மாணிக்க விழுமியங்கள் - 8 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) ஆய்வு நூல்கள் 8  தொல்காப்பியப் புதுமை - முதல் பதிப்பு 1985  இலக்கிய விளக்கம் - முதல் பதிப்பு 1972 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 8 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+280 = 296 விலை : 275/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 296 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல்’, சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம்’, புலமை நலத்திற்குக் `கம்பர்’ ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். ” என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு” இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். “தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள்’ எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல்’. இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர்’ என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு’. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம்’ மற்றும் `திருக்குறட்சுடர்’. திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள்’. தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!” இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, “வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தளமாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்புகளாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே “லேவாதேவி” என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு “கதிரகம்” என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை’ என்னும் குறிப்பேட்டில் “நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி” என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், “அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல்” என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம்’, `தமிழ்க்காதல்’, `கம்பர்’, `சிந்தனைக்களங்கள்’ போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை 21-7-2017 தொல்காப்பியப் புதுமை முதற் பதிப்பு 1958 இந்நூல் 1980 இல் மணிவாசகர் நூலகம் வெளியிட்ட 4ஆம் பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முகவுரை தொல்காப்பியம் தமிழ்நாட்டுக்கு முதனூல், தமிழ்மொழிக்கு முதனூல், தமிழர்க்கு முதனூல். இந் நூலறிவு எத்துறைத் தமிழனுக்கும் வேண்டும். தொல்காப்பிய அறிவுடைய தமிழன் எண்ணத்திலும் வாழ்விலும் ஏற்றமாக விளங்குவான். பலமொழிக் கலப்புடைய இன்றைத் தமிழர்க்குத் தமிழ்மொழி மூவரசாண்ட நன்னாளில் தோன்றிய தொல்காப்பியம் எடுத்தவுடன் புரியாதுதான். ஆயினும் தொல்காப்பியம் விளங்கும் நற்றமிழர்களாக நாம் உயர வேண்டாமா? உயர்ந்து தமிழை மேலும் உயர்த்த வேண்டாமா? தொல்காப்பியப் புதுமை என்பது இந்நூலின் பெயர். தொல்காப்பிய நூல் காலத்தால் மிகப் பழமையாக இருக்கலாம். காலப் பழமைக்காகக் கருத்தும் பழமை என்று மயங்கி எடுத்து எறிந்து இகழ்ந்து விடக்கூடாது என்று விழிப்பூட்டவே `தொல்காப்பியப் புதுமை’ என்ற பெயரை இந்நூற்கு வழங்கினேன். தொல்காப்பிய நிழல்படாத தமிழ் நூல்கள் இல்லை. இன்று பிறக்கும் நூல்களுங்கூட இந்நிழல் படிந்தனவே. இன்றைய தமிழ்மொழி வழக்கினைச் சிறிது நோக்கினும், ஒலியும் தொடரும் பிற அமைப்பும் தொல்காப்பிய நெறிப்பட்டனவே என்பது தெளிவு. பரந்து வளரும் மொழியியல் இவ்வுண்மையை மெய்ப்பிக்கின்றது. காதலுலகிலும் கற்புலகிலும் தொல்காப்பிய வுள்ளமே தமிழ்மக்களின் உள்ளமாக இன்றும் வாழ்கின்றது. எனவே நம் பரம்பரை செம்மையானது, வழி நெறி வருவது, காலம் பொருந்தியது, சாலச் சிறந்தது என்று ஒவ்வொரு தமிழனும் செம்மாப்புக் கொள்க. இதன் முன்னைப் பதிப்புக்கள் 14 கட்டுரை கொண்டவை. இப்பதிப்பில் சங்க நெறிகள், தொல்காப்பிய நெறிகள் என்ற இருபொழிவுகள் மேலும் கூடியுள்ளன. நூலின் பெயருக்குத் தக 16 கட்டுரைகளிலும் தொல்காப்பிய நீரோட்டத்தைப் பருகலாம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்த மனிதக்குடி எனப் புகழப்படும் தமிழினம் மூத்தும் மூவாத் தொல்காப்பியத் தமிழ்மறையைக் கைமணக்க வாய்மணக்க வாழ்வுமணக்கக் கற்க முன்வருக. 1-3-80 வ.சுப. மாணிக்கம் காரைக்குடி பொருளடக்கம் 1. தொல்காப்பியப் புதுமை 4 2. தொல்காப்பியன் ஒரு மொழியறிஞன் 14 3. தமிழ் முதல் நூல் 17 4. காவியப்பேச்சு 25 5. சாத்தனார் 31 6. தியாகம் 38 7. அழகியல் 48 8. மணிநாவொலி 52 9. பாவம் 57 10. அருஞ்சொற்கள் 62 11. வாழ்க்கைத்துணை 69 12. பாரதியார் புலமை 78 13. பாரதியின் பழமை 96 14. பாரதி கண்ட தேசிய ஒருமை 108 15. சங்கநெறிகள் 118 16. தொல்காப்பியர் நெறிகள் 130 1. தொல்காப்பியப் புதுமை I தொல்காப்பியம் என்பது தமிழ்ப்பழமை காட்டும் வரலாற்றுச் சுவடி; வருங்காலப் புத்தமிழுக்கு அறிவூட்டும் வழிகாட்டி. இவ்வருமை நூல் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகட்கு முன்தோன்றியது இன்றுள்ள சங்கப் பழநூல்களுக்குங்கூட ஆயிரம் ஆண்டு முற்பட்டது தொல்காப்பியந்தான் தமிழிற் பிறந்த முதனூல் என்று எண்ணற்க அதற்கு முன் எத்துணையோ நூல்கள் தமிழில் இருந்து, இயற்கையாலும் செயற்கையாலும் இறக்கலாயின. இன்று நமக்கு வரவாகியிருக்கும் நூல்களுள் தொல்காப்பியம் பழமை சான்றது என்பதுவே கருத்து. முன்தோன்றிய பனுவல்களும் உடன்தோன்றிய பனுவல்களும் பின் தோன்றிய பனுவல்களும் அழிந்தொழிய, தொல்காப்பியம் ஒன்றுமட்டும் உயிர் பிழைத்து வந்த நிலை தமிழக வரலாற்றில் ஒரு மருட்கையாகும். இந்நூலின் பழம்புதுப் பெருமைகளைச் சுருங்க உரைப்பான் நினைக்கும் எனக்கு, முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்னும் திருவாசக அடிகளே முன்னிற்கின்றன. இயற்கை தழுவிப் பிறந்த கருத்துக்களுக்குப் பழமை புதுமை என்ற காலப் பாகுhடு இல்லை. தொல்காப்பியம், சங்கவிலக்கியம், திருக்குறள் முதலாய நூல்கள் இயற்கையோடு இயைந்தன; ஆதலால் அவை ஞாயிறு திங்கள் போல என்றும் புத்தொளி தரவல்லன. திருக்குறள் மக்கட்கு உயிர் நூலாவது போலத் தொல்காப்பியம் தமிழுக்கு உயிர்நூலாகும்; தமிழ்மக்களின் உலக வழக்கையும் செய்யும் நெறியையும் திறம்பட ஆராய்ந்து எழுதிய நாட்டு நூலாகும். பிற்காலத்து ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனி இலக்கண நூல்கள் தோன்றியுள. அவையெல்லாம் தங்கால வழக்குகளைக் கண்டு புதுமையாக எழுதப்பட்டன வல்ல; தொல்காப்பியத்திலிருந்து தோன்றிய கிளைநூல்கள். திருக்குறள் கருத்தாலும் சொல்லாலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, இராமாயணம் முதலான வழி வழி இலக்கியங்கள் ஆட்சிசெய்த ஆற்றலை நாம் கற்றிருக்கிறோம். பிற நூல்களிடைத் திருக்குறள் ஆட்சியைப் பலர் பலபட எடுத்துக் காட்டுவதையும் கேட்டிருக்கின்றோம். இத்துறையில் தொல்காப்பியச் செல்வாக்கைப் பற்றிப் புலவர் பெருமக்கள் ஆராயத் தொடங்கினார் இல்லை. இன்று நம்மவர் ஆராய்ச்சியெல்லாம் ஒரு நூலாசிரியன் தன் காலம் யாது? அவன் சமயம் யாது? எனக் கால சமயங்கள் காணும் அளவிலேயே நின்று அகம் பாராது பின்வாங்குகின்றன. பெரிய ஆசிரியர்களின் நெஞ்சம் அறிவதற்கு அன்னார் வாழ்ந்த காலம் காண்பது ஓரளவு துணை செய்யும்; அவர் தழுவிய சமயம் காண்பதோ இன்னும் குறைவாகத்தான் பயன் தரும். தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் இவ்விருவகைத் துறைகளுக்கும் சிற்றளவே இடங்கொடுத்து, வேறு புதிய அடிப்படைத் துறைகளில் நாட்டம் செலுத்த வேண்டும். தொல்காப்பிய நீரோட்டம் சங்கவிலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பன்னூல்களிடை எங்ஙனம் பாய்ந்து தமிழ்வளம் செய்திருக்கின்றது என முதற்கண்ட காட்டுவேன். II தலைவன் பரத்தையிழுக்கம் உடையவனாய்ப் புறத்துச் சென்றிருக்கின்றான். அவன் தீய நெறி தலைவியைச் கினப்பிக்கின்றது. அருகே நின்ற தன் சிறுமனைப் பார்த்து, “நீ அழகில் உன் தந்தையை முழுதும் ஒத்திருக்கின்றாய்; ஆனால் குணத்தில் அவரைப்போல் இராதே. பகைவரை வெல்லும் மறத்தில் தந்தையை ஒத்திரு; மணந்த மகளிரைப் பிரிவதில் அவரைப் பின்பற்றாதே. நடுவு செய்யும் அறத்தில் அவரை ஒத்திரு; காதல் மனைவியைக் கைவிடுவதில் அவரை ஒவ்வாதே. தந்தைபோல் கொடை செய்; ஆனால் தந்தைபோல் கொண்ட மனைவியை வருத்தாதே”என ஒப்பும் ஒவ்வாமையும் சுட்டி இடித்துரைப்பாள் தலைவி. செம்மால், வனப்பெலாம் நுந்தையை யொப்பினும் நுந்தை நிலைப்பாலுள் ஒத்த குறியென்வாய்க் கேட்டொத்தி கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும் வென்றிமாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி ஒன்றினேம் யாமென் துணர்ந்தாரை நுந்தைபோல் மென்றோள் நெகிழ விடல். என்றவாறு மருதன் இளநாகனார் பாடிய இக் கலித்தொகைச் சங்கப் பாட்டுக்குத் தூண்டுகோல் யாண்டு உண்டு? “தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் அந்த மில் சிறப்பின் மகப்பழிந்து நெருங்கல்”என்னும் தொல்காப்பிய ஈரடிகளின் விரிவன்றோ 34 அடியுடைய கலித்தொகைப் பாட்டு. பத்துப் பாட்டிலும் புறநானூற்றிலும் வரும் பல்வேறு ஆற்றுப்படை இலக்கியமெல்லாம் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கம் (1036) என்ற தொல்காப்பியத் தொடரின் படைப்பன்றோ? வள்ளல் ஒருவன்பால் செல்லக் கருதும் இரவலனுக்கு வழியிடைக் காட்சிகளைப் புனைந்து சொல்லவேண்டும் என்பது தொல்காப்பிய விதி. இவ்விதியை உட்கொண்டமையால், பத்துப்பாட்டில் வரும் ஆற்றுப்படைகள் அடிகள் பலவாய் விரிந்தன. சங்க இலக்கியங்களில் தொல்காப்பிய ஆட்சி இத்துணையென்று எழுதிட முடியாது. III உலகம் கண்ட திருக்குறளையே மேற்கொண்டு பார்ப்போம். காமத்துப்பாலும் பொருட்பாலுள் பல அதிகாரங்களும் தொல்காப்பியப் பற்றுக்கோடு உடையன. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (1435) எனவரும் தொல்காப்பிய நூற்பா அன்றோ, நிறைமொழி மாந்தர்பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (28) எனத் திருக்குறளாக மாறி நிற்கின்றது. எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற் பொற்புடை நெறிமை இன்மையான (980) என்ற தொல்காப்பிய நூற்பாவும், கடலன்ன காம முழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் (1137) என்ற திருக்குறளும் ஒன்றாகத் திகழ்வதை நோக்குவார்க்குத் தொல்காப்பியத்தை வள்ளுவர் பொன்னே போற் போற்றியமை பெறப்படும். மேலும் திருக்குறள் ‘அகரமுதல’ எனத் தொடங்கிப் ‘பெறின்’ என்று னகரமாக முடியும் எழுத்தமைப்பைக் கண்டு அஃது ஒரு வரம்பு நூல் எனப் பெருமிதம் அடைகின்றோம். திருவள்ளுவருக்கு இங்ஙனம் தந்நூலை அமைக்கும் எழுச்சி, எழுத்தெனப் படுப அகர முதல் னகர விறுவாய் முப்பஃ தென்ப (தொல் 1) என்னும் தொல்காப்பிய முதல்நூற்பாவினால் பிறந்திருக்க வேண்டும் என்று கருதுவதிற் பிழையில்லை. தொல்காப்பியம் கற்றபின் திருக்குறளைக் கற்பார் பெறும் அறிவு வேறு; அதனைக் கல்லாது திருக்குறளைக் கற்பார் அறிவு பிறிது என நாம் உணரவேண்டும். IV சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் கண்ணகிப் பெருந்தெய்வத்துக்கு இமயமலைக்கண் கல்கண்டதையும் கால் கொண்டதையும் கங்கைக்கண் நீர்ப்படுத்ததையும் வஞ்சிக் கல் நட்டதையும் எல்லோரும் வழுத்தியதையும் ஐந்து காதைகளில் விரித்துரைக்கின்றது. காட்சிக்காதை, கால் கோட்காதை என்ற தலைப்புக்களில் வஞ்சிக்காண்டத்தைப் படைக்கும் குறிப்பை அருளியது, காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணர (1005) என்ற தொல்காப்பிய நுற்பாதானே? செங்குட்டுவன் வடநாட்டிற்குப் படையெடுத்த போரைக் கூறும்போது தொல்காப்பியப் புறத்திணையியல், காணீர்! வஞ்சிக் காண்டமாக வடிவெடுத்து நிற்கின்றது. தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலை (1036) என்பது தொல்காப்பியர் காலத்து அரசப்பள்ளி யெழுச்சி. துயிலெழுப்பும் இவ்விலக்கிய நெறி ‘எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே’எனத் திருவாசகத் தெய்வப்பள்ளி யெழுச்சியாகவும்,‘ஈன்றவளே பள்ளியெழுந்தருளாயே, எனப் பாரதியின் தாய்ப் பள்ளியெழுச்சியாகவும் புதுப்பிக்கப்பட்டது என்ற வரலாறு அறிக. பாட்டென்பது இன்னின்னவாறு அமையவேண்டும் என்று தொல்காப்பியம் முறை வகுக்கின்றது. அம்முறைப்படி அமைந்த பாட்டில் கருத்துச் செறிவிருக்கும்; இயற்கைவனப்பு இருக்கும்; பொருளாழம் இருக்கும். முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை (948) என்பது தொல்hகாப்பியர் சுட்டும் இலக்கியப் போக்கு. சங்கப் பாக்களெல்லாம் இப்போக்கு உடையன. நிலவறிவும் காலவறிவும் அவற்றுள் தோன்றும் கருப்பொருளறிவும் பிற்காலப் புலவர்களுக்குக் குறைவு; இக்காலப் பாவலர் பலர்க்கோ அவ்வறிவு பகையாகும். ஆயினும் தொல்காப்பிய மரபைச் சாவாது காத்துப் பாட்டியற்றிய பெருமை நம் காலப் பெரும்புலவர் பாரதிக்கு உண்டு. அல்லிக் குளத்தருகே - ஒருநாள் அந்திப் பொழுதினிலே - அங்கோர் முல்லைச் செடியதன்பாற் - செய்தவினை முற்று மறந்திடக் கற்ற தென்னே இக் களவுப் பாட்டில் முதல் கரு உரி என்ற முப்பொருள் அமைப்புண்மை அறியலாகும். V தமிழ் நூல்கள் தம் ஆக்கத்துக்குத் தொல்காப்பியத்தைப் பயன் கொண்ட துணையை இதுகாறும் ஓரளவு கண்டோம். இனி அந்நூலுட்புகுந்து சில கருத்துக்களை இக்காலத்தோடு பொருத்தி ஆராய்வோம். தொல்காப்பியம் என்ற பெயர் கேட்டளவில் அதனை வழக்கொழிந்த நூல் என்று ஒதுக்க வேண்டா. இன்றும் என்றும் கொளத்தகும் அடிப்படைப் புதுமைகள் உள. கேட்பார்க்கு அதன் நிலைப்பண்மை நினைவூட்டவே ‘தொல்காப்பியப் புதுமை’ என்ற தலைப்பிட்டு உரையாற்றுவல். செய்யுள் பற்றிச் சொல்லும் யாப்பிலக்கணமும், அகழி மதில் வாள் வேல் கொண்டு செய்த அக்காலப் போரைப் பற்றிக் கூறும் புறத்திணையிலக்கணமும் தொல்காப்பியத்து வழக்கிழந்த இயல்கள் என்னலாம். அகம்பற்றிய குடும்ப இயல்களெல்லாம் நிலைத்து நின்று வழிகாட்ட வல்லன. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் கொண்டது. ஓரதிகாரத்துக்கு ஒன்பது இயல் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்கள் உடையது; 160 நுற்பாக்கள் பெற்றது. தொல்காப்பிய முழுமையும் முதற்கண்ட 1891இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் உயர்திரு. சி.வை.தாமோதரம் பிள்ளையவர்களைச் சாரும். இந்நூலுக்குப் பனம்பாரனார் அருளிய சிறப்புப் பாயிரம் உண்டு. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்ற தொடர் இன்று தமிழ்நாட்டு எல்லைக் கிளர்ச்சிக்கு இலக்கிய முதற்சான்றாக நிற்கின்றது. இச்சான்று தொல்காப்பியப் பாயிரத்தின் முதலடிகள் அல்லவோ? தொல்காப்பியத்துக்கு மக்கள் மொழிவழக்கே அடிப்படை. மக்கள் இயல்பில் சிதைத்துப் பேசும் மரூஉச் சொற்களுக்கும் இலக்கணம் கூறும். தமிழ்மொழிக்கண் வகரமெய் ஈறான சொற்கள் நான்கே என இவ்வாறு ஒவ்வொன்றையும் முடிவுகட்டிக் கூறும் இந்நூல். அதனால் தொல்காப்பியரைத் தமிழ் அளந்த பெருமாள் என்னலாம். நாலு கால் என்பதற்கும், நாலேகால் என்பதற்கும் பொருள் வேற்றுமையுண்டு. இவ்வேற்றுமை ‘ஏ’என்னும் ஓரெழுத்து இடையே வருவதால் உண்டாவது. ‘ஒத்தது என்ப ஏயென் சாரியை’ என்பது தொல்காப்பிய விதி. இவ்விதி கடவாதுதானே இன்றும் நாம் பேசி வருகின்றோம். அவ்வாறாகவும் சிலர் கூறுமாப்போல் தொல்காப்பியம் வழக்கொழிந்த நூல் என்று அறையும் துணிவு பின்பற்றத் தகுவதன்று. ஆவிரம்பூ, பனங்காய், பனாட்டு, பனைக்கொடி, பூங்கொடி, குமிழம்பூ, புளியமரம் என இன்னும் நாம் சொல்லும் புணர்ச்சி யெல்லாம் தொல்காப்பிய வழிப்பட்டன. உயர்திணை அஃறிணை என்ற பொருட்பிரிவு தமிழ்மொழிக்கே சிறப்பாக அமைந்தது; காரணத்தோடு கூடியது. கால்டுவெல் முதலாய மொழி நூலறிஞர்கள் இப்பகுத்தறிவுப் பகுப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளனர். உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே (484) என்பது தொல்காப்பியச் சொல்லதிகார முதற்பா. மனித உடம்பெடுத்தும் அதற்கேற்ற ஒழுக்கமில்லாதவர் மக்களாக மதிக்கப்படார் என்பது குறிப்பு. தமிழ்ப் பெருமக்கள் புறத்தோற்றத்துக்கு நிலையான மதிப்பு நல்குவது இல்லை. ‘மக்களே போல்வர் கயவர்’, ‘உறுப்பொறுத்தல் மக்கள் ஒப்பன்றால்’, ‘மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்’ எனவரும் திருக்குறள்களுக்கு அடிப்படையும் விளக்கமும் மேலை நூற்பாவில் கண்டுகொள்க. VI எனது மாடு, எனது வீடு என்பது போல, எனது மக்கள், எனது மனைவி, எனது கணவன், எனது தந்தை என அது என்னும் வேற்றுமையுருபு சேர்த்து வழங்குகின்றோம். அது என்பது அஃறிணைக்கு உரிய உருபு; உடைமைப் பொருள் தருவது. எனது மாடு என்றால் மாடு என்னுடைமை என்பது கருத்து. இந்நடை அஃறிணைப் பொருள்களுக்குத்தான் ஏற்கும், ஏன்? உடைமையாகும் அடிமை அவற்றுக்குத்தானே உண்டு. எனது தந்தை என்பதற்குத் தந்தை என்னுடைமை என்று பொருளாகுமா? எனது கணவன் என்பதற்குக் கணவன் என்னுடைமை என்று பொருள்வருமா? மனைவி, மக்கள், கணவன், தந்தை என்பவெல்லாம் முறைமைப் பெயர்களேயன்றி உடைமைப் பெயர்கள் இல்லை. உயர்திணைக்கு உயர்திணை உறவேயன்றி உடைமையில்லை என்பது தமிழ்நாகரிகம். எனது மனைவி என அது உருபு கொடுத்துச் சொல்லுங்கால், பெண்ணினத்தை மதித்த நம் நாகரிகம். மொழிநடையில் தோன்றவில்லை. தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மக்களும் நம் போலவே இப்பிழை செய்தார்கள் போலும். அதனைக் கண்டு தமிழ்க்கோள் கெடாதபடி, அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அதுவென் உருபுகெடக் குகரம் வருமே (577) என்று நடைதெரிந்து ஓதினார். என் மனைவி, என் மக்கள் என்று தொகுத்துச் சொல்லுங்கள். அல்லது, எனக்கு மனைவி, எனக்கு மக்கள் என்று விரித்து எழுதுங்கள். திருமண அழைப்பிதழ்களில் என் மகன், என் மகள் என்று ஆட்சி செய்யுங்கள். எல்லார்க்கும் பிறப்பொப்புமை அறையும் நாம் தொல்காப்பிய மொழி விதியைப் புதுக்குவோமாக. 2. தொல்காப்பியன் ஒரு மொழியறிஞன் I உலகியலைக் கூர்ந்து அறிந்து எழுதிய புலவனது காவியம் காலவியல்பைக் காட்டுவதோடு காலங்கடந்தும் நிற்கும். நிற்பதற்குக் காரணம். காவியத்தினுள் உயிராக இயங்கும் மக்கட் பண்பேயாகும். மக்கள் வழக்கை அடிப்படையாகக் கொண்டு யாத்த இலக்கியமே சிறப்புறுமாப்போல, மொழி வழக்கை அடிமுதலாக வைத்து விதி செய்யும் இலக்கணமே தன் காலத்து இலக்கியங்கூட ஒழியவும், தான் நின்று வாழ்தற்கு ஒரு காரணம் அதன் நல்லடிப்படை என நாம் தெளியவேண்டும். தொல்காப்பியர் தமிழ்மொழியைப் பலவாறாகத் துருவியாய்ந்த ஆசிரியர்; அதன் வரவும் செலவும் இருப்பும் நன்றாகக் கணக்கிட்டவர். தமிழ்மொழியில் வகரமெய்யீறான சொற்கள் நான்கே உள; ஞகர மெய் ஈறாகும் சொல் ஒன்றுதான் உண்டு; அளவுப் பெயரிலும் நிறைப்பெயரிலும் வரும்மொழி முதலெழுத்துக்கள் ஒன்பதுவே என இவ்வாறு சொல்வரம்பு பல காட்டுபவர். தமிழ்பேச்சுமொழி யாதலால் தொல்காப்பியர் செய்யுள் வழக்கு ஒப்ப உலக வழக்கையும் மதித்தவர். விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர் (483) என்ற நூற்பாவால் மொழிக்கு உரைகல் வழக்கு என்று அறிவுறுத்தினர். தாம் இதுகாறும் கூறிய விதிகளுக்கு மாறான செய்யுளையோ வழக்கையோ கண்டால், அப்பொழுதை வழக்கைக் கொண்டு பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறுதியிட்டனர். செய்யுள் வழக்குத்தான் சிறந்தது; உலக வழக்குச் சிறவாதது என்ற பொருந்தாக் கோட்பாடு தொல்காப்பிய மொழிஞன்பால் இல்லை. இரு வழக்குகளையும் நிகராக மதித்த மொழியறிஞர் அவர். ‘வழக்காறல்ல செய்யுளாறே’(501),‘வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி, இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல’ (510) என்ற இரண்டிடங் களையும் சான்றாக நோக்குக. புணர்ச்சிக்கு உரிய நிலைமொழி வருமொழிகளை வரையறுத்துக் கொண்டுவரும் தொல்காப்பியர், மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் உரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே (111) என்று ஒரு நூற்பா யாத்தனர். வழங்கி வழங்கி ஒலி தேய்ந்து குறுகிய சொற்களை, மழுங்கிய நாணயம்போல் எள்ளாது, புணர்நிலைக்குத் தகுதியுடையவை என்று வெளிப்படுத்தினர். அகம் + கை = அங்கை என்றும், ஆதன் = தந்தை = ஆந்தை என்றும் வரும் மரூஉ முடிவுகளைத் தாமே உடன்பட்டனர். II வாழ்க்கையில் செல்வம் வரும்; போம். ஆதலால் இருவினையையும் ஏற்கவேண்டும் என்று விளங்கியவன் மெய்யறிஞன் ஆகின்றான். ஒரு மொழியில் சொற்செல்வம் வரும்; போகும். ஆதலால் இரண்டிற்கும் இடங்கொடுக்க வேண்டும் என்று வழக்காடுபவன் மொழியறிஞன் ஆகின்றான். மொழி நாணயத்தின் உயிரான வரவுசெலவுகளை மூவாயிரம் ஆண்டுக் கிழவனான தொல்காப்பியர் நன்னர் அறிந்திருந்தார் என்று நிறுவுவதற்கு, கடிசொல் லில்லை காலத்துப் படினே (934) என்ற ஓரடி நூற்பாவே அமையும். சொற்கள் அவ்வக் காலத்து வழக்கில் இறப்பின் அவை காக்கப்படுதலில்லை; சொற்கள் அவ்வக்காலத்து வழக்கில் தோன்றின் அவை தள்ளப்படுதல் இல்லை என்ற இருபொருளும் ஒருங்கு புலப்பட இந்நூற்பா தொகுத்தனர். உயிரோடிருக்கின்றோம் என்பதற்கு வாங்கி விடும் மூச்சுச் சான்றாதல் போல, வாழும்மொழி என்பதற்கு வந்துபோம் சொற்கள் சான்றாகும் என்பதைக் கண்டு ‘கடிசொல் இல்லை’ என வழிகாட்டினர். தொல்காப்பியம் தூய தமிழினத்தின் மனம், அறிவு, இன்பம், மறம், மரபுகளை அறிந்துகொள்ளற்குப் பொய்யாத் தனிக் கருவூலமாகக் கிடக்கின்றது. இப்பேருண்மையைச் சில்லாண்டுகளாக அறிந்து விழிப்படைந்து வருகின்றோம். இன்று தமிழகத்துப் புதுத் துறையாக வளர்ந்து வரும் மொழிக்கலைக்கும் நிரம்பிய மூலங்கள் அந்நூலகத்து உண்டு என்று தெளிவோமாக. தெளிந்து, தொல்காப்பியர் தொடங்கி வைத்த மொழியியற் கலையைப் பழமையும் புதுமையும் விரவ வளர்ப்போமாக. 3. தமிழ் முதல் நூல் I தமிழ் முதல்நூல் என்பது என் உரைப் பொருள். திருக்குறட் கழகத்தில் பேசுகின்றேன். ஆதலால் திருக்குறளைத் தான் முதல் நூல் என்று சொல்வதாக நீங்கள் கருதக்கூடும். திருக்குறள் அறநூல்களுள் முதல் நூலாகலாம்; மக்கள் வாழ்க்கைக்கு முதல் நூலாகலாம். தமிழ்மொழிக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நிலத்துக்கும் தமிழ் நாகரிகத்துக்கும் அது முதல் நூல் ஆகாது. உலகத்துப் பெரியவர்கள் பலர் உளர்; என்றாலும் நம் குடும்பத்துக்கு நம் பெற்றோர்களே நெருங்கிய பெரியவர்கள். இம்முறையிற் பார்க்குமிடத்து, நம் தமிழுக்கும் தமிழராகிய நமக்கும் உரியமுதல் நூல் யாது? பாரதியார் திருக்குறளும் சிலப்பதிகாரமும் இராமாயணமும் சிறந்த தமிழ் நூல்கள் என்று பாடினார். இம்மூன்று நூல்களும் சிறந்தவையே. ஆனால் சிறிது நினையுங்கள். இம்மூன்றினைத் தவிர்ந்த பிற தமிழ் நூல்களெல்லாம் மட்டமா? தரங்குறைந்தவையா? பாரதியார் பாடலால் இம்மூன்று நூல்கள் நாடெங்கும் பரவின; பரப்பப்பட்டன; புகழெய்தின என்பது தவிரப் பாரதியின் சொல் இந்நூல்களுக்கு முன்பில்லாத இலக்கியத் தரத்தை உயர்த்திவிட்டதா? பாரதியார் பாடல் பெறாமையால் பிற தமிழ்நூல்கள் பரவல் குறைந்தன என்று வேண்டுமானால் கொள்ளலாம். அதற்காகத் தமிழ்த்தரம் குறைந்தன என்று சொல்ல ஒரு புலவன் நெஞ்சு துணியாது. பாரதியார் முப்பெரும் புலவர்களையே திரும்பத் திரும்பப் புகழ்ந்த அழுத்தத்தால், சிறந்த பல தமிழ் நூல்கள் பரவுவதற்கு அறியாதே ஒரு தடையிட்டார் என்று கூடச் சுட்ட விழைகின்றேன். இன்னொரு மயக்கமும் நம்பால் உண்டு. ஒரு நூல் எத்துணை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது; பெயர்த்துக்கொண்ட அத்துணை மொழிகளின் எண்ணிக்கைக்கேற்பச் சிறப்பை மதிக்கின்றோம். நல்ல நூலாயின் மொழி பெயர்க்கப்பட்டிருக்குமே என்று புதியதோர் அளவுக்கோல் நீட்டுகின்றோம். திருக்குறளுக்கு ஒரு தனி மதிப்பு பல மொழிபெயர்ப்பு என்று பறைசாற்றுகின்றோம். இம்மொழி பெயர்ப்பெல்லாம் ஓரிரு நூற்றாண்டிற்கு உட்பட்டன. மொழி பெயர்ப்புக்கு முன் திருக்குறளின் இலக்கியத்தரம் குறைந்திருந்தது என்றும், மொழிபெயர்த்த பின் அதன் தரம் உயர்ந்துவிட்டது என்றும் கொள்ளப்படுமா? ஆனால் ஒன்று கூறலாம். தமிழறிஞர் பலர் திருக்குறளுக்குச் சில நல்ல உண்மைப் பொருள்களைக் கண்டு இன்றும் எழுதி வருகின்ற நிலையில், இதற்கு முன்செய்த மொழி பெயர்ப்புக்கள் குறட்பொருளை வேற்று நாட்டவர்க்குத் திரிபாகக் காட்டுகின்றன என்று அறியவேண்டும். ஒரு நூலின் உண்மைப் பொருளைத் துணியாத இடையில், அதனை மொழி பெயர்த்தல் மாற்ற வாராத் தீங்காய் முடியும். நிற்க, பாரதியார் பாடாமையாலோமொழி பெயர்க்கப்படாமையாலோ பிற தமிழ் நூல்கள் சிறப்பில என்று திறனாய்தல் அடிப்பிழையாகும். II திருக்குறள், சிலப்பதிகாரம், இராமாயணம் இன்று நன்கு பரவிப் பெருகுகின்றன; பலர் கைப்பட்டு விட்டனர்; மேடையிலக்கியங்களாயின; வள்ளுவர், இளங்கோ, கம்பர் பேரால் நாடெங்கும் கழகங்கள் தோன்றுகின்றன. இவையெல்லாம் எண்ணியும் கண்டும் மகிழத்தக்க செயல்கள் என்றாலும், இந்நூல்களின் வளர்ச்சியே முடிந்த தமிழ் வளர்ச்சியாகாது. தமிழ்மொழி இம் மூன்று நூல்களுள் அடங்கியதன்று. இவை தமிழ் வானத்துத் தோன்றும் சில கதிர்கள். தமிழ் வளர்ச்சியில் அறிஞர்களின் பொறுப்புப் பெரிது. பலர் எடுத்துப் பேசும் நிலை எய்திய இலக்கியங்களைத் தாமும் தொடுத்துப் பேசுதல் ஆகாது. மேடைக்கு இதுவரை வாராத, இனி வரவேண்டிய இலக்கியங்களாகப் பார்த்துச் சொற்பொழிவு செய்தல் வேண்டும். பல தமிழ் நூல்கள் பொதுமேடை நூல்கள் ஆகும்படி மறைந்தவற்றை வெளிப் படுத்தத் துணிய வேண்டும். சில நூல்களையே எப்போதும் யாரும் எவ்விடத்தும் எழுதிப் பேசிக்கொண்டிருப்பது பல நூல்களின் மறைவிற்குக் காரணமாய் ஒழியும் உ.வே.சாக்கள் மீண்டும் பிறக்க வேண்டி வரும். தமிழுக்கு முதல் நூலாவது தொல்காப்பியம் ஆகும். இது மூவாரயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட நூலென்று அறிஞர்கள் கொள்கின்றனர். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பிரிவுடையது. கண்ணாடிக்கு முன்நின்றவுடனே நம் உருவம் தெரிகின்றது. அவ்வளவு இயல்பாகவும் விரைவாகவும் தெளிவாகவும் சூத்திரம் அமையவேண்டும் என்ற வரம்பு தழுவித் தொல்காப்பியர் நூல் எழுதியுள்ளார். இருந்தும் இந்நூல் நமக்கு விளங்கவில்லை என்று சொல்கின்றோம். ஆசிரியர் விளக்கமாகத்தான் நூலை எழுதியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. நேற்றுப் பார்த்த ஆளையே இன்று நீ யார் என்று கேட்கின்றோம். ஒருநாள் இடையீடு இந்த அறியாமையை நமக்குத் தருமானால், மூவாயிரம் ஆண்டு இடையீடுபட்ட தொல்காப்பியத்தில் சில பகுதி படித்தவுடனே விளங்காதிருப்பதில் வியப்பென்னை? தமிழ் ஆட்சியில்லை; தமிழ்மொழி கல்விமொழியாக இல்லை; நாம் முறையாகத் தமிழ் படிக்கவில்லை. இங்ஙனம் நம் தமிழ்நாடும் நம்மனோர் தமிழறிவும் இருக்கும்போது, தெளிந்த தொல்காப்பியம் நமக்கு எப்படி விளங்கும்? நமக்கு விளங்கவில்லையே என்று தொல்காப்பியரைப் பழிப்பது அறிவு வளர்ச்சியாகுமா? தொல்காப்பியம் விளங்க வேண்டும் எனின், நம் விளங்காமை ஒழியவேண்டும். தமிழ்மொழி யறிவுபெற முயலவேண்டும். இன்றைய சூழ்நிலையில் முயற்சி பெரிது வேண்டும். III திருக்குறள், பின் தோன்றிய தமிழ் நூல்களை எங்ஙனம் ஆட்சி செய்திருக்கின்றது என்று பலர் பறையறையக் கேட்டிருக்கின்றோம். அக்குறளையும் ஆட்சி செய்த நூல் தொல்காப்பியம் என்று அறிந்து கொள்ளுங்கள். விவிலிய நூல் கற்றபின் ஆங்கில இலக்கியம் கற்பார் பெறும் விளக்கம் பெரிது; மற்றையோர் பெறும் அறிவு சிறிது. திருக்குறள் கற்றுப் பிற தமிழ் நூல்களைக் கற்பார் காணும் இன்பம் வேறு; குறளறிவின்றிப் பிற தமிழ் நூல்களைப் படிப்பார் அடையும் இன்பம் வேறு. அதுபோல, தமிழில் காலத்தாலும் சிறப்பாலும் முதன்மையுடைய தொல்காப்பியத்தைப் படித்த பின், திருக்குறள் முதலான தமிழ் நூல்களைக் கற்பார் அழுத்தமான புதிய அறிவு விளக்கம் பெறுவர். தொல்காப்பியம் கல்லாதார் பெற்றுள்ள தமிழறிவு எப்படியும் குறைபாடு உடையதே. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (1435) என்று பெரியோர் பெருமையைத் தொல்காப்பியர் கூறுகின்றார். இச்சொல்லும் பொருளும் அப்படியே குறளாக உருவெடுப்பதைக் காண்க. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். (28) தந்தையின் பொருளை உரிமையோடு மகன் எடுத்துக் கொள்வதுபோல, திருவள்ளுவர் தொல்காப்பியரின் சொற் செல்வத்தைப் பொருட் செல்வத்தோடு அள்ளிக்கொள்கின்றார். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று திருக்குறளை மூன்று பிரிவு செய்யும் கருத்து வழங்கியவர் யார்? ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’(1037) எனவும், ‘அறம் முதலாகிய மும்முதற் பொருள்’ (1363) எனவும் தமிழ் முதல்வன் தொல்காப்பியன் சுட்டியிருத்தல் காண்க. அன்புடைமை அதிகாரத்து ‘என்பு’ என்னும் சொல் பலவிடங்களில் தொடைபட வந்து நிற்கின்றது. இங்ஙனம் யாக்கும் நினைவு திருவள்ளுவருக்கு, என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும் (1059) என்ற தொல்காப்பியத் தொடையால் எழுந்திருக்கலாம். தமிழ் முதனூல் ‘அவன் சோர்வு காத்தல் கடன்’(1119) எனப் பெண்ணுக்கு அறிவுறுத்தும். இவ்வறிவுரையைத் ‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற் காத்துச் சோர்விலாள் பெண்’என்று திருக்குறள்(56) விரிவு செய்யக் காண்மின். IV பாரதி பாடிய மூவருள் இளங்கோவும் ஒருவர் காட்சிக் காதை, கால்கோட்காதை, நீர்ப்படைக்காதை, நடுகற் காதை, வாழ்த்துக் காதை என மூன்றாவதாகிய வஞ்சிக் காண்டத்துப் பல காதைகளுக்குப் பெயரிட்டிருக்கின்றார். இவ்வமைப்பு இளங்கோவின் தனதா? கடனா? காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணர (1005) என்று தொல்காப்பியர் கல்லெடுப்பின் நிலைகளைக் கூறிச்சென்றனர். அச்சுவடு பற்றி அவர் கூறிய ஒவ்வொரு சொல்லையும் ஒரு காதையாகவே விரித்துரைத்தனர் இளங்கோ. அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை எனக் கண்ணகி தன் இல்லறங்களைச் செய்ய மாட்டாமைக்கு வருந்தினாளாகச் சிலப்பதிகாரம் சுட்டுகின்றதே; இவை இல்லக்கிழத்தியின் கடமைகள் என்று இளங்கோவுக்குக் கல்வியூட்டிய நூல் தொல்காப்பியமே. கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள் (1097) என்பது கற்பியல். தொல்காப்பிய இலக்கணத்திற்கு ஏற்ற ஓர் இலக்கியமாகக் கண்ணகியைப் படைத்தார் இளங்கோ என்று துணியலாம். ‘அவன் வரம்பிறத்தல் அறந்தனக் கின்மையின்’(1065) என்னும் முதனூற் பொருளும் ‘யாவதும் மாற்றா உள்ள வாழ்ககையேன் ஆதலின் ஏற்றெழுந்தனன்’ என்ற கண்ணகி உறுதியும் இசைதல் நோக்கத்தகும். V நரசிங்கம் தூணிலிருந்து வெளிப்படுகின்றது; அதனைத் தெய்வம் என்று தொழும்படி பிரகலாதன் தன் தந்தை இரணியனுக்கு அறிவுறுத்துகின்றான். இரணியனோ தொழுபவன்? ஊடல் நிலையிலும் மனைவியை வணங்கி இன்பம் வேண்டியதில்லை; அன்பு நிலையிலும் வணங்கி இன்பம் வேண்டியதில்லை; அன்பு நிலையிலும் தொழாத நானோ பகைவனை அஞ்சித் தொழுபவன் என்று தன் அக வாழ்க்கையும் புறவாழ்க்கையும் யாரையும் வணங்கியறியாத் தலையுடையது என்று இறுமாந்து குமுறுகின்றான் இரணியன். கேளிது நீயும் காணக் கிளர்ந்தகோ ளரியின் கேழல் தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்துப் பின்னென் வாளினைத் தொழுவ தல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் இரணியனுக்கு ஏற்பப் பேச்சினை அமைத்த கம்பரின் புலமையை வியக்கின்றோம், கருத்தின் ஆழத்தையும் அருமையையும் நயத்தையும் சுவைக்கின்றோம். ஆயினும் அவர் அங்ஙனம் பாடுதற்குக் குறிப்பு வழங்கிய முன்னோன் யாவன்? ஆடவன் தலைநிமிர்ந்து செம்மாந்து நடக்கின்றான். பெண் தலை தாழ்த்தி நிலம் நோக்கி நாணி நடக்கின்றான் . புறவுலகில் ஆடவன் தலைமையும் பெண்ணின் பணிவும் காணப்படுகின்றன. ஓரிடத்து இம்முறை மாறுகின்றது; மாறவும் வேண்டும் என்று தொல்காப்பியர் குடும்பவியல் அறிவுறுத்துவர். தலைவி இன்பம் தர மறுப்பவள் போல, எளிதில் இணங்காது புணர்ச்சிக் காலத்துத் தலைமை தோன்ற நடப்பாள்; நடிப்பாள். அவ்விடத்து அவள் தலைமையைத் தலைவன் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவள் நடிப்பைப் போக்கும் பொருட்டும் இன்பம் மீதூரும் பொருட்டும் தன் தலைமையை விட்டுக்கொடுத்து உடல் பணியவேண்டும்; சொற்பணிவு வேண்டும்; நெஞ்சம் குழைவு வேண்டும். இஃது இன்பவியல் என்று கற்பிப்பர் தொல்காப்பியர். மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய (1172) இரணியன் புறத்துறையிலே யன்றி அகத்துறையிலும் கொடுமையுடையவன், மூர்க்கன் என்பதை இத் தொல்காப்பியக் கருத்தை அறிந்தபின் துணிகின்றோம். ‘வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ’ என்ற கம்பர் பாவில் தொல்காப்பியம் படிந்திருப்பதைக் காண்கின்றோம். இராமனைக் காமுற்ற சூர்ப்பனகை பெண்மை மிக்கவள் போல நடித்து, தாமுறு காமத் தன்மை தாங்களே யுரைப்ப தென்பது ஆமென லாவ தன்றால் அருங்குல மகளிர்க் கம்மா என்று நாணி மொழிகின்றாள். இந்நாணம் திருநுதல் நல்லார்க்கு உரியது என்பதனை, தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை (1063) என்று மொழியும் முதல் நூல் தொல்காப்பியமே. VI தொல்காப்பியத்தின் ஆட்சியைப் பாரதி பாராட்டிய முந்நூல்களிலும் பார்த்தோம். பாரதி நூலிலும் பார்க்கலாம். ‘அல்லிக் குளத்தருகே’ என்ற காதற்பாட்டில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற இலக்கிய அமைப்பு மிளிர்கின்றது. அவ்வமைப்பினாலேதான் அப்பாடல் சுவை குன்றாது நிற்கின்றது. பாடல் வெறும் சொல்லெடுக்காக இருத்தல் கூடாது; இயற்கை கலந்த சூழ்நிலையைப் பின்னணியாக, ஓவியமாகக் கொண்டு திகழ்தல் வேண்டும் எனப் பாட்டின் தளத்தைத் தொல்காப்பியர் சுட்டுகின்றார். தொல்காப்பியப் பாயிரம் தமிழகத்துக்கு மேற்றிசை கீழ்த்திசை எல்லைகள் கூறவில்லை. ‘வடவேங்கடம் தென்குமரி’ என இருதிசைகளின் எல்லைகளையே குறிக்கின்றது; ‘நல்லுலகம்’ என்று நாட்டினைப் போற்றுகின்றது. இப் பாயிர மரபையே பாரதியார் பாட்டிலும் கண்டு உவக்கின்றோம். நித்தந் தவஞ்செய் குமரி யெல்லை - வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு ‘இவற்றிடையே’ என்பது பாயிரத்தில் வரும் ‘ஆயிடை’யின் தற்கால நடையன்றோ! ‘வன்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு’ (1336) எனத் தமிழ் நிலத்தைக் குளிர்ந்த சோலையாக மொழிகின்றார் தொல்காப்பியர். இதன் விளக்கமே, ‘யாறு பல ஓடத் திருமேனி செழித்த தமிழ்நாடு’ என்றால், அத்துணை மிகையாகாது. தமிழ் இலக்கியங்கள் தொல்காப்பியத்திற்குப் பட்ட பெருங்கடன் ஒருபுறம் இருப்ப, இன்றும் தமிழ் வழக்குப் பெரும்பகுதி தொல்காப்பியச் சுவட்டைப் பின்பற்றியே இயங்குகின்றது. அத்தடம் பிறழ்ந்தோமேல், நம் நாள் வழக்கும் மொழி வழக்கும் குழம்பிக் குலைந்து சீர்கெட்டு விளக்கமின்றி யொழியும். மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட ஒரு நூல் இன்றும் நம் கையில் உள்ளது. அந்நூலே இன்றுள்ள நூல்களுள் மிகப் பழமையானது. அதுவே பிற நூல்களுக்கெல்லாம் ஊற்றுக் கொடுத்தது. நம் மொழிவளர்ச்சிக்கும் நாகரிகத்துக்கும் பற்றுக்கோடாவது. சமுதாயச் சிக்கலற்றது. பழமையாயினும் ஐம்பூதங்கள் போல் புதிய ஆற்றலுடையது என்று உணருங்கள்! பெருமை கொள்ளுங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! தொல்காப்பியக் கழகங்கள் அமையுங்கள்! 4. காவியப் பேச்சு I புலவன் தான் செய்யும் காப்பியத்தை இருபெருங்கூறுகளாகப் பிரித்துக் கொள்கின்றான். ஒன்று இயற்கை வருணனை, மற்றொன்று பேச்சுப் பகுதி. இயற்கைப் பகுதிகளை உலகத்திடைக் காணப்படும் மரஞ்செடி கொடி பறவை விலங்கு முதலான பொருள்களை உற்றுநோக்கிக் கையாளுகின்றான். புலவன் வருணனை பொருத்தமாக அமைகின்றது. பேச்சுப் பகுதிகளை எவ்வாறு காவியத்து அமைக்கின்றான்? காவியத்து வரும் ஆட்கள் பேசிய பேச்சின் ஓர் எழுத்தையாவது புலவன் செவி நேரிற்கேட்டிருக்குமா? நிலா முற்றத்துக் காதலரிடை நிகழும் ஊடற்பேச்சும், போர்க்களத்திடைப் பகைவர்முன் எழும் வஞ்சினப் பேச்சும், ஒருவன் தனக்குள் சொல்லிக் கொள்ளும் அகப்பேச்சும், அரசவைப் பேச்சும், வழிநடைப் பேச்சும் ஆகிய பகுதிகளை யெல்லாம் அண்மையில் மறைந்து நின்று புலவன் ஒலிப்பதிவு செய்து கொண்டானா? காவியப் பேச்சுக்கள் எப்பொழு தெப்பொழுதோ எங்கெங்கோ யார் யார் முன்னோ நிகழக் காண்கின்றோம். இவற்றையெல்லாம் அணுவளவும் நேரிற் கேட்டறியாப் புலவன் அவற்றை எவ்வாறு அமைக்க வல்லவ னாகின்றான்? அவன் மேற்கொள்ளும் இயல்புகள் பல. அவற்றுள் ஓரியல்பை மட்டும் இக் கட்டுரையில் விரித்தெழுதுவன். அண்ணாமலை நகரில் அறிவியல் வகுப்பில் ஒரு மாணவர் படித்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தமிழ் ஒரு பாடப்பகுதியாகும். சிலப்பதிகாரத்துக் கொலைக்களக்காதை பாடமாக இருந்தது. அதனைக் கற்றுச் சுவை கண்ட அம்மாணவருக்குச் சிலப்பதிகார முழுவதையும் பார்க்க வேண்டுமென்று ஆர்வம் எழுந்தது இயல்புதானே. நெஞ்சை அள்ளுஞ் சிலம்பினை விரித்தவுடனே அவர் கண்ணுக்கு முன்வந்து நின்ற பாட்டு இது:- தெய்வந் தொழா அள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து இந்த வெண்பா அவர் எண்ணத்திற் பதிந்தது. அதன் பின்னடிகள் இரண்டனையும் நூலறைக் கதவில் சுண்ணாம்புக் கட்டியால் எழுதி வைத்துத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தார். இது அவர் வாழ்வில் நடக்கப் போவதைக் காட்டும் அறிகுறி என்று அப்போது யாருடைய அறிவிலும் படவில்லை. ஆனால் நடந்தது என்னையோ? அன்றுபட்ட விளைவை இன்றும் என்கோல் நடுங்கியே எழுதுகின்றது. அவர் மனைவி இறந்ததாக ஒரு தந்தி அன்றிரவே அவருக்கு வரக்கண்டோம். மனைவியின் எதிர்பாராச் சாவையும் அதற்கு முன் அவர் சுவைகண்ட வெண்பாவையும் ஒருங்கு அறிந்த நாங்கள் வியந்து மருண்டோம். ஒருவர் சொல்லும் நினைவும் கல்வியும் எல்லாம் அவர் தம் பின் வர்ழ்க்கையை முன் புலப்படுத்தும் அறிகுறி என்று உணர்ந்தோம். எரிமலை திடீரெனக் கிளம்பி விடுவதில்லை; விதையின் முளை மண்மேல் சட்டென வந்துவிடுவதில்லை; நீர்க்கோள் உடனே சினைப்பதில்லை. அழிவு ஆக்கச் செயல்களுக்கு உரிய காரணப்படிகள் முன்னே மறைவாகப் பெருகுகின்றன. அவற்றை நுணுகிக் காணும் அறிவு வன்மையும், கண்டாலும் தடுத்துக் கொள்ளவல்ல மனத்திண்மையும் பலர்க்கு இருப்பதில்லை. II ஒருவர் இறந்தபின் மக்கள் உரையாடலை உற்றுப்பாருங்கள். அவர் இறப்பிற்கும் சில நாளாகப் பேசிவந்த அவர் பேச்சிற்கும் ஒரு தொடர்பு காண்கின்றார்கள். முன் சொல்லுஞ் சொல்லுக்கும், பின்வருஞ் செயலுக்கும் தொடர்பிருப்பதாகக் கருதியே, போகிறேன் என்று விடைபெறாது, போய் வருகிறேன் அல்லது வருகிறேன் என்று சொல்லிப் போகும் உலகியல்பைப் பார்க்கின்றோம். கேதங்கேட்டுத் திரும்பும்போது, வருகிறேன் என்று சொல்லிக் கொண்டால், மறுபடியும் உங்கள் வீட்டிற்குக் கேதங்கேட்க வருகிறேன் என்று பொருள்படும் என அஞ்சி, யாதொன்றும் சொல்லாது எழுந்து வந்து விடுவது நாட்டுப்புற மரபாக இன்னும் நிலவுகிறது. இவ் வழக்கினையெல்லாம் கண்ட புலவன் அவற்றுள் ஊருடுவி நிற்கும் இயல்பினை - பேச்சு வருவது காட்டும் முன்னோடி என்பதனை - வடித்தெடுத்தான். அதன்படி காப்பியத்துச் சிலர் தம் உரையாடல்கள் பின்வருங் கதை நிகழ்ச்சியை முன்னர்ப் புலப்படுத்து முறையிற் சொற்களைக் கையாண்டான். இங்கு நாம் ஒன்று தெளிந்து கொள்ளவேண்டும். இராவணன் தோல்வி காப்பியத்து இறுதியில் வரும் நிகழ்ச்சி. தாடகையழிவு காப்பியத் தொடக்கத்து வருவது. இரண்டையும் தொடர்பு படுத்தித் தாடகை நிலத்து வீழ்ந்தது இராவணன் வெற்றிக்கொடி வீழ்வதை ஒக்கும் என்று பாலகாண்டத்து, தடியுடை யெயிற்றுப் பேழ்வாய்த் தாடகைதலைகள் தோறும் முடியுடை யரக்கற் கந்நாள் முந்தியுற் பாதமாகப் படியிடை யற்று வீழ்ந்த வெற்றியம் பதாகை யொத்தாள் என்று கம்பர் கூறுகிறார். இது புலவன் தன் கூற்றாகச் சொல்லுங் கருத்து. கதை முழுதும் அறிந்து தானே அவன் காவியம் புனையத் தொடங்குகின்றான் ஆதலின் நயனும் பயனுங் கருதிக் கவிஞன் கதையின் பின்னிகழ்ச்சிகளை வெளிப்படையாக முன் சொல்வது ஒரு வகையால் ஒப்பத்தகும். ஆனால் காப்பிய மக்கள் - கதை நிகழ்ச்சியைச் செய்தவர்கள் - பின்கதைப் பகுதிகளை முன் பேசுவதாக உரையாடல் அமைப்பது இழுக்காகும்; கதை நிரல் படவும் சுவை படவும் இராது. இந்நிலையில் பேச்சு பின்வருவது காட்டும் முன்னோடி என்ற உலகியலைப் புலவன் காவியத்து எவ்வாறு கையாளுகின்றான்? மொழியின் வளம் அவனுக்குத் துணை செய்கின்றது. இருபொருள் தரவல்ல சொற்களையும் தொடர்களையும் அவ்விடத்து மேற்கொள்கின்றான். அவை கதையின் அப்பொழுதைப் பேச்சிற்கேற்ப ஒரு வெளிப்படைக் கருத்தும், பின் நிகழ்ச்சிகளுக்கேற்ப ஓர் உட்கருத்தும் தந்து - நிற்கின்றன. வெளிப்படைக் கருத்து எளிதில் தோன்றி நிற்கும். நவில் தொறும் நூல் நயம் என்றபடி உட்கருத்து நூல் முழுதும் பன்முறை படிக்கப் படிக்கப் புலனாகும். III பொருளிழந்த கோவலனும் கண்ணகியும் மதுரையின் புறத்து மாதரி மனையில் தங்கினர். கண்ணகியின் கற்பினைப் பலபடப் பாராட்டிய கோவலன், சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய் மாறி வருவன் மயங்கா தொழிக என்று சொல்லிப் பிரிகிறான். ‘நின் சிலம்பு இரண்டனுள் ஒன்றைக் கொண்டுபோய் (மாறி) விற்று வருவேன்; தனிமை நோக்கி வருந்தாதே’ என்பது பொருள். இது வெளிப்படை. கோவலன் கருதிய பொருளும் இதுவே. ஆனால் நடந்தது என்ன? கோவலன் கொல்லன் சூழ்ச்சியால் கொலையுண்டான். கற்புடைக் கண்ணகி வெட்டுண்ட கொழுநனைக் கண்டு மார்பைத் தழுவிக் கொண்டாள். அவனும் அவள் முகத்துக் கண்ணீரைத் துடைத்து இரு என்று சொல்லிப் போனான். இவை பின் நடந்தவை. உடலில் யாதொரு ஊனமுமின்றி மனிதனாய்ச் சிலம்பு விற்கப்போன கோவலன் வெட்டுண்ட உடம்போடு பின் தேவனாய் மாறிவந்து கண்ணகியைக் கண்டான் ‘யான் போய் மாறி வருவன்’ என்ற கோவலன் விடையை உலகத்தார் நேரிற் கேட்கும் பேறு பெற்றிருந்தால், இப்போது என்ன பேசிக் கொள்வார்கள்? “போகும்போது ‘போய் வருவேன்’என்று சொல்லிப் போனானில்லை. அவன் விதி ‘மாறி வருவேன்’என்று அப்படிச் சொல்லச் செய்தது” என்று பேசிக் கொள்ளமாட்டார்களா? இவ்வாறு இளங்கோவடிகள் ‘மாறி’ என்ற சொல்லில் வைத்து, காவியப் பேச்சில் உலகியலை மறைத்துக் காட்டுவர். பெருங்காப்பியஞ் செய்த கம்பர் பெருமானும், “அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கில்லை யுனக்கேஐய” “மாகத்தோள் வீரபெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி” “பிள்ளைபோற் பேச்சினாளைப் பெற்றபின் பிழைக்க லாற்றாய்” என்ற சூர்ப்பனகை உரையாடலில் இவ்வியல்பினைத் திறம்பட அமைத்திருக்கின்றார். இராவணன் முடிவில் அழிவான் என்பதை இவள் சொற்கள் முன் தந்து நிற்கின்றன. VI மணிமேகலையும் சுதமதியும் மலர் கொய்ய வனஞ்செல்கின்றார்கள். சோலையிடை மந்தி ஆடுதலையும் குயில் கூவுதலையும் சுதமதி காட்டி வருகிறாள். அப்போது பொய்கையில் செந்தாமரை மலரிடைக் கயல்கள் பிறழ்கின்றன. அவற்றைச் சிச்சிலிப்பறவை இரை கருதிப் பாய்ந்து தாக்குகிறது. தாக்கலினின்றும் தப்பிக் கயல்கள் நீருட்புகுந்து ஒளிந்து கொள்கின்றன. சிச்சிலிப் பறவை எண்ணிய இரைபெறாது வருந்தி வந்த வழியே போய்விடுகின்றது. அஞ்சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு எறிந்தது பெறா அது இரையிழந்து வருந்தி மறிந்து நீங்கும் மணிச்சிரல் காண் என்று தோழி மாதவி மகளுக்குச் சிரலின் எண்ணம் கை கூடாமையைக் காட்டுகின்றாள். இதனை மேலோடாகப் படிப்பார் ஏதோ ஒரு நல்ல வருணனை என்ற அளவிலே தான் சுவைக்க முடியும். அடுத்து வரப்போகுங் கதைப் பகுதியை அறிந்தவர்க்கு இவ்வருணனையில் ஒரு கதை நிகழ்ச்சி உள்ளீடாக இருப்பது நன்கு தோன்றும். அரசன் மகன் உதயகுமரன் மணிமேகலைபால் நீங்காத காமவேட்கை கொண்டவன். அவள் தன் தோழியோடு இச்சோலைக்குச் சென்றாள் என்று கேள்விப்பட்ட அவன் பொழிலிடை மணிமேகலையைக் கைப்பற்றும் நோக்கத்தோடு தேரேறி வருகின்றான். அவன் தேரொலி கேட்ட மணிமேகலை, கயல் நீர்க்குள் ஒளிவது போல, பளிக்கறைக்குள் மறைந்து கொள்கிறாள். வந்த உதயகுமரன் நெடும்பொழுது முயன்றும் மணிமேகலையைத் தன் காமப்பசி தீர்க்கும் இரையாக அடைந்தானில்லை. எண்ணியது பெறாது வருந்தித் திரும்பினான் என்பது பின்வருங் கதைப் பகுதி பின் நடக்கும் இந்நிகழ்ச்சி முன்பே சிச்சிலிப்பறவை வருணனையில் உள்ளீடாக அமைந்து கிடக்கிறது என்று இப்போது தெளியலாம். இவ்வாறு உலகப்பேச்சு காப்பியப் பேச்சிற்கு அடிப்படை என்றும், தமிழ்க் காப்பியம் வழக்கொடு ஒட்டியது என்றும் உணர்ந்து கொள்ளவேண்டும். 5. சாத்தனார் I நம் பழந்தமிழ் மக்கள் தொழிற்கல்வியும் புலமைக் கல்வியும் ஒருசேரப் பெற்றிருந்தார்கள். பொருளீட்டி வாழ்வை மதிப்போடு நடத்தத் தொழிற்கல்வி அவர்களுக்குத் துணை செய்தது. அறிவு ஈட்டவும், புகழ் ஈட்டவும், கவலையை மறக்கவும் புலமைக்கல்வி உறுதுணையாக இருந்தது. பல்வேறு தொழில் செய்தவர்கள் சங்கப் பாடல்கள் இயற்றித் தந்துள்ளார்கள். ஆதலின் கூலவாணிகத் தொழில் நடத்திய சாத்தனார் தம் தொழிலுக்கிடையே ஒரு காவியஞ் செய்தருளியது அவர் காலத்துக் கல்வியின் அமைப்பையே நமக்கு அறிவிக்கின்றது. பண்டைத் தமிழ்ப் புலவர்களைப் பற்றி இன்று வழங்கும் வரலாறுகளில் உண்மை மிகுதியில்லை; மிகுதியாக இருப்பது பொய் கலந்த புனைவே. இக் கட்டுக்கதைகள் புலவர்களின் பெருமையைப் பரப்பும் நன்னோக்கத்தோடு தான் எழுந்தன; என்றாலும் என் செய்வது. ஆராய்ச்சி வேடுவர்களின் அறிவாகிய அம்புபட்ட மாத்திரத்தில் சான்றாகிய வன்மையின்றிச் செத்தொழிகின்றன. திருக்குறள் குற்றமில்லாத தமிழ் மறை என்று பெருமை பாராட்ட நினைத்த ஒருவர் ஒரு கதை படைத்தார். பிறர் பாடல்களிற் பிழைகண்ட போதெல்லாம், சாத்தனார் என்ற ஒருவர், ஐயோ தமிழ்த் தாயைக் கொலை செய்கின்றார்களே என்று மிக நொந்து, என் செய்வாராம், கையில் உள்ள எழுத்தாணியால் தம் தலையிற் குத்திக்கொள்வாராம்; அதனால் அச் சாத்தனார் தலை சீழ்த் தலையாக இருந்ததாம்; அந்த நோய்க்கு மாசற்ற திருக்குறளைக் கேட்டது நன் மருந்தாயிற்றாம்! இக்கதை பிறத்ததற்கு மூலம் சீத்தலை என்ற ஒரு சொல்லே யாகும். சீத்தலை என்பது ஓர் ஊர் என்று அறியாது, சீழ்கொண்ட தலை என்று பொருள் கொண்ட மயக்கமே இன்னதொரு வரலாற்றை உண்டாக்கிற்று. அறியாமை காரணம் ஆகாதன்றோ! கபிலர், பரணர், திருவள்ளுவர், இளங்கோ, சாத்தனார் போன்ற பெரும் புலவர்களின் வரலாற்றை நாம் அறியலாம். வாழ்ந்தவர் காலத்தே வரலாறு எழுதிவைக்கும் நோக்கம் நந்தமிழகத்து இருந்ததில்லை. புலவர்கள் வரலாற்றை அறிய அவர்கள் செய்துவந்த நூலல்லது, வேறு உண்மைத் துணை இன்று நமக்கில்லை. சாத்தனார் பாடியது மணிமேகலை என்ற ஒரு நூல்தான். இவர் சங்கப்புலவர்க்கும் திருவள்ளுவர்க்கும் பின்பு தோன்றியவர். இவருடைய ஊர் சீத்தலையன்று; மதுரை என்றும், தானியங்கள் விற்கும் வணிகர் என்றும் சிலப்பதிகாரப் பதிகத்து வரும் ‘மதுரைக் கூலவாணிகன் சாத்தன்’ என்ற தொடரால் அறிகிறோம். இவர் பல்வேறு சமயங்களின் கொள்கைகளை நுணுகிக் கற்ற அறிஞர். சங்கப் புலவர்களைப் போலச் சமயப் பொறுமையுடையவர் இல்லை. பிறமதங்களை இழித்து நகையாடும் சிறுவெறுப்பு உடையவர். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் செய்யக் காரணமானவர் இச்சாத்தனாரே என்று சொல்ப. சாத்தனாரைக் குறித்துத் தெளிவுபடச் சொல்லத்தக்க குறிப்புக்கள் இவைகளே யென்று கருதுகின்றேன். II சாத்தனார் இயற்றிய மணிமேகலையை ஒருவர் படிக்கக் கேட்டாலே பெரும்பாகம், தமிழ்பேசத் தெரிந்த யார்க்கும் விளங்கும். திரும்பத் திரும்பச் சொல்லுதலும், உடனுக்குடன் விளங்கவேண்டுமென்று செறிவில்லாமல் பல சொல்லாற் சொல்லுதலும், தொடர்பின்றி நினைவு வரவர ‘இன்னுங்கேள்’ என்று கூட்டிச் சொல்லுதலும், பேச்சுக்கிடையிடையே கேட்போரை முன்னிலைப் படுத்திச் சொல்லுதலும், நாள் வாழ்க்கையில் ஒருவரோடு ஒருவர் உரையாடும் போது காணப்படும் கூறுகள் அல்லவா? சாத்தனார் வாழ்ந்து பல நூற்றாண்டு களாயினும், தன் பெருங்காப்பியத்தைப் பேச்சு நடைபோல் ஆக்கியிருத்தலின், பேசத் தெரிந்த கல்லாத் தமிழர்க்கும் மணிமேகலை விளங்குவதில் வியப்பில்லை. “நான் அவன் வீட்டிற்குப் போனேன்; போனதும் வா, இரு என்றான். இருந்ததும் வந்தது எதற்கு என்று கேட்டான். கேட்டதற்கு முதலிற் பேசாதிருந்தேன்; பேசாதிருந்ததைப் பார்த்து, ஊமையோ என்று கேலி செய்தான். கேலி செய்த பிற்பாடுதான் காரியத்தை மெல்லக் கக்கினேன். இவ்வாறு மக்கள் சொற்கோவை பட நடைமுறையிற் பேசிவருப. இன்னுயிர் ஈவர் ஈயா ராயின் நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர் நனியெரி புகாஅ ராயின் அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர் இது மணிமேகலைக் காப்பியத்து மாதவி சொல்லியசொல். ஈவர் ஈயாராயின்; புகுவர்; புகா அராயின் என்பது பேச்சு. நடைக்கு ஓர் எடுத்துக்காட்டு. எழுத்தாளர்கள் இதனை இவ்வாறு வரிசைப்படி தொகுத்து எழுதவேண்டுமென்று எழுதுமுன் ஒரு வகை செய்துகொள்வார்கள். அறிஞர்கள் தாம் கூடிப் பேசு முன்னாக ஆராயவேண்டிய கருத்துக்களைச் செவ்வையாகக் குறித்துக் கொள்வர். மக்களோ எனின், ஆளைப் பார்த்ததும் பேசும் வழக்கிடை, நினைவு வரவரப் பேசுவதல்லது பேசுதற்குரிய பொருளைத் தொகுத்துக் கொள்வதில்லை. தொகுத்துக் கொள்ள எங்ஙனம் இயலும்? இக்காரணத்தால், ஏதோ ஒன்று சொல்லவேணுமென்று எண்ணியிருந்தேன், இப்போது நினைவு வரவில்லை என்றும்; இன்னும் ஒன்று சொல்ல மறந்து போனேன், இப்போது தான் சட்டென நினைவு வந்தது என்றும் மக்கள் பேசிக்கொள்ளக் காண்கின்றோம். ஆதலால் ஞாபகம் வரவரப் பேச்சு நீளும்; உலக வழக்கில் மறதி இருப்பது இயற்கை. மணிமேகலா தெய்வம் மணிமேகலையோடு பேசிவிட்டுச் சிறிது தொலை சென்றது. சென்ற தெய்வம், மறந்ததும் உண்டென மறித்தாங் கிழிந்து சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய் மக்கள் யாக்கை உணவின் பிண்டம் இப்பெரு மந்திரம் இரும்பசி யறுக்கும் என்று சொல்வது வழக்குநடை யன்றோ! மணிமேகலையும் தீவதிலகையும் பேசிக்கொண்டிருக்கும்போது ‘மறந்தேன் அதன் திறம் நீ எடுத்துரைத்தனை’ என்று தீவதிலகை சொல்வதும் நாம் இன்னும் பேசிவரும் நடை காணீர். இன்ன பல வழக்கு நடையுடைய காரணத்தால், மணிமேகலை தமிழிற் சிறு பயிற்சியுடையாரும் கற்கத்தக்க காப்பியமாக அமைந்திருக்கிறது. இங்ஙனம் வழக்கொடு பொருந்த அமைத்த பெருமை சாத்தனாருக்கு உண்டு. ஒரு நூல் வழக்கு நடையால் அமைவது கற்பாருக்கு எளிதில் விளங்கும். வழக்கிற்கிடையே இலக்கிய நடை மிளிர்வது பன்முறை படிக்கும்படியான சுவையைக் கற்பவர்க்கு ஊட்டும். முழுதும் வழக்கு நடையுடைய நூல் இலக்கியமாகாது. அதுபோல், முழுதுங் கற்பனை நடை நிரம்பிய நூல் அறிவுக்கு ஒட்டாது. இருவகை நடையும் விரவி வந்த இலக்கியங்களே விளக்கமும் சுவையும் பயக்கும்; நெடிது வாழும். தமிழ் நூல்களிற் பெரும்பாலான, நாம் செய்த தவத்தால் இவ்வமைப்பு உடையனவே. வழக்கு நடையைத் தக்க அளவு மேற்கொண்ட சாத்தனார் தமிழ் மரபுப்படி கற்பனையூற்றாகவும் மணிமேகலைக் காப்பியத்தைப் படைத்திருக்கின்றார்; ஆதலின் அன்று எழுந்த இவர் நூல் இன்றுபோல் என்றும் நிலவும். III இந்நூலுள் மணிமேகலை வரலாறேயன்றிக் கிளைக் கதைகளும் மிகவுள. இம்மை மறுமையுண்டு; துறக்கம் நரகம் உண்டு; சமயங்களுள் புத்தமதஞ் சிறந்தது என்ற கொள்கைகளை அக்கதைகள் மெய்ப்பிக்கின்றன. இன்று நம் அறிவு ஒத்துக்கொள்ள மறுக்குஞ் செய்திகள் இந்நூலகத்துப் பலவுள. பசியின்றி வாழவும், வானத்துப் பறக்கவும், வேற்று வடிவம் கொள்ளவும் மந்திரங்கள் இருந்தன என்றும், எடுக்க எடுக்கச் சோறு அளிக்கும் அமுதசுரபி இருந்தது என்றும், தொழுது வணங்குவார்க்குப் பழம் பிறப்பை அறிவிக்கம் புத்த பீடிகை ஒன்று உண்டு என்றும், நடந்ததையும் நடப்பதையும் உணர்த்தும் கந்திற்பாவை இருந்தது என்றும் பலவிடத்து இந்நூல் பகர்கின்றது. இவை மணிமேகலையின் உயர்விற்கும் புத்த சமயச் சிறப்பிற்கும் துணையாகிக் கற்பார்க்கு மருட்கை விளைவிக்கின்றன; என்றாலும், மணிமேகலை நூலை எக்காலத்திற்கும் ஏற்ற அறக் காப்பியமாகச் செய்த சிறப்புடையவர் சாத்தனார் என்று நாம் மனமாரப் புகழ்வோம். இந்நூல் ஒரு தனி மனிதனுக்கும் ஒரு தனி நாட்டிற்கும் உலக முழுவதற்கும் நலம் தரும் அறங்களை நெஞ்சிற் பதியும்படி திறம்படச் சொல்லுகின்றது. நூலின் தொடக்கத்து, பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என்று யானைமேல் முரசறைந்து வாழ்த்துவது எவ்வளவு உயர்ந்த குறிக்கோளை உலகம் கொள்ளக் காட்டுகின்றது பாருங்கள். இன்று நாட்டின் நலத்திற்கு நாம் பரப்புஞ் சீர்திருத்தங்கள் பல அன்று நாட்டில் நடந்தனவாக இந்நூலால் அறிகின்றோம். மக்களுக்குக் கீழ்மையைத் தரும் என்று மதுவொழித்தலை நாம் வேண்டினோம். அன்று சாதுவன் செய்தது என்ன? மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் என்று விளக்கித் தண்ணீராகக் கள்ளைக் குடித்த நாகர்களை மது விலக்கும்படி செய்தான் சாதுவன். மணிமேகலை காட்டும் ஒரு சீர்திருத்தக் காட்சியிது. பிறப்பில் வேற்றுமையில்லை என்று இன்று நாம் பேசுவது சாத்தனார் காலத்துப் பேசிய பழம்பேச்சே. அந்தணர்கள் ஆபுத்திரனைப் பசுவிற்குப் பிறந்தான் என்றும், தீயொழுக்கம் உடைய ஒருத்திக்குப் பிறந்தான் என்றும் இழித்துரைத்தார்கள். ஆவோடு வந்த அழிகுலம் உண்டோ சாலிக்கு உண்டோ தவறு என்று சான்று காட்டிப் பிறப்பில் மக்கட்கேயன்றி எவ்வுயிர்க்கும் உயர்வு தாழ்வில்லை என்று ஆபுரத்திரன் நிலை நிறுத்தினான். இது மற்றொரு சீர்திருத்தம். அரசன் உண்டாக்கிய சிறைக்கோட்டத்தை அழித்து முனிவர்கள் வாழும் அறக்கோட்டமாக மணிமேகலை மாற்றியது இன்று நாம் கூட எண்ணாத சீர்திருத்தமன்றோ! IV மணிமேகலை நூலின் பெருமை இன்று குடத்து விளக்குப்போல் ஒளி குன்றி யிருக்கின்றது. இது உலகிற்கே ஒரு வழிகாட்டும் நூல். உலக வூழியர்களுக்கு இந்நூல் ஓர் ஆசிரியன் போன்றது. மதுவை விலக்க வேண்டும்; பிறப்பு வேற்றுமையை ஒழிக்கவேண்டும்; எவ்வுயிரும் பசியின்றி வாழ வேண்டும். இந்நூல் காட்டும் நல்வழிகள் இவை மட்டோ? உயிரினுஞ் சிறந்த ஒழுக்கம் நிலைபெறப் பரத்தை யொழிப்பும் வேண்டும் என்று ஒரு புத்தறங் காட்டுகின்றது. மாதவி தாயின் பெயர் சித்திராபதி; இவள் பரத்தை குலத்திற் பிறந்தவள்; குலத்திற்கொப்ப நடந்தவள்; குலவொழுக்கம் தவறுதல் கூடாது என்ற உறுதியும் உடையவள். மாதவி பரத்தையாகிய சித்திராபதியிடத்துப் பிறந்தும், கோவலன் ஒருவனையே காதலனாகக் கொண்டு ஒழுகிய கற்புடையவள். மணிமேகலையோ எனின், கோவலனுக்கு மாதவியிடத்துப் பிறந்து, இளமை தொட்டு முற்றத் துறந்தவள். சித்திரா பதியின் மகள் மாதவி கற்புடைய நங்கை ஆனதும், சித்திராபதியின் பேர்த்தி மணிமேகலை தவஞ்செய் குமரி ஆனதும் ஆகிய வளர்ச்சி, தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது (68) என்ற குறளை உண்மைப்படுத்துகின்றது. பரத்தை நிலையைத் திருத்தாச் செய்கை என்றும் தீத்தொழில் என்றும் மாதவியே சொல்லக் கேட்கின்றோம். பரத்தையர்களை முன்னோர்களாகவுடைய மணிமேகலை அறப்புரட்சி செய்து துறவுபூண்டாள். இது திருந்திய நெறி என்று உலகறிய வேண்டித் தம் காப்பியத்திற்கு ‘மணிமேகலை துறவு’ என்று சாத்தனார் பெயர் சூட்டக் காண்கின்றோம். இவையெல்லாம் பரத்தைமை ஒழிக்கத்தக்க சீர்திருத்தம் என்று காட்டவில்லையா? இங்ஙனம் வாழவேண்டியவற்றையும் ஒழிய வேண்டியவற்றையும் உலகம் உய்ய எடுத்துக்காட்டும் புலவர் பெருமான் சாத்தனாரை நாம் தமிழும் நாடும் பரவப் புகழுவோம். 6. தியாகம் I உலகப் புலவர் திருவள்ளுவர் உண்மைத் தியாகம் யாது? போலித் தியாகம் யாது? என்னும் வினாவைத் தாமே எழுப்பிக் கொண்டு, வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து (221) என்று விடை சொல்கின்றார். பசிப்பிணியால் துன்புறும் நோயாளிக்குச் சோற்று மருந்து கொடுப்பதன்றோ நல்ல மருத்துவன் இயல்பு. ஆதலின், வறுமை வாய்ப்பட்ட ஒருவனுக்கு எதனை ஈந்தால் அவன் வறுமை தொலையுமோ, அதனைத் தன்பால் விட்டுக் கொடுப்பதுவே தியாகம் என்பர் திருவள்ளுவர். வாடையால் நலிவுறும் ஏழைக்கு அவ்வாடை தடுக்கும் ஆடை கொடாது ஏதோ ஒரு பொருள் எடுத்தெறிதலும், வயிரம் இழைத்த பொற்பேழை வெள்ளிப் பேழைகளை முன்பே செல்வ நலம் நிறைந்த மணமக்கட்குத் திருமணப் பரிசாக உய்த்துக் கொடுத்தலும் ஆகிய இன்ன பல நடப்புக்கள் உலகத்து நிகழ்கின்றனவே; இந்நிகழ்ச்சிகளில் தன் பொருளைப் பிறர்க்கு விட்டுக் கொடுப்பதைத் தானே காண்கின்றோம்; ஆதலால், இவையெல்லாம் தியாகம் ஆகாவோ? எனின், வேண்டிய தொன்றைக் கொடாது வேண்டாததைக் கொடுப்பதாகவும், ஒன்றும் வேண்டி நில்லாதார்க்குத் தன் பொருளைத் தானே சுமந்துபோய்க் கொடுப்பதாகவும் இருத்தலின், இவையெல்லாம் தியாகம் ஆகா. பின்னொருகால் கூடுதலாக வாங்கும் குறியொடு பிறர்பால் ஒருவன் தன் பொருளை முன்னே கொடுத்து வைக்கும். ‘பொலி கடன்கள்’ என்று நாலடியார் அறையும். இக் கருத்தினையே ‘ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்’ என மணிமேகலைக் காப்பியமும் ‘இம்மைச் செய்தது மறுமைக்காம் எனும் அறவிலை வணிகன்’எனப் புறநானூறும் வலியுறுத்துப. II யாரும் ஒப்புக் கொள்ளத்தக்க இலக்கணப்படி, தற்பலி செய்த இலக்கியப் பெருமக்கள் பலர், தமிழ்ச் சோலையில் சொல் மலரிலிருந்து பரவும் புகழ்மணத்தை மோந்து நீடுவாழ்வதை நாம் கல்விக்கண்ணால் காண்கின்றோம். அச்சான்றோர் பலருள் தமிழ் நாடறிந்த கோவலன் ஒருவன் உடல், பொருள், உயிர் மூன்றனுள் ஒன்றிரண்டன்றி அனைத்தையுமே தன் இளமைப் பருவத்து வழங்கும் வாய்ப்புப் பெற்றவன். மாதவி மகளுக்கு மணிமேகலைப் பெயரிட்ட நன்னாளில், தானம் ஏற்கத் தண்டூன்றி வந்த முதிய மறையவனை ஒரு மதயானை தெருவிடைத் தன் கையால் தூக்கிற்று; தூக்கவே பார்க்கப் பொறாத கோவலன் விரைந்தோடிச் சிக்குண்ட கிழவனை யானையினின்றும் விடுவித்து, அதன் கைவழியாகவே கொம்பைப் பற்றி முதுகில் ஏறிப் பிடரியில் அமர்ந்து, பாகர்க்கும் அடங்காத யானையை அடக்கினான். மறையவனுக்குச் செய்த இவ்வுதவி, மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை யிருந்து பெருஞ்சினம் பிறழாக் கடக்களி நடக்கிய கருணை மறவ என்று மற்றொரு மறையவன் மாடலனால் புகழப்படுகின்றது. யானையை அடக்கும் வீரனிடத்துக் கொல்லுந் தொழிலல்லது அருளுந் தொழில் இருப்பது அரிது. மாறாக, ஆண்மை கிடந்த கோவலன்பால் அருளும் கிடக்கக் கண்ட மாடலன் வீரத் தியாகி என்று பொருள்படக் கோவலனுக்குக் ‘கருணை மறவன்’ எனப் பட்டம் கொடுத்து மகிழ்கின்றான். பாம்பைக் கடித்து இரத்த வாய்பெற்ற கீரியைத் தன் பிள்ளையைக் கொன்றதெனப் பிழைபட எண்ணினாள், ஒரு பார்ப்பனி. எண்ணியதும் அக்கீரியைக் கொன்றுவிட்டாள். கொலை செய்தவள் கையால் உணவு கொள்ள விரும்பாப் பார்ப்பான் வடமொழியில் எழுதப்பட்ட ஓர் ஏட்டை அவளிடம் கொடுத்து வடநாடு சென்றுவிட்டான். அப்பார்ப்பனி தான் செய்த கொலைப் பாவத்தைக் கழிக்கும் பொருட்டு, விலைக்கு ஏடு வாங்குவோர் உண்டோ எனத் தன் எதிர்ப்பட்ட கோவலன்பால் முறையிட்டனள். அஞ்சல் உன்தன் அருந்துயர் களைகேன் நெஞ்சுறு துயரம் நீங்குக என்றான் கோவலன். இந்த ஈரடிகள் தியாகி என்பான் பேசும் சொன்னடையையும் சொற்களையும் நன்கு காட்டுவன. கவலையை விட்டொழி என்று சுருங்கச் சொல்லாது. அச்சம் கொள்ளற்க என்று பணிவாகவும், நீ படுந்துயர் மலைபோலப் பெரியதாய்ப் பிறர் போக்குதற்கு அரியதாயினும் யான் நீக்கவல்லேன் என்று துணிவாகவும், மனம் நோவாதே என்று ஆறுதலாகவும் நம்பிக்கை பிறக்குமாறு கூறினான். அதன்பின் பொருள் கொடுத்து ஏடு வாங்கியும், சென்ற கணவனை மீண்டு வரவழைத்தும் கெட்ட குடியை வாழ்த்தினான். நின் மனைவி கற்புடையவள் இல்லை என்று கணவனுக்குப் பொய் சாற்றிய வஞ்சகனைக் கொல்லக் கயிற்றாற் கட்டியது ஒரு பூதம். தன்னைப் பேணிய தன் ஒரு மகனும் பூதங் கைபட்டுச் சாவப்போவதைக் காணமாட்டாத தாய், என் மகன் உயிர்க்கு மாற்றுயிர் பூதத்திற்குக் கொடுப்பார் இலரோ? என்று கூக்குரலிட்டனள். தாய்ப்பூசல் கேட்ட கோவலன், கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி என்னுயிர் கொண்டீங்கு இவனுயிர்தா என்று கெஞ்சினான் பூதத்தின் முன் என அவன் உயிர்த்தியாகம் புகழப்படுகிறது. வறியவர் உடல் (முயற்சி) கேட்பின் உடல்கொடுத்தல், பொருள் இரப்பின் பொருள் வழங்கல், உயிர் வேண்டின் உயிர் துறத்தல் என்ற குறிக்கோளொடு நின்ற கோவலன் வாழ்வால் நாம் அறியக்கிடப்பது யாது? எதனால் தன் துன்பம் நீங்கும் என்று யார் எதனைக் கேட்கிறார்களோ, அதனை விட்டுக் கொடுத்து அவர் துன்பத்தைத் தொலைப்பதுதான் தியாகம் என்ற உண்மையாம். III கூடிவாழ் இயல்புடைய மக்களினத்திற்குத் தியாகவுணர்ச்சி வேண்டும் என்று ஏதுக்காட்ட வேண்டா. மக்கள் எவ்வளவு இடம் நெருக்கமாய்ப் பிறரொடு வாழ்கின்றார்கள், எவ்வளவு காலம் அணித்தாய்ப் பிறர்முகங் காண்கின்றார்கள், எவ்வளவு உணர்ச்சிச் செறிவாய் மனம் ஒன்றுபடுகின்றார்கள், அவ்வளவு தந்நலத் துறவினராய் ஆதல் வேண்டும். தியாகவுணர்ச்சி எங்கு எவ்வளவு குறைந்து காணப்படுகின்றது அங்கு அக்குறையின் அளவிற்கேற்பக் குழப்ப நிறைவு காணப்படுதல் ஒருதலை. தகப்பன் பிள்ளைக்குள் பற்றிவிடாப் பான்மை நிலைக்குமாயின், குடிப்புகழ் பாழாம். அண்ணன் தம்பியர்க்குள் உரிமைப்போர் மூளுமாயின், குடியின் வலி குறையுறும். கணவன் மனைவியர்க்குள் தனக்கென இவறும் தன்மையிருக்கு மாயின், இல்லறச் சகடம் இனிதின் இயங்காது. ஆதலால், தொடர்பில்லார்க்கு விட்டுக் கொடுப்பது தான் தியாகம் என்ற பொய்யறிவை விட்டொழித்து, நலங்குறைந்தவர் உற்றாராக இருப்பினும் அவர்க்கும் வரையாது வழங்கும் தியாகத் தன்மை வேண்டும். அவ்வண்ணம் கிளைஞர்க்குத் தியாகஞ் செய்த அன்பினர் சிலரை ஆராய்வாம். வேந்தன் கோப்பெருஞ் சோழனோடு அவன் மக்கள் இருவரும் அரசு பற்றிப் போர் தொடுத்தனர். தந்தையும் விடாப்பிடியனாய் மக்களை எதிர்த்து நின்றனன். இந்நிலை கண்ட புலவர் எயிற்றியனார், நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே (புறம். 213) எனத் தந்தைக்கு முறை சுட்டி மூதுரை செய்வர். போரில் தோற்பார் யார் என்று முதலில் அறுதியிட முடியாது. உன் மக்கள் தோல்வியடையலாம். அல்லது நீ தோல்வியடையலாம். அரசே! நின் மக்களே தோற்றனர் என்று வைத்துக் கொள். உனக்கே வெற்றி கிடைப்பினும் நின் இறப்பிற்குப்பின், எச்செல்வத்திற்காக நீ போரிட்டனை காணாய், அச்செல்வம் நின் மக்கட்குத்தானே முறையாற்சேரும் ஆதலின் மக்கள் தோற்றாரேனும் நின் தன்மை சிறக்கவில்லை என்று அறிக. இங்ஙனம் எயிற்றியனார்தம் நாமுதற்கண் அரசனைச் சார்ந்து விளக்கம் செய்கின்றது. அமர்வெஞ் செல்வம் நீயவர்க் குலையின் இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே அதனால், ஒழிகதில் அத்தை நின்மறனே ‘ஒருகால் நீ தோற்றாய் என்று எண்ணிப்பார். இருந்த அரசும் இழப்பாய். நின் முன்னோர் அடையாப் புதுப்பழியும் எய்துவை. ஆதலின் பின்னர்த் தானே போயொழியும் அரசு தாயத்தைத் தியாகவுணர்வொடு முன்னே விட்டுக் கொடு’ என்று புலவர் ஏதுமுடிவு காட்டுகின்றார். IV இராமாயணத்துப் பலராலும் புகழப்பட்டவன் இராமன் அல்லன்; பரதனே என்பது அறியத்தகும். இராமன் தாய் கோசலை ‘நிறைகுணத்தவன் நின்னினும் நல்லன்’ எனத் தன் மகனைக் காட்டிலும் பரதனை உயர்த்துக் கூறுவர். எத்தாயர் வயிற்றினும் பின்பிறந்தார் களெல்லாம் ஒத்தாற் பரதன்பெரி துத்தம னாதலுண்டோ எனப் பரதனைத் தம்பியருள் சிறந்தவனென்று இராமனே புகழ்வான். இவற்றுக்கெல்லாம் பரதன் தியாகமே காரணம். கூனியின் சூழ்ச்சிக் கட்டிடம், பரதன் தானே வந்த அரசை விடாது பற்றிக் கொள்வான் என்ற கயமைக் கருத்தின்மேற் கட்டப்பட்டது. ஆதலின், நெடுநாள் நில்லாது, கைகேயின் மங்கல நாணொடு இடிந்து விழுந்தது. “எனக்கு நல்லையு மில்லை” என்று கைகேசி கூறிய சொல் பொய்யாகவில்லை. பகைவர் சூழ்ச்சி முடியும்படி விட்டுக் கொடுத்த இராமனைப் போல ஆயிரம் இராமர் கூடினாலும், பகைவர் சூழ்ச்சிமுடியாதபடி தாயை மறுத்து, அரசை வெறுத்து நின்ற ஒரு பரதனுக்கு நிகராகார் என்று தெளிந்த குகன், தாயுரை கொண்டு தாதை யுதவிய தரணி தன்னைத் தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப் போயினை யென்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா எனப் பரதன் தியாகப் பெருமையை இராமனொடு சீர்தூக்கிப் புகழ்தல் இராமாயணத்து எண்ணவேண்டும் அரிய கருத்து. பரதன் தன் அண்ணனுக்கு விட்டுக்கொடுத்தவை உறவினர்க்குள் நிகழ்ந்தனவாதலால் தியாகம் அன்று என்று பிழைபடக் கருதற்க. மாற்றானெனத் தம்முனைக் கொல்லிய வந்துநின்றான் வேற்றார்கள் திறத்திவன் தஞ்சமென் வீர என்று அண்ணனிடத்தையே சுக்கிரீவன் அன்பிலன் என இலக்குவன் அளந்து கூறுவதை நோக்கின், தொடர்புடைய சுற்றத்தார்க்கு விட்டுக் கொடுக்கும் அன்பிலான் தொடர்பற்ற மக்கட்கு வழங்கும் அருளனாதல் எவ்வாறோ! என்ற குறிப்புக் காணப்படும். V மேற்கண்ட வரலாறுகளால் சுற்றத்தவராக, மற்றவராக மானிட இனத்துக்குச் செய்வது தியாகம் என்ற எண்ணம் படும். அவ்வெண்ணம் குறைவுபட்டது. மரமென விலங்கென மக்களென வரையாது, கெடுதல் உற்ற உயிர்க்கெல்லாம் அக்கெடுதல் கெடத் தன்னலத்தை விட்டுக்கொடுப்பதுதான் தியாகத்தின் பரந்த குறிக்கோள் என்பது, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பேறப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனத் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி என்ற வள்ளலின் உள்ளக் கசிவால் தெளியப்படும். பாரி தேரேறி நெடுவழிச் சென்றபோது முல்லைக்கொடி ஒன்றைக் கண்ணுற்றனன். கொடிவளரக் கொளு கொம்பு வேண்டும்; அக்கொம்பு இல்லாமையாலும், பூவின் சுமை பொறுக்க மாட்டாமையாலும் கொடி ஒசிந்து சாய்ந்து வருத்திற்று. ஆதனைக் கண்காண நெஞ்சு பொறாப் பாரி தேர்விட்டுக் குதித்தான். குதிரைகளைப் பூட்டவிழ்த்தான். கொடி சிறிதளவும் அறுபடாப் பரிசு தேரைத்தானே தன்னிருகையால் இழுத்துச் சென்று பக்கத்து நிறுத்தினான். பகைவர்க்கு வணங்கா உடலை வளைத்துத் தரையிற் கிடந்த கொடியைத் தழுவி எடுத்தான். நடுநின்ற தேரின் நாற்றிசையும் கொடிபடர விட்டான். தேர்வந்த வழிநோக்கிக் காலால் நடந்தான். கொடிநிலை கண்டதும் ஈர நெஞ்சினன் பாரி இறங்கித் தேரீந்ததைப் புலவன் கபிலன் பொய்யா நாவாற் பட்டாங்குப் புகழ்கின்றான். தியாகத்தின் உயிர் நாடியாதொன்றையும் எதிர்பாராது செய்தலாமெனின் அத்தன்மை அஃறிணையுயிர்கட்கு அளித்த அளிப்பிடத்தல்லது வேறெங்குக் காண வல்லோம். VI இனி ஒருவன் கொண்ட கொள்கை யாதாயினும் ஆகுக. எத்துணை முரண்பாடு உடையதாயினும் ஆகட்டும். தன் குறிக்கோள் அழிய வந்தக்கால், அழியாவாறு உயிர் துறந்து காக்கும் பேராண்மையும் தியாகமே ஆகும். இத்தகைய வழங்கிகளை இனிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழு தேத்தும் உலகு என்று வள்ளுவர் வணங்குவர். செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்பது தென்னவர் குலக்கொள்கை. கோவலன் படுகொலையால் வளையாச் செங்கோல் வளைந்த காலத்து, ஆரீயப்படை கடந்த நெடுஞ்செழியன், தன்னுயிர் கொடுத்துக் கோல் வளைவை நிமிர்த்தினான். சேரன் செங்குட்டுவன் புகழும் பெருமையன் ஆயினான். பிச்சை வாங்கி வயிறு வளர்த்த ஆபுத்திரன் சிந்தா தேவியருளால் அள்ளக் குறையா அமுத சுரபியைப் பெற்றான். பிறர் பசி போக்கலும், உண்டபின் அவர்முகம் காணுதலுமே ஆபுத்திரன் கோட்பாடு. வறியவர் வாழ்ந்த சாவக நாட்டிற்குக் கப்பலிற் புறப்பட்டான். மணிபல்லவத் தீவில் வங்கம் ஆபுத்திரனை விட்டுச் சென்றது. அந்நிலையில் அவன் நினைக்கின்றான்: “மணி பல்லவமோ மக்கள் வாழாத்தீவு. சோறு கேட்பாரும் இல்லை; எனக்குக் கொடுப்பாருமில்லை; வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்? என் கையத்துவற்றாப் பாத்திரத்திலிருந்து சோறு எடுத்து உண்டு வாழலாம் என்றாலோ, ஆயிரக்கணக்காய் மக்கட்கு உணவூட்டும் இம் மாபெரும் பாத்திரம் என் ஓருயிர் வாழ உணவு தருவதை விரும்பகில்லேன். அமுத சுரபி நல்லவர் கைப்புகுந்து என்னை யொழிய எல்லார்க்கும் பயன்படட்டும் என்று தான் விடாப் பட்டினியோடு உயிர் விட்டதை, தவந்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன் சுமந்தென் பாத்திரம் என்றனன் தொழுது உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்ந்தான் என்று அறவணவடிகள் அழிவில் கொள்கைக்கு அழிந்த ஆபுத்திரனைப் போற்றுவர். VII வறியவர்க்கு அவர்கேட்ட ஒன்றைக் கொடுத்தல் அன்றோ தியாக இலக்கணம்; முந்துற்ற இரக்கமிகுதியால் வறுமையில்லா உயிர்களை அங்ஙனம் உள்ளனவாகக் கருதுதலும், வழங்கி வந்த பயிற்சி மிகுதியால் கேட்ட பொருளைக் கொடாது கேளாத பொருள்களைக் கொடுத்தலும் தியாகிகளுக்கு வளர்ந்த பண்பியல். அப்பலிக் கொடையாளருள் மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப் படாஅம் போர்த்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேகன் என்ற பெரியவனைப் பரணர் பாடுவர். மயில்கள் மேகத்தைக் கண்டு தோகை விரிப்பக் குளிரால் நடுங்கின என்று இரக்க மிகுதியால் கருதி, மயில்களுக்குப் போர்வை விரித்து வீசினான் பேகன். இச்செயல் செய்து அருளியை ஏனையுலகம் பேதையென இகழுமேனும், புலவர் உலகம் கொடைமடம் பட்டவன் என நயம்படப் புகழும். ஒளவையார் அரிசிமாக் கேட்க மலைபோன்ற யானையைக் கொண்டு வந்து கொடுத்தான் நாஞ்சில் வள்ளுவன். இலக்கண வரையறை கடந்தோரைப் புலவர் பழித்தல் இயல்பே. கேட்ட பொருளைக் கொடுக்க வேண்டும் தியாக இலக்கணத்திற்கு மாறாக கேளாத பொருளைக் கொடுத்த நாஞ்சில் வள்ளுவனைப் புலவர்கட்கு முன்பாக, தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர் என்று ஒளவையார் பழிப்பர்; குறிப்பிற் புகழ்வர். VIII தியாகப் பாங்கின் வரலாறுகளை இதுகாறும் உளங்கொண்ட மக்கட்கு ஆகாத் தியாகக் குறிப்பு ஒன்று கூறுவன். விட்டுக்கொடுப்பது தியாகம் என்று தெளிந்தளவில், எதனையும் விட்டுக்கொடுப்பான் தியாகி என்று மயங்கல் வேண்டா. மலையமான் திருமுடிக்காரியின் வண்மையைப் பாடப்போந்த அந்தணன் கபிலன், வடமீன் புரையுங் கற்பின் மடமொழி அரிவை தோளள வல்லதை நினதென இலைநீ அருந்ததி போன்ற மனைவிதோளை மாத்திரம் விடாதவனாய், மற்றெப்பொருளையும் விடுக்கின்ற வள்ளலே என்று விடத்தகாப் பொருளை விலக்கிப் புகழ்தல் காண்க. இதனால் மானம், நாணம், பெருமை முதலியன உள்ளழியாதபடி கொடை செய்க என்னும் தமிழ் நாகரிகம் பெறப்படும். விட்டுக்கொடுப்பவன் தியாகி எனவே, பகைவர்க்கும் விட்டுக்கொடுப்பவன் தியாகி என்றோ அச்சத்தால் விட்டுக் கொடுப்பவன் தியாகி என்றோ முடிவாகாது. தியாகத்திற்கு இரக்க வுணர்ச்சியும் பேராண்மையும் அடிப்படைகள். அதனாலன்றோ இரவலர்க்குத் திங்கள் அனையராய தமிழ்நாட்டு வள்ளல்களைப் பகைவர்க்கு ஞாயிற்றனையர் என்று சங்க நூல்கள் சாற்றுகின்றன. ஆய், அதிகமான், ஓரி, பாரி, காரி, பேகன், நள்ளி வள்ளல்கள் அன்புக்கொடையும் அஞ்சிக்கொடாமையும் ஆகிய தியாக இலக்கணத்திற்கு இலக்கியம் ஆவர் என்பது குறிக்கொள்ளத்தகும். பகைவர் பகைவராயே இருப்பின் சிறிதும் விட்டுக்கொடான்; பகைவர் பணிந்து இரவலராய் வரின் எதனையுங் கொடாது விடான் தமிழ் வள்ளல் என்பது தொகைநூற் காட்சி. 7. அழகியல் I விதையின்றி முளை தோன்றாது என்றாலும் விதை இருப்பதனால் மட்டும் முளை தோன்றிவிடுமா? முளை தோன்றினாலும் பூத்துக் காய்த்துக் கனி வந்துவிடுமா? விதை நிலைத்து நீடித்துப் பயன்தர, அதன் வளர்ச்சி நிலையில் எத்தனையோ கூறுபாடுகள் உண்டு. அழகப்பாவின் கொடை வளங்களைப் பார்க்கும்போது, கொடுக்குந் தன்மை அவர் தம் பிறவிக்குணம் என்று நாம் சொல்லுகின்றோம். இது சிறப்பான கருத்தாகாது. மக்களினம் குழுமி வாழும் குலப்பாங்கு உடையதாதலின், பிறப்பிலேயே கொடைக்கரு வாய்ந்த மக்கள் உலகத்துப் பலராவர். முதியோரிடத்துக் காணும் கொடத் தான்மை குழந்தைகள் இடத்து இல்லை. பாரியின் மக்கள் ஒளவைப் புலமகளுக்கு நீலச் சிற்றாடை வழங்கிய கதையைப் படித்திருக்கின்றோம். பெருஞ்சித்திரனார், பாரதியார் போன்ற பலர் வரலாற்றில் விரைந்து கொடுத்த ஈகைகளைப் பார்க்கின்றோம். யார் வாழ்க்கையிலும் பிறவிக்குணம் என்று பாராட்டத்தக்க சில கொடைகள் நிகழாமல் இல்லை. ஆதலால் கொடையை அழகப்பரின் பிறவிக்குணம் என்று சொல்லல் பொதுக் கூற்றாகுமே யன்றிச் சிறப்பியல் ஆகாது. இலக்கியங்கள் தமிழில் பலவுள. அவற்றையெல்லாம் ஒருவன் கற்கலாம்; கற்கவேண்டும்; என்றாலும், தோய்ந்த தமிழ்மை பெறுதற்கு அவன் எவ்விலக்கியங்களைத் தேர்ந்து கொள்கின்றான்? எவ்விலக்கியத்தை விழைந்து பயில்கின்றான்? என்று அறியவேண்டும். அதுபோல, மக்கட் பிறவிக்குக் கொடை முதலாய பல்குணங்கள் வித்து நிலையில் அமைந்து கிடக்கின்றன. பிறவிக்குணம் என்பது மழித்து வளர்க்காத் தலைபோன்றது; துவைத்து வெளுக்காக் கோடி போன்றது. ஒருவன் தன் பிறப்புக் குணங்களுள் வாழ்வின் குறிக்கோளாக எதனைத் தேர்ந்தெடுக்கின்றான்? அதன்பால் எவ்வளவு அழுத்தமாக நினைவு செலுத்துகின்றான்? குறிக்கொண்ட தனிக்கோளை எங்ஙனமெல்லாம் பண்படுத்துகின்றான்? இவை ஒருவன் வாழ்வியலில் ஆராயத்தக்க அடிப்படைக் கூறுகளாகும். II எல்லாரும் கொடைக்குணம் படைத்திருந்தாலும் அழகப்பா அக்குணம் ஒன்றையே தம் தலைக் குணமாக மேற்கொண்டார். கொடைக்கே நீரிட்டார்; நினைவிட்டார்; பாத்தி பிடித்தார்; பண்படுத்தினார். கொடைக் கதிர்களைக் கண்டு உவந்தார். பிறர் அறுத்துப் போகப் பார்த்து இன்புற்றார் பருவமன்றியும் பயிரிட்டுப் பகுத்திட்டார். அழகர் தம் கொடைமையைப் பண்படுத்திய முறை நுண்ணிய புதிது. அதனால், அதன் விரிவும் பெரிதாயிற்று; பயனும் பெரிதாயிற்று; வாழ்நாள் வரை வளர்ச்சி யல்லது தளர்ச்சி யறியாதாயிற்று. பொருட்பற்று வேண்டும்; உடைமைப்பற்றுக் கூடாது என்பது அழகப்பர் கண்ட கொடையியல் அல்லது அழகியல். பொருளுடைமை தவறன்று; அதனைத் தன துடைமை என்று இறுகப் பிடிக்கும் பிடியே தவறாகும். துறவியும் கொடைஞனும் நிலையாமை உணர்ந்தவர்கள்; ஆயின் நிலையாது என்று எண்ணித் துறவி பொருளீட்டவே மறுக்கின்றான். அவன் மெய்யுணர்வு முயலாமைக்கும் ஈட்டாமைக்கும் கொடாமைக்கும் துணை செய்கின்றது. கொடையாளி முயல்வான்; ஈட்டுவான்; நிலையாமை கருதி வழங்குவான். நிலையாமை நினைந்து பொருள் தேடாது அமையும் வறுந் துறவியினும், பொருள் திரட்டியபின் நிலையாது என்று அளிக்கும் செல்வத் துறவி சிறந்தோனாவன். அழகப்பர் வணிகத்துறை புகுந்தார்; ஆலைகள் பல அமைத்தார்; பங்குத் தொழிலில் ஈடுபட்டார்; வானூர்தித் துறையில் முனைந்தார்; இலக்கம் இலக்கமாகத் தொகுத்தார்; எனைப் பெருஞ்செல்வக் குவியலும் கரையும் என்று கண்டார். தொழில் நட்டங்களால் பொருள் நிலையாது போதலை அறிந்த அவர் கொடைகளால் அந்நிலையாமையைக் காண அவாவினார்; இலக்கம் இலக்கமாக அள்ளி வீசினார்; நாள்தோறும் கொடைச்செய்திகளைப் பரப்பினார்; கல்லூரி கல்லூரிகளாக நிறுவினார்; நிலையாச் செல்வங்கொண்டு நிலைத்த விழுச்செல்வத்தை வளர்த்தார்; வந்த பொருளைக் காட்டாற்றுப் போக்கில் போகவிடாமல் அணைகட்டி வழிப்படுத்திப் போகவிட்டார். இவ்வாறெல்லாம் கொடைக் கருவைச் செல்வப் பெருஞ்செவிலிகளால் வளர்த்தார்; பண்படுத்தினார். III ஈட்டுவோம், ஈவோம் என்ற காரண காரியமுறையில் இயங்கிய அழகப்பர் நினைவியல் வரவர ஒரு பெருமாற்றத்தை எய்திற்று. ஈட்டு நிலை பிந்திற்று; கொடைத்துடிப்பு முந்திற்று. ‘கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்’ என்னும் தொல்காப்பியத்தின்படி, ஈட்டுவோம் என்ற துணிச்சலில், ஈட்டா முன்னரே எதிர்பார்த்த தொகைகட்கும் கொடையறி வித்தார். கொடுக்க ஈட்டுவோம் என்ற எண்ணமுனைப்புப் பெற்றார். பொருட்செல்வத்தினும் அரும்பெருஞ் செல்வங்கள் ஒருவன் உடல் உயிர்கள் என்றும், இவற்றையும் கொடைப்படுத்த வேண்டும் என்றும் குறிக்கொண்டார். உடலின் நோயைப் பொருட்படுத்தவில்லை. உயிர் குற்றுயிர் ஆவதைக் கருத வில்லை. உடல்நலத்தையும் உயிரின்பத்தையும் கொடைக்கெனப் பலியிட்டார். நிரம்பக் கொடுத்தோம்; இனி இனிதாகக் கொடையின் புகழைப் பருகி வாழ்வோம் என்று மதிமயங்காமல், உடலென உயிரென ஒரு பொருள் உள்ளவரை, கொடை கொடையெனப் பதறினார். பொருளென்ன, உடலென்ன, உயிரென்ன, எவ்வுடைமைகளும் கூடா, நிலையா என்ற உணர்வுக் கடலாக அழகப்பர் விளங்கினார். கொடையில் தலையாயவராகவும் ஒருபொழுதும் சலிப்புத் தட்டாத வராகவும் இறுதிவரை வாழ்ந்தார். நிலையா மெய்யறிவு தெளிவாகப் பெற்றிருந்த காரணத்தால் அன்றோ, தம்மை அடக்கஞ் செய்ய வேண்டும் இடத்தை வாழும்போதே சுட்டிக் காட்டினார் அழகப்பர். வள்ளல் ஒருநாள் உடற்கல்விக் கல்லூரி முதல்வர் திரு. இராப்பிசனுடன் பவநகர் மைதானத்துக்கு எதிரே உள்ள திடலில் சென்றார். அந்நிலப் பகுதியில் விளையாட்டிடங்கள் அமைவதைக் கண்ட அழகப்ப அறிஞர் ‘என்னிடத்தைக் கைப்பற்றுகிறீரே’ என்று விளையாட்டாக முதல்வரிடம் கூறினார். இவ்விடம் என்னை அடக்கஞ் செய்வதற்கு நான் தேர்ந்து வைத்திருக்கும் நிலப்பகுதியன்றோ என்று சுட்டினார். இங்ஙனம் முடிவிடம் காட்டிச் சாவைச் சிரித்துப் பேசும் அழகப்பரின் ஆழ்ந்த நிலையாவுணர்வுக்கு ஓரெல்லை உண்டோ? அவர் தம் கொடை வரலாற்றை அறிவார், நிலையாமை யுணர்ச்சியால் அக்கொடைக் குணம் முளைத்துக் கிளைத்துப் பரந்து விரிந்து பண்பட்ட நுண் கூறுகளை அறிவாராக. தன்னைத் துயிற்றும் தனியிடம் சுட்டிய பின்னர்த் துயின்ற பெருஞானி - கொன்னே இறப்பினுக் கஞ்சான் எடுப்பின் கொடாஅப் பிறப்பினுக் கஞ்சும் பெரிது. 8. மணிநாவொலி I தமிழ்க் கல்விக்கு வரம்பெனப்படும் புலவோர் சிலருள், ஒருவராகிய பெரும் பேராசிரியர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்கள் ஆராய்ச்சித் துறை அலுவலினின்றும் தாமே விடைபெற்று விலகிக் கொண்டு தமதூர் செல்வுழி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதி, தமிழிசைப் பகுதி ஆசிரியர்கள் 2-8 -46 ஆம் நாள் சாயுங்காலை ஒரு நாவிருந்து நடத்தினர். தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் தம் உரைக்கிடையில், திருவாசக முதலாம் சமயநூற்கண்ணும் நயம் பல உண்டென்று காட்டி, அது காணும் முறைகளைச் சொற்பொழிவால் கற்பித்த முதல்வர் முதுபெரும் புலவரேயாவர் என்று புகழ்ந்தனர். விரிவுரை முதல்வர் திரு.லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் விருந்தினரின் உடற்றளர்ச்சியைப் போக்க ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதிகன் போல்வார் இன்று இல்லைகொல் என்று தம் வேணவாவை வெளியிட்டனர். விரிவுரையாளர் திரு.அ.பூவராகன் பிள்ளை தம்மோடு தொடர்புடையார் நலனைத் தந்நலமாகவே கருதும் பண்டிதமணியின் சால்பினை வரலாற்றில் வைத்து இன்புறுத்தினர். ஒளவை திரு.சு. துரைசாமிப் பிள்ளை தமிழகம் விரும்பும் திருவாசக நுண்ணுரையை விரைவில் தந்தருள வேண்டும் என்று வியங்கோள் செய்தனர். இசைப்பகுதியின் சார்பாகக் கோமதி சங்கரையர் இயற்புலவரின் இசைத்துறையறிவை எடுத்துச் சொல்லினர். இங்ஙனம் நாவின் பிறிதொரு தொழிலாகிய பாராட்டு விருந்து முடிவுற்றது. II நன்றி மொழி புகலத் துவங்கிய பண்டிதமணியார் ‘நீங்கள் என்னைப் புகழ்ந்த செயல் ஒக்கும்’ என்றனர். தம்முன் தம்புகழ் கூறக் கேட்ட அவர் தலைசாய்த்துத் துஞ்சுமரம் போலவன்றோ நாணுதல் வேண்டும்; அது செய்யாராய், மேலும் உடன்பட்டது அறத்திற்கு எத்துணை முரணென, அவர் பின்னுரை கேளாக்கால் நம்மனோர்க்குத் தோன்றுவதியல்பே. ‘ஒக்கும்’ என்ற பண்டிதமணி, ‘ஒருவனை இளமைப் பருவத்துப் பிறர் புகழ்தல் வேண்டா. மனக்கிளர்ச்சிக்கு வேண்டும் உணர்ச்சியை அவனுக்கு அவ்விளமைப் பருவமே கொடுக்கும். மேலும் அப்பருவத்து ஊறும் வீறு பெரிதாகலின், ‘இளையான் அடக்கம் அடக்கம்’ என அஃதொரு அறமாகவும் கூறப்பட்டது. முதுமைப் பருவத்தான் ஒருவனைச் செயலின்றி அடக்க அப்பருவ மொன்றே அமையும். அவனைப் பிறர் அடக்கப் புகுதல் பேதைமை. அதற்கு மாறாக அவர் கடமை யாதெனின், பருவமடக்கிய அவன் மனங்கிளர்ந்து செயற்பட வேண்டுமேல் உடல் வீறுடைய இளமைக் காலத்து முனைந்து செய்த நற்றிறங்களை அவன் முன்னர்ப் புகழுதல் வேண்டும். இவ்வுண்மையைக் கருத்திற்கொண்டு, அறுபத்தையாண்டு அகவை மூதாரிப் புலவனாகிய என்னை, என் முன்னர்ப் பலபடப் பாராட்டியது நும் அறிவுடைமையே என்று விளக்கினார். தம் முன்னர்ப் பிறர் புகழும் செயலும், புகழக் கேட்கும் தஞ்செயலும் அறத்தின் கழிவேனும், அது முதுமைக் காலத்துச் சோர்வினை அகற்றி ஊக்கம் ஊட்டுதலின், முதியோரைப் புகழ்தல் முற்றும் பொருந்தும். ஆதலால் நன்கு பாராட்டுக என்பது பண்டிதமணியின் புது விளக்கம், புலமை விளக்கம். ‘யான் முதுமையும் தளர்வும் உடையேன். ஊழ்வினை வயத்தால் இவ்வுடம்பிற்கு விரைவில் ஊறுஉண்டாமேல், எனக்கு மறு பிறவி உண்டென்பது உறுதி. உண்டாமேல், பிறந்து தமிழாசிரிய இளைஞர்களாம் உங்கள் காலத்தே வகுப்பில் தமிழ்ப் பாடங்கேட்கும் ஒரு மாணாக்கனாக அமர்தலும் உண்டு. கற்பான் ஒருவன் தன் முதிராப்பருவத்தே படிப்பில் ஆர்வங்காட்டுதலும் பாட்டில் நயங்காண்பதும் செய்வானேல், இவன் இப்பருவத்தே இன்னனாதற்குக் காரணம் யாது கொல்? என்று சூழ்வீர்கள். சூழின், முற்பிறவியிற் சாந்துணையும் இவன் தமிழ் கற்றதன் மணம்போலும் இது என்று முடிவு கொள்வீர்கள். அம்மாணாக்கன் அகவையை என் மறைவு நாளொடு கணக்கிட முரணாதிருக்குமாயின், அவனாக யான் பிறந்திருக்கிறேன் என்று நீவீர் தெரிந்து அன்பு பாராட்டுங்கள்’என நகை படவும் தம் புலமைத் தகைபடவும் கூறினார் பெரும் பேராசிரியர். III பண்டிதமணியின் முகம்நோக்கி அமர்ந்திருந்தயான், ‘இவ்வுடம்பிற்கு விரைவில் ஊறு உண்டாமேல்’ என்று சொல்லி வருகையில் துணுக்குற்றேன். கண்ணீர் பிலிற்றியது. நாணத்தால் வருபனி கரந்த கண்ணன் ஆகினேன். அரிதுணர் அகத்தின் அரசியற் சிலம்பின் விரிவுரை வரைந்த வேங்கட சாமியும், நற்றவ வாழ்வினன் நாறா மலரினன் கற்றவர் அன்பினன் கந்த சாமியும், மறவாத் திறத்தினன் வழக்கியல் அறிஞன் இறவாப் புகழினன் எந்தமிழ்க் காசுவும், வள்ளலைப் பாடி வளர்ப்பொன் பெற்றோன் எள்ளறும் உரைஞன் இராகவ முதியனும், நண்ணார் பாடவும் நாடு கேட்கவும் பண்ணார் தமிழினைப் படுகுழி எழுப்பியோன் அண்ணா மலையான் அரணெனும் நகருள் இருந்த காலை இறத்தல் காணேம்; மருந்தில் கூற்றுவன் மறத்தைக் காணேம்; காலனும் நகர்நீங்கு காலம் பார்த்தே புறநகர்ப் போந்தவர் புக்கில் இருந்துழிப் புறநகர்ப் போந்த புல்லுரை கேட்டேம் என்றவாறு, முன்னைத் துன்ப நிகழ்ச்சிகளை நினைத்து விட்ட என்னெஞ்சம் வெதும்பிற்று. தொடித்தலை விழுத்தண் டூன்றித் தமிழகம் முழுதும் சென்று, தமிழிற் சுவை காணும் புதுமுறை காட்டிச் சொற்பொழிவால் தமிழ்ப் பைங்கூழ் தழையச் செய்த முகிலனைய பண்டித மாமணி, மறலி மறம் புகாத அண்ணாமலைநகர் அரணினை விட்டு இன்னும் சின்னாளில் செல்வாரன்றே; சென்ற பின்னையும். முத்தமிழ் பாடிய இளங்கோ இவனெனும் வித்தகன் தவத்தினன் விபுலா னந்தனும், தொன்னூற் கமப்பியத் தொடர்பொருள் வரைந்த தென்மொழி பெயர்ப்பின் திங்க ளழகனும் எண்ணம் எல்லாம் தமிழே யான பெண்பெயர் அடுத்த சுந்தரப் பெயரனும் பேரா சிரியப் பெயர்ப்பதம் நீங்கி நேராச் சிறப்பின் நீடிய வாழ்க்கையர் போல ஆயுள் நீட நோயின்றி வாழ்வர் பண்டிதமணி என்று துணிந்து என் நெஞ்சு ஒருவாறு குளிர்ந்தது. IV பின்னரும் பேசிய பண்டிதமணி ‘அறிவுடையவரே தஞ்சுற்றத்தவராவர்’ என்று தம் வாழ்க்கையுள் ஒரு பற்றை எடுத்துக் காட்டிப் பிறந்த ஊராகிய மகிபாலன் பட்டியில் அச்சுற்றம் இன்மைக்குக் கவன்றார். என்றினி மதுரை காண்பேம் எப்பகல் சவுந்த ரேசன் தன்றிரு வடிகள் காண்பேம் தசயையெஞ் ஞான்று காண்பேம் வென்றிகொள் தரும வேந்தர் வேந்தனை எந்நாட் காண்பேம் ஒன்றிய துணையாஞ் சங்கத் துறவையெஞ் ஞான்று காண்பேம் என்ற நக்கீரர் பிரிவுச் சொற்களைத் தம்மொடு உளப்படுத்திக் கூறினார். வைப்புமுறையின் நயங்காட்டி மேற்பாடலை விளக்கியபோது, பண்டிதமணி இலக்கியம் பேசுங்கால் இளமை பெறுங்காட்சியை எஞ்ஞான்று காண்போம் என நாங்கள் வருத்தம் உற்றோம். அவர் முதுமை நோய் தீர்க்கும் மருந்து ஒன்று உடனே எனக்குப் புலனாயிற்று. ‘வருந்திய செல்லல் தீர்த்த திறனறி யொருவன் மருந்தறை கோடலிற் கொடிதே’ என்னும் கலித்தொகைக் குற்றத்திற்கு ஆளாக விரும்பவில்லை. பண்டிதமணியார்க்கு மருந்து கூறினேன்; வாழ்த்தினேன்; நோயைச் சாபமிட்டேன். வகைபடச் சொல்வோய் வளர்கொதி நோய்க்குப் பகைபட நன்மருந்து பாராய் - தொகைபடும் நன்னூலுக் கெல்லாம் நயவுரை செய்குவையேல் என்னோயும் தானே இறும். உழைப்பால் உயர்ந்த ஒருவ! அரசன் அழைப்பால் நகர்போந்த ஐய! - பிழைப்பாய் பருதிக் கொதிப்பைப் பதஞ்செய் முகில்போல குருதிக் கொதிப்பைக் குறைத்து. பாவால் உரையால் பசித்த தமிழர்க்கு நாவால் அறிவுணவு நல்கியோன் - மூவா மொழிவளர் தொண்டால் முதுமையிற் பெற்ற பழிவளர் நோயே படு. 9. பாவம் I தமிழ்மொழி சில பத்தாண்டுகளாகப் பல துறையிலும் தழைத்துப் பெருகுகின்றது. உரிமை யுணர்ச்சியே அதற்குக் காரணம். விடுதலையுணர்வோ நமக்கு மொழியுணர்வோடு தோன்றியது. நம் தாய்மொழி தாழாது வளரவேண்டும்; அரசாள வேண்டும் என்ற விழைவையும் விடுதலைக்கு ஒரு பெருங் காரணமாய்ப் பறைசாற்றினோம். புலவர் பெருமகன் பாரதியார் நாடு மொழி என்னும் இருபெரும்பற்றையும் ஒருங்கு குழைத்து மக்கட்கு ஊட்டினார். மீதூர்ந்த மொழியன்பே ஆந்திரப் பிரிவினைக்கு ஏது என்பது வெளிப்படை. செய்தித்தாள்கள் வழக்குத் தமிழின் வளர்ச்சிக்கு நற்றுணை செய்கின்றன. படக்காட்சிகள் மொழியைப் பொறுத்தவரை, தமிழாக்கத்தைப் பெண்களிடத்தும் குழந்தைகள் இடத்தும் பரப்புகின்றன. இது குடியரசுக் காலம். மக்கட்குக் கருத்துக் கொளுத்தவும், அன்னவரைத் தஞ்சார்பாக இழுக்கவும் கட்சியாளர்கள் பற்றும் பொதுக்கருவி தமிழ் அன்றோ? இம்முறையால் தமிழுயிர் நீடித்துவிட்டது; அதன் ஆட்சி கால்கொண்டு விட்டது. உயர்நிலைப் பள்ளிவரை தமிழ்மொழி கல்விமொழியாய் அமைந்த நாள் தொட்டு, அதன் செல்வாக்கு “தமிழில் முடியுமா?” என்று இடையூறாகக் கிடந்த ஒரு சாராரை அஞ்சி வியக்கும்படி செய்தது. தமிழகக் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நிலத்துத் தமிழினைக் கருத்து வாயிலாகக் கொள்ளும் காலம் ஒன்றுவரும்; அக்காலம் அணித்து வருவது அறிவுக் கண்ணுக்கு அதோ தோன்றுகிறது. அஞ்ஞான்று தமிழ் உடன்வாழ்ந்த உலகத் தொன்மொழி யெல்லாம் வழக்கு ஒழியவும் ஒழியா உயிர்த் தமிழ் - ஞால அரங்கில் நடம்புரியக் காண்போம். மொழியடிப்படையில் இந்திய நாடு பகுதிப்பட்டு விட்டது. இனி அவ்வந் நிலத்துமொழி பரந்தோங்கிச் செம்மாக்கும் என்பது உறுதி. மேலும், தமிழ் வழங்கு நிலம் தமிழகம் மட்டுமன்று. தில்லி, பம்பாய், பூனா, கல்கத்தா முதலிய இந்தியப் பிற நிலங்கள் தமிழ்த்தாய் குடிக்கொண்டிருக்கும் புது மாளிகைகள். மலேயா தமிழ்ப் பைங்கூழுக்கு ஒரு புதுவயல். இலங்கை தமிழரசுக் குமரியின் அரண்மனை. தென்னாப்பிரிக்கா தமிழ் நங்கையின் உறவிடம். இவ்வண்ணம் பழந்தமிழ் இடத்தாற் பரந்து செயலால் நிலைத்து வாழ்வதைக் காணுதொறும் காணுதொறும் தமிழ் நெஞ்சங்கள் விம்மிப் பூரிக்கின்றன. II மேற்சொல்லியாங்கு நம் தாய்மொழி பலபடப் பரவினாலும் அதன் வளர்ச்சி அறிஞர் பலரைக் கவரவில்லை. இத் தமிழ்ப்பெருக்கம் நிலையா? மேற்போக்கா? வேர் ஊன்றுமா? வழக்கோடு இரண்டறக் கலக்குமா? வளர்வது போலக் காட்டி, பழைய பெருக்கத்தையும் வாரிக்கொண்டு போய் விடுமா? மொழியடிப்படையையே தகர்த்துச் சிதைத்து உருமாற்றிவிடுமா? இவ்வளர்வுக்குத் தமிழ் என்னும் பெயர் பொருந்துமா? என இவ்வாறு பல உள்ளங்கள் உசாவி அலைகின்றன. இந்த ஐயங்கள் மயக்கத்தாலோ, பொறாமை யாலோ, சூழ்ச்சியாலோ எழுந்தனவல்ல. அறிவால் எழுந்த ஐயங்கள். இவற்றுக்குத் தலையாய் ஒரு காரணத்தை மாத்திரம் இக்கட்டுரையிற் காண்போம். இலக்கியச் சுவையைப் பரப்புவாருள் ஒரு சிலர் ‘பாவம்’ என்ற சொல்லைச் சில காலமாகப் பெரிதும் கையாளுப. உள்ளக் குறிப்பு என்பது அதன் பொருள். தமிழில் முன்பே பாவம் எனப் பிறிதொரு சொல் உண்டு தீவினை என்பது அதற்குப் பொருள். புதிய குறிப்புப் பாவத்தைப் பழைய தீவினைப் பாவத்தினும் வேறுபடுத்துவதற்குப் பாவத்தின் முதலெழுத்தைத் தடித்துக் காட்டுகிறார்கள். இப்பருவெழுத்து மொழி முறையன்று; வலிந்து புகுத்தினாலும் கைவழக்கில் ஒட்டுவதன்று; தமிழ் வரம்பு அன்று; அதற்கு வளர்ச்சியும் அன்று. ஓரெழுத்தையே பட்டையாகவும் தட்டையாகவும் பருமனாகவும் சிறுமனாகவும் சாய்வாகவும் நேராகவும் கண்டவாறு யார் கையும் எழுதக் காண்கின்றோம். ஒழுங்கில்லா இந்நிலையில், பருமை சிறுமை என்றின்ன ஓரெழுத்தின் தோற்றவே வேறுபாடுகட்கெல்லாம் பொருள் வேறு வேறு கூறப் புகின், எம்மொழியும் விளங்காது விரைவில் இடுகாடு அடையும். III ஓர் ஒலிக்கு ஓரெழுத்து என்பது மொழியறம். ஒலி வேறு பொருள் வேறு கொண்டால் எழுத்தும் வேறு கொள்ளல் வேண்டும். முறை மாறி ஈரொலிக்கு ஓரெழுத்துக்கொள்வதும், அவ்வொழுக்கத்தையே பட்டை போடுவதும் அறப்பிழை; மொழிச் சிதைவு. இந்தி வடமொழிகளும் இனவொலிகளுக்கு வெவ்வேறு தனியெழுத்துக் கொண்டனவே யன்றி, ஓரெழுத்துள்ளேயே விளம்பும் வேலை செய்யவில்லை. எண்ணிறந்த வடமொழிக் கிளவிகள் இடைக்காலத் தமிழில் புகுந்தன. அவ்வெல்லாம் தம் மொழிமை யிழந்து புக்ககத்து மணமகள் போலத் தமிழ்மை எய்தன; தம் ஒலியை விட்டுத் தமிழொலி கொண்டு விளங்கின*. இவ்வினிய மொழியாக்கமே நிலைப்பது; பின்பற்றத் தகுவது. தமிழுக்கு வந்தும் கலவாது தனித்து நிற்கும் பிற சொற்கள் காலப்போக்கில் தாமே அகலும்; அல்லது அறிவுப் புரட்சியால் அகற்றப் படும். குறிப்பு என்னும் தமிழ்ச் சொல் முன்பே நமக்கு உண்டு. அதனைப் பேராட்சிக்குக் கொண்டு வருவது கற்றார் கடன். உரிய சொல் தமிழில் இருப்பவும்,‘பாவம்’ என்ற பிறமொழிச் சொல் வேண்டுவதில்லை. ஒருகால் ஆளவிரும்பின், தமிழ்ப் ‘பாவம்’ஆக ஒலியாமல் வடமொழிப் ‘பாவம்’ஆகவே வைத்து ஒலிப்பது பொருந்தாது. வழக்கில் யாரும் எழுதி வரும் இயல்புப் பகர வடிவாக எழுதாமல், பருத்த பகரமாக அச்சிடல் எவ்வாற்றானும் ஒவ்வாது. கடன் பட்டாலும் வரம்பு போற்றித் தமிழ் வளர்க்கும் வாழ்வு நமக்கு வேண்டும். தொல்காப்பியர் முதலாய சான்றோர் தமிழுக்கு ஒலியிலக்கணம் வகுத்தனரே யன்றி, எழுதுவார் கைக்கு ஏற்ப எத்துணையோ வேறுபடும் வரியிலக்கணம் வரைந்தார் அல்லர். தமிழுக்கு அடிப்படையை ஒலி நிலையில் கட்டினரே யன்றி வரிவடிவிற் கட்டினார் அல்லர். தமிழ் வரம்பு இதுவாதலின், ஓரெழுத்துத் தன்னையே தடிப்பித்துப் பொருள் காட்டலும், வரிவடிவைத் தமிழ் மொழிக்கு உயிராக்கலும் அடிமுரண் என்பது பெறப்படும். IV இப்புதுப் பாவச் சொல் பற்றிப் பிறிதொன்றும் நினைக்க வேண்டும். ஒரு சொல் நல்லது தீயது என இருபொருட்கும் உரியதாயின், காலப்போக்கில் தீயது நல்லதை அழிக்கும். இத்தீயவெற்றி மொழியறம்; தமிழ் காட்டும் வரலாறு. இரு தன்மைக்கும் உரிய ஒரு சொல்லை உரைக்கும்போது, கேட்பார்க்குத் தீயபொருளே முன்னிற்கும் ஆதலின், நல்ல பொருளிற் சொல்ல யாரும் துணியார். தலைவன் பொருளீட்டக் கள்ளிக் காட்டினைக் கடந்து சென்றான் என்ற கருத்தைக் ‘கள்ளியங் காடு இறந்தோர்’(குறுந்- 16) என்பாள் சங்கத் தலைவி. ‘புலி செத்து வெரீஇய புகர்முக வேழம்’ (அகம் -12) என்ற அடிக்கண், புலி செத்து - புலி யென்று கருதி என்பது பொருள். ‘மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்’ (புறம் -191) என்ற தொடரில் மாண்டசிறந்த என்பது பொருள். இவ்வாறு சங்கத் தமிழர் நற்பொருளில் வழங்கிய இறந்த, செத்த, மாண்ட என்ற சொற்களுக்கு வரவரச் சாவுப் பொருள்கள் ஏறிவிட்டன. அதனால், அவற்றை நல்ல பொருள்வாய் மக்கள்ஆளத் துணியவில்லை. அவற்றின் நற்கூறு வழக்கொழிந்தது. இது தமிழ்மொழி வரலாறு. இவ்விளக்கத் தால் நாம் அறியக் கிடப்பது என்ன? பாவம் என்ற புதுச் சொல்லை நல்ல குறிப்புப் பொருளாய் இன்று நாம் ஆண்டாலும், பழைய தீவினைப் பொருளே கேட்பார்க்கு முன்தோன்றும்; குறிப்புப் பொருள் தானே ஒழிந்துபோம். ஆதலால் இப்புதிய பாவத்தை - பருத்த பாவ எழுத்தை - தமிழ் எழுத்தாளர் சொல்லாளர் பின்பற்ற வேண்டா என்று வேண்டிக்கொள்வன். இகலின்றி இவ்வுண்மையை ஆராய்ந்து கொள்க. 10. அருஞ்சொற்கள் செய்திகளையும் விளம்பரங்களையும் சிறுகதை களையும் புதினங்களையும் படிப்பவர் சொல்தோறும் நின்று சுவைத்துப் படிப்பதில்லை; படிக்க வேண்டுவதும் இல்லை. திரண்ட கருத்துக்களைக் கண்டளவில் அமைதியடை கின்றனர். இப்பகுதிகளில் தமிழ்ப் புதுச்சொற்களோ பிறமொழிப் புதுக்சொற்களோ இருப்பினும், பொதுவாய கருத்தை ஒருவர் அறிவதற்கு அச்சொற்கள் அத்துணைத் தடையாக இருப்பதில்லை. ‘இறந்த காலத்தின் இறவாவரம் பெற்றுவிட்ட சம்பவங்கள்’ ‘வாயிலிருந்து வெளிப்பட்ட வெண் புகையைச் சமந்தரக் கோடுகளாகவும் சுருள் சுருளாகவும் காற்றிலே மிதக்கவிட’ என்ற தொடர்கள் ஒரு சிறுகதையில் வருகின்றன. ‘மின்னொளியின் தன்னொளியால் கண் விழிகள் பறிக்கப்பட்டுக் கதறுகின்றான்’ ‘ஆற்றொணாத் துயரடை கின்றான்’‘விடை வெண்திரை விளக்கும், ‘தத்தை மொழி பேசும் திலகம்’என்றெல்லாம் திரைக்கதைச் சுருக்கத்தில் வந்துள. இவற்றைச் சொல் சொல்லாக மக்கள் கூர்ந்து நோக்குவதிலர். இலக்கியம் கற்கப் புகுவாரோ பொருள் விளங்கா அருஞ்சொற்கள் வரக்கண்டு மேலோடாது நின்றுவிடுகின்றனர். நாங்கள் அறியக்கூடிய சொற்களை வைத்து இலக்கியஞ் செய்யவில்லையே புலவன்; அவனுக்கு எளியனவாய் இருந்த சொற்களை யெல்லாம் பாடலின் தலைமேல் சுமத்தியுள்ளானே என்று சினமுறுகின்றனர். இலக்கியம் என்பது ஒருசொற் கட்டிடம். வளமான கிளவிகளை ஈட்டிய புலமைக் கொற்றன் நுண்ணிய செஞ்சொற்களைத் தொடுத்துக் கவிதைத் தெய்வமனை எடுக்கின்றான். சொற்களின் நிலையழகால் பொருளழகு மிளிர்ந்து விளங்குகின்றது. கருத்தைப் பிண்டமாக அறிவது இலக்கியத்தின் பயனன்று. செய்தி சொல்லும் நாளேடன்று இலக்கியம். இலக்கியத்தின் உட்பொருள் அறிய, முதற்கண் சொற்பொருள் அறிவு வேண்டும். சொற்பயிற்சி இலக்கியப் பயிற்சிக்கும் இலக்கியப் படைப்பிற்கும் நனி இன்றியமையாதது. நீத்துப் பயிற்சி இல்லாதான் நீராழம் காணமாட்டான். ஆதலின் தமிழறிவு தேடுவார் பாட்டுக்களில் புதுச்சொல் வரும்போது பொன்பெற்றார்போல விளங்கிப் போற்றிக் கொள்ள வேண்டும். அச்சொற்களை அறிவுப் பகை என மயங்கி இலக்கியத்தினின்று புறங்காட்டி ஓடிவிடக்கூடாது. இலக்கியத் தரம் உடையதாய ஒரு பாட்டோ உரைநடையோ தோன்றுங்கால், சில அருஞ்சொற் கிளவிகள் கட்டாயம் கலந்தே தீரும். இக்கலப்பு இலக்கியத்தின் இயற்கை. இக்காலக் குழந்தைக்கெனப் பாரதி பாடிய புதிய ஆத்திசூடி ‘ஞமலிபோல்’ வாழேல்’ ‘ஞிமிறென இன்புறு’, ‘ரோதனம் தவிர்’, ‘ரௌத்திரம் பழகு’ என்று பாடல்கள் தொடுக்கின்றது. அவர் தம் பாப்பா பாட்டிலும் வன்னம், ஆன்றோர்கள், மதி என்றின்ன அருஞ்சொற்களைக் காண்கின்றோம். கவிமணி தேசிய விநாயகரின் குழந்தைப் பாடல்களிலே வட்டு, அல், ஞாலம், வானம், ஒளிறும், ஆழி முதலாய சொல்லருமைகள் உள. சின்னஞ்சிறு இலக்கியங்கள் கற்பார்க்குங்கூட அருஞ்சொல் வந்து நிற்கும். ஆதலின் கற்கண்டு அஞ்சுவது போலச் சொற்கண்டு அஞ்சுதல் அழகாகாது; அறிவு பயவாது. இலக்கியம் கற்குந்தோறும் சொற்செல்வம் பெருகுவதுகண்டு மகிழ்க. இனி நாம் அருஞ்சொற்கள் என்று கருதுபவை உண்மையில் அருஞ்சொற்களா? இலக்கியவுலகிற்கெனப் புலவர் தாமே படைத்துக்கொண்டனவா? என்னும் வினாக்கள் எழுகின்றன. மக்கள் வழங்கும் சொற்களை வைத்துக்கொண்டு புலவோர் செய்யுள் ஏன் செய்தலாகாது? என்ற ஓர் எதிர்ப்புணர்ச்சி கிளம்பும்போது, அன்னோர் யாப்புக்குக் கொண்டவை வழக்கில் இல்லாத சொற்களா? என மறித்து வினாவின், நிலை புலப்படும். கற்பவர் அறிவுக்குப் பொருள் தெரியாமையால், பாட்டிற் பயிலும் சொற்கள் வழக்கில் இல்லாச் சொற்கள் என்று ஆகுமா? ஒருமொழியில் எண்ணிறந்த சொற்றொகுதி உண்டு. கலைக்கும் குலத்துக்கும் தொழிலுக்கும் சூழ்நிலைக்கும் தகப் பகுதிச்சொற்கூட்டம் பல்வகை உள. ஒரு மாவட்டத்தில் வழங்கும் சொற்கள் மற்றொரு மாவட்டத்தில் வழங்கா. புலவர்கள்கூட ‘அறிதோறு அறியாமை கண்டற்றால்’ என்றபடி, வழக்கிடைப் புதியவாய் அறிந்து வரும் சொற்கள் அளவில. பிறமொழிப் பெருங்கல்வியாளரும் அம்மொழியின் அகரமுதலை அடிக்கடி புரட்டிப் பார்த்துச் சொற்பொருளை அறிதல் நாம் காணாததன்று. தமிழ்மொழியில் அருஞ்சொல் என ஒரு சொற்குழு இல்லை. தமிழ்மொழியில் அருஞ்சொல் பலர்க்கு மிகப்புரிந்த சொல்லாக இருக்கலாம். அகரமுதலைப் பார்த்தளவில், அறிந்தார்வாய்க் கேட்டளவில், அருஞ் சொல்லின் அருமை மறைந்தொழிகின்றது; அருஞ்சொல் அறிசொல்லாகின்றது. மக்கள் வாழ்க்கையே இலக்கியத்தின் பொருள். அவ்வாழ்க்கை பற்றிய சொற்கள் வழக்கில் உளவாதலின், புதுச்சொற் படைத்துக்கொள்ள வேண்டும் கடப்பாடு புலவனுக்கு இல்லை. மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான (தொல்.1590) எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே (நன். 388) என இலக்கண நூல்கள் சொல் மரபை வற்புறுத்தல் காண்க. ‘தாழ்ச்சி உயர்ச்சி சொலல்’, ‘நடையும் பறப்பும் உணர் வண்டிகள்’ ‘வேலையனைத்தையும் செய்யும் வினைச்சி, ‘வில்லர் வாழ்வு குன்றி’எனவாங்கு சொல்லிடைப் புது வடிவங்களையும் தமிழோசை, தமிழ்ச்சாதி, தமிழ் முழக்கம், கவிப்பெருக்கு, வெள்ளிப் பனிமலை, வெண்பனி முடியிமயம், மணிக்கொடி, வீட்டுவார்த்தை என வாங்கு தொடரிடைப் பல புதுப் புணர்ச்சிகளையும் பாரதியார் படைத்துள்ளார். இங்ஙன் வழக்குச் சொல்லடிப்படைமேல் ஆக்கஞ் செய்யும் உரிமையும் ஆற்றலும் புலவனுக்கு உண்டேயன்றி, அடிப்படையைப் படைக்கும் உரிமை அவனுக்கில்லை. மீறிப் படைப்பானாயின், மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும் (1691) என்று முதனூலாசிரியன் அச்சுறுத்துவன். வழக்கிலக்கணம், செய்யுளிலக்கணம் என ஒரு வேறுபாடு இலக்கணத்தில் உண்டு. ‘போக்கின்றென்ப வழக்கினுள்ளே’ (65), ‘வழக்காறல்ல செய்யுளாறே’ (501) ‘முற்படக்கிளத்தல் செய்யுளுள் உரித்தே’ (522) என்றபடி, இருவகை வேற்றுமைகளை விதந்து கூறுவர் தொல்காப்பியர். அங்ஙன் வழக்கிற்கே வருஞ்சொல் செய்யுட்கே வருஞ்சொல் எனச் சொற்றனிமை செய்யாமை அறியவேண்டும். அத்தகைய ஒரு சொற்கூட்டம் தமிழ்மொழியில் இன்மையே முதனூலாசிரியன் வேற்றுமை தெரிக்காமைக்குக் காரணமாம். ஒருமுறை பொருளைத் தெரிந்து கொண்டபின், அருஞ்சொல் என்ற அடைநிலை நிற்குமா? இத் தொல்மரபும் மெய்வழக்கும் தெளியாமல் ‘செய்யுட்கு உரியன உரிச்சொல்’என்று நன்னூலார் மயங்கி எழுதிவிட்டார். நாம் இயல்பாகப் பேசிவரும் வாய்ச்சொற்களை இப்போது ஆராய்வோம். அருஞ்சொல்லின் முடி எனத் தக்க இச் சொல்லையுமா நம் நா சொல்லுகின்றது என நினைப்பார்க்கு வியப்பு உண்டாகினும் உண்டாகலாம் தாய் மொழியாதலால், பல பெருந்தமிழ்க் கிளவிகளை உரியபொருளில் இயல்பாகச் சொல்லுகின்றோம்; புரிந்துகொள்கின்றோம். நம் பேச்சினை ஒருவர் இடைமறித்து, நீர் சொன்ன சொல்லுக்குப் பொருள் என்ன ஐயா என்று கேட்டால், அப்போது அறிவோம், நம் வாய்ச்சொற்களுக்குப் பொருள் தெரியாமல் பேசி வருகின்றோம் என்று. ‘வளியென வரூஉம் பூதக்கிளவி’ (தொல்.242), ‘வளிமிகின் வலியும் இல்லை’ (புறம் 91) ‘வளி வழங்கும் மல்லல்மா ஞாலம்’(குறள்.245) என வரும் இலக்கியப் பகுதிகளில் ‘வளி’என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன? பார்வைக்கு இஃது ஓர் அருஞ்சொல்தானே. சூறாவளி என்ற வழக்கைக் காண்மின். காற்று இதன் பொருள் என்று இப்போது விளங்கும். மிகப் பழங்காலத்து வளி என்னும் சொல்தான். பெருவழக்காக இருந்தது. ‘நிலம்தீ நீர்வளி விசும்பு’ (தொல்.1589), ‘விசும்பு தைவருவளியும்’ (புறம்.2), ‘வளி முதலா எண்ணியமூன்று’ (குறள்.941) என ஐம்பூதங்களைக் குறிப்பிடுமுறையில் வளிச் சொல்லையே கையாண்டனர். காற்று என்பது அன்று அரிய வழக்கு. மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன ஐம்பொறிகள் எனப்படும். ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐம்புலன்களை உட்கொள்ளுதலால், ‘இவைபொறி எனப் பெயர் பெற்றன. பொறி என்பது ஒன்றை உள்வாங்கிக் கொள்ளும் கருவிக்குப் பெயர். எலிப்பொறி என்னும் வழக்குத் தொடரைக் காண்க. ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ (குறள்.6), ‘புலனைந்தும் பொறிகலங்கி’(சம்பந்தர் தேவாரம்) என்ற இலக்கியத் தொடர்களையும் காண்க. பொறி என்பதற்கு நல்லூழ் என்ற பொருளும் உண்டு. பொறிகெட்டவன் என்னும் வழக்கைக் காண்மின். ‘பொறியின் யாத்த புணர்ச்சி’ (தொல்.1057), ‘பொறியறு நெஞ்சத்து’ (சிலப்.3069) என்ற செய்யுள் அடிகளையும் காண்மின். பா - பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை என்பர் பேராசிரியர். பா என்ற சொற்குப் பரப்பு என்னும் பொருளைச் சிறுமியர் உடையாம் பாவாடையிலும், ‘பால்மருள் மருப்பின் உரல் புரை பாவடி’ (கலி.21) என்ற சங்கத் தொடரிலும் பார்க்கலாம். ‘மாடு நின்ற அம்மணி மலர்ச்சோலை புக்கான் அநுமன்’ என்பர் கம்பர். பசுமாடு காளைமாடு என்று பொருள் செய்தால் எளிய சொல் என்பீர்கள். கால்மாடு, தலைமாடு என வழங்குகின்றோமே. காற்பக்கம், தலைப்பக்கம் என்பதன்றோ உரை. மாடு - பக்கம்; எனவே கம்பர் தொடருக்குப் ‘பக்கத்து வானளவு உயர்ந்து நின்ற சோலை’ என்பது பொருள். ‘மாடல்ல மற்றையவை’ (400) என்ற திருக்குறளுக்குப் பிற செல்வங்கள் கல்விச் செல்வத்தின் பக்கம் இருப்பத் தகுதியற்றன எனப்பொருள் செய்யலாம். அறிவன் முல்லை கணிவன் முல்லை, இல்லான் முல்லை, மூதின் முல்லை எனப் புறத்திணையில் பலதுறைகள் வரும். இயல்பு நிலை, தன்மை என்பது முல்லைச் சொல்லின் பொருள். தன்னிலை மாறியவனை, மொல்லை மாறி; (முல்லை மாறி) என வழக்கில் வையக்கேட்கின்றோம். விய்யஞ் சமயத்துக் கூட உதாவதவன் என்று ஒருவர் சினந்து உரைத்தபோது, இதன் கருத்து என்ன என்று எண்ணலானேன். ‘காதலன் தன்வீவும் காதலி நீ பட்டதூஉம்’ என்பது சிலப்பதிகாரம். (அடி.4658) வீவு - திடீரெனச் சாதல். வாழ்வரசி என்பதனை வாவரசி என ழகரமின்றிச் சொல்லுகின்றனர். அதுபோல், தமிழ்தொன்மை மொழியாதலின், வீழ்வு என்பது வீவு என இளங்கோவின் காலத்தே மரூஉஆயிற்றுப்போலும். திடீரென இறக்குங் காலத்துக் கூட உதவாத கொடியன் என்ற கருத்தை, விய்யும் (வீயும்) சமயம் என்னும் தொடர் குறிக்கின்றது என்று சிலப்பதிகாரத்தால் அறிந்தேன். ‘கொடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை, உள்ளினும் உள்ளஞ்சுடும் (799) என்ற திருக்குறளை ஒப்புநோக்குக. ஐயனார்க்கு மண்சுதையால் குதிரைகள் செய்து கோயிலின்முன் வைப்பது வழக்கம். இவ்விழாவிற்குப் ‘புரவி எடுப்பு’என்பது பெயர். புரவி -குதிரை. “பால்புரை புரவி நால்குடன் பூட்டி” எனப் பொருநராற்றுப்படையில் இச்சொல் வருதல் காண்க. புரட்டாசித் திங்களில் குழந்தைகள் அம்பெடுத்து வாழைமரத்தைக் குத்தும் விழா இன்றும் நடைபெறுகின்றது. மானம்பு (மகார் நோன்பு என்பதன் மரூஉ) என்றும், கிலுகிலுப்பை எடுத்தல் என்றும் இவ்விழாவினை அழைக்கின்றனர். மகாஅர் அன்ன மந்தி மடவோர் நகாஅர் அன்ன நளிநீர் முத்தம் வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கி.... கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடும் ஒரு குரங்கு நத்தைக் கிழிஞ்சலில் முத்துக்களை இட்டுக்குலுக்கி விளையாடுவதை மேற்கண்டவாறு புனைகின்றார் சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் நத்தத்தனார். திண்ணைப் பள்ளியில் விடுமுறைக்கு ‘வாவு’ என்ற ஒரு சொல்வழக்கு உண்டு. பதினைந்து நாட்கு ஒருமுறை - நிறைநாளும் மறை நாளும் - விடுமுறை அளிப்பது பண்டை வழக்கம். ஆதலின் பதினைந்து என்ற பொருள் தரும் உவாச்சொல் விடுமுறையைக் குறிப்பதாயிற்று. உவாஅப் பதினான்கு என்பது இலக்கணத்து வரும் ஒருதொடர், ‘உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை’ (புறம்.3) என்ப நிறைமதியைக் குறிக்கின்றது. ஆராய்ச்சி, நாற்று, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, ஓட்டாஞ்சில், மாணி, மாரியம்மை, கார்காத்தார், முருகன், காவடி, கழைத்கூத்து, அண்ணன், அண்ணி, கண்டது கடியது, கீரையாய்தல், ஆவுடையார், புடைவை, மடைப்பள்ளி, அக்காரவடிசில் எனவாங்கு எண்ணில் சொற்களைத் தமிழ் மக்கள் மிக இயல்பாக நீரோட்டம்போல் வழங்குப; என்றாலும் அவற்றின் சொற்பொருள் அறியார். வழிவழியாக வந்த பொருள் பிறழாது சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அச்சொற்களை இலக்கியத்துக் காணுங்கால் புதியன என்று தடுமாறுகின்றனர். வழக்கு நினைவு வருவதில்லை. ஒருவன் ‘என்தாய் மலடி’என்பது போல இன்னோர் நிலை காணப்படவில்லையா? மக்கள் தம் வாய்ச்சொற்களுக்கு - வழக்குச் சொற்களுக்கு - இது பொருளென அறிந்து கொள்வராயின், இலக்கியத்து வரும் சொற்களை இன்முகத்தோடு வரவேற்பர். இன்னோர்க்கு இலக்கியம் தானே செம்பாகம் விளங்கிவிடும். 11. வாழ்க்கைத் துணை I இந்நாள் மக்களுலகமும் மாணவவுலகமும் பிறர் பலர் சொற்பொழிவைக் கேட்பதில் பேரார்வம் உடையனவாய் விளங்குகின்றன; பெரும்பொருள் செலவிட்டுக் கேள்விச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. இத்தமிழ் உணர்ச்சி வரவேற்றற்கு உரியது; வாழ்த்துதற்கும் உரியது. கேள்வி அறிவுக்கு இன்றியமையாதது என்றாலும், கற்றற்கு உரிய வாய்ப்புப் பெற்றவர்களும், வாய்த்த பருவம் உடையவர்களும் அவ்வாய்ப்பைப் புறக்கணித்துக் கேள்வியிலேயே காலந் தள்ளுதல் ஆகாது. `கற்றிலனாயினும் கேட்க’ என்ற திருக்குறளில் கல்விக்கு முதன்மை கொடுத்தல் காண்க. ஆதலின் கல்விச் செல்வம் ஈட்டு தற்குரிய பருவத்தில், மேடைக் கேள்விச் செல்வத்திற்கு மாணவர் ஆசைப்படுதல் அத்துணை அறிவு நலம் அன்று; ஆக்கமும் அன்று. II மருத்துவம், உழவியல், பொறியியல் என்றினைய தமிழ் வழங்காக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் கேள்வியால் பெருகியோடும் தம் தமிழுணர்ச்சியை நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். இன்றேல், இவ்வுணர்ச்சி வெள்ளம் தமிழ்ப்பைங்கூழை அழித்துத் தமிழ்நாட்டை அறுத்தோடி செய்துவிடும். ஓடிச்சாடும் காட்டாற்றை அணைகட்டிப் பயிர் வளம் காண்கின்றோம். மின்சாராற்றலைக் கம்பிப்படுத்தி ஒளி பெறுகின்றோம். பரந்த களத்தைச் செதுக்கி வழிநடையாக்கு கின்றோம். தமிழ்க்காதல் சின்னாளில் சாதல் எய்தாதபடி ஒரு நூல் வழிபடுத்த வேண்டும். சிறந்தவையென யாரும் ஒப்பும் நூல்கள் பல தமிழில் உள. குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, பெரியபுராணம், இராமாயணம், அருட்பாசுரங்கள் என்றின்ன வகையில் ஒரு முழு நூலையாவது வாழ்க்கைகைத் துணை நூலாகக்கொண்டு பயிலுங்கள். தமிழில் உள்ள எல்லா நூல்களையும் படிமின் என்ற அறிவுரை சொல்லவில்லையே என்று சில உள்ளங்கள் எண்ணலாம். முழுதும் கற்க முயல்வார் முயல்க. ஒவ்வொரு நாளையும் கடத்தி மகிழும் வாழ்க்கைப் போராட்டம் பெரிதாகி வரும் இஞ்ஞான்று, எல்லாத் தமிழும் கற்றாகுக என்ற சொல்லறம் செயலில் ஒதுக்கப்படும்; என்றாலும் ஒரு பிறப்பிற்கு ஒரு பெருந்தமிழ் நூலையாவது கல்லாதவன் தமிழனா? நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ, சொல்லீர்! எடுத்த இத்தமிழ்ப் பிறப்பில் இணையற்ற ஒரு தமிழ்ப் பனுவலைக்கூடக் கற்க இயலவில்லையே; பொழுதெல்லாம் சோற்றுக்கே போகுதந்தோ என்று கூறிக் கழிக்கும் தமிழ்ப் போலியன், வள்ளுவர் நடைப்படி, அவியினும் வாழினும் தமிழுக்கும் தமிழகத்திற்கும் என்? தமிழ்நாடு என்பது நம் தாயகத்தின் பெயர். நாட்டின் பெயரே ‘தமிழை நாடுக’ என்று மொழிப் பற்றையும் குழைத்து ஊட்டக் காண்மின். தமிழைப்படி என்று ஏவல் செய்ததை ஓர்மின். ஆதலின் சீப்பு, கண்ணாடி முதலிய புழங்கு பொருள்கள் போல, ஒரு பெருந் தமிழ் நூலையும் உங்கள் கண்பார்வையில் வைத்து அடிக்கடி பயன்படுத்துங்கள். சிறந்த ஒரு நூலை நீரே குறிப்பிடுக என்பீராயின், திருக்குறள் என்பேன். அந்நூல் எல்லோரும் கற்றற்குத் தகுவது; வாழ்வு வேண்டும் என்பவர் கற்றுத் தீரவேண்டுவது; தமிழ்வகுத்த அகமும் புறமும் தழுவியது; வரப்பண்ணுதற்கு எளியது; இனியது; கைக்கு அடக்கமாவது; அணியாவது; வாழ்வே பொருளானது. சில குறள்களுக்குப் பொருள் விளங்காமையை - பொருள் வேற்றுமைகளைப் பொருட்படுத்தற்க. குறள் மூலத்தைக் கற்று அருஞ்சொற் பொருள் அறிந்து இடையறாது நினைக. இதற்குப் பின் திருக்குறள் பற்றிப் பல்லோர் எழுதிய உரைகளையும் உரைநடைகளையும் காலத்திற்குத்தக்க அறிந்து தெளிக. இவ்விளக்க நூல்களைப் படிப்பது கல்வியை வளர்க்கும். குறள் மூலத்தைப் போற்றிக் கற்பதுதான் வாழ்வை வளர்க்கும். III ‘வாழ்கைத் துணை’ என்ற தலைப்பு நும் வாணாள் முழுதும் ஒரு பெருந் தமிழ்ப்பனுவலைத் துணையாகக் கற்க என்ற கருத்தைக் குறிப்பது என நீவிர் எண்ணியிருப்பீர். முறையான கல்வி பெறுதற்குத் தமிழ் வகுப்புத் தொடங்கும் இவ்விழாவிற்கு இத்தலைப்பு ஏற்றதேனும் நீவிர் கருதும் பொருளில் நான் முதன்மையாகப் பேச நினைக்கவில்லை. வாழ்க்கைத் துணையாவாள் மனைவி என்னும் பொருள்மேல் உரையாற்றுவன் என்று சிலர் பலர் கருதியிருத்தலும் கூடும். இத்தலைப்பு இக்கருத்தின் மேலும் எழுந்ததன்று என்று முதற்கண்ணே தெளிவித்து விடுவன். மயங்கிய ஒரு தலைப்பைக் கொடுத்து மயக்க அவாவினேன் அல்லேன், என் கருத்துக்கு ஏற்ற தொடர் இதுவென எனக்குப்பட்டது. இத்தொடர் மனையாளைக் குறிப்பது பொருத்தமில்லையா? என ஐயுறலாம். ஆராய்வோம். வாழ்க்கைத்துணை - யார் வாழ்க்கைக்கு யார் துணை? ஆண் வாழ்க்கைக்குப் பெண் துணை என்றால் வாழ்வெனப்படுவது ஆடவனுக்கு உரித்தென்றும், பெண் அதற்கோர் கருவி என்றும் பொருள்படவில்லையா? வாழ்வென்பது பெண்ணுக்கு இல்லையா? பெண் வாழ்க்கைக்கு ஆண் துணையென்று இத்தொடர்க்குப் பொருள் கொண்டால் இழுக்கு என்னையோ? மணமில் ஆண் தனிமையும் அன்ன பெண் தனிமையும் வாழ்வெனப்படா; காதலி இழந்த தபுதார நிலையும் காதலன் இழந்த தாபத நிலையும் (1024) என்ற முதனூற்படி, இல்லறத்து ஒருவரை இழந்து இருப்போர் நிலை கைம்மையாகுமேயன்றி வாழ்க்கையாகாது. இல்வாழ்க்கை என்பதனை வாழ்க்கையெனச் சுருங்கச் சொல்கின்றோம். ‘வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’, ‘வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்’ என்ற குறட்பகுதி களுக்கு ஆடவன் வாழ்க்கை என்று ஒருபாற்படப் பொருள் கொள்ளாது, இல்லற வாழ்க்கை என இருபாற் பொதுமைப் படப் பொருள் கொள்ளவேண்டும். இங்ஙன் பொருள் கொண்டாலும், ‘வாழ்க்கைத்துணை’ என்னும் தொடர் திருக்குறளில் மனைவியையே குறித்து நின்கின்றது. அதற்குக் காரணம், இல்லாள் என்னும் பெயரும் விருந்தோம்பல் முதலாம் இல்லறக் கடமைகளும் அவளுக்கே, தமிழ் நாகரிகப்படி உரியனவாம். ‘புகழ் புரிந்த இல்லிலோர்’என இல் என்னும் பெயர் மனைவிக்கே உரித்தாதல் காண்க. IV திருக்குறட்படி வாழ்க்கைத்துணை என்பது மனையவளைச் சுட்டுமாயினும், நாம் இன்று அப்பொருளிலே மட்டும் ஆளவேண்டும் என்பதில்லை. கணவன் மனைவி கூட்டுறவு வாழ்க்கை எனப்படுதலின் அவர் வாழ்க்கைக்குத் துணை பிறர்வேண்டும். இல்வாழ்வு துனியாற் பிரிவின்றி அறியாப் பிணக்கத்தால் அழிவின்றி நீடித்து இயங்குதற்குச் சான்றோர் துணைவேண்டும். இக்கருத்தை அறிவுறுத்தவே இத்தலைப்பினைக் கொண்டேன். ஆணும் பெண்ணும் உள்ளம் ஒத்துத் தாமே மணம் புணர வேண்டும் என்று களவு பேசும் தமிழுக்கு, காதலைப் பொருளாகக் கொண்டு அகத்திணை கண்ட தமிழுக்கு இக்கருத்து முரணில்லையா? அகவொழுக்கத்திற் புறத்தார் தலையிடலாமா? என்று நீவிர் வெகுண்டு வினவலாம். ‘யாணம்’ சான்ற அறிவர் கண்டோர்’(1447) கற்பில் கூற்றிற்கு உரியர் என்று தொல்காப்பியர் மரபு சுட்டுகின்றது. இடித்துவரை நிறுத்தலும் அவர தாகும் கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் (தொல்.1100) கணவன் மனைவி என்னும் இல்லறவுறுப்பினர் அறிவோர்க்குக் கட்டுப்பட்டவர் என்றும் குடும்பத்துக்கு மாறாக நடப்பாரேல் அவரைத் திருத்தும் கடப்பாடு அறிவோர்க்கு உரியது என்றும் தமிழ் முதல்வன் மிக வெளிப்படையாகவே கற்பியலில் கூறிப்போதல் எண்ணத்தகும். V வள்ளல் பேகன் மன்னன் இனத்தவன். அவன் தன் மனைவி கண்ணகியைத் துறந்தபோது, அகத்துறை பாடிய கபிலர் முதல் நால்வர் இஃது ஒருவன் தனவொழுக்கம் என்று வாளா இருந்தனரா? மன்னன் ஆயிற்றே எனப் பின் வாங்கினரா? அவன் இருப்பிடம் தேடிச்சென்று வல்லவாறு தாக்கி இடித்துரைத்த ஐந்து பாடல்களைப் புறநானூற்றில் பார்க்கின்றோமே. ‘குழல் இணைவதுபோல் அழுதனள் பெரிதே’ (புறம் - 143) எனக் கரைந்து திருத்துகின்றார் கபிலர். ‘பசித்தும் வாரேம் பாரமும் இலமே’ (புறம் 145) என்று வெறித்து நகையாடுகின்றார் பரணர். ‘தண்கமழ் கோதை புனைய வண்பரி நெடுந்தேர் பூண்க நின்மாவே’ (புறம். 146) என மன்னனை ஏவுகின்றார் அரிசில்கிழார். ‘புதுமலர் கஞல இன்று பெயரின் அதுமன் எம்பரிசில்’(புறம்.147) என்று புதுப்பரிசு வேண்டுகின்றார் பெருங்குன்றூர் கிழார். ஆதலின் குடும்ப நல்வாழ்விற்கு - சிறு பெருந்தடைகளை அகற்றிக் குடும்பச் சகடத்தை ஓட்டுவிப்பதற்கு - சான்றோர் துணைமையை நம் நாகரிகம் விதிக்கின்றது என்பதனை இலக்கணத்தாலும் இலக்கியத்தாலும் அறிகின்றோம். VI நாடெனப் படுவது வீட்டின் கூட்டம். வீடுகள் வாழ்வறியாது நிலைகுயுமேல், நாடு முடிவில் அடிமைப்படும். வீட்டின் செம்மையே நாட்டின் செம்மையாகக் கண்டவன் தமிழன். மக்கள் தம் வீட்டைக் காக்கும் பற்றொடுதான் நாட்டுப் பற்றுக்கொள்ப. அணையின் நீர்நலம் பயிர்நலமாதல் வேண்டும். நாட்டு வளர்ச்சி வீட்டு நலமாய் முடிதல் வேண்டும். நாடு வீடு காப்பதால் வீடு நாடு காக்க விழைகின்றது. மகளிர் மேற்றாக மூதின் முல்லைத் துறையும் பண்டு ஏற்பட்டது. கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தார் என்னையர் - பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் பின்னோடி எய்போற் கிடந்தானென் ஏறு (வெண்பாமலை 176) நாட்டிற்கெனப் பொருளகத்துத் தன் தந்தை, தன் கணவன், தன்னுடன் பிறந்தாரெல்லாம் செத்தொழிய பெற்ற ஒரு மகனையும் சாகக்கொடுத்தாள் ஓர் இல் மகள் என்றால், நாடு காப்பது வீடு என்ற அடித்தளம் பெறப்பட வில்லையா? செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே (புறம். 179) சங்க காலத் தமிழ் மகளிரின் நாட்டுப்பற்று இத்தகையது. தமிழ்நாடு இல்லற வாழ்வைப் பெரிதும் போற்றியது. தமிழரசு குடும்ப ஆணிவேர் அறாது வழியுற ஆவன எல்லாம் செய்தது. தமிழ்ப் புலவோர் கணவர் மனைவியரின் பிணக்குக்களை அரும்பிலேயே அறிவுறுத்திக் கிள்ளியெறிந்தனர். VII காதலர்க்கு உடல் இரண்டு உள்ளம் ஒன்று எனக் காவியம் ஓவியமாகப் புனைந்தாலும், நடைமுறையில் காதலர் உள்ளங்கள் கடிய கொடிய உள்ளங்களாக இருத்தல் காண்கின்றோம். கணவன் அல்லது மனைவியின் உடல் கிணற்றில், குளத்தில், ஆற்றில், கடலில் மிதக்கவும், கயிற்றில் தொங்கவும், புகையூர்தித் தடத்துக் கிடக்கவும் அவலப்படு கின்றோம். இவை காதலைக் காக்க வந்த சாதல் அல்ல. காதலை அறிவோடு பேணிக்கொள்ளத் தெரியாமையால் விளைந்த சாதலாகும். இன்று செய்தித்தாள்களில் குடும்பக் கோணல்கள் பத்தி பத்தியாக வெளி வருவ. வீட்டின் இழிவு நாட்டின் செய்தியாக வருவதை மக்கள் விருப்புற்றுப் படிக்கின்றனர். நாடு நன்னாடாக வேண்டுமேல், வீடு இன்ப வீடாதல் வேண்டும். தலைவன் தலைவி பிணக்கமில் வாழ்வு நடத்தவேண்டும். பிணக்கம் பெருகுங் கால் பொய்ம்மானம் நச்சாது, தமிழியற்படி, சான்றோர் துணையைத் தாமே நாடவேண்டும். இந்நாட்டம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்று. பெரியாரைத் துணைக்கோடல் அரசாட்சிக்கே யன்றி இல்லாட்சிக்கும் இன்றியமையாதது. VIII வெவ்வேறிடத்துப் பிறந்து வேறு வேறு சூழ்நிலையில் பல்லாண்டு வளர்ந்த இருவர் மணம் கொள்கின்றனர். எல்லா வகையானும் இவ்விருவர் மனமும் இயல்பாக ஒன்றிவிடும் என எதிர்பார்ப்பது தவறு. ஒருவர் சொற்போக்கையும் சொற் குறிப்பையும் ஏனையவர் மயக்கமறப் புரிந்துகொள்ளவே நாட்பிடிக்கும். இம்முன்னிலையைப் பண்டைத் தமிழர் பக்குவமாக ஊன்றி நோக்கினர். தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின்று மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே (குறுந்.167) வரைந்து கொடுத்தபின், செவிலி தலைவியின் வீடு அடிக்கடி செல்வது வழக்கம். விருந்துண்பது நோக்கமன்று; இல்வாழ்க்கையைக் காண்பது நோக்கம். கணவனொடு மாறுபட்ட குறிப்புப் புலப்பட்டால், நேர்படுத்துவது நோக்கம். தற்கொண்டானையும் பேணுவது மனைவி பொறுப்பாதலின், வீட்டியல் என்பது பெண்ணியல் ஆகும். ‘நன்கு ஆக்கி முறுவல் பூத்துச்சோறிட்டாள். விரும்பி அவனும் உண்டான்; இவள் முகம் மலர்ந்தது’என்று தான் கண்ணாரக் கண்ட ஒற்றுமையைச் செவிலி நற்றாய்க்கு உவந்து கூறுகின்றாள். இல்லறம் தழைக்கின்றது. காதற் கருவிலிருந்து குழந்தைக் கனி பழுக்கின்றது. இன்பக் குழவியை இடையூறு என்று எண்ணாது நடுவே கிடத்திப் பெற்றோர் இருபாலும் துயில் கின்றனர். காதல் அகலுகின்றது. கடமை குறுக்கிடுகின்றது. மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வன் நடுவணன் ஆக நன்றும் இனிது மன்றவவர் கிடக்கை முனிவின்று நீனிற வியலகங் சுவைஇய ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே (ஐங்.401) முக்கூட்டுக் குடும்பக் காட்சியைக் கண்ட செவிலித்தாயின் மகிழ்ச்சி எவ்வுலகமும் கடந்தது. மான் குடும்பமாக, இயற்கைக் காட்சியாகக் களிக்கின்றாள் அவள். பெற்றோர் மாறுபாட்டைப் பிறந்த குழந்தை தணிக்கும் ஆதலின் மக்கட் பேறுவரை தாய்வீட்டார் வந்து வந்து மகளின் இல்லற வொழுங்கைப் பார்த்துக் கொள்வது தொன்மைத் தமிழ் நாகரிகம். VX தலைவன் பரத்தை வேட்டையனாய்த் திரிந்தலைந்தான். மனைவி பொறுக்கும் நிலையின்றி அலமந்து அவனை மிக வெறுத்தாள். அவன் வீடு வர இசைந்தான் இல்லை. கவலையால் அறிவு பிறழ்ந்து கடமை தவறினாள். அன்பினால் நாளும் அவலநீர் வடித்தாள். தன்னிலை என்ன? தன் குடும்ப நிலை என்ன? குழந்தைகள் எதிர்காலம் என்ன? இவை பற்றி அவளுக்கு நினைவோடவில்லை. இந் நிலையில் தோழி துணையானாள். கணவன் மாட்டு எழுந்த சினவுணர்ச்சியை மட்டுப்படுத்தினாள். சினத்தால் பிறர் அடைந்த கேடுகளைப் பார் என்று ஏதுக்காட்டினாள்; அறிவு நிலைக்குக் கொண்டு வந்தாள். பரத்தமை தாங்கலோ இலலென வறிதுநீ புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை அதுபுலந் துறைதல் வல்லி யோரே செய்யோள் நீங்கச் சில்பதம் கொழித்துத் தரமட் டுண்டு தமிய ராகி.... வைகுநர் ஆகுதல் அறிந்தும் அறியார் அம்மவஃ துடலு மோரே (அகம்.316) என்று பாடுகின்றார் ஓரம்போகியார். ‘கணவன் நிலைகிடக்க; குழந்தைகள் நிலைய நினை’ என்று எடுத்துக்காட்டும்போது, வளரும் இளமுகங்களைக் காண்கின்றாள்; ‘பொறுத்தல் இறப்பினை என்றும்’ என அமைதிப்படுகின்றாள். தோழி துணையாய் இடித்துரையாவிடில் குடும்பப் பிரிவேற்பட்டுக் குழந்தைகள் கஞ்சிக்கலையும் அன்றோ? 12. பாரதியின் புதுமை I அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார் பாட்டிலும் பாட்டின் புலமையிலும் பாரதியார் பெருங்காதல் கொண்டவர். படைப்புக்களில் ஆச்சரியமான பொருள்பாட்டே என்று துணிந்தவர். கவிதையிலே நிலையான இன்பம் கண்டவர். பாட்டினால் நாட்டு மக்கள் பிணியையும் வறுமையையும் ஓட்டலாம்; மானுடச்சாதியை ஒன்றெனக் கூட்டலாம்; வைய முழுதும் பயனுறச் செய்யலாம்; நானிலத்தவர் மேனிலை எய்தலாம் என்று தெளிந்த புலவன் பாரதி. ‘என்தன் பாட்டுத்திறத்தாலே இவ்வையகத்தைப் பாலித்திடவேணும்’என வரங்கேட்டார். கதைகள் சொல்லிக் கவிதை எழுதும் ஆசையும், நீண்ட காவியம் படைக்கும் வேட்கையும், மக்களின் வாழ்க்கைச் சித்திரங்களை நாடகச் செய்யுள் ஆக்கும் விழைவும் பராதியாருக்கு இருந்தன. ‘இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்ற கடமையை அவர் பிறர்க்கே யன்றித் தமக்கும் சொல்லிக்கொண்டார். இவ்வாசைகளை நிறைவேற்றத் தக்க கல்விப் பெருக்கும் கவித்துடிப்பும் வாய்த்திருந்த பாரதியாருக்கு, ஐயகோ வாழ்நாள் தான் நிரம்ப இல்லை. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர் (குறள்.779) II கம்பர், வள்ளுவர், இளங்கோ, நூல்களில் மதி தீட்டிய பாரதி புலமையோடு பாடவேண்டும் என்று வேட்கை கொண்டார். ‘பாட்டுத்திறம்’ என்றும், ‘கவியுளம்’ என்றும் புலமையை அவர் சுட்டுவர். ‘யாமறிந்த புலவரிலே’ என்று எடுக்கும் எடுப்பை நினைக்கும்போது, அம் முப்புலவர்கூடத் தம்மையும் சேர்த்து ஒரு நாற்புலவராக நாடு எண்ணவேண்டும் என்ற குறிப்பு நம் புலவருக்கு ஓடியிருக்கும். ‘திறமான புலமை யெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ எனக் கூறுவரேல், புலமையைப் பற்றி அவர் எத்துணை உயர்வாக மதித்திருக்க வேண்டும்? பிரான்சு, ஆங்கில நாட்டுப் புலவோர் ‘என்தன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார்’ எனச் சீட்டுக் கவி விடுப்பரேல், தம் புலமை வணக்கங் கொண்ட புலமையென அவரே பெருமிதம் கொண்டிருந்தது வெளிப்படை. ஆதலின் மக்கட்கு எனப் பாடிய பாரதியார் தம் எளிய பாடல்களில் புலமை காண்பது அரிது என ஒரு சாரார் கருதுவதும், கொள்ளத்தக்கன வல்ல. “ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்கு உள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்தல் வேண்டும்”என்பது பாஞ்சாலி சபதத்தின் முகவுரை. வேதத் திருவிழியாள் - அதில் மிக்க பல்லுரையெனும் கருமையிட்டாள் என்ற அடிகளில் மறைந்துள்ள புலமை நயத்தைப் பாரதியாரே பின்வருமாறு எழுதியுள்ளார்: “மை கண்ணுக்கு நல்லது; அழகுங்கூட. ஆனால் அளவுக்கு மிஞ்சிப் பூசினால் விகாரமாகத் தோன்றுவதுடன் கண்ணே போனாலும் போய்விடும்.” அருமையில் எளிமையும் எளிமையில் அருமையும் இருப்பது உலகியற்கை. எளிய பாடல்கள் எல்லாம் வெளிய பாடல்கள் ஆகா. அண்ணாமலை நகரில் ஓர் பாரதி விழாவிற்குத் தலைமை தாங்கிய மகாமகோபாத்தியாய பண்டிதமணியார், ஓவியர் மணி ரவிவர்மாமேல் பாரதி பாடிய இரங்கற் பாடல்களை ஒவ்வொன்றாகச் சொல்லி, உட்கிடக்கும் புலமை வளங்களை அவையோர் வியக்க எடுத்துக்காட்டினர். பாரி காதை பாடிய மகாவித்துவான் இராகவையங்கார் பாரதியாரின் பாட்டுத்திறத்தைப் புகழ்ந்து உரையாடினார் என்று பண்டிதமணியார் கூறக்கேட்டிருக்கின்றேன். பாட்டுக்கு ஒரு வித்தகன் என்றோ வேந்தன் என்றோ கூறாது, ‘பாட்டுக்கு ஒரு புலவன்’என்று கவிமணி பாடிய புலமைத் தொடரை நினைமின். ஆதலின், மேலெழுந்தவாரி பாரதிகவியைப் படிப்பவர்கள் கவியுளம் காண மாட்டார்கள் என்பது சொல்லவும் வேண்டுமோ? ஐஐஐ புலமைத்திறம் பெறுதற்குப் பன்னூற் பயிற்சி இன்றியமை யாத அடிப்படையாகும். இராமாயணம், திருக்குறள், சிலப்பதிகார ஆசிரியர்களைப் பலவிடத்தும் போற்றிக் கூறுவதால், அன்னோர் பெருநூல்களில் மனந்தோய்ந்தவர் பாரதியார் என்பது தானே விளங்கும். எனினும், பாரதி கற்ற தமிழ்நூல்கள் இவ்வளவே என்று சிலர் அறியாது நம்புகின்றனர். யாதும் தமிழ் முகம் பாராத் தமிழர் சிறந்த இம் மும்முகங்களையாவது பார்க்கட்டும்; படிக்கட்டும்; எடுத்த தமிழ்ப் பிறப்பில் பயன்பெறட்டும் என்று ஒரு வழி காட்டினா ராகவே, மூவர் புகழ்ச்சியைக் கருதவேண்டும். பாரதியார் ஆரியம், ஆங்கிலம், பிரெஞ்சு முதலாய மொழிகளில் இலக்கியங்களைக் கற்றவர்: காளிதாசனையும் சாகுந்தலத்தையும் அருமையான முறையில் போற்றிச் சொல்லுகின்றார். பல்கலை பலதுறைப் பயிற்சி அவர்க்கு உண்டு. உலகவரலாறும் தமிழ் நாட்டு வரலாறும் தமிழ்மொழி வரலாறும் அவர் அறிந்தனவே. பாரதியார் தமிழ்நூற்கல்வி பெரியது. ஐவகை இலக்கணங் களையும் முறையாகக் கற்றவர். சந்தி பிரித்தெழுதுவது அவர் வழக்கமில்லை. தொடரிலக்கண முறைப்படி தான் சொற்களை உரைநடையிலும் தொடுத்து எழுதக் காண்கின்றோம். சீர்தோன்றப் பாடல்களை எழுதியிருக்கும் அவர் தம் கையெழுத்துப் படிகளே யாப்புப் பயிற்சிக்குச் சான்றுகள். பாவும் பாவினமும் எல்லாம் செய்யுளியல் குன்றாதும் இசை குன்றாதும் பாடவல்லவர் பாரதியார். இஃது உண்மையென்று சொல்ல நினைப்பதே நகைப்பிற் கிடமாகுமெனின், சான்று காட்டல் என்னாம்? பொன்ன னாரருள் பூண்டில ராமெனிற் கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துயர்க் காத லஃது கருதவும் தீயதால் எனப் பொருளிலக்கணம் பற்றிய ஒரு திணையை விளக்கிப் பேசுகின்றார் பாரதியார். அவர் சங்கத்தமிழ் கற்றவர் என்பது அகநானூற் றிலக்கியங்களை விலைக்கு அள்ளி வந்த கதையால் அறியலாம். வியாச பாரதத்தையும், வில்லிபாரதத்தையும் ஒப்புறழ்ச்சி செய்து கற்றுப் பாஞ்சாலிசபதம் இயற்றினார் என்பது தெளிவு. ஆழ்வார், நாயன்மார், திருமூலர், பட்டினத்தார், தாயுமானார் பாடல்களை நன்குபயின்றவர் என்பதனைப் பாரதி தம் சமயப் பாசுரங்களே காட்டும். என்றாலும், பாரதி தாம் கற்ற நூற்கருத்துக்களுக்கும் அடிமைப்பட்டவர் அல்லர்; படிக்கும் ஆற்றலினும் படைக்கும் ஆற்றல் மிக்கவர்; கற்கும் அமைதியினும் கவிசெய்யும் வெறிகொண்டவர். ஐஏ பாரதியாரின் சமயக் கருத்துக்கள் பல நாவுக்கரசரின் கருத்துக்களோடு ஒத்துள்ளன. தேவாரத்தின் பொருளும் சொல்லும் பாரதி பாடல்களில் கலந்திருப்பக் காண்கின்றோம். மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் விண்பால் திசைகெட்டிருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே (அப்பர்) உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே (பாரதி) சிறுதெய்வ வணக்கம் இருவர்க்கும் உடன்பாடன்று; ஒரு பெருங்கடவுள் சிவனே என்பது அன்னவர்தம் கோட்பாடு. ‘சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்’ என்ற தேவாரத்தின் விளக்கமாக, ‘மாடனைக் காடனை வேடனைப் பற்றி மயங்கும் மதியிலிகாள்’ எனப் பாரதியில் வருவதும்; சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்’ என்பதன் சான்றாக, ‘சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளிரோ’ எனப் பாரதியில் வருவதும் ஒப்புமையாகும். நாவுக்கரசர் ‘பாராண்டு பகடேறி வருவார் சொல்லும் பணிகேட்கக் கடவோமோ’என்று அரசியலில் சுதந்திர முழக்கம் செய்தவர்; அரசனை எதிர்த்தவர். சமயத்துறையிலோ ஆண்டான் அடிமையை நாடியவர். ‘சிவனே என்னும் நாவுடையார் நமையாள உடையார்’என்று பணிவுதலைக் கொண்டவர். அப்பரின் உலகவுரிமையும் இறையடிமையும் நம் பாரதியாரை மிகவும் கவர்ந்தன. பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் - பரி பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம். (பாரதி) நாமார்க்கும் குடியல்லோம்.... தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே. (அப்பர்) பாரதியார் சொல்லும்‘பரிபூரணன்’யாவன்? தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மையன் எனத் தேவாரத்தால் விளங்கல் காண்க. ஏ எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங் காவியம், பெரிய புராணம், பாரதம் என்ற பல பெருநூல்கள் தமிழ் மொழியில் உள. இவ்விலக்கியப் பரப்பை உட்கொண்டு தான் ‘தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்’ என்று பாரதியார் தமிழ்ப்புகழ் கூறினார். கம்பர், இளங்கோவின் காவியம் இரண்டனைத்தான் இப்புகழ்மாலை குறிக்கும் என்று கருதுதல் பிழையாகும். தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல் தீய கைக்கிளை யானெவன் பாடுதல் என்ற பாரதி பாட்டில் தேவர் என்பது ஒருகால் சீவகசிந்தா மணி ஆசிரியர் திருத்தக்க தேவரைச் சுட்டலாம். பேரரசன் மகனான சீவகன் சுடுகாட்டில் யாரும் துணையின்றிப் பிறக் கின்றான். ‘இவ்வாறாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கியல் வேந்தே’(309) என அவன் பிறப்பின் அவலநிலை தேவராற் பாடப்பெறுகின்றதை நினைக. சிந்தாமணிப் பொருட்குறிப்பு பாரதியில் காணப்பெறும் இடங்கள் இன்னும் சிலவுள. தவழ்மதுக் கோதை மாதர் தாமரைப் பூவ தாக உமிழ்நகை வேலி னானும் ஒண்சிறை மணிவண்டு ஒத்தான் (சிந்தா.191) தோயுமது நீயெனக்கு தும்பியடி நானுனக்கு பொன்னனாள் அமிர்த மாகப்புகழ் வெய்யோன் பருகியிட்டான்... மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள். (சிந்தா.190) பானமடி நீயெனக்கு; பாண்டமடி நானுனக்கு (பாரதி) கவிச் சக்கரவர்த்தி செயங்கொண்டார் முதற் குலோத்துங்கன் கலிங்கவெற்றிக்குப் பரணி பாடியவர். குலோத்துங்க சோழ னுடைய முன்னோர் பெருமைகளைச் சொல்லும்போது, கரிகாலன் இமயமலைச் செண்டினால் அடித்துத் திருத்தினான் எனவும், ‘பண்டு நின்றபடி நிற்க’என்று புலிப்பொறி பொறித்தான் எனவும் புலவர் பாடுகின்றார். கரிகாலனால் இமயம் அடிபட்ட கருத்தையே, விண்ணை யிடிக்கும் தலையிமயம் எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் (பாரதி) என்ற பாரதியின் தமிழ் வீரப்பாட்டு குறிக்கும். இவ்விடத்துக் கலிங்கத்துப்பரணி நினைவு பாரதியாருக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்ற துணிதற்கு, அடுத்துவரும் ‘சமர்பண்ணிக் கலிங்கத் திருள் கெடுத்தார்’என்ற அடியே சான்றாகும். ‘தவமே புரியும் வகையறியேன்’ என்ற விநாயக நான்மணி மாலைப் பாடல் ‘தவமே புரிந்திலன்’ என்னும் திருவாசப் போக்கை நினைவூட்டுகின்றது. சிலப்பதிகாரம், திருக்குறள், இராமாயணம் ஆகிய முந்நூல்களிலிருந்து பாரதியார் மேற்கொண்ட பொருளும் சொல்லும் நெறியும் பலப்பல. அவற்றை விரித்துச் சொல்ல இஃது இடனன்று; கட்டுரைக் கிடையே காண்க. பாரதி கவிதைத் தொகுதிக்குப் புத்தம் புதியதோர் பதிப்பு இனி மிக இன்றியமையாதது. சங்க நூல்களுக்கும் பிற நூல்களுக்கும் உ.வே.சா.செய்த பதிப்புக்களைக் காணுங்கள். அவைபோல, ஒப்புமைகளும் மேற்கோள்களும் கொண்ட பாரதி பதிப்பு ஒன்று வருவதைத் தமிழுலகம் விரும்பி யேற்கும். இம்மேற்கோட் பதிப்பு பாரதியின் புலமையை நாடறியச் செய்யும். பாரதியார் ஓரளவு தமிழ் கற்றளவில் நிரம்பப் பாடிவிட்டார் என்றும், கவிஞர் ஆவார்க்கு நூற் பயிற்சி அத்துணை வேண்டியதன்று; பாரதியைப் பார் என்றும், பாடிக் கொண்டேயிருந்தால் புலமை வந்துவிடும் என்றும் இளங் குழுக்கள் ஆறுதல் கொண்டு வளரப் பார்க்கின்றன. யாப்பிலக்கணம் கற்றபின் பாடும் ஆசையோ, பெருந்தமிழ் நூல்களின் பாவெள்ளத்தில் மூழ்கி எழுந்து பாடும் ஆசையோ இளந்தமிழ் உள்ளங்களில் தோன்றவில்லை. சொல்லாலும் தொடராலும் பொருளாலும் முன்னைத் தமிழ்ப் பனுவல்களோடு ஒப்பிட்டுக்காட்டும் ஓர் ஆராய்ச்சிப்பதிப்பு பாரதீயத்துக்கு வந்தால், வருங்காலத் தமிழ்வளர்ச்சியில் ஒரு நன்மரபு ஏற்படும்; மாசு ஏறாது; பாரதியைக் கற்குமுறையிலும் ஒரு செம்மை மக்களிடம் காணப்படும். இம்மேற்கோட் பதிப்பில் பாரதிக்குப் பின் வந்த நூல்களிலிருந்தும் ஒப்புமை காட்டவேண்டும். அதனால் பாரதியின் செல்வாக்கு வெளிப்படும். VI தன் மனத்திற் பதிந்த பொருளைக் கற்பவர் மனத்திலும் பதிக்கவல்ல மொழியாற்றலே புலமை எனப்படும். சிலப்பதிகாரம் நெஞ்சை அள்ளியதாகப் பாரதியார் சுட்டுவர். இக்கருத்துப் பதிப்பிற்குப் புலவன் ஆளும்நெறிகள் பலதிறத்தன அப்புலமைக் கூறுகளுள் ஒன்று சொல் வீழ்ச்சி. புலவன் பாடலில் தொடுக்கும் ஒவ்வொரு சொல்லும் பொருட்கு இன்றியமையாச் சொல் என்றும், மாற்றினால் நயம் கெட்டுப்போம் என்றும் கூறுப. அங்ஙனம் கூறின் எல்லா இடமும் அழுத்தம் உடையன எனப்பட்டு, ஓரிடமும் பொருள் சிறக்காது காணவேண்டிவரும். நீர்வீழ்ச்சி பருந்தின் வீழ்ச்சிபோல, பாட்டில் கருத்துச் சீர்த்த விடத்துத் தக்க சொற்களைப் புலவன் பெய்கின்றான்; அல்லது சொற்கள் வந்துவிழுகின்றன. பொருள்களை முறையாகச் சொல்லிச் செல்லும்போது, கருத்தழுத்தம் செய்ய வேண்டியக் கால், புலவன் சொல்லழுத்தம் செய்வான்; நெற்றிக்குத் திலகம் இடுவான். கவியின் உள்ளம் விளங்கித் தோன்றும். கொடிய துரியோதனன் கூடத் துகிலுரியும் இழிசெயலைத் தானே செய்ய விரும்பவில்லை. துரியோதனன் சொற்கேட்டு அச்செயல் செய்ய முன்வந்தான் துச்சாதனன். அவன் கொடுமை கயமைகளை எப்படிக் காட்டுவது? எழுந்தவன் திரௌபதியின் ஆடையைப் பற்றினான் என்றால் தீமை புலப்படுமா? துச்சாதனன் எழுந்தே - அன்னை துகிலினை மன்றிடை யுரிதலுற்றான் திரௌபதி துகில் என்னாது அன்னை துகில் என்று சொல்லுங்கால், தாயின் துகிலை உரிந்தவன் கொடுமை சட்டெனப் பதிவதோடு, சினவுணர்ச்சியும் தோன்றிவிடுகின்றது. ‘மன்றிடை யுரிதலுற்றான்’என்றபோது, அவையின் சிறுமையும் உடன்தோன்றக் காண்கின்றோம். ‘அன்னை’என்றதனால் உரியத் தகாதவள் துகிலை உரிந்தான் என்ற குறிப்பும். இந்நிகழ்ச்சியைச் சொல்லவந்த கவிஞனின் அறமும் புலப்படு கின்றன. துரியோதனனுக்குப் பாண்டவர்களைக் காட்டிலும் அன்னவர் பத்தினி மேல்தான் சினமிகுதி. அவளை இழிவு படுத்துவதே அவன் செயல்களின் நோக்கம். ‘அன்று நகைத் தாளடா - உயிர் மாமனே அவளை என் ஆளாக்கினாய்’ என்று திரௌபதி அடிமைப்பட்டதில் தனி யுவகை அடைகின்றான். துரியோதனன் ஒரு வஞ்சகன். அவன் சொற்கள் நேர்பொருளும் தரும், மறைபொருளும் தரும். இம்மாந்தனை அங்ஙனம் அமைக்க வேண்டுவது புலவன் பொறுப்பு. சூதாட்டத்தில் திரௌபதி தருமனால் விற்கப்பட்ட பொருளாவாள் என்பது கதை. முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவிமகள் இன்னே நாஞ்சூதில் எடுத்த விலைமகள் (பாரதி) என்ற தொடரில், துரியோதனன் திரௌபதியை ‘விலைமகள்’ என்று காரணப் பெயராகக் குறிக்கின்றான்; என்றாலும், அவள் ஓர் பரத்தை என அவன் கருதும் இழிவுக் குறிப்பும் அச் சொல்லில் அடங்கியுளதன்றோ? VII பெருமிதம் வாயாதவன் புலவன் ஆகான். அவன் சொல்லும் சொற்கள் மக்கள் செவியில் ஏறா. தமிழ்நாட்டிற் பிறந்த புலவர்களுள் சிறந்த பெருமிதத்தவர் பாரதியார். ‘மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர் தங்களையும் வணங்கலாதேன்’என்று அவர் கூறும் நெடுமொழிப் பாட்டை உள்ளுக. ‘பெறுமவற்றுள் யாமறிவதில்லை’(61), ‘யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை’(300),‘அவரன்ன ஒப்பாரி யாம் கண்டதில்’(1071) எனத் தாம் கண்ட மூன்று துணிவுகளைக் கூறவந்த வள்ளுவர், யான் என்னாது ‘யாம்’என்ற தன்மைப் பன்மை நடையில் மொழியக் காண்கின்றோம். இந்நடையே துணிவுப் பொருள் வெளியீட்டிற்கு ஏற்றது என்று கண்ட பாரதியார் - குறள் கற்ற பாரதியார் - ‘யாமறிந்த மொழிகளிலே,’‘யாமறிந்த புலவரிலே’எனச் சொல்லாட்சி செய்துள்ளார். பாரதியார் வேறிடங்களில் இங்ஙன் ஆட்சி செய்ததாக அறியப்படவில்லை. கம்பன் பிறந்தது, உலகிற்கு வள்ளுவனைத் தந்தது, சிலப்பதிகாரம் படைத்தது. வேதம் நிறைந்தது, வீரச்செறிந்தது, காதற்கன்னியர் சூழ்ந்தது, புவிச்செல்வம் அத்தனையும் பெற்றது, தமிழ்மொழி வழங்குவது எனப் பல சிறப்பு உடைய தமிழகத்தை எப்படிக் குறிப்பது? நிறைந்தது, நிரம்பியது, விரிந்தது, தொக்கது, குழுமியது, பரந்தது என்றெல்லாம் சொல்லினால் உள்ளக் கருத்துப் பதியுமா? ‘புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு’ என்றார் பாரதி. காடு மண்டிக் கிடத்தல் என்ற வழக்குத் தொடரைச் சிறிது மாற்றியமைத்து உள்ளங் கவர்ந்தார். ‘குமரி யெல்லை வடமாலவன் குன்றம் இவற்றிடையே’என்று வரம்பு கூறியதனால் இவ் வெல்லைக்கு வெளியுலகத்திலே புகழ் இவ்வளவு மண்டிக் கிடக்கவில்லை என்றும், பரவலாகவே காணப்படும் என்றும் குறிப்புக் காட்டினார். வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா (பாரதி) குமரி முனைக்கு ‘வாழும்’என்ற அடை கொடுத்த தன் கருத்து என்ன? தமிழகத்தின் தென்னெல்லை கடல்கோளால் அழிந்து குறுகி வந்த நிலவரலாற்றை பாரதியார் அறிவர். இப்போதுள்ள குமரி முனை இனியும் அழியாது வாழ வேண்டும் என்பது அவர் ஆசை. அவ்வாசையை ‘வாழும்’என்ற சொல்லால் புலப்படுத்துவர். நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ் செய்குமரி - ஓரத்திலே ஏன் நிற்கின்றாள்? தவம் ஏன் செய்கின்றாள்? இவ்வோரத்தோடு கடல் கிடக்க வேண்டும், முன்னேறி வரக்கூடாது என்பதுவே தவத்தின் நோக்கம் என இப்பாடலுக்கு விபுலானந்த அடிகள் நயங்கூறினாரெனச் சொல்லுப. வரை, சிலம்பு, அடுக்கம், குன்று, ஓங்கல் என்ற பல சொற்கள் மலையின் பொருளாக வரும். அவற்றுள் வெற்பு என்பது ஒரு சொல். ஒரு நாட்டிற்கு மலையரண் இருக்குமாயின், வெற்றி எளிதில் பெறலாம். மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாநில மீதது போற்பிறி திலையே (பாரதி) எனப் பாரத நாட்டின் முதற்பெருமைக்கு உரியதாக இமயமலைப் போற்றுவர் புலவர். இது வடவரணாய் நின்று இந்தியநாட்டைக் காக்கின்றது. வடக்கே வந்து இதனை வென்றார் யாரும் இலர். அங்ஙன் வெற்றித் திருவுடைய இமயத்தையும் தெற்கே யாண்ட தமிழ்வேந்தர்கள் வென்ற வரலாற்றை இலக்கியங்கள் பாடுகின்றன. விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்குந் திறனுடையார் என்று தமிழ்மறம் பாடும் பாரதியார், இமயம் எனும் வெற்பு என்று சொல்லாளுதல் நோக்குக. வெற்பு என்னும் தொழிற்பெயர் முதற்கண் வெற்றியைக் குறிக்கும். அரணாய் நின்று வெற்றிதரும் மலைக்கும் பெயராகும். VIII ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ - பாரதி. ஒலியின் கூட்டமே சொல்லாகும். ஆதலின் புலவன் ஒலிநயத்தாலும் கருத்தைப் புலப்படுத்துவான். அதற்கு நாம் அவன் பாடல்களை வாய்விட்டுப் படிக்க வேண்டும். சந்திபிரியாதும் எதுகைமோனை கொல்லாதும் சொல்லிப் பார்க்கவேண்டும். அப்போது கருத்து செவிவழியாக நெஞ்சிற் பாயும். ‘சுவை நண்ணும் பாட்டினொடு தாளம், மிக நன்றா உளத்தழுந்தல் வேண்டும்’என்று சத்தியிடத்து வரங்கேட்ட பாரதியாரின் கவிகளில் ஒலி நயத்திற்குக் குறைவேயில்லை. செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே. இப்பகுதியில் மெல்லிய வண்ணமும் னகரவொலிகளும் அமைந்திருத்தலால், தமிழின் இனிமை சொல்லானேயன்றி ஒலிநயத்தானும் விளங்கும். இராவணன் பாடினும் இப்பாடல் இனிமை குன்றாது. ‘பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’என வல்லொற்று இரட்டித்து நிற்றலால், வீரப்பொருள் தானே வெளிப்படுகின்றது. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் சீர்தோறும் தொடங்கும் நெட்டொலிகள் அச்சத்தின் ஏற்றத்தையும், அடுத்துவரும் குற்றொலிகள் அதன் இறக்கத்தையும் புலப்படுத்துவன. வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடிதோட் டென்னவன் கடிப்பிகு முரசே. (2914 - 16) என்ற சிலப்பதிகார அடிகளில் முரசின் முழக்கொலியைக் கேட்கின்றோம். அதுபோலவே பாரதியும் ‘வெற்றியெட்டுத் திக்குமெட்டக் கொட்டு முரசே’ எனப் பறையறைகின்றார். இங்ஙனம் முரசுப் பாடல்களில் டகாரவோசை கட்டாயம் இடம் பெறுதலாற்போலும், டமாரம் என்பது (டகாரத்தின் திரிபு) முரசுக்கு ஓர் பெயராயிற்று. VX பாட்டின் இயக்கம் நடை எனப்படும். புலவன் கருதிய பொருளைச் சொல் குறிக்கும்; ஒலி உணர்த்தும்; நடை எடுத்துக் காட்டும். ஒருவன் விரைந்து நடப்பதிலிருந்து காரியத்தின் விரைவைப் புரிந்துகொள்கின்றோம். ‘பைய நடக்கவும் தேற்றாயால், நின்பெண்மை ஐயப்படுவது உடைத்து’என நடைக்கும் பண்புக்கும் தொடர்பு சுட்டுகின்றார் முத்தொள் ளாயிரவர். புகழை விரும்பிய மனைவியையுடையானுக்கே ஏறுபோற் பீடு நடை இருக்கும் என்கின்றார் வள்ளுவர். கண்ணகியைத் தனிமையில் வைத்துப் பிரியும் கோவலன் நடை தளர்ந்தான் என எழுதுகின்றார் இளங்கோ. அருமையான செல்வம் - என்பால் அளவிலாத துண்டு ஒருமடங்கு வைத்தால் - எதிரே ஒன்பதாக வைப்பேன் (பாரதி) என்று உருளுகின்றது பாஞ்சாலி சபதத்தின் சூதாடுப்பாட்டு. “சூதாட்ட வருணனைக்கும் அதில் ஏற்படும் பரபரத்த வார்த்தைகளையும் செய்கைகளையும் விளக்குதற்கும் இந் நடை மிகவும் பொருந்தியது என்பது எளிதிலே காணப்படும்”என்று பாரதியாரே நடைபற்றி விளக்கம் தருகின்றார். எனவே பொருளுக்கேற்ற நடைகளைத் தேர்ந்து பல பாடல்களை ஆக்கியிருப்பார் என்றும், அப்புலமைத் திறத்தைக் கண்டறிந்து கற்றல் நம் கடமை என்றும் தெரியவேண்டும். ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா (பாரதி) என்ற பாட்டு குழந்தைக்கேற்ற கொஞ்சு நடையாகும். ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’என்ற அடி யார் தலையையும் ஆட்டிவைக்கும் கூத்து நடையாகும். ‘சுற்றி நில்லாதே போ, பகையே’என்பது எச்சரிக்கை நடையாகும். ‘தாரையடி நீ எனக்கு; தண்மதியம் நான் உனக்கு’ என்பது காதல் நடை. ‘முன்னே யிலங்கை அரக்கர் அழியமுடித்த வில் யாருடைய வில்’ என்பது பெருமித நடை. ‘நெஞ்சு பொறுக்குதிலையே’ என்பது ஏளன நடை. ‘வலிமையற்ற தோளினாய் போ போ போ’என்பது சின நடை. ‘மதலையர் எழுப்பவும் தாய் துயில் வாயோ’ என்பது அன்பு நடை. ‘பகைவனுக்கு அருள்வாய்’என்பது ஆண்மை நடை. ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் என்தன் மூச்சை நிறுத்தி விடு’என்பது வெறிநடை. ‘சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரியசந்திரரோ’என்பது இசை நடை. வில்லினை யெடடா - கையில் வில்லினை யெடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா ஒரு சொல்லையே அடுக்கிச் சொல்லியும், அடுத்துச் சொல்லியும் புலவன் கருத்துக்கு ‘வேகம் ஏற்றுகின்றான். ‘போரடா பொருதியாயிற் புறப்படு புறப்படென்றான்’ என இரணியன் கூற்றாகக் கம்பர் நடை தொடுப்பர். கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய் வண்ணப் பொற் சேலைகளாம் - அவை வளர்ந்தன - வளர்ந்தன வளர்ந்தனவே பாலருந்து மதலையர் தம்மையே பாத கக்கொடும் பாதகப் பாதகர் மூலத் தோடுகு லங்கெடல் நாடிய மூட மூடநிர் மூடப் புலையர்தாம் உரிய உரியத் திரௌபதியின் துகில் கண்ணபிரான் அருளால் வளர்ந்துகொண்டே சென்றதை, ‘வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே’ என்று ஒரு சொல்லை மும்முறை அடுக்கி, விரைவும் துணிவும்படப் பாரதியார் சுட்டுகின்றார். தட்டுத் தடையின்றித் துகில் ஒழுங்காக வளர்ந்தது என்பதனை, ஏற்ற விறக்கமின்றி ஒரு சீராக வரும் (குற்றொலியாகவே வரும்) ஒலி நயத்தாலும் உணர முடிகின்றது. பிள்ளை மணஞ்செய்யும் கொடியவர்களை,‘பாதகக் கொடும் பாதகப் பாதகர், மூடமூட நிர்மூடப் புலையர்’என்று வசைச் சொற்களைத் தொடுத்துக் கூறுதல் காண்க. அடுக்கு நடையைப் புலவன் அரிதாகவே கையாளவேண்டும். நீளக் கையாண்டால் படிப்பவர்க்கு உணர்ச்சி பிறக்காது. ஆசிரியன்மேல் நகைப்பே பிறக்கும். X புலவன் சொற்களை வைக்கோல்போல் ஏற்றும் வண்டிக்காரன் அல்லன் பீ பீ ஊதிக்கொண்டு செல்லும் தெருவூதியல்லன்; ஒத்த நடையிடும் படையாளன் அல்லன். அவன் சொல்லுள்ளும் ஒலியுள்ளும் நடையுள்ளும் கவியுள்ளம் ஆழ்ந்திருக்கும். அவ்வுள்ளம் ஓரடியாழத்திலும் இருக்கலாம்; ஓராயிரம் அடி ஆழத்திலும் இருக்கலாம்; ஒரு பாடலிலும் இருக்கலாம், பல பாடல்களிலும் தொடரலாம். ஒரு சொல்லிலும் இருக்கலாம்; சொற்றொடரிலும் சீரிலும் அடியிலும் அடிகளிலும் காணப்படலாம். பாரதி சொல்லுமாப்போல, கவியெனப் படுவான் உள்ளம் ஆழத்தில் கட்டாயம் இருக்கும். இக் கவியுள்ளத்தையே தொல்காப்பியர் ‘நோக்கு’ என மொழிவர். இந்நோக்கின் ஆழத்திற்கும் அழகிற்கும் மிகுதிக்கும் தகச் சுவைஞர்கள் புலவனைப் போற்றுப. நோக்கு நயங்களை ஆசிரியனே கருதி வைப்பதும் உண்டு; அவன் புலமையால் அந்நயங்கள் தாமே அமைந்து விடுவதும் உண்டு. தாமே அமையுமாறு புலமையாற்றல் மிக்க புலவன் நூலிலேதான் ‘நவில்தொறும் நூல்நயம்’ ஊறிக் கொண்டிருக்கும். வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு (பாரதி) மொழியால் தமிழ்ப்பற்றும் இனத்தால் தமிழர் பற்றும் நாட்டால் இந்தியப்பற்றும் கொண்டவர் பாரதியார் என்பது மேலையடிகளால் புலனாகும். இக்கோட்பாட்டிற்கு முரணில்லாமல் அவர் தம் பாடல்களுக்கு உரையும் நயமும் காணவேண்டும். தமிழ் உலகமொழிகளுள் இனியது; அவ்வினிய மொழியின் பெயரால் மக்கள் தமிழரென அழைக்கப் படுகின்றனர். ஆனால் அம்மக்கட்கோ தமிழ் தெரியாது. அவரோ பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு வாழ்கின்றனர். மொழிகளிற் சிறந்த தமிழால் பெயர்கொண்ட இம்மக்கள் நிலை மொழியின் பெருமைக்கே சிறுமைதரும். ‘நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!’ என்று காரணப் பெயருக்கும் இன்ன வாழ்கைக்கும் பொருத்த மில்லையே என்று கேட்கிறார் பாரதியார். வேறு எங்காவது போய் வேறு பெயர் சுமந்து வாழங்களேன்; தமிழரெனப் பெயர் தாங்கி இங்கு இருக்காதீர்கள் என்று நாணச் சொல்கின்றார். “ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்”- வாழ்கின்றோம் என்பதுவா புலவன் கருத்து? ஐம்புலன்களில் பேச்சு, கேள்வி, பார்வை என்னும் சிறந்த மூன்றை இழந்துவிட்டீர்கள்; உடம்பை வளர்த்து ஏதோ மூச்சு விட்டுக்கொண்டிருப்பதால், நீங்கள் இன்னும் சாகவில்லை என்று சொல்ல வேண்டியிருக்கின்றது; இதுவா வாழ்க்கை? என இடித்துரைப்பதுவே புலவன் நோக்கமாகும். புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவ தில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் என்றந்தப் பேதை யுரைத்தாள் - ஆ! இந்த வசையெனக் கெய்திடலாமோ சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் (பாரதி) இம் முப்பாடல்களையும் தொகுத்து நோக்கும் போதுதான் புலவன் உட்கிடை இதுவெனப் புலப்படும். 1. விஞ்ஞான நூல்கள் தமிழில் இல்லை. 2. விஞ்ஞானத்தைச் சொல்லும் ஆற்றல் தமிழுக்கு இல்லை என்பவை ஒருவன் வெளியிட்ட கருத்துக்கள். அவன் முதற்கருத்தில் தவறொன்றுமில்லை. ‘கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்’ என்று ஏவுவதிலிருந்தே பேதை என்பான் கூறிய முதற்கருத்தை - விஞ்ஞானப் பனுவல்கள் தமிழில் இல்லை என்பதைப் பாரதியாரும் ஒப்புகின்றார் என்பது தெளிவு. தமிழுக்குச் சொல்லாற்றல் கிடையாது; சாகும் என்று மற்றொரு கருத்துக் கூறினானே அவன்! அதற்காகத்தான். ‘அந்தப் பேதை யுரைத்தான்’என்று ஒரு வசவுச்சொல் கொடுத்தார் பாரதியார். ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’என்று அவன் சொல்லிய ஈற்றுச் சொல்லைக் கேட்ட ஒரு தமிழன்பருக்கு நெஞ்சு பொறுக்க முடியுமா? ‘கொன்றிடல் போல் ஒரு வார்த்தை’ என்று துடிதுடித்தார் பாரதியார். இக்கருத்தைச் சொல்லியவனை விடாது வைது தூற்றிக் கொண்டிருப்பது புலவன் உள்ளம் அன்று காண். திறமையில்லை என்று சொல்லுபவர்களை நீங்களும் என்போல் இகழுங்கள் என்று ஏவிவிடுவது புலவன் நோக்கன்று காண். இப்படி ஒருவன் சொன்னான் என்று நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டித் தமிழ்மக்கட்கு மானவுணர்ச்சி ஊட்டுவதும், தமிழின் வசையைத் துடைப்பதும், விஞ்ஞான நூல்கள் இல்லாக் குறையை நிறைவு செய்வதுமே பாரதியின் பாடல் நோக்கமாகும். என்றந்தப் பேதை யுரைத்தான் ஆ! இந்த வசையெனக் கெய்திட லாமோ சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் பேதையுரைத்தான் - ஆ! வசை -திக்கெட்டும் ஓடுங்கள். திரட்டிக்கொண்டு வாருங்கள் - எனது ஆருயிர் மக்களே! என்று படைத் தலைவன் கட்டளையிடுமாறு தமிழ்மக்களை வேகப் படுத்துகின்றார் ஆசிரியர். பாட்டின் முதலடியில் சினவுணர்ச்சி - இரண்டாமடியில் மானவுணர்ச்சி - மூன்றாமடியில் மறவுணர்ச்சி - நான்காமடியில் மகிழ்வுணர்ச்சி என நாலுணர்ச்சி களையும் இவ்வொரு பாட்டினால் புலப்படுத்திவிடுகின்றார் பாரதியார். XI சமுதாயவூழலைக் கண்டு கொதித்துப் பாடும் புலவன் தன் கோட்பாட்டைச் சேற்றில் எறிந்த கல்போல மக்கள் மனத்துள் பாய்வதற்குப் பலமுறைகளைத் தேடிப்பிடிப்பான். அம்முறைகளின் வேறுபாடுகளைக் கண்டதும் மயங்கி அவன் கோட்பாட்டைத் திருத்திக் கூற முயலலாகாது. அவன் துணிந்த நோக்கத்திற்கிணங்கவே அம்முறைகளுக்குக் கருத்தை உய்த்துணரவேண்டும். அவன் நோக்கம் எது என்பதனை எப்படி முடிபு கட்டிக்கொள்வது? கற்பனைப் பூச்சும் உணர்ச்சித் துடிப்பும் மிகாத அறிவுநிலையில் சில அடிகள் பாடியிருப் பானன்றே; அப்பகுதிகளைக் கொண்டு ஒரு புலவன் கொண்ட சமுதாய அறங்களைத் துணிந்துவிடலாம். வானத்தில் கரியமேகக் கூட்டங்கள் வெண்ணிலாவை நோக்கி ஓடுகின்றன. தன்னைத் தாக்க ஓடிவரும் கருங்கூட்டத் திற்குள்ளே புகுந்து ஒண்ணிலவு ‘நீல விதானத்து நித்திலம்’ என்றபடி, கருமேகத்தை ஒளி மேகமாக்குகின்றது. காண்கின்றார் பாரதிப் புலவர். தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே நலஞ் செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ வெண்ணிலாவே. இன்னா செய்தவர்க்கும் இனியவே செய்யவேண்டும் என்ற வள்ளுவம் இதனால் வெளிப்படை. பகைவனுக்கருள்வாய் - நன்னெஞ்சே - தின்னவரும் புலிதன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய் என்ற பாடலாலும் பாரதியறம் வெளிப்படை. பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா (பாரதி) பாதகரை மிதித்து உமிழ ஏவினாரெனச் சொற்கிடந்தாங்கு பொருள்கொள்ள முடியுமா? இவர் பாதகர் பாதகரல்லர் என்று காணும் பகுத்தறிவுதான் பாப்பாவுக்கு இருக்கமுடியுமா? முடியாததாதலின், பாப்பு (பார்ப்பு) நிலையிலேயே துணிவுணர்ச்சி யூட்டினார் பாரதியார் என்று நோக்கம் காண்பதே தகும். ‘நையப்புடை’என்ற புதிய ஆத்திசூடிக்கும் குறிப்பிதுவே. ‘தேடு கல்வியிலாத தொரூரைத் தீயினுக்கிரையாக மடுத்தல்’என்ற அடிக்கும், கட்டாயக் கல்வியை, முன்பு கல்வி சிறந்த தமிழ்நாடு முழுதிற்கும் இன்று வற்புறுத்தினார் பாரதியார் என்றே கருத்துக்கொள்ளப்படும். பாரதீயத்துக்கு முரணாகாமல் உணர்ச்சி செறிந்த பாரதியார் கவிகட்குப் பொருள் காணுக. 13. பாரதியின் பழமை I பழமை பழமை யென்று பாவனை பேசலன்றிப் பழமை யிருந்தநிலை - கிளியே பாமரர் ஏதறிவார் - பாரதி தொல்காப்பியம் முதல் பாரதீயம் இறுவாய்த் தமிழ்ப் பெருநூல்கள் பழமைப் பற்றுடையனவாகவே காணப்படுகின்றன; ஆலம் வீழ்து போலப் பழமையிலிருந்து தோன்றிப் பழமையைக் காப்பனவாகவே விளங்குகின்றன. இலக்கியம் என்பது மக்களினம் தோன்றியவுடன் தோன்றியதன்று; மொழியோடு உடன் பிறந்ததுமன்று. மக்கள் பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்தபின் பிறந்தது மொழி. மொழி பல்லாயிரம் ஆண்டு வளர்ந்தபின் எழுந்தது இலக்கியம். இலக்கியம் எழுதப்பட்ட காலத்துச் சமூகம் தொன்று முதிர் பழமையை எய்திவிட்டது. மக்கள் நினைவோட்டம் தடம் பட்டுவிட்டது. மொழிக் கருவியின்றி நினைக்கும் தனியாற்றலை மக்கள் நெஞ்சம் இழந்து விட்டது. சொற்களும் சொற்றொடர்களும் மரபாகிவிட்டன. ஆதலின், ஒரு நாட்டின் ஓரினத்தின் ஒரு மொழியின் முதலிலக்கியங்கூடக் கன்றிய வழக்கின் அடிப்படைமேல் எழுந்ததுவே என்று தெளிக. முதலெழுந்த இலக்கியங்களின் பிறப்புநிலை இதுவாயின், பின்னெழுந்த இலக்கியங்களைப் பற்றிச்சொல்வானேன்? அவற்றுக்குப் பழைய வழக்கு மாத்திரம் அடிப்படையன்று; பழைய இலக்கிய மரபும் அடிப்படையாம். ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்’தோன்றியதெனத் தொல்காப்பியத்திற்கே - மூவாயிரம் ஆண்டு எய்திய கிழப் பனுவலுக்கே.... சொல்லப் படுமேல், தமிழில் இன்று எழுகின்ற நூல்களுக்குத் தனிப் புதுமை எங்கு வரும்? புதுக்கியவற்றையே புதுமை யென்று நம் பாராட்டுகின்றோம். மரபியல் என ஓரியல் தொல்காப்பியரே வகுக்கும் வண்ணம் அத்துணை வழக்குப் பழமையுடையது தமிழகம். புதுமைக்கவி என்று பாரதியை நாடு புகழ்கின்றது. ‘சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது’எனப் பாரதியாரும் சொல்லிக்கொள்கின்றார். இப்பெருமைக்கு அவர் உரியவரே என்று நாம் இசைக்கின்றோம்; என்றாலும் ஆழ்ந்து நோக்கின், பாரதியின் புதுமை பழமை யுரத்திலிருந்து மலர்ந்தது என்பது புலப்படும். ஒருபெரும் புலவன் இறந்தகாலத் தளத்தின்மேல் நிகழ்காலக் கண்கொண்டு நாட்டின் எதிர்கால வாழ்வை உருவாக்குவான். அவன் படைப்பு தஞ்சைப் பெருவுடையார் கோயில் அனையது. ஆதலின் தொல்காப்பியப் பெருநூலில் புதுமை காண்பது தவறன்று; பாரதிப் பெரும் புலவனிடத்துப் பழமை காண்பதும் தவறன்று. II ஒரு நாட்டில் பெருங்குறைகள் மலிந்து தோன்றிய காலத்து, அவற்றை எடுத்துக் காட்டும் பாடல்கள் முகிழ்க்கும். அவை புதுமைப் பாடல்கள் என்று பெயர் பெறும். தொல்காப்பியர், சங்கத்தார் நாளில் பற்றூட்டும் நாட்டுப் பாடல் பிறக்கவில்லை; காரணம் தமிழ்நாடு அடிமை நாடாக இருந்ததில்லை. மொழிப்பற்றூட்டும் பாட்டு அறவேயில்லை; அதற்குக் காரணம், தமிழர் பற்றுக் கொள்வதற்குத் தமிழ்மொழி தவிர வேறு மொழி ஈண்டு வழங்கியதில்லை. ஆடுஉ வறிசொல் மகடூஉ வறிசொல் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே (தொல்.485) என்ற முதனூற்படி, ஆணும் பெண்ணும் ஒத்த உயர்தினை யாகவே கொள்ளப்பட்ட அறிவுக்காலம் அது. ஆதலின், பெண்ணுரிமைப் பாட்டுக்குப் பிறப்பில்லை. இறை இருந்தது; ஆனால் மதம் இருந்ததில்லை. தொழில் இருந்தது; ஆனால் சாதி இருந்ததில்லை. எனவே மதவொற்றுமைப் பாட்டிற்கும் சாதியொழிப்புப் பாட்டிற்கும் பண்டு வாய்ப்பில்லை. சங்க நாளைக்குப் பின்னர் ஊழல்கள் அரும்பின; சங்கம் அழிந்தது; தமிழ் வேந்து அழிந்தது; இருந்த இலக்கியங்களிற் பல மறைந்தன. முதற்கண் சமயவூழல்கள் நாறின; அருட்பாசுரங்கள் தோன்றக் கண்டோம். வென்ற சமயங்கள் தம்முட் பூசலிட்டன; அப்போது சமயப் பொதுப்பாடல்கள் எழக்கண்டோம். தன்னாட்டுப் பற்றும் தன்னரசுப் பற்றும் தன்மொழிப் பற்றும் இருக்கவேண்டும் நம் மக்கட்கு இருக்கலாகாத் தற்சாதிப்பற்றே உயிர்க்குணம் ஆயிற்று. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்துப் பாட்டுக்கு ஏற்ற தீய சூழ்நிலை முற்றி நின்றது. வீறிட்டெழுந்தார் புலவர் பாரதி. ஆயிர முண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி - ஓர் தாயின் வயிற்றிற் பிறந்தோர் - தம்முட் சண்டை செய்தாலும் சகோதர ரன்றோ (பாரதி) என்று வினவினார். புதுக்குறைகளைப் பாடிய நிலையால் பாரதிபாட்டின் பொருள் புதிதாயிற்று; சொல் புதிதாயிற்று; நடையும் புதிதாயிற்று; குறைகண்டு கொதித்துப் பாடிய புலவன் புதுமைக் கவியாயினான். III நாட்டுப்பற்று என்பது ஒரு பாரதீயம். பாரதியார் கண்ட நாடு பாரதநாடு. பாரதப் பெருநாட்டின் அகநாடுகளாகவே தமிழகத்தையும் இந்திய பிற பகுதிகளையும் நோக்கினார் பாரதியார். இந்தியா முழுவதும் அடிமைப்பட்டிருந்த நிலையில், தமிழக விடுதலையை மட்டும் பிரித்துப் பாடும் குறிப்பு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்ற மரபு வழிவந்த தமிழ்ப் புலவனுக்குத் தோன்றாது. தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்; தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்ற கொடி நிலைப்பாட்டில் அகநாட்டார் அனைவரையும் பாரதி அழைக்கின்றார். முப்பதுகோடி முகம் உடையாள், அறுபது கோடி கையுடையாள், செப்புமொழி பதினெட்டுடை யாள்; ஆனால் சிந்தனை ஒன்றுடையாள் என்று அறுதியிடும் பொழுது, வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரதியின் பாரதப் பண்பு வெளிப்படை. வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா. பேரிமய வெற்புமுதற் பெண்குமரி யீறாகும் ஆரிய நாடென் றறி நாட்டுக்கு எல்லை வரையுமுகத்தால், தம் தமிழ்ப் பாட்டுக்கும் வழக்கெல்லை சுட்டுகிறார் புலவர். பாரதியின் பாரதப்பாடல்கள் தமிழ்மொழிக்குப் புதியவை. தமிழ் மொழியில் இருந்தாலும் திருக்குறள் மக்கெட்கெல்லாம் பொதுவன்றோ! பாரதிப்பா இந்தியநாட்டுப் பொது என்பதனை எல்லோரும் அறியச் செய்தல் தமிழர் கடன், அது தமிழ்மொழியில் இருத்தலின்,‘தாயின் மணிக்கொடி’என்னும் கொடி வாழ்த்து இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு எங்கும் இசை பெறுதல் வேண்டும். நாட்டுப்பற்றை மக்கட்கு ஊட்டுவதெப்படி? விடுதலை யுணர்ச்சியை விதைப்பது எங்ஙனம்? பாரதம் பழம் பெரு நாடன்றோ? பாருக்குள்ளே நல்லநாடில்லையா? ஞானத்திலும் கானத்திலும், வீரத்திலும், ஈரத்திலும், நன்மையிலும், வன்மையிலும், ஊக்கத்திலும்,நோக்கத்திலும், நுண்மையிலும், உண்மையிலும் உயர்ந்த நாடன்றோ! வரலாற்றறிஞர்களும் பிறந்தநாள் அறியமாட்டாப் பழந்தாய் இல்லையா! நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததும், நம் அன்னையர் தோன்றி மணந்ததும், நம்மை ஈன்று வளர்த்ததும் இந்நன்னிலம் காணீர்! இந்நாட்டை வந்தனை செய்து மனத்திலிருத்தி வாயுற வாழ்த்தி வணங்குவம் வாரீர் என்று பற்றூட்டுகின்றார் புலவர் பெருமகன். முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும் இன்று புதிதா யிரக்கின் றாமோ முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெல்லாம் ஓராயோ (பாரதி) அடிமைதான் எங்கட்குப் புதிதேயொழிய விடுதலை புதிதன்று என வீறு பேசுகின்றார். ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்துவிட்டோம் என்று இடைக்காலத்து வந்த இழிவை எடுத்துக்காட்டுகின்றார். விடுதலை பாரதியின் மதம். பாரதியார் விடுதலைப் புலவர், விடுதலை நாயனார், விடுதலை யாழ்வார். சிட்டுக் குருவியைப் போலே எப்போதும் விடுதலை வேண்டுபவர். ஆதலின் தெய்வப் பாசுரங்களின் நடை பாரதியின் விடுதலைப் பாசுரங்களிலும் காணப்படும். சமயத் துறைநடையில் ஒரு கொள்கையைப் பரப்பினாற்றான், இந்நாட்டு மக்களுக்கு ஏற்கும் தன்மை உண்டு என்று கண்டு கொண்டார் பாரதியார். சிவன், கண்ணன், இராமன் என்ற பெயர்களைக் கூறியவளவில் பிறவித் துன்பம் எல்லாம் அறும் எனச் சுட்டுதலும், மதத்தொண்டர் களைப் போற்றிப் புகழுதலும் சமய மரபு. இம்மரபு தழுவி விடுதலை மதம் பாடினார், விடுதலைத் தொண்டர்களைப் பாடிப் பரவும் சுந்தரராயினார் பாரதியார். பாரத தேசமென்று பெயர்சொல்லுவார் - மிடிப் பயங் கொல்லுவார் துயர்ப்பகை வெல்லுவார் துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே தொண்டி ழைக்கத் துணிந்தவர் யாவரும் அஞ்செ ழுத்தினைச் சைவர்மொ ழிதல்போல் அன்பொ டோதும் பெயருடை யாரியன் (பாரதி) IV பாரதப் புலவன் பாரதியார் ஓர் தமிழ் மகன்; தமிழாலே உலகத்தை நினைப்பவர்; தமிழக நாட்டவர்; ‘வாழ்க நற்றமிழர்’ என்று வாழ்த்தும் இனப்பற்று உடையவர்; தம் இனமக்கட்கு விடுதலை வேட்கையையும் மொழிப்பற்றையும் குழைத்து ஊட்டவிரும்பிய பாரதியார் பாடல்களில் நாம் காண்பதென்ன? சிங்களம், புட்பகம், சாவகம் ஆகிய தீவுகளை வென்று புலிக்கொடியும் மீன்கொடியும் ஏற்றிய தாய்நாடு தமிழ்நாடு என்று தென்திசை கீழ்த்திசை வெற்றிகளைக் கூறுகின்றார். இமயத்தைத் தாக்கிய வீரர் வாழ்ந்த தமிழ்நாடு என்று வடதிசை வெற்றியைச் சுட்டுகின்றார். பாரத நாட்டுணர்வுடைய பாரதியார் தமிழகத்தின் சிறப்பைப் பாடும் வரிசையில் இமய வெற்றியையும் கலிங்க வெற்றியையும் ஒதுக்கிவிடாது கூறுதல் குறிப்பிடத்தகும். சீன, மிசிர, யவன நாடுகளில் புகழ் பரப்பிய தமிழ்நாடு என்று மேற்றிசைப் பெருமையைக் குறிக்கின்றார். இப்பழம் புகழ்ச்சியெல்லாம் எற்றுக்கு? எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சுதந்திர சத்தி பிறக்க வேண்டும் என்பதற்காக. பாரதியார் இந்தியநாட்டுப் பற்றுப்போல் தமிழ்ப் பற்றுக்கொண்டவர். பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடு என்றதுபோல் தாமறிந்த மொழிகளிலே நல்ல மொழி தமிழ்மொழி என்று வீறு பேசியவர்.‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே’என்று சின்னஞ்சிறு குழந்தைக்கே தமிழின் உயர்வை அறிவுறுத்தியவர். தமிழ்ப்பாரதம் அல்லது தமிழிந்தியா என்பது நம்புலவன் கண்ட பாரதீயம் ஆகும். நம் மொழி மட்டுந்தான் சிறப்புடையதா? நம்மொழியில் பாடிய முப்புலவர்களைப் போலச் சிறந்தார் பிறமொழியில் எப்புலவரும் இல்லையே; இது பற்றுக் கொண்டு சொல்லும் முடிபன்று: உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று பாரதி மொழி முரசு கொட்டுவர். ‘ஆதிசிவன் பெற்றுவிட்டான்’எனத் தமிழின் தெய்வப் பிறப்பையும், காதில் விழுந்த திசைமொழி யெல்லாம் பெயர்கூடத் தெரியாமல் யாவும் அழிவுற்றிறந்தன என்பதனால் தமிழின் இறவாத் தன்மையையும் எடுத்துக் காட்டுவர். இல்வுலகத்து அமரவாழ்வு வேண்டுமென்றால் தமிழமுதினைச் சுவையுங்கள்; இன்பத்தேன் வேண்டுமென்றால் செந்தமிழ்நாடு என்று சொல்லுங்கள் என மொழிமேல் வைத்து நல்வழி கூறுவர். இவ்வாறெல்லாம் தமிழின் பழமையையும் பெருமையையும் விரிப்பதன் நோக்கம் என்ன? தெருவெல்லாம் தமிழ் முழங்கவேண்டும் என்பதற்கு. பெண்ணுரிமை பாரதீயத்தில், ஒன்று. இவ்வுரிமை வேண்டும் பாரதியார் ஈண்டும் பழமை பேசப் பார்க்கின்றோம். ஆணுக்குப் பெண் சமம் என்று முற்கால நூல்கள் கூறும்; ஆணே உயர்வு பெண் அடிமை என்று பிற்கால நூல்கள் கூறும் என்பது பாஞ்சாலி சபதத்தில் வீடுமன் பேச்சு: புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதும றைப்படி மாந்த ரிருந்தநாள் தன்னி லேபொது வான வழக்கமாம் பாரதியின் புதுமைப்பெண்ணே இங்ஙனம் பழமை பேசுவாள் எனில், பாரதீயத்துக்கு அடிப்படை (அண்மைப் பழமையன்று) தொன்மைப் பழமை என்பது தெளிவு. புதிய ஆத்திசூடியும், கண்ணன் பாட்டும், பாஞ்சாலி சபதமும் முற்றும் புதியனவல்ல; புதுப்பிக்கப்பட்டன என்பது முன்னை நூல்களோடு ஒப்பிட்டுக் காண்பார்க்கு எளிதாகப் புலப்படும். கண்ணன் பாட்டுக்கு வ.வே.சு.அய்யர் எழுதிய முன்னுரையைக் காணுக. V தொல்காப்பியன் முதல் பாரதி ஈறான தமிழ்ப் புலவர்கள் பழமைப் பார்வை யுடையவர்களே என்றாலும், அப்பார்வை யிலிருந்து ஒவ்வொருவரும் உலகிற்குக் காட்டிய புதுமைப்போக்கு வேறு வேறாகும். தமிழ்ப் புலவர்களுள் சிலர் தம் புதுமைப் போக்கு ஒற்றுமையுடைய தாய் காணப்படுகின்றது. பாரதிப் புலவன் புதுமைப் போக்கோ இதுவரை தமிழிலக்கியம் கண்டறியாதது பழமையை அவர் பார்த்த பார்வையே வேறு. தமிழ்மொழியின் சிறப்புப் பற்றி முன்னும் பாடல்கள் உள; என்றாலும்,‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்’என்னும் பாரதி உறுதிப்பாட்டிற்கு இணையுடைய தொன்று உண்டோ? திருக்குறளுக்குத் திருவள்ளுவ மாலையில் ஐம்பத்து மூன்று பாராட்டு வெண்பாக்கள் உண்டு. அசரீரி, நாமகள், இறையனார் எல்லாருந்தான் அந்நூலைப் பாராட்டியுளர். என்றாலும், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்னும் பாரதி பாட்டுக்கு ஒப்பில்லை. வள்ளுவன் தமிழ்நாட்டின் கொடைப்பொருள் என்று மொழியோடும் நாட்டோடும வைத்துப் புகழ்ந்த புலவன் வேறெவன்? உலகச்செல்வம் அத்தனையும் படைத்த ஒரு நாடு தமிழ்நாடு என்றும் புகழ் மண்டிக்கிடக்கும் ஒரு நாடு தமிழ்த் திருநாடு என்றும் வளமாரச் சொல்லிய பாரதி தமிழுக்கு முன்னைத் தமிழ் நூல்களில் ஒப்புமை காட்டமுடியுமா? பாரதி கவிதைக்கு மேற்கோட்பதிப்பு வேண்டும் என்று முன்னர் ஒரு கருத்து வெளியிட்டேன். பல இடங்கட்கு முந்து நூல்களிலிருந்து ஒப்புமைகள் காட்ட முடியும்; ஒப்புமை காணமுடியாப் பல புது நுண்கூறுகளும் பாரதி கவிதையில் உள, ஆதலின் புதுமைப் புலவன் சொல்லிய அனைத்திற்கும் விடாது மேற்கோள் காண அலையவேண்டா. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம். பெண்ணினத்துக்கு வேண்டும் ஆண்மைகளைப் புது மெய்ப்பாட்டோடு எடுத்துரைக்கின்றார் பாரதியார். உலகில் சமுதாயம் பல மாறுதல் அடைந்துவிட்டது. இந்நிலையில் பழம்போக்கு பெண்ணுக்குக் கூடாது; நாணமும் அச்சமும் மக்களினத்துக்கே கூடா என்று தெளிந்த புலவர் மேற்கண்டவாறு புதுப்பெண்மை வேண்டுகின்றார். VI இலக்கியத்துக்கு ஒரு புது நோக்கை இந்நூற்றாண்டில் வகுத்துக்கொடுத்த புதுத் தொல்காப்பியர் பாரதியார் ஆவார். அரசு மக்களரசாகி வரும் காலத்து இலக்கியமும் மக்களிலக்கிய மாக உருவாக வேண்டும் என்றும், மொழிநடை எல்லார்க்கும் பொருள் விளங்கும்படி நெகிழ வேண்டும் என்றும், ஒலிநடை யாரையும் ஈர்க்குமாறு இசையவேண்டும் என்றும், இவ்வெல்லாம் கவிதைத்தன்மை சிறிதும் குன்றாவாறு அமையவேண்டும் என்றும் பாரதியார் பாடல் நமக்குக் கற்பிக்கிறது. உலகத்து நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் எத்துணைப் பெரியவன் செய்திருப்பினும், உரசி அலசிப் பார்த்து மக்கள் தம் கருத்துரைக்கும் மனவளர்ச்சியை இன்று காண்கின்றோம். அங்ஙனம் யாரும் தத்தம் கருத்தை வெளியிடும் உரிமைக்காலம் இது. இந்நாளைப் புலவனும் பாத்திரங்களின் செயல்களை அழகு படச் சொல்லுவதோடு அமையாமல், அச்செயல்களைப் பற்றித் தாம் கருதும் கருத்தையும் இடையிடையே சொல்லிப் போக வேண்டுமன்றோ? கருத்துரிமை சான்ற காலத்து, அவ்வுரிமை யூட்டும் இலக்கியந்தான் மக்கள் நெஞ்சையள்ளும். தருமன் பாரதநாடு கொண்டாடும் பழம்பெரியவன் என்றாலும் சூதில் தேயம் வைத்திழந்த அவனைப் பற்றிப் பாரதியார் என்ன கருதினார்? ‘சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்’என்று மிகவும் இகழ்வர். தீய துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றித் தெருவழியே இழுத்து வருகின்றான்; பார்க்கக் கூட்டம் கூடி விட்டது. இது கொடுமை கொடுமை என்று கூட்டம் பார்த்துக் கொண்டே துடிக்கின்றது. இத்துடிப்பினால் என்ன பயன்? கொடியவனைக் காட்டிலும் அக்கொடுமையைக் கண்டும் துடித்து நிற்கும் கூட்டமே இகழ்தற்கு உரியது. இக்கூட்டம் என்ன செய்திருக்க வேண்டும்? நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி முன்னிழுத்துச் சென்றான் வழிநெடுக மொய்த்தவராய் என்ன கொடுமை யிதுவென்று பார்த்திருந்தார் ஊரவர் தங்கீழ்மை யுரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள் விலங்கா மிளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே பொன்னை யவளந்தப் புரத்தினிலே சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினார் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ? VII பாரதியார் ஓர் வெறிஞர். அவர் வெறி தடமற்ற காட்டாற்று வெள்ளம் போன்றதன்று; கரையணைத்தோடும் காவிரி வெள்ளம் போன்றது. அவர் தம் பழமைப் பற்றில் ஒரு தனிப்புதுமை யிருப்பக் கண்டோம். அவர் தம் பழநூற் பயிற்சியிலும் ஒரு தனிப்புலமை யிருக்கக் காணலாம். சொல் வீழ்ச்சியும் ஒலிநயமும் நடைநயமும் நோக்காழமும் என்றிவையே முழுப்புலமையாகிவிடா. எதிரதை முன்னுணர்ந்து ஆற்றலோடு கூறும் அறிவுத்தெளிவு புலமைக் கூறுள் தலைசிறந்தது. சென்ற வரலாற்றையும் நிகழும் போக்கையும் காணும் புலவன் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று மயங்காது முடிவுகட்டுவான். மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் (தொல்.1020) என்று புலவன் புலமைத் திறத்தைக் குறிப்பிடுவர் தொல்காப்பியர். தமிழ்ப் புலவர்களுக்குள்ளே இத்தொல்காப்பிய இலக்கணத்திற்குப் பேரிலக்கியமாக விளங்குபவர் பாரதியாரே. ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (பாரதி) இப்பாடல் 1948 ஆம் ஆண்டில் எழுந்ததன்று. இந்தியா உரிமை பெற்ற பின்னர் ‘சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று ஒருவன் பாடும் பாட்டில் வரலாற்றுண்மைக்கு இடமுண்டே யன்றிப் புலமை வீறுக்கு இடமில்லை. உரிமை என்பது பெருங்கனவாக இருந்த முப்பதாண்டுக்கு முன்னரே, சுதந்திரம் அடைந்து விட்டோம்; இனிச் செய்யவேண்டுவது ஆடுவதும் பாடுவதுந் தான் என்று பள்ளுப் பாடிய பாரதியின் அறிவுத்தெளிவு வாகை சூடற்குரியது. இத் தெளிவெண்ணம் அவர் பாடலில் பலவிடத்துப் பொதிந்துள்ளது. ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்’ என்று காந்திப்பெருமான் புகழை முன்னரே உணர்ந்து துணிவு தோன்றப் பாராட்டுதல் காண்க. பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே (பாரதி) இப்பாடல் டாக்டர் உ.வே.சா.மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றபோது பாரதி பாடிய வாழ்த்து. இவ்வாழ்த்துப்பா சென்னைக் கடற்கரையில் நிறுவப் பெற்ற உ..வே.சா. சிலையடிக்கீழ்ப் பொறித்தற்கு ஏற்றது என்று அறிஞர்கள் கருதுவரேல், கூர்த்த புலவன் பாரதி என்பது வெள்ளிடை மலை. ‘வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம், ‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’என்ற பாரதி கனவுகள் இன்று எவ்வளவு மெய்யாகி வருகின்றன. நாடு எதிர்காலத்து இங்ஙனம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவது பாரதி வெறிஞர்க்கு அத்துணைப் பிடித்தமில்லை. நாடு அங்ஙனம் இருக்கும் என்ற பெருந்தெளிவில், இருந்ததாகவே கொண்டு பாடும் இன்பக் கனவினர் பாரதியார். கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும் காணரும் வீரர் பெருந் திருக்கூட்டம் நம்பற் குரியர் அவ்வீரர் - தங்கள் நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பர் இழிவுகொண்ட மனித ரென்பது இந்தியாவில் இல்லையே. எல்லோரும் சம மென்ப துறுதி யாச்சு சங்குகொண்டே வெற்றி யூதுவோமே ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். எழுதிய நாளையும் இருந்த சூழ்நிலையையும் அறிந்து பாரதியார் பாடல்களைப் படித்தாற்றான் அவர் தனிப்புலமை - எதிரதை முன்னுணர்ந்து பாடிய அறிவுவீறு - நன்கு புலப்படும். இன்றேல், இலக்கிய அழகு புலப்படுமே யொழியப் புலவன் தன் எண்ணக் கூர்மை புலனாகாது. இப்பாடல் இந்நாளிற் பாடப்பட்டது என்ற குறிப்பு விளக்கத்தோடு பாரதி பாடல்களைப் பதிப்பிப்பது கற்பவர்க்குப் பெருந்துணை செய்யும் ‘அடைந்துவிட்டோம்’ முதன்மையுற்றாய் உறுதியாச்சு, மாய்ந்துவிட்டார் ‘தலை கவிழ்ந்தார்’ என்பவற்றில் வரும் இறந்தகால வினைமுற்றுக்கள் ‘அடைந்துவிடுவோம்’ ‘முதன்மை உறுவாய்’, ‘உறுதியாகும்’, ‘மாய்ந்துவிடுவார்’ ‘தலைகவிழ்வார்’என்று பாரதியார் கண்ட எதிர்கால நல்வாழ்வைச் சுட்டுகின்றன. இவை விரைவில் வரும் என்ற தெளிவால், புலவர் வந்தனவாகவே கொண்டு இறந்தகால நடையில் பாடலாக்கினார். பாரதியார் கண்ட நனவெனத்தக்க நாட்டுக் கனவுகள் புதியனவாயினும், அவற்றைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடை தொல்காப்பியப் பழமையுடையது என்பது பின்வரும் நூற்பாவால் விளங்கும். வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர் 14. பாரதி கண்ட தேசிய ஒருமை எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க (பாரதி) என்று பறையறைந்தாற்போல ஒருமைப்பாட்டு முழக்கியவர் பாரத தேசியக்கவி பாரதியார். அவர் உறுதி மொழியாக மும்முறை பாடிய முழக்கத்தினால் எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற தொடரும் கருத்தும் யார் வாயிலும் இயல்பாகக் கேட்கப்படுகின்றது. கவிஞர் பெருமான் பாடிய காலத்தில் பாரத மக்கள் ஒருகுலமாக, ஓரினமாக, ஒருநிறையாக, ஒரு விலையாக, இந்நாட்டு மன்னராக இருந்ததில்லை. 1947 இல் பாரத நாடு விடுதலை பெறுவதற்கு முப்பது ஆண்டுகட்கு முன்பே எல்லோரும் சமம் என்று பாடி முடித்தார் பாரதியார். விடுதலை பெற்று முப்பது ஆண்டு ஆகிய இன்றும் குலத்தினாலோ இனத்தினாலோ பொருளாதார வளத்தினாலோ சமம் பெறவில்லையே என்று எண்ணிப் பார்க்கவேண்டும். பாரதி கண்ட கனவு இன்றுவரை கனவாகவே இருக்கின்றது. அக்கனவுநிலை இன்பங்கூடக் கலைந் தொழியுமோ என்ற அச்சம் பிறந்திருக்கின்றது. அவர் கண்ட கனவு நனவுத் திருவாக வேண்டுமேல் பாரதியின் தேசியப் பாடல்களைப் பாரத மக்கள் பல்லாண்டு படிக்க வேண்டும். அவர் பாடல்கள் தமிழ்மொழியில் இருந்தாலும் பாடப்பட்ட பொருள் தேசிய ஒருமைப்பாடு ஆதலால் எல்லா இந்தியமொழிகளிலும் இப்பாடல் நல்ல பண்களில் மொழி பெயர்க்கப்படல் வேண்டும். இந்திய நாட்டின் சிறு பள்ளிகளில் எல்லாம் இப்பாடல் முழக்கம் பெறல் வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டினை விடுதலையுரிமை பெறுவதற்காக மட்டும் பாரதி பாடவில்லை. விடுதலைக்குப் பின்னும் மக்கள் சரிநிகர் சமானமாக ஒத்த மதிப்புப் பெற வேண்டும் என்பதுதான் அவர் குறிக்கோள். “திறமைகொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வமிந்த நாட்டிலே” “வாழி கல்வி செல்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே” “வையவாழ்வு தன்னிலெந்த வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமைமாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே” (பாரதி) சுதந்திரம் பெற்றபின் இந்தியா ஒருநாள் உரிமைபெறுதல் உறுதி என்று முன்னறிவால் தெளிந்த பாரதியார் தம் கவிதைகளில் உரிமைபெற்ற இந்தியாவும் இந்திய மக்களும் வாழ வேண்டிய வளங்களைப் பல செய்யுட்களில் புலப்படுத்தியுள்ளார். இமயமுதல் குமரிவரை பாரதம் நிலத்தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும், மக்கள் உள்ளத்தில் ஒருமை உணர்வு வேண்டு மல்லவா? அடையாததற்கு முன்னே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று சுதந்திரப் பள்ளுப் பாடிய தேசியப் பாவலர் பாரதியார் சுதந்திரம் பெற்றபின் நாட்டில் என்ன எண்ணங்கள் பரவ வேண்டுமன்று தொகுத்துச் சொல்லு கின்றார். “எங்குஞ் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமம் என்ப துறுதி யாச்சு.” “எல்லோரும் ஒன்றென்னுங் காலம் வந்ததே - பொய்யும் ஏமாற்றுந் தொலைகின்ற காலம் வந்ததே” “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்” (பாரதி) சுதந்திரம் பெற்றதற்குப் புறச்சான்றுகள் என்ன? எல்லாரும் சமம்; எல்லோரும் ஒன்று; பொய்யான ஏமாற்றத் துக்கு இடங்கொடாமை; நல்லவரையும் பெரியவரையும் மதித்தல்; நயவஞ்சகம் இல்லாமை; உழவுக்கும் தொழிலுக்கும் மதிப்பு; உழையாதாரை மதியாமை; நாமிருக்கம் நாடு நமது என்ற பற்று; இந்நாடு இனி நமக்கே உரிமை என்ற அறிவு; இந்தப் பண்புகள் எல்லாம் சுதந்திரத்தின் பயன்கள், அடையாளங்கள் என்று சுதந்திரத்தின் பின்னும் நாடு ஒருமைப்பாடு என்னும் உணர்வுப்பாடாக வளர்வதற்குரிய அடிப்படை நெறிகளைப் பாரதீயத்தில் காண்கின்றோம். பாரதியார் ஆங்கில ஆட்சியின் அடிமைத் தளையிலிருந்து சுதந்திரம் பெறுதற்கு விடுதலைப் பாடல்கள் முழக்கிய விடுதலைப் புலவர் என்றே பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். அதனால் விடுதலைப் பெற்றுவிட்டோமே, இனி அவர் தம் செய்யுட்கள் முன்போல அவ்வளவு தேவை யில்லை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இக்கருத்துக்கள் ஓரளவே உண்மை. ஆங்கிலத் தளையிலிருந்து விடுதலைக்குப் பாடினார் என்பதனை உடன்படுகின்றேன். அவ்வளவில் அவர் நிற்கவில்லை. சாதிக்கொடுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமயப்பிணக்கு, ஏழை செல்வன், அறியாமை, கல்வியின்மை, ஏய்ப்பு, நயவஞ்சகம், உழைப்பின்மை முதலான பல தீமைகளிலிருந்து இந்தியப் பெருநாடும் மக்களும் முழு விடுதலையடைய வேண்டுமென்று எதிர்காலத்தைப் பாடிப் பொழிந்தார். ஏன் இருவகை விடுதலையும் பாடினார். உள்நாட்டுத் தீமைகளிலிருந்து விடுதலை பெறாவிட்டால், சுதந்திரம் பெற்ற பின்னும் சாதியும் ஏற்றத்தாழ்வும் கல்லாமையும் பெண்ணடிமையும் ஒரு நாடு என்ற உணர்ச்சியின்மையும் இருந்தால் முன்புபோல் எந்த அயல்நாட்டாருக்காவது அடிமையாகி விடுவோமல்லவா? அதனாற்றான் ஆங்கில அடிமை விடுதலையோடு இணைத்து நாட்டுத்தீமை விடுதலையும் பாடினார், எதிர்கால உணர்வு மிக்க பாரதியார். அவர் பாடிய வற்றுள் ஒரு விடுதலை - ஆங்கில ஆட்சி விடுதலை நமக்குக் கிடைத்துவிட்டது இன்னொரு விடுதலை - சாதி முதலிய வற்றின் விடுதலைக்கு நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்த விடுதலை தேசிய ஒருமைப்பாடு என்ற உணர்வினாற்றான் பெறமுடியும். அத்தகைய ஒருமைப்பாட்டுக் கல்வியைத் தருங்கருத்துக்கள் பாரதீயத்தில் மண்டிக் கிடக்கின்றன. பாரத வொருமை பாரதநாடு, பாரத அன்னை நவரத்தினமாலை, பாரத தேவியின் திருத்தசாங்கம், பாரத சமுதாயம், தாயின் மணிக்கொடி என்ற தலைப்புடைய பாடல் எல்லாம் பாரதியாரின் ஒருமைக் கனவை வடித்துக் காட்டுகின்றன. பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கம் பொதுவுடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக் கொரு புதுமை - வாழ்க. மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ மனிதர்நோக மனிதர்பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ - புலனில் வாழ்க்கை இனியுண்டோ? - நம்மிலந்த வாழ்க்கை இனியுண்டோ? இனிய பொழில்கள் நெடியவயல்கள் எண்ணரும்பெரு நாடு கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தருநாடு -இது கணக்கின்றித் தருநாடு - நித்த நித்தம் கணக்கின்றித் தருநாடு. இனியொரு விதிசெய்வோம் அதை எந்த நாளுங் காப்போம் தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.” பாரத சமுதாயம் வாழ்க என்ற இப்பாட்டு தேசிய ஒருமைப் பாட்டிற்குப் பெரிய வேராகும். ஏன்? உலக வொருமைப் பாட்டிற்குக்கூட இப்பாடலில் கரு அமைந்து கிடக்கின்றது. பல மாநிலங்களாகப் பிரித்துக் கூறாமல் பாரத சமுதாயம் எனவும், பல சங்கங்களாகப் பிளவு படுத்தாமல் முப்பது கோடி உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் எனவும், பல தனியுடைமை களைப் பாராட்டாமல் முழுமைக்கும் பொதுவுடைமை எனவும், இத்தகைய பொதுச் சமுதாயமும் பெருஞ்சங்கமும் பொதுவுடைமையும் வேறு எங்கும் இல்லாமையால் ஒப்பிலாத ஒரு சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை எனவும், இன்ன புதுமை மக்களின் சிறுமைப் பாட்டினால் கெட்டுத்தொலையக் கூடாதே; ஒருமைப்பாடு வேண்டுமே என்ற எண்ணத்தால் ‘வாழ்க’என்றும் பாடியுள்ளார் எதிர்காலக்கவி பாரதியார். சுரண்டலும் பசியும் இருக்கும்வரை பாரதம் இராது. இந்நாடு ஏன் வறுமைப் படல் வேண்டும்? எந்த வளங்களில் இந்நாடு குறைவுடையது? இந்நாடு எல்லா வளமும் ‘கணக்கின்றித் தருநாடு’என்று மூன்றுமுறை வலியுறுத்துகின்றார். நாடு வளமுடையது. நாட்டில் பட்டினி ஏன்? எல்லோரும் வாழவேண்டும்; பசியார உண்ணவேண்டும் என்ற பொதுக் குறிக்கோள் இருந்தால் பட்டினி இருக்குமா என்று சினந்து துடிக்கும் பாரதக் கவிஞர், ‘இனி யொரு விதி செய்வோம்; சுதந்திரம் பெற்ற பின்னும் காப்போம். பாரதன் ஒருவன் பட்டினியாகக் கிடந்தாலும் இப்பாரத நாட்டை மட்டுமா, உலகத்தையே அழிப்போம்’ என்று பாரதீயம் பாடுகின்றார். எனவே பாரத சமுதாயம், ஒப்பிலாத சமுதாயம், முப்பது கோடியினர் சங்கம் என்ற ஒருமைப்பாடும் பெருமைப்பாடும் காக்கப்பட வேண்டுமென்றால், ஓர் இந்தியனும் பசி என்பதில்லாத தேசிய ஒருமைப்பாடு என்ற கட்டுப்பாடு வேண்டுமென்று எதிர்காலப் பாரதர்கட்குச் சமவழி காட்டிச் சென்றிருக்கின்றார் அடிமைநாட்டில் வாழ்ந்த நம் பாரதியார். சாதியின்மை தேசிய ஒற்றுமைக்கு இடையூறாய் இருப்பது சாதி வேறுபாடு. வேண்டாத இவ்வேறுபாடு நம்முள் அடித்துக் கொண்டு நாம் அடிமைப் படுதற்குக் காரணமாயிற்று. என்பதை அறிந்தவர் பாரதியார். சமயச் சண்டைகளும் நம் அடிமைக்கு மற்றோர் காரணம். ‘சாதிச்சண்டை போச்சோ உங்கள் சமயச்சண்டை போச்சோ இங்ஙனம் அடித்துக் கொள்கின்ற உங்கட்குச் சுதந்திரம் வேண்டுமா, என ஆங்கிலேயன் இழித்துக் கூறுவதாகப் பாடியுள்ளார். ஆம்; உரிமைபெற்று முப்பது ஆண்டுகளாயிற்றே; சாதிச் சமயப் பூசல்கள் தேர்தல் காரணமாக வலுப்பெற்று வருகின்றதேயன்றிக் குறைய வில்லையே. சாதிப்பற்றையும் சமயப்பற்றையும் தூண்டி விட்டுத்தானே வாக்குக்கள் கேட்கப்படுகின்றன. ஜாதி மதங்களைப் பாரோம் -உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயின் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி. (பாரதி) என்ற பாட்டிலிருந்து சாதிவேற்றுமைகள் பெருகினால் வேற்றுநாட்டவர் புகுந்துவிடுவார்கள் என்ற கருத்தும், வேற்றுமை நீங்கி எல்லாரும் இந்தியர் என்று ஒன்றுபட்டால் தான் வாழ்வு உண்டு; ஒற்றுமை நீங்கினால் எல்லார்க்கும் தாழ்வே என்ற எச்சரிக்கையும் தெளிவாகின்றன. சாதிப்பற்று குழந்தைகளிடத்து வளரக்கூடாது. எதிர்காலத்துப் பிறக்கும் குழந்தைகளாவது சாதிமனப் பான்மையின்றி உயரவேண்டும் என்பதற்காகத்தான், “சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் (பாரதி) என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பர் இந்தியக் கவிஞன் பாரதி. சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னில் செழித்திடும் வையம். (பாரதி) என்று சாதிக்கொடுமையை முரசறைந்து சாடுவர் பாரதியார் இன்னொரு செய்யுளில். எனவே, சாதிகள் இல்லாத, சாதிப் பூசல்கள் முளைக்காத ஒரு பாரத நாட்டை உண்டாக்கினாற்றான் தேசிய ஒருமைப்பாடு என்ற விளைவு கிடைக்கும் எனத் தெளிவோமாக. மொழி யொருமை இப்பெரு நாட்டில் பல மொழிகள் உண்டு, பல இனங்கள் உண்டு என்ற வரலாற்றுண்மையை அறிந்தவர் பாரதியார். பல மதங்களுண்டு என்பதனையும் நன்குணர்ந்தவர். பல மொழிகள், பலவினங்கள், பல மதங்கள் இவற்றை நாட்டின் வளங்களாகவும் பிரிவுகளாகவும் பாரதியார் மதித்தாரேயன்றி வேற்றுமையாகக் கருதவில்லை. சாதிகள், வறுமை, ஏழைமை இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்ததுபோல, பல மொழிகளும் இனங்களும் மதங்களும் இல்லாத இந்தியா வேண்டும் என்று அவர் பாடியதே இல்லை. இவற்றைப் பாரதத்தாயின் உறுப்புக்களாகப் போற்றினாரே யன்றி மறுப்புக்களாகத் தூற்றவில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்று அறுதி யிட்டுக் கூறியதுபோல மொழிகள் இல்லையடி, இனங்கள் இல்லையடி, மதங்கள் இல்லையடி பாப்பா என்று அறிவுறுத்த வில்லை என்பதனைத் தேசிய ஒருமைவாதிகள் உணர்ந்து கொள்ளவேண்டும். வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு (பாரதி) என்ற அடிகளிலிருந்து, பாரதநாட்டை வாழ்த்தும் போதே தமிழ்வாழ்க, தமிழர் வாழ்க என்று அடுக்குவதிலிருந்து பாரதியார் மொழியையும் இனத்தையும் போற்றுகின்றார் என்பது தெளிவாகும். முப்பது கோடி முகமுடையாள்உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள் மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ கோமகளே பெரும் பாரதர்க் கரசே விதமுறு நின்மொழி பதினெட்டுங் கூறி வேண்டிய வாறுனைப் பாடுதுங் காணாய. (பாரதி) பாரதத்தாய் வளமான பதினெட்டு வழக்கு மொழி யுடையாள் எனவும் பாரத மக்கள் தங்கள் தங்கள் மொழிகளால் அவளை வாழ்த்தித் திருப்பள்ளியிலிருந்து எழுப்புகின்றனர் எனவும் பாடுவதனால் பாரதப்புலவர் பாரதியார் இந்தியாவில் பன்மொழி வளத்தை உடன்படுகின்றார் என்பது தெளிவாகும். மேலும், வேறுபட்ட அம்மொழிகள் சிந்தனையினால் வேறுபடக் கூடாது. தேசிய ஒருமைச் சிந்தனை ஒன்றே வேண்டும் என்று உறுதியாகக் கூறுகின்றார் என்பதும் தெளிவாகும். இன வொருமை பல மொழிகளை வரவேற்றது போலவே பாரத ஒருமைப் பாட்டிற்குப் பல இனங்களையும் வரவேற்று வழிகாட்டியுள்ளார் பாரதியார். “தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்”என்ற ஒப்புயர்வற்ற மணிக்கொடிப் பாடலில் இந்திய நாட்டு இனங்களை யெல்லாம் வந்தே மாதரம் என்று எழுதித் திகழும் - பட்டொளி வீசிப் பறக்கும் பாரத தேவியின் கொடியைக் காக்க வாரீர் வாரீர் என்றுஅழைக்கின்றார். செந்தமிழ் நாட்டுப் பொருநர்கள், சேரன் வீரர்கள், துணிந்த தெலுங்கர்கள், தாயடிபணியும் துளுவர்கள், கன்னடர், ஒட்டியர்,காலனைக் கலக்கும் மராட்டர், மறத்தையும் கற்பையும் காக்கும் கீர்த்தி மிக்க இராசபுத்திர வீரர், பாஞ்சால நாட்டவர், துஞ்சும் போதும் தாயை வணங்கும் வங்க வீரர் என்ற பல இனத்தாரையும் கொடி காக்க வாரீர் என்று அழைக்கின்றார். இவ்வீரரெல்லாம் நம்புதற்குரிய திருக்கூட்டம் எனவும் எந்நிலையிலும் உயிர்கொடுத்துக் கொடியினைக் காப்பார்கள் எனவும் பாராட்டுகின்றார். எனவே, பாரதிப் பெருமகன் காணும் தேசிய ஒருமைப்பாடு என்பது நாட்டின் பல மாநிலங்களிலும் வாழும் இன மக்கள் எல்லாம் நாட்டிற்காக ஒன்றுபடுதல் என்பதாகும் வரலாற்றுச் சிறப்புடைய வாழும் இனங்களை அவர் வெறுக்கவில்லை; போற்றிப் புகழ்கின்றார். நீங்கள் பல இனமாக இருந்தாலும் தாயின்மணிக்கொடியாகிய பட்டுத்துகிலைக் காக்க ஒன்றுகூடி ஓடி வம்மின் என ஒருமைப் பாட்டால் சேர்க்கின்றார். மத வொருமை நாட்டில் பல மதங்கள் இருப்பது பாரதக் கவிஞனுக்கு உடன்பாடே. அம்மதங்களும் மத நூல்களும் பாரதத்தின் பெருமையாகும் என்பது அவர் துணிபு. ஞானத்திலும் பரமோனத்திலும், சாரம் மிகுந்த சாத்திரத்திலும், யாகத்திலும் தவவேகத்திலும் யோகத்திலும், தெய்வபத்தியிலும் உயர்ந்த நாடு எனவும் பூரண ஞானம் பொலிந்த நன்னாடு, புத்தர்பிரான் அருள் பொங்கிய நாடு எனவும், தெய்வம் பலபல சொல்லிப் பகைத்தீயை வளர்ப்பவர் மூடர் உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர்பொருளானது தெய்வம் தீயினைக் கும்பிடும் பார்ப்பார் நித்தம் திக்கை வணங்கும் துருக்கர் கோயிற் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசுமதத்தார் யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடுந் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் எனவும் மதங்களுக்குள் ஒருமைப்பாடு காட்டுவர் பாரதியார். புதிய ஆத்தி சூடியிலும், ஆத்தி சூடி இளம்பிறை யணிந்து மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன் மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே அதனிலை ஒளியுறும் அறிவோம் எனப் பல மதங்களை இணைத்துப் பாடுகின்றார். இங்ஙனம் மொழி யொருமைப்பாடு, இன வொருமைப்பாடு, மத வொருமைப்பாடு வேண்டும் பாரதக் கவி பாரதியார் எந்த ஒருமைப்பாடும் முடிவில் தேசிய ஒருமைப்பாடாக நிறைவுற வேண்டும் என்று பாரத மக்கட்கு அறிவுறுத்துவர். இப் பேருண்மை அவர் தம் எல்லாப் பாடலுக்கும் நிலைக் களானாகும். பாருக் குள்ளே சமத்தன்மை - தொடர் பற்றுஞ் சகோதரத் தன்மை யாருக்குந் தீமைசெய் யாது - புவி யெங்கும் விடுதலை செய்யும் வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் ஒன்றென்று கொட்டு முரசே அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே. (பாரதி) என்ற ஈடிணையற்ற முரசுப்பாடலில் தேசிய வொருமைக்கு வேண்டிய அறிவுரைகள் அனைத்தையும் தொகுத்துப் பாடுவர் பாரதியார். தமிழ்மொழியின் சிறப்பு தமிழ்நாட்டின் சிறப்பு. பத்தி சத்தி காளி முத்துமாரி கலைமகள் திருமகளின் பெருமை கண்ணன் பாட்டு, குயிற்பாட்டு பாஞ்சாலி, சபதம், தன் வரலாறு எனப் பல துறையிற் பாடியிருந்தாலும் அவரை நாயனார் ஆழ்வார் ஞானியென்றோ, தெய்வப் புலவன், காப்பியக் கவி என்றோ புகழ்வதில்லை. தேசியக்கவி பாரதியார் என்ற தனிப் புகழால் போற்றுகின்றோம். அதற்குக் காரணம், அவர் பாடிய எப்பொருட் பாடலுள்ளும் பாரத தேசியம் என்ற ஒருமைப் பாடு உயிராக ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதுதான். இருவகை விடுதலைக் கவிஞரான பாரதியார் விரும்பியபடி சுதந்திரம் பெற்ற நாம் எல்லோரும் சமம், எல்லார்க்கும் உணவு, எல்லார்க்கும் கல்வி, எல்லார்க்கும் ஏற்றத்தாழ்வில்லாச் சமுதாயம் என்ற உண்மையான விடுதலை வாழ்வு பெறத் தேசிய ஒருமைப்பாடு என்ற உயர்ந்த உள்ளத்தைப் பாரதி பாடல்களின் வழி நாடு முழுதும் பரப்புவோமாக. எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும் முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடியும் வீழ்வோம் (பாரதி) என்றபடி, பாரத வாழ்விலும் தாழ்விலும் ஒன்றுபடுவோமாக. 15. சங்க நெறிகள் 1. அன்பு நெறிகள் தமிழ்மொழிக்கு உயிரும் உடம்பும் என்று மதிக்கத் தக்க சங்கவிலக்கியம் என்பது பெரும்பாலும் காதல் வாழ்வு பற்றிக்கூறும் அகவிலக்கியமாகும். அகப்பொருள்இலக்கியம் என்ற பெயர் பெற்றிருப்பினும், இல்லற வாழ்வுக்குத் தொடர்பான உலகச் செய்திகளும், இயற்கைச் சூழல்களும், அரசியல் போரியல் நெறிகளும், உயர்ந்த எண்ணங்களும், நல்லவழக்க வொழுக்கங்களும் இவ்விலக்கியத்தில் நிரம்பவும் தெளிவாகவும் பொதிந்து கிடக்கின்றன. சங்கத்தொகை நூல்களுள் அகநானூறு நீண்ட அடிகள் கொண்ட பனுவலாதலின் எல்லா வகையிலும் பல்வேறு குறிப்புக்களும் நெறிப்பாங்குகளும் கொண்டதாக விளங்குகின்றது. மேலும், சங்கப் புலமைச் சான்றோர்கள் இயற்கைச் சூழ்நிலையில் வாழ்த்து மரஞ்செடி, கொடி, புள், பறவை, விலங்கு முதலான இயற்கை யுயிர்களின் வாழ்வியலையும் உணர்வியலையும் கடசற அறிந்தவர்களாதலின் அவர் தம் அறிவாற்றலை அகநானூறு விரிவாகப் பகர்கின்றது. முதற்கண் அகநானூறு கூறும் அன்புநெறியைக் காண்போம். அன்பு என்பது மக்கட்கு மட்டும் உரிய உணர்வன்று எல்லாவுயிர்க்கும் உயிராக விளங்கும் குணம் அன்பாகும். அதனாற்றான் ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று பொது நோக்கிற் கூறினார் வள்ளுவர். அன்பு பொதுப்பெருஞ் சிறப்பினது ஆதலின் ‘அன்பென்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்ததில்லை’என்று கம்பர் அதன் தனித்தன்மையை அழுத்தமாகப் பாடினார். பறவை விலங்கு இனங்கட்கும் அன்புவெளிப்பாடு உண்டு. மரஞ்செடி கொடிகட்கும் அன்புச் செயல் உண்டு. இவ்வுண்மை எங்குஞ் செயற்கையறிவும் செயற்கை மோகமும் உடைய இக்காலத்தவர்க்கு எளிதிற் படாது. அகநானூற்றுக் காலம் இயற்கை யறிவுக் காலம். ஆண்மான், பெண் மான், குட்டிகள் என்ற ஒரு குடும்பம். கொலை வில்லை ஏந்திய வேட்டுவன் அம்பு தொடுத்தபோது பெண் மான் இறந்துவிட்டது. அந்த இறப்பைப் பொறாது துயருற்ற ஆண் மான் புல்மேயவில்லை, சிறிதும் நீர் பருக வில்லை, நடக்கவும் முடியவில்லை. தன்னுடலில் அம்பு தைத்தது போல மாழ்கி அந்த இடத்திலேயே சோர்ந்து கிடந்துவிட்டது. கைம்மைப்பட்ட இவ்வாண்மான் செத்திருக்கவும் செய்யும்; தான் காக்க வேண்டிய மறிக்குட்டிகள் இருப்பதை நினைந்து மடியவில்லை. கணையிடக் கழிந்ததன் வீழ்துணை யுள்ளிக் குறுநெடுந் துணைய மறிபுடை யாடப் புன்கண் கொண்ட திரிமருப் பிரலை மேய்பதம் மறுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து நெய்தலம் படுவிற் சின்னீர் உண்ணாது எஃகுறு மாந்தரின் இணைந்துகண் படுக்கும் (அகம் 371) என்ற இளங்கீரனார் பாடலில் இரலைக் கணவன் மான் மனையாளிடத்தும் மறிக் குழந்தைகளிடத்தும் கொண்ட அன்பும் குடும்பப்பொறுப்பும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. வழி காட்வும் செய்கின்றன. ஒரு யானைக் குடும்பத்தின் அன்பு. ஆண் யானையாகிய களிறும் பெண் யானையாகிய பிடியும் உணவுதேடி மலைப்பக்கம் சென்றன. ஓரிடத்துச் சுரபுன்னையும் வாழையும் வளர்ந்தோங்கிய சாரல் இருந்தது. முதற்கண் அவற்றைத் தின்னச்சென்ற களிறு விரும்பித் தின்னும் மகிழ்ச்சியில் அறியாது அருகிருந்த படுகுழியிற் காலை வைத்து உள்ளே விழுந்துவிட்டது. நேர்குத்தான ஆழ்குழியாதலின் ஏறமுடிய வில்லை. இல்லறக் காதலும் ஒட்பத் திறலும் வாய்ந்த பெண் யானை .உடனே அடுத்திருந்த பெருமரக்கிளைகளை முறித்து வருந்தும் தன் யானைக் கணவன் ஏறி வருவதற்குப் படிகள் அமைத்துக்கொடுத்தது. ஆண் யானையும் தப்பிப் பிழைத்துத் தன் காதற்பிடியோடு புறப்பட்டது. இந்த அகநானூற்றுச் செய்யுளில் வரும் அன்புடை யானைக் குடும்பத்தை எண்ணித் தான் “காதன் மடப் பிடியோடும் களிறு வருவன கண்டேன்” என்று அப்பரடிகள் பாடினார் போலும். பெண் யானை இத்தந்திரம் செய்திராவிட்டால் கானவர்கள் ஆண் யானையைப் பிடித்து அடிமைப்படுத்தி யிருப்பார்கள். தற்காத்துத் தற்கொண்டானையும் காத்த சிறப்பு இந்தப் பிடிக்கு உண்டு. இந்த அன்பு நிகழ்ச்சியை, கழைநரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு வாழை யோங்கிய தாழ்கண் அசும்பில் படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலியப் பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் (அகம்8) என்று நான்கு அடிகளில் பாடுவர் பெருங்குன்றூர்க் கிழார். ஆய் எயினன் என்ற வீரன் பறவை யினங்களை நன்குவளர்த்துக் காப்பவன். அதனால் அவன்பால் எல்லாப் பறவைகளும் அன்பு காட்டின. பாழி என்ற போர்க்களத்தில் ஞிமிலி என்பவன் ஆய்எயினனைக் கொன்றுவிட்டான். கொன்ற நேரம் கடுமையான நண்பகல். எயினனது சிதைந்த உடம்பு போர்க்களத்தில் வெயிலிற் கிடப்பதைக் காணப்பொறாத பருந்து முதலான பறவைகள் ஒருங்கு கூடித் தஞ்சிறகுகளை யெல்லாம் மேலே குடையாகப் பரப்பிப் பறவைக் காதலன் உடலை வெயிலிற்படாமற் காத்தன. பகலிற் கண்தெரியாத கூகை தான் இந்தச் செய்ந்நன்றி நிகழ்ச்சியிற் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருந்திற்றாம். பறவையினம் ஒரு மனிதனிடம் காட்டிய வியத்தகு அன்புச் செயலைப் பரணர் நான்கு பாடல்களில் பாராட்டுகின்றார். எனவே அகநானூறு மக்களின் அன்பொன்றனையே பாடவில்லை; ஏனையுயிர்களின் அன்புகளையும் பாடிப் பாராட்டுகின்றது. இதுவே சங்கவிலக்கியத்தின் தனி மாண்பு. 2. மனித நெறிகள் ‘அறிவறிந்த மக்கட்டேறு’என்று வள்ளுவப் பெருமகன் சொல்லியபடி, அறிவுடையனே மனிதன் எனப்படுவான். பிறிதோர் உயிரின் துன்பத்தை உணரும்போது தான் நமக்கு அறிவுண்டு என்று சொல்லவேண்டும். அங்ஙனம் உணராத நிலை அறிவு என்ற பெயருக்குத் தகுதியில்லை. இவ்வுலகமும் இவ்வுலகத்து உயிர்களும் நமக்காக இருக்கின்றன எனவும், நமக்குப் பணிசெய்ய வேண்டும் எனவும் மனிதவினம் மடம்பட்டு வீறு பேசுகின்றது இவ்வுலகம் எல்லாவுயிர்க்கும் பொது என்ற அறிவும், ஏனையுயிர்கட்கும் மனிதன் தொண்டு செய்ய வேண்டும் என்ற அறிவும் இன்றைய மக்கள் வாழ்வில் பதியவில்லை. தன்னலத்துக்காகப் பிறவுயிர்களை வருத்தி வாழும் போக்குத்தான் இன்று வளர்ந்துவரும் அறிவியலுலகில் பெருகிவருகின்றது. அகநானூறுபோன்ற சங்கவிலக்கியங்கள் படிப்பது பரவினால், பரப்பப்பட்டால், மனிதநெறி, என்ற இரக்கப் பண்பும் தன்னல மறுப்பும் நாட்டில் வளரும். ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’என்ற தொடரை நாம் அடிக்கடி கேட்கின்றோம். இத்தொடர் அகநானூற்றில் வரும் அழகுத்தொடர் என்று நினைவூட்ட விரும்புகின்றேன். முறைப்படி கற்பித்தால் அகநானூற்றுச் செய்யுள் ஒவ்வொன்றும் சிறுகதை போலவும், ஓருறுப்பு நாடகம் போலவும் விறுவிறுப்பாக இருக்கும். மனிதர்கள் பின்பற்ற வேண்டிய அவ்வளவு அறநெறிகள் அகநானூற்றில் உள்ளன. தலைவனும் வண்டும் பற்றிய ஒரு காட்சி: தலைவியைப் பிரிந்து நெடுந்தொலை சென்ற தலைவன் வினையை வென்றியொடு முடித்துக்கொண்டு கார்காலத் தொடக்கத்தில் வீடு திரும்புகின்றான். விடு நெருங்குகின்றது. மாலைப் பொழுதிற்குள் தலைவியைக் கண்டு இன்புறவேண்டும் என்று அவன் நெஞ்சு வேகப்படுகின்றது. மனவேகத்திற் கேற்பக் குதிரையும் வேகம். இத்தலைவன் வேகத்தேரில் வருகின்ற வழியோ பெருஞ்சோலை; வண்டுகள் மலர்களொடு பிணைந்து கிடக்கின்றன. ஒரு சிந்தனை தலைவனுக்கு வருகின்றது. ஓடுகின்ற தேரில் கிண் கிண் என்று ஓசை செய்யும் மணியின் நாவினைக் கயிற்றாற் கட்டி ஓசையை அடக்குகின்றான். குதிரை பறக்கின்றது; ஆனால், மணியொலியில்லை. ஏன் இவ்வாறு செய்தான்? தன் இன்பவேட்கைக்காகப் பூஞ்சோலையிற் பிணைந்து கிடக்கும் வண்டுகளின் இன்பத்தைக் கலைக்கலாமா? கெடுக்கலாமா? தொல்காப்பியர் கூறியபடி இவ்வுலகில் எல்லாவுயிர்க்கும் இன்பந்துய்க்கும் உரிமை யுண்டல்லவா? இந்தப் பொதுச் சிந்தனை தோன்றியதும் தலைவன் மணியின் நாவைக் கட்டினான். நாலறிவுடைய வண்டின் இன்பத்தை மதித்ததனால் இத்தலைவன் ஆறறிவுடைய மனிதன் ஆனான். பூத்தபொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேரன் (அகம்.4) என்று குறுங்குடி மருதனார் இவன் செயலை மாண்வினை என்று பாராட்டுகின்றார். வேட்டுவனும் ஆண் பன்றியும் எதிர்ப்பட்ட ஒரு காட்சி: ஓர் ஆண் பன்றி தன் பெண் பன்றியொடும் குட்டிகளொடும் இரைதேடிப் புறப்பட்டது. அப்போது வேட்டுவன் ஒருவன் தன் வேட்டை நாயைப் பன்றிமேல் ஏவினான். ஆண் பன்றி அந்நாயைத் துரத்தி ஓட்டியது. மேலும் வேடுவர்கள் தன்மேல் வராமல் எதிர்த்து விலக்கியது. விலக்கியதோடு போய்விடாமல் தன் குட்டிகளையும் பன்றிப் பெண்ணையும் காவலான இடத்தில் வைத்துவிட்டுப் வில்வேடுவன் வருகின்ற வழிபார்த்து அவனைத் தாக்குதற்காக அசையாது சினத்தொடு நின்று கொண்டு இருந்தது. இவ்வீரக் காட்சியைக் கண்டான் வேடுவன். ஒரு சிந்தனை அவனுக்குப் புறப்பட்டது. அதுதான் மனிதச் சிந்தனை. அவ்வாண் பன்றியைக் கேவலம் பன்றியாக அவன் நினைக்கவில்லை. அதனைத் தன் தலைவனாகக் காண்கின்றான். வழி பார்த்து நிற்கும் அதன் எதிர்ச்செயலைத் தன் தலைவன் போர்க்களத்துப் பகைவர் படையை விலக்கித் தடுப்பதற்கு முன்னிற்பதாகக் காண்கின்றான். வீரவுணர்ச்சி விலங்கிற்கும் உண்டு என்று உணர்ந்தவுடனே, பன்றியே நீ என் தலைவனுக்கு ஒப்பாவாய் என்று பாராட்டிவிட்டுத் தொடுத்த அம்பை எடுத்துக்கொண்டு செல்கின்றான் என்று கபிலர் ஓர் அரிய நிகழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார். அரும்புகழை முடுக்கர் ஆட்குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கிக் கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி மடைசெலல் முன்பின்தன் படைசெலச் செல்லாது அருவழி விலக்குமெம் பெருவிறல் போன்மென எய்யாது பெயரும் (அகம் 248.) என வரும் பண்பு மனிதநெறி தழுவியது. ஒரு மனிதன் தன் மனைவி மக்களைக் காக்க நினைக்கின்றான். ஓர் ஆண் பன்றி தன் பெண்ணையும் குட்டிகளையும் காப்பாற்றும் பொருட்டு வீரங்கொள்கின்றது. இத்தற்காப்புச் செயலைத் தன் செயல்போல உணர்பவன்தானே மனிதன். அத்தகைய அறிவுடை இரக்க மனிதர்களை அகநானூற்றில் நிறையப் பார்க்கலாம். 3. பொருள் நெறிகள் ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று மிகவும் வெளிப்படையாக மனத்திற் பதியும்படி திருக்குறள் கூறுகின்றது. தமிழ் நூல்கள் செல்வத்தை நன்கு ஈட்டித் திரட்டி நல்ல வழியில் தனக்கும் பிறர்க்கும் பயன்படுத்த வேண்டுமென்று கூறுமே யன்றிச் செல்வத்தைத் தேடவேண்டாம் என்று முயற்சியைத் தடுப்பதில்லை. தமிழர் திருமண வாழ்வைக் குடும்ப வாழ்வு என்று சொல்லாமல் இல்லறம் என்று உயர்த்துக் கூறுவதிலிருந்தே கணவனும் மனைவியும் இன்பம் துய்க்கும் அளவில் நில்லாமல் அறங்களும் செய்யவேண்டுமென்ற கருத்துப் பெறப்படும். அகப்பொருளிற் பொருள் வயிற்பிரிவு என்பது இன்றியமையாத பிரிவாகும். சங்க விலக்கியங்கள் இன்பப் பொருள் பற்றிப் பாடினாலும் இன்பத்துக்குத் துணையான ஏனைச் செய்திகளை விரிவாகக் கூறுகின்றன. ஆதலின் சங்கப் பனுவல்களை வாழ்க்கையிலக்கியங்கள் என்று மதிக்க வேண்டும். பொருள் ஏன் தேடவேண்டும்? உள்ள செல்வம் போதாதா? பொருளீட்டத்துக்காகத் துன்பப் படவேண்டுமா? இளமையில் இன்பத்தைத் துறந்து, மனைவியைப் பிரிந்து நெடுந்தொலை செல்லலாமா? இன்பம் பெரிதா? பொருள் பெரிதா? என்ற பல பொருள் நெறிகளை அகநானூறு தெளிவிக்கின்றது. திருமணமாவதற்கு முன் செலவும் தொடர்பும் பொறுப்பும் குறைவு. மணமானபின் குடும்பம் என்ற கட்டு ஏற்படுவதால் உறவுகள் பெருகுகின்றன; உலகத் தொடர்புகள் விரிகின்றன; பழியின்றிப் புகழ்பெறும் எண்ணங்கள் மலர்கின்றன. பெற்றோர் மனைவி, மக்கள் இவர்களைப் போற்றவும், உறவினர்க்கும் ஊரார்க்கும் உதவவும், வறியவர்கக்கு வழங்கவும் தம்மை இகழ்ந்து செருக்கித் திரிவாரை அடக்கவும் பொருளின் துணை வேண்டும். கேள்கே டூன்றவும் கிளைஞ ராகவும் கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் (அகம்.93) என்று நக்கீரனார் கூறுவதுபோல, குடும்பமானவுடன் முதற்கண் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்குச் செல்வம் வேண்டுமல்லவா? ஒரு கணவன் சிந்திக்கின்றான்; இளைய மனையாளின் புதிய இன்பத்தையே நினைந்துருகி ஊரிலிருந்தால், நண்பர்கள் நெருங்க மாட்டார்கள், குறைவார்கள். உற்றார் துன்பம் பெருகிக் கொண்டிருக்கும். செல்வம் ஈட்டிவந்து பக்கத்து நன்றாக வாழ்பவர்களின் வளத்தைப் பார்க்கும்போது பொறாமையும் ஏற்படும். நட்டோ ரின்மையும் கேளிர் துன்பமும் ஒட்டா துறையுநர் பெருக்கமுங் காணூஉ ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய மென்முலை முற்றங் கடவா தோர் (அகம்.279) என்று இவ்வாறு ஒரு குடும்பத் தலைவன் புகழையும் இகழையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஊரில் இருக்க விரும்பாமல் பொருளீட்ட நெடுந்தொலை செல்லுகின்றான். சில குடும்பத்தில் பெற்றோர் தொகுத்த செல்வம் பிள்ளைகட்கு இருக்கும். முன்னோர் ஈட்டிய பொருளை வைத்துச் செலவு செய்து இளங்காதலர்கள் இன்பக்காலம் கழித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? இப்போக்கை நன்னெறியென்று சங்க நூல்கள் போற்றுவதில்லை. இன்பம் துய்த்தாலும் ஈதல் வழங்கினாலும் ஒவ்வொருவரும் தாந்தாம் புதிதாக ஈட்டிய பொருளிலிருந்தே வாழ்க்கை நடத்துதல் வேண்டும் எனவும், இன்னொருவர் தேடிய செல்வத்தைக் கொண்டு வாழ்தல் பகைவர்களின் கேலிக்கு இடமாகும் எனவும் பாலை பாடிய பெருங்கடுங்கோ எச்சரிக்கின்றார். உள்ளங் குவத்தல் செல்லார் கறுத்தோர் எள்ளல் நெஞ்சத் தேஎச்சொல் நாணி (அகம்.111) என்றபடி இருப்பதைக் வைத்துக்கொண்டு வீட்டில் தங்கிவிடாமல் மற்றவர் சொல்லும் ஏளனத்துக்கு நாணப்பட்டுப பொருளீட்டப் பிரிகின்றான் ஓர் இளங்காதலன். திருமணமாகிப் பல்லாண்டுகள் மனைவியோடு கூடி வாழ்வதைச் சங்கச் சமுதாயம் விரும்புவதில்லை; பாராட்டிப் பாடுவதுமில்லை. அங்ஙனம் பல்லாண்டு தங்கிவிட்டால் பின்னர்ப் பிரியவிரும்பான்; மடியனாவான் பிறருக்குப் பாரமாகவும் ஆகிவிடுவான். இவன் பிறரைத் தாங்குவது போய் உறவெல்லாம் இவனைத் தாங்க வேண்டிய மாறுநிலை ஏற்படும். ஆதலால் பொருள் காரணமாகவோ, போர் காரணமாகவோ திருமணமான புதிதிலே பிரிந்து செல்வதைத்தான் அகநானூறு முதலான சங்கப் பனுவல்கள் வலியுறுத்துகின்றன. வண்டுபடுபு இருளிய தாழிருங் கூந்தற் சுரும்புண விரிந்த பெருந்தண் கோதை இவளினுஞ் சிறந்தன்று ஈதல் நமக்கு (அகம்.131) என்றபடி, மாலைமணமும் கூந்தல் வனப்பும் உடைய இவளைவிட ஈதலறமே சிறந்தது என்று கடமையுணர்வோடு ஓர் இளந்தலைவன் கடிதிற் பிரிகின்றான். சங்ககால மகளிர்கள் இன்பக் கருவிகள் அல்லர் பிரிவில் பெரிதும் இரங்கித் துயருற்றாலும், தலைவன் கடமை செய்ய புறப்படுவதை முழுதும் தடுப்பதில்லை. வருந்தி விடுத்தாலும் வாழ்த்திக் கொண்டிருத்தல் சங்கப் பெண்களின் சார்பாகும். தன் கணவன் வீரத்திலும் கொடையாலும் குடிக்குப் புகழ் சேர்ப்பதையே அவர்களும் விரும்பினர். எத்துணையோ தலைவியர்கள் சென்ற தலைவன் கடமைக்கு வேண்டிய நாளெல்லாம் இருந்து வருக; வினைமுடித்துப் பொருளீட்டி வருக; நோயின்றி நலமாக வருக என்று இல்லிலிருந்து நாளும் வாழ்த்துவதை நல்ல அகநானூறு எடுத்துக் காட்டுகின்றது. ‘என், ஆய்நலம் தொலையினும் தொலைக வென்று நோயில ராகநங் காதலர்’ (அகம்.115) ‘’நோய்நாம் உழக்குவ மாயினுந் தாந்தஞ் செய்வினை முடிக்க தோழி’ (அகம்.155) ‘நாமழத் துறந்தன ராயினும் தாமே.... செழுநகர் நல்விருந் தயர்மார் ஏமுற விழுநிதி எளிதினின் எய்துக’ (அகம்.205) என்று புலவர் பலர் பாடியபடி, கணவன் தன் பொருளீட்டுங் கடமையிலும் பிறர்க்கு உதவி செய்யும் குறிக்கோளிலும் சங்கப் பெண்குலம் ஒத்துழைத்தது என்பதனை அகநானூற்றால் அறிகின்றோம். 4. உலகநெறிகள் உலக நடப்பிற்கும் ஒரு குடும்பத்தின் நல்வாழ்விற்கும் பல்வேறு அறங்கள் தேவைப்படுகின்றன. விரும்பினும் விரும்பாவிடினும், ஏற்பினும் ஏலாவிடினும் ஒவ்வொருவர்க்கும் பிறரோடும் பிறவுயிரினங்களோடும் தொடர்புகள் நரம்பு மண்டலம் போல் பின்னிச் செறிந்து கிடக்கின்றன. பல அறங்களை வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் அமைதியான உலக இயக்கத்துக்கு வழி செய்பவர்கள் ஆவர். அகநானூறு இல்லற வாழ்வு பற்றி மொழியும் பனுவலாயினும் சமுதாய நலத்துக்கு வேண்டிய பல நெறியறங்கள் நல்ல தெளிவான மொழி நடையிற் சொல்லப்பட்டுள. உலகம் என்பது குடும்பங்களின் தொகுதி. வாழைத் தோப்பில் ஒரு மரம் நோயுற்றாலும் அந்நோய் ஏனையவற்றுக்கும் பரவுமாப்போல், ஓர் ஊரில் ஒரு குடும்பம் இயல்பான அறநெறி பிறழ்ந்தால் அந்நெறி எங்கும் பரவிவிடும். ஆதலின் நன்னெறியைப் போற்றுவது ஊரார் கடனாகும். இன்று எல்லாம் அரசின் பொறுப்பு என்று விட்டு விட்டு அவரவர் காரியம் பார்ப்பது போன்ற தன்னலப் போக்கு சங்க காலத்து இருந்ததில்லை. ஊரில் ஒழுங்கு தம் பொறுப்பு என்று ஒவ்வொரு ஊராரும் கருதினர். குற்றம் இழைப்பாரை ஊர்ப் பெரியோர் கூடித் தண்டித்தனர். ஓர் இளம் பெண்ணின் கற்பைக் கெடுத்த கயவனுக்கு ஊர்ச் சான்றோர் தண்டனை கொடுத்த செய்தியை அகநானூறு கூறுகின்றது: திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய அறனி வாளன் அறியேன் என்ற திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய் முறியார் பெருங்கிளை செறியப் பற்றி நீறுதலைப் பெய்த ஞான்றை வீறுசால் அவையத் தார்ப்பினும் பெரிதே. (அகம்.256) காதலித்த பெண்ணை ஒருவன் கைவிட்டு விட்டான். தனக்குத் தொடர்பில்லை என்று பொய் கூறினான். சான்றுகளால் தொடர்புண்டு என்ற உண்மையைத் தெளிந்த ஊர்க் கூட்டத்தார் கற்பொழுக்கத்திற்குப் புறம்பாக நடந்த அக்கயவனை ஊரார்முன் மரத்திற் கட்டிச் சுண்ணாம்பு நீற்றினை அவன் தலையில் வைத்து ஒறுத்தார்கள் என்ற வரலாற்றுக் குறிப்பினால் சங்கத் தமிழ்க் காலம் கற்புக்கு உயர்ந்த தனிமதிப்புக் கொடுத்த காலம் என்பது பெறப்படும். இன்பத் துறையில் கற்பு என்ற ஒருமைநிலை பிறழ்ந்தால் வேறு எந்த உலக நெறியும் வெறியாகத்தானே போகும். உலக நடப்பிற்குத் தொழில் வேற்றுமைகள் உடம்பின் உறுப்புக்கள் போல வேண்டும். தொழில் வேற்றுமை குலவேற்றுமையாகவும், உயர்வு இழிவாகவும் கருதல்கூடாது. பிறர் உழைப்பால் நாம் வாழ்கின்றோம்; நம் உழைப்பினால் மற்றவர் வாழ்கின்றனர். இவ்வுண்மைமையை உணர்ந்த சங்க மக்கள் ஒத்த மதிப்பொடு யாரொடும் பழகினர். அகநானூற்றில் வரும் முல்லைப் பாடல்கள் உலக சமநெறியைக் காட்டுகின்றன. வினையை முடித்த தலைவன் பாகன் ஓட்டத் தேரில் வேகமாக வருகின்றான். வீடு வந்துவிட்டது; இறங்குக என்று பாகன் சொல்லும்போது, தலைவன் ‘இவ்வளவு விரைவாக எப்படி வந்தாய்? காற்றையே குதிரையாகப் பூட்டினையா? உன் மனதைக் குதிரையாகப் பூட்டினையா? என மனமாரப் பாராட்டி விட்டு, தன்மார்போடு தேர்ப்பாகனைத் தழுவிக்கொண்டு தன் மனைக்குள் புகுந்தான். மனையாளோ தேர்வலவனையும் வரவேற்று விருந்து பெற்றேன் என்று மகிழ்ந்தாள். வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ மானுரு வாகநின் மனம்பூட் டினையோ உரைமதி வாழியோ வலவ எனத்தன் வரைமருள் மார்பின் நளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை விருந்தேர் பெற்றனள் திருந்திழையோளே (அகம்.384) தேரோட்டிதானே என்று எண்ணாது போர்ப் புகழ்த்தலைவன் தோளொடு தோள் தழுவினான் என்பதனையும், திண்ணை வெளியில் இருக்கச் செய்யாது வீட்டிற்குள்ளேயே கொண்டு சென்றான் என்பதனையும், இல்லற நங்கை தேரோட்டி வந்த தொழிலாளியை நல்விருந்தாக மதித்துப் போற்றினாள் என்பதனையும் நினைக்கும்போது, சங்ககாலம் மீண்டும் நம் நாட்டிற்கு இக்காலத்து வாராதா என்ற ஆசை பிறக்கின்றது. உலக வியக்கத்தின் ஒழுங்கு என்பது அரசியல் ஒழுங்கைப் பொறுத்தது. சங்க காலம் முடியரசுக் காலமாயினும் நடைமுறையில் மக்களை மதிக்கும் குடியரசுப் பண்பு அன்று நிலவியது. அரசனுக்கும் சான்றோர்களுக்கும் பெருந்தொடர்பு இருந்தது. எவ்வகை அரசு முறையிலும் மானவுணர்வுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். ஈனமற்ற மானம் உடையவனே தூய வழிகாட்டியாவான். வெண்ணிப் பறந்தலை என்ற போர்க்களத்தில் சோழன் கரிகாலனுக்கும் சேரன் பெருஞ் சேரலாதனுக்கும் கடும்போர் நடந்தது. சோழன் விட்ட அம்பு சேரனது மார்பைத் துளைத்து முதுகு வரை பாய்ந்து முதுகுப் புண்செய்தது. நேர் நின்று சேரன் மார்பிலேதான் அம்பினை ஏற்றான் என்றாலும் புறப்புண் ஏற்பட்டுவிட்டதே என்று மனஞ்சோர்ந்து மானத்தால் மாழ்கினான். இந்த இழிவுக்குப் பின் ஆட்சி எதற்கு என்று அரசைத் தானே துறந்து உயிர்விடும் நோக்கத்தொடு வடக்கிருந்தான். இந்த மானச் செய்தியைக் கேட்ட சேர நாட்டுப் பெருமக்களும் நட்பிற் பிரியாது சேரனொடு வடக்கிருந்து ஒக்க உயிர் துறந்தனர். கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருதுபுண் நாணிய சேர லாதன் அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் அரும்பெறல் உலகத் தவனொடு செலீஇயர் பெரும்பிறி தாகி யாங்கு (அகம்.55) என்ற அகநானூற்றுச் செய்யுளில் வரலாற்றுக் கவிஞரான மாமூலனார் சங்கத் தமிழர் கொண்டொழுகிய மானத்தையும் நாணத்தையும் நட்பையும் உயிர்த் துறவையும் சிறந்த உலக நெறியாக உவமையில் வைத்துக் காட்டுகின்றார். இதனால் தன்னலமற்ற அரசியல் வாழ்வே சிறந்த உலகநெறிக்கு அடிப்படை என்பது பெறப்படும். 16. தொல்காப்பியர் நெறிகள் 1. குடும்ப நெறிகள் தொல்காப்பியர் மூவாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ஒரு பெருந்தமிழ்ப் புலவர். இவர் எழுதிய உலகப் பெருநூலான தொல்காப்பியம் தமிழர் செய்தவத்தால் முழுநூலாகக் கிடைத்துளது. இந்நூல் சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோ, சாத்தனார், திருத்தக்கதேவர், சேக்கிழார், கம்பர் முதலான எல்லாப் புலவர்க்கும் வழிகாட்டியாக விளங்கியது. நீருள் ஒளி நிழல் போற் கிடந்த இத்தமிழ் முதனூல் இன்று குன்றின் மேலிட்ட மின்னொளி போலப் பல நாட்டிலும் பரவி வருவது கண்டு தமிழர்களாகிய நாம் பெருமையும் பெருமிதமும் கொள்கின்றோம். ஆடம்பரமான புறக்கோலப் பொருள்களுக்குப் பழமை புதுமை என்ற வளர்ச்சி வேறுபாடு உண்டேயன்றி, இயற்கையான பொருள்கட்குப் புழமை புதுமை என்ற கால வேற்றுமையில்லை. கி.மு.காலத்துக் காற்று, கி.மு.காலத்து நெருப்பு, கி.மு.காலத்துத் தண்ணீர் என்று இயற்கைக்குக் காலங் கூறுவதில்லை. அதுபோல மக்களின் இயற்கை யுணர்வுகளை ஆராய்ந்து கூறும் எச்சான்றோர் நூல்களும் காலப் பழமையினால் கருத்துக்கள் பழமையாகி விடா. இன்று எழுதிவரும் கருத்துக்கள் எல்லாம் காலப்புதுமையினால் நல்லன ஆகிவிடுமா? எம்மொழியிலும் உயர்பெருஞ் சான்றோர்கள் தங்கால மக்களை மட்டும் மனத்தில் வைத்துப் பாட நூல்கள்போல எழுத எண்ணுவதில்லை. வருங்கால மக்களின் வாழ்வும் அப்பெரு மக்கள் உள்ளத்தில் உண்டு. ஆதலின் பெரியவர்தம் நூல்களைக் காலப் பழமையெனப் பேதைமை யினால் கழித்தொதுக்காது, ஐம்பூதங்கள் போல மக்களின் இயற்கை வாழ்க்கைக்குச் சாலச் சிறந்தவை என்று மதித்துப் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தகைய வழிகாட்டும் நூல்களுள் ஒன்றே தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் கண் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும், நாட்டுக்கும், அரசியலுக்கும், காதலுக்கும், வீரத்துக்கும், மெய்யுணர்வுக்கும், மொழிக்கும், இலக்கியத்துக்கும் பல நெறிகள் எளிமையாகவும் தெளிமையாகவும் கூறப்பட்டுள. அவற்றுள் குடும்பம் பற்றிக்கூறும் தொல்காப்பிய நெறிகளை அறிந்து கொள்வோம். எந்த ஓர் ஆடவனும் ஒரு பெண்ணுக்குக் கணவன் ஆகலாம் என்றோ எந்த ஒரு பெண்ணும் ஓர் ஆடவனுக்கு மனைவியாகலாம் என்றோ பொதுப் படையாக விலங்கு பறவை நிலைபோல் சொல்லிவிட முடியாது. இருவர் கணவன் மனைவியாகிக் குடும்பம் நடத்துதற்கு முக்கியமான பத்து ஒற்றுமைகள் அல்லது பொருத்தங்கள் வேண்டும் என்பர் தொல்காப்பியர். “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.” பழக்க வழக்கங்களும் சூழ்நிலையும், ஒத்த குலத்திற் பிறப்பில், பிறந்த குடிக்கேற்பப் பெருமையாக நடந்து கொள்ளும் நற்போக்கும் வேண்டும். பொருத்தமான வயது கொண்ட இளமையும் ஒருவரை யொருவர் உள்ளங் கவரும் பொருத்தமான உடல் வனப்பும் வேண்டும். குடும்பம் என்றால் எவ்வளவு சிறுபூசல்கள், பெருநோய்கள், அருந்துன்பங்கள். இவற்றைப் பஞ்சுச் சுமைபோல் எளிதெனத் தாங்கி குடும்பச் சகடத்தைச் சமுதாயத் தடத்தில் ஓட்டும் பேராண்மை தலைவனுக்கும் தலைவிக்கும் வேண்டும். இந்த ஆட்சித்திறம் ஆண்மை எனப்படும். இந்த ஆண்மை பெண்ணுக்கும் வேண்டும் என்பர் தொல்காப்பியர். குடும்பச் செம்மை எங்ஙனம் தோன்றும்? இன்பத்தில் அசையாத, வேறு போகாத ஒத்தவேட்கை வேண்டும். அதன் மேலும், உடலொற்றுமைப் பட்டாற்போலக் கலக்கமும் துளக்கமும் நடுக்கமும் இல்லாத உள்ளத்தொற்றுமை இருவர்க்கும் எப்போதும் இருந்தால்தான் இன்பங்கூட இனிய இன்பமாக இருக்கும். குடும்ப பிணக்குக்களையும் நடைமுறைகளையும் பிறர் வீட்டுப்படிகள் ஏறிச் சொல்லிப் புலம்பித் திரியாது, பெருமை காக்கும்நிறை என்ற முழுப்பொறுமை கட்டாயம் வேண்டும். இல்லறக் குடியாகி இருவர் ஆனது தாங்கள் மட்டும் வாழ்வதற்கன்று. பெருஞ்சமுதாயத்தின் ஓர் உறுப்பே குடும்பம் எனப்படும். உலகத் தொடர்போடு பல்வகை உறவு கொள்ளுதற்குரிய இயக்க வாயிலே குடும்பம் ஆகும். ஆதலின் எவ்வுயிர்க்கும் இரங்கி உதவும் அருளுணர்வு இல்வாழ்வார் இருவர்க்கும் வேண்டும். பிறநலம் பேணாத இல்வாழ்வு உண்மையில் ஒன்றுமில்லாத இல்வாழ்வாகவே கருதப்படும். இல்லறந் தொடங்கிவிட்டால் அலைமோதும் கரைபோல, நல்லவை தீயவை என்ற தாக்குதல்கள் வந்து கொண்டே யிருக்கும். அவ்வப்போது மேற்கொள்ளத்தக்கது எது? கொள்ளத் தகாதது எது? என்ற பகுத்தறிவுப் பான்மையும் வேண்டப்படும். அனைத்துக்கும் மேலாகத் திரு என்ற ஒரு பொருத்தம் குடும்பத் தலைவனுக்கும் குடும்பத்தலைவிக்கும் மாறாதும் வற்றாதும் வாடாதும் ஒருதலையாக வேண்டும். மாடமாளிகை, வங்கியிருப்பு, பெரும்பதவி, ஆட்பேர் மாகாணம் எல்லாம் பெற்றிருப்போர் உள்ளக் களிப்பாக மனமகிழ்வாக வாழ்கின்றனர் என்று சொல்ல முடியுமா? வானே மாடமாக, மண்ணே மனையாக திசையே கதவாக, இலை யெச்சிலே நிலையுணவாகப் பல குழந்தைகளொடு திரியும் இல்லறத்தார் எல்லாம் என்றும் வாடி அழுதமுகமாக ஓடிக்குவிந்த உள்ளமாக இருக்கின்றனர் என்று சொல்லமுடியுமா? புறவசதிகள் மல்லலாக இருந்தாலும் அல்லலாக இருந்தாலும் என்றும் கலகலப்பாக முகமலர்வாக அகப்பொலிவாக இருக்கும் மனப்பக்குவமே தொல்காப்பியர் வேண்டும் ‘திரு’என்ற நெறியாகும். கோவலன் பொருளெல்லாம் நகையெல்லாம் தொலைத்த நிலையிலும் கற்புக் கண்ணகி உள்ளம் அசையவில்லை. இராமன் தனக்குரிய அரசு துறந்து வனம் புக்கபோதும் சீதை நல்லாள் மனம் கவலவில்லை. இத்தகைய திருநிலை என்னும் ஒரு நிலை கணவனுக்கும் மனைவிக்கும் நிலையாகவேண்டும் என்று இல்லற நெறிகாட்டுவர், தமிழ் முதனூல் எழுதிய தொல்காப்பியர். 2. பெண்மை நெறிகள் தமிழ் முதனூலான தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. மூன்றாவது பிரிவான பொருளதிகாரம் 665 நூற்பாக்கள் கொண்டது. ஒவ்வொரு நூற்பாவும் தமிழ் நாகரிகத்தின் கல்வெட்டாகும். பேரரசர்கள் நிறுவிய வரலாற்றுக் கற்றூண்களும் கற்கோட்டைகளும் சின்னமும் பின்னமும் பட்டு அழிந்தொழியும் இவ்வுலகில் ஒரு ஒரு தமிழ்ப்புலவன் மூவாயிரம் ஆண்டுகட்குமுன் பனையேட்டில் எழுதிய தொல்காப்பியம் பெருநூல் சிதைவின்றி வழிவழிக் காக்கப்பட்டு இன்றும் நம் உடைமையாக வாழ்கின்றது. காலக்கோட்படாதும் கடும்பகைக் கோட்படாதும் இத்தனிப் பெரும் பனுவலைக் குடும்பச் சொத்துப்போற் காத்தளித்த நம் முன்னோர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு தவப்பெரிது. நம் மூதாதையர் அடித் தொண்டினைப் பின்பற்றித் தமிழினத்தின் பொது வுடைமை யான தொல்காப்பியத்தினை நம் பிந்தியோருக்கு நாமும் காத்து வழங்க வேண்டாமா? வழங்க வேண்டுமெனின் தொல்காப்பியர் மொழிந்த நெறிகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? பெண்மை பற்றி இப்பேராசான் கூறிய நெறிகளைக் காண்போம். ‘பெண்ணின் பெருமை’என்று ஒரு தனிநூல் எழுதினார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. “எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்று கொதித்தெழுந்து கும்மிபாடினார் இந்தியத் தமிழ்க் கவி பாரதியார். முன்னேற்றக் கொள்கையினர் இன்று பரப்பிவரும் ஆண்பெண் சமனியம் தொல்காப்பியர் காலத்தில் இத்தமிழ் மண்ணில் நீரோட்டம் போல் படிந்து பதிந்துகிடந்தது. இன்னும் ஒருபடி கூடச் சொன்னால் குடும்பவுலகில் இல்லறச் சாவியை தலைவியிடம் வழங்கியவர் தொல்காப்பியர். முதலுரிமை யுடையவள் பெண்ணே என்பது அவர் கருத்து. அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய என்ப செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான என ஒன்பது பண்புகளைப் பெண்மைக் குணங்களாகக் கூறுவர் தொல்காப்பியர். பெண்ணைக் கல்வியறிவில்லாதவள் எனவும் பிறரிடம் கேட்டுத்தான் அறிவு பெறுபவள் எனவும், பெற்றோரும் கணவனும் கற்பித்தபடி நடக்கும் கற்புடையவள் எனவும், சில நாடுகளில் உரிமையில்லாத குடிகள் இருப்பது போலப் பெண்ணினத்தைச் சமுதாயத்தில் கடைத்தரமாக இழித்துக் கூறியது இடைக்காலம். இக்கொள்கை தொல்காப்பியர் காலத்தில் சிறிதும் இல்லை. பெண்மைக்கு முதன்மையளிப்பது, பெண்மையை இல்லாட்சிக்குப் பொறுப்பாக்குவது, பெண்மையைக் காப்பது, பெண்மையை வணங்குவது என்பவை தொல்காப்பியம் புலப்படுத்தும் தமிழ்நெறிகள். அதனாலன்றோ தமிழ் நிலத்தின் முதற் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பெண்களைக் காப்பியத் தலைவர்களாக வைத்துப் பாடின. திருவள்ளுவர் இல்லறவியலில் வாழ்க்கைத் துணை நலம் என மனைவிக்குத் தனியதிகாரம் பாடினார். தன்னையும் காத்துக கணவனையும் போற்றிக் குடும்பப் பொறுப்பையும் கலங்காது நடத்துபவள் பெண் என்று நீர்க்குடம் சுமக்கும் பெண் தலைமேல் எவ்வளவு பெரும்பாரத்தை வள்ளுவர் ஏற்றுகின்றார். இதனால் தொல்காப்பியர் திருவள்ளுவர் போன்ற நெடிய முன்னோர்கள் பெண்ணினத்தின் தனிப் பேராற்றலை உணர்ந்திருந்தார்கள் என்பது பெறப்படும். முதலுரிமை உடையவள் தலைவி என்றால் கடமையும் முதற்கண் செய்யவேண்டியவள் அவளே என்பது கருத்து. உரிமையும் கடமையும் ஒன்றிச்செல்பவை. உரிமை எந்த அளவு, அந்த அளவு பொறுப்பும் உண்டு. ஆதலின் தொல்காப்பியர் உரிமை நிறைந்த தலைவிக்குப் பின்வரும் நெறிகளைக் கூறுகின்றார். “கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலு பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள்.” கற்பு என்பதற்குக் கல்வி என்ற ஒரு பொருளுண்டு. “மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார்” என்று கம்பரும் இச்சொல்லை இப்பொருளில் ஆள்வர். ஆதலின் இல்லறப் பெண்ணுக்கு மனையியற் கல்விவேண்டும். இன்றுங்கூட மகளிர் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் இம்மனையியற் கல்வி கற்பிக்கப்படுகின்றது. இன்பவுணர்க்குத் தக்க புலவிநுணுக்கங்கள் தெரிதல் வேண்டும். அஃதாவது, பாலியல் அறிவுவேண்டும். கணவனையும் குழந்தைகளையும் பேணிக்காக்கும் நடைமுறைகளின் பயிற்சிவேண்டும். பொறுத்துக்கொண்டேன் என்ற பகட்டு இல்லாமலே மலர் ஒடுங்கினாற்போல இடையூறுகளை மென்மையாகத் தாங்கிக் கொள்ளும் அமைதிப் பொறுமையும் குடும்பச் செய்திகளை ஊரறியக் கலக்காது மனத்தளவில் வைத்துக்கொண்டு காரியஞ் செய்யும் மனப்பக்குவமும் பெண்ணுக்கு வேண்டுவன. உறவில்லாத புதிய விருந்தினர்களை ஓம்புதலும் இருவகை உறவுடைய சுற்றத்தார்களை வரவேற்றுப்பேணலும் இல்லறத்தின் பெருங்கடமைகளாம். இக்கடமைகளை இரவு பகல், காலமற்ற காலம் என்று பாராது, உணவுப்பொருள் வேண்டுமளவு இல்லை யென்று முகஞ் சுளிக்காது, அடிக்கடி என்ன தொல்லை என்று கசந்து கொள்ளாது இக்கடமைகளை வல்லிதின் விரைந்து முந்துற்றுச் செய்க என்று தொல்காப்பியர் பெண்மை நெறி பகர்வர். பெண் கல்வித் திட்டத்தில் என்னென்ன பாடப்பொருள்கள் இருக்க வேண்டும் என்பதனை இத்தொல்காப்பிய நூற்பா மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே குறித்திருப்பது இன்றும் எவ்வளவு புதுமை! 3. ஆண்மை நெறிகள் சிந்தனைக் களஞ்சியமாம் தொல்காப்பியம் மேலோட்ட மாகப் பார்ப்பவர்க்கு இலக்கண நூலாகத் தோன்றும். அங்ஙனம் தான் இதுகாறும் எண்ணியும் பரப்பியும் வந்திருக்கின்றோம். ஆழ்ந்து அகன்று நுணுகிக்காணும் அறிவுடையார்க்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் ஆசிரியப் பாவால் இயன்ற திருக்குறளாகக் காட்சியளிக்கும்; வரலாற்றுப் பெயரில்லாத புறநானூறாகத் தோன்றும்; கதைமாந்தர் இல்லாத சிலப்பதிகாரம் போல ஒலிக்கும். வெயில் நுழையாத சோலையில் பன்மணப் பன்னிறப் பூக்கள் செறிந்து கிடப்பது போல இல்லறநெறி, பாலியல்நெறி, போர்நெறி, அரசியல் நெறி, மெய்ந்நெறி, பொதுநெறி, மொழிநெறி, இலக்கிய நெறிகள் தொல்காப்பியத்தில் மறிந்தோடிக் கிடக்கின்றன. அவற்றைப் பிரித்து வகைப்படுத்தினால் நெறிப் பன்மைகள் தெளிவாகும். அந்நெறி வகைகளுள் ஆண்மை நெறி ஒன்றாகும். தொல்காப்பியம் அகம் புறம் என இருபொருளைக் கூறும். இருவகையிலும் ஆடவர்க்கும் பங்கு உண்டு; பெண்டிர்க்கும் பங்குண்டு. ஆண் பெண் என்பன நட்புடைய நீரும் நெருப்பும் போன்றவை. ஒற்றுமையில் வேற்றுமையும் வேற்றுமையில் ஒற்றுமையும் கொண்ட இணைப்புடையவை. பிறப்பிலே உறவுடைய இவ்விருபாலினை எவ்வகையானும் முரணாகப் பார்த்தல் பொருந்தாது. எனினும் உலகியலாகவும் கடமை யாகவும் சில வேறு பாடுகள் வழி வழி வந்துள. அந்நிலையில் அகப்பொருளான இல்லறத்தில் பெண்ணுக்குக் கடமைப் பொறுப்பு மிகுதி. புறப்பொருளான உலகியலில் ஆடவன் கடமை மிகுதி. தொல்காப்பியம் காமநூல்கள் போல ஆண் பெண் உடலுறுப்புக்களைப் புனைந்து சுட்டுவதில்லை. இரு பாலாரின் கடமைகளையும் மனவோட்டங்களையும் சமுதாயப் பார்வை செலுத்தி நெறிகளைக் கற்பிப்பது தொல்காப்பியம். ஆடவன் நெறிகட்கெல்லாம் இரண்டு அடிப்படைக் குணங்கள் உண்டு. ‘பெருமையும் உரனு ஆடூஉ மேன’ என்பது தொல்காப்பியம். ஆண் குலத்துக்குப் புறவுலகுத் தொடர்பு எளிது. தற்காப்பு அவனுக்கு இயல்பு நிலையில் வேண்டிய தில்லை. அவன் தனிப்பயணம் பலரின் கண்ணை இடுக்காது. இது இன்றும் பெரும்பகுதி மாறா உலகியல் ஆதலின் புறத்தே நெடுந்தொலை சென்று பொருளீட்டம் ஆடவன் கடமையா கின்றது. பொருளில்லை எனின் அவன் குடும்பம் பெருமை யிழக்கும். சிறுமைப்படும். எனவே குடும்பப் புகழோ, கொடைப் புகழோ, கல்விப் புகழோ, வீரப்புகழோ வேண்டி ஆடவன் பலகாலம் வாழ்நாளைப் புறத்தே கழிக்க வேண்டியவன் ஆகின்றான். அண்மையில் மணந்த காதலியைப் பிரிந்து இன்பந் துறந்து செல்வது என்பது எளிதன்று. இளமைக் காலத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கும் சிந்தனைவல்லார்க்கு உண்மை புலப்படும். இளைய ஆடவனின் மனப்போராட்டத்தை இன்பத்துக்கும் பொருளுக்கும் இடைப்பட்ட நெஞ்சப் பூசலைத் தொல்காப்பியம் பின்வருமாறு கூறுகின்றது. “நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்” இவ்வடிகளில் தலைவனின் எதிர்குதிரான உணர்ச்சிகளைப் பார்க்கின்றோம். இன்பந் துய்க்கும் நாட்களைக் கணக்கிட்டால் அவை சில நாட்களே. பருவங்களுள் இளமை அருமையானது. இந்நடுப்பருவம் தலைவியோடு இருப்பதற்கு உரியது. குடும்பம் ஆனபின் பொருள் முயற்சி கூடுதலாக வேண்டுமல்லவா? அப்போது தானே சமுதாயத்தில் தகுதிப் பெருமை உண்டாகும். வறுமையானால் இளிவில்லையா? உடைமையிருந்தால்தானே பல்வகை உயர்வுக்கு வழிபிறக்கும். இளங்காதலியின் அன்போ பெரியது. அவளை விட்டுப் பிரிதலோ இயலாதது என்று இவ்வாறெல்லாம் மணவின்பம் நுகர்ந்த புதுக் காதலன் பொருள் தேடப்புறப்படுபவன் கலக்கமாக எண்ணுகின்றான். எனினும் பெருமையும் உரமும் ஆண்மையின் குறிக்கோள் அல்லவா? ஆதலின், சமுதாயத்துப் பெருமை கருதி மனத் திட்பத்தொடு சில காலமாவது பொருளுக்குப் பிரியவேண்டும் என்ற தொல்காப்பியர் நெறி கூறுகின்றார். ஆண்மை நெறி என்பது அன்பு நெறியும் தழுவியது. அன்பை முரிப்பது ஆண்மையும் ஆகாது; இல்லறமும் ஆகாது. ஆதலின் பொருளுக்கோ பிற காரியங்கட்கோ செல்லும் கணவன் தன் மனைவியின் பிரிவுத் துயருக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். இல்லறத்துக்காகப் பொருளேயன்றிப் பொருளுக்காக இல்லறமன்று. காதலியின் உள்ளத் துயரை ஓரளவாவது தணித்துத்தான். அதற்காகச் சில நாள் கூடத் தங்கியிருந்துதான் மறுபடி புறப்பட வேண்டும் என ஆடவனை எச்சரிப்பர் அகப்புலவர் தொல்காப்பியர். துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன் வன்புறுத் தல்லது சேறல் இல்லை. என்றபடி இல்லறத்தைப் போற்றும் வழி காட்டுவது இத் தமிழ் நூல். இல்லக் கிழத்தியின் துன்பத்தைத் துடைத்துப் பின்னர் பிரிந்து செல்லும் தலைவன் போன விடத்தில் முழுதும் கடமை நினைவாக இருக்க வேண்டுமேயன்றிக் காமவுணர்வு தலைக் காட்ட இடங்கொடுத்தலாகாது. புகழ் நாட்டமும் நெஞ்சுரமும் உடைய தலைவன் கடமைக்குரிய காலத்தினையும் காமவின்பத் துக்குரிய காலத்தினையும் பகுத்தறிந்து கொள்வான். கிழவி நிலையே வினையிடத்து உரையார் வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் என்ற பாவினால் கடமை முடியும் வரை காதலியை நினையான்; கடமை முடிந்தவுடனே மறந்த காதலியை நினையாதிரான் என்று கடமைக்கும் காதலுக்கும் உரிய வரன் முறைகளைத் தொல்காப்பியர் வடித்துக் காட்டுகின்றார். 4. மறநெறிகள் ‘வீரஞ்செறிந்த தமிழ்நாடு’என்று பாடினார் தேசியக்கவி பாரதியார். “ஆரஞர் உற்ற விரபத்தினி’ என்று இல்லறக் கண்ணகியை வீரக்கல் மகளாகக் காப்பியம் செய்தார் இளங்கோ. மறம் எனப்படும் வீரம் எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும் வீரத்தை ஈரந்தோய்ந்த வீரமாகவும், மறத்தை அறவழிப்பட்ட மறமாகவும், பகைவெறியைப் பண்பட்ட தகைநெறியாகவும் இலக்கியவுருக் கொடுத்த நாகரிகம் தமிழ் நாகரிகம் ஆகும். அந்நாகரிகத்தை நூற்பா வடிவில் வைத்திருக்கும் காலப்பெட்டகமே காலத்தை வென்ற தொல்காப்பியம். போரும் செருவும் இல்லாத புத்துலகத்தை நாம் காண நினைப்பதில் தவறில்லை. அத்தகைய நல்லுலகம் அமைக்க முயல்வோம்; அமைந்தால் மகிழ்வோம். அது ஒரு குறிக்கோள் உலகம். ஆனால் இன்று கண்டுவரும் நடைமுறை யுலகம் போரையும் பகையையும் பொறுத்தவரை பண்டை யுலகத்தினின்றும் வேறுபட்டதாக இல்லை. கண்ணிமை கைந்நொடியளவில் உலகங்களைச் சாம்பலாக்கும் நுண் கருவிகள் ஒருபுறம் பெருகிக் கொண்டிருப்ப, இன்னொருபுறம் உலக அமைதி பேசுவது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதாக இல்லையா? படையை, படைப் பயிற்சியை, படைச் செலவைப் பெருக்காத நாடேயில்லை. ஆதலின் தொல்காப்பியம் கூறும் மறநெறிகளை நம் சிந்தனைக்கு உரியவையே. இல்லற நெறி என்பது இருவர்க்கு இடைப்பட்டது. அந்நெறியிற் பிறழ்வு வந்தால் அதனால் துயர் படுவார் சிலரே. போர் என்பது நாடுகளுக்கிடையே பகையுணர்வால் நிகழ்வது. போர் கொலைப்போராயினும் சில மறநெறிகளைப் பின்பற்றாவிட்டால் தொடர்பில்லாத எளிய உயிர்களும் மடிய நேரிடும். வேந்தவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற்றாகும் என்று ஒரு மற நெறி வகுப்பர் தொல்காப்பியர். பகையென்பது இருநாட்டு மக்கட்கு இடையேயன்றி இருநாட்டிலும் உள்ள பறவைகளுக்கோ விலங்குகட்கோ பகைமையில்லை. ஆதலின் போர் தொடங்குவதற்குமுன் பகை நாட்டிலுள்ள பசுமாடு முதலிய உயிரினங்களை நல்லிடத்துக்கு அப்புறப்படுத்த வேண்டும். அவற்றுக்குப் புல்லும் நீரும் வழங்கி நோயின்றிக் காக்கவேண்டும். ஆதந்து ஓம்பல்’ என்று பசுமேல் வைத்துக் கூறினாலும் ஏனை விலங்கினங்களையும், எதிர்க்கும் நோக்கமும் ஆற்றலும் இல்லாத குடிகளையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இன்றைய வெறிப்போர் நிலையிலுங்கூட, மருத்துவ மனைகளில் குண்டு வீசலாகாது என்ற உலகப் போரறம் உண்டல்லவா? வேலைநிறுத்தம் செய்வதென்றால் முன்னரே அறிவிப்புக் கொடுக்க வேண்டும் என்ற தொழிற் சட்டம் உண்டு. அதுபோல, ஒரு நாட்டின்மேற் படை தொடுப்பதாயின் முன்னரே அறிவிப்புக் காட்ட வேண்டும் என்பது பண்டைத் தமிழர் நெறி. பகைநாட்டின் பசு முதலியவற்றை அப்புறப்படுத்திக் கொண்டு வருதல் பண்டைக்காலத்தில் போர்க்குறிப்பாகக் கொள்ளப் பட்டது. தொல்காப்பியத்திலோ புறநானூற்றிலோ சிலப்பதிகாரத் திலோ தமிழர்கள் தொடுத்த போர்களில் தேவர்கள் கலந்துகொண்டார்கள் என்ற குறிப்பில்லை. வரத்தாலும் மாய வஞ்சனையாலும் சூதுப்போர் செய்தனர் என்ற வழக்காறும் இல்லை. தொல்காப்பிய உரையாசியர் நச்சினார்க்கினியர் இவ்வஞ்சப் போர்முறைகள் தமிழுலகத்துக்கு உரியனவல்ல என்று நேர்மையாக அயல்நெறிகளை மறுத்துத் தமிழ்ப்போர் நெறிகளைப் பாராட்டியுள்ளார். நேர்நின்றும் நெடுமொழி கூறியும் வஞ்சினம் பகர்ந்தும் அடுத்தடுத்துத் தாக்கியும் வாளெறிந்தும் வேல் வீசியும் அம்பு தொடுத்தும் மெய்யோடு மெய் கலந்தும் புறங்காட்டாதும் புறங்காட்டினார்மேல் போர் தொடுக்காதும் கடைப்பிடித்த மறநெறிகளைத் தொல்காப்பியப் புறத்திணை விரிவாகக் கூறுகின்றது. மாயமின்றி நேர்முகத்து நின்றுமுற்பட்டுத் தாக்குவதைக் ‘கடந்தடுதானை’ என்று புறநானூறும் பாராட்டுகின்றது. எனவே தொல்காப்பியர் காட்டும் மறநெறி மாயங் கலவாத அறநெறி என்பது தெளிவு. உயிர்யீவடுவேன் என்று சொல்வது எளிது. விட்டுப் பார்க்கும் போதல்லவா அதன் அருமை தெரியும். மறவர்கள் என்போர் நாட்டுக்கு உயிர் என்ற முதலையே வழங்கும் உயிர்க்கொடைஞர்கள். போரில் அவர்கள் ஆற்றும் வினை கொலையாயினும் அக்கொலைப் பணி விலைமதிக்க முடியாத நாட்டன்பு எனப்படும். அத்தகைய மறவுணர்வை வளர்ப்பது எப்படி? “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல்” என்று தொல்காப்பியர் வீரக்கற்கள் நடவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். ஒவ்வொருவர்க்கும் தனி வீரக்கல் நடுகை மறவுணர்வை வளர்க்கும் நெறியாகும். போரில் மடிந்தார்க் கெல்லாம் இன்று நெடிய பொதுத்தூண் எழுப்புகின்றோம். இது தவிர வீர வுணர்வை வளர்க்குமா? தொல்காப்பியத்தின் வழி சிந்தியுங்கள்! 5. பண்பு நெறிகள் எந்த விலங்கினங்களையும் பண்பாக நடக்கின்றது என்றோ. பண்பாக நடக்கவில்லை யென்றோ பாராட்டுவதும் பழிப்பதும் இல்லை. குயில் கூவுவது அதனியல்பு; நாய் குரைப்பது அதனியல்பு; புலி உறுமுவது அதனியல்பு; வேறு வகையாக அவற்றிடம் நாம் எதிர்பார்ப்பதில்லை. மக்களின் நிலை வேறு. பழக்கத்தினாலும் பயிற்சியினாலும் உறவினாலும் தண்டத்தாலும் மக்களைத் திருத்த முடியும்; பண்படுத்த முடியும்; மனித இனத்தைப் பண்பாட்டுக்குக் கொண்டுவர இயலும் என்ற கொள்கையினால் தானே நீதி நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கல்வி நிலையங்களும் சமயத் துறைகளும் உள்ளன. திருத்துவதற்குத்தானே சட்டங்களும் சிறைகளும் உள. மக்களை உயர்திணை என்று பாகுபாடு செய்திருக்கின்றோம். ஏன்? பண்படுத்தி உயர்ந்த ஒழுக்கமாகக் கொண்டுவர முடியும் என்பது கருத்து. பொதுவாகப் பண்பு எனப்படுவது மற்றவர்களோடு பழகும்போது நடந்து கொள்ளும் தன்மையைக் குறிக்கும். கூட்டத்தை மதித்தல், பணிவாகப் பழகுதல், பிறர் வைத போதும் அடக்கமாக மறுமொழிதல், ஏழை எளியவர்களிடம் இரக்கமாக நடந்து கொள்ளுதல், குறிப்பாக ஆண்கள் பெண்டிரிடத்தும் பெண் மக்கள் ஆடவரிடத்தும் அளவாக நாகரிகமாகப் பழகுதல், உயிரினங்களைத் துன்புறுத்தாது இரக்கங்காட்டி ஓம்புதல், பகைவரையும் சிறியோரையும் மதித்தல் - சுருங்க கூறின் உலகத் தொடர்பில் பெருமைப் படுத்தியும் பெருமையாகவும் நடந்து கொள்ளல் மக்கட் பண்பாகும். எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் என்ற நூற்பாவில் அஃறிணையுயிராயினும் உயர்திணை யுயிராயினும் எறும்பு போல சிற்றுடல் உடைய உயிராயினும் யானைபோல் பேருடல் வாய்ந்த உயிராயினும் ஒவ்வோர் உயிரும் துன்பமின்றி இன்பமாக வாழ்வதையே நாடுகின்றது என்ற இன்பப் பொதுக் கோட்பாட்டினைத் தொல்காப்பியர் வெளிப்படுத்துகின்றார். இதனால் தன் இன்பத்துக்காகப் பிறிதோர் உயிர்க்குத் துன்பஞ் செய்யக்கூடாது என்ற பண்பும் பிறவுயிர்கட்குத் தன்னால் எத்துணை இன்பஞ் செய்ய முடியுமோ அத்துணை இன்பம் செய்யவேண்டும் என்ற பண்பும் தொல்காப்பியரால் நமக்குக் கூறப்படுகின்றன. செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென்று அல்லல் நீத்த உவகை நான்கே என்ற தொல்காப்பிய நூற்பாவிலும் செல்வத்தில், கலையில், இன்பத்தில், விளையாட்டிலுங் கூடப் பிறருக்குத் துன்பஞ் செய்யாத, அல்லல் இல்லாத மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற பொதுப்பண்பு வலியுறுத்தப்படுகின்றது. ஊர் மக்களின் பொதுப் பண்பு பெருகியிருந்தால்தான் எல்லார்க்கும் சிக்கல் குறையும்; தொல்லை யிராது; நலம் பெருகும். குளத்து நீர் தூய்மையாக இருந்தால் எவ்வளவு நன்மை. ஊர் முழுதும் சோலையாகவும் வீதிதோறும் மரங்களாகவும் இருந்தால் எவ்வளவு குளிர்ச்சி. ஆதலின் ஊர்ப் பொதுப் பண்பை உயர்த்துவதே உண்மையான நலமாகும். பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றங் காட்டலும் ஊரது சார்வும் செல்லுந் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்ச மொடு அழிந்தெதிர் கூறி விடுப்பினும் ஆங்கத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினும் கண்டோர் மொழிதல் கண்டது என்ப. ஊர் வழியாகச் செல்வோரிடத்தும் ஊருக்குப் புதியோராக வருவோரிடத்தும் ஊர்மக்கள் எவ்வளவு அன்பாக நயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பு நெறிகளை இந்நூற்பா தொகுத்துச் சொல்கின்றது. காதலித்த இளந் தலைவியும் இளந்தலைவனும் தம் ஊரைவிட்டு உடன்போக்குச் சொல்லுகின்ற நிகழ்ச்சி; பல ஊர்கள் வழியாகப் போகின்றனர். இடைப்பட்ட ஊரார் இக் காதலர்களைக் கேலி செய்யவில்லை எதிர்ப்புக் காட்டவில்லை. நமக்கென்ன என்று சும்மா இருக்கவும் இல்லை. நெருங்கிவந்து அவ்விருவரையும் பார்த்து பொழுது சாய்ந்தது, போகின்ற வழியோ அச்சமானது என்று எடுத்துச் சொல்லி இரக்கம் காட்டுகின்றனர், ஓர் ஊர் மக்கள். இன்ன வழியிற்சென்றால் இந்த ஊரை எளிதில் விரைவில் அடையலாம் என நல்வழி காட்டுகின்றனர் இன்னொரு ஊர் மக்கள். எம்மூரில் தங்கியிருந்து புறப்படுங்கள் என்ற அழைப்பை ஏற்றுக்கொள்ளாதபோது அன்புகலந்த வருத்தத்தோடு வழிவிடுவர் இன்னொரு ஊரார். உடன்போன மகளை ஊர்தோறும் தாய்தேடி வருவாள் அல்லவா? அங்ஙனம் துயர்கொண்டு அலையும் தாயைப் பார்த்து உலகியலும் ஆறுதலும் கூறி நிறுத்துவார்கள். ஓர் ஊர் மக்கள். இன்னொரு ஊராரோ இளங்காதலர்கள் சென்ற வழிகளைச் சுட்டிக் காட்டித் தாயை வழிப்படுத்துவர். இங்ஙனம் காதலர்கள் உடன்போகும்போதும் உடன்போகித் திரும்பும்போதும் ஊர்ப்பெண்கள் பண்பாகவும் பணிவிடையாகவும் நடந்து கொள்வர் என்ற பொதுப் பண்பு நெறியைத் தொல்காப்பியம் கவின்பட நயம்பட எடுத்துக் காட்டுகின்றது. 6. இலக்கிய நெறிகள் அன்னைத் தமிழுக்கு முதல் மகனான தொல்காப்பியன் எழுதிய தொல்காப்பியம் எழுத்தாளர்க்கெல்லாம் வழிகாட்டும் அறிவு நூலாகும். எப்பொருளை எம்முறையில் எப்பண்பில் எவ்வளவு எழுதவேண்டும் என்று அளவுகூறும் செவ்விய நூல் தொல்காப்பியம். இன்று சிறு பெருநகரங்களில் தெருக்களைப் பாருங்கள். எவ்வளவு வெள்ளை மஞ்சட் கோடுகள் குறுக்கும் மறுக்குமாகப் போடப்பட்டுள. மறிக்கோடுகளும் கைகாட்டிகளும் நிறவிளக்குக்களும் எவ்வளவு உள்ளன? ஊர்திகள் ஓடுவதற்கே யன்றி மக்கள் குறுக்கே கடந்து செல்வதற்கும் குறுங்கோடுகள் உள. தெருக்களில் ஏன் இத்தனைக் கட்டுப்பாடுகள்? அனைத்தும் மக்களின் நலத்திற்கன்றோ? தெருவிதியைக் கடைப்பிடிப்பவன் தன்னையும் காத்துக்கொள்கின்றான்; ஊர்திக்குள் இருப்ப வனையும் காக்கின்றான்; எதிரே வருபவர்களையும் தாக்குதலின்றிக் காக்கின்றான். இவை யெல்லாம் கட்டுப்பாட்டால் வருபவை. கண்ணுக்கு முன்நடைபெறும் இத்தெரு நிகழ்ச்சிகட்கு இவ்வளவு விதிகளும் கட்டுப்பாடும் வேண்டுமெனின், அறிவுக் கண்ணால் படைக்கப்படும் இலக்கியங்கட்கு மனத்தைக் கெடுக்காத நெறிகள் வேண்டுமல்லவா? தன் மனம்போன போக்கெல்லாம் சுவையாக இருக்குமென்று கருதி எதனையும் எப்படியும் எழுத்தாளன் எழுதலாமா? ஆதலின் எழுத்தாளர் களைக் கட்டுப்படுத்திப் பண்படுத்தும் பெருமித நூலே தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் இலக்கிய நெறிப்படி சங்கப் புலவர்களும் திருவள்ளுவரும் இளங்கோவும் இலக்கியம் படைத்தார்கள். அதனால் அப்பெரு மக்களின் கவிதைகள் பண்பை வளர்க்கும் கவிதைகளாகக் காலங்கடந்தும் வாழ்கின்றன; உலகிற்கே வழிகாட்டுவனவாக இலங்குகின்றன. எவ்வகை எழுத்தாளரும் ஆண் பெண் காதல் பற்றி எழுதுவது இயற்கை. ஏன்? காதலின்றி இலக்கியத்திற்கு நடமாட்டமோ நறுமணமோ உரமோ இல்லை. உணவின்றி உடல் வளராது என்பது உலகறிந்த உண்மை. எனினும் நோயற்ற உடல்நலத்துக்கு உணவில் தூய்மை தேவை; உணவில் அளவு தேவை; உணவில் சத்துத்தேவை; உண்டது செறிமானமாதல் தேவை. அதுபோல, இலக்கியத்துக்குக் காதற்பொருள் வேண்டுவதுதான். அதனைத் தொல்காப்பியம் மறுக்கவில்லை ஆனால் உலகில் நிகழும் காமச்செயல்கள் எல்லாம் எழுத்துக்குத் தேவையா? எதனை எழுத்து மூலம் மக்கட்கு வழங்க வேண்டும் என்ற பண்பும் பகுத்தறிவும் இலக்கியப் படைஞர்களுக்குத் தேவை என்பதனை, ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்’ என்ற நூற்பாவால் வலியுறுத்துவர் தொல்காப்பியர். இங்ஙனம் காதலில், நல்லவற்றைப் பொருளாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வதைப் ‘புலன்நெறி’என்று கூறுவர் ஆண் பெண் உறவுகளைப் பாடும்போது இன்பமும் பொருளும் அறமும் அன்பும் விளையும்படி பாடவேண்டும் என்பது இப்பேராசான் கருத்து. காதலைப் புனையும்போது பெரும்பகுதி பெண்களைப் பற்றித்தான் இருக்கும். “காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் நாணும் மடனும் பெண்மைய” ஆதலால் பெண்ணின் நாணத்துக்கும் அடக்கத்துக்கும் இழிவின்றி எழுதவேண்டும் என்ற குறிப்பினைத் தொல்காப்பியம் பல இடங்களில் சுட்டிச் செல்கின்றது. கற்பனை நோக்கில் காதல் வருணனை இருப்பதில் தவறில்லை. பல்லாயிரக்கணக்கான விற்பனை நோக்கில் கேவலம் பொருட்பார்வையில் காதலை விளம்புபோது புதிய தீண்டத் தகாத சிறுமை ஏற்படுகின்றது. ஆண்மைக் குணங்களாகத் தொல்காப்பியம் கூறும் பெருமையும் உரமும் இன்றைய எழுத்தாளர்கட்குப் பெருந்தேவை. தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகட்கு முந்திய தொன்னூலாயினும் பழமையையே போற்றிக்கொண்டிருக்கும் போக்குடைய தன்று; புதுமையையும் பொதுமையையும் வரவேற்கும் பரந்த நோக்குடையது என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய வகைகளை ‘விருந்து’ என்ற சொல்லால் இந்நூல் குறிப்பிடும். இலக்கியத்துக்குச் செல்வர்களையோ அரசர்களையோ தலைவர்களாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று தொல்காப்பியம் நுவலவில்லை. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற நிலத்தில் வாழ்கின்ற எளிய ஊர் மக்களும் பணியாளர்களும் தொழிலாளர்களும் ஆகிய எவ்வகை மக்களும் புலவர்களால் பாடுதற்குத் தக்கவர்கள் என்பது இந்நூலின் பெருங்கோட்பாடு. இலக்கிய உலகில் தொல்காப்பியத்தின் தனிப்பெருமையைச் சொல்லப்புகின், இந்நூல் பெருங்காப்பிய இலக்கணங்களைப் பற்றியோ வேந்தர்களை குறித்தோ விரிவுபடக் கூறவில்லை ஒரு குலம் பற்றியோ ஓரினம் பற்றியோ ஒரு நிலம் பற்றியோ குறுக்கிக்கொள்ளவில்லை. எல்லாக் குலத்தாரும் கொண்ட சமுதாயமே அவன் நோக்கம். சமுதாயத்தில் யாரையும் தொல்காப்பியம் இலக்கியத்துக்கு விலக்குவதில்லை. இடையரும், குறவரும், மறவரும், பாணரும், கூத்தரும், விறலியரும், கலைஞரும், இசைஞரும், படைஞரும் ஆகிய இன்ன பொதுவான மக்களின் வாழ்க்கைகளைப் பாடலாம். புனையலாம். எழுதலாம் என்று காட்டுவர் தொல்காப்பியர். கிராம இலக்கியம் என்று சொல்லத்தகும் ஊரிலக்கியமே இத்தமிழ் நூலின் எழுத்து நோக்கமாகும். இந்நோக்கம் இன்றைக்கும் எழுத்தாளரால் பின்பற்றுவதற்கு உரியதல்லவா? ஆதலின் தொல்காப்பியம் என்ற பெயரில் தொல் என்ற பழைய அடைமொழி கண்டு அஞ்சவேண்டாம். அது நமக்கெல்லாம் புதிய நெறிகாட்டும் நல்ல ‘தொல்’என்று கொள்வோமாக. இலக்கிய விளக்கம் முதற் பதிப்பு 1972 இந்நூல் 1980ல் மணிவாசகர் நூலகம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முன்னுரை இலக்கிய விளக்கம் என்ற இந்நூல் பதினான்கு கட்டுரைகள் கொண்டது. செம்பாகம் ஏழு கட்டுரைகள் திருக்குறள் பற்றியவை. நடைமுறையும் செயலும் தெளிவும் நோக்கி எழுதப்பட்டவை. திருக்குறளும் இலக்கியம் ஆதலின் இவ்வேழினையும் இலக்கிய விளக்கமாகவே கருதலாம். ஏனைக் கட்டுரைகள் புறம், அகம், காப்பியம், சிற்றிலக்கியம், நீதியிலக்கியம் என்ற நூல் வகைகளை ஒவ்வொரு கூறுபற்றி ஆராய்பவை. இவற்றில் சில இலக்கியப் பாங்குகள் புதுவிளக்கம் பெற்றுள. நீதிவிளக்கம் என்ற இறுதிக்கட்டுரை `சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர், என்றபடி சிறு நூல்களும் இலக்கியத்திறனுக்கு உரிய ஆய்வுத் தளங்களாம் என்பதை மெய்ப்பிக்கும். இக்கட்டுரைக்கண் ஏழிளந்தமிழ் என்ற புதுத் தொகைநூல் படைக்கப்பட்டிருப்பதை நினைவுகொள்ள வேண்டுகின்றேன். இக்கட்டுரையிற் சில வானொலியில் எழுந்தவை சில மலரில் மலர்ந்தவை. வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவை எனினும் ஒரு நூல் வடிவம் பெறும் இப்போது வேண்டும் ஒழுங்கு செய்து வெளியிடுகின்றேன். வெவ்வேறு ஆண்டிற் பிறந்த மக்களை ஒருங்கு காணும் குடும்பக் காட்சியின் இன்பம் இந்நூற் காட்சியிலும் தோன்றுகின்றது. கட்டுரைத் தனிமலர்களை நூன்மாலையாகப் பதிப்பிக்க அன்போடு ஏற்றுக்கொண்ட சிதம்பரம் மணிவாசக நூலகத்தார்க்கு நன்றியன். காரைக்குடி. வ.சுப.மாணிக்கம் 1-12-1971 பொருளடக்கம் 1. இலக்கிய விளக்கம் 150 2. இலக்கணக் குறள்கள் 162 3. வரிசைப்பாட்டு 170 4. வாழ்வாங்கு 176 5. தூய இலக்கியம் 183 6. நடைமுறை அறங்கள் 191 7. இலக்கியக்கலை 199 8. குறளணிகள் 204 9. இலக்கிய வெள்ளம் 211 10. தன் நெஞ்சம் 226 11. இலக்கியத்தளம் 230 12. குறள் விளக்கம்? 236 13. நம்பிக்கை நூல் 242 14. நீதி விளக்கம் 247 1. இலக்கிய விளக்கம் இலக்கியம் என்பது மனித உள்ளங்களின் திரைப்படம். மனிதகுலத்தின் ஆசைகளை உணச்சிகளை விளைவுகளை முடிவுகளை இலக்கியத்தில் கற்றுக் கொள்கின்றோம். நல்ல மனிதர்களையும் அவர்களுக்கு இடையூறாக நிற்கும் தீய மனிதர்களையும், அன்பு அறம் பொறுமை போன்ற நல்லுணர்வு களையும் அவற்றைப் பகைக்கின்ற வன்பு மறம் சிறுமை போன்ற அல்லுணர்வுகளையும் இலக்கியங்கள் வடிக்கின்றன. முழுதும் நல்லவற்றையோ முழுதும் தீயவற்றையோ இலக்கியம் கூறப்புகுவதில்லை கூறவும் இயலாது. இரண்டும் இடைமடுத்து நடப்பதே இலக்கிய நடை. ஆதலின் பகுத்தறிந்து படிக்கும் ஆற்றலை இலக்கியம் வளர்க்கின்றது. வழக்கில் பல்வேறு மக்களோடு பழகும்போது ஆராய்ந்து விழிப்போடு பழகுகின்றோம். அதுபோலத்தான் இலக்கியத்தை ஆராய்ந்து விழிப்போடு படிக்கவேண்டும். சிலர் தங்கள் வாழ்வில் எப்படி நடக்கின்றனர், அப்படியே இலக்கியத்தையும் பார்க்கின்றனர். எப்படி நடக்கவேண்டும் என்று நினைக்கின்றோம், அதற்குத் தகவும் இலக்கியப் பார்வை செய்யலாம். தற்படி பார்ப்பதற்கும் மேற்படி பார்ப்பதற்கும் இவ்விருவகைக்கும் இலக்கியங்கள் இடங்கொடுக்கும். சரக்குகளைப் பாடஞ்செய்து போற்றுவது போல மனித உணர்ச்சிகளை இலக்கிய வடிவில் பாடஞ்செய்து வைக்கின்றான் புலவன். விலைமதிப்பில்லா இவ்விலக்கியப் பாடங்களை - உணர்ச்சித் திரட்சிகளை - ஒவ்வொருவனும் அறிந்து கொள்வது மனிதப்பேறாகும். இலக்கியங்கள் யார்க்கும் பொதுவாக விளங்கி விடுகின்றன. ஏன்? அவை நம் வாழ்வைப் பற்றிப் பேசுபவை. திருமணம், குடும்பவுறவு, பிள்ளைப்பேறு, குடும்பச்சிக்கல், நட்பு, பகை, அரசாட்சி, போர், வெற்றி, தோல்வி, கலைகள் இவ்வகையான நடப்புச் செய்திகள் வரும்போது மேலோடாக விளங்கிக் கொள்ளப் பெருமுயற்சி தேவையில்லை. ஓரிருமுறை படித்தாலும் விளங்கிவிடும். படிக்கக் கேட்டாலும் விளங்கி விடும். பேரிலக்கியங்களைப் புலவர்க ள்சொற்பொழியும்போது, கேட்பவர்கள் எழுத்தறிவில்லாதவர்களாயினுங்கூட எவ்வளவோ புரிந்து கொள்கின்றார்கள். காரணம் கவிதைப் பொருள் அவ்வளவு எளிமையுடையது. இவற்றுள் சுதையிலக்கியங் களும் நீதியிலக்கியங்களும் குழந்தைகட்கும் எளிதாகப் புரிந்து விடுகின்றன. மேலும் இலக்கியங்கள் புரிவதற்கு மற்றொரு காரணம் புலவன் ஆளும் சொற்கள் பெரும்பாலும் நாம் பேசும்சொற்கள். சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டுள னோவென வினவுதி என் மகன் யாண்டுள னாயினும் அறியேன் ஓரும் புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே (புறம்.86) உன் மகன் எங்கே என்று வினவினாள் ஒருத்தி. என் மகன் எங்கிருப்பானோ? புலி இருந்து போன குகைபோல இந்த வயிற்றிலிருந்து புறப்பட்டான். புறப்பட்ட நாள் முதல் எப்போதும் போர்க்களத்தில் திரிகின்றான் என்பது தாயின் மறுமொழி. ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இந்தச் சங்கப் பாட்டில் உள்ள பல சொற்கள் இன்றும் நமக்கு விளங்கக் கூடியனவே. நம் வழக்கில் பயில்வனவே. வாழ்க்கையைப் பற்றிப் பாடுதலாலும், வழக்குச் சொற்களை ஆளுதலாலும் இலக்கியங்கள் பொதுவாக விளங்குகின்றன என்றாலும் இவ்விளக்கம் ஒரு மேம் போக்கே. ஒரு பெருநகரத்தினை வானூர்தியிற் பறந்து பார்க்கலாம். விரை பேருந்தியிற் சென்று பார்க்கலாம். மிதிவண்டி செலுத்திப் பார்க்கலாம். மெல்ல நடந்து ஆங்காங்கே தங்கி நின்றும் பார்க்கலாம். இந்த நால்வகைப் பார்வையுள் ஆற்றுப்படை போல நடந்த பார்வையே நகரத்தின் முழுவறிவையும் தரும். காலம் கூடுதல் ஆகும் என்றாலும் இது தருகின்ற பயிலறிவை ஏனைய பார்வைகள் தரமாட்டா. இலக்கியம் அடிதோறும் சீர்சீராக அசையசையாக முழுதும் விளங்கவேண்டும். எனின், முழு விளக்கத்திற்குச் சில அடிப்படையறிவுகள் தேவை. இவ்வறிவு பெறுவதற்குப் பல இலக்கியங்கள் படிக்க வேண்டுமோ என்று தளர வேண்டிய தில்லை. ஒரு சில இலக்கியங்களைக் கடைப்பிடிகளாக வைத்துக் கொண்டாற்போதும், அச்சிலவற்றை முதலில் மேலோட்டமாகப் படித்தபின் ஆழ்போக்காகப் படிப்பது நல்லது. படிக்கும் நூல் சிலவாயினும் கவிதைகளை ஓடாது நின்று பார்த்துத் தங்கிப் படித்தும் செல்லும் அசைநடையால் ஆழ்பொருள்கள் விளங்கித் தோன்றும். சங்கப் புலவர்கள் இயற்கையறிவு மிக்கவர்கள். இயற்கையை மக்கள் வாழ்வோடு இணைக்கவல்லவர்கள். பிற்காலப் புலவர்களுக்கும் இயற்கை அறிவு இருந்தது. ஆனால் அந்த அறிவைத் தனியாகப் பாடிப் புனையும் ஆற்றல் இருந்ததேயன்றி மனித சமுதாயத்தோடு ஒன்றிப்பாடும் புலமைய மனம் இல்லை. சங்கப் புலவர்கள் அகம் பாடினாலும், புறம்பாடினாலும் செடி கொடி மரம் பறவை விலங்கு முதலியவற்றின் இயற்கைகளை மனித இயற்கையாக உள்ளுறுத்திப் பாடுவர். ஏதோ தாமரையையும் புன்னையையும் நாரையையும் களிற்றையும் புலியையும் யானையையும் பட்டாங்குப் பாடுகின்றனர் என்று கொண்டு நுனிப்புல்லான ஒரு செய்யுள் என எண்ணிவிடக்கூடாது. வெள்ளியில் நாணயம்போல இயற்கைப் புனைவில் மனிதப் பிணைவு உயிரோடிக் கிடக்கின்றது. புறநானூறு பாண்டியன் நெடுஞ்செழியன் ஆலங்கானப் போரில் தனிவெற்றி பெற்றான். எதிர்த்துவந்த எழுவரையும் முறியடித்தான். இவன் யானைப்படைகள் பகைவர் நாட்டுக் குளங்களைக் கலக்கிச் சேறாக்கிக் குடிநீருக்கு உதவாமற் செய்தன. இவன் படை மறவர்களோ பகைவர்தம் நாட்டுப் பொருட்களை வேண்டுமளவு அள்ளிக் கொண்டதல்லாமல் எஞ்சிய பொருட்களைப் பயன்படாதபடி நிலத்தில் கெடுத்தனர். நகரத்துப் பெருமனைகள் வாழ முடியாதபடி தீக்கிரை ஆயின. இவ்வாறு மிகையாகச் செய்த படு அழிவுகளுக்கு அஞ்சிப் பகைவர்கள் நெடுஞ்செழியனுக்குப் பணிந்து போயினர். வழியிடை அந்த அழிபாடுகளைக் கண்டு கண்டு வரும் புலவர் கல்லாடனார். ஆலங் கானத் தமர்கடந் தட்ட கால முன்பநிற் கண்டனென் வருவல் அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை வேளை வெண்பூக் கறிக்கும் ஆளில் அத்தம் ஆகிய காடே (புறம்.23) என்று தாம் வந்த காட்டுவழி பற்றிப் பாடுகின்றார். அவ்வழியிற் கண்ட காட்சி என்ன? ஆண்மான் பெண்மான் மான்குட்டி என்ற ஒரு குடும்பம். புலி, ஆண்மானைக் கொல்லவே. உடன் இறக்க நினைத்தும் பெண்மான் இறக்கவில்லை. தன் குட்டியைக் காத்து வளர்க்கும் கடமையொன்று அதற்கு உண்டு. அதனால் குட்டியைத் தழுவிக்கொண்டு முன்போல் சுவையுடைய பசும்புற்களைத் தின்னாது ஏதோ உயிர் வாழவேண்டும் என்ற அளவிற்கு ஓரளவு சத்துடைய வேளைப்பூவைத் தின்னுகின்றது. இங்ஙனம் கணவனை இழந்தும் குட்டியைக் காக்க வேளைப் பூவைத் தின்னும் பெண்மானின் இல்லறவொழுக்கத்தைக் கண்டேன் என்று புனைகின்றார் கல்லாடர். இப்பெண்மானின் கைம்மைக் காட்சியில் மகளிர் காட்சியை நினைவூட்டுவர் புலவர். ஆலங்கானப்போரில் நெடுஞ்செழியன் எண்ணிறந்த பகைமறவர்களைக் கொன்றழித்தான். கணவன்மாரை இழந்த பகைமனைவியர் உடனுயிர் துறவாது தத்தம் ஊரில் இருக்கக் கண்டார் புலவர். காரணம் என்னை? குழந்தைக் கடமை. `சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை’ என்பதனால் காதலன் இறப்பினும் பெற்ற மகவின் பொருட்டு மனைவி பின்னிருந்து கடமையாற்றுவாள் என்பது பிறிதுமொழிதல் அணியாகப் பெறப்படும். இவ்வொரு புறநானூற்றுக் கருத்து, கணவன் இறந்த பின்னும் மகப்பேறுடைய மனைவியர் சாவாதிருப்பர் என்ற பண்டைச் சமுதாயக் கருத்து பல இலக்கியங்களில் விளக்கம் பெறுகின்றது. சிலப்பதிகாரம் - மாதவி மாதவி கணிகைக் குலத்திற் பிறந்தவளாயினும் கற்பு நோக்கம் உடையவள். கடற்கரையில் கோவலன் தன்னைப் பிரிந்தபின் பிரிந்து போனால் போகின்றான் என்று வாளா இருக்கவில்லை. தன் கவலை தோன்ற இரு ஓலைகள் வரைந்தாள். அவன் சென்ற இடத்துக்குத் தூதுவிடுத்தாள். வாழ்நாள் எல்லாம் துன்புற்றும் உடன்சென்ற கண்ணகியைக் `குலப் பிறப்பாட்டி என்று மனம்விட்டுப் பாராட்டினாள். `வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும், என்று தன் பேதைச் சொல்லுக்குக் கழிவிரக்கப்பட்டாள். தான் குற்றம் இல்லாதவள் என்று கோவலன் உணர்ந்து கொண்டால் போதும் என்ற அளவுக்குத் தனிவாழ்வு நடத்தினாள். கோவலன் இறந்தது கேட்டு உடன் இறக்கவேண்டும் என்பதுதான் அவள் கோட்பாடு. ஆனால் தன் மகள் மணிமேகலை நிலை என்னாகும்? சிறுகுழந்தையாகிய அவளைக் கணிகையாக்கத் தன் தாய் சித்திராபதி சமயம் பார்த்துக் கொண்டிருக்கின்றாள் என்பது மாதவிக்குத் தெரியும். தன் ஒரு காதலனுக்கு ஒரு மகளாய்ப் பிறந்த மணிமேகலையைக் கண்ணகி €குலமாக்க வேண்டும் என்பது மாதவியின் ஆசை. உடனுயிர் துறப்பதா? மணிமேகலைக்காக உயிர் வாழ்வதா? என்ற அருநிலையில் பின்னதே கோவலனுக்கும் உவப்பாகும் என்று துணிந்தனள். காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப் போதல் செய்யா உயிரொடு நின்றே பொற்கொடி மூதுhர்ப் பொருளுரை யிழந்து நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன் காவலன் பேரூர்க் கனையெரி யூட்டிய மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கை தீத்தொழிற் படாஅள் (மணி -2) என்ற அடிகள் மாதவி வயந்தமாலைக்குக் கூறிய மறுமொழிகள். அந்த ஆண்டு இந்திரவிழாவிற்கு நடனமாட மாதவியும் வரவில்லை மக்கள் எல்லாம் மிகவும் எதிர்பார்த்த மணிமேகலையும் வரவில்லை என்று வருந்திய தாய் சித்திராபதி செய்தி தெரிந்து வரும்படி வயந்தாமாலையை மாதவியிடம் விடுக்கின்றாள். உடனுயிர் துறந்திருந்தால் இந்த ஊர்ப்பழிக்கு இடமிராது. `மணிமேகலை வருவாள் என்று கூட்டம் எதிர்பார்த்தது பிழை. அவள் கணிகைக் குலத்துப் பிறந்த என் மகள் இல்லை. மதுரைக்குக் கற்புத் தீ வைத்த கண்ணகி மகள். தீயநெறியிற் சிறிதும் அடிவைக்க மாட்டாள் என்று மாதவி கூறும் மறுமொழியில் காதலனாகிய கோவலனோடு உடன் உயிர் துறக்க விரும்பிய அவள் வேட்கையும், மணிமேகலையைக் கண்ணகி மகளாக்கிக் காக்க அவள் மேற்கொண்ட வாழ்வும் புலப்படுகின்றன. மகளைத் தவத்தியாக்கும் கடமையுணர்வு மாதவியை வாழவைத்தது. சீவகசிந்தாமணி - விசயை சீவகசிந்தாமணியில் அரசன் சச்சந்தன் கட்டியங் காரனோடு போரிடப் போவதற்கு முன் கருக்கொண்டிருந்த தன் மனைவி விசயையை மயிலூர்தி யேறிப்போகச் செய்கின்றான். போரில் தான் இறப்பது அவனுக்குத் தெரியும்; விசயை கண்ட கனவுகளின்படி ஆண்குழந்தை பிறந்து எண்மரை மணந்து அரசாளும் என்பதும் தெரியும். அப்போது பிரிவுக்குக் கலங்கும் விசயை, நங்கைநீ நடக்கல் வேண்டும் நன்பொருட்கு இரங்கல் வேண்டா கங்குல்நீ யன்று கண்ட கனவெலாம் விளைந்த தென்ன, கொங்கலர் கோதை மாழ்கிக் குழைமுகம் புடைத்து வீழ்ந்து செங்கயற் கண்ணி வெய்ய திருமகற்கு அவலஞ் செய்தாள் (சிந்.257) என்று திருத்தக்கதேவர் எடுத்துக் காட்டுகின்றார். பிரியாது போரிடும் கணவனோடு உடனிருந்து இறப்பதா? பிரிந்து, உள்ளிருக்கும் மகனுக்காக வாழ்வதா? என்ற இக்கட்டான நிலையில், விசயை என்செய்வது என்று அறியாது வயிற்றில் அடித்துக் கொண்டாளாம். வயிற்றில் அடித்துக் கொண்டாள் என்று பச்சைமொழியிற் கூற மனம் வாராமல் காப்பியத்துக்கு நாயகனாய் உள்ளிருக்கும் திருமகனைத் துன்புறுத்தினாள் என்று காப்பிய அவலம் சுரக்கப் பாடுவர் தேவர். கைம்மாண் கடற்படையுள் காவலனை யாண்டொழியப் பொய்ம்மா மயிலூர்ந்து போகிப் புறங்காட்டுள் விம்மாந் தியான்வீழ வீழ்ந்தேன் துணையாகி எம்மானே தோன்றினாய்என்னை யொளித்தியோ (சிந்.1801.) சீவகன் இறந்தான் என்று தவறாக உணர்ந்தபோது ஒப்பாரிக்கும் விசயை பழைய தன் மனப் போராட்டத்தை நினைவுகூர்ந்து சொல்லும் கருத்துடையது இச்செய்யுள். `அரச கணவனைப் படை நடுவே விட்டுப் பொறிமயில் ஏறிச் சுடுகாட்டில் இறங்கியதெல்லாம் மகனே நீ துணையாவாய் என்று அல்லவா? இப்போது அரசனும் மயிலும் மறைந்தாற் போல நீயும் மறைந்தனையோ’ என்று புலம்புகின்றாள். எனவே கற்புடை நங்கையாம் விசையையின் வாழ்விலும் மகன் பிறப்பு கணவனொடு துறப்பை மாற்றிற்று எனவும் காதலுறவைவிடக் கடமையுறவு பெரிதாயிற்று எனவும் தெளியலாம். சிலப்பதிகாரம் - கண்ணகி கோவலன் இறந்தும் கண்ணகி உடனுயிர் துறக்கவில்லை என்பது சிந்தனைக்குரியது. மாதவிக்குப்போல மகட்கடமையோ விசையைக்குப்போல மகற்கடமையையோ கண்ணகிக்கு இருந்ததில்லையே. கற்புத் தெய்வமான கண்ணகி கோவலன் வீவினைக் கேட்டதும் `காதலர் இறப்பின் அக்கணமே இன்னுயிர் ஈவர்’ என்பதற்கு ஏற்ப, உயிர் விட்டிருக்கலாமே என்று வினவலாம். மக்கட் கடமையைவிடக் கண்ணகிக்கு ஒரு பெருங்கடமையிருந்தது. கோவலன் சாவு இயல்பான சாவில்லை. அவன் சாவு `வீவு’ எனப்படும். வீவு என்பதற்கு எதிர்பாராத திடீர் இறப்பு என்பது பொருள். `காதலன் தன் வீவும் காதலி நீபட்டதூஉம்’ என்பது சிலப்பதிகாரம். கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டான் கோவலன் ஆதலின் அக்குற்றத்தைத் துடைப்பது கொளப்பட்டாளின் கடமையாகும். கணவனோடு அவளும் விரைந்து உயிர்விட்டிருப்பாளேல் கள்வனுக்குக் கள்ளி உயிர்விட்டாள் என்று தூற்றுவரேயன்றிக் கற்பி என்று புகழார். கோவலன் வீவு கேட்டு உடனே கண்ணகி இறக்க எண்ணவில்லை; கைம்மை நோற்று வாழவும் எண்ணவில்லை. `என் கணவன் மறைவு இயல்பான மறைவில்லை. இயல்பான மறைவாக இருந்தால் அல்லவா இயல்பான சமுதாயமுறைகளைப் பின்பற்ற முடியும்? மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண்டழிவலோ (சிலப்.19) நான் அன்பனாகிய கணவனை இழந்தமுறை வேறு. இது மன்னவன் முறைக்கேட்டால் வந்த இழவு. ஆதலின் கணவன் போய்விட்டானே என்ற அவலத்தால் சாம்பி மடியேன். தவறுடையான் மன்னவன்; தவறிலன் என் கணவன் என்று நாட்டும் வரை வாழ்வது என் கடமை’ என்று தெளிந்தாள் கண்ணகி. இத்தெளிவோடு கோவலன் கொலைப்பட்ட இடத்தைக் காணச்சென்றாள். கணவன் மார்பைப் பொருந்தத் தழுவினாள். அவன் திருவடியைத் தொழுதாள். கண்ணகியின் நினைவு அறாது கிடந்த கோவலன் ஓராற்றால் எழுந்திருந்து `இருந்தைக்க’ என்று ஒரு சொற்சொல்லிக் கடைசி மூச்சினையும் விட்டான். இச்சொல்லின் பெருங்குறிப்பு என்ன? வழியிடைப் பெருந்துயரம் எல்லாம் பொறுத்து வந்த கண்ணகி உடனுயிர் துறக்கல்ல நல்லாள் என்பது கோவலனுக்குத் தெரியும். எங்கே உடனுயிர் துறந்துவிடுவாளோ என்பது அவனுக்கு ஓர் அச்சம். அவளும் அங்ஙனமாகிவிட்டால் வேற்றூராகிய இம்மதுரையில்தான் கள்வன் அல்லன் என்பதை மெய்ப்பிக்க யாருண்டு? கவுந்தி மாதரி எல்லாம் என்ன நினைப்பர்? மாசாத்துவான் குடிப்புகழ் என்னாம்? இவ்வாறான பழியெண்ணங்கள் கோவலன் உள்ளத்து ஓடிக்கொண்டிருந்தன போலும். ஆதலின் கண்ணகியைக் கண்டவுடன், என் மேலிட்ட பழியைத் துடைப்பதற்கு இருந்துவா, உடனுயிர் துறவாதே என்று மெய்ப்பாட்டாற் பொருள்பட `இருந்தைக்க’, என்று ஒரு சொற்சொல்லி அமைந்தான். இது கேட்ட பின்னர் மருண்டு சினந்து எழுந்த கண்ணகி, காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் தீவேந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யான் (சிலப்.19) என்று புறப்பட்டாள். கள்வன் என்ற பழியைப் போக்கிய பின்னரே கணவனைக் காண்பது அவன் வரவேற்புக்கு உரியதாகும் என்பது கண்ணகியின் புதுத்தெளிவு. மணிமேகலை - கற்பின் நிலைகள் காதலர் இறப்பிற் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயிர் ஈவர் ஈயா ராயின் நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர் நளியெரி புகாஅ ராயின் அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடன் படுவர் (மணி.2) என்ற மணிமேகலைப் பகுதியில் (1) கணவன் இறந்தான் என்றதும் மார்படைப்பால் மனைவி உயிர்விடுதல் உண்டு. (2) தீமுட்டிப் பாய்ந்து உயிர்விடுதல் உண்டு (3) மறுபிறப்பிலும் அவனை அடையப் பெறுவேனாக என்று கைம்மை நோற்றிருத்தல் உண்டு என்ற மூவகைகளை அறிகின்றோம். உடன் உயிர்விடுதலைத் தலையாய கற்பு எனவும், தீப்பாய்தலை இடையாய கற்பு எனவும், நோற்றிருத்தலைக் கடையாய கற்பு எனவும் கூறிவருகின்றோம். கற்பொழுக்கத்தில் தலை இடை கடை என ஏற்றிறக்கும் கூறுவது பிழையும் ஆகும். நகையும் ஆகும். வள்ளல்களில் தலையாய வள்ளல் இடையாய வள்ளல் கடையாய வள்ளல் என்று சொல்லிவரும் போக்கும் இது போன்று நகைப்புக்கு உரியதே. கணவன் இறந்தபின் மனைவியர் வாழ்நிலை குடும்பக் கடமையைப் பொறுத்தது; கணவன் இறந்த நிலைமையையும் பொறுத்தது. மக்களைக் காக்கும் கடமை இருக்கையில், தாயும் மறைதல் சமூகத்தின் பாரமாகி விடும். கணவனும் மனைவியும் மக்கள் பெற்றபின் தந்தை தாய் உறவாகக் குடும்பப் பொறுப்பை ஏற்கின்றனர். அவர்களிடைக் காதலுறவு சுருங்கக் கடமையுணர்வு பெருகுகின்றது. குடும்பக் கடமை சமுதாயக் கடமையாக மாறுகின்றது. ஆதலின் உடனுயிர் விடாதும், தீப்பாயாதும் நோற்று உறையும் கைம்மைப் பெண்டிரைக் கடையாய கற்பினர் என்பது பொருந்தாது. கடமையான கற்பினர் என்று தெளியவேண்டும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அரசுக் கட்டிலில் மயங்கி வீழ்ந்ததும் கோப்பெருந்தேவியும் ஒருங்குடன் மாய்ந்தாள். இஃது அதிர்ச்சியின் விளைவு. நெடுஞ்செழியன் செங்கோல் தவற்றுக்குத் தேவியும் காரணமாவள். பாண்டியன் மாய அவள் மாயாதிருந்தாளேல் அஃது எவ்வகையிலும் புகழின்பாற்படாது; உடனுயிர்த் துறவே கணவனுக்குப் பெருமை செய்வதாகும். மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத் தன்னுயிர் கொண்டவன் உயிர்தே டினள்போல் பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் (சிலப்.25) என்றார் தமிழாசான் சாத்தனார். இத்தேவிக்கு அரசனோடு போவது தான் கடமைதவிர பின்னிருந்து செயக்கூடிய கடமையில்லை. மக்கட்பேறும் இல்லை. இராமாயணம் பிறன்மனை நயந்த இராவணன் இராமனது அம்பால் தன் பெரும் பேறெல்லாம் இழந்து போர்க்களத்தில் வீழ்ந்தான். கணவன் வீழ்ச்சியைக் கேட்டுக் களம் வந்த மண்டோதரி பல்லாற்றால் புலம்பியபின், என்ற ழைத்தனள் ஏங்கி யெழுந்தவன் பொன்ற ழைத்த பொருவரு மார்பினைத் தன்ற ழைக்கைக ளாற்றழு வித்தனி நின்ற ழைத்துயிர்த் தாளுயிர் நீங்கினாள் (யுத்த - இராவ) என்று தானே உயிர் போயதைச் சுருங்கச் சொல்லினார் கம்பர். மண்டோதரிக்கு மேகநாதன் முதலிய மக்கள் முன்னரே மடிந்து போயினர். இராவணக் கணவனும் மடிவு எய்தியபின், அவளுக்கு என்ன கடமை உண்டு? கணவனை நினைந்து கடைசி மூச்சினை விட்டாள். `கண்டாள் அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்’ என்று இளங்கோ அவலவுணர்வு சுட்டியபோல, மண்டோதரி தனி நின்று அழைத்தாள். இராவணனால் அவள் அழைக்கப் பெறவில்லை, அதனால் உயிர் நீங்கினாள் என்று கம்பரும் ஒருபால் நிலையைப் புலப்படுத்துகின்றார். வாலி இறந்தபின் தாரை இறக்க வில்லை. தயரதன் இறந்தபின் வரைந்த தேவியர் மூவர் இருந்தும் யாரும் இறக்கவில்லை. மகன் அங்கதனையும் சுக்கிரீவனுக்குத் துணைநின்று நாட்டின் அரசியலையும் ஒழுங்கு செய்யும் கடமை தாரைக்கு இருந்தது போலும். இராமனுக்காகக் கோசலையும், இலக்குவனுக்காகச் சுமித்திரையும், பரதனுக்காகக் கைகேசியும் உயிர்வாழ்ந்தனர் போலும். குறுந்தொகை இக்கட்டுரையின் தொடக்கத்துப் புறநானூற்றுப் பாடலில் வந்த பெண்மான் பற்றிய வாழ்க்கையின் விரிவாகப் பல்வேறு இல்லற நங்கையரின் வாழ்வுநிலைகளை இதுவரை கண்டோம் இதன் தொடர்பாக ஒரு குறுந்தொகைப் பாடலில் வரும் பெண் குரங்கின் முடிவுநிலையையும் காண்போம். கடுந்தோட்கரவீரன் பாடிய பாடல் கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ்க் கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சாரல் நாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே (குறுந்.69) ஆண் குரங்கு இறந்துபட, காதல்மிக்க பெண்குரங்கு கைம்மையாக வாழ விரும்பவில்லை. உடனுயிர் துறக்க எண்ணியது. இதற்குக் கூட இருக்கும் குரங்குக்குட்டி தடையாயிற்று பொறுப்பு சிறிது சிந்திக்கத் செய்தது என்றாலும் உயிர் துறக்கும் எண்ணம் மந்திக்கு மேலோங்கிற்று. அதனால் குட்டிக் குரங்கு தன் வயிற்றினின்றும் நீங்கி மரக்கிளையைப் பற்றிக்கொள்ளும் வரை உயிர் வைத்திருந்தது. கிளை பற்றும் வலி வந்தவுடன் பெண்குரங்கு கடுவன் மாய்ந்தது பொறாமல், மலையடுக்கம் ஏறி அங்கிருந்து விழுந்து தன்னுயிரைப் போக்கிக்கொண்டது. இந்த இயற்கைப் புனைவிலிருந்து, கற்புடை நங்கையர் சிலர் கடமை முடியும்வரை உயிர்வைத்திருந்து, அது முடிந்தபின் கணவனுக்காக உயிர்விடுதல் என்ற ஒரு சமுதாய முறையும் இருந்திருக்கலாம் என்று உய்த்துணர்கின்றோம். `சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை’ என்ற புறநானூற்றின் ஒரு கருத்து பின் எழுந்த தமிழ்க் காப்பியங்களில் பெருகி வளர்ந்த இலக்கிய விரிவை ஒப்பீட்டு முறையில் கண்டு கொள்கின்றோம். பண்டைச் சமுதாயமுறை தொடர்ந்து நிலவி வந்த பான்மையினையும் உணர்கின்றோம். இவ்வாறே தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் வரும் சமுதாய வழக்காறுகள் பின் இலக்கியங்களில் விரிவோ குறுவோ அடைந்த போக்கினை ஆராய்தல் தமிழின வரலாறு காணப் பயன்படும். 2. இலக்கணக் குறள்கள் திருவள்ளுவர் இலக்கிய முறையில் தம் அறநூலைப் பாடியவர். அம்முறைகள் பல்வேறு திறத்தன. பெருங் காப்பியத்திற் காணப்படும். இலக்கியங்கள், கதை தழுவிய நூலன்றேனும் திருக்குறளில் ஏற்றபெற்றி வந்துள. அதற்குக் காரணம் வள்ளுவரின் புலமை. அணிவகையில், உவமை, உவமைவகைகள், உருவகம், உருவகவகைகள், பின்வருநிலை, இல்பொருள், ஒட்டு, வேற்றுமையணி, ஒப்புமைக்கூட்டம் என்றிவை காணப்படும். நடைவகையில் இயல்பு, வினா வினாவிடை, ஏவல், வியங்கோள், வியப்பு, உடன்பாடு, எதிர்மறை, மறுப்பு, நிலைக்காட்டு, முன்விதிப்பு, பின்விதிப்பு, உறழ்ச்சி, முற்றுத்தொடர், எச்சத்தொடர், உம்மைத்தொடர், தொடரடுக்கு, துணிவு என்று இன்னவை வந்துள. பொருள் வகையில், இயற்கை, மரம், விலங்கு, வழக்காறு, மேற்கோள், கதை முதலியன அமைந்துள்ளன. உணர்ச்சி, கற்பனை, உரையாடல், தற்கூற்று, யாம்நடை, எண்சுவை முதலான இலக்கியல்களைத் திருக்குறளிற் காண்கின்றோம். அறிவியல் கலையியல்களுக்கென்று பல துறைக் கிளவிகள் உள. இக்கிளவிகள் வழக்கில் ஒருபொருளில் வழங்கும். இயலில் வேறு வேறு பொருளில் வரும். ஆதலின் இயலோர் இன்ன குறியீட்டுக்குப் பொருளிது என்று வரையறை கூறிக் கொள்ளல் ஒரு மரபு. அறிவியலிலும் ஒழுக்கம் அடக்கம் அழுக்காறு சினம் நடுவுநிலைமை அன்பு அருள் மானம் பண்பு நாணம் சால்பு குடிமை கயமை எனப் பல குறிமொழிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மக்கள் வழக்கில் நாள் தோறும் பயில்வனவே. பொருள் சொல்ல வேண்டியதில்லை என்றாலும் ஒரு சில அறச்சொற்கள் மிகப்பொதுவான நிலையில் பயன்படுத்தப்படுகின்றன. பொருள் வரம்பில்லாமல் செல்லுகின்றன. அன்னகிளவிகட் கேனும் தெளிவான பொருள்சுட்ட வேண்டியது நூலாசிரியன் கடமை. இத்தெளிவு அவன் கொள்கைகளை நன்கு அறியத் தேவை. சங்க இலக்கியங்களில் அறக் கருத்துக்கள் பிறவற்றோடு இடைமடுத்துக் கிடக்கின்றன. அறத்தை முழுதும் சொல்லுகின்ற செய்யுட்கள் புறநானூற்றிற்றான்உள. அதன் அளவு ஒரு விழுக்காடே. மடுத்துச் சொல்லினும் முழுதும் சொல்லினும் அவை யெல்லாம் தனிப்பாடல் நிலையின. இன்றுள்ள தமிழுலகில் முதல் முழுநூல் தொல்காப்பியம் அடுத்த முழு முதல்நூல் திருக்குறள். அறத்தையே நூற்பொருளாகக் கொண்டு எழுந்த முதல் நூலாதலின், திருக்குறளுக்கு அறம் என்ற பெயர் பண்டு வழங்கலாயிற்று. அகநானூறு, புறநானூறு என்று பொருளால் நூற்கள் பெயர் பெறுவதையும் அகம், புறம் என்று உரையாசிரியர்கள் சுருங்க மொழிவதையும் ஒப்புக் காண்க. `செய்தி கொன்றோர்க்கு உய்தியில்லென அறம் பாடிற்றே’ என்ற புறநானூற்றில் (34) அறம் என்பது திருக்குறளைக் குறிப்பது. பாடிற்று என்ற வினையால் அது செய்யுள் யாப்புடையது என்பது பெறப்படும். வள்ளுவர் சில அறக் குறியீடுகளுக்கு வரம்பான தெளிவான பொருளை இலக்கணிப்பதை இனிக் காண்போம். அறத்தின் இலக்கணம் 1. அறம் என்பது ஒரு பெருந்துறைச்சொல். இதன் ஆட்சி மிகப்பெரிது. எடுத்தற்கெல்லாம் இது தரும். இது தருமமில்லை என மனம்போன போக்கில் மக்கள் வழக்கில் தருமப் பேச்சுப் பேசுகின்றனர். யாசகம் கேட்கும் பிச்சைக்காரன் தருமம் போடுங்கள் என்று சுட்டிக்காட்டுகிறான். அறஞ்சாரா நல்குரவு (1047) அறம் நோக்காது ஈட்டிய ஒண்பொருள் (1009), அறங்கூறான் அல்ல செயினும் (181) அறன் ஈனும் இன்பமும் ஈனும் (754) அறவாழி (8) அறவினை யாதெனின் (321) அறத்தாறு (37) என அறச்சொல்லாட்சி குறளில் மலிந்துள. இதன் வரம்பான பொருள் யாது? மனத்துக்கண் மாசிலன்ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற (34) அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரக்குறள் இது. எத் தன்மைத்து அறம் என்ற வினாவைத் தாமே எழுப்பிக் கொண்டு, தன் மனத்துக் கண் மாசு இல்லாத அந்த அளவே அறம் என பட்டென விடை கூறினார் வள்ளுவர். இதற்குக் கட்டுரை போலப் பல அதிகாரங்கள் எழுதவில்லை. அறம் என்பதன்பொருள் யாரும் எளிதில் உணரக்கூடியதே என்பதனைக் காட்டுவார்போல், `மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து (அவ்வளவே) அறன் என்று ஒரே மூச்சில் முடித்தார். அறமாவது மனம் பற்றியது. மாசில்லாப் பண்பு பற்றியது என இடமும் இடத்து நிகழ்பொருளும் இணைத்துக் காட்டினார். அறத்திலிருந்து தோன்றுகின்ற செயல்கள் பல கூறுகளாக இருக்கலாம்; பல இடங்களில் பரவலாம். ஆனால் அறம் என்ற மூலம் மனம் என்னும் ஓரிடத்து இருப்பது; மாசின்மை என்ற ஒரு தன்மை வாய்ந்தது. குளத்து நீரை ஒருவர் கையால் அள்ளிக்குடிப்பர். ஒருவர் குவளையில் மொண்டு குடிப்பர், ஒருவர் குழாய்வழிக் குடிப்பர், ஒருவர் குளிரகத்து வைத்துக் குளிரக் குடிப்பர், வாய் வைத்துக் குடிப்பர், ஒரு மொடுக்கில் குடித்து விடுவர். குடிமுறை எதுவாக இருந்தாலும், முதற்கண் நீரிடமும் நீரும் தூய்மையாக இருத்தல் வேண்டும். அதுபோல் அறத்தின் புறவெளிப்பாடுகள் எவ்வண்ணம் இருப்பினும் மூலமனமும் மூலநினைவும் தூய்மையாக வேண்டும். அறமாவது மனத்து மாசின்றிச் செய்கின்ற செயல் என்று நீட்டிச் சொல்லவில்லை. மனத்து மாசில்லாமை என்ற அளவோடு அறத்தின் இலக்கணத்தை முடித்துவிட்டார். ஏன்? ஏதாவது ஒரு செயலின்றி எவனும் வாழமுடியாது. அச்செயலும் பல்வகைப்படும். அறச்செயல்கள் இவை என்று வரையறுக்க முடியாது. அவற்றில் பழையன கழிதலும் புதியன புகுதலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு காலத்து அறச் செயல்கள் இன்னொரு காலத்து வேண்டாதன. சமுதாயத்துக்குக் காலந்தோறும் தேவையான நலச் செயல்களைக் கண்டு அறம்மேற்கொள்ள வேண்டும். ஆதலின் ஒரு நிலைப்படாத அறச்செயல்களைப் பற்றிக் கூறாமல், ஒருவழியான மூக்கைப்பிடிப்பது போல, அறத்தின் தன்மையை மட்டும் வரையறுத்தார் வள்ளுவர். இவ்வரையறை திருக்குறளின் தெளிவுகட்கு மிக இன்றியமையாதது. மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் (278) மழித்தலும நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (280) மனத்தில் மாசு இருப்ப, எது செய்தாலும அறமில்லை, வஞ்சகமாம் என்பது இவ்விரு குறள்களின் கருத்து. `ஆகுல நீர பிற’ என்ற குறட்பகுதிக்கு (34) எடுத்துக்காட்டுக்களே மேலை இரு குறள்கள். பிற என்பது மன மாசொடு வஞ்சகமாகச் செய்யப்படுவன. சுருங்கக்கூறின் மனத்தூய்மை அறம். அத்தூய்மை மூலத்திலிருந்து செய்யப்படுவன எல்லாம் அறவினைகள். அறமின்மையாவது மன வஞ்சகம். வஞ்சக மனத்திலிருந்து நல்லன எனச் சமுதாயம் மரபாகக் கருதும் செயல்களை மேற்கொண்டாலும் அவையெல்லாம் பகட்டானவை, படிறானவை. அறம், அறமின்மை என்பன செயல்பற்றியன அல்ல; மனம் பற்றியனவும் அல்ல, மனத்து நிகழும் தன்மைபற்றியன. இவ்விளக்கத்தைக்கொண்டு தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (274) துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று (586) என்ற இருகுறளையும் நுனிப்பாம். வஞ்சக நெஞ்சம் காரணமாகத் தவக்கோலம் பழிக்கப்படுகின்றது. அங்ஙனம் பழிக்கும் வள்ளுவர், அரசியல் ஒற்றன் மக்களின் நம்பிக்கைக்கு உரிய தவவேடங்கொண்டு நுழையாத இடமெல்லாம் நுழைந்து நாட்டு நடப்புக்களை ஆராயவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பர். ஏன்? உளவறிவான் மனத்து நிகழ்வது நாட்டன்பு. அவன் ஒருகால் பிடிபட்டாலும் தண்டனைக்கு உரியவன் அல்லன். மக்கள் நலத்துக்கெனப் பூண்ட மாறுவேடி அவன். வாய்மையின் இலக்கணம் 2. பல அறங்கள் கூறும் வள்ளுவர் வாய்மை என்ற ஓர் அறத்தை மட்டும் யாம் நடையில் வலியுறுத்தி மொழிகுவர். யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300) யாம் கண்டவற்றுள் எனவும், மெய்யாக் கண்டவற்றுள் எனவும் அழுத்தமாக அறைவதிலிருந்து வாய்மையறத்தின் முதன்மை பெறப்படும். அறச்சொல்லுக்கு இலக்கணித்தது போல வாய்மைச் சொல்லுக்கும் அது செய்ய வேண்டும் அல்லவா? வாய்மையாவது நல்லதோ, கெட்டதோ, நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி கூறல் என்பது பொதுவான பொருள். இப்பொருளை ஒரு திருத்தத்தோடு வள்ளுவர் உடன்படுகிறார். நிகழ்ந்ததைக் கூறவேண்டும் என்பது முற்றும் உடன்பாடு. அங்ஙனம் கூறுங்கால் தீது நீங்கக் கூற வேண்டும் என்பது அவர் திருத்தம். வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல் (291) வாய்மை என்பது அறத்துட் சிறந்த தலையறம். நிகழ்ந்தது கூறல் என்ற இலக்கணத்தைக் கொண்டு வாய்மையறத்தைத் தீய கருவியாகப் பயன்படுத்தக்கூடாது. ஒன்றின் பயன் பொதுவாக நன்மை, தீமையின்மை, தீமை என்று மூன்று நிலையுடையது. வாய்மைக்கும் இம்முந்நிலை உண்டு. வாய்மை நன்மையாகவே இருக்கவேண்டும் என்பதில்லை. தீமை என்ற மூன்றாம் நிலை சாரக் கூடாது. ஆதலின் தீமையிலாது சொல்ல வேண்டும் என்று முதற்கண்ணே எச்சரிப்பர் வள்ளுவர். நிகழ்ந்தது தீமை தரும் என்பதற்காக மறைக்கலாமா? அது பொய்ம்மை இல்லையா என்ற வினாவுக்கு `பொய்ம்மையும் வாய்மையிடத்த’ (292) என்று அறவழுவமைதி மொழிவர். நிகழ்ந்தது கூறவேண்டும், அது நன்மை பயப்பதாகவும் இருத்தல் வேண்டும் அது வாய்மை. நிகழ்ந்ததாக இருந்தாலும் பிறர்க்குத் தீமை தருவதாக இருக்குமேல், அப்பகுதியை வெளிப்படுத்தக்கூடாது. அது பொய்ம்மை என்றாலும் பிறர் நலங்கருதிய தூய்மையுடையது ஆதலின் வாய்மை ஆகும். நிகழ்ந்தது என்ற அடிப்படையில் வள்ளுவரின் வாய்மையறம் அமைந்தது. நன்மை பயப்பது வாய்மை, அதற்கு நடந்ததும் கூறலாம்; நடவாததும் கூறலாம் என்று பரிமேலழகர் கொள்ளும் கருத்து வழக்குக்குப் பெரிதும் முரண்ஆதலின் கொள்ளத் தகுவதில்லை. பழைமையின் இலக்கணம் 3. நட்புப் பற்றிப் பொருட்பாலில் பல அதிகாரங்கள் உள. மனித சமுதாயம் இடையறாது பிணைந்து வாழும் கூட்டினம் ஆதலின் உறவு பற்றிய பல்வகைகளை அலசிக் காட்டுவர் ஆசிரியர். பழைமை, பேதைமை, வெண்மை என்ற மூன்று குறியீடுகட்குப் பொருள் என்ன? பழைமை - பல்லாண்டுத் தொடர்பு என்பது வழக்குப்பொருள், `தொல்லைக்கண் நின்றார் தொடர்பு’ எனவும், `வழிவந்த கேண்மையவர் எனவும் இத்தொன்மைத் தொடர்பை ஆசிரியர் உடன்படுவர். உடன்படினும் அதன்மேல் ஒன்றை வலியுறுத்துவர். பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (801) பழைமை என்பது நட்பினுள் ஒருவகை. நண்பர் பழகிய எளிமையால் - வஞ்சகத்தால் அன்று - குற்றம் செய்தால் பொறுத்துக்கொண்டு மறுபடியும் பழகிக்கொண்டிருக்க வேண்டும். `பழையார் கண் பண்பின் தலைப்பிரியாதார்’ எனவும் `கேண்மையார் கேண்மை விடாஅர்’ எனவும் வருதலின், விடா நட்பு பழைமையின் இலக்கணம் என்பது பெறலாம். பழைமை என்ற சொல்லிற்குத் தொன்மைப் பொருளும் உண்டு. பழகுந்தன்மை என்ற பொருளும் உண்டு. `தொல்லைக்கண் நின்றார் `பழகிய நட்பு’ என இவ்விரு பொருளிலும் குறளாட்சி காண்க. வாய்மைக்கு நிகழ்ந்ததை உடன்பட்டு நன்மையை வலியுறுத்தியது போல, பழைமையில் தொன்மையை உடன்பட்டு என்றும் விடாமையை வலியுறுத்துவர். பேதைமை வெண்மை பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல் (831) பேதைமை பெண்ணின் இயல்பு எனவும் யாதும் அறியாமை எனவும் வழக்குப் பொருள் உண்டு. பேதையனும் ஒரு வகை அறிவுடையவனே. அறிவின் வேறுபாடுகளில் பேதைமை ஒன்று. அறிவுடையான் தீது நீக்கி நல்லது கொள்வான், பேதையன் நல்லது நீக்கித் தீது கொள்வான். தூசி வடிகட்டியும் சாறு வடிகட்டியும் உண்டல்லவா? வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு (844) வெண்மை என்பது அறிவு நிலைகளில் ஒன்று. புல்லறிவு என்பது மறுபெயர். வெண்மை (வெள்ளை) என்றால் யாதும் இல்லா வெற்றிடம் என வழக்கில் பொருள் கொள்கின்றோம். அறிவில் தெளிவு நிலை, திரிபுநிலை, பகட்டுநிலை என நிலை பல உண்டு. பித்தன் தவிர ஏனையோர் இந்நிலையில் இருப்பர். அறிஞன், பேதையன், வெண்மையன் என அப்படி மனித இனப்பகுப்பு இல்லை. ஒருவனே தெளிவு நிலையில் அறிஞன் ஆகவும், திரிபு நிலையில் பேதையாகவும், ஆணவ நிலையில் புல்லறிஞனாகவும் மாறிக்கொண்டிருப்பான். எவனிடத்தும் இம்மூன்று நிலையும் இருக்கும். எனினும் ஒருவன் வாழ்வில் பெருங்கூறு நோக்கி அறிஞன் என்றோ பேதையன் என்றோ அறிவிலி என்றோ சொல்லுகின்றோம். வெண்மை என்பது ஓர் அறிவுநிலை. அறிவுத்தெளிவு பெற வேண்டிய இடத்தில் தெளிவுக்குத் தடையான முனைப்பு -செருக்கு -இருக்கின்றது. ஓரிரு வகை அறிந்திருந்தும் சில வகையில் ஓரிரு கூறு அறிந்திருந்தும் எல்லாம் அறிந்தோனாகத் தன்னைத்தானே மதித்துக்கொள்ளும் பகட்டறிவு வெண்மை எனப்படும். அவன் தற்பெருமையை நடையாலும் காட்ட வேண்டி, ஒண்மையுடையன் யான் என்று ஒருமையிற் பாடாது, `ஒண்மையுடையம் யாம் என்று உயர் சொன்னடையில் யாத்தார் ஆசிரியர். அறம், வாய்மை, பழைமை, பேதைமை, வெண்மை என்ற ஐந்து அறக்கலைச் சொற்களுக்கு ஆசிரியர் இலக்கணித்த பொருளை வழக்குப்பொருளோடு ஒப்பிட்டுப் பார்த்தோம். அந்தணர், முறை, ஈகை, கல்வி, அறிவு, இன்சொல், சொல்வன்மை, திட்பம், தவம், புலவி, காமம், நோக்கம் என்ற கிளவிகட்கும் வள்ளுவர் காட்டும் பொருளொழுங்கு அறியத்தகும் அறச்சொற்கள் எல்லாம் வழக்கில் பயில்வனவே. அவற்றின் பொருளும் மிக வேறுபாடுடையன வல்ல. ஒருசில அறச்சொற்களுக்குப் பொருள் வரம்பு செய்தாற் போதும்.எனக் கண்ட வள்ளுவர் மேற்காட்டியாங்கு அறம் முதலான சொற்களுக்குப் பொருள் இதுவெனத் தெளிவுறுத்தினர்ர். இனைய குறள்களை இலக்கணக் குறள்கள் என்று குறிப்பிடல் நன்மரபு. 3. வரிசைப்பாட்டு பாட்டு என்றால் உணர்ச்சி துள்ளவேண்டும். கற்பனை செறியவேண்டும், உவமை கலக்க வேண்டும், எதுகை மோனை இணையவேண்டும் நயம் கனியவேண்டும். நோக்கு இருக்கவேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாகச் சங்கப் பாட்டு என்றால், இயற்கை தழுவவேண்டும். இங்ஙனம் பாட்டுக்கு ஓர் அளவுகோல் செய்துவருகின்றோம். பின்வருவது ஓர் ஒரையாடல் சான்றோர்கள்:- (பிசிராந்தையாரைப் பார்த்து) உம்முடைய பெயரை நெடும் பல்லாண்டுகளாகக் கேட்டு வருகின்றோமே. நீர் பெரிய கிழவராக இருத்தல் வேண்டுமே. வயது பல ஆகியும் உமக்கு நரை ஏற்படவில்லையே. பிசிராந்தையார்:- (சிரித்துக்கொண்டு) உங்கள் கேள்வி கேட்க வேண்டிய கேள்வி. சுருக்கமாகச் சொல்லி விடுகின்றேன். என் மனைவி இல்லறப் பண்பெல்லாம் நிறைந்தவள். எனக்குப்போதுமான ஆண் மக்களும் பெண் மக்களும் உண்டு. என் உடன் பிறப்பாளர்கள் என்னோடு ஒற்றுமையாக நடந்து கொள்பவர்கள். என் நாட்டு அரசன் முறை தவறாது குடிகளைக் காப்பவன். என் ஊரில் கல்வி கேள்வி அறிவு பண்பு எல்லாவற்றிலும் சிறந்த பெரியவர் ஒருவர் அல்லர். பலர் இருக்கிறார்கள். எந்நலத்திலும் குறைவில்லாதபோது, நரை எப்படி வரும்? இந்த மாதிரியான பேச்சு இன்றும் இல்லையா? இப்பேச்சுத் தின்மையில் என்ன பாட்டுமை இருக்கமுடியும்? என்று கருதுகின்றோம். பின்வருவது இவ்வுரையாடல் அமைந்த ஒரு சங்கப் பாட்டு யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே. (புறம்.191) முதற்கண் இச்செய்திப் பொருளை அலசவோம். வயது நனி முதிர்ந்தும் முதுமை காட்டும் நரைதிரை தோன்ற வில்லையே என்பது கேள்வி. அதற்கு விடையாக நான்கு கருத்துக்களைப் பிசிரார் சொல்கின்றார். தன் குடும்ப நலம், தன் பொதுக் குடும்ப நலம், தன் ஆட்சி நலம், தன் ஊர் நலம் எல்லாம் யாதும் குறைவில்லை. தொடர்பான இடமெல்லாம் நலம் பயப்பனவாக இருக்கையில் நரைக்கு இடமில்லை. பிசிரார் மொழிந்த நான்கு நலங்களுள் தன் குடும்ப நலம், தன் பொதுக் குடும்ப நலம் என்ற இரண்டனையும் அகச்சூழ்நிலை எனவும் ஏனயை இரண்டனையும் பொதுச் சூழ்நிலை எனவும் பகுத்துக் கொள்ளலாம். `இளையர் என்பதற்கு ஏவலாளர் என்று இது காறும் பொருள் சொல்லப்பட்டு வருகின்றது. மனைவி, மக்கள், வேந்தன், ஊர்ச்சான்றோர் என்போர் இயல்பான தொடர்பினர். விலக்க முடியாத உறவு நிலையினர். இந்நிலையினரோடு எண்ணத்தக்கவர் அல்லர் ஏவலாளர்; விலகற்கும் விலக்கற்கும் உரியர். ஆதலின் `என் இளையர் என்பார் உடன் பிறப்பினரே ஆவர். `மாண்ட என் மனைவி என்ற நடையை ஒப்புநோக்குக. திண்பொருள் எய்தல் ஆகும் தெவ்வரைச் செகுக்கல் ஆகும் நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணல் ஆகும் ஒண்பொரு ளாவ தையா உடன்பிறப் பாக்க லாகா எம்பியை ஈங்குப் பெற்றோன் என்னெனக் கரிய தென்றான் (சிந்தா.1760) என்பர் திருத்தக்க தேவர். `நரையில, என்ற தொடர்ப் போக்கு நரை திரை முதலாயின என்பதைக்குறிக்கும். நீ சொன்ன நேரத்தில் வரவில்லையே? என்பது ஒரு மடக்குக் கேள்வி. உடன்பட்டதாக ஒன்றைக்கொண்டு மேலொன்றைச் சொல்லுகின்ற வாய்பாடு உடையது. ஆண்டு பலவாகியும் நரையில்லையே என்பது ஒரு மடக்குக் கேள்வியே. முதுமை வந்தாலன்றோ நரைவரும். எனக்கு இன்னும் முதுமை தொடரவில்லையே. சூழ்நிலைகள் நலமாக இருத்தலால் என் இளமை நீடிக்கின்றது. முதுமையே தொடங்காதபோது நரை என்ற வினாவுக்கு இடமில்லை என்பது புலவரின் குறிப்பு. பாட்டின் வடிவம் `யாண்டு பலவாக என்பது சங்கச் சான்றோர் கவியினுள் ஒன்று. இதனைப் பாடிய பிசிராந்தையார் அகநானூனுற்றில் ஒன்று. புறநானூற்றில் மூன்று என ஐந்து பாட்டாசிரியர். ஏனைய பாடல்களில் உவமை முதலாயின உள. இப்பாட்டிலோ உவமையில்லை, கற்பனையில்லை, இயற்கையில்லை என்பது வெளிப்படை. இவை இல்லாவிட்டாலும் இது பட்டாகாதா? சிந்திப்போம். உவமை முதலாயின இல்லாவிட்டாலும் ஒரு செய்யுள் பாட்டாகலாம் ஏன்? உவமை என்றின்னவை பாட்டின் புறக்கூறுகள். எண்ணிய கருத்தை ஒழுங்குபடப்புனையும் அமைப்பே பாட்டின் வடிவம். புறக்கூறுகள் இன்றியும் வடிவச்செம்மை வரும். கண்ணகி கற்பழகி அணிகலன்கள் அவளுக்கு இயல்பாக வேண்டுவதில்லை. அவளழகு செய்யாக்கோலம். ஆதலின், கூடல் மகளிர் கோலங் கொள்ளும் ஆடகப் பைம்பூண் அருவிலை யழிப்பச் செய்யாக் கோலமொடு வந்தீர் (சிலப்.16) என்று மாதரி கண்ணகியின் அணியில் திருமேனியைப் பாராட்டு கின்றாள். சீதை இயற்கைப் பேரழகி மேலணிகள் அவளழகை மிகுக்கவில்லை. மாறாக மறைக்கின்றன என்று கருத்துக் கொண்ட கம்பர், அமிழிமைத் துணைகள் கண்ணுக்கு அணியென அமைக்கு மாபோல் உமிழ்சுடர்க் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் அமிழ்தினைச் சுவைசெய் தென்ன அழகினுக்கு அழகு செய்தார் இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ (பால: கோல.) எனச் சீதைக்கு அணியழகு செய்வாரை அறியாதவர் என்று சாடுகின்றார். இயற்கையழகு என்பது பாட்டுக்கும் பொருந்தும் வடிவொழுங்கு பட்டாங்கு இருப்பின், உவமை முதலாயின வேண்டுவதில்லை. இவ்வொழுங்கு இல்லாத பாட்டு, புடைவைக் கடைப் பார்வைப் பாவை போல என்ன செய்யழகு செய்தாலும் உயிர்ப்பு இராது. வரிசையழகு `யாண்டு பலவாக என்ற பாட்டில் கருத்தொழுங்கு உண்டு. கருத்தைச் சொல்வதில் வரிசையுண்டு. `வரிசை அறிதலோ அரிது என்பர் கபிலர். மாண்டவன் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையர் என் இளையரும் ஒருவனுக்கு மனைவியும் மக்களும் முதல் நெருக்கமானவர். உடன்பிறந்தார் அடுத்து நெருக்கம் ஆனவர். வேந்தனும் ஊர்ச்சான்றோரும் அடுத்தடுத்த நெருக்கத்தினர். முன்னவர் இருவரும் ஒருவனுக்கு நேரடித் தொடர்பினர். அவர்தம் நலமும் தீங்கும் ஒருவரை விரைவில் சாரும். வேந்தனும் சான்றோரும் பொதுத்தொடர்பினர். அவர் தம் செயல்கள் பலரைச்சார்வன. இங்கு முறை வைப்பில் நினைக்கத்தக்க ஒன்று உண்டு. தன் ஊர்ச்சான்றோரை மூன்றாவதாக வைத்து எல்லார்க்கும் பொதுவான வேந்தனை நான்காவதாக இறுதியில் வைத்திருக்க வேண்டும். பின்னர் மக்கள், உடல் பிறந்தார். வேந்தன் என்றிவ் வகையினர் நன்மைக்கும் தீமைக்கும் இடமானவர்; சான்றோர் நலமே செய்பவர் ஆதலின் முறை மாறிவைத்த முறை பெறப்படும். `வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் என்று எதிர்மறுத்து மொழிவதாலும் `ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் என்ற விளக்கத்தாலும் வரிசைக் கருத்துத் தெளிவாகும். சான்றோர் என்பதற்கு வீரர் என்ற பொருளும் உண்டு. அச்சான்றோரைச் சுட்ட வில்லை என்று காட்ட `ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைiச் சான்றோர் என்று பொருள் விரித்தார் பிசிரார். எனவே நரையில்லையே என்ற வினாவிற்குக் காரணம் மொழியும்போது, நான்கு தொடர்புகளை - வாழ்க்கைச் சூழ்நிலைகளை - நெருக்களவில் வரிசைப் படுத்திய வடிவு பாட்டின் வடிவாகும். உவமைப்பாட்டு, கற்பனைப் பாட்டு, உணர்ச்சிப்பாட்டு என்பதுபோல வரிசைப் பாட்டும் ஒரு செய்யுள்முறை. அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் மங்கல வணியிற் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாணுதல் திலகம் இழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி (சிலப்.4) என்பது அவலவுணர்ச்சியில் எழுந்த வரிசையடிகள். கோவலன் பிரிந்தபோது, கண்ணகி தன்னைச் சிறிதும் அழகுபடுத்திக் கொள்ளவில்லை என்பதனை அடிமுதல் கூந்தல் முடிவரை உறுப்புக்களை ஒரு வரிசைக்கு உட்படுத்திப் புனைகிறார் இளங்கோ. பாட்டின் வடிவம் பகுதிப் பொருள்களை நாட்டும் வரிசையில் நடந்திய லும்மே செய்யுள் உள்ளமைப்பு. இல்லமைப்பு என இருவகையுடையது. ஒரு பொருளினைப் புனைந்து விளக்குங்கால், இன்ன கருத்து வரலாம் என்பது ஒருமுறை. இன்னது வரக்கூடாது என்பது ஒருமுறை. தம் நீண்ட இளமைக்குக் காரணம் கூறுவார். மனைவி மக்கள் உடன்பிறந்தார் வேந்தன் சான்றோர் இனையவரின் நிறைவையும் ஒற்றுமையையும் செம்மையையும் சால்பையும் கூறினார். தன் நல்ல பழக்க வழக்கங்கள் காரணம் என்று சொல்லியிருக்கலாம். தன் கல்வியறிவு ஒழுக்கம் காரணம் என்று சொல்லியிருக்கலாம் நால்வரோடு தன்னை யுளப்படுத்தி `வாழ்வாங்கு வாழும் மாசில் வாழ்க்கையன், என்று முதலிலோ இறுதியிலோ மொழிந்திருக்கலாம். இவ்வாறு தன்னைப்பற்றிக் கூறா இல்லமைப்பால் பிசிராந்தையாரின் மனவொழுங்கையும், அவர் ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோருள் ஒருவர் என்பதனையும் உணர்ந்து கொள்கின்றோம். 4. வாழ்வாங்கு `வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், என்று ஒரு திருக்குறள் தொடங்குகிறது. ஏனைக் குறள் எல்லாம் இக்குறளின் விளக்கம் என்று சொல்லலாம். இக்குறளில் `வாழ்வாங்கு’ என்று ஒரு புதிய சொற்சேர்க்கை செய்வர் வள்ளுவர். வாழ்வாங்கு வாழ்பவன் என்பதற்கு வாழும் முறைப்படி வாழ்பவன் என்பது பொருள். வாழ்வுக்கு ஒரு முறையுண்டு. உயிரோடிருப்பினும், அம்முறை தழுவி ஒழுகும் போதுதான் வாழ்வு எனப்படும். `பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன்’ எனவும் `ஊனார் புழுக்கூடு இது காத்து இங்கிருப்பதானேன்’ எனவும் மணிவாசகர் வெற்றிருப்பை இகழ்வர். எப்படியேனும் காலங் கழிக்க எண்ணுவது வாழ்வு ஆகாது. ஒருவன் சாகாதிருப்பதனால் அவன் வாழ்கின்றான் என்று சொல்லிவிடலாமா? சாதலும் சிலருக்கு வாழ்வு தரும். மானத்தைக் காக்கவேண்டும் என்ற நிலைபற்றி அறம் சொல்லும் போதெல்லாம் உயிரை ஓர் ஈனப் பொருளாக அவமதிக்க வேண்டும் என்பர் வள்ளுவர். உயிர் தானே போகா விட்டால், வலிந்தாவது போக்கிக் கொள்ளலாமே என்பர். `உயிர்நீப்பர் மானம் வரின்’ என்ற தொடரில் நீப்பர் என்ற பிறவினை - வல்வினை ஆட்சியைக் காண்க. பெருமை பெருஞ் சிறுமைப்பட்ட போது உடலைப் பேணிக்கொண்டு உலகை விடாதிருத்தல் ஒரு வாழ்வா? மதியாதாரின் பின் சென்று அடிமையாக வாழ்வதைக் காட்டிலும் உயிர் விட்டொழிதல் நன்றல்லவா? இவ்வாறு வாழ்வுக்கு மானமருந்து தருவர் வள்ளுவர். இதன் குறிப்பு என்ன? இறக்கவேண்டும் அல்லது இறப்பித்துக் கொள்ளவேண்டும் என்பதுவா இப்பேராசான் கருத்து? மனிதப் பிறப்பு பெறுமவற்றுள் அரிய பிறப்பு என்று பாராட்டிய வள்ளுவப் பெருமகன், அரிய உடம்பைப் பெற்றவன் அளவறிந்து உண்டு ஓம்பி நெடிது வாழ்க என்று வாழ்த்திய அப்பெருமான் நாம் இறக்கவும் மடியவும் மாளவுமா தெய்வக் குறள்கள் எழுதினார்? நாமெல்லாம் இல்வுலகில் வாழ்வாங்கு வாழவேண்டும். பின்னர் வானுறையும் தெய்வங்களாக வழிவழி மக்களால் போற்றப்பட வேண்டும் என்பதுவே அவர் நன்னெஞ்சம். தனி வள்ளுவங்கள் வாழ்வுக்கு முறை இன்றியமையாதது என்றால், அம்முறை என்பது என்ன? முறை ஒன்றா? பலவா? ஆளுக்கு ஒருமுறையா? பலருக்குப் பன்முறையா? திருக்குறள் கூறும் வள்ளுவம் ஒன்றன்று. பலவினும் பல. மக்கள் மனிதப் பிறப்பு என்ற இன வகையில் ஒன்றாக இருந்தாலும் பண்பால் நினைவால் அறிவால் ஆசையால் கல்வியால் பொருளால் முயற்சியால் உறவால் நட்பால் பகையால் பருவத்தால் உருவத்தால் உடற் கூற்றால் இன்னும் எத்துணையோ பிரிவால் வேற்றுமைப் பட்டவர்கள். இவ்வேற்றுமையை என்றுமுள வேற்றுமையாகக் கொண்டு வள்ளுவங்கள் கூறுவது திருக்குறள். சுருங்கச் சொல்லின், முறைகளின் தொகுதியே திருக்குறள். ஒருவனுக்கே அவன் பல நிலைகளுக்கு ஏற்பப் பன்னெறிகள் மொழிவது திருக்குறள். மனித வாழ்வில் பல நிலைகள் உண்டு என்று கண்டு உணர்ந்து அவற்றுக்கெல்லாம் பல வழிகள் காட்டிய சிறப்பே குறளின் சிறப்பு. இவ்வடிப்படையைக் கடைப்பிடித்துத் திருக்குறளைக் கற்கமுனைபவர் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிய தனி வள்ளுவங்கள் எத்துணையோ உண்டு என்று புரிந்து தேர்ந்து எடுத்துக் கொள்ளமுடியும். பொருள் வாழ்வு திருக்குறள் காட்டும் பல்வேறு நிலைகளை மூன்று பெரும்பிரிவாக்கலாம் யார்க்கும் இவ்வுலகில் பொருள் வேண்டும். யாவர்க்கும் அறிவு வேண்டும் எவர்க்கும் பண்பு வேண்டும். இம்மூன்றில் பொருள் பற்றிய முறைகளை விரிவாகப் பார்ப்போம். மனிதன் பிற உயிரினங்கள் போல இயற்கையோடு நெருங்கி இயைந்து வாழ்பவன் இல்லை. இயற்கை யொட்டி இல்லை. இயற்கை விலகியாக வளர்ந்து கொண்டே அகல்கின்றான். செயற்கை மயமே நாகரிக வளர்ச்சியாகக் கருதப்படுகின்றது. செயற்கை பெருகப் பெருகச் சமுதாயக் கூட்டுறவு பெருகல்வேண்டும். நன்கு வாழ விரும்பும் மாந்தன் இக் கூட்டுறவைப் பெருக்கிக் கொள்ளல் வேண்டும். இக் கூட்டுறவு எதனால் எளிதில் உண்டாகும்? பொருளால் உண்டாகும் என்று கண்டவர் வள்ளுவர். ஆகாது எனினும் அகத்துநெய் உண்டாகின் போகாது எறும்பும் புறஞ்சுற்றும் (நாலடி.337) பாத்திரத்துள் நெய் இருப்பின் உறவாட எறும்புக்கூட்டம் திரளும் என்று நாலடியார் சொல்லுமாப் போல், பொருளாளிக்கு நட்புப் பெருகும். இல்லாளிக்கு இருந்த நட்பும் விலகப் பார்க்கும். `இல்லாரை எல்லாரும் எள்ளுவர் (752) என்பர் ஆசிரியர். இதற்கு ஒரு விளக்கமாக `ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப்படும் (1047 என்று மேலும் கூறுவர் சமுதாய உறவு கிடக்க, பெற்ற தாயுறவுங்கூட வறிய மகனுக்கு வாடிப்போகும் என்று உணரலாம். மனிதன் - சமுதாயத்தின் ஒரு மணலாகக் கிடக்கும் மனிதன் - செல்வனாகத் திகழ முடியாவிடினும் கேவலம் வறியவனாக வதங்கக்கூடாது. மனிதன் இரவலனாகச் சமுதாயத்தில் நடமாடக்கூடாது என்பது வள்ளுவரின் அதிராக் குறிக்கோள். ஆதலின் `பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு (247) என்று கடுநடையில் உவமையில் வைத்து எச்சரிக்கின்றார். `இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என்னும்போது நானும் கூடச் சேர்ந்துகொண்டு வறியனை இகழ்வேன் என்று உட்படுத்திக் கொள்கின்றார் போலும். இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது (1041) வறுமைக்கு உவமை வறுமையே. அதன் கொடுமையை விளக்கிக் காட்ட வேறு ஓர் உவமை இல்லை. வறுமை உவமை யுலகத்தையே வள்ளுவர்க்குக்கூட வறிதாக்கி விட்டது. நல்குரவு என்ற பெயரால் வறுமைக்கு ஓர் அதிகாரம் வைத்துப் பத்துக் குறள்களில் வறுமையின் கொடிய இழிவுகளை வெளிப்படுத்து கின்றார். வறுமை என்பது எவ்வாறானும் கூடாது பொருளீட்டு தல் உலகக் கடமை. ஈட்டாது விதி விதியென்று கூறிக்கொண்டு மடிந்து கிடக்கற்க என்று வள்ளுவர் அறையும் திருக்குறட் பறைபோல் யாரும் அறைந்ததில்லை. `செய்க பொருளை (759) என்பது அவரது ஆணை, இன்ன அளவு பொருளீட்டினாற் போதும் என்று திருக்குறள் செல்வ வரம்பு செய்யவில்லை. சோம்பல் பற்றாத மன்னவன் திருமால் அளந்த உலகத்தையெல்லாம் அடைவான் என்பதனால், பொருளிற் பேராசையை வள்ளுவர் தூண்டுகின்றாரேயன்றிக் குறைத்துக் கொள்ளச் சொல்லவில்லை. ஒண்பொருள் காழ்ப்பகெட்டியாக இயற்றவேண்டும் என்பதுஅவர் ஊட்டும் ஆர்வம். குன்றேறி யானைப்போர் கண்டற்றால் (756) என்ற உவமையிலிருந்து எவ்வளவு பொருட் குவியலுக்கும் மனிதன் ஆசைப்படலாம் என்பது புலனாகின்றது. பொருளாசைப்படுக, நும் முயற்சி திருவினையாக்கும் என்பது வள்ளுவ வாழ்த்து. பொருட்பயன் திருக்குறள் வறட்டுக் கொள்கை பேசவில்லை. நன்றாக முயன்று குன்றாத பொருளீட்டி நலமாக இவ்வுலகில் வாழ்கின்ற வாழ்வுக் கொள்கையே சாற்றுகின்றது. பொருளின் இன்றியமை யாமையை - பொருள் முயற்சியை - பொருள் வேட்கையை இவ்வளவு அழுத்தமாகத் திருக்குறள் இயம்புவதேன்? பொருளீட்டுவது குறிக்கோள் இல்லை. சமுதாய உறவைப் பெருக்கிக் கொள்ளுதல் என்னும் குறிக்கோளுக்காகப் பொருளீட்டுகின்றோம். அணை நீர்த்தேக்கம் காண்பது நம் குறிக்கோளா? இல்லை. ஆயிரமாயிரம் வேலிப்பயிரை வளர்ப்பது நம் குறிக்கோள். பொருளீட்ட வேண்டும் என்பதற்கு எவ்வளவு குறள்கள் உள்ளன. அவ்வளவு குறள்களுக்கும் மேலாக, கொடுப்பாய், ஈவாய், ஒப்புரவு ஆற்றுவாய் என்பன பற்றிக் குறள்கள் உள. எது மனிதத் தொழில்? ஈதல்,எது மனிதவாழ்வு? கொடுத்து வாழ்தல். எது மனிதனுக்கு முடிவான பயன்? கொடைப் புகழ் என்று முடிப்பர் வள்ளுவர். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற ஆசான் பொருளுடையார்க்கு, ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை என்று வாழ்வின் பயனை அறுதியிட்டுரைப்பதை நினையவேண்டும். சுற்றத்தாற் சுற்றப்பட்ட ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன். (524) ஒருவன் எவ்வளவு பொருளீட்டினான் என்பதைக் காட்டும் அளவு கருவி என்ன? எவ்வளவு சுற்றம் உறவாயிற்று; எவ்வளவு சமுதாயம் பயன் பெற்று அவனை உறவாகக் கொண்டது. இதுவே பொருள் மானி உறவு பெருக்காதவனது செல்வத்தை நன்றியில் செல்வம் என்று ஓர் அதிகாரம் முழுவதும் இகழக் காண்கின்றோமே. உறவிலாச் செல்வத்தைப் பழுத்த நச்சுமரம் எனவும் அச்செல்வனை நச்சப்படாதவன் எனவும் பழிக்கப் பார்க்கின்றோமே. பொருளானாம் எல்லாமென்று ஈயா திவறும் மருளானாம் மாணாப் பிறப்பு (1002) இக் குறளில் பொருளுக்கு உரிய மதிப்புப் பற்றியும் மயக்கம் பற்றியும் தெளிவிப்பர் ஆசிரியர் வாழ்வுக்கு வேண்டிய எல்லாமே உலகில் பொருளால் நடந்துவிடும் என்று நினைக்கின்ற போக்கு தப்பு என்பது அவர் தம் இடிப்புரை. பொருளை வாழ்விக்க வந்த நற்றுணை என்று அறியாது பொருளே வாழ்வு என்று மயங்கும் மதியனைப் பித்துக்கொளி என்பது அவர் தம் ஏச்சுரை. தேக்கிய நீரைப் பாய்ச்ச வேண்டும். நெய்த ஆடையை உடுத்த வேண்டும். சமைத்த உணவை உண்ணவேண்டும். கட்டிய வீட்டில் குடியிருக்க வேண்டும். கற்ற கல்வியைக் கற்பிக்க வேண்டும். அவைபோல் ஈட்டிய பொருளை ஈய வேண்டும். இருப்பிற் பயனில்லை செலவிற்றான் பயனுண்டு. ஈயாது இறுகப் பிடிப்பது மருள்; அங்ஙனம் பிடிப்பவன் அல் பிறவி என்பது பொய்யில் புலவரின் வசையுரை பொருள் நெறி ஈட்டுவதிலும் பல நிலைகள், ஈவதிலும் பல நிலைகள், இன்மையிலும் பல நிலைகள், உடைமையிலும் பல நிலைகள். பொருள்வேண்டும். ஒருவந்தம் வேண்டும் என்பதற்காக எதுவும் செய்யலாமோ? ஈட்டுவதற்கு எம் முறைகளையும் மேற்கொள்ளலாமோ? பொருள் வந்தாற் போதும் என்று நினைக்கலாமோ? எச் செய்கையும் முறையோடு செய்யப்பட வேண்டும். வாழ்வுக்குப் பொருளா? பொருளுக்கு வாழ்வா? வாழ்வு என்பது பழிபடா வாழ்க்கை, சமுதாயம் நன்குமதிக்கும் வாழ்க்கை. மனிதனுக்கு மெய்யான உடைமை எது? விட்டு நீங்கா உடைமை எது? உலகத்தையே நாம் தேடினாலும் அது நம் உடைமையாகாது. அகச்சொத்து ஆகாது. செல்லும் இடமெல்லாம் உடன் வாராது. பொருளுடையார் எல்லாம் உடையார் என்று வள்ளுவர் கூறவில்லையே. `அறிவுடையார் எல்லாம் உடையார் என்பதே அவர் தம் பொருளுரை. இன்னும் ஒருபடி சென்று, எவ்வளவு செல்வமிருந்தாலும் என்ன, `அறிவிலார் என்உடையரேனும் இலர் (430) அறிவு என்ற நிலையுடைமை இல்லாதார் வறியவரே என்று மாற்றுடைமை சுட்டுவர் ஏன்? அறிவொன்றே மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி காட்டுவது. அறிவு என்பது ஓயாச் சிந்தனை, வாழ்க்கையலசல் எது வேண்டும்? எது வேண்டாம்? எப்படி என் வாழ்வு இன்று ஓடுகின்றது? இப்படி ஓடலாமா? வேறுவிதமாக வழிப்படுத்த வேண்டுமா? மனம் அல்வழிச் செல்கின்றதா? அதனைப் பிடித்து இழுத்துநல்ல பாதையில் செலுத்த வேண்டுமே? வரவு பெரிதா? செலவு பெரிதா? நட்பைப் பெருக்கிக் கொள்வது. பகையை நட்பாக்கிக் கொள்வது, சிறு நட்பைத் துணிந்து விலக்குவது, பெரியவர் நட்பை வருந்திப் பேணுவது, கட்டுப்படுத்துவது. கட்டுப்பாட்டைப் பெருக்கிக்கொள்வது. எத்துறையிலும் அளவறிந்து பழகுவது, அளவறிந்து செய்வது, அளவறிந்து அடங்குவது என்று இச்சிந்தனைகள் எல்லாம் வாழ்வாங்கு வாழ்வதற்கு வேண்டும். வாழ்வுக்கும் வேண்டும் என்ற இப் பரந்த சிந்தனைகளில் நாளும் நாட்டம் செலுத்தாது. ஓரேருழவன் போலப் பொருளொரு சிந்தனை மட்டும் உடையவன். வாழ்வாங்கு வாழ்பவனாக ஆகான். தக்க கருவியாகிய பொருளிருந்தும். சிந்தனைவறியவன் ஆலமரம் அரசமரம் போல எண்ணக் கிளை பெருக்கி விரிந்து சமுதாய நிழலில் வாழமாட்டான். பாலை நிலக் குறும்புதர் போல வாழ்வு முடங்கியாக இருந்து மடிவான். முயன்று எனைப் பொருளீட்டுக; கொடையால் சமுதாயவுறவு பெருக்குக; விரிந்து நுணுகிச் சிந்திக்க; எல்லாம் தரும் அறிவுடைய மனிதனாய் நிலைபெறுக என்பதுவே வள்ளுவரின் வாழ்வியல். 5. தூய இலக்கியம் சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இஃது அகத்திணையிலக்கியம் புறத்திணையிலக்கியம் என இருவகைப்படும். அகத்திணை கூறும் பொருள் என்ன? காதலும் குடும்ப வாழ்க்கையும். இந்த வகையிலக்கியம் தமிழுக்கே உரிய பெருமையுடையது என்று பிறமொழி கற்றார் எல்லாம் தெளிவாகச் சொல்லியுள்ளனர். அகத்திணை தமிழினத்தின் தனிப் படைப்பு. தமிழ் சொல்லிக் கொடுப்பது என்றால் அகத்திணை சொல்லிக் கொடுப்பது. அதாவது அன்பான காதலுறவையும் அன்பான இல்லற வாழ்வையும் சொல்லிக் கொடுப்பது என்பது நம் முன்னோர் கருத்து. திருவள்ளுவர் காமத்துப்பால் என்ற அகத்திணை பாடினார். `உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ் இன்துறை என்று மணிவாசகர் அகத்திணையை `இன்துறை எனத் திருக்கோவையாரில் பாராட்டுகின்றார் இத்தகைய இலக்கியத் துறை தீந்தமிழிலேதான் உண்டு என்பது அவர் கருத்து. புவியினுக் கணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற் றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார் (ஆரணி -சூர்) என்பது இராமாயணம். அகத்திணையின் உலக மதிப்பையும் பொருட்சிறப்பையும் நெறியையும் தெளிவையும் ஒழுக்கத்தையும் காட்டுவதற்கு ஒரு முழுப்பாடலே தொடுத்தார் கம்பர். சங்கப் பாடல்கள் 2381. இவற்றுள் அகத்திணைப் பாடல்கள் 1862. அதாவது முக்காற்பாகம். சங்கப் புலவரின் தொகை 473. இவருள் அகத்திணை பாடினோர் தொகை 378. அதாவது முக்காற்பாகத்தர். இதனால் அகத்திணையின் சிறப்பும் பரப்பும் அதனை நுனித்து ஆராய வேண்டிய நம் கடமையும் பெறப்படும். சங்கத்துக்குப்பின் எழுந்த காப்பியங்களிலும் அருட்பாசுரங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் நாட்டுப் பாடல்களிலும், ஏன்? இன்று பல்கி வரும் திரைப்பாடல்களிலும் தமிழன் பாடிக் களிக்கும் காதற்பாட்டு எதிலும் - அகத்திணையின் சாயல் படியாமல் இருப்பதில்லை. ஆயினும் அகத்திணையின் அடிப்படையுண்மைகள் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாகத் தெளிவின்றியும் திரிபாகவும் கற்பிக்கப்பட்டு வரக் காண்கின்றோம். கி.பி.நாலாவது நூற்றாண்டுக்குப் பின், பிறராட்சியாலும் பிறமொழித் தாக்கலாலும் சங்கத் தமிழ்க் கல்வி முறை மாறிவிடவே, தொல்காப்பியத்துக்கும் சங்க இலக்கியத்துக்கும் கலப்புப் பொருள்கள் உரைக்கப்பட்டன. குலம் சாதி சமயம் கடந்த அன்பு ஒன்றையே காதலுக்கு முதலாகக் கொண்ட அகத்திணைக்கும் பிற்காலப் பிரிவுக் கூறுகளைப் புகுத்தி விளக்கஞ் செய்தனர் இடைக்காலோர். அகத்திணை, கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்ற தலையாய குறியீடுகளுக்குக்கூட அன்பும் அறமும் அல்லாத விளக்கங்கள் எழுதுவதும் கற்பிப்பதும் ஒரு மரபு போல வந்திருத்தலின், 1500 ஆண்டுகளாக அகத்திணையின் உண்மையும் பொதுமையும் ஒழுங்கும் புதைகுழிப்பட்டன. தமிழ் கண்ட தன்னேரில்லாத அகத்திணையின் இடைக்கதை இவ்வாறாயிற்று. ஆதலின் உண்மையைக் கண்டு தெளிதற்கு ஒரு சில சங்கப் புலவர்களையோ ஒரு சில சங்கப் பாடல்களையோ ஒரு சோற்றுப் பதம்போல் பார்ப்பது தகவாகாது. 378 அகப் புலவர்களையும் ஒருங்குவைத்துப் பலவகைப் படுத்தியும் பல தொகைப்படுத்தியும் அலசல் வேண்டியதாயிற்று. அங்ஙனம் அகத்திணை குறித்துத் தேர்ந்து ஓர்ந்து நான் கண்ட முடிபுகளில் மூன்றினை இங்கு வானொலிக்கின்றேன். அகத்திணையின் பொருள் ஆண், பெண் காதல் பற்றியும் பாலிணைவு பற்றியும் எல்லா மொழியிலும் எல்லா இலக்கியங்களும் பாடுகின்றன. கற்பனைப் படுத்துகின்றன, தித்திக்க மொழிகின்றன, அவ்வாறாக, தமிழ் அகத்திணைக்கு என்ன தனிப்பெருமை என்று கேட்கலாம். காதல் பாடுவதால் அகத்திணைக்குச் சிறப்பு என்பதில்லை. இவ்வகையான காதலை இவ்வகையாகத்தான் பாடுவது என்ற கட்டுப்பாடே அகத்திணையின் சிறப்பு. காதற்பொருளிலும் கட்டுப்பாடு. அதனைச் சொல்லும் முறையிலும் கட்டுப்பாடு. இவை அகத்திணை நெறிகள். காதலுலகம் மிகப்பெரிய உலகம். அங்கு எத்தனையோ கலவரங்கள், சரிவுகள், குழிகள், பழிகள், கட்டாய மணம், கணவன் மனைவி ஒரு வரையொருவர் ஐயப்பாடு, குணக்கேடு, கள்ளக்காதல், கள்ளப்பேறு, கருவழிப்பு, விட்டோடுதல், வழக்காடுதல், குடுமிபிடித்தல், கூந்தல் பிடித்தல், எவ்வளவோ நிலையழிவுகள் பாலுறவில் உள்ளன. உலகில் நடப்பன எல்லாம் பாடலாமா? புதினங்களும் சிறுகதைகளும் நாடகங்களும் காப்பியங்களும் இவற்றைச் சுவைபடப் பலபடப் புனைகின்றன. வழிப்படுத்துவதைக் காட்டிலும் சுவைப் படுத்துவதே இவற்றின் ஆசை. பிற இலக்கியங்கள் சுவைக்காக எக்காதலையும் பாடும். எப்படியும் பாடும். புரண்டோடும் வெள்ளத்துக்கு உள்ள கரையையும் இடித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் இலக்கியங்களே பல. அவை தனி மனிதன் அறிவுக்குச் சுவையாவன; ஆனால் தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் நச்சாவன. அகத்திணை அன்புக் காதலை மட்டுமே பாடும். அறிவுறுத்தும் இயல்பாகச் சில சிக்கல்கள் தோன்றும்போது, காதலர்கள் எப்படி அன்பாக நடந்து இணைந்து கொள்ள வேண்டும் என்று வழியும் பொறுப்பும் காட்டும். அஃது ஒரு தூய இலக்கியம். தன் மகள் ஒருவனோடு கொண்ட காதலுறவு அவள் குடும்பத்தார்க்குப் பிடிக்கவில்லை. மகள் செய்தியறிந்த அன்னையும் துடிக்கின்றாள். இப்படி நடந்துவிட்டதே என்று உடனே பிறந்த அண்ணன்மார்களும் சினங்கொண்டு அத்தலைவனைப் பகையாகக் கருதி அம்பும் வில்லும் பார்க்கின்றனர். ஒருநாள் முழுதும் சினம் தணிந்த பாடில்லை. முடிவு நாம் நினைப்பதுபோலப் புதினமாக வில்லை. சிறுகதையாகவில்லை. அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து ஒருபகல் எல்லாம் உருத்தெழுந் தாறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை (கலி.39) வெகுண்ட அண்ணன்மார் தன் தங்கை என்ன குற்றஞ்செய்தாள், அவளைக் காதலித்தவனும் செய்தகுற்றம் என்னோ? தம் வாழ்வுக்கு உரியவர்களை அன்பினால் தேர்ந்து கொள்வது குற்றமில்லை. அது தானே கற்பு என்று அறிவு வந்து, தாம் செய்ததற்கு வெட்கப்பட்டனராம். இவ்வண்ணம் காதலர்களுக்கேயன்றித் தொடர்புடைய வீட்டார்க்கும் நேர்வழி காட்டுவது அகத்திணை; சிறிய சிக்கலைப் பின்னிப் பெருஞ் சிக்கலாக்காமல் தொடக்கத்திலேயே நெறிப்படுத்துவது அகத்திணை. அகத்திணைப் பாடல் அமைப்பு சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி மாதவி மணிமேகலை தேவந்தி மாசாத்துவான் என்று இயற் பெயர்கள் வருவதுபோலவும், இராமாயணத்துத் தசரதன், கோசலை, கைகேயி, இராமன், சீதை, இலக்குவன் என்று பாத்திரப் பெயர்கள் வருவது போலவும் அகப்பாடலில் யாருக்கும் பெயர் சொல்லக்கூடாது என்பது உயிரான இலக்கணம். மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளாப் பெறாஅர் (தொல்.999) என்று தொல்காப்பியம் விதிக்கின்றது. காதலர்கள் ஒத்த நல்ல அன்புடையவர்கள் தானே; பெயர் சொன்னால் காதல் குறைவு பட்டுவிடுமா என்று கேட்கலாம். மக்கள் பெயர் தாங்கி வரும் காதல், காதற்பாட்டு ஆகுமேயன்றி அகம் என்ற பாட்டாகாது. அகப்பாட்டு பொதுவானது. பெயரில்லாமையினால் படிப்பவர் ஒவ்வொருவரும் எனக்கு எனக்கு என்று கொள்ளத்தக்க உரிமையுடையது. தலைவி தன் காதலன் தொடர்புப் பெருமையைச் சொல்லும் ஒரு குறுந்தொகைப் பாடல்: நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று; நீரினும் ஆரள வின்றே; சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (குறுந்.3) என் காதலனுடைய நட்பு நிலத்தைக் காட்டிலும் அகலமானது, வானத்தைக் காட்டிலும் உயரமானது, கடலைக் காட்டிலும் ஆழமானது, எவ்வகையிலும் அளவைக் கூற முடியா நிறையுடையது என்று பெயர்ச்சுட்டின்றி வரும்போது, இப்பாடல் ஒவ்வொருவர்க்கும் உடைமையாகின்றது. தலைவன், தலைவி, காதலன், காதலி, தாய், தந்தை, செவிலி தோழி என்று உறவுப்பெயர் சொல்லலாம். மலை, கடல், நாடு, ஊர் என்றவாறு நிலப்பெயர் சொல்லாம். ஆயர் வேட்டுவர் உழவர் என்றாங்கு தொழிற்பெயர் சொல்லலாம். எப்படியும் பெயர் ஒருவரைச் சுட்டாமல் பொதுமை தழுவவேண்டும் என்பது அகப்பாட்டின் மாறா அமைப்பு. மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துனைப் போற்றி சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே (திருவா.1) என்பது திருவாசகம். இத்தகைய அருட்பாடல்களிலும் இயற்பெயர் வரவில்லை. பொதுமையுண்டு என்றாலும் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. `உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழவிடேன் என்ற போதும். `என்னை யாண்டு கொண்டான் என் சிறுமை கண்டும் என்றபோதும், `உன் அருள்பெறு நாள் என்றென்றே வருந்துவனே என்றபோதும் இவை பொது நடையாக இருந்தாலும் மணிவாசகரின் பயில்பு என்று சொல்லுகின்றோம் பாடற் பொருளுக்கும் பாடியவர்க்கும் தொடர்பு ஊட்டுகின்றோம். அகத்திணைப் பாடலில் வரும் காதற் பொருளுக்கும் பாடிய அகப்புலவர்க்கும் பயில்வு சொல்லுகின்றார் என்று தொடர்புபடுத்தவே கூடாது. காதலன் விரைவில் மணஞ்செய்து கொள்ளாதபோது வருந்திக் கதறிய காதலியின் ஒரு குறுந்தொகைப் பாடல் முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல்? ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு ஆஆ ஒல்லெனக் கூவு வேன்கொல்? அலமரல் அசைவளி யலைப்பவென் உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே. (குறுந்.28) ஒருவனோடு என் காதலை விட்டார் அறியவில்லை. எதனோடும் என் தலையை முட்டிக்கொள்ளலாமா? உடலை இடித்துக் கொள்ளலாமா? ஏதாவது ஒரு சாக்குப் போக்குச் சொல்லி ஆ ஓ என்று அலறலாமா? அப்போது தூங்கும் வீட்டார் விழித்துக் கொண்டு இந்த நள்ளிரவில் என்ன வந்தது என்று கேட்கமாட்டார்களா? என்று இன்னணம் புலம்புகின்றாள் களவுத்தலைவி. இவ்வகப் பாடலை யாத்தவர் ஒளவையார். பாடினார் என்ற கட்டுத் தொடர்பு தவிரப் பாட்டின் பொருளோடு ஒளவையார்க்கு ஒரு சுட்டுத் தொடர்பு பொருத்திக் குறிப்பாகவும் கூறக்கூடாது. இஃது அகப்பாடலைக் கற்கும், கற்பிக்கும் முறை. அகத்திணை நோக்கம் பிறர் வாழ்க்கைக் குறிப்போ, பெயர்க்குறிப்போ தோன்றாது யாத்த தூய காதல் இலக்கியம் அகத்திணை. தமிழ்ச் சான்றோர்கள் இத்தகைய அடக்கமான காதலிலக்கியத்தை ஏன் கண்டுபிடித்தனர்? உலக நிலைபேறு காதலில் உண்டு. அஃது அன்பான அடக்கமான காதலில் உண்டு. மிண்டிய மண்டிய திமிறிய பாலுறவு ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்லதன்று. மக்கட் சமுதாயத்துக்கும் நல்லதன்று. பாலுறவு விலங்கு முதலியவற்றுக்கும் உண்டென் றாலும், அவ்வுணர்வு அஃறிணைக்கு ஒரு வரம்பில் அமைந் துள்ளது. இனப்பெருக்கம் வேண்டிய பருவகாலங்களில் பாலெழுச்சி தோன்றுகின்றது. பின்னர் மடிந்துவிடுகின்றது. மக்களோ மனவுணர்வு உடையவர்கள். ஆடல் பாடல் கேளிக்கைகளாலும் ஓவியங்களாலும் இன்சுவைச் சொற்களாலும் பாலெண்ணத்தை உரமிட்டு வளர்த்துக் கொள்பவர்கள். இனப் பெருக்க நாட்டமின்றி இன்பம் நாடியே உறவாடுபவர்கள். ஆதலின் மக்கட்குப் பாலுறவுக் கல்வி இன்றியமையாதது. மரவியல் விலங்கியல் உடலியல்போலப் பாலியலை அறிவியல் முறையிலும் கற்கலாம். அது உணர்ச்சியைத் தொடாது. இலக்கிய முறையே நெஞ்சையும் உணர்ச்சியையும் இயக்க வல்லது. ஆதலின் மக்கட்கு ஆண் பெண் உறவுக் கல்வியையும் குடும்பக் கல்வியையும் கற்பிப்பதற்கென்று கண்ட தூய இலக்கியமே அகத்திணை. ஆணும் பெண்ணும் ஒருவர் காதல் விருப்பத்தையும் அளவையும் மற்றொருவர் புரிந்து கொள்ளவேண்டும். இன்பக் குறைவு தோன்றக்கூடாது ஒளிவும் மறைவும் ஒப்புக் காண்டாலும் கூடா. இன்பநிலையில் பெருமை சிறுமைக்கு இடமில்லை. நிறைவான இன்பத்துக்கு ஊடல் வேண்டும். ஊடல் குறைவுபட்டால் உள்ளமும் குறைவுபடும். குடும்ப பொறுப்பு தலைவியுடையது. தலைவனையும் திருத்தும் உரிமைக் கற்புச் சான்றவள் தலைவி. காதலர்கள் தம்முள் பூசலைப் புறத்துத் தோன்றாது ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். ஒருகால் ஒத்துவராத பூசல் வந்தால் பிரிய நினைக்கக்கூடாது. பெற்றோர்களின் துணைகொண்டும், சான்றோர்களின் துணைகொண்டும் குடும்ப ஒருமையைக் காத்துக் கொள்ள வேண்டும். குடும்பம் சமுதாயத்தின் ஓர் உறுப்பு என்ற எண்ணத்தோடு ஒற்றுமையாகவும் முயற்சி யாகவும் உதவியாகவும் இல்லறத்தை நடத்தவேண்டும். இங்ஙனம் இன்பவுறவிலும் சமுதாயவுறவிலும் நாணமும் கற்பும் தழுவிய இல்லறக் கல்வியை அகத்திணையிற் கற்கின்றோம். பண்டைத் தமிழர் கண்ட அகத்திணையின் தூய்மையையும் உலகப் பொதுமையையும் இற்றைத் தமிழர் உணரவேண்டும். இந்த அகத்திணைக் கல்வி இளைஞர்கட்கு இளமையில் முறையாகக் கற்பிக்கப்பட்டால், இன்பக் குமுறல்களும் குடும்பப் கோணல்களும் குறைவுபடும் என்பது யான் கண்ட அகத்திணை ஆராய்ச்சியின் முடிபு. எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் என்பர் பாலியலறிஞர் தொல்காப்பியர். 6. நடைமுறை அறங்கள் 1. கடமைத் தொண்டு ஒவ்வொருவர்க்கும் இரு கடமைகள் உண்டு. ஒன்று வீட்டுக் கடமை; மற்றொன்று சமுதாயக் கடமை. இவற்றுள் வீட்டுக் கடமை வெளிப்படையானது. இயல்பானது `இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன், என்று வள்ளுவர் குறிப்பிடுவர். பெற்றோர்க்கும் சுற்றத்தார்க்கும் குடும்பத்துக்கும் குழந்தைகட்கும் செய்வனவெல்லாம் பள்ளத்து நீரோட்டம் போல மிக இயல்பான கடமைகளாகும். இவற்றைச் செய்வதால் புகழ் வருவதில்லை. செய்யாவிட்டாற்றான் பழி வரும். குடும்பக் கடமை இயல்பு என்றாலும் எளிதில்லை. எல்லா நலம் தீங்குகளும் குடும்பத்தைத் தாக்குகின்றன. நாடு என்பது குடும்பங்களின் தொகுதி. சட்ட திட்டங்களும் போர்ப்பூசல் களும் ஆட்சி மாற்றங்களும் கடைசியில் குடும்பக் கரையை மோதுகின்றன. குழந்தை வளர்ச்சி, குடும்பவுறவு, குடும்பக்காப்பு, குடும்பப் பொருளாதாரம், குடிக்குணம் இவையெல்லாம் சிறிய செயல்கள் அல்ல. இதனை `இல்லாண்மை என்று பாராட்டுவர் வள்ளுவர். பேராறு நேரே வயலை வளப்படுத்தாது. சிறு வாய்க்கால்தான் வயலை வளமாக்கும். ஆதலின் நன்றாகத் தன் குடும்பத்தை நடத்துவாரை நாட்டின் ஒரு பகுதிக் கடமையைச் செய்பவராகவே மதிக்க வேண்டும். குடி செயல்வகை என்ற அதிகாரத்தில், தன் குடும்பம் பேணுவதை ஒரு பெருங் குறிக்கேளாகக் கருதவேண்டும் என்று திருக்குறள் வலியுறுத்தும். குடும்பக் கடமை சிறந்தது என்றாலும் அதனைத் தொண்டு என்று கூறுவதில்லை. குடும்பப் கடமிகளைக் குடும்பத் தொண்டர்கள் என்று புகழ்வதுண்டா? குடும்பத் தாண்டிச் செய்யும் சமுதாயக் கடமைகளே தொண்டு எனப்படும். இன்றைய மக்கள் மனப்பான்மையில் தனக்கு என்ற உணர்ச்சி வளருகின்றதா? சமுதாயத்திற்கு என்ற உணர்ச்சி வளர்கின்றதா? என்று மதிப்பீடு செய்தால், எல்லாம் தனக்கு என்ற குறு எண்ணமே தடிக்கக் காண்கின்றோம். தேவைப் போராட்டம் தன்னலவுணர்ச்சியைப் பல மடங்க பெருக்கிவிட்டது. ஈட்டிய எல்லாம் எனக்கே போதா என்ற மனமை ஊறிப் பீறுகின்றது. குடியரசு என்ற முறையில் சமுதாயத்துக்கு வேண்டியவற்றை அரசு செய்யட்டும் என்று கழித்துவிடுகின்றோம். அரசு சமுதாயப் பெருநலங்களைச் செய்தாலுமே மக்கள் செய்ய வேண்டிய சமுதாயத் தொண்டுகளும் பலவுள. சிறுதுளி பெருவெள்ளம், ஒரு பிடி பலபடி என்பதுபோல ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற பொதுத்தொண்டு செய்தால் சமுதாயம் கூட்டுவளம் பெறும். ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல். (33) எவ்வகையாலும் முடிந்த அளவு பொதுத்தொண்டு செய்துகொண்டிருக்க வேண்டும்; எவ்விடத்து எவ்வளவு என்பதனை அவரவர் தீர்மானித்துக் கொள்ளவேண்டியது என்று வள்ளுவர் பொதுப்படச் சொல்லுவர். மக்களினம் பெருகி வரும் இக்காலத்தில் தொண்டுக்கு இடமும் பெருகியுள்ளது. பொருளிருந்து தொண்டு செய்யவேண்டும் என்பதில்லை. பொருளில்லாமலே எவ்வளவோ தொண்டுகள் செய்யலாம். மேலும் தொண்டுகளில் சிறியன பெரியன என்ற வேறுபாடும் இல்லை. வீதியிற் கிடக்கும் முள்ளினை, கண்ணாடித் துண்டினை இலாடத்தைக் குனிந்து எடுத்து ஒதுப்புறமாகப் போடுவது தொண்டில்லையா? கிடப்பது தெரிந்தும் எடுத்தெறியாவிட்டால், யார் காலிலாவது கண்ணாடித் துண்டு பாய்ந்தால் எவ்வளவு புண்பாடு ஏற்படும்? தீயவிளைவை நோக்கும்போது, கண்ணாடித்துகளை அப்புறப்படுத்துவது பெருந்தொண்டல்லவா? வீதிக்குழாயிலிருந்து தண்ணீர் விழுந்து கொண்டிருந்தால் அதனை அடைத்துத் தண்ணீரைக் காப்பது சமுதாயத் தொண்டு, வீட்டில் கூட்டிய குப்பையை வீதியில் எறியாது, வீட்டுக் குழியில் போடுவதும், கொண்டு சென்று வீதித்தொட்டியிற் போடுவதும் சமுதாயத்தொண்டு கண்டவிடங்களில் காறித்துப்பாமை, பொதுவிடங்களைக் கெடுக்காமை, சுவர்களில் கண்டபடி எழுதாமை, காம விளம்பரங்களை ஒட்டாமை இவையெல்லாம் சிறியனவாகத் தோன்றினாலும் சிறந்த சமுதாயத் தொண்டுகளாகும். புகைவண்டிகளில் பிறர்க்கும் இடங்கொடுத்தால், முதியவர்க்கும் நோயாளர்க்கும் மிக்க இடவசதியளித்தல், பொருள்களை அளவாக எடுத்துச்செல்லுதல் எல்லாம் சமுதாய நலங்களே. விளம்பரப் பலகைகளில் மொழிப்பிழைகள் இருந்தால் அவற்றைத் திருத்துவதும் ஒரு சமுதாயத் தொண்டெனவே கருதவேண்டும். இங்ஙனம் பொதுநலங்கள் பல யாரும் செய்யலாம். இவற்றைச் செய்வதற்குப் பணம் வேண்டுமா? சமுதாயத்தொண்டு என்பது யாரோ பெரியவர்கள் செய்ய வேண்டிய செயல் என்று மலைக்கவேண்டா, ஒதுக்க வேண்டா, குடும்பக் கடமையும் சமுதாயத்தொண்டும் சேர்த்து செய்யமுடியாது என்று தவறாக எண்ண வேண்டா. தன் தோட்டத்தில் மரம் வைப்பது சமுதாயக்கடன். தன் வீட்டுக்கு முன்னே பொது வீதியில் மரம் வைப்பது சமுதாயக்கடன். தன் குழந்தைக்குப் பாடஞ்சொல்லிக் கொடுப்பது குடும்பக்கடன். தான் அதனோடு இன்னொருவர் குழந்தையையும் உடன்வைத்துச் சொல்லிக் கொடுப்பது சமுதாயக் கடன். இவற்றைப் பெரியவர்களாகித்தான் செய்ய வேண்டுமா? இவற்றைச் சிறு பருவமுதல் செய்து பெரியவர்களாகக் கூடாதா? எப்பருவத்தினரும் எந்நிலையினரும் செய்யக்கூடிய சமுதாய நலன்கள் ஏராளமாக உள்ளன. இவற்றைச் செய்வதற்குப் பணம் தேவையில்லை, மனமே தேவை. அழைப்புத் தேவை யில்லை. உழைப்பே தேவை. அறிவுகூடத் தேவையில்லை; அன்பு கூடத் தேவை. 2. துன்பச்சுவை எல்லோரும் வாழ விரும்புகின்றோம். இருந்தாலும் சிலரே செம்மையான திறமையான ஆற்றலான வாழ்க்கை நடத்தக் காண்கின்றோம். ஏன் போதிய முயற்சியில்iலா? போதிய விருப்பமில்லையா? போதிய அறிவு இல்லையா? தக்க முயற்சியும் விருப்பமும் அறிவும் இருந்தாலுங்கூடப் பலரால் முன்னேற முடியவில்லையே. ஏன்? வள்ளுவர் கண்டுபிடித்த ஒரு காரணம் எண்ணியது உடனே கைகூடாவிட்டால் பலர் பெருஞ் சோர்வடைந்துவிடுகின்றனர். ஓரிரு காரியங்கள் தோல்வி யானாலும் வாழ்க்கையே தோல்வி என்று மதிமயங்குகின்றனர். சிறிய ஏமாற்றங்களைப் பெரிதுபடுத்தி அவலப்படுகின்றனர். தம் ஆற்றலுக்கு மிகையான காரியங்களை மேலிட்டுக் கொண்டு வீணே அல்லற்படுகின்றனர். எண்ணிய பதவி கிடைக்கா விட்டாலும், பதவியுயர்வு கிடைக்காவிட்டாலும், பல்லாண்டு இருந்த பதவி இல்லையானாலும், எதிர்பார்த்த இலாபம் வாராவிட்டாலும், இலாபக்குறி சிறிது குறைந்தாலும் பலர் மனம் நிலைகொள்ளவில்லை. வணிகத்திலும் பதவியிலுமே யன்றிக் குடும்பவுறவுகளில் ஏமாற்றங்களும் எதிர்ப்புக்களும் சோர்வுகளும் அலையலையாக வந்துகொண்டிருக்கின்றன. சுருங்கக்கூறின் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு மக்கள் ஏதோ ஒரு வகையில் சோர்ந்த வாழ்க்கையைத்தான் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களையெல்லாம் நன்றாக வாழுங்கள் என்று ஊக்கப்படுத்தும் நோக்கோடு, இடுக்கண் அழியாமை என்றே ஒரு புதிய அதிகாரம் கண்டார் வள்ளுவர். ஏன் ஒவ்வொருவரும் மனக் கலகலப்பாகவும் உடற் குதுகுதுப்பாகவும் இருக்கக் கூடாது? நன்றாக வாழ்வதற்கு என்ன குறைவு? தேவையின்றியும் காரணமின்றியும் சோர்வடைதல் என்பது மக்கட்குத் தீய பழக்கமாகிவிட்டது. துன்பத்தின் உண்மையான மெய்ம்மை என்ன? இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். (628) எவனுக்குத் துன்பம் இல்லை? எவன் துன்பத்தை வாழ்வின் இயல்பு என்று விளங்கிக்கொள்கின்றானோ? அவ்விளங்கிக்குத் துன்பம் இல்லை என்பர் வள்ளுவத்தோன்றல். நில வளர்ச்சிக்குக் குழி தோண்டுதலும் பள்ளம் பறித்தலும் வேண்டுமாப்போல, வாழ்க்கை வளத்துக்குப் பல்வகைத் துன்பங்கள் அடிக்கடி கட்டாயம் தேவை. நுண்ணிய வேர்முனைகள் எப்படியோ கற்களின் இடுக்கிற் புகுந்து துளைத்து மதில்மேல் இறுமாந்து நிற்கக் காண்கின்றோம். மண்ணிற் கிடவாமல் மதிலிற் கிடக்கின்றோம் என்று அவ்வேர்கள் உணங்கி விடுவதில்லை. வளரும் வழியைக் கண்டுபிடிக்கின்றன. வண்டி மேட்டுப்பாதை ஏறும்போது தளராமல் காளைகள் மூச்சடக்கி மேலேறுகின்றன. வெள்ளத்தால் எறும்புக் குழிகள் மூடப்பட்டாலும் புதிய குழிகளை எறும்பினங்கள் உண்டாக்கிக் கொள்கின்றன. ஆதலின் இடையூறுகள் என்பவை உயிராற்றல்களை வேகமாக வெளிப்படுத்தும் வாழ்க்கைக் கூறுகள் என்று புரிந்துகொள்ள வேண்டும். துன்பத்தை வரவேற்க என்பது வள்ளுவர் அறிவுரை. வாழ்வு ஒளிபெற வேண்டுமாயின், புதுப்புதுத் துன்பங்கள் சுடச்சுட வந்து தாக்கவேண்டுமாம். பொன் ஒளிபெறுவது புடம்போடுவதாலன்றோ என்று சுட்டிக்காட்டுவர். வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622) பெரிய துன்பங்கள் வரட்டுமே. அவை மனிதனை என்ன செய்ய முடியும்? துன்பம் இயல்புதானே என்ற மெய்யறிவு மனிதனுக்கு இருந்தால், துன்பத்தைக் கேவலம் துன்பம் என்று அஞ்சியோடாது. ஏதோ நன்மை செய்ய வந்த இன்பம் என்று எண்ண வேண்டுமாம். `இன்னாமை இன்பம் எனக்கொளின் என்று வள்ளுவர் துன்பத்தின் மெய்ம்மையை யார்க்கும் புரிய வைத்துள்ளார். நாம் துன்பம் என்று நினைத்துக் கொண்டிருப்பன எல்லாம் உண்மையில் துன்பங்கள் அல்ல. சிறு பொறுமைகூட இன்றி எதற்கும் துன்பப்பெயர் சூட்டுகின்றோம். சிறிதுதொலை நடப்பதையும், ஒரு காரியத்துக்குக் காத்துக் கொண்டிருப் பதையும், கூட ஒருமணி அரைமணி வேலை பார்ப்பதையும், குழாய்த் தண்ணீர் கொண்டு வருவதையும், கிணற்றில் நீர் இறைப்பதையும், சிறு சுமை தூக்குவதையும், சிறு தாமதங் களையும் துன்பமெனப் பெருஞ்சோர்வு கொள்கின்றோம். கால்வாய் அலையைக் கடலலையென மயங்குகின்றோம். வாழ்வில் துன்பம் என வருபவை மிகச் சிலவே. எது துன்பம்? எது அளவிறந்த முயற்சியைப் பெருக்குமோ, எது அறிவைப் பெருங்கூர்மையாக்குமோ, எது மனத்தைப் பண்படுத்துமோ, சுருங்கக் சொல்லின், எது வாழ்வை ஆலமரம்போல விரிவாக்குமோ அதுவே துன்பம் எனப்படும். அத்தகைய நல்ல இனிய துன்பம் கிடைப்பது வாழ்வுப்பேறு. ஆதலின் வாழ்வாங்கு வாழவிரும்பும் ஒவ்வொருவரும் பொய்யான துன்பப் போலிகளைத் தள்ளி, வளமான துன்பங்களை வரவேற்பார்களாக. 3. சொல்லொழுக்கம் மனிதப்பிறப்பு மிக உயர்ந்தது. அவ்வுயர்வுக்கு ஒரு காரணம் மக்கள் பேச்சாற்றல் பெற்றிருப்பது. குயில் கூவுகின்றது, காக்கை கரைகின்றது. குதிரை கனைக்கின்றது, நாய் குரைக்கின்றது. கூவுதலும் கரைதலும் கனைத்தலும் குரைத்தலும் இன்ன இனம் என்று காட்டும் அஃறிணைக் குரல்களே. அக்குரல்களுக்குச் செய்திப் பொருளில்லை. மனித இனத்துக்கும் ஒரு தனிக்குரல் உண்டு. அக்குரல் ஒலிப்பது மட்டுமில்லை பேசவும் செய்கின்றது. மனிதன் ஏன் பேசுகின்றான்? தன் கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காகப் பேசுகின்றான் என்று பொதுவாக நினைத்துக்கொண்டிருக்கின்றோம். மொழியின் நோக்கம் கருத்துப் பரிமாறிக் கொள்வதன்று, காரியம் பரிமாறிக் கொள்வது. செய்தி தெரிவிப்பதற்காகப் பேசவில்லை. மக்கள்வாய் செய்தித்தாள் இல்லை. செய்தியைச் சொல்லிச் சில காரியம் முடித்துக்கொள்வதற்காகப் பேசுகின்றோம். இதுவே மொழியின் பயன். காரியம் முடித்துக்கொள்வதற்குப் பேச்சு வேண்டும் என்றால், அப்பேச்சுக்கு ஒரு நற்பண்பு வேண்டும். தண்ணீராலன்றி வெந்நீரால் பயிர் விளையாது. இன்சொல்லாலன்றி வன்சொல்லால் காரியம் முடியாது. நயனீன்று நன்றி பயக்கும்; பயனீன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் (97) என்ற குறளால் பேச்சுக்குப் பண்பு வேண்டும். பண்பு என்ற தடத்தினின்று பேச்சு என்ற நடைவண்டி விலகக்கூடாது என்று வலியுறுத்துவர் வள்ளுவர். பேச்சுப் பண்பு என்பது என்னை? பிறரை இகழாமை, இழிந்த சொற்களால் ஏசாமை. திருக்குறள் பல அறங்களைப் பலபட மொழிந்தாலும். எல்லா அதிகாரங்களிலும், குருதி யோட்டம்போல ஓடுகின்ற ஒரு பொதுவறம் உண்டு. அதுதான் பேச்சொழுக்கம், யாரிடத்துப் பேசினாலும் எந்நிலையிற் பேசினாலும் பணிவுடையன் இன்சொலனாதல் வேண்டும். இதுதான் நன்மனிதன் என்பதுகாட்டும் நாகரிக அடையாளம். நம் வாழ்க்கையில் நாள்தோறும் எவ்வளவு உரையாடு கின்றோம். எத்துணை மக்களோடு சொல்லாடுகின்றோம். எது எதற்கெல்லாம் பேச்சுத் தொடுக்கின்றோம். பாலும் பருவமும் வேறுபட்ட, மொழியும் நிலையும் வேறுபட்ட, அறிவும் அன்பும் உணர்ச்சியும் வேறுபட்ட மனித குலங்களோடு பழகுகின்றோம். நா என்னும் துடுப்பால் மொழி என்னும் நாவாயை ஒட்டிக்கொண்டு மனிதப் பெருங்கடலில் வாழ்வுக் கரைகாண மிதக்கின்றோம். மொழித்தெப்பம் நன்முறையில் புரையின்றி இயங்கவேண்டும் என்றால், வள்ளுவர் கூறுவதுபோல யார் மாட்டும் இன்புறும் இன்சொல் வேண்டும். பண்பற்ற பேச்சு படியற்ற இல்லத்தையும் அடியற்ற உடலையும் ஒக்கும். மனிதவுறவு என்பது பேச்சுறவு. நண்பர்கள்தானே என்று நண்பர்களைக் கேலி செய்யக்கூடாது. பகைவர்கள் என்றும் பகைவர்கள் அல்லர். ஆதலின் அவர்களையும் ஓயாது இகழ்ந்து சிறுசொல் சொல்லக்கூடாது. நண்பர்களை எஞ்ஞான்றும் நண்பர்களாக வைத்துக்கொள்ள வேண்டும். பகைவர்களையும் நண்பர்களாக்கிக்கொள்ளும் முயற்சிவேண்டும். இதற்கு ஒரேவழி பேச்சில் இகழ்ச்சியின்மை. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி; பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. (995) கேலி செய்வாரை வெறுப்பது எவ்வுயிர்க்கும் பொதுக் குணம். ஆதலின் இழிசொல் சொல்லாதவர்க்கு மனிதவுறவு பெருகும், மனித நாட்டம் வளரும். இன்றைய நம் உலகம் பெரும் பகுதி பேச்சுலகம். பேச்சுமுறை ஆட்சிமுறையில் ஒன்றாகிவிட்டது. குழூஉக் குழூவாகக் கூட்டம் கூட்டமாக மனிதவுறவு செறிவடைகின்றது. கூட்டுறவும் நாட்டுறவும் பெருகுகின்றன. கருத்து வேற்றுமை களும் கொள்கைப் பூசல்களும் எதிர் குதிராகின்றன. எழுத்தாலும் சொல்லாலம் இகழ்கலை கூத்தாடும் இந்நாளில் பேச்சொழுக்கம் பெரிதும் தேவைப்படுகின்றது. தன்னைப் பிறர் மதிக்கவேண்டும் என்ற ஆசை இல்லாதவன் உண்டா? அவ்வாசை நிறைவேறுவதற்கு ஒரேவழி இன்சொல்லால் தான் பிறரை மதித்தல். மதிப்பு என்பது சமுதாயத்தில் ஒருவகைப் பண்டமாற்று. மதிப்புக் கொடுத்து மதிப்புப் பெறல் வேண்டும். அம்மதிப்பு என்பது நாவினைப் பொறுத்தது. ஏனை உயிரினங்கட்கு உண்ணப் பயன்படும் நா மனிதனுக்குச் சொல்லவும் பயன்படுகின்றது. சிறுசொற் பேசிப் பிறரை வடுப்படுத்தும் கொடுநாவாக இல்லாமல் இன்சொல் மொழிந்து யாவரையும் அணைக்கும் செந்நாவாக விளங்கவேண்டும். நம்மிற் சிறியரையும் இகழக்கூடாது. நம்மைச் சின்னவன் என்று தூற்றித் தூண்டியபோதும் இழிவுரை வரக்கூடாது. தன்மதிப்பு என்பது தன் நாவின் மதிப்பு. தற்பண்பு என்பது தன் நாவின் சொற்பண்பு. தன்னுடைமை என்பது தன் நாவின் அடக்கமுடைமை. `என் நாவிலிருந்து இழிசொற் பிறவாது. என் நா எதிரியையும் இழிவு பேசாது. என் நா நிறத்தாலும் செந்நா; தரத்தாலும் செந்நா, இதுவே உண்மை மனிதனின் உயர்ந்த குறிக்கோள். இஃது அரிய குறிக்கோளாயினும் தன் மனிதப்பிறப்பை மதிப்பவனுக்கு உரிய குறிக்கோளாகும். யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127) நாகாக்க என்பது பொய்யில்புலவர் முடிவாகக் கூறும். பெரிய எச்சரிக்கை. பிறரை இகழ நா வளையும்போது இவ்வெச்சரிக்கையை நினைவுகொண்டு அடங்குவோமாக. 7. இலக்கியக் கலை எண்ண விரிவு வாழ்வு என்பது எண்ணத்தால் அமைவது, நல்லெண்ணத்தால் வளர்வது, அல்லெண்ணத்தால் வீழ்வது. எவ்வகை வாழ்வுக்கும் எண்ணங்களே மூலங்கள். எண்ண விரிவு செயல் விரிவாக வாழ்வு விரிவாக முகிழ்க்கின்றது. அதனாற்றான் மனம் போல வாழ்வு என்று பழமொழிகின்றோம். எண்ணத்தை விரிவடையச் செய்வது எப்படி? அதற்கு என்ன துணைகள் வேண்டும்? தானே சிந்தனை செய்து செய்துஎண்ணச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்; சிந்தனையாளர்களோடு உறவாடி எண்ணப் பயிரை வளர்த்துக் கொள்ளலாம். தற்சிந்தனையால் ஓரளவு தான் எண்ணம் பெருகும், நாம் பழகும் சிந்தனையாளர் எண்ணச் €சுருக்கம் உடையவர்களாக இருப்பின், நம் சிந்தனை வளமும் சுருங்கிவிடும். ஆதலின் விரிந்த எண்ணங்களுக்கு விரிவு தரும் பொருள்களை நாடவேண்டும். எண்ணம் விரிந்தால் மட்டும் போதாது. விரியுங்காலை ஒழுங்கும் உரமும் பண்பும் வேண்டும். ஒழுங்கில்லா உரமில்லாப் பண்பில்லா எண்ண விரிவு தனக்கும் அழிவு, தன்னைச் சார்ந்தார்க்கும் அழிவு. அமைதியான ஆற்றலான, ஒருமையான எண்ண வளர்ச்சிக்குக் கலைகளே சிறந்த பற்றுக்கோடு, இயல், இசை, நாடகம், ஓவியம், சிற்பம் முதலான கலைகள் தீய எண்ணங்களைக் கலைக்கின்றன. அலைந்து திரியும் நினைவுகளை ஒருமைப்படுத்துகின்றன. ஓடிப்பாடியும் அளவிறந்த உணர்ச்சிகளை அளவுபடுத்துகின்றன. வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தின் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வர் என்ற பாரதி பாட்டு இன்று மக்கள் கலையுணர்வின்றிக் குருடராகக் கிடக்கின்றனர் எனவும் எல்லோரும் விழிபெறக் கலைகளும், கவிகளும் வெள்ளம்போற் பெருக வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றது. இலக்கியக்கலை பல கலைகளுள் இலக்கியக் கலை சிறந்த பல கூறுகள் உடையது. இசைக்கலை உணர்ச்சியைத் தூய்மைப்படுத்தும்; ஓவிய சிற்பக் கலைகள் உணர்ச்சியை ஒருமைப்படுத்தும்; நாடகக் கலை எவ்வுணர்ச்சியையும் இன்பப்படுத்தும். ஆனால் இசை முதலிய கலைகளுக்கு எண்ணத்தை விரிவுபடுத்தும் தன்மை இலக்கியக் கலைக்குப் போல இல்லை. இசைக்கலை குரல் சார்ந்தது; நாடகக் கலை மெய் சார்ந்தது; ஓவியம் சிற்பம் முதலான கலைகள் புறப்பொருள் சார்ந்தவை; இலக்கியக் கலை ஒன்றே மொழி சார்ந்தது. அதனாற்றான் பாரதியார் இலக்கியமும் ஒரு கலையாயினும் அதனைத் தனியாக விதந்து `கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும், எனப்பாடி வைத்தார். மொழி மனிதப் பிறப்புக்கு உரிய தனியுடைமை எண்ணம் மொழித்துணையின்றி வளராது. எண்ண விரிவுக்கு மொழி விரிவும் மொழி விரிவுக்கு இலக்கியப் பயிற்சியும் வேண்டும். இலக்கியம் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டு பலர் எண்ணங்களின் பேழையாகும். காலந்தோறும் அப்பேழை பெருகுகின்றது. ஏனைக் கலைகளினும் இலக்கியம் வாழ்வொடு பொருந்திய கலையாதலின், இலக்கியம் கற்கக் கற்க வாழ்வில் விளக்கம் ஏற்படுகின்றது. பலர் வாழ்க்கையொடுபட்ட பல் நிகழ்ச்சிகளையும் பல்லுணர்ச்சிகளையும் நமக்குக் கற்பிப்பது மாத்திரம் இலக்கியமன்று; இலக்கியத்தின் சிறந்த கூற புலவனின் எண்ணங்கள். நிகழ்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் எப்படி ஆராய்க்கின்றான், எப்படி ஒதுக்குகின்றான், எப்படி வரவேற்கின்றான், எப்படி வழிகாட்டுகின்றான் என்பது இலக்கியம். எப்படி நம்மை எண்ண வைத்து நம்மிடம் எண்ணங்களைப் பெருக்குகின்றான் புலவன் என்பதுவே இலக்கியக் கலை. குறிக்கோள் உலகில் எவ்வுயிரும் துன்பத்தை விரும்புவதில்லை; துன்பம் செய்யும் உயிரையும் விரும்புவதில்லை. சில குறிக்கோள் களுக்காகத் துன்ப வரவைத்தாங்கிக் கொள்பவர்களுங் கூட, அத்துன்பத்தால் குறிக்கோள் நிறைவெய்தும் இன்பத்தைக் காண்கின்றார்கள். அதனால் குறிக்கோள் வழிப்பட்ட துன்பம் இன்பமாக மாறுகிறது. `நரகம் புகினும் எள்ளேன் நின் திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா’ என்று மணிவாசகர் இறைவன் அருளொடு கூடிய நரகத்தை இன்பமாக மதிக்கின்றார். கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடித் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி; இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக் கற்புக்கடம் பூண்டவித் தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால் (சிலப். அடைக்.) இளைய மெல்லிய கண்ணகி மதுரைக்கு நடந்தபோது கடுவெப்பம் தன்னைத் தாக்குதலை அறியாள்; தன் கணவன் இவ்வெப்பத்தை எங்ஙனம் பொறுப்பனோ என்று வருந்தினாள் என்பர் இளங்கோ. யாருக்கு யார் வருந்துகின்றார்கள் என்ஷற பாருங்கள். ஏன்? கண்ணகியின் குறிக்கோள் கற்பு என்பது. பெண்ணுக்குக் கற்பு என்பது இல்லறத்து வரும் துன்பத்தை யெல்லாம் பொறுத்தலும், கணவனுக்கு வரும் துன்பத்தைப் பொறாமையும் ஆம். இக்குறிக்கோளால் முதுவேனில் வெம்மையும் கொப்புளம் பட்ட குதிகாலும் கண்ணகி நங்கையைத் தாக்கவில்லை; துன்பம், குறிக்கோளின் வழிப்படும்போது இன்பமாக மாறுகின்றது. ஈண்டு நானிருந்து இன்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத் தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் வேண்டி னாள்தொழு தென்று விளம்புவாய். (சுந்தர.சூளா) அசோகவனத்தில் அநுமன்முன் சீதை கூறிய குறிக்கோள். காமுகப் பகைவன் நாட்டில் சிறைவைக்கப்பட்டுச் சிறையிலேயே இறந்தாலும், இறந்துபோம் பெருந்துன்பம் எய்தினாலும், அத்துன்பத்துக்கிடையே சீதை வேண்டும் வரம் என்ன? மீண்டும் இராமன் தன் கணவனாகவும் தான் அவன் மனைவியாகவும் பிறந்து திருமேனி தீண்ட வேண்டுமாம், தீண்டப்பெற்றாலல்லது சிறையிலிருந்த தீவினை நீங்காதாம் என்று வரு பிறப்புக்கும் குறிக்கோள் தொடருகின்றாள். இராமனைக் காணலாம் ஒருநாள் ஒரு கணம் என்ற ஆசையால் போகும் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றாள். குறிக்கோளால் வந்த இன்னாமை இன்பமாக விளங்குகின்றது. இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும் பதந்திரு இரண்டும் மாறி பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு இன்னல் கோடி விளைந்தெனை நலிந்திட் டாலும் சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே இன்று நாம் பெற்றுள்ள நாட்டின் விடுதலைக்காகத் தம் பதவியைத் தம் பொருளைத் தம் உயிரைத் துறந்தோர் எத்துணை எத்துணையர்? அவர் தம் வாழ்வின் இழப்புக்கும் வருத்தத்தின் பெருக்கத்துக்கும் எல்லையுண்டோ? `இன்பம் என்பது உரிமை; துன்பம் என்பது உரிமையின்மை என்பது நாட்டுத் தொண்டர்களின் குறிக்கோள். அதனால் மாடாக நின்று செக்கிழுத்தலை வரவேற்றனர். சிறிய சிறைக்குள் முடங்கி ஒடுங்கிக் கிடப்பதை இது ஒருநாள் உரிமை விரிவாகும் என்று கருதினர்; தம் பதவியிழப்பு பாரத மகளுக்கு உரிமைப் பதவியை அளிக்கும் என்று உவந்தனர். இவ்வாறு இலக்கியக் கலை இன்ப துன்பம் பற்றிய புலவர்களின் கருத்துக்களை நமக்கு வழங்குகின்றது. வாழ்வில் இன்ப துன்ப வயப்பட்ட நாம் இக்கருத்துக்களைப் படிக்கும்போது, குழந்தை வளர்ப்புக்குப்படும் துன்பமும் குடும்பத்துக்குப் படும் துன்பமும் துன்பமல்ல, குடிநலத்துக்கு இயல்பில் அமைந்த இன்பங்கள் என்று சிந்திக்கின்றோம். குடி மேன்மேலும் வளர எவ்வளவு துன்பப் படவும் தகுதிப் படுத்திக்கொள்கிறோம். குழந்தைகளுக்கும் எதிர்கால நலத்துக்குத் துன்பப் பயிற்சி கொடுக்கிறோம். துன்பம் என்பது முடிவில் இன்பத்தின் வழிகாட்டி என்று ஊக்கங் கொள்கின்றோம். எவ்வகைத் துன்பமும் இறுதியில் இன்ப நலமாக முடியும் என்ற உலக வியல்பை அறிந்தே. எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (1168) என்று முடிப்பர் தொல்காப்பியர். ஆதலின் பல்வேறு கருத்துக்கள் தரும் இலக்கியக் கலை. எண்ணத்தை விரிவு படுத்தும் இன்பக் கலை என்று தெளியலாம். 8. குறளணிகள் சிலப்பதிகாரம் பெரிய புராணம் இராமாயணம் போலத் திருக்குறள் காப்பியம் இல்லையே; தொடர்நிலைச் செய்யுள் கொண்டதில்லையே; கதை பொதி பொருளும் இல்லையே; தன்னிகரில்லாத தலைவனுக்கோ தலைவிக்கோ கூற்றுக்களுக்கோ இடனில்லையே; இயற்கைப் புனைவுக்கும் கற்பனை முனைவுக்கும் உரையாடல் நயத்துக்கும் வாய்ப்பில்லையே. மிகச் சிறிய செய்யுட்கள், தொடர்பு ஓடாத் தனித்தனிக் குறள்கள். இப்படிச்செய், அப்படிச் செய்யாதே என்று அறம் சொல்லும் கட்டளைப் பாக்கள் இப்போக்குடைய திருக்குறளில் இருக்கமுடியுமா அணியழகு? பாறையில் பசும்புல்லா? இவ்வாறு எண்ணக்கூடும். நகையாடக் கூடும் இலக்கிய மேலோடிகள். இலக்கிய வரலாற்றில் நாம் அறியக்கிடப்பது சங்க இலக்கியங்கட்கு முன் உள்ள ஒரே முழுநூல், ஒருவரால் இயற்றப் பட்ட தனிநூல் தொல்காப்பியம் என்பது தொல்காப்பியம் இலக்கணத் தன்மை செறிந்த இலக்கியம் ஆகும். சங்க இலக்கியத்தை அடுத்து எழுந்த ஒரு முதல் நூல், ஒருவர் ஆக்கிய தனிப்பெருநூல் திருக்குறள். திருக்குறள் இலக்கியத் தன்மை மிகுந்த வாழ்விலக்கணப்பனுவல். சிலப்பதிகாரம் முதலான பெருங்காப்பியத் தனிநூல் எல்லாம் திருக்குறளுக்குப்பின் எழுந்தன என்பது மட்டுமன்று; சொல்லாலும் பொருளாலும் பொருளைச் சொல்லும் போக்காலும் திருக்குறளை முன்வைத்து எழுந்தன என்றும் அறியவேண்டும். திருக்குறளின் தொடக்கமே அணியழகு பொலிந்தது. `அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற முதற்குறளின் முதலடியை அறியாதார் யார்? தொடக்கமே உவமை யணியாக இலங்கும் ஒரு நூலில் உள்ளணிகளுக்குப் பஞ்சமிராது. வாசலில் இனிப்பு வழங்குவார் இலையில் எவ்வளவோ இனிப்புக்கள் படைப்பர். இவ்வுலகியல் இலக்கியலுக்கும் பொருந்தும். வள்ளுவ அணி உலகத்தார் போற்றும் அணியை வள்ளுவர் அணியாக நகையாக அழகாக மதிப்பதில்லை. பணிவும் இன்சொல்லும் மக்களணியாம் கண்ணோட்டம் கண்ணுக்கு அணியாம். நாணம் சான்றோர்க்கு அணியாம். நன்மக்கள் இல்லற அணியாம். குறிப்பறிவான் உலகுக்கு அணியாம். மடநோக்கும் நாணும் பெண்ணுக்கு அணியாம். நாம் விருப்பத்தோடு பெருவிலை கொடுத்து வாங்கும் நகைகள் எல்லாம் அணியல்லவாம், எவையோ பிறவாம். இவ்வாறு உடலணிகளை மதியாது புதிய உயிரணிகள் இயம்புவர் வள்ளுவர். இதுபோல வள்ளுவ நூலிலும் புதிய புரட்சிய அணியழகுகளைக் காணலாம். அணியழகு என்பது என்ன? இதுதான் அழகு என்று தெள்ளத் தெளியச் சொல்லமுடியுங்கொல்? முழுக் கூந்தலுக்கு என்ன அழகோ அந்த அழகு முன் குடுமிக்கும் மொட்டைக்கும் உண்டு. யானைக் குட்டியின் வனப்பு பன்றிக்குட்டிக்கு இல்லையே, பன்றிக்குட்டியின் வனப்பு யானைக்குட்டிக்கு இல்லையே என்று சொல்லலாமா? அதன் அதனழகு அதன் அதனுக்கு உண்டு அதுவே இயற்கை. மாறி யிருப்பதுதான் அழகா? இது ஆராய்தற்கும் ஐயத்திற்கும் உரியது. பாலில் நீரின் தன்மை இருந்தால் அழகு என்று ஒப்புவோமா? பாம்பைக் கண்டு பெண் ஓடினால் பெண் தன்மை என்று பாராட்டுவோம். ஆண் ஓடினால் பேடி என்றல்லவா பாராட்டுவோம். ஆதலின் எது அணி? தனக்குரிய தன்மையோடு விளங்குவது அணி. தன்மையணிகள் மணிமேகலை யாதொரு அணியும் அணியவில்லை. அவள் அழகைப் `புனையா ஓவியம்’ என்றார் சாத்தனார். கண்ணகி எல்லா அணிகளும் இழந்த நிலையழகைச் `செய்யாக் கோலம்’ இயற்கையழகு என்றார் இளங்கோ. சீதைக்குத் திருமணத்தன்று பல அணிகலங்களைஅணிகின்றார்கள். ஐயோ இயற்கை யழகை இவைகள் கெடுக்கின்றனவே, அணிமோகம் கொண்ட உலகத்தின் அறியாமை என்னே என்று அழுங்கு கின்றார் கம்பர். கடவுளர் திருமேனிகள் அணி சாத்தாத நிலையில் தனியழகினவாகக் கண்டு கலையழகென வணங்கு கின்றோம். செய்தித்தாளில் விளம்பரஞ் செய்வார் சிலர் வெள்ளைப் பகுதியாக விளம்பரம் கொடுத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதனால் அழகு பற்றி நாம் அறிவது இயற்கையழகே அழகு. தன்னியல்புக் காட்சி ஓர் அணி. இதனைத் தன்மை யணி என்பர் அணிநூலார். தன்மையணிதான் அணிகளில் தாலிபோல உண்மையணி, முதலணி தன்மையணி என்பது உள்ளது கூறுதல். உள்ளது எளிதன்று. உள்ளது கூறுவதுதானே உலகத்தில் கடினமாக இருக்கின்றது. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் €(2) இறைவனுடைய திருவடியைத் தொழுவதே கல்வியின் பயன். இது கல்வித் தன்மையணி. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் (428) பயப்படுவதற்குப் பயப்படமாட்டேன் என்றல் மடமை; பயப்படுவதற்குப் பயந்து நடத்தல் அறிவுடைமை. இவை பேதைமை அறிவுடைமை பற்றிய தன்மைகள். கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனம் ஒண்டொடி கண்ணே யுள. (1101) கண்ணின்பம் கேள்வியின்பம் உணவின்பம் மணவின்பம் தொடுவின்பம் எல்லாம் ஒரு பெண்ணின்பத்துள் அடங்கிக் கிடக்கின்றன என்பது இன்பம் பற்றிய தன்மையணி. ஒரு பொருளின் தன்மை காணல் எளிதன்று. அதனைத் துல்லியமாகக் காண்பதற்குத்தான் அறிவியலுலகம் கருவிகள் மூலம் பாடுபடுகின்றது. எவ்வளவோ அருட்பாசுரங்கள் எழுந்துள்ளன என்றாலும், “தன்மை பிறரால் அறியாத தலைவா” என்று இறைவனைச் சுட்டுவர் மணிவாசகர். இன்னும் ஒருபடி கூடுதலாகச் சென்று, இறைவன் கூட ஓர் அறியாமை யுடையவன். அவனுக்குத் தன் பெருமைத் தன்மை தெரிவதில்லை. “தன்பெருமை தானறியாத் தன்மையன் காண்” என்பது மணிவாசகம். தன்மைதான் எல்லா அணிகளுக்கும் அடிப்படையணி. நிலமின்றிக் கோபுரம் இல்லை. கூந்தலின்றேல் மலரில்லை. கல்வியின்றேல் ஆராய்ச்சியில்லை. உடலின்றேல் உலகில்லை. திருக்குறள் அறநூலாதலால், வாழ்வுத் தன்மை நுவலும் இயல்பு நூலாதலால், நூல் எங்கணும் தன்மையணிகள் நிரம்ப உள. அதனால்தான் வள்ளுவர்க்குப் பொய்யில் புலவர் என்பது ஒரு பெயர். பொய்யில் புலவர் என்றால் உள்ளதனை உள்ளபடி கூறும் தன்மைப் புலவர் என்பதுபொருள். தன்மையணி தன்னிலையில் இருந்தால் சுவைபடாது, கவர்ச்சிப் படாது, நெஞ்சையள்ளாது. அணி என்பது இலக்கிய விளம்பரம். எது உள்ளத்தை ஈர்க்கும். எது உணர்ச்சிப்படுத்தும். எது கவர்ச்சியூட்டும். அது அணியாகும். தங்கம் நகையாக, மலர்மாலையாக, நூல் ஆடையாக, அரிசி சோறாக, கிழங்கு வற்றலாக, அறிவு செயலாக, வனப்புப் பெறவேண்டும் பயன் பெறுதற்கு. தன்மையைத் தன்மையாகக் காட்டல் அறிவியல். தன்மையை அணியாக மாற்றல் இலக்கியல். புலவன் என்னும் கருமான் இலக்கியப் பட்டறையில் தங்கச் சிலம்பினுள் குறிப்பு என்னும் பரல் உள்ளீடு அமைக்கின்றான். குறிப்பொடு கலக்கும்போது தன்மை அணியாக விளங்குகின்றது. குறிப்பில்லாத தன்மை குரல் இல்லாதஇசையைப் போல்வது,ஒருமையில்லாத காதலரைப் போல்வது. கவனமில்லாத காதைப் போல்வது. குறிப்பணிகள் திருவள்ளுவர் தெய்வப் புலவராதலின் அவர் செய்த தன்மையணிகள் எல்லாம் குறிப்பணிகளாக இலங்குகின்றன. தன்மையாக இருத்தலின் ஓதற்கு எளிது எனவும். எங்கும் குறிப்புமயம் இருத்தலின் உணர்தற்கு அரிது எனவும் பாராட்டினார் மாங்குடி மருதனார். அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் (30) எவ்வுயிர்க்கும் அருளுடையவர் அறவோர் என்பதுஇதன் கருத்து என்றாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்வதா? பிறவுயிர்களைக் காப்பாற்றுவதா? என்று ஒரு முரண் நிலைவரும்போது, பிறவுயிரை மதிப்பதுதான் அறமாகும். `மற்று எவ்வுயிர்க்கும்’ என்ற மற்று நடையால் இக்குறிப்பு பெறப்படும். மேலும் அந்தணர் என்பது ஒரு சாதிப்பெயரன்று. குணப்பெயர் என்பது `அந்தணர் என்போர் அறவோர் என்ற குறிப்பு மறுப்பாலும் பெறப்படும். கடலோடா கால்வல் நெடுந்தேர்; கடலோடு நாவாயும் ஓடா நிலத்து (496) தன்மைக் குறிப்பணிக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு மாட்டுவண்டி கடலிற் போகாதாம். கப்பல் நிலத்தில் போகாதாம். குழந்தைத்தனமான கருத்து என்று சொல்லி விடுவோம். குறளாக இருத்தாலும் பாடினவர் தெய்வப் புலவர் என்பதனாலும் குகைக்குள் மணிபோலக் குறளுள் அணி யிருக்கும் என்று தேடுகின்றோம். எந்த இடத்தில் எதனைச் செய்வது என்ற அறிவுவேண்டும் என்பது இக்குறளின் கருத்து. இதற்கு நிலவண்டியையும் நீர்க்கப்பலையும் ஏன் காட்டவேண்டும்? எங்கோ தனியாக ஓடுகின்ற வண்டியையும் எத்திசையோ நோக்கிச் செல்லுகின்ற கப்பலையும் கூறவில்லை இது கடற்கரைச் சந்திப்பு. வெளிநாட்டுக்குப் போக்குவதற்காகப் பாரச் சரக்குகளை வலிய வண்டியில் ஏற்றிக் கடற்கரை நோக்கி வருகின்றனர். கரை வந்ததும் மேற்செல்லாது வண்டி நிற்கின்றது. சரக்குகள் கப்பலில் ஏறுகின்றன. அது போலவே வெளிநாட்டிலிருந்து கப்பல் வருகின்றது. வந்த கப்பலைத் தரை தட்டாமல் ஆழ்நீரில் நிறுத்திவிட்டுச் சரக்கினைக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றுப. சந்திக்கும் இடத்தில் இடவேற்றுமை காரணமாக ஊர்தி மாற்றம் ஏற்படுகின்றது. `நீரினின்று நிலத்தேற்றவும், நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பல பண்டம்’ என்று சோழ நாட்டின் இருமதி வணிகத்தை - நிலநீர்ச் சந்திப்பைப் பட்டினப்பாலை தொடுத்துக் காட்டும். வன்கால் வண்டி கடற்கரை வந்தும் அப்படியே கடலுள் புக்கோடுவதில்லை; ஓடிவரும் கப்பல் கரைவரை வந்ததும் அப்படியே நிலத்திற் பாய்ந்து விடுவதில்லை என்ற இருமுனையைக் குறிப்பிக்கவே. தேர் கடலோடா எனவும், கடலோடும் நாவாயும் எனவும் சூழ்நிலை சுட்டி விளக்கினார். கடல் வணிகத்தை நினைவிற்கொண்டு கூறியதோடு, தேர்ப்படை, கப்பற்படைகளையும் எண்ணிக் கூறியதாகவும் குறிப்புக்கொள்ளலாம். கால்வல் நெடுந்தேர் என்பது போர்க்களத் தேர்ப்படையைக் குறிக்கலாம். `வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன்னோன் என்பதனை ஒப்புநோக்குக. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே; ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (1088) இல்லறத் தலைவன் தலைவியின் நுதல் அழகு கண்டு இன்புற்ற தன்மையை இக்குறள் காட்டும். நெற்றியழகு தன்னை வெற்றி கொண்டது என்று சொல்லுமளவில் தலைவன் நிற்கவில்லை. இவன் ஓர் மறத்தலைவன். அவன் தமிழ் படைத்தமிழ் இவன் பெருமை எப்படிப்பட்டதாம்? போர்க்களத்துக்கு வந்தஇவள் வலிகண்டு தோற்ற பகைவர்கள் மற்றவர்களுக்கு அதனை எடுத்துச் சொல்லவே அப்பகைவர்களும் போர்க்களம் வாராமலே அஞ்சி வீட்டில் கிடக்கின்றார்களாம். முன்னின்றாரைப் புறங்காட்டிய இவன் பெருமை மற்றவர்களை முன்னிற்க வாராமலே தடுக்கின்றதாம். இது போர்க்களத்தில், மாலையில் வெற்றியோடு வீடுவந்த இத்தலைவன் தன்னிலையை வீட்டில் வைத்துப் பார்க்கின்றான். புறமும் அகமும் இணையும் தமிழ்க் காட்சியிது. பளபளப்பான இவள் நெற்றி ஒன்றுக்கே, நெற்றியைக் காட்டிய அளவிலேயே தன் பெருமை முழுதும் உடைந்துவிட்டதே. இனி பிற உறுப்புக்களுக்கு உடைய இடமில்லையே. தன் தானைப் பீடு ஒரு சிறிய முன்தானைக்கு ஓடிவிட்டதே. இப்படியும் பெருவீரனுக்கு ஒரு சிறுதோல்வியா என்பது இவன் வியப்பு படை புறங்காட்டுதலை உடைதல் என்று கூறுதல் சங்ககாலப் படைத்தமிழ் `பல்படை ஒருவற்கு உடைதலின்’ என்பது தொல்காப்பியம். `மண்டமர்க்கு உடைந்தனனாயின்’ என்பது புறநானூறு. ஆதலின் நுதலுக்கு என்பீடு உடைந்ததே என்று வினைப்படுத்துகின்றான் படைத்தலைவன். பெண்ணுக்குப் பீடாவது கற்பு கணவன் வரவேண்டிக் காமகோட்டம் தொழலாம் என்றபோது பீடன்று - கற்புப் பெருமையன்று எனக் கூறியமைந்தாள் கண்ணகி. ஆடவனுக்குப் பீடாவது புறங்காட்டாப் போர்ப் பெருமை பெண் பீடாகிய கற்புக்கும் ஆண் பீடாகிய வீரத்துக்கும் பாயற்களத்து ஊடற்போர் நிகழுங்காலத்தில் ஆண்பீடு தோற்றல் வேண்டும். பெண் பீடு வெல்லவேண்டும். ஊடற்போரில் தோற்றவரே வென்றார் என்பது வள்ளுவமன்றம். அகத்துக்குப் புறம் பணிவதே அணியழகு அணிகளிற் சிறந்தது குறிப்பணியே. இதனை நோக்கு என்பர் தொல்காப்பியர். குறிப்பணிகளே திருக்குறளில் ஏராளமாக இருக்கும்போது ஏனைய அணிகளும் தாராளமாக இருக்கும் என்பதனைக் குறித்துக்கொள்ள வேண்டுகின்றேன். எல்லா அணியும் இதிலுள; இந்நூலில் இல்லாத எவ்வணியும் இல் என்பது புதிய வள்ளுவமாலை. 9. இலக்கிய வெள்ளம் தமிழ் நிலைபெற்ற தாங்கரும் மரபுடைய மதுரை மூதூரின் கண் தமிழ் வாழவும் தமிழால் நாம் வாழவும் இன்று தலைக்கூடி யிருக்கின்றோம். சங்க நாளில் சேர பாண்டிய சோழ நாட்டுப் புலவர்கள் கூடும் தமிழ்கெழு கூடலாக இம்மதுரை விளங்கியது. பனம்பாரனார் வரை யறுத்தபடி, வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட தமிழ்ப்புலமையோரே பண்டு கூடி இந்நகர்க்கண் தீந்தமிழ் ஆய்ந்தனர். `வடக்கில் இமயமலை தெற்கில் வாழும் குமரி முனை என்று பாரதி மொழிந்தாங்கு இமய முதல் குமரி வரை தமிழ்வளர்க்கும் புலவர்கள் கூடும் இந்தியத் தமிழ்க் கூடலாக இம்மதுரையை உயர்த்தியிருக்கின்றோம். மக்கள் பதவி உயர்வு பெறுவதுபோல, மதுரை நகரமும் புகழால் பரந்தோங்கு சிறப்புடையதாகத் திகழ்கின்றது. மேலைநாட்டுச் சில மொழிகளின் பெருவளர்ச்சியோடு ஒப்பிடுகையில் இன்று நம் தமிழ் வளர்ச்சி ஓரிரு நூற்றாண்டு பிற்பட்டுக் கிடக்கின்றது. தமிழ் அரசாட்சி நடத்தினால் மட்டும் போதாதது, அறிவாட்சியும் நடத்தவேண்டும்; கால மொழியாகவும் வேண்டும்; பல்கலைக்கழகங்களிலும் அனைவகைக் கல்லூரிகளிலும் அனைநிலைத் துறைகளிலும் சரி நிலை என்னும் உரிநிலையும் பெறவேண்டும். எல்லாந் திருச்செவியில் ஏறும் படியுரைக்க வல்லாயுன் போலெவர்க்கு வாய்க்குமே என்று தமிழ்விடுதூது பாராட்டியபடி, எக்கலையையும் ஏறும்படி யுரைக்க வல்ல மொழி தமிழ்மொழி என்பதனை இடைக்கால இலக்கியங்கள் மெய்ப்பித்துவிட்டன. பல துறைகளையும் பாட்டால் இயம்பும் வன்மை ஒரு மொழிக்கு இருக்குமாயின், உரைநடையாற்றல் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? மலையேறிக்குச் செய்குன்று ஏறல் பாராமா? துறை மன்றங்கள் தமிழ் வளரா, வளரவிடக் குறைவை யுணர்ந்து அதனைக் குறைவிலா நிறைவாகவும் கோதிலா அமுதாகவும் ஆக்குதல் தமிழ் இலக்கிய ஆசிரியர்களின் கடமை மட்டுமன்று; பிற துறையாசிரியர்களின் பொறுப்பும் ஆகும். தமிழுக்குக் குறைவு இலக்கியமன்று; பல்துறை நூல்களே. இக்குறைவை நிறைவாக்க வல்லுநர் பிறதுறை யாசிரியர்களே. அவர்களை இத் தொண்டுக்கு ஊக்குவதும். சொல்லும் நடையும் காட்டி உதவுவதும் தமிழாசிரியர்களின் கடனாகும். ஆதலின் என் கருத்து பொறியியலாசிரியர் தமிழ்மன்றம் வேதியலாசிரியர் தமிழ் மன்றம், மருத்துவ ஆசிரியர் தமிழ்மன்றம், வணிகவியலாசிரியர் தமிழ்மன்றம் எனவாங்குத் துறை தோறும் தமிழ் மன்றங்கள் தோன்ற, தோன்றித் துறைக் கட்டுரைகளும் துறைப்பாட நூல்களும் துறைப்பொது நூல்களும் எழுத, இம்மன்றம் வழிசெய்யவேண்டும். ஆர்வலர்களைத் துறை மன்றம் கூட்ட ஊக்கவேண்டும். ஆண்டிகள் கூடிக்கட்டினால் கட்டுவது மடமாக இருக்கும்; அவ்வளவுதான். நாம் கூடி எது வளர்க்க முற்பட்டாலும் அது இலக்கிய வளர்ச்சியாகவே அமையும். தமிழுக்குக் காலத்தினால்செய்ய. செய்விக்க வேண்டிய நன்றி அறிவியல் துறையாக்கமே. தமிழுக்கு உண்மையான குறைவு இது என்பதனை உணர்ந்து, துறைகள் பயின்ற பிற தமிழர்களுக்கு இதனை உணர்த்தி, துறைத் தமிழ் மன்றங்கள் பல தமிழகத்தில் தோன்ற நம் மன்றம் வழி காட்டுமாக. இடைக்காலம் கருத்தரங்கின் இரண்டாம் நாளாகிய இன்று இடைக்கால இலக்கியம் பற்றிக் கேட்கக் குழுமியிருக்கின்றோம். தமிழ் இலக்கிய வரலாற்றில் இடைக்காலம் என்பது எது? அக்கால அளவு என்ன? ஏறக்குறைய கி.பி.நாலாம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை பதினைந்து நூற்றாண்டுகளை - ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளை ஒருசேர இடைக்காலம் என்று வைத்துக் கொண்டிருக்கின்றோமே; பொருந்துமா? இது மறுசிந்தனைக்கு உரியது. ஆங்கிலம் செருமனி போன்ற மேனாட்டு உலக மொழிகள் கிறித்துவுக்குப் பல நூற்றாண்டுக்குப் பின்னரே இலக்கியங்கள் பெற்றவை இம் மொழிகளும் பண்டை, இடை, இற்றை எனக் கலப்பாடு செய்துள்ளன. அவற்றின் இடைக்காலம் இருநூறாண்டு, முந்நூறாண்டு அளவினதே. இந்திய நாட்டு மொழிகளிற் பல, சில நூற்றாண்டு களாகவே, இலக்கியம் உடையவை. ஒரு சில மொழிகளின் இலக்கியத் தோற்றம் மிக அண்மையது. உழக்குக்குள் கிழக்கு மேற்கு என்பது போல, இவைகளும் பண்டைக்காலம் இடைக்காலம் தற்காலம் எனப் பாகுபாடு கொள்கின்றன. எவ்வளவு காலம் வரலாறிருந்தாலும் முக்காலத்துள் அடக்கவேண்டுமா? நீண்ட நெடிய இடைக்காலம் என்பது தமிழின் தொன்மையை மறைப்பதோடு பலதுறையாக வளர்ந்த தமிழ் வளர்ச்சியையும் கற்பார்க்குத் தோன்றாவாறு மறைத்து விடுகின்றது. ஒரே நீளமாகச் சொல்வதால், இடைக்காலத் தமிழ்வளர்ச்சி புகை வண்டிப் பாதைபோல ஒரே தடமானது. வேறும் வீறும் இல்லாதது என்ற தவறான கருத்து ஏற்படுகின்றது. கன்னித் தமிழ் ஆதலின் என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று நகைக்கலாம். கன்னித்தமிழ், காதலுக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே காப்பியம் கண்டது என்பதனை உணரவேண்டும். தமிழ்உலக மொழியாகப் பரவியும் பரப்பியும் வரும் இக்காலத்தில், இலக்கிய வரலாறும் வரலாற்றுக் காலப்பாடுகளும் தொன்மையும் நன்மையும் துலங்கும் வகையாக அறிவியல் நெறியில் திருத்தி எழுதப்பட வேண்டும். ஏனை மொழி இலக்கிய வரலாறுகளைச் சுவடு ஒட்டித் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படுமேல், அது உண்மை கலக்கிய வரலாறாகவே படும். சங்க காலம் தமிழுக்குப் பொற்காலம், சங்க இலக்கியம் தமிழுக்குப் பொன்னிலக்கியம் என்ற கருத்து எல்லார்க்கும் உடன்பாடானவை. இடைக்கால இலக்கியத்தைப் பற்றி நிறைவான கருத்துடையவரும் கொஞ்சம் குறைவான கருத்துடையவரும் உளர். குறைவானது என்ற எண்ணத்தோடு, இடை இலக்கியங்களைப் படிப்பாரும், படிக்க வேண்டா என்ற பகைப்பாரும் உளர். இயற்கை வறட்சி, வானக்கற்பனை, உலகியலின்மை, புராணக்கதை, சமயப் படிவம், அயல்நாகரிகக் கலப்பு, சொற்சிலம்பம் என்ற காரணக்கூறுகளைக் கொண்டு இடைக்கால இலக்கியங்களைக் குறை மதிப்பீடு செய்ப. காப்புக் காலம் இலக்கியப் பார்வை என்பது தனிப்பார்வை யன்று; தன் குறுங்கண்ணொடு பார்ப்பதன்று. காலச் சூழலுக்கும் இனவேட்கைக்கும் ஏற்ப இலக்கிய வகைகளையும் இலக்கியக் கூறுகளையும் புலவர்கள் படைக்கின்றனர். மக்களின் மனப்பாங்குகள் மாறுகின்ற திசை நோக்கி இலக்கியம் திசை திரும்பிக் கொள்கின்றது. சமுதாயத்தின் எண்ண நாடி பிடித்து எழுத்துக்கள் ஓடுகின்றன. ஆதலின் இலக்கியப் பார்வை என்பது கால இனப்பார்வை. சங்க காலம் என்பது உள்ளூர்க்காலம். போர்கள் பல நிகழ்ந்தாலும் அவை மூவேந்தருள் அமைந்த அகப்பூசலேயாகும். சங்க மூவேந்தர்கள் தமிழெல்லையின் புறத்தே சென்று போரிட்டனர். ஆனால் தமிழகத்துள் புறத்தார்க்கு இடங்கொடுக்கவில்லை. புறநானூறு ஓராற்றான் தமிழ் மன்னர்களைப் பற்றிய அகநானூறேயாகும். கம்பர் கூறியது போல அகமாயினும் புறமாயினும் சங்கச் சான்றோர்களின் கவிகள் சவியுறச் தெளிந்து தண்ணென்ற யாற்றொழுக்கு உடையனவாகக் கிடந்தன. `கவி எனக் கிடந்த கோதாவிரி, கிடந்த என்று பாடுவதால், கொந்தளிப்பின்மை பெறப்படும். சங்கப் பிற்காலம் புறத்தார் தமிழகத்தார் ஆன காலம். தமிழும் தமிழரசர்களும் முதன்முதலாகத் தம் தனி முதன்மை இழந்த காலம். சங்கக் கல்விநெறி துண்டிக்கப்பட்டது. உள்ளது காத்தாற் போதும் என்றாயிற்று. சிதறுண்ட செய்யுட்களைத் தேடிச் சிதறுபடாவாறு அழகிய தொகைகளாக்கித் தந்தனர் இடைக்கால முற்காலத்தார். தொகையாக்கிய சான்றோர்கள் தற்கால உ.வே.சா. போன்றவர்கள். ஆதலின் இடைக்காலம் என்பது சங்கக் காப்புக் காலம் என்று முதலாவது தெளியவேண்டும். சங்கப் பாடநூல்கள் சங்கத்தொகைகளை இடைக்காலத்தார் காத்தளித்த தோடு நிற்கவில்லை. அவைகளைப் புரிந்து படிப்பதற்கு ஏற்ற வகையில் அகப்பாட நூல் புறப்பாட நூல்களை யாத்துக் குவித்தனர். கோவை நூல்கள் அகப்பாட நூல்களாகும். புறப் பொருள் வெண்பாமாலையின் வெண்பாக்களும் முத்தொள் ளாயிரம் பரணியும் புறப்பாட நூல்களாகும். இனைய நூல்களில் சங்கக் கருத்துக்கள் மறுவாழ்வு பெற்றன. `மள்ளர் குழீஇய விழவினானும் மகளிர் தழீஇய துணங்கையானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனை’ என்ற ஆதி மந்தியின் குறுந்தொகைப்பாடல் (31) நம்மாழ்வாரைக் கவர்ந்தது. தையனல் லார்கள் குழாங்கள் குழிய குழிவினுள்ளும் ஐயநல் லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம் கைய பொன்னாழி வெண்சங்கொடுங் காண்பா னவாவுவனான் மைய வண்ணா மணியே முத்தமே யென்தன் மாணிக்கமே என்று குறுந்தொகை திருவிருத்தமாக உருவெடுத்தது. தாயிற் சிறந்தன்று நாண் தைய லாருக்கந் நாண்தகைசால் வேயிற் சிறந்த மென்தோளி திண் கற்பின் விழுமிது என்ற திருக்கோவை (204) தொல்காப்பியத்தின் ஈகையன்றோ? இங்ஙனம் ஆயிரமாயிரம் சங்கக் கருத்துக்கள் வெவ்வேறு யாப்பு வகையில் இடைப்பிறவி எடுத்துள்ளன ஆதலின் இடைக்கால இலக்கியங்கள் சங்கவழி நூல்களே. இடைக்காலப் பனுவல்களைச் சிற்றிலக்கியங்கள் என்று சொல்லுகின்றோம். சிறுமையடுத்த இப்பெயர் பெருமைக்கு உரியதாகவும் இல்லை, பெருமை தருவதாகவும் இல்லை. மும்மணிமாலை, இரட்டை மணிமாலை, தசாங்கம், சிலேடை வெண்பா இவைகளும் சிற்றிலக்கியங்கள்; இவற்றோடு ஒப்ப, கலிங்கத்துப்பரணி, மூவருலா, முக்கூடற்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, நந்திக் கலம்பகம், பாரதவெண்பா இவையும் சிற்றிலக்கியங்களா? திருக்குறளைப் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாக எண்ணிவரு மரபுடைய நமக்கு இது சரியென்று பட்டாலும் படும். அளவும் பொருளும் திறமும் பாராமல், பலசரக்குப் போல மொத்தமாகச் சிற்றிலக்கியங்கள் என்று பெயர்ப்படுத்தல் அறிவியலன்று. எண்ணப்படும் நூலினம் ஒரு தரமாக இருத்தல் வேண்டும் `வரிசை யறிதலோ அரிதே’ என்பர் கபிலர். நூல் வளர்ச்சி இடைக்காலத்தில் தமிழ்வளர்ச்சியில் ஏற்பட்ட புதிய சில கூறுகளை - தள்ளமுடியாத சில தமிழ்நலங்களைப் பார்ப்போம். சங்க காலம் தனிப்பாட்டுக் காலம் தொடர்பற்ற தனிப்பாடல்கள் யாப்பதே சங்கப்புலவர் மனமாக இருந்தது. ஒரு பாடல் எழுதி அமைத்த புலவர்கள் பலராகக் காண்கின்றோம். திணைபற்றி நூறு பாடல் அளவு எழுதிய எல்லையை ஐங்குறுநூறு காட்டுகின்றது. நூறுபாடல் என்பது கிட்டத்தட்ட ஐந்நூறு அடிகளாகும். மதுரைக்காஞ்சி, மலைபடு கடாம் முதலிய நெடும் பாடல்களும் தனிப்பாடல் வகையாகிப் பத்துப்பாட்டில் இருபாட்டுக்கள் என எண்ணப்பட்டன. பெரும்பாலும் சங்கச்சான்றோர் தனிப்பாட்டாசிரியர்களே யன்றி முழு நூலாசிரியர்கள் அல்லர். நூல் நூலாக எழுதும் மனமையை வளர்த்தது இடைக்காலம். ஒரு நூலென்ன பல நூல் எழுதும் ஆசிரியர் பலர் தோன்றினர். கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன் என்று பாராட்டப் பெற்றார். நம்பியாண்டவர் இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, அந்தாதி, உலாமாலை, கலம்பகம், ஏகாதசமாலை என்றவாறு பத்துப் பிரபந்தங்களைப் படைத்தவராவார். இளம்பூரணர் சேனாவரையர் போலன்றி நச்சினார்க்கினியர் பல்லுரையாசிரியர் ஆனார். இடைக்காலம் வெள்ளம்போல் நூல் நூலாகப் பெருக்கியிராவிட்டால் தமிழ் இலக்கியவரலாறு வாழ்ந்து முறிந்த வரலாறாக, குழந்தை கையடக்க நூலாகவே குறுகியிருக்கும். இறையனாராகப் பொருள் உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் கூறுகின்ற வரலாறளவாகவே நிற்கும். ஆதலின் இடைக்காலம் என்பது தமிழுக்கு இலக்கிய நூலாசிரியர்களைப் பெருக்கிவிட்ட புரட்சிக்காலம் - மழைக்காலம் - என்று உணரவேண்டும். நூல் வளர்ச்சி இடைக்காலத் தமிழ்வளர்ச்சியில் ஏற்பட்ட புதிய சில கூறுகளை - தள்ளமுடியாத சில தமிழ் நலங்களைப் பார்ப்போம். சங்ககாலம். தனிப்பாட்டுக் காலம் தொடர்பற்ற தனிப்பாடல்கள் யாப்பதே சங்கப்புலவர் மனமாக இருந்தது. ஒரு பாடல் எழுதி அமைந்த புலவர்கள் பலராகக் காண்கின்றோம். திணைபற்றி நூறு பாடல் அளவு எழுதிய எல்லையை ஐங்குறுநூறு காட்டுகின்றது. நூறுபாடல் என்பது கிட்டத்தட்ட ஐந்நூறு அடிகளாகும். மதுரைக்காஞ்சி, மலைபடு கடாம் முதலிய நெடும் பாடல்களும் தனிப்பாடல் வகையாகிப் பத்துப்பாட்டில் இருபாட்டுக்கள் என எண்ணப்பட்டன. பெரும்பாலும் சங்கச்சான்றோர் தனிப்பாட்டாசிரியர்களே யன்றி முழு நூலாசிரியர்கள் அல்லர். நூல் நூலாக எழுதும் மனமையை வளர்த்தது இடைக்காலம். ஒரு நூலென்ன பல நூல் எழுதும் ஆசிரியர் பலர் தோன்றினர். கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன் என்று பாரட்டப்பெற்றார். நம்பிபாண்டவர் இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, அந்தாதி, உலாமாலை, கலம்பகம், ஏகாதசமாலை என்றவாறு பத்துப் பிரபந்தங்களைப் படைத்தவராவர். இளம்பூரணர் சேனாவரையர் போலன்றி நச்சினார்க்கினியர் பல்லுரை யாசிரியர் ஆனார். இடைக்காலம் வெள்ளம்போல் நூல் நூலாகப் பெருக்கியிராவிட்டால் தமிழ் இலக்கிய வரலாறு வாழ்ந்து முறிந்த வரலாறாக, குழந்தை கையடக்க நூலாகவே குறுகியிருக்கும். இறையனாரகப் பொருள் உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் கூறுகின்ற வரலாறளவாகவே நிற்கும். ஆதலின் இடைக்காலம் என்பது தமிழுக்கு இலக்கிய நூலாசிரியர்களைப் பெருக்கிவிட்ட புரட்சிக்காலம்; மழைக்காலம் - என்று உணரவேண்டும். பாவினம் - பாவளர்ச்சி இடைக்காலத் தமிழ் வளர்ச்சியில் இன்னொரு பெரும் பயனை புரட்சியான ஆனால் பொன்னான மாறுதலை நினைப்போமாக. இடைக்காலம் யாப்பிற்புரட்சி கண்ட காலம், சங்க யாப்பு, திட்பமுடையது, செறியுடையது, கட்டுக்கோப்பானது மாற்றத்துக்கு இடந்தராதது. இவ்வமைப்பு மூவேந்தர் தலைமுறையாக ஆண்டு சங்கக் கல்வி நெறி முறையாகப் பயின்று வந்த காலத்திற்கு ஏற்றதாக இருந்தது. முற்றும் மாறிய நிலைக்கு ஏற்பத் தமிழை மாற்றி வளர்த்துக் காத்தனர் இடைக்காலச் சான்றோர். இடைக்காலத் தமிழ், நடையழகும் தொடையழகும் பெற்று, எப்பொருளையும் கலகலத்துச் சொல்லும் நெகிழ்ச்சியுற்றது. பாவினங்களையும் நூலினங்களையும் பெருக்கித் தமிழினத்தைக் கவியினமாகவே புதுக்கியது. இன்றும் நம் மக்கட்குக் கவியரங்கும் கேட்கும் ஈடுபாடு உண்டு என்றால், திரைப்பாடல் கேட்கும் விழைவுண்டு என்றால் இம்மனப்பான்மை நமக்கு இடைக்கால வழி வந்தது என அறிய வேண்டும். பேச்சிலக்கணம் கற்றபின் நாம் பேசத்தொடங்கவில்லை. செவிக்கேள்வி வாயுரையாகின்றது. பேச்சு உரைநடையா செய்யுளா என்பது கேள்விச் சூழ்நிலையைப் பொறுத்தது. இடைக்காலத்தார் நெஞ்சம் செய்யுளாக இருந்தமையின் செய்யுட் சூழ்நிலையே புலவர் குடும்பங்களில் பெருகியிருந்தது. குழந்தைகளை நன்கு படிக்கவைக்க விரும்பிய பெற்றோர், புலவர் குடும்பங்களில் சேர்த்துவிட்டனர். குழந்தையும் கவிதையும் கொண்டாடும் இடத்தில் வளரும் என்ற கருத்து எழுவதாயிற்று. காரிகை கற்றுக் கவிபாடுவது இகழப்பட்டது. பாடங்கேட்பதற்கு முன்பே பாடத்தெரிய வேண்டும் என்ற நிலை எதிர்பார்க்கப்பட்டது. `குடக்கோடு வானெயிறு கொண்டாற்கு’ என்ற வெண்பாவை யாத்துவிட்டுப் பாடங் கேட்டார் சிவப்பிரகாசர். நமக்கு உரைநடைப்பேச்சு எப்படி, அப்படிச் செய்யுள் யாப்பு இடைக்காலத்தார்க்கு. எழுத்து என்பதும் படிப்பு என்பதும் எல்லாம் அவர்கட்குக் கவியே. ஆதலின் நாள்தோறும் பாடிக்கொண்டே இராவிட்டால் யாப்பு வராது என்ற நிலை அவர்கட்கு இல்லை. ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெங்கும் நீடுங் குடையைத் தரித்த பிரான் இந்த நீணிலத்தில் என்று ஒட்டக்கூத்தர் பாடும் போக்கைப் பார்த்து, ஒரு கணமும் தயங்காமல் சிந்தனைக்கு நேரம் கொடாமல் இடைமறித்துக் குலோத்துங்கள். பாடும் புகழொட்டக் கூத்தன் பதாஅம் புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழனென்றே என்னக் கூறுவரே என்று இரட்டையர் போலப் பின்னிரண்டியைச் சேர்த்து முடித்துவிட்டான் என்றால், இடைக்காலக் கவிதை மனத்தின் இயக்கம் தெள்ளத் தெளியலாம். `இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுhறும் அம்மென்றால் ஆயிரம் பாட்டா காதோ’ என்ற வீறாப்பு உருட்டுப் புரட்டன்று. கவிதை வெள்ளம் இடைக்காலத்து ஓடிப்பரந்தது. பயிற்சி நூல்கள் எவ்வகைக் கவிதையும் பாடும் வன்மை வேண்டும் என்பதற்காகவே சில சிற்றிலக்கியங்கள் பாவின அடிப்படையில் அமைந்துள்ளன. கலம்பகம் பதினெட்டு உறுப்புடைய இலக்கியம் இதனைப் பாடுவாருக்கு ஏறக்குறைய எல்லாப் பாக்களும் பாவினங்களும் யாக்கத் தெரிய வேண்டும். மும்மணிக்கோவை நான்மணிமாலை இரட்டை மணிமாலை எல்லாம் செய்யுட் பயிற்சி காட்டும் நூல்களே. குறமும் பள்ளும் பாடுதற்கு இயற்பாக்களொடு இசை நாடகப்பாடல்களும் இயற்றத் தெரிய வேண்டும். பரணி பாடுதற்கு நடைவேறுபட்ட தாழிசை இனங்கள் வேண்டும். பிள்ளைத் தமிழ் பாடுதற்குப் பல சீர்கொண்ட நீண்ட விருத்தப் பயிற்சிவேண்டும். பிள்ளைத் தமிழ் என்று பெயர் பெற்றிருந்தாலும் இதன் நடை பல பருவங்களில் பெருநடையாகும். யாப்பு வன்மையின் வெறிநிலை சிலேடைப் பாடல் என்க. செம்மொழிச் சிலேடையே அருஞ்செயல், பிரிமொழிச் சிலேடை தமிழ்ப்புலவர்க்கு அரியவென்று ஆகாதவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு. புணர்ச்சியிலக்கணத்தை நம்பியே சிலேடை யாப்பு வளர்ந்தது இவை பொருளற்றன என்ற தள்ளிவிடுதலும் எளிது; பிரித்துப் பதிப்பிக்க இடங்கொடா என்று தூற்றலும் எளிது. பிறமொழிக் கலப்பால் சிலேடை நூல் பெருகிற்று என்ற ஒரு குறையுண்டு என்றாலும், சின்னாளில் எவ்வளவு மொழிப் பயிற்சியைத் தரவல்லது என்று அறிந்தோர் சிலேடை வெண்பா ஒரு நூலாவது கற்பதையும் கற்பிப்பதையும் உடன்படுவர். மற்றிலை யாவி தளரும் பொழுதுமுன் வந்துநிற்பார் நற்றிலை யாடக மன்றுடை யாரன்றி நாமவரைப் புற்றிலை யாபுக லூரிலை யாவெனப் போற்றியின்றே சற்றிலை யாயினுந் தூவுநெஞ் சேபினைச் சாவிலையே (திருப்புகலூரந்தாதி - 83) மனனம் பண்ணுதற்கும் சொற்பயிற்சிக்கும் மொழிப் புணர்ச்சிக்கும் பிரிவிற்கும் சிலேடைபோல் ஆற்றலுடையது வேறில்லை. நூலெல்லாம் ஒரே பயனுடையன அல்ல. ஒரு நூலின் பயன் இன்னொரு நூலிலிருந்து கிடைக்காது. சில நூல்கள் சிறுபயன் உடையன; சில நூல்கள் பெரும் பயனளிப்பன என்றாலும் சில்லறை வணிகம் தொகை வணிகம்போல எல்லா நூலும் கல்விச் சமுதயத்துக்கு ஒவ்வோர் பருவத்தில் இன்றியமையாதவை. படைப்பு மனம் இடைக்காலக் கல்வியாளர்க்கு யாப்பு மனம் மிக்கிருந்தமையின் புதுப்புது யாப்புக்கள் படைத்தனர் அப்படைப்புக்களுள் சிறந்த ஒன்று காரிகை என்னும் கட்டளைக் கலித்துறையாகும். இது வெண்பாவும் வெண்பாவினமும் கலந்தது. ஓரடிக்குள் தளை இருந்தாற்போதும். ஓரடியின் இறுதிக்கும் வரும் அடியின் முதலுக்கும் தளைபார்க்க வேண்டா. இப்புதுயாப்பு கோவை நூல் வளர்ச்சிக்குப் பயன் பட்டது. இந்த யாப்பில் மக்கட்குக் கவர்ச்சியிருந்ததாலன்றோ யாப்பருங்கலக் காரிகையும் வீரசோழியமும் கட்டளைக் கலித்துறையில் செய்யப்பட்டன. திருமந்திரச் செய்யுட்கள் கலிவிருத்தம் என்ற பெயர் பெற்றாலும் அவ்வளவும் சீரும் தளையும் சிதையாத வெண்பாத்தன்மையன. என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி என்பொன் மணியினைக் காண வொண்ணாதே இவ்வாறு சீர் தளை அடி முதலியவற்றை மாற்றியமைத்து இனியும் புது யாப்புக்களைப் படைக்கலாமா என்பது பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். இத்தகைய இலக்கியக் கண்டுபிடிப்புக்கள் தமிழின் மேல் வளர்வுக்கத் தேவை. நல்லமைப்புக்கள் இடைக்கால இலக்கியங்கள் மிக நல்ல அமைப்பு உடையவை என்பது என் கருத்து. இவ்வமைப்பை அறிவான முறையில் பயன்கொள்ளவேண்டும். கோவை, கலம்பகம், உலா, பரணி இவற்றில் பாட்டுடைத் தலைவர்கள் உண்டு. இவர்கள் மானிடத் தலைவர்களாக இருக்கும்போது, இவ்விலக்கியங்கள் உலகியலும் வரலாறும் தழுவுகின்றன. கடவுளர்களைத் தலைவர்களாகக் கொள்ளும்போது உலகியலும் வரலாறும் இழக்கின்றன. கலிங்கத்துப்பரணி முற் சோழ வரலாறும் முதற்குலோத்துங்க சோழன் வரலாறும் அறிய உதவும் இவ்வுலகப் பரணியாகும். இராச பாரம்பரியம் என்ற உறுப்பு வரலாறு சொல்லுதற்கே எழுந்தது. தக்கயாகப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணியெல்லாம் புராணமாகவும் உருவகமாகவும் மாறி அவ்வுலகப் பரணியாகிவிட்டன. இவையெல்லாம் பரணியாகுமேல், கரன்வதைப்படலம் கும்பகருணன்வதைப் படலமெல்லாம் காப்பியப் பரணிகள் ஆகாவா? பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை குலோத்துங்கள சோழன் கோவைகளில் மக்கள் பாட்டுத் தலைமை வகிக்கின்றனர். பாண்டிக்கோவை பல்லவ பாண்டிய வரலாற்றுக் கருவூலமாக விளங்குகின்றது. திருக்கோவை, திருவாரூர்க்கோவை, திருவெங்கைக் கோவை முதலியன கடவுளர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக்கி உலகம் தழுவாவாயின. நந்திக்கலம்பகம், மூவருலா இவை வரலாற்றிலக்கியங்கள், மதுரைக் கலம்பகம், அழகர் கலம்பகம், திருவாரூர் உலா, திருப்பூவண நாதருலா எல்லாம் தெய்வத் தலைமை பெற்ற இலக்கியங்கள். நீலந்தீண்டா இலக்கியப் பறவைகள். கிளவித் தலைவர்கள் பெயர்சுட்டப்படார். பாட்டுடைத் தலைவர்களையும் அன்ன நிலையினராக்கி விட்டால், அவ்விலக்கியங்கட்கு இவ்வுலக வாழ்வுண்டா? பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்றால் மக்கட் பொருளில்லா இலக்கியங்கட்கு இவ்வுலக வேர் உண்டா? எடுத்துக் காட்டியவற்றிலிருந்து, இடைக்கால இலக்கிய வகைகள் பிழைபட்டனவல்ல எனவும், இவ்வுலகியலுக்கு உரிய இடங்களிலும் அவ்வுலகம் புகுந்து கொண்டதனால், இலக்கியப்பாழ் ஏற்பட்டதெனவும் தெரியலாம். பொடி மட்டையிலும் பொன்துகள் வைப்பாருண்டோ? இடைக்கால நல்ல இலக்கிய அமைப்பைச் சமய வல்லவர்கள் முழுதும் பற்றி அவமாக்கிவிட்டனர். மீண்டும் மக்கள்மேலாக இவற்றைப் பாடி உயிர்ப்பித்தல் தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் பாவளர்ச்சிக்கும் நல்லது. இற்றைப் புலவர்கள் பெரியார் பிள்ளைத் தமிழ், காந்தி பிள்ளைத்தமிழ், திருவள்ளுவ பிள்ளைத் தமிழ் என்று உயிர்ப்பித்திருக்கக் காண்கின்றோம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை நீதிபதி வேதநாயகனாரை பாட்டுடைத் தலைவராக வைத்து, பொருந்த உலகர் வழக்கோர்ந்து பொய்யிது மெய்யிதென்று திருந்த எழுதும் திறல்வேத நாயகச் செம்மல் நாட்டுக்கு நல்லன் பதினாயிரம் பொன் நவிலுமொரு பாட்டுக்கு நல்கும்புகழ்வேத நாயகப் பண்பன் என்று குளத்தூர்க்கோவைபாடி, கோவையை மக்கட் கோவையாக்கினார். தமிழுணவு இடைக்கால இலக்கிய வகை உலகியலோடு தொடர்புபட்டால் எதிர்காலத் தமிழுக்கு ஏற்ற வழிகாட்டி. தூது என்ற இலக்கிய வகையால் எவ்வளவோ கருத்துக்களை இனிமையாகப் பரப்பலாம். பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்டு எஞ்சியழுக் கேறா இயற்கலையே - விஞ்சுநிறம் தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம் தீயாது சொல்விளையும் செய்யுளே தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியேயென் முத்தமிழே - புத்திக்குள் உண்ணப் படுந்தேனே உன்னோ டுவந்துரைக்கும் விண்ணப்ப முண்டு விளம்பக்கேள் என்ற தமிழ்விடுதூது இன்றும் நாளையும் வரும் தமிழினத்தார்க்கு விடுக்குந்தூதல்லவா? என்ன சொல்வளம்! என்ன சொல்மாயம்! சங்ககால மக்கட்குத் தமிழ்மொழி இயல்பானது. ஆதலின் அதன் அருமையை அறியும் வாய்ப்பில்லை. இடைக்கால மக்கட்குத் தமிழ் அருந்தமிழ், தீந்தமிழ், ஒண்டமிழ், வண்டமிழ். ஏன்? நிழற்பெருமை வெயிலில் நின்றறிமின் என்றாங்கு பிறமொழித்தாக்கம் தமிழருமையை உணர்த்திற்று. `இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்’ எனவும் `தமிழ் தழீஇய சாயலவர்’ எனவும் என்று முள தென்றமிழ் இயம்பி’ எனவும் யாண்டும் தமிழுணர்ச்சியை ஊட்டிக் கொண்டே இருந்தனர். அவ்வூட்டத்தாலன்றோ எவ்வளவு அரசு நாகரிகம், மொழி, சாதிப் பூசல்களுக் கிடையேயும், தமிழ் நமக்குக் கிடைத்து, நாமெல்லாம் இன்றும் தமிழர்களாக இருக்கின்றோம். மக்கட் சமுதாயம் குறை பாடுடையதாக இருக்கும்வரை இலக்கிய படைப்புக்களும் குறைசார்ந்தனவாக இருக்கும்; என்றாலும் இலக்கியத்தின் நோக்கம் முழுதும் மக்கள் வழி இயங்குவதன்று; மக்கள் வழியோடு சென்று தன் வழியில் இழுப்பது; நிறைவான நிலையை காட்டிக் கொண்டிருப்பது. ஒலித்தூய்மை இடைக்கால இலக்கியத்தமிழ், எதிர்காலத் தமிழுக்கு வழிகாட்டி; நல்வழிகாட்டி என்றேன். என்றதற்கு ஒரு பெருங்காரணம் தமிழ்மொழிக்காப்பு மட்டுமன்று. தமிழொலிக் காப்பு. இலக்கியத்துறையிலும் ஏராளமாகச் சமயத்துறையிலும் பிறமொழிச் சொற்கள் கலந்தபோதும், பிறவொலிக் கலப்புக்கு இடந்தரவில்லை. ஏன்? மொழயின் உயிர்நாடி சொல்லில்லை, ஒலிதான் என்பதனைத் திடமாக அறிந்திருந்தனர். பிறமொழி கலந்த தொடக்க காலமாதலின், தொல்காப்பியர் அது பற்றி ஒரு நூற்பாக்களே யாத்தனர். இடைக்காலத்து பிற மொழிக் கலப்பு மிகுந்தபோது, பவணந்தியார் பிறவொலியாக்கம் பற்றியும் ஒலித்தொடர் பற்றியும் வரம்பான நூற்பாக்கள் பல எழுதினார். தொல்காப்பியர் சொல்லதிகாரத்திற் கூறியது போலன்றிப் பவணந்தியார் எழுத்ததிகாரத்தில் இவை பற்றிய நூற்பாக்களை எழுதிச் சேர்த்தார் என்றால், எல்லாப் பிறவொலிகளையும் தமிழ்மையாக்குவதில் அவருக்கு இருந்த விழிப்புப் பெறப்படும். பன்மொழிச் சிலேடைக்கும் யமகம் திரிபு மடக்குக்கும் பிறமொழிக் கிளவிகளைக் கூடை கூடையாக அள்ளிக்கொண்ட போதும் ஒலிக்கற்பில் பிறழவில்லை நல்லிடைக் காலத்தார். இந்நிலையை நாம் உணரவேண்டும். யாகாவாராயினும் நாகாக்க என்பது போல, யாகலந்தாலும் ஒலி கலவாது தமிழ் காக்க, ஒலிக்கலப்பு என்பது தமிழ்க் கலைப்பாகும். ஒலிப்பிறழ்ச்சி என்பது தமிழ் உயிர்ப்பிறழ்ச்சி ஆகும். ஆயிரம் ஆயிரம் செய்யுட்கள் கொண்ட தமிழ்க் காப்பியங்களையும் நடுவிலக்கியங்களையும் சிற்றிலக்கியங் களையும் தெய்வப் பாடல்களையும் சமய நூல்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்வோமானால், ஒலித்தூய்மை பற்றிய நெஞ்சுரம் நமக்கு ஏற்படும். இவ்வோர் உண்மையையாவது இடைக்கால இலக்கியத்திலிருந்து நாம் கற்றுக் கொள்வோமாக. 10. தன்னெஞ்சம் கெடுவல்யான் என்பது அறிக; தன்னெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் (119) என்பது அறத்துப்பால் நடுவுநிலைமை அதிகாரத்தில் வரும் குறளாகும். நேர்மை வேண்டும் என்பதுதான் இக்குறளின் அறக்கருத்தாயினும், அக்கருத்தைச் சொல்லும் முறையில் நான்கு கூறுகள் அமைந்துள்ளன. நேர்மை தவறிக் காரியம் செய்தலாகாது; அங்ஙனம் செய்யும்படி நெஞ்சை விடக்கூடாது; நெஞ்சு என்ற ஓர் உறுப்பு நேர்மைப்பிழை செய்தால் நெஞ்சுடையான் முழுதும் கெட்டுப் போவான்; இந்த அச்ச அறிவு எப்போதும் இருக்கவேண்டும். `கெடுவல்யான் என்று குறளைத் தொடங்குவதிலிருந்தே வள்ளுவர் எச்சரிக்கை செய்கின்றார் என்பதனை உணர்கின் றோம். ஏன்? நேர்மை என்ற நடுவு நிலைமை ஒவ்வொருவனுக்கும் இன்றியமையாத ஒழுக்கம். மக்கட் சமுதாயம் நம்பிக்கை என்ற நாணால் சுட்டப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு காரியத்துக்கும் கையெழுத்துக்களும் ஆட்சான்றுகளும் ஒப்பந்தங்களும் வைத்துக்கொண்டு உலகத்தை இயக்கமுடியுமா? நம்பித்தான் பலவற்றைக் கொடுக்கின்றோம். கொள்கின்றோம் நாணயக் கேடி சமுதாயப் பேடியாவான். சிறு துறையாயினும் பெருந் துறையாயினும், சமுதாயத் தண்ணீர் நேர்மை தவறிகளுக்கு வெந்நீராக மாறிவிடும். சினங்கொண்டவனோ பொறாமை கொண்டவனோ பொய் சொன்னவனோ புறங்கூறினவனோ முழுதும் கேடடைவதில்லை. ஏன்? இக்குற்றத்தார்களைச் சமுதாயம் அடியோடு வெறுக்கக்காணோம். இவர்களைச் சிலர் அணைத்துக் கொள்ளவும் செய்ப நாணயம் இல்லாதவனை வீடும் வெளியும் முழுச்சமுதாயமுமே விரைவில் வெறுத்துவிடும். நேர்மை காவாவிட்டால் உன் வாழ்வு என்னாகும் தெரியுமா? வாழ்வில் ஒரு பகுதி மாத்திரம் கெடாது. முழுவாழ்வும் கெட்டுப்போம் என்பதைச் சுட்டிக் காட்டவே `கெடுவல் யான் என்பதறிக என்று யான் என்னும் தன்மை முழுப்பெயரை ஆட்சி செய்துள்ளார். பணத்தாள் ஏனைப் பகுதியெல்லாம் கிழிந்திருந்தாலும் எண்ணுப் பகுதி இருந்தால் செல்லுபடி யாகும். எண்கெட்டு ஏனைப்பகுதி இருந்து என்ன பயன்? ஏனைய குணங்கள் கெட்டால் சமுதாய உறவு அற்றுவிடாது. நடுவு என்னும் நாணயம் கெட்டுவிட்டாலோ சமுதாயம் தள்ளுபடி செய்துவிடும். நான் நாணயம் பிறழ்ந்தால் சமுதாயம் ஒன்றும் கெட்டுவிடாது; நாணயத்தைக் கெடுத்துக் கொண்ட நாள் தான் கெடுவேன் என்று தெரிந்துகொள்க என்பார் `கெடுவல் யான் என்பது அறிக’ என்று உணர்த்துகின்றார். `தன்நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்’ என்ற குறட்பகுதியில், நெஞ்சம் என்ற சொல்லாட்சி சிந்தனைக்குரியது. நடுவுநிலைமை கடந்தால் வாழ்வு கெடும் என்று சொன்னாற் போதாதா? நெஞ்சம் நடுவுநிலைமை கடந்தால் என்று நெஞ்சத்தின்மேல் அக்குற்றத்தை ஏற்றுவதன் கருத்து யாது? மனிதன் செய்யுங் குற்றங்களை இருவகையில் அடக்கலாம். ஒருவகை அறியாமைக் குற்றம் `கற்றனைத்து ஊறும் அறிவு’ என்பாராதலின், அறியாமைக்குற்றம் உண்மையில் குற்றம் இல்லை எனவும் கல்வியால் நிறைவு செய்யக்கூடிய ஒரு குறையே எனவும் தெளியலாம். மனிதனுக்கு உண்மையான குற்றம் என்பது மனக்குற்றமே. இக்குற்றத்தை மாசு என்பர் வள்ளுவர் `மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’ என்று அறத்திற்கு இலக்கணம் வகுப்பதால், அறிவுப்பிழை அறப்பிழையாகாது. நெஞ்சப் பிழைதான் அறத்தொடுபட்ட பிழை என்று தெரிந்து கொள்ளுகின்றோம். நேர்மைப் பிழை நெஞ்சுக்குத் தெரியாமல் நடவாது. தெரியாது கையூட்டு வாங்கிவிட்டேன் எனவோ, அறியாது அளவையும் தரத்தையும் குறைத்துக் கொடுத்துவிட்டேன் எனவோ சொல்வதை யாரும் உடன்படார். நாணயப்பிழை அறிவைச் சார்ந்ததன்று. மனத்தைச் சார்ந்தது என்பதைக் காட்டவே நெஞ்சம் நடுவொரீஇ என்று நெஞ்சொடு தொடர்புபடுத்திக் கூறினார். நெஞ்சம் என்று தனியாகச் சொல்லாமல் `தன்நெஞ்சம்’ என்று தன்னோடு சேர்த்துச் சொல்லிய அடைதான் இக்குறளுக்கு உயிரோட்டம் ஆவது. அறிவு யார்க்கும் நிரம்புவதன்று. `அறிதோறு அறியாமை கண்டற்றால்’ என்று வள்ளுவரும் அறிவு உறிஞ்சு தரைபோல் நிறைவுகாண முடியாக் குறைவுடையதாகவே இருக்கும் என்று சுட்டிக் காட்டுவர். பல்வேறு அறிவாளர் கூட்டமாகச் சேர்ந்து கருத்துப் பரிமாறிக் காரியஞ் செய்யலாம். அறிவு கடல்போல நிறைவுபடாதது, கூட்டுறவுக்கு உரியது. ஒன்றைத் தெரியாமற்செய்தால் இன்னவனைக் கேட்டுச்செய்தேன் என்று அறிவுத்துறையில் பிறர்மேல் பாரத்தைப் போடலாம். சமுதாயமும் உடன்படும். ஒருவன் அறிவுக்குற்றம் பிறரையும் சார்ந்தது. மனக்குற்றம் ஒவ்வொருவன் தன்னையே சார்ந்தது. என்னை களவாடச் சொன்னான், பொய் சொல்லச் சொன்னான், நாணயங்கெடச் சொன்னான் என்று பிறர்மேல் பழிபோடலை வள்ளுவர் உடன்படவில்லை. சமுதாயமும் உடன்படாது. யார் சொன்னாலும் தன்னெஞ்சு கேட்டுக் குற்றஞ்செய்தால் தானே? குற்றஞ் செய்யத் தன்நெஞ்சு மறுத்துவிட்டால் யார்சொல்லி என் பயன்? நேர்மை என்பது பொதுப் பொருளன்று. பலர் நேர்மை தவறியிருக்கின்றார்கள் என்பது ஒப்புமை யாராய்ச்சிக்கும் மேற்கோளுக்கும் உரியதன்று. நேர்மையும் ஒழுக்கமும் அவனவன் நெஞ்சத்தின் பால. `தன்நெஞ்சறியப் பொய்யற்க’, என வாய்மை அதிகாரத்தும். `தன்நெஞ்சு தானறி குற்றப்படின்’, எனக் கூடாவொழுக்க அதிகாரத்தும், `கள்ளாமை காக்க தன்நெஞ்சு’, எனக் கள்ளாமை யதிகாரத்தும் இவ்வாறே ஒழுக்கக் கூறுகளைத் `தன்நெஞ்சு’ என்ற வாய்பாட்டில் வைத்து முடிப்பர் வள்ளுவர். இதனால் தன் நேர்மைக்குத் தன் நெஞ்சு ஒன்றே மூலம், பிறிது எதுவுமன்று என்ற வரம்பு தெளிவாகின்றது. வண்டி தடம் பிறழ்வது அறிந்தால் உரிய தடத்துக்குக் கொண்டுவர முயல்கின்றோம். அடக்கியைப் பயன்படுத்தி ஓடுகின்ற காலை ஒடுக்குவோம். சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (422) மனம் என்னும் வண்டி நடுவுநிலைமை என்னும் நேர்பாதையிலிருந்து விலகுமானால், அதனைத் தடுத்து ஒழுங்குபெற ஓட்டுதல் அறிவு என்ற வலவனின் தொழில் என்று உலகியல் நிலையில் புலப்படுத்துவர் வள்ளுவர். கெடுவல்யான் என்பது அறிக; தன்னெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் என்நெஞ்சு நேர்மைபிசகினால் நான் முதலொடுங்கெட்டொழிவனே என்றுஅறிந்தால், இவ்வறிவு பெற்ற அறிவாளன் தன்மனம்போன போக்கெல்லாம் போகமாட்டான்; ஊசிவழி நூல்செல்வது போலவும், இருப்புப்பாதை வழி புகையூர்தி இயங்குவது போலவும், அறிவுவழி தன் மனத்தைக் கட்டிக்காப்பான். தன் உணர்ச்சிகளை விம்மவும் குமுறவும் கொந்தளிக்கவும் விடாது அறிவுக்கரை வழி ஒழுங்குபடுத்துவான். நெஞ்சுடையார் எல்லாம் உடையாரல்லர்; நெஞ்சை ஒழுங்குபடுத்தும் அறிவுடையாரே எல்லாம் உடையார். 11. இலக்கியத் தளம் இலக்கியம் ஒரு மொழிக்கலை, மிகப்பழங்கலை, பல கலைகட்கும் அடிக்கலை. இக்கலையை ஓரளவு துய்ப்பதற்குத் தனிப்பெரும் பயிற்சி வேண்டுவதில்லை. வேண்டுவது இலக்கிய ஆர்வமே. எழுத்தறியாக் குழந்தை முதலாக யாரும் கவிதையைக் கேட்டுச் சுவைக்கலாம். பருவத்துக்கு ஏற்ற இலக்கிய வகைகள் உள, பாட்டுக்கள் உள. ஒன்றைச் சுவைக்கும் திறம் வேறு; ஆக்கும் திறம் வேறு. நாவாரச் சுவைத்து உண்பவர்கக்ச் சமையல் அறிவோ, வனப்பாக உடுத்துபவர்க்கு நெசவறிவோ, அணிபல பூணுவார்க்குக் கொல்லறிவோ, பயணஞ்செய்வார்க்கு ஊர்திகளின் அறிவோ தேவையா? உண்டா? மக்கள் நுகரும் பொருள்கள் எண்ணிறந்தன. ஆனால் அவற்றைப் பற்றிய தன்மையறிவு பெரும்பாலார்க்கு இராது, வேண்டுவதும் இல்லை. அறிந்துதான் ஒன்றை நுகர்வது என்றால் கடை போகாது. நுகரும் சுவை நிலை வேறு. நுகர்பொருளை அறிநிலை வேறு. ஆனால் யாருக்காவது ஒன்றைப் படைக்கும் திறம் இல்லாவிட்டால், துய்க்கும் வாய்ப்பினை எல்லாரும் இழப்பர். வள்ளுவர் திருக்குறளை, இளங்கோவின் சிலப்பதி காரத்தை, பாரதியார் பாடல்களை நுகர்வோர் வழிவழிக் கோடியர். இலக்கியம் படைப்போன் ஒருவனே; பயன் பெறுநர் தொகைக்குக் கால இட வரம்பில்லை. இன்று மக்கட் பெருக்கத்திற்கு ஏற்ப இலக்கியச் சுவைஞர் தொகையும் கூடுதலாகி வருகின்றது. ஆனால் நல்லிலக்கியம் படைக்குநர் தொகை வேண்டு மளவு கூடவில்லை. படைப்பாற்றலும் நயமாக இல்லை. துய்ப்பதில் பரப்புவதில் உள்ள நாட்டம் படைப்பதில் இல்லையே. இலக்கியம் செய்வது எங்ஙனம்? இலக்கியன் தன் உலகப் பார்வை எது? பார்வைப் பொருளில் இலக்கியச் சாயம் ஏற்றுவது எவ்வாறு? இலக்கியநூல் நெசவில் சொல்லிழை எத்தன்மைத்து? இலக்கிய ஞாலத்தில் மன்னும் பகுதி எது? மன்னாப் பகுதி எது? இலக்கியப் படைப்புக்கு இன்ன அறிவோட்டங்கள் வேண்டும். இன்ன அறிவு கைவரப் பெறுபவன் புதிய வீற்றிலக்கியங்களைத் தோற்றுவிக்க முடியும். இரு பாங்கு எக்காலத்து இலக்கியம் ஆயினும், எந்நாட்டு இலக்கியம் ஆயினும், இலக்கியம் கூறும் பொதுப்படையான பாங்குகளை எண்ணிவிடலாம் காதலும் வீரமும், இல்லறமும் துறவறமும், நாடும் போரும், நேர்மையும் வஞ்சகமும், நட்பும் பகையும், உரிமையும் அடிமையும், எள்ளலும் துள்ளலும், எதிர்பார்ப்பும் ஏமாற்றமும், அறியாமையும் இரக்கமும், தாய்மையும் வாய்மையும், பேய்மையும் நாய்மையும் என்றிவை இலக்கியப் பாடுபொருளாக வருகின்றன. இம்மனிதப் பான்மைகள் பொதுவாயினும் இப்பான்மைகளைப் புலப்படுத்தவரும் மெய்ந் நிகழ்ச்சிகள் பொதுவானவையல்ல. இனம் காலம் இடம் என்ற சமுதாய வரம்புடையவை. என்ன உணர்ச்சியைக் காட்ட நினைப்பினும், அதனை ஓர் இடத்தொடும் காலத்தொடும் ஆளொடும் சேர்த்துத் தானே கூறவேண்டும்? வானத்துப் பறப்பினும் பறவைக்கு நிலத்தில் ஒரு கூடு உண்டு. ஞாலமுழுதும் வேகத்தியங்கும் வானூர்திக்குத் தங்குதரை உண்டு. அகலவிரியினும் ஆலமரத்துக்கு ஓர் அடி உண்டு எண்ணங்கள் விரிந்தோடினும் நெஞ்சென ஒரு பகுதி உண்டு. யார் யாது பாடினும் இலக்கியத்துக்கு ஒரு சமுதாயத்தளம் உண்டு. ஒரு சமுதாயத்தோடும் ஒட்டாது, ஒட்டக்கூடாது என்று இலக்கியம் பாடுவானாயின், அவன் படைப்பு விளங்காது, வேர்கொள்ளாது. வானத்து வரைந்த வடிவுபோல இனப்பற்றுக் கோடின்றி அழியும். பல்வேறு நாட்டிலக்கியங்கள் எனவும், ஒரு நாட்டினுள்ளும் பல்வேறு கால இலக்கியங்கள் எனவும் பாகுபாடு செய்வதற்குச் சமுதாயத்தள வேற்றுமையே காரணமாம். பாடும் புலவன் தன் கருத்தினை எவ்வளவு சமுதாயத்துக்கு இயைபாகப் பாடுகின்றான், அவ்வளவுக்கு அவன் படைப்பு உலகவுயிர்ப்பு உடையதாக இருக்கும். நெடிது வாழும், சமுதாயத்தளம் காலந்தோறும் மாற்றம் பெறினும், மன்னாதாயினும், அம்மாற்றத்தில் அம்மன்னாமையில், நிலை பேற்றுத்தன்மை பிறக்கின்றது. சமுதாய மாற்றம் விதையழிவு போன்றது. அவ்வழிவு ஆக்கத்துக்கு உரம் தருகின்றது. இத்தளம் இல்லா இலக்கியம் வாணம் இல்லாக் கட்டிடம் ஒக்கும். குறுந்தொகை அகவல் மகளே அகவல் மகளே மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவல் மகளே அகவல் மகளே இன்னும் பாடுக பாட்டே அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே (குறுந் 23) இக்குறுந்தொகைப் பாட்டு தோழி அறத்தொடு நிற்கும் துறையில் அமைந்தது. தலைவியின் மெலிவுக்குக் காரணம் யாது என்று குறிசொல்லும் குறத்தியை அன்னை கேட்கிறாள். குறி சொல்லுங்கால் முருகன் வீற்றிருக்கும் மலைகளை எண்ணுவது ஒரு மரபு. அங்ஙனம் ஒரு மலையைப் பாடி வருகையில், அதனையே மேலும் மேலும் பாடுக பாடுக என்று தோழி வேண்டுகின்றாள். இதன் குறிப்பு என்ன? அம்மலையில் வாழ்கின்ற ஓர் ஆடவனே இவளுக்கு நோய்தந்த காதலன் என்பது தோழியின் சுட்டு. குறமகளின் தோற்றமும் அவள் சங்குமணி அணிவதும் தாய் குறிகேட்பதும் குறி நம்பிக்கையும் தெய்வத்தால் ஆயது என வெறியாடுவதும் எல்லாம் தமிழ்ச் சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள் காதலும் கற்புத் துணிவும் மக்கட் பொதுவாயினும், அக்கற்புக் காதலைத் தமிழ்ச் சமுதாயத்தில் வைத்து அகத்திணை இலக்கியம் காட்டுகின்றது. திருக்குறள் திருக்குறள் கூறும் அறங்கள் இடம் காலம் இனம் கடந்தனவாயினும், இலக்கிய விளக்கத்தில் இடம் காலம் இனத்தொடுபட்டவை. தமிழ்ச் சமுதாயச் சாயல் கொண்டவை. தமிழரின் பழக்க வழக்கங்களின்மேல் எழுந்தவை. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்? பலரென்னை முன்னின்று கன்னின் றவர் (771) இக்குறள் போர்க்களத்து மறவன் கூற்று. தன் தலைவனை எதிர்த்துவந்த பகைவர்களை விளித்து, `இதற்கு முன்னும் என் தலைவனொடு போரிட வந்தோர் எண்ணிலர். அவரெல்லாம் என்னாயினர்? வெல்லமாட்டாது அவன் அம்பு பட்டு நடுகல் ஆயினர். நீவிர் உயிர் விரும்புகின்றீரா? உயிர்கொடுத்து வீரக்கல் விரும்புகின்றீரா? என்று நெடுமொழி புகல்கின்றான் படைவீரன். பொருகளத்தில் விழுப்புண்பட்டு மடிந்த வீரர்க்கு வீரக்கல் நடுவது தமிழ் மரபு. நாட்டுப்பற்றுக்கு உரிய பொது வீரவுணர்வைத் தமிழ் நாகரிக வாயிலாக விளக்குகின்றார் வள்ளுவர். அருவப் பொருளான உணர்ச்சிகளுக்கு உருவப் பொருளான சமுதாய நிலை வேண்டும். சிலப்பதிகாரம் கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்தகத்து ஒளித்துநீர் உகுத்தன; எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன; விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்து (சிலப்.5) இச்சிலப்பதிகாரப் பகுதியில் இந்திரவிழாக் காலத்துக் கண்ணகியின் அவல நிலையையும் மாதவியின் இன்ப நிலையையும் புலப்படுத்துகின்றார் இளங்கோ. புலப்படுத்தும் இலக்கியப்புனைவில் ஒரு தமிழ் மரபு பொதிந்து கிடக்கின்றது. இவ்விழாவுக்குப் பின்னர் கோவலன் கண்ணகியை அணை கின்றான், மாதவியை அகல்கின்றான். கண்ணகிக்கு இன்ப நிலையும் மாதவிக்கு அவலநிலையும் இனிவரப் போகின்றன. இந்த எதிர்கால மாற்றத்தைக் குறிப்பிற் புலப்படுத்துவதற்கு ஒரு தமிழினப் பழக்கவழக்கத்தை இலக்கியப் படுத்துகின்றார் இளங்கோப் புலவர். மகளிர்க்கு இடக்கண் துடிப்பது நன்மைக்கு அறிகுறி என்பதும் வலக்கண் துடிப்பது தீமைக்கு அறிகுறி என்பதும் தமிழர் நம்பிக்கை. இந்திரவிழாவில் கண்ணகி கண்இடமும் மாதவிக்கண் வலமும் துடித்தன என்று பாடிய அளவில் இருவரின் எதிர்கால வாழ்வைத் தமிழர் புரிந்து கொள்வர். இராமாயணம் கம்பர் தம் தழுவு காப்பியத்தில் தமிழ்ச் சமுதாயத் தளத்தைக் கலந்து பாடியுள்ளார் என்பது அவருக்கு உள்ள தனிப்பெருமை. சுக்கிரீவன் குறித்த காலத்து உதவிக்கு வரவில்லை என்று சினக்கின்றான் இலக்குவன். சினத்தொடு கிட்கிந்தை செல்கின்றான். அவன் சீற்றத்துக்கு முன்னிற்பார் யார் என்று அஞ்சுகின்ற அனுமன் ஒரு சூழ்ச்சியாக வாலியின் மனைவி தாரையை இலக்குவனை வரவேற்க விடுக்கின்றான். தாரையோ அணிமையில் கணவனை இழந்த கைம்மையள். அவள் தாலியற்ற, நகையற்ற, திலகமற்ற வெள்ளுடைக் கோலத்தி. மங்கல அணியை நீக்கி மணியணி துறவ்து வாசக் கொங்கலர் கோதை மாற்றிக் குங்குமச் சாந்தங் கொட்டாப் பொங்குவெம் முலைகள் பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நின்றான் (கிட்கி.கிட்.) இக்கைம்மைக் கோலத்தைக் கண்ணுற்றதும் இலக்குவனுக்குச் சினவுணர்ச்சி மறைந்தது. தன் தந்தையாம் கணவனை இழந்த கோசலை சுமத்திரை முதலியோரும் அழகு களைந்து இவ்வவலத்தோற்றத்திற்றானே, காலங்கழிப்பர் என்ற ஊர் நினைவு பளிச்சென அவன் நெஞ்சில் தைத்தது. உணர்ச்சிகளின் மாற்றத்திற்குத் தமிழ்ச் சமுதாயத்தளத்தை எங்ஙனம் நுட்பமாகப் பயன் கொள்ளுகின்றார் கம்பர் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு. சங்க நூல்களும் சிலப்பதிகாரம் பெரியபுராணம் கம்ப ராமாயணம் போன்ற இலக்கியப் பெருநூல்களும் காலங்கடந்து வாழ்வதற்குக் காரணம். புலவன் காலத்தோடு ஒட்டிப் படைத்தது. தன் காலச்சமுதாயத்தோடு பின்னிப்பிணைத்து எழுதியது. சமுதாயத் தளத்தோடு ஒட்டாத இலக்கியம் தண்டிற் கட்டாத கொடியாகிவிடும். இலக்கியச் சிந்தனை எவ்வாறு ஓடினும் அவ்வோட்டத்தை வழிப்படுத்தி நிலைப்படுத்துவது வரம்பும் மரபும் வரலாறும் உடைய சமுதாயத்தளமே. 12. குறள் விளக்கம்? திருக்குறள் தன் விளக்கம் வாய்ந்த எளிய இனியநூல்; தனக்கு வேறொரு விளக்கம் வேண்டாத் தெளிவு நூல்; உவமைகள் மலிந்த நூல்; கருத்துக்களைப் பல நிலையில் புலப்படுத்தும் நூல். அந்தத் திருக்குறளுக்கு எவ்வளவு உரைகள், உரைக்கு உரைகள், சிறப்புரைகள், விரிவுரைகள், தெளிவுரைகள், நயவுரைகள் எனவாங்கு எவ்வளவோ வகையுரைகள், எவ்வளவு விளக்கங்கள்? விளக்கத்தின் மேலும் விளக்கங்கள் எவ்வளவு? திறன்களும் திறத்திறன்களும், கட்டுரைகளும், பொழிவுகளும், கதை விளக்கங்களும் எவ்வளவு? இவ்வளவு இருந்தும், திருக்குறளில் என்ன விளங்கிக் கொண்டோம் என்று கேட்கத் தோன்றுகின்றது. அறம் பொருள் இன்பம் வீடு எல்லாம் தெளிந்தோம் என்று திருவள்ளுவமாலை புகன்றாலும், என்ன தெளிந்தோம் என்று மறுக்கத் தோன்றுகின்றது? சுருங்கிய சொல்லால் பொருள் விளங்கக் கூறுவதில் வல்லவர் வள்ளுவர் என்று திருவள்ளுமாலை உரைத்ததாலும், அவர் வல்லவர்தான்; நாம் பொருள் விளங்கிக் கொண்ட வல்லவர்களா என்ற ஐயம் ஏற்படுகிறது. குறள் விளக்கம் என்றால் என்ன? உரையா? நயமா? உரைப்பன்மையா? ஆராய்ச்சி நுண்மையா? எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (666) இந்தக் குறளுக்குக் குறளின் மேலும் என்ன தெளிவு வேண்டிக் கிடக்கின்றது. பல குறள்களுக்குப் பலவுரைகள் எழுதப்பட்டுள்ளன. புதிய விளக்கங்கள் எழுந்துள்ளன. புத்துரையும் புது விளக்கமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வகை வரவு ஒருநாளும் ஓயாது. ஓரளவு தமிழ் பயின்றார்க்கும் ஆயிரங் குறள்கள் தாமே விளங்கி நிற்கும். இதுவா விளக்கம்? இதுவா குறளின் தலைநோக்கம்? ஓவிய நிலை ஓவியத்தில் ஒரு மாம்பழத்தைக் காண்கின்றோம். மெய்யான ஒரு மாம்பழத்தைத் தின்னுகின்றோம். இவ்விரு நிலைமைக்கும் எவ்வளவு வேறுபாடு? மலையோவியப் பயன் வேறு. மலையப்பன் வேறு. கட்டிப் படத்தின் தன்மை வேறு. கட்டிடத்தின் தன்மை வேறு. இவ்வோவியங்கள் மிகத் தெளிவானவை என்றே கொள்வோம். ஓவியப் பயன் முற்றும் வேறு. பொருட்பயன் முற்றும் வேறன்றோ? மலையோவியம் மலைபோல் கனக்காது. கட்டிட வரைவின் மதிப்பு என்ன? கட்டிடத்தின் மதிப்பு என்ன? பழ ஓவியத்துக்குச் சுவை உண்டா? ஆதலின் ஓவியம் உருவச் சாயலே தவிர உண்மை நிலையில்லை. திருக்குறள் அறங்களம் இத்தகையவே. குறள்கள் நல்ல அறவோவியங்கள், அறவுரைகள். மலையோவியத்தைக் காண்பவனுக்கு மலையையே நேரிற்காணும் உணர்ச்சி வரவேண்டும். கட்டிடப் படம் வரைவதன் நோக்கம் அதுபோல் ஒரு கட்டிடம் கட்டவன்றோ? விளங்கியது, விளங்கியது என்று நாம் சொல்லும்போது ஒரு வகை விளக்கத்தையே எண்ணிப் பேசுகின்றோம். ஒருவர் சொல்லும் கருத்தோ, ஒரு நூலின் கருத்தோ தெளிவாகப் புரிவதை விளங்கிற்று என்கின்றோம். உவமை, ஒப்புதல், மேற்கோள் எல்லாம் இப்பிரிவின் கூறுகளாகும். இதனை மொழி விளக்கம் என்று கூறலாம். மொழி விளக்கம் வேறு. வினை விளக்கம் வேறு. முன்னது ஒவியநிலை; பின்னது உண்மை நிலை; கசடறக் கற்றல் ஓவிய நிலை; கற்றபின் நிற்றலே உண்மை நிலை. ஓதியும் உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தல் ஓவியநிலை; தானடங்குதலே உண்மை நிலை. உண்மை நிலை திருக்குறளை ஓவிய நிலையில் வைத்தே கற்றும் கற்பித்தும் பாராட்டியும் வருகின்றோம். உண்மைநிலை என ஒன்று உண்டு என்பது நமக்குப் படவில்லை. இவ்வுண்மைநிலை என்பது என்ன? மருந்துக்கடையில் பன்மருந்துகள் இருந்தாலும், தன் உடல்நிலைக்கு வேண்டிய மருந்தினையே பெறுவர். செய்துணிக் கடையில் அளவுப்பல் சட்டைகள் இருந்தாலும், தன் உடலளவுக்குத் தக்க சட்டையையே எடுத்துக்கொள்வர். வண்ணத்துணி பல இருந்தாலும் தன்மேனி நிறத்தோடு வைத்துப் பார்த்துத் துணிவண்ணம் தேர்குவர். கடைவீதியில் நிரம்பிய பல்பொருள் குவிந்திருந்தாலும் தன் கைப்பொருளுக்கு ஏற்பவே சரக்குக்களை வாங்கிக் கொள்வர். இதன் அடிப்படை யாது? எதனையும் தன்னிலையில் வைத்துக் காண்பது. தன்னிலைப் பார்வை என்ற கண்ணில்லாவிடின், தனக்கும் பரந்த உலகிற்கும் என்ன தொடர்பு ஏற்படும்? வாழ்வு வளமும் வாழ்வு விரிவும் வேண்டுமேல், எதனையும் தன்னொடு பொருத்தியும் ஒட்டியும் இணைத்துக் காணும் எண்ணோட்டம் - தன்னோட்டம் வேண்டும். இவ்வோட்டம் உடையவரே எண்ணிய எண்ணியபடி எய்துவர். பரந்து செல்லும் நீரை வேர் தன் பக்கம் உறிஞ்சிக் கொள்கின்றது. பல்வளம் உடைய மண்ணில் பயிர் தனக்குரிய மண்ணாற்றலைத் தேர்ந்து வளர்கின்றது. `தன் என்பது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் கயிறு. தன்னிலைப் பார்வை என்ற கயிறு அறுந்தவன் உலகக் குருடன் ஆகின்றான். தன்னிலைப் பார்வை வேறு, தன்னலப் பார்வை வேறு என்பது உணரத்தகும். தன்னிலைப் பார்வை திருக்குறளில் மொழி விளக்கத்தையே கண்டும் காட்டியும் வரும் நாம் இனி தன்னிலைப் பார்வையைக் காணுமாறு முயலவேண்டும் இம் முயல்வு ஒவ்வொருவரின் தனி முயல்வாகும். தன்வாய் திறவாவிட்டால் தன் வயிறு நிரம்பாதது போலத் தனிப்பார்வை யில்லா விட்டால், தன்வளம் இராது. இந்நிலையில் பின்வரும் குறள்களை முதலிற் காண்போம். தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க தூங்காது செய்யும் வினை. (672) செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும். (466) எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு அவ்வது உறைவது அறிவு. (426) இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல. (517) ஒல்லும் வகையான் அறவினை யோவாதே செல்லும்வாய் எல்லாம் செயல். (33) உப்பமைந் தற்றாற் புலவி; அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். (1302) தாமதித்துச் செய்வதைத் தாமதித்துச் செய்க; உடனே செய்ய வேண்டியவற்றை உடனடியாகச் செய்க என்ற கருத்தில் என்ன விளங்கிற்று? எந்தக் காரியம் தாமதத்திற்கு உரியது? எது உடனே செய்தற்கு உரியது என வள்ளுவர் கூறியிருக்கின்றாரா? கூறத்தான் முடியுமா? எந்தக் காரியம் என்ற பகுத்தறிவு அவனவனுக்கு வேண்டும். எவை செய்யத் தக்கவை, எவை செய்யத் தகாதவை, எப்படிச் செல்லுகின்றது உலகம் என்று தெரிவது அவனவன் நிலையைப் பொறத்தது. `இதனை இதனான் இவன் முடிக்கும் என்ற குறளானது வாய்பாடு காட்டும் இலக்கண நூற்பா நடையில் அமைந்துள்ளது. `இ என்ற சுட்டுக்கள் காட்டும் உண்மைப் பொருள்கள் யாவை என்று வரையறுத்தல் யாராலும் முடியுமா? அவனவனே தன் நிலைக்கு ஏற்பக் கண்டு கொள்ளும் மதி நுட்பம் வேண்டும். அறவினை, ஒல்லும் வகை, செல்லும் வாய் என்பன செய்பவன் தெளிவுக்கு விடப்பட்டவை. புலவி, உப்பளவு, உப்பின் மிக்களவு என்பவை அவரவர் அறிவளவை ஒட்டியன. வலியறிதல், இடனறிதல், கால மறிதல், சிற்றினஞ் சேராமை, கூடா நட்பு, தீ நட்பு, பொறையுடைமை, பயனில சொல்லாமை என்ற அதிகாரங்கள் எல்லாம் கற்பவன் பகுத்தறிவுக்கு விடப்பட்டவை. `கற்பவை கற்க `அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, நிலையின் இழிந்தக் கடை `வாழ்வாங்கு வாழ்பவன் `போற்றின் அரியவை போற்றல் `செயற்கரிய செய்வார் `அளவறிந்து வாழதான் `யாதனின் நீங்கியான் `உலகத்தோடு ஒட்ட ஒழுகல் `காலத்தினால் செய்தநன்றி `இரத்தக்கார்க் காணின் `அளவறிந்து உண்க என வரும் நூற்றுக்கணக்கான வள்ளுவத் தொடர்களின் விளக்கம் உரைகளுக்கு உட்படுமா? அவனவன் நிலைக்கு ஏற்ப வினைக்கண் வேறுபடும். குறளறங்கள் வரையறுக்கப்பட்டுள. ஆனால் அவ் வறத்துக்கு உரிய நிகழ்ச்சிகள் வரையறைக்கு உட்படுவனவல்ல. இன்று மிக விரைவாகச் செய்த காரியத்தை நாளை மிகத் தாமதமாகச் செய்ய வேண்டி நேரிடும்; பலநாள் தாமதமாகச் செய்ய நேர்ந்தாலும் நேரும்; கைவிட வேண்டி நேர்ந்தாலும் நேரும். இவ்வினை நுட்பத்தை வரையறுக்க முடியுமா? அறத்தின் செசயல் அவனவன் அறிவுத் திறத்தைப் பொறுத்தது. அதற்குச் செயற்பயிற்சி வேண்டும். ஒவ்வொருவரும் தன்னுணர்வைத் தன்னெண்ணத்தைத் தன் போக்கை அடிக்கடி நினைத்துப் பார்க்கவேண்டும் எனப் பல இடங்களில் வலியுறுத்துவர் வள்ளுவர் இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக; தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (539) வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின் மெலியார்மேற் செல்லும் இடத்து. (250) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப்பெறின். (540) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். (505) திருக்குறளைப் பொது பொது என்று சொல்லிச் சொல்லி வாளிருந்தும் பேடியானோம், வாயிருந்தும் ஊமையானோம். ஊருணி பொது என்றாலும் எல்லா உயிர்க்கும் ஒரு பொது வாய் உண்டோ? காற்று பொது; எல்லா உயிருக்கும் ஒரு பொது மூக்கு உண்டா? இவ்வாறே பொது உடம்பு, பொதுவுயிர் என்றெல்லாம் உண்டு கொல்? திருக்குறள் ஒவ்வொருவர் வாழ்விலும் பயன்படவேண்டும்; தற்பார்வை வேண்டும். ஒவ்வொரு குறளும் தனக்கு எவ்வகையிற் பொருந்துங்கொல் எனவும் தனக்குப் பொருந்தும் குறள் எதுகொல் எனவும் அறிவு நாட்டம் வேண்டும். குறள் விளக்கம் என்பது தன் வினை விளக்கம். வினைவிளக்கம் என்பது தன் அறிவுப் பார்வை. வள்ளுவர் தன் நூலைக் கற்பவனிடத்து ஒன்றையே எதிர்பார்க்கின்றார். அவ்வொன்று இருந்தால் எல்லாம் உண்டாகுமாம். அவ்வொன்று இல்லையேல் எல்லாம் இல்லையாகிவிடுமாம். அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். (430) வள்ளுவர் நம்மிடம் எதிர்பார்ப்பது பகுத்தறிவு, தன்னறிவு, தன் விலையறிவே. தன்னறிவுடையார் வாழ்வாங்கு வாழ்வர்; தன்னறிவில்லார் வீழ்வாங்கு வீழ்வர். 13. நம்பிக்கை நூல் பலருக்குஆராய நூல் வேண்டும், சொற்பொழிவாற்றக் கருத்து வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றவில்லை. எல்லோரும் வாழவேண்டும், எப்படி வாழ்விப்பது என்ற தலையாய நோக்கமே திருக்குறட் பிறப்பிற்குக் காரணம். இந்நோக்கம் எல்லாக் குறள்களிலும் வெளிப்படக் காணலாம். மிகக் கீழானார்க்கும் உயர்வுண்டு இயல்பாகவுள்ளவர்க்கும் மேலுயர்வு உண்டு; மிகவுயர்ந் தார்க்கும் மேன்மேலுயர்ச்சியுண்டு என்ற நம்பிக்கையைத் திருக்குறள் நமக்கு ஊட்டுகின்றது. தாழ்ந்தாரைப் பார்த்துச் சோர்வடைய வேண்டாம் எனவும். உயர்ந்தாரைப் பார்த்து அமைதியடைய வேண்டாம் எனவும் ஊக்கமும் ஆக்கமும் தருவது திருக்குறள். எல்லார்க்கும் பொதுவான அறங்களைக் கூறுவது குறள் என்று சொல்லி வருகின்றோம். இது எவ்வளவு தவறான கருத்து? எவ்வளவு வீழ்வான கருத்து? பொது அறம் கூறுhது அவரவர்க்குப் பொருத்தமான அறங்கூறுவதே குறள். இதுவே குறளின் தனிச்சிறப்பு. பொதுவறம் செயற்படுமா? பொதுமடம் துப்புரவுப்படுமா? “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்” என்று பொருள் நிலைக்கு ஏற்ற அறம் பாரதியார் கூறியிருப்பதை அறிவோம். அதுபோல் உலகுபுகழ் வள்ளுவர் ஒவ்வொரு வரையும் தனித்தனியாக முன்னேற்ற வேண்டி அவரவர் செய்வதற்கு ஏற்ற அறங்கூறியுள்ளார். அறத்திற்காக அறம் எழுதவில்லை அவர். இவ்வுண்மையை இப்போது நாம் தெளிந்து வருகின்றோம். யாரையும் முன்னேற்றிவிட வல்லது முப்பால் என்பதனை ஊரறிய உலகறியத் தெளிவிக்க வேண்டும். `ஏன் நிலைக்கு ஏற்ற அறம் இந்நூலில் உண்டு; ஆதலால் எனக்கும் முன்னேற்றம் உண்டு என்ற மெய்ந் நம்பிக்கையோடு திருக்குறளைப் படியுங்கள். அறம் அறம் எல்லா மக்களும் செய்ய வேண்டிய கடமை. எனினும் இப்படிச் செய்வதுதான் அறம், இவ்வளவு செய்தாற்றான் அறம் என வரம்பு கட்டலாமா? வள்ளுவர் அறம் வலியுறுத்தினாரேயன்றி அதற்கு ஓர் அரண் கட்டவில்லை. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல் (33) இக்குறளில் அவர் நெகிழ்ச்சியைப் பாருங்கள். ஒல்லும் வகையான் எனவும், செல்லும்வாய் எனவும் அறஞ்செய்வான் நோக்கத்திற்கு எவ்வளவு தாராளமாக விட்டுக் கொடுக் கின்றார்? தலைமேல் புல்லுக்கட்டை இறக்கி உதவுவதும் ஆட்டின் கால் முள்ளை அணைத்து எடுப்பதும், முதியோர்க்கு இடங்கொடுத்து இளையோர் எழுந்து நிற்பதும், இவ்வூர்க்குச் செல்வது இவ்வண்டியா என வினாவினார்க்குச் சலிப்பின்றி அறிவுறுத்தலும் எல்லாமே சிறு வினையாயினும் அற வினையல்லவா? வள்ளலிடம் சென்றான் வறியனாய்த் திரும்பான்; வள்ளுவரைக் கற்றான் வாழாதிரான். வள்ளல் எப்படியும் கொடுப்பான்; வள்ளுவர் எப்படியும் வாழ்விப்பார். வாழ்வின் உயர்விற்கு இன்னவளவு பொருளாதார அடிப்படை வேண்டும் எனப் பலர் மயங்கி எண்ணம் தடுமாறிச் சோர்வடைகின்றனர். உள்ள நிலையை மேலும் குள்ள நிலையாக்கிக் கொள்கின்றனர். உயர்வுக்கப் புறவடிப்படை வேண்டாம் என்பது வள்ளுவம். உயர்வாக வேண்டும் என்றால், வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்; அவ்வெண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணவேண்டும்; எண்ணப் பித்து வேண்டும். இதுவே உயர்வுக்கு வள்ளுவர் காட்டும் நெறி. உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். (592) எந்தப் பொருளடிப்படை வேண்டும் என நாம் நினைக்கின்றோமோ அதனை வள்ளுவப் பேராசிரியன் உடன்படவில்லை. பொருளோ தகரக்கூடிய அடிப்படை என இகழ்வதைக் காணுங்கள். உலகில் பொருளுடையாரெல்லாம் உயர்ந்து விடவில்லையே. பொருளிலாரெல்லாம் தாழ்ந்து விடவில்லையே. பொருளாளர் தாழவும் பொருளிலார் உயரவும் காண்கின்றோம் ஆதலால் உதவ வேண்டுமென்ற ஊக்கமே நல்வாழ்வுக்கு அடிப்படை என்பர் ஆசிரியர். இதனைவிட உயர்வுக்கு எளிய நெறி காட்டமுடியுமா? திருக்குறள் காட்டும் வழி ஏற்ற நெறி மட்டுமன்று; செய்தற்கு எளிய நெறியுமாகும். பொருள் திருக்குறளில் பொருட்பாலே பெரும்பால். இப்பாலில் கூறப்படும் அரசியல் நெறிகள் நடைமுறைக்கு உகந்தவை. முடியரசு, குடியரசு, படையரசு என்ற வகைக்கு உட்பட்டு வள்ளுவர் அரசியல் வகுக்கவில்லை. நாடென்றால் அதற்கோர் நல்லரசு வேண்டும்; அது வல்லரசாகவும் இருத்தல் வேண்டும் என்பதுவே வள்ளுவ அரசியல். படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. (381) இது பொருட்பாலின் முதற்குறள். அரசியல் நெறி பேசும் முதற் குறளிலேயே படை என்ற சொல்லை முதலாவதாக வைத்துப் பாடுகின்றார் வள்ளுவர். படையற்றது அரசாகாது என்ற பேருண்மையை இதனைக் காட்டிலும் வேறு வகையான் அறிவுறுத்த முடியுமா? தமிழறிஞர் - எவ்வளவோ நூற்றாண்டுக்கு முன்னர் வலியுறுத்தியிருந்துங்கூட, சீனப்படை யெடுப்புக்குப் பின்னரேதான் படையின் இன்றியமையாமையை நாம் உணர்ந்து கொண்டோம். அரசு வினையாளரிடம் கையூட்டை எங்ஙனம் ஒழிப்பது என்று நம் இந்தியத் தலையரசும் உறுப்பரசுகளும் என்றும் மும்மரமாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். பல பல குழுக்களைப் புதுவதாக அமைக்க எண்ணுகின்றன. இக் குழுக்களுக்குள்ளும் கையூட்டு நுழையாது என்று யார் உறுதி கூறமுடியும்? கையூட்டைக் கண்டுபிடிக்க வழி செய்தலைக் காட்டிலும் கையூட்டு நிகழாதவாறு அலுவல் நெறிகளை அமைப்பதிற் கருத்துச் செலுத்த வேண்டும். இது பற்றி அரசியற் சான்றோராகிய வள்ளுவர் யாது கூறுகின்றார்? நாடொறும் நாடுக மன்னன்; வினைசெய்வான் கோடாமை கோடா துலகு (520) நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் (553) மக்களின் வேண்டுகோள் தூங்காதபடியும், திட்டங்கள் காலங் கடவாதபடியும் உடனுக்குடன் செய்யப்படுகின்றனவா என்று மேலவர்கள் தம் கீழவர்களை நாள்தோறும் கவனிக்க வேண்டும் என இடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர். தாமதமின்றிக் காரியம் நடக்குமென்றால் கொடுக்க யாருக்குத்தான் கைந்நீளும்? இன்னும் ஒன்று வள்ளுவப் பெருமான் சொன்னபடி செய்தால், சிலவகைக் கையூட்டுக்கள் ஒழிந்துபோம் என்று நம்பலாம். காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (386) இன்று பெரிய வினைஞர்களைப் பார்க்க வேண்டுமென்றால் பணியாளன் அருள்வேண்டும். எழுத்து மூலம் சில எழுதினாலும் அவை மேலவர் பார்வைக்கு எட்டுமென்று சொல்ல முடியுமா? கட்டில் எடுத்து வைத்தாற்றானே கண்ணுக்குப் புலப்படும்? ஆதலின் அமைச்சர்களும் அமைச்சரனையவர்களும் நாள்தோறும் அரைமணிநேரமோ வாரத்தில் ஒரு பொழுதோ தம் அலுவலகத்திற்கு வெளியே வந்து தடையின்றி யாரையும் பார்க்க இசைவது, குறைகேட்பது, முறை காண்பது என்று வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் அங்ஙனம் மிக்க அன்பும் நேரான எளிமையும் இருக்குமாயின் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்ற வள்ளுவர் பாராட்டு அவர்கட்குக் கிடைக்கும். மக்கள் வாக்கும் மனமாரக் கிடைக்கும். வள்ளுவர் நல்லரசு வேண்டும் நடைமுறையெல்லாம் அறிந்த அரசியல் மேதை. ஆதலின் இந்திய அரசியல் வாழ்வில் செல்வார் அனைவர்க்கும் திருக்குறளறிவு இன்றியமையாதது என்பது வெளிப்படை. இன்பம் உலக நலம் என்பது சமுதாய நலம். சமுதாய நலம் என்பது இல்லற நலம். இல்லற நலம் என்பது கணவன் மனைவியின் காதல் நலம். காதல் சிறவாவிட்டால் ஞாலத்தில் எத்துறையிலும் எப்பண்பும் சிறவாது. எம்முயற்சியும் விழலுக்கு இறைந்த நீராகிவிடும். உலகிடை வேறு வகையால் வரும் இன்பத்திலும் காதலர் தம் இன்பம் சிறந்தது ஐயமில்லை. ஆனால் வேறு வகையால் வரும் துன்பத்திலும் காதலர்களுக்குள் வரும் துன்பம் கொலையனைய தன்றோ? காதலர்தம் வேற்றுமை அறத்தைக் கெடுக்கவும் அரசியலைக் கெடுக்கவும் காண்கின்றோம். ஒருவர் பொறை இருவர் நட்பு என்பது குடும்பத்தின் தலையாய பண்பு. உயிரொன்று என இலக்கியம் பாராட்டும் காதலர்களுக் குள்ளும் நீண்ட வாழ்நாளில் நெஞ்சு பொறுக்கமாட்டாச் சில பிணக்குகள் நிகழவே செய்யும். மனப்பூசல்கள் வஞ்சகத் தாலன்றி, வாய் வார்த்தையால் வளரவே செய்யும்; சில சமயம் தடிக்கவும் செய்யும். அப்போது காதலின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ளல் என்பது பொறுத்துக் கொள்ளுதலாகும். பொறுத்தக் கொள்ளாதார் புரியாதவரே. பிணக்கைப் புரிந்து கொண்டார் இன்பப் பெருமை எய்துவர். உப்பமைத் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். (1302) பிணக்கம் அளவாகுக, மிகுதியாக்க வேண்டாம் என்று இல்லறப் பெருமகனாராகிய வள்ளுவர் காதலர்களுக்கு நுண்ணிய நாகரிக முறையில் புலப்படுத்துவர். அறம் பொருள் இன்பம் என்ற முத்திற வாழ்விற்கும் எத்திறத்தாலும் வழி காட்டுவது திருக்குறள். 14. நீதி விளக்கம் ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை பாத்திசேர் நல்வழி பண்புலகம் - பூத்த நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக் குறுந்தமிழ் என்றறிந்து கொள். மக்கள் நினைவுகொள்ளுதற் கென்ற சிலமுறைகளைக் கையாளுகின்றோம். வெண்பாவால் தொகைப்படுத்தல் அம்முறைகளுள் ஒன்று. `முருகு பொருநாறு பாணிரண்டு’ என்ற வெண்பா பத்துப் பாட்டினையும், `நற்றிணை நல்ல குறுந் தொகை’ என்ற வெண்பா எட்டுத தொகையினையும், `நாலடி நான்மணி நானாற்பது’ என்ற வெண்பா பதினெண் கீழ்க்கணக்கினையும், `உந்தி களிறு உயர்போதம் சித்தியார்’ என்ற வெண்பா பதினான்கு மெய்ப்பனுவல்களையும் இலக்கியப்பட்டியல் செய்துள்ளன. ஓரின நூல்களை நினைவு கொள்ளவும், ஒன்று படித்தபின் ஒன்றைப் படிக்கவும், நூலகங்களில் இனநூல்களை வரிசைப்படுத்திக் கொள்ளவும், இப்பட்டியல்கள் உதவுகின்றன. அழியாமற் காப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் இம்முறை வழி செய்திருப்பது கண்கூடு. வெண்பா வடிவில் இல்லாவிடினும், ஐம்பெருங் காப்பியம் ஐஞ்சிறு காப்பியம் பன்னிருதிருமுறை என்ற தொகைத் தொடர்கள் எவ்வளவோ ஆய்வுச்சுடரைத் தூண்டியுள்ளன. இம் மரபுப்படி ஆத்திசூடி கொன்றைவேந்தன் மூதுரை நல்வழி உலகநீதி நறுந்தொகை நன்னெறி என்ற ஏழு அற நூல்களும் ஓரினமாக எனது மேலை வெண்பாப் பட்டியலில் தொகை பெற்றுள. எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண்கீழ்க்கணக்கு என்றாற் போல இவற்றையும் ஏழிளந் தமிழ் என வழங்கலாம் என்பது என் கருத்து. ஏழிளந்தமிழ் கடவுள்வாழ்த்துக்கள் நீங்கலாக 403 செய்யுள் கொண்டது. ஓரடிச் செய்யுள் 245; வெண்பா 110; எண்சீர் விருத்தம் 12. ஈரடி முதல் ஆறடிவரை செய்யுள் 36. ஆத்திசூடி கொன்றைவேந்தன் முழுதும் ஓரடிச்செய்யுட்கள். மூதுரை நல்வழி நன்னெறி மூன்றும் வெண்பா யாப்பின. உலகநீதி எண்சீர் விருத்த யாப்புடையது. நறுந்தொகை ஓரடி முதல் ஆறடிவரை விரவியது. கடவுள் வாழ்த்துக்கள் 1. ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே. 2. கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோ மியாமே. 3. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. 4. பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா. 5. உலக நீதிப் புராணத்தை யுரைக்கவே கலைக ளாய்வருங் கரிமுகன் காப்பு. 6. பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன் சரணவற் புதமலர் தலைக்கணி வோமே. 7. மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே. ஏழு கடவுள் வாழ்த்தும் கணபதி மேலவாக உள்ளன; எனினும் `ஆத்தி சூடி அமர்ந்த தேவன் என்ற தொடர் சிவனைக் குறிப்பதாகவும் கொள்ள இடங்கொடுக்கும். நூலகத்துள் சிவன் திருமால் வழிபாடு சொல்லப்படுகின்றது. தெய்வம் இகழேல் என ஆத்திசூடியும், தெய்வம் சீறிற் கைதவம் ஆளும் எனக்கொன்றைவேந்தனும், தெய்வத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம் என உலக நீதியும் பொதுமைப்படத் தெய்வ நம்பிக்கை ஊட்டலும் காண்க. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நன்னெறி, உலகநீதி இவற்றின் கடவுள்வாழ்த்துக்கள் தத்தமக்கு உரிய யாப்பில் அமையவில்லை என்பது காணத்தகும். நறுந்தொகை பலவடியது ஆதலின் அதன் வாழ்த்து ஈரடியாக இருப்பது முரணில்லை. மூதுரை நல்வழி வாழ்த்துக்கள் வெண்பாவில் இருப்பது பொருந்தும். உலகநீதியின் ஆசிரியர் முருகவேள்பாற் பெரும்பற்றினர். மேலும் உலகநீதி என்ற நூற்பெயரைப் பன்னிரண்டாவது விருத்தத்தில் சொல்லியும் உள்ளார். ஆதலின் அதன் கரிமுகக் கடவுள் வாழ்த்து ஐயத்திற்கு உரியது. இவ்வேழு பாடல்களும் ஒரு வகையில் வெண்பாவின் பாற்படும். ஈரடியுடைய ஐந்து வாழ்த்தும் குறள் வெண் செந்துறை என்று வெண்பாவின் இனமாக கொள்ளவேண்டும். உலகநீதி நன்னெறி என்பவை ஆசிரியன் வைத்த பெயர்களே. கடவுள்வாழ்த்திற் குறிப்பிட்டபடி `நன்னெறி வெண்பா என்பதே பெயராகி இருந்து பின்னர்க் குறைந் திருக்கலாம். பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பதனை ஒப்புநோக்குக. கடவுள்வாழ்த்தின் முதற்சீர்களான ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்பன அந்நூற் பெயர்கள்ஆயின. கொன்றை வேய்ந்தோன் என்பது கொன்றைவேந்தன் என மரூஉ வாயிற்றுப் போலும். `வாக்குண்டாம் என்ற கடவுள்வாழ்த்தின் முதற்சீரும் மூதுரைக்கு ஒரு பெயராய் வழங்குதல் உண்டு. `நற்றிமிழ் தெரிந்த நறுந்தொகை என்றபடி நறுந்தொகை என்பது அதிவீரராமர் வைத்த பெயர். ஆயினும் `வெற்றிவேற்கை என்று தொடங்கும் பாயிரத்தின் முதற்சீரும் நறுந்தொகைக்கு ஒரு பெயராய் வழங்கும். இப்பாயிரம் பிறராற் பாடப்பெற்றது. நல்வழிப்பெயர் கடவுள் வாழ்த்திலோ நூலகத்தோ இல்லை; வழி வழி வரும் பெயராகும். உலகநீதி ஓரளவு உலகநாதன் என்னும் ஆசிரியன் பெயரோடு தொடர்புடையது; மூதுரை, நல்வழி, நன்னெறி, நறுந்தொகை என்பன பொருள் பற்றிய காரணப் பெயர்கள். நறுந்தொகை என்று பெயர் இருந்தாலும், அதன் செய்யுட்கள் தொகுப்பில்லை. ஒருவர் முறையாகப் பாடியனவே நல்ல அறங்களையெல்லாம் ஒரு சேரக்கொண்டிருத்தல் என்பது கருத்து. ஒரு நூலுக்கு முதற்சீராலும் பெயராகலாம் என்ற வழக்கு ஆத்திசூடி கொன்றைவேந்தன் காலத்திலிருந்து வந்தது என்று கொள்ளவேண்டும். ஏழிளத் தமிழ் சிறுவயதிற் கற்பிக்கவென்றே அறமும் தமிழும் தழுவ நாற்பெரும் புலவர்களால் இயற்றப்பட்டவை. இவை பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பல அறநூல்களுக்கு அறத்தரமோ தமிழ்த்தரமோ குறைந்தன வல்ல. ஒரு வெண்பாவில் மூவறங்கூறும் திரிகடுகமும், நாலறம் மொழியும் நான்மணிக்கடிகையும், ஐயறஞ் சொல்லும் சிறுபஞ்ச மூலமும் ஆறறங்கரையும் ஏலாதியும் ஒருபாவிற்குள் இத்தனை யறங்கள் வைப்பதெனப் பொருள் வேலி செய்து கொண்டமையின் இலக்கிய ஓட்டத்துக்கு அவ்வளவு இடம் கொடுக்கவில்லை. கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும் தன்மையி ளாளர் அயலிருப்பும் இம்மூன்றும் நன்மை பயத்தல் இல. (திரி.100) இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடில் வனப்பும் நடைவனப்பும் நாணில் வனப்பும் - புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு. (ஏலாதி. 74) இவ்வாறு அடுக்கிய அறம் இந்நூல்களின் போக்கு ஆதலின் உவமையும் பிறவும் எளிதிற் புக இயலவில்லை. இங்ஙனம் அன்றி மூதுரை நல்வழி நன்னெறியில் உவமைகள் மலிந்துள்ளன. ஒவ்வொரு வெண்பாவும் ஒரறத்தின் விளக்கமாக உள்ளது. கொன்றைவேந்தன் நறுந்தொகை போல ஓரடியுடைய முதுமொழிக் காஞ்சியும், நல்வழி நன்னெறி போல நாற்பது செய்யுளுடைய இன்னாநாற்பது இனியவை நாற்பதும் பதினெண்கீழ்க்கணக்கில் இல்லாமல் இல்லை. ஒளவையாரின் நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு தொகுக்கப்பட்ட காலத்துத் தோன்றியிருக்குமேல் அக்கணக்கில் இடங்கொண்டிருக்கும். தொன்மையவாம் எனுமெவையும் நன்றாகா இன்று தோன்றியநூல் எனுமெவையும் தீதாகா என்பர் உமாபதி சிவனார். ஆதலின் முன்னைத் தொகையில் சேராமையினால் ஏழிளந்தமிழ் பெற்றி குன்றியவையல்ல. சிவப்பிரகாசர் நன்னெறி இயற்றிய சிவப்பிரகாசர் துறவிப்புலவர். சீகாளத்திப்புராணம் பிரபுலிங்கலீலை நால்வர் நான்மணிமாலை திருவெங்கைக் கோவை என்றின்ன இருபது நூல்களின் ஆசிரியர். கற்பனைக் களஞ்சியம் என்று புலவருலகம் இவரைப் பாராட்டுவது உண்டு. இப்புலமகன் தம் முதிர்ந்த புலமையில் இளைஞர் நன்னெறியை யாத்தார். பிறர்க்கு எந்நிலையிலும் இயன்ற உதவி செய்யவேண்டும் என்பது நன்னெறி முழுதும் ஓடிக்கிடக்கும் சாரக் கருத்து. நெறிகளை விளக்கப் பிரகாசர் ஆண்ட உவமைகள் இருதிறத்தவை. உடலுறுப்புக்களை உவமைப் படுத்துவது ஒரு திறம். பூவிற் பொலிகுழாய் பூங்கை புகழவோ நாவிற்கு தவும் நயந்து. மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண். முளைக்கும் எயிறு முதிர்சுவைநா விற்கு விளைக்கும் வலியனதாம் மென்று. மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேற் கைசென்று தாங்கும் கடிது. நல்லவர்கள் பாராட்டாதார்க்கும் முற்பட்டு உதவுவர்; கை புகழை எதிர்பாராமல் நாவிற்கு உதவவில்லையா? பிறர் படும் துன்பம் பார்க்கப் பொறாமல் பெரியோர் வருந்துவர்; ஏனை உறுப்புக்கள் உறும் நோய்க்குக் கண்கலங்கவில்லையா? கற்றோர் கைம்மாறு வேண்டாமல் முடிந்த உதவிகளை ஆற்றுவர்; பற்கள் கடின உணவுகளை மென்று எளிமைப்படுத்தி நாவினுக்கு வழங்கவில்லையா? உடல்மேற் படவரும் அடியை இடைமறித்துக் கை விரைந்து நீக்குவதுபோல, மற்றவர் இடுக்கண்களைப் பெரியவர்கள் குறுக்கிட்டுக் காப்பர். பிறவுறுப்புக்கள் அணிபூண்டாலும் அணிவேண்டாக் கண்ணுக்கு ஈடாகா எனவும், ஒன்பான் வழியுடைய உடம்பில் வெளிப்போகாது உயிரிருப்பது புதுமை எனவும், கண் இரண்டானாலும் காண்பது ஒரு பொருளையே எனவும் மெய்சார் உவமைகள் நனி கூறுவது சிவப்பிரகாசரின் தனியியல்பாகும். உடம்பிலாதார் யாருமிலர் ஆதலின் தற்சார்ந்த இவ்வுவமைகள் குழந்தைகட்கு எளிதிற் புரியும் என்பதில் ஐயமில்லை. மெய்சார் உவமமே யன்றிக் கதைகளையும் உவமப்படுத்தல் ஆசிரியரின் இன்னொரு திறம். சாக்கிய நாயனார் கல்லெறிவு, மன்மதன் மலரெறிவு, அகத்தியர் கடல்குடிப்பு, சிவன் சடைமேல் பாம்பிருப்பு, மேருமலை வளைவு, விந்தமலை தாழ்வு முதலிய கதைகள் உவமைகள் ஆகின்றன. இக்கதையறிவு குழந்தைகள் பின்னர் சைவப் புராணங்களைப் படிக்கத் துணைசெய்யும் என்ற நோக்கொடும் ஆசிரியர் சொல்லியிருக்கலாம். கன்றுவிட்டுப் பால்கறத்தல், நெல்லில் உமிநீக்கம், எறும்பூரக் கற்குழிதல் என்றின்ன இயல்புவமைகளும் கலந்துள. உவமை வகை எதுவாயினும், குழந்தை நிலையை உட்காண்டே நன்னெறி எழுதப்பட்டது என்பது தெளிவு. இங்ஙன் எழுதுமுறையிலும் இன்னொரு திறம் இவர்பால் உண்டு. எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பாரோ? - பைந்தொடீ நின்று பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்க் கன்றும் உதவுங் கனி. எழுத்தறிவார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம்; - எழுத்தறிவார் ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வீயுஞ் சுரநீர் மிகை. இவ்வாறே முன்னிரண்டு அடியில் அறமும் பின்னிரண்டு அடியில் விளக்கமும் நாற்பது வெண்பாவிலும் வைப்பு முறைமாறாது வருகின்றன. பொருளும் உவமையும் இடமாறாது கிடத்தல் குழந்தைக்கல்விக்கு எளிது என்று கருதினார் போலும். வினாக்கேட்பதும் கல்விமுறைகளுள் ஒன்று. இம்முறையால் கேள்வியைப் புரிந்துகொண்டனரா என்பதும் பெறப்படும்.. உய்த்துணர்ந்து சொல்லும் பயில்வும் வளரும். - வெள்ளம். தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு. - நனிவிளைவில், காயினும் ஆகுங் கதலிதான் எட்டிபழுத் தாயினும ஆமோ அறை. - வெள்ளம். வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் பெருகுதற்கண் என்செய்வார் பேசு. வெண்பா வினாநடையாக இயங்குவதும், விளம்பு அறைபேசு என்றாங்கு வியங்கோளாக இறுவதும் ஆசிரியர் கையாண்ட கல்வி முறைக்குச் சான்று. இருவகை யுவமம். உவமைக் கிடக்கை வினாவிடை முறை என்றிவற்றைச் சிவப்பிரகாசர் முறை அல்லது சிவப்பிரகாசம் என்று இக்காலத்துக் கேற்பக் குறியிட்டால் தவறில்லை. அதிவீரராமர் அதிவீரராம பாண்டியர் அரசப் புலவர். நைடதம் கூர்ம புராணம் இலிங்க புராணம் திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி என்றின்ன பன்னூலாசிரியர். குழந்தைக்கென்றே பாடிய இவர்தம் நறுந்தொகை புதிய பல அமைப்பு உடையது. பாயிரம் பாராட்டுவது போல, மெய்யாகவே `நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தான். சங்கப் பாண்டியரின் புறநானூற்றுச் செய்யுட்களின் கருத்துக்கள் நறுந்தொகை யில் ஒளிவிடுகின்றன. யார்க்கும் கல்வியின் இன்றியமையாமையை வன்புறை செய்தவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். அவன் கொள்கையை மீண்டும் வலியுறுத்த எண்ணிய அதிவீரராமர் பத்தடிப் புறப்பாடலைக் குழந்தை கொள் நிலைக்கேற்ப ஒன்பதடியாக ஐந்து செய்யுட்களாக யாத்தார். புறநானூறு உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னாது அவருள் அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. நறுந்தொகை 1. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே; 2. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே; 3. நாற்பாற் குலத்தின் மேற்பால் ஒருவன் கற்றில னாயிற் கீழிருப் பவனே; 4. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்; 5. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும். பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே என்ற நெடுஞ்செழியன் கருத்தினைப் பிச்சை புகினும் கற்கை நன்றே என வலியுறுத்துவர் அதிவீரராமர். யாது கொடுத்தாயினும் படிக்கவேண்டும் என்ற புறக்கருத்தினும் பிச்சை எடுத்தாயினும் படிக்கவேண்டும் என்ற நறுந்தொகைக் கருத்து ஏழை எளியவர்க்கும் கல்வியை வற்புறுத்தலை அறியலாம். `எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று நூலின் முதற்செய்யுளைத் தொடங்குவதனால் அதிவீரராமரின் கல்விச் சிந்தனை பெறப்படும். இப்பாண்டிப் புலவர் அறங்களைச் சொல்லும் போக்கில் நிரலினிமை காணப்படும். கல்விக்கழகு செல்வர்க்கழகு வேதியர்க்கழகு மன்னர்க்கழகு வைசியர்க்கழகு உழவர்க்கழகு மந்திரிக்கழகு தந்திரிக்கழகு உண்டிக்கழகு பெண்டிர்க்கழகு குலமகட்கழகு விலைமகட்கழகு அறிஞர்க்கழகு வறிஞர்க்கழகு எனப்பதினான்கு அழகு வரிசைகள்; பெரியரும் அல்லர் சிறியரும் அல்லர் பிள்ளைகள் அல்லர்; உறவினர் அல்லர் பெண்டிரும் அல்லர் என அல்லர் வரிசை ஐந்து; யானைக் கில்லை பூனைக்கில்லை ஞானிக்கில்லை சிதலைக்கில்லை முதலைக்கில்லை அறிவிலோர்க்கில்லை நலிந்தோர்க்கில்லை கெட்டோர்க்கில்லை என இல்லை வரிசை எட்டு; அனைவரும் பதரே மூர்க்கனும பதரே வணிகரும் பதரே ஏழையும் பதரே பாராப் பேதையும் பதரே ஏகும் பேதையும் பதரே கொடுக்கும் பேதையும் பதரே எனப் பதர் வரிசை ஏழு; கோற்கஞ்சும்மே புலிக்கஞ்சுமமே பாம்பிற்கு மிகவஞ்சுமே என அஞ்சுவரிசைகள் மூன்று. இங்ஙனம் பல வறங்களை ஒரு பயனிலை நடையிற் கூறிக்காட்டும் இலக்கியர் அதிவீரராமர். இன்னொரு பெற்றியும் இவர் பால் உண்டு. ஓரறத்தை முன்வைத்து அதன் விளக்கமாகத் தொடர்ந்து பல காட்டுக்களை அவரே தருகுவர். ஐம்புலனை அடக்கியவர் தம் ஆற்றலுக்கு வானவர் தலைவன் இந்திரனே சான்று என்று வள்ளுவர் அறமும் விளக்கமும் ஒருசேரக் காட்டுவதையும் ஒப்புநோக்குக. அறம் உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா அறத்தின் விளக்கம் 1. குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலித் தோரூர் நண்ணினும் நண்ணுவர்; 2. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்; 3. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே யழியினும் அழிவர்; 4. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேல்பா ழாயினும் ஆகும்; 5. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசரோ டிருந்தர சாளினும் ஆள்வர் 6. பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநக ராயினும் ஆகும். உடைமை நிலையாதது என்று தாம் சொல்லிய அறத்தை விளக்கு முகத்தான் அரசுடைமை பெருமையுடையமை செல்வமுடைமை பெருமனையுடைமை என்றிவற்றின் அழிவுகளை எடுத்துக்காட்டுவர். யாக்கை இளமை செல்வம் என உள்ளது நிலையா என்று சொல்வதுதான் பொதுவான அறமரபு. அதிவீரராமரோ வறுமையும் நிலையாது எனவும், வறியவர் செல்வராய் அரசராய் உயர்வர் எனவும், புதுமுறையில் அறம் கூறக் காண்கிறோம். பிச்சைக்கார ஒருவனும் அரசளாலாம் என்ற கருத்தால் குடியரசு முறையைக் குறிப்பிற் காட்டுவர் போலும். நறுந்தொகையாசிரியர் சில அறங்களைப் பொறுக்கி யெடுத்து அவற்றைப் பல உலகியல் மேற்கோள்களால் தெளிவு செய்குவர். அறப்பொறுக்கில் புதிய சில அறங்களும் இலங்குகின்றன. இவை நடைமுறை உலகியலைக் காட்டுகின்றன. 1. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே; 2. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின் பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே. 3. பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினாற் மெய்போ லும்மே bம்ய்போ லும்மே; 4. மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே. 5. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் பின்பவட் பாராப் பேதையும் பதரே. சிறியவர்கள் அளவினுங் கடந்து பெரும்பிழை செய்தால் பெரியவர்கள் அதனைப் பொறுக்கமுடியாது என்பது இவர் தம் எச்சரிக்கை. சொல்வன்மையினால் பொய் மெய்யாகத் தோன்றும். மெய் பொய்யாகத் தோன்றும் எனச் சொல் வன்மையை ஒருவாறு இகழ்ந்துரைப்பர். பெண்ணினைப் பேதை என்றல் வழக்கு. பிறந்தகம் விட்டு மனைவியாக வந்தவளைப் பின்பும் பிறந்தகத்துக்கே போகச் சொல்லும் ஆணைப் பேதை என மாற்றியுரைப்பர் அதிவீரர். இவர் அரசராதலின் இளங்கோப்போலத் தம் நறுந்தொகையில் அரசநீதிகளை அழுத்தமாகக் கூறியிருக்கக் காணலாம். குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே கொடுங்கோல் வேந்தனைப் பதர் என்றளவில் சொல்லியொழி யாது மூர்க்கன் என்று வகைபாடுகின்றார். இக்கடுஞ்சொல் அரசப் புலவர் வாயிலிருந்து வருவதால் அவர் தம் நேர்மை விளங்கும். உலகநாதர் உலகநீதி பாடிய உலகநாதரைப்பற்றி வரலாற்றுக் குறிப்பு இல்லை. பாடிய எண்சீர் விருத்தங்கள் பன்னிரண்டே. 61 நீதிகள் உள. மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்று வள்ளுவர் எதிர்மறைபட அறத்துக்கு இலக்கணம் வகுப்பர். வெகுளாமை கொல்லாமை புறங்கூறாமை அழுக்காறாமை பயனில சொல்லாமை என வரும் தலைப்புகளையும் நோக்குக. எதிர்மறையாக அறங்கரைதலும் ஒருமுறை என்பது இன்னா நாற்பது நூலால் போதரும். ஆதலின் உலகநீதியாசிரியர் `ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்’ என்ற நடையை நூன் முழுதும் கையாள்வார். வேண்டா என்ற வினை வடிவே பழைய மரபு. இவரோ `வேண்டாம் என்ற வினைமுற்றை யாண்டும் ஆளுகின்றார். வேண்டாம் என்பது வேண்டா ஆம் என்பதன் மரூஉ. மருந்தென வேண்டாவாம் (942), பணியுமாம், அணியுமாம் (978) என்ற திருக்குறள் நடையில் ஆம் என்ற ஒரு துணை வினைமுற்று மற்றொரு முற்றின்மேல் வருவதைப் பார்க்கின்றோம். இங்ஙனம் வேண்டாவாம் என வந்த தொடர் வேண்டாம் என்று பிற்காலத்துக் குறுகிற்று. நெஞ்சறிவுறுத்தல் என்ற முறையில் அமைந்தது இந்நீதிநூல். குழந்தைகட்கு முழுதும் பொருந்தியநூல் என்று சொல்ல இயலாவிடினும், அவைகள் படிக்கும் எளிய ஓட்டநடையில் இயங்குவன. கடவுள்வாழ்த்து கரிமுகனைப் பற்றி இருந்தாலும், மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே என்ற முருகவணக்கமே நூல் முழுதும் காணப்படு கின்றது. அருந்தமிழால் அறு முகனைப் பாடவேண்டி ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன் உண்மையாகப் பாடிவைத்த உலகநீதி என்பது ஆசிரியரின் வாய்மொழி. ஆதலின் இவர் புறந்தொழா அறுமுக வழிபாட்டினர் என்பது தெளிவு. எனவே கரிமுகக் கடவுள் வாழ்த்து இவர் பாடலா என்ற ஐயத்திற்கு உரியதாகும். உலகநாதர் அறங்களை அழுத்தமாகச் சொல்லும் போக்கினர். அவ்வழுத்தம் காட்ட `ஒருநாளும் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவர். ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம் நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம். இவ்வாறு இன்னும் இச்சொல் பயிலும் அடிகள் பலவுள. புறஞ்சொல்லித் திரியவேண்டாம், பாராட்டித் திரியவேண்டாம். கலகமிட்டுத் திரியவேண்டாம் என்றபடி திரிய என்ற செயவென் வினையெச்சம் பயின்றுவரக் காணலாம். சிறிய நூலாயினும் புதிய அறங்கள் இல்லாமல் இல்லை. நடைமுறைக்கு வேண்டும் அறங்கள் நடைமுறை மொழியில் ஓட்டமாகச் சொல்லப் பட்டுள. வாழாமற் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம் மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம் இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம் கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம் அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் வேண்டாம் என்பது இலக்கண முறையில் வினைமுற்றாக இருந்தாலும் ஆசிரியரின் ஓர் உணர்ச்சி மெல்லிழையாக அதன்கண் ஓடிக்கிடக்கின்றது. வேண்டாம் வேண்டாம் என்று அடிதோறும் வரும் அச்சொல்லில் நெஞ்சே நீதிக்குப் புறம்பாகப் போகாதே என்று தன் நெஞ்சைப்பரிந்து வேண்டிக் கொள்வது போன்ற பணிவுணர்ச்சி புலனாகவில்லையா? தன் நெஞ்சையே விளித்து அதற்கொரு நெஞ்சிருப்பது போல்வைத்து `நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்’ என்று வேண்டும் போது, `தன்னெஞ்சறிவது பொய்யற்க (293) என்ற குறள் மணத்தை நுகர்கின்றோம். ஒளவையார் ஒளவை என்பது யாரும் அறிந்த முதுதமிழ்ப்பெயர். இப்பெயருடைய பெண்புலவர் வழிவழிச் சிலர். சங்க ஒளவை வேறு. ஆத்திசூடி ஒளவை வேறு என்பது தெளிவு. எனினும் அறஞ்சொல்லும் புலமை இருவரிடமும் உண்டு. சங்க காலத்தில் அறங்கள் பிற கருத்துக்களோடு விரவி வரும். அறத்திற்கென்றே தனிப்பாடல் செய்யும் மரபு அரிது. புறநானூற்றில் ஒரு சில தனி அறப்பாடல்களே உள. நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்.187) என்ற அறச்செய்யுள் ஒன்றினை யாத்தவர் ஒளவையார். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற பழமொழியை ஆடவர் எவ்வழி நிலம் அவ்வழி என்று புதுக்குவர். எவ்விடத்தும் உழைத்தால் உயர்வுண்டு என்று நிலங்கடந்த அறம் கரைவர். சங்க ஒளவையும் குழவிமனம் கொண்டவர். அதிகமான்முன் தம்மைக் குழந்தை நிலையில் வைத்துப் பாடியவர். யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா பொருளறி வாரா வாயினும் தந்தையர்க்கு அருள்வந் தனவாற் புதல்வர்தம் மழலை என்வாய்ச் சொல்லும் அன்ன (புறம். 92) ஆத்திசூடியின் ஒளவையார் தமிழ் இலக்கிய வுலகில் புதிய பாதை வகுத்தவர். குழவிகட்கென்றே இலக்கிய வடிவு கண்டவர். அவர்கட்கு வழிவழி தமிழமுது ஊட்டி வரும் அன்னையாவர். ஆத்திசூடி கொன்றைவேந்தன் மூதுரை நல்வழி என்ற நாற்சுவடிகளும் இலக்கண இலக்கிய நெறியில் தனியாய்வுக்கு உரிய எனினும் பொதுப்பட சில சிறப்பினை இவண் காண்போம். `கற்க கசடறக் கற்பவை’ என்ற வள்ளுவர் கற்கவேண்டும் நூல்களின் பெயர்களை விதந்து குறிக்கவில்லை. குழந்தைகட்கு இன்னின்னவை கற்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுபவர் ஒளவையார். துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத்தமிழ் மூன்றுந் தா. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். சங்க இலக்கியமும் அறநூல்களும் சமயநூல்களும் கற்கத் தக்கவை என்று வழிப்படுத்தியிருப்பதை அறிகின்றோம். அதற்கேற்ப இந்நூல்களின் கருத்துக்கள் ஒளவை அற நூல்களில் மலிந்து கிடக்கின்றன. ஒளவை நூல்களைக் கற்றாலே பழம் பனுவல்களின் அறிவும் சொல்லும் நிரம்பக் கிடைக்கும். `உண்பது நாழி உடுப்பவை இரண்டே” என்ற புறநானூறு (189) `உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்’ என்ற நல்வழியில் வருகின்றது. கற்பு என்பதற்குக் கல்வி என்ற பொருள் சங்க இலக்கியத்து உண்டு. தொலையாக் கற்ப என்பது பதிற்றுப்பத்து (43), அளவிடமுடியாத கல்வியுடையவனே என்பது பொருள். `கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்’ என்ற மூதுரையில் கற்பிலா என்ற தொடர் கல்வியில்லாத என்று பொருள்படுதல் காண்க. திருக்குறட் கருத்துக்கள் ஒளவை நூல்களில் பலப்பல சில சுருக்கமாகவும் சில விளக்கமாகவும் உள மருந்தேயாயினும் விருந்தோடுண், முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும். நோன்பென்பது கொன்று தின்னாமை என்ற கொன்றைச் செய்யுட்கள் குறள் வழிப்பட்டவை `கொக்கொக்க கூம்பும் பருவத்து’ என்ற (490) குறளையும், `ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு என்ற மூதுரையையும்,` வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்ற (595) குறளையும் `நீரளவே யாகுமாம் நீராம்பல் என்ற மூதுரையையும் ஒப்பிட்டுக் காண்க. இனைய காட்டுக்களால், கற்பதற்கு உரியவை என்று மொழிந்த நூல்களின் கருத்துக்களைத் தழுவியே ஒளவையார் தம் அறநூல்களை யாத்துள்ளார் என்பது பெறப்படும். ஆதலின் ஒளவை நூல்களைச் சார்பு நூல்கள் என்று கூறலாம். `அடியின் சிறுப்பே பாட்டெனப் படுமே என்பது (1292) தொல்காப்பியம். அதன்படி எதுகைமோனை முதலிய தொடையழகுகளை ஓரடிக்குள் யாத்து மகிழ்வதே மிக்க சங்கத்திறன். அடிதோறும் எதுகைமோனை தொடுப்பது சங்கப்பின் வளர்ச்சி என்று கருதவேண்டும். பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயி;ற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வாழஅ நற்பல வுதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க (அகம் 86) இந்த எட்டடிகளிலும் அடியளவில் வேண்டிய எதுகைமோனை இசை நயங்கள் உள. அடியுள் சீர்தோறும் தொடைவிகற்பங்கள் உள்ளன. ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் சங்க யாப்புப் போன்றன எனவும் தொல்காப்பிய உரியியலின் ஓரடியமைப்பைப் பின்பற்றுவன எனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பிற்கால இலக்கணிகள் வெண்பாவையும் கட்டளைக் கலித்துறையையும் விருத்தத்தையும் இலக்கணப்பாவாகப் பயன்படுத்தக் காண்கின்றோம். அம்மாற்றத்தையொப்ப, இலக்கணத்துக்கு உரியநூற்பாவை அறஞ்சொல்லும் இலக்கியப்பாவாக முதன் முதலில் பயன்படுத்திக் காட்டினார் ஒளவையார். தொல்காப்பியம் - உரியியல் 1. வெம்மை வேண்டல் 2. பொற்பே பொலிவு 3. உயாவே வயங்கல் 4. மழவுங் குழவும் இளமைப் பொருள 5. விறப்பும் உறப்பும் வெறிப்பும் செறிவே 6. நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை. சூத்திசூடி - கொன்றைவேந்தன் 1. ஆறுவது சினம் 2. கேள்வி முயல் 3. நூல்பல கல் 4. ஏவா மக்கள் மூவா மருந்து 5. கீழோ ராயினும் தாழ வுரை 6. புலையும் கொலையும் களவுந் தவிர் கலம்பகம் தூது பிள்ளைத் தமிழ்உலா கோவை போல ஆத்திசூடி என்பதும் சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாகவும் குழந்தை இலக்கிய வரலாற்றுக்குத் தோற்றுவாயாகவும் பெருமை பெற்றுள்ளது. பாப்பா பாட்டுப் பாடிய பாரதியார் புதிய ஆத்திசூடி எழுதினார் பாரதிதாசனார் ஆத்திசூடிகள் இரண்டு எழுதினார். இங்ஙனம் ஆத்திசூடி யியக்கம் பரவிவரக் காரணம். மேற்கூறிய ஏழிளந்தமிழும் சிறிய நூல்கள் என்று பெரும்புலவர்கள் ஒதுக்கவில்லை. அகநானூறு சிலப்பதிகாரம் மணிமேகலைக்கு உரைகண்ட பேராசிரியர் வேங்கடசாமி நாட்டார் இவ்விளந் தமிழுக்கும் உரையாசிரியர் ஆவர் என்பது நினையத்தகும். `ஙப்போல் வளை’ என்ற சூடியின் பொருளை இன்றும் விளக்க முடியாமல் விழிக்கின்றோம். `இலவம் பஞ்சிற்றுயில் என்பதன் பொருள் என்ன? இலவம் பஞ்சாலான மெத்தையில் படுத்துறங்கு என்பது பொதுப்பட்ட பொருள், இஃது பலர்க்குப் பொருத்தமான அறம் அன்று என்பர் பாரிகாதை பாடிய மகாவித்துவான் இராகவையங்கார். இலவம் பஞ்சுபோலத் துயில்க என்பது இவர்தம் பொருள். இன் என்பது ஒப்புப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமையுருபு எனவும் சிறுகாற்று வீசினும் பஞ்சு அசைவது போலச் சிறு அரவம் கேட்டாலும் விழித்துக்கொள்ளும் மென்துயில் வேண்டும் எனவும் இவர் விளக்கம் தருவர். உறக்கம் துயில் என்ற வினைச்சொற்களுக்கு உள்ள வேறுபாட்டை நினைத்து இப்பொருள் செய்வர். பாரதியார்க்கு ஒளவை கூறும் அறத்தில் தனிப்பற்று உண்டு. `சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் என்று யாவரையும் உட்படுத்தி அழைக்கின்றார் பாரதிப்பெருமகன். இச்சுவடிகள் சிறு பருவம் தொட்டே கற்பிக்கத் தக்கன என்று எண்ணிய ஆறுமுகநாவலர் கீழ் வகுப்புக்களில் இவற்றைச் செய்யுட் பாடநூலாக அமைத்தார். அதனால் சிறு நூலாயினும் ஒரு நூலை முழுதும் கற்றல், பிரித்தும் புணர்த்தும் பயிலல், அருஞ்சொற் பொருள் அறிதல், யாப்பு மனம் பெறுதல் வரப்பண்ணி ஒப்பித்தல் முதலான பல மொழிக்கூறுகள் ஈரத்தடம்போலக் குழந்தைகள் அறிவில் பதியலாயின. நம் முன்னோர்கள் திண்ணைப் பள்ளிகளில் இச்சிறு, முது நூல்களை முறையாகப் பயின்று குன்றாத் தமிழொலியும் குறையத் தமிழறிவும் வளமான தமிழடிப்படையும் வாய்த் திருந்தனர். முதுமையிலும் இளங்கல்வியை நினைந்து நினைந்து வாழ்ந்தனர். இத்தொல் மரபுப்படி ஏழிளந் தமிழ் மீண்டும் தொடக்கப் பள்ளியில் முழுநூலாக இடம்பெறுவதாகுக. பெற்றால், இலக்கிய அளவிலே இயல்பான இலக்கணத்தினை நம் சிறார்கள் பெற்றுவிடுவர். மொழித்திறம் ஊற்றுப்போல் பத்து வயதிற்குள் படிந்துவிடும். மருத்துவம் கற்கும் மாணவர்கள் உலகத்து உடல்களையெல்லாம் அறுத்துப் பழகிப் பார்ப்பதில்லையே. யாரும் அங்ஙனம் அறுவை செய்து காட்டுவதில்லையே. சில உடல்களில் மெய்யிலக்கணங்களைக் கற்றுக்கொள்ப. ஒருசில எடுத்துக்காட்டுக்களில் உண்மை யறிதலே அறிவியல் முறை. அதுபோலத்தான் மொழியுடலும், சில இலக்கணங்கள் தாம் எல்லாச் செய்யுட்களிலும் பரவிக்கிடக்கின்றன. ஒவ்வொரு பாட்டுக்கும் தனிப் புணர்ச்சி விதியும் பிரிவு விதியும் இல்லை. ஒவ்வொரு பாடலுக்கும் தனிஎழுத்து அசை சீர் அடி தொடைகள் இல. மொழிக்கும் அறிவியல்முறை உண்டு. ஏழிளந்தமிழ் ஒழுங்காகக் கற்பிக்கப் பட்டால், முன்னேற்றம் என்ற பெயரால் ஒவ்வொரு செய்யுளையும் மரங்கொல் தச்சன்போலப் பிரித்துப் பதிக்கும் வேதனையும் கேவலம் ஒரு நூலைப் பிரித்துப் பதித்து இரு கூறாக்கும் போலிச் சாதனையும் ஒழிந்துமாயும் என்பதும் உண்மையான தமிழ் வேலி வளரும் என்பதும் என் துணிபு. வ.சுப. மாணிக்கம் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து 1. புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரியில் (1917) பிறந்தார். இயற்பெயர் அண்ணாமலை. இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி, தாத்தாவிடம் வளர்ந்தார். 7 வயது வரை நடேச ஐயரிடம் குருகுலக் கல்வி கற்றார். 2. வணிகம் பழக 11 வயதில் பர்மா சென்றார். பொய் சொல்லுமாறு முதலாளி கூறியதை ஏற்க மறுத்தவர், வேலையை இழந்து 18 வயதில் தமிழகம் திரும்பினார். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உதவியுடன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து `வித்வான்’ பட்டம் பெற்றார். 3. சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல்., முதுகலை பட்டம் பெற்றார். `தமிழில் வினைச்சொற்கள்’ என்ற பொருளில் ஆய்வு செய்து எம்.ஓ.எல் பட்டமும், `தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். 4. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, இராகவ ஐயங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், அ. சிதம்பரநாதன் செட்டியார் உள்ளிட்ட அறிஞர்களிடம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு விரிவுரையாளராக 7 ஆண்டுகள் பணியாற்றினார். தலைசிறந்த உரைநடை எழுத்தாளராக புகழ்பெற்றார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வல்லமை பெற்றவர். இரண்டிலுமே நூல்களைப் படைத்தார். 5. காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். 1964 முதல் 1970 வரை அதன் முதல்வராகப் பணியாற்றினார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து அழைப்பு வந்ததால், அங்கு 7 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். 6. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக 1979 முதல் 1982 வரை பணியாற்றினார். அப்போது, பண்டிதமணி அரங்கை நிறுவினார். பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன், அங்கு தமிழ் ஆய்வு நடைபெறவும் வழிவகுத்தார். 7. தமிழில் பல புதிய சொல்லாக்கங்களைத் தந்தவர். வீட்டிலும் கலப்படமற்ற தூய தமிழில் பேசினார். தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தினார். தமிழ்வழி கல்வி இயக்கம் என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். 8. துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகத்தில் முது பேராய்வாளர் என்ற பதவியில் `தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொல்காப்பிய ஆய்வு மேற்கொண்டு, நூலாக எழுதி வெளியிட்டார். தொடர்ந்து பல நூல்களை எழுதினார். 9. திருக்குறள் நெறிகளின்படி வாழ்க்கை நடத்தினார். தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அறநிலையத்துக்கும், தன் சொந்த ஊரில் இலவச கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வழங்குவதற்காகவும் உயில் எழுதிவைத்தார். தன் நூலக நூல்களை அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு வழங்குமாறும் உயிலில் குறிப்பிட்டிருந்தார். 10. தினமும் அதிகாலையில் எழுந்து 4 மணி நேரத்துக்கு மேல் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர். கடுமையான உழைப்பாளி. சங்க இலக்கியங்களைத் தன் நுனிநாக்கில் வைத்திருந்தவர். மூதறிஞர் ,செம்மல், முதுபெரும் புலவர், பெருந்தமிழ்க் காவலர் என்றெல்லாம் போற்றப்படும் வ.சுப. மாணிக்கம் 1989 ஏப்ரல் 25ஆம் தேதி 72 வது வயதில் மறைந்தார். - தி இந்து (தமிழ்) நாளிதழ் 17-4-2017 வ.சுப. ஒரு கலங்கரை விளக்கம் “தோன்றிற் புகழோடு தோன்றுக” எனும் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். தமிழிலக்கிய உலகில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ்மொழியை உணர்வு மொழியாகவும், சிந்தனை மொழியாகவும் ,பகுத்தறிவு மொழியாகவும் போற்றியவர். புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரியில் வாழ்ந்த வ.சுப்பையா செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் 17-4-1917 அன்று இரண்டாவது மகனாகப் பிறந்தவர். `அண்ணாமலை’ என்ற தம் இயற்பெயரை, மாணிக்க வாசகரின் திருவாசகத்தின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டால், `மாணிக்கம்’ என மாற்றிக் கொண்டார் எனச் சொல்லப்படுகிறது. இளம் வயது முதலே பிள்ளைகளுக்குத் திருக்குறள், திருவாசகம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி முதலிய இலக்கியங்களைப் பிழையின்றி தகுந்த ஒலிப்பு முறையுடன் சொல்லிக் கொடுப்பாராம். அத்துடன் திருக்குறளில் ஓர் அதிகாரத்தை முழுதும் மனப்பாடமாகப் படித்து ஒப்புவித்தாலோ அல்லது பிழையின்றி எழுதிக் காட்டினாலோ பத்து முதல் இருபது பைசா வரைக் கொடுத்து ஊக்கப்படுத்துவாராம். ஒருமுறை காரைக்குடியில் இல்லத்தின் ஓர் அறையில் வ.சுப.மா. ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தபோது, கொசு ஒன்று அவரது தோள்மீது அமர்ந்து குருதியைக் குடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்டுவிட்ட அவருடைய மகள் தென்றல், அந்தக் கொசுவை அடித்து அப்பாவிற்கு நன்மை செய்து விட்டதாக நினைத்து அவரின் பாராட்டை எதிர்பார்த்து நின்றிருந்தாராம். அப்போது வ.சுப.மா. “படிப்பதில் கவனம் இருக்கும் போது கொசு கடிப்பது எப்படித் தெரியும்? நீ எனது தோளில் அடித்ததால் என் சிந்தனையோட்டம் தடைப்பட்டு விட்டது” என்று கடிந்து கொண்டாராம். படிப்பதையும், எழுதுவதையும் வ.சுப. மாணிக்கனார் ஒரு தவமாகவே செய்து வந்திருக்கிறார். எல்லோரும் உறங்கிய பின் உறங்கி, அவர்கள் விழிக்கும் முன் விழித்து தமது கடமைகளைச் செம்மையுடன் செய்ததன் விளைவாகத்தான் கம்பர், வள்ளுவர், தமிழ்க்காதல் (அகத்திணை ஆராய்ச்சி), இலக்கியச்சாறு, கொடை விளக்கு, நெல்லிக்கனி, மாமலர்கள், மாணிக்கக்குறள், மனைவியின் உரிமை, உப்பங்கழி, தலைவர்களுக்கு உலக முரசு, இரட்டைக் காப்பியங்கள், நகரத்தார் அறப்பட்டயங்கள், தற்சிந்தனைகள் முதலிய முப்பதுக்கும் மேலான நூல்களை அவரால் எழுத முடிந்திருக்கிறது. இந்நூல்கள் அனைத்தும் தமிழக அரசால் 2007ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. காரைக்குடி அழகப்பச் செட்டியார் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய போது இவரின் தமிழ்ப் புலமையைக் கண்ட அரசர் முத்தையவேள் செட்டியார் 1970இல் தமது அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு அழைத்து தலைவர் பொறுப்பை அளித்துப் பெருமைப்படுத்தினார். ஏழு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் செய்த தமிழ்ப்பணிகள் இன்று விருட்சங்களாய் வளர்ந்து நிற்கின்றன. சங்கப் பாக்களின் நுட்பங்களையெல்லாம் கட்டுரைகளாக வடித்தவர். பிசிராந்தையார், `யாண்டு பலவாக’ என்று தொடங்கும் புறப்பாடலில் `மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்’ என்று குறிப்பிட்டிருப்பார். இதில் வரும் `ஓடு’ என்ற சிறு சொல் மனைவி ஒருத்தி, மக்கள் பலர் எனப் பிரித்துப் பொருள் தருவதாக அமைகிறது. இச்சொல் இடம் பெறாதிருக்குமானால் மனைவியும் பலர், மக்களும் பலர் எனப் பொருள் மாறுபட்டிருக்கும் என்பதனை வ.சுப.மாணிக்கனார் சுவையுடன் தெளிவுபடுத்துவார். இவர் உரைநடையில் கையாளும் சொல்லாக்கங்கள் பல அரியவை. “காற்று எனும் சொல் மக்கள் வழக்கிற்குரியது என்றும், வளி என்னும் சொல் இலக்கிய வழக்கிற்குரியது என்றும் பலர் கூறுவார்கள். ஆனால், பொதுமக்கள் சூறாவளி என்னும் வழக்கில் வளி என்னும் சொல்லினை மிக எளிதாகப் பயன்படுத்துகிறார்கள்” என்று `இலக்கிய விளக்கம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார். வ.சுப.மாணிக்கனார் எதையும் புதிய நோக்கில் சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர். `எந்தச் சிலம்பு?’ எனும் நூலில் கண்ணகியின் சிலம்பு தான் சிலப்பதிகாரம் என்று பெயர் இடுவதற்குக் காரணம் எனப் பலரும் கூறிவரும் நிலையில், இவரோ பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி பாண்டிமாதேவியின் சிலம்புதான் நூல் பெயர்க்குக் காரணம் எனக் கூறுவது புதுமை. முந்நீர் என்பது ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் எனும் மூன்றும் நிறைந்த கடலைக் குறிக்கும் சொல் என்பது புறநானூற்று உரையாசிரியர்களின் கருத்து. முந்நீர் எனும் சொல் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூவகைச் செயல்பாடுகளையும் குறிப்பது என்பது அடியார்க்குநல்லாரும், நச்சினார்க்கினியரும் கூறும் கருத்து. இவ்விரு கருத்துகளையும் மறுத்து வ.சுப. மாணிக்கனார், “முந்நீர் எனும் சொல் முப்புறம் தமிழகத்தை வளைத்துக் கிடக்கும் ஒரு பெருநீர்ப்பரப்பைக் குறிப்பது என்பதனையும், தீபகற்பமாகிய நிலவடிவைச் சுட்டுவது என்பதையும் இடைக்கால உரையாசிரியரெல்லாம் எண்ணிப் பார்க்க வில்லை” (தமிழ்க்காதல்) என்று குறிப்பிடுகிறார். பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரின் மாணவர் என்கிற தனித்த அடையாளம் வ.சுப.மாணிக்கனாரிடம் எப்போதுமுண்டு. தமது இல்லத்திற்குக் `கதிரகம்’ என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார். அவரது எழுத்தும் பேச்சும் தமிழநலம் சார்ந்தவையாகவே இருந்தன. தமிழ் வழிக் கல்விக்காகப் பல்வேறு ஊர்களுக்குச் சென்று கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். எத்தனை இடர்வரினும் நடுவுநிலையோடு நின்று உண்மையின் அடையாளமாய்த் திகழ்ந்தவர். எழுத்திலோ, பேச்சிலோ எவர் பிழை செய்யினும் நெஞ்சுரத்துடன் உடனே வெகுண்டெழுந்து நேருக்கு நேர் சுட்டிக்காட்டும் இயல்பினர். ஒவ்வொரு மனிதரும் ஒரு குறிக்கோளுடன் வாழவேண்டும் என்பதே வ.சுப.மா.வின் வேண்டுகோள். கவர்ச்சி தரக்கூடிய கேளிக்கைப் பேச்சுகளில் பொழுதைக் கழிப்பதை விடுத்து சங்க இலக்கியம், திருக்குறள், திருவாசகம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன், ஆத்திசூடி உள்ளிட்ட உயர்வான நோக்குடைய இலக்கியங்களைக் கற்று வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் என்பதே வ.சுப.மா வின் கருத்து. ஒரு நூற்றாண்டைக் கடந்தும் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நின்று வாழும் வ.சுப.மாணிக்கனார், தமிழச் சமூகத்திற்கு அவர் ஏற்றிய ஒளி கலங்கரை விளக்கமாய் என்றும் அணையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழின் மறுவுருவாய் வாழ்ந்து மறைந்த மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவைப் பலரும் சிறப்பாகக் கொண்டாடி வரும் நிலையில், தமிழக அரசு அவருக்கென தனியொரு நினைவிடம் அமைத்து, விழாவெடுத்து, சிறப்பு செய்தால் தமிழ்கூறும் நல்லுலகம் பெருமை கொள்ளும். அந்நாள் எந்நாளோ? - தமிழ்மணி (தினமணி) 16-4-2017 செம்மூதாய் சதாசிவம். மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்பு வாய்மை வாழ்வு வாய்மை வாழ்வைத் தன் வரலாறாகக் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு நிலைகளையும் தன் அக வாழ்விலும் புற வாழ்விலும் கடைப்பிடியாய்க் கொண்ட குறிக்கோளர். வள்ளல் பாரியும் வாய்மொழிக் கபிலரும் வாழ்ந்த பறம்பு மலைப் பகுதியைச் சார்ந்த ஊராகிய, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச்சிவபுரி, தமிழ்நாட்டு சபைகளுள் தொன்மையும் தொண்டுஞ் சிறந்த சன்மார்க்க சபை அமைந்த ஊர் என்பதோடு, அந்தச் சபை நிறுவுவதற்குப் பெருங்காரணமாக இருந்த பண்டிதமணியாரின் மாணவர் “வ.சுப. மாணிக்கனார் பிறந்த ஊர்” என்ற பெருமையையும் தரித்துக்கொண்டது. 17.4.1917 இல் வ.சுப்பையா செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் மகனாய்த் தோன்றினார். அண்ணாமலை என்பது இவரது இயற்பெயர். பின், மாணிக்கம் என அழைக்கப்பட்டார். நகரத்தார் குல மாணிக்கமாக, தமிழ் மாணிக்கமாகத் திகழ்ந்தார். பெற்றோர் இருவரையும் சிற்றிளம் பருவத்தே இழந்து, வறுமை யுற்ற நிலையில் பதினோராவது வயதில் பருமா சென்று வட்டிக் கடையில் சிறுகணக்கனாகச் சில ஆண்டுகள் பணிசெய்தார். ஒரு நாள் கடையில் சோதனைக்கு வந்த அதிகாரியிடம் தான் ஊரில் இல்லை எனக் கடை முதலாளி சொல்லச் சொன்னபோது, `அப்படிப் பொய் சொல்ல முடியாது’ என மறுத்துப் பேசவே, வேலை இழந்து ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். பெற்ற கல்வி பொருள் முட்டுப்பாட்டோடு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் புலவர் வகுப்பில் சேர்ந்து பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் ஆய்வாளனாகவும் ஆசிரியனாகவும் பணியேற்றார். விடா முயற்சி கொண்டு பி.ஓ.எல்., எம்.ஓ.எல்., எம்.ஏ., பிஎச்.டி போன்ற பல பட்டங்களைப் பெற்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, துறைத் தலைவராகவும் கல்லூரி முதல்வராகவும் உயர்ந்தார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்தார், முத்துறை இணைந்த இந்திய மொழிப்புலத் தலைவராக. பட்டங்களும் விருதுகளும் செம்மல், முதுபெரும் புலவர், பெருந்தமிழ்க் காவலர், முதுமுனைவர் (டி.லிட்), முதுபேராய்வாளர், திருவள்ளுவர் விருது, முது ஆராய்ச்சியாளர், தொல்காப்பியத் தகைஞர் ஆகிய பல பட்டங்களைப் பெற்றார். வள்ளுவத்தின் மீது இவர் கொண்ட ஈடுபாடு, அதை வாழ்வுநூலாய் நிலைநிறுத்திய எழுத்துத்திறம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதத்தில் தமிழக அரசு “திருவள்ளுவர் விருது” வழங்கி கௌரவித்தது. மாணிக்கத் தலைமை காரைக்குடித் தமிழ்ச் சங்கம், காரைக்குடித் தமிழ் உயர் ஆராய்ச்சி மையம், தமிழ்ப் பல்கலைக்கழக வல்லுநர் குழு, புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வல்லுநர் குழு, தமிழகப் புலவர் குழு, அனைத்திந்தியப் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபைக் கல்லூரிக் குழு, பண்டிதமணி மு. கதிரேசனாரின் நூற்றாண்டு விழாக் குழு ஆகியவற்றுக்குத் தலைமை கொண்டதோடு, தமிழ்நாடு தெய்வீகப் பேரவை அறிவுறைஞராகவும், தமிழ்வழிக் கல்வி இயக்க நிறுவனராகவும் விளங்கினார். தில்லைத் திருக்கோவில் பொன்னம்பலத்தின்கண் திருமுறைகள் ஓதி வழிபடும் வாய்ப்பை ஏற்படுத்தியவராகவும் திகழ்ந்தார். பட்டங்களும் பதவிகளும் இவரைத் தேடி வந்து பெருமை சூடிக்கொண்டன. அரிய பட்டங்கள் பல பெற்றாலும் துணைவேந்தர் பதவிவரை வகித்தாலும் முறையான பள்ளிக்கல்வி பெறும் வாய்ப்பிழந்தவர் இவர். இழந்த வாய்ப்பை ஈடு செய்யும் வகையில் கடுமையாக உழைத்து, ஆழமாகப் படித்து, தமிழ்மொழி வானில் ஒளிவிடும் மாணிக்கமாய்ச் சுடர் வீசினார். மாணிக்கத் தமிழ் தமிழ் இலக்கிய உலகில் மிக உயரிய ஆய்வு நூல்களாகக் கருதப்பெறும் `தமிழ்க் காதல்’, `வள்ளுவம்’, `கம்பர்’ போன்றவை இவர்தம் உன்னதப் படைப்பாற்றலுக்குச் சான்று பகர்பவை. இவரது செம்மாந்த மொழி நடையும், வலுவான பழமைத் தளத்தில் புத்தம்புதியது சமைக்கும் புலமைத் திறனும், ஆழ்ந்து அகன்ற ஆய்வுப் போக்கும், புதிய சொல்லாக்கத் தரவுகளையும் வரவுகளையும் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தன; அடுத்து வந்தவர்களும் பின்பற்றிப் போற்றும் “மாணிக்கத் தமிழ்” நடை, வழக்கிற்கு வந்தது. தமிழ்வழிக் கல்வி தமிழ்மீது கொண்ட அளப்பரிய அக்கறையாலும் ஈடுபாட்டாலும் தமிழ்வழிக் கல்வியைத் தன் இறுதி மூச்சுவரை வற்புறுத்திவந்தார். அதன் தொடக்க முயற்சியாக, மேலைச் சிவபுரியில் தமிழ்வழி மழலையர் பள்ளியை நிறுவினார். குடும்பம் ஆண் மூன்றும் பெண் மூன்றுமாக ஆறு குழந்தைகளைப் பெற்றுத்தந்த வாழ்க்கைத் துணை ஏகம்மை ஆச்சியுடன் அனைத்தையும் பகிர்ந்துகொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர். இவர் எண்ணங்களையும் எழுத்துக்களையும் செயல் வடிவமாக்கியவர் திருமதி ஏகம்மை மாணிக்கம் அவர்கள். ஆசிரியர்கள் தனக்கு குருவாக இருந்தவர்களை ஒளியாகவும் தெய்வத் தோற்றங்களாகவும் கண்டவர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் நடேச அய்யர், ஆங்கில ஆசிரியர் கோபாலன் நாயர், இந்தி ஆசிரியர் மு. கோ. வேங்கடகிருட்டிணன், வடமொழி ஆசான் பி.சி. இராமானுசாச்சாரியார், பிரெஞ்சு மொழியாளர் சிவப்பிரகாசம், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா. இராகவையங்கார், இராமசாமிப் புலவர், ரா. கந்தசாமி, ஆ. பூவராகன் பிள்ளை, மு. அருணாசலம் பிள்ளை ஆகியோரை நினைக்குங்கால் அச்சங் கலந்த பணிவு, அறிவு கலந்த நன்றியுணர்வு ஏற்படுவதாகக் குறிப்பிடுவார். இவர்களுள், உற்றுழி உதவிய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரின் மீது இவர் கொண்ட பெருமதிப்பும் பேரன்பும் காரணமாகத் தன் காரைக்குடி இல்லத்திற்குக் `கதிரகம்’ எனப் பெயரிட்டு ஆசிரியரின் இல்லத்திற்குள்ளே வாழ்ந்தவர். மாணிக்க அறம் 1986இல் விருப்பமுறி எழுதினார். அதில் தம் சொத்துக்களில் ஆறில் ஒரு பங்கினை ஒதுக்கி, மேலைச் சிவபுரியில் ஒரு அறநிலை ஏற்படுத்தவும் அதில் வரும் வருமானத்தினைக் கல்வி, மருத்துவம், நலவாழ்வு, குழந்தைகள் நலன், அஃறிணை உயிர்களின் நலம் முதலான பொது நலங்களுக்குச் செலவிட வேண்டும் என்று எழுதிவைத்து, புதிய வள்ளலாராய்த் தன்னை வரலாற்றிற்கு அடையாளம் காட்டியவர் இந்த மாமனிதர். மாணிக்க விதை தமிழுக்குத் தொல்காப்பியத்தையும் வாழ்வின் உயர்வுக்குத் திருக்குறளையும் உயிர்த் தூய்மைக்குத் திருவாசகத்தையும் வழிகாட்டிய தமிழ் மறைகளென வாழ்ந்தவர் மாணிக்கனார். மேலைச்சிவபுரியில் உதித்து, அண்ணாமலையில் பூத்து, அழகப்பரிடம் காய்த்து, மதுரையில் பழுத்த மாங்கனி மாணிக்கம், தமிழ் நெஞ்சங்களில், 24.4.1989 திங்கட் கிழமையன்று, விதையாய் விழுந்து அமரத்துவம் கொண்டது. `கதிகரம்’ வ.சுப. மாணிக்கனாரின் மக்கள் காரைக்குடி 21.03.2016 வ.சுப. மாணிக்கனார் எழுதிய நூல்கள் காலநிரலில் தரப்பட்டுள்ளது 1. மனைவியின் உரிமை 1947 2. வள்ளுவம் 1953 3. கொடைவிளக்கு 1957 4. தொல்காப்பியப் புதுமை 1958 5. இரட்டைக் காப்பியங்கள் 1958 6. தமிழ்க்காதல் 1962 7. நெல்லிக்கனி 1962 8. கூhந கூயஅடை உடிnஉநயீவ டிக டுடிஎந 1962 9. ஊடிடடநஉவநன யீயயீநசள 1962 10. நகரத்தார் அறப்பட்டயங்கள் 1963 11. உரைநடையில் திருக்குறள் 1963 12. எந்தச் சிலம்பு 1964 13. கம்பர் 1965 14. தலைவர்களுக்கு 1965 15. இலக்கிய விளக்கம் 1972 16. உப்பங்கழி 1972 17. ஒருநொடியில் 1972 18. ஹ ளுவரனல டிக கூயஅடை எநசளெ 1972 19. சிந்தனைக் களங்கள் 1975 20. மாமலர்கள்(மாணிக்கனார் கவிதைகள்) 1978 21. தொல்காப்பியத்திறன் 1984 22. கம்பர் நாற்பது 1984 23. தொல்காப்பியக் கடல் 1987 24. திருக்குறட் சுடர் 1987 25. சங்கநெறி 1987 26. காப்பியப்பார்வை 1987 27. இலக்கியச்சாறு 1987 28. ஒப்பியல் நோக்கு 1987 29. தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் நூன்மரபும் 1990 30. மாணிக்கக்குறள் 1991 31. நீதி நூல்கள் 1991 32. கூயஅடைடிடடிபல 33. தற்சிந்தனைகள் 2016 34. என் பொழிவுகள் 2017 பிற நூல்கள் 34. வ.சுப. மாணிக்கனார் போற்றிய விழுமியங்கள் 35. மாணிக்க ஆய்வியல் 36. மாணிக்கப் பேரொளி 37. தொல்காப்யிச் செல்வர் 38. மாணிக்கக் குறளில் மாணிக்கம் 39. மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் 40. தமிழ்ஞாயிறு