மாணிக்க விழுமியங்கள் - 12 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) நாடகங்கள் - 12  உப்பங்ழி - முதல் பதிப்பு 1972  ஒரு நொடியில் - முதல் பதிப்பு 1972 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 12 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+320 = 336 விலை : 315/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 336 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல்’, சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம்’, புலமை நலத்திற்குக் `கம்பர்’ ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். ” என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு” இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். “தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள்’ எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல்’. இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர்’ என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு’. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம்’ மற்றும் `திருக்குறட்சுடர்’. திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள்’. தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!” இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, “வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தளமாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்புகளாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே “லேவாதேவி” என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு “கதிரகம்” என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை’ என்னும் குறிப்பேட்டில் “நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி” என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், “அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல்” என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம்’, `தமிழ்க்காதல்’, `கம்பர்’, `சிந்தனைக்களங்கள்’ போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை 21-7-2017. உப்பங்கழி முதற் பதிப்பு 1972 இந்நூல் 1972இல் மணிவாசகர் நூலகம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முகவுரை போரதிர்ச்சி, பகையதிர்ச்சி, தேர்தலதிர்ச்சி, பதவியதிர்ச்சி, புகழதிர்ச்சி, பொருளதிர்ச்சி, உடலதிர்ச்சி என்றவாறு உலகில் பல அதிர்ச்சிகள் உள்ளன. இவற்றுள் குடும்ப அதிர்ச்சியே மனிதனுக்கு நெருங்கியது, நெஞ்சத்தை உறுத்துவது, ஏனையதிர்ச்சிகளுக்கும் உட்காரணமாவது. எல்லார்க்கும் எல்லாப் பூசல்களும் வருவதில்லை. குடும்பப் பூசலோ யாரையும் விடுவதில்லை. ஏன்? குடிவழியின்றி யார் பிறந்தவர். பல பூசல்களைத் தாங்கும் பேராண்மையன் கூடக் குடியதிர்ச்சியைத் தாங்கமாட்டான். உப்பங்கழி என்ற இக்குடும்ப நாடகம் குடிச்சிக்கல்கள் என்ன, அவற்றை யார் யார் எத்துணையளவு தாங்கிக் கொள் கின்றனர், எம்முறையில் மெல்ல ஏற்று நல்லவழி காண்கின்றனர், ஒரு சிலரால் தாங்க முடியாமை ஏன்? என்ற வாழ்வியல்களைக் காட்டுகின்றது. காதலுக்கு நிறம் இல்லை, முதலில் தோன்றும் நல்லெண்ணத்துக்கு மதிப்பளிக்க வேண்டும், இயற்கையொடு பழகுவது உணர்ச்சியை ஒழுங்குபடுத்தும் என்ற நல்லோட்டங்கள் வளியிடை வீசும் வானொலி போல இந்நாடகத்தில் கலந்து வருகின்றன. சமுதாயப் பொதுச் சீர்திருத்தமின்றிச் சில குடும்பச் சூழல்களைத் தனித்தனி ஒவ்வொருவரும் மாற்றிக்கொள்ள இயலாது என்ற புரட்சிக் குறியும் இந்நாடகத்தில் அடங்கி யுள்ளது. புது ஆராய்ச்சிகளையும் படைப்புக்களையும் தமிழ்ப் பணியாக ஏற்றுப் பதிப்பித்து வரும் பண்புடைய சிதம்பரம் மணிவாசக நூலகத்தார்க்கு வாழ்த்துக் கலந்த நன்றி. காரைக்குடி வ.சுப. மாணிக்கம் 1-11-72 உப்பங்கழி நாடகர் முத்தரையர் : திருமணக்கழகத் தலைவர் இன்னிசை : மனைவி சேயிழை : மகள் : துணைச் செயலி அறந்தாங்கி : உயிர்க்காப்புக்கழக அலுவலர் வெல்லம்மை : மனைவி செல்லம்மை : மனைவியின் தங்கை பெரியாள் : மனைவியின் தாய் திருமேனி : மூத்த மகன் : திருமணக்கழகச் செ யலன் நீலமலை : இளைய மகன் மயிலி : மூத்த மகள் குயிலி : இளைய மகள் மானாள் : வேலைக்காரி மால்வரை : மிதிவண்டி வணிகர் நல்லி : மனைவி வெண்ணிலா : மகள் கொடுமுடி : திருமண முடிப்பவர் பசுந்தோகை : மூத்த மகள் செவ்வாழை : இளைய மகள் நக்கீரர் : புலவர், தலைவர் (மகளிர் நல்லகத்திலும் கருத்தரங்கிலும் கலந்தோர் பலர்) பொருளடக்கம் காட்சி : 1 5 காட்சி : 2 20 காட்சி : 3 31 காட்சி : 4 41 காட்சி : 5 48 காட்சி : 6 69 காட்சி : 7 80 காட்சி : 8 91 காட்சி : 9 102 காட்சி : 10 112 காட்சி : 11 122 காட்சி : 12 133 காட்சி : 13 140 காட்சி : 14 147 உப்பங்கழி காட்சி : 1 இடம் : முத்தரையர் வீடு முத்தரையர் 50 வயதுடையவர், சிவப்பு நிறம், அடைந்த முடி, கட்டான உடல், சிறிது பெரிய வயிறு, நீண்ட உயரம், படர்ந்த முகம், கூரிய கண்கள், அகன்ற காது. அவர் வீடு மூன்றடுக்கு மாளிகை, சுற்றும் பெருஞ் சோலைகள், செவ்விளநீர் தொங்கும் தென்னைகள்; பலா, சாத்துக்கொடி, ஆரஞ்சு, எலுமிச்சை மரங்கள்; வண்ண வண்ணப் பூங்கொத்துச் செடிகள்; முற்றத்தில் முல்லைக் கொடிகள்; பக்கத்தில் தொட்டிப் பூஞ்செடிகள்; சுவரில் பாசிபடர் செடிகள். காலை மணி ஐந்தரை. கதிரவன் ஒளிக்கற்றைகள் உலகில் புகுகின்றன. பறவைகள் மெல்லொலிகளை ஓதுகின்றன. முத்தரையர் சேக்கையை விட்டு எழுந்து நேர் நின்று கைகால்களை ஆட்டி உதறி, குழாயில் முழுமுகமும் கழுவித் தாம் அறிந்த இசையில் இழுமெனப் பாடுகின்றார். உயிரினங்கள் வளமார உண்ணுமாக; உடலுறுப்புச் சொன்னபடி கேட்குமாக; பயிரினங்கள் தழையுரத்தால் வளரு மாக; பசுவினங்கள் இல்தோறும் பரவு மாக; செயிரினங்கள் கல்வியினால் திருந்து மாக; செய்தித்தாள் திரிபின்றிச் செப்பு மாக; தயிரினங்கள் கைப்பட்டால் தகர்தர் போலத் தடைமனங்கள் திருக்குறளால் தளர்க மாதோ. (இவ்வாறு பாடிக்கொண்டு முன் கதவைத் திறந்த) முத்தரையர்: வணக்கம் வணக்கம். வாரும் வாரும். (கைகூப்பல், வந்தவரும், கைகூப்பல்) என்ன இவ்வளவு வெள்ளென. எழுந்ததும் பசுமுகத்தில் விழிப்பது புண்ணியம் என்பார்கள். பசுப்போன்ற நண்பர்கள் முகத்தில், கதவுக்குப் பக்கத்தில், படியில் விழிப்பது எவ்வளவு புண்ணியம்! கொடுமுடி: (சிரித்த முகமாக) நான் வந்ததும் கதவு நீயே திறந்ததும் எவ்வளவு பொருத்தம். கதவு திறந்ததும் நீ என் முகத்தில் விழித்தாய். நானும் இவ்வளவு தூரம் நடந்து வந்தும் இடையில் யார் முகத்தும் விழிக்கவில்லை. உன் முகத்தில் விழிக்கிறேன். உன்னைவிட எனக்குத்தான் புண்ணியம் மிகுதி. ஆமா, நான் வருவது உனக்கு எப்படித் தெரியும்? நான் வருவேன் என்று இரவு கனவு கினவு கண்டாயா? எப்போதும் உன் ஆள்தானே வெள்ளென எழுந்து கதவு திறப்பான். முத்தரையர்: (துண்டை உதறிக்கொண்டு) இல்லையா. இப்போது வாழ்க்கையில் ஒருமாற்றம். இரவு சரியாகத் தூக்கம் வருவதில்லை. தூக்க மருந்துகூடச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டேன். கொடுமுடி : அப்பவும் பயனில்லையா? முத்தரையர் : ஒரு பயனும் இல்லை. இரவெல்லாம் எனக்கு விடியல்தான். ஒப்புக்காகக் காலையில் முகம் கழுவிக் கொள்கின்றேன். இனி ஒரே ஒரு மருந்து சாப்பிட வேண்டியது எச்சம். கொடுமுடி : (விரைவாக) அதையும் சாப்பிட்டு முடித்து விடுவது தானே. முத்தரையர் : (உதறிய துண்டை மடித்துப்போட்டுக் கொண்டு) அதைச் சாப்பிட்டால் கண்ணுக்கு மாத்திரம் தூக்கம் வராது... கொடுமுடி : சிவ சிவ. ஏன் முத்தரை? (கன்னத்தில் அறைந்து கொண்டு) காலைப் போதில் இப்படியெல்லாம் சொல்லு கிறாய். என்னைப் பார்த்ததும் புண்ணியம் என்று சொல்லிவிட்டு, மறுபடி இங்ஙனம் பேசலாமா? முத்தரையர் : காலையில் எழுந்து வேகமாக அரைமணிப் பொழுது வேர்வை வெளிவர வீசி நடந்தால், யாரோடும் பேசாது கால் வலிக்கும் என்று பாராது இடையிடையே உட்கார்ந்து மூச்சு வாங்கி ஒரு மாதமாவது நடந்தால், தூக்கத்துக்கு என்னிடம் ஏக்கம் ஏற்படும் என்று ஒரு பழைய வைத்தியர் நேற்று இங்கு வந்தவர் அழுத்தமாகச் சொன்னார். பணச் செலவில்லாத இந்த வழியைக் கடைப்பிடிப்போமே என்று இன்று முதன்முதலில் புறப்பட்டேன். அதற்கும் நீர்... கொடுமுடி: நான் தடையாகக் குறுக்கிட்டேன்? மருந்தினால் ஆகாதது வருந்தினால் ஆகும். நடை என்பது காந்தி வைத்தியம். சிறு குழந்தைகள் இயல்பாக ஓடியாடி உறங்குகின்றன. பெண்கள் வீட்டுக்குள்ளே இங்கும் அங்குமாகப் பத்துக் கற்கள் அளவு நடந்து திரிந்து உறங்குகின்றார்கள். கொஞ்சம் வசதியான ஆண்கள் ஏவியும் கூவியும் இருந்தபடி இருக்கிறார்கள். உடல் உழைப்பு எந்த வயதிலும் வேணும். இறைவன்கூட, இருந்த இடத்தில் சும்மா இராமல் கால் மாறி ஆடிக்கொண்டே மெய்ந்நலத்தைக் காத்துக்கொள்கிறான். முத்தரையம் : முடியரே! நீரும் காலையில் எழுந்து ஏன் நடந்து வந்தீர்? உமக்கும் நடைமருந்து வைத்தியர் சொன்னாரா? கொடுமுடி : அவ்வாறு சொல்லியிருந்தால் நேரே வீதி வழியாக அல்லவா நடந்து போய்க்கொண்டிருப்பேன்? உன் வீட்டுக்கு ஏன் வருகிறேன்? என் நிலை வேறு. எனக்கு மாத்திரை சொல்லுவதாக இருந்தால் தூக்கம் கலையச் சொல்ல வேண்டும். (பொய்யாகச் சிரித்து) எனக்கு வைத்தியர் எதுவும் சொல்லவில்லை. பழைய ஆசிரியர், தம்பி! நடந்து போகும் போதாவது தூங்காமற் போ என்று அறிவு சொல்லியிருக்கிறார் (பொடி போடுகிறார்) முத்தரையர் : (பொடி வேகம் தாங்காமல்) முதல் முதலில் நடக்கலாம் என்று புறப்பட்டு வந்தேன். நினைத்தப்படி கொஞ்ச தொலையாவது போய் வருகிறேன். என்னமும் தெரிவிக்க வேண்டுமானால் காத்திருங்கள். (டே! அய்யாவுக்குச் சூடான காப்பி கொடு) கொடுமுடி: (காப்பி வரட்டும் என்று தெரிவித்துவிட்டு) அரைய! காத்திருந்தது போதும், போதும். இன்னுமா உன் வீட்டில் காத்திருக்க வேண்டும். உங்களுக்கெல்லாம் ஏன் தூக்கம் வரவில்லை, தெரியுமா? இருபத்து நாலு மணிப்போதும் உட்காராமே பத்து விரலும் பதிய நடந்தாலும், குதிகால் தேய ஓடினாலும் தூக்கம் வருமா? வருமா? என்று கேட்கிறேன். முத்தரையர் : ஏன் வராது, சாபமா? கொடுமுடி: சாபமும் இல்லை, கோபமும் இல்லை. எல்லாம் பெண் பிறப்பின் பாவம். நீ தந்த இந்தக் காப்பி ஆவிமேல் ஆணையாகச் சொல்லுகிறேன். இனி நீ ஓரடிகூட இதற்காக நடக்கவேண்டியதில்லை. நான் உன்படி வந்தபின் நீ ஏன் படியைவிட்டு இறங்கவேண்டும்? படியில் நின்று பேசக்கூடிய காரியம் இல்லை. (இருவரும் வீட்டிற்குள் போதல்) இனி உனக்கு இரவு மாத்திரமில்லை, பகலிலும் தூக்கம் வரும். இதோ, படி. (தன்னிடமிருந்த செய்தித்தாளை முத்தரையரிடம் நீட்டுதல்) முத்தரையர் : (மெய்ப்பையைப் பார்த்து) கண்ணாடி இல்லை. நீரே படித்துச் சொல்லும். அங்ஙனம் என்ன பொல்லாத மருந்து. பகலிலும் தூக்க மருந்து என்ற புது விளம்பரமா? ஊசி கீசி புதிய கண்டு பிடிப்பா? செய்தித்தாள் என்கிற பேருதான். எங்கும் விளம்பரம். விளம்பரத்துக்கிடையே சின்னச் செய்திகள். கொடுமுடி: ஓ! ஓ! நீ செய்தித்தாள் வாங்குகிறதில்லையா? நானாவது ஒரு தாள் வாங்குகின்றேன். இது புது மாதிரியான (சிறிது தாமதித்தல்).... முத்தரையர் : ஏன் தாமதம்? (படபடப்போடு) புதுமாதிரி இன்னா விளம்பரமாக இருந்தாற்கூடச் சொல்லுக. விளம்பரத்தில் என்ன இருக்கிறது? கொடுமுடி : புத்தம் புதிய வாழ்வு விளம்பரம். கலியாண விளம்பரம். முத்தரையர் : (இயல்பாக) கலியாணமா; ஆன கலியாணமா? “எங்கள் திருமணத்துக்கு வந்து வாழ்த்து வழங்கியோர்க் கும், வாழ்த்து விடுத்தோர்க்கும், பரிசு அளித்தோர்க்கும் இதன்மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம். தனித்தனி நன்றி தெரிவித்ததாகக் கருதிக்கொள்ள வேண்டுகின்றோம்” என்ற விளம்பரந்தானே. கொடுமுடி : (தலை நிமிர்ந்து) ஆன கலியாணமில்லை. ஆக வேண்டிய திருமணம். ஆகக்கூடிய நறுமணம். முத்தரையர் : (உரத்த குரலில்) யாருக்கு? கொடுமுடி : (இயல்பாக) எல்லாம் நின் ஒரே மகளுக்கு. சேயிழைக்குந் தாயில்லை. உனக்கும் வயதாகிறது. கவலைதரும் பொருள் அகத்தில் இருக்கும்போது என்ன மருந்து விழுங்கினாலும் தூக்கம் கிட்ட வருமா? முத்தரையர் : தூக்கம் இல்லை என்றால் வைத்தியர்கள் மருந்து தருவார்கள். ஏன் வரவில்லை என்று கேளார்கள். கொடுமுடி : அதுதான் மருத்துவ மறை. (செய்தித்தாளைப் பிரிக்காமல்) கேட்டாலும் செல்லமுடியுமா? மக்கள் படும் பல நோய்களுக்கு உடாலா காரணம்? உயிரைப் பாதிக்கும் சமுதாயப் பழக்கவழக்கங்கள் காரணம். செய்தி பார்த்த மகிழ்ச்சியில் நானும் கண்ணாடியை எடுத்துவர மறந்து போனேன். (காப்பியைச் சிறிது குடித்துக் கொள்கிறார்) டே! எனக்குத் தேநீர் கொண்டு வா. வரும்போது அந்தக் கண்ணாடியையும் எடுத்து வா. முத்தரையர் : (கண்ணாடியை மாட்டும்போதே) அந்த விளம்பரம் எந்தப் பக்கத்தில்? கொடுமுடி : இதோ பார். மங்களமான கருப்புக்கோடுகள் நாலு திசையிலும் போட்டுக் காட்டியிருக்கிறேன். முத்தரையர் : (நகையாக) கருப்புக்கோடா மங்களம்? எந்த நாட்டுப் பழக்கம்? கொடுமுடி : செய்தியே கருப்பு மையில் இருக்கும்போது கோடு வேறு மையில் போடுவது வேற்றுமையாகும். முத்தரையர் : (செய்தித்தாளை நன்றாகப் பிரித்துவைத்து) ஒரு மணமகள் தேவை “பட்டக் கல்வியும் நல்ல குடிப் பிறப்பும் செந்நிறமும் வனப்பான உடற்கட்டும் இருபத்தைந்து வயதும் உடைய இளைஞனுக்கு மணமகள் வேண்டும்” (படிப்பதை நிறுத்தி) கொடுமுடியாரே, தகுதியான மாப்பிளை. கொடுமுடி : மேலும் படி. மடிக்காமல் படி. (டே! இன்னொரு முறை அய்யாவுக்குக் காப்பி கொண்டு வா) முத்தரையர் : “மணமகள் 25 வயதுக்குக் குறைந்தவளாக இருக்கவேண்டும்” (படிப்பதை நிறுத்தி) என் மகளுக்கு 18 நடந்து கொண்டிருக்கிறது. நேற்றுத்தான் பிறந்த நாள் கொண்டாடினோம். கொடுமுடி: திருமணம் கொண்டாட வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தன்னைவிடப் பெண் குறைந்த வயதாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தம் தானே. முத்தரையர் : நல்ல பொருத்தம் (விளம்பரத்தைத் தொடர்ந்து வாசிக்கிறார்) “பெண் தன்மை கொண்டவளாக இருந்தாற்போதும்” (படிப்பதை நிறுத்தி) என்ன, அவ்வளவு விளங்கவில்லையே. கொடுமுடி : ஏன் தயங்குகிறாய்? அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற குணங்கள் இருக்க வேண்டும். உன் பெண்ணுக்கு இந்த நான்கு குணமும் அச்சுப்போல் படிந்து இருக்கிற மாதிரி யாருக்கு இருக்கிறது? முத்தரையர் : (மேலும் தொடர்ந்து) “நிறம் எதுவாக இருந்தாலும் இருக்கலாம். எழுத்துமணம் இல்லா விட்டாலும் திருமணத்துக்குத் தடையில்லை. விருந் தோம்பும் தமிழ்ப்பண்பு கட்டாயமாக இருக்கவேண்டும்” (மகிழ்வாகத் தாளைக் கீழே வைத்தல்) கொடுமுடி: (தாளை வாங்கி) என்னப்பா தாளை வைத்து விட்டாய்? மிக முக்கியமான செய்தியைப் படிக்க வில்லையே. முத்தரையர் : (இயல்பாக) அதைக் கண்ணாலே முழுதும் பார்த்திட்டேன். ஒரு குடியைக் காப்பதால் இன்னொரு குடி முழுகிப்போகாது. “என் குடும்பப் பொறுப்பு முழுதும் தாங்கும் செல்வத்தை அப்பெண் கொண்டுவர வேண்டும்” என்று மாப்பிள்ளை முடிவாக அறிவித்திருக் கிறார். தாங்கிவிட்டால் போகிறது. கொடுமுடி : என்னப்பா, இவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டாய். அவன் குடும்பப் பாரம் என்னவோ? முத்தரையர் : (மறுபடியும் தேநீர் குடித்து) குடும்பப் பொறுப்பு என்றால் என்ன இருக்க முடியும்? அவன் வீட்டிலும் கட்டிக் கொடுக்கவேண்டிய கழுத்துக்கள் நாலைஞ்சு முழுகிக் கிடக்கும். நம் குடும்பம் போலக் கருதி அவர்களுக்கும் மணம் செய்து வைத்துவிடுவோமே. சேயிழை நம்மைவிட்டுப் போகும்போது என் செல்வ மெல்லாம் அவள்கூடப் போகத்தானே செய்யும். என் செல்வம் எங்கும் விளக்கேற்றட்டும். கொடுமுடி : பெருஞ் செல்வம் உடைய உன் போன்றவர்களுக்கு ஒரு மகளுக்குத் திருமணம் செய்வதில் இவ்வளவு திண்டாட்டம் என்றால் ஏழைக் குடும்பத்தில், பல பெண்கள் பிறந்துவிட்ட குடும்பத்தில், எவ்வளவு கவலைகள் இருக்கும். உன் போலச் செல்வர்கள் மற்ற வீட்டுத் திருமணங்களுக்கும் அருள் செய்தால் அதை விடப் புண்ணியம் உண்டா? நம் சமுதாயத்துக்கு ஏற்ற அறம் இது. (வரங்கொண்டார் உள்ளே வருதல். வேலையாள் காப்பி கொண்டு வந்து வைத்தல்) முத்தரையர் : வாருங்கள். எதிர்பாராத வருகை. ஏன் காப்பியைக் குடியாமல் கையில் வைத்திருக்கிறீர்? சூடு கூடுதலா? வரங்கொண்டார் : இல்லை. இனிப்பைக் குறைத்துக் கொள்ளு மாறு வைத்தியர் சொன்னார். இனிப்பு இல்லாமல் இருந்தால் நல்லது. (கொடுமுடியாரைப் பார்த்து) தாங்கள்... கொடுமுடி : நான் முன்பே இருமுறை (சிரித்துக்கொண்டு) சீனி கூடுதலாகப் போட்டுக் காப்பி சாப்பிட்டேன். இனி பலகாரம்தான் சாப்பிட வேண்டும் (முத்தரையரைப் பார்த்து) ஐயா... முத்தரையர் : ஐயா பெயர் வரங்கொண்டார். நம் மாவட்டத்தில் பெரிய பொதுநலத் தொண்டர். (அப்படியா என்று கொடுமுடி கும்பிட வரங்கொண்டாரும் கும்பிடல்) கொடுமுடி : கொடுமுடி என்றால் இந்த வட்டத்தில் எல்லார்க் கும் என்னைத் தெரியும். பெரிய தொண்டர் என்றால் எந்தப் பெரிய கட்சியிலாவது சேர்ந்தவராக இருக்க வேணுமே. வரங்கொண்டார் : (விரைவாக, குடித்த காப்பியைக் கீழே வைத்து) எந்தக் கட்சியிலும் சேர்ந்தவனில்லை, சேரப் போகிறவனும் இல்லை, சேர்ந்து சேர்ந்து விலகினவனும் இல்லை, விலக்கப்பட்டவனும் இல்லை. முத்தரையர் : தலைவர்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்றால் தான் ஒரு கட்சியில் சேரவேணும். மக்களுக்குத் தொண்டு செய்வதற்குக் கட்சி எதுவும் தேவையில்லை. கட்சியில்லாமல் செய்கிற தொண்டு நிரக்கும். இவரும் இவர் முன்னோரும் பாட்டாளிகள். கட்சியில் எல்லாம் வந்து நிற்கச் சொன்னார்கள். இவர் குடும்பக் கொள்கை என்ன தெரியுமா? ஒருக்காலும் எந்தக் கட்சியிலும் சேரலாகாது. வரங்கொண்டார் : (இடை மறித்து) இருந்தாலும் எல்லாக் கட்சியோடும் பழகலாம். சமயச் சார்பற்ற அரசு என்று சொல்கிறார்களே அதுபோல் எங்களது கட்சிச் சார்பற்ற குடும்பம். அவ்வளவுதான். யாரோடும் அதிகமாகக் கூடி நகைத்துகொள்ள மாட்டோம். ஒருவரையும் பகைத்துக் கொள்ள மாட்டோம். கொடுமுடி : (மறுபடியும் கும்பிட்டு) இப்படி நாட்டில் இரண்டொரு குடும்பம் தானுங்க இருக்க முடியும். என்ன நான் சொல்வது. நல்லா இருக்கட்டும். முக்கியமான காரியம் பேச வந்தாற்போல் தெரிகிறது. அடியேன் விடை வாங்கிக் கொள்கிறேன். (எழுவதுபோல் குனிந்து நிற்கிறார்) வரங்கொண்டார் : (அவர்மேல் கையை வைத்து) நீங்கள் நன்றாக இருக்கலாம். பொதுக்காரியம்தான் பேசப் போகின்றோம். மறைவு கரவு ஒன்றுமில்லை. (முத்தரை யரைப் பார்த்து) இன்று ஒரு நல்ல செய்தி. கொடுமுடி : இன்றைக்கு இவர்க்கு எல்லாமே நல்ல செய்தி தானுங்க. வரங்கொண்டார் : நம் மாவட்டத்தில் ஒரு கழகம் அமைக்க இருக்கின்றோம். சமூகத்தில் வரவர எல்லாப் பாரத்திலும் பெண் பெற்றார் பாரம் தலைச்சுமைபோல் பெருகி வருகிறது. படிப்பு பெருகப் பெருக மணப்பாரமும் பெருகுகிறது. அறிவியல் எவ்வளவு வளர்ந்தாலும், நம் சமுதாயத்தில் திருமணத்தில் எளிமையில்லை. சரிநிகர் சமானம் என்பது தேர்தற்காலப் பேச்சாகிவிட்டது. முத்தரையர்: இதுபற்றி எனக்கும் சிந்தனையுண்டு. இதுவரை சிந்தனையால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. சிந்திக்கா மல், போகிற வழியில் போய், கட்டாறு போல விழுகிற இடத்தில் விழுகட்டும் என்று விட்டுவிடுவது நல்லதில் லையா? வரங்கொண்டார் : (காப்பி மறுபடியும் சூடுபடுத்திவரக் குடித்துக்கொண்டு) கடினமான சீர்திருத்தம். பார்த்துக் கொண்டு சும்மாவும் இருக்க முடியவில்லை. திருமணக் கழகம் என்ற பெயரால் ஓர் இயக்கம் நடத்துவோம். சேர்கின்றோம் என்று சில இளைஞர்கள் வந்து என்னைத் தூண்டினார்கள். நூறு இளைஞர் உறுப்பினராகவும் சேர்ந்திருக்கின்றனர். கொடுமுடி : (குறுக்கிட்டு) ஒன்று கேட்கலாமா? வரங்கொண்டார் : தாங்கள் கேட்கத்தானே வேண்டும். கொடுமுடி: அவர்கள் எல்லாம் திருமணமாகிக் குழந்தைகள் பெற்ற இளைஞர்களா? (சிரித்தல்) வரங்கொண்டார் : திருமணம் ஆகவேண்டிய நல்லிளைஞர்கள். வேலையில் இருந்து பொருள் ஈட்டிக் கொண்டிருப்ப வர்கள். பெரும்பாலோர் பட்டப் படிப்பிகள். பெற்றோர், தங்கை, தமக்கையெல்லாம் உண்டு. உண்மையாகச் சமுதாய மாறலை விரும்பிகள். இந்தக் கழகத்துக்கு (முத்தரையரைப் பார்த்து) ஐயா தலைவராக இருக்க வேண்டும் என்று அந்த இளைஞர்கள் விரும்புகின்றனர். என் விருப்பமும் அது. கொடுமுடி: (விரைவாக) இது பொன் விருப்பம். முத்தரையர் : (சிறிது நினைந்து) வரங்கொண்டார் வந்து கேட்கும்போது.... (மறுபடியும் நினைந்து) படித்த இளைஞர் பலர் அதில் அக்கரை காட்டுகையில் ... (மறுபடியும் ஒரு நினைவு வந்து) நான் வேண்டுமானால் அக்கழகத்துக்கு நிதி தருகின்றேனே தலைவனாக இருப்பதைக் காட்டிலும்... வரங்கொண்டார் : (வருத்தமாக) நீங்கள் மாறுபாடாக எண்ணி விட்டீர்களோ என்று நினைக்கிறேன். நிதியை மனத்தில் வைத்துக்கொண்டு பேச்சுக்காகத் தலைவனாக.... முத்தரையர் : (குறுக்கிட்டு) மாறுபாடாக நினைக்கவில்லை. நான் தலைவனாக இருக்கவேண்டும் என்பதுதான் தங்கள் கருத்து. கொடுமுடி : அதுவே என் கருத்து. முத்தரையர் : (மறுபடியும் சிந்தனையொடு) தொண்டனாக வேண்டுமானால் இருக்கிறேனே. வரங்கொண்டார் : (சிறிது பேசாமல் இருந்தபின்) தலைவராக இருப்பதில் தங்கட்கு ஏதும் தடையுண்டா? எங்கள் இடத்தில் குறைபாடு இருந்தால் தெரிவியுங்கள். திருத்திக் கொண்டு தங்களைத் தலைவராகப் பெறுகின்றோம். கொடுமுடி : இவ்வளவு வற்புறுத்திக் கேட்கும்போது முத்தரையா! ஒத்துக்கொள்ளப்பா. முத்தரையர் : எனக்கு ஆண் குழந்தை இல்லை. பெண் குழந்தை களும் பல இல்லை. ஒரே ஒரு மகள். இவளுக்குக்கூடத் திருமணஞ் செய்துவைக்க மாட்டாமல் இந்தக் கழகத்தில் சேர்ந்துகொண்டானே என்று ஊர் சொல்லக் கூடும். இளைஞர்கள் உறுப்பினராக இருக்கின்ற ஒரு கழகத்தில் ஒரு மகளுடைய நான் தலைவனாக இருந்தால் வெளிப் படையாகப் பலர் பேச வாய்ப்பு ஏற்படுமே என்று நாணப் படுகின்றேன். என் ஒரு மகளுக்குப் பெருமைக்குறைவாய் முடியுமோ, தாயில்லாப் பிள்ளையாயிற்றே என்று பார்க்கிறேன். என் குழந்தைக்குத் திருமணம் முடிந்தபின்... கொடுமுடி : (சிரிப்பாக) இதுவா உன் சிந்தனை! முத்தரையா! உன்னைப் பற்றி இப்படி நீயே நினைத்தால் நினைக்கலாம். மஞ்சள் தாள்கூட இவ்வாறு நினைக்கப் போவதில்லை. உனக்கு இருக்கும் பணம் எவ்வளவு? இந்த ஊரில் உள்ள எல்லாக் குமரிப் பெண்ணுக்கும் செலவழித்துத் திருமணம் செய்யக்கூடிய அவ்வளவு செல்வத்தை ஆண்டவன் உன்னிடம் சேமித்து வைத்திருக்கிறான். உனக்கு இருக்கிற செல்வாக்கு எவ்வளவு? உன் மகள் திருமணத்தில் பகல் விருந்து மூன்று நாளைக்கு நீண்டு செல்லும். கைகழுவக் காவிரியும் போதாது; தாட்டி லைக்குத் தஞ்சாவூரும் போதாது. உனக்குக் கூடி வருகிற புகழ் உனக்குத் தெரியுமா? உன் மகள் சேயிழை திருமணத்தை வானொலி நடப்பு வருணனை செய்யும். திரையினர் செய்திச் சுருள் எடுப்பர். திரைமுன் போடுவர். யாரிடத்திலே இதெல்லாம் சொல்லுகிறாய்? எங்களிடத்தில், என்னிடத்தில் பலிக்காது. வரங்கொண்டார்: தங்கள் கருத்தை நான் புரிந்துகொள் கின்றேன். (சிந்தனை முகத்தோடு) எண்ணிப் பார்க்கிறேன். எந்த விதத்தில் தங்களை ஊரார் குறைகூற முடியும்? சிறையாளர்க்கு அமைத்த சிதம்பரனார் கழகத்தில், ஏழைத் தொழிலாளர்கள் கொண்ட திரு.வி.க. கழகத்தில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இருக்கும் உ.வே.ச. குழுவில், பிச்சைக்காரருக்கு வாழ்வளிக்கும் பண்ணனார் சங்கத்தில், அநாதிக் குழந்தைகளுடைய ஆபுத்திரன் சங்கத்தில், கைம்மைப் பெண்டுகளின் காந்தியார் சங்கத்தில், பிள்ளை பல பெற்றோர் நடத்தும் பெருஞ்சித்திரனார் சங்கத்தில், ஏன், பரத்தையரின் சீர்திருத்தத்துக்கு உரிய மணிமேகலை மன்றத்தில் தலைவராக இருந்து வருகிறீர் கள். இத்தகைய சங்கங்களுக்குத் தாங்கள் தலைவராக இருப்பது மரபாகி வருகின்றது. அச்சங்கங்களோ மலராகி மணக்கின்றன. வேறென்ன நினைக்கிறீர்கள்? முத்தரையர் : (சிரித்த முகத்தொடு) இனி நினைக்கவும் மறுக்க வும் உரிமையில்லை போலும். கொடுமுடி : உடன்படுவதைத் தவிர. (வரங்கொண்டாரைப் பார்த்து) ஐயா தலைவர். யார் செயலாளர்? நல்ல ஓர் இளைஞராகப் பார்த்து.... வரங்கொண்டார் : செயலராக ஒருவரை எண்ணியிருக்கிறோம். திருமேனி என்பது அவர் பெயர். துடிதுடிப்பான நேர்மை யான இளைஞர். தலைவர் கருத்து அறிந்து ஒரு முடிவு செய்யவேண்டும். (இச்சமயம் திருமண விளம்பரம் செய்தவன் இத்திரு மேனி என்பதனைக் கொடுமுடி ஒரு சிறு தாளில் எழுதி முத்தரையர்க்குக் காட்டுதல்) கொடுமுடி : இந்தப் பையன் தந்தை அறந்தாங்கி உயிர்க்காப்புக் கழகத்தில் அலுவல் பார்ப்பவர். அவர் மகன் தானே? வயது 25 இருக்கும். முத்தரையர் : (அந்தத் தாளை மடித்துக் கீழே போட்டு) மாப்பிள்ளை திருமேனி நன்றாகச் செயலராக இருக்கட்டும். உங்கள் விருப்பமே என் விருப்பம். பெண்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க முடிந்தால் நல்லது. கழகம் வலுப்படும். கருத்துக்களைப் பெண்ணுலகிற் பரப்ப இளம் பெண்கள் வேண்டும். வரங்கொண்டார் : நல்ல கருத்து கொடுமுடி : எனக்குப் பட்டது. நான்தான் சொல்லுகிறேன். தவறாக இருந்தால் உடனே மன்னித்து விடுங்கள். வரங்கொண்டார் : நீங்கள் தவறாகவா சொல்வீர்கள்? நீங்கள் தவறென நினைப்பது எங்கட்கு நல்லதாக முடியும். கொடுமுடி : அப்படி இளமகளிரைச் சேர்த்தால் ஐயாவின் மகளைத் துணைச் செயலியாக.... வரங்கொண்டார் : பொருத்தமான குறிப்பு. வேறு எந்தக் குடும்பம் இவ்வாறு முன்னுக்கு வரும். நேரு குடும்பம் ஒன்று நினைவுக்கு வருகிறது. கொடுப்பவர்களிடமே திரும்பத் திரும்பக் கேட்பது உலக வழக்கு. நம் கழகத்தில் அக்கரை காட்டுகிற (கொடுமுடியாரைக் காட்டி) இவரை... முத்தரையர் : (முகமலர்ந்து) ஒரு பெரிய உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வோமே. அறிவு சொல்லப் பயில்வான பெரியவர் வேண்டும். கொடுமுடி : (கையை நிமிர்த்தி) அங்ஙனமெல்லாம் நமக்கு ஒன்றும் வேண்டாம். என் பிழைப்புப் போய்விடும். அந்தப் பேச்சை எடுக்க வேண்டாம். ஐயா தலைவராகவும் (வரங்கொண்டாரைப் பார்த்து) தாங்கள் துணைத் தலைவராகவும், திருமேனி செயலராகவும், சேயிழை திருமேனிக்குத் துணைச் செயலியாகவும் இருந்து திருமணத் தெய்வக் கழகத்தை ஈடும் எடுப்புமாக நடத்துங்கள். எல்லார் குடும்பமும் மணக்கட்டும். இக் கழகத்தை முன்பே தொடங்கி விட்டீர்களா? இனிமேல் தான் தொடக்கமா? மிக நல்ல நாள் பார்த்துத் தொடங்குங்கள். வரங்கொண்டார் : நீங்களே - எங்கள் கழகத்தை முதன் முதலில் வாழ்த்திய பெரியவராகிய நீங்களே - தக்க நாள் சொல்லுங்கள். கொடுமுடி : (மூக்கில் விரல் வைத்து) ஆம், அது தகுந்த நாள். ஐயா மகள் திருமணம் விரைவில் நடைபெற ஏற்பாடு உண்டு. அந்த மணம் இந்த நாட்டில் பெரிய திருமணம். அமைச்சர்கள், ஆளுநர்கள், தாளர்கள், மாவட்ட ஆளர்கள் எல்லாரும் வரும் நாள். வரங்கொண்டார் : மங்கலமான கலகலப்பான நாள். பல பெண்களுக்கு உரிய திருமணக் கழகத்தை ஒரு நல்ல பெண்ணின் திருமண நாளில் தொடங்குவது நற்குறி. தாங்கள் உறுப்பினராக இருக்க இசையாவிட்டாலும், இம்மாதிரி அறிவுரை அடிக்கடி சொல்ல வேண்டும். கொடுமுடி : (இறுமாந்து) அதுக்கென்ன, என் அறிவுரைக்குப் பஞ்சமா, பணமா, காசா? கேளுங்கள் சொல்லப்படும். சொல்லுங்கள் கேட்கப்படும். (வரங்கொண்டார் விடைபெற்றுச் செல்லல்) முத்தரையர் : (தனக்குள்) வரங்கொண்டார் தாம் தோற்றிய கழகத்துக்குத் தாமே தலைவராக இருந்திருக்கலாம். அடக்கமானவர். என்னை எப்போதும் மதிப்பவர். (கொடுமுடியைப் பார்த்து) மனைவி இறந்தபின், கால மெல்லாம் என் வாழ்க்கை பொதுநலத் தொண்டாகக் கழிந்துவிடுமோ? ஒரு மகள் திருமணத்தைக் கூட வேகமாக முடிக்கவில்லை. கொடுமுடி : என்னப்பா அப்படிச் சொல்லிவிட்டாய். நான் வந்ததும் அவர் வந்ததும் எல்லாம் பார்த்தால் சேயிழை திருமணத்தை விரைவில் முடித்து வைக்க ஊழ் இங்ஙனம் ஓடியாடுவதாக எனக்குத் தோன்றுகின்றது. கூடிவரும் காலத்தில் எல்லாம் நாடிவரும். (சிரித்துக்கொண்டு) நான் வந்ததினால் நடப்பது கெட்டுப் போச்சு என்று நினைக் காதே. நடக்கவேண்டியது நடக்கப்போகிறது. ஒன்றுகெட இன்னொன்று வளரும். வைத்தியர் சொன்னபடி என் கூடக் கொஞ்ச தூரமாவது நடந்து விட்டுத் திரும்பேன். (மற்ற செய்திகளை இன்னும் பார்க்கவில்லை என்று செய்தித்தாளைச் சுருட்டிக் கொள்ளுதல்) முத்தரையர் : (கேலியாக) தாளுக்குரிய காசு ஒட்டிக்கு இரட்டி யாகத் தருகிறேனே. கொடுமுடி : பரவாயில்லை. இந்த விளம்பரம் என் பிழைப்புக்குத் தேவை. தேவை முடிந்தவுடன் தாளைத் தந்து காசை வாங்கிக் கொள்கிறேன். நற்றாள் தொழாவிட்டால் கற்றாதனால் ஆய பயனென், சொல். (புறப்படல்) காட்சி - 2 மால்வரை வீடு காலை மணி பத்து. நீராடிப் பூசை செய்து காலைப் பலகாரம் உண்டு அன்று வந்த கடிதங்களைப் பார்க்கிறார் மால்வரை. நாள்தோறும் இன்னின்ன கடிதங்கள் வந்தன என்று குறித்துக் கொள்வர். கூடுகளைக் கையால் கிழிக்காது, சிறு கத்தரியால் ஓரங்களை வெட்டுவர். நல்ல அஞ்சல் தலைகள் இருந்தால் தன் மகள் வெண்ணி லாவைக் கூப்பிட்டுக் கொடுப்பர். உடனே மறுமொழிய வேண்டிய கடிதங்கட்கு மறு மொழிவர். இன்ன நாள் மறு மொழி எழுதவேண்டும் என்று சில கடிதங்களில் குறித்துக்கொள்வர். சிலவற்றைப் பார்வை என்றளவில் வைத்துவிடுவர். வெண்ணிலா : (தந்தை தந்த சப்பான் அஞ்சல் தலையை வாங்கிக் கொண்ட மகிழ்ச்சியோடு) இன்று ‘வழிகாட்டி’ தாளில் ஒரு விளம்பரம் வந்திருக்கிறது. மால்வரை : ஒரு விளம்பரம் என்ன, இப்போதெல்லாம் தாள் முழுதும் விளம்பரந்தானே. நம் மிதிவண்டி விற்பனை பற்றிப் புறாச்சின்ன விளம்பரம் கொடுத்திருந்தோமே; முதற்பக்கத்தில் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அவ்வளவு பிழையில்லை. (புன்சிரிப்பாக) ஓரிடத்தில் மிதிவண்டு என்று அச்சு விழுந்திருக்கிறது. வெண்ணிலா : அதற்கும் ஒரு கருத்துண்டு அப்பா. ஒரு மிதி மிதித்தாற்போதும், வண்டு போலப் பறக்கும் என்று ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது? மால்வரை : இல்லை குழந்தை. இப்படியும் கருதலாமே, வண்டு ஓசை செய்துகொண்டு போவதுபோல் இந்த வண்டியும் ஓசை செய்யும் என்று. போடுகிற பிழையான விளம்பரத்துக் கெல்லாம் அவரவர் மனம்போல் கருத்துச் சொல்லலாம். பிழையாகப் போட்டால் மறுபடி பணமின்றி ஒழுங்காக அத்தாள் போட வேணும். வெண்ணிலா : (விரைவாக) அப்பா ஒரு பிழையும் இல்லாத நல்ல பெரிய விளம்பரம் இந்தத் தாளில் வந்திருக்கிறது. இதுவரை இம்மாதிரி விளம்பரம் வந்ததில்லை. ‘வழிகாட்டி’ தாளில் வழிகாட்டியாகவே இருக்கிறது, எல்லாரும் பார்க்கும்படியான இடத்தில். மால்வரை : என் கண்ணில் அது படாமல் இல்லை. நல்ல விளம்பரமாக இருந்தால் சற்று உன் அம்மாவிடம் காட்டு. வெண்ணிலா : ஊம், ஊம் காட்டமாட்டேன். இதுதானா வேலை. வீட்டு வேலை எவ்வளவு? குழந்தைகள் எழுந்த வுடன் வானொலியில் தொழுகைப் பாடல்களைக் கேட்க வேண்டும். அவற்றை இசைகூட்டிப் பாடிப் பார்க்க வேண்டும். உறங்கி எழுந்து மனம் தெளிந்த நிலையில் நல்ல செய்திகளைப் படிக்க வேண்டும். திருடினது, கொலை செய்தது, கிணற்றில் விழுந்தது, பொதுச் சொத்துக்களைக் கெடுத்தது, புகைவண்டியை நிறுத்தி யது, வகுப்புக்குப் போகாதது, விதவிதமான ஆடை விளம்பரங்கள், கண்கூசும் பட விளம்பரங்கள் என்னென் னமோ தாளை மையாக்கிப் போடுகிறார்கள்; இவற்றைப் படிக்கலாமா? பார்க்கலாமா? சும்மா கொடுத்தாலும் தொடலாமா? என்று அம்மா ஒரேயடியாகச் சண்டை பிடிப்பாள். இந்தத் தாளை வாங்கி அடுப்பு படிக்க வைத்தாலும் வைத்துவிடுவாள். மால்வரை : அம்மா இடத்தில் சொல்ல முடியாததை அப்பா இடத்தில் சொல்லலாம் என்று சொல்லுகிறாய். சொல்லு சொல்லு. வெண்ணிலா : வழிகாட்டி நீங்கள் தானே வரவழைக்கிறீர்கள். பணம் கொடுக்கிறீர்கள். உங்களுக்கு அதன் அருமை தெரியும். அம்மாவுக்கு என்ன தெரியும்? இந்தத் தாள்களை நிறுத்து விற்றுப் பணத்தைச் சொந்தமாக வாங்கிக் கொள்ளத் தெரியும். மால்வரை : (கடிதங்களை ஒழுங்குபடுத்திவைத்து) உன் அம்மாவைத் தப்பா நினைக்கிறாய். இப்படிச் செய்தி யெல்லாம் வருகிறது என்று தாளைப் படிக்காமல் எப்படித் தெரியும்? பழைய தாழ்கள் விற்று வருகிற பணத்தைக் கொண்டு என்ன செய்கிறாள் தெரியுமா? பள்ளியில் ஏழைப் பிள்ளைகளுக்கு எழுதுநூல், கற் பலகை, எழுதுகோல் வாங்கிக் கொடுத்து வருகிறாள். வெண்ணிலா : பழைய தாளைப் பணத்தாள் ஆக்குகிறாள். அது சரி, அப்பா! இந்த விளம்பரம் உங்களுக்குப் புது மாதிரி யாகப் படவில்லை? மால்வரை : (கலகலவென்று சிரித்து) புதுமாதிரி வருவதெல் லாம் போற்றத்தக்கது என்று எங்ஙனம் கூறுவது? இல்லற வாழ்வை விரும்புவன் இவ்விளம்பரஞ் செய்யான். (தலைதாழ) சீசீ இவனுக்குத் திருமணம் நோக்கம் இல்லை. விளம்பர நோக்கம். பெற்றவர்கள் இதைப் படித்து வருத்தப்படுவர். வெண்ணிலா : ஒருவர் இருவர் அல்ல; நாடே வருத்தப்படுவதற்கு உரிய விளம்பரம் இது. சமுதாயத்தின் புரையோடிய தீமையை அச்சில் வெளிப்படுத்தும் விளம்பரம் இது. யாரோ ஓர் இளைஞர் சமுதாய நலத்திற்காகத் தன் செலவில் இதை அம்பலப்படுத்தியிருக்கும் துணிவைப் பாராட்ட வேண்டும். மால்வரை: (இடைமறித்து) பாராட்டுவது மட்டும் போதாது. பரிசும் கொடுக்க வேண்டும்; பல மொழிகளில் மொழி பெயர்த்துப் பரப்பவேண்டும் என்று சொல்லம்மா. வெண்ணிலா : அப்பா, கேலியாகச் சொல்கிறீர்கள். நான் என் கருத்தை இனி ஏன் சொல்லவேண்டும்? மால்வரை : கேலியான கிண்டலான விளம்பரந்தான். இருந்தாலும் உன் கருத்தைச் சொல்லேன். இளம் பிள்ளைகள் மனப்பான்மையைத் தெரிந்துகொள்வது நல்லது. வெண்ணிலா: (சப்பான் அஞ்சல் தலையைப் பழைய தலைச் சேமிப்போடு வைத்துவிட்டு வந்து) விளம்பரத்தால் நோக்கம் எதுவாயினும், முடிவு எப்படியாயினும், சமுதாயத்தின் குறை காட்டி இந்த விளம்பரம். ஒரு பெருங்குறை என்ன? காதல் நிறம் சிவப்பு என்ற மனப்பான்மை. அதுவும் பெண் சிவப்பாக இருக்க வேண்டுமாம். ஆரஞ்சு நிறமாக, மாதுளம் நிறமாக, செம்பூ நிறமாக, பவள நிறமாக (சிறிது கடுப்பாக) இரத்த நிறமாக இருக்கவேண்டுமாம். மால்வரை : நல்ல வேளை தப்பித்தேன். என் மகள் நிறம் சிவப்பு. வெண்ணிலா : என் சிவப்புக்கூடச் சில கண்ணுக்குப் போத வில்லை. கருப்பாகப் படுகின்றது. மணப்பேச்சு எடுக்கும் போதே முதலில் பெண் நிறம் என்ன என்று தான் கேட்கிறார்கள். சிவப்பு என்றால் பேச்சு வளர்கிறது. கருப்பு என்றால் முகம் சுளிக்கிறது. அதில் ஒரு நல்ல காலம் (கலகலவென்று சிரித்து) கூந்தலும் சிவப்பாக இருக்க வேண்டுமென்று இதுவரை கேள்விப்படவில்லை. திருமணச் சந்தையில் நிறத்தை வைத்துச் சீர்தனம் இறங்குகிறது; ஏறுகிறது. செந்நிற இளைஞன் கருவண்ண மங்கையை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. கருப்பு வடியும் இளைஞர் எல்லாம் செவ்வண்ணப் பெண்களையே விரும்புகிறார்கள். பெண்களுக்கு இந்தவிதமான விருப்பத்துக்கு இடமில்லை. திருமணமானாற் போதும் என்று, திருமகள் போன்ற பெண் திருமால் போன்ற இளைஞனுக்குத் துணைவியாகின்றாள். ஏனென்றால் திருமணச் சந்தையில் பெண்கள் பருவகால மாம்பழம் போல் மிகுதியாகக் கொட்டிக் கிடக்கின்றார்களாம். வரத்து மிகுதி, சௌலுத்து குறைவு இப்படித்தான் இருக்கும் என்று பொருளாதாரக் கொள்கை பகர்கின்றனர். காதல் நிறம் சிவப்பு என்ற மூடக் கொள்கை சமுதாயத்திலிருந்து ஒழிக. அதற்கு இந்த விளம்பரம் முன்னோடி என்பது என் மகிழ்ச்சி. மால்வரை : வெண்ணிலா, இளங்குருதி படபடவென்று துடிக்கிறது. வெள்ளையர் ஆட்சிக்குப் பிற்பாடே கருப்பு நிறத்துக்கு மதிப்புக் குறைந்தது. அரசன் நிறம் அழகு நிறமாகக் கருதப்பட்டது. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி. நீ நினைப்பதுபோல் இன்னும் கருநிறத்துக்கு மதிப்பு குறைந்துவிடவில்லை. சில நல்ல ஆடவர்கள் கணவனும் மனைவியும் ஒரே நிறமாக இருப்பது அழகில்லை என்று கருதிக் கருநிற அழகிகளை விரும்பு கிறார்கள், தெரியுமா? வெண்ணிலா : அவர்கள் வாழ்வுக்கு வாழ்த்து. மால்வரை : (நிழற்படத்தைக்காட்டி) நான் நிறத்துக்கு மதிப்பு அளித்ததில்லை. உன் தாய் நிறம் கருப்பு. (அடுப்படியில் இவ்விருவர் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த தாய் நல்லி வருகிறாள்). நல்லி : (வேகமாக) இவர் என்னைச் செய்துகொண்டது பரம்பரை வழக்கம். உனக்கு இதுவெல்லாம் தெரியாது. வெண்ணிலா: (திடுக்கிட்டு) திருமணத்தில் ஒரு பரம்பரை வழக்கமா? புதிராக இருக்கிறதே. நல்லி : ஆமம்மா. நல்ல பரம்பரை வழக்கம். உங்கள் வீட்டுக்கு வந்த மருமகள்களையெல்லாம் என்ன நிறம் என்று ஒருமுறை வரிசையா நினைத்துப் பாரேன். உன் பெரியப்பார்களின் மனைவிகள் சித்தப்பார்களின் மனைவிகள் எல்லாம் என்ன நிறம்? (சிரித்துக்கொண்டு) எல்லாரும் கரும்பொன் நிறம். வெண்ணிலா : இல்லை அம்மா. உன்னைவிட ... மால்வரை : அதென்ன பரம்பரை வழக்கம். புதிதாக இருக்கிறது. நல்லி : (வரிந்து கட்டிக் கொண்டாற்போல நிமிர்ந்து) கேளம்மா, நான் வந்துசேர்ந்த இந்தக் குடும்பத்தில் மூன்று நான்கு தலைமுறைக்குமுன் சிவத்தப் பெண்களை மணஞ்செய்து கொண்டார்களாம். குழந்தைகள் குழந்தையாகப் பிறக்க வில்லையாம். பிறந்த குழந்தைகளும் திடமாக இல்லை யாம். தாய் உயிருக்கும் கேடு வந்ததாம். ஒரு பெரியவரிடம் கேட்டபோது அவர் எல்லோரையும் ஒருமுறை பார்த்து, கருப்பைப் பழிக்காதே என்று சுருக்கமாகச் சொன்னா ராம். ஒரு புலவரிடம் கேட்டபோது, அவர் நூல்களைக் கயிறு சாத்திப் பார்த்தார். தொல்காப்பியத்தில் கயிறு சாத்திப் பார்த்தபோது, (தன்னுள், ‘நினைவு வரவில் லையே, மறந்திட்டேனே) ‘வண்டே இழையே வள்ளி பூவே’ என்ற அடி வந்ததாம். ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ’ என்ற திருக்குறள் அடி வந்ததாம். திருவாச கத்திலிருந்து, ‘உடையாள் உன் தன் நடுவிருக்கும், உடையாள் நடுவுள் நீயிருத்தி’ என்ற வாசகம் வந்ததாம். இராமாயணத் திலிருந்து, ‘மையோ மரகதமோ மறி கடலோ மழைமுகிலோ’ என்ற பாட்டு வந்ததாம். நன்னூலைப் புரட்டிப் பார்த்தபோது, ‘கறுப்பின்கண் மிக்குள்ளது அழகு’ என்ற பக்கம் பளிச்சென்று தெரிந்த தாம். குருவிச் சோதிடம் பார்த்தபோது, குருவி குத்திய ஏட்டில், கேளப்பா என்வாக்கிற் கெடுதல் இல்லை; கேட்டவர்கள் ஒருநாளும் கெட்ட தில்லை; வாளொப்பாம் நிறத்தினிலே மயக்கம் ஏண்டா? வஞ்சனையார் இன்சொல்லை மதித்தல் ஏண்டா? நாளப்பா இன்றைக்கு நல்ல நாளாம்; நடுவீட்டுத் தொட்டிலிலே நடனஞ் செய்யும் ஆளப்பா பலபெறுவாய் அதிகம் சொல்லோம் அவனருளால் திருநீறு அளித்தோம் அப்பா. என்று எழுதிய பாட்டு வந்ததாம். ஒரு பெரிய கிழவி சொன்னதைக் கேட்டு, முருகன் முன் பூக்கட்டி வைத்துப் பார்த்ததில் சின்னக் குழந்தை தாமரைப் பூவை எடுக்காமல் குவளைப் பூவை எடுத்ததாம். பார்க்க வேண்டிய இவ்வளவும் பார்த்து முடித்த பிறகு, இனி நிறம் பார்ப்பதில்லை; குறைந்தது பத்து தலை முறைக்குச் சிவப்பில்லாத பெண்களையே மருமகள்களாகக் கொண்டு வருவது என்று பெரியவர்கள் தீர்மானித்தார்களாம். மால்வரை : (சிரித்துக்கொண்டு) அதனால் தான் இவளுக்குத் திருமணம் (சிறிது தயங்கி) இந்த வீட்டில் நடந்தது. வெண்ணிலா : (தாய்க்குச் சார்பாக) இந்த முறை ஏற்பட்டதி னால்தான், அப்பாவே பிறந்திருக்கிறீர்கள். எங்கள் அம்மா எதையும் மறக்கமாட்டாள். நினைவில் வைத்தி ருந்து, சமயம் வரும்போது தடதட மழைபோல (சிரிப்பாக) ஒரே நீளமாகச் சொல்லி முடித்துவிடுவாள். அடிக்கடி எதிர்த்துப் பேச மாட்டாள். (நாணமாக) இன்னொன்று கேட்கலாமா? நல்லி : சும்மா கேளு, அம்மாவும் அப்பாவும் இருக்கும்போது சும்மா கேளு. வெண்ணிலா : வருகிற மாப்பிள்ளை நிறத்தைப்பற்றி ஏதாவது தீர்மானித்து வைத்திருக்கிறார்களா அம்மா. நல்லி : அவ்வளவு கண்டிப்பாகத் தீர்மானிக்கவில்லையாம். சிவன் பார்வதி, திருமால் திருமகள், முருகன் வள்ளி நிறங்கள் போல ஒரே நிறம் இல்லாமல் மாறுபட்டி ருந்தால் அழகாக இருக்குமில்லையா? வெண்ணிலா : ஆமாம். சிவப்பிகள் கறுப்புக் கச்சுத்துணி ஒத்துவரும் என்று வாங்குகிறார்கள். நீலிகள் சிவப்புத் துணியோ பச்சைத் துணியோ விரும்புகிறார்கள். யாருக்கும் தன்னிறத் துணி பிடிப்பதில்லை. நீ சொல்வது சரிதான். மாறு நிறமே மனத்துக்குப் பிடிக்கிறது. மால்வரை : (வெளியே புறப்படச் சட்டையைப் போட்டுக் கொண்டு) உன் அம்மா சொல்வது சரி என்று நீயும் சொல்லிவிட்டாய். நாட்டு நடப்பு அப்படியில்லை. நம் வீட்டுக்குப் பெரியவர்களும், சோதிடமும் சொன்ன மாதிரி ஒவ்வொரு வீட்டுக்கும் பயமுறுத்திச் சொன்னால் பலித்தாலும் பலிக்கும். என்னவாய் இருந்தாலும் இந்த விளம்பரம் பெருமையில்லை. கருப்பை வைத்துக் கூடப்பணங் கேட்கிற தந்திரம். (கைகூப்பி) வாரும், வாரும் இன்று உம்மை நினைத்தேன். நீரே வந்தீட்டீர். கொடுமுடி : (கைகூப்பி) அப்படியென்றால் நான் இன்னுமா நூறு வயதிருப்பேன். மால்வரை: (சிரித்துக்கொண்டு) அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நினைச்சவர்களுக்கு நூறு வயது, தெரியுமா? கொடுமுடி: (விளம்பரத்தாளை முன்னே வைத்துவிட்டு) நினைக்கப் பட்டவர்களுக்கு என்ன வயது? மால்வரை : பட்டவர்களுக்கு வயசு குறையும். கொடுமுடி : குறையுமா? எவ்வளவு குறையும்? மால்வரை : ஆம் ஆம். நன்றாகக் குறையும். நினைச்சவருக்கு நூறு வயது எங்கிருந்து கிடைக்கும்! இவருக்குக் கூடுகிற வயதுக் கணக்குக்கு ஈடாக அவருக்குக் குறையும். கொடுமுடி : (தாளைப் பிரித்து) அப்படியானால் இன்றுதான் நீ என்னை நினைத்தாய். உன்னை நான் நேற்றே நினைத்தேன். மால்வரை : நாம் நண்பர்கள். நண்பர்களுக்கு விதிவிலக்கு. அவரவர்க்கும் உள்ள வயசு குறையாது; கூடவும் செய்யாது. உம்மைப் பார்த்து நாளாச்சு. நலம்தானே. மெலிவாகத் தெரிகிறது. (இனிய எலுமிச்சைச்சாறு வெண்ணிலா கொண்டு வந்து வைக்கிறாள்) கொடுமுடி : (நிமிர்ந்து பார்த்துவிட்டு) எனக்குச் சூடாச் சர்க்கரை குறையாமல் புதுப்பால் இருந்தால் காப்பி போட்டுக்கொண்டு வாம்மா. (மால்வரையைப் பார்த்து) எதோ வெளியிற் புறப்படுகிறாற் போலத் தெரிகிறது. ஒரு முக்கியமான செய்தி. அரைமணி நேரத்தில் நானும் இன்னொருவரைப் பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறேன். மால்வரை : அவரைப் பார்த்துவிட்டு மறுபடி வாருங்களேன். மெதுவாகப் பேசிக்கொண்டிருக்கலாம். கொடுமுடி : (சிந்தனை செய்வார்போல்) மறுபடி மறுபடி என்னால் நடந்துவர முடியாது. நீ வெளியே போய் வரும் வரையில் இருக்கச் சொன்னால் காத்திருக்கிறேன். மால்வரை : (சட்டையைக் கழற்றாதபடி இருந்துகொண்டு) முக்கியமானால் சொல்லுங்கள். கையிலிருக்கிறது முக்கியமான தாளாக - பழைய செய்தித் தாளாகத் தெரிகிறது. கொடுமுடி : (சூடான காப்பியைச் சுவைத்துக்கொண்டு, இனிய சாற்றை மால்வரைக்குக் கொடுத்து) இந்தத் தாள் பழைய தாளாக இருந்தாலும் புதிய விளம்பரம் ஒன்று இருக்கிறது. (‘உலகம்’ என்ற தாளை நீட்டிக் கொடுத்தல்) மால்வரை : (அதை வாங்கி விரைவாகப் படித்துவிட்டு) இனி இந்தப் புதிய தாளை வைத்துக் கொள்ளும். (‘வழிகாட்டி’யை நீட்டல்) கொடுமுடி : இரண்டையும் வைத்துக் கொள்கிறேன். (தன்னுள்: ஓ. ஓ. இந்த விளம்பரம் எல்லாத் தாளிலும் வருகிறதா? நல்ல விளம்பரந்தான்) மால்! நீயும் இதைப் பார்த்திருப் பதைக் குறித்து மகிழ்கிறேன். உனக்குத் தலைக்குமேல் வேலை. இருந்தாலும் செய்தித்தாள் முழுதும் பார்ப்பது நல்ல வழக்கம். சிலபேர் சில செய்திகளைப் பார்ப்பர். சில பேர் சில விளம்பரங்களைப் பார்ப்பர். சிலபேர் செய்தி களில் சிலவற்றையும், விளம்பரங்களில் சிலவற்றையும் பார்ப்பர். நீ... மால்வரை : நானா! ஒன்று விடாமல் செய்தித்தாள் படிப்போர் வேறு வேலை இல்லாதவர்களாக இருப்பார்கள். தற் செயலாக இவ்விளம்பரம் கண்ணில் பட்டதுமட்டு மில்லை, கருத்தையும் உறுத்தியது. இவ்விளம்பரத்தான் சிறியவன்; பெண் பெற்றவர்களையும் பெண்களையும் பழிப்பவன். இது புரட்சியான புதிய விளம்பரம் இல்லை. குறும்பான பொன் விளம்பரம். (பூத்தொடுப்பது போலப் பக்கத்து அறையிலிருந்து கேட்கிறாள் வெண்ணிலா) கொடுமுடி : (குடிக்கும் காப்பியைப் பாதியோடு கீழே வைத்து விட்டு) நீ இப்படிச் சொல்வாய் என்று எனக்கு முன்னமே தெரியும். முப்பது நாற்பது ஆண்டாக உன்னைத் தெரியுமே. கால் மாறினாலும் மால் மாறான். நரை மாறினாலும் வரை மாற மாட்டான். இது எனக்குத் தெரியாதா? இதுவரையில் நூறு பேர் இந்த விளம்பரம் போலப் பல வரவேணும் என்று சொல்லியிருக்கிறார்கள். சொல்லிச் சொல்லித் துடிக்கிறார்கள். இதை நீ மதி, மதியாமற்போ. காலம் மதிக்கத்தான் போகிறது. எங்களைப் போல உனக்கு நாலைந்து பெண்கள் இல்லை. மதிபோல ஒரு பெண்ணுதான். நாலு பெண் பெற்றவனை யாவது இந்தச் சமூகம் ஈவு சோவாப் பார்க்கும். ஒரு பெண் வைத்திருப்பவனை உயிரோடு கேட்கும். (வெண்ணிலா பூத்தொடுப்பதை நிறுத்திப் போகிறாள்) மால்வரை : (இவர் வாயாடி என்று பேச்சை மாற்ற) இந்தத் தாளில் நான் ஒரு விளம்பரம் செய்திருக்கிறேன். பார்த்தீரா? கொடுமுடி : நான் ஒன்றும்விடாமல் படிப்பவன் ஆச்சே. அதுவும் புதுமாதிரியான விளம்பரம். மிதிவண்டியில் ஒரு பெரிய குடும்பமே காய்ச்சுத் தொங்குது. ஆனால்... மால்வரை : அந்த விளம்பரத்தைப் புகழ்வதுபோல இந்த விளம்பரத்தைப் புகழ உமக்கு மனம் வரவில்லை. இல்லையா? கொடுமுடி : மனம் எப்படி வரும்? அதைப் பிடித்துச் சுற்றி நிற்கிற நாலு பெண்களும் பாவம். திருமணம் ஆகாத பெண்களாக அல்லவா இருக்கிறார்கள்? மால்வரை : (மறுபடியும் பேச்சை மாற்றக் கருதி) உம் மூத்த மகள் என்ன செய்துகொண்டிருக்கிறாள்? கொடுமுடி : (மகிழ்ச்சியாக) பசுந்தோகை தையற்கலையில் தேர்ச்சி அடைந்து மாதம் நூற்றைம்பது சம்பளம். மால்வரை : (விரைவாக) அடுத்த பெண்ணும் .... கொடுமுடி : (மிக்க மகிழ்ச்சியோடு) இருநூறுவரை சம்பளம். ஆசிரியத் தொழில். பொது வேலை நிறுத்தம் செய்த தால் இந்த மாதம் ஏழுமாதச் சம்பளம் கூடும். மால்வரை : உமக்கு இன்னும் பல பெண்கள் பிறந்திருக்கலாமே. உம் தொழில் பரவாயில்லை. மாதம் முந்நூற்றைம்பது ஒரு செலவில்லாமல் கிடைக்கிறது. இந்த வரும்படி நிலையாக என்றைக்கும் கிடைப்பதைக் கெடுத்துக் கொள்ள மாட்டீர். செய்தித்தாளை ஒருவரியும் விடாமல் பார்க்க உமக்குப் பெண்கள் வசதி செய்து தருகிறார்கள். கொடுமுடி : (பேச்சை மாற்றக் கருதி) இந்த மிதிவண்டி விளம்பரத்துக்குப் பிறகு எப்படித் தொழில் என்று தெரிந்துகொள்ள இன்னொரு முறை வருகிறேன். (இருதாளையும் சுருட்டிக்கொண்டு புறப்படுதல்) காட்சி : 3 மகளிர் நல்லகம் இங்கு விளையாட்டுக்கும் படிப்புக்கும் பலவகைக் கலைக்கும் இடம் உண்டு. புகழ்பெற்ற பெண்களின் படங்கள், உடல் நலம் பற்றிய படங்கள் உண்டு. பல பொருள்களின் விலைவாசிகள், கிடைக்கும் புதிய பொருள்கள் பற்றிய அட்டைகள் உண்டு. குழந்தைகளுக்குப் பாலும் சத்துணவும் வழங்கப்படும். முக்கியமான செய்திகள் கரும்பலகையில் அவ்வப்போது எழுதப்படும். ஐந்து வயதுப் பெண் குழந்தையும் உறுப்பினராகலாம். விதவைக்கும் அறுபது கடந்தவர்க்கும் கட்டணம் இல்லை. மாலை 4 மணிக்கு நல்லகம் திறக்கப்படும். ஆயிழை: (கரும்பலகையைப் பார்த்து) படிப்பதற்குக்கூட மாரி, நாணமாக இருக்கிறது. இதை ஏன் முக்கிய செய்தியாக எழுதிப் போடவேண்டும்? முதலில் பார்த்த நீ வந்து சொல்லியிருந்தால், இப்போது கண்ணைக் கழுவ வேண்டியது வந்திருக்காது. மாரி : (வேகமாக) சொல்லியிருந்தால் காதைக் கழுவியிருப்பாய்; தொட்டிருந்தால் உடம்பைக் கழுவியிருப்பாய்; நினைத்திருந்தால் நெஞ்சைக் கழுவி யிருப்பாய்; முக்கிய மான விளம்பரமா? முக்கியமான மிக முக்கியமான மிகவும் முக்கியமான விளம்பரம். விளம்பரத்தில் நாணமா? வயது வந்த கிழக்குமரிகளை வீட்டில் வைத்திருப்பதில் நாணமில்லை! இது வழி காட்டும் விளம்பரம், பழிகாட்டும் விளம்பரம். விழிகாண வேண்டிய விளம்பரம். ஆயிழை : (தன்வாயில் போட்டுக்கொண்டு) என்ன மாரி, ஏதோ கேட்டேன். மாரியாயி மாதிரி காறிக்கொண்டு பேசு கிறாய். இவ்வளவு வெகுளி உனக்கு வராது என்று கேட்டேன். இந்த விளம்பரத்தினால் யார்க்கோ மணமாவதை நானா தடுக்கப்போகிறேன்? குருவி உரசிக் கோபுரம் உடைஞ்சு போகாது. மாரி : (சிரித்து) எனக்குச் சினம் வந்தது, உன்மேலேயா? நீ என் சினத்தை ஊரார்மேல் கிளப்பிவிட்டாய். குதிரை கிளப்பின தூசி கோபுரத்திலே படிஞ்சது. அவ்வளவு தான். இந்தா பார். உனக்குப் பெண் குழந்தை ஒண்ணுமே இல்லை. எனக்கோ குழந்தையே இல்லை. என்றாலும் நம் சொந்தக்காரர்கள், ஊரார்க்கெல்லாம் வதிவயதியாய் இருக்கே. பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுதா? ஆயிழை, சும்மா தான் இருக்கலாமா? ஆயிழை : (சிரித்து) சுமந்தோர் பாடு. இறக்கியோர் பாடு. நமக்கென்ன? பாடுபட்டால் தான் இனி சுமக்கக் கூடாது என்ற சுரணை வரும். மாரி : (கேலியாக) அந்தச் சுரணை இல்லாமையினால் நாம் பிறந்திருக்கிறோம் (இருவரும் சிரித்தல்) இது விளை யாட்டுப் பேச்சில்லை. இந்த விளம்பரம் வீண்பரம் இல்லை. தனி மனிதன் கொடுமை அவனோடு மறைந்து விடும். ஓர் ஊர் கொடுமை செய்தால் இன்னொரு ஊரிலிருந்து எதிர்ப்பு வரும்; அல்லது அந்த ஊர் இரண்டுபடும்; அல்லது அரசு அந்த ஊரை அடக்கும். ஒரு கட்சி அரசுக்கொடுமை செய்தால் குடியரசில் உடனே மாற்ற முடியாவிட்டாலும் பொறுத்திருந்து தேர்தலில் திசை திருப்ப முடியும். சமுதாயம் கொடுமை செய்தால், அட்டூழியம் செய்தால், ஒடுக்கம் செய்தால், அதுவும் பெண்களைச் செய்தால், அதுவும் மலரனைய இள மகளிரைச் செய்தால், பழக்கம் வழக்கம் மரபு என்ற பித்தலாட்டப் பேரால் செய்துகொண்டிருந்தால், விடிவு எங்கே? பசுந்தோகை : (குறுக்கிட்டு) விடிவு இந்த விளம்பரத்தில் அக்கா, நீங்கள் எல்லாம் முதிர்ச்சி பெற்றவர்கள். சிறு பிள்ளைத் தனமாகச் சொல்லுகிறாள் என்று வைத்துக் கொண்டா லும் கொள்ளுங்கள். பெரியவர்களும், பெற்றோர்களும் ஏன் பெண்களும்கூடச் சமுதாயக் கொடுமைக்குத் துணையாக இருக்கும்போது இளைஞர்கள் தான் ஒரு வழிகாட்ட வேண்டும். மாரி : இல்லையம்மா. நீ சொல்வதுபோல் எல்லாப் பெற்றோர்களும் கொடுமை செய்வதில்லை. வேறு வழியில்லாமல் செய்கிறார்கள். ஆண்கள் பெற்ற பெற்றோர்களே திமிரினால் பெருமை குவிப்பதுபோல், பெண் பெற்றோர்களைக் கொடுமைக்கு ஆளாக்குகிறார் கள். கல்லேற்றினாலும் கழுதை சுமக்கும். பசுந்தோகை : (உரிமைக் குரலொடு) பெற்றோராவது திருமணஞ் செய்ய வழிகாண வேண்டும்; அல்லது மகளாவது உரியவனைத் தேடிக்கொள்ள வாய்ப்பு அளிக்கவேண்டும். ஆயிழை : (கலகலவென்று சிரித்து) உன்போல் எங்களுக்குப் படிப்பும் இல்லை, இப்படிப் பேசும் துணிவும் இல்லை. தேடிக்கொள் என்று சொல்லவேண்டுமா? அஃறிணை களுக்கு யார் சொல்லுகிறார்கள்? அந்த வாய்ப்பு இருந்தால் அப்படிப் பார்த்துக்கொள்ளவேண்டியது. அதற்குத்தானே காதல் என்று பெயர். தாகமும் இருந்து தண்ணீரும் இருந்தால் யாரைக் கேட்டுக் குடிக்க வேண்டும்? அங்ஙனம் தேடிக்கொள்ள ஆடவர்கள் வீதியில் கற்களைபோலக் கொட்டியா கிடக்கிறார்கள்? தேடிக்கொள், தேடிக்கொள் என்று பெற்றோர்கள் பறையறைந்துவிட்டால், திருமணங்கள் பொலபொல வென்று நிகழ்ந்துவிடுமா? மணமில்லாமல் என்னென் னமோ நிகழும். வீதி சிரிக்கும், வீடு வெறிக்கும். மயிலி : (இயல்பான குரலில்) என் அண்ணன் திருமேனி போல எல்லா இளைஞர்களும் முன்வந்தால் எவ்வளவு சீர்திருத்தம் நொடிப்பொழுதில் ஏற்படும்! ஆயிழை : (கேலியாக) விளம்பரம் செய்தது உன் சொந்த அண்ணனா? (தன்னுள், தங்கையைக் கேட்டுச் செய்த 7விளம்பரம் போலத் தெரிகிறது) (மாரியைப் பார்த்து) இன்னும் எவ்வளவு விளம்பரங்கள் எந்த மாதிரி வருமோ? இளைஞர்கள் எல்லாம் விளம்பரம் போட்டுத் திருமணம் செய்யத் தொடங்கிவிட்டால் பெண்களின் மானம், வானம் ஏறவேண்டியதுதான். பசுந்தொகை : சமுதாயம் அவ்வளவு கெட்டுப் போச்சு. பழம் அழுகினபின், நாற்றத்தை மறைக்க முடியுமா? (மயிலியைப் பார்த்து) உன் அண்ணனின் துணிச்சலைப் பலர் போற்றத் தான் செய்வார்கள். இது புதிய முறை என்று சொல்ல மாட்டேன். எவ்வளவு பேர் பெண்ணின் நிறம், வயது, படிப்பு, சமையற்கலை, பிறகலை எல்லாவற்றையும் தெரிவித்து மருமகள் கேட்கிறார்கள். விளம்பரம் இப்போது மாமாத் தொழில் புரிகிறது. இன்னும் சில நாளில் படம்கூடத் தாளில் போடுவார்கள். இது வேண்டாம் என்றால் வழி சொல்லட்டும். வெண்ணிலா : (வேர்க்கும் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு) வழி பிறரிடம் ஏன் கேட்கவேண்டும்? அவதிப்படுவோரே வழி பார்க்க வேண்டும். மாரி : ஒரு வழி உண்டம்மா. முப்பதாண்டுக்கு இறைவன் எல்லாம் ஆண் குழந்தைகளாகவே படைத்துவிட்டால்... வெண்ணிலா : (தன் தலைப்பூவைச் சரிசெய்துகொண்டு) அதனாலே இப்போதுள்ள குமரிகளுக்கு என்ன விடுதலை? பசுந்தோகை : (சினத்தோடு) தானே அறியாத இறைவன். இறைவனைக் குற்றஞ் சொல்லக்கூடாது. ஒருபாகமாக ஒட்டிக் கிடக்கும் சிவன்க்கு இது தெரியாதா? மயிலி : (கேலியாக) அவளுக்குக் கணவன் பக்கத்திலேயே கிடைத்துவிட்டான். தன் கவலை தீர்ந்துவிட்டது. கவலை இருந்தால்தானே உலகைப் பேசுவார்கள். மேலும் அவளுக்குப் பெண் குழந்தை இல்லை. இரண்டும் ஆண்கள். இரண்டுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம் (எல்லாரும் சிரித்தல்) (கைலை மலையில் ஒரு காட்சி) சிவன்யம்மை : பார்த்தீர்களா. ஒரு மண்ணுலகப் பெண் எவ்வளவு துடுக்காக, மிடுக்காக, அடுக்காகப் பேசுகிறாள். வாயை அடக்க வேண்டாமா? சிவன் : அவள் கல்லூரிப் பெண். தெரிந்துகொள். உன் காலத்தில் கல்லூரி இருந்ததா? இந்தக் காலத்தில் உலகத்துப் பெண்களுக்கு முன் நாம் தான் வாயை அடக்கிக் கொள்ள வேண்டும். அந்தக் குமரி சொல்வது உள்ளது. வாயை அடக்குவதற்காகக் கைலையிலிருந்து மண்ணு லகிற் சென்றால், படைத்தவன் வந்தான் என்று உலகத்தில் உள்ள முந்நூறு கோடிப் பேரும் என்னோடு உன்னையும் வளைப்புப் பண்ணுவார்கள். எத்தனையோ சொற்குண்டுகள் எறிவார்கள். புரட்சி நாயன்மார்கள் வருவார்கள். ஏன் கைலைக்கு ஓடி ஒளிந்தாய் சிவன்யொரு பாகா, சிவனொருபாகி என்று கேட்டால் என்ன மறு மொழி சொல்வேன். ஆயிரம் ஆயிரம் குமரியர் மணமிலி யாக இருக்கும்போது, ஒரு பிள்ளையை இன்னும் மூக்க வைத்திருக்கிறீரே: நாங்கள் இழிந்த இனமா? சீர் கூட வாங்கலாம் என்ற ஆசையா என்று கேட்டுவிட்டால் நீ என்ன மறுமொழிவாய்? ஒருவனுக்கு ஒருத்தி என்பது எங்கள் சட்டம்: உம் இளைய மகன் தெய்வச் சட்டத்தால் இருமணம் செய்துகொண்டான் என்பதனாலே கைலைக் குகைக்குள் ஓடிப்போய் யானைத்தோலால் மூடிக்கொண் டிருக்கிறீர் என்று வினாமாரி பொழிந்தால் வேறு திருமலைக்குப் போக முடியுமா? முக்கண்ணினாலும் முழிக்கவேண்டியது வரும். இத்தகைய கேள்விகளுக்கு ஆயத்தம் செய்ய இங்கு துணைநூல்களும் இல்லை. தனிப்பயிற்சிக் கல்லூரிகளும் இல்லை. விடை சொல்லா விட்டால் மானிட அரக்கிகள் விடைமேல் ஏறவிட மாட்டார்கள். என்ன வேண்டுமானாலும் எந்த மொழி யில் வேண்டு மானாலும் ஏசிப் பேசித் தொலைக்கட்டும். பனி அதிகமாகக் கொட்டுதடி... குகைக்குள் ஒரு மூலையில் போய்க் குந்துவோமடி. (மகளிர் நல்லகம்) வெண்ணிலா : இதெல்லாம் அந்தப் பழங்கடவுளுக்கு படும்படி செய்ய ஒரு வழி உண்டு. (சிவன் நடுங்குதல்) பெண்களே மிகுதியாகக் கோயிலுக்குப் போகின்றார்கள். அவர்கள் அணி செய்து புறப்படுவதால் ஆண்களும் தொடர்ந்து கோயிலுக்கு வருகிறார்கள். (இறைவன் நடுங்குதல்) பெண்டுகள் கோயில் நிறுத்தம் செய்தால் இறைவன் வழிக்கு வருவான். (எல்லாரும் கைத்தட்டல்) மயிலி : வழிக்கு வருவரோடு கைலையிலிருந்து பனிக்கட்டியில் வழுக்கிக் கொண்டு வந்து இங்கு விழுவான். (கைலைமலைக் காட்சி) சிவன் : (குகைக்குள் போவதை நிறுத்தி) சிவன், மண்ணுலகிகள் பேசுவது உன் காதில் விழுந்ததா? பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி அதிரும் என்பது தமிழ் வாக்கு. இப்போது பார். கைலையே அதிருகின்றது. நம் விடையின் மணி அதிருகின்றது. என் சடை உன் சடை போல் தொங்குகிறது. அளவுக்கு மிஞ்சிப் பெண்களைப் படைத்த .... மடமையை இப்போது உணர்கின்றேன். சிவன் : (இராவணன் கைலையைத் தூக்கிய காலத்துப்போல இறைவனது தோளை இறுகப் பற்றிக்கொண்டு) கவலைப்பட வேண்டாம் கணவா. நான் பக்கத்திலே இருப்பேன். ஏன் அவ்வளவு அதிகமாகப் படைத்துப் போட்டீர்கள்? தெரிஞ்சு படைச்சீர்களா, தெரியாமல் தான் படைச்சீர்களா? சிவன் : ஓ. ஓ. நீயும் அப்படிக் கேட்க வந்திட்டாயா? மண் வாசனை மலைக்கும் ஏறிவிட்டது. எல்லாம் நாயன்மார் களைக் கொடுமைப்படுத்திச் சோதித்த வினை. இப் போது அன்னோர் வழிவழி என்னைக் கொடுமைப் படுத்துகிறது. தெரிஞ்சு பாதி படைத்தேன். நீ ஊடலில் இருந்தபோது தெரியாமே எவ்வளவு படைத்தேனோ? கோயில்களே உலகத்தில் நம் சொத்துக்கள். அவை துப்புரவாக இருக்கவேண்டும் என்றால், ஆள் பேர் புழக்கம் வேண்டும். கோயில் ஒன்றா இரண்டா? தமிழ்ப் பாரதியார் பாடியபடி நாற்பதாயிரம் கோயில்கள். நாம் கைலை மலையிலிருந்து தவறி விழுந்தாலும் (சிவன் மறுபடியும் இறுகப் பற்றுதல்) கோயிற்கோபுரத்தில்தான் விழுவோம். அத்துணைக் கோயில்கள். அவ்வளவும் கோபுரங்கள், கொத்து மலர்க் குழலியர்கள் போக்கு வரத்து இருந்தால்தான் கோயில்கள் துப்புரவாக இருக்கும். இத்தனை ஆயிரம் கோயில்களுக்குப் போய் வர எவ்வளவு பெண்களைப் படைப்பது? இதுவோ குடியரசுக் காலம். கோயில்களுக்கு வரும்படி குறைவு, வரவுசெலவுத் திட்டத்தை எப்படி ஒழுங்குப்படுத்துவது? பற்றாக்குறைத் திட்டமாக இருந்தால் மக்களுக்கு நம்மிடம் பற்றுக் குறைந்துவிடும். பற்றுடையான் பற்றினை யார் பற்றுவார்? சொல்லடி. அதனால் வரும்படிக்கென்று கோயிற் பக்கங்களை வளையலும் மலரும் வழிபடு பொருள்களும் விற்கும் கடைகள் ஆக்கினேன். பல மனிதர்களுக்கு மதப்பற்று என்பது மாதர் பற்று. பிறைமதி சூடிய பெம்மானாகிய நான் இவ்வளவும் நினைத்துப பெண்களை உன் தொடர்பில் லாமல் இன்னும் படைத்துக் கொண்டிருக்கின்றேன். ஆண்மை பெற்ற இந்தப் பெண்களின் பேச்சு எங்கும் பரவி கோயில் நிறுத்தம் ஏற்படுவதற்கு முன் இனிப் படைப்பதையே நிறுத்திக் கொள்ளலாம் என்று சிந்திக் கின்றேன். சிவன் : தேவரீர், ஓர் ஐயம், தமிழில் கேட்கின்றேன். சிவன் : இதுவரை எதில் கேட்டாய்? நமக்குத் தாய்மொழி மகன் மொழி முருகனது மொழியே. நம்மை எவ்வளவு வைதாலும் இப்பெண்களின் தமிழ் வளத்தைப் பார். அந்தப் படிப்பகத்தில் தமிழ் படிக்க மறுபடியும் உன்னைக் காஞ்சிபுரத்தில் பிறக்கச் செய்கிறேன். (கையுடுக்கையை அடித்து) கோவிலுக்குள் நம் செவி தமிழ் கேட்கும் நல்ல காலம் வந்துவிட்டது, நல்ல காலமே வந்துவிட்டது. சிவன் : (தானும் கைகொட்டி) ஆடவர்களையும் வேண்டுமளவு கூடுதலாகப் படைத்திருந்தால் இந்த நிறுத்தத்தைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா? சிவன் : (நெற்றியில் அடித்துக்கொண்டு) படைக்கப் பார்த்தேன். மடந்தையர்களைப் படைக்கும்போது மணமான மண் விரைவாகக் கிடைத்தது. ஆண்களைப் படைக்க எண்ணியபோது களியான மண்ணுருண்டை கடினமாகக் கிடைத்தது. ஆண்கள் தொகை குறைவாக இருந்தாலும் அறிவுடைப் பெண்கள் மிகுதியாக இருந்தால் சிவனாட் சிக்குப் பெரிய கெடுதல் வராது என்று எண்ணியிருந்தேன். அறிவுடையார் ஆணும் உடையார் என்று பாடபேதத் தோடு சொல்லிக் கொண்டேன். எல்லாம் தப்படி தப்பு. (தலையில் அடித்துக்கொள்ளக் கையை ஓங்கி) இத்தலை யில் எவ்வளவோ பொருள்கள் நெடுங்காலமாக இருக் கின்றன. விலகி அடிக்கத் தலையில் வெற்றிடமும் இல்லை. சிவன் : ஆமாம். அறிவுடைய பெண்களைக் கண்டுதான் கோயில் நிறுத்தம் என்று மட்டும் பேசுகின்றனர். ஆண்கள் கூடினால் கோவிலுடைப்பு நிகழும். மதிற்கற்களைக் கொண்டு உடை உடை என்று உடைப்பார்கள். நிலாவூர் தியேறிக் கைலைக்கும் வருவார்கள். சிவன் : (சிவன்யை அணைத்துக்கொண்டு) நீ நடுங்குவது காண என்னாற் பொறுக்க முடியவில்லையே. படைப்பை அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்துவிட்டுச் சிவனே என்று இருக்கலாம். உன் கருத்தும் அதுவாகவே இருக்கும். நான் விடம் உண்டபோதும் திடமாக என் இடப்பக்கம் இருந்தாய். (குகைக்குள் சென்றுவிடல்) (மகளிர் நல்லகம்) ஆயிழை : (புத்துணர்வோடு) இந்த இளம் நங்கைகள் எவ்வளவு துடிப்பாக இருக்கிறார்கள். காலத்துக்கேற்ற கன்னிகள். மாரி : கட்டிப் போட்டிருந்தால் இந்தத் துடிப்பு ஓடிப் போயி ருக்கும். பசுந்தொகை : (கைக்குட்டையைக் கையில் சுருட்டிக் கொண்டு) கட்டிப்போட வழி பாருங்கள் என்று தானே கேட்கின் றோம். காலத்திற்கு ஏற்ற வழி. சொல்கின்றேன். நாணப் படாமல் கேளுங்கள். நாம் இங்கு எல்லாரும் இருப்பது பெண்கள். நமக்குள் என்ன நாணம்? வேலையிலிகள் வேலை வேண்டுமென்று கொடி தூக்கி ஊர்வலம் போகின்றார்கள், கிளர்ச்சி செய்கின்றார்கள். திருமணம் ஆகாத கன்னியா குமரிகள் எல்லாரும் அப்படிக் கிளர்ச்சி வழி பார்த்தால் என்ன? மாரி : என்ன கொடி பிடிப்பது? தாலிக் கொடியா? ஆண் கொடியா? வெண்ணிலா : கிளர்ச்சி செய்தாக வேண்டும். அதுவே வழி. செய்தித்தாள்கள் முன் பக்கத்தில் கொட்டையெழுத்தில் பெரிய படம் போடும். திரைப படங்கள் செய்திச் சுருளு காட்டும். வானொலிகள் நேர்முகப் புனைவு செய்யும் விளம்பரங்கள் பெருகும். ஆனால் குமரி ஊர்வலம் அழகான வழியில்லை. இவ்வளவு துணிவுடைய பெண் களை யார் மணப்பார்? விலகி ஓடியொளிவார்கள். தாடகையணி சூர்ப்பனகையணி கைகேயியணி என்று பழிப்பார்கள். ஆண் கூட்டம் எதிர்க்கொடி தூக்கினா லும் தூக்கும். மயிலி : நான் ஒன்று சொல்கிறேன். பெண் பெற்ற தாயர்களும் தகப்பன்மார்களும் திருமணக்கொடி ஏந்தி ஊர்வலம் வந்தால்... மாரி : யாருக்குத் திருமணம் என்று ஊர் சிரிக்கும். கூலிக் கிளர்ச்சியைத் தாலிக்கிளர்ச்சியோடு ஒப்பிடக்கூடாது. நாணமாகவும், நாகரிகமாகவும் ஒரு புரட்சி சொல்லுங் கள், நானும் ஆயிழையும் மற்றவர்களும் வந்து கலந்து கொள்ளுவது போல. வெண்ணிலா : இந்தக் கால இளைஞர்கள் என்பவர்கள் எடுத்ததற்கெல்லாம் வேலை நிறுத்தம், படிப்பு நிறுத்தம், தோசை நிறுத்தம், உண்டி நிறுத்தம், வண்டி நிறுத்தம், தேர்வு நிறுத்தம் என்று பல நொண்டி நிறுத்தம் செய்து கொண்டு போகிறார்களே. திருமண நிறுத்தம் என்று அந்த வீரர்கள் ஒரு கிளர்ச்சி தொடங்கினால் கேடு என்ன? பசுந்தொகை : இது குமரர்கள் காதில் பட்டால் போதும். இந்தக் கணத்திலேயே அவரவர் விரும்பிய குமரிக் கொடியைக் குன்றுத்தோளில் தூக்கிப் புறப்பட்டுவிடுவர். (சிரித்துக் கொண்டு) பின்வாங்க மாட்டார்கள். அந்தக் கொடியைக் கீழே வைக்க மாட்டார்கள். அப்புறம் எந்தக் கிளர்ச்சியி லும் ஈடுபடமாட்டார்கள். நல்லவேளை, நீ சொன்ன வழி நமக்குள்ளே இருக்கட்டும். மலரினும் மெல்லிய செய்தித் தாளுக்குத் தெரியக்கூடாது. இவர்கள் நம்பக்கூடிய இளைஞர்கள் இல்லை. காதலைத் தற்காலப் பதவியாகக் கருதுபவர்கள். பெண்களைப் பார்ப்பதையும் பின்புறம் தொடர்ந்து வந்து இளிமை பேசுவதையும் மாலைச் சிற்றுண்டிபோல மதிப்பவர்கள். அவர்களுக்கு என்ன தெரியும்? ஆண்மையைப் பெண்களிடம் விட்டவர்கள். பெண்களைவிட அழகு செய்துகொள்ளும் வெண்மை யினர். நெஞ்சைக் கெடுக்கும் புகையூதிகள். படிக்கிற காலத்தில் நிறுத்தம், நிறுத்தம் என்று அறிவு நிறுத்தம் செய்து பழகிய சூரர்கள். மணந்தபின் காதல் நிறுத்தங் கூடச் செய்வார்கள். எங்களை மணஞ்செய்து கொள்ள வாருங்கள் என்று இளைஞர்களை அழைப்பதைக் காட்டிலும் வள்ளுவர் சொன்னதுபோலக் குமரிகளாகவே இருந்து கழிப்பது எவ்வளவோ மேல். மயிலி : அப்படியானால் கிளர்ச்சி வேண்டாம் என்பது உன் கருத்தா? இவ்வாறு கொடுமைக் குழியில் கிடக்க வேண்டியதுதானா? வேதனைப்படும் பெண் நெஞ்சங் களுக்குப் பிறந்த வீட்டு விடுதலையில்லையா? மாரி : ஏன் விடுதலையில்லை? பசுந்தோகை சொன்னபடி, கன்னித்துறவு நல்ல விடுதலை. வெண்ணிலா : (ஏளனமாக) நல்ல விடுதலையம்மா. (மகளிர் நல்லகம் ஏழு மணிக்குச் சாத்தப்படுகிறது. எல்லாரும் தத்தம் இல்லம் செல்லல்) காட்சி : 4 அறந்தாங்கி வீடு மேல் மாடியில்லாத வீடு. கூட்டுறவுச் சங்கத்தில் கடன் வாங்கிக் கட்டிய வீடு. காற்றோட்டம் மிகுதி. கம்பி வேலி யடைப்பு. தோட்டத்தில் சிறு கிணறு. சிறு சிறு பாத்திகள். பெரிய மரங்கள் இல்லை. ஓரிரு தென்னை மரம். ஓரிரு வாழைமரம். ஒரு பகுதியில் சில பூஞ்செடிகள். ஒரு பகுதியில் சில பயிர்ச்செடிகள். வீட்டுக்கு வெளியே வாயிற்படிக்கு இரு பக்கத்தும் ஒவ்வொரு வேம்பு. முகப்புச் சுவரில் கோலேந்திய பாரதியார் படம். ‘அச்சந்தவிர்’ என்ற ஆண்மைத்தொடர். ஒரு நீள நாற்காலி முன் வாயிலில். வெல்லம்மை : (தானாக) ஒண்ணு, ரெண்டு... மணி ஏழு அடிக் கிறது. மானமும் குமுறுகிறது. மின் விளக்கும் சிமிட்டுது. போன குழந்தைகள் வரக் காணும். இருட்டுவதற்கு முன் வந்துவிடுங்கள் என்று எத்தனை முறை படித்துச் சொன்னாலும் இந்த இளம் பெண்களுக்குப் பட மாட்டேன் என்கிறது. காலம் வரவர நாலுபக்கமும் கெட்டுக்கொண்டு வருகிறது. குமரிப் பெண்களும் சொல்வதைக் கேட்பதில்லை. (வந்த மயிலியைப் பார்த்து) வரவர நேரமாகியே வருகிறாய். இன்னும் அவள் ஒருத்தி வரவில்லை. சொல்லாவிட்டால் ஒழுங்கான நேரத்திற்கு வருவீர்கள். சொல்லச் சொல்ல நேரஞ் சென்று வருகிறீர்கள். தள்ளி விடலாம் என்றாலும் அது கிள்ளுக் கீரையாக இல்லை. மயிலி : ஆமம்மா, இன்றைக்கு அதிக நேரந்தான் ஆய்விட்டது. அதற்குக் காரணம் ... வெல்லம்மை : (இழுத்தாற்போல) அதுக்குக் காரணம் பல செய்திகள் பரபரப்பாக வந்திருக்கும். கரகரப்பாகப் பேசி முடிவு கட்டியிருப்பீர்கள். நாம் முடிவுகட்டியா எதுவும் நடக்கப் போகிறது? யாரு வந்து முடிவாக்கட்டப் போகிறானோ? மயிலி : (துடுக்காக) எங்ஙனமும் ஒரு முடிவு கட்டியாக வேண்டிய செய்தியம்மா. என்ன சொல்லப் போகிறேன் என்று நீ தெரிஞ்சு பேசுவது போலத் தெரிகிறது. வெல்லம்மை : (இயல்பாக) அண்ணன் வெளியிட்ட விளம் பரத்தைச் சொல்லப் போகிறாய். ஊரெல்லாம் இப்படிப் பேசுகிறது, அப்படிப் பேசுகிறது என்று சொல்லப் போகிறாய். மயிலி : (திடுக்கிட்டு) விளம்பரம் வருமுன்னே உனக்குத் தெரியுமா? ஏதோ அடுப்படியில் காலமெல்லாம் கழிக்கிறாய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். நெருப்போடு பழகிப் பழகி அவ்வளவு துணிச்சல் உன்கிட்டே இருக்கிறது என்று இப்போது புரிகிறது. அண்ணன் விளம்பர வாசகம் முழுதும் உனக்குத் தெரியுமா? வெல்லம்மை : (கூவியெரியும் நெருப்பைச் சிறிது அடக்கி வைத்து) அப்படி ஒரு விளம்பரம் கொடுக்கத் தூண்டினது யார் என்று நினைக்கிறாய்? (சிறிது தயங்கி) நான் என்று புரிந்துகொள். (சிறிது நின்று) பணங்கொடுத்ததும் நான் என்று தெரிந்துகொள். இன்னும் என்ன வேண்டும்? மயிலி : (இயல்பு போல்) அப்படியானால் இவ்வளவும் செய்த நீ உன் பெயர் போட்டு விளம்பரப்படுத்தியிருக்கலாமே. வெல்லம்மை : (கேலியாக) அவ்வளவு துணிச்சல் அன்றைக்கு எனக்கு வரவில்லை. துணிச்சலுக்கும் பழக்கம் வேண்டும். உங்கள் அப்பா உங்கள் திருமணம் பற்றிக் கவலைப்படுவ தாகத் தெரியவில்லை. ஏதாவது வாயெடுத்தால் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகட்டுமே என்று பேச்சை உதறுகின்றார். நம்மைப்போல வயது வந்தவர்கள் பேரன் பேத்தி எடுத்துப் பெருகியிருக்கிறார்களே, உங்களுக்கு அந்த ஆசை இல்லையா என்றால் ஆசைக்கா பஞ்சம் என்று அடக்குகிறார். வேலையில் இருக்கும்போது இந்தக் கடமைகளைச் செய்து முடிக்காவிட்டால் பின்பு யார் சீந்துவார்கள். பெற்ற மனம் துடிக்கிறது. கற்ற மனம் கடத்துகிறது. (திருமேனி வருகிறான்) தம்பி உன் விளம்பரம் சரியில்லை என்று மணமாக வேண்டிய இவள் சொல்லுகிறாள். குயிலி : (வந்து கொண்டிருக்கும்போதே) சரியில்லை என்று மயிலி மாத்திரம் சொல்லவில்லை, குயிலியும் கூடச் சொல்லுகிறாள் என்று தெரிந்துகொள்ளுங்கள். திருமேனி : (விளம்பரத்தின் ஒரு படியை எடுத்துக்காட்டி) நல்ல திருத்தம் இருந்தால் சொல்லட்டும். யார் சொன்னாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன். மயிலி : (குயிலியைப் பார்த்து) நம் அண்ணன் உயர்நிலைப் பள்ளியிலிருந்து நாடகத்தில் நடத்துப் பழகியவர். அந்த நாடகப் பாணியில் வீட்டிலும் வாசகம் பேசுகிறார். குயிலி : (மயிலியைப் பார்த்து) தான் மாத்திரம் பேசவில்லை தாயையும் அவ்வாறு.... திருமேனி : (சினத்தோடு) வாயை மூடுங்கள். பேச இடங்கொடுத் தால் ஏச இடம் (சிறிது தணிவாக) திருத்தம் இருந்தால் சொல்லுங்கள். இரண்டாவது விளம்பரம் போடுகிறேன். குயிலி : (இருவரும் ஒரே குரலாக, கேலியாக) அண்ணே மயிலி : இரண்டாவது விளம்பரம் போட வேண்டியது வரும். போடாமல் விடமாட்டோம். போட்டுத்தான் ஆக வேண்டும். மயிலி : (சினத்தோடு) தந்தைக்குத் தெரியாமல் செய்த விளம்பரம். திருமேனி : அது உனக்கு எப்படித் தெரியும்? மயிலி : அவருக்குத் தெரிந்தால் ஊர்க் கேலிக்கு இடமில்லாமல் செய்திருப்பாரே. நம் தந்தை இசையாத ஒன்று வசை யாகத் தான் இருக்கும். வெல்லம்மை : தந்தை உடன்பட்டால் ... மயிலி : உடன்பட்டாலும், உடன்பட வைத்தாலும் நான் உடன் பட மாட்டேன். (குயிலியைக் காட்டி) இவளும் உடன்பட மாட்டாள். குயிலி : (துணிவாக) அதிலென்ன ஐயம். அண்ணன் தனக்கு உரியவளைத் தேடிக் கொள்ளட்டும், கொள்ளாதிருக் கட்டும். தன் திருமணத்தில் எங்களை இழுக்க வேண்டிய தில்லை. விளம்பரத் திருமணங்கள் நடப்பதாக இருந்தால் அவை விளையாட்டுத்தனமாகத்தான் இருக்கும். கைவீச்சினால் கனி விழுமா? அண்ணே தெரிந்துகொள். மானம் பெரிது, மணம் பெரிதில்லை. மணமின்றி வாழ லாம், மானமின்றி வாழக்கூடாது. தந்தையைக் கேட்க வில்லை. தொடர்புடைய எங்களைக் கேட்கவில்லை. இன்றைய உலகம் தெரியாமல் பேரன் பேத்திக்கு ஆசைப்படும் பழந்தாயை அடுப்படியுலகிற் கேட்டாற் போதுமா? (கையை முறித்து) எங்கே அந்த விளம்பரம்? (தந்தை அறந்தாங்கி வருதல். சிறு பையன் நீலமலை ‘என்ன, அப்பா வந்ததும் எல்லோரும் கப் சிப் என்று இருக் கிறீர்கள்? என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்று அப்பா, தெரியுமா? என்று கேட்கிறான்) அறந்தாங்கி : (அசட்டுச் சிரிப்பாக) ஊரறிந்த செய்தியாச்சே. எல்லோர்க்கும் திருமணம் (கடைசிப் பையனையும் காட்டி) விரைவில் முடியப் போகிறது என்ற மகிழ்ச்சி யாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். (வெல்லம்மையும் திருமேனியும் தலைகவிழ்தல்) குயிலி : உங்களுக்கு இது வருமுன்னே தெரியுமா அப்பா. அறந்தாங்கி : வந்ததற்கு அப்புறம் எல்லாருக்குந்தானே தெரியும். அதிலென்ன, இது ஒன்று வரப்போகிறது என்று முன்னமே எனக்குத் தெரியும். (எல்லாரும் வியத்தல்) ஏன் வியப்பாகப் பார்க்கிறீர்கள்? நண்பர் வரங்கொண்டார் மகன் நெடுந்தகை வழிகாட்டி நாளிதழில் விளம்பர மேலராக இருக்கின்றான். இவ்விளம்பரம் வந்ததும் வியப்படைந்து என்னைக் கேட்டான். எனக்குத் தெரியக் கூடாது என்று வேண்டுமென்றே மறைத்துக் கொடுத்ததை நான் ஏன் தடுக்கவேண்டும்? போட வேண்டாம் என்று நான் தடுத்திருந்தால் நெடுந்தகை என்ன எண்ணுவான்? எனக்குக் குடும்பத்தில் மதிப்பில்லை, குடும்பத்துள் பிளவு என்று எண்ணிக்கொள்ள மாட்டானா? குடும்பச் சிறுமை ஒருவன் உள்ளத்தில் விழுந்தாலும் குறைவு குறைவுதானே. திருமேனி : (தன்னுள்) எவ்வளவு பேர் உள்ளத்தில் குடும்பச் சிறுமையைக் காட்டிவிட்டேன். வெல்லம்மை : (தன்னுள்) சிறுமையை நீக்க உண்மையான வழி செய்யாமல், பெருமை பேசுவதில் என்ன பயன்? இந்த இருபெண்களின் கழுத்துக்கள் சிறுமையைக் காட்ட வில்லையா? மயிலி : (தன்னுள்) ஒருவன் உள்ளத்தில் படக்கூடாது என்று நினைப்பது சரி. என்ன ஆயிற்று, ஊரார் வாயில் எல்லாம் சிறுமைப் பேச்சுக்கு இடங்கொடுத்தாச்சே. அப்பா! தெரிந்தும் விட்டது பெரும் பிசகு. குயிலி : (தன்னுள்) தாய்க்கும் அண்ணனுக்கும் ஒருவிதமான துணிவு. அப்பாவுக்கு வேறுவகையான துணிவு. பெண்ணாக இந்தக் குடும்பத்தில் ஏன் துணிவின்றிப் பிறந்தோம்? விளம்பரத்தில் அடிப்பட பிறந்தோம். அறந்தாங்கி : (அமைதியாக) உணர்ச்சியின் விளையாடல்கள் பல. இக்காலத்து விளம்பரம் ஒருவகை விளையாட்டு. இந்தச் சூழ்ச்சி உங்களுக்கு இயல்பாகத் தோன்றியிருக்க முடியாது. சூழ்ச்சி செய்யும் பயிற்சி உட்கட்கு இல்லை. இது முதற் சூழ்ச்சி. யார் வீசிய வலை என்று தெரியும் எனக்கு. (வெல்லம்மை திடுக்கிடல்). வெல்லம்மை : (நாங்கள் செய்த விளம்பரம் குற்றந்தான். இவர்களை மணஞ்செய்ய வேறு வழி என்ன? அறந்தாங்கி : (மென்சினமாக) வழிகள் எவ்வளவோ இருக் கின்றன. இல்லாமல் இல்லை. வானொலியில் விளம்பரம் செய்யலாம்; துண்டுத்தாள், சுவரொட்டி விளம்பரம் செய்யலாம்; இவள்தான் தாய் இவன்தான் அண்ணன் என்று வண்ணப் படத்தோடு வெளியிடலாம். இந்தக் காலத்து விளம்பர வழிகளுக்குக் கொஞ்சமா? பஞ்சமா? படக்காட்சியில் விளம்பரிக்கலாமே (எல்லாரும் நாணல்). மயிலி : (கைந்நொடித்து) உள்ள நல்லதையும் இது கெடுத்து விட்டது. விளம்பரத்துக்கு ஏதும் விண்ணப்பம் வந்திருக் கிறதா என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். நாங்கள் வெளியே சென்றால், எங்கள் காதிற்படும்படி அந்த விளம்பரம் செய்தது இவள் அண்ணன் என்று சொல்லுகிறார்கள். தாம்பு பிடிக்கப்போய் பாம்பு பிடித்துவிட்டது. இது வீடா, விண்ணப்பம் வரும் அலுவலகமா? திருமேனி : (தன்னுள்) (தந்தை சொல்லை மந்திரமாகக் கருத வேண்டும். தாய் சொல்லை மந்திரமாகக் கருதின தந்திரம் இப்படியாச்சு. குறுக்குவழி, கிறுக்குவழி) தன் மக்களுக்கு இன்னும் மணமாகவில்லையே, தந்தையும் இதுபற்றிப் பேசவில்லையே என் கண்முன்னே எல்லாம் பார்க்க வேண்டாமா என்று தாய்பட்ட வருத்தம் இப்படிக் கொண்டுபோய்விட்டது. அப்பா! அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக இன்னொரு விளம்பரம் உடனே போட்டுவிடவா? அறந்தாங்கி : (அமைதியாக) நீ கருத்துச் சொன்னாய் பாரு, தந்தை இதுபற்றிப் பேசவில்லையே என்று. அது சரியில்லை. இந்நாட்டில் பெண் பெற்ற அன்றே கவலைப்பெண்ணும் உடன்பிறக்கின்றாள். பெண் வளர வளரக் கவலை கடலாகிறது. இதனை உணரும் தந்தை அக்கவலைக் கடலைக் கடக்க வழியும் பார்த்திருப்பான். இன்னும் இரண்டு மூன்று ஆண்டு போகட்டும் என்று உன் தாயிடம் சொல்லியிருக்கிறேன். தோணி அடைகரை சேருமுன் தாண்டலாமா? நடந்தது நடந்துவிட்டது. மேல்வழி என்ன என்று பார்ப்பதே அறிவுடைமை. மறு விளம்பரம் மானத்தைத் திரும்பத் தராது. மானம் போனதை மறுபடியும் நினைவுபடுத்த வேண்டுமா? திருமணத்தில் எனக்கு இரு கருத்துக்கள். பெண் பெற்றவனுக்குச் சுமையின்றித் திருமணம் செய்து கொள்வது. முடிந்தவரை சுமையை ஏற்றுப் பெண்ணுக்கு மணம் முடித்து வைப்பது. திருமணம் செய்வது பெற்றோர் கடமை. செய்ய விடுவது பிறந்தோர் கடமை. (எல்லாரும் மகிழ்ந்து உண்டாடல்) காட்சி : 5 திருமணக் கழகம் மாலை நான்கு மணி. கயற்கண்ணி திருமண மண்டபம். ஆயிரவர் இருக்கக்கூடிய பெருவளவு அம்மண்டபத்தில் நிகழ்ந்த மணமக்கள் படங்கள், சுவரில் தெய்வத் திருமண ஓவியங்கள், இல்லறக் கடமைகளைப் பற்றிய படங்கள், இல்லறத் தொடக்கமுதல் படிப்படியாகச் சிலர் வாழ்ந்த வரலாறுகள். அன்பே இன்பம்; ஆர்வமே செல்வம்; பொறுமையே பெருமை; அடக்கமே ஆற்றல்; கடைசிவரை கைகொடு; பெண்ணின் பொறுப்பு பெரிது முதலான குடும்ப அறங்கள் நல்லிடங்களில் எழுதப்பட்டுள. கூட்டத் தொடக்கம். கடவுள் வாழ்த்து. ஒரு சிறுமியும் ஒரு சிறுவனும் பாடுகின்றனர். ஒளியானை வளியானை ஒவ்வாத மரச்சடங்கின் உளியானை நெளியானை உயிர்க்கறையை விளக்கிவரும் புளியானை அளியானைப் பொய்ம்மனத்தார் தமிழ்ப்பாவிற் தளியானை வெளியானைக் கண்ணெதிரே வணங்குதுமே. வாழுங்கால் துன்பங்கள் மலைமலையா வந்தாலும் ஆழங்கால் கலம்போல அலையலையா வந்தாலும் சூழுங்கால் என் நினைவைச் சூழ்பவனே நின்னடியில் தாழுங்கால் அவ்வனைத்தும் சலிசலிக்கக் காணுதுமே. முத்தரையர் : புலவர் நக்கீரர் அவர்களே! திருமணக்கழக உறுப்பினர்களே! அன்பர்களே! கழகத் தலைவன் என்ற முறையில் அனைவரையும் வரவேற்க எழுந்து நிற்கின்றேன். முகவை மாவட்டத்தார் மழையை வரவேற்பது போல வும், விண்வெளி வீரரை அவர்தம் குடும்பத்தார் வரவேற்பது போலவும், முதற் பேரனைப் பாட்டி வரவேற்பது போலவும் ஆரா மகிழ்வோடு உங்களை வரவேற்கின்றேன். அவ்வாறே திருமணக் கழகத்தின் முதல் தலைவனாகவும் முதற் பேச்சாளனாகவும் உள்ள என்னைத் தங்கள் குடும்பத்துள் ஒருவனாக ஏற்பதோடு, என் கருத்துக்களையும் ஏற்பீர்கள் என்று நம்புகின்றேன். மன்பதை இயங்குவது நம்பிக்கைத் தடத்தில் அல்லவா? இக்கூட்டம் மாபெரும் பொதுக்கூட்டம். உறுப்பினர் அல்லாதோரும் இக்கூட்டத்துக்கு வந்திருக்கின்றனர். இல்லறம் முதிர்ந்த பெரியோர்களும் வந்திருக்கின்றனர். இக்கூட்டத்துக்கு விளம்பரம் இல்லை என்றாலும் அயலூர் மக்கள் திரளாக வந்து கலந்துகொள்கின்றனர். மிகுதியாக மகளிர் கலந்துகொள்வதும், குறிப்பாகப் பழுத்த இல்லறத் தாயர்கள் ஆவலோடு வருகை தந்து வீற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பு. (அப்பக்கம் பார்த்துக் கைத்தட்டல்) துறவிகளும் நம்முன் அமர்ந்திருப்பது பெருமை தருவது. ஏராளமான இளைஞரும், இளைஞியரும் வந்திருப்பது இயற்கை. இக்காட்சி என்ன காட்டுகிறது? இத்தகைய ஒரு கூட்டம் தேவை என்பதைக் கோபுர நீல விளக்குப்போலத் தெளிவாகக் காட்டுகிறது. இம்முதற் கூட்டத்துக்குச் சிறப்பு தலைவராவார் புலவர் நக்கீரர். சங்க நக்கீரர், நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று அறையும் வீரப் புலவர். நம் தலைவர் நக்கீரர் குணம் குணமே என்று சொல்லி எளியவரையும் வாழ்வீக்கும் ஈரப்புலவர். உலகச் சமுதாயங்களின் வாழ்வு முறைகளை மண முறைகளை - கடங்குகளை ஒப்பிட்டு ஆராய்ந்தவர். உலக மணங்கள், மணப்புரட்சி, அல்காதல் என்று நூல் பல எழுதியவர். அவர் தலைமை கட்சித் தலைமை போல்வதன்று. அத்தலைமையின்கீழ் நாம் பல நலன்கள் பெறக் கூடியிருக்கின் றோம். இந்நாள் இனிவரும் நாளையெல்லாம் நன்னளாக்குக என்று சொல்லி உங்களை நல்வரவேற்கின்றேன். வரங்கொண்டார் : (நக்கீரர்க்கு மாலை அணிந்தபின் (கை தட்டல்) பல தாள்களைக் கையில் வைத்துக்கொண்டு) பெருமக்களே! கழகத்தலைவர் முத்தரையர் தம் வரவேற்புரையிற் கூறியாங்கு, திருமணக் கழகம் பல திருமணங்கள் எளிமையாக நடக்க வழிகாட்டும் என்று நம்புகிவோம். என் கையில் இருக்கும் நூற்றுக்கணக்கான தாள்கள் கழகத்தை வாழ்த்தி விடுத்த தாள்கள் மட்டுமில்லை; வாழ்வுச் சன்னல் காணாத கூந்தற் கன்னிகள் ஒளிகாட்டி இருள் வெருட்டி வாழச் செய்யுங்கள் என்று எழுதியுள்ள வேட்கைத் தாள்கள், அவலத் தாள்கள். எழுதியோர் பெயர் சொல்லாமல் சில குறிப்புக்களை இங்குப் படிப்பன். ஒவ்வொரு வகைத் துயரத்துக்கும் ஓர் எடுத்துக்காட்டு. ‘ஐய நான் அழகிலும் படிப்பிலும், ஏன் உழைப்பிலும் கூடக் குறைந்தவள் அல்லள். ஆனால் பிறவியில் கால் சிறிது வளைவு. திருமண வழி கூறுங்கள்” என்பது ஒரு கடிதத் கருத்து. ‘என் பெற்றோர் சிறு வயதில் மறைந்துவிட்டனர். உறவினர் இல்லை. காந்தி அநாதைப் பள்ளியிற் சேர்ந்து உயர்நிலைப் பள்ளிவரை படித்தவள். என்னை நாடுவார் இலர். நானாக எப்படி நாடுவது?’ என்பது 25 வயது நங்கையின் கேள்வி. ‘வெட்கத்தோடு வெளியிடுகிறேன். என் தாய் குலமகள் அல்லள். குலமகளாகும் ஒரு மண வாழ்க்கையை விரும்புகின்றேன். தாய் தடையில்லை. உலகம் என்னை ஐயக் கண்ணாகப் பார்க்கின்றது. உய்தி எப்படி?’ என்பது 20 வயதுத் தங்கையின் புரட்சிக் கடிதம். ‘என் தாய் இல்லறப் பெண்; அவள் தவறிய ஒழுக்கத்தில் பெண்ணாகப் பிறந்தேன். தந்தை அறியேன். தாய்க்கு என்பால் அன்பில்லை. வெளிப்பட்ட தந்தை என் குற்றமில்லை என்று பரிவு காட்டினாலும் மணம் பேச முன்வரவில்லை. இந்நிலையில் ஓர் இளைஞன் என்னைக் காதலிப்பதுபோல் காட்டிக்கொள் கிறான். மேல்வழி யாது?’ என்பது ஓர் இரக்கக் கடிதம். ‘என் பெண் மக்கள் நால்வரும் பட்டம் பெற்று வேலையில் உளர். தகுதியான ஆடவர்கள் கிடைத்திலர். என்ன காரணமோ சகுனம் சரியில்லை என்று சொல்லிக் கழிக்கின்றனர்’ என்று ஒரு தாய் மயங்குகின்றாள். ‘பெற்றோர் தம் சொற்கேளாது ஒருவரை மணந்தேன். அவர் என்னை வசதிக்குக் கலந்து வைத்துவிட்டு இப்போது தம் பெற்றோர் சொற்படி இன்னொருத்தியைத் தாலிக்கட்டியுள்ளார். முடிவு எப்படியோ? தற்கொலைக்கு நெஞ்சம் துடிக்கிறது? (படிக்கும்போது கண்ணீர் துளித்து) இக்கடிதத்தில் பேர் இல்லை. தற்கொலை முயற்சி வேண்டவே வேண்டாம். அந்நல்லாளை இக்கூட்டத்தின் சார்பாகத் தற்கொலையைத் தள்ளிவைக்கும்படி வேண்டுகின்றேன். பெற்றோரின் கட்டாயத் தினால் இன்னொரு மணம் நின் கணவர் செய்திருக்கக் கூடும். சிந்திப்பதற்கும் திருந்துவதற்கும் நின் கணவர்க்குக் காலம் கொடுப்பாயாக. மாறிய நின் கணவர் மீண்டும் மாறி வரலாம் என்ற நம்பிக்கையோடு, தங்கையே இருப்பாய். நம்பிக்கையே வாழ்க்கை நண்பன். (கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துக்கொண்டு) இவ்வாறு எவ்வளவோ கவலைக் கடிதங்கள். மகளிர் எழுதியுள்ள கடிதங்களைக் காட்டிலும் ஆடவர் எழுதியுள்ளவை மிகப்பல. ‘நான் காதலை விரும்புகின்றேன். காதலுக்காகப் பெற்றோரை மீற விரும்பவில்லை. இரண்டும் தெரிந்த கேள்வி களாக இருக்கும்போது எந்த ஒன்றனை எழுதுவது என்று தேர்வறையில் தடுமாறுகின்ற மாணவ நிலையில் வீட்டில் இருக்கின்றேன்’ என்பது மரபு வழிப்பட்ட இளைஞனின் கடிதம். ‘என் தந்தை எனக்கு ஒரு பெண் பார்க்க, என் தாய் வேறொரு பெண் பார்க்க, என் தமக்கை இன்னொரு பெண் பார்க்க, நான் முற்றிலும் வேறான பெண்ணைக் காதலிக்க என் வாழ்க்கைக் காற்று நாலு திசையில் வீசுகின்றது’ என்கின்றார் 25 வயது இளைஞர். ‘நான் பட்டம், பதவி, செல்வ வசதியெல்லாம் உடையவன். ஏழைக் குடும்பத்தில் எளிய பெண்ணை மணக்க விரும்புகிறேன். நிலை குறைந்துவரக் காரணம் என்ன என்று ஐயப்பட்டுப் பெண் தரப்பினர் பின்வாங்குகின்றனர். சீர் திருத்தம் செய்யப்போய்த் தப்பான கருத்துப் பரவி எப்பக்கத் தினரும் ஏதோ சொல்லிக் கழிக்கின்றனர். சீர்திருத்தத்துக்கும் நிலைவேண்டும் போலும் என்று கருத்துரைக்கின்றார் ஓர் ஆசிரிய இளைஞர். ‘நான் ஒருத்தியை மனமாரக் காதலித்தேன். என் தாயின் கட்டாயத்தினால் உறவுப் பெண்ணைக் கட்டிக்கொண்டேன். காதலை மறக்க முடியவில்லை. கடமையைத் துறக்க முடிய வில்லை. மனைவிக்கு உடலையும், காதலிக்கு நெஞ்சையும் பாகமாகக் கொடுத்துவிட்டுப் பெண்பற்றின்றித் தளர்கின்றேன்’ (கடிதத்தை மடக்கிக் கொண்டு மூக்கில் விரல்வைத்து) பெருமக்களே, இக்கருத்தைச் சொல்லும்போது முன்சொன்ன ஒரு மகள்கடிதம் நினைவு வருமே. இக்கடிதத்திலும் பேரில்லை. தற்கொலை வழி என்று புலம்பிய அப்பெண்ணின் காதலனாக இவர் இருப்பாரோ? மனைவியைக் காதலியாகவும் காதலியை மனைவியாகவும் துணிந்து இருவரோடும் கூடி முருகனைப் போல் வாழ்வதே வழி. இன்னொரு உண்மையான கடிதத்தைக் கேளுங்கள். ‘நான் திருமணஞ் செய்துகொள்வதால் ஒரு தந்தைக்கு ஒரு பெண் பாரம் குறையும் என்றாலும், பல பெண் குழந்தைகளுக்கு நான் தந்தையாகிவிட்டால் என்னாவேன். இவ்வாறு அஞ்சித் துறவியாகிவிட்டேன்’ என்று 30 வயது இளந்துறவி எழுதுகின்றார். இன்னொரு அதிர்ச்சியான கடிதம். இளம் பெண் துறவி எழுதியிருப்பது. ‘சோதிடம் பார்த்தபோது எனக்கு ஆண் குழந்தை பிறவாது எனவும், ஆறு பெண் குழந்தைகள் அதுவும் சில இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் எனவும், அவைகள் நலமாக வாழும் எனவும், அக்குழந்தைகளும் பெண் மகவுகளையே ஈனும் எனவும் சோதிடர் கூறினார். இந்த வரவெல்லாம் திருமணத் தளையில் மாட்டிக் கொண்டால் தானே என்று சமுதாயப் பணியில் ஈடுபட்டுத் துறத்தியாக வாழ்கின்றேன்’ என்பது ஒரு தொண்டியின் எழுத்து. நல்ல ஓர் இல்லறப் பெரியவர் பாடலாக எழுதிய கருத்தை இறுதியாக வாசிக்கிறேன். இவர் செய்யுட் கருத்தைக் கேட்கும் நீங்கள், இப்படியும் ஒரு புதுச் சான்றோர் நம்மிடை உளர் என்று தெரிந்து மகிழ்வீர்கள். வாடிய குடிகள் நாடிய கழகம் கூடி யிருக்கும் குடும்பத் தீரே! ஒன்று சொல்லுவன்; உணர்ந்து சொல்லுவன்; அவலம் என்ற அச்சம் வேண்டாம் இல்லறம் சான்ற இன்ப உழவில் நல்ல சிறுவர் நால்வர் பெற்றோம் அன்னை யெனவோர் அணிமகள் பெற்றிலோம். இதுகுறை என்ற ஏக்கம் இல்லை; பெண்பல பெற்ற பிறிதோர் குடியில் கண்பல பெற்ற காதலன் போலத் திருமகள் அனைய ஒருமகள் எடுத்துக் குடிநிறை செய்து கொண்டனம் படிமுறை இதுவெனப் பகர்வோம் நாமே. (எல்லோரும் ஆரவாரமாகக் கைத்தட்டல்) இன்னணம் ஏராளமான முடங்கல் எல்லாப் பருவத்தாரி டமிருந்தும் வந்து குவிகின்றன. வழிகாட்டுவோம் என்று இக்கடிதவர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். சிலர் இக்கூட்டத் திலும் இருக்கக்கூடும். வழிசொல்வது நம் கழகத்தின் கடமை. நக்கீரர் போன்ற சான்றோர்கள் வழிகாட்டவேண்டும். நக்கீரர் : (உயரமான தோற்றத்தினர்; நீண்ட கையினர்; 55 வயதினர்; வெண்ணிற உடையினர். கைம்மணியைப் பார்த்துவிட்டு எழுந்து நின்று ஒலிபரப்பிக்கு முன்னேவந்து வணங்குகின்றார். இசையோடு பாடுகின்றார்) காட்டுவோம் நல்வழி : காதல் உலகத்துக் கூட்டுவோம் இன்பக் குடி. கூற்றுப்போல் ஓடும் குமர மனங்களை ஆற்றுப்போற் செய்வோம் அணைத்து. எளிதெனக் காதலை எண்ணுக; சிக்கல் வெளிதெனத் தானே விடும். இல்லறப் பெருமக்களே! இளையர்களே! கழக மாந்தர்களே! எவ்வளவோ கவலைக்கிடையே நாம் இவண் குழுமியிருக் கின்றோம். அல்லல் மறந்து அவ்வப்போது நீங்கள் நெடுங்கை தட்டி மகிழ்கின்றீர்கள். இலக்கியக் கழகங்களில், இலக்கணக் களங்களில், சமயக் கூடங்களில், ஆய்வுப் பேரவைகளில், கருத்தரங்குகளில், அறிவியல் மன்றங்களில், அரசியல் மாநாடு களில், தொழிலாளர் ஒன்றவைகளில், கட்சி மேடைகளில், இளைஞர் அணிகளில், இன்ன அவைக் களங்களில் எல்லாம் கலந்து உரையாடி உறவாடி வரும் நான் இத்திருமணக் கழகத்திலும் கலந்துகொள்கிறேன் என்பதில் வியப்பு யாதும் இல்லையென்றாலும், உலகம் சுற்றி வருபவனுக்குத் தன் வீடு தரும் உணர்வைப் பெறுகின்றேன். பகலெல்லாம் வானவெளி யில் சிறகடிக்கும் பறவைகள் மாலையில் தம் குஞ்சியிருக்கும் சிறு கூட்டை அடையும் அமைதியைக் காண்கின்றேன். பள்ளிக் குழந்தைகள் பைதூக்கி வீட்டுத் திசை நோக்கி விரையும் அன்பை உணர்கின்றேன். எல்லாக் கழகங்கட்கும் அடிப்படை குடும்பக் கழகங்களே. குடும்பங்கள் கலகமின்றிக் கலவரமின்றிக் கலகலப்பாக வாழவேண்டும் என்பதே எல்லா முயற்சிகளின் நோக்கமாகும்; நோக்கம் ஆகவேண்டும். குடும்பம் என்பது திருமணத்தின் விளைவு. திருமணம் என்பது அன்பின் மணம். ஊன விதைக்கு எவ்வளவு உரமிட்டாலும் பயனில்லை. ஊன அன்பில் வரும் திருமணம் ஈன நாற்றமாகும். அன்பில் குடி எவ்வளவு வளம் இருப்பினும் மனநோய்களின் குகையாம். இஞ்ஞாலத்தில் பெரும்பேர் அறிஞர்கள் இன்று ஆராயும் துறைகள் பலப்பல. ஆனால் அவையெல்லாம் புறத்துறைகள், புறப்புறத்துறைகள். வேண்டாதவையல்ல, வேண்டியன. வாழ்வுக்கு மிக வேண்டியன. ஆனால் அவை வாழ்வாகா. எத்துணை இருந்தாலும் புறவளம் அக வாழ்வாகா. கண்ணாடி கண்ணாகா. மிதியடி காலாகா. மெய்ப்பை மெய்யாகா. இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை (மூலத்திருக்குறளைக் கையில் எடுத்துக்கொண்டு) வாழ்வு சிறந்ததா? வளம் சிறந்ததா? என்ற பட்டிமன்றத்தில் திருவள்ளுவ நடுவர் கூறிய முடிவுரை இது. இம்முடிவு மனிதப் பிறவி தோன்றும்வரை, இல்லறம் இருக்கும்வரை, ஆண் பெண் உறவு இன்றியமையாதவரை மாறாது. இதனால் திருமணக் கழகத்தின் சிறப்பை, அதன் பொறுப்பை இங்குக் குழுமியிருக்கும் நாம் ஒருவாறு உணர்ந்துகொள்ளலாம். வாழ்வை உணர்ந்தவர் நம் தமிழ் முன்னோர். வாழ்க்கையை உணர்த்துவது நம் தொல்காப்பியம். பாலுணர்ச்சியைக் காதலாக உயர்த்தியும், காதலைக் கடமையாகக் கற்பித்ததும், காதலோட்டங்களுக்கு நெறிகள் வகுத்ததும், நெறி வெறியாகாத படி அகத்திணை இலக்கியம் கண்டு வழங்கியதும், இந்த இல்லற இலக்கியத்துக்குமட்டும் அகம் என்ற தனிப் பெயர் சூட்டியதும் தமிழினம் அளித்த உலக உண்மைகள். இவை தமிழில் இருந் தாலும், தமிழினம் கண்டு பிடித்திருந்தாலும் மனித குலத்துக் குரிய பொதுவுண்மைகள். அதனாலன்றோ ஈராயிரம் ஆண்டு களுக்கு முன் சங்ககாலத்தில் ஆரிய அரசன் பிரகத்தன் கபிலரிடம் அகப்பாடம் கேட்டான். அவனுக்கு அகத்திணையைப் பாடஞ்சொல்ல எழுதிய அரிச்சுவடிதான் குறிஞ்சிப்பாட்டு. பாடம்கேட்ட ஆரிய அரசனும் தமிழ்ச் சான்றோருள் ஒருவனாய் ஓர் அகப்பாட்டுப் பாடினான் என்றால் நம் அகத்திணையின் மாட்சி பெறப்படும். (சங்க இலக்கியத்தின்மேல் கைவத்து) அகங்கண்ட தமிழினத்தின் வழிவந்த நாம் திருமணக் கழகம் காணுகின்றோம் என்றால் இது பெருமையா? சிறுமையா? திரு. வி.க. ‘பெண்ணின் பெருமை’ என்ற நூல் எழுதினார் ஏன்? பாரதியார் ‘புதுமைப் பெண்’ என்ற கவிதை பாடினார் ஏன்? நினைத்துப் பாருங்கள். வாழ்வில், குடும்பத்தில், இல்லறத்தில் பெண்ணுக்குத் தலைமையையும், பொறுப்பையும் பங்கிட்டுக் கொடுத்தது சங்கத் தமிழினம். உலகிற்கு, மனித குலத்திற்கு இல்லறம் என்ற வாழ்வுத்துறையில் வழிகாட்டவல்ல அறிவுடைத் தமிழினம் இன்று தனக்கே வழிகாணமாட்டாது, வழிகாணவேண்டி இக்கழகத்தைக் கட்டாயமாக அமைத்திருக் கின்றது. சிறுமை நீக்கத் தோன்றியிருக்கும் அருமைக் கழக்கம் இது. (கை தட்டல்) நடக்கவேண்டிய காலத்தில் தேர்தல் நடப்பதுபோல, கூட வேண்டிய காலத்தில் இக்கழகம் கூடுகின்றது. வரவேண்டிய அனைவீரும் இங்கு வந்திருக்கின்றீர்கள். என் குடும்பக் கடமைகளை எல்லாம் செய்து முடித்த நான் இனி எல்லார் தம் குடும்பக் கடமைகளையும் என் கடமைகளாகக் கருதிய உணர்வோடு எழுந்து பேசுகின்றேன். (கூப்பிய கையோடு) என் கருத்துக்களை மனக்கதவு திறந்து குடும்பத்தில் உரையாடுவது போல் சொல்லுகிறேன். (வலப்பக்கம் சுட்டிக்காட்டி) இதோ அமர்ந்திருக்கும் செய்தி குறிக்குநர் இக்கூட்ட நடவடிக்கைகளைக் கூடியவரை முழுவதும் எழுதிவிடுப்பர் என்று நம்புகின்றோம். நம் நாட்டுப் பன்மொழிச் செய்தித் தாள்கள் இக்கழகத்தின் குறிக்கோளை யும் நடைமுறைகளையும் பிறநாடுகள் அறியுமாறு அவ்வப்போது செவ்வனம் வெளியிடுமாக. செய்தித்தாள்கள் அரசியலுக்கும், பொருளியலுக்கும், இன்னபிறவற்றிற்குமே தலை விளக்கம் செய்கின்றன. இது ஒரு மரபுபோலும். இக்காலம் மரபுகளை மாற்றுவதை ஒரு மரபாகக் கொண்ட காலம். குடும்பம் பற்றியும் சமுதாயச் சீர்திருத்தம் பற்றியும் தலைவிளக்கம் எழுதுவதில் தவறில்லை. முன் சொல்லியபடி எல்லா விளக்கங்களும் எதற்கு? நல்ல குடும்ப விளக்கத்திற்கே. (ஒரு திருமண அழைப்பிதழை விரித்துக்கொண்டவராய்) நாடுதோறும் இனந்தோறும் மணச்சடங்குகள் பலவாறு இருந்தாலும், மணம் என்ற சமுதாய முறை மனித இனத்துக்குச் சிறப்பும் பொதுவுமாகும். மணம் என்ற ஒரு முறை வேண்டும் என்ற கருத்தில் யார்க்கும் மறுப்பு இல்லை. பதிவு முறையும் ஓர் மணமுறையே. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கணவன், மனைவி என்ற வெளிப்பாட்டுத் தன்மையை அருளுவதே மணம் என்பது. தானே தேடிக்கொண்டாலும், பெற்றோர் தேடித்தந்தாலும் ஊரறியச் செய்யும் ஒரு மணம் வேண்டும். அழைப்பிதழின் நோக்கம் இது. ‘மாநகர்க்கு ஈந்தார் மணம்’ என்று இளங்கோ சொன்ன நோக்கமும் இதுவே. இன்று நான் சொல்ல விழைவது திருமணம் பற்றிய சில இடையூறுகள், சில மனப்பான்மைகள். காதலுணர்வுக்கு எவ்வளவு விளம்பரம் செய்தாலும், எவ்வளவு சூழ்நிலை அமைத் தாலும் திருமணங்கள் எல்லார்க்கும் ஆகிவிடா. ஆடவருக்குக் காதலித்தல் எளிது. அந்த எளிய காதலைப் பெண்ணினம் நம்பி விடுவதில்லை. ஆடவர் தம் காதற்பாங்குகளை ஆராய்ந்து, ஆராய்ந்து மெலியும் மென்மையே பெண்மை. (இமைகொட் டாது கேட்டல்) ஏன்? ஒருநாள் உறவு அவட்குப் பலநாட்பாரம். அன்னைத் தன்மை ஆடவர் தன்மையை ஆராய்கின்றது. ஆதலின் திருமணத் துணிவுக்குப் பெரும்பாலான பெண்கள் தம் பெற்றோரையே நம்புகின்றனர், நாடுகின்றனர். இன்று ஞால முழுதும் பரவலான மாற்றம். பெண் தன்மையும், அன்னைத் தன்மையும் வேறாகப் பிரிக்கப்படுகின்றன. அன்னைநிலை எய்தாதபடி அடக்கு முறைகள் காணப்படு கின்றன. இப்புதுப்போக்கில் மாதர் மனங்களும் மாறலாம். ஆடவர்போலப் பெண்களும் காதல் கொள்ளுதல் எளிதாக லாம். என்றாலும் பல குழந்தைகள் பெறும் தாய்நிலை குறைய லாமேயன்றி ஓரிரு முறையாவது தாய்த்தன்மை பெறவேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு ஒழிந்துவிடாது. ஏன்? பெண் உடற்கூறுகள் தாய்நிலையில்தான் நலமும் நிறைவும் பயனும் பெறுகின்றன. திருமணமாகிச் சில ஆண்டுகளுக்குப் பின் பெண்ணின் அன்பு தன் குழந்தை பக்கம் பெருகக் காண்கின் றோம். வயது ஆக ஆக அவளுக்கு மகிழ்ச்சி குழந்தையிடமிருந்து நிரம்பக் கிடைக்கின்றது. ஆதலின் மக்கட்பேறுபற்றி என்ன மாறுபறை சாற்றினாலும் தாயுணர்வுக்கு முற்றும் அழிவில்லை. அவ்வுணர்வு இருக்கும்வரை பெண்ணினம் காதலுலகில் தன்னை ஒழுங்கு செய்துகொள்ளும், கட்டுப் படுத்திக் கொள்ளும். இன்றைய உலகத்தின் ஒரு நற்போக்கு பெண்ணுல கத்தின் கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஆட்சிப்பொறுப்பு, நாணத்தோடு கூடிய துணிவு, பலதுறை வெளிப்பாடு. ஆதலின், (பெண்பாலார் பக்கம் காட்டி) இப்பெண்ணினம் எதிர்காலத்து ஆணினத்தை நெறிப்படுத்தும். பாலுறவு என்பது இயற்கையுள் மிக்க இயற்கை. இன்றியமையாத இந்த இயற்கைக்கு எளிமை வேண்டும். உலக முழுதும் நாகரிகக் குலம் என்று சொல்லும் சமூகங்களில் திருமணச் செய்கைகள் தாங்க முடியாதவையாக உள்ளன. சடங்குகள் மிகுதி. இம்மிகுதிக்கேற்பச் செலவினங்களும் மிகுதி. (கடுகடுப்பாக) மனித வளர்ச்சி என்பது முடிவில் திருமணச் சிக்கலாகவும், குடும்ப சிக்கலாகவும் போய்முடிகின்றது. வளராதவை என்று சொல்லும் மனித இனங்களில் பாலுறவுகள் அஃறிணை உயிரினங்களிற்போல எளிமையாக உள்ளன. உண்பதையும், உறங்குவதையும் பெரிதுபடுத்துவதில்லை. அதுபோல் உடலுறவையும் பெரிதுபடுத்தத் தேவையில்லை. எல்லாவுயிர்க்கும் பாலுறவு உண்பது, உறங்குவது போலாம். இவ்வுறவை ஒரு நடைமுறையாகக் கருதினால் எவ்வளவோ தொல்லைகள், கசப்புக்கள் சமுதாயத்திலிருந்தும் குடும்பங்களி லிருந்தும் குறைந்துபோகும் என்பதில் ஐயமில்லை. (விதிர்விதிர்ப்போடு) ஒரு சாரார் சொல்லக் கேட்கின் றேன். சொல்லவும் கேட்கின்றேன். உலகப் பிறப்புக்களில் பெண் தொகை மிகுதி. ஆண்தொகை குறைவு. அதனால் திருமணப் பேரம் ஏற்படுகின்றது என்று வரவு தேவைப் பொருளியல் பேசுகின்றனர். அவர்கள் பேச்சு என்ன காட்டுகின்றது? சமுதாயம் மக்களை விலைப்பொருளாகவும், உடைமையாகவும் கருதும் நிலைக்கு (கேலிச்சிரிப்பாக) வளர்ந்துவிட்டதுபோலும். மணத்தைப் பணத்தோடு தொடர்புபடுத்திவிட்டோம். சடங்கை மதத்தோடு தொடர்புபடுத்திவிட்டோம். எத்துறையிலும் வறிய நிலையை, இல்லா நிலையை, ஆகா நிலையை ஊழ்வினையோடு தொடர்புபடுத்திவிட்டோம். (சிறிதுபொழுது பேசாது தயங்கி) இம்மருட்சிக்கெல்லாம் புரட்சிக் காலம் இது. திருமணம் என்பது இருவர்க்கு உரியது. இதற்குப் போய் உலகத் தொகையைக் கணக்கிட வேண்டியதில்லை. பாலுறவு இயற்கை; அதற்குத் திருமணம் அவ்வளவே. மேலும் ஆண் பெண் பிறப்புக்களில் தொகை வேறுபாடு பெரிதில்லை. சாதி, சமயம், மொழி, நாடு என்று மக்கள் வைத்திருக்கும் குறுங் கோட்டிற்குள் கூடுதல் குறைவு தோன்றுகின்றன. ஓரூர்த் தண்ணீர்ப்பஞ்சம் உலக நீர்ப் பஞ்சமா? (கைத்தட்டல்) (சினக்குறிப்போடு ஒலிபெருக்கி முன் நெருங்கி நின்று) உரிமை வேண்டும், என்ன உரிமை? பிரியா உரிமை, பிரிக்க முடியாத உரிமை. திருமணம் என்பது தொழிலில்லை. கணவன் மனைவி என்ற உறவு தொழிலுறவன்று. பிரியும் உரிமையைக் கண் வேண்டினால், கால் வேண்டினால், உடலுறுப்புக்கள் தம்முள் வேண்டினால் என்னாகும்? நான் பேசுவதைக் கேட்கும் இவ்வொலி பெருக்கி, பரப்பாத உரிமையை வேண்டினால்... (கூட்டம் கலகலவென்று சிரித்தல்) சிறிய வேலைக்கு அமர்த்து வோரைக்கூட, பணியிலிருந்து நீக்கிவிட முடியாது. வேலையுறுதி வேண்டும் காலம் இது. கணவன் மனைவி வேண்டுங்கால் உறவும் ஆகலாம், வேண்டுங்கால் துறவும் ஆகலாம் என்றால் எந்த நிலைபேற்றில் சமுதாயத்தை நாம் காக்கமுடியும்? நிலைபேற்றைக் காட்டுவதற்கன்றோ திருமணம் என்பது. (மீண்டும் எடுத்துக் கொண்டு) அதற்கன்றோ இப்பல திருமண அழைப்புக்கள். நிலைபெறுத்தும் ஒரு தன்மையின்றேல் நண்பர்களுக்கு ஏன் இவ்வளவு அழைப்புக்கள்? விலங்குபோல் வாழும் உறவுமுறை வேண்டும் என்பவர்தம் கொள்கை கேட்டு நாணுகின்றேன். இவர்கள் பிரிமண அழைப்பு அடித்தாலும் அடிக்கலாம். எதிர் காலப் பெண்ணினம் விழிப்பாக இருக்கட்டும். (கைதட்டல்) இம்முதற் கூட்டத்தில் ஒருசில சொல்லி அமர்வேன். பாலுறவு இயற்கை என்றேன். அந்த இயற்கை எளிமையாகச் செயல்பட வேண்டும் என்றேன். திருமணம் என்ற முறை இன்றியமையாதது எனவும் எந்நிலையிலும் நிலைபேறே திருமணப் பயன் எனவும் கூறினேன். திருமணக் கழகம் காலத்திற்கு ஒவ்வாதனவற்றை அகற்றி உடன்பாடானவற்றை ஏற்று இளைஞர்க்கும் இளைஞியர்க்கும் வழிகாட்டும் என்று நம்புவோம். (வேகக்குரலில்) திருமணத்துறையில் இல்லற நெறியில் வேண்டியதெல்லாம் மனமாற்றம். எவ்வளவோ வகை மாறிவரும் இவ்வுலகத்தில் மாற்றவேண்டாதது இருக்கலாம். மாற்றமுடியாதது எதுவும் இல்லை. திட்டமிட்டு எடுத்துச் சொன்னால், செவிடும் சிறிது திரும்பிக்கேட்கும் காலம் இது. வீட்டுத் துன்பங்களை மெய்யாகப் படம்பிடித்து நிறம் படக்காட்டினால், குருடும் கண்தேய்த்துக் காணும் காலம் இது. மனித குலத்து அன்புடைய நல்ல எழுத்தாளர்கள் தீமைகளைப் பெரிதுப்படுத்திச் சுவைக்கென புனைந்துகாட்டக்கூடாது. எடுத்துக் கொட்டால் சமுதாயக் களைகளைப் பறிக்க வேண்டும் காலம் இது. இயற்கையோடு பழகி வா - மனிதா எளிமையோடு ஒழுகி வா செயற்கையோடு சிறிது வா - மனிதா சிந்தையோடு பெருகி வா என்று உணர்ச்சிபட கவிபாடியும் உரைநடை எழுதியும் தொண்டு செய்வார்களானால் அணுக்குண்டு அடுக்குகின்ற நெஞ்சமும் கசிந்துருகும் காலம் இது. தீமைகளைத் தடுக்கமுடியாத அறிவுப் பேடிகளாக இருந்தாலும் இவை தீமைகள் என்பதனை இன்றைய மக்கள் நன்றாக உணர்வர். பழக்கவயத்தால், சூழ்நிலை வசத்தால் தீயவற்றிற்கு உள்ளானாலும் தீமையினின்று விடுதலை பெற வேண்டும் என்று (கையை உயர்த்திக்கொண்டு) கொடுதூக்கும் காலம் பரவிக்கொண்டு வருகின்றது. அறிவியலுக்கு எல்லை யில்லை என்றாலும் அது மேன்மேலும் தரும் தொல்லை வாழ்வைச் சிந்திக்கச் செய்கின்றது. திருமணக்கழகத்தின் தோற்றம் இங்கு நம்பிக்கையான முகத்தோற்றங்களை பெருக்கியிருக்கின்றது. இத்தோற்றம் நல்ல மணத்தோற்றங்களை உண்டுபண்ணுமோ? எல்லாம் பொறுத் திருந்து பார்ப்போம். நம்பிக்கையோடு வாழுங்கள், வாழ முடியும் என்று நம்புங்கள். நம்பிக்கையே என் தலைமையுரை. (கைதட்டல்) (தலைவர் அறிவித்தபடி மக்கட் கருத்தரங்கம் கூட்டத்தின் இடையே அரைமணியளவு நடைபெறுகின்றது. கூடிய அவையோர்க்குக் கேள்வி எழுப்பும் வாய்ப்பு அளிப்பது இவ்வரங்கின் நோக்கம். ஒருவர் ஒரு வினா கேட்கலாம் என்பது விதி. வினாத் தொடுப்பவரின் பெயர்களை முன்னரே கேட்டுச் செயலர் திருமேனி குறித்துக்கொள்ளுதல். எழுதிய முறையாக மேடைக்கு வந்து ஒலிபெருக்கி முன் நின்று ஒவ்வொருவரும் தம் வினாவைச் சொல்லுதல். நடுக்கூட்டத்திலும் ஓரிரு ஒலி பெருக்கிகள். முதியவர்கள் இருந்த இடத்திலிருந்தே தம் வினாவைக் கூறுதல்) ஓரிளைஞர் : (25 வயது) திருமணத்துக்குப் பெற்றோர் இசைவு வேண்டுமா? காதலர் தம் இசைவு போதாதா? நக்கீரர் : நல்ல கேள்வி. நிலம் உடையவரும் வாங்கியவரும் தம்முள் மாற்றிக்கொண்டாற்போதுமே? அரசினர் பதிவு ஏன் வேண்டும்? (கூட்டம் சிரித்தல்) பெற்றோர் இசைவு என்பது சமுதாய இசைவு. இவ்விசைவு வாழ்வுக்கு ஊன்றுகோல். காதல் என்பது இருவர் தம் அக இசைவு. திருமணம் என்பது புற இசைவு, இருவர் இசைவுக்குப் பலர் வைக்கும் பொன் முத்திரை. பெற்றோர் இசைவு பெறாவிட்டாலும் உற்றோர் இசைவாவது அரசுப் பதிவின் இசைவாவது வேண்டும். இவற்றுள் எளியதும் சிறந்ததும் பெற்றோர் இசைவே. குடியாகும் மக்கள் காட்டவேண்டிய நன்றியும் அதுவே. புற இசைவு என்னும் சமுதாய முத்திரை பெறாதவரை காதலாயினும் திருமணம் ஆகாது. கல்வி இருப்பினும் கலகலப்பு இராது. கேட்ட அவ்விளைஞர் : (மறுபடியும்) இன்னும் ஓர் ஐயம். நக்கீரர் : (ஒரு விலைக்காட்டி) ஒருவர் ஒரு வினாத்தான் கேட்க லாம். (கூட்டம் சிரித்தல்) ஓரிளைஞர் : (31) மரபெல்லாம் மாறும் காலம் என்று தலைமை யுரையில் சொன்னீர்களே? நக்கீரர் : பிறர் இசைவு என்பது மரபுமட்டுமில்லை; வாழ் வொழுங்குமாம்; இல்வாழ்வுக்குத் துணையுமாகும். ஒரு பெண் : (37) திருமணத்தில் எளிமைவேண்டும் என்ற தங்கள் கருத்தை விளக்குவீர்களா? நக்கீரர் : நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைப்பது எளிமை. விளம்பர நோக்கம் இல்லாமை பல எளிமைகளைத் தரும். பாலுறவு இயற்கை. இதற்குப் பெரிய ஆடம்பரம் அல்நாகரிகம் ஆகும். ஓர் எழுத்தாளர் : (61) காதல் முறைகளைப் பரப்பித் திருமணத்தை எளிமையாக்கலாமே. நக்கீரர் : காதல் முறை என்பது என்ன? ஆண் பெண் இசைவு. அவ்விசைவு, தானேவரினும் காதல்தான்; பெற்றோர் இசைவு கூட்டவரினும் காதலேதான். ஒன்றை நாமே விரும்பி வாங்கலாம். பிறர் எடுத்துக்காட்டின் அதன்பின் விருப்பங்கொண்டும் வாங்கலாம் அல்லவா? பெற்றோர் இசைவு என்பது ஒரு நன்முத்திரை. அவ்வளவே. இல்லறம் பூணும் ஆண் பெண் இசைவே உயிரிசைவு. இதன் வேறுபாடு தெரிந்துகொள்ள வேண்டும். உயிரிசைவு இல்லாதபோது வைக்கும் முத்திரையருக்கு ஒட்டாது உதிர்ந்துவிடும். ஒரு பெரியவர் : (75) அவரவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி விட்டுவிட்டால் பெற்றோருக்குக் கவலை இராது. நக்கீரர் : (முத்தரையரைச் சுட்டிக்காட்டி கழகத்தலைவர் விளக்குகிறார் முத்தரையர் : (நன்றி என்று சொல்லி) பெறுவதே கவலைப்படு வதற்குத்தான். (நக்கீரர் முதல் எல்லாரும் சிரித்தல்) திருமணத்துக்கு நம்மக்கள் நம்மை நம்பி இருக்கும்வரை அக்கடமையை நாம் புறக்கணிக்கக் கூடாது. அக் கடமையைச் செய்வதாலன்றோ நம்பேர் நன்றியோடு வைக்கப்படுகின்றது. ஒரு முறையானது பெரும்பான்மை நன்மை தருகின்றதா என்று பார்க்கவேண்டும். நூற்றுக்கு நூறு சரியாக்குவோம் என்ற பொய்யான மடமையில் பெரும்பாங்கான நன்மையைக் கெடுத்தலாகாது. புறநடையான சிறுபான்மைக்கு அதற்குத் தக்க புற நடையான வழிகாணவேண்டும் என்பது என் கருத்து. கேட்ட பெரியவர் : (மறுபடியும் எழுந்துநின்று) ஒரு விளக்கம். நக்கீரர் : (சிரிக்கத் தொடங்கும் கூட்டத்தைக் கையமர்த்தி) இப்பெரியவர் இரண்டாவதுமுறை வினாக் கேட்கப் புறநடையாக இசைவு அளிக்கிறேன் (கைதட்டல்) அப்பெரியவர் : (நன்றி என்று சொல்லிக்கொண்டு) நான் இன்னொரு வினாக் கேட்க எழுந்து நிற்கவில்லை. ஒரு விளக்கம் சொல்ல நிற்கிறேன். ஆணையே பெற்ற குடும்பங்கள், பெண்ணையே பெற்ற குடும்பங்கள் என்று கணக்கிட்டால் ஒருசில குடும்பங்களே இருக்கும். எண்ணிக்கை கூடுதல் குறைவாக இருந்தாலும் ஆண் பெண் கலந்து பெற்ற குடும்பங்களே பல. ஆதலின் எல்லாக் குடும்பங்களும் சீர்திருத்தத்தில் நாட்டம் கொள்ளவேண்டும். இதுபோன்ற திருமணக் கழகங்களை ஊர்தோறும் அமைத்து வலுப்படுத்த வேண்டும். நக்கீரர் : பெரியவர் அறிவுரைக்கும் ஈடுபாட்டிற்கும் கூட்டத்தின் சார்பாக நன்றி. சீர்திருத்தர் : (50) திருமணத்தில் தாலிகட்டும் முறை பெண் அடிமை என்பதைக் காட்டவில்லையா? நக்கீரர் : (புன்சிரிப்போடு) ஒருவனை அடிமைப்படுத்தியிருக் கிறாள் என்று காட்டும் அடையாளமாகவும் ஏன் கொள்ளக்கூடாது? உண்மை, தங்கள் கருத்தும் அன்று; நான் இப்போது சொன்னதும் அன்று. தாலி என்பது இவட்குத் திருமணமாயிற்று, ஒருவன் மனைவியானாள் என்பதைக் காட்டும் அறிகுறி. சிவப்பு விளக்குப்போல இவள்மேல் யாரும் காதல் செலுத்தக் கூடாது என்று காட்டும் தடுப்புக் குறி. கூட்ட நடுவில் ஒருவர் : (குறுக்கே எழுந்து வேகமாக) இப்படி ஓர் அடையாளம் திருமணமான ஆணுக்கும் வேண்டும் அல்லவா? நக்கீரர் : (சிறிது தாமதித்து நின்றபின்) இருந்தால் நல்லது. பெருமகன் காந்தி இலண்டனில் ஒரு வீட்டில் தங்கி வாழ்ந்தபோது அவ்வீட்டுப் பெண் அவரோடு நெருங்கி உறவாடினாள். தமக்கு மணமாயிற்று என்பதனையும் ஒரு குழந்தை உண்டு என்பதனையும் பின்னர் வெளிப்படுத்தி னார் காந்தி. மனம் இருவர்க்கும் நல்லதாயிற்று. திருமண அடையாளம் ஆடவர்க்கும் இருந்தால் இன்னொரு பெண் ஏமாறமாட்டாள் அல்லவா? இருவர்க்குமே அடையாளம் இருந்தால் சமுதாய உணர்ச்சி இன்னும் ஒழுங்குபடும் என்பது என் கருத்து. திருமணத்தில் மோதிரம் மாற்றிக்கொள்ளும் ஒரு வழக்கம் உண்டு. ஆனால் அது தாலிபோல் உடலில் என்றும் காக்கப்படு வதில்லை. ஒரு புலவர் : (54) ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் ஐம்படைத் தாலிகட்டும் வழக்கம் பண்டு இருந்தது. ஆதலின் திருமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒப்ப இரு தாலி கட்டலாமே. (கைதட்டல்) நக்கீரர் : இதுவரை திருமணம் செய்துகொண்ட ஆடவர்கள் கழுத்துக்கு வேண்டாம் என்று அவர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். (கையொலித்தல்) ஓர் ஆசிரியை : (30) திருமணத்தில் பெண்ணுக்குச் சடங்குகள் சுமையாக இருக்கின்றன. இதில் சீர்திருத்தம் வேண்டும். நக்கீரர் : (மென்குரலில்) சடங்குகளை மிகுதியாக விரும்புவோர் மகளிரே. இத்தங்கையின் கருத்து மாதருலகின் சிந்தனைக்கு உரியது. சடங்குகள் என்பது இனந்தோறும் வழிவழி வந்து குவிந்த மரபுகள். இவற்றுக்கு அதிகப் பொருளில்லை. பழைமை விடுத்து இன்று சீர்திருத்தம் என்ற பேரால் புதிய சடங்குகளைப் புகுத்துகின்றனர். சடங்குகள் எவ்வளவாக இருந்தாலும், எப்படி இருந்தாலும், திருமண அரங்கு அரை மணிக்குள் முடிந்துவிட வேண்டும். இன்று சொற்பொழிவு மேடைகளாக, ஏன் கட்சி மேடைகளாகக்கூட மாறிவருவதைக் கண்டு அஞ்சுகின்றேன். திருமணத்தில் சடங்குச் செய்கைகள் இருக்கலாமே தவிரப் பேச்சுக்கூடாது என்பது என் முழுவுரை. திருமணத்திலும் பேச்சா? குறிப்பான ஏச்சா? (கை மறித்து) இப்போக்கு வேண்டாம், இனி வேண்டாம். (சொல்லி வேகமாக உட்காருகின்றார்) ஒரு கிழவி : (73) (தன் நரைக் கூந்தலை ஒதுக்கிக்கொண்டு) ஐயா, இந்தக் காலத்து இளைஞர்கள் என்னைப்போலச் சிவப்பான பெண்கள் வேண்டும் என்று பிடிவாதம் செய்கின்றனர். அவர்கள் அடுப்புக்கரிபோல், கரித்துணி போல, அண்டங் காக்கைப்போல, அழகாக இருந்தாலும், பச்சை நத்தம்போலப் பெண்கள் வேண்டும் என்று சுற்றித் திரிகின்றனர். (துடிப்பாக) ஐயா, காதல் நிறம் கருப்பா? சிவப்பா? கருப்பான பெண்களைக் கடலில் தள்ளுவதா? ஒரு கிழவி : (70) (கையில் ஒரு விசிறியை வைத்துக்கொண்டு) நம்ம பையன்கள் பல்லைக்கூடச் சிவப்பாகக் கேட்பான்கள் போலிருக்கு (கைதட்டல்) வெற்றிலை போட்டுப் பல்லையாயினும் சிவப்பாக்கிவிடலாம். கூந்தலும் செங்கூந்தலாகக் கேட்டால் நிறந்தீட்ட எந்தக் கடைக்குப் போவது? ஒரு கிழவி : (68) (தான் ஊன்றிய தடியைக் கீழே போட்டு விட்டு) சிவப்புக் கேட்கின்றான், சிவப்போடே படிப்புக் கேட்கிறான். படிப்போடே பணமும் கேட்கின்றான். பணத்தோடே பதவியும் கேட்கின்றான். இங்ஙனம் மாமன் உழைப்பில் மாப்பிள்ளையாகத் துடிக்கின்றான். (கூட்டத்தில், வெட்கம் வெட்கம்) ஓர் இளைஞன் : (21) இவ்வளவும் நாங்களா கேட்கின்றோம்? எங்கள்பேரில் பழிபோட வேண்டாம். எந்தச் சீர் திருத்தத்துக்கும் என்போன்ற இளைஞர்கள் ஆயத்தம். ஓர் தையலர் : (48) எல்லமே சிவப்புக் கேட்கிறார்கள் என்று பெரிய அம்மைகள் சொல்வது பொருத்தமில்லை. காலுடைகளைப் பொறுத்தவரை அதுவும் விருந்துக்குக் கறுப்புடைகளை அணிந்துகொண்டு வரும் வழக்கத்தை நீங்க்ள் பார்த்திருப்பீர்களே. ஒரு கிழவி : (82) (சட்டென) துணி கறுப்பாக இருக்கலாம். தோல் கறுப்பாக இருக்கக்கூடாதா? உடை கறுப்பாக அணிய லாம். உடல் கறுப்பானால் அழகில்லையா? (இன்னும் வேகமாக) மனம் கறுப்பாக இருக்கலாமாக்கும். மணமகள் மேனி அப்படி இருக்கக் கூடாதாக்கும். என்ன நாடகம்? நக்கீரர் : முது பெண்டிர்களின் வேகமும் கருத்தும் எல்லாரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டன. எத்துணைக் கொதிப்போடு எழுந்து நின்று வீட்டு நடையில் பேசினார்கள். காதல் நிறம் என்பது ஒன்றுமில்லை. நம் உடம்பே பன்னிறம் உடையது. காதல் கறுப்பிலோ சிவப்பிலோ மஞ்சளிலோ வெண்மையிலோ எந்த நிறத்திலும் இல்லை. செந்நிற மண மக்கள் ஐயப்பட்டு அடித்துக் கொள்வது செய்தித் தாளில் பத்திபத்தியாக வெளிவரவில்லையா? கருநிற இல்லறத்தோர் கடைசி வரை ஒற்றுமையாக வாழ்வு நடத்தி மணிவிழாக் கொண்டாடவில்லையா? நாடும் பருவமும் வழிமுறையும் முதலான புறச்சூழ்நிலையைப் பொறுத்தது நிறம். ஒவ்வொரு உயிரினத்திலும் மாவினத் திலும் பல நிறங்கள் இருத்தல்போல, மக்களினத்திலும் நிறப்பன்மை இருக்கிறது. இஃது இயற்கை. ஆதலின் காதல் என்பது நிறத்தில் இல்லை. உயிரொன்று என இருவரும் எண்ணிக்கூடும் அறத்தில் உள்ளது. உயிருக்கு நிறம் உண்டா? உயிர் நிறமே காதல் நிறம். (கூட்டம் முழுதும் கைதட்டல்) ஓர் அலுவலர் : (32) வேலைக்குப் பதிவு செய்துகொள்வது போல, திருமணமாகாதோர் பதிவு செய்துகொள்ளலாம். இந்த அரசு ஒரு நிலையம் அமைக்கலாம். ஒரு புள்ளியாராய்ச்சியாளர் : (45) அவ்வாறு நிலையம் அமைத்தால் பதிவு செய்துகொள்வோர் பெரும்பாலும் பெண்களாக இருப்பர். ஒரு மனநூலறிஞர் : (56) அந்நிலையத்துக்கு அவ்வளவு வேலை யிராது. பெண்கள் நாணிகள். எப்படியிருப்பினும் தமக்கு அழகுண்டு என்று அமைதியாக இருப்பவர்கள். பதிவு செய்துகொள்ள இந்த நாட்டில் முன்வர மாட்டார்கள். ஓர் இளைஞர் : (22) இது பாததிதாசனுக்கு முந்திய பெண்களின் போக்கு. இன்று பிறந்திருப்போர் ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்ற புதுமைப் பெண்ணின் வழிவந்தவர்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் : (44) (செய்தி குறிக்குநர் பக்கம் திரும்பி) திருமணப் பதிவு நிலையம் என ஒன்று அமைத்து அதன்வழித் திருமணஞ் செய்துகொண்டவர்களுக்கு வேலை முன்னுரிமை வழங்கப்படும் என்றும், அளவான திருமணச் செலவை நிலையமே ஏற்றுக்கொள்ளும் என்றும் வழிவகுத்தால் பல மணங்கள் எளிமையாக நடக்கும் என்பதும் என் கருத்து. ஒரு சட்டமன்ற உறுப்பினர் : (33) (முன்பேசியவர் பக்கம் பார்த்து) திருமணஞ் செய்து வேலை வாங்கிக்கொண்ட பின் பிரிவார்கள் என்றால் வேலை பறிபோகும் என்ற உள் விதியும் வேண்டும். ஒரு சமயவாதி : (65) அரசுத் திருமணத்தில் சமயத்துக்கு இடை யூறு கூடாது. தத்தம் சமய முறைப்படி மணஞ்செய்து கொள்ள இசைவுதர வேண்டும். இது தவிர எந்தச் சீர்திருத்தத்துக்கும் நான் ஓர் ஆள். நக்கீரர் : இப்போது சொல்லப்பட்ட கருத்துக்கள் தள்ளத் தக்கவையல்ல. பல எளிய வகைகளில் இதுவும் ஒரு வகை. வேலைவிதி எதுவாக இருந்தாலும், சமயநெறி எதுவாக இருந்தாலும், இருவர் தம் இசைவு இன்றியமையாதது. மனை வாழ்வை நாம் இல்லறம் என்று அறமாகப் போற்றுகின்றோம். புறச்சடங்குகள் எவ்வாறு இருந்தா லும் இருவர் தம் உள்ளிசைவே மணத்தின் உயிர்நாடி. அவையோர்களே! திருமண இயக்கம் சமயத்திற்கு முரணன்று, அரசியலுக்கு முரணன்று. இந்த நல்லியக்கத்தில் எல்லோரும் கலந்து ஒத்துழைப்போமாக. எதிர்கால உலக நலம் குடும்ப நலத்தைப் பொறுத்துள்ளது. இவ்வியக்கம் தக்கார் தலைமையில், அறிவுத் துணையில் அன்பியக்கமாக நடப்பின், நிறமனம், பொருள்மனம், செலவு மனம் எல்லாம் நீங்கிவிடும். இவ்வியக்கம்பற்றிச் சமுதாயத்திலும் அரசியலிலும் ஒரு வேகம் பிறக்க வேண்டும். தாள்களென்ன, திரைகள் என்ன, ஒலிக ளென்ன, நூல்களென்ன, எல்லாத் துறையிலும் திருமணத் தின் அடிப்படை உண்மைகளைப் பரப்பவேண்டும். ஒன்று சொல்லுகின்றேன். திருமணத்தை முழுதும் திருத்தவேண்டும் என்று புறப்பட வேண்டா. சிலவகை திருத்தினாலேபோதும். சிலவற்றைச் சீராகத் திருத்த வேண்டுமேயொழிய உள்ள நலன்கள் கெடத் திருத்தி விடக் கூடாது. நல்லது கெடாதபடி காத்து அல்லதை யொழிக்க வேண்டும். திருமண இயக்கம் நல்லது; ஆனால் எளிதன்று. பழையவற்றைப் பழித்து இவ்வியக்கத்தை நடத்தாது புதியவற்றை விழித்து மேற்கொள்ள வேண்டும். இதுவே நடைமுறை. திருமணக் கழகம் குடும்பந்தோறும் நறுமணத்தை பரப்புமாக. கன்னியா குமரியை முந்நீர்க் கடல் வரைந்து கொண்டு தழுவிய கை வழுவாது கிடக்கும் இத்தொல்காப்பிய நாட்டில் மணப்பருவம் பெற்ற மடந்தையர் எல்லாம் மனைவியராய்த் தாயராய் உயர்வார்களாக; ‘தமியள் மூத்தற்று’ என்று வள்ளுவப் பழிக்கு இடங்கொடாமல் அரசுக்கொடி பறப்பதாகுக. (கூட்டம் ஒரே ஒலி) திருமேனி : (கைகூப்பி நின்று) கழகத்தில் செயலன் என்ற நிலை யில் நன்றி கூறுகின்றேன். இங்கு தலைமையுரையிலும் கருத்தரங்கிலும் சொல்லிய கருத்துக்கள் தேர்தற் காலத்தில் வைக்கும் விரல்மை போல நம் உள்ளத்துப் பல நாள் நிலைநிற்கும் என்பதில் ஐயமில்லை. சில கருத்துக்கள், என் உள்ளத்துப் பல நாளென்ன வாழ்நாள் முழுதுமே நிலைநிற்கும் எதனையோ திருமண வழி என்று தவறாக நினைத்து என்போலும் இளைஞர் வழுவிப் போகின்ற னர். (சிறிது தலைகுனிந்து) நான் செய்ததொரு விளம்பரம் எனக்கு ஒரு பாடமாகும். மக்கள் திருமணம் பெற்றோரின் பொறுப்பு என்று அறிவு மலையான நக்கீரர் அறைந்த கருத்து என்னைப் பிணித்துவிட்டது. எனக்கு வழிகாட்டும் இக்கழகம் உணர்ச்சியிலும் அயர்ச்சியிலும் தடுமாறி நடுமாறித் திரியும் இளைஞர்க்கெல்லாம் வழிகாட்டும் என்று இளைஞர் சார்பாகத் தெரிவித்துக் கொள்கின் றேன். திருமணக் கழகத்தின் துணைச் செயலி தங்கை சேயிழையின் சார்பாகவும், கழகத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் சார்பாகவும் அவையோர் அனைவர்க்கும் நன்றி. (எல்லாரும் எழுந்து நிற்க, சேயிழை பாடுகின்றாள்) திருமணக் கழகம் வாழ்க; திருக்குறட் காதல் வாழ்க; கருமணற் கூந்த லார்க்குக் கடிமணம் எளிமை யாக; அருமணத் துறைகள் கண்ட ஐந்திணைத் தமிழ்நாட்டில் ஒருமணச் சோலைபோல உயிர்மணம் பெற்று வாழ்க! காட்சி : 6 அறந்தாங்கி வீடு. காலை மணி ஏழு. அறந்தாங்கி தோட்டத்தில் சிறுகளைகளைப் பறித்து மண்ணைக் கிளறிக்கொண்டிருக் கிறார். ஒரு சிறு நாய்க்குட்டியும் பக்கத்தில் நிற்கின்றது. அது குலைப்பதைப் பார்த்து திரும்புகின்றார்) கொடுமுடி : (கூப்பிக்கொண்டு) காலை வணக்கம். எழுந்ததும் நல்ல உடல் வேலை. அறந்தாங்கி : வாருங்கள், இருங்கள். காலையில் விழித்ததும் இயற்கையோடு பழகுவது மனத்துக்குப் பண்பு. தளிர்த்த கீரையிலைகளைக் காணும்போதும், நெருக்கமாக வளரும் மல்லிக் கிளைகளை காணும்போதும் நெடுநாள் வாழும் துடிப்பு. பெருமரங்கள் நமக்கு அவ்வளவு மகிழ்ச்சியைத் தருவதில்லை. அவற்றின் வளர்ச்சி நாள் தோறும் தெரிவதில்லை. சிறு செடிகள், சிறு பயிர்கள் இதோ பாருங்கள்! பச்சை மிளகாய்ச் செடிகள், பொலிந்தமேனி, விரிந்த கிளைகள், தொங்கும் காய்கள் எல்லாம் நமக்கென வாழ்பவை. மாலையில் தண்ணீர் ஊற்றினால் இவை மகிழ்கின்றன. காலைத் தண்ணீரை வெயில் குடித்துவிடுகிறது. உங்கள் வீட்டுத் தோட்டத்தில்... கொடுமுடி : எங்கள் வீடு தோட்டமில்லாத வீடு. தோட்டம் வைத்தால் தண்ணீர் பாயவேண்டும். தண்ணீர் தங்கினால் கொசுக்கள் வளரும். பயிர்கள் வளர்ந்தால் களைகள் பறிக்க வேண்டும். கூட வளரலாம் என்று துடிக்கும் களைப் பயிர்களைப் பிடுங்கி எறிவது எனக்கென்னவோ அவ்வளவு பிடிப்பதில்லை. தீயவர்கள் தீயவர்கள் என்று நாம் நினைப்பவர்களை ஒழித்துக்கட்டுவதற்கு ஒப்பாகும் (அறந்தாங்கி சிரித்துக்கொள்கின்றார்) இன்னொன்று பாருங்கள். நீங்கள் வேலையுண்டு வீடு உண்டு என்று இருப்பவர்கள். உடலுழைப்பு இல்லாத உங்கட்கு இப்படி ஒரு பயிற்சி வேண்டியதே. எனக்கு ஊரெல்லாம் தோட்டம். அறந்தாங்கி : நீர் ஒரு கோணத்தில் பார்க்கின்றீர். அவரவர் வாழுகின்ற போக்குக்கு ஏற்பவே பார்வையிருக்கும். (மண் கையைக் கழுவிக்கொண்டு) உம்மைப் பார்க்கவேண்டும் என்று இரண்டொரு நாளா எனக்கு ஒரு எண்ணம். காலை நேரத்தில் நீரே வந்துவிட்டீர். கும்பிடப்போன தெய்வம்.... கொடுமுடி : (இடைமறித்து) அதெல்லாம் அந்த காலம். எதிர்பார்த்து ஏமாந்திருந்து தெய்வமே கும்பிட வருவது இந்தக் காலம். என்னைப் பார்க்க வேணுமென்று நீங்கள் நினைத்ததே ஒரு பெரும் பாக்கியம். அறந்தாங்கி : (கூர்ந்து பார்த்து) கையில் வைத்திருப்பது? கொடுமுடி : பகல் முரசு. நல்ல செய்தித்தாள் அறந்தாங்கி : நல்லதாள் இல்லாவிட்டால் நீர் சொந்தப் பணம் போட்டு வாங்கமாட்டீர். கொடுமுடி : ஆம். சிக்கன முறைகளில் அது ஒன்று. நாம் ஓர் ஊருக்குப் போகையில், தெரிந்தவர் கார் வந்தால் ஏறிக்கொண்டு போகலாம். பட்டணத்துக்குச் செல்லுகிற வரிடம் நமக்கு வேண்டிய பொருளைச் சொல்லிவிட லாம். சிறுமிச்சம் பெருமிச்சம். பொதுவாக நான் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள நகரப் படிப்பகம் சென்று படிப்பேன். முதலாளாகப் போய்ப் படிப்பேன். பலருக்குச் சொல்லவேண்டிய செய்தியாக இருந்தால் அன்றுமட்டும் ஒருபடி காசு கொடுத்து வாங்கிக்கொள்வேன். அறதாங்கி : அப்படி ஓராண்டுக்கு ஒரு தாள் இரு தாள் வாங்குவீர்! கொடுமுடி : (கேலியாக) என்ன அவ்வளவு தாராளமாகச் சொல்லிவிட்டீர்! பெண் மக்கள் தவிர வேறு கலப்பில் லாத நான் எல்லாம் பதுங்கிப் பதுங்கித்தான் செலவழிக்க வேண்டும். அறந்தாங்கி : நீர் வைத்திருக்கும் செய்தித்தாள் நான் அவ்வளவு பார்த்ததில்லை. பரபரப்பான செய்தியூட்டும் தாள் இல்லையா இது! இதில் வரும் செய்திகளை நம்புவதற்கு இன்னொரு தாள் வேண்டும். (இது சமயம் வழக்கம்போல் ஒருவன் தாள் கொண்டு வந்துபோடுதல்) கொடுமுடி : (தன்தாளை விரித்தவராய்) இந்தச் செய்தி கட்டாயம் வந்திருக்கும். தலைப்பில் கொட்டை எழுத்தில் முதற்பக்கத்தில் பருவப் பெண்களுக்குப் பதிவு நிலையம் என்று போட்டிருக்கிறதா பாருங்கள்! (தானும் கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தல்) அறந்தாங்கி : (ஒவ்வொரு பக்கமாகத் தள்ளிக்கொண்டு) ஆமய்யா ஆறாவது பக்கத்தில் திருமணக் கழகம்; நக்கீரர் தலைமையுரை. நக்கீரர் படம் போட்டு, நடப்புக்களை ஒரு சிறு பத்தியளவு வெளியிட்டிருக்கின்றது. கொடுமுடி : (சீயென்று) நக்கீரர் படம் போட்டிருக்கின்றார்களா? ஆ! இதோ பாருங்கள் துணைச் செயலி சேயிழை நின்று பாடும் படம். என் தாளில் முதற்பக்கத்து வரும் செய்தி உம்முடைய தாளில் ஆறாவது பக்கத்து, ஈ! ஈ! (கேலிச் சிரிப்பு) அறந்தாங்கி : இந்தச் செய்தி எல்லாம் ஆறுநாள் கழித்து வந்தால்தான் என்ன, கருத்து அழுகிப் போகுமா? நல்ல கருத்துக்கு நாளும் இல்லை, பக்கமும் இல்லை. எந்தச் செய்தியை எந்தத் தாள் முதற்பக்கத்து வெளியிடுகிறதோ, அந்தத் தாள் அதனைத்தான் நிலையான செய்தியாக மதிக்கிறது என்பது என் கருத்து. கொடுமுடி : என்ன அப்படி! தாங்காத ஒரு பெரும்போடு போட்டுவிட்டீர். காலத்துக்கு ஏற்பக் கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். அறந்தாங்கி : வேறென்ன. முதற் பக்கத்தைப் பார்த்தவுடனே தாள் வாங்கவேண்டும் என்ற விற்பனை நோக்கில் கவர்ச்சி யும் மலர்ச்சியுமாக முதற்பக்கத்தைப் பெரிதுபடுத்து கிறார்கள். இவ்வளவு வயதுக்கு அப்புறமும் நீர் இந்தப் பரபரப்புத் தாளை வாங்குவது எனக்கு வியப்பாக இருக்கிறது. கொடுமுடி : நான் எனக்கா வாங்குகிறேன்? இந்த மாதிரித் தாளைக் கையில் வைத்திருப்பதால் பலர் என்னை இளைஞர் உள்ளம் தெரிந்தவன் என்று கூப்பிட்டுப் பல செய்திகள் கேட்கின்றனர். அறந்தாங்கி : “வேலைப் பதிவு செய்துகொள்வதுபோல் திருமணம் வேண்டுவோர் பதிவு செய்துகொள்ள ஒரு நிலையத்தை அரசு அமைக்கவேண்டும் எனவும், நிலையத்தின் வழி மணஞ் செய்துகொண்டவர்க்கு அரசு முன்னுரிமை வழங்கவேண்டும் எனவும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தை நக்கீரர் பாராட்டி வரவேற்றார்”. கொடுமுடி : இவ்வளவுதான் வந்திருக்கிறதா? இந்தத் தாள் எல்லாம் புளித்த கஞ்சிக் கதை சொல்லும் புராணத்தாள் கள். நான் வைத்திருப்பது சுடச்சுடச் சொல்லும் சூட்டுத் தாள். அதற்கு மந்திரி சொன்ன கருத்து இதோ கொட்டை எழுத்தில் மந்திரியின் படத்தோடு.... அறந்தாங்கி : அதற்கு மந்திரி கருத்துச் சொல்ல வேண்டிய முறைதான். அதுவும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கிளப்பி விட்டிருக்கும்போது கருத்துரை திருமணமான குழந்தை குட்டிகள் உள்ள முதுமந்திரி சொல்லி இருக்கிறாரா? அண்மையில் திருமணமாகி வெண்ணிலவு சென்ற மந்திரி சொல்லியிருக்கிறாரா? இல்லை, திருமணம் ஆகவேண்டிய மந்திரி சொல்லியிருக்கிறாரா? கொடுமுடி : எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. அறந்தாங்கி : (சிரித்துக்கொண்டு) திருக்குறள் முழுதும் ஐயா கரைத்துக் குடித்திருக்கிறாற்போலத் தெரிகிறது. அது வரைக்கும் பெருமைதான். கொடுமுடி : இது யார்க்கும் தெரிந்தால் திருக்குறட் கழகத்துக்கு என்னைத் தலைமை தாங்க அழைத்தாலும் அழைப்பார் கள். இந்தக் காலத்தில் குறளைப் படிக்காமல் இருந்துவிட லாம். பார்க்காமே எப்படித் தப்பிக்க முடியும்? ஊர்தி களில் எல்லாம் என்னைப் பார் என்னைப் பார் என்று குறட்பலகைகள் நம்மைப் பார்த்து சொல்லுகின்றன. உண்மையைச் சொல்லிவிடுகின்றேன். நான் குறளை எடுத்துப் படித்ததில்லை. அறந்தாங்கி : நாலணாக் கொடுத்து நீர் எப்படித் திருக்குறள் ஒன்று தனதாக வாங்கிக் கொள்ள முடியும். பெண்கள் பெற்றோர் அதிலும் எல்லாம் பெண்களாகப் பெற்ற நீர் இதற்கெல்லாம் செலவழித்தால் அறிவு என்ன கதியாகும்? குறள் வாங்கினால் செல்வம் குறைந்து போகுமே. (எழுந்துபோய்த் திருக்குறள் மூலம் ஒருபடி எடுத்துவந்து கொடுத்தல்) கொடுமுடி : நன்றி (சிரிக்கிறார்) ஏன் சிரிக்கிறேன் தெரியுமா? இலவசமாகத் தரும் நூல்களை யார் படிக்கிறார்கள்? வாங்கிக்கொண்டவர்களும் அப்படி அப்படியே இலவச மாக வழங்கி விடுகிறார்கள். வாழ்வுக்குக் கட்டாயம் தேவையென்றால் தம்பொருள் கொடுத்து வாங்குவார் களே. நான் ஏதோ குறள் நூல் வாங்காவிட்டாலும் ஏறுகின்ற ஊர்தியிலே எழுதியிருக்கும் இரண்டு வரிக் குறளையெல்லாம் படித்துவிடுவேன். என்னிடத்தில் இருக்கிற ஒரு கெட்டபழக்கம், படித்ததை மறப்பதில்லை. எனக்கும் இருபது குறள் இதுவரை தெரியும். அறந்தாங்கி : இந்தக்கெட்ட பழக்கம் வாழ்க! கெடாத பழக்கம் வீழ்க! கொடுமுடி : இது மாத்திரமில்லை. கொஞ்சம் குறள் தெரிந்த வுடன் என்னாகிறது? நாமே குறள் கட்டலாம் என்ற ஒரு தெம்பு. முழுக்குறள் செய்ய முடியாவிட்டாலும், காலத்துக்கேற்பக் கைவைக்கலாம் என்ற ஆசை. பாருங்கள் இந்தக் குறளை. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். அறந்தாங்கி : தடுமாற்றம் இல்லாமல் சொல்லுகிறீர். போக்கு வரத்தில் படித்தாலும் நல்ல நாக்குவரத்தாக இருக்கிறது. கொடுமுடி : எனக்கெல்லாம் தடுமாற்றம் செயலில் இருந்தாலும் இருக்குமே தவிரச் சொல்லில் இராது. இதோ இந்தக் குறள் இப்படி இருக்கலாமே. எனைத்தானும் ஊர்குறள் காண்க அனைத்தானும் ஆன்ற வரவு தரும். கேட்க என்பதைக் காண்க என மாற்றினால் எவ்வளவு பொருத்தம். நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? அறந்தாங்கி : எழுதினவர் ஒத்துக்கொள்ள வேண்டும். படிப் போர், கேட்போரெல்லாம் மாற்றிக்கொண்டேபோனால் கிறளாக இருக்குமே தவிரக் குறளாக இருக்காது. இருந்தாலும் இந்த வயதில் இவ்வளவு குறள் படித்து ஒப்பிக்கின்றீரே. கொடுமுடி : குறள் படிப்பதற்கு இந்த வயது, அந்த வயது என்று இருக்கா? அவர், ‘சாந்துணையும் கல்’ என்று சொல்லி வைத்திருக்கிறார் பாருங்கள். அறந்தாங்கி : எல்லாம் படித்தவர்க்குக்கூடப் பட்பட்டென்று குறள் சொல்லவராது. நீர் நாலைந்து படித்து டக்டக் கென்று அடிக்கிறீரே. உம்மைக் கொடுமுடி என்று அழைக்கக்கூடாது. குறள்முடி என்று பாராட்ட வேண்டும். கொடுமுடி : இன்று எனக்கு ஒரு நல்ல நாள். உங்களைக் காலையில் பார்த்ததும் குறள்களைச் சொன்னதும், குறள் முடியானதும் எல்லாம் கிடைக்கக்கூடியதா? காலையில் யாரோடும் குறள் பற்றிப் பேசினால், வேறு வேலை யில்லையா என்று செவியடைப்பார்கள். ஏதோ குறள் நாலைந்து படித்தபின் தமிழன் என்ற பெருமிதமும், மனிதன் என்ற மாண்பும் கொஞ்சம் கொஞ்சம் வந்து கொண்டிருக்கின்றன. அடுத்த பிறப்பில் எல்லாம் சரியாய்விடும். அறந்தாங்கி : அடுத்த பிறப்புவரை போகவேண்டாம். குறள்வழி நின்றால் இந்த உலகத்திலேயே என்றும் வாழலாம். கொடுமுடி : ஆமாம். நீங்கள் சொன்னபடி ‘நிலமிசை நீடுவாழ்வார்’ என்று வள்ளுவப் பெரியவரும் சொல்லி வைத்திருக்கிறார். பாருங்கள் எதையோ பேசியவாக்கில் குறளில் ஆழ்ந்துவிட்டோம். குறள் அவ்வளவும் அமிழ்தம். திருமணப் பதிவுபற்றி மந்திரியின் கருத்துரை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் இருக்கிறது. அறந்தாங்கி : (தன் செய்தித்தாளை மடித்துவைத்துவிட்டு) உங்கள் தாளில் என்ன சொல்லியிருக்கிறார்? சுருக்க மாகச் சொல்லுங்கள். கொடுமுடி : அவரே நறுக்குத் தறித்தாற்போல் மணிச் சுருக்க மாகச் சொல்லியிருக்கிறார். யாரும் மணப்பதிவு செய்து கொள்ளலாம் என்றால் பதிவு நூல் பெரும் பட்டியலாகி விடும். பெற்றோர் முயற்சி குறைந்துபோகும். பெண்ணுக்கு 25 வயது ஆணுக்கு 30 வயது வரை திருமணம் ஆகாதோரே பதிவு செய்துகொள்ளலாம் என்று வயது எல்லை வைக்க வேண்டும். அங்ஙனம் மணஞ் செய்து கொண்டோர் நாட்டு நலங்கருதி இரண்டாண்டு குழந்தைகள் பெறக்கூடாது. குடும்பக் கட்டுப்பாடு விதிகட்கு இணங்க வேண்டும். கலப்பு மணமாக இருந்தால் முன்னுரிமையும் பரிசும் வழங்கப்படும். குழந்தை பெறுவதற்கு முன் பிரிந்துபோனால் வேலையும் சரிந்துபோகும். குழந்தை பெற்றபின் பிரிவு ஏற்பட்டால் குழந்தைப் பொறுப்புடையவர் மட்டும் வேலையில் தொடர்ந்து இருக்கலாம். இத்திட்டத்தை அரசு கொள்கையளவில் ஒப்பும். எதற்கும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் கலந்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது. இல்லாவிட்டால் தேர்தற் சூழ்ச்சி என்று மக்களிடம் தவறான கருத்தைப் பரப்பக்கூடும். அறந்தாங்கி : (சிரித்துக்கொண்டு) குடியரசு நாடு; எதிலும் பட்டுக்கொள்ளாமல் சொல்லவேண்டும். கலக்காமல் செய்தால் தங்கள் கட்சியாட்களுக்கே பதிவு மணம் செய்து வைக்கிறார்கள் என்று குற்றஞ் சாட்டப்படும் அல்லவா? கொடுமுடி : யாரோடு வேணுமானாலும் கலந்து கொள் ளட்டும். எந்த முறையாக இருந்தாலும் இருக்கட்டும். கலப்பு மணமாக இருந்தாலும் இருக்கட்டும். (தனக்குள் எல்லாமே ஆண் பெண் கலப்பு மணந்தாள்) என்னிடம் இரண்டு பெரிய பெண்கள், உங்களிடமும் அப்படி ஆக நாலு பெண்கள். எந்த வழியிலாவது புறப்பட்டு நம் கவலை நீக்கினாற் சரி. அறந்தாங்கி : ஐயா ஆயத்தம் போலத் தெரிகிறது. பதிவுக்கு நன்னாளைச் சோதிடரிடம் கேட்டு வைத்துக்கொள்ளும். கொடுமுடி : சோர்வு தராதது சோதிடம். (ஏதோ நினைத்துக் கொண்டவர் போல்) எதையோ சொல்ல வந்தவன் எதை யெதையோ காப்பி வாக்கில் பேசிக் கொண்டிருக்கின் றேன். எல்லாரிடமும் வாய்கொடுப்பதுபோலத் தங்களிட மும் பேசக் கூடாது என்று எனக்குத் தெரியும். என்னைக் காட்டிலும் வயதில் உயர்ந்தவர். பெண்ணோடு ஆணும் பெற்றவர். அரசு அலுவலில் இருப்பவர். இட்ட பெயருக்கு ஏற்ப அறமாக வாழ்வு நடத்துபவர். இன்னும் இரண்டொரு ஆண்டில் ஓய்வுபெறப் போகிறவர். உங்கள் பெயரைச் சொன்னால் எல்லோருக்கும் ஒரு அன்பு. என் நிலை வேறு. நாலு வீடு காலை முதல் திரிந்து அவரவர்க்கு வேண்டிய காரியங்களை - கலியாண காரியங்களை முடித்துவைத்து அந்த அளவில் மகிழ்ச்சி அடைபவன். அறந்தாங்கி : நீலமலை! ஐயாவுக்குக் காப்பி கொண்டு வந்து கொடு. கொடுமுடி : இன்று காலை நீங்கள் தருவது மூன்றாவது காப்பி. (இன்னொரு தாளை எடுத்து அவரிடம் காட்டி) இந்த விளம்பரம் எல்லார் கண்ணிலும் பட்டிருக்கவேண்டும். அறந்தாங்கி : (கேலிச் சிரிப்பாக) கருத்திற்பட்டது கண்ணில் படாமல் இருக்காது. கண்ணில் பட்டது மாத்திரம் இல்லை, கண்ணை உறுத்தவும் செய்திருக்கும், உங்களைப் போன்ற சிலருக்குத் தவிர. கொடுமுடி : (பேசப் பின்வாங்கியவர்போலக் காப்பியை முழுதும் குடித்துக்கொண்டு) உங்கள் சொற்களில் ..... அறந்தாங்கி : அவ்வளவு இல்லை. கொடுமுடி : அப்படியானால் கேட்கிறேன். விளம்பரத்துக்கு ஏதாவது மறுமொழி கிறுமொழி. அறந்தாங்கி : (சினந்தணிந்தவர்போல) ஆமாம். நீங்கள் சொன்ன கடைசிச் சொல். விளம்பரம் செய்தவர்கள் பேர் கொடுக்கவில்லையே. செய்தித்தாள் மேல் பார்த்து என்றல்லவா முகவரி கொடுத்திருக்கின்றனர்? அத்தாள் நிலையத்தைக் கேட்டுப் பாருமே! மறுமொழி வரா விட்டால் என்ன? இப்போது பதிவுசெய்துகொள்ள மண வழி பிறந்திருக்கின்றதே. கொடுமுடி : திருமணக்கழகத்தின் ஆண் செயலன், பெண் செயலி இருவரையும் இணைத்து இந்தத் தாளில் படம்... அறந்தாங்கி : அந்தத் தொடக்கக் கூட்டத்துக்கு நான் போயி ருந்தேன். நீர் கட்டாயம் வந்து முன்னிடத்தில் உட்கார்ந் திருப்பீர். கொடுமுடி : அப்படியா? (வெட்கப்பட்டவர்போல்) நான் அந்தக் கூட்டத்துக்குப் போகவில்லை. அம்மாதிரி கூட்டத்துக்குப் போக விரும்புவதும் இல்லை. (சிரித்துக் கொண்டு) போகாத இடந்தனிலே போகவேண்டாம். நீர் போவது தெரிந்தால் உம் கூடவந்து பக்கத்து இருந்தி ருப்பேன். அறந்தாங்கி : நான் போகிற இடத்துக்கு நீர் வரமாட்டீர். கொடுமுடி : நான் போகிற இடத்துக்கெல்லாம் நீங்கள் வரமுடியுமா? இந்தக் காலத்தில் அவரவர்களுக்கும் தனிப்பாதை. ஆமாம். கடைசிவரை இருந்திருக்க மாட்டீர். அறந்தாங்கி : போய் இடையில் எழுந்து வருகின்ற வழக்கம் இல்லை. கொடுமுடி : நீங்கள் எல்லாம் இடையில் எழுந்துவந்தால், வந்ததும் தெரியும், போவதும் தெரியும். கூட்டம் ஒரு மாதிரியாக நினைக்கும். நான் போகாவிட்டாலும்...... அறந்தாங்கி : உமக்கென்ன எப்படியோ செய்திகளைப் பலர் வீட்டுக்குப் போய்ச் சேர்த்துக்கொள்ளும் ஆற்றல் உண்டு. மேலும் எந்தச் செய்தியையும் வெளியிடும் தாள்களை வாங்கும் பழக்கமும் உமக்கு உண்டு. கொடுமுடி : இந்தக் கூட்டத்துக்கு நான்கூடப் போக நினைத்தேன். என் இரண்டு மகள்களும் தாயைக் கூட்டிக்கொண்டு முன்னாடியே போய்விட்டார்கள். அறந்தாங்கி : உன் குடும்பம் முன்னேறும் குடும்பம். ஆண் பிள்ளை இல்லை என்ற கவலை உமக்கு இருக்காது. உமது பெண் குழந்தைகளிடம் ஆண்மை இருக்கிறது. நல்ல முறையில் உரிமையாக வளர்த்திருக்கிறீர். கொடுமுடி : இதெல்லாம் தாய் செல்வம். நான் உரிமையாகவா வளர்த்திருக்கின்றேன்? அவைகளே உரிமையாகத் தெரிகின்றன, உரிமையாகப் போய் வருகின்றன. (வெட்கப்பட்டவராக) அதனால்தான் அன்றைக்குக் கூட்டத்துக்குப் போக முடியாமே வீட்டிற்குக் காவலா இருக்க வேண்டியதாச்சு. (இருவரும் சிரித்தல்) அறந்தாங்கி : ஆண்கள் வீட்டுக் காவலாக என்றும் இருக்கும் காலம் வந்துகொண்டிருக்கின்றது. கொடுமுடி : வந்துவிட்டது. ஒரு நாட்காவல் அதற்குப் பயிற்சி என்றா சொல்லுகிறீர். யாராவது ஒருவர் வீட்டில், ஒருவர் வெளியில் இருக்கத்தான் வேண்டும். இதுவரை பெண்கள் இருந்தார்கள். இனி நாம் இருப்போமே. வீட்டில் இருப்பது குறைவா? சமையல் வீட்டில் இருப்போர் பின்பு சமய வீடு பெறுவார்கள். உங்கள் வீட்டிலும் ..... அறந்தாங்கி : இல்லை. உள்ளே தான் இருக்கிறார்கள். காலை வேலை அவ்வளவு. கொடுமுடி : (அறந்தாங்கி ஒரு கிரைக்கட்டினைக் கொடுக்க) இநத் இளங்கீரையை எப்படி ஆய்வது, ஆய மணம் வராது போலிருக்கே. அதுவும் நீங்கள் உங்கள் கண் பார்வையினால், கைந்நீதில் வளர்த்த கீரை. என்ன? என் கைப்பட்டவுடன் வாடிச் சாய்கின்றன. கை மாற்றம் இந்தக் காலத்துக் கீரைக்குக்கூடத் தெரிகிறது. அறிவு முறையில் உரமிட்டு வளர்த்த கீரை அல்லவா? அறந்தாங்கி : (கைகூப்பி) நல்ல செய்தி இருந்தால் அந்தத் தாளை எடுத்துக்கொண்டு வாருங்கள். (கொடுமுடி கீரையொடும் தாளொடும் செருப்பை மாட்டிக்கொண்டு போதல்) காட்சி – 7 கடற்கரை. மணற்குன்று. மாலை. திருமேனி மக்கள் ஆரவாரமில்லாத ஒரு பக்கம் தனியே நடந்துகொண்டிருக்கின்றான். அவன் கையில் பேராசியர் சேதுப்பிள்ளையின் ‘கடற்கரையில்’ என்ற நூல் இருக்கிறது. சில பக்கங்களைப் பார்ப்பதும் மடக்குவதுமான நிலையில். திருமேனி : (தன்னுள்) அன்பை நம்பவும் கூடாது. அறிவை நம்பவும் கூடாது. ஒருவர் சொல்லை நம்புவதற்கு அவர் அன்பும் அறிவும் இணைந்தவராக வேண்டும். அவர் சொல்லை (இகழ்ச்சியாக) அவன் சொல்லை அன்னை நம்ப, அன்னை சொல்லை நான் நம்ப முடிவில் விளம்பரம். இவ்விளம்பரம் பொருள் விற்கும் கடை விளம்பரமா? செய்தித்தாள்கள் எத்தகைய விளம்பரங் களையும் பரத்தைமைபோல் போடுகின்றன. காசுக்கு இது மரபு போலும். பொருள் விளம்பரங்களைக்கூட உடலுக்கு நல்லதா என்று பார்த்துப் போடுவது நல்லது. அப்படியானால் எப்படிப் பணம் வரும்? எவ்வாறு செய்தித்தாள்களைப் பத்துப் பதினைந்து காசுக்கு விற்க முடியும்? ஒரு நல்லதைச் செய்யப் பல கெடுதல்களை மேற்கொள்ள வேண்டிய உலகம் இது. (தன்னுள் நகைப்பாக) ஒரு திருமணம் செய்ய ஓராயிரம் பொய் சொல்லலாம் என்பது ஒரு பழமொழி. நம் கொடுமுடியார் இதுவரை எவ்வளவு பொய் சொன்னவரோ? தெரிய வில்லை. ஆயிரத்துக்குமேல் சொல்லியிருப்பார். அதனால் தான் அவர் ஈடுபடும் மணங்கள் எடுபடவில்லை. என் விளம்பரம் கண்டு பெண்ணுடையோர் என்னென் னமோ எண்ணியிருப்பர். நிச்சயம் பாராட்டியிரார். இந்தப் பேடி திருமணஞ் செய்து வாடி என்று கூப்பிடுவதைக் காட்டிலும் வள்ளுவர் சொன்னதுபோல, தனியாகவே மூத்த குமரியாக இருந்துவிட்டுப் போகலாம் என்று பெருமைப் பெண்கள் நினைப்பர். திருமணத்துக்கே இவ்வளவு ஆரவார மாக விளம்பரிப்பான் கழுத்தில் தாலி கட்டியபின் எவ்விளம்பரம் செய்யத் துணிவான் என்று அடக்கப் பெண்கள் தூவெனத் துப்பியிருப்பர். (ஒரு நினைவு வந்து) சேச்சே இப்படி எல்லாப் பெண்டுகளையும் சொல்லிவிட முடியுமா? ஆணுலகத்தில் என்போலப் பெண்ணுலகத்திலும் ஒருத்தியாவது இருப்பாள். இவனல்லவோ புரட்சி மகன் என்று என் பெயர் தெரிந்தால் பாராட்டிக்கூட எழுதியிருப்பாள். (தன்னுள் மெல்ல) இரண்டு புரட்சிக்கும் - புரட்டுக்கும் திருமணமானால் வீடு வேடிக்கை யாக இருக்கும். தனித்தனியாகப் பிரிவு விளம்பரம் வெளியிடும் நிலை ஏற்படும். நம் நாட்டில் மாப்பிள்ளை அருமை. அதுவும் இவன் போலும் படிப்பும் அறிவும் முன்னேற்றமும் அழகும் சிவப்பும் நல்ல குடிப்பிறப்பும் உடைய மாப்பிள்ளை நகர வீதி மரம்போல அருமை. ஒரு சொல் சொன்னால் பிறப்பேடுகள் வந்து குவியும். இனிப்பாக ஈப்போல என்றெல்லாம் என் முன்னே என் தாயிடம் விரித்துச் சொன்னார் அவர். பிள்ளைப் பெருமையில் தாய் ஏமாறுவது சரி. நான் ஏமாந்தது இருக்கே அதுகேட்டு உலகம் சிரிசிரி என்று சிரிக்கச் செய்யும். பொருளாதாரம் படித்தும் என்ன பயன்? அருமைப் பொருளை விளம்பரஞ் செய்வதில் லையே. அக்கொடு முடியார் பாராட்டியபடி எல்லாச் சிறப்பும் எனக்கு இருந்தால் (தன்னுள்) ஆம் என்ன இல்லாமல் இல்லை! அவர் சொன்னபோது அறிவு கொஞ்ச நேரம் இல்லாமல் போய்விட்டது. பின் வந்து சேர்ந்துகொண்டது. பிறரல்லவா நல்ல மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரஞ் செய்திருப்பர். அவர் சொன்னபடி நான் நகர வீதி மரந்தான். மின்கம்ப மரம். ஈயினம் இனிப்புக்குத்தான் மொய்க்குமா? மூடி வையாத இடமெல்லாம் மொய்க்கும். (விளம்பரத்தை விரித்தவனாய்) உலகம் என்னென்ன சொல்லிக் கொண்டிருக்கிறதோ? இளைஞர்களாவது என்னை ஆதரித்துப் பேசுவார்களா? என்னைப் பின்பற்ற மாட்டார்கள். அவர்கட்குத் தன பெருமை தெரியும். போயும் போயும் இப்படியொரு விளம்பரஞ் செய்து புகழ்கட்டிக் கொண்டான். பெயரை வெளியிடாமல், ‘செய்தித்தாள் மேற்பார்த்து’ என்ற முறையில் விளம்பரிப்பானா? இங்ஙனம் செய்கிறான் ஒரு பேதை-மேதை. ஏதோ இந்த அளவோடு பேதையளவைக் காட்டிக்கொண்டானே. ‘மாப்பிள்ளை என்ற பொருளைப் பார்க்க விரும்புவோர் ஞாயிறுதோறும் நண்பகல் 12 மணி யளவில் முருகன் திரைக் கொட்டகைக்குள் பார்க்கலாம். கட்டணம் இல்லை’ என்று வேறு குறிப்பிடாமல் இருந்தானே; அது பாராட்டத்தக்கது என்று நகைத் தோழர்கள் உரையாடிக் கொள்வர். (சிந்திப்பான்போல) இறைவன் ஒரு குணத்துக்கு ஓர் ஆளைமட்டும் படைத்திருக்க மாட்டான். என்னோடு ஒருசேரத் தொடர்ந்து பல பேரையாவது ஆக்கியிருப்பான். செய்தித் தாளிலும் விளம்பரத்திலும் கண்ட கண்ட இடங்களிலும் முன்னட்டையிலும் பின்னட்டையிலும் உள்ளும் புறமும் எல்லாம் இளம் பருவப் பெண்களை இல்லாத உடையும் பொல்லாத நடையும் சொல்லாத கண்ணும் கொல்லாத நெஞ்சும் கொண்ட பெண்களை நீட்டியும் தீட்டியும் பதுக்கியும் புதுக்கியும் கசக்கியும் நசுக்கியும் கலக்கியும் துலக்கியும் விலக்கியும் சுளித்தும் நெளித்தும் விளித்தும் அரும்பாகவும் துரும்பாகவும் கரும்பாகவும் குறும்பாகப் புனைந்து பண்பு சுருக்கிப் பணம் பெருக்கி விற்பனைவளம் காண்கின்றார்களே. அவர்கள் எல்லாம் என்னோடு சேரப் படைக்கப்பட்டவர்கள். இல்லை, இல்லை. நான்முகன் முதல் மண்ணில் அன்னவரைப் படைத்து மிச்சமிருந்த சொச்ச மண்ணுதிரில் என்னைப் படைத்தான். அவர்களை விடவா இந்த விளம்பரத்தில் பெண்ணின் பெருமையைக் குறைத்துவிட்டேன்; ஆணின் பெருமையைக் குறைத்துவிட்டேன். (தன்னுள்) ஆம் குறைத்து விட்டேன். அவர்கள் செய்வனவற்றைச் செய்தித்தளறம், விளம்பர மரபு என்று உலகம் பேர் சூட்டுகின்றது. எனதோ ஒரு குடும்பத்தைச் சேர்ந்த விளம்பரம். இதனை எப்படி உலகம் ஒத்துக்கொள்ளும்? ஒருவன் தீமை செய்தால் குற்றம். ஊர் கூடிச் செய்தால் ஊரையே கூடிச் செய்யச் சொல்லிவிட்டால், குற்றமா? குற்றமென்று சொல்லலாமா? பலர் குற்றம் அருங் குணம். என் மாணவக் காலத்தில் ஒருமுறை புகை வண்டிச் சங்கிலியைப் பிடித்திழுத்தேன். ரூபாய் ஐம்பது தண்டனை கொடுத்தேன். எதற்கு? கருக்கொண்ட முதற் சூலி ஆடவர்கள் வண்டிப் பகுதியில் ஏறியிருந்தாள். வயிற்றுவலி பெருகிவிட்டது. பெண் துணையில்லை. வண்டியோ விரைவு வண்டி. ஏனை ஆடவர்கள் அந்தப் பெண்ணை, இந்த நிலையில் வரலாமா? இங்கு வந்து ஏறலாமா? இப்படித் தனியே வந்து துணிந்து ஏறிய இவள் எப்படிக் கருவுற்றாளோ? என்றெல்லாம் தொடை நடுங்கினர், சங்கிலியைத் தொட நடுங்கினர். நான் மாணவன். கல்லூரி மாணவன். கல்லூரி மாணவன் கடமையறிவான். உடனே என் கை சங்கிலியைப் பிடித்திழுத்து வண்டியை நள்ளிரவில் நிறுத்தியது. வண்டிப் பொறுப்பர் வந்தார். ஆடவர்கள் இவன்தான் சொல்லவும் கேளாமல் நிறுத்தினான் என்றனர் துணிவாக. அப்பெண்ணும் நான் நிறுத்தச் சொல்லவில்லை ஐயா என்றாள். நிறுத்திய காரணம் முக்கியம் என்று நான் சொன்னேன். இதென்னடா முக்கியம்? சாவும் பிறப்பும்எந்த இடத்திலும் உண்டு. வீட்டிலே குழந்தை பெற்றுக்கொள்ளத் தெரியாத அவளுக்கு நீ என்ன உதவி செய்கின்றாய்? நீ வந்து உதவி செய்வாய் என்று எண்ணியா அவள் நீ ஏறிய இவ்வண்டியில் ஏறினாள்? சரி. அரசுக்கு மேலும் ஐம்பது ரூபாய் உதவி செய் என்று பதிந்துகொண்டு போனார். குணம் குற்றமாகிவிட்டது; அதனாலென்ன, ஒரு பெண் பிறவிக்கு உதவினேன் என்ற மனநிறைவு. என் கல்லூரி மாணவ நண்பர் இதனை எப்படியோ தெரிந்துகொண்டனர். விடுவார் களா? ஏற்கனவே காரணத்துக்கு ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் அல்லவா! இதனைக் கேட்டதும் புகைவண்டியுள் அனலென்னப் புனலென்னப் பொங்கினர். அவர்கள் சுடச்சுட உண்ணும் பூரிபோலத் தோள்கள் பூரித்தன. இராமன் இலங்கை போகுமுன் ஆலமரத்தின் கீழ் கூடிப் பேசிய அருமறைபோல, இவர்கள் அவ்விருளில் திருண்டு ஏதோ பேசி ஒரு முடிவு செய்தனராம். அடுத்தநாள் - அடுத்த நாளே எல்லா வண்டி களும் தக்தக்கென்று அவ்வவ்விடத்தில் நின்றன. எல்லா வண்டிப் பகுதியுள்ளும் சங்கிலிகள் ஒற்றுமையாகத் தாழ்மை யாகத் தொங்கின. யார் என்ன செய்வது? பலர் செய்த இழுப்பு விழுப்பமாகிவிட்டது. இவ்வளவு பொது நிறுத்தத்துக்கு நான் ஒருவன் செய்த நன்மை காரணமா? வண்டிக் காப்பாளர் செய்த தீமை காரணமா? சட்டம் காரணமா? என்னவாயினும் இன்றைய உலகில் ஒருவன் நல்ல செய்கையில் உலகம் அவ்வளவு அக்கரை காட்டவில்லை. பலர் கூட்டமாகத் திரளாக செய்யும்போது, அஞ்சி அக்கரை காட்டுவதோடு தீமைகளை நன்மையாகவே நினைக்கின்றது. நினைக்கின்றதென்ன, பாராட்டுகின்றது. இத்தகைய மாற்றுலகில் என் ஒருவன் விளம்பரம் மதிப்புபெறாது. ஆனாலும் என் விளம்பரம் - உண்மையை நான் உணராமல் இல்லை - குடும்ப விளம்பரம். பிறர் நலம் நோக்கிச் செய்யப்பட்டதில்லை. என் கருத்தில் தோன்றியபடி என் குடும்பத்துக்கு நலம் என நினைந்து, தாய் சொற்படி-இல்லை, எடுபடியில்லாக் கொடுமுடி சொற்படி-இல்லை இல்லை, பிறர் மேல் ஏன் பழியைச் சுமத்த வேண்டும்-குறுக்குவழி எண்ணிய என்-ஆம் என்-கிறுக்கின்படி, வீழ்ச்சிதரும் விளம்பரம் செய்து விட்டேன். (குனிந்த தலையனாய்) ஆனாலும் ஒரு விடுதலை. உள்ளத்துக்கு ஒரு சிறு நிறைவு. அன்று நக்கீரர் தலைமையில் நிகழ்ந்த பெருங் கூட்டத்தில் தவறான விளம்பரம் செய்ததைக் குறிப்பிட்டது நல்லதாயிற்று. அதுபற்றி யார் என்ன நினைத்துக் கொண்டாலும் கொள்ளட்டும். திருமணக் கழகம் எவர்க்கு வழி காட்டினாலும் காட்டாவிட்டாலும் எனக்கு ஒரு வழிகாட்டி. என்போல் திருமணம் ஆகவேண்டும் சேயிழைக்கும் ஒரு நல்ல வழி காட்டும். (‘கடற்கரையில்’ என்ற நூலைக் கையில் வைத்துக் கொண்டு விரிப்பதும் மூடுவதும் செய்துகொண்டு எண்ணச் சூழலில் அகப்பட்டுச் சோர்ந்து நடக்கின்றான் திருமேனி. ஒதுங்கி ஓரமாகச் செல்கின்றான். இருபக்கமும் மணற்குன்று. அருகே வந்த கார் காலில் மெல்ல மோதியது. திரும்பிப் பாராமல் மணல் மேட்டில் அமரப் போகின்றான். ஓ! தாங்களா என்று காரோட்டி வந்த சேயிழை அதனை ஓரமாக நிறுத்தி விட்டு) சேயிழை : (கைந்நொடித்து) ஏதும் உரசலா, காயமா, ஊமைக் காயமா, (அடிபட்ட இடத்தைத் தொட்டுப் பார்க்கும் எண்ணம் வந்தும் பருவம் இடங்கொடுக்காமையை எண்ணித் தொடுவது போலக் கையைக் கிட்ட வைத்துக் கொண்டவளாய்) ஊமைக் காயமா பணியாரம்போல (வருந்தி) என் கார் தங்களை மோதிவிட்டது. திருமேனி : (புன்முறுவலாக) கார் மோதவில்லை. காரோடு நான் மோதினேன். கார் மெல்ல வந்து, இப்படிக் கடற்கரையில் நடுவீதியில் செல்லலாமா என்று என்னிடம் ஓதிற்று. காரின் மட்காப்பு ஏதும் வளைந்திருக்கின்றதா? வா, போய்ப் பார்ப்போம். வளைந்திருந்தால் காப்புக் கழகத்திற்கு எழுதி ஈடு வாங்கலாமே. சேயிழை : (நடுங்கிய உடலோடு) தங்கள் புன்முறுவல் எனக்குச் சிவன் முறுவலாகப் படுகின்றது. கார் வளைந்தால் ஒரு சிறு செலவில் செப்பனிட்டுக் கொள்ளலாம். தங்கள் கால்.... திருமேனி : (இன்னும் புன்முறுவலாக) உணர்ச்சியில்லாத மரக்காலே வைத்துக்கொள்ளலாம். மாற்றுக் கண், மாற்று நெஞ்சம் வைக்கும் செய்திகளை நீ படித்த தில்லையா? (சேயிழையின் கண்ணீர் மணலைக் கரைக்க, அவள் பெருமூச்சு விடுவதைப் பார்த்து) என் சிரிப்பி லிருந்து என் கால் காலாகவே இருக்கிறது என்பதனைப் புரிந்துகொள்ளாத அன்பு மடமகளாக இருக்கின்றாய். ஆண்பிள்ளை காரோட்டி வந்திருந்தால், என் கால் பெயருக்கேற்பக் காலாகவே போயிருக்கும். எவண்டா குறுக்கே விழுந்தவன், விதி தள்ளுகிறதா குடி தள்ளு கிறதா என்று சொல்லிவிட்டு ஊதிய வண்ணம் மீசையை உருவி ஓட்டியிருப்பான். என் காலுக்கு நற்காலம். பெண்ணோட்டி என்பதனால் பிழைத்தேன். சேயிழை : என்னை அமைதிப்படுத்த நீங்கள் சொல்லும் அன்புப் பொய். என் வீட்டுக்கு நான் இருபிள்ளை மாதிரி. மெதுவாக ஓட்ட நான் இன்னும் பழகவில்லை. வேகமாக ஓட்டி வந்தேன். நடந்து காருக்கு வாருங்கள். திருமேனி : (சுற்று முற்றும் பார்த்து மரங்களின் மேலும் பார்த்து) நல்ல வேளை. கார் மோதியதில் எனக்குக் கவலையில்லை. இதை யாராவது பார்த்திருக்கக் கூடுமா? செய்தி கொடுப்பிகள் பக்கத்தில் எங்கும் மணலில் படுத்திருக்கின்றனரா? இல்லையே. நீயும் ஒருமுறை பார். ‘காரால் மோதினாள் கன்னி, காலால் வணங்கினான் காளை’ என்று கொட்டை எழுத்தில் முன் பக்கத்தில் எந்தச் செய்தித்தாளும் போட்டு இந்த அரிய நிகழ்ச்சியை உலகத்துக்கு முந்துற்று அறிவிக்குமோ என்று பெருங் கவலைப்பட்டேன். (தன்னுள்ளே நினைத்துக் கொள் கின்றான். முன் விளம்பரத்தோடு இந்தச் செய்தியும் வந்தால் குடும்பநிலை எவ்வளவு இழிவாகிவிடும்) யாரும் பாராத சமயம் பார்த்து, யாரும் இல்லாத இடம் பார்த்து இந்த நல்ல கார் என் அருகே வந்து தட்டியது. சேயிழை : (புன்முறுவலாக, தலைந்த தன் கூந்தலை ஒழுங்கு படுத்திக்கொண்டு) எப்படியும் ஒரு நாளாவது செய்தித் தாளில் இரண்டு வரியில் தன் பேர் வராதா என்று வருவதற்கு வேண்டிய வழிகளைச் செய்து தடபுடல் பண்ணுகின்ற இக்காலத்து ..... திருமேனி : (கைதட்டி) அப்படிச் சொல். இந்த நிகழ்ச்சி செய்தித் தாள்களில் வரவேண்டுமென்று எதிர்பார்க்கின்றாயா? சொல். நிழற் படத்தோடு வரவேண்டுமென்று விரும்பு கின்றாயா? சொல்லு. இன்றே இரவு முரசில் வெளியிட ஏற்பாடு செய்கின்றேன். செய்தி கொடுப்பிகள் இங்கு தான் உலவுவர். கூப்பிடலாமா? சேயிழை : (கையை அசைத்து) இந்த நிகழ்ச்சி வரவேண்டாம். நல்ல நிகழ்ச்சி வர நாளாகாது. (இருவரும் தங்கள் உடையில் உள்ள மணலை உதறிக் கொண்டு கடற்கரையின் ஒரு பக்கம் அமர்கின்றனர். பலர் சோடி சோடியாக வருவதும் போவதும் இருப்பதும் செய்ப. குழந்தைகள் மணலை அள்ளி வீசி விளையாடுப. சிறுமிகள் மணற்குழி தோண்டிச் சிறு கிளிஞ்சல்களைப் பொறுக்குப. பெரிய ஆடவரும் பெண்டிரும் சிறு துண்டுகளை விரித்து அமர்ந்து வீட்டுப் பேச்சுக்களை விடாது இங்கும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பர்.) சேயிழை : (கையை உயர்த்தி) என்றும் இல்லாத அளவுக்கு இன்று கடலலை எவ்வளவு பெரிதாக அடிக்கின்றது. திருமேனி : ஆம்! இன்று மக்களின் மனக் கவலைகளும் பெரிதாகவே உள்ளன. புறம் போல உள்ளம். சேயிழை : என் அவ்வண்ணம் கருத வேண்டும்? இன்ப அலைகள். திருமேனி : உன் எண்ணத்துக்கு நான் குறுக்காக நிற்கவில்லை. ஆனால் ஒன்று. இன்பத்துக்கு அலை இருக்காது. இன்ப மாவது அடக்கம். எத்துணை அடக்கம், அத்துணையும் இன்பம். இந்த நீரலைகள் கரைப் பகையைக் கொன்று கொண்டே உள. துன்பத்தைப் பெருக்கி நிலவுலகத்தைக் கவர வேண்டும் என்று வற்றாக் கடல் இரவும் பகலும் வஞ்சி முழங்குகின்றது. திண்கரை இடங்கொடுக்க வில்லை. அதனால் மணலோடு போரிட்டுக் கொண்டிருக் கின்றது. ஞாலத்தில் பெரும் பகுதியைக் கடல் கைப்பற்றி விட்டது. ஒருநாள் எல்லாம் நீராகி விடும். சேயிழை : எனக்குப் பூசலாக எண்ணுவது பிடிக்கவில்லை. கடற் கரையில் பட்டினத்தார் பூலம்பலைப் படிப்பவர்கட்குக் கடல் எப்படித் தோன்றும்? பருவத்துக்குத் தக்க பார்வை வேண்டும். பேராட்சி வல்ல கடல் தன் ஆயிரம் அலைக் கையால் பள்ளியிற் கிடக்கும் நிலக் காதலியைத் தழுவுகின்றது. வாரி யணைக்கின்றது. வா! வா! என்று அழைக்கின்றது. தன் ஆற்றலையெல்லாம் ஒடுக்கிக் கொண்டு ஊடும் நில மடந்தையின் தாளடியில் மெல்ல வந்து பணிகின்றது. ஏன் இவ்வளவு நங்கையரும் நம்பியரும் மாலையில் இங்கு வருகின்றனர்? நீரும் நிலமும் செய்யும் காதலைக் கற்றுக்கொண்டு கற்றபடி நிற்பதற்கல்லவா? திருமேனி : அலையை ஊடுதலாகக் காண்கின்ற நீ கடல் கோளை என்ன நினைப்பாயோ? சேயிழை : (பின் தொடங்கும் கூந்தலை மார்பின்மேல் வைத்துக் கொண்டு முடியைப் பின்னுவாள் போல முறுவலித்து) கடல்கோளா அது? தன் காதலியை முழுதும் ஒரு நாள் தழுவிக் கொள்ளும் கைக்கோள். ஆராக் காதலால் நிலக் குமரியை ஒருங்கே அணைத்துக்கொள்ளும் ஆசைக் கோள். அது கடல்கோள் இல்லை. காதற்கோள். திருமேனி : அந்த இனிய காதற்கோள் உலகில் விரைவில் வரட்டும். நிலக் கிழவியைக் கடல் அணைக்கும் நாளே உயிர்களுக்கெல்லாம் விடுதலை நாள். இப்போது வேண்டுமானாலும் வரட்டுமே. கதிரவன் வெப்பத்தால் தீய அணுக்கள் பொசுங்குகின்றன. பெருமழையால் ஊர்ச் சாக்கடைகள் துப்புரவாகின்றன. பெரும் போரால் தலைவர்களின் கொடு நெஞ்சங்கள் ஒடுங்குகின்றன. சேயிழை : (எப்போதும் கல கல வென்று முகமலரப் பேசும் இவர் இன்று கவலைப் பார்வையாக உள்ளாரே என்று தன்னுள் எண்ணி) ஆம்! உங்கள் பார்வை எனக்குப் புரிகின்றது. ஊரில் உள்ள கவலைகளைக் கொஞ்சமாவது மறக்கலாம் என்று போலும் இந்த மக்கள் குழந்தை களோடு இக்கடற்கரைக்கு நாளும் வருப. இம்மகிழ்ச்சி இவர்கட்கு மனிதவுறவில் கிடைப்பதில்லை போலும். எத்துணைத் துன்பங்கள் வந்தாலும் முயற்சியைக் கைவிட வேண்டாம் என்று இந்த அலைகள் நெருங்கி வந்து நம் தாள்களுக்குச் சொல்லிச் செல்லுகின்றன. இப்படி எண்ணிப் பார்ப்பதும் ஒரு முறையே. இத்துன்பங்களில் ஓரளவையேனும் குறைப்போம் என்பதற்கு அல்லவா திருமணக் கழகம் அமைத்திருக்கின்றோம். திருமேனி : (கையில் இருக்கும் நூலைப் பிரித்துக்கொண்டு) சேயிழாய், இயற்கையில் பெரிய பொருள் கடலே. எவ்வளவு தமிழ்ப் பெரியோர் கடற்கரையில் வீற்றிருந்து புதிய எண்ணங்களை எண்ணிப் பெரு வாழ்வு பெற்றி ருக்கின்றனர் என்பதைப் பேராசிரியர் இனிய தமிழில் எழுதிய இந்நூல் புனைந்து காட்டுகின்றது. சேயிழை : (நகையாக) எதிர்காலத்தில் உங்களையும் ஒரு பேராசிரியர் இப்பட்டியலில் சேர்த்துவிடுவார். திருமேனி : இந்நூலில் பெண்டிர்க்கும் இடமுண்டு. (அலை நுரையைக் கையில் முகந்துகொண்டு) வானத்துக் கூட்டங் கூட்டமாகப் பறந்து செல்லுகின்ற கொக்கினங்கள் மனிதனின் பார்வையை உணர்த்துகின்றன. நீலவானுக்கும் நீலக்கடலுக்கும் இடையே தொகுதியான வெண்ணிறப் புறாக்கள். இதோ பார்த்தாயா! ஒரு புறவு ஏனைப் புறவு களையெல்லாம் முந்திக்கொண்டு செல்வதை. பரிசுக்கா பறக்கின்றது? மனித இனம் காடுகளை அழித்துவிடவே உயிரினங்கள் படுகின்ற தொல்லையை யாரிடம் சொல்வது? இவ்வளவு தொலை நாள்தோறும் பறந்து சென்று மீள்வதற்கு எத்தனை முறை இறகுகளை அடித்துக்கொள்ள வேண்டும்? ஐயோ பாவம்! சேயிழை : மனிதக் கூட்டம் தன்னிடங்களை அதிரடியாகப் பறித்துக்கொண்டதை எண்ணி வயிற்றில் அடித்துக் கொள்கின்றன போலும். என்னே ஒற்றுமை! வழி விலகிச் சென்ற ஒரு புறா திரும்ப இனத்தோடு சேர்ந்து ஓடுகின்றது. திருமேனி : ஒற்றுமையில்லை. சேயிழை. தனியே சென்றால் மனிதப் பகைவர் பிடித்துவிடுவர் என்ற அச்சம். புறா இனத்துக்குத் தலைவர்கள் அளிக்கும் சிறப்பு உனக்குத் தெரியுமா? அமைதி குறிக்க வெண்புறாவினைப் பறக்க விடுவர். சேயிழை : ஆம்! இவர்கள் அமைதிக்குறி என நினைக்கின்றனர். புறாக்களோ இவர்கள் கையிலிருந்து விடுதலை பெற்றோ மென வேகமாகப் பறந்தோடுகின்றன. இதோ ஒரு கருங்காக்கை. உள்ளும் புறமும் கரிய கள்ளக் காக்கை. (சில நிலக்கடலைகளை வீசுகின்றாள். காக்கை கொத்துகின்றது). பறவைகளில் மனிதப் பண்பு உடையது இவ்வினம். பிழைக்கத் தெரிந்தவை. எத்தித் திருடும் இந்தக் காக்கை. திருமேனி : அவ்வணம் சொல்லாதே சேயிழாய். அவைகளின் இயல்பை நாம் கள்ளம் என்று பெயரிடுகின்றோம். புலி மானைக் கொலை செய்கிறது. பூனை எலியைக் கொல்லு கின்றது. பாம்பு நச்சுப் பல்லாற் கடிக்கின்றது. தேள் கொட்டுகின்றது. இவற்றின் செயல் குற்றமா? இல்லை, இயல்பு. காக்கை பிழைக்கவும் தெரிந்தவை. இனத்தை அழைக்கவும் தெரிந்தவை. இன ஒற்றுமைக்கு இவற்றை யும் பறக்கவிடலாம். சேயிழை : (மார்புக் கூந்தலை இரு சடையாகப் புறத்தே போட்டுக்கொண்டு) தாங்கள் கடற்கரைக்கு அடிக்கடி வருவதுண்டா? நான் அடிக்கடி வந்தாலும் காரில் இருந்து காற்று வாங்கி அப்படியே திரும்பி விடுவது வழக்கம். இன்று உங்கள் தொடர்பால் இயற்கையழகு களில் ஈடுபட்டேன். திருமேனி : கடலைச் சுற்றி எவ்வளவு காட்சிகள் இருந்தாலும் அலைக் காட்சிகள் உயர்தல், சுருள்தல், வீழ்தல், படிதல், தணிதல், சிதறல், இணைதல், பணிதல், மீளல், நுரை சுமத்தல், மோதல், அரித்தல், அணைத்தல், தூய்தல் இவ்வாறு எல்லா வினைகளையும் அலைப் பொருளி டத்துக் காணலாம். பிறரை மகிழ்விப்பதறகென்றே கும்மாளம் போடும், கூத்தாடும், வரிசையாக வந்து வணங்கும். நள்ளிரவில் முழுத் திங்களில் அலைகளைக் கண்டுகளிக்கும் பேறுடையாரே பிறப்புடையார். சேயிழை : (கூந்தற் பூங்கொத்தை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு) தங்கள் தொடர்பால் அந்தப் பிறப்பு எனக்குக் கிடைக்கவும் கிடைக்கும். (இரவு ஏழு மணி. கடற்கரையை விட்டுப் பலரும் புறப்படுதல். திருமேனி நடந்து வீடு செல்லுதல். சேயிழை காரை மெதுவாக ஓட்டிக் கொண்டு புறப்படுதல்). சேயிழை : (தன்னுள்) அவரிடம் எவ்வணம் என் எண்ணத்தை வெளியிடுவது. பேச்சுக்குப் பேச்சு அவர்க்கு இயற்கை மூச்சு. அவரை ஒருநாள் தனியே காணவேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறியது. ஐயோ பாவம். கார் மோதிச் சந்திக்கும்படி ஆயிற்று. குருட்டுத்தனமாக ஏற்றியிருந்தால், என் வாழ்வு இன்றே குருடாகி இருக்கும். கடலலையில் இவ்வளவு ஈடுபடுபவர் நாள்தோறும் வருவார். எனக்கும் ஈடுபாடு முளைத்து வருகின்றது. காட்சி – 8 கடற்கரை : மாலை சேயிழை முன்னமே வந்து இருத்தல். திருமேனி வந்திருக்கின் றாரா என்று அவள் பார்வை பரவுதல். வரவில்லை என்று நினைந்து அங்கும் இங்கும் உலாவுதல். வண்ணப் பனிப்பழம் வாங்கிச் சுவைக்கும்போது, திருமேனி மெல்ல நடந்து செல்வதைக் கண்டு, அவனை நோக்கிச் செல்கின்றாள். சேயிழை : (விலைக்கு வாங்கி முல்லைக் கண்ணியைத் தலையில் வைத்தவண்ணம்) நேற்று... நேற்று வந்து காத்திருந்தேன், தாங்கள் வரவில்லை. காலுக்கு என்னமும் உண்டோ என்று என் நெஞ்சு கவலைப்பட்டது. இன்று உங்களைக் கண்ட பின்பே இந்தக் கடல் நினைவு வந்தது. திருமேனி : சூட்டில் சுவை தெரியாது. உணர்ச்சியில் நிலை தோன்றாது. மோதிய நேரத்தில் தெரியவில்லை. காற்பகுதியில் நெல்லிக்காயளவு ஊமைக் காயம். ஒத்தணத்தில் மெத்தென ஆயிற்று. (சிரிப்பாக) நம் முதல் நாள் கடற்கரை உறவுக்கு ஓர் அடையாளம் வேண்டாமா? சேயிழை : வலியால் இரவில் தூங்கியிருக்கமாட்டீர்கள். இவள் தானே இவ்வாறு செய்தாள் என்று என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்திருப்பீர்கள். (காயம்பட்ட காலைத் தொட்டுப் பார்க்க மனம் விரும்பினாலும் அவர் என்ன நினைப்பாரோ என்ற நாணத்தால் தன் காலைக் காட்டி) இந்த இடத்திலா அடிப்பட்டது? திருமேனி : (நகையாக) உன் காலில் எப்படிப்பட்டிருக்கும்? கார் மோதியது (சுட்டிக்காட்டி) இந்த என் காலில் அல்லவா? சேயிழை : இல்லை! இல்லை! என் காலிலும் தான். சிவன்மேல் பட்ட அடி ஒவ்வொரு உயிர் மேலும் விழுகவில்லையா? தங்கள் கணைக்காலில் ஒரு வடு காணப்படுகின்றதே. அது என்ன? திருமேனி : உன் கார் மோதியதில்லை. நேற்றைய மோதலாக இருந்தால் இன்னும் புண்ணாக இருக்குமேயன்றி வடுவாகிவிடாது. சேயிழை : (முந்துற்று) என் கார்போல் முன்பு யார் காரும் பலமாகத் தாக்கியதா? (வருந்தியவளாய்) பட்ட காலிலே படுகின்றது. திருமேனி : பட்டகால் தான். ஏழெட்டு வயதில் மிதி வண்டிக்குள் என் சின்னஞ்சிறு கால்களைக் கொடுத்து வேகமாக ஓட்டியபோது நானே ஏற்படுத்திக்கொண்ட படுகாயம். (தற்பெருமை பேசுவதுபோல) மற்றவர்கள் எனக்குப் புண் செய்வார்கள். நான் எனக்கு வடுவே செய்துகொள்வேன். சேயிழை : நான் இப்போது கடற்கரைக்குக் காரில் வருவதில்லை. ஒருநாள் புண்படுத்தியது போதும். அலைக் காட்சிகளில் ஈடுபட்டு ஓட்டினால், கார் வேகம் தெரியாது. திருமேனி : தமிழ்நாட்டில் ஒரு சில குடும்பங்களில்தான் இந்தப் பழக்கம் காண முடியும். சேயிழை : (ஆவலாக) எந்த மாதிரியான பழக்கம்? சொல்லுங் கள். பின்பற்றுகின்றேன். திருமேனி : ஓர் இளம் பெண்ணைக் கடற்கரைக்கு மாலை மயங்கும் நேரத்தில் தனியே வரப் பார்த்துக் கொண்டி ருக்கின்றார்களே உன் குடும்பத்தார். அது எப்படி? இதெல்லாம் இயல்பு என்று கருதுகின்ற நாகரிகக் குடும்பமா? அல்லது நீ சொல்லக் கேளாது வருகிற துடிப்பான பெண்ணா? எவ்வாறாயினும் அண்ணன் போல என்பால் பழகுவதில் ஒரு குறைவும் வராது. ஆனால் உலகம் இதைத்தானே, உலகம் என்ன, பெரிய எழுத்தாளர் என்பவர்களும் இவ்வகைத் தனி வரவைத் தானே பெரிதுபடுத்துகின்றார்கள். அன்புடையோர் அச்சப்பட வேண்டிய சூழல் இது. சேயிழை : என் செலவும் உங்கள் வரவும் என் குடும்பத்தார்க்கு வெளிப்படை. உங்களோடு கடற்கரையில் பேசிக்கொண் டிருந்ததையும் வாய்க்கும்போதெல்லாம் உடனமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கப் போவதையும், உங்களால் இயற்கையறிவு பெறுவதையும், என் தந்தையிடம் சொல்லியிருக்கிறேன். ஒளிவு மறைவு ஒன்றுமில்லை. திருமேனி : (உன் தாய்க்கு இது தெரியுமா என்று கேட்க வாயெடுத்தவன் இதுபற்றி அதிகம் கேட்கக் கூடாது என்று எண்ணியவனாய்) இவ்வளவும் சொல்லிய நீ கார் செய்த தொண்டினையும் சொல்லியிருப்பாய். சேயிழை : (கையுதறி) அதைச் சொன்னால் என் அப்பா காரை யும் விற்றுவிட்டு என் ஓட்டிசைவையும் பறித்து விடுவார். திருமேனி : நேற்று ஒரு நாள் வராததற்கு இந்த அலைகள் எவ்வளவு தவ்வாட்டம் போடுகின்றன. எதற்காக வரவில்லை, நாங்கள் தரும் காட்சியின்பம் குறைவா, பிற இன்பம் நிறைவா என்று ஊடுகின்றன. உளறிக் குழறி வாயில் எச்சில் நுரை காட்டுகின்றன. படிகடவாப் பாவைபோல நாங்கள் காரைகடவாக் கைகள் என்று வந்து மீள்கின்றன. என் முன்பு மற்ற இடங்களைக் காட்டிலும் பெரிய பெரிய அலைகள் சிறு நீலக்குன்றுகள் போல வருகின்றனவே. இவற்றின் நோக்கம் என்ன? ஒருநாள் என்னைக் காணாது இழந்த இன்பத்தின் இரட்டிப்பா? (கரைதாண்டிப் பத்தடி கடலுக்குள் சென்று மீண்டும் வந்து அமர்ந்து) சேயிழாய்! உனக்கு வியப்பாக இருக்கும். என்ன இவர் எந்த இன்பத்தினும் இந்தத் திரையின்பத்தில் அழுந்தியிருக்கிறாரே. கடல் நீர் குடிக்கச் சிறிதும் உதவா உப்புநீர். இதற்கு இவ்வளவு பாராட்டா என்று நீ நினைப்பாய். சேயிழை : அப்படி ஒன்று இரண்டு நாளாக நான் நினைக்க இயலவில்லை. உங்கள் தொடர்பில் உங்கள் இன்பம் என் இனபமாயிற்று. நேற்று நீங்கள் வந்திருந்தால், இந்த இயற்கை நுகர்ச்சி எனக்கு இன்னும் கூடியிருக்கும். திருமேனி : சிறு பருவத்திலிருந்தே நான் அலைப்பித்தன், அலை மோகன். எவ்வளவு ஓங்கல், எவ்வளவு பளிங்கு, எவ்வளவு தூய்மை, எல்லாவற்றுக்கும் மேலாக எவ்வளவு பணிவு. கடற்கரைத் தலங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் அங்குள்ள அலைகள் இறைவன் திருவடியைப் பணிந்து எழுவதும் எழுந்து பணிவதுமாய் நாட்கடன் செய்து கொண்டிருக்கின்றன. அதனால் நீடு வாழ் கின்றன. அவை தெய்வ அலைகள். நம் உள்ளத்தை அகப் படுத்திக்கொள்ளும் தெய்வ வலைகள். (சுட்டிக்காட்டி) இதோ! இந்தக் குழந்தைகள் பெண் குழந்தைகளும் ஆண் குழவிகளும் இப்போதே மண் தோண்டிக் கடலுக்குக் குழி பறிக்கின்றனர். அதோ பார்! அந்த நல்லலைகள் சான்றோர்போல விரைந்து வந்து குழிகளைத் தம் நீர்மையால் சமப்படுத்திச் செல்ப. இந்தா! மக்களின் சிறிய பெரிய மயங்கிய கால்தடங்கள். மக்களின் காலாட்சிக்கும் அடியாட்சிக்கும் திரைகள் இடங்கொடா. பார்த்தாயா! ஓரேயடியாக வந்து அவ்வளவு அடிச் சுவடுகளையும் திரைகள் மணலால் மெழுகிவிட்டன. சடலுக்கு வரும்போது மக்கள் அழுக்கான கால்களை கொண்டு வருகிறார்கள். திரும்பிப் போகும்போது அலைகள் திருத்தொண்டர்களின் அடிகள்போல அவைகளை எத்துணைத் தூய்மையாக்கி விடுகின்றன. இந்த நன்றிக்கு அறிகுறியாகவே மக்கள் செருப்போடு அலைகளை மிதிப்பதில்லை. சேயிழை : மக்கள் அவ்வளவு நன்றியுடையவர்களென நான் நினைக்கவில்லை. செருப்பிலே இருக்கிற பற்று. அவர்களுக்கு செருப்பு அலையோடு போனாலும் போய்விடும் என்ற பயம். (திருமேனி சிரிக்கின்றான்). திருமேனி : ஆம்! ஆம்! இக்கால மக்கட்குக் காலைப் பற்றிக் கவலையில்லை. விருந்துக்குச் சென்ற இடத்தும் வெளியில் விட்ட காலணியைப் பற்றிய நினைப்பே பெரிது. அலைகள் மிகப் பணிவுடையன. ஆற்றலும் உடையன. இம் மணலெல்லாம் ஒரு காலத்துக் குன்றுகளாக இருந்தவை. அலை தாக்கித் தாக்கி மணலாகிக் கிடக்கின்றன. அங்கங்கே தோன்றுகின்ற சிறு பாறைகளும் ஒரு நாள் மணலாகி இங்கே வரும். (கொஞ்ச மணலை அள்ளிக் கொடுத்து) கரையோரமாகக் கிடக்கும் இப்பிடிமணல் எத்துணை ஈரம், குளிர்ச்சி, செறிவு. ஊர் மணலைக் கையால் தொட முடியுமா? ஒப்பிட்டுப் பார்! எவ்வளவு வறட்சி, அழுக்கு, கலப்பு. கடலைச் சாரும் எப்பொருளும் தூய்மை பெறும். சிறு பொழுது கடலலையோடு தொடர்பு கொண்டாலும் நெஞ்சத்தின் அலை குறைகிறது. அது தூய்மை பெறுகின்றது. சேயிழை : நெஞ்சம் தூய்மை மட்டுமா பெறுகின்றது? தூய்மை யோடு ... திருமேனி : கடல் போல விரிந்த அன்பு பிறக்கின்றது. சேயிழை : அன்பு உண்டாவதோடு நிற்கவில்லை. திருமேனி : விரிந்த அறிவும் எழுகின்றது. சேயிழை : தூய்மை, அன்பு, அறிவு எல்லாம் உடைய உயிர் களுக்கு.. திருமேனி : நெருங்கி நட்பு உண்டாகிறது. சேயிழை : (நெகிழ்ந்த தன் மேலாடையைச் செறிப்பவள்போல) அவ்வுயிர்கள் ஆணும் பெண்ணுமாக இருந்தால் ... திருமேனி : (சிரிப்பாக அஃறிணை உயிர்களாக இருந்தால் அவற்றைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். சேயிழை: (புன்முறுவலித்து தாள் தோன்றாமல் ஆடையால் மறைத்துக்கொண்டு) நம்மைப் போல நல்ல உயர்திணை யாக இருந்தால். திருமேனி: (இயல்பாக) உறவு உண்டாகும் என்று வேண்டுமா னால் வைத்துக்கொள்ளேன். சேயிழை : (பின்னலின் ஒரு பகுதியை மார்பிலும் ஒரு பகுதியைக் கையிலும் வைத்து) எத்தகைய உறவு? திருமேனி : (சிந்தனையோடு) நல்லெண்ணம் கொண்டவர் களுக்கு உடன் பிறப்பு உறவு. அல்லெண்ணம் உடையவர் களுக்கு அவர்களைத்தான் கேட்கவேண்டும். சேயிழை : (வெளிப்படையாக நல்லெண்ணம் உடையவர்களுக் குள் ஓருயிர் என்ற உணர்வு. திருமேனி : (இயல்பாக) இழாய், உடன்பிறப்பு என்று யாரையும் சொல்லிவிடலாம். குற்றமில்லை. நீ சொன்ன உணர்ச்சி இருக்கிறதே, உளம் பார்த்துக் களம் பார்த்துச் சொல்லவேண்டும். (இருவரும் சிறிது நேரம் பேசாதிருத்தல்) கடற்கரை வானொலியில் பின்வரும் பாடல் கேட்கப்படுகின்றது. பேசாமல் இருப்பது பெருமையோ கூசாமல் இருப்பது குடிமையோ ஏசாமல் இருப்பது எளிமையோ - என்று சொல்வது குற்றமா நற்றமா? நெருக்கம் எல்லாம் நிலையில்லை வருத்தம் எல்லாம் வழியில்லை பொருத்தம் எல்லாம் புணர்வில்லை - என்று சொல்வது குற்றமா நற்றமா? புல் வளர்குது பொறுப்போடு நெல் வளர்குது நினைவோடு கல் வளர்குது கனிவோடு - என்று சொல்வது குற்றமா நற்றமா? திருமேனி : (வானொலிப் பாடலைக் கேட்டுத் தன் பையில் இருந்த மிட்டாய் ஒன்றை அவளுக்குக் கொடுத்து இன்னொன்றைத் தான் தின்று) ஒன்றுபட்ட உள்ளங் களோ பேசத் தேவையில்லை. வேறுபட்ட மனங்களோ பேச விரும்புவதில்லை. சேயிழை : (மிட்டாய்த் தாளைப் பார்த்து) தாளே! நாங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தோர் என்று அவர் பைக்குள் இருந்த நீயாவது சொல்லுவாயா? திருமேனி : (தன் மிட்டாய்த் தாளைப் பார்த்து) தாளே! சேயிழை வைத்திருக்கும் தாள் ஏன் உன்னைவிடப் பல நிறமுடையதாக இருக்கின்றது. நிறத்துக்கும் சுவைக்கும் தொடர்பு உண்டா? (இருவரும் சிரித்துத் தாள்களைத் தூக்கி எறிதல்) நேற்று இல்லாத காட்சிகளை இன்று பார்த்தாயா? வானத்துப் படிந்து தவழ்ந்து செல்லும் மேகங்களை. கருப்பு நிறங்களில் எவ்வளவு மென்மை வன்மை வெண்மை. கடல் அலைகளுக்கும் மேக அலைகளுக்கும் குடும்பவுறவு உண்டு. மேகங்கள் சங்ககால வள்ளல்கள் போல வீரமும் கொடையும் உடையன, இடிப்பன, முழுங்குவன, மின்னுவன, பெய்வன. ஆனால் காற்றைக் கண்டால் மேகங்கள் அஞ்சி ஓடிவிடும். கொடையை மறந்துவிடும். ஓரிடத்துச் செய்ய வேண்டிய கொடையை வேறு எங்கோ செய்துவிடும். கொடை மடம் மேகத்துக்கும் உண்டு. மேகத்தின் மெல்லிய காற்று என் மேனியிற் படும்போது, வேறு எத்தூண்டுதலும் இவ்வளவு இன்பம் தருவதில்லை. மேகத்தின் மென் துளிகள் என் மெய்யிற் படும்போது, வேறு இன்பத் துளிகளை நான் மதிப்பதில்லை. மலைமேல் படிந்திருக் கும் மேகங்களைக் காட்டிலும் கடலுக்கு மேலே பரவிச் செல்லும் மேகங்களே குளிர்ச்சியுடையன. ஆடையை நனைக்காது வீசும் மேகத் தூறல்கள் இன்ப ஊறல்கள். சேயிழை : இம்மேகத் தொடர்ச்சிகளை மகளிர் கருங்கூந்தலுக்கு ஒப்புச் சொல்வர் புலவர்கள். திருமேனி : சரிதான். பழம் புலவர்கள் பழங்கால மகளிர் கூந்தல் களைப் பார்த்துச் சொல்லிய பழைய இலக்கிய உவமை. சேயிழை : இக்காலப் புலவர்கள் இக்காலப் பெண்களின் கூந்தலைப் பாடவில்லையா? திருமேனி : பண்டைப் புலவர் அக்காலப் பெண்களின் இடையைப் பாடாததுபோல இற்றைப் புலவர்கள் இக்கால மகளிரின் கூந்தலைப் பாடுவதில்லை. (சிறிது தயங்கி) உன்போன்ற சில நங்கையர்களின் கற்றைக் கூந்தல்கள் புறநடை. சேயிழை : மேகம் கூந்தலின் கருநிறத்துக்குச் சொல்லிய உவமை. நீளம்பற்றிப் பேச்சில்லை. திருமேனி : (சிரிப்பாக) இது நீளமாகப் பேசக்கூடிய பொருளும் இல்லை. இலக்கிய உலகில் புகுந்துவிட்டால் புலவர்கள் நம்மை வீடுபோக விடமாட்டார்கள். சேயிழை : (குறும்பாக) நேற்றுப்போல் நாளை ஆகிவிடக் கூடாது. (இருவரும் ஓரிடம்வரை சேர்ந்து சென்று அப்புறம் பிரிந்துபோதல்) சேயிழை : (திரும்பிச் செல்லும்போது தன்னுள்) என்ன புதில் இவர். இதற்குமேல் ஒரு பெண் வெளிப்படையாகவோ குறிப்பாள்? என்மேல் காதல் அவர்க்கு உண்டா என்பது அவர் சொல்லால் புரிந்துகொள்ள முடியவில்லையே. சேயிழை என்று பெயரைப் பெயரைச் சொல்லுகின்றா ரேயன்றி, நான் எதிர்பார்க்கும் அகச் சொற்கள் அவர் மலர்மொழியாகவில்லையே. (தனக்குள் நாணமாக) அவ்வாறு இருக்கும்போது, என் வாய் இன்ப விளிகளைச் சொல்ல நினைத்தும் விழுங்குகின்றது. இயற்கையில் ஈடுபடுகிறார். நல்லது. என்னையும் ஈடுபடுத்துகின்றார். மிக நல்லது. காதலும் இயற்கை, ஒரு பேரியற்கை என்பதை நான் எடுத்துச் சொல்வது பெண்மையாகாது. என்பால் ஈடுபாடு காட்டுங்கள் என்று அலைகளும் மேகங்களும் கேட்கவில்லையே. ஈடுபாடு என்பது தானே நீரூற்றுப்போலத் தோன்றவேண்டிய உணர்ச்சி. நான் செல்வன் மகள் என்பது அவர் பின்வாங்குவதற்குக் காரணமாக இருக்கலாமோ? செல்வன் மகளேயன்றிச் செல்வ மகள் இல்லை நான். இப்பருவத்தில் எனக்குக் காதல் வறுமை கூடாது. இவருடைய காதலுக்கு வறுமைப்படவும் ஆயத்தம். முதல்நாள் தொடர்பில் கார்விட்டு நடந்தேன். இனி அவர் தொடர்புக்கு எதையும் விடப் பழகுவேன். ஆனால் அவர் உள்ளம் என் உள்ளமாவது எப்போது? எனக்கு இயற்கையில் இன்னும் ஈடுபாடு பெருகினால், ஒத்த உணர்ச்சியாள் என்று அவர் மதித்தாலும் மதிக்கலாம். ஒன்று புலனாகின்றது. புலனாகின்றது என்று நான் கருதிக்கொள்கின்றேன். என் வரவு நாளும் அவரைக் கடற்கரைக்கு வரச்செய்கின்றது. அருகிலிருந்து பேசச் செய்கின்றது. சிரிக்கச் செய்கின்றது. மிட்டாய் கொண்டுவரச் செய்கின்றது. இவையெல்லாம் காதலின் அரும்புகள் இல்லாமல் என்ன? நாளை என்ன கொண்டு வருகின்றார் என்று பார்ப்போம். முதல் நாள் கடலை. இன்று மிட்டாய். நாளை கற்கண்டாக இருக்கலாம். காதலாகவும் இருக்கலாமே. (வீசியெறிந்த மிட்டாய்த் தாள்களை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டவள் அவற்றில் யாதும் எழுதப்பட்டுள்ளதா என்று பார்க்கின்றாள். இரு மான் உருவங்கள் இருந்தன. மகிழ்ச்சியோடு மறுபடியும் பேணி வைத்துக்கொண்டு வீடு சென்றடைகின்றாள்). திருமேனி : (சென்றவன் மறுபடியும் கடற்கரைக்கு வந்து தனியே கொஞ்ச நேரம் இருந்து) சேயிழை நல்லவள், களங்கமிலி. என்போல அவளும் உலகம் புரியாதவள். நான் இப்போது புரிந்துகொண்டு வருவதுபோல அவளுக்கும் சில நாளில் புரிந்துவிடும். குமரப் பருவம் எப்படி வாழவேண்டும் என்று எண்ணுகின்ற அறிவுப் பருவம் இல்லை. வாழ்க்கைக்கு யாரைப் பற்றலாம் என்று விரையும் துடிப்புப் பருவம். விழிப்பாக இருக்கவேண்டிய பருவம் என்று அப்பருவத்தார்க்கு அப்போது புலப்பட மாட்டாது. கொடி பக்கத்துள்ள எந்த மரத்திலும், ஆம் பட்ட மரத்திலும் ஊன்றிய கம்பிலும் படரும். மரமும் எந்தக் கொடியும் படர இடங்கொடுக்கும். இது முதலுறவு. சேயிழை செல்வ மகளாக இருந்தும் எளியவள். ஓரிரு சமயம் கடந்து சொல்லி அவளைப் புண்படுத்திவிட்டேன். முதல் நாள் ஆடம்பரமான உடையணிந்து காரில் வந்தாள். இன்று காரை விட்டுவிட்டு ஓரிரு கல் நடந்து, மென்னிறம் கலந்த எளிய உடை உடுத்தி இல்லறப் பெண்ணுக்கு உரிய இயல்பில் வந்தாள். வழக்கம்போல் கையில் சிறுபை வைத்திராது, இறையனார் அகப்பொருள் நூலை எடுத்து வந்தாள். இல்வாழ்வுக்குச் சேயிழை போன்ற ஒரு செல்வி கிடைக்கப்பெற்றால்.... (அலைகளைக் கிட்ட நெருங்கிக் கணுக்கால் அளவு அலையில் நின்று கொண்டவனாய்) அலையே! சேயிழையோடு உடனிருந்தமையின், உன்னை இயற்கை மனத்தோடு காண முடியவில்லை. நீயும் நான் ஒரு பெண்ணுடன் இருந்த பெற்றி நோக்கி, என்னை நெருங்காமல் தள்ளியே நின்றுகொண்டாய். அத்தொடர்பு இடைத் தொடர்பு. நீயோ முதலும் நடுவும் முடிவும் இல்லாத் தொடர்பு. உன்னை அலை என்று சொல்லலாமா? உப்புப் போட்டுத் தின்னுகின்ற ஓரினம் மனித இனம். உப்பினை வழங்குகின்ற அலைத்தாயே! என் வாழ்வில் உப்புக் குறையுமா? முழுதும் உப்பாகிப்போமா? இல்லை, விளம்பரத்தால் யாதொரு கேடும் தொடராது அளவான உப்பாக இருக்குமா? எவ்வாறு இருப்பினும் இருந்துபோக. உன்னைப் பார்க்கும்போதென்ன, நினைக்கும்போதுகூட, கடற்பரப்பில் நீ எவ்வளவு நிலையாக இருந்து களித்து ஆடித் தழுவுகின்றாயோ, அவ்வளவு எனக்கும் நிலப்பரப்பில் நிலை வாழ்வு உண்டு. வாழ்வில் நீயும் ஓய்வுகொள்ளாய். நானும் ஓய்வென்ன, சாய்வும் கொள்ளேன். வாழ்வு புரியாத சில நல்லுடம்புகள் உன் மடியில் வந்து வீழ்ந்து உனக்குப் பழியை உண்டாக்குகின்றன. அதனால்தான் நீ என்னமும் செய்துவிடுவாயோ என்று அஞ்சி மக்கள் கரையி லேயே வந்து இருந்து அப்படியே எழுந்து எழுந்து புறங்காட்டிப் போய்விடுப. நான் உனக்குப் பழி கூட்டமாட்டேன். தன் இயற்கை கெட்டான், இன்னொன்றின் இயற்கையை நுகர முடியாது. என் இயற்கையை விடாதே உன் இயற்கையில் நான் ஈடுபட்டிருக்கிறேன். சமமாகவே உன்னோடு பழகுகின்றேன். கடற்கரை அலைகள் கடலின் திருவடிகள். ஆதலின் அடியள வில் நின்று நின்னோடு சமமாக உறவாடுகின்றேன். சேயிழை யொடு பழகுவதனால் எனக்குப் பழி வரலாகாது. அப்படியொரு பழிப்பாடு வருமானால் உன் பார்வையில் நிகழ்ந்தது எனவும் நீயும் துள்ளிக் குதித்து உதவி செய்தாய் எனவும் உன்னைப் பழியார்களா? (தான் கொண்டுவந்த எலுமிச்சம்பழத்தை வாய் முத்தமிட்டுத் திரைக்கையில் கொடுத்துவிட்டுச் செல்கின்றான்) காட்சி 9 கடற்கலை : மாலை. உப்பங்கழியின் பக்கம் மக்கள் நடமாட்டம் குறைந்த இடம். பட்டம் விடுகின்ற பள்ளிச் சிறார்கள் ஒரு சிலர். மீன் நாற்றம் குறைந்த பாங்கர். மாலைச் செங்கதிரின் சூடில்லாத ஒளி. மணல் பரந்த அகன்ற இடம். சிற்சில காக்கைகள். நாரைகளும் சில. கழித் தண்ணீரில் ஓட்டமில்லை. நடுவிடத்து அடும்புகள். திருமேனியும் சேயிழை யும் அவ்விடத்து எதிர்பாராத பார்வை. திருமேனி : சொல்லி வைத்தாற்போல இருவரும் ஒரே நேரத்தில். சேயிழை : உப்பங்கழிப் பாதையில் இன்று வருகின்றோம். திருமேனி : அது மாத்திரம் இல்லை. ஒருவர் முன் ஒருவர் பின் என்பதில்லாமல் இருவரும் ஒரே நேரத்தில் வாய் திறந்து கேட்கின்றோம். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது. சேயிழை : இது பழைய மொழி. குறுக்கே வந்தது என்றால் இக்காலத்தில் இடையூறு செய்ய வந்தது என்று பொருள் செய்வார்கள். (சிந்தனை செய்வாள்போல) நமக்கும் பொருத்தமாக இருக்கவேண்டுமே. கும்பிடப் போன தெய்வம் கொள்ள வந்ததுபோல. திருமேனி : (கைதட்டி) நான் உன்னை என்னமோ என்று நினைத்தேன். பழமொழி என்ன, யார் எழுதிய எந்தக் கவிதையையும் காலத்துக்கேற்பக் கைவைக்கும் திறம் உனக்கு இருக்கிறது. சேயிழை : அப்படி நீங்கள் பயப்பட வேண்டாம். பெயர் தெரிந்த வர்களின் கவிதைகளில் ஒன்றும் செய்ய மாட்டேன். பழமொழிகள் அப்படியில்லை. இதுவும் ஒரு பழமொழி யாகிவிடும். திருமேனி : பழமொழியின் பின்பகுதியை உனக்கேற்ப ஒழுங்குப் படுத்திவிட்டாய்; முன் பகுதியிலே எனக்கு ஒரு ஐயப்பாடு. சேயிழை : (ஆர்வமாக) சொல்லுங்கள். தீர்த்து வைக்கிறேன். ஒரு பாதியைச் சரிப்படுத்திய நான் தான் இன்னொரு பாதியையும் சரிப்படுத்த வேண்டும். திருமேனி : கும்பிடபோன தெய்வம் என்றால் தெய்வம் யாரையும் கும்பிடப் போச்சா? சேயிழை : (சட்டென) அங்ஙனம் போகிற தெய்வங்களும் உண்டு. மதுரை மா தெய்வம் கற்புப் பெருந்தெய்வமான கண்ணகியைக் கும்பிடப் புறப்பட்டதே. திருமேனி : சரி. ஒரு ஐயம் தீர்ந்தது. இன்னொரு புதிய ஐயம். இந்தப் பழமொழி நமக்கு எப்படிப் பொருந்தும்? சேயிழை : இவ்வளவு நேரம் தெய்வங்கள் நின்று கொண்டிருக்க முடியுமா? சந்தித்த இந்த இடத்தில் இருந்து ஐயமெல் லாம் தீரப் பேசுவோமே. (இருவரும் அமர்ந்தபின்) ஐயம் தீர்க்கவா? நேற்றுக் கடற்கரையில் நான் கும்பிட, வீட்டுக்குப்போன (அவனைச் சுட்டிக் காட்டி) தெய்வம் இன்று இந்த இனிய உப்பங்கழியில் என்னைக் கொள்ள வந்தது. திருமேனி : நான் ஒரு விளக்கம் சொல்லவா? யாரையோ கும்பிடப்போன பெண் தெய்வம் அவர்களைக் காணாமல் குறுக்கும் மறுக்குமாகத் திரிகின்றது. சேயிழை : தெய்வத்துக்கு எந்த விளக்கமும் செய்யலாம். எல்லா விளக்கத்தையும் ஏற்பதுதானே தெய்வம். இவ்வாறு இலக்கியச் சுவையாக உரையாடுவதில் ஆறாவது இன்பம் பெருகுகின்றது. திருமேனி : ஏழாவது இன்பம் ஒன்றிருக்கின்றது, தெரியுமா? அதுதான் கவிதையாகவே பேசுதல். கடற்கரையில் எனக்குக் கவிதை மளமளவென்று வரும். சேயிழை : தாலாட்டும் ஒப்பாரியும் பாடும் பெண்ணினத்துக்கே கவிதை பிறவித் தொழில். அதனால்தான் பெண்ணுக்கும் பாட்டுக்கும் காரிகை என்று பெயர். இருகுரற் பாட்டு திருமேனி : அலையென்று சொல்லலாமா சேயிழை : நம் நெஞ்சின் வலை யென்று சொல்லலாமா? திருமேனி : கடலைப்பார் மனம் விரியும் கரையைப்பார் கலை புரியும் சேயிழை : மனம் விரிந்தால் மணம் பொங்குமே கலை விரிந்தால் கதை நீளுமே திருமேனி : ஒடுங்கி நடுங்கி ஒதுங்கி வரும் ஓரலை இரைந்து கரைந்து மறைந்து வரும் ஈரலை முனைந்து கனைந்து சினந்து வரும் மூவலை சேயிழை : ஒதுங்கி வருதல் உயர்மகள் தன்மை மறைந்து வருதல் மதுமகள் தன்மை சினந்து வருதல் சிறுமகள் தன்மை திருமேனி : இல்லாரும் இருக்கலாம் இயற்கையோடு இணையலாம் கல்லாரும் கற்கலாம் காற்றினோடு கலக்கலாம் சேயிழை : நல்லாரும் நடக்கலாம் நாணமாக நகைக்கலாம் எல்லோரும் வாழலாம் என்றுகழி அழைக்கலாம் திருமேனி : இருந்தால் என்னவரும்? சேயிழை : இணைந்தால் இன்பம்வரும். திருமேனி : கற்றால் என்னவரும்? சேயிழை : கலந்தால் ஒருமைவரும். திருமேனி : நடந்தால் என்னவரும்? சேயிழை : நகைத்தால் ஊடல்வரும் திருமேனி : வாழ்ந்தால் என்ன வரும்? சேயிழை : வாழையடி வாழைவரும். திருமேனி : (தன் காலடியில் வந்து விழுந்த ஒரு மீனைப் பார்த்து) மீனாய்! உன்னை நான் கைதொட்டுப் பிடிக்க மாட்டேன். உன் பிறழ்ச்சியைப் பார்த்தளவில் இன்புறும் திறம் எனக்குக் கைவந்தது. இயற்கையை நுகரும் சில கொலையாளிகள் இருக்கின்றனர். பூவைப் பறித்து நுகர்வர். கொடியை அறுத்து நுகர்வர். செடியை ஒடித்து நுகர்வர். கொழுந்தினைக் கிள்ளி நுகர்வர். இதழைப் பிய்த்து நுகர்வர். மானை இரலையினின்று பிரித்து மகிழ்வர். கிளியைக் கூண்டில் வைத்து மகிழ்வர். நாயைப் பூட்டி மகிழ்வர். இயற்கையை அதன் இயற்கை நிலையில் துய்ப்பதே இயற்கையின்பம். மனிதன் கைபட்ட இயற்கை உரிமை இழக்கும். உரிமை இழந்த பொருள் உண்மை யின்பம் அளியாது. மீனே! துள்ளாதே, கலங்காதே, பிறழாதே, பதறாதே. நான் இயற்கையை இயற்கையாக வைத்து மதிப்பவன். சேயிழை : (குறுக்கிட்டு) மீனே! இவரோடு பழகிய நானும் இயற்கையை மதித்துக் கொண்டிருப்பவள். நீ உன் இனத்தோடு எங்கள் பக்கத்து இருந்தாலும், மடியில் வந்து விழுந்தாலும் எதுவும் செய்யமாட்டோம். நீரில் இருப்பதுபோல எங்கள் நிழலில் இருக்கலாம். (மீன் நீதில் குளித்துவிட்டது) திருமேனி : இது உளவறிய வந்த மீன்போலும். நம் அன்புச் சொல்லை மற்ற மீன்களுக்கு அப்படியே போய்ச் சொல்லுமா? மக்கள் முன்னே கட்சியினர் தேர்தல் காலத்துத் திரித்துச் சொல்லுவதைப் பின்பற்றுமா? சேயிழை : எல்லாம் ஓடுவதைப் பார்த்தால், எவ்வாறு சொல்லியிருக்குமோ? நீங்கள் ஓர் இலக்கியப் புலவனாக இருந்தால் எப்படிக் கருதுவீர்கள்? திருமேனி : இந்தக் கயல் மீன் என்னை மட்டும் பார்த்தளவில் இங்கோர் ஆடவன் வெட்கமில்லாமல் பெண் மீன்கள் விளையாடும் அருங்கழிக்கு வந்திருக்கின்றானே என்று ஓடி ஒளிந்திருக்கும். சேயிழை : என்னை மட்டும் பார்த்திருந்தால் ... திருமேனி : மற்றை மீன்களையும் குஞ்சுகளோடு கொண்டு வந்து மொய்த்து உன் மடியிலும் மார்பிலும் கையிலும் தவழ்ந்து விளையாடி, கண்ணோடு கண் ஒத்திட்டுப் பார்த்து உளமகிழ்ந்து உன்னை வீட்டுக்குப் போக விடாது. தங்கள் நீரக இல்லத்துக்கு அழைக்கும். சேயிழை : (இதுதான் தக்க சமயம் என்று எண்ணியவளாய்) தன் வீட்டுக்குப் போய்ச் சேருவதுதான் பெண்ணின் வாழ்வு. (தான் கொண்டு வந்திருந்த கற்கண்டினை அவன் கையில் கொடுத்து) அந்த வீடு தங்கள் வீடாக வேண்டும் என்பதுவே என் ஆசை. திருமேனி : (இயல்பாக) எங்கள் வீட்டுக்கு யாரும் வரலாம். அதுபோல நீயும் வரலாம். ஒருநாள் எங்கள் வீட்டுக்கு நீ வரத்தான் போகிறாய். (சேயிழை மிகவும் மகிழ்ச்சியடைதல்) சேயிழை : (தானும் ஒரு கற்கண்டை வாயில் போட்டுக் கொண்டு) என் உள்ளத்தில் உள்ளதை .... திருமேனி : நன்றாகச் சொல். உள்ளதைச் சொல்வதால் தான் உள்ளம் என்று பெயர். இவ்வளவு பழகும் என்னிடம் சொல்லாமல் யாரிடம் நீ சொல்வாய். நீ சொல்ல நான் கேட்கக் கடமைப்பட்டவன். சேயிழை : (கைகூப்பி) தவறாக நினைத்துக்கொள்ளக் கூடாது. அப்படி நினைத்துக்கொள்ள மாட்டேன் என்று உறுதி சொல்லுங்கள் என்று எனக்குக் கேட்கத் தோன்றுகிறது. திருமேனி : சொல்வதெல்லாம் உறுதி தானே. என்னிடம் சொல்ல உனக்கு என்ன அச்சம். (சிந்தனையில்) சரி. உன் தெளிவுக்கு இதுவரை செய்யாத உறுதியும் தருகின்றேன். தெய்வத்தின்மேல் ஆணை செய்யவா? அலைமேல் ஆணை செய்யவா? நின் பெற்றோர், என் பெற்றோர்மேல் ஆணை சொல்லவா? மனச்சான்றுமேல் ஆணைப்படுத் தவா? சில நாளாக என் அன்பையெல்லாம் கொள்ளை கொள்ளுகின்ற ஒரு பொருள்மேல் ஆணை இடவா? சேயிழை : (சட்டென) இறுதியிற் சொன்ன பொருள்மேல் உறுதி செய்யுங்கள். நம் இருவர்க்கும் நல்வாழ்வு. திருமேனி : (இயல்பாக அவள் கைமேல் தன் கையை வைத்து) தங்கை சேயிழையாகிய உன்மேல் ஆணை. (ஆ! என்று புலம்பிப் பெருமூச்சுவிட்டு அழுது மயங்கிக் கரையில் விழுகின்றாள் சேயிழை. விழுந்து தன்னையறியாமலே உப்பங்கழியில் சரிகின்றாள்) திருமேனி : (கலங்கிய நிலையில் தன்னுள் மெதுவாக) சேயிழை கேட்ட உறுதியைக் கொடுத்தபின், ஏன் இவ்வாறு விம்முகின்றாள். (பக்கம் பார்த்து) ஏதும் நீர்ப்பாம்பு வாய்வைத்துவிட்டதா? சிறு பூச்சி எதுவும் ஊசிமுனை போல் குத்திவிட்டதா? விளையாட்டுப் பேச்சில் யாதும் வினைக்குறும்பு விளைந்து விட்டதா? இக்காலத்து அடிக்கடி செய்தித்தாளில் பார்க்கிறோமே மாரடைப்பு என்று. (அவளுக்கு கேட்கும் நிலையில்) மருத்துவரை முதலில் அழைத்து வரவா? தந்தையை அழைத்து வரவா? சேயிழை : (கண் மருண்டு விழித்து, திருமேனியைப் பார்த்த நிலையில்) நான் தங்கை, என் தங்கை, அருமைத் தங்கை, தங்கைமேல் உறுதி எதற்கு? (மீண்டும் புலம்பி மருளுதல்) திருமேனி : தங்கை என்ற சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லுகிறாளே. இவளுக்குத் தங்கை யாரும் இருக்கிறார்கள் போலும். அத்தங்கைக்கு என்ன ஆயிற்று என்று கலங்குகின்றாள். தங்கை என்று மறுபடியும் நான் சொன்னால் என்னாமோ? (கலங்கிய நிலையில் சேயிழை முகத்தில் தண்ணீர் தெளித்து உப்பங்கழியை விடுத்து முன்பு இருந்த கடற்கரைப் பாங்கர் நடத்திச் செல்லுதல். தான் கொண்டு வந்த சிறு எலுமிச்சம்பழத்தை அவனிடம் கொடுத்தல். சோர்ந்து நடந்து வந்த சேயிழைக்கு ஒரு தெளிவும் தெம்பும் உண்டாயின.) சேயிழை : (தன்னைச் செம்படுத்தியவனாய்) அருமை அண்ணா! திருமேனி : சேயிழை! புரிந்தும் புரியாதவனாக, புரியாதே பிரிந்தவனாக இருக்கிறேன். நாம் இருவரும் பழகக் கூடாத பருவத்து, தனித்து இருக்கக் கூடாத இடத்து, உனக்கு இவ்வாறு ஆயிற்து; யாரைக் கூப்பிடுவது, யாரிடம் சொல்வது ஒன்று புரிகிலேன். உப்பங்கழியில் கலகலவென்று இலக்கியச் சுவையாக உரையாடிய போது, ஏன் ஏற்பட்டது? உனக்கு எப்போதாவது ஒருமுறை இப்படி வருமா? இதுதான் முறையா? சேயிழை : திருமேனியண்ணா! இது முதன் முறை. இதுதான் நடுமுறை. இதுவேதான கடைசி முறை. இனி உங்களிடம் உறுதி கேளாமலே எதுவும் பேசலாம். திருமேனி : நான் வாழ்க்கையில் உறுதியென்று சொன்னது இதுவே முதன்முறை. அப்படி நீ மறுபடியும் உறுதி கேட்டால், தங்கையென்று நானும் கொடுத்தால், அந்த இடமாவது உப்பங்கழி, இது கடல், நீ என்னாவாய். ஏதோ ஒரு முறையில் பிழைத்துவிட்டாய். சேயிழை : மனைவி, காதலி என்று அழைக்க ஒருவர் இருப்பார். தங்கை என்று சொல்ல ஓர் அண்ணன் கிடைப்பது அரிது. அப்பேற்றை இன்று நீங்கள் அருளினீர்கள். இந்த உப்பங்கழி எனக்கு உடன் பிறப்பு நல்கிற்று. திருமேனி : (இடைமறித்து) அன்று திருமணக் கழகத்தில் நன்றி கூறும்போதே, தங்கை சேயிழை என்று குறிப்பிட்டேன் என்று எண்ணுகின்றேன். சேயிழை : ஆம். நீங்கள் சொல்லியதைக் கூட்டத்தின் மரபு என்று பொதுப்படையாகக் கருதிக் கொண்டேன். பேசும் கூட்டத்தில் தந்தை தாய் மனைவி கொழுந்தி மாமன் மாமி யார் இருந்தாலும் பேசுபவர் யார் யார் இருக்கி றார்கள் என்ன உறவு முறை என்று பார்த்து விளிப்ப தில்லை. (சிரிப்பாக) அன்புடைய மாமனே மாமியே, அன்புடைய மனைவியே, மற்றைய உறவினர்களே, உறவில்லாதவர்களே (திருமேனியும் சிரித்தல்) என்று உறவுச் சுட்டுச் செய்வதில்லை. எல்லார்க்கும் பொதுவாக உடன்பிறப்பாளர்களே, உடன் பிறந்த தம்பிகளே, தங்கைகளே என்று விளியொற்றுமை செய்வது மரபு. திருமேனி : உன்னைக் கூட்ட மரபுப்படி சொன்னதாக நீ நினைப்பது தவறு. தங்கை என்று எண்ணியே சிறப்பாகக் கூறினேன். சேயிழை : (தெளிவு கூடினவளாய்) அண்ணா என்னைக் கண்ட நாள் முதலே தங்கள் தங்கை என்ற நினைவு தானா? திருமேனி : வேறென்ன நினைவு தோன்றும். ஒரு மனைவிக்காக எல்லாப் பெண்களையும் காதற் பார்வை பார்ப்போர் கயவர். ஒருவனுக்குத் தங்கைக் கூட்டமே உலகம் நிரம்பியது. ஓரிடத்துப் புதையல் எடுக்க உலகத்தைத் தோண்டுவார் இல்லை. ஒரு பழத்தை வாங்கும் பொருட்டு அவ்வளவு மாம்பழங்களையும் சுவை பார்ப்பார் இல்லை. இராமன் தம்பிகளாகச் சேர்த்தான். நான் தங்கைகளாகச் சேர்க்கின்றேன். உன்னைப் பார்த்த முதல் நாளன்றே, திருமணக் கழகத்தின் முதற்கூட்டத்திலே சேயிழை என்று அழைத்து இயல்பாக உன்னோடு பழகியதையும் உன் தந்தை முன்னர்க்கூட உன்னோடு கலகலவென்று உரையாடியதையும் நினைத்துப் பார். கடற்கரையில் மூனறு நாளும் நாம் இருவரும் பக்கம் பக்கம் அமர்ந்து இருந்ததைப் பார்த்த ஒரு சிலர் என்ன நினைத்தார்களோ, எதற்குச் சொன்னார்களோ, நிறந்தான் வேறு, முகச்சாயல் ஒன்று என்று சொல்லிக்கொண்டு போன சொற்களைக் கடற்காற்று வாரி என் காதில் தூற்றியது. சேயிழை : வெளிப்படையாக இனி நன்றாகக் கேட்கலாம். (சிரிப்பாக) உறுதி வேண்டியதில்லை. நான் எப்படி நினைத்தேன் என்று உங்கட்குப்பட்டது. (மீதியிருந்த கற்கண்டைப் பிதிர்த்து அண்ணனிடம் கொடுக்கிறாள்) திருமேனி : இப்போது நீ நினைப்பதுபோல் அப்போது நினைத்ததில்லை. உன் தந்தையும் உன்போல் நினைத்தி ருப்பார் என்பது எனக்கு தெரியாமல் இல்லை. சேயிழை : ஒரு பெண் நினைப்பது இது என்று தெரிந்தும், முன்னரே அகற்றியிருக்கலாமே. இவ்வளவு கழிமயக்கத் துக்கு இடம் கொடுத்திருக்க வேண்டாமே. திருமேனி : செல்வத்தங்காய், நீ இப்போது கேட்டாய் பாரு இது ஈடு இணையற்ற கேள்வி. காதலுலகின் நுட்பம் இது. பெண் ஆண் உறவின் நுட்பம் இது. சிறந்த மனவியலுக்கு உரிய கேள்வி இது. சேயிழை : ஏனண்ணா! வினாவின் சிறப்பையே பாராட்டு கின்றாய்? விடை சொல்லாமல், விடையில்லாத வினாவா இது? திருமேனி : பல்கலைக் கழகத்தில் நாம் பல தேர்வு எழுதியி ருக்கின்றோம். தேர்வறைக்குள் செல்வதற்குமுன் இது வரும் என்று உருப்போடுகிறோம். விளங்காமல் உருப் போடுவது ஒருபோதும் உருப்படாது. தேர்வு எழுதும் போது அது நினைவுக்கு வரவில்லை; தேர்வறையை விட்டு வெளிவந்தபின் அந்த உரு நினைவுக்கு வந்தது என்று வைத்துக்கொள்வோம். என்ன பயன்? எதுவும் உரிய காலத்தில் நிகழ வேண்டும். முன் வெளியிடுவது மாட்டிக் கொள்ளத்தக்க குற்றமாகும். இந்த வினாக்கள் வரும் என்று முன்னரே பலருக்குச் சொல்லி, அப்படியே வந்திருந்தால், கல்வியுலகம் என்ன நினைக்கும், தேர்வுத் தாள் கள்ளமாக வெளியாயிற்று என்று பழிக்காதா? அதுபோலத்தான் என் நிலையும். நீ நல்ல தங்கையாத லின், சரியாயிற்று. புதினங்கள் படித்த ஒரு மங்கையாக இருந்தால் என்ன ஆயிருக்கும்? அவளிடத்து இவ்வா றெல்லாம் ஒருவன் பழகிவிட்டு, மிட்டாய் அவன் கொடுக்க, கற்கண்டு அவள் கொடுக்கச் சுவைத்துவிட்டு, நீ என் தங்கை என்று உப்பங்கழியில் உளறியிருந்தான் என்றால் என்ன போக்கு ஏற்பட்டிருக்கும்? அவனை அவள் உப்பங்கழியில் குளிப்பாட்டியிருப்பாள். வன்மம் கொண்டு என்னவெல்லாமோ பறைசாற்றி அச்சுறுத்திக் காதலிக்கச் செய்து கணவனாக ஆக்கி அடக்கிக் கொண்டிருப்பாள். நீ திருமேனியின் தங்கை. சேயிழை : எனக்கு மணம் முடித்து வைக்கும் சுமை இப்போது உங்கட்குக் கூடிவிட்டது. (சிரித்துக்கொண்டு) அண்ணா இருவரோடு மூன்றாவது ஒரு தங்கை கூடியிருப்பதால், இன்னும் பெரிய விளம்பரஞ் செய்யப் போகிறீர்களா? திருமேனி : (சிரிப்பாக) விளம்பரம் தந்த தங்கைக்கு வேறு ஒரு விளம்பரம் வேண்டியதில்லை. இன்னும் விளம்பரஞ் செய்தால் தங்கையரே பெருகுவர். நான் ஒன்று கேட் கிறேன். உன் தந்தை என்ன நினைப்பாரோ? சேயிழை : கடைசிக் காலத்தில் தனக்கு ஒரு மகன் கிடைத்ததாக மகிழ்வர். முன்பின் அறியாத தன் மகளைத் தங்கையாகப் பழகிய உங்களை தன் மகனாகவே மதிப்பர். திருமேனி : இருந்தாலும் பெற்ற மகளுக்கும் வளர்ந்த மகனுக்கும் வேறுபாடு காட்டுவார் அல்லவா? சேயிழை : (நகையாக) வளர்ந்ததுதானே பிள்ளைகளுக்குத் தெரியும். காட்சி - 10 முத்தரையர் வீடு : மாலை நான்கு மணி அரையரய்யா இருக்கிறாரா என்று கொடுமுடி கேட்க வேலையாள் வந்து கதவு திறத்தல். அயர்ந்து கண்ணுறங்கிய முத்தரையர் முகங்கழுவி அறையிலிருந்து வெளியே வருகின்றார். முத்தரையர் : (கைகூப்பி) தங்களைப் பார்த்து நெடுநாள் ஊரில் இல்லையோ? வேறு ஊருக்குப் போய்விட்டீரோ என்று நினைத்தேன்? கொடுமுடி : தண்ணீர்த்தாகம். (வேலையாளைப் பார்த்துப் பெருவிரலை மறித்து வாயைக் காட்டுகின்றார்) முத்தரையர் : இருவர்க்கும் சூடான காப்பி கொண்டு வா. ஏதாவது கலப்பு இருந்தாலும் ஒரு தட்டில் கொண்டு வா. கொடுமுடி : இனிப்புக்கு அப்புறந்தானே காரக் கலப்பு சாப்பிடுவது வழக்கம். எனக்கு உடம்பில் இனிப்புக் கூடுதல் என்பது இல்லை. வடநாட்டு இனிப்புக்கள் விழுங்கினாலும் கெடுதல் வராது. முத்தரையர் : ஓடியலைந்து எல்லாவற்றையும் உண்டு செறித்து வளர்ந்த உடம்பு. கொடுமுடி : உன் உடம்புதான் என்னவாம். மருந்துக்கும் மருத்துவர்க்கும் பணங்கொடுக்காத செல்வ உடம்பு. பெரிய தனி மருத்துவர்கள் பணக்காரர்களால்தான் செல்வமாக வாழ்கின்றனர். சில செல்வர்கள் ஈட்டுவது மருத்துவர்களுக்காகவே. முத்தரையர் : உடல் நலம் மனநலம் இவற்றுக்குத்தானே செல்வம். செல்வத்தால் பலர் இருநலத்தையும் கெடுத்துக் கொள்வர். மருந்து வாங்கி வாங்கிக் கெட்ட உடலைக் காத்துக்கொள்வர். கெட்ட மனநலத்துக்கு எந்தச் செல்வமும் ஈடாகாது. கொடுமுடி : நான் பார்த்திருக்கிறேனே உன் உழைப்பை. தன் வீட்டு மெய் வேலைகள் எல்லாம் நீயும் சேர்ந்து செய்கிறாய். தனக்கு வேண்டிய நீரை இறைப்பது; தன் ஆடையை ஒலித்துக்கொள்வது; தன் படுக்கையை விரிப்பது; சுற்றுவது; முடிந்த இடங்களுக்கெல்லாம் நடந்துசெல்வது; வழியூர்திக்காகக் காத்துக்கொண்டு நின்று நின்று திரும்பி வராமல், பக்கத்து இடங்களுக்கு விறுட்டென நடந்துசெல்வது; தோட்டத்துச் செத்தை களைக் குனிந்து எடுத்து நடந்து தொட்டியில் போடுவது; சுறுசுறுப்பாக எழுவது, இருப்பது, இயங்குவது இவ்வாறு உடலை வளைத்தால் (வேகமாக) நோய் ஏழையாகிவிடும். முத்தரையர் : என்னய்யா, உடல்நல வினைஞர் போலச் சொற்பொழிவு செய்யத் தொடங்கிவிட்டீரே. கொடுமுடி : மாலை நேரம் அல்லவா? இந்த நேரம் நாட்டில் இப்போதெல்லாம் சொற்பொழிவு செய்வது, கேட்பது தானே பழக்கம். இந்தக் காலத்தில் யாரும் எதற்கும் பேசுகிறார்கள்? எடுத்ததற்கெல்லாம் சொற்பெழிவுப் பாணி. பெட்டிப் பாம்பாட்டி, கைவரிப்பார்ப்பி, குடுகுடுப்பி, பரிசுச்சீட்டு விற்பி, மாலைப் பொருள் விற்பி எல்லோரும் எவ்வளவு பகர்கின்றார்கள். முத்தரையர் : (குறும்பாக) நீர் அந்த இனத்தைச் சேர்ந்தவர் இல்லை? கொடுமுடி : நான் கொஞ்சமும் பெரிய இனத்தைச் சேர்ந்தவன். (தற்பெருமையாக) இந்த நாற்காலிமேல் கிடக்கிற திருமண அழைப்பிதழ் எல்லாம் (தன்னைச் சுட்டிக் காட்டி) இவர் முடித்தவை. இன்னும் இந்த ஆவணி ஐப்பசியில் பல மணங்களை முடித்து வைத்திருக்கிறேன். தெல்லாம் இந்த வாய் வளம். முத்தரையர் : பெண்ணுக்கு மாப்பிள்ளை, மாப்பிள்ளைக்குப் பெண் வரும்படி செய்கிறீர். கொடுமுடி : அதனால் (மகிழ்ச்சியாக) எனக்கும் நல்ல வரும்படி. உனக்குச் சற்று ஓய்வு இருந்தால் என் முடிச்சு, பிணைப்பு, இணைப்பு எப்படி என்று சொல்லலாம் என நினைக்கி றேன். என்னடா பறையடிக்கிறான் என்று நினைத்துக் கொள்ளாதே. அதிகமாக இல்லை. நாலிரண்டு சொல்லு கிறேன். முத்தரையர் : திருமணக் கழகம் வைத்திருக்கின்றோம். உம்முடைய சில பயில்வுகளும் தெரிதல் நல்லது. சும்மா சொல்லுவீரா சொன்னதற்கு ஏதும் ..... கொடுமுடி : அவ்வகையில் ஒன்றும் இல்லை. சொல்லி முடித்து நான் வீட்டுக்குப் போகும்போது இன்னொரு முறை காப்பி போதும். (வேலையாளைக் கூவி உடனே ஒரு காப்பி கொடுக்கச் செய்தல். பாதியைக் குடித்துக் கீழே வைத்துக்கொண்டு) முப்பது வயது வரை ஒரு பெண்ணுக்கு மணப்பேச்சு இல்லை. தகப்பன் இறந்து நாளாச்சு. தாய்க்கு எழுபது வயது. வீடு வாசல் இல்லை. கூடப்பிறந்த அண்ணன் ஒருவன். எங்கே இந்தப் பாரம் தன்மேல் விழுந்து விடுமோ என்று மனைவியம்மாள் சொல்லைக் கேட்டுப் பிறந்த வீட்டைத் துறந்துவிட்டான். (ஒரு சுண்டுச் சுண்டி) இந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணம். எண்பது ரூபாய் சம்பளத்தில் மளிகைக் கடையில் ஒருவன் வேலை பார்த்தான். முத்தரையர் : (குறுக்கிட்டு) எண்பது ரூபாயா எண்பது வயதா? கொடுமுடி : வயது பாதிதான். இரண்டு நாளைக்கு ஒரு முறை கடையில் அவன் மாத்திரம் தனித்து இருக்கும்போது காசுகொடுத்துச் சிறு மளிகை வாங்கச் சொன்னேன். அந்தப் பெண் இளமுருகி துணிச்சலாகப் போய் வாங்கி வந்தாள். அவன் மனம் குளிர்ந்தது. விலை குறைத்து அளவுக்கு மேல் மளிகை வழங்கினான். மளிகை வரவர மணக்கையாயிற்று. பதிவுத் திருமணம் நடந்தது. அரசிட மிருந்து கலப்புத் திருமணப் பரிசும் கிடைத்தது. முத்தரையர் : இதனால் உமக்கென்ன வரும்படி? கொடுமுடி : அவ்விதம் சொல்லக் கூடாது. ஊருக்கு உழைப்பது ஊதியம். கடவுள் நினைவில் என் பெயர் இருக்கும். (சிரிப்பாக) இப்போது அந்தக் கடையிலிருந்து நமக்கு வேண்டிய மளிகை முறையாக வந்து கொண்டிருக்கின் றது. திருமணத்துக்கு உரிய வயது வந்தவர்களை நெருங்கிப் பழக விட்டுவிட்டால் நடவாத மணமெல்லாம் நடந்துவிடும். நிறம் பணம் படிப்பு எல்லாம் கூட்டுறவுக்குக் குறுக்கே நில்லாது. இதுதான் நான் கையாளும் மறை நேர் வழி. முத்தரையர் : (இயல்பாக) நீர் ஒரு பெரிய சமூகத் தொண்டர். பலர் செய்ய முன் வராத காரியத்தை விளம்பரம் இல்லாமல் செய்துகொண்டு வருகிறீர். உம்முடைய படத்தை நல்ல செய்தித்தாளில் வெளியிட இசைவு தாருங்கள். கொடுமுடி : (கைம்மறித்து) இப்போது அவ்வளவு புகழ் வேண்டாம். என் வட்டாரத்துக்குள் எனக்கு நல்ல விளம்பரம். இன்னும் ஒரு முடிச்சைச் சொல்லுகிறேன், சிறு கதையாகத் தோன்றும். இருபத்தெட்டு வயது இளைஞன். அழகும் பரவாயில்லை. செல்வக் குடியில் பிறந்தவன். அடிக்கடி படக்காட்டி வருவான். ஒரு படத்தை நடித்தவர்கள்கூட அவ்வளவு முறை பார்த்தி ருக்க மாட்டார்கள். முதல்நாட் படத்துக்கு முதற்சீட்டு வாங்கி முதலில் போய்க் கொட்டகைக்குள் முதற்காலியில் உட்கார வேண்டும் என்பது அவன் கொள்கை. யாரைப் பார்த்தாலும் ஒருவருடைய ஆசை வேகம் எல்லாம் எதிலே நிற்கிறது என்று நான் ஒரு பார்வையிலே கண்டுகொண்டு விடுவேன். முத்தரையர் : இது உம்முடைய தனித்திறம். கொடுமுடி : (கொண்டுவந்து வைத்த உப்பு நீரத்தைக் குடித்துக் கொண்டு) குட்டிச் சுவரும் எட்டிப் பார்க்க உதவும். திருமணம் ஆகவேண்டிய பெண். அம்மைத் தழும்பு முகம், உடைத்த பருப்பளவு; ஆனால் ஏழெட்டுக் குழிகளே. நிறம் தேசிய நிறம். அந்த இளைஞன் சீட்டு எடுக்கத் திணறு வதைப் பார்த்து, நான் வேண்டுமானால் எனக்குத் தெரிந்த இந்தப் பெண்ணை எடுத்துத்தரச் சொல்கின் றேனே என்று மெல்ல ஒரு சொல் சொல்லிவிட்டேன். அவன் என்ன நினைத்தானோ? திரைப்படமே இன்பம். திரைச் சீட்டு பெண் வாங்கித் தந்தால், குளிரம் இட்ட குடிநீராச்சு என்று மகிழ்ந்திருப்பான். அவளும் ஒரு சீட்டு வாங்கி நாணிப் புன்முறுவலோடு நீட்டினாள். அகமும் அகமும் முகப்பதுபோல இருவர் நகமும் நகமும் இணைந்தன. புதுப்படத்துக்கு முதல்நாள் அவன் வந்து தீருவான். இவளையும் போய் நின்று வாங்கிக் கொடுக்கச் சொன்னேன். சில நாள் கழித்து அவனே இரண்டு சீட்டுத் தன் காசில் வாங்கச் சொல்லி அவளிடம் ஒரு சீட்டுக் கொடுப்பான். நகம் தொட, நுனி தொட, விரல் தொட என்று கதை காதையாயிற்று போங்க; அவள் இரு சீட்டும் வாங்கித் தருவாள். இவன் இரண்டினையும் தன்னிடம் வாங்கிக்கொண்டு உடன் அழைத்துப்போவான். ஏனைப் பேச்சுக்கள் இடைக்காலப் புலவர் பாடுவதற்கு உரியவை. அந்தச் சங்கப் புலவன் ஒருவன் சொன்னானே செம் மண்ணில் பெய்த மழை நீர் போல ஆயிற்று. முத்தரையர் : ஆயிற்று என்ன? நீர் ஆக்கி வைத்தீர். சங்கத் தமிழ் அதற்கெல்லாம் உதவுகிறதா? கொடுமுடி : சங்கத் தமிழ் திருமண வேதம். வயது வந்தவர்கள் இருவர் தினைப் புனத்திலோ, மேய்ச்சற் களத்திலோ, கழனிப் பக்கத்திலோ, உப்பங்கழியிலோ தனியாகக் கண்டால் இயற்கைப் புணர்ச்சி கூடிவிடும் என்று இருபது ஆண்டுக்கு முன் ஒரு புலவர் எடுத்துச் சொன்னது என் கொள்கையாயிற்று. இளமை புரிந்துவிட்டது. இந்த வழியில் நான் தோல்வி கண்டதில்லை. (இங்கே பாருங்கள் நான் முடித்துவைத்த திருமண அழைப்பிதழ்களை என்று வண்ண வண்ணமாகச் சீட்டுக்கட்டுப் போலக் காட்டுதல்) முத்தரையர் : (மனம் மெலிந்து மெல்ல) என் பெண்ணு சேயிழைகூட இப்போதெல்லாம் கடற்கரைக்குப் போய் வருகிறாள். கொடுமுடி : நல்ல பழக்கம். வீட்டிலேயிருந்து வீடு கிடைக்குமா? மனம் வைத்தால் உங்கள் பெண்ணுக்கு ஒரு நாளில் முடிக்கலாம். நாளும் இடமும் விட்டு அழைப்பு அடித்து விடுவோமே. (மாடிப்படியிலிருந்து சேயிழை வருதல்) முத்தரையர் : எங்கேயம்மா? கடற்கரைக்குப் போகிறாயா? சேயிழை : (இதுதான் சமயம் என்று எண்ணியவளாய்) அண்ணன் வந்திருப்பார். இயற்கைப் பாடம் சொல்லித் தருவார். முத்தரையர் : அது யாரம்மா அண்ணன். இந்த வீட்டுக்கு நீ ஒரு குழந்தை தானே! சேயிழை : (இரண்டு விரலைக்காட்டி) அவர் தானப்பா. திருமேனி யண்ணன். இந்த அண்ணனுக்குக் கடலே விருப்பம்; கடலலையே விருப்பம்; கடல் மேகமே விருப்பம். இதையெல்லாம் கிட்ட இருந்து எனக்குச் சொல்லிக் கொடுப்பதிலே விருப்பம். இமை கொட்டா மல் இருந்து எல்லாவற்றையும் கேட்பதிலே விருப்பம். இருவருக்கும் ஒரே விருப்பம். இது என் வாழ்க்கையில் பெரிய திருப்பம். கொடுமுடி : (இடைமறித்து) திருமேனிக்கு ஒரு அண்ணனா? அந்தக் குடும்பம் எனக்கு நல்லாத் தெரியும். அந்தக் குடும்பத்தில் திருமேனிக்கு மூத்தவன் அவனுடைய அப்பா தான். மூத்தரையர் : (தாழ்வாக) தெளிவாய்ச் சொல்லம்மா. கடற் கரைக்கு ஓடுகிற வேகத்தில் படிதட்டி விழுந்துவிடாமே நின்று பார்த்துச் சொல்லிவிட்டுப் போ. உன் திருமணத்தைப் பற்றி இந்த நல்ல அய்யாகூடச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இன்று நான் பிறந்த நல்ல நாள். அழைப்பிதழ் முறையைக் குறித்து வைக்கலாமா என்று எண்ணம் படுகிறது. சேயிழை : (இன்னும் வேகமாக) அந்த அழைப்பிதழில் நல்வரவை விரும்பும் என்ற இடத்தில் அண்ணன் பேரையும் குறியுங்கள். அவரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். கேட்டுக் குறிக்க வேண்டும் என்பதில்லை. என் விருப்பமே அவர் விருப்பம். மூத்தரையர் : (இயல்பாகத் தனக்குள்) சேயிழை விளையாட் டாகச் சொல்லுகிறாள். இளம் பெண் துடுக்காகப் பேசுகிறாள். செல்லப்பிள்ளையாக, ஒரே பிள்ளையாக வளர்ந்து ஓடிஆடித் திரிந்தவள். (அவள் பக்கம் திரும்பி) திருமணக் கழகச்செயலர் மாப்பிள்ளை போன்ற திருமேனி (சிரிப்புத் தோன்ற) எப்போது யாருக்கு அண்ணன் ஆனான்? கொடுமுடி : குழந்தையிடத்துச் சூடு வேண்டாம். எல்லாரையும் அண்ணன் தங்கை உடன் பிறந்தார் என்று முறை கூறுவது உலக வழக்கு. திருமணம் பேசி முடிக்கும்வரை சேயிழை தன் நோக்கப்படி சொல்ல விட்டுவிடுங்கள். சேயிழை : என்றும் யாரிடத்திலும் வராத கோபம் இன்று மகளிடத்து வந்திருக்கிறது. வேறு விதமாகப் பழகிக் கொண்டிருந்தால் நல்ல தந்தைக்குக் கோபம் வரவேண்டி யதுதான். அவர் அன்று கழகக் கூட்டத்திற்கூடத் தங்கை என்று சொன்னாரே. மூத்தரையர் : (இப்போது சினக் குறிப்பாக) ஓ! ஓ! அப்படியா? சான்றும் உண்டா? அப்படிப்பட்ட நல்ல அண்ணா வோடு கடற்கரைக்குப்போய் இந்த நல்ல தங்காள் பழகவேண்டாம். கொடுமுடி : (குறும்பாக) இந்தப் பெண் குழந்தை எவனையோ அண்ணன் அண்ணன் என்று மூச்சுவிடாமல் திரும்பத் திரும்ப உரைப்பதைப் பார்த்தால் ... எனக்கு ஒன்று தாறுமாறாப்படுகிறது. உங்கள் சொத்துக்கு உரிமை கொண்டாடுவான் போலிருக்கே அந்த வெளியண்ணன். மூத்தரையர் : (தன்னுள்) அவனைப் பங்கு கேட்கச் சொன்னா லும் கடற்கரைக்குப் போய்ச் சொல்லிவிட்டு வருவாள். சேயிழை : (அருகே வந்து) என்னப்பா, இவ்வளவெல்லாம் தங்கை மனம் படைத்த ஓர் இளைஞரை இக்காலத்துக் காண முடியுமா? அலையடித்து மலைசாயுமா? அந்த அண்ணன் இமயக் குணத்துக்கு நம் வீட்டுச் சொத்தெல் லாம் கொடுக்கலாம். மூத்தரையர் : (கேலியாக) சொத்து வேண்டாதவன் தான் பெரிய விளம்பரம் புதிய விளம்பரம் செய்தான். சேயிழை : விளம்பரத்தினால் எனக்கு ஓர் அண்ணன் எளிதாகக் கிடைத்தான். இந்த வீட்டில் என்னோடு யாரும் கூடப் பிறக்கவில்லை என்ற குறை நீங்கிவிட்டது. நீங்கள் என்ன உடைமை அள்ளிக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார். கடலாசை அலையாசை தவிர எந்த ஆசையும் அவர்க்கு இல்லை. நான் செல்வ மகள் என்ற பேர்தான். கடற்கரையில் தன் காசில் எனக்குக் கடலை வாங்கித் தருவார். மூத்தரையர் : (சிந்தனையாக) இனி கடற்கரைக்கு நீ போகக் கூடாது. சேயிழை : (தாழ்வாக) உங்கள் கட்டளையை நாளையிலிருந்து கடைப்பிடிக்கிறேன். இன்று வருவேன் என்று அண்ணன் கடற்கரையில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். இன்று போகாவிட்டால், அன்று ஒருநாள் நான் எதிர்பார்த்தும் அவர் வராதற்குப் பழிக்குப்பழி வாங்கினதாக எண்ணிக் கொண்டாலும் கொள்வார். முத்தரையர் : நாளைக்குப் போ. சேயிழை, இன்று போக வேண்டாம். (அதனைக் கேளாது சேயிழை வேகமாகப் படியில் இறங்கிப் புறப்படுதல்) முத்தரையர் : (தானும் படியளவு வந்தவராய் வாய் துடிக்க) பெற்ற மகளாக இருந்தால் மீறிப் போவாளா? போக விடுவேனோ? வளர்த்த மகள். வசதிக்கு வந்த மகள். போகட்டும் போகட்டும். (இச்சொல் விழுந்த சேயிழை சென்ற வேகத்தோடு தலைகுனிந்து திரும்பி வந்து நேரே தன் அறைக்குச் சென்று முக மறைத்துப் படுத்தாள். தேம்பித் தேம்பி விம்மி விம்மிச் சொல்லொன்றும் சொல்லாது பொருமியழுதாள்.) முத்தரையர் : (மனத்தையும் கருத்தையும் அடக்கிக் கொண்டு சிரிப்புப் போலியாக) உமக்குப் பெண்கள் உண்டா? பேரன் பேத்தி எடுத்திருப்பீர் இல்லையா? கொடுமுடி : அதை ஏன் கேட்கிறீர்? எடுக்க வேண்டிய வயது எனக்கும் ஆகிவிட்டது. பெற்ற இரண்டு மகள்களுக்கும் இனிமேல்தான். முத்தரையர் : இனிமேல் குழந்தைகள் பிறக்கவேண்டுமா? நன்றாகப் பல பெற்று வாழட்டும். கொடுமுடி : (வெட்கப் போலியாக) இல்லை. இல்லை. திருமணமே இனிமேல். முத்தரையர் : தந்திர முறைகள் என்னச்சு. கொடுமுடி : பிறவீட்டுப் பிள்ளைகளிடத்து இத்தந்திரங்களைச் செய்து பார்க்கலாம். நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நாம் எப்படிச் சொல்வது? மானம் பெருமை குடிமை என்று ஒன்று இருக்கிறதே. கொஞ்சமாவது பார்க்க வேண்டும். உங்கள் திருமணக் கழகத்தில் ஏதோ சீர்திருத்தம் செய்யப் போவதாகத் தாளிலே வந்திருக்கிறது. ஒன்று கேட்க வேணுமென்று நினைத்தேன். விளம்பரத்தைத் தெரியாமல் செய்துவிட்டதாகத் திருமேனி அந்தக் கூட்டத்தில் சொன்னானாம். அது உள்ளதா என்று தெரிந்துகொள்ள ஒரு ஆசை. முத்தரையர் : இளம் பிள்ளைகள் கூட்டம் கீட்டம் சுவைக்க வேணுமென்று வேகத்தில் எதுவும் சொல்லிவிடுவது உண்டு. பெரியவர்களுக்குக்கூட வேகத்தில் எதுவும் வந்துவிடுதே. கொடுமுடி : ஆமாம். இளம்பிள்ளைகள் சொல்லை என்ன, செயல்களைக்கூட அவ்வளவு கணக்காக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நான் யாரிடமும் என் கருத்தை வேகமில்லாமல் சொல்லிவிடுவேன். முத்தரையர் : (உள் வருத்தமாக) வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க. கொடுமுடி : தங்கை என்று திருமேனி சொன்னதைப் பார்த்தா லும், விளம்பரம் செய்ததைப் பார்த்தாலும், திருப்பி வாங்கியதைப் பார்த்தாலும், கடற்கரையில் வந்து அங்கிருந்து பேசுவதைப் பார்த்தாலும், இயற்கையாகப் பழகுவதைப் பார்த்தாலும் ஏதோ ஒரு தாறுமாறு இருக்கிறது போலப் பட்டாலும்...... வயது வந்த இளைய வர்கள் போக்கைக் கிளறாமல் விட்டுவிடுவதுதான் நல்லது. உன் மகள் சென்றவள் கட்டளைக்குப் பணிந்து திரும்பிவிட்டாள். யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி. (முத்தரையர் வேலையாளைக் கூப்பிட்டுக் குளிர்ந்த நீர் கொண்டுவரச் சொல்லுதல்) கொடுமுடி : (குளிரத்தைக் குடித்துக்கொண்டு) என் மனம் குளிரட்டும். வந்தபோது சூட்டுநீர் தந்தாய். போக வேண்டிய நேரத்தில் குளிர்நீர் தருகிறாய். பகலும் இரவும் போல ஒளியும் இருளும்போல அறிவும் அறியாமையும் போல, சினமும் பொறுமையும் போல எல்லாம் வாழ்க்கையில் மாறி மாறி வரும். (எழுந்து நின்று) எப்போது வேண்டுமானாலும் சொல்லிவிடு. மற்ற வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு உடனே வந்து சேருகிறேன். (அழைப்பிதழ்களைப் பையில் போட்டுக் கொண்டு விடைபெற்றுச் செல்லுதல்) காட்சி : 11 கடற்கரையில் நான்கு மணிக்கே வந்த திருமேனி சேயிழை வரக் காணாது கரை வழியாக நெடுக நடந்து போகின்றான். முன்னாள் உப்பங்கழி யருகே வருவான். முன்னாள் இருந்த இடம் செல்வான். கூட்டமாகப் பெண்கள் வரும் திசையைப் பார்ப்பான். நெடுநேரம் சேயிழை வாராமை யினால் ஓரிடத்து அமர்ந்தான். திருமேனி : (‘கடற்கரையில்’ என்ற நூலை விரித்து) “தமிழ்ப் பெருந்துறையே! உன் தாழ்விலும் எந்த நாளிலும் - என் தமிழ்த்தாயை நான் மறந்தறியேன். இந்த நகரத்தில் வக்கீல் (வழக்கறிஞர்) வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பாண்டித்துரைத் தேவரொடு உறவுகொண்டு தமிழ் நூல்களைக் கற்றேன். அதனால் நான் அடைந்த நன்மைக்கு ஓர் அளவில்லை. சிறைச்சாலையில் செக்கி ழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ? கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ? தொல் காப்பியத்தைப் படித்துப்படித்து என் தொல்லையெல் லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல் களையெல்லாம் வென்றேன். ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை ‘மனம் போல வாழ்வு’ என்று தமிழிலே மொழிபெயர்த்தேன். உயர்ந்த நூல்களிற் கண்ட உண்மைகளை இளைஞரும் எளிதில் அறிந்துகொள்ளுமாறு மெய்யறிவு, மெய்யறம் என்ற சிறு நூல்களை இயற்றினேன். இவற்றை என் தமிழ்த்தாயின் திருவடிகளில் கையுறையாக வைத்தேன். சிறையிலிருந்து நூற்ற என் சிறுநூல்களையும் உவந்து ஏற்றுக்கொள்ளுமாறு செந்தமிழ்த்தாயின் திருவருளை வேண்டுகிறேன். வருங்காலப் பெருவாழ்வே! காலங் கடந்து சென்றது. என் சிறை வாழ்வு முடிந்தது. இந்நகரை வந்தடைந்தேன். என் அருமைக் குழந்தைகளைக் கண்டு ஆனந்தமுற்றேன். ஆயினும் என் ஆசைக் குழந்தையை - தேசக் கப்பலை - இத்துறைமுகத்தில் காணாது ஆறத் துயருற்றேன். பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று பரிதவித்தேன். என்று வருமோ நற்காலம் என்று ஏங்கினேன். இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் சுதந்திரம் வந்தே தீரும். வீரசுதந்திர வெள்ளம் புறப்பட்டு விட்டது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் ஆகும்? பாரத நாட்டிலே, “பாயக் காண்பது சுதந்திர வெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்” என்று நாம் பாடும் நாள் எந்நாளோ? என்று உருக்கமாகப் பேசிக் கடற்கரையை விட்டகன்றார் வீர சிதம்பரனார்.” (செக்கிழுத்த சிதம்பரனார் கடற்கரையை நோக்கிக் கூறியதை முடித்துவிட்டுப் புரட்சிக் கவிஞர் பாரதியார் அதனை நோக்கி மொழிந்ததைப் படிக்கின்றான்.) கொடுமுடி : (பத்தடி தூரம் தள்ளியிருந்து ஒரு செய்தித்தாளைப் படிப்பவர் போல) என்ன உலகமடா இது. வேண்டாதவர் களும் கடினப்படுகிறார்கள். எனக்குப் பணம் இல்லை. பெண்குமரிகள் இரண்டுபேர். இந்த முத்தரையருக்கு என்ன குறைச்சல். கரும்பாலையில் இருந்து சீனிபோல் வெள்ளிப் பணம். ஒரே பெண் சேயிழை. நல்ல மதிப்பு இருந்தும் என்ன? வீட்டில் பெண்ணை வைத்திருப்பதில் நானும் அவரும் ஒண்ணு. பெண்ணுகளைப் பெற்றவர்கள் கண்ணு என்று வைத்துக் கொண்டிருப்பது மண்ணுத் தனம். மற்றவர்களல்லவா கண்ணு என்று அழைத்துக் கொண்டு போகவேணும். இல்லறத்துக்கு இருகண்கள். ஆண் கண் தனியாகவும், பெண்கண் தனியாகவும் இருந்தால் பார்க்க முடியுமா? அழைப்பிதழ்களை எல்லாம் கூடக் காட்டிப் பார்த்தேன். அவன் என்ன செய்வான் பாவம். கண்ணு போக மாட்டேன் என்கிறது. ஒட்டிய மாப்பிள்ளையையும் வெட்டிவிடுவாள் போலத் தெரிகிறது. திருமேனி : (எழுந்து நெருங்கி வந்து) ஐயா, வணக்கம்! கொடுமுடி : திருமேனியா? வணக்கமப்பா. உங்கள் அப்பா ஊரில்தானா? எல்லாரும் நலமா? என்ன கடற்கரையில் அலுவலை முடித்துக்கொண்டு நேரே சிலர் கன்னிக் காற்று வாங்க வருவதுபோல நீ கடற்காற்று வாங்க வந்திருக்கிறாய். நாள்தோறும் வருவதுண்டா? இன்று தான் நான் வருகிறேன். எனக்கெல்லாம் இந்த வயதிலும் நல்ல காற்று வாங்க எங்கே நேரம் இருக்கிறது? திருமேனி : ஒருநாள் கடற்கரைக்கு வந்தால், மறுபடி அந்த இன்பம் விடாது. நாள்தோறும் வரச்சொல்லும். கொடுமுடி : அப்படி இந்தக் கரையிலே பார்க்க என்னப்பா இருக்கிறது. உதவாக்கரை, உப்புத் தண்ணீர், நுரை, கல்லு, மண்ணு, நாற்றம். ஆள் விழுங்கி. திருமேனி : இன்பத்துக்கு வேண்டுவன இவையே. நீங்கள் நினைக்கிற பொருளெல்லாம் இருக்கிற பட்டணத்திலே இன்பம் இருக்கிறதா? ஊரிலே உதவும் கரையுண்டா, தண்ணீர் கொடுக்கிறவர்கள் உண்டா? வாய் நுரை கக்கிறவர்கள் இல்லையா? கல்லு மண்ணு கூடச் சும்மா கிடைக்குமா? ஒருநாள் கூட்டாவிட்டால் நாற்றம் பொறுக்க முடியுமா? ஊர்ப்பொருள்கள் தனியுடைமை, இல்லாவிட்டால் அரசுடைமை. கடல் பொதுவுடைமை. கடற்காட்சி பார்க்க வேண்டுமானால் திரையரங்கத்துக் குள் பணங்கொடுத்து நுழைய வேண்டும். இதோ! திறந்து கிடக்கும் கடற்காட்சி. திரைப்படத்தில் கடற்காற்றைப் பார்ப்பீர்கள். இங்கு அக்காற்று தன்மெய்யிற்பட நுகர்வீர்கள். இங்கே பெரும் பெருஞ்செல்வர்கள் எல்லாம் காரோட்டி ஏன் வருப? எவ்வளவு செல்வப் பெருக்காலும் இந்த அலையின்பம், மணலின்பம், எல்லா இனத்தாரும் கூடியிருக்கும் குழுவின்பம் பெறமுடியாது. கொடுமுடி : உன்போல எடுத்துச் சொல்லுவோர் இருந்தால் நானும் நாள்தோறும் வருவேன். எங்கேயப்பா வரமுடி கிறது. இந்தப் பட்டினத்தில் பத்து இலட்சம்பேர் இருக்கின்றனர். பதினாயிரம் பேரே இங்கு வந்திருக் கின்றனர். மற்றவர்களுக்கென்ன, வர முடியாத கவலை. கடல் ஊருக்குள் வந்தால்தான் அவர்கள் கவலை தீரும். உன்னைப் பார்த்ததும் உள்ளிருந்த நினைவு வந்து விட்டது. ஏதோ திருமணக்கழகத்தில் வேலைப் பதிவு போலத் திருமணப் பதிவு செய்யலாம் என்று ஒரு தீர்மானம் செய்ததாகக் கேள்விப்பட்டேன். எந்த நிலையில் இருக்கிறது? திருமேனி : இப்படியான சீர்திருத்தம் உடனே வந்துவிடாது. உங்களைப் போன்ற பெரியவர்கள் அந்தக் கருத்தைப் போகின்ற இடமெல்லாம் எடுத்துச் சொல்லி மக்கள் மனத்தில் பதிய வைக்க வேண்டும். கொடுமுடி : நான் சொன்னால் ஏறாது. திருமணம் செய்ய மாட்டாமல் இரண்டு பொட்டைகளை வைத்திருக்கிற என் கருத்தை யார் கேட்பார்கள்? ஏளனம் செய்வார்கள். தன் பிள்ளைகளைத் தள்ளிவிடச் சீர்திருத்தம் பேசு கிறான் என்று புறம்பழிப்பார்கள். உள்ளதும் கெட்டுப் போகும். திருமேனி : நீங்கள் அப்படி எண்ண வேண்டாம். இந்த மாதிரி ஏளனம் எல்லார்க்கும் பொது. பழியாக இருந்தால் பொருட்படுத்த வேண்டும். கேலிச் சிறுமையை உதறித் தள்ளுவதே ஒரு முற்போக்கு. தேவையுடையோர் தாமே வழி பார்க்க வேண்டும். பசியுடையோர் சோறு கேட்பர். நோயுடையோர் மருந்து உண்பர். தாகமுடையோர் தண்ணீர் கேட்பர். அறிவு வேண்டுவோர் நூல் விரிப்பர். பெண் வைத்திருப்போர் இந்தக் காலத்துப் பழைய தகுதிகளையெல்லாம் பாராது சாதியென்று சாதிக்குள் சாதியென்று சமயம் என்று குடியென்று குலம் என்று அக்கம் பக்கம் என்று தூரம் தொலையென்று பணம் கிணம் என்று வீடு கீடு என்று கடை கிடையென்று இவற்றையெல்லாம் மிகவும் அழுந்திப் பாராமல் பையன் பண்பவனா, உழைப்பவனா, பொறுப்பு உணர்பவனா, பெண்டாட்டியைத் திண்டாடாமே கடைசி வரை வைத்துக் கொண்டாடுபவனா என்று பார்த்துக் கொடுத்தால் எவ்வளவோ திருமணங்கள் நடக்கும். கொடுமுடி: உன் கொள்கைதானப்பா எனக்கும். அப்படிப் பல திருமணங்களை முடித்திருக்கிறேன். முடித்துக் கொண்டு வருகிறேன். பெண்கள் இல்லாமல் ஆண்கள் இருந்துவிட முடியுமா? பெண்ணுக்கு ஆண் சார்பு. ஆணுக்குப் பெண் சார்பு. இருவருக்கும் மனச் சார்பு. மற்ற சார்பெல்லாம் (இகழ்வாக) தூ ஒரு சார்பா... என்று கேட்கிறேன். ஆணும் பெண்ணும் வாழ்வின் இதழ்கள். எனக்கு இரண்டு பெண்கள் குமரியாக, பல கலைகள் தெரியும், பொருள் ஈட்டுகிறார்கள். உன்போல நல்ல பிள்ளையாண்டானாக இருந்தால் சொல்லு. எதுவும் பாராமல் எதுவும் வாங்காமல் எதுவும் கொடுக்காமல் சீர்திருத்தமாக - ஒரு சொல்லுக்குச் சொல்ல வந்தேன் - என் கையிலே மடியிலே இருக்கிறதையெல்லாம் கொடுத்து உடனே கட்டிக் கொடுக்கிறேன். மாப்பிள்ளைத் தகுதியை மட்டும் பார்ப்பவன் நான். உன்னளவு தகுதி போதும். நீ இரண்டு மூன்று நாளில் சொல்லு (சிறிது தயங்கி) இப்பொழுது வேண்டுமானாலும் சொல்லிவிடு. முடித்துக்கொள் வோம். என் வீட்டில் எனக்கு முழுவுரிமை. மனைவி தட்டும்படியான எதையும் நான் சொல்ல மாட்டேன். இன்று நமக்கு நல்ல சந்திப்பு. (அலைகளைப் பார்த்து) இந்த மகிழ்ச்சியைக் கேட்டு, பார்த்தாயா, இந்த அலைகள் நம் பக்கமே எவ்வி வருகின்றன. பன்னீர் தெளித்தாற்போல நம்மேல் தெளிக்கின்றன. மேலே கருக் கொண்ட மேகம். நல்ல அறிகுறிகள் சூழ்ந்துகொண்டிருக் கின்றன. திருமேனி : (குறிப்பை உட்கொண்டு) ‘இப்படித் தகுதியான இரண்டு பெண்மணிகள் இருக்கிறார்கள். மணமகன் தகுதியே பார்க்கப்படும். வேறு எந்தச் சார்பும் பார்ப்ப தில்லை’ என்று மண விளம்பரம் செய்து பார்க்கலாமே. கொடுமுடி : அது தற்கால வழி. நல்ல வழியுங்கூட. மாப்பிள்ளை கள் நாடு முழுதும் சிதறிக்கிடக்கும்போது விளம்பர வலை வீசி, பிடுபடுதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது. விளம்பர முறையில் தவறில்லை. விளம்பரஞ் செய்து எதற்கும் பொறுத்துப் பார்க்க வேண்டும். மறு முறையும் விளம்பரம் செய்ய வேண்டும். வீசிய வலைக்கெல்லாம் மடக்கென மீன்கள் புகுந்தா விடுகின்றன? செம்படவன் எத்தனை முறை எத்தனை இடத்தில் சளைக்காமல் வலை வீசுகிறான். (சிந்திப்பவர்போல) நீ ஒரு தவறு பாராமல் செய்துவிட்டாய். திருமேனி : (வேகமாக) பெருந்தவறுதான். உங்கள் சொல்லைக் கேட்டு விளம்பரம் செய்தோமே, நீங்களே உங்கள் குழந்தைகளுக்குச் செய்யாதபோது. ஆண் பிள்ளை விளம்பரம் போட்டேனே. கொடுமுடி : திருமேனி! நீ சொன்னது கேட்பது சரி. விளக்கம் தெரிந்த பெரிய பிள்ளை நீ. உன் குடும்பத்தை யாரும் ஏமாற்றி விடமுடியாது. நீ துடிப்பாகச் சொன்னாலும் நானும் இரண்டொன்று அமைதியாகச் சொல்லுகிறேன். எனக்கு எந்தப் பயனும் கருதி விளம்பரம் செய்யச் சொல்லவில்லை. எவ்வளவோ திருமணங்கள் முடித்து வைத்திருக்கின்றேன். வைத்துக் கொண்டும் வருகிறேன். இதோ பார் கட்டுக்கட்டான அழைப்பிதழ்கள். இன்னும் என் இரண்டு பெண்களும் என் வீட்டில் இருப்பதிலி ருந்தே தெரியலாம். மற்றவர்கள் எவ்வாறு நினைத்தாலும் நினைத்துக்கொள்ளட்டும். நான் தொண்டாகக் கருதியே இந்தச் சமூகப் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். எத்தனை திருமணக் கழகங்கள் வைத்தாலும் நான் ஒருத்தன் (மார்பைத் தட்டிக் காட்டி) செய்து முடிக்கிற வேலையைச் செய்ய முடியாது. என்போல ஓடியலைந்து பணிந்து கிடந்து, குறைகளைச் சொல்லாமல் நிறைகளை மட்டும் சொல்லி, முடித்து வைப்பதற்கு விரல்விட்டுப் பாரேன் (வலக்கையின் சுண்டு விரலை நீட்டி) ஒன்று கொடுமுடி (இரண்டாவது விரலை நீட்டி) யார் பெயர் யாராவது சொல்ல முடியுமா? எல்லா விரல்களையும் நீட்டினாலும் கொடுமுடி கொடுமுடி என்று திரும்பத் திரும்ப என் பெயரைத் தான் சொல்ல வேண்டும் சிவசிவ என்று சொல்வதுபோல. ஒழுங்காக முடித்து வைப்பதனால், வீட்டுக்கு வீடு எனக்கு வரவேற்புப்படி. (திருமேனியை நேர்முகமாகப் பார்த்து) அதனாலே தம்பி உனக்குச் சொல்லுகிறேன். என் கருத்துப்படி நீங்கள் நடந்ததில் தவறில்லை. அன்று கூட மூன்று முறை சொன்னேன். நினைவிருக்கும். மறுபடியும் இரண்டொரு நாள் கலந்து தெளிந்து நல்லது என்றால் செய்யுங்கள் என்று சொன்னேன். குடியரசு முறை என் முறை. ஏன்? நான் செய்வதெல்லாம் இருவரும் குடியாகி ஒரு அரசு பிறக்க வேண்டும் என்பதற்காகவே. தம்பி! அப்படியே வைத்துக் கொள். என் சொற்படி விளம்பரம் போட்டாய். ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் அல்லவா? திருமணக் கழகத்தில் நீயாக அந்த விளம்பரம் பிசகென்று ஏன் சொல்ல முற்பட்டாய்? (விரைவாக) சரிசரி, நடந்தது சரி. இப்போதும் குடி முழுகிப் போகவில்லை. படி நழுவிப் போகவில்லை. இன்று சொல்கின்றேன். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கின்றேன். உனக்கும் சேயிழைக்கும் ஏற்பட்ட தொடர்பு என்னால் ஆனது. வியப்பாக எண்ணுகிறாய். பொய் என்றுகூட நினைப்பாய். நான் பொல்லாததைச் சொன்னாலும் சொல்வேன். ஒரு நாளும் இல்லாததைச் சொல்ல மாட்டேன். முதன் முதலில் இந்த விளம்பரத்தை முத்தரையரிடம் காட்டினது நான்தான். திருமணக் கழகம் தொடங்கினது, நீ சேர்ந்தது, சேயிழை செயலியானது எல்லாம் அப்புறம் தொடர்கதை. விளம்பரத்தின் பயன் எப்படிப் போகும் என்று ஒரே ஒரு விளம்பரம் செய்தோர் தெரிந்துகொள்ள முடியாது. திருமேனி : (இயல்பாக) சிலர் தங்கள் புகழ்களைச் சொன்னால் தான் தெரிகிறது. (சுற்றும் முற்றும் பார்க்கிறான்) உங்களுக்கு அந்தக் குடும்பத்தோடு நல்ல தொடர்பு ஏற்படுத்திக் கொண்டீர்களா? கொடுமுடி : (சிரிப்பாக) என்ன அவ்விதம் கேட்டுவிட்டாய். குமரிப் பெண்கள் வைத்திருக்கிற வீட்டில் எல்லாம் இந்தக் கொடுமுடிக்குத் தொடர்பு உண்டு. இந்த ஊரில் யார் வீட்டில் எத்தனை பெண்கள் திருமணம் ஆக வேண்டியிருக்கின்றனர், ஏன் ஆகவில்லை, எப்படி ஆக்குவது என்று, குடித்தொகை எடுப்பதுபோலக் குமரித் தொகை எடுத்து மனத்தில் வைத்திருக்கிறேன். காளைத்தொகையும் எனக்குத் தெரியும். இந்தக் கணக்கு நாளிதுவரை இருக்கும். நீ கேட்டது சரி. விளம்பரத்துக்கு முன்னே எனக்கு முத்தரையர் பழக்கம். அவர் திருமணத் துக்கு எனக்கு அழைப்புத் தந்திருந்தார், நானும் போயி ருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளேன். இப்போது கூட அவர் வீட்டிலிருந்து நேரே கடற்கரைக்கு வந்தேன். மாலைச் சிற்றுண்டி தந்தார். திருமேனி : (மறுபடியும் சுற்றும் கண் பரப்பி) சேயிழை வீட்டில் இல்லையா? உடல் நலமா? கொடுமுடி : வீட்டில்தான். கடற்கரைக்கு வருவதாகப் புறப் பட்டாள்... ஆம் புறப்பட்டாள் திரும்பி. திருமேனி : ஏதோ மறந்ததை எடுக்க உள்ளே போயிருப்பாள். நீங்கள் அதற்குள் புறப்பட்டுவிட்டீர்கள். கொடுமுடி : (இழுத்தாற்போல) அதற்குள் புறப்படவில்லையப்பா. அந்த இடத்தில் நமக்கென்ன வேலை என்று வந்து விட்டேன். பெரிய இடத்துப் பேச்சு; பிறழ உணர்ந்தால் ஏச்சு. அவ்விருவருக்கும் இவ்வளவு உள்ளே இருக்கும் என்று தெரிந்தபோது அந்த இடத்தில் எவ்வளவு பழகினவனும் இருக்கலாமா? விசிறிக்கு முன் கொசுவுக்கு என்ன வேலை. சொல்லு தம்பி. திருமேனி : அப்படியிருக்காதே. முத்தரையர் ஊர் அறிந்த பெரிய மனிதர். சேயிழை எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளுபவள். தாங்கள் போயிருந்த சமயம் ஏதும்.... கொடுமுடி : (இடைமறித்து) என்ன தம்பி எதையோ நினைத்துச் சொல்லுகிறாய். தகராறுக்கு நான் காரணம் என்று நினைக்கிறாயா? (எழுந்து புறப்படத் தொடங்குகிறார்) திருமேனி : (கையசைத்து) புறப்படலாம். நானும் வருகிறேன். நீங்கள் போயிருந்த சமயம் நடந்திருந்தால் செய்தி விளக்கமாகத் தெரியும் என்பதற்காகக் கேட்டேன். குற்றமாக இருந்தால் குணப்படுத்துங்கள். நீங்களும் பழகின குடும்பம். எனக்கும் ஓரளவு பற்றான குடும்பம். அவர்கள் நன்றாக இருந்தால் எல்லார்க்கும் நல்லதுதானே. கொடுமுடி : (துண்டடை உதறி விரித்து) முன்பின் என்ன நடந்ததோ எனக்குத் தெரியாது. எனக்கு அவ்வளவும் தெரிந்ததாக நீ எண்ணிக்கொள்ளக் கூடாது. அவ்வளவை யும் தெரிந்துகொள்வதற்கு அவர்கள் வீட்டிலா நாம் குடியிருக்கிறோம்? நான் ஒருத்தர் வீட்டுக்குப் போனால் நாம் உண்டு, நம் வேலையுண்டு அவர்கள் தருவதை உண்டு என்று செவியை வாயை மடக்கிக்கொண்டு வந்து விடுவேன் (அஞ்சியவர்போல) ஏதோ அண்ணன்... தங்கை...திருமேனி... இப்படிச் சில சொற்கள் காதில் விழுந்தன. திருமேனி : இவை நல்ல சொற்கள் தானே. சேயிழையைப் பார்த்த நாள்முதல் தங்கை என்று நினைத்து அப்படியே தனிமையிலும் கடற்கரையிலும் பழகிவருகிறேன். கொடுமுடி : அதுதான் பிடிக்கவில்லையோ, என்னமோ. இந்த இடத்திலே நல்ல வகையாகத் திருமணம் முடியும்: பின்பு பல மணங்கள் சரசரவென்று முடியும் என்றெல்லாம் நம்பிக்கை இருந்திருக்கும். திருமேனி : என்ன, அந்த நம்பிக்கை நான் சேயிழையைத் தங்கை என்று அழைத்ததனால் கெட்டுப்போச்சாக்கும். கொடுமுடி : (தலையைச் சொரிந்தவராய்) இல்லையப்பா, முத்தரையர் படக்கென்று அப்படி ஒரு வார்த்தை சொன்னாரே. அங்ஙனம் சொல்லக்கூடியவரும் இல்லையே. இதுவரை எவ்வளவோ பழகியிருக்கிறேன். சொல்லக் கேட்டதும் இல்லை. ஏன் சொன்னார் என்று புரியவும் இல்லை. வீட்டுச் செய்தி வெளியாருக்கு எவ்வாறு புரியும்? திருமேனி : புரியாது என்றால் விட்டுவிடுங்கள். நமக்கென்ன அவ்வளவு அக்கரை. தகப்பன் மகளுக்குள்ள செய்தி. புரிந்த பிறகு மறுபடி சந்திக்கும்போது வேண்டுமானால் சொல்லுங்கள். கொடுமுடி : அப்படியில்லையப்பா. எனக்கு அவ்வளவு புரியாம லும் இல்லை. சொன்னால் உனக்கு விளங்கினாலும் விளங்கும். எதற்கும் மனத்துக்குள் கிடக்கட்டும். உனக்குப் புரிந்துவிட்டால் மறுபடி காணும்போது எனக்குச் சொல்லு. மூன்றாம் பேருக்குத் தெரிய வேண்டாம். நமக்கென்ன, இன்னொரு வீட்டுச் செய்தியைத் தெருப்படுத்தக் கூடாது. என்ன சொன்னார் தெரியுமா? (தயங்குவோர் போல) ‘என் சொந்த மகளாக இருந்தால் இப்படி நடப்பாளா? இவ்வாறு கடுகடுவென்று சொன் னார். அப்புறம் எதையோ நினைத்துக்கொண்டவர் போலப் பொருமி விம்மினார். திருமேனி : (இயல்பாக) பிள்ளைகள் மீறி நடக்கும்போது யாரும் இவ்வாறு சொல்லுவது வழக்கம். உள்ளதாக இருந்தா லும் நமக்கென்ன ஆராய்ச்சி. உள்ளதாக இருந்தால் உங்களைப் போன்ற பிறர் இருக்கும்போது இப்படிச் சொல்லுவாரா? கொடுமுடி : கோபத்திலேதான் உள்ளது கொட்டும், தம்பி. சிந்தித்துப் பேசுவோர் எதைச் சொல்லலாம் என்று எண்ணி அதைச் சொல்லுவர். கோபம் அவர்களை மீறி உள்ளத்தைக் காட்டிக் கொடுக்கிறது. எனக்கென்னமோ அவர் சொன்னது உண்மைதானோ என்று படுகிறது. ஒரு காரணம் சொல்லட்டுமா? நீ செய்த விளம்பரத்தைப் பார்த்து இவ்வளவு பெரியவர், செல்வத்திலும் சிறப்பி லும் பெரியவர், தன் மகளைக் கட்டிக் கொடுக்கலாம் என்று கருதினாரே, சொந்த மகளாக இருந்தால் அவ்வளவு குறைவாகத் தள்ளிவிட மாட்டார்கள். நமக்கென்ன இன்னொரு குடும்பத்திலே புகுந்து ஆராய்ச்சி. பேச்சுக்கு இதையெல்லாம் சொன்னேன். பழைய ஒரு புலவர் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொன்னதுபோல நமக்கு யாதும் மனையே யாவரும் மகளே. திருமேனி : (சிரித்துக்கொண்டு) நீங்கள் பொதுக்குன்றன். அது சரி. அவ்விதம் அவர் சொல்லுமாறு சேயிழை என்ன செய்தாள்? தெரிந்தால் சொல்லுங்கள், தெரியா விட்டால்.... கொடுமுடி : தெரிந்ததைத் தெரியாது என்று சொல்வது என் வழக்கமில்லை. தெரிந்தால் நீ வருத்தப்படுவையோ? ... முறையாகச் சொல்லிவிடுகிறேன். உன்னைப் பார்க்கக் கடற்கரைக்கு வர வேண்டும் என்றாள் நீ தங்கையென்று சொல்கிற சேயிழை. உன்னை ஒரு மாப்பிள்ளையாகக் கருதியிருக்கிற அவர் போகக் கூடாது என்றார். மீறிப் புறப்பட்டாள். அவர் அப்படி ஒரு சொற் குண்டு போட்டார். புறப்பட்டு வாசற்படி வந்தவள் திரும்பி விட்டாள். அப்புறம் முகமாறிய இடத்தில் நமக்கென்ன வேலை என்று சொல்லிக்கொண்டதுபோல என்னுடைய பொருள்களையெல்லாம் போட்டுவிடாமல் எடுத்துக் கொண்டு மெல்ல வந்துவிட்டேன். இதுதானேயப்பா நாகரிகனுக்கு அழகு. திருமேனி : அதைவிடத் தாங்கள் கடற்கரைக்கு வந்தது பேரழகு. கொடுமுடி : நன்றாகச் சொன்னாய். கவலையுடையோரும் கவலை விட்டோரும் அடைவது கடற்கரை. இங்கு உன்னைப் பார்த்தது எனக்குப் பெருமகிழ்ச்சி. நம் குடும்பத் தொடர்புக்கு இது நல்ல வாய்ப்பு இல்லையா. (இருவரும் தனித்தனியாகப் பிரிந்து செல்லுதல்) காட்சி : 12 அறந்தாங்கி இல்லம் மயிலி : (காய்கறி நறுக்கிக் கொண்டிருக்கும் தாயைப் பார்த்து ஆர்வமாக) அம்மா, பார்க்கிற கனவெல்லாம் பலிக்குமா அம்மா. கனவிலே உனக்கு நம்பிக்கை உண்டா அம்மா. முன்னெல்லாம் பார்த்த கனவு நினைப்புக்கு வராது. இப்போது நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இரண்டு மூனறு நாளாகத் தவறாமல் வருகிறது. வெல்லம்மை : (காய்கறியை நறுக்கிக்கொண்டே, நிற்கின்ற மூத்த மகளைப் பார்த்து) என்ன கனவு சொல்லேன், நம்பலாமா, பலிக்குமா என்று அப்புறம் சொல்லுகிறேன். நானுந்தான் நாலைந்து ஆண்டாப் பேரப் பிள்ளைகள் மடியில் இருப்பதாகக் கனாக்கள் கண்டு கொண்டு வருகிறேன். மயிலி : (பெருஞ் சிரிப்பா) அப்படியானால் என் கனாவும் பலிக்கும். நாமிருவரும் கண்டது உறவான கனா. அண்ணனுக்குத் திருமணம் நடந்ததாகக் கனா நாள்தோறும் வருகிறது. விரைவில் அதுவும் நடந்து, பேரப்பிள்ளைகள் உன் மடியில் தாலாட்டுக் கேட்கும். நாங்கள் தொட்டில் ஆட்டுவோம். வெல்லம்மை : (பெருமூச்சோடு விளம்பரத்தை நினைத்தவளாய்) நல்ல கனவு நாமிருவரும் சொல்லிவைத்தாற்போலப் பார்த்திருக்கின்றோம். பலிக்கிற கனவு ஒரு முறையே தோன்றும் என்று என் பாட்டி சொல்லக் கேட்டிருக் கிறேன். மயிலி : (காய்கறியைத் தான் நறுக்கியவளாய்) இந்தக் காலம் பாட்டி காலம் இல்லை. மறவாத கனவு மாறாது. நீ சொல்வதுபோல நானும் தங்கையும் சேர்ந்தாற்போல மணவறையில் இருப்பதாக ஒருமுறை கனாக்கண்டேன். பாட்டி சொன்னபடி பலிக்குதா என்று பார்ப்போமே. வெல்லம்மை : (கையைக் கழுவிக் கொண்டு புன்சிரிப்பாக) பகலெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த ஆசை கனவாக வந்தால் அதற்கு வலுவில்லை. ஆசைக்கனவுக்கோர் அடியுமில்லை, வேசையன்புக்கோர் வேருமில்லை என்று என் பாட்டனார் பாட்டுச் சொல்லியிருக்கிறார். நமக்கென்ன கவலை. கனவு கவலைப்படட்டும். கனவில் வந்தாலும் வராவிட்டாலும் உங்கள் திருமணம் எல்லாம் நடக்கவேண்டியவை. விரைவாக முடித்துவிட வேண்டும் என்று அவர் கொஞ்ச நாளாகச் சொல்லிக் கொண்டிருக் கிறார். ஏதோ குறிப்பு இருக்கிறது. மயிலி : அம்மா, குயிலி சொல்லுகிறாள், என்ன துணிச்சல். செலவு சிக்கனம் என்று இரண்டு பேரையும் யாருக்கா வது வேகப்பட்டுக் கட்டிவைத்து விடப்போகிறார்கள். அக்கா கவனமாக இரு என்று சொல்லுகிறாள். அப்படிச் செய்வதாக இருந்தால் இதுவரை செய்திருப்பார்கள் அல்லவா? நல்ல இடம் பார்ப்பதினால்தான் என் திருமணம் தாமதமாகிறது என்று சொல்லியிருக்கின்றேன். வெல்லம்மை : அவள் கேட்டதும் சரி, நீ சொன்னதும் சரி, நாங்கள் செய்வதும் சரி. நல்ல இடம் பார்த்துதான் வாழ்க்கைப் படுத்துவோம். மயிலி : (அடுப்பில் கொதித்த சோற்றை வடித்துக்கொண்டு) அம்மா, நானும் குயிலியும் பேசிக்கொண்டதை உனக்குச் சொல்லட்டுமா? நம் இருவர் திருமணத்துக்குக் குறைந்தது இருபத்தையாயிரம் ஆகும். திருமணத்துக்கு அப்புறமும் பொங்கல் தீபாவளி என்று பெண் வீட்டுக்குச் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். நமக்காகப் பெற்றோர்கள் பணத்துக்காக இந்த வயதுக் காலத்தில் துன்பம், தொல்லை கவலைப்படக் கூடாது. பெற்றோ ருக்குத் தொல்லை கொடுத்து மணம் செய்துகொண்டு இல்லறத் தலைவியாவதைக் காட்டிலும் இந்த நாட்டில் மணிமேகலைகளாக இருந்து காப்பியத் தலைவியாக லாமே என்று குயிலி சொன்னாள். அதற்கு நான் சொன்னேன். நாமிருவரும் அங்ஙனம் எண்ணக்கூடாது. குடும்பம் நடத்தும் ஆற்றல் இல்லாத தலைவிகள்தான் நீ சொன்னாற்போலக் காவியத் தலைவி ஆவார்கள். நாம் ஏன் அவ்வணம் ஆகவேண்டும்? இருவரும் இன்னும் சில ஆண்டு பொருள் ஈட்டுவோம். நாம் ஈட்டத் தெரியாத வர்களா என்ன? நிறைய ஈட்டிப் பெற்றோரிடம் கொடுத்து மணஞ் செய்து கொள்வோம் என்று சொன்னேன். குயிலி நம்பிக்கை இல்லாதவளாக இருப்பதைப் பார்த்து இன்னொன்றும் சொன்னேன். அதையும் சொல்லிவிடுகிறேன். (வடித்த சோற்றை வேறொரு பக்கம் இறக்கி வைத்து) நாம் இருவரும் மணிமேகலை யாக வேண்டாம். நான் மட்டும் அவ்வாறு இருக்கிறேன். இருந்து வேண்டும் பொருள் ஈட்டி உனக்கு மணம் செய்விக்கிறேன் என்று அவளுக்குத் திடமாகச் சொன்னேன். அதற்குக் குயிலி மாதரி மகள் ஐயைக்கும் மணமாகவில்லை, மாதவி மகள் மணிமேகலைக்கும் மணமாகவில்லை. எப்படியோ பழைய பெண்ணுலகம் என்று சொல்லிக்கொண்டே போனாள். அதற்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா? கோவலன் குடும்பத் திலும் கோவலனோடு தொடர்புபட்ட குடும்பத்திலும் தான் சிலப்பதிகாரம் செல்லுபடியாகும். நம் குடும்பம் இயல்பாக இல்லறம் நடத்தும் குடும்பம் என்று சொல்லி அவள் வாயை அடைத்தேன். நான் சொன்னது சரிதானே அம்மா. (வெல்லம்மை இதனைக் கேட்டு உள் வருத்தத்தோடு இருந்த நிலையில் அறந்தாங்கி வருகின்றார். தனியாக அழைத்துச் சென்று ஒரு பையைக் கொடுத்தபோது) வெல்லம்மை: இதிலென்ன சமையலுக்கு இருக்கிறது. இன்று சமையல் முடிந்துவிட்டதே. அறந்தாங்கி: (சிரித்துக்கொண்டு) பெண்களின் திருமணச் சமையலுக்கு வேண்டியதெல்லாம் இருக்கிறது. வெல்லம்மை : (விரிந்த தன் கூந்தலை முடித்துக்கொண்டு) அப்படியா, அப்படியா? இவ்வளவும் நம்ம பணந்தானா? அறந்தாங்கி: ஆம், ஆம். நான் தேடிய செல்வம். வேலை பார்த்த நாளிலிருந்தே உயிர்க்காப்புச் செய்திருந்தேன். வேலை கிடைத்ததும் ஐயாயிரத்துக்கு உயிர்க்காப்பு. உன்னை மணந்ததும் பதினாயிரத்துக்கு உயிர்க்காப்பு. மயிலி பிறந்ததும் மேலும் ஐயாயிரத்துக்கு. குயிலி பிறந்ததும் இன்னும் ஐயாயிரத்துக்கு. வெல்லம்மை: (பையைத் திறந்து வைத்துக்கொண்டு) இருபத்தையாயிரம் இந்தச் சிறிய பையில். (எண்ணிப் பார்த்து) முப்பதினாயிரம் இருக்கிறாற்போல. பேரப் பிள்ளைகட்கும் சேர்த்துச் செய்தீர்களோ! அறந்தாங்கி : என்ன ஆசை. இருபத்தையாயிரத்துக்கு வட்டி அவ்வளவு. இந்த நம்பிக்கையில்தான்.... வெல்லம்மை : முடிகிற காலத்தில் முடியும் என்று சொல்லி வந்தீர்கள், இல்லையா. ஏதோ ஓரளவு உயிர்க்காப்புச் செய்து வைத்திருப்பது தெரியும் எனக்கு. பெண் குழந்தை கள் பிறந்த போதெல்லாம் செய்து வைத்திருப்பீர்கள் என்று தெரியாது. அறந்தாங்கி : தெரியக்கூடாது என்று எண்ணிக்கொண்டேன். தெரிந்தால், அதில் கடன் வாங்கும்படியான நிலைக்குப் பெண்கள் வைத்துவிடுவார்கள். வீட்டுச் செலவை, துணிமணிச் செலவை அடக்கமாகச் செய்யமாட்டார்கள். இந்த உயிர்க்காப்பு என் உயிர்க்காப்பு இல்லை. பெண்களின் கழுத்துக் காப்புக்காகச் செய்வது. எந்தக் குடும்பத்தார்க்கும் இக்காப்பு நல்லது. வெல்லம்மை : பெரும்பாரம் இறங்கிற்று. மாப்பிள்ளைகள் பார்க்க வேண்டியதுதான். இவ்வளவு கருத்தாகச் சேமிப்பு செய்த நீங்களே நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துவிடுங்கள். அறந்தாங்கி : பணம் பார்த்துவிடலாம். மாப்பிள்ளை பார்ப்பது அருமை. இருந்தாலும் ஆசையில்லாமல் பார்த்தால் பொருத்தமான மாப்பிள்ளைகள் கிடைப்பார்கள். மாப்பிள்ளை பார்ப்பதில் ஒரு கவனம். முன்னமே முன்னேறிய குடும்பத்தில் இருக்கிற பையன்கள் பின்பு முன்னேற விரும்பமாட்டார்கள். ஏற்கனவே உள்ள வசதிகளைக் கொண்டு ஆடம்பரமாக வாழ்வதற்கே திட்டமிடுவார்கள். இனிய நிழலில் இளஞ்செடி வளராது. வசதி குறைவாக இருந்தாலும், தான் முன்னேறுவானா என்று அவ்வகையில் பார்க்க வேண்டும். வெல்லம்மை : (பையை ஓர் இருப்பலமாரியில் பூட்டி வைத்து விட்டு வந்து) அவ்விதம் யாரையும் பார்த்திருந்தால் சொல்லுங்கள். இருவருக்கும் பார்த்து முடித்து விடுவது கூட நல்லது. (மகிழ்ச்சியாக) பேரப் பிள்ளைகள் ஒரே காலத்தில் தோன்றுவார்கள். அறந்தாங்கி : என் கருத்தும் உன் கருத்தே. நம் மயிலுக்கு மாப்பிள்ளையாக நெடுந்தகையை எண்ணியிருக்கிறேன். வரங்கொண்டார் மகன். வருவாய் இருக்கிறது. ஒரு நாள் பேசிக்கொண்டு போகும்போது, நல்ல பழக்க வழக்க முள்ள குணமான பெண்ணாகத் தன் தகப்பனார் பார்ப்பதாகச் சொன்னான். பெண்கள் பெற்ற என்னிடம் சொன்னதிலிருந்து அவன் குறிப்பைப் புரிந்துகொண்டேன். இரண்டு நாட்சென்று அவன் எண்ணத்தை ஒரு நண்பனிடமும் தெரிந்துகொண்டேன். வெல்லம்மை : இருவரும் வாழ்ந்து நன்றாக இருக்கட்டும். இவள் ஒற்றுமையில் கிளிபோல, மாப்பிளையும் முன்னேற்றத்தில் புலிபோல. நமக்கும் நல்ல உறவு. வரங்கொண்டார் கருத்து எப்படியிருக்குமோ? அப்புறம் இன்னொரு மாப்பிள்ளை நம் குயிலிக்கு. அறந்தாங்கி : கூடி வரும்போது எல்லாம் ஓடிவரும். பெற்றோர் இல்லாத பிள்ளை. வேலையிலே வைத்த கண்ணை எடுக்கமாட்டான். இப்போது இரண்டு தேர்வு எழுதி மேலேற்றம் பெற்றிருக்கிறான். விரைவாக முன்னேறக் கூடிய திறம்படைத்தவன். இசை, ஓவியம், தையல் பலகலை தெரியும். எந்நேரமும் கற்றுக்கொண்டே இருப்பான். பார்வைக்கு உன் தம்பி மகன்போல. வெல்லம்மை : இந்த இடத்தை இன்னும் பொறுத்துப் பார்ப்பது நல்லது. குயிலிக்கும் உடனே செய்துவிட வேண்டும் என்பதில்லை. கொஞ்சம் என் மனம் தயங்குகிறது. பெற்றோர் இல்லாவிட்டாலும் போகிறது. சுற்றமாவது.... அறந்தாங்கி : நாம்தான் சுற்றம். வேறு சுற்றமில்லை என்பதி னால் கோளாறில்லை. குணம் என் வயதிலே அவ்வளவு நல்ல குணத்தை வேறு ஒருவரிடமும் பார்த்ததில்லை. அவனை அலுவலகத்தில் எல்லார்க்கும் பிடிக்கும். எல்லார்க்கும் என்ன, அணில், குருவி, காக்கை, கிளி எல்லாம் அவனிடத்து அன்பாகச் சுற்றி விளையாடும். இயற்கைக் குணம். எந்த இயற்கையோடும் எப்போதும் இன்பமாக இருப்பான். உனக்கு நினைவில்லையா? நம் பிள்ளைகள் எல்லாரும் முறைக் காய்ச்சலில் மாறி மாறித் தொல்லைப்பட்டபோது, மருந்து வாங்கி வந்து தந்தானே. வெல்லம்மை : அந்த இளநம்பியா? சிறு வயதில் அவ்வளவு பெருங்குணம். எத்தனை முறை சொன்னாலும், காசு கூட அப்புறம் வாங்கிக்கொள்கிறேன் என்று சிட்டுக்குருவி போலத் தொண்டு செய்தான். குயிலிகூட அவனைப் பார்த்து ஒருநாள் இவ்வளவு வேலை பார்க்கிற நீங்கள், எங்கள் வீட்டில் ஒருநாள் சாப்பிடுங்களேன் என்றாள். அதற்கு அவன் உங்கள் சாப்பாடுதானே நாளும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி போய்விட்டான். அறந்தாங்கி : தன் நன்றியை அப்படிக் குறிப்பாகச் சொல்லி இருக்கிறான். அவனை இந்த அலுவலகத்தில் சேர்த்து விட்டது நான். பெற்றோர் இல்லாத பிள்ளை மாப்பிள்ளையாக வருகிறான் என்பதற்காக நாம் இளக்கமாக நடக்கக்கூடாது. மயிலிக்குச் செய்வது போலவே குயிலிக்கும் செய்யவேண்டும். வெல்லம்மை : இன்னொன்று சொல்லலாமா? கூடிவருகிற நேரத்தில் அதுவும் கூடி வந்தால் நல்லது. நம் திருமேனிக் கும் இந்தச் சமயம் பார்த்து ஏதோ கேள்விப்படுகிறேன், சரியோ தப்போ திருமணக் கழகத்தில் துணைச் செயலி யாக ஒரு பெண் இருக்கிறாளாம். இவனுக்கு என்ன பெண்ணா கிடைக்காது. பாவிப்பயல் திருமணக் கழகத்தில் சேர்ந்து தொலைத்திருக்கிறான். இரண்டு தங்கைகளுக்கும் திருமணம், அண்ணனுக்கு அதுபற்றிப் பேச்சில்லை என்று ஊர்வாய் அலரும். நல்ல நேரத்தில் இப்படி ஒரு பொல்லாப்பு எதற்கு. அறந்தாங்கி : பணத்தின் அருமை தெரிய வேண்டும். இவ்வளவு பெருந்தொகையை எதையோ நினைத்துக்கொண்டு ஒரு சிறிய அலமாரியில் வைக்கிறாய். நாளைக்கே பாதித் தொகையை மயிலி பேராலும் பாதித் தொகையைக் குயிலி பேராலும் அரசு வங்கியில் மூன்று மாதக் கெடுவில் போடவேண்டும். பூட்டிச் சாவியை என்னிடம் தா. காட்சி : 13 முத்தரையர் இல்லம் : இரவு ஏழு மணி முத்தரையர் : (ஒரு படத்தைப் பார்த்தவராய், நெற்றியில் கை வைத்துக்கொண்டு, மெல்ல வரும் கண்ணீரைக் கைத்துண்டால் துடைத்த நிலையில்) அப்போதே இவள் சொன்னாள். ஆம் சொல்லி நிழலானாள். உங்களுக்கு முன்சினம் ஒவ்வொரு முறை திடீரென வரும். அது நல்லதில்லை. அதுவும் இந்தச் செய்தியில் எந்த நிலை யிலும் வரலாகாது. இவ்வாறு துடிதுடித்துப் புலம்பி நம்பிக்கையோடு வீட்டை விட்டுப் புறப்பட்டாள். என்ன அதிர்காலம். மறைக்க வேண்டுவதைக் கடைசிவரை மறைக்கவேண்டும். எப்படி யார் சொன்னாலும் உண்மையை மறைக்க முடியாது போலும். பொய்யைப் பொத்த முடியாது போலும். பொய் என்னும் புற்றை அறிவு வேலியாலும், பொறுமை மண்ணாலும், அச்சக் கதவினாலும் அன்புச் சுவராலும் காத்துக்கொண்டே இருக்க முடிகிறதா? மறக்கக் கூடிய ஒன்றைத்தான் மறைக்க இயலுமேயல்லாது, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய எதனையும் மறைக்கவே இயலாது, இயல வில்லையே. மனைவி சுட்டிச் சொல்லியும், சாகும்போது குறிப்பிட்டுச் சொல்லியும் வெளிவந்து விட்டதே. கருவான ஒன்று உருவாகி ஒருநாள் வெளியாகித் தீரும் அடைத்தாலும் எறும்புத்துளை எங்காவது புறப்படும். (மீண்டும் மனைவியின் இன்னொரு நிழற்படத்தைப் பார்த்து) எனக்கும் என் சேயிழைக்கும் நல்லவற்றை நினைத்துக் கொண்டே இருந்தவள் இவள். சிரிக்கும் இப்படத்திற்கும் உயிருண்டோ? சினப்பதுபோல் படுகின்றது. வெறுப்பது போல் முகம் விரிகின்றது. சாகுமுன் கொடுத்த உறுதியைக் காப்பாற்றாதவன் என்று உள்ளி நாணுவதுபோல் கவிழ்கின்றது. (படத்தைப் பார்ப்பதைவிட்டு) இச் சிறு பூமகள் வந்த பின்னரே எனக்குப் பணமும் வளமும் புகழும். இத்தாமரைச் செவ்வாய் அமுதவாய் திறந்து அப்பா அப்பா என்று தொடர்கூட்டிச் சொல்லியதனா லும், உணவு போல நெஞ்சுக்கு உணர்வு ஊட்டியத னாலும், மெய்ம் முழுதும் தழுவி மென்சாரம் பாய்ச்சிய தனாலும் இவ்வளவு நலங்கள். இவ்வீடு சேயிழைக்குப் பின் கட்டியது. இக்கார் சேயிழை வந்தபின் வாங்கியது. ஊர்ப்புகழ் சேயிழைக்குப்பின் கூடியது. தாய்க்குப் பின் தாரம். தாரத்துக்குப் பின் தன் மகள். அன்பின் செயல்கள் எவ்வளவு. நான் வரும்வரை காத்திருந்து என்னோடு உண்ணும். வாசற்படி வரை வந்து ஒவ்வொரு நாளும் முத்தம் பெற்றுத் திரும்பும். எனக்கு அயர்வும் மயர்வும் தோன்றாதபடி வாசகம் பாடும், கதை சொல்லும், செய்தி படிக்கும், நன்னாரி விசிறும், சட்டை மாட்டும், காலணி பூட்டும், கணக்கு எழுதும், கடிதம் வரையும். உறக்கம் கலையாவாறு தொலைபேசும், மறுமொழியும். நாணத் தோடும் ஆண்மையோடும் இந்தக் காலத்திற்கு வேண்டிய படி நடந்துகொள்ளும். ஆண் குழந்தை ஒருத்தன் வேண்டும் என்ற எண்ணம் இல்லாதபடி செய்துவிட்டதே. பெண் ஆண் கலந்த சிவப்பிறவி. (சேயிழையின் நிழற்படத்தைப் பார்த்து) இப்படம் இவள் தாயொடு எடுத்தது. பால் குடிப்பது போன்ற அன்னைக் காட்சி. ஒற்றுமையான முகங்கள். சம்பந்தரைக் கண்ட மங்கையர்க்கரசியார் பால்சுரந்தாராம். என் சேயிழையைக் கண்ட பெண்ணரசியும் அவ்வாறு. என்ன அன்பின் சுரப்பு. இன்று அவளிருந்தால் சேயிழை பால் சுரந்திருப் பாள். (தன் நிழற்படத்தின் அருகே வந்து) இதுவும் ஒரு நிழற்படமே; இல்லை, அழற்படம்; இல்லை, இல்லை, வாழ்க்கைச் சுழற்படம். பிறர் மகளைத் தன் மகளாக எந்த பெண்ணும் மதிக்க மாட்டாள் என்பது பொதுப்பேச்சு. ஆடவர்கள் தன் பிள்ளை பிறர் பிள்ளை என்று பாராது தழுவிக்கொண்டு பெரும்பான்மையாக நடப்பார்கள் என்பது உலக வழக்கு. என் வீட்டிலோ நான் பெண்ணா னேன். அவள் இருந்திருந்தால் சேயிழைக்கு முன்பே மண முடிந்திருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு இடம் இருந்திருக்காது. அவளில்லாக் குறை அறிவுக்குறை. இந்த வயதில், இந்தத் தனிமையில் ஏன் இத்துன்பம். பெற்ற மகள் இல்லை என்ற உண்மை எண்ணம் என் உள்ளத்துள் ஒளிந்து கிடந்திருக் கின்றது. கிடந்தது ஒருநாள் பீறிட்டு வெளிக்கிளம்பிற்று இடம் காலம் பாராமல். இந்த வீடு வளர்ப்பு வீடு, இவன் வளர்ப்புத் தந்தை, இவள் வளர்ப்புத்தாய், இது வளர்ப்பு உடை, இது வளர்ப்புச் சோறு இப்படியெல்லாம் ஒரு பெண் உள்ளம், குமரியுள்ளம், குழந்தையுள்ளம் புலம்பிச் சோர ஒரு சொல்லால் இடங்கொடுத்துவிட்டேனே. ஒன்றானும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும் (கேலியாக) இப்பொய்யில் குறளுக்கு நான் மெய்யிலக்கியம். சொன்னபோது அந்த ஆள் வேறு போகாது கேட்டுக்கொண்டிருந்தானே. கடலை வானத்தால் மூடிவிடலாம். அவன் வாயை எமன் ஒருவனே மூடலாம். அவனை அவன் மூடுவதற்குள் எங்கெல்லாம் சொல்லித் தூவியிருப்பானோ. விட்ட சொல்லை, வெளி வந்த உணவை, பட்ட புண்ணை, பறித்த கண்ணை என்ன செய்ய முடியும்? (மீண்டும் மனைவியின் நிழற் படங்களைப் பார்த்துச் சோர்ந்து சேக்கையில் விழுதல்) (இன்னொரு பக்கம்) சேயிழை : (தன் தந்தையின் நிழல் படத்தை வணங்கி) அருமை அப்பா சொன்னதை இதுவரை மீறியதில்லை. அவர் சொன்னபடி நான் கேட்பேன் என்பதைச் சரி பார்ப்பதற் காக, ஒரு நாள் தன்னை யடிக்கச் சொன்னார். அடிப்பது போல ஓங்கி அவர் தாளைத் தடவினேன். தாயார் தராத உரிமையைத் தந்தவர் என் தந்தை. ஊரொடு பழகினாலும் என் உள்ளத்தை நம்புபவர். இன்றைக்கு ஏன் மீறினேன், எப்படி மீறினேன். விதி என்று ஒன்று சொல்வார்களே, அதுவா இது? அதுவும் வீட்டில் இன்னொருவர் இருக்கும்போது மீறிச் சென்றேன். என் தாய் இருந்திருந் தால், கட்டிய மாறால் என்னை கட்டிவைத்துப் புடைத் திருப்பாள், சொல்லாத சொல்லி என்னைச் சுட்டிருப் பாள், அறைக்கு இழுத்து வந்து சாத்தியிருப்பாள், அடுக்களைக்குக் கொண்டு சென்று வறுத்திருப்பாள். தாய் வளர்க்காத பெண்ணுக்கு ஆண் தன்மை வந்துவிடு கின்றது. திருமணத்திலே பருவமான தொடக்கத்தில் இருந்த ஆசை இப்போது இல்லை. திருமணமானால் வேறொரு வீட்டுக்குப் போய்த் தீரவேண்டும். உடைமைப் பொருள் உடையவர் வீட்டுக்குப் போவது முறை. நான் போனால், அப்பாவை... (அழுகிறாள்) அதைத் தள்ளிப் போடுவது நல்லது. அல்லது காரைக்கால் அம்மையாரின் கணவனைப் போல என் வீட்டில் இருக்கிற மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும். எப்படியும் அப்பாவைத் தனியே விடக்கூடாது. (தாயின் நிழற்படத்துக்கு ஒரு பூவை யணிந்து) இன்னும் நினைவிருக்கிறது. நான் வெளியே போனதாக எண்ணிக் கொண்டு, அப்பாவிடம் அம்மா காதுக்குள் சில கூறினாள். காப்பாற்றுவேன், இன்னொரு முறை சொல்ல வேண்டாம் என்று சொல்லி அம்மாவின் கையைத் தொட்டார் அப்பா. இளம் வயது, பணமும் இருக்கிறது, ஆண்பிள்ளை என்று அடுக்கடுக்காகச் சொல்லிப் பலர் அப்பாவை மறுமணக்கத் தூண்டியபோதெல்லாம் சிரித்துக்கொண்டார். என் வாழ்வின் பொருட்டு மறுமணத்தை நினையாதவர். அவர் நலத்தின் பொருட்டு நான் திருமணத்தைத் தள்ளியாவது போடலாம் அல்லவா? திருமணம் வேண்டாம் என்று கூட வெறுத்து விடுவேன். ஆனால், அப்பாவின் சொல்லைத் தட்ட மாட்டேன் (அழுது) என்ன தட்டமாட்டேன், அம்மாவோ! அப்பாவின் சொல்லைத் தட்டிப் படி கடந்துவிட்டேனே. கடந்தவள் உன் நினைவு வந்து திரும்பி வந்தும் விட்டேன். அவர் பொறுக்காவிட்டாலும் நீயாவது பொறுத்துக்கொள்ளேன். ஏன் அப்படி நடந்தது? ஆம், நாள்தோறும் எழுந்ததும் உன்னை வணங்கி உன் திருவடியில் ஒரு பூ வைத்து, அதனை என் முடியில் வைத்து மகிழ்வேன். இன்று மறந்து என் முடியில் வைத்த பூவை உன் அடியில் வைத்தேன். மனந்தடுமாறி னேன். சொல் தடுமாறினேன். செயல் தடுமாறினேன். அடக்கம் தடுமாறினேன். அப்பாவையே தடுமாறச் செய்தேன். (ஒரு நறுமாலையைத் தாயின் திருவடியில் வைத்து வணங்கித் தன் தலையில் சூடிக்கொண்டு தந்தை இருக்கும் அறைக்கு வந்து பார்க்கும்போது, அவர் விம்மிப் பொருமும் குரல் கேட்டு) சேயிழை : அப்பா, உங்கள் வார்த்தையைத் தட்டியதும் இதுவே முதல், இதுவே கடைசி. இன்றே பிறந்து இன்றே ஒழிந்தது. (முத்தரையர் தன் கண்ணீரோடு சேயிழையின் கண்ணீரைத் துடைக்க) அப்பா, நான் தாய் முன் ஆணையாகச் சொல்லி வந்திருக்கிறேன். இந்த ஒரு முறை பெற்ற தாயை நினைந்து உங்கள் மகளை மன்னித்து மறந்துவிடுங்கள். (சிரித்துக்கொண்டு) இனி எப்படி நடந்துகொள்கிறேன் என்று பாருங்களேன். முத்தரையர் : (தன் கண்ணீரை மட்டும் துடைத்துக் கொண்டு தன் மனைவி இன்னிசையின் நிழற்படத்தை எடுத்துவரச் சொல்லி) உன் தாயின் ஆணையாகச் சொல்கிறேன், இனி உன்னை வளர்ப்பு மகள் என்று சொல்லமாட்டேன், எண்ணமாட்டேன். அப்படிச் சொன்னால் இந்த உயிர் என்னால்..... சேயிழை : உள்ளதைத்தானே சொல்லுகிறீர்கள் அப்பா, என்ன குற்றமாகச் சொன்னீர்கள். தாய்க்குப் பின்னே இவ்வளவு பெரியவளாக வளர்த்தது யார்? நான் தாய் பெற்ற மகள், தந்தை வளர்த்த மகள். (சிரிப்பாக) தந்தை கண்டித்து வளர்க்காத செல்வ மகள். அப்பா நீங்கள் தாய்போல அடித்துப் பிடித்து ஒடித்து வளர்த்திருந்தால் இன்று மீறிப்போய் உங்கள் கண்ணில் நீர்வரச் செய்திருப் பேனோ? இனிமேல் இப்படி வளர்க்காதீர்கள். தண்டித்துப் பட்டினி போட்டுக் கண்டிப்பாக என்னை வளர்க்க வேண்டும். முத்தரையர் : (அவலச் சிரிப்பாக) உன் தாயிடத்து உள்ள நளினம் எல்லாம் உன்னிடத்துக் கூடுதலாகவே இருக் கிறது. அழுகையை வருத்தத்தைச் சிரிப்பாக மாற்றுகிறாய். குற்றத்தை, குறையை நிறைவாகச் செய்கிறாய். நான் உன்னை வளர்த்ததைக் காட்டிலும் நீதான் என்னை என் குணத்தை வளர்க்கிறாய். உன் முகம் மட்டும் தாய் முகமாக இல்லை, உன் அகமும் தாயகமாகவே இருக்கிறது. (மணி எட்டு. கதவு தட்டோசை கேட்கிறது. படியிலிருந்து முத்தரையர் இறங்கி வந்து கதவை மெல்லத் திறந்து யாரது இந்த நேரத்தில்) திருமேனி : நான் திருமேனி வந்திருக்கிறேன். முத்தரையர் : (கூப்பிய கையினராய்) நீயா தம்பி, எந்த நேரத்திலும் வரலாமே. குரல்காட்டித் தட்டியிருந்தால் யாரது என்று கேட்டிருக்க மாட்டேன். திருமேனி : யாரது என்று கேட்டுத் திறப்பது நன்முறை. நான் நாளைக் காலையில் வரலாமென்று நினைத்தேன். மனம் நினைத்தாலும் கால் இசைவு கொடுக்கவில்லை. பொறுத்துக் கொள்ளவேண்டும். தங்கை சேயிழை கடற்கரைக்கு வழக்கம்போல் வருவாள், இயற்கைகளைக் கண்டு இலக்கிய இன்பம் பெறுவாள் என்று எதிர்பார்த்தி ருந்தேன். அங்கே வந்த நடமாடும் ஒரு பெரியவர் சேயிழை கடற்கரைக்கு வருவதாகப் புறப்பட்டவள் வாசற்படிவரை வந்து வீட்டுக்குப் போய்விட்டதாகச் சொன்னார். (முத்தரையர் நெஞ்சு துணுக்குறல்) சேயிழை : (படியிலிருந்து வரும்போதே) அண்ணா, கொடுமுடி தான் சொல்லியிருப்பார், அண்ணே, இதுமட்டும் சொல்லியிருக்க மாட்டாரே. என் அப்பா என்னைப் பார்த்துப் பெற்ற மகள் இல்லை, வளர்ப்பு மகள் என்று சொன்னார் என்றும் சொல்லியிருப்பாரே இல்லையா? திருமேனி : அதைச் சொல்லத்தான் அங்கு ஓடிவந்தாற் போலத் தெரிகிறது. தங்கை நீங்கள் வெகுளும்படி நடந்துகொண் டாளே, கண்டித்து வைப்போம், ஓர் அறிவுரை கழறு வோம் என்று நேரமானாலும் வந்தேன். வீட்டுக்கு வீடு இப்படிச் சொல்வது வழக்கமே. நான் பெற்ற பிள்ளை யாக இருந்தால் நடப்பானா என்று சொல்லாத வீடு பிள்ளை இல்லாத வீடு. முத்தரையர் : தம்பி, கொடுமுடி படு முடிச்சுப் போடுவதில் பெரிய ஆளு. உன்னிடத்தில் இது சொல்ல வந்திருக்க மாட்டார். ஏதோ உன் குறிப்பறிய வந்திருப்பார். மணமாகாத பெண்கள் இரண்டுபேர் அவரிடம் இருக்கி றார்களே. எவ்வளவு பழகினாலும் காதலில் விழிப்பாக இருக்கவேண்டும். திருமேனி : விழிப்பாகவும் இருக்க வேண்டும், ஒருமுறை கூட உள்ளம் வழுக்கு ஏற்படாமல் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். (சேயிழை நன்னீர் கொண்டு வந்து கொடுக்க அதனைப் பருகிய திருமேனி வீடு செல்ல நினைக்கையில்) முத்தரையர் : தம்பி, ஓரிரு மணித்துளி இரு. ஒன்று சொல் கிறேன். கைப்பிடி போல மனப்பிடி கொள். உன்னை என் மகனாக மதிக்கின்றேன்... உன் பண்பு, ஒழுக்கம், மாசில்லாத அன்புள்ளம், இயற்கைப்பற்று எல்லாம் என் மகள் நாளும் சொல்லுவாள். இது உன் வீடு. எப்போதும் வந்து போ, போய் வா. சேயிழை : அண்ணா, நம் அப்பா சொல்லுவதை இயற்கையா கவே போற்றிக்கொள். (சிரித்துக்கொண்டு) உன் வீட்டில் தான் நான் இப்போது இருக்கிறேன். இருக்கலாமா? திருமேனி : (இயல்பாக) உங்கள் குடும்பத்தோடு எனக்குத் தாயகவுறவு இருப்பது போல் படுகிறது. நான் உங்கள் வீட்டுக்கு (சேயிழை இடைமறித்து நம் வீட்டுக்கு) வந்துபோவது போல நீங்களும் எங்கள் வீட்டுக்கு வந்து பழக வேண்டும். என் தங்கைகளுக்கு இன்னும் இரண்டு நாளில் வெள்ளிக்கிழமை திருமணம் பேசி முடித்துக் கொள்கின்றோம். எல்லா உறவினரும் வருவார்கள். நீங்களும் தங்கையைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும். சேயிழை : ஓ, நானே அப்பாவை அழைத்துக்கொண்டு வருகிறேன். (திருமேனி தன் வீடு ஏகல்) காட்சி : 14 காலை மணி எட்டு. அறந்தாங்கியாரின் வீட்டில் நெருங்கிய உறவினர்கள் வருகை. இரு பெண்களின் திருமணத் துக்குப் பாக்கு வெற்றிலை மாற்றும் நிகழ்ச்சி. வெல்லம்மையின் தாய் தங்கை எல்லாரும் வந்திருத்தல். அறந்தாங்கியின் நண்பர்கள் சிலரும் வந்திருத்தல். முத்தரையரையும் சேயிழையை யும் திருமேனி அறிமுகப்படுத்தல். சேயிழை பெண்டிர் பக்கம் போய் அமர்தல்) முத்தரையர் : (எலுமிச்சம் பழத்தை அறந்தாங்கி கையிற் கொடுத்து) நல்ல செய்திகள்; எல்லாம் நன்றாக நடக்க ஆண்டவன் அருள்செய்கிறான். அறந்தாங்கி : இன்று உங்கள் வருகை எங்கட்குப் பாக்கியம். உள்ளூரிலிருந்தும் கேள்விப்பட்டோமே தவிரப் பார்த்துப் பேசிக்கொண்டதில்லை. வேறு எது இறைவ னால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் திருமணம் என்பது இறைவனால் நடைபெறுகிறது என்று கருதுபவன் நான். முத்தரையர் : ஒரு குடியாதல் என்பது தெய்வச் செயல். இதனால்தான் நம் முன்னோர்கள் தெய்வப்புணர்ச்சி என்று பாராட்டினர். அக்குடி துன்பமின்றியும் துன்பம் கடந்தும் இயங்குவதற்கு இறையுள்ளுணர்வு ஒவ்வொரு வர்க்கும் வேண்டியதே. அறந்தாங்கி : உங்களுக்கு ஒரு பெண் குழந்தை தானா? முத்தரையர்: என் கூடவந்த சேயிழை ஒரே குழந்தை. (அறந்தாங் கியின் குறைப்பைப் பார்த்து) தாயில்லை. (சிறிது தாமதித்து) இக்குழந்தையை என் தாய். அறந்தாங்கி : தாயின் கடமையையும் சேர்த்து மிகப் பொறுப் போடு வளர்த்திருக்கிறீர்கள். உங்கள் பொதுமை, தொண்டு, கொடை எல்லாம் பிறருக்கு வழிகாட்டி. (மயிலியும் குயிலியும் வந்து வணங்க, மங்கல வாழ்த்து என்று வாழ்த்துகின்றார் முத்தரையர்) முத்தரையர் : உங்கள் குடும்பம் முழுதும் பண்புடைய குடும்பம். எங்கள் குழந்தையும் உங்கள் குடும்பத்தோடு பழகுவது நல்லது என்று அழைத்து வந்திருக்கிறேன். திருமேனியி னால் இந்த உறவு ஏற்படுகிறது. திருமேனி எங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பழகுகின்றவர். நன்கு முன்னேறக் கூடிய இளைஞர். அவருக்கும் விரைவில் திருமணம் முடிக்க வேண்டியதுதானே. அறந்தாங்கி : பெண் மக்கள் திருமணங்களை நடத்துவது பெற்றோர்க்கு மிகப் பொறுப்பு. இன்னும் ஒரு திங்களில் இவ்விரண்டையும் நல்லபடியாக முடிக்கவேண்டும். முத்தரையர் : (சேயிழையைக் கூப்பிட்டு வணங்கச் செய்தபின்) என் குடிக்கு ஒரே கொடி. இவளுக்குத் திருமணம் முடித்துவிட்டால், (கண் கலங்கி) இவள் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தவனாவேன். அறந்தாங்கி: உங்கள் பெருமைக்கும் செல்வத்துக்கும் குழந்தை யின் அடக்கத்துக்கும் மாப்பிள்ளை தேடி வரும். உங்கள் குழந்தையும் நம் குழந்தைகளில் ஒன்றுதான், வேறுபாடு வேண்டா. (சேயிழையைப் பார்த்து) இங்கே இருக்கிறவர் களைத் தாயாக எண்ணி அடிக்கடி வந்து பழகம்மா. முத்தரையர் : (மயிலிலையும் குயிலியையும் வரச்சொல்லி, சேயிழையைக் காட்டி) என் குழந்தையை உங்கள் தங்கை யாக எண்ணுங்கள். இதுவரையில் என் வீட்டில் தாயும் இல்லாமல் கூடப்பிறந்த யாருமில்லாமல் பிறரோடு பழக வாய்ப்பு இல்லாமல் இச்செல்வம் தனியே இருந்தது. (சேயிழையைப் பார்த்து) நன்றாக இவர்களோடு அடிக்கடி வந்து பழகிக்கொள்ளம்மா. மயிலி : (மெல்ல) எங்கள் வீட்டிலே சில நாளைக்குச் சேயிழை இருக்கட்டுமே. முத்தரையர் : (பெருஞ் சிரிப்பாக) சில நாளைக்கு என்னம்மா, எல்லா நாளுமே இருக்கலாமே. திருமண வேலை உதவிக்கு ஆள் வேண்டாமா? (இவ்வாறு சொல்லி இரண்டு வைர மோதிரங்களை மயிலிக்கும் குயிலிக்கும் அணிவிக்கின்றார் முத்தரையர். அறந்தாங்கி இப்பரிசை மறுத்தபோது, அன்புக் காணிக்கை; அவர்கள் வாழ்வில் ஒளிபெற வேண்டும் என்று வழங்குகின்ற ஒளி நகைகள் என்றார் முத்தரையர்) வெல்லம்மை : (கணவரைத் தனியே) அழைத்து இருவரும் தங்கமான குணம் உடையவர். பெண்ணும் கருக்கிடை யான பெண். நிறம் கறுப்பு என்றால் என்ன? திருமேனிக்கு நோக்கம் இருக்கும்போல் தெரிகிறது. அவன் சாதி மதம் நிறம் பாராதவன். காதலுக்கு நிறமில்லை, கடவுளுக்குப் புறமில்லை. இதையும் முடித்துவிட்டால் நம் கடமை இனிப் பேரப் பிள்ளைகளுக்கே. (வைர மோதிரங்களைப் பார்த்து உடனே அவள் ஆசைகொண்டாளென எண்ணியவராய், முதலில் பெண்மணங்கள் முடியட்டும் என்று சொல்லிவிட்டார்) அறந்தாங்கி : இரண்டு திருமணங்களையும் ஒரே நாளில் வைத்து நடத்து கின்றோம், முயற்சி செலவெல்லாம் ஒன்றாக ஆகிவிடுமென்று. முத்தரையர் : எப்படியிருந்தாலும் திருமண வேலை என்றால் நம் சமுதாயத்தில் கூடுதலான வேலையே. பலர் உதவி வேண்டும். வேலைக்கிடையே உடல் நலத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள். என் கார் வேண்டுமாயின் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். அலைச்சல் குறையும். அறந்தாங்கி : (நன்றியாக) இக்காலத்துக் கார் இல்லாமல் மணத் தேர் ஓடாது. தேவைப்படும்போது பெற்றுக் கொள்கின் றேன். ஓரிருநாள் வேண்டியதிருக்கலாம். (வெல்லம்மையின் தாய் 70 வயது பெரியாள் தன் பக்கம் வந்து அமர்ந்த சேயிழையைப் பார்த்தாள். ஒருகணம், மறுகணம் பலகணங்கள் உற்றுப்பார்த்தாள். நெற்றியைக் கழுத்தைக் கையைக் காலை கால்விரலையெல்லாம் பார்த்தாள். அவள் அணிந்திருக்கும் நகைகளைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். மூக்கையும் கழுத்தையும் வலக்கால் விரலையும் தொட்டுப் பார்த்தாள். திடுக்கிட்டு உள்ளத்தைப் புறங்காட்டவில்லை. என்ன செய்வது இந்தக் கூட்டத்தில் என்று தோன்றவில்லை. இருக்கை நிலைகொள்ளவில்லை. முத்தரையரும் அறந்தாங்கியும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, வெல்லம்மையைக் கூப்பிட்டாள்) பெரியாள் : (கையை நீட்டிக்கொண்டு) அந்தப் பெண்ணைப் பார்த்தாயா? என்ன தெரிஞ்சது. வெல்லம்மை : (மகிழ்வோடு) நல்ல பொண்ணு. அம்மா, அவரிடம் சற்று முன்னே இதுபற்றிச் சொல்லியிருக் கிறேன். அவரும் மறுக்கவில்லை. இந்த இருமணங்களும் முடிந்தபின் நீ நினைக்கிறபடி நடக்கும். பொருத்தமான பொண்ணுதானே. பெரியாள் : (ஓர் அறைக்குள் தனியே அழைத்துபோய் கையை உதறிக்கொண்டு) நீ என்னமோ நினைக்கிறாய், சொல்லு கிறாய்? எனக்கு ஒரு மணி நேரமா ஒரு மாதிரியா இருக்கிறது. இன்றைக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. வெல்லம்மை : (வயதான தாய் என்று எண்ணி) உடம்புக்கு ஒரு மாதிரியா? மருத்துவரை வந்தவர் காரைப் போக்கி அழைத்துவரச் செய்வோம். என் பிள்ளைகளுக்கெல் லாம் திருமணம் முடியும் வரையில் நீ நன்றாக இருக்க வேணும். விரைவாகச் சொல்லம்மா? எல்லாரும் வந்திருக்கும் நேரத்தில் நாம் அறைக்குள் இருக்கக்கூடாது. பெரியாள் : நீ நினைக்கிற மாதிரி இல்லை. நான் இன்னும் நூறு வயசு இருப்பேன். ஒரு பெரிய ஐயப்பாடு. அன்பாகவும் இருக்கிறது. அச்சமாகவும் இருக்கிறது (வெல்லம்மையை யும் கூட்டிக்கொண்டு முத்தரையரும் அறந்தாங்கியும் இருக்குமிடம் வருதல்) பெரியாள் : (முத்தரையரைப் பார்த்து) உங்களைப் பார்க்க வேணுமென்று இந்தப் பெரிய மனுசிக்குப் பட்டது. (முத்தரையர் எழுந்து வணங்குதல்) தாங்கள் கொஞ்சமும் தப்பாக எண்ணக்கூடாது. ஒரே ஒரு பெரிய கேள்வி. நான் நினைப்பது சரியா என்று தெரிந்துகொள்ள வேண்டும். முத்தரையர் : தாங்கள் என் தாய்போல. குற்றமாக உங்கள் வாயிலிருந்து ஒரு சொல்லும் வராது. எதுவானாலும் மனத்திலே பட்டதைச் சொல்லுங்கள். தெரிந்தவரை நானும் சொல்லுகிறேன். (வந்த உறவினர் எல்லாரும் கூடிவிட்டனர்) பெரியாள் : என்ன இந்த ஒரு கிழவி வந்த இடத்தில் எல்லாரை யும் வைத்துக்கொண்டு இப்படிக் கேட்கிறாளே; வயதான கோளாறோ என்று எண்ணக்கூடாது. வானத்திலிருந்து மழை விழுகிறதா இடி விழுகிறதா என்று தெரியவேண்டும். அறந்தாங்கி : இவர்கள் என் மனைவிக்குத் தாய். நேர்மையாக எதையும் கேட்பார்கள். இன்னும் தன் ஊரில் ஏழை விடுதி ஏழை மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார்கள். முத்தரையர் : இவ்வளவு பெரியவர்களை இன்று பார்க்கக் கொடுத்து வைத்தது என் பாக்கியம். (சேயிழையைக் கூப்பிட்டு வணங்கச் சொல்கிறார்) பெரியாள் : (சேயிழையை அணைத்துக்கொண்டு) இந்தக் குழந்தை (வேகமாக) உங்கள் சொந்தக் குழந்தையா? (எல்லோரும் திடுக்கிடல், சேயிழை அதிர்ச்சியடைந்து தந்தையின் பக்கம் சேர்தல்) நீங்கள் பெற்ற மகளா? வாங்கி வளர்த்த மகளா? முத்தரையர் : (சேயிழையை அணைத்துக்கொண்டு) உங்கள் பேச்சைக் கேட்டு என் மகள் நெஞ்சு படபடவென்கிறது. (இயல்பாக) என் மகள், என் மகள். உங்களுக்கு ஏன் ஐயம்....? வெல்லம்மை : ஏன் அம்மா, யார் குழந்தையாக இருந்தால் உனக் கென்ன? அவரவர் குழந்தை அவர்கட்குத் தெரியாதா? விருந்துக்கு வந்த பெரியவர்களிடம் இப்படி வெடுக் கென்று கேட்கக் கூடாது. நெடுநேரம் பின்னிக் குழப்பாதே அம்மா. பெரியாள் : நான் எல்லாருக்கும் தெரிய நல்லதற்குத்தான் கேட்கிறேன். கேட்க வேண்டிய நேரமும் இது. கடவுள் என்னை இதுவரை வைத்தது இதற்குத்தான். இந்தக் குழந்தை, செல்லம்மா தெரிந்துகொள். உன் மகள், என் பேத்தி. (பலகணம் ஒருவரும் பேசாதிருத்தல்) திருமேனி : (வியப்பிலிருந்து எழுந்து) பெரியம்மா சொல்வதற்கு என்ன காரணமோ, காரணம் இல்லையோ, சேயிழையைப் பார்த்த நாள் முதல் எனக்குத் தங்கையுணர்ச்சியே. எப்படி அந்த எண்ணம் வந்தது தெரியவில்லை. அறந்தாங்கி : (யாது செய்வதென மயங்கி இருக்கும் முத்தரை யரை) தாங்கள் ஒன்றும் நினைக்க வேண்டியதில்லை. நானும் எங்கள் குடும்பமும் உங்கள் சொற்படி நடப்போம். முத்தரையர் : நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது. இக்கண் மணி என் மகள், என் ஒரே மகள், என் மனைவியின் மகள், தந்தை என்ன காரணம் சொல்வது (பெரியாளை) அம்மா, தாங்கள் ஏதாவது விளக்கம் இருந்தால் பம்மாமல் சொல்லுங்கள். மலையை மறைக்க முடியாது, அலையை அடக்க முடியாது (சிறிது சினமாக) என் மகளையே வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். சேயிழை : அப்பா, என்னப்பா, நம் வீட்டுக்குப் போவோம். எழுந்து வாருங்கள் அப்பா. பெரியாள் : (பொக்கை வாய் திறந்து) நீ அவர் மகள்தான். யாரும் வேறு சொல்லவில்லை. இருந்தாலும் நடந்த ஒரு கதையைப் பாட்டி சொல்கிறேன். எல்லாரும் இருந்து கேளுங்கள். கதை சொல்லுதல் பாட்டி வழக்கம் இல்லையா? முத்தரையர் : (சிறிது சிந்தனையோடு) பெரியம்மா, உணர்ச்சி யெல்லாம் ஒழுங்காகிவிட்டது. இவ்வளவு ஒரு பெரிய கேள்வியைக் கேட்ட நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள். பெரியாள் : (இதுகாறும் நின்றவள் உட்கார்ந்தவளாய்) வெல்லம்மை! பதினெட்டு ஆண்டுகட்கு முன் உன் தங்கை செல்லம்மைக்கு அரசினர் பேறு மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது நினைவிருக்கிறதா? செல்ல மைக்குக் கடுமையான சூல். குழந்தையின் கால் முன் வந்தது. கருவிகொண்டு எடுத்தனர். வெல்லம்மை : குழந்தையின் வலக்கையில் நாலாவது விரல் சிதைந்தபோது இனி கவனமாக எடுங்கள் என்று கதறினாய். செல்லம்மை மயக்க மருந்தில் கிடந்தாள். (கண்கலங்கி) அந்தக் குழந்தை நாலைந்து மாதத்தில் செத்துப்போச்சு. இவளுக்கு முதற் பெண்ணாகப் பிறந்தும் கொடுத்து வைக்கவில்லையே. பெரியாள் : அந்தக் குழந்தை சாகவில்லை, தெரிந்துகொள்ளுங் கள். (சேயிழையைக் காட்டி) இதோ கமரியாக வந்திருக் கிறாள். பாருங்கள் எல்லாரும் வலது காலை. வலது காலை நாலாவது விரலைப் பாருங்கள். கனவா நனவா? இதை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. அந்தக் குழந்தை எளிதாக வரவில்லை. பிறக்கும்போதே உருண்டு திரண்டு கனமான குழந்தையாக இருந்தது. மூக்கிலும் கழுத்திலும் ஆயுதத் தழும்புகள்.... மருத்துவர்களை நான் சினந்தபோது, இப்படி இவ்வளவு காயம்படப் பச்சைக் குழந்தையைப் பிறக்கும்போதே தொல்லைப்படுத்து கிறீர்களே என்று பதறினபோது, அவர்கள் என்ன சொன்னார்கள், பிழைத்தது பெரிது, இந்தப் புண்ணெல் லாம் பின்னே தெரியாது, இந்த மாதிரி எவ்வளவோ என்று ஆறுதல் சொன்னார்கள். வெல்லம்மைக்கு நினைவிருக்கும், அதோ இருக்கிற என் தங்கைக்கும் தெரியும். இன்னும் ஓரடையாளம் கழுத்தின் பின்புறம் இவ்வளவு நாளாகியும் இவை மறையாமல் காட்டிக் கொடுக்கின்றன. (திருமேனியைப் பார்த்து) உன் தங்கை என்று நீ எண்ணியது தெய்வக் குறிப்பு. செல்லம்மை : (முத்தரையரை வணங்கி) என் மகள் என்று என் தாய் சொல்லுகிறாள். உங்கள் மகள் என்பதுவே என் கருத்து. பெற்றிருந்தாலும் ஒருநாளும் நான் வளர்க்க வில்லை, பார்க்கவும் இல்லை. உங்கள் தெய்வ மனைவியே தாய். நீங்களே தந்தை. எனக்குப் பெண் குழந்தைகள் இருக்கின்றன. நீங்களே சேயிழையை மகளாக வைத்துத் திருமணம் செய்துகொடுத்து, பிறக்கும்முதற் பெண் குழந்தைக்கு உங்கள் மனைவியின் பேரிட்டு எல்லாக் கடமையும் செய்யுங்கள். தாயும் தந்தையும் ஆக இருந்து எல்லாச் சடங்குகளும் செய்யுங்கள். ஆனால்..... அழுதவ ளாய் உங்கள் கைக்கு இக்குழந்தை எப்படி வந்தது என்பது தெரியவில்லை. சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். உங்கள் விருப்பம்போல். முத்தரையர் : (சேயிழையைத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குடித்துவிட்டு) என் மகள் என் மகளே. இவ்வளவு நிலைக்கு வந்ததால் சொல்லுகிறேன். சொல்லாது விட்டால் உண்மை தெரியாது. (கண் கலங்கி) என் மகள் என்பதும் உண்மை, இந்த அம்மா சொல்வதும்..... பெரியாள் : வளர்த்தவர்களே பெற்றவர்கள். அவர்களுக்கே அவள் மகள். இவள் உங்கள் மகளே. என் மகள் மகள் இல்லை, இல்லை. உங்கள் மகள் என் பேத்தி. முத்தரையர் : (இருகணம் சிந்தனை செய்து) யார் நெடு நாள் இருப்பவர்கள்? உண்மையே நிலைக்கும், உண்மையை நிலைக்க வைப்பதே உலகத்தொண்டு. (சேயிழையை தழுவிக் கையோடு கை வைத்துக்கொண்டு) எங்கட்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் குழந்தை இல்லை. பூட்டி வைக்கும் அருஞ்செல்வங்கள் இருந்தன. ஓடி விளை யாடும் ஒரு பெருஞ்செல்வம் இல்லை. யார் குழந்தையாக இருந்தால் என்ன, ஒரு குழந்தையை வளர்த்து இல்லறக் கடமையை ஆற்றுவோமே என்று ஏங்கினாள் அவள். அம்மா, அப்பா என்ற சொற்களுக்கு இடமில்லாத வீடு வீடா, மனித வீடா? பசுவும் அல்லவா மா என்ற சொல்லைக் கேட்டு இன்புறுகிறது என்று, அம்மா என்ற அன்புச் சொல்லை நான் கேட்டின்புறவும் ஒரு வழி பாருங்களேன் என்று தவித்தாள். பெரியாள் : நல்ல பெண்களுக்கு இருக்கவேண்டிய உணர்ச்சி. முத்தரையர் : (சேயிழையின் முகத்தோடு முகம் வைத்து) ஒரு நாட் காலை வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டு முன் அம்மா என்று ஒரு மெலி குரல் கேட்டது. “நான் ஏழை. வேறு சொல்ல எனக்குத் தெரியாது. மிகவும் காய்ச்சல். இது என் குழந்தை. நான் ஏழையாக இருந்தாலும் குழந்தையை எப்படியோ ஒரு நல்ல சட்டை வாங்கிப் போட்டேன். இந்தச் சின்ன உயிரை பெரிய உயிராக வளருங்கள்” என்று புலம்பிக் கொண்டிருந்தபோது, அந்த ஒரு வயதுக் குழந்தை என் மனைவியைப் பார்த்துக் கொண்டே, கன்னத்தில் குழிவிழச் சுவைத்துக்கொண்டே, உடலைக் குலுக்கிக் குலுக்கிக் கொண்டே இருந்தது. சிரிப்புவலை என் மனைவியுள்ளத்தைப் பறித்துக் கொண்டது. எதிர்பார்த்த நேரத்தில் இப்படி ஒரு தாய் வந்து வேண்டுகிறாளே என்று உள்ளிருந்த என்னைக் கேட்க வந்தாள். வந்தவள் திரும்புவதற்குள் ஏழைப் பெண்ணைக் காணோம். குழந்தை வீட்டிப்படியில் சிரித்துக் கொண்டு கிடந்தது. கெடுதலா நல்லதா என்று ஒன்றும் புரியவில்லை. வம்போ வழக்கோ என்னாமோ என்று துடிதுடித்தேன். என் மனைவி கவலைப்பட வில்லை. இது தெய்வம் தந்த உயர்திணைச் செல்வம். இல்லாதாருக்கு இருப்பவரிடம் இருந்து பெற்றுக் கொடுப்பது இறைவன் கடமை. மற்ற செல்வங்களை மனிதர்கள் தங்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம். குழந்தைச் செல்வம் பெற்றாலும் எடுத்தாலும் இறைவன் தருவது. யாரும் வந்து கேட்டால் கொடுப்போம். இப்போது எடுத்து நம் மகளாகவே வளர்த்துப் பதினெட்டாவது ஆண்டில் திருமணம் செய்துவிடுவோம். இவ்வாறு சொல்லிக்கொண்டே, மகளே கண்ணே மானே மரகதமே என்று முத்தி அணைத்து முலைக்காம்பில் வாய் வைத்துத் தொட்டில் கட்டி ஆராரோ ஆரிவரோ என்று தாலாட்டினாள். ஆண்டாளாய்ப் பத்தினியாய் அம்மையாய் என் குடலைத் தீண்டாது வந்துதித்த திருமகளே கண்வளராய்; சோற்று வயிறென்று சொற்பழிப்பார் நாமடங்கப் பேற்று வயிறளித்த பெருந்தவமே கண்வளராய்; என்னம்மா என்னப்பா என்றினிய குழல்கேட்கச் சின்னம்மா வாய்வந்த செந்தமிழே கண்வளராய் என்று ஆராட்டச் சீராட்டத் தொடங்கிவிட்டாள். குழந்தை அழவில்லை, கம்மென்று சும்மா இருக்கவும் இல்லை. செவ்வாய்ச் சிரிப்பும் மெய்வாய்க் குலுக்கலும் பெருவிரலாட்டும் அவளை என்னமோ செய்துவிட்டன. உடனே மலைய நாட்டுப் பொற்சங்கிலி தன் கழுத்திற் கிடந்ததை அக்குழந்தைக்கு அணிந்தாள். ஒளி மிகுந்த சிறுமேனியில் மயங்கிய நான் சேயிழை என்றேன். சேயிழை சேயிழை என்று அவளும் முத்தினாள். இதுவே அன்று முதல் என் மகளுக்குப் பெயராயிற்று. செல்லம்மை : இப்படி யாரும் ஏழைக் குழந்தையை வளர்த் திருக்க முடியாது. அத்தாயே அன்பு வடிவான உலகத் தாய். முத்தரையர் : எனக்கு அப்புறம் ஒரு பெரிய அச்சம் ஏற்பட்டது. அன்னைப் பாசத்தில் அவள் மயங்குகிறாள். முடிவில் ஏமாறக்கூடாது என்று ஊர்க்காவல் நிலையத்தில் இச்செய்தியைத் தெரிவித்தோம். தங்கள் குழந்தை என்று யாரும் உறுதிப்படுத்தினால் மனமாரக் கொடுத்துவிடுகி றோம் என்று எழுதிக் கொடுத்தோம். நிழற்படமும் எடுத்துக் கொடுத்தோம். அதற்கு ஒரு படியும் ஊர்க் காவற் பொறியோடு என் பேழையில் இருக்கிறது. சேயிழை என் மகளே. அந்த ஏழை தன் மகள் என்று என் மனைவியிடம் சொன்னாள். சொந்தப் பிள்ளையாக இல்லா விட்டால் இந்தப் பிள்ளை வாழ்வில் அவள் ஏன் அக்கரைப்பட்டு எங்களிடம் கொண்டு வந்து தர வேண்டும்? தான் எப்படி ஒழிந்தாலும் தன் குழந்தை நன்றாக வாழட்டும் என்று, என் மனைவி மடிமேல் வைப்பதுபோலப் படியில் வைத்துவிட்டுச் சென்றாள். அறந்தாங்கி : அந்த ஏழைக்கு எவ்வளவு நம்பிக்கை எடுத்து வளர்ப்பார்கள் என்று. இது பிள்ளையில்லாத குடும்பம் என்று அவள் தெரிந்துதான் வந்தாளோ என்னமோ. அதனால் உங்கள் மனைவியார் தெய்வம் தந்த குழந்தை என்று போற்றி வந்திருக்கிறார். பெரியாள் : நடந்த நடப்பை இன்னும் சிறிது சொல்லுகிறேன். அந்த ஏழையாளும் என் மகளும் ஒரே படுக்கையறையில் பெண் மகவு பெற்றுக் கிடந்தார்கள். மூன்று நாள் கழித்து ஒரு வேலை காரணமாக நான் ஊர் போயிருந்தேன். ஏழாம் நாள் வந்தேன். அந்த ஏழையாள் விடுதலைப்பட்டி ருந்தாள். ஆயுதப்பேறாக இருந்ததால் என் மகள் செல்லம்மை கூடுதலாகச் சில நாள் சேக்கையில் இருக்கவேண்டியதாயிற்று. (மேலும் சொல்லமாட்டா மல் தயங்கி) ஏதோ ஒரு மாற்றம். திடுக்கிட்டேன். குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டு வைக்கும் போது மாற்றமா, வேறு வேறு செவிலிகளால் கை மாறி இரவு நேரத்து நிகழ்ந்த மாற்றமா? கருவிபட்ட என் பேத்தி இல்லை. அவளோ குழந்தையொடு அகன்றுவிட்டாள். என் மகளும் தன் குழந்தை என்று எண்ணிக் கொண்டிருக் கிறாள். ஒருவர்க்கும் சொல்லாமல் ஒரிருநாள் மருத்துவ மனைப் பக்கம் தேடிப் பார்த்தேன். மனத்துக்குள் இன்னொரு ஆறுதலும் ஏற்பட்டது. காயம்படக் கருவிபட்ட குழந்தையைவிட இது ஒரு ஊறும் படாத குழந்தை என்று எண்ணிக்கொண்டேன். ஆனாலும் பொய்யில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுமா? அழுகினா லும் தன் கை கையே. அன்றிலிருந்து அந்த வயதுடைய எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் என் கண் தேடிக் கொண்டே இருக்கும். இனி என் கிழட்டுக் கண்ணுக்கு வேலையில்லை. ஏழை பெற்று என் மகள் வளர்த்த குழந்தை ஆயுதமின்றிப் பிறந்தாலும் பிறந்த நாளிலிருந்தே நோயாக வளர்ந்தது. ஐந்தாறு திங்களில் இறந்துவிட்டது. எவ்வளவோ மருத்துவம் செய்து பார்த்தாள் செல்லம்மை. அவளுக்கு அது வேற்றவள் குழந்தை என்று தெரியாதல்லவா? அந்த ஏழை நங்கை வேண்டுமென்று குழந்தையை மாற்ற வில்லை. காயம்பட்ட குழந்தையையா மாற்றிக் கொள் வாள்? செவிலியர்கள் அறியாமையால் செய்த மாற்றம். அந்த ஏழை இந்தச் செயிழைக்கு முதற்றாய். உங்கள் மனைவி இரண்டாந்தாய். என் மகள் மூன்றாந்தாயே. (இவ்வாறு பெரியாள் சொல்லிக்கொண்டிருக்கும்போது அக்கூட்டத்தில் 40 வயதுடைய ஒருத்தி புலம்பி அழுதாள். நீண்டு வளர்ந்த கூந்தல், வறுமையால் செந்நிறம் கறுத்த உடல். மிக எளிய ஆனால் அழுக்கற்ற உடை. தன் முகத்தைப் பொத்திக்கொண்டு பொருமினாள். எல்லார்க் கும் திகைப்பு. மீண்டும் என்ன புதிரோ என்று முத்தரையர் கலங்கினார்) வெல்லம்மை : என்ன மானாள், ஏன் இவ்வாறு கதறுகிறாள். (மற்றவர்களைப் பார்த்து) நம் வீட்டுத் திருமண வேலை பார்ப்பதற்காக ஒரு வாரமாக வந்திருப்பவள். மிகவும் பொறுப்பானவள். பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவள். ஏன் மானா அழுகிறாய். உன் குடும்பத்தில் ஏதும்..... மானாள் : (தானையால் அழுகையைத் துடைத்துக் கொண்டு சேயிழை என் மகள். இவள் என் மகள் (என்று ஓவென்று கதறினாள்) முத்தரையார் : பெரிதும் கலக்கம் உற்றவராய், சேயிழை கொட்டும் கண்ணீரைக் கண்டு பணப்பையில் வைத்திருக் கும் ஒரு படத்தை எடுத்து) என் வாழ்வுத் துணையே, இன்னிசைப் பெயராளே, சேயிழையின் நற்றாயே, உன்னிடம் கொடுத்த உறுதி பிழைத்தேன். பிழைக்கக் கூடாத இறுதி பிழைத்தேன். அன்று சேயிழை படி தாண்டிச் சென்றபோது சினத்தால் உறுதி தவறினேன். இன்றோ பலருக்கு முன் வெளிப்படுத்திவிட்டேன். உயிர்போகு முன் என்னைத் தனியே அழைத்து, உங்கள் உயிர் இருக்கும் வரை சேயிழையை வளர்ப்பு மகள் என்ற உண்மையைப் பொய்யென்று எண்ணாது சொல்லுங்கள். இதுவே சேயிழை வாழ்வுக்கு நல்லது என்று உறுதி பெற்றுக்கொண்ட பின் உயிர் நீத்து முகமலர்ந்தனை, வாடா மலராயினை. ஐயகோ! என் உயிர் இருக்கும் போதே வளர்ப்பு மகள் என்று இருமுறை அம்பலப் படுத்திவிட்டேனே. மகளின் எதிர்காலம் உணர்ந்து சொல்லினை. இன்று பார்க்கிறேன், பரிவாகப் பார்க் கிறேன். சேயிழையை ஒவ்வொருவரும் என் மகள் என்று, பதினேழாண்டு வளர்க்காதவர்கள் எல்லாரும் என் மகள் என்று சொல்லிக் கொள்கின்றார்கள். திருமண நிலைக்கு வளர்ந்த என் மகளோ அம்மா அம்மா என்று நம்மையே பார்த்து, பக்கத்து நின்று போகாது கட்டிப்பிடித்து அழுகின்றாள் விழுகின்றாள். (சிறிது தெளிந்து) ஆம் நாம் பெற்ற... இல்லை. பெற்றவர்கள் தெரியாதபோது நாம் பெற்ற மகளே. (புலம்பலாக) நாம் பெறவில்லை என்று பலர் சொல்ல முடியும். மகள் உடன்படும்போது பிறசான்று வேண்டுவதில்லை. ஓவிய உயிரே! பொய் பெரிது. உனக்கு உயிர் போகுமுன் கொடுத்த வாய்மை அதனினும் பெரிது. எங்கட்கு வளர்ப்பு மகள் என்பது மனமாரத் தெரியும். சேயிழைக்குத் தெரியக்கூடாது. இதுவே என் மனைவிக்கு எண்ணம். உண்மைப் பொய்மை உறுதி காக்குமா? பொய்யை மறைத்தால் மெய்தான் மறையும். உண்மை பிழைக்க உறுதி பிழைத்தேன். மனைவிக்கு மரணத் தறுவாயில் மகள் வாழக்கொடுத்த வாய்மை பிழைத்துவிட்டேன். மனைவிக்குப் பொய்மையானேன், மகளுக்கு வாய்மை யானேன். சேயிழை : (தந்தையைத் தழுவிக்கொண்டு) அப்பா, நீங்கள் உண்மையும் தவற வில்லை உறுதியும் தவறவில்லை வாய்மையும் தவறவில்லை தாய்மையும் தவறவில்லையே. என் அம்மாவே வந்து சொன்னாலும் நான் உங்கள் வளர்ப்பு மகள் இல்லை. இவ்வளவு நாளும் நினையா ததை இன்று என்னை யாரும் நீங்கள் கூட நினைக்க வைக்க முடியாது. என்னிடத்து இருக்கிற செல்வத்தைப் பார்த்து, அதுவும் சேர்த்துக் கிடைக்கும் என்று ஒவ்வொருவரும் ஆசையோடு பொய் சொல்லுகிறார் கள். அப்பா இந்தப் பாட்டியும் அந்த மானாளும் அறமன்றம் சென்று வழக்கு வேண்டுமானாலும் தொடுக்கட்டும். புதிய கண்ணகியாகத் தோன்றி, அம்மாவும் நானும் இருக்கும் நிழற் படத்தைக் காட்டி உறுதிப்படுத்துவேன். (புலம்பலாக) அம்மா! காட்டும் போது நீ பேசவேண்டும். முத்தரையர் : இவள் என் மகளே. மன்றம் கிடக்க. என் வீடும் வெளியும் சொல்லும். முற்பிறப்பில் எங்களிடம் பிறந்தி ருப்பாள். அப்போது வளர்க்கத் தவறி விட்டோம். இப்போது வளர்த்தோம். விட்ட குறை தொட்ட குறை. ஆனாலும் வேண்டாத விளைவை இச்சிறு உள்ளத்தில் விதைத்த தந்தையாய்ப் போனேன். பெற்றுப் பழக்க மில்லை, அதனால் சொல்லி பழக்கமில்லை. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்த எண்ணம்; நீ பல குழந்தைகட்குத் தாயானபின்பும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் உனக்கு அந்த எண்ணம்; இவ்வுரு நிழலைப் பார்க்கும் போதெல்லாம் என்னை நம்பி அவள் உயிர்விட்ட எண்ணம்; அவளுக்கு என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘உறுதிகொண்டு என்னுயிர் போயிற்று. உறுதி கொன்றும் இவர் உயிர்...’ என்ற எண்ணம். (நெஞ்சு கொதிக்கும் நிலையில் இயல்பாக) உன் தாயிடம் சொல்லிவிட்டு வரு... என் மக... சேயிழை : (தந்தை இறுதி மூச்சாகப் பெருமயக்கம் கொண்டு சாய்வுநாற்காலியில் கிடப்பதை உணராமல்) இந்த வீட்டு நாற்காலியில் இருக்கவேண்டாம் அப்பா. காருக்கு என் கையணைத்து வாருங்கள். நான் ஒட்டிக்கொண்டு செல்கின்றேன். இங்கே தெரிகிற எந்த முகமும் நமக்கு உறவில்லை, பகை. நல்லநாள் என்று கேட்டு இங்கு வந்தோம். மனக்கவலை தீர்ப்பது மகள் முகம். என்னை ஒருமுறை தாங்கள் கண் பார்த்தால் போதும், இன்று வந்த புதுக்கவலை இனி வராது. நம் வீட்டுக்குப் போய் தாயின் பளிங்குச் சிலையைக் கண்டால் நீங்கள் தவறு செய்யும் பழக்கமே இல்லை என்று தாய் வாய்விட்டுச் சொல்வாள். எது உண்மை என்று இவ்வளவு நாளும் தேடாத இவர்களுக்குத் தெரியுமா? வரும்போதே ஒரு மணி நேரத்தில் திரும்பிவிடவேண்டும் என்று சொல்லி வந்தீர்களே. வந்து இரண்டு மணியாச்சே. பலகாரம் வீட்டிற்குப் போய்ச் சாப்பிடுவோம். உடனே உப்புமா இடியப்பம் செய்து தருகிறேன். இந்த வாசற்படி இனி மிதிக்கக்கூடாது. எழுந்திருங்கள். மகளொடு வாருங்கள். முத்தரையர் : (தலை நிமிர்ந்து சிறிது இமை திறந்து சேயிழையை யும் திருமேனியையும் பார்த்த நிலையில்) எனக்கு ஒரு பிறவி இருக்கும்வரை என் மகள் சேயிழை: திருமேனி நம்மகன். உங்கள் அம்மா இருக்கும் மேல் வீட்டுக்கு நான் போய்ச் சொல்லி... என் மகள், என் மக..... (சேயிழையின் மடிமேல் வீழ்ந்து ஆவி பிரிதல். திருமேனி அவர் தலையைத் தாங்கிப் பிடித்தல்) முற்றும் ஒரு நொடியில் முதற் பதிப்பு 1972 இந்நூல் 1988இல் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. கருத்துவளம் கொழிக்கும் கவின்மிகு நாடகங்கள் ச. மெய்யப்பன், எம்.ஏ., அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் படைப்புக்கள் அனைத்தையும் வகைப்படுத்திச் செம்பதிப்புக் கொணரும் திட்டத்தில் பத்து நூல்கள் இதுவரை வெளி வந்துள்ளன. ஆசிரியரின் எழுத்துக்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து நோக்கும்போது அவரது அளப்பரிய தமிழ்க்கொடை மலையென உயர்ந்து விளங்குகிறது. ஆசிரியரின் புலமை நலம், படைப்புத்திறன், மொழித்திறன் ஆகிய முக்கூறுகளின் பேராற்றலை உணர முடிகிறது. இவ்வகை புதிய பதிப்புக்களால் ஆசிரியரின் பேரும் புகழும் பெருமையும் எல்லோராலும் எளிதில் உணர முடிகிறது. ஆசிரியரின் ஆளுமையும் அனைத்துத் துறையின் ஆற்றலும் யாவராலும் அறியப்பெற்று அவரது இலக்கியக் கொடையின் பயன் பல்வகையாலும் போற்றப் படுவது அறிந்து பதிப்பாளர் மகிழ்வது இயற்கைதான். பேராசிரியரின் முதல் படைப்பே நாடகம்தான். நாடகத் தலைப்பும் புதுமையானது புரட்சியானது. அறம் சார்ந்த கருத்துக்களைப் பரப்புகிறார். ‘மனைவியின் உரிமை’ எனும் நாடக நூலில் புகழ்துறவு, உளவுப் புலவன் என்னும் நாடகங்கள் வாயிலாக மன்பதைக்கு வளம் நல்கும் கருத்துக்களை வழங்குகிறார். ஆசிரியரின் சமூகப் பார்வை நாடக மூலம் நன்கு புலனாகின்றது. சில வகைகளில் சில கருத்துக்களை ஆசிரியர் வன்மையாகவும் அழுத்தமாகவும் பிரசாரம் செய்வதற்குத் தமது நாடகங்களைப் பயன்படுத்துகிறார். ‘நெல்லிக்கனி’ நாடகத்தின் கருத்து, கருத்துப் புரட்சியை மையமாகக் கொண்டது. பேராசிரியரின் நாடகங்கள் பொதுவாகச் சாதி, சமயங் களைக் குறிப்பிடாத மனித வாழ்வின் பொது சிக்கல்களை அடித்தளமாகக் கொண்டு அமைவன. புதியதோர் உலகு காண விழையும் ஆசிரியரின் உள்ளார்ந்த ஆர்வத்தை நாடகங்கள் நன்கு விளக்குகின்றன. மனங்களின் சிறிய அலைகள், நெஞ்ச நெகிழ்வுகள், நெஞ்சங்களின் நினைவலைகள் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஆசிரியர் வண்ணக்கோலங்களாக வரைந்துள்ளார். நாடகப் படைப்புக்கள் அனைத்திலும் சமூக விழிப்புணர் வுடைய சமூக மாற்றத்தைக் காண விழைகிற சான்றோரின் குரல் மூலநாதமாக ஒலிக்கிறது. ஆசிரியரின் தூய நெஞ்சமும் தூய வாழ்வும் பெரிய செயல்களும் நாடகப் படைப்புக்கள் அனைத்திற்கும் ஆக்கமும் பெருமையும் அளிக்கின்றன. இவரது நாடகப் படைப்புக்கள் மூலம் ஆசிரியருக்கென அமைந்த வளமான நடை நலத்தை நன்குணர முடிகிறது. நல்ல தமிழ் நடையும் நெகிழ்ந்த தமிழ் நடையும் ஆற்றொழுக்கான அழகிய நடையும் ஆசிரியரின் நடைச் சிறப்பு என்பது நாடகங்களால் புலனாகிறது. இயல்பான இனிய தமிழ் நடையில் அமைந்து இன்பம் பயப்பன. பல்வகையான நடை நயங்களை ஆசிரியர் பயன்படுத்துவதற்கு இந்நாடகங்கள் களங்களாக அமைந்துள்ளன. ஒரு கருத்தை மையமாகக் கொண்டு நாடகங்கள் உருவாகின்றன. அரிய பொருளை மையக் கருத்தாகக் கொள்கிறார். கருத்துக்களின் வலிமையை நாடக யுக்திகளால் பின்னியுள்ள திறம் கருத்துக்களின் வன்மை, மென்மைகள், ஆசிரியரின் அழுத்தமான வெளிப்பாட்டுத் திறத்தால் வாசகர் உள்ளங்களில் படிகின்றன. கதையின் கருவும் கருத்தும் கதை அமைப்பும் நாடக நலத்திற்கு வலிமை தருகின்றன. எடுத்த கருத்தை விளக்குவதற்கு கதையமைப்பையும் பாத்திரப் படைப்பையும் கதை நிகழ்வுகளையும் செறிவாக அமைத்து, உயிரோவியமாக்கியுள்ளார். பேராசிரியர் தமிழுக்குப் பல நூறு சொற்களை வழங்கும் வள்ளல். புதிய சொல்லாக்கம் படைப்பதில் வல்லவர். நாளும் அவர் வழங்கும் சொற்கள் நல்ல தமிழுக்கு ஆக்கம் அளிப்பன. படைப்பிலக்கியங்களில்தான் புதிய சொல்லாக்கத்திற்கு வாய்ப்பு அதிகம். ஆசிரியரின் சொற்படைப்பு வீச்சின் விகிதம் நாடகங்களில் மிகுதி. மாறிவரும் சமூக அமைப்புக்கேற்ப புதிய பொருள்களுக்கேற்பப் புதிய சொற்களைப் படைக்கிறார். அவர் படைத்த எளிய, இனிய, அழகிய சொற்கள் சொல்லாக்கங்கள் வழக்கில் வந்துவிட்டன. ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய சொல்லாட்சிகளை, தொடரமைப்புக்களை அவர் போல் தமிழுக்கு அளித்தவர் இலர். ‘ஒரு நொடியில்’ ஒரு நொடிப் பொழுதில் மனம் கொள்ளும் மாற்றத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தினைப் பலரின் மனநிலைகளைப் படம் பிடித்துக் காட்டுவதன் மூலம் விளக்கு கிறார். தற்கொலை தவிர்க்கப்பெறல் வேண்டும் என்பதனைத் திட்ப நுட்பத்துடன் தெளிவாக்கியுள்ளார். புதுக் கருத்தினைப் பிரச்சாரம் செய்யும் தலைசிறந்த சமூக நாடகமாக இதனைக் கற்றோர் போற்றுகின்றனர். இதனைப் படிப்பவர் பயன்பெறு வர். தமிழ் நாடகத்துறை நலம்பெறும். இத்தகைய நூலால் ஆசிரியரும் பதிப்பகமும் பெருமை பெறுவது உறுதி என நம்புகிறேன். உயிரின் சிந்தனைக்கு வாழ்வில் ஒரு முறையாவது தற்கொலையை எண்ணாத வள் இல்லை; எண்ணாதவன் இல்லை. இந்த நலிவெண்ணம் எந்த வயதிலும் முளைக்கின்றது. ஏன்? துன்பத்திலிருந்து விரைவில் விடுதலைபெறத் தன் கையில் இருக்கும் எளியவழி தற்கொலை என்ற கருத்தினைப் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சமயங்களும் இலக்கியங்களும் அறங்களும் நடைமுறை வழக்கங்களும் ஊட்டிப் பாராட்டி வந்திருக்கின்றன. உலகில் மக்கள் மதியாத பொருள் ஒன்று உண்டெனின் அது உயிர் என்பது நான் கண்டது. மதிப்பதாகச் சொல்வ தெல்லாம் நடிப்பே. உண்மையான உயிர்ப்பற்று உடையவன் உடல் நலத்தைக் காப்பான், குணநலத்தைக் காப்பான், பிற நலத்தையும் காப்பான். குடலையும் உடலையும் பணத்தையும் குணத்தையும் புணர்ச்சியையும் உணர்ச்சியையும் எடுத்ததற் கெல்லாம் கெடுத்துக் கொண்டு வேகதாகப்பட்டுக் கொந்த ளிக்கும் இவ்வுலகம் உயிரைப் போற்றுகிறது என்பதனை எவ்வாறு ஒத்துக்கொள்வது? உயிர் என்பது தானே வந்த தனக்குவமையில்லாத வித்துச் செல்வம். கொள்கை வறுமை மானம் மற்றவற்றுக்காக உயிரைக் கிள்ளுக் கீரை போல நீக்கலாம் போக்கலாம் என்று பாடி எழுதிப் பறைசாற்றிப் பரப்பிவரும் பழம்போக்கைத் தடைப்படுத்த வேண்டும் என்ற எதிர்ப்பு நோக்கத்தாலும், உயிரிடத்துத் தற்பற்று ஊட்டி வாழ்வில் நம்பிக்கை கொள்ளச் செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தாலும் இப்பத்து நாடகங் களையும் படைத்துள்ளேன். இவை ஒரு பொருள்மேல் எழுந்த தனிமொழி நாடகங்கள். தனியான தன்மொழி உள்ளத்தை ஒருமைப்படுத்தும், உணர்ச்சியைத் தூண்டி ஒழுங்குபடுத்தும், துணிவோடு வாழும் வழிகாட்டும் என்பதனால் இந்நாடக வடிவை மேற்கொண்டேன். எதனை நாம் பிறந்தபின் பெற்றோமோ அந்த உடைமையை விடும் உரிமை நமக்கு உண்டு. உயிர் என்பது இயற்கை வரவு. அஃது இயற்கையாகப் போக வேண்டும். இந்த இயல்பான விதையை மன்பதைக் களத்தில் புதிய உரமிட்டு உழவுசெய்ய முயல்கின்றேன். இடையிட்டு வந்துபோம் பதவிகளை அழுத்த மாகப் பிடித்துக்கொள்ளப் பாடுபடும் இவ்வுலகம், மெய்யான பிறவிப் பதவியைப் பலுவன் காற்றுப்போல எளிதாக விடலாம் என்று இன்னும் எழுதிப் பரப்பிக் கொண்டிருப்பது பொருந்துமா? எதனையும் செய்யலாம்; ஒரு நாள் தற்கொலை செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தை உயிர்க்குணமாக ஆக்கி வந்திருக்கின்றோம். அதனால் இளைஞர்களுக்கும் உணர்ச்சிப் பிண்டர்களுக்கும் நேர்வழி தோன்றவில்லை; குறுக்கு வழியே சட்டெனப் படுகின்றது. கடவுட் பற்றும் தற்கொலையும் முரண் என்று சமயப் பெரியார்கள் இடித்துரைக்க வேண்டும். தற்கொலையாக நிகழ்ச்சிகளை முடித்துக் காட்டாதபடி கதைஞர்கள் கவிஞர்கள் திரைஞர்கள் அறிஞர்கள் எல்லோரும் தம்படைப்புக்களை நலமாக நெறிப்படுத்த வேண்டும். உயிரோடும் முன்னறிவோடும் துணிவோடும் பண்போடும் எந்நிலையிலும் திருந்தியும் திருத்தியும் வாழலாம், வாழ்க என்ற புது மனப்பான்மையை இளைஞர்களுக்குப் பாய்ச்ச வேண்டும். இவை என் வேண்டுரை. தற்கொலை யெண்ணம் எழுவதும் ஒரு நொடியில்; தற்கொலை செய்து தொங்குவதும் ஒரு நொடியில்; அந்தப் பாழெண்ணம் மாறுவதும் ஒரு நொடியில். ஒரு நொடிப் பொறுமை இல்லாமையால் எய்தற்கரிய அருமையை, வாழும் உரிமையை, செல்வவுயிரை இழக்கலாமா? தற்கொலை யெண்ணம் வந்தவுடன் ஒன்று செய்யுங்கள். உங்கள் எண்ணத்தை ஒரு நண்பனிடமோ, பெரியவரிடமோ, ஆசிரியரிடமோ வாய் விட்டுத் தெரிவித்துவிடுங்கள். உயிரோடு வாழ்வீர்கள்! உயர்வாக வாழ்வீர்கள்! உண்மையாக வாழ்வீர்கள்! கதிரகம் வ. சுப. மாணிக்கம் காரைக்குடி -2 1-12-1972 பொருளடக்கம் 1. தேர்வுக்காக 171 2. வறுமைக்காக 185 3. மானத்துக்காக 195 4. பதவிக்காக 208 5. கொலைக்காக 224 6. கொள்கைக்காக 243 7. ஐயத்தினால் 263 8. புரியாமையினால் 275 9. கற்புக்காக 287 10. காதலுக்காக 309 1. தேர்வுக்காக (அதிகன் பதினெட்டு வயது இளைஞன். குடும்பத்தில் மூன்றாவது பையன். தங்கை இருவர். தகப்பனார் இறந்து விட்டார். தாய் மருத்துவச் செவிலி. இக்குடும்பத்தில் இவன் ஒருவனே கல்லூரிவரை படிக்கச் சென்றவன். அரசினர் உதவி பெற்ற அதிகன் கல்லூரியில் முன்னிலை வகுப்புப் படித்துப் பல்கலைக்கழகத் தேர்வு ஏப்பிரல் மாதத்தில் எழுதியிருக்கிறான்.) (காற்சட்டை போட்டிருக்கும் அதிகன் கையில் ஒரு செய்தித்தாளைச் சுருட்டி மடக்கிக்கொண்டு புகைவண்டித் தடத்தின் வழி செல்கின்றான். இரவு மணி எட்டு.) தனிமொழி 1 அதிகன் : (செய்தித்தாளைக் கசக்கிக்கொண்டு, தன்னுள்) இந்தப் பதினைந்து காசுத் தாளுக்கு என்ன ஆற்றல்? இத்தாளா என் முடிவைச் சொல்ல வேண்டும்? (கேலிச் சிரிப்பாக) எழுதிய அன்றே எண்ணிய முடிவு தானே. இருந்தா லும் ஒரு சிறு நன்னம்பிக்கை. என் வகுப்புத் தோழர்கள் என்போலத்தான் பல்கலைக்கழகத் தேர்வு எழுதியிருப்பார்கள். என்னைவிட மிக மட்டமாகத்தான் கிறுக்கியிருப்பார்கள். எப்படி நாங்கள் நன்றாகத் தேர்வு எழுதியிருக்க முடியும்? கல்லூரிக்குப் படிக்கவா போனோம்? படிப்பதுபோல் காட்டிக் கொள்ளத்தானே நாளும் போய் வந்தோம். பேர் கொடுத்து விட்டு ஊர் சுற்றினோம். இந்த ஓராண்டில் மட்டும் நூறு திரைப்படம் உள்ளூரிலும் வெளியூரிலும் பார்த்திருப்போமே. ஒழிந்த நேரங்களில் திரையிதழ் படிப்போம். இன்னும் ஒழிந்த நேரங்களில் திரை நடிகைகளைப் பற்றி அரட்டை பேசிப் புகையும் குடித்து இளஞ்சொல் பேசித் திரிவோம். இப்படியாக மாணவ நாளை ஓட்டிய நாங்கள் தேர்வில் என்ன எழுத முடியும்? (சிறிது பெருமிதமாக) நானாவது தேர்வு நேரம் முழுவதும் உட்கார்ந்து விடாது எழுதினேன். ஒவ்வொரு நாளும் தேர்வு தவறாது எழுதினேன். என் நண்பன் நல்லப்பன் தேர்வுப் பணம் கட்டினான். தேர்வு முகம் பார்க்கவில்லை. இன்னொரு நண்பன் பூவன் சட்டப்படி அரைமணி நேரம் தேர்வறையில் இருந்து விட்டு வினாத்தாளை விசிறிக்கொண்டு, எழுதுகின்றவர்களை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டு புறப்பட்டான். நண்பன் மாலி ஐயோ பார்த்தெழுதிப் பிடிப்பட்டான். எனக்கும் பார்த்தெழுதும் ஆசை கிடந்தது. இருந்தாலும் தாயின் சொல்லை மீற விரும்ப வில்லை. அது ஒரு வகைக்கு நல்லதாயிற்று. என் நண்பர்களை விட நான் தேர்வு நன்றாக எழுதியிருக்கின்றேன். அதனால் ஒரு நம்பிக்கை நல்ல முடிவு வந்தாலும் வந்துவிடும் என்று. அதிகா, எப்படிச் செய்திருக்கிறாய் என்று தட்டிக் கொடுத்துக் கேட்டார் என் ஆசிரியர். ஒரு கேள்வியையும் விட வில்லை; எல்லா நாளும் கடைசிவரை இருந்து எழுதி விட்டுத் தான் வந்தேனய்யா என்று சொன்னதுகேட்டு, நல்லது வரும் என்று கைகுலுக்கினார். இந்த முறையில் கேள்விகள் மிகக் கடினம். நம் மாணவர்கள் நிலை தெரியாது வெளிநாடு சென்று வந்த எவனோ வினாத்தாள் குறித்திருக்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகின்றது. சொன்னால் யார் கேட்பார்கள்? நீ எழுதியிருப்பதற்குக் குறைத்துப் போட்டாலும் 40 மதிப்பெண்ணுக்குக் குறைத்துப் போடமுடியாது. இப்போது திருத்துகின்றவர்கள் கண்டவாறு கைகொண்டவாறு திருத்தித் தள்ளுகிறார்கள். கூடியவரை பலரைத் தூக்கிப் போடும்படி மேலிடத்தாரும் பார்த்துக் கொள்கின்றார்கள். நீ கவலைப் படாதே. இவ்வாறு ஆறுதல் சொன்ன ஆசிரியர் இனி எந்த மேல்வகுப்புப் படிக்க எண்ணியிருக்கிறாய் என்று கேட்டு வாழ்த்தினார். தன் கையில் இருந்த மிட்டாயையும் தந்தார். என் சிறிய தங்கைக்குக்கொடுக்கலாம் என மிட்டாயைப் பையில் போட்டுக் கொண்டேன். என் நம்பிக்கை கூடிவிட்டது. இது இரண்டு மாதங்களுக்குமுன், (ஏக்கமாக) கூடிய நம்பிக்கை என்னாயிற்று, என்னாயிற்று? ஒரு முடிவாயிற்று, ஒப்பற்ற முடிவாயிற்று. 2 ஆசிரியர் வாழ்த்தியதை என் தாயிடம் பூரிப்பாகச் சொன் னேன். (கண்கலங்கி) நீ நல்லதற்குப் பொய் சொல்லுபவன் என்று உன் அப்பா என்னிடம் அடிக்கடி சொல்வதுண்டு. நன்றாகத் தேர்வு எழுதிவிட்டு, மட்டமாக எழுதியிருப்பதாகச் சொன்னாய். குட்டு வெளியாகிவிட்டது. அளப்பார் அளக்கவேண்டும். (அணைத்துக் கொண்டு) ஆசிரியர் சொன்னதை அப்படியே நம்பு என்று கூறினாள் தாய். அவள் மகிழ்ச்சி வரவரப் பெருகியது. படிப்பை இடையிலே விட்டுவிட்ட என் அண்ணன் மார்களை உண்ணும்போதெல்லாம் காரசாரமாகத் திட்டுவாள். வருபரிடம் வாய் கொள்ளாது என்னைப் போற்றுவாள். இந்தப் பெருமைப் பறையில் என்னை என் போக்கிலே விட்டுவிட்டாள். (இழிவுக் குறிப்பாக) மகனை நன்றாக விட்டுவிட்டாள். (செய்தித்தாள் கீழே விழுகின்றது) படித்த பிள்ளை, இன்னும் இரண்டு மாதத்தில் மேல் வகுப்புப் படிக்கவேண்டிய குழந்தை இப்போது நோக்கப்படி தூங்கட்டும், திரியட்டும், தின்னட்டும், செலவு செய்யட்டும் என்று விட்டுவிட்டாள். எதிர் காலத்தில் நான் வெளிநாடு சென்று பணம் குவித்துக் கொட்டுவேன் என்ற ஆசையில் கைப்பணத்தை எனக்கு மட்டும் செலவுக்குத் தருவாள். தாய் தருவது போதுமா? இனி இவை எதற்கு என்று பாடநூல்களை யும், துணை நூல்களையும் பழைய கடைக்குக் கால்விலைக்கு விற்று இடத்தைக் காலியாக்கினேன். என் கலகலப்பு தாயின் குதுகுதுப்பு. இவற்றைப் பார்த்த சிலர் என் அண்ணன்மார் வளர்ந்து இருக்கவும், எனக்குத் திருமணம் பேசச் சொல்லிவிட்ட னர். இந்தத் தம்பிக்கா இருந்தால், இப்போதே பெண்ணைக் கட்டிக்கொடுக்கலாம் என்ற சொல் வரவைக் கேட்கக் கேட்க, என் தாய் என் ஒருவனையே தன் மகனாக எண்ணிக் கொண்டாள். எப்போதும் முகமலர்ச்சியாக இருந்தாள். 3 எனக்கு எல்லாம் செய்யலாம், எதுதான் செய்யக் கூடாது என்ற தெம்பு வந்துவிட்டது. மகளிர் கல்லூரியில் என் வகுப்புப் பயின்ற நங்கை முருகிக்குக் கவி தீட்டினேன். யாப்பு சரியா என்று இக்கடிதத்தை யாரிடமும் காட்ட முடியுமா? நான் தேர்வில் வெற்றி பெறுவது புலிக்கு மறம்போல, புயலுக்கு வேகம்போல, காதலுக்குச் சாதல்போல உறுதி. நீ தேர்ச்சி அடைவது எதுபோல என்று எழுதட்டுமா? குயிலுக்குக் குரல்போல, கூந்தலுக்கு மலர்போல, உடலுக்கு உயிர் போல, நாம் ஒரே கல்லூரியில் உடன் பயிலும் மங்கல நாளை எதிர்பார்க்கிறேன் என்று துணிவாகக் கையெழுத்திட்டு எழுதினேன். அவளுடைய நறுமொழி உடனே கிட்டவேண்டும் என்று முகவரி எழுதிய முத்திரைக் கூட்டை உள்ளே வைத்தேன். நாணம் மிகுந்து மறுமொழி எழுதுவாளோ, பிறர் அறியாமல் அவளால் எழுத முடியுமோ முடியாதோ என்று எண்ணி, தேர்வெழுதிய அந்த மெல்லியகை என் பொருட்டு நோவக்கூடாதே என்று அவள் எழுதவேண்டிய வாசகத்தை நானே எழுதி உள் வைத்தேன். நல்லன்பீர், உங்கள் கடிதம் என் கையில் . . . . . நாணத்தால் . . . . வாழ்த்து. அன்பி . . . . . . . . . . . . . . . . . அவள் கையெழுத்திட்டாற் போதும் என்ற அளவுக்கு வேலையைச் சுளுவாக்கி வைத்தேன். என் மனத்தைப் பெண் மனம் ஆக்கிக்கொண்டு சுருக்கமாகவும் புள்ளியாகவும் எழுதினேன். (சிரித்துக்கொள்கிறான், வாய்மூடாமல் சிரிக்கிறான்.) என்ன அறியாமை! என் அறியாமை! இப்படி எந்தக் காதல் மடையனும் செய்ததுண்டா? கடிதம் மறுநாளே எனக்குக் கிடைத்தது. முருகி எதனையும் காலம் போற்றிச் செய்பவள் என்று பாராட்டிக் கொண்டேன். என்னிடம் கடிதம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாளோ, இவ்வளவு விரைவாக மறுமொழி எழுதுவதற்கு என்று காரணம் சொல்லிக் கொண்டேன். (கடிதத்தை உடைக்காமலே பையில் வைத்துக் கொண்டு) இதனை எங்கே பிரிப்பது, எந்த இடத்தில் கிழிப்பது, எப்படி மறைவாகப் படிப்பது, மேலும் என்ன செய்வது என்று உள்ளம் பதறியது. மறைவான மகிழ்வான வெளியிடம் சென்று முகவலகால் நறுக்கிக் கூட்டின் வாயைத் திறந்தேன். திறக்கும்போதே, கையெழுத்து மட்டும் ‘முருகி’ எனப்போடும் அளவுக்கு, பிற செய்திகளை அவளுக்காக நானே எழுதி வைத்த மதி நுட்பத்தை வியந்து கொண்டேன். கையெழுத்து மட்டும் செய்திருப்பாளா? மேலும் பல வரிகள் பாசமாகத் தன் கைவளை யொலிக்கத் தீட்டியிருப்பாளோ? நல்லன்பீர் என்று நான் எழுதியதை நேரடியாக அடித்துவிட்டு (வாயூறுகின்றது) நல்லத்தான் என்று என்னைக் காதலால் கொல்லத்தான் எழுதியிருந்தாலும் எழுதியிருக்கலாம் என்று ஆசைப்பட்டேன். (வெறுப்பாக) பட்டு என்ன பயன்? கடிதத்தைத் தொட்டு என்ன பயன்? காதலே ஒரு அறியாமை. அதுவும் பள்ளிக் காதல் பேதமை. பாலில் நீர் கலப்பதற்கு மாறாக நீரில் பால் கலந்ததுபோல, அஞ்சற் கூட்டினை மாறி வைத்தொழிந்தேன். அவள் முகவரி எழுதிய காதல் அஞ்சலுறையுள் என் முகவரியுறையை வைத்து அனுப்பாமல் மாறி வைத்தேன். உள்ளூர் அஞ்சலகத்திலிருந்து நேரே எனக்கு வந்துவிட்டது. காதல் மயக்கம் கடித மயக்கமாகியது. இது நாலு நாளைக்கு முன் நடந்த நிகழ்ச்சி. (அக்கடிதத்தைப் பையிலிருந்து எடுத்துப் பார்த்து மறுபடியும் பையிலே திணிக்கின்றான்.) 4 (புகைவண்டித் தடத்தின் ஓரமாக நடந்துகொண்டு அதிகன் தன்னுள்) இரவு தூங்கினேனா? காலை ஐந்து மணிக்கு வழக்கத்திற்கு மாறாக எழுந்தேன். என்ன நம்பிக்கை! முகங்கழுவித் தலைசீவி, காற்சட்டை நுழைத்துக் கடவுளைக் கையை உயர்த்தி வணங்கி, தூங்குகின்ற தெய்வத் தாயையும் முகம் பார்த்துத் தொழுது, புகை வண்டி நிலையத்திற்கு விரைந்தேன். இல்லை, ஓடினேன். இல்லையில்லை, பறந்தேன், பாய்ந்தேன். செய்தித்தாள் வாங்கப் பதினைந்து காசு கையில் இருந்தது. முன்னாள் சொல்லிவைத்திருந்தபடி தாள் விற்பி என்னைக் கண்டதும் முதலில் மேலாக இருந்த ஒரு தாளை அடுக்குக் குலையாமல் எடுத்துத் தந்தான். அக்கம் பக்கம் யார் நிற்கிறார்கள் என்று பாராமல் தொட்டுக் கும்பிட்டு வாங்கினேன். விரல்கள் நடுங்கின. இதழ்கள் துடித்தன. காற்சட்டை கலகலத்தது. சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் என்ற தலைப்பு பெரிய எழுத்தில் இருந்தது. மூன்று பக்கமும் எண்கள் மயம். பொடியான எண்கள். கண்களைப் பறிக்கும் எண்கள். வேறுசில மாணவர்களும் ஓசியில் என் தாளைப் பார்க்க வந்துவிடுவார்களோ என்று மடித்துவைத்துக்கொண்டு ஒருபுறம் சென்றேன். என் தேர்வெண்ணை மந்திரம்போல் சொல்லிக்கொண்டேன். இதுதான் என் எண்ணா என்று நுழைவுச் சீட்டை எடுத்துப் பார்த்தேன். என் பதிவெண் 1000. நினைவு வைத்துக்கொள்ளக்கூடிய மூன்று கோழிமுட்டைகள். கடவுள் காப்பாற்றுவார். கடவுளே கடவுளே என்று ஓதிக்கொண்டு துணிவாகச் செய்தித்தாளை விரித்தேன். நன்றாகவே விரித்தேன். நம்பிக்கையோடு விரித்தேன். எண்களில் பரப்பரப்பாக விரலை வைத்துப் பார்த்தேன். 999, 1002 என இருந்தது. திகைத்தேன். 999 முதல் 1002 வரையா என்று கண்ணைத் துடைத்துக்கொண்டு விரலை அழுத்திக்கொண்டு பார்த்தேன். 2 என்பது அச்சுப் பிழையா என்று நல்ல வெளிச்சத் தில் தூக்கிப் பிடித்தும் பார்த்தேன். எண்ணிருந்தால் இளங் கண்ணுக்குத் தெரியாதா? மற்றவர்களாக இருந்தால், உடனே தாளை நூறு சுக்காகக் கிழித்தெறிந்திருப்பார்கள். அவ்வளவு குழப்பம் எனக்கில்லை. மூன்று பாகங்களிலும் தேறாவிட்டா லும் தனிப் பாகங்களிலாவது என் எண் வந்திருக்கலாமே. தமிழில் தோல்வி என்றால், வேறெதில் வெற்றி? இன்னும் சிறிய ஆசை. ஏனைப் பாகங்களையும் பரபரப்பின்றித் தெளிவாகப் பார்த்தேன். தோல்வியாகத்தான் இருக்கும் என்று எண்ணிவி ட்டவனுக்குக் கலக்கம் வருமா? எல்லாம் தோல்வி; எதிலும் தோல்வி. தாளில் எண் தென்படவில்லை. என் உயிர் தென் பட்டது. தாளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். என் உயிர்வாங்கும் தாளாகிய வாளைச் சுருட்டிக்கொண்டேன். அந்த 100 என்ற எண் இருந்தது. அதுவும் இல்லாமலிருந்தால் ஒருவகை ஆறுதல் அடைந்திருப்பேன். துன்பச் சூழல் பெருகிவிட்டது. கண்கள் நீர்ப்புண்கள் ஆகின. மண் கட்டிகள் கண் மழை பெற்றன. 5 (கண்ணீரும் கம்பலையுமாக ஓடுகிறான் அதிகன்) மறுபடியும் ஓராசை. இந்தச் செய்தித்தாளில் விடுபட்டி ருக்கலாமோ? மீண்டும் அரை நொடியில் புகை வண்டி நிலையத்திற்கு விரைந்தேன். ஆங்கிலச் செய்தித்தாளை வாங்கி அங்கேயே விரித்துப் பார்த்தேன். பலருடைய எண்கள் இருந்தன. ஐயமில்லை தோல்வி. பக்கத்து நின்ற பெரியவர் தம்பி ஆறாக அழுது விழுகிறானே என்று அணைத்தனர். சிலருடைய எண்கள் விடுபட்டு மறுநாளும் வரும்; எல்லாவற்றுக்கும் அடுத்த நாள் தாளையும் பார் தம்பி என்று ஒரு பெரியவர் ஆறுதல் கூறினார். என் அழுகைப் போக்கைப் பார்த்து என்னமும் செய்துகொள்வானோ என்று பயந்து வீட்டுக்குப் போ தம்பி! அடுத்த தேர்வு நன்றாக எழுது என்று வாழ்த்தித் தட்டிக் கொடுத்தார் ஒரு பெரியவர். இங்ஙனம் போகிற போக்கில் அவரவரும் சொல்லிவிட்டு வண்டி ஏறினர் காலையில். (தேர்வில் எழுதிய மைக்கோலைப் பிடித்துக்கொண்டு வெகுண்ட முகத்தோடு) என் பை நீங்காக் கோலே! நீ என்ன செய்வாய். உன்னிடத்தில் மையூறும். அதுவும் உள்ளே ஊற்றியிருந்தால் ஊறுவாய். என்னிடத்தில் அறிவு ஊற வேண்டாமா? படித்திருந்தால்தானே அறிவு என்பது ஊறும். இதுவரை ஒன்பதாவது வகுப்பு முதல் தேர்வெழுதினேன். தோல்வி தந்ததில்லை, கண்டதில்லை. எவ்வளவோ வண்ண வண்ண அழகிய மைக்கோல்கள் இருந்தும் பழகிய கோலென்று உன் முனைகொண்டு எழுதினேன். படியாத மாணவனுக்குப் பழகிய கோல் என்ன செய்யும்? கோலே உனக்கு நன்றி. (கை கூப்புகின்றான்) எழுதும்போது நீ ஏறிக் கொண்டதில்லை. பின்னிக் கொண்டதில்லை, குத்திக் கொண்டதில்லை, மைப் பட்டை அடித்ததில்லை, மல்லாந்ததில்லை. வழக்கம்போல மைப்பால் சுரந்தாய். உன்னைப்போல் பணிவனை உலகத்திற் கண்டதில்லை. உடையவன் கருத்தை எழுதுவாய். மடக்கருத்தை யும் மறுக்காது எழுதுவாய். வளையாக் கருங்கோலே, வாடாத நன்முனையே, எதனைப் பற்றியோ நீ எழுதினாய். இன்று - இறுதிக் காலமாகிய இன்று - எனக்கு ஊழியான இன்று என்னைப் பற்றியே எழுதுக. ஒழுகாமல் அழுகாமல் எழுதுக. (மைக்கோலைத் திறக்கின்றான்; கீழே விழுந்து முனை வளைகின்றது, மை தெறிக்கின்றது, மூடி உருண்டோடுகின்றது.) 6 (மார்பிற் கைவைத்து) இந்தக் கெட்டகேடு உயிர் தாங்கியிருந்து அடுத்த நாளும் தாளைப் பார்க்க வேண்டுமா? என் உயிரை வாங்குவதற்கு இவ்வொரு தாள் போதுமே. இன்னொரு தாள், நாள் தேவையா? முதல் வகுப்பில் தேறிய என் கடிதத்தோழி-என்னை மணவாளனாகப் பார்த்த சுற்றுப்புறம்-பெருமையோடு பேசிக்கொண்ட உறவினர் - பழங்கூடையில் புது நூல்போல் கிடக்கும் என் பாட நூல்கள் - என் வாய் மொழியை நம்பி வாழ்த்துக் கூறிய நல்லாசிரியர்கள் - தேறியவன் போல நான் கேலி செய்த என் கிள்ளாடி நண்பர்கள் வாழுகின்ற இவ்வுலகில் இனி நான் உடன் வாழ்வதா? (மறந்து நினைந்தவன் போல) எல்லாம் கிடக்கட்டும். தாய், அன்னை, பெற்றவள், தெய்வம் அவள் அன்பு முகம் காண்பது எப்படி? அன்றே அவநம்பிக்கையில் என் தேர்வெண்ணை 100 என்று மாற்றிச் சொல்லி வைத்தேன் அன்னையிடம். நன்றாகப் படிக்கும் வெளியூர் மாணவியின் தேர்வெண் அது. அந்த எண் முதல் வகுப்பில் இருப்பதைப் பார்த்த என் தாய்த் தெய்வம் எவ்வளவு மகிழ்வாக எல்லாரோடும் புகழ்ந்து கொண்டிருக் கும்; என்னைக் கண்டவுடன் வயிற்றில் திணிப்பதற்கு என்னென்ன நெய்தோய் பலகாரம் படைத்து வைத்திருக்கும்; நான் வருவது பார்த்து அத்தெய்வம் படிவரை வந்துநின்று காத்துக் கொண்டிருக்கும். வராதது கண்டு என்ன நினைக்குமோ? என்ன சொல்லுமோ? வீட்டுக்குப் போக விடாது என் மகனைத் தடுத்து நிறுத்திப் பலர் பாராட்டிக் கொண்டிருப்பார்கள். முதல் வகுப்புக் கிடைக்கும் அளவிற்குத் திறமாக எழுதிவிட்டு, பொய் சொல்லி இருக்கின்றான். அப்பப்பா! இவன் கருமமே கண்ணானவன் என்று கூடப் படித்தவர்கள் ஆரத் தழுவி யிருப்பார்கள். நன்றி தெரிவிக்க ஒவ்வொரு ஆசிரியர் இல்லத்துக்கும் சென்றிருப்பான். தேறிய நண்பர்கள் இவனைத் திரைப்படத்துக்கு இழுத்துக் கொண்டு போயிருப்பார்கள். ஐயோ காசு வாங்காமல் போய்விட்டானே. நேற்றே வாங்கி வைத்துக்கொண்டு போயிருக்கக் கூடாதா? இவ்வாறெல்லாம் என் தாய் அகமகிழ வாய் கொள்ளாமல் வாழ்த்திக் கொண்டி ருப்பாள். அந்த மகிழ்வுள்ளத்தைக் கலைக்கலாமா? கலைக்கக் கூடாது. (பொய்ச்சிரிப்பாக) இன்னும் ஒரு நாள் மகிழ்ந்து போகட்டும். யாருக்கும் எந்த இன்பத்தையும் கெடுக்கலாகாது. 7 (குழப்பம் நீங்கித் தெளிவு பெறுகின்றான்.) என் இன்பத்தையும் கெடுக்கலாமா? இருப்பதும் இன்பம், இல்லாமல் இருப்பதும் இன்பமே. உழைப்பது இன்பம். ஊர் சுற்றுவதும் இன்பமே. வெற்றி பெறுவது இன்பம், நன்றாகத் தோல்விப்படுவதும் இன்பமே. பொய் சொல்லுவது இன்பம், பொய்யை மெய்யாக மயங்குவதும் இன்பமே. எல்லாம் தன் மனத்தைப் பொறுத்தது. (வேகமாக) அவ்வளவே, இவ்வளவே, உவ்வளவே கிடக்க. (ஓடாது தடத்தில் கிடக்கும் புகைவண்டியைப் பார்க்கின் றான்.) வண்டியே! புகைவண்டியே! தட வண்டியே! எவ்வளவு இளைஞர்களுக்கு நீ ஆறுதல் அருளியிருக்கிறாய், அருளப் போகின்றாய்? நீ புகைவண்டி இல்லை, உயிர்க்கெல்லாம் பகைவண்டி என்று பலர் பழித்துப் பேசுவர். இருப்புப் பாதை எமவண்டி என இழித்துப்பேசுவர். அவர் கிடக்கட்டும். நீ என் போலும் ஏழை இளையவர்க்கு இனிய கருப்புப் பாதை. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிரிகளை ஏற்றிச் செல்லும் உன் நெடுந்தொடருக்கு ஆண்டிற்கு நாலைந்து சிற்றுயிர் மேலே ஏறுவது பழியா? உன் உருளடிபடவேண்டும் என்று துடித்து உன் தடத்தில் தலைசாய்த்துக் கழுத்துக் கொடுத்துத் தவங் கிடப்பார்மேல் ஏறாது நிற்பதன்றோ பழி? அன்பற்ற, இல்லை, அன்புள்ள உயிர்க்கு நீ ஒரு நொடியில் தரும் விடுதலையைப் போல் யாரும் தந்ததில்லை. அதனாலன்றோ உலக வாதைப் பட்டார் உன் பாதையில் வந்து படுக்கின்றனர். (படுத்துப் பார்த்து எழுந்திருக்கின்றான்.) தனக்கெனத் தனிவழி வகுத்துக்கொண்ட புகைவண்டியே, நானும் எனக்கென வழி வகுத்துக் கொள்ளப் போகின்றேன். நான் விரும்பிப் பிறக்கவில்லை. பிறவி என் வசமில்லை. ஆனால் இறப்பதாவது விரும்பி இறக்கலாம் அல்லவா? அந்த உரிமையை இறைவனுக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இப்படி உரிமைப் புரட்சி செய்தால்தான் பழைய இறைவன் என்போலும் உயிர்களை இனிப் படைப்பதை நிறுத்திக் கொள்வான். புகைவண்டியா நீ? இல்லை, புகழ் வண்டி. நடை பாதை யில் பிற ஊர்திகள் ஏறினால், வழக்கு ஏற்படும். ஏறியவர் தண்டனை பெறுவர். சடுதியில் விடுதலையும் கிட்டாது. நீ ஏறி உருளப்பெற்றால் உனக்குப் பழி இல்லை. எனக்குப் புகழ். மறுநாள்: செய்தித்தாளில் என் வரலாறு வரும். புன்முறுவ லோடு என் உருவம் வந்தாலும் வரும். மானமுடைய மாணவன் என்று தலையுரையும்வரும். இன்று பொய்த்தாளைப் பார்த்து மகிழும் என் அருமை அன்னை நாளை என் மெய்த் தாளைப் பார்த்து . . . . . (பெருமூச்சு விடுகின்றான். தற்கொலைக்குத் துணிந்த அதிகன் குழாயில் முகம் கழுவினான், சிறுது நீரும் குடித்தான். இதுதான் நான் பிறந்த உலகம் என்று மண்நோக்கி வான் நோக்கினான். தன் உடைக்கட்டு வலுவாக உள்ளதா என்று சரிபார்த்தான். உய்தி தந்த செய்தித்தாளைக் கையில் பிடித்துக் கொண்டவனாய்த் தடத்தின் மேலே நடந்துசெல்லுகிறான்.) யாருக்கும் இவ்வுலகில் நான் கெடுதல் செய்யவில்லை. என்னுயிரை விடுவது யார்க்கும் கெடுதல் இல்லை. இவ்வுலகில் இருக்கவோ நடக்கவோ இயல்பாகப் படுக்கவோ பிடிக்க வில்லை. ஏன்? இவ்வுலகம் எனக்கு வெற்றி தந்து மதிக்கவில்லை. ஏன்? இளைஞர்களைக் கெடுக்கும் கலையுலகமாக வளர்ந்து விட்டது. இளந்தீய ஓட்டங்களுக்குத் தடைசெய்யாமல், கலகப் பாத்தி வகுத்து, உணர்ச்சி நீர் பாய்ச்சுகின்றது. இளமைப் பயிரோடு வளரும் களையை எடுக்காமல் பயிரை எடுக்கும் உழவர்கள் பெருகிவிட்டனர். இளந் தலைமுறைகளைச் செவ்வழிப்படுத்தும் நல்வழி மாந்தர்கள் இல்லை. எல்லாம் அல்வழிப் பேர்வழிகள். என் தற்கொலைக்கு இன்னும் நொடிப் பொழுதில் நான் செய்யும் தற்கொலைக்கு நானா காரணம்? நான் சூழ்ந்திருக்கும் நச்சுலகமே காரணம், அழிவு மிகுந்த ஆடம்பரமே காரணம். இத்தகைய தகுதியில்லாத சிறிய உலக மண்ணில் இனியும் பல்லாண்டு வாழ விரும்பவில்லை. இதுவே என் பெருமிதம், ஒருமிதம். இறக்கின்றேன் என்று நான் எண்ண வில்லை. இச்சிறிய வெறிய உலக அடிமையைப் பெருமிதத் தோடு துறக்கின்றேன், வாழா வாழ்வை மறக்கின்றேன். (நடந்து சென்றவன் தடத்தில் ஓரிடத்தில் அமர்கின்றான். நிலையத்தில் முதல் மணி ஒலி கேட்கின்றது. வண்டி வர இன்னும் பதினைந்து மணித்துளிகளே உள்ளன. யாரும் இப்பாதையில் வருகின்றார்களா என்று கண்பரப்பிப் பார்க்கின் றான். ஆ! அதோ ஒரு வெள்ளுருவம், அன்னை உருவமா? இல்லை, காற்றில் பறந்துவரும் காகிதத் தாள் என்று நடுங்குகின் றான். சலசலப்புக் கேட்கும் போதெல்லாம் அச்சம் அலைகின்றது. தாமதம் கெடுக்கும் என வேகப்பட்டு எழுந்து நின்று,) இவ்வுலகை முற்றும் பழிக்கக்கூடாது. துறக்கக் கூடாது. இவ்வுலகம் சிறந்தது. என் தாய் இருக்கிற உலகம் அல்லவா? தற்கொலையை நான் எவ்வளவு வேகமாக நினைக்கிறேனோ அதுபோல் என் வரவை வேகமாக நினைக்கும் அன்னை இருப்பது எந்த உலகம், இந்த இருப்புப்பாதை இருக்கும் உலகந் தானே. அந்தப் பெரியவளிடம், போகிறேனம்மா என்று காலையில் சொல்லிக் கொண்டேன். என்ன அவள் பாசம். அப்படிச் சொல்லாதேயப்பா; போய் வருகிறேன் என்று சொல்லப்பா என்று கற்பித்தாள் காலையில். இதிலெல்லாம் என்னம்மா இருக்குது என்று புரட்சி மகனாக ஓடி வந்தேன். அந்த ஓட்டத்திலும் என் காதிற் படும்படியாக, போய் வாப்பா போய்வாப்பா என்ற அன்னையின் வாழ்த்துக் குரல் வழியனுப் பியது. தெய்வத்தாயிடம் இறுதியாகச் சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் . . . . . . (இவ்வாறு புலம்பி அன்னையிருக்கும் திசை நோக்கித் தொழுகிறான்; மண்மேல் விழுகிறான்; என்னையே, அன்னையே என்று தடுமாறுகின்றான். அன்னை வடிவம், செம்மைக் கோலம். இது என்ன காட்சி. யாரோ எழுப்பியது போல எழுகின்றான். உடையில் மண் ஒட்டவில்லை. விழாதபடி தாயின் இருகை தழுவினாற்போல உணர்ச்சி ஏற்படுகிறது. உடல் வேர்க்க, உடையின் வரிக்கட்டு ஞெகிழ, எழுதுகோல் மூடி கழன்றுவிழ, கைத்தாள் கிழியத் தட்டுண்டு நிமிர்கின்றான். அதி! அதி! என்று அவனைக் கூப்பிடும் அன்புச் சொல்போல் ஒலி செவிப்படவே, அஞ்சுகிறான். அன்னை வடிவம் அகலவில்லை. தாயின் வாய் துடித்துப் பேசுகின்றது.) வணங்குகிறேன், அன்னையே. இவ்விடத்தைவிட்டு விலகிப்போ. புகைவண்டி உன்மேலும் ஏறிவிடும். இங்கு நின்று என்னை விடுதலையிலிருந்தும் தடுத்துவிடலாம் என்றா திட்டமிடுகின்றாய். அது முடியாது, முடியவே முடியாது. நான் பொறுப்பு உணராதவன். உணர்ந்தவனாக இருந்தால், நன்றாகப் படித்திருப்பேன் அல்லவா? குடும்ப வறுமை தெரியாதவன். தெரிந்திருந்தால் இவ்வளவு செலவும் செய்து படிப்பைக் கெடுத்துக் கொண்டிருப்பேனா? நான் பொய்யன்; மெய் சுமந்த அன்னையிடமும் பொய்யெண்ணைச் சொல்லி வைத்த செம்பொய்யன். வண்டி வரப்போகிறது. இரண்டாவது மணி அடிக்கிறது கேட்கிறது. அன்னையே, என் சாவுக்கு ஒப்புதல் அளி. சாவில் மகிழ்வேன், மறு பிறப்பில் உனக்கு நன்மகனாகப் பிறக்கும் எண்ணத்தோடு சாவேன். இந்த உறுதியைப் பெற்றுக்கொண்டு எனக்குச் சாவுக்கட்டளை அருளுக. (விழுந்து வணங்கப் பார்க்கிறான். உடல் வளையவில்லை. கட்டியணைக்கப் பார்க்கிறான். கை வளையவில்லை. தாயின் வாய் பேசும் அசைவு புலப்படுகின்றது.) 8 ஏடா, அதி! பெற்ற தாயிடம், தாய் முன்னே சாகவரம் கேட்கின்றாய். அதி, முதற்கண் என் சொல்லை மதி. கைத்தாளை மிதி. (சினவுணர்வு தோன்ற) இந்தத் தடத்திலிருந்து பத்தடி தள்ளிக் கீழே நில். (தள்ளி நிற்கிறான்) நீ கேட்பது சிறிய வரம். நீ கேளாத பெரிய வரம் தரட்டுமா? (திகைக்கிறான்) நீ கேட்கும் வரத்தைத் தருகிறேன். நான் கேட்கும் வரத்தையும் நீ தர வேண்டும் அல்லவா? நீ இறந்துவிட்டால் அப்புறம் கேட்க ஆளில்லை. மகனுக்குத் தாயிடம் வரம் கேட்பதற்கு உரிமையிருந் தால், தாய்க்கு மகனிடம் வரங்கேட்க உரிமையுண்டு தானே. (தருகிறேன் என்று தன் வாய்க்குள் முணுமுணுக்கிறான். வண்டி வருவதையும் பார்த்துக்கொள்கின்றான். தாயின் வடிவம் வண்டித் தடத்தின்மேல் தோன்றுகின்றது.) என் வயிற்றில் பிறக்க மறுபடி ஆசைப்படுகின்றாய். நானும் உன்னைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். விதவையான என் வயிற்றில் நீ எப்படிப் பிறப்பாய்? நம் ஆசை நிறைவேற ஒன்று செய். முதலில் செய். உன் தந்தையை உயிர்ப்பித்துக் கொடு. கொடுத்துவிட்டு எங்கள் இருவரிடமும் உன் வரத்தைக் கேள். (கலகலவென்று சிரித்துத் தலைகுனிந்து கூப்பிய கையோடு நிற்கிறான். தாயே! நீ வண்டித் தடத்தை விட்டு வா. வண்டி வரும் சமயம் என்று சொல்லுகிறான்.) அப்பா அதிகா, கணவனை இழந்தேன். கணவனிழப்பு மனைவிக்குப் பேரிழப்பு. கழுத்து நூலிழந்தும், ஆடை நிறமிழந்தும், கை அணியிழந்தும், தலை பூ இழந்தும், வயிறு பசியிழந்தும், உயிர் உணர்விழந்தும் வாழ்கின்றேன், பெற்ற மக்களின் கடமைக்காக. அந்த மக்களில் ஒருவன், அன்னை யிடமே தற்கொலைக்கு இசைவு கேட்கிறான். (வெகுளிச் சிரிப்பு) கேட்கிறான் இசைவு. (நகைச் சிரிப்பு) பொறுப்பான பையன் அதனால் கேட்கிறான். உடையவனிடம் களவுக்குக் கேட்கிறான். மெச்சுகிறேன். நோய்வாய்ப்பட்டிருந்த உன் தந்தை கூறினார் “கடமை பெரிது, பிறந்த பிறவியை மதி. பிள்ளைகளுக்கு வாழ்” இவ்வாறு சொல்லித் தம் நெஞ்சில் என் கையை வைத்து உறுதி பெற்றார். (அன்னையின் உருவெளித் தோற்றம் அகலவில்லை. அகற்றவும் முடியவில்லை. உணர்ச்சி கலைகின்றது. கைத்தாள் விழுந்துவிட்டது. கையைக் கட்டிக்கொள்கிறான்.) நெஞ்சே, அறிவே, உணர்வே, உயிரே, புதிதாக மாறுங்கள். என் உள்ளத்தில் தெய்வமாகக் குடிகொண்டிருக்கும் அன்னை காட்சியளிக்கிறாள். அவள் கணவனிழப்புக்கு என் தேர்விழப்பு எம்மாத்திரம்? எதுமானம், எது அவமானம்? தேர்வுத் தோல்விக்கு உயிர்விடுவதென்றால், எத்தனை இளைய உயிர்கள் நாள்தோறும் உயிர்விடவேண்டும். இத்தோல்விகள் மறுபடி வெற்றிக்கு உரியவை என்றுதானே மறுமறு தேர்வுகள் நடத்துகின்றனர். தேர்வுத் தோல்வி ஒழுக்கக் குறைவா? பழியா? பாவமா? மேலும் தேர்வுத் தோல்விகள், அன்று என் நல்லாசிரியர் வகுப்பில் சொல்லியதுபோல, என் தனித் தோல்வியாகுமா? குறிப்பார் குறை, திருத்துவார் குறை, கூட்டுவார் குறை, பெயர்த்தெழுதுவார் குறை யார் குறை என்று தெரியாதபோது யார் உயிரை யார் விடுவது? என் தேர்வுத்தாள் திருத்தம் சரியா என்று பார்க்கும்படி பல்கலைக் கழகத்துக்குப் பணம் நாளையே கட்டுகிறேன். வெற்றி வந்தாலும் நிச்சயமாக வரலாமே. இவ்வுயிர் என்னுடையதா? நான் தேடிக் கொண்டாதா? தன் பொருளைக்கூட மற்றவரைக் கேட்டுச் செலவிட வேண்டிய இக்காலத்தில், என் அன்னைக்கு உரிய என் உயிரை நான் தானாக விட முடியுமா? அதனாலேதான் தாய் வந்து தடுத்தாண்டாள். வாழ்க! (புகைவண்டி வரும் ஓசை கேட்கின்றது. கீழே தள்ளி நின்று வண்டித் தடத்தில் வழக்கம்போல் ஓடுவதைப் பார்க்கின்றான். போ என்று கையை வீசி ஆட்டுகின்றான்.) 2. வறுமைக்காக (மான்விழி என்பவள் இருபது வயதுப் பெண். ஏழைக் குடும்பம். மான்விழியே குடும்பத்தில் மூத்தவள். உயர்நிலைப் பள்ளி வரை படித்தவள். கூடப்பிறந்த இரு தங்கைகளும் ஒரு தம்பியும் உண்டு. ஆற்றங்கரையில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கிறாள். மான்விழி. பகல் பன்னிரண்டு மணி. உடன் துவைத்த பெண்கள் எல்லாம் வீடு சென்றுவிட்டனர்.) 1 (மான்விழி கிளையில் ஈரத்துணியைக் காயப்போடச் சென்றவள் தாவித் திரியும் குரங்கைப் பார்த்து,) பிறப்பு எதுவாக இருந்தால் என்ன? கவலையில்லாத பிறப்பே பிறப்பு. கவலையில்லாத இறப்பே இறப்பு. மக்கள் உயர்ந்த பிறப்பாம். (கேலியாக) தங்கள் பிறப்பைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொள்கிறார்கள். தற்பெருமை. ஏனையப் பிறப்புக்கள் பேசாமற் பார்த்துக் கிண்டலாக நடப்பது இவர் களுக்குப் புரிவதில்லை. உயர்ந்த பிறப்பு. உயரமாக வளர்வதில், வறுமையாக வளர்வதில், அறியாமையாக வளர்வதில், ஆணவமாக வளர்வதில் உயர்ந்த பிறப்பு. குரங்கு இழிவாம். ஓடியாடி உல்லாசமாகத் திரிகின்ற குரங்கு இழிந்த பிறப்பாம். குரங்கு என்றும் தன் குட்டியைக் காப்பது இல்லை. எனினும் குரங்குக் குடும்பம் பட்டினியால் மடிந்தது என்ற செய்திப் படம் உண்டா? செய்தித்தாளுக்கு மக்கள் செத்த செய்தி எவ்வளவு? குரங்கைக் காட்டியல்லவா குரங்காட்டி பிச்சை வாங்கிப் பசி தீர்த்துக் கொள்கிறான். (மரத்திலிருக்கும் குரங்கு மாம்பழத்தை உதிர்க்கிறது. விழுகின்ற சில மாம்பழங்களைப் பொறுக்கிக்கொண்டு.) எனக்கு நல்ல பசிதான். இருந்தாலும் என்னைவிட என் பெற்றோரும் பிள்ளைகளும் பசித்துக் கிடக்கின்றார்கள். பகுத்துக் கொடுத்துத் தின்போம். கொடைக் குரங்கே! அடுத்த பிறவியில் உன் இனத்திற் பிறந்து மாம்பழக் கடனைத் தீர்க்கின்றேன். (சுற்றுமுற்றும் பார்வை செலுத்தி) என்ன இனிய ஒலி, ஓயாத் துயரம் படும் உள்ளத்துக்கு இந்தக் குயிலோசை எவ்வளவு மருந்து! புலவர்கள் பாடிய இன்னொலி, தமிழோசை. விடுதலைக் கூவலும், மரக்கிளை யிருப்பும், வானப்பறப்பும், துள்ளித் தாவலும் என்ன காட்சி! படிப்பு உண்டா? பதட்டம் உண்டா? நாளை என்ற நலிவு உண்டா? குயில் நிறம் கறுப்பு. பாடல் பெற்ற கறுப்பு. கருங்குயிலைப் புகழும் மாந்தர் குயிலோசையுடைய கரும்பெண்ணைப் புகழுவதில்லை, மதிப்பதில்லை, வரவேற்பதில்லை. நிறவேற்றுமையில்லை என்று தமுக்கடிக்கும் சின்னப் பெரியவர்கள் காதலுக்கு கறுப்பு சிவப்பு என்று பிரிவினை பார்க்கின்றனர். நான் அவ்வளவு கறுப்புக்கூட இல்லையே. நல்ல மாநிறந்தானே. சிவப்பையே இன்ப நிறம் எனப் பாராட்டும் இவ்வுலகில் என்போலும் பெண்களுக்குத் தாய்மை எவ்வாறு வரும்? அஃறிணை இனத்திற் பிறவாது நிறவேற்றுமை பெருக்கும் உயர்திணையில் பிறந்தொழிந்தோமே. (துவைப்பதை நிறுத்திவிட்டுத் துவைக்கல்லில் அமர்ந்து காலாட்டிக் கொண்டு.) எதனை எதனை எண்ணி வருந்துவது? எதனை எண்ணி எண்ணி வருந்தாமல் இருப்பது? இறைவா, கடவுளே, ஆண்டவா, உயர்நிலைப்பள்ளி இறுதிவரை நன்றாகப் படித்தேன். 75 விழுக்காடு மதிப்பெண் பெற்றேன். கல்லூரியில் தங்கிப் படிக்க நிதியில்லை, உதவிக் கதியில்லை. ஐந்தாண்டுகளாக வீட்டு வேலை பார்க்கிறேன். என்னோடு பள்ளியில் உடன் பயின்ற பெண்கள் இப்போது பட்டம் பெற்று வந்து பேசிக் கொண்டி ருக்கும்போது, வீட்டில் மாவரைக்கும் நேரத்திலும், மிளகாய் அரைக்கும் நேரத்திலும், சட்டிமுட்டி தேய்க்கும் நேரத்திலும் வந்து பேசிக்கொண்டிருக்கும்போது - இந்த வேலை செய்வதைக் குறைவாகவே நினைக்கவில்லை - செய்ய வேண்டிய வேலைதான் - இருந்தாலும் பட்டம் பெற இறைவன் என்ற அவன் எனக்கு வழி வைக்கவில்லையே என்ற ஏக்கம் பிறக்கிறது. அப்பெண்களோடு அறிவுச் சமமாகப் பேசமுடியவில்லையே என்று உள்ளம் திக்குகின்றது. அப்பெண் நண்பிகளில் சிலர் ‘திருமணம், தோழி வந்துவிடு, வீட்டு வேலை என்று சாக்கிட்டு வராதிருக்காதே; தம்பி தங்கைகளைக் கூட்டிக் கொண்டு வா, திருமணநாள் முழுதும் இருந்து விருந்து சாப்பிட வேண்டும்’ என ஓயாமல் அன்பாக அழைக்கும்போது, மனம் மகிழுகின்றது. இல்லை, பொய் சொல்கிறேன், மனம் புண்படுகிறது. கொதி கொதியாகக் கொதிக்கிறது. எனக்கும் என் உடன் பிறப்பிகளுக்கும் வீட்டில் சாப்பிட எதுவுமில்லை. ஒருநாள் வடை பாயசம் அப்பளத் தோடும் காலை மாலைப் பலகாரத்தோடும் வயிறார உண்ண லாம் என்பது அவர்கள் குறிப்பா, கிண்டலா என்று மனம் வயிற்றோடு வாடுகிறது. யார் எது சொன்னாலும் குத்தல் கிண்டல் சாடை வஞ்சகம் என்றே மனம் கருதுகிறது. மீளா வறுமை எப்படியெல்லாம் நினைவைக் கெடுக்கிறது. அதிலும் குமரி வறுமை என்னென்ன செய்யுமோ? செய்யத் தூண்டுமோ? (அழுகின்றாள். தண்ணீரை முகத்தில் வீசி அடித்துக் கொள்கிறாள்.) 2 என் தாயும் தந்தையும் எங்களுக்கு வறுமையைக் காட்டுவதில்லை. பக்கத்து வீட்டிலோ எதிர்வீட்டிலோ உறவினரிடத்திலோ எதுவும் கேட்பதில்லை. உடை வறுமை தெரியலாகாது என்பதற்காக, வெளியிற் செல்லும்போது, உள்ள இரண்டொன்றில் தையல் தெரியாத உடைகளை உடுத்திப்போக விடுவார்கள். உலகப் புறணிக்கு அவ்வளவு பயம். பிறர் வந்தாலும் வீட்டு வறியநிலை காணலாகாது என்பதற்காக, வெளியில் வந்து நின்று பேசி வழியனுப்பி விடுவார்கள். வீடு சொந்த வீடா? எவ்வளவு மாதம் குடக்கூலி கொடுக்காமல் இருக்கமுடியும்? வீடுடையார் பொறுமைக்கும் எங்கள் வறுமைக்கும் எல்லையில்லை. தரும்போது தாருங்கள் கட்டின நாள்முதல் கரியின்றி வைத்து இருக்கிற உங்களைப் போகச் சொல்லக்கூடாது என்று எங்கள் வறுமையை அறிந்தவர்போல வெளியிலிருந்தே மாதம் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் சொல்லிவிட்டுச் செல்வார். ஏழையின் துயரைக் துடைக்க முடியாவிட்டாலும், புண்படுத்தாத நல்லவர். இது அப்பாவின் மனத்தை மிக உறுத்தும். மதிப்பவரிடத்து மதிப்பைக் காத்துக்கொள்ள வேண்டாமா என்று சொல்லி வெதும்புவர், கண்ணீர் ததும்புவர். வேறு என்ன செய்ய முடியும்? தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று நாலாண்டுகள் ஆயின. நல்ல தாய் தந்தையர்க்குத் தான் பிறந்தி ருக்கிறோம், அவர்களை வறுமையாக்கும் செல்லமாகப் பிறந்தி ருக்கிறோம், வறுமை பெருகப் பிறந்து வளர்ந்திருக் கிறோம். (மேலே பார்க்கிறாள். தலைக்கு நேரே கதிரவன்.) (கையை நொடித்துக்கொள்டு) உச்சிப்பொழுது துவைக்கப் போனவள் வரவில்லையே என்று எதிர் பார்த்துக் கொண்டி ருப்பாள் தாய். வயதுப் பெண்ணை இவ்வாறு தனியே போகச் சொல்லக் கூடாது, நாடு நல்ல போக்கில் இல்லை என்று மேலும் கவலைப்படுவாள். தகப்பனாரோ குடும்ப வறுமையை மறக்கும் ஓர் வழியாக, கயிற்று மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு படிப்பகச் செய்தித்தாளைப் படிக்கப் போயிருப்பார். தங்கைகளும் தம்பியும் இன்று ஞாயிற்றுக்கிழமை வெயிலில் விளையாடிக் கொண்டிருப்பர். எவ்வளவு ஆண்டுகள் வறுமையை, வயிற்றுப்பூசலைத் தாங்குவது? ஊரைவிட்டு எல்லாரும் அடுத்த மாநிலத்துக்குச் சென்று பிச்சை எடுத்து வயிற்றைக் காக்கலாம் என்று சில நாட்களாக அப்பா கண்ணீர் கொட்டிப் புலம்புகிறார். இவ்வளவு நாள் இருந்த ஊரை விட்டால் வறுமை விட்டுப் போகுமா? ‘குடும்பத்தோடு காணோம்; வறுமை, வறுமை; காவலர் புலனாராய்ச்சி’ என்று செய்தித்தாள் நம் குடும்பத்தை விளம்பரப்படுத்தாதா? அடக்கமான வறுமை செல்வம் அறிவிக்கும் விளம்பரம் கேவலம் என்று தாயும் நானும் அப்பா மனத்தை ஆற்றி வைத்திருக்கி றோம். மனம் ஆறினால் பசி மாறிவிடாதே. செத்த விளம்பரம் வருவதற்கு உயிர் விளம்பரம் வரலாமே. (ஆற்றங்கரை வழியாக ஒரு பிச்சைக் குடும்பம் சேய்மை யில் சென்றுகொண்டிருப்பதைக் காண்கின்றாள்.) இப்படிப் போகவேண்டிய நிலையும் ஒரு காலத்தில் - இல்லை இன்னும் சில நாளில் - இல்லை, இன்னும் இரண் டொரு நாளிலே எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்டு விடுமோ? உள்ளபடியே நான் காண்பது பிச்சைக் குடும்பந்தானா? நன்றாக வாழ்ந்து, வரும்படி வரவரக் குறைந்து இந்த நிலைமைக்கு வந்த குடும்பமா? (எண்ணிக்கை ஐந்தாக இருப்பதைப் பார்த்துத் திடீரெனப் பதறி) என்ன, என் குடும்பமா? நான் குளத்துக்கு வந்த சமயம் பார்த்து, மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு என் பெற்றோர்கள் இப்படிப் புறப்பட்டார்களோ? (அப்பா, அம்மா என்று கதறி ஓடி நெருங்கிப் பார்த்து) நல்ல வேளை, வேறு குடும்பம். உயிர் திரும்பி வந்தது. நாளை இது மாதிரிப் போகவேண்டிய நிலை வரத்தான் போகிறது. பட்டினிக்கு வேறு என்ன விடுதலை? (அழுகை பெருக, இதழ் துடிக்க, கூந்தல் குலைய.) என் குடும்பத்துக்கு என்னால் எவ்வளவு தொல்லை. பருவம் வளரும் என்னைப் பார்க்கப் பார்க்க அப்பாவுக்குத் தான் எவ்வளவு சோர்வு. ‘இவளுக்குத் திருமணம் என்ற ஒன்று எப்படி நடக்கும்? நாடகக்காரிபோல் கணத்துக்குக் கணம் முகமா அப்பிக் கூந்தலை நெறிப்படுத்தி வண்ண வண்ண மின்னுடை கட்டி உயர் செருப்பில் குதித்துக் குதித்து நடவா நடை நடக்கும் இப்பெண்ணுலகில், என் மகள், திருமண வயது வளரும் என் பொன்மகள், எங்கட்குப் பிறந்ததினால் இந்தக் கதியா?’ என்று பிறர் திருமண அழைப்பு வரும்போதெல்லாம் கண்ணீர் பனிக்கிறார். நான் ஆணாகப் பிறந்திருந்தால் இந்த நாட்டில் ........... இல்லாப் பிறப்புக்கு ஏங்குகிறேன். என் பெற்றோர்க்கு முக்கால்வாசிக் கவலை என்னைப் பற்றியே. ஒரு வேளை ஆரக் குடிக்கக் கஞ்சியில்லை என்று தெரிந்துங்கூட, என் திருமணம் பற்றி எண்ணி மேலும் உடல் கரைகிறார்கள். காதல் காதல் என்பது பேச்சு. அந்த ஆடவரின் காதல் பண முள்ள இடத்திலேதான் பாய்கிறது. வறுமையுள்ள பெண்ணி டத்துக் காதல் நாடகம் ஆடிப் பயிற்சி பெறப் பார்க்கிறார்கள். பருவப் பெண்களை ஆடவர்கள் மருவுகின்றனர். வறுமைப் பெண் என்று தெரிந்ததும், வாயிற்படிச் செருப்புப் போல அந்த அளவுக்கே ஆசை வைத்துக்கொள்கிறார்கள். (புரட்சி மனமாக) தொல்லை துடைப்பது அவரவர் கையில்தான் இருக்கிறது. பிறர் நீக்க வேண்டுவதில்லை. எனக்கு எங்கே திருமணம்? குடி வறுமை, நிறம் சிவப்பில்லை, பெற்றோர் வசதியில்லை. எங்கே திருமணம்? நடவாது என்று தெரிந்தும் ஆசைப்படுவது அறிவில்லை. வந்தாலும் எனக்குத் திருமணம் வேண்டாம். இப்படி நானே சொல்லிவிட்டால், என் பெற்றோர் கவலை நீங்கிவிடும். எப்படி நீங்கும்? இன்னும் கவலை அதிகமாகப் படுவார்கள். வறுமையினால் இந்த முடிவுக்கு வந்ததாக விம்மியழுவார்கள். (கண்ணீரைத் துடைத்துக்கொண்டு) பிச்சைக் குடும்பம் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. பருவ மகளை. பதினோரா வது வரைக்கும் படிக்க வைத்த மூத்த மகளை, அல்லும் பகலும் வீட்டு வேலை சிணுங்காது செய்யும் பெரிய மகளை அழைத்துக் கொண்டு பிச்சைப் போக்கு போவதா? அப்படி அடி எடுத்து வைத்துவிட்டால், அப்புறம் திருமணம் எல்லாம் என்னாகும்? பெண்மக்கள் நிலை என்னாகும்? இப்படிப் போய்ச் சாவதற்கு இப்படி இருந்தபடியே சாவலாமே என்று பெற்றோர் கலங்கிக் குழம்பித் திணறுகிறார்கள். இந்த நிலை எனக்குப் புரிவது போலத் தங்கை தம்பிகளுக்குப் புரியவில்லை, புரியும் வயதில்லை. 3 (துணிந்து கிளர்ந்த முகத்தொடு) பெற்றோரைத் தாண்டிய ஒரு முடிவு. சின்னப் பெண்ணா முடிவுக்குத் தயங்க? ஒருநிலையில் பெருந்துணிவே பெரு வாழ்ககை. நான் நெடுநாள் இருப்பது அவர்கட்கும் நெடுநாட் கவலை. ஒருநாள் ஒருவர் ஒரு பெருங்கவலைக்கு ஆளாக்கிக் கொண்டுவிட்டால், அப்புறம் பலர் கவலைப்பட இடமிராது. கவலைக்குரிய பொருளே போய்விட்டால், அப்புறம் எதனைப் பற்றிக் கவலை யார் படுவது? மரம் இருந்தால் பழுக்கவில்லை; நிலம் இருந்தால் விளையவில்லை என்று வருத்தப்படலாம். பல ஆண்டு வாழ லாம் என்பது நம்பிக்கையே தவிர உண்மையில்லை, இயற்கை யில்லை. வெள்ளத்தில், நில அதிர்ச்சியில், தீப்பிடிப்பில், புயற்காற்றில் எவ்வளவு இளம் பொருள்கள் திடீர்த் திடீரென மடிகின்றன, மாள்கின்றன. வறுமை வெள்ளத்தில், வறுமைத் தீயில், வறுமைப் புயலில் மடிவதுதான் இயல்பு. மடியாது பிழைப்போம் என்பது அறிவு வறட்சி. அதிலும் ஒரு புரட்சி யுண்டு. நம்மைக் கொல்லவரும் வறுமையை நாமும் கொல்ல லாம். வறுமை அப்புறம் எட்டிப் பாராது. வறுமையைக் கொல்லும் ஒரே வழி - ஒரே ஒரு வழி தற்கொலை. நெஞ்சே! ஏன் நடுங்குகிறாய்? தற்கொலை என்ற சொற் கேட்டு நடுங்குகிறாயா? வறுமை போய்விடுமே என்று நடுங்கு கிறாயா? ஒரு சிறு பெண் மடவாயிலிருந்து நாணமில்லாத சொல் பிறக்கிறது என்று நடுங்குகிறாயா? (கேலிச் சிரிப்பாக) நடுங்கு, நடுங்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒடுங்கப் போகிற நெஞ்சே! நடுங்கு. தற்கொலை என்பது நற்சொல்; வறுமைதான் கொடுஞ்சொல்; தற்கொலை விடுதலைச் சொல், வறுமைதான் அடிமைச்சொல்; தற்கொலை பெருமைச் சொல், வறுமை சிறுமைச் சொல். இளம்பெண் தற்கொலை என்று செய்தித்தாளில் படிக்கும் போதெல்லாம் இரக்கப்பட்டேன். அதுதான் இளம்பெண் முத்திவழி என்று புரிந்துகொண்டேன். நான் படித்ததுபோல, ஊரெல்லாம் நாளைச் செய்தித்தாளில் என்னைப் படிக்கப் போகிறது. செத்தால்தானே வறியவர்களுக்கு விளம்பரம். செய்தித்தாள்கள் வறியவர்க்கு இப்படித்தான் வழிகாட்டு கின்றன. அதிலும் இளம் பெண் தற்கொலை படத்தோடு என்றால், எவ்வளவு விற்பனை. இளம் பெண் தற்கொலை நாட்டுக்கு நல்லது. மக்கட் பெருக்கத்தைக் குறைக்க அது முதல்வழி என்றுகூடச் சிலர் வாதாடலாம். வளமிருப்பார் ஏன் வாதாட மாட்டார்கள்? 4 (சிறிது தயங்கிப் பேசாது நின்று தலைநிமிர்ந்து) மனம் குழம்புகிறதே. உயிரை விடுவது சரியில்லை; விட்டால் வாராது. வாராததை விடக்கூடாது. கட்டான இளைய உடல். முழுதும் உழைத்து வறுமையை நீக்கிக் கொள்ளலாம். முடியாதது என்பது வேறில்லை. மறுபடியும் மனம் தடுமாறுகிறது. இவ்வளவு வறுமைக்கு முன் எந்த முயற்சியும் பலிக்காது. தகப்பனார் முயற்சியில்லாதவரா? ஐம்பதாண்டு முயன்றும் என்னாச்சு. முயற்சிக்குப் பன்மடங்கு வறுமைதான் பெருகிற்று. பெண்ணுக்கு என்ன முயற்சி. நாலு வீட்டில் கூடப் பாத்திரம் சட்டிகள் தேய்த்துக் கழுவலாம். இன்னும் முயற்சி செய்ய வழிபார்த்தால், பலபடப் பேசுவார்கள். ஊர்சுற்றித் திரிகிறாள் என்பார்கள். வறுமையைக் கேலி செய்வதுதானே இந்நாட்டுப் பழக்கப் பண்பு. (தன் ஆடையை இறுக்கக் கட்டுகின்றாள். ஆள் யாரும் உண்டா என்று கரையேறிச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். கூந்தலை நன்றாக முடிந்துகொள்கிறாள். வானம் திசை நிலம் எல்லாம் வணங்குகிறாள்.) எப்படி எப்படியோ சென்று என் உள்ளம் ஒரு தெளிவுக்கு வந்துவிட்டது. நான் உழைத்து, வயதான பெற்றோர்களையும் தம்பி தங்கைகளையும் காப்பது என்பது பாரமான முடிபு. பிறந்தோம். இந்த உலகத்தையும் ஒரு சுற்றுப் பயணமாகப் பார்த்தோம். பார்த்ததும் போதும். போய் வருகிறேன். எவ்வளவு செல்வமாகச் செல்லமாக வாழ்ந்தாலும், நூறாண்டு வாழ்ந்தா லும், எப்படி இறந்தாலும் முடிவு எல்லார்க்கும் சமம். விரைவில் இறப்பது நல்ல பிறப்பு விரைவில் எடுக்க ஒரு வழி. (மறுபடியும் சுற்று முற்றும் பார்க்கிறாள். தீய நாற்றம் வீசுகிறது. வளமான ஆடு பாம்பு கடித்து இறந்து கிடக்கிறது. கீழே பார்க்கிறாள். பாம்பு ஓடுகிறது. கலங்கவில்லை, பதற வில்லை. தன்னைக் கடிக்கட்டும் என்று எதிரே நிற்கிறாள். பாம்பு சீறாது ஓடிப்போய் புற்றுக்குள் நுழைகிறது.) பாம்பும் வளமான பொருளைத்தான் வாய் வைக்கும். எதிரே நின்றும் தீண்டவில்லை, திரும்பிப் பார்க்கவில்லை. ஆற்றுக்குத் துவைக்கப் போன இடத்தில் பாம்பு கடித்து இறந்தாள் என்ற பழி பாம்பைச் சாரட்டும் என்று பார்த்தால், பழிக்குப் பாம்பு அஞ்சி ஓடி ஒளிகிறது. பாம்பும் தீண்டாப் பாவை, வறுமைப் பாவை. போதும், போதும், இவ்வாழ்வு போதுமே. அதனாலென்ன, குளிக்கப்போன இடத்தில் தவறி ஆற்றில் விழுந்துவிட்டாள் என்ற பழி நீரைச் சாரட்டுமே. மன்பதை நீர் வடிக்கட்டுமே. ஆற்றுக்கொலையை நிழற்படம் எடுத்து அழகாகப் போடட்டுமே. எல்லாம் போகட்டுமே. வறுமையால் உயிர் போம்போது உலகமே உயிர் போகட்டுமே. வாடிய வயிறுகளையே பெருக்கும் இப்பழைய உலகம் நான் மறுபடி பிறப்பதற்குள் பசி நீக்கும் புதிய உலகம் ஆகட்டும். 5 (மான்விழி கரையிலிருந்தவாறே ஆற்றில் வேகமாக விழுந்து இறக்கலாமென ஓடோடி வருகிறாள். முடிக் கூந்தல் அவிழ்கிறது. இறுக்கிய ஆடை தெறிக்கிறது. கையால் முகத்தை மூடிக்கொண்டு கல் பிறழமண் பிதிர அலங்கோலமாக ஓடுகிறாள். மிதி வண்டியில் வேகமாக வந்த இளைஞன் குறுக்கே வந்து தாக்க நடுப் பாதையில் மூர்ச்சையாகி விழுகிறாள். பண்புடைய அவ்விளைஞன் ஆற்று நீரை, இருகையிலும் அள்ளி வந்து அவள் முகத்தில் தடவித் தெளிக்கவே அம்மா, அப்பா என்று சொல்லி, மெல்லப் பார்க்க, நாணம் வருகிறது. நீ என்கூடப் படித்த மான்விழி அல்லவா! ஓடி வருவதைப் பார்த்து, யாரோ துரத்துகிறார்கள் என்று வேகமாக வந்து தடுத்தேன். உன் முகத்தைத் தொட்டு என் கைத்தண்ணீரைத் தெளித்ததைப் பொறுத்துக்கொள். ஆற்றங்கரைக்குத் தனியே வரலாமா? நல்லது. துணிவிருந்தால் என் மிதி வண்டியின் பின் ஏறிக்கொள். உனக்கே மிதி வண்டி ஓட்டத் தெரியும். நீ ஓட்டு. நான் உன் பின்னால் இருந்துகொள்கிறேன். என் கை தனியாக ஒரு குமரிப் பெண்ணைத் தொட்டுவிட்டது. அந்தப் பெண்தான், அவள் விரும்பினால் என் வாழ்க்கை . . . . . . மான்விழி புன்முறுவல் பூத்து மிதிவண்டியைத் தொட்டுத் தள்ளவே, இந்த முறுவல் கோடிபெறும் என்று திரும்பிப் பார்த்துப் பார்த்துப் புறப் பட்டான் காவியன்.) மான்விழி நாணமாகத் தன்னுள் உயர்நிலைப் பள்ளியில் உடன்படித்த இந்தக் காவியன் (வெட்கமும் மதிப்பும் தோன்ற) இவர் இந்த வழியில் எவ்வாறு வந்தார்? தடுத்தாட்கொண்ட பெரிய புராணம்போல். இதுவும் புராணமா? என்ன துணிச்சல் குமரிப் பெண்ணைத் தொட்டு முகங்கழுவிக் கைத்துண்டால் துடைக்க. முகத்தைத் துடைத்து அகத்தை உடைத்தார். இவர் காவியர். என் ஆவியர். மிதிவண்டியின் பின்னே இருக்க எனக்குத் துணிவுண்டா என்று வெட்டெனக் கேட்டாரே. இருக்க வைத்துக்கொண்டு ஊர்வழியே போகத் துணிவுண்டா என்று பட்டெனக் கேட்டிருப்பேன். மிதிவண்டிக்குப் பின்னே என்ன, உங்கள் வாழ்க்கைப் பின்னேயும் வரத் துணிவுண்டு என்று சடக்கெனச் சொல்லியிருப்பேன். உயிர் தந்த அவருக்கு என் உடலுண்டு என்று கைம்மாறு சுட்டியிருப்பேன். குறிப்பில் உணரட்டும் என்றுதான் மிதிவண்டியில் ஏறிய அவரை மணியடித்துச் சிறிதுகூட ஓடிச் சென்று வழிவிடுத்தேன். சாதல் மணத்தைக் காதல் மணமாக்கிய தெய்வம் கைகூடும். (கூந்தலையும் ஆடையையும் சரிப்படுத்திக் கொள்கிறாள். துவைத்துக் காய்ந்த உருப்படிகளைக் கட்டிக் கொண்டு மிதிவண்டியிற் போவதுபோல, மகிழ்ந்து கொண்டு வீடு செல்லுகையில்.) வறுமை நல்லது. நல்லது தரும் வறுமை நல்லது. வறுமையின் முடிவு வளம். இளம் பெண்ணுக்குக் காதல் வளம். நல்லது வரும் என்ற நம்பிக்கையே மனிதப் பிறவிக்குச் சாவா மருந்து. எந்நிலையிலும் வாழ்வு வரும் என்ற நம்பிக்கையே மெய். ஏனையவெல்லாம் பொய். அதோ எதிரே வருகிறார். மறுபடியும் காணும் வாய்ப்பு. கண்டு வெளிப்பட அளவளாவும் வாய்ப்பு விரைவில் வரும் நெஞ்சே! நம்பி வாழ். 3. மானத்துக்காக (ஆறுமுகம் வயது 58. குடும்பத்தலைவன். மனைவி வள்ளியம்மாள் வயது 52. பெண் குழந்தைகள் நாலு. ஆண் குழந்தைகள் இரண்டு. யார்க்கும் திருமணமாகவில்லை. ஆறுமுகனார் விற்பனைவரி அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். சேமிப்பு நிதியிலிருந்து அவ்வப்போது கடன் வாங்கியிருந்தார். தன் மனையில்லை; துச்சில்லம். குடிக்கூலி கொடுக்க மாட்டாது தம் பழங் கிராமத்துக்கு வந்தார். சிறு குடிசை. நகர வாழ்வில் பயின்ற அவர் குடும்பம் கிராம வாழ்வுக்கு ஒத்துப்போக முடியவில்லை. உறவினரும் ஊராரும் இக்குடும்பத்தைக் கேலிப்படுத்தினர்.) நகர வழக்கப்படி ஆறுமுகனார் கிராமத்திலும் காலை மாலை நடந்து போவார். களைப்பாகக் குளக்கரையிலோ வயற்கரையிலோ சோலை நிழலிலோ உட்காருவார். ஒருநாள் மாலை ஐந்து மணி. குளத்தங்கரை சிறுமடைவாய்க் கல்லில் இருந்துகொண்டு.) என் முன்னோர் தலைமுறையாக வசித்த இந்தச் சிற்றூரில் கடைசி காலத்திலாவது வந்தது மகிழ்ச்சி. இந்த ஊரைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்த என் பிள்ளைகளுக்குக் கடைசி காலத்திலாவது காட்ட முடிந்ததே. கயல்வயல் என்ற இந்தப் பசுமையூரில் என் முன்னோர் வாழ்ந்த அடையாளம் இன்றும் ஊர் மக்கள் மனத்தில் இருக்கின்றது. ஊர்க்கேணி அவர்கள் தோண்டியது. குளக்கரை அவர்கள் அமைத்தது. சிறு பள்ளி அவர்கள் தொடங்கியது. பொது அம்பலம் அவர்கள் கட்டியது. முருகன் கோயில் பழுது பார்த்தது அவர்களாம். இந்த மடைவாய்க்காலை ஒழுங்குபடுத்தியது அவர்களாம். ஊர் நடுவில் பெருந்தூண் நட்டு அம்பல விளக்குச் சுடரச் செய்தது அவர்களாம். இவ்வளவும் தங்கள் பணத்தில் செய்தார்களாம். செய்தாலும் தங்கள் பெயரைப் பொறிக்க வில்லையாம். கதை கதையாகச் சொல்லக் கேட்டிருக்கின்றேன். நான் ஒருவனே நகரம் நோக்கிச் சென்றேன். என்னானேன்! முடிவில் கிராமம் நோக்கி நகர்ந்தேன். வறுமையிலும் ஒரு மகிழ்ச்சி. நகரத்தில் செலவு செய்து பெறும் வசதிகள் இங்கு இயற்கையில் கிடைக்கின்றன, இயல்பாகக் கிடைக்கின்றன. அந்த நகர வீட்டில் எவ்வளவு ஒட்டுக்குடிகள்? நல்ல காற்று நல்ல குடிநீர் உண்டா? சாக்கடை, அதிலே பன்றி குளிக்கும். குளித்த தவளை குதித்து வீட்டுப்படி வரும். அடைபட்ட கதவு. சிறு கள்ளர் கை நீட்டித் திருடும் பயம். கொசுகுக்காக முகத்தை மூடிக் கொண்டு உள்மூச்சு விட்டு உறங்குதல். இங்கு வந்த பிறகு அங்குபட்ட துன்பங்கள், நலக்குறைவுகள் தெரிகின்றன. நாற்பதாண்டுகளாக எப்படியோ வாழ்ந்துவிட்டேன். ஓய்வும் பெற்றேன். தொழில் ஓய்வு மட்டுமல்ல, வாழ்வில் ஓய்வு. வாழும்போதே, உயிர் இருக்கும்போதே, ஓய்வு என்ற சாய்வுக் காஞ்சியை எவன் கண்டுபிடித்து உலகிற்கு வழங்கினானோ? கட்டாய ஓய்வு. பகுத்தறிவுக்கு இடமில்லை. யாருக்கு ஓய்வு? எந்தக் குடும்பத்துக்கு ஓய்வு? குடும்பக் கடமை முடிந்தவர்களுக்கு ஓய்வு கொடுத்தாலும் கொடுக்கலாம். படிக்க வேண்டிய குழந்தைகளும் பருவமான பெண்களும் திருமணக் கடமைகளும் உள்ள குடியாளனுக்குமா ஓய்வு? இன்னும் பழம் தந்து கொண்டிருக்கும் மரத்தை வெட்டுவதில்லை. ஐந்தாண்டு கறந்தது போதும் என்று கறவைப் பசுவைத் துரத்தி விடுவ தில்லை. பத்தாண்டு வரி தந்தது போதும் என்று பின் வரியை ஒழிப்பது இல்லை. உடம்போடு இருக்கும்வரை ஓய்வு என்ற நிலையுண்டா? கடமை முடியும்போது உழைப்பு முடிய வேண்டும். (சினக்குறிப்போடு) நீண்ட நாள் வாழும் மருந்துகளைக் கண்டு பிடிக்கிறார்கள். உழைத்து நீண்ட நாள் வாழ முடியாத படி ஓய்வுப் படுத்துகிறார்கள். என்ன முரண்? பின்பு ஓய்வுக் காலத்து இருந்து செலவு செய்யும் அளவுக்கா கூலியம் வாரி வழங்குகின்றார்கள்? ஒரு பக்கம் தொழிலோய்வு தந்து இன்னொரு பக்கம் தொழிலின்மையை - வேலையில்லாத் திண்டாட்டத்தை - ஈடுசெய்கிறார்களாம். கடமை செய்ய வேண்டிய முதியவர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை - ஏற்படுத்துகின்றோமே என்ற எண்ணம் படவில்லை. பறித்து ஈடு செய்வது வழியாகாது, பழியாகும். அதிகாரம் சமவியம் மிக நல்ல தேவையான கொள்கைதான். அது மக்கட்குப் பொது வாழ்வியம். இவர்கள் செய்வது அழிப்பியம், வற்றியம். உயிர் இருக்கும்வரை வேலை பார்க்க, உழைக்க வகைகள் காண வேண்டும். ஒருவன் வருவாயில் குடும்பம் நடக்கும் நாடு இது. தலைவன் ஓய்வு பெற்றால் குடும்பமே மாய்வாகி விடும். தலைவனே வாய். தலைவன் செத்தபோது எழும் அழுகுரல் களைக் கேட்டால் விளங்கும். இதுவரை உண்டது போதும், இனி மற்றவரை உண்ண விடுங்கள்; இதுவரை உடுத்தியது போதும், இனி மற்றவரை உடுத்த விடுங்கள் என்றெல்லாம் விதிகள் வந்தாலும் வரும். உங்கள் குடும்பத்தில் இதுவரை செத்ததுபோதும், இனி மற்ற குடும்பத்தில் சாகட்டும் என்றெல் லாம் என்னென்ன வருமோ? எல்லாம் அருளாதாரம் இல்லாத பொருளாதார விளையாட்டுக்கள். தங்கள் பொருளாதாரத்தைப் பல தலைமுறைக்குப் பெருக்கிக் கொண்ட அரசியற் கட்சிகளின் மருளாதாரம். 2 (குளத்தங்கரையில் நடந்துகொண்டு மூக்குப் பொடியைக் கையில் எடுத்து) ஊக்குப் பொடியே! நீ ஒன்று தவிர எனக்கு கெட்ட பழக்கம் இல்லை. உன் தொடர்பு என் வருவாய்க்கு ஏற்ற தொடர்பு. உன்னால் எனக்குக் கொடை பழக்கம் வந்தது. உன் தொடர்பு நான் கண்டுபிடித்ததில்லை. (ஒரு சிரிப்புச் சிரித்து) என் பாட்டனார் தகப்பனார் மரபு வழி. கடையில் வாங்கி வரச் சொன்ன பழக்கம் கையில் வந்துவிட்டது. அவர்கள் சென்ற வழியில் எதைக் கடைப்பிடிக்கா விட்டாலும், நினைவுக்கறி குறியாக இதைக் கைப்பிடித்திருக்கிறேன். (பொடியை உறிஞ்சிக் கொண்டு) அவர்களின் பொடிமட்டை வெள்ளி. என் மட்டை சருகு. கிராம வாழ்வுக்கும் நகர வாழ்வுக்கும் வேறுபாடு இது. (சிந்தனை முகத்தோடு) வயது 58. கொள்கை பேசி என்ன? அரசியலைத் தூற்றி என்ன? சீர்திருத்தம் உளறி என்ன? இல்லாதவனுக்கு இவ்வளவு கருத்துக்கள். அவள் அறிவுடைய வள். பத்தாண்டுகளுக்கு முன்னே பதறிச் சொன்னாள். மனைவி வள்ளியம்மாள். ‘பிள்ளைகள் சின்னங்கள். வேலை வருவாய் போதாது. வயிறு கழுவவே போதாது. திடீரென வயது குறைத்து ஓய்வு காட்டி உயிரறுப்பார்கள். வேறு வருவாய் தேட வேண்டும். பெருங்குளத்துக்கு நாலாபக்கமும் மடைவாய். பெருந் தெருவுக்குப் பல குழாய். அரசு எத்தனை வகைகளில் வரி வாங்குகிறது? குடும்பத்துக்கும் பல வகையில் வருவாய் வேண்டும். மாத வருவாயில் சேமிக்க முடியவில்லை என்றால் நாள் வருவாயும் பார்க்க வேண்டும். கெட்ட வழியில் மதிப்புக் குறைவான வழியில் பணம் குவிக்கச் சொல்வதாக எண்ணி விடாதீர்கள். பெருஞ் செல்வராகிக் குடியாட்டம் களியாட்டம் போட வேண்டாம். உந்துவிற் பறக்க வேண்டாம். கண்ணாடி உடைகளோ கை வயிரக் காப்புக்களோ குதிமிதிகளோ வேண்டாம். நமக்குப் பிறந்த கடவுள் அருளிய ஆறு சிற்றுயிர்களைப் பட்டினிப் பசியின்றிப் படிக்க வைத்து ஆளாக்கி விடுவதற்கு வழி பார்க்க வேண்டுமே. அடக்கமாகச் சூதாடிக் கடமை செய்பவர்களைப்போல, சட்டப்படி கணக்கைப் பக்குவப்படுத்திக் கணக்கற்ற கறுப்புப் பொருள் வைத்திருப்பதுபோல, மரபாகத் தரும் கைக் கொடையை மனமார வாங்கலாமே. நீங்கள் கேட்க வேண்டாம். தாமாகக் கொடுப்பதை வாங்கினாற் போதும். குடும்பத்துக்கு ஓரளவு குணப்பலி செய்யலாம். இனியாவது சிந்தனை செய்யுங்கள். நாணயமாக இருந்த நல்லலுவலர் என்பதற்கு நாலாண்டு வேலை கூட்டித் தர மாட்டார்கள். சட்டம், சமம் பேசுவார்கள். பெற்ற குழந்தைகளுக்காக இப்படிச் சொல்ல மனஞ்சொல்லு கிறது’. அன்றே வள்ளி அன்பாக உலக அறிவாகச் சொன்னாள். (மூக்குப் பொடியை மறுபடி உறுஞ்சிக் கொண்டு) ‘சிந்தனைக்கே தகாத கருத்து. குழந்தைகளுக்குச் செல்வம் வேண்டியதில்லை. குழந்தைகளே செல்வம். தீய வழியில் ஈட்டிக் காப்போம் என்று இத்தனை குழந்தைகளை நாம் பெறவில்லை. உன் வழி உடனே ஓய்வாக்கும் வழி. உழைப்புக்கு நேர்வழி காட்டு. கடுமையாக உழைப்போம்’ என்று சிறிது சினமாகப் பட்டெனக் கூறினேன். அப்படிக் கூறினதற்கு இன்னும் வருந்தவில்லை. உண்மையே உரம். அன்றிலிருந்து இப்பேச்சை அவள் விட்டுவிட்டாள். உண்மை தொடர்ந்தது போல வறுமையும் தொடர்ந்தது. 3 (குளத்தங்கரையில் மறையும் ஞாயிற்றைப் பார்த்துக் கொண்டு, பறந்து செல்லும் குருவியினங்களையும், வீடு திரும்பும் உழவன் உழத்தி, உழப்பிள்ளைகள், ஆடு மாடுகளையும் பார்த்து.) இப்பட்டிக் காட்சிகள் மாசற்ற இன்பங்கள். மறுநாள் பற்றிக் கவலா வாழ்க்கை. இந்தச் சிறு ஆட்டுக் குட்டிக்கு எவ்வளவு நடிப்பு! நாலு காலும் தூக்கித் துள்ளும் நடிப்பு, நடைமுழுதும் நடிப்பு. கவலையற்று நடிக்கும்போது பார்ப்ப வர்க்கும் கவலை மறைகின்றது. (ஒரு நினைவு வந்து) இப்போது என் சின்னக் குழந்தைகளும் தெருவில் இப்படித்தான் விளை யாடிக் கொண்டிருக்கும். நகரக் குழந்தைகளும் நடிக்கின்றன. அவை திரை நடிப்பு. இந்தப் பசுவுக்கு எவ்வளவு நேர்மையான நடைப்போக்கு. வீடு சேரும் ஒரே நோக்கம். வயலாகிய அலுவலகத்திற்குக் காலையில் சென்று கடமையை முடித்துச் செம்மாந்து திரும்புகிறது. தோளில் கலப்பை ஏந்தித் தலையில் வைக்கோல் தாங்கிக் கையில் அரிவாளும் கம்பும் கொண்டு திரும்பும் இந்தக் கரிய உழவனார் வணங்கத்தக்கவர். இயற்கை ஐம்பூதங்களோடு இரண்டறக் கலக்கும் பெருஞ் செல்வர். நகரத்தோ விசிறிக் காற்று, குழாய் நீர், தார் நிலம், கரித்தீ, புகைவானம். இவ்வளவு கெடுதலுக்கும் விலைவேறு. சோற்றுக் கலசம் சுமந்து முள்ளிச் சுப்பி பொறுக்கிச் சிற்பம்போல இடையை எடையின்றி வைத்துக்கொள்ளும் இந்த உழத்தி எவ்வளவு உழைப்பாளி. சுறுசுறுப்பின் வடிவம். பசுவோடும் குட்டியோடும் உழவனோடும் சரளமாகத் தொழில் பற்றியே பேசிக் கொண்டு நிலமகள் அடிதாங்க மெத்தென நடக்கின் றாள். வஞ்சகமற்ற வயலுழைப்பு. இவளே உலகந்தாங்கி. நகரத்தோ சமைக்கும்போது கட்சிப் பேச்சு, செய்திப் பேச்சு. மாத்திரை உடம்புகள். கடமை செய்யாக் கலவரங்கள். பேச்சு ஏச்சு பூச்சுக் குப்பைகள். பெண்மை குறைந்த பெண்ணுருவங்கள், கனவான்களுக்குத் தக்க கனத்திகள். இந்தச் சிறு கிராமக் குழந்தைகளின் பயிர் போன்ற பசுந்தமிழ், ஓடை போன்ற குளிர்ச்சித் தமிழ் என் நெஞ்சத்தைப் பூப்போல அள்ளுகின்றன. எவ்வளவு எளிதாக உணர்ச்சியொடு உரிமையாக ஒரு மொழியாகப் பேசுகின்றன! நகரத்துக்குச் சென்றபின், இக்குழவித் தமிழ்கூட எனக்குப் புரியவில்லையே. மாட்டோடும் கன்றோடும் இக்குழந்தைகள் பேசுவதைப் பார்த்தால், சிற்றூர்களில் அஃறிணையுயிர்களுக்கும் தமிழ்க் கேள்வி உண்டுபோலும். நகரத்துக் குழந்தைகள் நிலந்தீண்டாத் தெய்வங்கள்; காலடி மிதியடி என நான்கடிகளால் நடக்கும் புதிய உயிரினங்கள். நிலம் அவ்வளவு அழுக்கு. மழை பெய்தால் எங்கும் பாலாறு தேனாறு போலச் சாக்கடை ஆறுகள். அதனால்தான் செருப்பு மாட்டிய காலோடு உடல் மூடிய குழந்தைகளைப் பொம்மைபோல் தூக்கிக் கொண்டு புறக்கருப் போலத் தாங்கிக் கொண்டு செல்கின்றனர். நகர மாந்தர் தமிழா பேசுகின்றனர்? அவர்கள் ஒலி பிச்சைப் பாத்திரத்தில் அரிசி போல் இருக்கிறது. (மேலாடையைத் தலையில் கட்டிக்கொண்டு குளத்தில் இறங்கி நீர்ப்பசியாறக் கொஞ்சம் தண்ணீர் குடித்தவராய்) உள்ள நிலையை மறந்து ஊர்நிலை உலக நிலைகளை வம்பளக்கின்றேன். கிராமத்துக்கு வந்துங்கூட நகர மனமே பிடித்துக் கொண்டிருக்கிறது. ஓய்வு பெற்றவன் சிந்தனை இப்படித்தான் ஓடும். கிராமத்துக்கு வந்தும் என் நகரப்பழக்கம் மாறவில்லை. இங்கு யாராவது உலாவச் செல்கிறார்களா? தனிமையில் குளத்தங்கரையில் ஒண்டியாக இருக்கிறார்களா? இங்கு பொடி கிடைக்காது என்று சாடிப்பொடி வாங்கி வைத்தேன். நான் பொடி உறிஞ்சுவதைப் பார்க்கும் கிராமக் குழந்தைகள் ஐயா நெடு மூக்குக்குளே ஏதோ திணிக்கிறாரே என்று தள்ளி நின்று பார்த்துத் தும்மிக் கொண்டு ஓடுகின்றன. உலாவுவதும் பொடி போடுவதும் நகரத்திலிருந்து வந்து ஒரு பெரியவர் பழக்கம் என்று பொதுப்பட அம்பலத்தில் சொல்லிக் கொள்கிறார்கள். எனக்கோ இப்போது உலாவுதல் ஒரு போர்வை. துன்பத்தை மறக்க, சிந்தனையில் ஆழ இங்கு வருகிறேன். மாடு கன்று காலி எல்லாம் வீடு நோக்கி விரையும்போது, எனக்கு வீட்டுக்குப் போவதென்றால் கசப்பு. ஒவ்வொரு நாளும் நேரங்கழித்தே வீடு செல்கிறேன். இருட்டி இன்னும் நேரமாகிச் சென்றால், ஐயாவைக் காணவில்லையே என்று கூக்குரல் எழுந்தால் இது கிராமம் அல்லவா? எங்கும் செய்தி பரவிக் கெட்டுப் போகுமே என்று திரும்புகிறேன். (மறுபடியும் குளத்தில் இறங்கி நன்றாக முகங்கழுவித் தண்ணீர் நிறையக் குடித்து, பையில் வைத்திருந்த திருநீற்றைச் சிறிது வாயிற் போட்டு, நெற்றியிற் பூசிக்கொள்கிறார். உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை, உறிஞ்சும்பொடி எல்லாமும் அவனே என்று கண்ணீர் மல்க இரவு ஏழு மணிக்கு வீடு திரும்புகிறார் ஆறுமுகனார்.) 4 (மறுநாள் வழக்கத்தினும் முந்தி நாலு மணிக்கே குளத் தங்கரை வந்தார். முதல் நாள் உட்கார்ந்த இடத்தில் இருக்கா மல், பலர் கண்ணுக்குப் படாத ஒரு பக்கத்தில் அமர்ந்தார். மட்டையைத் திறந்தும் பொடி எடுக்கவில்லை. சோர்வு மிகுதியால் மரத்தோடு ஒட்டிச் சாய்ந்தார். கண் நீர் கொட்டி யது. துணியால் துடைத்துக் கொள்ளவில்லை, கையால் வடித்தார். ஈரத்துணி பிழிந்தாற்போல விரல்களிலிருந்து வடியும் கண் துளிகளைப் பார்த்த வண்ணமாய்.) நேற்றுச் சாயுங்காலம் இக்குளத்தில் கையால் அள்ளிக் குடித்த தண்ணீர்கள் செரியாது அப்படியே தங்கி இவ்வாறு கண்ணீர்களாக மாறி, குடித்த கையிலே நீராக வடிகின்றன. இந்நீர் மறுபடியும் இக்குளத்தில் நீரோடு கலக்கட்டும். எவ்வளவு மலையாகப் பொறுத்தேன்! பொறுத்துத்தான் பார்த்தேன். கருவை வயிற்றில் எவ்வளவு பொறுத்தாலும் காலங்கடந்து வைத்துக்கொள்ள முடியாது. கருமேகம் நீரைப் பொழியாது தாங்கி நடக்க இயலாது. வெளிவரத் துடிக்கும் உயிரை உடல் ஒருநாள் விட்டுத்தான் ஆகவேண்டும். அறுபதாண்டு தின்று பழகிய வயிறு. உண்பது கொஞ்சமாக இருந்தாலும் பசி பொறுத்து இருக்க முடியவில்லை. முதுமை, பட்டினி, எப்படித் தூக்கம் வரும்? என் அருமைக் குழந்தைகள் அப்பா பசிக்குதே அம்மா பசிக்குதே என்று சொல்லக் காணோம். நன்றாக விளையாடுகின்றன. வீட்டுக்கு வந்து தூங்கிப் போகின்றன. அந்தக் கடைசிப் பயல் ஒருமுகன் அப்பா நடந்துபோய்க் களைத்து வந்திருக்கிறார் என்று அடுத்த வீட்டுத் தாத்தா தந்த பொரிகடலையை நீட்டுகிறான். அந்தச் சின்ன மகள் குழலி வழக்கம்போல விளக்கேற்றியவுடன், ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ என்று குரலிசைத்துப் பாடும்போது வறுமையை ஒரு கணம் மறந்து மறுகணம் ஆழமாக நினைக்கின்றேன். மனைவியாக வந்த நாள்முதல் என் நல்ல இல்லறச் செல்வி வள்ளி உற்றுவரும் தொல்லைகள் பொறுமைக்கு ஓர் இமயம், வறுமைக்கு ஒரு புகலிடம். இந்தக் கிராமத்துக்கு வந்த நாளிலிருந்து எப்படித்தான் சமையற் பணிகளை நிறைவேற்றுகின்றாளோ! என்னை உயிரோடு வைத்துத்தானே தாலியும் பொட்டும் பூவும் நிறச்சேலையும் ஒதுங்காத நடையும் ஓடியாடித் திரிதலும். மண்ணுலகப் பிணைப்பு எவ்வளவு கடுமை? எவ்வளவு ஆண்டுகளுக்கு இத்தள்ளாட்டம், போராட்டம். (திடீரென எழுந்து நடந்து) இக்கிராமத்துக்கு வரும் போதே எதற்கும் கையிருப்பு வேண்டும் என்று கொண்டு வந்து வைத்திருக்கிறேன். பொட்டணத்தோடு பொட்டணமாக முடித்து வைத்திருக்கிறேன். இது யாரிடமும் கேட்க முடியா மருந்து. இன்று உலகப் போக்கில் இது தவறில்லை. இது ஒருவழி. நல்ல செய்தி இல்லாவிட்டால் நாளிதழ் வெளியிடுமா? குடும்பப் பெரியவர்கள் எல்லாரும் பின்பற்றும் வழி. குடும்பத்தோடும் அவ்வளவு பிள்ளைகளோடும் நஞ்சுண்டு இறந்தார்கள், கடலில் விழுந்தார்கள், கிணற்றில் விழுந்தார்கள் என்ற செய்திகளைக் கண்ணாடி போடாமலே கிழவர்களும் படிக்கும் வகையில் கொட்டையெழுத்தில் தாள்கள் படங் களோடு வெளியிடுகின்றன. வானொலியில் வருகின்றன. வறுமை முடிவிலும் புகழ். தோன்றும்போது புகழொடு தோன்றா விட்டாலும் மறையும் போதாவது புகழொடு தோன்றுவோம். (அழுது வடியும் கண்ணீரை வாரி எறிந்து) என் வாழ்வு முடிவும் செய்தித்தாளுக்கு ஏற்றதே. குடும்பம் குடும்பமான வறுமைப்பலிகளை அறிந்து கவலையாபடு கிறார்கள், இல்லை, கவிபாடுகிறார்கள். குடும்பங்களின் தனித் துயர்களை நேரடியாகக் கலந்து அறிந்து வழிசெய்யும் முறை நாட்டில் இல்லை. வாக்குக்கும் வாக்குச் சீட்டுக்கும் ஏழைச் சாவுகள் செய்தியளிக்கின்றன. ஏழைமையை யாரய்யா ஒழிக்கிறார்கள்? இவர்கள் செய்யும் கூப்பாட்டை நம்பி ஏழைகள் தாமே ஒழிகிறார்கள். குடும்பத்தோடு குலையாகச் சாகிறவர்கள் மக்கட் பெருக்கத்தைக் குறைத்து நாட்டுத் தொண்டு ஆற்றுகிறார்கள் என்றுகூடத் தலைவர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். நல்லதங்காள் ஏழைகளுக்கு வழி காட்டிய பெண் தெய்வம். 5 (துண்டினை மேலே போர்த்திப் பொடியைச் சிறிது போட்டுக்கொண்டு குளத்தில் இறங்கி முகங்கால் கழுவி மறையும் கதிரவனை நிலங்கிடந்து தொழுது திருநீறு பூசி) வாழ்வாவது வறுமை, மண்ணாவது பெருமை. பிழைக்க வழியில்லை, உழைக்க வயதில்லை. களைக்க நேரமில்லை. கலக்கும் நேரம் வந்துவிட்டது. மனைவியும் மக்களும் என் சொற்படி கேட்பவர்கள். அவர்களுக்கு நல்வழி நான் காட்ட வேண்டும், தலைவன் இல்லையா? சிந்திக்கவோ கவலைப் படவோ கண நேரமும் கொடுக்கக் கூடாது. மனைவி வள்ளி மானத்தி. கற்புக் கதைகளைப் படித்தவள். சிறுமை கேட்கப் பொறாதவள். பெருமையாகவே கடைசிவரை வாழ நினைப் பவள். என் கருத்தைத் தனியே கூப்பிட்டுச் சொல்வேன். முதலில் அழுவாள். தாய் அழாமல் இருக்க முடியுமா? பக்கத்து வீட்டுக்குக் கேட்டுவிடக் கூடாதே என்று மானமாகவே அழுவாள். குழந்தைகள் கலங்குமே என்று வெளிப்படையாகக் கலங்க மாட்டாள். பெரிய புராணப் பெண்களைப் போலவே நான் சொல்வதை மறுக்கமாட்டாள். அந்த நம்பிக்கையோடு முடிந்துவிடலாம். மிகவும் சிந்திக்க நேரம் கொடுக்கக்கூடாது. (தலையைச் சொரிந்து கொண்டு) என் சிந்தனை திசைதிரும்பி விட்டது. அவள் இசையாவிட்டால் . . . என் அளவுக்காவது செய்துகொள்ள இசைவாய் என்ற வன்கண்மை யாகச் சுடுசொல்லுவேன். தாலிக்காரி தருவாளா இசைவு? நானும் உடன்குடிக்கிறேன், உடன் மடிகின்றேன் என்று பாடுகிடப்பாள். குழந்தைகள் வயிற்றுக்கதி என்னாகும் என்று ஒரு கேள்வி அதிரக் கேட்பேன். நாம் இருக்கும்போது காக்க முடியாத குழந்தைகள் நமக்குப் பின் தாமே தெருக்களில் நாய்போல் மடித்துக் கிடக்கலாமா என்று அன்பொழுகவும் அறிவோடவும் மெல்லச் சொல்வேன். மடித்துக் கிடக்க விடக்கூடாது என்று பளிச்செனப் பதில் வரும். உணர்ச்சி வேகத்தில் முடிக்கவேண்டும். சிறிது இடைக்காலம் இருந்தா லும், அறிவும் ஆசையும் புகுந்து சூழ்ச்சியைக் கெடுத்துவிடும். பெற்ற மனைவியிடம் திடீரென இசைவு பெற்றுவிட்டால், அப்புறம் எல்லாரும் இவ்வுலகுக்கு அப்புறம். (கவலையாக) எல்லாம் ஒக்க நடக்கவேண்டுமே. இக்காலக் குழந்தைகள் அறிவுப் புலிகள். துணிவாகக் கேட்கும். துச்சமாக மறுமொழி சொல்லும். அதிலும் என் குழந்தைகள் வறுமை சுடச்சுட அறிவுக் கொழுந்தாகிவிட்டன. என்றாலும் வறுமை அனலுக்குமுன் அறிவுக் கொழுந்து கருகிப்போம். (நடந்து மகிழ்ந்து கொண்டு) குழந்தைகள் இன்று மகிழ்ச்சி அடையக் கூடிய பெருநாள். நான் பிறந்தநாள் (மெல்லத் தனக்குள், பாழாப்போன நாள்) ‘இந்த நல்ல மங்கல நாளில் இந்தச் சுவைநீரை நாம் எல்லாரும் ஒரே நேரத்துக் குடிப்போம். ஒன்று இரண்டு மூன்று என்று சொல்வேன். கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லிக் கண்ணை மூடிக்கொண்டு ஒரே முடக்கில் குடித்து விடவேண்டும். கொஞ்ச நேரம் வாயைத் திறவாமல் அப்படியே அடக்கமாக இருக்கவேண்டும். கண்ணைத் திறவுங்கள் என்று என் குரல் கேட்கும்வரை, நல்ல பிள்ளைகள் இல்லையா அப்படியே கிடக்கவேண்டும் என்று கண்ணாம் பூச்சி போலக் காட்டுவேன்’ மனைவி அழுவாள். அதைப் பார்க்கும்போது என் உயிர் மருளும். என்றாலும் திட்பமாக நடந்துகொள்வேன். இறப்பு கொடிது. அதனினும் கொடிது வறுமைப் பிறப்பு. 6 (மூன்றாம் நாள் வழக்கத்திற்கு மாறாக விடியற்காலையில் குளத்தங்கரைக்கு நடந்துசென்றார். குழந்தைகள் தூங்கின. எங்கே செல்லுகிறீர்கள் என்று கவலையோடு கேட்ட மனையாளுக்கு ‘இனி அஞ்சுவதில்லை; அஞ்சவருவதும் ஒன்றில்லை. இனி அது குடிப்பதில்லை. குடிக்க வருவதும் ஒன்றில்லை. எத்தீதும் நடவாது. வழக்கம்போல் வீட்டுக் கடமைகளைச் செய்து குழந்தைகளைக் குளிப்பாட்டி உள்ளது கொடு’ என்று இயம்பி முகமலர்ந்து குளக்கரை புறப்பட்டார் ஆறுமுகனார். மனைவி கதவோரம் நெடுந்தொலை பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் சோர்வாக நிற்பதையும் பார்த்துக் கொண்டே நடந்தார்.) (குளத்து நீரிற் குளித்துச் செவ்வானூடே எழுந்து வரும் கதிரவனைக் கைகூப்பித் தொழுது, ஒலிக்கும் புள்ளினங்களை யும், வயல்நோக்கும் காலினங்களையும், கண்டு மகிழ்ந்த வண்ணமாய்.) நல்லவள், வல்லவள். கேட்டவுடன் கலங்கினாலும் - யார்க்கும் கலக்கம் வரத்தானே செய்யும் - அதிர்ச்சியான கொடுமையான பேதைமையான பழியான பாவமான கருத்தல்லவா? கலங்கினாலும், நாமிருவரும் குடித்து மடிவதாக இருந்தால், குழந்தைகளைப் பரிதவிக்க விடக்கூடாது. அதுவும் பருவமான நம் பெண் செல்விகளின் நிலை என்னாவது? அவல நிலையிலும் ஒரு நிலைவேண்டும். ஒன்றாக மடிந்தால் தான் ஊர் ஒன்றாக நன்றாகப் பேசும் என்று கலங்கிய வள்ளியாள் தெளிந்து மொழிந்தாள். (சிரித்துக் கொண்டு) அவள் சொல்லி என்ன பயன்? உயிர் ஒவ்வொன்றும் உயர்திணையில்லையா? அவள் ஒத்துக்கொண்டால் எல்லாம் அப்பளம்போல எளிதாக நொறுங்கிவிடும் என்று எளிதாக எண்ணிவிட்டேன். மடத் தந்தை. இப்படி ஓர் எண்ணம் கிடந்தமையினால் தான் வறுமை என்னைவிட்டு நீங்கவில்லை. தீநீர்க் குவளைகள் எட்டு வரிசையாக இருப்பதைப் பார்த்து இன்னும் இரு கணத்தில் வறுமைக்கு விடுதலை என்று எண்ணிக் களித்தேன் கயத்தந்தை. என் பார்வை அப்படி. என் கண்மணிகளின் பார்வையே பார்வை. சின்னச்சிறு கால்களை ஆட்டிக்கொண்டு, காற்சட்டைப் பையுள் கைகளை வைத்துக் கொண்டு மேடைப் பேச்சாளன் போல, அம்மா அம்மா இப்படித்தானே ‘வறுமைக்கு மருந்து’ என்ற அந்தத் திரைப்படத்தில் சருபத்துக் கொடுப்பதுபோல எல்லாப் பிள்ளைகளையும் அம்மா அப்பா கொன்றார்கள். அதுமாதிரி எனக்கு நினைவு வருகிறது என்றானே சுட்டிப்பையன் ஒருமுகன். தூக்கி வாரிப்போட்டது என்னையும் அவளையும். இமைகள் இமைக்கவில்லை. கண்கள் அசையவில்லை. நெஞ்சம் துடிக்க வில்லை. திரைப்படம் பார்த்ததுகூட நல்லதுதான் என்று கருதி, துணிவும் நாடியும் சுருங்கிய நிலையில் அப்பா! தம்பி திரைப்படத்தில் வந்தது என்று தெரியாமல் சொல்லுகின்றான். அப்பா! பகல் முரசிலே படம் பிடித்துப் போட்டிருந்தார்கள். சிரித்துக்கொண்டு, ‘இந்தச் சருபத்தைக் குடித்தா நம்ம எல்லார் படமும் மொத்தமா வருமா அப்பா, உடனே வருமா? நாட்சென்று வருமா? அந்தப் படத்தைப் பார்க்க ஆசையாக இருக்கப்பா’ என்றாள். இதைக்கேட்ட ஒருமுகன் குழலியை அடிக்கப்போக, அவள் ஓட அவன் ஓட, சடையையும் சட்டையையும் பிடித்திழுத்த சண்டையில் நல்ல வேளையாக எட்டுக் குவளைகளும் தண்ணீர் கொட்டிப்போயின. மனைவி என்முகம் பார்க்க, அவள் முகத்தை நான் வெட்கத்தால் பாராமல் இருக்க, என்ன செய்தாள்? பண்புடைய பக்குவமான மனைவி தோட்டத்தில் வாடிக் கிடந்த எலுமிச்சம் பழத்தைப் பறித்து வந்து சிறிதே இனிப்பிட்டு ஒரு பெரும் பாத்திரத்திற் கலந்து ஆளுக்குக் கொஞ்சமாகக் கொடுத்து எனக்கும் கொடுத்துத் தானும் குடித்தாள். நானும் அவளும் என் குழந்தைகள் பெற்றெடுத்த பிள்ளைகள் ஆனோம். தம் மக்களே தம் பொருள். 7 (மூன்றாம் நாள் மாலை வழக்கப்படி குளத்தங்கரை செல்லவில்லை. வீட்டில் வளைந்து கிடந்த ஒரு கம்பியும் கயிறும் கொண்டு கண்மாய் நோக்கிச் சென்றார். குச்சிகளை ஒடித்து விறகாகக் கட்டினார். காய்ந்த சருகுகளைப் பொறுக்கினார் வீடு நோக்கி வரும்போது.) குழந்தைகள் வாழ்க, வறுமை ஒழிக. மூச்சிருக்கும் வரை முயல்க, முயல்க. புன்னெஞ்சே! தற்கொலைக்கு இடைவிடாது என்னைத் தூண்டிய புழுநெஞ்சே! நல்வழி சொல்வதுபோல வறியவர்களைத் தற்கொலை செய்யும் பாழ் நெஞ்சே! பழி நெஞ்சே! அழி நெஞ்சே! மானவழி காட்டுவதுபோல ஊன வழி காட்டி மயக்கும் ஈனநெஞ்சே, கிட, கிட. உலகத்து வறியவர் களே! உங்கள் நெஞ்சை நம்பாதீர்கள். உங்களினும் வறுமை யானது உங்கள் வறிய நெஞ்சு. அறிவும் ஆர்வமும் வறண்ட நெஞ்சை விலக்குங்கள், பதவி மாற்றுங்கள். அறிவான ஆர்வமான வாழ்வான வழி சொல்லும் நெஞ்சுக்கு இடங் கொடுங்கள். தற்கொலை எண்ணம் தூண்டுகின்ற உட்பகையான நெஞ்சை முதலில் தற்கொலைப்படுத்துங்கள். வாழ்வுப் பயிர் வளர இந்த நெஞ்சக்களையை அகற்றுங்கள். (கையை ஓங்கி மடித்துக் கொண்டு) என் பழைய தீ நெஞ்சே! இதோ இவ்விடத்து உன்னைக் காலில் மிதிக்கின்றேன். (காலை அழுத்தமாகத் தரையில் மிதித்தல்.) என் திசை திரும்பாதே, யார் பக்கமும் திரும்பாதே! புதிய நன்னெஞ்சே வருக. அறிவுடை நெஞ்சே! வருக. என்றும் வாழலாம் என்று நம்பிக்கை தரும் பண்புடை நெஞ்சே வருக. (புதிய ஊக்கத்தோடு விறகுச்சுப்பியைத் தூக்கிக் கொண்டு கரைவழி நடந்து செல்கிறார். ‘ஊர் தேசம் தாண்டிப் போனால் பிழைக்கலாம். உள்ளூர் சோறு போடுமா, ஊர் மாடு சாணி போடுமா’ என்று ஒரு கிழவி மகளுக்குச் சொல்லிக் கொண்டு வருவதைக் கேட்ட ஆறுமுகனார்.) திருடனுக்கு உழைக்கத் தோன்றாது. கள்ளத் துறவிக்குக் கல்யாண எண்ணம் வாராது. சிந்தனை மாற்றங்களே சிறந்த வழிகள். உலகத்து எத்தனை வழிகள்! வழிதேடுபவன் வாழ்வான். அறிவோட்டமே உயிரோட்டம். இந்தக் கிழவி அறிவுக்கிழவி, தெய்வக் கிழவி. இவள் சொற்கள் என் வாழ்வுச் சொற்கள். என் குடும்பத்தோடு நாளையே எட்டாக்கையில் உள்ள வெளியூர் சென்று எல்லாரும் வேலை பார்த்துப் பிழைப்போம். பிழைப்பு வேலை எதுவாக இருந்தால் என்ன? உழைப்பே உயிர். உலகமே ஊர். 4. பதவிக்காக (நெடுமுடி கல்லூரியில் வேதியல் விரிவுரையாளர்; இருபது ஆண்டுகள் பயில்வுடையவர். மனைவி அமுதி தமிழ்ப் பட்டத்தி; மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியை. ஒரே மகள் கல்லூரியில் படிக்கிறாள். மகளுக்கு திருமணப் பேச்சு நடைபெற வேண்டிய காலம்.) நெடுமுடி விடுதித் துணைக்காவலனாகவும் பணியாற்றி யவர்; தென்னிசு விளையாட்டினர்; கல்லூரி ஆண்டு மலரின் துணைப் பதிப்பாசிரியர். வேதியற் பேராசிரியராக இருந்தவர் ஓய்வு பெற்றமையால் துறைப் பொறுப்பினை முதிஞராக இருந்த நெடுமுடியைப் பார்க்கப் பணித்தனர். பேராசிரியம் தனக்குக் கிடைக்கும் என்று நம்பியிருந்த நிலையில் விளம்பரம் வந்தது. மனங்கசந்து விண்ணப்பித்தார். நேர்முகப் பார்வைக்குப் போய்வந்த மறுநாள் விடுதி மாணவர்களும் தன் வகுப்பு மாணவ மாணவிகளும் இவரைக் கண்டு பாராட்டுக் கூறினர். ஆசிரியர் சிலர் வாழ்த்துக் கூறிக் கை குலுக்கினர்.) (மாலை ஆறு மணி. வழக்கம்போலத் தென்னிசு விளை யாடியபின் கல்லூரிப் பூங்காவில் அமர்ந்து கைச் சட்டையை மடக்கிக் கொண்டு மட்டையைச் சாய்த்து வைத்தவராய்,) 1 (தன்னுள்) வயது என்ன 45. படிப்பு என்ன, முதல் வகுப்பு மூதறிவியல். பயில்வென்ன 22 ஆண்டு. கோடைக்காலத் தனிப் பயிற்சிகளும் உண்டு. இந்தக் கல்லூரியிலே படித்த முதற் பழைய மாணவன். உரையாளனாக விரிவுரையாளனாகப் பணிபுரிபவன். இருபதாண்டு விரிவுரைகள். தேர்வுக் குழுத் தலைவனாகவும் பாடக்குழு உறுப்பினனாகவும் இருக்கின்றேன். கல்லூரிக்குத் தொண்டென்ன? வேலை நிறுத்தம் செய்யும் மாணவர் கூட்டத்துக்கு முன் போய்ப் படிப்பு நிறுத்தம் செய்யாதீர்கள் என்று செப்பி அவர்தம் வசை மொழியும் கேட்டுக் கொள்பவன். எது எக்காலத்துச் சொன்னாலும் செய்ய மறுப்பதில்லை. சுமை என நினைப்பதில்லை. பங்கிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. வாய்ப்பு, பயிற்சி என நினைத்து வாரிப் போட்டுக்கொள்வது. குணம் என்ன? காக்காய் பிடிக்கவும் தெரியாது; கத்தரிக்காய் நறுக்கவும் தெரியாது. நல்லன வெல்லாம் கடமை. இக் காலத்துக்கு என்ன, எந்தக் காலத்துக்குமே இது சரியில்லை. ஓரளவேனும் ஆளும் கோளும் வேண்டும். நானிருக்க விளம்பரஞ் செய்ததே சரியில்லை. அது செய்ய விட்டிருக்கக் கூடாது. மற்ற துறை மேலவர்கள் போனபோது விளம்பரித்தார்களா? அடுத்த நிலையில் இருந்தவர்களுக்கு அரவமில்லாமல் பேராசிரியப் பதவியைத் தூக்கி வழங்கினர். சிலருக்கு இரண்டு மூன்றாண்டு உயர்வூதியம் கூட அளித்தனர். என் அளவு பயில்வுகூட அவர்கட்கு இல்லை. கேட்கப் போனால் விளம்பரஞ் செய்வது முறை என்பார்கள். அதற்கு மேல் கேள்வி கேட்டால், உள்ளதும் பாதிக்குமோ என்று அஞ்சிச் சும்மா இருந்துவிட்டேன். (மட்டையைக் கையில் வைத்து உருட்டிக்கொண்டு) சும்மா இருந்துவிட்டேன். சும்மா இருக்க விடுகின்றதா உலகம்? மனம் சும்மா இருக்குமா? பேராசிரியராக இருந்தவர் விட்டுப்போன நாள் முதல் என் உலகம் வேறாகியது. என்னைப் பார்ப்பவர் தம் உலகமும் வேறாகியது. பேராசிரியர் நெடுமுடி என்று கடிதங்கள் வரத் தொடங்கின. மாணவர் பலரும் என் வகுப்பைப் பேராசிரியர் வகுப்பு என்று குறிப்பிடுவர். முதல்வர் கூட வேதியற் பேராசிரியரை அழைத்துவா என்பர். கல்லூரிக் குழுவில் கலந்துகொள்ள என்னையும் பணிப்பர். நான் மாத்திரம் பேராசிரியப் பொறுப்பில் என்று குறித்துக் கையெழுத்திடத் தவறுவதில்லை. யார் பாராட்டினாலும் முகமலர்ந்ததில்லை. விளம்பரித்ததிலிருந்தும் விளம்பரத்திற் கேட்ட தகுதியிலி ருந்தும் என்னை விலக்கவே ஒழிக்கவே இச்சூழ்ச்சி என்று பட்டது. (மட்டையை நிலத்தில் குத்தி) உலகறிவு போதாது. நேர் பார்வைக்குப் போயிருக்க வேண்டாம். அவர்கள் கூப்பிட்டி ருக்கக் கூடாது. ‘கூப்பிட்டபோது போகத்தான் வேண்டும். பணிவு முறை அது. இல்லையென்றால் இவனுக்கு இது தேவையில்லை, செருக்கன் என்று அதை ஒரு சாக்காக வைத்துத் தள்ளிவிடுவார்கள். இன்னொரு முறை விண்ணப்பித்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். வெளி விண்ணப்பங்கூட ஒப்புதல் செய்யார்கள். போகவில்லை என்றால் வரவியல வில்லை என்று தந்தி போக்க வேண்டும்’ என்றாள் மனைவி அமுதி. அதற்காகப் போக வேண்டியதாயிற்று. மேலும் என் மனைவி பேராசிரியையாக உயர்நிலையிலும் ஊதியவுயர்விலும் இருக்கும்போது கணவன் குறைந்த விரிவுரையாளனாக எவ்வளவு நாள் இருப்பது? மன்பதை என ஒன்று இருக்கிறதே. மகள் திருமண அழைப்பில் பதவி சுட்டாமல் அடிப்பதா? இப்படி நாணமும் என் உள்ளத்தைத் தின்றது. எப்படியாவது பேராசிரியனாக ஆவதுதான் ஆண்மைக்கு நல்லது; இல்லா விட்டால் காதலின்பம்கூடத் தரங் குறையும். இவ்வாறெல்லாம் எண்ணம் ஓடிற்று. எண்ணியது மட்டும் என்ன? சில திங்களாகத் துறவறப்பான்மை புகுந்துவிட்டது. இன்பமும் துன்பமும் எல்லாம் நினைவெழுச்சியைப் பொறுத்தது. ஓரிழை போனாலும் பிரிவு. ஊசி முனை நுழைந்தாலும் ஓட்டை. 2 (கைந்நொடித்துக் கொண்டு) இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள நேர்முத்துக்குச் சென்றது சரியில்லை. ‘வெளிநாடு சென்றிருக்கிறீர்களா? ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்களா! எழுதி வைத்திருக்கிறீர்களா? வெளி நாட்டிதழ்கள் வெளியிடத் தகுதி இல்லை என்று தள்ளி விட்டனவா? ஏன் இளம் வயதிலேயே ஆராய்ச்சிக்குப் படித்து எழுதவில்லை. உங்கள் இருபதாண்டுப் பயில்வில் வேதியியலில் புதியன கண்டதில்லையே’. இப்படியெல்லாம் இல்லாக் கேள்விகளை என்னிடம் கேட்கத் துணிந்தார்கள். என்னிடம் இல்லாதவற்றையே வினாவும்படி யாரோ எழுதிக் கொடுத் திருக்கின்றனர். மற்றவர்களிடம் இது மாதிரி இவ்வளவு தொடுத்திருக்க மாட்டார்கள். இல்லை இல்லை என்று அத்தனைக்கும் மறுமொழியும்போது வெட்கமாகத்தான் இருந்தது. கூண்டில் ஏறியவனை இறங்கும் வரை வழக்காடி என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். அவனும் ஒவ்வொன்றுக்கும் தெரியாது என்று சொல்லலாம். நல்ல வேளையாக, கூட இருந்த முதல்வர் இதே கல்லூரியிற் படித்து இதே கல்லூரியில் வேலை பார்த்து இப்போது பேராசிரியப் பொறுப்பையும் வகிக்கிறீர்கள் என்று சொல்லிக் காட்டிய போது, புகைப் படலத்திலிருந்து குழந்தையை மீட்டாற்போல, சிறிது தலைநிமிர்ந்து, ஆம் எந்தவிதமான புகாரும் இல்லாமல் பொறுப்பாகப் பார்த்து வருகிறேன் என்று சொன்னேன். இந்தியப் பல்கலைக் கழகங்கள் கோடைச் சிறப்புப் பயிற்சிக்குச் சென்றீர்களா என்று இன்னொரு பெரியவர் கேட்டபோது மூன்று பயிற்சிகளில் கலந்திருக்கிறேன் என்று சான்றுச் சுருள்களை மலர்த்தினேன். இப்போதுகூட வாய்ப்புக் கிடைத்தால், கல்லூரி இசைவருளினால் இரண்டாண்டு அயல்நாடு சென்று வர விருப்பம் என்று தொடர்ந்து சொல்லி முடித்தேன். 45 வயதான உங்கட்கு இனி எந்த வாய்ப்புக் கிடைக்கும் என்று ஒருவர் சொன்னபோது அலர்ந்த முகம் தீப்பெட்டி ஆயிற்று. (சிறிது நேரம் பூங்காவைச் சுற்றித் தென்னிசு மட்டை யொடு நடந்து வருகிறார். அங்கிருந்த சில மாணவர்கள் ஆசிரியர்களை அவன் இவன் என்று இழித்துக் கூறும் நகைப்பொலி கேட்டது. இடையிடையே நெடுமுடி என்ற சொல்லும் கேட்டது. இவர் நெருங்கியதும் கைக்குட்டையைத் தலையில் கட்டிக் கொண்டு செடி மறைவில் குனிந்து கொண்டனர்.) (மனங்குன்றி) ஆசிரிய மாணவ உலகில் மதிப்பொன்றே உயிர்க்கயிறு. நான் இங்கு இருப்பதும் வருவதும் தெரிந்து என் காதிற்பட இப்போதே இவ்வாறு சொல்லாடத் துணிந்தி ருக்கிறார்கள். பேராசிரியன் ஆகாவிட்டால் இவர்கள்முன் உள்ள மதிப்பும் போய்விடும். மலைச்சரிவு கொல்லாது, மதிப்புச் சரிவு கொன்றுவிடும். (மட்டையால் நெஞ்சுப் பந்தைத்தட்டிக் கொடுத்து) அன்னை அப்பனைச் சிறுவயதில் இழந்த நெஞ்சமே! முன்னோர் சொத்துக்களை அறத்துக்கு எழுதி வைத்த நெஞ்சமே! திருமணத்தில் சீர்தனம் வாங்க மறுத்தச் சீர் திருத்தஞ் செய்த நெஞ்சமே! சாதி பாராது காதல் மணம் செய்த நெஞ்சமே! உற்றார் தள்ளி வைத்தும் உரமடைந்த உள்ளமே! பிறந்த இரு ஆண் குழந்தைகளும் இறந்தும் துன்பம் தாக்காத துணி நெஞ்சமே! நீ ஒரு பொய்ப் பதவிக்குக் கலங்குகிறாய். பதவிக்காகவா வாழ்கிறோம்? வாழ்வின் ஓர் இடைப்படியே பதவி. (கேலிச் சிரிப்பாக) கணவ பதவி மனைவி பதவிகள் தான் நிலையான பதவிகள். இறுதிவரை ஒரே பதவியில் இருப்பது உறுதியைக் காட்டும். பேரிக்காய் என்பது பெரிய காயில்லை, பேரளவு என்பது பெரிய அளவில்லை. பேராசிரியன் என்பது மிகப் பெரிய ஆசிரியன் இல்லையே. இவை எல்லாம் சும்மா சொல்லும் அடைகள். இதற்காக நெஞ்சே இவ்வளவு கவலைப் படாதே. (பூங்காவிற்கு மற்றொரு பக்கத்தில் அமர்ந்து) என்ன ஆறுதல் சொன்னாலும் புகுந்த கவலை புகுந்ததுதான். காச நோயை இளைப்பு நோயை மூச்சிலிருந்து நீக்க முடியாது. கவலையில் பலவகை. மனிதப் பிறப்புக்கு ஓர் அடையாளம் கவலைப்படுவதற்குப் படுதல், நாணப்படுதற்குப் படுதல். எனக்குப் பேராசிரியர் கிடைக்காதது ஒரு கவலையே. அதைவிடப் பெருங்கவலை யாருக்குக் கிடைக்கும் என்பதைக் கேள்விப்படும்போது. மதிப்பு குறைவுபட்டாற் பொறுத்துக் கொள்ளலாம்; மிதிபட்டால் முன்பின் தெரியாதவன் இப்பதவிக்கு வந்தால் பரவாயில்லை. தெரிந்தவர்களுக்கு முன்பு தானே நாணமும் வெட்கமும் பொறாமையும் எல்லாம். இக்கல்லூரியில் பயின்றவன், என்னிடத்துப் படித்தவன், நான் வரும்போது எழுந்து நின்று முன்னிருந்து படித்தவன். ஏதோ ஆராய்ச்சிப் பட்டம் வாங்கிவிட்டான் என்பதற்காக நெய்வேலியை எனக்குமேல் பேராசிரியராக அமர்த்துகிறார் களாம். அந்த நேர்முகப் பார்வைக்கு வந்திருந்தபோது என்னைக் கண்டதும் எழுந்திருந்தான். தனிப் பணிவுடைமை மாணவர் களை விட்டு நீங்கவில்லை. ‘தாங்கள் இருக்கும்போது விளம் பரஞ் செய்திருக்கக் கூடாது. என் பட்டம் தாங்கள் வகுப்பிற் சொல்லிய தேன் துளிகளின் இறால். நான் சும்மா விண்ணப்பித் தேன். கூப்பிட்டிருக்கிறார்கள்’ என்று பணிவாகச் சொன்னான். நெய்வேலி நல்ல வல்ல என் செல்ல மாணவன். அவன் பேரில் சொந்தப் பொறாமைக்கு என்ன? மன்னுலகம் ஒன்று பக்கத்தே இருக்கிறதே. (நெஞ்சைத் தொட்டு) மகன் போன்ற மாணவன் வருவதில் யாருக்குத்தான் மகிழ்ச்சியிராது. எவனோ ஒருவன் எங்கிருந்தோ வருவதைவிட என் அறிவு பெற்ற என் மாணவ நம்பி பேராசிரியனாவதில் பன்மடங்கு மகிழ்ச்சி ஆனாலும் மகன் வரும்போது தந்தை எழுந்திருப்பது இந்தக் காலம் வரை இல்லை. இப்பதவியுலகின் நிலை வேறு. தனித்த நிலையில் இருந்துவிடலாம் குற்றமில்லை. கூட்டத்தில் எழுந்திருந்தாக வேண்டுமே. நெய்வேலி பேராசிரியனானால், அவன் - இல்லை - அவர் வரும்போது மாணவர் பிற ஆசிரியர்கள் போல நானும் முன் வரிசையில் எழுந்து நின்று அவர் உட்கார்ந்த பின் உட்கார வேண்டும். என்னிடம் கற்றுக் கொண்ட அவனை - அவரை - என் பேராசிரியர் என்று அடிக்கடி சொல்ல வேண்டும். சொன்னால் போச்சு என்று சொன்னால் நெஞ்சு கேட்கவில்லை. எவ்வளவு சொன்னாலும் நெஞ்சு பொறுக்குதில்லை. மதிப்பு என்பது வரிசை மதிப்பு. இடநிலையில் மதிப்பு. மானம் போய் உயிர் வைத்துக்கொள்ளும் முறையில் இலக்கணம் கூறாதே என்று நெஞ்சு பின்னிப் பின்னிப் புலம்புகிறது. பதவியைவிட்டு வீட்டுக்குச் செல்லலாம். மனைவி படியளப்ப தாக வந்து சேரும். கல்லூரியில் மாணவப் பேராசிரியன். வீட்டில் மனைவிப் பேராசிரியை. இடைநிலையில் பெரிய விரிவுரையாளன். என்ன வாழ்வு இனி? வாழத் தெரியாத வாழ்வு. அப்படியே சாகத் தெரியாத சாவாக விடக்கூடாது. (மட்டையைக் கையில் ஏந்தி) தென்னிசு விளையாடி பந்து போல் உயிரை விளையாடுவான். உன்னைப் பிறர் தொடவிட மாட்டேன். இனி உன்னை நானும் தொட மாட்டேன். நம் இருவர் விளையாட்டுக்கு ஒரு முடிவு காலம் வந்தொழிந்தது. அது உறுதி. ஆனால் இறுதியிலும் நெடுமுடி பண்புடையவன் என்று புகழ வேண்டும் என்பதற்காக இன்று - இன்னும் இரண்டொரு நாள் வாழ்ந்து போகிறேன். 3 (மூன்று நாள் கழித்து, காலை ஆற்றங்கரை வழியாகச் செல்கிறார் நெடுமுடி, அரைக்காற் சட்டை, பனியன், மட்டை யோடு, அவர் வளர்த்த ஞமலியும் உடன் செல்கிறது.) இரவு உணவு ஏறவில்லை. உண்ட வயிறு வேலை செய்யவில்லை. என் அருமை ஒரு மகள் ஒள்ளிழை இட்டிலி சூடாக வைத்தாள். ஒன்று போதும் என்று நெடுநேரம் சாப்பிட்டேன். அப்பாவுக்குக் காய்ச்சலா என்று தொட்டுப் பார்த்தாள். அதற்குமேல் மகள் பேசவோ கேட்கவோ துணிய வில்லை. மாலையில் கல்லூரி விருந்துகளில் கலந்திருப்பேன் என்று எண்ணிக் கொண்டாளோ? மனைவி தேர்வுத் தாள் களைத் திருத்திக் கொண்டிருந்தமையால், மற்றதைக் கவனிக்க வில்லை. உண்டபின் தெருவிடையே சென்று உலவி வந்தேன். பத்து மணிக்கு வழக்கம்போல் படுத்தேன். எப்படியாவது தூங்கிவிட முயன்றேன். முயற்சியினால் தூக்கத்தை வரவழைக்க முடியுமா? கண்ணை எவ்வளவு நேரம் மூடிக் கொண்டிருப்பது. எழுந்திருந்து மறுநாள் பாடத்துக்கு ஆயத்தஞ் செய்வதுபோல நூல்கள் முன் உட்கார்ந்தேன். உள்ளங் கலைந்தால் உடலுக்கு எவ்வளவு அலைவு. என் மனநிலையை அறிந்து என் போக்கைக் கவனிக்கும் நிலையில், திருத்துவதுபோல அவள் பாசாங்கு செய்கிறாளோ என்று எண்ணினேன். எப்போது உறங்குவாள், இன்னும் எவ்வளவு திருத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளக் கிட்டச் சென்றேன். தூக்கம் வல்லையா என்று கேட்டாள். நீ தூங்க விட்டால்தானே என்று சொல்லியதைப் புரிந்து சிரித்தாள். இருவருமே தூங்கலாம் இருங்கள். நான் திருத்திக் கொண்டி ருப்பது நல்ல தலைப்பு. ‘உயிரினும் மானம் பெரிது’ என்ற தலைப்பில் பல கல்லூரி மாணவ மாணவிகள் பரிசுக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இக்காலப் பிள்ளைகளுக்குச் சிந்தனை அதிகம். வாழ வேண்டும் என்ற நோக்கில் சிந்தனையைச் செலுத்துகிறார்கள். எழுத்துப் பிழைகள், ஒற்றுப் பிழைகள், நடைமுடிவுப் பிழைவுகள், ஆரவாரமான வளர்ச்சித் தொடர் கள், தலைகால் தெரியாத கையெழுத்து, வேகமான கிறுக்கல்கள், மறுமுறை பாராமை முதலிய கட்டுரைப் பிழைகள் இல்லாத பிள்ளைகள் (சிரித்துக்கொண்டு) கட்டுரை எழுத வரவில்லை. எவ்வளவு பிழைச் செல்வம் இருந்தாலும் கருத்து காலத்திற் கேற்ற சாலம். கொடுத்த தலைப்பு ‘உயிரினும் மானம் பெரிது’ கட்டுரையில் பலருடைய முடிவு மானத்தினும் உயிரே பெரிது. வள்ளுவரையே ஒரு தள்ளு தள்ளிவிட்டார்கள். அவர்கள் காட்டியிருக்கிற காரணங்களை வள்ளுவர் இருந்து பார்த்தால், தம்மின் தம் மக்கள் அறிவுடைமையை மெச்சுவார். என்னென்ன காரணங்கள் வரைந்திருக்கிறார்கள். எது மானம்? வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆளு, நிலைக்கு நிலை, காலத்துக்குக் காலம் மானம் வேறு. பொறுக்க மாட்டாமல், வழி காணமாட்டாமல் வீம்பை மானமாகக் கருதுகிறார்கள். தம்மைத் தகுதிப் படுத்திக் கொண்டு வெல்லும் முயற்சியின்றி, எளிய வழி என்று உயிரை விடுகின்றார்கள். விட்டுக் கொடுத்துப் பண்பாகப் பழக நினையாமல், சிறிதைப் பெரிதாகவும் பெரிதைச் சிறிதாகவும் பிறழ்ந்து சினந்து அறிவைக் கைவிடுகிறார்கள். இவர்கள் நினைக்கிற மானத்துக்கெல்லாம் உயிரை விடுவதென்றால், குடும்பத் திட்டம் வேண்டியதில்லை. இது மானம், இது நாணம் என்றால், ஆண்களிடம் மருத்துவமும் பிள்ளைப் பேறும் பார்க்கிற பெண்கள் எல்லாம் உயிர் விட வேண்டுமே. ஊடலுக்குப் பணியும் ஆடவர்கள் எல்லாம் உயிர் வைத்திருக்கலாமா? தேர்தலில் நின்று கட்டுத் தொகை இழக்கும் வேட்பாளர்கள் உயிர் விட்டாக வேண்டுமே. அவர்கட்கு வேலை செய்தவர்களும் வாக்கு வழங்கியவர்களும் உயிர் விடவேண்டும். காவற்காரர்கள் வழி காக்க, கட்சிக்காரர்கள் தாளளவு மாலையிட, செய்தியினர் சில்லறைச் செயலெல்லாம் படம் பிடிக்க, கழுத்துமாலைக் குவியல்களைத் தனியுந்து மாட்டிச் செல்ல, பஞ்சாய நகரக் கழகங்கள் பாராட்டுப் படித்து வழங்க எந்தக் கூட்டங்களுக்கும் தலைமை தாங்கி எப்பொருளும் பேசத் தகுதி பெற்றிருந்த மந்திரிமார்கள் அடுத்த தேர்தலில் மந்திரிப் பதவி பெறாமல், வாக்குரிமை பெறாமல் இவ்வுலகில் வாழ்கின்றார்கள். சுற்றுக்குலம் சில நாள் ஒரு மாதிரியாகப் பார்க்கும். அப்புறம் எல்லாம் சரியாகப் போகும். காலம் மானத்தை ஒழுங்குபடுத்தி விடும். மட்டுப்படுத்தி விடும். மானம் என்பது சூடு. ஆறவிட்டால் குளிர்ந்துவிடும். மானங்கள் பலவகை. உயிரில் வகையில்லை. ஒன்றே உயிர். எது சிறப்பு? இன்னும் பலர் என்னென்னமோ அறிவு மாரி பொழிந்தி ருக்கிறார்கள். மானத்துக்காக உயிர் விடவேண்டும் என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார். பொய்ம்மானம் கருதிச் சோம்பியிருந்தால் குடிகெடும் என்றும் சொல்லி வைத்திருக் கிறார். நன்றாகவும் மானமாகவும் உயிரோடு வாழ்வதற்கு அப்பெரியவர் எவ்வளவு எவ்வளவோ அறைந்ததுபோல் சொல்லியிருக்க, அவற்றைப் பின்பற்றி வாழப் பார்ப்பார்களா, ‘இப்படித் திருடிப் பொய் பித்தலாட்டம் பண்ணுவதற்கு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம்’ என்று பிள்ளையைக் கண்டித்தால், பிள்ளை நாக்கைப் பிடுங்கிக் கொள்கின்ற தனமாக அல்லவா உயிர்விட முந்துகிறார்கள் என்றெல்லாம் வாழைப்பழ வத்திபோல எழுதியிருக்கிறார்கள் கட்டுரை மாணவர்கள். இன்னும் சில பேர் குறிப்பிட்டிருக்கிறார்கள். திருமணமாகிப் படிக்கிறவர்கள்போலத் தெரிகிறது. கையெ ழுத்தைப் பார்த்தால் பெண்களாகப்படுகிறது. சில ஆடவர்கள் கடமை உணர்ச்சி இல்லாமல், குடும்பப் பற்றில்லாமல் வீம்பாகி, வீம்புக்கு ஆளாகி, தன்மானம் என்று கருதிக் குடியையும் குழந்தைகளையும் அவமானத்துக்கு உள்ளாக்குகின்றார்கள். இப்படி அவமானப்படும் நிகழ்ச்சிகளைக் காணும் அறிவுடைய ஆடவர்கள் உயிரை விடவே மாட்டார்கள் எனவும் பெரியவர் களுக்குக்கூட இந்தச் சிறு பிள்ளைகள் வழிகாட்டியிருக் கிறார்கள். இந்தக் கருத்தை எழுதியுள்ள கட்டுரைக்குத்தான் முதல் பரிசு என்று என் மனைவி மளமளவென்று வகுப்பில் தமிழ்ப் பாடம் நடத்திய பழக்கத்தில் இரவு எனக்குப் பாடஞ் சொல்லத் தொடங்கினாள். (கற்கண்டுப் பாலைத் தந்து) இக்கட்டுரைக்கு முதற் பரிசு சரிதானே என்று வேறு என்னிடம் கேட்டாள் பேராசிரியை. (அப்பாலை அவளுக்கும் பாதி கொடுத்து நானும் குடித்துக்கொண்டு) சிறு பிள்ளைகள் பரிசுக்கு எழுதிய கட்டுரைகள் தானே. ஒரு மணி நேரத்தில் வந்த கருத்தையெல்லாம் வாரி வரைந்திருக்கிறார்கள். திரைப்படமும் திரைப்பாட்டும் நடிக நடிகைப் பார்வையும் இன்பம் என நினைக்கும் கல்லூரிப் பிள்ளைகளுக்கு உயிர் பெரிதாகத்தான் தோன்றும். தேர்வு பெரிதா, திரை பெரிதா? நலம் பெரிதா, புகை பெரிதா? மூலநூல் பெரிதா, உரைக்குறிப்புப் பெரிதா? ஆசிரியர் பெரியவரா, அரசியல்வாதி பெரியவாரா? என்று கேட்டால் இவர்களின் அறிவுப் போக்கு வெளிச்சிடும். யாரிடம் எது கேட்டுத் தெளிவது? தலைப்புக்கு மாறாக எழுதிய யாருக்கும் பரிசில்லை. இவ்வாறு சினவுணர்ச்சியை அடக்கிக் கொண்டு சிரிப்பாகச் சொல்லி முடித்தேன். பாலைத் தான் குடிக்காமல் விளையாடி வருகின்ற உங்கள் உடம்புக்கு உரம்வேண்டும் என்று அவள் பாலை எனக்கு அளித்துக் கட்டுரை பற்றி நமக்குக் கருத்துவேறுபாடு இருந்தாலும், எனக்கு உங்கள் உயிர் தான் பெரிது என்று புன்முறுவலித்தாள். இரவு மணி பதினொன்று. மாறாக அவள் மனத்துப்பட்டு விடக்கூடாது என்று, அந்தக் கட்டுரைக்கே பரிசு கொடு என்று சொல்லி முடித்தேன். 4 (ஆற்றங்கரை வழியாக நெடுந்தொலை சென்றபின், நாய் வாலைத் தடவிக்கொடுத்து) இரவு பதினொரு மணிக்குப் படுக்கச் சென்றும் தூக்கம் வரவில்லை. நினைவிருந்தால் உறக்கம் வாராது. ‘எனக்கு உங்கள் உயிர் பெரிது’. இது தாலி தொழும் மனைவி சொல். இந்நினைவு என்னைத் தூங்கவிடவில்லை. ஆனால் அவள் நன்றாகத் தூங்கினாள். தூங்கினாளா, தூங்கிய மாதிரி கிடந்தாளா? (இன்று கல்லூரி உண்டு என்று எண்ணாமல் காலை எட்டு மணி வரை ஒரே திசையில் நடந்து சென்ற நெடுமுடி) இன்று ஒன்பதரை மணிக்கே கல்லூரியில் இருக்க வேண்டுமே. முன்னாள் மாணவரிடம் அவர் தம் முன்னாள் முதுநிலை ஆசிரியர் இன்று பத்துமணிக்குத் துறைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். (பையிலிருந்து ஒரு கடிதத்தைத் திரும்பப் படித்துப் பார்த்து.) ஆம். இன்றுதான், பத்துமணிக்குத்தான். ஒப்படைத்தான். இந்த அறிவுப்பு நேற்று மாலை கல்லூரியை விட்டு இறங்கும் போது பணியாளன் நீட்டினான். (சினம் பொங்க) வாங்க மறுத்திருக்கலாம், இல்லை வாங்கி இப்போது முதல் வேலையிலிருந்து விலகிக் கொண்டேன் என்று விலகல் முடங்கலை உடன் குத்தி அப்பணியாளனிடம் திருப்பி விட்டிருக்கலாம். இல்லை, வாங்கிக் கொண்டு ஒப்படைக்க மாட்டேன், உரிமையைப் பிறருக்கு விடேன், தடைவழக்குத் தொடர்வேன் என்று அதிர்ப்பு செய்திருக்கலாம். இன்றேல் கல்லூரித் தலைவரின் தகவலைப் பெற்ற என் கணவர் வீடு வந்ததும் மானத்தால் வான்வீடு அடைந்தார் என்று தகவல் சொல்லுமாறு மடிந்திருக்கலாம். இல்லை, இல்லை பணியாளன் கடிதத்தைப் பார்த்ததும் படியிலேயே ஆவி பிரிந்திருக்க வேண்டும். இடைமானம் கடைமானங்கூட இல்லாமல் மாலையும் இரவும் இன்று காலையும் உயிர் வைத்திருந்து மீண்டும் கல்லூரிப்படி ஏற எண்ணுகிறேன். ஆற்றங்கரையிலும் பூங்காவிலும் நாய் முன்னும் மட்டை முன்னும் போம்போதும் வரும்போதும் நடைமானம் துள்ளுகிறேன். சீசீ என்ன பேடியுணர்ச்சி. (சீசீ என்ற ஓசை கேட்டு நாய் சிறிது விலகிற்று. பந்து மட்டையும் விழுந்தது.) வாலியே! எப்போதும் மாலை உலாவிற்கு வரும் நீ இன்று காலையே வந்துவிட்டாய். இனி மாலை இல்லை என்பதை மோப்பம் பிடித்தாய் போலும். (தட்டிக் கொடுக்கிறார்) இனி விளையாடுதற்கில்லை. எல்லாம் விளையாட்டு. (விழுந்த மட்டையை எடுத்து மண் துடைத்துச் சிரிக்கிறார்.) 5 இறுதிவரை மானத்தோடு வாழ்வதுபோலக் கடமை யோடும் வாழ வேண்டும். தன்மானம் பிறர் அவமானமாகக் கூடாது. எவ்வளவு மனவேக்காடு இருந்தாலும் கட்டளையை நிறைவேற்றினார், இதுதான் மன்பதை நலம் என்று பாராட்ட வேண்டும். மானவொழுங்கு உடைய இவர்க்கு இது செய்யா திருந்தோமே என்று அவர் தம் நெஞ்சு சுட வேண்டும். இறப்பது உறுதி. இறப்பிற் சிறப்பதும் உறுதி. (ஒருவகையால் தெளிந்த முகத்தோடு ஆற்றில் குளித்து மனைவியை வாழ்த்தி, மகளை மணமகளாகப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று கவன்று, நீர்க்கண்ணைக் கைக்குட்டையில் துடைத்துக் கொண்டு.) பத்து மணிக்குச் செல்வேன். எல்லார்க்கும் முன் நின்று நெய்வேலி வந்தவுடன் கைகுலுக்குவேன். பிற ஆசிரியர்களையும் பணியாளர்களையும் அறிமுகப்படுத்துவேன். நெஞ்சே! பொறாமை என்ற குறிப்பு எவ்வகையிலும் படக்கூடாது. காப்பி என் செலவில் கொடுப்பேன். பாடத் திட்டங்களைக் காட்டுவேன். சில மாணவர்கள் தேர்வெழுதாக் குற்றக் காசுக் கணக்கை ஒப்பிப்பேன். துறைத் தேவைகளைச் சுட்டி முன்னரே செய்த பணிப்புக்களைக் காட்டி வைப்பேன். பேராசிரியர் அறையில் இருக்கும் அவரிடம், விடை பெறுகிறேன் என்று சொல்லிக் கிளம்புவேன். இவ்வளவும் வரவழைத்துக் கொண்டு சித்திர மலர்ச்சியொடு செய்வேன். முதல் மணி வகுப்புக்குப் போவேன். போவேனா? போக லாமா? போகாதிருந்தால் என்ன? போகாதிருக்கலாமா? இருக்கலாமே. இருந்தால் போச்சு. கடமையுணர்ச்சி. போகத் தான் வேண்டும். தாழ்விலும் ஒரு வாழ்வு மாணவ முகங்களைப் பார்ப்பது. இங்கு உங்களைப் போல என் முன் இருந்து நன்றாகப் படித்தவர் எனக்கே பேராசிரியராக வந்திருக்கிறார். நீங்களும் அவ்வாறு வரவேண்டும் என்று வாழ்த்துவேன். நெஞ்சே! என்ன பிசகு எண்ணம். அப்படிப் பேசினால் குத்தல் தானே! எச்சில் துப்பி இலையில் படைக்கலாமா? வகுப்புக்குப் போனால் அவ்வாறு பேசத் தோன்றும். புதிதாக வந்தவரைப் பற்றி முதல் வகுப்பில் சொல்லுவோம் என்று மாணவர்கள் எதிர் பார்ப்பார்கள். ஒன்றும் சொல்லாவிட்டால், பேராசிரியர் உங்களிடம் படித்தவராமே என்று இரண்டொரு மாணவர்கள் கிளறிவிடுவார்கள். (வீடு நோக்கித் திரும்புகையில்) பொறுப்பை மனமார முறையாக ஒப்படைத்தபின், நேரத்தை வீண் போக்கலாகாது. வகுப்புக்குப் போனால், ஏதாவது உளறி விடுவேன். அப்புறம் தாங்காது. உணர்ச்சி பிச்சுக்கொண்டு எங்காவது போகும். நேரே சோதனையறைக்குப் போவேன். ஆம் அதுதான் நெறி. அப்பொடியை மடிப்போடு வாயிற் போட்டால், இறைவன் ஆட்கொள்வான். திருவடிப் பதவி பெறுவேன். இது தான் சமய நெறி. அப்போது சில வார்த்தைகள் சொல்லலாமா? ஆசையும் அன்பும் மானமும் தெரியும்படி பலர் காதிற்படும்படி, குடித்த பின் சில இறுதிச் சொற்கள் புலம்பலாமா? இல்லை, ஏதும் எழுதி வைக்கலாமா? நெஞ்சே, மீண்டும் பிசகு செய்யாதே. தூய்மையாகச் சாகவேண்டும். எந்த நினைவும் எந்த எழுத்தும் இந்த உயிருக்கு வேண்டியதில்லை. இந்த அறிவுப்புக் கடிதம் மட்டும் என் பையில் இருந்தாற்போதும். இல்லை, நெஞ்சே, ஆசிரிய நெஞ்சே! ஒன்று வேண்டுமானால் நினை. ‘மாணவ உலகம் பிறர் கண்டித்தலை ஏற்றுக்கொண்டு வளர்க. படிப்பு நிறுத்தம் எக்காரணத்தாலும் செய்யற்க. ஆசிரியர்களை உள்ளும் புறமும் போற்றுக. கடுமையாக உழைக்க, மாணவர்கள் வன்செயல் மறக்க, மாணவப் பருவத்தைத் தெய்வப்பருவமாகத் தூய்மைப்படுத்திக் கொள்க. ஒழுக்கத்தும் பழக்கத்தும் கட்டுப்பாடு போற்றுக’ நெஞ்சே! நினைக்க நேரமிருந்தால் இவற்றை நினைக. மனைவி மகள் நினைவுகூட வேண்டுவ தில்லை. 6 (ஆற்றிற் குளித்து வீடு சென்றார் நெடுமுடி. தான் செல்லும் முன்பே மனைவி தன் கல்லூரி சென்றுவிட்டாள். மகள் ஒள்ளிழை தகப்பனாருக்குப் பலகாரம் கொடுக்க, மிக்க மகிழ்வோடு அதுவை, இன்னும் வை என்று சுறுசுறுப்பாக, இப்பிறவிப் பசி நீக்குவார்போல் அள்ளிச் சாப்பிட்டார். முக மலரிலிருந்து நீர் கொட்டியது. என்னப்பா கண்ணில் என்று துடிப்போடு கேட்ட மகளுக்குத் தாய்போல் பலகாரம் ஊட்டும் அன்புக்கு நன்றிக் கண்ணீர் என்று முகங் குனிந்து மொழிந்தார். இன்று பேராசிரியராக வருபவரிடம் துறைப் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும் அதற்காக விரைவாகப் போகின்றேன். நெடுநேரம் ஆகலாம் என்று தான் (சிரித்துக்கொண்டு) நிரம்பச் சாப்பிட்டு வைக்கிறேன், எப்போது வருவேன் என்று சொல்ல முடியாது. இன்று பகலுணவு அனுப்ப வேண்டாம். மகளுக்கு மாறுபாடு தோன்றலாகாது என்பதற்காக, புறப்படுமுன் ‘கொஞ்சம் குளிர்நீர் தா அம்மா’ என்று சொல்லி முழுவதும் குடித்தார்.) (துறைக் கட்டிடத்தின் முன் நின்று கையில் பூவும் எலுமிச்சையும் கொண்டு) பேராசிரியர் நெய்வேலி வரும் நேரம் இதுவே. மணி வள்ளிசாகப் பத்து. (பையில் இருக்கும் அறிவிப்பைப் பார்த்து) இன்று காலை பத்து மணி, சரிதான். நான் வருமுன்னே உள்ளே வந்து விட்டாரோ? இல்லை. நேரே முதல்வரிடம் சென்று வந்தாலும் வரலாம். வரக்கூடிய சமயத்தில் உள்ளே போய் இருக்கலாகாது. நின்று வரவேலாமல் வந்து வரவேற்றல் பண்பாகாது. (மறுபடியும் பைத்தாளைப் பார்த்து) சூலை 2 வெள்ளிக்கிழமை வருவார். மணி பன்னிரண்டு. இன்று வரவியலவில்லை என்று தொலை வரி வந்தாலும் வரலாம். (தனியாக ஓர் அறைக்குட் சென்று) அவர் ஆயத்தம் இல்லை. நான் ஆயத்தம். அவர் வரும் நாள் எந்நாள்? அது வரையும் மானம் பொறுப்பதா? எனக்கு இன்றுதான் மானநாள். இதைப் பிறருக்காக ஒத்திப் போடமுடியாது. இனி பைத்திய மாக மாறி வாழலாமேயன்றி அறிவோடு வாழ்வது என்ப தில்லை. அறிவிருக்கும்போதே உயிர் வழங்க வேண்டும். (பணியாளன் ஐயா என்று தந்தியை நீட்டுகிறான். அவன் உள்ளே வருமுன், நச்சுத்தூள் மடிப்பு கீழே விழுந்துவிடாமல் பையில் இருப்பதைப் பார்த்துக் கொள்கிறார். தந்தியை வாங்கிக்கொண்டு) என்ன முன்னறிவு! நினைத்தபடி தந்தி வந்துவிட்டது. நான் நினைப்பது சரி என்பதற்கு இது ஒரு சான்று. (தந்தியைப் படித்துப் பார்த்தவராய் அப்படியே நாற்காலியில் சாய்கின்றார். தன் பெயருக்கு வந்ததுதானா என்று சன்னல் பக்கம் போய் நின்று பார்க்கிறார். கை நடுங்குகின்றது) கடவுள் சோதிப்பான். சோதனைக்கு அன்போடு உட்பட்டால் அன்பன் நினைத்ததைச் சாதிப்பான். எதனையும் யாரையும் கடந்த ஒரு பேராற்றல் உண்டு. அது நல்லவர்க்கு நல்லாற்றல் கெட்டவர்களுக்கும் நல்லாற்றல் (சுவைத்துத் தொலைவரியைப் படித்தல்) “இங்கு பேராசிரியர் பதவி உமக்கு. உடனே வேலையை ஒப்புக்கொள்க. ஊதியம் கேட்டபடி, முதல்வர், வள்ளுவர் கல்லூரி” இப்படியும் ஒரு நல்லுலகம். நேர்முகத்துக்கு அழைக்க வில்லை. ஒருவாரமுன் விண்ணப்பித்தேன். கல்வித் தகுதி, விடுதிக் காவல் தகுதி, விளையாட்டுத் தகுதிகளைக் கண்ணாடி போலும் விண்ணப்பத்திற் பார்த்து, இவர் எங்காவது சேர்ந்து விடுவாரோ என்று தந்தியில் தெரிவித்திருக்கிறார்கள். உலகம் மதிப்பவனை உள்ளூர் மதிப்பதில்லை. நல்ல கலைச் சிற்பங் களை வடநாட்டார்க்கும் வெளி நாட்டார்க்கும் தமிழர்கள் விற்கிறார்கள். ஞாயிற்றைக் குடை மறைத்தாலும் குடைக்குமேல் ஞாயிறு விளங்கும். (குழாய் நீரில் முகம் கழுவி) எனக்கு அடுத்த நிலையாள ரிடம் துறைப் பொறுப்பை இன்றே ஒப்படைத்து, சட்டப்படி மூன்றுமாதக் கூலியத்தையும் இப்போதே கட்டிவிட்டு மானத்தோடு புறப்படுவேன். நாளை வந்து சேர்வேன் என்று அங்கு தொலை வரிப்பேன். (பையிலிருந்த நச்சுமடிப்பை அவிழ்த்துச் சன்னல் வழியாக நிலத்தில் பரக்கக் கொட்டி, ஒப்படைக்க என்ற அறிவிப்பை மேசைமேல் வைத்து, தன் தொலைப்பரியைப் பையில் வைத்துக் கொண்டு, வந்திருந்த காப்பியைக் குடிக்கையில் மீண்டும் பணியாளன் வந்து ஒரு கடிதம் கொடுத்தான்.) முதல்வரிடமிருந்து வந்ததா? பேராசிரியரிடம் பொறுப்பை ஒப்படைத்தாயிற்றா? என்று கேட்டிருப்பார். எது கேட்டாலும் கேட்கட்டுமே. மறுமொழி எழுதும்போது இத் தந்திக்கு ஒரு படி வைத்து விலகற் கடிதமும் உடன் வைப்பேன் (சிரித்துக்கொண்டு) திடுக்கிடுவார். எவ்வளவு கலக்கத்திலிருந்து எவ்வளவு தெளிந்திருக்கிறேன். வாழ்க்கை கணத்துக்குக் கணம் எவ்வளவு மாற்றம்? எதிரது யாரறிவார்? எதற்கும் உயிரை விடாது வைத்துக்கொள்வது அடிப்படை. (கடிதத்தைப் பொருட்படுத்தாமல் பிரித்து) இப்படியும் ஒரு கடிதம், அப்படியும் ஒரு தொலைவரி. அவனே மாணவன் பேராசிரியராக இருக்கத்தக்கவன். படிப்புத் தகுதி மாத்திரமன்று, பண்புத் தகுதியே தகுதி. ‘என் ஆசிரியர் இருக்கின்ற கல்லூரி துறைக்கு நீங்கள் என்னைப் பேராசிரிய னாகத் தேர்ந்தெடுத்தாலும் ஒப்புதல் எனக்கு அழகில்லை. ஆசிரியர் பயிற்சித் தகுதியும், ஆராய்ச்சிப் பட்டம்பெற வாய்ப் பில்லாவிட்டாலும், துறை நுண் தகுதியும் சால வாய்ந்தவர். என் ஆசிரியரையே பேராசிரியராகப் பணிப்பது கல்லூரியின் கடமை. நான் மேற்படிப்புக்கு விரைவில் அயல்நாடு செல்லு கிறேன்”. இதனால் என்னைப் பேராசிரியராய் இன்று முதல் அமர்த்தியிருப்பதாக முதல்வர் முடித்திருக்கின்றார். (அமைதியாகச் சிறிதுநேரம் இருந்து) எது பெரிது? உள்ளூர்க் கடிதத்தினும் வெளியூர்த் தொலைப்பரியே பெரிது. 5. கொலைக்காக (கழலன் கிராமத்திற் பிறந்து வளர்ந்தவன். இவன் முன்னோர்கள் படையிற் சேர்ந்திருந்தனர். இவன் தந்தை முன்னாட் படைஞர். கழலன் கல்லூரியிற் படித்து மெய்யியற் பட்டம் பெற்றுத் தட்டெழுத்துப் பயிற்சியும் பெற்று உயிர்க் காப்புக் கழகத்தில் எழுத்தர் பணிபுரிபவன். வயது 24.) (வலிபரம்பன் என்பவன் ஊர்க் காவலர் மகன். தேசியப் படைப் பயிற்சியினன். வணிகப் பட்டம் பெற்று அரசு வங்கியில் எழுத்தராகப் பணி செய்பவன். வயது 25.) (காப்புக் கழகமும் அரசு வங்கியும் ஒரே கட்டிடத்தில் மேலும் கீழும் உள்ளன. ஊதிய உயர்வுக்கான வேலை நிறுத்தத்தில் கழலனும் வரம்பனும் கொடி தூக்கி அட்டை தூக்கி ஆர்ப்பரித்தவர்கள். அதனால் இருவருக்கும் உணர்ச்சி ஒத்த நட்பு பெருகிற்று. ஒரே வீட்டில் அடுத்தடுத்த அறையில் குடிற் கூலிக்கு இருந்தனர். ஒரே உணவகத்தில் உணவு. ஒருசேரத் திரையகம் செல்வர். கன்னத்திண்டும் வேதமுடியும் வளர்ப்பர். மதுவிலக்கு ஒழிந்து குடிவழக்கு வந்தபின் உயர் குடிப்பழக்கமும் சேர்ந்து கொண்டது. ஒரு நல்ல குணம் பெண்களைப் பார்த்துக் கேலி செய்யார்கள். பின் தொடரார்கள். பெரியவர்களை இகழார்கள். நடப்பரசியல் பேசார்கள். கவிதையுள்ளம் படைத் தவர்கள். பொறுமைக் குணம் உண்டு. தம் பணியைக் காலவொ ழுங்காகச் செய்வர். அதனால் பணித் தலைவர்களுக்கு இவ்விருவரிடமும் அன்பும் மதிப்பும் உண்டு. கபில பரணர் என்பது போல் கழல வரம்பர் என்று எல்லாரும் இந்த இரட்டையரை அழைப்பது வழக்கம்.) பூமாலை என்பவள் பூக்கடை வணிகனின் மகள். வயது இருபது இருக்கும். கடைக்கு அன்று வந்து இறங்கிய கூடைப் பழம் போன்ற பொலிவினள். உரமிடாத எலுமிச்சம் பழம் போன்ற கன்னத்தள். சாத்துக்குடி முகமுடையாள். பலாச்சுளை போன்ற இன்சொல்லள். அரசு வங்கியில் தட்டெழுத்தியாகப் பணியாற்றுபவள். இவள்பால் கழலனுக்கும் வலிவரம்பனுக்கும் இயல்பான காதல் தனித்தனி ஏற்பட்டது. முடிவில் பூமாலை கழலனைக் காதலித்தாள். அந்த மணம் நடைபெறாதவாறு வலிவரம்பன் இடையூறு செய்ததாகக் கழலன் துணிந்தான். 1 கழலன் : (மனித நடமாட்டமில்லாத ஒரு பாழ் மண்டபத் தின் மேல் செடிகள் முளைத்த தாழ்வாரப் பகுதியில் ஒருகாலில் நின்று ஒரு காலைச் சுவர்மேல் உதைத்துக் கொண்டு,) மூன்று மாதங்களுக்கு முன் அவனை அப்படித் தீர்த்துக் கட்டியது சரி. மூன்று நாளைக்கு முன் அவளை இப்படித் தீர்த்துக் கட்டியதும் சரி. இன்று நல்லநாளில் இவ்வரலாற்று மண்டபத்துக்கு வந்ததும் சரி. இனி நடக்க இருப்பதும் சரி. (பித்துப்போல்) எல்லாம் சரி சரி. மனமே சிரி. துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும் என்றார் அந்தக் காலப் பெரியவர். நானோ இன்பம் வரும்போது சிரி சிரியென இதோ சிரிக்கிறேன். நல்ல சிரிப்பும் நல்ல அழுகையும் முடிவில் ஒன்றே! மூன்று நாட்களாக இம்மண்டபத்துக்கு வந்து வந்து திரும்புகின்றேன். கதிரறுத்த கை தன்னை அறுத்துக் கொள்வதில்லை. களை பறித்த கை தன் விரலைக் கூடப் பறித்துக் கொள்வதில்லை. குழி தோண்டிய கை தன்னிடத்துக் குழி செய்து கொள்வதில்லை. (மடித்த பொடித்தூளைப் பார்த்து) இந்த எலிப் பொடி யால் வலிவரம்பனை வானவரம்பன் ஆக்கினேன். நம்பின வனைக் கெடுக்க வேண்டிய காலத்து ஈவு சோவு பாராது கெடுக்க வேண்டும். நல்ல நண்பன்தான் என்றாலும் என் காதலில் தலையிட்டு விட்டானே. ஒரு தோசையை இருவரும் அப்பக்கம் இப்பக்கமாகப் பிய்த்துத் தின்போம். உண்டிச்சாலையில் ஒரு மாம்பழத்தை ஆளுக்குப் பாதி கடித்துத் தின்போம். ஒரு பீடியை ஆளுக்கு ஒரு மூச்சு இழுத்துப் புகைப்போம். ஒரு கள் புட்டிலை மாறிமாறி வாய் வைத்துக் குடித்துக் களிப்போம். பிய்ப்பதும் கடிப்பதும் இழுப்பதும் குடிப்பதும் போலக் காதலிப்பதையும் கருதிக் கொண்டான் எருமைப் பயல். தன் அலுவலகத்தில் வேலை பார்ப்பதனால் தனக்கு உரியவளாம். என்ன காதலியம் பேசினான்! அந்த வங்கியில் வேலை பார்ப்பதனால் அவளென்ன அங்குள்ள எல்லாப் பெண்களும் அந்த வங்கி ஆடவர்களுக்குக் காதலிகளா? பெண்கள் என்ன, (கேலியாக) அந்த வங்கிப் பணம் எல்லாங்கூட அவர்களுக்குத் தானே சொந்தம்! எல்லா நிலையங்களும் அப்படி நினைக்கின்ற தேசியவுடைமைக் காலமாகப் போச்சு. பூமாலை என்னைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தும் அந்த வலி ஒதுங்கி நிற்கவில்லையே. கால்வாய் நீரை மாற்றுவது போல, விசிறிக் காற்றைப் பக்கம் திருப்புவதுபோல, காதல் அடிக்கும் திசையை மாற்றலாம் என்று கருதினான். நண்பனாகிய நானும் அவளைக் காதலாடுகிறேன் என்று தெரிந்தும் அந்த வரம்பன் வரம்பிலே நின்றானில்லை. திரை சென்றால் முதற்காலியை அவனுக்கு விட்டுக் கொடுத்து மறு காலியில் நான் இருப்பேன். குமுதம் முதலான காதலிதழ்களை முதலில் அவன் பார்க்கக் கொடுப்பேன். அவன் கடனை என் கூலியத்தில் முதலில் அடைத்து என் கடனைப் பின்பு அடைப்பேன். வண்ணான் கொண்டுவந்த என் வெள்ளாடையை அவன் எடுத்துடுத்த, நான் புல்லுடையோடு இருப்பேன். இதிலும் அப்படியிருப்பேன் என்று எண்ணிக் கெட்டான் காதலின் தனித்துவம் தெரியாத மண்ணுப் பயல். காதல் என்பது ஒரு நட்பு. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் உரியது. இரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் உரிய முக்கூடல் என்று எண்ணினான் கூடாப்பேதை. நண்பன் காதலிடம் இது என்று அறிந்தவுடன் பாங்கற் கூட்டத்துக்குத் துணை செய்வானா? என்னைப் பாங்கனாக்கித் தான் தலைவனாகப் பார்த்தான். நட்பு நாடகத்துள் காதல் உள்நாடகம் நடத்தப் பார்த்தான். அப்படி ஒரு குறுகிய நோக்கம் என்னிடமில்லை. எங்கள் காப்புக்கழகத்தில் மாலைப்பூ என்ற ஒரு பணிமகள் உண்டு. கூலி தேடிப் பிடித்த அவள் இப்போது தாலி தேடிப்பிடிக்க முயல்கிறாள். வரம்பன் விரும்பினால் நகைக் கடையில் பொற்றாலி வாங்கிக் கொடுத்து உடனே கணவனாக்கி இருப்பேனே. அவனிடத்துக் காதல் தோன்றியதில்லை. உறுதிச் சிமிந்தியில் ஒன்றும் முளையாது. பசிக்குத் தின்பான். விடாய்க்குக் குடிப்பான். கண்ணுக்குப் பார்ப்பான். நாணுக்கு உடுப்பான். பாவம்! கட்டியங்காரன் போலச் சுவையும் அறியான், நவையும் அறியான். பூமாலை ஒருநாள் வரம்பனைப் பார்த்து, அவர் இன்று அலுவலகம் வரவில்லையா? ஊர் போய் விட்டாரா? என்று கேட்டாளாம். கணவன் பெயர் சொல்லாத முறையில் என்னை ‘அவர்’ என்று பெண்ணிதழ் சொன்னதைக் கேட்டு அவனைப் பொறாமை கவ்விக் கொண்டது. என்னை ‘அவன்’ எனவும் தன்னை ‘அவர்’ எனவும் மாறிச் சொல்ல வைக்கவேண்டும் என்று குறிக்கோள் கொண்டான். மணத்தைப் பிணம் என்றும் பிணத்தை மணம் என்றும் சொல்ல வேண்டுமாம் ஒரு இளம் நங்கை வாயால். காதல் வீரனுடைய குறிக்கோள்! என்னானான், எலி மருந்துக்குப் பலியானான் காதற் புலி. யாரும் யாரையும் காதலிக்கலாம். பேச்சுரிமை, குடியுரிமை, சொல்லுரிமை போலக் காதலுரிமை எல்லார்க்கும் பொதுவில்லை. இருவர் ஒருமைப்பட்டுவிட்டால் ஏனையோர் ஒத்து உழைப்பதே உரிமை. அவனைக் கொன்றிருக்க மாட்டேன். குடும்பத்துக்கு அவன் ஒரு பிள்ளை என்று தலைச் சிறுகுடுமிபோல விட்டு வைக்க நினைத்தேன். என் காதலுக்கும் உரியவள் ஒருத்திதானே. அவள் காதலை மாற்றப் பார்த்து மாற்ற இயலாதபோது விட்டுவிடாமல் படுசூழ்ச்சியில் இறங்கினான். பூமாலையின் தந்தை காந்திக் கழகத்திற் சேர்ந்து மதுவிலக்குக் கொள்கைக் காகச் சிறை புகுந்தவர். அவர் சிறை சென்றது இந்த ஒரு கொள்கைக்கே. என் பேரால் வாங்கிய மதுச்சீட்டுக்களை யெல்லாம் தொகுத்துக் குத்தி வைத்து, நான் குடிகாரன் என்று அவருக்குத் தெரிவித்தான். இதாவது உள்ளது. மாலைப்பூ என்ற என் அலுவற் களப்பெண்ணை நான் காதலித்து உற்ற கருவைச் சிதைத்ததாகவும் அங்கங்கே சிலர் காதில் பொய்ம்மலர் தூவியிருந்தான். இவ்வளவும் ஒருபுறம் செய்துகொண்டு, வெயிலடிக்கும்போது மழை தூறுவதுபோல என்னிடமும் கைகோத்துக் காசுவாங்கிக் கட்குடித்து உறவு நாடகம் ஆடினான். என் காதலிற் கைவைத்தான். மாமனாரிடம் அவநம்பிக்கை கொள்ள வைத்தான். இல்லாக் காதலையும் கொல்லாக் கருவையும் பரப்பி என் வேலைக்கு உலை வைத்தான். நான் அவனுக்குக் கொலை வைத்தேன். மூன்று குற்றத்துக்கு ஒரு கொலை செய்திருக்கிறேன். (துடி துடிப்பாக) இன்னும் இரண்டு பிறப்புக்களில், வரட்டும். இரு கொலைகள் செய்து குற்றக் கணக்கை நிகர் செய்வேன். எலி மருந்து இன்னும் போதிய அளவு இருக்கிறது. 2 (மண்டபத்தின் இன்னொரு மூலையில் மறையும் ஞாயிற்றை உற்று நோக்கிய வண்ணம்) நண்பனைக் கொன்ற பிறகு மனம் கலங்கிற்று. புதியவளுக்காகப் பழகியவனைக் கொல்லலாமா? (வரும் கண்ணீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு) என்றுகூட மறு சிந்தனை எழுந்தது. வலிவரம்பன் பட்டிருந்த உணவுச் சாலைக் கடன், சிறுகடைக் கடன், நாளிதழ்க் கடன், கைம்மாற்றுகள் முதலியவற்றைக் கேட்டு, நானே தீர்த்தேன். நான் அவனுடைய கடன் தீர்ப்பதைக் கேட்டு வந்து இரண்டொருநாள் கழித்து மெய்யோ பொய்யோ சிலர் சொன்ன கடன்பாடுகளையும் வட்டியொடு தீர்த்தேன். அதனால் என்னை உண்மையான நண்பன் என்று எல்லாரும் - புலன் உசாவ வந்தவர்களும் - நம்பினார்கள். புகைவண்டி முதல் வகுப்பிற் சென்ற பெருஞ் செல்வர் காளியப்பரை நள்ளிரவில் ஒருவன் குருதி பீறிடக் கொன்றான். வண்டி ஓடும் போதே எங்கோ இறங்கிப் போய்விட்டான். கொன்றவன் சுவடு இன்றளவும் தெரியவில்லை. என் செயலும் அப்படித்தான் என்று எண்ணியிருந்தேன். அவனைக் கொன்றபின் அதே மருந்தால் தற்கொலை செய்துகொள்ளும் ஓட்டம் எனக்கு வந்தது. ஆனால் காவற்புலன் ஆராய்ச்சிக்கு இடம் இல்லாதபடி அவன் கையெழுத்துக் கடிதம் முற்றுப் புள்ளி வைத்தது. ஏதோ ஒரு புதினத்தில் தற்கொலை செய்துகொண்ட பாத்திரம் எழுதிய கடிதத்தை வலிவரம்பன் அப்படியே படிசெய்து வைத்திருந்தான். கையெழுத்திடவில்லை. அது செய்வதற்கு முன் இறந்தான் என்று எழுதிப் புலனை ஒருவாறு முடித்தனர் புலனாய்வாளர். (வரம்பன் நிழற்படத்தை ஒருமுறை பார்த்துக் கீழே வைத்துச் சுற்று முற்றும் பார்க்கிறான். பின் ஒரு கூட்டிலிருந்து இன்னொரு நிழற்படத்தை எடுத்து, தூவென எச்சில்படத் துப்பி.) உன் காதலை நம்பி அச்சாதலைச் செய்தேன். பூவின் மணம் நுகரத் தடையென்று முள்ளைக் களைந்தேன். நீரின் இனிமை நுகரத் தடையென்று இளமட்டையை வெட்டினேன். பழம் தின்னத் தடையென்று தோலைச் சீவியொழித்தேன். அதன்பின் பூவும் நீரும் பழமும் தாமே தடையானால் என் செய்வது? அவனைக் கொன்றது ஊர்க் காவலருக்குத் தெரியாவிட்டாலும் என் உள்ளக் காவலிக்குத் தெரியும். காதலும் கள்ளும் எல்லாம் சொல்லும். என் கள் வாடையை அறிவது போல கொல் வாடையையும் அறிந்தாள் அவள். பிடிக்காவிட்டால் நண்பனைப்போலத் தன்னையும் வலி வரம்பியாக்கி விடுவேனோ என்று கருதிக் கொண்டாள். சிறிது சாடைமாடையாகச் சொல்லிப் பார்த்தேன். உன் தந்தை கொள்கைப்படி நடப்பேன். கள்குடியேன் என்று உடனே வாயைக் கழுவித் தண்ணீரால் ஆணையிட்டேன். எந்தக் கெட்ட பழக்கத்தையும் நீ சொன்னால் ஒழித்துக்கொள்வேன், பார் என்று வெண்சுருளை நெருப்போடு வீசியெறிந்தேன். என்னை நம்பு என்று மன்றாடினேன். என்ன நினைத்தாளோ, இளம் பெண்தானே. எப்படியும் கொலைக் குற்றம் ஒருநாள் வெளிப்பட்டால் மனைவியையும் சாரும் என்று அஞ்சியிருப்பாள். கொலை செய்பவன் உறுதி அலைமேல் கல் என்று எண்ணியிருப்பாள். கள்ளும் காமமும் பொய்யும் கொலையும் உடையவனை மணந்து இரவும் பகலும் பயந்து கிடப்பதைக் காட்டிலும் உதயகுமரன் கைப்படாத மணிமேகலையாக இருக்கலாம் என்று முடிவு கட்டியிருப்பாள். என்ன நினைத்தாளோ நான் நட்புக்கு முதன்மை கொடுக்காதது போல அவள் தன் கற்புக்கு முதன்மை கொடுக்கவில்லை. அவனை இறப்பித்தேன்; இனி மணம் நடக்கும் என்று எண்ணிய எனக்குச் சக்கரமே இடக்குச் செய்வது போலானாள். விளம்பரப் படங்கள் போல எத்தனையோ பெண்கள் எனக்கு, காப்புக் கழகத்தில் வேலை பார்க்கும் எனக்கு, தற்கால உடை நடை முகம் உடைய எனக்கு. பூமாலையிடம் புணர்ந்த களவாயிற்றே என்று கற்பை நான் மதித்தொழுக, மணமான பின்தானே கற்பு என்று அவள் ஒரு கற்பிலக்கணம் செய்து கொண்டாள். கற்பு மனம் பெண்ணுக்கு வரும் என்று பொறுத்துப் பார்த்தேன். அவளோ நான் கொலைஞன் என்று நிறுவப் பார்த்தாள். அவள் கற்புக்காகவும் காதலுக்காகவும் கொலைசெய்தேன் என்பதை மறந்துவிட்டாள். நினைவூட்டி னும் நினைக்க மறுத்துவிட்டாள். நம்பி எழுதிய இரண்டொரு கடிதங்களையும் நம்பிக் கொடுத்த இரண்டொரு பொருள் களையும் தர மறுத்துக் காட்டிக்கொடுக்க முனைந்தாள். கொஞ்சியும் கெஞ்சியும் மிஞ்சியும் அஞ்சியும் எல்லாம் பார்த்தேன். அவ்வஞ்சியிடம் பலிக்கவில்லை. நம்பிய ஆடவ னையே உலகம் மாற்றிய நான், காதல் செய்து கலந்து கனிவாய் முத்தம் உண்டபின் நம்பாதவளை. எனக்குக் கைவிலங்கு பூட்டிவிட நினைப்பவளைச் சும்மாவைப்பேனா? ஆடவன் ஏமாற்றினால் இன்னொரு ஆடவனுக்குச் சினம் ஆற்றொ ழுக்குப் போல வரும்; அவ்வளவே. திரௌபதி போலப் பெண் ஏமாற்றி ஏளனஞ் செய்தபோதெல்லாம் பாரதங்கள் அல்லவா நடந்திருக்கின்றன. இன்னொரு பாரதம் ஆக்க வந்தவன் நான். இனி என் கண்முன் வரமாட்டாள். இந்த மாலையில் வந்தவளை விட்டுவிடக் கூடாது என்று தெரிநிலையாகவே (இந்தக் கருவியால்) வாழைத்தண்டுபோல வெள்ளாடை உடுத்தியிருந்த வளைத் தாலிகட்ட வேண்டிய இடத்தில் தலைவேறு உடல் வேறு ஆக்கி ஆக்கம் செய்த வாளைக் குருதியிற் குளிர்ப்பாட்டி முத்தமிட்டேன். ஈரக்காதலனாக இருந்த நான் வீரக் கயவன் ஆனேன். (சிறிது அமைதியாக இருந்து எழுதுகோலை மூக்கிற் சார்த்தி) பெற்றோர் முடித்து வைத்த திருமணங்களில் மனைவி மிகையான கேடுகளைச் செய்துவிடுவதில்லை. தொடக்கத்திலி ருந்தே பொறுக்கும் சூழ்நிலையைப் பயின்று கொள்கின்றனர். காதல் என்ற கனவுப் பெயரால் காமத்கொந்தளிப்பில் கொதித்துத் துடிப்பவர் தம் உறவு எங்கு எவ்வாறு போய் முடியும் என்று சொல்வதற்கில்லை. அடக்கியில்லாத விரைவு வண்டியைக் கட்குடிகாரன் ஓட்டினால் வண்டிக்கும் உள்ளிருப்பவர்க்கும் என்ன கதியோ? (அழுதவனாய்ப் பொடியையும் வாளையும் ஒரு சேர வைத்து) இது நண்பனை . . . . இது . . . . என் முன்னாட் காதலியை . . . . . இவையிரண்டும் என்னை . . . . ஆம் வேண்டும்; ஆம் வேண்டும். நண்பனுக்கு எலித்தூள் போதும். காதலிக்குப் பொலிவாள் போதும். இரு பெரும் வினை செய்த என் உயிர்க்கு ஒன்று போதாது. (மடித்த பொடியை விரித்து, தேங்காய் உடைக்கும் அரிவாள் போல வாளைத் தலையோட்டின் மேல் வைத்து நகையாகப் பாடுகிறான்.) கொலைஞனும் நானே, தற்கொலைஞனும் நானே. பொடியனும் நானே, அடியனும் நானே. உயிர்க்காப்புக் கழகத்தின் உயர்பணியாளனும் நானே, இரண்டு உயிர்களை எடுத்தவன் நானே, கொலைஞனும் நானே தற்கொலைஞனும் நானே (பாடிக்கொண்டே) பூமாலைக் கொலைக்கு அப்புறம் என்னைக் கண்டு பிடிப்பார்கள். அந்தக் கொலையையும் செய்தவன் நானே என்று புதைபொருளை மீண்டும் கிளப்புவார்கள். இதுவரை துப்புத் துலக்காத கொலைகளையெல்லாம் என்னோடு தொடர்பு படுத்துவார்கள். ஒவ்வொரு கொலைக்கும் ஒரு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். என்னிடம் இருப்பது ஓருடல் தானே (கேலியாக) நான் கெட்டிக்காரன் ஒவ்வொன்றுக்கும் பாதித் தண்டனையே பெறுவேன். பெண் காதல் போலப் பெண் கொலை என்னைச் சூழ்ந்து விட்டது. பூமாலை எனக்குத் துன்பமாலை ஆனாள். இனியும் ஏதும் செய்துகொள்ளாவிட்டால் அடுத்த கணத்தில் என்ன நடக்குமோ? யார்கை நான் படுவேனோ? என் கை யார் யார் படுவார்களோ? இப்பொடி, இவ்வாள் தவிர எனக்கு நட்பில்லை, காதலில்லை, கள்ளில்லை, குடியில்லை, வாழ்வில்லை. கொலை யால் ஒருவன் உலகத் தொடர்பை வெட்டிக் கொள்கின்றான். இருவரை உலகிலிருந்து அகற்றினேன். உலகம் இனி என்னை அகற்றும்வரை சும்மா இராது. இனி நல்ல போக்குக்கு இடமில்லை, இடமில்லை. (மீண்டும் பொடியையும் வாளையும் பார்த்துக்கொண்டு) வருங்காலம் எவ்வளவு கொடுமை செய்யுமோ என்று கவலைப்படுவதைவிட, நண்பனையும் காதலியையும் கொன்ற கயவனாகிய என்னைக் கொல்ல என்னைவிட ஒரு கயவன் வருவான் என்று எதிர்பார்த்திருப்பதைவிட, தன்னையே பழி வாங்கிக்கொள்ளும் நல்லவனாக நான் ஏன் இறுதியில் மாறக் கூடாது? தன் பொடி தன்னைக் கொல்லும், தன் வாள் தன்னைக் கொல்லும் என்று ஏன் எடுத்துக்காட்டு ஆகக்கூடாது? (முகம் வாள் பொடி எல்லாம் கண்ணீர்பட) இருபத் தைந்து வயதுக்குள் இவ்வளவு கொடுமைகள் செய்துவிட்டேன். மூன்று பெற்றோர்களை நீங்காத் துயரத்துக்கு உள்ளாக்கி இருக்கிறேன். இனி இருந்தால் என் கொடுமைக்கு உலகம் தாங்காது. உலக அமைதிக்கு நான் ஒடுங்கவேண்டும். என் பெற் றோருக்கு ஒரே மகன். தலங்கள் நடந்துசென்று தவஞ்செய்து பெற்ற மகன் என்பார்கள். அத்தை மகள் அம்மான் மகள் அக்காள் மகள் எவ்வளவோ உறவுப் பெண்கள் இருக்க, என் ஊரில் பெண் இல்லை என்பதுபோல எங்கோ வந்து ஒரு காதலுலகிற் புகுந்தேன். காதலுலகம் இனிய உலகந்தான். அதற்கு உலகமலையெல்லாம் சேர்ந்த ஊழிப் பொறுமை வேண்டுமே. ஞான அலையெல்லாம் சேர்ந்த ஊழிப் பணிவு வேண்டுமே, காதல் கிச்சுக் கிச்சுத் தாம்பாளம் கீயாக்கீயாத் தாம்பாளம் இல்லை. பெற்ற கடனோ பிறந்த கடனோ உற்ற கடனோ ஊர்க் கடனோ யாதும் செய்யவில்லை. வாங்கிய ஊதியத்தைத் திரைக்கும் புகைக்கும் குடிக்கும் வாரிவிட்டேன். சிறுசிறு கெட்ட பழக்கங்கள், சிறுசிறு உணர்ச்சிக் கலிகள் எல்லாம் தூசிபோல் படிந்து வாழ்வை மூடிவிடுகின்றன. நூறாண்டு வாழ வேண்டிய இளைஞன் குருத்துவிடும் பருவத்துப் பக்கத்து மரங்களையும் அசைத்து விழுகின்றான். சமுதாயத் தொண்டு உலகத்தொண்டு என்பதெல்லாம் இளைஞர்களின் பழக்கவழக்க உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் தொண்டே. யாரையும் மதிக்கும் பணிவுத் தன்மை. இத்தன்மை ஒன்றுமட்டும் இளைஞர்களிடம் வளர்ந்து விட்டால் உலக வளர்ச்சி உயர்ந்த வளர்ச்சியாக இருக்கும். அடிக்கடி பெற்றோர் பெரியோர் தொடர்புகள் கொண்டால் இளைஞர்கள் ஒருக்காலும் கொலைஞர் ஆகமாட்டார்கள். (வருந்தியவனாய்) எனக்கு இங்கு வந்தபின் இத்தொடர்பும் இல்லை. (பொடியையும் வாளையும் உள்ளிருந்த குறுங்கத்தியையும் பார்த்து) இதோ இரண்டு கடிதங்கள் கொண்டு வந்திருக் கின்றேன். எதனை வைத்திருப்பது? எதனை கிழிப்பது? (ஒரு தாளை எடுத்து). “என் நண்பன் வலிவரம்பனையும் என் காதலி பூமாலையையும் கொன்ற கயவன் நான். இதில் வேறு யாரும் தொடர்பு கொள்ளவில்லை. என்பதனைக் கடவுள் சான்றாகச் சொல்லுகின்றேன். அந்த இரு பெற்றோர்களையும் என்னை மன்னிக்கும்படி இக்கடிதத்தைப் பார்ப்பவர்கள் சொல்லுவார்கள். என் பெற்றோர்கள் எனக்காகத் தங்களை எவ்வகையிலும் தண்டித்துக் கொள்ளக் கூடாது என்பது என் இறுதி வேண்டுகோள். இப்படிக்கு நட்பையும் காதலையும் உயிரையும் இழந்த பேதை இதனைப் படித்த உலகம் இயல்பாக நான் நல்லவன் என்பதனையும் அறியாக் காதல் கொடியவன் ஆக்கியது என்பதனையும் தெரிந்துகொள்ளும். (ஒரு நினைவு வந்து) உண்மையைச் சொன்னால் நம் கால உலகம் அவ்வளவு எளிதாக நம்பாது. புளுகுத் தாள்களைப் படித்துப் படித்துப் பொய்களை மெய்யெனத் துணியும் அறிவியல் உலகமாச்சே; ஒத்துக்கொண்டேன் என்பதனை வைத்து மூன்று பெற்றோர் களையும் என் அவன் அவள் அலுவலகப் பணியாளர்களையும் அறையுடைமையாளர்களையும் உணவுச் சாலையாளர் களையும் தொந்தரை செய்வார்கள் நம் காவலர்கள். அவர் கட்குக் கைவிளக்குக் கிடைத்தாற் போதுமே கை விலங்கு போடுவதற்கு. இப்படி வெளிப்படையாக ஒத்துக்கொண்டால் வரும்படிக்கு வேறு வழியில்லை அல்லவா? (ஒரு நினைவு வந்து) கொடுத்ததை எண்ணிப் பார்ப்பது போல உண்மையை உண்மைதானா என்று சோதிப்பதும் ஒரு கடமை தானே. (கேலியாக) பெருங்கொலைகள் செய்த எனக்கு எல்லாரையும் குற்றம் சொல்லும் பெருந்தகுதியுண்டு, இன்னும் சில கணம் வரை. (இன்னொரு தாளை எடுத்து) இதுவும் ஒரு பொருத்த மான கடிதமே. (தானே சிரித்துக்கொண்டு) அலுவற் கடிதமாக இருந்தால் உயர்ந்தவர்கள் சரி பார்ப்பவர்கள். என் இறுதி உறுதி அறுதிக் கடிதம். (சில பிழைகளைப் பார்த்துத் திருத்துகின்றான்.) இறுதிக் கடிதத்தில் எழுத்துப் பிழை இருக்கக் கூடாது. கொலையிற் பெரியது தமிழ்க்கொலை. மொழிக் கொலை என்பது இனக்கொலை என்று என் ஆங்கில ஆசிரியர் சொல்லி இருக்கிறார். ஆண் பெண் பலர்பால் கொலை செய்த கழலன் மொழிக்கொலை செய்யான் என்பதனை என் இறுதிக் கடிதம் காட்டட்டும், நபியும் சாக்கிரதரும் இறுதியில் கடனைத் தீர்த்துச் செத்ததுபோல? (பிழை திருத்திய கடிதத்தைக் கையில் ஏந்தி) வம்புக்காதல் செய்த வலிவரம்பனைப் பொடி போட்டு மயக்கிக் கொன்றாள், அவன் அலுவலகத்துப் பணிசெய்த பூமாலை. அவனைக் கொன்றதற்கு அஞ்சித் தன்னையும் தற்கொலை செய்துகொண்டாள். இதனை அறியாமல் இருவரொடும் நட்பாகப் பழகிய என்மேல் குற்றஞ் சாட்டப் பார்க்கிறார்கள். நானும் உயிரோடு இருப்பதனால். கயிற்றோடு வளையம் விழுந்தாற்போல ஆற்றாது நானும் தற்கொலை செய்துகொள்கின்றேன். அவனைச் சுட்டெரித்த அதே காட்டில் என்னையும் சுட்டெரியுங்கள். இதுவே என் இறுதியாசை. உலகம் உண்மை உணரட்டும். குற்றமற்ற கொலைஞன் கழலன் (தன் முகத்தை கசப்பாக வைத்துக்கொண்டு) இதனை இவ்வுலகம் நம்பும். சாகுமுன் எழுதிவைத்த கடிதத்தை எல்லாரும் நம்புவர். சீசீ சாகும்போதாவது நல்லவனாகச் சாக வேண்டும். செத்தும் கெடுத்தான் என்ற சொல்லுக்கு இடம் தரக்கூடாது. வாழும் உயிர்களைச் சாகுங்கை ஏதாவது எழுதி வைத்து வருத்தக் கூடாது. இந்த அறிவுலகம். இந்தச் செய்தித் தாள் உலகம், இந்த வழக்காடு மன்றங்கள் நம்பும் என்பதற்காக இல்லாததை உள்ளதாகவும் உள்ளதை இல்லாததாகவும் கடைசி மூச்சைக் கயமையாக்கலாகாது. பொய் சொல்லக் கூடாது, கொலை செய்யக் கூடாது என்பது உலகப் பெரியார் வாக்கு. கொலை செய்துவிட்டேன்; இனிப் பொய் சொல்லாம லாவது போய்த் தொலையலாம் அல்லவா? கொலையனை விடப் பொய்யன் கொடியவன். அவன் பொய்யினால் என்னென்ன விளையுமோ? கொலை செய்தேன் உண்மை. ஆனால் இப்படிப் பொய் எழுதேன். (அக்கடிதத்தைக் கிழித்துக் காற்றில் பூ எனத் துப்பி எறிகிறான்.) தீயும்போது மின்நரம்பின் வெளிச்சம்போல, இப்போது நல்ல குணம் தோன்றுகின்றது. என்ன காதல், வெங்காய பெருங்காயக் காதல். அவள் விரும்பினால் நீயே மணந்துகொள் என்று விட்டுக் கொடுத்திருக்கலாம். நீ சூழ்ச்சி செய்வதாக அறிகிறேன், நமக்குள் உறவும் கரவும் வேண்டாம். நடந்ததை இருவரும் மறப்போம் என்று அவளிடம் நேர்முகமாகச் சொல்லி விலகிக் கொண்டிருக்கலாம். கீழே இருந்து பார்க்கும்போது பெரிதாகத் தோன்றுவது மேலே ஏறிப் பார்த்தபின் சிறிதாகத் தோன்றும். கணியன் பூங்குன்றன் பார்வை வந்துவிட்டால் உயர்ந்த குணங்கள் எவ்வளவு எளிமையாக வளமாக வரும். மூன்று பேரும் தனி மும்மணிகளாக வாழ்ந்திருக்கலாமே. மறு பிறப்புக்காவது இந்நினைவு உதவட்டும். (பொடி வாள் கத்தி உள்ளிருந்த கயிறு எல்லாவற்றையும் சேர வைத்துக் கொண்டவனாய்) பகலவன் சாயத் தொடங்குகிறான். அவன் துணையோடு நானும் சாய்வதே சரி. அச்செவ்வானத்தோடு என் குருதிச் சிவப்பும் கலக்கவேண்டும். கதிரவன் காலையில் தோன்றும் போது நானற்ற உடல் இப்பக்கம் நடமாடுவார் கண்ணுக்குப் படவேண்டும். இந்த இடமே என் முடிவிடம். இம்மண்டபம் எனக்கென்றே இன்னும் இடிபடாது இருக்கின்றது. இம்மாலை யோடு என்னுயிர் தொலையட்டும். இன்றிரவு என்னுலகம் வேறு. அவ்வுலகில் நாங்கள் மூவரும் கண்டு உண்மை நட்பாக, உண்மைக் காதலாகத் தொடர்கதை நடத்துவோம். (மண்டபத்தின் மேலிருந்தவன் மண்டபத்தின் உள்ளே வந்தான். தண்ணீரில் பொடியைக் கலக்கி வாளைக் கழுத்துக்கு நேரே வைத்து, கத்தியை நெஞ்சுக்கு நேரே வைத்து, கயிற்றை மேலே மண்டபக் கல்லில் கட்டி) முதலில் தொங்கும் கயிற்றில் கழுத்தைக் கொடுக்க வேண்டும். பொடித் தண்ணீரை மடமடவெனக் குடிக்க வேண்டும். மிக விரைவாக இடக்கை வாளால் கழுத்தைப் பறிச் சென அறுத்து, வலக்கைக் கத்தியால் நெஞ்சைத் தையெனக் குத்தி மாளவேண்டும். எல்லாம் ஒரு நொடியில் பட்டாசுபோலச் சட்புட்டெனத் தீரவேண்டும். என்னுயிர் தடியுயிர். கொடிய அந்த உயிரைப் போக்க இத்தனை முறைகளையும் ஒரே சமயத்து ஆளவேண்டியிருக்கிறது. (இவ்வாறு தற்கொலைக்கு ஒத்திகை பார்த்தபிறகு, குனிந்து கையைத் தரையில் வைத்துத் தன் பெற்றோர்களைத் தொழுதான். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அவ்விருவர்தம் பெற்றோர்களையும் கேட்டுக் கொண்டான். கீதை சொல்லிய படி உங்கள் உடலைக் கொலை செய்தேனேயன்றி உயிரை யாதும் செய்யவில்லை; உயிரோடு இருக்கின்ற உங்களிடம் இன்னும் ஒரு நொடியில் வந்து பணிந்து மன்னிப்பு வேண்டு வேன் என்று வரம்பனையும் மாலையையும் நினைத்துப் புலம்பினான். ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்து வந்து மனம் மகிழ்ச்சியாக, பொழுது முடிந்தது யான் செய் கொலையால், பொன்மை ஒளிக்கணம் போயின யாவும் என்று கைத்தாள மிட்டு மறுவாசகம் கீற்றுக் குரலில் பாடி, சிந்திக்கிடந்த பொடியைத் திருநீறென மதித்து நெற்றியில் அணிந்து, விரலைச் சிறிது கீறிக் கசிந்த இரத்தத்தைக் குங்குமமாக நீற்றின்மேல் வைத்து, புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பாவியேன் என்று சொல்லிக்கொண்டான்.) (ஒத்திகைப்படியே தொங்கு கயிற்றில் கழுத்தை மாட்டி, எலிப்பொடியைத் தின்று வாளால் வெட்டிக் கத்தியால் குத்தி எல்லாம் செய்தான். செய்தபின் தரையில் டபக்கென்று அவன் உடல் விழுந்தது. விழுந்தவன் மெல்ல எழுந்து மண்டபத்தின் வாசற்படியில் இடியாத பாங்கரில் அமர்ந்து பகலவன் மறைந்த வானத்தில் திங்கள் தோன்றி வருவதை நோக்கி, மதியே வருக! திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும் என்று உரக்கப்பாடினான். பக்கத்துப் பூத்திருந்த அலரிப் பூக்களைத் திங்கள் மேல் தூவினான்.) 3 கழலன் : (தன்னுள், குழந்தையினும் மென்குரலில்) கொலை செய்து பழகினேன். தற்கொலை செய்து பழக்கமில்லை. (சிரிப்பாக) தற்கொலை எத்தனை முறை பழகமுடியும்? தற்கொலை செய்து கொள்பவன் ஏதாவது ஒரு வழியைப் பின்பற்றுவான். தூக்கிட்டுக் கொண்டாற்போதும். எலித்தூளைத் தின்றாற்போதும். இளநீர்போல ஒரு தடவை தலைசீவினாற் போதும். ஒருச்சாண் கூர்ங்கத்தியால் நெஞ்சத் தாமரையைக் குத்தினாற்போதும். பக்கத்துப் பாழ்ங்கிணற்றில் தவளை போற்குதித்தாற் போதும். சிதறுகாய்போல் இத்தூணில் முட்டிக் கொண்டாற் போதும். உயர் மண்டபத்திலிருந்து இந்தப் படியில் அறங்குப்புற விழுந்தாற் போதும். உயிரைப் போக்க ஒன்பது வழியா வேண்டும்? ஒரு வழி போதுமே. இரு கொலை செய்த என் கொடிய உயிர் எளிதாக என்னுடம்பை விட்டுப் போகாது என்று நாற்புறமும் வேட்டு வைப்பதுபோல நால்வழியை மேற்கொண்டேன். வேட்டா வைத்தேன்? இருவென்று நால்வகை விருந்து செய்தேன். பேதை, பெரும் பேதை, பித்துப்பேதை. (இருந்தவன் எழுந்து இங்கும் அங்கும் நடந்து) தற் கொலைக் கொலைஞனுக்குத் தண்டனை இல்லை. பிறர் கொல்ல மடிவதே மெய்த்தண்டனை. கொலைஞன், நட்புக் கொலைஞன், பெண் கொலைஞன் என்று ஊரெல்லாம் தாளெல்லாம் தூற்ற என் தாய் தந்தையர் கேட்டுக் கண் கடலாகி அழுது புலம்ப, அதனைப் பார்ப்பதே எனக்குக் கண்கண்ட தற்கொலை. வலிவரம்பன் பூமாலை பெற்றோர் களும் உறவினர்களும் என்னைச் சினந்து உருத்துக் கறுத்துப் பார்க்க, அவர்கள் முகம் பாராது மறைவதே எனக்குத் தற்கொலை. கொன்ற என் தாயும் கொல்லப்பட்ட அவ்விருவர் தாயும் ஒருவர்க்கொருவர் திட்டிக்கொள்வதைக் கேட்கும் செவியே என் தற்கொலை. இதையெல்லாம் காணப்பொறாத ஓர் வீர அன்பன் வழக்குக் கூண்டில் கொலைப் பறவையாகி நிற்கும் என்னைக் குறிபார்த்து வாள்வீசி என் உடம்பைக் குட்டிச் சுவர்போல வீழ்த்துவதே சரியான தண்டனை. வலியா பூவா ஐயோ என்று அலறி விழும்போது, அவன் செய்தது சரி, அவ்வாள் செய்தது சரி என்று அவனைப் பார்த்து அவ்வாளை முத்தமிட்டு விழுவதே எனக்கு ஆறுதல். (வேகமாக) தற்கொலை யும் தகுதியில்லை, தண்டனைக் கொலையும் தகுதியில்லை, படுகொலையே எனக்குத் தகும். (வாளை மட்டும் எடுத்துக்கொண்டு சுழற்றிப் பிடித்து) என் செய்தாய்! ஏன் உனக்கு இந்த ஓரச்சார்பு! அன்று வீசியபோது என் காதலியின் கழுத்தை நூல் பிடித்தாற்போல வெட்டிய நேர்வாளே! கூர்வாளே! என்னிடம் என்ன செய்தாய்? என் கழுத்தை அறுப்பதற்குப் பதிலாகத் தலைக்கு மேலிருந்து தொங்கிய கயிற்றை அறுத்தொழிந்தாய். தொட்டிலிலிருந்து வீழ்வதுபோலத் தொப்பென வீழ்ந்தேன். உன் செயல் கொஞ்சகமா? நஞ்சகமா? பலர் முன்னிலையில் பிறன் வாளால் வெட்டுண்டு மாளவேண்டும் என்பது உன் வஞ்சகமா? நீ என்னைக் கழுத்தறுக்க விரும்பவில்லை. கயிறும் என்னைக் கழுத்துச் சுருக்க விரும்பவில்லை. எலிப்பொடியோ அன்று மடித்த பழம்பொடி. நஞ்சன்கூடுப் பற்பொடி போலவாகி என்னை நச்சுப்படுத்த விரும்பவில்லை. இந்தக் கத்தி உங்களோடு சேராது என் நெஞ்சைக் குத்திற்று. ஆனால் முனையால் குத்தாது மாறி அடியால் குத்தி மேந்தோலை ஈச்சிறகு போல் எடுத்தெறிந்தது அவ்வளவே. அது பஞ்சாபியின் கத்தி. வெளியில் எடுத்தால் அது குருதித் துளி ஓரளவேனும் குடியாது ஒழியாது. (கயிறு பொடி வாள் கத்தி எல்லாவற்றையும் மேலா டைக்குள் சுருட்டிக்கொண்டு) இருபத்தைந்தாண்டு ஒழுங்காக வளர்ந்த நெஞ்சு இரண்டு நாளில் இரு கொலை நெஞ்சாகிவிட்டது. கொலை பழகிய நெஞ்சும் கலை பழகிய கையும் சும்மா இரா. இதோ சிறு வெடிப்பில் விழுந்த விதை என்று சும்மா விட்டதனால் இம் மண்டபம் பாழாகிக் கிடப்பதைப் பார்க்கின்றேன். நெஞ்சு பாம்புபோல் தீய புற்றையே நாடிக் கொண்டிருக்கும். நல்லெண்ணச் சிமிந்தினால் அவ்வப்போது கொற்றுவேலை செய்யாவிட்டால் புற்று வளர்ந்து வேலை செய்யும். கொலை செய்த என்வாள் தலைவனாகிய என்னைக் கொலை செய்ய விரும்பவில்லை. நெஞ்சை அடக்க ஒரே வழி நான் கொலைஞன் என்பதனை எல்லார்க்கும் தெரிவித்துவிட வேண்டும். கொலையைக் காட்டிலும் கொடிய துன்பத்துக்கு என்னை ஆளாக்கிக் கொள்வதே நான் எனக்குச் செய்து கொள்ளக்கூடிய வழி. (தன் கைப்பட ஒரு நீளத்தாளில் சிலவற்றை எழுதுகிறான்.) இங்கிருந்து நேரே நீதிபதியிடம் சென்று இத்தாளைக் கொடுத்து இருவரையும் கொன்ற கொலையாளி நானே என்று ஒப்புக்கொள்வேன். அறமன்றத்தில் என்னை விடுதலை செய்ய என் பெற்றோர் வழக்கறிஞரை அமர்த்தினாலும் அவர்தம் பொய் ஒத்திகைக்கு இணங்க மாட்டேன். இழந்த இரு பெற்றோர்களும் தம் மக்களே போனபின் இனியென்ன என்று வழக்காடாது சும்மா இருப்பார்கள். எனக்குக் கொலைத் தண்டனையே வேண்டும் என்று மன்றாடி நிற்பேன். அரசு வழக்கறிஞர் வலிவரம்பன் உன் நண்பனா? பூமாலை காதலனா நீ என்று கேள்விமேல் கேள்வி கேட்பார். “இருவரையும் நீதான் கொன்றாயா?” “வேறு யார் கொல்ல முடியும்?” “ஏன் கொன்றாய்” “அவன் என் காதலிற் குறுக்கிட்டான்; அவள் அதன்பின் என் காதலுக்கு இசையவில்லை.” “எதனால் கொன்றாய்” “அவனைப் பொடியாலும் அவளை வாளாலும்.” “எந்த நேரத்தில்?” “அவனை இரவிலும் அவளைச் சாயுங்காலத்திலும்” “வேறு யாரும் துணை யுண்டா?” “கடவுளே துணை” இவ்வாறு ஒவ்வொரு கேள்விக்கும் பட்பட்டென்று பதில் சொல்வேன். எனக்குக் கொலை தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்று அந்த வழக்கறிஞரிடம் வாதாடுவேன். நீதிபதி குறுக்கிட்டு “கடவுள் சான்று இருக்கட்டும், வேறு சான்று உண்டா?” “என் பொடியும் என் வாளும் சான்று” “இவை சான்றாக ஏற்றுக்கொள்ள முடியாது தெரியுமா?” “வன்னிமரமும் மடைப்பள்ளியும் சான்றானது தங்கட்குத் தெரியாதோ?” ‘சமயச் சான்று வேறு, சட்டச் சான்று வேறு’ என்று நீதிபதி கூறுவார். கொன்றவன் தானே ஒத்துக் கொள்ளும் போது, மொழிப் பிழையின்றி எழுதிக் கொடுக்கும்போது வேறு சாட்சிகள் வேண்டியதில்லை என்று வழக்கறிஞர் எடுத்துரைத் தால், ‘சட்டம் மனச் சாட்சியை ஏற்காது. புறச் சாட்சி வேண்டும். கொன்ற மனமாக இருப்பின், ஒருநாள் அவனை அதுவே கொல்லும். மன்றம் அது செய்யாது. குற்றத்தைத் தானே ஒத்துக் கொண்டாலும், பிறர் குற்றத்தைத் தன்மேலிட்டுக் கொண்டா லும் இவன் சான்றோன் ஆகிறான். குற்றமே செய்திருந்தாலும் இவன் இளைஞன். திருந்தி வாழ் என்ற எச்சரிக்கை போதும். இவன் பேச்சையும் நடத்தையையும் பார்க்கும்போது பித்தனோ என்று சொல்லத் தோன்றுகின்றது. நேர் சான்று இல்லாமை யினால் இருக் கொலைக் குற்றத்தினின்றும் கழலனை விடுதலை செய்கிறேன்’ என்று தேனியல் அனைய நீதிபதி தீர்ப்புக் கூறுவார். நெஞ்சே! விடுதலை வரும் என்று மகிழவேண்டா. விடுதலை வந்தாலும் மகிழ வேண்டா. அறிவே! நெஞ்சு மகிழக் காரண காரியங்களைச் சொல்ல வேண்டா. என் நெஞ்சு கொலை நெஞ்சு என்பதும் என் அறிவு கொலைக்குத் தூண்டிய அறிவு என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். விடுதலை பெற்றாலும், என் அன்னை எனக்குப் பால் கொடுத்த மார்பை வஞ்சினமாக அறுத்துக்கொண்டாலும், என் தந்தை துறவியாகச் சென்றாலும் நான் இனி மணஞ் செய்துகொள்ள மாட்டேன். ஊதியம் ஈட்டி அதனை மூன்றாகப் பகிர்ந்து மூன்று பெற்றோர்க்கும் கொடுப்பேன். கழலன் கழகம் என ஓர் இளைஞர் கழகம் அமைத்து, ‘இளையர் களே! காதலில் அழுத்தம் வைக்க வேண்டா, முழுமூச்சாக இறங்கித் தொலைய வேண்டா. மாற்றெண்ணத்துக்கும் வழி வைத்துக் கொள்ளுங்கள். காதலுக்காக வாழ நினையாமல், வாழ்வுக்காகக் காதலை ஒழுங்குப்படுத்துங்கள். காதல் இழந்தால் உயிரிழப்பு என்ற மரபுப் பேதைமையை விட்டு, உயிர் வாழக் காதல் என்ற அறிவுப் புரட்சியைக் கடைப்பிடியுங்கள்’ என்று எடுத்துச் சொல்வேன். ‘எழுத்தாளர்களே! புலவர்களே! ஓவியர்களே! காவியர்களே! திரையர்களே! நாடகர்களே! காதலை ஈருடல் ஓருயிர் என்று சிறப்பிப்பதை நிறுத்துங்கள். காதல் காதல் காதல், காதல் நீங்கிற் சாதல் சாதல் சாதல் - என்று மரபுக் கூப்பாட்டை நிறுத்துங்கள். திருமணத்துக்கு முன், கூட்டுறவு ஆகுமுன் காதலை மாற்றலாம், வேறுபடுத்தலாம், விடலாம் என்ற புதுக்குரலை எழுப்புங்கள். வாழ்வு பெரிதே யன்றி வீணான வீம்பான விளையாட்டான வெறியான தற்சாவு கேவலம் என்று இனிப் புதுப்படலம் தொடங்குங்கள். காதலைத் தாறுமாறாக ஏறுமாறாக வண்ணப்படுத்தி இளைய உள்ளங் களை எஞ்ஞான்றும் கள்ளப்படுத்தும் கலைகளையும் தாள் களையும் ஒட்டிகளையும் ஒழியுங்கள் ஒழியுங்கள்’ என்று எடுத்துச் சொல்லி வீதிகள் தோறும் பறைசாற்றுவேன். ‘வாழ்வுக் காதல்’ என்ற செய்தித்தாள் தொடங்கித் துண்ட றிக்கைகள் விழாக் காலங்களில் வீசுவேன். இதுபற்றிப் பட்டி மன்றங்கள் கருத்தரங்குகள் மாநாடுகள் எல்லாம் கூட்டி, யாதும் ஊரே யாவரும் கேளிர் ஓதுங் காதல் போதும், யாதும் தற்கொலை நமக்கு வேண்டா, வாழும் எண்ணம் காதலில் வேண்டும், வீழுங்காதல் வேரொடும் வீழ்க என்று கூட்டுப் பாடல் முழங்கச் செய்வேன். வாழிய உயிரே ஆழிய காதல் என்று வாழ்வு மந்திரம் ஓதுமாறு இயக்கம் நடத்துவேன். என் கொலையாற்றல் தற்கொலையாற்றல் அனைத்தையும் இளையவர்களின் மனமாற்றத்துக்கும் நல்வாழ்வுக்கும் பயன் படுத்துவேன். (மீண்டும் ஒரு நினைவுவர, பொடி, கயிறு, வாள், கத்தி, வாக்குமூலம் எல்லாவற்றையும் ஒருமுறை பார்த்து, கண்ணீர் மெல்கக் கசிய) அஃறிணை நண்பர்களே! இனி எனக்கு உயர்திணை நண்பர்கள் கிடைப்பார்களா? சிறையிலிருந்து வெளிவந்த வ.உ.சியை சிவா ஒருவராவது வரவேற்றதுபோல என்னை நீதிபதியாவது வரவேற்பார் என்று நம்புகிறேன். எந்நிலையிலும் வாழ்வோம் என்ற நம்பிக்கையுரம்தான் வாழ்வு தரும். (படியிலிருந்து இறங்கி வந்து தனக்கு வாழ்வு மாற்றம் தந்த மண்டபத்தைப் பார்த்தான். குழலூதும் கண்ண சிற்பம் பட்டது. மகிழ்ந்தவனாய்) போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எங்காளாய் (என்று எங்காளைப் பாட்டுப் பாடிப் புறப்பட்டான் நீதிபதி வீட்டுக்கு நேரே.) 6. கொள்கைக்காக (அறக்கதிர் என்பவருக்கு வயது 60. இளமையிலிருந்தே பொதுத்தொண்டர். தீண்டாமையொழிப்பு, மதுவிலக்கு, சேரியொழிப்பு, சாதியொழிப்பு, எழுத்தறிவியக்கம், பகுத்தறி வியக்கம், தொழிலாளர் இயக்கம், கடவுளியக்கம், தமிழியக்கம், கிராமச் சீர்திருத்தம், நகரத்துப்புரவு எனப் பலதொண்டுகளில் ஈடுபட்டவர். இத்தொண்டுகளை வருவாய் வழியாகக் கருதாமல் மக்கட்பணியாக மதிப்பவர். கூலவாணிகம் செய்து குடும்பம் காப்பவர். செயலாளராகவும் தலைவராகவும் சார்பாளராகவும் தேர்தலில் நிற்கும்படி பல கழகங்கள் இவரை வேண்டின. தேர்தலை இவர் வெறுப்பவர் இல்லை. நடைமுறைத் தேர்தல்முறை இவருக்குப் பிடிப்பதில்லை. வாக்குரிமை தாமே வழங்கவேண்டும். போய் இரந்து கேட்பதை விரும்பாதவர். ஒரு கட்சிக்குள் இருந்து மக்கட்கும் மன்னுலகிற்கும் பற்றற்ற தொண்டு செய்ய முடியாது எனவும் அரசியல் தொண்டு ஆதிக்கத் தொண்டு எனவும் ஆரவாரமில்லாமல் தூய தொண்டு ஆற்றுவதற்கு உயர்ந்த பிற வழிகள் உண்டு எனவும் கருதுபவர். காந்தி ‘அரிசன்’ இதழ் நடத்தியதுபோல் வாழ்வு என்ற கிழமையிதழ் நடத்துபவர். மலையமானை எல்லா வேந்தர்களும் தம் பக்கம் இருக்கவேண்டும் என்று விரும்பியதுபோல, இவரை ஒவ்வொரு இயக்கத்தாரும் தம் சார்பாக இருக்கவேண்டும் என்று விரும்பும் ஆற்றல் உடையவர். அறம் வருகிறார், அறம் பேசுகிறார், அறம் என்ன சொன்னார் என்று அவரை மதிப்பாகச் சொல்வது வழக்கம்.) 1 அறக்கதிர் : (நிலாமுற்றத்தில் இரவு ஒன்பது மணிக்குச் சாய்காலியில் சாய்ந்து கொண்டு அருட்பாவையும் வைத்துக் கொண்டு, தன்னுள்) மூன்று நாட்களாக உறக்கம் இல்லை. உணவும் கொள்ள வில்லை. அந்தக் கோலங்களைக் கண்டது முதல் உலகமே உமட்டுகின்றது. வறுமையின் வரலாறு மாறக் காணோம். உயிர்கள் வயிறார உண்ணக் காணோம். (இன்மென் குரலில்) எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில் பட்டினி யுற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீ ரெனநடுக் குற்றேன் இட்டஇவ் வுலகினில் பசியெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவது தியல்பே பிறர் பசித்தனர் களைத்தனர் என்று கேட்டளவில் வள்ளலார் இவ்வளவு நடுக்கம் எய்துகின்றார். நான் கண்ட காட்சியை அப்பெருமான் கண்டிருந்தால் உடனே நடுங்கி உயிர் விட்டிருப்பார். (சாய்காலியை விட்டு எழுந்து மெல்ல நடந்து) ‘பட்டினி யால் யாரும் செத்ததாக இதுவரை செய்தி வந்ததில்லை: பட்டினியால் சாக யாரையும் விட மாட்டோம். வெள்ளத் தாலோ பஞ்சத்தாலோ ஒருவரும் சாகாதபடி பார்த்துக்கொள் ளுமாறு அங்கங்கே அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருக்கிறோம். பட்டினிப் பஞ்சம் என்பது காகிதத் திரிப்பு’ என்று ஆள்வார்கள் வாய் முழக்கம் செய்துகொண்டே வருகின்றனர். பட்டிகள் குடிசைகள் சாலைகள் தெருக்கள் ஓரங்கள் வாரங்கள் சாவடிகள் மடங்கள் நடைபாதைகள் எல்லாம் வறுமைகள் வறுமைகள். பட்டினி வயிற்றைத் தலைவர்கள் பார்க்க நெருங்க முடியுமா? தலைவர்கள் வானூர்தியிலிருந்து இறங்கும்போது அவர்களை வரவேற்கப் பட்டினியாளர்களையா முன் நிறுத்துவார்கள்? நாட்டில் வறுமை மிகுதி, மக்களுக்கு உணவில்லை, சத்தான உணவில்லை, இத்தனை கோடி மக்களுக்கு வேலையில்லை. இந்தச் சிக்கன நடவடிக்கையில் இவ்வளவு பேர் வேலையிழந்தனர். படித்த இத்தனை இலட்சம் பேருக்கு வேலை கிடையாது. பல திட்டங்கள் போடவேண்டும். பல கோடி முதலீடு செய்ய வேண்டும்’ என்று இவ்வாறு ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு பட்டினியில்லை என்றால் சொல்பவர்க்குப் பட்டினியில்லை அவ்வளவே. ஒட்டிய பட்டினி வயிற்றை அவர் பார்த்ததில்லை. அவர்கட்குக் காட்டியதில்லை அவ்வளவே. பசியாற் சாகவில்லை, விதிமுடிந்து செத்தான் என்பவன் சமயவாதி. பட்டினிச் சாவில்லை: மெலிந்து வலுவின்றி நோயாய்ச் செத்தான் என்பவன் அரசியல்வாதி. எதிர்க்கட்சியாக இருக்கும்வரை பட்டினிச் சாவு என்று கொதித்துப் பேசுவார்கள். ஆள்கட்சியாகிவிட்டால் பரமபதம் அடைந்துவிட்டான் என்று குளிரப் பேசுவார்கள். (சினமாக) கட்டில் ஏறினால் ஒரு காரணம். இறங்கினால் ஒரு காரணம். (தன் மூக்குக் கண்ணாடியைக் கையில் ஏந்திக் கொண்டு) இது அறிவியற் காலம். ஐயமில்லை. கண் கெட்டால் ஆடியுண்டு. செவி கெட்டால் மாட்டியுண்டு. பல்போனால் கட்டு உண்டு. கால் போனால் கட்டையுண்டு. நெஞ்சுபோனால் மாற்று உண்டு. கெடுதல்களைச் செய்வதும் அறிவியற் காலம். சரிசெய்வதும் அறிவியற் காலமே. எவ்வளவோ கண்டு பிடிக்கிறார்களே, பழம்பசி இன்னும் நீங்கவில்லை. பசிமாற்ற வழியில்லையா என்றால், உண்டு; வயிற்றைப் பளிங்கு வயிறாக மாற்றிவிடலாம் என்பார்கள் போலிருக்கின்றது. (கேலியாக) போரை ஒழிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே அழி கருவிகளையும் அழி செலவுகளையும் மேலும் பெருக்கிக் கொண்டு போகும் இந்தப் போர் ஞானிகளுக்கு வறுமையின் மூலத்தைக்காண எங்கே நினைவு உண்டு. வறுமை ஒழியின் போர் ஒழியும் என்ற உள்ளொளியை இந்த ஞானிகள் உணர மாட்டார்கள். சோறு கொடுத்தால் பசி நீங்கும்; மருந்து கொடுத்தால். . . அதைக் கண்டு பிடித்தோம், இதைக் கண்டு பிடித்தோம் என்று பல தற்பெருமை உளறும் உணர்ச்சிமிக்க இந்த உலகத்தார்க்கு ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற தமிழறம் புரியாது. பண்ணன் வழங்கிய சோற்றுக் கொடை புரியாது. சாத்தன் எடுத்துக்காட்டிய பசியின் கொடுமை புரியாது. ஆபுத்திரனும் மணிமேகலையும் ஆற்றிய வயிற்றுத் தொண்டு புரியாது. பசி தீர்ப்பதே இரக்கம் என்று அருளிப்பாடிய இராமலிங்கம் புரியாது, இவர்கட்குப் புரிந்ததெல்லாம் போரே, போர்க்கருவிகளே, போர்க் காட்சிகளே. ஒரு நாட்டின் வரவு செலவு திட்டத்தில் எச்செலவு பெரிது என்று எண்ணி ஒருகணம் பார்த்தால், மக்கள் வறுமை ஏன் அன்று தொட்டு இன்றும், ஒருபொருளைக் கோடிக் கணக்காகப் பெருக்கக் கூடிய இக்காலத்தும் ஒழியவில்லை என்பது விளங்கும். போர்ச்சிந்தனை வறுமைச் சிந்தனையை விழுங்கிவிட்டது. அறிவியல் பழைய மனவியலுக்குத்தான் துணை போகிறது. இன்றும் வறுமை ஒழியவில்லை எனின், அறிவியலுக்கு வேறு சிறுமை வேண்டுமோ (சினமும் அழுகையும் கலந்த நிலையில்) இந்த மறந்தாங்கிகளைப் பற்றி என்ன சிந்தனை? உறக்கம் இன்றும் வராது. முன்போல் இனியும் வராது. என்றும் பழைய உறக்கம் இல்லை. துக்கம் புகுந்த கண்ணுக்குத் தூக்கம் ஏது? (மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு) ‘என்ன கவலை, தூங்காதிருக்கிறீர்கள். நம் இரு பெண்ணுக்கும் திருமணம் செய்தாயிற்றே’ என்று என் மனைவி இரண்டு நாட்க ளாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றாள். என் சிறு பேரன், ஐயா தொட்டிலில் தூங்கட்டும், நான் ஆராரோ தாலாட்டுகின்றேன் என்று குதலை செய்கிறான். மணிமேகலையை, அருட்பாவைப் படித்துத் திளைத்த பாசமோ சில நாட்களாகச் சில காட்சிகள் என் நெஞ்சைக் குத்துகின்றன. அய்யா பசிக்குதே அம்மா பசிக்குதே என்று அன்று ஒரு சிறுவன் இரவு இரண்டு மணிக்கு என் வீட்டின் முன் குரலிட்டான். அக்குரல் என் தூக்கத்தைக் கலைத்தது. கலைந்த தூக்கம் இன்னும் கூடவில்லை. அன்றொரு நாள் இருபது வயதுப் பெண் இரண்டு வயதுப் பெண் போல வாடி வற்றி நின்று பிச்சை கேட்பதைக் கேட்டேன். இன்னொரு நாள் எச்சில் இலைக்கு இளைஞனும் நாயும் போட்ட போட்டியில் நாய் தின்று போட்ட எலும்புத் துண்டையும் முருங்கைத் தோலையும் இளைஞன் கடித்துச் சுவைத்தான். ஒரு தாய் மிக்க பசி போலும். தன் குழந்தை எடுத்த மண்ணோடு கலந்த இட்டிலித் துண்டைக் குழாய் நீரிற் கழுவித் தானும் குழந்தையும் தின்று பக்கத்துத் தத்தி வந்த காக்கைக்கும் பிச்சுப் போட்டாள். ஒரு கிழவி சேலையை இழுத்துப் போர்த்தித் தெருவில் சுருண்டு படுத்துக்கிடந்தாள். வெடுவெடென ஆடினாள், கணகணவென முணுமுணுத்தாள். யார் என்று நான் கிட்டச் சென்று கேட்டபோது, என் குரல் அறிந்தவள்போல, இமை கவ்விய தன் கிழக்கண்ணைக் கட்டாயமாகத் திறந்து, அறமா அறமா, பசி பசி, பத்துநாள் பட்டினி என்றாள். படக்கென்று உயிர் பறந்தது. (தன் கண்ணிலிருந்து மளமளவென்று வடிந்த நீரை வழித்துக்கொண்டு சிறிது சிந்தனைசெய்து,) அறமா அறமா என்று இத்தாய்க் கிழவி சொல்லி இறந் தாளே. என் பெயரைச் சொன்னதாக நான் நினைக்கவில்லை. பசிப்பது, பட்டினி கிடக்கவிடுவது, பார்த்துக் கொண்டிருப்பது இவையெல்லாம் அறமா என்று உயிர்விடுமுன் உலகத்தை நோக்கிச் சொல்லிய குற்றமாக எனக்குப் படுகின்றது. இனி இக்குற்றத்தை இவ்வுலகிலிருந்து ஒழிக்கப் பாடுபடவேண்டும்; ஏனைத் தொண்டெல்லாம் போதும் என்ற ஓர் எண்ணம் என் உள்ளத்தில் பதிந்தது. என் ஆற்றலை ஒருவழிப்படுத்திப் பசி பட்டினி ஒழிக்கும் உயிர்த் தொண்டுக்கே என் வாழ்நாளை, மதிப்பை, புகழை எல்லாம் பணயம் வைக்கத் துணிந்தேன். (குளிர்ந்த குவளை நீரால் முகங்கழுவி, ஒருவாய் நீர் குடித்து வானத்து முழுமதியைப் பார்த்து,) இப்போது முதல் உண்ணா நோன்பு. இந்த மதிபோல் எல்லார் முகமும் மலர ஒளிர வேண்டுமெனின், வயிறு முழுவயிறாக இருக்கவேண்டும். மறை வயிறாக, பிறைவயிறாக இருந்தால் முகம் ஒளி வீசுமா? இறையொளி எல்லாப் பொருளிலும் நடுவயிற்றில் இருக்கின்றது. அவ்வொளியைப் பசி மூடி மறைக்கின்றது. பட்டினி மழுக்குகிறது. சோற்றால் பசி நீக்கினால் அந்த ஒளி வயிற்றிலிருந்து உடல் முழுவதும் பரவுகின்றது. பசி நீங்கினவனும் ஒளியுடையவன் ஆகிறான். காற்றும் நீரும் போல உணவு விலையின்றி எவ்வுயிர்க்கும் கிடைக்க வேண்டும். உணவு நாட்டுடைமையாக வேண்டும். உலக முழுவதுமே உணவு மக்கள் மயமாக வேண்டும். ஐக்கிய நாட்டவையின் குறிக்கோள் உணவுப் பொதுவுடைமை செய்வதாக இருத்தல் வேண்டும். கல்வி இலவசம், மருந்து இலவசம் என்பதனைக் காட்டிலும் உண்டி இலவசம் என்பதே நலவசம் ஆகும். உழைத்தவன் உழைக்காதவன் என்று பாராது எவ்வுயிர்க்கும் அளவான சத்தான நலமான அடிப்படையளவு - பசி நீக்கும் அளவுணவு வழங்க வேண்டும் என்பதுவே என் அளவான குறிக்கோள். ‘பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக’ என்ற இராமலிங்கமே என் உண்ணா நோன்பின் கொள்கை. ஒவ்வொர் அரசும் ஒவ்வொரு நாடும் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாக. இதன் வழிச் சிந்தனை செய்து வேண்டுமேல் சட்டம் இயற்றுமாக. பசி நீக்கத்தை அரசு தன் கடமையென அறிவிப்பதாகுக. யார் எந்த இடத்து வேண்டினும் வேண்டுவார் இந்த உணவு வாங்கிக் கொள்ளலாம் என்று பறைசாற்றுமாக. எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ என்று உலகப் பெருங்கவி கம்பன் ஞாலக் குறிக்கோள் அறைந்தான். என் குறிக்கோள் அவ்வளவு பெரிதில்லை. பசியளவில் இல்லார் ஆகுக. இதனையாவது இந்த அறிவியல் உலகம் இந்த மனித இனத்துக்கு வழங்கி வறுமை வழியைத் தூர்க்கக் கூடாதா? தீயணைக்கும் வண்டிகளைப் பெருக்கும் இந்த முன்னேற்ற உலகம் ஒருச்சாண் அளவில் கொதிக்கும் வயிற்றுத் தீயை அணைக்கும் சோற்று வண்டிகளை மணியடித்து நடமாட விடக்கூடாதா? இந்த அகத் தீ யணைந்தால் பல புறத் தீக்கள் எரியா என்பதனை இந்த நுட்பத் தொழிலுலகம் உணரும் நாள் எந்நாளோ? (மறுபடியும் ஒரு வாய் நீரைக் குடித்துக்கொண்டு) எதனையும் கலந்துசெய்யும் என் மனைவியிடம்கூட என் உண்ணா நோன்பைச் சொல்லவில்லை. நண்பர்களிடம் கலந்து கொள்ளவில்லை. கிழவி நல்லாள் உயிர்விடுமுன் என்னைக் கடைக்கணித்துப் பார்த்துச் சொல்லிய அறச்சொல் ஒரு நொடியில் என்னை உண்ணா நோன்பியாக்கி விட்டது, உறங்கா நோண்பியாக்கி விட்டது. மணிமேகலைக்குப் போல் எனக்கும் ஓர் அமுதசுரபி கிடைக்காதா? பலவற்றைக் கண்டுபிடிக்கும் தற்கால அறிஞர்குழாம் சில அமுதசுரபிகளை ஆக்கித்தாராதா? ஊர்தோறும் மின் சங்கு இருத்தல் போல ஒரு சோற்றுச் சுரபி இருக்கக் கூடாதா? சோறு வழங்கும் நேரத்தைச் சங்கூதி அறிவிக்கக் கூடாதா? இவையெல்லாம் இன்று கனவாக இருக்கலாம். சிலர் மனம் மாறினால் நாளை நனவாகலாம். (மூன்றாந் தடவை குவளையுள் எஞ்சிய நீரையெல்லாம் குடித்த பின்) உண்ணா நோன்பு உறுதி நோன்பு; இறுதி நோன் பாயினும் ஆகுக. என் உயிர்க்கு இறுதியானாலும் ஆகட்டும் பசி நோய்க்கு இறுதியானாலும் ஆகட்டும். (பணிவான குரலில்) நாட்டில் அரசியல் கட்சிகளில் செய்தித் தாள்களில் எல்லாம் ஒரு செல்வாக்கு எனக்கு உண்டு. சில நாளைக்கு முன் என் மணி விழாவில் இதனைக் காண முடிந்தது. அன்று வாழ்த்தியவர்கள் என் தொண்டு இன்னும் புதிய முறையில் பெருகவேண்டும் எனவும் நீங்கள் தலைமை யேற்று ஓரியக்கத்தை நடத்தினால் நாங்கள் கடைசி வரை பின்பற்றுவோம் எனவும் மனமாரக் கூறினர். உண்மைத் துன்பத்தை, இயல்பான நோயை உலகம் உணரவில்லை. ஒரு வகையில் நெருக்கடி கொண்டுவந்தால்தான் உணரும் உலகமாக இன்று வளர்ந்திருக்கிறது. ஏதோ ஒரு நிறுத்தம் என்பது இல்லாவிட்டால் உண்மைத் திசைப் பக்கம் உலகம் திரும்பாது. வீச்சம் தன் பக்கம் மூக்கை இழுப்பதுபோல நிறுத்தம் தன் பக்கம் அரசை இழுக்கிறது. உண்ணா நோன்பு ஒரு நிறுத்தம். ஏன்? எல்லாரும் உண்ணும் நோன்பு பெறவேண்டும் என்று. உணவு பொது என்ற என் குறிக்கோள் வெற்றி பெற இறைவனை வணங்குகின்றேன். (அருட்பாவைத் தொழுதல்) 2 (ஒரு கீற்றுக் கொட்டகை, பலவகைப் பசிக் காட்சிகள், பட்டினி மக்களின் படங்கள், வாடிமெலியும் விலங்குகளின் படங்கள். எச்சில் இலைப் போராட்டம். ஒரு எச்சில் இலையை வீசியெறியும்போது மக்களும், நாய்களும், காக்கைகளும், கோழிகளும், குஞ்சுகளும், பன்றிகளும் குட்டிகளும் ஓடி வருங் காட்சி. வீசியெறிந்த சில இலைகளை ஆவலோடு விரித்துப் பார்க்கும்போது ஒன்றும் இன்மை. அந்த இலைகளை மாடுகள் முட்டிக்கொண்டு தின்னும் காட்சி. குழாய் நீருக்கு அடியில் அழுக்கு நீரில் கலந்து கிடக்கும் உணவுப் பருக்கைகளை, உணவுத் துளிகளை விரலால் பொறுக்கி எடுத்து வாய் மடுக்கும் நிலை.கருவுற்ற ஏழைப் பெண் உயிர்க்க மாட்டாமல் மடியும் நிலை. கைம்பெண் பட்டினியால் தன் நான்கு குமரிப் பெண் மக்களொடு கிணற்றில் விழுந்து மடிந்த நிலை. வேலையில்லாத் தொழிலாளர்கள் தம் மனைவியொடும் குழந்தைகளொடும் ஊர்தோறும் இரந்து செல்லும் நிலை. வள்ளலார் திருநாளில் காந்தி நாளில் அழகப்பர் பிறந்த நாளில் குடமுழுக்கு விழாக்களில் இலவச உணவுப் பொட்டணத்துக்கு ஆயிரக் கணக்கான மக்கள் கூடித் தள்ளிக்கொண்டு முந்திக் கையேந்தும் நிலை. இவற்றைப் பற்றிய வரை படங்கள். பட்டினிச் சாவு பற்றிச் செய்தித் தாள்களில் வந்த பகுதிகள். ‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்பது போன்ற பொன் மொழிகள். உணவு பொது, நிலம் பொது, விளைவு பொது என்பது போன்ற கொள்கை அட்டைகள். உலகில் தோன்றிய பெரியவர்களின் படங்கள். அறக்கதிரின் உண்ணா நோன்பு ஐந்தாம் நாள். சிலர் அங்கு வந்த ஏழைகளுக்கு உணவு வழங்குகின்றனர். ஊர் காவலர்கள் சிலர் காவல் புரிகின்றனர். செய்தித்தாள் குறிப் பாளர் சிலரும் உள்ளனர். மாலை ஐந்து மணி யளவில் அறக்கதிர் பக்கத்து ஓங்கி வளர்ந்திருக்கும் ஆலமரத்துக்கு மெல்ல நடந்து தனியே செல்கின்றார்.) அறக்கதிர் (தன்னுள்) எதிர்பார்த்தபடி என் நோன்பு எல்லார் தம் கவனத்தையும் பலவிதமாக இழுத்திருக்கின்றது. உணவுக் கொள்கைக்கு ஒரு நோன்பா என்று உலக முழுவதும் ஒரு சிறு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, வாக்குரிமை தேடுபவன் இல்லை என்று அறிந்த சில தாள்கள் என் நோக்கத்தை அரசியல் நோக்கமாகத் திரித்துக் கூறவில்லை என்பது மகிழ்வுக்கு உரியது. ஐ.நா. அவையிலும் வேறு சில சட்டமன்றங் களிலும் உணவு பொது என்ற கருத்துப்பற்றிச் சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். எந்தக் கொள்கைக்கும் வழக்கம் போல் இசையும் வசையும் இருக்கத்தானே செய்யும். இந்தக் கொள்கைக்கு இசைவு மிகுதி இருக்குமென எதிர்பார்த்தேன். எதிர்ப்பு மிகுவதும் வளர்வதும் ஒரு வழிக்கு நல்லது. உலகக் கவனம் இன்னும் ஏழைகள் பக்கம் மிகும். பலர் சிந்தனை செய்யவும் எழுதவும் தூண்டவும் முற்படுவர். இதுபற்றி இசை வியக்கமும் எதிர்ப்பியக்கமும் பெருகவேண்டும். வரலாறு காணாத இந்த ஏழை இயக்கத்துக்கு அப்போது தான் வரலாற்று முடிவு ஏற்படும். என் கொள்கையை எதிர்ப்பவர்களைத் தீயவர்கள் என்று நான் எண்ணவில்லை. ஏழைக்கு எதிரிகளென்று சிறிதும் சொல்லவில்லை. தாங்கள் தழைத்துக் கொழுத்து வாழ நினைக்கும் தன்னலக்காரர் என்று கருதவேயில்லை. ஏழைமை எல்லார்க்கும் பொது. இன்று நாம் செல்வராக இருக்கலாம். நம் வழியினர் என்றும் செல்வமாக இருப்பர் என்று எண்ண மாட்டோம். நிலையாமையையும் செல்வமும் வறுமையும் சகடக்கால் போல வருவதையும் கண்கூடாக நாம் கண்டிருக் கின்றோம். போர்க்காலத்தில், வெள்ளக் காலத்தில், வறட்சிக் காலத்தில், பிரிவினைக் காலத்தில், தேர்தற் காலத்தில், வேலை நிறுத்தக் காலத்தில், நாட்டுடைமைச் சட்டத்தில் செல்வநிலை எவ்வளவு மாற்றம் திடீரென அடைகிறது. ஆதலின் எந்நிலை யிலும் யார்க்கும் அடிப்படை நலமான உணவுடைமை இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. திரைப்படம் வயது வந்தோர்க்கே என்று குறிப்பிடுவது போல இன்ன நிலையினர்க்கு உணவு இலவசம் என்று கூறலாம் என்பது சிலர் கருத்து. பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகட்கும் கருவுற்றவர்கட்கும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கட்கும் வேலை யோய்வு பெற்றவர்கட்கும் உழைக்கும் உறுப்பிலிகட்கும் உணவு இலவசமாகலாம் என்று சிலர் வரம்பு கூறுகின்றனர். இன்னும் சிலர் என் கொள்கையை ஏற்றுக்கொண்டு உடையும் இலவசம் ஆக்கவேண்டும் என்று வாதாடுகின்றனர். இதைக் காட்டிலும் வேறு சிலர் உணவு உடை மருந்து கல்வி இவை எல்லாம் குறைந்த அடிப்படையளவு இலவசமாக நாடே வழங்கவேண்டும் என்று கருத்துரைக் கின்றனர். இவ்வளவெல்லாம் இலவசமாக வேண்டும் என்று நான் சொல்லவோ வாதிடவோ இன்றைய நிலையில் முன் வரவில்லை. பசியளவே என் இலவசம். என் கொள்கைக்குக் கடுமையான எதிர்ப்புக்கள் நாலா புறமும் கிளம்பியுள்ளன. காற்றும் நீரும் போல உணவு பொதுவாக வேண்டுமென்றால் காற்றும் நீரும் இயற்கை. பழங் கற்காலம் போலப் பச்சைக் காய்கனி கிழங்குகளை மக்கள் தின்ப தாக இருந்தால் நிலை வேறு. இன்று தின்பதே தொழிலாகக் கலையாகப் பெருகியிருக்கின்றது. உணவு இலவசம் என்றால் இலவசமாக யார் முன் வந்து உழவு வேலை செய்வர்? இந்தக் கொள்கையைக் கொண்டு வந்தால் உழைக்காது உண்டுவிட்டு எல்லாரும் திண்ணைச் சோம்பேறியாகி விடுவார்கள். உழைப்பைக் கட்டாயப்படுத்தினாலல்லது உணவைக் கட்டண மின்றி வழங்க முடியாது. இல்லாமையால் பலர். பட்டினி கிடக்கவில்லை. உடை திரை நடை கலை ஊதல் குடித்தல் முதலான ஆடம்பரங்கட்கு முதன்மையாகச் செலவழித்து விட்டு வயிற்றைக் கழுவிப் போடுபவரே பலர். வேண்டாத கெட்ட இனவாயப் பழக்க வழக்கங்கள் மாறினாலல்லது பசியும் பட்டினியும் ஒழியா; தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். இப்போது ஊனமுற்றோர்க்கும் கருப்பிணிகட்கும் குழந்தை கட்கும் இலவசவுணவு வழங்கித் தானே வருகின்றோம். இந்த நிலையைக் கடைப்பிடித்தாற்போதும். எல்லார்க்கும் இலவச வுணவு என்ற அரசுக் கோட்பாடு அரசு என்ற ஓரமைப்புக்கு உலைவைப்பதாகும். உணவைப் பொதுவாக்கினால் எல்லாவற் றையும் பொதுவாக்கவேண்டும் என்ற கருத்தும் கிளர்ச்சியும் ஏற்படும். இவ்வாறெல்லாம் பொருளாதார அறிஞர்களும் தாளாளர்களும் இனப் பெருமக்களும் எதிர்முகம் காட்டு கின்றனர். (சிறிது இங்கும் அங்குமாக நடந்துகொண்டு இரண் டொரு செய்தித்தாள்களையும் பெரியவர் தம் கருத்துரை களையும் திரும்பத் திரும்பப் படித்து,) உணவு இலவசமானால் யாரும் உழைக்கமாட்டார்கள் என்ற கருத்தைச் சிந்தித்துப் பார்த்தேன். மனித வாழ்வின் நோக்கம் உண்பது அன்று. சிறிய எளிய மனிதனுக்குக் கூட எவ்வளவோ கடமைகள் உள. பல்லாண்டு உழைக்காது உண்பதற்கு உரிய செல்வம் பலரிடம் இருக்கிறது; ஏன் மேலும் உழைக்கின்றனர்? ஒருவனுக்கு முன்னோர் சொத்து நிரம்ப உண்டு. ஏன் மேலும் முயல்கின்றான்? அல்லும் பகலும் உழைக்கின்ற பல்கோடி மாந்தரெல்லாம் தம் வயிற்றுக்கே உழைக்கின்றனர் என்பது உண்மையில்லை. உண்டு உடுத்து இங்கு இருப்பதை மணிவாசகர் விரும்பவில்லையே. ஒருவன் நூறாண்டு வாழ்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு வாழ்நாள் முழுதும் இருநூறு மூடை அரிசி போதுமே. கேவலம் வயிற்றளவுக்கு என்றால் - பசி நீக்கும் அளவுக்கென்றால் மாதம் முப்பது உருபாய் போதுமே. உண்பது மனிதப் பிறவியின் நோக்கம் என்றால் ஏனையுயிர்கள் எல்லாம் மனிதவுயிரினும் மேலானவை. இதோ எறும்புக் கூட்டங்கள். இதோ குருவிக் கூட்டங்கள். இதோ வானத்துப் புறாக் கூட்டங்கள். எவ்வளவு சிறந்தவை. இவைபோல் இயற்கையாக மனிதக் கூட்டம் வாழ்ந்திருந்தால் என் கொள்கைக்கு இடமில்லை. காட்டு மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுகின்றார்களா? காட்டுப் பசுக்களுக்குப் புல் வைக்கின்றார்களா? காட்டுக் கோழிகளுக்குத் தானியம் போடுகின்றார்களா? காட்டுக் குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கின்றார்களா? இயற்கையோடு இருக்கும் வரை இரக்கம் தேவையில்லை. இயற்கை முறையில் பசி நீங்கும். வீட்டுச் செடிகளுக்குக் குழாய் வைத்து நீர் பாய்ச்சுகின்றோம். கூண்டுக் கிளிகளுக்குத் தானியம் கொடுக்கிறோம். கம்பிச் சிங்கத்துக்கும் புலிக்கும் இரை வைக்கின்றோம். நாம் கடமை யுணர்ந்து இறைச்சி யுணவு வைக்காவிட்டால் சிங்கமும் புலியும் என் செய்யும்? இறந்துபடும். இடம் பெயரப் பெயரச் செயற்கை பெருகப் பெருக உழைக்கும்வாய்ப்புக் குறைகின்றது. காட்டு மனிதன் இன்று பெருங்கட்டுலகில் ஒரு சிறிய உறுப்பாக மறைந்து தேய்ந்து ஆற்றலின்றி நிற்கின்றான்; தன் உழைப்புக்குரிய வாய்ப்புக்களை இழந்து நிற்கின்றான். வாய்ப்புக்களைத் தானே தேடிக் கொள்ளலாம் என்றால் மனிதக்களம் பாலையாக இருக்கின்றது. ஆதலின் இலவசவுணவுக் கொள்கையை அறிவுக் கண்ணாற் பார்க்கக் கூடாது; இரக்கக் கண்ணால், உயிர்க்கண்ணால், மன்பதைக் கண்ணால் பார்க்கவேண்டும். எவ்வளவோ கடமைகளைச் செய்யப் பிறந்தவன் மனிதன். அவனைக் கேவலம் உணவுக்கே அலைந்து திரியும்படி மன்னாயம் அலைக்கழிக் கின்றது. ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள். பிறந்த நாள் தொட்டுத் தகப்பன் அக்குழந்தைகளை உணவுக்கே அலைய விடுவானானால் அவற்றின் அறிவும் பண்பும் என்னாகும்? நல்ல குடும்பம் என்பது குழந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளைக் கொடுத்து அறிவையும் பண்பையும் வளர்ப்பது. நல்ல மன்னாயம் என்பது தன் மக்களைப் பசியால் வாடவிடாத தரம் உடையது. பிறந்த மக்கட்கெல்லாம் அடிப்படையுணவுத் தரத்தை இலவசமாக வழங்கும் பொறுப்பு செயற்கை பெருகி வரும் இக்காலத்து நல்லரசின் கடன். இக்கொள்கை சரி என்பதே என் துணிபு. (சிறிது ஓரிடத்தில் அமர்ந்து) தெளிவு செய்து கொள்ளவே இத்தனியிடம் வந்தேன். எதிர்ப்புக்கள் ஓரளவு என் மனத்தைக குழப்பிவிட்டன. நேரில் வந்து வாதாடிய சில பெருமக்களும் என் கொள்கையின் நலந் தீங்குகளைச் சொல்லக் கேட்டேன். இந்நிலையில் உண்ணா நோன்பு தொடரலாமா? விடலாமா? என்ற ஐயம்கூட மெல்ல அரும்பிற்று. இருந்துவிட்டதற்காக வீம்பு பாராட்டக் கூடாது. நிந்தனைக்காக ஒரு சிந்தனையை விடவும் கூடாது. (அண்மைக் கிணற்று நீரில் முகத்தைக் கழுவிக் கொண்டு) என் கொள்கையில் மேலும் உறுதி கொள்கிறேன். உணவு இலவசம் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளும்வரை உடல் எவ்வளவு மெலியினும் தோல் எவ்வளவு சுருங்கினும், நெஞ்சு எவ்வளவு துடிப்பினும், சோர்வு எவ்வளவு மிகினும், ஆவி எவ்வளவு குறையினும், நண்பர்கள் சுற்றத்தார்களும் எவ்வளவு வேண்டினும், உண்ணா நோன்பினை உயிர் நோன்பாக உலக நோன்பாகத் தொடர்ந்து கடைப்பிடிப்பேன். (நெஞ்சைத் தட்டிக் கொடுத்து) அறுபதாண்டுத் துணை நெஞ்சே! தளராதே, தயங்காதே, தடுமாறாதே. இரக்கத்தின் பொருட்டு இற. (இவ்வாறு புதுத்தெளிவும் துணிவும் நம்பிக்கையும் பெற்றுக் கீற்றுக் கொட்டகைக்கு நடந்தார் அறக்கதிர்) (உண்ணா நோன்பு பத்தாம் நாள். அறக்கதிரொடு அவர் மனைவியும் நோன்பு கொண்டாள். இன்னும் நாற்பது ஆடவர்களும் இருபது பெண்களும் தூய வெள்ளுடையணிந்து உடன் நோன்பு கொண்டனர். குளிர்ந்த நீர்ப்பானைகள் எலுமிச்சம் பழச்சாற்றுக் குவளைகள் காந்தி உண்ணா நோன்பு கொண்ட காலத்து எடுத்த படங்கள். ஆபுத்திரன் உயிர்விடும் படம். விடுதலைக்கும் சமயத்துக்கும் மொழிக்கும் உயிர் துறந்தோரின் படங்கள். செய்தித்தாள்களில் வந்த அறக்கதிரின் உண்ணா நோன்புப் படங்கள். பசிக் கொடுமை களைக் காட்டும் செய்திச் சுருட்படங்கள். அறக்கதிர் உண்ணா நோன்பை விட வேண்டும் என்ற நன்னோக்கத்தோடு உண்ணா நோன்பு கொண்ட சில அன்பர்கள். எல்லாரையும் சந்து செய் விக்க வந்த சில பெரியவர்கள். கூட்டம் பெருகிய இந்நிலையில் ஒருபுறம் சில கடைகள். ஏழையின் படங்கள் விற்பவர்கள். அங்கு வந்த ஏழைகளைப் படம் பிடிக்கும் பிற நாட்டவர்கள். வழக்கம்போல மாலை ஐந்து மணிக்கு ஆலமரம் வரை உலவத் தனியே சென்றார். உடற்சோர்வால் அங்கிருந்த ஒரு கற்பலகையில் சாய்வாக அமர்ந்தார். சிறிதுநேரம் ஒருமை கொண்டபின்) அறக்கதிர் : (தன்னுள்) உண்ணா நோன்பு கொள்பவர் பெரியவர்; அவரினும் பெரியவர் பிறருடைய வசவுச் சொல்லைக் கேட்டுப் பொறுப்பவர் என்றார் தெய்வப் புலவர். என் நோன்பு பற்றிக் கேவலமாகப் பேசுவதையும் எழுதுவதையும் பார்க்கின்றேன். இதுவரை என்னை மதித்த தாள்கள்கூட நான் உண்ணா நோன்போடு உடல் பருத்திருப்பதாகவும் என் நோன்பினால் உண்ணாதே மக்கள் எல்லாம் ஒரே நாளில் பருத்துவிட்டதாகவும் கேலிச் சித்திரங்கள் தீட்டியுள்ளன. ஊர் காவலரைக் கொண்டு என்னைச் சிறைப்படுத்த வேண்டும் எனவும் நாட்டில் மக்களைத் தூண்டிச் சட்டவொழுக்கங் களைக் கெடுக்கிறேன் எனவும் அறிவுறுத்துகின்றன. ஆம். என் நோன்பு தூய நோன்புதான். எனினும் எதிர்க் கட்சிகள் அரசைத் தாக்குதற்கு என்னைப் பயன்படுத்திக கொள்கின்றன. என் சாவைக்கூடச் சில எதிர்பார்க்கின்றன என்று சொல்லலாம். வானொலிகள் என் நாடித் துடிப்பை மருத்துவர்கள் சோதனை செய்வதாகவும் இன்னும் கெடுதலில்லை, நன்றாக உள்ளதாக வும் ஒலிக்கின்றன. என் கொள்கைக்கு ஊற்றமாகவோ, அரசுக்கு இடையூறு விளைவிக்க வேண்டியோ பலர் தொடருண்ணா நோன்பு சில மணி நேர நோன்பு கொள்ளுகின்றனர். (சிரிப்பாக) இப்படி எல்லாருமே நோன்பிருந்தால் என் கொள்கைக்கு இடமிருக்காது. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் படிப்பு நிறுத்தம் செய்தும், ஊர்தி நிறுத்தம் கொளுத்தம் செய்தும் காலவரையற்ற உண்ணா நோன்பு கொள்வதாகத் தெரிகிறேன். இதற்கிடையில் ஒரு மாணவன் இறந்தான் என்ற பொதுவலர் பரவியிருக்கின்றது. என்னைத் தவிர யாரும் உண்ணா நோன்பு இருக்க வேண்டா என்று கேட்டுக் கொண்டேன். இராமலிங்கர் சொன்னது போலக் கேட்பாரில்லை. இவ்வளவு பெருங் கும்பல் எனக்குப் பிடிக்கவில்லை. நான் நோன்பிருக்கும் இடம் கடையும் கடைத்தெருவும் ஆயிற்று. அந்த மாணவன் இந்தச் சமயத்தில் இறந்தது உண்மையானால் அவன் குடும்பம் என்னைப் பழிதூற்றும். எதிர்க் கட்சிகள் அரசை வழக்குக்கு இழுக்கும். என் உண்ணா நோன்பு நான் எண்ணா நோன்பாய்விடும். (சிறிது நேரம் வாய்வாளாது இருந்து) இவையெல்லாம் உடன் வரக்கூடிய நிகழ்ச்சிகள் என்பதை அறிந்தவனே; என் ஏற்பாடல்ல. என் மனச் சான்றின்படி நடப்பது என் கடமை. நெஞ்சே! நீ கொஞ்சம் தடுமாறத் தொடங்குகின்றாய். உறுதி குலையப் பார்க்கின்றாய். ஏன் இவ்வாறு நெஞ்சைப் பழிக்க வேண்டும்? ஒத்துழைத்தால் புகழ்வது, ஒத்துழைக்காவிட்டால் இகழ்வதா? நெஞ்சுக்குக் குருதி பாய்ந்தால் தானே உறுதி இருக் கும். ஆம் எப்போதும் மனிதன் மறு சிந்தனைக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும். ஒன்றைத் திண்மையாகக் கடைப்பிடிப்பதில் தவறில்லை. அத் திண்மை நெஞ்சத் திண்மையாக இருக்க வேண்டுமேயன்றி அறிவுத் திண்மையாக இருக்கக் கூடாது. அறிவுத் திண்மை என்பது மடமை. ஆலை அரைத்துக் கொண்டி ருப்பதுபோல, ஒவ்வொரு நினைவையும் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு கருத்தையும்ஒவ்வொரு சொல்லையும் சிந்தனைப் புடம் செய்யும் புத்தொளியும் புதுவேகமும் புத்துணர்வும் அறிவுக்கு இடையறாது ஓடிக் கொண்டிருக்க வேண்டும். சிந்தனை இழந்தவன் செயல் இழந்தவன். (மார்பின்மேல் கைவைத்து) நெஞ்சே! நீ திண்மைப் படு. (தலைமேற் கை வைத்து) அறிவே! நீ சிந்தனைப்படு. மீண்டும் எண்ணுவதில் என்ன தவறு? காந்தியடிகள் உண்ணா நோன்பு இருந்த போதெல்லாம் நான் இம்முறையை உடன்பட்டதில்லை. இது குழந்தை முறை என்று கருதியவன். ஒரு குடும்பத்துக்கு ஓர் ஆண் குழந்தை. தந்தை வெளியூர் செல்லும் போது தானும் வருவதாக உணவு மறுத்துப் பிடிவாதம் செய்கின்றது. இடையே தாய் பரிந்து பேசவே, தந்தை குழந்தையை அழைத்துச் செல்ல இசைகின்றான். இசையாவிடின் தாயும் உண்ணா நோன்பு இருப்பதாகக் கொள்வோம். எனவே, உண்ணா நோன்பு என்பது ஒரு கட்டாய முறை; பிடிவாத முறை; இன்னும் என்னவெனின் மதிப்பான ஓருயிர் மேற்கொள்ளும் முறை. இன்னும் கூறப்போனால் மதிப்பான ஓருயிர் தன்னை மதிக்கும் பிறவுயிர்களை உயிரச்சம் காட்டி வணக்கும் கடும் நோன்பே உண்ணா நோன்பு. காந்தியடிகள் இன்றி வேறொரு எளிய உயிர் அரிசன இயக்கத்துக்கு உணவில் நோன்பு மேற் கொண்டால் பரவுமா, பாராட்டப்படுமா? காந்தியின் உயிர் நல்லுயிர், பல தொண்டுகள் செய்த பேருயிர், பல தொண்டுகள் இன்னும் செய்ய வல்ல ஆருயிர், உலகம் அறிந்த இந்திய உயிர். இத்துணை மதிப்புடை உயிராக இருந்தும், அவர் சொன்ன அளவில் அந்நற் சொல்லை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டு நடக்க முற்பட்டார்களா? இல்லையே. சொல்லால் வணங்காத வர்களை உயிரால் உண்ணா நோன்பால் வணக்க நினைத்தார் காந்தி. அவர் உயிர் மதிப்புடையது, அதனை ஒழியவிட்டால் உலகப் பழி இந்திய வரலாற்றில் படியும். அவ்வுயிர் மாயின் உயிர்க் கூட்டங்கள் மாயும் என்று தலைவர்கள் அறிவு பாராது எதிர்கால அச்சத்தால் இசைந்தனர். உண்ணா நோன்பின் மதிப்பு நோன்பு கொள்ளும் உயிரின் வாழ்வு மதிப்பாகும். காந்தியடிகளே உண்ணா நோன்பையும் தம்மையும் மதிக்காத இட்டலர் ஆட்சியில் இவ்வாறு இருந்தால் மதிக்கப்படுவாரா? எனவே உண்ணா நோன்பின் மதிப்பு கொள்ளும் உயிரை மட்டும் பொறுத்ததில்லை; யார் முன் கொள்ளப்படுகின்றது என்ற மக்கட் கூட்டத்தையும் பொறுத்தது. எனவே பட்டினி நோன்பு என்பது தன் மதிப்பை அதனை மதிப்பவர் முன் வைத்துச் நான் சொல்வதைச் செய்கின்றாயா? அல்லது என்னைச் சாகவிட்ட பழியை ஏற்றுக் கொள்கிறாயா? என்று அச்சுறுத்தும் கொடு நோன்பாகும். (சிறிது உரத்த குரலில்) கையில் வேல் வைத்திருக்கும் திருடன் ‘மடியில் இருப்பதை எடு, என் தாழ்ந்த கையில் இடு’ என்று பணிந்து கேட்பதற்கும், மதிப்புடைய ஓருயிர் உண்ணா நோன்பு என்ற அச்சத்தவம் கொள்வதற்கும் மிரட்டல் அளவில் வேறுபாடு இல்லை. காந்தீயம் என்பது, யான் அறிந்தவரை, நோக்கமும் இன் முறையாக இருக்கவேண்டும்; அதனை நிறைவேற்றக் கடைப் பிடிக்கும் நெறியும் இன் முறையாக இருக்கவேண்டும். அவ்வாறாகப் பெருமகன் காந்தி உண்ணா நோன்பு கொண்ட நெறி பொருந்துமா? பிறர் நிறைவேற்ற வேண்டிய காரியங் களுக்காக ஊண்மறு நோன்பு கொள்வது வன்முறை யாகாதா? என்ற ஐயம் இப்போது - நான் கடு நோன்பு கொண்டிருக்கும் இப்போது பெரிதாகின்றது. பசி நிறுத்தம் என்பதும் தன்னுயிர் என்பதற்காகப் பட்டினியால் வருத்துதலுங் கூடத் தற்கொலை யாகும் என்று சிந்திக்கின்றேன். ‘எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு’ என்பது தன்னுயிர்க்கும் பொருந்தும். (ஆலமரத்தின் கீழ் ஒரு பக்கத்து இரு பிச்சைக்காரர்கள் பேசிக் கொள்வது: பிச்சை எடுத்தாயினும் உயிரைக் காப்பாற்ற வேண்டும். மானம் கீனம் என்று இந்த உயிரை விடக்கூடாது. எவ்வளவு பிச்சை எடுத்திருக்கின்றோம். எப்படியாவது உழைத்து அந்தப் பிச்சைக்கடனை அடைக்கவேண்டும் எந்தக் கடமை செய்யவும் உயிரை வைத்துக்கொள்ள வேண்டும். யாரோ ஒரு அய்யா நமக்காகப் பட்டினிகிடக்கிறாராம். (அறக்கதிர் கூர்ந்து கேட்டல்) எவ்வளவு நல்லவர். காந்திக்கு அப்புறம் இவர்தான். இவ்வாறு ஒருவன் சொல்ல, இன்னொருவன் சொல்வது, ஐயோ பாவம்! இப்படி இருந்தால் இன்னும் இரண்டு மூன்று நாளில் செத்துப்போவார். காந்தியின் காலம் இல்லை இது. இனி உள்ள பிச்சையும் இவரால் கிடைக்காமற் போனாலும் போய்விடும். (ஒருபிடி சோற்றைத் தின்றுகொண்டு, உயிரை வைத்துக்கொண்டு தன்னாலே முடிந்த அளவு உழைத்து நாலு ஏழைகளைக் காப்பாற்றி வழி காட்டுவாரா? உள்ள உயிரையும் விட்டு இவர் குடும்பத்தையும் நம்மோடு சேர்ப்பாரா? உயிர் இருந்தால் தானே கொள்கையையாவது சொல்லிக் கொண்டி ருக்கலாம்; நினைவுபடுத்திக் கொண்டிருக்கலாம். ஏதாவது ஒரு தீக்குச்சியில் திரி பற்றிக்கொள்ளும். பெட்டியைத் தூக்கி யெறிந்துவிட்டால் குச்சியை எங்கே உரசுவது? தெரியாத பெரிய வர். என்னிடம் வந்து கேட்டால் சொல்லுவேன். பெரியவர்கள் ஏழை முகம் பார்க்க மாட்டார்கள். எட்டியிருப் பார்கள்.) அறக்கதிர் : (அவ்விருவரும் உடனே எழுந்து செல்வதைப் பார்த்து) இறைவன் விடுத்த தூதுவர்களோ? சோற்றைக் கிளறுவது போல என் சிந்தனையைக் கிளறிவிட்டார்களே. இதுவரை எந்நூலிலும் படிக்காத கருத்தை, யாரிடமும் கேட்டிராத கருத்தைச் சொல்ல வந்தவர்கள் போல் சொல்லி, சொல்லியதும் சுற்றுமுற்றும் பாராது வேகமாகப் போய்விட்டார்களே. என் கொள்கையை அவர்கள் மறுக்கவில்லை. நான் உயிர் விடுவ தையே அவர்கள் மறுக்கின்றார்கள். என் கொள்கையை உயிர் வைத்துக் கொண்டு ஓரளவாவது நானே நிறைவேற்றலாமே என்று வழி சொல்லுகின்றார்கள். நாட்டில் உணவு பொது என்று பெரும்பறை சாற்றுவதைவிட என் வீட்டில் உணவு பொது என்று சிறுமணி அடிக்கலாம். கொள்கை முழுமை அளவில் நடைபெறுகின்றதா? துளியளவில் நடைபெறு கின்றதா என்று அளவு பார்ப்பது தவறுதான். சிறுதுளி பெருவெள்ளம். சிறு கொடை பெரும் பொது. கொலை என்பது காரியத்துக்கு எதிராக இருப்பவனை ஒழிப்பது. தற்கொலை என்பது காரியத்துக்கு எதிராக இருப்ப வனைப் பழிப்பது. உண்ணா நோன்பு என்பது தற்கொலையா? பலரறியச் செய்துகொள்ளும் தற்கொலையே. உண்ணா நோன்பில் கொள்கை நோக்கத்தோடு புகழீட்டும் நோக்கமும் உண்டு. உயிரை ஏனை யுயிர்கள் போல இறுதியில் இயல்பாகப் போகவிடாமல், புகழாகப் போக்கிக் கொள்ளும் வேட்கை உண்ணா நோன்பில் உண்டு. நிறைவேற்றவில்லை என்று பிறர்மேல் பழி சுமத்தும் உட்கருத்தும் அதில் உண்டு. எனக்குத் தெளிவாகப்படுகின்றது; ஒரு முறை உண்ணா நோன்பு கொண்டபின் உண்மை தெளிவாகப்படுகின்றது. ஒருவன் தன் கொள்கையைத்தான் நிறைவேற்ற வேண்டும். தான் உயிரோடு இருந்து நிறைவேற்றப் பார்க்கவேண்டும். இருந்து உழைத்து இன்னும் பலரை இணைத்து நிறைவேற்றப் பார்க்கவேண்டும். என்ன ஆசை உண்ணா நோன்பு இருப்பவனுக்கு? தன் கொள்கையைப் பிறர் நிறைவேற்றி வைக்கவேண்டுமாம். தன் முன்னே தான் பார்க்கத் தன் காலத்திலேயே நிறைவேற்றி வைக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர்கள் முன்னே உயிர்விடு வானாம். மெல்ல மெல்ல அணு அணுவாகத் தற்கொலை செய்துகொண்ட அவனுடலைப் பாராட்டி அடக்கம் செய்ய வேண்டுமாம். செயலாசையும் புகழாசையும் பழியாசையும் கூடிய தன்முனைப்பே உண்ணா நோன்பு. தனக்கு மாறாக இருப்பவர்களோடு கலந்து உரையாடிக் கோவூர்கிழாரும் கிசிங்கரும் செய்ததுபோல மனமாற்றம் செய்ய முயலவேண்டும். மனமாற்றத்துக்கு இருந்து போராட வேண்டுமேயன்றி உங்களை விட்டுப் புறப்படுவேன் என்று உயிராடக்கூடாது. (பணிவான குரலில்) முன்னைப் பெரியவர்களை நான் பழிக்கவில்லை. ஆனால் பின்னைப் பெரியவர்களுக்குப் பழியாக வழிகாட்ட விரும்பவில்லை. முன்பு ஊண் மறுநோன்பு அரிதாக எங்கோ இருந்தது. தெய்வ உணர்வோடு கலந்திருந்தது. இன்றோ அந்நோன்பு தொழிற்கருவியாயிற்று, எவர்க்கும் தீடீர்ப்படையா யிற்று, கூட்டாயுதம் ஆயிற்று. சுருங்கச் சொல்லின் தேசிய மயமாயிற்று. (சிறிதுநேரம் ஒருமையுடன் இறைவன் திருவடியை நினைந்து) பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப் பார் முகம் பார்த்தி ரங்கும் பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும் பதியும்நன் னிதியும் உணர்வும் சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும் நோய்த் தீமையொரு சற்றும் அணுகாத் திறமும் மெய்த் திடமும்நல் லிடமும் எனக்கு அருள்வாய். நெஞ்சே! உண்ணா நோன்பினைப் பத்து நாள் இருந்து இவ்வளவு கூட்டத்தையும் கூட்டியபின், விட்டால் உலகம் என்ன நினைக்கும் என்று தடுமாறுகின்றாய். இகழ்ந்த தாள்கள் கேலி செய்யும், புகழ்ந்த தாள்கள் கேலியொடு கூடிக்கொள்ளும் என்று கலங்குகின்றாய். இன்னொரு நாள் கொள்கைக்குப் போராடினால் ஊர் சிரிக்காதா என்று உள்ளுகிறாய். தெரிந்துகொள் நெஞ்சே! உணவு பொது என்ற கொள்கை மாறவில்லை. கொள்கையை நிறைவேற்றும் முறையில் மாறுகின்றேன். எவ்வுயிர்க்கும் உணவு இலவசம் என்று ஒரு உண்ணா நோன்பும் ஒரு வகைத் தற்கொலையே; கொடு நோன்பே; வன்முறையே என்ற ஓர் அரிய உண்மையையும் வெளியிடுகின்றேன். அரசியலிலும் மக்களியலிலும் தனியிய லிலும் கொள்கைப் புரட்சியும் முறைப் புரட்சியும் ஏற்படும் என்பது என் உள்ளுணர்வு. உணர்வதோடு நிற்கவில்லை. உயிரோடு இருந்து என் வாழ்வில் நடத்திக் காட்டப் புத்துறுதி யும் கொள்கின்றேன். நெஞ்சே! ஏன் இன்னும் தடுமாற்றம் நீங்காதிருக்கின்றாய். இகழ்ச்சிக்காக, கண்ட உண்மையை மறைக்க வேண்டா. கௌதமர் உலகப் பெரியவருள் எவ்வளவு பெரியவர். மெய்ப்பொருளைக் காண உருவேலா வனத்திற் கடுந்தவஞ் செய்தார். மாதம் இருமுறை உண்டார். பசுஞ்சாணத்தையும் தின்றார். உடலுறுப்புக்கள் நாணற் குச்சிகள் ஆயின. முதுகெலும்புகள் முடிச்சுக்கள் ஆயின. விலா வெலும்புகள் பின்னிட்ட கம்பிகள் ஆயின. கண் குழிகள் நீரில் கிணற்றின் ஆழம் போலாயின. உடலைத் தடவும்போது மயிர்கள் செதிள்கள் போல் உதிர்ந்தன. பிணத்துணிகளையும் குப்பைத் துணிகளையும் உதிர்ந்த இறகுகளையும் தம் பொன் மேனியில் அணிந்தார். ஆறாண்டு உண்ணாதும் உறங்காதும் உடுத்தாதும் கடுந்தவம் புரிந்த சித்தார்த்தர், ‘உடல் வலியை இழந்தவன் உள்ளொளி பெறான்’ என்ற உண்மையைத் தெளிந்தார். போதி மரத்தடியில் சுசாதை அளித்த இனிய பாற்பொங்கலை வாங்கியுண்டு ஞானம் பெற்றார். ஏதோ பெருங் குற்றம் செய்தவர்போல உணவுண்டார் என்பது கேட்டு மாணாக்கர்கள் அவரை வெறுத்தனர். காலப்போக்கில் பிறந்த நாடும் பரந்த உலகமும் அவரைப் பின்பற்றின. நன்னெஞ்சே! உண்மைக்காக முறையை மாற்றிக் கொள்ளலாம் என்பது புத்த ஞாயிறு காட்டிய அறிவு வழி. ஆறாண்டு நோன்பிருந்தவரே அதனை விட்டார் என்றால் நம் பத்து நாள் நோன்பு எம்மாத்திரம்! உண்மையைப் புகழ் இகழ் என்ற துலாக்கோலில் நிறுத்துப் பார்க்கக் கூடாது. உண்மை ஒரே நிறை, ஒரே எடை. அதனை நிறுப்பதற்கு வேறோர் எடைக்கல் இல்லை. கண்ணே! பார். அதோ அவ்விரு தூதுவரும் திரும்ப வருகின்றனர். கையே! கூப்பி உணவு பெறுவாய். வாயே! உயிரெல்லாம் உண்பதாக என்று சொல்லி அந்த அமுதத்தை உண்பாய். ஆலமரமே! நீ என் போதிமரம். 7. ஐயத்தினால் (திசையனுக்கு வயது முப்பது; அரசியல் இளங்கலைப் பட்டம் பெற்றவன். கவிபாடும் ஆற்றலான், ஓரளவு மேடை பேசவும் வல்லவன். மனைவி பொன்னி வயது இருபத்தைந்து. பொருளியல் இளங்கலைப் பட்டத்தவள், இசைபாடி, பெற்றோரிலி. பொறுப்புடைய அண்ணன் இவளுக்குத் திருமணஞ் செய்து வைத்தான். திருமணமாகி ஐந்தாண்டுகள். ஒரு பெண் மகவு பிறந்து ஈராண்டு.) (வள்ளுவர் சோலை. பகல் மணி இரண்டு. பிச்சைக்காரக் குடும்பம் ஒரு புறம். துறவி ஒரு பக்கம் படுத்துள்ளார். சில மாடுகள் படுத்து அசை போடுகின்றன. குரங்குகள் சில தாவித் திரிப. பள்ளிச் சிறுவன் பையிலிருந்து எடுத்து எடுத்துக் கடலையைத் தின்னுகிறான்.) 1 திசையன் : (சிமிந்திருக்கையில் சாய்ந்துகொண்டு) இதே சோலையில் - ஆம் - உலகம் புகழும் இந்த வள்ளுவச் சோலையில் இதே சிமிந்திருக்கையில் - ஆம்! ஐயமில்லை - மாமரத்தின் கீழிருக்கும் இந்த இருக்கையில் (கைக்கடி காரத்தைப் பார்த்து) என்ன பொருத்தம். இதே இரண்டு மணி நேரத்தில் அவளை - ஆம்! இந்தச் சிறுக்கியை முதன் முதலில் ஆவலோடு சந்தித்தேன்; சிந்தனையின்றி, சிந்தனையிழந்து சந்தித்தேன். சந்தித்த ஆண்டு ஐந்து கழிந்தபின், ஒரு பெண் குழந்தையும் போட்டபின் இன்னும் சிந்திக்கிறேனே. (கேலியாக சிரித்துக் கொள்கிறான்.) இவ்விடத்தில் அவளைக் கண்டதே ஒரு வியப்பு. எதிர்பாராத காட்சி. (சலிப்பாக) எதிர்த்திருக்க வேண்டிய சந்திப்பு. வள்ளுவர் பெயர் பரந்த இச்சோலைக்கு அடிக்கடி வருவேன். அவள் இவ்வழிச் சென்றவள் நீர்க்குழாயில் தண்ணீர் குடிக்க இங்கு வந்தாள். இந்த குழாய்க்குத்தான் வந்தாள். தாகத்தொடு குழாயைத் திருகினாள். மறுபடி மறுபடி குழாயை முறித்துப் பார்த்தாள். தண்ணீர் துளிகூட வரவில்லை. பக்கத்து ஓர் இளைஞன் இருப்பதைப் பார்த்ததும் நாணத்தால் திருகுவதும் விடுவதுமாக இருந்தாள். விரல்கள் சிவந்தன. கண் என் திசை நோக்காமல் நோக்கிற்று. குறிப்பறிந்த நான் யாதும் பேசாது குழாய் அருகே சென்று நீர்வரு வழியைச் செப்ப னிட்டுத் திருகினேன். பெண் தீண்டுதலுக்குப் பணியாத குழாய், ஆண் தீண்டுதலுக்குப் பணிந்து சரேலெனப் பீறிட்டு என் முகத்தை நனைத்தது. தன் கைக்குட்டையை என்னிடம் நீட்டினாள். நனைவைத் துடைத்துக்கொண்டு அதனை அவளிடம் நெருங்கி நீட்டினேன். விரல் படாது வாங்கிய அவள் அதனால் தன் முகத்தைத் துடைத்துக்கொண்டு, நான் பார்க்கச் சாய் முறுவல் செய்து தண்ணீர் குடித்தாள். இவ்வாறு குழாய்த் திறப்பு அன்று காதல் திறப்பாக இன்று . . . . . ஏன் சொல்லத் தயங்கவேண்டும்? இதோ என் கையில் இருக்கும் கைக்குட்டை - அன்று முகத்தொடர்பு தந்த இந்த நிறக் கைக்குட்டை. வெளிப்படையாகச் சொல்கிறேனே; முன்பின் அறியாத இளைஞன் முகத்தைத் துடைக்கக் கைத்துண்டு நீட்டிய துணிவும், ஆண்முகம் அழுந்தத் துடைத்த துணியைப் பெற்று உதறாது தன் முகம், பெண்முகம், குமரி முகத்தை என் முகத்துக்கு முன்பே துடைத்துக் கொண்ட துணிவும், துடைத்துக் கொண்டதோடு அமையாமல் நீர் குடிப்பாள் போல் மென்முறுவல் செய்த துணிவும், அன்று காதற் குறி களாகத் தோன்றின பருவத்துடிப்பினால். இன்றல்லவோ காலம் போய்ப் புரிகின்றது. குமரிக் கொழுந்துக்குப் பார்த்த ஒரு நாளில் - இல்லை, அரை மணிப் பொழுதிற்குள், துணி கொடுத்து வாங்கும் துணிச்சல் இருந்தால், மனைவியானபின், மனைவி யாக்கிக் கொண்டபின், எவ்வளவு துணிச்சல் இருக்காது? யாரிடமும் நெருங்கும் போக்கு எவ்வளவு இருக்கும்? 2 (சிமிந்திருக்கையில் எழுந்து வேறொரு புறம் சாய்ந்து கொண்டு.) குழந்தை பெற்றபின், இப்படிச் சொல்ல என்ன தயக்கம், குழந்தை அவளிடத்துப் பிறந்தபின், வேறு எப்படி சொல்வது? அது ஒரு காதலனுக்குப் பிறந்த குழந்தையல்லவா? அக்குழந்தை பெற்றபின் என்னை மறந்துவிட்டாளே. பாசமா? மோசமா? எதற்கெடுத்தாலும் குழந்தை குழந்தை என்று சொல்லி என்னை வாயடைக்கிறாள். இங்கே கேட்க யார் இருக்கிறார்கள். என்ன வெட்கம்? குழந்தையை முத்துவதையும் குழந்தை முத்துவதையும் இன்பமாகக் கருதுகின்றாள். என் முத்தத்தால் அவள் பெறவில்லை. (பெருமூச் செறிந்து) மேலும் என்ன வஞ்சகி! உங்கள் நண்பர்கூட நம் குழந்தையிடத்து அவ்வளவு பாசம் காட்டி எடுக்கி வைத்துக்கொள்ளும்போது, யார் குழந்தையோ என்று சும்மா இருக்கிறீர்கள் என்று வெடுக்கிடுகிறாள். தன்னை அறியாமலே உண்மை வெளிப்படுகிறது. சில நாளாக அப்படித்தான், இதுவரை அப்படித்தான். நாளை எப்படியோ? நாளை இறப்பதை யாரறிவார்? (கேலியாக இழுத்துப் பாடுதல்) பெற்றோர் கட்டிப்போட்ட திருமணமாக இருந்தால், இப்படிப் பாரத்தைக் கட்டினார்களே என்று அவர்கள் மேல் பழிபோடலாம். அவளை (மகிழ்வாக) தள்ளி வைத்துவிடலாம். தாய் வீட்டுக்கே விரட்டிவிடலாம். (இன்பமாக) பெற்றோர் மூலம் நல்ல இளம் பெண்ணைச் செய்துகொள்ளலாம். சீர்திருத்தமாக அவளும் புதுக் காதலனிடம் மறுதாலி கட்டிக் கொள்ளலாம். இது காதல் மணம் ஆச்சே. நன்பகற் காதலாச்சே. வள்ளுவச் சோலைக் காதலாச்சே. (நகைப்பாக) புலவர் பாடிய பொய்யாக் காதலாச்சே. என்ன காதல் வேண்டிக் கிடக்கிறது. உடனே உறவு கிடைக்கிறது என்ற உடம்புக் காதல், அன்பு அறியாத என்புக்காதல், உள்ளந் தெரியாத குள்ளக் காதல், உணவுக் காதல், பருவக் காதல். திருமணம் ஆன நாளிலிருந்தே என் அம்மா சொல்லிக் கொண்டுதான் வருகிறாள், பொன்னி துணிவுக்காரி, துடுக்குக் காரி, மடுவுக்காரி என்று. கைக்குட்டையில் பொடி போட்டு விட்டாள், நீ மயங்கி விட்டாய் என்று குத்திக் காட்டிக் கொண்டிருக்கிறாள். மாமியாள் மருமகளைக் காமியாள் என்று நான் பொருட்படுத்தவில்லை. அன்னை சொல் அறிவுச்சொல் என்று (தலையில் அடித்துக்கொண்டு) வரவர இத்தலைக்குப் புரிகின்றது. எங்கும் எதற்கும் தனியே செல்வாள். ஆண்கள் யார் வந்தாலும் கதவைத் தானே திறந்துவிடுவாள். வந்தவர்கள் வாசற்படியில் நின்றவாறே, இவள் பெண் என்று பேசிப் போக நினைத்தாலும், என் கற்புடை மனைவி விடமாட்டாள். உள்ளே வாருங்களேன், இருங்களேன் என்று சொல்லிக்கொண்டே வருவாள். ஐயோ, வந்தவர்கள் என்னைப் பற்றியும் என் குடிப் பெருமையைப் பற்றியும் என்னென்ன நினைத்துக்கொண்டு சென்றார்களோ, யார் யாரிடம் என்னென்ன சொன்னார் களோ? ஆடவர்களைக் காண்பதிலும் ஆடவர்களோடு கலகலவென்று முந்திப் பேசுவதிலும் கைகாரி. சீசீ என்ன பெண்மை! உள்ளமும் கள்ளமும் ஒருநாள் வெளிப்பட்டு விட்டது. கணவன் பெயரை மனைவி சொல்லாள் என்பது மரபு. என் மனைவி என் பெயரை என் முன்னே சொல்லக் கேட்டிருக் கிறேன். அப்போதெல்லாம் பாரதியார் சொன்ன புதுமைப் பெண் எனவும் இத்தகைய பாரதிக் கனவுப் பெண் எனக்குத் தானே சோலையில் நனவாக வந்து கிடைத்தாளே எனவும் தற்புகழ்ந்து இறுமாந்தேன்; இல்லை, ஏமாந்தேன். கேடு காலத்துக்குத் தற்புகழ்ச்சியைத் தவிர வேறு என்ன வேண்டும்... அவனைப் பற்றிச் சொல்லும்போது அருந்திறலான் என்று பெயர் சொல்லமாட்டாள். உங்கள் நண்பர், உங்கள் நல்ல வல்ல நண்பர் என்று வாயூறிச் சொல்லுவாள் என் காதல் மனைவி. 3 (நாற்றிசையும் சுற்றிப் பார்த்து) கற்புப் புகழ்சான்ற இத் தமிழகத்தில், கற்புக்கு ஒரு காப்பியம் பிறந்து வழங்கும் இத்தமிழ் கூறும் நல்லுலகத்தில், இப்படியும் ஒரு கயத்தி தோன்றிச் சாகாது வளர்ந்து நோய்வாய்ப்படாது பெரிய பெண்ணாகிக் குமரியாக மூத்துப் போகி யொழியாது, எனக்கு இயற்கைப் புணர்ச்சியில் மனைவியாகி விட்டாளே. எப்படி ஆனாள்? எப்படி எதுவும் புரியாது ஐந்தாண்டுக் காலம் ஊடிக் கூடி வாழ்ந்தேன்? போதாக் குறைக்கு ஒரு குழந்தையும் போட்டுவிட்டாள். அதுவும் பெண் குழந்தை, தன்னைப் போல் . . . . அப்படிச் சொல்லக் கூடாது. அத்தாமரைக் குழந்தை என்ன குற்றஞ் செய்தது. இக்குழந்தை யைப் பார்ப்பவர்கள் எல்லாரும் உடனே சொல்லுகிறார்கள். அப்பா சாயல் இல்லை; மூக்கு முழி எல்லாம் அம்மா சாயல். உரித்துவைத்ததுபோல் என்று சொல்லுகிறார்கள். அதனைக் கேட்டு மனைவிக்கு (இப்படிச் சொல்வது பிசகு) அவளுக்குச் சிரிப்பு வருகின்றது. என் குழந்தை என்று எல்லாரும் சொல்வதைக் கேட்டீர்களா என்று வேறு குத்திக் காட்டுகிறாள். உண்மைதானே அது. என் நண்பன் நெல்லியான் சொன்னது சரி. பள்ளி முதல் நண்பன். இக்குழந்தையின் சாயல் வேறு என்று எப்படியோ கண்டுவிட்டான். கூர்மையாளன், பண்புடையவன். மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தவன், சொல்லத் தயங்கி விழுங்கி யதைப் புரிந்துகொண்டேன். குடும்பச் செய்தியில் தலையிடக் கூடாது என்று கருத்தை அடக்கிக் கொண்டிருப்பான். மனைவியைவிடப் பழைய நண்பனே சிறந்தவன். பள்ளி நண்பனோ எல்லாரினும் சிறந்தவன். அதிலும் நெல்லியான் சிறந்தவரினும் சிறந்தவன். ‘அரும்’ என்று அவன் சொல்லி நிறுத்திவிட்ட குறையிலிருத்து, அருந்திறலானுடைய சாயல் அக்குழந்தையிடம் என்று வாயெடுத்தான் என அறிவுடைய வர்கள் ஊகித்துக் கொள்ள முடியாதா? அவள் பெற்றோர்கள் எங்கள் வீட்டுக்கு வருவது இல்லை. இவளுங்கூடப் பிறந்தகத்துக்குப் போக ஆசைப்படுவதில்லை. இவள் பாசம் எல்லாம் வேறு, எனக்கு நாசம். எங்கள் குடிப்பெருமை முடிப்பெருமை. என் தாய் இவ்வயதிலும் கண்ணகி போலப் படிகடவாப் பாவை. என் அண்ணன்களின் மனைவியரும் அப்படியே. பெற்றோர்கள் குணம் பார்த்துக் குலம் பார்த்து நலம் பார்த்து வலம் பார்த்துத் தேர்ந்தெடுத்த அண்ணிகள். திருமண நாளன்று கண்ட காதற் காட்சிதான், என் அண்ணன்மார்களுக்கு. எவ்வளவு நன்றாக ஒன்றாக இருக்கி றார்கள். தன் மக்கள் கவலையில்லாது பெண்டாட்டிகளோடு ஏறுபோல் பீடுநடை போட்டு வாழவேண்டுமே என்று என் பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள். அதனால் மூத்தோர் குடும்பங்கள் ஆண் குழந்தைகளோடு பெருகி வருகின்றன. பெற்றோர் கவலைக்கு இடங்கொடாது, நானே இவளைப் புதின முறையில் கைப்பற்றினேன். கவலை பற்றினேன். (மிக்க வருத்த உணர்ச்சியால்) பட்டுத்தான் ஆகவேண்டும். பேதைக்கு உரிய பாதை பாடைதான். புடலங்காய் கத்திரிக்காயைக்கூட உடனே வாங்குவதில்லை. நாலு கடை பார்த்து, நாலு கூடை பார்த்து, நாலுபேர் வாங்குவதைப் பார்த்து மாறி மாறிக் கேட்டு, நல்லதாக இல்லாவிட்டால் திரும்பித் தந்துவிடுவோம் என்று எச்சரித்து வாங்குகின்றோம். வீட்டுக்கு வந்து உடனே நறுக்கிப் பார்த்து நல்லதில்லை என்று கண்டால், சினவேகமாக எடுத்துச் சென்று காட்டிப் பணத்தைத் திருப்பிக் கேட்கின்றோம்; தர மறுத்தால் கூச்சலிடுகின்றோம். நாலணா எட்டணாக் காய்கறிக்கு இவ்வளவு நுண்மாண் நுழைபுல ஆராய்ச்சி. கண்டதும் கத்திரிக்காய் இல்லை; பார்த்ததும் பச்சை மிளகாய் இல்லை; தீண்டினதும் தேங்காய் இல்லை. கண்டதும் காதலாம்; கேட்டது பேசியது தொட்டது எல்லாம் காதலாம்; முற்பிறப்பிலிருந்து வந்த காதல் தொடர்ச்சியாம்; தெய்வம் செய்த கூட்டுறவாம்; இது காதல் தனியுலக நன்னெறியாம். இளைஞர்களை ஏமாற்றும் இலக்கியம். இலக்கியம் ஏமாற்றிய இளைஞன் (தன் தலையில் அடித்துக் கொள்ளுதல்) காதற் குளத்தில் திடீரென்று தடுமாறி விழுந்தால் குளிக்கிறான் என்றா சொல்வது? காம மலையிலிருந்து திடீரென வழுக்கி விழுந்தால் தரையில் குதிக்கிறான் என்று சொல்லுவர்போலும் காதல் ஆசிரியர்கள். ஆடவன் ஆடவனோடு கொள்ளும் நட்பைக் கூடாநட்பா தீ நட்பா என்று ஆராய்ந்து விழிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்றால், உடலும் உயிரும் உறவான ஆண் பெண் நட்பை எத்துணை முறை சோதித்துச் செய்ய வேண்டும்? இதுபற்றி இளைஞர்களுக்கு யார் எடுத்துச் சாற்றுகின்றனர்? சாற்றினாலும் பருவத்தாகத்தில் எவ்விளைஞன் கேட்கிறான்? உடலாசை காலம் பொறுக்காது. கையிற் கிடைத்ததைக் குழந்தை வாயில் வைத்துக்கொள்வது போன்றதே காதல். நான் செய்த காதல் வாழாக் காதல், வளராக் காதல், வழியற்ற காதல். 4 (போற்றி வைத்திருந்த கைக்குட்டையை விரித்துக் கொண்டு) அழகான வண்ணமான ஆற்றலான கைக்குட்டையே! காதல் துணியே! சாதல் வித்தே! அன்று எங்கள் குமரக் கைகளை இணைத்து முகந்தடவி உள்ளங்களை ஒன்றுபடுத்தி இல்வாழ்க்கை என்று ஒரு நிலை தந்தாய். மூன்றாண்டுகளாக உன்னைக் காதற்கொடியாகப் போற்றிப் பொதிந்து வைத்துக் கொண்டேன். திருமணம் கூட்டிய உனக்கு நறுமணம் ஊட்டிப் பொலிவைப் புதுப்பித்து வந்தேன். மறுபிறப்பிலும் உன்னால் நட்புத் தொடரவேண்டுமென்று அவாப்பட்டேன். அதனால் உயிருள்ளவரை உன்னைக் காத்துக் கொள்வது என்று கருத்துட் கொண்டேன். ஆம் உயிருள்ளவரை; ஆம் இன்று உள்ளவரை. நீ வெறுந் துணியன்று. துணிவு தரும் துணி. அன்று அவளுக்கு வெட்கம் நாணம் விடத் துணிவு தந்தாய். எவளை எச்சிறுக்கியை என்னொடு எளிதாகப் புணர்த்தி வைத்தாயோ அக்கயத்தியை (உணர்ச்சிப் பொருமலாக) இன்றே இன்னே இங்கே எளிதாகப் பிரித்துவை. செருப்பு இன்னொருவர் போடக் கொடுப்ப தில்லை. பல்லுரசி மற்றொருவர் தேய்க்க நீட்டுவதில்லை. கைக்குட்டை இன்னொரு முகம் துடைக்க வழங்குவதில்லை. இவளோ குமரி நிலையில் அது செய்தாள். அது செய்த அவள் எது செய்ய மாட்டாள்? பாவி செய்து விட்டாளே. என்னுயிர்ப் பிஞ்சைக் கொய்து விட்டாளே. (சுற்று முற்றும் பார்க்கிறான். ஒரு பிச்சைக்காரக் குடும்பம் கலகலப்பாக முகமலர்ச்சியோடு பேசிக்கொண்டிருப்பது கேட்கிறது. பிச்சைப் பாத்திரங்கள் பக்கத்துக் கிடக்கின்றன. நாயொடு பிச்சைப் பெண் குழந்தை விளையாடுகின்றது.) (தலையில் அடித்துக்கொண்டு) எது வாழ்வு? எது வாழ்வின் சிறப்பு? எது இன்பம்? எது இன்பத் தொடர்ச்சி? இவற்றை எப்படி முடிவு கட்டுவது? எப்போது முடிவு கட்டுவது? மாடவாழ்வு சிறப்பா? மடவாழ்வு சிறப்பா? வீடு வேண்டுமா? (பிச்சைக்காரர் பக்கம் பார்த்து) ஓடு வேண்டுமா? மனைவி அடிசில் ஆக்கி அருகிருந்து இனிது பேசி அமுது படைக்க உண்ணும் அருமந்த செல்வர் நாட்டில் எத்துணைப் பேர்? ஊணுறவு இல்லாதபோது ஊனுறவு இன்பம் தருவதில்லை. இப்பிச்சையர் செல்வ வாழ்வுகண்டு பொறாமைப்படுகிறேன். எவ்வளவு அளவான ஆசையான வாழ்வு. குழந்தையையும் செல்வப் பிச்சையாகப் பழக்கியிருக்கின்றனரே. (தன் குழந்தை நினைவு வந்து, கனிந்த முகத்தோடு) இளங்கொடி! எந்நினைவிலும் உன் நினைவு கலக்கின்றது. இவ்வளவு நாளும் துன்பக் கடலில் மூழ்காதிருப்பதற்கு உன் முகப்படகே காரணம். உன் அன்னை சிரிக்கும்போது மனம் கொதிக்கிறது. கொதிப்பு அடங்கிக் குளிர்ப்படுகிறது உன் புன்முறுவலுக்கு. அவள் இதழை விரித்துப் பேசும்போது என் உள்ளம் புயற் குடைபோல் குவிகிறது. நீ மழலை மொழியும் காலை மழைக்குடை போல் உள்ளம் அகல மலர்கின்றது. அவள் என் அருகே வரும்போது ஓட நினைத்து உன் அருகே வந்து நின்றுவிடுகின்றேன். என் அருமை, பெருமை, ஒருமைப் பெண் குழந்தாய்! நீ நான் பெற்ற மகளோ இல்லையோ உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. அவ்விருவர்க்கே தெரியும். கடவுளுக்குக் கூடத் தெரியாது. நல்லவன் இந்தச் செய்கையைப் பார்க்க மாட்டான். எப்படியிருப்பினும் நீ என் வளர்ப்பு மகள். இல்லை, என் மகளே என்று அன்பாற் சொல்லு கின்றேன். என்னைத் தவிர யாரையும் நீ அப்பாவாக அறியாய். நிறையான உனக்குக் குறையேது? குறையும் வாராது. குறைவு வரக்கூடாது. வரவிடக்கூடாது. ஆனாலும் உலகம் என ஒன்று இருக்கிறதே. சும்மா கம்மென இருந்தாலும் விடாத உலகம் சுமந்திருந்தால் விட்டு விடுமா? இழுக்கியின் மகள் என்று உன்னைத் தூற்றும். அன்னை பத்தினிப்பழி பெற்றால், மகள் கதி என்னாகும்? அவள் கதி என்னால் தாலியறும். உன் கதி ஒருநாள் தாலி ஏறுமா? என் காலம் இனி உயிருதிர் காலம். இளங்கொடி, உன் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுகின்றேன். உன்னையும் இங்குக் கொண்டு வரத் திட்டமிட்டேன். இருவர்க்கும் ஒரு முடிவு காண எண்ணி னேன். மனம் இடங்கொடுக்கவில்லை. உன்னை என் அருகில் வைத்துக் கொண்டால், வேறு எண்ணம் எனக்கு தோன்றாது. வீட்டிலேயே என் முடிவைச் செய்து கொள்ளலாம் என்று கருதினேன். நீ இருக்கவேண்டிய இல்லத்தில் அது செய்யலாமா? உன் குரல் கீச்சென்று கேட்டாலும் என்னுயிர் தளிர்த்துவிடும். அடுத்த பிறவியில் என் நல்ல மனைவிக்கு ஒரு மகளாக வந்து பிற. இங்கும் உன் முகம் என்னைத் தடுக்கின்றது. 5 (கைக்குட்டையால் தன் முகத்தை மறைத்துக் கொள் கிறான்) சீசீ குட்டை குழந்தை முகமலரை மறைக்கின்றது. இது இன்னும் என்னென்ன கொடுமை செய்யுமோ? (பெருஞ் சினத்தோடு) அதுவும் ஒரு நல்ல கருத்துத்தான். அதையும் செய்யலாம். செய்தால் தவறில்லை. தவறுக்குத்தானே தண்டனை. அக்கற்புக் கேடியை அது செய்தால் என்ன? அது செய்யக்கூட எனக்கு உரிமையில்லையா? அவளை அப்படியே முடித்துவிடலாம். அப்புறம் உலகத்துக்குக் காரணம் நானல் லவோ இருந்து சொல்ல வேண்டும்? வீட்டிலிருந்து சொல்ல வேண்டி வருமோ, சிறைக் கம்பிக்குள் இருந்து சொல்ல வேண்டி வருமோ? குடும்பச் செய்திகள் என்று நற்றாள்கள் சும்மா இராவே. இருவரையும் படப்படுத்துமே. கூலி வழக்காடிகள் மானமின்றி எல்லாம் கேட்பார்கள். கூண்டில் நிறுத்தி என் குழந்தையையும் உன் அப்பா யார் என்று கேட்பார்களே. இப்போக்கு வேண்டாம். இன்னும் எனக்கே துன்பம். உலகத்தில் யார் இன்பமாக இருக்க விரும்புகிறார்களோ அவர்கள் துன்பம் அடையட்டும். அவளுக்குத் தண்டனை நான் மாய்வது. அவமானக் கூண்டில் ஏறி அவள் பதில் சொல்லட்டும். சொல்லக் கூடிய துணிவு அவளுக்கு உண்டு. குற்றமிலாதவளாக இருந்தால் - அதுதான் இல்லையே - என் சாவு கேட்டுத் தானும் சாவாள். குற்றமுள்ளவள் ஆச்சே. சனியன் தொலைந்தது என்று தாலியற்ற கழுத்தியாக வேலியற்ற விளைநிலமாகத் திரிவாள். அந்தக் கழிச்சியைப் பற்றி இந்தக் கழியனுக்கு என்ன கவலை. அவளும் உலகமும் எப்படியாவது போகட்டும் என்றால் (. . . சிறிது வேகம் தணிந்து) இந்த அன்புக் குழந்தையின் அவலம் என்ன? யார் பிள்ளை என்பது அப்புறம் தீர்மானிக்கட்டும். ‘நீ ஒரு பெண் குழந்தை. பெற்றோரின் ஒழுக்கக் குற்றம் பிள்ளையைச் சாரவே சாராது. ஏ குழந்தாய்! பருவம் வந்தபின் உன் அன்னையைப் பின்பற்றாதே. தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை என்பதைப் பின்பற்றாதே. தாய், பாட்டி சொற் கேளா மாதவி, மணிமேகலை போல் மீறி நடந்துகொள். கணவனுக்கு நம்பிக்கைப்பட வாழ். இறைவன் இந்த நல்லெண்ணத்தைப் பருவக் காலத்து உனக்கு நினைவூட்டுவானாக.’ (பையில் வைத்திருந்த குழந்தையின் நிழற் படத்தைப் பார்த்து விம்முகிறான், மெய்ம் மறக்கிறான்.) குழந்தைப் பாசமும் முடிவில் நாசமே. நெஞ்சே! என்ன மெலிவு. இது உன் மகள் என்று துணிகிறாயா? சான்று சொல். குழந்தை வாழ்க என்ற வாழ்த்தலாமேயன்றி அதற்காக நான் வாழ முடியாது. ஒன்றை ஒழிக்க முடியாவிட்டாலும் உடந்தையாக இருக்கக் கூடாது. கற்புக் கேடியும் கணவன் பேடியும் என்ன அழகு? ஊர்க் காட்சிக்கு ஒருவனைக் கணவனாகக் காட்டிக்கொண்டு உடற் காட்சிக்கு ஒருவனைப் போற்றிக் கொள்கிறாள். இவள் ஒரு கோவலி. நாள்தோறும் என்னைக் கொல்லுகிறாள். ஒரு சான்று போதுமே. உடனுறைந்து ஓராண்டு ஆயிற்று. அந்த எண்ணம் பட்ட நாள் முதல் அவள் முகத்தைக் கண் விழித்துப் பார்ப்ப தில்லை. இதுபற்றி அவள் கவலைப்பட்டதுமில்லை. இன்பம் வேறோரிடத்துக் கிடைக்கிறது. ஒரு கால மனைவியாயிற்றே என்று இங்கு வரும் முன்னே ஒருமுறை பார்க்க நினைத்ததுண்டு. எங்கே என் எண்ணம் அவள் மேல் பாய்ந்து உயிரைப் பறித்து விடுமோ? நாகரிகமில்லையே என்று விறிட்டென வந்துவிட்டேன். அவளை ஐயப்படுகின் றேன். இல்லை, இல்லை, அவள் அவன் வழிதான் என்று தார்ப்பாதைபோல் தெளிந்துவிட்டேன். இன்னும் நாளானால் அவனொடு சேர்ந்து உலையை என் தலையடுப்பில் வைப்பாள். அவள் பேதையில்லை; கள்ளத்தனத்தில் மேதாமேதை. இக்கயத்தியொடு இவ்வளவு நாளும் உடல் தீண்டியதே பாவம். இந்த உடம்பு சாக்கடைப் பால்போல் மாசு பட்டுவிட்டது. குருதி உறைபட்டுவிட்டது. கழுவாய் வேண்டும். மறு பிறப்பு எடுத்தால், இறைவா, எனக்கு மணம் என்பது வேண்டாம். எப்பிறப்பிலும் வேண்டாம். எவ்வகைப் பிறப்பிலும் வேண்டாம். (நாலா பக்கமும் திரும்பத் திரும்பப் பார்க்கிறான். பிச்சையாளர் உறங்குகின்றனர். நாயும் படுத்துக் கிடக்கிறது. மரங்களின் மேலும் பார்க்கின்றான். பழைய நினைவு வரக் குழாயைத் திறந்து ஒரு வாய் நீர் குடித்து) இதுவே கடைசிக்குடி. இந்த இடம் அன்று மணம் காட்டிய இடம். இன்று என்னைப் பிணமாகக் காட்டும் இடம். இந்த நீர் அன்று காதல் ஊட்டிய நீர். இன்று சாதல் கூட்டும் நீர். (விம்மி யெழுந்து பரபரப்பாக) இதோ, இந்த இந்த என் கையில் இருக்கிறதே இந்தக் குட்டைக்கை, இல்லை, கைக் குட்டை அவள் கட்டைக் கழுத்துக்குத் தாலி தொடுத்த குட்டை. ஆம், வேறென்ன? இப்போது என் கழுத்தை அழுத்தமாகச் சுருக்கும் குட்டை. புகழ்க்குட்டை. அதோடு அவள் கழுத்துத் தாலியைத் திடீரென இறக்கும் படுகுட்டை. (கைக்குட்டையை நீளக் கயிறுபோல் முறுக்கித் தன் குரல் வளையில் கட்டிப் பார்த்துக் கொள்ளுகிறான். வேட்டியை இறுக்கிக் கட்டிச் சட்டையைக் கழற்றுகிறான். ‘என் இறப்புக்கு நானே பொறுப்பு. என் மனைவி என்பவள் பொறுப்பில்லை’ என்று எழுதிய ஒரு தாளைச் சட்டைப்பையில் மடித்து வைக்கிறான். வானையும் திசையையும் நிலத்தையும் தொழுது, முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக்கொண்டு, உறவு தந்த கைக்குட்டையே உன் கடமையைச் செய் என்று மும்முறை சொல்லிக் கழுத்தில் இறுக்கி இறுக்கிக் கட்டுகையில்) என்ன பிரிவு! ஒரு துணி இறுக்கம் தாங்காமல் இரு துணியாகி விட்டதே. நாலாண்டு நனையாத் துணிக்கு என்ன வலுவிருக்கும். காதல் துணிக்குச் சாதல் ஏற்பட்டது. எங்களைப் பிரிக்க இசையவில்லையோ? அதனாலென்ன? (கீழே கிடந்த தன் சட்டையை முறுக்கிக் கழுத்தில் கட்டுகையில்) இது என்னடா, நாய் குரைக்கிறது. பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பிச்சைக் குழந்தை எனக்குப் பக்கத்து வந்துநின்று, ஐயா பிச்சை, உங்க பிள்ளையைப் போல நினைச்சு ஏதாவது போடுங்க என்று கேட்கிறது. என் பிள்ளையைப் போலச் சிரிக்கிறது. இந்தக் கிழிஞ்ச துணியைத் தாங்க என்று கை நீட்டிக் கேட்கிறது. 6 (சட்டையின் முறுக்கவிழ்த்து மாட்டிக்கொண்டு சிமிந்திருக்கையில் சாய்ந்துகொண்டு) ஆம்: வரவேண்டிய நினைவு இப்போது வருகின்றது. வகுப்பில் ஐயங்கள் கேட்பேன். ‘எவ்வளவு தெளிவாகச் சொன்னாலும் மறுபடியும் மறுபடியும் ஐயப்படுகிறாயே. திருமணமானால் பனிநீர்போல் தெளிந்த மனைவியைக் கூட ஐயப்படும் ஆளப்பா நீ’ என்று ஆசிரியர் சிறிது கடிந்து கூறினார்; ஐயப்பயிற்சி கூடாது தம்பி என்று அப்புறம் அறிவுரை கூறினார். என் திருமணத்துக்கு வாழ்த்திய வாழ்த்திலும் ‘மனைவியை நம்பு’ என்று ஆத்திசூடி பாடியிருந்தார். அதனை என் மனைவியிடம் காட்டியதுபோது ஆடவர் ஆடவர்க்குக் கூறவேண்டிய அறம் என்று சொல்லி அதனை வாங்கி வைத்துக் கொண்டாள். (அமைதியும் வருத்தமும் தோய்ந்த மனத்தோடு) உணர்ச்சி வழிப்பட்டவனுக்கு உண்மை வழி தோன்றாது. சிறு பையன் சிறு குற்றஞ் செய்தாலும் நீ செய்தாயா என்று ஒரு வார்த்தை கேட்பது உலக முறை. என் மடமை இமய மடமை. குற்றஞ் செய்தோர்கள் செய்தோம் என்று ஒத்துக்கொள்வார் களா, என்று காரணங்களை நானே கற்பனை பண்ணிக் கொண்டேன். என் அறிவெல்லாம் பேதைமை. கேட்கத் துணிவில்லாத பேதைக் கயவன் நான். அருந்திறலான் என் அரிய நண்பன். பண்பிற் சிறந்தவன். என்னைப்போல் அவனை மதித்து நட என்று அவளிடம் அன்று நான் சொல்லவில்லையா? அவனோடு இருந்து நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லையா? கலகலப்பான பழக்கம் கற்பிழுக்கம் ஆகாது. (சிரித்த முகத்தொடு) என் மனைவியின் கற்பாற்றல் கைக்குட்டையை இரண்டாக்கிக் கழுத்துத் தாலியைக் காத்துக்கொண்டது. இரண்டான இத்துணிகளைக் காத்துவைத்து ஒன்றினை என் மகளுக்குக் கற்புச் சீராக வைப்பேன். (குழாய் நீரால் முகத்தை நன்கு கழுவிக் கொள்கின்றான். மறுபடியும் நீர் குடித்துப் புதிய காதலுணர்ச்சியோடு இல்லம் புறப்படுகின்றான். வாயிற்படியில் நிற்கும் இளங்கொடியைப் புதிய அன்பொடு அணைத்துக்கொள்கிறான்.) 8. புரியாமையினால் (ஒரு சிறு வீடு. கீழே நாலறைகள். மேன்மாடியில்லை. தோட்டத்தில் அடர்த்தியான மரஞ் செடி கொடிகள். வீட்டின் முன்னே குழாயும் பின்னே கிணறும் உள. படுக்கையறையில் கண்ணகி, மணிமேகலை, திலகவதியார், காரைக்காலம்மையார், ஆண்டாள், சாரதாதேவி முதலியோர் படங்கள். இரவு மணி ஒன்பது. மனைவி தாமரைக்குப் படுக்கையில் இருந்தும் உறக்கம் வரவில்லை. உணவு கொள்ளவில்லை. கணவன் உலகன் வெளியூர் சென்றிருக்கிறான். மாமன் இல்லை. மாமிக்கு வயது அறுபது. இன்னொரு அறையில் இருக்கின்றாள்.) (விரித்த படுக்கையைச் சுற்றி வைத்துவிட்டு முகஞ் சாய்ந்து கண்ணீர் துளி துளியாக விழ, அழுகின்றாள்.) 1 தாமரை : (தன்னுள்) ஓர் இளஞ்சிறு பெண்ணுக்கு இவ்வளவு மனப் போராட் டம் தாங்காது. தாங்கவே தாங்காது. எவ்வளவு இள நங்கைகள் இப்படி விழுங்கவும் மாட்டாமல் சொல்லவும் மாட்டாமல் நெருப்பை முடிந்து வைத்திருக்கிறார்களோ? நெருப்பை அள்ளிக் கட்ட முடியாது. நெருப்பெச்சம் உட்புகைந்து என்னென்ன செய்யுமோ? மணமாகி இன்னும் ஓராண்டுகூட ஆகவில்லை. கட்டிய தாலியில் குங்குமச் சுவடு இன்னும் பசுமையாக இருக்கிறது. நெடுங் கூந்தற் பின்னலில் நறும்பூ சூடாத நாளில்லை. கணவன் மனத்தைக் கணந்தோறும் கவருவதற்கா பூச்சுடிக்கொள்கிறேன்? மனைவி என்பவள் நிலைமகள். கணவன் என்பவர் நிலைமகன். இல்லறம் என்பது நிலையறம். திருமணத்துக்குப் பின் ஒருவர் ஒருவரைக் கவரக் கூடுதலாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. நாட்கவர்ச்சி நன்மகள் செய்யாள். இவ்வளவு பெருங்கவலை யிலும் ஏன் பூ அணிகிறேன்? குலக்கட்டு. பூ அணியாவிட்டால், யாரும் தருவதை அணிய மறுத்துவிட்டால் இவள் இல்லறத் தாளா, இல்லையா? என்று ஐயப்படுவார்கள். பூவின் பயனைத் தலை நுகருமோ என்னவோ? தலைவன் நுகரவில்லை. (நிலைக் கண்ணாடி முன் நின்று சிரித்துக் கொண்டு.) என் அழகு உலக அழகுப் போட்டியிட்டாற்கூட முதல் தரம், இல்லாவிட்டால் இரண்டாந்தரத்துக்குக் குறையாது. இவ்வாறு முதல்நாள் இரவு அவரே புகழ்ந்தார். ஓராண்டுக்கு முன். கல்லூரியில் படிக்கும்போது இப்போட்டியிற் கலந்து கொள்ளும்படி சில பெரியவர்கள் வந்து என் பெற்றோரிடம் கூறினர். ‘தங்கள் கருத்துரைக்கு வருத்தம்: எழுந்து போங்கள்’ என்று கடிந்து விடுத்தார் என் தந்தை. இல்லறப் பெண்ணுக்கு அழகு விளம்பரமா என்று துடித்தார். (கண்ணாடி முன் நெருங்கிநின்று) எந்த உறுப்பும் வனப்புக் குறைவாகப்படவில்லை. கூந்தலின் நீளம் (சிரிப்பு வர) குரங்குவால். காதளவோடிய கண் - இல்லை, கணவன் நெஞ்சளவோடிய கண். உடல் சந்தனக் குளிர்ச்சி. விரல் ஒடியும் வெண்டைப்பிஞ்சு. ஆப்பிள், தக்காளி, ஆரஞ்சு கொய்யாப் பழம் என்று இந்த உறுப்பை அவர் அடுக்கி அடுக்கிப் பாராட்டினார். ஓராண்டிற்குள் பழம் காயாகிவிட்டது. இனி, பிஞ்சாகி நஞ்சாகி வெம்பி விழுந்து விடும்போலும்! ஒரு பெண் பருவமான முதலே, பருவவுணர்ச்சி அரும்பும் நாள் முதலே மணக்கோட்டை வரைகிறாள். அவளாசை கரு வளர்வதுபோல் வளர்கின்றது. அந்த ஆசைக் கற்களை ஆயிர ஆயிர வடிவங்களாக்கிக் கோட்டையை அகலப்படுத்துகிறாள். திருமண நாளன்று அந்தக் கோட்டை முடிந்து குடியாகத் திறக்கின்றது. ஆசைகள் உயிரோட்டம் பெறுகின்றன. ஒவ் வொரு கணமும் ஆசைக்கோட்டை அசைக்கோட்டையாகக் கூடாது என்று கற்பாலும் பொற்பாலும் திண்மைப்படுத்து கிறாள். எக்காரணத்தாலும் காதற் கயிறு நைந்துவிடக் கூடாது, அறுந்துவிடக் கூடாதே என்று பூ அணியும் போதும் பொட்டு வைக்கும் போதும் தனியே உறங்கும் போதும் கணவர் வெளியே போம்போதும் ஆடவர் என்பார் முன் அடியெடுத்து வைக்கும் போதும் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கின்றாள். 2 (மனவேகமாக) என்னிடத்து அவர் என்ன குறை கண்டார்? என்ன நிறைவு வேண்டுமென நினைக்கின்றார்? இன்னும் அதிகமாகப் பூஞ்செடிகளையே தலையில் முளைக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று விழைகிறாரா? பூமணம் போதாது செய்மணம் வேண்டுமா? ஆடை குறைந்து அசைவு கூடவேண்டுமா? (நாணமாக) வேட்கையாக நான் தன்னருகே வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார் போலும். அது பெண்மையில்லையே. இன்னும் பல்லெல்லாம் தெரியக் காட்டிச் சடபுடவெனச் சிரித்துக் கேலியுரை செய்ய வேண்டும் என்று கருதுகிறார்போலும். புன்முறுவல் இன்னகை சில சொல்தானே பெண்மை. (வெறுப்புணர்வாக) இல்லறச் சோலையகத்தில் விளம்பரமும் கோலமும் ஆன அங்காடிமுறை வேண்டுமா? சீசீ கூடாது. அப்படிச் செய்வது யார் பார்க்க, யாருக்காக? இல்லறத்தில் விளம்பரப் போக்கு அன்புக்கு மாறாக ஐயத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஒப்பனை அளவினும் குறைவாக வேண்டும். உள்ளத்தில் கடல் கடந்த ஆசையிருந் தாலும் குறிப்பிற் புலப்படுத்த வேண்டும். இல்லறம் என்பது குறிப்பறம்; அதனால் நல்லறம். (தாமரை நிலைக்கண்ணாடி முன் நின்று தன் ஒப்பனையை நன்கு செம்மை செய்துகொள்கிறாள். கண்ணாடியைத் துடைத்து ஒளியாக்கி மறுபடியும் நிற்கிறாள். தாலியைத் தொட்டுத் தொழுது கணவன் படத்தை நோக்குகின்றாள். கண்ணீர் பூந்தொட்டிபோல மழமழவென்று கொட்டுகின்றது. நிலைக் கண்ணாடியை நோக்கி) உன்னை இரவு நேரத்தில் பார்க்கக் கூடாது என்பார்கள். என் உரு முழுதும் உணர்ச்சியொடு வாங்கிக் காட்டும் ஒரு நீளக் கண்ணாடியே! கண்ணாட்டியே என்று அவர் என்னைச் சொல்லிக் கொண்டிருந்தால், உன்னிடம் இந்த உணர்ச்சியொடு வரமாட்டேன். வந்தாலும் உன்னோடு பேசமாட்டேன். என் உருவத்தை இனி அவர் பார்க்கமாட்டார் என்றபோது உன் மூலம் நானாவது என்னைப் பார்த்துக் கொள்கிறேன். இருபதாண்டு அன்னை ஓம்பிய உடல், விரைவில் அன்னையாக வேண்டும் என்று திருமணத்தன்று அன்னை வாழ்த்திய இவ்வுடல், கைபடா உடலாக இன்னும் சில ஆண்டுகள் குமரித்தோலாகவே பிறந்தகத்தில் இருந்திருக்கலாமே. சோறு போட மாட்டார்களா? கட்டத் துணி தர மாட்டார்களா? சோறு துணிக்கா கணவன்? இதுவரை கட்டிவரும் சேலைகூடத் தாய்வீடு தந்த சீர். உண்மையில் இது எனக்குத் தாய் வீடாகத் தான் மாறி வருகிறது. பெண்ணுக்குத் தாய் வீட்டுப் பற்று அதிகம் என்று குற்றம் சொல்லுகிறார்கள். கொழு கொம்பு பற்று விடும்போது, பற்ற மறுக்கும்போது, தரையிற் படர்வது குற்றமாமா? அகலக் கண்ணாடியே! நீயும் நானும் இந்த நல்லகத்திற்கு ஒரே நாளில் வந்தோம். எனக்குச் சீராகவும் நிலையாகவும் உன்னைத் தந்தாள் நம் அன்னை. உன் முன்னே நிற்கும்போது அன்னையின் இரட்டைப் பெண்கள் இவ்வீட்டில் இருப்பது போல் உணர்கின்றேன். நான் அழகுபடுத்திக் கொள்ளும்போது நீயும் அழகாகின்றாய். நான் இன்பந் துய்க்கும்போது நீயும் அவ்வண்ணமே அந்நிலையே நாணமின்றி இன்புறுகிறாய். நான் அவர்க்கு நிலைக்கண்ணாடியாக இருக்கும்வரை நீ நிலைக்கண்ணாடி. நானில்லாவிட்டால், நீ விலைக்கண்ணாடி. வீட்டுக்குத் திரும்புவாயோ? விலைக்குப் போவாயோ? தானே உடைவாயோ? உன் கதி என்னாகுமோ? இப்போது என்னை நன்றாகப் பார்த்துக்கொள். உயிர்பெற முடிந்தால் பெற்று, உன்முன் நின்று கலங்கியதையும் புலம்பியதையும் என் உயிர்க்குள் உயிராய் இருந்துவரும் அவருக்கு எடுத்துச் சொல் கண்ணாடியே, நீ வாயாடியாகவும் இருந்தால் எவ்வளவு நல்லது. 3 (கூந்தலிலிருந்து விழுந்த பூவை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு) என்றும் அன்பில்லாதவராக அவர் இருந்ததில்லை. மனையறம்படுத்த காதைபோல் முதல் நாள் அவர் சொல்லிய சொற்களும் சுவைத்த சுவையும் நகைத்த நகையும் இன்றும் பசுமையாக உள்ளன. முதல் நாள் ஆசை நாள். அதனால் அப்படியிருந்தார் என்று சொல்லித் தள்ளிவிடலாம். என் கணவர் அவ்வாறு இல்லை. இருதிங்கட்கு முன்வரை அவர் புலம்பிய இன்பப் புலம்புகள் வெளிப்படையாகத் தனியாகவும் தன்னுள்ளும் சொல்லிக் கொள்ளக்கூடியவை அல்லவே. காமத்தைப் பருகினார் உண்டார் குடித்தார் தின்றார் என்னும் அவ்வளவுக்கு அவர் களியாட்டம் இருந்தது. ‘இதுவே வாழ்வு. வாழ்வென்றால் இதுவே. இது தவிர எது இன்பம்? இந்த இன்பமே வாழ்வு. இலக்கியத்தில் வருவன இன்பக் குறிப்பே. உண்மையின்பம் உன்னிடத்தே, நுகரும் இன்பம் என்னிடத்தே. நம் அரைநாள் இன்பக்கடலை எவ்வளவு பெரிய தேவரும் கம்பரும் எப்பாவிலும் பாடமுடியாது. இவ்வாழ்வுக்கே மீண்டும் மீண்டும் பிறப்பேன். என் பிறவிதோறும் நீயே . . . . . காவிரியிருக்கும் வரை தஞ்சை இருக்கும். தஞ்சை இருக்கும் வரை நஞ்சை இருக்கும். உலகம் இருக்கும் வரை தமிழிருக்கும். தமிழிருக்கும் வரை தான் உலகம் இருக்கும். நீயிருக்கும் வரை நானிருப்பேன். நாமிருவரும் இருக்கும்வரை காதல் இருக்கும்’. இப்படியெல்லாம் சொல்லி என்னை ஓர் அசைச் சொற் சொல்ல விடாது மெய்யுற்றார். கூந்தற்சோலை யில் நிழலுற்றார். நெஞ்சே! இன்று என்னானேன்? ஒரு நொடியில் தீய்ந்த ஒளிக்குமிழி யானேன். (விம்மியழுது படுக்கையிற் சாய்ந்து) இப்படுக்கை என்ன பாவம் செய்தது? கன்னிமை கழிந்த ஓராண்டில் நானே படுக்கையை விரித்துச் சுற்றிலும் சுற்றி விரித்தும் உள்ளம் வேகின்றேனே. உள்ளத்தைச் சொல்ல மாட்டாமல் ஒருவர்க்காகக் கண்ணீர் கொட்டுகின்றேனே. தலையணை ஈரம் கண்ணீர் ஈரம் என்று யார்க்குத் தெரியும். புதுப்பூ நுகர்ந்து கிடக்கவேண்டிய தலையணையில், இன்பக் கலையணையில் எறும்பு ஊர்கிறது. கசங்கிக் கிடக்கவேண்டிய விரிப்பு விற்பனை விரிப்புப்போல வெளுக்குநர் கைப்பட்டளவில் கிடக்கின்றது. இது உறக்கப் படுக்கையா? உறவு படுக்கையா?. ஆம். (சினத்தோடு நிமிர்ந்து நின்று விரிந்தவிழ்ந்த கூந்தலோடு) இரவு விடியுமுன் - நள்ளிரவு வருமுன் இப்படுக்கையைப் பாடை யாக மாற்றுகிறேன். மணவாடையற்ற இப்படுக்கையைப் பிண வாடையாக மாற்றுகிறேன்! (படுக்கையைக் கட்டிலிலிருந்து சுற்றிக் கீழே வைக்கையில்) எவ்வளவு பூக்கள் இங்கே ஒளிந்து கிடக்கின்றன. இவையெல்லாம் காதற்போர்க் காலத்து மிதிப்பட்டும் குதிபட்டும் படுக்கைக் கீழே பாடமானவை. படுக்கையை அகற்றிப் பார்க்க இன்றுதானே தனி வாய்ப்பு. (சுற்றிய படுக்கைமேல் இருந்துகொண்டு) வாழ்வதாக இருந்தால் வளமாக வாழவேண்டும். குடும்பம் என்ற போலிப் போர்வைக்குள் துன்பப்படக் கூடாது. ஓராண்டு போதுமே. இன்னும் பல ஆண்டு கிழவியாகி உடம்போடு வாழவேண்டியதில்லை. குமரியாக மடிவதைவிட ஓராண்டு மனைவிப்பதவி பெற்று மடிகிறேனே. என் வாழ்வில் ஒரு பேறு. இப்பேறு அளித்த பெற்றோரையும் கணவனாரையும் மறவேன். தாலிகட்டிய குமரியாக வைத்துவிடாது, ஓராண்டு மனைவியாக வும் போற்றினாரே என்று ஆறுதல் கொள்கின்றேன். பெண் பெறவேண்டிய பேறு பெற்றேன். (வடியும் கண்ணீரைத் துடைத்தவளாய்) பேறு காலம் வரை மனைவியாக வைத்திருக்கக் கூடாதா? அன்னையாகக் கூடிய பெரும் பதவி கிடைத்தால், உலகக் கடனைத் தீர்த்து இன்னும் மகிழ்ச்சியாக மடிவேன். கிடைத்த அளவுக்கு மகிழ்ச்சி. இந்நாட்டில், மனைவிக் கனவே காணமுடியாதிருக்கின்ற இளமுருகிகள் எவ்வளவு? 4 (தாமரை அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடித்து, விழுந்த பூச்செம்மலைச் செருகித் தலையணையைத் தலைமேல் வைத்துக்கொண்டு கணவன் நிழற்படத்தை நேரே பார்த்து வணங்கி) அன்ப! காதல! உயிர! இது திருமண நன்னாளில் மணக் கோலத்தொடு, என் கமுகுக் கழுத்தை யாழெனத் தொட்டுத் தாலி பூட்டி நாணவிழ்த்த படம். இது விடா நாணத்தால் பூத்தலை கவிழ்ந்து நேரே நிமிர்ந்த உமது வளையாக் கழுத்தில் நான் மாலை மாற்றிய படம். திருமணமாகி ஒரு திங்களில் ஒருங்கிருந்து இயல்பு வடிவாக எடுத்த படம். இது (நாணத் தால்) படக்கருவி தானே பள்ளியறையில் நம் ஓருடலைப் பிடித்த காட்டலாகாப் படம். இத்தகைய தங்கள் முதலன்பு (சிந்தனை யாக) எப்படிப் பறந்தது? காதல் வேறு பக்கம் திரும்பிவிட்டதா? எவளும் தன் பக்கம் திருப்பிக் கொண்டாளா? காதலில் ஒப்புமையாராய்ச்சி செய்ய அறிவு விழைந்ததா? உம் வெள்ளக் காமத்திற்கு ஒருத்திக்கரை கூடாது என்று எண்ணினீர்போலும். உம் மெய்ப் போதைக்கு ஏலாப் பேதை என்று பொட்டணத் தாள்போல் எறிந்து விட்டீர்போலும். அன்புக் குறைவுக்குக் காரணக் குறிப்பு தெரிந்தால் நிறைவு செய்யப் பார்க்கலாம். திரைப்பாடல் எனக்குப் பிடிப்பதில்லை. படக்காட்சியும் ஆண்டுக்கு ஓரிரு முறைதான் பிடிக்கும். திரைப் பெண்கள் போல அறப் பெண்கள் கூந்தலைக் காதில் செருகியும் முன் நெற்றியில் வளைத்தும் கொள்வது எனக்கு வருவதில்லை. அடி தெரியாமல் நிலம் தோயச் சேலை கட்டும் பெண்கள் வயிறெல்லாம் தெரியவும் முதுகெல்லாம் தோன்றவும் கையளவு கச்சு முடிப்பது அறவே பிடிப்பதில்லை. இவள் கவர்ச்சியறியாப் பேதை என்று கற்பறியாக் கலைச்சியை நாடிவிட்டார்போலும். (காதலன் படத்தைப் பார்த்து) சீ சீ என்ன எண்ணப் போக்கு. மடியும் நேரத்தில் மாசு படுத்தும் எண்ணம். அவரும் என்னைப் போன்றவரே. என்றும் பையிற் சீப்பு வைத்துக்கொண்டு திரிவதில்லை. தாளில் முகமா வைத்துக்கொண்டு பூசிக் கொள்பவரில்லை. கலையிதழ்களையோ செய்தித் தாள்களில் கலைப்பகுதிகளையோ பார்ப்பவரில்லை. கலையை விலையாகவும் வலையாகவும் ஆக்கித் திரித்து இளநெஞ்சங்களைக் கெடுக்கிறார்களே என்று பிறரோடு பேசிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கின்றேன். அவரிடத்து நான் ஒரு குற்றமும் ஒரு குறையும் கண்டதில்லை. பெரியவர்களின் நூல்களே அவர் நூலகத்து இருக்கும். பின்பற்ற வேண்டு மென்று துடிப்பார். நடிப்பவரல்லர். அவரை வேறுவிதமாக நினைக்கும் நானே மனைவித் தகுதி குறைந்தவள். பண்பு குறைந்து சொல்லிவிட்டேனே (தப்பு தப்பு என்று கன்னத்தில் அறைந்துகொள்ளுதல்.) (கூந்தல் நுனியைக் கையில் தேய்த்துக்கொண்டு) ஒருகால் என்னை இப்படி அவர் எண்ணியிருப்பாரோ? தப்பெண்ணம் அவருக்குத் தோன்றியிருந்தாலும் இருக்கலாம். (நினைத்து நினைத்துப் புலம்புகின்றாள். படுக்கைமேல் சாய்கின்றாள்) ஓராண்டுக் காலத்தில் கணவன் மனைவியை நெருங்கவில்லையென்றால், அவர் மனக் கொதிக்கும் ஒரு பெருங்காரணம் வேண்டும். அந்தக் காரணம் - பலமான காரணம், அதுவாக - நம்பிக்கைக் குறைவாக இருக்கவேண்டும். ஏதோ என் நடத்தையில் ஒருவித . . . அதுவாக இருந்தால் எப்படி முகம் பார்ப்பார். ஏதோ ஒரு சனியன் தின்று கிடக்கட்டும் என்று ஒதுங்குகிறார். ஊரொப்புக்கு நடந்துகொள்கிறார். இப்படியும் ஒரு போக்காக இருக்குமோ? (சினமும் கொதிப்பும் பெருக) ஐயம், என்ன படிப்பில் ஐயமா? பணத்தில் ஐயமா? யாரிடமும் நகையாடிப் பேசவில்லை. யார் முன்னும் நெடு நேரம் நின்று பேசவில்லை. ஆடை விலகி உடுத்தவில்லை. ஆரவாரத்துக்கு அணி அணியவில்லை. ஆடவர் திரண்டு வரும் கோயிலுக்குச் சென்றதில்லை. எனக்கு விரைவில் திருமணம் ஆனது பொறாது குமரிக் கொள்ளிகள் கல்லூரித்தோழிகள் - அவர் காது கேட்க வீதியில் ஏதும் விளம்பினார்களோ? என்ன அவர் உள்ளத்தில் விளைந்ததோ? யார் என்ன விதைத்தார் களோ? கருவைச் சிதைத்தவள் கன்னியாகி விடுவாளா? இந்த ஐயத்துக்குத் தீர்வேது? குணத்தில் ஐயம் பிணத்தில் முடியும். ஒருகால் என் அடக்கம் அவருக்கு வஞ்சகமாகப் பட்டிருக்கலாம். அவர் சிந்தனையும் முழுத்தவறுதானே. காரணம் எதுவானால் என்ன? அவரிடம் நான் கேட்க முடியாது. என்னிடம் அவர் கேட்க வரமாட்டார். முடிவு, விளைவு இறுதி ஒன்று. ஒன்றே ஒன்று. 5 (கூந்தலை வாரி முடித்துப் பூ வைத்துப் போட்டிட்டுப் பட்டாடையும் செறிகச்சும் அணிந்து, தன்னை முத்துவதுபோல் அவரே வரைந்த ஓவியப் படத்தைக் கூர்ந்து பார்த்து) நன்றும் புரியவில்லை, ஒன்றும் புரியவில்லை. கண்ணகி யாக உன்னை மதிக்கிறேன், எனக்கு ஓர் இளங்கோ தோன்று வார் என்று பாராட்டினார். புன்முறுவல் செய்தேன். கண்ணகி என்பதை அப்படியே காட்டி விட்டாயே; தேவராட்டி புகழ்ந்தபோது, கண்ணகி நல்லாள் இப்படித்தான் புன்முறுவல் பூத்தாள் என்றார். நான் கண்ணகியானால், நீங்கள் . . . புகாரில்லாத கோவலன் என்று தாமே சொல்லிக் கலகலத்தார். கண்ணகியாகக் கண்டஎன்னை ஐயப்படுவார் என்று எண்ணுவதே மடமை, பெருமடமை. (சிந்தனையோடு) எங்கள் இருவரிடமும் ஐயமில்லை. என்றாலும் வாழ்வில்லையே. நெருக்கமும் இல்லை, வயிற்றுப் பெருக்கமும் இல்லையே. (பெருமூச்செறிந்து) ஆம், இனி அதுதான் சரி. தனித் துயரம் தாங்கமாட்டேன். அவரோ இரவு தங்கார். தங்கினாலும் காற்றுக்காக முற்றத்தில் படுப்பார். கவலையற்றுத் தூங்குவார். வீடு அவருக்குத் தங்கும் மடம். அதனைக் காத்துக் கிடக்கும் மடத்தி நான். வயிற்றுக்காகச் சமைக்கிறேன். கூந்தலுக்காகப் பூச்சூடுகிறேன். தாலிக்காகக் குங்குமம் வைக்கிறேன். அற்றத்துக் காக உடுக்கிறேன். அவருக்காக என்ன செய்கிறேன் - செய்கிறேன், அழுதுகொண்டு உயிர் விடுகிறேன். (இரவு மணி பதினொன்று. மாமியாள் வேறோர் அறையில் படுத்துக் குறட்டை விடுகிறாள். அன்று கணவன் தங்கக்கூட வரவில்லை. மெல்லக் கதவைத் திறக்கிறாள் தாமரை. இரவு விளக்கு எரிகிறது. மெத்தென அடி வைத்து இயங்கிச் சமைய லறை செல்கின்றாள். கூந்தலைச் செண்டாக முடிந்து சேலையைக் கயிறு போல் வரிந்து கட்டிக்கொண்டு) மனவமைதி வேண்டும். முடிவான உடலமைதி உறக்க அமைதி வேண்டும். வேறு வகையான கலக்கம் இருந்தால், சொல்லி அறிவுரை கேட்கலாம். கணவனால் வரும் கலக்கத் திற்குத் தேற்றாவிதையில்லை. தேற்றும் விதை உயிரை மாற்றும் வதையே. (திடுக்கிட்டு) ஆ! இவை ஒரு சேர இருக்கின்றன. ஓரத்தில் இருந்தவை நட்ட நடுவிடத்தில் வந்திருக்கின்றன. மறந்து நானே இப்படிச் செய்தேனா? மனக் கலக்கத்தில் மாறுதாறாக வைத்திருப்பேன். (பெட்டியைத் திறந்து) உள்ளே ஒரு நெருப்புக் குச்சியும் இல்லை. (அடுப்பைத் திறந்து) திரியில்லை. (மூடியைத் திறந்து) எண்ணெய்ப் பசை இல்லை. மறைப்புக் கலக்கத்தில் திரியும் எண்ணெயும் குச்சியும் இல்லா விளக்கையும் பெட்டி யையும் மாறிக் கொண்டு வந்து வைத்தேன்; வைத்திருப்பேன்; இன்று நடுப்பகல் உருட்டிய சோற்றை மூக்கில் வைத்துக் கொண்டதுபோல், நேற்று கணவனார் காப்பியில் உப்புப் போட்டதுபோல, முந்தாநாள் மாமி தலையில் தேய்த்துக் கொள்ளக் கடலெண்ணெய் கொடுத்ததுபோலத் தடுமாறிச் செய்திருப்பேன். என் தடுமாற்றம் இப்போது தெரிகிறது. இருந்தாலும் இந்த வகையில் தடுமாற்றம் கூடாது என்று செவ்வையாகச் செய்த நினைவும் வருகிறது. எண்ணிப் பத்துக் குச்சி பெட்டியில் வைத்தேன். பொருதிப் பார்த்து விளக்கை அமர்த்தினேன். ஒரு கால் அவர் செய்த சூழ்ச்சியோ? இன்று அவர் இப்பக்கம் வரவில்லை. சூழ்ச்சி செய்துவிட்டு வராமல் இருந் தாலும் இருப்பார். அவரது அன்னை செய்திருப்பாளா? எப்படித் தெரியும்? என் உணவுக் குறைவு, உறக்கக் குறைவு, நடைமாற்றம், இரவு விழிப்பு, பெரு மூச்சு, தூக்கப் புலம்பல் எதுவும் வெளிப்படுத்திவிட்டதோ என்னமோ? கள்ள உறவைப் பிள்ளை வரவு வெளிப்படுத்திவிடும். என் மாமி சில நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. அவள் செல்லும் நேரம் அவர் செல்வதில்லை. யாராவது ஒருவர் வீட்டில் இருப்பார்கள். (சுற்றும் முற்றும் பார்த்து) மண்ணெண்ணெய்த் தகரத்தைக் காணோம். பக்கத்தில் எந்த எண்ணெயும் காணோம். இதோ ஒரு தீப்பெட்டி (பிரித்துப் பார்த்து) அவ்வளவும் எரிந்த குச்சிகளாக இருக்கின்றன. ஒரு மாதமாகவாவது இக்குச்சிகளைச் சேர்த்து வைத்திருக்க வேண்டும். குட்டு நெடுநாளைக்கு முன்னே புட்டுவிட்டது போலும். (வீம்பான எண்ணத்தோடு) சரி, இன்று உயிர்போவது நின்றது; அவ்வளவே. வீட்டு வழி இல்லாமல் வெளி வழி பார்ப்பேன். வாழ்வு வெறுத்தவர் கட்கு வழியா தெரியாது? உயிரே, ஓரிரு நாள் வாழ்ந்துபோ. (அப்படியே திரியில்லா விளக்கையும் குச்சியில்லாத் தீப்பெட்டியையும் வைத்துவிட்டு, மிகவும் மெல்ல அஞ்சி நடந்து தன்னறை செல்கிறாள். மணி பன்னிரண்டு. மாமி புரண்டு படுக்கும் அசைவு கேட்கிறது. கதவைச் சாத்திக் கொண்டு) பிடிபட்டேன். உள்ளம் கடிவேகப்படுகின்றது. பிடிபட்ட வர் குடும்பத்தில் இடிபட்டவர். சமையலறையில் சேலையில் தீப்பற்றி வெந்து போனாள் என்று சொல்லட்டும் என்று ஒட்பமான ஒரு வழி பார்த்தேன். இவ்விருவருமோ, இவ்விரு வரில் ஒருவரோ ஏற்பாட்டை மாற்றிவிட்டனர். அன்பொடு செய்தார்களா? என்னை வதைத்து மகிழும் வன்பொடு செய்தார்களா? தாகத்தொடு குடி, வேகத்தொடு சா என்று என் நெஞ்சம் தூண்டுகின்றது. இவ்வளவும் செய்து இனிமேல் பின்வாங்காதே என்று என் துடிப்பு நெஞ்சம் கிளறுகின்றது. வாழ்வு பாராதே வழிபார் என்று என் பட்டிநெஞ்சம் இடிக்கின்றது. (இவ்வாறு உணர்ச்சிபட, மீண்டும் உறுதிபட, தெரிந்து விட்டதே என்ற அச்சம்பட, வாழ்வில் அவலம்பட ஏதாவது சாவழி காணும் வன்மத்தொடு அலமாரியைத் திறந்தாள். கணவனது நாட்குறிப்புமுன் இருந்தது. இக்குறிப்பில் தன் குறிப்பை எழுதி வைத்துச் சாகலாம் என்று தாளைப் புரட்டினாள். பல நாட்கள் குறிப்பில்லை. மேலும் தள்ளிப் பார்த்துத் திடுக்குற்றாள், நடுக்குற்றாள். விளக்குக்கு நேரே வைத்துக்கொண்டு வரிதோறும் விரல்வைத்துக் கண்ணீர் மடைபோல்வர) ஐயோ, ஐயையோ, தப்பித்தேன், வாழ்ந்தேன். நெஞ்சு சொன்னதைச் செய்திருந்தால் என்ன என்ன பஞ்சாகிப் போயிருக்குமோ? இல்லறப் பெண்ணுக்கு இந்த இடைப் போக்குக் கூடாது. இல்லறம் இடையறமாகக் கூடாது இல்லறம் எவ்வளவு தொல்லைபோல் இருப்பினும் நல்லறமே, வல்லறமே. உண்மையுள்ள இடம் ஓரிடம். அந்த இடந்தான் இந்தக் குறிப்பிடம். உண்மையுள்ள இடத்தைக் காண முயலவேண்டும். கண்டுவிட்டால் உலகம் எளிது. நெஞ்சப்படி, அறிவில்லா உணர்ச்சிப் பேதையான நெஞ்சப்படி முடிந்திருந்தால் தற் கொலை என்றா ஆகும்? கருக்கொலை என்றல்லவா ஆகிவிடும். கருத்தாய்க்கொலை என்று பழி மடங்கிரண்டாகாதா? அடக்கத்தை, அறிவை, ஆற்றலை உணர முடியா விலங்குப் பேதை. மனைவி என்ற மணவுரிமைச் செருக்கு கணவரின் அருமை பெருமைகளைக் கவித்தொழிந்தது. (நாட்குறிப்பை மார்பிலும் தாலியிலும் அணைத்துக் கொண்டு, தன் வயிற்றை வணங்கி ஓசையின்றி வாசிக்கின்றாள்.) இன்றைய புணர்ச்சிக் கலவியில் தாமரை நல்லாள் கருவுற்றாள் என்று உணர்கிறேன். பத்துத் திங்களில் மகப்பேறு பெறுவேன். கருவுற்ற பிணையை ஆண் விலங்கு நாடுவதில்லை. கருக்கொண்ட பறவையை ஆண் பறவை மருவுவதில்லை. அஃறிணைப் பண்பு இதுவாயின் உயர்திணை அப்பண் பினையாவது கடைப்பிடிக்க வேண்டாமா? கருவுற்ற நாளில் மனைவியைப் பேணும் கணவனாக நடந்துகொள் என்பது காந்தீயம். இது காந்தி நூற்றாண்டு. என் மகவு இந்நூற்றாண்டில் பிறப்பது ஒரு தனிப்பேறு. இது வள்ளுவர் ஈராயிரம் ஆண்டு. என் குடும்பத்துக்கு இப்பிள்ளை அறிவுப்பேறு. இப்பேறு சிறிது சிதையவும் இடங் கொடுத்தலாகாது. மனைவியோ கற்புக் கடலன்ன காதலள். நானோ காட்டுத் தீயன்ன காதலன், அரிய வேட்கையன். எனினும் உண்மையை உணர்கின்றவன். வள்ளுவத் திலும் காந்தீயத்திலும் பொய்யாப் பற்றினன். ஆதலால் ஒரு குறிக்கோள். இன்று முதல் குழந்தை பிறக்கும் வரை புலனடக்கம் மேற்கொள்வேன். குழந்தை தன் தாய் முகம் பார்த்து நகைக்கும்போது நான் என் மனைவி இன்முகம் பார்த்து நகைப்பேன். என் இல்லற ஆண்மையைத் தாமரைக் கண்ணகி ஒரு நாள் விளங்கிக் கொண்டு என்னைப் போற்றுவாள்.’ 9. கற்புக்காக (அங்கணன் என்பவன் மருத்துவப் பட்டம் பெற்றவன்; நெஞ்சு மருத்துவத்திலும் தனிப் பயிற்சி பெற்றவன். அரசு மருத்துவமனையில் தொழில் பார்ப்பவன். 28 வயது இருக்கும். இவன் குடும்பம் உழவுக் குடும்பம். வளர்மதி என்பவள் இவன் மனைவி. இவளும் மருத்துவப் பட்டம் கொண்டவள்; பேற்றில் தனிப்பயிற்சி உற்றவள். வயது 25 இருக்கும். எழுதுகோல் போல் சிறிய இடைகனத்த வடிவம், குயில் போன்ற நிறம், கைக்குடை போன்ற கூந்தல், அருவியோட்டம் போன்ற வளை வகுப்பு, புள்ளி படாப்பொலி முகம். அச்சுத் தொழிற் குடும்பத்திற் பிறந்தவள். மணமாகி நாலாண்டுகள் ஆயின. கையில் ஒரு பெண் குழந்தை. குழவியின் பெயர் நீலவிழி. பிறந்து மூன்று திங்கள் ஆயிற்று. பாலூட்டுவதற்காக வேலைக்காரி மருத்துவ மனைக்குக் குழந்தையைக் கொண்டு வருகின்றாள்.) வளர்மதி : (குழந்தையை வாங்கித் தனியிடம் செல்கின்றாள். தன்னைப் பார்த்தவுடன் சதங்கை ஒலிக்கச் சிறு கால்களையும் பூங்கைகளையும் ஆட்டி முலைக்காம்பில் வாய் வைக்கத் துடிக்கும் மகவின் பரப்பரப்பைப் பார்த்துக் கவலை மறந்த வளாய், தன்னுள்.) என் கைத்தொட்டிலிற் கிடக்கும் இது என் முதற் குழந்தை, இறுதிக் குழந்தையும் இதுவே. நீ என் பெண்ணுக்குழந்தை, கண்ணுக்குழந்தை. நான் உனக்கு அம்மா. நீ எனக்குப் பாப்பா. வேறு யார் உறவு நமக்கு? என்னைக் கண்டதும் காணாததுமாய் உன் பஞ்சிதழ் விரிகின்றது. விரலுடைய தாமரையை வண்டிசை யொடு அசைக்கின்றாய். யாழ் வாசிக்கின்றாய். குழலூதுகின் றாய். கைத்தாளம் போடுகின்றாய். பன்னீர் தெளிக்கின்றாய். பாவை விளையாடுகின்றாய். வெண் தாமரை, செந்தாமரை என்றெல்லாம் சொல்வார்கள். நான்முகன் பிறந்தது கொப்பூழ்த் தாமரை என்று புராணிப்பார்கள். நீயோ என் வயிற்றுச் சேற்றில் உதித்த பெண் தாமரை. உன்னை யார் பெற்றது? என்ன ஐயப்பாடு? நான் ஒருத்தி தான் உன் பிறப்பை உலகுக்கு வழங்கினேன். என் முகம் பார்த்ததும் உன் முகத்தில் இன்பக்குழி எனக்கோ . . . . எனக்குந்தான் என்ன? உன்னைப் பார்த்ததும் கவலை பட்டம்போல் ஓடுகிறது. ஓடித் தொலையவில்லை. மறுபடி இருமடங்கு மும் மடங்காகப் பெருகி வருகிறது. என் உள்ளம் புரியும் வயது உனக்கு இருந்தால் நீ கேட்பாய், ஏன் பெற்றாய் என்னை, ஒரு நற்றாயா என்று. ஆம் உனக்கு நற்றாயும் நானே. செவிலித் தாயும் நானே. கைத்தாயும் நானே. உனக்குத் தாய் தந்தை பாட்டன் பாட்டி பூட்டன் பூட்டி எல்லாம் ஓர் இறைவன்போல நானே. என்னைத் தவிர உனக்கு உறவு, உன்னைத் தவிர எனக்கு உறவு இல்லை. நம்மிருவர்க்கும் என்ன உறவு? எவ்வளவு உறவு, பால் குடிக்கும் உறவு, பாலூட்டும் உறவு. (குழந்தையின் இடக்கை தாயின் வாயைத் தொடுகிறது.) புரியாமல் புலம்புகின்ற பேச்சை நிறுத்து என்று வாயை அடிக்கிறாய். பேச்சையும் நிறுத்த வேண்டும், ஏச்சையும் நிறுத்த வேண்டும். நம்மிருவர் மூச்சையும் . . . . (குழந்தை பால் குடிப்பதை நிறுத்தித் தாய் முகம் பார்க்கவே.) புரிந்து நிறுத்தினாயா? பால் ஊறவில்லை என்று நிறுத்தினாயா? பால் கொடுக்கும்போது பேசக் கூடாது. நான் கொதிப்பாகப் பேசுகிறேன். உட்பாலும் கொதிக்கிறது. முலைப் பால் குழந்தைக்கு விலைப்பால் போலப்படுகின்றது. இந்த மூன்று மாதத்தில் என்ன பகுத்தறிவு! (குழந்தை தன் சிறுவிரலால் தாயின் மார்பைத் தட்டவே.) பெண் பிள்ளையாயினும் நீ ஆண் பிள்ளை. என் நெஞ்சைத் தடவிக் கவலையை விடம்மா என்று முகம் பார்க்கிறாய். வெள்ளிரிப்பிஞ்சு அனைய அஞ்சு விரலாலும் என் மார்பைத் தொட்டு, கொதிக்காதேம்மா, உள்ளம் குளிரம்மா, திடமாக இரம்மா என்று விரலை நீட்டுகிறாய். என் மனசு சின்ன மனசு. உன் மனசு பெரிய மனசு. என் நெஞ்சு மட நெஞ்சு. உன் நெஞ்சு திட நெஞ்சு. மருக்கொழுந்தே சுடர்க்கொழுந்தே மதிக்கொழுந்தே என்னுதிரக் கருக்கொழுந்தே விதிக்கொழுந்தே கண்கலங்கல் காணாயோ? ஊசிகுத்தி உடல் நோயை ஓட்டுவேன் என்ஒழுக்க மாசுகுத்தி நலப்படுத்தும் மாணூசி சொல்லாயோ? மருந்தெழுதி ஊரார்நோய் மடிவிப்பேன் என்மடியில் இருந்தெழுதிச் சீட்டொன்றும் என்கையில் தாராயோ? கிழித்தறுத்துப் பிறர்நோயைக் கெடுவிப்பேன் என்னுளத்தை வழித்தறுக்கும் நுண்கருவி வாங்குமிடம் காட்டாயோ? முலைகுடிக்கும் வாய்க்குள்ளே முறுவலிக்கும் என்சிரிப்பு மலைகுடிக்கும் நோய்க்கெல்லாம் மருந்தம்மா என்னாயோ? (மறு முலையில் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டு.) எனக்கா தெரியாது? கரு வராமல் பிறக்காமலே தடுத்து விடுவது; மீறி உருவானால் பருவாகாமல் கரைப்பது; அந்தக் குஞ்சுக் கரு கரையாமல் திமிறி வளரத் துணிந்தால் துண்ட மாகப் பிண்டமாகக் கழிப்பது. இம்முறையெல்லாம் நுணுக்கமாக எனக்கு தெரியும். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், பாடத்தில் இல்லா இழிசொற்களை முதலில் பழகிச் சுவரில் எழுதிக் கொள்வதில்லையா? அதுபோல மருத்துவம் பயிலச் செல்லும் இளையவர்கள், முதலில் கருக்கேடு பற்றிய நடைமுறைகளை ஆவலொடும் அறியாமலும் தெரிந்துகொண்டு விடுகிறார்கள். வேட்கையிருந்தால் வெளிச்சம் தானே வரும். அதிலும் காம வேட்கைக்குக் கடலடியும் தெரிந்துவிடும். என்னை மருத்துவம் படிக்க வைக்க மனமார இசைந்த என் தந்தையும் ஒருவாறு இசைவருளிய என் தாயும் முதல் நாள் நான் மருத்துவக் கல்லூரிக்குப் புறப்பட்டபோது, ‘வளர்மதியே! இங்கே வா. நாங்கள் இருவரும் உன் புதுப்படிப்புக்கு ஒரே ஒரு நல்லுரை சொல்கின்றோம். எந்நிலையிலும் எக்காலத்தும் அதனைக் கடைப்பிடி. நாங்கள் உயிரோடு இருக்குமட்டும் அல்ல. எங்கட்குப் பிற்பாடும் உறுதியோடு கடைப்பிடித் தொழுகு’ என்றார்கள். (சிரித்துக்கொண்டு) மகளுக்கு அறிவுரை சொல்ல இவ்வளவு பீடிகை ஏனப்பா. கல்லூரிக்கு அதுவும் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டால் பெற்றோர் அறிவுரை செவிக்குள் நுழையாதா? அந்த மாணவக் கும்பலில் சேர்ந்தவள் இல்லை நான். இதோ பாருங்கள். (தந்தையும் தாயும் தானும் இருந்து எடுத்த நிழற்படத்தைத் தன் கொன்றைவேந்தன் புத்தகத்திலிருந்து எடுத்துக்காட்டி.) யார் படத்தை நான் போற்றி வைத்திருக்கிறேன். முதல் நாள் கல்லூரி போகுமுன் உங்கள் படத்துக்குச் செம்பூ இட்டு வணங்கி வைத்திருக்கிறேன். பெற்றோர் சொல்லைக் கேட்பது நன்றி. அதன்படி நடப்பது வென்றி. நீங்கள் இருவருமா சேர்ந்து வந்து சொல்ல வேண்டும்? ஒருவர் சொன்னால் ஒரு குரலில் இருவரும் சொன்னதாகவே பொருள். சொல்லுங்கள். எது வேண்டுமானாலும் கழறுங்கள். அந்த நல்லுரையை என் படிப்புக்கென்ன, என் வாழ்க்கை முழுதும் நில்லுரையாகக் கொண்டு, கொண்டபடி ஒழுகுவேன் என்று மறுமொழிந்தேன். தாய் என்னைச்சேர ஆரத்தழுவிக் கொண்டு ‘உன் மருத்துவக் கல்வி யார் கருவையும் அழிக்கத் துணையாகக் கூடாது. எவ்வளவு பொருள் கொடுத்தாலும், எவ்வளவு வல்லாளர் கட்டளையிட்டாலும் கருச் சிதைகயமைக்கு இணங்காதே. கள்ளக் கூட்டுறவில் உண்டான கரு பிறந்தால் குடிப்பெருமை மணப்பெருமை கெட்டுப் போகும் என்று வருமானம் உடையவர்கள் கருச் சிதைவுக்கு வருவார்கள். எதிர்த்துக் கூறாதே, இசைவும் கூறாதே’ (என் தந்தை என்னை இருக்க வைத்து) ‘இம்மருத்துவம் எனக்குத் தெரியாது என்று பொய் வேண்டுமானாலும் சொல்லு. கருவோடு போகவிடு. ஒன்றாக நல்லது கொல்லாமை என்ற தமிழியலை மறவாதே. கருவே அடிப்படை. கருவே உலக முதல். கருவே கடவுளிருக்கை. உலக முகம் பார்க்க ஆசையொடு தோன்றி வேகமாக வளரும் சிற்றுயிரை அதற்கு வாக்குரிமை இல்லை என்பதற்காக வலிய கருவியால் கொல்லுதல் கொடிய வன்கண்மையாகும். கருச் சிதைவு பற்றிக் கற்றுக்கொள். இவ்வொருவகையில் கற்றபடி நில்லாது அன்புக்குத்தக நில்’. இவ்வாறெல்லாம் என் உரிமைப் பெற்றோர்கள் . . . (கண் கலங்கி) இன்று அவ்விருவரும் இல்லை. தங்கள் வாழ்வறத்தை, மன்னாய அறத்தை எனக்குப் புகன்றார்கள். ஆம். அவர்கட்கு உண்மையாக நடந்துகொண்டேன். படிக்குங் காலத்துப் பெண்ணுடலத்தைச் சோதனை செய்யும் போதுகூட உட்கரு இறந்திருந்தாலும் தோற்சிதைவின்றி எடுப்பேன். கருவுற்ற ஒரு நங்கை உதிரங்கொட்டி வலிப்பட்ட போது, பெரிய மருத்துவர் ஊசி மருந்து ஏத்திக் கருவை வழுவச் செய்தார். அவ்விடத்து நிற்க மனமின்றிப் பேற்றறை விட்டுச் சென்றேன். ஒரு நாள் அவர் என்னை அங்ஙனம் செய்யப் பணித்த சமயம் அவர் கட்டளையைத் தடுக்கும் துணிவு எனக்கில்லை. பெற்றோரின் கனிமொழியைக் கைவிடும் துணிவும் எனக்கில்லை. கருவியைப் பிடிக்கக் கை நடுங்கியதைப் பார்த்த அவர் இது இக்காலத்துச் செய்ய நடுங்கினால் உனக்குப் பிற்காலத்து என்ன வருவாய் வரும்? கருத்துவம் தெரியாத மருத்துவம் என்ன பயன் என்று சினந்துகொண்டார். என் பெற்றோர் நல்லுரையைச் சொன்னால் இக்கற்றோர் கேலி செய்வர் என்று அம் மறை மொழியை நான் சொல்லவில்லை. பெற்றோர்கள் நமக்கு என்ன செய்திலர்? நாம் அவர்கட்கு என்ன செய்துவிட்டோம்? காலத்திற்கு ஏற்றதோ ஏற்றதில்லையோ அவர்கள் சொல்லியது ஒன்றே ஒன்று. முறை என்பது அதனைச் செய்வதே. நூறு என்ன, ஆயிரம் குறையட்டுமே, பதினாயிரம் இலக்கம் குறையட்டுமே. அவர்கள் நலத்தொடு தந்த இந்த உயிர் மெய்க்கு எதுவும் ஈடாமோ? (பால் குடித்த குழந்தை முலைக்காம்பை விட்டு வயிறு நிறைந்து தாய் முகம் பார்த்துத் தவ்வாட்டம் போடுகிறது. சிறு சதங்கை கலிக்கிறது. மறுபடி வந்த வேலைக்காரி குழந்தையைப் பெற்றுக்கொண்டு செல்கிறாள்.) 2 (ஒரு வாரம் கழித்து ஒருநாள். கைக்குழந்தையுடன் வயலில் உள்ள ஏற்றுக் கேணிக்கு அருகே அமர்ந்துகொண்டு தன் மிதியடியைக் கழற்றி வைக்கிறாள். குழந்தையின் சிறு மிதியையும் கழற்றுகின்றாள். கேணிக்கு அருகே நீரோடும் கால்வாய்ச் சிறு பாலத்தில் உட்கார்ந்து மகவுக்கு மாவுணவு கொடுக்கின்றாள்.) வளர்மதி : (தன்னுள்) ஒழுக்கம் என்பது உள்ளம் அறிந்தது. ஒருவருக்கும் தெரியாது என்று இலைக் கீழ்ப் புழுப்போலப் பிழைக்குள் ஒளிந்து கொண்டிருக்க முடியுமா? மனக்கரி என ஒன்று இருக்கின்றதே. என் இழுக்கும் உரியவருக்குத் தெரியாது தான். ஆனால் அல்லாதவனுக்குத் தெரியுமே. அகலிகைபோல ஒருமுறை தானே உடற்பிழை என்று மறுபடியும் ஓர் இராமன் வருவதை எதிர்பார்த்திருக்கலாமா? (குழந்தையின் தலையில் விழும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.) அன்றே பிறர்போல் செய்திருப்பேன். என் பெற்றோர்கள் அந்த நல்லுரை சொன்னபோது என் எதிர்காலத்தை நினைத்துத்தான் சொன்னார்களோ? கருவை அழித்தால் முதற் பிழை போய்விடாது. அறுக்க அறுக்கத் துண்டுகள் மிகும். ஒழுக்கப் பிழை ஒன்று, கருப்பிழை இரண்டு, துணிவுப்பிழை மூன்று. கருவை அழித்து மேலும் பிழைகளைப் பெருக்கிக் கொள்ளக் கூடாது. ஒத்துக்கொண்டால் பிழைகள் குறையும். ஆனால், ஐயோ, இப்பிழை தாய் முன்னும் யார் முன்னும் சொல்லக்கூடியது இல்லையே. என் வாழ்க்கையில் நிகழக் காரணமும் இல்லை. எப்படியோ ஒருகணம் நிகழ்ந்து குழந்தையாகவும் நிலைபெற்றுவிட்டது. (குழந்தையின் மூக்கில் இருந்த மாவுத் துண்டைத் துடைத்து.) ஏன் அவ்வாறு நிகழ்ந்தது, நிகழ இடங்கொடுத்தேன், நெகிழ இடங்கொடுத்தேன்? என் கணவர் கடலலைபோல் அழுக்கற்றவர். தாய் மகள்போல் அழுக்காறு அற்றவர். என் கூடப் படித்த அவன் வீட்டிற்கு வந்த போதெல்லாம், என் கூடப் படித்தவன் என்பதற்காகவே வரவேற்றார். உடனிருந்து விருந்து செய்தார். நல்லுந்திலும் பக்கம் வைத்து அழைத்துச் சென்றார். அந்த நெடுமிடல் வஞ்சகன் என்று சொல்வதற்கில்லை. பொய்யாக நடித்தான் என்று நினைக்கவில்லை. என்னை ஏறிட்டும் கூறிட்டும் பார்த்ததில்லை. எனினும் என் கணவர் நெடுமிடலுக்கு நல்வரவு கூறிப் பேசிக் கொண்டிருப்பதை உள்ளூர வெறுத்தேன். அண்மையில் மணமான குடும்பத்தில் காமஞ் சான்ற ஒரு பருவன் வந்து போய்க் கொண்டிருப்பது ஊர்க் கண்ணுக்குப் பொருந்தாது. ஒருநாள் திடீரெனப் பழிக்கல் வீழ்ந்துவிடும் என்று என் உள்ளம் உறுத்தியது. (மாத்துண்டைத் தின்று வாயுதப்பும் குழந்தைக்கு வாயு றிஞ்சியைச் சப்பும்படி செய்தாள். தன் கண்ணீர் குழந்தையின் நிறச் சட்டையை நனைக்கத் தலை கவிழ்ந்தவளாய்) உலகத்தில் அருஞ் செயல்கள், கொடுஞ் செயல்கள் எல்லாம் இமைக்கும் அளவில் நடந்து எங்கோ இழுத்துச் செல்கின்றன. நெடுமிடலைக் குறை சொல்லி என்ன பயன்? பெண்ணல்லவா கற்புப் பிடியாக இருக்க வேண்டும்? கண்ணல் லவா இமை காப்பாக விழிக்க வேண்டும்? அவரில்லாத போது வெயில் நேரத்தில் இல்லம் வந்த நெடுமிடல் வாசற்படியில் நின்றவாறே ‘அண்ணன் அங்கணன் இன்று திரை செல்லலாம் ஆறு மணிக்கு வா என்று சொன்னார். என் தந்தை வெளியூர் போவதால் வர இயலாது என்று தெரிவியுங்கள்’ என்று கூறினான். வாசற்படியில் ஒரு காலும் தரையில் ஒரு காலும் வைத்துக் கொண்டிருந்தவனை ஒரு பணிவுக்காக ‘உள்ளே வாருங்களேன்’ என்று இயல்பாகச் சொன்னேன். அவனும் உள்ளே வந்து அமர்கையில் இருந்தான். மேலும் ஒரு பேச்சுக்காகத் ‘தண்ணீர் வேணுமா’ என்று இயல்பாகக் கேட்டேன். எப்படி மறுப்பது என்று நல்லுள்ளங்கொண்டு ‘குளிர் நீர் இருந்தால் அரைக்குவளை கொடுங்களேன்’ என்று பணிவொடு வேண்டினான். எல்லாம் இயல்பாக மனத் திரிபின்றி நடந்தன. (விம்மியவளாய்) என்ன கேடு காலமோ? என்ன மனக்கோலமோ? குளிர் நீர் கொடுத்ததில் தவறில்லை. மனைவியின்றிக் கணவன் விருந்தோம்ப முடியாது. கணவனின்றி மனைவி யாருக்கும் விருந்தோம்பக் கூடாது. கணவன் இருக்கும்போது அடியவர்க்கு மாம்பழம் கொடுத்திருந்தால், அம்மையின் இல்லறம் இம்மையிற் சிறந்திருக்கும்; கணவனும் சிவனடி யான் ஆகியிருப்பானே. தண்ணீரை நாற்காலிமேல் வைத்திருக்க வேண்டும். விரல் படாமல்தான் அவன் கையில் நீட்டினேன். அவனும் தன் விரல் படாமல் ஒதுங்கி நின்றுதான் வாங்கினான். ஆனாலும் என்ன? நாணத்தால் அக்குவளை வழுக்கியது. குவளை விழக் கூடாதே என்று வேகமாக இருவர் கையும் தடுமாறிய நிலையில் விழுங் குவளையைப் பிடிப்பதை விட்டு ஒருவர் கையை ஒருவர் விடாது பிடித்துக் கொண்டோம். கையுணர்ச்சி பட்டவுடன் நகையுணர்ச்சி தோன்றியது. ஒரு நொடியில் விசுவாமித்திரனுக்குப் போல் ஒளிந்து கிடந்த பாலுணர்ச்சியும் மாலுணர்ச்சியும் கலந்து இந்த மகவுருவம் ஏற்பட்டு விட்டது. ஒரு துளைபட்ட அடிப்பனையானேன். ஒரு புள்ளிபட்ட பலுவன் ஆனேன். ஓரெண் கிழிந்த நாணயத்தாள் ஆனேன். ஒரு புண்பட்ட குடலானேன். குருதிக்குழாய் மாறிய நெஞ்சானேன், ஆகாதவள் ஆனேன். (அழுது வடியும் கண்ணீர் சிற்றோடையில் கலக்கின்றது. குழந்தையின் முகமெல்லாம் கண்ணீர், உடையெல்லாம் கண்ணீர், மாத்துண்டெல்லாம் கண்ணீர். குழந்தை கத்தத் தொடங்கிவிட்டது. பால் கொடுத்து அணைத்துக்கொண்டு.) தங்கத்தினும் தங்கமான அவர் பங்கத்தினும் பங்கமான கற்புக் கெட்ட என்னை, நான் சாய்காலியில் நடுங்கிக் கிடப் பதைப் பார்த்து, என்ன உடலுக்கு, உன் உடலுக்கு என்றும் இல்லாதது போல் ஏன் இவ்வளவு அதிர்ச்சி. உடலதிர்ச்சி யினால் வந்த மனவதிர்ச்சி, என்ன, என்ன காரணம். நான் பார்க்கும் மருத்துவம் போதாவிட்டால், நம் பேராசிரிய மருத்துவர்களை அழைத்து வரட்டுமா என்று உள் கலங்கிக் கேட்டார். அவர் என்னைத் தொட்டு நாடி பார்த்தபோதும், மார்பில் மூச்சுக்கருவி வைத்துப் பார்த்தபோதும், பாவயேனைத் தொடுகிறாரே, பிறன் கைபட்ட இடத்தைத் தொடுகிறாரே, கற்புப் பதடியைத் தொடுகிறாரே, வாழ்க்கைத் கேடியைத் தீண்டுகிறாரே, இழுக்குப் பிணத்தைத் தீண்டுகிறாரே, இல்லறக் கொலைச்சியை வாழ வைக்க நினைக்கிறாரே என்று அவர் தம் கைபடும் போதெல்லாம் துடிதுடித்துக் கொண்டேன். அவரோ யார்? இதுவரை பிறந்த சான்றோர் எல்லாம் ஒருங்கு கூடிய சால்பு வடிவானவர். திருக்குறள் போன்ற அறநூல் எல்லாம் கூடிய ஒரு பண்புப் பிழம்பானவர். கற்புப் பெண்டிர் எல்லாம் ஓர் ஆண் வடிவாக வந்தவர். இனிய கனிகளின் சாறெல்லாம் ஒரு கட்டிபட்டவர். என்னை இன்னும் - ஒரு குழந்தையை ஒரு மாதிரியாகப் பெற்ற பின்னும் - கண்ணே கண்ணே என்று கண்ணால் அழைப்பவர். (அவருடைய உருவப்படத்தைத் தன் பணப் பையிலிருந்து எடுத்து வணங்கித் தொழுது) இன்று வீட்டைவிட்டு நான் வேலைக்குச் சென்ற பின் புயல் அடித்தாற்போலத் திடீரென உனக்கு ஏற்பட்ட இவ்வளவு பெரிய மாறுதல் என்ன என்று கேட்டார். பொய் சொல்ல மனம் வரவில்லை. உண்மை சொல்வது உயர்வில்லை. மெய் சொன்ன காரைக்காலம்மையார் தவித்தபோது இறைவன் உதவி செய்தான். மெய் கெட்ட எனக்கு சிவன்யொரு பாகன் என்ன துணை செய்ய முடியும்? மேலும் கேட்டால் மனவதிர்ச்சி பெருகும் என்று என் கணவனார் அடக்கமாக இருந்தார். ஆனாலும் என் சிதைவு என்னுயிரை அரித்தது. அன்று முதல் நெடுமிடல் வரவில்லை. வரவில்லையே என்று அவரும் கேட்கவில்லை. அதுபற்றி நானும் ஒன்றும் சொல்லவில்லை. அவன் வராததற்கும் என் மாற்றத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு என்று ஊகித்துக் கொள்வது பெரிய காரியம் ஆகுமா? அவன் வந்து ஏதாவது வம்பு பண்ணியிருப்பான். சீ நாயே எட்டி நில் என்று இவள் ஏசிக் கற்பை ஒரு நொடியில் காத்துக் கொண்டிருப்பாள். நண்பன் இழி செயலைக் கணவனார்க்குச் சொன்னால் என்ன செய்வாரோ என்று நான் சும்மா இருப்பதாக அவர் எண்ணியிருக்கக் கூடும். இந்திரன் அகலிகை நாடகம் நடந்தது என்று அவர் நல்லுள்ளம் எண்ணாது. மனைவியின் கற்பை ஐயப்படாத இராவணன் அவர். (கணவன் படத்தைக் கண்ணுக்கு நேரே பிடித்துக் கொண்டு) அன்று முதல் அவருக்கும் எனக்கும் இரவு நட்பு இல்லை. (கேலியாக) இவள் காமவாசை அற்றவள் இல்லையா? அடக்கம் உடையவள் இல்லையா? பாடல் பெறத்தக்க பத்தினியில் லையா? கணவன் உறவின்றிக் குழந்தை பெற வல்லவள் ஆச்சே. பேறு மருத்துவம் படித்தவள் இல்லையா? மணமான பின் கணவனின்றிக் குழவி பெற்ற ஒழுக்கத்தி. இருபால் அணுக் கலப்பால் சோதனைக் குழாய் வழிக் குழந்தை பெறுவதைக் காட்டிலும் நான் பெற்றுக் கொண்ட முறை இயற்கை முறை. அவர் என்னைத் தொடவரும் போதெல்லாம் காற்றிலை போல ஒருவகை நடுக்கம் வருவதைப் பார்த்து, சிலநாள் தொட வந்து, பின் தொடுவதை நிறுத்திக் கொண்டார். இக்குழந்தையைத் தொடும்போதும் மின்சாரம் போல எனக்கு நடுக்கம் பாய்வதைப் பார்த்து இந்நீலத்தைத் தூக்கி முத்துவதையும் மறந்துவிட்டார். குழந்தை அவரைக் கண்டு சிரிக்கும், ஓடும், மழலும். என் நடுக்கத்துக்கு அஞ்சி, மாத்துண்டு மிட்டாய் முதலியவற்றை வெள்ளைத்தாளில் வைத்துக் கொடுப்பார். அவ்வாறே பெற்றுக் கொள்வது அதற்கும் பழக்கமாயிற்று. குழந்தை ஒன்று இருந்தும் எங்கள் வாழ்வு ஓராண்டுக் காலம் நீலகண்டர் வாழ்வு போலா யிற்று (கேலியாக) என் புரட்சி ஒழுக்கத்தால். என் உள்ளம் என் வயிறு என் குருதி என் நரம்பு ஒவ்வொன்றும் கொதித்தது. கணவரின் பண்பு என்னைக் சுட்டது. அவர் பொறுமை என்னைக் கரித்தது. என்னை நம்பிக் கிடந்து அவர் ஏன் இன்பத்தை இழக்க வேண்டும். என்னைக் கற்பாக்கி அவர் இன்பம் நுகர முடியுமா? சல்லிக் கல் மலையாகாது. ஒரு நாள் பகலில் அவரிடம் கூறினேன். ‘இப்பிறவியில் இந்த நடுக்கம் எனக்குத் தீராதுபோலப் படுகின்றது. நீங்கள் இளவயது. கணவனுக்கு நடுங்கும் மனைவியை எவ்வளவு நாள் பொறுத்துப் பார்ப்பது? உங்கள் விருப்பம் போல் கற்புடைய ஒரு நல்லாளை மணந்து கொள்ளுங்கள். நல்வழி பெருக்கிக் கொள்ளுங்கள். வெள்ளைத் தாளில் கையெழுத் திட்டுத் தருவேன். என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொண்டு எனக்கு மனைவி விலக்கு அளியுங்கள். நீங்கள் ஒருத்தியோடு இன்பமாக இருப்பதைக் கேட்டால் என் நடுக்கம் தீர்ந்துவிடும். அப்பெண் வழி உட்கட்கு ஒரு மகவு பிறந்துவிட்டால் இக் குழந்தையை நீங்கள் தொடும்போது எனக்கு ஏற்படும் நடுக்க மும் ஒடுங்கிவிடும். இதுவே மருத்துவராகிய தாங்கள் எனக்குச் செய்யவேண்டிய மருந்து.’ உடனே அவர் நடுங்கினார், சிரித்தார், சிரித்துக்கொண்டே நடுங்கினார். என்ன சொன்னாய், என்ன சொன்னாய் என்று சொல் வராமல் திகைத்து நின்றார். கணவனும் மனைவியும் பேசுகின்ற பேச்சா இது? மனைவி கணவனுக்குச் சொல்கின்ற வாழ்க்கை முறையா இது? என்ன மறுமொழி என்னிடம் எதிர்பார்க்கிறாய்? (சிரிப்பாக) என் ஒருமையைச் சோதிக்கிறாய். இனி நீ இவ்வாறு சொன்னால், எனக்கும் நடுக்கம் வரும். இருவர்க்கும் நடுக்கம் வந்தால் இரண்டு எதிர்மறை உடன்பாடு போல, நடுக்கத்துக்கு ஒடுக்கம் வரும். (தும்மிய குழந்தையை நூறு என்று சொல்லி வாழ்த்தி மூக்கையும் வாயையும் துடைக்கிறாள்.) என் பெற்றோர் என் திருமணம் பேசி முடியுமுன் ஓர் உறுதி கொண்டனர். ‘அப்பா! இந்த நாட்டில் ஆண் எத்தனை மறுமணங்கள் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று ஒரு தீய பழக்கம் மரபாக வந்து கொண்டிருக்கின்றது. அந்த எண்ணம் இருப்பவன் மனைவியிடம் அவள் இளமை குன்றக்குன்ற முன்போல அன்பாக இருக்கமாட்டான். குழந்தைக்குப் பின் அவள் பொலிவு இன்னும் மெலிய, அவன் அன்பு திசை மாறும். இன்னொரு இடத்தில் வேலை தேடிக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றவன், இருக்குமிடத்தில் செம்மையாகப் பணி செய்வானா? இன்னொன்று என்பது சுவையாக இருக்கலாம். நிலைபேற்றை நல்காது. தந்தை ஒன்று தாயொன்று தாரம் ஒன்று என்பதுவே குடும்ப முறை. எந்நிலையிலும் எக்காரணத்தாலும் வேறு எண்ணாதே’ என்று தங்கள் திருமணப் படத்தைக் காட்டி நல்லுரை கூறினர். இயல்பாக நான் அப்படித்தான் ஒழுகுவேன். உங்கள் அறிவுரைக்குப் பின், எனக்கு வந்தவள் எப்படியிருந்தாலும் - அழுத்தமாகச் சொன்னேன் - கற்பில் ஊனம் பட்டாலும் வேறொன்றைக் கனவிலும் நினையேன் என்று முடித்தேன். இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று இராமன் ஒருவரம் சீதைக்குக் கொடுத்தானாம். கெட்டிக்கார இராமபிரான் ‘இந்த இப்பிறவி’ என்று ஓர் இக்குவைத்துச் சொன்னது புரியாமல் எளிய சீதை அதனைச் செவ்வரம் என்று பாராட்டுகின்றாள். (சிரித்துக்கொண்டு) என்னிடம் என் மனைவி வரம் கேட்கமாட்டாள். கேட்டாலும் சீதை மாதிரி கேட்கமாட்டாள். கொடுத்தாலும் இராமன் மாதிரி வரம் கொடுக்கமாட்டேன். எந்த எப்பிறவியிலும் இந்த ஒரு மாதினையே தீண்டுவேன் என்று நேர் வரம் கொடுப்பேன். வேண்டுமானால் வரம் அங்கணனாகிய என்னிடம் கேட்டுப் பாரேன் என்று சிரித்துக் கூறினார். (வயற் காற்றின் மிகுதியால் உடல் நடுங்கும் குழந்தையைச் சேலைக்குள் அணைத்துக்கொண்டு, குளிர் புகாதபடி அதன் கால்களை ஒடுக்கி வைத்துக் கொண்டவளாய்) இதனினும் தூய உள்ளம் ஒரு கணவனிடம் எதிர்பார்க்க முடியுமா? அப்படிப்பட்ட அவருக்கு (தன் தலையில் அடித்துக் கொண்டு) இப்படி ஒருத்தி வந்து சேர்ந்தேனே. எம் மனையாளும் கேட்டிராத சான்றாண்மை. என் பெற்றோர்களும் என்னிடம் ஓர் உறுதி பெற்றுக் கொண்டனர் என்று சொல்ல வாயெடுத்தேன். எக்கருவையும் அழிக்கக் கூடாது என்ற அந்த உறுதியைச் சொன்னால் கானல்வரியில் கோவலனுக்கு எதிர் யாழிசைத்த மாதவியின் நிலைக்குக் கொண்டு போய்விடும் என்று கள்ளத்தை உள்ளத்துள் விழுங்கிக் கொண்டேன். (குழந்தைக்கு வாடை அதிகமாயிற்று, இருளும் படர்ந்தது. பறவைகள் தம் கூடு நோக்கிப் புறப்பட்டன. மக்கள் காட்சியும் குறைந்தது. கைகாட்டுவார் ஏழு மணிக்கு வீடு வருவர். கணவனும் தனி மருத்துவ நிலையத்திலிருந்து திரும்பும் நேரம். வளர்மதி நீலவிழியுடன் கண்ணைத் துடைத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள்.) 3 (ஒரு திங்கள் கடந்தது. அங்கணன் வழக்கம்போல் மகிழ்ச்சி யோடு பேசுவான் பூக்கள் வாங்கி வருவான் குழந்தையைத் தொட்டிலாட்டுவான், பொம்மைகள் வாங்கியளிப்பான். சில நாள் நள்ளிரவில் அவள் படுக்கையை நெருங்குவான். கூந்தலைத் தொடக் கூசுவான். ஆடைமேற் கைபட அஞ்சுவான். நரம்புத் தளர்ச்சி ஏற்படுமோ அலறுவாளோ அரற்றுவாளோ என்று உணர்ந்து கால் பின் வாங்கத் திரும்புவான். தன் மனத்தை மாற்ற மருத்துவப் பணியில் நெடுநேரம் ஈடுபடுவான். கிராமத்தில் இருக்கும் உடல் நலம் குன்றிய தன் முதிய தாயைப் பார்ப்பதற்கு ஒருநாள் காலையில் போனான் அங்கணன்.) (வளர்மதி தன் மருத்துவக் கருவிகள், மாத்திரைகள், மருந்துகள், தன் உடைகள், குழந்தை உடைகள், சில நிழற் படங்கள், ‘பெண்களுக்கு’ என்ற காந்தியின் நூல் இன்னவற்றை ஒருசேரத் தொகுத்து வைத்தாள்.) வளர்மதி : (அணியறையில் நாற்காலியில் அமர்ந்து தன்னுள்) ஒழுக்கப் பிழையை எழுத்துப் பிழைபோல் அச்சுப் பிழைபோலக் கருதுகிற நாகரிகம் இக்காலம். பிழை திருத்தம் போட்டுவிடலாமே என்று சுளுவாகச் சொல்கின்ற காலம் இது. குற்றம் செரிக்கவில்லை. உமட்டுகின்றது. கணவனுக்குத் தெரியாது என்பதற்காக ஒளிக்கின்ற மனம் வரவில்லை. அம்மனம் இருந்தால் ஒருவாறு களிப்பாக வாழ்ந்து போயிருக்கலாம். இக்குழந்தைக்கும் மறைவான வாழ்வளித்திருக்கலாம். கறை பட்ட கற்புப்பட்ட என்னுடலைத் தீண்டச் செய்து அத்தூய வரையும் கறைப்படுத்தக் குறைப்படுத்த என் தீய மனம் இசைய வில்லை. அதுவரையில் என் மனம் நன் மனமே. (பெருமூச்சுவிட்டு) எனக்கு வாழ்வு இனியில்லை. வழுவிய தழுவிய அன்றே தெரிந்த முடிவுதான். குழந்தையின் நிலைபற்றி ஒரு கவலை. என் நிலையே ஊசலாடும்போது அதன் நிலை எக்கேடு கெட்டால் என்ன? ஏன் என்னிடம் வந்து பிறந்தது? ஏன் கற்பற்ற பாலைக் குடித்தது? அதுவும் பெண் மகவாக உதித்தது ஏன்? புண்ணியக் குழந்தையாக இருந்தால் கற்புத் தாயிடம் பிறந்திருக்கும். பாவக் குழந்தை என்னைப் பாவியாக்கிப் பிறந்துவிட்டது. எக்கேடானால் என்ன? நல்ல குலத்திற்பிறந்த என் கற்புநிலையே இவ்வாறு சிதைந்தபோது, அல்ல குலமாகிய என்னிடத்துப் பிறந்த இது எவ்வளவு சிதையுமோ? உயிரோடு இருந்தால் அல்லவா இதுபற்றிக் கவலைப்பட வேண்டும். (குழந்தை தொட்டிலிற் கிடந்து காலாட்டுகிறது. தாயை உற்றுப் பார்த்துக் குழிவிழச் சிரிக்கின்றது.) இந்தக் குழி மயக்கத்துக்கு ஈடுபட்டுப் பயனில்லை. ஒரு மயக்கத்துக்கு ஒரு கணம் இடங்கொடுத்ததன் விளைவு தொட்டில் கட்டும்படியாயிற்று. இனிய முடிவு செய்ய வேண்டிய ஊழிநாள். திருப்பதியில் ஒரு நிகழ்ச்சி படித்தேன். அவர் ஒரு மருத்துவர். தன் பிள்ளைகளுக்குத் தன் மனைவிக்குத் தனக்கு எல்லாம் ஒருசேர நச்சூசி போட்டுக் குடும்ப முழுவதை யும் நற்கொலை செய்துகொண்டாராம். என் இழுக்கத்தை என் கணவரிடம் சொல்வேன். அவர் கையில் நானும் குழந்தையும் ஊசித் தண்டனை பெறுவோம். அதன் பின் அவரும் அங்ஙனம் செய்துகொள்வார். இப்படிக் குடும்பத்தை முடித்துக்கொண் டால் என்ன? (சிறிது தாமதித்து) நல்லவளாகவே என்னைத் தெளிந்திருக்கும் அவர் கெட்டவள் என்று தெரிந்துகொண் டால் என்ன வடிவம் கொள்வாரோ? என்ன கருவி பிடிப் பாரோ? அசையாமலை அசைந்தால்? எனக்கு முந்துற்றுத் தற்கொலை என் முன்னரே செய்து கொண்டாலும் கொள்வார். கொண்டாலும் என்ன, கொண்டேவிடுவார். ஊர் வரும், ஊர் காவலர் வருவர். நான் படிக்கச் செய்தி வரும். கை வளையல் இருந்த இடத்தில் கை விலங்கு வரும். அன்புடையவர்களை ஏமாற்றக் கூடாது. ஏமாற்றினால் பெரிய வன்பாக உருவெடுக் கும். தன் மனைவி ஒழுக்கக் குறைவி என்று தெரிந்த கணவன், செல்லமே! இனி இப்படிச் செல்லாதே; ஒரு முறை சென்றதை மன்னித்துவிட்டேன் என்று சொல்லிக் கட்டியணைப்பார் என்று எதிர்பார்த்தால் அவரைவிட ஒரு ஆண்பேடி இல்லை. பரத்தை வாய்ப்பட்ட கணவன், பிறன்மனை நயந்த கணவன், இனப் புரட்சியிலே புரளும் கணவன்கூட அவ்வாறு சொல்லமாட்டானே. பெண் தகையை மதிக்கும் ஆண் தகை என் கணவர். என்ன கொடியவள் நான்! இளம் பருவக் கணவரை இரவில் காமத்தை அடக்கிக் கொள்ளும்படி அச்சுறுத்தும் கயத்தி நான். மாசுபட்ட என் மண்ணுடல் அப்பொன்னுடலைத் தீண்டும் தகுதியை இழந்துவிட்டது. அவர் மருத்துவர். எத்தனையோ பெண்கள் மார்பில் மூச்சுக் கருவி வைத்துப் பார்ப்பவர்; கை தொட்டு நாடி காண்பவர்; மருத்துவ ஒழுக்கம் வாய்ந்தவர். அவர் தம் மருத்துவக் கை மரக் கை. ஒரு பெண்ணிடத்துமட்டும் மலர்க்கையாக இருந்தது. அவளும் இப்போது அதனை மரக்கையாக்கிவிட்டாள். (பலகைமேற் கிடக்கும் மருந்து மாத்திரைகளைப் பார்த்து) அன்று இரவே நான் ஏன் அது செய்துகொள்ளவில்லை என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. செய்துகொண்டிருந் தால் இத்தொட்டில் தொங்காது; இச்சதங்கை ஆடாது; இரவு நடுக்கம் இராது. ஒரு நொடியில் ஆகாத ஒன்றைச் செய்தது போல அடுத்த நொடியில் வாழாத ஒன்றையும் செய்திருந்தால் இச்சிறு பிறப்பைக் கருவிலே கிள்ளி எறிந்திருக்கலாம். எனக்கு எங்காவது அறுபிறப்புக் கிடைத்திருக்கும். (ஒரு நினைவு வந்து) இன்னும் தாமதமாகாமல் இந்தப் பத்து உறக்க மாத்திரைகளை விழுங்குகின்றேன். (மாத்திரை களை எடுத்துக் குவளை நீரையும் எடுத்து) ஆம். மாத்திரை விழுங்கி மாள்வேன். (மறு நினைவு வந்து) இந்த வீட்டில் மாண்டுகிடந்தால் அவருக்கு அல்லவா பழி கூடும்? மருத்துவர் தன் மனைவிக்கு மாத்திரை கொடுத்துக் கொன்றார் என்று மலர்களும் மணிகளும் முரசுகளும் ஒலிகளும் ஓசைகளும் கொட்டை யெழுத்தில் போடுமே. இருக்கும்போது இன்பத்தை இழந்தது போதாது என்று போகும்போது துன்பத்தையும் சேர்த்து விட்டுப்போவதா? (மாத்திரைகள் கைநழுவி விழுதல்) முதல் மனைவி தற்கொலை செய்துகொண்டாள் என்றால் இன்னொரு திருமணம் அவர்க்கு வராது போய்விடும். (சிறிது நேரம் கண்மூடி இருந்து) கற்பிழந்த பகலில் காரண காரியமா பார்த்தேன், இப்போது காரணத்தோடு சிந்திப்பதற்கு. அன்றே செத்துவிட்டேன். செத்த இவ்வுடலை என்ன செய்வது என்பதுதான் தெரியவில்லை. நேற்று இரவு ஒரு மணிக்கு அவர் என்கிட்டே வந்து இரண்டு மணி நேரம் நான் அயலவள் போல இருந்து, பக்கத்தில் மூச்சும் பாயாது படுத்து, நான் ஏதும் குறிப்புக் காட்டுவேனா என்று எதிர்பார்த்து, தன் தலைய ணையை என் தலையணையோடு காதலிக்கச்செய்து, வளர்மதி மதிவளர் என்று புலம்பி, பிறன் மனை நயப்பவன் போலத் தளர் குரலிட்டு ஒன்றும் பலிக்காது, தொட்டிற் குழந்தைக்குக் கொசுகு கடியாதபடி தொடாது ஆட்டி, விரித்த வெண்மெத்தையை ஓசைப்படாதபடி தலையணையொடு வைத்துச் சுருட்டித் தலைமேல் வைத்துக்கொண்டு, உறங்காதே ஏங்கி இருந்து வழக்கம்போல் வைகறையிற் குளித்து நான் ஆக்கியதை உண்டு பருகி, நான் வரும் வரையில் படியில் நின்று, குழந்தை தூங்கும் நேரம் வரை தூங்கட்டும், கதவைத் தாழிட்டுக்கொள் என்று சொல்லி என் முகம் மலரத் தன் முகம் மலர்ந்து பலர் நலம் பேணச் சென்ற இப்புத்தருக்கு இன்பச் சுடராகாது துன்ப இருளானேன்; ஒழுக்கப்பற்று ஆகாது இழுக்கப் புற்றானேன்; துஞ்சும் அமளியாகாது தொட்டாற் சிணுங்கியானேன். (கணவன் வாங்கி வைத்திருந்த அவன் கால் படாத புதுச் செருப்பினால் காயம்பட நாலைந்து முறை மாறி மாறித் தன்னை அடித்துக் கொண்டவளாய்ப் பற்கடித்துப் புலம்பியவளாய்) அவர் இது செய்யமாட்டார். அவர் செருப்புச் செய்யட்டும். நான் அடித்துக்கொள்வதில் நெஞ்சுக்கு வலி ஏற்படவில்லை. கற்பிழந்த என்னை இச்செருப்பும் தீண்டக் கூசுகின்றது, வழுவி விழுகின்றது. யாராவது போய்க் கிராமச் சக்கிலியன் பைக்குள் தைக்க வைத்திருக்கும் பிய்ந்த ஆணி நீண்ட பழஞ்செருப்புகளைக் கொண்டுவந்து செருப்புப் புயலால் இத்தையலைக் கன்னா பின்னா முன்னா பின்னா என்று வாலி வீச மாட்டார்களா? தெரு முழுவதும் மூலை முடுக்கெல்லாம் சந்து பொந்தெல்லாம் ஓட ஓடவிட்டு இக்கள்ளியைப் பிடி அடி முடி என்று துரத்த மாட்டார்களா? அப்படி அடித்து ஓட்டும் போது வண்ணப் படம் எடுத்துச் செய்திச் சுருள் காட்டமாட் டார்களா? காட்டினால் என்னால் உலகம் எவ்வளவு திருந்தும். (குழந்தையை எடுத்து அதன் கையில் ஒரு செருப்பைக் கொடுக்கின்றாள். அது தன்னையே அடித்துக்கொள்வது கண்டு அஞ்சியவளாய்) நீல விழியே! விழி நீலமே!! நீ என்ன குற்றம் செய்தாய்? ஏசுபெருமான்போல நீ ஏசுபெருமாட்டி. பிறர் குற்றத்துக்கு உன்னைத் தண்டித்துக் கொள்கிறாய். ஏன் இவளிடத்துக் கருவாக இருந்து பிறந்தேன் என்று அடித்துக்கொள்கிறாயா? இவள் பாலைக் குடிப்பதற்கு இத்தோலைக் கடித்து வாழலாமே என்று தின்று பழகுகிறாயா? நீ அவருக்குப் பிறந்தாயா? அவனுக்குப் பிறந்தாயா? ஒருநாள் முன்பின் என்னால் முடிவு செய்ய முடியவில்லை. அதற்கப்புறம் பிறந்தாய். என் செய்வது? உறுதியாகச் சொல்ல முடியாததனால் இதுவரை பிழைத்துத் தவழ்கின்றாய். என் முகச் சாயலைப் பார்த்து அவரும் உன்னைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறார். நீ கருவில் எனக்கு வயிற்றுவலியோ வாந்தியோ தந்ததில்லை; உதிரம் இளக்கிய தில்லை. சூல்வலி தந்து பிறக்கவில்லை. சீவகன் போல உனக்குக் குழந்தை நோயும் வந்ததில்லை. என் உறக்கம் கெட மாறன் போல நீ பாலுக்கும் அழுததில்லை. உன்னையும் கிணற்றில் போட்டு நானும் கிணற்றில் குதித்துக் கீழுலகம் போகலாம் என்று எண்ணியது உண்டு. நஞ்சினைத் தின்று அம்முலைப்பாலை உனக்கு அருளிக் கண் மூடிவிடலாம் என்று எண்ணியது உண்டு. மார்போடு உன்னை அணைத்து வரிந்து கட்டி உலகப் பொதுப் பாதையான இருப்புப்பாதையில் இருதலைகளாக நான்கு துண்டுகளாகக் கிடக்கலாம் என்று திட்டமிட்டது உண்டு. யாராவது விரைந்து உந்தோட்டிச் செல்லும்போது இருவரும் தெருவிடை முத்திய டையலாம் என்று திட்டமிட்டது உண்டு. அறிவு குறுக்கிட்டது. என்னிடம் பிறந்தாய் என்ற தோலுறவுக்காக உன்னை என்னோடு அடக்கம் செய்யத் தாயானாலும் எனக்கு என்ன உரிமையுண்டு. கருவையே அழிக்கக்கூடாது என்றால், உருவை அழிக்கலாமா? அப்படிச் செய்தாலும் நீ சாக நான் பிழைத்து விட்டால், நான் சாக நீ பிழைத்து விட்டால், இருவரும் காலொடிந்து கையொடிந்து கண்ணிழந்து பிழைத்துவிட்டால், சுமை யாருக்கு? எதனை நினைத்தாலும் அவருக்குப் போய் முடிகிறது. (மணி பத்து அடிக்கிறது அங்கணன் பன்னிரண்டு மணிக்கு உணவுண்ண வருவது வழக்கம். நல்லுணவாகத் தானே செய்து எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு) நேற்றுப்போல் இன்று இரவும் வருவார். காலையில் அவர் செய்த புன்சிரிப்பு இன்று இரவு என் முறுவலை எதிர்பார்க் கின்றது. காலையில் அவர் காட்டிய முகமலர்ச்சி என்னிடம் இன்று இரவு இன்ப மலர்ச்சிக்கு ஏங்கி நிற்கிறது. காலையில் அவர் வளர்மதி என அழைத்த ஓர் இன்பவிளி இரவில் தமிழ்க் காதலாகப் பல இன்பவிளிகள் வரும் என்பதனைக் காட்டுகின்றது. (கேலியாக) மனைவியிடம் இன்றைய இரவும் கணவன் வந்தால் வழக்கம்போல் நடுங்குவதா? எத்தனை இரவானாலும் அவர் பொறுமை விடியுமளவும் இருக்கும். அவ்வாறு நான் நடந்துகொள்வதற்கும் ஒரு கால எல்லை வேண்டாமா? கரவை வெளிப்படுத்தாமலே, ஒன்றும் நடவாதது போல, களவு செய்யாத மாதிரி எடுத்த பொருளைத் திருப்பி இருந்த இடத்தில் வைத்துவிடுவதுபோலே, இணங்கிவிடலாமே என்றால், அதுதான் எனக்கு முடியவில்லை. முள் தைத்த நெஞ்சை என் செய்வது? மறுபடியும் வஞ்சக வாழ்வா? என் கெட்ட மனத்தை நம்பக்கூடாது. மறைத்துக் கூடும் துணிவை நெஞ்சுக்குக் கொடுத்துவிட்டால், வேற்றுச் சுவை கண்ட உடல் இன்பத்தில் மாற்றுச் சுவைகளை மறைத்து மறைத்து விரும்பிக் கொண்டுதானிருக்கும். கெட்ட நெஞ்சின் சூழ்ச்சிக்கு வயப்பட லாகாது. நான் இப்போது அவருக்குப் பிறன் மனையாகி விட்டேன். இன்று இரவு இசைவது அவரை ஒரு பெருங்குற்றப் படுத்துவதாகும். இன்பந்துய்க்கும்போது உடலால் இல்லாவிட் டாலும் உள்ளத்தால் அந்த ஒரு நாள் நினைவு வந்து போகத் தானே செய்யும். கற்புமாசு என்பது இன்பமாசு. இன்று இரவு எனக்கு ஒரு பெருஞ்சோதனை. அச்சோதனைக்குக் கணவன் முன் நிற்க விரும்பவில்லை. அவர் வருவார். கெட்ட உண்மையைச் சொல்வதா? வஞ்சகமாக இசைவதா? (தற்செயலாக மேசைமேற் கிடந்த செய்தித்தாளைப் பார்த்து) “மனைவி கெட்டவள் என்பதைத் தெரிந்துகொண்ட கணவன் இன்பம் துய்ப்பவன் போல வந்து அவள் கழுத்தை நெரித்துக் கொன்றான். தானும் தற்கொலை செய்யக் குத்திக் கொண்டான். அச்சமயம் குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தவர் ஓடிவந்து கணவனைத் தடுத்துக் காப்பாற்றி னர். கணவன் சிறைக்காவலில் இருக்கிறான். புலன் நடக்கிறது” (தாளை எறிந்து அழுதவளாய்) எது செய்தாலும் எப்படி முடியுமோ? என்னை அணுகும்போது, தீண்டாதீர்கள் ஒழுக்கம் தவறிவிட்டேன் என்று இரவு நேரத்தில் வெளிப்படையாகச் சொன்னால் என் ஆவாரோ? நல்ல பாம்பு என்ன செய்யுமோ? என் கணவர் அவர் தாலி விளங்கும் என் கழுத்தை நெரிக்கார். வீட்டை விட்டுப் போய்த்தொலை என்று ஏசார். உனக்குப் பூட்டிய நகைகளைக் கழற்றிவை என்று கேளார். கொடிய பாவியே கற்புச் சாவியே என்று வையார். கை நீட்டார், கண் கலங்கார், வாய் திறவார். காலையில் மருத்துவம் பார்க்கச் சொல்லார், குளியார், எழுந்திரார், நஞ்சுண்ணார், மாத்திரை விழுங்கார். என் நிலை கேட்டவுடனேயே நீயா மனைவி, நானா கணவன் என்ற உள்ளதிர்ச்சியில் புதுப் பாண்டியனாய்க் கண் மூடிவிடுவார். இப்பெண்ணின் இழி செய்கை கண்டு மண் கலங்கும், விண் கலங்கும், கற்பு மனையெல்லாம் கலங்கும். (ஓ என்று அழுகின்றாள். தாய் அழுகை பார்த்துக் குழந்தை யும் அழுகிறது. ஊறிய கொஞ்சப் பாலைக் குழந்தைக்குக் கொடுத்துச் சீவிப் பொட்டிட்டுப் பூச்சூட்டினாள். தானும் ஓரளவு கூந்தலை வகிர்ந்து ஒழுங்குபடுத்திக் கொண்டாள். உடையை மாற்றிக் கொண்டாள். அறையை முழுதும் ஒரு பார்வை பார்த்தாள். சினம் பொங்கியது சுவரில் மாட்டியிருந்த தெய்வப் படங்களைப் பார்த்து) உயிர் ஒன்று என்று உடல் ஒன்றிய கணவனிடமே சொல்லக் கூடாத கற்புக் குற்றத்தை யாரிடம் சொல்வது? சொல்லி யாரிடம் தீர்வு கேட்பது? (திருப்பதிப் பெருமாள் படத்தை எடுத்துக்கொண்டு) ஒருவர் உள்ளக் கரவை உணர் பவன் நீ. எங்கும் உறைபவன் நீ. எதனையும் அருளுபவன் நீ. எந்நோய்க்கும் நன் மருந்து நீ என்று உன்னை எல்லாரும் பலபடப் பாடுகிறார்களே. ஒன்று கேட்கிறேன். குற்றஞ் செய்தபின் விடுத்தருளுவது உன் குணமா? குற்றம் செய்யு முன்னே தடுத்தருளுவது உன் குணமா? அன்றைக்கு என் சிறு செயலைக் கண்டுகொண்டு தானே இருந்தாய். இல்லை, அந்த இடமட்டும் உனக்குரிய இடமில்லாமல் போய்விட்டதா? அன்பர்கள் குன்று குன்றாகக் கொடும் பணக் குவியலை எண்ணிப் பார்ப்பதில் ஈடுபட்டுக் கிடந்தாய் போலும். அப்பணத்தை யாரும் களவு செய்துவிடலாகாது என்று என் களவைத் தடுக்க முன்வரவில்லை. ஒழுக்கத்தைக் காப்பதினும் பணக்காப்பே உனக்குப் பெரிதாயிற்று. நீ திருமகள் கணவன் இல்லையா? (இன்னொரு படத்தைப் பார்த்து) உலகத் தாயான சிவன்த் தாயே! மகள் தகாத வழிபோகும்போது, என்ன செய்துகொண்டிருந்தாய். கணவன் ஏறிய பசுவில் பால் கறந்து கொண்டிருந்தாயா? (எல்லாப் படங்களுக்கும் முன் நின்று) நீங்கள் கண்ணாடிப் படங்களா? கண்கண்ட தெய்வங்களா? அன்று நீங்கள் தொங்கினீர்களா? தூங்கினீர்களா? வழி காட்டி என்று தானே உங்களைச் சுவர்மாட்டி வைத்திருக்கிறோம். வெறுஞ் சுவரொட்டிகள் ஆகிப்போனீர்கள். எனக்கும் என் குழந்தைக்கும் இன்றேனும் ஒருவழி காட்டுங்கள். காட்டாவிட் டால் ஒவ்வொரு படத்தையும் சுக்கு நூறாக்குவேன், வீட்டில் தெய்வப் படங்கள் இருக்கக்கூடாது என்று ஊர்க்குப் பறைசாற்றுவேன். (சிறிது நின்று) நீங்கள் பேசும்படமா பேசாப்படமா? மாசு பார்க்கும் காசுப் படம். (தன் கூந்தல் குலைந்து விரிய, வளையல்கள் சில நொறுங்க, விரல்களிலிருந்து குருதித் துளிகள் விழ, கணவனின் பல்வேறு நிழற் படங்களைத் துடைத்து ஒன்று சேர்த்து அழகாக அடுக்கிவைத்தாள். திருமண நாளன்று தாலிகட்டும்போது எடுத்த படத்தை எல்லாப் படத்துக்கும் முதலாவதாக நிறுத்தி னாள். தன் தலைப் பூங்கண்ணியைச் சூட்டினாள். குங்குமப் பொட்டு வைத்து அதனைத் தன் நெற்றியில் ஒற்றிக் கொண்டாள். கண்ணாடிக்கு முன் நின்று குழந்தையையும் தன் பெற்றோர் படங்களையும் பார்த்துப் பொருமியவளாய் இரு கையாலும் தன் கழுத்திலிருந்த தாலியை மெல்லக் கீழே விழாதவாறு கண்ணீர் விழக் கழற்றினாள். முகத்துக்கு முன் வைத்துச் சிரித்தாள், புலம்பினாள், சிறிது தயங்கினாள். அடக்கமான ஒரு பொன்னிறப் பெட்டியில் தாலியை வைத்துத் திருமணப் படத்தில் உள்ள கணவன் கையில் வைத்தபின் மீண்டும் தன்னைச் செம்மையாக ஒப்பனை செய்துகொண்டு) என் வாழ்வொளியே! இல்லறத் தெய்வமே! தவக் கணவனே! பண்பு மலையே! அன்புக் கடலே! பொறுமை நிலமே! குளிரும் நெருப்பே! கூட்டும் காற்றே! (வணங்கி) கற்பிழந்தேன், இல்லறப்பொற்பு இழந்தேன். உங்கள் முன்னே சொல்லமாட்டாமல், உங்கள் உருவத்தின்முன் சொல்லுகின்றேன். பெருங்குற்றம் செய்தேன். அந்த நேரம் முதல் அதனை உணர்ந்து வருந்தி வாடுகின்றேன். தற்கொலை அல்லது படுகொலையே எனக்கு உரிய தண்டனை. இத்தண்டனையை இனிமையாக ஏற்றுக்கொள்வேன். என்றாலும் உங்கள் வாழ்வைக் காண விரும்புகிறேன். நல்லவள் என்று என்னை மாசின்றி எண்ணிக் கொண்டிருக்கும் உங்கள் உள்ளத்தை நான் மாற்ற விரும்ப வில்லை. மாற்றினால், மாறினால் என்ன விளையுமோ? என் இறுதிக் கடிதத்தைப் பார்த்துச் சினக்க வேண்டாம். அழ வேண்டாம். வருந்தி மாள வேண்டாம். உங்கள் வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். என்னை நினையாது அமைதி கொள்ளுங்கள். உங்கள் முன் சொல்வதுபோல, உங்கள் செவி கேட்க என் கடிதத்தை ஒருமுறை வாய்விட்டுப் படித்து ஆறுதல் அடைவேன். என் தனிப் பெருந்தெய்வமே! உங்கள் திருவடிகட்கு மனையாளின் வணக்கம். மனைவிக்கு உரிய கற்பு என்னும் ஒழுக்கத்தில் குற்றப்பட்டு விட்டேன். ஓராண்டாகத் தாங்கள் தீண்டத்தகாதவள் ஆனேன். அக்குற்ற உடலைத் தாங்கள் தொடக்கூடாது என்ற நல்லுள்ளத்தால் நடுங்கினேன். குழந்தையைத் தொடும்போதும் நடுங்கினேன். என் கூந்தற் பூ தங்கள் திருவடியில் உள்ளது. என் தாலி அதனைக் கட்டிய தங்கள் கையில் உள்ளது. இவற்றைப் போற்றிக் கொள்ளுங்கள். காத்துக் கொள்ளுங்கள். என் உயிர்க்கும் குழந்தைக்கும் கேடு செய்ய எண்ணியி ருந்தும் விட்டுவிட்டேன். எங்கோ சென்று மருத்துவத் தொண்டு செய்துகொண்டிருப்பேன். இழந்தேன் ஒருமுறை பெரிய கற்பு. என்றாலும் வேடமற்ற தவத்தொடு வாழ்வேன். சாகும்வரை குற்றத்தை மறவேன். இயல்பாக என் வாழ்நாள் முடியும். முடியுங்கால் தங்கட்குச் செய்தி வரும். அன்று எங்கிருந்தாலும் தவறாது வாருங்கள். இப்பூவையும் இத்தாலியையும் எனக்கு உங்கள் மன்னிப்புக் கையால் அணியுங்கள். மறுபிறப்பில் தங்கட்குக் குற்றமில்லாத மனைவியாக வந்து வாழ்நாள் முழுவதும் நல்லின்பம் தருவேன். உயிரோடு இருக்கிறேன். தேடும் முயற்சி எவ்வகையாலும் வேண்டாம். வளர்மதி, நீலவிழியைப் பெற்ற வளர்மதி. 10. காதலுக்காக (குடும்பத்தில் எல்லாரும் திருவிழாப் பார்க்கச் சென்ற சமயம். இரவு மணி ஒன்பது இருக்கும். வெல்லன் தனியறையில் இருக்கிறான். அறிவியல் முதுகலைப் பட்டம் பெற்றவன். ஏதோ ஒரு நூலைப் படிப்பதும் மூடுவதுமாக இருக்கிறான். வெள்ளைத் தாளை ஓர் எழுது நூலிலிருந்து கிழிக்கிறான். எழுதுகோலைத் திறப்பதும் அறைகுறையாக மூடுவதும் செய்கிறான். திடீரென எழுந்து அறையில் திரும்பத் திரும்ப நடத்தல், மறுபடியும் சடக்கென உட்காருதல், அறைக்கு வெளியே வந்து பார்த்தல். இவ்வாறு மாறி மாறி நடக்கிறான். நிலவொளி பகலொளி போல் ஒளிர்கிறது. முற்றத்தில் வந்துநின்று வானிலவை நிமிர்ந்து பார்த்தவண்ணம் . . . . . .) 1 தனிமொழி வெல்லன் : (கையை மடக்கிக் கட்டிக்கொண்டு தன்னுள்) இவ்வளவு பெரிய உலகம் எவ்வளவு அமைதி. உயிரினம் எல்லாம் மாலை மறைந்து இரவு நீள நீள எவ்வளவு ஒடுக்கம். மக்கள்கூட எத்துணை மெதுவான பேச்சாடல். காற்று மெல்லிய வீச்சு. வேக ஊர்திகளும் போக்கு நின்றுவிட்டன. இவை புற அமைதியா? அமைதிக்குப் புறமா? இது உட்கொதிப் பின் மூடி; பகலெல்லாம் ஆற்றிய வாழ்க்கைப் போராட்டத்தின் சோர்வு. வினைச் சுமையின் அயர்வு. மறுநாட் போராட்ட வாழ்வுக்கு வலி சேர்க்கும் சூழ்ச்சி. இரவு என்பது ஒரு வகைக் கரவு. இதற்கு நான் விலக்காக முடியுமா? இளைய உள்ளம், கற்ற உள்ளம், அறிவியல் உள்ளம், ஆசையுள்ளம், போராட்ட உள்ளமாகத் தானே இருக்க முடியும்? கடலலை பெரிதாகத்தான் இருக்கும். அதனால் கெடுதல் இல்லையே. பார்க்கவும் கேட்கவும் எவ்வளவு மகிழ்ச்சி. உள்ளத்தின் அலை ஒலியலையினும் ஒளியலையினும் சிறிய நுண்ணியது. உள்ளலை சின்னஞ் சிறிதாயினும் உலகத்தை எல்லாம் கலைக்கும் பேரலை, பெரும் பேரலை. உலகை ஆட்டி வைக்கும் மனவலை, என் ஒருவனை - பள்ளியே உலகமாகப் பயின்ற என் ஒருவனை - எவ்வளவு ஆட்டி வாட்டி வைக்கும். கல்லாதவன் மனத்தைக் கல்வீழ்ச்சியும் அசைக்க முடிவதில்லை. கற்றவன் மனத்தை முனையற்ற துரும்பும் கலக்கிவிடுகின்றது. இங்கு என்ன மேடைப் பேச்சுக்கா நிற்கின்றேன். (துடிப்பாக) விளக்கம் என்ன வேண்டிக்கிடக்கின்றது எல்லாம் புரிந்து விட்டது. இது என்ன புரிய முடியாத புதிரா? புரிவதற்கு யாரிடம் போய்க் கேட்பது? இந்த வகையில் தனக்கே புரியாதவனுக்கு யார் வந்து புரிய வைக்கமுடியும்? வேலைக்கு விண்ணப்பங்கள் இன்று கூடத்தான் நாலு எழுதிப்போட்டேன். நாளைக்கும் போடுவதற்கு எழுதி வைத்திருக்கிறேன். செய்தித்தாளை விடிந்ததும் பார்ப்பேன், விண்ணப்பம் தட்டுவேன். வேலை கிடைக்கும் என்றா விண்ணப்பங்கள் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறேன்? வேலை ஒருவேளை கிடைத்தாலும் போகும் நோக்கம் எனக்கு உண்டா? இவையெல்லாம் வீட்டை ஏமாற்றுதல். இல்லாவிட்டால் என் மனத்தைப் பற்றித் தாயும் தந்தையும் ஐயப்படுவார்கள், கவலைப் படுவார்கள். ஏதோ கவலை இல்லாதவன்போல உண்பதிலும் உடுப்பதிலும் காட்டிக்கொள்கின்றேன். காட்டினாலும் ஒவ் வொரு சமயம் என் மனமாற்றம் துணிப் புகைபோல் வெளியாகி விடுகின்றது. தம் மக்கள் செய்யும் எதனையும் மெய்யாக நம்பிக் கொள்ளும் பெற்றோர்கள் - என் அருமைப் பெற்றோர்கள், நான் சோற்றைக் கையில் வைத்துக் கொண்டு நெடுநேரம் பிசைந்து கொண்டிருந்தாலும், நெய்ச்சோறு உண்டவுடனேயே மோர் ஊற்று என்று சொன்னாலும், உப்பைக் குழம்புச் சோற்றில் போட்டுக் கொண்டாலும், மோர்ச் சோறு உண்ணாமலே இலையை மடக்கினாலும், தொடுவான் கேளாது இட்டிலியை வெறுமனே தின்றாலும், நுரைப்பான் இன்றிக் குளித்தாலும், என்ன நினைத்துக் கொள்கின்றார்கள், வேலையேக்கம், தொழில் நோக்கம் என்று சும்மாவிடுகிறார்கள். நானே வேலை பற்றி இவ்வளவு கவலைப்படும்போது ஒன்றும் சொல்லக்கூடாது என்று பேசிக் கொள்கின்றார்கள். அவர்கள் கவலை என்ன? என் உட்கவலை என்ன? சில சமயம் நெடுநேரம் நான் தன்னந்தனி யனாய்த் தனியறையில் சோர்ந்து இருப்பதைப் பார்த்து, ஒருமுறை என் அன்புத்தாய் வந்து, ‘என்ன தம்பி வெல்லா! உன் படிப்புக்கு எல்லாம் தானே தேடிவரும், எதற்கும் கொஞ்சம் காலம் வேண்டாமா? இப்போது தானே படிப்பை முடித்திருக் கிறாய். படித்து முருங்கைபோல் இளைத்த உடம்பு இன்னும் தடிக்கவில்லையே. உடனே வேலைக்குப் போயாக வேண்டிய நிலையிலா நம் குடும்பம் இருக்கிறது. உன்னைப் பெண் தேடி வருவதுபோல வேலையும் தேடி வரும்’ என்று தடவிக் கொடுத்து ஆறுதல் சொன்னாள். எல்லாருமே எனக்கு வேலை யேக்கம் என்று தெரியாமல் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். 2 (சிறிது தன்னுள் சிரித்துக்கொள்கிறான்.) என் ஏக்கத்தை யாரிடம் வெளிப்படுத்துவது? என் தாயோ தன் ஒரு தம்பி மகளை எனக்குத் திருமணஞ் செய்ய வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறாள். படிப்பில்லை என்ற சின்னக் குறையைத் தவிர நல்ல வல்ல பெண்தான். என் தந்தையோ தன் அக்காள் மகளைக் கொள்ள வேண்டுமென்று திட்டமிருகின்றார். படிப்பு, அழகு, சிவப்பு எல்லாம் உண்டு. எனக்குக் கவர்ச்சியாகப் படவில்லை. ஊரிலுள்ள ஒரு பெரிய மனிதர் என்னை மாப்பிள்ளையாக்கப் பார்க்கிறார். அவருடைய பெண் மிக்க ஆணவி. பரமதத்தன்போல் அவ்வீட்டுக்கு அடிமை மருமகனாக நான் விரும்பவில்லை. நாமிருவரும் துறவியாகி மன்பதைத் தொண்டு செய்யலாமே என்று என் நண்பன் வெளியன் சொல்லிக் கொண்டிருக்கிறான். (கேலிச்சிரிப்பு) இவனும் ஒரு நண்பன். பேதை நண்பன். எவ்வளவோ என்னோடு பழகியும் புரியா நண்பன். என் ஆசை, வெட்கம், அவா வெள்ளம் எல்லாம் எவ்வளவு பெரியது. அதைத் தாயோ, தந்தையோ, நண்பனோ புரிந்துகொள்ள முடியவில்லையே. எனக்கே புரியவில்லையே. என்ன பேதையுலகம், ஒரு சிறுவன் உள்ளோட்டத்தைக் காணத் தெரியாத அறிவுலகம். என் சுற்றுப்புறம், கணந்தோறும் பழகினாலும் ஒருவன் புரட்சிக் காதலை அறியத் தெரியாத வெற்றுப்புறம். உலகை ஊரைப் பழித்து என்ன பயனோ? ஒருகால் புரிவது மறுகால் புரியவில்லையே. இந்த எண்ணம் எப்படி வந்து என் நல்லுள்ளத்தில் எந்நேரத்தில் நுழைந்தது என்பது எனக்கே விளங்கவில்லை. (வியப்பாக) இப்படியும் ஒருமனப்போக்கு. அறிவியல் கற்ற நான், ஆராய்ச்சி இதழ்களைத் தேடித் தேடிக் கற்ற நான் எப்படி மாறினேன், எவ்வளவு மாறினேன், ஏன் மாறினேன், இன்னும் எவ்வாறு மாறப் போகிறேன். காணாததைக் கண்டு ஆசை வெள்ளத்தில் மூழ்கிவிட்டேன். முன் அடக்கம் என்ன? இப்போது அடக்க முடியாத்தனம் என்ன? படிப்பு முடித்தவரை திரைப்படம் பார்த்ததில்லை. இப்போதோ படம் பார்க்கத் தவறுவதில்லை. முன்னெல்லாம் படித்துச் சுவைத்த இதழ்கள் எங்கே? இப்போது என்னென்ன இதழ்களைப் படிக்கிறேன்? இங்கு யாருமில்லை சொல்ல, ஏன் வெட்கப்படவேண்டும்? திரைப்பட இதழ்களைப் படிக்கிறேன். வெட்கம் எதற்கு? நடிகையர் தம் இதழ்களைப் பருகுகின்றேன். படிப்புத் திசையே மாறிவிட்டது. பார்வைத் திசையும் பரந்துவிட்டது. சிறுகதை களை, புதினங்களை, திரைப்படத் திறன்களை எமுத்தெழுத்தாகக் கற்கின்றேன். நினைவில் வைத்துக்கொள்கிறேன். இவற்றைப் படிக்க படிக்க எவ்வளவு ஆசை நானே ‘இதழ்’ என்று ஒரு தாள் தொடங்கலாமா? அவ்வளவு கொள்ளை ஆசை. என்னொடு படித்த நண்பர்களைக் காணப் பிடிக்கவில்லை. என் போக்குக்குப் புது நண்பர்கள் கிடைக்கவில்லை? படத்துக்குத் தனியாகவே போய், தனியாகவே இருந்து, தனியாகவே வரு கிறேன். இல்லை, நடிகை நினைவாகவே வருகிறேன். உடனாக வரவேண்டும் என்பது என் ஆசை. நடிகையழகிகளின் நாளட்டைகளைச் சுவரில் மாட்டிவைத்துக் கொள்ளும் விருப்பம் இருந்தாலும், நடிகை மார்புப் படங்களை நூலட்டை யாகப் போட்டுக்கொள்ளும் விருப்பம் இருந்தாலும், அவ்வளவு திடீர்த் துணிவு வரவில்லை. அறிவியல் கற்ற சிறுமை இது. வெளிப்படங்களில் என்ன, என் உள்ளமே நடிகையர்களின் குடில். 3 (தலைநிமிர்ந்து கையை மடக்கிக் கொண்டு) சிரித்தாலும் விரித்தாலும் குறைந்துவிடாது. நல்ல இனிய அழகிய ஆடல் பாடல் நடிப்பான, என்னை என்றும் கவர வல்ல மெல்லியல் புதுமுக நடிகைச் செல்வியைப் பிரியா மனைவியாகப் பெறவேண்டும் என்பது என் பேராசை, ஓராசை. இல்லை, குறிக்கோள்; வெறிக்கோள். எண்ணிய எண்ணியபடி எய்துவேன். திண்மைதான் வேண்டும். வேண்டிய திண்மையைக் கங்கை சூடிய இறைவன் எனக்கு அருள்வான். (பெருமூச்செறிந்து பிறர் பேசுதல்போல வேகமாகப் பேசுதல்) நடிகையை மணப்பதா? நம் குடும்ப மரபுக்கு அடுக்குமா? எவ்வளவோ குலப்பெண்கள் நான் முந்தி தான் முந்தி என்று கட்டிக்கொள்ளக் காத்துக் கிடக்கும்போது, பொது நடிகச்சியைக் காதலிப்பதா? காதல், கற்பு, இல்லறம், நம்பிக்கை, வழிவழி நன் மரபுக்கு என்ன தொடர்பு உண்டு? செல்ல நடிகையை மணந்து இவனும் நடிகனாக மாறப்போகிறானா? (தனக்குள், மாறினால் என்ன கெட்டுப் போச்சாம்) இணையாக நடிப்பானா? பிற நடிகர்களோடு நடிக்க முறியெழுதிக் கொடுப்பானா? (தனக்குள், பிறர் தொட்டால் கற்பா போய்விடும், அப்படிப் போகிற சின்னக் கற்பு போகட்டுமே) பிற நடிகர் தன் மனைவி நடிகையை முத்துவதை அருகிருந்து கண்டு மகிழ்ச்சியொடு கைதட்டி ஆர்ப்பரிப்பானா? (தனக்குள், கன்னம் என்பது தோல்தானே) குழந்தை பெற விரும்புவானா? நடிப்புக்கு உடல் கெட்டுப்போகும் என்று தடுப்பு முறையில் குமரியாகவே காத்துக்கொள்ள எண்ணுவானா? (தனக்குள், நாட்டில் கோடிக் குழந்தைகள் இருக்க, நமக்கு ஏன் குழந்தை வேண்டும். குழந்தை பெறாமையே ஒரு நாட்டுத் தொண்டு.) அறிவியல் கற்றும் மோகப்பேதை என்று இவ்வாறு என் மனப் போக்கைப் பலர் - இல்லை - எல்லாருமே கேலி செய்யக்கூடும். செய்யட்டும். புதுமையை, புரட்சியை, முன்னேற்ற மாறுதலை முதலில் உலகம் வரவேற்காது. இது வரலாறு. நாளாக நாளாக, என்னைப் பின்பற்றி, நடிகை விண்மீன்களைப் பலர் மணக்க மணக்க, வழிகாட்டி எனப் பாராட்டி மாலையிடுவது மக்கள் வரலாறு. வழி காண விரும்புபவன் பழிகாணான். நடிகையர்கள் பண்பற்ற வர்கள், தகாதவர்கள் என்றால், ஏன் பெரியோரெல்லாம், பெற்றோரெல்லாம், துறவியருங்கூட, திரை பார்க்க ஓடுகின்றனர். திரையாரைக் காண்பதுவும் தீதல்லவா? சீசீ சொல்லும் செயலும் முரணிகள். (மனம் பூரித்தவனாய்) இன்று நடிகையர்களுக்கு என்ன மதிப்பு? விருப்பு வெறுப்பின்றிப் பார்க்கவேண்டும். பழங்காலக் கூத்தி வேறு, புதுக்கால நடிகை வேறு. கற்புக்கு இன்ன இடம் இன்ன குலம் என்று உண்டா? நல்ல குலத்திலிருந்து இசைத் தொழிலுக்கு வருவதுபோல நடிகைத் தொழிலுக்கு வருகிறார் கள். முறையாகத் தாலி கட்டி மணக்கிறார்கள். இத்திருமணங் களுக்கு நீதிபதிகளும் மந்திரிகளும் ஆளுநர்களும் வந்து வாழ்த்துகிறார்கள். நாளிதழ்களில் கணவனொடு நடிகையின் திருமணப் படங்கள் முன் பக்கத்தில் பெருந்தலைப்பில் குளு குளுவென வெளிவருகின்றன. நடிகையை மணக்கும்போதே கணவன் புகழொடு தோன்றுகிறான். நல்ல வருவாயும் உண்டு. நடிகை வருவாயில் உலகம் சுற்றலாமே. வெளியே சொன்னால் வெட்கம், வெட்கம், நடிகையரல்லாத பெண்களின் போக்கும் வரவும். இவற்றைப் புதினங்கள் அம்பலப்படுத்துகின்றன. ஒழுக்கம்இருந்தாற் போதுமா? கணவனைப் புறம் நோகாது தன் பக்கம் இழுக்கும் கவர்ச்சியும் வேண்டும். என்னைக் கவரழகு நடிகைக்குத்தான் உண்டு. (மூக்கிற் கைவைத்து) ஒரு கருத்து, இலக்கிய ஆராய்ச்சி. கோவலனுக்கு முதலிலேயே ஒரு நாடகக் கன்னியை மணஞ் செய்திருந்தால், சிலப்பதிகாரம் எவ்வளவு நெஞ்சையள்ளும்? இனியாவது உலகம் கற்கட்டும். மகனுக்கு எவ்வகைப் பெண்ணியல் பிடிக்கும் என்பதனை இனியாவது பெற்றோரினம் ஆராயட்டும். ஆராயாது செய்து வைத்துக் கண்ணகி வாழ்வைக் கெடுத்துத் தெய்வமாக்கியது போதும். (தெளிந்தவனாய்) எனக்கு என்ன வேண்டுமென்று எனக்குத்தான் தெரியும். வழக்கியல், பொருளியல், வணிகியல் படிக்கும்படி என் குடும்பத்தார் சொல்லினர். இத்துறைகள்தான் குடும்பத்துக்கு ஏற்ற துறைகள் என்றனர். பெற்றோரை மறுத்து விலங்கியலை நானே தேர்ந்து முதுகலைவரை படித்து முதன்மை பெற்றிருக்கிறேன். வேறுதுறை படித்து இருந்தால் படிப்பை இடையிலே நிறுத்தியிருப்பேன். என் அறிவுப்போக்கு அவர்களுக்குத் தெரியவில்லை. அதுபோல் என் மனப்போக்கும் அவர்களுக்கும் அப்படித்தான். படிப்புக் கலையை நானே தேர்ந்துகொண்டதுபோல நடிப்புக்கலையாளை மனைவியாக, வாழ்க்கைத் துணையாக நானே தேர்ந்து வாழப் போகிறேன். இது என் உரிமை. (வேகமாக) பூவொடு சேர்ந்து நார் மணம் பெற்றாற்போல நடிகையைத் தழுவி. . . . 4 (கையோடு கைபிணைத்து நடந்துகொண்டு) எல்லாம் எனக்குத் தெரிகிறது. எனக்குமட்டும் தெரிந்தால் காரியம் முடியாதே. காரியம் முடிப்பவருக்கு அல்லவா தெரியவேண்டும். திருமணம் என்றால் பெற்றோர் மூலமின்றி எப்படி முடியும்? பெற்றோர் இல்லாத பிள்ளையில்லையே. பெற்றோருக்குக் கடிதம் எழுதி வைக்கலாம். அதற்கும் துணிவில்லை. ஒன்றும் எழுதி வைக்காமல் ஓடிப்போகலாம். ஒழுங்கான திருமணம் நடைபெறாது. ஓடிப்போன பேர்வழியை நல்ல நடிகை தேடிவருவாளா? இதற்குத்தான் நண்பன் வேண்டும். படித்த நண்பன் இதற்குப் பயன்படமாட்டான். அவனை நம்பவும் முடியாது. நானே ஒரு நடிகையைக் கைக்கொண்டு பதிவுத் திருமணஞ் செய்துகொள்ளலாம். தாளில் வெளியிடலாம். இந்தக் காலத்தில் எந்த நடிகையும் தன் பெற்றோரைக் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். கற்பு அப்படி வளர்ந்துவரும் காலம் இது. (வெட்கம் வந்து சிரித்துக்கொண்டு) ஒரு வழி உண்டு, இருக்கிறது. எனக்கு முகவெட்டு இல்லாமல் இல்லை. நானே நடிகன் ஆவேன். எந்த நடிகையை மணக்க விரும்புகிறேனோ அந்தப் படத்தில் அவள் காதலனாக நடிப்பேன். நடிப்பில் அவளைத் தழுவிச் சிலகாலம் அடக்கமாக இன்புற்றுக் களிப்பேன். (சிறிது மயக்கமாக இன்புறுகிறான்.) மெல்லத் தழுவித்தழுவி என்னை மணக்கும் வேட்கையை அவளுக்கு எழுப்புவேன். அரிய குறிக்கோள், புதிய குறிக்கோள். உடனே எளிதாக முடியாது தானே. நடிகைகள் நடிகரல்லாதவர்களைத் தானே மணக்க விரும்புகிறார்கள். நடிகன் நாளைக்குக் கணவன் நிலையிலும் நடிகனாக இருந்தால் என்று பயமோ, என்னவோ. எப்படிப் பார்த்தாலும் எண்ணம் இடிபடுகிறது. (முகஞ் சுளித்துக் கசப்பாக) பலபடப் பேசி என்ன? சரியோ தவறோ வாழ்க்கைத் தெளிவுவேண்டும். குளமாக இருந்தாலும் குட்டையாக இருந்தாலும் கலங்கல் கூடாது. அலைவான உள்ளம் மலையான சுமைதாங்கி. உள்ளத்தின் ஊசல் முடிவில் உயிரூசல். என் பெற்றோர் உடன்படார். எலிபோய் மலையைக் குடைய முடியாது. இவ்வளவு பெரும் பட்டம்பெற்ற என்னை நடிப்புக்கு யாரும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். விலங்கியல் படித்த என் நடிப்பு மனித நடிப்பாக இருக்காது. நடிப்பு என்பது மெய்க்கலை. உண்மையாகவே நடிக்கவேண்டும். தழுவலும் முத்துதலுங் கூட நடிப்பாக இருக்க வேண்டும். நடிப்புக் களத்தில் காதலுக்கு இடமில்லை. மாறாக இருந்தால், துரத்திவிடுவார்கள். (வேகமாக மாறி மாறி நடக்கிறான்) வரவரப் புரியவில்லை. நெஞ்சம் நச்சரிக்கின்றது. பிறரிடம் சொன்னால் புரியாதது புரியும். யாரிடம் சொல்வது. சொல் சொல் என்று உள்ளம் கொல்லுகின்றது. அறிவு வெறியாகின்றது. மடித்து வைத்திருக்கும் நச்சுப் பொடியை என்ன செய்யப் போகிறாய். நெற்றியில் பூசிக்கொள்ளப் போகிறாயா? முதலில் துணிந்தபடி வாயில் போட்டுக்கொள்ளப் போகிறாயா? இல்லையா? எண்ணப்படி வாழ முடிந்தால் வாழ். முடியாது என்று தெரிந்தால் சாக வேண்டுமடா? கிட்டாத பொருளை நினைத்துக்கொண்டே செத்தால் அடுத்த பிறவியில் கிட்டுமடா. வெல்லா, உயிரை வெல்லம் என்று கருதிப் பலவாறு பேசுகிறாய். நல்ல வெல்லம் உருகும். நல்ல உயிர் காதலுக்கு உருகிவிடும். உள்ளத்தைச் சொல்லும் துணிவில்லை. தன்னுயிரைக் கொல்லும் துணிவாவது உனக்கு இருக்குமென்று நம்பினேன். அதுகூட இல்லையா? ஒன்று எண்ணத்தை மற, அல்லது உயிரைத் துற. உன்னால் நடிகை எண்ணத்தை மறக்க முடியாது. ஏன் மறக்கவேண்டும்? எவ்வளவு நல்ல நேரம். இருவரும் வீட்டில் இல்லாத நேரம். நச்சுப்பொடி கையில் இருக்கிற நேரம். கைக்கு வாய் தூரமா? எல்லாம் நினைவைப் பொறுத்தது. நச்சுப் பொடியைப் பற்பொடியாக எண்ணிக்கொள் விரைவில் உயிர் பொடியாகும். உனக்கு என்னால் விடுதலை. செய், செய், செய். நெஞ்சே, உன் ஆணை. அப்படியே செய்கின்றேன். இனியும் செய்யாதிருப்பேனா? செய்யாவிட்டால் நீ விடுவாயா? விடுதலை எவ்வளவு மகிழ்ச்சியான சொல். அதிலும் உயிர் விடுதலை, உலக விடுதலை, உணர்ச்சி விடுதலை. உன்னிடம் ஒரே ஒரு வேண்டுகோள். அடுத்த பிறவியில் நீ என் நெஞ்சாக வாராதே. 5 (சட்டைப் பையிலிருந்து நச்சுத்தூள் மடிப்பை விரலிற் பிடித்துக்கொண்டு) இளைஞர்கள் மனத்தைக் கெடுக்கும் தீய பெரியவர்கள் திருந்துக. எங்கு பார்த்தாலும் திரைப்பேச்சு, திரைப்படம். திரைத் தலைமை, திரைக்கூட்டம், திரையிசை, திரையிதழ், நடிகை நாட்காட்டி, நடிகை வண்ணம், நடிகைப் பெயர்கள், நடிகைச் சாயல். என்ன உலகம்! இவ்வுலகில், இவ்வுலகிலும் கலை வளரும் இந்நாட்டில் பிறந்த பிழைக்குச் சாவே உய்தி, போக்கிடம். இனியாவது இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பெரியவர்கள் தோன்றுக. திரையில் செல்வாக்கைச் சிறுமைப் படுத்தும் மக்கள் தலைவர்கள் தோன்றுக. இளைஞர்களாவது என்போலக் கெட்டொழியாது, தன்னறிவுக் கண் கொண்டு உலகில் நல்வழியைத் தேர்ந்துகொள்ளட்டும். என் வருவழி பண்பாக வாழட்டும். உலகத்துக்கு ஒருவாய் இருந்தால், என் வேண்டுகோள் முழங்கட்டும். நான் மகிழ்ச்சியோடு மடிகிறேன், உலக நலத்திற்காக. (நச்சுப் பொடியுள்ள மடிப்பைப் பார்த்த வண்ணம்) உன்னிடம் ஒரே ஒரு வேண்டுகோள். உலகை வெறுத்து உன்னை விரும்புகிறேன். உன்னை வாயிற் போட்டுக்கொண்ட பின் என்னை ஆட்கொண்டு விடு. அரைகுறையாகக் கொல்லாதே. (இறைவனை வணங்குகிறான். பெற்றோர்களை நினைந்து தொழுகின்றான். உடன் பிறவிகளையும் எண்ணுகிறான். ஒரு குவளை நீர் பக்கத்தில் இருக்கிறது. மடிப்பை விரித்துப் பொடியைப் பார்க்கிறான்.) (திடுக்கிட்டு) என்ன இது, வெண்பொடியாக இருக்கிறதே, (நுகர்ந்து பார்த்து) பழநித் திருநீறுபோல் மணப் பொடியாகவும் இருக்கிறதே, (வாயில் போட்டுப் பார்த்து) இப்பொடி இங்கு எப்படி வந்தது. யார் வைத்தது? யார் மாற்றியது? இது தேவாரப் பெரியவர்கள் பாடிப் புகழ்ந்த திருநீற்றுப்பொடி. ‘தந்திரமாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு’ என்ற தெய்வப் பொடி. பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் என்ற சிவப்பொடி, சிவத்தின் வெண்பொடி. (ஆரா மகிழ்ச்சியொடு குதித்துக் குறித்து நடந்துகொண்டு திருநீற்றை நெற்றியில் பூசிக்கொள்கிறான். நெஞ்சில் தடவிக் கொள்கிறான்.) (நிலாமுற்றத்துக்கு வந்து நின்று) இது யார் திருவிளை யாடல்? இப்பொடி நான் வாழ விரும்புகின்றது. என் சாதல் எண்ணத்தை நீறாக்கிவிட்டது. நான் இவ்வுலகில் வாழ விரும்பு கிறான் இறைவன். அவன் எண்ணப்படி யாரும் நடக்காதிருக்க முடியுமா? மாண்டவனுக்கு ஆண்டவன் காட்டிய ஆணை இது. 6 (புன்சிரிப்பாக) உண்மை விளங்குகிறது. என் போக்கு வீட்டாருக்குத் தெரியாது என்று நான் நினைத்துக் கொண்டி ருந்தேன். என் மாற்றங்களை வேலை நோக்கம் என்று எண்ணிக் கொள்வார்கள் என்று கருதிக்கொண்டிருந்தேன். உண்மை அப்படியில்லை. இருபது வயதில் இளைஞனுக்குப் பெரிய திடீர் மாற்றம் காதலேக்கத்தால் ஏற்படும் என்று என் பெற்றோர்கள் அறிந்தவர்கள் போலத் தெரிகிறது. என் தந்தை என் அறைக்கு வருவார். படியில் நிற்பார், நிலாமுற்றத்தில் படுத்திருப்பார். உறங்கு வதுபோல் கிடந்திருப்பார். என் உள் நோக்கம் அவருக்கு விளங்கி விட்டது. தன்னிடம் சொல்ல மாட்டான், தற்கொலைக்குத் தான் முடிவில் நிற்பான், இடையில் தடுக்க முடியாது, இறுதிச் செயலில் ஏமாற்றித் தடுக்க வேண்டும் என்று என் தகப்பனார் கூடவே திட்டஞ் செய்தார் போலும். அன்பும் அறிவுமுடைய பெற்றோர்கள் காளைப்பருவம் பாவைப்பருவம் வாய்ந்த தம் மக்களைக் கூர்ந்து கவனிப்பார்கள். நேரடியாக உணர்ச்சியை மோதாது, விட்டுப் பிடிப்பதுபோல் முழுதும் கட்டுப்படுத்து வார்கள். (திருநீற்றை முழுதும் பூசியபின், நீறிருந்த தாளைப் படிக்கிறான்.) ‘உயிருடையார் எய்தா வினை இல்லை’ என்ன பாடல். பழமொழிப் பாடல். என் எழுத்தாக வல்லவோ இருக்கிறது. என் பாடத்துக்கு இருந்த பாட்டு. நான் எழுதிப் பார்த்த பாட்டு. இந்தத் தாள் திருநீறு மடிக்க எப்படிக் கிடைத்தது? இவ்வளவு நாட் சென்று எப்படிக் கிடைத்தது? இன்று எப்படிக் கிடைத்தது? என் ஆசிரியருக்கும் இத்திருநீற்று மடிப்பில் - என் உயிர் காப்பதில் - தொடர்பு இருக்கலாம். உயிரை வாங்காதே என்று இருபொருள்பட வகுப்பில் அடிக்கடி சொல்லுவார். (திரைபற்றிய தாள்களையும் படங்களையும் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிகிறான். அறிவியல் நூல்களை மேலெடுத்து வைக்கிறான். திருக்குறள் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் முன்னிடம் பெறுகின்றன.) (நிறைந்த முகமலர்ச்சியோடு) என் ஒருமை நெஞ்சே! நான் திருந்தினேன். திருந்திக் கொள். எடுத்த பிறப்பில் நன்றாக வாழ நினை. வேறு நினைவு வேண்டவே வேண்டாம். மேலாராய்ச்சிக்குப் படிக்க முனைந்து விட்டேன். திருமணவுரிமையைப் பிறவியருளிய பெற்றோருக்கு ஒப்படைத்துவிட்டேன். பிறர் கடமையில் நான் தலையிடக் கூடாது என்று தெளிந்துவிட்டேன். தலையிட்டதனால் பட்ட பாடு போதும். அறிவு நெஞ்சே, அழகிய நெஞ்சே, வா நாம் வாழ்வோம். (திருநீற்றை மறுமுறையும் பூசிக்கொண்டு பெற்றோரை நினைத்து வணங்குகிறான்.)