில் வியப்பில்லை! பெண்களுக்குத் திருவள்ளுவர் கொடுத்த உயர்வும் பொறுப்பும் மிக மிகப் பெரிது. பெண்களையே அவர் அறிவின் திருவுருக்களாகக் கண்டார். ‘சிறுவயதில் தாய் தந்தையர்க்கும், மணமானபின் கணவற்கும், பின்னர் மக்களுக்கும் கட்டுப் பட்டவள் பெண்’ என்ற ஆரியக் கருத்துக்கு நேர்மாறாக, அவர் ‘பெண்தான் தன்னையும் காக்க வேண்டியவள், கணவனையும் காக்க வேண்டியவள். உலகின் பண்பையும் அவளேதான் காத்தல் வேண்டும்’ என்றார். தற்காலத்தில் நாம் கடவுளுக்குக் கொடுக்கும் சிறப்பு இதைவிடக் கூடுதலன்று. ‘தெய்வந் தொழாஅள்’ என்று அவர் கூறியதன் குறிப்பு இதுவே. இஃது ஆரியக் கருத்துக்கு நேர் மாறுபட்டது. ஆனால், இது மேனாட்டினர் கருத்துமன்று. சம உரிமை என்ற பெயரால் ஆணின் அடாப்பழிகளுக்கு அவர் பெண்ணைக் காட்டிக் கொடுக்கவில்லை. பெண்ணுக்குக் காதல் தரும் இயற்கைப் பாதுகாப்பையும் கற்புத் தரும் சமூகப் பாதுகாப்பையும் உரிமை யாக்கினார். ஆனால், இஃது ஆரிய அறிஞரும் இசுலாமியச் சமுதாயமும் கட்டமைத்த சிறைக்காப்பன்று. ‘சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை’ என்று பெண்டிர் நிறைக்குக் காப்புரிமை அளித்து அதற்குப் பெண்டிர் ‘கற்பு’ என்னும் திண்மையை அரணாக்குகிறார். குடிமை, சான்றாண்மை, பண்புடைமை முதலியன இக் கற்புநெறியின் சமுதாயப் பாதுகாப்புகளேயாகும். ‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு’ முதலிய குறட்பாக்கள் இன்றுவரை உலக இலக்கிய மெங்கும் காணப்படாது திருவள்ளுவரின் தனி இலச்சினை பெற்ற கருத்துகளாகும். தமிழகப் பின்னணி திருக்குறளைப் பொதுமறை, உலகப் பொதுமறை என்றும், திருவள்ளுவரை உலகப் பொது அறிஞர் என்றும் பாராட்டுவ துண்டு. ஆனால், அதுவே தமிழ் மறை என்பதையும் அவரே தமிழ்ப் பண்பை முக்காலத்துக்கும் உரியதாக வகுத்தவர் என்பதையும் நாம் மறந்துவிடல் தகாது. திருவள்ளுவர் உலகுக்குரியவர். அவர் தமிழரிடையே பிறந்து தமிழில் திருக்குறள் எழுத நேர்ந்தது தமிழர் நற்பேறு என்று யாராவது கூறினால், வள்ளுவரைப் பாராட்டிய அளவில் அஃது ஏற்றுக்கொள்ளத் தக்கதே. ஆனால், அதை அப்படியே உண்மையாகக் கொள்வது தமிழ்க்குப் பெருமையோ நேர்மையோ ஆகாது. அஃது உண்மையும் அன்று. தெலுங்கர் தமிழரை ‘அரவர்’ என்பர். இதற்கு உண்மை யான தோற்ற மூலம் தெலுங்கு நாட்டின் தென் எல்லையிலும், தமிழகத்தின் வட எல்லையிலும் இருந்த மக்களும் நாடும் அருவாளர் என்றும், அருவா நாடு என்றும் முன்பு வழங்கப் பட்டதே யாகும். இதனை உற்றுக் காணாத நிலையில் அறிஞர் கால்டுவெல் அதை ‘அறவர்’, நீதிக் கோட்பாட்டாளர் என்று கூறுகிறார். இது சொல்லாராய்ச்சி முறையில் சரியல்லவாயினும் தமிழர் பண்புக்குப் பொருந்துவதே யாகும். ஆனால், கால்டுவெல் ஓரளவு வேடிக்கையாகத் தெலுங்கர் சிலர் கூறும் வேறு பொருள்களையும் சுட்டிக் காட்டுகிறார். அரவம் அல்லது ஓசை என்பதன் சமற்கிருதப் பதம் ரவம். சமற்கிருதத்தில் அரவம் இதன் எதிர்மறை. ஓசை யில்லாதது அல்லது இனிமையாக இல்லாத ஓசை என்பது அதன் சமற்கிருதப் பொருள். இது குறும்பினால் புனைந்துகொண்ட பொருள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இன்னொரு விசித்திரப் பொருளும் தரப்படுகிறது. இஃது அறவர் அறநூலுடையோர் என்பதை ஏற்கின்றது. ஆனால், தமிழரிடம் ஒழுக்க நூல் நிறைந்திருப்பதற்குக் காரணம் தமிழரிடம் ஒழுக்கம் குறைவாயிருப்பதே, அவர்களைத் திருத்த ஒழுக்க நூல்கள் மிகுதியும் தேவையாயிருந்தன என்று கூறப்படுகிறதாம்! இக் காரணங்கள் அறிஞர் ஆராய்ச்சி முடிவுகளல்ல. அயல் வீட்டாரைப் பற்றி ஒவ்வோரினத்தவரும் கூறும் நகைச்சுவைக் குறும்பு கலந்த பொதுப் பேச்சேயாகும். ஆனால் உலகில் பலரிடம் நிலவும் ஒரு தப்பெண்ணத்தையே இது பெருக்கிக் காட்டுகிறது என்னலாம். திருக்குறளின் பெருமை பேரளவில் திருவள்ளுவரின் பெருமை என்பதில் ஐயமில்லை. ஆனால், அது திருவள்ளுவர் காலத்துடனோ தமிழகத்துடனோ தொடர்பற்ற, திருவள்ளுவரின் தனிப்பட்ட, துண்டுபட்ட, தமிழ்ச் சூழலுடன் தொடர்பற்ற பெருமையன்று. அவர் கால தேயச் சுவடுகளும் பொது உலக அடிப்படையும் தரும் படிப்பினைகளைக் கூர்ந்து கவனித்தால் இது விளங்கும். ‘திருவள்ளுவரது திருக்குறளின் பெருமையில் ஒரு பெரும் பகுதி தமிழகத்தின், தமிழினத்தின் பெருமை; ஒழுக்க ஆர்வமிக்க, உயிர் ஒழுக்கப் பண்புடைய ஓர் இனத்திலேயே உலகம் வியக்கும் உயர் ஒழுக்க நூலாகிய திருக்குறள் தோன்றிற்று என்பதை வற்புறுத்திய முதற் பெரியார்அறிஞர் ‘போப்’ ஆவார். திருக்குறளுக் கடுத்தபடி, தமிழர் வேதம், வேளாண் வேதம் என்று சிறப்பிக்கப்பட்டது நாலடியார். ‘நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி’ என்ற பழமொழி அதன் சிறப்பைக் காட்டும். வெங்கதிர், தண்கதிர் போன்ற இவ்விரண்டு நூல்களன்றி இன்னா நாற்பது; இனியவை நாற்பது முதலாக நீதிநெறி விளக்கம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஈறாகத் தமிழின் அற நூல்கள் எண்ணற்றவை. திருக்குறளின் மிகப் பல உயர் கருத்துகளுக்கு விளக்கமும் இணையும் சங்க இலக்கியங்களில் காணப்படல் அரிதன்று, ‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய்அல்லன் - புறம் 134 என்ற உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் கருத்தும், “...............யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல; நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்” பரிபாடல் 5 என்ற கடுவன் இளவெயினனார் உயர் அவாவும், ``உண்டால் அம்ம இவ் உலகம் !...... தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே! ‘’ - புறம் 182 என்ற இளம்பெரு வழுதியின் கருத்தும், ``நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’’ - புறம் 186 என்ற மோசிகீரனாரின் மெய்ம்மையும் திருக்குறளின் உயர் கொடுமுடியை எட்டிப் பார்ப்பவை என்று தட்டாமல் கூறலாம். வள்ளுவர் களர் நிலத்தில் எதிர்பாரா வகையில் தோன்றிய கரும்பும் அல்லர்; சம வெளியில் திடுமென எழுந்தோங்கும் கொடும்பாறையும் அல்லர். அவர் தமிழக நன்செய்யில் விளைந்த நற்பயிர்! தமிழ்ச் சங்கஇலக்கிய மென்னும் இமயத்தின் மீது உயர்ந்த எவரெ°டுக் கொடுமுடி! அவர் பெருமையின் அடிப்படை, தமிழகத்தின் பெருமை என்பது குறிக்கத்தக்கது. காலத்தில் முதிர்ந்த கனி திருவள்ளுவர் திருக்குறள் தமிழகத்தின் விளைபயன். ஆனால், அது தமிழினத்தின் தனிப் பயன் மட்டுமே. தமிழகம் தட்டுக்கெட்டு இழி பண்புகளுடன் கலப்படமாகிப் பண்பு குன்றிய காலம் அதைப் போற்ற மட்டும்தான் முடிகிறது. அதன் வழிநின்று அத்தகு புகழ்நூல் தோற்றுவிக்கவோ, அதன்மீது புது வளாச்சி பெறவோ, அதன் புகழ் வளர்க்கவோகூட முடியவில்லை. அது நாட்டின் விளைவு மட்டுமன்று, காலத்தின் விளைவுமாகும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. திருக்குறளை அடுத்துத் திருக்குறளுக்கு இணையான நூல்களை, திருக்குறளின் அருகு நின்று போட்டியிடக் கூடிய கருத்துகளைத் தற்கால மறுமலர்ச்சிக் காலத்தில் காணும் அளவைவிடக் கூடச் சங்ககாலத்திலேயே மிகுதியாகக் காண்கிறோம். மறுமலர்ச்சிக் காலக் கருத்துகளுக்கு ஓரளவு மேலை நாட்டுத் தொடர்பு காரணமாகலாம். ஆனால், இதுகூடச் சங்க இலக்கியப் பண்பை அணுக அதற்கு இன்னும் துணை தந்துவிடவில்லை என்னலாம்! திருக்குறளுடன் ஒப்பிடத்தக்க சீரிய சங்க இலக்கியக் கருத்துகளுள் சில மேலே தரப்பட்டுள்ளன. அவற்றுடன் கல்வி பற்றிய நாலடியாரின் கீழ்வரும் பாட்டும் குறிப்பிடத்தக்க கருத்து நயம், சொல் நயம் உடையது. ``கல்வி கரையில; கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே, நீரொழியப் பாலுண் குருகில் தெரிந்து.’’ ஆனால், சங்க இலக்கியமோ, அதனுடன் ஒட்டிய கால நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களோ திருக்குறளிற் கண்ட முழுநிறைப் பெருமைக்கு ஒரு சிறிதும் ஈடாக மாட்டா. நம் காலத்தைவிடக் கம்பர் காலம் எவ்வளவு வளமுடையதோ, அவ்வளவு கம்பர் காலத்தை விடத் தேவாரக் காலமும்; தேவாரக் காலத்தைவிடச் சங்ககாலமும்; சங்க காலத்தைவிடத் திருக்குறள் காலமும் வளமுடையன என்னலாம். இலக்கிய முறையில் மட்டும் இதனைக் காண்பதோ கண்டு விளக்கு வதோ எளிதன்று. ஏனெனில், அது கலைப் பண்பின் உலகளாவிய முழுநிறை ஆராய்ச்சி ஒன்றினாலேயே முடிவது. வரலாற்றுச் சார்பான இரு பண்பாட்டு விளக்கக் கூறுகள் இதனைச் சுட்டிக் காட்டப் போதியன. நம் மறுமலர்ச்சிக் காலத்தில் காலமும் இடமும் வென்ற நிலஊர்தி, நீர் ஊர்தி, வானஊர்திகள், பத்திரிகை, அச்சு, அஞ்சல் முதலிய பல வாய்ப்புகள் நமக்கு உள்ளன. ஆயினும், நம் தமிழகத்தின் கல்வி நிலை நேற்று நாகரிகம் பெற்ற நாடுகளும், முந்தாநாள் நாகரிகம் பெற்ற நாடுகளும் கண்டு நகைக்கும் திறத்ததாய் உள்ளது. கற்றறிந்தவர்களல்லர், எழுத வாசிக்கத் தெரிந்தவர் களல்லர், கையொப்பமிடத் தக்கவர்கள்கூட அல்லர், கையொப்பமிடும் பாவனையில் கோலமிடத் தெரிந்தவர்கள்தாம் இன்று நம்மிடையே 100-க்கு 15 பேர். இதுவும் 150 ஆண்டுக் கால ஆங்கில ஆட்சி முடிவில்! இத்தொகையில் எல்லா மாவட்டங் களும் ஒத்த இடம் பெறமாட்டா என்பதும், ஒன்றிரண்டு குலத்தினர், அவரினும் உழையாத ஒரு சிறுபான்மை வகுப்பினரே இடம் பெறுவர் என்பதும் கவனிக்கத்தக்க நிலைகள். இன்று நம் பெண்டிர் நிலையோ கேட்க வேண்டியதில்லை. நாட்டில் ஆடவர் விழுக்காடுகூட, உயர் வகுப்பில் அவர்களுக்குத் தேறாது. கம்பர் கால நிலையை இதனுடன் ஒப்பிட நமக்கு வாய்ப்பில்லை. அந்நாளைய விழுக்காட்டை நாம் அறிய முடியாது. ஆனால், அது சோழப் பேரரசர் காலம்; கவிச் சக்கரவர்த்தியின் காலம். அந்தச் சக்கரவர்த்திகளுடன் போட்டியிடும் ஓர் அவ்வையார், அவர்க்குக் குறையாத கல்வியறிவுடைய பிற மாதரசியர் இருந்தனர். இஃது இன்றைய தமிழகத்தில் காட்டமுடியாத ஒன்று என்று கூறத் தேவையில்லை. பிற நாடுகளில்கூட அரிதான நிலையே இது! கம்பராமாயணம், தேவார திருவாசகங்கள் உயர் வகுப்பினர்க்காக, புலவர்க்காக எழுந்த இலக்கியமல்ல. பள்ளி மாணவர்க்காக எழுந்த இலக்கியம் கூட அல்ல. பொது மக்களிடையே சமயப் பிரச்சாரத்துக்காக எழுந்தவை அவை. இதனால் இன்றையக் கல்விநிலையைவிட அன்றைய நிலை உயர்ந்த தென்பதை உய்த்தறியலாம். மதிப்பீட்டைக் குத்தாய மாகக் கூறுவதானால், இன்றைய 100-க்கு 15 விழுக்காடு அன்று கட்டாயமாக 45 விழுக்காடாவது இருக்கக்கூடும் என்னலாம். சங்க நூல்களால் அக்காலத்துத் தலைசிறந்த பாடல்களைப் பாடிய புலவர்களுள் ஒரு பகுதியினரை மட்டுமே நாம் அறிகிறோம். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளிலுள்ள புலவர்களாக இவ்வகையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர்களைக் காண்கிறோம். அது மட்டுமோ? அவர்கள் அன்றைய தமிழகத்துக்குப் பிரதிநிதிகளாக அமைந்ததுபோலத் தமிழகத்திலோ பிற நாடுகளிலோ இன்றுவரை எங்கும் ஒரு சிறிதும் அமைந்ததில்லை. ஏனென்றால், பெயர் ஊர் தெரிந்த வரிடையிலேயே இன்றைய தமிழகத்தின் எல்லா மாவட்டத்தின் புலவர்களையும் காண்கிறோம். எல்லா நகரங்களின் புலவர் களையும், எல்லாப் படியிலுள்ள சமுதாய, தொழில் வகுப்புகளைச் சார்ந்த புலவர்களையும் காண்கிறோம். பெண்பாற் புலவர்களிலும் இதுபோல முழு நிறை பிரதிநிதித்துவம் உடைய முப்பத்தொரு புலவரை- முதற்புலவர்களான ஒளவையார், காக்கை பாடினியார் உள்ளிட்ட புலவரைக் காண்கிறோம். சங்க காலக் கல்வி நிலைமையைக் குத்தாயமாக மதிப்பிட்டால், அஃது இன்றைய 15 விழுக்காடல்ல, கம்பர் கால 45 விழுக்காடல்ல, 65 விழுக்காட்டுக்குக் குறையாமல் இருக்கு மென்னலாம். இது தற்செயலாக நேர்ந்த முன்னேற்றமன்று, முத்தமிழ் வேந்தரும், சங்கமும் குடியாட்சி மரபுகளும் இணைந்து செய்த செயல்களாகும். இதே முன்னேற்றத்தை - இன்றைய தமிழகம் மட்டுமன்றி, மேனாடுகள் கூடக் காணாத முன்னேற்றத்தை- கலை இயல்கள், செல்வ நிலை, வாணிகம், உழவு, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றிலும் காணலாம். சங்க இலக்கியமும் சிலப்பதிகார மணிமேகலைகளும் பெருங்கதையும் இப்பண்பாடுகளை நமக்குக் கண்ணாடி போல் விளக்கிக் காட்டுகின்றன. திருவள்ளுவர் காலத் தமிழ், தமிழின, தமிழகப் பண்பாடு அக்காலப் பண்பாடுதான்- ஆனால், அஃது இன்றைய தமிழகப் பண்பாட்டுக்கோ, இன்றைய மேனாட்டுப் பண்பாட்டுக்கோ குறைந்த ஒன்றன்று-பலவகையில் அவற்றை விஞ்சியதே யாகும். ‘ஆராய்ச்சியாளர்’ இவற்றை எடுத்துக் கூறாமலில்லை. கூறுபவர், கேட்பவர் சூழலால் அஃது ஒப்பீட்டு முறையில் அளவிடப் படாமல் போகிறது என்னலாம். பழைமை எல்லை திருவள்ளுவர் காலச் சூழலை மட்டுமன்றி, அதன் பழைமை எல்லையையும் சுட்டிக் காட்டும் இன்னொரு வாழ்வுக் கூறு சமயநிலை ஆகும். இந்திய மொழிகளுள்-தாய் மொழிகளில் மட்டுமன்றிச் சமற்கிருதம் உட்பட எல்லா மொழிகளிலும்-சமயத் துறையில் தமிழ்க்குரிய மதிப்பு வேறு எம்மொழிக்கும் இல்லை. ஆரிய வேத சுமிருதி நீங்கலாக, இந்தியாவின் எல்லாப் பண்டைச் சமய நூல்களும் மிகப் பெரும்பாலாகத் தமிழிலேயே உள்ளன. தமிழ்க்கு அடுத்தபடி கன்னடமும், அதற்கடுத்த மூன்றாமிடத் திலேயே சமற்கிருதமும் இத்துறையில் இடம் பெறுவன. இத் தனிச் சிறப்புக்கு வரலாற்று முறையில் ஒரு காரணம் உண்டு. இந்தியாவின் தாய் மொழிகளுள் தமிழ் நீங்கலான எல்லாத் தாய்மொழிகளின் இலக்கியமும் தமிழக ஆழ்வார்கள் வழிவந்த வைணவ இலக்கியம் மட்டுமே. அதற்கு முற்பட்ட சைவ இலக்கியம் தமிழ், கன்னடம், சமற்கிருதம் ஆகிய மூன்றிலும், அதற்கும் முற்பட்ட காலச் சமண இலக்கியம் பெரிதும் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் மட்டுமே உண்டு. தென்னாட்டில் சமண நெறி ஏழாம் நூற்றாண்டளவும் வளத்துடன் ஓங்கியிருந்தது. தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டின் பின்னும் கன்னட நாட்டில் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பின்னுமே அது தளர்ச்சியுற்றது. ஆனால், சங்க காலத்தை அடுத்து மூன்றாம் நூற்றாண்டில் சமண மதத்துக்கு ஒப்பாகப் புத்த மதமும் நிலவிற்று. இந்தியாவில் இப் புத்தர் கால இலக்கியம் பாலி, தமிழ் என்ற இருமொழிகளில் மட்டுமே உண்டு. தமிழில் புத்த சமய நூல்கள் குறைவாயினும், இலக்கியச் சிறப்பில் மேம்பட்டது. மணிமேகலை, குண்டலகேசி ஆகியவற்றுக் கீடான புத்த இலக்கியம் உலகில் எம்மொழியிலும் இல்லை. தவிர, இக்காலச் சமய இலக்கியமும் சமயஞ் சாரா இலக்கியமும் தமிழில் பாலியைவிட மிகுதி. சமற்கிருதத்திலோ இக் காலத்தில் ஒன்றிரண்டு புத்த நூல்கள் தவிர இலக்கியம் எதுவும் கிடையாது. கடைத் தமிழ்ச் சங்க காலத்திலேயே புத்த மதம் தமிழகத்தில் பரவிற்று. இலங்கையில் புத்த மதம் பரப்பியவருள்ளும்,இலக்கியம் பரப்பியவருள்ளும் மிகப் பலர் தமிழகப் புத்த சமயத்தவராகவே இருந்தனர். தமிழ் நூல்கள் பல சிங்களத்தில் அன்று மொழி பெயர்க்கப்பட்டன. இதில் வியப்பில்லை. ஏனென்றால், அன்று தமிழுடனொப்பான இலக்கிய மொழி இந்தியாவில் இருந்ததில்லை. திருவள்ளுவர் திருக்குறளில் புத்தம், சமணம், சைவம், வைணவம் ஆகிய சமயங்களின் கருமூலங்களையும் காணலாம். ஆனால், இந்த நான்கு சமயங்களிலும் பிற்காலத்தில் வளர்ந்த வளர்ச்சிகளைக் காண முடியாது. சங்க காலத்திலேயே புத்த நெறியில் உருவ வழிபாடு தோன்றவில்லை. புத்தபிரான் திருவடி மட்டுமே வணங்கப்பட்டது. சமணர்களும் தீர்த்தங்கரர் உருவை வணங்கத் தொடங்கவில்லை. உருவமில்லா அருகன் கோவில்களே இருந்தன. வைணவ நெறியில் பலராமன், கண்ணன் கோவில்கள் இருந்தன. இராமன் வழிபாடு தொடக்க நிலையிலேயே இருந்தது. சிவபிரானுக்குக் கோவில்கள் மலைகளில் மட்டுமே ஒரு சில இருந்தன. அவையும் சிறு கோவில்கள், கற்கோவில்களல்ல. ஆறு சமயங்கள் அல்லது கோட்பாடுகள் மணிமேகலையில் குறிக்கப்பட் டுள்ளன. அவற்றுள் வேதாந்தமாகிய உத்தர மீமாம்சையும் யோகமும் தோன்ற வில்லை. திருவள்ளுவர் காலநிலையை இது சுட்டிக் காட்டுகிறது. அஃது உண்மையில் புத்த சமண சமயங்கள் தோன்றியதை அடுத்து முன்னோ பின்னோ உள்ள காலமாகவே இருக்கக் கூடுமென்றும் அதன் பழைமை எல்லை கி.மு. 6 அல்லது 7ஆம் நூற்றாண்டுவரை செல்லக்கூடுமென்றும் கருத இடமுண்டு. தற்காலிகமான இக்கருத்துகள் முடிந்த முடிவுகளுமல்ல, முடிந்த முடிவாகிவிடும் என்று கருதத்தக்கவையுமல்ல. ஆனால், அத்தகைய ஒரு முடிபை இவை சுட்டிக் காட்டுவனவே யாகும். பழைமையும் பண்பும் ஒரு நூலின் உயர்வுக்கோ, பண்புக்கோ பழைமை ஒரு சான்றாகமாட்டாது. திருக்குறளின் பழைமைக்கும் அதன் உயர்வுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. ஆயினும், அதன் பண்பும் மரபும் அறியவேண்டுமானால், அவ்வழி அதற்கு உண்மையான உரை காண வேண்டுமானால், மறுமலர்ச்சி யறிஞர் அதன் பழைமை எல்லையைத் துருவி ஆராய்தலும், எல்லை எதுவாயினும் அதன் சூழலை ஆராய்தலும் இன்றியமை யாதனவாகும். தமிழினத்தின் வருங்கால வளமும் வரலாறும் அதன் பழைமை விளக்கத்தையே சார்ந்தது. இதனை உரை ஆசிரியர்கள் போக்கும் ஆரியப் பற்றாளர் ஆராய்ச்சிகளின் போக்கும் தமிழர்க்குத் தெள்ளத் தெளியக் காட்டவல்லன. திருவள்ளுவர் முப்பாலும் ஒரு பாலின் முப்பிரிவாகத் திருவள்ளுவரால் வகுத்துக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டைக் கூடக் காணமுடியாமல், திருக்குறளுக்குப் பிற்பட்ட அயல் மொழி நூல்களின் முரணுரைகளுடன் அவற்றை இணைத்து, அவற்றின் புகழையும் பண்பையும், அவற்றுடன் தமிழின் புகழையும் ஊறுபடுத்த அவர்கள் காட்டும் ஆர்வம் தமிழர்க்கு ஒரு படிப்பினை ஆகும். அவர்கள் இனப் பற்றைத் தமிழர் மேற்கொள்ள வேண்டிய தில்லை யாயினும், அதன் சார்பான பொய்ம்மை மயக்கங்களை யேனும் அறிந்து விலக்க மறுமலர்ச்சி அறிஞர் அயராது பாடுபடுதல் வேண்டும். 9. மூவா மொழி இருபதாம் நூற்றாண்டு மலுமலர்ச்சி கண்ட நூற்றாண்டு, தமிழகத்தைப் பற்றிய மட்டில். அது மக்கள் வாழ்வை, இலக்கியத்தை உருத்தெரியாமல் மாற்றியிருக்கிறது; மாற்றி வருகிறது. அதன் ஆற்றலை நூற்றாண்டின் ஒவ்வொரு பத்தாண்டிலும் ஆட்சியாளரும் ஆட்சி வகுப்பினரும் சிறுகச் சிறுக உணர்ந்து வருகின்றனர். ஆனால், தமிழகத்துக்கு வெளியே மக்கள் ஆற்றல் வளராத நிலையில், தமிழகத்தின் மறுமலர்ச்சி ஆட்சியாளரின் உள்ளத்தையும், பார்வையையும் இன்னும் போதிய அளவு கவராமலே இருந்துவருகிறது. தமிழகத்திலும் இந்தியாவிலும் அவற்றைச் சூழ்ந்த நாடுகளிலும் இதுவரை ஏற்பட்ட இலக்கியங்களுக்கும் தமிழக மறுமலர்ச்சி இயக்கத்துக்கும் புதுமை வாய்ந்த ஒரு வேறுபாடு உண்டு. முன்னைய இயக்கங்களில், புத்த சமண நெறிகள் நீங்கலாகக் கிட்டத்தட்ட யாவுமே தமிழகத்தில் தோன்றி வடக்கே இந்திய மாநிலத்திலும், தெற்கே இலங்கையிலும், தென்கிழக் காசியாவிலும் பரந்த இயக்கங்களாகவே இருந்தன. தமிழகமே தமிழரின் தாய்நிலம் என்று இலங்கைத் தமிழர்கூட எண்ணியதன் காரணம் இதுவே. தமிழக மறுமலர்ச்சி யியக்கம் ஒரு புதிய அனுபவத்தை நமக்குத் தருகிறது. அது தமிழகத்திலிருந்தோ இந்தியாவி லிருந்தோ எழவில்லை. இலங்கை, மலாயா ஆகிய கடல் கடந்த பழந்தமிழ்த் தாயகங்களிலிருந்தே அவை தோன்றின. கடல் தாண்டி இந்தியாவில் புகுந்த பின்னர்க்கூட அது தமிழகத்தை உடனடியாகத் தீண்டவில்லை. திருவாங்கூர்த் தமிழகத்தில்-திருவனந்தபுரத்தில் கரமனை யாற்றின் கரையிலும், நாகர்கோவிலில் கோட்டாறு என்ற பழம் பெயருடைய பழையாற்றின் கரையிலும், மேற்குக் கரைத் தாமிரவருணியாகிய குழித்துறை யாற்றின் கரையிலுள்ள திருவட்டாற்றிலும் அஃது உலவிற்று. பின் திருநெல்வேலி மாவட்டத்திலும் தஞ்சை மாவட்டத்திலும் காஞ்சிபுரத்திலும் காலூன்றித் தமிழகமெங்கும் பரந்தது. நாளடைவில் சோணாடும் கொங்குநாடும் (தஞ்சை, திருச்சி, கோயமுத்தூர், சேலம் மாவட்டங்கள்) அதில் பெரும்பங்கு கொண்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழகத்தில் பாரதி, பாரதிதாசன் கவிதைகளே மறுமலர்ச்சியை வளர்த்தன. மறைமலையடிகளின் உரைநடையும் ஆராய்ச்சியும், சொற்செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியவர்களின் உரை வண்மை, எழுத்து வண்மைகளும் அதனை ஊக்கின. ஆயினும், தமிழகத்திலே அதைக் கருக்கொண்டு பேணிய அவர்கள் அனைவர்க்கும் முற்பட்ட சேரநாட்டுக் கவிஞர் பேராசிரியர் சுந்தரனாரும், சோழநாட்டு உரைவாணர் வேதநாயகம் பிள்ளையுமே யாவர் என்னலாம். இருவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாலைப் போதில் வாழ்ந்தவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தை இருபதாம் நூற்றாண்டுத் தமிழகம் எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஏனெனில், அஃது பழைமைக்குரிய நூற்றாண்டு மட்டுமன்று, பழைமையின் தளர்ச்சிக் காலம்கூட ஓய்ந்து சாய்ந்த நூற்றாண்டு அது. தலபுராணங்கள் படுத்துவிட்டன; பழைமை பட்டும் போயின; சித்தர் பாடல்கள் தேய்ந்து மரபற்றுப் போயிற்று. தமிழின் கடைசிப் பேருரையான சிவஞானபோதத் திராவிட மாபாடியம் சிந்தாந்த நூல்களுக்கும் உரைகளுக்கும் ஒரு முடிச்சுப்போட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வள்ளல் இராமலிங்க அடிகளார் தம் அருட்பாவில் பழைமை என்ற சக்கிமுக்கிக் கல்லிலிருந்து பொறி எழுப்பி ஒரு புதுச்சோதி காட்டினார். நீதிபதி வேதநாயகம் புதிய உரைநடையும் இசை நாடகத் தமிழும் புதுப்பிக்கும் முறையில் ஆறியலந்த பழைமைக் கனலில் புதுமையை ஊதி எழுப்ப முயன்றார். புதுமையைத் துணிச்சலுடன் கனவு கண்டு, கனவுகண்டதுட னமையாது திட்டமிட்டு, திட்டமிட்டதுட னமையாது தன்னந் தனியாக நின்று செயற்படுத்தத் துணிந்தார் பேராசிரியர் சுந்தரனார்! பேராசிரியர் சுந்தரனார் புது நாகரிகத்தில் பூத்த மேலை உலகின் உலகக் கவிஞரான ஷேக்°பியருடனேயே போட்டியிட முனைந்து அவர் மனோன்மணிய நாடகம் இயற்றினார். அறிவியலில் முனைந்து முன்னேறிவந்த மேனாடுகளை அந்நாளைய நொண்டித் தமிழன் எட்டிப்பிடித்தல் வேண்டும் என்ற ஆத்திரத்தால் நூல் விளக்கம் யாத்தார். ஆராய்ச்சித் துறையில்கூட அந்நாளைய ஈழநாட்டுப் பேரறிஞரைத் தாண்டி விரைந்து அடியெடுத்து வைத்தார். அவர் செயல் வெற்றி பெரிதாயினும், அவர் தமிழக வாழ்வில் அன்று ஒதுங்கியே இருக்கவேண்டி வந்தது. தூங்கும் தமிழகத்தைத் தட்டி எழுப்பும் பொறுப்பை அவர் தமக்குப் பின்வந்த இளந் தலைவர் மறைமலையடிகளார்க்கே விட்டுவைக்க நேர்ந்தது. ஆனால், தமிழின் தகுதியை மதிப்பிட்டு உய்த்துணர்ந்த வகையில் அவர் மறைமலையடிகளைத் தாண்டி மறுமலர்ச்சி யூழியையும் நாண வைத்துள்ளார். கன்னித்தமிழ் என்ற புராணக்கால மரபு வழக்கை ஓர் அறிவு மரபாக்கிய செல்வர் அவரே. “பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும்ஓர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு அழிந்துஒழிந்து சிதையாஉன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!’’ என்று அவர் மனோன்மணிய நாடகத்தின் பாயிரத்தில் பாடுகின்றார். இந்தியாவிலேயே தேசியக் குரல் எழுவதற்கு முன் அவர் எழுப்பிய தமிழ்த் தேசியக் குரல் இது. அதில் தமிழ்த் தேசியத்தின் பழங்கால வரலாறும், அவர் வருங்கால முன்னறிவும், நம் வருங்கால ஆக்கமும் செறிந்து பொதிந்துள்ளன. கன்னித்தாய் தமிழைக் கன்னித்தாய் என்று கூறுவது ஓர் இல் பொருளுவமை. மலடி மகன் என்பது போல அஃது ஒரு முரண்பட்ட தொடர் ஆகும். ஆயினும், அந்த இல்பொருளுவமை தமிழ்க்கு முற்றிலும் இசைகிற உவமையே யாகும். அது கவிஞரின் சொல்லணி வழக்கு மட்டுமன்று. அறிஞர் பலர்கண்ட, கண்டுவரும் முடிவுகளின் தொகுப்பாகவும் அது விளங்குகிறது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு முதலிய மொழிகள் ஒரே திராவிட மொழிக்குழுவைச் சார்ந்தவை என்றும், அதன் மிகப் பழைமையான மூலம் தமிழே என்றும் டாக்டர் கால்டுவெல் ஆய்ந்து ஒப்பியல் மொழிநூல் வெளியிட்ட காலம் அதுவே. அம் முடிவைக் கவிதை உருவில் தெரிவித்தார் பேராசிரியர். சங்க இலக்கிய ஏடுகள் அப்போதுதான் வெளிவரத் தொடங்கியிருந்தன. அதற்குள் அதை மதிப்பிட்டுவிட்டார் பேராசிரியர். பத்துப் பாட்டையும் திருக்குறளையும் கற்றவர் வேத புராணங்களையும் சாதி அநீதி வகுத்து மனு சுமிருதியையும் தீண்டுவரோ என்று வினவினார். சமற்கிருதம் அன்றுமட்டுமன்றி இன்றுகூடப் பலரால் வட இந்தியத் தாய்மொழிகளின் தாய் என்று கருதப்படுகிறது. வடநாட்டுத் தாய்மொழிகளை ஈன்ற சமற்கிருதம் அழிந்துவிட, தென்னாட்டுத் தாய்மொழிகளை ஈன்ற தமிழ் அழியவில்லை என்ற வரலாற்றுண்மை கண்டே அவர் கன்னித்தாய்க் கருத்தைத் கட்டுரைத்தார். பேராசிரியர் நாளில் சங்க இலக்கியம் முற்றிலும் வெளிவரவில்லை. அவற்றின் காலவரையறை உணரப்படவில்லை. சிந்துவெளி நாகரிகம் இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் பத்திலேயே அகழ்ந்து காணப்பட்டது. இந் நிலையில் இருபதாம் நூற்றாண்டில் ஒரு மறைமலையடிகள் கண்டு நிலைநாட்ட வேண்டிய கருத்தையெல்லாம் முன் நூற்றாண்டிலேயே கண்டு கவிதைக் கருத்தாகத் தந்தார் சுந்தரனார். உலகின் செம்மொழிகளுள் சமற்கிருதம் மட்டுமன்று, பழம் பாரசீகம், பண்டை கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், அரபு, ஐ°லாண்டிக் ஆகிய யாவுமே வழக்கிறந்துபட்டன. அது மட்டுமன்று. இவற்றினும் பழைமையான நாகரிகம் வளர்த்த பண்டை எகிப்திய மொழி, சிரிய மொழி, பினீசிய மொழி, அசீரிய, பாபிலோனிய மொழிகள் ஆகியவையும் இவற்றுக்கு மூல நாகரிக மொழிகளான வரலாற்றுக்கு முற்பட்ட சுமேரிய, ஏலமிய மொழிகளும் மரபும் தடமுமற்று ஒழிந்து போயின. உலகின் மிகப் பழைமை வாய்ந்த மொழிகளுள் இன்னும் உயிருடன் நிலவுபவை தமிழ்மொழியும் சீன மொழியும் மட்டுமே. அறிஞர் அறிவுடன் கவிஞர் முன்னறிவும் இணைந்த பேராசிரியர் முடிவு வியக்கத்தக்க ஒன்றே யாகும். வட இந்தியாவின் படிப்பினை அசோகன் காலத்துக்கு முன்னிருந்து இன்றுவரை இந்தியாவில் இலக்கிய மொழியாக நிலவுவது தமிழ் ஒன்றே. ஆனால், இந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்குள் வட இந்தியாவில் எழுந்தெழுந்து மறைந்த மொழித் தலைமுறைகள் மிகப்பல. வட இந்திய ஆரியரின் மிகப்பழைமை வாய்ந்த மொழி வேதமொழி. இது கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்குள்ளேயே இறந்துவிட்டது. இதிகாச மொழி இதன் பின் எழுந்து கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குள் அதே நிலை கண்டது. புத்தர், மகாவீரர் காலங்களில் பாலியும் அதனையடுத்து அர்த்தமாகதிப் பிராகிருதமும் புத்த, சமண இலக்கிய மொழிகளாய் நிலவின. கி.பி. 1ஆம் நூற்றாண்டுக்குள் இவையும் இறந்துபட சமற்கிருதம் தலையெடுத்தது. வேதமொழி, இதிகாச மொழி, பாலி, பிராகிருதங்கள், பழங்குடியினர் மொழிகள் ஆகியவற்றின் கலப்படமாகவே அது பிறந்ததால் பிறக்கு முன்பே இறந்து பிறந்தது. கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்து புதிய பிராகிருதங்களும் 10ஆம் நூற்றாண்டிலிருந்து அபப்பிரும்சங்களும் தோன்றி மறைந்தன. 16ஆம் நூற்றாண்டிலிருந்து தற்கால வட இந்தியத் தாய்மொழிகள் பிறந்து வளர்கின்றன. வட இந்தியாவில் இங்ஙனம் நான்கு நூற்றாண்டு களுக்கொரு முறை மொழிவாழ்வும் இலக்கிய வாழ்வும் பிறந்திறந்து உருமாறியுள்ளன. ஆனால், அத்தனை காலமும் தமிழ் மொழியும் இலக்கியமும் இந்தியாவின் வரலாறே தம் வரலாறாய் இயங்கி வந்துள்ளன. தென் இந்தியத் தாய்மொழிகளுக்குத் தமிழ் நடுநாயக மொழியாய் இருந்து அவற்றின் வாழ்வை இயக்கியுள்ளது. அவற்றைப் பண்பட்ட மொழிகளாய், முற்பட்ட இலக்கிய வாழ்வுடைய மொழிகள் ஆக்கியுள்ளது. ஆனால், வட இந்தியாவிலுள்ள திராவிட அல்லது தமிழின மொழிகள் தமிழ்த் தொடர்பின்றிப் பண்படாதனவாய் இயங்குகின்றன. ஆரியச் சார்புடைய மொழிகளும் தமிழகத் தென்னாட்டுத் தொடர்பின் அளவிலே பழைமையும் பண்பாடும் பெற்றுத் திகழ்கின்றன. இங்ஙனம் இந்தியாவில் சமற்கிருதம் மட்டுமன்றி, சமற்கிருதத் தொடர்பு கொண்ட மொழிகள் விரைந்து அழிந்துவிட, தமிழும் தமிழ்த் தொடர்புடைய மொழிகளும் உயிர்ப்பண்பு பெற்றுத் தழைக்கின்றன. இவ்வுயிர்த் துடிப்பின் மறைதிறவு யாது? மொழிகளும் வரலாறும் உலகின் வரலாறு பெரிதும் மொழியடிப்படையிலேயே அமைந்துள்ளது என்னலாம். ஆரிய மொழிகளின் மொத்த வாழ்வே தொடக்கத்தில் மனித இனத்தின் மொத்த வரலாறாகக் கருதப்பட்டது. ஆகவேதான், ஆரிய நாகரிகக் காலம் இன்றளவும் வரலாற்றுக் காலம் என்றழைக்கப்படுகிறது. தென் ஆரிய மொழிகளும் கீழை மொழிகளும் வாழ்ந்த முற்பட்ட வரலாற்றுக் காலம் பண்டைக் காலம் என்றும், அவற்றின் தூண்டுதலால் மலர்ந்துள்ள இன்றைய நாகரிகக் காலம் தற்காலம் என்றும் இடைப்பட்ட நாகரிகத் தொடர்பற்ற காலம் இடையிருட் காலம் என்றும் வகுக்கப்பட்டன. மனித உலக வரலாறு, மனித மொழி வரலாறு இதுவே என்று நெடுங்காலம் கருதப்பட்டது. சமற்கிருதத்தின் பெருமை உலகில் பரந்த காலம் இதுவே. ஆனால், ஆரிய மொழிகளுள் தென் ஆரியமும் கீழை ஆரியமும் மட்டும் பண்டை வளர்ச்சியடைந்ததன் காரணம் விரைந்து தெரிய வரலாயிற்று. இந்தியாவில் தமிழினத் தொடர்பும் மேலையுலகின் தென்பகுதியில் நடுக்கடலக நாகரிகத் தொடர்புமே பண்டை ஆரிய நாகரிகங்களுக்கு மூலத் தாயகமாகும் என்று காணப்பட்டன. பண்டைக் காலத்துக்கும் முற்பட்ட இந்த நாகரிகக் காலமே வரலாற்றுக்கு முற்பட்ட காலம் எனப்பட்டது. நடுநிலக் கடலக நாகரிகத்தின் பழைமை எல்லை கி.மு. 3000 ஆகும். இதுவே உலக நாகரிகத் தொடக்கம் என்று சில நாள் கருதப்பட்டது. இது முதல் ஆரியர் வருகைக் காலமான கி.மு. 1500 வரை வரலாற்றுக்கு முற்பட்ட நாகரிகம் என்று கருதப்பட்டது. ஆனால் சுமேரிய, ஏலமிய நாகரிகமும், சிந்துவெளி நாகரிகமும் கி.மு. 3000-க்கும் பல்லாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட உயர் நாகரிகமுடையவையாய் இருந்தன. கி.மு. 3000-க்கும் பல்லாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழின நாகரிகத்தின் தொடக்க ஊழிக்கு இன்னும் வரலாற்றாசிரியர் பெயர் கொடுக்கவில்லை. ஏனெனில், அவர்கள் பெயர் மரபுப்புடி அது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்துக்கும் முற்பட்ட காலம் ஆகும். உலக வரலாறு எழுதிய எச்.ஜி. வெல்° இந்த விவரங்களைத் தருவதுடன், அதைத் தம் இன வரலாற்று அட்டவணையிலும் குறித்துள்ளார். தமிழ் இங்ஙனம் இயற்கையின் முதல் மொழிக் குழவியாய், இயற்கையோ டொத்து நீடித்த வாழ்வும் வளமும் வளர்ச்சியும் பெற்றுள்ளது. அதன் உயிர்ப்பண்பின் மறை திறவுக்குரிய ஒரு பண்புக்கூறு இது. ஆனால், நீடித்த வாழ்வுக்கே உயிர்ப் பண்பு காரணமாகும். ஆகவே, நீடித்த வாழ்வு, உயிர்ப் பண்பு இரண்டுமே ஒன்றற் கொன்று முதற் காரணமாகமாட்டா. ஒன்றற்கொன்று காரணமாகவும் காரியமாகவும் இணைந்து வரும் பண்புகளே யாகும். வாழ்வு, தாழ்வுப் பண்புகள் தமிழ் மொழியின் உயிர்ப்பண்பு, நீடித்த வாழ்வு, நிலையான இன நலம் ஆகியவற்றின் மூல காரணம் தமிழின இயற்கையோ டொட்டிய வாழ்வே என்னலாம். ஆனால் வேளிர், மூவேந்தர் பொதுவாகவும், பாண்டியர் சிறப்பாகவும் அதற்குத் திட்டமமைத்துச் சங்க வாழ்வால் வளர்த்ததே அதன் நீடித்த வாழ்வுக்குப் பெரிதும் உதவிற்று என்னலாம். சங்க வாழ்வு, இலக்கியத்தைத் தோற்றுவிக்கவும் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கவும் மட்டும் அமைந்த நிலைய மன்று. அதுவே தமிழகத்தின் தேசியப் பல்கலைக் கழகமாகவும் அமைந்தது. பாண்டியருடன் அரசியலில் போட்டியிட்ட சேர சோழரும் வேளிரும், மொழித்துறையில் பாண்டி நாட்டின் சங்கத் தலைமையை ஏற்றதன் காரணம் இதுவே. அரசர் வாழ்வு கடந்த தேசியக் குறிக்கோள் கண்ட தமிழினத்தார் அரசனை ஆட்சிக் காவலனாக மட்டுமே கொண்டிருந்தனர். ஆட்சி முறையில் அடிப்படை குடியாட்சி யாகவும் சிறு குடியரசுகளின் நாட்டாண்மை, ஊராண்மை நகராண்மைகளாகவும் வகுக்கப்பட்டது. இதற்கென மூவாயிர ஆண்டுகட்கு முற்பட்டே கோட்டம் (ஜில்லா), கூற்றம் (தாலுக்கா), வளநாடு (வட்டம்), நாடு (நகர்-நாடு அல்லது பேரூர் சூழ்ந்த சிற்றூர்த் தொகுதி) ஆகியவற்றை வகுத்திருந்தனர். தமிழரின் ஆட்சி முறையும் கல்வி முறையும் தமிழரசர் காலம் முழுதும் அவர்கள் போர்களாலும் ஆட்சி மாறுதல்களாலும் பாதிக்கப் பெறாமல் நீடித்தன. ஆனால், சங்க வாழ்வு கி.பி. 3ஆம் நூற்றாண்டுடன் ஓய்வுற்றது. தமிழ்க் கல்வி நிலையங்கள் படிப்படியாக அழிவுற்று, சமற்கிருதக் கல்வி நிலையங்களாக வளர்ந்ததால் 16ஆம் நூற்றாண்டுக்குள் தமிழ்க் கல்வி தட்டுக்கெட்டது. வாணிகம் தகர்ந்தது. குடியாட்சி முறைகள் அயலார் ஆதிக்கத்தால் சீர்குலைவுற்றன. கலைகள் சமற்கிருதத்தில் மேற்கொள்ளப்பட்டன போக மீந்தவை அழிந்தன. தமிழகத்தின் செல்வநிலை மட்டும் 6ஆம் நூற்றாண்டுவரை உலகில் முதலிடம் வகித்து வந்தது. ஆங்கில ஆட்சி இதையும் சூறையாடி மேலை உலக நாகரிகம் வளர்த்தது. தமிழரின் உயிர்ப்பண்புக்கும் நீடித்த வாழ்வுக்கும் காரணமான அடிப்படைப் பண்புகளைத் தமிழகம் இன்றும் இழந்துவிடவில்லை. ஆனால், அதை வளர்க்கத் தமிழர் தமிழ்ப் பண்புடைய தமிழராதல் வேண்டும். மறுமலர்ச்சி இதையே செய்தல் வேண்டும்; செய்யத் தொடங்கியுள்ளது. மறுமலர்ச்சி மூலம் தமிழார்வம் தமிழ்த் தேசிய ஆர்வமாக, தமிழினப் பண்பார்வமாக வளர்ந்தபின் தமிழ் மக்கள் ஆற்றலே தமிழர் உரிமைகளை, பண்பாட்டு வளர்ச்சியைப் பாதுகாத்து ஊக்கும். அது தமிழகம் சூழ்ந்த தமிழின மாநிலத்தையும், தமிழுலகையும், கீழ்த் திசையையும் மீண்டும் நாகரிக உலகில் மேம்படச் செய்யும் என்பது உறுதி. திருக்குறளும் தமிழினப் பண்பும் திருக்குறள் தமிழினப் பண்பின் தாயூற்று என்பதை இன்றைய மறுமலர்ச்சித் தமிழர் அறிவர். அதனை உலகப் பொதுமறை என்றும் பாராட்டுகிறோம். ஆனால் அது, உலகப் பண்பின் தலையூற்று என்பதைப் பலர் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். அதை முதன் முதல் சுட்டிக்காட்டிய பெருமை ஜெருமானிய அறிஞர் ஆல்பிரட் ஷ்வைட்சருக்குரியதாகும். அவர் கூற்றுகள் தமிழர்க்கும் இந்தியர்க்கும் உலகுக்கும் புதியன; புதுத் தூண்டுதல் தருவன. அவற்றுள் சில வருமாறு: “செயல் துறை அன்பறம் என்பது இந்தியாவின் மக்கள் ஒழுக்கக் கோட்பாட்டின் பகுதியாய்ப் பண்டைக் காலத்திலிருந்தே நிலவி வந்துள்ளது. இதனை அந்நாட்டின் கதை இலக்கிய மரபிலே பொதுவாகக் காணலாம். ஆனால், சிறப்பாகக் குறள் என்ற நூலின் ஒழுக்க விதிகளில் காணமுடியும். இந்நூல் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக் குரியதென்று தோற்றுகிறது. “திருவள்ளுவர் ஒழுக்க விதிகளுட் சில பல அவர்க்கேயுரிய தனிப்பட்ட கருத்துகளாயிருக்கக் கூடுமானாலும், பெரும்பான்மை அந்நாட்டுப் பொது மக்களின் மரபுச் செல்வத்திலிருந்து எடுத்து அவரால் கவிதைப்படுத்தப் பட்டவையே என்னலாம். “மனுநீதி குறளுக்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தென்று கூறப்படுகிறது. ஆயினும், இரண்டுக்கும் இடையே உள்ள வேற்றுமைதான் எவ்வளவு? மனுநூலைப் பார்ப்பன உள்ளம் ஆட்டிப்படைத்துள்ளது. உலகம் மாயை வாழ்வு மாயை என்ற உலக மறுப்புக் கோட்பாடே அதில் மேலோங்கியுள்ளது. திருவள்ளுவரின் உலக மெய்ம்மை, வாழ்க்கை ஆக்கக் கோட்பாடுகள் இங்கே இடம் பெற்றுள்ளனவானாலும், இவை இரண்டா மிடத்தில் பின் தள்ளப்பட்டுத் தட்டிக் கொடுக்கப்படுகின்றன. “செயல்துறை வாழ்வுக்குப் பகவத்கீதை செயற்கை இரும்புச் சட்டம் வகுத்து உணர்ச்சியற்ற முறையில் அதை உலகச் சட்டம் என்னும் விதியுடன் இணைக்கிறது. குறள், செயல்துறை வாழ்வு முற்றிலும் அன்புக்குரிய வாழ்வு எனக் குறிக்கிறது. எவ்வளவு பெரிய ஒழுக்கமுறை முன்னேற்றம் இது? உழைப்பும் ஊதியமும் அன்புச் செயலுக்குரிய கருவிகள் மட்டுமே என்று வகுக்கிறது அது. “உழைப்பில் இன்பம்-இந்தியர் திருவாயிலிருந்து நாம் எதிர்பாராத கருத்து. வள்ளுவர் வாய்மொழியில் தரப்படுகிறது. குறளின் உலக மெய்ம்மை, வாழ்க்கை ஆக்கக் கோட்பாட்டின் மெய் வலிமையை இது காட்டுகிறது. “புத்தரையும் பகவத்கீதை ஆசிரியரையும் போலவே குறள் உலகின் சிக்கல்களிலிருந்து அக விடுதலையும், அதில் வெறுப்பும் களிப்புமற்ற உள்ளமும் நாடுகிறது. இருவரையும் போலவே அது கொல்லாமையையும் அழிவு செய்யாமையையும் குறிக்கொள்கிறது. ஆனால், புத்தர்க்கு மாறாக, தான் கொல்லாத உயிரின் ஊனை உண்பதும் தவறு என்று குறள் துணிகிறது. இங்ஙனம் உலக மாயைக் கோட்பாட்டாளர்கள் கூறிய நற்பண்புகளை ஒன்று விடாமல் குறள் மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்த அகமுக ஆன்மிக ஒழுக்கத்துடன் அது அன்புப் பாசத்தை இணைத் துள்ளது. “மனித இனத்தின் ஒழுக்க முறையை வகுப்பதில் ஈடும் இணையுமற்ற நூல், மனிதன் மனிதனுடன் எவ்வாறு பழகுதல் வேண்டும்; உலகுடன் தொடர்பு கொள்ளுதல் வேண்டும் என்பது பற்றிய கடாக்களிலெல்லாம் , குறளின் நீதியில் உயர் மேம்பாடும் நுண்ணறிவும் துலங்குகின்றன. இத்தனை உயரிய அறிவுக் கோட்பாடுகளடங்கிய ஓர் அறிவுரைத் தொகுதி உலக இலக்கியத்திலே எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. “இந் நூலிலிருந்து நாம் காணும் பேருண்மை இது. இயல்பான ஓர் ஒழுக்க முறையும் வாழ்க்கை ஆக்கக் கோட்பாடும் இந்திய மக்களிடையே கி.பி. முதல் நூற்றாண்டுகளில் நிலவி வந்தது. ஆனால், அதன் நிழல் கோடுகளைக் கூடப் பார்ப்பனச் சமயத்திலோ, புத்தமத நூல்களிலோ, பகவத் கீதையின் இந்து மதத்திலோ காண முடியவில்லை. ஆயினும், பெரும்பாலும் தாழ்ந்த வகுப்பினரிடையிலேயே தோன்றியுள்ள பெரிய சமயாச்சாரியார்கள் மூலம் அது மெல்ல இந்து மதத்தில் புகுந்து ஊறி அதைத் தனதாக்கியுள்ளது. அத்துடன் அது மெல்ல மெல்ல மக்கள் வாழ்வில் பரவி அவர்கள் உள்ளத்தையும் பண்படுத்திவருகிறது. தமிழகமும் வருங்கால உலகும் இவற்றை எழுதிய ஆல்பிரட் ஷ்வைட்சர்க்கு உலகப் பரிசான நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்கண்ட உரைகள் தாங்கி “இந்தியாவின் சமயக் கருத்துகள்” என்ற நூலுக்காக அல்ல! ஷ்வைட்சர் தமிழறிந்தவரல்லர், திருக்குறளை அவர் ஜெருமனி மொழி பெயர்ப்பிலேயே படித்தவர். எல்லா மொழிபெயர்ப்புகளையும் போல, அது பரிமேலழகரின் ஆரியக் கண்ணாடி நிறம் தோய்ந்த கருத்துகளின் மொழி பெயர்ப்பாகவே இருந்திருக்க முடியும். ஆனால், அப்படித் தமிழ்ப் பண்பும் தமிழ்ப் பின்னணி வண்ணமும் தமிழகத்திலேயே பல மடியாக வடிகட்டப்பட்டுச் சென்ற ஆரியப் பதிப்பே, அவர்க்கு இத்தமிழ்க் கதிரவனின் ஒளியை ஓரளவு காட்ட உதவிற்று என்று தோற்றுகிறது. சங்கரர், இராமானுஜர், இராமானந்தர் முதலிய சமயாச்சாரியர் விழுமிய கருத்துகளுக்கும், அவர்கள் மூலமாகச் சைதன்னியர், ஞானதேவர் ஆகியவர்கள் சமயப் பண்புக்கும்’ இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்த அடிகள், காந்தியடிகள் ஆகியோரின் அருட் பண்புகளுக்கும் உரிய தாய் மூலத்தைத் திருக்குறளில்தான் காணமுடியுமே யன்றி வேத புராண இதிகாசங்களில் காணமுடியாது என்று ஷ்வைட்சர் கருதுகிறார். உலகப் பழைமையாராய்ச்சித் தொகுதி (ஹசஉhயநடிடடிபல) இந்தியப் பண்பாராய்ச்சித் தொகுதியும் (ஐனேடிடடிபல) தமிழ்ப் பண்பாராய்ச்சித் தொகுதியும் (கூயஅடைடிடடிபல) குறுகிய ஆரிய மனப்பான்மை, குறுகிய வெள்ளையர் ஆதிக்க மனப்பான்மை ஆகியவையன்றி நடுநிலையாக முழுதுறழ்வாக ஆயப்படும் நாளில், தமிழ்ப் பண்பாட்டின் விரிவே உலக மறுமலர்ச்சியாய், சங்க முத்தமிழின் ஆய்வே உலகின் புத்திலக்கிய வழிகாட்டியாய், வள்ளுவர் வழிவந்த அறிவு நூலே, அன்போடியைந்த ஆக்க அறிவு நூலாய்த் திகழும் என்னலாம். தமிழன் உரிமை முதற் பதிப்பு - 1960 இந்நூல் 2001 இல் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. உரிமையும் கடமையும் உரிமை, கடமை ஆகிய இரண்டும் இரு வேறு பண்புகள் அல்ல. அவை ஒரே பண்பின் இரு திசைக் காட்சிகள். ஒரு தாளுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல, ஒரே பண்புக்குரிய இரண்டு பக்கங்களாக அவை இயங்குகின்றன. உரிமை உயிர், கடமை உடம்பு, ஒன்று இல்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. உயிரில்லாத உடலை நாம் உடல் என்று கூறுவதில்லை; பிணம் என்போம். அதுபோல உரிமை இல்லாத கடமையை நாம் கடமை என்று கூற முடியாது; அடிமைத்தனம் என்று கூறுவோம். நேர்மாறாக, உடலில்லாத உயிர் என்று ஒன்று இருக்க முடியாது; இருப்பதாகக் கூறுபவரும் அதை உயிர் என்பதில்லை; ஆவி, பேய் என்பர். இவற்றின் பண்பு வேறு; உயிரின் பண்பு வேறு. இதுபோலவே கடமையில்லாத உரிமையும் உரிமையின் பண்பு உடையதன்று. இதற்கு உரிமை என்ற பெயர் கூறுவது தவறு. அதன் உண்மைப் பெயர் ஆதிக்கம், சுரண்டல் என்பதே. உரிமையில்லாத கடமையும் கடமையன்று. அதன் பெயர் அடிமை! “உரிமை பேசாதே? கடமை செய்?” இஃது ஆதிக்கத்தின் குரல். ஆனால், இஃது அதன் கடும் பதிப்பான குரல் மட்டுமே. தன் அடிமைகளிடம் எப்போதும் அஃது இப்படி உத்தரவு இடுவதில்லை. ஏனெனில், அதே குரலுக்கு வேறு பல தொனிகள் உண்டு. “உரிமைபற்றிக் கவலைப்படாதே, கடமையாற்று!” என்று அது கனிவுடன் கூறலாம். “கடமையின் பெருமையே பெருமை. கடமையாற்றுபவர்கள் கண்ணியவான்கள். உரிமையை எண்ணுவதுகூட ஈனத்தனமான தல்லவா?” என்று அது புகழ்ந்து பசப்பலாம். “கடமை செய்துவிட்டால் உரிமை எங்கே போகிறது? அது தானாக வந்துவிடுகிறது!” என்று அது விளக்க வேதாந்தமும் அளிப்பதுண்டு. தான் கடமையற்ற உரிமை கோருவதுடன் ஆதிக்கவாதம் நிற்பதில்லை. பிறரிடமிருந்து அஃது உரிமையற்ற கடமையை எதிர்பார்க்கும், விரும்பும் - கட்டளையிடும் - வலியுறுத்தும் - கெஞ்சும் - உபதேசிக்கும்! ஆனால் உபதேசித்த படி, அது நடவாது! அது கூறும் வேதாந்த விளக்கங்கள், பிறர்க்கு - அதற்கல்ல! ஆனால், ‘நீ உன் கடமையைச் செய்துவிட்டாயா?’ என்று அடிமைக்குப் பெரும்பாலும் கேட்கத் தோன்றாது. கேட்டால் அஃது அடிமைக் குரலன்று, புரட்சிக்குரல்! அதன்பின் ஆதிக்க அடிமைத் தொடர்புகள் - ஆண்டான் அடிமை முறைகள் சரிந்துவிடும். மனிதப் பண்புடைய மனித சமுதாயம் அமைந்துவிடும். ஆதிக்கம் என்பது கடமையில்லாத உரிமை. அது பிறர் முதல் கொண்டு, தான் ஆதாயம் பெற விரும்புவது போன்றது. பிறர் உழைப்பைக் கொண்டு, தான் ஊதியம் பெற விழைவது போன்றது. அதனை நாம் கொடுங்கோன்மையின் குரல் என்றும் கூறலாம். கோழைத்தனத்தின் மறு வடிவம் என்றும் கூறலாம். ஏனெனில், அதற்கு உண்மை வீரம் இருக்கமுடியாது. அஃது ஊதி உப்பிய தொய்வகப் பை (இரப்பர்ப் பை) போன்றது. ஊசிபட்டால் வெடித்துவிடும். உரிமைக் குரல் என்ற ஊசிமுனை படும்வரை அஃது ஏவும், கட்டளையிடும்; வற்புறுத்தும், வல்லந்தப் படுத்தும்; வாதிக்கும், உபதேசிக்கும்; கேலி செய்யும், கெஞ்சும். “அகப்பட்டால் தலையைப் பிடி, அகப்படாவிட்டால் காலைப்பிடி” என்ற தமிழ்ப் பழமொழி இத்தகையவர்களிடம் தமிழன் பழகிக் கண்ட அனுபவ மொழியே யாகும். ஒரு நாட்டை மற்றொரு நாடு ஆளும்போது, ஒரு மொழிமீது மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்தும்போது, ‘கடமை செய்’ என்று ‘ஒருவனை’ ‘மற்றொருவன்’ ஏவும்போது நாம் இந்தக் குரலை, கடமை செய்யாது உரிமை பெறத் துடிக்கும் இந்த மொழியுருவத்தைக் காண்கிறோம். தமிழன் சில காலமாகக் கேட்டுவரும் குரல் இது. நாட்டுரிமை, சமயஉரிமை, அரசியல்உரிமை, மொழியுரிமை, பொருளியல் உரிமை, வாழ்வுரிமை ஆகிய எல்லாவற்றையும் வேறு ஒருவனுக்கு அளித்துவிட்டு, கடமைமட்டும் ஆற்றிக் கிடக்கும்படி தமிழனுக்குப் பிறர், அவனை ஆளும் பிறர் - சில சமயம் ஆளுபவனை அண்டி இனத்தை விற்றுப் பிழைக்கிற, குடிப்பெருமை விற்றுக் குபேரனாக வாழ விரும்புகிற பஞ்சைத் தமிழர் ஒரு சிலர் குரல் மற்றப் பெரும்பாலான தமிழர்க்கு உபதேசம் தருகிறது. இந்த உபதேசங்களைத் தமிழன் கேட்டு ஆட்டுக் கூட்டங்கள் போல நெடுநாள் வாழ முடியாது - வாழ்ந்த இடையிருட்கால இரவு மலையேறி விட்டது, மலையேறி வருகிறது! கடமைக் கேற்ற உரிமை, உரிமைக் கேற்ற கடமை என்ற இனக்குரல், சமத்துவக் குரல் எழுந்துவிட்டது. எழுந்து வளர்ந்துவருகிறது! எல்லார்க்கும் உரிமை, எல்லார்க்கும் கடமை - எல்லாரும் இந்நாட்டு மன்னர், எல்லாரும் இந் நாட்டுத் தொண்டர் - இதுவே சமூக நீதி, சமூக நேர்மையின் அடிப்படை - இதுவே உயர் சமய உண்மை, உண்மைச் சமயப் பண்பு! இதுவே குடியாட்சிக் குணம் - சமதர்மத் தென்றல் இதுவே! கடவுட் பண்புணர்ந்த அறிஞர், அருளாளர் - இயேசுபெருமான், நபிநாயகம் - புத்தர்பிரான், மகா வீரர் - ஆழ்வார்கள், நாயன்மார்கள் - வற்புறுத்தி, வலியுறுத்தி, ஆனால் நயமாகக் கூற விரும்பிய உண்மை இதுவே! ஆயினும், இந்தக் குரலை எழுப்புபவர், விளக்குபவர் - இந்தக் குரலில் எழுச்சிப் பாடல் பாடுபவர், இந்தத் தத்துவத்தைப் பேனா பிடித்துத் தாள் மீது எழுதுபவர் - இவர்கள்தாம் ஆதிக்கபுரியினர் கண்களுக்குப் புரட்சிக்காரர், கிளர்ச்சிக்காரர் என்று தோன்றுகிறார்கள். இந்தக் குரலைத்தான் சமதர்மப் பூச்சுப் பூசிய சாதி ஆணவ வெறியர்கள், காலிகள் குரல், கூலிகள் குரல் - நாத்திகர் குரல், தெய்வ விரோதிகள் குரல் - பாவிகள் குரல், நாட்டுப் பகைவர் குரல் என்று வசைபாடுகிறார்கள். தமிழ் நாட்டுக்குத் தமிழ் நாடு என்ற பெயர் கூடாது என்று கூறும் குரல் - ‘தமிழகம்’ என்ற புதுப்பெயர் எதற்கு, எங்கள் மூதாதையர்களான வெள்ளைக்காரன் வைத்த பெயர், மதரா° என்னும் பண்டைக்காலப் பெயரே இருக்கட்டும் என்று கூறும் வரலாற்று மணம் காணாத போலித் தேசியக் குரல் -தேசியப் போர்வை போர்த்த தன்னல நச்சுக்குரல் - ஆட்சியிலிருந்து கொண்டு சட்டத்தைத் தங்கள் அட்டூழியங்களுக்கான காவற் கோட்டை யாக்கிவரும் குரல் - தேசத்தின் கொடி என்று தாங்கள் ஏற்றிவைத்த கொடியையே தங்கள் கட்சிக் கொடி என்றும் கூறிக் கட்சிப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தி அவமதித்துவரும் குரல் இதுவே! ‘தமிழ் நாடாவது, வெங்காய நாடாவது! தேவிகுளம் பீர்மேட்டைத் தமிழன் ஆண்டால் என்ன, எவன் ஆண்டால் என்ன? இதுகள் அப்பன் சொத்துகளா அவை’? என்று கேட்கிற, கேட்பவரைத் துதிபாடி எத்திப் பிழைக்கிற குரல் - ஒரு புறம் தமிழனைப் பார்த்து அகம்பாவ ஆணவத்துடன் சீறி அவமதிப்பாகப் பேசிக் கொண்டு மறுபுறம் ஆட்சியிலிருக்கும் அயலானிடம் கெஞ்சி மண்டியிட்டுக் கூத்தாடும் பண்புடைய இருமுகம்படைத்த இக்கலியுகத் தெய்வங்களின் குரல் - ஏங்கிய; தமிழனை ஏவி, தூங்கிய தமிழன் முதுகில் கயிறு திரித்தது போதும், தமிழன் இனியாவது விழித்தெழுதல் வேண்டும்! தமிழன் உரிமையை நசுக்கிவரும் இந்தக் குரலைத் தமிழன் எத்தனை நாள் வைத்துப் பேணித் தன் வாழ்வை அழித்துக்கொண்டிருக்கப் போகிறான்? பகுத்தறிவு மிக்க வீரன் கூறினான், தேவைப்பட்டால், ‘கொலைவாளினை எடு’ என்று. ஆனால், அஃது எதிரியை எதிர்ப்பதற்கான செயல் மட்டுமே! இங்கேயோ, நம் முதல் எதிரி நம் செயலின்மையே! செயல் செய்து உரிமை பெறுவதற்கு வாளும் தடியும், வில்லும் வேலும், துப்பாக்கியும் குண்டும் எதுவும் பயன்படமாட்டா! ஆகவே, தன்மான வாளை எடு! தன் உரிமை மொழியைத் தன் இனத்துக்கே, இனத்தின் பிரதிநிதிக்கே, இனத்துக்குப் பாடுபட்டு, உலகில் இனத்துக்கு இடந் தேடுபவனுக்கே கொடு - இதுதான் இன்றைய தமிழனின் தேவை! உன் கடமை இது, தமிழனே! உன் உரிமையும் இதுதான்! கிளர்ந்தெழு, ஒன்றுபட்டெழு! குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக - ஊர் ஊராக, மாவட்டம் மாவட்டமாக - அலை அலையாகத் தமிழர் குரல் எழுப்பித் தமிழ்க் கடலாகப் பொங்கி எழு! தமிழர் தன்னுரிமை வாழ்வு பெற, தன்மான ஆட்சியமைய ‘உன் நெஞ்சின் உறுதி தாங்கிய நாவின்மொழி, நாவின் உறுதிமொழி தாங்கிய உரிமை மொழிச் சீட்டைக் கைக்கொள்! அதையே உன் புது வாழ்வுக்குரிய உரிமை வாளாகக் கொண்டு வெற்றி பெறுவாயாக! நீ வாழ, உன் இனம் வாழ, உன் வழிமரபு வளம்பெற, நீ செய்ய வேண்டிய கடமை, பெறவேண்டிய உரிமை இதுவே! 2. இன வாழ்வு கடமை உண்டு, உடைமைகூட உண்டு உனக்கு, தமிழனே! ஆனால், உரிமை உண்டா? கடமையும் உடைமையும் உடைபோன்றவை. உள்ளே உயிருருவம் இல்லாமல், குற்றிக் கட்டையின்மீது உடையும் செருப்பும் தொப்பியும் மாட்டி வைத்திருக்கிறார்களே, கொல்லைகளில்! அது போன்ற உடையணி, உடையணி ஆகுமா! அல்ல, துணிமணிக் கடைகளில் அழகான பொம்மைகளின் மீது அவற்றை நாகரிகமாகக் கட்டியிருக்கிறார்களே, அதுதான் உண்மை உயிர் அழகாகுமா? கடமை, உரிமை என்ற சொற்கள் தமிழில் உண்டு. ஆனால், தமிழன் வாழ்வில் அச்சொற்கள் குறிக்கும் பண்புகள் மேற்கூறிய உடையுருவங்கள் பெற்றவையே. ஏனென்றால், ‘இனவாழ்வு’ என்ற உயிருருவத்துடன் இணைந்தே அவை பொருளும் பண்பும், அழகும் வளமும் பெறுபவை. உரிமை, கடமை என்ற இரண்டு சொற்களுமே இனம்சார்ந்த சொற்கள். இனத்தின் தன்மை அறியாதவர்களுக்கு அந்தச் சொற்கள் பொருளற்றவை. இனவாழ்வற்றவர்களுக்கு, அந்தச் சொற்கள் கழுதை சுமக்கும் வெல்லப் பொதிகள் போல, இனிமையற்றவை, பாரமாக மட்டும் அமைபவை, இயங்குபவை. உரிமை என்றால் என்ன? - தனி மனிதன் வாழ்வு! கடமை என்றால் என்ன? - இனப் பொது வாழ்வு! தனி மனிதன் இனத்துக்காக வாழ்கிறான். தான் மாளும்போதும் இனத்தை வளர்த்து, இனத்துக்காகவே கவலைப்பட்டுக்கொண்டு இறக்கிறான். இஃது அவனது கடமை. இஃது எவரும் போதனைசெய்து உண்டாகும் கடமையன்று. அவன் இனப்பண்பாக அமையும் இயற்கைக் கடமை. ஆனால், தனிமனிதன் ‘தன்’ இனத்துக்காகவே வாழ முடியும்; மாள முடியும். ஏனெனில், இனம் அவனுக்காக வாழ்கிறது. அவன் இயற்கைப் பண்பாகிய இனப் பண்பே அந்த இனத்துக்கும் இயற்கையாக இனப்பண்பாய் அமைகிறது. ஆகவே, இனமும் அவனுக்காக வாழ்கிறது, அவனுக்காக மாள்கிறது. இனமுழுவதும் அழிந்து, ஓர் உயிர் - வாய்விடாக் குழந்தை வடிவில், கருவிலுள்ள சிசு வடிவில் மீந்திருந்தாலும், இனம் தன்மாள்வை எண்ணாது. அந்தக் குழந்தை வாழ்வுக்கே கவலைப்படும் பண்புடையது. ‘இனம் என்றால் என்ன?’ இந்தக் கேள்விக்கும் மேற்கூறிய விளக்கமே விடை தருகிறது. ‘ஒருவன் எல்லோர்க்குமாக, எல்லோரும் ஒருவனுக்காக’ (டீநே கடிச யடட, யடட கடிச டிநே’) என்ற கூட்டுறவு இயக்கக் குறிக்கோளை; எந்தக் குழுவில் தனி மனிதனும் குழுவும் இயல்பாகக் கொண்டிருக்குமோ, அந்தக் குழுதான் இனம். இனத்துக்கும் கூட்டுறவுச் சங்கத்துக்கும் உள்ள ஒரே வேற்றுமை, ‘முன்னது இயல்பானது. வழிவழி மரபாக வளர்ந்துவந்த உயிர் மரபு; பின்னது நாகரிக சமுதாயத்தில் அறிவுடைய தலைவர்கள் புதிதாகத் தோற்றுவிப்பது’ என்பதே! ஓர் இனம் சிறிதாக இருக்கலாம். பெரிதாக இருக்கலாம். அது சில பல உறுப்பினர்களைமட்டும் கொண்ட சிறு தனி இனமாய் இருக்கலாம். அல்லது பல சிறிய பெரிய இனங்களை உள்ளடக்கிய பேரினமாக, கூட்டினமாக இருக்கலாம். பேரினங்களையே உட்கொண்ட பல்கூட்டினமாக, பெரும் பேரினமாகவும் இருக்கலாம். ஆனால், எங்குமே ‘ஒன்று’ எல்லாவற்றுக்குமாக வாழ்தல் வேண்டும்; எல்லாம் ஒன்றுக்காக வாழ்தல் வேண்டும்’ - என்ற பண்பு இல்லாத கூட்டம் இனமல்ல, வெறும் கும்பல், கூளம், உருவிலா உயிரிலாத்திரள் - அவ்வளவே! மிகச் சிறிய இன எல்லை குடும்பமே. மிகப் பெரிய இன எல்லை மனித சமுதாயம், உலகமே. இனம் என்பது குறுகிய எல்லை என்று கருதுபவர், ‘இனம்’ என்ற சொல்லுக்குரிய பொருள் அறியாதவர்களே. ஏனெனில், இனம் என்பது கட்டடம் அல்லது கோட்டை போன்ற நிலையான, வளராத உயிரற்ற சட எல்லையன்று. அது குடும்ப எல்லையிலிருந்து உலக எல்லைவரை ஓயாது வளர்ந்து கொண்டே யிருக்கும் ஓர் உயிரியக்கம் ஆகும். அதன் உருவத்தை வரலாற்றின் வளர்ச்சியிலும் காலத்திலும்தான் காணுதல் வேண்டும். மனிதர் முகத்தையும் வடிவத்தையும் அளந்தோ, கண்ணிறத்தையும் மயிர் நிறத்தையும் கொண்டோ, நில இயலைத் தேடியோ காணமுடியாது. அவை நீடித்த இனவாழ்வின் பயன்கள் ஆகலாம்; இனக்குறிகள் ஆகலாம்; இனப் பண்புகள் ஆகமாட்டா! உரிமையும் கடமையும் இனம் சார்ந்தனவாதலால், ‘இனத்துக்கு வெளியே’ நாம் உரிமையையும் காணமுடியாது. கடமையையும் காணமுடியாது. ஆனால், ‘இனத்துக்கு வெளியே’ என்று கூறும்போது, ‘இனம்’ என்பது கட்டடம், கோட்டை, தோட்டம், வயல் போன்ற இட எல்லையல்ல; ஓர் உயிர்மரபு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அமைதியான ஒரு நீர்நிலையில் நாம் ஒரு கல்லை மெல்ல விழும்படி செய்தால், அது விழுந்த இடத்தை மய்யமாகக் கொண்டு, வட்ட வட்ட அலைகள் அதைச் சுற்றி விரிந்து கொண்டே செல்வதைக் காண்போம். அலைகள் வரவரப் பெரிதாக விரிவுற்று, நீர்ப்பரப்பில் எவ்வளவு இடம் உண்டோ அவ்வளவு இடத்தையும் உட்கொண்ட வட்டமாக விரிகின்றன. இஃது அலையின் ‘பரப்பு வளர்ச்சி.’ ஆனால், நாம் இன்னொரு வளர்ச்சியையும் காணலாம். சிற்றலை பேரலையாகிக் கொண்டே போகிறது. ஆனால், சிற்றலை எழுந்த இடத்தில் புதிய சிற்றலை ஒன்றன்பின் ஒன்றாக எழுந்து முந்திய சிற்றலையைத் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும். இப்புது மரபுத் தொடர்பே அலையின் உயிர் வளர்ச்சி. அதாவது ஓயாப் புது வளர்ச்சி ஆகும். இது பரப்பு வளர்ச்சியன்று, கால வளர்ச்சி அல்லது மரபு வளர்ச்சியே. இனம் என்பது இந்த இரண்டுவகை வளர்ச்சிகளும் உடைய ‘உயிர் வாழ்வு’ ஆகும். சிற்றலையிலிருந்து பேரலை விரிவது போல, இது குடும்பம் என்ற சிற்றின எல்லையிலிருந்து குடி, குலம், சமுதாயம், ஊர்,நாடு ஆகிய எல்லைகள் தாண்டி உலகமாக விரிவுறுவது. இந்த எல்லா எல்லைகளிலும் அது புதுப்புது அலைகளாக இன மரபின் உயிர்ப்பு ஊட்டிக் கால எல்லை தாண்டி வளர்வது. அலை வளர்ச்சி, அலை மரபு ஆகிய இரண்டின் வளமும் விழுந்த கல்லின் ஆற்றல் அளவேயாகும். அதுபோல, இனத்தின் பரப்பு வளர்ச்சி, மரபு வளர்ச்சி ஆகியவையும் இனவாழ்வின் வளமும் அந்த இனப் பண்பின் வளத்தைப் பொறுத்ததே யாகும். தமிழினம் உலகின் எல்லா இனங்களுக்கும் தலைமூத்த தாய் இனம். அதன் பண்பு எல்லா இனப் பண்புகளையும்விட உரமிக்கது. இனப் பண்புகட்கு மூல உயிர் வேராய், அவற்றை முற்காலத்திலும் வளர்த்து, இன்றும் வளர்த்து, இனியும் வளர்க்கவேண்டுவது அதுவே. இத்தகைய இனத்தில் நீ பிறந்திருக்கிறாய் தமிழா! உன் உரிமை மிகமிகப் பெரிது. உன் கடமையும் பொறுப்பும் அதன் அளவேயாகும். ஆகவே, நீ உன் உரிமை பேணாவிட்டால், நீ இழப்பது உன் உரிமை மட்டுமன்று. வருங்கால உலகின் உரிமையையே நீ அழிப்பவனாவாய் - வருங்கால மனிதப் பெரும் பேரினத்தின் வாழ்வையே உன் அறியாமையால் நெகிழவிட்டவன் ஆய்விடுவாய்! இயற்கை உன் இனத்தின் கையில் - உன் கையில், எவர்க்கும் தராத பெருஞ் செல்வத்தை நம்பி அளித்திருக்கிறது. உன் செல்வத் தந்தை உன் கையில் ஒப்படைத்த தங்கத்தின் மதிப்பறியாமல், அதைக் கொடுத்துப் பக்கத்து வீட்டுப் பஞ்சையிடம் வங்கத்தை வாங்கி நீ பங்கமடையலாமா? அதுவும் பக்கத்து வீட்டுப் பஞ்சை நல்லறிவுடைய பஞ்சையல்லவே - உன் தங்கத்தைக் கொண்டு அந்தப் பேதை நஞ்சு உண்டுபண்ணி, அதை அமுதமென்று உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் மட்டுமன்றி, தனக்கும் தன் பெண்டுபிள்ளைகளுக்கும், உன் தோழர், தன் தோழர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர்க்கும், கொடுத்து எல்லாரையும் கூட்டோடு கயிலாயத்துக்கு அனுப்பப் பாடுபடும் அறிவிலாப் பஞ்சையாயிற்றே! இதை நீ எண்ணிப் பார் தமிழா! உன்னுடன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலக வாழ்விலே கூடிக் குலவிய தென்கிழக்காசிய ‘மலாய்’ இனம், அதன் கிளை நாகரிகமாகத் தோற்றிய அமெரிக்க ‘மாய நாகரிக’ இனம், ‘இங்கா நாகரிக’ இனம் - இவை யாவும் பழம்பொரு ளாராய்ச்சியாளருக்கு மட்டுமே, மாண்ட முகம் காட்டிப் பூண்டற்று மறைந்தன தமிழா! அவர்களுடன் வாழ்ந்த உன்னை இயற்கை அவர்கள் மாள்வு மறைவு மறப்புக்குப் பின்னும் மரபறாது வாழ வைத்திருக்கிறது. இதன் பின்னரும் மூவாயிர நாலாயிர ஆண்டுகளாக உன்னுடன் உலக வாணிகப் போட்டியிட்ட வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பழங்காலச் சிந்துவெளி நாகரிகத்தவர், ஏலமியர், சுமேரியர், எகிப்தியர், கிரேக்க நாகரிக இனத்தவர், மிசினிய நாகரிக இனத்தவர், இத்தாலி நாட்டு எட்ர°கானர், °பெயின், பிரான்சு, பிரிட்டன் நாட்டுத் துருயித இனத்தவர் - இத்தனை பேரும் மாண்டொழிந்தனர். தமிழா! உன்னிடமே அவர்கள் தங்கள் இனப்பண்புகளாகிய கருவூலங்களை விட்டுச் சென்றுள்ளனர். இவற்றையெல்லாம் பண்பறியாத ஒரு மூடத் தேசியத்தின் குருட்டுத் திட்டங்களில் பாழாக்கிக் கொண்டிருக்கலாமா? நீயே யோசித்துப் பார்! இக்காரியங்களின் நிழலாக முந்தா நேற்று வாழ்ந்த கிரேக்கர், உரோமர், அழிக்கப்பட்டனர். இவர்கள் நிழலாகவும் உன்நிழலாகவும் நேற்றுப் பிறந்து இன்றே வாழத் தொடங்கியுள்ள தில்லி - சமற்கிருத - இந்தி நாகரிகம், அதை நீ வாடவைப்பதை விட்டு, அதன் கையைப் பிடித்துக் கொண்டு குருடும் குருடும் குருட்டாட்டமாடிக் குளத்தில் விழுவதா, தமிழா! சிந்தித்துப் பார்! பண்டைய நாகரிகங்களின் உயிர் விதைகளில் ஒருசில வற்றுடன் பகுத்தறிவொளி சரிவரப் பெற்றும், வள்ளுவர்பண்பு சென்று எட்டப் பெறாமல் அதோ சரிந்து சாய்ந்து சாத்துடிப்புத் துடிக்கத் தொடங்கியிருக்கிறதே, மேனாட்டு நாகரிகம் அதைக்காத்து வளர்க்க வேண்டிய வள்ளுவர்மரபில் வந்த நீ, அதன் நிழலுருவை நோக்கி நீந்த எண்ணும் வடநாட்டு எருமையாட்சியின் வாலைப் பிடித்து நீரடி காணவா எண்ணுகிறாய், தமிழா? எழு! விழித்தெழு! உன் இனப் பண்பின் உயிர்த்துடிப்பால் உலகுக்குப் புத்துயிர் அளிக்க உன் உரிமைக்குரல் எழுப்பு! உன் உரிமை மொழிச் சீட்டை இன்று உன் வாழ்வு மலர்ச்சிக்குப் பயன்படுத்தி, நாளைய உலக மக்கள் நன்றிக்கு ஆளாகு! இத்தனைக்கும் உதவத்தக்க உயிர்க் கருவி, உன் கைச் சீட்டு! அதை, உன் குடிஉரிமைச் சின்னத்தை உன் இன உரிமைத் திறவுகோலை, இன வாழ்வின் வித்தை, உன் இனத்தை ஓர் இனமாக மதிக்காத, அடிமை இனமாக வைத்து நடத்த விரும்புகிற ஓர் அயலினஆட்சியை வலுப்படுத்தும் வகையில் பயன்படுத்தாதே - அதை அயலினத்துக்கு விற்காதே, வீணாக்காதே! வித்து நெல்லை விற்கிற அல்லது உண்கிற தொலையறிவற்ற உழவனைப் போல, உன் உரிமையை, இனவாழ்வை நீயே மனமாரப் பறிகொடுக்காதே! உன் உரிமைச் சீட்டை உன் உரிமைக்காக, உனக்குப் பிரதிநிதியாக நின்று போராடுபவர்க்கே பயன்படுத்து! 3. தமிழின வளர்ச்சி தனிமனிதனின் வாழ்வைச் சுற்றிக் குடும்ப எல்லையில் சிறு வட்டமாக எழுந்த இனஅலை; குடி, சமுதாயம், ஊர், நாடு என விரிந்துகொண்டே செல்கிறது. ஆனால், அது மொழி யெல்லையில் சென்றவுடன் அதன் விரிவு ஒரு நீடித்த தடைக்கு ஆளாகின்றது. இந்தத் தடை நிலையானதுமன்று, முழுத்தடையு மன்று. ஆனால், அஃது உருப்படியான, வளமான தடை ஆகும். அது கடந்து அலை யியக்கத்தின் ஒரு சிறு கூறே வெளிச் செல்கிறது. கிட்டத்தட்ட நான்கு புறமும் கரையால் சூழப்பட்டு, பரந்த நீர்ப்பரப்புடன் ஒரு சிறு இடுக்கு வழியாகவே தொடர்பு கொண்டுள்ள சிறு நீர்நிலையின் அலை இயக்கத்துக்கு மொழி கடந்த அலை இயக்கத்தை ஒப்பிடலாம். மற்றும் அணையில் தேக்கப்பட்ட நீர், சிறு மதகு அல்லது கால்வாய் வழியாக வெளியேறுவதற்கும் அதனை ஒப்பிடலாம். ஆனால், மொழி கடந்த இயக்கம் அளவில் சிறிதானாலும், மனித இன நாகரிகத்தில் அதன் முக்கியத்துவம் சிறிதன்று. நீர்த்தேக்கத்தில் நீர் செறிவுறுவதுபோலப் பண்புகள் ஒவ்வொரு மொழியெல்லையிலும் செறிவுற்று முதிர்ச்சி அடைகின்றன. ஒவ்வொரு மொழி யெல்லையும் கிட்டத்தட்ட ஒரு தனித் தொகுதியாய் அமைவ தனால், மொழியெல்லைகள் பல வகைப்பட்ட பண்புத் திறங்களைப் பேணி வளர்க்கின்றன. இவற்றின் முதிர்ந்த நல் விளைவுகளே சிற்றலைகளாயினும், அடிப்படை மனிதப் பண்பலைகளாக, மொழி கடந்து மொழிகளை இயக்கி உலகப் பண்பாட்டை வளர்க்கின்றன. மொழிக்கு மொழி வேறுபாடு - பண்பு வளத்தைப் பெருக்குகின்றது. அதே சமயம் நிலையான முதிர் பண்புகளாகிய சிற்றலைகளின் செயல் எதிர்ச் செயல்களாக. மனிதப் பண்பாட் டின் அடிப்படை ஒற்றுமையும் சிறுகச் சிறுக, ஆனால், நிலையாகவும் உறுதியாகவும் வளர்கின்றது. குடும்பஇனம் கடந்து, நாம் மொழியினத்தைக் காண்பது போல, மொழியினம் கடந்து பல சமயம் மொழிக்குழுஇனமும் பண்பாட்டினமும் காண்கிறோம். செடியில் முதிர்ந்த வித்துகள் வேறு பல செடிகளாக வளர்ந்து செடியினம் வளர்ப்பதுபோல, மொழிஎல்லையில் நீடித்து நின்ற முதிர்ந்த பண்புகள் மொழி கடந்து வளர்கின்றன. மொழி கடந்த பண்பினம் வளர்க்கின்றன. மொழி கடந்த இந்தப் பண்பினத்துக்குள்ளேயே மொழிப் பண்பினமும் இருப்பதுண்டு. தமிழ் மொழி எல்லை கடந்த இந்த மொழிப் பண்பினம் அல்லது மொழிக்குழுவினத்தையே பண்டைத் தமிழர் தமிழகம் என்று வழங்கினர். நாம் இப்போது மலையாள நாடு, தெலுங்கு நாடு, கன்னடநாடு, துளுநாடு என்று வகுத்துக் காண்பவை அனைத்தும் சங்க காலத்திலே ஒரே தமிழகமாகத்தான் இருந்தது. ஆனால், தமிழகம் குறுகிவரத் தொடங்கியபோது, அவர்கள் குறுகிய தமிழகத்தைச் ‘செந்தமிழகம்’ அல்லது ‘தமிழ் கூறும் நல்லுலகு’ என்றனர். பரந்த மொழி எல்லையை இதற்கெதிராகச் சில சமயம் ‘முத்தமிழகம்’, ‘பெருந்தமிழகம்’ அல்லது ‘தமிழுலகு’ என்றனர். இச்சொற்கள் இன்று மரபிழந்த, முன்னைய பொருள் எல்லை காட்டாமல் மயக்கம் தருகின்றன. ஏனெனில், பழைய செந்தமிழகத்தையே நாம் இன்று தமிழுலகம் என்று கூறவேண்டிவர்களாயிருக்கிறோம். இதன் ஒரு பகுதியை ஆனால், பெரும்பகுதியையே - நாம் தமிழகம் என்கிறோம். பலர் திருவேங்கட முதல் தென் கன்னியாகுமரி வரையுள்ள எல்லை மட்டுமன்று, வட இலங்கையும் பண்டைத் தமிழகத்தின் ஒரு பகுதியே என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. இவ்விரண்டையும் சேர்த்து நாம் இன்று பெருந்தமிழகம் என்றும், தமிழர் வாழும் பிற உலகப் பகுதிகளை அவற்றுடன் சேர்த்துத் தமிழுலகம் என்றும் கூறலாம். ஆனால், இன்றைய தமிழுலகமே பழந்தமிழகத்தை முழுதும் குறிக்கவில்லை. ஏனெனில், மலையாள, தெலுங்கு, கன்னடப் பகுதிகள் பழந்தமிழகத்தின் பகுதிகளான தமிழின நாடுகளே. தமிழகத்தை உள்ளடக்கிய தமிழின நாடுகளின் பரப்பை, முற்கால சமற்கிருதவாணரும் தற்கால உலக அறிஞரும் ‘திராவிடம்’ என்ற பெயரால் வழங்கினர். இதனைத் ‘தமிழகம்’ என்பதன் திரிபு என்று சிலரும், திருவிடம் என்பதன் மறுவடிவம் என்று சிலரும் கூறுகின்றனர். ஆனால், திருத்தந்தை ஹீரா° என்ற காலஞ்சென்ற பழைமை வரலாற்றாராய்ச்சிப் பேரறிஞர் கருதுகிற படி அது `தமிழ்’ என்பதில் அடங்கிய பழைய இனப்பெயராகிய ‘இழ்’ ‘இழம்’( ஈழம்) ‘இடம்’ என்பதனுடன் தமிழரிடையே உலகெங்கும் பரவிய நெய்தல் நில இனத்தவரான திரையர் பெயரும் சேர்ந்த இணைச் சொல்லேயாகும் எனலாம். தமிழகத்தில் தமிழ்க் குடும்பத்திலிருந்து பரந்து விரிவுற்ற இன வளர்ச்சி மரபு இங்ஙனம் தமிழ் மொழியின் எல்லையாகிய தமிழகம், பெருந்தமிழகம், தமிழுலகம் ஆகிய பரப்புக்களிலும், தமிழினப் பண்பெல்லையாகிய திராவிடத்திலும், அதிலும் விரிந்த தமிழ் ஆட்சி, தமிழ் நாகரிக எல்லைகளாகிய தென்கிழக்காசியா, இந்தியா ஆகிய பரப்புகளிலும், பண்டை நாகரிக மறுமலர்ச்சித் தொடர்பு மூலம் இவ்வெல்லைகள் கடந்து நாகரிக உலகெங்கும் பரவியுள்ளது - பரவி வருகிறது. இச் செய்திகளில் பலவற்றை, தமிழரை ஆளும் இன்றைய அயலினங்களும், அவற்றின் ஆதிக்கமே பரவிய இன்றைய உலகும் புறக்கணிக்கின்றன; இருட்டடிக்கின்றன. தமிழன் உரிமையாட்சி பரவும்பரை இந்த இருட்டடிப்பு ஆட்சியாளர் குறுகிய தன்னலத்துக்குரிய அறிவுத்துறை சார்ந்த இருட்டடிப்பாக இருந்தே தீரும். ஆகவே, தமிழன் தன் உண்மை வரலாறு காண வேண்டுமானால், உலகுக்குத் தன் முன்னோர் தந்த, தந்துள்ள பண்புகளை விளக்கமுறக் காண விரும்பினால், அதற்குக்கூட அவன் முழு இனவிழிப்பும் அரசியல்விழிப்பும் பெற்றாதல் வேண்டும். தேர்தலைத் தமிழன் புறக்கணித்தால், தன் இன்றைய குறுகிய அடிமை நலன்களை எண்ணி இனப்பண்பற்றவர்களே ‘குடியாட்சி நாடகம் நடிக்கும்படி’ விட்டுவிட்டால், அவன் தன் இனத்தின் கொலைகாரன் மட்டுமல்லன் உலகில் தானும் தன் இனமும் பெறவேண்டிய இடத்தைப் பெறாமலும், உலகுக்குத் தானும் தன் இனமும் செய்யவேண்டிய கடமையைச் செய்யா மலும் இருந்து, வருங்கால உலகுக்குக் கேடு செய்தவனாவான். தமிழன் உலகைத் தன் வயமாக்கத் தயங்கலாம். ஆனால், இது போலி மயக்கத்தால் வரும் தயக்கமே. ஏனெனில், தமிழ்மொழி மட்டும்தான் தமிழர்க்குரியது. தமிழ்ப் பண்பு உலகத்துக்குரியது. ஏனெனில், தமிழ்ப் பண்புதான் தாய்மொழிப் பண்பு. ஆங்கிலேயன் ஆங்கிலமொழிப் பண்பில் நின்று உலகப் பண்பு வளர்த்தால், சீனன் சீனமொழிப் பண்பில் நின்று உலக நலன் வளர்த்தால், அதுவே தமிழ்ப்பண்பு. இஃது இன்றைய ஆசியாவில் அரும்பண்பு. இந்தியாவிலே மருந்துக்குக்கூடக் கிடையாத பண்பு. ஏனென்றால் வட இந்தியாவிலே பண்பில் சிறந்த வடஇந்திய மொழியாகிய வங்கமொழிகூட ஆங்கிலப் பண்பையோ, சமற்கிருதப் பண்பையோ, இந்திப் பண்பையோ சார்ந்தே வளரவேண்டிய நிலை, அவசிய நிலையாகவும், இயல்பான இன்றியமையாத நிலையாகவும் கருதப்பட்டு வருகிறது. தன் குடும்பப் பண்பில் ஊன்றி நின்று இனப்பண்பு வளர்த்து, தன் இனப்பண்பில் ஊன்றி நின்று படிப்படியாக விரிவுற்று உலக வளம் பேணுவதே தமிழ்ப் பண்பு. இதுவே நேரிய நாகரிகப்பண்பும், நன்மனித இனப்பண்பும் ஆகும். இதற்கு நேர்மாறான பண்புகள் முட்காடாய் வளர்ந்துள்ள இந்தியாவிலே, அகில இந்தியக் கட்சிகளும் அகில உலகக் கட்சிகளும் தமிழகத்தில் வேரூன்றி, இங்குள்ள உலக நாகரிகத் தலையூற்றை, வள்ளுவர் மரபை அழிக்கும் நச்சுக் கலைகளாக, பயிர்வளம் கெடுக்கும் காளான்களாகச் செயலாற்றுகின்றன. தமிழன் இந்த அகில இந்தியக் கட்சிகளிலும் அகில உலகக் கட்சிகளிலும் இன்று தன் வயமற்ற, தன் உரிமையற்ற அடிமையாய், அகில இந்தியத் தலைமை பெற்ற காளான் தலைவர்கள் கைப்பாவையாய் இயங்குகிறான். அந்நிலையைத் தமிழன் மாற்ற முடியுமானால், மிக நன்று. ஆனால், இஃது எளிதன்று என்பதைக் காங்கிரசிலே அறிவும் ஆற்றலும் நிறைந்த வ.உ.சிதம்பரனார், டாக்டர் நாயுடு, திரு.வி.கலியாணசுந்தரனார், பெரியார் ஈ.வெ.இராமசாமி ஆகியோரின் புகழ்சான்ற தோல்வி வரலாறுகளும், தொழிலாளர் இயக்கம், பொதுவுடைமை இயக்கம், சமதர்ம இயக்கம் ஆகியவற்றை இந்தியாவிலேயே தொடங்கிவைத்த பெருந்தமிழ்த் தலைவர்களின் மறந்துபட்ட வரலாறுகளும் காட்டும். ஆகவே, தமிழகத்தில் தமிழன் உரிமை நாட்டாலும், தென்கிழக்காசியாவில், இந்தியாவும், அகல் உலகில் உண்மையான குடியாட்சி, சமதர்மப் பண்புகளின் பக்கம், தமிழன் ஒத்துழைப்புக்குக் கிடைக்கச் செய்யவும் ஒரேவழி, தமிழினத்தின் பெயரால் தமிழக ஆட்சியில் இடம்பெற்று அதன் அடிமை விலங்கை உடைக்க முற்படும் தமிழியக்கத்தவர்களைச் சட்டமன்றங்களில் வலுப்படுத்துவதே யாகும். தமிழகத்துக்காகப் பாடுபடும் உரிமை, தம்மைத் தமிழர் என்று கூறிக் கொள்ளும் உரிமை. நம் நாட்டுக்குத் தமிழகம் என்று பெயர் சூட்டும் உரிமைகூட அற்றதுதான் இன்றைய சென்னை அமைச்சரவை, சென்னை அரசியல். ஆனால், அந்த உரிமைக்குப் பாடுபடுதல் வேண்டுமானால் காங்கிரசு ஆட்சி ஒழிந்தாதல் வேண்டும். அது மட்டுமன்று. இன்றைய அகில இந்தியக் கட்சிகள், அகில உலகக் கட்சிகளின் பிடி, தமிழன் குரல்வளையைவிட்டு விலகியாதல் வேண்டும். தமிழக விடுதலைக்குப் பின் தென்கிழக்காசிய இயக்கங்கள், இந்திய, ஆசிய இயக்கங்கள். உலக இயக்கங்கள் இப்போதிருக்கும் சடஇயக்கங் களாயிராமல், உயிரியக்கங்களாக, தமிழகமும் தன்னுரிமையுடன் உயிர்ப்பங்கு கொள்ளும் இயக்கங்களாக இயங்கலாம். அவ்வாறு இயங்கவும் தமிழினக் கட்சி ஒன்றே பாடுபடமுடியும். ஆகவே, நல்ல தமிழன் காங்கிரசில் இருந்தாலும் சரி, வேறு கம்யூனி°ட், சோஷலி°ட், பிரஜா கிசான் - மஸ்தூர் இயக்கங்களிலிருந்தாலும் சரி - அவன் தற்போதைய இலட்சியக் கடமை தமிழினப் பணி செய்பவர் களையே வருங்கால அகில ஆசிய, அகில உலகக் கட்சியாளராகக் காண்பதே யாகும்! ஏனெனில், தமிழர் உரிமைத் தலைவர் கைப்பட்ட பின்னரே பெயரளவில் கூட அக்கட்சிகளுக்குத் தமிழகத்தில் தமிழ்ப் பெயரும், இந்தியாவில் இந்தியப் பெயரும் அமையமுடியும். பொதுமக்களிடையே அவர்கள் தம்மை அறிமுகப்படுத்த இன்று வழங்கும் ஆங்கிலப் பெயர்கள் நீங்கி, தமிழ்ப் பெயர்கள் அல்லது மற்றத் தாய் மொழிப் பெயர்களாக அமையும். ஆகவே, தமிழா! படிப்படியாக உலகளாவ, உலகப் பண்பளாவ, வளர்ந்த உன் தமிழ் இனம் வாழ, அதன்மூலம் உலகு புதுவாழ்வு, புது மலர்ச்சி காண, உன் உயிர் உரிமைகளுக்குப் பாதுகாப்பான உயிர்ச்சீட்டை உன் உரிமை காக்க முன்வரும் கட்சியினர்க்கு அளிப்பாயாக! 4. மொழி உரிமை இந்தியாவின் தாய்மொழிகள் நூற்றுக்கணக்கானவை என்று கூறப்பட்டாலும், முக்கியமானவை ஓர் இருபதுதான். இவற்றுள் வடமேற்கில் சிந்து வெளியில் உள்ள மொழிகள் பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இறுதிக் காலத்திலேயே இலக்கிய வடிவும் மொழியுருவும் பெறத் தொடங்கியுள்ளன. தவிர, ஆரிய இன மொழிகள் அனைத்துமே பிரிட்டிஷ் ஆட்சிக்குச் சற்று முற்பட்டே இலக்கிய வடிவமும், மொழி வடிவமும், மொழிப் பெயரும் பெற்றன. உண்மையில், பாரத நாடு பழம்பெரு நாடு என்றும், பிரிட்டன் புதிய தற்கால நாகரிக நாடு என்றும் கூறப்படுகிறதானாலும், இலக்கிய வகையில் பிரிட்டன்தான் பழம்பெரு நாடு. பண்டை இலக்கிய வளமுடைய நாடு. பாரத நாடு தென்னாட்டை நீக்கிப் பார்த்தால் ஆங்கில நாட்டைவிடக்கூட மிகப் புத்தம் புதிய நாடு என்னலாம். பாரத தேசத்தின் வடபகுதியைக் காட்டிலும், உலகின் மற்றெப் பகுதியைக் காட்டிலும் பன்மடங்கு பழம்பெருமையும் வளமும் வாய்ந்த இலக்கியமுடையது தென்னாடு. உண்மையில் சமற்கிருதத்தின் பழைமைகூடத் தென்னாட்டரசர் பேரரசர்கள் - சிறப்பாக ஆந்திரர், சாளுக்கியர், பல்லவர், கங்கர் - தாய்மொழி பேணாமல் பாளி சமற்கிருத மொழிகள் பேணியதன் பயனே யாகும். அப்படியும் மலையாளம், தெலுங்கு, கன்னடமொழிகள் கிட்டத்தட்ட சமற்கிருதத்துடன் ஒத்த பழம்பெருமை உடைய இலக்கிய மொழிகளேயாகும். தமிழோ பிற தென்னாட்டு மொழிகளையும் சமற்கிருதத்தையும் கடந்த மிகப்பெரிய இலக்கியப் பழைமை யுடையது. பாரத தேசத்திலே இங்ஙனம் பழம்பெருமைக்குரிய தாய்மொழி தமிழாக இருக்க, பாரதத்தின் பழம்பெருமையே பேசுபவர்கள் அதைப் புறக்கணித்து ஒதுக்கி, தமிழ்போலப் பழைமை புதுமைப் பெருமையோ, வங்காளிபோலப் புதுப் பெருமை மட்டிலுமோகூட அடையாத இந்திக்கே சலுகையும் உரிமையும் ஆதிக்கமும் அளிக்கப் பெரும்பாடு படுகின்றனர். நாகரிக அடிப்படையில், கலை இலக்கிய அடிப்படையில், பண்பாட்டு அடிப்படையில், இந்தியாவின் பெருமைக் குரிய ஒரு தேசிய மொழி வேண்டுமென்றால், அது தமிழைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. இந்தியாவின் வரலாற்றில் ஒவ்வொரு நூற்றாண்டையும் நிழலிட்டுக் காட்டவல்ல, இந்திய நாகரிகத்தின் அடிப்படைப் பண்புகளின் சின்னமான மொழி தமிழ் ஒன்றே! ஆனால், அந்த ஒன்றுமட்டும்தான் அகில இந்தியக் கட்சிகளாலும் அகில உலகக் கட்சிகளாலும் புறக்கணிக்கப் படுகிறது; எதிர்க்கப்படுகிறது; இருட்டடிக்கப்படுகிறது. இஃது எதனால்? இதற்குப் பொறுப்பு யார்? இதற்குப் பொறுப்பு தமிழர்கள்தாம் - ஒருபுறம் தமிழ்ப்பண்பு பேணாமல், தமிழிலேயே உள்ள சமய ஏடுகளான தேவாரம், திருவாசகம், திருநாலாயிரம் முதலிய ஏராளமான பத்தி நூற்களைக்கூடத் திரும்பிப் பாராமல் - புராணங்களில் கூடத் தமிழ்ப் பெரும்புராணங்களான பெரிய புராணம், திருவிளை யாடற் புராணம் ஆகியவற்றைப் பாராட்டாமல், இலக்கியப் பண்பற்ற, சமயப்பண்பும் பத்தித் திறமுமற்ற சமற்கிருதப் பஞ்சை இதிகாசப் புராணங்களைப் பரப்புவதிலேயே ஈடுபட்டுள்ள தமிழர், ‘உயர் குடித்தமிழர்’ என்ற உரிமையை அயற்பண்பாட்சிக் காலங்களில் பெற்ற இனப் பற்றற்ற தமிழர் சிலர் உள்ளனர். அயலாட்சிகளிலும், அயற்பகையாட்சிகளிலும் இத்தகையவர்க்குச் சலுகைகள், உரிமைகள் பெருகி வந்ததனால், இத்தகையவர்களே ஆட்சி வகுப்பினராகியுள்ளனர். செல்வர்கள் பெரும்பாலும் இவர்கள் பக்கம் சாயவே நேர்வதால், தமிழ்ப் பற்றும் தமிழ் உரிமை யும் உடையவர்களுக்குப் பல இக்கட்டுகளும் வறுமைச் சூழல்களும், தமிழை எதிர்ப்பவர்கள், அழிப்பவர் களுக்கே புகழும் செல்வவளமும் பதவியும் பெருக வழி ஏற்படுகிறது. தமிழ், தமிழகப் பத்திரிகைகள், வானொலி, கல்வி நிலையங்கள் அலுவலகங்கள் ஆகியவற்றிலும் தமிழ்மொழி உரிமையற்ற நிலையிலும் தமிழ்ப்பண்பு சென்று இவற்றை அணுகமுடியா நிலையிலுமே உள்ளன. தமிழைத் தாழ்த்தும் இப்பொதுச் சூழல்களல்லாமல் அரசியல் கட்சிகளால் ஏற்படும் ஒரு சிறப்புச் சூழலும் சென்ற அரை நூற்றாண்டாகச் செயலாற்றுகிறது. அகில இந்திய இயக்கமாக மட்டுமன்றி உலக இயக்கமாகவும் செயலாற்றிய பிரமஞான சங்க இயக்க முதல் காங்கிரசு, சோஷலி°ட், கம்யூனி°ட், பிரஜா சோசலி°ட் கட்சிவரை எல்லா அகில இந்திய, அகில உலக அமைப்புகளிலும் தமிழ்த்தொடர்பற்ற அல்லது தமிழ்ப்பண்பை எதிர்க்கின்ற அல்லது குறைந்த அளவு தமிழ்ப்பண்புக்கு உழைக்காதிருக்கும் நன்மதியுடைய தமிழர்களே இடம்பெற முடிகிறது. அவ்வமைப்புகளிலுள்ள தமிழருள் பலர் தனிப்பட்ட முறை யில் இதை உணர்ந்திருந்தாலும், தமிழகத்துக்கு வெளியிலுள்ள தலைவர்கள் ஆதரவைப் பெறவும், பிறகு தமிழர் அந்த ஆதரவைப் பெறுவதில் முந்திக் கொள்ளாமல் தடுக்கவும், இத்தகையவர்களும் தம் தமிழ்ப்பண்பு எதிர்ப்பில் முனைந்து நிற்கவேண்டியது அவசியமாகியுள்ளது. இன்னும் அவசிய மாகவே இருக்கிறது. அகில இந்திய இயக்கத்தில் தமிழ்ப் பண்பின் பெயரால் கிளர்ச்சி ஏற்பட்டது ஒரே ஒரு தடவைதான். உயர்திரு.சக்கர வர்த்தி இராஜகோபாலாச்சாரிக்கு எதிராக உயர்திரு.காமராசர் ‘தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி’த் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட சமயம் அது. ஆனால், இச்சமயத்திலும் ‘தமிழ்ப் பண்பின்’ பெயர், ஒரு சாதி எதிர்ப்பாக மட்டுமே செயலாற்றிற்று என்றே சொல்லுதல் வேண்டும். ஏனென்றால், இராசகோபாலாச் சாரியாரை எதிர்ப்பதற்காகத் திரு.காமராசர் அகில இந்தியத் தலைவர் பண்டித நேருவுக்குக் கைப்பிள்ளையாக நடக்கவேண்டி வந்துள்ளது. தவிர, இராசகோபாலாச்சாரியாரை விடக் காமராசர் எந்த வகையில் நல்ல தமிழன் என்று கேட்டால் வெளிப்படையாகக் கூறத்தக்க பதில், இராசகோபாலாச் சாரியாரைப்போலக் காமராசர்க்குச் சமற்கிருதம் தெரியாது, ஆங்கிலம் தெரியாது என்ற எதிர்மறைப் பகுதியே கூறவேண்டி வரும். ஆனால், இராசகோபாலாச்சாரியார் தமிழில் நல்ல பேச்சாளர், நல்லதொரு எழுத்தாளரும் கூட. அத்துடன் தவறான மதப்பற்றுக் காரணமாகத் தமிழைவிட அவர், சமற்கிருதத்துக்குப் பேராதரவு கொடுத்தாலும், தன் கொள்கையில் உறுதியாக நிற்பதிலும், எதிர்த்தரப்பை உணர்ந்து கொள்வதிலும் அவர், பழந்தமிழரின் நக்கீரர். வணங்காமுடிப்பண்பும், வள்ளுவர் சமரசப் பண்பும் உடையவர். காமராசரோ ஆதிக்கத்துக்குமட்டுமே பணிபவர். இனப்பற்றற்றவர். தமிழறிவும் தமிழ்ப்பண்பும் அற்றவர். இந்நிலையில் தமிழ்ப் பண்பின் பெயரால் அவர் வென்றா ரென்பது சாதிப்பெயரால் வென்றார் என்பது தவிர வேறு பொருள் உடையதன்று. வேறு எந்த வகையில் அவர் ‘பச்சைத் தமிழன்’ என்பதையும் எவரும் காண முடியாது. ஏனெனில் தமிழறிவில், அவர் இராசகோபாலாச்சாரியார்க்குக் குடை பிடிக்கும் தகுதிகூட அற்றவர். தமிழ் இனப்பற்றிலும் அப்படியே! தமிழ் என்ற பெயரை உரத்துக்கூவ, தமிழ்க்குப் போராடக்கூட இராசகோபாலாச்சாரியார் முன்வந்ததுண்டு. அந்தப் பிழையைக் காமராசர் வாழ்வில் எவரும் காணமுடியாது! இங்ஙனம் தமிழகத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுவதற்கும், தமிழ்ப் பண்பு தாழ்த்தப்படுவதற்கும், அகில இந்திய, அகில உலகக் கட்சிகளிலுள்ள தமிழர்களின் தன்னல அடிமைத் தனமே பெரிதும் காரணம் ஆகும் என்னலாம். தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற முதல் தேர்தல் 1907ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தின் போது நடைபெற்றதாகும். அது பொதுமக்கள் வரை வந்து எட்டாத தேர்தல் முறை. மற்றும் தமிழகமோ இந்தியாவோ அரசியல் விழிப்புப் பெறாத காலம் அது. 1922ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலின்போது தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா விலேயே மக்கள் வாக்குப் பெற்று ஆட்சியைத் தொடங்கிய முதல்கட்சி, தென்னாட்டு நீதிக் கட்சியே. அகில உலக, அகில இந்தியக் கட்சிகளைப் போலவே, தென்னாட்டுக் கட்சியிலும் தலைவர்கள் தமிழகத்துக்கு வெளியிலுள்ளவர்களே. ஆயினும், அக்கட்சி பெரிதும் தமிழ் மக்கள் எழுச்சியின் பயனாக, அவர்கள் பிரதிநிதி யாகவே ஆண்டது. அத்துடன் கட்சியைத் தோற்றுவித்த முதல்வர் டாக்டர் சி.நடேசனாரும், கட்சியின் மிகப் பெரும்பாலான தொண்டர்களும், ஆதரவாளர்களும் தமிழர்களே. 1922-லிருந்து 1937 வரை கிட்டத்தட்ட இருபது ஆண்டு இந்த நீதிக்கட்சி ஆண்டதன் பலனாகத் தமிழகம் பொதுவாகக் கல்வியிலும், சிறப்பாகத் தாய்மொழிக் கல்வியிலும் உணர்ச்சியிலும் பிறமொழி நாடு களைவிட இன்று மேலோங்கியுள்ளது என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்துக் கீழ்த்திசை விடுதலை தந்த அளவில் காங்கிரசு மற்ற மாகாண மக்கள் உள்ளங்களைவிடத் தமிழர் உள்ளங்களைப் பேரளவில் ஈர்த்தது என்பது மறக்கமுடியாத உண்மை ஆகும். 1937ஆம் ஆண்டுத் தேர்தலின் புள்ளி விவரங்கள் இதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டும். தமிழகத்திலே காங்கிரசுக் கட்சிக்கு மிக ஏராளமான ஆதரவு கிட்டியது - உறுப்பினர் தொகையில் மட்டுமன்று, மொழிச் சீட்டுகள் வகையிலும்! தமிழகம் இதில் பெருமைகொள்ள இடமுண்டு - ஆனால், மகிழ இடம் கிடையாது. ஏனெனில், முதல் காங்கிரசு அமைச்சரவை தமிழகத்துக்குச் செய்த தீங்குகள் பல - மறக்க முடியாத, மன்னிக்க முடியாத தீங்கும் ஒன்று உண்டு. தமிழர் பெயரால் ஆட்சியை மேற்கொண்டு, இந்திய அரசியலிடையே ஒப்பற்ற பெருமைகொண்ட தமிழர் இராசகோபாலாச்சாரியார், வேறு எந்த மாகாணமும் வடஇந்திய மாகாணம் கூட, செய்யத்துணியாத செயலை - இந்தித் திணிப்பைத் தமிழகத்தில், தமிழரைத் துரும்பாக மதித்து, ஏமாளிகளாகக் கருதிச் செய்யத் துணிந்தார். தூங்கிவழிந்த தமிழனுக்குத் தமிழ் உணர்ச்சியும் தன்மான உணர்ச்சியும் ஊட்டிய வகையில் - சமூகச் சீர்திருத்த, சமயச் சீர்திருத்த இயக்கமாக மட்டுமே அதுவரையில் நிலவியிருந்த தன் மதிப்பு இயக்கத்தையும், அரசியலியக்கமாக மட்டும் நிலவிவந்த நீதிக் கட்சியையும் ஒரே தமிழ்த் தேசிய இயக்கத்தின் முதுகெலும்பாக்கி, திராவிட இயக்கமாக வளர்த்த வகையிலும்; தற்காலத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தைத் தூண்டிய வகையிலும் இது மிகப்பெரிய நற்செயல் என்றே கூறுதல் வேண்டும். ஏழாயிர, பத்தாயிரங் கல்லுக்கு அப்பாலுள்ள அயலின மாகிய பிரிட்டிஷார் ஆட்சிகூட எழுப்பமுடியாத தமிழர் தேசியத்தைத் தமிழ்ப் பகை இனத்துடன் அளாவிய இந்தத் தமிழரால் எழுப்பிவிட முடிந்தது! ஆனால் அச்செயல் இராசகோபாலாச் சாரியாருடைய தமிழ்ப் பண்புக்கோ, காங்கிரசிலுள்ள தமிழர் தமிழ் வீரத்துக்கோ சான்றாகக் கூறக்கூடிய செயலன்று. நீதிக்கட்சி வெள்ளையரை ஆதரித்த கட்சி, தன்னாட்சியை விரும்பாத கட்சி என்று அன்று விளக்கம் தரப்பட்டது. ஆனால், இஃது உண்மையன்று. ஆயினும், நீதிக்கட்சி தன் கொள்கையைப் பரப்பப் பலம் இல்லாததால் இதற்கு மாற்றுரை தரமுடியவில்லை. ஏனென்றால், நீதிக்கட்சி ஆளும் கட்சியாய் இருந்ததேயன்றி, ஆளும் இனமாய் இருந்ததில்லை. பத்திரிகைகள், கல்வி நிலை யங்கள், ஆட்சி நிலையங்கள் இன்றுபோல் அன்றும் அகில இந்தியக் கட்சியின் கையிலேயே இருந்தன. இதனால் நீதிக்கட்சியை அகில இந்தியக் கட்சி தன் கொள்கை விளக்கத்தினாலேயே வென்று, மக்களிடம் நீதிக் கட்சியின் இனமாகவே சென்று எட்டியது. அத்துடன் நீதிக்கட்சி தன்னைப் பிராமண ரல்லாதவர் கட்சி என்று கூறிக்கொண்டதால், ஆட்சியினத்தின் பெரும் பகுதி யாகவும் செல்வாக்கும் மதிப்பும் அறிவும் திறமையும் மிக்கதாகவும் உள்ள பிராமண சமுதாயத்தின் பகைமையை அது வரவழைத்துக்கொண்டது. நீதிக்கட்சி விரும்பிய தன்னாட்சி அகில இந்தியக் கட்சிக்கு மட்டும் உரிய தன்னாட்சியன்று, தமிழர்களுக்கும் தாய்மொழிப் பற்றுடைய வர்க்கும் உரிய தன்னாட்சியே என்பது இக்காரணங்களால் பொதுமக்களுக்குத் தெரியவாராது போயிற்று. நீதிக்கட்சி ஆளும் அயலாரை மட்டுமன்றி, அவர்கள் ஆட்சிக்கே காரணமாயிருந்த அயல் பண்புகளையும், அவற்றை ஆதரிக்கும் ஆட்சியினத்தையும் ஒருங்கே எதிர்க்கத் துணிந்தது. ஆனால் அஃது, ஆளும் இனம் என்பது பிராமணர் மட்டுமே என்று கருதி அவர்களைப் பகைத்துக்கொண்டு வீழ்ச்சியடைந்தது. நீதிக்கட்சியின் வீழ்ச்சியும் காங்கிரசுக் கட்சியின் வெற்றியும் மேலீடாக மக்கள் வெற்றி என்று தோன்றினாலும்; உண்மையில் அது தமிழ்ப் பண்புடையவர்களின் தோல்வியாகவும், தமிழ்ப் பண்பின் எதிரிகளின் வெற்றியாகவுமே முடிந்தது. காங்கிரசுக் கட்சியில் பிராமணர் உண்டு. பிராமணரல் லாதார் உண்டு. ஆதித்திராவிடர் பிரதிநிதிகளும், கிறித்துவர், முசுலிம்களும்கூட உண்டு. ஆனால், தமிழ்ப் பற்றுடையவர் அப்பக்கம் நாடவில்லை-நாடியவர்களைக் காங்கிரசு மேலிடம் மண்டையில் குட்டி வெளியேற்றவும் தயங்கவில்லை. காங்கிரசில் எவர்க்கும் பின்னடையாத பற்றும் வீரமும் உடைய எத்தனையோ தலைவர்கள் தமிழ்ப்பற்று இருந்த ஒரே குற்றத்துக்காக எதிர்க்கட்சியினராக, ஏதிலராக நடத்தப்பட்டு வந்தனர்-வருகின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழரசுக் கட்சித் தலைவர் திரு.ம.பொ.சிவஞானம் மேலிடத்தின் கையில் பட்ட அவதி களையும் அவமதிப்புகளையும் கூறலாம். தமிழ்ப்புலவர் திலகமும் தென்னாட்டுத் திலகருமான நாவலர் சோமசுந்தர பாரதியார், கவிபாடும் ஆற்றலும் புலமைத் தகுதியுமுடைய இராய. சொக்கலிங்கனார், ஒத்துழையாமைப் போரில் பி.எல்.பட்டத்தைப் பறக்கடிக்க விட்டுக் காங்கிரசுத் தொண்டிலே சீரும் சிறப்பும் இழந்த திரிகூடசுந்தரனார், தமிழகக் காங்கிரசையே படைத்து உருவாக்கி அகில இந்தியக் காங்கிரசைப் புரட்சிக் காங்கிரசாக்கிய வ.உ.சிதம்பரனார் ஆகியவர்கள் தமிழ்ப்பற்று ஒன்று காரணமாகவே காங்கிரசில் தண்டனை பெற்றவர்கள் ஆவர். நீதிக்கட்சியின் வீழ்ச்சியின் பின்னரே இந்த உண்மையைத் தமிழர் உணர்ந்துகொண்டனர். அதன் பயனாக அவர்கள் தேசியம் 1939ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பியக்கத்தால் வளர்ச்சியடைந்தது. ஒரு தடவை தம் பிரச்சாரபலத்தால் தமிழரை ஏமாற்றி வெற்றிபெற்றுவிட்டாலும், இந்தித் துறையில் அகில இந்தியத் தலைமை இதனால் புதிய பாடங்கள் கற்றுக் கொண்டது. தமிழரை எதிர்த்து இந்தி புகுத்துவதென்பது ஆபத்தானது-நய நாகரிகச் சூழ்ச்சிகளாலேயே இந்தி புகுத்தப்படுதல் வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். அவர்கள் நினைத்தது சரியே. ஏனென்றால், ‘இந்தி கட்டாயப் படுத்துவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அது விருப்பத்துக்கு விடப்பட்ட தானால் எதிர்க்கமாட்டோம்’ என்று இந்தி எதிர்ப்புக் கோட்டைக் குள்ளேயே சிலர் சொல்லத் தொடங்கினர். அகில இந்தியத் தலைமை கற்றுக்கொண்ட இன்னொரு பாடம் கூடிய மட்டும் தமிழரைக்கொண்டே முடியுமானால் அரசியல் துறையில் மட்டுமன்றி, ஓரளவு தமிழ்த்துறையிலும் செல்வாக்குடைய தமிழரைக்கொண்டே மென்னயமிக்க சூழ்ச்சி முறைகளாலேயே இந்திப் பிரச்சாரம் செய்தல் வேண்டும் என்பதே. பல ‘நல்ல தமிழர்’ ஏடுகளில்-சிறப்பாக ஆட்சியாளர் பரிசுகளும், ஆட்சியாளர் ஆதரவு பெற்ற நிலையங்களின் பரிசுகளும் பெற்று, அவர்களுக்கு நல்லவர்களாக நடத்தல் வேண்டும் என்ற கடப்பாட்டை மேற்கொண்ட தமிழர் ஏடுகளில்-இதன் மறைமுகமான சுவடுகளைக் காணலாம். அகில இந்தியத் தலைமையின் மூன்றாவது பாடம் பிரச்சாரக் கருவிகளையும் அரசியல் நிலையங்களையும் இந்திப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தி நல்விளைவு காண்பது என்பதே. இதனாலேயே இந்திய அரசாங்கத்தில் ஒரு துறை என்று கூறும் அளவுக்கு இந்திப் பிரச்சார சபையின் ஆற்றல் வளர்க்கப்பட்டது. கட்டாயமற்ற விருப்பப்பாடம் என்ற பெயரிலேயே பள்ளிக் கூடங்கள் இந்தியை வளர்க்கும்படி தூண்டப்பட்டன. தமிழகம் தனி நாடாகப் பிரிய முடியாதபடியும் அந்த எண்ணம் எழாத படியும் தலைமை, பல முயற்சிகளை அணிமைவரை மேற் கொண்டிருக்கிறது. ‘தட்சிணப் பிராந்தியம்’ இவற்றுள் முக்கியமானது. கூடியமட்டும் தமிழ், தமிழர், தமிழகம் என்ற பெயர், உலக அரங்குக்கு எட்டிவிடக் கூடாது என்பதும், தமிழ் என்ற பெயரைத் தமிழரே படிப்படியாக மறக்கும்படி செய்தல் வேண்டு மென்பதும், தமிழகத்திலேயே பிறமொழியினர்க்குப் பதவிகள் கொடுத்தும் பிறமொழியினரைக் குடியேற்றியும், அவர்கள் தொழில், வாணிக முயற்சிகளுக்கு ஆதரவளித்தும் தமிழினத்தின் தனித்தன்மையையும் தமிழர் தனி உரிமையையும் தனிஆற்றலையும் அழித்தல் வேண்டுமென்பதும் அகில இந்தியத் தலைமையின் எழுதாத் திட்டங்கள் ஆகும். அகில இந்திய வானொலித் தமிழகக் கிளைகளில் கூடிய மட்டும் தமிழல்லாத மொழிகளுக்குச் சலுகைகள் தருவதும், அதே வகைச் சலுகை தமிழகத்துக்கு வெளியே தமிழுக்கு எந்த இடத்திலும்-சித்தூரிலும் நெல்லூரிலும் பெருவாரி தமிழரைக் கொண்ட ஆந்திர மாகாணத்திலோ, திருவனந்தபுரத்திலும் ஆலப்புழையிலும் புறவூரிலும் தெற்கு மேற்குத் திருவாங்கூரிலும் ஏராளமான தமிழரைக் கொண்ட கொச்சியிலோ தரப்படாதது காணலாம். தமிழையே பிறமொழியாளர் பாணியில் ஒலிப்பதும், பிற மொழிச் சொல்லின் மூலம் தாய்மொழியிலேயே பிற மொழிப்பிரச்சாரம் செய்வதும் இவற்றைவிட நயமிக்க சூழ்ச்சிகள் ஆகும். மற்றும் ஊர்தி நிலையங்கள் அஞ்சல் அட்டைகள், கூடுகள் ஆகியவற்றின் மூலமும் நாணயங்கள் மூலமும் செய்யும் இந்திப் பிரச்சாரம் வெறும் பிரச்சாரம் அன்று, பலவந்தப் புகுத்தீடே யாகும். இது செய்யும் அரசியல், தன்னைக் குடியாட்சி அரசியல் என்று கூறிக்கொள்வது உலக அதிசயங்களில் ஒரு புது உலகஅதிசயம் எனலாம். அகில இந்தியத் தலைமையின் நான்காவது படிப்பினை தான் மிக மிக ஆபத்தானது. உண்மையில் ஏதோ தன்னலம், தன் குழுநலங்களை எண்ணி இந்தியை ஆதரிக்கத் துடிதுடித்து முன்வந்த சக்கரவர்த்தி இராசகோபாலச்சாரி யாரையும் அவர்போன்ற பல தமிழரையும்கூட அது திகைக்க வைத்து விட்டது. உத்தியோகம் வகிப்பதற்கு அல்லது வகிக்க அவசியமான தேர்வுகள் எழுதுவதற்கு இந்தி அறிவு அவசியம் என்ற ஏற்பாடே அது. இது மிகவும் நயவஞ்சகச் சூழ்ச்சி என்பது சற்று ஆர்ந்தமர்ந்து பார்த்தால் தெரியும். ஏனென்றால், மனிதர்க்கு இயல்பான தன்னலமே இங்குத் தேசியத்தை அழிக்கும் கருவியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. நீண்ட அயலாட்சி, அயல் பண்பாட்சிகளால் ஏற்கெனவே வளர்ந்துள்ள ஆட்சி வகுப்பு என்னும் களைப்பயிர், இதன் மூலம் இன்னும் புதிதாக வளர்ச்சி பெறுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் நச்சுப் பண்பறிந்து, இதுகாறும் அயற்பண்புகளின் முன்னோடும் பிள்ளையாயிருந்து வந்துள்ள இராசகோபாலச்சாரியாரே சீறியெழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழகத்துக்கு ஓர் எச்சரிக்கை ஆகும். இந்தித் திணிப்பு ஒன்றே தமிழகத்தை நாளடைவில் முற்றிலும் அழித்துவிடப் போதுமானது. ஆனால், இந்தித் திணிப்பு தமிழன் தலையில் மெல்லத் திருகி இறக்கிவிடும் ஒரு திருகாணி மட்டுமே. அதன் பின்னணியில் அதை அடித்திறுக்கும் சுத்தியும், சுத்திக்கு வலுத்தரும் கொட்டாப்புளியும் வேறு உள்ளன. இந்தி, சமற்கிருத மயமான இந்தி ஆதல் வேண்டுமென்பது ஆணியை அடித்திறுக்கும் சுத்தி. சமற்கிருதமே ஆட்சிமொழியாதல் வேண்டும் என்ற கோட்பாடு ஆணியுடன் சுத்தியையும் தலைக்குள்ளே பாய்ச்சிவிட உதவும் கொட்டாப்புளி ஆகும். சுத்தியும் கொட்டாப்புளியும் தாமே நேரில் தலையைத் தாக்காமல், ஆணியை உள்ளே கடத்தப் பயன்படுத்தப் பெறுபவை. காங்கிரசு பெற்ற தன்னாட்சி, அகில இந்தியக் கட்சிகளுக்கு மட்டுமே உரிய தன்னாட்சியாகும். தமிழகத் தேசியத்தை அகில இந்தியக் கட்சிகள் எதுவுமே மதிக்காமலிருப்பது இதனாலேயே. இதனால் விடுதலையாட்சி வந்தபின் தமிழின் நிலையும், தமிழன் நிலையும், தமிழினத்தின் நிலையும் சீர்திருந்துவதற்கு மாறாக, முன்னிலும் கெட்டுள்ளன. ஆளும்கட்சி என்ற நிலையிலிருந்து ஆளும் தேசமாய் விட்ட அகில இந்தியக் காங்கிரசும் அதன் செல்லப்பிள்ளையான மற்ற அகில இந்தியக் கட்சிகளும் 1947ஆம் ஆண்டுக்குப் பின் தமிழகத் தேசியத்தை அழித்தொழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கின்றன. இதில் காங்கிரசு காட்டும் உறுதியையும் ஆர்வத்தையும்விட சோஷலி°ட்களும் கம்யூனி°ட்களும் பிரஜா சோஷலி°ட்களும் காட்டும் ஆர்வமே மிகுதி என்பதும், காங்கிரசு வீழ்ச்சியடைந்து ‘இந்த முற்போக் குடையவையாகக் கூறப்படும்’ கட்சிகள் வந்துவிட்டால் தமிழன் நிலை இன்னும் படுமோசமாய்விடும் என்பதும் தமிழன் எளிதில் மறந்துவிடத்தக்க செய்திகள் அல்ல. இந்தச் சூழலில் தமிழன் மொழி உரிமை கெட்டது மட்டுமன்று. மொழி உணர்ச்சிகூடக் கட்சி வெறிகளுக்கிடையே மழுங்கியுள்ளது. தமிழகத்தைத் தவிர வேறு எந்தப் பகுதியிலும் ஓர் அயல்மொழியாளன் கட்சித் தலைவனாய் இருக்க முடியாது. தமிழ்நாடு மட்டுமன்றித் தமிழன் மிகுதியாகவுள்ள நாடு திரு கொச்சியும் ஆந்திரமும். அங்கே எந்தக் கட்சியிலாவது ஒரு தமிழன் தலைவனாக, சட்ட சபை உறுப்பினராகக்கூடும் என்று எவரும் எண்ணமுடியாது. ஆனால், தமிழகத்திலே, காங்கிரசு சார்பில் கோயங்காக்கள், தௌலத்ராம்கள் தேர்தலிலே நிற்க முடிகிறது. வெற்றிபெறக்கூட முடிகிறது. நம்பியார் போன்ற மலையாளிகள் தமிழகக் கம்யூனி°ட் தலைவராகவும், தமிழர் சட்டசபைக்குத் தமிழின உறுப்பினராகவும் வர முடிகிறது. ஆனால், தமிழர் தொகுதிகளுக்குக்கூட மற்ற இடங்களில் ஒரு தமிழன் நின்று வென்றுவிடமுடியாது. தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை, நெய்யாற்றங்கரை, கொச்சிச் சித்தூர், வடதிசைச் சித்தூர் ஆகியவற்றில், தமிழ் உறுப்பினர்கள் சட்டசபைக்கு வந்தும் அவர்கள் தமிழுரிமைகள் காலடியில் மிதித்துத் துவைத்து அழிக்கப்படுகின்றன. தமிழகத்தின் தலைசிறந்த நடிகருள் ஒருவர் திரு.டி.கே.சண்முகம். அவர் கொச்சியிலே ஆலப்புழை என்ற ஊரிலே தமிழ்நாடகம் நடத்த முடியாதபடி துரத்தி யடிக் கப்பட்டார். இதில் அதிசயம் என்னவென்றால் ஆலப் புழையில் நூற்றுக்கு எண்பதுபேர் தமிழர். அது மட்டு மன்று. நம் நடிகர் டி.கே.சண்முகம் அந்த ஆலப் புழையில் பிறந்தவர்! அவர் குடும்பம் ஏழு தலைமுறையாக ஆலப் புழையிலேயே வாழ்ந்தது! தமிழன் பிறப்புரிமை, இந்தியத் தேசியத்தில் படும் பாடு இது. இந்தியாவின் தேசியம் பவனிவரும் மாநிலத்திலே, தமிழரே நிறைந்த ஒரு பகுதியில் ஒரு தமிழன் தமிழர் காணத் தமிழ்நாடகம் நடிக்க உரிமையில்லை. ஆனால், தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் தமிழனல்லாதவன், தமிழ் தெரியாதவன் எந்தப் பதவியும் வகிக்க முடியும். தமிழர் மொழியுரிமைச் சீட்டுகள் பெற்றுக்கூடத் தமிழர் உறுப்பினராக முடியும்! தமிழ் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், ‘தமிழன் அல்லன்’ என்ற உரிமையாலேயே எவரும் தமிழ்ப் பள்ளி கல்லூரித் தலைவராகலாம், தமிழ்ப் பத்திரிகை ஆசிரியராகலாம், பணிமனை முதல்வர்கள் ஆய்விடலாம். தமிழக ஆட்சி தமிழர்க்காக அன்று. தமிழர் அல்லாதவர்க்காக. தமிழர் தவிர உலகில் மற்ற எல்லா இனத்தவர்க்குமாக நடக்கும் ஆட்சி என்பதை இது காட்டுகிறது! அயற் பண்பாட்சியில் தமிழன் அடைந்துள்ள தன்மான மற்ற நிலை இது! இந்நிலையை அகற்ற, தமிழர் தன்மானம் மேலோங்க, உலகத்தில் மனிதரிடையே மனிதனாகத் தமிழன் வாழ, உலக மொழிகளிடையே, மொழிகளுள் மொழியாகத் தமிழும் தனக்குரிய இடம்பெற, உன் கைச்சீட்டை உன் இன உறுப்பினனுக்கே, தமிழ்மொழிப் பற்றும் தமிழ்ப்பண்பும் தமிழார்வமும் உள்ள கட்சிக்கே அளி, தமிழா! தெரிந்தோ தெரியாமலோ இடைக்கால அடிமை வாழ்வில் தமிழர் செய்துவந்த தமிழ்ப் பகைமையின் தடத்தை - உரிமையுடன் உன் உரிமைச் சீட்டை வழுங்குவதனாலே - ஒழித்துத் தமிழர் தன்னாட்சியில் காலெடுத்து வை, தமிழா! ‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’ என்று பாடிய தேசியக் கவிஞர் வாக்கு வீண் வாக்காகாமல் காக்க முனைந்தெழு, பீறி எழு, வீறி எழு! 5. வாழும் மொழியில் வாழா மொழி! மிகக் கொடிய ஆதிக்க அயல் ஆட்சிகளுக்கு உட்பட்டு நலிந்து வாடும் அடிமை நாடுகளுக்கு உரிய எல்லா இலக்கணங் களும் இன்றைய தமிழகத்துக்கு அமைந்துள்ளன, அமைந்து வருகின்றன. வெள்ளையர் ஆட்சியில் தமிழர்க்கு இருந்த உரிமைகள்கூட, மதிப்புக்கூடப் படிப்படியாகக் குறைந்து வருகின்றன, ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. அவ்வெள்ளையர் ஆட்சியில் இல்லாத வரிச்சுமைகள், மொழிச்சுமைகள், அடக்குமுறைகள், பொல்லாங்குகள் இன்று சுமத்தப்பட்டு வருகின்றன; இழைக்கப்பட்டுவருகின்றன. தமிழர் நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. உரிமைக் கேரளத்துக்கும், உரிமை ஆந்திரத்துக்கும் இடையே அது மட்டும் உரிமையற்ற அடிமைச் ‘சென்னை’ யாகவே இயங்கி வருகிறது. வட திசையிலுள்ள பிறமொழி அகதிகளுக்குத் தம்மொழி நிலங்களிலும் உரிமைச்சலுகை, பாதுகாப்பு, தனிச் சிறப்பு வாய்ந்த உதவிகள் உண்டு. பிறமொழி நிலங்களில் - தமிழகத்தில்கூட தில்லி ஆட்சி, இவற்றை அவர்களுக்கு வலிந்து பெற்றுத் தர முன்வருகிறது. ஆனால், வெளிநாடுகளில் அவதிப் பட்டு நாடிழந்து, வீடிழந்து, உரிமையிழந்து தவிக்கும் தமிழ் அகதிகளுக்கு எந்த நிலத்திலும், தமிழ் நிலத்தில்கூட அத்தகைய உதவிகளோ, சலுகையோ, உரிமையோ, பாதுகாப்போ கிடையாது. அவர்கள் குடிப் பிறந்த நாட்டுரிமையும் இன்றி அல்லற்படுகின்றனர். குடிபுகுந்த நாட்டுரிமையும் இன்றி, அதனைப் பாதுகாக்க - அதற்குப் போராடத்தக்க சொந்த அரசு எதுவும் இல்லாமல் பரிதவிக்கும் நிலையிலேயே அவர்கள் உள்ளனர். தமிழக ஆட்சியில் மட்டுமன்று, தமிழக நாணயத்தில் கூடத் தமிழ் இல்லை. தொலை அயலார் ஆட்சியான வெள்ளையர் ஆட்சியில் நாணயங்களில் இருந்த அளவு தமிழும் இன்று ஒழிக்கப்பட்டுவிட்டது. அஞ்சல் அட்டையில், அஞ்சல் உறையில், பண அஞ்சல் படிவத்தில், அஞ்சல் தலையில் தமிழ் கிடையாது. அதே சமயம் வெள்ளையர் ஆட்சியிலே இல்லாத இந்தி, இன்று நாணயத்தில், புகை வண்டி நிலையங்களில், அஞ்சல், மின்செய்தி நிலையங்களில்; அலுவலகங்களில் இதே ஆட்சியால் புகுத்தப்பட முடிகிறது. இந்தி மொழியில் தில்லி ஆதிக்க ஆட்சிக்கிருக்கும் இந்த அடங்கா ஆர்வத்தில் ஒரு சிறு தூசுகூட தமிழில் இருக்க-ஏற்பட வழியில்லை. அதைவலியுறுத்த, பரிந்துரைக்க, அதற்கு மன்றாடக் கூடிய சொந்த அரசும் ஆட்சி உரிமையும் தமிழர்க்குக் கிடையாது. அஞ்சல் தலைகளிலோ வடமொழிக் கவிஞர்களுக்கு, முனிவர்களுக்கு, இந்திக் கவிஞர்களுக்கு, பத்த சிகாமணிகளுக்கு, அறிஞர்களுக்கு, பிற வடதிசை மொழிப் புலவர்களுக்கு முன்பு வெள்ளையராட்சியில் இல்லாத இடம் புது முறையில் தேடி அளிக்கப்பட்டுள்ளது; அளிக்கப்பட்டு வருகின்றது. ஆயினும், தமிழகம் இத்துறையில் முழுக்க முழுக்கப் புறக்கணிக்கப்படுகிறது; மறக்கடிக்கப்படுகிறது. தமிழுடன் ஒட்டியவை என்ற ஒரே குற்றத்துக்காக மற்றத் தென்னக மொழிகள் கூடத் தமிழைப் போலப் பாரதப் பண்பாட்டுக்கு அயலான மொழிகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. சாதிமத கட்சி வேறுபாடின்றித் தமிழகத்தின் எல்லா வகுப்பினரும், புலவர்களும் பாமரர்களும், பொது அரசியல், கலை, பண்பாட்டு நிலையங்களும் இவ்வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பியுள்ளன; வற்புறுத்தி மன்றாடியுள்ளன. தமிழ்க் கவிஞர்கள் தென்னகச் சீர்திருத்தச் செம்மல்கள், சிறப்பாகத் திருவள்ளுவர், இளங்கோ, கம்பன், பாரதி, எழுத்தச்சன், திக்கணன் முதலிய புலவர்கள்; அப்பர், நம்மாழ்வார், வள்ளலார் முதலிய பத்தர்கள்; வீரேசலிங்கம் பந்துலு, வ.உ.சி. போன்ற நாட்டு மொழிப் பத்தர்கள்; திருப்பூர் குமரன் முதலிய தியாகிகள் ஆகியோர் உருவங்கள் இடம்பெறுதல் வேண்டு மென்று தமிழர்கள் வாதாடியுள்ளனர். ஆனால், வடதிசை அயலரசின் இறுமாப்புச் செவிகள் இவற்றைப் பொருட்படுத்தவில்லை. தமிழக அரசு ஒன்று அமைந்திருந்தால் இவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்ப் புலவரேறுகளான மறைந்த ஆசிரியர் மறைமலைஅடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர்க்கும்; தமிழ்க்குப் போராடி மாண்ட தமிழ்த் தியாகிகளான தாளமுத்து - நடராசனுக்கும், இத்தகு சிறப்பிடங்கள் அளிக்கப்பட்டிருத்தல் உறுதி. தமிழ்க்கும் தமிழ் சார்ந்த தென்னக மொழிகளுக்குந்தான் ஏக பாரதத்தில் இடம் இல்லை - நாட்டு மொழிகளுக்குரிய இடமும் அவற்றுக்குக் கிடையாது - அயல் மொழிகளுக்கு உள்ள சலுகைகளும் அவற்றுக்கு இருக்க முடியாது. அடிமை மொழிகளுக்கு உரிய உரிமையற்ற நிலை - புறக்கணிப்பு - இருட்டடிப்பு ஆகியவை தான் அவற்றுக்கு இருக்கமுடியும். இஃது இன்றைய நிலை. பிறந்த நாள் முதல் கதராடையே உடுத்த காந்தி பத்தர்கள்கூட - சட்ட சபை உறுப்பினர், மந்திரிகள், முதன் மந்திரிகள்கூடத் தமிழராய், தமிழில் ஒரு சிறிது பற்றுதல் உடையவராய், தமிழர், தமிழகம் பற்றி ஒருசிறிது அக்கறை உடையவராய் இருந்துவிட்டால், இருக்க, இயங்கத் தொடங்கிவிட்டால் அவர்கள் ஒருநாள்கூட ஆட்சிப் பீடத்தில் நீடிக்க முடியாது. தாம் தமிழன் என்பதையே மறந்து தமிழர்க்கு அயலாராகவும், தில்லி அயல்மொழி அயலாட்சியாளர் சொல்லுக்கடங்கித் தலையாட்டிப் பொம்மையாகவும் நடப்பவர் மட்டுமே அப்பீடத்தில் உறுதியாக அமரமுடியும். மேலும் மக்கள் விருப்பம் ஒன்றே ஆட்சி யுரிமைப் பீடங்களுக்கு அவர்களை உயர்த்திவிடவும், வெறுப்பு அவற்றிலிருந்து விலக்கிவிடவும் முடியாது. பதவி காட்டியும் கூலி கொடுத்தும் வாங்கிய அடிமைகள், அச்சுறுத்தி ஆட்கொள்ளப்பட்ட அதிகாரிகள், அயற் பண்பாடுகளையே ஆதரிக்கும் ஓரினப் பத்திரிகைகள், விலை கொடுத்தும், பின்னணி வேலைப்பாடுகளாலும், தகிடு தத்தங்களாலும் பெறப்பட்ட போலி வாக்குரிமைச் சீட்டுகள் ஆகியவற்றின் மூலம், அவர்கள் மக்கள் பெயரைக் கூறிக்கொண்டே மக்களுக்கெதிரான ஆட்சியை நீடித்துவிட முடியும் என்ற நிலை இன்று உள்ளது. உண்மையில் அங்கேரியில் இரஷ்யர் அமைத்துள்ள பொம்மை அரசாங்கத்துக்கும் தமிழகத்தில் சென்னை அரசாங்கத்துக்கும் வேறுபாடு கிடையாது - அங்கேரி யின் நிலை ஒன்றே உலகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழக நிலை தெரியவில்லை என்ற ஒன்றே அவற்றினிடையே உள்ள வேறுபாடு! வெள்ளையர் ஆட்சியில் தொழிற்றுறையில் இந்தியா உலகில் பத்தாம் படிக்குக் கீழ்ப்பட்ட நிலையில் இருந்தது. காங்கிரசின் உழைப்பினாலும், சுயராஜ்யத்தினாலும் இவ்விரண்டின் சலுகைகள், உரிமைகள் பெற்ற வடநாட்டு முதலாளிகள் கூட்டு முயற்சியாலும் இன்று வடஇந்தியா பிரிட்டனையே பணிய வைக்கும் நிலையில் உலகின் முதல் வரிசை நாடுகளில் ஒன்றாகிவருகிறது. ஆனால் தமிழகம், தமிழகத்தை அடுத்து வாழும் தீவினை உடைய பிற தென்னகப் பகுதிகள் வெள்ளையர் ஆட்சிக்கால நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கூடுமான போதெல்லாம் அந்நிலையிலிருந்துகூடப் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன - தள்ளப்பட்டு வருகின்றன. ஆக்கிப் படைக்கும் ஆற்றலும் ஆர்வமுமுடைய நாட்டுப் பிரதிநிதிகள் யாவரும் - நல்ல தலைவர், நல்லறிஞர், நற்கலைஞர், நல்லவீரர், நல்ல குடிமக்கள் அனைவரும் கீழ்நிலைக்கு ஒதுக்கப் படுகின்றனர். நாட்டைக் காட்டிக் கொடுத்து நாட்டு மக்களைச் சுரண்டும் சத்தி களும், அவர்களை அண்டிப் பிழைக்கும் ‘கங்காணி’களுமே இவ்வெல்லாத் துறைகளையும் நிரப்பி, நாட்டு வாழ்வைப் படிப்படியாக அழித்து, நாளடைவில் தம் அழிவுக்கும் அடிகோலுகின்றனர். இந்நிலை தமிழகத்தில் வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே பெருகிற்று - ஆனால், அதற்கு முன்னே தொடங்கிவிட்டது. உண்மையில் வெள்ளையர் ஆட்சிக்கும் அதை அடுத்து வந்துள்ள இந்தி ஆட்சிக்கும் முன்னரே அடிகோலிய ஐந்தாம்படை ஆற்றல் அதுவே - வடமொழிப் பற்று என்ற போலிப் போர்வையின் கீழ் அக் குழு, அயலாட்சிகளிலும் அவ் அயலாட்சிகளுக்கு உகந்த போலிப்பண்புகளை வளர்த்து வந்துள்ளது. அயலாட்சியாயினும் வெள்ளையராட்சி பொருளாதாரச் சுரண்டல் என்ற ஒரு துறை தவிர, மற்றத் துறைகளில் மக்கள் நலமும், மக்கள் உரிமைகளும் மதித்துக் குடியாட்சிப் பண்பு பேணிற்று. குடியாட்சி நிறுவனங்களையும் நாட்டின் வரலாறுகளையும் உருவாக்கப் பாடுபட்டது. ஆனால், அந்தக் குடியாட்சிப் பண்பிடையேயும் மக்கள் மொழிக்கு எதிரான தம் போலி உரிமைகளை வட மொழிப்பற்றின் போர்வையில் அப்பற்றாளர் நுழைக்கப் பலதடவை முயலாமலில்லை. இவற்றுள் ‘திரு’ என்ற தமிழ் மரபை ஒழித்துத் தமிழில் இன்னும் எழுத்தற்ற ‘சிறீ’ யைப் புகுத்திப் பரப்ப அவர்கள் செய்த முயற்சி குறிப்பிடத் தக்கது. ஏனெனில், மக்கள் வழக்கில் இன்றும் ‘திரு’ வே பெரிதும் இடம் பெறினும் ஓரினப் பத்திரிகை உலகிலும் அவ்வினத்தார் பிடியிலேயே இன்னும் உள்ள வடவர் ஆட்சித் துறைகளிலும் ‘சிறீ’ வெற்றிபெற்று இன்னும் இறுமாப்புடனேயே உலவி வருகின்றது. தவிர வடதிசை ஆதிக்கத்துக்குள்ளேயே ஒரு வடதிசை ஆதிக்கம் செறிந்த தனித்துறையாக வானொலி நிலையமும் அதன் கிளைகளும் இயங்கி வருகின்றன. தமிழ் மரபுக்கும் பண்புக்கும் மாறான மொழிநூலார் கூற்றுப்படி அகில இந்திய மொழிப் பண்புக்கே மாறுபட்ட - வடமொழி உச்சரிப்புகளை, வடமொழிச் சொற்களில் மட்டுமின்றித் தமிழ்ச் சொற்களிலும் புகுத்தித் தமிழர் காதுகளுக்குத் தமிழையே நாராசமாக்கி விடுகின்றனர். போலி வடமொழிப் பற்றாளர்கள் மாதா என்பதை மாத்தா என்பது போலவும், நிச்சயம் என்பதை நிஃச்சயம் என்பது போலவும் உச்சரிப்பதன்றிக் கட்சி, ஆட்சி என்ற சொற்களை கக்ஃட்சி, ஆக்ஃட்சி என்பது போல ஒலித்து அயல்மொழியாளர் போலப் பேசுகின்றனர். இப்போக்கின் தவற்றைப் பத்திரிகையுலகில் ஒரு பத்திரிகையின் பெயரே தெளிவாகக் காட்டுகிறது. தமிழில் லகரத்துக்குப் பின் ககரம் ஒலிக்கும் வகையை நல்கி, பல்கி, கால்கோள் என்ற தமிழ்ச் சொற்களிலே காணலாம். ஆனால் ‘கல்கி’ என்ற சொல் அயல்மொழிச் சொல்லாதலால் ‘கல்க்கி’ என்பதுபோல இன்று ஒலிக்கப்படுவது காண்கிறோம். இதைப் படிக்கும் தமிழரின் தமிழ்ப் பண்புக்கு முரணான நாப்பழக்கம், முன்காட்டப்பட்ட நல்ல தமிழ், அதாவது தனித்தமிழ்ச் சொற்களின் ஒலியையும் மாணவரிடை கெடுக்கத் தொடங்கி விட்டது. சென்னையிலும், சென்னையை அடுத்த மாவட்டங் களிலும் ஏற்கெனவே ‘வந்துகொண்டு, சுமந்துகொண்டு’ என்ற தொடர்புகள் ‘வந்துக்கொண்டு, சுமந்துக் கொண்டு’ என்று ஒலிக்கப்படுகின்றன. எழுத்து வடிவைத் தவறாக ஒலிப்பதுடன் அவர்கள் நிற்கவில்லை. தவறான உச்சரிப்பை மீண்டும் எழுத்து வடிவில் புகுத்திப் பேச்சுத் தவற்றை எழுத்துத் தவறாக்கி, மொழி மரபைக் கெடுக்கின்றனர். இதனால் மாணவர்கள் மட்டுமன்றி, பத்திரிகை எழுத்தாளர்கள், புது எழுத்தாளர்கள், புதுக் கவிஞர்கள் வரை அவற்றைத் தவறாக ஒலித்துத் தவறாகவே எழுதத் தொடங்கி விட்டனர். இது தமிழர் மரபுக்கும் தமிழ் மரபுக்கும் செய்யும் கேடு சிறிதன்று. இந்தச் சூழ்நிலைகளுடனும், பின்னணியுடனும் தான், நாம் இப்போது நம் முன் தோன்றியுள்ள ஒரு புதிய ஆபத்தைப் பற்றி ஆராய வேண்டியவர்களாகி யுள்ளோம். இந்திக்கும் அயல் மொழிகளுக்குமே எப்படியாவது சலுகையும், உரிமையும் வளர்த்துவிடப் பாடுபடும் தில்லி ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளான சென்னைக் கிளை அரசியலார், ‘தமிழ்மொழி ஆட்சிக் குழு’ என்ற ஓர் அரசியல் நாடகக் குழு அமைத்துள் ளார்கள். அதன் வாயிலாகத் தமிழை அரசியல் மொழியாக்கப் பாடுபடும் சாக்குடன் தமிழின் அடிவயிற்றிலேயே - உயிர்க் கருவியிலேயே கையை வைத்துவிட எண்ணியுள்ளனர். தமிழ் நெடுங்கணக்கில் இல்லாத, தமிழ் இலக்கணங்கள் அறியாத தமிழ் இலக்கியம் கனவு காணாத நான்கு வடமொழி எழுத்துகளை (ஃக = ஹ, ஃச = ஸ, ஃட்ச = ஷ, ச்ஃய= ஜ) அருந்தமிழ் நெடுங்கணக்கில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டுமென்று அவர்கள் தமிழ் எழுத்துகளுக்கு ஒரு புதிய தலைவிதி அமைக்க முன்வந்திருக்கிறார்கள். தம் புராணக் கருத்துப்படி தமிழைக் கீழோர் மொழிகள் - அரக்கர், அசுரர் மொழிகளுள் ஒன்றாகக் கருதுவதனால் தம் தெய்வ உலக மொழியாகிய வடமொழியின் முத்திரையில்லாமல் தமிழ் மனித மொழியின் தரம் கடந்து அரசியல் மொழியாக முடியாது, ஆகக்கூடாது என்று துணிகின்றனர் போலும்! வடமொழிப் பற்றின் போர்வையில் தாய்மொழி வளர்ச்சிக்கு, குந்தகம் செய்யும் குழுவினரின் ஒவ்வொரு சொல்லும், செயலும் உண்மையில் ஒட்டகத்துக்கு இடங்கொடுத்து, கூடாரத்தையே பறிகொடுத்த அராபியன் கதையை நினைவூட்டுவதாகும். வடமொழி இலக்கியங்களை - பெரும்பாலும் பொது மக்களை மயக்கி வசப்படுத்த உதவும் சமய சாத்திர ஏடுகளை மொழி பெயர்த்து, அதுவே இலக்கியம் எனக் கொண்டு, பேணிப் பரப்பி வடமொழிப் புகழை மறைமுகமாக வளர்ப்பது முதற்படி - ஒட்டகத்தின் மூக்குக்கு இடம் தேடும்படி. வடமொழிச் சொற்களையே கையாண்டு தாய்மொழிகளிலே வடமொழி முத்திரைத் தழும்புகளைப் பெருக்கித் தாய்மொழியைத் தம் ஆட்சிக்குள் கொண்டுவந்து வடமொழிப் பிரச்சாரக் கருவிகளாக்குவது, அடுத்தபடி - மூக்கு முகமாக விரிவுறும்படி, வடமொழிச் சொற்களைச் சரிவர எழுத வடமொழி எழுத்துகளை ஒன்றொன்றாக, தொகுதி தொகுதியாக இறக்குமதி செய்வதே மூன்றாவது படி. அதன் பின் வடமொழி இலக்கியமும் சொல்லும் எழுத்தும் புரிய வைப்பதற்காக, வடமொழி இலக்கணமும் வேண்டும் என்று கூறுகின்றபடி ஒட்டகத்தின் திமிலை உள்ளே நுழைக்கும்படி ஆகும். இவ்வாறு வளருகின்ற பலவகைப் படிகளும் - கடைசிப் படியில் கூடாரத்தை ஒட்டகத்துக்கே உரிமையாக்கி, ஏழை அராபியனை வெளியேற்றி விடுவது காண்கிறோம். குடியாட்சியின் விலை, ஓயா விழிப்பு என்பர் குடியாட்சி அறிஞர். குடியரசோ, விடுதலையோ பெற்றுவிட்டவுடன் மக்கள் அமைதி அடைந்துவிட முடியாது. ஏனென்றால், ஏகாதிபத்தியத்தின் சொந்த வடிவம் போன பின்னும், ஏகாதிபத்திய வாதிகள் குடியரசிலேயே இருந்துகொண்டு, குடியரசின் போர்வை யிலேயே புதிய புதிய உருவில் ஏகாதிபத்தியப் பண்புகளை உருவாக்கி, குடியரசையும் மக்கள் உரிமைகளையும் மெல்லக் கவிழ்க்க ஓயாது சதிசெய்த வண்ணம் இருப்பர். ஆகவே, மக்கள் உரிமை பேண விரும்புபவர் ஓயாது போராடிக் கொண்டே இருந்தாதல்வேண்டும். ‘ஏகாதிபத்திய மரபு’ ஒன்று எப்போதும் ஏமாற்றுவதற்கு இருந்து வருவதுபோல, மக்கள் உரிமை பேணி அதைக் கண்டு விளக்கி எதிர்க்கும் மரபு ஒன்றும் தொடர்பறாமல் ஓயாது பேணப்பட்டே வருதல் வேண்டும். ஏகாதிபத்தியம் குடியாட்சி ஆகிய இவற்றின் இதே தொடர்பு, வடமொழிப் பற்று ஆகிவற்றுக்கும் பொருந்தும். வடமொழிப் பற்றாளர் மரபு உலகிலேயே அடிமைப் பண்பு மறையும்வரை எளிதில் மறைந்துவிட முடியாது. பல உருவில், பல கோணங்களில் காட்சியளித்த வண்ணமாகவே இருக்கும். தாய்மொழி அல்லது தமிழ் மரபும் அதனுடன் அவ்வக் காலங்களில், அவ்வவ்வுருவில் போராடிக்கொண்டே தான் இருத்தல் வேண்டும். ஒரு கணம் போராடத் தயங்கினால், அல்லது போராட்டம் தளர்ச்சி யடைந்தால் - போராட்டத்தில் மக்கள் சத்தி ஒன்றுபடாமல் பிளவுபட்டால்கூட வடமொழிப் பற்றாகிய ஏகாதிபத்தியச் சத்தி, நெடுந்தொலை அழிவுத்திசை நோக்கி வளர்ந்துவிடும். மக்கள் உரிமை பேணும் அறிஞர், நல்ல தமிழார்வ அறிஞர் விளக்கினாலல்லாமல், ஏகாதிபத்தியப் போக்கையும், வடமொழிப் பற்றாளர் போக்கையும் மக்கள் தாமே எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஏனெனில், முன் இரு சத்திகளும் பல உரு எடுப்பவை மட்டுமல்ல, அவை தம் கோரத் திட்டங்களைச் சிறு சிறு கூறுகளாக்கி, படிகளாக்கி, மெல்ல மெல்ல, ஆனால் நீண்ட காலத் திட்டத்துடன் கொண்டு வருவர். ஒவ்வொரு கூறுகளையும் தனித்தனி காணும் மக்கள், திட்டத்தின் கோர அழிவை ஒரு சிறிதும் காண முடியாமல் ஏமாறுவர். உண்மை நூலில் சிப்பு நூல் இணைத்து, சிப்பு நூல்வழி நூல்கயிறு, நூல்கயிறு வழி வடம், வடத்தின் வழி நூலேணி ஏற்றும் கதை ஒன்று உண்டு. இதன் ஒவ்வொரு படியிலும் காண்பவர் ஒரு சிறு சூதற்ற செயல் காண்பரேயன்றி, இறுதியாக நூலேணி ஏற்றப்படுவதை மனங்கொள்ளமாட்டார். வடமொழிப் பற்றாளர் செயலில் மக்கள் எளிதில் மயங்குவதன் வகை இது. இதனை மரபறாது நின்றபடி நாளும் விளக்கும் அறிஞர் பொறுப்பு பெரிது. மரபறாதிருத்தலும் அரிது. ஏனென்றால், ஏகாதிபத்தியம், வடமொழிப்பற்று ஆட்சியிலிருந்துகொண்டு அவர்களை அழித்துக் கங்காணி அறிஞர் மரபையே வளர்க்கும். தாய்மொழிப் பண்பு இந்தியாவின் மற்றெல்லாத் தாய்மொழிகளிலும், தமிழின மொழிகளில்கூட, ஓரளவு தளர்ந்து விட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் அல்லது தாய்மொழிப் பண்பு வாய்ந்த தமிழ் ஆசிரியர் மறைமலைஅடிகளின் தளராப் போராட்டம் காரணமாக, மக்கள் வாழ்விலும், ஆட்சித்துறை, செயலாக்குத் துறைகளில் அதன் எதிர்ப்பே நெடுங்காலம் தலைதூக்கி ஆடிவருகிறது. தொடர்ந்த அயலாட்சிகள், அயல்மொழிஆட்சிகள், அயல்பண்பாட்சிகள், இதற்கு உகந்த சூழல்களாயுள்ளன. இப்போது மக்களிடையேயும், இலக்கிய வாழ்விலேயும் தனித்தமிழ் அடைந்து வந்த வெற்றியைக் கருவறுக்கும் திட்டமாகவே வாழா மொழியின் எழுத்துகளின் புகுத்தீடு மெல்லத் தலை காட்டுகிறது. இப் புகுத்தீட்டுக்கு வடமொழிப் பற்றாளர் கூறும் நியாயங்களை அலசிப் பார்த்து, அவற்றின் நேர்மை - நேர்மைக் கேடுகளை ஆராய வேண்டுவது இன்றி யமையாதது ஆகும். தமிழ் வாழும் மொழி. வாழும் மொழிகளின் பல தலைமுறைகளைக் கண்டும் இன்னும் உயிர்ப்பாற்றலும் இளமை நலமும் தளராத மொழி. அது எல்லா உலக மொழிகளுக்கும் முற்பட்டதாய், பல மொழிகளையும், நாகரிகங்களையும், நாகரிகத் தலைமுறைகளையும் தோற்றுவித்து, அம்மொழிகளின் வாழ்வு களை யெல்லாம், அம்மொழி தலைமுறைகளின் வாழ்வுகளை யெல்லாம் கடந்து நின்று நிலவுகின்றது. அதற்கொப்பாகப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்த கலை, இலக்கிய, இலக்கண, நாகரிகப் பெருவாழ்வுடைய மொழி உலகில் வேறு எதுவும் இல்லை. இந்த இறவா வாழ்வு, தளரா இளமை, மொழித் தாய்மை ஆகியவை கருதியே தமிழைக் கன்னித் தாய்மொழி என்றும், ஓவா மூவா முதன்மொழி என்றும் பாராட்டுவர் அறிஞர். அதுவே முக்காலத்துக்கும் உரிய மொழி என்றுகூடக் கூறலாம். ஏனெனில், அஃது இறந்த காலத்தின் கருவிலிருந்து நிகழ் காலத்துக்கு ஒரு பாலமாய், நிகழ்காலங் கடந்து வருங்கால உலகு நோக்கித் தளராது முன்னேறும் மனித இனத்தின் உயர் நாகரிகப் பெரும் பாதையாக அமைந்துள்ளது. இச்சிறப்பு வட மொழிக்கோ வேறு எந்த உலக மொழிக்கோ உரியதாகாது. தமிழ் வாழும் மொழி மட்டுமல்ல, வாழ்வளிக்கும் மொழி. அது தன் இனமொழிகளுக்கும் தன்னுடன் தொடர்புடைய மொழியினங்களுக்கும் பழம் பெருமை, கலை நாகரிக வளம், நீடித்த வாழ்வு ஆகியவற்றை அளித்துள்ளது. அதன் பழைய இனத் தொடர்பு, வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றின் காரண மாகவே, உலகில் வட ஆரிய மொழிகளாகிய இலத்தீனம், கிரேக்கம், வடமொழி ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முற்பட்ட பொலிவுடையனவாய்த் திகழ்ந்தன. அதே தொடர்பு காரணமாகவே, வட இந்தியத் தாய்மொழிகளின் புத்தணிமைக் காலச் சிறுவாழ்வு கடந்து, தென்னக மொழிகள் ஆயிரக்கணக் கான ஆண்டு பழைமையும் நீடித்த இலக்கிய வாழ்வும் பெற்றுள்ளன. வாழும் மொழி, வாழ்வளிக்கும் மொழி என்ற இந்த இரண்டு வகையினும் தமிழ்க்கு நேர்மாறான இயல்புடையது வடமொழி. அது பிறக்கும்போதே உயிர்ப்பாற்றலற்ற மொழியாகப் பிறந்தது. அதன் இலக்கிய வாழ்வுகூட ஒரு நான்கு நூற்றாண்டுகளே உயிர் வளர்ச்சி பெற்றிருந்தது. அதற்கு முற்பட்ட அதன் தாய் மொழிகளான வேதமொழி, பாளி ஆகிய முன் தலை முறைகளும் அதற்குப் பிற்பட்ட பாகதங்கள், அபப்பிரும்சங்கள், தற்காலத் தாய்மொழிகள் ஆகிய பின் தலைமுறைகளும் எவையும் இருநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாழ்வுடையனவாய் இயங்கவில்லை. இங்ஙனம் வடமொழியின் மரபும் தொடர்பும் கலப்பும் ஒவ்வொரு படியிலும் அம்மரபுக்கோ, தொடர்புக்கோ, கலப்புக்கோ உரிய மொழிகளை வாழா மொழிகளாகவே ஆக்கியுள்ளன. இங்ஙனம் வாழும் மொழி, வாழ்வளிக்கும் மொழியாகிய தமிழில், வாழா மொழி, வாழ்வு கெடுக்கும் மொழியாகிய வடமொழியின் நான்கு எழுத்துகளைப் புகுத்தீடு செய்வதற்கான தேவை, அவசியம் என்ன? தமிழ்மொழி ஆட்சிக்குழு, அவ்வாறு செய்ய விரும்புவானேன்? அவ்வாட்சிக்குழு தம் நீண்ட காலத் திட்டத்தின் ஒருபடி என்ற முறையிலேயே அதற்கு ஆதரவு தர விதிர்விதிர்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் வடமொழிப் பற்றாளரும் இப்புகுத்தீட்டுக்குக் கூறும் நியாய ஆதாரங்கள், வாதங்கள், காரண காரிய விளக்கங்கள் எவை? அவை நேர்மையானவையா, தமிழர் நலங்களுக்கு ஏற்றவையா, தமிழர் பண்பாட்டை வளர்ப்பவையா? இவையே இப்போது நம்முன் உள்ள ஐயப்பாடும் கேள்விகளுமாகும். முதலாவதாக: பிறமொழிச் சொற்களைத் தமிழில் திருத்தமாக எழுதவும் படிக்கவும் இவ்வெழுத்துகள் தேவை, அல்லது இன்றியமையாதவை என்று கூறப்படலாம். (அ) இங்கே வடமொழிப் பற்றாளரின் புத்தம் புது முடிவுக்குக் கூறப்படும் ஆதாரம் உண்மையில் அவர்கள் இதற்குமுன் செய்த ஒரு பழைய முடிவு மட்டுமே. பிறமொழிச் சொற்களைத் தமிழில் திருத்தமாக எழுதவும் பேசவும் வேண்டும் என்பதே இப்பழைய முடிவு. இதற்கு ஆதாரம் அவர்களது இன்னும் பழைமையான ஒரு முடிவே - இது முடிவுகளுக்கு முரணானதும்கூட. ஏனெனில், பிற மொழிச் சொற்களைக் கலக்குதல் வேண்டும் என்ற முதல் முடிவு எடுக்கப்பட்டபோது, திருத்தமாக எழுத, பேச வேண்டியதில்லை , தமிழ்க்கேற்பத் திரித்துச் சிதைத்து வழங்கினால் போதும் என்றே கூறப்பட்டது. இங்கே வாதம், எதிரிகளையும் தமிழ்ப் பொதுமக்களையும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி கூறி ஏமாற்றும் சந்தர்ப்பவாதமாகவே முடிகிறது என்று காணலாம். திருத்தமாகவோ, திரித்தோ இந்த வடமொழிச் சொற்களைக் கலக்க வேண்டியதுமில்லை. அதனால், மேன்மேலும் இக்கட்டுகளை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டுவதுமில்லை என்ற தனித்தமிழ் ஆர்வலர் கருத்தையே இப்போக்கு வலியுறுத்தத் தக்கதாயுள்ளது. ஏனெனில், வடமொழிக் கலப்பே தேவையில்லை என்பதற்குத் தனித் தமிழாளர் காட்டும் ஆதாரம் திறந்த உள்ளம் படைத்த எவரையும் மனநிறைவடையச் செய்யும். எத்தகைய வடமொழிக் கலப்பும் பிற மொழிக் கலப்பும் தேவையில்லாத அளவுக்குத் தமிழ், அதாவது தூய தனித்தமிழ் போதிய வளமுடையதாயுள்ளது என்று அவர்கள் செயல் மூலமே எடுத்துக் காட்டுகின்றனர். காலஞ்சென்ற ஆசிரியர் மறைமலையடிகளாரும், அவரைப் பின்பற்றிய தனித் தமிழாளரும், புலவருலகும், அறிஞரும் பிறமொழிச் சொல் உதவியின்றி உலகின் அறிவெலாம், தமிழில் அளந்துரைத்துக் காட்டி வருகின்றனர். அவர்கள் செயல் வெற்றி - வடமொழிப் பற்றாளர்களின் கோட்பாட்டின் தோல்வியையும், அவர்களது நேர்மையற்ற பிடிவாத முடிவையுமே காட்டுகிறது. (ஆ) மேலும், பிறமொழிச் சொற்களைக் கலந்து கொண்டிருக்கும் எந்த மொழியும் அதைத் தன் பண்புக்கேற்பத் திரித்து, அதனைத் தன் எழுத்துகளின் உதவியாலேயே ஏற்றுள்ளன. வடமொழிகூட இவ்விதிக்கு விலக்கல்ல. மாக்° மூலர், மாக்ஷ்மூலர் என்றும் அன்னிபெசண்ட், அன்னீபசந்தீ என்றும் அந்த மொழிகூடத் திரித்து வழங்கியதையே காண்கிறோம். சில சமயம் இடுகுறிப் பெயர்களேகூட எழுத்து பெயர்த்தெழுதப்படாமல் மொழிபெயர்த்துக் கொள்ளப் படுவதுமுண்டு. ஆக்°போர்டு, கோதீர்த்தபுரி என்று ஆவது இது போன்றதே. பொது எழுத்தும் நெருங்கிய தொடர்பும் உடைய ஆங்கில, பிரஞ்சு மொழிகள் கூடச் சொற்களை இரவல் பெறும்போது அல்லது குறிக்க நேரும்போது இதே வகைப் பண்புகளையே கையாண்டுவருகின்றன. ‘இங்கிலிசு’ தமிழில் ‘ஆங்கிலம்’ என்று மாற்றுருவம் பெற்றது போலவே, பிரஞ்சிலும் ‘அங்க்லேய்’ ஆகிறது. இங்கிலாந்து என்பதன் பிற்பகுதி மொழி பெயர்க்கப்பட்டு, பிரஞ்சு வடிவத்தின் அங்கில்தர் (ஆங்கிலம் : லாண்ட்; பிரஞ்சு : தர்; தமிழ்: நிலம்) ஆகிறது. ஆங்கிலம் இப்பிற மொழிச் சிதைவில் மற்றெல்லா மொழிகளையும் விஞ்சியுள்ளது. அஃது ஒலிகளையே முற்றிலும் மாற்றி உருத்தெரியாத தாக்கிவிடுகிறது. எடுத்துக்காட்டாக எபிரேய மொழியின் ‘தாவீத்’ அதில் ‘டேவிட்’ ஆகவும், இலத்தீன் மொழியின் ‘தீதுக’ ‘டைட்ட°’ ஆகவும், ‘கைசர்’ சீசர்’ ஆகவும் மாறிவிடுகின்றன. இங்கே உயிரொலி, மெய்ஒலி எல்லாமே மாறுவது காணலாம். அயல்மொழியின் எழுத்துகள் யாவும் தாய்மொழியில் இருந்துங்கூட, இங்கே தாய் மரபு பேணுவதற்காக அயல்மொழி ஒலிமரபு முற்றிலும் திரிக்கப்படுவது குறிப்பிடத் தக்கது. வடமொழியும், பிரெஞ்சும் மற்றெந்த உலக மொழியும் பின்பற்றாத திருத்தம், தமிழ் மொழிக்கு மட்டும் தேவை என்று வடமொழிப் பற்றாளர் ஏன் கருதுகின்றனர் என்பது தெரியவில்லை. அஃது உண்மையில் வடமொழி ஆதிக்கத்தைத் தமிழர்மீது ஏற்றித் தமிழர் அடிமைத்தனத்தைப் பெருக்கும் செயலே யன்றி வேறன்று என்று காண்பது அரிதன்று. (இ) பிறமொழி கற்றுத் தேர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதனால், பிற தாய்மொழியாளர்களைவிடத் தாங்கள் இனஉயர்வு, குடிஉயர்வு அல்லது பண்பாட்டு உயர்வு உடையவர்கள் என்று கருதி, அவ்வுணர்ச்சியைப் பிறர்க்கு அப்பிறமொழித் திருத்த நடிப்பால் குறித்துக் காட்டுபவர் பல நாடுகளிலும் உண்டு. இங்கிலாந்தில் பிரஞ்சு மொழி இவ்வாறு பண்பாட்டு உயர்வுக்குச் சின்னமாகவும், ஐரோப்பாவெங்கும் அதுபோலவே இலத்தீன் மொழி நாகரிக வகுப்பு உயர்வுக்கு அறிகுறியாகவும், இந்தியாவில் வடமொழி இவ்வெல்லா வகை உயர்வுக்கும் உரிய குறியீடாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆயினும், ஆங்கிலப் பொதுமக்களிடையே உயர் குடிப்பண்பாளர் செருக்குடன் பசப்பிக் காட்டும் பிரஞ்சு மொழித் திருத்தம் எப்போதும் பிரஞ்சுத் தாய்மொழி மக்கள் கேட்டால் சிரிக்கும் படியாகத்தான் இருக்கும். ஆனால், பிரஞ்சு மொழியைப்போல இலத்தீனும் வடமொழியும் தாய்மொழிகளல்ல. எனவே, பொது மக்களிடையே உயர்வு கொண்டாடுபவர்களைக் கண்டு சிரிக்க அம் மொழிகளுக்குரிய மக்கள் யாரும் கிடையாது. முற்றத் துறைபோன ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே அதுகேட்டு நகையாட முடியும். இலத்தீன் பல்கலைக் கழகங்களின் வடமொழிப் பேராசிரியரது வடமொழி உச்சரிப்பு இவ்வாறு கேலிக்கிடமாய்ப் புதிய சூழல்களில் அமைவதுண்டு. வடமொழிப் பேராசிரியராயிருக்கும் வெள்ளையரின் எழுத்துகள் மதிப்புப் பெறும் அளவு அவர்களது ஒலிப்பு மதிப்புப் பெறுவதில்லை. இந்தியாவிலேயே வங்காளிகள் வடமொழியை உச்சரிக்கும் முறை, பிறமொழி நிலத்தார் கண்டு ‘ இஃது என்ன விசித்திரப் புரியாமொழி’ என்று மலைக்கும்படியாகவே உள்ளது. இந்த நிலையில் அவ்வம் மொழியில், அம்மொழியைக் கையாளும் புலவர் தாம் திருத்தத்தை ஓரளவு பேச்சிலும் எழுத்திலும் மேற்கொள்ளுதல் ஏற்புடையதாகும். ‘தமிழிலே வடமொழி’ எனத் திருத்தும் - எழுத்துத் திருத்தம் பேணுபவர் பெரும்பாலும் தமிழிலும் நாளடைவில் அறிவு குன்றி அந்த வடமொழியிலும் தம் அறியாமையை அறிவென்று தருக்கித் திரிபவராகவே அமைவர். (ஈ) மிகப் பல தறுவாய்களில் இத்திருத்த முயற்சியே கேலிக்குரிய வகையில் இரு மொழிகளையும் கொலை செய்யும் பெரும் பிழையாகவும் அமைகிறது. இதற்கு இரண்டு சான்றுகள் இங்கே காட்ட விரும்புகிறோம். சென்னையில் ஒருசில ஆண்டுகளுக்குமுன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில், ஒரு தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் தமிழ்க் கவிதை பற்றிச் சொற்பொழிவாற்றி வந்தார். தொல்காப் பியரின் எட்டு மெய்ப்பாடுகளையும் வடமொழியாளரின் ஒன்பது சுவைகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தார். மெய்ப்பாடுகள் அல்லது சுவைகளில் தலைசிறந்தது பரிவு அல்லது கருணைச் சுவையே என்று தக்க சான்றுகள் காட்டினார். ஆனால், சுவை ஆராய்ச்சி யிலிருந்து அவர் திடுமெனக் கடவுள் ஆராய்ச்சிக்குக் குதித்தார். கடவுள் கருணை உருவினராய்ப் பத்தர்களால் சிறப்பிக்கப் படுவதன் காரணம் இக் கருணைச் சுவையின் தலைமையை உணர்த்துவதாகும் என்று முடித்தார். வடமொழியில் எழுத்தாலும், சொல்லிய பொருளாலும் கருணம், கருணையினின்று வேறுபட்டது என்பதை அவர் அறியவில்லை. இதை ஒருவர் சுட்டிக் காட்ட நேர்ந்தபோது, தம் வடமொழி அறிவைப் பெருமையுடன் பகட்டிக் காட்டவந்த எழுத்தாளர் வெட்கித் தலைகுனிய நேர்ந்தது. இரண்டாவது சான்று, நாம் எடுத்துக்கொண்ட செய்திக்கு இன்னும் பொருத்தமுடையது. ‘ஈசுவரன்’, ‘சாசுவதம்’ முதலிய வடமொழிச் சொற்களை நாம் இங்கே எழுதியபடியே தமிழ் எழுத்துகளில் எழுதுவதுதான் கலப்புத் தமிழாளரிடையேகூட மிகப் பெரும்பாலான வழக்கு. இது நன்னூல் முதலிய இலக்கண ஏடுகளின் வடமொழி ஆக்க விதிகளின்படி அமைந்தது. தமிழிலுள்ள ஒரு ‘ச’கரம் வடமொழியிலுள்ள நான்கு ‘ச’கரங்களுக்கு மட்டுமின்றி இடை எழுத்துகளின் இறுதியாகச் சேர்க்கப்பட்ட ‘ச’கரத்துக்கும் இறுதி வரியில் சேர்க்கப்பட்ட இரு ‘ச’கரத்துக்கும் (ஷ,ஸ) பொதுவாகும். இலக்கண விதிப்படி வடமொழிச் சிறப்பு எழுத்துகளைப் பொது எழுத்தாக்கி, ஒலி மயக்கங்களைத் தமிழுக்கு ஏற்றவாறு இடையே உயிர் எழுத்துகள் சேர்த்து இத்தமிழ் ஆக்கங்கள் அமைந்தன. ‘ஈசுவரன்’, ‘சாசுவதம்’ ஆகிய இரு சொற்களிலும் இரண்டாம் எழுத்தாய் வரும் ‘ச’கரம் வடமொழியின் ஈறாகிய ‘ச’கரமேயாகும். ஆனால், சமற்கிருதப் பற்றாளர் இதனை வட மொழி மரபுக்கியைந்த திருத்தமாக எழுத முற்படும் முயற்சியில் பெரும் பிழைகளும், குளறுபடிகளும் சூழ்கிறார்கள். திருத்தம் நாடும் வடமொழிப் பற்றாளரின் ஒரு சாரார் ‘ஈசுவரன்’, ‘சாசுவதம்’ என்பதற்குப் பதிலாக இடையிலே தமிழ் மரபுக்குரிய உயிர் சேர்க்காமல் ‘ஈச்வரன்’, ‘சாச்வதம்’ என்று எழுதுகின்றனர். இதனால் ஏற்படும் தவறுகள் பல. முதலில் தமிழ்மரபுக்கு ஒவ்வாத மெய்மயக்கம் இங்கே ஏற்படுகிறது. அதுமட்டுமன்று, தமிழ்மரபில் எழுதும்போது வடமொழியின் ‘ச’கர ஒலி மரபு கெடவில்லை. இங்கே வடமொழியின் ஒலி மரபு கெட்டு, ‘ச’கரம் வடமொழியில் முதற் ‘ச’கரம் போல ஒலிக்கிறது. இதனால் ஏற்படும் மற்றொரு பிழை உண்டு. அது தமிழ்மரபு கெடுப்பது மட்டுமன்று. வடமொழிமரபும் கெடுப்பது. முதற் ‘ச’கரமும் ‘வ’கரமும் இணைந்த மெய்மயக்கம் எப்படித் தமிழ்மரபுக்கு அயலானதோ அவ்வாறே, வடமொழிமரபுக்கும் அயலானது. வடமொழியிலும் அவ்விரு மெய்களும் மயங்குவ தில்லை. ஆகவே, இத் திருத்தம் இரு மொழிகளின் எழுத்து, ஒலி, மரபு ஆகிய மூன்றையும் பிழைபட வைத்து இரு மொழிக் கொலை யாகிறது. இன்னும் ஒரு சாரார் பொது வெழுத்தாகிய இத்தமிழ் ’ச’கரத்திற்குப் பதிலாக, புதிதாக இப்போது புகுத்தப்படும் எழுத்துகளுள் ஒன்றான ஈற்று வரியின் இரண்டாவது ‘ச’கரத்தை (ஃச=ஸ) பயன்படுத்தி (ஈ°வரன், சா°வதம் என்று) எழுதிவிடுகிறார்கள். இங்கே தமிழ் மரபும் தமிழ் இலக்கணமும் தவறுவதுடன் தவறு நிற்கவில்லை. வட மொழியின் மூல எழுத்தும், ஒலியும், மரபும் யாவும் தவறி, எழுத்து மாற்றமே ஏற்பட்டுவிடுகிறது. தமிழக வடமொழிப் பற்றாளர் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் திருத்தத்தை, உண்மை வடமொழிப் பற்றுடைய வடவர் கண்டால், ஒன்று எள்ளி நகையாடுவர்; அல்லது வடமொழிக் கொலை கண்டு சீறுவர். ‘சங்கரன்’ என்ற வடமொழிச் சொல் இடையின ஈற்றெழுத்தாகிய ‘ச’கரத்தையே முதல் எழுத்தாக உடையது. இது சைவர் வழிபடும் முழுமுதற் கடவுள் பெயராகிய சிவ பெருமானைக் குறிப்பது. மேற்குறிப்பிட்ட இரண்டாவது வகைத் திருத்த முறைப்படி புதிய புகுத்தீட்டு ‘ச’கரங்களில் ஒன்றை வழங்கி அதைத் தமிழில் எழுதினால், மேற்குறிப்பிட்ட ‘ஈ°வரன்’, ‘சாசுவதம்’ ஆகிய சொற்களில் ஏற்படும் எல்லாப் பிழைகளுடன் பொருட் பிழையும், பொறுக்க முடியாத கடவுள் நிந்தனைச் சீற்றமும் ஏற்பட்டுவிடுகிறது. ஏனெனில், மூல வடமொழியிலும் பொது எழுத்துடன் எழுதப்படும் தமிழ் வடிவிலும் இரண்டிலும் அது சிவபெருமானைக் குறிக்க வழியுண்டு. மாறுபட்ட புதிய புகுத்தீட்டு எழுத்துடன் எழுதப்படும் திருத்த வடிவிலோ, அது தகாக் கலப்பினப் பிறவி அல்லது கீழ்மகன் என்ற பொருளை மட்டுமே தரமுடியும். இது பெரும் பொருட் பிழைபாடு மட்டுமல்ல, சமய வாணர்களைப் பெரிதும் புண்படுத்தும் செயலும் தெய்வ நிந்தனையு மாகும். உண்மையில் வடமொழிப் பற்றாளர் கூறுகிறபடி வடமொழிச் சொற்களைத் தமிழில் திருத்தமாக எழுதவேண்டு மானால், தமிழ் ஆட்சி மொழிக்குக் குறிப்பிடும் நான்கு வடமொழி எழுத்துகளை (ஷ,ஜ,ஸ,ஹ) மட்டும் தமிழில் எடுத்துக் கொண்டால் போதாது. இதனை நாம் மேலே எடுத்துக் காட்டிய ‘ஈசுவரன்’ ‘சாசுவதம்’, ‘சங்கரன்’ ஆகிய சொற்களின் திருத்த முயற்சியால் விளைந்த குளறுபடிகளே நன்கு எடுத்துக்காட்டும். புகுத்தீடு செய்யும் நான்கு எழுத்துகளை ஆறு எழுத்துகளாக, எட்டு, பத்து எழுத்துகளாகப் பெருக்கினாலும், வடமொழியைத் திருத்தமாக எழுதப் பயன்படமாட்டா. இது வடமொழிப் பற்றாளர் அறியாததன்று. நாலு எழுத்துப் புகுத்தீடு வெற்றி கண்டுவிட்டால், பின் அம்முறையே நாற்பதும், நானூறு படிப்படியாய்ப் புகுத்தி, தாய்மொழி வாழ்வை, வடமொழி வாழ்வாக மாற்றிவிடலாம் என்பதே அவர்கள் தொலையறிவும், இனப்பொறுமையும் மிக்க நப்பாசை-ஆயிர இரண்டாயிர ஆண்டுகளாக அவர்கள் உள்ளத்தில் ஊறி இருந்துவரும் இன ஆவல்-இன்னும் ஆயிர இரண்டாயிர ஆண்டுகளானாலும் மறவாது அடுத்தபடிகளில் முன்னேறும் வியத்தக்க குழுநல அவா! முழுத்திருத்தம் ஏற்படத் தமிழில் இல்லாத வடமொழி எழுத்துகள் அத்தனையும் மொத்தமாக இறக்குமதி செய்யப் பட்டாதல் வேண்டும். இதுவே வடமொழிப் பற்றாளர் இன அவாத் திட்டத்தின் முழுமையான இரண்டாம் படியாகும். அதன் சிறு கூறே, முளை முகமே, ஒட்டக மூக்கே ‘நாலு எழுத்து’‘ப் புகுத்தீடு. எல்லா வடமொழி எழுத்துகளையும் தமிழில் புகுத்தீடு செய்வதே வடமொழிப் பற்றாளர் முழுத் திட்டத்தின் இரண்டாம்படி என்பதைப் பெரும்பாலான தமிழர் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமையே இத்தகைய புகுத்தீடுகள் படிப்படியாக வெற்றியடைவதற்குரிய மறைதிறவும் ஆகும். அயற் பண்பாட்சியில் தமிழ்ப் பற்றுடைய அறிஞர், சிறப்பாகப் பிறமொழிப் பயிற்சியால், அல்லது பற்றால் உயர்வுற்ற அல்லது மதிப்புப் பெற்ற அறிவாளிகள் மிகச் சிலராகவே இருப்பர். அவர்கள் விளக்கத்தின் பின்னும் பலர், மொத்த இறக்குமதி ஒரு நீண்ட காலத்திட்டம் என்பதை ஏற்கத் தயங்கவே செய்வர். வட மொழிப் பற்றாளரும் தம்மைப் போன்ற உள்நோக்கமற்ற தமிழரே என்ற எண்ணத்தால், ஒரு சிலர் அவ்வடமொழிப் பற்றாளருடன் சேர்ந்து அத்தகைய திட்டம் கிடையவே கிடையாது என்று மறுக்கவும் துணிவர். ஆனால், இத்தனை வகையினரும் தமிழக எல்லை கடந்து பார்வையைச் செலுத்தினால், அத்திட்டத்தின் மெய்யுருவைக் கண் முன்னேயே காணலாம். தமிழ் தவிர, மற்றெல்லாத் தமிழினஞ் சார்ந்த தென்னக மொழிகளிலும் வட மொழிச்சொல் புகுத்தீட்டுப்படி போலவே, வடமொழி எழுத்துப் புகுத்தீட்டுப்படியும் முற்ற முழுக்க வெற்றியடைந்து விட்டன- இன்றல்ல, ஆயிர ஆண்டுகட்கு முன்னரே வெற்றியடைந்து விட்டன! மொழியாராய்ச்சித் துறையில் நுணுகி நோக்கினால், வட மொழியின் இவ்வெழுத்துப் புகுத்தீட்டுப்படி தென்னகத் தமிழின மொழிகளில் மட்டுமல்ல, தென்கிழக்காசியத் தாய்மொழிகள் பலவற்றிலும் வெற்றிகரமாகியுள்ளது என்பது தெரியவரும். சிங்கள மொழியிலும் பாளியிலும், பாகதங்களிலும் கி.பி.5ஆம் நூற்றாண்டுக்குள்ளாகவும் கன்னட தெலுங்கு மொழியில் (பண்டை வடுக மொழியில்) கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னும், மலையாள மொழியிலும், வட இந்தியத் தாய் மொழிகளிலும் கி.பி. 12ஆம்நூற்றாண்டுக்குப் பின்னுமே இப்புகுத்தீடு முற்றுப்பெற்றது. திருத்த நோக்கத்துடன் நாலு எழுத்துகளை இவ்வாறு புகுத்தீடு செய்வதைத் தமிழர் எதிர்த்துத் தடுத்து நிறுத்தாது, வாளா மதியாது இருந்தால் ஊசிச்சுமை நாளை உலக்கைச் சுமையாகவும், உலைக்கூடச் சுமையாகவும் வளர்வது உறுதி. ஏனெனில் வட மொழிப்பற்றாளர் முழுநோக்கு, முழு எழுத்து இறக்குமதியுடன் நிற்பதல்ல. இவை முற்றுப்பெற்று முடிந்தமைந்த பின், இலக்கண இலக்கியங்களிலும் முழுதும் வடமொழிச் செல்வாக்குக் கொண்டு வரப்பட்டு, பிற தாய்மொழி வாழ்வுகள் போலவே, தமிழும் மீண்டும் ஒரு புதிய ‘வடமொழி’, அதாவது பேசா இலக்கிய மொழிக்கு இடம் தந்து வடநாட்டுத் தாய்மொழிகள் போலப் பண்படாத் தாய் மொழியாய் நலிதல் உறுதி. இது உண்மையில் போதிய தொலை நோக்குடைய வடமொழிப் பற்றாளர்க்குக்கூட நன்மையல்ல. ஏனெனில், இன்றும் ஒரு சமற்கிருத இலக்கியம் வடநாட்டின் கோடிக் கணக்கான மக்கள் தாய் மொழிகளுக்கு ஆயிரக் கணக்கான ஆண்டு இலக்கியமில்லாக் குறையைப் போக்க உதவாது! வடநாட்டு வரலாற்றின் இப்பெருங் குறையை-கறையை-வரலாற்றாசிரியர் புறக்கணித்தாலும் தேசியவாதிகள் எளிதில் தள்ளிவிட முடியாது. இரண்டாவதாக, வடமொழிச் சொற்கலப்பையோ, எழுத்துப் புகுத்தீட்டையோ எதிர்ப்பவர்களை வாதத்தால் தம் பக்கம் ஆக்க முடியாதபோது; வடமொழிப் பற்றாளர், அவர்களுக்கு மொழி வெறுப்பாளர், இனவேற்றுமையாளர், வேற்றுமை மனப்பான்மையுடையோர், சாதிப் பகைவர் என்பன போன்ற பெயர்களைக் கூறிப் புறக்கணித்துவிட்டு, அவர்கள் ஒத்துழைப்பில்லாமலே தம் திட்டங்களை வெற்றிகரமாக்குவதில் முனைவர். ஏனென்றால், கீழ்த் திசையில் நெடுங்காலமாக உள்ள சூழ்நிலையில், சிந்தனை செய்பவர்களையோ, இனப்பற்றாளர் களையோ அவர்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. வடமொழிப் பற்றாளர்களை ஆதரித்து அவ்வடமொழிப் பற்றாளர்கள் ஆதரவையே நம்பி வாழும் அயல் ஆட்சி, அயல் பண்பாட்சிகள் ஒருபுறம், எவரையும் பொருட் படுத்தாது செயல் திட்டங்களை நிறைவேற்றக் காத்திருக்கின்றன. மற்றொரு பக்கம் மக்கள் அறியாமை அவர்களுக்குக் குடிமக்கள் பற்றிய கவலையில்லா நிலையை உண்டு பண்ணுகிறது. இவ் விரண்டுக்குமிடையே சிந்தனையாளர், இனப்பற்றாளர் தோற்றுவதும் அரிது. தோற்றினாலும் வளம் பெறுவது, உயர்வது, மதிப்புப் பெறுவது அரிதினும் அரிது. அவ்வாறு தப்பித் தவறிப் பிறமொழிப் பற்றாலோ அறிவாலோ உயர்ந்து சிந்தனையும், தனி மதிப்பும் இழவாதவராயிருந்தால் கூட, தன்னல மறுத்துத் தம் உயிரையும் பணயம் வைத்து அழிந்துபடச் சித்தமாயிருக்கும் பொறுக்கிய சிலர் தவிர, ஏனையோரை வடமொழிப் பற்றாளரும், ஆட்சியும்; நயத்திலும், பயத்திலும், சூழ்ச்சியிலும், பசப்பாலும் வென்றுவிடல் எளிது. மீந்தவர்களை அழிக்கவோ, ‘மகாத்மா’ க்களாக உயர்த்திப் பொதுமக்களிடமிருந்து துண்டு படுத்தி விடவோ, இரண்டும் தவறினால் பிரச்சாரத்தால் பொது மக்களிடம் அவர்களை மொழி வேற்றுமையாளர், இன வேற்றுமையாளர் என்று தூற்றிச் செல்வாக்கிழக்க வைக்கவோ செய்துவிடுதல் எளிது. ஆசிரியர் மறைமலையடிகள் கால முதல், தமிழர் மறுமலர்ச்சி எய்தியுள்ளனர். அதுமுதல் இச்சூழ்நிலைகள் ஓரளவு மாறியுள்ளன. ஆனால், தமிழர் விழிப்பாயிருந்து வடமொழிப் பற்றாளர்களைப்போலவே நீண்டகாலத் திட்டமிட்டுத் தாய் மொழியின் வழி சென்றுவிடல் நேரிடும். அவ்வழி, நெடுந் தொலை சென்றுவிட்ட தமிழின மொழிகளையும் மீளா அடிமைகளாகவே விட்டு விடும் நிலை ஏற்படும். வடமொழி எழுத்துகள் புகுத்தீட்டையோ, அதை உள்ளடக்கிய நீண்டகாலத்திட்டத்தையோ, அதன் கூறு களையோ எதிர்க்கும் தமிழ்ப் பற்றாளர், தமிழினப் பற்றாளர்கள் மொழி வேற்றுமை, இன வேற்றுமை, சாதி வேற்றுமை காட்டுபவர்கள் என்ற குற்றச்சாட்டை தமிழர் பலர் வெறும் வசவு தான் என்று மதியாமல் விட்டுவிடுகின்றனர். இது தவறு. இக்குற்றச்சாட்டு அறிஞரை அறிஞர் எதிர்க்கும் வாத எதிர்வாதக் குற்றச்சாட்டன்று. அரசியல் வழக்கு மன்றத்தில் சட்டப்படி முறையிடப்படும் குற்றச்சாட்டுகள்கூட அல்ல. முதலதற்குத் தண்டனை கிடையாது. தண்டனையிலிருந்து மீளும் வகை யுண்டு. இரண்டாவது தண்டனைக்குரியது. ஆனால், அது தற்காலிகமான தண்டனையே. அத்துடன் அது குற்றம் சாட்டப்பட்டவரை மட்டுமே தாக்கும். மூன்றாம் வகையான இக் குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடம் பிரச்சார வடிவில் செய்யப்படுபவை என்றும் உயர்நீதி மன்றங்கள், அரசியல்கள் யாவும் கடந்த உயர்நீதி மாமன்றம், அரசியல் கடந்த இன மாமன்றத்திலேயே இம்முறையீடும் இத்தண்டனையும் நடைமுறைக்கு வருகின்றன. சரியாகவோ தவறாகவோ, நியாயமாகவோ, அநியாயமாகவோ, இம் மன்றத்தில் அறிஞர், சிந்தனையாளர், இனத்தொண்டர் தண்டிக்கப்பட்டால், அத்தண்டனையில் பாதிக்கப்படுவது ஓர் அறிஞனல்லன், ஒரு சிந்தனையாள னல்லன்; இனப்பற்று, இனப்பற்றடிப்படையான சிந்தனையோ, தமிழினத்தின் உரிமைத் தன் மதிப்பு! தமிழ்ப் பொதுமக்கள் முன்னிலையில் தமிழே தண்டிக்கப் பட்டுவிடுகிறது. இத்தண்டனை குற்றஞ்சாட்டப்பட்ட இனப்பற்றாளரையும், இனப்பற்று மரபையும் குற்றஞ் சாட்டப்பட்ட இனத்தையுமே-நாளடைவில் அழிப்பதாகும். தமிழினத்தவராகிய மலையாளிகள், கன்னடியர், தெலுங்கரில் பலர்- பெரும்பாலும் பாமர மக்கள், தாம் தமிழினத் தவரல்லர் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்-வரவிழைகின்றனர் என்பதைத் தமிழர் கவனித்தால், இதன் கோர உண்மை விளங்கும். வட மொழிப் பற்றாளர் போக்கில் தமிழகம் சென்றால், தமிழரே தமிழ்ப் பகைவராகித் தமிழை மறுத்துவிட நேர்தல் கூடும். வடமொழிப் பற்றாளரின் பல மாய வடிவங்களை அலசிக் காட்டி எதிர்க்கும் தமிழ் இனப்பற்றாளர், இனவேற்றுமை யாளர்களா? இதைப் பொதுமக்கள் நன்கறிய விளக்குதல் ‘தமிழினம் வாழ’ இன்றியமையாத நடவடிக்கை ஆகும். இனவேற்றுமை, இனப்பகைமை கூடாது என்பது பொன்னான நீதி. இனம் இனத்தை ஆளும்போது, இனம் இனத்தின் உரிமையைப் பறிக்கும் போது, அந்த ஆட்சியும் கொள்ளையும் எவ்வளவு நயநாகரித்துடன், எவ்வளவு தற்காலிக நலங்களின் பசப்புடன் நடைபெற்றாலும் ஆதிக்க இனத்தை ஆட்பட்ட இனம் எதிர்க் காமலிருக்க முடியாது; இருக்கக்கூடாது. மொழிவகை யிலும் இது போலவே பொதுவாக மொழிவேற்றுமை, மொழிப்பகைமை கூடாது. ஆனால், ஆதிக்க மொழிகளை வெறுப்பதும், பகைப்பதும் மொழிப் பற்றாளர், தம் மொழிக்குச் செய்யவேண்டிய இன்றியமையாக் கடமைகளுள் ஒன்று. ஆதிக்க மொழிகளின் ஆதிக்கம் ஒழியும் வரை, அவ்வாதிக்க மொழிகளை மொழிப் பற்றாளர் உயிர் கொடுத்தும் வெறுத்துப் பகைத்து எதிர்த்துப் போராடியாதல் வேண்டும். பிரிட்டன்மீது வேற்றுமை வெறுப்பு உணர்ச்சிகளும், பகைமையும் தூண்டுகிறார் என்று காந்தியடிகள்மீது பிரிட்டன் இந்திய நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்ட சமயம், அவர் கூறியது இதுதான்; “பிரிட்டன் இந்தியாவை ஆளும்வரை அதைப் பகைப்பது, வெறுப்பது - பகைக்கத் தூண்டுவது - என்கடமை; பிறப்புரிமை. அதற்காக என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக் கொள்ளுகிறோம். ஏனெனில், அடிமையாட்சி; தண்டனையை விட, உயிரைவிட, இனஅழிவை விடக்கூட மோசமானது.” தமிழர் என்றும் இனவேறுபாடு, மொழிவேறுபாடு, நாட்டு வேறுபாடு கூடக் காட்டியதில்லை. இன்றும் காட்டுவதில்லை, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும், ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்றும் அவர்கள் அன்றுமுதல் இன்றுவரை சொல்லாலும், கருத்தாலும், செயலாலும் கொள்கை யாக மேற்கொண்டு நடப்பவர்களே. ஆனால், இந்த உயரிய கொள்கையைத் தகாத இடங்களில் - ஆதிக்க இடங்களிடமும் ஆதிக்க மொழிகளிடமும் காட்டியதனாலேயே, அவர்கள் இன்று நாடிழந்து, ஏடிழந்து, மொழியிழந்து, தன்மதிப்பிழந்து அடிமைகளுக்கும் கால்பிடிக்கும் கொத்தடிமைகளாக, நாடற்ற அகதிகளாகத் திரிய வேண்டியதா யிருக்கிறது. மொழிப் பகைமை கூடாது என்று வடமொழிப் பற்றாளர் பொதுப்படையாகக் கூறினாலும், அவர்கள் உள்ளத்தில் கருதுவதும் வலியுறுத்தி ஆர்வமாக ஆதரித்துப் போராடுவதும் வடமொழி, இந்தி போன்ற ஆதிக்க மொழிகளையே யன்றி மற்ற மலையாளம், தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளையன்று. ஆதிக்க மொழிகள் தவிர, வேறு எவற்றிலும் அவர்களுக்கு அவ்வளவு உள்ளார்ந்த பற்று ஏற்படுவது இல்லை. ஏனெனில், ஆதிக்கம் விரும்பும் இனத்தவராகிய அவர்களுக்கும் ஆதிக்க மொழிகளுக்கும் இன்றியமையாத் தொடர்பு எப்போதும் உண்டு. அவர்கள் ஆதிக்கக் குழு நிலத்தை என்றும் ஆதிக்க மொழிகள் பேணுவதுபோல, தேசிய - அதாவது மக்கள் தாய்மொழிகள் பேண முடியாது. ஆகவே, அவர்கள் எதிர்க்கும் பகை மட்டுமே, அந்த ஆதிக்க மொழிகளிலும் தங்கள் குழுநலத்துக்கு உகந்த ஆதிக்க மொழியாகிய வடமொழிப் பகைமையை அவர்கள் எவ்வளவு ஆர்வமாக எதிர்ப்பார்களோ அவ்வளவு ஆர்வமாக அக்குழுநலத்துக்கு அதே அளவு ஒவ்வாத பிறமொழிப் பகைமைகளை அவர்கள் எதிர்ப்பதில்லை. இதற்குச் சில சான்றுகள் காட்டலாம். ஆங்கிலம், இந்தியைப் போலவும், வடமொழியைப் போலவும் ஆதிக்க மொழியேயாகும். ஆனால், ஆங்கிலத்தின் ஆதிக்கம் அரசியல் ஆதிக்கம் மட்டுமே. ஆங்கிலமும் ஆரிய இனமொழியேயானாலும் அஃது இனம் கடந்து வளர்ந்து விட்டது. ஆங்கில ஆட்சித் தொடக்கத்தில் வடமொழிப் பற்றாளர் ஆங்கிலக் கல்வியில் நெடுந்தொலை முந்திக்கொண்ட அளவுக்கு ஆங்கில ஆதிக்கமும், அவர்கள் குழுநலமும் இனநலமும் தற்காலிகமாக இணைந்தன. வடமொழிப் பற்றாளரே ஆங்கில ஆட்சியின் ஆட்சி வகுப்பாய் அமைந்தனர். ஆனால், ஆங்கிலம் நிலையாக அக் குழுநலத்துக்கும், இனவேறுபாட்டுக்கும் உதவவில்லை. பாமர மக்களில் பல்வேறு வகுப்பினரும் படிப்படியாக அதைக் கற்று ஆட்சி வகுப்பினரின் இடத்தில் சிறிது சிறிதாகப் பங்கு பெற்றனர். ஆங்கிலப் பற்று இந்தியப் பற்றாக எளிதில் மாறியதற்கும், இந்திக்கு வடமொழிப் பற்றாளரும், அவர்கள் தலைவர்களும் ஆச்சாரியாரான ஆட்சி வகுப்பின் தலைவரும் முந்திக் கொண்டு முனைத்த ஆதரவு தந்ததன் காரணம் இதுவே. இந்தி புதிய ஆட்சி மொழி. ஆங்கிலத்தில் முந்திக்கொண்டதுபோல அதில் வடமொழிப் பற்றாளர் எளிதில் முந்திக்கொள்ள முடியும். அத்துடன் பெயரளவில் ஆரிய இனமொழியாகிய ஆங்கிலம் போலன்றி, அது நேரடியாக வடமொழித் தொடர்பும் உடையது. தவிர, தமிழை, வடமொழி மயமாக்குவதைவிட இந்தியை வடமொழி மயமாக்கு வது எளிது. வடவர் ஏற்கெனவே வடநாட்டுப் பொதுமக்கள் கண்களிலும் பொடியைத் தூவிக்கொண்டு அதை விரைந்து செய்து வருகின்றனர். வடமொழி மயமான ஆட்சிமொழியின் ஆதிக்கம், தமிழையும் தென்னக மொழிகளையும் இன்னும் விரைந்து வடமொழி மயமாக்க உதவும். இக்காரணங்களாலேயே ஆங்கிலத்தை விட்டு விட்டோ, ஆங்கிலத்துடன் சேர்த்தோ இந்திக்கு அவர்கள் ஆதரவு தர விரைந்துள்ளனர். ஆயினும், இந்தியும் ஆங்கிலத்தைப்போல ஒரு தாய்மொழி. அது மட்டுமன்று. ஆங்கிலம் ஆங்கில நாட்டு மக்களுக்கே தாய்மொழி, ஆங்கில நாட்டு மக்கள் இந்தியருடனோ, தென்னக மக்களுடனோ போட்டியிடுபவர்கள் அல்லர். அப்போட்டியில் வட மொழிப் பற்றாளர்க்கே முழு இடம் விட்டுவிடுபவர். தென்ன கத்தில் முதன்மையும், இந்தியாவில் அதற்குகந்த சூழலும் இருக்கும்வரை ஆங்கிலேயர்க்கு இந்தியரை அடிபணிய வைத்துத் தாம் அருகே கங்காணிகளாய் அதிகாரம் செய்து பசப்பி வாழ்வதில் அவர்களுக்குச் சிறிதும் தடை கிடையாது. ஆனால், இந்தி தொடக்கத்தில் ஆங்கிலம்போல அவர்கள் குழுநலம் பேணினாலும், நீடித்து வடமொழி ஆதிக்கத்துக்கும் உதவக் கூடுமானாலும், இந்தியாவிலேயே ஒரு பெரும்பான்மை யான பகுதி மக்களின் தாய்மொழி ஆகும். ஆகவே, அது நாளடைவில் தென்னக ஆதிக்கத்தில் வடமொழிப் பற்றாளர் களுடன் வடஇந்தியரும் போட்டியிட, போட்டியில் முந்திக் கொள்ள இடந் தந்துவிடும். இந்தியைத் தென்னகத்தில் புகுத்திய வடமொழிப் பற்றாளர் பெருந்தலைவர் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியர் இதனை உணரத் தொடங்கியதன் பின்னரே இந்தி எதிர்ப்பாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலமும் வேண்டா, இந்தியும் வேண்டா; வடமொழி யாளட்டும் என்ற குரல், தன்னாட்சி இந்தியாவில் வளர்ந்தே வருகிறது என்பதில் ஐயமில்லை. அவ்வளர்ச்சியின் அளவை நாட்டு மக்கள் இன்னும் சரிவர உணர்ந்த கொள்ளவில்லை. ஏனெனில், அது மூன்று தனித்தனிக் கிளைகளாக, தொடர் பற்றதாகத் தோற்றும் மூவேறு வடிவங்களில் இன்று வெறியாட்டமாடுகின்றது. இவற்றுள் முதல் கிளைதான் நேரடியாக வடமொழி இந்தியாவின் ஆட்சிப் பொது மொழியாக ஆதல்வேண்டுமென்ற கோரிக்கை. இதன் பரப்புச் சிறிதானாலும், இது கல்வி நிலையங்களிடையேயும் வடபுலப் பொது மக்களிடையேயும் எதிர்பாராத, வெளிப்படையாகத் தெரியாத வளர்ச்சியடைந்து வருகிறது. அரசியல் கட்சியாகிய காங்கிரசு இந்தித் திட்டத்தில் கட்டுப்பட்டிருப்பதனால், இதற்கு நேரிடையான ஆதரவு தரவில்லை என்பதுண்மையே. ஆனால், திரைமறைவிலும், வெளிப்படை யாகவும் இந்தியையே வடமொழி மயமான இந்தி ஆக்கி வருவதன் மூலமும், கல்வித்துறையிலும், கலைத்துறையிலும் வடமொழிக்குப் புத்துயிர் தரும் இடங்களுக்கு ஆதரவு தருவதன் மூலமும் அது இரு வேறு துறைகளின் மூலம் வடமொழி ஆதிக்கத்துக்குக் கடைக்கால் வகுத்து வருகிறது. வடமொழிப் பற்றாளர்கள் ஆதரவை எதிர்பார்த்து, அரசியலே நான்கு எழுத்துகளைத் தமிழர்மீது புகுத்த முன்வந்துள்ள இன்றைய நிலை மேற்கூறிய அரசியலாரின் முகமூடிச் செயலின் ஒரு பகுதியேயாகும். அது மொழி, கலை, பண்பாடு, இலக்கிய, இலக்கணத் துறைகளில் ஆதிக்கம் நாடி, நீடித்து உலவிவரும் வடமொழிக்கும், அதன் புத்துருவாக அரசியலில் ஆதிக்கம் நாடிவரும் இந்திக்கும் வலுத்தந்து; தமிழ், தமிழர், தமிழினம், தமிழகம் ஆகியவற்றின் வலுவையும், உள்ளுரத்தையும், உயிர்ப்பாற்றலையும், வளர்ச்சியையும் கெடுப்பதாகும். தமிழர் தன் மதிப்பையே புண்படுத்துவதாகும். இத்தகைய நூலேணிக்கு அடிமையான உண்டை நூலை, விருந்தாளியாக வந்து வெளியேற்ற வகை செய்யும் ஒட்டக மூக்கைத் தமிழர் தம் முழுமூச்சுடன் ஒன்றுபட்டு எதிர்த்தாதல் வேண்டும். இன்றேல் அழிவுக் குழியில் மெல்லப் படியெடுத்து வைப்பவர்கள் ஆவர். ‘மொழிப் பகைமை கூடாது’ என்றும், ‘பிறமொழிப் பகை கூடாது’ என்றும் வடமொழிப் பற்றாளர் மொழி பற்றிப் பொதுவாகவே கூறுவர். ஆனால், அவர்கள் மனத்தில் குறித்த பிறமொழி, வடமொழி மட்டுமே. அவர்கள் அறிவுரைக்கு ஆளாவதும், தமிழ் மொழியும், தமிழரும் மட்டுமே. இதை நாம் எளிதில் காணலாம். தமிழில் திருத்தத்துக்காக, தமிழில் இல்லாத வடமொழி எழுத்துகள் தேவையானால், அதுபோலவே ஏனைப் பிறமொழிகளின் சிறப்பெழுத்துகளும் தமிழிலும், வடமொழி போன்ற மொழிகளிலும் தேவைப்படுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் ஃவ(கு), ஃய(ஷ்), உஅ(று), முதலிய பல ஒலிக் குறியீடுகள் தமிழிலோ, வடமொழியிலோ, மலையாளம், தெலுங்கு முதலிய ஏனைய தெற்கு, வடஇந்தியத் தாய்மொழிகளிலோ இல்லாதவை. இவற்றை இம் மொழிகளில் புகுத்த யாரும் எண்ணியதில்லை. வடமொழிப் பற்றாளரும் அவற்றை நினைவூட்டக் கருதியது கிடையாது. இது மட்டுமோ? தமிழில் உள்ள ழகரம், றகரம், னகரம், எகரம், ஒகரம் ஆகியவை வடமொழியில் இல்லாதவை. முதல் மூன்றும் வடஇந்தியத் தாய்மொழிகளுக்கும் தற்கால கன்னட, தெலுங்கு மொழிகளுக்கும் புதுமையானவை. ஆனால், திருத்தம் கருதி இவ்வெழுத்துகளை இம்மொழிகளி லெல்லாம் புகுத்தீடு செய்யப்படுதல் வேண்டும் என்று, யாரும் கூற முன்வந்ததில்லை. வந்திருப்பினும், அவர்களை அம்மொழியாளர் மூளைக்கோளா றுடையவராகக் கருதுவரேயன்றி வேறன்று. ஆதிக்க மொழியாகிய வடமொழியிலிருந்து தமிழ்க்கு, அதே ஆதிக்க மொழியாகிய இந்தி மொழியிலிருந்து தமிழ்க்கு என்று சொற்புகுத்தீடும், எழுத்துப்புகுத்தீடும், வடமொழிப் பற்றாளர் உள்ளத்தில், மேலிருந்து கீழாக இறங்கி வருமே தவிர, வடவர் சுரண்டலுக்குரிய தமிழ் முதலிய மொழி களிலிருந்து, வடமொழிக்கு, இந்திமொழிக்கு அவர்கள் கற்பனையவாவில் ஏறிச் செல்வதில்லை என்று காணலாம். இது மட்டுமன்று. திருத்தத்தின் அவசியம், எழுத்துப் புகுத்தீட்டின் அவசியம் ஆகியவற்றைப் பற்றி, இந்திமொழியின் அனுபவம் தமிழகத்துக்கு நல்ல படிப்பினைகள் தருவதாகும். இந்தியை ஆதிக்க மொழியாக வரவேற்கும் அரசியலாரும், அரசியலாரின் தமிழ் ஆட்சி மொழிக் குழுவினரும், வடமொழிப் பற்றாளரும் இவற்றை ஒருசிறிதும் எண்ணிப் பாராதது வியப்புக்குரியதாகும். வடமொழியின் நான்கு சகரங்களுக்கும் உட்படாத ஐந்தாவது சகரம் தெலுங்கில் உண்டு. குற்றியலுகரம் துளுமொழியில் உண்டு. இவற்றைப் பிற தமிழின மொழிகளிலோ, வடமொழி வழங்கிய தாய் மொழிகளிலோ, மேலை மொழிகளிலோ புகுத்துவது பொருத்தமாகவே இருக்கும். ஆனால், வடமொழியாளர் கற்பனைகள் சமதளத்திலும் செல்லமாட்டா, ஏறிச் செல்லவும் மாட்டா தென்பதை இவற்றின் மூலம் காண்கிறோம். இலக்கிய இலக்கணமும், எழுத்து வடிவும் அற்ற, வெறும் பேச்சு மொழியாக இந்தி அண்மைக்காலம் வரை நிலவிற்று. இப் பேச்சுமொழி இந்தியையே, காந்தியடிகள் ‘இந்துத்தானி’ என்று பெயரிட்டு அழைப்பர். தனக்கென எழுத்தற்ற இந்த மொழியில், வடமொழிப் பற்றாளராகிய இந்துப் பண்டிதர்கள், வடமொழிச் சொற்களைப் பேரளவில் சேர்த்தனர். வடமொழி தேவநாகரி எழுத்து வடிவையே எழுத்து வடிவாகக் கொண்டனர். இந்த வடிவி லேயே, அது இந்தி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நேர் எதிராக, அரபு, பாரசிக மொழிப்பற்றாளராகிய முசல்மான் பண்டிதர்கள், இதே மொழியில் அரபு - பாரசிகச் சொற்களைப் பேரளவாகக் கலந்தனர். அரபு -பாரசிக மொழிகளின் எழுத்து வடிவையே, எழுத்து வடிவாகவும் கொண்டனர். இந்த வடிவிலேயே, இது உருது என்று வழங்கப்படுகிறது. இந்தி, உருது ஆகிய இந்த இரு வடிவங்களும், இன்று இரு திசையாக, இரு வேறு மொழிகளாகப் பிளவுற்று இயங்கத் தொடங்கியுள்ளன. பாமர மக்கள் மொழியாகிய இந்துத்தானி மூன்றாவது மொழியாகவே விரைவில் ஆகிவிட வழியுண்டு. பிறமொழிச் சொற்புகுத்தீடும், பிறமொழி எழுத்துப் புகுத்தீடும் தடையற்ற வளர்ச்சி பெற்றால், ஒரு மொழி இரண்டு மூன்றாகப் பிளவுபட்டு விடுவது உறுதி என்பதையும்; தாய்மொழி ஒருபுறம் இலக்கிய இலக்கணப் பண்பற்ற ஒரு பண்படா மொழியாகவும், அதன் இலக்கியமொழி வடமொழியைப்போல, மக்கள் தொடர்பற்ற ஒரு வழக்கிழந்த மொழியாகவும் மாறுபட்டுவிடும் என்பதையும் இப்போக்குச் சுட்டிக்காட்டு கின்றது. தமிழ் நீங்கலான, உலகின் மற்ற எல்லா உயர்தனிச்செம்மொழிகளும், வடமொழி போலவே எவ்வாறு வழக்கிழந்த மொழிகளாக வீழ்ந்தன என்பதை, இந்த மொழி விளக்கம் தெளிவாகக் காட்டுகிறது. இம்மொழிகள் யாவும், பன்மொழிக் கலப்புகளாகத் தொடங்கிய இலக்கியமொழி வடிவங்களே என்பது, கூர்ந்து நோக்கத் தக்கது. தென்னகத்தின் நடுநாயகப் பண்டைமொழி வடிவாகிய தமிழிலிருந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகள் விரிந்து வேறு வேறு மொழிகளாகப் பிளவுறுவதற்கு, வடமொழிச் சொற்கலப்பும், எழுத்துக் கலப்புமே காரணமாயிருந்தன என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தி மொழி தரும் படிப்பினைகள், இன்னும் பல உண்டு. இந்திமொழி, தாய்மொழிகளுள் ஒன்று. எழுத்து வடிவம் இல்லாத காலத்திலும் அதற்கு எழுத்துகள், அதாவது ஒலிகள் உண்டு. இவற்றுள் சிலவற்றுக்கு வடமொழியிலோ, அரபு-பாரசிக மொழியிலோ தக்க எழுத்துக் குறியீடுகள் இல்லை. ஆகவே, ஈர் எழுத்து வடிவங்களிலும், சில பொது எழுத்துகளுக்கும் புள்ளியிடுதல், பெருக்குதல் ஆகிய முறைகளினால் அவ்வொலி களுக்குப் புதுக் குறியீடுகள் உண்டு பண்ணப்பட்டன. மேலும், இந்தி, உருது இப்போது வேறு வேறு, அயல்மொழிக் கலப்பால் வேறாகப் பிரியத் தொடங்கிவிட்டாலும் பிரியுமுன், வடமொழிச் சொற்களில் மிகப் பல இந்தியைப் போல உருதுவிலும், அரபு-பாரசிகச் சொற்களில் மிகப் பல. உருதுவைப் போல இந்தியிலும் இடம் பெற்றுவிட்டன. இவற்றை எழுதும்போது உருது, வடமொழி எழுத்துகளைப் பெரும்பாலும் கூட்டெழுத்துகளாக்கி யமைந்தது. ஆனால், சில எழுத்துகளுக்குப் புள்ளி சேர்த்து அல்லது பெருக்கியே அது புதுக் குறியீடுகள் அமைத்தது. அதே சமயம், இந்தி மொழி இதுபோல அரபு-பாரசிக எழுத்துகளை எளிதாகக் குறிக்க முடியவில்லை. ஓர் ஏழு எழுத்துகளை மட்டும், பொது எழுத்துகளின் புள்ளியிட்டுத் திருத்தமாகக் காட்ட முற்பட்டது. ஆனால், இந்தி பேசுபவர்களுக்கு மட்டுமின்றிப் படிப்பவர்க்கும் இந்த உச்சரிப்புகள் முற்றிலும் அயலாயிருந்த தனால், இவற்றில் இன்று பெரும்பாலும், புள்ளிகள் ஒலியிலும், எழுத்திலும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. இந்தியில் உருதுவிலிருந்த புகுத்தீடு செய்யப்பட்ட அரபு ஒலிக் குறியீடுகள் ஏழு நீங்கலாக, வேறு உருது, அதாவது அரபு-பாரசிகச் சிறப்பெழுத்துகள் உண்டு. எடுத்துக்காட்டாக, இந்தியின் ஒரு தகரத்துக்கு எதிராக உருதுவில் இரண்டு தகரமும், இந்தியின் ஒரு சகரத்துக்கு (ஃச=ஸ) எதிராக அத்தகைய இரு வேறு சகரங்களும் இந்தியில் இல்லாத, ஆனால் புகுத்தீடு செய்யப்பட்ட ஏழு எழுத்துகளின் ஒன்றான சகரத்துக்கு (ஃச்ய = ஷ்ஹ) எதிராக நாலு சகர ஒலிகளும் உருதுவில் உள்ளன. இவற்றைப் புகுத்தீடு செய்யவோ அதன் மூலம் திருத்தம் பேணவோ இந்திய மொழியாளரோ இந்தி பேசும் வடமொழிப் பற்றாளரோ ஒரு சிறிதும் முயன்றதில்லை. முயல்வதில்லை. முயலப்போவது மில்லை. செய்யப்பட்ட ஏழுமே வெற்றி பெறவில்லை. இந்தியின் இந்த அனுபவங்களால், நாம் கீழ்வரும் மொழித் துறைச் செய்திகளை உள்ளங்கை நெல்லிக்கனிபோல உணரலாம். முதலாவது, எழுத்துப் புகுத்தீட்டால் திருத்தம் மொழியில் வெற்றி பெறாது. வெற்றி பெற்ற அளவிலும் நிலைக்காது; நீடிக்காது. இரண்டாவது திருத்தம் இன்றியமையாது வேண்டப்படும் இடத்தில் கூடப் புதுவடிவம் தேவையில்லை. புள்ளியிட்ட பொது வடிவமோ, கூட்டெழுத்து முறையோ போதுமானதாகும். மூன்றாவதாக மொழி, அடிமை மொழியாய் இருக்கும் காலத்தில்தான் இந்தத் திருத்தமோ அயல் மொழி எழுத்துப் புகுத்தீடோ, சொற்புகுத்தீடோ கூடலியலும் என்பது. இந்தியை அரசியல் ஆதிக்க மூலம் பரப்ப விதிர்விதிர்க்கும் இந்தி மொழியாளர்க்கும் அதை ஆதரித்துத் தம் தனிநலம், குழுநலம் நாடி அதைக் கற்கும் தென்னவர்க்கும் அம்மொழி தரும் இப் பொன்னான படிப்பினைகள் கூடப் புலனாவதில்லை. ஏனென்றால், அவர்கள் இந்தி தாய்மொழி என்ற அளவில் அதில் பற்றுக் கொள்ளவில்லை, அதை நேசிக்கவில்லை. ஆதிக்கமொழி என்ற முறையிலே அதில் பற்றுள்ளவராக அதை நேசிப்பவராக நடிக்கின்றனர். வடமொழியாளரின் உள்ளார்ந்த ஆவலறிந்து அவர்கள் உறுப்பினர்களான அரசியலாரும், அவர்கள் ஆட்களாக அவர்களால் அமர்வு பெற்று, அவர்கள் உட்கிடக்கை அறிந்து அதை ஆதரித்தோ அல்லது அதை மறுக்க அஞ்சியோ நான்கு எழுத்துப் புகுத்தீட்டுக்குச் சார்பாக முடிவு தெரிவித்துள்ள தமிழ் ஆட்சிக் குழுவும், அப்புகுத்தீட்டுக்குச் சொல்கிற அல்லது சொல்லத்தக்க அல்லது சொல்லக்கூடிய சான்றுகளை எடுத்து அவற்றின் முரண்பாட்டையும், பொருத்தமின்மையையும் இங்கே பிறமொழி ஒப்பீடுகளாலேயே - ஆதிக்க மொழிகளின் வரலாற்றாலேயே காட்டியுள்ளோம். இப் புகுத்தீடு முற்றிலும் புதிதன்று. ஏற்கெனவே பத்திரிகைகளும், மொழிபெயர்ப்பு ஏடுகளும், புது எழுத்தாளர் சிலரின் புனைகதை, சிறுகதை இலக்கியமும் எடுத்தாண்டு, மக்களுக்குப் பழகிவிட்ட எழுத்துகளையே சட்டப்பூர்வமாக ஏற்கிறோம் என்று அவர்கள் பதில் சொல்லக்கூடும். ஆனால், ஊன்றி நோக்கினால் இது வாதமன்று, உண்மை ஆதாரமன்று. புகுத்தீட்டு முறையின் உள்ளார்ந்த சதியையே இது காட்டுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் காலமுதல் இன்றுவரை இலக்கணங்கள் எதுவும் இவ்வெழுத்துகளைத் தமிழ் நெடுங் கணக்கில் உட்படுத்தியது கிடையாது. பள்ளிக்கூடத்துக்காக எழுதப்பட்ட இலக்கணங்களில்கூடத் தமிழின் மெய்யெழுத்து 18 என்று கற்பிக்கப்படுகிறதே தவிர, இவற்றையும் சேர்த்து 22 என்று கற்பிக்கப்படவில்லை. இலக்கியத்தில் செய்யுள் இலக்கியத்தில் இவ்வெழுத்துகள் இடம் பெறவில்லை. நல்ல உரை நடை இலக்கியத்தில் இவை இடம் பெறவில்லை. மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் பிறமொழிப் பெயர்கள் ஒலிப்பை ஓரளவு காட்ட, அதுவும் ஆதிக்க ஆட்சி மொழிகளாகவோ கல்வி நிலைய ஆட்சி மொழிகளாகவோ இயங்கும் பிறமொழி ஒலிப்பை, அப் பிறமொழி படித்தவர்கள் திருத்த உணர்வைக் கூடியமட்டும் புண் படுத்தாதிருப்பதற்கே இவை வழங்கப்பட்டுள்ளன. இதனால் இவை தமிழ் மொழியில் உள்ள எழுத்துகள் ஆய்விடமாட்டா. உண்மையில் பிரச்சார மூலமாகத் தங்கள் கையில் உள்ள செய்தி இதழ்கள், தாம் எழுதும் ஏடுகள் மூலமாக வெற்றிகரமாகப் புகுத்தீடு செய்ய முடியாத நான்கு எழுத்துகளையும் அவர்கள் தமக்கே உள்ளாதரவான அயல் பண்பாட்சி அரசியலின் மூலம் சாதித்துக்கொள்ள எண்ணுகிறார்கள். அரசியற் சட்டத்தின் உதவி கொண்டு, மக்களுக்கும் மொழிக்கும் எதிராகச் சதிசெய்ய முனைந்துள்ளார்கள். நேர் பிரச்சாரத்தால் முடியாததைப் பின்னிருந்து மறைமுகமாகக் கோழைத்தனமாகப் புகுத்தத் தலையிட்டுவிட்டனர். தமிழர் தன்மானத்துக்கும், இனப் பற்றுக்கும் இஃது ஓர் அறைகூவல் ஆகும். கடைசியாகப் புகுத்தீடு செய்யப்படும் எழுத்துகளின் வடிவத்தைப் பற்றிய ஒரு மறைந்துவரும் மாயச் செய்தியைக் கூற விரும்புகிறோம். இவ்வெழுத்துகள் செய்தி இதழ்களிலும், புதிய எழுத்தாளரின் புனை கதைகளிலும் எழுதப்பட்டபோது தமிழர் பலர்க்கு அவை புதியனவாகவும் பலருக்கு ஒலிக்க முடியா தனவாகவும் இருந்தன. இது பற்றிய அணிமைக் கால நாட்டுப்புறக் கேலிச்சித்திரம் ஒன்று உண்டு. பூ என்பதற்குரிய வடமொழிச் சொல் புட்பம் என்று தமிழாக்கப்பட்டு, அணிமைக்காலத்தில் புகுத்தப்பட்டிருந்தது. அதைத் திருத்தமாகப் புகுத்தீட்டெழுத் துப்படி புஃட்பம் என்றும் சிலர் எழுதி வருகிறார்கள். ஆனால், நாட்டுப்புறத்தில் வடமொழிப் பற்றாளர்க்குப் புறம்பான பல தமிழ் வகுப்பினரும் அதை ஒலிக்க முடியாமல் பல குளறுபடிகள் செய்தனர். இதனை இச்சித்திரம் கேலி செய்து காட்டுகிறது. முழுத் திருத்தமாகத் தமக்கு ஒலிக்க முடியாது என்று கருதிய நாட்டுப்புற வடமொழிப் பற்றாளன் ஒருவன், பிற நாட்டுப் புறத்தார் ஒலிப்புகளைக் கேலிசெய்து தானே கேலிக்கும் ஆளாகிறான். ‘இதைப் பூ இண்ணும் சொல்லுவாக; புப்பம் இண்ணும் சொல்லுவாக , புட்பம் இண்ணும் சொல்லுவாக, ஐயா சமற்கிருத சொல்மாதிரியும் சொல்லுவாக’ என்றானாம் அவன். இன்றும் இப்புகுத்தீட்டு எழுத்துகளைத் திருத்தமாக ஒலிக்கிறோம் என்று சுருக்கி, அதை ஒன்றுக்கு ஒன்றாக ஒலிக்கும் மக்கள், நாட்டுப்புறத்தில் மட்டுமன்று, நகர்ப்புறங்களிலும் மிகுதி உண்டு. அவர்கள் சீரிய திருத்தமான நாவில் ‘ரசம் சொகுசாயிருக்கிறது’ என்பது ‘ரஃசம் ஃசொகுஃசாயிருக்கிறது’ என்றோ, ரஃசம்ஃட் சொகுஃட்சாயிருக்கிறது’ என்றோ ‘ரட்சம் ட்சொகுட்சா யிருக்கிறது’ என்றோ இனிதாகச் செவிக்கு விருந்தளிக்கும். ஃஅ இல்லாத இடத்தில், ஃஅ ஒலித்து, ஃஅவன், ஃஇவன் என்பன வரையும், ஃட்ச இல்லாத இடத்திலும் அது சேர்த்து, வட மொழி விற்பன்னர்களாக முயன்று ‘ஆஃட்ச்குக் குட்டி வந்து, வேஃட்ச்டியைத் தின்கிறது, முரஃட்ச்டுக் கம்பெடுத்து ஓஃட்ச்டு, ஓஃட்டு` என்று கூறுபவரும் இல்லாமலில்லை. இத்தகைய ஆபாசக் குளறுபடிகளுக்குள் தமிழையும், தமிழரையும் தள்ளும் இந்தப் புகுத்தீடு தமிழ் - தமிழரிடமிருந்து ஒதுங்கிய, ‘அம்மாஞ்சிப் பத்திரிகை’ப் புகுத்தீடாக வந்து வெற்றி காணாமலே விளையாடியதுபோல், அரசியல் அதிகாரத் துடனும் செல்வாக்குடனும் தமிழர் மீது மொழி அடக்குமுறை செய்ய வந்திருக்கிறது. ஒலிப்பை அறியாத தமிழர்கள் இப்புகுத்தீட்டெழுத்து களைக் குத்து மதிப்பாகவேனும் பொது எழுத்துகளுடன் தொடர்புபடுத்தி உரைப்பதற்கு ஒரு காரணம் உண்டு. இவ்வெழுத்துகள் கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய தமிழின மொழிகளில் ஆயிர ஆண்டுகட்கு முன்பே புகுத்தப்பட்டுவிட்டன என்று கூறினோம். ஆயிர ஆண்டுகளாக அம்மொழியாளர் வடமொழிச் சொற்கள் கலந்த, தம் தாய்மொழியைத் திருத்தமாக எழுதுவதற்கு மட்டும் அந்த எழுத்துகளைக் கையாளவில்லை. எல்லா வடமொழி எழுத்துகளும் அத்தகைய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருந்ததனால், வடமொழி ஏடுகளை எழுதவே, அத்தாய் மொழி எழுத்துகள் பயன்பட்டன. தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஆகிய மொழி எழுத்துகளில் எழுதப்பட்ட வடமொழி இராமாயண, பாரத ஏடுகளை மட்டுமல்ல, அச்சிடப்பட்ட ஏடுகளைக்கூட இன்றும் காணலாம். தமிழின மொழிகள் வட எழுத்துகளை இறக்குமதி செய்யுமுன் சமற்கிருத ஏடுகளை எழுதுவதற்கென்றே தமிழர் ஒரு எழுத்து முறை வகுத்திருந்தனர். அதுவே கிரந்த எழுத்து. அணிமைக்காலம் வரை தமிழகத்திலும், தென்னா டெங்கும் வடமொழி ஏடுகள் எழுதப்பட்டு வந்ததும், அச்சிடப்பட்டு வந்ததும் இந்தக் கிரந்த எழுத்திலேயே. அதுவே அன்று வடமொழி எழுத்தாகக் கருதப்பட்டு வந்தது. மிகப் பழைமை வாய்ந்த வடமொழி எழுத்து வடிவம் அதுவே. இந்திக்குத் தனக்கென ஓர் எழுத்துக் கிடையாது என்று மேலே கூறினோம். உண்மையில் வடநாட்டுத் தாய்மொழிகள் அனைத்தின் நிலையும் இதுதான். அதுமட்டுமன்று வடமொழியின் நிலையும் இதுதான். வடமொழிக்கு உண்மையில் தனக்கென ஓர் எழுத்துக் கிடையாது. தமிழர் வடமொழியை இலக்கிய இலக்கணமுடைய மொழி ஆக்கிய பின்பு, அதை எழுத முதலில் பிராமி என்ற எழுத்து வடிவையும், பின் கிரந்தம் என்ற வடிவையும் அமைத்துக் கொண்டார்கள். அதற்குப்பின், வடபுலத்தார் மலைவாணரிடமிருந்து பிராமி எழுத்தின் ஒரு திரிந்த வடிவை மேற்கொண்டு, அதில் வடமொழி எழுதினர். மலைவாணர் நாகராதலால், அது நாகரி என்றும், அவர்கள் தேவர்களாகக் கருதப்பட்டதால் அது தேவநாகரி என்றும் அழைக்கப்பட்டது. இன்று வடநாட்டில் வடமொழி எழுத்துகளென்றும், இந்தி, மராத்தி, குஜராத்தி எழுத்துகளென்றும் நடமாடுபவை இந்தத் தேவ நாகரியின் வடிவங்களே. இந்தி ஆதிக்கம் தென்னகத்தில் புகுந்த பின்னர், தமிழர் வட மொழியைக்கூடத் தம் பழைய கிரந்த உருவத்தில் எழுதுவதையும், வாசிப்பதையும் விடத் தொடங்கித் தேவநாகரியை ஏற்று வருகின்றனர். தென்னாட்டவர் வழங்கிய வடமொழிக் கிரந்த எழுத்து அழிந்துவருகிறது. புகுத்தீடு செய்யப்படும் நான்கு எழுத்துகளும், வடமொழி எழுத்துகள். ஆனால், புகுத்தீடு செய்யப்படும் வடிவம் வடவர் வடமொழி எழுத்துவடிவமான தேவநாகரி வடிவமன்று. தமிழரிடையே வடமொழி பயின்றவர் முன்னால் பயன்படுத்திய, அவர்களுக்குப் பழக்கமான கிரந்த வடிவங்களே. இந்த வடிவங்களே கிட்டத்தட்ட இன்றும் மலையாள மொழியில் இவ்வெழுத்துகளுக்கு வழங்குகின்றன. அதுமட்டுமன்று. தமிழும் வடமொழியும் கலந்து 13ஆம் நூற்றாண்டிலிருந்த ‘மணிப்பிரவாள நடை’ எழுதித் தோல்வியுற்ற வைணவ உரைகாரர் பயன்படுத்திய எழுத்தும் இதுவே. தமிழர் வடமொழி படிக்க இந்தக் கிரந்த எழுத்துப் பயன்படவில்லை. வடமொழியில் தமிழர் தொடர்புடைய எழுத்து வடிவுகூட இருக்கக்கூடாது என்று வடமொழிப் பற்றாளர் நினைக்கின்றனர். ஆனால், தமிழர் மீது வடமொழியைப் படிப்படியாகப் புகுத்துவதில் மட்டும், அழிந்துவரும் அந்த எழுத்துகளைக் கையாளுகின்றனர். இதில் அவர்கள் போக்கு வெளிப்படை - தமிழிலிருந்து தமிழர் முன்பு வழங்கிய வடமொழிக் கிரந்த எழுத்து, அதிலிருந்து தேவநாகரி எழுத்து! தமிழ் எழுத்து முழுவதுமே தேவநாகரி ஆதல்வேண்டும் என்ற வட நாட்டவர் இயக்கம் ஒன்று உண்டு என்பதும், இங்கே தமிழரால் நினைவு கூரத்தக்கது. இந்தியப் பத்திரிகைகள் அதை ஆதரித்து அரும்பாடுபடுகின்றன. வடவரும், அவர்களுக்குப் பக்கப்பாட்டுப் பாடும் வடமொழிப் பற்றாளரும், இருசாரார் கைப்பொம்மையாய் இருக்கும் ‘அடிமைத் தமிழகம்’ அல்லது ‘ சென்னை’யின் அரசியலாரும் சேர்ந்து செய்யும் இம்மொழிக் கொலை நாடகத்துக்குத் தமிழினம் தன் இனக்குரலெழுப்பி எதிர்ப்பளித்து, எழுநூறு ஆண்டுகட்குமுன் நம் முன்னோர் மணிப்பிரவாளத் தமிழை ஒழித்ததுபோல அம்முயற்சியைப் புறம் காண்பார்களாக! 6. தமிழ்த் தேசியம் இந்திய மாநிலத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழன் தனிப் பண்பு கண்டு பாடியவர் நாமக்கல் கவிஞர். `தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற உண்மையைப் போராட்ட அனுபவத்திலும் இலக்கியத் திலும் தம் கவிதை நுண்ணோக்கால் உணர்ந்தவர்தான் அவர். காந்தியத்திலும் - அதன் போர்வையி லல்ல - அதன் உள்ளார்ந்த பண்பில் ஊறியவர்தாம் அவர். ஆனாலும், அத் தேசியக் கவிஞர் வழிநின்று தமிழ்நிலம் - முழுநிறை உரிமைத் தமிழ்நிலம் அன்று அடிமையாட்சி பரப்பி ஓர் எல்லை வறையறுத்த தமிழ்நிலம் மட்டும் கேட்ட கட்சி தமிழரசுக் கட்சி. அதைக்கூடத் தேசத்துரோகக் கட்சி என்றுதான் காங்கிரசு மேலிடம் கருதுகிறது. 1956 பிப்ரவரி 20-இல் தேவிகுளம் பீர்மேட்டுக்காக எல்லாக் கட்சியினரும் தொழிலாளரும் சேர்ந்து நடத்திய வேலைநிறுத்தச் சமிக்கையின் போது, திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனி°ட் கட்சி, தமிழரசுக் கழகம் ஆகிய மூன்று கட்சியினர்க்கும் ஒரே மண்டையுடைப்பு உரிமைதரக் காங்கிரசு ஆட்சி-பச்சைத்தமிழன் காமராசர் ஆட்சி தயங்கவில்லை. அது தமிழ்ப் பகைவரின் அடியாள் பிடியாளான ‘ பச்சைத் தமிழன்’ ஆட்சி என்பதை ஓர வஞ்சகமற்ற இந்தத் தண்டனை காட்டிற்று. ‘காங்கிரசுக் காரனானாலும் நீ தமிழன். தமிழனுடன் சேர்ந்த தமிழ்நாடு கேட்கிறாய்’ என்று கூறிக்கொண்டு தமிழக ஆட்சியாளர் காங்கிரசுத் தமிழர்மீதுகூடத் தடியடி நடத்தினர். தமிழனைத் தமிழ் ஆட்சி அடிக்கத் துணிந்தாலும், தமிழ்ப் போலீசார் கைகள் அவ்வளவு உணர்ச்சியற்றவையாய் இருக்க முடியாது என்ற காரணத்தால், மலையாளப் போலிசாரையும் மலையாளப் போலிசு அதிகாரிகளையும்தாம் ‘பச்சைத் தமிழர்’ ஆட்சி நம்பிற்று. ‘ பச்சைத் தமிழர்’ ஆட்சியில் எந்த மலையாளியும் ‘தமிழன்’ உரிமைகேட்கும் எந்தத் தமிழன்மீதும் பழிதீர்த்துக் கொள்ள முடியும் - சட்டத்தின் உதவியும், பதவியின் உதவியும் கொண்டே! தமிழன் இந்த அயலினத் தேசியத்தை - பகை இனத் தேசியத்தை எத்தனை நாள் தன்தேசியம் என்று கொண்டாடித் தன் உரிமையழித்து வாழ முடியும்? உலக இயக்கங்களிலெல்லாம் தமிழன் பண்டிருந்தே ஈடுபட்டிருந்தான். தமிழ்நாடு என்ற சொல்லைவிடத் தமிழிலக்கியத்தில் உலகு, தமிழ்உலகு என்ற சொற்களையே மிகுதியாகக் காணலாம். பண்டிருந்தே ‘ஓருலகை’க் கனாக் கண்டவன் என்ற முறையில் தமிழனுக்கு அகல் உலகப் பற்று இயற்கையானது, குருதியிலேயே படிந்து வருவது. ஆனால், அவன் தற்பண்பு பேணாத காரணத் தால் அவனால் உலக நாகரிகத்தை வளர்க்க முடிந்தாலும், அந்த உலகில் அவனுக்கு மட்டும் இடம் கிடைக்கவில்லை. ஓருலகைக் கற்பனை செய்ததுபோலவே தமிழன் இமயம் வரை அளாவிய ஒரே தேசியத்தையும் கனவு கண்டதுண்டு. `தென்குமரி வடபெருங்கல் குணகுடகடலா வெல்லை ஒருமொழி வைத்து உலகாண்ட சேரல் ஆதன்’ என்பது போன்ற சங்க காலப் பாடல்கள் இதற்குச் சான்று. ஆனால், ஓருலகு தமிழன் கனவாய் இருந்ததுபோலவே, ‘ஒரே இமய எல்லை’யும் கனவாகவே நின்றது. சங்ககாலத் தொடர்பு களால் நாகரிகக் கூறுகள் ஓரளவு இமயம்வரை பரந்ததுண்டு. சோழப் பெரும் பேரரசர் ஆட்சியால் அந்தப் பண்பாடு இன்னும் மிகுதியாகத் தென்கிழக்காசியாவிலும் கங்கை வெளியிலும் பரவியதுண்டு. இன்றிருக்கும் இந்தியாவின் எல்லைக்கோடு சோழப் பேரரசர் ஆட்சியின் எல்லைக் கோடாகவே அமைந்துள்ள பொருத்தத்தைப் பலவரலாற்றாசிரியரும், அரசியல் வாணரும் கவனிக்கத் தவறியுள்ளனர். ஆகவே, வடதிசை முழுவதும் ஒரே தேசியமாக்கும் தமிழன் கனவு நிறைவேறா விட்டாலும். பாகி°தான் நீங்கிய இன்றைய இந்தியப் பகுதியை அவன் தன் ஆட்சியால் ஓரளவு ஒன்றுபட்ட அடிப்படைப் பண்பாடுடைய பரப்பாக்குவதில் வெற்றிபெற்றான் என்னலாம். சோழப் பெரும் பேரரசர் ஆட்சி ஒரு நூற்றாண்டுக்குள் கவிழாமல் நீடித்திருந்தால், ஒருவேளை இந்தியா ஒரு தேசியமாக உருவாகியிருக்கக்கூட வழியுண்டு. இது மட்டுமன்று, தன் முழுநிறை தேசியத்தின் நிழலாகத் தமிழன் வளர்க்க எண்ணிய இந்தியத் தேசியத்தில் தமிழனையும் தமிழினத்தவரையும் தவிர, மற்றவர் யாவர்க்கும் - அயலவர் களான பார்சிகளுக்கும் யூதர்களுக்கும் வெள்ளையர்களுக்கும்கூட இடமுண்டு. தமிழனுக்கு மட்டும்தான் இடமில்லை. இதைத் தமிழன் கவனித்தல் வேண்டும். இந்தியாவிலுள்ள எல்லாச் சமயங்களின் சமய நூல்களும் தமிழில்தான் இருக்கின்றன. - தமிழில் மட்டும்தான் இருக்கின்றன. கன்னடத்தில் ஒருசிலவும் தெலுங்கிலும் சமற்கிருதத்திலும் ஒன்றோ இரண்டோ மட்டுமே உள்ளன. இவையும் தமிழைப் போல் எல்லாச் சமயங்களுக்கும் உறைவிடமாய் இல்லை. அவ்வாறிருந்தும் தமிழோ, தமிழின மொழிகளோகூடச் சமய மொழியாகக் கருதப்படாமல், அதற்கு உரிமையற்ற வட இனமொழிகளின் உயிரற்ற மொழியான சமற்கிருதமே அவ்வாறு கருதப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றுக் காலமுழுவதும் வளர்ந்து அதன் முழுநிறை தேசியக் கண்ணாடியாக விளங்குவது தமிழ். தமிழ்க்கு அடுத்தபடி கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் அந்நிலை உடையன. ஆனால், தமிழோ, தமிழின மொழிகளோ தேசிய மொழிகளாகக் கருதப்படாமல், வடதிசையினத்துக்கு மட்டுமே உரித்தான - பண்படா மொழியான -இந்தி, தேசியமொழி ஆக்கப் பட்டுள்ளது. வடதிசையில் கூட அது பண்பற்ற, அயலினப்பண்பு விரவிய மொழி என்பதும் குறிப்பிடத் தக்கது. அத்துடன் ஓரளவு இலக்கிய நயமுடைய அதன் உருது வடிவமும் புறக் கணிக்கப்பட்டு, மக்கள் தொடர்புடைய காந்தியடிகளும் பண்டிதநேருவும் ஆதரித்த பேச்சுமொழி இந்தி(நெடில்)யும் கைவிடப்பட்டு ‘உயர் இந்தி’ என்ற பண்பற்ற புத்தம் புது வடநாட்டு மொழி தமிழர்மீது சுமத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள இரண்டு இனமொழிக் குழுக்கள், வட திசை ஆரிய இனமொழிக் குழுவும் தென்திசைத் தமிழின அல்லது திராவிட மொழிக் குழுவும் ஆகும். ஆனால், சமயத் துறையிலும் அரசியல் துறையிலும் வடஇன மொழிக்கே ஆதிக்கம் தரப்பட்டுள்ளது. தென் இனம் இரு துறையிலும் ஆளப்படும் இனம் என ஒதுக்கப்பட்டே உள்ளது. பிரிட்டன் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆண்டபோது அதை அடிமை ஆட்சி என்று கூறக் காங்கிரசுக்காரர் தயங்கவில்லை. ஆனால், பிரிட்டன் இந்தியாவை என்றும் இங்கிலாந்துடன் சேர்த்து ஒரு நாடாக்கி விடவில்லை. அவ்வாறு எண்ணவுமில்லை. இந்தியாவுக்குத் தனிச் சட்டமன்றங்கள், சட்டமியற்றும் உரிமைகளை ஆங்கிலேயர் அளித்திருந்தனர். ஆனால், இந்திய ஏகாதிபத்திய ஆட்சியில் தென்னாட்டுக்குத் தனிச்சட்டமன்றம், சட்டம் இயற்றும் உரிமைகள் இல்லை. அது வடநாட்டுச் சட்டசபைக்கே உட்படுதல் வேண்டும். அத் துடன் பிரிட்டன் ஆட்சிக் காலத்திலிருந்த மாகாணத் தன்னாட்சியும் இப்போது கிடையாது. தமிழ்ப் பற்றும் தமிழினப் பற்றும் காங்கிரசுக்குள்ளும் பரவி, எல்லாக் கட்சியினரும் தமிழ்த்தேசியத்தில் ஓரளவு ஒன்றுபட்டு, இந்தி எதிர்ப்புக் கிளம்பியபின், இந்தி கட்டாயமன்று என்ற பசப்பும் வடதிசைப் பல்கலைக் கழகங் களில் தமிழ் அல்லது தென்னாட்டு மொழிகளுள் ஒன்றுக்கு இடந்தர வேண்டு மென்றும் மாயாசாலக் கண்வெட்டுகள் காட்டப்பட்டு வருகின்றன. ஆனால், அஞ்சல் நிலையத்திலும் ஊர்தி நிலையத்திலும் இந்தி ஏறு நடையுடன் உலவும் காட்சி, வடவரின் உண்மை ‘உருவை’த் தமிழர்க்குக் காட்டுவதாகும். ‘கோவணம் உடுத்தாத ஊரில் கோவணம் உடுத்தவன்தான் பயித்தியக்காரன்’ என்ற ஒரு பழமொழி தமிழில் உண்டு. போலி இந்தியத் தேசியத்தில் தமிழன் நிலை இதுவே. இயற்கைத் தேசியமும் முழுநிறை தேசியமும் ஆன தமிழகத்தின் ஒளி நிழலாகப் பரவியுள்ள ஒரு தேசிய நிழலில் தமிழன் தன் தேசிய உரிமை மட்டும் இழந்தவனாகிறான். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, அடிமையாட்சிக் காலத்தில் தமிழன் தன் முழுநிறை தேசியத்தின் வரலாறு மறந்தான். வெள்ளையரும் இதனை மறக்கடிக்க வைக்க அரும்பாடுபட்டனர். தமிழன் தேசியம் ஒருபுறம் தென்னாட்டையும் மற்றொருபுறம் தெற் காசியாவையும் அளாவிய ஓர் உயிர்த் தேசிய ஒளியாய்க் கீழ்த்திசையின் வாழ்வையே மலரச்செய்துவிடும் என்பதையும், அத்தகைய கீழ்த்திசை வாழ்வை முற்றிலும் அழிக்கவல்ல ஆற்றல் வடதிசைப் போலித் தேசியமே என்றும் வெள்ளை ஏகாதிபத்தியம் கண்டுகொண்டது. அவ்வெண்ணத்துடன் அந்த வெள்ளை ஏகாதிபத்தியம் வளர்த்த அடிமை ஏகாதிபத்தியக் குழந்தையே இந்தி - உருவற்ற இந்திய ஏகாதிபத்தியத் தேசியத்தின் முதிராக் கரு! இரண்டாவதாக, முழுநிறைவுடைய அமைப்புகள் யாவுமே தன்னுணர்வற்ற அமைப்புகளாக இருப்பது இயல்பு (கூhந ரnஉடிளேஉiடிரள ளை வாந யடடிநே யீநசகநஉவ) என்பதைக் கார்லைல் என்ற அறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கியையவே தமிழர் தேசியத்தின் முழுநிறைவு பெரிதும் தமிழர் எளிதில் காணாத ஒன்றாக நிலவுகிறது. வரலாற்றாசிரியரும் அறிஞரும் காட்டினாலன்றி அதன் தனித் தன்மையையும் தொலை விளைவுகளையும் பொதுமக்கள் எளிதில் காணமுடியாது. ஆனால், அயற் பண்பாட்சியிடையே வரலாறு எழுதுபவர் தமிழ்ப் பண்பற்றவராகவே அமைந்ததனால் அதனைக் காணாமல், அல்லது காட்ட விரும்பாமலே வரலாறு எழுதி யுள்ளனர். இந்திய வரலாற்றில் தென்னகத்தை அந்த வரலாற்றுப் பிதாக்கள் முதலில் முற்றிலும் மறந்துவிட்டதும், தமிழக எழுச்சியின் பின் அதை வட திசையின் ஒரு வால் அல்லது நோய் உறுப்பாகக் காட்டியிருப்பதும் இதனாலேயே ஆகும். உலக வரலாற்றிலே தமிழகமும் அதனைச் சார்ந்த பிற தென்னாட்டு மொழியினங்களும் தாம் மிகப்பழைமையான முதல் தேசியங்கள் ஆகும். மொழிச் சார்பில் தேசியங்கள் பிறந்து, மொழிச் சார்பிலேயே பெயர் பெற்றதற்கு உலக வரலாற்றிலேயே முதற் சான்றுகள் இவையே. இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்க வரலாற்றாசிரியர்களின் காதுவரை தமிழகம் என்ற பெயரும் அதன் மும்மண்டலங்களான சேர, சோழ, பாண்டியர் பெயரும் சென்றெட்டி யிருந்தன. மேனாட்டிலுள்ள மொழிச் சார்பான இன்றைய தேசியங்கள், தென்னாட்டுத் தேசியங்களுக்கு ஆயிர ஆண்டு பிற்பட்டே தோன்றின. வடநாட்டு மொழித் தேசியங்களோ பின்னும் எட்டு நூற்றாண்டு கழித்தே தொடங்கின. இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாடுவரை சென்று எட்டி, கிரேக்க மொழியிலும் ‘தமிரிகா’ என்ற வடிவில் பதிந்துவிட்ட தமிழகம் என்ற பெயர் தமிழகத்திலே வாழும் ஒரு பச்சைத் தமிழன் காதுக்குள்ளும், அவர் அருகிலே உலவுகிற ஒரு ‘சிவப்புத் தமிழன்’ காதுக்குள்ளும் இன்னும் சென்று எட்டவில்லை என்பது வியப்பாகும். காங்கிரசு மேலிடப் பதவியாசையென்ற தமிழ்புகா மெழுகு வைத்து அவர்கள் காதுகளை மேலிடம் ஒட்ட அடைத்திருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது! ஒரு தேசியம் உருவாவதற்கும் அந்தத் தேசிய மொழியில் இலக்கண இலக்கியம் அமைவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த் தேசியத்தைப் போலவே, இலக்கிய இலக்கணமும் முழுநிறை வளர்ச்சி பெற்று நீடித்த வாழ்வு பெற்றிருந்தது. தமிழகத் தேசியம் உருவாகி, அதன் விரிவான தென்னாட்டுத் தேசியம் வளர்ச்சியுற்ற பின்னரே, இவற்றின் எல்லையிலுள்ள வட நாட்டு மொழிகள் தேசிய வாழ்வு மேற்கொள்ளத் தொடங்கின. ஆனால், அவை மொழித் தேசியங்களாகக் கூட இன்னும் முழுநிறை உருவாகவில்லை. இவற்றிடையே தமிழ்ச் சோழர் ஆட்சியில் சிறிதளவு மின்னல் போலத் தொடங்கிய ஒற்றுமைகூட இன்று சிதைந்துவருகிறது. உலகுக்கு நாகரிகத்தை அளித்து, இமயம் வரையிலுள்ள இனக் கலவைகளுக்கு இனத்தேசியச் சாயல் அளித்துவந்த தமிழகத் தேசிய வாழ்வையே இந்தியாவின் போலித்தேசியம் அழிக்கக் கனவு காண்கிறது. ஒரு நல்ல வருங்காலத் தமிழகம் அமைப்பதற்கு மட்டுமன்றி, ஒரு நல்ல எதிர்கால இந்தியா வையோ, நல்ல எதிர்கால ஆசியாவையோ, உலகத்தையோ அமைக்க விரும்பும் எவரும், தமிழகத் தேர்தல் பிரச்சினையை மனித இனத்தின் உயிர்ப்பிரச்சி னையாகக் கருதுவது இன்றியமையாதது. உருவில் சிறிய குறள் பயனிற் பெரிதா யிருப்பதுபோல, இரண்டு மூன்று கோடித் தமிழர் பிரச்சினையாகமட்டும் தோன்றும் இப்பிரச்சினையே இருநூறு கோடி மக்கள் வாழும் மனித உலகின் உயிர்ப் பிரச்சினையாகும். ஆகவே, தமிழனே, அகில இந்திய, அகில உலகக் கட்சிகளின் ‘லாலி’ப் பாட்டில்-உன் இடைக்கால அடிமையிருள் தூக்கத்தில் - மேலும் ஆழ்ந்து விடாமல், விழித்தெழுந்து செயலாற்றுவாயாக. 7. கடல் கடந்த தமிழர் இந்திய மாநிலத்தின் தென்கோடியில், தென்னாட்டின் ஒருபகுதியாயுள்ள தமிழ் கூறும் உலகப் பகுதியை மட்டும்தான் தமிழகம் என்று நீ வழங்குகிறாய் தமிழா! ஆனால், இந்தியத் தேசியமோ இதற்குக்கூடத் தமிழகம் என்று பெயர் கொடாமல், உன் தடமழித்துவிடக் கனவு கண்டு கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகத்தின் பெரும்பகுதி இதுவானாலும், இஃது ஒன்றுதான் இந்தியத் தேசியத்தின் மாயப்பிடியுட்பட்டு முதல் முதல் ‘கபளீகரம்’ ஆக இருக்கும் பகுதி என்பதையும், இதன் உதவிகொண்டே பிறசிறு பகுதிகளிலும் தமிழகத்தின் உயிர்த் தடங்களை அழிப்பதற்கு அத்தேசியம் மற்ற நாட்டு அரசியல்களைத் தூண்டிச் செயலாற்றுவித்துவருகிறது என்பதையும் நீ அறியாய்! ஏனெனில், அகில இந்தியக் கட்சிகள் இவ்வகையில் உன் கண்களை மூடித் திரையிட்டு வருகின்றன. தமிழினக் கட்சியில்கூட இந்தியத் தமிழகம் தாண்டிப் பெருந் தமிழக எல்லைபற்றிச் சிந்திக்க முயலவில்லை. இந்த ஒரு தமிழக விடுதலையே அவர்கள் நேரமுழுவதையும் கவர்ந்துவருகிறது. தமிழா! நீ தமிழ்நாடு என்று கூறும் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தொகை ஏறத்தாழ மூன்றுகோடி. இதற்கு வெளியே தமிழ்பேசும் மக்கள் தொகை ஏறத்தாழ ஒருகோடி. ஆனால், வெள்ளையர் ஆட்சியிலும் சரி, இந்தியர் ஆட்சியிலும் சரி - கடல் கடந்த தமிழர் பற்றிய எந்த வகுப்பு தொகுப்புப் புள்ளி விவரமும் ஒழுங்காகச் சேகரிக்கப்படவில்லை. தமிழினம் இந்திய இனத்தின் ஒரு சிறந்த பகுதியாக வாழ்தல் வேண்டும் என்பதில் அந்த இரு ஏகாதிபத்தியங்களுக்கும் என்ன ஆவல் இருக்கமுடியும்? ஆனால், அதுபற்றி நீயும் கவலைப் பட்டதாகக் காணவில்லையே! உன் பத்திரிகைகள் தமிழகத்தையே காணத் தயங்கும்போது, தமிழகத்துக்கு வெளியே ‘ஏழு’ கடல்களிலும் சிதறிக் கிடக்கும் உன் தோழர்களைப் பற்றியா அவை கவலைப்படும்? கடல் கடந்த தமிழர் என்றுகூட அவை அத் தமிழர்களைக் கூறாது; கடல் கடந்த இந்தியர் என்றுதான் கூறும். ஏனென்றால், அவற்றில் அக்கறை கொள்ள வேண்டியவர் தமிழரேயானாலும், ஆளவேண்டியவர் இந்தியர்கள் தாமே! பாகி°தானிலிருந்து வரும் அகதிகளுக்கு, இந்திய அரசாங்கம் தன் சொந்தப் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் சலுகைகளைவிட மிகுதியாக, மருமகப் பிள்ளைகளுக்குத் தரும் இராசோபசாரம் தருகிறது. ‘தமிழ்’ என்ற சொல்லையே வெறுக்கும் நம் ‘சென்னை’ அரசாங்கமோ இந்த அகதிகளுக்குத் தன் எசமானர் பிள்ளை களுக்குக் காட்ட வேண்டிய மரியாதைகளைக் காட்டிப் பயபத்தியுடன் தன் தில்லித் தேவதைகள் மனமகிழ அவர்களுக்குப் பாத காணிக்கைகள் - மானிய உதவி, கடன் சலுகை, வாடகைச் சலுகை, உதவிச் சம்பளப் பதவிகள், வருவாய்க்குரிய அமோக வசதிகள் - தருகின்றது. ஆனால், தமிழக அகதிகளையோ, இந்தியப் பகை அரசாங்கத்தின் செல்வாக்கின் பயனாக, மறைமுகத் தூண்டுதலின் பயனாக, வெளிநாட்டு அரசாங்கங்கள், வெள்ளை முதலாளிகள் வேண்டும்போது குறைந்த சம்பளத்தில் வைத்து வேலைவாங்கிப் பிழிந்து குற்றுயிராக்கி, வேண்டாத போது குற்றுயிருடன் இங்கே துரத்தியடிக்கின்றன. உற்ற தாயால் துரத்தப்பட்டு, பெற்றதாய் பஞ்சை அடிமையாயிருக்கும் நாட்டிலே கால்வைக்கவும் இடமில்லாமல் அவர்கள் அல்லல் படுகின்றனர். தில்லி ஏகாதிபத்திய நலனுக்காக, வடநாட்டு ஆலை முதலாளிகள் நலனுக்காக, கைத்தறித் தொழில் அழிக்கப்பட்டு, அத்தொழிலாளர் அவதிப் பட்டனர். இங்கே அடிமைத் தமிழன்னை பெற்ற பிள்ளையே அவள் கண்காண அவதிப்படும் போது, வெளியிலிருந்து வரும் அகதிகளை யார் கவனிப்பது? கடல் கடந்த இந்தியர்களுள் தமிழர் பெரும்பான்மை யானவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காலப் புள்ளி விவரங்கள் இல்லையானால் இதை நாம் எளிதில் அறிய முடியாது. இந்தியா விடுதலை பெற்ற பின் அங்கே இருப்பவர்களுள் தமிழர் உண்டு என்ற செய்தியே மறைக்கப்படுகிறது. மோரிசு போன்ற தொலை நாடுகளில் தமிழரே நாட்டு மக்களுள் மிகப் பெரும்பான்மை யானவர்கள். பிஜித் தீவுகளிலும் அப்படியே. இந்திய ஏகாதி பத்தியத்துக்கு உரிமை வந்தபின், அங்குள்ள இந்தியர்களிடையே இந்திய நாகரிகத்தைப் பரப்புவதில் புதிய ஏகாதிபத்தியம் அக்கறை கொண்டது. மோரிசை ஆள்பவர்கள் பிரஞ்சுக்காரர். பிரஞ்சு மொழி ஆட்சிமொழியாகியிருக்கிறது. இந்திய ஏகாதிபத்தியம் பிரஞ்சு ஏகாதிபத்தியத்துடன் பேரம் பேசி, இந்தியர்களுக்கு இந்திய மொழியாகிய இந்தியும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று சிபாரிசு செய்து, அதுமுதல் இங்கிருந்து இந்தி ஆசிரியர்களை ஏற்றுமதி செய்துவருகிறது. பாவம்! மோரிசிலுள்ள அடிமைத் தமிழன் தன்னை ஆளும் ஓர் அன்னிய ஏகாதிபத்தியத்தின் மொழியைக் கற்பது போதாமல், தன் இனத்தவரை ஆளும் மற்றோர் அன்னிய ஏகாதிபத்தியத்தின் மொழியையும் கற்கவேண்டியவனாய் இருக்கிறான். தமிழன் அகில இந்தியக் கட்சிகளுக்குப்போடும் ஒவ்வொரு ‘வோட்’ டும் இந்நாட்டுத் தமிழன் கழுத்தை மட்டும் அறுக்கும் கத்தியன்று; மோரிசுத் தமிழன் கழுத்திலும், அதுபோன்ற பிஜி, கயானா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலேயாத் தமிழர் கழுத்திலும் அடிமைத் தளையை இன்னொருபடி இறுக்கமாக முறுக்கும் செயலும் அதுவே ஆகும்! ‘கரும்புத் தோட்டத்திலே!’ என்று பாரதியார் சென்னைக் கடற்கரைக் காங்கிரசுக் கூட்டத்தில் பாடிய பாட்டுதான் அவரை நாடு கடத்தித் தண்டனைக்கு உள்ளாக்கிற்று. இது பிஜித்தீவில் தமிழன் அன்று பட்ட அவதியைச் சுட்டிற்று. பிரிட்டிஷ் ஆட்சியில் பிஜித் தமிழன் இருந்தான் என்பது தமிழர்க்குத் தெரிய வாவது வழியிருந்தது. இன்றுதான் தமிழன் ‘விடுதலை இந்திய’னாய் விட்டானே! ‘இந்தியர்’ கையில் தமிழன் தன் தலைவிதியை ஒப்படைத்துவிட்டுத் தான் தேவாரம் பாடிக் கொண்டு காலம் கழிக்கிறான். மோரிசைப்போலவே, பிஜியிலும் தமிழர்தாம் நாட்டுக் குடிகளில் பெரும்பான்மையினராய் இருக்கின்றனர். தமிழர் வாழும் இடங்களையே தமிழன் அறிவதில்லை -அவன் அங்கே போக்குவரவு வைத்துக்கொள்ள முடியாதபடி அவை வெகுதொலையில் இருப்பதால்! ஆனால், தென் ஆப்பிரிக்காத் தமிழன் குரல், இலங்கைத் தமிழன் குரல், மலாயாத் தமிழன் குரல் அவன் அடிக்கடி கேட்பது. ஏனெனில், இவ்விடங் களுக்கெல்லாம் அவன் இன்றும் வெள்ளை முதலாளிகளுக்காகக் கூலிகளை அனுப்பிக்கொண்டிருக்கிறான். வெள்ளை ஏகாதி பத்தியங்களுக்கு- வெள்ளை முதலாளிகளுக்குக் குறைந்த கூலியில் உழைத்து உருக்குலைவதற்குரிய விலங்குகள் - இயந்திரங் களுக்காவது எண்ணெய் செலவாவதுண்டு, தேய்மானக் கழிவு உண்டு, அவைகூட இல்லாத தமிழ் இயந்திரங்கள் - தேவைப் படும்போது, தமிழகத்தின் பழைய எசமானான வெள்ளையரும், புதிய எசமானான அவன் இந்தியத் தோழனும் தமிழனைப் பார்சல் செய்து அனுப்புகிறார்கள். வெள்ளையன் தேவை நீங்கியபின் - கறவைவேளை கழிந்தபின் மாடு அடிமாட்டுச் சந்தைக்கு அனுப்பப்படுவதுபோல, இந்தத் தமிழ் மாடுகளும் தமிழர் அடிமாட்டுச் சந்தையாகிய நம் தமிழகத்துக்கு அனுப்பப்படுகின்றனர். இதில் வியப்புக்குரிய இன்னொரு செய்தி என்னவென்றால் கூலித் தமிழன் திருப்பியனுப்பப்படும் சமயம், குடியிருந்த தமிழன் வாழ்வே சிதையும் அளவுக்கு மேலும் அடிக்கடி கை வைக்கப்படுகிறது. காந்தியடிகள் இந்தியர்களுக்குப் பாடுபட இந்தியா வருமுன் தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் உரிமைக்காகவே பாடுபட்டார். அவருடன் உழைத்த வர்களுள் தமிழ்ப்பெண் ‘வள்ளியம்மை’ யை அவர் தம் புதல்வியாகப் பாவித்தார். அவள் தமிழ்ப்பெண்ணா யிருந்ததனாலேயே காங்கிரசு அவள் வீரப்புகழை மறந்தது - அத்துடன் இந்தியா தன்னாட்சி பெற்ற பின்பே, காந்தியடிகள் உழைப்பால் கிடைத்த உரிமைகளை இழந்து தமிழர் தவித்தனர். நிறத்திமிர் ஒருபுறமும், வெள்ளையர் கிளறிவிட்ட நீக்ரோ - தமிழர் பூசலுக்கு ஒருபுறமும் ஆளாகின்றனர். இந்தியர் விடுதலை பெற்றது போலத் தமிழகமும் விடுதலை பெற்றிருந்தால் தென்னாப்பிரிக்கத் தமிழர் வாழ்வின் கடுமைகள் குறைந் திருக்கும். அயலினத்தவராகிய இந்திய ஆட்சியாளர் தம் நாட்டினர் என்று அவர்களைக் கூறிக்கொண்டே அயலினத்தார்களாகவே நடத்துகின்றனர். மலாயாவில் ‘கம்யூனி°ட், கம்யூனி°ட்’ என்று கிலிகாட்டிப் பெரும்பாலும் தமிழனே வேட்டையாடப்பட்டான். ‘கம்யூனி°ட்’ என்ற சொல் அங்கே தமிழினத்தின் மீது பாணம் தொடுப்பதற்கே பயன்பட்ட ஒரு சாக்காக இருந்தது. அச்சமயம் விடுதலை இந்தியாவின் தூதுவராக அங்கிருந்தவர் தமிழருமல்லர். தென்னாட்ட வருமல்லர்: ஒரு வட இந்தியர்! தமிழரை நாம் இந்தியர் என்று கூறினாலும், இந்தியர் எங்கும் தமிழரை இந்தியர் என்று கருதியதில்லை. வடநாட்டுப் புயலுக்குத் தென்னாட்டுக் காங்கிரசு தலைவர்களும் ஆட்சியாளர்களும் மக்களும் முனைந்து உதவியதும், தென்னாட்டுப் புயலைத் திரு.இராச கோபாலாச் சாரியார் அரசியல் புறக்கணித்ததும், காமராசர் ஆட்சியிலும் தில்லி புறக்கணித்ததும் கண்கூடு. ஆனால், இவற்றையெல்லாம் கவனிக்காத அகில இந்தியத் தமிழரும் மலாயாத் தமிழர் நிலைகண்டு கொதித்தனர். இதன் பலனாகவே மலாயாத் தூக்கு மரம் தமிழன் கழுத்தில் பதித்த பல்லைத் தளர்த்திற்று. தமிழ் மக்களேனும் ஒன்றுபட்டால், அடிமையாட்சியில்கூட வெளி நாட்டுத் தமிழன் வாழ்வுக்குச் சிறிது ஒளி ஏற்படும் என்பதை இது காட்டிற்று. தேர்தலில் தமிழர் தமிழ்த் தேசியத்தை வலுப் படுத்தினால், அதன்முதல் நல்விளைவைக் கட்டாயமாக வெளிநாடுகளில் காணலாம். மலாயாப் பல்கலைக் கழகத்திலும் இந்தியப் பண்பாட்டுக்கும் இந்திய மொழிக்கும் ஒருபகுதி சென்ற சில ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டது. மலாயாவில் மூன்றுமொழி நாகரிகங்கள் கூடி வாழ்கின்றன. ஒன்று நாட்டுக்குரிய மலாய் மொழியும் மலாய் இனமும். அஃது இன்னும் தன் பழம்பெருமை அறியாத இனமாகவே இருக்கிறது. உலகப் பழைமையில் தமிழனோடொத்த பழம்பேரினம் அது. இரண்டாவது இடத்துக்குரியது சீனமொழியும் சீனஇனமும் ஆகும். இவற்றுட னொத்த மூன்றாவது இனமே தமிழ் இனம். மூன்றும் உலகின் மிகப்பழம் பேரினங்கள் - ஒத்த பழம் பேரினங்கள் ஆகும்-இம்மூன்றினங்களும் மலாயாவில் ஒத்து வாழ்ந்தால், மூன்றும் தம் பழம் பெருமையுணர்ந்து மறுமலர்ச்சி கண்டால், மலாயா உலகிலே ஒரு மிகப்பெரும் புரட்சி உண்டுபண்ண முடியும் என்பது உறுதி. ஆனால், இங்கும் இடையிருட்கால இனமாகிய இந்தியப் போலித் தேசிய இனம் குறுக்கிட்டுத் தமிழை உருக்குலைக்க அரும்பாடுபட்டுள்ளது; பட்டு வருகிறது. இந்திய அரசாங்கம் இந்தியையே இந்திய மொழியாக்க ஒற்றைக்காலில் நின்று குதித்தாடிற்று. மலாயாத் தமிழன் குரல் இதை எதிர்த்தது. தமிழே அங்குள்ள இந்திய மொழியாய் இருக்கவேண்டுமென்றனர் அவர்கள். அச்சமயம் நம் அடிமைத் தமிழகத்திலிருந்து சில கொத்தடிமைகள் அங்கே சென்று, சமரசச்சாக்கில் ‘இந்தியும் வேண்டா தமிழும் வேண்டா. இருவர்க்கும் பொதுவாக சமற்கிருதம் இருக்கட்டும்’ என்று தலைகீழாக நின்று போராடினராம்! மலாயா அரசாங்கம் ஓர் ஏகாதிபத்தியத்தின் குரலுக்காகவோ, அதன் தாசர் குரலுக் காகவோ தமிழர் குடியாட்சியுரிமையை அடக்க முனையாமல் தமிழையே இந்திய மொழியாக்கினர். தமிழகத்தின் ஒரு சிறந்த பேராசிரியரும் - உயர்திரு. வித்துவான் மு.இராசாக்கண்ணனார் அப்பதவி ஏற்றுத் தற்போது அங்கே சென்றுள்ளார். இந்திய அரசியலும் அதற்குக் குற்றேவல் புரியும் தன்னுரிமை தன்னுணர்ச்சியற்ற சென்னை அரசாங்கமும் இங்கே புகுந்து மேலும் ஓர் அடிமைச் சமரச முயற்சி செய்து தமிழை ஒரு சிறிதேனும் தாழ்த்த அரும் பாடுபட்டன. தமிழ்மொழியே மலாயாவில் இந்திய மொழியாய் இருக்க வேண்டும் என்பதைத் தமிழே அடிப்படையான இந்திய மொழி என்று மாற்றி, தமிழுடன் சமற்கிருதத் துக்கும் இந்திக்கும் இடங்காண, தேசிய ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இந்த அயற் பண்பாட்சிகள் பாடுபட்டுவருவதாகக் கேள்விப்படுகிறோம். மலாயாவிலும் இலங்கையிலும் உள்ள மக்களுள் பலர் நம் அடிமைத் தமிழகத்திலிருந்து சென்ற சில நூற்றாண்டுகளில் சென்று குடியேறியவர்கள் என்பது உண்மையே. ஆனால், எல்லாரும் அப்படிக் குடியேறியவர்கள் என்ற எண்ணம் சிலகாலமாக வளர்க்கப்பட்டுவருகிறது. தன் வரலாறும் உலக வரலாறும் அறியாத தமிழன் - சில சமயம் மலாயாத் தமிழனும் இலங்கைத் தமிழனும்கூட - இதை விரும்பும்படி ஏடுகளாலும் பத்திரிகைகளாலும் பெரும் பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இஃது இரண்டு வகையில் பொய்யுரை ஆகும். குடியேறிய தமிழரிலே மிகப்பலர் சென்ற இரண்டாயிர மூவாயிர ஆண்டுகளில் குடியேறியவர்கள் ஆவர். இதே காலத்துக்குள் இந்தியாவில் வந்து குடியேறிய ஆரியர், பார்சிகள், குஷாணர் ஆகியவர்கள் இன்று இந்தியராகக் கருதப்படுவது போல, இந்தத் தமிழரும் மலாய் மக்கள் என்று கருதப்பட வேண்டியவர்களே ஆவர். ஆனால், உண்மையில் அவர்கள் பேசும் தமிழ் ஒலிப்பே இதனைக் காட்டும். ஆயிர ஆண்டுகட்குமுன் - கடல்கடந்த தமிழகத்துடன் தமிழர் உறவு குறைந்துவந்த காலத்துக்குமுன் - இருந்த தமிழையே அவர்கள் இன்னும் பேசுகிறார்கள். இரண்டாவதாக, மலாய்நாடும் இலங்கையும் கடலால் நம் தமிழகத்திலிருந்து பிரிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளே. இந்நாடுகள் இடையே கடலில்லாமல், குமரி, பஃறுளி முதலிய ஆறுகளினாலே பிரிக்கப்பட்ட பண்டைக் குமரிக் கண்டத்தின் பகுதிகளே. ஆகவே, இங்குள்ள தமிழர்களுள் ஒரு பெரும்பகுதி, கருமூலப்பகுதி கடலுக்கு இப்பாற்பட்ட தமிழகத் தமிழரைப் போலவே, அவ்வந்நாட்டின் மூலக் குடிமக்கள் ஆவர். மலாய் நாட்டிலுள்ள மலாய் மக்களும், இலங்கை நாட்டிலுள்ள சிங்கள மக்களும் தமிழர்க்கு முற்றிலும் அயலானவர் களல்லர். தென்னாட்டிலே, பிற இனத்தலையீட்டால், தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு பிரிவுற்றதுபோல, இவையும் தமிழிலிருந்து பிரிவுற்ற தமிழின மொழிகளே. மக்களும் தமிழருடன் சிலகாலம் நெருங்கிய தொடர்பில்லாமல் இருந்த காலத்தில் மாறுபட்டுவிட்ட தமிழினத்தவர்களேயாவர். இலங்கையில் சிங்களவரை ஆரியர் என்று கதைகட்டி, இந்திய ஆரிய மொழிகளுடன் சிங்களத்தைச் சேர்க்கும் முயற்சி சில காலமாக நடைபெற்று வருகிறது. சிலகாலமாக, வடதிசைத் தொடர்பினாலும் தூண்டுதலாலுமே சிங்களத் தலைவர்களைப் புத்த பிட்சுகள் தமிழர்க்கெதிராகத் திருப்பி வருகின்றனர். தமிழ் மக்கள் தம்மை இந்தியர் என்று கூறிக்கொள்வதனாலும், அகில இந்தியக் கட்சியின் ஆட்சியிலுள்ள தமிழ்ப் பத்திரிகைகள் இந்தக் கருத்தை வளர்த்து வருவதனாலுமே, இந்தியர் தமிழர்க் கெதிராகச் செய்து வரும் இந்தச் சூழ்ச்சியைத் தமிழர் காணாதிருந்து வருகின்றனர். சேனநாயகா, கொத்தலாவல, பண்டாரநாயகா ஆகியவர்கள் ஆட்சி படிப்படியாகப் பண்டித நேருவுடன் பழகிய பின்பே தமிழர்க்கெதிராகப் படிப்படியாகப் புது எதிர்ப்புகள் காட்டி வருகிறார்கள். அகில இந்திய எல்லையில் தமிழன் குற்றுயிராகி வரும் சமயம்; யாழ்ப்பாணத் தமிழர்கள் தம் இனிய தமிழ்மொழியை வீறுடன் வளர்த்து, சிங்கள மக்களுடன் நேசமாக வாழ்ந்து வருவது வட ஏகாதிபத்தியத்தின் கண்களை உறுத்தியிருத்தல் வேண்டும் என்பதில் அய்யமில்லை. ஆனால், ஓர் இராசகோபாலாச்சாரி போய், ஒரு காமராசர் வந்து விட்டா ரென்ற போலி மகிழ்ச்சியால், சாதிச் சிறுபுத்தி யடிப்படையான, மகிழ்ச்சியால், அதனுடன் ஏற்பட்டுவரும் இன அழிவைப் பலர் கவனியாதிருந்து வருகிறார்கள். சக்கரவர்த்தி இராச கோபாலாச்சாரி போன்ற ஒருவரைப் பண்டிதநேரு போன்றோர் தம் நண்பராக்கிக்கொள்ள முடியுமேயன்றிக் கொத் தடிமையாக்கிக்கொள்ள முடியாது. இதை வடஎல்லையில் இராசகோபாலாச்சாரியும், காமராசரும் நடந்து கொண்டவிதம் நன்கு காட்டும். சென்னையில் இடம் கொள்ளத் துடித்த ஆந்திரரைத் தமிழர் சார்பில் எதிர்த்து நின்றார் இராச கோபாலாச்சாரி. அவர் ஆட்சி நீடித்திருந்தால், திருத்தணி கட்டாயம் பறிபோயிராது. தேவிகுளம், பீர்மேடு, மேல்கரைச் சித்தூர், செங்கோட்டை, நெய்யாற்றங்கரை ஆகியவற்றில் தமிழர் கட்டாயம் கோட்டை விட்டிருக்க மாட்டார்கள். அதுபோலவே இராசகோபாலாச்சாரி நீடித்து முதல்வராயிருந்து வந்தால், இலங்கைப் பிரச்சினையில் தமிழின எதிர்ப்பு இவ்வளவு மும் முரமாய் இருக்க முடியாது. ‘பச்சைத் தமிழன் ஆட்சி’ தமிழினத்தின் குரல்வளையை நெரிப்பவர்க்குப் பாதுகாப்பளித்துத் தமிழன் குரலை அடக்கும் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறது. ‘இலங்கைத் தமிழர் குடியுரிமைப் பிரச்சினை, மொழி ஆட்சிப் பிரச்சினை ஆகியவற்றைப்பற்றி, இலங்கையிலிருந்து வரும் தமிழர் இங்கோ, இங்கிருந்து இலங்கை செல்லும் தமிழர் இலங்கை யிலோ பிரச்சாரம் செய்யாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அவர் பண்டாரநாயகாவிடமே வாக்குறுதி அளித் துள்ளதாக அறிகிறோம். தமிழகத்தை நேரடியாகத் தில்லி ஆண்டால்கூட, தில்லிக்குக் காமராசர் மூலமாகக் கிடைக்கும் இவ்வளவு சாதகமான நிலை இராது என்று நிச்சயமாகக் கூறலாம். தமிழர் நலங்களைக் கவனிக்க ஒரு பச்சைத்தமிழன் இருக்கிறான் என்ற எண்ணமே தமிழர் பல துறைகளில் அசட்டையாய் இருக்கும்படி செய்துவிட்டது. தேவிகுளம், பீர்மேடு முதலிய பகுதிகள் வகையிலும் தமிழர் குரலை அடக்குவதாகப் பச்சைத்தமிழர் திரு - கொச்சி அமைச்சர்களுக்கு உறுதியளித் துள்ளார் என்று தெரிகிறது. பர்மாவில் தமிழர்நிலை பற்றிப் பேசவந்த ஒருவரிடம் அது பற்றி இந்திய அரசாங்கத்துக்குப் பரிந்துரைக்கக்கூட நம் பச்சைத்தமிழர் மறுத்துவிட்டார். ‘எனக்குத் தமிழ் உணர்ச்சியூட்ட முயல்வது வீண்செயல்’ என்று அவர் கூறினா ராம்! இத்தகைய இரும்புத் தமிழன் இருக்க நமக்கென்ன குறை என்று பண்டித நேருவும் வடவரும் கட்டாயம் எண்ணிக் கவலையற்று இறுமாந்திருக்கக் கூடும். தமிழா! நீ உலகின் நண்பனாயினும், உலகில் நீ உரிமை யில்லாமலும், உன் உரிமை எங்கும் எழாதபடி பார்த்துக் கொள்ளவும் பொறுப்பேற்றுக் கொள்ளவும் உனக்கு ஓர் அரசாங்கம் இருக்கிறது! அந்த ஆதரவில் உன் இனப் பகைவரே உன்னை ஆள, உன் பகைவரே உன்னைச் சூழ்ந்துள்ள நிலையில் நீ இருக்கிறாய்! உன் இனத்தை அழிக்க விரும்பும் பகைவர்க்கு உதவியாக உன் கையும் எழா திருக்குமாக! உன் கைச்சீட்டும் உன் பகைவர் ஏற்கெனவே பெற்றுள்ள வலுவைப் பெருக்கா திருக்குமாக! தமிழினத்தின் குரல் இன்று தமிழகத்திலே உரக்கக் கேட்கப்படுகிறது. ஆனால், அக்குரல் இதுவரை உன் வாழ்வில், சமுதாயத்திலேயே உழைத்தது. தேர்தலில் உன் உரிமையைக் காக்க நெடுநாள்வரை வாராதிருந்தது. ஏனெனில், அரசியலுரிமைக்குப் பாடுபடுமுன் அஃது உன் சமுதாய, கலை நலன்களில் கருத்துச் செலுத்தியிருந்தது. ஆனால், தமிழினத்தின் ‘விடியல் ஒளி’ அவர்களைத் தூண்டியிருக்கிறது. உன் இனப்பற்றையே தம் கேடயமாகக் கொண்டு, தம் இனப்பற்றையே வாளாக ஏந்தி அவர்கள் களம் புகுந்துள்ளனர். நீ வாழ, கடல்கடந்து உன் தோழன் உரிமை பெற, நீ நிமிர்ந்து நில். ஒரு தடவையாவது, உன் உயிர்த் தேவையான இனவளத்தை எண்ணி, மற்றப் பாசங்களை ஒதுக்கி, மற்ற மயக்கங்களைத் தள்ளி வைத்துத் தமிழினக் குரல் தரணியெங்கும் கேட்கும்படி செய்வாயாக! தமிழ்மொழியும் தமிழ்க் குரலும் உன் சட்டமன்றங்களில் முழங்கினால், உன் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளை களும் வருங் காலத்தில் உன்னை வாயார வாழ்த்தும் நிலை கட்டாயம் உண்டாகும் - பிள்ளை காலத்திலென்ன, உண் கண் முன்னேகூட அந்த நிலை உண்டாகக் கூடும். உன் பிள்ளைகள் நல்வாழ்வை மனத்தில் கொண்டு, உரிமைப் பெட்டியில் உன் உரிமைக்கரம் நீட்டு. மங்கிய உன்வாழ்வு அதன் மூலம் பொங்குவது உறுதி. வறுமையின் வாட்டம் உன்னை விட்டும், உன் நாட்டை விட்டும் ஓடுவது உறுதி. அது நீ எழுப்பும் ஆர்வத்தை அதாவது, உன் குடும்பத்தை ஊக்கி, நண்பரைத் திரட்டி, தமிழுணர்ச்சி வாயிலாக அலையலையாகத் தமிழரைத் தமிழினத்தின் திசையில் நீ இட்டுச்செல்லும் துடிப்பைப் பொறுத்தது! 8. தமிழகமும் தென்னாடும் தமிழகத்தின் மொழி விரிவு, தமிழர் வாழும் பகுதி களனைத்தும் அடங்கிய தமிழுலகம் ஆகும். இதனை நாம் பெருந்தமிழகம் என்னலாம். ஆனால், தமிழகத் தின் இன்னொரு வகை விரிவு உண்டு. அது மொழிவிரிவன்று. ஆனால், மொழி சார்ந்த இனப்பண்பின் விரிவு. அது தமிழின மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய மொழிப் பகுதிகள் சார்ந்தது. இப்பேரெல் லையை நாம் பண்டைத் தமிழக விரிவின் எஞ்சிய சின்னமாகவும் கருதலாம். செந்தமிழக மாகிய இன்றைய தமிழகத்தின் நாடு கடந்த மொழிவிரிவாகவும் மொழிகடந்த பண்பு விரிவாகவும் கருதாதிருக்க முடியாது. நல்ல குடியாட்சித் தமிழகம் அமையும் காலத்தில், தமிழகத் தேசிய அரசியல் தொலைதமிழர் வாழும் கடல்கடந்த நாடுகளின் அரசியல்களுடன் ஒரு நேச உறவும், அண்மையிலுள்ள இவ்வின நாடுகளுடன் அதனிலும் நெருங்கிய ஒரு கூட்டுறவும் கொள்ளப் போவது உறுதி. ‘திராவிடம்’ என்ற இந்த இன எல்லையின் பெயரால், தமிழகத்திலே ஒரு கட்சி ஏற்பட்டிருப்பதுடன் அதன் குரல் தமிழகத்தின் பழம் புகழ்க் கீதத்தைப் புதிய தமிழகத்தின் காதில் சென்ற பல ஆண்டுகளாக எழுப்பிவருகிறது. அஃது உரிமைத் தமிழகம் என்ற குறிக்கோளுடன் இந்த உரிமை இனக்கூட்டுறவு என்ற குறிக்கோளையும் ஒரே குறிக்கோளாக்கி, திராவிடம் என்று அழைக்கிறது. இது திராவிட இயக்கத்தின் பொதுக் குறிக்கோளானாலும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே சிறப்புக் குறிக்கோள் ஆகும். ஏனென்றால், திராவிட இயக்கம் தொடக்கக் காலத்தில் - திராவிடர் கழகமாக உருவாகுமுன் -`தமிழ்நாடு’ என்ற மொழி எல்லை மட்டுமே மேற் கொண்டிருந்தது. 1944இல் ‘திராவிடர் கழகம்’ என்ற பெயர் ஏற்ற போது, அது ‘தமிழ்நாடு’ என்ற குறிக்கோளைப் பேரளவில் நழுவவிட்டு, ‘திராவிடநாடு’ என்ற குறிக்கோளை மட்டுமே வலியுறுத்திற்று. ஆனால், 1949இல் திராவிட முன்னேற்றக் கழகமாக மறுமலர்ச்சியுற்றபோது, அது தமிழகத்தின் மறுமலர்ச்சி இயக்கமாகி, முழுநிறை தமிழ்த் தேசிய வாழ்வாயிற்று. ‘தமிழ்நாடு’ என்ற குறிக்கோளுடன், திராவிடநாடு என்ற குறிக்கோளை இணைத்து, ‘முழுநிறை உரிமை பெற்ற தமிழ்நாடும்’ முழுநிறை உரிமைபெற்ற கேரளம், ஆந்திரம், கருநாடகம், துளுவம் ஆகிய நாடுகளுடன் இணைந்து, சரிசம அடிப்படையில் அமைந்த திராவிடக் கூட்டாட்சியும்’ என்று இணைவுக் குறிக்கோளுக்கு விளக்க வரையறை அளிக்கப்பட்டது. இந்த இணைவுக் குறிக்கோளும் அதன் விளக்க வரையறையும் அகில இந்திய, அகில உலகக் கட்சிகளால் மனக்குழப்பமுறும் கட்சிப் புத்தார்வலர்க்காகவே செய்யப் பட்டாலும், அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணியிலே ஒரு பெருமாறுதல் உண்டுபண்ணிற்று. ‘தமிழ்நாடு’ குறிக்கோளை மட்டுமே கண்டுணர முடிந்த அகில இந்திய, அகில உலகக் கட்சிகளுடன் அக்குறிக்கோள் நோக்கி ஒத்துழைத்தும், ‘திராவிடநாடு’ குறிக்கோள் மட்டுமே கொண்ட திராவிடர் கழகத்துடனும் அது தேவைப்பட்ட சமயம் அவ்வப்போது அக்குறிக்கோள் நோக்கி ஒத்துழைத்தும், தமிழக முழுநிறை தேசியத்தின் மய்யக் கட்சியாய்ச் செயலாற்ற முடிகின்றது. அதன் ஆற்றல் இதனால் பன்மடங்கு பெருகிற்று. தமிழகம் கடந்து மிகுதி பரவாத நிலையிலேயே 1952-க்குள்ளாக அஃது அகில இந்தியாவிலும் ஒப்புயர்வற்ற ஆற்றல் மிக்க ஒரு கட்சியாயிற்று. 1952 தேர்தலில் அது தன் நேரடி ஆதரவாளர்களாகத் தமிழகத்தில் 40 உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்ப முடிந்தது. அத்துடன் அதற்கு முன் தமிழகத்தில் 2 இடம் மட்டுமே பெற்ற கம்யூனி°டுகளை அது தன் அனுதாப ஆற்றல் மூலமே 20 இடம் பெறுவித்தும், தமிழகத்துக்கு வெளியே முற்போக்குக் கட்சிகள் அதாவது இடதுசாரிக் கட்சிகள் பெருவாரியாக வெற்றிபெறுவித்தும் கீழ்த்திசை முழுவதுமே முற்போக்குச் சத்திகளுக்குத் தூண்டுதல் தந்து இயக்கிற்று. 1952-க்குப் பின் அதன் ஆற்றல் தமிழகத்தினுள்ளும் வெளியேயும் கண்காணும் கட்சியாற்றல் வடிவிலும் கண்காணா ஆர்வ ஆதரவு வடிவுகளிலும் பரவிவருகிறது. 1953-ஜூலை 14-இல் அது நடத்திய மும்முனைப் போராட்டம் ஒரேநாளில் தமிழகத்தின் மூவாயிரம் இளங் காளைகளையும் நங்கையர்களையும் சிறைக்கோட்டம் காணவும் பல்லாயிரம் மக்களைத் தமிழின் உரிமைக் களம் காணவும் வைத்தது. தமிழகங் கண்ட மிகப்பெரும் பேருரிமைப் போர் அதுவே. அதுவே தமிழகத்தை ஐந்து கண்டங்களுக்கும் அறிமுகப்படுத்திவைத்தது. திராவிட இயக்கத்தினரின் இந்த இணைவுக் குறிக்கோளைத் தமிழர் அய்யந்திரிபற அறிந்துகொள்ளுவது மிகமிக அவசியம். ஏனெனில், அகில இந்திய இயக்கத்திலேயே, அவ்வியக்க எல்லைக் குள்ளிருந்து தமிழார்வம் காரணமாக வெளியேற்றப்பட்ட தமிழரசுக் கழகத்தின் குறிக்கோளுக்கும் செயலுக்கும், இத் தமிழ்த் தேசியக் குரலுக்கும் தொடர்பு உண்டு என்றாலும், தூரமும் மிகுதி உண்டு. இரண்டையும் தமிழர் அறிதல் நன்று. தமிழக எல்லை எது என்பதை அறுதியிட்டு அந்த எல்லையைத் தமிழகமாகக் காணும் வகையில் அகில இந்தியக் கட்சியின் தமிழ் நுனியான தமிழரசுக் கழகத்தின் ‘தமிழ்நாடு’ குறிக்கோளும், தமிழினக் குறிக்கோளான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘தமிழ்நாடு’ குறிக்கோளும் ஒன்றே. ஆனால், இனக் குறிக்கோள் தமிழினத்துக்கு முழுநிறை தன்னாட்சி கோருகிறது. அதாவது வடதிசை ஏகாதிபத்தியத்தின் மேலுரிமையற்ற, தொடர்பற்ற, முழு விடுதலை நாடாகவே அது ‘தமிழ்நாடு’ காண விழைகிறது. அகில இந்தியக் கட்சியின் தமிழ்க் குரலோ ஆந்திர மாகாணம்போல ஒரு தமிழ் மாகாணம் பெறுவதுடன் அமைதியுற்றுவிடும். தொடக்கத்தில் எழுச்சியுற்ற விழிப்புற்ற தமிழர்களையும் கவராமல், இன்னும் தமிழகத்தின் பெரும்பாலான மக்களைக் கவராமல் காங்கிரசின் அருகே ஒரு கண்காணாச் சிற்றொளியாக அக்கழகம் நிலவவேண்டியிருப்பதன் காரணம் இதுவே. இரண்டாவதாக, காங்கிரசு மற்றத் தமிழருடன் சேர்த்துத் தம்மையும் உதைத்தாலும், அகில இந்தியக் குறிக்கோளுடன் நிற்கும் தமிரசுக் கழகம் அதைவிட்டு அகலமுடியவில்லை. இதனால், அது காங்கிரசால் வேண்டும்போது பயன்படுத்தி, வேண்டாதபோது சுருட்டி வைத்துக்கொள்ளும் ஒரு வாலாகவே நடைபெற முடிகிறது. தமிழக எல்லைக்காகப் போராடும் போதும் அது காங்கிரசு அரசியலை எதிர்த்துத் தாக்கும் ஆற்றல் இல்லாததாலேயே நினைத்தபடி எதுவும் முடிக்கமுடியாமல் இருக்கிறது. இந்தி எதிர்ப்பு வகையிலும் இரண்டாம் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின்போது அது மற்றக் கட்சிகளுடன் பெயரளவில் இணைவதாகக் காட்டிக்கொண்டாலும், தன் வலுவையோ ஆர்வத்தையோ அதில் மிகுதியும் காட்ட முடியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் கோரும் தமிழ்நாட்டின் முழுப் பொருளும் விளங்க வேண்டுமானால், அது கோரும் திராவிட நாட்டின் முழுப்பொருளையும் நன்கு உணர்தல் வேண்டும். ஏனெனில், இரண்டு குறிக்கோளும் ஒரே இனக் குறிக்கோளின் இருபுறங்களேயாகும். இரண்டையும் சேர்த்துக் கீழ்வருமாறு விளக்கலாம். ஒன்று: திராவிட முன்னேற்றக் கழகம் கோரும் தமிழ்நாடு அகில இந்தியக் கட்சி கோரும் தமிழ்நாடன்று. தமிழக ‘வாக்குரிமை’ மூலம் கொடுத்த உரிமையன்றி, தமிழக அரசியலுக்கு வேறு எந்த உரிமையும் அது கோரும் தமிழ் நாட்டில் இராது. அதுகோரும் தமிழ் நாட்டுச் சட்டமன்றத்தின் ஆற்றல் இங்கிலாந்தில் பாராளுமன்றத்துக்கு இருக்கும் ஆற்றல். அந்த மன்றமே யாருக்காவது அல்லது எந்தக் கட்சிக்காவது தன் ஆற்றலைப் பகிர்ந்து கொடுத்தாலல்லாமல் அதற்கு மேற்பட்ட ஆற்றலாக, இயற்கையின் ஆற்றலன்றி வேறு எந்த ஆற்றலும் இராது. இரண்டு: திராவிட முன்னேற்றக் கழகம் கோரும் திராவிட நாட்டில் தமிழ்நாடு மட்டுமன்றி, ஆந்திர நாடும், கருநாடக நாடும், கேரளநாடும், துளு நாடும் அடங்கியுள்ளன. ஆனால், அது கோரும் ஆந்திரநாடு, இன்று ஆந்திரர் பெற்றுள்ள ஆந்திர நாடன்று, மேற்கூறிய தமிழ்நாட்டைப் போலவே முழுநிறை உரிமைபெற்ற, தில்லி மேலுரிமையோ அல்லது வேறு எவர் மேலுரிமையோ அற்ற ஆந்திரநாடு ஆகும். அந்த ஆந்திரநாட்டுச் சட்டமன்றமே ஆந்திரர் ஆட்சிக்கு முழுப்பொறுப்பு வகிக்கும் ஆந்திரப் பாராளுமன்றமாய் இருக்கும். காங்கிரசு ஆட்சியை எதிர்த்துக் காங்கிரசுக்காரரே போரிட்டு அதன் பிறகு அமைந்துள்ள ஆந்திரமும், கேரளமும், இனியமையவிருக்கும் கருநாடகமும். தமிழகமும், துளுவமும் அல்ல; திராவிட முன்னேற்றக் கழகம் கோரும் ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும், தமிழகமும், துளுவமும்! முழுநிறை விடுதலை யுரிமையும் தன்னாட்சியும் தில்லி மேலுரிமையோ, வேறு எந்த மேலுரிமையோ அற்ற நாடுகளாய் அவை இருக்கவேண்டுமென்று திராவிட மறுமலர்ச்சி இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. மூன்று : இந்த ஐந்து முழுநிறை உரிமை பெற்ற நாடுகளும் தத்தம் பாராளுமன்றம், அமைச்சரவை, அரசியல் உரிமைகளுடன் தனித்தனி முழு உரிமை நாடுகளாக உலகில் இயங்கும். நான்கு : இந்த ஐந்து நாடுகளும் சரிசம அடிப்படையில் பொது இன உரிமை, பொது நல விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையிலே மட்டுமே ஒன்றுபட்டுக் கூடி, தாம் விரும்பிய முறையில் கூட்டுறவு அமைத்து, அக்கூட்டுறவு அரசியலைத் தாம் விரும்பிய முறையில் கட்டமைத்து, அதற்குத் தாம் விரும்பிய உரிமைகளையே கொடுக்கும். ஐந்து : இந்தியக் கூட்டுறவில் மய்ய ஆட்சியே மேலாட்சியும் மேலுரிமையும் உடையது. ஆனால், திராவிடக் கூட்டுறவில் உரிமைகள் யாவும் மொழி நாடுகளிலேயே இருக்கும். அவற்றின் ஒத்துழைப்பால் ஏற்பட்ட மொழி ஆட்சி மேலாட்சி யாய் இராது. அவற்றுடன் ஒத்துழைக்கும் பொது ஆட்சியாகவே இருக்கும். அதன் ஒவ்வொரு செயலும் நாட்டாட்சிகளின் இணக்கம் பெற்றதாகவே இருக்கும். ஆறு : இந்தியக் கூட்டுறவு இன அடிப்படையில் அமைந்ததன்று. அஃது ஒரு தேசிய இனமாக இயங்கவும் முடியாது. அதனாலேயே அது மாகாணங்களின் உரிமைகள் என்றால் அஞ்சுகிறது. மாகாணங்களை மொழியடிப்படையில் அமைக்கவும் அஞ்சுகிறது. மொழியடிப்படையான உண்மைத் தேசியங்கள் தம் போலிப் பொதுத் தேசியத்தை உடைத்துவிடும் என்பது இப் போலித் தேசியவாதிகளின் ஓயாத கிலி. திராவிடக் கூட்டுறவுக்கு இந்த அச்சம் எதுவும் இராது. ஏனெனில், இந்தியக் கூட்டுறவில் இனம், கூட்டுறவுக்கு எதிராகச் செயலாற்றுகிறது. திராவிடக் கூட்டுறவில் இனம், கூட்டுறவுக்குச் சாதகமாகத் தானாகச் செயலாற்றிவிடும். ஏழு : இந்தியக் கூட்டுறவில் தனிமனிதப் போட்டியும் சரி, மாகாணப் போட்டியும் சரி தேசிய இன ஆர்வம் என்ற அன்பிணைப்பு இல்லாத, பொதுக் குறிக்கோளில்லாத பொறாமைப் போட்டி ஆகும். சுதந்தரத்துக்கு முன்பே இப் பொறாமைதான், முசுலிம் பகுதிகளான இன்றைய பாகி°தான் பரப்பில் தொழில் வளர்க்காமல், இந்துப் பகுதிகளான இன்றைய இந்தியாவிலேயே தொழில் வளர்த்தது. இதனாலும், வட இந்தியாவிலே முசுலிம்களுக்கு இடம்தரும் உருதுவைப் பகைத்து இந்தியை வலியுறுத்தியதனாலும் பாகி°தான் பிரிய நேர்ந்தது. இதே பொறாமைப் போட்டி, இந்தியக் கூட்டுறவின் மாகாணங் களிடையே இன்றும் நிலவுகிறது. தென் மாகாணங்களைப் பொறுத்தவரையில் இப் பொறாமைப் போட்டி, அயலினப் பகைமைச் செயலாகவே நடைபெறுகிறது. இந்த இனவேறுபாடு காங்கிரசில் மாறாப் பற்றுள்ள பெருந்தலைவர்களையும் பெரியவர்களையுமே உறுத்திவருகின்றது. பம்பாயில் ‘தாஜ்மகால்’ ஓட்டலை விலைக்கு வாங்க எண்ணிய பாரி°டர் திரு.அழகப்ப செட்டியாரை வடக்கத்திய முதலாளிகள் திரண்டு உருட்டிவிட்ட செய்தி; இந்தியில் படமெடுக்கும் முயற்சியில், பம்பாய் அரசியலார் ‘ஆனந்த விகடன்’ உரிமையாளரான திரு.ஜெமினி எஸ்.எ°.வாசனுக்குத் தந்த இடி ஆகியவற்றையும்; மைசூரில் அரசாங்கம் நடத்த முன் வந்த மோட்டார்த் தொழிலுக்கு இணக்கம் மறுத்து, வடவர்க்கு அது கொடுத்தது; குடியாட்சியில் மக்கள் உயிர் நிலையாகிய பத்திரிகைகளையும் உண்டி விடுதிகளையும் வடநாட்டவர் கைப்பற்றி வருவது; சோப்பு, சிமிட்டித் தொழில்களைத் தென்னாட்டிலும் டாட்டா, பிர்லா, டால்மியாக்களுக்கே உரிமையாக்கி வருவது; ஐந்தாண்டுத் திட்டத்தால் தென்னாட்டை ஆசியாவில் ஓர் ‘ஆசியா’ வாக்கி, வடநாட்டைக் கீழ்த்திசை ‘அமெரிக்கா’ ஆக்கிவருவது ஆகிய செயல்கள் அறிவுக் குருடராக்கப் பட்டுள்ள தமிழர்க்கும் உணர்ச்சியூட்டும் காட்சிகளாகப் பெருகி வருகின்றன. இந்தப் பொறாமை, பகைமை, தன்னலப் போட்டிகள் திராவிட மறுமலர்ச்சி இயக்கம் கோரும் தென்னாட்டில் இருக்கமாட்டா. ஏனெனில், ஒவ்வொரு மொழி நாடும்; தன் முழு ஆற்றலும் வளர்த்து, உலக வாணிகத்திலும், தொழிலிலும் ஒன்றுக்கு ஐந்தாக இடம்பெறும்படி ஊக்கப்படும். ‘எல்லாரும் ஒரு நிறம் எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் இந்நாட்டு மக்கள்’ என்ற உணர்ச்சி மொழி காரணமாக; மொழி நாடுகளில் வளர்க்கப்படுவதுடன், மொழி இனம் காரணமாகத் தென்னாடெங்கும் வளர்க்கப்படும். கடைசியாக, “தமிழ்நாடு’ குறிக்கோளும் ‘திராவிடநாடு’ குறிக்கோளும் இணைக்கப்படுவானேன். முழு நிறை தமிழகம் போதாதா?” என்ற கேள்வி சிலரிடம் எழக் கூடும். இதன் விடையும் இணைவுக் குறிக்கோளின் விளக்கமாகவே அமைவது. ஆதலால், அதில் தமிழர் கருத்துச் செலுத்துதல் வேண்டும். முதலாவது :தில்லியை எதிர்த்துத் தமிழகம் தனித்து நின்று முழு நிறை விடுதலைபெற முடியுமென்றே வைத்துக்கொள்வோம். தமிழகம் அப்போது மொழியடிப்படையில் அமைந்த ஒரு நாடாயிருக்குமேயன்றி, இன அடிப்படையில் அமைந்த இயற்கைத் தேசியமாய் அமையாது. தமிழ் இனம் மொழி யடிப்படையாகவே அமைந்ததானாலும், அது மொழி கடந்து வளர்ந்துவிட்டது. அந்த வளர்ச்சி உண்மையில் இமய எல்லை யளாவி, அதற்கப்பாலும் பரந்திருந்த காலம் உண்டு. ஆனால், அதன் இனவளர்ச்சியின் உயிர்த்துடிப்புக் குன்றியபின் அஃது இமய எல்லையை விட்டு விந்திய எல்லைக்கும், விந்திய எல்லையைவிட்டு ஐந்து மொழி நாடுகள் எல்லைக்கும், பின் வடவேங்கடம் தென்குமரி குண குடக் கடல் எல்லைக்கும், அதன்பின் குடகடல் எல்லைவிட்டு மலை எல்லைக்கும், நம் நாளில் இதனினும் குறுகியுமே வந்துள்ளது காணலாம். இனப் பற்றற்ற காரணத்தாலேயே, கொடுந்தமிழ் நிலம் என்று எல்லைப் புறங்களைப் பழித்ததனாலேயே, தமிழகமும் தமிழினமும் தேய்ந்து பிற இனங்களுக்கும் மொழிகளுக்கும் நாடுகளுக்கும் பணிய நேர்ந்தது. இன அடிப்படையையும் பண்பாட்டடிப் படையையும் தமிழகம் இன்று பேணாமற் போனால், முழு நிறை உரிமை பெற்றாலும் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மேல் தமிழகம் நீடித்து நிற்க முடியாது. கிரேக்க, உரோம இனங்கள் போல, சால்டிய, எகிப்திய இனங்கள் போல, அழிந் தொழியவே நேரும். இது தமிழகத்துக்கு மட்டும்தானே நட்டம்? ஆந்திரரும், கன்னடியரும், மலையாளிகளும் இதற்காகத் தமிழருடன் சேருவரா - சேர ஆர்வம் கொள்ளுவரா? என்று நேர்மையுள்ளம் படைத்த தமிழர் கட்டாயம் கேட்பர். எல்லையிழந்தது தமிழகம் மட்டுமன்று அன்பரே, தமிழினம் முழுவதுமே ! ஆந்திரப் பேரரசர் ஆண்ட முக்கலிங்கம் எவை என்பதை ஆந்திரர் இன்று மறந்துவிட்டனர். வங்கக் குடாக்கடலில் மேற்கிலுள்ள வட தென்னாடு ஒரு கலிங்கம் - இது மேல் கலிங்கம். வங்காளம் உள்ளடக்கிய கங்கைச் சமவெளி ஒரு கலிங்கம் - இது வட கலிங்கம். பர்மா ஒரு கலிங்கம் - இது கீழ்க் கலிங்கம். இம் மூன்றும் சேர்ந்ததே முக்கலிங்கம். இஃது ஆந்திரரின் அரசியல் விரிவு. ஆனால் 11ஆம் நூற்றாண்டில் சோடகங்கர் ஒரிசாவை ஆண்டபோது, அங்கே பேசப்பட்ட மொழி தெலுங்கே. சோடகங்கர் தெலுங்குப் புலவரை ஆதரிக்காமல் தமிழ்ப் புலவரை ஆதரித்தனர் என்றும் பள்ளிகளில்கூடத் தாய்மொழியாகிய தெலுங்கை அமிழ்த்தித் தமிழைப் புகுத்தினர் என்றும் அந்நாட்டு வரலாறு குறிப் பிடுகிறது. ஆந்திர மொழி வழங்கிய ஒரிசாவின் வடவரினக் கலப்பாலேயே இன்றும் அரைத் திராவிட - அரை ஆரிய மொழியாகிய ஒரிசா பிரிந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே ஒரிசா மாகாணம் அமைந்தது. அச்சமயம் சென்னை மாகாணத்தின் வடகோடியில் இருந்த கஞ்சம் மாவட்டத்தையும் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும் பகுதியையும் ஆந்திரர் இழந்தனர். அப் பகுதிகளில் தெலுங்கு பேசுபவரும் பண்டைத் திராவிட மொழிகளான கோண்டு, கூயி பேசுபவர்களும்தாம் மிகுதி. ஆனால், இன்று கேரளத்தை வளப்படுத்தத் தேவிகுளம், பீர்மேடு தமிழரிடமிருந்து வட ஏகாதிபத்தியத்தால் பிடுங்கப்பட்டது போல, அன்று அதே ஏகாதிபத்தியத்தால் ஒரிசாவை வளப்படுத்தக் கஞ்சம், விசாகப்பட்டினம் பகுதிகள் திராவிட ஆந்திரரிடமிருந்து பறிக்கப்பட்டன. மராட்டிய ஆட்சிக் காலத்தில் தெலுங்கு மொழி பேசிய பகுதியிலும் கன்னட மொழி பேசிய பகுதியிலும் மராட்டிய மொழி பரவிற்று என்று கன்னட, தெலுங்கு மொழி வரலாறுகள் கூறுகின்றன. மராத்திய நாட்டில் ‘தெலாங்’ என்ற பெயருடைய வர்கள் பலர் முன் தெலுங்கராயிருந்து மராத்தியரானவர்களே. மராட்டியரும் குஜராத்தியரும்கூட, இதுபோல வட ஆரியரால் தெற்கு நோக்கித் தள்ளப்பட்டனர் என்றும் தெற்கே கிடைத்த புது நிலத்தைவிட அவர்கள் வடக்கே இழந்த எல்லை பெரிது என்றும் மராட்டிய, குஜராத்திய வரலாறுகள் குறிக்கின்றன. மலையாள நாடு சங்க காலத்தில் தமிழ்நாடாக இருந்ததை நம்மில் பலர் அறியமாட்டார். ஆனால், அதை அறிபவர்கள்கூட அந்தப் பழைய மலையாளமாகிய தமிழ்மொழி எல்லை, இன்றைய மங்களூர் எல்லை தாண்டிச் சென்றிருந்தது என்பதைக் கவனித்தால், மலையாள மொழி வடக்கே எவ்வளவு கோட்டை விட்டிருக்கிறது என்று காணலாம். தமிழினத்தவர் ஒத்துழைப்பின்றித் தமிழர் தனித்து ஒரு நாடாக வாழலாம். ஆனால், இது சிலநாள் வாழ்வாகவே இருக்கும். அதுபோலவே தமிழக ஒத்துழைப்பின்றி, தமிழின நாடுகள் சிலகாலம் நாடாக வாழலாம். ஆனால், இதுவும் சிலநாள் வாழ்வாகவே இருக்க முடியும். தமிழினக் கூட்டுறவால் இந்நாடுகளின் வாழ்வு படிப்படியாக விரிவுறுவதுடன், அவற்றின் பண்பாடும் எதிர்பாரா வளர்ச்சியடையும். உண்மையில், பிற நாட்டார் தலையீட்டால் தென்னாட்டின் மொழிதான் ஐந்தாகப் பிரிவுற்றது. பண்பாட்டிலும் பலவகைச் சீரழிவுகள் ஏற்பட்டன. ஆனாலும், புதிய ஒற்றுமைக்குரிய பண்பாட்டுக் கூறுகளை அந்தத் தலையீடே உண்டுபண்ணிற்று. திராவிட இனத்தின் பண்டை நாடகக் கலையின் பெருமையில் ஒரு பகுதியை மட்டுமே நாம் மலையாளத்தில் காண்கிறோம். அதன் பிற கூறுகள் தமிழிலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் உள்ளன. அதுபோலவே கட்டடக் கலையின் ஒரு பெரும் பகுதி தமிழகத்திலும் மீந்தவை மலையாளம், கன்னடம் ஆந்திரப் பகுதியிலும் உள்ளன. ஓவியத்தில் பெரும் பகுதி ஆந்திரா விலும் தமிழகத்திலும் சிதறிக் கிடக்கின்றன. இவ்வெல்லைகள் முழுதும் மீண்டும் ஒன்றுபட்டாலன்றி, தமிழின நாகரிகத்தின் முழு விரிவை நாம் காணமுடியாது. மொழித் துறையிலும் தமிழ்மொழியின் முழு ஆராய்ச்சி என்றாலும், பிற தென்மொழிகளின் முழு ஆராய்ச்சி என்றாலும் ஒன்றே - எல்லாம் ஒரே திராவிட மொழி ஆராய்ச்சியே ! அயலினப் பண்பாட்சியிலுள்ள சென்னைப் பல்கலைக் கழகமும் அண்ணாமலை பல்கலைக் கழகமும் இத்துறையைத் தீண்டவில்லை, தீண்டிய பின்னும் வேண்டா வெறுப்பாக நத்தை வேகமும், நத்தையார்வமுமே காட்டிவருகின்றன. தேசியத் தமிழகத்திலே திராவிடக் கூட்டுறவிலே ஐந்து மொழிகளின் தனித்தனிச் சிறப்பாராய்ச்சிகளை ஐந்து நாட்டுப் பல்கலைக் கழகங்களும், அவற்றின் கொண்டுகூட்டான திராவிட மொழியின் உயர் ஆராய்ச்சியை, அனைத்தும் சேர்ந்த கூட்டுக் குழுவும் நடத்தும். தமிழினப் பழைமை யாராய்ச்சியில் பாண்டியர், சோழர் தலைநகரங்கள் தமிழகத்திலுள்ளன. ஆனால், இவ்விருவர் ஆட்சிச் சின்னங்களும் கல்வெட்டுகளும் சேரர் தலைநகரான வஞ்சியிலும் திருவாங்கூரிலும் மலபாரிலும் உள்ளன. மிகப் பழங்காலச் சேரர் தலைநகரான ‘நறா’ நகர் தென்கன்னட மாவட்டத்திலேயே இருக்கிறது. தமிழரசருள் பாண்டியர் ஆண்ட சின்னங்களுடனும் கல்வெட்டுகளுடனும்; சோழர் ஆண்ட சின்னங்களுடனும் கல்வெட்டுகளுடனுமே குடகு நாட்டு வரலாறு தொடங்குகிறது. மற்றும் ஐந்து மொழி நாடுகளிடையே உள்ள மக்கள் தொடர்பு ஆட்சித் தொடர்பு, வரலாற்றுத் தொடர்பு, நாகரிகப் பண்பாட்டுத் தொடர்புகள் பல. அவை தனி நூலாக எழுதப்படின், தென்னகப் புது வாழ்வுக்கு மிகவும் பயன்படுவதாகும். ஒரு தேசியத் தமிழாட்சியிலும் திராவிடக் கூட்டாட்சியிலும் மட்டுமே இவற்றை ஊக்க முடியும். அத்தகைய புரட்சிகரமான தொடர்புகளுக்கு ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள் மட்டும் கூறுவோம். ஒன்று: மலையாள நாட்டுக் கவிஞன் எழுத்தச்சன்தான் தென்னா டெங்கும் - தமிழகம் உட்பட - திண்ணைப் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினான் என்பது. திண்ணைப் பள்ளிகளுக் காகவே பிற்கால ஒளவையார் ஆத்திசூடி முதலிய பள்ளி வகுப்புப் பாட ஏடுகள் எழுதினார். இரண்டு: சோழர் குடி இளைஞரும் பாண்டியர் குடி இளைஞரும் கன்னட நாட்டிலும் தெலுங்கு நாட்டிலும் தனித்தனி நாடுகள் கண்டு ஆண்டனர் என்பது. மூன்று: இன்று தமிழருடன் தமிழராகக் கலந்துவிட்ட களப்பிரர் இரண்டாயிர ஆண்டுகட்கு முன் கன்னட நாட்டிலிருந்து தமிழகத்துக்குள் வந்து புகுந்த முல்லைநில நாகரிகத்தவர் என்பது. இப்பண்பெல்லை விரிவால் இந்திய மாநில எல்லையி லுள்ள மற்ற மொழி நாடுகளும் இன்றைய அறிவற்ற வடதிசை ஏகாதிபத்தியத்தில் நலிவதுபோல, நலியாமல், சோழப் பேரரசின் ஆட்சியில் அடைந்த அதே புதுத் தேசிய ஆற்றல் பெற்று வளரும். இன்னொரு திசையில் கடல் கடந்த தமிழர் வாழ்வும் அவர்கள் வளமும் ஆப்பிரிக்க, தென்கிழக்காசிய, இலங்கைப் பகுதிகளும் சோழப் பேரரசாட்சியில் கண்டதுபோலவே மீண்டும் தென்திசை வளங்காணும். தமிழக - தென்னாட்டு இணைவுக் குறிக்கோள் இங்ஙனம் இணைவுக் குறிக்கோள் மட்டுமன்று; தேசியக் குறிக்கோள்; தேசியங் கடந்த கீழ்த்திசை மறுமலர்ச்சிக் குறிக்கோள் ஆகும். 9. குடியாட்சி கடமை என்ற சொல்லுக்குத் தமிழில் வரி என்ற பொருளும் உண்டு. ஒரு நாட்டில் குடியுரிமையாளன் ஆட்சியாளர்க்குச் செய்யவேண்டிய முக்கியமான கடமை வரியே என்பதை இது நினைவூட்டுகிறது. ஆனால், ஆளப்படுபவன் கடமை, வரி மட்டுமன்று. ஆளப்படுதல் என்ற சொல்லே மற்றொரு கடமையைக் குறித்துக் காட்டுகிறது. அவன் சட்டத்தை மதித்து, அதற்குக் கட்டுப்பட்டு நடக்க ஒத்துக் கொள்ளுதல் வேண்டும். கட்டுப் படத் தவறு பவர்களுக்குத் தண்டனை தரப்படுவதையும் அவன் ஒத்துக்கொள்வது இயல்பு. இந்த இரண்டு கடமைகளுக்கும் நேரொப்பான உரிமையே குடியுரிமை என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. பொதுவாக, கடமையை நினைக்கும் அளவுகூட, இந்த உரிமையைப்பற்றி ஆளப்படுபவர் நினைப்பதில்லை. காரணம் அவை தனி மனிதன் வாழ்வு தொடங்கு முன்னும் முடிந்த பின்னும் நடை பெறுவதே. ஆற்றில் ஓடும் நீரைப்போல, வெட்டவெளியில் நிலவும் காற்றைப் போல அவை நாகரிக உலகில் மனிதனுக்கு இயல்பாகிவிட்டன. ஆனால், ஆற்றில் நீர் வற்றினாலும் வெள்ளமாகப் பொங்கி எழுந்தாலும் நீர் பற்றிய கவலை எழுவது உறுதி. காற்று இனிய தென்றலானாலும் சூறாவளியானாலும் அதைப்பற்றிய எண்ணம் உண்டாகாமல் இராது. அதுபோல், ஆட்சி பொதுநிலை கடந்து மிக நல்ல ஆட்சியானாலும், பொது நிலையால் குறைபட்டு மிக மோசமான ஆட்சி யானாலும் குடியுரிமை பற்றிய பேச்சு கட்டாயமாக எழுந்துவிடும். அரசியல் குழப்ப நிலை ஏற்பட்ட காலத்தில் வாணிகம் தடைப்படும். தொழில்கள் கெடும். உழவு தட்டுக்கெடும். பொருள்கள் கிடைக்கா. விலை எட்டா விலையாகும். பணமுடை, பொருள்முடை, உணவுமுடை உண்டாகும். ஆட்சிமீது மக்கள் கொதித்தெழுவர். புதிய நல்லாட்சி ஏற்படுத்த முந்துவர். அரசியல் மிகத் திறம்பட நடத்தப்பட்ட போதும் இதேபோன்று மாறுதல்கள் மக்கள் கண்களில் படாமல் இராது. பணம் பெருகும்; பொருள்கள் மலிவாகும்; கல்வி பெருகும். வாழ்வின் இன்பத்தால் கலைகள் பொங்கும்; அறிவு மலர்ச்சியுறும். குடியுரிமை என்பது மக்கள் நல்வாழ்வு என்பதை இது நமக்கு விளக்கிக் காட்டுகிறது. தனி மனிதர் நல்வாழ்வுக்குரிய விலையாகவே மக்கள் வரி கொடுக் கின்றனர்; சட்டத்துக்கும் கட்டுப்படுகின்றனர். ஆட்சி, நல்வாழ்வும் வாழ்வில் வளமும் உண்டுபண்ணினால், கடமை செய்தவர் மகிழ்வர். இன்னும் சிறிது மிகுதி வரி கொடுக்கவேண்டி வந்தால், அச்சமயம் அவர்கள் முணுமுணுக்க மாட்டார்கள். இன்னும் சட்டம்மூலம் சில கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டுமானால், அதையும் வெறுக்கமாட்டார்கள். உண்மையில் இக்கடமைகளை அவர்கள் தாமாகப் பெருக்க முந்துவார்கள். பங்கீட்டுக் களத்தில் மிகுதி ஆதாய வீதம் தரும் நிலையத்தில் எவர்தாம் மிகுதி பங்குபோட விரும்பமாட்டார்கள்! ஆட்சி என்பது உண்மையில் நல்வாழ்வு, வாழ்வுவளம் என்ற ஆதாயத்துக்காக அமைக்கப்பட்ட ஒரு பங்கீட்டு நிலையமே ஆகும். ஆனால், நல்வாழ்வும் வாழ்வின் வளமும் ஆட்சி மூலம் கிடைக்காவிட்டால், அல்வாழ்வும் அல்லலும் பெருகினால், ஆதாயத்துக்குப் பதில், இழப்பே தரும் நிலையத்திலிருந்த தம் பங்கை மீட்டுப் பெற்று, வேறு நிலையத்திலிட விரும்பும் பங்குதாரர்களைப் போல, மக்கள் அந்த ஆட்சியை மாற்றியோ, உடைத்தெறிந்தோ வேறு ஆட்சியை அமைக்க விரும்பாதிருக்க மாட்டார்கள். குடியுரிமை என்பது நல்வாழ்வும் வாழ்வின் வளமும் மட்டுமல்ல. ஆட்சியையும் ஆட்சிக்குட்பட்ட திட்டங்களையும் வேண்டும்போது ஆக்கும் ஆற்றலும் வேண்டாதபோது அழிக்கும் ஆற்றலும் குடியுரிமையின் ஒரு பகுதி ஆகும் என்பதை இது காட்டுகிறது. குடியாட்சி என்பது நல்லாட்சிக்குரிய இன்னொரு பெயரன்று. நல்லாட்சியை அமைக்கும் உரிமையும், அல்லாட்சியை அழிக்கும் உரிமையும் மக்களிடமே இருத்தல் வேண்டும் என்பதே குடியாட்சியின் அடிப்படைக் கருத்துமாகும். ‘பொன்னாட்சியானாலும் தன்னாட்சிக்கு நிகரன்று’ என்ற பழமொழி தமிழில் இது காரணமாகவே எழுந்தது. அயலாட்சி தன்னாட்சியன்று. அது குடியாட்சியும் ஆகாது. ஏனென்றால், அஃது எவ்வளவு பொன்னாட்சியாய் இருந்தாலும் ஆளுபவர் ஆளப்படுகிற வர்களுள் ஒருவர் அல்லர். அவர்களால் ஒரு போர் இல்லாமல் நீக்கப்படத்தக்க வரும் அல்லர். அதே சமயம் தம் நாட்டவரே ஆள்பவர் ஆனாலும், அவ்வாட்சி தன்னாட்சியோ குடியாட்சியோ ஆகிவிடாது. ஏனெனில், மக்கள் விரும்பினால் ஆக்கவும், விரும்பாவிட்டால் அழித்து மாற்றவும் உரிமையுடைய ஆட்சியே குடியாட்சி ஆகும். ‘நான் ஆளப் பிறந்தவன், அதனால் ஆள்கிறேன்’ என்று இறுமாப்போடு அரசர்கள் கூறிக்கொண்ட காலம் ஒன்று உண்டு. அங்ஙனம் அரசர்கள் மரபில் இங்கிலாந்திலே மன்னன் முதலாம் சார்ல° என்பவன் மக்களால் தூக்கிலிடப் பட்டான். பிரான்சிலே மன்னன் லூயி மக்கள் முன்னிலையிலேயே சிரச்சேதம் செய்யப்பட்டான். உருசியாவிலே, பாரதியார் கூறுவது போன்று ‘ஜார் அரசன் கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்’! என் ஆற்றலால் ஆள்கிறேன் என்று கூறிய ஜூலிய° சீஸர், நெப்போலியன், ஹிட்லர் ஆகியோர் அதே ஆற்றலாலேயே வீழ்த்தப்பட்டனர். இன்றைய நாகரிக உலகில் எல்லா நாகரிக அரசாங்கங்களும் தம்மைக் குடியாட்சி அரசாங்கங்கள் என்று கூறிக்கொள்ளத் தான் விரும்புகின்றன. அயல் நாட்டு ஆதிக்க ஆட்சிகூடத் தன் ஆட்சிக்குக் குடியாட்சிச் சாயமிட்டு, குடி யாட்சிப் போர்வை போர்த்துக்கொள்ளவே விரும்புகின்றது. பிரிட்டன் ஆட்சியில் இந்தியாவில் இந்தியாவுக்கெனப் பாராளுமன்றங்கள், சட்ட மன்றங்கள், மாகாண உரிமையாட்சிகள், மந்திரிசபைகள் முதலிய வற்றைப் பிரிட்டன் அமைக்க முனைந்தது இதனாலேயாகும். தொடக்கத்தில், பிரிட்டிஷார், ‘எங்கள் ஆட்சி நல்லாட்சி. தந்தி, தபால், பாதை, இருப்புப்பாதை, அணைக்கட்டு கால்வாய் வகுத்து உங்களுக்கு நல்வாழ்வின் வரம் கொடுத்த ஆட்சி’ என்றுதான் தம் ஆட்சியைப் பற்றிப் பள்ளிப் புத்தகங்களில் பிரச்சாரம் செய்தனர். ஆனால் பின்னாள்களில் ‘சட்ட உரிமைகள் தந்தோம், பதவி உரிமைகள் தந்தோம், உங்களவரே உங்களை ஆளும்படி செய்தோம்,’ என்று பாணியை மாற்றினர். ஆனால், இந்தியரே இந்திய ஆட்சியை ஆக்குவதற்கு, அழிப்பதற்கு உரிய அரசியல் விடுதலை அளித்தபின்பே உலகில் அவர்கள் குடியாட்சி மரபுக்குப் பெருமை ஏற்படும் என்ற நிலை கண்டனர். ஆயினும், அயலாட்சி ஆள்பவர்க்கு இனிப்பானதே என்பதை அவர்கள் சிங்கப்பூரிலும் மலாயாவிலும் எகிப்திலும் காட்டியே வந்துள்ளார்கள். எகிப்தில் பிரிட்டன் சூயஸைக் குடியாட்சி முறைப்படி எகிப்துக்கு விட்டு விட ஒருப்படவில்லை. கிழட்டு ஏகாதிபத்தியம் ஆனாலும் பல்லில் அகப்பட்டதை, வேறு வழியில்லாத நிலை வரும்வரை, விட்டுக் கொடுக்க மனம் வருவதில்லை! இந்து சீனாவில், இந்தோனேஷியாவில். பிரஞ்சு, டச்சு அரசியல்களும், கோவாவில் போர்ச்சுக்கீசு அரசியலும்; ஆப்பிரிக்காவில் பெல்ஜியம் முதலிய மற்ற ஐரோப்பிய அரசுகளும் இன்னும் தங்கள் ஏகாதிபத்தியப் பிடியைக் கூடியமட்டும் சாதித்துக் கொள்ளவே விரும்புகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்புக்கூட, இந்த ஏகாதிபத்தியப் பிடிகளைக் கண்டும் காணாததுபோலவே இருக்க நேர்கிறது - அதன் தலைமை உறுப்பினர்களே ஏகாதிபத்திய வாதிகளாக இருப்பதால்! பல் பிடுங்கப்பெற்று வரும் மேலை ஏகாதிபத்தியங்களின் அருகே, வளர்ந்துவரும் மக்கள் வல்லரசுகளான அமெரிக்கா, இரஷ்யா, சீனா ஆகியவற்றுடன் போட்டியிட்டுக்கொண்டு, தனக்கென ஒரு புதுவகை ஏகாதி பத்தியத்தைத் தில்லித் தெய்வங்கள் கனவில் கண்டு விரைந்து நனவில் பின்னி வருகின்றன. புலி ஏகாதிபத்தியங்கள் பூனை ஏகாதிபத்தியங்களான பின்பு, இங்கே ஒரு பூச்சி ஏகாதிபத்தியம், சிலந்தி ஏகாதிபத்தியம் காணமுயன்று வருகிறது. புலிகள் கோரப் பற்களைக் காட்டின. ஆனால், இந்தியாவிலோ மாயவலை விரித்து அது பூச்சிகள் வரும்வரை பதுங்கியிருந்து பின் சீறிப் பரபரவென்று சுற்றுகிறது. இதன் கோர உருவைக் கண்ட மகாராஷ்டிரத் தலைவர்கள் அதன் இயல்பைப் படம் பிடித்து நமக்குக் காட்டியுள்ளனர். அதில் இனம், தேசிய இனம் ஆகியவற்றின் பண்பு காணாததனால், அவர்கள் அதை ‘உள் நாட்டு ஏகாதிபத்தியம்’ என்று குறித்தார்கள்!. குடியாட்சியில் உரிமைகள் கீழிருந்து மேலே செல்லும். தேசிய ஆட்சியில் உரிமை, மக்கள் ஆர்வத்திலிருந்து தோன்றி ஆட்சியின் விருப்பமாகவும் கடமையாகவும் உரிமையாகவும் மிளிரும். இவ்விரண்டு பண்பும் உள்ள கூட்டாட்சியில் மக்கள் உரிமையிலிருந்து தனியரசு உரிமைகளும், தனியரசு உரிமை களிலிருந்து கூட்டரசு அல்லது மய்ய அரசு உரிமைகளும் பிறக்கும். ஆனால், இந்திய ஏகாதிபத்தியம் கண்டுபிடித்த முறை இதற்கு நேர் தலைகீழானது. மய்ய ஆட்சி ஏகாதிபத்திய ஆட்சியாய், அது வகுத்த உரிமையால், அதன் அடிமையாய்த் தனியரசுகள் செயலாற்றுகின்றன. குடியாட்சியில் அடிப்படை அரசியற் சட்டத்தை ஆக்கும் உரிமை மட்டுமன்றி, அழிக்கும் உரிமையும், மாற்றியமைக்கும் உரிமையும் மக்களுக்கு உண்டு. கூட்டுக் குடியாட்சியில் இந்த உரிமை மக்களுக்கு முதலிலும், தனியரசுகளுக்கு அதன் பின்னும், இறுதியிலேயே மய்ய அரசுக்கும் இருத்தல் வேண்டும். ஆனால், இந்தியக் கூட்டாட்சியில் அரசியல் சட்டம் அடிமையாட்சிக் காலத்தில் அமைந்தது. அஃது அமைப்பதற்கென்று தேர்தல்கூட நடத்தப்படவில்லை. மக்கள் விருப்பப்படி இஃது அமையவில்லை. அத்துடன் அதனை ஏற்கும் உரிமையும், மறுக்கும் உரிமையும், மாற்றியமைக்கும் உரிமையும் மக்களுக்கோ, தனியரசுகளுக்கோ தரப்பட வில்லை. இது சிறப்பாகத் தமிழகத்துக்கும் பொதுவாகத் தென்னாட்டுக்கும் அநீதியாகும். ஏனென்றால், தமிழகம் உட்பட்ட தென்னாடு மொழி வேறுபாடும், அதனிலும் அடிப்படைப் பண்பான இன வேறுபாடும் உடையது. தென்னாடும் தமிழகமும் அமையாமலே இயற்றப்பட்ட சட்டம் தென்னாட்டின் தனி மதிப்பையும் உரிமையையும் அவமதிப்பதாகும். தேசியக் கூட்டுக் குடியாட்சியில் எல்லா மொழிகளுக்கும் இனங்களுக்கும் சம உரிமையும், சிறுபான்மை இனங்களுக்குச் சலுகையும் பாதுகாப்பும் அளிக்கப் படும். இந்தியக் கூட்டுறவில் பெரும்பாலும் சிறுபான்மை இனமாயிருந்த இசுலாமியப் பகுதி, இந்த உரிமைகள் தில்லி ஏகாதிபத்தியத்திடம் கிடைக்காது என்பதைக் காங்கிரசின் போக்கிலிருந்து அறிந்ததனாலேயே பிரிவினை முழக்கம் செய்து பிரிவுற்றது. தென்னாட்டிலும் காங்கிரசுவாதிகள் இந்தக் குடியாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, அது கிடைக்காவிட்டால் பிரிவினைக்கு உழைத்திருத்தல் வேண்டும். அவர்கள் அடிமைத்தனமும் பதவியார்வமுமே இதற்குத் தடையாய் இருந்துவந்துள்ளன, வருகின்றன. இனப் பிரச்சினையே இல்லாத மராட்டியரும் பஞ்சாபியரும் வங்காளிகளும் கூடத் தென்னாட்டு அகில இந்தியக் கட்சியினரளவு மக்கட்பற்று, தேசியப்பற்று அற்றவர்களாயிருக்க முடியவில்லை என்பதை வட இந்தியச் சூழ்நிலை காட்டுகிறது. மராட்டியப் பகுதியான பம்பாய் மராட்டிய நாட்டில் சேர்க்கப்படவில்லை என்றவுடனே பதவியைத் துறந்த பம்பாய் முதல்வரின் தேசிய வீரம் எங்கே? பதவிக்காகத் தேவிகுளம், பீர்மேட்டை விட்டுக்கொடுத்துத் தமிழரிடம் வீம்பு பேசும் பச்சைத் தமிழனெங்கே? குடியாட்சியில் கட்சிகள் இருக்குமிடத்தில் மக்கள் உரிமை எதிர்க்கட்சி உரிமையேயாகும். ஆனாலும், கட்சி எப்போதும் தன் குற்றங்களை, குறைபாடுகளை உணர முடியாது. மக்கள் அவற்றில் கருத்துச் செலுத்தித் தம் சிந்தனையுரிமை, வாதிடும்உரிமை, பேச்சுரிமை, கண்டனஉரிமை ஆகியவற்றைச் செயலாற்றவும் ஆட்சி மாற்றவும் வாய்ப்பளிப்பது எதிர்க்கட்சி அல்லது எதிர்க் கட்சிகளே. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளும்கட்சி விளக்கம் தரலாமே தவிர, தண்டிக்கக் கூடாது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியில் காங்கிரசு எப்படி நடத்தப்பட்டதோ, அதைவிட மோசமாக எதிர்க்கட்சிகள் காங்கிரசு ஆட்சி யினரால் நடத்தப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற கட்சியினர், காங்கிரசுக்குள்ளேயே கருத்து வேற்றுமை யுடையவர், தத்தம் தேசியச் சார்பாகப் பேசும் நல்ல காங்கிரசுவாதிகள் ஆகியவருக்கும் வாய்ப் பூட்டு, கைப்பூட்டுகள் தரப்படுகின்றன. உண்மையில் காங்கிரசு ஆட்சி என்பது மய்யத்திலும், மாகாணத் தனியரசுகளிலும், ஒரு சில தன்னலக் காரர் - தங்கள் குடும்ப நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஆட்சியை அணுக ஒட்டாமல் தடுத்து ஆளும் கொடுங்கோலர் ஆட்சியாகவே இருக்கிறது. அது மட்டுமன்று, பொது மக்கள் உரிமைகளைச் சுரண்டும் முதலாளிகள் ஆட்சியாகவும், முதலாளிகளுக் குள்ளே ஒரு சில பெரு முதலாளிகளை ஆதரித்து மற்றவர்கள் நலன்களை நசுக்கி, அப்பெரு முதலாளிகளுடன் பேரம் செய்து ஆட்சியுரிமையை அவர் களுக்குத் தந்து அவர்கள் ஆதாயத்தில் ஊதியப் பங்கு (கமிஷன்) பெறும் கூலி ஆட்சியாகவும், கள்ள வாணிகம், கொள்ளை ஆதாயம் ஆகியவற்றைச் சட்டத்தின் உதவிகொண்டே மறைமுகமாக ஆதரித்து ஆளும் ஆட்சியாகவும் இருக்கிறது. தமிழகத் தென்கோடியிலுள்ள நகரங்களில் வெற்றிலை பாக்குக் கடையின் தொழிலுரிமை (permit licence) களையும், மக்கள் உரிமைகளையும், நாட்டு உரிமைகளையும் வடநாட்டு ஆட்சியாளரிடமிருந்து ஒருங்கே சூறையாடுகின்றனர். பிரிட்டனிடமிருந்து பெற்ற விடுதலை காங்கிரசுக்கு மட்டும் விடுதலை என்ற எண்ணத்தில் காங்கிரசுக்காரர் தாங்களே சாசுவதமாக ஆள எண்ணி, ஆளும் வாய்ப்பு முழுவதையும் தேர்தலில் எப்படியாவது எதிர்க்கட்சியை வரவிடாமல் செய்யவே பயன்படுத்துகின்றனர். காங்கிரசு தேர்தல் பிரச்சாரத் துக்காகவே தேசியத் திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் அதிகாரிகள் நடுநிலைமை, போலீ° நடுநிலைமை, நீதிபதிகள் நடுநிலைமை ஆகிய எதுவும் பேணப்படுவதில்லை. பிரிட்டன் ஆட்சியில் மக்களிடையே இருந்த அடிமைப்பண்பு மேன்மேலும் நீரூற்றி வளர்க்கப்படுகிறது. கைக்கூலியை ஒழிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டே, அப்பயிர் களையாக, காடாக வளர்க்கப் பெறுகின்றது. இதனை எடுத்துக் காட்டுபவர்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது. அதிகாரிகள் அவர்களைப் பழி வாங்குகின்றனர். காங்கிரசிலேயே நல்லெண்ணமுடையவர் களுக்கு-விடுதலைப் போராட்டத் தழும்புடையவர்களுக்கு, ஆட்சியில் எத்தகைய இடமும் கிடையாது. சன்னியாசிகளுக்கு மக்கள் மதிப்புக் கொடுப்பதறிந்த திருடர்கள், சன்னியாசிப் பண்புடையவரை ஒழித்து அவ்வுடையில் காட்சி தருவது போல, ஆளும் உரிமை காங்கிரசுக்கு என்று அறிந்தவுடன், தேசப் பற்றுடையவரை எல்லாம் காங்கிரசிலிருந்து துரத்தி, பதவிவேட்டைக் கும்பல்கள், முதலாளித்துவத்திலும் அநீதி முதலாளித்துவம் மேற்கொண்ட படுசுரண்டல்காரர்கள் அப்போர்வையில் புகுந்து நாட்டாட்சியைக் காட்டாட்சியாக்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழன், தென்னாட்டினர் என்ற தேசிய உரிமைகள் மட்டுமல்ல பறிபோவது. மனிதன், இந்தியன், ஆசியாக்காரன் என்ற உரிமைக்கும் வரவர ஆபத்துப் பெருகிக் கொண்டுதான் வருகிறது. இவற்றை எதிர்க்கட்சிக்காரர்கள் மட்டுமன்றிப் பழம்பெரும் காங்கிரசுத் தலைவர்களே-வயிறும் தன்னலமும் வேலை செய்வதில் சிறிது ஓய்வு பெற்று இதயமும் மூளையும் விழிப்புடன் வேலை செய்யும் நேரத்தில், பண்டித ஜவஹர்லால்கூட எடுத்துக் கூறுவதுண்டு. ஆனால், இவற்றுக்கான அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான் - இதற்கு மாற்றும் ஒன்றே ஒன்றுதான்-அதில் எவரும், ஜவஹர்லால் கூடக் கருத்துச் செலுத்துவதில்லை. பொன்னாட்சியினும் தன்னாட்சிக்கு நிகரன்று என்று குடியாட்சி நீதியை ஒத்த மற்றொரு நீதியுண்டு. எவ்வளவு நல்லாட்சியாயினும் ஒரே கட்சியாட்சி தன்னாட்சியுமாகாது, நல்லாட்சிகூட ஆகாது என்பதே அது. காங்கிரசு ஆட்சி இப்போதுபோல் கூலியாட்சியாக இல்லாமல் நல்லாட்சியாய் இருந்தால்கூட, அவ்வப்போது எதிர்க்கட்சிகள் ஆண்டாலன்றிக் குடியாட்சிப் பண்பு தென் னாட்டிலும் நிலவாது, வடநாட்டிலும் நிலவாது; ஏனெனில், குடியாட்சிப் பண்பு ஓடுகிற நீர் போன்றது. நீர் எவ்வளவு நல்ல நீரானாலும் கட்டிக்கிடந்தால் மாசடைந்து கெட்டேதீரும். ஆளும் கட்சியின் மாற்றமே குடியாட்சியில் குடி யுரிமைக்குரிய ஒரே எடுத்துக்காட்டு, குடியாட்சிக்குரிய ஒரே பாதுகாப்பு. இதை உணர்ந்தே காந்தியடிகள் ஒரே மாற்று வழியைச் சுட்டிக் காட்டினார். ‘காங்கிரசு இப்போது ஆளும் விருப்பம் தவிர, வேறு அரசியல் நோக்கமோ குறிக்கோளோ அற்றது; அதைக் கலைத்துவிடுங்கள். கொள்கை உடையவர் அக்கொள்கை யடிப்படையாக மக்கள் ஆதரவு பெற்றுப் புதுத் தேசியக் கட்சிகள் அமைத்துக் குடியாட்சிப் பண்புப்படி ஆளட்டும் என்றார் காந்தியடிகள்! காந்தியடிகள் பெயரைத் தங்கள் வாணிகத்துக்கு முதலாகவும், வாணிக மதிப்புக் குறியீடு (டிரேட் மார்க்) ஆகவும் பயன்படுத்த விரும்பிய காங்கிரசு முதலாளிகள் காந்தியடிகளின் நல்லுரை வகையில் கேளாக் காதினர் ஆயினர். தமிழா, உன் தேசியப்பற்று, இனப்பற்று மட்டுமன்றி, குடியாட்சிப் பற்றும் தேர்தல்களின்போது செயலாற்றுதல் வேண்டும். தென்னாட்டில் மட்டுமன்றி இந்தியாவிலேயே குடியாட்சிப் பண்பு நிலவவேண்டுமானால், ஆட்சிக்காகவும், ஆட்சி ஆதாயத்துக்காகவுமே அமைந்த காங்கிரசு கட்சி யினிடமாக, கொள்கைக்காகப் பாடுபடும் பிற கட்சிகள் மாறிமாறி வந்தாதல் வேண்டும். ஆகவே, சிந்தித்துச் செயலாற்று. உன் உரிமை வாழ்வை வளப்படுத்தும் வகையில் உன் சீட்டைப் பயன்படுத்துவாயாக. 10. பொருளியல் வாழ்வு தன்னலத்தை அறவோர் இழித்துப் பேசுவதையும் பொது நலத்தை உயர்த்திப் பேசுவதையும் கேட்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் பொதுநலமும் தன்னலமும் வேறு வேறு பண்புகளல்ல - ஒரே பண்பின் இரு கூறுகள்தாம். நாகரிக சமுதாயத்தில் இரண்டும் ஒன்றை ஒன்று பிணைக்கும் இரு திசைப்பட்ட ஒரே பண்பாகும். தனி மனிதனின் பண்பார்ந்த தன்னலமே இனத்தின் பொது நலத்தைப் பேணுகிறது. இனத்தின் பண்பார்ந்த பொதுநலமே தனி மனிதனின் தன்னலத்தையும் பேணிவிடுகிறது. பண்பார்ந்த தன்னலம் என்பது என்ன? பொதுவாகத் தன்னலம் என்பது ஒருவன் ‘நான் வாழ்தல் வேண்டும்’ என்று கருதுவதே. இதனைச் சிலர் ‘நானே வாழ்தல் வேண்டும்’ என்று மாற்றிக்கொள்வர். இதுவே இழிந்த தன்னலம். இதன்படிகள் ‘வேறொருவரும் வாழக் கூடாது’ என்ற காட்சிப்படி, ‘பிறன் வாழ்க்கையைக் கெடுத்தாவது நான் வாழ்தல் வேண்டும்’ என்ற தன்முனைப்புப் படி, ‘பிறர் வாழ்வு கடந்து நான் வாழ்தல் வேண்டும்’ என்ற ஆதிக்கப்படி முதலியன. ‘பிறர் கூழ்க்கு அலைந்து மாண்டாலும் மாளட்டும், நான் பால் பருகுதல் வேண்டும்’ என்பது இம்மரபினரது குறிக்கோள். வேறு சிலர் ‘நானும் வாழ்தல் வேண்டும்’ எனத் தன்னலக் கூற்றை மாற்றிக்கொள்வர்.`என்ன செய்தாவது நானும் வாழ்பவரைப் போல வாழ்தல் வேண்டும்’ என்பது ஆதிக்கவாதியை அண்டிப் பிழைப்பவன் படி, அடிமைப் படி. ‘பிறரும் வாழ்தல் வேண்டும், நானும் வாழ்தல் வேண்டும்’ என்பது குடியுரிமை யாளன் படி. ‘வாழு, வாழவிடு’ என்ற மேனாட்டினர் குறிக்கோள் இதுவே! “பிறர் வாழ, நான் வாழ்தல் வேண்டும்; நான்வாழப் பிறர் வாழ்தல் வேண்டும்’ என்பதே, இனம் சார்ந்த, தேசியம் சார்ந்த குடியாட்சிப் படிக்குரிய பண்பு. பண்பார்ந்த தன்னலப்படி பொதுநலத்தில் குறைந்ததன்று. உண்மையில் அதனினும் உயர்ந்தது. ஏனெனில், அதுவே பண்பார்ந்த பொதுநலப்படியும் ஆகும். பொதுநலத்துக்காகப் பாடுபடும் உத்தமருள் சிலர் தம் வாழ்வைக் கவனிக்காது விட்டுவிடுவதுண்டு. இஃது உயர்ந்த அரிய பண்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், கொள்கையளவிலேயே இஃது உயர்ந்தது. செயலில் அவ்வளவு வளம் தருவதன்று. இனமும் உயர்ந்த பண்பார்ந்த இனமாயிருக்கும் இடத்தில் மட்டுமே இது பயன்தரும். தமிழினம் இத்தகைய உயர்ந்த பண்பார்ந்த இனமாய் முன்னாளில் வாழ்ந்தது. தன்னலம் கெடுத்துப் பொதுநலம் பேணிய உத்தமர் இருந்தனர். இவர்கள் தாம் கெட்டும் இனம் வளர்த்தனர். ஆனால், அறிவார்ந்த தமிழினம் அவர்கள் தனி நலம் கெடாமல் பார்த்துவந்தது. திருவள்ளுவர் இத்தகையவர் களையே ஒழுக்கத்து நீத்தார் என்று குறிப்பிட்டார். பின்னாள் களில் தமிழினம் பண்புகெட்ட பின்னும் இந்த ‘ஒழுக்கத்து நீத்தார்’ மரபு அழியவில்லை. அவர்கள் இன்னும் தமிழினத் துக்காக உழைத்தே வருகின்றனர். ஆனால், அவர்களைக் கண்டுணரும் ஆற்றலற்று, அவர்களைப் பேணும் கடமையும் அற்ற தமிழினம் அவர்கள் உழைப்பாலேயே அழியாமலும், அதே சமயம் அவர்களைப் பேணாததாலேயே தழைக்காமலும் தட்டுக்கெட்டும் நிற்கிறது. அது மட்டுமன்று. உண்மைத் தேசியவாதிக்குரிய மதிப்பை அவ்வேடமிட்ட போலித் தேசியவாதி இன்று கொள்வதுபோல, ஒழுக்கத்து நீத்தார்க்கு முற்காலத் தமிழன் காட்டிய மதிப்பையும் சலுகையையும் அத்தோற்றமுடைய போலிகளுக்குத் தமிழன் தந்து இன்று தன் இனத்தை அழித்துவருகிறான். இன வாழ்வில் தனி மனிதன் தன்னலத்தோடு பொதுநலம் பேணினால்தான், இனம் வாழ்வும் வளமும் எய்தும். அதுபோல இனம் கடந்த வாழ்வில் இன்னலுடன் இனம் கடந்த நலனும் பேணினால்தான், இனமும் வாழும், இனம் கடந்த பேரினமும் வாழும். இன்றைய தமிழன் வாழ்வில், தமிழ் இனம் தன் வாழ்வு வாழாமல் தமிழ்க்குழு மொழி இனம் அல்லது திராவிட இனவாழ்வும் வாழாமல், இந்தியா என்ற போலி இனக் கொள்கையிலே ஈடுபட்டு வாழ்கிறது. இனம் இன்று அவனைப் பேண முடியாது. ஏனென்றால், இனமும் பேரினமும் கடந்த ஓர் இனக் கும்பலிலேயே அவன் வாழ்கிறான். பண்பார்ந்த தன்னலம், படிப்படியாக விரிந்து செல்கிற தன்னலம் ஒன்றே அவனை இன்று காக்கக்கூடும். தமிழன் இன்று தனிநல அடிமையாக, தன் இன எதிரியாக, பிற இனங்களுக்கே தலைவணங்கி வாழ்வதன் காரணம் இதுவே. தமிழன் சமய, சமுதாய வாழ்விலும், பொருளியல் வாழ்விலும் நாம் இன்றும் தன்னலத்தைக் காணலாம். ஆனால், பண்பார்ந்த தன்னலத்தைக் காணமுடியாது. பண்பார்ந்த பொதுநலத்தைக் காணமுடியாது. தன்னலத்தைக் காணலாம். பொதுநலத்தையும் காணலாம். ஆனால், இந்தப் பொதுநலமே அவன் இனத்தை அழிக்கிறது. ஏனெனில், அது பண்பார்ந்த பொதுநலம் அன்று. இவையெல்லாம் மாற வேண்டுமானால் தமிழன் அரசியல் இன அரசியலாக மாற்றியமைக்கப்படுதல் வேண்டும். இன்று தமிழன் கொடுக்கும் வரிகளில் உயிர்ப் பகுதியும் பெரும் பகுதியும் நேரே மய்ய ஆட்சியான தில்லிக்குச் சென்றுவிடுகிறது. வாழ்வை அருகே இருந்து கவனிக்கும் சென்னை அரசியலுக்கு அதில் மிகச் சிறு பகுதியே கிடைக்கிறது. தமிழன் ஆற்றும் அரசியல் கடமையின் பெரும் பகுதி வட திசைக்கு அவன் ஆற்றும் கடமையாகப் பயனற்றுத் தொலைந்து போகிறது. ஆனால், அவன் உரிமைகள், கடமைக்குப் பதிலாக அவன் நல்வாழ்வுக்கு வேண்டிய பொறுப்புகள், செலவுகள் ஆகியவற்றைத் தில்லி ஏற்றுக்கொள்ளவில்லை, சென்னைக்கு ஒதுக்கிவிடுகிறது. இங்ஙனம் அரசியலமைப்பில் தமிழன் மூலமான வருவாயெல்லாம் தில்லிக்கு-அவனுக்குரிய செலவெல்லாம் சென்னை ஆற்றுதல் வேண்டும். இக்காரணத்தாலேயே தமிழகத்தில் உழவுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட முடியவில்லை. கல்விக்கு வேண்டிய வசதிகளும் செய்யப்படாமல் இருக்கிறது. அத்துடன் வடதிசையிலிருந்து வந்து வாணிகத்தையும் தொழிலையும் நாட்டு மக்களிடமிருந்து கைப்பற்றும் சுரண்டல் வகுப்பினரை உரிமையற்ற சென்னை அரசியல் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. தென்னாட்டுத் தொழில்களை ஊக்கவும் முடியவில்லை. சென்னை ஆட்சியும் தில்லியாட்சியைப்போலக் காங்கிரசு ஆட்சியாய் இருக்கும்வரை, வடநாட்டுக் காங்கிரசு தலைவர்களே சென்னைக் காங்கிரசுக்கும் எஜமானர்களாதலால், இனப் பற்றற்றவர்களையே, பதவிக்காகத் தம்மைத் தொங்கிக் கொண்டிருப்பவர்களையே சட்டசபை உறுப்பினர்களாக, காங்கிரசுத் தலைவர்களாக, மந்திரிகளாக நிறுத்த முடிகிறது. இதன் பயனாகத் தென்னாட்டுச் சுரண்டலுக்குத் தென்னாட்டு அரசியலும் உடந்தையாய் இருந்து வருகிறது. மக்களுள் 100க்கு 85 பேர் படியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படைக் கல்வி தர, அதற்குச் செலவு செய்ய நாதியில்லை. ஆனால், கதர்க்கென்று காந்தியார் புகழை அழித்து அவர் பெயர்க்கு மட்டும் மதிப்புத் தரும் வீண் எண்ணத்தில் கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் மானியம் தரப்படுகிறது. கைத்தறித் தொழிலாளர்களுக்கு இயல்பாக இருந்துவந்த தென் கிழக்காசிய வாணிகக் களத்தை- ஆலைகளின் போட்டியாலும் மேனாட்டுப் போட்டியாலும் வெல்ல முடியாதிருந்த வாணிக வளத்தை -ஆட்சி தம் கையிலிருக்கும் காரணமாக வடவர் கைப்பற்றி, தென்னாட்டுக்குப் பஞ்சு வாங்கிக் கொடுப்பதிலும் நூல் வாங்கிக் கொடுப்பதிலும், தென்னாட்டுப் பஞ்சையும் நூலையும் ஆடையையும் வாங்கி வெளிநாட்டுக்குக் கொடுப்பதிலும் தாமே தரகராயிருந்து, இருதிசையிலும் குறைந்த விலைக்கு வாங்கி, கூடிய விலைக்கு விற்றுத் தாம் தரகு சம்பாதிப்பதுடன் தென்னாட்டுத் தொழில்களையும் அழித்து வருகின்றனர். ஆனால், இவற்றைக் கெடுப்பதற்கன்றி வளர்க்கப் பணமில்லாத சென்னைக் காங்கிரசு அரசியல் வடநாட்டு அகதிகளுக்கு மட்டும் இராசோபசாரம் செய்ய முடிகிறது. ஐந்தாண்டுத் திட்டங்களின் பெயரால் வெளிநாடுகளி லிருந்து கோடி, நூறு கோடி, ஆயிரக் கோடிக்கணக்கான பணம் கடன் வாங்கப்படுகிறது. ஒன்றிரண்டு இலட்சங்களைத் தென்னாட்டுக்குச் செலவிட்டுவிட்டு, மிகுதியை வடநாட்டுத் தொழில்களைப் பேரளவில் வளர்த்து அதைக் குபேர நாடாக்கு வதிலேயே செலவழிக்கின்றனர். இவ்வகையில் தென்னாட்டு மக்களை மட்டுமன்றி, தென்னாட்டுக் காங்கிரசுக்காரரையும் மந்திரி, முதன் மந்திரிகளையும் வடநாட்டார் மமதையுடன் அவமதிப்பாக நடத்தத் தயங்கவில்லை. தென்னாட்டவர் மானமும் வாழ்வும் காக்கப்போகும் மக்கள், சிம்மக் குட்டிகளாக வளர்ந்து வருகின்றனர் என்பதைப் பலர் இன்னும் அறியவில்லை. அதனால் தம் அடிமைகள்தாமே என்று நினைத்து இங்குள்ள காங்கிரசுக்காரரையும் காங்கிர° தலைவர்களையும் அவம திப்பாக நடத்துகிறார்கள். இவ்வகையில் அவர்களுக்குத் தெம்பு தரும் வகையில் தென்னாட்டுக் காங்கிரசுக்கே விபீஷணர்களாக டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஓ.வி.அளகேசன் முதலியவர்கள் வடநாட்டுக்காக விளம்பரம் செய்கின்றனர். உலக வாணிகத்திலே இந்தியாவுக்குப் பெருத்த ஆதாயம் தரும் மிளகு, ரப்பர், மானோசைட், அப்பிரகம், தேயிலை ஆகிய பொருள்கள் தென்னாட்டுக்கே உரியவை. ஆனால், அவற்றின் ஆதாயமும் நலனும் வடநாட்டுக்குச் சொந்தமாய் வருகின்றன. இவற்றை மறைத்து அடிமைப்படுத்தி வளர்க்கும் முறையில் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டம் அமைக்கப்படுகிறது. அவற்றில் காட்டப்படும் தென்னாடு வளமில்லாத நாடு என்று பள்ளியிலேயே பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. தென்னாட்டுக் கடற்கரை, ஆங்கிலேயர் வரும்வரை, உலக வாணிகத்துக்கு மய்ய இடமாகவும், உலகத் தொழிற் பொருள்கள் உற்பத்தியாகி ஏற்றுமதியாகும் இடமாகவும் இருந்தது. சேரரும் பாண்டியரும் சோழரும் ஆந்திரரும் பெருங் கடற்படைகளை வைத்திருந்தனர். கடல் வாணிகத்தில் மேல் நாடுகளுடனும் கலம் செலுத்தித் தொடர்பு கொண்டிருந்தனர். ஆனால், தென்னாட்டின் கடைசிப் பேரரசான விஜயநகரப் பேரரசுக்கும் வடநாட்டிலுள்ள எல்லா அரசு, பேரரசு களுக்கும் கடற் படையும் கிடையாது, கடல் வாணிக வளமும் கிடையாது. அயலார் கீழ்த்திசையை வென்றதற்கே இவ்வட நாட்டுப் பேரரசுகள்தாம் காரணம். இது மட்டுமன்று. காங்கிரசு இயக்கத்திலேயே கடலக வாழ்வின் முக்கியத்துவம் அறிந்த பெருந்தலைவர் வ.உ.சிதம்பரனார் ஒருவரே. அவர் மாபெருந் தொழிற் போராட்டமே சமதர்ம, பொதுவுடைமைக் கட்சிகள் தோன்றக் காரணமாய் இருந்தது. ஆனால், அக்கட்சிகளும் சரி, காங்கிரசும் சரி அவர் பெயரே சொல்வதில்லை. அவர் கப்பல் போராட்டத்தைக் காங்கிரசு மறந்ததுடன் நிற்கவில்லை; மறக்கடிக்க அரும்பாடுபட்டது. அவர் உலகு நீத்த ஆண்டில் காங்கிரசு அவர்க்கு அனுதாபத் தீர்மானம்கூடச் செய்யவில்லை. அது மட்டுமன்று. முதல் முதல் கப்பலோட்டியவன் என்ற அரும்பெருமையைக்கூட, அவர்க்குப் பத்தாண்டுகளுக்குப்பின் வாணிகக் கப்பல் கம்பெனி அமைத்த ஒரு குஜராத்திக்குத் தந்து அவனே முதற் கப்பல் ஓட்டியவன் என்று காங்கிரசு மாநாட்டில் பாராட்டப்பெற்றான். இது வ.உ.சிதம்பரனார் புகழையும் தென்னாட்டினரையும் அவமதிப்பதாயினும், தென்னாட்டுக் காங்கிரசு உறுப்பினர் இதைப் பார்த்துக் கொண்டுதான் வாளா இருந்தார்கள். ஒருவர்கூட மறுக்க முற்படவில்லை. தென்னாட்டவர் கடல் வரலாற்றுக்குச் சான்றாக இன்றும் பம்பாயின் ஒரு பகுதி ‘மலபார்க் குன்று’ என்ற பெயருடன் இயங்குகிறது. சேரர் ஆண்ட காலத்தில் கடற்கொள்ளைக்காரரை அவர்கள் கடற்போரிட்டு வென்றடக்கிய செய்திகள் சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்தில் வருணிக்கப் பட்டுள்ளன. ஆனால், சேரர் ஆட்சிக்குப் பின்னர், கடற்கொள்ளைக்காரர்கள் மேல்கடற்கரை யெங்கும் பரந்தனர். இவர்களுள் பெரும்பாலார் தென்னாட்டு மலையாளிகளாய் இருந்தனர். அவர்கள் பம்பாயிலுள்ள அக்குன்றத்தை மூலதளமாக்கி, பிரிட்டிஷ் ஆட்சிவரை அதைக் கைக்கொண்டிருந்ததால் ‘மலபார்க் குன்று’ என்று ஆங்கிலேயர் அதற்குப் பெயர் கொடுத்தனர். விடுதலை இந்தியா புதிதாகக் கப்பல்கள் அமைத்தபோது, கங்கா, சிந்து, தில்லி என்று கடலக மரபற்ற தம் இடங்களைத்தாம் பெருமைப்படுத்தினர். ஜலஉஷா போன்ற வடவர் இலக்கிய மரபும் குறித்தனர். ஆனால் கடற்படையுடைய கடலரசர்களான சேர சோழ பாண்டியர் பெயரோ, கிரேக்கரும் மேனாட்டினரும் புகழ்ந்த உலக வாணிகத் துறைமுகங்களான புகார், முசிறி, தொண்டி ஆகியவற்றின் பெயர்களோ, கடல்கடந்து கலஞ் செலுத்திக் கடற் பேரரசாண்ட பாண்டியன் நெடியோன் பெயரோ, சோழன் இராசேந்திரன் பெயரோ, நம் காலத்தி லேயே கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனார் பெயரோ, தென்னாட்டு வரலாற்றுப் புகழ், இலக்கியப் புகழ் சான்ற ஆறுகளின் பெயரோ, மலைகளின் பெயரோ இந்திய மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் வீரன் பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் பெயரோ, அகில இந்தியக் காங்கிரசுக்கும் அதன் அடிமையான தமிழ்நாட்டுக் காங்கிரசுக்கும் தென்படவில்லை. தமிழனை அவமதித்து, தமிழர் வாழ்வைச் சுரண்டி, தமிழகத்தைத் தங்கள் தேசியத்தின் வேட்டைக் காடாக்கிவரும் மரபினராகிய அகில இந்தியக் கட்சியினரைத் தவிர வேறு எவரும் கட்சிப் பேரால் 1957 வரை தமிழகத் தேர்தலில் நின்றதில்லை. காங்கிரசு மீது தமிழர்க்கு ஏற்பட்ட வெறுப்பே அதற்கு முந்திய தேர்தலில் சுயேச்சையாளர்களைப் பேரளவில் சட்டமன்றங்களுக்கு அனுப்பிற்று, உழைப்பாளர் கட்சி போன்ற புதிய காங்கிரசு எதிர்ப்புக் கட்சியினர்க்கும் வெற்றிதந்தது. ஆனால், மக்கள் காட்டிய குறிப்பையும் ஆர்வத்தையும் இவர்களுள் பலர்-சிறப்பாக மாணிக்கவேலர், இராமசாமிப் படையாட்சி போன்றவர்கள் மந்திரி பதவியாசையால், பண ஆசையால் தகர்த்து எறிந்துவிட்டனர். வரவிருக்கும் தேர்தல்களில், அத்தகையவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும் அகில இந்தியக் கட்சிகளை வருங்காலத்தில் இனச் சார்பாகத் திருத்தியமைக்கத் தூண்டவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு. வரும் தேர்தல்கள் மூலம் தமிழன் தன் குரலை எழுப்பித் தமிழ் நாட்டில் மாறுதல் உண்டுபண்ணினால், அதுவே தென்னாடு முழுவதற்கும் ஒரு மாறுதலாக அமைவது உறுதி. ஏனெனில், சென்ற தேர்தல்களில் தமிழ் மக்களுள் மிகப் பெரும் பான்மையோர் காங்கிரசுக்கு எதிராகவே தங்கள் ‘வோட்டை’ அளித்ததுபோல, திருகொச்சியிலும் கன்னடத்திலும் ஆந்திரத்திலும் காங் கிரசுக்கு எதிராகவே பெருவாரியான ஆதரவு காட்டப்பட்டது. காங்கிரசு தலைமையின் குடியாட்சிக்கு முரணான தகிடுதத்தங்களாலேயே, சூதாட்ட கோதாட்டங்க ளாலேயே, அங்கே பெயரளவில் காங்கிரசு ஆட்சி நடைபெறுகிறது. வருகிற தேர்தல்களில் இந்தச் சூதாட்டங்களால்கூடக் காங்கிரசு நிலைக்க முடியாத நிலை ஏற்படுவது உறுதி. தென்னாடு வடவர் பிடியிலிருந்து விடுபட வேண்டுமானால் அந்நிலை ஏற்பட்டாதல் வேண்டும். தமிழகத்திலும் தென்னாட்டிலும் காங்கிரசுக்கு ஒரு தடவை தோல்வி ஏற்பட்டுவிட்டாலே, காங்கிரசு மேலிடத்தைப் பிடித்துள்ள முதலாளிக் கும்பலின் பிடிப்பு அற்றுவிடும். ஏனெனில், தேசப் பற்றுதலால் அவர்கள் காங்கிரசைக் கைப்பற்றவில்லை. பண ஆசை, கொள்ளை ஆதாய ஆசை, சுரண்டுதல், சந்தர்ப்பம் ஆகியவற்றின் காரணமாகவே அவர்கள் காங்கிரசைக் கைப்பற்றியுள்ளனர். ‘ஆலிலை பூவும் காயும் அளிதரு பழமும்’ பெற்றிருந்தபோது அணுகி, அவை போனபின் போய்விடும் பறவைகள் போல, ஆட்சியிலிருக்கும் கட்சியானால் ஆதாயமிருக்கும்வரை போலி நண்பர்களாக அதில் ஒட்டியிருந்து விட்டு அவர்கள் புதிய ஆட்சிக் கட்சிகளையே பற்ற எண்ணு வார்கள். அச்சமயம் மக்கள் குரல் எழுந்து, புதிய ஆட்சி களிலிருந்து அவர்களைத் துரத்திவிடமுடியும். காங்கிரசு எழுப்பிய விடுதலைப் புகழ் முழக்கத்தாலேயே மக்கள் மயங்கிக் காங்கிரசில் முதலாளி பிடி வலுப்பட்டதைக் காணாதிருந்தனர். தமிழர் மொழியையும் நாட்டையும் இனத்தையும் வாழ்வித்து, உன்னையும் உன் பின் மரபினரையும் உயர்த்தி உலகில் உயர் இடம் பெறச் செய்யும் இந்தத் தேர்தலில் விழிப்பாயிரு. இனக்குரலின் பக்கம் உன் உள்ளமும், உள்ளத்தின் திசையிலே உன் மொழியும் செல்வாக்கும் பயன்படுத்தி, உன் சீட்டையும் உன் உற்றார் உறவினர்களின் சீட்டையும் இனக்குரலின் உரிமைச் சீட்டுகளாக்குவாயாக. உன் நாட்டுத் தொழில் வாழ, வாணிகம் பெருக, வடநாடு போலவே உன்நாடும் உலகில் உயர் இடம் பெற உன் சீட்டைப் பயன்படுத்து. தமிழக மறுமலர்ச்சிக் கட்சிக்கே, தென்னகப் புதுவாழ்வுக் கட்சிக்கே, வள்ளுவர் மரபில் நின்று வான்புகழ் நாடும் குரலுக்கே ஆதரவளிப்பாயாக. 11. முடிவுரை தமிழா, நாலாயிர ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்பே, உன்னை இன்று ஆளும் வடவரும் அவர்களை ஆண்ட வெள்ளையரும் ஆடையுடுக்கப் படிக்குமுன்பே, உன் முன்னோர் குடியாட்சி அமைத்துக் கோட்டை நகரங்கள் கட்டி, இலக்கிய இலக்கணமும் இசை முதலிய கலைகளும் இயல்களும் வளர்த்து, ‘கடன்மா’ என்றழைக்கப்பட்ட ஆழ்கடல் கப்பல்களில் எகிப்துக்கும் மலாயாவுக்கும் சீனத்துக்கும் சென்று வாணிகம் செய்துள்ளனர். அந்நாடுகளில் ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்பே குடியேறியும் நிலப் பேரரசராகவும் கடற்பேரரசராகவும் ஆண்டுள்ளனர். உன் பேரரசருள் ஐயாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பிய காலப் பாண்டியன் நெடியோன் இமயமலை வரை வென்று நிலப் பேரரசனாகவும், மலாயா, சுமத்ரா முதலிய தென் கிழக்காசிய நாடுகளை வென்று கடற் பேரரசனாகவும் வாழ்ந்தான். அவன் புகழையே வடதிசைப் புராணங்கள் மனுவின் கதையாகவும், மேலையுலக யூதர் விவிலிய ஏடு நோவாவின் கதையாகவும் வருணித்துள்ளன என்று சில வரலாற்றாராய்ச்சியாளர் கருது கின்றனர். யவனருடனும் உரோமருடனும், சீனருடனும் எகிப்தியருடனும் வாணிகம் செய்து உன் முன்னோர் குவித்த பணம் பல்லாயிரம் கோடிப்பொன் என்று வரலாற்றாசிரியர் கணித்துக் காண்கின்றனர். இரண்டாயிர ஆண்டுகளாகத் தமிழகமெங்கும் அடி நிலத்தில் கண்டெடுக்கப்பட்டு வரும் புதையல் பொன்நாணயங்கள் அவையே. தமிழா, உன் நாடு தமிழகம் என்ற பெயருடன் வெள்ளையர் வரும்வரை உலகின் செல்வத்தில் முக்கால் பங்கைக் கொண்ட வளமிக்க நாடாய், வெளியார் கால்படாத விடுதலை நாடாய், தமிழ்மொழி வைத்துத் தமிழகம் மட்டுமன்றி நாகரிக உலகெங்கும் ஆட்சி செலுத்திய நாடாயிருந்தது. நீ உன் உரிமைக்குப் பிரிட்டிஷ் ஆட்சியில் பாடுபடாமல், வடவர் உரிமைக்குப் பாடுபட்டாய். அரசியல் விழிப்புற்ற உன்னைப் போலன்றி, வட்டித் தொழில் நடத்திய ஒரு சிறு கும்பலிடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். அக் கும்பல் காங்கிரசை மட்டுமின்றி அகில இந்தியக் கட்சி களனைத்தையும் ஆட்டியமைப்பதனால்தான், அக்கட்சிகளி லெல்லாவற்றிலும் நீ தொண்டனாய் இருக்கிறாய். உன் தென்னாட்டுத் தோழரும் தொண்டராயிருக்கின்றனர். தலைமைப் பீடம் அம் முதலாளிகளின் வடநாட்டுக் கணக்குப் பிள்ளைகளுக்கு ஏகபோகச் சொத்தாய் இருந்து வருகிறது. நீ எத்தனை நாள் இவற்றைப் பொறுத்திருக்கப் போகிறாய்? உலகாண்ட நாடு அடிவருடிப் பிழைப்பதா? உலகுக்கு நாகரிகம் தந்த நாடு தன் வரலா றறியாமல் தட்டுக்கெடுவதா? நேற்றுப் பிறந்த, இன்று காலைப் பிறந்த புன்மொழிகள் உன் சீரிய உலகமுதல் மொழிமீது உலகப் புலவர் வள்ளுவர்மொழி மீது ஆதிக்கம் செலுத்துவதா? நீ எழுதும் அஞ்சல் அட்டையைப் பார்! உன்மொழி, உன் இனமொழி கிடையாது. நீ கையாளும் துட்டுகளைப் பார்! காலணாவில்கூட உன்மொழி கிடையாது. அஞ்சல் வில்லைகளைப் பார்! அதில் அசோகன் பொறிப்பு உண்டு! இந்திக் கவிஞர் துளசிதாசர் உண்டு - காளிதாசன் உண்டு. வள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதி கிடையாது. தெலுங்குக் கவிஞன் நன்னயன், திக்கணன், வேமனன் கூடக் கிடையாது. பிற தென்னாட்டு முகங்கள், செய்திகள் எதுவும் கிடையாது. பிரிட்டிஷார் உனக்குத் தந்த உரிமைகளையே தர மறுக்கிறான் வடவன். அதற்கு ஒத்து ஊதும் மடவரை ஆதரிக்கிறான் அந்த மமதை ஆட்சியாளன், தமிழா! இந்த அவமதிப்புச் சின்னங்களை, உன் வரலாற்றில் படர்ந்த களையை வீசியெறிய வீறி எழு! சிங்கக் குருளையே, சிறுத்தையே! சீறி எழு! உன் நாடு சிறிய நாடு என்பவர் உண்டு. தமிழனே! நீ இல்லாவிட்டால் அவர்கள் நாடு சிறியதாய் விடுமே என்ற கவலை அவர்களுக்கு! நீ அவர்களைப் போலச் சுரண்டல்காரனல்லவே, பெரிய வேட்டைக் காடு விரும்புவதற்கு? அத்துடன் பிற நாட்டை வெல்பவர்களுக்குத்தான் பெரியநாடு வேண்டும். பாதுகாப்பில் இருந்து நல்லாட்சி நடத்துபவர்களுக்குச் சிறுநாடே சிங்காரநாடு. மேலும் ஒரு பெரிய நாட்டைப் பகைவர்கள் தோற்கடிப்பதுதான் சிரமம். தோற்கடித்தபின் வென்றாளுவது எளிது. ஏனென்றால், அதன் தலைநகரிலேயே அதன் உயிர் அடங்கிவிடும். ஆனால், சின்ன நாட்டைத் தோற்கடிப்பதுதான் எளிது. வென்றடக்க முடியாது. அத்துடன் சிறு நாடு நல்லாட்சி பேணி, குடியாட்சி மரபும் காத்தால், அத்துடன் அஃது இனத் தேசியமாகவும் அமைந்தால், அதன் வலுச் சிறிய வைரத்தின் வலுப்போன்றது. கொல்லுலைக் கூடங்களாலும் அசைக்க முடியாதது. ‘பிரிவினை கோராதேடா, தம்பீ! ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே’ என்று ஆதிக்கப் புலிகள் வேதாந்தம் பேசும் உன்னிடம், தமிழா! ‘அண்ணே, ஒற்றுமையும் சமத்துவமும் அன்பும் இருக்கும் இடத்தில்-ஓரினத் தேசியத்தில்-பிரிவினைக்குரல் எழாது. உயர்வு தாழ்வு வேற்றுமை உள்ள இடத்திலேயே அஃது எழும். ஒத்துழைப்பு உன்னிடம் இருந்தால், பாகி°தான் பிரிந்திருக்குமா!’ என்று கேட்டுப் பார்!. ‘ஆண்டான் அடிமை ஒற்றுமை, ஒற்றுமை ஆகுமா? மாகாணங்களிடையே, இனங்களிடையே, மொழிகளிடையே சமத்துவம் இருக்க முடியா விட்டால், பிரிவினைதானே சமநிலை தரும். ‘சமத்துவம் என்றால் என்ன? ஒரு கூட்டு நிலையத்தில் சம பங்காளிகளாய் இருப்பவர்களுள் ஒருவன் இன்னொருவன் பிரியாமல் தடுக்க முடியுமா? நேசம் இருக்கும்வரைதானே கூட்டு நடைபெற முடியும்? ‘விரும்பிச் சேர்ந்த அன்புக் கூட்டுறவில் விரும்பினால் பிரியும் உரிமையிருக்குமே, அண்ணே? பிரிவினை உரிமைதானே சமத்துவத்தின் சின்னம், குடியாட்சியின் குறியீடு. ‘யாரிடம் கேட்டுக்கொண்டு இந்தியைத் தேசிய மொழியாகச் சட்டம் செய்தாய், அண்ணே? சென்னை சட்டசபையிலாவது கேட்டாயா? தமிழ்நாட்டுக் காங்கிரசிடமாவது கேட்டாயா?’ ‘குடியாட்சியில் உரிமை குடிகளிடம் என்றும் நிலைப்பதாய் இருக்க வேண்டுமே. இன்றைய தமிழகக் காங்கிரசுக்காரர் எல்லாரும் இந்தியை ஏற்றுக் கொண்டாலும், அவர்களது இந்த முடிவு வருங்காலத் தமிழகக் காங்கிரசுக் காரரைக் கட்டுப்படுத்த முடியுமா? இன்றைய தமிழர்கள் அனைவரும் அம்முடிவை ஏற்றாலும், நாளை பிறக்க இருக்கும் தமிழர்களை அஃது எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?’ இந்த உரிமை வாதங்களைத் தமிழன் எழுப்பினால் வடதிசை அல்லது வடதிசைக்கு வழக்குரிமை வாங்கிக்கொண்ட தென்திசை-சீறும். ஆனால், அந்தச் சீற்றத்திலேயே சமத்துவ மில்லாப் பண்பு வெளிப்பட்டுவிடும். தேசியம் என்று அவர்கள் கூறும் இந்தியாவில் மொழிக்கு மொழி சமத்துவம் என்றால் அடிக்க வருகின்றனர்-இனத்துக்கு இனச் சமத்துவம் என்றால் சீறுகின்றனர்! ‘இந்தியா ஒரு தேசம். அதன் ஒற்றுமைக்காக இந்தி படி’ என்கின்றனர். இந்தியா ஒரு தேசம், சரி! அதில் இருபது மொழிகளே மக்கள் பேசுகிறார்கள். பொது ஆட்சிக்கு ஒரு மொழி வேண்டும் என்கிறார்கள். மக்கள் மொழிகள் இருபது. ஆளுபவன் மொழி ஒன்று . மக்கள் ஆளுபவன் மொழியைப் படித்துக்கொள்ளுதல் வேண்டுமாம். ஏன் ஆளுபவர் இருபது மொழிகளைக் கற்றுக்கொண்டு ஆளக்கூடாது? இருபது மொழிகளில் ஏன் சட்டங்களை வெளியிடக் கூடாது? இருபது மொழிகளில் ஏன் அஞ்சல் வில்லைகள் பண அஞ்சல் கட்டளைகள் (அடிநேல டிசனநச கடிசஅ) உருவாக்கக் கூடாது? இருபது மொழிகளில் ஏன் ஊர்திநிலையப் பலகைகள் தொங்க விடக்கூடாது? இவ்வளவு பெரிய தேசத்தின் ஆட்சி ஏற்றவன் கையில் பணம் கிடையாதா? மக்களை-தாய்மொழிகூடப் படியாத மக்களை-இன்னொரு மொழி படிக்கச் சொல்வதைவிட, அவர்கள் பணத்தை எத்தனையோ வீண் செலவுகளுக்குப் பயன்படுத்துவதற்குப் பதில் இருபது மொழிகளைக் கற்று ஆளப் பயன்படுத்துவதுதானே! மொழி மாகாணங்கள் அமைத்து, மாகாண சுய ஆட்சி கொடுத்து, அந்தந்த நாட்டு வரிப்பணத்தில் அந்தந்த நாட்டுத் தேசிய ஆக்க வேலைகளைச் செய்வதுதானே! தேசியம் என்ற பெயரால் ஏழை மாகாணங்களைச் சுரண்டிப் பணக்கார மாகாணங்களைக் கொழுக்க வைப்பானேன்? இத்தகைய கேள்விகளைக் கேட்டு, இன்னும் அகில இந்தியக் கட்சியிலுள்ளவர்களை அந்தக் கட்சிகளிலிருந்து கொண்டே கூடத் தமிழர் தன்னுரிமைகளை அவற்றில் வற்புறுத்தச் செய்தல் வேண்டும். அக்கட்சிகள் அவ்வப் பெய ருடனே தமிழக இனக் கட்சியின் துணைக் கட்சிகளாகிவிடும். தமிழகம் மறுமலர்ச்சி கண்டுவிட்டது தமிழனே! உன் பிள்ளைகள் வளரும் பிள்ளைகள்; பருவப் பிள்ளைகள். அவர்கள் நல்வாழ்வு என்றும் மணம் காண, இனஉரிமை பெற, நீ செய்ய வேண்டிய சிறு செயல், உன் உரிமையை அவர்களுக்கு, உன் இனத் தோன்றல்களின் வளத்துக்கு, உன் இன உரிமைக்குப் பயன் படுத்துவதே. எழு, விழித்தெழு, வீறிட்டெழு. அவாவுடன் ஆர்வத்துடன் கிளர்ந்து செயலாற்றி வெற்றிக் கோட்டையில் உன் வீரப் புகழ்க்கொடி நாட்டு. வாழ்க தமிழ்! வெல்க தமிழ்ப் பண்! வீறுக தமிழர் வாழ்வு!