மாணிக்க விழுமியங்கள் - 7 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) எந்தச் சிலம்பு - முதல் பதிப்பு 1964 இலக்கியச்சாறு - முதல் பதிப்பு 1987 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 7 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+320 = 336 விலை : 315/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 376 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல்’, சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம்’, புலமை நலத்திற்குக் `கம்பர்’ ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். ” என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு” இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். “தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள்’ எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல்’. இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர்’ என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு’. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம்’ மற்றும் `திருக்குறட்சுடர்’. திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள்’. தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!” இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, “வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தளமாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்புகளாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே “லேவாதேவி” என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு “கதிரகம்” என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை’ என்னும் குறிப்பேட்டில் “நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி” என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், “அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல்” என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம்’, `தமிழ்க்காதல்’, `கம்பர்’, `சிந்தனைக்களங்கள்’ போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை 21-7-2017. எந்தச் சிலம்பு முதற் பதிப்பு 1964 இந்நூல் 1978இல் பேகன் பதிப்பகம் வெளியிட்ட 4ஆம் பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முகவுரை இலக்கிய வளர்ச்சியில் தனிக் கட்டுரைகளுக்கு ஒரு நன்மதிப்பு உண்டு. அவை பொருளால் வேறுபடுதலின் கற்பவர்தம் அறிவை வளர்க்கின்றன; காலத்தால் வேறு படுதலின் கட்டுரையாளன் தன் நடை வளர்வைக் காட்டு கின்றன. பிரிந்து கிடந்த கட்டுரைகள் ஒன்றுகூட நுற்புணர்ச்சி பெறும்போது, ஆசிரியன் நிலைபேறான இன்பம் எய்து கின்றான். எந்தச் சிலம்பு முதலான பன்னிரு கட்டுரைகள் கொண்டது. இத்தொகுதி ஒன்பது, பத்து பதினொன்றுஎன்று மூன்றும் வானொலித்தவை. பிற பல மலர்களில் வெளி யானவை. திருக்குறளை இலக்கிய நூலாகவே மதிப்பதினும் நாட்டுக்கு நல்வழி காட்டும் இயக்க நூலாக மதிக்கவேண்டும். இலக்கிய பார்வை திருக்குறளின் உயிர்ப்பை ஒருக்காலும் வெளிப்படுத்தாது. நடப்புப் பார்வையே அதன் நாடிப்பார்வை. இக்கட்டுரையில் விளக்கப்படும் அரசியற் கருத்துக்களில் வேறுபடுவார் படுக. இந்திய வழிகாட்டி என்னும் கட்டுரை திருக்குறளை எங்ஙனம் கற்க வேண்டும் என்பதற்கு ஒரு வழிகாட்டி; அத்துணையே. காரைக்குடி வ.சுப. மாணிக்கம் கதிரகம் 1-12-1964. பொருளடக்கம் 1. எந்தச் சிலம்பு 5 2. இந்திய வழிகாட்டி 20 3. வள்ளுவர்கள் 29 4. வள்ளுவர் கல்வித் திட்டம் 35 5. சான்றோன் 41 6. காதற்போர் 50 7. கோவைத்திறன் 55 8. இலக்கிய முத்திறன் 79 9. தனிப்பாடல்கள் 88 10. நான் மாடக்கூடல் 94 11. போர்க்களம் 101 12. இளங்கோ 106 1. எந்தச் சிலம்பு அ சிலப்பதிகாரம் என்னும் பெயர் சிலம்பு காரணமாக வந்தது என்பது வெளிப்படை. எனினும் அச்சிலம்பு எது? யாருடையது? கண்ணகியின் காற்சிலம்பே காப்பியத்தின் பெயருக்குக் காரணம் என்று நாம் அறிவோம். வேறு வகையாக நினைத்துப் பார்க்க அறியோம். கோவலன் மாதவி வயப்பட்டான். பிரிவுற்ற கண்ணகி “அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய” (4.47) எக்கோலமும் கொள்ளாது துயருறுகின்றாள். மாதவியை வெறுத்துத் திரும்பிய கணவனிடம், சிலம்புகள் உள்ளன கொள்ளுங்கள்’ (9.73) என்று வாடிவருந்திய நிலையிலும் கண்ணகி நல்லாள் உடையது விளம்புகின்றாள். மனம் நல்வழிப்பட்ட கோவலன், ‘இச்சிலம்பை முதலாக வைத்து எல்லாப் பொருளையும் ஈட்டுவேன்’ (9.74) என்று குறிக்கோள் கொள்கிறான். இவை புகார்க் காண்டத்து வரும் சிலம்புக் குறிப்புக்கள். இடைமகள் மாதரியின் இல்லத்துத் தங்கியிருக்கும் போது, மனைவியின் காற்சிலம்பில் ஒன்றை விற்பனைக்கு எடுத்துக் கொண்டு வீதிவழிப் புறப்படுகின்றான் கோவலன் (16.92). அச்சித்திரச் சிலம்பின் செய்வினைகளைப் பொற் கொல்லன் காண்கின்றான் (16.119). செய்வினைச் சிலம்பின் செய்தியெல்லாம் காவலாளர்க்குக் காட்டுகின்றான் (16.160). கணவன் சாவு கேட்ட கண்ணகி எஞ்சிய சிலம்பொன்றைக் கையேந்தி ஊர் சூழ்கின்றனள் (19.2). “பொற் றொழிற் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்” (20.42) என்று வாயிலோன், கண்ணகி சொல்லப் பணித்தபடியே, பாண்டியன் முன் அறிவிக்கின்றான். “என் காற்பொற்சிலம்பு மணியுடை அரியே” (20.67) என வழக்குரைத்தச் சிலம்புடைத்து வேந்தனை வெல்கின்றாள் புகார் நங்கை. “சிலம்பின் வென்ற சேயிழை நங்கை” (22.135) என்று மதுரை நங்கையர் புகழ் பாடுவர். இவை கண்ணகி தன் சிலம்பு பற்றி மதுரைக் காண்டத்து வருபவை. பாண்டிய வேந்தன் முன்னே சிலம்பொடு சென்று சிலம்பை எறிந்து மாநகர் அழித்த பத்தினியின் வீரத்தைச் சேரன் செங்குட்டுவனுக்கு விரித்து மொழிகின்றார் சாத்தனார் (25.71), சிலம்பும் மேகலையும் வளைக்கையும் பொற்றோடும் பொலிந்த மன்னுக்கொடியை வானத்துக் காண்கின்றான் செங்குட்டுவன் (29.பா 9). “கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளை” (29.பா 11) வஞ்சி மகளிர் வாழ்த்துப் பாடுவர். இவை வஞ்சிக் காண்டத்து வரும் சிலம்புச் செய்திகள். ஆ கண்ணகியின் சிலம்பு எல்லாக் காண்டத்தும் தொடர்ந்து பேசப்படுவதாலும், கற்புக்கடம் பூண்ட மாபெரும் பத்தினித் தெய்வத்தின் காலணியாக இலங்குதலாலும், சிலப்பதிகாரம் என்னும் நூற்பெயருக்குக் காரணமான சிலம்பு, கண்ணகி யுடைய சிலம்பே என்று தமிழறிஞரெல்லாம் இதுகாறும் எண்ணி வருகின்றனர். உரையும் விளக்கமும் திறனும் எல்லாம் எழுதி வருகின்றனர். இக்கருத்தை நன்மரபு போலத் தமிழுலகம் போற்றி வருகின்றது. சிலப்பதிகாரப் பெயர்க் காரணம் உள்ளூர் மலைபோலவும் ஊருணி நீர் போலவும் தெளியக் கிடத்தலின், ஈண்டுச் சிந்தனை ஏற்றுக்கு என்று பலர் உள்ளலாம். இடைக்காலத் தமிழ்ப்போக்கு பண்டைத் தமிழ் நெறியினும் பல்லாற்றான் வேறுபட்டது. இடைக்காலப் புலவோர் காலக் கோட்பட்டு எழுதி விடுத்த மயக்கங்களை மரபுகள் எனவும், தொல்லோர் தம் உண்மைகள் எனவும், நாணயத்தாள்போல நாம் ஆராயாது மேற்கொள்வோ மேல், தமிழ் ஆராய்ச்சி மேலும் புரையோடிப் புற்றுப் படுங்காண். இடைக்காலோர் சிந்தித்துத் துணிந்த கருத்து என்று பலவற்றில் நாம் சிந்தனை இழப்போமேல், புதை பொருள் என்றும் புதையுண்ட பொருளேயாய், குப்பை மேடுகளே கோபுரங்களாய்த் தோன்றும். நூற்பெயரீட்டிற்குக் கண்ணகியின் சிலம்பு காரணம் என்று ஆங்காங்கு வந்துள்ள இடங்களையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றோமே; இது பொருந்துமா? சிலம்பு மகளிர் அணியாதலின், பெண் என்ற நிலையில், கண்ணகிக்குச் சிலம்பணி கூறிய சிலவிடங்கள் நூலகத்து உள. “சிலம்பு காலுக்கு அமைவுற அணிந்தாள்” (6.84) என்று மாதவிக்கும், “சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி”, (12.63) என்று சாலினிக்கும் பெண் வனப்பாகக் கூறியிருத்தலை ஒப்பிடுக. இங்ஙனமே கண்ணகிக்குச் சிலம்பு அணியாகும் பொதுக் கூற்றினையும் கதைக்குச் சிலம்பு ஆதாரமாகும் சிறப்பு கூற்றினையும் காப்பியத்து நாம் பிரித்து உணர வேண்டும். மாதவியை மாயத்தாள் என்று கைநெகிழ்ந்து வந்த கோவலனுக்குச் சிலம்பு உள கொள்ளுவீர் என்று புகாரில் கண்ணகி மொழிந்தது கதைக்கு முதற் சிறப்பிடம். சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு போய் விற்றுவருவன் என்று கோவலன் கொண்டுசென்றது. பிறிதொரு சிறப்பிடம் எஞ்சியிருந்த ஒரு சிலம்பைக் கையில் எடுத்துக் கொண்டு கண்ணகி ஊர் சுற்றியது மற்றொரு சிறப்பிடம். வேந்தன் முன்பு அணி மணிக்காற்சிலம்பு உடைத்தது இறுதிச் சிறப்பிடம். இதனோடு கதை இயக்கத் துக்குக் கண்ணகி சிலம்பின் தேவை முடிந்துவிடுகின்றது. அஞ்செஞ் சீறடி, அணிசிலம் பொழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை முன்னிற் குங்குமம் எழுதாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாண்முகம் சிறுவியர்ப் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாணுதல் திலகம் இழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி யன்றியும் (4.47) இவை கணவனைப் பிரிந்த கண்ணகியின் ஆறாத் துயரைப் புலப்படுத்தும் நெய்தலடிகள். சிலப்பதிகாரம் என்ற பெயர்க்கேற்ப, இங்குச் சிலம்பு முதற்கண் கூறப்பட்டுள்ளது எனக் கண்ணகி சிலம்புக் கொள்கையாளர் எடுத்தியம்புவர். இது பொருந்தாது. அஞ்செஞ்சீறடி எனத் தொடங்கி மையிருங் கூந்தல் என முடிதலில் பிரிவாற்றாக் கண்ணகியின் முழு அவலத்தோற்றத்தை அடிமுதல் முடிகாறும் எடுத்துக் காட்டவந்த ஓர் இலக்கிய நெறியாகவே கொள்ளப்படும். இத்தோற்றம் பிரிவு பொறாக்கற்புடை நங்கைக்கெல்லாம் சொலத்தகும் பொது நிலையாகும். “கையறு நெஞ்சத்துக் கண்ணகியன்றியும் காதலர்ப் பிரிந்த மாதர் நோதக” என்று தொடர்ந்து மேல்வரும் கருத்தினை உன்னுக இவ்விலக்கிய நெறியால் சிலம்பு முற்கூறப்பட்டது என்பது தவிர, அம்முற் கூற்று சிலப்பதிகாரப் பெயர் ஆராய்ச்சிக்கு என்னானும் தொடர்புடைய தன்று. என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல் பொன்னஞ் சிலம்பிற புனைமே கலைவளைக்கை நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர் மின்னுக் கொடியொன்று மீவிகம்பிற் றோன்றுமால் (29. பா 9) பத்தினிக் கோட்டம் வகுத்த செங்குட்டுவன் கண்ட வானக்காட்சி இது. கண்ணகி தன் சிலம்பாற் பெயரியது சிலப்பதிகாரம் என்பவர். ஈண்டுப் ‘பொன்னஞ் சிலம்பின்’ என வருதலை ஒரு சான்றிடமாகத் தொடுத்துக் கூறுவர். இதுவும் அமையாது. சேரன் கண்டது சிலம்பன்று; மின்னுக்கொடி. அக்கொடி, சிலம்பும் மேகலையும் பொற்றோடும் என்றின்ன பலவணியாற் பொலிந்த ஒரு பெண் கொடி. பெண் கொடி என்று தெரிவித்தற்கே, சிலம்பு முதலான பெண்ணணிகள் ஒருங்கு கூறப்பட்டன. ஆதலின் ஈண்டுச் சிலம்பணிக்குத் தனிச் சிறப்பு இல்லை. அது பொது வரவு என அறிக. ஓர் அணியையோ, ஓர் உறுப்பையோ தனித்துச் சிறப்பிக்க இளங்கோ எண்ணி யிருப்பரேல், பிற அணிகளோடு உடன் எண்ணாது, சிலம்பு அணிந்த மின்னுக்கொடி எனப் புனைந்தி ருப்பர்மன். குரங்குக்கை கொண்ட வானவன் சாரணர்முன் தோன்றினான் என்று கையுறுப்பை மட்டும் அடையாகச் சிறப்பித்துக் காட்டி யிருத்தலை அடைக்கலக் காதையிற் காண்க. இ கண்ணகியின் ஞெகிழம் காரணமாக நூற்பெயர் இடுதல் கூடாது என்பது என் கருத்துரையன்று. அப்படி நூலாசிரியன் இடவில்லையே என்பதுதான் நாம் அறிய வேண்டும் மெய்யுரை. காப்பிய நடக்கைக்குக் கண்ணகி தேவியின் காற்சிலம்பு எத்துணை இன்றியமையாதது. அத்தனை இன்றையமையாத இன்னொரு தேவியின் சிலம்பும் உண்டு என்று நாம் நினைவு கொண்டோமா? நூற்பெயரை ஆராய முற்பட்டார் எல்லாம், தமிழினம் தமிழை மறந்து வருதல்போல, பாண்டிமாதேவியின் சிலம்பணி சிலப்பதிகாரத்து வருவதை மறந்தயர்ந்தனர். சிலப்பதிகாரம் இரு தேவியரின் சிலம்புப்பூசல். இருவர் சிலம்பில் யார் சிலம்பு இன்றேனும் கதை நடவாது; காப்பியம் பிறவாது. கண்ணகி மடந்தையின் ஞெகிழம் காண்டந்தோறும் காதை பலவற்றில் வருவது என்னும் ஒரு கருத்து மயக்கத்தில், ஒரு காண்டத்து ஒரு காதையில் மட்டும் வந்துபோகும் அரசியின் காலணியை நினைத்து பார்க்கவும் நினைப்பிலோம். இந்நினையாமைக் கெல்லாம் கற்புத் தெய்வத்தின் புகழ்மேல் நாம் கொண்ட ஈடுபாடே காரணமாம். உரைசால் பத்தினியின் திருவடிக்கலனால் பெயர்பெற்ற பேறுடையது சிலப்பதிகாரம் என்று சொன்னாற்றான், என்று சொல்லும்போதுதான், நூலுக்கு ஏற்றம் என்னும் ஓர் எண்ணப்பற்று அறியாமலே நம்முள் ஊறிவிட்டது. அதனால் மற்றொரு பெருந்தேவியையும் அவள் காலணியையும் உளங்கொளாது விட்டோம், அரச நங்கையின் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் எனப் பெயர் எய்திற்று என்றால், எண்ணிப் பார்மின், நூலின் ஏற்றம் இறங்கிப் போமோ? முடிசூடா மன்னன் என்பது போலக் கல்லெழுதாக் கற்புத் தேவியன்றோ அவ்வரச பத்தினி! மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி (20.78) மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத் தன்னுயிர் கொண்டவ னுயிர்தேடி னள்போல் பெருங்கோப்பெண்டும் ஒருங்குடன்மாய்ந்தனள் (25.84) இளங்கோவும் சாத்தனாரும் பாண்டிமாதேவி உயிர் துறந்த எளிமையையும் விரைவையும் மாண்புறப் பாராட்டு வர். பாராட்டிய அடிகள் குறள் போலச் சிலவாயினும் அப்பாராட்டு வான் போர்த்த புகழாகும். சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்து முவ்வகைப் பத்தினியரைக் கூறுவர். காதலர் இறப்பின் உடனே இன்னுயிர் ஈவர் (மணி 2.42) என்று அக்காப்பியம் மொழிந்த முதன்மைப் பெண்டிர்க்குத் தமிழிலக்கியத்துக் கற்கப்படும் ஒரேவொரு எடுத்துக்காட்டு இப்பாண்டிமா பத்தினியல்லது யார்? மறக்கற்பிக்கும் அறக்கற்பிக்கும் எடைபோட முயல்வது அழகன்று. எடைபோட விரும்பிய செங்குட்டுவன், உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும் செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும் நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார் (25.109) என்று தன் தேவியை வினவினான். ‘கணவன் உயிரோடு தன்னுயிர் விட்ட அரசமாது வானகத்துப் பெருந்திரு உறுவாள். நாம் செய்ய வேண்டுவது நம் நாட்டுக்கு வந்த பத்தினிக் கடவுளைப் பரவுவது’ என்று சேரமாதேவி மன்னனுக்கு வழி காட்டினாள். செங்குட்டுவனது வேண்டா வினாவிற்கு நேர்விடை கொடாது கற்புடை நங்கையருள் உயர்வு தாழ்வில்லை. கற்பு வழிப்பட்ட எல்லோருமே உயர்ந்தவர் என்று குறிப்பிற் புலப்படுத்தினாள். ஆதலின் எத்தேவியின் சிலம்பு காரணமாக நூற்பெயர் வந்திருந்தாலும், நூலின் பெருமைக்குக் குறைவில்லை என்று தெளிக. யார் சிலம்பு என்பது இந்நூற்பெயர் ஆராய்ச்சிக்கு உரிய பொருளன்று; எந்த சிலம்பு என்பதுவே ஆய்வுப் பொருள், “சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரான் நாட்டுதும்” என்ற அடியைப் படிக்குங்கால் எச் சிலம்பு காரணம் என்ற வினாக்கொண்டு ஆராய முனையாது, சிலம்பு அணிந்த ஒரு தேவியை முன் வைத்து ஆராய்ந்தமையால் நம்மனோர் இதுகாறும் செய்த பெயராராய்ச்சி பிழையாராச்சியாயிற்று. காப்பிய விலக்கியம் படைத்த இளங்கோ தம் நூற்குப் பெயரிட்ட போது கண்ணகி தேவியையோ கோப்பெருந்தேவியையோ காரணமாகக் கருதவில்லை. நிகழ்ச்சிகளின் தீய விளைவுகளுக்கு இல்லற மாசற்ற இத்தேவியர் காரணரல்லர் என்பது அவர் துணிபு. காவிய இயக்கத்துக்கும் காவிய மாந்தர்களின் வாழ்க்கை மாற்றங்கட்கும் காரணமான ஓர் உயிரிடம் - அரிய பெரிய நுண்ணிய நிகழ்ச்சி - உண்டடென்று இளங்கோவிற்குப் பட்டது. அதனை நூற்பெயரிலேயே காட்ட நினைத்தார். இக்காப்பியத்து எதனால் பெரிய பெரிய மாற்றங்கள் அதிகரிக்கின்றன, ஒன்றன்பின் ஒன்று தொடர்ந்து வருகின்றன. அதனால் பெயர் வைக்கக் கருதினார். அது எது? கோப் பெருந்தேவியின் சிலம்பைக் களவாடிய கள்வன் என்று கோவலன் குற்றப்பட்டுக் கொல்லப்படுதலே காப்பியத்தின் துடிப்பான கருவிடமாகும். பொற்கொல்லன் சூழ்ச்சி விணைக்கும் பின்னெழுந்த பலவினைக்கும் இத் தேவியின் சிலம்பே காரணமாயிற்று. ஈ தன் தேவியின் சிலம்பு என மயங்கிட வேந்தன் “கொன்று அச்சிலம்பு கொணர்க” என்று ஏவி அரசியல் பிழைத்தான்; அறம் கூற்றாதற்கு இடஞ்செய்தான். வேந்தியின் சிலம்போடு கண்ணகி சிலம்பு மோதிய அரிய நிகழ்ச்சியினாற்றான். கண்ணகி வழக்குரைத்து அரசனையும் அரசியையும் மடிவித்துச் சேர வேந்தன் கல்லெடுப்ப உயர்ந்தோர் ஏத்தும் வெளிப்பட்ட புகழுடையளாயினாள். பாண்டிய மன்னனின் குடிமக்களுள் ஒரு பெண்ணின் சிலம்பைத் திருடியவன் என்று ஒருவனால் கோவலன் கொலைப்பட்டிருந்தால், கண்ணகியின் கற்பு மறமாக வெளிப்பட்டிருக்குமா? வெளிப்படினும் இத்துணை ஞாலப் பரப்புக்கு இடனாயிருக்குமா? உலகெலாம் தொழத்தக்க உரைசால் பத்தினியெனக் கண்ணகியை ஞாலத்துக்குக் காட்டியது கோப்பெருந்தேவியின் சிலம்புப் பகையே. மேலும், அரசியின் காலணி கவர்ந்த கள்வன் என்று கோவலன் கொல்லப்படும்போதுதான், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிய முறைமையைக் காண்கிறோம். வினைவிளை காலம் ஆதலின் யாவதும் சினையலர் வேம்பன் தேரா னாகி ஊர்காப் பாளரைக் கூவி யீங்கென் தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகிற் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும் ஏவல் உள்ளத் தெண்ணியது முடித்தெனத் தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் தன்னைக் குறுகின னாகி (16.148) கள்வனைக் கொன்று தேவியின் சிலம்பைக் கொணர்க என்று மன்னன் கட்டளையிட்ட காலத்தை வினைவிளை காலம் என்றும், ஊர்காப்பாளரோடு பொற்கொல்லன் கோவலனை நெருங்கிய காலத்தைத் தீவினை முதிர்ந்த காலம் என்றும் இளங்கோ சுட்டிக்காட்டுதலும் நினையத் தகும். அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரான் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் இப்பதிக அடிகள் மீண்டும் நினைத்தற்கு உரியவை. இளங்கோ நாட்ட நினைத்த முத்திறக் கொள்கைக்குக் காரணமாக நிற்பது எச் சிலம்பு? நூற்பெயர் ஆராய்வார் விடை காணவேண்டும் வினா இதுவே. கோப்பெருந்தேவி யின் சிலம்புக் கள்வன் என்று கண்ணகி கேள்வன் கொலைப்பட்ட காரணத் தாற்றான், செழியனுக்கு அரசியற் பிழைப்பும், கண்ணகிக்கு உயர்ந்தோர் ஏத்தும், கோவலனுக்கு ஊழ்வினையூட்டும் நேர்ந்தன என்று மேலே விளக்கினேன். கண்ணகியின் சிலம்பு காரணம் ஆகாதோ எனின், ஆகும், எப்படிக் கதையிருந்தால், கோவலனது சிலம்பை வஞ்சகத்தால் பறித்துக்கொள்ளப் பாண்டியன் சூழ்ச்சி செய்திருந்தால், கண்ணகி சிலம்பினைக் கவரும் ஆசையால் கோவலனைக் கொன்றிருந்தால், “என் காற் சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டாற் கொன்றாரே” (19.8) என்று கண்ணகி கருதுவது உண்மையாக இருந்தால் அவள் சிலம்பு நூற் பெயர்க்குக் காரணமாயிருக்கும். கதை அப்படி யில்லையே. கோவலன் வைத்திருக்கும் சிலம்பு கோப்பெருந் தேவியின் சிலம்பு என்ற நிலைக்களத்தில் இருந்தன்றோ மேல் பெருவிளைவுகள் தோன்றுகின்றன. மூன்று கோட்பாடுகளுள் அறங்கூற்றாதலும் உயர்ந்தோர் ஏத்தலும் இளங்கோ நாட்ட எண்ணிய துணைக் கொள்கை களே. ஊழ்வினைக்கோள்தான் அவர் நிறுவ முனைந்த தலையாய பேரறம். “வினை விளை காலம் என்றீர்; யாது அவர் வினைவிளைவு” (பதிகம்) என்று சாத்தனார்பால் இளங்கோ மறித்துக் கேட்கும் வினாவால், அவர்க்கு இருந்த இக்கொள்கைப் பற்று நன்கு விளங்கும். சிங்கபுரத்துச் சங்கமன் என்னும் வணிகனை ஒற்றன் என்று பொய்க் குற்றப்படுத்திக் கொல்வித்தான் முற்பிறப்பிற் கோவலன்; அதனால் இப்பிறப்பில் சிலம்புக் கள்வன் என்று பொய்க் குற்றப்பட்டுக் கொல்லப்படுகிறான். இவ்வூழ்வினைப் பயனை அவனுக்கு உறுத்தியது எது? அரசதேவியின் சிலம்பைக் கவர்ந்த கள்வன் என்ற குற்றப்பாடே. உ நூற்பெயர் வைப்பிற்கு உரிய காரணத்தை இளங்கோ மயக்கமறவே சொல்லியுள்ளார். பதிகத்தைப் படிக்கும் நாம் பொருள் பொதிந்த தொடர்களை ஊன்றிப் பாராது, சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்ற பெயர் உண்டா யிற்று என்று பொதுப்படையாகக் கருதி வருகிறோம். “சூழ்வினைச் சிலம்பு காரணமாக” என்ற தொடரில் வரும் அடைமொழியை நாம் ஆழ நினைக்கவில்லை. நினையா வண்ணம் உரைகளும் நம்மை ஒருவழிப்படுத்தின, சூழ்வினை-சூழ்ந்த சிற்பத் தொழில் என்பது அரும்பத வுரையாசிரியர் உரை. இவ்வடை மொழிக்கு இவ்வுரைப் பொருளையே பின்வந்த உரையாசிரியர்களும் எழுதலாயினர். சூழ்வினை என்பது சிலம்பணிக்கு இயற்கை அடை என்று கருதுவது பிழை; பிற சிலம்பினின்றும் வேறு படுத்திக் காட்டும் இனஞ்சுட்டிய அடை என்று ஈங்குக் கொள்ள வேண்டும். சிலப்பதிகாரக் கதைக்கு மூன்று சிலம்புகள் தேவை; கண்ணகியின் சிலம்பு இரண்டு; கோப்பெருந்தேவியின் சிலம்பு ஒன்று கண்ணகி சிலம்பு ஒவ்வொன்றும் காப்பிய நிகழ்ச்சிக்கு இன்றியமையாதது; தனிச் சுட்டுக்கு உரியது. சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு போய் விற்று வருவேன் என்று கோவலன் ஒரு சிலம்பை மட்டும் எடுத்துச் செல்கின்றான். அது பொற் கொல்லன் வஞ்சனையால் வேந்து கோட்படுகின்றது. போற்றருஞ் சிலம்பு, சித்திரச் சிலம்பு, செய்வினைச் சிலம்பு, செஞ்சிலம்பு என இவ்விற்பனைச் சிலம்புக்கு இளங்கோ அடைமொழி புணர்ப்பர். கோவலன் இறந்த பின், கண்ணகி யின் மற்றொரு சிலம்பு கதையை நடத்துகின்றது. எஞ்சி நின்ற சிலம் பொன்றை கையேந்தி ஊர்சூழ்ந்து, அச்சிலம்போடு சென்று வேந்தன்முன் வழக்குரைக்கின்றாள் கண்ணகி. செம்பொற் சிலம்பு, இணையரிச் சிலம்பு, பொற்றொழிற் சிலம்பு எனக் கண்ணகி கைச்சிலம்புக்கு இளங்கோ அடைமொழிகுவர். இன்னணம் கோவலனுக்கு ஒரு சிலம்பும், கண்ணகிக்கு ஒரு சிலம்பும் வேறுவேறாகப் பயன்படக் காண்கிறோம். கோப்பெருந்தேவியின் சிலம்பு இரண்டடையும் பொற் கொல்லன் திருடினானா? ஒன்றுதான் திருடினானா? இரண்டும் களவாடப்பட்டிருக்கு மேல், கோவலனைக் கொன்று ஒரு சிலம்புக் கொண்டுவந்தபோது, மற்றொரு சிலம்பு எங்கே என்று ஊர்காப்பாளரைப் பாண்டியன் கட்டாயம் வினவியிருப்பான். வினவியிருப்பானேல் கண்ணகி வந்து வழக்குரைக்க வேண்டாமலே, தன் கொடுங் கோன்மையை உணர்ந்து உயிர்விட்டிருப்பான். தானே உணர்ந்து கைகுறைத்துக்கொண்ட செங்கோன்மையைப் பொற்கைப் பாண்டியன் வரலாற்றில் அறிகின்றோம். காவலர்களை வினவாமையாலும், காவலன் உயிர்விடாமையாலும், தேவியின் தொலைந்த சிலம்பு ஒன்றேயாகும். கோவலன் சிலம்பு இரண்டையும் விற்க எடுத்துச் சென்றிருப்பினும், கதை வேறு வகையாக முடிந்திருக்கவும் கூடும். இரண்டு சிலம்பு வைத்திருக்கக் கண்டாரேல் கோவலனைக் கொல்ல ஊர்காவலர்கள் மறுத்திருக்கவும் கூடும். ஊழ் வினையால் ஒரு சிலம்பை மட்டும் கொண்டு சென்றான் கோவலன். “காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கணி நீ விலையிடுதற்கு ஆதியோ” (16-111) என ஒரே ஒரு சிலம்பு விற்பனை பற்றியே பொற்கொல்லனிடமும் பேசுகின்றான். மேலும் அவ்வொரு சிலம்பு காவலன் தேவிக்கு ஆம் தகுதியுடையது என்றும் சாற்றுகின்றான். பொற்கொல்லன் அரசியின் ஒரு சிலம்பு கவர்ந்த கள்வனாதலின், கோவலன் சொற்களைக் கேட்டதும், அவனைக் கள்வனெனச் சாட்டிவிடும் சூழ்ச்சி சட்டென அவனுக்கு உதயமாயிற்று. நுணலும் தன் வாயாற் கெடும் என்பது பழமொழி. கோவலன் தன் கூற்றாற் கெட்டான். ஊர்க்காப் பாளரைக் கூவி யீங்கென் தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகிற் கொன்றச் சிலம்பு கொணர்க (16.150-153) என்பது பாண்டியன் கட்டளை. ‘சிலம்பு கையது ஆகின்’ என ஒருமை முடிபு பெறுதலின், ஒரு சிலம்புதான் தொலைந்தது என்பது தெளிவு. வேந்தன் நீர்வார் கண்ணோடு வந்த கண்ணகியைக் கண்டான்; காலணியான சிலம்பு கையில் இருப்பதைக் கண்டான்; அதுவும் ஒற்றைச் சிலம்பாக இருக்கக் கண்டான், கண்டபோதே பாண்டியன் தோல்வி கண்டான் என ஒரு வெண்பா பகர்கின்றது. மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையிற் றனிச்சிலம்பும் கண்ணீரும்-வையைக்கோன் கண்டளவே தோற்றானக் காரிகைதன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர் “கூடலான் கூடாயினான்” என்று மற்றொரு வெண்பா கூறுகின்றது. ஏன்? ஊர் காவலோர் கொண்டு வந்தது தன் தேவியின் சிலம்பு இல்லையோ? இந்நங்கையின் மற்றொரு சிலம்போ? என்று வேந்தன் உள்ளம் உளையத் தொடங்கி விட்டது. கோவலன் விற்பனைச் சிலம்பும் கண்ணகி கைச் சிலம்பும் கோத்தேவியின் களவுச் சிலம்பும் ஆகிய மூன்றுமே சிலப்பதிகாரக் கதை நடப்புக்கு உரியவை. முன்னிரு சிலம்புகளுக்கு வந்த அடைமொழிகளை மேலே காட்டினேன். அவ்விரண்டினும் வேறுபாடு தோன்ற, முத்திறக் கொள்கைக்குக் காரணமானது இதுவென அறிய, ‘சூழ்வினைச் சிலம்பு’ என்று அரச தேவியின் களவுச் சிலம்புக்கு அடைபுணர்த்தினார் ஆசிரியர். பொற்றொழிற் சிலம்பு, சித்திரச் சிலம்பு என்பன போல இத்தேவியின் சிலம்பு தன்மையடை பெறவில்லை. பலவினைகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சுற்றி வருவதற்கு, சூழ்ந்து வருவதற்கு, இச்சிலம்பு காரணமாய் இருந்தமையின் சூழ்வினைச் சிலம்பு என்ற அடைபெற்றது. ஊர் சூழ்வரி, மிளைசூழ் கோவலர், வையை சூழும் மதுரையார் என்ற தொடர்களை ஒப்பு நோக்குக. ஊ நூலியற்றிய பின்னரே பதிகம் செய்யப்பட்டது. நூலுள் வரும் பலவடிகளையும் சொற்றொடர்களையும் பதிகத்தவர் தழுவிக்கொண்டார் என்பது மிக வெளிப் படை. திருமாபத்தினி விண் ஏகிய வியப்பைக் குன்றக் குறவர்கள் இளங்கோவிடம் அறிவித்தனர் என்ற செய்தியைப் பதிகம் கூறுகின்றது. செங்குட்டுவனுக்கு இதனைத் தெரிவித்தோரும் அக்குறவர் களே என்று காட்சிக் காதையால் அறிகின்றோம். குறவர் செய்தி அறிவித்த காலை, உடனிருந்த தமிழ்ச் சாத்தனார் கோவலன் கண்ணகியார் வரலாற்றை இளங்கோவுக்கும் சேரனுக்கும் எடுத்து விளக்கினார் என்று முறையே பதிகமும் காட்சிக் காதையும் மேலும் ஒருங்கு புலப்படுத்துகின்றன. தீவினைச் சிலம்பு காரண மாக ஆய்தொடி யரிவை கணவற் குற்றதும் வலம்படு தானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும் செஞ்சிலம் பெறிந்து தேவி முன்னர் வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி அஞ்சி லோதி அறிகெனப் பெயர்ந்து முதிரா முலைமுகத் தெழுந்த தீயின் மதுரை மூதூர் மாநகர் சுட்டதும் (25.69-77) இவை சாத்தனார் செங்குட்டுவனுக்கு மொழியும் வரலாற்று விளக்கம்; மேலும் நூற்பெயரின் உண்மை காண்பான் என்னை ஆராயத் தூண்டிய அடிகள். தீவினைச் சிலம்பு, சிலம்பொடு சென்ற, செஞ்சிலம் பெறிந்து என மூன்று சிலம்புகள் இப்பகுதியில் இடம் பெற்றன. ‘சிலம் பொடு சென்ற சேயிழை வழக்கு’ என்ற தொடர் கண்ணகி யின் கைச்சிலம்பைக் குறிக்கும். கண்ணகி தான் ஏந்திச் சென்ற கைச்சிலம்பை வேந்தன் முன் உடைக்கவில்லை. இச்சிலம்பை உடைத்து உள்ளிருக்கும் பரல் மாணிக்கம் என்று காட்டுவது சான்றாகுமா? இதனோடு இணையான மற்றொரு என் சிலம்பையே என் கணவன் கொண்டு சென்றான், காண்மின் என்று பறைசாற்றுவதே கண்ணகி கைச்சிலம்பின் பயன். ஊர்காவலர் கொன்று கொண்டு வந்த சிலம்பே அகத்து உள்ளது மாணிக்கமா முத்தா என்று காண்பதற்கு உரியது. கண்ணகி சிலம்புகள் மணிப்பரல் உடையன; தேவியின் சிலம்புகள் முத்துப்பரல் உடையன: எனினும் இப்பொதுச் செய்தி வழக்குரையன்று. கண்ணகி யின் கைச்சிலம்பு மணிப்பரல் உடையதாக இருக்கலாம். தேவியின் தொலையாத அரண்மனைச் சிலம்பு முத்துப்பரல் உடையதாக இருக்கலாம். எத்தேவியின் சிலம்பு எப்பரலுடையது என்று காண்பதா ஈண்டு வழக்காட்டம்? கண்ணகி சிலம்பின் பரல் மணி; தேவியின் சிலம்புப் பரல் முத்து. இப்பொதுத் தன்மையை ஊர் காப்பாளர் கொண்டு வந்த ஒரு சிலம்பில் வைத்துப் பார்த்துப் பரல்வேறுபாடு கண்டு வழக்கின் உண்மை தெளிய வேண்டும். இவ்விளக் கத்தை நினைந்து பின்வரும் வழக்குரை யடிகளை நோக்குக: என்காற் பொற்சிலம்பு மணியுடை யரியே எனத் தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடை யரியே (20-67-69) என் கணவன் விற்க எடுத்து வந்த என் சிலம்பு மணிப்பரல் உடையது எனக் கண்ணகி வழக்காடினாள் எனவும், நீ சொல்வது சரியான சான்று; எனினும் ஊர்காவலர் கொன்று கொணர்ந்து யாம் வைத்திருக்கும் சிலம்பு முத்துப்பரல் உடையது எனப் பாண்டியன் எதிர்ச்சான்று விளம்பினான் எனவும் இப்பகுதிக்கு ஒரு சிலம்பின் மேல் எழுந்த வழக்காகக் கொள்ளவேண்டும். பின்னர் வழக்கிற்கு உரிய அச்சிலம்பைக் கொண்டு வருக என்று பாண்டியன் ஏவினான்; மெல்லப் பிரித்துப் பார்க்கும் கருத்தோடு அதனைத் தன்முன் வைத்தான். அச்சிலம்பைப் பார்த்தாள் கண்ணகி. இச்சிலம்பால் கணவனை இழந்து வாழ்வு முடிந்த நிலையை எண்ணினாள். பொறாது பொங்கிய சினத்தளாய், அதனை உடைத்தெறிந்தாள். உள்ளிருந்த மணிப்பரல் ‘கொன்று அச்சிலம்புகொணர்க’ என்று சொல்லிய தென்னவன் வாயைத் தாக்கிற்று. ஆதலின் ‘செஞ்சிலம்பு எறிந்து’ என்று மேலே தந்த காட்சிக் காதைப் பகுதியில் வருவது கோவலன் விற்பனைக்குக் கொண்டு சென்ற சிலம்பையே குறிப்பதாகும், “கொங்கையாற் கூடற்பதி சிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம்” என்று வாழ்த்துக் காதையிலும் இவ்வழக்குச் சிலம்பு ‘செஞ்சிலம்பு’ என அடைமொழிப் படுகை காண்க. “சிலம்பொடு என்பதும் ‘செஞ்சிலம்பு’ என்பதும் கண்ணகி சிலம்பிரண்டினையும் குறித்து விடுதலின், ‘தீவினைச் சிலம்பு’ என முதலில் வருவது கோப்பெருந்தேவியின் களவுச் சிலம்பு என்று உய்த்துணரலாமன்றோ? தீவினைச் சிலம்பு காரண மாக ஆய்தொடி யரிவை கணவற் குற்றதும் என்ற ஈரடிகளின் நடை தனித்து நினையத்தகும். ஆய்தொடி யரிவை என்பது கண்ணகியையும், அரிவை கணவன் என்பது கோவலனையும், கணவற்கு உற்றது என்பது அவன் கொலைப் படுதலையும் குறிப்பன. தீவினைச் சிலம்பு என்பதற்குக் கண்ணகி சிலம்பு என்று பொருள்படுத்தின், கண்ணகி சிலம்பு காரணமாக அவள் கணவன் கொலைப் பட்டான் என்று பொருள்படும். இச்சிலம்பா அவன் கொலைக்குக் காரணம்? ஆய்தொடி யரிவை சிலம்பு காரணமாகக் கணவற்குற்றது என்ற நடை யில்லை; ஆய்தொடியரிவை கணவன் என்பது பின்னடியாக இருத்தலின், முன்னடியில் வரும் தீவினைச் சிலம்பு கதைப்படி கோப்பெருந்தேவியினது ஆதல் தெளிவு. இக்காட்சிக் காதையில் வரும் சிலம்பின் முத்தொடர்களும் கண்ணகியின் இரு சிலம்புகளையே குறிக்கும் எனக் கொளின், அரசதேவியின் சிலம்பு குறிப்பிட வேண்டாவா? அச்சிலம்பு இன்றேல், கண்ணகி தன் சிலம்பு அணிந்து நல்வாழ்வு வாழ்ந்திருப்பாள்; ஆயின் இளங்கோ காப்பியத் துக்குப் பொருளாகியிராள். தேவியின் சிலம்புக் கள்வன் என்று குற்றஞ் சுமத்திய காரணத்தாற்றான், காரணத்தின் பின்தான், கோவலன் கொலையுண்ணலும். கண்ணகி வழக்குரைப்பும், சிலம்பு டைப்பும், வஞ்சினம் சாற்றலும், மாநகர் அழிவும், தென்னவன் வீழ்வும், தேவி மாய்வும் எல்லாம் நிகழ்ந்தன என்று செங்குட்டு வனுக்குச் சாத்தனார் விளக்கினார். பலர் மாய்வுக்குக் காரண மாக இருந்தமையின், பாண்டியன் சிலம்பினைத் ‘தீவினைச் சிலம்பு’ என்று தொடங்கினார். இச்சிலம்பின் தொடர்பு இன்றேல், இவ்வளவு பெரிய அரிய விளைவுகள் நடந்திரா என்பது புலவர் கருத்து. “தீவினைச் சிலம்பு காரணமாக” என்று காட்சிக் காதையில் வருவதும், “சூழ்வினைச் சிலம்பு காரண மாக” என்று பதிகத்தில் வருவதும் ஒப்பு நோக்குவார்க்குக் கோப்பெருந்தேவியின் தொலை சிலம்பே காரணம் என்பது செவ்விதின் விளங்கும். சிலப்பதிகாரப் பெயர் பற்றிய என் ஆராய்ச்சி முன்னை யோர் ஒருமுகமாகக் கூறிவரும் கருத்துக்கு முற்றுமுரணாக இருந்தாலும், உண்மை காண முயலலும் கண்ட உண்மையை வலியுறுத்தலும் தமிழ் மாணவர் கடனாகும். இக்கடமை யுணர்ச்சியே என் கருத்தை வெளியிடத் தூண்டிற்று. 2. இந்திய வழிகாட்டி அ திருக்குறள் தனி மனித வாழ்வு, சமுதாய வாழ்வு, நாட்டு வாழ்வு, ஞால வாழ்வு அனைத்தும் முழுதுறத்தழுவிய வாழ்வியல் நூல். அது கற்பனைப் பனுவலன்று. வறட்டுக் கொள்கை பேசும் நூலன்று. எந்நிலைய வாழ்வுக்கும் வழி காட்டும் முதனூல் வினையின் நீங்கி விளங்கிய அறிவன் கண்ட தலைநூல். அந்நூலை நடைமுறைக் கண்ணோடு பார்க்க வேண்டும். நாள் நிகழ்ச்சிகளோடு உராய வேண்டும். காலப்போக்கோடு ஒத்திட்டுக் காணவேண்டும். திருக்குறள் ஓர் உயிர் நூல் என்பது மெய்ப்பட வேண்டுமாயின், வள்ளுவர் குறள் களைக் கால நடப்புக்களோடு பொருத்தி எழுதவும் சொல்லவும் விளக்கவும் வேண்டும். இது செய்தற்கு நாம் அஞ்சுகின்றோம். செய்யப்புகின், கருத்து வேறுபாடு தோன்றிப் பூசல் பொங்கி எங்கே திருக்குறளின் பெருமை போய்விடுமோ என்று மயங்குகின்றோம். இவ்வச்சம் தவறானது, பயனற்றது. ஆதலின் இக்கட்டுரைக்கண் இக்கால நடப்புகளின்மேல் திருக்குறளைச் செலுத்திக் காண்போம். அறம் பொருள் காமம் என்று திருக்குறள் மூன்று பாலுடையது எனினும், பொருட்பாலே எழுபது அதிகாரம் கொண்ட பெரும்பால். அது பல பொருள்களுக்கும் பொது வான பால் என்று பெயர் பெறினும் மெய்யாக நுவலின், பொருட்பால் ஓர் அரசியற் பால். இறைமாட்சி என்பது அதன் முதலதிகாரம். ஆதலின் அதன் பின்னதி காரங்கள் எல்லாம் ஓராற்றான் அரசியற் சார்புடையன என்பது பெறப்படும். நாட்டின் ஆட்சிக்கும் மக்களின் வாழ்வுக்கும் உயிர்மெய் அனைய உறவு உண்டாதலின் பொருட்பாலிற்றான். வள்ளுவரின் பல்வேறு கொள்கைகளையும் சிக்கல் தீர்க்கும் வழிகளையும் காண்கின்றோம். பொருட்பால் வள்ளுவரின் அறிவுப்பால். வள்ளுவ அரசு மக்களுரிமை சான்றது. அடிமையை வெறுப்பது; நல்லரசு வேண்டுவது; அல்லரசு கடிவது; நல்லரசனைப் போற்றுவது; அல்லரசன் ஒழிகவெனத் தூற்றுவது; வல்லரசு வேண்டுவது; மெல்லரசை இகழ்வது. வள்ளுவ அரசு முடியரசு, குடியரசு, படையரசு என்ற வகைக்கு உட்பட்டதன்று. வகை எதுவாயினும் ஆகுக. செங்கோலரசே திருக்குறள் வேண்டும் நாட்டரசு. அரசன் அணியும் முடிகளை ஆடைகளை அணிகளை, அவன் தேவியர்களை, அத்தேவியர்களின் அழகுக் கோலங் களை, அரசனது வழிவழி மக்களை இன்ன பிறவற்றைத் திருக்குறள் கூறவில்லை. அரசன் என்ற சொல்லுக்காக அடிபணிந்து எந்நாளும் போற்ற வேண்டும் எனவும் கூறவில்லை. முறை செய்து காப்பாற்றும் மன்னனாயின், மக்கட்கு இறை யாவான்; வெருவந்த செய்வானாயின் வெங்கோலன் ஆவான்; அல்லவை செய்வானாயின் கொலைஞன் ஆவான்; தன் செயலால் தானே கெடுவான்; கூழும்குடியும் ஒருங்கிழப்பான்; அவன் குடிமக்கள் அழுத கண்ணீர் படையாகி அவனை அழிக்கும்; அவனது ஆட்சி பேயாட்சியாகும். இவ்வாறு கொடுங்கோல் அரசனாயின் அவனைக் குப்புறத் தள்ளக் குறள் பின்வாங்குவதில்லை. மேலும் அரசனே நாட்டின் தனிப் பெருந் தலைவன் என்பது வள்ளுவர் கருத்தன்று. அவன் தன் குடி மக்களுள் சிறந்த பெரியவர்கள் உளர். அன்னவர் களைத் தழுவித்தான் அரசன் நாட்டினை இயக்க வேண்டும். ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் (899) என மன்னனுக்கு அறிவுரையும் அக்கரையும் கூறுவர் வள்ளுவச் செம்மல். செவிகைப்பச் சொற்பொறுக்கும் வேந்தனே பண்பு டையவன் எனவும், வென்றி தருவது வேலன்று செங்கோல் எனவும் ஆள்வார்க்கு இடிக்கும் நண்பர்கள் வேண்டும் எனவும் அரசனுக்கு மேல் நின்று அறிவுறுத்துவர். திருக்குறள் எக்காலத்து எழுந்தது, எழுந்த காலத்து எவ்வகை அரசு இருந்தது என்பது வினாவன்று; திருக் குறளை எவ்வகைச் சிந்தனைச் செல்வன் எவ்வண்ணம் எழுதினான் என்பதுவே வினா. உடம்பின் இயற்கைகளை எண்ணி நல்லிலக் கணம் வடித்தாற்போல, அரசியலின் ஒழுகலாறுகளைக் கண்டு உணர்ந்து காலங்கடந்த நெறிகளைத் தெளிவிப்பது திருக்குறள். அரசு என ஓரமைப்பு மக்களினத்துக்கு வேண்டியவரை அரசு வள்ளுவங்கள் வாடாதவை, தள்ள முடியாதவை. ஆ நம் இந்தியவரசு உரிமை பெற்ற மணிமுதல் சொல் லொணா இடர்ப்பாடுகளை எதிரேற்று முன்னேறி யுள்ளது. ‘இளையதாயினும் பகையரசு கடியும் செருமாண் தென்னர் குலமுதலாதலின்’ என்று இளங்கோ பாராட்டியது போல, இளைய இந்திய நல்லரசு பெறலருந் தலைவர்களின் ஆற்றலாலும், கிளர்ச்சி விரும்பா மக்களின் சீரான ஒழுக்கத் தாலும் சாயாது இயங்கி வருகின்றது, ஐந்நூற்றுக்கு மேற்பட்ட குறு நிலங்கள் ஓரிந்தியாவாகக் கிளர்ச்சியின்றி இணைந்தது உலக வரலாற்றில் ஒரு புதுமை. இப் புதுமையைப் பழமைபோல செய்தவர் சர்தார் படேல். ஒரு காசுமீரம் நம்மைப் படுத்தி வரும் பாட்டினைப் பார்த்தால், படேலின் அருந்திறலாண்மை புலப்படும். இங்ஙனம் வளர்ந்து, இனியும் வளர வேண்டிய இந்திய வரசுக்கு வள்ளுவர் பொருத்தமான வழிகாட்டி. திருக்குறள் இந்தியத் தமிழ் நூல். இந்திய அரசியல் அமைப்பின் அறிவு ஆள்வார்க்கும் சார்பாளர்க்கும் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு திருக்குறட் பொருட்பாலறிவும் இன்றியமையாதது. இன்னும் மெய்ப் படமொழியின், திருக்குறட் கல்விதான் யார்க்கும் முதற்கண் வேண்டப்படுவது. ஏன்? அரசியலமைப்பு அவ்வப்போது கட்சிப் பெரும்பான்மையால் திருத்தத்துக்கு இடனாகிச் செல்வது வள்ளுவ அரசியல் திருத்தம் கடந்த செம்மைப்பாடு உடையது. இந்தியவரசு தனி மனிதப் பண்புகள் நிரம்பியதாகக் காண் கின்றேன். விருந்தோம்பல், இனியவை கூறல், பொறையுடைமை, அருளுடைமை, செந்நன்றியறிதல், இன்னா செய்யாமை, அவாவறுத்தல் இன்ன பிற தனி மகப்பண்புகள் நம் அரசின் வெளி நாட்டுக் கொள்கைகளில் மிகுதி. இறைமாட்சி, ஓற்றாடல், வினைசெயல் வகை, படைமாட்சி, பகைத்திறந்தெரிதல் என்றின்ன அரசியங்கள் தலைவர்களின் அயலகச் சிந்தனை களில் ஊடுருவவில்லை என்பது என் கருத்து. நம் அரசு திருக்குறளின் அறத்துப் பாலுக்கு ஓர் இலக்கியமாக ஒளிர்கின்றதேயன்றி, பொருட்பாலுக்கு இலக்கி யளமாக உயரவில்லை. ஏன்? தனியியமும் அரசியமும் ஒன்று, பெரிதும் வேறில்லை என்பது நம் தலைவர் களின் துணிபு. இம் மனப்பான்மையினால் உண்ணாட்டு அயல்நாட்டுக் கோட்பாடு களை வகுத்துள்ளனர். அதனால் எதிர்பாரா இன்னா விளைவுகள் புகுந்துவிட்டன. இன்னும் புகுவன. கொள்கைகளின் களங்களை முரணின்றி நமக்குப் புரியவைப்பது திருக்குறள். ஒருவன் கொள்கை என்ன? உள்ளூர்க் கொள்கை என்ன? உலகக் கொள்கை என்ன? இவற்றை அறியும் நோக்கில் வகுத்துத் திருக்குறளைப் பயில வேண்டும், குற்றஞ் செய்தவர்களைப் பொறுத்தவர்க்குப் பொன்றுந் துணையும் புகழ் என்பது தனியறம்; குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் என்பது அரசறம். ஒன்றாக நல்லது கொல்லாமை என்பது தனியறம்; கொடியவர்களைக் கொன்று தண்டிக்க என்பது அரசறம். தவமறைந்து அல்லவை செய்யற்க என்பது தனியறம்; தவவடிவங்கொண்டு ஒற்றாடுக என்பது அரசறம். எல்லார்க்கும் பணிதல் நல்லது என்பது தனியறம்; பகைவரைக் காணின் பணிவதுபோல் முதுகு காட்டுக என்பது அரசறம். ஒருவன் ஒருவனை அழித்தால் கொலை என்கின்றோம்; அழித்தவனைக் கொலையாளன் என்கின்றோம். ஆனால், போர்க்களத்துக் கொலையை வீரம் எனவும், அக்கொலை செய்தானை வீரன் எனவும் போற்றி வாகைமாலை சூட்டு கின்றோம். இக்கொலை வீரப் பயிற்சியும் கருவியோடு அளிக்கிறோம். அறங்கள் இரு வேறாக இருக்கலாமா? பெருமுரண் இல்லையா? இதற்கு விடை இக்கட்டுரைக்கண் விரிப்பின் பெருகிவிடும். மனமாசின்மையே அறத்தின் அடிப்படை. பிறநலமே அறத்தின் உரைகல்., தவக்கோலம் கொள்ளும் ஒற்றனும், போர் செய்யும் வீரனும் தம்முயிரை மதியாது நாட்டு நலம் பேணுபவர்கள் அன்றோ? அவர்கள் செயலில் தன்னல மாசுக்கு இடனுண்டா? ஆதலின் அரசறங்கள் பொதுநலம் தரும் நல்லறங்களே என்பது தெளிவு. இ ஓர் அரசுக்குப் படையும் படைப் பெருக்கமும் இன்றியமை யாதவை என்பதனை நம் தலைவர்கள் ஆழமாகச் சிந்திக்க வில்லை. மாறாக, படைவளத்தை இழித்தும் கழித்தும் பேசினர். பொருளே வளம் என்று அதற்கே திட்டம் பல இட்டனர். மக்களைப் படையுணர்ச்சிப்படுத்தாது பொருளுணர்ச்சிப் படுத்தினர். சுற்றியுள்ள உலகம் நம் படை வறுமையைப் புரிந்து கொண்டது. படை மனம் பகைபனம் இல்லா நாடு என்பதனையும் புரிந்துகொண்டது. இஃது இந்தியாவின் தனிப்பெருமை என்று நம்மிற் பலர் தற்பெருமை ஆடலாம். இப்பெருமை சீனத்தாக்குதற் காலத்து என்னாயிற்று? யார் தரினும் படை தருக என்று இரந்து ஏளனத்துக்கு ஆளானோம். சீனா வஞ்சித்தது, செய்ந்நன்றி கொன்றது என்று தனியறம் பழித்தோமேயன்றி, அரசறம் எது என்று நாடவில்லை. செய்ந்நன்றியுணர்வு அரசறம் அன்று. அரசாள்வார்கள் அடிக்கடி மாறுவார்கள். அரசின் கொள்கைகள் அயற்சூழ் நிலைகளால் அடிக்கடி நிலை மாறுவன. அப்போது தன்னாட் டிற்கு நல்லது எது என்று எண்ணியே வினைசெயல் வகைகளை ஆளுநர் மேற்கொள்வர். நாட்டு நலம் கருதிச் சூழ்ச்சிகளைக் கையாளும் அரசியல் அறிஞர்களைப் பழிப்பது பொருந்தாது கையாளாதவர்களே பழிப்புக்கு உரியர். வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேல் மேக பகை (861) என்பது பகைமாட்சிக் குறள். படைமெலியவர்களைப் பகைத்து நாட்டுநலம் பேணுக என்று வள்ளுவரே ஆணை யிடுகின்றார். அங்ஙனம் செய்யாத அரசுக்குப் புகழ் இராது எனவும் அச்சுறுத்துகின்றார். நம் அரசியற்றலைவர்கள் இன்றுவரை முற்றும் மறந்து வரும் ஓர் அரசியல் உண்டெனின் அது பகைமாட்சியைப் பயன்படுத்தாமை யாகும். திருக்குறள் எண்பத்தேழாவது அதிகாரத்தை இனியாவது நாம் கண்ணும் கருத்துமாகப் பின்பற்ற வேண்டும். நம் தாய்நாடு ஞாலத்தில் ஒரு பெரு நாடு; மாநில மீது அதுபோல் பிறிதில்லை என்ற புகழ்ச்சிக்கு உரிய நாடு. எனினும் பயன் என்ன? நம்மைக் கண்டு பக்கத்து நாடுகள் துணுக்குற வில்லை. சீனப் படையெடுப்புக்குப் பின், சுற்றுச் சிறு நாடுகளுக்கெல்லாம் குளிர் விட்டுவிட்டது. அணிய நாடுகளின் பகைகூடாது, ஐ.நா.வில் சார்புத்துணை வேண்டும் என்று அஞ்சியஞ்சி விட்டுக் கொடுத்த போக்கால், கண்டது என்ன? பன்னூறாண்டு மண்ணோடு பாடுபட்ட இந்தியர்களை, இந்தியர்கள் என்பதற்காக இலங்கை விரட்டுகின்றது; கப்பல் கப்பலாகப் பருமா ஏற்றுமதி செய்கின்றது. பாகித்தான் அகதிகள் ஒருபுறம் குவிய, இலங்கை யகதிகளும் பருமா அகதிகளும் தாயகம் ஓடிவந்து தவிக்கின்றனர். இங்ஙனம் வரவிட்டால், இந்தியன் என்பதற்கு அகதி என்று பொருள் என மேனாட்டு அகரநூல்கள் எழுதவும் கூடும். உலகம் ஒன்று, உலக மக்கள் ஓரினம் என்று பறையறையும் நம் கொள்கைக்குப் பழிப்பு வருமோ? அரசியல் அரங்கில் ஐந்தொழுக்கம் கண்ட நம் இலக் கணத்துக்கு இலக்கியமாக நாமாவது நடந்துகாட்ட வேண்டாமா? என்று நாம் எண்ணும் புழுக்கத்தை அயலக நாடுகள் கண்டவாறு பயன்படுத்துகின்றன. எகித்து, காங்கோ, கொரியா, வியட்டுநாம், கியூபா நிகழ்ச்சி களில் நாம் காட்டிய எதிர்ப்புத் துடிப்பை இலங்கைத் தமிழர் பூசலில் காட்டியிருந்தால், திபேத்தில் காட்டியிருந்தால், அணிய நாடாளுநர் உள்ளத்து அச்சம் குடிகொண்டிருக்கும். சிறிது ஆராய்ந்து இறங்குவார்கள். இலங்கைத் தமிழர்கள் அவல நிலைகளை ஐ.நா.வில் கொண்டுபோய் விளம்பியிருந்தால், பருமாவிற்கு இன்று இவ்வளவு துணிவு பிறந்திராது. என்னாமோ என்று பருமா வாழ் தமிழர்களை நாமே இறக்குமதி செய்துகொள்ள வேண்டிய பரபரப்பும் பதைபதைப்பும் ஏற்பட்டிரா. நம்மரசு சேணாடுகளிடை மதிப்புப்பெறல் கருதி, அணிய நாடுகளுக்கு இளக்காரம் கொடுத்துவிட்டது. எல்லா அயல் நாடுகளுக்கும் பரவலாக ஒரே ஒரு வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிப்பது ஓர் அரசியல் தவறாகும். அவரவர் பண்பறிந்து எதனையும் செய்ய வேண்டும்; இன்றேல் நன்மையும் தீமையாகும் என்பர் வள்ளுவர். உறவின் நிலை நோக்கி நாட்டுக்கு நாடு நம் அயலகக் கொள்கை வேறாக இருத்தல் வேண்டும். இக்கருத்தை நம் தலைவர்கள் நீளச் சிந்திப்பார்களாக. சுற்றுநாடுகளின் இளக்காரம் அப்போது தான் அகன் றொழியும். மேலும் ஒரு நாடு தன் அயலகக் கொள்கைகளை முற்றும் தானே வகுத்துக்கொண்டுவிட இயலாது. படைப் பெருக்கம் கூடாது என்று நாம் உறுதியாக எண்ணினோம். அமைதிப் பேச்சால் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதே நெறி என்று நன்னர் எடுத்துரைத்தோம். ஆயினும் என்னோ? சீனத் தாக்கம் நம் கொள்கைக்கெல்லாம் ஓரதிர்ச்சியாயிற்று. அதன்பின் ஆட்படை கருவிப்படை ஊர்திப்படையெல்லாம் பெருக்கத் தொடங்கி விட்டோம். “மாரத வீரர் மலிந்த நன்னாடு” என்று வீரப் பாடல்களையும் வீரத் தாயர்களின் திறங்களையும் கற்பிக்கப் புகுந்துவிட்டோம். இதனோடு நிற்றலாகாது. மேலும் சுற்று நாடுகளின் முற்போக்குகளை முன்னரே ஊகித்துக் கொண்டு ஓரடி முன்வைத்துவிட வேண்டும். ஈ சீனா எப்படியும் ஒருநாள் அணுக்குண்டு ஆக்கிவிடும். அதன் வெடிப்பைக் கேட்கும்வரை நாம் வாளாவிருத்தல் ஆகாது, ஆகாது. படையொழிப்புப் பறைசாற்றும் நாம் அணுக்குண்டு செய்யலாமா? செய்வோமென்று சொல்லின், உலகம் நகையாடாதோ? என்று நினைப்பது தனியறம், நாட்டறமன்று. சீனத்தாக்குதலுக்கு முன் இந்தியா போய்க் கொண்டிருந்த போக்கிலேயே பின்னும் போதல் ஒரு போக்கு எனப் புகழப்படுமாயினும், அப்போக்கு பிற்போக்கேயாம். மாறிய சூழ்நிலைகளைக் கணித்து, வேண்டுமேல், மாறத் தயங்குதல் கூடாது. அதுவே நாடு காக்கும் பெருநெறி. யார் தூற்றினும் தூற்றுக என்று ஐதராபாத்தை இணைத்தோம். படை விடுத்துக் காசு மீரத்தை மீட்டோம். படைதொடுத்துக் கோவாவைக் கொண்டோம், அதனால் ஓரளவேனும் வாழ்கின்றோம். இத்துணிவு பாரதத் தலைவர்களுக்கு இன்னும் பலவாகுக. அணுக்குண்டு செய்யும் ஆற்றலுடைய ஆசிய நாடுகள் மிகச்சிலவே. அதற்குரிய மூலகங்கள் எம்மிடமிருந்தும், அணுக்குண்டு வடிக்க மாட்டோம் என்கின்ற கொள்கைத் தடிப்பு இனி வேண்டாம். வழி வழி நட்பல்லது வேறறியாச் சீனம் வஞ்சித்தபின், அணுக்குண்டு ஆக்கிக் காட்டும் கொள்கைத் துடிப்பே வேண்டற்பாலது. இந்தியக் குண்டின் வெடிப்பை எதிரிகள் கேட்கும் நாளே இனிய நாள். இவ்வல்லமையை நாம் வேண்டுவது பிறநாட்டைப் பிடித்து வஞ்சி சூடுதற்கன்று; நொச்சி என்னும் தற்காப்புக்கே, ஒரு நாடு இந்தியாவை இளக்கமாக எண்ணாதபடி அவ்வெண்ணத்தை முளையிலே கிள்ளுதற்கே. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு (878) காலத்திற்கேற்ற வகை வகையான தற்காப்புக் கருவியெல்லாம் முன்னரே நம்மிடத்து இருந்தால், பகைவர் நம்வழி வராது வேறுவழி பார்ப்பார்கள் அல்லவா? இந்திய மன்னர்கள் ஐரோப்பியர்களுக்கு அடிமைப்பட்டதற்கு ஒரு காரணம் காலத்திற்கேற்ற படைக்கருவி எதிரிகள் வைத்திருந்த கருவி வகைகள் இல்லாமையாம். எது கடன் வாங்கினாலும் தற்காப்புக் கருவிகள் கடன் வாங்க வேண்டாதபடி, தானே ஆக்குவிக்கும் தன்னாற்றல் நம் நாட்டிற்கு வேண்டும். அப்போதுதான் அணிய நாடுகள் நம்மை அச்சத்தோடும் ஆர்வத்தோடும் மதிக்கும். நம் வள்ளுவரை நாமே நம் நாட்டின் அரசியல் வழிகாட்டியாக இதுகாறும் கொள்ளத் தவறிவிட்டோம், கொள்ளுமாறு எடுத்துச் சொல்லவும் இந்தியத் தமிழர்கள் தவறிவிட்டனர். இத்தவறு இனியும் நீளக் கூடாது. தனியறம் அரசறம் என்பவனவற்றை உணர்த்த வல்ல ஓர் இந்திய நூல் திருக்குறள். ஒன்றாக நல்லது கொல்லாமை என்று உலகம் மொழிந்த வள்ளுவரே படைமாட்சியும் படைச்செருக்கும் மொழிகின்றார். நாட்டின் செல்வத்துள் படையே தலைச் செல்வம் என்று வலியுறுத்துகின்றார். அரசின் முதலு டைமை படையே என்று கண்டார் வள்ளுவர். தாம் கண்டவாறே கற்பவர்க்கு உணர்த்தவும் துடித்தார். பொருட்பால் எழுபது அதிகாரம், எழுநூறு குறள்கள் கொண்டது. இறைமாட்சி என்பது முதலாவது அதிகாரம். அவ்வதிகாரத்தின் முதற் குறளாவது: படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (381) இக் குறளின் முதலடிக்கண் முதலாவது இருக்கும் முதல் அசைச் சொல் படை என்பது. படை என்னும் ஆற்றலுடைய சொல்லை முதலாவதாக வைத்துப் பொருட்பாலையே தொடங்கியுள்ளனர் வள்ளுவர். படையின் இன்றியமை யாமையை இதனைவிட வேறு வகையால் உணர்த்த முடியுமா? வள்ளுவரை உலகிற்கு வழங்கிய தமிழிந்தியா தன் வள்ளுவ மகனின் அருமையை அறியவில்லை. இனியேனும் வள்ளுவ நம்பி இந்திய வழிகாட்டி ஆகுக. வழிகாட்டியெனத் தலைவர்கள் வணங்கி யொழுகுக. அரசறம் பகைமாட்சி, படைமாட்சி, படைச்செருக்கு, பகைத்திறந்தெரிதல் என்ற வள்ளுவ அரசியங்களை நம் தலைவர்கள் மேற்கொள்ளுக. 3. வள்ளுவர்கள் அ திருக்குறட்கு உரைகள் பல முன்னும் தோன்றி யுள்ளன; இன்றும் தோன்றி வருகின்றன; நாளையும் தோன்றும் என்பதில் ஐயமில்லை. முழுவுரைகளாகச் சிலர் எழுதிவர, பலர் தனிக் குறட்கு ஆங்காங்கே புத்துரை சொல்லியும் வரைந்தும் வருகின்றனர். வேறு எத்தமிழ் நூலுக்கும் இல்லாத உரைவளப் பங்கள் திருக்குறளுக்குப் பெருக்கெடுப்பதை காணும் நாம் நூலுள் தலையாயது திருக்குறளே என்று வீறு எய்துகின்றோம்; பெருமை முரசு அறைகின்றோம். இளங்கோ, சாத்தர், திருத்தக்கர், சேக்கிழார், கம்பர், வில்லியார், நாயன்மார், ஆழ்வார் ஆதியாய பெரும் புலவர்கள் கருத்தாலும் சொல்லாலும் திருக்குறளை வாரி வைத்துக் கொண்டனர்; இஃதோர் பெருமை. எண்ணிறந்த உரைநடையும் சொற்பொழிவும் கட்டுரையும் நாடகமும் ஓவியமும் திருக்குறள் பற்றி எழுகின்றன; இதுவும் ஒரு பெருமை. ஆரவாரமின்றித் திங்கள்தோறும் ஆயிர மக்கட்கு மேலாய் அறிவூட்டும் புதுக்கோட்டைத் திருக்குறட் கழகம் போலும் தமிழவைகள் தோன்றிக் குறளைப் பறை சாற்றுகின்றன; இதுவும் ஓர் பெருமையே! ஆங்கிலம், செருமனி, பிரஞ்சு, இலத்தீன், இந்தி, தெலுங்கு முதலாய மொழி பலவற்றில் திருக்குறள் பெயர்க்கப் பட்டுள்ளது என்பதும் பெருமைக்கு உரியது. விலையில் பதிப்பு, மலிவுப்பதிப்பு, பரிசுப்பதிப்பு, கைப்பதிப்பு, குழந்தைப் பதிப்பு, சொல்லடைவு, பொருளடைவு என்ற வகைப் பதிப்புக்கள் திருக்குறட்கு அணிசெய்தலும் பெருமைக் குரியதே. தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் இறுவாய் குறட் பாடம் இல்லாத வகுப்பில்லை என்பதும் பெருமைச் செய்தியேயாகும். இவ்வெல்லாம் நூலுள் உள்ள அகப்பெருமைகளா? அல்லவே யல்ல. குறளைப் பரப்ப முயல்வார் மேற்கொள்ளும் வழிப் பெருமைகள். இவற்றால் வள்ளுவர் உள்ள நிலையினின்று உயர்ந்துவிடார். ஆனால் ஊரும் நாடும் வள்ளுவங்களைக் கற்று உயரும். ஆ உரை பல தோன்றல் மேலைப் பெருமைகள் போல்வ தன்று. ஒரு நூலுக்கு ஒரே உரைதான் எழுதப்பட்டுள்ளது; பின்னர் வேறு உரைகளே எழவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நூலொன்று உரையொன்று என்பது பெருமையா? சிறுமையா? அந்நூலின் கருத்தை அவ்வுரை யொன்றே தெளிவாக்கிவிட்டது என்பது தானே குறிப்பு. உரைக்குப் பெருமை இதுவன்றோ! பலவுரை வேண்டாத தெளிவு நடையுடையது அந்நூல்; தெள்ளுநடையில் எழுதி னான் அந்நூலாசிரியன் என்பதன்றோ நூலுக்கும் நூலானுக்கும் பெருமை! திருக்குறட்கு உரைபல உண்டென் றால், ஒவ்வோர் உரையும் குறையுடையது என்பதுவே முடிவாகும். உரை யாசிரியர்கள் சிறு படிப்பாளிகளா? புலமைச் செல்வர்கள் இல்லையா? அவரெல்லாம் உரையிற் குற்றப்பட்டார் என்று சொல்ல நா எழுமா? பலவுரைக்கு இடந்தருதலின் திருக்குறள் தெளிவற்று எழுதப்பட்டது என்றும், வள்ளுவர் மயக்க நடையில் எழுதினார் என்றும் நினைக்கவும் கூசுமன்றோ? பல்பொருள் காட்டுதலின், குறள் ஆழமுடையது என்றால் என்னை? நன்று நன்று, கருத்துத் தெளிவில் தோன்றுவதன்றோ ஆழம் எனப்படும். கருத்துள்ளே குழப்பமும் கலக்கமும் மயக்கமும் ஆழமாமோ? இ வள்ளுவர் தாம் எண்ணிய ஓர் எண்ணத்தைக் காட்ட வேண்டும் என்றே குறள் யாத்திருப்பார். எண்ணிய ஒரு பொருளின் மேலும் பல்பொருள் புலப்படட்டும் என்றோ எண்ணிய கருத்து மறைய எண்ணாத கருத்துத் தோன்றினும் தோன்றுக என்றோ ஆசைப்பட்டிருக்க மாட்டார். நூல் நயம் என்பது நூற்பொருளிலே ஐயப்பட்டு விளங்காது இன்புறு வதன்று; பொருள் விளக்கத்திற்குப்பின் அதன் நுண்ண மைப்பை அறிந்து இன்புறுவதாகும். வள்ளுவர் நெஞ்சார ஒரு பொருள் குறித்தே பாடியிருப்பினும், மொழி நடை காரண மாகச் சில குறள்கள் பிறபொருளும் தருதல் உண்டு. சொற் களுள் பலபொருள் சுட்டுவனவும் உண்டன்றே; இவ்வகைச் சொல்லாட்சி காரணமாகச் சில குறட்குக் கருத்துவேறுகள் பிறத்தல் உண்டு; புணர்ச்சியைப் பிரிப்பதில் வரும் வேறு பாட்டாலும் கருத்து மாறுகள் தோன்றும். இவற்றிற்கு நூலான் பொறுப்பல்லன். மொழியின் இயற்கையாகும். நடையாலும் சொல்லாலும் பிரிப்பாலும் உரை வேற்றுமைப்படுவன சில குறள்களே என்றும், இவ்வேற்றுமைகளுங்கூட நூலவன் கருத்துக்கு அத்துணை முரணிப்போகா என்றும் நம்பலாம். ஈ இதுகாறும் வந்த உரைகளை ஆராய்ந்தால், அவை பல்கியதற்குப் பின்வரும் காரணங்கள் கூறலாம். பாட வேற்றுமையால் சில உரைவேற்றுமைகள் காணப்படும். இவை ஆராய்ந்து ஏற்கத்தக்கன. பாடங் கற்பித்துக் கொண்டு ஓரிருவர் புதுப்பொருள் காட்டியுள்ளனர்; இவர் பொறுக்கத்தகார்; மக்கள் கண்டிக்கவும் அரசு தண்டிக்கவும் தருவர். இலக்கண வறுமையாலும் இலக்கணச் செருக்காலும் எழுந்த உரை வேற்றுமைகளும் உள; இவை பழிக்கத் தரும். இக்கருத்து சப்பென்றிருக்கின்றது உப்பென்றில்லை எனத்தப்பாகச் செய்த உரைகளையும் காண்கின்றோம்; இவை விடுக்கத் தகுவன. சமய வெறிப்பட்டும் சாதிவெறிப்பட்டும் கட்சி வெறிப்பட்டும் இன வெறிப் பட்டும் மொழி வெறிப்பட்டும் கொள்கை வெறிப் பட்டும் வலிந்துபடுத்திய உரைக் கோணல்களும் பலவுள; இவை செப்பனிடத் தகும் முன்னோன் எழுதிய உரைப் பொருளைப் பெரிதும் தழுவக் கூடாது; தாம் ஒரு தனிவுரை எழுதத் துணிந்த தற்குச் சான்றாக, எங்ஙனமேனும் பல குறட்குப் புத்துரை சொல்ல வேண்டும் என்னும் முனைப்பே திருக்குறள் உரை பலவற்றின் தோற்றத்துக் காரணம் என்று சுருங்கச் சொல்லலாம். ஒவ்வோர் உரையாசிரியரிடத்தும் இன்ன குறை நிலைகள் சிலவோ பலவோ இருத்தலின், இதுவரை எழுதப்பட்ட யாருரையும் செவ்வுரை யெனக் கொள்ளுதற்கில்லை. ஒவ்வொருவர் தம் உரையும் ஒருவகை நிறைபாடும் ஒருவகைக் குறைபாடும் கொண்டதாகவே தோன்றுகின்றது. ஆதலின் இன்று பலருரை களைக் கற்றாக வேண்டிய நிலையிலேதான் நாம் உள்ளோம். இவ்வுரைகள் ஒன்றன் பற்றுக்கோடின்றித் திருக்குறள் மூலத்தில் நேரடியாகப் பொருள் காணும் வன்மை நமக்கில்லை. உரைவளமும் உரைக்கொத்தும் உரை வேற்றுமையும் எல்லாம் இன்று நமக்குத் துணைசெய்யும் பதிப்புக்களாகவே உள. உ திருக்குறள் உரை நலங்காண்பார்க்கும் இன்றியமை யாத சில கடைப்பிடிகளை இனிக் கூறுவோம். வள்ளுவர் கற்ற நூல்களின் கல்வி உரையாசிரியனுக்கும் வேண்டும். அவர் கற்ற தமிழ் நூல்கள் எத்துணையோ? அவையெல்லாமே நமக்குக் கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாது. தொல்காப்பியமும் சங்க நூல்களும் அவர் கற்றவற்றுள் நமக்கும் கிடைக்கின்றன. வள்ளுவர் குறிப்பை அவர் சொற் கொண்டும் நடைகொண்டும் தானே அறிய வேண்டும்? அவர் சொல்லும் நடையும் சங்கத் தன்மையன. ஞாலம் ஏற்கும் அறங்கண்டவரேனும் வள்ளுவர் தமிழ்ச் சமுதாயத்தவரே. குறள் மொழி தமிழ் மொழியே வள்ளுவர் காலக் குழுவியல் அமைப்பையும் மொழிய மைப்பையும் அறிவிக்கும் தனிக் கருவிகளாவன தொல்காப்பிய மும் சிறப்பாகச் சங்கத் தொகை நூல்களும் ஆம். திருக்குறட்குப் பின் எழுந்த (சிலப்பதிகாரம் மணிமேகலை ஒருவாறு நீங்க) நூல்களை நம்பிக் குறளுரை எழுதுபவர் பெருந்தவற்றுக்கு உள்ளாவார். இதுவரை உரையெழுதினோர் தொல்காப்பிய சங்க பனுவல்களைக் கல்லாதார் என்பது இதன் கருத்தன்று. நன்கு கற்றிருந்தும் குறளுரைக்கு அவை தூய வழிகாட்டி யாம் என்பதை அழுத்தமாகக் கடைப்பிடிக்கத் தவறி விட்டனர். சங்கத் தமிழ்நெறி தழுவி உரை எழுதப்பெறு மேல், திருக்குறள் செவ்வுரை பெறும். ஊ எதிர்காலக் குறளுரையாசிரியன் இதுகாறும் தோன்றிய உரையாசிரியர்களுக்குப் பெருங் கடமைப் படுவான். அவ்வுரை களை மதித்து நடப்பான், புத்துரை காணும் அவாவின்றியும் ஓரிருவர்மேற் பற்றின்றியும் உரைவினை செய்வான். நல்லுரை களைப் போற்றி அல்லுரைகளை விடுத்து மேலும் தகுமுரை கண்டு திருக்குறட்குப் பொருளுரையே நாடி ஒழுகுவான். எல்லாக் குறட்கும் உரை காண ஒல்லும் என்று கண்டவாறு எழுத வலியான். காலச் சேய்மையாலும் முந்து நூல் பல அழிந்தமையாலும் குறளிற் சில இடங்கள் விளங்கித் தோன்றா. தெளிவில் இடங்களை மழுப்பான். பொய்ம்மானம் பாராது ‘இவை இனியும் தெளியத்தகும்’ என்று சுட்டுவான். இதுவரை நாம் கண்ட உரையாளர்கள் வள்ளுவர் கருத்தெல்லாம் தமக்கு ஒக்கும் என்பது படவே? தங்கருத்துக்கு ஒப்பவே வள்ளுவர் குறளெல்லாம் அமைந்துள என்பது படவே சரிப்படுத்தி உரை கண்டுள்ளனர். நூலுக்கு உரையடிமை. உரையாசிரியனோ நூலாசிரியனுக்கு அடிமையல்லன். ஒரு நூற் கொள்கை களை ஒப்பவனே அந்நூற்கு உரை காண வேண்டும் என்பதில்லை. சில வகையாலோ பல வகையாலோ மாறுபட்ட கொள்கையுடை யாரும் உரை எழுதலாம். நூற்பொருளைக் காட்ட உரை எழுதுகின்றோமேயன்றிக் கொள்கை யுறவு காட்டவன்று. இம்முறை மயங்காது குறிக்கொண்டு உரையெழுதின் வள்ளுவர் எண்ணியதை முரணறக் கண்டுபிடித்துவிடலாம் என்பது என் துணிபு. நூலவன் போக்கு தனக்குப் பிடிப்பினும் பிடியா தொழியினும், உள்ளதை எழுதும் உரை வாய்மை வேண்டும். எத்துணை விழிப்பாக இருப்பினும், சிலபொழுது தன் கருத்து வள்ளுவர் கருத்தாகப் புகுந்துகொள்ளும்; மரத்தை மறைத்தது மாமதயானை என்றாகிவிடும். நாம் முதனூல் எழுதவில்லை; ஒருவன் எழுதிய முதநூற்கு உரையன்றோ எழுதுகின்றோம் என்ற உணர்வு சாகாதிருப்பின், உரை வெற்றி என்பதில் ஐயமில்லை. எ காப்பியத்திற் சிறந்த கம்பர் நூலுக்குப் பதிப்பு வேட்டையும், வாழ்வுக்குச் சிறந்த வள்ளுவர் நூலுக்கு உரை வேட்டையும் தமிழ் இலக்கியச் சோலையைக் காடாக்கி விட்டன. இராமகாதைக்குச் செம்பதிப்புத் தோன்றாவிடின், பாடிய கம்பர் மறைவர்; பாடபேதக் கம்பர்களே காட்சி யளிப்பர். திருக்குறட்குச் செவ்வுரை தோன்றாவிடிலோ, மக்கள் வாழ்வு விளங்கார்; உரையாசிரியர்களே வள்ளுவர்களாக வெளிப்படுவர். உரைப் பொருள்களே வள்ளுவங்களாகப் பரவத் தலைப்படும். ஒரு நூற்கு மணல் போல் பாட பேதங்கள் குவிதலும் உரைகள் காளான் போல் பல்குதலும் இலக்கிய வளர்ச்சிகள் எனப்படுமா? வளர்ச்சிப் போலிகள் என்றும், உண்மையைக் காணவொட்டாது தடுக்கும் புதர்கள் என்றுமே இலக்கியப் பற்றளர்கள் கூறுவர். 4. வள்ளுவர் கல்வித் திட்டம் அ கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார். (729) மேடைக்கு அஞ்சும் பெரும் படிப்பாளியைப் படியாத வனினும் கடையென்று இகழ்கின்றார் வள்ளுவர். பேடிக்கும் வாளுக்கும் என்ன தொடர்பு? இவனுக்கும் நூலுக்கும் என்ன தொடர்பு? என்று இழிவுபடுத்துகின்றார். இவன் வாழ்பவனா? செத்தவன்காண் என்று உயிரோடு பாடையில் ஏற்றுகின்றார். இவ்விடித்துரைகளை நோக்கும்போது, நூற்கல்விக்கும் மேடைப் பேச்சுக்கும் வள்ளுவர் ஓர் இணைப்பை வற்புறுத்தக் காணலாம். நிரம்பக் கற்றவனுக்கு நன்கு சொல்லவும் தெரியவேண்டும் என்பரேல், வள்ளுவரின் கல்வித் திட்டம் விரிந்த ஒரு புதுநோக்குடையது என்பதனைக் காண்பதோடு, இவர் கல்விக் குறள்களுள் என்னென்ன புது நோக்குப் புதை யுண்டு கிடக்கின்றதோ என்று காணவும் அவாவுகின்றோம். சிற்சில இயக்கங்களோ, அறிவெழுச்சிகளோ முன்னேற்ற வுணர்ச்சிகளோ வீறிட்டுப் பொங்கிப் பரவுங் காலைதான், நாட்டிலும் இலக்கியங்களிலும் புதைந்து கிடக்கும் பொருள்கள் வெளிப்பட்டு ஒளி பெறுகின்றன; இக்காலை தான் அவற்றை வெளிப்படுத்தும் ஆள்வினைகள் பலர்பால் உண்டாகின்றன. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்பது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொல் காப்பியப் பாயிரம். பெரும்புலவர்கள் அளவில் அறியக் கிடந்த இவ்வடிகள் தமிழக எல்லைக் கிளர்ச்சிக் காலத்தே தொண்டர் வாய்ப்பட்டு நாடெங்கும் முழங்கக் கேட்டோம். சிலப்பதி காரத்தும் இசை நூற்செய்திகள் பலவுள. அவை போற்று வாரற்றுக் கிடந்தன. அரங்கேற்றுக் காதையொழிய முத்தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகாரத்தைப் பயில்வதே வழக்கமாயிற்று. தமிழிசைக் கிளர்ச்சியாலன்றோ இவ்விசைப் பகுதிகள் பரப்பவும் ஆராயவும் பட்டன. பல்லவ அரசு என்பதொன்று, ஏழு நூற்றாண்டு இந்நாட்டை ஆண்ட வரலாறு நெடுங்காலம் சிறிதும் அறியப்பட்ட தில்லை. சென்ற நூற்றாண்டில் எழுந்த ஆராய்ச்சி முனைப்பினால் இன்று மாமல்லபுரம், சித்தன்ன வாசல், குடுமியான்மலை நாடும் ஏடும் காலும் அறியும் கலைத் தலங்களாய்த் திகழ்கின்றன. மக்களின் பொருள்வளம் உயர வேண்டும் என்னும் வாழ்வுத் தூண்டன்றோ நெய்வேலி போலும் இடங்களின் இருப்பை அறிஞர்க்குக் காட்டிற்று. ஆ மொழியியக்கங்கள் கிளர்ந்த காரணத்தால் இன்று தமிழ் மக்களுக்குத் தம் இலக்கியங்களை மதிக்கும் நல்லன்பும், கல்லாது போயினும் கேட்கும் பேரார்வமும், குறைகூறக் கண்டால் கொதிக்கும் மானவுணர்ச்சியும் பெருகியுள. திருக்குறளைப் பன்முகமாகப் போற்றத் தொடங்கிவிட்டோம். அதனைப் பரப்புதலை ஓரியக்க மாகவே கொண்டு விட்டோம். இவ்வியக்கத்தால் பெருமைக்குரியது திருக்குறள் என்னும் தரம் அறியப்படு மேயன்றிச் செயலுக்கு உரியது திருக்குறள் என்னும் நிலை அறியப்படாதே போகலாம். திருக்குறட் செயலியக்கம் நாடெங்கும் வலிவுறத் தாக்கும் ஒரு காலம் வரும். அஞ்ஞான்று இயக்கமற்ற நமக்கு இன்று தோன்றாப் பல வாழ்க்கை யுண்மைகள் திருக்குறளகத்துப் பொலிவோடு புதையுண்டு கிடப்பக் காண்பார்கள். நாட்டியல் பெரும் பாலும் திருக்குறட் படி நடக்கவேண்டும் என்னும் ஓர் பூசல் தோன்றினால் அல்லது நம் அரசு திருக்குறளை முறை நூலாக ஏந்தித் தானே ஆட்சி நடத்தினால், இலக்கிய நோக்கிற்கும் மொழி நோக்கிற்கும் புலனாகாப் பல ஆட்சிக் குறிப்புக்கள் ஆண்டு மிளிரக் காணலாம். நம் நாட்டில் கல்வி வகுப்புகள் இன்று கீழ் மேல் எல்லா வகுப்புக்கும் பாடமாகத் திருக்குறளை வைக்கும் அளவுக்கு முன்வந்துள்ளனரேயன்றித் தாம் வகுக்கும் கல்வித் திட்டத்துக்கு ஓர் உரைகல்லாகத் திருக்குறளைக் கடைப்பிடித் தொழுக முன்வரவில்லை. பிறர் பலர் கூறியவற்றையெல்லாம் நாடியலைகின்றார்களேயொழிய, அவரொடு ஞாலப்புகழ் நம் வள்ளுவரையும் நாடத் துணிகின்றாரில்லை. வள்ளுவர் தனிப்பெருங் கல்வி வகுப்பி என்றும், திருக்குறளகத்துக் கல்விக் கோள்கள் பலவுள என்றும் ஓரியக்கம் ஏற்பட்டாற்றான் நாடு உணரும் போலும். அறிஞர்களின் அறிவு வேலை செய்யும் போலும்! இ மனித உறுப்புக்களுள் சிறந்தது கண். அதன் வாயிலாகத் தான் உள்ளத்திற்கும் உலகிற்கும் போக்குவரவு உண்டாகின்றது. மனிதனுக்குக் காட்சிக் கண்ணினும் சிறந்தது கல்விக்கண் என்பர் வள்ளுவர்; இக்கண்ணால் ஒருவன் இறந்த காலத்தையும் காண்கின்றான். தானில்லா இடத்தையும் அறிகின்றான். நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் ஒரு நாட்டில் படித்துள்ளனர் என்றாலும், எஞ்சிய ஒருவன் கண்ணிழந்த முகப்புண்ணன் என்பதே வள்ளுவர் துணிபு. நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பதிமர் உண்டனர் என்பதற்காக உண்ணா ஒருவன் பசி ஆறிப் போமா? ‘கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்றபடி புறநடையின்றி ஒவ்வொருவரும்-ஆணும் பெண்ணும்-கற்கவேண்டும் என்பது வள்ளுவரின் பொதுக்கல்வித் திட்டம். ‘கல்வி’ வேண்டும் என ஓரதிகாரம் எழுதினார்: ‘கல்லாமை’ வேண்டாம் எனவும் ஓரதிகாரம் எழுதினார்; இங்ஙன் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் யாரும் கற்றாகவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். எழுத்தைக் கற்பிக்கும் ஒன்றாம் வகுப்பில் வகுப்பு ஆசிரியன்போல, அகரமுதல எழுத்தெல் லாம்’ என்று தம் குறட் சுவடியைத் தொடங்குவதிலிருந்தே, இறையை நினைவூட்டப்போந்து முன்னாக எழுத்தை நினைவூட்டுவதி லிருந்தே, வள்ளுவர் தம் கல்வியுள்ளம் வெளிப்படவில்லையா? குறட் கட்டளைக்கல்லில் இற்றைக் கல்வித் திட்டத்தை உரைத்துப் பார்த்தால் மிகக் குறைந்த மாற்று பல இடங்களில் தோன்றும்; சில இடங்களில் பித்தளையும் மின்னும். இன்று பாட நூல்களெனக் கற்பிப்பவை தேர்வு முடிந்த, தேர்வின் முடிவு தெரிந்த மாலையே தூக்கு ஏறுவதைக் காண்கின்றோம். ‘நெற்கொண்டு போமளவும் நில்லாய்’ என்றபடி, பாடப் பொருளைத் தேர்வில் எழுதும் வரை நினைவில் தாங்கி வைத்துக் கொள்ளவே மாணவன் பாடுபடுகிறான். இது பாட நூலின் குற்றமன்று; படிப்பான் குற்றமன்று; படிப்பை வகுப்பான் குற்றம். இந்நாட் கல்வி, கல்வியென நம்மால் பெயர் பெறினும், வள்ளுவர் கண்ட கேடில் விழுச்செல்வம் ஆகாது. எல்லாப் பொருளுமே நூல் வாயிலாகக் கற்றற்கு உரியன என்ற மயக்கத்தால், அடுப்புக்கலைகூடப் பள்ளிப் பாடமாய் விட்டது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவப்பாடுபடும் பயனில் முயற்சி பள்ளியில் வந்துவிட்டது. கல்வியொன்றாலேதான் ஒருவர் இப்பொருள் களை அறிந்துகொள்ள இயலும் என்னும் வரம்புத் தெளிவு நமக்கில்லை. கற்கவேண்டியதை மட்டும் கல்லாத தாலும், குப்பைபோல் தொடர்பற்ற பொருட்குவியல்களைக் கசடுறையக் கற்பதாலும் இற்றைக் கல்விக் கெடுசிறு செல்வமாய் மாறித் தேய்கின்றது. கல்வித் திட்டங்கள் ‘கற்க கசடறக் கற்பவை’ என்ற குறளை நெற்றிப்பட்டமாகத் தாங்கி எவ்வகுப்புக்கும் திட்டம் வகுப்பரேல், கல்வித் தரம் தரமில்லை என்ற சொல்லுக்கும், மாணாக்கர்க்குக் கல்வியில் நாட்டம் இல்லை என்ற சொல்லுக்கும் இடமிராது. நிற்க. ஈ பொருட்செல்வம், செவிச் செல்வம், அருட்செல்வம் போலக் கல்வியும் ஒரு செல்வம் எனப்படும். செல்வம் எவ்வகைத்தாயினும். ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பது செல்வத்துக்கெல்லாம் ஒரு பொதுவியல். பொருளை ஓயாது ஈட்டுகின்றான்; நன்று. சிறிதும் எடுத்து வழங்குகின்றானில்லை. இவன் செத்தளவனே என்றும், இவன் தோற்றம் நிலத்துக்குப் பாரம் என்றும், இவன் மாணாப் பிறப்பு எய்துவான் என்றும் வள்ளுவர் வையவில்லையா? அதுபோல் நிரப்பிய கல்விச் செல்வத்தை ஈயாதவனையும் கடையனென, பேடியென வைவதில் எனன தவறுண்டு! ஈயாப் பொருட்செல்வனைவிட ஈயாக் கல்விச் செல்வன் மிகவும் இகழத்தக்கவன். பொருள் ஈந்தால் ஈந்த அளவுக்கு இருப்புக் குறையவே செய்யும். ஒப்புரவினால் பொருள் முற்றும் இல்லையாய் ஒழியும். ஆதலால் பொருட்செல்வன் கொடுக்க அஞ்சுவதில் ஒரு குணம் உண்டு. கொடுத்தாற் குறைவுபடும் பொருளினம் வேறுபட்ட நிறை தன்மையுடையது கல்வி என்பதைச் சாற்றவே ‘கேடில்விழுச்செல்வம் கல்வி’ என்றார் ஆசிரியர். பொருட்கொடையால் பிறர் பொருள் எய்துவர்; கொடை செய்தவனோ புகழ்தான் எய்துவான். கல்விக் கொடையால் கேட்டார் அறிவுநலம் பெறுவதுபோலச் சொன்னானும் அறிவு விளங்கப் பெறுவான். கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச் சொற்றெரிதல் வல்லா ரகத்து. (717) உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பார்த்தியுள் நீர்சொரிந் தற்று (718) தன் கல்வித் தெளிவுக்கும் மேல் வளர்ச்சிக்குங்கூடச் சொல்வன்மை இன்றியமையாதது என்பது வள்ளுவர் கல்விக்கோள். யாதானும் நாடாம் ஊராம் என்பதினால் பொருட்கொடையாளன் போலப்புகழும் பெறுவான் என்று சுட்டுவர் ஆசிரியர். கொடுக்கக் கொடுக்கக் கேடின்றி வளர்ந்து புகழூட்டும் கல்விச் செல்வத்தைப் பெற்றிருந்தும், சொல்ல அஞ்சும் கல்வியனை, கொடுக்க அஞ்சும் பொருட் செல்வனைக் காட்டினும் கடுஞ்சொல்லாற் பழிப்பர். கற்றவன் கொடை செய்யும் முறை யாது? பொருளன் கையால் வழங்குகின்றான்; பிறர் கையால் ஏற்கின்றனர் என்பது மரபு. கல்வியனோ வாயால் வழங்கப் பிறர் செவியால் ஏற்கின்றனர். ஒருவன் கல்விச்செல்வம் ஏனை யோர்க்குச் செவிச் செல்வம் ஆகின்றது. ‘செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்’ என்றார்; அச்செல்வம் கல்விச் செல்வமுடையார் வழங்கினா லன்றோ வருவது. வழங்கா விடின் பாயா நீரும் பாய்ச்சல் பெறாப்பயிரும் ஒருங்கு கெடுதல்போல, இருசெல்வமும் கெடுமெனக்கண்ட வள்ளுவர் அவையஞ்சாக் குறள்களை யாத்தார் என அறிக. நாடெங்கும் கல்வி பரவவேண்டும் என்னும் நோக்குடைய வராதலின், கல்வி பரப்பும் பொறுப்பு, கற்ற ஒவ்வொரு வனையும் சாரும் என்று ஆசிரியர் வலியுறுத்து கின்றார். கல்வியாளன் வேறு, சொல்லாளன் வேறு என்று படுத்தாமல் இரண்டுமே ஓராளனுக்கு வேண்டும் என்பது கல்வி வள்ளுவம். கல்லாதவன் அஞ்சாது மேடையேறுகின்றான். கற்றவன் அஞ்சி மேடையேறாதிருக்கின்றான்; என்ன உலக முரண்! என்று வள்ளுவர் வியக்கின்றார். நிரம்பக் கற்றலும் நன்கு சொல்லுதலும் என இரு கூறுபடக் காட்டும் வள்ளுவர் கல்வித் திட்டத்தில், செம்மையாக நூல் எழுதுதலையும் இன்று நாம் ஒரு கூறாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவன் கற்ற கல்வியைச் சொல்லுதலால் பிறர் பயன்பெறுதல் போல, வள்ளுவர்போல் எழுதுவ தாலும் பயன்பெறலாமன்றோ? கற்றல், சொல்லல், எழுதல் என்ற முக்கூற்றொருமையை அறிஞர்கள் கருது வாராகுக. 5. சான்றோன் அ நம் தமிழ்மொழி உலகத்து இன்று வழங்கும் மொழி களுக்குள் எல்லாம் மிகப் பழமையானது. முதிர்ந்த மொழியாதலின், கடல்போல எவ்வளவோ சொற்களும் சொல்லமைப்புக்களும் பொருள் நுணுக்கங்களும் விரிவுகளும் தமிழில் காணப்படுகின்றன. பதினாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் மொழிச்சங்கங்கள் தோன்றின. இதன் கருத்து என்ன? அவ்வளவு காலத்துக்கு முந்தியே தமிழ், பழமையும் ஆராய்ச்சிக்கு உரிய நுண்வளமும் உடையதாயிற்று என்பது தெளிவு. ஒரு பொருள் பழமைப் படப்படக் கவர்ச்சி இழப்பது பொதுவியல்பு. இவ்வியல்பைக் கடந்தது தமிழ்மொழி. “ஆயுந்தோறும் இனிதாம் தமிழ்” என்றார் ஒருவர். தமிழின் தொன்மையை ஆராய ஆராயப் புதைபொருளிடங்கள் போலன்றி மணிச்சுரங்கங்கள்போல, நல் வாழ்வுக்கு வேண்டியன கிடைக்கின்றன. சில பொருள்களுக்குப் பழமை புதுமை என்பது இல்லை. இவ்வேறுபாடுகள் மக்களாகிய நாம் நம் தெளிவுக்கு வைத்துக் கொண்டவை. சிறந்த இயற்கைப் பொருள்கள் என்றும் ஒரு தன்மையுடையன வாக விளங்கு கின்றன. தமிழ் ஆழமான பழமையும் உயரமான புதுமையும் வாய்ந்தது. தோண்டத் தோண்ட ஒளி தரும்; வளர்க்க வளர்க்க நிழல் தரும், எக்காலத்தையும் தழுவிக்கொண்டு வாழும் தற்காப்புத் தன்மை தமிழுக்கு உண்டு. எவ்வளவு கடல் கோள்கள், எவ்வளவு சமயப் பூசல்கள், எவ்வளவு அயல் மொழித் தாக்குதல்கள், எவ்வளவு தமிழ் மக்களின் அறியாமைகள், எவ்வளவு மறைந்த சிறு பெரு நூல்கள்! இவ்வளவு இடையறாத் தொல்லைக் குண்டுகளிலிருந்தும் தப்பிப் பிழைத்து வந்த தமிழ்த் தன்மையை - இன்றும் பிழைத்து வருகின்ற தமிழின் தனியாற்றலை - நாம் காண்கின்றோம். தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் வளர்ந்து வந்த நிலையை மட்டும் காட்டவில்லை; தமிழக்குத் தன் மக்களாலும் அயலவர்களாலும் வந்த பேரிடையூறு களையும், அவற்றைத் தமிழ்க்குமரி பல்வேறு வடிவு கொண்டு ஓடியும் ஆடியும் பாடியும் சாடிச்சென்ற பேராற்றலையும் காட்டுகின்றது. முன்போல் இனியும் இடையூறுகள் வந்தாலும் தமிழ் வெல்லும், தமிழ் வளரும் என்ற நம்பிக்கையும் தமிழ் இலக்கிய வரலாறு நமக்கு ஊட்டுகின்றது. ஓங்க லிடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று: ஏனையது தன்னேர் இலாத தமிழ். இங்ஙனம் தாய்மொழியை ஞாயிற்றோடு இணைத்துப் புலவர் பாராட்டுகின்றார். ஞாயிறு உள்ளளவும் தமிழ் வாழும் என்பது அவர் கருத்து. தமிழ் உள்ளளவுந்தான் ஞாயிறு வாழும் என்றும் சொல்லலாம் அன்றோ? தமிழுக்கு நல்ல வருங்காலம், பெருங்காலம் உண்டு தமிழ்த்தாய் தான் தமிழினத்தை வாழ்விப்பாள் என்பதனை இதுவரை உணராதாரும், உணர்ந்ததை உடன்படாதாரும். உணர மறுத்தாரும் இப்போது விளங்கிக் கொண்டு வரு கின்றனர். தமிழ் தான் பிறந்த நாட்டிலும் பரவி வேரூன்றிக் கிளை பெருக்கிய நாட்டிலும் இன்று நன்றாகத் தொல்லைப் படுவது தமிழ் வளரும் என்பதற்கு மற்றொரு சான்று. துன்பம் இல்லாதாருக்கு மனவேகம் இராது; மனவேகம் இல்லாதாருக்கு அறிவோட்டம் இராது. அறிவோட்டம் இல்லாதார்க்கு உயிரோட்டம் இராது. தமிழ் படும் நெருக்கடி யால் வீறுடைய நல்லிளைஞர்கள் பெருகி வருகின்றனர். “எறிகோல் அஞ்சா அரவின் அன்ன மள்ளரும் உளரே” என்று பாராட்டத்தக்க தமிழ் மள்ளர்கள் இன்று எங்கும் பயின்று வருகின்றனர். தமிழ் மீண்டு தழைக்கும் என்பதற்குத் தொல்காப்பிய மும், சங்க இலக்கியங்களும் இன்று பரவி வருவது இன்னொரு சான்று. சங்க நூல்கள் சாதி மதம் கட்சி முதலான பிரிவுகள் இல்லாத இயற்கை நூல்கள்; இவ்வுலக வாழ்வு நோக்கித் தோன்றிய பண்பு நூல்கள். உலகம் உள்ளளவும் வீடு காக்கும் மெய்க் காதலும் நாடு காக்கும் மெய்வீரமும் தேவை. இவற்றையே சங்க நூல்கள் பாடுதலின் சங்கக்கல்வி எல்லார்க்கும் தேவை. இன்று வீர உணர்ச்சி நாடு முழுதும் வேண்டப்படுகின்றது. தமிழ்த் தாள்களிலும் மேடைப் பேச்சுக்களிலும் புறநானூற்று வீரப்பாடல்கள் பொங்கி வருகின்றன. சங்கப்பாக்களுக்கு என்றும் உயிருண்டு என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு. முதுபாட்டன் முதலாகச் சிறு பேரன் ஈறாக வீரக்குடும்பங் களைக் காணவேண்டுமெனின் அத்தகைய தமிழ்க்குடி களைக் காட்டுவன சங்க இலக்கியங்கள் அல்லவா? ஆ மெய்வீரம் பரவியிருந்த காலத்துப் பரவியிருந்த ஒரு சொல் சான்றோன் என்பது. தமிழ்மொழிக்கண் பெருமதிப்பு உடைய சொல் இது. அன்பு நாணம் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை எனப் பல குணங்களும் நிறைந்தவர் சான்றோர் எனப்படுவார். பெருவாழ்வுக்கு ஒரு குணம் இருந்தாற்போதாது. அன்புடைய வனுக்கு அறிவில்லை; கல்வியுடையவனுக்கு இரக்கமில்லை; பொதுநலத் தொண்டனுக்கு நாணயமில்லை, எழுத்தாளனுக்குக் குறிக்கோள் இல்லை என்றால், உள்ள பணத்துக்கு ஊறு ஏற்படும். ஒருறுப்பு மட்டும் அழகாக இருந்தாற்போதாது. உறுப்பைச் சுற்றியுள்ள உறுப்புகளும் ஓரளவு அழகுடையனவாக இருத்தல் வேண்டும். அப்போது தான் சிறந்தது சிறப்படையும். பல குணங்களும் வேண்டும் என்பதனைக் காட்டுவதற்கே “சான்றாண்மை” என்ற அதிகாரத்தைப் படைத்தார் திருவள்ளுவர். “ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே” என்ற புறத்தொடரில் சான்றோரின் பல்குணங்களையும் அறியலாம். சான்றோன் என்ற பெயரைப் பெறுவது பண்டைத் தமிழரின் புகழ்நோக்காக இருந்தது. இப்புகழ்ப் பெயர் பெண்பாலர்க்கும் பொது. “தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றவர்” (பரிபாடல் 20) என்ற தொடர் கற்புடைப் பெண்டிரைக் குறிக்கும். பூதப் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி தீப்பாயும்போது “பல்சான்றீரே பல் சான்றீரே” (புறம் 256) என்று விளிக்கின்றாள்; தன்னைத் தீப்பாய விடாது விலக்கும் பெண்களைப் பார்த்துத்தான் கூறுகின்றாள். முன் இருப்பவர் பெண்கள் என்பது. “பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கரி தாகுக” என்று இகழ்ந்து கூறுவதிலிருந்து புலனாகின்றது. எனவே “பல் சான்றீரே! பல் சான்றீரே!” என்பது இப்புறப்பாட்டில் பெண் சான்றோர்களையே குறிக்கும். சான்றோர் என்ற சொல் பெரியவர் என்ற சொல் போன்றது. பெருமை பலவகைப்படும், கல்வியில், பதவியில், வயதில், செல்வத்தில், புகழில், உடலில், பெருமை வாய்ந் தாரையெல்லாம் பெரியவர் என்னலாம். சான்றோர் என்பதற்கு நன்கு அமைந்தவர் என்பது பொருள். புலமையால் அமைந் தோரும், நற்குணங்களால் அமைந்தவரும், புகழால் அமைந்த வரும் சான்றோர் ஆவர். இன்னதனால் அமைந்தவர் என விரித்து இச்சொல்லுக்கு உரையாசிரியர்கள் பொருள் எழுதியுள்ளனர். இ இனி நாம் அறியவேண்டுவது சான்றோர் என்னும் கிளவி வீரரையும் சங்க காலத்தில் குறித்தது என்பதாம். இப்பொருள் உண்டு என்பதை நாம் மறந்துவிட்டோம். அறிந்த சிலரும்கூட, வீரரைக் குறிப்பது பெரும் வழக்காக இருந்தது என்பதனை அறியவில்லை. அதனால் சான்றோன் என வந்த பல சங்க அடிகளுக்கு உண்மைப் பொருளைக் காணத் தவறி விட்டோம். சொற்பொருள் புலப்படாத போது ஓரினத்தின் நாகரிகமும் புலப்படாதன்றோ? “எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை” (பதிற்று 14) “கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்” (பதிற்று 82) “தேர்தர வந்த சான்றோர் எல்லாம்” (புறம் 63) “அமரின் இட்ட அருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் நீரே” (புறம் 31) மேற்காட்டிய நான்கு இடங்களிலும் சான்றோர் என்பதற்கு வீரர் என்ற பொருள் வெளிப்படை. வேறு பொருள் சொல்லுவதற்கு இயலாதபடி, சான்றோர் மெய்ம்மறை, தானைச்சான்றோர், தேர் தரவந்த சான்றோர், பாசறைப் பல்சான்றீர் எனத் தொடர்களும் தெளிவாக அமைந்துள்ளன. ஆதலீன் உரையாசிரியர்களும் பதிப் பாசிரியர்களும் இப் பொருளை முன்னரே எடுத்துக் காட்டியுள்ளனர். மேற்காட்டிய சில இடங்களிலேயன்றி இன்னும் சங்க இலக்கியத்துப் பல இடங்களில் வீரர் எனப்பொருள் கொள்ளு வதற்கு இடமுண்டு என்பது என் கருத்து. ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து யெர்தல் காளைக்குக் கடனே (புறம் 312) பலரும் அறிந்த புறப்பாடல் இது. யானையைக் கொல்லுதல் காளையின் கடன் எனவும், அதற்கு யார் யார் என்னென்ன ஆணை செய்யவேண்டும் எனவும் கூறுவது இப்பாட்டு. ஒவ்வொருவர் துணையும் வீரக் குறிப்பு உடையதாக இருத்தல் வேண்டும். அவ்வாறே இப்பாட்டின் ஒவ்வோர டிக்கும் பொருள் காணவேண்டும். புறத்திணை கண்ட தமிழினத்தின் படை பற்றிய சொற்கள் மறைந்துவிட்டன. அங்ஙனம் மறைந்த மறக் கிளவியுள் ஒன்று ‘நன்னடை’ என்பது. நன்னடை என்பதற்கு ஒழுக்கம் என இடைக்கால முதல் நாம் பொருள் கொண்டு வருகின்றோம். இராணுவப் பயிற்சி என்பது இச்சொல்லின் பொருள். இப்பயிற்சியை அளிக்க வேண்டிய கடமையுடையவன் அரசனே. தனிப்பட்டோர் அளிப்பதற்கு இல்லை. அடியெடுத்து வைக்கும் நடையொழுங்கிலிருந்து தான் படைப்பயிற்சி தொடங்கு கின்றது. ஆதலின், நன்னடையாளர் என வீரர் பெயர் பெற்றனர். நடைப்பயிற்சி இன்றேல் களிற்றை எறிய முடியுமா? பயிற்சி இல்லாதானைக் களிறு தூக்கி எறிந்துவிடாதா? ஆதலின் வீரன் கடமையைக் கூறும் இச்செய்யுளில், அதற்குத் துணையான வீரப் பயிற்சி கூறவேண்டும். ஆதலின் நன்னடை என்பது பண்டு வழக்கில் இருந்த படைச்சொல் என அறிக. நாட்டுக்கு வீரர்கள் தேவையாதலின் ஆண் மக்களைப் பெற்றுக் கொடுத்தல் பெண்டிரின் கடமை. இக்கடமையை ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் பண்டு உணர்ந்திருந்தாள். வீரனாகப் பிறந்து வளர்ந்து, தான் பார்க்க வீரனாக மடிவதையே அவள் விரும்பினாள்; புறமுதுகு காட்டினான் என்று கேட்டால், கோழைக்குப் பாலூட்டிய மார்பை அறுத் தெறிவேன் என்று துடி துடித்தாள்; போர்க்களத்துக்குக் கூடச் சென்று தன் கோலால் பிணங்களைப் புரட்டிப் பார்த்தாள்; கணவன் இறந்த பின்னும் தன் ஒரே சிறுமகனைப் போர்க் கோலம் செய்து வேலைக் கையில் பிடிக்கச் சொல்லிப் போக விட்டாள்; என்றும் தன் மகன் போர்க்களத்தில் பொழுது போக்குவதையே பெருமையாக எண்ணினாள்; பெற்ற மகன் நாட்டின் வீரனாகச் சாவதை, தமிழ்க் குடித் தாய்க்குப் புகழ் தந்தது. பெற்று வளர்த்த மகனைச் சான்றோன் ஆக்குதல், வீரனாகச் செய்தல் தந்தையின் கடமை; அவனுக்குக் கூரிய வேல் கொடுத்தல் கொல்லன் கடமை; மறப்பயிற்சியளித்தல் அரசன் கடமை: பலர் கடமைகளைப் பெற்ற மகன் தன் கடமை போர்க்களத்தில் படையிற் சிறந்த யானையை வெட்டி வீழ்த்தி வெற்றியோடு வீட்டுக்கு வருதல். சான்றோன் என்பதற்கு வீரன் எனவும் நன்னடை என்பதற்குப் படைப் பயிற்சி எனவும் இவ்வாறு பண்டை மொழிப்படி பொருள் கொண்டாற்றான், அப்புறப்பாட்டு சொல்தோறும் அடிதோறும் வீரநோக்கும் உடையதாகத் தெளிவுபடும். ஈ திருக்குறள் சங்க இலக்கியங்களைத் தழுவியெழுந்த தமிழ்ப் பெருநூலாகும், திருவள்ளுவர் சங்கச் சான்றோர்களின் பொருளையும் சொல்லையும் பொன்னேபோல் தழுவிக் கொண்ட பெருந்தமிழ்ப் புலவர். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் தன் மகனை வீரன் எனக்கேட்ட தாய் அவனைப் பெற்ற காலத்தைக் காட்டிலும் மிக்க மகிழ்ச்சி அடைவாள் என்பது இக்குறளின் கருத்து. சான்றோன் கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்று பொருள் கொள்ளும் முறை ஈண்டுப் பொருத்தமில்லை. போர்க்களத்தில் நிகழும் மகனது வீரச் செயல்களைத் தந்தை காண்பான்; தாயோ கண்பதற்கில்லை. மகன் பக்கத்து மறவர்களோ, எதிரிகளோ வந்து சொன்னாற் றான் தாய்க்குத் தெரியும். ஆதலின் “சான்றோன் எனக் கேட்ட தாய்” என்று கூற வேண்டியதாயிற்று. நரம்பெழுந்து உலறிய நிரம்பா மென்றோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறினன் என்று பலர் கூற (புறம் 278) என வரும் பகுதியில் போர்க்குச் சென்ற மகன் செயலைப் பலர் கூறத் தாய் கேட்டாள் என்பது தெளிவு. கல்வி அறிவுகளால் சான்றோன் ஆயின், தாய் நேரே அறிந்து கொள்ளத் தடை யில்லை. மகனைப் பெற்ற காலத்தைவிடப் பெரிதான மகிழ்ச்சியைத் தாய் எப்போது அடைவாள்? இக் கேள்விக்குச் சங்ககாலத்து ஒரே ஒரு விடைதான் உண்டு. களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே (புறம் 277) படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே (புறம் 278) ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (குறள் 69) வீரன் என்பதற்காகத் தாய் ஓரளவு மகிழ்ச்சி அடைவாள்; யானையைக் கொன்று வெற்றியோடு வந்தான் என்பதற்காக ஓரளவு மகிழ்ச்சி அடைவாள். இச்செயல்களுக்காகப் பெருமகிழ்ச்சி அடைய மாட்டாள். யானையை வெட்டித் தானும் பட்டனன், உயிர் விட்டனன் என்னும் போதுதான் போர்க்களத் தினின்று வாராது விழுப்புண் பட்டு அவ்விடத்தே படுமகனாகக் காணும்போதுதான் தாய்க்குப் பெருமகிழ்ச்சி உண்டாகும். தான் பெற்ற மகன் தானிருக்கும்போதே வீரனாக இறந்த ஞான்றுதான், ஈன்ற ஞான்றினும் தாய் பேருவகை அடைவாள். நல்வீரனாக வாழ்ந்தால் தாய் பெரு மகிழ்ச்சி அடைய மாட்டாளா? மாட்டாள்; வீரனாக இறந்தால்தான் அவளுக்குப் பேருவகை ஏற்படுமா? ஆம். இன்று வீரன் நாளைப் போரிற் கோழையாகலாம். பல நாட் செய்த வீரங்கள் ஒரு நாட் கோழைக்கு ஈடாகா. தன் மகனது வீரவாழ்வன்று, வீரச்சாவுதான் தாய் விரும்பிய பெரு நோக்கம். அச்சாவுதான் அவளுக்கு அவனைப் பெற்ற காலத்திலும் பேருவகையை அளிப்பதாயிற்று. புறநானூற்றுப் பாடல்களும் திருக்குறளும் ஈன்ற ஞான்றினும், ஈன்ற பொழுதின் எனவும், உவகை பெரிதே, பெரிது உவந்தனளே, பெரிதுவக்கும் எனவும் ஒன்றுபோல் சொல்லாட்சி செய்தலைக் காண்க. இவ்வொற்றுமையைப் பார்க்கும் போது ‘சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்பதற்கு வீரனாகப் போர்க்களத்தில் மடிந்தான் என வீரச் சாவைக் கேட்ட தாய் என்று பொருள்படுகின்றது. இங்ஙனம் திருக் குறளுக்குப் பொருள் கொள்ளல் சங்கமரபுக்கு இசைந்ததாகும். தாயாகும் பண்டைத் தமிழ்க்குமரியின் வாழ்க்கை நாட்டு நோக்கமுடையது. நாட்டுக் காவலுக்கு மக்களை வழங்கும் வீரநோக்கம் உடையது. சான்றோன், போரில் உயிர் வழங்கியவன் என்று மகன் புகழ்கேட்பதே தாய்க்குப் புகழ். வேறுவகையாக அவன் இறப்பது அவளுக்குப் பழி. மக்களை மைந்தர்கள் என்று இன்றும் நாம் வழங்குகின்றோம். மைந்தர்கள் என்பதற்கு வலியுடையவர்கள், வீரர்கள் என்பதே பொருள். வலியற்ற வர்களும், வீரமற்றவர்களும் மைந்தர்கள் ஆகார் என்பது பெறப்பட வில்லையா? “பெற்றோரெல்லாம் பிள்ளைகள் அல்லர்” என்பது நறுந்தொகை. 6. காதற்போர் எல்லா உணர்ச்சிகளும் எல்லா மக்களிடத்தே உண்டு என்றாலும், ஒவ்வோர் உணர்ச்சி ஒவ்வொருவரிடத்தும் சிறப்பாகக் காணப்படும். எல்லாப் பண்புகளும் எல்லாச் சமுதாயத்திடம் உள என்றாலும், ஏதாவது ஒரு பண்பு ஒவ்வொரு சமுதாயத்திலும் மிகுந்து காணப்படும். எப்பண்பு எச்சமுதாயத்தில் மிகுந்துள்ளது என்பதை அறிவது எப்படி? சமுதாயத்திற்கு உரிய தனிப் பண்பினை நீரும், நிலனும், மலைகளும் காட்டா. காட்ட வல்லது இலக்கியம் ஒன்றே. ஓரினத்தின் இலக்கியங்களைக் கற்கும்போது அந்த இன மக்களின் அறிவோட்டங்களையும், உள்ளோட்டங் களையும் கண்ணாடிபோல் தெரிந்துகொள்கிறோம். சமுதாயத்தின் பண்புகளைக் கொண்டே இலக்கியம் எழுதுவதால், அவற்றைக் காண்பது சிறிதும் கடினமில்லை. ஓர் இனத்தின் பண்பும் காலப்போக்கில் மாறிமாறி அமையும். இத்தகைய பண்பு மாற்றங்களையும் அவ்வக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் காட்டி விடுகின்றன. இலக்கியம் என்பது ஓரினத்தின் நாகரிகத்தையும், நாகரிக மாற்றத்தையும் காண்பதற்கு உரிய மெய்யான ஒன்றாகும். நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை என்பதுபோல இலக்கியம் தன் மக்களின் நாகரிகத்தை ஒளிப்பதில்லை, வஞ்சித்துக் காட்டுவதில்லை. இலக்கியங்களை நம்பி மக்களின் நாகரிகத்தைத் தெளிவாகத் துணிந்து விரிவாக எழுதலாம் என்பது என் கருத்து. தமிழினத்தின் தனிப்பண்பு எது? பல்வேறு பண்புகள் இருந்தாலும், விரிந்து பரந்து எல்லாச் செயல்களிலும் புகுந்து கிடக்கும் தலைமையான பண்பு எது? தொல் காப்பியமும் சங்க இலக்கியங்களும் நமக்குக் கிடைத்துள்ள பழம்பெரும் நூல்கள். இந்நூல்களை ஒரு சில நாட்கள் படித்துப் பார்த்தாலும் மேற்சொல்லிய வினாவிற்கு ஏற்ற விடையை எளிதாகக் கண்டு கொள்ளலாம். ஒரு சமுதாயம் காதலில் பேருணர்ச்சி கொண்டிருக்கும்; ஒரு சமுதாயம் போரில் பேருணர்ச்சி கொண்டிருக்கும். நம் தமிழ்ச் சமுதாயத்தில் காதலுணர்ச்சிக்கும் இடமுண்டு. போர் உணர்ச்சிக்கும் இடமுண்டு. எனினும் எந்த உணர்ச்சி மிகுதியாக இருந்தது? காதலுக்காகப் போர் செய்தனரா? போருக்காகக் காதல் செய்தனரா? என்று நீங்கள் கேட்பீர்கள். இரண்டு உணர்ச்சிகளும் சமநிலையில் இருந்தன எனவும், காதலோ வீரமோ ஒன்றைவிட்டு ஒன்று மிகுதியாகச் சென்றதில்லை எனவும் பழைய நூல்கள் நமக்கு காட்டுகின்றன. தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் என ஒரு பகுதி உண்டு. இப்பகுதி அகம், புறம் என இரு பிரிவுப்படும். அகமாவது காதல் பற்றியது. புறமாவது போர் பற்றியது. அகக்காதலையும் புறப்போரையும் கூறுவதே பொருள திகாரம் ஆகும். ஒரு நாணயத்திற்கு முன்பின் என இருபக்கம் உண்டு. முன்பக்கம் நன்றாக இருந்து பின்பக்கம் தேய்ந்தி ருந்தாலும் காசு செல்லாது; பின்பக்கம் நன்றாக இருந்து முன்பக்கம் சிதைந்திருந்தாலும் காசு நாணயப்படாது. நாணயத்தின் எப்பக்கம் சிறந்தது என்பது சரியான கேள்வியில்லை. எப்பக்கம் சிறவாவிட்டாலும், நாணயத்தின் மதிப்புக் கெட்டுவிடும். இருபக்கமும் ஒத்த சமநிலை பெற்றிருந்தாற்றான் நாணயம் வழங்கும். நாணயம் போன்றது தமிழர் கண்ட பொருளதிகாரம். காதலும் மிகுந்திருக்கலாம்; மறமும் மிகுந்திருக்கலாம்; இரண்டும் மிகுந்த நிலையிலும், இரு நுனிகளைச் சேர்ப்பது போலச் சமனிலை வேண்டும். ஆதலால் வாழ்க்கை என்ற நாணயத்திற்குக் காதலை அகம் என்றும், மறத்தைப் புறம் என்றும் ஒன்றன்பின் ஒன்றாக மார்பும் முதுகும்போல வகுத்துக் காட்டினர் தொல்காப்பியர். “அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின், “வெட்சி தானே குறிஞ்சியது புறனே” “வஞ்சிதானே முல்லையது புறனே” “உழிஞை தானே மருதத்துப் புறனே” “வாகை தானே பாலையது புறனே” இன்ன அகத்திற்கு இன்னது புறம், இன்ன புறத்திற்கு இன்னது அகம் என்று தமிழிலக்கணம் சுட்டிச் சொல்வதி லிருந்து காதலும் வீரமும் இரண்டறக் கலந்த ஒரு கூட்டு ணர்ச்சியே தமிழினத்தின் தலைமைப் பண்பு என்று நாம் தெரிந்து கொள்கிறோம். நீரும் சுவையும் போலவும், பூவும் நிறமும் போலவும், உள்ளங்கை புறங்கை போலவும், தமிழினத்தின் வாழ்க்கையில் அகமும் புறமும் ஒரு பொருளாகக் கலந்திருந்தன. இத்தலைமைப் பண்பினைக் காதல் என்ற ஒரு சொல்லாற் சொல்வதும் பொருத்தம் இல்லை. போர் என்ற ஒரு சொல்லாற் சொல்வதும் பொருத்தமில்லை; ஆதலின் காதற்போர் என்ற ஒரு தொடரால் குறிப்போம். ஒரு கருத்தை ஒரு சொல்லால் குறிக்காது ஒரு தொடர் கொண்டு குறிப்பதும் மொழி வழக்கே. தாய்மொழி, தாய்நாடு, நாட்டுப்பற்று எனச் சொல்லும் வழக்கை ஒப்புநோக்குக. காதலுணர்ச்சி உயிர்கட்கு இயல்பானது. அவ்வுணர்ச் சிக்குத் தனிப்பயிற்சி வேண்டியதில்லை. உடல் வளரும் தோறும் உடலோடு ஒட்டிய காதலுணர்ச்சியும் வளரக் காண்கின்றோம்; மேலும் காதல் இயல்பான உணர்ச்சியாதலின் வாழ்க்கையில் ‘காதல் கொள்வேன்’ என்று யாரும் குறிக்கோள் கொள்வ தில்லை. மக்கட்குப் போருணர்ச்சி ஒரு வகையால் செயற்கை யானது; பல்வேறு பயிற்சியால் வளர வேண்டுவது, எல்லா மக்களுக்கும் உடம்பில் ஆற்றல் உண்டென்றாலும் அந்த ஆற்றலைப் போராற்றல் என்று சொல்ல முடியாது. விலங்கினங்களுள் யானை பேராற்றலு டையது என்பதனை நாம் அறிவோம். எனினும் அப் பேராற்றல் போராற்றலாக ஆவதற்குப் பயிற்சி வேண்டு மன்றோ? ஆற்றல் மிக்க யானைக் கூட்டம் பயிற்சி பெற்ற பின்னர்த் தான் யானைப்படையென்று பெயர் பெறுவதற்கு உரியதாகும். அதுபோல, மக்கள் வன்மை யுடையவர்களாயினும் மக்கட்படை ஆகவேண்டுமேல், அதற்கு ஒழுங்கான நன்னடைப் பயிற்சி இன்றியமையாதது. ஒரு மகன் நன்னடைப் பயிற்சி பெற்றபின்னர்தான் மறவன் என்ற பெயருக்கு உரியவனாக விளங்குகின்றான். வாழ்விற்குக் காதலும் வீரமும் வேண்டும். எனினும் காதல் இயல்பானது; காதல் செய்வேன் என்று கொள்கை கூற வேண்டாதது. புறப்பொருளான வீரமே பயின்று வருவதற்கு உரியது. நாடுகாக்கப் போர் செய்வேன் என்று கொள்கை கூறுதற்கு உரியது. அதனாலன்றோ களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ என்று பொன்முடியார் ஆடவனுக்குக் கொள்கையை வகுத்துக் காட்டினார். சங்க காலம் எல்லா ஆடவர்களுக்கும் வீரப் பயிற்சி கொடுத்த காலமாகும். குழந்தை நிலையிலேயே இவ்வீரப் பயிற்சி தொடங்கி விட்டது என்பதனைப் புறப்பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன. இப்பயிற்சியின் இன்றியமையா மையைச் சங்ககால அன்னையர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதனை நாம் எவ்வாறு அறிகின்றோம்? புறநானூற்றில் வீரம் பற்றிப் பேசுகின்ற பொதுப்பாடல்கள் பெண்பாற் புலவர்களால் பாடப்பட்டிருத்தலின், தம் ஆண்மக்கள் மறவர்களாக விளங்க வேண்டும் என்ற நோக்கம் தாய்மார்களுக்கு இருந்தது என்பதனைத் தெளிவாக அறியலாம். சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டுள னோவென வினவுதி; என்மகன் யாண்டுள னாயினும் அறியேன் ஓரும்: புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே. (புறம் 86) மகன் எங்கே என்று ஓர் இளைய நங்கை ஒரு தாயைப் பார்த்து வினவுகின்றாள். “இந்த வயிற்றில் பிறந்தான் என்பது தெரியும். எங்குச் சென்றானோ தெரியவில்லை. போர்க் களத்துக்குச் சென்றால் கட்டாயம் காணலாம்” என்பது தாயின் விடை. வயிறு என்னும் குகையிலிருந்து வந்த நாள் முதல் போர்க்களத்தில் திரிகின்றான் என்று சொல்லும் பெருமித நடையிலிருந்து தாயின் வீர மனப்பான்மையைக் கண்டு கொள்கின்றோம். கேட்பவளும் பெண் ஆதலால் அவளுக்கு உவப்பான விடை இதுவே என்றும் அறிந்துகொள்கிறோம். எனவே, பண்டைப் பெண்ணுலகம் ஆடவன் மறவன் ஆவதையே விரும்பிற்று, மதித்தது என்பது தெளிவு. பழந்தமிழ் மகளிர் நாட்டுப்படைக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே ஆண் மக்களை ஈன விழைந்தனர். வீரனாக வேண்டும் என்ற நினைவோடு பாலூட்டினர். விழுப்புண்பட்டு வீரனாக மடியாமல், புறப்புண்பட்டுக் கோழையாக மடிந்தி ருப்பானாயின் அங்ஙனம் கோழையாக மடிந்தது அவன் குற்றமன்று, கோழைப்பால் ஊட்டிய தன் குற்றம் என்று முலையை அறுத்துக்கொண்டு கழுவாய் செய்ய விரும்பினார். மண்டமர்க் குடைந்தன னாயின் உண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே. (புறம் 278) காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண் புலவர் பாடியது இப்புறப்பாட்டு. என்ன உணர்ச்சி! என்ன வேகம்! தடிகொண்டு நடக்கும் கிழவியாயினும், மகன் புறமுதுகு காட்டினான் என்று கேட்டதும், போர்க்களத்திற்கே புறப் பட்டுவிட்டாள். அவன் அங்ஙனம் செய்திருப் பானாயின் அந்த இடத்திலேயே அவன் வாய் வைத்த தன் முலையை அறுத் தெறிவேன் என்று கையில் ஒரு வாள் எடுத்துக்கொண்டும் போயினாள். அங்கு மடிந்து கிடந்த பிணங்களை, என்ன துடிப்பு’ அவ்வாளாலே புரட்டினாள், மகனைக் கண்டாள், பல துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்த வீரமகனைக் கண் கொண்டு கண்டாள்; அவனைப் பெற்ற நாளைக் காட்டிலும் பெரிதும் மகிழ்ந்தாள். ஏன்? எந்த நோக்கத்திற்காகப் பெற்றாளோ அது நிறைவேறி விட்டதன்றோ? 7. கோவைத்திறன் “யாவையும் பாடிக் கோவை பாடுக” என்பது பழமொழி. இம்மொழிக்கிணங்க, கலித்தொகை அகநாநூறு ஐங்குறுநூறு பத்துப்பாட்டு புறநானூறு முதலான சங்க நூற் சொற்பொழிவு களும், பதினெண்கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகளும் உலா கலம்பகம் தூது பற்றிய சிறுநூற் சொற்பொழிவுகளும் நிகழ்ந்த பின்னர், இந்தக் கோவைச் சொற்பொழிவு இன்று நடக்கிறது. திசையெல்லாம் செந்தழிழைப் பரப்பி வரும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆற்றும் நிலைத்த பணிகள் பல. கடைப்பிடிக்கும் புதுத்துறைகள் பல. அவற்றுள் ஒன்று இச்சொற்பொழிவு இயக்கமாகும். இதுகாறும் பத்துக்கு மேற்பட்ட இலக்கிய மாநாடுகள் கூடியுள்ளன. ஐம்பதிற்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கலந்து சொற்பொழிந்துள் ளனர். இவ்வகைப் பணிபுரியும் கழகத்தின் திறம் முதற்கண் போற்றற் குரியது. இதனினும் போற்றத் தகும் கழகத்தின் திறம் ஒன்று உண்டு. புலவர்களின் சொற்பொழிவுகளை உடனடி யாகக் கேட்டு விட்டுவிடும் இறந்த காலப் பொருளாக்காமல் நிகழரும் எதிரரும் பயன்கொள்ள அச்சுயிர் ஏற்றி நூற்பிறவி யாக்கி வாழ்விக்கின்றனர் கழகத்தார். அதனால் தமிழ் வளர்கின்றது. யாதொரு நிலையம் தமிழை வளர்க்குமோ, வாழ்த்துமோ, அந்நிலையம் வளர்க வாழ்க என்று பாராட்டு வது நம் தமிழ்ப் பிறப்பின் பண்பாகும். இப்பொழிவுகளைத் தமிழுக்குத் தொடக்கத் திறனாய்வுகள் என்று கூறலாம். இவற்றால் தமிழிலக்கியங்கள் பரவும் எனவும், திறன்கலை வளரும் எனவும் எதிர்பார்க்கலாம். சொற்பொழிவு என்பது ஆகுபெயராய் இன்று ஒரு நூல் வகையைச் சுட்டும் வழக்குப் பெற்றுவிட்டது. கோவைச் சொற்பொழிவைக் கேட்டேன் என்ற நடையோடு கோவைச் சொற்பொழிவைப் படித்தேன் என்ற புதிய நடையும் இந்நாள் தோன்றலாயிற்று. கலம்பகம், உலா, தூது முதலான செய்யுள் வகை போல, சொற்பொழிவு என்பது உரைநடை வகையில் ஒரு கூறாகத் தோன்றியது கண்டும், அதனைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வளர்ப்பது கண்டும், அதனால் தமிழும் தமிழரும் வளர்வது கண்டும், அவ்வளர்ச்சியின் பங்காளிகளாக நீங்கள் இவண் வந்து கூடியிருப்பது கண்டும் பெருமித உவகை கொள் கிறேன். இவ்வளர் பணிக்கு என்னை ஒரு பணியாளன் ஆக்கிய கழகத்தார்க்கு நன்றியன். மனைநூல் நிலையங்கள் இருவர் மூவர் விரல்விட்டு எண்ணத்தக்க சில கோவை நூல்களே இஞ்ஞான்று நமக்கு கிடைத்துள. கோவை பாடும் வழக்கம் ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னரே தொடங்கி விட்டது. இப்பன்னூற்றாண்டுக் காலத்து எழுந்த கோவைகள் எண்ணிறந்தன என்று சான்றுபட அறிகின்றோம். அவைகள் இறந்தன எனவும் உடன் அறிகின்றபோது, பிள்ளைப்பேறு கேட்க வந்தோர் சாவு கேட்ட உணர்ச்சியை அடைகின்றோம். அகப்பொருள் இலக்கண நூல்கள் இடைக்காலத்துப் பல தோன்றியிருத்தலின், கோவைகளின் எண்ணிக்கையும் குறை வின்றியிருத்தல் வேண்டும். கிளவித் தெளிவு, கிளவி மாலை, கிளவி விளக்கம், சிற்றெடக்கம், தமிழ் முத்தரையர் கோவை, தமிழ்க் கோவை, (இரண்டாம்) குலோத்துங்கன் கோவை, அசதிக் கோவை, பல்சந்த மாலை, பொருளியல், வச்சத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக்கோவை, விஞ்சைக் கோவை, வங்கர்கோவை, நந்திக் கோவை, குமார சேனாசிரியர் கோவை, தானக்கோவை, காரிக் கோவை, இராமீசுவரக் கோவை, அரையர் கோவை, அண்ணாமலைக் கோவை, அகத்திணை என்றின்ன கோவை நூல்கள் இருந்தன என்று பிற நூற்குறிப்புக்களால் அறிகின்றோம். பிள்ளை இறப்பினும் அதன் பெயரேனும் ஒருவாறு ஆறுதல் தருமன்றோ? இனிப்புக் கட்டியினின்றும் உதிர்ந்த சீனித் தூள்கள்போல, மறைந்த நூல்களின் சில பாடல்கள் கிடைக்கப் பெற்றுள்ளோம். இத்தமிழ்ச் செல்வங்கள் ஏன் அழிந்தொழிந்தன? “வாரணம் கொண்டது அந்தோ வழி வழிப் பெயரும்மாள” என்று பல காரணம் கூறுவர். நீரும் நெருப்பும் தமிழின் சுவையை நுகர விரும்பின என்று சிலர் நயனுறப் பேசுவர். வாழ்வுப் போரிடைப் புகுந்து வெல்ல மாட்டாத் தகுதியில் நூல்கள் அழிவதியற்கை என்று இற்றைத் திறனிகள் விளக்குவர். இவையெல்லாம் நம் மொழி நூற்செல்வங்கள் காலந்தோறும் அழிவுண்டமைக்குக் காரணங்கள் ஆகா. தமிழர் தம் மொழித் தாயை என்றும் எப்படியும் பேண முனையாப் பெரும் பேதைமையே தமிழ் நூல்களின் மறைவுக்கு அறிவுடைக் காரணமாகும். இதனை நாம் உணரவும் உணர்த்தவும் வேண்டும். இன்றுள்ள கோவைகளேனும் பிழைக்க வழியுண்டு கொல் என்று நினைக்க அஞ்சுகின்றேன். முன்னோர் தமிழகத்தில் பெறுமவற்றுள் இவைபோல் யாம் அறிவதில்லை என்று பெற்ற நூற் குழந்தைகளை உவந்து புறந்தாராது, இவை என்ன பேறு என்று பின்னோர்கள் பேதைப்படுவரேல், அக்குழந்தைகள் தாமே கதறி அழுது கண்ணீர் வடித்துத் துடித்து மடியும். இக்குழவிக் கொலை அரசியற் கொடுங்கோன்மையினும் ஆழ்ந்தகன்ற இனக் கொடுங்கோன்மையாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெருகித் தடித்து வரும் மொழி பேணாப் பேதமையை, அழிவுக் கருவிகள் பெருகியுள்ள இக்காலத்துக் கட்டாயம் அழித்தாக வேண்டும். வளரப் பார்த்தல் கூடாது. வழி என்ன? கருவி என்ன? பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி களிலும் இருக்கும் நூல்நிலையங்கள் போதா. பொது நூல்நிலையங்கள் பட்டிகள் தோறும் பெருகினும், அவை நல்ல நூல்களை வாங்கிக் காவா. ஆதலின் தமிழன் என்பான் ஒவ்வொருவன் இல்லத்திலும் அடுக்களைபோல ஒரு தமிழ் நூல்நிலையம் வேண்டும். திருமணச் சடங்குகளுள் தமிழ் நூல்நிலையம் அமைப்பதும் ஒன்றாதல் வேண்டும். தமிழ் நூல் இல்லா இல்லத்தை மங்கல நூல் இழந்த இல்லமாக அவமதிக்கும் சமுதாய உணர்ச்சி பெருக வேண்டும். வீட்டக தோறும் தமிழ் ஏட்டகம் இருத்தல் வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்ல விழைகின்றேன். வீடுதோறும் தமிழ்க் கலையின் விளக்கம் இலங்குமாயின், இன்று உள்ள நூல்கள் அழியா; இனி எழும் நூல்கள் வாழும். மேலும் இத் தமிழகத்து நூல்கள் எழுதலாம் என்ற நம்பிக்கையும் பிறக்கும். தமிழ்ப்பற்று கோவை பாடிய புலவர்கள் சிறந்த தமிழ்ப் பற்றினர். முன்னூல்களைக் கற்றுத் தமிழின் பெருமையைத் துணிவாக அறிந்தவர்கள். முத்தமிழின் பெருமை, தமிழ்பனுவல்களின் பெருமை, தமிழ்ப் புலவர்களின் பெருமையெல்லாம் இக் கோவைகளில் இடைமடுத்து வருகின்றன. அகப்பொருட் செய்யுட்களில் தமிழைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்பது இலக்கணமன்று. சொல்வது நேரடியான இயல்பும் அன்று. அன்றாயிருந்தும் வேண்டுமென்றே சொல்லியிருத்தலின், கோவைச் சான்றோர்களின் தமிழன்பினைத் தெளிவாகக் காண்கின்றோம். மறந்தும் தமிழ்ப்புறம் தொழா மொழிக் கற்பினை உணர்கின்றோம். வாணன் கோவைத் தலைவன். இவன் செங்கனி வாயுணவு தேருந்தோறும் இனிதாம் தமிழ் போன்றது எனத் தலைவி நுகர்ச்சியைத் தமிழ் நுகர்ச்சியாகப் பாராட்டுகின்றான். (59) “சிறந்தார் தெரிந்த செழுந்தமிழ்” (145) “யாணர்த் தமிழ்” (148) “வரைப்பால் மதுரத்தமிழ்” (217) என்றெல்லாம் தஞ்சைவாணன் கோவையாசிரியர் அமுதூறி மொழிகுவர். தலைமகளின் இடை கூடல் ஒண் தீந்தமிழ் போல்வது (217) எனவும் அவள் விளையாட்டி டம் ஈர்ந்தமிழின் பொருள் போல் இனியது (166) எனவும் பாண்டிக்கோவை தமிழை உவமப்படுத்தும். ‘மந்த மாருதம் வண் தமிழ் நாறும் மலைய வெற்பா” (277) ‘முச்சங்க வண் தமிழ்போல் மொழியாய்” (302) எனத் தலைவனையும் தலைவியையும் வண் தமிழர்களாகக் காண்பர் அம்பிகாபதி. செல்வத்துள் செந்தமிழாம் செல்வம் சிறந்தது. தமிழின் மேன்மை கருதியன்றோ ஆரூர்த் தியாகர் சுந்தரர்க்குத் தூதாகப் பரவையாரிடம் நடந்து சென்றார். ஆதலின் தமிழ்க்கல்வியின் பொருட்டு நம் தலைவர் பிரிந்தது ஏற்கத்தகும் (413) என ஆரூர்க்கோவைத் தொழி தலைவிக்குத் தமிழின் தெய்வத் தன்மையைப் புலப்படுத்து கின்றாள். “யாரே கல்லாமல் உயர்ந்தார், தென் கூடல் இறையவனும் சீராய் சங்கத்தில் இனிதிருந்து ஆய்ந்தனன்” (424) என்று வியாசக் கோவையில் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சங்கத் தமிழ்க் கல்வியைப் போற்றுவர். செந்தமிழ்க் கலையைக் கற்கச் சென்ற காதலர் அருள் வேண்டும் என்னும் ஓர் அறவுரை கற்க மாட்டாரா? (490) என்று திருவெங்கைக் கோவை தமிழுக்கும் அருளுக்கும் உள்ள தொடர்பை இயம்புகின்றது. இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தலைவன் பாங்கனைக் காண்கின்றான். நின் மெலிவிற்குக் காரணம் இதுவோ - இதுவோ? என்று பாங்கன் வினவுகின்றான். பாங்கன் கருதியுரைக்கும் காரணங்கள் பல கோவைகளில் தமிழ்க் காரணங்களாக உள. “வண்டுறை வார்பொழில் சூழ்நறை யாற்றுமன் ஓடவைவேல் கொண்டுறை நீக்கிய தென்னவன் கூடற் கொழுந்தமிழின் ஒண்டுறை மேலுள்ள மோடிய தோவன்றியுற்ற துண்டோ தண்டுறை வாசிந்தை வாயென்னாங்கொல் தளர்கின்றதே” (பாண்டிக்கோவை: 25) “சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே (திருக்கோவை : 20) “தென்செய்த பண்ணின் திறந்தெரிந்தோதெய்வப்பாவலர்தம் முன்செய்த நூலின் முறைதெரிந் தோசெம் முகங்கருகிப் பொன்செய்த மேனியும் புல்லென்று வாடிப் புலம்பவென்னோ என்செய்த தோவறி யேன்திரு மேனி இறைவனுக்கே” (அம்பிகாபதி : 25) “போதைப் பொதிந்திட் டிருள்தூங் களகப் பொருப்பிமய மாதைக் கலந்த திருவெங்கை வாணர் மதுரைச்சங்க மேதைப் பசுந்தமிழ்ப் பாற்கடல் நீந்திய வீரமொரு பேதைக் குடைந்துநின் றாய்தகு மோசொல் பெருந்தகையே” (திருவெங்கைக்கோவை: 45) ‘கொத்துறு முத்தமிழ் வேலையின் வாய்த்தனையோ” என்பது கலைசைக் கோவை (45) “மாவேட்டம் தெய்தனையோ, மன்னர் போர்செய்துவந்தனையோ, நாவேட்ட முத்தமிழ் ஆய்ந்தனையோ” என்பது (142) வியாசக் கோவை. தலைவனை இவ்வகையால் வினாவுதல் மூலம் தமிழ் கற்ற மெலிவும் தமிழிசை கேட்ட மெலிவும் பாராட்டற்குரியன என்பது. கோவைப் புலவர்களின் குறிப்புரையாகும். இங்ஙனமே இடைக்காலத்தில் தோன்றிய சிறு பெரு நூல்களில் எல்லாம் தமிழின் மாட்சி பறைசாற்றப் படுகின்றது. ஆதலின் புலவர்கள் போலவே மக்களும் தமிழ்ப் பற்றுடையவர்களாக இருந்தனர் என்று கொள்ளலாம். இப்பற்றின் விளைவு என்ன? இவ்விளைவால் தமிழுக்கு வந்த ஆக்கம் என்ன? என்று காண்போம். இடைக்காலத் தமிழ் வளர்ச்சி தொல்காப்பியத்தையும் சங்கத் தொன்னூல்களையும் படிக்கவும் பரப்பவும் வேண்டும் என்ற வேணவா இடைக் காலத்துத் தீக்கொழுந்து போலப் பற்றியது. தொன்னூல்களை நேரடியாகக் கற்க முயன்றனர்; அம்முயற்சியினால் உரைகள் பெருகின. தொல்காப்பியத்திற்குப் பலர் உரையெழுதினர். சங்கவிலக்கியங்களுக்கு குறிப்புரைகளும் பேருரைகளும் கிளைத்தன; இதனால் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி இடைக் கால மக்களிடை எளிதாக்கப்பட்டது. தொல்காப்பியத்திற்கும் சங்கப் பனுவல்கட்கும் உரையாசிரியர்கள் பெரும்பாலும் பிற்கால நூல்களிலிருந்து மேற்கோள்கள் தருவதில்லை. பழந்தமி நல்களை அவற்றுக்குரிய பெருமையோடு பரப்ப விரும்பினார்கள் உரையாசிரியர்கள் என்ற நெறியை இதனால் அறிகின்றோம். இறையரனாகப் பொருள், நம்பியகப் பொருள், வெண்பாமாலை, நன்னுல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம் முதலான எத்துணையோ இலக்கண நூல்கள் இடைக்காலத்து வெவ்வேறு யாப்பு வடிவில் தோன்றின. முன்னூல்களை நன்கு கற்பதற்கு இடைத்தமிழோர் மேற்கொண்ட மற்றொரு முயற்சி இது வாகும். காலத்திற்கேற்பச் சிறு சிறு இலக்கண நூல்கள் ஒவ்வொரு கூறுபற்றி எழுந்தனவாம். இவ்விலக்கண நூல்களின் பாயிரங்களைப் படித்துப் பாருங்கள். முயற்சியின் நோக்கமும் தொல்காப்பியத்தைக் கற்பதற்கு இலக்கண நூல்கள் வாயில் களே என்ற கருத்தும் விளங்கிக் கிடக்கும். “தொல்காப்பியனருள் ஒல்காப் பெரும் பொருள் அகப்பொருள் இலக்கணம் அகப்படத் தரீஇ இகப்பருஞ் சான்றோர் இலக்கியம் நோக்கித் தொகுத்து முறைநிறீஇச் சூத்திரம் வகுத்தாங்கு அகப்பொருள் விளக்கமென் றதற்கொரு நாமம் புலப்படுத் திருளறப் பொருள் விரித் தெழுதினன்” என்பது நம்பியகப் பொருளின் பாயிரம். அகப்பொருள் விளக்கம் என நூற்குப் பெயரிட்டிருப்பதும். கற்பவர்தம் இருளறப் பொருள் விரித்து எழுதினன் என்று கூறியிருப் பதும் நினையத்தகும். உரைவகை ஒரு முயற்சி: சார்பிலக்கண நூல்வகை ஒரு முயற்சி: சிற்றிலக்கியவகை ஒரு முயற்சி இம்மூவகை முயற்சி யாலும் தொன்னூல்கள் இடைக் காலத்துப் பரவின. படிக்கப் பெற்றன சிற்றிலக்கிய முயற்சியே பல்வகைப் பிரபந்தங்களின் எழுச்சியாயிற்று. கோவை என்பது இவ்வகையில் ஒன்று. தொல்காப்பியத்தும் சங்கத்தொகைகளிலும் மிகுந்து கிடக்கும் பொருள் அகப்பொருளாதலின். அதனைப் பரப்பத் தோன்றிய கோவையிலக்கியம் சிற்றிலக்கியங்களுள் ஒரு பேரிலக்கிய மாயிற்று: பேரின்பத்திற்குத் துடித்த மாணிக்கவாசகர் பாடும் பெற்றியுடையதாயிற்று. வீடும் துறவும் வேண்டி வாழ்ந்த இடைக்காலத் தமிழ்ச் சமுதாயத்தார் சிற்றின்பங்கூறும் கோவையைப் பேரின்பக் குறிக்கோளுக்கும் பயன்படுத்தினர். இவள் தந்த இன்பத்தைச் சிற்றின்பம் என்பது எம்பெருமான் நடஞ்செய்யும் அம்பலத்தைச் சிற்றம்பலம் என்பதுபோலும் என்று சிவப்பிரகாசர் காதல் இன்பத்தைப் பெருமைப் படுத்துவார். துறவிகளும் கோவை பாடியுள்ளார்கள். ஆதலின் சிற்றின்பத்தை வெறுத்தாலும் அவ்வின்ப இலக்கியங்களை வெறுக்காது வளர்த்தனர் என்று அறிகின்றோம். பற்றற்ற கோவை வளர்ச்சியினாற் றான் தொல்காப்பியமும் சங்க நூல்களும் இடைக்காலத்துக் காக்கப்பட்டன; இடைத் தமிழோர் முயற்சியால் இப்பெருந் தமிழ்ச் செல்வங்களை இன்று நாம் எய்தப் பெற்றுள்ளோம். சங்கநூற் கருத்துக்கள் தொல்காப்பியக் கருத்தும் சங்கநூற் செய்திகளும் கோவைகளில் மறுபிறவி யெய்தி விளங்குகின்றன. அகத்திணை மாந்தர்களுக்குப் பெயரிடுதல் கூடாது என்பது தொல்காப்பிய இலக்கணமாகும். இவ்வுயிரான நெறியை எல்லாக் கோவை களும் புறநடையின்றிப் போன்றியுள்ளன. யார் பாட்டுடைத் தலைவனாகலாம் என்று தமிழ் முதல்நூல் வரம்பு செய்ய வில்லை. ஆதலின் கடவுளர்கள் பல கோவைகளுக்குப் பாட்டுடைத் தலைவர்களாக அமைந்திருப்பது சமயக்கால வியற்கை என்று நாம் கொள்ள வேண்டும். அக மாந்தர்களுள் சிறந்த ஆள் தலைவியே; அவள் தன் பல்வகைப் பண்புகளுள் சிறந்தது கற்பே. “உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும், செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று,” எனத் தொல்காப்பியர் தமிழ் நெறி காட்டினர். இத்தமிழ்மையை எல்லாக் கோவை களும் நன்முறையில் வலியுறுத்துகின்றன. வெறியாட்டிலும், உடன்போக்குத் துறையிலும், பரத்தையர் பிரிவிலும் கற்பு நெறிகளைக் கோவைப் புலவர்கள் சால்புபடப் புலப்படுத்தி யுள்ளனர். குழியில் விழுந்த களிற்றினை உய்விக்கும் பொருட்டுப் பெண் யானை மரங்களை ஒடிக்கின்றது; கரடி உணவிற் காகப் புற்றினை இரவில் தோண்டுகின்றது; வேங்கை பூத்ததும் திங்கள் ஊர்வட்டம் கொண்டதும் திருமண நாளைக் குறிக்கின்றன என்றிவை அகநானூற்றுக் கருத்துக்கள். பிரிந்து செல்ல மாட்டார் என்று நான் வாளா இருந்தேன்; பிரிவைச் சொன்னால் உடன்படமாட்டாள் என்று அவர் வாளா இருந்தனர்; காலம் பார்த்துப் பிரிந்தனர் என்று கவல்கின்றாள் ஒரு தலைவி. தலைவன் என்னை மறைவிற் கூடியபோது யாருமில்லை; அங்கிருந்த குருகும் நீரில் ஓடும் மீனை இரைகொள்ளப் பார்த்திருந்தது என்று கலங்குகின்றாள் ஒரு தலைவி. சூல்கொண்ட பேடைக்குப் பேறு விடுதி அமைக்க ஆண் குருவி கரும்பின் பூவைக் கொண்டு வருகின்றது; என் தலைவன் பரத்தை வாய்ப்பட்டானே என்று வெதும்புகின்றாள் ஒரு தலைவி. என் மாமைக் கவின் எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் பயன்படாது பசலை நோய்க்கு ஊணாகின்றதே என்று பிரிவிடைப் புலம்புகின்றாள் ஒரு தலைவி. களவுக் காலத்து என் தோழி வேம்பைத் தந்தாலும் உமக்கு இனித்தது; இக்கற்புக் காலத்துப் பாரியது பறம்புச் சுனைநீர் தந்தாலும் உவர்க்கிறது என இடித்துரைக்கின்றாள் ஒரு தோழி. இவன் காலில் வீரக்கழல் உண்டு; இவள் அடியில் சிலம்புகள் உள. உடன்போக்கு மேற்கொண்ட இந்நல்லவர்கள் யார்? என்று அன்பு கொள்ளுகின்றனர் கண்டோர். இவையெல்லாம் குறுந்தொகைக் கருத்துக்கள். வேலன் அழைக்க வெறியாடும் மனைக்கு வந்த முருகனே நீ கடவுளாயினும் மடவை என்பது நற்றிணை. சாந்தும் முத்தும் இசையும் பிறந்த இடத்துக்குப் பயன்படா; ஆதலின் தலைவி ஒருவனுக்கு உரியவளே என்று செவிலியை முக்கோற் பகவர்கள் அறிவுறுத்து கின்றனர். பாலையில் வெயிலின் கொடுமையைத் தாங்காது துயர் உறும் பெடையை ஆண் புறா தன் சிறகால் நிழல் கொடுத்துக் காக்கும். இந்த அன்புக் காட்சியைக் காணும் தலைவன் நின்னை நினைந்து விரைவில் வருவான் எனத் தலைவியைத் தோழி ஆற்றுவிக் கின்றாள். அறமும் இன்பமும் வேண்டிப் பொருள்வயிற் பிரிந்தார் அன்பர் என்று தோழி எடுத்துக் கூறுகின்றாள். இவையெல்லாம் கலித் தொகைக் கருத்துக்கள். உடன்போய தலைவன் என் மனைக்கு வருவானா? தன் மனைக்கே கொண்டு செல்வானா? தலைவனின் தாய் நம் வீட்டில் மணம் நடக்க இசைவாளா? என்று தலைவியின் தாய் ஆவல்கொள்கின்றாள். புதல்வனை ஈன்ற எம்மேனியை முயங்க வேண்டா; தாய்ப்பால் தன் மார்பழகைச் சிதைக்கும் என்று புலம்புகின்றாள் தலைவி இவையெல்லாம் ஐங்குறு நூற்றுக் கருத்துக்கள். “வேலினும் வெய்ய கானம், அவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே” என்பது பட்டினப்பாலை. இச்சங்க நூற் கருத்துக்கள் எல்லாம் பற்பல கோவைகளில் கட்டளைக் கலித்துறை என்னும் புது யாப்புப் பெற்று விளங்குகின்றன. சங்க நூல்களும் கோவைகளும் என்பது ஒரு தனிக் கட்டுரைக்கு உரிய பொருளாகும் என்று கொள்க. குறள் பாய்ந்து வளஞ்செய்யாத் தமிழ் நூல்கள் இல்லை. மகளுக்கு மாலை சூட்டிய வரைவைக் கண்டு ஈன்றபொழுதிற் பெரிது உவந்தாள் தாய் என்பர் சிவப்பிரகாசர். கோழி காலையிற் கூவுதல் வாய்மையாயினும் கொழுநனோடு கூடிய தன் இன்பத்தைச் சிதைத்துத் தீமை செய்தலின் பொய்யாம் என்று தலைவி திருக்குறளை நினைக்கின்றாள். (திருவெங்கை. 211) “போதவிழ் மென்மலர்ப் புன்னையங்கானல் பொருந்து மிந்த மாதவி பெற்ற மணிமே கலைநம்மை வாழ்விப்பதே” என்பது (36) அம்பிகாபதி கோவை. புன்னையங் கானல் பொருந்தும் இந்த மாதவி என்ற தொடர் சிலப் பதிகாரக் கானல் வரியையும், மணிமேகலை என்பது நூலையும் நினைவூட்டு கின்றன. கோவை என்பது சங்க இலக்கியங்களின் பாவை என்று மேற்காட்டிய செய்தி களால் வலியுறும். சங்க இலக்கியச் சிறப்பு சங்க நூற் கருத்துக்கள் கோவைகளில் நிரம்பிக் கிடப்பினும், கோவைகள் சங்க நூல்களுக்குக் கிட்ட நிற்கும் தகுதியுடையவனவல்ல. இருவகை நூல்களும் அகப் பொருளையே பாடுகின்றன. எனினும் இரண்டன் நெறியும் நோக்கும் வேறாயவை. ஒருவனுக்கு மனைவியும், மகளும் போலச் சங்கப்பனுவல்களும் கோவைகளும் ஆம். சங்க இலக்கியங்கள் நேரடி வாழ்விலிருந்து தோன்றிய மூலப் பிறவிகள். அவை கற்பவர் நெஞ்சுட் புகுந்து வாழ்வை நெறிப்படுத்த வல்லவை. சங்கச் சான்றோர் அகப் பொருளைத் தொடர்புடைய துறைகளாக வைத்துப் பாடவில்லை. தமக்குட்பட்ட ஒவ்வொரு கூறுபற்றித் தனிப்பாடல் செய்தனர். ஆதலின் சங்க அகநூல்கள் தொகையெனப் பெயர் கொண்டன; கோவைப் பெயர் பெற்றில. அகத்திணைக்குத் தொடர்பற்ற தனிப் பாடல்கள் எழுந்த தொல்காப்பிய நெறியே வாழ்வுக்குப் பொருந்தும். அந்நெறிப்பட்ட பாடல்களே உயிருடைய வாழ்வுப் பாடலாகும். கோவை என்பது சங்க இலக்கியம் என்னும் பெரிய மாளிகையைக் கண்டு படியெடுத்த ஒரு வரைப்படமாகும்; அம்மாளிகைக்குள் செல்லப் பயன்படும் வழிகாட்டியாகும்; இலக்கியம் தோற்றிய இலக்கியமாகும். “படித்துணரக் கோவைத் தமிழ் நம் திருவெங்கை வாணர்க்குக் கூறினனே” என்பர் சிவப்பிரகாசர். கோவை என்பது அகத்துறை என்னும் முத்துக்களெல்லாம் முறையாக அமைந்திலங்கும் ஒரு தனி இலக்கிய நூலாகும். அகத்திணைக் கூறுகளை நிரல்படவும் கோவை படவும் தொடர்நிலைச் செய்யுள் கோக்கலாம் என்று நம் இடைக்காலப் பெருமக்கள் கண்டறிந்த நுண்மையைப் புதுநெறியை - நாம் பாராட்டுகின்றோம். இந்நெறித்தோற்றத் தால் தொல்லைப் பனுவல்கள் அழியாது காப்புற்ற நலத்தை முன்னே குறிப்பிட்டேன். கோவைகள் சங்கவிலக்கியம்போல அகப்பொருளைச் சொல்லுவன எனினும், சொல்லும் நடைப்பண்பிற் சில பெருங்குறையுடையன. இக்குறைகள் இடைக்காலத்துக் தோன்றிய பல்வகை நூல்களுக்கும் பொருந்தும். “மலரினும் மெல்லிது காமம்” என்ற நுண்ணிய அகப்பொருளையே தமக்கு நூற்பொருளாகக் கொண்ட கோவைப் புலவர்கள் இக் குறைகளுக்கு இடங்கொடுத்திருத்தலாகாது காண். நம் அகத்திணை நுதலும் காதற்பொருள் நனி நாணுடையது; சிறிது வழுவினும் நிறை வழுவாவது. அகச் செய்யுட்களில் அவையல் கிளவி வருதலாகாது; இடக்குச் சொற்கள் புகலாகா; சங்க இலக்கியங்கள் இக்குற்றங்கள் இல்லாதன வாகலின் எக்காலத்தும் பெண்ணும், ஆணும் பயிலத்தக்கன வாகவுள; பேரவையிலும் பெருமிதவுணர்வோடு பேசத் தகையனவாகவுள. மொழி நாணத்தையும், கற்பனைக் கற்பையும் கோவை நூல்கள் சின்னஞ்சிறு நயங்கருதி பலியாக்கிவிட்டன. பெண்பாலின் உறுப்புக்கள் இந்நூல்களில் படாத கற்பனைப்பட்டுள. நாணிக்கண் புதைத்தல் என்னும் ஒரு துறைக்கோவை நூல் படிப்பார் நாணிக்கண் புதைத்தற்குரியதாக நிற்கின்றது. நாணில் மொழியும் அளவில் கற்பனையும் பொதுவாகத் தமிழ் நூல்களிலும் கட்டுப்படாகக் காதல் நூல்களிலும் வருதலாகா; வருங்காலத் தமிழ் வளர்ச்சியில் இடைக்காலக் குறைகள் மறுமை எய்தலாகா என்பதற்காகவே, கோவை பாராட்ட எழுந்தது இம்மாநாடேனும், ஈண்டுச் சொல்லத் துணிந்தேன். யாண்டும் நம் நோக்கம் நற்றமிழ் வளர்ச்சியாகும். சமயகால இலக்கியம் பிற்காலச் சிற்றிலக்கியங்களுள் கோவை தன்னேரில்லா இலக்கியமாகும். இதனைத் தொடர்நிலைச் செய்யுள் - சிறுகாப்பியம் - என்பர் தண்டியுரையாசிரியர். ஒரு புலவன் ஒரு தனிப்பொருளை நீள நினைந்து பாடும் முழுச் சிந்தனைக் கோவையில் பார்க்கின்றோம். புலவன் தன் சிந்தனைக் கோவை என்னும் பெற்றியுடையது இவ்விலக்கியம். சங்கத் தமிழர் இயற்கையொடு ஒன்றிய வாழ்வினர். அதனால் சங்க இலக்கியங்கள் முதற்பொருள் கருப்பொருள்களை நிரம்பத் தழுவிப் பாடுகின்றன. இது அக்காலத்திற்குப் பொருந்தும். கோவை பிறந்த காலத்துத் தமிழர் வாழ்வு சமய வாழ்வாக மாறிவிட்டது. சமயச் சார்பற்ற எதுவும் தமிழ்ச் சார்பற்றதாகக் கருதப்பட்டது. இலக்கியம் சமுதாயக் காட்டியதாலின், கோவைகள் பெரும்பாலும் தலக்கோவைகளாகத் தோன்றின. இலக்கியம் காலக்கோட்பட்டது என்பதற்குக் கோவைப் பிறவி ஒரு சான்று. சங்கவிலக்கியத்தின் இயற்கைச் சூழ்நிலையை இழந்த கோவைகள் சமயச் சூழ்நிலைப்பற்றி முன்னேறின; புதிய நிலையால் முன்னில்லாத் தமிழாக்கம் செய்தன. சமய மெய்ம்மைகள், நாயன்மார் வரலாறுகள், புராணக் கதைகள் முதற்பொருள் கருப்பொருளுக்கு ஈடாக வந்து கோவைப் புலவர்க்கு உதவின; உவமைகளாகப் பயன் பட்டன. “பெய்யுடை யார்க்கரன் போலகலும் அகன்றாற் புணரின் மெய்யுடைய யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும்” (திருக்கோவை: 48) தலைவியைப் பிரியும் தலைவன் அவள் தன் தினைப் புனத்துத் தெய்வப்பத்தியை உவமப்படுத்துகின்றான். யானைக்கு அஞ்சிய தலைவியைத் தலைவன் இடப்பக்கத்துத் தழுவிக் கொள்கிறான்; அவன் வலப்பக்கம் யானையின் புண்ணுமிழ் குருதியால் செந்நிறப்படுத்துகின்றது. அண்ணலை ஆயிழை பாகன் என்று அஞ்சினம்” (தஞ்சை வாணன்: 302) என அறத்தொடு நிற்கும் தோழி செம்மேனி யெம்மானாகத் தலைவனை உருவகஞ் செய்கின்றாள். உடன்போய மகளுக்கு ஒரு நற்றாய் வருந்தினாள். எப்படியும் மகளைத் தேடிக் கொணர்வேன் என்று செவிலி ஆறுதல் கூறுதல் வழக்கம். ‘நிலத்தில் மறைய முடியாது. வானத்தில் ஏறமுடியாது, இதற்குள் கடல் வழியாகச் சென்றிருந்தாலும் ஒல்லாது; அடுத்த நாட்டிலோ அடுத்த ஊரிலோ அடுத்த வீட்டிலோ தாம் உடன் போக்கினர் மறைந்திருப்பர். நாடு நாடாக, ஊர் ஊராக, வீடு வீடாகத் தேடிக் கண்டுபிடிப்பேன்’ என்று குறுந்தொகைச் சங்கச் செவிலி சொல்லுகின்றாள். இஃது இயல்பான பேச்சு. “அருகாத அன்புடன் இன்புற மேல்வந் தடுகளிற்றைப் பொருகாளை பின்சுரம் போயினள் என்று புலம்பிநையேல் குருகார் கமலக் கொடி தங்குதேயம் குறுகியவர் ஒருகாலி னுக்கும் ஒருகையின் நீக்கும் உட்பட்டதே” (அம்பிகாபதி: 369) என்பது சமயச் செவிலியின் ஆறுதலுரை. உலகம் பெரிதன்று; குறளுருவாகிய திருமாலின் ஓரடியால் அளக்கப்பட்ட சிறியது; கடலையுண்ட அகத்தியரின் ஒரு பிடிக்குள் அடங்கிவிட்ட குறியது. அதனால் உடன் போகியாரை ஓரடி வைத்தால் ஒரு கையால் பிடித்துவிடலாம் என்பது செவிலியின் கருத்து. இவ்விலக்கிய நெறி புராண காலத்தில் எழுந்த இலக்கியங் கட்குப் பொருந்துவதே. சிறந்த கண்ணப்பர் இறைச்சியைச் சுவைத்து இலையில் வைத்துக் காளத்தியருப்பருக்குப் படைத்தார் என்பது வரலாறு. பகற்குறிவந்து நீங்கும் தலைவனை விருந்தாக அழைக்கின்றாள் குறக்குடித் தோழி. நும் வேண்டுகோளை மறுப்பது எப்படி? குறமகன் ஊட்டிய எச்சிற் கறிதானே இறைவனுக்கு உவப்பாயிற்று’ என்று திருவெங்கைக் கோவைத் தலைவன் வாயூறி உடன்படுகின்றான். திருமகள் தாமரையில் வாழ்கின்றாள் என்றும், கதிரவன் தாமரையைத் திறப்பான், திங்கள் அதனை மூடுவான் என்றும் புராணம் புனைந்து கூறும். இப்புராணச் செய்தியைப் பொருட்படுத்திக் கோவைப் புலவர்கள் மேலும் செய்த கற்பனைத் திறங்கள் எண்ணில, தலைவியைத் திருமகளாகவும், அவள் இல்லத்தைத் தாமரையாகவும் கொண்டு தலைவன் பலபடப் பாராட்டு வான். இரவுக்குறியில் வந்த காதலன் தலைவியைக் காணவில்லை. “இங்கு அவள் எப்படி வரமுடியும்? அவள் வாழும் தாமரைமனை மாலையில் அடைக்கப்படும். யாரும் திறந்துவிட்டாற்றானே அவள் வெளிவர இயலும்? என் காதலியின் திருமனையைத் திறப்பார் ஒருவர், அடைப்பார் ஒருவர்” என்று அல்ல குறிப்பிட்ட வெங்கைத் தலைவன் புலம்புகின்றான். “இருவர் திறந்தடைக் கின்றதன்றோ நெஞ்சமே நம் திருமனையே” என்று அவலிக்கும் தலைவன் கருத்தில் திருமறைக் காட்டினைத் திறந்தடைக்கப் பாடிய நாயன்மார்கள் செயல்புலனாகின்றது. இரவில் என்னைக் காணவேண்டு மென்று நீ தாமரை மாளிகையைப் பகற்காலத்தே விட்டு வந்தாயோ என்று கனிந்து மொழிகின்றான் ஒரு காதலன். கைத்தி கிரிப்புயல் காணத பாதர் கமலையுறை மெய்த்திரு வேயிருட் போதுவந் தாயந்த வெங்கதிரோன் அத்திரி மேனின றிதழா யிரமுமடைத் துவண்டாம் முத்திரை யிட்டதன் றோவென்றும் நீவைகும் முண்டகமே (திருவாரூர்க் கோவை: 207) உன்னைத் தாமரையில் வைத்துக் கதிரோன் இதழா யிரக் கதவடைத்தான்; மேலும் வண்டு முத்திரையிட்டான். முத்திரைக் கதவையுடைத்துக்கொண்டு காலமல்லாக் காலத்து எவ் வண்ணம் வந்தாய் திருவே என்றாங்கு அன்புத் தலைவன் இன்பச் சொல்லாடுகின்றான். அன்பர் வரலாறு, புராணக்கதை, சமயவுண்மைகள் என்றின்ன வகையால் கோவைகள் பொருள்வளம் பெற்றுக் கற்பனை பெருக்கிக் காதற் சுவையை வெளிப்படுத்தின. தெய்வக் காதலும் மக்கட் காதலும் இணைந்த புதிய அமைப்பினால் கோவைகள் நிலைத்த இலக்கியங்களாயின. கோவைகள் பிறந்த காலம் தமிழ்ப்பற்று மிகுந்த காலம் என்றும், உரை, சார்பி லக்கணம், சிற்றிலக்கியம் என்ற முந்நெறியால் இடைக்காலத் தமிழ் வளர்க்கப்பெற்றது என்றும், இந்நெறியில் தோன்றிய கோவை தொல்காப்பியம் சங்க இலக்கியம் முதலான தொன்னூல்களை அழியாமற் காத்தது என்றும், சமய எழுச்சி கோவை இலக்கியத்திற்கு ஊட்டம் தந்தது என்றும், சில அடிப்படைகளை விளக்கி னேன். அதற்குச் சான்றாகக் கோவை அமைப்பையும் கோவைச் சான்றோர்களின் புலமையையும் திறங் காண்போம். கோவையின் இலக்கணம் கோவை, தலைவனும் தலைவியும் தாமே கண்டு தோழி யின் துணைகொண்டு காதலின்பம் துய்க்கும் களவொழுக்க முதல் ஊரறிய மணந்து விருந்தோம்பி மகப்பெற்று வாழும் கற்பொழுக்கம் வரை ஒன்றன்பின் ஒன்றாக நிரல்பட எல்லா நிகழ்ச்சிகளையும் ஒருங்கு கூறுவது. கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் அமைந்த கோவைகளே மிகப்பல. ஆசிரியத்தாலும் வெண்பாவாலும் பாடிய சில பழங்கோவை களும் உண்டு. கோவைக்கு நானூறு பாடல்கள் வேண்டும் என்பது ஒரு பொதுவிலக்கணம். நானூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் கொண்ட கோவைகளே பல. ஒட்டக்கூத்தர் பாடிய நாலாயிரக் கோவை பேரெல்லைக்கு எடுத்துக்காட்டு. ஒரு துறைக்கு ஒரு செய்யுள் என்ற முறையால் அமைந்த கோவைகளும் உள. சில துறைகளுக்குப் பல பாடல்கள் உடைய கோவைகளும் உள. அம்பிகாபதிக் கோவையில் தலைவன் பாங்கற்கு இரங்கல், தலைமகனுக்கு அவன் நற்றாய் உரைத்தல், பதங்கம் (ஒருவகைப் பறவை) பழிச்சல், யாணரைக்காண விரும்பல் என்றின்ன புதிய துறைகள் காணப்படுவ. திருவாரூர்க் கோவையில் வளம்பட வுரைத்தல், நற்றாய் தமருக்கு அறத்தொடு நிற்றல், கழையொடு புலம்பல் என்ற புத்துறைகள் காணப்படுவ. தோழிமுன் தலைவன் யானை வினாதல், கலைமான் வினாதல் என்ற வினாக்கள் கோவைகட்கெல்லாம் பொது. சிராமலை, திருவாவடு துறை, கலைசை, திருக்கழுக்குன்றக் கோவைகளில் வேங்கை வினாதல், வன்றி (பன்றி) வினாதல், மரை வினாதல் என்ற பல வினாக்கள் உள. மயூரகிரிக் கோவையில் சிங்கம் வினாதல், கரடி வினாதல் முயல்வினாதல் என மாணவர் வினாத்தாள் போலப் பல வினாக்கள் வருகின்றன. எல்லா வினாக்களுக்கும் நன் மாணவி போலத் தோழி எதிர்மொழி பொருந்தச் சொல்லுகின்றாள். பல கோவைகள் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் என்ற முறையால் அமைந்திருக்க, திருக்கோவை இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் என்ற முறையில் நிகழ்வுகளைக் கூறுகின்றது. வறிது நகைதோன்றல் என்னும் துறை கவிக்கூற்றாகும். “முளைக்கும் சிறிய முறுவல் என் ஆகம் முடிவிக்குமே” என மதுரைக் கோவையும், “என் செவ்வாய் நகைக்கிடம் தந்தது இனி யார்க்கு நல்கும் நகைக்கிடமே” எனக் கலைசைக் கோவையும் தலைவன் கூற்றாகச் செய்யுட்படுத்துவ. கோவை கோக்கும் நிகழ்ச்சிகளுக்கு எல்லை என்ன? தலைமக்கள் களவு தொடங்கிக் கற்பாகி மகப்பேறு எய்தி இன்பமாக இருக்கும் இல்லற வாழ்க்கையே கோவைப் பொருளாகும். பரத்தையிற் பிரிவு காரணமாக வந்த ஊடலைத் தீர்த்துத் தலைவன் தலைவியை இன்முயக்கம் செய்கின்றான் என்பது திருக்கோவை முடிபு. போர்க்குச் சென்று மீண்டும் வந்த தலைவன் தலைவியோடு உடனிருந்து கார்ப்பருவங் கண்டு, முகிலே இனிப் பொழியத் தடையில்லை என்றான் என்பது தஞ்சைவாணன் கோவை முடிவு. ஓதற்குப் பிரிந்து வந்த தலைவன் மனைவியோடிருந்து இன்புற்று இறைவன் அடியை நினைக்கின்றான் என்பது மதுரைக்கோவை முடிபு. பொருள் வயிற் பிரிந்த தலைவன் காதலியை அகத்திட்டுச் செழுங் கொண்டலே திருவருள் போல் மும்மாரி பொழிக என்று ஏவுகின்றான் என்பது கலைசைக்கோவை திருவாவடுதுறைக் கோவை முடிபுகள். காதலியைக் கூடிய காதலன் முகிலை வாழ்த்துகின்றான் என்று மீனாட்சிசுந்தரம் பிள்ளை தாம் பாடிய மூன்று கோவையிலும் மொழிவர். கோவை என்பது அகப்பொருட் கோவையாதலின் இல்லறமாக முடித்தலே நேரிது. துறவற முடிபு என்னானும் கோவைக்குப் பொருந்தாது. “அல்லோடு நண்பகல் ஐம்புல னாலரும்போ கந்துய்த்து வல்லியும் மல்லல் வளவயலூரனும் மாதருமே சொல்லிய கேள்வித் துறைமுடி வாய்ந்து துணைவியரோடு இல்லறங் காத்துத் துறவறந் தாங்கல் இயைந்தனரே” என்பது அம்பிகாபதிக் கோவையின் இறுதிச் செய்யுள். கூட்டுறவுப் பண்ணைப் பாலில் உப்புவிழுந்தது போல இல்லறக் கோவையில் துறவறத் தனிமையைச் சொல்வது நெறிப்பிழை யாகும். பிற கோவையரெல்லாம் இல்லற வாழ்க்கையாகவே முடித்திருப்பது அம்பிகாபதி முடிவு ஏற்கப்படவில்லை என்பதற்கு ஒரு கரி. அகப்பொருட் செய்யுட்களில் பாட்டுடைத் தலைவன் கிளவித்தலைவன் என்ற இருவகைத் தலைவர்களுக்கு இடனுண்டு. பாட்டுடைத் தலைவன் வரல்வேண்டும் என்பது விதியுமன்று: விலக்குமன்று. அம்பிகாபதிக் கோவைக்குப் பாட்டுடைத் தலைவன் இல்லை. பாண்டிக் கோவை தஞ்சைவாணன் கோவை குளத்தூர்க்கோவை நாணிக்கண் புதைத்தற் கோவைக்கு முறையே பாண்டியன் நெடுமாறன், சந்திரவாணன், வேதநாயகம் பிள்ளை, தளவாய் ரகுநாத சேதுபதி என்போர் பாட்டுடைத் தலைவர்கள். இக்கோவை களில் இன்னவர் தம் மனைவியர் இணைத்துக் கூறப்படுத லில்லை. கிளவித் தலைவனுக்குக் கிளவித் தலைவி கோவையிற் சொல்லப்படுதல் போலப் பாட்டுடைத் தலைவனுக்கு மனைவியிருப்பினும் பாட்டுடைத் தலைவியாகப் பாடுபெறுதல் வழக்காறன்று. தலக்கோவைகளில் என்றால் பாட்டுடை இறைவனோடு இறைவியும் பிணைத்துப் பாட்டுப்பெறுதலைக் காண்கின்றோம். இது பெரு முரணன்று. சமயகால இலக்கியக் கூறு என்று சொல்லியமையலாம். பாட்டுடைத் தலை மக்கள் இல் வாழ்க்கையைக் கிளவித் தலைமக்கள் இல்வாழ்க்கையோடு ஒப்பிட்டு உரைப்பதும் ஏற்றத் தாழ்வு காட்டுவதும் எவ்வாற் றானும் கூடாது. அகத்திணை மாந்தர் பெயர் சொல்லுதல் கூடாது எனின், அம்மாந்தர்களைப் பெயருடையவர்களோடு இயைத்து வாழ்வைப் பொருத்திச் சொல்வதும் கூடாதன்றே? துறைப் பொருட்குத் தகப்பாட்டுடைத் தலைவனது இல்வாழ்க்கையை அமைத்துப்புனையும் போக்கினைத் திருவெங்கைக் கோவையில் கற்கின்றோம். “புணர்ந்தாருள் வெங்கை புரநாதர் பாகம் புணர்ந்தநறு மணந்தாழ் குழலுமை மங்கையல் லாமல் மகிழ்நர்தமைத் தணந்தார் அமைகிலர் நீதரி யாமல் தளர்ந்தனையேல் பணந்தாழ் அகலல் குலாய்நகு வார்நினைப் பார்த்தவரே” இது (158) தலைவியைப் பாங்கி கழறுதல் என்னும் துறையாகும். தோழியிற் கூட்டத்துத் தலைவன் காலம் நீட்டித்தமையால் தலைவி மிக வருந்தினாள். என்றும் பிரியாத் தன்மையும் பிரிய இயலாத் தன்மையும் உடையவள் ஒரே ஒருத்தி. அவள் திருவெங்கை நாதர்பாகத்து இருக்கும் உமையே. மக்களுள் புணர்ந்தார் யார்க்கும் பிரிவு உண்டு. இவ்வியல் பறியாது நீ வருந்துவது நகைப்பிற்கு இடமாகும் என்று ஆற்றுவிக்கின்றாள் தோழி. திருவெங்கை இறையவனின் மனைவி சான்றக அகப்பொருளில் வருதல் காண்க. “கல்லைக் குழைத்துப் பயின்றுள தாகிய கல்வியுடைத் தில்லைப் பதியின் நடமாடும் வெங்கைச் சிவனையல்லால் சொல்லிக் கொடுநின் மனம்நாம் குழைப்பத் துணைதலொரு புல்லைக் கொடுதண் கடல்நீந்த உன்னுதல் பூங்கொடியே” பாங்கியைத் தலைவன் பழித்தல் என்னும் துறைச் செய்யுள் (62) இது. தலைவன் தன் குறைகளையெல்லாம் தோழியிடம் எடுத்துச் சொல்லுகின்றான்; தலைவி தனக்கு இன்றியமை யாதவள் என்பதனை விளம்புகின்றான். அவனது ஆர்வமொழி யெல்லாம் கேட்டபின், தோழி நின் குறையை நீயே சென்று தலைவிக்குச் சொல் என்று தன் பொறுப்பின்றிச் சொல்கின்றாள். இப்பேச்சால் தலைவன் கசந்தான்; சிறிது சினந்தான். ‘நின்மனத்தை என் சொல்லால் மாற்ற இயலாது. ஒரு புல்லைத் தோணியாகக் கொண்டு கடலை நீந்த முடியுமா? கல்லைப் பிசைந்து கனியாக்கவல்ல திருவெங்கைச் சிவனே உன் மனத்தை இளக்க வல்லவன்’ என்று தலைவன் தோழியின் வன்னெஞ்சத்தைத் தாக்கி னான். பாட்டுடைத் தலைவனாம் வெங்கைநாதன் துறைப் பொருளுக்கு உள்ளாதல் காண்க. கோவைப் புலவர்களின் தனித்தன்மை ஆசிரியம் வெண்பா கலித்துறை என்ற யாப்பிலும் செய்யுள் எண்ணிக்கையிலும், ஒரு துறைச்செய்யுட்களிலும், துறைவகை யிலும், கூற்றிலும், முடிபிலும், தலைவர் நிலையிலும் கோவை நூல்களிடை வேறுபாடுகள் உள என்பதனை மேலே சுட்டிக் காட்டினேன். கோவைப் புலவர்கள் பாட்டியல் இலக்கண நூல்களுக்கு அடிமைப்பட வில்லை என்று இதனால் அறியப்படும். இலக்கியம் கண்டு அதற்கேற்பக் கோவையிலக் கணம் எழுதப்படவில்லை என்று மேலும் அறியலாம். கோவைகள் தோறும் வேறுபாடு இருத்தலின் ஒரு கோவை மற்றொரு கோவைக்கு முற்றும் அடிச்சுவடாகவில்லை என்பதும் அறியத்தகும். கோவைப் புலவர் ஒவ்வொருவரிடம் சில தனிப்புலமைகள் காணப்படுகின்றன. கலித்துறைக் கோவைகளுள்ளும் நடைநயங்கள் வேறுபடுகின்றன. தமக் கெனச் சில புதிய கருத்துக்களும் யாப்பமைதியும் பெற்றமை யாற்றான் ஆளுக்கு ஒரு கோவை பாடத் தொடங்கினர். ‘இடம் அணித்து என்றல்’ என்னும் ஒரு துறையில் கோவைப் புலவர்களின் வேறுபட்ட சிந்தனைகளை ஒப்பிட்டுக் காண்போம். தலைவன் தலைவியை முதல் நாள் கண்டுபிரியும் போது, தலைவி கவல்கின்றாள். ‘கவலாதே, உன் ஊரும் என் ஊரும் மிகப்பக்கம் போவதும் வருவதும் எளிது’ என்று தலைவன் ஆறுதல் செய்தல் இத்துறையின் பொருளாகும். இவ்வொரு துறைக்கண்ணே ஒவ்வொரு புலவரும் காட்டிய சிந்தனை யோட்டம் நுண்ணியது, இனியது, சிறந்தது. திருவாரூர்க் கோவைத் தலைவன் நம் இருவர் ஊர்க்கும் நடுவே எல்லைக்கல் உள்ளது இந்த எல்லைக்கல் இன்றேல், இரண்டு ஊரார்க்கும் எல்லைச் சண்டை ஏற்படும் என்று மொழிகின்றான். கலைசைக் கோவைத் தலைவன் ‘என்னூர் ஆடுமாடுகள் நின்னூர் மலைக்கு வந்து தினை மேய்ந்து திரும்புகின்றன’ என்று கூறுகின்றான். சிராமலைக் கோவைத் தலைவன் ‘என்னூர் மிளகுக்கொடி உன்னூர்ச் சோலையில் படர்கின்றது’ என்று சுட்டுகின்றான். திருவாவடுதுறைக் கோவைத் தலைவன் ‘என்னூர் இஞ்சிக் கொடி நின்னூருக்கு நிழல் தரும்’ என்று இயம்புகின்றான். திருக்கோவைத் தலைவன் ‘என்னூர் மாளிகை வெண் சாந்தின் ஒளி நின்னூரின் கருங்குன்றத்தை வெண்குன்ற மாக்கும்’ என்று உரைக்கின்றான். திரு வெங்கைக் கோவைத் தலைவன் ‘இறைவன் திருமேனியும் அம்மை திருமேனியும் ஒன்றாய் இருப்பதுபோல நம்மிருவர் ஊரும் ஒன்றே’ என்று கூறுகின்றான். தஞ்சைவாணன் கோவைத் தலைவன் ‘என் ஊர் வேங்கை மரம் நின்னூரின் காந்தட்கையில் பொன் சொரியும்’ என்று பேசுகின்றான். மதுரைக் கோவைத் தலைவன் ‘நின் காதுக்கும் விழிக்கும் எவ்வளவு தொலை’ என்று வினவுகின்றான். வியாசக் கோவைத் தலைவன் ‘என்னூர்க் கருமணிச் சோதியைக் கண்டு முகிலென்று மயங்கி நின்னூர் மயிலாடும்’ என்று காட்டுகிறான். குளத்தூர்க் கோவைத் தலைவன் ‘வேத நாயக வள்ளலின் பொருட்கும் வறியோர்க்கும் நெடுந்தொலைவா’ என்று கேட்கிறான். ஒரு பழங்கோவைத் தலைவன் ‘நின்னுடைய கூந்தல் நிறத்தால் நிறைவளையாய் என்னுடைய ஊரும் இருளாகும்’ என்று முடிக்கின்றான். கோவையின் சொல்லும் நடையும் கோவைப் பொருளாராய்ச்சி, கோவைச் சொல்லா ராய்ச்சி, கோவை நடையாராய்ச்சி என்ற வகையால் கோவைத் திறன்களை ஆராய்ந்து விளக்கிப் பரப்புதல் நல்லது. கோவைச் சான்றோர்களின் புலமைத் தனிக்கூறு களை மேலே ஒரு துறையளவில் வைத்துக் காட்டினேன். பொருளும் சொல்லும் ஒரு மொழிக்குச் சோறும் நீரும் போல்வன. ஒரு மொழிக் கண்ணே பொருளே மாத்திரம் வளர்க்கும் அறிஞன் உடைமைத் தீட்டு இன்றி நிலம் வழங்கும் அன்பனை யொப்பான். மொழிக்கு உடைமையாவது பண்புடைய சொற்களே; பொருளல்ல. இதனைத் தமிழ்வளர்ப்பிகள் நினைவில் வைக்க வேண்டும். தமிழ்ச் சொற்களையும் சொல் வடிவங்களையும் புதுக்கி ஆக்கிப் படைக்காத புலவன் தமிழ் மொழிக்கு உடைமைச்செல்வம் பெருக்காதவனே என்பது என் துணிபு கோவைப் புலவர்கள் இக்குற்றத்திற்கு ஆளாகவில்லை. ‘ஓராட்டி பாகர்’, (கலைசை 162), “பொன்னி நீர் நாட்டிலுள்ள தண்ணெல்லாம்” (பழமலை 103) “அன்பன் பின் செலும் வாறு எதுவோ” (பழமலை 339) என்ற இடங்களில் ஆட்டி, தண், வாறு என்பன முதற் சொற்களாக ஆட்சி செய்யப்பட்டுள. “வடுக்கின்ற மாந்தளிர்” (திருவாரூர் 510), “குன்ற மழைக்கக் குயில் அழையா நிற்பர்” (அம்பிகாபதி 15) என்ற பகுதிகளில் வடு, மழை என்ற பெயர்ச் சொற்கள் புதிய வினையெச்ச வடிவம் பெற்று, ‘வடுச்செய்கின்ற’ ‘மழை பெய்ய’ என்னும் பொருளைத் தருகின்றன. இவ்வாக்கம் தமிழ்மொழி மரபிற்கு ஒத்ததே. இங்ஙனம் ஆக்கும் ஆற்றலையும் ஆக்கவேண்டும் என்னும் அன்பையும் இன்று நாம் இழக்கலாமா? இழக்கத்தான் இடங்கொடுக்கலாமா? தேனமர் சொல்லி, அம்பலமே போலி, தில்லை போலி, அன்பிற்சொல்லி, குயில் மன்னு சொல்லி, காட்டில் நின்றாடி, விளையாடி என்ற பெயர்ச் சொல் வடிவங்கள் திருக்கோவையில் நன்கு காணப்படும். முருகனுக்கு உரிய முரசை ‘முருகியம்” (662) என்றும் பாவிகளைச் ‘சீர் வழுத்தாப்பாலர்’ (337) என்றும் இக்கோவை சுருங்கச் சொல்லும். உவளை, உங்குவை, உங்ஙன், உந்திடம், இந்திடம் என்ற அரிய சுட்டு வடிவங்கள் இக்கோவைக்கண் பயின்றுள்ளன. தமிழ்நர், கணிமை, நாயினர் (நாயுடையார்), மன்னாமை, கற்பு (முறைமை), சோத்து, மடவியன், பேரான் (பேரன்) நயனி (நயனம் உடையவள்), காளையம் (போர்), கூண்டு (கூடி), பிறவு (பிறப்பு) முதலான சொற்களும், குழீஇ, வெரீஇ, தழீஇ போன்ற அளபெடை வடிவங்களும் பல கோவைகளில் புகுவதாக வரக் காண் கின்றோம். ஆசிரியம் வெண்பா முதலான யாப்பினால் கோவை பாடலாமாயினும், கலித்துறையே பழக்கப்பட்ட பாவாகும். பெரும்பாலான கோவைகள் இத்துறை யாப்பில் பாடப் பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் பாநடையும் தனித் தன்மையுடையதாக விளங்குகின்றது. இவ்வெண்ணத்தோடு கோவைகளைப் படித்துப் பாருங்கள். “கோடையும் கொண்டலும் கண்டறி யாத குளிர்பொழிற்கண் வாடையும் தென்றலும் மேவரு மேவரில் காண்பதன்னப் பேடையும் சேவலும் சேலும்வராலும் பிறங்கு நன்னீர் ஒடையும் கங்கமும் சங்குமி ழாநின்ற ஒண்முத்துமே” (அம்பிகாபதி கோவை:100) “அருந்தும் பசியும் அடுமணற் சோறும் அயர்ந்திறைவன் வருந்தும் பசிக்கு வருந்துமில் வாழ்க்கையும் வேட்கையுடன் பொருந்தும் விருந்தும் புறந்தரு நீர்மையும் போற்றியவன் திருந்தும் திறஞ்செய லுங்கற்ற வாநின் திருமகளே” (அம்பிகாபதி கோவை: 449) அம்பிகாபதி உம்மை நடையின் அன்பர் என்று பல பாடல்கள் காட்டுகின்றன. எண்ணும்மையும் பெயரெச்ச வும்மையும் இப்பாடல்களில் அடுக்கி வருகின்றன. ‘விழியும் சிவந்த மொழியும் தளர்வுற்று மெய்யுங்கைத்து’ (ஙசசு) என்பதுபோல உம்மையும் வினையெச்சமும் இணைந்த நடையும் இவர்க்கு உரியது. திருக்கோவை கோவைச் செல்வங்களுள் சிறந்த செல்வம் என்பதனை யாவரும் அறிவர். திருவாசகத்தின் மணம் திருக்கோவையிலும் உண்டு. தேனூறு செஞ் சொல் திருக்கோவை என்கின்ற நானூறும் என் மனத்தே நல்கு’ என்ற வெண்பாவில் தேன் என்பது திருவாசகத்தைக் குறிக்கலாம். “வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்” என்று பாராட்டப்படுதல் காண்க. “பேரென்னவோ வுரையீர் விரையீர்ங்குழற் பேதையரே” (54) ‘தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நுஞ் சுரிகுழற்கே’ (63) ‘பாய்சின மாவென ஏறுவர் சீறூர்ப்பனைமடலே” (74) “மென்னனையாய் மறியே பறியேல் வெறியார்மலர்கள்’ (125) ‘உரையென்னவோ சிலம்பா நலம்பாவி யொளிர் வனவே’ (153) ‘ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாதிவ்வணிநலமே” (307) இவை திருக்கோவைத் கலித்துறையின் சில அடிகள். ஓரடியின் இடைச்சீர்கள் தம்முள் எதுகை மோனை யழுத்தம் சிறந்ததொலிக்கக் கேட்கின்றோம். அவ்வழுத்தத்தால் கருத்து வலிபெறவும் காண்கின்றோம். கோவைதோறும் ஓடுகின்ற தனிநடை நயத்தை ஆராய்ந்து பார்ப்பின், இடைக்காலத் தமிழ் ‘நல்லோர் தமிழை இனிக்கச் செய்த பக்குவம் பெறப்படும். கோவைத் தோற்றம் கோவைத் தோற்றம் பற்றிய ஒரு கருத்தைச் சொல்லி இவ்வுரையை முடித்துக் கொள்வல். சங்க அக இலக்கிய மெல்லாம் துறைத் தொடர்பற்ற தனிப்பாடல்கள் கொண்டன என்பது ஒரு பொதுப் பேருண்மை. ஆராய்ந்து பார்க்கின், அகநிகழ்ச்சிகளை வரன்முறையாகத் தொகுத்துச் சொல்லும் கோவை முறை சங்க காலத்திலேயே பிறந்து விட்டது என நாம் அறிய வேண்டும். ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழை அறிவுறுத்த விரும்பிய கபிலர் குறிஞ்சிப் பாட்டுப் பாடினார். இப்பாட்டு அறத்தொடு நிலை என்னும் துறைத்து. அன்னை ஏவத் தலைவியும் தோழியும் தினைப்புனம் காக்கச் சென்றதும், தலைவன் கெடுதி வினாயதும், மொழி பெறாது வருந்தியதும், யானையினின்று காத்ததும், புனலினின்று காத்ததும் முயங்கியதும், இரவுக்குறியின் இடையூறுகளும், வெறியாட் டும், அறத்தொடு நிற்றலும் என்ற களவு நிகழ்ச்சிகள் வரிசையாக இப்பாட்டில் வந்துள்ளன. எளியேம் துணிந்த ஏமஞ்சால் அருவினை நிகழ்ந்த வண்ணம் நீநனி யுணர செப்ப லான்றிசின் (குறிஞ்சிப்: 32) என்று நிகழ்ந்த வண்ணங்களை அன்னைக்குத் தோழி கூறுகின்றாள். ஆதலின் குறிஞ்சிப் பாட்டினைச் சங்கத்தின் கோவைப் பாட்டு என்று கூறலாம். ஐங்குறு நூற்றில் நெய்தல் பாடிய அம்மூவனாரும் கோவைப் புலவராவர். தொண்டிப் பத்து (171-80) என்ற தலைப்பில் வரும் பாடல்கள் இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டமாகிய களவுக் கிளவிகளை முறைப்படக் கூறுகின்றன. சங்கவிலக்கியத்தில் ஒரு நெடும் பாட்டிலும் ஒரு பத்துப் பாட்டிலும் மறைந்து கிடந்த கோவை யமைப்பை ஒரு நூற் கோவையாக்கி வளர்த்த நம் இடைக்காலச் சான்றோர் புதுத் திறம் மெய்யான கல்வித் திறமேயாகும். ஒரு துறைக் கோவையின் தோற்றமும் சங்கப் பிறப்பு உடையது மடல் பாடிய மாதங்கீரனார். வெறிபாடிய காமக் கணியார் என்ற அடைகளை நோக்குழி. இவரெல் லாம் மடற்றுறையிலும் வெறித்துறையிலும் பாடல் பலயாத்த ஒரு துறைக் கோவையினர் என்று ஊகிக்கலாம். கயமனார் மகட் போக்கியதாய் வருந்தும் துறையில் பதினேழுசெய்யுட்கள் கோத்திருக்கக் காண்கின்றோம். ஆதலின் இடைக்கால ஒரு துறைக் கோவையும் சங்க மூலம் உடையது என்பது தெளிவு. தமிழ்மொழி வளரும் இக்காலத்து முன்னூல்களை ஒதுக்கிப் படிக்கும் வழக்கம் வளரக்கூடாது. எல்லாரும் எல்லா நூல்களையும் படிப்பது என்பது முடியாது. எனினும் சிலர் சில துறை நூல்களைக் கற்கலாம். வேறு சிலர் வேறு சில துறை நூல்களைக் கற்கலாம். ஆகக் கூடிய எல்லா நூல்களும் நாட்டில் கற்கப்படவேண்டும். அப்போதுதான் குறைவற்ற வளர்ச்சி தமிழுக்கு உண்டாகும். கற்கு முயற்சியும் அன்பும் ஆர்வமும் பெருகினாற்றான் நூல்கள் வாழும். தமிழர் வாழ்வும் உயர்வும் நிலையும் எல்லாம் தமிழின் வாழ்வையும் உயர்வையும் நிலையும் பொறுத்தன என்பது கண்கூடு. மொழிக்காப்பு என்பது அம்மொழியில் தோன்றிய நூற்காப்பாகும். ஆதலின், தமிழன்பர்களே! தமிழ் இளைஞர்களே! தமிழ்க் குடிமக்களே! நும் இல்லமெல்லாம் தமிழ் நூல் இல்லமாக விளங்குக நும் அகமெல்லாம் தமிழ் ஒளி பரவுக நும் மனையெல்லாம் தமிழ்ப் புத்தகமாக இலங்குக என்று வாழ்த்துவன். 8. இலக்கிய முத்திறன் அ இன்று நாம் வளர்க்க முனையும் எல்லாத் துறைகளும் தமிழ் மொழிக்குப் புதியனவல்ல. சில துறைகள் வேரோடிப் பரந்தவை; சில துறைகள் விழுதுவிட்டவை; சில துறைகள் பிஞ்சளவில் வெம்பியவை; சில துறைகள் அரும்பளவில் நின்றவை; சில பல துறைகள் அயல் விதைகளின்று எழுந்தவை. தமிழைத் தொன் மொழிகளுள் ஒன்றாகப் பாராட்டி, ஞால மொழிகளுள் ஒன்றாக உயர்த்த விரும்பும் நம் முயற்சிக்கிடையே முன்னரே பண்பட்ட பகுதிகளை மறத்தல் கூடாது. ஒரு துறையை அதன் முன்னை நிலையை அறிந்து வளர்ப்போ மாயின், வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று என்பதுபோல், தமிழும் வளரும்; தமிழால் அத்துறை புதிய உரம் பெற்று உலகப் பயனும் செய்யும். தொன்மை இலக்கியச் செல்வம் பெற்ற மொழிகளுள் தமிழும் தன்னேரிலாத ஒன்று. சங்கங்கள் வைத்தும், அகம் புறம் எனத் திணைகள் வகுத்தும், ஆயிரத்துக்கு மேலான புலமைச் சான்றோர்களைப் படைத்தும் வளர்ந்தது நம் இலக்கியம். இத்தகைய நீண்டுயர்ந்த ஆக்கம் திறனாய்வின்றி அமையாது. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் (குறள். 441) என்று வாழ்க்கைத் திறன் கண்ட நம் முன்னோர் அவ் வாழ்க்கையைப் பொருளாக உடைய இலக்கியத் திறனையும் கண்டிருந்தனர். ஆதலின் இலக்கியம் பற்றிய திறனாய்வு தமிழுக்குப் புதிய துறையன்று என அறிக. இலக்கியத்தினின்றும் வேறானதன்று இலக்கணம். ஒரு செய்யுட்கண் ஐந்திலக்கணமும் உள. எனினும் அகத்தன்மை யான இலக்கணத்தைத் தனித்துறையாகக் கொண்டு நம்மனோர் இலக்கணக் கலையைப் பலவாறு வளர்த்தனர். இலக்கிய வளர்ச்சியோடு இலக்கண வளர்ச்சியும் ஏற்பட்டது. திறனாய்வும் இலக்கியத்தின் வேறானதன்று. இக்கூட்டுறவை நம்மனோர் அறிந்திருந்தும், அதனை ஒரு துறையாகத் தனித்தெடுத்துக் கலையாக வளர்க்கவில்லை; ஆய்வு முறை களை வகுத்து நூல்களைப் பெருக்கவில்லை. இன்று இலக்கியத் திறனை தனித் துறையாக மேற்கொண்டு வளர்க்க முயல்கின் றோம். இது மேனாட்டுக் கல்வியால் பெற்ற பேறாகும். முன்னரே இலக்கியச் செல்வங்கள் நிரம்பிய தமிழுக்கு இத்துறை நலம் செய்யும். எச்செல்வமாயினும் உடையான் துய்க்கத் தெரிதல் வேண்டுமன்றோ? நல்ல சரக்காயினும் இக்காலத்து விளம்பரம் வேண்டும். திறனூல்களின் பெருக்கத்தால் தமிழில் உள்ள எல்லா இலக்கியங்களும் வாழ வழியுண்டு; அவற்றைப்பற்றி ஓரளவேனும் மக்கள் அறிய வாய்ப்பு உண்டு; குடியரசு ஓங்கும் இக்காலத்து மக்களை இலக்கியச் செல்வர்களாக உயர்த்தி னாற்றான், நூல்களின் விற்பனை பரவி நிலைக்க இடம் உண்டு. நலம்பல பயக்கும் திறனாய்வுத் துறையில் கேடுகளும் இல்லாமலில்லை. இத்துறை குறைவிலா நிறைவு என்று திறனாளிகள் சொல்லார். திறன் வளர்ச்சியால் இலக்கிய மூலப் படைப்புக்கள் குறையலாம்; சொல்வன்மையுடைய திறனாள னது கருத்தையே நூலாசிரியரது கருத்தாகக் கற்பவர் கொண்டு விடலாம்; திறநூலில் சில பகுதிகளை அறிந்த துணையானே மூல நூலில் கைவரப் பெற்றது போன்ற புல்லறிவை வளர்க்க லாம்; மூல நூலைப் படிக்க வேண்டா என்ற போக்கையும் ஊட்டலாம். இன்னணம் திறனாய்வுத் துறையின் குறைகளை அடுக்கிச் சொல்ல முடியும். “யார் உலகத்து ஓர் சொல்லில் லார்” என்றபடி, எத்துறையும் எண்ணுங் காலைக் குறைபாடு டையதே. குறைபாடு துறைக்கு இயற்கையன்று; துறையாளர் களின் அறிவையும் பண்பையும் நோக்கத்தையும் சார்ந்தது. இப்புதுத் திறனாய்வைத் தனித்திறன் என்று அழைப்போம். இலக்கியம் செறிந்தும் ஒளி குன்றியிருக்கும் தமிழுக்கு இத்தனித் திறன் வேண்டும். உரைநடை பெருகி வரும் இக்காலத்து இத்திறனாய்வை எளிதாக மேற்கொள்ள முடியும். எனினும் திறனாய்வுத் துறையின் ஒரு வகையாகவே இத்தனித்திறனை நாம் கருதவேண்டும். இதுவே முழுத் துறையாகாது. ஆ தொன்றுதொட்டுத் தமிழகத்து இரண்டு வகையான இலக்கியத் திறன்கள் வளர்ந்து வந்துள்ளன. ஒருவன் பல எண்ணங்களை எண்ணலாம். அஃது அவன் நெஞ்சுரிமை; அவ்வெண்ணங்களுக்கு இலக்கியமாக ஏன் வடிவு கொடுக் கிறான்? அவை சமுதாயத்தில் பரவ வேண்டும் என்பது அவன் நோக்கம். ஒருவன் கருத்துடைமையiச் சமுதாய உடைமையாக மாற்றும் பதிவேடே - வனப்பேடே இலக்கியம் என்பது. சமுதாயம் மிகப்பெரியது. பரந்தது, சிக்கலானது. அது தன் இலக்கியத்தை ஏற்கும் என்ற நன்னம்பிகை எழுத்தாளனுக்குப் பிறப்பது எப்படி? இவன் இலக்கியம் கற்கத் தகுவது என்ற பெரு நம்பிக்கை சமுதாயத்தார்க்கு உண்டாவதுதான் எங்ஙனம்? இவ்விரு பகுதியார்க்கும் நம்பிக்கையூட்டும் நடுவமைப்பே அரங்கேற் றம் என்பது. புலவனின் தனித்தன்மை குறையாதும், சமுதாயத்தின் பொதுத் தன்மை கெடாததும் பார்த்துக் கொள்கை இவ்வரங்கின் கடமையாகும். முத்தமிழுக்கும் அரங்கேற்றம் பண்டு இருந்தது. இன்று திரைப்படத் தணிக்கைக் குழுவை இதற்கு ஒருவாறு ஒப்பிடலாம். நூல் அரங்கேற்றம் பற்றிய பல குறிப்புக்கள் நமக்குக் கிடைத்துள்ளன. தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அரங்கேறிற்று. நான்மறை முற்றிய அதங் கோட்டாசான் அரங்கின் தலைவராவார். தொல் காப்பியத்திற்குக் குற்றங்கூறி அரங்கேறாதபடி செய்க என்று அகத்தியனார் அதங்கோட்டாசானுக்குச் சொன்னார் என்றும், அதன்படி இவ்வாசான் பல வினாக்களைக் கேட்டார் என்றும் ஒரு கதையுண்டு. அரங்கேறா தாயின் நூல் பரவாது என்பது இதன் உட்கிடை. தம் நூல் எழுத்து முறைகளை மயங்காது கூறுவது எனவும் பிற குற்றங்கள் இல்லது எனவும் தொல் காப்பியர் எடுத்துக் காட்டினர். “அரில்தபத் தெரிந்து” என்பது பாயிரம். அதங்கேற்றத்தின் பின் இப்பாயிரம் பனம்பாரானா ரால் வழங்கப் பெற்றது. சமுதாயம் ஏற்கலாம், மாணவர் கற்கலாம், படி எடுத்துக் கொள்ளலாம் என்பதற்குப் பாயிரம் முத்திரையாகும். ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே என்பதனால், பாயிரத்தின் ஆற்றல் பெறப்படும். நூன் முகத்துப் பாயிரம் இல்லா ஏடு பனுவலாகவே மதிக்கப்படாது. திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்றும், திருவள்ளுவமாலை சிறப்புப் பாயிரம் ஆம் என்றும் சொல்லுப. சிலப்பதிகாரம் சாத்தனார் முன்னிலையிலும் மணிமேகலை இளங்கோ முன்னிலையிலும் அரங்கேறின. திருத்தக்கத்தேவர் சங்கப்புலவர் முன்னர் சீவக சிந்தாமணியை அரங்கேற்றியபோது, இளந்துறவி காமச் சுவையை இல்லறத்தாரும் வியப்பப் பாடவல்ல திறம்யாண்டுப் பெற்றனர் என்ற வினா எழுந்ததாம். சிந்தாமணிக்கு நச்சினார்க் கினியர் எழுதிய முதலுரை சமணப் பெரியோர்களால் ஒப்புக்கொள்ளப் பட்டிலது என்றும், சமண மரபுகளையும் மெய்ம்மைகளையும் நன்கு கற்றபின் அவர் எழுதிய இரண்டாவது உரையே ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் அறிகின்றோம். இவர் தம் சமணவறிவுக்கு முத்தியிலம்பகவுரை சான்றாகும். இச்செய்தியால் கவியரங்கேற்றம் போல உரை யரங்கேற்றமும் நிகழ்ந்தமை அறியப்படும். கம்பர் தம் இராமாயண அரங்கேற்றம் பற்றிய குறிப்புக் கள் செவி வழியாக வந்துள. தில்லை மூவாயிரவர்களும் திருநறுங்கொண்டைச் சமணர்களும் இக்காப்பியத்தை முதலில் ஒப்பினார்கள். இச்செய்தி இந்நூல் மதவெறுப்பற்ற பொது நோக்குடையது என்பதற்கு ஒரு சான்று. “உலகம் யாவையும் தாமுள வாக்கலும்” என்னும் கடவுள் வாழ்த்து பொதுவாக அமைந்திருத்தலையும் நோக்குக. சைவர்களும் சமணர்களும் பாராட்டுத் தெரிவித்த பின், நாதமுனி தலைமையில் திருவரங்கத்தில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. “கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே” என்று ஒரு தனியன் கூறுகின்றது. கம்பர் தம்மைப் புரந்த சடையப்பர் மேல் நூற்றுக்கு ஒன்று விழுக்காடாகப் பதினாயிரம் பாடல் கொண்ட தம் காப்பியத்து நூறுபாடல் பாடியிருந்தார். தெய்வ மணங்கமழும் நூலகத்து அடிக்கடி மனிதப் பாடல் இருப்பது சரியில்லை என்றும், ஆயிரத்துக்கு ஒரு பாடலாகப் பத்துப்பாடல் சடையப் பருக்கு இருந்தாற் போதுமென்றும் நாதமுனி கருத்துரைத்தார். நூற்றுக்கு ஒருவராகச் சடையப் பரை மதித்தேன். தாங்கள் சொல்லுவதுபோல அப்பெரு மகன் ஆயிரத்துக்கு ஒருவராக மதிக்கத்தக்கவர் என்று கம்பர் ஒட்பமாக மறுமொழி கூறினார். பாடியிருந்த தொண்ணூறு பாடல்களையும் அகற்றினார். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டம் கம்பருக்கு வழங்கப்பட்டது. அதிவீரராம பாண்டியர் எழுதிய நைடதம் காமச்சுவை நிரம்பியது. மகனது தமிழறிவு இத்துறையில் கழிகின்றதே என அவர் தாய் அவலங் கொண்டாள். அதனால் நூலின் பிற்பகுதியை ஆர்வமின்றி அதிவீரராமர் எழுதி முடித்தார். இந்நூல் கரும்பு போன்றது என்றும் வேட்டை நாய் போன்றது என்றும் அவையோர் குறை கூறினர். நைடத நூலில் அவையடக்கம் என்பது இல்லை, தாம் வேந்தனாகலின் அவையடக்கம் கூற வேண்டியதில்லை என்று அரங்கின்முன் காரணங்கள் கூறினார் என்ப. “கொங்கேந்து மணிமன்றுள் குனித்தருளும் பெரு வாழ்வைக் குறித்து வாழ்வோம்” என முதற்கண் தில்லைச் சிற்றம்பல முடையார் வணக்கம் காஞ்சிப் புராணத்துக் கூறப்பட்டுள்ளது. காஞ்சித் தலத்து ஏகாம்பரநாதர் வணக்கத்தை இரண்டாவதாகக் கூறினார் சிவஞான முனிவர். தலக்கடவுளின் வணக்கமே முதலில் இருத்தல் வேண்டுமென அரங்கிற் சிலர் வாதாடினர். உடனே முனிவர் காஞ்சித் தல ஓதுவாரை அழைத்துக் காஞ்சித் தேவாரங்களை ஓதும்படி மொழிந்தனர் ஓதுவார் முதற்கண் திருச்சிற்றம்பலம் எனக் தொடங்கினார். இதனால் எத்தலத்தைப் பாடினும் முதலில் திருச்சிற்றம்பலத்தைச் சொல்லும் சைவமரபினை அரங்கி னர்க்கு நினைவூட்டித் தாம் பாடிய முறை தகும் என்று அறிவுறுத்தினார் முனிவர். அவரை ஆதரித்தவர் பிள்ளையார் பாளையும் மணியப்ப முதலியார். அவர்மேல் செய்ந்நன்றிப் பாடல் ஒன்று காஞ்சிப் புராணத்துப் பாடி வைத்திருந்தார் முனிவர். தன் பெயர் சுட்டவேண்டா என்று மணியப்பர் வேண்டியபடி முதலில் எழுதியிருந்த செய்யுளைப் பின்வரு மாறு மாற்றி அமைத்தார். பொருவில் கச்சியம் புராணம் வண்டமிழினிற் புகலென்று இருநி லம்புகழ் மணிமதிற் கச்சியே கம்பர் திருவ ருட்குரி யான்தவர் கூறிய சிறப்பால் உரிமை யுற்றெழும் ஆசையான் உரைத்திட லுற்றேன் மணி என்று முதலியாரின் பெயர் மறைமுகமாக இச்செய்யுளில் அமைந்திருத்தலைக் காணலாம். மகாவித்து வான் இராகவையங்கார் பாடிய பாரிகாதையும், டாக்டர் சோமசுந்தர பாரதியார் பாடிய மங்கலக் குறிச்சிப் பொங்கல் வாழ்த்தும் அண்ணாமலை நகரில் சில ஆண்டுகளுக்கு முன் புலவர்கள் முன்னிலையில் அரங்கேறின. இ அரங்கேற்றுகையில் அவையோர் எழுப்பும் தடை களுக்கு ஆசிரியன் ஒப்பும் விடை சொல்வான் அல்லது தடைகளுக்குச் செவிசாய்த்து நூலகத்துத் திருத்தஞ் செய்து கொள்வான். சில சொற்களேனும் சில தொடர்களேனும் அவையோரால் செம்மைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கம்பர் தொண்ணூறு பாடல்களை ஒதுக்கினார் என்று பார்த்தோம். நூல் வெளிவந்து பலர் படி எடுப்பதற்குமுன் அரங்கேற்றத் திறனாய்வு எழுதலின், இவ்வகையை ‘அகத்திறன்’ என்று அழைக்கலாம். பலர்க்கு முன் நேரிருந்து அரங்கேற்றுதல் என்னும் முறை இருக்குமாயின் புலவன் தானே தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு நூல் எழுதுவான். தன்னைக் கட்டுப்படுத்திய ஒருவன் செய்யும் நூல் சமுதாயத்துக்குக் கேடு விளைக்காது. “அவையடக் கியலே அரில்தபத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்று எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே” என்பர் தொல்காப்பியர். நேர்நின்று நூல்ஒப்புதல் பெற வேண்டுமாதலின், புலவன் மிகப் பணிவோடு அரங்கி னோரை மதிக்க வேண்டியவனாகின்றான். இந்த அகத்திறனில், சில புதுக்கூறுகள் மரபுக்கு ஒவ்வா என்று அரங்குப் புலவோர் மறுக்கலாம்; காழ்ப்பின் காரணமாக இல்லாக் குறைகளை ஏற்றலாம்; விரைந்த இலக்கிய வளர்ச்சிக்கும் நூல்களின் பெருக்கத்திற்கும் இடையூறாகலாம். இக்குறை பாடுகள் முன் சொல்லியபடி, அகத்திறன் என்ற முறையின் குறைகள் அல்ல. “திருத்தங்கள் கூறுவாராயின் மனமுவந்து செய்ந்நன்றியோடு வரவேற்பேன்” என்று முன்னுரையில் இன்றும் பலர் எழுதுவர். இதனால் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற நல்லுணர்ச்சி எழுத்தாளர்க்கு இயல்பாக உண்டு என்பது பெறப்படும். ஆயிரக்கணக்கான படிகளை அச்சாக்கி நாட்டில் பரவ விட்டபின், திருத்திக்கொள்ளும் ஆசைக்குப் பெரும் பயனில்லை. நம் நூலின் பிழைகளை அறிந்துகொள்வ தற்காகவா எண்ணிறந்த படிகளை அடித்து வெளியாக்கு கின்றோம்? ஒருகால் மறுபதிப்பில் சில திருத்தங்கள் செய்ய லாம். பெரிய திருத்தங்கள் செய்வதற்கு யார்க்கும் மான வுணர்ச்சி இடங்கொடாது. செவ்விய நூலைச் சமுதாயத்திற்கு அளிப்பதுவே எழுத்தாளரின் தலையாய ஒழுக்கமாகும். நாம் எழுதும் கடிதத்தைக் கூட அஞ்சற்படுத்துமுன், பிறரைப் பார்க்கச் செய்கின்றோம். எனின், சமுதாய உடைமையாகும் நூலுக்குச் செப்பம் மிக இன்றியமையாதது என்று கழறவும் வேண்டுமோ? நூற்செம்மை ஒருவனாலோ ஊராலோ அமையாது. அரங்கேற்றம் போன்ற குறிய நடுநிலை அமைப்பி னாற்றான் அமைய முடியும். நூலின் மூலத்தைத் தூய்மை செய்யும் இவ்வகத் திறனை எந்த அளவிலேனும் ஆசிரியன் காலத்திற்கேற்ப எளிய முறையில் அமைத்துக் கொள்வானாக. இன்று கவியரங்கங்கள் ஓரளவு இம்முறை தழுவியன என்று கூறலாம். செய்யுள் நூல்கள் தாம் அரங்கேற்றத்திற்கு உரிய என்று எண்ணற்க. இக்காலம் உரை நடைக்காலம். சிறந்த உரைநடை நூல்களும் உரையரங்கேற்றம் பெற்றுப் பின் வெளிவரல் வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆய்வரங்கு களில் உறழப் பெற்று வெளிவரு முறையை நாம் அறிவோம். அகத்திறன் அல்லது அரங்கேற்றம் என்ற தொன்முறை மீண்டும் இயன்ற அளவு உயிர்ப்பிக்கப் படுமாயின், முதலாவது இன்று பெருகி வரும் மொழிக்குறை பாட்டிற்கு இடமில்லை; புதிய பொருளாக்கத்திற்கும் வழிபிறக்கும். ஈ தமிழ் மொழிக்கண் முன்னரே வளர்ந்துள்ள மற்றொரு இலக்கியத் திறனைப் ‘புறத்திறன்’ என்று பெயரிடலாம் அரங்கேறி அகத்திறன் பெற்றுச் சமுதாயம் ஒப்பிய நூல்களைப் பின்னர்க் குறைகூறுதல் என்பது மரபன்று. அந்நூல்களின் சிறப்புக்களை எடுத்துக் காட்டுவதே அடுத்துச் செய்யக் கூடியது. இச்செய்கையைத்தான் உரையாசியர்கள் திறம்பட ஆற்றினர். நூல் குற்றம் உடையதுபோலத் தோன்றினும், உரையா சிரியர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்; எவ்வாற்றானும் அமைதி கூறவே முயல்வர். இஃது அரங்கேற்றத்துக்குக் கொடுத்த நன்மதிப்பாகும். எல் என்பது இலங்குதல் என்ற பொருளுடைய உரிச் சொல்லாயினும், ஆசிரியர் இடைச் சொல்லாகக் கருதி இடையியலில் ஓதினமையின், இடைச் சொல் என்றே கொள்வோம் என்பர் சேனாவரையர். மலைபடுகடாம் என்னும் நூல் நன்னன் மேல் பாடப் பட்டது. “தீயி னன்ன ஒண்செங் காந்தள்” என்பது இந்நூலில் வரும் ஓரடி. நன்னன் என்னும் பெயர் தீயோடு சேர்ந்து வருதலின் ஆனந்தக் குற்றம் என்றும் அதனால் பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தார் என்றும் ஆளவந்த பிள்ளைமலைபடுகடாத்துக்குக் குற்றம் கூறினராம் இக்கருத்தை நச்சினார்க்கினியர் பல வகையால் மறுப்பர். “பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றம் என்பது ஒரு குற்றம் என்று நூல் செய்ததன்றி, அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றம் கூறாமை யின் சான்றோர் செய்யுட்கு இக்குற்றமுண்டாயினும் கொள்ளார்” என்று நச்சினார்க்கினியர் அறுதியிட்டுரைத்து மூலநூலைப் போற்றுந்திறத்தை ஓர்க. நூலாசிரியர்களை நன்கு மதித்துப் பற்றோடு உரையெழுதும் பாங்கினைப் புறத்திறன் களில் காண்கிறோம். தெய்வப் புலமைத் திருவள்ளுவர் என்றும், எல்லா நூல்களினும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப் படக் கூறுதல் இவர்க்கு இயல்பு என்றும் பரிமேலழகர் தம் ஆசிரியப் பற்றினைப் புலப்படுத்தியுள்ளார். “இக்காப்பியஞ் செய்தவர் விழைவு வெறுப்பற்ற சேரமுனி” என்று உரையா சிரியர் அடியார்க்கு நல்லார் இளங்கோவைப் புகழ்வர். இவ்வாறு அன்போடு ஆய்வு செய்வது திறனிலக்கணங்களுள் ஒன்றாகும். உரையாசிரியர்கள் தம் புறத்திறனில் நூலின் அமைப்பு, சொல்லாழம், கருத்தாழம் ஆகியவற்றை இடந்தோறும் எடுத்துக்காட்டிச் செல்வர் மூலத்தோடு இயைத்தியைத்துச் சிறிது சிறிதாக இலக்கிய வன்மைகளைப் புலப்படுத்துவார். அவர்கள் ஆங்காங்குச் சொல்லிய நூற் கூறுகளைத் தொகுத்துப் பார்ப்பின் பல வகையான திறனிலக்கணங்களை நாம் கற்க முடியும். சீவக சிந்தாமணியும் சிலப்பதிகாரமும் தொடர்நிலைக் காப்பியங் களாதலின், இவற்றின் உரைகள் சிறந்த புறத்திறன் களாகும். பதினாறு வயதுடைய கோவலனது பிறப்பை முற்கூறாது, பன்னிரண்டு வயதுடைய கண்ணகியின் பிறப்பை முற்கூறிய தற்குக் காரணம் கண்ணகியே கதைக்கு நாயகி யாவாள் என்று அரும்பத உரையாசிரியரும், பத்தினியை ஏத்துதல் இக்காப்பியத்தின் உட்கோள் என்று அடியார்க்கு நல்லாரும் அமைப்பை ஆராய்வர். கவுந்தியடிகளுக்குத் தவப்பயனாலே சபிக்கும் ஆற்றல் உண்டேயன்றி, எதிர்கால உணர்ச்சியில்லை என்று அடியார்க்கு நல்லார் பாத்திரப் பண்பைக் காட்டுவர். இவ்வகைப்புறத் திறன்கள் மூலத்தோடு ஒட்டி எழுதப்படுபவை; எல்லா மூலப்பகுதிகளையும் இடந்தோறும் அலசிக் காட்டுபவை; நூலைமுறையாகக் கற்பவர்க்குச் சொல்லும் பொருளும் தந்து உதவுபவை. அகத்திறன், புறத்திறன், தனித்திறன் என்ற மூவகைத் திறன்களையும் ஒப்ப மதித்துப் போற்றித் தமிழ் இலக்கிய வளர்ச்சி செய்யவேண்டும். ஒவ்வொரு திறனும் ஒவ்வொரு வகைப்பயனுடையது. அகத்திறனால் நூலுக்குச் செம்மையும் புறத்திறனால் நூலின் நுண்மையும் தனித்திறனால் நூலின் முழுவனப்பும் நூலாசிரியரின் ஆற்றலும் தோன்றுகின்றன. சமுதாயத்துக்குப் பெருநன்மை செப்பமுடைய நூல்கள் தோன்றுவது. எங்ஙனமும் நூல்கள் பெருகட்டும் என்று விட்டுவிட்டுப் பின்னர் புறத்திறனும் தனித்திறனும் செய்வது கேட்டினைச் சமுதாயத்திற்முடியும். ஆதலின் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் பரப்புவதாகவே என்றபடி, அகமாசற்ற செவ்விய நூல்களே சிலவாயினும், தமிழக்குச் சிறந்த செல்வங்களாகும்; சமுதாயத்திற்குத் தூயவழி காட்டிகளாகும். அறத்தின் வழிபொருளும் இன்பமும் நடக்கவேண்டும் என்பர்; அதுபோல, அகத்திறன் வழி பிற இருதிறன்களும் நடப்பதாகுக. நடப்பின், நாடும் மொழியும் நீடு வாழும். 9. தனிப்பாடல்கள் அ இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக்கு என்றும் வரவேற்பு உண்டு. மின் விளக்கு வந்ததற்காக அகல் விளக்கு இல்லாமல் போயிற்றா? வானூர்தி வந்ததற்காக வண்டிக்கு இடம் இல்லையா? தொடர்கதைகள் ஒருபுறம் தோன்றச் சிறுகதைகளும் ஒருபுறம் தோன்றவே செய்யும். பலவுறுப்பு நாடகங்கள் இருப்ப ஓருறுப்பு நாடகங்களும் இருக்கவே செய்யும். தொடர்நிலைக் காப்பியங்கள் ஒப்பத் தனிப்பாடல்களுக்கும் ஒரு மொழியில் இடம் உண்டு. மேலும் இலக்கியம் வளர்ந்த நெறியை நோக்கின் தனிப் பாடல்களே ஒரு மொழியில் முன் தோன்றின என்பதும், இவற்றின் அடிப் படையில் தொடர்நிலைச் செய்யுள் என்னும் பெருங்காப்பி யங்கள் பின் தோன்றின என்பதும் விளங்கும். எப்பெரும் புலவனும் முதலில் தனிப்பாடல் எழுதிப் பழகித் தானே பேரிலக்கியம் செய்யப் புறப் பட்டான் என்றபடி முறையையும் எண்ணுங்கள். மொழி என்னும் கட்டடத்துக்கு இலக்கணம் அடித்தளம் என்றால், காப்பியங்கள் தூண்கள் என்றால், நாடக நூல்கள் மேன்மாடங்கள் என்றால், நாடோடிப் பாடல்கள் காற்று வரும் காதலர்கள் என்றால், தனிப்பாடல்கள் படிக் கட்டுகள் என்றும் சொல்லலாம். தனிப்படாமல் என்பது யாது, நடந்த ஒரு தனி நிகழ்ச்சியை அல்லது மனத்துத்தோன்றிய ஒரு தனிக்கருத்தைப் பற்றிப் பாடுதல். தனிப்பாடல்கள் கற்பனை குறைந்தன; ஆனால் கவர்ச்சி மிகுந்தன. மறைவு இல்லாதவை; ஆனால் உண்மை தழுவியவை. உறுதி தளர்ந்தவை; ஆனால் உணர்ச்சி செறிந்தவை. ஆதலின் இப்பாடல்கள் மக்கள் மனத்துப் பதிந்து பேச்சோடு பேச்சாகக் கலந்துவிடுகின்றன. செந்தமிழும் நாப் பழக்கம், கொடையும் பிறவிக்குணம், கற்றது கைம்மண்ணளவு, பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி, மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடியுறும் என்பனபோலும் பல தனிப்பாடற் பகுதிகள் மக்கள் பேச்சுக் கிடையில் வழங்குவதைக் கேட்கின்றோம். இடைக்காலத் தமிழ்ப்புலவர்கள் நிகண்டுகளை வரப் பண்ணிச் சொல்வளம் மிக்க செல்வர்களாக விளங்கினர். பல செல்வர்கள் செல்வத்தையே பொருளெனக் கருதி எண்ணி இருப்புப் பார்த்து மகிழ்வதுபோல, இந்தச் சொற்செல்வர் களும் சொற்களையே புலமையெனக் கொண்டு யாப்பு நயம் பாடி மகிழ்ந்தனர். எவ்வெழுத்திலும் பாட்டுத் தொடங்குவோம், எவ்வெழுத்திலும் பாட்டை முடிப்போம், எதிரி வியக்கும்படி பாட்டுக் கட்டமுடியும் என்று செய்யுட் பந்தயத்தில் ஈடுபட்டார்கள். உடலைப் பரத நடிகை பொருளுக்குத் தகவளைப்பதுபோலத் தமிழ் மகளை இப்புலவர்கள் தாம் விரும்பிய யாப்புக்குத்தக வளைத்தனர். ஆ துறைமங்கலம் சிவப்பிரகாசர் முந்நூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ஒரு பெரும் புலவர். கற்பனைக் கருவூலம் என்று பெயர் பெற்றவர். திருவெங்கைக் கோவை, திரு வெங்கைக் கலம்பகம், நால்வர் நான்மணிமாலை முதலாய பல நூல்களின் ஆசிரியர் தந்தையை இளம் பருவத்திலேயே இழந்த இவர் தன் முயற்சியால் கல்விப் புலமை எய்தினார். இயற்றமிழை நன்கு கற்க விரும்பித் தருமபுரி ஆதீனத்தை அடைந்தார். வெள்ளியம் பலவாணர் என்னும் ஆசிரியரை அணுகினார். அம்பலவாணர் சிவப்பிரகாசரின் சொற்பயிற்சியையும் பாடல் இயற்றும் யாப்புப் பயிற்சியையும் அறிய விரும்பினார். மேடைமீது ஏறியவுடன் சொற்பொழி வாற்றும் உடனடிப் பேச்சுப் போட்டியை நாம் இன்று நடத்துவதுபோல், உடனடிப் பாட்டுத் தேர்வொன்றைச் சிவப்பிரகாசருக்கு ஆசிரியர் அன்று நடத்தினார். “ஒரு பாட்டை ‘கு’ என்று தொடங்கி ‘கு’ என்று முடி; மேலும் ‘ஊருடையான்’ என்ற தொடரைப் பாட்டுக் கிடையில் வை” என்று ஒரு கேள்வி விடுத்தார். கேள்விக்குச் சிவப்பிரகாசர் உடனே இயற்றிய பாட்டானது; குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழல் முடக்கோடு முன்னம் அணிவார்க்கு - வடக்கோடு தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல் ஊருடையான் என்னும் உலகு. குடக்கு எனத் தொடங்கி உலகு என முடிதலால் முதலும் இறுதியும் ‘கு’க்கள் வருதல் காண்க. ஊருடையான் என்று ஆசான் கொடுத்த ஒரு தொடரை ஊர் உடை ஆன் எனப் பிரிவு செய்துகொண்டு சிவனுக்கு ஊராவது தில்லை, உடையாவது புலித்தோல், ஏறும் ஊர்தியாவது காளை என்று பொருள மைத்து இளமையிலேயே தம் மதி நுட்பத்தை வெளிப்படுத்தி னார் சிவப்பிரகாசர். காய் என்று எடுத்து இலை என முடித்தல், கொட்டைப் பாக்கு என்று எடுத்துக் களிப்பாக்கு என முடித்தல், கரி என்று எடுத்து உமி என முடித்தல், ஐந்து ‘டு’க்கள் வரத் தொடுத்தல் என்றவாறு புலவர்கள் பாடல்கட்டி விளையாடுகிறார்கள். இன்ன விளையாட்டில் ஒட்டக்கூத்தர் கூட ஒரு சமயம் தோற்றுப்போனார். மதி அல்லது பிறை என்ற சொல் ஓரடிக்குள் மூன்றிடத்து வரப்பாடுக என்று ஒளவை கொடுத்த வினாவுக்கு, ‘பிள்ளை மதிகண்டு எம்பேதை பெரிய மதியும் இழந்தாளே’ எனப் பிள்ளைமதிபெரியமதி என்று இரண்டு மதிகள் வரவே ஒட்டக்கூத்தரால் பாட முடிந்தது. ஒட்டா ஒரு மதி கெட்டாய் என்று ஒளவை இகழ்ந்து, புகழேந்திப் புலவரை நோக்கினாள். ‘வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கும் மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே’ எனப் பிறைச்சொல் மூன்று ஓரடிக்குள் வருமாறு பாடிப் புகழேந்தியார் வெற்றி பெற்றார் என அறிகிறோம். அஞ்சற்றலைகள் தொகுப்பது, நிழற்படம் எடுப்பது, ஓவியம் வரைவது இன்று பலர்க்குப் பொழுதுபோக்காக இருத்தல்போல, செய்யுள் இயற்றல் என்பது பண்டைப் புலவர்க்கு ஒரு பொழுதுபோக்காகும். இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம் பாட் டாகாதோ என்று அளக்கின்றார் காளமேகம். மூச்சு விடுமுன்னே முந்நூறும் நானூறும் ஆச்சென்றால் ஆயிரம் பாட் டாகாதோ என்று விரிக்கின்றார் அதிமதுரக் கவிராயர் உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் எந்தன் உளம் என எதனைப் பெறவும் ஒரு பாட்டு என்று எளிய பண்ட மாற்றாக மதிக்கிறார் ஒளவை. ஒருவர் முன்னிரண்டடி களைப் பாடுவது; இன்னொருவர் பின்னிரண்டடிகளை முடிப்பது என்பது புலவர் கண்ட ஒரு யாப்பு விளையாட்டு. இரட்டை யருள் குருடர் இரண்டடி பாடி நிறுத்திக்கொள்வார்; பிற்பகுதியை முடவர் பாடி முடித்துவிடுவார். இஃது ஒரு நிலை. வேறு சில பாடல்கள் உள. ஒருவர் முற்பகுதியைப் பாட அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொருவர் கருத்தை மாற்றுவதற்காக மிக விரைந்து பிற் பகுதியை பாடிவிடுவார். எவ்வளவு யாப்புப் பயிற்சியிருந் தால் இங்ஙனம் முந்திக் கொண்டு பாடவரும் என்று எண்ணிப் பாருங்கள். ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழன் அவைப்புலவர் ஆவர். இவர் சோழன் அகவாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். சோழன் ஆட்சிச் சிறப்பை நேரில் அறிந்தவர். இவன் ஆட்சியில் ஆராய்ச்சிமணி அசையவில்லை. இவன் குடையோ பரந்து விரிந்தது என்று பலர் சூழ்ந்த அவைமுன் பாராட்ட விரும்பிய ஒட்டக்கூத்தர், ஆடுங் கடைமணி நாவசையாமல் அகிலமெலாம் நீடுங் குடையைத் தரித்த பிரான் இந்த நீணிலத்தில் என்றுபாடி வருவதைக் கேட்டான் குலோத்துங்கன். தன் செவ்விய ஆட்சிக்கு ஒட்டக்கூத்தரே துணை என்பதை உட்கொண்டான். மேலும் தன் ஆசான் என்பதையும் நினைந்தான். ஒட்டக்கூத்தர்பால் தான் கொண்டுள்ள நன்மதிப்பையும் பெரும் பணிவையும் காட்ட இதுவே காலம் என்று துணிந்தான். தான் அரசன் என்பதைச் சிறிதும் எண்ணாது புலவருள் தலையாய ஒட்டக்கூத்தரின் அடியவன், மாணாக்கன் என்று சொல்லிக் கொள்ளத் துடித்தான் குலோத்துங்கன். புலவர் மேலிரண்டடிகளை முடிப்பதற்கு முந்தி, பாடும் புலவர் புகழொட்டக் கூத்தர் பதாம்புயத்தைச் சூடுங்குலோத்துங்க சோழனென்றே என்னைச் சொல்லுவரே என்று செய்யுளை முடித்துவிட்டான். இதனால் இடைக் காலத்துத் தமிழ்ப் புலவன் பெற்றிருந்த அரசியற்செல்வாக்கு ஒருபுறம் விளங்க, இடைக்காலத் தமிழ்வேந்தன் பெற்றிருந்த தமிழ் வன்மையும் விளங்கக் காண்கின்றோம். இ தனிப்பாடற் புலவர்கள், நமக்கு உரைநடை போல எண்ணிப்பாராதே செய்யுள் செய்வதை ஒரு பொழுது போக்காகக் கொண்டனர் என்று கண்டோம். வைக்கோலுக் கும் யானைக்கும் பொருத்தம், மீனுக்கும் பேனுக்கும் பொருத்தம், திருமாலுக்கும் கடிகாரத்துக்கும் பொருத்தம் என்ற முறையில் பொருத்தப் பாடல்கள் செய்வதையும் ஓர் இன்தொழிலாகக் கருதினார்கள். சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை ஐங்கரர்க்கு மாறுதலையானதே! என்ற வகையில் புணர்ச்சி விதியுள் புகுந்து ஓசைநயம் காட்டு வதையும் ஒரு விளையாட்டு வினையாகப் பயின்றார்கள். வழக்கில் மக்கள் அடிக்கடி பேசும் சிறப்பில்லாத சொற் களுக்குக்கூட, சுவை ததும்பும் பாட்டு வடிவம் கொடுக்க முடியும் என்று நிகரற்ற தம்மொழித் திறத்தை மிகத் தெளிவாகக் காண்பித்தார்கள். தனிப்பாடல்கள் இலக்கிய வுலகில் உரை நடையை ஒக்கும். ஆதலால் காப்பியங்களில் தள்ளுபடியாகும் பல தமிழ்ச் சொற்களுக்குத் தனிப்பாடலில் நல்வரவு உண்டு. ஆத்தாள், அக்காள், கண்ணால வோலை, சும்மா, வண்ணான், அம்பட்டன், தேங்குழல், அப்பம் தோசை முதலான சொற்களைக் கொண்டு எத்துணையோ தனிப்பாடல்கள் இனிமை தருகின்றன. தனிப்பாடல் செய்தாருள் சொக்கநாதப் புலவரும் ஒருவர். இவர் முருகனை நோக்கி, கொடிய இம்மானிடவுடம்பு தவஞ்செய்து இளைத்துக்காய்ந்த சுக்குப்போல் ஆகவேண்டும்; அதன்பின் சுடுகாட்டில் வெந்தால் என்ன கேடு? இவ்வுடலை மீண்டும் கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள்; சிறந்த வீட்டின்பத்தை நீர் அருளுக; நான் இக்காயத்தை என்றும் தேட மாட்டேன் என்று வேண்டுகின்றார். திருவேரகத்து எழுந்தருளி யிருக்கும் முருகனுக்குச் செட்டி என்பது பெயர். செட்டி என்றால் வணிகனையும் குறிக்குமன்றோ. இவ்வணிகச் சொல்லை அடிப்படியாக வைத்துச் சொக்க நாதப்புலவர் ஓர் உருவகம் புனைகின்றார். அவர் உருவக வெண்பாவில் வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற மளிகைச் சொற்கள் நயமான கவியாக ஆவதைக் கேளுங்கள். வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கார் சுமந்திருப்பர் இச்சரக்கை - மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே ஒரு மொழியின் இலக்கியம் இடையறாது வளர் கின்றது என்பதற்கும், ஒரு மொழி மக்கள் நீண்ட கலையுணர்ச்சியு டையவர்கள் என்பதற்கும் காலந்தோறும் எழுகின்ற தனிப் பாடல்களே கண்ணாடியாகும். கற்றார் எல்லாரும் காப்பி யங்கள் செய்துவிட முடியாது. ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்பொழுது தனிப்பாடல்கள் பாடி வாழ்க்கையில் அறிவின்பம் நுகரலாம். இவ்வின்பமும் சிறந்த இலக்கிய இன்பமேயாகும். 10. நான்மாடக்கூடல் அ கூடல் என்பது மதுரைத் தலைநகரைக் குறிக்கும் ஒரு பழம் பெயர். சிறிது தமிழ் கற்றவனுக்கும் கூடல் மாநகரை நினைக்கும் போது, எவ்வளவோ எண்ணங்கள் கூட ஓடி வருகின்றன. தமிழும், தமிழ்ச் சங்கமும், சங்கப் புலவர்களும், நிலைபெற்று வழிகாட்டும் தொல்காப்பியமும், சங்க இலக்கியமும், சங்கம் புரந்த பாண்டிய குலத்தாரும், பாண்டிய வேந்தர்களின் வஞ்சினப்பாட்டும், கோப்பெருந் தேவி துஞ்சின பாட்டும், நெடுஞ்செழியன் கல்விப்பாட்டும், அறிவுடைநம்பியின் மக்கட் பாட்டும், வையை நீராடலும், நீராடல் பாடிய பரிபாடலும், நிலைத்த வாழ்வுக்கு நிலையாமை ஓதும் மதுரைக் காஞ்சியும், உரைச் சிறப்பு வாய்ந்த இறையனார் களவியலும், உலகப்புகழ் ஓடிய திருக்குறள் அரங்கேற்றமும், திருவள்ளுவ மாலையும், கண்ணகியாரின் சீற்றமும், மதுரை மறுகெல்லாம் கற்பின் கொழுந்து படர்ந்தோடிய ஓட்டமும், பாண்டியன் உயிர்விட்ட செங்கோலும், இவ்வரலாற்றிற்பிறந்த சிலப்பதிகாரமும், நெருப்பிற் கருகாமல் நீரில் அமிழாமல் தமிழ் தழைத்த பாசுரங்களும், அறுபத்து நான்கு திருவிளையாடற் புராணங் களும் இங்ஙனமாகப் பல நினைவுகள் மதுரை நகரோடு பின்னிக் கிடக்கின்றன. “பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகையேட்டிலே தவழ்ந்த பேதை” என்று வரந்தருவார் உள்ளம் தமிழை எண்ணுங்கால் மதுரையை எண்ணுகிறது. எந்நாட்டுத் தலைநகராயினும் ஆகுக. தலைநகர் எனின் அங்கு மொழியும் இலக்கியங்களும் உருப்பெறுதல் வேண்டும். பலவூர் மக்கள் வந்து கூடும் இடமன்றோ தலைநகர்? அங்கு எப்பண்பு பெறுகின்றது, அப் பண்போ பண்பின்மையோதான் அகநாட்டிலும் பரவும். இது மொழி நூலோர் கண்ட உண்மை. இவ்வுண்மையைப் பண்டைத் தமிழ்ப் புலவர் நன்கு அறிந்திருந்தனர். கடல்கோளால் நாடழிந்தாலும் சங்கம் அழியாது தொடர்ந்து போற்றினர். தமிழெனத் தகும் நற்றமிழை எங்கும் பரப்பினர். “மதுராபுரிச் சங்கம் வைத்தும்” எனச் சின்னமனூர்ச் செப்பேடு வழிவழிப் பாராட்டுவதுபோல, நற்றமிழுக்கு மதுரை இடமளித்தது. பருவநிலைக்கேற்பப் பாடல்கள் எழுந்தன. இளவேனிற் காலத்து வையைப் பெருக்கில் மகிழ்ந்தாடும் மதுரைக் காதலர்கள் பழம்பாட்டுக்களைப் பாட மாட்டார்கள். அவர்கள் பாடுதற்கென அன்றலர்ந்த நாண் மலர் போல் மிகப் புதிய உணர்ச்சிப் பாடல்களைப் புலவர்கள் யாத்துக் கொடுப்பார்கள் என்று பின்வரும் கலித்தொகையால் அறிகின்றோம். “நிலனாவிற் றிரிதரூஉம் நீண்மாடக் கூடலார் புலனாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ” இவ்வாறு சங்கம் வைத்துப் பாடல்கள் வழங்கிய தலைநகராதலின், ‘தமிழ்கெழுகூடல்’ ‘கூடற்றமிழ்’ ‘தமிழ் வைகை’ எனவும் ‘கூடலின் ஆய்ந்த ஓண்தீந்தமிழ்’ எனவும் மதுரைநகர் எல்லோராலும் பாராட்டும் முதன்மை பெறுகின்றது. ஆ பாண்டியன் தலைநகருக்கு மதுரை என்பது பெயரா? கூடல் என்பது பெயரா? மதுரைக் காண்டம் என்று இளங் கோவடிகள் பெயரிட்டுள்ளார். மதுரை மருதனிள நாகனார், மதுரைக் கணக்காயனார், மதுரைக் கண்ணனார் எனப் புலவர் பெயர்கள் மதுரைப்பேர் கொண்டனவாகவுள என்றாலும் சங்கப் பாடலுள்ளும் சிலப்பதிகாரத்துள்ளும் பார்க்குமிட மெல்லாம் கூடல் என்னும் பெயரே மிகுந்து வருகின்றது. கூடல் மகளிர், மன்னவன் கூடல், கூடற்பதி, கூடற்றெய்வம், கூடற்காவதம் என்று அமைந்த தொடர்கள் பல. ஆதலின் புலவர் வழக்கில் மதுரையும், மக்கள் வழக்கில் கூடலும் பயின்றனவோ என்று ஒருவாறு கருதலாம். இவ்வாறாயினும் மதுரை என்ற சொல்லின் பொருள் அவ்வளவு தெளிவாகப் புலப்படவில்லை. கூடல் என்பதன் பொருளை இயல்பாக யாரும் அறிவர். உணர்ச்சித் துடிப்புக் காட்ட விரும்பும் புலவன் ஒரு சிலரே அறியும் அரிய சொற்களை மேற்கொள்ளான். கொள்வா னாயின் கேட்போர்க்குச் சொற்பொருள் அறியும் நாட்டம் தோன்றுமேயன்றி உணர்ச்சி தோன்றாது. ஆதலின் பொருள றிந்த பழகு தமிழ்ச் சொற்களையே உணர்ச்சிக்குப் பயன் படுத்துவான். கண்ணகியின் விழி நீர்ப் பெருக்கையும் ஒற்றைச் சிலம்பையும் உயிர்போன தோற்றத்தையும் விரிந்த கருங் கூந்தலையும் கண்டானோ இல்லையோ, பாண்டியன் உயிர் விட்டான். காவி யுகுநீரும் கையிற் றனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும் - பாவியேன் காடெல்லாம் சூழ்ந்த கருங்குழலும் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான். இச் சிலப்பதிகார வெண்பாவில் ‘கூடலான் கூடாயி னான்’ என்ற யாப்பால் எழும் வேகம் ‘மதுரையான் மாண்டான்’ என்று சொன்னால் எழுமா? தலைவன் வருவானோ வரானோ என்று குறிபார்க்கத் தலைவி வட்டமாக ஒரு கோடு கிழிப்பாள். வட்டத்தின் இரு முனையும் விலகாது ஒத்துக்கூடி ஒன்றானால், தலைவன் வந்து கூடுவான் என்று அவள் நம்புவாள். இவ்விளை யாட்டுக்கு கூடலிழைத்தல் என்பது பெயர். பாண்டியனைக் காமுற்ற பெண் கூடலிழைத்துப் பார்க்க ஆவலோடு எண்ணுகின்றாள். கூடலிழைப்பைச் சொல்லவந்த முத்தொள்ளாயிர ஆசிரியர், கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவேனேற் கூடென்று - கூடல் இழைப்பாள்போற் காட்டியிழையாதிருக்கும் பிழைப்பிற் பிழைபாக் கறிந்து என்று பாட்டினைத் தொடங்கி ஓரோசை படுமாறு முடிப்பர். இவ்வாறு மதுரை என்னும் சொல்லைக் காட்டிலும் கூடல் என்னும் தலைநகர்ச் சொல் இலக்கியத்துக்கு ஓசையும் ஓட்டமும் பயந்து நிற்கின்றது. இ கூடல் என்பதுதான் தலைநகரின் பெயர். ஒரு பொருளைச் சிறப்பிக்கப் பல அடைமொழிகள் கொடுப்பது புலவர் மரபு. கலிகெழுகூடல், நிலைகெழுகூடல், மாபெருங்கூடல், தோலாக் கூடல் என்றெல்லாம் கூடலுக்கு அடைகள் இலக்கியத்து வந்துள்ளன. நான் மாடக் கூடல் என்பது அவ்வடைமொழி களுள் ஒன்று. நான் மாடம் என்ற தொடரால் மதுரை நகரின் கட்டட அமைப்பை அறிந்து கொள்ளலாம். ‘மாட மதுரையும் தருகுவன்’ எனப் புறநாநூறும், ‘மதிமலிபுரிசைமாடக் கூடல்’ எனத் திருமுகப் பாசுரமும், ‘மாடமதுரை மகளிர்’ எனச் சிலப்பதிகாரமும் பல இடங்களில் சுட்டுவதால், மதுரையின் தெருத்தோறும் மாடி வீடுகள் இருந்த அழகு விளங்கும். மிகப் பழங்காலத்து ஒரு மாடி கொண்ட கட்டடம் தோன்றியதே ஒரு சிறப்பு. அதுவும் மதுரைக்கண் நான்கடுக்கு மாளிகைகள் அமைந் திருந்த கட்டடக்கலையின் வனப்பைக் காட்ட நான் மாடக் கூடல் என்று புலவர் பாராட்டுவராயினர். கணவனை இழந்து சந்துதோறும் கதறியோடிய கண்ணகி. நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின் என்று அழைத்துப் புலம்புகின்றாள். சேய்மாடக்கூடல், நீள்மாடக் கூடல், நெடுமாடக்கூடல் என்ற அடைகளால் பல மாடிகள் வானோக்கி வளர்ந்த கட்டடப் போக்குப் பெறப்படும். தெருவெனப்படும் நகர அமைப்பும் மதுரைத் தலை நகருக்கு என்றும் அமைந்த ஒரு தனிச்சிறப்பு. இச்சிறப்பினை இன்று காண்பதுபோல் சங்ககாலத்தும் காண்கின்றோம். கூடல் நகர் தாமரைப்பூவை யொக்கும்; அதன் தெருக்கள் தாமரையின் அகவிதழ் புறவிதழ்களை ஓக்கும்; அரசன் அரண்மனை தாமரை நடுவண் இருக்கும் கொட்டையை ஓக்கும் என்று பின்வரும் பரிபாடல் மதுரை யமைப்பை வடித்துக் காட்டும். மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுஞ் சீருர்; பூவின் இதழகத் தனைய தெருவம்; இதழகத்து அரும்பொருட் டனைத்தே அண்ணல் கோயில் இதனால் கூடல் நகரின் பொலிவையும் தெருக்களின் வரிசையையும் அரண்மனையின் வட்ட வடிவத்தையும் புலவர் புலப்படுத்துவர். இங்ஙனம் மதுரையின் சிறந்த வனப்புக்களுள் நான்மாடக் கட்டடமும் ஒன்று என அறிவோமாக. ஈ தமிழ் நாகரிகத்தை வையை நாகரிகம் என்று குறிப்பிட லாம் “தமிழ் வையை” எனப் பாராட்டுவர் ஆசிரியர் நல்வந்து வனார். உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி என்று சேரகுல இளங்கோ வாய்கொள்ளது புகழ்வர். வையைக் குலமகளைக் கண்ட கோவலனும், கண்ணகியும் ‘புனல்யா றன்று இதுபூம்புனல் யாறு’ எனத் தொழுது செல்கின்றனர் வையைப் பெருக்கில் ஆடாதாரில்லை. ஆடியும் குளித்தும் ஊடல் தீராதாரில்லை. காதலர்களின் தீராப்பிணக்கையும் தீர்க்கும் நீர்மையுடையதென வையை கருதப்பட்டது. களிப்பர் குறிப்பர் காமம் கொடிவிட அளிப்ப துளிப்ப ஆங்காங் காடுப ஆடுவார் நெஞ்சத் தலர்ந்தமைந்த காமம் வாடற்க வையை நினக்கு என்றாங்கு, தலைவியர் பலர் வையையை வாழ்த்தி வந்தனர். மைந்தரும் மகளிருமே யன்றிக் களிறுகளும் பிடிகளும் நீண்ட கைகோத்து வையைப் பெருக்கில் காதலாடின பரிபாடல் என்னும் சங்க இலக்கியம் வையைக் கவிதை என்னும் அளவிற்கு நீராடிய நாகரிகத்தையும் உள்ளம் ஒன்றிய காதலையும் பலபடப் புனைகின்றது. வையை ஓட்டத்தையும் ஆட்டத்தையும் பரிபாடல்கள் நடைப் படுத்துகின்றன. பெயலாற் பொலிந்து பெரும்புனல் பலநந்த நலநந்த நாடணி நந்தப் புலனந்த வந்தன்று வையைப் புனல் கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு தேடித் தேடிச் சிதைபு சிதைபு சூடிச் சூடித் தொழுது தொழுது இவ்வாறு நந்த நந்த என்ற மெல்லொலியால் இனிமை யையும், கூடிக் கூடித் தேடித் தேடி என்ற அடுக்கால் விரைவையும் வையைப் பாடலில் ஓசைகொண்டு பொருள் காட்டுவர் புலவர். மதுரையை நினைத்தால் தமிழும், தமிழை நினைத் தால் வையையும், வையையை நினைத்தால் திருப்பரங் குன்றும் நம் நினைவில் ஒரே தொடர்பாகப்படுகின்றன. வையையாடும் தலைவன் தன் ஒழுக்கத்தில் நம்பிக்கை பிறக்க ‘தலை தொட்டேன் தண்பரங்குன்று’ என்று பரங்குன்றின்மேல் தலைவிக்கு ஆணையிடுதல் பண்டைய மரபு. குன்றம் உள்ளளவும் மதுரை குன்றாது என்று இணைத்து வாழ்த்து கின்றார் தமிழ்ப்புலவர். குன்றுத லுண்டோ மதுரை கொடித்தேரான் குன்றமுண் டாகு மளவு என்று நம்பிக்கை தந்து வினவுகின்றார். சேர சோழ பாண்டிய அரசுகள் திகழ்ந்த பண்டை நாளில் மூன்று பெருந்தலை நகரங்கள் விளங்கின. பின்னச் சேரர் மூதுராம் வஞ்சி தமிழகத்தின் புறம்பாயிற்று. சோழர் மூதூராம் காவிரிப்பூம் பட்டினம் கடலோடு கலந்துவிட்டது. பாண்டியர் தலைநகராகிய மதுரையே இன்றுவரை சீரோடும் சிறப்போடும் இலங்குகின்றது. கண்ணகியின் கற்புத்தீ பரவியதால் நிலைகெழு கூடலாக நீடு வாழ்கின்றது உலகம் கண்ட தலைநகரங்கள் எத்துணை? புதிதாகத் தோன்றிவரும் தலைநகர்கள் எத்துணை? தமிழ் நாகரிகம் கண்ட மதுரை பழமைக்குப் பழமையாய், மூதூராய், புதுமைக்குப் புதுமையாய்ப் புத்தூராய்த் தழைப் பதைக் காண்கின்றோம். உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப் புலவர் புலக்கோலாற் றூக்க - உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக் கூடல் நகர். என்று உலகத்தை ஒரு தட்டிலும் மதுரையை ஒரு தட்டிலும் வைத்துச் சீர்தூக்கி மதுரையின் புகழ்ப் பாரத்தைப் போற்றி னான் ஒரு தமிழ்ப் புலவன். அவன் வாக்கு இன்று வரை பொய்யாகவில்லை; என்றும் பொய்யாகாது. 11. போர்க்களம் அ போர் என்பது பகையான அரசர்கள் தம்முள் மலைந்து கொள்ளும் நாட்டுப் பெருஞ் சண்டையைக் குறிக்குமேயல்லது, மக்கள் ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ளும் வீட்டுச் சிறு சண்டைகளைக் குறிக்காது. ஆதலின் போராவது அரசியலோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியாகும். ‘போரெனிற் புகலும் புனைகழல் மறவர் (புறம் 31) என்று கோவூர் கிழார் பாராட்டு மாறு, பண்டைத் தமிழர்கள் போர்வேட்கை மிக்கவர்களாய் வாழ்ந்தனர். தமிழக எல்லைக்குள் மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் நாளோயாது கலாமிட்டுப் போர் மேற் கொண்டனராதலின், போரச்சம் என்பது தமிழினத்துக்கு அரிய பொருளாயிற்று. போர் என்ற சொற்கேட்டால், வைக்கோற் போரைக் குறிக்கலாம் என்பதைக்கூட மறந்து போர்க்களம் நோக்கின தமிழ்க் கால்கள். அற்றைத் தமிழகத்துப் போரெனின் நன்றெனப் புறப்பட்டார் பலராதலின் “பகையகத்துச் சாவார் எளியர்” என்றார் வள்ளுவர். இன்று மாணாக்கர்கள் நன்னடை என்னும் இராணுவப் பயிற்சி பெறுதற்கு நாட்டுப்படைக் குழுக்கள் உள்ளன அல்லவா? இதுபோல் பண்டைத் தமிழகக் காளைகள் நன்னடைப் பயிற்சி பயிலுதற்குப் பேரவை, முரண்களரி எனப் பலபயில்வுக் கழகங்கள் இருந்தன. ‘ஒளிறுவாள் அருஞ் சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல்காளைக்குக்கடனே’ (புறம்312) என்று ஒவ்வொர் இளைஞனுக்கும் உரிய நாட்டுக்கடமையைப் பழந்தமிழ்நாடு வலியுறுத்திற்று. நின் மகன் எங்கே என்று வினவிய ஒரு நங்கைக்கு ‘என் மகன் ... தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே’ (புறம்86) என மறுமொழிகின்றாள் தாய் காவற்பெண்டு. வினாவிய பெண்ணும் அத்தகைய மகனைப் பெற்றெடுக்க வேண்டும்; அல்லது, பெற்றுள்ள மகனை விளையாடு களத்திற்கன்று; பொருகளத்திற்குச் செல்லப் பழக்கவேண்டும் என்பது காவற்பெண்டின் குறிப்புப்போலும். தமையனையும் கணவனையும் போரில் இருந்த ஒரு தமிழ்ப்பெண் மீண்டும் போர்ப்பறை கேட்டுத் தன் சிறுவனைப் போர்க்கோலஞ் செய்தாள்; வேல் கைக்கொடுத்து இதோபார்! போர்க்களம் என்று காட்டிச் செல்கென ஏவினாள் என்பது புறநானூற்றில் ஒரு காட்சி. போர்கள் ஊருக்கு அணிமையில் நிகழ்வதுண்டு என்று இதனால் அறியலாம். இவ்வண்ணம் போர்மூச்சு தமிழக மண்ணில்யாண்டும் ஓடி உலாவிய தன்மையால் புறத்திணை என்னும் அரிய இலக்கியப்புரிவு இலக்கண வடிவில் தமிழ் மொழிக்கண் தோன்றுவதாயிற்று. ‘வீரஞ் செறிந்த தமிழ்நாடு’ என்றார் பாரதியாரும். போர்க்களத்தைக் குறிப்பதற்குக் களம் என்று சொன்னால் தமிழில் போதுமானது. ‘களம் புகலோம்பு மின் (புறம் 87) ‘பொருநரும் உளரோ நீ களம் புகினே’ (புறம் 90) என்ற ஆட்சிகளை நினைக. ‘களம் பாடியது’ என்பது பரணிநூலின் உட்பிரிவுகளுள் ஒன்று சமம், பறந்தலை, அமர்க்களம், செருக்களம் எனப் பல சொற்கள் போர்க்களத்தைக் குறிக்கத் தமிழில் உள்ளன போரில் எல்லாப் பொருள்களும் அழிந்து தரைமட்டமாகுவதால் சமம் என்றும், ஊருக்குப் புறம்பான வெள்ளிடையில் போர் நடக்குமாதலின் பறந்தலை என்றும், விருப்பத்தோடு உயிர் வழங்கும் இடமாதலின் அமர்க்களம் என்றும், செருக் குணர்ச்சியோடு போர் செய்வாராதலின் செருக்களம் என்றும் காரணப் பெயர் பெற்றிருத்தல் கூடும். ஒருவன் சினந்தெழுந்து தாறுமாறாக ஆர்ப்பாட்டஞ் செய்து குதிப்பானேல், என்ன அமர்க்களம் பண்ணுகிறான் என்னும் சொல்வழக்கை நாம் அடிக்கடி கேட்கின்றோம். ஆ பொருகளத்தைப் பாடிய புலவர்கள் இருவகையர். போர்ப்பூசல்களை நேரிற் கண்டு பாடியவர் ஒருவகையினர். இவர்தம் போர்ப் பாடல்களில் உணர்ச்சியும் உண்மையும் அறமும் அளவறி கற்பனையும் அமைந்திருக்கும். போர்களைக் கண்ணாற் பாராதே இதன் கொடுமை இப்படித்தான் இருக்குமென்று கருதிப்பாடியவர் மற்றொரு வகையினர். இன்னோர்தம் இலக்கியங்களில் பாட்டு மிகுதியும் புனைவு மிகுதியும் நய மிகுதியும் சொல்லடுக்கும் வெளிப்படும். புராணப் போர்களைப் பாடிய புலவர்களின் நூல்களில் வியப்பாற்றல் தோன்றுமேயல்லாது போராற்றல் கற்பவர்க்குத் தோன்றுவ தில்லை. எவ்வாறாயினும் போர்க்களக் காட்சிகளைப் பாடாத தமிழ்ப் பேரிலக்கியம் இல்லை. அக்காட்சிகள் சிலவற்றை இனிக் காண்போம். போர்க்களம் என்பது உயிர்கள் தொகையாக மடியும் கொலைக்களம் என்பது பொதுவான கருத்து. இக்கருத்திற் கேற்ப இன்னாக் கொடுங்காட்சிகள் இலக்கியத்து இடம் பெறலாயின. யானையொடு யானை இடிப்பதும், குதிரை யோடு குதிரை தாவுவதும், தேரோடு தேர் சாடுவதும், ஆளோடு ஆள் தாக்குவதும், வாளோடு வாள் உரசுவதும் வேலொடு வேல் வீசுவதும், அம்போடு அம்பு விடுப்பதும் ஆகிய காட்சிகள் பழம்போரை நினைக்கும்போது நமக்கு வழக்கமாகத் தோன்றுகின்றன. உயிரினங்கள் உடல் துணி பட்டும் தலை தகர்பட்டும் செவியறுபட்டும் கண் குழிபட்டும் நாத்துளைபட்டும் குடல் புறம்பட்டும் காலொடிபட்டும் வாலறுபட்டும், உறுப்பறைகளாய் உறுப்பிலிகளாய்க் கிடக்கும் அவல நிலையை இலக்கியங்கள் உருக்கமாய் எடுத்துரைக்கும். பொருங்களத் தாடவர் பொருவில் பைந்தலை அரும்பெறற் கண்ணியோ டற்று வீழ்வன கருங்கனிப் பெண்ணையங் கானங் கால்பொர இருங்கனி சொரிவன போன்ற என்பவே. (சிந்தாமணி 2236) காலாட் படைகளின் தலைகள் பனங்குலையிலிருந்து காய்கள் உதிர்வன போல உருள்கின்றன என்று எளிதாகச் சொல்லுவர் திருத்தக்க தேவர். குருதியின் நதிவெளி பரக்கவே குடையினம் நுரையென மிதக்கவே கரிதுணி படுமுடல் அடுக்கியே கரையென இருபுடை கிடக்கவே (கலிங் 410) குருதி ஆறாக ஓடுகின்றது; அவ்வாற்றில் பகைவரின் வெண் கொற்றக் குடைகள் நுரைகளாக மிதக்கின்றன; யானையின் கால்வெட்டுக்கள் இருபுறமும் கரையாகக் கிடக்கின்றன என்று உருவகத்தால் போர்க்களத்துப் புண்ணாற்றின் ஓட்டங் காண்கின்றார் செயங்கொண்டார். தமிழ் முதற்பெரு நூலாகிய தொல்காப்பியத்தின் புறத் திணையியலில் பல போரோ வியங்கள் உள்ளன. ஒரு வீரன் உடலின் நாற்றிசையிலும் வேல் களும் அம்புகளும் பாய்ந்து நிரம்பவே மயங்கி விழுகின்றான். அவனுடல் மண் ஒட்டுமா? மண் ஒட்டாதபடி அவன் உடம்பைப் போர்க் கருவிகள் தாங்குகின்றன. அந்நிலையில் நிலந் தீண்டாமலே அவன் உயிர்போகின்றது. இதனை அரிய வீரத்தின் நிலை என்று மதிக்கின்றார் தொல்காப்பியர். கணையும் வேலும் துணையுற மொய்த்தலிற் சென்ற வுயிரின் யாக்கை இருநிலந் தீண்டா அனைநிலை வகை (தொல். 1016) இப்பெருநூலின் காஞ்சித்திணையில் வெருவரத்தக்க மகளிர் வீரச் செயல்கள் கூறப்பட்டுள்ளன. தன் கணவன் உயிரைப் போக்கிய வேலைக் கண்டு அவ்வேலாலே தன்னுயிரையும் போக்கிக் கொண்டாள் ஒரு பெண் என்றும், கணவன் தலையொடு தன் மார்பையும் முகத்தையும் சாத்தி வைத்தளவில் உயிர்விட்டாள் ஒரு பெண் என்றும் மறக் காட்சிகள் சுட்டப்பட்டுள்ளன. இ பண்டைப் போரில் யானைப்படையே சிறந்தது என்று கருதப்பட்டது. ‘களிறெறிந்து பெயர்தல் காளைக்குக்கடன்’ என்றார் பொன்முடியார். “வெளிற்றுப் பனந்துணியின் வீற்று வீற்றுக் கிடப்பக் களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை” (புறம் 35) என்ற அடிகளில் யானையின் உருட்டுக் கால்கள் பனந்துண்டுகள் போல வெட்டுண்டு இரத்தமின்றி வெளிறிக் கிடக்கின்றன என்பர் வெள்ளைக்குடி நாகனார். களவழி என்பது பதினெண்கீழ்க் கணக்கைச் சேர்ந்த நூலாகும். இது நாற்பது வெண்பாக்கள் உடையது. அளவிற் சிறியதா யினும் போர்க்களம் என்னும் ஒரு பொருளையே விரித்துக் கூறும் சிறப்பினது. சோழன் செங்கணானுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் நடந்த போரின் களத்தைப் பாடவந்த புலவர் பொய்கையார் களிற்றுக் காட்சிகளையே மிகுதியாகப் புனைகின்றார். இரத்த வெள்ளத்தில் மூழ்கியர்கள் ஒடிந்த யானைக் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு எழுவர்; இதுவரை கரிய மலை போன்றிருந்த யானை இப்போது இரத்தந்தோய்ந்து இங்குலிக மலைபோல ஆயிற்று; யானை மேல் பதிந்துமேலே தோன்றும் அம்புத் தலைகள் மலை மேல் வரிசையாக இருக்கும் குருதிக் கூட்டத்தை ஒக்கும்; வீரர் வெட்டிய யானைக்கைகள் இடியேறுபட்ட மலைப் பாம்புகள் போலப் புரளும்; யானையின் கைவெட்டி லிருந்து ஒழுகும் அரத்தம் பையிலிருந்து சொரியும்பவளம் போலும்; யானை முறித்து ஒடித்த குடைகள் சிதறிக் கிடக்கும் போர்க்களம் தச்சனது தொழிற்களத்தை ஒக்கும்; குருதியுட் படிந்து மேலே தோன்றும் யானை செவ் வானத்துத் தோன்றும் மேகத்தை நிகர்க்கும் என்று பலவாறு யானைப் போர்க்காட்சிகளையே கூறுவர் பொய்கையார். தமிலிலக்கியத்து யானையைக் குறித்து எழுதிய போர்க் கற்பனைகள் பல. அவையெல்லாம் முத்தொள்ளாயிர நூலில் வரும் ஒரு கருத்துக்கு இணையில்லை. அக்கற்பனை தனக்குவமை யில்லாதது. பாண்டியன் யானை பகைவர்களின் மார்பகலங் களைக் குத்திக் குடைகின்றது. இக்குடைவை ஒரு புது நோக்காகப் பார்க்கின்றார் ஒரு புலவர். கொம்பாகிய எழுத்தாணியால் பகை மன்னர்களின் மார்பாகிய ஓலைகளில் எழுதியது என்பது அவர் நோக்கு. குழந்தை பிறந்தது என்றால் என்ன குழந்தை என்றும் எல்லோருக்கும் கேட்கத் தோன்று கிறதன்றோ? அதுபோல, யானை எழுதிற்றென்றால் என்ன எழுதிற்று எனக் கற்பவர்கள் அறிய விரும்புவது இயல்பே. பகை மன்னர்களே! உங்கள் நாடெல்லாம் எம் அரசனுக்குச் சொந்தம் என்று கல்வெட்டுப்போல மார்பு வெட்டு வெட்டிற்று என்பர் முத்தொள்ளாயிரவர். மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் உருத்தகு மார்போலை யாகத் - திருத்தக்க வையகம் எல்லாம் எமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு. 12. இளங்கோ அ இளங்கோ வேந்துக் குலத்திற் பிறந்தவர்; வேத்தியற் கல்வி பெற்று வளர்ந்தவர். கணிவன் கூறியபடி, அரசாளும் திருப் பொறி வாய்ந்தவர். காதலை வெறுத்தோ கடமைக்கு அஞ்சியோ இவர் துறவு கொள்ளவில்லை. மூத்தவன் ஆளும் அரச மரபு பிறழக் கூடாது என்பதற்காகவே துறவு மேற் கொண்டார். அடிகளான பின்னுங்கூட, ‘குடக்கோச் சேரல் இளங்கோ’ என்று பெயர் பெறுவதைக் காண்கின்றோம். இளங்கோ நாட்டைவிட்டு ஒதுங்கி வாழவில்லை. குடிமக்களின் தொடர்பை அறுத்துக் கொள்ளவில்லை. கண்ணகி துறக்கம் சென்ற செய்தியைச் செங்குட்டுவனிடம் வெளியிட்ட மலைக்குறவர்கள் அதனை இளங்கோவிடமும் வெளியிட்டனர். அதுபோல புலவர் சாத்தனாரும் வியத்தகு நிகழ்ச்சிகளைச் செங்குட்டுவனுக்குக் கூறியதோடு நில்லாது இளங்கோவிடத்தும் கூறினர். இளங்கோவை மன்னனாகவே நாடு மதித்தது என்பது இவற்றாற் பெறப்படும். குலத்தாலும் குணத்தாலும் அரசியல் நெஞ்சம் வாய்ந்த ஒரு புலவர் காப்பியம் இயற்றினார் என்றால், அந்நெஞ்சம் அதனகத்துப் படியாதிருக்குமோ? பயின்ற நெஞ்சைப் பாடுவான் ஒளிக்க முடியாது. பாடமேற் கொண்ட கதை பயின்ற மனத்துக்கும் படித்த கல்விக்கும் பொருத்தமாக இருந்து விடுமானால், காப்பியத்தின் சிறப்புக்கு வேறென்ன இணைப்பு வேண்டும்? சிலப்பதிகாரக் கதையின் கருவே அரசியல் உருவுடை யது. கதைத் தலைவன் கோவலன் முற்பிறப்பில் அரச வினைஞனாக இருந்தவன்; ஒற்றனென ஒருவனை மன்னனுக்குத் தவறாகக் காட்டிக் கொல்லச் செய்தவன். கொலைப்பட்ட சங்கமன் மனைவி. அரசர் முறையோ பரதர் முறையோ ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என்று பூசலும் ஓலமும் இட்டு மலைமேல் ஏறி மண்ணில் வீழ்ந்து மாய்கின்றாள். நீலி என்னும் அக்கற்பி ஒரு சிறு சிலப்பதிகாரத்தின் தலைவியாக முன்னரே விளங்குகின்றாள். முற்பிறப்பு வரலாற்றைச் சாத்தனார் இயம்பி வரும் போது அக்கதையில் இளங்கோ காணும் கருத்தென்ன? அரசியற் பிழை, முறை கோடிய கொலை. ஆசிரியர் நாட்ட எண்ணிய முக்கொள்கைகளில் ஒன்று அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் என்பது. மூன்றனில் இவ்வறம் முதலாவதாக நிற்கின்றது. கதைப்படி பார்த்தால், நெடுஞ்செழியன் வினைவயப்பட்டுக் கோவலனைக் கொன்று அரசியல் பிழைத்தல் இரண்டாவதாகிய மதுரைக் காண்டத்தில் நிகழ்வது. அதன்படி, அறங்கூற்றாகும் கொள்கை நடுவணதாகச் சொல்லப்பெறல் வேண்டும். எனினும் இளங்கோ அதனை முதலாவதாக மொழிகின்றார் ஏன்? அது அவர் தம் அரசியற் பார்வை. முற்பிறப்புக் கதையிலும் பிற்பிறப்புக் கதையிலும் உயிரோட்டமாக அவருக்குப்படுவது அரசியற்றவறு. தன் வீட்டுப்படி நடைக்கு எளிதாதல் போலத் தான் பயின்ற துறை பற்றுக்கு எளிது, பாடுதற்குச் செவ்விது. சங்கமன்பால் கோவலன் அரசியற்கொலையும், கோவலன் பால் நெடுஞ்செழியன் அரசியற்கொலையும் நெடுஞ் செழியன் பால் அறத்தின் வெற்றியும் இளங்கோவின் நெஞ்சைக் கவ்விய இடங்கள். தாம் உலகிற்கு என்ன வழங்க முடியுமோ தம்மிடமிருந்து உலகம் என்ன எதிர்பார்க்க ஓல்லுமோ, அவற்றை வாய்ந்த இடங்களில் வலியுறுத்த எண்ணினார் இளங்கோ. நெறி தவறி அரசாண்டால், யார் யார், யார் யாரால் எவ்வெவ்வாறு அழிக்கப்படுவார்கள்? முறை பிறழ்ந்தவனும் பிறழ்வதற்குக் காரணமாக இருந்தவனும் அழிவான். சிறியவ னாயினும் பெரியவனாயினும் அழிவான், ஒரு பிறப்பில், இன்றேனும் வருபிறப்பிலாயினும் அழிவான், பிறரால் அழிவான், தன்னானும் அழிவான் என்பது இளங்கோவம். அரசியல் பிழைத்த அரசர்களுக்கு அறம்கூற்றாகும் என்று சுட்டி மொழியாது, ‘பிழைத்தோர்க்கு’ என அனைவரையும் உட்படுத்திப் பொதுப்பட மொழிந்தார் ஆசிரியர். ஏன்? சங்கமன் கொலைக்குக் காரணமாக இருந்த கோவலனும் முற்பிறப்பில் ஒரு அரச வினைஞன் அன்றோ? ஆ மக்கட்பற்று இல்லாதாரிடத்துக் கடவுட் பற்றுக்கு இடனில்லை. மொழிப்பற்று இல்லாதாரிடத்து உணர்ச்சிப் பற்றுக்கு இடனில்லை. நாட்டுப்பற்று இல்லாதாரிடத்து அரசுப்பற்றுக்கு இடனில்லை. சிறந்த அரசியலறிஞன் என்பவன் எடுத்துக்காட்டாகத் தக்க நாட்டுப் பற்றாளனாகத் திகழ வேண்டும். அவனுடைய அறிவிலும் பொழிவிலும் நாட்டின் நாடி ஓடவேண்டும். நாட்டுநாடி ஓடாத அறிவு நாடிகள் நாட்டுக் கேடிகளாக மாறத் தயங்கார். நாட்டுப் பற்றினை அரசியல் நூல்களோ வரலாற்று குறிப்பர் அடிகள் இதனால் தமிழகம் பிறநாட்டார்க்கு ஓரகமாகவே தோன்றிற்று என்பதும், தம்முட் பகைகொண்டாலும் மூவேந்தர்கள் ஓரகமாகக் காட்டுவதை விட்டுக் கொடுக்க வில்லை என்பதும் தெளிவாகின்றன. பாண்டிநாட்டு இடைச்சியர்கள் குரவையாடுங்கால் ‘தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே’ எனப் பாண்டியனையும், ‘பொன்னிமயக் கோட்டுப்புலி பொறித்து மண்ணாண்டான்’ எனச் சோழைனையும் ‘முந்நீரினுள் புக்குமூவாக் கடம்பெறிந்தான்’ எனச் சேரனையும் மாயவ னாகவே போற்றிப் பொதுப்பற்றோடு பாடுவர் சேர நாட்டு வஞ்சி மகளிர் செங்குட்டுவன் தன் வடதிசை வென்றியைப் பாடும்போது, அம்மனைவரிக்கண் சோழனையும், கந்துகவரிக்கண் பாண்டியனையும், ஊசல் வரிக்கண் சோழனையும், ஒருங்கு போற்றி வாழ்த்துவர். இங்ஙனம் ஒவ்வொரு வரிக்கண் ஒவ்வொரு வேந்தனை வைத்துப் பாடியதோடு அமையாது, ஒரு வரிப்பாடலில் மூவரையுமே வைத்துப் பாடிப் பரவியுள்ளனர். “ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல் பாவைமார் ஆரிரக்கும் பாடலே பாடல்” “வானவர் கோனாரம் வயங்கியதோட் பஞ்சவன் தன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் வேப்பந்தார் நெக்சுணக்கும் பாடலே பாடல்” “கடந்தடு தார்ச்சேரன் கடம்பெறிந்த வார்த்தை படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல் பனந்தோ டுளங்கவரும் பாடலே பாடல்” இவ்வரிப்பாடல்களால் மக்களிடை வேற்றுமைப்பட்ட உணர்ச்சியில்லை என்பதும், விழக்களில் ஒற்றுமையூட்டும் பொதுப் பாடல்கள் இசைக்கப்பட்டன என்பதும், இம்மரபு அரசியலில் தவறாக உணரப்படவில்லை என்பதும் புலவர் களால் நன்றாக ஊக்குவிக்கப்பட்டது என்பது அறியத்தக்கன. எவ்விழாக்களாயினும் முடிவில் அரசு வாழ்த்துப் பாடுதல் பண்டைத் தமிழ்நாட்டு மரபு. சமய விழாக்களும் இதற்கு விலக்கில்லை. மதுரையில் ஆயர்பாடியில் ஆய்ச்சியர் மாயவன் கோலமும் நப்பின்னை கோலமும் பூண்டு குரவையாடுகின்றனர். திருமால் சீர்கேளாத செவியென்ன செவியே, கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே, நாராயணா என்னா நாவென்ன நாவே என்று மாயவன் சீர்பாடுகின்றனர். இவ்வாறு ஆடினும் பாடினும் குரவையைக் கடவுள் வாழ்த்தாக முடிக்க வில்லை. “வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடித்தோல் தென்னவன் கடிப்பிகு முரசே” என்று அரச வாழ்த்தாக, முரசவென்றியாகக் குரவையை நிறைவு செய்கின்றனர். குடி என்பது அரசியல் மதிப்புடைய ஒரு நிலை. ‘குடி தழீஇக் கோல் ஓச்சும் மன்னவன்’ என்பர் வள்ளுவர். திருமணம் என்பது ஒரு குடிமணம். ஒவ்வொரு திருமணமும் அரசன் முன்னிற்க நடப்பதாகக் கருதுவதே தமிழ் நாகரிகம். அரசன் திருமண இல்லந்தோறும் தான் நேரே வந்து கலந்துகொள்ள முடியுமா? முடியாதாதலின், வளையாத ஒரு நேர் கொம்பினை வெட்டி வந்து அதனை அரசனது செங்கோலாக மதித்து அரசாணைக் கால் எனத் திருமணப் பந்தலில் நாட்டுகின்றோம். தெய்வ விழாக்களிலே யன்றித் திருமணங்களிலும் அரச வாழ்த்துப் பாடுதல் தமிழகமுறை என்பதனை இளங்கோ எடுத்துக் காட்டுகின்றார். அங்கன் உலகின் அருந்ததி யன்னாளை மங்கள நல்லமளி யேற்றினார் தங்கிய இப்பால் இமயத் திருந்திய வாள்வேங்கை உப்பாலைப் பொற்கோட் டுழையதா எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒரு தனி யாழி உருட்டுவோன் எனவே இமயத்தின் தென்பக்கம் வரைந்த புலிப்பொறி வடபக்கமும் தோன்றுமாறு சோழனது ஆணை பரவட்டும் என்று கண்ணகி திருமணத்தில் மங்கல வாழ்த்துப் பாடினார்கள். செம்பியன் ஒரு தனி யாழி உருட்டுவோன் ஆகுக என்று அரச வாழ்த்தாகப் பாடலை முடித்தார்கள். ஒருகுடி பெருகுந்தோறும் ஆட்சியும் பெருக வேண்டும் என்பது மக்களின் வேட்கை. திங்களைக் காணும்போது அரசனது வெண்குடையும், ஞாயிற்றைக் காணும்போது அரசனது திகிரியும், மழையைக் காணும்போது அரசனது அருளும், நகரைக் காணும்போது அரசனது குலமும் நம் உணர்விற்படுகின்றன. ஆதலால் திங்களையும் ஞாயிற்றையும் மழையையும் புகாரையும் போற்றுவோம் வாரீர் என்று அழைக்கின்றார் இளங்கோ. இப்பாடல்கள் இயற்கை வாழ்த்தா? அரச வாழ்த்தா? அரசனது குடையும் திகிரியும் அருளும் குலமும் போலா விட்டால் இவை போற்றப்படா என்பதுதானே குறிப்பு இங்ஙனம் சிலம்பின் தொடக்கமே நாட்டுப்பாடலாக ஒலிக்கின்றது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற தலைப்புக்களும் நாட்டுணர்வைப் பெருக்குகின்றன. ‘முடியுடை வேந்தர் மூவருள்ளும்’ என்றவாறு காண்டந்தோறும் இறுதியில் அமைந்த கட்டுரைகளும் நாட்டுப் பற்றை வளர்க்கின்றன. நாட்டுப் பற்று இக்காப்பிய முழுதும் நடம் புரிதலாலன்றோ விடுதலைக் கவிஞர் பாரதியார் பின்வருமாறு பாடினார். “நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” இலக்கியச் சாறு முதற் பதிப்பு 1987 இந்நூல் 1987இல் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முன்னுரை பதினெண்கட்டுரைகள் கொண்ட இந்நூல் `இலக்கியச் சாறு’ என்ற இனிய புதிய பெயர்த் தலைப்பினைப் பெறுகின்றது. இது மிகப் புதிய தொடரன்று. கருப்பஞ்சாறு என்ற வழக்கினை நாம் பலகால் கேட்டிருக்கின்றோம். பழச் சாற்றுக்கடைகள் எங்கும் பெருகி வரும் காலம் இது. சாறு என்பதற்குச் செறிவு என்பது பொருள். `சாறயர்களம்’ எனவும் `சாறுதலைக் கொண்டென’ எனவும் `வேறு வேறு கடவுளர் சாறு சிறந்தொருபால்’ எனவும் விழா என்ற பொருளில் இச்சொல் சங்க காலத்துப் பெருவழக்காக இருந்தது. மக்கள் செறிவாகக் கூடிய நெருக்கம் என்பது இதன் கருத்து. சாறு என்பதற்குச் சத்தின் பிழிவு என்ற பொருளும் உண்டு. `ஆலைச்சாறு பாய் ஓதை’ என்பர் கம்பர். `திருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம்புகை’ என்பர் திருத்தக்க தேவர். அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தாற் பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோற் சாலவும் பயனுதவி மற்றதன் கோதுபோற் போகும் உடம்பு என்ற நாலடியில் கரும்பின் பிழிவு சாறெனவும் அதன் சக்கை கோதெனவும் குறிக்கப்படுதல் காண்க. `நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்’ என்ற புறநானூறும் நினையத் தகும். எனவே இலக்கியச் சாறு என்ற சொற்றொடருக்கு இலக்கியப் பிழிவு என்பது கருத்தாம். இரும்பனையின் குரும்பை நீரும் பூங்கரும்பின் தீஞ்சாறும் ஓங்குமணற் குவவுத் தாழை தீநீரோ டுடன்விராஅய் முந்நீருண்டு முந்நீர்ப் பாயும் தாங்கா வுறையுள் நல்லூர் என்ற மாங்குடிகிழார் புறநானூற்றுச் செய்யுளால், பனைநுங்கின் நீர், கரும்பின் தேறல், தென்னை இளநீர் மூன்றும் விரவிய கலவைச் சாறு குடித்த பழக்கம் பண்டைக் காலத்து இருந்ததை அறியலாம். தனிப் பழச்சாற்றோடு பல்வகைப் பழங்கள் பிழிந்த கலப்புச்சாறும் இன்று கடைகளில் கிடைக்கின்றன. இலக்கியச்சாறு என்ற இந்நூல் பல இலக்கியங்களின் பிழிவாகும். திருவாசகம், திருக்கோவை, கோவையிலக்கியம், திருப்பாவை, திருவெம்பாவை, தைப்பாவைகள், பல சிற்றிலக்கியங்கள், தாயுமானவர் கவிதை, காந்திக் கவிதை, பாரதிகவிதை என்ற இலக்கிய வகைகளை ஒவ்வோர் கூறுபற்றி வடித்தெடுத்த கருத்துச் சாறுகளை இத்தொகுப்பிற் காணலாம். இடைநூற்றாண்டு இலக்கியங்களும் இந்நூற்றாண்டு இலக்கியங்களும் மரபுச்சுடர் குன்றாமல் புத்தொளி நந்தாமல் திறப்பாடு செய்யப்பட்டுள. தற்சிறுமை, தேவர்கள் படும்பாடு, காந்திக்கவிதை, பாரதீயம் என்றினைய கட்டுரைச் சாறுகள் அறிவு மறுமலர்ச்சியைப் பண்படுத்தும் என்று நம்புகின்றேன். படைப்பிலக்கியப் பாங்கு என்ற முதற்சாறு கவர்ச்சி கருதிப் பெண்ணினத்தின் பெருமை மாசு படக்கூடாது என்ற நோக்கில் பிழியப் பெற்றது. தமிழ்ச் சொல்லாட்சியும் தமிழ்மையாகப் போற்றப்படவேண்டும் எனவும் தமிழாற்றலை அயல்மாசு படுத்தலாகாது எனவும் இக்கட்டுரை தெளிவுபடுத்துகின்றது. புதினம், சிறுகதை, நாடகம் படைக்கும் புத்தெழுத்தாளர்கள் பொருண்மையிலும் சொன்மையிலும் மக்கள் நலங்களையே நயத்தக்க நாகரிகச் சால்போடு கடைப்பிடிக்கவேண்டும் என்பதும், தங்கள் மறுபதிப்புக்களை மொழித் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதும் இக்கட்டுரையின் சாறாகும். பழமைக்குள் மூழ்கினாலும் புதுமைமேல் நீந்தினாலும், நாட்டின் எதிர்கால முனனேற்றமும் நிகழ்கால நல்வாழ்வுமே என் எழுத்துக்களின் உள்ளொளி. என் ஏனைவகை நூல்களிலும் இவ்வொளிக்கதிர் பிறங்கக் காணலாம். என் நூல்களை வரிசைப் பதிப்பாக்கித் தமிழ்மக்கட்கு வழங்கவேண்டும் என்று திட்டப்படுத்தினார் பதிப்புச் செம்மல் மெய்யப்பனார். அவர் எண்ணியாங்கு பட்டுத் துகில்போலக் குறுகிய காலத்தில் என்பனுவல்கள் அச்சிழை பெற்றுக் கண்கவர் வனப்போடு வந்து கொண்டிருக்கின்றன. தன் குழந்தை வரிசை வரிசையாகப் பரிசு வாங்கும்போது மகிழும் தாயுணர்வை நான் பெறுகின்றேன். மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு என் வாழ்த்தும் நன்றியும் உரிய. என் வகுப்புத் தோழர் முன்னை முதல்வர் திரு. சி. செல்வத்தாண்டவனாரின் அன்புத் தொண்டினால் என் பதிப்புக்கள் பிழையூனம் பெறவில்லை. அவர்க்கு என் நன்றிக்கடன் மரபாயிற்று. கதிரகம் வ.சுப. மாணிக்கம் காரைக்குடி ஆவணி 2018 பொருளடக்கம் 1. படைப்பிலக்கியப் பாங்கு 119 2. இலக்கிய முத்திறன் 138 3. இலக்கிய வெள்ளம் 148 4. தனிப்பாடல்கள் 161 5. தற்சிருமை 167 6. தேவர்கள் படும்பாடு 176 7. திருவாசக நினைப்பு 185 8. திருவாசகமும் பண்டிதமணியும் 191 9. திருக்கோவைப் புரட்சி 199 10. கோவைத் திறன் 208 11. தைப்பாவை 232 12. சங்கத் தமிழ் மாலை 241 13. தாயுமானவர் சினம் 247 14. காந்திக் கவிதை 254 15. பாடுவார் பாட்டாண்மை 270 16. பாரதியின் புலமை 278 17. பாரதியின் பழமை 295 18. பாரதியின் தேசிய வொருமை 307 1. படைப்பிலக்கியப் பாங்கு பல்வேறு கலைத்துறைகளில் தமிழ்ச் செல்வத்தை இன்று வகைவகையாகப் பெருக்கி வரும் எழுது குலத்தோராகிய நாம் குழுமியிருக்கும் அண்ணாமலைநகர் தமிழ் மன்னர் என்று புலவர் உலகம் புகழ்ந்த அண்ணாமலையரசரின் பெயரைத் தாங்கிய கல்வித்தலமாகும்; அரசர் முத்தையவேள் போற்றி வளர்த்த தமிழ்ப் பண்ணையும் ஆகும். ஏனைப் பல்கலைக் கழகங்கள் போலாது தமிழியக்கமும் தமிழிசையியக்கமும் கண்ட புரட்சிக் கழகம் இது. இங்கு தமிழ்த்துறையில் பேராசிரியராக வீற்றிருந்த விபுலானந்த அடிகள், கா.சு.பிள்ளை, நாவலர் பாரதியார், நாவலர் நாட்டார், பண்டிதமணி கதிரேசனார், மகாவித்துவான் இராகவையங்கார், தெ.பொ.மீ.முதலானோர் தமிழிலக்கிய வரலாற்றில் சீரிடம் பெற்ற புலமைத் தோன்றல்கள். இங்ஙனம் பன்மாணும் தமிழ் மணங்கமழும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய இணைவேந்தரும் புதிய துணைவேந்தரும் தமிழ் மன்பதைக்கு எழுத்து விருந்து படைக்கும் நம்மைச் சோழபாண்டியர் போல ஒரு சேர இருந்து வரவேற்று ஐயடுக்கு வளமனை போல விருந்தோம்புவது எழுத்தாளர் மாநாட்டிற்கு உள்ளாக்கமும் புறவூக்கமும் ஆம். இப்பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவனாய் அறிவொளி பெற்றுத் தமிழ்த்துறைப் பேராசிரியனாய் நிறைபணி செய்து பொன்விழாவில் முதறிஞனாய் உயர்பேறு பெற்ற நான் குறள் சொல்லும் நன்றியுணர்வொடு என் முதன்மை யுரையைத் தொடங்குகின்றேன். நம் இலக்கியப் பரம்பரை `நானார் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னையார் அறிவார்’என்று மணிவாசகர் தற்சிந்தனை செய்ததுபோல, தமிழ் எழுத்தாள்வார்களான நாம் யார்? நம் பரம்பரை எத்தகையது? நம்மொழி எத்திறத்தது? நம் வாசகர்கள் எவ்வண்ணர்? நம் எழுத்து நோக்கங்கள் யாவை? அவற்றின் எதிர்கால விளைவுகள் யா? இவற்றையெல்லாம் தற்சிந்தனை செய்யவேண்டிய மாநாடு இது. உலக மொழிகளுள் என்று பிறந்தவள் என்று அறியகில்லாத தொன்மையானதும், இந்திய மொழிகளுள் உலகமொழி என்ற செல்வாக்கினதும் நம் தமிழ். பாரதியார் பாடியபடி, ஒரு காலத்தில் ஆரியத்துக்கு நிகராக வளர்ந்திருந்ததும், இப்போது ஆங்கிலத்திற்கு நிகராக நம்மால் வளர்க்க வேண்டியதும் நம் தமிழ். கலைக்களஞ்சியம் கண்ட முதல் இந்திய மொழியும் தமிழேயாம். நம் எழுத்து முன்னோர்கள் யார் என்று சுழல் வேகமாக எண்ணினாலும், தொல்காப்பியர், சங்கச் சான்றோர், திருவள்ளுவர், இளங்கோ, திருத்தக்கதேவர் சேக்கிழார், கம்பர், வீரமாமுனிவர், உமறுப்புலவர், இளம்பூரணர், சிவஞான முனிவர், பவணந்தியார், காரைக்காலம்மையார், ஆண்டாள், வள்ளலார், வேதநாயகர், உ.வே.சா., மறைமலையடிகள் திரு.வி.க., பண்டாரத்தார், மு.வ. அவ்வை துரைசாமி, பாவாணர் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வ.வே.சு. புதுமைப் பித்தன், கல்கி, மௌனி, சோமலெ என ஆயிரக் கணக்கான முன்னோடிகள் தமிழ்வானத்து ஒளிறுகின்றனர். இப்பெருமைப் பரம்பரையில் நாம் தமிழ்ப் பிறப்பு எடுத்திருப்ப தற்குப் பெருமிதம் எய்துகின்றோம். அதுவும் எழுத்தாளராகப் பிறந்து தமிழ்ப்பணி செய்வதற்கு மகிழ்கின்றோம். நம் முன்னோரை நாம் மதிப்பது போல, நம்பின்னோர் நம்மை நல்ல முன்னோர்களாக ஏற்றுக் கொள்ளவேண்டுமே என்ற அவலக் கவலையும் நமக்கு இல்லாமல் இல்லை. எழுத்தாளர் வாழ்வு வளம் தமிழ் எழுத்தாளர்கள் பொருளாதாரத்திலும் நல்ல தலையெழுத்துடை யோராக, வறுமைக் கோட்டிற்குக் கீழே தாழாமல் வாழ்வுக் கோட்டிற்கு மேலே இருப்பவர்களாக வாழவேண்டும் என்பது என் முதற்சிந்தனை. எங்கள் முன்னோர்களை வேறு வகையில் எல்லாம் பின்பற்ற நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம். பெருஞ்சித்திரனார், பாரதியார், வ.உ.சி., அரசஞ்சண்முகனார் போன்ற பல பெருமக்கள் வறுமையில் உழன்று கன்னித் தமிழைக் காத்தனர். நாங்கள் அந்த ஒரு வழியைப் பின்பற்ற விரும்பவில்லை. அது முடியரசுக் காலம்; இது குடியரசுக் காலம். எழுத்தாளர்கட்கும் வாக்குரிமை யுண்டன்றோ? ‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற பாரதியார் வாக்கின்படி, எழுத்தாளர்களும் மொழித்தொழிலாளர்களே. அவர்கள் தங்கள் சிந்தனைத் தொழில் எழுது தொழிலுக்குத் தக்கவருவாய் பெற்றுத் தம் பொருட்காலில் நிற்கவேண்டும். அப்போதுதான் சந்தை நோக்கமும் தொழுநோயுமின்றிச் சிந்தனையுரிமையோடு எழுத்துப் பிறக்கும். எழுத்தாளிகளைச் ‘சொல்லேருழவர்’ என்று உருவகஞ் செய்வர் திருவள்ளுவர். எவ்வளவு பொருத்தம். பொருளாதாரத்தில் நம் நாட்டு ஏருழவர்களின் கதிதான் இன்று நம் எழுத்துழவர்களின் கதியும். வீட்டு நூலகம் ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் விற்பதற்கு மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்பவேண்டும். குடும்ப நலத்திட்டத்துக்கு எவ்வளவு பறைப்பு நடக்கின்றது? இரண்டே பெறுக இனிதே வாழ்க; அதிகம் பெறாதே அவதிப்படாதே; நாமிருவர் நமக்கொருவர்; ஒன்று பெற்றால் ஒளிமயம்; அளவோடு பெற்று வளமோடு வாழ்க; ஒன்றுக்குப் பின் இப்போது வேண்டாம்; இரண்டுக்குப்பின் எப்போதும் வேண்டாம் என்று எவ்வளவு புது முழக்கங்கள். அத்தகைய பறைப்பும் முழக்கமும் நூலுக்கும் வேண்டும். வீட்டுக்கு ஒரு நூலகம்; புத்தகம் வாங்கிப் புத்தகம் பெறுக; ஏடுகள் வாங்கின் கேடுகள் நீங்கும்; இத்தகைய பறையரவம் இருந்தால், வீட்டு நூலகங்கள் பெருகும். வாசகர்களே நம் வாடிக்கையாளர்கள் ஐயாயிரம் படிகளாவது முதல்முறையில் விற்றால் எழுத்தாளர் வளம் தோன்றும். உலகத் தமிழ்ர் தொகைக்கு இது பெரிய எண்ணிக்கையன்று. மக்களை வளர்த்தே எழுத்துச் சான்றோர்கள் வளப்பட வேண்டும்; என்றாலும் அரசுக்கும் இதில் செம்பாகம் பொறுப்பு உண்டு. கதர் கைத்தறி முதலானவற்றிற்குச் சிறப்புத் தள்ளுபடி வழங்குவது போலத் தரமிக்க நூல்கட்கும் சிறப்புத் தள்ளுபடியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். நிதி நிலையில் ஐந்து விழுக்காடாவது புத்தகவுலகிற்கு ஒதுக்கீடு செய்வது நல்லது. இது மையவரசுக்கும் பொருந்தும். அப்போதுதான், பாரதியார் கனவின்படி, வெள்ளம்போற் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் உயரும். அறியாமைப் பள்ளத்தில் விழுந்திருக்கும் உயர்திணைக் குருடரெல்லாம் அறிவு விழிபெற்று வாழ்வுப் பதவி பெறுவர். இந்தியாவிலும் தமிழகத்திலும் பதிப்பு வெளியீடுகள் தனியார் பக்கமாகவே உள. சிறுசிறு தொழிற்சாலையளவுக்குக் கூட இப்பதிப்பாளர்தம் உழைப்புக்கு ஊதியமில்லை. பாடநூல்களைத் தவிர்த்தால் தமிழகத்தில் ஓராண்டுக்கு மூன்றுகோடிக்கு மேல் விற்பனைக்குறி இராது. ஆண்டுக்கு நூறு கோடியாவது புத்தக விற்பனை நிகழ்ந்தால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிவு சார்ந்த வளர்ச்சியாக ஓங்கும். விடுதலைப் பலிஞர்கள் போல எழுத்தாளர்களும் பதிப்பாளர் களும் எவ்வளவு காலம் மொழிப்பலியர்களாக இருக்கமுடியும்! நிலம் முதலான சொத்துடைமைகள் உடையான் இறந்த ஐம்பதாண்டுகட்குப்பின் சட்டபடி பொதுவுடைமை யாவதில்லை. ‘தாயத்தின் அடையா வீயச்செல்லா வீற்றுக் கோட்படா” என்று தொல்காப்பியர் பண்டே தனியுடைமைத் தன்மையைக் குறிப்பர். நூல்கள் முதலான எழுத்துடைமைகளோ எழுத்தாளி மறைந்த ஐம்பதாண்டுக்குப்பின் உலகவுடைமைகள் ஆகி விடுகின்றன. யார்வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம். இதனை நான் குறிப்பதன் கருத்து பொதுவுடைமைப் பொருளைப் படைக்கும் எழுத்துச் சான்றோர்கள் இவ்வுலகில் வாழுங் காலத்துத் தரவாழ்வு வாழவேண்டும் என்பதேயாம். தமிழ்வளம் பெருக்கும் எழுத்தாண்மையர் தாமும் வளமாக வாழ வேண்டும் என்பது ஆசையன்று அழுக்காறன்று; உரிமையுணர்வாகும். காதல் நடப்பியல் புதினம், நாடகம், சிறுகதை, உரைநடை, திறனியல், முறைக்கவிதை, புதுக்கவிதை, இலக்கணம், அறிவியல், இதழியல், பதிப்பியல், நாட்டுப்பாடல், திரைப்பாடல், வானொலி, தொலைக்காட்சி எனப் பல்துறை சார்ந்த எழுத்தாளர்கள் இம் மாநாட்டுக் கருத்தரங்கிற் கலந்து கொள்கின்றீர்கள். இவற்றின் முன்னோடிகள், தன்மைகள், வரலாறுகள், வளர்ச்சிகள், தாக்கங்கள் எல்லாம் நான் சொல்ல வரவில்லை. நாழிகைக் கடையில் மணி பார்க்கலாமா? ஆதலின் என் பொதுமை யுரைக்கண் எதிர்கால வளர்ச்சி நோக்கில் நம்இலக்கியப் படைப்பின் சில குறைகளை முறைகளை நிறைகளைச் சுட்டிக்காட்டுவேன். ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு என்பர் திருவளுவர். மன்னாயத்தின் குறைபாடுகளை, இளிவரல்களை, இழிவுகளை, மறை நிலைகளை, நெற்றி வடுப்போல எடுத்து விளம்பும் எழுத்தாளர்கள்; தங்கள் எழுத்துக் குறைகளையும் மறித்துப் பார்ப்பது நற் சிந்தனை யாகும். பல படிகள் விற்பனைக்காகச் சந்தை நோக்கில், பாலுறவுக் கீழ்மைகளையும் காமச் சாக்கடைகளையும் இறக்குமதி உளவியல்களையும் கோணற் சூழ்நிலைகளையும் பச்சைக் கொச்சைச் சொற்களால் எழுதுகின்றார்கள்; எதுவும் எதிர்த்துக் கேட்டால் நடப்பியல் என்னும் யதார்த்தத்தைத் தானே எடுத்துக் காட்டுகின்றோம் என ஒரே சங்கினை ஊதுகின்றனர். இஃது எழுத்தாளர் பற்றிப் பரவலாகக் கூறப்பட்டுவரும் குறை. வேறுபட்ட காதலிணைவுகளைக் கதையாக்கிய கு.ப.இரா.பச்சையாக இருந்தால் எழுத்தாளன் குற்றமன்று. ஆண் பெண் உறவு இப்பொழுது நிலவி வரும் முறையின் குற்றம். உண்மையை மறைப்பது கலையாகாது. கீறி ஆற்றுவதே சிறந்த வைத்தியம்’ என்று காரணம் கூறுவர். இக்கருத்து கொள்கை யளவில் பலர்க்கு உடன்பாடு என்று சொல்ல வியலாவிட்டாலும், பலர் தம் எழுத்தோட்டம் இவ்வாறாகத்தான் செல்கின்றது. புதுக்கவிதைக்குப் பரவலாக அறையப்படும் குறைகளுள் பெரிது பச்சையான சிவப்பு வருணனை யாகும். ‘இந்தப் பச்சை நோட்டுக்களுக்கு நாட்டில் எத்தனையோ சிவப்பு விளக்குகள் எரிகின்றன; நீலப்படங்கள் விரிகின்றன; மஞ்சள் பத்திரிகைகள் பிறக்கின்றன. ஆனால் இதற்குப் பிடித்த நிறம் என்னவோ கறுப்புத்தான்.’ புதுக்கவிதையோட்டம் உடைய இந்நடை ஓரளவு நாகரிக நடைத்து. ‘எங்கே போகின்றோம்’ என்ற புதினத்தார் ‘பரபரப்புச் செய்தி, சினிமாசிங்காரக்கவர்ச்சி, ஆண் பெண் அந்தரங்கச் சதை விவகார வெளியாட்டங்கள் இவையெல்லாம் நாள்தோறும் வாரந்தோறும் மக்களிடம் பரப்பப்படுகின்றன’ என்று கவலைக் கொதிப்புற்றாலும், என்ன செய்யமுடிகின்றது, வேசித்தனத்தால் தன் உடல் மூலதனமாகப் பொருள்குவிக்கும் ஒரு பெண்ணைத்தான் புதினத் தலைவியாக்க வேண்டிய காலமாக இருக்கிறது. ‘கலையும் பெண்ணும்’ என்ற பிச்சை மூர்த்தியின் கதையில் நிருமாணவடிவில் ஓவியம் எழுதுவதற்குக் கண்ணிழந்த சுசிலாவை ஓவியன் குமரன் மணந்தான். ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கும் போது, அவள் கண்பெற்று அந்த ஓவியங்களைச் சிதைத்தாள் என்ற மனநிலை காட்டப் படுகின்றது. நிருவாண ஓவியத் தீட்டுக்கெனப் பெண்கள் பொருளாவதைப் பல புதினங்கள் உத்தி மரபாகக் கொண்டுள. இவையெல்லாம் நடப்பியலா? எழுத்தாளர்கள் தம் கேட்பியலா? கற்பனையா? காப்பியத்துக்கும் புதினத்துக்கும் சில வேற்றுமையை விளக்கும் திறனி கைலாசபதி ‘யாராவது முகத்திற்கு நேரே சொன்னால் வெட்கம் பிய்த்துக் கொண்டு வருஞ்செய்தியை நாவலில் மெய்ம் மறந்து ஆழ்ந்து வாசிக்க முடிகிறது’ என்று பொருட் கவர்ச்சி மாயைகளைப் புதினவெற்றியாகச் சாதிப்பர். புதின முதலியவற்றிற்குப் பழி சுமத்தும் கரைகடந்த காமப் புனைவுகள் முன்பும் இல்லாமல் இல்லை. ‘குத்து விளக்கெரிய’ எனத் தொடங்கும் திருப்பாவையும் திருவாசக நீத்தல் விண்ணப்பத்தின் சில பாடல்களும், திருப்புகழும், விறவிவிடு தூதும் இப்போக்கின. சீவகசிந்தாமணிப் பெருங்காப்பியம் நரிவிருத்தம் பாடிய சமணத் துறவியால் எழுதப்பட்டிருப் பினும், சில பாடல்கள் வகுப்பில் நடத்தும் மாண்பினவல்ல. அண்ணாவின் கம்பரசத்தின்படி, கம்பரும் இதற்கு விலக்கல்லர். கிரேக்க இலக்கியங்கள் நாண்வரம்பு அறியாதவை. இன்று ஞாலமுழுவதும் அஞ்சப்படும் (எயிட்சு) முரண்பால் நோய்க்கு மூலங்களைக் கிரேக்கத்திற் காணலாம். கிரேக்க நாகரிகத்தில் திறந்த உடல் வனப்புக்கே அழகு மதிப்புண்டு. உரோமவத்திக்கன் கலைக்கூடத்தில் அற்றம் மறையா ஆணுருவங்கள் ஏராளமாக உள. உலக மக்கள் திரளாக வந்து காணும் பொருட்காட்சியில் புல்லிய அம்மணங்கள் இக்காலத்துக்குப் பொருந்தா என்றுணர்ந்த போப்பாண்டவர் அற்றம் மறைக்க ஆணையிட்டார். நம்நாட்டுக் கோயில்களிலும் இக்காட்சிகள் உள்ளன. சுசீந்திரக் கோயிற் சிற்பங்கள் மறை வற்றவை. சென்னை மாநாகராட்சி மாளிகையில் தியாகராசர் உருவச் சிலைக்கீழ் இரு பெண்ணுருவங்கள் கிரேக்கமாக வடிக்கப்பட்டுள்ளன. ஆதலின் பச்சைத் தோற்றம் நீண்ட வரலாறுடயது என்பது பெறப்படும். இருப்பினும் அப்போக்கு நாணக் கரைகடத்தலாகாது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியரும், சங்கச் சான்றோர்களும், திருவள்ளுவரும் காதல் நிலைகளை இருபாலாரும் ஒன்றியிருந்து கற்கத் தக்க நாண்வேலிப் பொருளாகப் பாடியிருக்கும் தமிழ்மரபைத் தமிழ் எழுத்தாளுநர் உளங்கொள்ள வேண்டும். ஞாலத்திற்கும் பைஞ்ஞிலத்திற்கும வழிகாட்டத்தக்க காதலியம் தமிழினத்துக்கு உண்டு. அதுதான் காதல் பாடும் தூயவரம்பு; பெண்ணினத்தைத் தலைவியாக மதித்துப் போற்றும் உயர்நெறி; ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’என்றபடி, திரிந்தோடும் மனத்தைத் திருத்தி நிறுத்தும் சால்பு. எழுது பொருட்களங்கள் எழுத்து வல்லுநர்க்கு இக்காலம் பக்குவமான உரிமைக் காலம். குழுமச் சீர்திருத்தமாக எப்பொருளையும் எப்படியும் எழுதலாம்; திரைக்காட்சிக்குக்கூட ஒப்பாளர் குழுவுண்டு. பண்டு எழுத்தாளர்க்கு அரங்கேற்றங்கள் இருந்தன. இன்றோ எழுத்தாளிகட்கு வரம்பற்ற விடுதலை. ஆதலின் பொறுப்பு உணரவேண்டும். பெண்களும் எழுத்தாளர்களாக முன்வரும் நற்காலம் இது. கைம்மை மணம், மறுமணம், சாதிக்கலப்பு மணம், மதக்கலப்பு மணம், ஏழை செல்வக்கலப்பு மணம், அயலகமணம், மணவிலக்கு, வரன் காணிக்கை, கைம்மைத் தமக்கை தங்கையின் கொடுமை, பெற்றோர் பகை அலுவலக வுறவுகள், பால்வினை முரண்கள் என எதனை எழுதினாலும் படங்களோடு படிக்க மன்னாயங்கள் பக்குவமாயிருக்கும் காலம் இது. இன்றைய பொருட்செய்திகளை முன்னை இலக்கியங்கள் தொட்டதில்லை. இவை பல அக்காலத்து இல்லை என்பது கருத்தன்று. செய்யுளமைப்பு அவ்வளவு எளிதாக இடங் கொடாது. மேலும் இவற்றைப் பாடற்பொருளாகக் கருதும் நெகிழ்மரபு தோன்றவில்லை. ஆதலின் ஒரு நூற்றாண்டான உரைநடை வளர்ச்சியில், பல்வேறு பொருட்செய்திகள் நுழைந்து கொண்டன. வேதநாயகர், இராசமையர், மாதவையா முதலியோரின் தொடக்கப் புதினங்களிலே நடப்புக் குடும்பச் சிக்கல்கள் பொருளாகி விட்டன; ஆங்கிலக் கல்வியும் விடுதலைவியக்கமும் காந்தீயமும் அயலக அரசியற் கொள்கைகளும் தொழிற்புரட்சிகளும் உரிமை வேட்கைகளும், தீண்டாமை, மதுவிலக்கு, சாதியொழிப்பு, பெண்ணுரிமை, நிலவுடைமை முதலாயினவும் எழுத்தாளர்கட்கு வரம்பிலாப் பொருட்களை வழங்கிக்கொண்டிருக்கின்றன. பொருள் வரம்பு கட்டமுடியாத காலப்போக்கு இது. குடும்பக் களங்கள் எத்துணைப் பொருட்கள் பல்கி மல்கிவரினும் இலக்கியத்திற்கு முதன்மையான பொருட்கள் குடும்பவுறவு, ஆண் பெண் பாலுறவு. வரலாற்றுப் புதினமாயினும் குடும்ப வுறுப்பினர்கள் பாத்திரங்களாக வருவர். இலக்கியவுலகம் என்பது இல்லறவுலகம்; காதல், பாலுணர்ச்சி, தன்மானம், தன்னுரிமை, அவா இவையெல்லாம் இயக்கவுணர்வுகள். நான் சுட்டும் அகவியம் புருடியம் அன்று. இணைவிழைச்சு என்பது பிறப்பின் தலையான முடிவான நோக்கமில்லை. துறவு என்ற ஒரு நிலை உலகம் முழுதும் உண்டு. பாலுணர்வு வற்றிய முதுமை நிலைகளும் உண்டு. குடும்பக்களமே இலக்கியக்களம் ஆதலின், மனித மன்பதையின் அனைத்து வினைகளும் குடும்பக் கரைகளில் மோதுகின்றன. இங்கே எழுத்தாளனுக்குத் தற்பொறுப்பு உண்டு. கலை கலைக்காகவே என்று வைத்துக் கொண்டாலும் நம் எழுத்தால் ஒருவன் திருந்தினான் என்பது கேள்விப்பட்டால் எழுதிய ஞான்றினும் மகிழ்வோம் அல்லவா? ‘சோதிடத்தில் உண்மையுண்டா என்பதல்ல கேள்வி. உண்மையாக இருக்கலாம். பொய்யாக இருக்கலாம். இரண்டும் கலந்ததாகவும் இருக்கலாம். அதில் பாபவினைக்கு நிறைய இடம் உண்டு என்பதே நமக்குப் போதும். இந்த விஷயத்தை விளக்குவதற்காகவே கதை எழுதப்பட்டது. வெறும் பொழுது போக்குக்கு எழுதவில்லை. பொழுது தானாகவே போகும். அதை யாரும் போக்க வேண்டியதில்லை. இவ்வாறு எழுத்தின் குறிக்கோளை மூதறிஞர் இராசாசி வலியுறுத்துவர். மு.வ.வின். அகல்விளக்கு, கல்கியின் அலை யோசை, பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர், செயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், இந்திராபார்த்தசாரதியின் குருதிப்புனல், அகிலனின் எங்கே போகிறோம் என்ற புதினங்களும்; அண்ணாவின் நல்ல தம்பி, கலைஞரின் தூக்குமேடை, இராமையாவின் பூவிலங்கு, மணிசேகரனின் பிறவிக்கடல், அழகப்பனின் முத்துச்சிற்பி, கோராவின் பெண்சாதி, வீராசாமியின் பொன்குஞ்சு முதலிய நாடங்களும் குறிக்கோள் இலக்கியங் களாகப் படைக்கப்பட்டுள. சீரழிந்த நிகழ்காலக் குழுவாயத் தைப் புனைதல் நசிவிலக்கியம் எனவும் எதிர்காலத் தீர்க்க தரிசனம் கூறல் நல்லிலக்கியம் எனவும் சீவானந்தனார் வகைப்படுத்துவர். ஐயப்படாமை ஒருவகைக் குடும்பச் சிக்கலைத் தீண்டுவதில் எழுத்தாளர்கள் குண்டுவெடிமேல் நடப்பது போல உயிர் விழிப்பாக நடந்து கொள்ளவேண்டும். இல்லறப் பெண்களை ஐயப்படுவது என்பது இலக்கியத்தின் சுவைப்பொருளாக இன்றும் வளர்கின்றது. இதனை மேலும் வளரவிடுவது குழும நலமாகாது. பெண்ணினம் எல்லாத்துறையிலும் வெளிவந்து பல பணிகளில் ஈடுபடுங் காலம் இது. அலுவலகங்களில், கல்வித் துறைகளில், தொழில் நிறுவனங்களில் ஏன், காவல்துறை களிலுங்கூட நிறைந்த பணிகளை ஆணோடு அடுத்தடுத்து இருந்து பெண்கள் செய்கின்றனர். பணிச்செம்மைக்கும் நாட்டு முன்னேற்றத்திற்கும் பொருளாதார விடுதலைக்கும் மகளிரினம் இன்னும் பெருகிய பணிகள் செய்யவேண்டும் என ஒதுக்கீடுகளும் உண்டு. இங்ஙனம் பலகளங்களில் பெண் ஆண் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஐயப்படுங் கதைகளைத் திரிப்பது இப்போது பெரும் போக்காக வளர்ந்து வருகின்றது. அக்கினிப்பிரவேசங்களைக் காணும் துடிப்பும் வளர்ந்து வருகின்றது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் நட்பாக இருப்பது போல ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கக் கூடாதா? பழகமுடியும் என்ற ஒரு புதுப்போக்கை உறுதிப் படுத்துவதற்குச் சில நல்லெழுத்தாளர்கள் எழுத்து முனைப் படுவதையும் காண்கின்றோம். ‘சாப விமோசனம்’ என்ற புதுமைப்பித்தன் கதையில், அகலிகை சீதை உரையாடலில், என்னைக் கல்லினின்று உய்வித்த இராமனா உன்னை ஐயப்பட்டுத் தீப்புகச் செய்தான் என்று ஆத்திரமாகக் கேட்கின்றாள் அகலிகை. உலகத்துக்கு மெய்ப்பிக்க வேண்டாமா? என்பது சீதையின் அமைதியான மறுமொழி. இம் மறுமொழி பாரத முன்னாயத்தின் கொடு போக்குக்கு நல்ல எடுத்துக்காட்டு. இல்லறப் பெண்களை ஐயமாகக் களப்படுத்துவது இராமாயண பாரத இலியத்து இதிகாசங்களின் ஆரிய வழக்கு. பரத்தை குலத்திற் பிறந்த மாதவிகூடக் கோவலன் தன்னை ஐயப்படுவதைப் பொறுக்க முடியவில்லை என்று சிலப்பதிகாரம் புலப்படுத்தும். இது தமிழ் வழக்கு. `விடிந்தது’ என்ற பெயரால் அண்மையில் வந்த கதையில், சிங்கப்பூர்க் கணவன், வீட்டில் வேறு வகையான சுருட்டுக் கிடந்ததைக் கண்டு ஐயப்பட்டு மனைவி வள்ளியைக் கொன்றான் எனவும் பின்பு உண்மை தெரிந்து வருந்தினான் எனவும் முடிகின்றது. சிசிலி மன்னன் இலியாந்தசு தன் வேண்டுகோளை மறுத்த நண்பன் பாலச்சென்சு தன் மனைவி எருமியான் வேண்டுகோட்கு இசைந்து விருந்தினனாக மேலும் நீடித்ததைத் தவறாக வுணர்ந்து அவள்மேல் ஐயப்பட்டுப் பெருங்கொடுமை செய்தான் என்பதுவே செகப்பிரியரின் மாரிக்காலக் கதையின் காரணமாகும். அண்ணாமலை நகரில் முன்பு நடந்த ஓர் அவலச் செய்தி; மகப்பேறு கேட்க வந்த நண்பன் தன் நண்பனை பார்த்து, இக்குழந்தை உன் மாதிரியில்லையே என்று இயல்பாகத்தான் சொன்னான் அது அவன் மனத்தில் சுருக்கெனத் தைத்தது. மனைவி மேல் உடனே ஐயப்பட்டுத் தன் மானத்தைப் பெருக்கிக் கொண்டு கிணற்றில் விழுந்து மாண்டான். எவ்வளவு பேதை வேகம். மனைவியை எளிதாக ஐயப்படுவதும் ஐயம் தோன்றினால் அதனையே முடிவாகச் சிந்தனை செய்வதும் கொலை அல்லது தற்கொலைப்படுவதும் இந்த நாட்டின் இழிந்த மரபாயிற்று. கணவனை ஐயப்படுவதில்லை. ஐயப்பட்டாலும் மனைவி பொறுப்பதைத் தவிர வழியில்லை. இந்நாட்டில் திருமணஞ் செய்து கொள்ளப்புகும் நடிகையர்கள் கூடத் திருமணத்துக்குப் பின் நடிப்பது என் கணவரின் இசைவைப் பொறுத்தது என்று சொல்வதுதான் நம் பெண்ணினப் பெருமை. இவ்வாறு நடிகர்கள் சொல்வார்களா? இத்தமிழ் நாகரிகத்தை - இந்திய நாகரிகத்தை எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டும். மன்குல நன்மைக்காகவும் பெண்குல மேன்மைக்காகவும் பெண்மேல் ஐயப்பாடு என்ற பொருளை எழுத்துலகிலிருந்து ஒழித்துக் கொள்ள முடிந்தால் நல்லது. இன்றேல் குறைத்துக் கொள்ள வாவது வேண்டும். இக்கால ஆண் பெண் பணி நெருக்கத்தை விளையாட்டு வினைப்பொருளாக மேற் கொள்ளாமை பெண்ணினத்துக்கே காட்டும் பெருமதிப்பு. மனமாற்றம் எனும் உத்தி தீய உளவியல்களையே பறையறைந்து கொண்டிராமல் தீமை தீர்க்கும் நல்ல மனமாற்றங்களைச் சுவைபடச் சொல்லும் திறத்தை எழுத்தாளர்கள் வளர்த்துக் கொள்வார்களாக. பெண் குழந்தைகள் பிறப்பதைப் பெண்ணினமே விரும்பவில்லை. ஆண் குழந்தைகள் அடுத்தடுத்துப் பிறந்தாலும் மக்கள் மன்பதை மகிழ்ச்சி மீதூர்கின்றது. பெண்கருவெனத் தெரிந்தால் கருவை அழிக்கலாமா ஆணாகத் திரிக்கலாமா என்று தீய அறிவியல் துணைசெய்வதைக் கற்கின்றோம். தாய்மையுணர்ச்சியை மக்கள் வெல்லும் நாள் வருவதாயின் மக்களினத்திற்கே அழிவு நெருங்குவதாகும் என்பர். பெற்ற மனத்தின் புதினர் மு.வ.நான் மருமகளாக வந்தபோது என் மாமியாரால் பட்ட துன்பம் நான் மாமியாராகும் போது என் மருமகள் படுவாளாக என்ற நெடுங்கதையைத்தான் பாரத நாகரிகமாகக் காண்கின்றோம். பெண்கட்குச் சொத்துடைமை கொடுத்தாற்கூட வரன் விலைக் கொடுமை மாறிவிடும் என்று கருத முடியவில்லை. ஐயத்தாலும் வரன் விலைக்கொடுமையாலும் நகரங்களில் தற்கொலைகள் கூடுதலாகக் காண்கின்றோம். இதற்கு என் போல்வார் கருதும் ஒரு காரணம் நம் எழுத்துப் படைப்புகளின் முடிவுப் பிழையாகும். இந்நிலையில்தான் மனமாற்றம் என்ற ஓர் உத்தியை எழுத்தாளர்கள் கூடுதலாகக் கையாள வேண்டும். குடும்பவுறவுப் புதினங்களிலும் கதைகளிலும் நாடகங்களிலும் இந்த உத்திக்கு இடன் பெரிதும் உண்டு. சில எழுத்தாளர்கள் முன்பே இதனைச் செவ்வனம் கடைப்பிடித்துள்ளனர். வராகசாமியின் மனைவி மேனகா பணக்காரன் நயினாமுகமதுக்குச் சூழ்ச்சியால் விறக்கப்படுகின்றாள். அதனைப் பொறாத முகமதுவின் மனைவி நல்லாள் நூர்சகான் மேனகையின் கற்பைக் காப்பாற்றி மீண்டும் அவள் கணவனிடம் ஒப்படைத்து ஐயப்படாமல் இல்லறம் நடத்தச் செய்கின்றாள். இது வடுவூரார் காட்டும் (1920) நன் முடிபு. தேர்வில் தோற்ற சகந்நாதனும் அலைந்தும் வேலை கிடைக்காத மகாதேவனும் தற்கொலை செய்யப்போனவிடத்தில் சந்திக்கின்றார்கள். மனம் மாறி மகாதேவன் நிறுவனம் அமைத்து முன்னேறுகின்றனர். இது கல்கி கதையின் நல்லுத்தி. விதவை மணத்திலும் ஒரு மனமாற்றத்தினை ‘நினைவு முகம் மறக்கவில்லை’ என்ற கதையில் இராமையா புலப்படுத்துவர். விதவைத் திருமணம் நடந்த முதலிரவில் புதிய கணவன் தொடவரும்போது, முதற்கணவன் முகம் நினைவுக்கு வர உறவு நீங்கிற்று என்பது இக்கதையின் முடிவு. பிறன் மனையான சாவித்திரியும் இளையபாலுவும் கொண்ட சிறு மயக்கம் ஒரு காலத்தில் மறைந்தது என்பதனையும் எந்தத் துணிகரமான செயலுக்கும் ஒரு எல்லை உண்டு என்பதனையும் ‘மோகினி மாயை’ என்ற கதையில் கு.ப.இரா.துணிவுபடச் சொல்கின்றார். அண்மைக் காலத்தும் இத்தகைய மனமாற்ற உத்திக் கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. ‘மகள் மருமகள்’ என்ற கதையில் தன் மருமகள் இலக்குமியை துன்புறுத்திய ஒரு மாமி தன் மகள் அவள் மாமியால் துன்புறுத்தப்பட்டுத் திரும்பியதைக் கண்டபோது உண்மை நிலை புரிந்ததாம். குழந்தையொடு இருந்த விதவை கல்யாணியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான் பெரும் பட்டதாரி இராமநாதன். அதனை மறுத்துக் கொண்டிருந்த தாய் மீனாட்சி தன் மகன் நோய் வாய்ப்பட்டு மெலிந்து போவதைப் பார்த்து மனமாறினாள் என்ற முடிவைப் ‘புதியதோர் உலகஞ் செய்வோம்’ என்ற கதை சொல்லுகின்றது. திடீரென்ற மனமாற்றத்தால் பத்துவகையான தற்கொலைகள் நின்று விட்டன என்பதனையும் தற்கொலை வேகம் முதல் நொடியில் தோன்றும்; மறுநொடியில் ஒழியும் என்பதனையும் ‘ஒரு நொடியில்’ என்ற என் நாடகத்தில் வலியுறுத்தியுள்ளேன். தீய முடிவுகளைச் சொல்லித் துன்பியலாக முடிவதுமட்டும் நடப்பியல் ஆகாது. எப்படி நடக்க வேண்டும் என்பதும் நடப்பியலுள் அடங்கும். இன்பியலாகவே முடிக்க வேண்டும் என்பது என் கருத்தன்று. துன்ப நிறுத்தமாக மனமாற்ற வுத்தியைக் குடும்பவுறவில் பெரியவளவில் கடைப்பிடிக்கலாமே என்பது என் கருத்து. வீடணன் கும்பகருணன் கூறியவற்றை வீணைக்கொடியோன் இராவணன் நற்சிந்தனை செய்தான்; முதிய அரச கணவனின் படுதுயரை உணர்ந்து கைகேசி வரங்கேட்க விரும்பவில்லை; கண்ணபிரான் தூது சென்றதை மதித்து அரவக்கொடியோன் துரியோதனன் ஓரளவு ஊர்களை விட்டுக் கொடுக்க முன்வந்தான்; கடற்கானலில் மாதவியைக் கைந்நெகிழ்ந்த கோவலன் மனச்செம்மையனாய்க் கண்ணகி நல்லாளோடு புகார் நகரில் இல்லறம் நடத்தி மக்களைப் பெற்றான்; இவ்வாறு பேரிலக்கியங்களில் நிகழ் மாற்றங்கள் செய்வது மன்பதைக்கு வழிகாட்டும் அல்லவா? எழுத்தாற்றல் என்பது யாது? அதன் பயன் என்ன? வாசகர்கட்கு மனமெலிவைத் தாராதது, மெலிந்த மனத்தை நிமிர்த்துவது, புதுத்தெம்பு மின்னலை போல் பாய்ச்சுவது, தற்சிந்தனையைக் கிளறுவது, இதுவே எழுத்தின் அறுவடையாகும். உத்திகளின் மீட்சி நெடிய தொல்லிய வளமான இலக்கியப் பரம்பரை நமக்கு உண்டு என இவ்வுரையின் தொடக்கத்துச் சுட்டினேன். கவிதை, நாடகம், புதினம், சிறுகதை என வாங்கு இலக்கியம் எவ்வகை யாயினும் உத்திகள் புழங்கு பொருள்போல் அவ்வளவு பழமைப் பட்டு விடுவதில்லை. மனித மனங்கள் அடிக்கடி மாற்றத்தை நச்சும்போது பழமை புதுக்கவர்ச்சி பெறும். பழமைப்படங்கள் தொலைக்காட்சியில் மீண்டும் திரைப்படுவதை மக்கள் ஆவலோடு களிக்கின்றார்கள் அல்லவா? நம் பண்டையிலக் கியங்கள் காலக்கோட்படாத உத்தியங்கள் கொண்டவை. சில எடுத்துக்காட்டு. ‘பூவிழி வாசலிலே’ என்பது அண்மையில் வந்த அருமைத் திரைப்படம். சிறுகுழந்தையின் ஊமை நடிப்புத் திறம்மிக்க மெய்ப்பாட்டுத் திரைக்கலை இது. இதில் ஒரு சுவையான களம்: இளங்காவலன் ஊமைக் குழந்தையிடம், ஒருவனைச் சுட்டிக்காட்டி, இவன் தானே அவர்களைக் குத்திக் கொன்றவன் என்று கேட்கின்றான். அந்த இவன் பெற்றோரைப் பிரிந்த அக்குழந்தையைப் பல வகைகயிலும் காத்து வளர்த்தவன். அதனால் அக்குழந்தை சினந்து தன் கையில் இருந்த குத்துவாளை அக்காவலன் மேல் எறிகின்றது. அவ்வாள் அவன் வாயைக் கிழிக்க இரத்தம் பீறிடுகின்றது. இதன் உத்தி என்ன? தன்னைக் காத்த இந்நல்லவனை அக்காவலன் குற்றப்படுத்து கின்றானே என்று குற்றஞ் சொன்ன அந்த வாயைக் குத்தியது குழந்தை. இந்தத் திரையுத்தி பழைய இலக்கிய வுத்தியின் மீட்சியாகும். தருகெனத் தந்து தன்முன் வைப்பக் கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே என்பது சிலப்பதிகாரம். தன் கணவன் கோவலனைக் கள்வன் எனவும் அவனைக் கொல்லுக எனவும் பொய்க் குற்றஞ் சாட்டிய பாண்டியனின் அத்தீவாய் தெறிக்கும்படி கண்ணகியின் சிலம்புமணி தாக்கிற்று என்பர் இளங்கோவடிகள். பொய் சொன்ன வாயைக் கிழி என்பது உலகப் பேச்சு. ‘அழியாச் சுடர்’என்பது மௌனி கதைகளுள் ஒன்று. “கற்பனையின் எல்லைக் கோட்டில் நின்று வார்த்தைகளுக்குள் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக் கொண்டுவரக் கூடியவர் மௌனி ஒருவரே’ என்று பாராட்டுவர் அவருக்கு நிகரான புதுமைப்பித்தன். கோயிலில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு தங்கையைக் கண்ட கல்லூரி மாணவன் மீண்டும் அவளை அக்கோயிற் புறத்துக் கண்டு சில இன்பச் சொற்களை உளறினான். அவளும் காண்கின்றாள். இந்நிகழ்ச்சியை அக்காதலன் தன் நண்பனிடம் சொல்லும்போது, “அவளுக்கு மட்டுந்தானா நான் சொன்னது கேட்டது என்பதில்லை. எனக்கு அப்பொழுதே சந்தேகம். உள்ளிருந்த விக்கிரகம், எதிர்த்தூணில் ஒன்றி நின்ற யாளி அவையும் கேட்டு நின்றன” என்று அஃறிணைச் சான்றுபடச் சொல்லுகின்றான். காதற்பேச்சுக்கு அஃறிணைக் கரி காட்டும் உத்தி சங்ககாலத்திலே உண்டு. யாரும் இல்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே என்ற குறுந்தொகையில் களவுத் தலைவி தலைவனொடு உறவாடியதற்குச் சான்று மனித்தரில் யாருமில்லை யானாலும், ஓடும் நீரில் ஆரல் மீனை எதிர்பார்த்திரக்கும் நாரை அச்சமயம் இருந்தது என்று இயற்கைக்கரி சுட்டுகின்றாள். இதனால் நுண்ணிய உத்திகட்குக் காலவடைப்பான் இல்லை என்ற படைப்பிய வரலாறு பெறப்படும். எனவே எதிர்காலம் என்பது இலக்கியப் பழத்தொடர்காலமேயன்றி அறுந்து தோன்றும் தனிய காலமன்று. தமிழ் எழுத்தாளரின் மொழிக் கடமை தமிழ் எழுத்தாளர் பரம்பரை, எழுத்தாளர் வாழ்வு வளம், காதல் நடப்பியல், இலக்கியப் பொருட்கள், ஐயப்படாமை, மனமாற்றவுத்தி என்ற சில கருத்துக்களை இதுகாறும் உரைசெய்தேன். என் சிந்தனைக்குள் பல்லாண்டுகளாகக் கவலையாக ஓடிக் கதப்படுத்திக் கொண்டிருக்கும் கசப்பான தூய தமிழ்மொழி நெறியை இப்போது சொல்ல முயல்கின்றேன். கருத்து வேறுபாடுகள் உடைய செய்திதான். ஆனால் மன வேறுபாடு இல்லை; என்றாலும் சொல்ல வேண்டிய மாநாட்டில் கேட்க வேண்டியவர்கள் குழுமி வந்திருக்கும் வாய்ப்பை நழுவ விடலாமா? இம்மாநாடு கூடுதற்கு அரியது; அதே நேரத்தில் தமிழ் உய்தற்கும் உரியதல்லவா? சிந்தியுங்கள் என்பதுவே என் வேண்டுகோள். புதினம், சிறுகதை, நாடகம் முதலிய எழுத்துப் பெருமக்களிடம் வளர்ந்து வரும் மொழிக்குறை யாது? கண்ட சொற்களையெல்லாம் தமிழெழுத்து வடிவில் எழுதி விடுவதனால் தமிழ்மொழியாகி விடாது. இந்நூல் எம்மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதே சில நூல்களுக்கு மயக்க மாகின்றது. 20 முதல் 70 விழுக்காடு வரை ஆங்கில முதலான கலப்புக் காணலாம். ஆங்கிலத்தில் தமிழ் கலந்துள்ளதா? தமிழில் ஆங்கிலம் கலந்துள்ளதா? எந்த மொழி? என நகையாடத் தோன்றுகின்றது. உருபுகள் வினையீறுகள்தாம் தமிழ் போலவுள. பஞ்சபூதங்களின் நுட்பங்கள் கூறும் அறிவியல்களைச் சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை என்பது கேட்டுக் கொதித்தார் பாரதியார். புதினங்கள் சிறுகதை நாடகம் புதுக்கவிதை யெல்லாம் அறிவியலா? அகத்திணை யிலக்கியமும் பெருங்காப்பியங்களும் படைத்த தமிழ்மொழிக்கண் குடும்ப உறவுகளையும் காதலுணர்வு களையும் சொல்லுதற்குக் கூடவா கிளவிகள் இல்லை? அலுவலகப் பெண்கள் உரையாடல், மருத்துவர் உரையாடல், கல்லூரி மாணவ மாணவியர் உரையாடல்; களவுக்காதலர் காதலிகள் உரையாடல் என்றால் அப்பகுதியெல்லாம் ஆங்கிலமாகத்தான் இருக்கவேண்டுமோ? தமிழாக இருந்தால் யதார்த்தம் ஆகாது என்று ஒரு புது மாயையை அடிக்கடி சொல்லக் கேட்கின்றோம். அப்படியானால் அவற்றை ஒரு நூலாக வடிப்பதுங்கூட யதார்த்தமில்லை என்று சொல்லலாம். அத்தகைய பகுதிகளை ஆங்கில எழுத்தால் எழுதுவதுதான் யதார்த்தம் என்று சொல்லவேண்டும். இவ்வுரையாடல்களையும் இடையிடையே வரும் ஆங்கிலச் சொற்களையும் ஆங்கில எழுத்தாலே எழுதுங்கள். உண்மை வெளிச்சமாகும். ஏன், இத்தகைய புதின முதலியவை ஆங்கிலம் படித்த கற்றாரை நோக்கியே எழுதப்படுவன; சிலபெரு நகரங்களையும் சில தெருக்களையும் எண்ணியே எழுதப்படுவன; சிலவகை அயல்மேல் நாகரிகத் தினரை மனத்துட் கொண்டே எழுதப்படுவன; ஆதலின் ஆங்கில வுரையாடல்கள் அவ்வெழுத்திலே இருப்பது அவ்வாசகர்கட்கு இன்னும் எளிதாய் புரியுமே, தமிழ் நூல் என்ற மாயையும் மறையுமே. வாசகர்களைத் தவறான கலப்பு மொழிவழியில் மேலும் மேலும் பழக்கிவிட்டு அவர்கட்கு அதுதான் எளிதாகப் புரிகின்றது என்று ஏதீடு கூறுவது பொருந்தாது. தாம் எழுத்தர் அல்லர், தமிழ் எழுத்தாளர் என்ற பெயருக்கேற்ப மொழிக் காப்பும் மொழியாக்கமும் தமிழ் எழுத்துச் சான்றோர் பொறுப்பாகும். இக்கொள்கையினர் கருதுவதுபோல் நடப்பியம் என்பதற்கு இதுவே பொருளானால், உலகில் அரசுத் தலைவர்கள் பேச்செல்லாம் அவரவர் பேசிய வெவ்வேறு மொழிகளில் தாளிகைகள் வெளியிட வேண்டுமல்லவா? அவ்வாறே வானொலிக்க வேண்டுமல்லவா? அப்புறம் மொழி பெயர்ப்புக்கு என்ன வேலை? கருத்துக்கள்தாம் புலப்படுத்தப்படுமேயன்றி அவ்வம்மொழிகள் தழுவப் படுவதில்லை என்பதுவே நடைமுறை நடப்பியம். கருத்தைப் புலப்படுத்தும் ஒரு கருவியே மொழி என்பது தொடக்கக் கருத்து. இறைவன் நீங்கலாக உலகத்து எப்பொருளும் கருவிகளே. இறைவனைக்கூட நிமித்த காரணன் என்ப. உடம்பும் ஐம்பொறிகளும், ஊர்திகளும் தகவலியங்களும் கருவிகள்தாம். இவற்றின் தூய்மைக்கும் செம்மைக்கும் ஒழுங்குக்கும் எவ்வளவு ஆய்வு நடத்துகின்றோம். உடல் நலத்துக்கென உலகம் எவ்வளவு கோடிகள் செலவழிக்கின்றது; உடல் மாயும் கருவிதானே என்று பேசுவது அறியாமையன்றோ? மொழி என்பது மனிதவுடைமை; பண்டு இன்று நாளை என எக்காலத்துக்கும் இயங்குடைமை. அதனாற்றான் ‘வாழிய செந்தமிழ்’ என்றார் பாரதியார் ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாரதிதாசனார். முன்பெல்லாம் ஆங்கிலச் சொல் அரிதே கலக்கும். சில ஆண்டுகளாகப் பத்தி பத்தியாகவும் பக்கம் பக்கமாகவும் ஆங்கிலத்தில் எழுதித் தமிழைக் கலக்குகின்றார்கள். தமிழ்எழுத்து வடிவில் எழுதிவிடுவதால் வெளிப்படையாகக் குறைபாடு தெரியவில்லை. யதார்த்தம் பேசுவோர் ஆங்கிலக் கலப்பை ஆங்கில எழுத்திலே எழுதுவார்களா? அப்போது அருவருப்பு ஏற்படும். உண்மைத் தோற்றம் தெரிவதற்காக இங்ஙனம் சுட்டிக் காட்டுகின்றேன். பாத்திரங்கட்குத் தக்க மரூஉச்சொற்களை, வட்டாரச் சொற்களை, குழுவினச் சொற்களை நோக்கப்படி ஆளலாம். ‘குறிஞ்சித்தேன்’ என்ற புதினம் படக மொழியிலும் புத்தம் வீடு, தலைமுறைகள், தலைகீழ் விகிதங்கள் என்ற புதினங்கள் வட்டார மொழிகளிலும் இருந்தாலும் மொழி யெல்லைக்குள் அமைந்தவை. மொழிநடைகள் பாத்திரங்கட்குத்தக மாறலாம். இது இசைவானது இதனை விடுத்துப் பாத்திரங்கட்குத்தகத் தமிழ் நூலில் மொழியே மாறும் என்பது எவ்வகையிலும் உடன்படத்தக்கதன்று. எழுத்துச்சான்றோர்களே, என் சுருக்கமான இன்றைய வேண்டுகோள் இதுவே. முடிந்தவரை தமிழ்சசொற்களைக் கூடுதலாகப் பயன்படுத்துங்கள். எழுத்தாளர் கலக்கும் ஆங்கில முதலான அயற்சொற்கள் தேவையற்றவை. அவற்றுக்கு உரிய தமிழ்ச்சொற்கள் பலவுள. உள்ள நல்ல தமிழக் கிளவிகள்கூட வாழ வாய்ப்பும் உரிமையும் தமிழெழுத்தாளர்களே வழங்காதிருப்பது அரக்கமாகும். ஆங்கிலச் சொற்கள் கலந்த நூல்கள் மறுபதிப்பாகும்போது நல்ல தமிழாக மாற்றுங்கள். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஈடுகளும் பிறவும் மணிப்பிரவாளமாக இருந்தமையின் சென்னைப் பல்கலைக் கழகம் அவற்றைத் தமிழாக்கம் செய்த வரலாற்றை நினைவு படுத்த விரும்புகின்றேன். ஒருவர் கூறினார், சில தமிழ்ப் புதினங்களை ஆங்கிலப்படுத்துவது எளிது; செய்யவேண்டியது எழுத்து மாற்றந்தானாம். ‘மாவண் தமிழ்த்திறம்’ என்று மணிமேகலைச் சாத்தனார் மொழிந்தபடி, தமிழுக்குப் பல துறைகளைச் சொல்லும் திறமுண்டு; எழுத்தாளர்களாகிய நமக்குத் தமிழாக எழுதும் ஆற்றலும் உண்டு. தவறான மொழிக் கொள்கைப் போக்கால் நம் படைப்புக்கள் வலுவிழக்கின்றன. நம் படைப்புக்கு நிலைபேறு தருவது உயர் கருத்து மட்டுமன்று; உயர் தனிச்செம்மொழியும் ஆகும். வ.வே.சு.ஐயர் எழுதுகின்றார். ‘கடைசிக் கதையாவது எங்கள் ஊர்க் குளத்தங்கரை அரச மரத்தால் சொல்லப்பட்டது. அது நன்னூல் முதலிய இலக்கணங்கள் படித்ததில்லை. கிட்டத்தட்ட அது பேசியபடியே எழுதி யிருக்கின்றதனால் படிப்போர் அக்கதையில் செந்தமிழை எதிர்பார்க்க மாட்டார்கள் என நம்புகின்றேன். இருப்பினும் முற்றிலும் அது பேசியபடியே எழுதினால் இன்று, போதும் என்பன போன்ற வார்த்தைகளை இன்னு, போரும் என்று எழுத வேண்டி வரும். படிப்போர் பொருள் கண்டுபிடிப்பது கஷ்டமாய்ப் போய்விடும் என நினைத்து அவை, போன்ற மொழிகளை இலக்கணப்படுத்தியே எழுதி யிருக்கிறேன். ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழ்மொழிச் செம்மை குறித்து வரைந்த கோட்பாடு இன்றைய எழுத்தாளர்கட்கு வேண்டிய அறிவுரையாகும். ‘நிலைபெறுமாறு எண்ணுதியேல்’ என்று நாவுக்கரசர் கேட்டபடி நம் புதுமைப் படைப்புக்கள் எதிர்கால மன்பதைக்குச் சென்று இயக்க வேண்டுமானால் தமிழ் எழுத்தாளர்கள் பெயருக்குத் தகுந்த தனித்தமிழ் எழுத்தாளர் களாக ஒளிபெறல் வேண்டும். இதுவே நிலைபேறும் வழிப்பேறும் ஆகும். இதுவே நம் வேண்டுகோள். 2. இலக்கிய முத்திறன் இன்று நாம் வளர்க்க முனையும் எல்லாத் துறைகளும் தமிழ்மொழிக்குப் புதியனவல்ல. சில துறைகள் வேரோடிப் பரந்தவை; சில துறைகள் விழுதுவிட்டவை; சில துறைகள் பிஞ்சளவில் வெம்பியவை; சில துறைகள் அரும்பளவில் நின்றவை; சில பல துறைகள் அயல் விதைகளின்று எழுந்தவை. தமிழைத் தொன்மொழிகளுள் ஒன்றாகப் பாராட்டி, ஞாலமொழிகளுள் ஒன்றாக உயர்த்த விரும்பும் நம் முயற்சிக்கிடையே முன்னரே பண்பட்ட பகுதிகளை மறத்தல் கூடாது. ஒரு துறையை அதன் முன்னை நிலையை அறிந்து வளர்ப்போமாயின், வளர்வதன் பாத்தியுள்நீர் சொரிந்தற்று என்பதுபோல், தமிழும் வளரும்; தமிழால் அத்துறை புதிய உரம் பெற்று உலகப் பயனும் செய்யும். தொன்மை இலக்கியச் செல்வம் பெற்ற மொழிகளுள் தமிழும் தன்னேரில்லாத ஒன்று. சங்கங்கள் வைத்தும், அகம் புறம் எனத் திணைகள் வகுத்தும், ஆயிரத்துக்கும் மேலான புலமைச் சான்றோர்களைப் படைத்தும் வளர்ந்தது நம் இலக்கியம். இத்தகைய நீண்டுயர்ந்த ஆக்கம் திறனாய் வின்றி அமையாது. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் என்று வாழ்க்கைத்திறன் கண்ட நம் முன்னோர் அவ்வாழ்க்கையைப் பொருளாக உடைய இலக்கியத்திறனையும் கண்டிருந்தனர். ஆதலின் இலக்கியம் பற்றிய திறனாய்வு தமிழுக்குப் புதிய துறையன்று என அறிக. திறத்துறை இலக்கியத்தினின்றும் வேறானதன்று இலக்கணம்; ஒரு செய்யுட்கண் ஐந்திலக்கணமும் உள. எனினும் அகத் தன்மையான இலக்கணத்தைத் தனித்துறையாகக் கொண்டு நம்மனோர் இலக்கணக் கலையைப் பலவாறு வளர்த்தனர். இலக்கிய வளர்ச்சியோடு இலக்கண வளர்ச்சியும் ஏற்பட்டது. திறனாய்வும் இலக்கியத்தின் வேறானதன்று. இக்கூட்டுறவை நம்மனோர் அறிந்திருந்தும், அதனை ஒரு துறையாகத் தனித்தெடுத்துக் கலையாக வளர்க்கவில்லை; ஆய்வு முறைகளை வகுத்து நூல்களைப் பெருக்கவில்லை. இன்று இலக்கியத் திறனை தனித்துறையாக மேற்கொண்டு வளர்க்க முயல்கின்றோம். இது மேனாட்டுக் கல்வியால் பெற்ற பேறாகும். முன்னரே இலக்கியச் செல்வங்கள் நிரம்பிய தமிழுக்கு இத்துறை நலம் செய்யும். எச்செல்வமாயினும் உடையான் துய்க்கத் தெரிதல் வேண்டுமன்றோ? நல்ல சரக்காயினும் இக்காலத்து விளம்பரம் வேண்டும். திறனூல்களின் பெருக்கத்தால் தமிழில் உள்ள எல்லா இலக்கியங்களும் வாழ வழியுண்டு; அவற்றைப் பற்றி ஓரளவேனும் மக்கள் அறியவாய்ப்பு உண்டு; குடியரசு ஓங்கும் இக்காலத்து மக்களை இலக்கியச் செல்வர்களாக உயர்த்தி னாற்றான், நூல்களின் விற்பனை பரவி நிலைக்க இடம் உண்டு. நலம்பல பயக்கும் திறனாய்வுத் துறையில் கேடுகளும் இல்லாமலில்லை. இத்துறை குறைவிலா நிறைவு என்று திறனாளிகள் சொல்லார். திறன் வளர்ச்சியால் இலக்கிய மூலப்படைப்புக்கள் குறையலாம்; சொல்வன்மையுடைய திறனாளனது கருத்தையே நூலாசிரியரது கருத்தாகக் கற்பவர் கொண்டு விடலாம்; திறநூலில் சில பகுதிகளை அறிந்த துணையானே மூலநூலில் கைவரப்பெற்றது போன்ற புல்லறிவை வளர்க்கலாம்; மூலநூலைப் படிக்க வேண்டா என்ற போக்கையும் ஊட்டலாம். இன்னணம் திறனாய்வுத் துறையின் குறைகளை அடுக்கிச் சொல்ல முடியும். ‘யார் உலகத்து ஓர் சொல்லில்லார்’என்றபடி எத்துறையும் எண்ணுங் காலைக் குறைபாடுடையதே. குறைபாடு துறைக்கு இயற்கையன்று; துறையாளர்களின் அறிவையும் பண்பையும் நோக்கத்தையும் சார்ந்தது. இப்புதுத் திறனாய்வைத் தனித்திறன் என்று அழைப்போம். இலக்கியம் செறிந்தும், ஒளி குன்றியிருக்கும் தமிழுக்கு இத்தனித் திறன் வேண்டும். உரைநடை பெருகிவரும் இக்காலத்து இத்திறனாய்வை எளிதாக மேற்கொள்ள முடியும். எனினும் திறனாய்வுத் துறையின் ஒரு வகையாகவே இத் தனித்திறனை நாம் கருதவேண்டும். இதுவே முழுத் துறையாகாது. அரங்கேற்றங்கள் தொன்றுதொட்டுத் தமிழகத்து இரண்டு வகையான இலக்கியத் திறன்கள் வளர்ந்து வந்துள்ளன. ஒருவன் பல எண்ணங்களை எண்ணலாம். அஃது அவன் நெஞ்சுரிமை; அவ்வெண்ணங்களுக்கு இலக்கியமாக ஏன் வடிவு கொடுக்கிறான்? அவை மன்னுலகில் பரவ வேண்டும் என்பது அவன் நோக்கம். ஒருவன் கருத்துடைமையை மன்னாய உடைமையாக மாற்றும் பதிவேடே - வனப்பேடே இலக்கியம் என்பது. பைஞ்ஞிலம் மிகப்பெரியது; பரந்தது; சிக்கலானது. அது தன் இலக்கியத்தை ஏற்கும் என்ற நன்னம்பிக்கை எழுத்தாளனுக்குப் பிறப்பது எப்படி? இவன் இலக்கியம் கற்கத் தகுவது என்ற பெருநம்பிக்கை மன்னாயத்தார்க்கு உண்டாவது தான் எங்ஙனம்? இவ்விரு பகுதியார்க்கும் நம்பிக்கையூட்டும் நடுவமைப்பே அரங்கேற்றம் என்பது. புலவனின் தனித்தன்மை குறையாதும், மன்னாயத்தின் பொதுத் தன்மை கெடாதும் பார்த்துக் கொள்கை இவ்வரங்கின் கடமையாகும். முத்தமிழுக்கும் அரங்கேற்றம் பண்டு இருந்தது. இன்று திரைப்படத் தணிக்கைக் குழுவை இதற்கு ஒருவாறு ஒப்பிடலாம். தொல்காப்பியம் நூல் அரங்கேற்றம் பற்றிய பல குறிப்புக்கள் நமக்குக் கிடைத்துள்ளன. தொல்காப்பியம் நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையத்து அரங்கேறிற்று. நான்மறை முற்றிய அதங் கோட்டாசான் அரங்கின் தலைவராவார். தொல்காப்பியத் திற்குக் குற்றங்கூறி அரங்கேறாதபடி செய்க என்று அகத்தியனார் அதங்கோட்டாசானுக்குச் சொன்னார் என்றும், அதன்படி இவ்வாசான் பல வினாக்களைக் கேட்டார் என்றும் ஒரு கதையுண்டு. அரங்கேறாதாயின் நூல் பரவாது என்பது இததன் உட்கிடை, தம் நூல் எழுத்துமுறைகளை மயங்காது கூறுவது எனவும் பிற குற்றங்கள் இல்லது எனவும் தொல்காப்பியர் எடுத்துக்காட்டினர். ‘அரில்தபத் தெரிந்து’ என்பது பாயிரம், அரங்கேற்றத்தின் பின் இப்பாயிரம் பனம்பாரனாரால் வழங்கப்பெற்றது. மன்பதை ஏற்கலாம், மாணவர் கற்கலாம், படி எடுத்துக்கொள்ளலாம் என்பதற்குப் பாயிரம் முத்திரையாகும். ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே என்பதனால், பாயிரத்தின் ஆற்றல் பெறப்படும். நூல் முகத்துப் பாயிரம் இல்லா ஏடு பனுவலாகவே மதிக்கப்படாது. திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்றும், திருவள்ளுவமாலை சிறப்புப் பாயிரம் ஆம் என்றும் சொல்லுப. சிலப்பதிகாரம் சாத்தனார் முன்னிலையிலும், மணிமேகலை இளங்கோ முன்னிலையிலும் அரங்கேறின. திருத்தக்கதேவர் சங்கப்புலவர் முன்னர் சீவக சிந்தாமணியை அரங்கேற்றியபோது, இளந்துறவி காமச்சுவையை இல்லறத்தாரும் வியப்பப் பாடவல்ல திறம்யாண்டுப் பெற்றனர் என்ற வினா எழுந்ததாம். சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய முதலுரை சமணப் பெரியோர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டிலது என்றும், சமண மரபுகளையும் மெய்ம்மைகளையும் நன்கு கற்றபின் அவர் எழுதிய இரண்டாவது உரையே ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அறிகின்றோம். இவர் தம் சமணவறிவுக்கு முத்தியிலம்பகவுரை சான்றாகும். இச்செய்தியால் கவியரங் கேற்றம் போல உரை யரங்கேற்றமும் நிகழ்ந்தமை அறியப்படும். இராமாயணம் கம்பர் தம் இராமாயண அரங்கேற்றம் பற்றிய குறிப்புக்கள் செவி வழியாக வந்துள. தில்லை மூவாயிரவர்களும் திருநறுங்கொண்டைச் சமணர்களும் இக்காப்பியத்தை முதலில் ஒப்பினார்கள். இச்செய்தி இந்நூல் மதவெறுப்பற்ற பொது நோக்குடையது என்பதற்கு ஒரு சான்று, ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’ என்னும் கடவுள்வாழ்த்து பொதுவாக அமைந்திருத்தலையும் நோக்குக. சைவர்களும் சமணர்களும் பாராட்டுத் தெரிவித்த பின், நாதமுனி தலைமையில் திருவரங்கத்தில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. ‘கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே’ என்று ஒரு தனியன் கூறுகின்றது. கம்பர் தம்மைப் புரந்த சடையப்பர் மேல் நூற்றுக்கு ஒன்று விழுக்காடாகப் பதினாயிரம் பாடல் கொண்ட தம் காப்பியத்து நூறுபாடல் பாடியிருந்தார். தெய்வ மணங்கமழும் நூலகத்து அடிக்கடி மனிதப்பாடல் இருப்பது சரியில்லை என்றும், ஆயிரத்துக்கு ஒரு பாடலாகப் பத்துப்பாடல் சடையப்பருக்கு இருந்தாற் போதுமென்றும் நாதமுனி கருத்துரைத்தார். நூற்றுக்கு ஒருவராகச் சடையப்பரை மதித்தேன்; தாங்கள் சொல்வதுபோல அப்பெரு மகன் ஆயிரத்துக்கு ஒருவராக மதிக்கத்தக்கவர் என்று கம்பர் ஒட்பமாக மறுமொழி கூறினார். பாடியிருந்த தொண்ணூறு பாடல்களையும் அகற்றினார். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டம் கம்பருக்கு வழங்கப்பட்டது. அதிவீரராம பாண்டியர் எழுதிய நைடதம் காமச்சுவை நிரம்பியது. மகனது தமிழறிவு இத்துறையில் கழிகின்றதே என அவர் தாய் அவலங்கொண்டாள். அதனால் நூலின் பிற்பகுதியை ஆர்வமின்றி அதிவீரராமர் எழுதிமுடித்தார். இந்நூல் கரும்பு போன்றது என்றும் வேட்டைநாய் போன்றது என்றும் அவையோர் குறை கூறினர். நைடத நூலில் அவையடக்கம் என்பது இல்லை. தாம் வேந்தனாகலின் அவையடக்கம் கூற வேண்டியதில்லை என்று அரங்கின்முன் காரணங்கள் கூறினார் என்ப. காஞ்சிப் புராணம் ‘கொங்கேந்து மணிமன்றுள் குனித்தருளும் பெரு வாழ்வைக் குறித்து வாழ்வோம்’ என முதற்கண் தில்லைச்சிற்றம்பல முடையார் வணக்கம் காஞ்சிப் புராணத்துக் கூறப்பட்டுள்ளது. காஞ்சித் தலத்து ஏகாம்பரநாதர் வணக்கத்தை இரண்டாவதாகக் கூறினார் சிவஞான முனிவர். தலக்கடவுளின் வணக்கமே முதலில் இருத்தல் வேண்டுமென அரங்கிற் சிலர் வாதாடினர். உடனே முனிவர் காஞ்சித் தல ஓதுவாரை அழைத்துக் காஞ்சித் தேவாரங்களை ஓதும்படி மொழிந்தனர். ஓதுவார் முதற்கண் திருச்சிற்றம்பலம் எனத் தொடங்கினார். இதனால் எத்தலத்தைப் பாடினும் முதலில் திருச்சிற்றம் பலத்தைச் சொல்லும் சைவ மரபினை அரங்கினர்க்கு நினைவூட்டித் தாம் பாடிய முறை தகும் என்று அறிவுறுத்தினார் முனிவர். அவரை ஆதரித்தவர் பிள்ளையார் பாளையம் மணியப்ப முதலியார். அவர் மேல் செய்ந்நன்றிப் பாடல் ஒன்று காஞ்சிப் புராணத்துப் பாடி வைத்திருந்தார் முனிவர். தம் பெயர் சுட்டவேண்டா என்று மணியப்பர் வேண்டியபடி முதலில் எழுதியிருந்த செய்யுளைப் பின்வருமாறு மாற்றி அமைத்தார். பொருவில் கச்சியம் புராணம் வண்டமிழினிற் புகலென்று இருநி லம்புகழ் மணிமதிற் கச்சியே கம்பர் திருவ ருட்குரி யான்தவா கூறிய சிறப்பால் உரிமை யுற்றெழும் ஆசையான் உரைத்திட லுற்றேன் மணி என்று முதலியாரின் பெயர் மறைமுகமாக இச்செய்யுளில் அமைந்திருத்தலைக் காணலாம். மகாவித்துவான் இராகவையங்கார் பாடிய பாரிகாதையும், மூதறிஞர் சோமசுந்தர பாரதியார் பாடிய மங்கலக்குறிச்சிப் பொங்கல் வாழ்த்தும் அண்ணாமலை நகரில் சில ஆண்டுகளுக்கு முன் புலவர்கள் முன்னிலையில் அரங்கேறின. நூற் செம்மைகள் அரங்கேற்றுகையில் அவையோர் எழுப்பும் தடைகளுக்கு ஒப்பும் விடை ஆசிரியன் சொல்வான் அல்லது தடைகளுக்குச் செவிசாய்த்து நூலகத்துத் திருத்தஞ்செய்து கொள்வான். சில சொற்களேனும் சில தொடர்களேனும் அவையோரால் செம்மைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கம்பர் தொண்ணூறு பாடல்களை ஒதுக்கினார் என்று பார்த்தோம். நூல் வெளிவந்து பலர்படி எடுப்பதற்குமுன் அரங்கேற்றத் திறனாய்வு எழுதலின், இவ்வகையை ‘அகத்திறன்’ என்று அழைக்கலாம். பலர்க்குமுன் நேரிருந்து அரங்கேற்றுதல் என்னும் முறை இருக்குமாயின் புலவன் தானே தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு நூல் எழுதுவான். தன்னைக் கட்டுப்படுத்திய ஒருவன் செய்யும் நூல் மன்னாயத்துக்குக் கேடு விளைக்காது. அவையடக் கியலே அரில்தபத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்று எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே என்பர் தொல்காப்பியர். நேர்நின்று நூலொப்புதல் பெற வேண்டுமாதலின், புலவன் மிகப்பணிவோடு அரங்கினோரை மதிக்க வேண்டியவனாகின்றான். இந்த அகத்திறனில், சில புதுக்கூறுகள் மரபுக்கு ஒவ்வா என்று அரங்குப் புலவோர் மறுக்கலாம்; காழ்ப்பின் காரணமாக இல்லாக் குறைகளை ஏற்றலாம்; விரைந்த இலக்கிய வளர்ச்சிக்கும் நூல்களின் பெருக்கத்திற்கும் இடையூறாகலாம். இக்குறைபாடுகள் முன்சொல்லியபடி, அகத்திறன் என்ற முறையின் குறைகள் அல்ல. ‘திருத்தங்கள் கூறுவாராயின் மனமுவந்து செய்ந்நன்றியோடு வரவேற்பேன்’ என்று முன்னுரையில் இன்றும் பலர் எழுதுவர். இதனால் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற நல்லுணர்ச்சி எழுத்தாளர்க்கு இயல்பாக உண்டு என்பது பெறப்படும். ஆயிரக்கணக்கான படிகளை அச்சாக்கி நாட்டில் பரவவிட்டபின், திருத்திக்கொள்ளும் ஆசைக்குப் பெரும் பயனில்லை. நம் நூலின் பிழைகளை அறிந்துகொள்வதற்காகவா எண்ணிறந்த படிகளை அடித்து வெளியாக்குகின்றோம்? ஒருகால் மறுபதிப்பில் சில திருத்தங்கள் செய்யலாம். பெரிய திருத்தங்கள் செய்வதற்கு யார்க்கும் மானவுணர்ச்சி இடங்கொடாது. செவ்விய நூலை மன்னுலகிற்கு அளிப்பதுவே எழுத்தாளரின் தலையாய ஒழுக்கமாகும். நாம் எழுதும் கடிதத்தைக்கூட அஞ்சற் படுத்துமுன், பிறரைப் பார்க்கச் செய்கின்றோம். எனின், மன்குல வுடைமை யாகும் நூலுக்குச் செப்பம் மிக இன்றியமையாதது என்று கழறவும் வேண்டுமோ? நூற்செம்மை ஒருவனாலோ ஊராலோ அமையாது. அரங்கேற்றம் போன்ற குறிய நடுநிலை அமைப்பினாற்றான் அமையமுடியும். நூலின் மூலத்தைத் தூய்மை செய்யும் இவ்வகத் திறனை எந்த அளவிலேனும் ஆசிரியன் காலத்திற்கேற்ப எளியமுறையில் அமைத்துக் கொள்வானாக. இன்று கவியரங்கங்கள் ஓரளவு இம்முறை தழுவியன என்று கூறலாம். செய்யுள் நூல்கள்தாம் அரங்கேற்றத் திற்கு உரியன என்று எண்ணற்க. இக்காலம் உரைநடைக்காலம். சிறந்த உரைநடை நூல்களும் உரைநடை யரங்கேற்றம் பெற்றுப் பின் வெளிவரல் வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆய்வரங்குகளில் உறழப் பெற்று வெளிவரு முறையை நாம் அறிவோம். அகத்திறன் அல்லது அரங்கேற்றம் என்ற தொன்முறை மீண்டும் இயன்ற அளவு உயிர்ப்பிக்கப் படுமாயின், முதலாவது இன்று பெருகி வரும் மொழிக்குறை பாட்டிற்கு இடமில்லை; புதிய பொருளாக்கத்திற்கும் வழி பிறக்கும். புறத்திறன் தமிழ் மொழிக்கண் முன்னரே வளர்ந்துள்ள மற்றொரு இலக்கியத் திறனை ‘புறத்திறன்’என்று பெயரிடலாம். அரங்கேறி அகத்திறன் பெற்று மன்னாயம் ஒப்பிய நூல்களைப் பின்னர்க் குறைகூறுதல் என்பது மரபன்று. அந்நூல்களின் சிறப்புக்களை எடுத்துக்காட்டுவதே அடுத்துச் செய்யக் கூடியது. இச் செய்கையைத்தான் உரையாசிரியர்கள் திறம்பட ஆற்றினர். நூல் குற்றம் உடையது போலத் தோன்றினும், உரை யாசிரியர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்; எவ் வாற்றானும் அமைதி கூறவே முயல்வர். இஃது அரங்கேற்றத்துக்குக் கொடுத்த நன்மதிப்பாகும். எல் என்பது இலங்குதல் என்ற பொருளுடைய உரிச் சொல்லாயினும், ஆசிரியர் இடைச் சொல்லாகக் கருதி இடையியலில் ஓதினமையின், இடைச்சொல் என்றே கொள்வோம் என்பர் சேனாவரையர். மலைபடுகடாம் என்னும் நூல் நன்னன் மேல் பாடப்பட்டது. ‘தீயி னன்ன ஒண்செங் காந்தள்’ என்பது இந்நூலில் வரும் ஓரடி, நன்னன் என்னும் பெயர் தீயோடு சேர்ந்து வருதலின் ஆனந்தக் குற்றம் என்றும் அதனால் பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தார் என்றும் ஆளவந்த பிள்ளை மலைபடு கடாத்துக்குக் குற்றம் கூறினராம். இக்கருத்தை நச்சினார்க்கினியர் பல வகையால் மறுப்பர். ‘பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றம் என்பது ஒரு குற்றம் என்று ஒரு நூல் செய்ததன்றி, அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றம் கூறாமையின் சான்றோர் செய்யுட்கு இக்குற்ற முண்டாயினும் கொள்ளார்’ என்று நச்சினார்க் கினியர் அறுதியிட்டுரைத்து மூலநூலைப் போற்றுந் திறத்தை ஓர்க. நூலாசிரியர்களை நன்கு மதித்துப் பற்றொடு உரையெழுதும் பாங்கினைப் புறத்திறன்களில் காண்கின்றோம். ‘தெய்வப் புலமைத் திருவள்ளுவர்’என்றும், ‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு’ என்றும் பரிமேலழகர் தம் ஆசிரியப் பற்றினைப் புலப்படுத்தியுள்ளார். ‘இக்காப்பியஞ் செய்தவர் விழைவு வெறுப்பற்ற சேரமுனி’ என்று உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இளங்கோவைப் புகழ்வர். இவ்வாறு அன்போடு ஆய்வு செய்வது திறனிலக்கணங்களுள் ஒன்றாகும். உரையாசிரியர்கள் தம் புறத்திறனில் நூலின் அமைப்பு, சொல்லாழம், கருத்தாழம் ஆகியவற்றை இடந்தோறும் எடுத்துக்காட்டிச் செல்வர்; மூலத்தோடு இயைத்தியைத்துச் சிறிது சிறிதாக இலக்கிய வன்மைகளைப் புலப்படுத்துவர். அவர்கள் ஆங்காங்குச் சொல்லிய நூற்கூறுகளைத் தொகுத்துப் பார்ப்பின், பல வகையான திறனிலக்கணங்களை நாம் கற்க முடியும். சீவசிந்தாமணியும் சிலப்பதிகாரமும் தொடர்நிலைக் காப்பியங்களாதலின், இவற்றின் உரைகள் சிறந்த புறத்திறன்களாகும். பதினாறு வயதுடைய கோவலனது பிறப்பை முற்கூறாது, பன்னிரண்டு வயதுடைய கண்ணகியின் பிறப்பை முற்கூறியதற்குக் காரணம் கண்ணகியே கதைக்கு நாயகியாவாள் என்று அரும்பத உரையாசிரியரும், பத்தினியை ஏத்துதல் இக்காப்பியத்தின் உட்கோள் என்று அடியார்க்கு நல்லாரும் அமைப்பை ஆராய்வர். கவுந்தியடிகளுக்குத் தவப்பயனாலே சபிக்கும் ஆற்றல் உண்டேயன்றி, எதிர்கால வுணர்ச்சியில்லை என்று அடியார்க்கு நல்லார் பாத்திரப் பண்பைக் காட்டுவர். இவ்வகைப் புறத்திறன்கள் மூலத்தோடு ஒட்டி எழுதப்படுபவை; எல்லா மூலப்பகுதிகளையும் இடந்தோறும் அலசிக் காட்டுபவை; நூலைமுறையாகக் கற்பவர்க்குச் சொல்லும் பொருளும் தந்து உதவுபவை. அகத்திறன், புறத்திறன், தனித்திறன் என்ற மூவகைத் திறன்களையும் ஒப்ப மதித்துப் போற்றித் தமிழ் இலக்கிய வளர்ச்சி செய்யவேண்டும். ஒவ்வொரு திறனும் ஒவ்வொரு வகைப் பயனுடையது. அகத்திறனால் நூலுக்குச் செம்மையும், புறத்திறனால் நூலின் நுண்மையும், தனித்திறனால் நூலின் முழுவனப்பும் நூலாசிரியரின் ஆற்றலும் தோன்றுகின்றன. மன்னாயத்துக்குப் பெருநன்மை செப்பமுடைய நூல்கள் தோன்றுவது. எங்ஙனமும் நூல்கள் பெருகட்டும் என்று விட்டுவிட்டுப் பின்னர் புறத்திறனும் தனித்திறனும் செய்வது கேட்டினை மன்பதையிற் பரப்புவதாகவே முடியும். ஆதலின் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றபடி, அகமாசற்ற செவ்விய நூல்களே சிலவாயினும், தமிழுக்குச் சிறந்த செல்வங்களாகும்; மன்னாயத்திற்குத் தூயவழி காட்டிகளாகும். அறத்தின் வழி பொருளும் இன்பமும் நடக்கவேண்டும் என்பர்; அதுபோல, அகத்திறன் வழி பிற இருதிறன்களும் நடப்பதாகுக. நடப்பின், நாடும் மொழியும் நீடு வாழும். 3. இலக்கிய வெள்ளம் தமிழ்நிலைபெற்ற தாங்கரும் மரபுடைய மதுரை மூதூரின்கண் தமிழ் வாழவும் தமிழால் நாம் வாழவும் இன்று தலைக்கூடியிருக்கின்றோம். சங்க நாளில் சேரபாண்டிய சோழ நாட்டுப் புலவர்கள் கூடும் தமிழ்கெழுகூடலாக இம்மதுரை விளங்கியது. பனம்பாரனார் வரையறுத்தபடி, வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட தமிழ்ப் புலமையோரே பண்டு கூடி இந்நகர்க்கண் தீந்தமிழ் ஆய்ந்தனர். ‘வடக்கில் இமயமலை தெற்கில் வாழும் குமரி முனை’ என்று பாரதி மொழிந் தாங்கு, இமய முதல்குமரிவரை தமிழ்வளர்க்கும் புலவர்கள் கூடும் இந்தியத் தமிழ்க் கூடலாக இம்மதுரையை உயர்த்தியிருக் கின்றோம். மக்கள் பதவி உயர்வு பெறுவது போல, மதுரை நகரமும் புகழால் பரந்தோங்கு சிறப்புடையதாகத் திகழ்கின்றது. மேலைநாட்டுச் சில மொழிகளின் பெருவளர்ச்சியோடு ஒப்பிடுகையில் இன்று நம் தமிழ் வளர்ச்சி ஓரிரு நூற்றாண்டு பிற்பட்டுக் கிடக்கின்றது. தமிழ் அரசாட்சி நடத்தினால் மட்டும் போதாது. அறிவாட்சியும் நடத்த வேண்டும்; கால மொழியாகவும் வேண்டும்; பல்கலைக் கழகங்களிலும் அனைவகைச் கல்லூரிகளிலும் அனைநிலைத்துறைகளிலும் சரி நிலை என்னும் உரிநிலையும் பெறவேண்டும். எல்லாந் திருச்செவியில் ஏறும் படியுரைக்க வல்லாயுன் போலெவர்க்கு வாய்க்குமே என்ற தமிழ்விடுதூது பாராட்டியபடி, எக்கலையையும் ஏறுபம்டியுரைக்க வல்ல மொழி தமிழ்மொழி என்பதனை இடைக்கால இலக்கியங்கள் மெய்ப்பித்துவிட்ன. பல துறைகளையும் பாட்டால் இயம்பும் வன்மை ஒரு மொழிக்கு இருக்குமாயின், உரைநடையாற்றல் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? மலையேறிக்குச் செய்குன்று ஏறல் பாரமா? துறை மன்றங்கள் தமிழ் வளரா, வளரவிடாக் குறைவை யுணர்ந்து அதனைக் குறைவிலா நிறைவாகவும் கோதிலா அமுதாகவும் ஆக்குதல் தமிழ் இலக்கிய ஆசிரியர்களின் கடமை மட்டுமன்று; பிற துறையாசிரியர்களின் பொறுப்பும் ஆகும். தமிழுக்குக் குறைவு இலக்கியமன்று; பல்துறை நூல்களே. இக்குறைவை நிறைவாக்க வல்லுநர் பிற துறையாசிரியர்களே. அவர்களை இத்தொண்டுக்கு ஊக்குவதும், சொல்லும் நடையும் காட்டி உதவுவதும் தமிழாசிரியர்களின் கடனாகும். ஆதலின் என் கருத்து பொறியியலாசிரியர் தமிழ்மன்றம், வேதியலாசிரியர் தமிழ்மன்றம், மருத்துவ ஆசிரியர் தமிழ் மன்றம், வணிக வியலாசிரியர் தமிழ் மன்றம் எனவாங்குத் துறைதோறும் தமிழ் மன்றங்கள் தோன்ற, தோன்றித் துறைக் கட்டுரைகளும் துறைப்பாட நூல்களும், துறைப் பொது நூல்களும் எழுத, இம்மன்றம் வழி செய்யவேண்டும். ஆர்வலர்களைத் துறைமன்றம் கூட்டி ஊக்கவேண்டும். ஆண்டிகள் கூடிக் கட்டினால் கட்டுவது மடமாக இருக்கும்; அவ்வளவு தான். தமிழாசிரியர்களாகிய நாம் கூடி எது வளர்க்க முற்பட்டாலும், அஃது இலக்கிய வளர்ச்சியாகவே அமையும். தமிழுக்குக் காலத்தினால் செய்ய செய்விக்க வேண்டிய நலம் அறிவியல் துறையாக்கமே. தமிழுக்கு உண்மையான குறைவு இது என்பதனை உணர்ந்து, துறைகள் பயின்ற பிற தமிழர்களுக்கு இதனை உணர்த்தி, துறைத் தமிழ் மன்றங்கள் பல தமிழகத்தில் தோன்ற நம் மன்றம் வழி காட்டுமாக. இடைக்காலம் கருத்தரங்கின் இரண்டாம் நாளாகிய இன்று இடைக்கால இலக்கியம் பற்றிக் கேட்கக் குழுமியிருக்கின்றோம். தமிழ் இலக்கிய வரலாற்றில் இடைக்காலம் என்பது எது? அக்கால அளவு என்ன? ஏறக்குறைய கி.பி.நாலாம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை பதினைந்து நூற்றாண்டுகளை - ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளை ஒரு சேர இடைக்காலம் என்று வைத்துக் கொண்டிருக்கின்றோமே; பொருந்துமா? இது மறுசிந்தனைக்கு உரியது. ஆங்கிலம், செருமனி போன்ற மேனாட்டு உலக மொழிகள் கிறித்துவுக்குப் பல நூற்றாண்டுக்குப் பின்னரே இலக்கியங்கள் பெற்றவை. இம் மொழிகளும் பண்டை, இடை, இற்றை எனக் காலப்பாகுபாடு செய்துள்ளன. அவற்றின் இடைக்காலம் இருநூறாண்டு, முந்நூறாண்டு அளவினதே. இந்திய நாட்டு மொழிகளிற், பல சில நூற்றாண்டுகளாகவே, இலக்கியம் உடையவை. ஒரு சில மொழிகளின் இலக்கியத் தோற்றம் மிக அண்மையது. உழக்குக்குள் கிழக்கு மேற்கு என்பது போல, இவைகளும் பண்டைக்காலம், இடைக்காலம், தற்காலம் எனப் பாகுபாடு கொள்கின்றன. எவ்வளவு காலம் வரலாறிருந்தாலும் முக்காலத்துள் அடக்க வேண்டுமா? நீண்ட நெடிய இடைக்காலம் என்பது தமிழின் தொன்மையை மறைப்பதோடு பலதுறையாக வளர்ந்த தமிழ் வளர்ச்சியையும் கற்பார்க்குத் தோன்றாவாறு மறைத்துவிடுகின்றது. ஒரே நீளமாகச் சொல்வதால், இடைக்காலத் தமிழ் வளர்ச்சி புகைவண்டிப் பாதை போல ஒரே தடமானது, வேறும் வீறும் இல்லாதது என்ற தவறான கருத்து ஏற்படுகின்றது. கன்னித் தமிழ் ஆதலின் என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று நகைக்கலாம். கன்னித்தமிழ், காதலுக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே காப்பியம் கண்டது என்பதனை உணரவேண்டும். தமிழ் உலக மொழியாகப் பரவியும் பரப்பியும் வரும் இக்காலத்தில், இலக்கிய வரலாறும் வரலாற்றுக் காலப்பாடுகளும் தொன்மையும் நன்மையும் துலங்கும் வகையாக அறிவியல் நெறியில் திருத்தி எழுதப்பட வேண்டும். ஏனை மொழி இலக்கிய வரலாறுகளைச் சுவடு ஒட்டித் தமிழ் இலக்கிய வரலாறுகள் எழுதப்படுமேல், அஃது உண்மை கலக்கிய வரலாறாகவே படும். சங்க காலம் தமிழுக்குப் பொற்காலம், சங்க இலக்கியம் தமிழுக்குப் பொன்னிலக்கியம் என்ற கருத்து எல்லார்க்கும் உடன்பாடானவை. இடைக்கால இலக்கியத்தைப் பற்றி நிறைவான கருத்துடையவரும் கொஞ்சம் குறைவான கருத்துடையவரும் உளர். குறைவானது என்ற எண்ணத்தோடு, இடை இலக்கியங்களைப் படிப்பாரும், படிக்க வேண்டா என்று பகைப்பாரும் உளர். இயற்கை வறட்சி, வானக்கற்பனை, உலகியலின்மை, புராணக்கதை, சமயப் படிவம், அயல் நாகரிகக் கலப்பு, சொற்சிலம்பம் என்ற காரணக் கூறுகளைக் கொண்டு இடைக்கால இலக்கியங்களைக் குறை மதிப்பீடு செய்ப. காப்புக் காலம் இலக்கியப் பார்வை என்பது தனிப் பார்வை யன்று; தன் குறுங்கண்ணொடு பார்ப்பதன்று. காலச் சூழலுக்கும் இன வேட்கைக்கும் ஏற்ப இலக்கிய வகைகளையும் இலக்கியக் கூறுகளையும் புலவர்கள் படைக்கின்றனர். மக்களின் மனப்பாங்குகள் மாறுகின்ற திசை நோக்கி இலக்கியம் திசை திரும்பிக் கொள்கின்றது. மன்னாயத்தின் எண்ண நாடி பிடித்து எழுத்துக்கள் ஓடுகின்றன. ஆதலின் இலக்கியப் பார்வை என்பது கால இனப்பார்வை. சங்க காலம் என்பது உள்ளூர்க்காலம். போர்கள் பல நிகழ்ந்தாலும் அவை மூவேந்தருள் அமைந்த அகப்பூசலே யாகும். சங்க மூவேந்தர்கள் தமிழெல்லையின் புறத்தே சென்று போரிட்டனர். ஆனால் தமிழகத்துள் புறத்தார்க்கு இடங் கொடுக்கவில்லை. புறநானூறு ஓராற்றான் தமிழ் மன்னர்களைப் பற்றிய அகநானூறேயாகும். கம்பர் கூறியது போல அகமாயினும் புறமாயினும் சங்கச் சான்றோர்களின் கவிகள் சவியுறத் தெளிந்து தண்ணென்ற யாற்றொழுக்கு உடையன வாகக் கிடந்தன. `கவி எனக் கிடந்த கோதாவிரி’ - கிடந்த என்று பாடுவதால், கொந்தளிப்பின்மை பெறப்படும். சங்கப் பிற்காலம் புறத்தார் தமிழகத்தார் ஆனகாலம்; தமிழும் தமிழரசர்களும் முதன்முதலாகத் தம் தனி முதன்மை இழந்த காலம். சங்கக் கல்விநெறி துண்டிக்கப்பட்டது. உள்ளது காத்தாற்போதும் என்றாயிற்று. சிதறுண்ட செய்யுட்களைத் தேடிச் சிதறுபடாவாறு அழிகிய தொகைகளாக்கித் தந்தனர் இடைக்கால முற்காலத்தார் தொகையாக்கிய சான்றோர்கள் தற்கால உ.வே.சா.போன்றவர்கள் ஆதலின் இடைக்காலம் என்பது சங்கக் காப்புக் காலம் என்று முதலாவது தெளியவேண்டும். சங்கப்பாட நூல்கள் சங்கத்தொகைகளை இடைக்காலத்தார் காத்தளித்த தோடு நிற்கவில்லை. அவைகளைப் புரிந்து படிப்பதற்கு ஏற்ற வகையில் அகப்பாட நூல் புறப்பாட நூல்களை யாத்துக் குவித்தனர் கோவை நூல்கள் அகப்பாட நூல்களாகும். புறப்பொருள் வெண்பாமாலையின் வெண்பாக்களும் முத்தொள்ளாயிரமும் பரணியும் புறப்பாட நூல்களாகும். இனைய நூல்களில் சங்கக் கருத்துக்கள் மறுவாழ்வு பெற்றன. `மள்ளர் குழீஇய விழவினானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக்கோனை’ என்ற ஆதிமந்தியின் குறுந்தொகைப் பாடல் (31) நம்மாழ்வாரைக் கவர்ந்தது. தையனல் லார்கள் குழாங்கள் குழிய குழிவினுள்ளும் ஐயநல் லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம் கையபொன் னாழிவெண் சங்கொடுங் காண்பா னவாவுவனான் மைய வண்ணா மணியே முத்தமே யென்தன் மாணிக்கமே என்று குறுதொகை திருவிருத்தமாக உருவெடுத்தது. தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்கந் நாண்தகைசால் வேயிற் சிறந்தமென் தோளிதிண் கற்பின் விழுமியது என்ற திருக்கோவை (204) தொல்காப்பியத்தின் ஈகை யன்றோ? இங்ஙனம் ஆயிரமாயிரம் சங்கக் கருத்துக்கள் வெவ்வேறு யாப்பு வகையில் இடைப்பிறவி எடுத்துள்ளன ஆதலின் இடைக்கால இலக்கியங்கள் சங்கவழி நூல்களே. இடைக்காலப் பனுவல்களைச் சிற்றிலக்கியங்கள் என்று சொல்லுகின்றோம். சிறுமையடுத்த இப்பெயர் பெருமைக்கு உரியதாகவும் இல்லை; பெருமை தருவதாகவும் இல்லை. மும்மணிமாலை, இரட்டை மணிமாலை, தசாங்கம், சிலேடை வெண்பா இவைகளும் சிற்றிலக்கியங்கள்; இவற்றோடு ஒப்ப, கலிங்கத்துப்பரணி, மூவருலா, முக்கூடற்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, நந்திக்கலம்பகம், பாரத வெண்பா இவையும் சிற்றிலக்கியங்களா? திருக்குறளைப் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாக எண்ணிவரும் மரபுடைய நமக்கு இது சரியென்று பட்டாலும் படும். அளவும் பொருளும் திறமும் பாராமல், பலசரக்குப் போல மொத்தமாகச் சிற்றிலக்கியங்கள் என்று பெயர்ப்படுதல் அறிவியலன்று. எண்ணப்படும் நூலினம் ஒரு தரமாக இருத்தல் வேண்டும். வரிசை யறிதலோ அரிதே’ என்பர் கபிலர். நூல் வளர்ச்சி இடைக்காலத்தில் தமிழ் வளர்ச்சியில் ஏற்பட்ட புதிய சில கூறுகளை - தள்ளமுடியாத சில தமிழ் நலங்களைப் பார்ப்போம். சங்ககாலம் தனிப்பாட்டுக் காலம். தொடர்பற்ற தனிப்பாடல்கள் யாப்பதே சங்கப்புலவர் மனமாக இருந்தது. ஒரு பாடல் எழுதி அமைந்த புலவர்கள் பலராகக் காண்கின்றோம். திணைபற்றி நூறுபாடல் அளவு எழுதிய எல்லையை ஐங்குறுநூறு காட்டுகின்றது. நூறு பாடல் என்பது கிட்டத்தட்ட ஐந்நூறு அடிகளாகும். மதுரைக்காஞ்சி, மலைபடு கடாம் முதலிய நெடும் பாடல்களும் தனிப்பாடல் வகையாகிப் பத்துப்பாட்டில் இரு பாட்டுக்கள் என எண்ணப்பட்டன. பெரும்பாலும் சங்கச் சான்றோர் தனிப்பாட்டாசிரியர்களேயன்றி முழுநூலாசிரியர்கள் அல்லர். நூல் நூலாக எழுதும் மனமையை வளர்த்தது இடைக்காலம். ஒரு நூலென்ன பல நூல் எழுதும் ஆசிரியர் பலர்தோன்றினர். ‘கோவைஉலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்’ என்று பாராட்டப் பெற்றவர். நம்பியாண்டவர் இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, அந்தாதி, உலாமாலை, கலம்பகம், ஏகாதசமாலை என்றவாறு பத்துப் பிரபந்தங்களைப் படைத்தவராவார். இளம்பூரணர் சேனாவரையர் போலன்றி நச்சினார்க்கினியர் பல்லுரையாசிரியர் ஆனார். இடைக்காலம் வெள்ளம்போல் நூல் நூலாகப் பெருக்கியிராவிட்டால் தமிழ் இலக்கிய வரலாறு வாழ்ந்து முறிந்த வரலாறாக, குழந்தை கைடயக்க நூலாகவே குறுகியிருக்கும்; இறையனாரகப் பொருள் உரையும், அடியார்க்கு நல்லார் உரையும் கூறுகின்ற வரலாறளவாகவே நிற்கும். ஆதலின் இடைக்காலம் என்பது தமிழுக்கு இலக்கிய நூலாசிரியர்களைப் பெருக்கிவிட்ட புரட்சிக்காலம் - மழைக்காலம் என்று உணரவேண்டும். பாவினம் - பா வளர்ச்சி இடைக்காலத் தமிழ் வளர்ச்சியில் இன்னொரு பெரும்பயனை - புரட்சியான ஆனால் பொன்னான மாறுதலை நினைப்போமாக. இடைக்காலம் யாப்பிற்புரட்சி கண்ட காலம். சங்க யாப்பு திட்பமுடையது, செறிவுடையது கட்டுக்கோப்பானது, மாற்றத்துக்கு இடந்தராதது. இவ்வமைப்பு மூவேந்தர் தலைமுறையாக ஆண்டு சங்கக் கல்விநெறி முறையாகப் பயின்று வந்த காலத்திற்கு ஏற்றதாக இருந்தது. முற்றும் மாறிய நிலைக்கு ஏற்பத் தமிழை மாற்றி வளர்த்துக் காத்தனர் இடைக்காலச் சான்றோர். இடைக்காலத் தமிழ், நடையழகும், தொடை யழகும் பெற்று, எப்பொருளையும் கலகலத்துச் சொல்லும் நெகிழ்ச்சியுற்றது. பாவினங்களையும், நூலினங்களையும் பெருக்கித் தமிழினத்தைக் கவியினமாகவே புதுக்கியது. இன்றும் நம் மக்கட்குக் கவியரங்கம் கேட்கும் ஈடுபாடு உண்டு என்றால், திரைப்பாடல் கேட்கும் விழைவுண்டு என்றால், இம்மனப்பான்மை நமக்கு இடைக்கால வழி வந்தது என அறியவேண்டும். பேச்சிலக்கணம் கற்றபின் நாம் பேசத் தொடங்கவில்லை. செவிக் கேள்வி வாயுரையாகின்றது. பேச்சு உரைநடையா செய்யுளா என்பது கேள்விச் சூழ்நிலையைப் பொறுத்தது. இடைக்காலத்தார் நெஞ்சம் செய்யுளாக இருந்தமையின் செய்யுட் சூழ்நிலையே புலவர் குடும்பங்களில் பெருகியிருந்தது. குழந்தைகளை நன்கு படிக்க வைக்க விரும்பிய பெற்றோர், புலவர் குடும்பங்களில் சேர்த்துவிட்டனர். ‘குழந்தையும் கவிதையும் கொண்டாடும் இடத்தில் வளரும்’ என்ற கருத்து எழுவதாயிற்று. காரிகை கற்றுக் கவிபாடுவது இகழப்பட்டது. பாடங்கேட்பதற்கு முன்பே பாடத் தெரியவேண்டும் என்ற நிலை எதிர்பார்க்கப் பட்டது. ‘குடக்கோடு வானெயிறு கொண்டார்க்கு’ என்ற வெண்பாவை யாத்துவிட்டுப் பாடங்கேட்டார் சிவப்பிரகாசர். நமக்கு உரைநடைப் பேச்சு எப்படி, அப்படிச் செய்யுள் யாப்பு இடைக்காலத்தார்க்கு. எழுத்து என்பதும் படிப்பு என்பதும் எல்லாம் அவர்கட்குக் கவியே. ஆதலின் நாள்தோறும் பாடிக்கொண்டே இராவிட்டால் யாப்பு வராது என்ற நிலை அவர்கட்கு இல்லை. ஆடுங் கடைணி நாவசை யாமல் அகிலமெலாம் நீடுங் குடையைத் தரித்த பிரான்இந்த நீணிலத்தில் என்று ஒட்டக்கூத்தர் பாடும் போக்கைப் பார்த்து, ஒரு கணமும் தயங்காமல் சிந்தனைக்கு நேரம் கொடாமல், இடைமறித்துக் குலோத்துங்கன், பாடும் புலவர் புகழொட்டக் கூத்தர் பதாஅம் புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழனென்றே என்னைக் கூறுவரே என்று இரட்டையர் போலப் பின்னிரண்டடியைச் சேர்த்து முடித்துவிட்டான் என்றால், இடைக்காலக் கவிதை மனத்தின் இயக்கம் தெள்ளத் தெளியலாம். ‘இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம் பாட்டா காதோ’ என்ற வீறாப்பு உருட்டுப் புரட்டன்று. கவிதை வெள்ளமாக இடைக்காலத்து ஓடிப் பரந்தது. பயிற்சி நூல்கள் எவ்வகைக் கவிதையும் பாடும் வன்மை வேண்டும் என்பதற்காகவே சில சிற்றிலக்கியங்கள் பாவின அடிப்படையில் அமைந்துள்ளன. கலம்பகம் பதினெட்டு உறுப்புடைய இலக்கியம் இதனைப் பாடுவார்க்கு ஏறக்குறைய எல்லாப் பாக்களும் பாவினங்களும் யாக்கத் தெரியவேண்டும். மும்மணிக்கோவை, நான்மணிமாலை, இரட்டை மணிமாலை எல்லாம் செய்யுட் பயிற்சிகாட்டும் நூல்களே. குறமும் பள்ளும் பாடுதற்கு இயற்பாக்காளோடு இசை நாடகப்பாடல்களும் இயற்றத் தெரியவேண்டும். பரணி பாடுதற்கு நடைவேறுபட்ட தாழிசை இனங்கள் வேண்டும். பிள்ளைத் தமிழ் பாடுதற்குப் பல சீர்கொண்ட நீண்ட விருத்தப் பயிற்சி வேண்டும். பிள்ளைத் தமிழ் என்று பெயர் பெற்றிருந்தாலும் இதன் நடை பல பருவங்களில் பெருநடையாகும். யாப்பு வன்மையின் வெறிநிலை சிலேடைப் பாடல் என்க. செம்மொழிச் சிலேடையே அருஞ்செயல். பிரிமொழிச் சிலேடை தமிழ்ப் புலவர்க்கு அரியவென்று ஆகாத வில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு. புணர்ச்சியிலக்கணத்தை நம்பியே சிலேடை யாப்பு வளர்ந்தது. இவை பொருளற்றன என்று தள்ளிவிடுதலும் எளிது; பிரித்துப் பதிப்பிக்க இடங்கொடா என்று தூற்றலும் எளிது. பிறமொழிக் கலப்பால் சிலேடை நூல் பெருகிற்று என்ற ஒரு குறையுண்டு என்றாலும், சின்னாளில் எவ்வளவு மொழிப் பயிற்சியைத் தரவல்லது என்று அறிந்தோர் சிலேடை வெண்பா ஒரு நூலாவது கற்பதையும் கற்பிப்பதையும் உடன்படுவர். மற்றிலை யாவி தளரும் பொழுதுமுன் வந்துநிற்பார் நற்றிலை யாடக மன்றுடை யாரன்றி நாமவரைப் புற்றிலை யாபுக லூரிலை யாவெனப் போற்றியின்றே சற்றிலை யாயினுந் தூவுநெஞ் சேபினைச் சாவிலையே (திருப்புகலூரந்தாதி.83) மனனம் பண்ணுதற்கும் சொற்பயிற்சிக்கும் மொழிப் புணர்ச்சிக்கும் பிரிவிற்கும் சிலடைபோல் ஆற்றலுடையது வேறில்லை. நூலெல்லாம் ஒரே பயனுடையன அல்ல. ஒரு நூலின் பயன் இன்னொரு நூலிலிருந்து கிடைக்காது. சில நூல்கள் சிறுபயன் உடையன; சில நூல்கள் பெரும் பயனளிப்பன என்றாலும் சில்லறை வணிகம் தொகை வணிகம்போல எல்லா நூலும் கல்விக் குலத்தார்க்கு ஒவ்வோர் பருவத்தில் இன்றியமையாதவை. படைப்பு மனம் இடைக்காலக் கல்வியாளர்க்கு யாப்பு மனம் மிக்கிருந்தமையின் புதுப்புது யாப்புக்கள் படைத்தனர். அப்படைப்புக்களுள் சிறந்த ஒன்று காரிகை என்னும் கட்டளைக் கலித்துறையாகும். இது வெண்பாவும் வெண்பாவினமும் கலந்தது. ஓரடிக்குள் தளை இருந்தாற் போதும்; ஓரடியின் இறுதிக்கும் வரும் அடியின் முதலுக்கும் தளை பார்க்க வேண்டா. இப்புதுயாப்பு கோவை நூல் வளர்ச்சிக்குப் பயன்பட்டது. இந்த யாப்பில் மக்கட்குக் கவர்ச்சியிருந்த தாலன்றோ யாப்பருங்கலக் காரிகையும், விரசோழியமும் கட்டளைக் கலித்துறையில் செய்யப்பட்டன. திருமந்திரச் செய்யுட்கள் கலிவிருத்தம் என்ற பெயர் பெற்றாலும் அவ்வளவும் சீரும் தளையும் சிதையாத வெண்பாத்தன்மையன. என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி என்பொன் மணியினைக் காண வொண்ணாதே இவ்வாறு சீர் தளைஅடி முதலியவற்றை மாற்றியமைத்து இனியும் புது யாப்புக்களைப் படைக்கலாமா என்பது பற்றிச் சிந்தனை செய்யவேண்டும். இத்தகைய இலக்கியக் கண்டுபிடிப்புக்கள் தமிழின் மேல் வளர்வுக்குத் தேவை. நல்லமைப்புக்கள் இடைக்கால இலக்கியங்கள் மிக நல்ல அமைப்பு உடையவை என்பது என் கருத்து. இவ்வமைப்பை அறிவான முறையில் பயன் கொள்ள வேண்டும். கோவை கலம்பகம், உலா, பரணி இவற்றில் பாட்டுடைத் தலைவர்கள் உண்டு. இவர்கள் மானிடத் தலைவர்களாக இருக்கும்போது, இவ்விலக்கியங்கள் உலகியலும் வரலாறும் தழுவுகின்றன. கடவுளர்களைத் தலைவர்களாகக் கொள்ளும்போது உலகியலும் வரலாறும் இழக்கின்றன. கலிங்கத்துப்பரணி முற்சோழ வரலாறும் முதற்குலோத்துங்க சோழன் வரலாறும் அறிய உதவும் இவ்வுலகப் பரணியாகும். இராச பாரம்பரியம் என்ற உறுப்பு வரலாறு சொல்லுதற்கே எழுந்தது. தக்கயாகப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணியெல்லாம் புராணமாகவும் உருவகமாகவும் மாறி அவ்வுலகப் பரணியாகிவிட்டன. இவையெல்லாம் பரணியாகுமேல், கரன்வதைப்படலம் கும்பகருணன் வதைப்படலமெல்லாம் காப்பியப் பரணிகள் ஆகாவா? பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை, குலோத்துங்க சோழன் கோவைகளில் மக்கள் பாட்டுத் தலைமை வகிக்கின்றனர். பாண்டிக்கோவை பல்லவ பாண்டிய வரலாற்றுக் கருவூலமாக விளங்குகின்றது. திருக்கோவை, திருவாரூர்க்கோவை, திருவெங்கைக் கோவை முதலியன கடவுளர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக்கி உலகம் தழுவாவாயின. நந்திக்கலம்பகம், மூவருலா இவை வரலாற்றிலக்கியங்கள். மதுரைக் கலம்பகம், அழகர் கலம்பகம், திருவாரூர் உலா, திருப்பூவண நாதருலா எல்லாம் தெய்வத் தலைமை பெற்ற இலக்கியங்கள்; நீலந்தீண்டா இலக்கியப் பறவைகள். கிளவித் தலைவர்கள் பெயர் சுட்டப்படார். பாட்டுடைத் தலைவர்களையும் அன்ன நிலையினராக்கி விட்டால், அவ்விலக்கியங்கட்கும் இவ்வுலக வாழ்வுண்டா? பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றால், மக்கட் பொருளில்லா இலக்கியங்கட்கு இவ்வுலக வேர் உண்டா? எடுத்தக் காட்டியவற்றிலிருந்து, இடைக்கால இலக்கிய வகைகள் பிழைபட்டனவல்ல எனவும், இவ் வுலகியலுக்கு உரிய இடங்களிலும் அவ்வுலகம் புகுந்து கொண்டதனால், இலக்கியப் பாழ் ஏற்பட்ட தெனவும் தெரியலாம். பொடிமட்டையிலும் பொன் துகள் வைப்பாருண்டோ? இடைக்கால நல்ல இலக்கிய அமைப்பைச் சமய வல்லவர்கள் முழுதும் பற்றி அவமாக்கி விட்டனர். மீண்டும் மக்கள்மேலாக இவற்றைப் பாடி உயிர்ப்பித்தல் தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் பாவளர்ச்சிக்கும் நல்லது. இற்றைப் புலவர்கள் பெரியார் பிள்ளைத் தமிழ், காந்தி பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ் என்று உயிர்ப்பித்திருக்கக் காண்கின்றோம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை நீதிபதி வேதநாயகனாரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து, ‘பொருந்த உலகர் வழக்கோர்ந்து பொய்யிது மெய்யிதென்று திருந்த எழுதும் திறல்வேத நாயகச் செம்மல்’ ‘நாட்டுக்கு நல்லன் பதினாயிரம் பொன் நவிலுமொரு பாட்டுக்கு நல்கும்புகழ்வேத நாயகப் பண்பன்’ என்று குளத்தூர்க்கோவைபாடி, கோவையை மக்கட் கோவையாக்கினார். தமிழுணர்வு இடைக்கால இலக்கிய வகை உலகியேலாடு தொடர்பு பட்டால் எதிர்காலத் தமிழுக்கு ஏற்ற வழிகாட்டி. தூது என்ற இலக்கிய வகையால் எவ்வளவோ கருத்துக்களை இனிமை யாகப் பரப்பலாம். ‘பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்டு எஞ்சியழுக் கே றா - இயற்கலையே - விஞ்சுநிறம் தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம் தீயாது சொல்விளையும் செய்யுளே’ ‘தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியேயென் முத்தமிழே - புத்திக்குள் உண்ணப் படுந்தேனே உன்னோ டுவந்துரைக்கும் விண்ணப்ப முண்டு விளம்பக்கேள்’ என்ற தமிழ்விடுதூது இன்றும் நாளையும் வரும் தமிழினத் தார்க்கு விடுக்குந்தூதல்லவா என்ன சொல்வளம்! என்ன சொல்மாயம்! சங்ககால மக்கட்குத் தமிழ்மொழி இயல்பானது. ஆதலின் அதன் அருமையை அறியும் வாய்ப்பில்லை. இடைக்கால மக்கட்குத் தமிழ் அருந்தமிழ், தீந்தமிழ், ஒண்டமிழ், வண்டமிழ் ஏன்? நிழற்பெருமை வெயிலில் நின்றறிமின் என்றாங்கு பிறமொழித் தாக்கம் தமிழருமையை உணர்த்திற்று. ‘இனிமை நீர்மையும் தமிழெனலாகும்’ எனவும் ‘தமிழ் தழீஇய சாயலவர்’ எனவும், என்று முள தென்றமிழ் இயம்பி’ எனவும் யாண்டும் தமிழுணர்ச்சியை ஊட்டிக் கொண்டே இருந்தனர். அவ்வூட்டத் தாலன்றோ எவ்வளவு அரசு, நாகரிகம், மொழி, சாதிப்பூசல் களுக்கிடையேயும் தமிழ் நமக்குக் கிடைத்து, நாமெல்லாம் இன்றும் தமிழர்களாக இருக்கின்றோம். மக்கட்குலத்தார் குறைபாடுடையராக இருக்கும்வரை இலக்கியப் படைப்புக்களும் குறைசார்ந்தனவாக இருக்கும்; என்றாலும் இலக்கியத்தின் நோக்கம் முழுதும் மக்கள் வழி இயங்குவதன்று; மக்கள் வழியோடு சென்று மக்களைத் தன் வழியில் இழுப்பது; நிறைவான நிலையைக் காட்டிக் கொண்டிருப்பது. ஒலித்தூய்மை இடைக்கால இலக்கியத்தமிழ், எதிர்காலத் தமிழுக்கு வழிகாட்டி; நல் வழிகாட்டி; நல்வழிகாட்டி என்றேன். என்றதற்கு ஒரு பெருங்காரணம் தமிழ் மொழிக்காப்பு மட்டுமன்று, தமிழ் ஒலிக்காப்பு. இலக்கியத்துறையிலும் ஏராளமாகச் சமயத் துறையிலும் பிறமொழிச் சொற்கள் கலந்த போதும், பிறவொலிக் கலப்புக்கு இடந்தரவில்லை. ஏன்? மொழியின் உயிர்நாடி சொல்லில்லை. ஒலிதான் என்பதனைத் திடமாக அறிந்திருந்தனர். பிறமொழி கலந்த தொடக்க காலமாதலின், தொல்காப்பியர் அது பற்றி இரு நூற்பாக்களே யாத்தனர். இடைக்காலத்துப் பிறமொழிக்கலப்பு மிகுந்தபோது, பவணந்தியார் பிறவொலியாக்கம் பற்றியும் ஒலித்தொடர் பற்றியும் வரம்பான நூற்பாக்கள் பல எழுதினார். தொல்காப்பியர் சொல்லதி காரத்திற் கூறியது போலன்றிப் பவணந்தியார் எழுத்ததிகாரத்தில் இவை பற்றிய நூற்பாக்களை எழுதிச் சேர்த்தார் என்றால், எல்லாப் பிறவொலிகளையும் தமிழ்மையாக்குவதில் அவருக்கு இருந்த விழிப்புப் பெறப்படும். பன்மொழிச் சிலேடைக்கும் யமகம் திரிபு மடக்கும் பிறமொழிக் கிளவிகளைக் கூடை கூடையாக அள்ளிக்கொண்ட போதும் ஒலிக்கற்பில் பிறழவில்லை நல்லிடைக் காலத்தார். இந்நிலையை நாம் உணரவேண்டும். யாகாவாராயினும் நாகாக்க என்பது போல, யாகலந்தாலும் ஒலி கலவாது தமிழ் காக்க, ஒலிக்கலப்பு என்பது தமிழ்க் கலைப்பாகும். ஒலிப்பிறழ்ச்சி என்பது தமிழ் உயிர்ப்பிறழ்ச்சி ஆகும். ஆயிரம் செய்யுட்கள் கொண்ட தமிழ்க் காப்பியங்களையும் நடுவிலக்கியங்களையும் சிற்றிலக்கியங் களையும் தெய்வப் பாடல்களையும் சமய நூல்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்வோமானால், ஒலித்தூய்மை பற்றிய நெஞ்சுரம் நமக்கு ஏற்படும். இவ்வோர் உண்மை யையாவது இடைக்கால இலக்கியத்திலிருந்து நாம் கற்றுக் கொள்வோமாக. 4. தனிப்பாடல்கள் இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக்கு என்றும் வரவேற்பு உண்டு. மின் விளக்கு வந்ததற்காக அகல்விளக்கு இல்லாமல் போயிற்றா? வானூர்தி வந்ததற்காக வண்டிக்கு இடம் இல்லையா? தொடர்கதைகள் ஒருபுறம் தோன்றச் சிறுகதைகளும் ஒருபுறம் தோன்றவே செய்யும். பலவுறுப்பு நாடகங்கள் இருப்ப, ஓருறுப்பு நாடகங்களும் இருக்கவே செய்யும். தொடர்நிலைக் காப்பியங்கள் ஒப்பத் தனிப்பாடல்களுக்கும் ஒரு மொழியில் இடம் உண்டு. மேலும் இலக்கியம் வளர்ந்த நெறியை நோக்கின், தனிப்பாடல்களே ஒரு மொழியில் முன்தோன்றின என்பதும், இவற்றின் அடிப்படையில் தொடர்நிலைச் செய்யுள் என்னும் பெருங்காப்பியங்கள் பின் தோன்றின என்பதும் விளங்கும். எப்பெரும் புலவனும் முதலில் தனிப்பாடல் எழுதிப் பழகித்தானே பேரிலக்கியம் செய்யப் புறப்பட்டான் என்ற படிமுறையையும் எண்ணுங்கள். மொழி என்னும் கட்டிடத்துக்கு இலக்கணம் அடித்தளம் என்றால், காப்பியங்கள் தூண்கள் என்றால், நாடக நூல்கள் மேன்மாடங்கள் என்றால், நாடோடிப் பாடல்கள் காற்று வரும் காலதர்கள் என்றால், தனிப்பாடல்கள் படிக்கட்டுகள் என்று சொல்லாம். தனிப்பாடல் என்பது யாது? நடந்த ஒரு தனி நிகழ்ச்சியை அல்லது மனத்துத்தோன்றிய ஒரு தனிக் கருத்தைப்பற்றிப் பாடுதல். தனிப்பாடல்கள் கற்பனை சூறைந்தன; ஆனால் கவர்ச்சி மிகுந்தன. மறைவு இல்லாதவை; ஆனால் உண்மை தழுவியவை. உறுதி தளர்ந்தவை; ஆனால் உணர்ச்சி செறிந்தவை. ஆதலின் இப்பாடல்கள் மக்கள் மனத்துப் பதிந்து பேச்சோடு பேச்சாகக் கலந்து விடுகின்றன. செந்தமிழும் நாப்பழக்கம், கொடையும் பிறவிக்குணம், கற்றது கைம்மண்ணளவு, பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி, மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடியுறும் என்பன போலும் பல தனிப்பாடற் பகுதிகள் மக்கள் பேச்சுக்கிடையில் வழங்குவதைக் கேட்கின்றோம். இடைக்காலத் தமிழ்ப்புலவர்கள் நிகண்டுகளை வரப்பண்ணிச் சொல்வளம் மிக்க செல்வர்களாக விளங்கினர். பல செல்வர்கள் செல்வத்தையே பொருளெனக் கருதி எண்ணி இருப்புப் பார்த்து மகிழ்வதுபோல, இந்தச் சொற் செல்வர்களும் சொற்களையே புலமையெனக் கொண்டு யாப்பு நயம் பாடி மகிழ்ந்தனர். எவ்வெழுத்திலும் பாட்டுத் தொடங்குவோம்; எவ்வெழுத்திலும் பாட்டை முடிப்போம் எதிரி வியக்கும்படி பாட்டுக் கட்டமுடியும் என்று செய்யுட் பந்தயத்தில் ஈடுபட்டார்கள். உடலைப் பரத நடிகை பொருளுக்குத் தக வளைப்பது போலத் தமிழ் மகளை இப்புலவர்கள் தாம் விரும்பிய யாப்புக்குத்தக வளைத்தனர். சிவப்பிரகாசர் துறைமங்கலம் சிவப்பிரகாசர் முந்நூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ஒரு பெரும் புலவர். கற்பனைக் கருவூலம் என்று பெயர் பெற்றவர். திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், நால்வர் நாண்மணி மாலை முதலாய பல நூல்களின் ஆசிரியர். தந்தையை இளம்பருவத்திலேயே இழந்த இவர் தம் முயற்சியால் கல்விப் புலமை எய்தினார்; இயற்றமிழை நன்கு கற்க விரும்பித் தருமபுர ஆதீனத்தை அடைந்தார்; வெள்ளியம்பல வாணர் என்னும் ஆசிரியரை அணுகினார். அம்பலவாணர் சிவப்பிரகாசரின் சொற்பயிற்சியையும் பாடல் இயற்றும் யாப்புப் பயிற்சியையும் அறிய விரும்பினார். மேடைமீது ஏறியவுடன் சொற்பொழிவாற்றும் உடனடிப் பேச்சுப் போட்டியை நாம் இன்று நடத்துவது போல் உடனடிப் பாட்டுத் தேர்வொன்றைச் சிவப்பிரகாசருக்கு ஆசிரியர் அன்று நடத்தினார். “ஒருபாட்டை `கு’ என்று தொடங்கி ‘கு’ என்றுமுடி: மேலும் “ஊருடையான்’ என்ற தொடரைப் பாட்டுக்கிடையில் வை” என்று ஒரு கேள்விவிடுத்தார். கேள்விக்குச் சிவப்பிரகாசர் உடனே இயற்றிய பாட்டனாது. குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழல் முடக்கோடு முன்னம் அணிவார்க்கு - வடக்கோடு தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல் ஊருடையான் என்னும் உலகு. என்பதாம் குடக்கு எனத் தொடங்கி உலகு என முடிதலால் முதலும் இறுதியும் `கு’ க்குள் வருதல் காண்க. ஊருடையான் என்று ஆசான் கொடுத்த ஒரு தொடரை ஊர் உடை ஆன் எனப் பிரிவு செய்துகொண்டு சிவனுக்கு ஊராவது தில்லை, உடையாவது புலித்தோல், ஏறும் ஊர்தியாவது காளை என்று பொருளமைத்து இளமையிலேயே தம் மதி நுட்பத்தை வெளிப்படுத்தினார் சிவப்பிரகாசர். யாப்பு விளையாட்டு காய் என்று எடுத்து இலை என முடித்தல், கொட்டைப் பாக்கு என்று எடுத்துக் களிப்பாக்கு என முடித்தல், கரி என்று எடுத்து உமி என முடித்தல், ஐந்து `டு’ க்கள் வரத் தொடுத்தல் என்றவாறு புலவர்கள் பாடல் கட்டி விளையாடுகிறார்கள். இன்ன விளையாட்டில் ஒட்டக்கூத்தர்கூட ஒரு சமயம் தோற்றுப் போனார். `மதி அல்லது ‘பிறை’ என்ற சொல் ஓரடிக்குள் மூன்றிடத்து வரப்பாடுக’ என்று ஒளவை கொடுத்த வினாவுக்கு, ‘பிள்ளை மதிகண்டு எம்பேதை பெரிய மதியும் இழந்தாளே’ எனப் பிள்ளைமதி பெரியமதி என்று இரண்டு மதிகள் வரவே ஒட்டக்கூத்தரால் பாடமுடிந்தது. `ஒட்டா ஒரு மதி கெட்டாய்’ என்று ஒளவை இகழ்ந்து, புகழேந்திப் புலவரை நோக்கினாள். `வெங்கட்பிறைக்கும் கரும்பிறைக்கும் மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே’ எனப் பிறைச் சொல் மூன்று ஓரடிக்குள் வருமாறு பாடிப் புகழேந்தியார் வெற்றி பெற்றார் என அறிகிறோம். அஞ்சற்றலைகள் தொகுப்பது, நிழற்படம் எடுப்பது, ஓவியம் வரைவது இன்று பலர்க்குப் பொழுதுபோக்காக இருத்தல் போல, செய்யுள் இயற்றல் என்பது பண்டைப் புலவர்க்கு ஒரு பொழுது போக்காகும். இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ என்று அளக்கின்றார் காளமேகம். மூச்சு விடுமுன்னே முந்நூறும் நானூறும் ஆச்சென்றால் ஆயிரம்பாட் டாகாதோ என்று விரிக்கிறார் அதிமதுரக் கவிராயர். உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒருகவிதை ஒப்பிக்கும் எந்தன் உளம் என எதனைப் பெறவும் ஒரு பாட்டு என்று எளிய பண்ட மாற்றாக மதிக்கிறார் ஒளவை. ஒரு வர் முன்னிரண்டடிகளைப் பாடுவது; இன்னொருவர் பின்னிரண்டடிகளை முடிப்பது என்பது புலவர் கண்ட ஒரு யாப்பு விளையாட்டு. இரட்டையருள் குருடர் இரண்டடி பாடிநிறுத்திக் கொள்வார்; பிற்பகுதியை முடவர் பாடி முடித்துவிடுவார். இஃது ஒருநிலை. வேறு சிலபாடல்கள் உள. ஒருவர் முற்பகுதியைப் பாட அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொருவர் அவர் கருத்தை மாற்றுவதற்காக மிக விரைந்து பிற்பகுதியைப் பாடிவிடுவார் எவ்வளவு யாப்புப் பயிற்சியிருந்தால் இங்ஙனம் முந்திக் கொண்டு பாடவரும் என்று எண்ணிப்பாருங்கள்! சோழன் புலமை ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழன் அவைப்புலவர் ஆவர். இவர் சோழன் அகவாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். சோழன்ஆட்சிச் சிறப்பை நேரில் அறிந்தவர். இவன் ஆட்சியில் ஆராய்ச்சிமணி அசையவில்லை; இவன் குடையோ பரந்து விரிந்தது என்று பலர் சூழ்ந்த அவை முன் பாராட்ட விரும்பிய ஒட்டக்கூத்தர், ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெலாம் நீடுங் குடையைத் தரித்த பிரான்இந்த நீணிலத்தில் என்று பாடி வருவதைக் கேட்டான் குலோத்துங்கள். தன் செவ்விய ஆட்சிக்கு ஒட்டக்கூத்தரே துணை என்பதை உட்கொண்டான். மேலும் தன் ஆசான் என்பதையும் நினைந்தான். ஒட்டக்கூத்தர்பால் தான்கொண்டுள்ள நன்மதிப்பையும் பெரும் பணிவையும் காட்ட இதுவே காலம் என்று துணிந்தான். தான் அரசன் என்பதைச் சிறிதும் எண்ணாது புலவருள் தலையாய ஒட்டக்கூத்தரின் அடியவன், மாணாக்கன் என்று சொல்லிக் கொள்ளத் துடித்தான் குலோத்துங்கன். புலவர் மேலிரண்டடிகளை முடிப்பதற்கு முந்தி, பாடும் புலவர் புகழொட்டக் கூத்தர் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழனென் றேஎன்னைச் சொல்லுவரே என்று செய்யுளை முடித்துவிட்டான். இதனால் இடைக் காலத்துத் தமழ்ப் புலவன் பெற்றிருந்த அரசியற் செல்வாக்கு ஒருபுறம் விளங்க, இடைக்காலத் தமிழ்வேந்தன் பெற்றிருந்த தமிழ் வன்மையும் விளங்கக் காண்கின்றோம். சொற்சிலம்பம் தனிப்பாடற் புலவர்கள், நமக்கு உரைநடைபோல எண்ணிப்பாராதே செய்யுள் செய்வதை ஒருபொழுது போக்காகக் கொண்டனர் என்று கண்டோம். வைக்கோலுக்கும் யானைக்கும் பொருத்தம், மீனுக்கும் பேனுக்கும் பொருத்தம், திருமாலுக்கும் கடிகாரத்துக்கும் பொருத்தம் என்ற முறையில் பொருத்தப் பாடல்கள் செய்வதையும் ஓர் இன்தொழிலாகக் கருதினார்கள். சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை ஐங்கரர்க்கு மாறுதலைய யானதே! என்ற வகையில் புணர்ச்சி விதியுள் புகுந்து ஓசைநயம் காட்டுவதையும் ஒரு விளையாட்டு வினையாகப் பயின்றார்கள். வழக்கில் மக்கள் அடிக்கடி பேசம் சிறப்பில்லாத சொற்களுக்குக் கூட, சுவைததும்பும் பாட்டு வடிவம் கொடுக்கமுடியும் என்று நிகரற்ற தம்மொழித் திறத்தை மிகத் தெளிவாகக் காண்பித் தார்கள். தனிப்பாடல்கள் இலக்கியவுலகில் உரைநடையை ஒக்கும் ஆதலால் காப்பியங்களில் தள்ளுபடி யாகும் பல தமிழ்ச்சொற்களுக்குத் தனிப்பாடலில் நல்வரவு உண்டு. ஆத்தாள், அக்காள், கண்ணாலவோலை,சும்மா, வண்ணான், அம்பட்டன், தேங்குழல், அப்பம், தோசை முதலான சொற்களைக் கொண்டு எத்துணையோ தனிப்பாடல்கள் இனிமை தருகின்றன. தனிப்பாடல் செய்தாருள் சொக்கநாதப் புலவரும் ஒருவர். இவர் முருகனை நோக்கி, `கொடிய இம்மானிடவுடம்பு தவஞ்செய்து இளைத்துக் காய்ந்த சுக்குப்போல் ஆகவேண்டும்; அதன்பின் சுடுகாட்டில் வெந்தால் என்ன கேடு? .இவ்வுடலை மீண்டும் கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள்; சிறந்த வீட்டின்பத்தை நீர் அருளுக; நான் இக்காயத்தை என்றும் தேடமாட்டேன்’ என்று வேண்டுகின்றார். திருவேரகத்து எழுந்தருளியிருக்கும் முருகனுக்குச் செட்டி என்பது பெயர். செட்டி என்றால் வணிகனையும் குறிக்குமன்றோ இவ்வணிகச் சொல்லை அடிப்படியாக வைத்துச் சொக்க நாதப்புலவர் ஓர் உருவகம் புனைகின்றார். அவர் உருவக வெண்பாவில் வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற மளிகைச் சொற்கள் நயமான கவியாக ஆவதைக் கேளுங்கள்: வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியா ரே. ஒரு மொழியின் இலக்கியம் இடையறாது வளர்கின்றது என்பதற்கும், ஒரு மொழி மக்கள் நீண்ட கலையுணர்ச்சி யுடையவர்கள் என்பதற்கும் காலந்தோறும் எழுகின்ற தனிப்பாடல்களே கண்ணாடியாகும். கற்றார் எல்லாரும் காப்பியங்கள் செய்துவிட முடியாது. ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்பொழுது தனிப்பாடல்கள் பாடி வாழ்க்கையில் அறிவின்பம் நுகரலாம். இவ்வின்பமும் சிறந்த இலக்கிய இன்பமேயாகும். 5. தற்சிறுமை பெருமை பேசுவோரைப் பார்க்கின்றோம்; தற்பெருமை பேசுவோரையும் பார்க்கின்றோம். தற்சிறுமை தாமே பேசிக் கொள்வாரையும் பாடிக் கொள்வாரையும் தெய்வப் பாசுரங்களில் அன்றி வேறு எங்கே பார்க்கமுடிகின்றது? அக இலக்கியம் காதலர்களுக்குள் தற்பெருமை பேச இடங் கொடுத்துக் காதலுணர்வை வளர்க்கும். புறவிலக்கியம் ஒன்னார்முன் நெடுமொழி கூற இடங்கொடுத்து வீரவுணர்வை வளர்க்கும். அருளிலக்கியமோ இறைவன்முன் தற்சிறுமை பேசவைத்து அன்புணர்வை வளர்க்கும். காதல் மரபு ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (1088) களவுப் புணர்ச்சியில் தலைவியின் நுதலொளி கண்டு காம வருத்தம் உற்ற தலைவனது கூற்று இக்குறள். என் வலி எத்தகையது? போர்க்களத்து நேரில் என்னை எதிர்த்துத் தோல்வி கண்டவரிடம் கேட்டவர்கள் நடுங்குவார்கள். கண்டாரும் கண்டார்வாய்க் கேட்டாரும் பாராட்டும் என் மறப்பெருமை இவள் சிறுநுதலுக்குப் பள்ளிக் களத்துப் புறங்காட்டி விட்டதே என்று கூறுகின்றான். `நண்ணாரும் உட்கும் என்பீடு’ என்பது தற்புகழ்ச்சி ஆகாதா? இவள் முன் அப்பெருமை போயிற்று எனக் `கழிந்ததற்கு இரங்கலின் தற்புகழ்தல் அன்றாயிற்று’ என்பர் பரிமேலழகர். தற்புகழ்தல் இல்லை எனின் தற்சிறுமை என்று கூறாலாமா? என்பது ஓர் எதிர்வினா. புணர்ச்சியின்பம், நோக்கி மனைவி முன்பு சொல்லிக் கொள்ளுதலின் தற்சிறுமையும் ஆகாது. தலைப்படு சால்பினுக் கும்தள ரேன்சித்தம் பித்தனென்று மலைத்தறி வாறில்லை யாரையுந் தேற்றுவன் எத்துணையும் கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை மலைச்சிறு மான்விழி யாலழி வுற்று மயங்கினனே (25) திருக்கோவைத் தலைவன் பாங்கனுக்குத் தன் வலியழிவு கூறும் துறை இது. `நான் தளர்ந்ததாகவோ பிறழவுணர்ந்ததாகவோ என்னை யாரும் சொல்லியதில்லை. தளர்ந்தாரைத் தேற்றும் அவ்வளவு சால்புடையவனாக இருந்தேன். அஃது ஒரு காலம். இப்போது ஒரு சிறு மான் கடைவிழிக்கு அறவே தோற்றேன்’ என்கின்றான் தலைவன். இது தற்பெருமையாகாதா? என்ற வினாவை எழுப்பிக் கொண்டு பேராசிரியர் `ஈண்டு தன்னை புணர்த்தல் என்ற குற்றம் தங்காது, சால்பு முதலியனவற்றை இப்பொழுது உடையேன் என்னாமையின்’ என்று காரணம் கூறுவர். தன்னையுணர்த்தல் என்ற குற்றம் இல்லை எனின், சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினனே என்பதனால் தன்னைத் தாழ்த்தல் என்ற குற்றம் தங்காதா? அன்புடைய ஒரு பெண்ணின் மான் பார்வைக்கு ஆடவன் மயங்குதல், மயங்க வேண்டுதல் இயற்கை. அந்த இயற்கைக்கு வயப்படாமைதான் குற்றமாகும். ‘ஊடலில் தோற்றவர் வென்றார்’ (குறள். 1327) என்பதனால் இல்லறப்போரின் தனித்துவம் பெறப்படும். இவை தற்பெருமையும் ஆகா, தற்சிறுமையும் ஆகா, இவை வழக்கொடு சிவணிய இலக்கிய மரபுகள் ஆம். வீர மரபு தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான்தற் புகழ்தல் தகுதி யன்றே மன்னுடை மன்றத் தோலை தூக்கினும் தன்னுடை யாற்றல் உணரார் இடையினும் மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே முதற்நூற்பா தற்புகழ்தல் ஆகாது என மொழிந்தாலும், இரண்டாவது நூற்பா அஃது ஆமிடங்களைச் சுட்டிக் காட்டுகின்றது. நூற்பா கூறுவது போல, இப்புகழ்ச்சி புலவர்க்கு மட்டும் உடைமையன்று. வஞ்சினம் என்பது புறத்திணையில் ஒரு புகழ்த்துறை. இத்துறையில் மறவர்கள் தம் பெருமையைத் தாமே எடுத்து அறைகுவர். பூதப்பாண்டியன், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி என்ற மூவர்தம் வஞ்சினப் பாக்களில் இல்லறப் பெருமை செங்கோற் பெருமை நட்புப்பெருமை குடிப்பெருமை என்றிவற்றைத் தம் வாயால் தாமே பறைசாற்றிக் கொள்வதைப் படிக்கின்றோம். மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்து அடங்காத் தானை வேந்தர் உடங்கியைந்து என்னொடு பொருதும் என்ப (புறம்.71) படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாமென்று உறுதுப் பஞ்சாது உடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை (புறம்.72) என்றபடி வேற்று வேந்தர் தம் பெருமையைப் பறைசாற்றிக் கொள்வதைக் கேட்கப் பொறாமையையும் பார்க்கின்றோம். பகைவரை ஏசித் தம்மை ஏத்திக்கொள்வதெல்லாம் வீரப் பொதுமரபு என்பதனால் இவற்றை நாம் குற்றமாகக் கொள்வதில்லை. `துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம்’ என்று பாராட்டும் தொல்காப்பியம். தற்பெருமையும் பெருமிதமும் இலக்கியத்தில் இன்னும் சில மரபுகள் உண்டு. சிலர் தம் பெருமையைத் தாம் சொல்லமாட்டார்கள். புலவனும் அவர்களை அங்ஙனம் சொல்ல வைக்கமாட்டான். அதற்காக அப்பெருமக்கள் தம் சிறப்பினைத் புலப்படுத்தாது இருக்க முடியுமா? அதனை இடம் வாய்த்துப் புலப்படுத்துவதற்கென்று வேறு சில பாத்திரங்களைப் புலவன் விடுவான். யாரென விளம்பு கேன்நான் எங்குலத் தலைவற் கும்மை வீரநீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான் வார்கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும் சோர்விலன் நிலைமை யெல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான் இராம இலக்குவ அனுமன் முச்சந்திப்பில் இராமன் தான் யார் என்பதைத் தானே மொழியவில்லை. பக்கத்திருந்த தம்பி இலக்குவன் அண்ணனின் குடிப்பிறப்பு வேள்விக்காப்பு அரசுத்துறப்பு மனைவியிழப்பு எல்லாம் வரன் முறையாக உரைக்கின்றான். கற்புக்கடம் பூண்டஇத் தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால் என்று கண்ணகியின் கற்புப்பெருமையைக் கவுந்தியடிகள் மாதரிக்குச் சொல்வதும், `இம்மைச் செய்தன யானறி நல்வினை’ என்று மாடலன் கோவலனது இளமைத் தொண்டுகளைச் சொல்வதும் எல்லாம் பிறர் வாய்ப் பெருமையாகும். தற் பெருமையை வெளிப்படையாகச் சொல்ல நாணினாலும் தனக்கு ஒரு பெருமையுண்டு என்ற எண்ணம் உள்ளத்தளவில் எல்லார்க்கும் கிடக்கின்றது. இவ்வுட்பெருமை தற்பெருமையாகாது, பெருமிதம் எனப்படும். பெருமிதம் என்பது கரைகடவா நீரொலி போன்றது. தற்பெருமை என்பது உள்ள நீரையும் வற்றச் செய்து கரையைப் புரைப்படுத்தும் கதிர்ச்சூடு போன்றது. உள்ளோடும் பெருமிதம் வாழ்வுக்கு இன்றியமையாதது; என்றும நம்பிக்கையூட்டுவது. அருள் மரபு இதுகாறும் காதலிலம் வீரத்திலும் தற்பெருமை பேசும் இலக்கிய மரபுகளைப் பார்த்தோம். இதற்கு மாறாகத் தற்சிறுமை பேசும் மரபினை அருள் நூல்களில் பரக்கக் காணலாம். ஞானசம்பந்தர் முதலான அருளாளர்கள் எவ்வளவோ மருட்கை நிகழ்ச்சிகளைப் புரிந்தவர்கள். ஆற்றலிலும் அறிவிலும் புலமையிலும் நிகரற்றவர்கள். நாட்டையும் அரசையும் மன்பதையையும் மாற்றி அமைத்தவர்கள். உரமும் ஊற்றும் வழி வழி ஊட்டவல்ல பாடல்களை ஆயிரக்கணக்காக அருளியவர்கள். இவ்வளவு பெரியவர்கள் நாயினும் சிறியவர்களாகத் தம்மைப் பழித்தும் இழித்தும் மடப்படுத்தியும் தாமே பாடிக் கொள்வானேன்? மாயத்தை அறியமாட்டேன் மையல்கொள் மனத்த னாகிப் பேயொத்துக் கூகை யானேன் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லி (அப்பர்) நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் பேயாய்த் திரிந்தெய்த்தேன் (சுந்தரர்) வஞ்சனையும் பொய்யுமுன்னே வைத்தழுக்கா றாயுளறும் நெஞ்சனுக்கு முண்டோ நெறிதான் பராபரமே (தாயுமானார்) மதிகெட் டறவா டிமயங்கி யறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் (அருணகிரிநாதர்) இங்ஙனம் அருட்புலவர்கள் தம்மைத் தற்சிறுமைப் படுத்திக் கொள்ளும் இடங்கள் பலப்பல; எனினும் மிகுதியாகத் தம்மைச் சிறுமை பேசியவர் மணிவாகசரும் பின்னர் இராமலிங்கரும் ஆவர். தேவாரங்களிலும் தற்சிறுமை இடங்கள் உள. திருவாசக அளவு அவற்றில் இல்லை. அதற்குக் காரணம் தேவாரம் சைவ இயக்கப்பாடல்; சமண பௌத்த மதச் செல்வாக்குகளைத் தகர்த்துச் சைவத்தை நிலைநாட்ட வந்த பறைவுப்பாடல்; தலந்தோறும் சென்று மக்களைத் திரட்டிச் சிவனது பெருமையையும் திருவருளையும் இசையொடு குழைத்துப் பாடிப் பரப்பிய மன்பதைப் பாடல். மனையறத்தில் இன்பமுறு மகப்பெறுவான் விரும்புவார் அனையநிலை தலைநின்றே ஆடியசை வடிக்கமலம் நினைவுறமுன் பரசமயம் நிராகரித்து நீறாக்கம் புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும் தவம்புரிந்தார் என்று சேக்கிழார் ஞானசம்பந்தரின் பிறப்பை இவ்வுலகில் ஓர் இயக்கம் நடத்த வந்த பிறப்பாகவே, பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதிகமும் தழைத்தோங்க, வந்த பிறப்பாகவே, அயல்வழக்கின் துறைவெல்ல வந்த தமிழ்ப் பிறப்பாகவே, சிவம் பெருக்க வந்த பிள்ளையாராகவே எடுத்துக் காட்டுதலைக் காண்கின்றோம் நாட்டில் எந்த இயக்கம் பரப்பும் பெரியவர்களும் மக்கள் முன் தம்மை அடிக்கடி சிறியவர் களாகத் தூற்றிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. அப்படித் தூற்றிக் கொள்ளின் அது மக்கட்கு இனிக்காது, புரியவும் புரியாது. ஆதலாலன்றோ, சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம் பந்தன் சொற்பாடி யாடக்கெடும் பாவமே (சம்பந்தர்) பொய்யாத் தமிழூரன் உரைத்தன வல்லார் மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே (சுந்தரர்) என்று திருக்கடைக்காப்புச் செய்யுட்களில் சம்பந்தரும் சுந்தரரும் தம் பெயர் வரவும் பெருமை தோன்றவும் பாடியுள்ளனர். இப்போக்கு தற்பெருமையன்று; மக்கள் உள்ளத்துப் பதியமாறு பாடிய பதிகமரபு என்று சுட்டிவருகின்றோம். திருவாசக மரபு திருவாசகம் என்பது தனிநெறிப்பாடல்; உயிர்ப்பாடல். அஃது உயிரியக்கப் பாடலன்று; உயிரொடுக்கப் பாடல். `இன்பே அருளி எனையுருக்கி உயிருண்கின்ற எம்மானே’ எனவும் `ஊன் கெட்டு உயிர்கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும் போய்’ எனவும் வருதல் காண்க. திருவாசகத்தின் பல பத்துக்களுள் உயிருண்ணிப்பத்து என ஒன்று உண்டு என்பதும் நினையத்தகும். `உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்’ என்றபடி, திருவாசச் செய்யுட்கள் தன்னைப் பிறன்போற் கூறும் படர்க்கை நடையில் அமையாது, நாடக நடை எனப்படும் தன்மை நடையில், பெயர் சுட்டிக் கூறாது அமைந்துள்ளன. உயிரையே ஒடுக்க நினைத்தவர்க்குப் பெயரொடுக்கம் எம்மாத்திரம்? ஆதலின் மணிவாசகர் தம்மை யாரினும் யாதினும் சிறுபொருளாகப் பாடிக்கொண்டார். `உலகத்தார் தூசியைக் காலின் கீழ் மிதிக்கின்றனர். உண்மை நாடி அத்தூசியும் தன்னைத் தலைமேல் மிதிக்கும் அளவுக்குப் பணிந்து கிடக்க வேண்டும்’ என்பர் பெருமான் காந்தியடிகள். அருளாளர்களில் மணி வாசகர்போல் தம்மை இழிவாசகம் பேசிக்கொண்டவர் யாருளர்? சிட்ட னேசிவ லோக னேசிறு நாயி னுங்கடை யாயவெங் கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே மூர்க்கன், கள்வன், கடியன், கலதி, பேயேன், ஆள்வாரிலிமாடு, கண்கெட்ட ஊரேறு, சழக்கனேன், ஊற்றையேன், புலையனேன் என்று கண்டவாறு தம்மைத் திட்டிக் கொள்கின்றார் மணிவாசகர். உலகில் இறப்ப இழிவாகக் கருதும் பொருள் நாய். மிகமிக இழிந்த தம்மை அந்நாயொடும் ஒப்பிட்டுக் கொள்ள விரும்பவில்லை. சில வகையில் நாயினம் உயர்ந்தது; எல்லா வகையிலும் தாம் இழிந்தவர். ஆதலின் நமக்கு எவ்வகை நாய் ஒப்பாகும் என்று காட்ட வேண்டி, நாய்க்குப் பல்வேறு அடைகொடுத்து ஒப்பாக்கிக் கொள்கின்றார். நாய் பெற்ற இடம் திருவாசகத்தில் யார் பெற்றார்? 1. `யாதும் ஒன்றல்லாப் பொல்லா நாயான நீசனேனை’ 2. `ஊர்நாயிற் கடையானேன்’ 3. `பொல்லா நாயான புன்மையேனை’ 4. `நாணமில்லா நாயினேன்’ 5. `ஏண் நாணில்லா நாயினேன்’ 6. கீறிலாத நெஞ்சுடைய நாயினேன்’ 7. `கடலினுள் நாய் நக்கியாங்கு’ 8. `கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை’ 9. `ஆதமிலி நாயேனை’ 10. `புறமே கிடந்து புலைநாயேன் புலம்புகின்றேன்’ 11. `ஒன்றும் போதா நாயேனை’ 12. `நாயிற் கடையாம் நாயேனை’ 13. `புழுத்தலை நாய்போல இச்சை யாயின.’ 14. `நானார் அடியணைவான் ஒருநாய்க்குத் தவிசிட்டு’ 15. `நாயினும் கடையாய வெங்கட்டனேனையும்’ நாய் ஒழியப் பிறபொருள் தனக்கு உவமையாகாது எனவும், அந்நாயையும் தம் இழிவுக்கேற்ற அடைகொடுத்து உவமையாகப் படைத்துக் கொண்டாலல்லது இயற்கை நாய் உவமையாகாது எனவும் திருவாசகர் கருத்தாதல் பெறப்படும். நாயொன்றையே உவமையாக ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? அடிநாயேன், நாயடியேன், நாயினேன் என்றெல்லாம் தம்மையே, ஏன் நாயாக ஆக்கிக் கொள்ள வேண்டும்? உலகம் அறிந்த நாயின் பண்பு செய்ந்நன்றியுடைமை. அந்நாய்ப் பண்பு தம்பால் இல்லையே என்பது மணிவாசகரின் கவற்சி. நான்தனக் கன்பின்மை நானுந்தானும் அறிவோம் தானென்னை யாட்கொண்டது எல்லாரும் தாமறிவார் ஈறி லாதநீ யெளியை யாகிவந்து ஒளிசெய் மானுடமாக நோக்கியும் கீறி லாதநெஞ் சுடைய நாயினேன் கடைய னாயினேன் பட்ட கீழ்மையே இவ்வாறு உலகம் அறியவந்து தன்னை எளிமையாக ஆட்கொண்ட திறத்தைத் தான் மதிக்கவில்லையே. நாய்க்குத் தவிசிட்டாற்போல, தனக்குத் தகுதியில்லாத பெரும்பதத்தை அருளிய பெம்மானைத் தான் நன்றியோடு நினைக்கவில்லையே என்று மணிவாசகர் துடிக்கும் திருவாசகக் கறதலை நாம் பல செய்யுட்களிற் பார்க்கின்றோம். நன்றியுடைய நாயாக இருக்க வேண்டிய நான் நன்றி கெட்ட நாயாக இருக்கின்றேனே; எப்போது நல்ல நாயுணர்வு எனக்கு வருமோ என்று மணிவாசகர் இரங்குகின்றார். செய்ந்நன்றியுணர்வு எல்லாக் குணங்களிலும் தலையாய குணம் எனின் அந்நன்றிக்கேடு எல்லாக் குற்றங்களிலும் தலையாய குற்றம் என்பது பெறப்படும். காமம் மிக்க சச்சந்தன் கட்டியங்காரனிடம் அரசாட்சியைக் கொடுத்தான்; நாய்போல் நன்றியுடையவனாக இருப்பான் என்று நம்பினான் சச்சந்தன். கட்டியங்காரனோ நம்பிக்கைக் கேடு செய்து சச்சந்தனைக் கொன்று அரசைக் கைப்பற்றினான். இவ்வாறு நம்பிக்கைக் கேடியாகிய கட்டியங்காரனை, ஓதி னார்தமை வேறுகொண்ட டோதினான் கோது செய்குணக் கோதினுட் கோதனான் (சிந்தா.240) என்று திருத்தக்க தேவர் பழித்துக் கூறுவர். ஆதலின் மணிவாசகர் தம்மைச் சிறுமையாகப் பாடிப் பழித்ததற்கு ஒரே ஒரு காரணம் இறைவனுக்கு நன்றி காட்டாமை என்று அவர் நினைப்பது. இதனால் அவருக்கு எழுந்த ஒரு முரட்டுத் துணிவினைப் பாருங்கள். நன்றியில்லாத நாயென்று தன்னைத் தெரிந்தும் ஆளலாமா? அங்ஙனம் ஆண்டவன் அறிவுடையவன் இல்லையாம், பேதையாம், என்ன துணிவு! தாதாய் மூவேழ் உலகுக்குந் தாயே நாயேன்தனை யாண்ட பேதாய் என்று இறைவனையே பழிப்பது பார்த்து மணிவாசகரின் துணிவுக்கு முன் நாம் பின்வாங்குகின்றோம். ஞாலம் உள்ளளவும் மக்களுயிர் உள்ளளவும் நிலைக்கத்தக்க அன்புநூல் அருளிய மாணிக்கவாசகரே தம்மை நாயென்றும் பேயென்றும் மாடென்றும் இழிவுபடுத்திக் கொள்வதைப் படிக்கும்போது, நாம் நம்முடைய சிறுமையை நினைத்துப் பார்க்க வேண்டும். இதுவே மணிவாசகருக்கு நாம் காட்டக்கூடிய செய்ந்நன்றி. வளமாக இருந்து பின் வறுமை வாய்ப் பட்டவர்களைக் காணுங்கால் நெஞ்சு உருகுகின்றது அல்லவா? அருள் வளமுடைய திருவாசக அடிகள் தம்மை நல்லது ஒன்றும் இல்லாப் பொல்லா வறியவராகச் சொல்லிக் கொள்ளும்போதும் அவ்வுருக்கவுணர்வு தோன்றுகின்றது. அதனால்தான் `திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்ற பழமொழி எழுந்ததுபோலும். அடிகளார் தம்மை இவ்வளவு என்று இல்லாமல் இறப்பப் பழித்துக் கொண்டாலும், பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசில் மணியின் மணிவார்த்தை என்று நாம் அறியோமா? `தன்பெருமை தான் அறியாத் தன்மையன்காண்’ என்று அடிகள் ஆண்டவனுக்குக் கூறியதைத் திருவாசக அடியோர்களாகிய நாம் நம் மணிவாசக ஆண்டவனுக்குத் திருப்பிக் கூறினால் பொருந்தாதா? 6. தேவர்கள் படும்பாடு திருமால் முதலான தேவர்களின் நிலைபற்றி மாணிக்க வாசகரின் உள்ளத்தையும் திருவாசகத்தின் ஓட்டத்தையும் வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கம். திருவாசகம் சமய நூலாயினும் இக்கட்டுரை சமயநோக்கில் எழுதப்பட வில்லை. ஆசிரியரின் உள்ளங் காணும் திறன் முறையில் எழுதப்படுவது. இதனை உளங்கொண்டு இந்த ஆய்வினைப் படிக்குமாறு வேண்டுகின்றேன். சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல் தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய் (திருவம்மானை) சந்திரனையும், இந்திரனையும், எச்சனையும், ஞாயிற்றையும், ஏனைத் தேவர்களையும் பல்வேறு உறுப்புக்களைத் தேய்த்தும் நெரித்தும் தகர்த்தும் நாலாறு திசையாக ஓடும்படி செய்து அதனைப் பார்த்து உவப்படைந்தான் சிவன் என்று திருவாசகம் பாடுமேல், அத்தேவர்களின் அடிப்படைக் குற்றங்கள் என்ன, அன்னோரைப் பாட்டில் வைத்துப் பாடாகப்படுத்தும் திருவாசகத்தின் உட்கிடை என்ன என்பன பற்றி நாம் ஒரு தெளிவு பெறவேண்டும். தலைவர் மூவர் முதற்கண் திருவாசகத்தில் தேவர்களைக் குறித்து வரும் செய்திகளையும் அவ்விடங்களில் ஆளும் மொழிநடைகளையும் காண்போம். புராணப்படி, தேவர்கள் இந்திய நாட்டின் தொகை போலப் பல கோடியர் ஆக இருந்தாலும், அக்கூட்டத்துக்குத் தலைவர் ஆவார் மூவரே. 1. `வான்வந்த தேவர்களும் மாலயனோடு இந்திரனும்’ 2. `மாலயனோ டிந்திரனும் எப்பிறவியுந் தேட’ 3. `இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்’ 4. `கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு’ என்றபடி திருமால், நான்முகன், இந்திரன் என்னும் மூவர்களையே விதந்தெடுத்துக் குறிப்பாகப் பாடுபடுத்துகின்றது திருவாசகம். `புரந்தரன் மால் அயன்பால் இருளாயிருக்கும் ஒளி’ (73) என்ற திருக்கோவையாரிலும் இம்முப்பெயர்த் தொடரைக் காண்கின்றோம். இம்மூவருள்ளுங்கூட, இந்திரன் சில இடங்களில் விடப்படுகின்றான். தலைமைத் தன்மை ஏனையிருவரைப் போல் அவன் பெறுவதில்லை. 1. `அரியொடு பிரமற் களவறி யொண்ணான்’ 2. `பிரமன் மாலறியாப் பெற்றி யோனே’ 3. `பூமேல் அயனொடு மாலும் புகலரிதென்று’ 4. `அரிக்கம் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்’ இவ்வாறு திருமாலும், பிரமனுமே திருவாசகத்தின் தாக்குதலுக்கு முற்பட ஆளாகின்றனர். திருக்கோவையாரிலும் `நான்முகன் மாலறியாக் கடனாம் உருவத்து’ (77) என்ற இடத்து இந்திரனை ஒழித்த இருகூட்டு காணப்படுகின்றது. இவ்விருவரைக் கூறினால் ஏனைத் தேவர்களையும் சுட்டிய தாகும் என்பது கருத்து. மாலையும், அயனையும் சேர்த்தே கூறும் பெருவழக்கு ஏற்பட்டமையின் பெயர் சொல்லாமலே இருவர் என்றால் இவ்விருதேவரையும் குறிக்கும் தொகை மரபு தோன்றலாயிற்று. `இருவரால் மாறு காணா எம்பிரான்’ எனத் திருவாசகமும், `இருவர் அறியா அணிதில்லை யம்பலத்து’ எனத் திருக்கோவையாரும் இத்தொகை மரபை ஆண்டுள்ளன. சில இடங்களில் மாலும் பிரமனும் என, பிரமனும் மாலும் என முன் பின்னர்க் கூறப்பட்டாலும் இருவரையும் நிகராக வைத்தே திருவாசகம் தாக்குதல் தொடுக்கின்றது. `அயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் `முன்னாய மாலயனும் வானவரும் தானவரும்’ என இவ்வாறு தேவர் கூட்டத்தைக் குறிக்கும்போது, இருவரையுமே முதற்கண் மொழிந்து ஏனையோரைப் பொதுவாகக் கூறுதல் நினையத்தகும். புராணப்படி, திருமால் நான்முகனுக்குத் தந்தையாதலின், சில இடங்களில் திருமாலை மட்டும் குறிக்கும் மரபு உண்டு. 1. `முழுவதுங் கண்டவனைப் படைத்தான் முடிசாய்த்து’ 2. `செங்கண் நெடுமாலும் சென்றிடத்துங் காண்பரிய’ 3. `வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனை’ 4. `திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை’ இங்ஙனம் திருவாசகத்தில் சிலவிடங்களில் நான்முகனை விட்டுத் திருமாலை மட்டும் குறிப்பது போவே, திருக்கோவையும் `கருங்கண்ணனை அறியாமை நின்றோன்’ (53) என்று குறிக்கும் போக்கினைப் பார்க்கின்றோம். எனினும் பொருட்பேற்றால் நான்முகனையும் கொள்ள வேண்டும் என்பது கதிர்மணி விளக்கப் பெரும் பேராசிரியர் பண்டிதமணியின் கருத்து. `முழுவதும் கண்டவனைப் படைத்தான்’ என்ற திருச்சதகப் பாடலுக்கு `அடிதேடிய திருமால் செய்தியை வெளிப்படையாகக் கூறவே, முடிதேடிய பிரமன் செய்தியும் குறிப்பாகப் புலப்படுத்திய படியாம்’ என்று மொழிகுவர் பண்டிதமணியார். ஆதலின் தேவக் குழுவிற்குத் திருமாலும் பிரமனும் தலைவர் ஆவர் என்று தெளியலாம். ஆணவ முனைப்பு திருமாலையும் நான்முகனையும் தலைமையாக எண்ணித் திருவாசகம் தாக்குதற்குக் காரணம் என்ன? சிவபெருமானைக் காணுவோம் என்ற முனைப்பை மேற்கொண்டு ஏனைத் தேவர்கள் செய்த முயற்சிகள் வெளிப்படையாகத் தெரியவில்லை. சிவனைக் கண்டு காட்டுவோம் என்ற ஆணவ முனைப்பில் திளைத்தவர்கள் அரியும் அயனுமே. திருமால் பன்றியுருவெடுத்துச் சிவன் திருவடியைக் காண முனைந்தான். பிரமன் அன்னமாகி அவனது முடியைக் காணப் பறந்தான். தனி முனைப்பு பயனளிக்கவில்லை என்பது புராணமுடிவு, இம்முனைப்புச் செயலைத் திருவாசகம் அழுத்தமான சொற்களால் தாக்கிப் பாடுகின்றது. 1. `மாலறியா நான்முகனும் காணா மலையினை’ 2. `செங்கண் நெடுமாலும் சென்றிடத்துங் காண்பரிய’ 3. `திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை’ 4. `பிரமம் அரியென் றிருவரும் தம் பேதைமையால் பரமம் யாம்பரம் என்றவர்கள் பதைப் பொடுங்க’ 5. `நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை’ 6. திகழத் திகழ அடியும் முடியும் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான்’ 7. `பங்கயத் தயனுமால் அறியா நீதியே’ இத்தொடர்களில் ஆளப்பட்ட குத்தற் சொற்களைத் திருமாலும் நான்முகனும் படிக்கும் வாய்ப்பிருந்தால், எவ்வளவோ புண்படுவர். திருமாலால் அறியமுடியாதவனும், நான்முகனால் காண முடியாதவனும் ஆய சிவன் சிறுபொருளா? வெள்ளிடைமலை என்பர். மலையாக இருந்தும் ஏன் காணமுடியவில்லை? மால் தன் பெயருக்கு ஏற்ப அறியா மயக்கத்தவன். ஒரு முகம் உடையவன் காண்பான், நான்கு முகம் உடையவன் எவ்வாறு காணவல்லான் என்று இருவர் தம் பெயர்களிலே காரணம் அமைந்து கிடப்பதாகத் திருவாசகம் குறிப்பிற் புலப்படுத்துகின்றது. செங்கண்ணன் ஆக இருந்தாலும் நெடுமால் ஆதலால் காணமுடியவில்லையாம். திருமால் பன்றியாய்க் கீழ்ப் பிறப்பெடுத்தும் உணரமுடியவில்லையாம். தம்மைத் தாமே பரமம் என்று அவ்விருவரும் தம்மைச் சொல்லிக் கொண்டது பேதைமையாம். ஓங்கி வளர்ந்த நெருப்பினை நெடியவனாக இருந்தும் பார்க்க முடிய வில்லையாம். நீ இப்பக்கம் செல், நான் அப்பக்கம் வருகின்றேன்; ஆளுக்கு ஒரு வழியாகப் போய்த் தேடிப் பிடித்துவிடலாம் என்பது போல, இருவரும் அகழ்ந்து பறந்து முயன்றும் பேரொளிப் பிளம்பாக விளங்கும் அடி முடியைக் காண மாட்டாதவர். ஆயினராம். அயனாலும் அரியாலும் சிவன் அறியப்படாமை நீதியாம். அடிமுடி தேடிய நிகழ்ச்சி பற்றித் திருக்கோவை யுரையாசிரியர் `அன்னம் திருவடித் தாமரையையும் பன்றி சடைக் காட்டையும் தேடுதல் முறை; அவ்வாறு தேடாது தமது அகங்காரத்தினால் மாறுபட்டுப் பன்றி தாமரையையும் அன்னம் காட்டையும் தேடினதால் கண்டில’ எனவும் விளக்கம் தருவர். இரு தலைவர்களும் மேற்கண்டவாறு சொற்றாக்கம் பெற்றனர் எனின், ஏனைத் தேவரின் பரிசழிவு சொல்ல வேண்டுமா? அடிமுடி தேடிய நிகழ்ச்சி அரிக்கும் அயனுக்கும் உரியது. கடலில் எழுந்த நஞ்சு கண்டு அஞ்சியது எல்லாத் தேவர்க்கும் பொது. நஞ்சுக்கு அஞ்சி அலறியதனால் இருதலைவர் முதலாக எல்லாத் தேவர்களும் ஆற்றல் அற்றவர்கள் என்பது வெளிப்படையாகின்றது. அந்நஞ்சை அமுதம்போல் உண்டு அவர்களைக் காத்தளித்தான் சிவன் என்பதனால் அவன் முழுமுதல் என்பதும் வெளிப்படை யாகின்றது. 1. `நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவரவரே’ 2. `சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின ஆலமுண்டாய் 3. `ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ’ இத்திருவாசக அடிகளிலும் சொற் குத்தல்கள் உள. மனிதர்கள்போல், நஞ்சைப் பார்த்ததும் வெருண்டு ஓட்ட மிட்டவர்கள் தேவர்கள் ஆவார்களா? இல்லை, நம்மவர்களாம். யாருக்காகச் சிவன் ஆலம் உண்டானெனின் நம் போன்ற சிற்றுயிர்க்காம். நஞ்சாலம் சிவன் உண்ணாவிட்டால் மேன்மை யானவர் என்று நினைத்து இறுமாந்திருக்கும் தேவரெல்லாம் செத்தொழிவராம். சிவபெருமான் எத்தேவர்க்கும் அரியவன், எட்டாதவன் என்ற கருத்துக்கோள் திருவாசகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன. தேவர்கள் சிவனை வழுத்த வில்லையா? வணங்கவில்லையா? பரவவில்லையா? போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று அடிமுடி யறியும் ஆதர வதனிற் கடுமுரண் ஏனம் ஆகி முன்கலந்து ஏழ்தலம் உருவ இடத்து பின்எய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியும் காணா மலரடி யிணைகள் என்ற போற்றித் திருவகவலால், திருமால் முதற்கண் தன்முனைப்போடு பன்றிவடிவெடுத்துச் சிவனடியைக் காணமுயன்று இளைத்தான் எனவும் பின் தன் முயற்சி பயன்படாதது கண்டு போற்றி வழுத்தினான் எனவும் அங்ஙனம் வழுத்திய பின்னும் மலரடிகளைக் காணமுடியவில்லை எனவும் அறிகின்றோம். தன்முனைப்புக்கு மலரடியைக் காட்டாதது பொருத்தம். தொழுத பின்னும் காட்டாதது பொருத்தமா? என்பதனைச் சிந்திக்க வேண்டும். இறைவனை அடைதற்கு அன்பு நெறிதான் தக்கது என்று தெரிந்திருந்தும், முதற்கண் அதனையன்றோ பின்பற்றி யிருக்கவேண்டும்? மனித இனத்துக்கு இது தெரியாமல் இருக்கலாம். உயர்ந்த வானவர்க்குத் தெரியாது என்று சொல்லமுடியுமா? ஒருவழி பயன்படாதபோது, இன்னொரு வழியை மேற்கெள்வது வினைசெயல்வகை என்று ஆகுமேயன்றிப் பத்திநெறியாகாது. தன்னலத் தேவர்கள் தேவர்களை மணிவாசகர் ஏன் இடமெல்லாம் இழிவுபடுத்துகின்றார்? இன்னாச்சொல் தொடுக்கின்றார்? இளிமை பேசுகின்றார் என்பதற்குப் புறத்தே காரணங்கள் தேட வேண்டுவதில்லை. திருவாசகத்திலே காரணப்பாடல்கள் உள. அடிமுடி தேடிய புராணத்தால் ஆணவக் குற்றமும், தக்கன் வேள்வியில் கலந்து கொண்டதனால் சிவனை மதியாக் குற்றமும் வெளிப்படுகின்றன. இன்னொரு பெருங் குற்றமும் தேவ இனத்துக்கு உண்டு. தண்ணீர் உயருந்தோறும் கரையை உயர்த்தவேண்டும்; மரம் நீளுந்தோறும் அடியைக் கனப்படுத்த வேண்டும். உயர்ந்தோர் உயரவுயரத் தாழ்ந்தவர்களையுங் கூட உயர்த்திக் கொண்டு செல்லவேண்டும். இவ்வாறு கீழ் நிலையையும் சேர்த்து உயர்த்தாவிட்டால் வெற்றுயர்வு வீழ்ச்சியைத் தந்துவிடும். இவ்வுயர் பண்பு தேவர்கள் பால் இல்லை. வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனநின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழ வேண்டிச் சூழ்த்தமது கரமுரலும் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே இத்திருவாசகம் வானவர்களை முழுத் தன்னலத்தார் என்று குற்றம் சாட்டுகின்றது. இக்குற்றம் தனித்தன்னலம் எனவும் பிறர்வழித் தன்னலம் எனவும் இருவகைப்படும். வானவர்கள் தாம் வாழ வேண்டும் என மொழியால் போற்றுகின்றார்கள். `வேண்ட முழுதும் தருவோய் நீ’ என மணிவாசகரும்’ `வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈவான் கண்டாய்’ என நாவுக்கரசரும் வழிகாட்டியிருத்தலின் தன்னல வேண்டுகோள் குற்றமாகாது என்று ஒருவாறு கொள்ளலாம். தாம் வாழவேண்டும் என்ற ஓரளவில் தேவர்களின் இறைவணக்கம் இருக்குமாயின் மணிவாசகர் விட்டு விடுவார். தாம் என்றும் உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும் எனவும் பிறவுயிரெல்லாம் தமக்குக் கீழாக நின்று தொழுது கொண்டே இருக்கவேண்டும் எனவும் ஓர் அதிகார வெறி தேவர்கட்கு இருப்பதைத் திருவாசகம் எடுத்துக்காட்டுகிறது. மனமொழி மெய்களால் தொழும்போது, `ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள’ என்றபடி முக்கருவிக்கும் ஒரு நோக்கமே இருத்தல் வேண்டும். நாம் வானவரிடத்துக் காண்பது என்ன? மொழியால் இறைவனைப் போற்றும் போது தாம் வாழவேண்டும் என்பது அவர்களின் நோக்கம். மொழியினும் சிறந்த மனக்கருவியால் இறைவனைப் பணியும்போது எல்லா உயிரும் தமக்கு அடிபணிந்து தம் முயர்வுக்காகப் பாடுபட வேண்டும் என்பது அவர் தம் நோக்கம். வழிபாட்டில் மொழியொன்றும் மனம் ஒன்றும் வேண்டும் இப்போக்கு வஞ்சகம் ஆகும். இறைவனைத் தாம் வழிபடுவதை விடுத்து, பிறவுயிரெல்லாம் தம்மை வழிபட வேண்டும் என்று நினைப்பதும், சிவன் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பரவுவதும் கயமையிலும் கயமை. தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் (குறள். 47) என்றார் திருவள்ளுவர். இக்குறளின் விரிவே திருவாசகத்தின் ஒரு பகுதி என்று கொள்ளலாம். திருவாசகப்படி ஆணவம், மதியாமை, தன்னல அதிகாரம் என்ற முக்குற்றங்கள் உடையவர்களே தேவர்கள் ஆதலின் இச்சிறுமையுயிர்கட்கு இறைவன் முன் வந்து காட்சியளிப்பான் என்று எதிர்பார்க்க முடியுமா? `கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி’ `கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்’ என்று தேவர்கட்கு இறைவனது முற்றருமை பேசப்படுகின்றது. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந் திளைத்தேன் என்ற பிறப்புப் பட்டியலால் மணிவாசகர் தேவனாகப் பிறந்த அருஞ்செய்தியையும் நாம் அறிகின்றோம். எனவே தேவரைப் பற்றி அவர் பாடும்போது அப்பிறப்பின் அனுபவ அறிவும் அவர்க்கு உண்டு என்பதனை நாம் உடம்பொடு புணர்த்தலாகக் கொள்ள வேண்டும். மானிடப் பிறப்பு இறையருள் பெறுதற்குத் தேவுப் பிறப்பு முற்றும் இடையூறாகும். அப்பிறப்புக்கு இறைவன் ஒருநாளும் காட்சி யளியான். அவன் வெறுப்புக்கு உள்ளான பிறப்பு வானப்பிறப்பு; அவன் வெறுப்புக்கு உள்ளான உலகம் வானுலகம். அவன் விரும்பும் பிறப்பு மனிதப் பிறப்பு; விரும்பும் உலகம் மண்ணுலகம் என்று திருவாசகம் தெளிவு செய்திருக்கின்றது. தேவர்களின் இரு தலைவர்களாகிய திருமாலும் நான்முகனுமே மண்ணுலகிற் பிறக்க ஆசைப்பட்டார்கள் எனின், அவர்களும் அவர்களைச் சார்ந்த பொதுத் தேவர்களும் தேவுப் பிறப்பில் இறைவனால் என்னென்ன அவதிக்கு உள்ளானார்களோ? `பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கனெச்சன் இந்துவனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரராற் புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ`’ 7. திருவாசக நினைப்பு யாருடைய நல்வாழ்வுக்கும் ஒரு பெரியவர் தொடர்போ ஒரு பெரிய நூலின் தொடர்போ இன்றியமையாதது. இரு தொடர்பும் ஒருங்கே ஒருவர்க்குக் கிடைக்குமாயின் வாழ்க்கைக் கடல் இருகரையுடைய தாகும். இத்தொடர்புக்கும் வாழ்க்கை யுயர்வுக்கும் உறவுண்டு. வாழ்வாங்கு வாழ்தல் என்பது என்ன? நினைப்பாங்கு நினைத்தல் ஆகும். நினைவு ஒரு பிறப்போடு அற்று விடுவதில்லை எனவும் ஒரு பிறப்பின் எண்ணங்கள் வரும் பிறப்புக்களிலும் தொடக்குற்று வாழ்வினை இயக்கும் எனவும் சமய நூல்கள் பகர்கின்றன. `ஏது நிகழ்ச்சி’ என்று மணிமேகலைக் காப்பியம் இதனைக் குறிக்கும். தங்கள் துன்பத்தைத் துடைத்தோரின் நட்பினை ஏழு பிறப்புக்களிலும் நினைவு கொள்வர் எனவும் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி எழுமையும் தொடரும் எனவும் எண்ணப் படர்ச்சியைத் திருக்குறள் பலவிடங்களிலும் அறிவுறுத்துகின்றது. உயிர் இருந்தாற்கூட, நினைவிழந்து விட்டால் வாழ்கின்றான் என்று அவனைச் சொல்வது வழக்கில்லை. எனவே நினைவியக்கமே வாழ்வியக்கம் என்பது தெளிவு. எது சிந்தனை `உண்மையே கடவுள்’ என்று பெருமகன் காந்தி அறுதியிட்டதுபோல், நினைவே வாழ்வென்றால், அந்நினைவு எவ்வண்ணம் இருத்தல் வேண்டும், எங்ஙனம் இருத்தலாகாது என உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் மக்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். `உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன்’ எனவும் ‘ஊனார் புழுக்கூடு இதுகாத்து இங்கு இருப்பதானேன்’ எனவும் ஊண் வாழ்க்கையை ஊன் வாழ்க்கையாகத் திருவாசகம் இகழ்கிறது. `தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசும் வேடிக்கை மனிதரைப்’ பாரதியார் வசை பாடுவர். ஆதலின் உண்பது உறங்குவது ஊடுவதெல்லாம் எண்ணமொன்றோ நினைவென்றோ சொல்லமுடியாது. இந்த நாள் நடப்பெல்லாம் சிந்தனைப் பெயர் பெற்றால், மரம், செடி, கொடி, பறவை, விலங்கினம் எல்லாம் சிந்தனையாளிகளாய் விளங்காவா? ஒருவன் உண்ணல் தின்னல் உறங்கல் இவற்றைக் குறித்த நேரத்திற் செய்வதற்கு `எண்ணிய எண்ணியாங்கு எய்துப’என்று திருக்குறளை மேற்கோள் காட்டினால் கேலிசெய்வது ஆகுமன்றோ? ஆதலின், எண்ணம் நினைவு சிந்தனை என்று நாம் குறிக்கும் போது, நாட்கடமைக்கு அப்பாற்பட்ட மனத்தாண்டுதல்களைக் கருதுகின்றோம் என்ற வரம்பைப் புரிந்து கொள்வோமாக. மனவளம் நிலத்திற்கு மேல் எல்லாமே வானந்தான். எனினும் வானத்திற் பறந்தது. வானளவியது என்று கூறுங்கால், குறிப்பிட்ட ஓரெல்லைக்கு மேற்பட்ட உயரளவையே சுட்டுகிறோம். இம் மனவளர்ச்சி பெரும்பாலோர்க்கு இல்லை. மெய்ம்மை காணின், பெரும்பாலோர் தம்மனவளம் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒரு சிலர்க்கு மனமெனும் ஓர் உள்பொருள் இருப்பதான எண்ணச் சுவடே இல்லை. நெஞ்சுவலி வரும்போது நினைப்பார்களோ என்னவோ? அதனாற்றான் தொல்காப்பியம் இச்சிறிய மாந்தரை ஐயறிவுடைய மாக்கள் என்று அழைக்கும், தமிழியலின்படி மானுட வடிவு உயர்திணையாகாது. உணர்மனம் உடை யோரே உயர்திணை என்ற மேற்றிணைக்கு உரியர்; மக்கட் குலம் என்ற தனிமதிப்புப் பெறுவர். ஆதலின் நம் பிறப்பு உயர்திணைப் பிறப்பாக உருப்பட வேண்டின், நல்ல தூய உயர்ந்த எண்ண விதைகளை நம் மனப் பண்ணையில் வித்தி வளர்த்து வளமார் கதிர்களைப் பெறல் வேண்டும். இவ்வுண்மையை உணர்த்தவே, மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே என அப்பரடிகள் உழவுப்பாடல் இயற்றினார். நிலபுலங்கட்கு வித்துக்கள் தேவைப்படின் அரசு வைத்திருக்கும் வித்து விற்பனைக்கிடங்குகளை நாடிப் பெறுவர் உழவர். சிந்தனை வித்துக்கள் எங்கே கிடைக்கும்? விற்பவர் யார்? விலை என்ன? இதோ திருவாசகம்! நிகரற்ற, விலை வேண்டாச் சிந்தனைக் கிடங்கு; எண்ண வியலா எண்ணக் களஞ்சியம்; யாரும் நண்ணத்தக்க நாற்றங்கால்; `கடலினுள் நாய் நக்கியாங்கு’ எனவும் `வெள்ளத்துள் நாவற்றியாங்கு’ எனவும் சொல்லியபடி, எவ்வளவு சிந்திக்க அள்ளிக் கொண்டாலும், அப்பாற்பட்ட சிந்தனையுயர்ச்சிக்கு உரிய வேராழமும் வேர்ப்பரப்பும் வேர்ப்பன்மையும் திருவாசகக் குளத்தில் உண்டு. நினைவே வாழ்வாதலின், நல்வாழ்புப் பயிற்சி பெறவிரும்புவார், திருவாசக எண்ணங்களை அடிக்கடி மனக்களத்துப் பயிலவேண்டும். எல்லோர்க்கும் பெரியோர்கள் தொடர்பும் உறவும் கிடைப்பதில்லை. யான் என்னும் செருக்கால ஒரு சிலர் யாரையும் பெரியோராக ஏற்றுக்கொள்வ தில்லை. அங்ஙனம் கொள்வது தம் பெருமைக்குக் குறைவாகும் என்ற உட்கருத்தாளரும் உலகில் இல்லாமல் இல்லை. ஆனால் திருவாசகம் போன்ற அரிய பெரிய நூல்கள், காட்சிக்கு எளிமையாகவும் கைக்கு அடக்கமாகவும் நம்முன் கிடக்கின்றன. அவற்றோடு ஒரு சில நொடிகள் நட்பாடினாற்கூட, வாழ்வில் கலக்கம் கலங்கிக் கவலை நீங்கித் தெளிவு கிடைக்கும். இந்நூல்களை `இலங்குநூல்’ என்பர் திருவள்ளுவர்; `ஒண்மைசால் நூல் கொடு வெண்மை களைக’ என்று வழிகாட்டுவர் வ.உ.சி.; அத்தகு நூல்களுள் தலையாயது வள்ளலார் போற்றிய திருவாசகம். திருவாசக வாழ்வு திருவாகச் சாணையில் நம் அறிவைத் தீட்டினால் என்ன பிறக்கும்? எக்காலத்தில் எதனை எதனை விட வேண்டும், எக்காலத்தில் எதனை எதனைக் கொள்ளவேண்டும் என்கிற காலப்பக்குவம் நம் மனத்தில் விளையும். பலர் தவறாக எண்ணுவது போலத் திருவாசகம் உலக நல்வாழ்வை வெறுக்கும் நூலன்று; குடும்பம், இன்பம், செல்வம், கல்வி, புகழ் என்ற வாழ்வுப் பாங்குகளையெல்லாம் பழிக்கும் நூலன்று; உலகத்தை விட்டு ஓடுக என்று துரத்தும் நூலன்று. அது பொருளாயின், திருவெம்பாவை திருவம்மானை திருப்பொற்சுண்ணம் முதலான பதிகங்களுக்கு இடம் எங்கே? உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் என்ற இல்லற வேண்டுதலுக்கு இடம் எங்கே? தில்லைச் சிற்றம்பலவன் பெண்பால் உகந்து குடும்பியாக விளங்கிக் காட்டுகின்றான் என்ற திருச்சாழல் நோக்குக்கு இடம் எங்கே? ஆதலின் திருவாசகம் திருமண வாசகத்திற்கு எதிரன்று; உடன்பாடு என்று அறையினும் மிகையன்று. வைத்தநிதி பெண்டிர் மக்கள்குலம் கல்வியென்னும் பித்த வுலகில் பிறப்போ டிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும் குற்றாலத் தமர்துறையும் கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே இத்தகைய துறவுக் கருத்துக்கள், திருவாசகத்தில் வழிந்தோடுகின்றன என்பதை நானும் அறிவேன்; யாவரும் உணர்வர். நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியில் இவை மிகவும் வெளிப்படை. ஆனால், இவ்விடத்துத்தான் சில அடிப்படை உலகியலை நாம் சிந்திக்க வேண்டும். உயிர்ப் பக்குவம் ஐம்பது வயதில் ஒருவன் மரப்பாவை வைத்துப் பருமன் ஊதி விளையாடலாமா? சிறு தேர் உருட்டி வீதியில் திரியலாமா? வயதுக் கிழவி சிற்றாடை கட்டிச் சதங்கை யொலிக்க நடை பழகலாமா? கல்லூரிக்குச் சென்றவன், உயர்நிலைப் பள்ளி நூல்களையும் பழக்கங்களையும் விட்டுவிடுகின்றான். உயர்நிலைப் பள்ளி மாணவன், தொடக்கப் பள்ளிப் பழக்க வழக்கங்களை விட்டுவிடுகின்றான். தாயானவள் கன்னித் தன்மைகளையும், பாட்டியானவள் அன்னைத் தன்மைகளையும் குறைத்துக் கொண்டு பருவத்திக்கேற்ற நடைமுறைகளைக் கொள்ப. ஆசிரியனானவன், மாணவக் குறும்புகளைக் குறைத்துக் கொள்கின்றான். படையிற் சேர்ந்த மறவன், வீட்டினை மறக்கப் பழகிக் கொள்கின்றான். வணிகன் தன் கடையில் ஒன்றினைத் தன் வீட்டிற்கு எடுத்தாலும் எழுதிக் கொள்கின்றான். உலகியலிற் பருவத்துக்கு ஏற்பவும் நிலைக்கு ஏற்பவும், கழிவன கழித்துக் கொள்வன கொள்ளவேண்டும். இவ்வாற்றால் கழிப்பவை வேண்டாதன என்றோ, வெறுக்கத் தக்கவை என்றோ பொருளல்ல. விட வேண்டிய காலத்து விட வேண்டியவற்றை விட வேண்டும். பிச்சைக்காரன் போலவும் குப்பைக்காரன் போலவும் எல்லாவற்றையும் விடாது சுமந்து கொண்டு திரியக்கூடாது. உலகியலில் நுகர்பொருள்களைக் காலக் கழிப்புச் செய்து கொண்டு வருவதுபோல, உள்ளத்தின் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் ஒவ்வொரு காலத்திலும் விட்டும், குறைத்தும், அடக்கியும், மேன்மேல் உயர்ந்தவை புகவும் வளரவும் இடங்கொடுக்க வேண்டும். திருவாசகம் கூறும் வேண்டாமைப் பாடல்களை, வெறுப்புப் பாடல்களாகக் கருதாமல், அவ்வக்காலத்து இன்னின்னவற்றை விட்டொழிக்க வேண்டும் என்று, படிமுறை காட்டும் வாழ்க்கை வழிநடைக் கல்வியாகக் கருதவேண்டும். இதுவே உலகியலுக்கும் உளவியலுக்கும் ஒத்தது. வாழ்வின் ஓட்டத்தில் எண்ணிப் பார்த்தால் நாம் நம்மையறியாமலே எவ்வெவற்றையோ விட்டுச் செல்கின்றோம். பலர் விட்டுச் செல்லவும் காண்கின்றோம். இவற்றை நினைவு படுத்துவதுதான் திருவாசகம். திருவாசக நினைப்பு மேன்மேலும் நம் உள்ளத்து வளர்ந்தால், விடாது வைத்துக்கொண்டிருப்ப வற்றை உரிய உரிய காலத்தில் விட்டுவிட்டு உயர்ந்த உயிர்ப் பக்குவம் பெறுவோம். இம்மைப் பெருவாழ்வுக்கே திருவாசக நினைப்பு எல்லோர்க்கும் வேண்டும். 8. திருவாசகமும் பண்டிதமணியும் இருபதாம் நூற்றாண்டில் எழுந்த உரை வரலாற்றில் என் ஆசிரியர் மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசனார் எழுதிய திருவாசகக் கதிர்மணி விளக்கம் என்ற பேருரை செந்தமிழுக்கு உறுதியான செல்வமாகும். நுண்மையால் ஒண்மையால் நடைநயத்தால் நடைத் தூய்மையால் உரைநடையாளர்க் கெல்லாம் இவ்வுரை வழிகாட்டி. மாதவச்சிவஞான முனிவர்க்குப் பின்னர், சைவ மெய்யியலை நன்னடையில் புலப்படுத்தும் சொல்வளம் மிக்க பேருரை இது. நூலின் நோக்கம், இறையெளிமை, அடியவர்பணி, பன்னூற் கலைகள். பல்துறைச் சான்றுகள், இலக்கணவமைதிகள், ஒப்பாய்வு, வாழ்வறங்கள் என்ற கூறனைத்தும் தழுவிய பேருரை இது. வையகம் போற்றுதிரு வாசகத்தின் உட்பொருளைக் கையிற் கனியாகக் காட்டினனால் - செய்யதமிழ்ப் பேரா சிரியர் பெருமான் கதிரேசன் ஆராய்ந்து முற்றும் அறிந்து என்பது கவிமணியின் பாராட்டு. பொதுமரபு திருவாசகத்தின் உட்பொருளைப் பலரும் எளிதிற் புரிந்து கொள்ளும் வண்ணம் பண்டிதமணியார் கையாண்ட ஒருமுறை உலகியல் விளக்கமாகும். திருவாசகம் இறைநூலாதலின் தோத்திரங்கள் சாத்திரங்கள் காட்டி விளக்குவதே சிறப்பு மரபு. எனினும் திருவாசக வமைப்புக்கள் திருப்பொற்சுண்ணம், திருவெம்பாவை, திருவுந்தியார், திருவம்மானை, திருப்பள்ளி யெழுச்சி, திருச்சாழல், திருப்பொன்னூசல், திருக்கோத்தும்பி என்ற உலகியல் வடிவுடையனவாதலின், மக்களின் பழக்கவழக்கங்களோடு ஒட்டியும் உராய்ந்தும் தெளிவாக விளக்கும் பொதுமரபையும் பண்டிதமணியார் தழுவிக் கொண்டனர். மெய்யியலும் உலகியலும் இணைந்த ஏற்றம் இப்பேருரைக்கு உண்டு. “அடிகள் அரசியல் வினைத்திறமை படைத்தவராதலின், உலகத் தலைவர் பணியாளர் வாணிகத் தொழிலாளர் முதலியோரின் குணஞ்செயல்களையும் மற்றை உலகியல்களையும் உரிய இடங்களில் தழுவியும், ஒரு சில இடங்களில் அவற்றுக்கு மாறாகக் கொண்டு இறையருட் செயல்களைப் புலப்படுத்தும் இருத்தல் அறிந்து இன்புறத்தக்கது”என்று தம் உரைநெறியைப் பண்டிதமணியே சுட்டிக் காட்டுவதை எண்ணுக. உரைநிறை பண்டிதமணியின் உரை திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை என்ற மூன்று பகுதிகளுக்கும் முழுமையாக வுண்டு. இவை அவர் தம் காலத்திலே அச்சாகி வெளிவந்துள. திருவம்மானை இரண்டு பாடல்கட்கு மட்டும் எழுதியவுரை கைப்படியாகவுளது. சிறுபருவந் தொட்டே அருமருந்தன்ன திருவாசகத்தைச் சிறப்பு முறையில் பயின்று அவைக்களங்களில் ப்ல்லாண்டு பன்னூறு சொற்பொழிவுகள் நயம்படப் பொழிந்திருந்தாலும், பண்டிதமணியார் கதிருரை எழுதத் தொடங்கிய காலம் அவர் தம் 65 ஆம் முதுமை ஆண்டிலாகும். 73 ஆம் அகவையில் இறையடி நிழல் எய்தினர். எனவே மேற்சுட்டிய மூன்று பகுதிகளும் ஏழாண்டளவில் இடைவிடா முயற்சியால் வலிநோய்க்கிடையே வரையப் பட்டவை. முழுமை நோக்கில் இம்மூன்றிற்கே உரை இருப்பினும், திருவாசகத்தின் உண்மைகளையும் மணிவாசகரின் அன்புப் பணிநிலைகளையும் பழுதற நாம் உணர்ந்து கொள்வதற்கு, இவ்வுரை விளக்கங்களில் நூல் முழுமை சான்ற குறிப்புச் செல்வங்கள் பரவிக்கிடக்கின்றன. ஒரு வாசகத்துக்கு உரை காணும்போது அடிகளாரின் பல வாசகங்கள் மேற்கோட்படு கின்றன. `நின்வாசகத்தில் ஒரு மொழியே என்னையும் என்னுடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம்’ என்ற வள்ளலார் வாக்கில் இச்செறிவு காண்க. பெரும்புலவனின் ஒரு பாடலுக்கு நல்லுரை காண்பதற்குக் கூட அவன்தன் முழுநூற் பயிற்சியும் நினைவுத் தொடர்ச்சியும் கைவரப் பெறுதல் வேண்டும். அறுபதாண்டு பழுத்த பயிலறிவு கதிர்மணி விளக்கத்தில் 170 பாடல்களில் தேக்கமாகி நிற்கின்றன. இவற்றோடு பண்டிதமணியார் எழுதிய உரைநடைக் கட்டுரைகளிலும் திருவாசகப் படிவங்கள் பொன்படு வைரம் போல இலங்கக் காண்கின்றோம். உரையெழுதாத சில பகுதிகளின் விளக்கங்கள் இக்கட்டுரைகளிற் கிடைக்கின்றன. எனவே திருவாசக முழுமைக்கும் பண்டிதமணியின் உரைநிறை இல்லை என்பது நம் தவக்குறையாயினும், திருவாசகவுண்மை களைக் கசடற அறிதற்கு உள்ளவுரை நிறையாகும் என்பதில் ஐயமில்லை. அதனாலன்றோ, தெய்வ மறையாம் திருவா சகப்பொருளை ஐயமறக் காட்டும் அணிவிளக்கம் என்று, திருச்சதகவுரையளவிற்கே இவ்வளவு பாரட்டினார் கவிமணி தேசிக விநாயகர். உலகியல் பண்டிதமணியார் திருவாசக உரையின் ஒருதனி வீறு உலகியல் பற்றிய விளக்கம் ஆகும் என்று காட்டுவது இக்கட்டுரையின் நோக்கம். தலைமை, பணிமை, உயர்வு, பணிவு, அருமை, எளிமை, செல்வம், நல்குரவு, பிறப்பு இறப்பு, ஏக்கம் அழுகை, பொறுமை, சிறுமை, காமவிழைவு, பிரிவுத்துன்பம் எண்ணப்புரட்சி, செயல் மாற்றங்கள் எல்லாம் மக்கள் வாழ்விற் காணப்படும் உலகியங்கள் அல்லவா? மக்களொடு தொடர்புடைய இறையுலக வளர்ச்சியிலும் இவையே நிழற் படுகின்றன. உணர்ச்சித் தளங்கள் மாறுவதில்லை. நோக்கங்களே மாறுகின்றன. இதுவே உலகியலுக்கும் இறையியலுக்கும் உரிய வேறுபாடு. இதனை வேறுபாடு என்று சொல்வதைவிட குழவி இளமை முதுமை போன்ற ஓர் உயர் வளர்ச்சியாக இறைமையைக் கருதுவதே படிமுறையாகும். “பொருள் புலப்பாட்டிற்காகவும் தெளிவுக்காகவும் அன்றாட உலகியலிற் காணப்படும் வழக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு பண்டிதமணியிடம் சிறப்பாகக் காணப்படுகின்றது. இப்போக்கு அவரது சமயக் கட்டுரைகளிலும் திருவாசக உரைவிளக்கங் களிலும் மிகுதியாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்க தாகும்.” என்று சிறப்புநிலை சுட்டுவர். `பண்டிதமணி நடைநயம்’ என்ற நூலாசிரியர் அறிஞர் இரா.மோகன். `பழுத்த இலக்கியச் சுவையும் பரந்த உலகியலறிவும்’ எனப் பாடினார் முத்தமிழ்மணி அரு™hசலம்பிள்ளை. அத்தகைய உலகியல் ஒழுக்கங்கள் சிலவற்றைச் சோற்றுப்பதம், உப்புப்பதம் போலக் காண்போம். திருச்சதகத்தில் கிற்ற வாமன மேகெடு வாயுடை யானடி நாயேனை விற்றெ லாமிக ஆள்வதற் குரியவன் விரைமலர்த் திருப்பாத முற்றி லாவிளந் தளிர்பிரிந் திருந்துநீ உண்டன எல்லாமுன் அற்ற வாறுநின் அறிவுநின் பெருமையும் அளவறுக் கில்லேனே என்ற திருச்சதகம் (34) இறைவன் உரிமையையும் நெஞ்சின் சிறுமையையும் சுட்டுகின்றது. நான்கு உலகியல்களைக் காட்டி இச்சதகக் கருத்தை விளக்குவர் பண்டிதமணியார். (அ) குற்றப்பட்ட ஒருவனைக் கண்டவாறு அவன் குற்றமெல்லாம் சொல்லிக்காட்டிக் கூப்பிடுவது அழகன்று. திருத்துவதற்குமுன் அன்பு தோன்ற அவனை அழைக்க வேண்டும். அப்போதுதான் அவன் நம்மிடம் நெருங்கி வருவான். இஃது உலகியல். கில்தவாமனமே - என்ன வெல்லாம் கெடுதல் செய்துவிட்டாய் நெஞ்சமே என்று சுருக்கமாகச் சொல்லும் நடையில் இவ்வுலகியல் அமைந்துளது. (ஆ) ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கினால் பயன் படுத்தலாம். பிறருக்கு விற்றபின் அப்பொருளை ஆளுதல் முடியாது. இஃது உலகிடைக் கண்டது. ஆனால் இறைவனை அவ்விதி கட்டுப்படுத்துமா, கட்டடுப்படுத்த முடியுமா? உலகியலுக்கு அவன் செயல்முரண். விற்றெலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விற்றபின்னும் அதனை ஆளும் உரிமைப்பாடு இறைவனுக்கு உண்டு. மேலும் ஈண்டு விற்றல், ஆளுதல் என்பதனை உலகியல் பில் வைத்துப் பொருள் செய்யக்கூடாது. அவன் யாருக்கு விற்பான், அவனிடம் உயிரை வாங்கவல்லார் யார்? ஆதலின் இவ்வினைச் சொற்கட்கு மெய்ப்பொருள் உண்டு என்று கருதிய பண்டிதமணியார் உயிரை வினைக்கீடாக மறுபிறப்புச் செய்வதே விற்றல் எனவும் வினை யொழிவில் திருவடிக்கண் சேர்த்துக் கொள்வதே ஆளுதல் எனவும் சைவ மெய்ம்மையைத் தெளிவிப்பர். இத் தெளிவானன்றோ இவ்வுரைக்குத் தனிப் பெருமை யுண்டு. (இ) ஒரு சில பரம்பரையினர் தம்முன்னோர் சொத்தின் வருவாயை மட்டும் நுகரப் பாத்திமையுடையரேயன்றி அடகு வைத்தல் முதலியன செய்யவிலா. இது பதிவியல். இறைவனுக்கும் அன்ன கட்டுப்பாடு உண்டோ? விற்று ஆள்வதற்குரியவன் என்று சுருக்கமாகப் பாடாமல், `விற்று எலாம் மிக ஆள்வதற்குரியவன்’ என்று விரித்துப் பாடினமையால், உயிரை எவ்விதமும் செய்தற்குப் பாத்தியன் என்பது பெறப்படும். இவ்விளக்கத்திற்குத் திருவாசகத்திலே சான்றிடன் உண்டு. `இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னினல் லால் விருந்தினனேனை’ என்ற செய்யுள் உடைமையின், எல்லா நிலையையும் குறிக்கக் காண்கின்றோம். (ஈ) அறிவுப் பெருமையும் ஆண்மையும் வாய்ந்த ஒரு பேரரசன் யார்க்கும் கீழ்ப்படாமல், தலைநிமிர்ந்து இருப்பது விரும்பத் தகும். இது அரசுலகிற் காணப்படும் இறைமாட்சி. என் நெஞ்சே, நீ உன்னை அரசனாகக் கருதிக் கொண்டு இறுமாந்து நடக்கலாமா? இறைவனது அடியை நீ வணங்காதிருப்பது எவ்வளவு கேடு தெரியுமா? நின்அறிவும் நின் பெருமையும் அளவறுக் கில்லேனே - உன் அறிவின் சிறப்பும் உன் பெருமையின் சிறப்பும் சிவபெருமானையும் பணியாத அவ்வளவுக்கு உயர்ந்து விட்டன, இல்லையா? என்று மணிவாசகர் புகழ்வது போல் இழித்துரைக் கின்றார். எனவே `கிற்றவா’ என்ற ஒரு திருவாசகத்தில் நான்கு உலகியல்கள் விளக்கமாக வருவதைக் கண்டு இன்புறுகின்றோம். இவ்விளக்கநெறியைப் பண்டிதமணியம் என்று குறியிடலாம். நீத்தல் விண்ணப்பத்தில் செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற் பன்னாள் விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாயறுகால் உழுகின்ற பூமுடி யுத்தர கோசமங் கைக்கரசே வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே என்ற திருவாசகத்தில் (5) தான் எவ்வளவு புரியாமல் நடந்து கொண்டாலும், ஒதுங்கினாலும், தன்னை விட்டுவிடக் கூடா என்று இறைவனை வேண்டுவர் நம் அடிகளார். ஒருவனை ஒருவன் வழிமறிக்கின்றான் என்றால் துன்புறுத்திப் பொருள் கவர்ந்து வழிப்பறி செய்வதற்கல்லவா? `பொருள் கொண்டு புண் செயின் அல்லதை யார்க்கும் அருளில் எயினர் எனச் சிலம்பும் கொள்ளும் பொருளில ராயினும், வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து உயிர் வவ்வலின்’ எனப் பாலைக்கலியும் வழிப்பறியின் கொடுமைகளைச் சுட்டும். இஃது உலக நிகழ்ச்சி. இறைவன் செயலோ இதற்கு மாறானது. மணிவாசகர் சென்றபோது இறைவன் வழியிடை நின்றது உண்மை. நின்றது பறிப்புக்கன்று. வழிநின்ற இறைவன் என்ன செய்தான்? வேறு யாரிடமும் பெறவியலாத அருள் நிறைந்த அமுதை வலிந்து வழங்கினான். உலக வழிப்பறியில் பறிஞன் நடையாளியைத் தொல்லைப்படுத்திப் பொருள் வாங்குவான். இறைவனது வழி மறியலிலோ அவன் நயந்து அருட்பெரும் பொருளை இனிமையாக வாய்மடுக்கின்றான். பிறவிச் செலவினராகிய மணிவாசகர் அதனைப் பெற மறுத்து இறைவனைத் தொல்லை செய்கின்றார். `வழிநின்று நின் அருளாரமுது ஊட்ட மறுத்தனன்’என்ற திருவாசகத்துக்கு வழிப்பறியுலகியலை உட்கொண்டு எழுதிய கதிர்மணி விளக்கம் சுவையுடையது மட்டுமன்று, அடியார் களை ஆட்கொள்ளும் இறைவனது வன்மை நிலையையும் புலப்படுத்துகின்றது. திருவெம்பாவையில் செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி என்ற திருவெம்பாவை (17) சிவபெருமானின் அருமையையும் எளிமையையும் புலப்படுத்தும். இதனை ஓர் உலகியற்காட்சியில் வைத்துக் கதிர்மணியுரை நம்மைக் கவரும். பேரரசன் ஒருவன் தனக்குரிய தலை நகரைவிட்டுப் பிறிதோரிடம் சென்றாலும், சென்று தங்கியிருக்குங் காலம் சிறிதாக இருந்தாலும், தலைநகர் போன்ற வசதிகளையும் சுற்று வனப்புக்களையும் அமைத்தாக வேண்டும். இடம் மாறியதற்காக இன்னிலை மாறக்கூடாது. பதவியின் மதிப்பு அத்தகையது. அதுவும் அவன் தன் அரசியோடு இடம் பெயர்ந்தானாயின், மேலும் மனைச்சூழ்நிலை அவ்விடத்தும் போற்றப்பட வேண்டும். இஃது ஆட்சியுலகில் காணப்படும் முறை. சிவனோ திருமால் நான்முகன் தேவர்கட்கெல்லாம் அரியவன். அவன் தனக்குரிய இடத்திலிருந்து அன்பர்களின் இல்லந்தோறும் செல்லும்போது, அவன் பெருமைக்குத்தக ஏழையடியவர்கள் அடிச்சிகளின் குடில்களை அழகுபடுத்த இயலுமா? `சிறைவான் புனற் றில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான்’ என்ற கோவைப்படி, இறைவன் தான் அன்பர்கள் புறத்தகுதிக்கு இறங்கி வந்து உடனுறைந்து அருள்செய்ய வேண்டும். ‘இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி’ என்ற தொடர் சிவனார் ஆட்சியுலகியலைப் பின்பற்றவில்லை என்ற பேருண்மையைப் புலப்படுத்துகின்றது. `நம் இல்லங்களுக்கு எழுந்தருளிய அளவிலன்றி அப்பெருமான் தன் போன்ற திருவடிகளையும் தந்தருளினான்’ என்ற கருணை மிகுதியைப் பாராட்டுகின்றது இப்பாவைச் செய்யுள் என்பர் கதிர்மணி விளக்கத்தார். பண்டிதமணியின் உலகியல் விளக்கத்துக்கு மேலே காட்டப்பட்டவை மிகச் சிலவே. சிறியவும் பெரியவுமான உலகநெறிகள் இவ்வுரையில் நிரம்பவுள. பண்டிதமணியின் சொற்பொழிவுகளும் மன்பதைப் பழக்க வழக்கங்களைத் தழுவியன என்பதனையும் அதனால் அரியனவும் எளியன வாய்ப் புரிந்தன என்பதனையும் அப்பொழிவினைக் கேட்டார் உணர்வர். `அருமையில் எளிய அழகே போற்றி’என்ற வனப்பு நிலை பண்டிதமணியின் திருவாசகவுரைக்கும் பொருந்தும். சைவத்தின் ஒழுக்கங் காட்டிச் சமயங்கள் கடந்து நிற்கும் தெய்வத்தின் விருப்பங் காட்டித் தெளியாரும் ஒப்பவேண்டி வையத்தின் வழக்கங் காட்டி வகுத்தநல் லுரையைக் கண்டேம் கையொத்துத் தொழுது சொல்வேம் கதிர்மணி விளக்கம் வாழ்க என்பது ஆசானுரைக்கு இம் மாணவன் எழுதிய பழம் பாயிரம். 9. திருக்கோவைப் புரட்சி திருமுறைக் கருத்தரங்கு என்பது சமயத்துறையில் காலத்திற்கு ஏற்ற புதிய அரங்காகும். திருமுறைகளை அன்போடு மட்டுமன்றி ஆராய்ச்சியோடு படிப்பதற்கும் கலந்து உரையாடுதற்கும் இக்கருத்தரங்கு வழிகோலுகின்றது. நம் பெரியோர்கள் இயற்றிய தெய்வப் பாசுரங்களைப் பல்வகையில் ஆராய்வது அன்புக்கு முரணாகாது; ஊன்றுகோல் ஆகும். திருப்பாவை திருவெம்பாவைகளை மார்கழித் திங்களில் பரப்புவதுபோல, ஒவ்வொரு திருமுறையையும் பரப்புவதற்கு ஒவ்வொரு மாதத்தை வகுத்துக் கொள்ளலாம். கணக்காகப் பன்னிரு திங்கட்குப் பன்னிரு திருமுறைச் செல்வங்கள் நமக்கு உள. மணிவாசரின் பாடல் எட்டாம் திருமுறையாக இருந்தாலும் காலையில் திருவாசகக் கருத்தரங்கு நிகழ்ந்தது. இப்போது மாலையில் கோவைக் கருத்தரங்கு நடைபெறுகின்றது. இவ்வாறு ஒரு திருமுறைக்குள் அடங்கிய ஒருவரின் இருநூல்களுக்குத் தனித்தனி கருத்தரங்கு வகுத்திருப்பது திருவாசகம்போலத் திருக்கோவையும் சிறப்புடையது என்பதனைப் பகரும். தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் என்ற நல்வழியில் மணிவாசகரின் இருநூல்களும் தனித்தனி யாகச் சுட்டப்படுகின்றன. கோவையை முன்சுட்டித் திருவாசகம் பின் சுட்டப்படும் வரன்முறையும் நோக்கத்தகும். முந்தியது எது? முதற்கண் பாடப்பெற்றது. திருக்கோவையா, திருவாசகமா? இருநூல்களின் ஆராய்ச்சிக்கும் மணிவாசகரின் மனநிலை வரலாற்றை அறிதற்கும் இதன் முடிபு இன்றியமை யாதது. திருவாசகம் பல்கால் பல தலங்களிற் பாடப்பெற்ற பாடல்களின் தொகை நூல். ஒரு சிலவற்றைத் தவிரப் பெரும்பாலானவை இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற பின்னர் செய்யப் பெற்றவை. பெரியோனாக வந்து இறைவன் கழல்காட்டிப் பிரிந்துவிட்டான். பிரிவு பொறாதும் தனிமை பொறாதும் மணிவாசகர் புலம்பிய ஏக்கப் பாடல்களே திருவாசகம். `எல்லையில் கழல் கண்டும் பிரிந்தனன்’எனவும், `இன்னருள் புரிந்த தலைவனை நனிகாணேன் எனவும், `கண்டுங் கண்டிலேன் என்ன கண் மாயமே’ எனவும் `காணுமாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும் பாணேபேசி என் தன்னைப் படுத்ததென்ன பரஞ்சோதி” எனவும், `எத்தனை யானும் யான் தொடர்ந்து உண்ண இனிப் பிரிந்தாற்றேனே’ எனவும் அடிகள் பாடல்தோறும் புலம்புவதை உணர்கின்றோம். அகத்துறைக்கண் பாலைப் பாடல் போலச் சமயத்துறையில் திருவாசகம் பாலைப்பாடல் என்பது என் கருத்து. கயல்மாண்ட கண்ணிதன் பங்கனெனைக்கலந் தாண்டலுமே அயல்மாண்டு அருவினைச் சுற்றமுமாண்டு அவனியின்மேல் மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண்டு என்னுடைய செயல்மாண்ட வாபாடித் தெள்ளே ணங் கொட்டாமே என்ற திருத்தெள்ளேணத்தில் `மற்றுள்ள வாசகம் மாண்டு’ என்ற தொடரின் உணர்ச்சி நினையத்தகும். இவ்வேகவுணர்க்குப் பின் தொல்காப்பியத்தையும் சங்க அகப்பாடல்களையும் அகவிலக்கணங்களையும் தொகுத்து ஆராய்ந்து துறைகளை நிரல்பட வகுத்துத் தொடர்நிலைச் செய்யுள் எனத் தகும் நானூறு பாடல் யாத்து ஒரு கோவைப்பட எழுதும் உலக மனவியல் அடிகளாருக்கு வாராது. சட்டெனப் பிரிந்து மறைந்த பெரியோன் சுழலைக் காணுவதே துடிப்பாகக் கொண்ட மணிவாசகர் அலறி உலறி எவ்விடத்தான் சிவன், எவர்கண்டனர் என்று ஓடிப்பாடித் திரிந்த அடியவரேயன்றி அதன் பின்னர் ஓரிடத்து அமர்ந்து ஒரு தொடர் நூல் எழுதிய புலவர் அல்லர். ஆதலின் இறையுணர்வு அரும்பி வளரும் நிலையில் கோவை இயற்றப்பட்டது எனவும், திருவாசகப் பகுதிகள் இறைவன் தன்னைக் காட்டிப் பிரிந்தபின், தேறுதல் ஒழிந்த அன்பின் மிகு திறத்தாலும் மிக்க அன்பின் மிடலாலும் மணிவாசகப் பெண்ணுயிரால் புலம்பிப் பாடப் பெற்றவை எனவும் உறுதியாகக் கொள்ளலாம் எனினும் திருவெம்பாவை போன்ற ஒரு சில திருவாசகப் பகுதிகள் கோவைக்கு முன்னும் பாடப்பட்டிருக்கலாம் என்று கொள்வதற்குக் குற்றமில்லை. கோவை ஆசிரியர் திருக்கோவை மணிவாசகரால் பாடியிருக்க இயலாது என்பது ஒருசாரார் எண்ணம். திருவள்ளுவர் காமத்துப்பாலைப் பாடவில்லை என்பது போன்ற கருத்துக்கு ஒப்பானது இது. நம் சான்றோhர் பாடியது கற்புடைக் காமம் ஆதலானும் அன்புடைக் காமம் தமிழ் இலக்கியத்தின் உரிப்பொருள் ஆதலானும், காமம் பாடுவது எப்புலவர்க்கும் நிறைவாகுமே யன்றிக் குறைவாகாது. அகத்திணை பாடாமை குறைவாகக் கருதப்பட்ட காலமும் ஒன்று உண்டு என்பதனை நினையவேண்டும். வள்ளுவரும் மணிவாசகரும் அன்புடைக் காமத்தைப் பாடினார் எனின் மதிப்புக் குறைவாகும் என்று சொல்லுவமேல், பரணர் கபிலர் நக்கீரர் இறையனார் ஒளவையார் முதலான சங்கச் சான்றோர்கள் மதிப்புக் குறைவுடையரோ? நம் தெய்வ இலக்கியங்கள் எல்லார் தம் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுவதற்கு ஒரு பெருங் காரணம் அகவிலக்கியத்தின் காதற்போக்குகளை அள்ளிக் கொண்டமையேயாகும். அகத்தமிழ் கலந்தமையால் தெய்வத் தமிழ் மக்களிலக்கியம் ஆயிற்று. `கற்புடைக் காமம் என்னும் அகம் பாடுவது குற்றம் எனின் அகநடையைத் தழுவிப் பாடுவது குணமாகுமா?’ `காமம்மிகு காதலன் தன் கலவியினைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினும் இன்பெய்து வதே’ என்று இராமலிங்க வள்ளல் கடவுட் புணர்ச்சிக்குக் கற்புப் புணாச்சியை உவமிப்பர். `உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை” என்ற தொல்காப்பியத்தின்படி ஆளும் உவமை சிறப்புடையதாகக் கருதப்படும். மோகம் அறுத்திடினாம் முத்தி கொடுப்பதென ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் - தோகையர்பால் தூதாகப் போகவிடும் வன்தொண்டன் தொண்டுதனை ஏதாகச் சொல்லுவேன் யான் என்ற திருக்களிற்றுப்படியால் காமம் நுதலுதலும் காமநடை ஆளுதலும் தமிழ்ச் சமயங்களுக்கு இயற்கை என்பது பெறப்படும். பாட்டுடைத் தலைவன் இனி சிற்றம்பலக் கோவையின் பொருளும் நடையும் பற்றிச் சங்க இலக்கியத்தோடு சில கூறுகளில் ஒப்பிட்டுக் காண்போம். `மக்கள் நுதலிய அகன் ஐந்திணை’ என்று தொல்காப்பியம் கூறுதலின், அகப்பாடலில் முதல் கருவுரி மூன்றிலும் மக்களே இடம் பெறுவர். தலைவன் தலைவி தோழி அன்னை முதலான கிளவிப் பாத்திரங்கள் இயற்பெயர் பெறுவ தில்லை என்பது தெரிந்த மரபு. பிற்காலக் கோவைகளிலும் இம்மரபு மாறவில்லை. ஆனால் முதல் கருப்பகுதிகளிலும் பேரும் பிறவும் மக்கள் தொடர்புடையனவே இடம்பெறுவது சங்க வழக்கு. பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய அற்றால் அன்பின் பாலே (குறுந்.196) ஒளிறுவாட் டானைக் கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளு ரன்னவென் ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க (அகம்.146) இக்குறுந்தொகை அகப்பாடல்களில் வேள்பாரியும் அவன் பறம்பும், கொற்றச் செழியனும் அவன் அள்ளூரும் கருப்பொருட் பகுதியில் வந்துள்ளன. திருக்கோவையிலோ இவ்வுலகத்தின் தில்லை பேசப்பட்டாலும், பாட்டுடைத் தலைவனாக வருபவன் மாந்தனல்லன், இறையோன். வருங்குன்றம் ஒன்றுரித் தோன்தில்லை யம்பல வன்மலயத்து இருங்குன்ற வாணர் இளங்கொடியே (15) ஆவா இருவர் அறியா அடிதில்லை யம்பலத்து மூவா யிரவர் வணங்க நின்றோனை (72) பாட்டுடைத் தலைவன் தில்லைக் கூத்தப்பிரான் என்பது மட்டுமன்று அத்தில்லை. `வருங்குன்றம் ஒன்றுரித்தவனது தில்லை’, `ஆலத்தினால் அமிர்தாக்கியகோன்தில்லை’, `பல்லிலனாகப் பகலை வென்றோன் தில்லை’, `மாயவன் வரங்கிடந்தான் தில்லை’ என்று கூத்தப்பிரானின் திருவிளையாடல்களோடு இணைத்துப் பேசப்படும் தில்லை என்று அறியவேண்டும். பாட்டுடைத் தலைவன் செயல்கள் பெரும்பாலும் தில்லைக்கு அடையாக வருகின்றன. சங்கப் பாடல்களிற்போல் இயற்கையடைஇல்லை என்று சொல்லும் அளவுக்குக் குறைவாகும். எனவே கோவையின் கருப்பகுதி அல்லது செம்பாகம் இடைக்காலத்து வளர்ந்த சமயநிலைக்கு ஏற்பத் தெய்வப்பான்மை யாகவும் உரிப்பகுதி முன்போல் மனிதப்பான்மையாகவும் அமைந்தன என்று அறியவேண்டும். இது காலமாற்றத்தால் விளைந்த இலக்கிய மாற்றம். சமயக் காதலர்கள் இம்மாற்றம் இதனொடு அமையவில்லை. சமயப்புயல் மெய்யான அகப்பகுதியையும் தாக்கியது. தலைவன் தலைவி தோழிமுதலான அகமாந்தர்கள் இன்ன திணையினர் இன்ன நாட்டினர் என்ற அளவிலே சுட்டப்படுதல் சங்க வழக்கு. திணைப்பாங்கே சங்கப்பாங்கு; இடைக்காலத்து இப்பாங்கு சமயநிலைக்கு முன்னிற்க இயலவில்லை. கருப்பொருளில் வரும் மக்கட்கும் உரிப் பொருளில் வரும் மாந்தர்கட்கும் உறவே இராது சங்கப்பாடல்களில். முதற்கோவையான திருக்கோவை யில் இவ்வகையிலும் ஒரு மாற்றம் காண்கின்றோம். பாட்டுடைத் தலைவனை இறைவனாகக் கொண்டது மட்டுமன்றி அத்தலைவனுக்கும் கிளவித் தலைவனுக்கும் ஏனை அகமாந்தர்க்கும் நீங்கா உறவு வலியுறுத்துப்படுகின்றது. ஈசர்க்கு யான்வைத்த அன்பி னகன்றவன் வாங்கியவென் பாசத்திற் காரென்ற வன்தில்லை யின்னொளி போன்றவன்தோள் பூசத் திருநீ றெனவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே (109) சிறைவாண் புனற்றில்லைச் சிற்றம் பலத்தும்எம் சிந்தை யுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ (20) கோவைத் தலைவன் பாட்டுடைத் தலைவனாகிய சிவனைத்தொழுது பாராட்டும் அடியவன் ஆகின்றான்; அவ்வாறே பாங்கனும் தில்லைக்கூத்தனை நெஞ்சத்தில் வைத்த அடியான் ஆகின்றான். தலைவியது உடன்போக்கில் வருந்தித் தேடியலையும் செவிலி சுரத்திடை எதிர்வருவாரை நோக்கித் தன் மகள் ஒருவனோடு சென்றது பற்றி வினவுகின்றாள். ஒரு காலில் கழல் இருந்தது; ஒரு காலில் சிலம்பு இருந்தது; ஒரு பக்கம் வெண்பட்டாடை, ஒரு பக்கம் செம்பட்டாடை. இவ்வாறு இணைபிரியா உருவத்தைப் பார்த்தோம்; பார்த்து உமையொரு பாகன் என்றே அந்த எழிற்காட்சியைத் தொழுதோம்; தொழும் நற்பேறு பெற்றோம் என்று எதிர்வருவார் மறுமொழிகின்றனர். மின்தொத் திடுகழல் நூபுரம் வெள்ளை செம் பட்டுமின்ன ஒன்றொத் திடவுடை யாளொடொன் றாம்புலி யூரனென்றே நன்றொத் தெழிலைத் தொழவுற்றன மென்னதோர் நன்மைதான் குன்றத் திடைக்கண் டனமன்னை நீசொன்ன கொள்கையரே (246) இங்கு கிளவித் தலைவனும் தலைவியும் பாட்டுடைத் தலைவன் தலைவியாகவே பார்க்க பெறுவது அகவிலக்கணத்தில் ஒரு பெரிய புரட்சியாகும். கோவையின் புதுமை இளங்கோ காப்பிய மரபில் புரட்சி செய்தவர். என்பது போல மணிவாசகரும் அகத்திணை மரபில் அடிப்படைப் புரட்சி செய்தவர். இளங்கோ புரட்சி செய்தவர் என்று கூறினாலும், செய்த புரட்சிகள் என்ன? என்று உராய்ந்து பார்ப்பதற்கு அவருக்கு முந்திய காப்பியங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் நாம் பெற்றிருப்பதால் திருக்கோவையில் மணிவாசகர் செய்த மாறுபாடுகளை ஒத்திட்டுத் தெளிகின்றோம். அகத்துறைகள் பல என்பதும், அவற்றைத் தனித்தனி நிகழ்ச்சியாகவே கருத வேண்டும் என்பதும், காதல் நிகழ்ச்சிகளை வரிசையாக கோவைப் படுத்தக் கூடாது என்பதும் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் காட்டும் அகமரபு. கபிலர் அகப்பாடல் பல பாடியபோதும், நிகழ்ச்சிகளை வரிசை செய்திலர். ஐங்குறுநூறு கலித்தொகை இவற்றில் ஒரு புலவரே தொடர்ந்து பல செய்யுட்களைத் தொடுத்த காலையும் துறைக்கோவையாகத் தொடுக்கவில்லை. முதற்பாட்டு ஒரு கைகோளாக ஒரு துறையாக, அடுத்த பாட்டு வேறொரு கைகோளாக வேறொரு துறையாக இங்ஙன் தொடர்பின்றித் தொடர்பின்றிச் செல்லுவதை அறிகின்றோம். துறைத்தனிமை சங்கப் பாங்கு; துறைக்கோவை சங்கப் பாங்கன்று. மணிவாசகர் தமிழ் அகத்திணையில் பெரிதும் ஈடுபாட்டினர்; அதனைப் பரப்பும் ஆர்வத்தினர். `உயர்மதிற்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ’ என்று பாங்கணை வினவச் செய்யும் முகத்தால், அகத் தமிழில் தாம் செய்த ஆராய்ச்சியைப் புலப்படுத்தியவர். அகத் தமிழை மாணவர்களுக்கு ஒழுங்குபடக் கற்பிக்கும் நோக்கங்கொண்டும், சைவமும் தமிழும் இணைந்து தழைத்து இனிது பரவவேண்டும் என்ற வேட்கை கொண்டும் பாடநூல் என்று சொல்லத்தக்க திருக்கோவை இயற்றினார். கோவை என்ற நூற்பெயரே தொல்காப்பியத் தனிமுறைக்கு மாறுபாடு என்பதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. மதச் சார்பு திருவெம்பாவைப் பெண்கள் சிவன்பால் வேண்டுவன பல, பாவை பாடுவோர் சைவக் குமரியர் ஆதலால், தங்கள் பருவத்துக்கு ஏற்ற ஒரு வேண்டுகோளினையும் ஈசனிடம் அறிவிக்கின்றனர். உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய். காதலர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற பிற்காலக் கருத்துவளர்ச்சியை இப்பாடல் காட்டுகின்றது. (ஒரு மதத்தைச் சார்ந்தும் அம்மதத்திற்கு உட்பட்ட ஒரு சாதியைச் சார்ந்தும் இருத்தல் வேண்டும் என்ற கருத்து மணிவாசகர் காலத்து வளரவில்லைபோலும்) இவ்வாறு மதவூற்றம் இருப்பினும், கிளவித் தலைவி சிவனைப் பணிந்தாளாகத் திருக்கோவை பாடவில்லை. ‘குலமகட்குத் தெய்வம் கொழுநனே’ என்பதும், தெய்வம் தொழாள் கொழுநனைத் தொழுதெழுவாள் என்பதும் தமிழ் மன்பதையின் கருத்துரையாதலின், மணிவாசகர் தலைவியைச் சைவச்சியாகக் காட்டினாலும், கணவனைத் தொழுபவளாக, அவனை யன்றிப் பிறதெய்வம் தொழாதவளாகவே காட்டுவர். தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலமனையாள் தெய்வம் பணிந்தறியா ளென்று (304) தென்னவன் ஏத்துசிற் றம்பலத் தான்மற்றைத் தேவர்க்கெலாம் முன்னவன் மூவலன் னாளும்மற் றோர்தெய்வ முன்னலளே (306) சிற்றம்பலம் போன்ற சிறப்புடைய தன் மனைவி தன்னைத் தவிர வேறொரு தெய்வத்தைப் பணிவது தெரியாதவள் என்று இல்லற வாழ்வில் கணவன் பாராட்டுகின்றான். தன் மகளின் இல்வாழ்க்கையைக் காணச்சென்ற செவிலியும் மற்றோர் தெய்வத்தை மனத்தாலும் நினையாதவள் என்று புலப்படுத்துகின்றாள். கோவைப் புரட்சிக்கு ஓர் எல்லையுண்டு போலும். சமயப் பின்புலம் முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை என்ற தொல்காப்பியத்தின்படி, அகப்பாடல் முதல் கரு உரி என்ற முக்கூறுடையது என்பது பெறப்படும். முதலும் கருவும் இயற்கை பற்றியன. உரி என்பது மக்களின் காதல் நிகழ்ச்சி பற்றியது. சமய எழுச்சிக்குப் பின்னர்த் தோன்றிய அகத்துறைச் செய்யுட்களில் முதல் கரு என்ற இரண்டின் இடத்தைச் சமயம் கைப்பற்றிக் கொண்டது. இப்பகுதியில் சமய மெய்ம்மைகளும் புராணக் கதைகளும் புகலாயின. இவற்றின் அடிப்படையில் கற்பனைகளும் சொல்நயங்களும் புனையப்பட்டன. மேலும், தலைவன் தலைவி முதலான அகமாந்தர்களும் ஒரு நெறி தழுவிய மக்களாகக் கொண்டமையின், உரிப்பொருளிலும் சமயம் கலப்பதாயிற்று. எனவே சங்கத்துப்பின் எழுந்த அகச்செய்யுட்கள் அகம் என்ற இலக்கணப் பெயரைப் பெற்றிருந்தாலும் நெறி முதன்மைப் பாடல்களாயின. சமயம் முதற்பொருளாயிற்று. அதனைச் சொல்லிப் பரப்புவதற்கு உரிப்பொருள் சார்புப் பொருளாயிற்று. இவ்வகைப் பொருள் மாற்றத்திற்கு முன்னோடியாகத் திகழ்பவர் மணிவாசகர். சமயத்துறையில் அன்புப் புரட்சி கண்ட அடிகளார் இலக்கியத் துறையிலும் நீடிய பொருட்புரட்சி செய்தார். அப்புரட்சி பின்னைப்புலவர் எல்லாம் மேற்கொள்ளத்தக்க மரபாயிற்று. கோவை மரபு மணிவாசகர் கண்ட புதிய இலக்கிய மரபு. 10. கோவைத் திறன் `யாவையும் பாடிக் கோவை பாடுக’ என்பது பழமொழி. இம்மொழிக்கிணங்க, கலித்தொகை அகநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு, புறநானூறு முதலான சங்கநூற் சொற்பொழிவு களும், பதினெண் கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகளும், உலா கலம்பகம், தூது பற்றிய சிறுநூற் சொற்பொழிவுகளும் நிகழ்ந்த பின்னர், இந்தக் கோவைச் சொற்பொழிவு இன்று நடக்கின்றது. திசையெல்லாம் செந்தமிழைப் பரப்பி வரும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆற்றும் நிலைத்த பணிகள் பல; கடைப்பிடிக்கும் புதுத்துறைகள் பல. அவற்றுள் ஒன்று இச் சொற்பொழிவு இயக்கமாகும். இதுகாறும் பத்துக்கு மேற்பட்ட இலக்கிய மாநாடுகள் கூடியுள்ளன. ஐம்பதிற்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கலந்து சொற்பொழிந்துள்ளனர். இவ்வகைப் பணிபுரியும் கழகத்தின் திறம் முதற்கண் போற்றற் குரியது. இதனினும் போற்றத்தகும் கழகத்தின் திறம் ஒன்று உண்டு. புலவர்களின் சொற்பொழிவுகளை உடனடியாகக் கேட்டு விட்டுவிடும் இறந்த காலப் பொருளாக்காமல் நிகழரும், எதிரரும் பயன்கொள்ள அச்சுயிர் ஏற்றி நூற்பிறவியாக்கி வாழ் விக்கின்றனர் கழகத்தார். அதனால் தமிழ் வளர்கின்றது. யாதொரு நிலையம் தமிழை வளர்க்குமோ, வாழ்த்துமோ, அந்நிலையம் வளர்க வாழ்க என்று பாராட்டுவது நம் தமிழ்ப் பிறப்பின் பண்பாகும். இப்பொழிவுகளைத் தமிழுக்குத் தொடக்கத் திறனாய்வுகள் என்று கூறலாம். இவற்றால் தமிழிலக்கியங்கள் பரவும் எனவும், திறன்கலை வளரும் எனவும் எதிர்பார்க்கலாம். சொற்பொழிவு என்பது ஆகுபெயராய் இன்று ஒரு நூல் வகையைச் சுட்டும் வழக்குப் பெற்றுவிட்டது. கோவைச் சொற்பொழிவைக் கேட்டேன் என்ற நடையோடு கோவைச் சொற்பொழிவைப் படித்தேன் என்ற புதிய நடையும் இந்நாள் தோன்றலாயிற்று. கலம்பகம், உலா, தூது முதலான செய்யுள் வகை போல, சொற்பொழிவு என்பது உரைநடை வகையில் ஒரு கூறாகத் தோன்றியது கண்டும், அதனைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வளர்ப்பது கண்டும், அதனால் தமிழும் தமிழரும் வளர்வது கண்டும், அவ்வளர்ச்சியின் பங்காளிகளாக நீங்கள் இவண் வந்து கூடியிருப்பது கண்டும் பெருமித உவகை கொள்கின்றேன். இவ் வளர் பணிக்கு என்னை ஒரு பணியாளன் ஆக்கிய கழகத்தார்க்கு நன்றியன். மனை நூல் நிலையங்கள் இருவர் மூவர் விரல்விட்டு எண்ணத்தக்க சில கோவை நூல்களே இஞ்ஞான்று நமக்குக் கிடைத்துள. கோவை பாடும் வழக்கம் ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னரே தொடங்கிவிட்டது. இப்பன்னூறாண்டுக் காலத்து எழுந்த கோவைகள் எண்ணிறந்தன என்று சான்றுபட அறிகின்றோம். அவைகள் இறந்தன எனவும் உடன் அறிகின்றபோது, பிள்ளைப் பேறு கேட்க வந்தோர் சாவு கேட்ட உணர்ச்சி தோன்று கின்றது. அகப்பொருள் இலக்கண நூல்கள் இடைக்காலத்துப் பல தோன்றியிருத்தலின், கோவைகளின் எண்ணிக்கையும் குறைவின்றியிருத்தல் வேண்டும். கிளவித் தெளிவு, கிளவி மாலை, கிளவி விளக்கம், சிற்றெட்டகம், தமிழ் முத்தரையர் கோவை, தமிழ்க் கோவை, (இரண்டாம்) குலோத்துங்கள் கோவை, அசதிக் கோவை, பல்சந்த மாலை, பொருளியல், வச்சத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக்கோவை, விஞ்சைக் கோவை, வங்கர்கோவை, நந்திக்கோவை, குமாரசேனாசிரியர் கோவை, தானக்கோவை, காரிக்கோவை, இராமீசுவரக் கோவை, அரையர் கோவை, அண்ணாமலைக் கோவை, அகத்திணை என்றின்ன கோவை நூல்கள் இருந்தன என்று பிறநூற்குறிப்புக்களால் அறிகின்றோம். பிள்ளை இறப்பினும் அதன் பெயரேனும் ஒருவாறு ஆறுதல் தருமன்றோ? இனிப்புக் கட்டியினின்றும் உதிர்ந்த சீனித்தூள்கள்போல, மறைந்த நூல்களின் சில பாடல்கள் கிடைக்கப் பெற்றுள்ளோம். இத்தமிழ்ச் செல்வங்கள் ஏன் அழிந்தொழிந்தன? `வாரணம் கொண்டது அந்தோ வழி வழிப் பெயரும் மாள’ என்று பலர் காரணம் கூறுவர். நீரும் நெருப்பும் தமிழின் சுவையை நுகர விரும்பின என்று சிலர் நயனுறப் பேசுவர். வாழ்வுப் போரிடைப் புகுந்து வெல்ல மாட்டாத் தகுதியில் நூல்கள் அழிவதியற்கை என்று இற்றைத் திறனிகள் விளக்குவர். இவையெல்லாம் நம் மொழி நூற்செல்வங்கள் காலந்தோறும் அழிவுண்டமைக்குக் காரணங்கள் ஆகா. தமிழர் தம் மொழித் தாயை என்றும் எப்படியும் பேண முனையாப் பெரும் பேதைமையை தமிழ்நூல்களின் மறைவுக்கு அறிவுடைக் காரணமாகும். இதனை நாம் உணரவும் உணர்த்தவும் வேண்டும். இன்றுள்ள கோவைகளேனும் பிழைக்க வழியுண்டு கொல் என்று நினைக்க அஞ்சுகின்றேன். முன்னோர் தமிழகத்தில் பெறுமவற்றுள் இவைபோல் யாம் அறிவதில்லை. என்று பெற்ற நூற் குழந்தைகளை உவந்து புறந்தாராது, இவை என்ன பேறு என்று பின்னோர்கள் பேதைப்படுவரேல், அக்குழந்தைகள் தாமே கதறி அழுது கண்ணீர் வடித்துத் துடித்து மடியும். இக்குழவிக் கொலை அரசியற் கொடுங்கோன்மையினும் ஆழ்ந்தகன்ற இனக்கொடுங்கோன்மையாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெருகித் தடித்து வரும் மொழி பேணாப் பேதைமையை, அழிவுக் கூர்ங்கருவிகள் பெருகியுள்ள இக்காலத்துக் கட்டாயம் அழித்தாக வேண்டும்; வளரப் பார்த்தல் கூடாது. வழி என்ன? கருவி என்ன? பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளிலும் இருக்கும் நூல்நிலையங்கள் போதா. பொது நூல்நிலையங்கள் பட்டிகள் தோறும் பெருகினும் அவை நல்ல நூல்களை வாங்கிக் காவா ஆதலின் தமிழன் என்பான் ஒவ்வொருவன் இல்லத்திலும் அடுக்களைபோல ஒரு தமிழ் நூல்நிலையம் வேண்டும். திருமணச் சடங்குகளுள் தமிழ் நூல் நிலையம் அமைப்பதும் ஒன்றாதல் வேண்டும். தமிழ் நூல் இல்லா இல்லத்தை மங்கலநூல் இழந்த இல்லமாக அவமதிக்கும் மன்பதை உணர்ச்சி பெருக வேண்டும். வீட்டகதோறும் தமிழ் ஏட்டகம் இருத்தல் வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்ல விழைகின்றேன். வீடுதோறும் தமிழ்க் கலையின் விளக்கம் இலங்குமாயின், இன்று உள் நூல்கள் அழியா; இனி எழும் நூல்கள் வாழும். மேலும் இத்தமிழகத்து நூல்கள் எழுதலாம் என்ற நம்பிக்கையும் பிறக்கும். தமிழ்ப்பற்று கோவை பாடிய புலவர்கள் சிறந்த தமிழ்ப் பற்றினர். முன்னூல்களைக் கற்றுத் தமிழின் பெருமையைத் துணிவாக அறிந்தவர்கள். முத்தமிழின் பெருமை, தமிழ்ப்பனுவல்களின் பெருமை, தமிழ்ப் புலவர்களின் பெருமை யெல்லாம் இக்கோவைகளில் இடைமடுத்து வருகின்றன. அகப்பொருட் செய்யுட்களில் தமிழைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்பது இலக்கணமன்று; சொல்வது நேரடியான இயல்பும் அன்று. அன்றாயிருந்தும் வேண்டுமென்றே சொல்லியிருத்தலின், கோவைச் சான்றோர்களின் தமிழன்பினைத் தெளிவாகக் காண்கின்றோம். மறந்தும் தமிழ்ப்புறம் தொழா மொழிக் கற்பினை உணர்கின்றோம். வாணன் கோவைத் தலைவன், இவள் செங்கனி வாயுணவு தேருந்தோறும் இனிதாம் தமிழ் போன்றது’ எனத் தலைவி நுகர்ச்சியைத் தமிழ் நுகர்ச்சியாகப் பாராட்டுகின்றான். `சிறந்தார் தெரிந்த செழுந்தமிழ்’(145) `யாணர்த் தமிழ்’ (148) `வரைப்பால் மதுரத்தமிழ்’ (217) என்றெல்லாம் தஞ்சை வாணன் கோவையாசிரியர் அமுதூறி மொழிகுவர். தலை மகளின் இடை கூடல் ஒண் தீந்தமிழ் போல்வது (217) எனவும் அவள் விளையாட்டிடம் ஈர்ந்தமிழின் பொருள்போல் இனியது (166) எனவும் பாண்டிக்கோவை தமிழை உவமப்படுத்தும். `மந்த மாருதம் வண் தமிழ் நாறும் மலைய வெற்பா’ (277), `முச்சங்க வண் தமிழ்போல் மொழி யாய்’(302) எனத் தலைவனையும் தலைவியையும் வண் தமிழர்களாகக் காண்பர் அம்பிகாபதி. செல்வத்துள் செந்தமிழாம் செல்வம் சிறந்தது. தமிழின் மேன்மை கருதியன்றோ ஆரூர்த் தியாகர் சுந்தரர்க்குத் தூதாகப் பரவையாரிடம் நடந்து சென்றார். ஆதலின் தமிழ்க் கல்வியின் பொருட்டு நம் தலைவர் பிரிந்தது ஏற்கத்தகும் (483) என ஆரூர்க்கோவைத் தோழி தலைவிக்குத் தமிழின் தெய்வத் தன்மையைப் புலப்படுத்துகின்றாள். `யாரே கல்லாமல் உயர்ந்தார், தென் கூடல் இறையவனும் சீரேய் சங்கத்தில் இனிதிருந்து ஆய்ந்தனன்’ (424) என்று வியாசக் கோவையில் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சங்கத் தமிழ்க் கல்வியைப் போற்றுவர். `செந்தமிழ்க் கலையைக் கற்கச் சென்ற காதலர் அருள்வேண்டும் என்னும் ஓர் அறவுரை கற்க மாட்டாரா?’ (410) என்று திருவெங்கைக் கோவை தமிழுக்கும் அருளுக்கும் உள்ள தொடர்பை இயம்புகின்றது. இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தலைவன் பாங்கனைக் காண்கின்றான். நின் மெலிவிற்குக் காரணம் இதுவோ - இதுவோ? என்று பாங்கன் வினவுகின்றான். பாங்கன் கருதியுரைக்கும் காரணங்கள் பல கோவைகளில் தமிழ்க் காரணங்களாக உள. வண்டுறை வார்பொழில் சூழ்நறை யாற்றுமன் ஓடவைவேல் கொண்டுறை நீக்கிய தென்னவன் கூடற் கொழுந்தமிழின் ஒண்டுநிறை மேலுள்ள மோடிய தோவன்றி யுற்றதுண்டோ தண்டுறை வாசிந்தை வாயென் னாங்கொல் தளர்கின்றதே (பாண்டிக்கோவை - 25) சிறைவாண் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே. (திருக்கோவை -20) தென்செய்த பண்ணின் திறந்தெரிந் தோதெய்வப் பாவலர்தம் முன்செய்த நூலின் முறைதெரிந் தோசெம் முகங்கருகிப் பொன்செய்த மேனியும் புல்லென்று வாடிப் புலம்பவென்னோ என்செய்த தோவறி யேன்திரு மேனி இறைவனுக்கே. (அம்பிகாபதி - 25) போதைப் பொதிந்திட் டிருள்தூங் களகப் பொருப்பிமய மாதைக் கலந்த திருவெங்கை வாணர் மதுரைச்சங்க மேதைப் பசுந்தமிழ்ப் பாற்கடல் நீந்திய வீரமொரு பேதைக் குடைந்துநின் றாய்தகு மோசொல் பெருந்தகையே (திருவெங்கைக் கோவை - 45) கொத்துறு முத்தமிழ் வேலையின் வாய்த்தனையோ (கலைசைக் கோவை - 45) மாவேட்டம் செய்தனை யோமன்னர் போர்செய் துவந்தனையோ நாவேட்ட முத்தமிழ் ஆய்ந்தனையோ (வியாசக் கோவை - 142) தலைவனை இவ்வகையால் வினாவுதல் மூலம் தமிழ் கற்ற மெலிவும் தமிழிசை கேட்ட மெலிவும் பாராட்டற்குரியன என்பது கோவைப் புலவர்களின் குறிப்புரையாகும். இங்ஙனமே இடைக்காலத்தில் தோன்றிய சிறு பெரு நூல்களில் எல்லாம் தமிழின் மாட்சி பறைசாற்றப்படுகின்றது. ஆதலின் புலவர்கள் போலவே மக்களும் தமிழ்ப் பற்றுடையவர்களாக இருந்தனர் என்று கொள்ளலாம். இப்பற்றின் விளைவு என்ன? இவ் விளைவால் தமிழுக்கு வந்த ஆக்கம் என்ன? என்று காண்போம். இடைக் காலத் தமிழ்வளர்ச்சி தொல்காப்பியத்தையும் சங்கத் தொன்னூல்களையும் படிக்கவும் பரப்பவும் வேண்டும் என்ற வேணவா இடைக் காலத்துத் தீக்கொழுந்து போலப் பற்றியது. தொன்னூல்களை நேரடியாகக் கற்க முயன்றனர்; அம்முயற்சியினால் உரைகள் பெருகின. தொல்காப்பியத்திற்குப் பலர் உரையெழுதினர். சங்கவிலக்கியங் களுக்குக் குறிப்புரைகளும் பேருரைகளும் கிளைத்தன; இதனால் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி இடைக்கால மக்களிடை எளிதாக்கப்பட்டது. தொல்காப்பியத் திற்கும் சங்கப் பனுவல்கட்கும் உரையாசிரியர்கள் பெரும்பாலும் பிற்கால நூல்களிலிருந்து மேற்கோள்கள் தருவதில்லை. பழந்தமிழ் நூல்களை அவற்றிற்குரிய பெருமையோடு பரப்ப விரும்பினார்கள் உரையாசிரியர்கள் என்ற நெறியை இதனால் அறிகின்றோம். இறையனராகப் பொருள், நம்பியகப் பொருள், வெண்பா மாலை, நன்னூல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் முதலான எத்துணையோ இலக்கண நூல்கள் இடைக்காலத்து வெவ்வேறு யாப்பு வடிவில் தோன்றின. முன்னூல்களை நன்கு கற்பதற்கு இடைத்தமிழோர் மேற்கொண்ட மற்றொரு முயற்சி இதுவாகும். காலத்திற்கேற்பச் சிறுசிறு இலக்கண நூல்கள் ஒவ்வொரு கூறுபற்றி எழுந்தனவாம். இவ்விலக்கண நூல்களின் பாயிரங்களைப் படித்துப் பாருங்கள். முயற்சியின் நோக்கமும் தொல்காப்பியத்தைக் கற்பதற்குப் பின்வந்த இலக்கண நூல்கள் வாயில்களே என்ற கருத்தும் விளங்கிக் கிடக்கும். தொல்காப் பியனருள் ஒல்காப் பெரும்பொருள் அகப்பொருள் இலக்கணம் அகப்படத் தழீஇ இகப்பருஞ் சான்றோர் இலக்கியம் நோக்கித் தொகுத்து முறைநிறீஇச் சூத்திரம் வகுத்தாங்கு அகப்பொருள் விளக்கமென் றதற்கொரு நாமம் புலப்படுத் திருளறப் பொருள்விரித் தெழுதினன். என்பது நம்பியகப்பொருளின் பாயிரம். அகப்பொருள் விளக்கம் என நூற்குப் பெயரிட்டிருப்பதும் கற்பவர் தம் இருளறப் பொருள் விரித்து எழுதினன் என்று கூறியிருப்பதும் நினையத்தகும். உரைவகை ஒரு முயற்சி; சார்பிலக்கண நூல்வகை ஒரு முயற்சி; சிற்றிலக்கிய வகை ஒரு முயற்சி. இம்மூவகை முயற்சியாலும் தொன்னூல்கள் இடைக் காலத்துப் பரவின, படிக்கப்பெற்றன. சிற்றிலக்கிய முயற்சியே பல்வகைப் பிரபந்தங்களின் எழுச்சி யாயிற்று. கோவை என்பது இவ்வகையில் ஒன்று. தொல்காப்பியத்தும் சங்கத் தொகை களிலும் மிகுந்து கிடக்கும் பொருள் அகப் பொருளாதலின், அதனைப் பரப்பத் தோன்றிய கோவையிலக்கியம் சிற்றிலக்கியங் களுள் ஒரு பேரிலக்கியமாயிற்று; பேரின்பத்திற்குத் துடித்த மாணிக்கவாசகர் பாடும் பெற்றியுடையதாயிற்று. வீடும் துறவும் வேண்டி வாழ்ந்த இடைக்காலத் தமிழ் மன்பதையார் சிற்றின்பங் கூறும் கோவையைப் பேரின்பக் குறிக்கோளுக்கும் பயன்படுத்தினர். `இவள் தந்த இன்பத்தைச் சிற்றின்பம் என்பது எம்பெருமான் நடஞ்செய்யும் அம்பலத்தைச் சிற்றம்பலம் என்பது போலும்’ என்று சிவப்பிரகாசர் காதல் இன்பத்தைப் பெருமைப் படுத்துவார். துறவிகளும் கோவை பாடியுள்ளார்கள். ஆதலின் சிற்றின்பத்தை வெறுத்தாலும் அவ்வின்ப இலக்கியங்களை வெறுக்காது வளர்த்தனர் என்று அறிகின்றோம். பற்றற்ற கோவை வளர்ச்சியினாற்றான் தொல்காப்பியமும் சங்க நூல்களும் இடைக்காலத்துக் காக்கப் பட்டன; இடைத்தமிழோர் முயற்சியால் இப்பெருந்தமிழ்ச் செல்வங்களை இன்று நாம் எய்தப் பெற்றுள்ளோம். சங்கநூற் கருத்துக்கள் தொல்காப்பியக் கருத்தும் சங்கநூற் செய்திகளும் கோவைகளில் மறுபிறவி யெய்தி விளங்குகின்றன. அகத்திணை மாந்தர்களுக்குப் பெயரிடுதல் கூடாது என்பது தொல்காப்பிய இலக்கணமாகும். இவ்வுயிரான நெறியை எல்லாக் கோவை களும் புறநடையின்றிப் போற்றியுள்ளன. யார் பாட்டுடைத் தலைவனாகலாம் என்று தமிழ் முதல்நூல் வரம்பு செய்ய வில்லை. ஆதலின் கடவுளர்கள் பல கோவைகளுக்குப் பாட்டுடைத் தலைவர்களாக அமைந்திருப்பது சமய கால வியற்கை என்று நாம் கொள்ள வேண்டும். அக மாந்தர்களுள் சிறந்த ஆள் தலைவியே; அவள் தன் பல்வகைப் பண்புகளுள் சிறந்தது கற்பே. `உயிரினும் சிறந்ததன்று நாணே நாணினும், செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்ததன்று’எனத் தொல்காப்பியர் தமிழ்நெறி காட்டினர். இத்தமிழ்மையை எல்லாக் கோவைகளும் நன்முறையில் வலியுறுத்துகின்றன. வெறியாட்டிலும், உடன் போக்குத் துறையிலும், பரத்தையர் பிரிவிலும் கற்புநெறிகளைக் கோவைப்புலவர்கள் சால்புபடப் புலப்படுத்தியுள்ளனர். குழியில் விழுந்த களிற்றினை உய்விக்கும் பொருட்டுப் பெண் யானை மரங்களை ஒடிக்கின்றது; கரடி உணவிற்காகப் புற்றினை இரவில் தோண்டுகின்றது; வேங்கை பூத்ததும் திங்கள் ஊர்வட்டம் கொண்டதும் திருமணநாளைக் குறிக்கின்றன என்றிவை அகநானூற்றுக் கருத்துக்கள். பிரிந்து செல்ல மாட்டார் என்று நான் வாளா இருந்தேன்; பிரிவைச் சொன்னால் உடன்பட மாட்டாள் என்று அவர் வாளா இருந்தனர்; காலம் பார்த்துப் பிரிந்தனர் என்று கவல்கின்றாள் ஒரு தலைவி. தலைவன் என்னை மறைவிற் கூடியபோது யாருமில்லை. அங்கிருந்த குருகும் நீரில் ஓடும் மீனை இரைகொள்ளப் பார்த்திருந்தது என்று கலங்குகின்றாள் ஒரு தலைவி. சூல்கொண்ட பேடைக்குப் பேறு விடுதி அமைக்க ஆண் குருவி கரும்பின் பூவைக்கொண்டு வருகின்றது; என் தலைவன் பரத்தை வாய்ப்பட்டானே என்று வெதும்புகின்றாள் ஒரு தலைவி. என் மாமைக் கவின் எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் பயன்படாது பசலைநோய்க்கு ஊணாகின்றதே என்று பிரிவிடைப் புலம்புகின்றாள் ஒரு தலைவி. களவுக் காலத்து என் தோழி வேம்பைத் தந்தாலும் உமக்கு இனித்தது; இக்கற்புக் காலத்துப் பாரியது பறம்புச் சுனைநீர் தந்தாலும் உவர்க்கிறது என இடித்துரைக்கின்றாள் ஒரு தோழி. இவன் காலில் வீரக்கழல் உண்டு; இவள் அடியில் சிலம்புகள் உள. உடன்போக்கு மேற்கொண்ட இந்நல்லவர்கள் யார்? என்று அன்பு கொள்ளுகின்றனர் கண்டோர். இவையெல்லாம் குறுந்தொகைக் கருத்துக்கள், வேலன் அழைக்க வெறியாடும் மனைக்கு வந்த முருகனே நீ கடவுளாயினும் மடவை என்பது நற்றிணை. சாந்தும், முத்தும், இசையும் பிறந்த இடத்துக்குப் பயன்படா; ஆதலின் தலைவி ஒருவனுக்கு உரியவளே என்று செவிலியை முக்கோற் பகவர்கள் அறிவுறுத்துகின்றனர். பாலையில் வெயிலின் கொடுமையைத் தாங்காத துயர் உறும் பெடையை ஆண் புறா தன் சிறகால் நிழல் கொடுத்துக் காக்கும். இந்த அன்புக் காட்சியைக் காணும் தலைவன் நின்னை நினைந்து விரைவில் வருவான் எனத் தலைவியைத் தோழி ஆற்றுவிக் கின்றாள். அறமும் இன்பமும் வேண்டிப் பொருள்வயிற் பிரிந்தார் அன்பர் என்று தோழி எடுத்துக் கூறுகின்றாள். இவையெல்லாம் கலித்தொகைக் கருத்துக்கள். உடன்போய தலைவன் என் மனைக்கு வருவானா? தன் மனைக்கே கொண்டு செல்வானா? தலைவனின் தாய் நம் வீட்டில் மணம் நடக்க இசைவாளா? என்று தலைவியின் தாய் ஆவல் கொள்கின்றாள். புதல்வனை ஈன்ற எம்மேனியை முயங்க வேண்டா; தாய்ப்பால் நின் மார்பழகைச் சிதைக்கும் என்று புலம்புகின்றாள் தலைவி. இவையெல்லாம் ஐங்குறுநூற்றுக் கருத்துக்கள். `வேலினும் வெய்ய கானம், அவன் கோலினும் தண்ணிய தடமென்தோளே’ என்பது பட்டினப்பாலை. இச்சங்க நூற் கருத்துக்கள் எல்லாம் பற்பல கோவைகளில் கட்டளைக் கலித்துறை என்னும் புது யாப்புப்பெற்று விளங்குகின்றன. சங்க நூல்களும் கோவைகளும் என்பது ஒரு தனிக்கட்டுரைக்கு உரிய பொருளாகும் என்று கொள்க. குறள் பாய்ந்து வளஞ்செய்யாத் தமிழ் நூல்கள் இல்லை. மகளுக்கு மாலை சூட்டிய வரைவைக் கண்டு ஈன்ற பொழுதிற் பெரிது உவந்தாள் தாய் என்பர் சிவப்பிரகாசர். கோழி காலையில் கூவுதல் வாய்மையாயினும் கொழுநனொடு கூடிய தன் இன்பத்தைச் சிதைத்துத் தீமை செய்தலின் பொய்யாம் என்று தலைவி திருக்குறளை நினைக்கின்றாள். (திருவெங்கை. 211) போதவிழ் மென்மலர்ப் புன்னையங் கானல் பொருந்து மிந்த மாதவி பெற்ற மணிமே கலைநம்மை வாழ்விப்பதே என்பது (36) அம்பிகாபதிக்கோவை. புன்னையங்கானல் பொருந்தும் இந்த மாதவி என்ற தொடர் சிலப்பதிகாரக்கானல் வரியையும், மணிமேகலை என்பது நூலையும் நினைவூட்டுகின்றன. கோவை என்பது சங்க இலக்கியங்களின் பாவை என்று மேற்காட்டிய செய்திகளால் வலியுறும். சங்க இலக்கியச் சிறப்பு சங்க நூற் கருத்துக்கள் கோவையில் நிரம்பிக் கிடப்பினும், கோவைகள் சங்க நூல்களுக்குக் கிட்ட நிற்கும் தகுதியுடையன வல்ல. இருவகை நூல்களும் அகப்பொருளையே பாடுகின்றன எனினும் இரண்டன் நெறியும் நோக்கும் வேறாயவை. ஒருவனுக்கு மனைவியும் மகளும் போலச் சங்கப்பனுவல்களும் கோவைகளும் ஆம். சங்க இலக்கியங்கள் நேரடி வாழ்விலிருந்து தோன்றிய மூலப் பிறவிகள். அவை கற்பவர் நெஞ்சுட்புகுந்து வாழ்வை நெறிப்படுத்த வல்லவை. சங்கச் சான்றோர் அகப்பொருளைத் தொடர்புடைய துறைகளாக வைத்துப் பாடவில்லை. தமக்குட்பட்ட ஒவ்வொரு கூறுபற்றித் தனிப்பாடல் செய்தனர் ஆதலின் சங்க அகநூல்கள் தொகையெனப் பெயர் கொண்டன; கோவைப் பெயர் பெற்றில. அகத்திணைக்குத் தொடர்பற்ற தனிப்பாடல்கள் எழுந்த தொல்காப்பிய நெறியே வாழ்வுக்குப் பொருந்தும். அந்நெறிப் பட்ட பாடல்களே உயிருடைய வாழ்வுப் பாடலாகும். கோவை என்பது சங்க இலக்கியம் என்னும் பெரிய மாளிகையைக் கண்டு படியெடுத்த ஒரு வரைபடமாகும்; அம்மாளிகைக்குள் செல்லப் பயன்படும் வழிகாட்டியாகும்; இலக்கியம் தோற்றிய இலக்கியமாகும். `படித்துணரக் கோவைத் தமிழ் நம் திருவெங்கை வாணர்க்குக் கூறினே’ என்பர் சிவப்பிரகாசர். கோவை என்பது அகத்துறை என்னும் முத்துக்களெல்லாம் முறையாக அமைந்திலங்கும் ஒரு தனி இலக்கிய நூலாகும். அகத்திணைக் கூறுகளை நிரல்படவும் கோவைபடவும் தொடர்நிலைச் செய்யுள் கோக்கலாம் என்று நம் இடைக்காலப் பெருமக்கள் கண்டறிந்த நுண்மையைப் - புதுநெறியை - நாம் பாராட்டுகின்றோம். இந்நெறித் தோற்றத்தால் தொல்லைப் பனுவல்கள் அழியாது காப்புற்ற நலத்தை முன்னே குறிப்பிட்டேன். கோவைகள் சங்கவிலக்கியம் போல அகப்பொருளைச் சொல்லுவன எனினும், சொல்லும் நடைப்பண்பிற் சில பெருங்குறையுடையன. இக்குறைகள் இடைக்காலத்துத் தோன்றிய பல்வகை நூல்களுக்கும் பொருந்தும். `மலரினும் மெல்லிது காமம்’ என்ற நுண்ணிய அகப்பொருளையே தமக்கு நூற்பொருளாகக் கொண்ட கோவைப் புலவர்கள் இக்குறைகளுக்கு இடங்கொடுத்திருத்தலாகாது காண். நம் அகத்திணை நுதலும் காதற்பொருள் நனி நாணுடையது; சிறிது வழுவினும் நிறைவழுவாவது. அகச்செய்யுட்களில் அவையல் கிளவி வருதலாகாது; இடக்குச் சொற்கள் புகலாகா; சங்கஇலக்கியங்கள் இக்குற்றங்கள் இல்லாதனவாதலின் எக்காலத்தும் பெண்ணும், ஆணும் பயிலத்தக்கனவாகவுள; பேரவையிலும் பெருமிதவுணர்வோடு பேசத்தகையனவாகவுள. மொழி நாணத்தையும், கற்பனைக் கற்பையும் கோவை நூல்கள் சின்னஞ்சிறு நயங்கருதி பலியாக்கிவிட்டன. பெண்பாலின் உறுப்புக்கள் இந்நூல்களில் படாத கற்பனைப்பட்டுள. நாணிக் கண் புதைத்தல் என்னும் ஒரு துறைக்கோவை நூல் படிப்பார் நாணிக்கண் புதைத்தற்குரியதாக நிற்கின்றது. நாணில் மொழியும் அளவில் கற்பனையும் பொதுவாகத் தமிழ் நூல்களிலும் கட்டுப்பாடாகக் காதல் நூல்களிலும் வருதலாகா; வருங்காலத் தமிழ் வளர்ச்சியில் இடைக்காலக் குறைகள் மறுமை எய்தலாகா என்பதற்காகவே, கோவை பாராட்ட எழுந்தது இம்மாநாடேனும், ஈண்டுச் சொல்லத் துணிந்தேன். யாண்டும் நம் நோக்கம் நற்றமிழ் வளர்ச்சியாகும். சமய கால இலக்கியம் பிற்காலச் சிற்றிலக்கியங்களுள் கோவை தன்னேரில்லா இலக்கியமாகும். இதனைத் தொடர்நிலைச் செய்யுள் - சிறுகாப்பியம் - என்பார் தண்டியுரையாசிரியர். ஒரு புலவன் ஒரு தனிப்பொருளை நீள நினைந்து பாடும் முழுச்சிந்தனையைக் கோவையில் பார்க்கின்றோம். புலவன் தன் சிந்தனைக் கோவை என்னும் பெற்றியுடையது இவ்விலக்கியம். சங்கத் தமிழர் இயற்கையொடு ஒன்றிய வாழ்வினர். அதனால் சங்க இலக்கியங்கள் முதற்பொருள் கருப்பொருள்களை நிரம்பத் தழுவிப் பாடுகின்றன. இஃது அக்காலத்திற்குப் பொருந்தும். கோவை பிறந்த காலத்துத் தமிழர் வாழ்வு சமய வாழ்வாக மாறிவிட்டது. சமயச் சார்பற்ற எதுவும் தமிழ்ச் சார்பற்றதாகக் கருதப்பட்டது. இலக்கியம் மன்பதைக் காட்டியாதலின், கோவைகள் பெரும்பாலும் தலக்கோவைகளாகத் தோன்றின. இலக்கியம் காலக்கோட்பட்டது என்பதற்குக் கோவைப் பிறவி ஒரு சான்று. சங்கவிலக்கியத்தின் இயற்கைச் சூழ்நிலையை இழந்த கோவைகள் சமயச் சூழ்நிலைப்பற்றி முன்னேறின; புதிய நிலையால் முன்னில்லாத் தமிழாக்கம் செய்தன. சமய மெய்ம்மைகள், நாயன்மார் வரலாறுகள், புராணக்கதைகள் முதற்பொருள் கருப்பொருளுக்கு ஈடாக வந்து கோவைப் புலவர்க்கு உதவின; உவமைகளாகப் பயன்பட்டன. பொய்யுடை யார்க்கரன் போலக லும்அகன் றாற்புணரின் மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும் (திருக்கோவை: 48) தலைவியைப் பிரியும் தலைவன் அவள்தன் தினைப்புலத்துத் தெய்வப்பத்தியை உவமப் படுத்துகின்றான். யானைக்கு அஞ்சிய தலைவியைத் தலைவன் இடப்பக்கத்துத் தழுவிக் கொள்கிறான் அவன் வலப்பக்கம் யானையின், புண்ணுமிழ் குருதியால் செந்நிறம் ஆகின்றது. `அண்ணலை ஆயிழை பாகன் என்று அஞ்சினம்’ (தஞ்சை வாணன்: 302) என அறத்தொடு நிற்கும் தோழி செம்மேனி யெம்மானாகத் தலைவனை உருவகஞ் செய்கின்றாள். உடன்போய மகளுக்கு ஒரு நற்றாய் வருந்தினாள். எப்படியும் மகளைத் தேடிக் கொணர்வேன் என்று செவிலி ஆறுதல் கூறுதல் வழக்கம். `நிலத்தில் மறைய முடியாது. வானத்தில் ஏறமுடியாது, இதற்குள் கடல்வழியாகச் சென்றிருத்லும் ஒல்லாது; அடுத்த நாட்டிலோ அடுத்த ஊரிலோ அடுத்த வீட்டிலோதாம் உடன்போக்கினர் மறைந்திருப்பர். நாடு நாடாக, ஊர் ஊராக, வீடு வீடாகத் தேடிக் கண்டு பிடிப்பேன்’என்று குறுந்தொகைச் சங்கச் செவிலி சொல்லுகின்றாள். இஃது இயல்பான பேச்சு. அருகாத அன்புடன் இன்புற மேல்வந் தடுகளிற்றைப் பொருகாளை பின்சுரம் போயினள் என்று புலம்பிநையேல் குருகார் கமலக் கொடிதங்கு தேயம் குறுகியவர் ஒருகாலி னுக்கும் ஒருகை யினுக்கும் உட்பட்டதே (அம்பிகாபதி - 369) என்பது சமயச் செவிலியின் ஆறுதலுரை. உலகம் பெரிதன்று; குறளுருவாகிய திருமாலின் ஓரடியால் அளக்கப்பட்ட சிறியது; கடலையுண்ட அகத்தியரின் ஒரு பிடிக்குள் அடங்கிவிட்ட குறியது. அதனால் உடன் போகியாரை ஓரடி வைத்தால் ஒரு கையால் பிடித்துவிடலாம் என்பது செவிலியின் கருத்து. இவ் விலக்கியநெறி புராண காலத்தில் எழுந்த இலக்கியங்கட்குப் பொருந்துவதே. சிறந்த கண்ணப்பர் இறைச்சியைச் சுவைத்து இலையில் வைத்துக் காளத்தியப்பருக்குப் படைத்தார் என்பது வரலாறு. பகற்குறிவந்து நீங்கும் தலைவனை விருந்தாக அழைக்கின்றாள் குறக்குடித் தோழி. `நும் வேண்டுகோளை மறுப்படி எப்படி? குறமகன் ஊட்டிய எச்சிற் கறிதானே இறைவனுக்கு உவப்பாயிற்று’ என்று திருவெங்கைக் கோவைத் தலைவன் வாயூறி உடன்படுகின்றான். திருமகள் தாமரையில் வாழ்கின்றாள் என்றும் கதிரவன் தாமரையைத் திறப்பான், திங்கள் அதனை மூடுவான் என்றும் புராணம் புனைந்து கூறும். இப்புராணச் செய்தியைப் பொருட்படுத்திக் கோவைப் புலவர்கள் மேலும் செய்த கற்பனைத் திறங்கள் எண்ணில. தலைவியைத் திருமகளாகவும், அவள் இல்லத்தைத் தாமரையாகவும் கொண்டு தலைவன் பலபடப் பாராட்டுவான். .இரவுக்குறியில் வந்த காதலன் தலைவியைக் காணவில்லை. `இங்கு அவள் எப்படி வரமுடியும்? அவள் வாழும் தாமரைமனை மாலையில் அடைக்கப்படும். யாரும் திறந்துவிட்டாற்றானே அவள் வெளிவர இயலும்? என் காதலியின் திருமனையைத் திறப்பார் ஒருவர், அடைப்பார் ஒருவர்’ என்று அல்ல குறிப்பிட்ட வெங்கைத் தலைவன் புலம்புகின்றான். `இருவர் திறந்தடைக்கின்ற தன்றோ நெஞ்சமே நம் திருமனையே’ என்று அவலிக்கும் தலைவன் கருத்தில் திருமறைக் காட்டினைத் திறந்தடைக்கப் பாடிய நாயன்மார்கள் செயல் புலனாகின்றது. `இரவில் என்னைக் காணவேண்டு மென்று நீ தாமரை மாளிகையைப் பகற்காலத்தே விட்டுவந்தாயோ’ என்று கனிந்து மொழிகின்றான் ஒரு காதலன். கைத்தி கிரிப்புயல் காணாத பாத ர்கமலையுறை மெய்த்திரு வேயிருட் போதுவந் தாயந்த வெங்கதிரோன் அத்திரி மேனின் றிதழா யிரமுமடைத் துவண்டாம் முத்திரை யிட்டதன் றோவென்று நீவைகும் முண்டகமே (திருவாரூர்க்கோவை : 207) `உன்னைத் தாமரையில் வைத்துக் கதிரோன் இதழாயிரக் கதவடைத்தான்; மேலும் வண்டு முத்திரையிட்டான். முத்திரைக் கதவை யுடைத்துக் கொண்டு காலமல்லாக் காலத்து எவ்வண்ணம் வந்தாய் திருவே என்றாங்கு அன்புத் தலைவன் இன்பச் சொல்லாடுகின்றான். அன்பர் வரலாறு, புராணக்கதை, சமயவுண்மைகள் என்றின்ன வகையால் கோவைகள் பொருள்வளம் பெற்றுக் கற்பனை பெருக்கிக் காதற்சுவையை வெளிப்படுத்தின. தெய்வக் காதலும் மக்கட் காதலும் இணைந்த புதிய அமைப்பினால் கோவைகள் நிலைத்த இலக்கியங்களாயின. கோவைகள் பிறந்த காலம் தமிழ்ப்பற்று மிகுந்த காலம் என்றும், உரை, சார்பிலக்கணம், சிற்றிலக்கியம் என்ற முந்நெறியால் இடைக்காலத் தமிழ் வளர்க்கப்பெற்றது என்றும், இந்நெறியில் தோன்றிய கோவை தொல்காப்பியம் சங்க இலக்கியம் முதலான தொன்னூல்களை அழியாமற் காத்தது என்றும், சமய எழுச்சி கோவை இலக்கியத்திற்கு ஊட்டம் தந்தது என்றும், சில அடிப்படைகளை விளக்கினேன்; அதற்குச் சான்றாகக் கோவை அமைப்பையும் கோவைச் சான்றோர்களின் புலமையையும் திறங்காண்போம். கோவையின் இலக்கணம் கோவை, தலைவனும் தலைவியும் தாமே கண்டு தோழியின் துணைகொண்டு காதலின்பம் துய்க்கும் களவொழுக்க முதல், ஊரறிய மணந்து விருந்தோம்பி மகப்பெற்று வாழும் கற்பொழுக்கம் வரை ஒன்றன்பின் ஒன்றாக நிரல்பட எல்லா நிகழ்ச்சிகளையும் ஒருங்கு கூறுவது. கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் அமைந்த கோவைகளே மிகப்பல. ஆசிரியத்தாலும் வெண்பாவாலும் பாடிய சில பழங் கோவைகளும் உண்டு. கோவைக்கு நானூறு பாடல்கள் வேண்டும் என்பது ஒரு பொதுவிலக்கணம். நானூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் கொண்ட கோவைகளே பல. ஓட்டக்கூத்தர் பாடிய நாலாயிரக் கோவை பேரெல்லைக்கு எடுத்துக்காட்டு ஒரு துதுறைக்கு ஒரு செய்யுள் என்ற முறையால் அமைந்த கோவைகளும் உள. சில துறைகளுக்குப் பல பாடல்கள் உடைய கோவைகளும் உள. அம்பிகாபதிக் கோவையில் தலைவன் பாங்கற்கு இரங்கல், தலைமகனுக்கு அவன் நற்றாய் உரைத்தல், பதங்கம் (ஒருவகைப் பறவை) பழிச்சல், யாணரைக் காண விரும்பல் என்றின்ன புதிய துறைகள் காணப்படுவ. திருவாரூர்க் கோவையில் வளம்படவுரைத்தல், நற்றாய்தமருக்கு அறத்தொடு நிற்றல், கழையொடு புலம்பல் என்ற புத்துறைகள் காணப்படுவ. தோழிமுன் தலைவன் யானை வினாதல், கலைமான் வினாதல் என்ற வினாக்கள் கோவைகட்கெல்லாம் பொது, சிராமலை, திருவாவடுதுறை, கலைசை, திருக்கழுக்குன்றக் கோவைகளில் வேங்கை வினாதல், வன்றி (பன்றி) வினாதல், மரை வினாதல் என்ற பல வினாக்கள் உள. மயூரகிரிக் கோவையில் சிங்கம் வினாதல், கரடி வினாதல், முயல் வினாதல் என மாணவர் வினாத்தாள் போலப் பல வினாக்கள் வருகின்றன. எல்லா வினாக்களுக்கும் நன் மாணவிபோலத் தோழி எதிர்மொழி பொருந்தச் சொல்லுகின்றாள். பல கோவைகள் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்ற முறையால் அமைந்திருக்க திருக்கோவை இயற்கைப்புணர்ச்சி பாங்கற் கூட்டம், இடந்தலைப்பாடு என்ற முறையில் நிகழ்வுகளைக் கூறுகின்றது. வறிது நகைதோன்றல் என்னும் துறை கவிக் கூற்றாகும். முளைக்கும் சிறிய முறுவல் என் ஆகம் முடிவிக்குமே’ என மதுரைக் கோவையும், `என் செவ்வாய் நகைக்கிடம் தந்தது இனி யார்க்கு நல்கும் நகைக்கிடமே’ எனக் கலைசைக் கோவையும் தலைவன் கூற்றாகச் செய்யுட் படுத்துவ. கோவை கோக்கும் நிகழ்ச்சிகளுக்கு எல்லை என்ன? தலைமக்கள் களவு தொடங்கிக் கற்பாகி மகப்பேறு எய்தி இன்பமாக இருக்கும் இல்லற வாழ்க்கையே கோவைப் பொருளாகும். பரத்தையிற் பிரிவு காரணமாக வந்த ஊடலைத் தீர்த்துத் தலைவன் தலைவியை இன்முயக்கம் செய்கின்றான். என்பது திருக்கோவை முடிபு. போர்க்குச் சென்று மீண்டும் வந்த தலைவன் தலைவியோடு உடனிருந்து கார்ப்பருவங் கண்டு, முகிலே இனிப் பொழியத் தடையில்லை என்றான் என்பது தஞ்சைவாணன் கோவை முடிபு. ஓதற்கு பிரிந்து வந்த தலைவன் மனைவியோடிருந்து இன்புற்று இறைவன் அடியை நினைக்கின்றான் என்பது மதுரைக்கோவை முடிபு. பொருள்வயிற் பிரிந்த தலைவன் காதலியை அகத்திட்டுச் செழுங் கொண்டலே திருவருள்போல் மும்மாரி பொழிக என்று ஏவுகின்றான் என்பது கலைசைக்கோவை திருவாவடுதுறைக் கோவை முடிபுகள். காதலியைக் கூடிய காதலன் முகிலை வாழ்த்துகின்றான் என்று மீனாட்சிசுந்தரம் பிள்ளை தாம் பாடிய மூன்று கோவைகளிலும் மொழிவர். கோவை என்பது அகப்பொருட் கோவையாதலின் இல்லறமாக முடித்தலே நேரிது. துறவற முடிபு என்னானும் கோவைக்குப் பொருந்தாது. அல்லோடு நண்பகல் ஐம்புல னாலரும்போ கந்துய்த்து வல்லியும் மல்லல் வளவய லூரனும் மாதருமே சொல்லிய கேள்வித் துறைமுடி வாய்ந்து துணைவியரோடு இல்லறங் காத்துத் துறவறந் தாங்கல் இயைந்தனரே என்பது அம்பிகாபதிக் கோவையின் இறுதிச் செய்யுள். கூட்டுறவுப் பண்ணைப் பாலில் உப்புவிழுந்தது போல இல்லறக்கோவையில் துறவறத் தனிமையைச் சொல்வது நெறிப்பிழையாகும். பிற கோவையரெல்லாம் இல்லற வாழ்க்கையாகவே முடித்திருப்பது அம்பிகாபதி முடிவு ஏற்கப்படவில்லை என்பதற்கு ஒரு கரி. அகப்பொருட் செய்யுட்களில் பாட்டுடைத் தலைவன் கிளவித்தலைவன் என்ற இருவகைத் தலைவர்களுக்கு இடனுண்டு. பாட்டுடைத் தலைவன் வரல்வேண்டும் என்பது விதியுமன்று: விலக்குமன்று அம்பிகாபதிக் கோவைக்குப் பாட்டுடைத் தலைவன் இல்லை. பாண்டிக்கோவை தஞ்சைவாணன் கோவை குளத்தூர்க்கோவை நாணிக்கண் புதைத்தற் கோவைக்கு முறையே பாண்டியன் நெடுமாறன், சந்திரவாணன், வேதநாயகம்பிள்ளை, தளவாய் இரகுநாத சேதுபதி என்போர் பாட்டுடைத் தலைவர்கள். இக்கோவை களில் இன்னவர்தம் மனைவியர் இணைத்துக் கூறப்படுத லில்லை. கிளவித் தலைவனுக்குக் கிளவித்தலைவி கோவையிற் சொல்லப்படுதல் போலப் பாட்டுடைத் தலைவனக்கு மனைவியிருப்பினும் பாட்டுடைத் தலைவியாகப் பாடுபெறுதல் வழக்காறன்று. தலக்கோவைகளில் என்றால் பாட்டுடை இறைவனோடு இறைவியும் பிணைத்துப் பாட்டுப் பெறுதலைக் காண்கின்றோம். இது பெரு முரணன்று. சமயகால இலக்கியக்கூறு என்று சொல்லிய யமையலாம். பாட்டுடைத் தலைமக்கள் இல்வாழ்க்கையைக் கிளவித் தலைமக்கள் இல்வாழ்க்கையோடு ஒப்பிட்டு உரைப்பதும் ஏற்றத்தாழ்வு காட்டுவதும் எவ்வாற்றானும் கூடாது. அகத்திணை மாந்தர் பெயர் சொல்லுதல் கூடாது எனின், அம்மாந்தர்களைப் பெயருடையவர்களோடு இயைத்து வாழ்வைப் பொருத்திச் சொல்வதும் கூடாதன்றே? துறைப் பொருட்குத் தகப் பாட்டுடைத் தலைவனது இல்வாழ்க்கையை அமைத்துப் புனையும் போக்கினைத் திருவெங்கைக் கோவையிற் கற்கின்றோம். புணர்ந்தாருள் வெங்கை புரநாதர் பாகம் புணர்ந்தநறு மணந்தாழ் குழலுமை மங்கையல் லாமல் மகிழ்நர்தமைத் தணந்தார் அமைகிலர் நீதரி யாமல் தளர்ந்தனையேல் பணந்தாழ் அகலல் குலாய்நகு வார்நினைப் பார்த்தவரே இது (158) தலைவியைப் பாங்கி கழறுதல் என்னும் துறையாகும். தோழியிற் கூட்டத்துத் தலைவன் காலம் நீட்டித்தமையால் தலைவி மிக வருந்தினாள். என்றும் பிரியாத் தன்மையும் பிரிய இயலாத் தன்மையும் உடையவள் ஒரே ஒருத்தி. அவள் திருவெங்கை நாதர் பாகத்து இருக்கும் உமையே. மக்களுள் புணர்ந்தார் யார்க்கும் பிரிவு உண்டு. இவ்வியல் பறியாது நீ வருந்துவது நகைப்பிற்கு இடமாகும் என்று ஆற்று விக்கின்றாள் தோழி. திருவெங்கை இறையவனின் மனைவி சான்றாக அகப்பொருளில் வருதல் காண்க. கல்லைக் குழைத்துப் பயின்றுள தாகிய கல்வியுடைத் தில்லைப் பதியின் நடமாடும் வெங்கைச் சிவனையல்லால் சொல்லிக் கொடுநின் மனம்நாம் குழைப்பத் துணிதலொரு புல்லைக் கொடுதண் கடல்நீந்த உன்னுதல் பூங்கொடியே பாங்கியைத் தலைவன் பழித்தல் என்னும் துறைச்செய்யுள் (12) இது. தலைவன் தன் குறைகளையெல்லாம் தோழியிடம் எடுத்துச் சொல்லுகின்றான்; தலைவி தனக்கு இன்றியமை யாதவள் என்பதனை விளம்புகின்றான். அவனது ஆர்வமொழி யெல்லாம் கேட்டபின், தோழி நின் குறையை நீயே சென்று தலைவிக்குச் சொல் என்று தன்பொறுப்பின்றிச் சொல்கின்றாள். இப்பேச்சால் தலைவன் கசந்தான்; சிறிது சினந்தான். `நின்மனத்தை என் சொல்லால் மாற்ற இயலாது. ஒரு புல்லைத் தோணியாகக் கொண்டு கடலை நீந்த முடியுமா? கல்லைப் பிசைந்து கனியாக்கவல்ல திருவெங்கைச் சிவனே உன் மனத்தை இளக்க வல்லவன்’ என்று தலைவன் தோழியின் வன்னெஞ்சத்தைத் தாக்கினான். பாட்டுடைத் தலைவனாம் வெங்கைநாதன் துறைப் பொருளுக்கு உள்ளாதல் காண்க. கோவைப் புலவர்களின் தனித்தன்மை ஆசிரியம், வெண்பா, கலித்துறை என்ற யாப்பிலும், செய்யுள் எண்ணிக்கையிலும், ஒரு துறைச் செய்யுட்களிலும், துறைவகையிலும், கூற்றிலும், முடிபிலும் தலைவர் நிலையிலும் கோவை நூல்களிடை வேறுபாடுகள் உள என்பதனை மேலே சுட்டிக்காட்டினேன். கோவைப் புலவர்கள் பாட்டியல் இலக்கண நூல்களுக்கு அடிமைப்படவில்லை என்று இதனால் அறியலாம். இலக்கியம் கண்டு அதற்கேற்பக் கோவையிலக்கணம் எழுதப்பட வில்லை என்று மேலும் அறியலாம். கோவை தோறும் வேறுபாடு இருத்தலின் ஒரு கோவை மற்றொரு கோவைக்கு முற்றும் அடிச்சுவடாகவில்லை என்பதும் அறியத்தகும். கோவைப்புலவர் ஒவ்வொருவரிடம் சில தனிப்புலமைகள் காணப்படுகின்றன. கலித்துறைக் கோவை களுள்ளும் நடைநயங்கள் வேறுபடுகின்றன. தமக்கெனச் சில புதிய கருத்துக்களும் யாப்பமைதியும் பெற்றமையாற்றான் ஆளுக்கு ஒரு கோவை பாடத்தொடங்கினர். `இடம் அணித்து என்றல்’என்னும் ஒருதுறையில் கோவைப் புலவர்களின் வேறுபட்ட சிந்தனைகளை ஒப்பிட்டுக் காண்போம். தலைவன் தலைவியை முதல்நாள் கண்டுபிரியும் போது, தலைவி கவல்கின்றாள். `கவலாதே, உன் ஊரும் என் ஊரும் மிகப்பக்கம்; போவதும் வருவதும் எளிது’என்று தலைவன் ஆறுதல் செய்தல் இத்துறையின் பொருளாகும். இவ்வொரு துறைக்கண்ணே ஒவ்வொரு புலவரும் காட்டிய சிந்தனையோட்டம் நுண்ணியது, இனியது, சிறந்தது. திருவாரூர்க் கோவைத் தலைவன் `நம் இருவர் ஊர்க்கும் நடுவே எல்லைக்கல் உள்ளது. இந்த எல்லைக்கல் இன்றேல் இரண்டு ஊரார்க்கும் எல்லைச் சண்டை ஏற்படும்’ என்று மொழிகின்றான். கலைசைக் கோவைத் தலைவன் `என்னூர் ஆடு மாடுகள் நின்னூர் மலைக்கு வந்து தினை மேய்ந்து திரும்புகின்றன’ என்று கூறுகின்றான். சிராமலைக் கோவைத் தலைவன்’ `என்னூர் மிளகுக்கொடி உன்னூர்ச் சோலையில் படர்கின்றது’ என்று கட்டுகின்றான். திருவாவடுதுறைக் கோவைத் தலைவன் `என்னூர் இஞ்சிக்கொடி நின்னூருக்கு நிழல் தரும்’ என்று இயம்புகின்றான். திருக்கோவைத் தலைவன் `என்னூர் மாளிகை வெண்சாந்தின் ஒளி நின்னூரில் கருங்குன்றத்தை வெண்குன்றமாக்கும்’என்று உரைக்கின்றான். திருவெங்கைக் கோவைத் தலைவன் `இறைவன் திருமேனியும் அம்மை திருமேனியும் ஒன்றாய் இருப்பது போல நம்மிருவர் ஊரும் ஒன்றே’என்று கூறுகின்றான். தஞ்சைவாணன் கோவைத் தலைவன் `என் ஊர் வேங்கை மரம் நின்னூரின் காந்தட்கையில் பொன் சொரியும்’ என்று பேசுகின்றான். மதுரைக்கோவைத் தலைவன் `நின் காதுக்கும் விழிக்கும் எவ்வளவு தொலை’ என்று வினவுகின்றான். வியாசக் கோவைத்தலைவன் `என்னூர்க் கருமணிச் சோதியைக் கண்டு முகிலென்று மயங்கி நின்னூர் மயிலாடும்”என்று காட்டுகின்றான். குளத்தூர்க் கோவைத் தலைவன் `வேதநாயக வள்ளலின் பொருட்கும் வறியோர்க்கும் நெடுந்தொலைவா’ என்று கேட்கிறான். ஒரு பழங்கோவைத் தலைவன் `நின்னுடைய கூந்தல் நிறத்தால் நிறைவளையாய் என்னுடைய ஊரும் இருளாகும்’ என்று முடிக்கின்றான். கோவையின் சொல்லாக்கம் கோவைப் பொருளாராய்ச்சி, கோவைச் சொல்லாராய்ச்சி, கோவை நடையாராய்ச்சி என்ற வகையால் கோவைத் திறன்களை ஆராய்ந்து விளக்கிப் பரப்புதல் நல்லது. கோவைச் சான்றோர்களின் புலமைத் தனிக்கூறுகளை மேலே ஒரு துறையளவில் வைத்துக் காட்டினேன். பொருளும் சொல்லும் ஒரு மொழிக்குச் சோறும் நீரும் போல்வன. ஒரு மொழிக் கண்ணே பொருளே மாத்திரம் வளர்க்கும் அறிஞன் உடைமைத் தீட்டு இன்றி நிலம் வழங்கும் அன்பனை யொப்பான். மொழிக்கு உடைமையாவது பண்புடைய சொற்களே; பொருளல்ல. இதனைத் தமிழ்வளர்ப்பிகள் நினைவில் வைக்கவேண்டும். தமிழ்ச் சொற்களையும் சொல் வடிவங்களையும் புதுக்கி ஆக்கிப் படைக்காத புலவன் தமிழ் மொழிக்கு உடைமைச் செல்வம் பெருக்காதவனே என்பது என் துணிபு. கோவைப்புலவர்கள் இக்குற்றத்திற்கு ஆளாகவில்லை. `ஓராட்டி பாகர்’ (கலைசை. 362) `பொன்னி நீர் நாட்டிலுள்ள தண்ணெல்லாம்’ (பழமலை. 103), `அன்பன் பின் செலும் வாறு எதுவோ, (பழமலை.339) என்ற இடங்களில் ஆட்டி, தண், வாறு என்பன முதற்சொற்களாக ஆட்சி செய்யப்பட்டுள. `வடுக்கின்ற மாந்தளிர் (திருவாருர். 510), `குன்றமழைக்கக் குயில் அழையா நிற்பர்’ (அம்பிகாபதி.15) என்ற பகுதிகளில் வடு, மழை என்ற பெயர்ச்சொற்கள் புதிய வினையெச்ச வடிவம் பெற்று, `வடுச்செய்கின்ற’ `மழைபெய்ய’ என்னும் பொருளைத் தருகின்றன. இவ்வாக்கம் தமிழ்மொழி மரபிற்கு ஒத்ததே. இங்ஙனம் ஆக்கும் ஆற்றலையும், ஆக்கவேண்டும் என்னும் அன்பையும் இன்று நாம் இழக்கலாமா? இழக்கத்தான் இடங்கொடுக்கலாமா? தேனமர் சொல்லி, அம்பலமே போலி, தில்லைபோலி, அன்பிற் சொல்லி, குயில் மன்னு சொல்லி, காட்டில் நின்றாடி, விளையாடி என்ற பெயர்ச்சொல் வடிவங்கள் திருக்கோவையில் நன்கு காணப்படும். முருகனுக்கு உரிய முரசை `முருகியம்’ (662) என்றும் பாவிகளைச் `சீர் வழுத்தாப் பாவர்’ (337) என்றும் இக்கோவை சுருங்கச் சொல்லும். உவளை, உங்குவை, உங்ஙன், உந்திடம், இந்திடம் என்ற அரிய சுட்டு வடிவங்கள் இக்கோவைக்கண் பயின்றுள்ளன. தமிழ்நர், கணிமை, நாயினர் (நாயுடையார்), மன்னாமை, கற்பு (முறைமை), சோத்து, மடவியன், பேரான் (பேரன்) நயனி (நயனம் உடையவள்), காளையம் (போர்), கூண்டு (கூடி), பிறவு (பிறப்பு) முதலான சொற்களும், குழீஇ, வெரீஇ, தழீஇ போன்ற அளபெடை வடிவங்களும் பல கோவைகளில் புதுவதாக வரக் காண்கின்றோம். கோவையின் நடை ஆசிரியம், வெண்பா முதலான யாப்பினால் கோவை பாடலாமாயினும், கலித்துறையே பழக்கப்பட்ட பாவாகும். பெரும்பாலான கோவைகள் இத்துறை யாப்பில் பாடப் பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் பாநடையும் தனித் தன்மையுடையதாக விளங்குகின்றது. இவ்வெண்ணத்தோடு கோவைகளைப் படித்துப் பாருங்கள். கோடையும் கொண்டலும் கண்டறி யாத குளிர்பொழிற்கண் வாடையும் தென்றலும் மேவரு மேவரில் காண்பதன்னப் பேடையும் சேவலும் சேலும்வராலும் பிறங்குநன்னீர் ஓடையும் கங்கமும் சங்குமி ழாநின்ற ஒண்முத்துமே (அம்பிகாபதிக் கோவை - 10) அருந்தும் பசியும் அடுமணற் சோறும் அயர்ந்திறைவன் வருந்தும் பசிக்கு வருந்துமில் வாழ்க்கையும் வேட்கையுடன் பொருந்தும் விருந்தும் புறந்தரு நீர்மையும் போற்றியவன் திருந்தும் திறஞ்செய லுங்கற்ற வாநின் திருமகளே (அம்பிகாபதிக் கோவை - 446) அம்பிகாபதி உம்மை நடையின் அன்பர் என்று பல பாடல்கள் காட்டுகின்றன. எண்ணும்மையும் பெயரெச்ச வும்மையும் இப்பாடல்களில் அடுக்கி வருகின்றன. `விழியும் சிவந்த மொழியும் தளர்வுற்று மெய்யுங்கைத்து’ (346) என்பது போல உம்மையும் வினையெச்சமும் இணைந்த நடையும் இவர்க்கு உரியது. திருக்கோவை கோவைச் செல்வங்களுள் சிறந்த செல்வம் என்பதனை யாவரும் அறிவர். திருவாசகத்தின் மணம் திருக்கோவையிலும் உண்டு. `தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற நானூறும் என் மனத்தே நல்கு’ என்ற வெண்பாவில் `தேன்’ என்பது திருவாசகத்தைக் குறிக்கலாம். `வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்’என்று பாராட்டப்படுதல் காண்க. பேரென்ன வோவுரை யீர்விரை யிர்ங்குழற் பேதையரே (54) தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நுஞ் சுரிகுழற்கே (63) பாய்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே (74) மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள் (125) உரையென்ன வோசிலம் பாநலம் பாவி யொளிர்வனவே (153) ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாதிவ் வணி நிலமே (307) இவை திருக்கோவைக் கலித்துறையின் சில அடிகள். ஓரடியின் இடைச்சீர்கள் தம்முள் எதுகை மோனையழுத்தம் சிறந்தொலிக்கக் கேட்கின்றோம். அவ்வழுத்தத்தால் கருத்து வலிபெறவும் காண்கின்றோம். கோவைதோறும் ஓடுகின்ற தனிநடை நயத்தை ஆராய்ந்து பார்ப்பின், இடைக்காலத் தமிழ் நல்லோர் தமிழை இனிக்கச் செய்த பக்குவம் பெறப்படும். கோவைத் தோற்றம் கோவைத் தோற்றம் பற்றிய ஒரு கருத்தைச் சொல்லி இவ்வுரையை முடித்துக் கொள்வல். சங்க அக இலக்கிய மெல்லாம் துறைத் தொடர்பற்ற தனிப்பாடல்கள் கொண்டன என்பது ஒரு பொதுப் பேருண்மை. ஆராய்ந்து பார்க்கின், அக நிகழ்ச்சிகளை வரன்முறையாகத் தொகுத்துச் சொல்லும் கோவை முறை சங்க காலத்திலேயே பிறந்துவிட்டது என நாம் அறியவேண்டும். ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழை அறிவுறுத்த விரும்பிய கபிலர் குறிஞ்சிப் பாட்டுப் பாடினார். இப்பாட்டு அறத்தொடுநிலை என்னும் துறைத்து. அன்னை ஏவத்தலைவியும் தோழியும் தினைப்புனம் காக்கச் சென்றதும், தலைவன் கெடுதி வினாயதும், மொழி பெறாது வருந்தியதும், யானையினின்று காத்ததும், புனலினின்று காத்ததும் முயங்கியதும், இரவுக்குறியின் இடையூறுகளும், வெறியாட்டும், அறத்தொடு நிற்றலும் என்ற களவு, நிகழ்ச்சிகள் வரிசையாக இப்பாட்டில் வந்துள்ளன. எளியேம் துணிந்த ஏமஞ்சால் அருவினை நிகழ்ந்த வண்ணம் நீநனி யுணர செப்ப லான்றிசின் (குறிஞ்சிப்: 32) என்று நிகழ்ந்த வண்ணங்களை அன்னைக்குத் தோழி கூறுகின்றாள். ஆதலின் குறிஞ்சிப் பாட்டினைச் சங்கத்தின் கோவைப்பாட்டு என்று கூறலாம். ஐங்குறு நூற்றில் நெய்தல் பாடிய அம்மூவனாரும் கோவைப் புலவராவர். தொண்டிப்பத்து (171 -810) என்ற தலைப்பில் வரும் பாடல்கள் இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டமாகிய களவுக் கிளவிகளை முறைபடக் கூறுகின்றன. சங்கவிலக்கியத்தில் ஒரு நெடும் பாட்டிலும் ஒரு பத்துப் பாட்டிலும் மறைந்து கிடந்த கோவை யமைப்பை ஒரு நூற்கோவையாக்கி வளர்த்த நம் இடைக்காலச் சான்றோரின் புதுத்திறம் மெய்யான கல்வித் திறமேயாகும். ஒரு துறைக்கோவையின் தோற்றமும் சங்கப் பிறப்பு உடையது. மடல் பாடிய மாதங்கீரனார் வெறி பாடிய காமக் கணியார் என்ற அடைகளை நோக்குழி, இவரெல்லாம் மடற்றுறையிலும் வெறித்துறையிலும் பாடல் பல யாத்த ஒரு துறைக் கோவையினர் என்று ஊகிக்கலாம். கயமனார், மகட் போக்கிய தாய் வருந்தும் துறையில் பதினேழு செய்யுட்கள் கோத்திருக்கக் காண்கின்றோம். ஆதலின் இடைக்கால ஒரு துறைக் கோவையும் சங்க மூலம் உடையது என்பது தெளிவு. மொழிக்காப்பு தமிழ்மொழி வளரும் இக்காலத்து முன்னூல்களை ஒதுக்கிப் படிக்கும் வழக்கம் வளரக்கூடாது. எல்லாரும் எல்லா நூல்களையும் படிப்பது என்பது முடியாது. எனினும் சிலர் சில துறை நூல்களைக் கற்கலாம்; வேறுசிலர் வேறு சில துறை நூல்களைக் கற்கலாம். ஆகக் கூடிய எல்லா நூல்களும் நாட்டில் கற்கப்படவேண்டும். அப்போதுதான் குறைவற்ற வளர்ச்சி தமிழுக்கு உண்டாகும். கற்க முயற்சியும் அன்பும் ஆர்வமும் பெருகினாற்றான் நூல்கள் வாழும். தமிழர் வாழ்வும் உயர்வும் நிலையும் எல்லாம் தமிழின் வாழ்வையும் உயர்வையும் நிலையையும் பொறுத்தன என்பன கண்கூடு. மொழிக்காப்பு என்பது அம்மொழியில் தோன்றிய நூற்காப்பாகும். ஆதலின் தமிழன்பர்களே! தமிழ் இளைஞர்களே! தமிழ்க் குடிமக்களே! நும் இல்லமெல்லாம் தமிழ்நூல் இல்லமாக விளங்குக. நும் அகமெல்லாம் தமிழொளி பரவுக. நும் மனையெல்லாம் தமிழ்ப் புத்தகமாக இலங்குக என்று வாழ்த்துவன். 11. தைப்பாவை `இன்னும் எழுத எண்ணங்கள் அதிகம் எதிர்காலத்தில் இறைவன் அருளுவான்’ என்பது கண்ணதாசன் வேண்டுகோள். பொன்னாண்டு எய்திய கவிஞர் கண்ணதாசனுக்கு நாமும் இறைவனிடத்து விடுக்கும் வேண்டுகோள் இதுவே. பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் மூவரும் இந்நூற்றாண்டில் தோன்றிய மக்கட் பெருங்கவிஞர்கள். உரைநடை வெள்ளம் பரந்து சாடிக் கவிதைக் கரையை இடித்துத் தகர்க்கும் இந்நூற்றாண்டில் தமிழினத்தின் கவிதையுள்ளம் உடையாமல் ஊறுபடாமல் காத்துத் தந்த பெருமை இம்மூவர்க்கும் உண்டு. இம் மூவருள் இன்று நம்மொடு வாழும் கண்ணதாசனார், கவிதை வாழக் காலமெல்லாம் வாழ்க. கங்கைநீர் காவிரிநீர் போலப் பெருங்கவிஞர்கள்பால் ஒவ்வொரு தனிநீர்மையுண்டு. தனிநீர்மை அல்லது தனித்தன்மை என்பது பிறர் பின்பற்ற முடியாததாய் ஒருவரிடத்தே இலங்கிக் கிடக்கும் தனியுயிர்ப் பண்பாகும். பிறரும் பின்பற்றக் கூடியதாக இருந்தால் அப்புலமைக் கூறு புகழுக்குரிய கூறாகாது. `கவிஞனின் பயணமோ தனிமை தனிமை’ என்பது கண்ணதாசம். கண்ணதாசன் பாடிய திரைப்பாடல் முதலான எவ்வகைப் பாடல்களிலும் ஒரு தனியோட்டம் உண்டு. யாப்பிலக்கணத்தை நினைவுகொள்ளாமல் ஓசையினாலேயே யாப்பமைதி விழும் வண்ணம் பாடவல்ல இயல்பான திறமையை இவரிடம் காணலாம். அதற்குக் காரணம் எப்போதும் கவிதை யாத்திரை. `ஆய தமிழோசை வரப் பாடுவதில் ஆசைவர ஆனவரை பாடுகின்றேன்’ என்று இவரே உணர்ந்து கூறுவர். ஓசைவழிப் பாடுவதில் இடைக்காலப் புலவரோடு கண்ணதாசன் ஒத்திருந்தாலும் அப்புலவர்கள் பால் இருந்த, பொருளோட்டத் திற்குத் தடையான யமகம், மடக்கு, திரிபு என்ற யாப்பு விளையாட்டுக்கள் இவர்பால் இல்லை. வாழும் மனிதரை வாழ்த்தியும் வைதும் நெஞ்சு திறந்து பாடும் சங்கச் சான்றோர்களின் செம்மை இயற்கையுள்ளம், மீண்டும் கண்ணதாசன் கவிதைகளில் மறுமை யெய்தியுள்ளது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் சங்க இலக்கியக் கொள்கை, இருபதாம் நூற்றாண்டில் இக்கவிஞரின் பாடல்களில் தலையெடுத்திருப்பது என்றுமுள தென்தமிழ் என்பதற்கு எடுத்துக்காட்டு. பாப்புக்கு முறையின்றிப் பணிவின்றிப் பொருளின்றிப் பாடுவார் வளர்வ துண்டோ எனவே நல்ல பாடற்கு முறையும் பணிவும் பொருளும் வேண்டும் என்பது கண்ணதாசம். இவர் தம் கவிதைகளை ஆராய்வார் இம்முத் தடத்தில் நின்று ஆராயலாம். கண்ணதாசன் காலத்தின் மேடுகளிலும், பள்ளங்களிலும் வேகமாக ஓடி விளையாடிய கவிஞன்; சங்கப்பரணர் கபிலர் போல அரசியலில் வாடையையும் தென்றலையும் கண்டவர்; தம் உணர்ச்சிக்கு மூடியும் பூட்டும் போடாதவர்; தம் அறிவுக்குச் சுவரும் கதவும் செய்யாதவர்; அரசு, சமயம், இனவாயம் எத்துறையிலும் காலந்தோறும் கருத்து வளர்ச்சி பெற்றவர்; தன்னியல்பைத் தானறிந்த கவிவலவர். `கொள்கைகளில் மாறுபட்ட காரணத்தால் கவிதைகளில் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் அன்றாட உணர்ச்சிகளில் விளைந்த கவிதைகளாதலின் பலவகையான உணர்ச்சிகள் கொழுந்து விடுகின்றன. வாழும் மனிதர்களைப் பற்றிய கவிதைகள் அதிகம் என்பதால் முரண்பாடுகள் இயற்கையாகவே எழுந்துவிட்டன.’ என்பது கண்ணதாசன் தன் கவிதைகட்குத் தானே வழிகாட்டும் வரலாற்றுப் பதிகம். இவர் எழுத்துக்களில் தலைவர்கள் வரலாறும், நாட்டு வரலாறும், கட்சி வரலாறும், தன் வரலாறும் நரம்புபோல் பின்னிக் கிடக்கின்றன. இவ்வளவு வரலாற்றுக் குறிப்புப் பொதுளப் பாடிய தற்கால கவிஞர்கள் கண்ணதாசனைப் போல் யாருமிலர். வரலாறு எழுதும் எதிர்காலத்தினர்க்கு இவர் தம் பாடல்கள் குறிப்புப்பால் நிரம்பச் சுரக்கும். கண்ணதாசனின் சில பாடற்றொகுதிகளில் இப்பாட்டு இன்ன காலத்து இவ்விடத்துப் பாடப்பெற்றது என்ற குறிப்புத் தரப்பட்டுள்ளது. இக்குறிப்பு எழுதாத பாடல்களும் பலவுள. ஒவ்வொரு பாட்டுக்கும் காலக்குறிப்புக் கொடுத்தால் மட்டும் போதாது; பாட்டுக்கள் பாடிய காலமுறைப்படி அடைவு செய்யப்பட்ட வரிசைத் தொகுதிகளும் வரல் வேண்டும். அப்போது தான் கவிஞனின் வாழ்வு நோக்கங்களும் கொள்கை வளர்ச்சிகளும் அவற்றிற்கேற்பத் தோன்றிய கவிதைப் படைப்புகளும் காரணம் படப்புலனாகும். உண்மைக்கும் ஆய்வுக்கும் உரிய கால நிரற்பதிப்பு கண்ணதாசன் அனைய கவிப்பெரு மக்கட்கு இல்லாவிட்டால் இவர் தம் சிறப்பினை வருங்கால இளைஞர்கள் உணரமாட்டார்கள்; பொருள் முரண்களுக்கு அமைதி கண்டு கவிதை வளத்தைப் பருகமாட்டார்கள். ஆதலின் கண்ணதாசனாரின் இனி வரும் கவிதைத் தொகுதிகள் காலச் செம்பதிப்பாக வருக என்பது என் வேண்டுகோள். காலப்பொருள்மேல் எண்ணிறந்த பாடல்கள் பாடிய கண்ணதாசன், காலத்தொடு சாரா நிலைப்பொருள்மேல் யாத்த தனிப்பாடல்களும் கவிதை நூல்களும் பலவுள. அவற்றுள் ஒன்று தைப்பாவை என்பது. இப்பாவையை மணிவாசகரின் திருவெம்பாவையொடும் ஆண்டாளின் திருப்பாவையொடும் ஒத்திட்டு ஓரளவு காண்போம். ஒப்பீடு என்பது ஏற்றத் தாழ்வு கூறுவதன்று; பெருமை சிறுமைப்பட முடிப்பதன்று; ஓரினப் பட்ட நூல்களில் வேறுபட்ட இயல்புகளைச் சுட்டிக் காட்டுவதே ஒப்பியத்தின் நோக்கம். முன்னிரு பாவைகளைத் தழுவித் தைப்பாவை இயற்றப்பட்டிருத்தலின், கண்ணதாசன் மரபு வழிப்பட்ட கவிஞர் என்பது அறியப்படும். மரபு, புரட்சி என்ற இருசொற்கள் கலையுலகில் மிகவும் எடுத்தாளப்படுகின்றன. ஒன்றுக்கொன்று முரண் எனப் பலர் கருதி வருப. நன்மை, தீமை, இரவு,பகல்,பழி, புகழ் என்பன முரண்பட்டவை. மரபும் புரட்சியும் இவை போல்வன அல்ல. புதுச்சாலை மிதிக்க மிதிக்கப் பழந்தடம் ஆவதுபோல இன்று புரட்சி நாளை மரபாய்க் கலந்துவிடும். முகத்தினுள் கண்துடி போலவும், புரட்சியும் மரபினுள் ஒரு பகுதி நீரோட்டத்திற் சுழி போலவும் கண்விழியில் காதற்கூறு போலவும் என்பதனை இலக்கியத் திறனிகள் உணர வேண்டும். ஆதலின் கண்ணதாசன் முறைமைக் கவி என்னும்போது புரட்சியையும் உள்ளடக்கியே கூறுகின்றேன். திருவெம்பாவை 20 செய்யுட்கள்; திருப்பாவை 30 செய்யுட்கள்; ஆண்டாள் பாவை போலத் தைப்பாவையும், 30 செய்யுட்கள். யாப்பு வகையில் முப்பாவையும் பார்வைக்கு எட்டடியுடையன என்று தோன்றினாலும் முன்னிரு பாவைகளும் முழுதும் வெண்டளைப் பட்டவை. தைப்பாவை ஒரு சில பாடல்களே வெண்டளை கொண்டவை. சந்த வேறுபாடான பாடல்கள் பலவுள. (அ) மெய்வாய்கண் மூக்குச் செவியாய் விளைந்திருக்கும் ஐவாயி லுள்ளும் அருமைத் திருமகளே (ஆ) வாவென்றன இமைகள் மண் நோக்கின விழிகள் தா வென்றன இதழ்கள் தழுவென்றது மேனி (இ) அம்பொன் மணிமாடத் தரசிருந்தான் எங்கோமான் தம்பொற் பதம் வருடித் தடங்கண்ணாள் துணையிருந்தாள் இவ்வாறு பாவையாப்பில் வெண்டளையும், பிறதளையும் விரவப் புதிய சந்தக் கலப்புக் கண்டவர் கண்ணதாசனார். ஓரிரு முறை படித்தாலே பள்ளத்துள் நீர்போல உள்ளத்துள் கவிதைகளை விழச் செய்யும் ஓசைப் பாடல்கள் இக்கவிஞர் பால் நிரம்பவுள. அதனாலன்றோ இவர் தம் பாடல்களை மதலைச் சிறு குதலைகள் விரைந்து பாடிப்பாடிக் களிப்பூட்டக் காண்கின்றோம். இத் தைப்பாவையில் ஓர் ஓசைப்பாட்டு. காளை மணியோசை களத்துமணி நெல்லோசை வாழை யிலையோசை வஞ்சியர்கை வளையோசை தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை கோழிக் குரலோசை குழவியர்வாய்த் தேனோசை ஆழி யலையோசை அத்தனையும் மங்கலமாய் வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ! தோழியர் கைதாங்கத் தூக்கியபொன் னடிநோக மேழியர்தம் இல்லத்து மேலெழுவாய் தைப்பாவாய் ஆ என்ற தொடக்க நெட்டொலி, அடுத்து ழகரத் தமிழொலி, இறுதியில் ஓ என்ற நெட்டொலி என்று ஊஞ்சல் போன்ற சந்தக் கிடப்பில் வரும் இச்செய்யுள் தைப்பாவைக்குத் தாலாட்டுப் பாவாய் அமைந்திருப்பதை உணரலாம். பட்டுப்போல் நெல் விளையும் பாடிவரும் காவேரி என்பர் கவிஞர். இவர் தம் செய்யுட்களும் அணை திறந்து மடைதிறந்த காவேரி நடப்புப்போலச் செல்வதைச் செவி களனாக நுகர்கின்றோம். ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய் (திருவெம்பாவை) ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் (திருப்பாவை) முன்னிருபாவைகளும் பாடல்தோறும் `எம்பாவாய்’ என முடிகின்றன. அப்பாடலைப் பாடும் மகளிர் தம் கூற்றாகப் பாடுதலின் `எம்’ என்ற அடைபொருந்துவதாகும். மேலும் இங்கு வரும் பாவையைப் பெண்பாவை எனவும் நோன்பு எனவும் பொருள் கொள்வர். கண்ணதாசனின் தைப்பாவை கவிக்கூற்று, தோழி கூற்று, தாய் கூற்று, மக்கள் கூற்று எனப் பாடல்தோறும் வேறுபடக் கொள்ளும் நிலையில் செல்கின்றது. மார்கழிக்குப் பெண்ணாக மாசிக்குத் தாயாகப் பேர்கொழிக்க வந்த பெட்டகமே தைப்பாவாய் என்று விளித்தலின், தைத்திங்களையே ஒரு பாவையாகக் கண்ணதாசனார் உருவகப்படுத்துவது தெளிவு. ஏலோர் ஏலோர் என முன்னிரு பாவைகளிலும் இறுதியில் வரும் பொருளற்ற அசைச் சொற்கள் இவர் தம் தைப்பாவையில் இடம் பெறவில்லை. இச்சொற்கள் முன்னிரு பாவைகளிலுங் கூடத் தெளிவுக்கு இடையூறாக இருந்தன என்ற கருத்தினை, `ஏல் ஓர் என்ற இரண்டு சொற்களும் திருவெம்பாவை இருபது பாட்டிலும் திருப்பாவை கடைசிப்பாடல் ஒழிந்த இருபத்தொன்பதிலும் ஈற்றடியில் வருகின்றன. ஏல் என்பதற்கு ஏற்றுக்கொள் என்றும், ஓர் என்பதற்கு ஆராய்ந்து பார் எனவும் சில பாடல்களில் பொருள் படுகின்றது. மற்றும் சில பாட்டுக்களில் அவ்வாறு பொருள் கொள்ள முடியவில்லை. அங்கு இவற்றைப் பொருள் தராது நிற்கும் அசைச் சொற்களாகவே கொள்ள வேண்டுவதாகிறது’ என வரும் தமிழ்க்கடல் இராய. சொ.வின் விளக்கத்தால் தெளியலாம். அசைச் சொற்களை விட்டது தைப்பாவையின் ஒரு புரட்சிக் கூறாகும். திருப்பாவை திருவெம்பாவைக்கும் தைப்பாவைக்கும் பாட மேற்கொண்ட பொருளில் முழுதும் வேற்றுமையுண்டு; முன்னிரு பாவைகளும் சமயப் பாவைகள். ஒன்று வைணவப் பாவை; மற்றொன்று சைவப்பாவை. கண்ணனையும், சிவனையும் முதற்பொருளாகக் கொண்டு அவர் தம் பெருமைக்குரிய கதைகளை அமைத்துக் கன்னியர்கள் நோன்பு நோற்று நீராடி வைகறையில் துயில் எழுப்பும் பொருட் போக்குடையவை. இவ்விரு சமயப் பாவைக்குள் சில வேற்றுமைகள் இருப்பினும் பொதுப்பொருள் நோக்கில் வாய்க்காலின் இருகரைபோல நெருங்கியவை. அதனாலன்றோ பாவை மாநாடுகள் இணைந்து நடைபெறுகின்றன. அன்பர் கண்ணதாசனின் தைப்பாவை ஒரு தமிழ்ப்பாவை. இவ்வுண்மையைக் கவிஞரின் வாழ்த்துப்பா வெளிப்படப் பகர்கின்றது. எந்தமிழர் கோட்டத் திருப்பார் உயிர்வர எந்தமிழர் உள்ளத் தினிமைப் பொருள்மலர எந்தமிழர் கைவேல் இடுவெங் களஞ்சிவக்க எந்தமிழர் நாவாழ் இளமைத் தமிழ் செழிக்க எந்தமிழர் இல்லத் திலங்கும் ஒளிவிளங்க முந்துதமிழ்ப் பாவாய் முன்னேற்றந் தான்தருவாய் தந்தருள்வாய் பாவாய் தைவடிவத் திருப்பாவாய் வந்தருள்வாய் கண்ணால் வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய் வாழ்த்துப்பாவில் வரும் கொள்கைக் கேற்பவே தைப்பாவைப் பாடல்கள் பெரும்பாலும் அகப்பொருள்மேல் அமைந்துள. தைத் திருமணம் தமிழர் விரும்பும் திருமணம் ஆதலின் களவு வழி ஒழுகும் காதலர்கட்கு அவனோடு அவள் சேர இத் தைத்திங்களில் ஓர் நாள் எடுத்துக் கொடுக்க மாட்டாயா தைப்பாவை என்று ஒரு பாட்டு கேட்கின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஒரு பழமொழி. ஆதலின் கணவனைப் பிரிந்து துயில் கொள்ளாது தனி நெஞ்சே துணையாகக் கையே போர்வையாகத் தலையணையிற் கண்மூடி இரவு போகாதோ? அவன் வரும் நாள் வாராதோ? இத் தைத்திங்களில் வழி பிறவாதோ? என்று நம்பியிருக்கும் மனைவியர்க்கு அவனை வரச்செய்து உறக்கம் நல்குவாய் தைப்பாவாய் என்று ஒரு பாட்டு அறிவுறுத்துகின்றது. பிரிந்து வருந்துவாளிடம் தூது செல்; காதலுக்கு இது காலம் என்று இயம்பு; குழந்தை அழுகின்ற நிலையிலும் மனைவியைக் கைச் சிறையில் வைத்த கணவனைத் தள்ளியிருக்கச் சொல்; ஊருலகம் காணத் திருமணத்துக்கு உதவுவாய்; வாடை தவிர்க்க வருவாய்; பொற்றாலி காட்டி முடிப்பாய்; மெத்தை விரித்த நங்கைபாற் சென்று தேற்றாய் என்று பல பாடல்கள் களவு நிலையிலும் கற்பு நிலையிலும் தைப் பாவையை விளித்து வருகின்றன. இன்பத்துறை பற்றிப் பாடுவது முன்னிரு சமயப் பாவைகட்கு முரணில்லை. அப்பாவைபாடும் பெண்கள் `அன்னவரே எங்கணவர் ஆவார்’ எனவும், `நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்’ எனவும் இல்லறம் பற்றிக் கூறும் கருத்துக்களை ஒப்பிடுக. எத்துணையோ ஆட்சிகள் வந்து போகினும் எக்காலத்தும் தமிழகத்தைச்சேர, சோழ, பாண்டிய நாடுகளாக வைத்துப் பாடுவது ஒரு வழக்கு. `தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்கள் வரக்கூவாய்’ என்று திருவாசகக் குயிற்பத்து பாடுகின்றது. இம் மரபுக்கு நம் கவிஞரும் விலக்கல்லர். அம்பனைய கண்ணாள் அருள்விளங்க மீனாளும் தென்மதுரை மண்ணில் திரண்டெழுவாய் தைப்பாவாய் கட்டான மேனியொடும் களம்போந் துயர்ந்த நிலம் பட்டாளத் தஞ்சையிலும் பாடாயோ தைப்பாவாய் தருஞ்சேரன் பெற்றறியான் தழைக்குங்கோன் வஞ்சியிலும் நிறையாயோ உலவாயோ நிலவாயோ தைப்பாவாய் இப்பாவை சமயப் பாவையாக இன்றித் தமிழ்ப்பாவையாக இருந்தாலும் தமிழும் ஒரு தெய்வப் பாவையல்லவா? ஆதலின், அன்னங்கேள் ஞானம் அருள்வானை முன்னிருத்தி முன்னங்கால் சேர்த்து முழந்தாளில் மண்டியிட்டு தன்னங்கை கூப்பித் தலைசாய்த்து யான்வணங்க என்னங்கேள் ஈசன் எனக்களித்தான் மெய்ஞ்ஞானம் என வரும் அரிய தைப்பாவை நல்ல ஒரு மெய்ப்பாவை யாகும். கவிஞர் கண்ணதாசன் அரசியல் போலும் துறைகளில் மாறுபட்டு மாறுபட்டுச் செல்லினும் தமிழ் என்ற தாய்த் துறையில் என்றும் நெறிபிறழாத் தவ மகனாகக் கவி மகனாக விளங்கி வருகின்றார். `தருமத்தில் வந்ததால் தாயாரின் ஆசையால் தமிழில் நான் வாழுகின்றேன்’ என்று தன் வாழ்க்கை தமிழ் சார்ந்தது என்பதனைக் கவிஞர் பெருமிதத் தோடு பாடியிருக்கின்றார். கணவன் மேற்கொண்ட கற்புடை நங்கையின் பற்று என்றும் ஒரு சீராக இருப்பது போலத் தமிழன்னைபாற் கொண்ட கவிஞரின் பற்று சூழ்நிலையால் கூடியது குறைந்தது என்பதற்கு இடமின்றி என்றும் குறைவிலா நிறைவாக இருப்பதை நாம் உணர்கின்றோம். `சொல்லுக்குச் சொல்லோர் சுவையிருக்கும் செந்தமிழ்’ எனவும், `தாயாணை தமிழாணை’ எனவும், `தனைப் புகழத் தன்னிடத் தோர் சொல்லில்லாத தமிழ்’ எனவும் எண்ணிறந்த தமிழ்மாலை கவிஞரின் இயற்கைத் தமிழன்புக்குத் தனிச்சான்றுகள். திருவெம்பாவை பாடுவதற்குச் சிவன் தானே வந்து ஆட்கொண்ட மணிவாசகர் தகுதியுடையவர்; திருப்பாவை பாடுவதற்குச் சூடிக் கொடுத்த ஆண்டாள் தகுதியுடையவர்; அதுபோல் தைப்பாவை என்னும் தமிழ்ப்பாவை பாடுவதற்குத் தமிழே நினைந்து தமிழால் வாழும் கவிஞர் கண்ணதாசனார் தகுதியுடையவர் என்பது என் ஒப்பீட்டின் முடிவு. நிறைவாக இன்னுமோர் பதினாயிரம் பாடல் நெய்க என் ஏழை வளமே என்பது கவிஞரின் ஆசை. பைந்தமிழ்ப் பின்சென்ற பசுங்கொண்டலுக்கு அடிமையான இக்கண்ணதாசனின் ஆசைநிறைவேறத் தமிழ்த்தெய்வம் நல்ல நெடிய இனிய உடல் நலம் அருளுக. 12. சங்கத் தமிழ் மாலை ஆண்டாள் அருளிய திருப்பாவை `சங்கத் தமிழ் மாலை’ என்று பெயர் பெறும். `பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும்’ என்பது திருப்பாவையின் முப்பதாவது பாடலில் வரும் தொடர். திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ்மாலை என்று பொருள் செய்யும் மரபுண்டு. சங்கம் என்பதற்கு மக்கள் கூடியிருத்தல் என்ற பொருள் இருத்தலின், இவ்வாறு கருத்துக் கூறப்பட்டது. `சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்’ (22) என்ற திருப்பாவைத் தொடருக்குத் திறள் திரளாக இருப்பது எனப் பொருள் செய்திருப்பது பொருந்தும். அத்தொடரின் அமைப்பு அத்தகையது. சங்கத் தமிழ் மாலை என்ற வண்ணத் தொடரில் தமிழுக்கு அடையாகச் சங்கம் வரும்போது, திரள் என்ற பொருள் மரபும் இல்லை, நயமும் இல்லை. தீந்தமிழ், செந்தமிழ் முத்தமிழ் என்பது போலச் சங்கத்தமிழ் என்ற தொடராட்சிக்குப் பண்டைத் தமிழ்ச் சங்கங்களைக் குறிக்கும் நெறியுண்டு. `சங்கத் தமிழ் மூன்றுந்தா’ என்பர் ஒளவையார். சங்கப்புலவர், சங்கப்பலகை என்று சொல்வதையும் ஒப்புநோக்குக. ஆதலின் திருப்பாவையில் வரும் சங்கத் தமிழ்மாலை என்ற இனிய தொடருக்குப் பண்டைச் சங்கத் தமிழ்வனப்பு அமைந்த பாசுரத் தொகுதி எனப் பொருள் செய்வதே தகும். இங்ஙனம் கோடல் வலிந்துரையன்று; முப்பது பாசுரங்களின் திணையமைப்பும் கருப்பொருட் காட்சியும் முல்லைப் பின்புலமும் சங்கத் தென்றலை வீசுகின்றன. நாச்சியார் திருமொழியும் இதற்கு விலக்கன்று. இரு மடைகள் திருப்பாவைக்கும் மணிவாசகர் அருளிய திருவெம்பாவைக்கும் யாப்பு முதலிய சில வகையில் ஒற்றுமையுண்டேயன்றிப் பாத்திரங்களிலும் பின்புலங்களிலும் நோக்கங்களிலும் சொல்லாட்சிகளிலும் பெரிதும் வேற்றுமையுள. திருப்பாவைக்குப் பின்புதான் திருவெம்பாவை தோன்றியது. ஆண்டாள் மனநிலை வேறு; மணிவாசகர் மனநிலை வேறு; நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாயகி நாயகன் பாணியிற் பாடியிருந்தாலும். அது மேட்டு மடையாகும் எனவும், காம மெய்ப்பாட்டிற்காகப் பெண்ணுடையுடுத்துப் பேசினார்கள் எனவும் இயல்பின்மை காட்டுவர் உரைவிளக்கிகள். ஆண்டாள் காமம் பள்ளமடை எனவும் இயல்பான பெண்ணுடையோடும் உடலோடும் உள்ளத்தோடும் ஏற்பட்ட தெய்வக்காதல் எனவும் கோதையார் வரலாறு காட்டுகின்றது. `மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’என்பது ஏற்றிக்கொண்ட உணர்வன்று; பிறந்தநாள் தொட்டு வளர்ந்த உள்ளுணர்வு. இதனை மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் என்று பாடாண் பகுதியாகப் பொருளிலக்கணம் வகைப்படுத்தும். ஆண்டாள் காதலுணர்வு `சங்கென்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் என்பது போலவும், `தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே’ நாயகன் நாயகி பாணியாகாது என்று தெளிக. தமிழிலக்கிய வரலாற்றில் கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர். நயத்த துறைக்கு ஒரேயொரு எடுத்துக்காட்டுத் தான் உண்டு. அஃது ஆண்டாள் காதலாம். பாடிச் சூழ்நிலை திருப்பாவையை நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியோடும் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையோடும் ஒப்பாடு செய்யின், திருப்பாவை சங்கத் தமிழ்மை கொண்டது என்பது தெளிவாகும். கோதையை எடுத்து வளர்த்தவிட்டு சித்தன் குலம் இடைக்குலம் இல்லை. துளவச் செடிக்கண் கண்டெடுக்கப்பட்டவள் என்பது கதையாதலின், கோதையின் பிறப்புக்குலமும் அறிதற்கில்லை. ஆனால் பெரியாழ்வார் திருமொழி, வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்கின்ற கோவலக் குட்டற்கு கற்றினம் மேய்த்துக் கனிக்கொரு கன்றினைப் பற்றி யெறிந்த பரமன் திருவடி என வாங்கு கண்ணபிறப்பையும் ஆய்ப்பாடிச் சூழ்நிலையையும் நந்தகோபாலன் அசோதை குடும்பத்தையும் புனைவதைக் கற்கின்றோம். ஆதலின் புதுவைப் பட்டர் பிரான் மகளாக வளர்ந்த கோதையும் திருப்பாவையிலும் திருமொழியிலும் தந்தையின் தடத்தையே பின்பற்றினாள். தந்தை - மகள் பாசுரங்களை ஒப்பியம் செய்யின், காணக்கிடக்கும் பொதுக் கூறுகள் பல. பெரியாழ்வார் திருமொழியின் பிற்பகுதி கோதை தென்னரங்களின் சோலைக் கிளியான பின் பாடப்பெற்றதோ என்று கருத இடனுண்டு. ஒருமகள் தன்னை யுடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான் பெருமகள் ஆய்க்குடி வாழ்ந்து பெரும் பிள்ளைபெற்ற அசோதை மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறஞ் செய்யுங் கொல்லோ என்ற பாசுரம் பெரியாழ்வாரின் ஏக்கத்தைக் காட்டும். இதனால் கோவலச் சூழலிலும் கண்ணன் ஈடுபாட்டிலும் கோதை தந்தையால் வளர்க்கப்பட்டவள் என்பது போதரும். பட்டர்பிரான் பிறப்புக் குலம் வேறாக இருந்தாலும், அவர் தம் இல்லம் ஆய்ப்பாடியாக விளங்கிற்று எனவும் அதற்கேற்பச் சுரும்பார் குழற்கோதை நல்லாளும் ஆயர் குலச் செல்வச் சிறுமியர்கள் சூழ விளையாடி வளர்ந்தாள் எனவும் எண்ணலாம். கோதையாய்ச்சி ஆண்டாள் தன்னை இடைக்குல மகளாகவும் தன்னொடு விளையாடும் தோழியரை ஆயர்குல மங்கையராகவும் தன் இல்லத்தை ஆய்ப்பாடியாகவும் கருதிக் கொண்டு பாவையும் திருமொழியும் பாடினாள் என வழங்கி வரும். பாவனைக் கருத்துப் பொருந்தாது. பாவனைச் செய்யுளாக இருந்தால், சூடிக்கொடுத்த நிகழ்ச்சிக்கோ, `வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே’ என்ற தொழுகைக்கோ பொருளில்லாது ஒழியும். சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் இடைக்குலமே குரவையாடுவது போலத் திருப்பாவையிலும் இடைக்குலமாக வளர்ந்து வந்த கோதை அக்குலத்துள் ஒருத்தியாகவே ஆய்க்குலப் பிற சிறுமியரொடு பாவை நோன்பு கொள்கின்றாள்: வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் கறவைகள் பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க வொழியாது. என்ற பகுதிகள் கோதையை ஆய்ச்சியருள் ஒருத்தியாகவே சுட்டுகின்றது. ஆண் ஆழ்வார்கள் தம்மை நாயகியாகப் பாவித்துப் பாடுவது மேட்டுமடையென்று ஒருவகைக் குற்றம் சொல்லுகின்றோம். அப்படியானால் பட்டர்பிரான் மகளாகப் பார்ப்பனக் குலத்து வளர்ந்த கோதை ஆயர்குல நாயகியாகத் தன்னைப் பாவித்துப் பாடினாள் என்பதும் மேட்டுமடை யாகாதோ? சிந்தியுங்கள். அங்ஙனம் சொல்லாமல் கோதை குழவிப் பருவ முதல் இடைக்குல மகளாகவே வளர்ந்தாள்; வேறு குலப்பழக்கம் அவளுக்கு இல்லை என்று துணிவதே சிறப்பாகும். `அவரப்பிராயந்தொடங்கி என்றும் ஆதரித்தெழுந்த என்தடமுலைகள்’என்பதுங் காண்க. நாச்சியார் ஆண்டாள், கோதை என்ற பெயர் வழக்குப் பெரிதாக இருந்தாலும், நாச்சியார் திருமொழி என்பதே பிரபந்த வழக்கு. இதனை மேலும் சிந்திப்போம். ஆய்ச்சி என்பது இடைக்குலப் பெயர். `செறிவளை ஆய்ச்சியர்’எனச் சிலப்பதிகாரமும், `ஆய்ச்சியர் இன்புற்றயர்வர்’ என முல்லைக்கலியும் இவ்வாறே நம்பியகப் பொருள் முதலான இலக்கணங்களும் கூறும். ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர் என்பது நாச்சியார் திருமொழி. ஆய்ச்சி என்பதில் இடையகரவொற்றுக் கெட்டு ஆச்சி என வருதல் உலகவழக்கு. வாய்ச்சி - வாச்சி; காய்ச்சி - காச்சி; பாய்ச்சி - பாச்சி என்ற மரூஉக்களை ஒப்புநோக்குக. மேலும் தன்னோடு உறவாகக் கூறும்போது, சுற்றச்சொற்கள் தமிழ்மொழியில் நகரமாகத் திரிதல் உண்டு. இது தமிழின் சிறப்பியல். ஆத்தாள் - நாத்தாள்; அப்பச்சி - நப்பச்சி; ஆயாள் - நாயாள்; அண்ணன் - நண்ணன்; அக்காள் - நக்காள் என வரும் உறவு மொழிகளை நாம் நாள்தோறும் சொல்லுகின்றோம், கேட்கின்றோம். நகரமுதல் மெய் இவ்விடங்களில் வரும். நாத்தாள் - என் ஆத்தாள் என்பது பொருள். நாச்சி - என் ஆச்சி என்பது பொருள். இவ்வகையிற் பார்க்குங்கால், இடைக்குலத்துக்கு உரிய ஆய்ச்சியார் என்பது நாச்சியார் என வந்ததாகக் கொள்ளவேண்டும். நெருங்கிய பிணைப்பைக் காட்டுவதற்கு, நம்மாழ்வார் நம்பிள்ளை நஞ்சீயர் என வரும் மரபுகளையும் சேர்த்துக் கொள்க. எனவே நாச்சியார் திருமொழி என்பது கோதை என்னும் இடைச்சியார், நம் வணக்கத்துக்குரிய ஆய்ச்சியார் பாடிய பாசுரம் எனப் பொருள்படும். ஆர் என்பது சிறப்பு விகுதி. முதற்கண் கூறியபடி, திருப்பாவை சங்கத் தமிழ்ச் சாயலுடையது. தொல்காப்பியம் மாயோனை முல்லைநிலக் கடவுளாகக் காட்டும். `மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ எனவும், `மாமாயன் மாதவன்’ எனவும் திருப்பாவை பாடுகின்றது. `வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள், `மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்’என வரும் பண்ணை வளம் முல்லைக்கலி கூறும் குடஞ்சுட்டினத்தைக் குறிக்கின்றது. மாமல்லபுரத்தில் பால் சொரியும் பசுவின் காட்சிச் சிற்பமும் ஒப்பாகும். சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையே ஆண்டாள் திருப்பாவைக்கு முன்னோடி, இளங்கோவின் தமிழ் ஆண்டாள் தமிழ்மாலையாக மலர்கின்றது. `கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்’என்ற சிலம்பின் மறுவடிவமே `கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி’ என்ற பாவையடி. `கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடில்லை’ என்ற சிலம்பின் கருத்தே `குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொறிகொடியே’ என்ற பாவைத் தொடராயிற்று. இங்ஙனம் தொன்னூற் சுவடும் முல்லைப் பின்புலமும் ஆய்ச்சியர் வாழ்வும் அமைந்திருத்தலின், சங்கத் தமிழ்மாலை என்று பெருமிதமாகப் பெயர் கொடுத்தார் கோதையார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியும் சங்கத் தமிழ் என்ற தொடராட்சிக்கு இத்திருப்பாவைத் தொடரை மேற்கோள் காட்டியுள்ளது. மு.இராகவையங்கார், வை.மு.கிருட்டிணமாச்சாரியார் என்ற வைணவப் புலமைப் பெருமக்கள் இவ்வகராதியின் உறுப்பினர்கள் என்பது நினையத்தகும். 13. தாயுமானவர் சினம் ஆழ்வார் நாயன்மார்கட்குப்பின் தோன்றிய சமயப் பெரியார்களை நினைக்கும்போது, பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க வள்ளலார் என்ற மூவர் நினைவு நமக்கு இயல்பாக வருகின்றது. பட்டினத்தார் கடுந்துறவு என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தவர். தாயுமானவர் பொதுநெறி என்ற இயக்கத்துக்கு வித்திட்டவர். வள்ளலார் சமயத்திடை உயிர்த்தொண்டு என்னும் இயக்கத்தைக் கலந்தவர். இம் மூவர் தம் பாடல்களில் படிமுறை வளர்ச்சியைக் காண்கின்றோம். பட்டினத்தடிகளின் பாடலில் துறவுவேகம் உண்டு; தாயுமானவர் பாடலில் துறவின் அமைதியுண்டு; இராமலிங்கர் பாடலில் துறவு நலம் உண்டு. இக்கட்டுரைக்கண் தாயுமானவரின் உள்ளுணர்ச்சிகளில் ஓர் உணர்ச்சியை விளங்கிக் கொள்வோம். தாயுமானவர் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்தவர். முறையாகத் திருமணஞ் செய்துகொண்டு இல்லறம் நடத்தி ஓர் ஆண்மகவுக்குத் தந்தையானவர். மனைவி இறந்தபின் அக்குழந்தைக்குத் தாயும் ஆனவர். சாரமாமுனிவர் மடந்தைச் சார்ந்த மௌனகுரு தேசிகரை அருட்குருவாகக் கொண்டவர். இவர்க்குத் தமிழ்மொழிபோல் வடமொழி அறிவும் நிரம்ப உண்டு என்பதனை இவர் செய்யுட்கள் காட்டுகின்றன. வடமொழிக் கலப்பு மிகுதியிருப்பினும் பாடல் நடை வானப்பறவையின் பறப்புபோல் உயர்ந்து செல்கின்றது. வடசொற்குறைந்த செய்யுட்களும் பல இல்லாமல் இல்லை. `மொழிக்கு மொழி தித்திப்பாக மூவர்சொலும் தமிழ்’ என்ற இடத்துத் தமிழ் என்னும் சொல் இனிமைப் பொருள் உடையது என்பதனைக் கரும்போடு உவமித்துக் காட்டியுள்ளார். மனவொடுக்கம் தாயுமானவர் செய்யுட்கள் நெஞ்சைத் திருத்தும் அடிப்படை நோக்கமுடையவை. மனவொழுங்கே இவர் காட்டும் மதவொழுங்கு. நல்லவை கெட்டவைக்கெல்லாம் மனமே மூலம் என்று கண்ட இப்பெருந்தவர் அதனை அடக்கவும் ஒடுக்கவுமே பாடுபட்டுள்ளார் என்பதனை இவர் தம் பாட்டுக்கள் வெளிப்படையாகக் காட்டுகின்றன. பாழான என்மனம் குவியவொரு தந்திரம் பண்ணுவது உனக்கருமையோ (பரி 9) நானென்று நீயென்று இரண்டில்லை என்னவே நடுவே முளைத்த மனதைக் கட்டவறி யாமலே வாடினேன் எப்போது கருணைக் குரித்தா வனோ (கருணா.4) கள்ளமனக் கப்பலெங்கே காணும் பராபரமே (பரா.212) இவ்வாறு மனத்தைப் பலகாலும் சாடுவர் தாயுமானவர். `சிந்தையற நில்’ எனவும் `சும்மா இரு’எனவும் மௌனகுரு வழங்கிய நிறைமொழியைக் கடந்து நெஞ்சம் எங்கெங்கோ ஓடித்திரிகின்றது. இறைவனைக் கும்பிடும்போது மனம் முழுதும் ஈடுபடவில்லை. எதனையோ நினைத்துக் கொண்டு அரைக் கும்பிடு செய்கின்றது. மனம் குவியாதபோது மலர்ப்பூசை செய்தல் முறையா? ஆதலின் எத்தனையோ வல்ல சித்தர் கணத்தைப் பார்த்து, சித்து என்ற அனலால் என் மனக்கல்லை மெழுகாக்கி வைக்கக்கூடாதா என்று வேண்டுவர் அடிகள். நல்லவர் யார்? கற்றோர் எல்லாம் நல்லவர் ஆகார்; கல்லாதவர் எல்லாம் கெட்டவரும் ஆகார்; மனத்தை அடக்கியவர் யாரோ, மனத்தி லிருந்து உணர்ச்சியைக் கிளர்ச்சியை அடக்கிக் கொண்டவர் யாரோ அவர் நல்லவர் என்பது அடிகளின் விளக்கம். தற்சிறுமை இறைவனை அடையப் பெறாமையினால் தாயுமானவர் படும் அவலவுணர்வுக்கு எல்லையில்லை. தம்மைத் தாமே நொந்து கொள்ளும் தற்சிறுமைக்கும் எல்லையில்லை. ஆணிலே பெண்ணிலே என்போல் ஒரு பேதை அனைத்துலகிலும் உண்டா? ஆடவர் வடிவு பெற்றுள்ளேனே யன்றிக் கனவிலும் ஆண்மைப்பொருள் இல்லேனே? நான் இதுவரை கற்றதும் கேட்டதும் எல்லாம் மனம்போன போக்கிலே போகவிட்டுப் பொய்யனாகவும் கடைப்புலையனாகவும் ஆகிவிட்டேனே? பகற்பொழுதிலே கண்ணை மூடிக்கொண்டு பொய்த்துயில் கொள்பவனை எழுப்ப முடியுமோ? மருந்துக்காவது ஓர் உண்மை சொன்னது உண்டா? ஈகை இரக்கம் என்பன என் பிறப்பில் என்றைக்காவது இருந்த சுவடு உண்டா? பிறருக்குப் போதிப்பது தவிர நான் செய்தது உண்டா? போதிப்பதை நிறுத்திச் சும்மாவும் இருந்திலேனே! என்னைப் போல் குணக்கேடனை யாரும் கண்டோ கேட்டோ இருக்கமாட்டார். என்செய்வேன்! எத்தனை விதங்கள்தான் கற்பினும் கேட்கினும் என் இதயம் ஒடுங்கிய பாடில்லை. என் கொடுமை முறையறற கொடுமை, தீய கொடுமை. இதனை யாரிடம் சொல்வேன்? கேட்பவர் யார்? வாடித் திரிந்துநான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்றோ என இவ்வாறெல்லாம் பன்னிப் புலம்பி நெஞ்சொடு போராடுவர் அடிகள். மத யானையை வணக்கலாம், கரடி புலிகளின் வாயைக் கட்டலாம். சிங்க முதுகின் மேல் ஏறியிருந்து செலுத்தலாம், படம் எடுக்கும் பாம்பைக் கையிற் பிடித்து ஆட்டலாம், உலோகங்களைப் பொன்னாக்கலாம், ஒருவரும் காணாமல் உலகத்துத் திரியலாம், தேவரையும் ஏவல் கொள்ளலாம், என்றும் இளமையோடு இருக்கலாம், கூடுவிட்டுக் கூடுபாயலாம். நீர்மேல் நடக்கலாம். நெருப்பின் மேல் இருக்கலாம். இங்ஙனம் எத்தனையோ சித்தி விளையாட்டுக்களைச் செய்பவர்கட்குச் சிந்தையையும் அடக்கலாம் என்ற இன்னொன்று செய்யமுடியுமா? சித்தியிற் பெரிது சிந்தனையை அடக்குதல். சித்தத்தை அடக்குவது தானே மெய்யான சித்தி! சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது சத்தாகியென் சித்தமிசைக் குடிக்கொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே (தே.சோ.9) என்று சிந்தையடக்கம் அடக்கங்களுள் அரியது என உறழ்மை காட்டி விளக்குவர் அடிகளார். ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம்போல் விசையடங்கி மனம் வீழ வேண்டும் என்பது இவர் வாழ்வின் நோக்கம். ஆனால் நிலை என்ன? தான் இறைவனோடு இரண்டறக் கலப்பதற்கு இடையூறாக நிற்பது எது? தன் மனமே தன் மேல்வாழ்விற்குக் குறுக்கீடு எனவும், உட்பகையாய் உடனாக இருந்து கேடு செய்வது மனமே எனவும் கண்டார். என்றுமில்லாத சினங்கொண்டார் அடிகள். இருவகைச் சினம் சினம் என்ற சொல்லைக் கேட்டவுடன் அது தீது என எண்ணி விடவேண்டா. அகப்பொருளில் களவு என்ற ஒரு கைகோள் உண்டு. இவ்வின்பக் களவினைக் குற்றம் எனக் கொள்வதில்லை. அன்பொடும் அறத்தொடும் கூடிய களவொழுக்கமாகவே அதனைக் கருதுகின்றோம். இக்களவினைப் பாடிய சங்கப் புலவோர் சான்றோர் எனப்படுவர். திருக்குறள் `அறஞ்சாரா நல்குரவு’ (வறுமை) என்று கூறுவதிலிருந்து அறஞ்சார்ந்த நல்குரவும் ஒன்று உண்டு என்பதும், வறுமை இருவகைப்படும் என்பதும் அறியத்தகும். அதுபோல் சினத்தையும் பண்படுத்தும் சினம் எனவும் புண்படுத்தும் சினம் எனவும் இருவகைப்படுத்தலாம். கற்பாக முடியும் களவு போற்றப் பெறுவதுபோல, கொடையால் வரும் வறுமை புகழப்பெறுவது போல மனத்தை இடித்துரைக்கும் சினமும் வரவேற்புக்கு உரியது. தம்மனம் அடங்காது உணர்ச்சி வாய்ப்படும்போது அதனைக் கடிந்து முனியும் காரணத்தால் அன்றோ முனிவர்கள் என்ற பெயர் தவத்தோர்கட்கு வந்தது. ஆதலின் தாயுமானவர்க்கு எழுந்த சினம் தவச்சினமே யன்றி அவச்சினம் அன்று. அச்சினத்தின் ஆற்றலையும் அதனை வெளிப்படுத்தும் இவர் வேகச் சொற்களையும் காண்போம். வாராய் நெஞ்சே உன்தன் துன்மார்க்கம் யாiவுயம் வைத்துக்கட்டிங்கு ஆராய்; அடிக்கடி சுற்றுகின்றாய்; உன்அவலமதிக்கு ஓராயிரம் புத்தி சொன்னாலும் ஓர்கிலையோ? கெடுவாய்; பாராய் உனைக்கொல்லு வேன்வெல்லு வேன்அருட் பாங்குகொண்டே (பாய.50) நெஞ்சு என்னும் உட்பகையை அருகில் அழைத்து, `என் உடன் வாழ் நெஞ்சே! உன் கெடுநெறிக்கு மூட்டைகட்டு. நான் சொல்வதை நன்றாக எண்ணிப்பார். இறைவன் ஒருவனிடத்துச் சும்மா இரு என்று நான் சொல்லவும் அதனைவிட்டு அடிக்கடி எங்கோ சுற்றுகிறாய். எவ்வளவு அறிவுரை புகன்றாலும் கெடுமதி உணருமா? உணராது கெடப்போகின்றாய். நான் இறைவனை அடையவேண்டி உன்னைக் கொல்லுவேன்; கொன்று என் குறிக்கோளில் வெற்றியுறுவேன். கொன்ற எனக்குப் பாவமன்றோ சாரும் என்று நீ எண்ண வேண்டாம். ‘உன்னைக் கொல்ல நான் கொள்ளும் கருவி அருள் என்னும் வாள்’: இங்ஙனம் அடிகள் தம் நெஞ்சொடு போர் தொடுக்க முனைவதைப் பார்க்கின்றோம் போருணர்ச்சி சினவுணர்ச்சி இன்றித் தோன்றாதல்லவா? வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே (ச.த.20) இத்திருவாசகம் மணிவாசகர் தம் நெஞ்சை விளித்துக் கூறியது. இச்செய்யுள் முழுதும் சினவுணர்வு உடையதன்று. சினத்தொடு இகழ்வும், இரக்கமும், அறிவுரையும் கலந்துள. தன்நெஞ்சு திருந்தும் என்ற நம்பிக்கை இன்னும் மணிவாசகர்க்கு இருந்ததுபோலும். தாயுமானார் தன் மனத்திடத்து நம்பிக்கையை இழந்துவிட்டார். பன்முறை இடித்துரைத்தும் திருந்தும் போக்கை அதனிடத்து இவர் காணவில்லை. மாறான கெடுதற் போக்கே வளர்ந்து வரக் கண்டார். கையோ காலோ உறுப்பு அழுகினால் துண்டாக வெட்டவில்லையா? நோய்மிக்காரைப் பெருந்தூக்க மருந்து கொடுத்து மூச்சு ஒடுக்குவதில்லையா? தீய பெருமனத்தை வேறென் செய்வது? அடிகளார்க்கு ஒரே சினம். அதனை ஒரு கை பார்க்கும் முழுச்சினம். உன்னைச் சாகடித்து நான் வாழ முடியுமேயன்றி இனி உன்னோடு உடன்வாழ்தல் அரிது என நெஞ்சு நோக்கி வஞ்சினம் கூறுவர் தாயுமானார். இவர் வஞ்சினக் கூற்றில் ஒரு முரண் உண்டு என்று அறியவேண்டும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முப்பது ஆண்டுகட்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. மறைமலையடிகளார் பல்கலைக் கழகப் பேரவையில் ஆயிரக்கணக்கான மாணவர் முன்னும் ஆசிரியர் முன்னும் தமிழர் நாகரிகம் குறித்துத் தமக்கே உரிய இனிய குரலில் சொற்பொழிவு ஆற்றினர். ஆற்றி வரும்போது அயல் நாகரிகக் கலப்பினை எடுத்துக் காட்டினர். காட்டிவரும்போது உள்ளம் கொதித்துச் சினம் தோன்றி, தமிழர்க்கு `ரோஷம்’ வேண்டாமா என்று கேட்டனர். ரோஷம் என்ற வடசொல்லை அச்சமயத்துப் பயன்படுத்தியவர் யார்? தனித்தமிழ் இலக்கியத் தந்தை மறைமலையடிகள். தமிழுக்கு வந்த கேட்டினை நினைக்கும்போது உள்ளத்துச்சினம் பொங்கிக் குறிக்கோளுக்குப் புறம்பான சொல் வந்துவிடப் பார்க்கின்றோம். கொல்லா நோன்பு கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும் (ஆனந்த. 1) கொல்லா விரதம் குவலயமெல் லாம்ஓங்க எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே (பரா.54) கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே (பரா.192) மேலைச் செய்யுட்கள் கொல்லா நோன்பினைக் குறிக்கோளாகக் கொண்டவர் தாயுமானவர் என்பதனைத் தெளிவாகக் காட்டும். கொல்லா விரதம் ஒருவன் கொண்டானேல் ஏனைய கெடுகுணங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்பதும், உலகமெங்கும் இவர் பறைசாற்ற விரும்பும் இயக்கம் கொல்லாமையே என்பதும் தெளிவாகும். எத்துணை நோன்புகள் கொள்ளாவிட்டாலும் , கொல்லா நோன்பு ஒன்று கடைப்பிடிப்பவரே `நல்லோர்’ எனத் தம் பாராட்டுதலையும், கொல்லுதலைச் செய்து கொண்டு பிற எத்தனை நோன்பு கொண்டிருந்தாலும் அவரைத் தீயரென்று சொல்லலாமா என்றால் அவரைக் குறிப்பிட்டுச் சொல்வதற்குச் சொல்லில்லை என்று காட்ட `யாரோ அறியேன்’ எனத் தம் வெறுப்பையும் அடிகள் வெளிப்படுத்துவர். `ஒன்றாக நல்லது கொல்லாமை’ என்ற வள்ளுவர் குறிக்கோளேஅடிகளின் கோளாகும். வள்ளுவர் கொல்லாமையே நல்லது எனப் பண்பின்மேல் வைத்து மொழிந்ததையே அடிகள் கொல்லாமையுடையவரே நல்லோர் எனப் பண்புடையார் மேல் வைத்துப்பாடிய ஒற்றுமை நினையத்தகும். கொல்லாக் குறிக்கோள் கொண்ட தாயுமானவர் தம் மனம் குவியாதபோது, சும்மா இராதபோது, எங்கும் சுற்றி அலைந்தபோது, எவ்வளவு கற்றும் கேட்டும் ஒடுங்காதபோது, மௌனகுரு வந்து போதித்தும் மடங்காத போது கவர்ந்து எழுந்து ஓங்கிப் பொங்கும் சினங்கொண்டார். உன்னை விடுவேனா பார் என்று உருத்தெழுந்தார். தம் குறிக்கோளையும் மறந்து, சற்றே தள்ளி வைத்து, `கெடுவாய் பாராய் உனைக் கொல்லுவேன்’ என்று மனக்கொலை செய்ய எண்ணினார் என்று பார்க்கின்றோம். இது கொள்கை முரணா? களவைக் கற்புக் களவு, கள்ளக் களவு என இரண்டாகக் கொள்ளலாம் எனின், வறுமையை அற வறுமை, புற வறுமை என இரண்டாகக் கொள்ளலாம். எனின், சினத்தைப் பண்படுசினம், புண்படு சினம் என இரண்டாகவும் கொலையையும் ஏன், வாழ்வுக் கொலை, தாழ்வுக் கொலையென இரண்டாகவும் கொள்ளல் கூடாது? சினமிறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே (169) 14. காந்திக் கவிதை `காந்திக் கவிதை’ என்னும் நூல் அழகப்பா கல்லூரித் தமிழாராய்ச்சித் துறையின் மூன்றாவது வெளியீடு. முன்னை வெளியீடுகளான `கம்பனும் சிவனும்’ `வில்லியும் சிவனும்’ என்ற இரு பனுவல்களும் ஆராய்ச்சி இனத்தைச் சார்ந்தவை; காந்திக் கவிதை என்ற இப்பதிப்பு படைப்பினத்தைச் சார்ந்தது. பழைய நூல்களை ஆராய்ந்து அமைவதே ஆராய்ச்சித் துறையின் நோக்கம் என்று கருதிக்கொண்டிருக்கின்றோம் இக்கருத்து ஓரளவே பொருந்தும். பல்கலைக்கழகங்களில் புது நூற்படைப்புக்குத் தனித்துறை இன்றில்லை; இல்லாதவரை உள்ள ஆராய்ச்சித்துறையே படைப்பியலையும் மேற்கொள்ள வேண்டும். முன்னோர் படைத்தளித்த பனுவல்களை ஆராயும் நாம் பின்னோர் ஆராயும் வண்ணம் சிலவேனும் புதியன ஆக்கிப் படைக்க வேண்டாமா? கதிரறுப்பவர்க்கு வித்திடலும் கடன். படைப்பு என்பது மூலநூல்; ஆராய்ச்சி என்பது வழிநூல். வழிநூல் இரண்டு வெளியீடு செய்த அழகப்பா கல்லூரி ஆராய்ச்சித்துறை, பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறைக்கு ஒரு வழிகாட்டியாக, இயக்குநர் தமிழ்க்கடல் இராய.சொ. படைத்த மூல நூலை வெளியிடுகின்றது என்பதனைப் பெருமிதமாகச் சுட்டிக் காட்ட விழைகின்றேன். காந்தியே தலைவர் காந்திக் கவிதைநூல் காந்திபிள்ளைத் தமிழ் முதலாகக் காந்தி இரங்கற்பா ஈறாக 38 பிரிவுகொண்டது. பிறப்பொடு தொடங்கி இறப்புவரை கூறுதலின், இந்நூல் முழுவடிவுடையது என்று கண்டு கொள்ளலாம். 885 செய்யுள் உடையது. இச்செய்யுட்கள் வெண்பா, அகவற்பா, ஆசிரியத்தாழிசை, அறுசீர் எண்சீர் பன்னிருசீர்ச் சந்த விருத்தங்கள், கலிவிருத்தம், கட்டளைக்கலித்துறை, வஞ்சித்தாழிசை, வஞ்சிவிருத்தம், காவடிச்சிந்து, கண்ணி என்றவாறு பாவும் பாவினமும் கலந்த பல்வேறு யாப்பின. பிரிவு 38 என்றாலும் அனைத்தும் காந்தி என்னும் ஒரு பொருளை நுதலி எழுந்தனவே. ஒரு பொருளைப் புலவன் நேராகவும் பாடுவன், உள்ளாகவும் பாடுவன். நேர்முகமாகப் பாடின், பாடற்பொருள் எனப்படும்; உள்முகமாகப் பாடின் வைப்புப்பொருள் எனப்படும். பாடல் பெற்ற தலம் எனவும் வைப்புத்தலம் எனவும் பாகுபடுத்தும் முறையை ஒப்புநோக்குக. பிள்ளைத்தமிழ், நான்மணிமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருத்தசாங்கம், திருப்பல்லாண்டு என்றின்ன பகுதிகளில் காந்தி பாடற்பொருளாக விளங்கு கின்றார். காந்தியந்தாதி, காதல் மறுமணம், தாலாட்டு, தோழி பேச்சு என்றின்ன பகுதிகளில் வைப்புப் பொருளாகத் திகழ்கின்றார். மயிலே மணியே மணமே மருந்தே மனத்தில்வளர் குயிலே கொடியே குணமே கொழுந்தே குழலொடுயாழ் பயிலின் மொழியே விழிதிற வாயெனில் பாவியெதும் அயிலேன் இதுமெய் அருங்காந்தி ஆணை அறிகுவையே (133) இது காந்தியந்தாதிக்கண் நாணிக் கண்புதைத்தல் என்ற துறையில் வருஞ்செய்யுள் நாணத்தால் கண்பொத்திக் கொண்ட காதலியை நோக்கி, `நீ எனைப் பார்க்கக் கண் திறவாவிட்டால் பட்டினி கிடப்பேன். காந்திமேல் ஆணை’என்றான் காதலன். இப்பாவில் காந்தி வைப்புப் பொருளாவர். தாலாட்டுப் பகுதியில், `காந்தி அறமதனைக் காசினியெல்லாம் பரப்பப் போந்த இளங்கொடியே’எனவும், இராசன்பாபு வரவேற்புரையில், `நடுவுயர் காந்தி நன்மணிப் பாங்கர் வடுவிலாது ஒளிரும் வயிரமா மணியே’ எனவும் பாடுங்கால் காந்தி வைப்புப்பொருள் படுகின்றார். தலம் எதுவாயினும் பலவாயினும் ஓரிறைவன் உறைகின்றான்; அதுபோல், தலைப்பு எதுவாயினும் பலவாயினும் ஒரு காந்தியே எங்கும் பொருளாகின்றார். இராய. சொ. எத்தகைய மனநிலையில் காந்திக் கவிதைகளைப் பாடுகின்றார்? தமக்கும் காந்திக்கும் என்ன உறவு காண்கின்றார்? இவ்வடிப்படை தெரிந்தால் தான் நூலின் உயிரோட்டம் விளங்கும். காந்திப் பெருமானைத் தம் தெய்வமாகவும், தம்மைக் காந்தியடியனாகவும் வைத்து வழிபடுகின்றார் இராய. சொ.எனவே தேவார திருவாசக பிரபந்தங்கள்போலக் காந்திக் கவிதையும் தெய்வப் பாசுரமாகும். பண்கொண்ட குழலூதிப் பசுக்காத்த திருமாலும் பங்கிற் பச்சைப் பெண்கொண்ட பெருமானும் பிரமனெனும் மறையோனும் புத்தன் ஏசு மண்கொண்ட வள்ளுவனும் மற்றொழிந்த பெரியோரும் ஒன்றாய் வந்த கண்கண்ட தெய்வமெனும் காந்திதனை இழந்திட்டோம் அந்தோ அந்தோ. (277) இதுவரை ஞாலத்தார் வழிபட்டுவரும் பல்வேறு கடவுளர்களும் சிந்தனைப் பெரியவர்களும் திரண்டு ஓருருக் கொண்ட தனி முழுத் தெய்வம் எனக் காந்தியை போற்றுவர் இராய.சொ.அடிகளார்.தெய்வ உறவு ஆனமையின், காந்திக் கவிதைகள் தெய்வ மணக்கும் தமிழ்ச் சோலையாகின்றன. தேவ நிலைக்கருத்துக்கள் பொலிகின்றன. கடவுள்நிலை பெற்ற காந்திப் பெருமான் (56), காந்திப் பரந்தாமன் (86), கருதுமின்காந்தி பத மலர் (137), கன்னல் மொழி பகர் காந்தியடியார் (121) என்றாங்குப் புதிய தெய்வத் தொடர்கள் இந்நூலில் ஆளப்பட்டுள. மைப்படிந்தோன் ஆனாலும் அவன் புகழை வாயார வாழ்த்துவனேல் ஒப்பரிய உயர் பதத்தை உறுவன் (2) என முத்தியும் மொழியப்படுகின்றது. தெய்வக் காந்தியைத் தொழும் இராய. சொ. இடத்து நாயன்மார் ஆழ்வார் ஒப்ப அடியவர் மனமையைக் காண்கின்றோம். எளியேன் உள்ளம் கோயில் கொண்டிருக்கும் கருணை இருங்கடலே (15) எனவும், இனிப்பிறவி எடுக்கும்போது எம்பெருமான் உன் குணத்தை இடைவிடாது போற்றுமாறு பிறத்தல் வேண்டும் (20) எனவும் பாடுவர். தண்ணளிசேர் காந்தி பாதம் தலைக்கொளும் நற் காரை நகர் ராய சொக்கலிங்கன் (118) என்று தாள்தலை உறவு குறிப்பர். `நாயேனை நஞ்சாம் உலகத் தீநெறி அதனுள் நண்ணாது ஆட்கொண்ட சீல (12) என்று மாணிக்கவாசகரின் தாழ்வு நடையில் நாயேனை என்று பணிவு மொழிகுவர். தெய்வப் பாசுரம் தெய்வப் பாசுரம் பாடிப்பாடிப் பாசுர இலக்கியத்தின் எல்லை கண்டது தமிழ் ஆதலின் எத்தெய்வத்தை யார் பாடினாலும் பழம் பாசுர அமைப்பின் படிவமாகத் தான் இருக்க முடியும். `போரார் திறம்பாடிப் பொன்னூசல் ஆடாமோ’ (189) என்பத திருவாசகத்தடம். `பாரதர் முடிமணிக் காந்தியடிகட்குப் பல்லாண்டு கூறுதுமே’ (192) என்பது சேந்தனார் பெரியாழ்வார் தம் திருப்பல்லாண்டுச் சாயல். `காந்தி திருமுன் குவியாக் கையென்ன கையே. கழலிணைகள் பற்றாத கையென்ன கையே’ (200) என்பது சிலப்பதிகாரநெறி, `எக்குறியும் திருநெற்றி இடாதான் கண்டாய், ஏர்வாடாக் கோவிலுறை எம்மான்தானே’ (206), பொன்னாரும் திருமேனி பொலிந்து தோன்றும், பூவிலுயர் சபர்மதி எம் புனிதனார்க்கே’ (208) என்பன திருத்தாண்டக வழி. இவ்வண்ணம் அடிகள் இராய. சொ.புதிய காந்திக் கடவுளைத் திருப்பொன்னூசல், திருப்பல்லாண்டு, திருப்புகழ், திருத்தசாங்கம் என்றின்ன தெய்வத் தலைப்புக்களில் நெக்கு நெக்குப் போற்றுவர். தடம் பழைமை என்றாலும் காந்திக் கவிதையின் உணர்ச்சிகளும் கொள்கைகளும் புது வேகம் உடையன. புதிய முறை என்று பேரிட்டு ஓய்ந்த கருத்துக்களைப் பாடுவார் பல்கிய இந்நாளில், மரபான முறையில் தரமான நடையில் காந்தியின் புரட்சியங்களைப் பாடியுள்ளார் இராய.சொ.தெய்வப் பாசுரமாயினும் `கைம்மையை உடைத்திடுவேன்’என மாதர் மறுமணம் கமழ்கின்றது; `எங்ஙனம் பெண்மை இழிவாகும்’ என மன்பதைத் திருத்தம் வலியுறுத்தப்படுகின்றது; `இந்தியா எழுந்துவிட்டது’ என நாட்டுப் பற்று எழுப்பப்படுகின்றது; வையகத்தில் எல்லோரும் பசியாமல் உண்டு உடுத்தி வாழவேண்டும் எனப் பொதுவாழ்வியம் வேண்டப்படுகின்றது; எனக்குத் தமிழ் வாராது என்றுரைப்பவர் தம் மனநிலை பழிக்கப்படுகின்றது. இவையெல்லாம் காந்திப் பாசுரத்தின் புதுக்கூறுகள். காந்தி மக்கள் தலைவராதலின், பொதுமக்களின் நல்வாழ்வுக்கு வேண்டிய மக்களியம் காந்திக் கவிதை முழுதும் இலங்கக் காண்கின்றோம். சிறியதொரு கத்தர்ப்பை பக்கம் தோன்றும் தினம்படிக்கும் ஒரு கீதை அதனுள் தோன்றும் மறையெழுதும் ஒருசிறிய குச்சி தோன்றும் வனப்புயர்ந்த இராட்டொன்று திருமுன் தோன்றும் கறையெதுவும் இல்லாத கத்தர் மாலைக் கயிற்றுடனே கடிகாரம் ஒன்று தோன்றும் பொறியடக்கி ஆண்டபெருந் தகைமை தோன்றும் பூவிலுயர் சபர்மதியெம் புனித னார்க்கே. (200) தெய்வக் காந்தியின் திருவுருவத் தோற்றம் புனையப்படும் இச்செய்யுளில் எவ்வளவு புதுக் கருத்துக்களும் காலப் புதுச்சொற்களும் தொக்குக் கிடக்கின்றன! சிறைக்காலம் பாடும் புலவனின் சூழ்நிலையைப் பொறுத்துப் பாட்டுக்கு உணர்ச்சி அமையும். இடத்துக்கும் உணர்ச்சிக்கும் இயைபு உண்டு; மேடைமேல் ஏறிப்பேசும் உணாச்சி பாயின்மேல் இருக்கும்போது தோன்றாது. காந்திக் கவிதையின் பல பகுதிகள் இராய.சொ.வேலூர்ச் சிறையில் வீற்றிருந்தகாலை பாடியவை. `சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்’என்று வினவுவர் வள்ளுவர். இறைகாப்பு தமிழ் செய்யும் என்று விடை. சொல்லத் தோன்றுகின்றது. 38 பகுதிகளில் 31 வேலுர்ச் சிறையில் ஓராண்டில் யாத்தவை. கறையுடையார் தமக்காகக் காணப்பட்ட காவலமை வறட்டுமலை சூழ்ந்த வேலூர்ச் சிறையதனில் சிற்றறையில் இருந்து ராய சொக்கலிங்கன் இப்பதிகம் சொல்லல் உண்டோ (219) என்று தமிழ்க்கடலாரே சிறைப்பேற்றை மதிக்கின்றார். சிறைத்துயர் என்று பதிகத் தலைப்பிடாமல், சிறைவாழ்வு என்று தலைப்பிட்டிருத்தலின் இராய.சொ.விற்கு. சிறை தமிழ் நிறையாக அமைந்தது. `வேலூர்அரண்மனை மேவிய நாளென்’ (185) என்று எட்டடி கொள் சிற்றறையை அரண்மனையாகக் காண்குவர். தாம் வதிந்த வறட்டுமலை வேலூர்ச் சிறையை அரண்மனையாக மதிக்கும் இராய.சொ.அடிகள் தம் தெய்வக் காந்தி அடைபட்டிருந்த ஏர்வாடாச் சிறையை `ஏர்வாடாக் கோவிலுறை எம்மான்’ என்று போற்றித் தொழுவது எத்துணைப் பொருத்தம்! ஏர்வாடாக் கோவில் என்ற தொடர் எவ்வளவு சிறைப்பட்டிருந்தாலும், அழகு குன்றாத கோவில் என்று மற்றொரு பொருள்படுகின்றதன்றோ? விடுதலைக்களம் புக்க இந்தியத் தலைவர்களுக்குப் புகழ்பயந்தது சிறைக்களம் ஆதலின் புலவர் இராய. சொ. சிறையை மதித்தே பாடுகின்றனர்; `மலிந்த புகழ் வேலூர்ச் சிறை’ (182), `சேண்புகழ் கொண்ட ஏர்வாடாச் சிறை’ (185) என்று பாடிப் போதுவர். சிறையிற் பட்டுச் சிறையையே நினைத்துப் பாடிய பழக்கத்தால், இராய.சொ.சிறையை மறக்க முடியவில்லை. யாரும்நிகர் இல்லாத காந்திதனைத் திருக்குறளோ டிசைவுகண்டு நேரிசைவெண் பாவொருநூற் றிருபத்தைந் தாயமைத்து நெஞ்சிலன்னான் சீருருவை அகலாது சிறை வைத்த ராய சொக்கலிங்கன் (பக்.55) அரசு துறந்திருந்த இளங்கோவடிகள் குணவாயிற் கோட்டத்தில் அமர்ந்து சிலப்பதிகாரம் பாடியாங்கு, நாட்டு விடுதலைப் போராடிய இராய.சொ.அடிகள் வேலூர்ச் சிறையில் தங்கிக் காந்திக் கவிதைகளைப் பாடினர். இராய.சொ.வின் ஓராண்டுச் சிறை வாழ்வையும் அக்குறுகிய பருவத்திற்குள் சிறைவயல் தந்த தமிழ் யாணரையும் நினைக்குங்காலை, பல்லாண்டு சிறையிருந்திருப்பரேல் காந்திக் காப்பியம் விளைந்திருக்குமே! ஆயிர விளக்கேந்திய திருமகள் வீடணன் மனைபுகுவதாக நற்கனா கண்டு கொண்டிருந்தபோது துயில் எழுப்பி விட்டாயே என்று கவன்ற திரிசடைக்கு, கனாவின் குறையைக் காண மறுபடியும் தூங்குக என்று அன்னை சீதை இருகை கூப்பினாளாம் என்பது நினைவிற்கு வருகின்றது. வள்ளுவ மணம் காந்தியை எண்ணும் போதெல்லாம் வள்ளுவர் நினைவே இராய.சொ.வின் மனத்தகத்து எழுகின்றது. பொய்யில் புலவரின் அறங்கள் மெய்யே என்று இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர் காந்தித் தோன்றல் என்பது அவர் தம் முடிபு. மேலும் பிள்ளைத் தமிழின் சிறு தேர்ப்பருவத்தில் வள்ளுவரோடு காந்தியை ஒப்பிட்டு, `தகுதியுடை நீ எங்கள் தன்மையோடு இனிமை சாரும் தெள்ளு தமிழ் வள்ளுவனார் திருவரவு என்று இயம்பிடலாம் என்று முடிப்பதனால் வள்ளுவனாரே காந்தியாகப் பிறந்தார் என்று காட்டுவர் இராய.சொ.அவ்வாறே அன்னை கத்தூரியை வாசுகியாகவும் காண்பர். காந்திக் கவிதையில் வள்ளுவமணம் பரவாத இடமில்லை. திருக்குறட்கு வரலாறு காட்டும் சோமேசர் முதுமொழி வெண்பா போன்ற நூல்கள் முன்னரே பலவுள. இந்நூல்களில் ஒவ்வொரு குறட்கும் பலர் தம் வாழ்க்கைச் செயல்கள் இலக்கியமாகக் காட்டப்பட்டுள்ளன. `காந்தியும் வள்ளுவரும்’ என்ற இராய.சொ.வின் கவிதைப் பகுதியில் எல்லாக் குறட்களுக்கும் காந்தி ஒருவரின் வாழ்க்கை வரலாறுகளே காட்டாகின்றன. தமிழிலக்கிய வரலாற்றில் இஃது ஒரு புதுமுறை. மேலும் `காந்தியும் வள்ளுவரும்’ என்ற நூற்பகுதி உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக அமைந்திருக் கின்றது. செய்யுள் யாத்த இராய.சொ.அவர்களே வேண்டிய விளக்கத்தை உரைநடையில் எழுதியுள்ளனர். வெண்பாவாலும் விளக்கத்தாலும் திருக்குறட்கே சில புதிய கருத்துக்களை அறிந்து கொள்கின்றோம். பின்னிரண்டடித் திருக்குறளுக்கு ஏற்ப, முன்னிரண்டடி குறள் பாடும் புலவன் தனிச் சொல்லும் சேர்த்துப் பாடவேண்டும். யாப்பு நிறைவுக்காகப் பாடுபவன் யாப்பறி புலவன் ஆகின்றான். இத்தனிச் சொல்லை ஒப்பற்ற சொல்லாக நயம்படத் தொகுப்பவன் பொருளறிபுலவன் ஆகின்றான். 125 வெண்பா உடைய இக்கவிதைப் பகுதியில் இராய.பொ.இணைக்கும் தனிச்சொற்கள் திருக்குறளின் பொருளை முன்னினும் வளப்படுத்துகின்றன. அமைதி - தெரிதலும் தேர்ந்து செயலும் (99) சின்ன - உருவு கண்டு எள்ளாமை வேண்டும் (104) வருந்தி - நவில்தொறும் நூல்நயம் போலும் (108) குணமான - மாறுபாடு இல்லாத உண்டி (111) தேய்ந்த - சிறியார் உணர்ச்சியுள் இல்லை (113) நன்றுக்கு - இரப்பாரை இல்லாயின் (118) இம்மேற்கோள்களில் முதலில் நிற்பன தனிச்சொற்கள்; பின்வருவன குறளடிகள். கொண்டியில் தொடுத்தாற் போலத் தனிச்சொற்கள் குறளோடு எவ்வளவு பொருள் படத் தழுவிக் செல்கின்றன! புதுத் துறைகள் காந்திக் கவிதையில் காந்தி பிள்ளைத் தமிழ், காந்தியும் வள்ளுவரும், காந்தி யந்தாதி, காந்தி நான் மணிமாலை என்ற நான்கு பகுதிகள் அடங்கியுள இவை ஒவ்வொன்றும் தனி நூல் வனப்பின. இவற்றுள் காந்தியந்தாதி இலக்கியப் புரட்சி செய்கின்றது. இதுவும் உரையிடைப்பட்ட பாட்டுடைச் செய்யுள். அகப்பொருளில் பிரிவுபல கூறல் உண்டு. அப்பிரிவுகளிலும் வேறாகத் தாய்நாட்டுக் கடமைக்குப் பிரிகின்றான் காந்தியந்தாதித் தலைவன், தலைவியைத் தலைவன் பிரிவான் என்று பாடுவதே அகமரபு. ஈண்டோ நாட்டுப்பற்றுக் காரணமாகத் தலைவனைத் தலைவி பிரிந்து சிறைபுகுகின்றாள். இருவருமே வீட்டை விட்டுத் தனித்தனிச் சிறையில் வாழ்கின்றனர். ஒரு சிறையிலிருந்து மறுசிறைக்கு வண்டுத் தூது விடுப. இங்ஙன் துறைகள் புதியவாம்போது துறைவிளக்கங்களும் புதியனவாதல் இயல்பே. எவரும் விரும்ப இசையிடு வண்டே! எழுந்துயர்ந்த சுவருள் இருக்குமென் சுந்தரன் தன்னிடம் தூதுசென்று கவரும் நினது கரும்பு சிறையிற் கலைபயின்று தவரும் வியந்திட வாழுகின் றாளெனச் சாற்றுகவே. (பக்.131) சிறையுறையும் தன் காதலனுக்கு இன்னொரு சிறைவாழ் காதலி வண்டு மூலம் கூறுகின்றாள் என்பது இவ்வந்தாதியின் துறை. இஃது அகத்துறையில் ஒரு புதுத்துறை. காந்தியந்தாதித் தலைவி காதலுக்கும் ஒரு விதி போடுகின்றாள். தன்னை விழையும் தலைவனை நோக்கி, `என்னை மணஞ்செய்து கொள்ள விரும்புவையேல் காந்தியின் அறத்தை உலகறியச் செயலால் பரப்புவேன்; பரவ ஒத்துழைப்பேன் என்று காந்திமேல் ஆணையிடுவாய்; இடுவையேல் உனைநான் மன்றல் புரிவேன்; என்னை விரும்பின் இது தவிர உனக்கு வேறு வழி இல்லை’ என்று காதல் விதி பகர்கின்றாள் (145). இதனால் மணக்காதலினும் காந்திக்காதல் பெரிதென உணர்கின்றோம். மெய்நொந்து உனைப்பெற்று யான்பெற்ற இன்பமிம் மேதினியில் அய்யா பெரிதே எனினும் அருந்தவக் காந்திகளத்து எய்யாது உழைத்தின்று இனிய பெருநலம் எய்தலின்றித் துய்யாய் சிலநாள் வறிதே கழித்திடத் தோன்றினையே உன்னை பெறக் கழித்த நாட்களில் காந்திவழிப்படி நாட்டுத்தொண்டு செய்ய முடியாமற் போயிற்றே என்று வருந்துகின்றாள் தாய். மகவின்பத்திலும நாட்டுக்கடமை பெரிது எனவும் வீழ்நாள் படாமல் நாள்தோறும் நாட்டுக் கடமை செய்ய வேண்டும் எனவும் உணர்கின்றோம். இது புறத்துறையில் ஒரு புறத்துறையாகும். தலைவன் போர்க்களம் செல்வான் என்றல் புற மரபு. அப்போர்க்களம் குருதிப்படைப் போர்க்களம் ஆகும். காந்திப் போர்க்களம் உறுதியுடையதேயன்றிக் குருதியுடைய தன்று. மக்களைச் சேர்த்து ஒரு மாபெரும்போர் முந்தையர் காணா முறை வகுத்திட்டவன் (132) என்பர் புலவர். இது பகைவர்க்கும் இனிய போராதலின் பெண்ணும் தனித்து அமர்க்களம் புகுகின்றாள். `வேந்தர் விறலும் மதியா வெறுங்கை அமர்க்களத்தே சேர்ந்தனளே’ என்பது நற்றாய் இரக்கம் (139). கன்னி காதற்களம் புகாது காந்திக்களம் ஏகுகின்றாள். இதுவும் புறத்துறையில் ஒரு புதுத்துறை. இப்புதுமைத் துறைகள் பொருந்துமா? முரண்கொலோ என்றால், அன்பின் அடிப்படையிலும் அறத்தின் அடிப்படையிலும் வழக்கு அறியப்பட்ட துறைகள் இலக்கிய முறைகளே ஆகும். தொல்காப்பியர் ஆணைப்படி மரபுநிலை திரியா மாட்சியனவே ஆகும். சைவப் பாசுரங்களில் திருநீறு இடம் பெறல்போல, காந்திக் கவிதையில் கதர் நல்லிடம் பெறுகின்றது. காந்தி மதத்துக்கு கதர் புறச்சின்னம். கதர் என்பது முரட்டுத்துணி. அதனை மென்காந்தித் தலைவி உடுத்துகின்றாள் என்னும்போது பெண்ணிலக்கியப் போக்கு மாறாமல் இருக்கமுடியாது. அனிச்சப்பூவையும் சூடமாட்டாத அவ்வளவு மெல்லிய இடையினள் என்று வள்ளுவர் நயம்படப் பாராட்டுகின்றாரே, அந்த மெல்லிடை கதர் பெறல் காணவில்லையா? அதன் மேலும் வண்டுகள் தலைமேல் இருந்தால் இடை என்னாம் என்று வினாவுகின்றான் தலைவன் (145). `கதர் உடுத்தியே கைராட்டு உருட்டும் நற்காரி கையீர்’ (126) என்று காதலன் கலைமான் தேடுகின்றான். தரித்தான் முரட்டுத் துணிக்கதரை (140) என்று உடன் போகிய மகளுக்கு நற்றாய் இரங்குகின்றாள். `நாடு செழித்திட நண்ணும் முரட்டுக்கதர் சுமந்து வாடிய சிற்றிடை’ (124) என்பதனால், கதரால் இடை வாடினாலும் நாடு செழிக்கும் என்ற கருத்து புலனாகின்றது. தனிக்கதர் தாங்கும் அழகினன் (127) என்று தலைவனும் காந்தி மதத்தவன் என்று காட்டுவான் கதரணிகின்றான். `தமிழே பயின்று கதரே சுமந்து தளரும் இடை’ (144) என்றால், இடைத் தளர்ச்சிக்கு முரட்டுக்கதர் அணிதல் காரணம் என்பது சரி; தமிழ் பயில்தல் இடைத்தளர்வுக்கு எப்படிக் காரணம் ஆகும்? சிலர் இருந்து படிப்பர்; சிலரோ நடந்து நடந்து படிப்பர். இக்காந்தித் தலைவி நடந்து தமிழ்நூலை ஏந்திப் படிப்பவள் ஆதலின் தமிழும் அவள் நுசுப்புத் தளர்ச்சிக்குக் காரணமாயிற்று. தமிழ்ப் படிப்பு மெலிவு தரும் என்பதனைத் `தமிழின் துறைவாய் நுழைந்தனையோ’ என்ற திருக்கோவை வினாவால் உய்த்துணரலாம். புலமைச் சிறப்பு காந்திக் கவிதை தனக்குவமையில்லாத காந்தியைப் பொருளாகக் கொண்டது. இது ஒரு சிறப்பே என்றாலும் கவிதையின் நீடித்த வழி வழி வாழ்வுக்குப் புலமைச்சிறப்பு வேண்டும். இலக்கிய வனப்புக்கள் இன்றேல், கவிதை பலர் படிக்கும் கவர்ச்சி இழக்கும்; உப்பின்றியிருக்கும்; ஓட்டமற்ற குட்டையாகு ம். இராய.சொ.அவர்கள் தமிழ்க்கடல், கவிதைக் கடலாடி. நூறாயிரக்கணக்கான செய்யுட் செல்வர். ஆதலின் இந்நூலுக்குப் பொருட் சிறப்புவாய்ந்தது போலப் புலமைச் சிறப்பும் வாய்ந்துள்ளது. இலக்கியக் கூறுகளுள் ஒன்று எடுத்துக்காட்டு நடையாகும். இந்நடையால் ஏற்றமும் இறக்கமும், வாழ்வும் தாழ்வும், பெருமையும் சிறுமையும் தெள்ளிதின் விளங்கும். `கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன், மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென’ என்று கண்ணகி நல்லாள் முன்னை நிலையைப் பின்னை நிலையோடு இணைத்துக் காட்டும்போது அவலம் பொள்ளெனப் பிறக்கின்றது. உணர்ச்சி கிளர்ந்தெழ வேண்டுமெனின் பாடலில் இருநிலை அல்லது பன்னிலை வேண்டும். ஒரு நிலைப்பாடல் தன்மை காட்டுமேயன்றி உணர்ச்சிமுடி காட்டாது. மெத்தையினில் கண்வளர்ந்த மேலோர் எல்லாம் மிதிப்பதற்கும் தகுதியில்லாக் கயிற்றுப் பாயில் கைத்தலைக்கு வைத்துறங்கும் காட்சியொன்று கனவினிலும் காண்பதுவோ காந்தி வள்ளால் (217) புத்துருக்கு நெய்யன்றி வேறு காணாப் பொருவரிய பெருவாழ்க்கை பூண்டோர் எல்லாம் கைத்துணைஎண் ணெயுமறியா மிடிகூர் வாழ்வைக் கடனாகத் கருதிடுதல் தரையில் உண்டோ (218) சிறைவாழ்வு என்ற தலைப்புப்பாடல் பத்தும் இருநிலைப் பாடலாகும்; அவலவுணர்வுப் பாடலாகும். சொல்நயம் பொருள்நயம் சான்ற பாடல்களே கவிநயம் உடையனவாகக் கற்கப்படும். இவையில்லாச் செய்யுட்கள் பட்டையடிக்கும் எழுதுகோலை ஒக்கும்; மழுங்கற் செய்யுட்களாகும். வேர்மாளத் தீண்டாமை வேண்டியவாறு உரைத்தருளி ஏர்வாடாச் சிறையிருந்த எம்மானும்நீதானோ (238) என்ற தாலாட்டித் தீண்டாமை என்ற மரத்தின் இலை தழை கிளைகளை வெட்டினாற் போதாது; என்றும் தளிராதபடி வேரும் மாளவேண்டும் என்று அழுத்தமாகக் கழறுவர். காந்தி ஓராடை ஆண்டி. நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரோ ஆடை பல அணியும் நாகரிகர். ஆனாலும் ஓராடையுடைனே இலண்டன் சென்று அரசரையும் அந்நாட்டு மக்களையும் கண்டு இந்திய உரிமையை எடுத்து விளம்பினார் காந்தியண்ணல். ஒன்னார்கள் கண்டஞ்சும் ஒற்றைக் கத்தர் உடுத்துஆடை பலசுமக்கும் ஓரார் நாட்டும் எல்நாட்டி மீண்ட பெரும் எழிலோன் (207) காந்தி உடுத்திய ஒரு கதர் பகைவர்க்குப் படையாய்த் தோன்றிற்றாம். அழகு என்பது ஆடைமென்மையிலும் எண்ணிக்கையிலும் இல்லை என்பதனை `எழிலோன்’ என்ற சொல்லால் அறியலாம். இலக்கிய நயம் பலவகைப்படும். அறிவு தித்திக்கு மாறு சொல்வது பொருள் நயம் எனப்படும். இதனால் கருத்தின் அருமையையும் புலவனின் சிந்தனையையும் புரிந்துகொள் கின்றோம். இம்மை மறுமை என்ற பிறப்புக் கொள்கைகள் பல சிந்தனையைப் புலவர்கட்குத் தூண்டியுள்ள. இம்மைப் பிறப்பில் பிரியமாட்டோம் என்று தலைவன் ஆறுதல் மொழிந்தபோது அப்படியானால் மறுபிறப்பிற் பிரிவான்போலும் எனத் தலைவி கலங்கினாள் என்பர் வள்ளுவர். எந்திர பீரங்கி எங்கள் உணர்ச்சி தன்னை என்செய்யும் - உடல் வெந்து போயின் வேற்றுடலில் வீறுகொள்வது உறுதியால் (254) உடலைக் கொல்லலாம்; விடுதலையுணர்வுக்குக் கொல்லியில்லை. ஆசையுடையவர்கட்கு மறுபிறப்பு உண்டு. `விடுதலை வேட்கையுடைய நாங்கள் இந்த மண்ணில் மறுபிறப்பு எய்துவோம்; எங்கள் உணர்ச்சி மறு உடம்பில் தொடரும்’ என்று உடலாற்றாலும் உணர்ச்சியறாமையைப் பிறப்புக் கொள்கையில் வைத்துக் காட்டுவர் புலவர். முருகன் வேல் ஏந்தியதற்கு இராய.சொ.மொழியும் கருத்துரை வேறு. குறவள்ளியை மணந்தான் வேலன். கோயிலில் அவ்வள்ளியைத் தொழுது பூசை செய்யும் மாந்தர் வள்ளி குலத்தாரைத் தீண்டாதார் என்று கோயிற்றடை செய்கின்றனர். இத்தடை யாளர்களை வள்ளி கணவன் பொறுப்பானா? `தீதுடையார் தமை ஒறுக்க அன்றோ அந்தத் திருக்கோலம்’ (262) என்பதாம். நடைவேகம் பாடல் படிப்பவர்க்கு உணர்ச்சியையும் கிளர்ச்சியையும் எழுப்ப வேண்டுமெனின், ஆற்றொழுக்குப் போன்ற அணிநடைச் செய்யுட்கள் சாலா. வெள்ளம் நிகர்க்கும் வேகப்பா வேண்டும். சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் சொல்லிலும் சொற்றொடரிலும் சொன்முறையிலும் வேண்டும். கருத்தில் ஆழம் மட்டும் போதாது, சுழிப்பாடும் வேண்டும். செவிச் சுவையறியா வாய்ச்சுவை மாக்கள் அவிந்தாலென்ன, அவிதலினின்றும் தப்பிப் பிழைத்து வாழ்ந்தா லென்ன என்று வள்ளுவர் வேகப்பட வில்லையா? வேகமில் கவிதைகள் இலக்கியப்பாகம் இல்லாதவை. காந்திக் கவிதையில் காட்டாறுபோலச் சாடும் வேகத்தை உணர்கின்றோம். காந்திப்பெம்மானைக் கொன்ற கொடுசேய் ஊழிக்காலம் முழுதும் நரகடைவான் என்று சிலர் சொல்வது இராய.சொ.செவியிற் படுகின்றது. சினமும் அவலமும் பிறக்கின்றன புலவர் பெருமானுக்கு. உய்யாது ஒருபாவி ஊழிநரகு உற்றாலென்? மெய்யான காந்திநமை விட்டானே - ஐயோ (110) என்று துடிக்கின்றார். `பாவி நரகு அடைவான் என்பது நமக்கு ஆறுதலா? காந்தி நம்மைப் பிரிந்தாரே ஐயோ’ என்று கதறுகின்றார். பித்துக்கொண்டு ஒப்புயர்வில் பெண்மை தனைப்பழிப்போர் செத்தஇடம் புல்முளைக்கச் செய்யுநாள் எந்நாளோ? (247) இருவர் இணைந்துபெறும் இல்வாழ்வுக்கு அறிகுறியா ஒருவர் பெறுந்தாலி ஒழியுநாள் என்னாளோ எனக்குத் தமிழ்வாராது என்றுரைக்கும் புன்தமிழர் இனித்த தமிழ்பேசி எழிலுறுநாள் எந்நாளோ? (247) இங்ஙனம் எந்நாட்கண்ணியிலும், கும்மியிலும், தாலாட்டிலும் கடுநடைப் பாடல்களைக் காண்கின்றோம். தமிழ்ப்பற்று பெருமகன் இராய. சொ.பிறந்து மொழி பயின்ற நாள் தொட்டே சிறந்த தமிழின் சேவடி தொழுபவர்; இனிப்பிறவி எடுத்தாலும் என் அருமைத் தமிழ்நாட்டில் எளியேன் பிறத்தல் வேண்டும் (20) என்று தமிழ்பிறவியை வேண்டுபவர்; அரசியலில் இருந்தபோதும் அதனைத் துறந்தபோதும் தமிழையே மூச்சும் பேச்சும் எழுத்தும் எல்லாமாகக் கொண்டவர்; தமிழுக்கெனத் தோன்றித் தமிழுக்கென வாழ்ந்து வரும் தமிழ்த்தகை. அருந்தமிழன் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் பெருந்தகை. விண்ணவர் மண்ணவர் மற்ற வரும்தொழ வான்செயல் பலசெய்த வண்தமிழ் கன்னி வளர்த்த செழுந்தமிழ் வரம்பமை தித்திக்கும் தேன்சொரி தெய்வத் தீந்தமிழ் (13) சங்கமிருந்து வளர்ந்த பசும் தனிய இனிய தமிழ்க்கோமான் (15) என்தன் இனிய இருந்தமிழ் (125) எம்மையுலகத்தும் ஈடில் தமிழ்ப்பா (202) அமிழ்தும் புளிக்குதடி - சகியே அதனிலும் மிக்க சுவைத் தமிழும் கசக்குதடி (257) இவ்வண்ணம் தமிழின் அருமை பெருமை உரிமைகளை உள்ளம் உணர்ந்து அறிவு தோய்ந்து பாராட்டுகின்றார் தமிழ்க் கடலார். கடமையிற் பிரியும் தலைவன், எக்கோவையும் இதுவரை கூறாத முறையில் தலைவிக்கு ஆறுதல் மொழிகின்றான். `நான் வரும்வரை நீ நம் இனித்த தமிழ் நண்ணும் இலக்கியத்தேன் குடித்து ஆறுக நாயகியே’ (163) என்று தமிழிலக்கியம் காட்டிப் பிரிவுத் துயரைத் தணிக்கின்றான். வள்ளுவரைப் பெற்றுப் புகழ்கொண்ட தமிழ்நாடு என்று பாரதியார் கூறா நிற்கவும், வள்ளுவனென்று ஒப்புயர்வில் மாட்சிமிக்க புலவனால் கொள்ளைநீதி குவலயத்துக் குரைத்ததெங்கள் இந்தியா என்ற இந்தியப் பிறப்பாளனாகக் காண்கின்றார். இராய. சொ. ஏன்? வள்ளுவரே காந்தியாகப் பிறந்தார் என்பது அவர் கருத்து. புதுத்திறன் இராய.சொ. கல்விப்பெருமையாலும் கவிதைப் பயிற்சி யாலும் சொற்பொழிவுத் திறத்தாலும் தமிழிலக்கியங்களின் நுழைபுலம் கண்டவர். அக்காட்சி காந்திக் கவிதைகயிலும் மிளிரக் காண்கின்றோம்; இலக்கிய நுணுக்கங்கள் பிறங்கக் காண்கின்றோம். இவற்றைத் திறாய்வுத் துறையாக எண்ணலாம். சேக்கிழார் நூலிலுள சீர்திருத்தக் கொள்கையெலாம் வாக்கினால் உரைத்துலகை வளர்த்தருளக் கண்வளராய் (232) பெரிய புராணம் சீர்திருத்த நூல் என்பது தமிழ்க் கடலாரின் இலக்கியத்திறன் அவர் தம் கல்விப் பயிற்சியிற்கண்டு காட்டும் முடிபு. கல்வி தனிற்பெரிய கம்பனார் பெற்றெடுத்த செல்வத் தமிழ்ச்சீதை செம்பொனாள் நீதானே! (234) வான்மீகியில் வரும் சீதைக்கும் கம்பர் தமிழ் நாகரிகத்துக்கு ஏற்ப உருவாக்கிய சீதைக்கும் உள்ள வேறுபாட்டை எண்ணி, கம்பர் பெற்றெடுத்த தமிழ்ச்சீதை என்று சீதையின் புதுப்பிறவி காட்டுவர் இராய.சொ. கண்ணகியைப் பாண்டியன் மகள் என்று இளங்கோ கூறுவதை ஒப்புநோக்குக. செவிக்குத்தேன் எனஇராமன் கதைதிருத்திச் செய்தமைத்த கவிக்கு நாயகன்என்னும் கம்பவள்ளல் நீதானோ (238) கவிக்கு நாயகன் என்ற தொடர் இராமாயணத்தில் அனுமனைக் குறிப்பது. இராய.சொ.கம்பரைக் கவிக்கு நாயகன் என்பர். இது எங்ஙனம் பொருந்தும்? இராமனது புகழைத் திருத்தினான் என்று வரும்போது கவிக்கு நாயகன் என்ற தொடர் குரங்கிற் சிறந்த அனுமனைச் சுட்டும். இராமனது கதையைத் திருத்தினான் என்றபோது அத்தொடர் புலவரிற் சிறந்த கம்பனைக் குறிக்கும் என்று தெளிக. இராமன் புகழைத் திருத்த வேண்டும் எனின் அதற்கேற்பக் கதையின் போக்கைத் திருத்தியாக வேண்டும். கதை திருந்தினாலல்லது புகழ் திருந்தாது என்பதும் இதனால் உணரப்படும். மேலும் ஈங்கு இராய.சொ.வின். துணிவைப் புலப்படுத்தத் துணிகின்றேன். `செவிக்குத் தேனென இராகவன் புகழைத் திருத்திய’ என்ற கம்பர்வாக்கு அவ்வளவு பொருத்தமில்லை. புகழைத் திருத்துதல் என்றால் பழியாக மாற்றுதல் என்றன்றோ பொருள்படும்? சரி திருத்தம் என்று சொல்லுகின்றோமா, பிழைதிருத்தம் என்று சொல்லு கின்றோமா? ஒப்பிட்டுக் காண்க. ஆதலாலும் `காசில்கொற்றத்து இராமன் கதை’ என்று வருதலாலும், `இராமன் கதை திருத்தி’ என்று கம்பரைத் திருத்தினார் தமிழ்க்கடலார் என்பது என் கருத்து. காந்திக் கவிதை என்னும் இப்படைப்பு நூல் செய்யுள் வடிவில் தோன்றிய பெறலரும் வரலாற்றிலக்கியம்; வருங்காலத்தார்க்கு ஓராயிரம் உண்மைக் குறிப்புக்களைக் காத்து வைத்திருக்கும் தமிழ்ப்பேழை; சால்பியம், புரட்சியம், பொதுவியம், மக்களியம் என எண்ணப்படும் பல்லியங்களும் உள்ளடக்கிய காந்தியத்தின் வழிகாட்டி. காந்திப் பொருளும் தமிழ்க் கடலார் புலமையும் இரண்டறக் கலந்து பிறந்த இக்காந்திக் கவிதை இந்தியமொழிகளில் எல்லாம் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்பது என் விழைவு. 15. பாடுவார் பாட்டாண்மை `பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்’ என்றார் சுந்தரர். `பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்’ என்று போற்றினார் சேக்கிழார். இங்ஙனம் இருபேரடியார் புகழ்ந்துரைத்த `பாடுவார்’ என்ற பெயரைப் பட்டப் பெயராகப் பெற்றவர் யார்? பெருந்துறவி பட்டினத்தாரின் குலத்துதித்த பாடுவார் முத்தப்பசெட்டியார் ஆவர். முத்தப்பரை நிறைமொழி மாந்தராகவும் காண்கின்றோம். வாழ்க என்றாலும் கெடுக என்றாலும் எவருடைய சொல் உடனே பலிக்குமோ அதுவே `நிறைமொழி’யாகும் என்று பரிமேலழகர் விளக்கியுள்ளார். இப்பலவித நிகழ்ச்சிகள் பலவற்றை 19 ஆம் நூற்றாண்டில் கீழைச் சேவற்பட்டியில் வாழ்ந்த முத்தப்பர் வாழ்க்கை வெளிப்படுத்து கின்றது. மாமரத்தைவிட்டுக் கிளை முரிந்து வீழ்ந்தது, ஆயக்காரன் இல்லம் அடியோடு எரிந்தது, அரியக்குடியார் பெருகாமல் ஓரளவாக இருப்பது. நாகூர்ச் சிறுவர்கள் மயங்கி வீழ்ந்தது, மூத்தமகன் சருக்கரைக் கருப்பையா பலிதம் இழந்தது என்ற தீய விளைவுகள் பாடுவார் வாக்கால் விளைந்தன. சங்ககால முதலே அறம் பாடுதல் என்ற கவி வழக்கு உண்டு. பெரும்பாலும் இஃது அழிவையே சுட்டும். இடைக்காலப் புலவர்கள் வரலாற்றில் வசை பாடிய செயல்கள் சுவையாகக் காணப்படுகின்றன. கருநாக்கு என்ற சிலரை வழக்கிற்கூட நாம் குறிக்கவில்லையா? எனவே `பாடுவார்’ என்பது அறம் பாடுவார் என்ற அச்சக் குறிப்புடையது. முத்தப்பர் வாழ்க்கையையும் வாக்கையும் நினைக்கும்போது, பொது மக்கட்குப்பட்ட எண்ணம் இது. நிறைமொழி மாந்தர் என்னும் அறம்பாடுவார்க்கு இருவகை யாற்றல் உண்டு. மழை கெடுதலையும் செய்யும்; அதனை மாற்றி நல்லதையும் செய்யும் தன்மையுடையது என்று திருக்குறள் கூறியதைப் போலவே, சபிக்கும் ஆற்றலும் சபித்ததை உடனே மாற்றியளிக்கும் ஆற்றலும் தெய்வப் புலவர்க்கு உண்டு. சபிக்கும் ஒரு போக்கே கொண்டவர் புலவர் ஆகார், சான்றோர் ஆகார் அல்லவா? காஞ்சிப் பல்லவன் தன்னைப் புகழ்ந்து பாடும்படி திருமழிசையாழ்வாரைத் துன்புறுத்தினான். அவர் மறுக்கவே ஊரைவிட்டுப் போகும்படி கட்டளையிட்டான் இவ்வாழ்வார்க்குக் கணிகண்ணன் என்ற மற்றொரு பெயருண்டு. உடனே காஞ்சி வரதராசப் பெருமாளை நோக்கி, நீயும் என் கூடவே ஊரைவிட்டுப் புறப்படு என்று பாடினார். இதனை அறிந்த அரசனும் அமைச்சர்களும் ஊர்மக்களும் உண்மை நிலையுணர்ந்து, ஆழ்வாரைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டினர். அதன்பின், திருமழிசையாழ்வார் தாம் முன்பாடிய வெண்பாவையே பின்வருமாறு மாற்றியமைத்தார்: கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய செந்நாப் புலவனும் செல்லவில்லை நீயுமுன்தன் பைந்நாகப் பாய்விரித்துக் கொள். இத்தகைய பாட்டாண்மைகளைப் பாடுவார் முத்தப்பர் வாக்கிலும் பன்முறை காண்கின்றோம். ஒருமுறை செவ்வூர் சென்றபோது, இவரை யாரும் வரவேற்கவில்லை; முகங்கொடுத்துப் பேசவில்லை; பசியாறி யாச்சோ என்று கேட்கவில்லை. பசி வந்திடப் பத்தும் பறந்து போனாலும், புலவனுக்கோ பாட்டுப் பிறந்துவிடும். தமிழிலக்கியவுலகில் வறுமைத்தாய் கருக்கொண்டவுடனே ஈன்று புறம்விட்ட செய்யுட் குழவிகள் பலப்பல. நீர் வறட்சியில் விளைந்த புதுக்கோட்டை முகவைக் காய்கறிகள் சுவையாக இருப்பது போலப் பசி பயந்த பாடல்கள் கொதிப்புச் சுவையுடையவை. எவ்வூர்க்குப் போனாலும் எவ்வுலகிற் சென்றாலும் செவ்வூர்க்குப் போகமனஞ் செல்லாதே - அவ்வூரார் பார்த்திருக்கத் தின்பார் பசித்தார் முகம்பாரார் கோத்திரத்துக் குள்ள குணம். இவ்வாறு பசி சுடச்சுட நிலஞ்சுடச்சுட வீதிவழி இசைத்துக் கொண்டே நடந்தார் முத்தப்பர். புலவன் செந்நா கருநாவாகும் என்பதனை உடனே உணர்ந்த அவ்வூரார் அவரை இடைமறித்து உணவூட்டி வளமாக்கிப் பசி போக்கினர். பசியொழிந்த முத்தப்பர் தாமே மனங்கசிந்து அருள்கொண்டு, எவ்வூர்க்குப் போனாலும், எவ்வுலகிற் சென்றாலும் செவ்வூர்க்குப் போகமனஞ் செல்லுமே - அவ்வூரார் பார்த்திருக்கத் தின்னார் பசித்தார் முகம் பார்ப்பர் கோத்திரத்துக் குள்ள குணம். எனப் புகழ்பட மாற்றிப் பாடினர். அறம் பாடும் ஆற்றல் உடையவரேனும் முத்தப்பர் மழை நலம், ஊர் நலம், புலவர் நலம் வேண்டிப் பாடிய நிகழ்ச்சிகளைக் காண்கின்றோம். நகரத்தாரே யன்றி எல்லாப் பொதுமக்களும் அவரை மதித்தனர். அக்காலச் சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் அவரை வரவேற்றனர். இருநூறு ஆண்கட்குமுன் கவிஞர்களிடைப் புலமைப் போட்டியும் எதிரரங்குகளும் சொற்சிலம்பங்களும் இயல்பாக இருந்தன; இத்துறையிலும் புலமை மிக்கார் மதிக்கும்படி பாடுவார் முத்தப்பர் தமிழ்வாகை சூடிப்பொலிந்தனர். பாரதிதாசனுக்கு முன்னோடியாக, `தமிழ் மேலும் ஆணை’ என்று பறையயைந்தவர் ஒருவர் உண்டெனின் பாடுவார் முத்தப்பரேயாவர். பாடுவாரின் பன்னூற் புலமைக்கும் தமிழ்ப்பற்றுக்கும் கவி விரைவுக்கும் அளவுண்டோ? திருக்குறளிலும் அவ்வை நூல்களிலும் பெருவிருப்பம் உடையவர். மகரநெடுங் கடலுலக வசந்தையைச் செந்தமிழால் யான்வழுத் துதற்கு அகரமுத லவ்வெழுத்தென் றாயதிலே முப்பால் சொன்னவன் தாள்போற்றி சிகரவரை மீதெழுந்த குன்றைவடி வேலவன்தாள் சென்னி வைப்பாம் என்று நூன்முக வாழ்த்தில் முருக வணக்கத்திற்கு முன்பே திருக்குறட்கடவுள் வாழ்த்தைப் போற்றுவது நினையத்தகும். `தமிழை நம்பி உரையிருக்கும்’ எனவும் `பன்னு தமிழோங்கு திருக்கோட்டி’ எனவும் `மதுரைப் பொய்கைக்கு நாயகம் சங்கப்புலவர்’எனவும் வருவதனால் பாடுவாரின் தமிழ்ப்பற்று விளங்கும். பாரதம், இராமயணம், புராணம், திருக்குறள், பிற நீதுநூல்கள் சிற்றிலக்கியங்களில் இவருக்கு நல்ல பயிற்சியொடு கூரிய பார்வையும் இருந்தது. மருவிய இடைக்காலத்துப் பல புலவரிடம் காணவியலாத வரலாற்றுச் சிந்தனைகள் பாடு வாரிடம் நன்கு இருந்தன. நடுவாற்று மருதம்பிள்ளையார் விருத்தத்தில் கும்பினித்துரை, மருதுபாண்டியர், முத்துவிசய ரகுநாத சேதுபதி முதலியோர் குறிப்புக்கள் வருகின்றன. திருமுகவிலாசம் நகரத்தார் வரலாற்றுச் சான்றுடைய அரிய நூலாகும். பாடுவார் முத்தப்பர் படைப்புக்களிற் சிறந்தவை திருமுகவிலாசமும் செயங்கொண்டார் வழக்கமும் ஆகும். திருமுகவிலாசம் கலிவெண்பாவால் ஆனது; ஏறக்குறைய 260 கண்ணிகள் நீண்டது. முருகக்கடவுள் ஊனைநகர் வீர பண்டாரத்தின் மகன் சுப்பிரமணியத்துக்காக இளைசை ஏழுநகரத்தார்க்கு எழுதிக்கொடுத்த பாவனையில் பாடுவார் முத்தப்பர் தீட்டிய திருமுகம் இது. என்பாலுன் பாட்டை யியம்பினாய் வன்புலவர் உன்பாலென் பாட்டை யுரைக்கக்கேள் என்று தன் தந்தை சிவனின் இழிநிலை, தாய் உமையின் பல நிலை, அண்ணன் கணபதியின் அழுகுநிலை, மாமன்மாலின் திருவிளையாடல்கள், தன் தாழ்நிலை இவற்றையெல்லாம் முருகனே சொன்னதாக அங்கதம்படவும் கிண்டலாகவும் கதைசெறியவும் பாடுவார் முத்தப்பர் உட்குறிப்பாகப் பாடியிருக்கின்றார். கோழி பிடித்தேன் குறத்திதனை மாலையிட்டேன் பேழை வயிற்றனுக்குப் பின்னானேன் - நீள் கூந்தல் வேடிச்சிக் காய்வனத்தில் வேங்கைமர மாகிமயல் வாடிக்கை மாதருக்கு மாலானேன் - நாடறியத் தந்தைக் குபதேசஞ் சாற்றினேன் அப்பனுக்கு விந்தைக் குருக்களென்றார் மேதினியோர் என்றவாறு வரும் பல அடிகள் இலக்கிய நகை யுடையவை. தெய்வங்களே தங்களைப் பிறர் பார்க்கும் பார்வையில் வைத்துப் பேசுவதாக அமைந்துள்ள இலக்கியநெறி சுவையானது. இரந்த ஒரு தமிழ்ப்புலவனுக்குக் கொடை செய்யமுடியாமல் கந்தன் பேருடைய முருகன் தன் குடும்பத்தவர்களின் குறைகளை யெல்லாம் சொல்லுவதும் தான் யாதும் பொருள் கொடுக்க மாட்டாமல் வேறொருவரிடம் போ என்று பரிந்துரை முகம் கொடுப்பதும் நம் நெஞ்சை அள்ளுகின்றன. குன்றாக்குடி முருகுத் தெய்வமே தன் அன்பர்களான நகரத்தார்களின் தெய்வப் பற்றையும் செல்வத் தொகையையும் கொடைப் பெருமையையும் வழிவழிச் சிறப்பையும் வாயூரப் பாராட்டுவது தெய்வப் புகழன்றோ? அஞ்செழுத்தை யுட்செபிப்போர் அல்லும் பகலுமெனை நெஞ்சில்விட்டு நீங்காத நிண்ணயத்தார் அன்னைதந்தை தெய்வமுத லாசானைப் போற்றுதலாய் மன்னவரைக் கூட வணங்காதார் அதிச யிக்கக் காவேரி யாறுதனைப் பஞ்சுப் பொதியால் அடைத்த புகழாளர் சீரகப்பூந் தாரணிந்தோர் சிங்கக் கொடிபடைத்தோர் காரிணையாச் செம்பொன் கவிக்கீவோர் என வரும் கண்ணியடிகள் முருகப்பெருமான் கூறியனவாக இருந்தாலும் பாடுவார் முத்தப்பர் தம் இனத்துக்குச் சூட்டிய முடிகள். சோழ பாண்டிய மன்னர்கள் விடுத்த திருமுக வோலைகள் ஊர்ச்சபையார் தலைமேல் தாங்கி ஏற்றுச் சிறப்பித்த பாங்குகளைக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. வித்தாரக் கைவாங்கி வேலர் திருமுகத்தை வைத்தார் சிரசில் வணிகேசர் என்று இந்திரன்போற் செல்வமுடைய ஏழு நகரார்களும் தங்கள் விலாசமிட்ட தெய்வத் திருமுகத்தைத் தலைமேற் கொண்டனர்; எல்லோரும் அறிய வாசித்துக் காட்டினர்; கொடை செய்வதைத் தாழ்க்காது, நிதியும் ஆடையும் தங்கநகையும் நெல்லும் ஊரும் ஒவ்வோர் திருமணத்திற்கும் ஓர் பணமும் அதற்குரிய சாசனமும் பண்டாரத்துக்கு வழங்கினர். இவ்வாறு திருமுகம் கொடை முகமாக நிறைவு பெறுகின்றது பொருள் வகையாலும் பொருளாலும் கதையாலும் அங்கதத்தாலும் இனச்செய்தி யாலும் கொடையாலும் இத்திருமுகம் தெய்வமணக்கும் செய்யுளாம். திருமுகவிலாசம் பாடுவார் விலாசமாகும். செயங்கொண்டார் வழக்கம் என்னும் நூல் பாடுவார் தம் படை.ப்பில் தலையான செய்யுகளாகும். இது நூறு பாடல்கொண்ட சிற்றிலக்கியச் சதக வகையைச் சார்ந்தது. அறுசீர் விருத்தங்களால் அமைந்தது. இதற்கு விரிந்தவுரை ஒன்றுண்டு. கதைப் பகுதிகள் சுவையாகப் புனையப்பட்டுள. இவ்வுரையையும் முத்தப்பரே எழுதினர் என்று கருதலாம். பழமொழியும் அதனை விளக்கும் கதையும் இணைந்த ஒரு புதுத்தோற்றமாக இச்சதகம் விளங்குகின்றது. இவ்வகையில் ஒரு புதுவடிவு கண்டவர் பாடுவார். முத்தப்பர் நேமங்கோயிலர். ‘தென்நியமச் செயங் கொண்ட சோழீசர்’ என்பதனால் நியமம் என்பதே சரியான சொல் எனவும் நேமம் என்பது திரிபெனவும் கொள்ளவேண்டும். பெயரன் - பேரன் என வருதல் காண்க. எனவே தம் கோயிற்கடவுளர்மேல் இச்சதகம் பாடினார் முத்தப்பர் என்பது தெளிவு. செயங்கொண்டார் சதகம் என்று ஏனை நூல்கள் போலப் பெயர் பெறாமல் `வழக்கம்’ என்ற பெயர் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் இந்நூலில் வரும் பழமொழிகளும் உலக வழக்கத்தில் உள்ளவை. விளக்கக் கதைகளும் உலக வழக்கத்தில் உள்ளவை. அதனால் வழக்கம் என்ற பெயர் பொருந்தும். பாடுவாரின் நுணுகி ஆராயும் நுட்பத்திறத்தையும், எதனையும் மறித்து எதிர்த்துப் பார்க்கும் நோக்கினையும் இச்செய்யுட்கள் ஒளிகாலுகின்றன. இவர் பலவிடங்களிற் காட்டும் கதை யோட்டங்கள் நடைமுறை வழக்கிற்கு வேறாகவும் உள்ளன. அக்கதைகளைத் திறனாடும் நெறியும் வீறாகவுள்ளன. சான்றாகச் சில காண்போம். ‘ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு அழகு’ என்பது ஒரு பழமொழி. வாலியும் சுக்கிரீவனும் தம்முள் பகைத்துக் கொண்டதனால், இராமனுக்குச் சீதையைச் சிறைமீட்கும் காரியம் நிறைவேறிற்று என்பர் பாடுவார். ‘கொண்டவன் தூற்றினால் கூறையும் தூற்றும்’ என்பது ஓர் உலக வழக்கு. கௌதமுனி வெளியே சென்ற சமயம் பார்த்துத் தேவேந்திரன் மாறுவேடம் பூண்டு அகலிகையைக் கற்பழித்தான். இதனைக் கண்டுணர்ந்த முனிவர் இந்திரனைக் கேவல வடிவாகச் சபித்தார். இவ்வடிவினால், மறைவாக நடந்த ஒரு கேவல நிகழ்ச்சி உலகறியப் பரவி விட்டது. முனிவனுக்குப் பொறுமைத் தன்மை இருந்திருந்தால் மனைவியின் செயல் வெளிச்சமாகி இருக்காதே என்று முனிமேல் பழிபோடுவர் முத்தப்பர். பண்டுலகில் அகலியை இந்திரன் களவாய்த் தழுவி வெளிப்படுஞ் சாலத்தைக் கண்டுமுனி சகியாமல் இருவரையும் சபித்ததனால் கனச்சொல்லாச்சே இக்கதைக்கு இத்தகைய கருத்துரையைக் கம்பர் முதலாக யாரும் சொல்லியதில்லை. முத்தப்பர் முருகனிடத்துப் பற்றப்பர். ஆதலின் முருகன் திருவிளையாடல்களைப் போற்றிப் பாடுவதே அன்புமுறை, முருகன் வேடவள்ளியை மணக்கச் சில நயங்கள் செய்தான். அவற்றுள் ஒன்று வேங்கை மரமாய் நின்றது. அண்ணலருள் சரவணவேள் புனக் குறப்பெண் வெயிலினிற்கும் அவதி பார்த்துத் தண்ணுலவு வேங்கைமர நிழலாய்நின்று அவள் வருந்தும் தகைதீர்த் தாரே. குறவள்ளி வெயிலில் நின்று வருந்தும் துன்பம் பெறாமல் முருகப்பெருமான் அவளுக்கு நிழல் கொடுக்க மரமாய் நின்றாராம். காதல் வெயிலிற்பட்ட முருகன் இவ்வாறு சூழ்ச்சி செய்தார் என்று சொல்ல அன்புப் புலவருக்கு மனம் வருமா? `பெண்ணென்றால் பேயும் இரங்கும்’ என்பது உலகச்சொல். தெய்வ முருகன் இரங்குதற்குச் சொல்ல வேண்டுமா? என்பது முத்தப்பர் கருத்து. `இராமன் ஆண்டாலென, இராவணன் ஆண்டா லென்ன’என்பது உலகப்பெருவழக்கு. இதற்குப் புது விளக்கம் செய்கின்றார் முத்தப்பர். குறள் வடிவு கொண்ட திருமால் மாவலியரசனிடம் மூன்றடிமண் இரந்தார்; அரச குருவாகிய சுக்கிரபகவான் கொடாதே என்று தடுத்ததனால் ஒரு கண் கெட்டுவிட்டது. மாவலி கொடுத்தால் என்ன, கொடாவிட்டால் என்ன என்று சுக்கிரர் குறுக்கே நில்லாதிருந்தால், கண்கெட்டிருக்குமா? என்று கேட்கின்றார் பாடுவார். ஒதுங்கிப் பிழைக்கத் தெரியவில்லையே என்றும் குறிப்பிடுகின்றார். கூச்சமற மாவலி பூமியைக் கொடுக்க மால்வாங்கக் குறுக்கே சுக்கிரன் பேச்சறி யாமல் பேசிக் கண்ணிழப்பா னேனொதுங்கிப் பிழைக்கொண்ணாதோ என்பது பாடுவார் கருத்துரை. இவ்வாறு முன்னைக் கதை நிகழ்ச்சிகளை ஆழமாக ஊடுருவிப் பார்த்துப் புதுத்தடங்கள் கண்ட புலமைப் பெருமையுடையவர் பாடுவார். முத்தப்பர் பாடுவார் மட்டும் அல்லர்; கதைகளின் நுட்பங்களை நாடுவார் என்றும் கண்டும் போற்றுகின்றோம். 16. பாரதியின் புலமை அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார் பாட்டிலும் பாட்டின் புலமையிலும் பராதியார் பெருங்காதல் கொண்டவர்; படைப்புக்களில் ஆச்சரியமான பொருள்பாட்டே என்று துணிந்தவர்; கவிதையிலே நிலையான இன்பம் கண்டவர். பாட்டினால் நாட்டு மக்கள் பிணியையும் வறுமையையும் ஓட்டலாம்; மானுடச் சாதியை ஒன்றெனக் கூட்டலாம்; வைய முழுதும் பயனுறச் செய்யலாம்; நானிலத்தவர் மேனிலை எய்தலாம் என்று தெளிந்த புலவன் பாரதி. `என்தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேணும்’ என வரங்கேட்டார். கதைகள் சொல்லிக் கவிதை எழுதும் ஆசையும், நீண்ட காவியம் படைக்கும் வேட்கையும் மக்களின் வாழ்க்கைச் சித்திரங்களை நாடகச் செய்யுள் ஆக்கும் விழைவும் பாரதியாருக்கு இருந்தன. `இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்ற கடமையை அவர் பிறர்க்கே யன்றித் தமக்கும் சொல்லிக்கொண்டார். இவ்வாசைகளை நிறைவேற்றத் தக்க கல்விப் பெருக்கும் கவித்துடிப்பும் வாய்த்திருந்த பாரதியாருக்கு, ஐயகோ! வாழ்நாள்தான் நிரம்ப இல்லை. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர் (குறள்.779) கவியுளம் கம்பர், வள்ளுவர், இளங்கோ நூல்களில் மதி தீட்டிய பாரதி புலமையோடு பாடவேண்டும் என்று வேட்கை கொண்டார். `பாட்டுத்திறம்’ என்றும், `கவியுளம்’ என்றும் புலமையை அவர் சுட்டுவர். `யாமறிந்த புலவரிலே’ என்று எடுக்கும் எடுப்பை நினைக்கும்போது அம் முப்புலவர்கூடத் தம்மையும் சேர்த்து ஒரு நாற் புலவராக நாடு எண்ண வேண்டும் என்ற குறிப்பு நம் புலவருக்கு ஓடியிருக்கும். `திறமான புலமை யெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ எனக் கூறுவரேல், புலமையைப் பற்றி அவர் எத்துணை உயர்வாக மதித்திருக்க வேண்டும்? பிரான்சு, ஆங்கில நாட்டுப் புலவோர்’ `என்தன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார்’ எனச் சீட்டுக்கவி விடுப்பரேல், தம் புலமை வணக்கங்கொண்ட புலமையென அவரே பெருமிதம் கொண்டிருந்தது வெளிப்படை. ஆதலின் மக்கட்கு எனப் பாடிய பாரதியார் தம் எளிய பாடல்களில் புலமை காண்பது அரிது என ஒரு சாரார் கருதுவதும் காண்பது தவறு என ஒரு சாரார் கருதுவதும் கொள்ளத் தக்கனவல்ல. `ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்கு உள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்தல் வேண்டும்’ என்பது பாஞ்சாலி சபதத்தின் முகவுரை. வேதத் திருவிழியாள் - அதில் மிக்க பல்லுரையெனும் கருமையிட்டாள் என்ற அடிகளில் மறைந்துள்ள புலமை நயத்தைப் பாரதியாரே பின்வருமாறு எழுதியுள்ளார்: `மை கண்ணுக்கு நல்லது; அழகுங்கூட. ஆனால் அளவுக்கு மிஞ்சிப் பூசினால் விகாரமாகத் தோன்றுவதுடன் கண்ணே போனாலும் போய்விடும்.”அருமையில் எளிமையும் எளிமையில் அருமையும் இருப்பது உலகியற்கை. எளிய பாடல்கள் எல்லாம் வெளிய பாடல்கள் ஆகா. அண்ணாமலை நகரில் ஒரு பாரதி விழாவிற்குத் தலைமை தாங்கிய மகாமகோபாத்தியாய பண்டித மணியார், ஓவியர்மணி இரவிவர்மா மேல் பாரதி பாடிய இரங்கற் பாடல்களை ஒவ்வொன்றாகச் சொல்லி, உட்கிடக்கும் புலமை வளங்களை அவையோர் வியக்க எடுத்துக் காட்டினர். பாரி காதை பாடிய மகாவித்துவான் இராகவையங்கார் பாரதியாரின் பாட்டுத் திறத்தைப் புகழ்ந்து உரையாடினார் என்று பண்டிதமணியார் கூறக் கேட்டிருக்கின்றேன். பாட்டுக்கு ஒரு வித்தகன் என்றோ வேந்தன் என்றோ கூறாது, `பாட்டுக்கு ஒரு புலவன்’ என்று கவிமணி பாடிய புலமைத் தொடரை நினைமின். ஆதலின், மேலெழுந்த வாரி பாரதிகவியைப் படிப்பவர்கள் கவியுளம் காணமாட்டார்கள் என்பது சொல்லவும் வேண்டுமோ? பன்னூற் பயிற்சி புலமைத்திறம் பெறுதற்குப் பன்னூற் பயிற்சி இன்றியமை யாத அடிப்படையாகும். இராமாயணம், திருக்குறள், சிலப்பதிகார ஆசிரியர்களைப் பலவிடத்தும் போற்றிக் கூறுவதால், அன்னோர் பெருநூல்களில் மனந்தோய்ந்தவர் பாரதியார் என்பது தானே விளங்கும். எனினும், பாரதி கற்ற தமிழ் நூல்கள் இவ்வளவே என்று சிலர் அறியாது நம்புகின்றனர். யாதும் தமிழ் முகம்பாராத் தமிழர் சிறந்த இம் மும்முகங்களையாவது பார்க்கட்டும்; படிக்கட்டும்; எடுத்த தமிழ்ப் பிறப்பில் பயன்பெறட்டும் என்று ஒரு வழி காட்டினாராகவே, மூவர் புகழ்ச்சியைக் கருதவேண்டும். பாரதியார் ஆரியம், ஆங்கிலம், பிரெஞ்சு முதலாய மொழிகளின் இலக்கியங்களைக் கற்றவர்; காளிதாசனையும் சாகுந்தலத்தையும் அருமையான முறையில் போற்றிச் சொல்லுகின்றார். பல்கலை பலதுறைப் பயிற்சி அவர்க்கு உண்டு. உலக வரலாறும் தமிழ்நாட்டு வரலாறும் தமிழ்மொழி வரலாறும் அவர் அறிந்தனவே. பாரதியார் தமிழ்நூற்கல்வி பெரியது. ஐவகை இலக்கணங்களையும் முறையாகக் கற்றவர். சந்தி பிரித்தெழுவது அவர் வழக்கமில்லை. தொடரிலக்கண முறைப்படிதான் சொற்களை உரைநடையிலும் தொடுத்து எழுதக் காண்கின் றோம். சீர்தோன்றப் பாடல்களை எழுதியிருக்கும் அவர் தம் கையெழுத்துப் படிகளே யாப்புப் பயிற்சிக்குச் சான்றுகள். பாவும் பாவினமும் எல்லாம் செய்யுளியல் குன்றாதும் இசை குன்றாதும் பாடவல்லவர் பாரதியார். இஃது உண்மையென்று சொல்ல நினைப்பதே நகைப்பிற் கிடமாகுமெனின், சான்று காட்டல் என்னாம்? பொன்ன னாரருள் பூண்டில ராமெனிற் கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துயர்க் காத லஃது கருதவும் தீயதால் எனப் பொருளிலக்கணம் பற்றிய ஒரு திணையை விளக்கிப் பேசுகின்றார் பாரதியார். அவர் சங்கத்தமிழ் கற்றவர் என்பது அகநானூற்றிலக்கியங்களை விலைக்கு அள்ளி வந்த கதையால் அறியலாம். வியாச பாரதத்தையும் வில்லி பாரதத்தையும் ஒப்புறழ்ச்சி செய்து கற்றுப் பாஞ்சாலிசபதம் இயற்றினார் என்பது தெளிவு. ஆழ்வார், நாயன்மார், திருமூலர், பட்டினத்தார், தாயுமானார் பாடல்களை நன்கு பயின்றவர் என்பதனைப் பாரதி தம் சமயப் பாசுரங்களே காட்டும். என்றாலும், பாரதி தாம் கற்ற நூற்கருத்துக்களுக்கு அடிமைப்பட்டவர் அல்லர்; படிக்கும் ஆற்றலினும் படைக்கும் ஆற்றல் மிக்கவர்; கற்கும் அமைதியினும் கவிசெய்யும் வெறிகொண்டவர். அப்பரும் பாரதியாரும் பாரதியாரின் சமயக் கருத்துக்கள் பல நாவுக்கரசரின் கருத்துக்களோடு ஒத்துள்ளன. தேவாரத்தின் பொருளும் சொல்லும் பாரதி பாடல்களில் கலந்திருப்பக் காண்கின்றோம். மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் விண்பால் திசைகெட்டிருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே - (அப்பர்) உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே - (பாரதி) சிறுதெய்வ வணக்கம் இருவர்க்கும் உடன்பாடன்று. ஒரு பெருங்கடவுள் சிவனே என்பது அன்னவர்தம் கோட்பாடு. `சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்’என்ற தேவாரத்தின் விளக்கமாக, `மாடனைக்காடனை வேடனைப் பற்றி மயங்கும் மதியிலிகாள்’எனப் பாரதியில் வருவதும்: `சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றேம்’ என்பதன் சான்றாக சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளிரோ’எனப் பாரதியில் வருவதும் ஒப்புமையாகும். நாவுக்கரசர் `பாராண்டு பகடேறி வருவார் சொல்லும் பணிகேட்கக் கடவோமோ’ என்று அரசியலில் உரிமை முழக்கம் செய்தவர்; அரசனை எதிர்த்தவர். சமயத்துறையிலோ ஆண்டான்அடிமையை நாடியவர்; `சிவனே என்னும் நாவுடையார் நமையாள உடையார்’என்று பணிவு தலைக்கொண்டவர். அப்பரின் உலகவுரிமையும் இறையடிமையும் நம் பாரதியாரை மிகவும் கவர்ந்தன. பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் - (பரி) பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம். - (பாரதி) நாமார்க்கும் குடியல்லோம்....... தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே. - (அப்பர்) பாரதியார் சொல்லும் `பரிபூரணன்’ யாவன்? தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மையன் எனத் தேவாரத்தால் விளங்கல் காண்க. தேவரும் பாரதியாரும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காவியம், பெருங்கதை, சூளாமணி, பெரியபுராணம், பாரதம் என்ற பல பெருநூல்கள் தமிழ்மொழியில் உள. இவ்விலக்கியப் பரப்பை உட்கொண்டுதான் `தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்’ என்று பாரதியார் தமிழ்ப் புகழ் கூறினார். கம்பர், இளங்கோவின் காவியம் இரண்டனைத்தான் இப்புகழ்மாலை குறிக்கும் என்று கருதுதல் பிழையாகும். தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல் தீய கைக்கிளை யானெவன் பாடுதல் என்ற பாரதி பாட்டில் தேவர் என்பது ஒருகால் சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரைச் சுட்டலாம். பேரரசன் மகனான சீவகன் சுடுகாட்டில் யாரும் துணையின்றிப் பிறக்கின்றான். `இவ்வாறாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கியல் வேந்தே’ (309) என அவன் பிறப்பின் அவலநிலை தேவராற் பாடப்பெறுகின்றதை நினைக. சிந்தாமணிப் பொருட்குறிப்பு பாரதியில் காணப்பெறும் இடங்கள் இன்னும் சிலவுள. தவழ்மதுக் கோதை மாதர் தாமரைப் பூவ தாக உமிழ்நகை வேலி னானும் ஒண்சிறை மணிவண்டு ஒத்தான் -(சிந்தா. 191) தோயுமது நீயெனக்கு தும்பியடி நானுனக்கு - (பாரதி) பொன்னனாள் அமிர்த மாகப்புகழ் வெய்யோன் பருகியிட்டான்.... மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள்.. - (சிந்தா. 190) பானமடி நீயெனக்கு பாண்டமடி நானுனக்கு - (பாரதி) கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் முதற்குலோத்துங்கன் கலிங்கவெற்றிக்குப் பரணி பாடியவர். குலோத்துங்க சோழ னுடைய முன்னோர் பெருமைகளைச் சொல்லும்போது, கரிகாலன் இமயமலைச் செண்டினால் அடித்துத் திருத்தினான் எனவும், `பண்டு நின்றபடி நிற்க’ என்று புலிப்பொறி பொறித்தான் எனவும் புலவர் பாடுகின்றார். கரிகாலனால் இமயம் அடிபட்ட கருத்தையே, விண்ணை யிடிக்கும் தலையிமயம் எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் என்ற பாரதியின் தமிழ் வீரப்பாட்டு குறிக்கும் இவ்விடத்துக் கலிங்கத்துப்பரணி நினைவு பாரதியாருக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்று துணிதற்கு, அடுத்துவரும், `சமர்பண்ணிக் கலிங்கத் திருள் கெடுத்தார்’ என்ற அடியே சான்றாகும். `தவமே புரியும் வகையறியேன்’ என்ற விநாயக நான்மணி மாலைப் பாடல் `தவமே புரிந்திலன்’ என்னும் திருவாசகப் போக்கை நினைவூட்டுகின்றது. சிலப்பதிகாரம், திருக்குறள், இராமாயணம், ஆகிய முந்நூல்களிலிருந்து பாரதியார் மேற்கொண்ட பொருளும் சொல்லும் நெறியும் பலப்பல. அவற்றை விரித்துச் சொல்ல இஃது இடனன்று; கட்டுரைக் கிடையே காண்க. ஒப்புமைப்பதிப்பு பாரதி கவிதைத் தொகுதிக்குப் புத்தம் புதியதோர் பதிப்பு இனி மிக இன்றியமையாதது. சங்க நூல்களுக்கும் பிறநூல்களுக்கும் உ.வே.சா.செய்த பதிப்புக்களைக் காணுங்கள். அவைபோல, ஒப்புமைகளும் மேற்கோள்களும் கொண்ட பராதி பதிப்பு ஒன்று வருவதைத் தமிழுலகம் விரும்பியேற்கும். இம்மேற்கோட் பதிப்பு பாரதியின் புலமையை நாடறியச் செய்யும். பாரதியார் ஓரளவு தமிழ் கற்றளவில் நிரம்பப் பாடிவிட்டார் என்றும், கவிஞர் ஆவார்க்கு நூற்பயிற்சி அத்துணை வேண்டியதன்று; பாரதியைப் பார் என்றும், பாடிக்கொண்டே யிருந்தால் புலமை வந்துவிடும் என்றும் இளங்குழுக்கள் படிறு கொண்டு வளரப் பார்க்கின்றன. யாப்பிலக்கணம் கற்றபின் பாடும் ஆசையோ, பெருந்தமிழ் நூல்களின் பாவெள்ளத்தில் மூழ்கி எழுந்து பாடும் ஆசையோ இளந்தமிழ்க்கவி உள்ளங்களில் தோன்றவில்லை. சொல்லாலும் தொடராலும் பொருளாலும் முன்னைத் தமிழ்ப் பனுவல் களோடு ஒப்பிட்டுக்காட்டும் ஓர் ஆராய்ச்சிப் பதிப்பு பாரதீயத்துக்கு வந்தால், வருங்காலத் தமிழ்வளர்ச்சியில் ஒரு நன்மரபு ஏற்படும்; மயக்கம் அகலும்; பாரதியைக் கற்கு முறையிலும் ஒரு செம்மை மக்களிடம் காணப்படும். இம்மே ற்கோட் பதிப்பில் பாரதிக்குப்பின் வந்த நூல்களிலிருந்தும் ஒப்புமை காட்டவேண்டும்; அதனால் பாரதியின் செல்வாக்கு வெளிப்படும். சொற்கிடப்பு தன் மனத்திற் பதிந்த பொருளைக் கற்பவர் மனத்திலும் பதிக்கவல்ல மொழியாற்றலே புலமை எனப்படும். சிலப்பதிகாரம் நெஞ்சை அள்ளியதாகப் பாரதியார் சுட்டுவர். இக்கருத்துப் பதிப்பிற்குப் புலவன் ஆளும் நெறிகள் பலதிறத்தன. அப்புலமைக் கூறுகளுள் ஒன்று சொல் வீழ்ச்சி. புலவன் பாடலில் தொடுக்கும் ஒவ்வொரு சொல்லும் பொருட்கு இன்றியமையாச் சொல் என்றும், மாற்றினால் நயம் கெட்டுப்போம் என்றும் கூறுப. அங்ஙனம் கூறின் எல்லா இடமும் அழுத்தம் உடையன எனப்பட்டு, ஓரிடமும் பொருள் சிறக்காது காணவேண்டிவரும். நீர்வீழ்ச்சி பருந்தின் வீழ்ச்சி போல, பாட்டில் கருத்துச் சீர்த்தவிடத்துத் தக்க சொற்களைப் புலவன் பெய்கின்றான் அல்லது சொற்கள் வந்து விழுகின்றன. பொருள்களை முறையாகச் சொல்லிச் செல்லும்போது, கருத்தழுத்தம் செய்ய வேண்டியக்கால், புலவன் சொல்லழுத்தம் செய்வான்; நெற்றிக்குத் திலகம் இடுவான். கவியின் உள்ளம் விளங்கித் தோன்றும். கொடிய துரியோதனன்கூடத் துகிலுரியும் இழிசெயலைத் தானே செய்ய விரும்பவில்லை. துரியோதனன் சொற்கேட்டு அச்செயல் செய்ய முன்வந்தான் துச்சாதனன். அவன் கொடுமை கயமைகளை எப்படிக் காட்டுவது? எழுந்தவன் திரௌபதியின் ஆடையைப் பற்றினான் என்றால் தீமை புலப்படுமா? துச்சாதனன் எழுந்தே - அன்னை துகிலினை மன்றிடை யுரிதலுற்றான் திரௌபதி துகில் என்னாது அன்னை துகில் என்று சொல்லுங்கால், தாயின் துகிலை உரிந்தவன் கொடுமை சட்டெனப் பதிவதோடு, சினவுணர்ச்சியும் தோன்றிவிடுகின்றது. `மன்றிடை யுரிதலுற்றான்’ என்றபோது, அவையின் சிறுமையும் உடன்தோன்றக் காண்கின்றோம். `அன்னை’ என்றதனால் உரியத் தகாதவள் துகிலை உரிந்தான் என்ற குறிப்பும், இந்நிகழ்ச்சியைச் சொல்ல வந்த கவிஞனின் அறமும் புலப்படுகின்றன. துரியோதனனுக்குப் பாண்டவர்களைக் காட்டிலும் அன்னவர் பத்தினி மேல்தான் சினமிகுதி. அவளை இழிவுபடுத்துவதே அவன் செயல்களின் நோக்கம். `அன்று நகைத்தாளடா - உயிர் மாமனே அவளை என் ஆளாக்கினாய்’ என்று திரௌபதி அடிமைப் பட்டதில் அவன் தனி யுவகை அடைகின்றான். துரியோதனன் ஒரு வஞ்சகன். அவன் சொற்கள் நேர்பொருளும் தரும், மறைபொருளும் தரும். இம்மாந்தனை அங்ஙனம் அமைக்க வேண்டுவது புலவன் பொறுப்பு, சூதாட்டத்தில் திரௌபதி தருமனால் விற்கப்பட்ட பொருளாவாள் என்பது கதை. முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவிமகள் இன்னே நாஞ்சூதில் எடுத்த விலைமகள் என்ற தொடரில், துரியோதனன் திரௌபதியை `விலை மகள்’ என்று காரணப் பெயராகக் குறிக்கின்றான். என்றாலும், அவள் ஓர் பரத்தை என அவன் கருதும் இழிவுக் குறிப்பும் அச்சொல்லில் அடங்கியுளதன்றோ?” பெருமிதம் வாயாதவன் புலவன் ஆகான். அவன் சொல்லும் சொற்கள் மக்கள் செவியில் ஏறா. தமிழ்நாட்டிற் பிறந்த புலவர்களுள் சிறந்த பெருமிதத்தவர் பாரதியார். `மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர் தங்களையும் வணங்கலாதேன்’ என்று அவர் கூறும் நெடுமொழிப் பாட்டை உள்ளுக. `பெறுவமற்றுள் யாமறிவதில்லை’ (61), `யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை’ (300), `அவரன்ன ஒப்பாரி யாம் கண்டதில்’ (1071) எனத்தாம் கண்ட மூன்று துணிவுகளைக் கூறவந்த வள்ளுவர், யான் என்னாது `யாம்’ என்ற தன்மைப்பன்மை நடையில் மொழியக் காண்கின்றோம். இந்நடையே துணிவுப் பொருள் வெளியீட்டிற்கு ஏற்றது என்று கண்ட பாரதியார் - குறள் கற்ற பாரதியார்- `யாமறிந்த மொழிகளிலே, `யாமறிந்த புலவரிலே’ எனச் சொல்லாட்சி செய்துள்ளார். பாரதியார் வேறிடங்களில் இங்ஙன் ஆட்சி செய்ததாக அறியப்படவில்லை. கம்பன் பிறந்தது, உலகிற்கு வள்ளுவனைத் தந்தது, சிலப்பதிகாரம் படைத்தது, வேதம் நிறைந்தது. வீரஞ்செறிந்தது. காதற்கன்னியர் சூழ்ந்தது, புவிச்செல்வம் அத்தனையும் பெற்றது, தமிழ்மொழி வழங்குவது எனப் பல சிறப்பு உடைய தமிழகத்தை எப்படிக் குறிப்பது? நிறைந்தது, நிரம்பியது, விரிந்தது, தொக்கது, குழுமியது, பரந்தது என்றெல்லாம் சொல்லினால் உள்ளக் கருத்துப் பதியுமா? `புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு’ என்றார் பாரதி. காடு மண்டிக் கிடத்தல் என்ற வழக்குத் தொடரைச் சிறிது மாற்றியமைத்து உள்ளங் கவர்ந்தார். `குமரி யெல்லை வடமாலவன் குன்றம் இவற்றிடையே’ என்று வரம்பு கூறியதனால் இவ்வெல்லைக்கு வெளியுலகத்திலே புகழ் இவ்வளவு மண்டிக் கிடக்கவில்லை என்றும், பரவலாகவே காணப்படும் என்றும் குறிப்புக் காட்டினார். வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா குமரி முனைக்கு `வாழும்’ என்ற அடை கொடுத்ததன் கருத்து என்ன? தமிழகத்தின் தென்னெல்லை கடல்கோளால் அழிந்து குறுகி வந்த நில வரலாற்றைப் பாரதியார் அறிவர். இப்போதுள்ள குமரி முனை இனியும் அழியாது வாழ வேண்டும் என்பது அவர் ஆசை. அவ்வாசையை `வாழும்’ என்ற சொல்லால் புலப்படுத்துவர். நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தஞ் தவஞ்செய் குமரி - ஓரத்திலே ஏன் நிற்கின்றாள்? தவம் ஏன் செய்கின்றாள்? இவ்வோரத்தோடு கடல் கிடக்க வேண்டும். முன்னேறி அழிக்கக் கூடாது என்பதுவே தவத்தின் நோக்கம் என இப்பாடலுக்கு விபுலானந்த அடிகள் நயங்கூறினாரெனச் சொல்லுப. வரை, சிலம்பு, அடுக்கம், குன்று, ஓங்கல் என்ற பல சொற்கள் மலையின் பொருளாக வரும். அவற்றுள் வெற்பு என்பது ஒரு சொல். ஒருநாட்டிற்கு மலையரண் இருக்குமாயின், வெற்றி எளிதில் பெறலாம். மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாநில மீதது போற்பிறி திலையே எனப் பாரத நாட்டின் முதற்பெருமைக்கு உரியதாக இமயமலையைப் போற்றுவர் புலவர். இது வடவரணாய் நின்று இந்திய நாட்டைக் காக்கின்றது. வடக்கே வந்து இதனை வென்றார் யாரும் இலர். அங்ஙன் வெற்றித் திருவுடைய இமயத்தையும் தெற்கே யாண்ட தமிழ்வேந்தர்கள் வென்ற வரலாற்றை இலக்கியங்கள் பாடுகின்றன. விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்குந் திறனுடையார் என்றும் தமிழ்மறம் பாடும் பாரதியார், இமயம் எனும் வெற்பு என்று சொல்லாளுதல் நோக்குக. வெற்பு என்னும் தொழிற்பெயர் முதற்கண் வெற்றியைக் குறிக்கும்; அரணாய் நின்று வெற்றிதரு மலைக்கும் பெயராகும். ஓசையின்பம் ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ - பாரதி. ஒலியின் கூட்டமே சொல்லாகும். ஆதலின் புலவன் ஒலிநயத்தாலும் கருத்தைப் புலப்படுத்துவான். அதற்கு நாம் அவன் பாடல்களை வாய்விட்டுப் படிக்க வேண்டும். சந்திபிரியாதும் எதுகைமோனை கொல்லாதும் சொல்லிப் பார்க்க வேண்டும். அப்போது கருத்து செவி வழியாக நெஞ்சிற் பாயும். `சுவை நண்ணும் பாட்டினொடு தாளம், மிக நன்றா உளத்தழுந்தல் வேண்டும்’ என்று சத்தியிடத்து வரங்கேட்ட பாரதியாரின் கவிகளில் ஒலிநயத்திற்குக் குறைவேயில்லை. செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே இப்பகுதியில் மெல்லிய வண்ணமும் னகரவொலிகளும் அமைந்திருத்தலால், தமிழின் இனிமை சொல்லானேயன்றி ஒலிநயத்தானும் விளங்கும். இராவணன் பாடினும் இப்பாடல் இனிமை குன்றாது. `பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’என வல்லொற்று இரட்டித்து நிற்றலால், வீரப்பொருள் தானே வெளிப்படுகின்றது. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் சீர்தோறும் தொடங்கும் நெட்டொலிகள் அச்சத்தின் ஏற்றத்தையும், அடுத்துவரும் குற்றொலிகள் அதன் இறக்கத் தையும் புலப்படுத்துவன. வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே (2914 -16) என்ற சிலப்பதிகார அடிகளில் முரசின் முழக்கொலியைக் கேட்கின்றோம். அதுபோலவே பாரதியும் `வெற்றியெட்டுத் திக்குமெட்டக் கொட்டு முரசே’ எனப் பறையறைகின்றார். இங்ஙனம் முரசுப் பாடல்களில் டகாரவோசை கட்டாயம் இடம் பெறுதலாற்போலும், டமாரம் என்பது (டகாரத்தின் திரிபு) முரசுக்கு ஓர் பெயராயிற்று. `டொண்டொண்டொண் என்னும் பறை’ (25) என்ற நாலடிச் செய்யுளை ஒப்புநோக்குக. இயக்க நடை பாட்டின் இயக்கம் நடை எனப்படும். புலவன் கருதிய பொருளைச் சொல் குறிக்கும்; ஒலி உணர்த்தும்; நடை எடுத்துக்காட்டும். ஒருவன் விரைந்து நடப்பதிலிருந்து காரியத்தின் விரைவைப் புரிந்துகொள்கின்றோம். `பைய நடக்கவும் தேற்றாயால், நின்பெண்மை ஐயப்படுவது உடைத்து’ என நடைக்கும் பண்புக்கும் தொடர்பு சுட்டுகின்றார் முத்தொள் ளாயிரவர். புகழை விரும்பிய மனைவியை யுடையானுக்கே ஏறுபோற் பீடு நடை இருக்கும் என்கின்றார் வள்ளுவர். கண்ணகியைத் தனிமையில் வைத்துப் பிரியும் கோவலன் நடை தளர்ந்தான் என எழுதுகின்றார் இளங்கோ. அருமையான செல்வம் - என்பால் அளவிலாத துண்டு - ஒருமடங்கு வைத்தால் - எதிரே ஒன்பதாக வைப்பேன் என்று உருளுகின்றது பாஞ்சாலி சபதத்தின் சூதாடுபாட்டு. `சூதாட்ட வருணனைக்கும் அதில் ஏற்படும் பரபரத்த வார்த்தைகளையும் செய்கைகளையும் விளக்குதற்கும் இந்நடை மிகவும் பொருந்தியது என்பது எளிதிலே காணப்படும்’ என்று பாரதியாரே நடைபற்றி விளக்கம் தருகின்றார். எனவே பொருளுக்கேற்ற நடைகளைத் தேர்ந்து பல பாடல்களை ஆக்கியிருப்பார் என்றும், அப்புலமைத் திறத்தைக் கண்டறிந்து கற்றல் நம் கடமை என்றும் தெரியவேண்டும். ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா என்ற பாட்டு குழந்தைக்கேற்ற கொஞ்சு நடையாகும். `ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்ற அடி யார் தலையையும் ஆட்டிவைக்கும் கூத்து நடையாகும். `சுற்றி நில்லாதே போ, பகையே’ என்பது எச்சரிக்கை நடையாகும். `தாரையடி நீ எனக்கு; தண்மதியம் நான் உனக்கு’ என்பது காதல் நடை. `முன்னை யிலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில்’ என்பது பெருமித நடை. `நெஞ்சு பொறுக்கு திலையே’ என்பது ஏளனநடை. `வலிமையற்ற தோளினாய் போ போ போ’ என்பது சின நடை. `மதலையர் எழுப்பவும் தாய் துயில் வாயோ’ என்பது அன்பு நடை. `பகைவனுக்கு அருள்வாய்’ என்பது ஆண்மை நடை. `மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் என்தன் மூச்சை நிறுத்திவிடு’ என்பது வெறிநடை. `சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ’என்பது இசை நடை. வில்லினை யெடடா - கையில் வில்லினை யெடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா ஒரு சொல்லையே அடுக்கிச் சொல்லியும், அடுத்துச் சொல்லியும் புலவன் கருத்துக்கு வேகம் ஏற்றுகின்றான். `போரடா பொருதியாயிற் புறப்படு புறப்படென்றான்’ என இரணியன் கூற்றாகக் கம்பர் நடை தொடுப்பர். கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய் வண்ணப் பொற் சேலைகளாம் - அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே பாலருந்து மதலையர் தம்மையே பாத கக்கொடும் பாதகப் பாதகர் மூலத் தோடுகு லங்கெடல் நாடிய மூட மூடநிர் மூடப் புலையர்தாம் உரிய உரியத் திரௌபதியின் துகில் கண்ணபிரான் அருளால் வளர்ந்துகொண்டே சென்றதை, `வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே’ என்று ஒரு சொல்லை மும்முறை அடுக்கி, விரைவும் துணிவும்படப் பாரதியார் சுட்டுகின்றார். தட்டுத் தடையின்றித் துகில் ஒழுங்காக வளர்ந்தது என்பதனை, ஏற்ற விறக்க மின்றி ஒரு சீராக வரும் (குற்றொலியாகவே வரும்) ஒலி நயத்தாலும் உணரமுடிகின்றது. பிள்ளை மணஞ்செய்யும் கொடியவர்களை, பாதகக் கொடும் பாதகப் பாதகர். மூடமூட நிர்மூடப் புலையர்’ என்று வசைச் சொற்களைத் தொடுத்துக் கூறுதல் காண்க. அடுக்குநடையைப் புலவன் அரிதாகவே கையாளவேண்டும். நீளக் கையாண்டால் படிப்பவர்க்கு உணர்ச்சி பிறக்காது. ஆசிரியன்மேல் நகைப்பே பிறக்கும். நடைக் குறிப்பு புலவன் சொற்களை வைக்கோல்போல் ஏற்றும் வண்டிக்காரன் அல்லன்; பீ பீ ஊதிக்கொண்டு செல்லும் தெருவூதியல்லன்; ஒத்த நடையிடும் படையாளன் அல்லன். அவன் சொல்லுள்ளும் ஒலியுள்ளும் நடையுள்ளும் கவியுள்ளம் ஆழ்ந்திருக்கும். அவ்வுள்ளம் ஓரடியாழத்திலும் இருக்கலாம்; ஓராயிரம் அடி ஆழத்திலும் இருக்கலாம்; ஒரு பாடலிலும் இருக்கலாம்; பல பாடல்களிலும் தொடரலாம். ஒரு சொல்லிலும் இருக்கலாம். சொற்றொரிடலும் சீரிலும் அடியிலும், அடிகளிலும் காணப்படலாம். பாரதி சொல்லுமாப் போல, கவியெனப்படுவான் உள்ளம் ஆழத்தில் கட்டாயம் இருக்கும். இக்கவியுள்ளத்தையே தொல்காப்பியர் `நோக்கு’ என மொழிவர். இந்நோக்கின் ஆழத்திற்கும் அழகிற்கும் மிகுதிக்கும் தகச் சுவைஞர்கள் புலவனைப் போற்றுப. நோக்கு நயங்களை ஆசிரியனே கருதி வைப்பதும் உண்டு; அவன் புலமையால் அந்நயங்கள் தாமே அமைந்துவிடுவதும் உண்டு. தாமே அமையுமாறு புலமையாற்றல் மிக்க புலவன் நூலிலே தான் `நவில் தொறும் நூல்நயம்’ஊறிக்கொண்டிருக்கும். வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு. மொழியால் தமிழ்ப்பற்றும் இனத்தால் தமிழர் பற்றும் நாட்டால் இந்தியப்பற்றும் கொண்டவர் பாரதியார் என்பது மேலையடிகளால் புலனாகும். இக்கோட்பாட்டிற்கு முரணில்லாமல் அவர் தம் பாடல்களக்கு உரையும் நயமும் காணவேண்டும். தமிழ் உலகமொழிகளுள் இனியது; அவ்வினிய மொழியின் பெயரால் மக்கள் தமிழரென அழைக்கப்படு கின்றனர். ஆனால் அம்மக்கட்கோ தமிழ் தெரியாது. அவரோ பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப்பான்மை கெட்டு வாழ்கின்றனர். மொழிகளிற் சிறந்த தமிழால் பெயர்கொண்ட இம்மக்கள் நிலைமை மொழியின் பெருமைக்கே சிறுமைதரும். `நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!’ என்று காரணப் பெயருக்கும் முரணான வாழ்க்கைக்கும் பொருத்த மில்லையே என்று கேட்கிறார் பாரதியார். வேறு எங்காவது போய் வேறு பெயர் சுமந்து வாழுங்களேன்; தமிழரெனப் பெயர் தாங்கி இங்கு இருக்காதீர்கள் என்று நாணச் சொல்கின்றார். `ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்’ - வாழ்கின்றோம் என்பதுவா புலவன் கருத்து? ஐம்புலன்களில் பேச்சு, கேள்வி, பார்வை என்னும் சிறந்த மூன்றை இழந்து விட்டீர்கள்; உடம்பை வளர்த்து ஏதோ மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதால், நீங்கள் இன்னும் சாகவி ல்லை என்று சொல்ல வேண்டியிருக்கின்றது; இதுவா வாழ்க்கை? என இடித்துரைப்பதுவே புலவன் நோக்கமாகும். புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவுங் கூடுவ தில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ! இந்த வசையெனக் கெய்திடலாமோ சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் இம் முப்பாடல்களையும் தொகுத்து நோக்கும்போது தான் புலவன் உட்கிடை இதுவெனப் புலப்படும். 1. அறிவியல் நூல்கள் தமிழில் இல்லை. 2. அறிவியலைச் சொல்லும் ஆற்றல் தமிழுக்கு இல்லை என்பவை ஒருவன் வெளியிட்ட கருத்துக்கள். அவன் முதற்கருத்தில் தவறொன்றுமில்லை. `கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்’ என்று ஏவுவதிலிருந்தே பேதை என்பான் கூறிய முதற்கருத்தை - அறிவியற் பனுவல்கள் தமிழில் இல்லை என்பதைப் பாரதியாரும் ஒப்புகின்றார் என்பது தெளிவு. தமிழுக்குச் சொல்லாற்றல் கிடையாது; சாகும் என்று மற்றொரு கருத்துக் கூறினானே அவன்! அதற்காகத்தான், `அந்தப் பேதை யுரைத்தான்’ என்று ஒரு வசவுச்சொல் கொடுத்தார் பாரதியார். `மெல்லத் தமிழ் இனிச்சாகும்’ என்று அவன் சொல்லிய ஈற்றுச் சொல்லைக் கேட்ட ஒரு தமிழன்பருக்கு நெஞ்சு பொறுக்க முடியுமா? `கொன்றிடல் போல் ஒரு வார்த்தை’ என்று துடிதுடித்தார் பாரதியார். இக்கருத்தைச் சொல்லியவனை விடாது வைது தூற்றிக் கொண்டிருப்பது புலவன் உள்ளம் அன்று காண். திறமை யில்லை என்று சொல்லுபவர்களை நீங்களும் என்போல் இகழுங்கள் என்று ஏவிவிடுவது புலவன் நோக்கன்று காண். இப்படி ஒருவன் சொன்னான் என்று நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டித் தமிழ் மக்கட்கு மானவுணர்ச்சி ஊட்டுவதும், தமிழின் வசையைத் துடைப்பதும், அறிவுத்துறை நூல்கள் இல்லாக் குறையை நிறைவு செய்வதுமே பாரதியின் பாடல் நோக்கமாகும். என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ! இந்த வசையெனக் கெய்திட லாமோ சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் பேதையுரைத்தான் - ஆ! வசை - திக்கெட்டும் ஓடுங்கள். திரட்டிக்கொண்டு வாருங்கள் - எனது ஆருயிர் மக்களே; என்று படைத் தலைவன் கட்டளையிடுமாறு தமிழ் மக்களை வேகப்படுத்துகின்றார் ஆசிரியர். பாட்டின் முதலடியில் சினவுணர்ச்சி - இரண்டாமடியில் மானவுணர்ச்சி - மூன்றாமடியில் மறவுணர்ச்சி - நான்காமடியில் மகிழ்வுணர்ச்சி என நாலுணர்ச்சிகளையும் இவ்வொரு பாட்டினால் புலப்படுத்தி விடுகின்றார் பாரதியார். தெளிவறம் மன்னாய வூழலைக் கண்டு கொதித்துப் பாடும் புலவன் தன் கோட்பாடு சேற்றில் எறிந்த கல்போல மக்கள் மனத்துள் பாய்வதற்குப் பலமுறைகளைத் தேடிப்பிடிப்பான். அம் முறைகளின் வேறுபாடுகளைக் கண்டதும் மயங்கி அவன் கோட்பாட்டைத் திருத்திக் கூற முயலலாகாது. அவன் துணித்த நோக்கத்திற்கிணங்கவே அம்முறைகளுக்குக் கருத்தை உய்த்துணரவேண்டும். அவன் நோக்கம் எது என்பதனை எப்படி முடிபு கட்டிக் கொள்வது? கற்பனைப் பூச்சும் உணர்ச்சித் துடிப்பும் மிகாத அறிவுநிலையில் சில அடிகள் பாடியிருப் பானன்றே; அப்பகுதிகளைக் கொண்டு ஒரு புலவன் கொண்ட இனவாய அறங்களைத் துணிந்துவிடலாம். வானத்தில் கரிய மேகக்கூட்டங்கள் வெண்ணிலாவை நோக்கி ஓடுகின்றன. தன்னைத் தாக்க ஓடிவரும் கருங்கூட்டத் திற்குள்ளே புகுந்து ஒண்ணிலவு `நீல விதானத்து நித்திலம்’ என்றபடி, கருமேகத்தை ஒளி மேகமாக்குகின்றது. காண்கின்றார் பாரதிப் புலவர். தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே - நலஞ் செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ வெண்ணிலாவே.” இன்னா செய்தவர்க்கும் இனியவே செய்யவேண்டும் என்ற வள்ளுவம் இதனால் வெளிப்படை. பகைவனுக்கருள்வாய் - நன்னெஞ்சே - தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய் என்ற பாடலானும் பாரதியறம் வெளிப்படை. பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா பாதகரை மிதித்து உமிழ ஏவினாரெனச் சொற்கிடந்தாங்கு பொருள்கொள்ள முடியுமா? இவர் பாதகர் பாதகரல்லர் என்று காணும் பகுத்தறிவுதான் பாப்பாவுக்கு இருக்கமுடியுமா? முடியாததாதலின், பாப்பு (பார்ப்பு) நிலையிலேயே துணிவுணர்ச்சி யூட்டினார் பாரதியார் என்று நோக்கம் காண்பதே ஆகும். `நையப்புடை’ என்ற புதிய ஆத்திசூடிக்கும் குறிப்பிதுவே. `தேடு கல்வியிலாத தொரூரைத் தீயினுக் கிரையாக மடுத்தல் என்ற அடிக்கும், கட்டாயக் கல்வியை, முன்பு கல்வி சிறந்த தமிழ்நாடு முழுதிற்கும் இன்று வற்புறுத்தினார் பாரதியார் என்றே கருத்துக்கொள்ளப்படும். பாரதீயத்துக்கு முரணாகாமல் உணர்ச்சி செறிந்த பாரதியார் கவிகட்குப் பொருள் காணுக. 17. பாரதியின் பழமை பழமை பழமை யென்று பாவனை பேசலன்றிப் பழமை யிருந்தநிலை - கிளியே பாமரர் ஏதறிவார் - (பாரதி) தொல்காப்பியம் முதல் பாரதீயம் இறுவாய்த் தமிழ்ப் பெருநூல்கள் பழமைப் பற்றுடையனவாகவே காணப்படுகின்றன; ஆலம் வீழ்து போலப் பழமையிலிருந்து தோன்றிப் பழமையைக் காப்பனவாகவே விளங்குகின்றன. இலக்கியம் என்பது மக்களினம் தோன்றியவுடன் தோன்றியதன்று; மொழியோடு உடன் பிறந்ததுமன்று. மக்கள் பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்தபின் பிறந்தது மொழி.மொழி பல்லாயிரம் ஆண்டு வளர்ந்தபின் எழுந்தது இலக்கியம். இலக்கியம் எழுதப்பட்ட காலத்து மன்னாயம் தொன்று முதிர் பழமையை எய்திவிட்டது; மக்கள் நினைவோட்டம் தடம் பட்டுவிட்டது; மொழிக் கருவியின்றி நினைக்கும் தனியாற்றலை மக்கள் நெஞ்சம் இழந்துவிட்டது. சொற்களும் சொற்றொடர்களும் மரபாகிவிட்டன. ஆதலின், ஒரு நாட்டின் ஓரினத்தின் ஒரு மொழியின் முதலிலக்கியங்கூடக் கன்றிய வழக்கின் அடிப்படைமேல் எழுந்ததுவே என்று தெளிக. முதலெழுந்த இலக்கியங்களின் பிறப்புநிலை இதுவாயின், பின்னெழுந்த இலக்கியங்களைப் பற்றிச் சொல்வானேன்? அவற்றுக்குப் பழைய வழக்கு மாத்திரம் அடிப்படையன்று; பழைய இலக்கிய மரபும் அடிப்படையாம். `வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்’ தோன்றியதெனத் தொல் காப்பியத்திற்கே - மூவாயிரம் ஆண்டு எய்திய கிழப்பனுவலுக்கே - சொல்லப்படுமேல், தமிழில் இன்று எழுகின்ற நூல்களுக்குத் தனிப்புதுமை எங்கு வரும்? புதுக்கியவற்றையே புதுமையென்று நாம் பாராட்டுகின்றோம். மரபியல் என ஓரியல் தொல்காப்பியரே வகுக்கும் வண்ணம் அத்துணை வழக்குப் பழமையுடையது தமிழகம். புதுமைக்கவி என்று பாரதியை நாடு புகழ்கின்றது. `சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது’ எனப் பாரதியாரும் சொல்லிக் கொள்கின்றார். இப்பெருமைக்கு அவர் உரியவரே என்று நாம் இசைக்கின் றோம்; என்றாலும் ஆழ்ந்து நோக்கின், பாரதியின் புதுமைகள் பழமை யுரத்திலிருந்து மலர்ந்தன என்பது புலப்படும். ஒரு பெரும் புலவன் இறந்தகாலத் தளத்தின்மேல் நிகழ்காலக் கண்கொண்டு நாட்டின் எதிர்கால வாழ்வை உருவாக்குவான். அவன் படைப்பு தஞ்சைப் பெருவுடையார் கோயில் அனையது. ஆதலின் தொல்காப்பியப் பெருநூலில் புதுமை காண்பது தவறன்று; பாரதிப் பெரும் புலவனிடத்துப் பழமை காண்பதும் தவறன்று. காலச் சூழ்நிலை ஒருநாட்டில் பெருங்குறைகள் மலிந்து தோன்றிய காலத்து, அவற்றை எடுத்துக்காட்டும் பாடல்கள் முகிழ்க்கும். அவை புதுமைப் பாடல்கள் என்று பெயர்பெறும். தொல்காப்பியர், சங்கத்தார் நாளில் பற்றூட்டும் நாட்டுப் பாடல் பிறக்கவில்லை; காரணம் தமிழ்நாடு அடிமை நாடாக இருந்ததில்லை. மொழிப்பற்றூட்டும் பாட்டு அறவேயில்லை; அதற்குக் காரணம், தமிழர் பற்றுக் கொள்வதற்குத் தமிழ்மொழி தவிர வேறு மொழி ஈண்டு வழங்கியதில்லை. ஆடுஉ வறிசொல் மகடூஉ வறிசொல் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே (தொல்.485) என்ற முதனூற்படி, ஆணும் பெண்ணும் ஒத்த உயர்திணை யாகவே கொள்ளப்பட்ட அறிவுக்காலம் அது. ஆதலின், பெண்ணுரிமைப் பாட்டுக்குப் பிறப்பில்லை. இறை இருந்தது; ஆனால் மதம் இருந்ததில்லை. தொழில் ஆனால் மதம் இருந்த தில்லை. தொழில் இருந்தது. ஆனால் சாதி இருந்ததில்லை. எனவே மதவொற்றுமைப் பாட்டிற்கும் சாதி யொழிப்புப் பாட்டிற்கும் பண்டு வாய்ப்பில்லை. சங்க நாளைக்குப் பின்னர் ஊழல்கள் அரும்பின; சங்கம் அழிந்தது; தமிழ் வேந்து அழிந்தது; இருந்த இலக்கியங்களிற் பல மறைந்தன. முதற்கண் சமயவூழல்கள் நாறின; அருட்பாசுரங்கள் தோன்றக் கண்டோம். வென்ற சமயங்கள் தம்முட் பூசலிட்டன; அப்போது சமயப் பொதுப்பாடல்கள் எழக்கண்டோம். தன்னாட்டுப்பற்றும் தன்னரசுப் பற்றும் தன்மொழிப் பற்றும் இருக்கவேண்டும் நம் மக்கட்கு இருக்கலாகாத் தற்சாதிப்பற்றே உயிர்க்குணம் ஆயிற்று. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்துப் பாட்டுக்கு ஏற்ற தீய சூழ்நிலை முற்றி நின்றது. வீறிட்டெழுந்தார் புலவர் பாரதியார். ஆயிர முண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி - ஓர் தாயின் வயிற்றிந் பிறந்தோர் - தம்முட் சண்டை செய்தாலும் சகோதர ரன்றோ என்று வினவினார். புதுக்குறைகளைப் பாடிய நிலையால் பாரதி பாட்டின் பொருள் புதிதாயிற்று; சொல் புதிதாயிற்று; நடையும் புதிதாயிற்று; குறை கண்டு கொதித்துப் பாடிய புலவன் புதுமைக் கவியாயினான். விடுதலை மதம் நாட்டுப்பற்று என்பது ஒரு பாரதீயம். பாரதியார் கண்ட நாடு பாரதநாடு. பாரதப் பெருநாட்டின் அகநாடுகளாகவே தமிழகத்தையும் இந்தியப் பிறபகுதிகளையும் நோக்கினார் பாரதியார். இந்தியா முழுவதும் அடிமைப்பட்டிருந்த நிலையில், தமிழக விடுதலையை மட்டும் பிரித்துப் பாடும் குறிப்பு `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எ;னற மரபு வழிவந்த தமிழ்ப் புலவனுக்குத் தோன்றாது. தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்ற கொடி நிலைப்பாட்டில் அகநாட்டார் அனைவரையும் பாரதி அழைக்கின்றார். முப்பதுகோடி முகம் உடையாள், அறுபது கோடி கையுடையாள், செப்பு மொழி பதினெட்டு டையாள்; ஆனால் சிந்தனை ஒன்றுடையாள் என்று அறுதியிடும் பொழுது, வேற்றுமையில் காணும் ஒற்றுமை பாரதியின் பாரதப் பண்பு வெளிப்படை. வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா பேரிமய வெற்புமுதற் பெண்குமரி யீறாகும் ஆரிய நாடென் றறி நாட்டுக்கு எல்லை வரையுமுகத்தால், தம் தமிழ் நாட்டுக்கும் வழக்கெல்லை சுட்டுகிறார் புலவர். பாரதியின் பாரதப் பாடல்கள் தமிழ்மொழிக்குப் புதியவை. தமிழ்மொழி யில் இருந்தாலும் திருக்குறள் மக்கெட்கெல்லாம் பொது வன்றோ! பாரதிப்பா இந்திய நாட்டுப் பொது என்பதனை எல்லோரும் அறியச்செய்தல் தமிழர் கடன், அது தமிழ் மொழியில் இருத்தலின், `தாயின் மணிக்கொடி’ என்னும் கொடி வாழ்த்து இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு எங்கும் இசை பெறுதல் வேண்டும். நாட்டுப்பற்றை மக்கட்கு ஊட்டுவதெப்படி? விடுதலையுணர்ச்சியை விதைப்பது எங்ஙனம்? பாரதம் பழம்பெருநாடன்றோ? பாருக்குள்ளே நல்லநாடில்லையா? ஞானத்திலும், கானத்திலும், வீரத்திலும், ஈரத்திலும், நன்மையிலும், வன்மையிலும், ஊக்கத்திலும், நோக்கத்திலும், நுண்மையிலும், உண்மையிலும் உயர்ந்த நாடன்றோ! வரலாற்றறிஞர்களும் பிறந்த நாள் அறியமாட்டாப் பழந்தாய் இல்லையா! நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததும், நம் அன்னையர் தோன்றி மணந்ததும், நம்மை ஈன்று வளர்த்ததும் இந்நன்னிலம் காணீர்! இந்நாட்டை வந்தனை செய்து மனத்திலிருத்தி வாயுற வாழ்த்தி வணங்குவம் வாரீர் என்று பற்றூட்டுகின்றார் புலவர் பெருமகன். முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும் இன்று புதிதா யிரக்கின் றோமோ முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெல்லாம் ஓராயோ அடிமைதான் எங்கட்குப் புதிதேயொழிய விடுதலை புதிதன்று என வீறு பேசுகின்றார். ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்துவிட்டோம் என்று இடைக்காலத்து வந்த இழிவை எடுத்துக் காட்டுகின்றார். விடுதலை பாரதியின் மதம். பாரதியார் விடுதலைப் புலவர், விடுதலை நாயனார், விடுதலை யாழ்வார் சிட்டுக் குருவியைப் போலே எப்போதும் விடுதலை வேண்டுபவர். ஆதலின் தெய்வப் பாசுரங்களின் நடை பாரதியின் விடுதலைப் பாசுரங்களிலும் காணப்படும். சமயத்துறை நடையில் ஒரு கொள்கையைப் பரப்பினாற்றான், இந்நாட்டு மக்களுக்கு ஏற்கும் தன்மை உண்டு என்று கண்டுகொண்டார் பாரதியார். சிவன், கண்ணன், இராமன் என்ற பெயர்களைக் கூறியவளவில் பிறவித் துன்பம் எல்லாம் அறும் எனச் சுட்டுதலும், மதத்தொண்டர் களைப் போற்றிப் புகழுதலும் சமய மரபு. இம்மரபு தழுவி விடுதலை மதம் பாடினார். விடுதலைத் தொண்டர்களைப் பாடிப் பரவும் சுந்தரராயினார் பாரதியார். பாரத தேசமென்று பெயர்சொல்லுவார் - மிடிப் பயங் கொல்லுவார் துயர்ப்பகை வெல்லுவார் துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே தொண்டி ழைக்கத் துணிந்தவர் யாவரும் அஞ்செ ழுத்தினைச் சைவர்மொழி தல்போல் அன்பொ டோதும் பெயருடை யாரியன் தமிழ்த் தனிமுழக்கம் பாரதப் புலவன் பாரதியார் ஓர் தமிழ்மகன்; தமிழாலே உலகத்தை நினைப்பவர்; தமிழக நாட்டவர்; `வாழ்க நற்றமிழர்’ என்று வாழ்த்தும் இனப்பற்று உடையவர்; தம் இனமக்கட்கு விடுதலை வேட்கையையும் மொழிப்பற்றையும் குழைத்து ஊட்ட விரும்பிய பாரதியார் பாடல்களில் நாம் காண்ப தென்ன? சிங்களம் புட்பகம் சாவகம் ஆகிய தீவுகளை வென்று புலிக்கொடியும் மீனக்கொடியும் ஏற்றிய தாய்நாடு தமிழ்நாடு என்று தென்திசை கீழ்த்திசை வெற்றிகளைக் கூறுகின்றார். இமயத்தைத் தாக்கிய வீரர் வாழ்ந்த தமிழ்நாடு என்று வடதிசை வெற்றியைச் சுட்டுகின்றார். பாரத நட்டுணர்வுடைய பாரதியார் தமிழகத்தின் சிறப்பைப் பாடும் வரிசையில் இமய வெற்றியையும் கலிங்கவெற்றியையும் ஒதுக்கிவிடாது கூறுதல் குறிப்பிடத்தகும். சீன மிசிர யவன நாடுகளில்; புகழ் பரப்பிய தமிழ்நாடு என்று மேற்றிசைப் பெருமையைக் குறிக்கின்றார். இப்பழம் புகழ்ச்சியெல்லாம் எற்றுக்கு? எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு விடுதலைச் சத்தி பிறக்க வேண்டும் என்பதற்காக. பாரதியார் இந்தியநாட்டுப் பற்றுப்போல் தமிழ்ப்பற்றுக் கொண்டவர். பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடு என்றது போல் தாமறிந்த மொழிகளிலே நல்லமொழி தமிழ்மொழி என்று வீறு பேசியவர். `சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே’ என்று சின்னஞ்சிறு குழந்தைக்கே தமிழின் உயர்வை அறிவுறுத்தியவர். தமிழ்ப்பாரதம் அல்லது தமிழிந்தியா என்பது நம் புலவர் கண்ட பாரதீயம் ஆகும். நம் மொழி மட்டுமந்தான் சிறப்புடையதா? நம் மொழியிற் பாடிய முப்புலவர்களைப் போலச் சிறந்தார் பிறமொழியில் எப்புலவரும் இல்லையே; இது பற்றுக்கொண்டு சொல்லும் முடிபன்று; உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று பாரதி மொழி முரசு கொட்டுவர். `ஆதிசிவன் பெற்றுவிட்டான்’ எனத் தமிழின் தெய்வப் பிறப்பையும், காதில் விழுந்த திசைமொழி யெல்லாம் பெயர்கூடத் தெரியாமல் யாவும் அழிவுற்றிறந்தன என்பதனால் தமிழின் இறவாத் தன்மையையும் எடுத்துக் காட்டுவர். இவ்வுலகத்து அமர வாழ்வு வேண்டு மென்றால் தமிழமுதினைச் சுவையுங்கள்; இன்பத்தேன் வேண்டுமென்றால் செந்தமிழ்நாடு என்று சொல்லுங்கள் என மொழிமேல் வைத்து நல்வழி கூறுவர். இவ்வாறெல்லாம் தமிழின் பழமையையும் பெருமையையும் விரிப்பதன் நோக்கம் என்ன? தெருவெல்லாம் தமிழ் முழங்கவேண்டும் என்பதே. பழமை வேர் பெண்ணுரிமை பாரதீயத்தில் ஒன்று. இவ்வுரிமை வேண்டும் பாரதியார் ஈண்டும் பழமை பேசப் பார்க்கின்றோம். ஆணுக்குப் பெண் சமம் என்று முற்கால நூல்கள் கூறும்; ஆணே உயர்வு பெண் அடிமை என்று பிற்கால நூல்கள் கூறும் என்பது பாஞ்சாலி சபதத்தில் வீடுமன் பேச்சு; புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதும றைப்படி மாந்த ரிருந்தநாள் தன்னி லேபொது வான வழக்கமாம் பாரதியின் புதுமைப்பெண்ணே இங்ஙனம் பழமை பேசுவாள் எனில், பாரதீயத்துக்கு அடிப்படை (அண்மைப் பழமையன்று) தொன்மைப் பழமை என்பது தெளிவு. புதிய ஆத்திசூடியும் கண்ணன் பாட்டும் பாஞ்சாலிசபதமும் முற்றும் புதியனவல்ல; புதுப்பிக்கப்பட்டன என்பது முன்னை நூல்களோடு ஒப்பிட்டுக் காண்பார்க்கு எளிதாகப் புலப்படும். கண்ணன் பாட்டுக்கு வ.வே.சு.அய்யர் எழுதிய முன்னுரையைக் காணுக. புதுப் பார்வை தொல்காப்பியன் முதல்பாரதி ஈறான தமிழ்ப்புலவர்கள் பழமைப் பார்வையுடையவர்களே என்றாலும், அப்பார்வை யிலிருந்து ஒவ்வொருவரும் உலகிற்குக் காட்டிய புதுமைப் போக்கு வேறு வேறாகும். தமிழ்ப்புலவர்களுள் சிலர்தம் புதுமைப்போக்கு ஒற்றுமையுடையதாய்க் காணப்படுகின்றது. பாரதிப் புலவன் புதுமைப் போக்கோ இதுவரை தமிழிலக்கியம் கண்டறியாதது. பழமையை அவர் பார்த்த பார்வையே வேறு. தமிழ்மொழியின் சிறப்புப் பற்றி முன்னும் பாடல்கள் உள; என்றாலும், `யாமறிந்த மொழிகளிலே தமிழ்’ என்னும் பாரதி உறுதிப்பாட்டிற்கு இணையுடையது ஒன்று உண்டோ? திருக்குறளுக்குத் திருவள்ளுவ மாலையில் ஐம்பத்துமூன்று பாராட்டு வெண்பாக்கள் உண்டு. அசரீரி, நாமகள், இறையனார் எல்லாருந்தான் அந்நூலைப் பாராட்டியுளர்; என்றாலும், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்னும் பாரதி பாட்டுக்கு ஒப்பில்லை. வள்ளுவன் தமிழ் நாட்டின் கொடைப்பொருள் என்று மொழியோடும் நாட்டோடும் வைத்துப் புகழ்ந்த புலவன் வேறெவன்? உலகச்செல்வம் அத்தனையும் படைத்த ஒருநாடு தமிழ்நாடு என்றும், புகழ் மண்டிக்கிடக்கும் ஒரு நாடு தமிழ்த்திருநாடு என்றும் வளமாரச் சொல்லிய பாரதியின் தமிழுக்கு முன்னைத் தமிழ் நூல்களில் ஒப்புமை காட்ட முடியுமா? பாரதி கவிதைக்கு மேற்கோட்பதிப்பு வேண்டும் என்று முன்னர் ஒரு கருத்து வெளியிட்டேன். பல இடங்கட்கு முந்து நூல்களிலிருந்து ஒப்புமைகள் காட்ட முடியும்; ஒப்புமை காணமுடியாப் பல புது நுண் கூறுகளும் பாரதி கவிதையில் உள. ஆதலின், புதுமைப் புலவன் சொல்லிய அனைத்திற்கும் விடாது மேற்கோள் காண அலைய வேண்டா. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் பெண்ணினத்துக்கு வேண்டும் ஆண்மைகளைப் புதுமெய்ப் பாட்டோடு எடுத்துரைக்கின்றார் பாரதியார். உலகில் மன்குலம் பல மாறுதல் அடைந்துவிட்டது. இந்நிலையில் பழம்போக்கு பெண்ணுக்குக் கூடாது; நாணமும் அச்சமும் மக்களினத்துக்கே கூடா என்று தெளிந்த புலவர் மேற்கண்ட வாறு புதுப்பெண்மை வேண்டுகின்றார். கருத்துரிமை இலக்கியத்துக்கு ஒரு புதுநோக்கை இந்நூற்றாண்டில் வகுத்துக் கொடுத்த புதுத் தொல்காப்பியர் பாரதியார் ஆவார். அரசு மக்களரசாகி வரும் காலத்து இலக்கியமும் மக்களிலக்கியமாக உருவாக வேண்டும் என்றும், மொழிநடை எல்லார்க்கும் பொருள் விளங்கும்படி நெகிழவேண்டும் என்றும், ஒலி நடை யாரையும் ஈர்க்குமாறு இசையவேண்டும் என்றும், இவ்வெல்லாம் கவிதைத் தன்மை சிறிதும் குன்றாவாறு அமையவேண்டும் என்றும் பாரதியார் பாடல் நமக்குக் கற்பிக்கிறது. உலகத்து நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் எத்துணைப் பெரியவன் செய்திருப்பினும், உரசி அலசிப் பார்த்து மக்கள் தம் கருத்துரைக்கும் மனவளர்ச்சியை இன்று காண்கின்றோம். அங்ஙனம் யாரும் தத்தம் கருத்தை வெளியிடும் உரிமைக்காலம் இது. இந்நாளைப் புலவனும் பாத்திரங்களின் செயல்களை அழகுபடச் சொல்லுவதோடு அமையாமல், அச்செயல்களைப் பற்றித் தான் கருதும் கருத்தையும் இடையிடையே சொல்லிப் போக வேண்டுமன்றோ? கருத்துரிமை சான்ற காலத்து, அவ்வுரிமை யூட்டும் இலக்கியந் தான் மக்கள் நெஞ்சையள்ளும். தருமன் பாரதநாடு கொண்டாடும் பழம் பெரியவன் என்றாலும் சூதில் தேயம் வைத்திழந்த அவனைப் பற்றிப் பாரதியார் என்ன கருதினார்? `சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்’ என்று மிகவும் இகழ்வர். தீய துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றித் தெருவழியே இழுத்து வருகின்றான்; பார்க்கக் கூட்டம் கூடிவிட்டது. இது கொடுமை கொடுமை என்று கூட்டம் பார்த்துக் கொண்டே துடிக்கின்றது. இத்துடிப்பினால் என்ன பயன்? கொடியவனைக் காட்டிலும் அக்கொடுமையைக் கண்டும் செயலின்றித் துடித்து நிற்கும் கூட்டமே இகழ்தற்கு உரியது. இக்கூட்டம் என்ன செய்திருக்க வேண்டும்? நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி முன்னிழுத்துச் சென்றான் வழிநெடுக மொய்த்தவராய் என்ன கொடுமை யிதுவென்று பார்த்திருந்தார் ஊரவர்தங் கீழ்மை யுரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள் விலங்கா மிளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே பொன்னை யவளந்தப் புரத்தினிலே சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினார் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ? நனவுக் கனவுகள் பாரதியார் ஒரு வெறிஞர். அவர் வெறி தடமற்ற காட்டாற்று வெள்ளம் போன்றதன்று; கரையணைத்தோடும் காவிரி வெள்ளம் போன்றது. அவர் தம் பழமைப் பற்றில் ஒரு தனிப்புதுமை யிருப்பக் கண்டோம். அவர் தம் பழநூற் பயிற்சியிலும் ஒரு தனிப்புலமை யிருக்கக் காணலாம். சொல் வீழ்ச்சியும் ஒலிநயமும் நடைநயமும் நோக்காழமும் என்றிவையே முழுப்புலமையாகிவிடா. எதிரதை முன்னுணர்ந்து ஆற்றலோடு கூறும் அறிவுத் தெளிவு புலமைக் கூறுகளுள் தலைசிறந்தது. சென்ற வரலாற்றையும் நிகழும் போக்கையும் காணும் புலவன் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று மயங்காது முடிவுகட்டுவான். மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் (தொல். 1020) என்று புலவன்தன் முக்கால புலமைத் திறத்தைக் குறிப்பிடுவர் தொல்காப்பியர். தமிழ்ப் புலவர்களுக்குள்ளே இத்தொல்காப்பிய இலக்கணத்திற்குப் பேரிலக்கியமாக விளங்குபவர் பாரதியாரே. ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று இப்பாடல் 1948 ஆம் ஆண்டில் எழுந்ததன்று. இந்தியா உரிமை பெற்ற பின்னர், `சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று ஒருவன் பாடும் பாட்டில் வரலாற்றுண்மைக்கு இடமுண்டே யன்றிப் புலமை வீறுக்கு இடமில்லை. உரிமை என்பது பெருங்கனவாக இருந்த முப்பதாண்டுக்கு முன்னரே, சுதந்திரம் அடைந்துவிட்டோம்; இனிச் செய்ய வேண்டுவது ஆடுவதும் பாடுவதுந்தான் என்று பள்ளுப்பாடிய பாரதியின் முன்னறிவுத் தெளிவு வாகை சூடற்குரியது. இத் தெளி வெண்ணம் அவர் பாடலில் பலவிடத்துப் பொதிந்துள்ளது. `முடிவில்லாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்’ என்று காந்திப்பெருமான் புகழை முன்னரே உணர்ந்து துணிவுதோன்ற அவர் பாரட்டுதல் காண்க. பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே பாடல் மூதறிஞர் உ.வே.சா.மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றபோது பாரதி பாடிய வாழ்த்து. இவ்வாழ்த்துப்பா சென்னைக் கடற்கரையில் நிறுவப்பெற்றுள்ள உ.வே.சா.சிலை யடிக்கீழ்ப் பொறித்தற்கு ஏற்றது என்று அறிஞர்கள் கருதுவரேல், கூர்த்த புலவன் பாரதி என்பது வெள்ளிடை மலை. `வெள்ளி பனிமலையின் மீதுலவுவோம்’, `சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்ற பாரதி கனவுகள் இன்று எவ்வளவு மெய்யாகி வருகின்றன. நாடு. எதிர்காலத்து இங்ஙனம் இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவது பாரதி வெறிஞர்க்கு அத்துணைப் பிடித்தமில்லை. நாடு அங்ஙனம் இருக்கும் என்ற பெருந்தெளிவில், இருந்ததாகவே கொண்டு பாடும் இன்பக் கனவினர் பாரதியார். கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும் காணரும் வீரர் பெருந் திருக்கூட்டம் நம்பற் குரியர் அவ்வீரர் - தங்கள் நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பர் இழிவுகொண்ட மனித ரென்பது இந்தியாவில் இல்லையே எல்லோரும் சம மென்ப துறுதி யாச்சு சங்குகொண்டே வெற்றி யூதுவோமே ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் எழுதிய நாளையும் அன்று இருந்த சூழ்நிலையையும் அறிந்து பாரதியார் பாடல்களைப் படித்தாற்றான் அவர் தனிப்புலமை - எதிரதை முன்னுணர்ந்து பாடிய அறிவு வீறு - நன்கு புலப்படும். இன்றேல், இலக்கிய அழகு புலப்படுமே யொழியப் புலவன்தன் எண்ணக் கூர்மை புலனாகாது. இப்பாடல் இன்னநாளிற் பாடப்பட்டது என்ற குறிப்பு விளக்கத்தோடு பாரதி பாடல்களைப் பதிப்பிப்பது கற்பவர்க்குப் பெருந்துணை செய்யும். `அடைந்து விட்டோம், `முதன்மை யுற்றாய்,’ `உறுதியாச்சு’ `மாய்ந்து விட்டார்’, `தலை கவிழ்ந்தார்’என்பவற்றில் வரும் இறந்தகால வினைமுற்றுக்கள் `அடைந்துவிடுவோம்’ `முதன்மை உறுவாய்’, `உறுதியாகும், `மாய்ந்து விடுவார்’, `தலைகவிழ்வார்’ என்று பாரதியார் கண்ட எதிர்கால நல்வாழ்வைச் சுட்டுகின்றன. இவை விரைவில் வரும் என்ற தெளிவால், வந்தனவாகவே கொண்டு இறந்தகால நடையில் புலவர் பாடலாக்கினார். பாரதியார் கண்ட நனவெனத் தக்க நாட்டுக் கனவுகள் புதியனவாயினும், அவற்றைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடை தொல்காப்பியப் பழமையுடையது என்பது பின்வரும் நூற்பாவால் விளங்கும்: வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர் 18. பாரதியின் தேசிய வொருமை எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க எற் பறையறைந்தாற்போல ஒருமைப்பாடல் முழக்கியவர் பாரத தேசியக்கவி பாரதியார். அவர் உறுதிமொழியாக மும்முறை பாடிய முழக்கத்தினால் எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற தொடரும் கருத்தும் யார் வாயிலும் இயல்பாகக் கேட்கப்படுகின்றது. கவிஞர் பெருமான் பாடிய காலத்தில் பாரத மக்கள் ஒரு குலமாக, ஓரினமாக, ஒரு நிறையாக, ஒரு விலையாக, இந்நாட்டு மன்னராக இருந்ததில்லை. 1947இல் பாரத நாடு விடுதலை பெறுவதற்கு முப்பது ஆண்டுகட்கு முன்பே எல்லோரும் சமம் என்று பாடி முடித்தார் பாரதியார். விடுதலை பெற்று முப்பது ஆண்டு ஆகிய இன்றும் குலத்தினாலோ இனத்தினாலோ பொருளாதார வளத்தி னாலோ சமம் பெறவில்லையே என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பாரதி கண்ட கனவு இன்று வரை கனவாகவே இருக்கின்றது. அக்கனவுநிலை இன்பங்கூடக் கலைந் தொழியுமோ என்ற அச்சம் பிறந்திருக் கின்றது. அவர் கண்ட கனவு நனவுத்திருவாக வேண்டுமேல் பாரதியின் தேசியப் பாடல்களைப் பாரத மக்கள் பல்லாண்டு படிக்க வேண்டும். அவர் பாடல்கள் தமிழ்மொழியில் இருந்தாலும் பாடப்பட்ட பொருள் தேசிய ஒருமைப்பாடு ஆதலால் எல்லா இந்திய மொழிகளிலும் இப்பாடல்கள் நல்ல பண்களில் மொழி பெயர்க்கப்படல் வேண்டும். இந்திய நாட்டின் சிறு பள்ளிகளில் எல்லாம் இப்பாடல்கள் முழக்கம் பெறல் வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டினை விடுதலையுரிமை பெறுவதற்காக மட்டும் பாரதி பாடவில்லை. விடுதலைக்குப் பின்னும் மக்கள் சரிநிகர் சமானமாக ஒத்த மதிப்புப் பெற வேண்டும் என்பதுதான் அவர் குறிக்கோள். திறமைகொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வமிந்த நாட்டிலே வாழி கல்வி செல்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே வையவாழ்வு தன்னிலெந்த வகையினும் நமக்குளே தாதர் என்ற நிலைமைமாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே உரிமை பெற்றபின் இந்தியா ஒருநாள் உரிமை பெறுதல் உறுதி என்று முன்னறிவால் தெளிந்த பாரதியார் தம் கவிதைகளில் உரிமை பெற்ற இந்தியாவும் இந்திய மக்களும் வாழ வேண்டிய வகைகளைப் பல செய்யுட்களில் புலப்படுத்தியுள்ளார். இமயமுதல் குமரிவரை பாரதம் நிலத்தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும், மக்கள் உள்ளத்தில் ஒருமையுணர்வு வேண்டு மல்லவா? அடையாததற்கு முன்னே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று உரிமைப் பள்ளுப் பாடிய தேசியப் பாவலர் பாரதியார், உரிமை பெற்றபின் நாட்டில் என்ன எண்ணங்கள் பரவவேண்டும் என்று தொகுத்துச் சொல்லுகின்றார். எங்குஞ் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமம் என்ப துறுதி யாச்சு எல்லோரும் ஒன்றென்னுங் காலம் வந்ததே - பொய்யும் ஏமாற்றுந் தொலைகின்ற காலம் வந்ததே உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம் சுதந்திரம் பெற்றதற்குப் புறச்சான்றுகள் என்ன? எல்லாரும் சமம்; எல்லோரும் ஒன்று; பொய்யான ஏமாற்றத்துக்கு இடங்கொடாமை; நல்லவரையும் பெரியவரையும் மதித்தல்; நயவஞ்சகம் இல்லாமை; உழவுக்கும் தொழிலுக்கும் மதிப்பு; உழையாதாரை மதியாமை; நாமிருக்கும் நாடு நமது என்ற பற்று; இந்நாடு இனி நமக்கே உரிமை என்ற அறிவு; இந்தப் பண்புகள் எல்லாம் விடுதலையின் பயன்கள், அடையாளங்கள் என்று உரிமைக்குப் பின்னும் நாடு ஒருமைப்பாடு என்னும் உணர்வுப் பாடாக வளர்வதற்குரிய அடிப்படை நெறிகளைப் பாரதீயத்தில் காண்கின்றோம். பராதியார் ஆங்கில ஆட்சியின் அடிமைத் தளையிலிருந்து சுதந்திரம் பெறுதற்கு விடுதலைப் பாடல்கள் முழக்கிய விடுதலைப் புலவர் என்றே பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். அதனால், விடுதலை பெற்றுவிட்டோமே, இனி அவர் தம் செய்யுட்கள் முன்போல அவ்வளவு தேவையில்லை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர் இக்கருத்துக்கள் ஓரளவே உண்மை, ஆங்கிலத் தளையிலிருந்து விடுதலைக்குப் பாடினார் என்பதனை உடன்படுகின்றேன். அவ்வளவில் அவர் நிற்கவில்லை. சாதிக்கொடுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமயப் பிணக்கு, ஏழை செல்வன், அறியாமை, கல்வியின்மை, ஆங்கில மோகம், தாய்மொழிப்பற்றின்மை, ஏய்ப்பு, நயவஞ்சகம், உழைப்பின்மை முதலான பல தீமைகளிலிருந்தும் இந்தியப் பெருநாடும் மக்களும் முழுவிடுதலையடைய வேண்டுமென்று எதிர்காலத்தையும் பாடிப் பொழிந்தார். ஏன் இருவகை விடுதலையும் பாடினார்? உள்நாட்டுத் தீமைகளிலிருந்து விடுதலை பெறாவிட்டால், உரிமை பெற்ற பின்னும் சாதியும் ஏற்றத்தாழ்வும் கல்லாமையும் அயல்மொழி மோகமும் பெண்ணடிமையும் ஒருநாடு என்ற உணர்ச்சியின்மையும் இருந்தால் முன்புபோல் எந்த அயல்நாட்டாருக்காவது அடிமையாகி விடுவோமல்லவா? அதனாற்றான் ஆங்கில அடிமை விடுதலையோடு இணைத்து நாட்டுத்தீமை விடுதலையும் பாடினார் எதிர்கால உணர்வு மிக்க பாரதியார். அவர் பாடியவற்றுள் ஒரு விடுதலை - ஆங்கில ஆட்சி விடுதலை நமக்குக் கிடைத்துவிட்டது. இன்னொரு விடுதலை - சாதி முதலியவற்றின் விடுதலைக்கு நாம் பாடுபட்டுக் கொண்டிருக் கின்றோம். இந்த விடுதலை தேசிய ஒருமைப்பாடு என்ற உணர்வினாற்றான் பெறமுடியும். அத்தகைய ஒருமைப்பாட்டுக் கல்வியைத் தருங்கருத்துக்கள் பாரதீயத்தில் மண்டிக் கிடக்கின்றன. பாரத வொருமை பாரதநாடு, பாரத அன்னை, நவரத்தினமாலை, பாரததேவியின் திருத்தசாங்கம், பாரத சமுதாயம், தாயின் மணிக்கொடி என்ற தலைப்புடைய பாடல் எல்லாம் பாரதியாரின் ஒருமைக் கனவை வடித்துக் காட்டுகின்றன. பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக் கொரு புதுமை - வாழ்க மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ மனிதர்நோக மனிதர்பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ - புலனில் வாழ்க்கை இனியுண்டோ? - நம்மிலந்த வாழ்க்கை இனியுண்டோ? இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெருநாடு கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தருநாடு - இது கணக்கின்றித் தருநாடு - நித்த நித்தம் கணக்கின்றித் தருநாடு. இனியொரு விதிசெய்வோம் அதை எந்த நாளுங் காப்போம் தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் பாரத சமுதாயம் வாழ்க என்ற இப்பாட்டு தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பெரிய வேராகும். ஏன்? உலகவொருமைப் பாட்டிற்குக்கூட இப்பாடலில் கரு அமைந்து கிடக்கின்றது. பல மாநிலங்களாகப் பிரித்துக் கூறாமல் பாரத சமுதாயம் எனவும், பல சங்கங்களாகப் பிளவுபடுத்தாமல் முப்பது கோடி உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் எனவும், பல தனியுடைமை களைப் பாராட்டாமல் முழுமைக்கும் பொதுவுடைமை எனவும், இத்தகைய பொதுச் சமுதாயமும் பெருஞ்சங்கமும் பொது வுடைமையும் வேறு எங்கும் இல்லாமையால் ஒப்பில்லாத ஒரு சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை எனவும், இன்ன புதுமை மக்களின் சிறுமைப்பாட்டினால் கெட்டுத் தொலையக்கூடாதே; ஒருமைப்பாடு வேண்டுமே என்ற எண்ணத்தால் `வாழ்க’ என்றும் பாடியுள்ளார் எதிர்காலக் கவிபாரதியார். சுரண்டலும் பசியும் இருக்கும்வரை பாரதம் இராது. இந்நாடு ஏன் வறுமைப்படல் வேண்டும்? எந்த வளங்களில் இந்நாடு குறைவுடையது? இந்நாடு எல்லா வளமும் `கணக்கின்றித் தருநாடு’ என்று மூன்றுமுறை வலியுறுத்து கின்றார். நாடு வளமுடையது. நாட்டில் பட்டினி ஏன்? எல்லோரும் வாழவேண்டும்; பசியார உண்ணவேண்டும் என்ற பொதுக் குறிக்கோள் இருந்தால் பட்டினி இருக்குமா என்று சினந்து துடிக்கும் பாரதக் கவிஞர், `இனியொரு விதி செய்வோம்; சுதந்திரம் பெற்ற பின்னும் காப்போம். பாரதன் ஒருவன் பட்டினியாகக் கிடந்தாலும் இப்பாரத நாட்டை மட்டுமா, உலகத்தையே அழிப்போம்’ என்று பாரதீயம் பாடுகின்றார். எனவே பாரத சமுதாயம், ஒப்பிலாத சமுதாயம், முப்பது கோடியினர் சங்கம் என்ற ஒருமைப்பாடும் பெருமைப் பாடும் காக்கப்பட வேண்டுமென்றால், ஓர் இந்தியனும் பசி என்பதில்லாத தேசிய ஒருமைப்பாடு என்ற கட்டுப்பாடு வேண்டுமென்று எதிர்காலப் பாரதர்கட்குச் சமவழி காட்டிச் சென்றிருக்கின்றார் அடிமை நாட்டில் வாழ்ந்த நம் பாரதியார். சாதியின்மை தேசிய ஒற்றுமைக்கு இடையூறாய் இருப்பது சாதி வேறுபாடு. வேண்டாத இவ்வேறுபாடு நம்முள் அடித்துக் கொண்டு நாம் அடிமைப்படுதற்குக் காரணமாயிற்று என்பதை அறிந்தவர் பாரதியார். சமயச் சண்டைகளும் நம் அடிமைக்கு மற்றோர் காரணம். `சாதிச்சண்டை போச்சோ; உங்கள் சமயச்சண்டை போச்சோ; இங்ஙனம் அடித்துக் கொள்கின்ற உங்கட்குச் சுதந்திரம் வேண்டுமா? என ஆங்கிலேயன் இழித்துக் கூறுவதாகப் பாடியுள்ளார். ஆம்; உரிமைபெற்று முப்பது ஆண்டுகளாயிற்றே; சாதிச்சமயப் பூசல்கள் தேர்தல் காரண மாக வலுப்பெற்று வருகின்றதேயன்றிக் குறைய வில்லையே. சாதிப்பற்றையும் சமயப்பற்றையும் தூண்டி விட்டுத்தானே வாக்குக்கள் கேட்கப்படுகின்றன. ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி என்ற பாட்டிலிருந்து சாதிவேற்றுமைகள் பெருகினால் வேற்றுநாட்டவர் புகுந்துவிடுவார்கள் என்ற கருத்தும். வேற்றுமை நீங்கி எல்லாரும் இந்தியர் என்று ஒன்று பட்டால்தான் வாழ்வு உண்டு; ஒற்றுமை நீங்கினால் எல்லார்க்கும் தாழ்வே என்ற எச்சரிக்கையும் தெளிவாகின்றன. சாதிப்பற்று குழந்தை களிடத்து வளரக்கூடாது. எதிர்காலத்துப் பிறக்கும் குழந்தைகளாவது சாதி மனப்பான்மையின்றி உயரவேண்டும் என்பதற்காகத்தான், சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பர் இந்தியக் கவிஞன் பாரதி. சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னில் செழித்திடும் வையம் என்று சாதிக்கொடுமையை முரசறைந்து சாடுவர் பாரதியார் இன்னொரு செய்யுளில். எனவே, சாதிகள் இல்லாத, சாதிப் பூசல்கள் முளைக்காத ஒரு பாரதநாட்டை உண்டாக்கினாற்றான் தேசிய ஒருமைப்பாடு என்ற விளைவு கிடைக்கும் எனத்தெளிவோமாக. மொழி யொருமை இப்பெரு நாடில் பல மொழிகள் உண்டு, பல இனங்கள் உண்டு என்ற வரலாற்றுண்மையை அறிந்தவர் பாரதியார். பல மதங்களுண்டு என்பதனையும் நன்குணர்ந்தவர். பல மொழிகள், பலவினங்கள், பல மதங்கள் இவற்றை நாட்டின் வளங்களாகவும் பிரிவுகளாகவும் பாரதியார் மதித்தாரேயன்றி வேற்றுமையாகக் கருதவில்லை. சாதிகள், வறுமை, ஏழைமை இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்ததுபோல, பல மொழிகளும் இனங்களும் மதங்களும் இல்லாத இந்தியா வேண்டும் என்று அவர் பாடியதே இல்லை. இவற்றைப் பாரதத் தாயின் உறுப்புக்களாகப் போற்றினாரேயன்றி மறுப்புக்களாகத் தூற்றவில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்று அறுதி யிட்டுக் கூறியதுபோல மொழிகள் இல்லையடி, இனங்கள் இலையடி, மதங்கள் இல்லையடி பாப்பா என்று அறிவுறுத்தவில்லை என்பதனைத் தேசிய ஒருமைவாதிகள் உணர்ந்து கொள்ளவேண்டும். வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு என்ற அடிகளிலிருந்து, பாரதநாட்டை வாழ்த்தும்போதே தமிழ்வாழ்க, தமிழர் வாழ்க என்று அடுக்குவதிலிருந்து பாரதியார் மொழியையும் இனத்தையும் போற்றுகின்றார் என்பது தெளிவாகும். முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள் மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ மாநிலம் பெற்றவன் இஃதுண ராயோ குதலை மொழிககிரங் காதொரு தாயோ கோமகளே பெரும்பாரதர்க் கரசே விதமுறு நின்மொழி பதினெட்டுங் கூறி வேண்டிய வாறுனைப் பாடுதுங் காணாய் பாரதத்தாய் வளமான பதினெட்டு வழக்கு மொழி யுடையாள் எனவும் பாரத மக்கள் தங்கள் தங்கள் மொழிகளால் அவளை வாழ்ததித் திருப்பள்ளியிலிருந்து எழுப்புகின்றனர் எனவும் பாடுவதனால் பாரதப் புலவர் பாரதியார் இந்தியாவில் பன்மொழி வளத்தால் உடன்படுகின்றார் என்பது தெளிவாகும். மேலும், வேறுபட்ட அம்மொழிகள் சிந்தனையினால் வேறுபடக் கூடாது; தேசிய ஒருமைச் சிந்தனை ஒன்றே வேண்டும் என்று உறுதியாகக் கூறுகின்றார் என்பதும் தெளிவாகும். இன வொருமை பல மொழிகளை வரவேற்றது போலவே பாரத ஒருமைப் பாட்டிற்குப் பல இனங்களையும் வரவேற்று வழி காட்டி யுள்ளார் பாரதியார். `தாயின் மணிக்கொடி பாரீர், அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்’ என்ற ஒப்புயர்வற்ற மணிக்கொடிப்பாடலில் இந்திய நாட்டு இனங்களையெல்லாம் வந்தேமாதரம் என்று எழுதித் திகழும் - பட்டொளி வீசிப் பறக்கும் பாரத தேவியின் கொடியைக் காக்க வாரீர் வாரீர் என்று அழைக்கின்றார். செந்தமிழ் நாட்டுப் பொருநர்கள், சேரன் வீரர்கள், துணிந்த தெலுங்கர்கள், தாயடிபணியும் துளுவர்கள், கன்னடர், ஒட்டியர், காலனைக் கலக்கும் மராட்டர், மறத்தையும் கற்பையும் காக்கும் கீர்த்தி மிக்க இராசபுத்திர வீரர், பாஞ்சால நாட்டவர், துஞ்சும்போதும் தாயை வணங்கும் வங்க வீரர் என்ற பல இனத்தாரையும் கொடி காக்க வாரீர் என்று அழைக்கின்றார். இவ் வீரரெல்லாம் நம்புதற்குரிய திருக்கூட்டம் எனவும் எந்நிலையிலும் உயிர் கொடுத்துக் கொடியினைக் காப்பார்கள் எனவும் பாராட்டுகின்றார். எனவே, பாரதிப் பெருமகன் காணும் தேசிய ஒருமைப்பாடு என்பது நாட்டின் பல மாநிலங்களிலும் வாழும் இனமக்கள் எல்லாம் நாட்டிற்காக ஒன்றுபடுதல் என்பதாகும். வரலாற்றுச் சிறப்புடைய வாழும் இனங்களை அவர் வெறுக்கவில்லை; போற்றிப் புகழ்கின்றார். நீங்கள் பல இனமாக இருந்தாலும் தாயின் மணிக்கொடியாகிய பட்டுத்துகிலைக் காக்க ஒன்று கூடி ஓடி வம்மின் என ஒருமைப் பாட்டால் சேர்க்கின்றார். மத வொருமை நாட்டில் பல மதங்கள் இருப்பது பாரதக் கவிஞனுக்கு உடன்பாடே. இம்மதங்களும் மத நூல்களும் பாரதத்தின் பெருமையாகும் என்பது அவர் துணிவு. ஞானத்திலும் பரமோனத்திலும், சாரம் மிகுந்த சாத்திரத்திலும், யாகத்திலும் தவவேகத்திலும் யோகத்திலும், தெய்வ பக்தியிலும் உயர்ந்த நாடு எனவும் பூரண ஞானம் பொலிந்த நன்னாடு, புத்தர்பிரான் அருன் பொங்கிய நாடு எனவும், தெய்வம் பலபல சொல்லிப் பகைத்தீயை வளர்ப்பவர் மூடர் உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர்பொருளானது தெய்வம் தீயினைக் கும்பிடும் பார்ப்பார் நித்தம் தக்கை வணங்கும் துருக்கர் கோயிற் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசுமதத்தார் யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடுந் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் எனவும் மதங்களுக்குள் ஒருமைப்பாடு காட்டுவர் பாரதியார். புதிய ஆத்தி சூடியிலும், ஆத்தி சூடி இளம்பிறை யணிந்து மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன் மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே அதனிலை ஒளியுறும் அறிவாம் எனப் பல மதங்களை இணைத்துப் பாடுகின்றார். இங்ஙனம் மொழி யொருமைப்பாடு, இன வொருமைப்பாடு, மத வொருமைப்பாடு வேண்டும் பாரதக் கவி பாரதியார் எந்த ஒருமைப்பாடும் முடிவில் தேசிய ஒருமைப்பாடாக நிறைவுற வேண்டும் என்று பாரத மக்கட்கு அறிவுறுத்துவர். இப் பேருண்மை அவர்தம் எல்லாப் பாடலுக்கும் நிலைக்களனாகும். பாருக் குள்ளே சமத்தன்மை - தொடர் பற்றுஞ் சகோதரத் தன்மை யாருக்குந் தீமைசெய் யாது - புவி யெங்கும் விடுதலை செய்யும் வயிற்றுக்ச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் ஒன்றென்று கொட்டு முரசே அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே என்ற ஈடிணையற்ற முரசுப்பாடலில் தேசிய வொருமைக்கு வேண்டிய அறிவுரைகள் அனைத்தையும் தொகுத்துப் பாடுவர் பாரதியார். தமிழ் மொழியின் சிறப்பு தமிழ் நாட்டின் சிறப்பு, பத்தி சத்தி காளி முத்துமாரி கலைமகள் திருமகளின் பெருமை, கண்ணன் பாட்டு, குயிற்பாட்டு பாஞ்சாலி சபதம், தன் வரலாறு எனப் பல துறையிற் பாடியிருந்தாலும அவரை நாயனார் ஆழ்வார் ஞானியென்றோ, தெய்வப் புலவன், காப்பியக் கவி என்றோ புகழ்வதில்லை. தேசியக் கவி பாரதியார் என்ற தனிப் புகழால் போற்றுகின்றோம். அதற்குக் காரணம், அவர் பாடிய எப்பொருட் பாடலுள்ளும் பாரத தேசியம் என்ற ஒருமைப்பாடு உயிராக ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதுதான். இருவகை விடுதலைக் கவிஞரான பாரதியார் விரும்பியபடி உரிமை பெற்ற நாம் எல்லோரும் சமம், எல்லார்க்கும உணவு, எல்லார்க்கும் கல்வி, எல்லார்க்கும் ஏற்றத்தாழ்வில்லாப் பாரத வினம் என்ற உண்மையான விடுதலை வாழ்வு பெறத் தேசிய ஒருமைப்பாடு என்ற உயர்ந்த உள்ளத்தைப் பாரதி பாடல்களின் வழி நாடு முழுதும் பரப்புவோமாக. எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும் முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடியும் வீழ்வோம். என்றபடி, பாரத வாழ்விலும் தாழ்விலும் ஒன்றுபடுவோமாக. வ.சுப. மாணிக்கனார் எழுதிய நூல்கள் காலநிரலில் தரப்பட்டுள்ளது 1. மனைவியின் உரிமை 1947 2. வள்ளுவம் 1953 3. கொடைவிளக்கு 1957 4. தொல்காப்பியப் புதுமை 1958 5. இரட்டைக் காப்பியங்கள் 1958 6. தமிழ்க்காதல் 1962 7. நெல்லிக்கனி 1962 8. The Tamil concept of Love 1962 9. Collected papers 1962 10. நகரத்தார் அறப்பட்டயங்கள் 1963 11. உரைநடையில் திருக்குறள் 1963 12. எந்தச் சிலம்பு 1964 13. கம்பர் 1965 14. தலைவர்களுக்கு 1965 15. இலக்கிய விளக்கம் 1972 16. உப்பங்கழி 1972 17. ஒருநொடியில் 1972 18. A Study of Tamil verbs 1972 19. சிந்தனைக் களங்கள் 1975 20. மாமலர்கள்(மாணிக்கனார் கவிதைகள்) 1978 21. தொல்காப்பியத்திறன் 1984 22. கம்பர் நாற்பது 1984 23. தொல்காப்பியக் கடல் 1987 24. திருக்குறட் சுடர் 1987 25. சங்கநெறி 1987 26. காப்பியப்பார்வை 1987 27. இலக்கியச்சாறு 1987 28. ஒப்பியல் நோக்கு 1987 29. தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் நூன்மரபும் 1990 30. மாணிக்கக்குறள் 1991 31. நீதி நூல்கள் 1991 32. கூயஅடைடிடடிபல 33. தற்சிந்தனைகள் 2016 34. என் பொழிவுகள் 2017 பிற நூல்கள் 34. வ.சுப. மாணிக்கனார் போற்றிய விழுமியங்கள் 35. மாணிக்க ஆய்வியல் 36. மாணிக்கப் பேரொளி 37. தொல்காப்யிச் செல்வர் 38. மாணிக்கக் குறளில் மாணிக்கம் 39. மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் 40. தமிழ்ஞாயிறு