மாணிக்க விழுமியங்கள் - 5 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) திருக்குறட்சுடர் - முதல் பதிப்பு 1987 சங்கநெறி - முதல் பதிப்பு 1987 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 5 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+360 = 376 விலை : 350/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 376 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல்’, சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம்’, புலமை நலத்திற்குக் `கம்பர்’ ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். ” என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு” இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். “தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள்’ எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல்’. இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர்’ என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு’. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம்’ மற்றும் `திருக்குறட்சுடர்’. திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள்’. தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!” இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, “வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தளமாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்புகளாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே “லேவாதேவி” என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு “கதிரகம்” என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை’ என்னும் குறிப்பேட்டில் “நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி” என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், “அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல்” என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம்’, `தமிழ்க்காதல்’, `கம்பர்’, `சிந்தனைக்களங்கள்’ போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை 21-7-2017. திருக்குறட் சுடர் முதற் பதிப்பு 1987 இந்நூல் 1987இல் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. திருக்குறளின் சுடரொளி ச. மெய்யப்பன், எம்.ஏ., அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூதறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் வகைப்படுத்தி, ஓரினப் பொருளை ஒரு தலைப்பின் கீழ் நூலாக்கும் திட்டத்தில் இந்நூல் வெளி வருகிறது. இந்நூல் வரிசை ஆய்வாளருக்கு மிகுந்த பயனை அளிக்கும்; இவ்வகை நூல்கள் வருங்கால ஆய்வுக்கு அடிப்படையாய் அமைவன. ஆய்வுக்களங்கள் பல அமைந்த இக்கட்டுரைகள் அனைத்தும் ஒரு நூலாக அமைவதால் பயன் மிகுதியாகிறது. குறிப்பிட்ட துறையில் பார்வை நூலாக அமைகிறது. இவ்வகை நூல்கள் மேற்கோளாட்சிக்கு மிகுதியும் பயன்படுவன. செம்பதிப்புக் கேற்ப, கட்டுரைகள் ஒருசேர வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. வகைமைப்படுத்தப்பட்டுள்ளன. பேரறிஞர் ஒருவர் ஒரு துறையைப் பற்றி நீண்ட நெடிய காலம் சிந்தித்த சிந்தனைகள் எல்லாம் அவராலேயே ஒழுங்குப்படுத்தப் பெற்று ஒரு நூலாக அமைக்கப் பெறுவது பல்வகைப் பலனைத் தரும் அரிய முயற்சி, பெரிய முயற்சியாகும். ஆசிரியர் இக்கட்டுரைகளை மறுபரி சீலனை செய்து, சீர்திருத்தி, செம்மைப்படுத்தி, முறைப்படுத்தி, வகைமைப்படுத்தி நூலாக்கியுள்ளது வளர்தமிழ் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும். இத்தொகுப்பு நிகழ்கால ஆய்வு வளத்திற்குக் கண்ணாடி. பேராசிரியரின் ஆய்வு வன்மைக்கு, அருந்தமிழ் ஆற்றலுக்கு இந்நூல் வரிசை பெருமை சேர்ப்பன. மூதறிஞர் செம்மல் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் ‘வள்ளுவம்’ எனும் அரிய பெரிய ஆய்வு நூலைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு அளித்தார். திருக்குறள் ஆய்வில் அந்நூலுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு, ஆசிரியரின் அறிவியல் அணுகுமுறை திருக்குறளைச் செயல் நூலாக நிறுவிற்று. திருக்குறளை ஓதி உணர்ந்ததோடு உணர்த்தலிலும் வல்லவராகத் திகழ்கிறார். திருக்குறள் வாழ்க்கை நூல்; நடைமுறையில் பின்பற்றப் பட வேண்டிய நன்னூல்; திருக்குறளைப் பெற்ற இனம் தனிச் சிறப்புடையது; வாழ்வின் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு நல்கி, வழிகாட்டும் வளமுடையது என்பதனை இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார். திருக்குறள் அமைப்பினையும் அழகினையும் ஆராய்கிறார். சொல்லழகு, தொடரழகுகளை விளக்குகிறார். இந்தியாவுக்கு மட்டுமின்றி வையத்திற்கே வழிகாட்டும் வளமுடையது திருக்குறள் என்பதனை நிறுவியுள்ளார். ஆசிரியரின் ஒவ்வொரு கட்டுரையிலும் ஏதேனும் புதுச்செய்தி பொதிந்திருக்கும். அதுவே ஆசிரியரின் நிலைத்த புகழுக்குக் களமாகும். மாணிக்கனாரின் புதிய சொல்லாக்கங்கள் தமிழுக்குப் புது வரவும் தமிழுக்கு ஆக்கமும் ஆம். இந்தத் தலைமுறையில் இவரைப்போல் புதிய சொற்களைப் படைத்தவர் இலர். வாழும் சொற்களைப் படைப்பதில் வல்லவர். பழஞ்சொல் புதுப்பிப் பதிலும் வல்லவர். இவர் படைத்த பல சொற்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பெற்று, நாளும் பயன்படுத்தப் பெற்று வருவது இவரது சொல்லாக்கச் செந்நெறிக்குச் சான்றாகும். இவருடைய சொல்லாக்கங்களைச் செய்தி இதழும் வானொலி யும் நாளும் பயன்படுத்துவதே இவரது மொழிக் கொடைக்கு ஒப்பற்ற சான்றாகும். வெல்லும் சொல் படைக்கும் வித்தக ரெனத் தமிழ்கூறு நல்லுலகம் போற்றுகின்றது. இவர் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்குகிறார். இவர் நடை சொற்செட்டும் சுருக்கமும் தெளியும் செறிவும் திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. புலமை நலம் சான்ற பெருமித நடை இவர் நடை. பழந்தமிழ்ச் சொற்கள் மிகுந்துவரும் இலக்கிய நடை. புதுச்சொற்கள் பொலியும் புதுவகை நடை. எல்லா வகையாலும் இவரது நடை தனித்தன்மை சான்றது. பேராசிரியருடைய மூன்று வரிகளைக் கொண்டே அவர் தமிழ்நடையின் தனித்தன்மையினை இனம் காணலாம். அவர் பயன்படுத்தும் சொற்கள், சொல்லாக்கம், சொல்லாட்சி ஆகியவை அவர் நடையின் இயல்பினை இனங்காட்டுவன. ஆய்வு அவருக்கு இயல்பாக அமைந்ததொன்றாகும். திருக்குறளைச் செயல் நூலாக வள்ளுவமாக நூலாக்கினார். கம்பனைக் கற்கும் நெறியில் புதிய தடம் அமைத்தார். அகத்திணையியல் ஆய்வில் ‘தமிழ்க் காதல்’ நெறி விளக்கினார். இவை என்றும் தமிழுக்குப் பொன்றாப் புகழ் தருவன. ‘மறைமலை அடிகளாரின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும் திரு.வி.க.வின் மொழி நடையும் சமுதாய நோக்கும் பேராசிரியரின் எழுத்தில் பளிச்சிடுவதாகத் திறனாய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். வெள்ளிவிழாக் கண்ட தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. தமிழ் மக்களின் நீண்ட நெடிய கனவுகளுக்கு உருவம் கொடுக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புக் குழுவின் தலைவராகயிருந்தார். சாதனைகளால் சிறந்து விளங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியத்தகைஞராக, சிறப்புப் பேராசிரியராக நியமிக்கப் பெற்று, உரை எழுதி வருகிறார். புலமையாலும் தலைமையாலும் சிறந்து விளங்கும் இவர்கள், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவராகத் திகழ்கிறார். எங்கள் பதிப்பகத்திற்குப் பெருமை சேர்க்கும் நல்லா சிரியப் பெருமக்களுள் முதன்மையானவர். அவர்தம் படைப்புக் களைப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிட்டுப் பதிப்பகம் பேரும் புகழும் பெற்று வருகிறது. பயனுள்ள நூல்களை வெளியிடும் ஒவ்வொரு முறையும் பூரிப்போடும் உவகையோடும் களிப்போடும் சாதனை மலர்களைச் சூடி மகிழ்கிறது. ஆசிரியன் முன்னுரை நம் திருக்குறளின் பெருமைகள் பலவற்றை நாம் அறிந்திருந்தாலும், தலையான உண்மையான ஒரு பெருமை மட்டும் நம் உள்ளத்திற் பதிந்து வேர் விடவில்லை. வேரோடு மாறு நம் நெஞ்சப் பாத்திகளை ஈரப்படுத்திக்கொள்ளவில்லை. அதுதான் செயல்வேர். திருக்குறள் தோன்றிய நாள்முதல் தமிழிலக்கியங்களைக் கருத்தாலும் சொல்லாலும் வளஞ்செய்து வருகின்றது. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், அருட்பாரங்கள், நீதியிலக்கி யங்கள், புராணங்கள், சிறுகதை புதின நாடகங்கள் என வகை யெதுவாயினும், குறள் நீர் பாயாத இலக்கியக்குளம் இல்லை. உரைகள், உரை வேற்றுமைகள், உரை வளங்கள், உரைக் களஞ்சியங்கள், ஆய்வுரைகள் திருக்குறட்கு அமுதசுரபி போல மேன்மேலும் பொங்கி வருகின்றன. மொழி பெயர்ப்புக்கள் முழுவளவிலும் சிறுவளவிலும் உலகப் பன்மொழிகளில் வந்த வண்ணம் உள. அண்மையில் எழுத்து வடிவு பெற்ற சௌராட்டிர மொழியிலும் திருக்குறள் பெயர்ப்பாயிற்று. வள்ளுவர் நூலகம் எனத் தனிபெரு நூற்கட்டிடம் காணுமள விற்குத் திருக்குறள் குறித்த நூல்களும் ஓவியங்களும் பிற பொருட்களும் குவிந்து கிடக்கின்றன. வள்ளுவர் பெயர் கொண்ட மக்கள் பலர், மன்றங்களும், கழகங்களும், நிறுவனங் களும், கோட்டங்களும், போக்குவரத்துக்களும், கூட்டுறவுச் சங்கங்களும் பலப் பல. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டு விட்டோம்; ஆம்! அவனால் நாம் புகழ் கொண்டோ மேயன்றி, நம்மால் அவன் புகழ் கொண்டானா? உரைகள் மொழி பெயர்ப்புக்கள் கோட்டங்கள் மன்றங்கள் எல்லாம் புறப் பெருமைகளேயன்றி நூலோடு உடன்பிறந்த உள்ளீடான அகப்பண்பல்ல. திருவள்ளுவர் தன் நூல் பன்மொழியில் பின்னொரு காலத்துப் பெயர்க்கப்படவேண்டும் என்று எதிர் நலம் நோக்கி எழுதவில்லை. திருக்குறளின் அகப்பயன் யாது? புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்; செய்யாது இகழ்ந்தார்க் கெழுமையும் இல் பாராட்டிய நெறிகளை வாழ்விற் கடைப்பிடிக்க வேண்டும்; பிடிக்காது விட்டவர்க்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்பர் வள்ளுவப் பெருமான். ஓர் எடுத்துக்காட்டு: நல்ல மருத்துவன் இலவசமாகச் சோதித்து இலவசமாக மாத்திரைகளைத் தருகின்றான். அவன் தகுதியைப் பலரிடம் பாராட்டுகின்றோம். அவன் தந்த மாத்திரைகளை மட்டும் உட்கொள்வதில்லை. அம்மருத்துவன் உட்கொண்டீரா என்று கண்டு கேட்டால், ஆ ஆ உட்கொண்டேன் என்று பொய்யும் சொல்லி மகிழ்கின்றோம். நமக்கும் அருமைத் திருக்குறட்கும் உள்ள தொடர்பு இவ்வளவுதான். வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய திருக்குறள் இலக்கிய ஆதிக்கம் செய்து வருகின்றதேயன்றி வாழ்வாதிக் கமோ அரசியலாதிக்கமோ உலகாதிக்கமோ செய்யவில்லை. அது பிறந்த நாள் தொட்டே தமிழ்ப் புலவர்கள் இலக்கியப் பயன் கொள்ளத் தவறவில்லை. புலவர் குழாம் இதுவும் செய்திராவிட்டால், ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்ற தொகுப்பில் திருக்குறளும் ஒன்றாகியிருக்கும். புலவரினமும் உரையினமும் போற்றிய மரபால் முப்பால் உய்தி பெற்றது. இது நன்றிக்குரிய வரலாறு. இதன் மேற் சிறப்பு திருக்குறளின் செயலாதிக்கமே. மக்கள் தத்தம் நாள் வாழ்விலும் மன்னர்கள் தம் அரசியல் நடப்பிலும் திருக்குறளைச் செயல் வழிகாட்டியாகவோ சிந்தனையியக்க மாகவோ கொள்ளத் தவறி விட்டனர். இச் செயல் மறை இன்றும் கற்றற்கும் சொற்பொழிதற்கும் உரிய பெருமைப் பொதுமறை யாகப் பாராட்டப்படுவதன்றி, ஒவ்வொருவரும் வினைப்படுத் தற்குத் தகும் வாழ்வுத் தனி மறையாக எண்ணப்படுவதில்லை. திருக்குறளைக் கற்கத் தொடங்கிய நாள்தொட்டு, செயல் நோக்கே என் முதற் பார்வையாயிற்று. தனித் தொடர்பு, மன்பதையுறவு, பொருளியல், அறிவியல், பண்பியல், இல்லறம் எனப் பல வகையிலும் பொருந்திய குறட்கள் என்னை நெறிப்படுத்தியுள்ளன. முப்பதாண்டுகட்கு முன்னரே ‘வள்ளுவம்’ என்னும் என் நூலில், திருக்குறளின் முழுவமைப் பையும் தனியதிகாரத்தையும் சொல் தொடர் நடைமாண்பு களையும் செயற்களத்தனவாக, நடப்பியல் அறங்களாக வலியுறுத்தி யுள்ளேன். திருக்குறட்சுடர் என்ற இந்நூலும் அதன் தொடர்ச்சியே. செயல் வாழ் வினை நோக்கத்தை அழுந்தக் காட்டுவதே திருக்குறள் குறித்த என் எழுத்துப் பயன். ஒருவர் வாழ்வின் நடப்பு பல நிலைப்பட்டது. அதற்கேற்ப அறக்கூறு களும் பலவாகும். ஆதலின் குறட்களும் பல நிலையறம் கூறுவன. இப்போது தன் நிலை எது என்று எண்ணி அந்நிலைக் குறளைத் தேர்ந்து வினையாளும் பகுத்தறிவு வேண்டும். பகுத்தறிவின்றிப் பொதுமையாக, பொது நிலையாகத் திருக்குறளைப் பார்ப்பது எல்லார்க்கும் எல்லா நோய்க்கும் ஒரு மருந்து சொல்வது போலாம். அத்தகைய பொது மருந்து உண்டா? மருந்துப் பன்மையே உலகியல். திருக்குறட் பொருட்பால் வலுவான செயலாற்றல் கொண்டது. இன்றைய ஞாலவரசியலுக்கும், சிறப்பாக நம் இந்தியவரசியலுக்கும் அரசு வள்ளுவங்கள் இன்றும் உயிர்ப் புடையன. ஆதலின் இந்திய வழிகாட்டி, தேசிய மறை திருக்குறள், நிகழ்காலப் பார்வை என்ற மூன்று கட்டுரைகளும் பாரதத்தின் வலிமையும் வளர்ச்சியும் மதிப்பும் நோக்கி எழுதப் பெற்றவை. திருக்குறட் சுடரில் இக்கட்டுரைகள் முச்சுடராகும். அரசின் நடப்போட்டங்கள் நாட்டன்போடு இவற்றில் திறனாயப்பட்டுள. நம் பாரதம் வல்நல்லரசாக வேண்டும் என்று விழையாத இந்தியர் உண்டோ? என் நடை பற்றி ஒரு குறிப்பு: என் எழுத்துக்கள் கட்டளைச் சொற்களால் கட்டளை நடையால் அமைந்தவை. சொற் பல்குதல் என்ற மிகைக்கு இடமில்லாதவை; செறிவு மிகுந்தவை; வேண்டுங்கால் புதிய சொல்லாக்கங்களும் புதிய சொல் வடிவுகளும் புதிய தொடராட்சிகளும் உடையவை. நீண்ட செந்தமிழுக்கு எதனையும் நிறைவாகத் தூய்மையாகச் சொல்ல வல்ல தற்கிழமைத்திறம் உண்டு; அம்மொழித் திறத்தைப் பயன்படுத்தும் பயில் திறம் எழுத்தாண்மையர்க்கு வேண்டும்; தூய செந்தமிழால் ஒருவர் எழுதவில்லையெனின், அது தமிழ்க் குறைபாடன்று; தெளிவும் உறுதியும் பயில்வும் இல்லா எழுதுகையர் குறைபாடு என்று உணர்வதே மெய்யுணர்வு. இலக்கிய விளக்கம், எந்தச் சிலம்பு, ஒப்பியல் நோக்கு, தொல்காப்பியத் திறன், சிந்தனைக் களங்கள் என்ற பல தலைப்புடை நூல்களில் இடைமடுத்துக் கிடந்த திருக்குறட் கட்டுரைகளும் இரண்டு புதிய கட்டுரைகளும் திருக்குறட் சுடர் என்னும் புதுப் பெயர் கொண்ட இந்நூலின்கண் ஒரு பொருள் மாலையாகத் தொகை பெற்றுள. என் முன்னைக் கட்டுரை எல்லாம் ஒரு பொருள் நுதலியனவாகப் புதிய தொகைப்பாடு பெறவேண்டும் என்று திரு.ச.மெய்யப்பன் விழைந்தார். உயர்வுள்ளலும் உள்ளியபடி செய்தலும் ஆகிய அருந்திறல் வாய்ந்த மெய்யப்பனாரின் கருத்தினை வரவேற்றேன். அதன்படி முருகனைய ஆறு புது நூல்கள் இப்போது வெளிவருகின்றன. மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு என் வாழ்த்தும் பதிப்புச் செம்மல் மெய்யப்பனார்க்கு என் நன்றியும் உரிய. கதிரகம் வ.சுப.மாணிக்கம் காரைக்குடி வைகாசி 2018 பொருளடக்கம் 1. இந்திய வழிகாட்டி 11 2. திருக்குறள் வெளிப்படை 20 3. வாழ்வாங்கு 25 4. நடைமுறை அறங்கள் 32 5. குறளணிகள் 40 6. தன் நெஞ்சம் 47 7. குறள் விளக்கம் 51 8. நம்பிக்கை நூல் 57 9. இலக்கணக் குறள்கள் 62 10. திருக்குறள் உத்திகள் 69 11. வள்ளுவர்கள் 80 12. வள்ளுவர் கல்வித் திட்டம் 86 13. வள்ளுவர் கண்ட உலகப்போக்கு 92 14. சங்க இலக்கியமும் திருக்குறளும் 96 15, நீதி விளக்கம் 103 16. திருக்குறளும் தம்மபதமும் 121 17. தேசிய மறை திருக்குறள் 126 18. நிகழ்காலப் பார்வை 136 1. இந்திய வழிகாட்டி திருக்குறள் தனிமனித வாழ்வு, மன்பதை வாழ்வு, நாட்டு வாழ்வு, ஞால வாழ்வு அனைத்தும் முழுதுறத்தழுவிய வாழ் வியல் நூல். அது கற்பனைப் பனுவலன்று; வறட்டுக் கொள்கை பேசும் நூலன்று; எந்நிலைய வாழ்வுக்கும் வழிகாட்டும் முதனூல். வினையின் நீங்கி விளங்கிய அறிவன் கண்ட தலைநூல். அந்நூலை நடைமுறைக் கண்ணோடு பார்க்க வேண்டும்; நாள் நிகழ்ச்சிகளோடு உராய வேண்டும்; காலப் போக்கோடு ஒத்திட்டுக் காண வேண்டும். திருக்குறள் ஓர் உயிர் நூல் என்பது மெய்ப்படவேண்டுமாயின், வள்ளுவர் குறட்களைக் கால நடப்புக்களோடு பொருத்தி எழுதவும் சொல்லவும் விளக்கவும் வேண்டும். இது செய்தற்கு நாம் அஞ்சுகின்றோம். செய்யப்புகின், கருத்து வேறுபாடு தோன்றிப் பூசல் பொங்கி எங்கே திருக்குறளின் பெருமை போய்விடுமோ என்று மயங்குகின்றோம். இவ்வச்சம் தவறானது, பயனற்றது. ஆதலின் இக்கட்டுரைக்கண் இக்கால நடப்புக்களின்மேல் திருக்குறளைச் செலுத்திக் காண்போம். பொருட்பால் அறம் பொருள் காமம் என்று திருக்குறள் மூன்று பாலுடையது எனினும், பொருட்பாலே எழுபது அதிகாரம் கொண்ட பெரும்பால். அது பல பொருள்களுக்கும் பொது வான பால் என்று பெயர் பெறினும், மெய்யாக நுவலின், பொருட்பால் ஓர் அரசியற்பால். இறைமாட்சி என்பது அதன் முதலதிகாரம். ஆதலின் அதன் பின்னதிகாரங்கள் எல்லாம் ஓராற்றான் அரசியற் சார்புடையன என்பது பெறப்படும். நாட்டின் ஆட்சிக்கும் மக்களின் வாழ்வுக்கும் உயிர்மெய் அனைய உறவு உண்டாதலின் பொருட்பாலிற்றான், வள்ளுவரின் பல்வேறு கொள்கைகளையும் சிக்கல் தீர்க்கும் வழிகளையும் காண்கின்றோம். பொருட்பால் வள்ளுவரின் அறிவுப்பால். அரசியம் வள்ளுவ அரசு மக்களுரிமை சான்றது; அடிமையை வெறுப்பது; நல்லரசு வேண்டுவது; அல்லரசு கடிவது; நல்லரசனைப் போற்றுவது; அல்லரசன் ஒழிகவெனத் தூற்றுவது; வல்லரசு வேண்டுவது; மெல்லரசை இகழ்வது. வள்ளுவ அரசு முடியரசு, குடியரசு, படையரசு என்ற வகைக்கு உட்பட்டதன்று. வகை எதுவாயினும் ஆகுக. செங்கோலரசே திருக்குறள் வேண்டும் நாட்டரசு. அரசன் அணியும் முடிகளை ஆடைகளை அணிகளை, அவன் தேவியர்களை, அத்தேவியர்களின் அழகுக் கோலங் களை, அரசனது வழிவழி மக்களை இன்ன பிறவற்றைத் திருக்குறள் கூறவில்லை. அரசன் என்ற சொல்லுக்காக அடிபணிந்து எந்நாளும் போற்ற வேண்டும் எனவும் கூறவில்லை. முறை செய்து காப்பாற்றும் மன்னனாயின், மக்கட்கு இறையா வான்; வெருவந்த செய்வானாயின் வெங்கோலன் ஆவான்; அல்லவை செய்வானாயின் கொலைஞன் ஆவான்; தன் செயலால் தானே கெடுவான்; கூழும் குடியும் ஒருங்கிழப்பான்; அவன் குடிமக்கள் அழுத கண்ணீர் படையாகி அவனை அழிக்கும்; அவனது ஆட்சி பேயாட்சியாகும். இவ்வாறு கொடுங்கோல் அரசனாயின் அவனைக் குப்புறத் தள்ளக் குறள் பின்வாங்குவதில்லை. மேலும் அரசனே நாட்டின் தனிப் பெருந்தலைவன் என்பது வள்ளுவர் கருத்தன்று. அவன் தன் குடிமக்களுள் சிறந்த பெரியவர்கள் உளர். அன்னவர்களைத் தழுவித்தான் அரசன் நாட்டினை இயக்கவேண்டும். ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் என மன்னனுக்கு அறிவுரையும் அச்சுரையும் கூறுவர் வள்ளுவச் செம்மல். செவிகைப்பச் சொற்பொறுக்கும் வேந்தனே பண்பு டையவன் எனவும், வென்றி தருவது வேலன்று செங்கோல் எனவும் ஆள்வார்க்கு இடிக்கும் நண்பர்கள் வேண்டும் எனவும் அரசனுக்கு மேல் நின்று அறிவுறுத்துவர். திருக்குறள் எக்காலத்து எழுந்தது, எழுந்த காலத்து எவ்வகை அரசு இருந்தது என்பது வினாவன்று; திருக்குறளை எவ்வகைச் சிந்தனைச் செல்வன் எவ்வண்ணம் எழுதினான் என்பதுவே வினா. உடம்பின் இயற்கைகளை எண்ணி நல்லிலக் கணம் வடித்தாற்போல, அரசியலின் ஒழுகலாறுகளைக் கண்டு உணர்ந்து காலங் கடந்த நெறிகளைத் தெளிவிப்பது திருக்குறள். அரசு என ஓரமைப்பு மக்களினத்துக்கு வேண்டியவரை அரசு வள்ளுவங்கள் வாடாதவை தள்ள முடியாதவை. இந்தியவரசு நம் இந்தியவரசு உரிமை பெற்ற மணி முதல் சொல் லொணா இடர்ப்பாடுகளை எதிரேற்று முன்னேறியுள்ளது. ‘இளையதாயினும் பகையரசு கடியும் செருமாண் தென்னர் குலமுதலாதலின்’ என்று இளங்கோ பாராட்டியதுபோல, இளைய இந்திய நல்லரசு பெறலருந் தலைவர்களின் ஆற்றலா லும், கிளர்ச்சி விரும்பா மக்களின் சீரான ஒழுக்கத்தாலும் சாயாது இயங்கி வருகின்றது. ஐந்நூற்றுக்கு மேற்பட்ட குறு நிலங்கள் ஓரிந்தியாவாகக் கிளர்ச்சியின்றி இணைந்தது உலக வரலாற்றில் ஒரு புதுமை. இப்புதுமையைப் பழமைபோலச் செய்தவர் சர்தார் படேல். ஒரு காசுமீரம் நம்மைப் படுத்தி வரும் பாட்டினைப் பார்த்தால், படேலின் அருந்திறலாண்மை புலப்படும். இங்ஙனம் வளர்ந்து, இனியும் வளர வேண்டிய இந்திய வரசுக்கு வள்ளுவர் பொருத்தமான வழிகாட்டி. திருக்குறள் இந்தியத் தமிழ் நூல். இந்திய அரசியல் அமைப்பின் அறிவு ஆள்வார்க்கும் சார்பாளர்க்கும் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு திருக்குறட் பொருட்பாலறிவும் இன்றியமையாதது. இன்னும் மெய்ப்படமொழியின், திருக்குறட் கல்விதான் யார்க்கும் முதற்கண் வேண்டப்படுவது. ஏன்? அரசியலமைப்பு அவ்வப்போது கட்சிப் பெரும்பான்மையால் திருத்தத்துக்கு இடனாகிச் செல்வது. வள்ளுவ அரசியல் திருத்தம் கடந்த செம்மைப்பாடு உடையது. இந்தியவரசு தனி மனிதப் பண்புகள் நிரம்பியதாகக் காண்கின்றேன். விருந்தோம்பல், இனியவை கூறல், பொறை யுடைமை, அருளுடைமை, செய்ந்நன்றியறிதல், இன்னா செய்யாமை, அவாவறுத்தல் இன்ன பிற தனி மகப் பண்புகள் நம் அரசின் வெளி நாட்டுக் கொள்கைகளில் மிகுதி. இறை மாட்சி, ஒற்றாடல், வினைசெயல் வகை, பகைமாட்சி, பகைத் திறந்தெரிதல் என்றின்ன அரசியங்கள் தலைவர்களின் அயலகச் சிந்தனைகளில் ஊடுருவவில்லை என்பது என் கருத்து. நம் அரசு திருக்குறளின் அறத்துப்பாலுக்கு ஓர் இலக்கிய மாக ஒளிர்கின்றதேயன்றி, பொருட்பாலுக்கு இலக்கியமாக உயரவில்லை. ஏன்? தனியியமும் அரசியமும் ஒன்று, பெரிதும் வேறில்லை என்பது நம் தலைவர்களின் துணிபு. இம்மனப் பான்மையினால், உண்ணாட்டு அயல்நாட்டுக் கோட்பாடு களை வகுத்துள்ளனர். அதனால் எதிர்பாரா இன்னா விளைவுகள் புகுந்துவிட்டன. இன்னும் புகுவன. தனியறமும் அரசறமும் கொள்கைகளின் களங்களை முரணின்றி நமக்குப் புரிய வைப்பது திருக்குறள். ஒருவன் கொள்கை என்ன? உள்ளூர்க் கொள்கை என்ன? உலகக் கொள்கை என்ன? இவற்றை அறியும் நோக்கில் வகுத்துத் திருக்குறளைப் பயில வேண்டும். குற்றஞ் செய்தவர்களைப் பொறுத்தவர்க்குப் பொன்றுந் துணையும் புகழ் என்பது தனியறம்; குற்றங்கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் என்பது அரசறம். ஒன்றாக நல்லது கொல்லாமை என்பது தனியறம்; கொடியவர்களைக் கொன்று தண்டிக்க என்பது அரசறம் தவமறைந்து அல்லவை செய்யற்க என்பது தனியறம்; தவவடிவங் கொண்டு ஒற்றாடுக என்பது அரசறம். எல்லார்க்கும் பணிதல் நல்லது என்பது தனியறம்; பகைவரைக் காணின் பணிவதுபோல் முதுகு காட்டுக என்பது அரசறம். ஒருவன் ஒருவனை அழித்தால் கொலை என்கின்றோம்; அழித்தவனைக் கொலையாளன் என்கின்றோம். ஆனால் போர்க்களத்துக் கொலையை வீரம் எனவும், அக்கொலை செய்தானை வீரன் எனவும் போற்றி வாகைமாலை சூட்டுகின் றோம். இக்கொலை வீரப் பயிற்சியும் கருவியோடு அளிக் கின்றோம். அறங்கள் இருவேறாக இருக்கலாமா? பெருமுரண் இல்லையா? இதற்கு விடை இக்கட்டுரைக்கண் விரிப்பின் பெருகிவிடும். மனமாசின்மையே அறத்தின் அடிப்படை. பிறநலமே அறத்தின் உரைகல். தவக்கோலம் கொள்ளும் ஒற்றனும், போர் செய்யும் வீரனும் தம்முயிரை மதியாது நாட்டு நலம் பேணுபவர்கள் அன்றோ? அவர்கள் செயலில் தன்னல மாசுக்கு இடனுண்டா? ஆதலின் அரசறங்கள் பொதுநலம் தரும் நல்லறங்களே என்பது தெளிவு. படை வலிமை ஓர் அரசுக்குப் படையும் படைப் பெருக்கமும் இன்றியமை யாதவை என்பதனை நம் தலைவர்கள் ஆழமாகச் சிந்திக்க வில்லை. மாறாக, படைவளத்தை இழித்தும் கழித்தும் பேசினர். பொருளே வளம் என்று அதற்கே திட்டம் பல இட்டனர். மக்களைப் படையுணர்ச்சிப் படுத்தாது பொருளுணர்ச்சிப் படுத்தினர். சுற்றியுள்ள உலகம் நம் படை வறுமையைப் புரிந்து கொண்டது. படைமனம் பகைமனம் இல்லா நாடு என்பதனை யும் புரிந்துகொண்டது. இஃது இந்தியாவின் தனிப் பெருமை என்று நம்மிற் பலர் தற்பெருமை ஆடலாம். இப்பெருமை சீனத்தாக்குதற் காலத்து என்னாயிற்று? யார் தரினும் படை தருக என்று இரந்து ஏளனத்துக்கு ஆளானோம். சீனா வஞ்சித்தது, செய்ந்நன்றி கொன்றது என்று தனியறம் பழித்தோ மேயன்றி, அரசறம் எது என்று நாடவில்லை. செய்ந்நன்றியுணர்வு அரசறம் அன்று. அரசாள்வார்கள் அடிக்கடி மாறுவார்கள். அரசின் கொள்கைகள் அயற்சூழ்நிலைகளால் அடிக்கடி நிலைமாறுவன. அப்போது தன்னாட்டிற்கு நல்லது எது என்று எண்ணியே வினை செயல் வகைகளை ஆளுநர் மேற்கொள்வர். நாட்டு நலம் கருதிச் சூழ்ச்சிகளைக் கையாளும் அரசியல் அறிஞர்களைப் பழிப்பது பொருந்தாது. கையாளாதவர்களே பழிப்புக்கு உரியவர். வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக: ஓம்பா மெலியார்மேல் மேக பகை (861) என்பது பகைமாட்சிக் குறள். படைமெலியவர்களைப் பகைத்து நாட்டுநலம் பேணுக என்று வள்ளுவரே ஆணையிடுகின்றார். அங்ஙனம் செய்யாத அரசுக்குப் புகழ் இராது எனவும் அச்சுறுத்துகின்றார். நம் அரசியற்றலைவர்கள் இன்றுவரை முற்றும் மறந்து வரும் ஓர் அரசியல் உண்டெனின் அது பகைமாட்சியைப் பயன்படுத்தாமையாகும். திருக்குறள் எண்பத்தேழாவது அதிகாரத்தை இனியாவது நாம் கண்ணும் கருத்துமாகப் பின்பற்ற வேண்டும். நம் தாய்நாடு ஞாலத்தில் ஒரு பெரு நாடு; மாநில மீது அதுபோல் பிறிதில்லை என்ற புகழ்ச்சிக்கு உரிய நாடு. எனினும் பயன் என்ன? நம்மைக் கண்டு பக்கத்து நாடுகள் துணுக்குற வில்லை. சீனப் படையெடுப்புக்குப் பின், சுற்றுச் சிறு நாடுகளுக் கெல்லாம் குளிர்விட்டு விட்டது. அணிய நாடுகளின் பகை கூடாது, ஐ.நா.வில் சார்புத்துணை வேண்டும் என்று அஞ்சியஞ்சி விட்டுக்கொடுத்த போக்கால், கண்டது என்ன? பன்னூறாண்டு மண்ணொடு பாடுபட்ட இந்தியர்களை, இந்தியர்கள் என்பதற் காக இலங்கை விரட்டுகின்றது. கப்பல் கப்பலாகப் பருமா ஏற்றுமதி செய்கின்றது. பாகித்தான் அகதிகள் ஒருபுறம் குவிய, இலங்கை யகதிகளும் பருமா அகதிகளும் தாயகம் ஓடிவந்து தவிக்கின்றனர். இங்ஙனம் வரவிட்டால், இந்தியன் என்பதற்கு அகதி என்று பொருள் என மேனாட்டு அகர நூல்கள் எழுதவும் கூடும். உலகம் ஒன்று, உலக மக்கள் ஓரினம் என்று பறையறையும் நம் கொள்கைக்குப் பழிப்பு வருமோ? அரசியல் அரங்கில் ஐந்தொழுக்கம் கண்ட நம் இலக்கணத்துக்கு இலக்கியமாக நாமாவது நடந்துகாட்ட வேண்டாமா? என்று நாம் எண்ணும் புழுக்கத்தை அயலக நாடுகள் கண்டவாறு பயன்படுத்துகின்றன. எகித்து, காங்கோ, கொரியா, வியட்டுநாம், கியூபா நிகழ்ச்சி களில் நாம் காட்டிய எதிர்ப்புத் துடிப்பை இலங்கைத் தமிழர் பூசலில் காட்டியிருந்தால், திபேத்தில் காட்டியிருந்தால், அணிய நாடாளுநர் உள்ளத்து அச்சம் குடிகொண்டிருக்கும். சிறிது ஆராய்ந்து இறங்குவார்கள். இலங்கைத் தமிழர்கள் அவல நிலைகளை ஐ.நா.வில் கொண்டுபோய் விளம்பியிருந்தால், பருமாவிற்கு இன்று இவ்வளவு துணிவு பிறந்திராது. என்னாமோ என்று பருமா வாழ் தமிழர்களை நாமே இறக்குமதி செய்து கொள்ள வேண்டிய பரபரப்பும் பதைபதைப்பும் ஏற்பட்டிரா. இளக்காரம் நம்மரசு சேணாடுகளிடை மதிப்புப்பெறல் கருதி, அணிய நாடுகளுக்கு இளக்காரம் கொடு போக்குகளை முன்னரே ஊகித்துக் கொண்டு ஓரடி முன்வைத்துவிட வேண்டும். வல்லரசாகுக சீனா எப்படியும் ஒருநாள் அணுக்குண்டு ஆக்கிவிடும். அதன் வெடிப்பைக் கேட்கும்வரை நாம் வாளாவிருத்தல் ஆகாது, ஆகாது. படையொழிப்புப் பறைசாற்றும் நாம் அணுக்குண்டு செய்யலாமா? செய்வோமென்று சொல்லின், உலகம் நகை யாடாதோ? என்று நினைப்பது தனியறம், நாட்டறமன்று. சீனத்தாக்குதலுக்கு முன் இந்தியா போய் கொண்டிருந்த போக்கிலேயே பின்னும் போதல் ஒரு போக்கு எனப் புகழப்படுமாயினும், அப்போக்கு பிற்போக்கேயாம். மாறிய சூழ்நிலைகளைக் கணித்து, வேண்டுமேல், மாறத் தயங்குதல் கூடாது. அதுவே நாடு காக்கும் பெருநெறி. யார் தூற்றினும் தூற்றுக என்று ஐதராபாத்தை இணைத்தோம். படைவிடுத்துக் காசுமீரத்தை மீட்டோம். படைதொடுத்துக் கோவாவைக் கொண்டோம். அதனால் ஓரளவேனும் வாழ்கின்றோம். இத்துணிவு பாரதத் தலைவர்களுக்கு இன்னும் பலவாகுக. அணுக்குண்டு செய்யும் ஆற்றலுடைய ஆசிய நாடுகள் மிகச் சிலவே. அதற்குரிய மூலகங்கள் எம்மிடமிருந்தும், அணுக்குண்டு வெடிக்க மாட்டோம் என்கின்ற கொள்கைத் தடிப்பு இனி வேண்டாம். வழிவழி நட்பல்லது வேறறியாச் சீனம் வஞ்சித்தபின், அணுக்குண்டு ஆக்கிக் காட்டும் கொள்கைத் துடிப்பே வேண்டற்பாலது. இந்தியக் குண்டின் வெடிப்பை எதிரிகள் கேட்கும் நாளே இனிய நாள். இவ்வல்லமையை நாம் வேண்டுவது பிறநாட்டைப் பிடித்து வஞ்சி சூடுதற்கன்று; நொச்சி என்னும் தற்காப்புக்கே; ஒரு நாடு இந்தியாவை இளக்கமாக எண்ணாதபடி அவ்வெண்ணத்தை முளையிலே கிள்ளுதற்கே. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு காலத்திற்கேற்ற வகை வகையான தற்காப்புக் கருவி யெல்லாம் முன்னரே நம்மிடத்து இருந்தால், பகைவர் நம்வழி வராது வேறுவழி பார்ப்பார்கள் அல்லவா? இந்திய மன்னர்கள் ஐரோப்பியர்களுக்கு அடிமைப்பட்டதற்கு ஒரு காரணம் காலத்திற்கேற்ற படைக் கருவி - எதிரிகள் வைத்திருந்த கருவி வகைகள் இல்லாமையாம். எது கடன் வாங்கினாலும் தற்காப்புக் கருவிகள் கடன் வாங்க வேண்டாதபடி, தானே ஆக்குவிக்கும் தன்னாற்றல் நம் நாட்டிற்கு வேண்டும். அப்போதுதான் அணிய நாடுகள் நம்மை அச்சத்தோடும் ஆர்வத்தோடும் மதிக்கும். ஆட்சிநூல் நம் வள்ளுவரை நாமே நம் நாட்டின் அரசியல் வழி காட்டியாக இதுகாறும் கொள்ளத் தவறிவிட்டோம். கொள்ளு மாறு எடுத்துச் சொல்லவும் இந்தியத் தமிழர்கள் தவறி விட்டனர். இத்தவறு இனியும் நீளக்கூடாது. தனியறம் அரசறம் என்பனவற்றை உணர்த்த வல்ல ஓர் இந்திய நூல் திருக்குறள். ‘ஒன்றாக நல்லது கொல்லாமை’ என்று உலகம் மொழிந்த வள்ளுவரே படைமாட்சியும் படைச்செருக்கும் மொழிகின்றார். நாட்டின் செல்வத்துள் படையே தலைச் செல்வம் என்று வலியுறுத்துகின்றார். அரசின் முதலுடைமை படையே என்று கண்டார் வள்ளுவர். தாம் கண்டவாறே கற்பவர்க்கு உணர்த்த வும் துடித்தார். பொருட்பால் எழுபது அதிகாரம், எழுநூறு குறள்கள் கொண்டது. இறைமாட்சி என்பது முதலாவது அதிகாரம். அவ்வதிகாரத்தின் முதற்குறளாவது: படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (381) இக்குறளின் முதலடிக்கண் முதலாவது இருக்கும் முதல் அசைச் சொல் படை என்பது. படை என்னும் ஆற்றலுடைய சொல்லை முதலாவதாக வைத்துப் பொருட்பாலையே தொடங்கியுள்ளார் வள்ளுவர். படையின் இன்றியமையா மையை இதனைவிட வேறு வகையால் உணர்த்த முடியுமா? வள்ளுவரை உலகிற்கு வழங்கிய தமிழிந்தியா தன் வள்ளுவ மகனின் அருமையை அறியவில்லை. இனியேனும் வள்ளுவ நம்பி இந்திய வழிகாட்டி ஆகுக. வழிகாட்டியெனத் தலைவர்கள் வணங்கியொழுகுக. அரசறம், பகைமாட்சி, படை மாட்சி, படைச்செருக்கு, பகைத்திறந்தெரிதல் என்ற வள்ளுவ அரசியங்களை நம் தலைவர்கள் மேற்கொள்ளுக. 2. திருக்குறள் வெளிப்படை திருக்குறளின் பழமை திருக்குறள் காலத்தால் ஈராயிரம் ஆண்டுப் பழமைப் பட்டது என்றாலும், கருத்தாற் பழமையுடையதா? ஆம், ஓரளவு கருத்தாலும் பழமை வாடை கொண்டது. நால்வகை மதில் பற்றிக் கூறும் அரண் அதிகாரச் செய்திகளும், போர் குறித்த களச் செய்திகளும் வழக்கு விழுந்தன என்றே ஒப்ப வேண்டும். கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் (774) விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு (775) எனவரும் வேல்மறப் போர் இன்றில்லை. ‘குன்றேறி யானைப்போர் கண்டற்றால்’ (758) என்ற மறக்காட்சியும் இன்றில்லை. பழமை எவ்வளவு காலங்கடந்த அறநூல் என்று போற்றினாலும், திருக் குறளில் பொச்சாப்பு, ஒருவந்தம், புத்தேளிர், மாண்ட, முதுக்குறைவு, உஞற்றுதல் போன்ற சொற்பழமைகள் உண்டு; அருங்கேடன், நன்னீரை, நிறைநீர, எனல் போன்ற இலக்கண வீழ்ச்சிகள் உண்டு; யாருள்ளித் தும்மினீர், இருட்டறையில் ஏதில் பிணம் தழுவல், சிவிகை பொறுத்தான், அவிசொரிந்து ஆயிரம் வேட்டல் போன்ற மரபு மறைவுகள் உண்டு. இவ்வாறு எடுத்துக்காட்டினாலும் இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மை வாய்ந்த திருக்குறளில் பழமைகளும், வீழ்ச்சிகளும் ஓரிரு விழுக்காட்டிற்கு மேல் இல்லை என்பதையும் ஒப்பவேண்டும். இதற்குக் காரணம் வள்ளுவர் காலத் தமிழ்மொழி, வழக்கா யினும் செய்யுளாயினும் செந்தமிழாக இருந்த நிலையாகும். அதனாலன்றோ தொல்காப்பியமும், சங்கப் பனுவல்களும் இன்றும் விளங்குவனவாக உள்ளன. அவை பிறப்பாற் காலப் பழமை படிந்தனவேயன்றி, மொழிநடையால் இன்றும் சாலப் புதுமை தவழ்வன. இடைக்காலத்துத் தோன்றிய மயக்கு நடைத் தமிழ் நூல்களோடு ஒப்புநோக்கின், இவ்வுண்மை வெளிப்படை யாகும். பழமையான பிறமொழி உலக இலக்கியங்களோடு ஒத்திடினும், நம் தொன்மை இலக்கியங்களின் புதுமைப் பெருவாழ்வு புலப்படும். உலகிற்சிறந்த தொல்லிலக்கியங்கள் தம்மொழியைச் சாகடித்தன; நம் தொன்னூல்களோ எனின், கம்பர் உணர்ந்து பாடியதுபோலத் தமிழ் மொழியை ‘என்று முள மொழி’யாக்கின. உரைப் பொடிகள் திருக்குறளுக்குப் பலவுரைகள் வந்துள்ளன. காலந்தோறும் புதுவுரைகள் புறப்படுகின்றன. சில குறட்பாக்களுக்கு உரை வேற்றுமைகள் பல்கியுள. பாட வேறுபாட்டாலும், புணர்ச்சி முறையாலும், கொள்கைப் பிடிப்பாலும், தொகையாலும், இலக்கணத் தன்மையாலும், சொற்பொருளாலும், காலவிடை யீட்டாலும், புலமைமிகையாலும், புலமைக் குறையாலும், நயப்பட்டாலும் வேற்றுமைகள் எழுந்தன. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள (223) என்ற குறளுக்கு எழுந்த உரைகளை நோக்கின், நயவுணர்வு தவிரப் பொருளுணர்வில் வேறுபாடில்லை என்பது வெளிப் படை. வேற்றுமை யுரைகளாகப் பரந்து காணப்படும் இடங் களை யெல்லாம் உராய்ந்து பார்ப்பின், அவ்வேற்றுமைகளிற் பல, சாரமிலாப் பொடிபோல, உரைப்பொடிகளாக வறிதுபடு வதைக் காணலாம். விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (82) அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான் (163) சாவா மருந்தாகிய அமிழ்தமானாலும் தனித்து உண்ணக் கூடாது என்ற கருத்தும், ஒருவன் தனித்துண்ணுதலே சாவா மருந்து ஆகும் என்ற கருத்தும் பெரிய வேற்றுமைகளா? அறனும் ஆக்கமும் என்ற உம்மைத் தொகையும், அறத்தினால் ஆகிய ஆக்கம் என்ற மூன்றாம் வேற்றுமைத் தொகையும் என்ன பொருள் வேற்றுமையைச் செய்துவிட்டன? நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் (605) இக்குறளில் காமக்கலன் என்பதற்கு விரும்பியேறும் மரக்கலம் எனவும், விரும்பிப் பூணும் அணிகலம் எனவும் பொருள் வேற்றுமை உண்டு. இவை கல்லும் பல்லும் போல முரண்பட்ட வேற்றுமைகள் அல்லவே! இவ்வுரைகள் மூலப் பொருளை மறையா. குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு (338) குடம்பை என்ற சொல்லுக்குப் பொருள் முட்டை என்பார் பரிமேலழகர்; கூடு என்பார் மணக்குடவர். இவற்றையெல்லாம் உரைக்கிளைகள் என்று கொள்ளவேண்டுமேயன்றி, மூலத்தை மறைக்கும் உரைத்திரைகள் அல்லது உரை மூடிகள் என்று பெரிதுபடுத்தலாகாது. கருத்துப் பூசல்கள் திருக்குறளில் ஆசிரியர், காலம், அமைப்புப் பற்றித் தோன்றிய, தோன்றி வளர்ந்து வரும் ஆய்வுப் பூசல்கள் எண்ணிறந்தன. திருக்குறள் ஒருவர் செய்த தனிநூலா, பலர் செய்த தொகுப்பு நூலா எனவும், பாயிரம் எனப்படும் முதல் நான்கு அதிகாரங்களும் திருக்குறளுக்கு உரியனவா எனவும், காமத்துப்பாலை வள்ளுவர் எழுதினாரா எனவும், அதிகாரத் தலைப்புக்களும், அதிகார வைப்பு முறையும், அதிகாரத்துள் குறள்வைப்பு முறையும் செய்தவர் யார் எனவும் கருத் தோட்டங்கள் உள. கடவுள், தெய்வம், வினை, உயிர், இம்மை, மறுமை, நகரம், வீடு, பிறப்பு, இறப்பு, துறவு, ஊழ் முதலான கொள்கைகள் பற்றியும், சாதி, வேள்வி என்றின்ன ஆரிய வேத நாகரிகக் கலப்புப் பற்றியும், பிறப்பொழுக்கம், அந்தணர், பார்ப்பான், எழுபிறப்பு, அடியளந்தான், இந்திரன், அறுதொழி லோர் நூல், ஆதிபகவன், மலர்மிசை யேகினான் என்றிவற்றின் பொருள் பற்றியும் கருத்துப் பின்னல்கள் உள. சொற்பழமை, இலக்கண வீழ்ச்சி, மரபு மாற்றம், உரைப் பன்மை, உரை வேற்றுமை, உரைப்பொடிகள், கொள்கைப் பூசல்கள், கருத்து மோதல்கள், கருத்துப் பிறழ்வுகள் என்றாங்குப் பல சிக்கல்கள் திருக்குறளுக்கு வந்து கொண்டிருக்கின்றன எனவும், இந்த இருட்டிரைகளை அகற்றி எல்லோரும் ஒப்ப விளக்கந் தந்தாலல்லது திருக்குறளில் தெளிவு பிறவாது எனவும் கண்டாங்கும் பட்டாங்கும் கற்றாரும் ஆய்வாளரும் மொழி யாளரும் குறை பரப்பி வருகின்றனர். இவற்றைத் தெளிவிக்க வேண்டும், வள்ளுவர் நெஞ்சம் நேர்முகமாகத் தெரியவேண்டும், உரைவேற்றுமை குறையவேண்டும் என்ற வேணவா எனக்கும் நிரம்பவுண்டு. இந்நோக்கில் ஆராய்ச்சிகள் நெறிப்படல் வேண்டும் என்ற ஆராவிருப்பம் குறளன்பர்க்கெல்லாம் வேண்டும் எனினும், அழுந்திய ஆழமான ஓர் உண்மையை வலியுறுத்துவதற்காகவே இக்கட்டுரையை எழுதுகின்றேன். சிலர் நினைப்பதுபோல் கருத்துப்போர்கள் பல விருப் பினும், மேலும் வளரினுங்கூட, அவையெல்லாம் திருக்குறளின் அடிப்படையறங்களையும், செயலுக்குரிய வாழ்க்கை வள்ளுவங் களையும், தில்லைமறை போலத் திரையிட்டு மறைக்கவில்லை. குறள்யாப்பு என்ற ஈரடிப் பாத்தியில் அறநெயிப்பயிர்கள் வெற்றிக்கொடி போல வெளிப்படையாகவே இயல்புக் கண்ணாளர்க்கும் காட்சி தந்துகொண்டிருக்கின்றன. திருக் குறளில் வள்ளுவரின் எண்ணங்கள் வெளிப்படை; அவற்றைக் கற்பதற்கும் கேட்பதற்கும் இயல்பான வழக்குத் தமிழறிவு போதும். இதனால் உரைகளும் விளக்கங்களும் வேண்டா என்பது கருத்தன்று. அவை புலமையையும் அறிவையும் பெருக்குவன. இதுவே அவற்றின் பெரும்பயன்; அவை செயலைத் தூண்டா; செயலார்வத்தைப் பெருக்கா; நெஞ்சினை நேரடியாக இயக்கா; வாழ்வினை உணர்ச்சிப்படுத்தா; உள்ளத்துள் ஊடுருவிப்பாயா. குறள் வெளிப்படை நடை திருவள்ளுவர் தம் நூலின் விளக்கத்துக்குப் பிற்கால உரைகளை எதிர்பார்த்தோ கட்டுரைகளை எதிர்பார்த்தோ எழுதவில்லை. தம் நூல் தானே விளங்கும், விளங்கவேண்டும் என்ற வெளிப்படை நடையிற்றான் யாத்துள்ளார். மூலக்குறள் களைப் பன்முறை படிக்கப் படிக்க வள்ளுவர் நெஞ்சுக்கும் நம் நெஞ்சுக்கும் உணர்ச்சித் தொடர்பு நெருங்குவதை உணர் கின்றோம்; குறட் சொற்கள் உயிர் நடை பெற்று நம் உள்ளத்தில் பாய்வதை உணர்கின்றோம்; உரைகள், விளக்கங்கள் என்னும் தீண்டாமைகளைக் கடந்து குறள் வடிவாக இருக்கும் திருவள்ளுவரின் நெஞ்சத்தினை நம் செயல் நெஞ்சத்தால் தீண்டுகின்றோம். மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் என்பது போல, மூலக்குறளைத் தீண்டல் வாழ்வின்பம் ஆகும். உரையின்றி, விளக்கமின்றித் திருக்குறளின் மூலங்களை அறிந்துகொள்ள இயலாது என்ற ஒரு பெருந்தவறான பொருந்தாக் கருத்து, எப்படியோ மக்களுலகிற் பரவிக் கிடக்கின்றது. இஃது உரையின் குறையன்று, விளக்கத்தின் குறையன்று; கல்விமுறையின் குறையாகும். காலிருப்பினும் செருப்பின்றி நடக்கவியலாது என்ற கருத்து இன்று இல்லையா? நடக்கக் கூடாது என்ற கருத்துக்கூட, இன்று பரவக் காண் கின்றோம். திருக்குறள் தோன்றிய காலத்து, உரையும் உடன் தோன்ற வில்லை. ஆயிரம் ஆண்டுகள் கழித்துத்தான், உரை பெருக் கெடுத்தது. மூலத்தைக் கற்கும் முறைவேறு; உரைகளைக் கற்கும் முறை வேறு; மூலத்தின் பயன் வேறு; உரையின் பயன் வேறு; மூலத்தைக் கற்கும்போது வள்ளுவரை நினைக்கின்றோம்; உரைகளைக் கற்கும்போது உரையாசிரியர்களை நினைக்கின் றோம். குறள் மூலத்தின் பயன் செயல்; குறளுரையின் பயன் விளக்கம். ஆதலின் வாழ்வு வேண்டின், செயலியக்கம் வேண்டின், வள்ளுவர் தம் உறவு வேண்டின், திருக்குறள் மூலங்களோடுதான் நமக்கு முதலுறவு வேண்டும். மூலக்குறள்கள், உரைகளைக் காட்டிலும் ஏன், உரைக்குறையைக் காட்டிலும் வெளிப்படை. 1. தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது (7) 2. நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று (108) 3. சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் (200) 4. எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு (299) 5. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு (467) 6. எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (666) 7. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள (1101) இவைபோலும் நூற்றுக்கணக்கான குறட்பாக்கள், தம் கருத்துக்களை இருட்படை செய்யாமல் ஒளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றின் பொருளை அறிதற்கும் மேற்கொள்ளற் கும் உரைகள் வேண்டுமா? எழுத்தறிவில்லாருங்கூடக் கேள்வியளவில் இவற்றின் கருத்துக்களை உணர்ந்துகொள்ள மாட்டார்களா? ‘கற்றிலனாயினும் கேட்க’ எனவும், ‘செல்வத் துட் செல்வம் செவிச்செல்வம்’ எனவும் அறிவுப் பறையறைந்த வள்ளுவர், கல்லாரும் கேட்டு விளங்கிக் கொள்ளுமாறுதானே, தம் அறநூலை வெளிப்படை நடையில் இயல்பாக எளிதாக யாத்திருப்பார்? ஆதலின் வாழ்வும் உணர்ச்சியும் செயலும் வளமும் விரும்பும் தமிழ் மக்கள், திருக்குறளை உரைகளி னின்றும் விடுதலைப்படுத்தி, மூலக்குறள்களை நேரே தீண்டு வார்களாக. நீரை உறிஞ்சிவழிக் குடிப்பதைக் காட்டிலும் வாய் வைத்துக் குடிப்பதனால் வருஞ்சுவை பெருஞ்சுவையல்லவா? 3. வாழ்வாங்கு ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்’ என்று ஒரு திருக் குறள் தொடங்குகிறது. ஏனைக் குறள் எல்லாம் இக்குறளின் விளக்கம் என்று சொல்லலாம். இக்குறளில் ‘வாழ்வாங்கு’ என்று ஒரு புதிய சொற்சேர்க்கை செய்வர் வள்ளுவர். வாழ்வாங்கு வாழ்பவன் என்பதற்கு வாழும் முறைப்படி வாழ்பவன் என்பது பொருள். வாழ்வுக்கு ஒரு முறையுண்டு. உயிரோடிருப்பினும், அம்முறை தழுவி ஒழுகும்போதுதான் வாழ்வு எனப்படும். ‘பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன்’ எனவும் ‘ஊனார் புழுக்கூடு இது காத்து இங்கிருப்பதானேன்’ எனவும் மணிவாசகர் வெற்றிருப்பை இகழ்வர். எப்படியேனும் காலங்கழிக்க எண்ணுவது வாழ்வு ஆகாது. ஒருவன் சாகாதிருப்ப தனால் அவன் வாழ்கின்றான் என்று சொல்லிவிடலாமா? சாதலும் சிலருக்கு வாழ்வு தரும். மானத்தைக் காக்க வேண்டும் என்ற நிலைபற்றி அறம் சொல்லும்போதெல்லாம் உயிரை ஓர் ஈனப்பொருளாக அவமதிக்க வேண்டும் என்பர் வள்ளுவர். உயிர் தானே போகாவிட்டால், வலிந்தாவது போக்கிக் கொள்ளலாமே என்பர். ‘உயிர் நீப்பர் மானம் வரின்’ என்ற தொடரில் நீப்பர் என்ற பிறவினை - வல்வினை ஆட்சியைக் காண்க. பெருமை பெருஞ் சிறுமைப்பட்டபோது உடலைப் பேணிக் கொண்டு உலகை விடாதிருத்தல் ஒரு வாழ்வா? மதியாதாரின் பின்சென்று அடிமையாக வாழ்வதைக் காட்டிலும் உயிர் விட்டொழிதல் நன்றல்லவா? இவ்வாறு வாழ்வுக்கு மானமருந்து தருவர் வள்ளுவர். இதன் குறிப்பு என்ன? இறக்க வேண்டும் அல்லது இறப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதுவா இப்பேராசான் கருத்து? மனிதப் பிறப்பு பெறுமவற்றுள் அரிய பிறப்பு என்று பாராட்டிய வள்ளுவப் பெருமகன், அரிய உடம்பைப் பெற்றவன் அளவறிந்து உண்டு ஓம்பி நெடிது வாழ்க என்று வாழ்த்திய அப்பெருமான் நாம் இறக்கவும் மடியவும் மாளவுமா தெய்வக் குறள்கள் எழுதினார்? நாமெல்லாம் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழவேண்டும், பின்னர் வானுறையும் தெய்வங்களாக வழிவழி மக்களால் போற்றப்பட வேண்டும் என்பதுவே அவர் நன்னெஞ்சம். தனி வள்ளுவங்கள் வாழ்வுக்கு முறை இன்றியமையாதது என்றால், அம்முறை என்பது என்ன? முறை ஒன்றா? பலவா? ஆளுக்கு ஒரு முறையா? பலருக்குப் பன்முறையா? திருக்குறள் கூறும் வள்ளுவம் ஒன்றன்று, பலவினும் பல. மக்கள் மனிதப் பிறப்பு என்ற இன வகையில் ஒன்றாக இருந்தாலும் பண்பால் நினைவால் அறிவால் ஆசையால் கல்வியால் பொருளால் முயற்சியால் உறவால் நட்பால் பகையால் பருவத்தால் உருவத்தால் உடற் கூற்றால் இன்னும் எத்துணையோ பிரிவால் வேற்றுமைப் பட்டவர்கள். இவ்வேற்றுமையை என்றுமுள வேற்றுமையாகக் கொண்டு வள்ளுவங்கள் கூறுவது திருக்குறள். சுருங்கச் சொல்லின், முறைகளின் தொகுதியே திருக்குறள். ஒருவனுக்கே அவன் பல நிலைகளுக்கு ஏற்பப் பன்னெறிகள் மொழிவது திருக்குறள். மனித வாழ்வில் பல நிலைகள் உண்டு என்று கண்டு உணர்ந்து அவற்றுக்கெல்லாம் பலவழிகள் காட்டிய சிறப்பே குறளின் சிறப்பு. இவ்வடிப்படையைக் கடைப்பிடித்துத் திருக்குறளைக் கற்க முனைபவர் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிய தனி வள்ளுவங்கள் எத்துணையோ உண்டு என்று புரிந்து தேர்ந்து எடுத்துக் கொள்ள முடியும். பொருள் வாழ்வு திருக்குறள் காட்டும் பல்வேறு நிலைகளை மூன்று பெரும் பிரிவாக்கலாம். யார்க்கும் இவ்வுலகில் பொருள் வேண்டும்; யாவர்க்கும் அறிவு வேண்டும்; எவர்க்கும் பண்பு வேண்டும். இம்மூன்றில் பொருள் பற்றிய முறைகளை விரிவாகப் பார்ப்போம். மனிதன் பிற உயிரினங்கள் போல இயற்கையோடு நெருங்கி இயைந்து வாழ்பவன் இல்லை. இயற்கையொட்டி இல்லை. இயற்கை விலகியாக வளர்ந்துகொண்டே அகல் கின்றான். செயற்கை மயமே நாகரிக வளர்ச்சியாகக் கருதப் படுகின்றது. செயற்கை பெருகப் பெருகக் குழுவாயக் கூட்டுறவு பெருகல் வேண்டும். நன்கு வாழ விரும்பும் மாந்தன் இக் கூட்டுறவைப் பெருக்கிக் கொள்ளல் வேண்டும். இக்கூட்டுறவு எதனால் எளிதில் உண்டாகும்? பொருளால் உண்டாகும் என்று கண்டவர் வள்ளுவர். ஆகாது எனினும் அகத்துநெய் உண்டாகின் போகாது எறும்பும் புறஞ்சுற்றும் (நாலடி 337) பாத்திரத்துள் நெய் இருப்பின் உறவாட எறும்புக் கூட்டம் திரளும் என்று நாலடியார் சொல்லுமாப் போல், பொருளாளிக்கு நட்புப் பெருகும். இல்லாளிக்கு இருந்த நட்பும் விலகப் பார்க்கும். ‘இல்லாரை எல்லாரும் எள்ளுவர்’ (752) என்பர் ஆசிரியர். இதற்கு ஒரு விளக்கமாக, ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப்படும்’ (1047) என்று மேலும் கூறுவர். மன்னுலகு உறவு கிடக்க பெற்ற தாயுறவுங்கூட வறிய மகனுக்கு வாடிப் போகும்’ என்று உணரலாம். மனிதன் மன்னாயத்தின் ஒரு மணலாகக் கிடக்கும் மனிதன் - செல்வனாகத் திகழ முடியாவிடினும் கேவலம் வறியவனாக வதங்கக் கூடாது; மனிதன் இரவலனாக உலகில் நடமாடக் கூடாது என்பது வள்ளுவரின் அதிராக் குறிக்கோள். ஆதலின் ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு’ (247) என்று கடுநடையில் உவமையில் வைத்து எச்சரிக்கின்றார். ‘இல்லாரை எல்லாரும் எள்ளுவர்’ என்னும்போது நானும்கூடச் சேர்ந்து கொண்டு வறியனை இகழ்வேன் என்று உட்படுத்திக் கொள் கின்றார் போலும். இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது (1041) வறுமைக்கு உவமை வறுமையே. அதன் கொடுமையை விளக்கிக் காட்ட வேறு ஓர் உவமை இல்லை. வறுமை உவமை யுலகத்தையே வள்ளுவர்க்குக்கூட வறிதாக்கிவிட்டது. நல்குரவு என்ற பெயரால் வறுமைக்கு ஓர் அதிகாரம் வைத்துப் பத்துக் குறள்களில் வறுமையின் கொடிய இழிவுகளை வெளிப்படுத்து கின்றார். வறுமை என்பது எவ்வாற்றானும் கூடாது; பொரு ளீட்டுதல் உலகக் கடமை. ஈட்டாது விதி விதியென்று கூறிக் கொண்ட மடிந்து கிடக்கற்க என்று வள்ளுவர் அறையும் திருக்குறட் பறைபோல் யாரும் அறைந்ததில்லை. ‘செய்க பொருளை’ (759) என்பது அவரது ஆணை. இன்ன அளவு பொருளீட்டினாற் போதும் என்று திருக்குறள் செல்வ வரம்பு செய்யவில்லை. சோம்பல் பற்றாத மன்னவன் திருமால் அளந்த உலகத்தையெல்லாம் அடைவான் என்பதனால், பொருளிற் பேராசையை வள்ளுவர் தூண்டுகின்றாரேயன்றிக் குறைத்துக் கொள்ளச் சொல்லவில்லை. ஒண்பொருள் காழ்ப்ப- கெட்டி யாக இயற்ற வேண்டும் என்பது அவர் ஊட்டும் ஆர்வம். குன்றேறி யானைப் பார் கண்டற்றால் (756) என்ற உவமையிலிருந்து எவ்வளவு பொருட்குவியலுக்கும் மனிதன் ஆசைப்படலாம் என்பது புலனாகின்றது. பொரு ளாசைப்படுக, நும் முயற்சி திருவினையாக்கும் என்பது வள்ளுவ வாழ்த்து. பொருட்பயன் திருக்குறள் வறட்டுக் கொள்கை பேசவில்லை. நன்றாக முயன்று குன்றாத பொருளூட்டி நலமாக இவ்வுலகில் வாழ் கின்ற வாழ்வுக் கொள்கையே சாற்றுகின்றது. பொருளின் இன்றியமையாமையை - பொருள் முயற்சியை - பொருள் வேட்கையை இவ்வளவு அழுத்தமாகத் திருக்குறள் இயம்பு வதேன்? பொருளீட்டுவது குறிக்கோள் இல்லை. மன்னாய உறவைப் பெருக்கிக் கொள்ளுதல் என்னும் குறிக்கோளுக்காகப் பொருளீட்டுகின்றோம். அணை நீர்த்தேக்கம் காண்பது நம் குறிக்கோளா? இல்லை. ஆயிரமாயிரம் வேலிப்பயிரை வளர்ப்பது நம் குறிக்கோள். பொருளீட்ட வேண்டும் என்பதற்கு எவ்வளவு குறட்கள் உள்ளன; அவ்வளவு குறட்களுக்கும் மேலாக, கொடுப்பாய், ஈவாய், ஒப்புரவு ஆற்றுவாய் என்பன பற்றிக் குறட்கள் உள. எது மனிதத் தொழில்? ஈதல். எது மனித வாழ்வு? கொடுத்து வாழ்தல். எது மனிதனுக்கு முடிவான பயன்? கொடைப் புகழ் என்று முடிப்பர் வள்ளுவர் பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற ஆசான் பொருளுடையார்க்கு, ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை என்று வாழ்வின் பயனை அறுதியிட்டுரைப்பதை நினையவேண்டும். சுற்றத்தாற் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன் (524) ஒருவன் எவ்வளவு பொருளீட்டினான் என்பதைக் காட்டும் அளவு கருவி என்ன? எவ்வளவு சுற்றம் உறவாயிற்று; எவ்வளவு மன்னுலகு பயன்பெற்று அவனை உறவாகக் கொண்டது; இதுவே பொருள்மானி. உறவு பெருக்காதவனது செல்வத்தை நன்றியில் செல்வம் என்று ஓர் அதிகாரம் முழுவதும் இகழக் காண்கின்றோமே. உறவிலாச் செல்வத்தைப் பழுத்த நச்சுமரம் எனவும் அச்செல்வனை நச்சப்படாதவன் எனவும் பழிக்கப் பார்க்கின்றோமே. பொருளானாம் எல்லாமென்று ஈயா திவறும் மருளானாம் மாணாப் பிறப்பு (1002) இக் குறளில் பொருளுக்கு உரிய மதிப்புப் பற்றியும் மயக்கம் பற்றியும் தெளிவிப்பர் ஆசிரியர். வாழ்வுக்கு வேண்டிய எல்லாமே உலகில் பொருளால் நடந்துவிடும் என்று நினைக் கின்ற போக்கு தப்பு என்பது அவர் தம் இடிப்புரை. பொருளை வாழ்விக்க வந்த நற்றுணை என்று அறியாது, பொருளே வாழ்வு என்று மயங்கும் மதியனைப் பித்துக்கொளி என்பது அவர்தம் ஏச்சுரை. தேக்கிய நீரைப் பாய்ச்சவேண்டும். நெய்த ஆடையை உடுத்த வேண்டும். சமைத்த உணவை உண்ணவேண்டும். கட்டிய வீட்டில் குடியிருக்க வேண்டும். கற்ற கல்வியைக் கற்பிக்க வேண்டும். அவைபோல் ஈட்டிய பொருளை ஈயவேண்டும். இருப்பிற் பயனில்லை; செலவிற்றான் பயனுண்டு. ஈயாது இறுகப் பிடிப்பது மருள்; அங்ஙனம் பிடிப்பவன் அல் பிறவி என்பது பொய்யில் புலவரின் வசையுரை. பொருள் நெறி ஈட்டுவதிலும் பல நிலைகள், ஈவதிலும் பல நிலைகள், இன்மையிலும் பல நிலைகள், உடைமையிலும் பல நிலைகள். பொருள்வேண்டும், ஒருவந்தம் வேண்டும் என்பதற்காக எதுவும் செய்யலாமோ? ஈட்டுவதற்கு எம் முறைகளையும் மேற்கொள்ள லாமோ? பொருள் வந்தாற்போதும் என்று நினைக்கலாமோ? எச் செய்கையும் முறையோடு செய்யப்படவேண்டும். வாழ்வுக்குப் பொருளா? பொருளுக்கு வாழ்வா? வாழ்வு என்பது பழிபடா வாழ்க்கை, மன்னாயம் நன்கு மதிக்கும் வாழ்க்கை. மனிதனுக்கு மெய்யான உடமை எது? விட்டு நீங்கா உடைமை எது? உலகத்தையே நாம் தேடினாலும் அது நம் உடைமை யாகாது. அகச் சொத்து ஆகாது. செல்லும் இடமெல்லாம் உடன் வாராது. பொருளுடையார் எல்லாம் உடையார் என்று வள்ளுவர் கூறவில்லையே. ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்பதே அவர் தம் பொருளுரை. இன்னும் ஒரு படி சென்று, எவ்வளவு செல்வமிருந்தாலும் என்ன, ‘அறிவிலார் என் உடையரேனும் இலர்’ (430) அறிவு என்ற நிலையுடைமை இல்லாதார்வறியவரே என்று மாற்றுடைமை சுட்டுவர். ஏன்? அறிவொன்றே மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி காட்டுவது. அறிவு என்பது ஓயாச் சிந்தனை, வாழ்க்கையலசல். எது வேண்டும்? எது வேண்டாம்? எப்படி என் வாழ்வு இன்று ஓடுகின்றது? இப்படி ஓடலாமா? வேறுவிதமாக வழிப்படுத்த வேண்டுமா? மனம் அல்வழிச் செல்கின்றதா? அதனைப் பிடித்து இழுத்து நல்ல பாதையில் செலுத்தவேண்டுமே? வரவு பெரிதா? செலவு பெரிதா? நட்பைப் பெருக்கிக் கொள்வது, பகையை நட்பாக்கிக் கொள்வது, சிறு நட்பைத் துணிந்து விலக்குவது, பெரியவர் நட்பை வருந்திப் பேணுவது, கட்டுப் படுத்துவது, கட்டுப்பாட்டைப் பெருக்கிக்கொள்வது, எத் துறையிலும் அளவறிந்து பழகுவது, அளவறிந்து செய்வது, அளவறிந்து அடங்குவது என்று இச்சிந்தனைகள் எல்லாம் வாழ்வாங்கு வாழ்வதற்கு வேண்டும். வாழ்வுக்கு வேண்டும் என்ற இப் பரந்த சிந்தனைகளில் நாளும் நாட்டம் செலுத்தாது, ஒரேருழவன் போலப் பொருளொரு சிந்தனை மட்டும் உடையவன் வாழ்வாங்கு வாழ்பவனாக ஆகான். தக்க கருவியாகிய பொருளிருந்தும், சிந்தனைவறியவன் ஆலமரம் அரசமரம் போல எண்ணக் கிளை பெருக்கி விரிந்து உலக நிழலில் வாழமாட்டான். பாலை நிலக் குறும்புதர் போல வாழ்வு முடங்கியாக இருந்து மடிவான். முயன்று எனைப் பொருளீட்டுக; கொடையால் உலகவுறவு பெருக்குக; விரிந்து நுணுகிச் சிந்திக்க; எல்லாம் தரும் அறிவுடைய மனிதனாய் நிலைபெறுக என்பதுவே வள்ளுவரின் வாழ்வியல். 4. நடைமுறை அறங்கள் 1. கடமைத் தொண்டு ஒவ்வொருவர்க்கும் இரு கடமைகள் உண்டு. ஒன்று வீட்டுக் கடமை; மற்றொன்று சமுதாயக் கடமை. இவற்றுள் வீட்டுக் கடமை வெளிப்படையானது, இயல்பானது. ‘இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்’ என்று வள்ளுவர் குறிப்பிடுவர். பெற்றோர்க்கும் சுற்றத்தார்க்கும் குடும்பத்துக்கும் குழந்தைகட்கும் செய்வனவெல்லாம் பள்ளத்து நீரோட்டம் போல மிக இயல்பான கடமைகளாகும். இவற்றைச் செய்வதால் புகழ் வருவதில்லை, செய்யாவிட்டாற்றான் பழிவரும். குடும்பக் கடமை இயல்வு என்றாலும் எளிதில்லை. எல்லா நலம் தீங்குகளும் குடும்பத்தைத் தாக்குகின்றன. நாடு என்பது குடும்பங்களின் தொகுதி. சட்ட திட்டங்களும் போர்ப் பூசல்களும் ஆட்சி மாற்றங்களும் கடைசியில் குடும்பக் கரையை மோதுகின்றன. குழந்தை வளர்ச்சி, குடும்பவுறவு, குடும்பக்காப்பு, குடும்பப் பொருளாதாரம், குடிக்குணம் இவையெல்லாம் சிறிய செயல்கள் அல்ல. இதனை ‘இல்லாண்மை’ என்று பாராட்டு வர் வள்ளுவர். பேராறு நேரே வயலை வளப்படுத்தாது. சிறு வாய்க்கால்தான் வயலை வளமாக்கும். ஆதலின் நன்றாகத் தன் குடும்பத்தை நடத்துவாரை நாட்டின் ஒரு பகுதிக் கடமையைச் செய்பவராகவே மதிக்க வேண்டும். குடி செயல்வகை என்ற அதிகாரத்தில், தன் குடும்பம் பேணுவதை ஒரு பெருங் குறிக் கோளாகக் கருதவேண்டும் என்று திருக்குறள் வலியுறுத்தும். குடும்பக் கடமை சிறந்தது என்றாலும் அனைத் தொண்டு என்று கூறுவதில்லை. குடும்பக் கடமிகளைக் குடும்பத் தொண்டர்கள் என்று புகழ்வதுண்டா? குடும்பந்தாண்டிச் செய்யும் உலகாயக் கடமைகளே தொண்டு எனப்படும். இன்றைய மக்கள் மனப்பான்மையில் தனக்கு என்ற உணர்ச்சி வளருகின்றதா? குழுவாயத்திற்கு என்ற உணர்ச்சி வளர்கின்றதா? என்று மதிப்பீடு செய்தால், எல்லாம் தனக்கு என்ற குறு எண்ணமே தடிக்கக் காண்கின்றோம். தேவைப் போராட்டம் தன்னலவுணர்ச்சியைப் பல மடங்கு பெருக்கிவிட்டது. ஈட்டிய எல்லாம் எனக்கே போதா என்ற மனமை ஊறிப் பீறுகின்றது. குடியரசு என்ற முறையில் மன்பதைக்கு வேண்டியவற்றை அரசு செய்யட்டும் என்று கழித்துவிடுகின்றோம். அரசு மன்பதைப் பெரு நலங்களைச் செய்தாலுமே மக்கள் செய்யவேண்டிய குழுவாயத் தொண்டுகளும் பலவுள. சிறுதுளி பெருவெள்ளம், ஒரு பிடி பலபடி என்பதுபோல ஒவ்வொரு வரும் தம்மால் இயன்ற பொதுத் தொண்டு செய்தால் மன்னிலம் கூட்டுவளம் பெறும். ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல். (33) எவ்வகையாலும் முடிந்த அளவு பொதுத்தொண்டு செய்துகொண்டிருக்க வேண்டும்; எவ்விடத்து எவ்வளவு என்பதனை அவரவர் தீர்மானித்துக்கொள்ள வேண்டியது என்று வள்ளுவர் பொதுப்படச் சொல்லுவர். மக்களினம் பெருகி வரும் இக்காலத்தில் தொண்டுக்கு இடமும் பெருகி யுள்ளது. பொருளிலிருந்து தொண்டு செய்யவேண்டும் என்பதில்லை. பொருளில்லாமலே எவ்வளவோ தொண்டுகள் செய்யலாம். மேலும் தொண்டுகளில் சிறியன பெரியன என்ற வேறுபாடும் இல்லை. வீதியிற் கிடக்கும் முள்ளினை, கண்ணாடித் துண்டினை, இலாடத்தைக் குனிந்து எடுத்து ஒதுப்புறமாகப் போடுவது தொண்டில்லையா? கிடப்பது தெரிந்தும் எடுத்தெறியா விட்டால், யார் காலிலாவது கண்ணாடித் துண்டு பாய்ந்தால் எவ்வளவு புண்பாடு ஏற்படும்? தீயவிளைவை நோக்கும்போது, கண்ணாடித்துகளை அப்புறப் படுத்துவது பெருந்தொண் டல்லவா? வீதிக்குழாயிலிருந்து தண்ணீர் விழுந்து கொண்டிருந்தால் அதனை அடைத்துத் தண்ணீரைக் காப்பது பொதுவாயத் தொண்டு. வீட்டில் கூட்டிய குப்பையை வீதியில் எறியாது, வீட்டுக் குழியில் போடுவதும், கொண்டு சென்று வீதித் தொட்டியிற் போடுவதும் ஊராயத் தொண்டு. கண்டவிடங்களில் காறித் துப்பாமை, பொதுவிடங்களைக் கெடுக்காமை, சுவர்களில் கண்டபடி எழுதாமை, காம விளம்பரங்கள் ஒட்டாமை இவையெல்லாம் சிறியனவாகத் தோன்றினாலும் சிறந்த பொதுமைத் தொண்டு களாகும். புகை வண்டிகளில் பிறர்க்கும் இடங்கொடுத்தல், முதியவர்க்கும் நோயாளர்க்கும் மிக்க இடவசதியளித்தல், பொருள்களை அளவாக எடுத்துச் செல்லுதல் எல்லாம் பொது நலங்களே. விளம்பரப் பலகைகளில் மொழிப் பிழைகள் இருந்தால் அவற்றைத் திருத்துவதும் ஒரு பொதுத் தொண்டெ னவே கருதவேண்டும். இங்ஙனம் பொது நலங்கள் பல யாரும் செய்யலாம். இவற்றைச் செய்வதற்குப் பணம் வேண்டுமா? உயிராயத் தொண்டு என்பது யாரோ பெரியவர்கள் செய்ய வேண்டிய செயல் என்று மலைக்கவேண்டா, ஒதுக்க வேண்டா. குடும்பக் கடமையும் பொதுத் தொண்டும் சேர்ந்து செய்ய முடியாது என்று தவறாக எண்ண வேண்டா. தன் தோட்டத்தில் மரம் வைப்பது குடும்பக் கடன். தன் வீட்டுக்கு முன்னே பொது வீதியில் மரம் வைப்பது உலகக்கடன். தன் குழந்தைக்குப் பாடஞ்சொல்லிக் கொடுப்பது குடும்பக்கடன். தான் அதனோடு இன்னொருவர் குழந்தையையும் உடன் வைத்துச் சொல்லிக் கொடுப்பது பொதுநலக் கடன். இவற்றைப் பெரியவர்களாகித் தான் செய்ய வேண்டுமா? இவற்றைச் சிறு பருவ முதல் செய்து பெரியவர்களாகக் கூடாதா? எப்பருவத்தி னரும் எந்நிலையினரும் செய்யக்கூடிய பொது நலங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றைச் செய்வதற்குப் பணம் தேவை யில்லை, மனமே தேவை. அழைப்புத் தேவையில்லை, உழைப்பே தேவை. அறிவுகூடத் தேவையில்லை. அன்பு கூடத் தேவை. 2. துன்பச்சுவை எல்லோரும் வாழ விரும்புகின்றோம். இருந்தாலும் சிலரே செம்மையான திறமையான ஆற்றலான வாழ்க்கை நடத்தக் காண்கின்றோம். ஏன் போதிய முயற்சியில்லையா? போதிய விருப்பமில்லையா? போதிய அறிவு இல்லையா? தக்க முயற்சியும் விருப்பமும் அறிவும் இருந்தாலுங்கூடப் பலரால் முன்னேற முடியவில்லையே. ஏன்? வள்ளுவர் கண்டுபிடித்த ஒரு காரணம் எண்ணியது உடனே கைகூடாவிட்டால் பலர் பெருஞ்சோர் வடைந்து விடுகின்றனர். ஓரிரு காரியங்கள் தோல்வியானாலும் வாழ்க்கையே தோல்வி என்று மதிமயங்கு கின்றனர். சிறிய எமாற்றங்களைப் பெரிதுபடுத்தி அவலப் படுகின்றனர். தம் ஆற்றலுக்கு மிகையான காரியங்களை மேலிட்டுக் கொண்டு வீணே அல்லற்படுகின்றனர். எண்ணிய பதவி கிடைக்கா விட்டாலும், பதவியுயர்வு கிடைக்காவிட்டா லும் பல்லாண்டு இருந்த பதவி இல்லையானாலும், எதிர் பார்த்த இலாபம் வராவிட்டாலும், இலாபக்குறி சிறிது குறைந்தாலும் பலர் மனம் நிலைகொள்ளவில்லை. வணிகத்தி லும் பதவியிலுமேயன்றிக் குடும்பவுறவுகளில் ஏமாற்றங்களும் எதிர்ப்புக்களும் சோர்வுகளும் அலையலையாக வந்து கொண்டிருக்கின்றன. சுருங்கக்கூறின் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு மக்கள் ஏதோ ஒரு வகையில் சோர்ந்த வாழ்க்கையைத் தான் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களையெல்லாம் நன்றாக வாழுங்கள் என்று ஊக்கப்படுத்தும் நோக்கோடு, இடுக்கண் அழியாமை என்றே ஒரு புதிய அதிகாரம் கண்டார் வள்ளுவர். ஏன் ஒவ்வொருவரும் மனக் கலகலப்பாகவும் உடற் குதுகுதுப்பாகவும் இருக்கக் கூடாது? நன்றாக வாழ்வதற்கு என்ன குறைவு? தேவையின்றியும் காரணமின்றியும் சோர்வடை தல் என்பது மக்கட்குத் தீய பழக்கமாகிவிட்டது. துன்பத்தின் உண்மையான மெய்ம்மை என்ன? இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் (628) எவனுக்குத் துன்பம் இல்லை? எவன் துன்பத்தை வாழ்வின் இயல்பு என்று விளங்கிக் கொண்கின்றானோ அவ்விளங்கிக்குத் துன்பம் இல்லை என்பர் வள்ளுவத் தோன்றல். நில வளர்ச்சிக்குக் குழி தோண்டுதலும் பள்ளம் பறித்தலும் வேண்டுமாப்போல, வாழ்க்கை வளத்துக்குப் பல்வகைத் துன்பங்கள் அடிக்கடி கட்டாயம் தேவை. நுண்ணிய வேர் முனைகள் எப்படியோ கற்களின் இடுக்கிற்புகுந்து துளைத்து மதில்மேல் இறுமாந்து நிற்கக் காண்கின்றோம். மண்ணிற் கிடவாமல் மதிலிற் கிடக்கின்றோம் என்று அவ்வேர்கள் உணங்கி விடுவதில்லை. வளரும் வழியைக் கண்டுபிடிக்கின்றன. வண்டு மேட்டுப்பாதை ஏறும்போது தளராமல் காளைகள் மூச்சடக்கி மேலேறுகின்றன. வெள்ளத்தால் எறும்புக் குழிகள் மூடப்பட்டாலும் புதிய குழிகளை எறும்பினங்கள் உண்டாக்கிக் கொள்கின்றன. ஆதலின் இடையூறுகள் என்பவை உயிராற்றல் களை வேகமாக வெளிப்படுத்தும் வாழ்க்கைக் கூறுகள் என்று புரிந்து கொள்ள வேண்டும். துன்பத்தை வரவேற்க என்பது வள்ளுவர் அறிவுரை. வாழ்வு ஒளிபெற வேண்டுமாயின், புதுப்புதுத் துன்பங்கள் சுடச்சுட வந்து தாக்கவேண்டுமாம். பொன் ஒளிபெறுவது புடம்போடுவ தாலன்றோ என்று சுட்டிக்காட்டுவர். வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622) பெரிய துன்பங்கள் வரட்டுமே. அவை மனிதனை என்ன செய்ய முடியும்? துன்பம் இயல்புதானே என்ற மெய்யறிவு மனிதனுக்கு இருந்தால், துன்பத்தைக் கேவலம் துன்பம் என்று அஞ்சி யோடாது, ஏதோ நன்மை செய்ய வந்த இன்பம் என்று எண்ண வேண்டுமாம். ‘இன்னாமை இன்பம் எனக்கொளின்’ என்று வள்ளுவர் துன்பத்தின் மெய்ம்மையை யார்க்கும் புரிய வைத்துள்ளார். நாம் துன்பம் என்று நினைத்துக் கொண்டிருப்பன எல்லாம் உண்மையில் துன்பங்கள் அல்ல. சிறு பொறுமைகூட இன்றி எதற்கும் துன்பப் பெயர் சூட்டுகின்றோம். சிறிது தொலை நடப்பதையும், ஒரு காரியத்துக்குக் காத்துக் கொண்டி ருப்பதையும், கூட ஒரு மணி அரை மணி வேலை பார்ப்பதையும், குழாய்த் தண்ணீர் கொண்டு வருவதையும், கிணற்றில் நீர் இறைப்பதையும், சிறு சுமை தூக்குவதையும், சிறு தாமதங் களையும் துன்பமெனப் பெருஞ்சோர்வு கொள்கின்றோம். கால்வாய் அலையைக் கடலலையென மயங்குகின்றோம். வாழ்வில் துன்பம் என வருபவை மிகச் சிலவே எது துன்பம்? எது அளவிறந்த முயற்சியைப் பெருக்குமோ, எது அறிவைப் பெருங் கூர்மையாக்குமோ, எது மனத்தைப் பண்படுத்துமோ, சுருங்கச் சொல்லின், எது வாழ்வை ஆலமரம்போல விரிவாக்குமோ அதுவே துன்பம் எனப்படும். அத்தகைய நல்ல இனிய துன்பம் கிடைப்பது வாழ்வுப் பேறு. ஆதலின் வாழ்வாங்கு வாழ விரும்பும் ஒவ்வொருவரும் பொய்யான துன்பப்போலிகளைத் தள்ளி, வளமான துன்பங்களை வரவேற்பார்களாக. 3. சொல்லொழுக்கம் மனிதப் பிறப்பு மிக உயர்ந்தது. அவ்வுயர்வுக்கு ஒரு காரணம் மக்கள் பேச்சாற்றல் பெற்றிருப்பது. குயில் கூவுகின்றது, காக்கை கரைகின்றது. குதிரை கனைக்கின்றது, நாய் குரைக்கின்றது. கூவுதலும் கரைதலும் கனைத்தலும் குரைத்தலும் இன்ன இனம் என்று காட்டும் அஃறிணைக் குரல்களே, அக்குரல்களுக்குச் செய்திப் பொரு ளில்லை. மனித இனத்துக்கும் ஒரு தனிக் குரல் உண்டு. அக்குரல் ஒலிப்பது மட்டுமில்லை, பேசவும் செய்கின்றது. மனிதன் ஏன் பேசுகின்றான்? தன் கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற் காகப் பேசுகின்றான் என்று பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். மொழியின் நோக்கம் கருத்துப் பரிமாறிக் கொள்வதன்று, காரியம் பரிமாறிக் கொள்வது. செய்தி தெரிவிப்பதற்காகப் பேசவில்லை. மக்கள் வாய் செய்தித்தாள் இல்லை. செய்தியைச் சொல்லிச் சில காரியம் முடித்துக் கொள்வதற்காகப் பேசுகின்றோம். இதுவே மொழியின் பயன். காரியம் முடித்துக் கொள்வதற்குப் பேச்சு வேண்டும் என்றால், அப்பேச்சுக்கு ஒரு நற்பண்பு வேண்டும். தண்ணீரா லன்றி வெந்நீரால் பயிர் விளையாது. இன்சொல்லாலன்றி வன்சொல்லால் காரியம் முடியாது. நயனீன்று நன்றி பயக்கும்; பயனீன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் (97) என்ற குறளால் பேச்சுக்குப் பண்பு வேண்டும்; பண்பு என்ற தடத்தினின்று பேச்சு என்ற நடைவண்டி விலகக் கூடாது என்று வலியுறுத்துவர் வள்ளுவர். பேச்சுப் பண்பு என்பது என்னை? பிறரை இகழாமை, இழிந்த சொற்களால் ஏசாமை. திருக்குறள் பல அறங்களைப் பலபட மொழிந்தாலும், எல்லா அதிகாரங்களிலும், குருதி யோட்டம்போல ஓடுகின்ற ஒரு பொதுவறம் உண்டு. அதுதான் பேச்சொழுக்கம். யாரிடத்துப் பேசினாலும் எந்நிலையிற் பேசினாலும் பணிவுடையன் இன்சொலனாதல் வேண்டும். இதுதான் நன்மனிதன் என்பது காட்டும் நாகரிக அடையாளம். நம் வாழ்க்கையில் நாள்தோறும் எவ்வளவு உரையாடு கின்றோம், எத்துணை மக்களோடு சொல்லாடுகின்றோம், எது எதற்கெல்லாம் பேச்சுத் தொடுக்கின்றோம். பாலும் பருவமும் வேறுபட்ட, மொழியும் நிலையும் வேறுபட்ட, அறிவும் அன்பும் உணர்ச்சியும் வேறுபட்ட மனித குலங்களோடு பழகுகின்றோம். நா என்னும் துடுப்பால் மொழி என்னும் நாவாயை ஒட்டிக் கொண்டு மனிதப் பெருங்கடலில் வாழ்வுக் கரைகாண மிதக்கின்றோம். மொழித் தெப்பம் நன் முறையில் புரையின்றி இயங்கவேண்டும் என்றால், வள்ளுவர் கூறுவதுபோல யார் மாட்டும் இன்புறும் இன்சொல் வேண்டும். பண்பற்ற பேச்சு படியற்ற இல்லத்தையும் அடியற்ற உடலையும் ஒக்கும். மனிதவுறவு என்பது பேச்சுறவு. நண்பர்கள் தானே என்று நண்பர்களைக் கேலி செய்யக் கூடாது. பகைவர்கள் என்றும் பகைவர்கள் அல்லர். ஆதலின் அவர்களையும் ஓயாது இகழ்ந்து சிறுசொல் சொல்லக்கூடாது. நண்பர்களை எஞ்ஞான்றும் நண்பர்களாக வைத்துக்கொள்ள வேண்டும். பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் முயற்சி வேண்டும். இதற்கு ஒரே வழி பேச்சில் இகழ்ச்சியின்மை. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி; பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு (995) கேலி செய்வாரை வெறுப்பது எவ்வுயிர்க்கும் பொதுக் குணம். ஆதலின் இழிசொல் சொல்லாதவர்க்கு மனிதவுறவு பெருகும், மனித நாட்டம் வளரும். இன்றைய நம் உலகம் பெரும் பகுதி பேச்சுலகம். பேச்சு முறை ஆட்சிமுறையில் ஒன்றாகிவிட்டது. குழுஉக் குழு உவாகக் கூட்டம் கூட்டமாக மனிதவுறவு செறிவடைகின்றது. கூட்டுறவும் நாட்டுறவும் பெருகுகின்றன. கருத்து வேற்றுமை களும் கொள்கைப் பூசல்களும் எதிர் குதிராகின்றன. எழுத்தா லும் சொல்லாலும் இகழ்கலை கூத்தாடும். இந்நாளில் பேச்சொழுக்கம் பெரிதும் தேவைப்படுகின்றது. தன்னைப் பிறர் மதிக்கவேண்டும் என்ற ஆசை இல்லாதவன் உண்டா? அவ்வாசை நிறைவேறுவதற்கு ஒரே வழி இன்சொல்லால் தான் பிறரை மதித்தல். மதிப்பு என்பது மன்னாயத்தில் ஒருவகைப் பண்டமாற்று. மதிப்புக் கொடுத்து மதிப்பு பெறல் வேண்டும். அம்மதிப்பு என்பது நாவினைப் பொறுத்தது. ஏனை உயிரினங்கட்கு உண்ணப் பயன்படும் நா மனிதனுக்குச் சொல்லவும் பயன்படுகின்றது. சிறுசொற் பேசிப் பிறரை வடுப்படுத்தும் கொடு நாவாக இல்லாமல் இன்சொல் மொழிந்து யாவரையும் அணைக்கும் செந்நாவாக விளங்க வேண்டும். நம்மிற் சிறியரையும் இகழக் கூடாது. நம்மைச் சின்னவன் என்று தூற்றித் தூண்டியபோதும் இழிவுரை வரக்கூடாது. தன்மதிப்பு என்பது தன் நாவின் மதிப்பு. தற்பண்பு என்பது தன் நாவின் சொற்பண்பு. தன்னுடைமை என்பது தன் நாவின் அடக்கமுடைமை. ‘என் நாவிலிருந்து இழிசொற் பிறவாது. என் நா எதிரியையும் இழிவு பேசாது. என் நா நிறத்தாலும் செந்நா; தரத்தாலும் செந்நா’ இதுவே உண்மை மனிதனின் உயர்ந்த குறிக்கோள். இஃது அரிய குறிக்கோளாயினும் தன் மனிதப் பிறப்பை மதிப்பவனுக்கு உரிய குறிக்கோளாகும். யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127) நாகாக்க என்பது பொய்யில் புலவர் முடிவாகக் கூறும் பெரிய எச்சரிக்கை. பிறரை இகழ நா வளையும்போது இவ்வெச்சரிக்கையை நினைவுகொண்டு அடங்குவோமாக. 5. குறளணிகள் சிலப்பதிகாரம் பெரிய புராணம் இராமாயணம் போலத் திருக்குறள் காப்பியம் இல்லையே; தொடர் நிலைச் செய்யுள் கொண்டதில்லையே; கதை பொதி பொருளும் இல்லையே; தன்னிகரில்லாத தலைவனுக்கோ தலைவிக்கோ கூற்றுக் களுக்கோ இடனில்லையே; இயற்கைப் புனைவுக்கும் கற்பனை முனைவுக்கும் உரையாடல் நயத்துக்கும் வாய்ப்பில்லையே. மிகச் சிறிய செய்யுட்கள், தொடர்பு ஓடாத் தனித்தனிக் குறள்கள், இப்படிச் செய், அப்படிச் செய்யாதே என்று அறம் சொல்லும் கட்டளைப்பாக்கள்; இப்போக்குடைய திருக் குறளில் இருக்கமுடியுமா அணியழகு? பாறையில் பசும்புல்லா? இவ்வாறு எண்ணக்கூடும், நகையாடக் கூடும் இலக்கிய மேலோடிகள். இலக்கிய வரலாற்றில் நாம் அறியக்கிடப்பது சங்க இலக்கியங்கட்கு முன் உள்ள ஒரே முழுநூல், ஒருவரால் இயற்றப்பட்ட தனி நூல் தொல்காப்பியம் என்பது. தொல் காப்பியம் இலக்கணத் தன்மை செறிந்த இலக்கியம் ஆகும். சங்க இலக்கியத்தை அடுத்து எழுந்த ஒரு முதல் நூல், ஒருவர் ஆக்கிய தனிபெருநூல் திருக்குறள். திருக்குறள் இலக்கியத் தன்மை மிகுந்த வாழ்விலக்கணப்பனுவல். சிலப்பதிகாரம் முதலான பெருங்காப்பியத் தனி நூல் எல்லாம் திருக்குறளுக்குப்பின் எழுந்தன என்பது மட்டுமன்று; சொல்லாலும் பொருளாலும் பொருளைச் சொல்லும் போக்காலும் திருக்குறளை முன் வைத்து எழுந்தன என்றும் அறியவேண்டும். திருக்குறளின் தொடக்கமே அணியழகு பொலிந்தது, ‘அகர முதல எழுத் தெல்லாம்’ என்ற முதற் குறளின் முதலடியை அறியாதார் யார்? தொடக்கமே உவமையணியாக இலங்கும் ஒரு நூலில் உள்ளணிகளுக்குப் பஞ்சமிராது. வாசலில் இனிப்பு வழங்குவார் இலையில் எவ்வளவோ இனிப்புக்கள் படைப்பர். இவ்வுலகியல் இலக்கியலுக்கும் பொருந்தும். வள்ளுவ அணி உலகத்தார் போற்றும் அணியை வள்ளுவர் அணியாக நகையாக அழகாக மதிப்பதில்லை. பணிவும் இன்சொல்லும் மக்களணியாம். கண்ணோட்டம் கண்ணுக்கு அணியாம். நாணம் சான்றோர்க்கு அணியாம். நன்மக்கள் இல்லற அணியாம். குறிப்பறிவான் உலகுக்கு அணியாம். மடநோக்கும் நாணும் பெண்ணுக்கு அணியாம். நாம் விருப்பத்தோடு பெருவிலை கொடுத்து வாங்கும் நகைகள் எல்லாம் அணியல்லவாம், எவையோ பிறவாம். இவ்வாறு உடலணிகளை மதியாது புதிய உயிரணிகள் இயம்புவர் வள்ளுவர். இதுபோல வள்ளுவ நூலிலும் புதிய புரட்சிய அணியழகுகளைக் காணலாம். அணியழகு என்பது என்ன? இதுதான் அழகு என்று தெள்ளத் தெளியச் சொல்ல முடியுங்கொல்? முழுக்கூந்தலுக்கு என்ன அழகோ அந்த அழகு முன் குடுமிக்கும் மொட்டைக்கும் உண்டு. யானைக்குட்டியின் வனப்பு பன்றிக்குட்டிக்கு இல்லையே, பன்றிக்குட்டியின் வனப்பு யானைக்குட்டிக்கு இல்லையே என்று சொல்லலாமா? அதன் அதனழகு அதன் அதனுக்கு உண்டு. அதுவே இயற்கை. மாறியிருப்பதுதான் அழகா? இது ஆராய்தற்கும் ஐயத்திற்கும் உரியது. பாலில் நீரின் தன்மை இருந்தால் அழகு என்று ஒப்புவோமா? பாம்பைக் கண்டு பெண் ஓடினால் பெண் தன்மை என்று பாராட்டுவோம். ஆண் ஓடினால் பேடி என்றல்லவா பாராட்டுவோம். ஆதலின் எது அணி? தனக்குரிய தன்மையோடு விளங்குவது அணி. தன்மையணிகள் மணிமேகலை யாதொரு அணியும் அணியவில்லை. அவள் அழகைப் ‘புனையா ஓவியம்’ என்றார் சாத்தனார். கண்ணகி எல்லா அணிகளும் இழந்த நிலையழகைச் ‘செய்யாக் கோலம்’ இயற்கையழகு என்றார் இளங்கோ. சீதைக்குத் திருமணத்தன்று பல அணிகலன்களை அணிகின்றார்கள். ஐயோ இயற்கை யழகை இவைகள் கெடுக்கின்றனவே; அணிமோகம் கொண்ட உலகத்தின் அறியாமை என்னே! என்று அழுங்குகின்றார் கம்பர். கடவுளர் திருமேனிகள் அணி சாத்தாத நிலையில் தனியழகினவாகக் கண்டு கலையழகென வணங்குகின்றோம். செய்தித்தாளில் விளம்பரஞ் செய்வார் சிலர் வெள்ளைப் பகுதியாக விளம்பரம் கொடுத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதனால் அழகு பற்றி நாம் அறிவது இயற்கை யழகே அழகு. தன்னியல்புக் காட்சி ஓர் அணி. இதனைத் தன்மை யணி என்பர் அணிநூலார். தன்மையணிதான் அணிகளில் தாலிபோல உண்மையணி, முதலணி. தன்மையணி என்பது உள்ளது கூறுதல். உள்ளது எளிதன்று. உள்ளது கூறுவதுதானே உலகத்தில் கடினமாக இருக்கிறது. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (2) இறைவனுடைய திருவடியைத் தொழுவதே கல்வியின் பயன். இது கல்வித் தன்மையணி. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் (428) பயப்படுவதற்குப் பயப்படமாட்டேன் என்றல் மடமை; பயப்படுவதற்குப் பயந்து நடத்தல் அறிவுடைமை. இவை பேதைமை அறிவுடைமை பற்றிய தன்மைகள். கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள (1101) கண்ணின்பம் கேள்வியின்பம் உணவின்பம் மணவின்பம் தொடுவின்பம் எல்லாம் ஒரு பெண்ணின்பத்துள் அடங்கிக் கிடக்கின்றன என்பது இன்பம் பற்றிய தன்மையணி. ஒரு பொருளின் தன்மை காணல் எளிதன்று. அதனைத் துல்லியமாகக் காண்பதற்குத்தான் அறிவியலுலகம் கருவிகள் மூலம் பாடுபடுகின்றது. எவ்வளவோ அருட்பாசுரங்கள் எழுந்துள்ளன என்றாலும், ‘தன்மை பிறரால் அறியாத தலைவா’ என்று இறைவனைச் சுட்டுவர் மணிவாசகர். இன்னும் ஒருபடி கூடுதலாகச் சென்று, இறைவன் கூட ஓர் அறியாமை யுடையவன். அவனுக்குத் தன் பெருமைத் தன்மை தெரிவ தில்லை. ‘தன் பெருமை தானறியாத் தன்மையன் காண்’ என்பது மணிவாசகம். தன்மைதான் எல்லா அணிகளுக்கும் அடிப்படை யணி. நிலமின்றிக் கோபுரம் இல்லை. கூந்தலின்றேல் மலரில்லை. கல்வியின்றேல் ஆராய்ச்சியில்லை. உடலின்றேல் உலகில்லை. திருக்குறள் அறநூலாதலால், வாழ்வுத் தன்மை நுவலும் இயல்பு நூலாதலால், நூல் எங்கணும் தன்மையணிகள் நிரம்ப உள. அதனால்தான் வள்ளுவர்க்குப் பொய்யில் புலவர் என்பது ஒரு பெயர். பொய்யில் புலவர் என்றால் உள்ளதனை உள்ளபடி கூறும் தன்மைப் புலவர் என்பது பொருள். தன்மையணி தன்னிலையில் இருந்தால் சுவைப்படாது, கவர்ச்சிப்படாது, நெஞ்சையள்ளாது. அணி என்பது இலக்கிய விளம்பரம். எது உள்ளத்தை ஈர்க்கும், எது உணர்ச்சிப்படுத்தும், எது கவர்ச்சியூட்டும், அது அணியாகும். தங்கம் நகையாக, மலர் மாலையாக, நூல் ஆடையாக, அரிசி சோறாக, கிழங்கு வற்றலாக, அறிவு செயலாக, வனப்புப் பெறவேண்டும் பயன் பெறுதற்கு. தன்மையைத் தன்மையாகக் காட்டல் அறிவியல். தன்மையை அணியாக மாற்றல் இலக்கியல். புலவன் என்னும் கருமான் இலக்கியப் பட்டறையில் தங்கச் சிலம்பினுள் குறிப்பு என்னும் பரல் உள்ளீடு அமைக்கின்றான். குறிப்பொடு கலக்கும்போது தன்மை அணியாக விளங்குகின்றது. குறிப் பில்லாத தன்மை குரல் இல்லாத இசையைப் போல்வது, கவனமில்லாத காதைப் போல்வது. குறிப்பணிகள் திருவள்ளுவர் தெய்வப் புலவராதலின் அவர் செய்த தன்மையணிகள் எல்லாம் குறிப்பணிகளாக இலங்குகின்றன. தன்மையாக இருத்தலின் ஓதற்கு எளிது எனவும், எங்கும் குறிப்புமயம் இருத்தலின் உணர்தற்கு அரிது எனவும் பாராட்டினார் மாங்குடி மருதனார். அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (30) எவ்வுயிர்க்கும் அருளுடையவர் அறவோர் என்பது இதன் கருத்து என்றாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்வதா? பிறவுயிர்களைக் காப்பாற்றுவதா? என்று ஒரு முரண் நிலை வரும்போது, பிறவுயிரை மதிப்பதுதான் அறமாகும். ‘மற்று எவ்வுயிர்க்கும்’ என்ற மற்று நடையால் இக்குறிப்புப் பெறப் படும். மேலும் அந்தணர் என்பது ஒரு சாதிப் பெயரன்று, குணப்பெயர் என்பது ‘அந்தணர் என்போர் அறவோர்’ என்ற குறிப்புடை மறுப்பாலும் பெறப்படும். கடலோடா கால்வல் நெடுந்தேர்; கடலோடு நாவாயும் ஓடா நிலத்து (496) தன்மைக் குறிப்பணிக்கு இஃது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. மாட்டுவண்டி கடலிற் போகாதாம்; கப்பல் நிலத்தில் போகாதாம். குழந்தைத் தனமான கருத்து என்று சொல்லி விடுவோம். குறளாக இருத்தலாலும் பாடினவர் தெய்வப் புலவர் என்பதனாலும் குகைக்குள் மணிபோலக் குறளுள் அணி யிருக்கும் என்று தேடுகின்றோம். எந்த இடத்தில் எதனைச் செய்வது என்ற அறிவு வேண்டும் என்பது இக்குறளின் கருத்து. இதற்கு நிலவண்டியையும் நீர்க்கப்பலையும் ஏன் காட்ட வேண்டும்? எங்கோ தனியாக ஓடுகின்ற வண்டியையும் எத்திசையோ நோக்கிச் செல்லுகின்ற கப்பலையும் கூறவில்லை. இது கடற்கரைச் சந்திப்பு. வெளிநாட்டுக்குப் போக்குவதற்காகப் பாரச் சரக்குகளை வலிய வண்டியில் ஏற்றிக் கடற்கரை நோக்கி வருகின்றனர். கரை வந்ததும் மேற்செல்லாது வண்டி நிற்கின்றது. சரக்குகள் கப்பலில் ஏறுகின்றன. அது போலவே வெளிநாட்டி லிருந்து கப்பல் வருகின்றது. வந்த கப்பலைத் தரை தட்டாமல் ஆழ் நீரில் நிறுத்திவிட்டுச் சரக்கினைக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றுப. சந்திக்கும் இடத்தில் இட வேற்றுமை காரணமாக ஊர்தி மாற்றம் ஏற்படுகின்றது. ‘நீரினின்று நிலத்தேற்றவும், நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பல பண்டம்’ என்று சோழ நாட்டின் இருமதி வணிகத்தை (-) நிலநீர்ச் சந்திப்பைப் பட்டினப்பாலை தொடுத்துக் காட்டும். வன்கால் வண்டி கடற்கரை வந்தும் அப்படியே கடலுள் புக்கோடுவதில்லை; ஓடிவரும் கப்பல் கரைவரை வந்தும் அப்படியே நிலத்திற் பாய்ந்து விடுவதில்லை என்ற இரு முனையைக் குறிப்பிக்கவே, தேர் கடலோடா எனவும் கடலோடும் நாவாயும் எனவும் சூழ்நிலை சுட்டி விளக்கினார். கடல் வணிகத்தை நினைவிற் கொண்டு கூறியதோடு, தேர்ப்படை, கப்பற்படைகளையும் எண்ணிக் கூறியதாகவும் குறிப்புக் கொள்ளலாம். கால்வல் நெடுந்தேர் என்பது போர்க்களத் தேர்ப்படையைக் குறிக்கலாம். ‘வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன்னோன்’ என்பதனை ஒப்பு நோக்குக. ஒண்ணுதற் கோஓ உடைந்ததே; ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (1088) இல்லறத் தலைவன் தலைவியின் நுதல் அழகு கண்டு இன்புற்ற தன்மையை இக்குறள் காட்டும். நெற்றியழகு தன்னை வெற்றி கொண்டது என்று சொல்லுமளவில் தலைவன் நிற்க வில்லை. இவன் ஓர் மறத்தலைவன். அவன் தமிழ் படைத்தமிழ். இவன் பெருமை எப்படிப்பட்டதாம்? போர்க் களத்துக்கு வந்த இவன் வலி கண்டு தோற்ற பகைவர்கள் மற்றவர்களுக்கு அதனை எடுத்துச் சொல்லவே அப்பகைவர்களும் போர்க்களம் வாராமலே அஞ்சி வீட்டில் கிடக்கின்றார்களாம். முன்னின் றாரைப் புறங்காட்டிய இவன் பெருமை மற்றவர்களை முன்னிற்க வாராமலே தடுக்கின்றதாம். இது போர்க்களத்தில். மாலையில் வெற்றியோடு வீடு வந்த இத்தலைவன் தன்னிலையை வீட்டில் வைத்துப் பார்க்கின்றான். புறமும் அகமும் இணையும் தமிழ்க் காட்சியிது. பளபளப்பான இவள் நெற்றி ஒன்றுக்கே, நெற்றியைக் காட்டிய அளவிலேயே தன் பெருமை முழுதும் உடைந்து விட்டதே. இனி பிற உறுப்புக்களுக்கு உடைய இடமில்லையே. தன் தானைப் பீடு ஒரு சிறிய முன்தானைக்கு ஓடிவிட்டதே. இப்படியும் பெரு வீரனுக்கு ஒரு சிறு தோல்வியா என்பது இவன் வியப்பு. படை புறங்காட்டுதலை உடைதல் என்று கூறுதல் சங்ககாலப் படைத்தமிழ். ‘பல்படை ஒருவற்கு உடைதலின்’ என்பது தொல்காப்பியம். ‘மண்டமர்க்கு உடைந்தனனாயின்’ என்பது புறநானூறு. ஆதலின் நுதலுக்கு என்பீடு உடைந்ததே என்று வினைப்படுத்துகின்றான் படைத் தலைவன். பெண்ணுக்குப் பீடாவது கற்பு. கணவன் வர வேண்டிக் காமகோட்டம் தொழலாம் என்றபோது பீடன்று - கற்புப் பெருமையன்று எனக் கூறியமைந்தாள் கண்ணகி. ஆடவனுக்குப் பீடாவது புறங்காட்டாப் போர்ப் பெருமை. பெண் பீடாகிய கற்புக்கும் ஆண் பீடாகிய வீரத்துக்கும் பாயற்களத்து ஊடற்போர் நிகழுங் காலத்தில் ஆண்பீடு தோற்றல் வேண்டும், பெண் பீடு வெல்ல வேண்டும். ஊடற் போரில் தோற்றவரே வென்றார் என்பது வள்ளுவ மன்றம். அகத்துக்குப் புறம் பணிவதே அணியழகு. அணிகளிற் சிறந்தது குறிப்பணியே. இதனை நோக்கு என்பர் தொல்காப்பியர். குறிப்பணிகளே திருக்குறளில் ஏராளமாக இருக்கும்போது ஏனைய அணிகளும் தாராளமாக இருக்கும் என்பதனைக் குறித்துக் கொள்ள வேண்டுகின்றேன். எல்லா அணியும் அதிலுள; இந்நூலில் இல்லாத எவ்வணியும் இல் என்பது புதிய வள்ளுவமாலை. 6. தன்நெஞ்சம் கெடுவல்யான் என்பது அறிக; தன்னெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் (119) என்பது அறத்துப்பால் நடுவுநிலைமை அதிகாரத்தில் வரும் குறளாகும். நேர்மை வேண்டும் என்பதுதான் இக்குறளின் அறக் கருத்தாயினும், அக்கருத்தைச் சொல்லும் முறையில் நான்கு கூறுகள் அமைந்துள்ளன. நேர்மை தவறிக் காரியம் செய்தலா காது; அங்ஙனம் செய்யும்படி நெஞ்சை விடக் கூடாது; நெஞ்சு என்ற ஓர் உறுப்பு நேர்மைப்பிழை செய்தால் நெஞ்சுடையான் முழுதும் கெட்டுப் போவான். இந்த அச்ச அறிவு எப்போதும் இருக்க வேண்டும். ‘கெடுவல்யான்’ என்று குறளைத் தொடங்குவதிலிருந்தே வள்ளுவர் எச்சரிக்கை செய்கின்றார் என்பதனை உணர்கின் றோம். ஏன்? நேர்மை என்ற நடுவு நிலைமை ஒவ்வொருவனுக்கும் இன்றியமையாத ஒழுக்கம். மக்கட் குழுவாயம் நம்பிக்கை என்ற நாணால் கட்டப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு காரியத்துக்கும் கையெழுத்துக்களும் ஆட்சான்றுகளும் ஒப்பந்தங்களும் வைத்துக்கொண்டு உலகத்தை இயக்க முடியுமா? நம்பித்தான் பலவற்றைக் கொடுக்கின்றோம், கொள்கின்றோம். நாணயக் கேடி உலகப் பேடியாவான். சிறு துறையாயினும் பெருந்துறையா யினும், பொதுத் தண்ணீர் நேர்மை தவறிகளுக்கு வெந்நீராக மாறிவிடும். சினங்கொண்டவனோ பொறாமை கொண்டவனோ பொய் சொன்னவனோ புறங்கூறினவனோ முழுதும் கெடடைவ தில்லை. ஏன்? இக்குற்றத்தார்களை மக்களினம் அடியோடு வெறுக்கக் காணோம். இவர்களைச் சிலர் அணைத்துக் கொள்ளவும் செல்ப. நாணயம் இல்லாதவனை வீடும் வெளியும் முழுப் பொதுவாயமுமே விரைவில் வெறுத்துவிடும். நேர்மை காவாவிட்டால் உன் வாழ்வு என்னாகும் தெரியுமா? வாழ்வில் ஒரு பகுதி மாத்திரம் கெடாது, முழு வாழ்வும் கெட்டுப்போம் என்பதைச் சுட்டிக் காட்டவே ‘கெடுவல் யான் என்பதறிக’ என்று யான் என்னும் தன்மை முழுப் பெயரை ஆட்சி செய்துள்ளார். பணத்தாள் ஏனைப் பகுதியெல்லாம் கிழிந்தி ருந்தாலும் எண்ணுப்பகுதி இருந்தால் செல்லுபடியாகும். எண்கெட்டு ஏனைப்பகுதி இருந்து என்ன பயன்? ஏனைய குணங்கள் கெட்டால் பொது உறவு அற்றுவிடாது. நடுவு என்னும் நாணயம் கெட்டுவிட்டாலோ மன்பதை தள்ளுபடி செய்துவிடும். நான் நாணயம் பிறழ்ந்தால் உலகியம் ஒன்றும் கெட்டுவிடாது; நாணயத்தைக் கெடுத்துக் கொண்ட நான் தான் கெடுவேன் என்று தெரிந்து கொள்க என்பார் ‘கெடுவல் யான் என்பது அறிக’ என்று உணர்த்துகின்றார். ‘தன்நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்’ என்ற குறட்பகுதியில், நெஞ்சம் என்ற சொல்லாட்சி சிந்தனைக்குரியது. நடுவுநிலைமை கடந்தால் வாழ்வு கெடும் என்று சொன்னாற் போதாதா? நெஞ்சம் நடுவு நிலைமை கடந்தால் என்று நெஞ்சத்தின்மேல் அக்குற்றத்தை ஏற்றுவதன் கருத்து யாது? மனிதன் செய்யுங் குற்றங்களை இருவகையில் அடக்கலாம். ஒரு வகை அறியாமைக் குற்றம். ‘கற்றனைத்து ஊறும் அறிவு’ என்பாராதலின், அறியாமைக் குற்றம் உண்மையில் குற்றம் இல்லை எனவும் கல்வியால் நிறைவு செய்யக்கூடிய ஒரு குறையே எனவும் தெளியலாம். மனிதனுக்கு உண்மையான குற்றம் என்பது மனக்குற்றமே. இக்குற்றத்தை மாசு என்பர் வள்ளுவர். ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’ என்று அறத்திற்கு இலக்கணம் வகுப்பதால், அறிவுப்பிழை அறப்பிழையாகாது; நெஞ்சப் பிழைதான் அறத்தொடுபட்ட பிழை என்று தெரிந்து கொள்ளுகின்றோம். நேர்மைப் பிழை நெஞ்சுக்குத் தெரியாமல் நடவாது. தெரியாது கையூட்டு வாங்கிவிட்டேன் எனவோ, அறியாது அளவையும் தரத்தையும் குறைத்துக் கொடுத்து விட்டேன் எனவோ சொல்வதை யாரும் உடன்படார். நாணயப்பிழை அறிவைச் சார்ந்ததன்று; மனத்தைச் சார்ந்தது என்பதைக் காட்டவே ‘நெஞ்சம் நடுவொரீஇ’ என்று நெஞ்சொடு தொடர்புபடுத்திக் கூறினார். நெஞ்சம் என்று தனியாகச் சொல்லாமல் ‘தன்நெஞ்சம்’ என்று தன்னொடு சேர்த்துச் சொல்லிய அடைதான் இக்குறளுக்கு உயிரோட்டம் ஆவது. அறிவு யார்க்கும் நிரம்புவதன்று. ‘அறிதோறு அறியாமை கண்டற்றால்’ என்று வள்ளுவரும் அறிவு உறிஞ்சு தரைபோல் நிறைவு காண முடியாக் குறைவுடையதாகவே இருக்கும் என்று சுட்டிக் காட்டுவர். பல்வேறு அறிவாளர் கூட்டமாகச் சேர்ந்து கருத்துப் பரிமாறிக் காரியஞ் செய்யலாம். அறிவு கடல் போல நிறைவுபடாதது, கூட்டுறவுக்கு உரியது. ஒன்றைத் தெரியாமற்செய்தால் இன்னவனைக் கேட்டுச் செய்தேன் என்று அறிவுத் துறையில் பிறர்மேல் பாரத்தைப் போடலாம். உலகாயமும் உடன்படும். ஒருவன் அறிவுக் குற்றம் பிறரையும் சார்ந்தது; மனக்குற்றம் ஒவ்வொருவன் தன்னையே சார்ந்தது. என்னைக் களவாடச் சொன்னான், பொய் சொல்லச் சொன்னான், நாணயங்கெடச் சொன்னான் என்று பிறர்மேல் பழிபோடலை வள்ளுவர் உடன்படவில்லை. மன்னாயமும் உடன்படாது. யார் சொன்னாலும் தன்னெஞ்சு கேட்டுக் குற்றஞ்செய்தால் தானே? குற்றஞ் செய்யத் தன்னெஞ்சு மறுத்துவிட்டால் யார் சொல்லி என்பயன்? நேர்மை என்பது பொதுப்பொருளன்று. பலர் நேர்மை தவறியிருக்கின்றார்கள் என்பது ஒப்புமை யாராய்ச் சிக்கும் மேற்கோளுக்கும் உரியதன்று. நேர்மையும் ஒழுக்கமும் அவனவன் நெஞ்சத்தின் பால. ‘தன்நெஞ்சறியப் பொய்யற்க’ என வாய்மை அதிகாரத்தும், ‘தன்நெஞ்சம் தானறி குற்றப்படின்’ எனக் கூடாவொழுக்க அதிகாரத்தும், ‘கள்ளாமை காக்க தன்நெஞ்சு’ எனக் கள்ளாமை யதிகாரத்தும் இவ்வாறே ஒழுக்கக் கூறுகளைத் ‘தன்நெஞ்சு’ என்ற வாய்பாட்டில் வைத்து முடிப்பர் வள்ளுவர். இதனால் தன் நேர்மைக்குத் தன் நெஞ்சு ஒன்றே மூலம், பிறிது எதுவுமன்று என்ற வரம்பு தெளிவா கின்றது. வண்டி தடம் பிறழ்வது அறிந்தால், உரிய தடத்துக்குக் கொண்டுவர முயல்கின்றோம். அடக்கியைப் பயன்படுத்தி ஓடுகின்ற காலை ஒடுக்குவோம். சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (422) மனம் என்னும் வண்டி நடுவுநிலைமை என்னும் நேர் பாதையி லிருந்து விலகுமானால், அதனைத் தடுத்து ஒழுங்குபெற ஓட்டுதல் அறிவு என்ற வலவனின் தொழில் என்று உலகியல் நிலையில் புலப்படுத்துவர் வள்ளுவர். கெடுவல்யான் என்பது அறிக; தன்னெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் (116) என்நெஞ்சு நேர்மை பிசகினால் நான் முதலொடுங் கெட்டொ ழிவனே என்று அறிந்தால், இவ்வறிவு பெற்ற அறிவாளன் தன் மனம்போன போக்கெல்லாம் போக மாட்டான்; ஊசிவழி நூல்செல்வது போலவும், இருப்புப் பாதை வழி புகையூர்தி இயங்குவது போலவும், அறிவு வழி தன் மனத்தைக் கட்டிக் காப்பான். தன் உணர்ச்சிகளை விம்மவும் குமுறவும் கொந்தளிக் கவும் விடாது அறிவுக் கரை வழி ஒழுங்கு படுத்துவான். நெஞ்சுடையார் எல்லாம் உடையாரல்லர்; நெஞ்சை ஒழுங்கு படுத்தும் அறிவுடையாரே எல்லாம் உடையார். 7. குறள் விளக்கம்? திருக்குறள் தன் விளக்கம் வாய்ந்த எளிய இனிய நூல்; தனக்கு வேறொரு விளக்கம் வேண்டாத் தெளிவு நூல்; உவமைகள் மலிந்த நூல்; கருத்துக்களைப் பலநிலையில் புலப்படுத்தும் நூல். அந்தத் திருக்குறளுக்கு எவ்வளவு உரைகள், உரைக்கு உரைகள், சிறப்புரைகள், விரிவுரைகள், தெளிவுரைகள், நயவுரைகள் என வாங்கு எவ்வளவோ வகையுரைகள், எவ்வளவு விளக்கங்கள்? விளக்கத்தின் மேலும் விளக்கங்கள் எவ்வளவு? திறன்களும் திறத்திறன்களும், கட்டுரைகளும், பொழிவுகளும், கதை விளக்கங்களும் எவ்வளவு? இவ்வளவு இருந்தும், திருக்குறளில் என்ன விளங்கிக் கொண்டோம் என்று கேட்கத் தோன்றுகின்றது. அறம் பொருள் இன்பம் வீடு எல்லாம் தெளிந்தோம் என்று திருவள்ளுவமாலை புகன்றாலும், என்ன தெளிந்தோம் என்று மறுக்கத் தோன்று கின்றது. சுருங்கிய சொல்லால் பொருள் விளங்கக் கூறுவதில் வல்லவர் வள்ளுவர் என்று திருவள்ளுவமாலை உரைத்தாலும், அவர் வல்லவர்தான்; நாம் பொருள் விளங்கிக் கொண்ட வல்லவர்களா என்ற ஐயம் ஏற்படுகிறது. குறள் விளக்கம் என்றால் என்ன? உரையா? நயமா? உரைப்பன்மையா? ஆராய்ச்சி நுண்மையா? எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (666) இந்தக் குறளுக்குக் குறளின் மேலும் என்ன தெளிவு வேண்டிக் கிடக்கின்றது. பல குறள்களுக்குப் பலவுரைகள் எழுதப்பட்டுள்ளன. புதிய விளக்கங்கள் எழுந்துள்ளன. புத்துரையும் புது விளக்கமும் மேலும் மேலும் வந்துகொண்டி ருக்கின்றன. இவ்வகை வரவு ஒரு நாளும் ஓயாது. ஓரளவு தமிழ் பயின்றார்க்கும் ஆயிரங் குறள்கள் தாமே விளங்கி நிற்கும். இதுவா விளக்கம்? இதுவா குறளின் தலை நோக்கம்? ஓவிய நிலை ஓவியத்தில் ஒரு மாம்பழத்தைக் காண்கின்றோம். மெய்யான ஒரு மாம்பழத்தைத் தின்னுகின்றோம். இவ்விரு நிலைமைக்கும் எவ்வளவு வேறுபாடு? மலையோவியப் பயன் வேறு. மலைப்பயன் வேறு. கட்டிடப் படத்தின் தன்மை வேறு; கட்டிடத்தின் தன்மை வேறு. இவ்வோவியங்கள் மிகத் தெளிவானவை என்றே கொள்வோம். ஓவியப் பயன் முற்றும் வேறு; பொருட்பயன் முற்றும் வேறன்றோ? மலையோவியம் மலைபோல் கனக்காது. கட்டிட வரைவின் மதிப்பு என்ன? கட்டிடத்தின் மதிப்பு என்ன? பழ ஓவியத்துக்குச் சுவை உண்டா? ஆதலின் ஓவியம் உருவச் சாயலே தவிர உண்மை நிலையில்லை. திருக்குறள் அறங்களும் இத்தகையவே. குறட்கள் நல்ல அறவோவியங் கள், அறவுரைகள். மலையோவியத்தைக் காண்பவனுக்குமலையையே நேரிற் காணும் உணர்ச்சி வரவேண்டும். கட்டிடப் படம் வரைவதன் நோக்கம் அதுபோல் ஒரு கட்டிடம் கட்டவன்றோ? விளங்கியது, விளங்கியது என்று நாம் சொல்லும்போது ஒருவகை விளக்கத்தையே எண்ணிப் பேசுகின்றோம். ஒருவர் சொல்லும் கருத்தோ, ஒரு நூலின் கருத்தோ தெளிவாகப் புரிவதை விளங்கிற்று என்கின்றோம். உவமை, ஒப்புதல், மேற்கோள் எல்லாம் இப்பிரிவின் கூறுகளாகும். இதனை மொழி விளக்கம் என்று கூறலாம். மொழி விளக்கம் வேறு; வினை விளக்கம் வேறு. முன்னது ஓவிய நிலை; பின்னது உண்மை நிலை. கசடறக் கற்றல் ஓவிய நிலை; கற்றபின் நிற்றலே உண்மை நிலை. ஓதியும் உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தல் ஓவியநிலை; தானடங்குதலே உண்மை நிலை. உண்மை நிலை திருக்குறளை ஓவிய நிலையில் வைத்தே கற்றும் கற்பித்தும் பாராட்டியும் வருகின்றோம். உண்மை நிலை என ஒன்று உண்டு என்பது நமக்குப் படவில்லை. இவ்வுண்மைநிலை என்பது என்ன? மருந்துக்கடையில் பன்மருந்துகள் இருந்தாலும், தன் உடல் நிலைக்கு வேண்டிய மருந்தினையே பெறுவர். செய் துணிக் கடையில் அளவுப் பல் சட்டைகள் இருந்தாலும், தன் உடலளவுக்குத் தக்க சட்டையையே எடுத்துக்கொள்வர். வண்ணத் துணி பல இருந்தாலும் தன்மேனி நிறத்தோடு வைத்துப் பார்த்துத் துணிவண்ணம் தேர்குவர். கடைவீதியில் நிரம்பிய பல்பொருள் குவிந்திருந்தாலும் தன் கைப்பொருளுக்கு ஏற்பவே சரக்குக்களை வாங்கிக் கொள்வர். இதன் அடிப்படை யாது? எதனையும் தன்னிலையில் வைத்துக் காண்பது. தன்னிலைப் பார்வை என்ற கண்ணில்லாவிடின் தனக்கும் பரந்த உலகிற்கும் என்ன தொடர்பு ஏற்படும்? வாழ்வு வளமும் வாழ்வு விரிவும் வேண்டுமேல் எதனையும் தன்னொடு பொருத்தியும் ஒட்டியும் இணைத்தும் காணும் எண்ணோட்டம் - தன்னோட் டம் வேண்டும். இவ்வோட்டம் உடையவரே எண்ணிய எண்ணியபடி எய்துவர். பரந்து செல்லும் நீரை வேர் தன் பக்கம் உறிஞ்சிக் கொள்கின்றது. பல்வளம் உடைய மண்ணில் பயிர் தனக்குரிய மண்ணாற்றலைத் தேர்ந்து வளர்கின்றது. ‘தன்’ என்பது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் கயிறு. தன்னிலைப் பார்வை என்ற கயிறு அறுந்தவன் உலகக் குருடன் ஆகின்றான். தன்னிலைப் பார்வை வேறு. தன்னலப் பார்வை வேறு என்பது உணரத்தகும். தன்னிலைப் பார்வை திருக்குறளில் மொழி விளக்கத்தையே கண்டும் காட்டியும் வரும் நாம் இனி தன்னிலைப் பார்வையைக் காணுமாறு முயலவேண்டும். இம் முயல்வு ஒவ்வொருவரின் தனி முயல் வாகும். தன் வாய் திறவாவிட்டால் தன் வயிறு நிரம்பாதது போலத் தனிப் பார்வையில்லாவிட்டால், தன்வளம் இராது. இந்நிலையில் பின்வரும் குறள்களை முதலிற் காண்போம். தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க தூங்காது செய்யும் வினை. (672) செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும் (466) எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு அவ்வது உறைவது அறிவு (426) இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் (517) ஒல்லும் வகையான் அறவினை யோவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் (33) உப்பமைந் தற்றாற் புலவி; அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் (1302) தாமதித்துச் செய்வதைத் தாமதித்துச் செய்க; உடனே செய்யவேண்டியவற்றை உடனடியாகச் செய்க என்ற கருத்தில் என்ன விளங்கிற்று? எந்தக் காரியம் தாமதத்திற்கு உரியது? எது உடனே செய்தற்கு உரியது என வள்ளுவர் கூறியிருக்கின்றாரா? கூறத்தான் முடியுமா? எந்தக் காரியம் என்ற பகுத்தறிவு அவனவனுக்கு வேண்டும். எவை செய்யத்தக்கவை, எவை செய்யத்தகாதவை, எப்படிச் செல்லுகின்றது உலகம் என்று தெரிவது அவனவன் நிலையைப் பொறுத்தது. ‘இதனை இதனான் இவன் முடிக்கும்’ என்ற குறளானது வாய்பாடு காட்டும் இலக்கண நூற்பா நடையில் அமைந்துள்ளது. ‘இ’ என்ற சுட்டுக்கள் காட்டும் உண்மைப் பொருள்கள் யாவை என்று வரையறுத்தல் யாராலும் முடியுமா? அவனவனே தன் நிலைக்கு ஏற்பக் கண்டுகொள்ளும் மதி நுட்பம் வேண்டும். அறவினை, ஒல்லும் வகை, செல்லும் வாய் என்பன செய்பவன் தெளிவுக்கு விடப்பட்டவை. புலவி, உப்பளவு, உப்பின் மிக்களவு என்பவை அவரவர் அறிவளவை ஒட்டியன. வலியறிதல், இடனறிதல், காலமறிதல், சிற்றினஞ் சேராமை, கூடா நட்பு, தீ நட்பு, பொறையுடைமை, பயனில சொல்லாமை என்ற அதிகாரங்கள் எல்லாம் கற்பவன் பகுத்தறிவுக்கு விடப்பட்டவை. ‘கற்பவை கற்க’, ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’, ‘நிலையின் இழிந்தக் கடை’, ‘வாழ்வாங்கு வாழ்பவன்’, ‘போற்றின் அரியவைபோற்றல்’, ‘செயற்கரிய செய்வார்’, ‘அளவறிந்து வாழாதான்’, ‘யாதனின் நீங்கியான்’, ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’, ‘காலத்தினால் செய்த நன்றி’, ‘இரத்தக்கார்க் காணின்’, ‘அளவறிந்து உண்க’ என வரும் நூற்றுக்கணக்கான வள்ளுவத் தொடர்களின் விளக்கம் உரைகளுக்கு உட்படுமா? அவனவன் நிலைக்கு ஏற்ப வினைக்கண் வேறுபடும். குறளறங்கள் வரையறுக்கப்பட்டுள. ஆனால் அவ்வறத் துக்கு உரிய நிகழ்ச்சிகள் வரையறைக்கு உட்படுவனவல்ல. இன்று மிக விரைவாகச் செய்த காரியத்தை நாளை மிகத் தாமதமாகச் செய்யவேண்டி நேரிடும்; பலநாள் தாமதமாகச் செய்ய நேர்ந்தாலும் நேரும்; கைவிட வேண்டி நேர்ந்தாலும் நேரும். இவ்வினை நுட்பத்தை வரையறுக்க முடியுமா? அறத்தின் செயல் அவனவன் அறிவுத் திறத்தைப் பொறுத்தது. அதற்குச் செயற் பயிற்சி வேண்டும். ஒவ்வொருவரும் தன்னுணர்வைத் தன்னெண்ணத்தைத் தன் போக்கை அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும் எனப் பல இடங்களில் வலியுறுத்துவர் வள்ளுவர். இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக; தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து (539) வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின் மெலியார்மேற் செல்லும் இடத்து (250) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் (540) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (505) திருக்குறளைப் பொது பொது என்று சொல்லிச் சொல்லி வாளிருந்தும் பேடியானோம், வாயிருந்தும் ஊமையானோம். ஊருணி பொது என்றாலும் எல்லா உயிர்க்கும் ஒரு பொது வாய் உண்டோ? காற்று பொது; எல்லா உயிருக்கும் ஒரு பொது மூக்கு உண்டா? இவ்வாறே பொது உடம்பு, பொதுவுயிர் என்றெல்லாம் உண்டு கொல்? திருக்குறள் ஒவ்வொருவர் வாழ்விலும் பயன்படவேண்டும்; தற்பார்வை வேண்டும். ஒவ்வொரு குறளும் தனக்கு எவ்வகையிற் பொருந்துங்கொல் எனவும் தனக்குப் பொருந்தும் குறள் எதுகொல் எனவும் அறிவு நாட்டம் வேண்டும். குறள் விளக்கம் என்பது தன்வினை விளக்கம். வினைவிளக்கம் என்பது தன் அறிவுப் பார்வை. வள்ளுவர் தன்நூலைக் கற்பவனிடத்து ஒன்றையே எதிர்பார்க்கின்றார். அவ்வொன்று இருந்தால் எல்லாம் உண்டாகுமாம்; அவ்வொன்று இல்லையேல் எல்லாம் இல்லையாகிவிடுமாம். அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (430) வள்ளுவர் நம்மிடம் எதிர்பார்ப்பது பகுத்தறிவு, தன்னறிவு, தன்னிலையறிவே. தன்னறிவுடையார் வாழ்வாங்கு வாழ்வர், தன்னறிவில்லார் வீழ்வாங்கு வீழ்வர். 8. நம்பிக்கை நூல் பலருக்கு ஆராய நூல் வேண்டும், சொற்பொழிவாற்றக் கருத்து வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றவில்லை. எல்லோரும் வாழவேண்டும், எப்படி வாழ் விப்பது என்ற தலையாய நோக்கமே திருக்குறட் பிறப்பிற்குக் காரணம். இந்நோக்கம் எல்லாக் குறள்களிலும் வெளிப்படக் காணலாம். மிகக் கீழானார்க்கும் உயர்வுண்டு; இயல்பாகவுள்ள வர்க்கும் மேலுயர்வு உண்டு; மிகவுயர்ந்தார்க்கும் மேன்மேலு யர்ச்சியுண்டு என்ற நம்பிக்கையைத் திருக்குறள் நமக்கு ஊட்டுகின்றது. தாழ்ந்தாரைப் பார்த்துச் சோர்வடைய வேண்டாம் எனவும், உயர்ந்தாரைப் பார்த்து அமைதியடைய வேண்டாம் எனவும் ஊக்கமும் ஆக்கமும் தருவது திருக்குறள். எல்லார்க்கும் பொதுவான அறங்களைக் கூறுவது குறள் என்று சொல்லி வருகின்றோம். இது எவ்வளவு தவறான கருத்து? எவ்வளவு வீழ்வான கருத்து? பொது அறம் கூறாது அவரவர்க்குப் பொருத்தமான அறங்கூறுவதே குறள். இதுவே குறளின் தனிச்சிறப்பு. பொதுவறம் செயற்படுமா? பொதுமடம் துப்புரவுப்படுமா? ‘நீதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவும் அற்றவர் வாய்ச் சொல் அருளீர்’ என்று பொருள் நிலைக்கு ஏற்ற அறம் பாரதியார் கூறியிருப்பதை அறிவோம். அதுபோல் உலகு புகழ் வள்ளுவர் ஒவ்வொருவரை யும் தனித்தனியாக முன்னேற்ற வேண்டி அவரவர் செய்வதற்கு ஏற்ற அறங் கூறியுள்ளார். அறத்திற்காக அறம் எழுதவில்லை அவர். இவ்வுண்மையை இப்போது நாம் தெளிந்து வருகின் றோம். யாரையும் முன்னேற்றிவிட வல்லது முப்பால் என்பதனை ஊரறிய உலகறியத் தெளிவிக்க வேண்டும். ‘என் நிலைக்கு ஏற்ற அறம் இந்நூலில் உண்டு; ஆதலால் எனக்கும் முன்னேற்றம் உண்டு’ என்ற மெய்ந் நம்பிக்கையோடு திருக் குறளைப் படியுங்கள். அறம் அறம் எல்லா மக்களும் செய்ய வேண்டிய கடமை; எனினும் இப்படிச் செய்வதுதான் அறம், இவ்வளவு செய்தாற் றான் அறம் என வரம்பு கட்டலாமா? வள்ளுவர் அறம் வலியுறுத்தினாரே யன்றி அதற்கு ஓர் அரண் கட்டவில்லை. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல் (33) இக்குறளில் அவர் நெகிழ்ச்சியைப் பாருங்கள். ஒல்லும் வகையான் எனவும், செல்லும்வாய் எனவும் அறஞ்செய்வான் நோக்கத்திற்கு எவ்வளவு தாராளமாக விட்டுக் கொடுக்கின்றார்? தலைமேல் புல்லுக்கட்டை இறக்கி உதவுவதும், ஆட்டின் கால் முள்ளை அணைத்து எடுப்பதும், முதியோர்க்கு இடங் கொடுத்து இளையோர் எழுந்து நிற்பதும், இவ்வூர்க்குச் செல்வது இவ்வண்டியா என வினாவினார்க்குச் சலிப்பின்றி அறிவுறுத்தலும் எல்லாமே சிறு வினையாயினும் அற வினையல்லவா? வள்ளலிடம் சென்றான் வறியனாய்த் திரும்பான்; வள்ளுவரைக் கற்றான் வாழாதிரான். வள்ளல் எப்படியும் கொடுப்பான்; வள்ளுவர் எப்படியும் வாழ்விப்பார். வாழ்வின் உயர்விற்கு இன்னவளவு பொருளாதார அடிப்படை வேண்டும் எனப் பலர் மயங்கி எண்ணம் தடுமாறிச் சோர்வடைகின்றனர். உள்ள நிலையை மேலும் குள்ள நிலையாக்கிக் கொள்கின்றனர். உயர்வுக்குப் புறவடிப்படை வேண்டாம் என்பது வள்ளுவம். உயர்வாக வேண்டும் என்றால், வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்; அவ்வெண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ண வேண்டும்; எண்ணப் பித்து வேண்டும். இதுவே உயர்வுக்கு வள்ளுவர் காட்டும் நெறி. உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். (592) எந்தப் பொருளடிப்படை வேண்டும் என நாம் நினைக்கின் றோமோ அதனை வள்ளுவப் பேராசிரியன் உடன்படவில்லை. பொருளோ தகரக்கூடிய அடிப்படை என இகழ்வதைக் காணுங்கள். உலகில் பொருளுடையாரெல்லாம் உயர்ந்து விடவில்லையே. பொருளிலாரெல்லாம் தாழ்ந்துவிடவில்லையே. பொருளாளர் தாழவும் பொருளிலார் உயரவும் காண்கின் றோம். ஆதலால் உயரவேண்டும் என்ற ஊக்கமே நல்வாழ்வுக்கு அடிப்படை என்பர் ஆசிரியர். இதனைவிட உயர்வுக்கு எளிய நெறி காட்ட முடியுமா? திருக்குறள் காட்டும் வழி ஏற்ற நெறி மட்டுமன்று; செய்தற்கு எளிய நெறியுமாகும். பொருள் திருக்குறளில் பொருட்பாலே பெரும்பால். இப்பாலில் கூறப்படும் அரசியல் நெறிகள் நடைமுறைக்கு உகந்தவை. முடியரசு, குடியரசு, படையரசு என்ற வகைக்கு உட்பட்டு வள்ளுவர் அரசியல் வகுக்கவில்லை. நாடென்றால் அதற்கோர் நல்லரசு வேண்டும்; அது வல்லரசாகவும் இருத்தல் வேண்டும் என்பதுவே வள்ளுவ அரசியல். படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. (381) இது பொருட்பாலின் முதற்குறள். அரசியல் நெறி பேசும் முதற் குறளிலேயே படை என்ற சொல்லை முதலாவதாக வைத்துப் பாடுகின்றார் வள்ளுவர். படையற்றது அரசாகாது என்ற பேருண்மையை இதனைக் காட்டிலும் வேறு வகையான் அறிவுறுத்த முடியுமா? தமிழறிஞர் - எவ்வளவோ நூற்றாண்டுக்கு முன்னர் வலியுறுத்தியிருந்துங்கூட, சீனப்படையெடுப்புக்குப் பின்னரேதான் படையின் இன்றியமையாமையை நாம் உணர்ந்துகொண்டோம். அரசு வினையாளரிடம் கையூட்டை எங்ஙனம் ஒழிப்பது என்று நம் இந்தியத் தலையரசும் உறுப்பரசுகளும் என்றும் மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. பல பல குழுக்களைப் புதுவதாக அமைக்க எண்ணுகின்றன. இக்குழுக் களுக்குள்ளும் கையூட்டு நுழையாது என்று யார் உறுதி கூற முடியும்? கையூட்டைக் கண்டுபிடிக்க வழிசெய்தலைக் காட்டிலும் கையூட்டு நிகழாதவாறு அலுவல் நெறிகளை அமைப்பதிற் கருத்துச் செலுத்த வேண்டும். இதுபற்றி அரசியற் சான்றோராகிய வள்ளுவர் யாது கூறுகின்றார்? நாடொறும் நாடுக மன்னன்; வினைசெய்வான் கோடாமை கோடா துலகு (520) நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் (553) மக்களின் வேண்டுகோள் தூங்காதபடியும், திட்டங்கள் காலங் கடவாதபடியும் உடனுக்குடன் செய்யப்படுகின்றனவா என்று மேலவர்கள் தம் கீழவர்களை நாள்தொறும் கவனிக்க வேண்டும் என இடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர். தாமத மின்றிக் காரியம் நடக்குமென்றால் கொடுக்க யாருக்குத்தான் கைந் நீளும்? இன்னும் ஒன்று வள்ளுவப் பெருமான் சொன்ன படி செய்தால், சிலவகைக் கையூட்டுக்கள் ஒழிந்துபோம் என்று நம்பலாம். காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (386) இன்று பெரிய வினைஞர்களைப் பார்க்க வேண்டுமென் றால் பணியாளன் அருள் வேண்டும். எழுத்து மூலம் சில எழுதினாலும் அவை மேலவர் பார்வைக்கு எட்டுமென்று சொல்ல முடியுமா? கட்டில் எடுத்து வைத்தாற்றானே கண்ணுக்குப் புலப்படும்? ஆதலின் அமைச்சர்களும் அமைச்சர னையவர்களும் நாள்தோறும் அரை மணி நேரமோ வாரத்தில் ஒரு பொழுதோ தம் அலுவலகத்திற்கு வெளியே வந்து தடை யின்றி யாரையும் பார்க்க இசைவது, குறை கேட்பது, முறை காண்பது என்று வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அங்ஙனம் மிக்க அன்பும் நேரான எளிமையும் இருக்குமாயின் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்ற வள்ளுவர் பாராட்டு அவர்கட்குக் கிடைக்கும்; மக்கள் வாக்கும் மனமாரக் கிடைக்கும். வள்ளுவர் நல்லரசு வேண்டும் நடைமுறையெல் லாம் அறிந்த அரசியல் மேதை. ஆதலின் இந்திய அரசியல் வாழ்வில் செல்வார் அனைவர்க்கும் திருக்குறளறிவு இன்றியமை யாதது என்பது வெளிப்படை. இன்பம் உலக நலம் என்பது மக்களின நலம். மக்கள் நலம் என்பது இல்லற நலம். இல்லற நலம் என்பது கணவன் மனைவியின் காதல் நலம். காதல் சிறவாவிட்டால் ஞாலத்தில் எத்துறையிலும் எப்பண்பும் சிறவாது. எம் முயற்சியும் வீழலுக்கு இறைத்த நீராகிவிடும். உலகிடை வேறுவகையால் வரும் இன்பத்திலும் காதலர் தம் இன்பம் சிறந்தது. ஐயமில்லை. ஆனால் வேறு வகையால் வரும் துன்பத்திலும் காதலர்களுக்குள் வரும் துன்பம் கொலையனையதன்றோ? காதலர் தம் வேற்றுமை அறத்தைக் கெடுக்கவும் அரசியலைக் கெடுக்கவும் காண்கின்றோம். ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்பது குடும்பத்தின் தலையாய பண்பு. உயிரொன்று என இலக்கியம் பாராட்டும் காதலர்களுக்குள்ளும் நீண்ட வாழ்நாளில் நெஞ்சு பொறுக்கமாட்டாச் சில பிணக்கு கள் நிகழவே செய்யும். மனப்பூசல்கள் வஞ்சகத்தாலன்றி, வாய் வார்த்தையால் வளரவே செய்யும்; சில சமயம் தடிக்கவும் செய்யும். அப்போது காதலின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ளல் என்பது பொறுத்துக் கொள்ளுத லாகும். பொறுத்துக் கொள்ளாதார் புரியாதவரே. பிணக்கைப் புரிந்துகொண்டார் இன்பப் பெருமை எய்துவர். உப்பமைந் தற்றால் புலவி அது சிறிது மிக்கற்றால் நீள விடல் (1302) பிணக்கம் அளவாகுக; மிகுதியாக்க வேண்டாம் என்று இல்லறப் பெருமகனாராகிய வள்ளுவர் காதலர்களுக்கு நுண்ணிய நாகரிக முறையில் புலப்படுத்துவர். அறம் பொருள் இன்பம் என்ற முத்திற வாழ்விற்கும் எத்திறத்தாலும் வழி காட்டுவது திருக்குறள். 9. இலக்கணக் குறள்கள் திருவள்ளுவர் இலக்கிய முறையில் தம் அறநூலைப் பாடியவர். அம்முறைகள் பல்வேறு திறத்தன. பெருங்காப்பியத் திற்கு காணப்படும் இலக்கியல்கள், கதை தழுவிய நூலன்றேனும் திருக்குறளில் ஏற்றபெற்றி வந்துள. அதற்குக் காரணம் வள்ளுவரின் புலமை. அணிவகையில் உவமை, உவமை வகைகள், உருவகம், உருவகவகைகள், பின்வருநிலை, இல்பொருள், ஒட்டு, வேற்றுமையணி, ஒப்புமைக்கூட்டம் என்றிவை காணப்படும். நடைவகையில் இயல்பு, வினா, வினாவிடை, ஏவல் வியங்கோள், வியப்பு, உடன்பாடு, எதிர்மறை, மறுப்பு, நிலைக்காட்டு, முன்விதிப்பு, பின்விதிப்பு, உறழ்ச்சி, முற்றுத்தொடர், எச்சத் தொடர், உம்மைத்தொடர், தொடரடுக்கு, துணிவு என்று இன்னவை வந்துள. பொருள் வகையில் இயற்கை, மரம், விலங்கு, வழக்காறு, மேற்கோள், கதை முதலியன அமைந்துள்ளன. உணர்ச்சி, கற்பனை, உரையாடல், தற்கூற்று, யாம்நடை, எண்சுவை முதலான இலக்கியங்களைத் திருக்குறளிற் காண்கின்றோம். அறிவியல் கலையியல்களுக்கென்று பலதுறைக் கிளவிகள் உள. இக்கிளவிகள் வழக்கில் ஒரு பொருளில் வழங்கும். இயலில் வேறுவேறு பொருளில் வரும். ஆதலின் இயலோர் இன்ன குறியீட்டுக்குப் பொருளிது என்று வரையறை கூறிக்கொள்ளல் ஒரு மரபு. அறிவியலிலும் ஒழுக்கம் அடக்கம் அழுக்காறு சினம் நடுவுநிலைமை அன்பு அருள் மானம் பண்பு நாணம் சால்பு குடிமை கயமை எனப் பல குறிமொழிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலன மக்கள் வழக்கில் நாள்தோறும் பயில்வனவே. பொருள் சொல்ல வேண்டியதில்லை; என்றாலும் ஒருசில அறச்சொற்கள் மிகப்பொதுவான நிலையில் பயன்படுத்தப்படு கின்றன. பொருள் வரம்பில்லாமல் செல்லுகின்றன. அன்ன கிளவி கட்கேனும் தெளிவான பொருள் சுட்ட வேண்டியது நூலாசிரியன் கடமை. இத்தெளிவு அவன் கொள்கைகளை நன்கு அறியத் தேவை. சங்க இலக்கியங்களில் அறக் கருத்துக்கள் பிறவற்றோடு இடைமடுத்துக் கிடக்கின்றன. அறத்தை முழுதும் சொல்லுகின்ற செய்யுட்கள் புறநானூற்றிற்றான் உள. அதன் அளவு ஒரு விழுக்காடே. மடுத்துச் சொல்லினும் முழுதும் சொல்லினும் அவையெல்லாம் தனிப்பாடல் நிலையின. இன்றுள்ள தமிழுலகில் முதல் முழுநூல் தொல்காப்பியம்; அடுத்த முழு முதல்நூல் திருக்குறள். அறத்தையே நூற்பொருளாகக் கொண்டு எழுந்த முதல் நூலாதலின், திருக்குறளுக்கு அறம் என்ற பெயர் பண்டு வழங்கலாயிற்று. அகநானூறு, புறநானூறு என்று பொருளால் நூற்கள் பெயர் பெறுவதையும் அகம், புறம் என்று உரையாசிரியர்கள் சுருங்க மொழிவதையும் ஒப்புக் காண்க. ‘செய்தி கொன்றோர்க்கு உய்தியில்லென அறம் பாடிற்றே’ என்ற புறநாநூற்றில் (34) அறம் என்பது திருக் குறளைக் குறிப்பது. பாடிற்று என்ற வினையால் அது செய்யுள் யாப்புடையது என்பது பெறப்படும். வள்ளுவர் சில அறக் குறியீடுகளுக்கு வரம்பான தெளிவான பொருள் இலக்கணிப் பதை இனிக் காண்போம். அறத்தின் இலக்கணம் 1. அறம் என்பது ஒரு பெருந்துறைச் சொல். இதன் ஆட்சி மிகப் பெரிது. எடுத்ததற்கெல்லாம் இது தருமம், இது தருமமில்லை என மனம்போன போக்கில் மக்கள் வழக்கில் தருமப் பேச்சுப் பேசுகின்றனர். யாசகம் கேட்கும் பிச்சைக்காரன் தருமம் போடுங்கள் என்று சுட்டிக் காட்டுகிறான். அறஞ்சாரா நல்குரவு (1047) அறம் நோக்காது ஈட்டிய ஒண்பொருள் (1009) அறங்கூறான் அல்ல செயினும் (181) அறன் ஈனும் இன்பமும் ஈனும் (754) அறவாழி (8) அறவினை யாதெனின் (321) அறத்தாறு (37) என அறச் சொல்லாட்சி குறளில் மலிந்துள. இதன் வரம்பான பொருள் யாது? மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற (34) அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரக் குறள் இது. எத்தன்மைத்து அறம் என்ற வினாவைத் தாமே எழுப்பிக் கொண்டு, தன் மனத்துக்கண் மாசு இல்லாத அந்த அளவே அறம் என பட்டென விடை கூறினார் வள்ளுவர். இதற்குக் கட்டுரை போலப் பல அதிகாரங்கள் எழுதவில்லை. அறம் என்பதன் பொருள் யாரும் எளிதில் உணரக் கூடியதே என்பதனைக் காட்டுவார்போல், ‘மனத்துக்கண மாசிலன் ஆதல் அனைத்து (அவ்வளவே) அறன்’ என்று ஒரே மூச்சில் முடித்தார். அறமாவது மனம் பற்றியது, மாசில்லாப் பண்பு பற்றியது என இடமும் இடத்து நிகழ் பொருளும் இணைத்துக் காட்டினார். அறத்திலிருந்து தோன்றுகின்ற செயல்கள் பல கூறுகளாக இருக்கலாம்; பல இடங்களில் பரவலாம். ஆனால் அறம் என்ற மூலம் மனம் என்னும் ஓரிடத்து இருப்பது; மாசின்மை என்ற ஒரு தன்மை வாய்ந்தது. குளத்து நீரை ஒருவர் கையால் அள்ளிக் குடிப்பார், ஒருவர் குவளையில் மொண்டு குடிப்பர், ஒருவர் குழாய் வழிக் குடிப்பர், ஒருவர் குளிரகத்து வைத்துக் குளிரக் குடிப்பர் வாய் வைத்துக் குடிப்பர் ஒரு மொடுக்கில் குடித்து விடுவர். குடிமுறை எதுவாக இருந்தாலும், முதற்கண் நீரிடமும் நீரும் தூய்மையாக இருத்தல் வேண்டும். அதுபோல் அறத்தின் புற வெளிப்பாடுகள் எவ்வண்ணம் இருப்பினும் மூலமனமும் மூலநினைவும் தூய்மையாக வேண்டும். அறமாவது மனத்து மாசின்றிச் செய்கின்ற செயல் என்று நீட்டிச் சொல்லவில்லை. மனத்து மாசில்லாமை என்ற அளவோடு அறத்தின் இலக் கணத்தை முடித்துவிட்டார். ஏன்? ஏதாவது ஒரு செயலின்றி எவனும் வாழமுடியாது. அச்செயலும் பல்வகைப்படும். அறச்செயல்கள் இவை என்று வரையறுக்க முடியாது. அவற்றில் பழையன கழிதலும் புதியன புகுதலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு காலத்து அறச்செயல்கள் இன்னொரு காலத்து வேண்டாதன. மன்பதைக்குக் காலந்தோறும் தேவையான நலச் செயல்களைக் கண்டு அறம் மேற்கொள்ள வேண்டும். ஆதலின் ஒரு நிலைப்படாத அறச்செயல்களைப் பற்றிக் கூறாமல், ஒரு வழியான மூக்கைப் பிடிப்பதுபோல அறத்தின் தன்மையை மட்டும் வரையறுத்தார் வள்ளுவர். இவ் வரையறை திருக்குறளின் தெளிவுகட்கு மிக இன்றியமையாதது. மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் (278) மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (280) மனத்தில் மாசு இருப்ப, எது செய்தாலும் அறமில்லை, வஞ்சகமாம் என்பது இவ்விரு குறட்களின் கருத்து ‘ஆகுல நீர பிற’ என்ற குறட்பகுதிக்கு (34) எடுத்துக்காட்டுக்களே மேலை இரு குறட்கள். பிற என்பது மன மாசொடு வஞ்சகமாகச் செய்யப்படுவன. சுருங்கக்கூறின் மனத்தூய்மை அறம். அத்தூய்மை மூலத்திலிருந்து செய்யப்படுவன எல்லாம் அறவினைகள். அறமின்மையாவது மன வஞ்சகம். வஞ்சக மனத்திலிருநது நல்லன என மன்னாயம் மரபாகக் கருதும் செயல்களை மேற்கொண்டாலும் அவையெல்லாம் பகட்டா னவை, படிறானவை. அறம், அறமின்மை என்பன செயல் பற்றியன அல்ல; மனம் பற்றியனவும் அல்ல, மனத்து நிகழும் தன்மைபற்றியன. இவ்விளக்கத்தைக் கொண்டு, தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (274) துறந்தால் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று (586) என்ற இருகுறளையும் நுனிப்பாம். வஞ்சக நெஞ்சம் காரண மாகத் தவக்கோலம் பழிக்கப்படுகின்றது. அங்ஙனம் பழிக்கும் வள்ளுவர், அரசியலில் ஒற்றன் மக்களின் நம்பிக்கைக்கு உரிய தவவேடங் கொண்டு நுழையாத இடமெல்லாம் நுழைந்து நாட்டு நடப்புக்களை ஆராய வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பர். ஏன்? உளவறிவான் மனத்து நிகழ்வது நாட்டன்பு. அவன் ஒருகால் பிடிப்பட்டாலும் தண்டனைக்கு உரியவன் அல்லன்; மக்கள் நலத்துக்கெனப் பூண்ட மாறுவேடி அவன். வாய்மையின் இலக்கணம் 2. பல அறங்கள் கூறும் வள்ளுவர் வாய்மை என்ற ஓர் அறத்தை மட்டும் யாம் நடையில் வலியுறுத்தி மொழிகுவர். யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300) யாம் கண்டவற்றுள் எனவும், மெய்யாக் கண்டவற்றுள் எனவும் அழுத்தமாக அறைவதிலிருந்து வாய்மையறத்தின் முதன்மை பெறப்படும். அறச்சொல்லுக்கு இலக்கணித்தது போல வாய்மைச் சொல்லுக்கும் அது செய்ய வேண்டும் அல்லவா? வாய்மையாவது நல்லதோ, கெட்டதோ, நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி கூறல் என்பது பொதுவான பொருள். இப்பொருளை ஒரு திருத்தத்தோடு வள்ளுவர் உடன்படுகின்றார். நிகழ்ந்ததைக் கூறவேண்டும் என்பது முற்றும் உடன்பாடு. அங்ஙனம் கூறுங்கால் தீது நீங்கக் கூறவேண்டும் என்பது அவர்திருத்தம். வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல் (291) வாய்மை என்பது அறத்துட் சிறந்த தலையறம் நிகழ்ந்தது கூறல் என்ற இலக்கணத்தைக் கொண்டு வாய்மையறத்தைத் தீய கருவியாகப் பயன்படுத்தக் கூடாது. ஒன்றின் பயன் பொதுவாக நன்மை, தீமையின்மை, தீமை என்று மூன்று நிலையுடையது. வாய்மைக்கும் இம் முந்நிலை உண்டு. வாய்மை நன்மையாகவே இருக்கவேண்டும் என்பதில்லை. தீமை என்ற மூன்றாம் நிலை சாரக் கூடாது. ஆதலின் தீமையிலாத சொல்ல வேண்டும் என்று முதற் கண்ணே எச்சரிப்பர் வள்ளுவர். நிகழ்ந்தது தீமை தரும் என்பதற்காக மறைக்கலாமா? அது பொய்ம்மை இல்லையா என்ற வினாவுக்கு ‘பொய்ம்மையும் வாய்மையிடத்த’ (292) என்று அறவழுவமைதி மொழிவர். நிகழ்ந்தது கூற வேண்டும், அது நன்மை பயப்பதாகவும் இருத்தல் வேண்டும்; அது வாய்மை. நிகழ்ந்ததாக இருந்தாலும் பிறர்க்குத் தீமை தருவதாக இருக்குமேல், அப்பகுதியை வெளிப்படுத்தக் கூடாது. அது பொய்ம்மை என்றாலும் பிறர் நலங் கருதிய தூய்மையுடையது ஆதலின் வாய்மை ஆகும். நிகழ்ந்தது என்ற அடிப்படையில் வள்ளுவரின் வாய்மையறம் அமைந்தது. நன்மை பயப்பது வாய்மை, அதற்கு நடந்ததும் கூறலாம்; நடவாததும் கூறலாம் என்று பரிமேலழகர் கொள்ளும் கருத்து வழக்குக்குப் பெரிதும் முரண் ஆதலின் கொள்ளத் தகுவதில்லை. பழமையின் இலக்கணம் 3. நட்புப் பற்றியப் பொருட்பாலில் பல அதிகாரங்கள் உள. மனித குலங்கள் இடையறாது பிணைந்து வாழும் கூட்டினம் ஆதலின் உறவு பற்றிய பல்வகைகளை அலசிக் காட்டுவர் ஆசிரியர். பழைமை, போதைமை, வெண்மை என்ற மூன்று குறியீடுகட்குப் பொருள் என்ன? பழைமை - பல்லாண்டுத் தொடர்பு என்பது வழக்குப் பொருள். ‘தொல்லைக்கண் நின்றார் தொடர்பு’ எனவும், ‘வழிவந்த கேண்மையவர்’ எனவும் இத்தொன்மைத் தொடர்பை ஆசிரியர் உடன்படுவர். உடன் படினும் அதன்மேல் ஒன்றை வலியுறுத்துவர். பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (801) பழைமை என்பது நட்பினுள் ஒருவகை. நண்பர் பழகிய எளிமையால் - வஞ்சகத்தால் அன்று - குற்றம் செய்தால் பொறுத்துக் கொண்டு மறுபடியும் பழகிக் கொண்டிருக்க வேண்டும். ‘பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார்’ எனவும் ‘கேண்மையார் கேண்மை விடாஅர்’ எனவும் வருதலின், விடா நட்பு பழைமையின் இலக்கணம் என்பது பெறலாம். பழைமை என்ற சொல்லிற்குத் தொன்மைப் பொருளும் உண்டு; பழகுந்தன்மை என்ற பொருளும் உண்டு. ‘தொல்லைக்கண் நின்றார்’, ‘பழகிய நட்பு’ என இவ்விரு பொருளிலும் குறளாட்சி காண்க. வாய்மைக்கு நிகழ்ந்ததை உடன்பட்டு நன்மையை வலியுறுத்தியதுபோல, பழைமையில் தொன்மையை உடன்பட்டு என்றும் விடாமையை வலியுறுத்துவர். பேதைமை-வெண்மை பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல் (831) பேதைமை பெண்ணின் இயல்பு எனவும் யாதும் அறியாமை எனவும் வழக்குப் பொருள் உண்டு. பேதையனும் ஒரு வகை அறிவுடையவனே. அறிவின் வேறுபாடுகளில் பேதைமை ஒன்று. அறிவுடையான் தீது நீக்கி நல்லது கொள்வான். பேதையன் நல்லது நீக்கித் தீது கொள்வான். தூசி வடிகட்டியும் சாறு வடிகட்டியும் உண்டல்லவா? வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு (844) வெண்மை என்பது அறிவு நிலைகளில் ஒன்று. புல்லறிவு என்பது மறுபெயர். வெண்மை (வெள்ளை) என்றால் யாதும் இல்லா வெற்றிடம் என வழக்கில் பொருள் கொள்கின்றோம். அறிவில் தெளிவுநிலை, திரிபுநிலை, பகட்டுநிலை என நிலைபல உண்டு. பித்தன் தவிர ஏனையோர் இந்நிலைகளில் இருப்பர். அறிஞன், பேதையன், வெண்மையன் என அப்படி மனித இனப்பகுப்பு இல்லை. ஒருவனே தெளிவு நிலையில் அறிஞன் ஆகவும், திரிபு நிலையில் பேதையாகவும், ஆணவ நிலையில் புல்லனாகவும் மாறிக்கொண்டிருப்பான். எவனிடத்தும் இம்மூன்று நிலையும் இருக்கும்; எனினும் ஒருவன் வாழ்வில் பெருங்கூறு நோக்கி அறிஞன் என்றோ பேதையன் என்றோ அறிவிலி என்றோ சொல்லுகின்றோம். வெண்மை என்பது ஓர் அறிவுநிலை. அறிவுத் தெளிவு பெற வேண்டிய இடத்தில் தெளிவுக்குத் தடையான முனைப்பு-செருக்கு-இருக்கின்றது. ஓரிரு வகை அறிந்திருந்தும், சில வகையில் ஓரிரு கூறு அறிந்திருந்தும் எல்லாம் அறிந்தோனாகத் தன்னைத் தானே மதித்துக்கொள்ளும் பகட்டறிவு வெண்மை எனப்படும். அவன் தற்பெருமையை நடையாலும் காட்ட வேண்டி, ஒண்மையு டையன் யான் என்று ஒருமையிற் பாடாது, ‘ஒண்மையுடையம் யாம்’ என்று உயர் சொன்னடையில் யாத்தார் ஆசிரியர். அறம், வாய்மை, பழைமை, பேதைமை, வெண்மை என்ற ஐந்து அறக்கலைச் சொற்களுக்கு ஆசிரியர் இலக்கணித்த பொருளை வழக்குப் பொருளோடு ஒப்பிட்டுப் பார்த்தோம். அந்தணர், முறை, ஈகை, கல்வி, அறிவு, இன்சொல், சொல் வன்மை, திட்பம், தவம், புலவி, காமம், நோக்கம் என்ற கிளவிகட்கும் வள்ளுவர் காட்டும் பொருளொழுங்கு அறியத்தகும். அறச்சொற்கள் எல்லாம் வழக்கில் பயில்வனவே. அவற்றின் பொருளும் மிக வேறுபாடுடையனவல்ல. ஒருசில அறச்சொற் களுக்குப் பொருள் வரம்பு செய்தாற்போதும் எனக் கண்ட வள்ளுவர் மேற்காட்டியாங்கு அறம் முதலான சொற்களுக்குப் பொருள் இதுவெனத் தெளிவுறுத்தினார். இனைய குறள்களை ‘இலக்கணக் குறள்கள்’ என்று குறிப்பிடல் நன்மரபு. 10. திருக்குறள் உத்திகள் திருக்குறட்கு இடைக்காலத்தில் பல முழுவுரைகள் தோன்றியன. இன்றுவரை முழுவுரைகளும் தனிக்குறளுரை களும் வந்த வண்ணம் இருக்கின்றன. கட்டுரைகளிலும் மேடைப் பொழிவுகளிலும் புத்துரைகள் ஆங்காங்கே மின்மினிபோல் ஒளி விடுகின்றன. யார் எங்கு குறளைப் பேசினாலும் எழுதி னாலும் ஒரு புதுப்பொருள் - ஒரு புது விளக்கம் செய்ய முற்படுவதைப் பார்க்கின்றோம். நாம் இதுகாறும் திருக்குறளைச் செயலுக்குரி யதாகப் பரப்பவில்லை. உரை செய்வதற்கு உரிய ஒரு பெரு நூல்; நினைத்தவர் நினைக்கும் கருத்தையெல்லாம் காட்ட வல்ல ஒரு சுரங்க நூல் என்ற மனமையைத்தான் கல்வி நிலையங்களிலும், பொதுமேடைகளிலும் பரப்பியும் பாராட்டி யும் வந்திருக்கின்றோம். எல்லாப் பொருளும் இதன் பாலுள பார்த்துக்கொள்ளுங்கள் என்று காட்டி வந்திருக்கின்றோம். உரைமோகம் குறளுக்கு இவ்வளவு உரைமோகம் ஏன்? பலவுரைகள் எழுதுவதற்குக் குறள் இடங்கொடுக்கின்றதா? இடங்கொடாத போதும் பலர் வேண்டுமென்றே குறளை இழுத்து உரை வரைகின்றனரா? இத்துணை உரைமலிவுக்கு, உரை வளத்துக்கு, உரை வேற்றுமைக்குக் குறள் காரணமா? உரைசெய்வார்தம் அறிவுநிலை காரணமா? வள்ளுவரின் பெருமையும் அவர்பால் நாம் கொண்டுள்ள வழி வழி நன்மதிப்பும் திருக்குறள் காரணம் என்று சொல்ல இடந்தரா. உரையாளர் தாம் காரணர் என்று ஒரு மூச்சில் சொல்லி மகிழலாம். எனினும், அது முழு வுண்மை யாகாது. வள்ளுவரை முழுதும் விடுவித்து உரை செய்வார் மேல் முழுப்பழியும் சுமத்தல் அறிவு நெறியாகாது. ஒரு குறளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிறவுரையெல்லாம் புலமை யின்றி, இலக்கணவறிவின்றி, விளங்குதலின்றி எழுதப்பட்டவை யென்றோ, வேண்டுமென்றே திரித்தும் நுழைத்தும் எழுதப் பட்டவையென்றோ தலைமழிப்பது போலத் தள்ளிவிட முடியாது. வள்ளுவரும் பழிப்படாமல் உரை செய்தார் பலரும் பழியுறாமல் இவ்வளவு உரை பல்கக் காரணம் என்ன என்று சிந்திப்போமாக. வேற்றுமைக் காரணங்கள் திருக்குறள் உரைவேற்றுமை ஆசிரியர் அறிஞர் சாரங்கபாணியின் கணக்கின்படி அறத்துப்பாலில் 217 குறட்கள் உரைவேறுபாடு உடையன. அண்மையில் வந்த உரைகளையும் உட்கொண்டால் இவ்வுரை வேறுபாடுகள் இன்னும் கூடுத லாகும். இலக்கணத்துக்குப் புறம்பாகவும், மரபுக்கு மாறாகவும் சொற்பொருள் அறியாமலும், வேண்டுமென்று திரித்தும், சின்னஞ்சிறு இலக்கிய நயம் கருதியும், சில பல உரை வேற்றுமைகள் தோன்றியுள்ளன என்பதை நானும் உடன்படு கின்றேன். ஆனால் இலக்கணத்தோடும் மரபோடும் பிற முறைகளோடும் எழுதப்பட்ட உரைவேற்றுமைகள் பலவுளவே. இவை எவ்வடிப்படையில் எழுந்தன என்று காணவேண்டும். நீயும் தவறிலை; நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலர்; நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப் பறையறைந் தல்லது செல்லற்க வென்னா இறையே தவறுடை யான் (கலி. 56) என்று கபிலர் ஒரு காதற் சிக்கலைத் தீர்த்து வைத்ததுபோல, வள்ளுவரும் தவறிலர்; உரையாளர் பலரும் தவறிலர்; இறையனைய தமிழே தவறுடையது என்று உரைவேற்றுமைச் சிக்கலைத் தீர்த்து வைக்க எண்ணுகின்றேன். பாடபேதம் உடைமையுள் இன்மை விருந்தொரால் (89) உடைமையுள் உண்மை விருந்தொரால் (89) இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக (539) இகழ்ச்சியிற் கெட்டாரை எண்ணுக (539) கணங்குழை மாதர் கொல் (1081) கணங்குழை மாதர் கொல் (1081) இவ்வாறு பாடவேற்றுமைகளால் வந்த உரைவேற்றுமைகள் பல. பாட வேற்றுமை என்பது காலத்தாய் பெற்றுவிட்ட கைக்கிளைக் குழவி. இவ்வகை வேற்றுமைகள் மனப் பாடத்தால் எழுந்தவை. சில எதுகை மோனையால் எழுந்தவை. ஆதலின் தவிர்க்க முடியாதவை. புணர்ச்சி விண்ணின்று பொய்ப்பின் (13) விண்நின்று பொய்ப்பின் விண் இன்று பொய்ப்பின் செய்தவ மீண்டு முயலப்படும் (265) செய்தவம் ஈண்டு முயலப்படும் செய்தவம் மீண்டும் முயலப்படும் இவை புணர்ச்சியொற்றுமையால் வந்த பிரிவு வேற்றுமைகள். இம்மொழியமைப்பு சில உரைவேற்றுமைகளுக்கு இடம் நல்கியது. சந்தியினால் வரும் உரைகளை எவ்வாறு தவிர்க்க முடியும்? இலக்கணம் ‘அறனாக்கம்’ (163) என்பதனை அறத்தினால் ஆகிய ஆக்கம் என வேற்றுமைத் தொகையாகவும், அறனும் ஆக்கமும் என உம்மைத் தொகையாகவும், ‘வெகுளியிற்றீதே’ (531) என்பதனை ஒப்புப் பொருளாகவும் உறழ் பொருளாகவும் ‘மடியை மடியா ஒழுகல்’ (692) என்ற விடத்துப் பல்வகை எச்சங்களாகவும், ‘ஓம்பா மேக’ (861) எனக் கொண்டு கூட்டாக வும் கொள்வதனால் வேற்றுரைகள் பிறக்கின்றன. செம்மையும் தெளிவும் தரவேண்டிய இலக்கணமே, உரைப்பன்மைக்கு ஏது ஆவதைப் பார்த்து மருள்கின்றோம். தொகை நூல் எழுதுவோன் தன் நூலுள் ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லப் புறப்படில் அது ஒரு கட்டுக்கோப்பான நூலும் ஆகாது. சில வழக்காறு களை அடிப்படையாகக் கொண்டுதான் கருத்துக்களை மேன்மேலும் சொல்ல வேண்டும். இயல்புடைய மூவர் (41) அறுதொழிலோர் (560) எழுமை எழுபிறப்பு (107) ஐந்தவித்தான் (6) எண்குணத்தான் (9) ஈண்டு வரும் எண்ணுத் தொகைகள் எவற்றைக் குறிக்கின்றன என்று திருக்குறள் கூறவில்லை. அவர் காலத்து அவை வழக்காறாகத் தெரிந்தவை. இலக்கிய மரபு களைக் கொண்டு இவற்றின் பொருளை அறியலாம் எனினும், உரையாசிரியர்கள் தொகை விளக்கத்தில் வேறுபடுகின்றனர். இயல்புடைய மூவர் என்பதற்குப் பிரமசரியன், வானப்பிரத்தன், துறவி என மணக்குடவர், பரிமேலழகர், பரிதி, காளிங்கர் முதலான பழைய உரையாசிரியர்கள் எழுதியுள்ளனர். தாய் தந்தை தாரம் என வ.உ.சியும், ஊர் மன்றத் தலைவர் அல்லது மூவேந்தர் எனத் திரு.வி.க.வும், உறவினர், நண்பர், ஏழைகள் என நாமக்கல் கவிஞரும், அடுத்த குறளில் எண்ணப்படும் துறந்தார், துவ்வாதார், இறந்தார் எனப் புலவர் குழந்தையும், பார்ப்பார், அரசர், வணிகரெனப் பாவாணரும் விரித்துக் காட்டுவர். இத்தொகைச் சொற்கள் போலவே கற்க கசடறக் கற்பவை (319) போற்றின் அரியவை (693) இரங்குவ செய்யற்க (655) சொல்லின் தொகை (711) என்ற பன்மைப் பெயர்கட்குப் பொருள் கோடலிலும் உரைவேற்றுமைகள் எழுந்துள்ளன. தனிச்சொல் பல்வேறு உரைவேற்றுமைக்கு ஒரு பெருங்காரணம் தனிச்சொல்லின் பொருள் பற்றியது. ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருத்தலின், சில சொற்களுக்கு வரம்பான பொருள் இன்மையின், உரைகள் எண்ணிறந்த குறள்களுக்கு வேறுபடுவ வாயின. எச்சம், நயன், அன்பு, அறிவு, அளவு, சிறப்பு, ஒற்கம், அமைவு, குடி, மடி, எண், பதம், கலன், படி, குறை, அடுங்காலை, ஆறு, அலகு, சான்றோன், இறந்தார், ஆழி, அற்றார், மணி, கை, தக்கார், தார், ஊராண்மை, பொறி, இறை, வெளிறு, சிறுமை என வரும் நூற்றுக்கணக்கான தனிச் சொற்கள் ஒருபொருள் எல்லைக்கு இடங்கொடாது உரைப்பன்மையை உண்டாக்கின. கவர்நடைத் தந்தை பாடபேதங்கள், தொடர்ப் புணர்ச்சி நிலைகள், இலக் கணம், தொகைச்சொல், தனிக்கிளவிகள் என்ற காரணங்கள் மட்டுமல்ல உரை வேற்றுமைக்கு. இவற்றினும் சீரான, மேலான, சிக்கலான, மயக்கமான காரணங்கள் இன்னும் உள. அவை விரிந்த ஆய்வுக்கு உரியவை எனினும் இரண்டொன்றை இங்கே சுட்டுவன். திருவள்ளுவர் காலத்துத் தமிழ்மொழி நடையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஓரளவு அணிவகைகளும், தொடை நயங்களும் புகத்தொடங்கின. புலவனது கல்விப் புலமையோடு மொழிப் பயிற்சியைக் காட்டுவதும் புலமையின் ஒரு கூறாயிற்று. மொழிக்கோவையில் ஆரவார நீர்மை ஓரளவு வேண்டிய தாயிற்று. துகில் நிறம் பெற்றதுபோல இயல்பான நடையோடு வண்ணநடையும் கலந்தது. நிறத்தால் மயக்கம் ஏற்படுவதுபோல, வண்ண நடையில் பொருள் மயக்கம் வரலாயிற்று. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை (12) சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய் (359) பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் (671) காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு (849) அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு (1182) துப்பு, சார், பொருள், காணுதல் என்ற சொற்களைச் சொற்பின்னிலை, பொருட் பின்னிலை, சொற்பொருட் பின்னிலையணிகளில் வைத்துப் பாடியிருப்பதையும், இறுதிக் குறளில் அவர் தந்தார் இவர் தந்து எனத் தொடை நயத்திற் காகவே பாடியிருப்பதையும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு குறட்கள் ஒலிநயத்தில் ஒற்றுமை காட்டி உரைப் பொருளில் வேற்றுமைக்கு வித்திட்டுவிட்டன. ஒலிநயம் முடிவில் உரை நயமாய் வளர்ந்தது. வள்ளுவர் கூற்றிற்கு ஒப்பவே அவர் குறள் நவில்தொறும் நூல் நயமாய் விரிந்தது. நிறக் கவர்ச்சி உள்ளத்தை மறைப்பதுபோலப் பாட்டின் தொடைக்கவர்ச்சி யாப்புப்புலவன் உள்ளத்தைப் புதைத்து விடுகின்றது. செவ்விய சங்க காலத்து இல்லாத மயக்க மொழிநடை திருவள்ளுவரின் காலத்துப் பிறந்தது. முளைத்தது என்ற யாப்பியல் வரலாற்றைத் திருக்குறளால் அறிகின்றோம். கி.பி. இரண்டாம் நூற்றாண் டுக்குப்பின் வந்த கவர்பொருள் தரும் தமிழ்க் கவிதை நடைக்கு வழிகாட்டியவர் வள்ளுவர். அதனால் அவரை யாப்புப் புரட்சிப் புலவர், கவர்நடைத் தந்தை, வண்ணமுன்னோடி என்று இக்கட்டுரையில் புகழ்மாலை தொடுக்க விரும்புகின்றேன். குறளுத்திகள் (அ) சுருங்கிய ஈரடியில் செறிவான முறையில் நுணுகிய பொருள்களை யாப்பு வேலியுள் அடைக்க முயன்றவர் ஆதலின் பல்வேறு எழுத்து உத்திகளை வகுத்துக் கொண்டு குறள் நூல் படைத்தார் வள்ளுவர். இவ்வுத்திகள் யாவை என ஆராய்வது தனிப்பொருளாயினும், ஒரு சிலவற்றை இக்கட்டுரையில் வெளிப்படுத்துவேன். நடை நிறைந்த ஒரு கருத்து நடைகுறைந்த இன்னொரு கருத்தினைத் தெளிவாக்கும் என்பது ஓருத்தி. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் (10) உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் (395) இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் என்றது நிறைநடை; நீந்துவர் என்பது குறைநடை. எனினும் அந்நிறை நடையிலிருந்து இறைவனடி சேர்ந்தார் என்பதனை நாம் கண்டுகொள்ள முடியும். கடையரே கல்லாதவர் என்பது நிறைநடை; கற்றார் என்பது குறைநடை. எனினும் நிறைநடையின் ஆற்றலால் கற்றார் தலையாயர் என்று நாம் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஆசிரியர் அணியில் ஒரு மருங்குருவகம் போல நடையிலும் ஒரு மருங்குத் தொடர் படைத்துள்ளார் என்ற நடையுத்தியை உணர வேண்டும். (ஆ) 1330 குறள்களையும் தொகுத்து வகுத்து ஆராயுங் காலை அவை சில எழுத்துத்திகளில் அல்லது சில வாய்பாடு களில் வடிவொருமை பெற்று அடங்கிவிடக் காணலாம். அப்போது எது பொருள் என்று மயக்கந் தரும் குறள்கட்கு அவ்வுத்திகள் தேற்றா விதைகளாக, தெளி நீர்களாக உதவுகின்றன. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு (20) வான் சிறப்பு அதிகாரத்தில் உள்ள இக்குறளில் நீர், ஒழுக்கு இரு கிளவிகள் உரைவேற்றுமைக்குக் காரணமாவன. இச்சொற்கள் அருஞ்சொற்கள் அல்லவே. எனினும் ஏன் இவ்வளவு உரை மயக்கம்? 1. தண்ணீர் இல்லாமல் உலகியல் நடவாது; அத் தண்ணீரோ வானத்திருந்தல்லது பிற வகையாற் கிடைக்காது. 2. தண்ணீர் இன்றி இவ்வுலகம் நடவாது; மழையின்றி யார்க்கும் ஒழுக்கம் அமையாது 3. பண்பின்றி உலகம் அமைதி பெறாது; அப்பண்புக்கு உரிய ஒழுக்கம் மழையின்றி உண்டாகாது சுருங்கச் சொல்லின், நீர்பெற மழை வேண்டும் என்பது ஓர் உரை. ஒழுக்கமாக இருக்க மழை வேண்டும் என்பது மற்றோர் உரை. இவ்வுரைகளும் கருத்தளவில் பிழையில்லை. ஆயின் இக்குறட்கு எது பொருள் என்று துணிய வேண்டும். அளவை முறையில் கருத்தினை நிறுவுவது ஒரு குறளுத்தி. பசி நீங்கவும். உழவர் உழவும், புல்லின் பசுந்தலை காணவும், கடல் புதுவளம் பெறவும், விழா நடைபெறவும், தானமொடு தவஞ் செய்யவும் இவ்வுலகிற்கு மழை வேண்டுமெனப் பல குறள்களால் வலியுறுத்திய வள்ளுவர் தருக்க முறையில் கேட்கின்றார். இவ்வளவு உலக நலங்களும் நீரால் வரும், அதனால் நீர் சிறப்புடையது என்றால் அந்த நீரை உலகிற்குக் கொண்டு வருகின்ற வானத்திலிருந்து கீழே விழுகின்ற மழை வரவு சிறப்புடையதில்லையா என்பது அவர் தருக்கம். இந்த அளவையுத்தியை, தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவா ரில் (256) என்ற அருமைத் திருக்குறளிலும் காண்கின்றோம். ஆதலால் உலகிற்கு நீர் வேண்டும், நீருக்கு வானொழுக்கு வேண்டும் என்ற பொருளே - வான் சிறப்பினைத் துணிந்து முடிக்கும் இக்கருத்தே இக்குறளின் நேர் பொருளாகும். உரை மயக்கம் இவ்வுத்தியால் தெளிவு பெறுகின்றது. (இ) அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை (37) என்பது கருத்து மயக்கத்துக்கும், கருத்துப் பூசலுக்கும் உரிய குறளாகும். பல்லக்கில் ஏறியிருப்பவன் அறஞ்செய்தவன் எனவும், அதனைச் சுமப்பவன் அறஞ் செய்யாத பாவி எனவும் பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, காளிங்கர், பாவாணர் முதலியோர் பொருள் காண்பர். பல்லக்கில் ஏறுதல், அதனைச் சுமத்தல் என்ற நிகழ்ச்சியை வைத்து அறத்தின் பயனை மதிப்பிட வேண்டா எனத் திரு.வி.க.வும், குழந்தையும், பாரதிதாசனும் பொருள் செய்வர். இச்சிக்கலை நான் இக்கட்டுரையில் புதிதாகக் கூறிய குறளுத்தி மூலம் தீர்க்கலாம். உலகத்தார் நடைமுறையில் கொண்டிருக்கும் கருத்தினை மறுப்பது ஒரு குறளுத்தி. அப்போது வேண்டா என்ற நடையை ஆளுவர் வள்ளுவர். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (280) அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி யிடத்தாற் செயின் (497) புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் (785) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி யுணின் (942) இக்குறள் எல்லாம் ஓருத்தியின் வடிவமைப்புடையவை. உலகம் மழித்தலும் நீட்டலும் ஆய புறவேடத்தைத் துறவாக மயங்குவதைப் பார்த்தும், அகத்தில் அஞ்சாமையைத் துணை யாகக் கொள்ளாது புறத்தில் ஆளைத் துணையாகக் கொள் வதைப் பார்த்தும், ஒத்த உணர்ச்சியை நட்பாகக் கொள்ளாது பலமுறை பழகுவதை நட்பென்று மயங்குவதைப் பார்த்தும், நடைமுறைப் பழக்க வழக்கமே உடல்நலத்திற்கு நல்வழியாகும் என்பது அறியாது புற மருந்தை நம்பியிருப்பதைப் பார்த்தும் இவையெல்லாம் வேண்டாம் என்று மாசு படிந்த கருத்தினை மறுப்பர் திருவள்ளுவர். இந்நடையில் அமைந்ததுவே அறத் தாறு இதுவென வேண்டா என்ற குறளும். ஆதலின் இப்புறக் காட்சியை அறமென மயங்க வேண்டா என்று உலகத்தை இடித்துரைப்பதுதான் வள்ளுவரின் உத்தியாகும். மனத்துக் கண் மாசில்லாமையே அறம் (34) எனவும் மேலிருந்தும் மேலல்லார் கீழிருந்தும் கீழல்லார் (973) எனவும் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் மொழிந்த வள்ளுவப் பெருமகன் பல்லக்குக் காட்சியைப் பொருளாக மதித்துச் சொல்வாரா என்று நினைமின். அது அக்காலச் செல்வர் ஊர்ந்த ஒரு நாகரிகப் போக்குவரத்து அவ்வளவே. (ஈ) ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி (25) இதுவும் உரைவேற்றுமைக்கு இடம் தரும் ஒரு குறளாகும். இக்குறளமைப்பில் ஓர் உத்தியுண்டு. முதற்கண் ஒரு தொடரில் அறம் கூறல், அடுத்து வரு தொடரில் அதற்குச் சான்று கூறல். அறமும் சான்றும் முறைப்பட அமைப்பது இவ்வுத்தியாகும். இந் நடையில் ‘அதற்கு’ என்ற இணைப்புச் சொல் மறைந்திருக்கும். அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி (245) இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலுங் கரி (1060) இவ்வுத்தியின் அமைப்பை இவ்விரு குறள்களிலும் காணலாம். காணும்போது சான்று எம்முறையில் அமைந்திருக்கின்றது என்ற தன்மையையும் தெரிந்துகொள்ள வேண்டும். அருளாளர்கட்குத் துன்பமில்லை என்பதற்கு அழியாமல் காற்றோடும் வளத்தோடும் உலகம் நிலையாக இருப்பதே சான்று. பிச்சைக்காரனுக்குச் சினம் வரக்கூடாது என்பதற்கு அவன் பசித்துன்பமே சான்று. வளிவழங்கு மல்லல் மா ஞாலம் எனவும், நிரப்பிடும்பை எனவும் அச்சான்றுகள் வெளிப்படையாகவே சொல்லப்பட்டுள்ளன. ஊகத்திற்கு இடமில்லை. அதுபோல் ஐந்தவித்தான் ஆற்றல் பெரிதென்பதற்கு அகல் விசும்புளார் கோமான் இந்திரன் சான்றாவான் என்றால் அந்த வெளிப்பட்ட சொற்களில் வைத்துப் பொருள் காணவேண்டும். அதுவே உத்தி. வெளிப் பட்ட சொல் இந்திரனைத் தேவருலகத் தலைவன் என்று போற்றுகின்றது. எனவே, ஐந்தவித்தான் தேவருலகத் தலைமை போன்று உயர்நிலை பெறலாம் என்பது கருத்து. இவ்வாறு மதிப்பிடை பெற்ற இந்திரனுக்கு உயர்ந்த பொருள் கொள்ளாது முனிவனால் இந்திரன் சாபம் எய்தி அழிந்தான் என்று பரிமேலழகர் முதலானோர் குறிப்பிற் பொருள் கொள்வர். இவர் தம் மதிப்புக் குறைவான கருத்திற்குச் சாபம் எய்திய இந்திரனே சாலுங்கரி என்று வெளிப்படை நடையாக இருந்தாற்றான் பொருந்தும். அங்ஙனம் இன்மையின் இக்குறிப்பு முறை கரி என்று பயனிலை வரும் குறளுத்திக்குப் பொருந்தாது. இக்கட்டுரைக்கண் உரைவேற்றுமைகள் எவ்வாறு பல்கி மல்கின என்று சில வகை அடிப்படைக் காரணங்களைத் தோற்றுவாய் செய்தேன். செய்தபின் பார்வைக்குப் பல குறள்கள் உரை மயக்கத்துக்கு இடந் தந்து நின்றாலும் அம்மயக்கம் களைந்து ஒரு பொருள் தெளிவு பெறுதற்கு வழி உண்டெனவும், திருவள்ளுவர் தமக்கெனச் சில உத்திகளைப் படைத்துக்கொண்டு நூல் யாத்தார் எனவும், 1330 குறட்களை யும் சில உத்திக்குள் அடக்க முடியும் எனவும், அவ்வுத்திகளை உரை காணப் பயன்படுத்தினால் மயக்கமற்ற பொருள் மணல் நீர்போல் தோன்றும் எனவும், கட்டுரையின் பிற்பகுதியில் நான்கு எடுத்துக்காட்டுக்களால் புலப்படுத்தினேன். ஏனைக் குறட்களுக்கும் உரிய உத்திநெறி கொண்டு தெளிபொருள் காணும் புதிய வேட்கையை இக்கட்டுரை தூண்டுமென நம்புகின்றேன். 11. வள்ளுவர்கள் திருக்குறட்கு உரைகள் பல முன்னும் தோன்றியுள்ளன; இன்றும் தோன்றி வருகின்றன; நாளையும் தோன்றும் என்பதில் ஐயமில்லை. முழுவுரைகளாகச் சிலர் எழுதிவர, பலர் தனிக் குறட்கு ஆங்காங்கே புத்துரை சொல்லியும் வரைந்தும் வருகின்றனர். வேறு எத்தமிழ் நூலுக்கும் இல்லாத உரைவளப் பங்கள் திருக்குறளுக்குப் பெருக்கெடுப்பதைக் காணும் நாம் தமிழ் நூலுள் தலையாயது திருக்குறளே என்று வீறு எய்து கின்றோம்; பெருமை முரசு அறைகின்றோம். புறப் பெருமை இளங்கோ, சாத்தர், திருத்தக்கர், செக்கிழார், கம்பர், வில்லியார், நாயன்மார், ஆழ்வார் ஆதியாய பெரும் புலவர்கள் கருத்தாலும் சொல்லாலும் திருக்குறளை வாரி வைத்துக் கொண்டனர்; இஃதோர் பெருமை. எண்ணிறந்த உரைநடையும் சொற்பொழிவும் கட்டுரையும் நாடகமும் ஓவியமும் திருக்குறள் பற்றி நாளும் எழுகின்றன; இதுவும் ஒரு பெருமை. ஆரவார மின்றித் திங்கள்தோறும் ஆயிர மக்கட்கு மேலாய் அறிவூட்டும் புதுக்கோட்டைத் திருக்குறட் கழகம் போலும் தமிழவைகள் தோன்றிக் குறளைப் பறை சாற்றுகின்றன; இதுவும் ஒரு பெருiமையே. ஆங்கிலம், செருமனி, பிரஞ்சு, இலத்தீன், இந்தி, தெலுங்கு முதலாய மொழி பலவற்றில் திருக்குறள் பெயர்க்கப் பட்டுள்ளது என்பதும் பெருமைக்கு உரியது. விலையில் பதிப்பு, மலிவுப் பதிப்பு, பரிசுப்பதிப்பு, கைப்பதிப்பு, குழந்தைப் பதிப்பு, சொல்லடைவு, பொருளடைவு என்ற வகைப் பதிப்புக்கள் திருக்குறட்கு அணி செய்தலும் பெருமைக்குரியதே. தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் இறுவாய் குறட்பாடம் இல்லாத வகுப்பில்லை என்பது பெருமைச் செய்தியேயாகும். இவ்வெல் லாம் நூலுள் உள்ள அகப்பெருமைகளா? அல்லவேயல்ல. குறளைப் பரப்ப முயல்வார் மேற்கொள்ளும் வழிப் பெருமைகள். இவற்றால் வள்ளுவர் உள்ள நிலையினின்று உயர்ந்துவிடார். ஆனால் ஊரும் நாடும் வள்ளுவங்களைக் கற்று உயரும். உரைப் பன்மை உரை பல தோன்றல் மேலைப் பெருமைகள் போல்வதன்று. ஒரு நூலுக்கு ஒரே உரைதான் எழுதப்பட்டுள்ளது; பின்னர் வேறு உரைகளே எழவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நூலொன்று உரை யொன்று என்பது பெருமையா? சிறுமையா? அந்நூலின் கருத்தை அவ்வுரையொன்றே தெளிவாக்கி விட்டது என்பது தானே குறிப்பு. உரைக்குப் பெருமை இதுவன்றோ! பலவுரை வேண்டாத தெளிவு நடையுடையது அந்நூல்; தெள்ளுநடையில் எழுதினான் அந்நூலாசிரியன் என்பதன்றோ நூலுக்கும் நூலானுக்கும் பெருமை! திருக்குறட்கு உரைபல உண்டென்றால், ஒவ்வோர் உரையும் குறையுடையது என்பதுவே முடிபாகும். உரையாசிரியர்கள் சிறு படிப்பாளிகளா? புலமைச் செல்வர்கள் இல்லையா? அவரெல்லாம் உரையிற் குற்றப் பட்டார் என்று சொல்ல நா எழுமா? பரவுரைக்கு இடந்தருதலின் திருக்குறள் தெளிவற்று எழுதப்பட்டது என்றும், வள்ளுவர் மயக்க நடையில் எழுதினார் என்றும் நினைக்கவும் கூசுமன்றோ? பல்பொருள் காட்டுதலின், குறள் ஆழமுடையது என்றால் என்னை? நன்றுநன்று. கருத்துத் தெளிவில் தோன்றுவதன்றோ ஆழம் எனப்படும் கருத்துள்ளே குழப்பமும் கலக்கமும் மயக்கமும் ஆழமாமோ? வள்ளுவர் தாம் எண்ணிய ஓர் எண்ணத்தைக் காட்ட வேண்டும் என்றே குறள் யாத்திருப்பார். எண்ணிய ஒரு பொருளின் மேலும் பல்பொருள் புலப்படட்டும் என்றோ எண்ணிய கருத்து மறைய, எண்ணாத கருத்துத் தோன்றினும் தோன்று என்றோ ஆசைப்பட்டிருக்க மாட்டார். நூல் நயம் என்பது நூற்பொருளிலே ஐயப்பட்டு விளங்காது இன்புறுவ தன்று; பொருள் விளக்கத்திற்குப்பின் அதன் நுண்ணமைப்பை அறிந்து இன்புறுவதாகும். வள்ளுவர் நெஞ்சார ஒரு பொருள் குறித்தே பாடியிருப்பினும், மொழி நடை காரணமாகச் சில குறட்கள் பிறபொருளும் தருதல் உண்டு. சொற்களுள் பல பொருள் சுட்டுவனவும் உண்டன்றே; இவ்வகைச் சொல்லாட்சி காரணமாகச் சில குறட்குக் கருத்துவேறுகள் பிறத்தல் உண்டு; புணர்ச்சியைப் பிரிப்பதில் வரும் வேறுபாட்டாலும் கருத்து மாறுகள் தோன்றும். இவற்றிற்கு நூலான் பொறுப்பல்லன். மொழியின் இயற்கையாகும். நடையாலும் சொல்லாலும் பிரிப்பாலும் உரை வேற்றுமைப்படுவன சில குறட்களே என்றும், இவ்வேற்றுமைகளுங்கூட நூலவன் கருத்துக்கு அத்துணை முரணிப்போகா என்றும் நம்பலாம். காரணங்கள் இதுகாறும் வந்த உரைகளை ஆராய்ந்தால், அவை பல்கியதற்குப் பின்வரும் காரணங்கள் கூறலாம். பாட வேற்றுமையால் சில உரைவேற்றுமைகள் காணப்படும். இவை ஆராய்ந்து ஏற்கத்தக்கன. பாடங் கற்பித்துக் கொண்டு ஓரிருவர் புதுப் பொருள் காட்டியுள்ளனர்; இவர் பொறுக்கத்தகார்; மக்கள் கண்டிக்கவும் அரசு தண்டிக்கவும் தகுவர். இலக்கண வறுமையாலும் இலக்கணச் செருக்காலும் எழுந்த உரை வேற்றுமைகளும் உள; இவை பழிக்கத் தகும். இக்கருத்து சப்பென்றிருக்கிறது உப்பென்றில்லை எனத் தப்பாகச் செய்த உரைகளையும் காண்கின்றோம்; இவை விடுக்கத் தகுவன. சமய வெறிப்பட்டும் சாதி வெறிப்பட்டும் கட்சி வெறிப்பட்டும் இனவெறிப்பட்டும் மொழி வெறிப்பட்டும் கொள்கை வெறிப்பட்டும் வலிந்து படுத்திய உரைக் கோணல்களும் பலவுள; இவை செப்பனிடத்தகும். முன்னோன் எழுதிய உரைப் பொருளைப் பெரிதும் தழுவக் கூடாது; தாம் ஒரு தனியுரை எழுதத் துணிந்ததற்குச் சான்றாக, எங்ஙனமேனும் பல குறட்குப் புத்துரை சொல்ல வேண்டும் என்னும் முனைப்பே திருக்குறள் உரை பலவற்றின் தோற்றத்துக் காரணம் என்று சுருங்கச் சொல்லலாம். ஒவ்வோர் உரையாசிரியரிடத்தும் இன்ன குறை நிலைகள் சிலவோ பலவோ இருத்தலின், இதுவரை எழுதப்பட்ட யாருரையும் செவ்வுரை யெனக் கொள்ளுதற்கில்லை. ஒவ்வொருவர் தம் உரையும் ஒருவகை நிறைபாடும் ஒருவகைக் குறைபாடும் கொண்டதாகவே தோன்றுகின்றது. ஆதலின் இன்று பலருரைகளைக் கற்றாக வேண்டிய நிலையிலேதான் நாம் உள்ளோம். இவ்வுரைகள் ஒன்றன் பற்றுக் கோடின்றித் திருக்குறள் மூலத்தில் நேரடியாகப் பொருள் காணும் வன்மை நமக்கில்லை. உரை வளமும் உரைக் கொத்தும் உரை வேற்றுமையும் எல்லாம் இன்று நமக்குத் துணை செய்யும் பதிப்புக்களாகவே உள. சங்கப் பார்வை திருக்குறள் உரை நலங் காண்பார்க்கு இன்றிமையாத சில கடைப்பிடிகளை இனிக் கூறுவோம். வள்ளுவர் கற்ற நூல்களின் கல்வி உரையாசிரியனுக்கும் வேண்டும். அவர் கற்ற தமிழ் நூல்கள் எத்துணையோ? அவையெல்லாமே நமக்குக் கிடைக்க வில்லை என்று சொல்ல முடியாது. தொல்காப்பியமும் சங்க நூல்களும் அவர் கற்றவற்றுள் நமக்கும் கிடைக்கின்றன. வள்ளுவர் குறிப்பை அவர் சொற் கொண்டும் நடைகொண்டும் தானே அறிய வேண்டும்? அவர் தம் சொல்லும் நடையும் சங்கத் தன்மையன. ஞாலம் ஏற்கும் அறங் கண்டவரேனும் வள்ளுவர் தமிழ்க் குலத்தவரே; குறள் மொழி தமிழ் மொழியே. வள்ளுவர் காலக் குழுவியல் அமைப்பையும் மொழியமைப்பையும் அறிவிக்கும் தனிக் கருவிகளாவன தொல்காப்பியமும் சிறப் பாகச் சங்கத் தொகை நூல்களும் ஆம். திருக்குறட்குப் பின் எழுந்த (சிலப்பதிகாரம் மணிமேகலை ஒருவாறு நீங்க) நூல்களை நம்பிக் குறளுரை எழுதுபவர் பெருந்தவற்றுக்கு உள்ளாவர். இதுவரை உரையெழுதினோர் தொல்காப்பிய சங்கப் பனுவல்களைக் கல்லாதார் என்பது இதன் கருத்தன்று. நன்கு கற்றிருந்தும் குறளுரைக்கு அவை தூய வழிகாட்டியாம் என்பதை அழுத்தமாகக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டனர். சங்கத் தமிழ்நெறி தழுவி உரைகள் எழுதப் பெறுமேல், திருக்குறள் செவ்வுரை பெறும். உரை வாய்மை எதிர்காலக் குறளுரையாசிரியன் இதுகாறும் தோன்றிய உரையாசிரியர்களுக்குப் பெருங் கடமைப்படுவான்; அவ்வுரை களை மதித்து நடப்பான்; புத்துரைகாணும் அவாவின்றியும் ஓரிருவர்மேற் பற்றின்றியும் உரைவினை செய்வான்; நல்லுரை களைப் போற்றி அல்லுரைகளை விடுத்து மேலும் தகுமுரை கண்டு திருக்குறட்குப் பொருளுரையே நாடி ஒழுகுவான். எல்லாக் குறட்கும் உரை காண ஒல்லும் என்று கண்டவாறு எழுத வலியான். காலச் சேய்மையாலும் முந்து நூல் பல அழிந்தமையாலும் குறளிற் சில இடங்கள் விளங்கித் தோன்றா. தெளிவில் இடங்களை மழுப்பான். பொய்ம்மானம் பாராது ‘இவை இனியும் தெளியத் தகும்’ என்று சுட்டுவான். இதுவரை நாம் கண்ட உரையாளர்கள் வள்ளுவர் கருத்தெல்லாம் தமக்கு ஒக்கும் என்பது படவே - தங் கருத்துக்கு ஒப்பவே - வள்ளுவர் குறளெல்லாம் அமைந்துள என்பது படவே சரிப்படுத்தி உரை கண்டுள்ளனர். நூலுக்கு உரையடிமை. உரையாசிரியனோ நூலாசிரியனுக்கு அடிமையல்லன். ஒரு நூற்கொள்கைகளை ஒப்புபவனே அந்நூற்கு உரை காண வேண்டும் என்பதில்லை. சில வகையாலோ பல வகையாலோ மாறுபட்ட கொள்கையு டையாரும் உரை எழுதலாம். நூற்பொருளைக் காட்ட உரை எழுதுகின்றோமேயன்றிக் கொள்கை யுறவு காட்டவன்று. இம்முறை மயங்காது குறிக்கொண்டு உரை யெழுதின் வள்ளுவர் எண்ணியதை முரணறக் கண்டுபிடித்து விடலாம் என்பது என் துணிபு. நூலவன் போக்கு தனக்குப் பிடிப்பினும் பிடியா தொழியினும், உள்ளதை எழுதும் உரைவாய்மை வேண்டும். எத்துணை விழிப்பாக இருப்பினும், சில பொழுது தன் கருத்து வள்ளுவர் கருத்தாகப் புகுந்துகொள்ளும்; மரத்தை மறைத்தது மாமத யானை என்றாகிவிடும். நாம் முதனூல் எழுதவில்லை; ஒருவன் எழுதிய முதனூற்கு உரையன்றோ எழுதுகின்றோம் என்ற உணர்வு சாகாதிருப்பின், உரை வெற்றி என்பதில் ஐயமில்லை. கம்பரும் வள்ளுவரும் காப்பியத்திற் சிறந்த கம்பர் நூலுக்குப் பாடபேதப் பதிப்பு வேட்டையும், வாழ்வுக்குச் சிறந்த வள்ளுவர் நூலுக்கு உரை வேட்டையும் தமிழ் இலக்கியச் சோலையைக் காடாக்கி விட்டன. இராமகாதைக்குச் செம்பதிப்புத் தோன்றாவிடின், பாடிய கம்பர் மறைவர்; பாட பேதக் கம்பர்கேள காட்சிய ளிப்பர். திருக்குறட்குச் செவ்வுரை தோன்றாவிடிலோ, மக்கள் உண்மை விளங்கார்; உரையாசிரியர்களே வள்ளுவர்களாக வெளிப்படுவர். உரைபொருள்களே வள்ளுவங்களாகப் பரவத் தலைப்படும். ஒரு நூற்கு மணல் போல் பாட பேதங்கள் குவிதலும் உரைகள் காளான் போல் பல்குதலும் இலக்கிய வளர்ச்சிகள் எனப்படுமா? வளர்ச்சிப் போலிகள் என்றும், உண்மையைக் காணவொட்டாது தடுக்கும் புதர்கள் என்றுமே இலக்கியப் பற்றாளர்கள் கூறுவர். 12. வள்ளுவர் கல்வித் திட்டம் கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார் (279) மேடைக்கு அஞ்சும் பெரும் படிப்பாளியைப் படியாதவனி னும் கடையென்று இகழ்கின்றார் வள்ளுவர். பேடிக்கும் வாளுக்கும் என்ன தொடர்பு? இவனுக்கும் நூலுக்கும் என்ன தொடர்பு? என்று இழிவுப்படுத்துகின்றார். இவன் வாழ்பவனா? செத்தவன்காண் என்று உயிரோடு பாடையில் ஏற்றுகின்றார். இவ்விடித்துரைகளை நோக்கும்போது, நூற் கல்விக்கும் மேடைப் பேச்சுக்கும் வள்ளுவர் ஓர் இணைப்பை வற்புறுத்தக் காணலாம். நிரம்பக் கற்றவனுக்கு நன்கு சொல்லவும் தெரிய வேண்டும் என்பரேல், வள்ளுவரின் கல்வித் திட்டம் விரிந்த ஒரு புது நோக்குடையது என்பதனைக் காண்பதோடு, இவர் கல்விக் குறட்களுள் என்னென்ன புது நோக்குப் புதையுண்டு கிடக்கின் றதோ என்று காணவும் அவாவுகின்றோம். புத்தொளி சிற்சில இயக்கங்களோ, அறிவெழுச்சிகளோ முன்னேற்ற வுணர்ச்சிகளோ வீறிட்டுப் பொங்கிப் பரவுங்காலைதான், நாட்டிலும் இலக்கியங்களிலும் புதைந்து கிடக்கும் பொருட்கள் வெளிப்பட்டு ஒளி பெறுகின்றன; இக்காலைதான் அவற்றை வெளிப்படுத்தும் ஆள்வினைகள் பலர்பால் உண்டாகின்றன. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்பது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொல்காப்பியப் பாயிரம். பெரும்புலவர்கள் அளவில் அறியக் கிடந்த இவ்வடிகள் தமிழக எல்லைக் கிளர்ச்சிக் காலத்தே தொண்டர் வாய்ப்பட்டு நாடெங்கும் முழங்கக் கேட்டோம். சிலப்பதிகாரத்து இசைநூற் செய்திகள் பலவுள. அவை போற்றுவாரற்றுக் கிடந்தன. அரங்கேற்றுக் காதையொழிய முத்தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகாரத்தைப் பயில்வதே வழக்கமாயிற்று. தமிழிசைக் கிளர்ச்சியாலன்றோ இவ்விசைப் பகுதிகள் பரப்பவும் ஆராயவும் பட்டன. பல்லவ அரசு என்பதொன்று, ஏழு நூற்றாண்டு இந்நாட்டை ஆண்ட வரலாறு நெடுங்காலம் சிறிதும் அறியப்பட்டதில்லை. சென்ற நூற்றாண்டில் எழுந்த ஆராய்ச்சி முனைப்பினால் இன்று மாமல்லபுரம், சித்தன்ன வாசல், குடுமியான்மலை நாடும் ஏடும் காலும் அறியும் கலைத் தவங்களாய்த் திகழ்கின்றன. மக்களின் பொருள்வளம் உயர வேண்டும் என்னும் வாழ்வுத் தூண்டன்றோ நெய்வேலி போலும் இடங்களின் இருப்பை அறிஞர்க்குக் காட்டிற்று. குறளியக்கம் மொழியியக்கங்கள் கிளர்ந்த காரணத்தால் இன்று தமிழ் மக்களுக்குத் தம் இலக்கியங்களை மதிக்கும் நல்லன்பும், கல்லாது போயினும் கேட்கும் பேரார்வமும், குறைகூறக் கண்டால் கொதிக்கும் மானவுணர்ச்சியும் பெருகியுள. திருக் குறளைப் பன்முகமாகப் போற்றத் தொடங்கிவிட்டோம். அதனைப் பரப்புதலை ஓரியக்கமாகவே கொண்டு விட்டோம். இவ்வியக்கத்தால் பெருமைக்குரியது திருக்குறள் என்னும் தரம் அறியப்படுமேயன்றிச் செயலுக்கு உரியது திருக்குறள் என்னும் நிலை அறியப்படாதே போகலாம். திருக்குறட் செயலியக்கம் நாடெங்கும் வலிவுறத் தாக்கும் ஒரு காலம் வரும். அஞ்ஞான்று இயக்கமற்ற நமக்கு இன்று தோன்றாப் பல வாழ்க்கையுண்மை கள் திருக்குறளகத்துப் பொலிவோடு புதையுண்டு கிடப்பக் காண்பார்கள். நாட்டியல் பெரும்பாலும் திருக்குறட்படி நடக்க வேண்டும் என்னும் ஓர் பூசல் தோன்றினால், அல்லது நம் அரசு திருக்குறளை முறை நூலாக ஏந்தித் தானே ஆட்சி நடத்தினால், இலக்கிய நோக்கிற்கும் மொழி நோக்கிற்கும் புலனாகாப் பல ஆட்சிக் குறிப்புக்கள் ஆண்டு மிளிரக் காணலாம். நம் நாட்டில் கல்வி வகுப்பிகள் இன்று கீழ் மேல் எல்லா வகுப்புக்கும் பாடமாகத் திருக்குறளை வைக்கும் அளவுக்கு முன் வந்துள்ளனரேயன்றித் தாம் வகுக்கும் கல்வித் திட்டத்துக்கு ஓர் உரைகல்லாகத் திருக்குறளைக் கடைப்பிடித்தொழுக முன்வர வில்லை. பிறர் பலர் கூறியவற்றையெல்லாம் நாடியலைகின்றார் களேயொழிய, அவரோடு ஞாலப்புகழ் நம் வள்ளுவரையும் நாடத் துணிகின்றாரில்லை. வள்ளுவர் தனிப்பெருங் கல்வி வகுப்பி என்றும், திருக்குறளகத்துக் கல்விக் கோள்கள் பலவுள என்றும் ஓரியக்கம் ஏற்பட்டாற்றான் நாடு உணரும் போலும். அறிஞர்களின் அறிவு வேலை செய்யும் போலும். பொதுக்கல்வி மனித உறுப்புக்களுள் சிறந்தது கண். அதன் வாயிலாகத் தான் உள்ளத்திற்கும் உலகிற்கும் போக்குவரவு உண்டாகின்றது. மனிதனுக்குக் காட்சிக் கண்ணினும் சிறந்தது கல்விக்கண் என்பர் வள்ளுவர். இக்கண்ணால் ஒருவன் இறந்த காலத்தையும் காண்கின்றான்; தானில்லா இடத்தையும் அறிகின்றான். நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் ஒரு நாட்டில் படித்துள்ளனர் என்றாலும், எஞ்சிய ஒருவன் கண்ணிழந்த முகப்புண்ணன் என்பது வள்ளுவர் துணிபு. நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பதிமர் உண்டனர் என்பதற்காக உண்ணா ஒருவன் பசி ஆறிப்போமா? ‘கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்றபடி, புறநடையின்றி ஒவ்வொருவரும் - ஆணும் பெண்ணும் - கற்கவேண்டும் என்பது வள்ளுவரின் பொதுக் கல்வித் திட்டம். ‘கல்வி’ வேண்டும் என ஓரதிகாரம் எழுதினார்; ‘கல்லாமை’ வேண்டாம் எனவும் ஓரதிகாரம் எழுதினார்; இங்ஙன் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் யாரும் கற்றாகவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். எழுத்தைக் கற்பிக்கும் ஒன்றாம் வகுப்பில் வகுப்பு ஆசிரியன் போல, ‘அகரமுதல எழுத்தெல்லாம்’ என்று தம் குறட் சுவடியைத் தொடங்குவதிலிருந்தே, இறையை நினைவூட்டப்போந்து முன்னாக எழுத்தை நினைவூட்டுவதி லிருந்தே, வள்ளுவர் தம் கல்வியுள்ளம் வெளிப்படவில்லையா? அழியாக் கல்வி குறட் கட்டளைக்கல்லில் இற்றைக் கல்வித் திட்டத்தை உரைத்துப் பார்த்தால் மிகக் குறைந்த மாற்று பல இடங்களில் தோன்றும்; சில இடங்களில் பித்தளையும் மின்னும். இன்று பாட நூல்களெனக் கற்பிப்பவை தேர்வு முடிந்த, தேர்வின் முடிவு தெரிந்த மாலையே தூக்கு ஏறுவதைக் காண்கின்றோம். ‘நெற் கொண்டு போமளவும் நில்லாய்’ என்றபடி, பாடப் பொருளைத் தேர்வில் எழுதும்வரை நினைவில் தாங்கி வைத்துக் கொள்ளவே மாணவன் பாடுபடுகிறான். இது பாட நூலின் குற்றமன்று; படிப்பான் குற்றமன்று; படிப்பை வகுப்பான் குற்றம். இந்நாட் கல்வி, கல்வியென நம்மால் பெயர்பெறினும், வள்ளுவர் கண்ட கேடில் விழுச்செல்வம் ஆகாது. எல்லாப் பொருளுமே நூல் வாயிலாகக் கற்றற்கு உரியன என்ற மயக்கத்தால், அடுப்புக்கலை கூடப் பள்ளிப் பாடமாய் விட்டது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவப்பாடுபடும் பயனில் முயற்சி பள்ளியில் வந்துவிட்டது. கல்வியொன்றாலேதான் ஒருவர் இன்ன பொருள்களை அறிந்துகொள்ள இயலும் என்னும் வரம்புத் தெளிவு நமக்கில்லை. கற்க வேண்டியதை மட்டும் கல்லாததாலும், குப்பைபோல் தொடர்பற்ற பொருட் குவியல்களைக் கசடுறையக் கற்பதாலும் இற்றைக் கல்வி கெடுசிறு செல்வமாய் மாறித் தேய்கின்றது. கல்வித் திட்டர்கள் ‘கற்க கசடறக் கற்பவை’ என்ற குறளை நெற்றிப் பட்டமாகத் தாங்கி எவ்வகுப்புக்கும் திட்டம் வகுப்பரேல், கல்வித் தரம் தரமில்லை என்ற சொல்லுக்கும், மாணாக்கர்க்குக் கல்வியில் நாட்டம் இல்லை என்ற சொல்லுக்கும் இடமிராது. நிற்க. கல்விக் கொடை பொருட்செல்வம், செவிச் செல்வம் அருட்செல்வம் போலக் கல்வியும் ஒரு செல்வம் எனப்படும். செல்வம் எவ்வகைத்தாயினும், ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பது செல்வத்துக்கெல்லாம் ஒரு பொதுவியல். பொருளை ஓயாது ஈட்டுகின்றான்; நன்று. சிறிதும் எடுத்து வழங்குகின்றானில்லை. இவன் செத்தவனே என்றும், இவன் தோற்றம் நிலத்துக்குப் பாரம் என்றும், இவன் மாணாப் பிறப்பு எய்துவான் என்றும் வள்ளுவர் வையவில்லையா? அதுபோல் நிரப்பிய கல்விச் செல்வத்தை ஈயாதவனையும் கடையனென, பேடியென வைவதில் என்ன தவறுண்டு! ஈயாப் பொருட்செல்வனைவிட ஈயாக் கல்விச்செல்வன் மிகவும் இகழத் தக்கவன். பொருள் ஈந்தால் ஈந்த அளவுக்கு இருப்புக் குறையவே செய்யும்; ஒப்புரவினால் பொருள் முற்றும் இல்லையாய் ஒழியும். ஆதலால் பொருட்செல்வன் கொடுக்க அஞ்சுவதில் ஒரு குணம் உண்டு. கொடுத்தாற் குறைவுபடும் பொருளினும் வேறுபட்ட நிறைத் தன்மையுடையது கல்வி என்பதைச் சாற்றவே ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’ என்றார் ஆசிரியர். பொருட்கொடையால் பிறர் பொருள் எய்துவர்; கொடை எய்தவனோ புகழ்தான் எய்துவான். கல்விக் கொடையால் கேட்டால் அறிவுநலம் பெறுவதுபோலச் சொன்னானும் அறிவு விளங்கப் பெறுவான். கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச் சொற்றெரிதல் வல்லா ரகத்து. (727) உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. (728) தன் கல்வித் தெளிவுக்கும் மேல் வளர்ச்சிக்குங்கூடச் சொல்வன்மை இன்றியமையாதது என்பது வள்ளுவர் குறிக்கோள். யாதானும் நாடாம் ஊராம் என்பதனால் பொருட்கொடையாளன்போலப் புகழும் பெறுவான் என்று சுட்டுவர் ஆசிரியர். கொடுக்கக் கொடுக்கக் கேடின்றி வளர்ந்து புகழூட்டும் கல்விச் செல்வத்தைப் பெற்றிருந்தும், சொல்ல அஞ்சும் கல்வியனை, கொடுக்க தஞ்சம் பொருட்செல்வனைக் காட்டினும் கடுஞ்சொல்லாற் பழிப்பர். கற்றவன் கொடை செய்யும் முறை யாது? பொருளன் கையால் வழங்குகின்றான்; பிறர் கையால் ஏற்கின்றனர் என்பது மரபு. கல்வியனோ வாயால் வழங்கப் பிறர் செவியால் ஏற்கின்றனர். ஒருவன் கல்விச்செல்வம் ஏனையோர்க்குச் செவிச் செல்வம் ஆகின்றது. ‘செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்’ என்றார்; அச்செல்வம் கல்விச் செல்வமுடையார் வழங்கினா லன்றோ வருவது. வழங்காவிடின், பாயா நீரும் பாய்ச்சல் பெறாப் பயிரும் ஒருங்கு கெடுதல்போல, இரு செல்வமும் கெடுமெனக் கண்ட வள்ளுவர் அவையஞ்சாக் குறட்களை யாத்தார் என அறிக. நாடெங்கும் கல்வி அறிவு வேண்டும் என்னும் நோக்குடையவ ராதலின், கல்வி பரப்பும் பொறுப்பு, கற்ற ஒவ்வொருவனையும் சாரும் என்று ஆசிரியர் வலியுறுத்து கின்றார். எழுத்தாண்மை கல்வியாளன் வேறு, சொல்லாளன் வேறு என்று படுத்தாமல் இரண்டுமே ஓராளனுக்கு வேண்டும் என்பது கல்வி வள்ளுவம். கல்லாதவன் அஞ்சாது மேடையேறுகின்றான்; கற்றவன் அஞ்சி மேடையேறாதிருக்கின்றான்; என்ன உலக முரண் என்று வள்ளுவர் வியக்கின்றார். நிரம்பக் கற்றலும் நன்கு சொல்லலும் என இரு கூறுபடக் காட்டும் வள்ளுவர் கல்வித் திட்டத்தில், செம்மையாக நூல் எழுதுதலையும் இன்று நாம் ஒரு கூறாகச் சேர்த்துக்கொள்ளலாம். ஒருவன் கற்ற கல்வியைச் சொல்லுதலால் பிறர் பயன் பெறுதல்போல, வள்ளுவர்போல் எழுதுவதாலும் பயன் பெறலாமன்றோ? கற்றல், சொல்லல், எழுதுதல் என்ற முக்கூற்றொருமையை அறிஞர்கள் கருது வாராகுக. 13. வள்ளுவர் கண்ட உலகப்போக்கு திருக்குறளைப் படிக்கும்போது நமக்கு ஓர் பகுத்தறிவு வேண்டும். அங்கு சொல்லப்படும் அறங்கள் உலகில் பல்வேறு மக்களின் பல நிலைகளைப் பார்த்து வடிக்கப்பட்டவை. ஒருவன் வாழ்க்கை எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. நாளுக்கு நாள் வேறு வேறு மாற்றங்கள் அலைகள்போல் வந்து கொண்டிருக்கும். தனி மனிதன் வாழ்வாயினும், இன வாழ்வாயினும், நாட்டு வாழ்வாயினும் மன நிலைகளும் உறவு நிலைகளும் பொருள் நிலைகளும் இன்ப துன்ப நிலைகளும் திடீரெனவும் மாறும், படிப்படியாகவும் மாறும். நிலை மாறி வருவதே உலகவியற்கை. ஆதலின் அறக் கருத்துக்கள் உலகப் போக்கின் மாற்றங்களை உட்கொண்டு எழுதப்பட வேண்டும். திருக்குறள் பல நிலைப்போக்கு அடிப்படையில் எழுந்த வள்ளுவம் ஆதலின், அதனைப் படிப்பவர்க்குத் தத்தம் நிலையோடு இயைத்துப் பார்க்கும் பகுத்தறிவு வேண்டும். பொதுவாகப் படிக்கும் பொதுப் பார்வை பயனேயில்லை. உலகப்போக்குக்கள் எத்தனை எத்தனை வகை. வள்ளுவப் பெருமகன் உலகத்தை வளைத்துப் பார்த்து ஒவ்வோரிடத்தும் நின்று கண்டவர்போல் நல்ல நிலைகளையும் தீய நிலைகளையும் நமக்கு எடுத்துக் காட்டுவர். இவ்வுலகம் பொருளைக் கருவியாகக் கொண்டது. ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றால் உலக வாழ்வும் வளர்வும் இல்லை என்பது பொதுக் கருத்து. அதனையே பெரிதாக எண்ணிக்கொண்டு ஒருவன் செல்வத்தைக் குவித்தால், அப்போதும் வாழ்வில்லை. தானும் துய்க்காது பிறர்க்கும் கொடுக்காது திரட்டி வைக்கும் செல்வம் பேய்க்காப்பாகும். செல்வம் வேண்டுமே என்று நினைத்து எப்படியாவது நெறி மயங்கி ஈட்டலாம் என்று துணிந்தால், அங்ஙனம் வந்த செல்வம் - அழக்கொண்டவை யெல்லாம் நீ அழும்படி போய்விடும் என்பர் வள்ளுவர். நன்முறையில் தொகுத்த செல்வங்கள் நிலைக்கின்றனவா? அரசியல் மாற்றங்களாலும் இனப்பூசல்களாலும் இயற்கைக் கொதிப்பாலும் அழியக் காண்கின்றோம். அந்நிலைக்கு வழிகாட்டும் குறள் யாது? ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார் (593) புறமான செல்வ இழப்புப் பற்றிக் கவலை கொள்ளாதே, அச்செல்வம் உன் ஊக்கத்தால்தானே வந்தது, ஊக்கத்தை யாரும் அழிக்க முடியாது என்று இழந்த நிலைக்கேற்பப் புதிய அறம் திருக்குறள் சொல்லுகின்றது. வறுமை என்பது எல்லா மாந்தரிடத்தும் காணப்படும் பிரியா நிலை. பெருங்கோடியாளர்கட்குக் கூட எப்படியும் உலக மாற்றத்தில் ஒரு நாள் வறுமைவாய்த் தள்ளப்படுவோமோ என்ற உள்ளச்சம் உண்டு. அவரவர் கடமைகட்கேற்ற பொருள் வேண்டும். பொருளீட்டாதவனை ஒரு குடும்பத்தில் தாயும் மதியாள். வீடு கட்ட வேண்டுமானாலும் திருமணஞ் செய்ய வேண்டுமானாலும் எல்லாம் கடன் வாங்கிக் காலந்தள்ள முடியாது. கையில் ஓரளவேனும் பொருள் வைத்துக்கொண்டு பின் காரியம் தொடங்குக. மலை மேலிருந்து கொண்டு கீழே யானைச் சண்டையைக் காண்பதுபோல, அக்காரியம் நடுக்கமின்றி முடியும். பொருளுள்ளவரை உலகம் பார்க்கும் பார்வையும் வேறு; பேசும் பேச்சும் வேறு. இல்லாதவரை நடத்தும் முறை வேறு. என்ன பொருள் என்ற வறட்டுக் கொள்கை வாழ்வில்லை. இங்ஙனம் இருக்கும் சில தடிமன நிலைகளை அறிந்த வள்ளுவர் ‘செய்க பொருளை’ என்று சுருக்கமாகச் சுட்டி ஏவி விடுவார். இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது (1041) வறுமையின் எண்ணற்ற கொடும் போக்குகளை நன்கு அறிந்த குறளாசான் நூற்றுக்கணக்கான உவமைகளைத் திருக்குறளில் ஆண்டிருந்தும், வறுமை நிலைக்கு ஓர் உவமை சொல்ல மாட்டாமல், அதற்கு அதுதான் உவமை என்று விட்டுவிடக் காண்கின்றோம். ஒவ்வொருவரின் பொருள் நிலையும் வேறு; ஒருவர் தனி வாழ்விலுங்கூடப் பொருள் ஒரு சீராக இருப்பதில்லை. எந்த நிலையாரும் கடைப்பிடிக்கத் தக்க வள்ளுவங்கள் திருக்குறளில் உண்டு. நமக்கேற்ற உணவும் உடையும் தெரிந்தெடுத்துக் கொள்வது போலக் குறளையும் பகுத்தறிந்துகொள்ள வேண்டும். பொருட் போக்கில் நிலை பல கண்ட திருவள்ளுவர் கல்வியில் பண்பில் ஆற்றலில் உறவில் புகழில் எல்லாம் மக்கட் கூட்டத்து ஒவ்வொரு ஆளிடத்தும் நிலைப்பன்மைகளை நேரடியாகக் கண்டு, ஆள் நிலைக்குத் தக வாழ்நிலைக் குறள் எழுதினார். உரிய காலத்தில் படிக்காதவனை, கேட்டாவது இனி அறிவு பெறுவாய் என வழிகாட்டியும், படித்தும் உணர்ந்தும் எடுத்துச் சொல்லியும் அடக்கமில்லாதவனைப் பேதையாக வாழாதே என இடித்துரைத்தும், படித்து இடையில் விட்டவனைச் சாகும்வரை படிப்பாய் எனத் தூண்டியும், வேறு வகையான செல்வமுடையவனைக் கேள்வியறிவுச் செல்வமே தலையாய செல்வம் என அறிவுறுத்தியும், பிறர் துன்பங் கண்டு இரக்கப்படாத அறிவுடையவனை உனக்கு அறிவிருந்தும் என்ன பயன் என்று பழித்துரைத்தும் அவரவர் நிலைக்குப் பொருந்தும் பாங்குத் திருக்குறளை யாத்தார். இழப்பு இழவு இழிவுகளையும், சிறுமை கொடுமை பகைமைகளையும், பொய்ம்மை வஞ்சகம் சூதுவாதுகளையும், தூற்றுதல் பழித்தல் இழித்தல்களையும், அச்சம் வெட்டு குத்து கொலை போர்களையும், அறியாமை பேதைமை மடமை கயமைகளையும் பரந்து கிடக்கும் உலக நிலைகளாகக் கண்டுணர்ந்த பொய்யில் புலவரான வள்ளுவர் இவ்வவலப் போக்குகளால் மலைக்கவில்லை. இம்மாந்தர்கட்கு அறங்கூறிப் பயனென்ன என்று பின் வாங்கவில்லை. தீய போக்குக்கட்கிடையே இருளில் ஒளியும் போல, பாலையும் சோலையும் போல நல்ல போக்குக்கள் உலகிடை என்றும் தொடர்ந்து வருவதைத் தெளிந்த ஆசிரியர் சோர்வு தரும் குறள்களை எழுதி மக்களை மயக்கிக் கலங்க வைக்காமல், ஆக்கமும் ஊக்கமும் ஆற்றலும் போற்றலும் அளிக்கும் குறட்களையே நன்னடையிற் பாடினார். இடுக்கண் அழியாமை என்று ஓர் அதிகாரம் கண்டார். சிற்றினம் சேராதும் பெரியவர்களைத் துணைக் கொண்டு இன்சொற் பேசியும் பண்பாக நடந்தும் வாழ்ந்தால், சோர்ந்து போகாமல் மனத் திட்பமாக வளர்ந்தால் என்றும் அறிவைப் பெருக்கிக் கொண்டிருந்தால், துன்பந்தான் துன்பப்படுமே யொழிய உன் வாழ்வு துன்பம் உறாது என்று ஊக்கம் தந்தவர் வள்ளுவர். ஆதலின் திருக்குறளை ஒவ்வொருவரும் தமக்கேற்ற நிலையில் பார்க்க வேண்டும். தன்னிலைக்கு வழிகாட்டும் வள்ளுவங்கள் என்ன? என்று அவ்வப்போது காணவேண்டும். இவ்வாறு காணும் தனிப்பயிற்சி ஏற்பட்டால், எந்த உலகப் போக்கிலும் நாம் முன்னேறலாம், வளரலாம், வாழலாம். திருக்குறளைக் கற்பவர் இவ்வள்ளுவ நெறியை இதுகாறும் கடைப்பிடிக்கவில்லை. இனிமேலும் உண்மை நெறியை யுணர்ந்து தன்னைப் பக்குவமும் செம்மையும் செய்யும் பாங்குடைக் குறள்களைத் தெரிந்தெடுத்து செயற் பயிற்சி செய்வார்களாக. தேர்வு வினாத்தாளில் பல வினாக்கள் கொடுக்கப்பட்டிருந் தாலும், நமக்கு விடை தெரிந்த வினாக் களைத்தானே பார்த்தெடுத்து விடையெழுதுகின்றோம். இந்தப் பகுப்புப் பார்வை திருக்குறள் படிக்கும் போதும் வேண்டும். 14. சங்க இலக்கியமும் திருக்குறளும் சங்க இலக்கியம் என்பது பண்டு பற்பல காலங்களில் சான்றோர் பரலால் எழுதப்பட்ட பாடல்களின் தொகுதி. அத்தொகுதியில் 2381 செய்யுட்கள் உள. இவ்வனைத்துக்கும் பிந்தியது திருக்குறள் என்று ஒரு மூச்சாகச் சொல்லிவிட முடியாது. கி.பி. மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் சங்கச் செய்யுட்கள் அகநானூறு புறநானூறு என்றாங்கு தொகை செய்யப் பெற்றன. தொகுத்த அக்காலம் வரை தோன்றிய செய்யுட்களும் தொகையுள் இடம் பெறுதல் இயல்பே. திருக்குறள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதி அல்லது மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். ஆதலின் சங்கத் தொகையுள் சில செய்யுட்கள் திருக்குறளின் காலத்தன வாகவும் சற்றே பிந்தியனவாகவும் தோற்றம் தருகின்றன. சங்கவுரை ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவே; நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி யில்லென அறம்பா டின்றே என்ற புறநானூற்றுப் பாடல் ஆலத்தூர்கிழார் பாடியது. இவ்வறத்தை ஆலத்தூர்கிழார் தாம் கூறுவதாகச் சொல்ல வில்லை. ‘அறம் பாடின்றே’ என்பதனால் பிறிதொரு நூலிலிருந்து மேற்கொண்டார் என்பது தெளிவு. அந்நூல் யாதாகலாம்? ‘பாடின்று’ என்ற வினையினால் அறம் என்பது ஒரு நூல் என்பதும் பாட்டினால் இயன்றது என்பதும் மேலும் தெளிவு. பாட்டினால் அறத்தைப் பகரும் ஒரு நூல் திருக்குறளே. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110) என்பது செய்ந்நன்றி அதிகாரத்துள்ள ஒரு குறள். ‘உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ என்ற வெண்பா யாப்பே ஆசிரியமாக வரும்போது ‘செய்தி கொன்றார்க்கு உய்தியில்’ எனச் சிறு மாற்றுருவில் அமைந்திருக்கின்றது. செய்ந்நன்றி கொல்லுதல் என்பதனைக் குறளினும் சுருக்கமாகச் ‘செய்தி கொல்லுதல்’ என ஆலத்தூர்கிழார் ஆளுவர். அங்ஙனம் சுருங்கச் சொல்லும் கிழாரே ‘எந்நன்றி கொன்றார்க்கும்’ என்ற குறட்பகுதிக்குப் பாட்டில் உரையெழுதினாற்போல் ‘ஆன்முலை யறுத்த அறனிலோர்க்கும்’ என்றாங்கு விரிவு செய்திருப்பது பின்வந்த உரைகளுக்கெல்லாம் முன்னோடியாகின்றது. இக்குறட்கு உரையெழுதிய பரிமேலழகர் இப்புறப்பாட்டை மேற்கொண்டிருப்பதும், ‘ஒருவன் செய்தி’ என்ற புறத்தொடரை உட்கொண்டே ‘செய்ந்நன்றி’ என்ற குறட்சீருக்கு ‘ஒருவன் செய்த நன்றி’ என எழுதியிருப்பதும் நினையத்தகும். எனவே இவ்வொரு குறளுக்கு முதலுரையாசிரியர் சங்க கால ஆலத்தூர்கிழார் என்று நினைக்குங்காலை நாம் இறும்பூது எய்துகின்றோம். அறம் என்ற நூற்பெயர் இப்புறப் பாடலிலிருந்து இன்னொரு குறிப்பும் நாம் பெறுகின்றோம். வள்ளுவர் நூலுக்குச் சங்கத் தொகைக் காலத்தில் ‘அறம்’ என்ற பெயரே வழங்கியிருக்கும் போலும். முப்பாலில் பொருளும் இன்பமுங்கூட அறத்தின் அடிப்படை யுடையன அல்லவா? ஆதலின் திருக்குறளுக்கு அறம் என்ற பெயர் அதன் உயிர்த்தன்மையைக் காட்டும் மெய்ப்பெய ராகும். இக்காரணத்தை உறுதிப்படுத்துமாறு போல ஒரு சங்கப் பாடலே உண்டு. சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல (புறம் 31) என்று கோவூர் கிழார் ஏனை இரண்டிற்கும் அறமே தலைமை என்று புலப்படுத்துவர். யாப்புக்காரணமாகப் பிற்காலத்துத் திருக்குறள் என்ற பெயரை வைத்து வழங்கி வருகின்றோம். இதனை மாற்ற நான் சொல்லவில்லை. திருவாசகம் என்பது போலத் திருவறம் என்று அடைபுணர்த்தும் வழங்கலாம். ‘மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகம்’ என்று மனோன் மணீயம் கூறுவது போலத் திருவடையின்றி ‘அறம்’ என்றும் நூற்பெயராகவும் வழங்கலாம். எவ்வாறாயினும் ‘அறம்’ என்ற பெயரும் இடையிடையே வழங்கற் பாட்டுக்குத் தகுவது என்பது என் கருத்து. முப்பால் சங்க மரபே திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப் பால் என்ற மூன்று பகுதி கொண்டது என அறிவோம். திருவள்ளுவ மாலையில் பல வெண்பாக்கள் ‘முப்பால்’ (9, 10,11, 12, 15, 17, 18, 19, 31, 39, 44, 46, 49, 53) என்ற பெயரையே பாரித்துரைப்பன. ‘இவர் பொருட் பாகுபாட்டினை அறம் பொருள் இன்பமென வடநூல் வழக்குப் பற்றி ஓதுதலான்’ எனக் காமத்துப் பாலின் தொடக்கத்துப் பரிமேலழகர் சுட்டுகின்றார். இது பொருந்துவ தன்று. ஒவ்வொரு நிலைநோக்கிப் பொருள்கள் பல பாகுபாடு பெறும். அகம் புறம் என்ற பாகுபாடு ஒரு வகை நிலை. இதுவொன்றே தமிழர் வகுத்துக் கொண்ட பகுப்பு என்பது மறுக்கத்தக்க கருத்தென்க. அறம் பொருள் இன்பம் என்ற முப்பகுப்பு தொல்காப்பிய முதல் வழிவழி வந்த மரபாகும். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு (1035) அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்டும் உரிய என்ப (1358) என்ற நூற்பாக்களில் வைப்பு முறை வேறாக இருப்பினும் முப்பகுப்புண்மை வெளிப்படை. முதல் மேற்கொள்களவியலின் முதல் நூற்பா. ஆதலின் இன்பத்தை முதலாக வைத்து எண்ணினார். இரண்டாவது மேற்கோளில் ‘அற முதலாகிய மும்முதல்’ என்பதனால் இயல்பாகச் சொல்லும்போது அறமே முதலில் நிற்கும் என்பது பெறப்படும். அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் (புறம் -28) சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல (புறம்-31) அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் (கலி. 141) எனவரும் சங்கத் தொடர்களால் இம்முப்பிரிவு தமிழ் மரபே என்பதும் திருக்குறளின் முப்பால் சங்கமரபே என்பதும் பரிமேலழகர் உரை இவ்வகையிற் பொருந்தாது என்பது உணரப்படும். திருக்குறட் பொருள்கள் திருக்குறள் அதிகாரங்களும் அதிகாரம் நுவலும் பொருட் களும் சொல்லாட்சிகளும் உவமைகளும் இன்ன பிறவும் சங்கமையுடையன. இக்கோட்பாட்டினால் திருவள்ளுவர் யாதும் புதுமையாகச் சொல்லிவிடவில்லை என்றோ திருக்குறளுக்குத் தனித்தன்மை இல்லை என்றோ கருத்துக் கொள்ளுதல் பிழை. ஒரே மண்ணில் ஒரே நிலத்தில் தோன்றி னாலும் புதுமரம், புதுச்செடி, புதுப்பூ, புதுப் பழம் என்று சொல்வதை ஒப்பு நோக்குங்கள். திருக்குறளின் நிலம் தமிழ் நிலம். சங்க நிலம் என்பதும் அந்நிலத்துக்கண் தோன்றிய புதுநூல் திருக்குறள் என்பதுமே இக்கட்டுரையின் கோள். சில அதிகாரங்களை மேலோடாகப் பார்த்தாலும் இவ்வுண்மை வெளிப்படையாகத் தெரியும். காமத்துப்பால் காமத்துப்பால் முழுதுமே தொல்காப்பிய வழி தழுவியது. உலகத்து அறநூலாசிரியர்கள் அன்பு அருள் ஈகை முதலான அறங்களைக் கூறுவர்; இறைமாட்சி முதலிய அரசியல் அறங்களையும் கூறுவர். இவற்றோடு எந்த அற நூலாளனும் காமத்துப் பாலைச் சேர்க்கான். காமங்கூடாது என்ற விலக்கறங்களே இடம்பெறும். இன்னின்னவாறு காமம் துய்க்க வேண்டும் என்ற இன்ப அறங்களையும் ஏனை இருவகை அறங்களோடு வள்ளுவர் சேர்த்து முப்பாலாகப் பாடினார். இதற்குக் காரணம் தமிழ் மரபு, சங்க மரபு என்பது நம்மனோர்க்குத் தெளிவு. மக்கட்பேறு மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துக்களை நேரடியாக அறம் என்று சொல்ல முடியுமா? சிறந்தபேறு மக்களைப் பெறுதலே; அவர்கள் கிளறிய சோறு அமிழ்தினும் இனியது; அவர் தம் சிறுமேனி தீண்டல் மெய்யின்பம்; அவர் தம் மழலைமொழி செவியின்பம்; அவ்வின்பம் குழலினும் யாழினும் இனியது என்றிவையெல் லாம் அறம் எனப்படுமோ? மக்களைப் பெறவேண்டும் என்பதுதானும் நாம் கருதி வரும் முறையில் அறத்தின் பாற்படுமா? மக்கட்பேறு என்ற ஓர் இனிய சுவையான பொருளை அதிகாரமாக வள்ளுவர் தழுவிக் கொண்டதற்குத் தமிழ் அகத்திணை மரபே காரணம். அகத்திணைக் கற்பொழுக் கத்தில் புதல்வனுக்குக் கூற்று இல்லாவிட்டாலும் அவன் நெய்க்கிண்ணம்போல இன்றியமையாப் பாத்திரம் ஆவான். பிள்ளையால் இருவர் தம் பிணைப்பும் கடமைகளும் முயற்சி களும் கூடுதலாகின்றன. புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் (தொல் 1090) காமக் கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும் (தொல்-1091) இன்னகைப் புதல்வனைத் தழீஇ இழையணிந்து பின்னை வந்த வாயிற் கண்ணும் (தொல்-1095) எனத் தொல்காப்பியத்து வரும் பல் குறிப்புக்களை நோக்கின், தமிழினத்துக்கு மக்கட் பேற்றின் மேல் இருந்த காதல் பெறப்படும். அதனாற்றான் வள்ளுவர் ‘பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை’ என்று அறுதியிட்டு மொழிந்தனர். சங்க இலக்கியத்து மருதப் பாடல்களின் சிறுமகன் சிறப்பும் அவன் விளையாட்டும் அவனால் பெற்றோருக்கு நேரும் ஒற்றுமையும் இனியநயமாக எடுத்துக்காட்டப்படுகின்றன. இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின் றெய்துப செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப் பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம் வாயே யாகுதல் வாய்ந்தனம் தோழி (அகம்.66) என்ற செல்லூர்க் கோசிகன் கண்ணனாரின் செய்யுள் மக்கட் பேறு பற்றி பழந்தமிழ்க்குல எண்ணங்களை வடித்துத் தொகுத்துக் காட்டுகின்றது. இவ்வெண்ணங்கள் பழமொழி வடிவாக இருந்தன என்று அறியும்போது கருத்தின் தொன்மையை மேலும் உணர்கின்றோம். ஆதலினன்றோ ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற அதிகாரத்துக்குப்பின் தோற்றுவாய் செய்து ‘மக்கட்பேறு’ என்ற அதிகாரத்தை வள்ளுவர் வழங்கினார். மகப்பேறு தாய் தந்தை இருவர்க்கும் ஒரு பெற்றியது என்றாலும் தாய்க்கே மற்றொரு பற்றுக் கோடாகும். ஆதலின் வாழ்க்கைத் துணை நலத்துக்கு அடுத்து மக்கட்பேறு அமைந்திருப்பது பொருந்துவதே. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு என்ற குறளும் மகச்செல்வத்தை மனையாளின் நன்கலமாகச் சொல்வதைக் காண்க. திருக்குறட் புரட்சி தொல்காப்பிய, சங்க இலக்கியங்கட்கும் திருக்குறளுக்கும் ஈண்டு ஒரு பெரு வேறுபாடு உண்டு. தலைவியின் ஊடலுக்கு முன்னை நூல்கள் தலைவனின் பரத்தமையை ஒரு பெருங் காரணமாகப் பின்னிப்பாடுதல் உண்டு. அவ்வகை யூடல் நீக்கத்துக்கு அன்புக் குழந்தையைப் பிணக்குதீர் கருவியாக ஆக்குதலும் உண்டு. தந்தையர் ஒப்பர் மக்களென் பதனான் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும் (தொல். 1091) நல்லோக் கொத்தனிர் நீயிர் இஃதோ செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தோனே (அகம். 26) எனத் தொல்காப்பியத்தும் அகநானூற்றிலும் பிற சங்கத் தொகைகளிலும் ஊடற்பொருளான மருதத்தில், சுந்தரர்க்குச் சிவன்போல், மகன் ஊடாடுபொருளாக இருக்கின்றான். வள்ளுவரோ இக்கருத்துக்கெல்லாம் மாறுபட்டவர். முன்னோர் மொழிபொருள் என்பதற்காக அவர் பின்பற்றினாரிலர். மரபுப் புரட்சியும் இலக்கணப் புரட்சியும் செய்தார் வள்ளுவர். தமிழ் மரபில் வள்ளுவர் செய்தவை செயற்கரியவையும் செயற்குரி யவையும் ஆம். காமத்துப் பாலில் புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என ஊடலுக்கே மூன்று அதிகாரங்கள் எழுதி யிருந்தும், தலைவனை மெய்யான பரத்தையொழுக்கம் உடையவனாகக் காட்டவில்லை. அவன் பரத்தமையைக் கற்பித்துத் தலைவி ஊடுவதாகவே கருத்துத் தொகுத்துள்ளார். இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்லது அவரளிக்கு மாறு (குறள். 1321) என்ற குறளால் பரத்தைக் குறிப்பு ஊடலுக்குக் கற்பித்துக் கொண்ட இல்பொருள் என்பது வெளிப்படை. மெய்யான பரத்தையொழுக்கமின்மையின் காமத்துப்பாலில் ஊடல் தீர்க்கும் மருந்தாகப் பிள்ளை வரவுக்கு இடமுமில்லை. பொருட்பாலில் வரைவின் மகளிர் என்ற இனமும் பரத்தையும் கூடா என்று கடந்த வள்ளுவர் அதனை நினைவிற் கொண்டு காமத்துப்பாலைத் திருத்தியமைத்திருப்பது அவர்க்கே யுரிய தனித்தன்மையும் சிறப்பும் ஆகும். ஆதலின் திருக்குறள் சங்க இலக்கிய வழியே என்பதும் அவ்வழி வள்ளுவரால் செப்பனிடப்பட்டது என்பதும் போதரும். 15. நீதி விளக்கம் ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை பாத்திசேர் நல்வழி பண்புலகம் - பூத்த நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக் குறுந்தமிழ் என்றறிந்து கொள் மக்கள் நினைவுகொள்ளுதற் கென்று சில முறைகளைக் கையாளுகின்றோம். வெண்பாவால் தொகைப்படுத்தல் அம்முறைகளுள் ஒன்று. ‘முருகு பொருநாறு பாணிரண்டு’ என்ற வெண்பா பத்துப்பாட்டினையும், ‘நற்றிணை நல்ல குறுந் தொகை’ என்ற வெண்பா எட்டுத் தொகையினையும், ‘நாலடி நான்மணி நாற்பது’ என்ற வெண்பா பதினெண் கீழ்க்கணக் கினையும், ‘உந்தி களிறு உயர்போதம் சித்தியார்’ என்ற வெண்பா பதினான்கு மெய்ப்பனுவல்களையும் இலக்கியப் பட்டியல் செய்துள்ளன. ஓரின நூல்களை நினைவு கொள்ளவும், ஒன்று படித்தபின் ஒன்றைப் படிக்கவும், நூலகங்களில் இனநூல்களை வரிசைப்படுத்திக் கொள்ளவும் இப்பட்டியல்கள் உதவுகின்றன. அழியாமற் காப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் இம்முறை வழி செய்திருப்பது கண்கூடு. வெண்பா வடிவில் இல்லாவிடினும், ஐம்பெருங்காப்பியம் ஐஞ்சிறு காப்பியம் பன்னிருதிருமுறை என்ற தொகைத் தொடர்கள் எவ்வளவோ ஆய்வுச்சுடரைத் தூண்டியுள்ளன. இம் மரபுப்படி ஆத்திசூடி கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, உலகநீதி, நறுந்தொகை, நன்னெறி என்ற ஏழு அற நூல்களும் ஓரினமாக எனது மேலை வெண்பாப் பட்டியலில் தொகை பெற்றுள. எட்டுத் தொகை பத்துப்பாட்டு பதினெண்கீழ்க்கணக்கு என்றாற்போல இவற்றை யும் ஏழிளந் தமிழ் என வழங்கலாம் என்பது என் கருத்து. ஏழிளந்தமிழ் கடவுள் வாழ்த்துக்கள் நீங்கலாக 403 செய்யுள் கொண்டது. ஓரடிச் செய்யுள் 245; வெண்பா 110; எண்சீர் விருத்தம் 12. ஈரடி முதல் ஆறடிவரை செய்யுள் 36. ஆத்திசூடி கொன்றைவேந்தன் முழுதும் ஓரடிச் செய்யுட்கள். மூதுரை நல்வழி நன்னெறி மூன்றும் வெண்பா யாப்பின. உலகநீதி எண்சீர் விருத்த யாப்புடையது. நறுந்தொகை ஓரடி முதல் ஆறடிவரை விரவியது. கடவுள் வாழ்த்துக்கள் 1. ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே 2. கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோ மியாமே 3. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. 4. பாலுந் தேளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் ங்கத் தமிழ்மூனறுந் தா. 5. உலக நீதிப் புராணத்தை யுரைக்கவே கலைக ளாய்வருங் கரிமுகன் காப்பு 6. பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன் சரணவற் புதமலர் தலைக்கணி வோமே 7. மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே ஏழு கடவுண் வாழ்த்தும் கணபதி மேலவாக உள்ளன. எனினும், ‘ஆத்தி சூடி அமர்ந்த தேவன்’ என்ற தொடர் சிவனைக் குறிப்பதாகவும் கொள்ள இடங்கொடுக்கும். நூலகத்துள் சிவன் திருமால் வழிபாடு சொல்லப்படுகின்றது. ‘தெய்வம் இகழேல்’ என ஆத்தி சூடியும், ‘தெய்வம் சீறிற்கைதவம் ஆளும்’ எனக் கொன்றை வேந்தனும், ‘தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்’ என உலகநீதியும் பொதுமைப்படத் தெய்வ நம்பிக்கை ஊட்டலும் காண்க. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நன்னெறி, உலகநீதி இவற்றின் கடவுள் வாழ்த்துக்கள் தத்தமக்கு உரிய யாப்பில் அமைய வில்லை என்பது காணத்தகும். நறுந்தொகை பலவடியது ஆதலின் அதன் வாழ்த்து ஈரடியாக இருப்பது முரணில்லை. மூதுரை நல்வழி வாழ்த்துக்கள் வெண்பாவில் இருப்பது பொருந்தும். உலக நீதியின் ஆசிரியர் முருகவேள்பாற் பெரும் பற்றினர். மேலும் உலகநீதி என்ற நூற்பெயரைப் பன்னிரண்டா வது விருத்தத்தில் சொல்லியும் உள்ளார். ஆதலின் அதன் கரிமுகக் கடவுள் வாழ்த்து ஐயத்திற்கு உரியது. இவ்வேழு பாடல்களும் ஒரு வகையில் வெண்பாவின் பாற்பாடும். ஈரடியுடைய ஐந்து வாழ்த்தும் குறள் வெண் செந்துறை என்று வெண்பாவின் இனமாகக் கொள்ளவேண்டும். உலகநீதி நன்னெறி என்பவை ஆசிரியன் வைத்த பெயர்களே. கடவுள் வாழ்த்திற் குறிப்பிட்டபடி ‘நன்னெறி வெண்பா’ என்பதே பெயராகி இருந்து பின்னர்க் குறைந்திருக்க லாம். பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பதனை ஒப்பு நோக்குக. பாரத வெண்பா என்பதுவே நூற்பெயர். கடவுள் வாழ்த்தின் முதற்சீர்களான ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்பன அந்நூற் பெயர்கள் ஆயின. கொன்றை வேய்ந்தோன் என்பது கொன்றை வேந்தன் என மரூஉ வாயிற்றுப்போலும். ‘வாக்குண்டாம்’ என்ற கடவுள் வாழ்த்தின் முதற்சீரும் மூதுரைக்கு ஒரு பெயராய் வழங்குதல் உண்டு. ‘நற்றமிழ் தெரிந்தநறுந்தொகை’ என்றபடி நறுந்தொகை என்பது அதிவீரராமர் வைத்த பெயர். ஆயினும் ‘வெற்றிவேற்கை’ என்று தொடங்கும் பாயிரத்தின் முதற்சீரும் நறுந்தொகைக்கு ஒரு பெயராய் வழங்கும். இப்பாயிரம் பிறராற் பாடப்பெற்றது. நல்வழிப்பெயர் கடவுள் வாழ்த்திலோ நூலகத்தோ இல்லை; வழி வழி வரும் பெயராகும். உலக நீதி ஓரளவு உலகநாதன் என்னும் ஆசிரியன் பெயரோடு தொடர்புடையது. மூதுரை நல்வழி நன்னெறி நறுந்தொகை என்பன பொருள் பற்றிய காரணப் பெயர்கள். நறுந்தொகை என்று பெயர் இருந்தாலும், அதன் செய்யுட்கள் தொகுப்பில்லை. ஒருவர் முறையாகப் பாடியனவே. நல்ல அறங்களையெல்லாம் ஒருசேரக் கொண்டி ருத்தல் என்பது கருத்து. ஒரு நூலுக்கு முதற்சீராலும் பெயராகலாம் என்ற வழக்கு ஆத்திசூடி கொன்றைவேந்தன் காலத்திலிருந்து வந்தது என்று கொள்ளவேண்டும். ஏழிளந் தமிழ் சிறுவயதிற் கற்பிக்கவென்றே அறமும் தமிழும் தழுவ நாற்பெரும் புலவர்களால் இயற்றப்பட்டவை. இவை பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பல அறநூல்களுக்கு அறத்தரமோ தமிழ்த்தரமோ குறைந்தனவல்ல. ஒரு வெண்பா வில் மூவறங்கூறும் திரிகடுகமும், நாலறம் மொழியும் நான்மணிக்கடிகையும், ஐயறஞ்சொல்லும் சிறுபஞ்ச மூலமும், ஆறறங் கரையும் ஏலாதியும் ஒருபாவிற்குள் இத்தனை யறங்கள் வைப்பதெனப் பொருள் வேலி செய்து கொண்டமையின் இலக்கிய ஓட்டத்துக்கு அவ்வளவு இடம் கொடுக்கவில்லை. கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும் தன்மையி ளாளர் அயலிருப்பும் இம்மூன்றும் நன்மை பயத்தல் இல. (திரி. 10) இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடில் வனப்பும் நடைவனப்பும் நாணில் வனப்பும் - புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு (ஏலாதி. 74) இவ்வாறு அடுக்கிய அறம் இந்நூல்களின் போக்கு ஆதலின் உவமையும் பிறவும் எளிதிற் புக இயலவில்லை. இங்ஙனம் அன்றி மூதுரை நல்வழி நன்னெறியில் உவமைகள் மலிந்துள்ளன. ஒவ்வொரு வெண்பாவும் ஓரறத்தின் விளக்கமாக உள்ளது. கொன்றை வேந்தன் நறுந்தொகைபோல ஓரடியுடைய முதுமொழிக் காஞ்சியும், நல்வழி நன்னெறி போல நாற்பது செய்யுளுடைய இன்னாநாற்பது இனியவை நாற்பதும் பதினெண்கீழ்க்கணக்கில் இல்லாமல் இல்லை. ஒளவையாரின் நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு தொகுக்கப்பட்ட காலத்துத் தோன்றியிருக்குமேல் அக்கணக்கில் இடங்கொண்டிருக்கும். தொன்மையவாம் எனுமெவையும் நன்றாகா இன்று தோன்றியநூல் எனுமெவையும் தீதாகா என்பர் உமாபதி சிவனார். ஆதலின் முன்னைத் தொகையில் சேராமையினால் ஏழிளந்தமிழ் பெற்றி குன்றியவையல்ல. சிவப்பிரகாசர் நன்னெறி இயற்றிய சிவப்பிரகாசர் துறவிப்புலவர். சீகாளத்திப்புராணம் பிரபுலிங்கலீலை நால்வர் நான்மணி மாலை திருவெங்கைக்கோவை என்றின்ன இருபது நூல்களின் ஆசிரியர். கற்பனைக் களஞ்சியம் என்று புலவருலகம் இவரைப் பாராட்டுவது உண்டு. இப்புலமகன் தம் முதிர்ந்த புலமையில் இளைஞர் நன்னெறியை யாத்தார். பிறர்க்கு எந்நிலையிலும் இயன்ற உதவி செய்யவேண்டும் என்பது நன்னெறி முழுதும் ஓடிக்கிடக்கும் சாரக் கருத்து. நெறிகளை விளக்கப் பிரகாசர் ஆண்ட உவமைகள் இருதிறத்தவை. உடலுறுப்புக்களை உவமைப் படுத்துவது ஒரு திறம். பூவிற் பொலிகுழலாய்! பூங்கை புகழவோ நாவிற் குதவும் நயந்து மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண். முளைக்கும் எயிறு முதிர்சுவைநா விற்கு விளைக்கும் வலியனதாம் மென்று மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேற் கைசென்று தாங்கும் கடிது. நல்லவர்கள் பாராட்டாதார்க்கும் முற்பட்டு உதவுவர்; கை புகழை எதிர்பாராமல் நாவிற்கு உதவவில்லையா? பிறர் படும் துன்பம் பார்க்கப் பொறாமல் பெரியோர் வருந்துவர்; ஏனை உறுப்புக்கள் உறும் நோய்க்குக் கண் கலங்கவில்லையா? கற்றோர் கைம்மாறு வேண்டாமல் முடிந்த உதவிகளை ஆற்றுவர்; பற்கள் கடின உணவுகளை மென்று எளிமைப்படுத்தி நாவினுக்கு வழங்கவில்லையா? உடல் மேற் படவரும் அடியை இடைமறித்துக் கை விரைந்து நீக்குவதுபோல, மற்றவர் இடுக்கண்களைப் பெரியவர்கள் குறுக்கிட்டுக் காப்பர். பிறவுறுப்புக்கள் அணிபூண்டாலும் அணிவேண்டாக் கண்ணுக்கு ஈடாகா எனவும், ஒன்பான் வழியுடைய உடம்பில் வெளிப் போகாது உயிரிருப்பது புதுமை எனவும், கண் இரண்டானாலும் காண்பது ஒரு பொருளையே எனவும் மெய்சார் உவமைகள் நனி கூறுவது சிவப்பிரகாசரின் தனியியல்பாகும். உடம்பிலாதார் யாருமிலர் ஆதலின் தற்சார்ந்த இவ்வுவமைகள் குழந்தைகட்கு எளிதிற் புரியும் என்பதில் ஐயமில்லை. மெய்சார் உவமமே யன்றிக் கதைகளையும் உவமப்படுத்தல் ஆசிரியரின் இன்னொரு திறம். சாக்கிய நாயனார் கல்லெறிவு, மன்மதன் மலரெறிவு, அகத்தியர் கடல் குடிப்பு, சிவன் சடைமேல் பாம்பிருப்பு, மேருமலை வளைவு, விந்தமலை தாழ்வு முதலிய கதைகள் உவமைகள் ஆகின்றன. இக்கதையறிவு குழந்தைகள் பின்னர் சைவப் புராணங்களைப் படிக்கத் துணை செய்யும் என்ற நோக்கோடும் ஆசிரியர் சொல்லியிருக்கலாம். கன்று விட்டுப் பால் கறத்தல், நெல்லில் உமிநீக்கம், எறும்பூரக் கற்குழிதல் என்றின்ன இயல்புவமைகளும் கலந்துள. உவமை வகை எதுவாயினும், குழந்தை நிலையை உட்கொண்டே நன்னெறி எழுதப்பட்டது என்பது தெளிவு. இங்ஙன் எழுது முறையிலும் இன்னொரு திறம் இவர்பால் உண்டு. எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ? - பைந்தொடீ! நின்று பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்க் கன்றும் உதவுங் கனி. எழுத்தறிவார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம்; - எழுத்தறிவார் ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வீயுஞ் சுரநீர் மிகை. இவ்வாறே முன்னிரண்டு அடியில் அறமும் பின்னிரண்டு அடியில் விளக்கமும் நாற்பது வெண்பாவிலும் வைப்பு முறை மாறாது வருகின்றன. பொருளும் உவமையும் இடமாறாது கிடத்தல் குழந்தைக் கல்விக்கு எளிது என்று கருதினார் போலும். வினாக்கேட்பதும் கல்வி முறைகளுள் ஒன்று. இம்முறையால் கேள்வியைப் புரிந்துகொண்டனரா என்பதும் பெறப்படும். உய்த்துணர்ந்து சொல்லும் பயில்வும் வளரும் - வெள்ளம், தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு. -நனிவிளைவில் காயினும் ஆகுங் கதலிதான் எட்டிபழுத் தாயினும் ஆமோ அறை. - வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் பெருகுதற்கண் என்செய்வார் பேசு. வெண்பா வினாநடையாக இயங்குவதும், விளம்பு அறை பேசு என்றாங்கு வியங்கோளாக இறுவதும் ஆசிரியர் கையாண்ட கல்வி முறைக்குச் சான்று. இருவகை யுவமம், உவமைக் கிடக்கை, வினாவிடை முறை என்றிவற்றைச் சிவப்பிரகாசர் முறை அல்லது சிவப்பிரகாசம் என்று இக்காலத்துக் கேற்பக் குறியிட்டால் தவறில்லை. அதிவீரராமர் அதிவீரராம பாண்டியர் அரசப் புலவர். நைடதம் கூர்மபுராணம் இலிங்க புராணம் திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி என்றின்ன பன்னூலாசிரியர். குழந்தைக்கென்றே பாடிய இவர்தம் நறுந்தொகை புதியபல அமைப்பு உடையது. பாயிரம் பாராட்டுவதுபோல, மெய்யாகவே ‘நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை’ தான். சங்கப் பாண்டியரின் புறநானூற்றுச் செய்யுட்களின் கருத்துக்கள் நறுந்தொகையில் ஒளி விடுகின்றன. யார்க்கும் கல்வியின் இன்றியமையாமையை வன்புறை செய்தவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். அவன் கொள்கையை மீண்டும் வலியுறுத்த எண்ணி அதிவீரராமர் பத்தடிப் புறப்பாடலைக் குழந்தை கொள்நிலைக்கேற்ப ஒன்பதடியாக ஐந்து செய்யுட்களாக யாத்தார். புறநாநூறு உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னாது அவருள் அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. நறுந்தொகை 1. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே 2. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே; 3. நாற்பாற் குலத்தின் மேற்பால் ஒருவன் கற்றில னாயிற் கீழிருப் பவனே; 4. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்; 5. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும். ‘பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ என்ற நெடுஞ்செழியன் கருத்தினைப் பிச்சை புகினும் கற்கை நன்றே என வலியுறுத்துவர் அதிவீரராமர். யாது கொடுத்தாயினும் படிக்க வேண்டும் என்ற புறக்கருத்தினும் பிச்சை எடுத்தாயினும் படிக்கவேண்டும் என்ற நறுந்தொகைக் கருத்து ஏழை எளியவர்க்கும் கல்வியை வற்புறுத்தலை அறியலாம். ‘எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்’ என்று நூலின் முதற் செய்யுளைத் தொடங்குவதனால் அதிவீரராமரின் கல்விச் சிந்தனை பெறப்படும். இப்பாண்டிப் புலவர் அறங்களைச் சொல்லும் போக்கில் நிரலினிமை காணப்படும். கல்விக்கழகு செல்வர்க்கழகு வேதியர்க்கழகு மன்னர்க்கழகு வைசியர்க்கழகு உழவர்க்கழகு மந்திரிக்கழகு தந்திரிக்கழகு உண்டிக்கழகு பெண்டிர்க்கழகு குலமகட்கழகு விலைமகட்கழகு அறிஞர்க்கழகு வறிஞர்க்கழகு எனப்பதினான்கு அழகு வரிசைகள்; பெரியரும் அல்லர் சிறியரும் அல்லர் பிள்ளைகள் அல்லர் உறவினர் அல்லர் பெண்டிரும் அல்லர் என அல்லர் வரிசை ஐந்து; யானைக்கில்லை பூனைக்கில்லை ஞானிக்கில்லை சிதலைக்கில்லை முதலைக் கில்லை அறிவிலோர்க்கில்லை நலிந்ததோர்க்கில்லை கெட்டோர்க்கில்லை என இல்லை வரிசை எட்டு; அனைவரும் பதரே மூர்க்கனும் பதரே வணிகரும் பதரே ஏழையும் பதரே பாராப் பேதையும் பதரே ஏகும் பேதையும் பதரே கொடுக்கும் பேதையும் பதரே எனப் பதர் வரிசை ஏழு; கோற் கஞ்சும்மே புலிக்கஞ்சும்மே பாம்பிற்கு மிக வஞ்சுமே என அஞ்சுவரிசைகள் மூன்று. இங்ஙனம் பலவறங்களை ஒரு பயனிலை நடையிற் கூறிக்காட்டும் இலக்கியர் அதிவீரராமர். இன்னொரு பெற்றியும் இவர் பால் உண்டு. ஓரறத்தை முன் வைத்து அதன் விளக்கமாகத் தொடர்ந்து பல காட்டுக்களை அவரே தருகுவர். ஐம்புலனை அடக்கியவர் தம் ஆற்றலுக்கு வானவர் தலைவன் இந்திரனே சான்று என்று வள்ளுவர் அறமும் விளக்கமும் ஒருசேரக் காட்டுவதையும் ஒப்பு நோக்குக. அறம் உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா அறத்தின் விளக்கம் 1. குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்; 2. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்; 3. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே யழியினும் அழிவர்; 4. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேல் பாழாயினும் ஆகும்; 5. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசரோ டிருந்தர சாளினும் ஆள்வர் 6. பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநக ராயினும் ஆகும். உடைமை நிலையாதது என்று தாம் சொல்லிய அறத்தை விளக்கு முகத்தான் அரசுடைமை பெருமையுடைமை செல்வ முடைமை பெருமனையுடைமை என்றிவற்றின் அழிவுகளை எடுத்துக்காட்டுவர். யாக்கை இளமை செல்வம் என உள்ளது நிலையா என்று சொல்வதுதான் பொதுவான அறமரபு. அதிவீரராமரோ வறுமையும் நிலையாது எனவும், வறியவர் செல்வராய் அரசராய் உயர்வர் எனவும், புதுமுறையில் அறம் கூறக் காண்கின்றோம். பிச்சைக்கார ஒருவனும் அரசாளலாம் என்ற கருத்தால் குடியரசு முறையைக் குறிப்பிற் காட்டுவர் போலும். நறுந்தொகையாசிரியர் சில அறங்களைப் பொறுக்கி யெடுத்து அவற்றைப் பல உலகியல் மேற்கோள்களால் தெளிவு செய்குவர். அறப்போக்கில் புதிய சில அறங்களும் இலங்கு கின்றன. இவை நடைமுறை உலகியலைக் காட்டுகின்றன. 1. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே; 2. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின் பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே 3. பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே; 4. மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே 5. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் பின்பவட் பாராப் பேதையும் பதரே சிறியவர்கள் அளவினுங் கடந்து பெரும்பிழை செய்தால் பெரியவர்கள் அதனைப் பொறுக்க முடியாது என்பது இவர் தம் எச்சரிக்கை. சொல்வன்மையினால் பொய் மெய்யாகத் தோன்றும், மெய் பொய்யாகத் தோன்றும் எனச் சொல் வன்மையை ஒருவாறு இகழ்ந்துரைப்பர். பெண்ணினைப் பேதை என்றல் வழக்கு. பிறந்தகம் விட்டு மனைவியாக வந்தவளைப் பின்பும் பிறந்தகத்துக்கே போகச் சொல்லும் ஆணைப் பேதை என மாற்றியுரைப்பர் ஆதிவீரர். இவர் அரசராதலின் இளங்கோப் போலத் தம் நறுந்தொகையில் அரசநீதிகளை அழுத்தமாகக் கூறியிருக்கக் காணலாம். குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே கொடுங்கோல் வேந்தனைப் பதர் என்றளவில் சொல்லி யொழியாது மூர்க்கன் என்று வசைபாடுகின்றார். இக்கடுஞ் சொல் அரசப் புலவர் வாயிலிருந்து வருவதால் அவர் தம் நேர்மை விளங்கும். உலகநாதர் உலகநீதி பாடிய உலகநாதரைப் பற்றி வரலாற்றுக் குறிப்பு யாதும் இல்லை. பாடிய எண்சீர் விருத்தங்கள் பன்னிரண்டே. 61 நீதிகள் உள. மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்று வள்ளுவர் எதிர்மறைபட அறத்துக்கு இலக்கணம் வகுப்பர். வெகுளாமை கொல்லாமை புறங்கூறாமை அழுக் காறாமை பயனில சொல்லாமை என வரும் தலைப்புக்களையும் நோக்குக. எதிர்மறையாக அறங்கரைதலும் ஒருமுறை என்பது இன்னாநாற்பது நூலால் போதரும். ஆதலின் உலகநீதி யாசிரியர் ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்’ என்ற நடையை நூன் முழுதும் கையாள்வார். வேண்டா என்ற வினை வடிவே பழைய மரபு. இவரோ ‘வேண்டாம்’ என்ற வினை முற்றையாண்டும் ஆளுகின்றார். வேண்டாம் என்பது வேண்டா ஆம் என்பதன் மரூஉ. மருந்தென வேண்டாவாம் (942), பணியுமாம், அணியுமாம் (978) என்ற திருக்குறள் நடையில் ஆம் என்ற ஒரு துணைவினைமுற்று மற்றொரு முற்றின்மேல் வருவதைப் பார்க்கின்றோம். இங்ஙனம் வேண்டாவாம் என வந்த தொடர் வேண்டாம் என்று பிற்காலத்துக் குறுகிற்று. நெஞ்சறிவுறுத்தல் என்ற முறையில் அமைந்தது இந்நீதி நூல். குழந்தைகட்கு முழுதும் பொருந்திய நூல் என்று சொல்லா இயலாவிடினும், அவைகள் படிக்கும் எளிய ஒட்ட நடையில் இயங்குவது. கடவுள் வாழ்த்து கரிமுகனைப் பற்றி இருந்தாலும், மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே என்ற முருக வணக்கமே நூல் முழுதும் காணப்படுகின்றது. ‘அருந்தமிழால் அறுமுகனைப் பாடவேண்டி ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன் உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி’ என்பது ஆசிரியரின் வாய்மொழி ஆதலின் இவர் புறந்தொழா அறுமுக வழிபாட்டினர் என்பது தெளிவு. எனவே கரிமுகக் கடவுள் வாழ்த்து இவர் பாடலா என்ற ஐயத்திற்கு உரியதாகும். உலகநாதர் அறங்களை அழுத்தமாகச் சொல்லும் போக்கினர். அவ்வழுத்தம் காட்ட ‘ஒருநாளும்’ என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவர். ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் இவ்வாறு இன்னும் இச்சொல் பயிலும் அடிகள் பலவுள. புறஞ் சொல்லித் திரியவேண்டாம், பாராட்டித் திரிய வேண்டாம், கலகமிட்டுத் திரியவேண்டாம் என்றபடி திரிய என்ற செயவென வினையெச்சம் பயின்று வரக் காணலாம். சிறிய நூலாயினும் புதிய அறங்கள் இல்லாமல் இல்லை. நடைமுறைக்கு வேண்டும் அறங்கள் நடைமுறை மொழியில் ஓட்டமாகச் சொல்லப்பட்டுள. வாழாமற் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம் மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம் இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம் கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம் அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் வேண்டாம் என்பது இலக்கண முறையில் வினை முற்றாக இருந்தாலும் ஆசிரியரின் ஓர் உணர்ச்சி மெல்லிழையாக அதன்கண் ஓடிக்கிடக்கின்றது. வேண்டாம் வேண்டாம் என்று அடிதோறும் வரும் அச்சொல்லில் நெஞ்சே நீதிக்குப் புறம்பாகப் போகாதே என்று தன் நெஞ்சைப் பரிந்து வேண்டிக் கொள்வது போன்ற பணிவுணர்ச்சி புலனாகவில்லையா? தன் நெஞ்சையே விளித்து அதற்கொரு நெஞ்சிருப்பதுபோல் வைத்து ‘நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்’ என்று வேண்டும்போது, ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ (293) என்ற குறள் மணத்தை நுகர்கின்றோம். ஒளவையார் ஒளவை என்பது யாரும் அறிந்த முதுதமிழ்ப் பெயர். இப்பெயருடைய பெண்புலவர் வழிவழிச் சிலர். சங்க ஒளவை வேறு, ஆத்திசூடி ஒளவை வேறு என்பது தெளிவு. எனினும் அறஞ்சொல்லும் புலமை இருவரிடமும் உண்டு. சங்க காலத்தில் அறங்கள் பிறகருத்துக்களோடு விரவிவரும். அறத்திற்கென்றே தனிப்பாடல் செய்யும் மரபு அரிது. புறநாநூற்றில் ஒருசில தனி அறப்பாடல்களே உள. நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம் - 187) என்ற அறச் செய்யுள் ஒன்றினை யாத்தவர் ஒளவையார். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற பழமொழியை ஆடவர் எவ்வழி நிலம் அவ்வழி என்று புதுக்குவர்; எவ்விடத்தும் உழைத்தால் உயர்வுண்டு என்று நிலங்கடந்த அறம் கரைவர். சங்க ஒளவையும் குழவிமனம் கொண்டவர். அதிகமான் முன்னர்த் தம்மைக் குழந்தை நிலையில் வைத்துப் பாடியவர். யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா பொருளறி வாரா வாயினும் தந்தையர்க்கு அருள்வந் தனவாற் புதல்வர்தம் மழலை என்வாய்ச் சொல்லும் அன்ன (புறம். 92) ஆத்திசூடியின் ஒளவையார் தமிழ் இலக்கிய வுலகில் புதிய பாதை வகுத்தவர்; குழவிகட்கென்றே இலக்கிய வடிவு கண்டவர். அவர்கட்கு வழி வழி தமிழமுது ஊட்டி வரும் அன்னையாவார். ஆத்திசூடி கொன்றைவேந்தன் மூதுரை நல்வழி என்ற நாற்சுவடிகளும் இலக்கண இலக்கிய நெறியில் தனியாய்வுக்கு உரிய எனினும் பொதுப்பட்ட சில சிறப்பினை இவண் காண்போம். ‘கற்க கசடறக் கற்பவை’ என்ற வள்ளுவர் கற்கவேண்டும் நூல்களின் பெயர்களை விதந்து குறிக்கவில்லை. குழந்தைகட்கு இன்னின்னவை கற்கவேண்டும் என்று சுட்டிக் காட்டுபவர் ஒளவையார். துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத்தமிழ் மூன்றுந் தா. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். சங்க இலக்கியமும் அறநூல்களும் சமய நூல்களும் கற்கத் தக்கவை என்று வழிப்படுத்தியிருப்பதை அறிகின்றோம். அதற்கேற்ப இந்நூல்களின் கருத்துக்கள் ஒளவை அற நூல்களில் மலிந்து கிடக்கின்றன. ஒளவை நூல்களைக் கற்றாலே பழம் பனுவல்களின் அறிவும் சொல்லும் நிரம்பக் கிடைக்கும். ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்ற புறநாநூறு (189) ‘உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்’ என்ற நல்வழியில் வருகின்றது. கற்பு என்பதற்குக் கல்வி என்ற பொருள் சங்க இலக்கியத்து உண்டு. ‘தொலையாக் கற்ப’ என்பது பதிற்றுப் பத்து (43). அளவிட முடியாத கல்வியுடையவனே என்பது பொருள். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்’ என்ற மூதுரையில் கற்பிலா என்ற தொடர் கல்வியில்லாத என்று பொருள் படுதல் காண்க. திருக்குறட் கருத்துக்கள் ஒளவை நூல்களில் பலப்பல. சில சுருக்கமாகவும் சில விளக்கமாகவும் உள. மருந்தேயாயினும் விருந்தோடுண், முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும். நோன்பென்பது கொன்று தின்னாமை என்ற கொன்றைச் செய்யுட்கள் குறள் வழிப்பட்டவை. ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ என்ற (490) குறளையும், ‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு’ என்ற மூதுரையையும், ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ என்ற (595) குறளையும் ‘நீரளவே யாகுமாம் நீராம்பல்’ என்ற மூதுரையையும் ஒப்பிட்டுக் காண்க. இனைய காட்டுக்களால், கற்பதற்கு உரியவை என்று மொழிந்த நூல்களின் கருத்துக்களைத் தழுவியே ஒளவையார் தம் அறநூல்களை யாத்துள்ளார் என்பது பெறப்படும். ஆதலின் ஒளவை நூல்களைச் சார்பு நூல்கள் என்று கூறலாம். ‘அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே’ என்பது (1292) தொல்காப்பியம். அதன்படி எதுகைமோனை முதலிய தொடையழகுகளை ஓரடிக்குள் யாத்து மகிழ்வதே மிக்க சங்கத்திறன். அடிதோறும் எதுகைமோனை தொடுப்பது சங்கப் பின் வளர்ச்சி என்று கருத வேண்டும். பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல வுதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க (அகம். 86) இந்த எட்டடிகளிலும் அடியளவில் வேண்டிய எதுகை மோனை இசை நயங்களே உள. அடியுள் சீர்தோறும் தொடை விகற்பங்கள் உள்ளன. ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் சங்க யாப்புப் போன்றன எனவும் தொல்காப்பிய உரியியலின் ஓரடியமைப்பைப் பின்பற்றுவன எனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பிற்கால இலக்கணிகள் வெண்பாவையும் கட்டளைக் கலித்துறையையும் விருத்தத்தையும் இலக்கணப் பாவாகப் பயன்படுத்தக் காண்கின்றோம். அம்மாற்றத்தை யொப்ப, இலக்கணத்துக்கு உரிய நூற்பாவை அறஞ்சொல்லும் இலக்கியப்பாவாக முதன் முதலில் பயன்படுத்திக் காட்டினார் ஒளவையார். தொல்காப்பியம் - உரியியல் 1. வெம்மை வேண்டல் 2. பொற்பே பொலிவு 3. உயாவே வயங்கல் 4. மழவுங் குழவும் இளமைப் பொருள 5. விறப்பும் உறப்பும் வெறிப்பும் செறிவே 6. நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை ஆத்திசூடி - கொன்றைவேந்தன் 1. ஆறுவது சினம் 2. கேள்வி முயல் 3. நூல்பல கல் 4. ஏவா மக்கள் மூவா மருந்து 5. கீழோ ராயினும் தாழ வுரை 6. புலையும் கொலையும் களவுந் தவிர் கலம்பகம் தூது பிள்ளைத் தமிழ் உலா கோவை போல ஆத்திசூடி என்பதும் சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாகவும் குழந்தை இலக்கிய வரலாற்றுக்குத் தோற்றுவாயாகவும் பெருமை பெற்றுள்ளது. பாப்பா பாட்டுப் பாடிய பாரதியார் புதிய ஆத்திசூடி எழுதினார். பாரதிதாசனார் ஆத்திசூடிகள் இரண்டு எழுதினார். இங்ஙனம் ஆத்திசூடியியக்கம் பரவிவரக் காணலாம். மேற்கூறிய ஏழிளந்தமிழும் சிறிய நூல்கள் என்று பெரும் புலவர்கள் ஒதுக்கவில்லை. அகநாநூறு சிலப்பதிகாரம் மணிமேகலைக்கு உரை கண்ட பேராசிரியர் வேங்கடசாமி நாட்டார் இவ்விளந் தமிழுக்கும் உரையாசிரியர் ஆவர் என்பது நினையத்தகும். ‘ஙப்போல் வளை’ என்ற சூடியின் பொருளை இன்றும் விளக்க முடியாமல் விழிக்கின்றோம். ‘இலவம் பஞ்சிற்றுயில்’ என்பதன் பொருள் என்ன? இலவம் பஞ்சாலான மெத்தையில் படுத்துறங்கு என்பது பொதுப்பட்ட பொருள். இஃது பலர்க்குப் பொருத்தமான அறம் அன்று என்பர் பாரிகாதை பாடிய மகா வித்துவான் இராகவையங்கார். இலவம் பஞ்சு போலத் துயில்க என்பது இவர்தம் பொருள். இன் என்பது ஒப்புப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமையுருபு எனவும் சிறு காற்று வீசினும் பஞ்சு அசைவதுபோலச் சிறு அரவம் கேட்டாலும் விழித்துக் கொள்ளும் மென்துயில் வேண்டும் எனவும் இவர் விளக்கம் தருவர். உறக்கம் துயில் என்ற வினைச் சொற்களுக்கு உள்ள வேறுபாட்டை நினைத்து இப்பொருள் செய்வர். பாரதியார்க்கு ஒளவை கூறும் அறத்தில் தனிப்பற்று உண்டு. ‘சாதியிரண்டொழிய வேறில்லை என்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்’ என்று யாவரையும் உட்படுத்தி அழைக்கின்றார் பாரதிப்பெருமகன். இச் சுவடிகள் சிறு பருவம் தொட்டே கற்பிக்கத் தக்கன என்று எண்ணிய ஆறுமுகநாவலர் கீழ் வகுப்புக்களில் இவற்றைச் செய்யுட் பாடநூலாக அமைத்தார். அதனால் சிறு நூலாயினும் ஒரு நூலை முழுதும் கற்றல், பிரித்தும் புணர்த்தும் பயிலல், அருஞ்சொற் பொருள் அறிதல், யாப்பு மனம் பெறுதல், வரப்பண்ணி ஒப்பித்தல் முதலான பல மொழிக் கூறுகள் ஈரத்தடம்போலக் குழந்தைகள் அறிவில் பதியலாயின. நம் முன்னோர்கள் திண்ணைப் பள்ளிகளில் இச்சிறு முது நூல்களை முறையாகப் பயின்று குன்றாத் தமிழொலியும் குறையாத் தமிழறிவும் வளமான தமிழடிப்படையும் வாய்த்தி ருந்தனர். முதுமையிலும் இளங்கல்வியை நினைந்து நினைந்து வாழ்ந்தனர். இத்தொல் மரபுப்படி ஏழிளந் தமிழ் மீண்டும் தொடக்கப் பள்ளியில் முழுநூலாக இடம் பெறுவதாகுக. பெற்றால், இலக்கிய அளவிலே இயல்பான இலக்கணத்தினை நம் சிறார்கள் பெற்று விடுவர். மொழித்திறம் ஊற்றுப்போல் பத்து வயதிற்குள் படிந்து விடும். மருத்துவம் கற்கும் மாணவர்கள் உலகத்து உடல்களை யெல்லாம் அறுத்துப் பழகிப் பார்ப்பதில்லையே. யாரும் அங்ஙனம் அறுவை செய்து காட்டுவதில்லையே. சில உடல்களில் மெய்யிலக்கணங்களைக் கற்றுக்கொள்ப. ஒரு சில எடுத்துக்காட்டுக்களில் உண்மையறிதலே அறிவியல் முறை. அதுபோலத்தான் மொழியுடலும், சில இலக்கணங்கள் தாம் எல்லாச் செய்யுட்களிலும் பரவிக் கிடக்கின்றன. ஒவ்வொரு பாட்டுக்கும் தனிப் புணர்ச்சி விதியும் பிரிவு விதியும் இல்லை. ஒவ்வொரு பாடலுக்கும் தனி எழுத்து அசை சீர் அடி தொடைகள் இல. மொழிக்கும் அறிவியல் முறை உண்டு. ஏழிளந்தமிழ் ஒழுங்காகக் கற்பிக்கப்பட்டால், முன்னேற்றல் என்ற பெயரால் ஒவ்வொரு செய்யுளையும் மரங்கொல் தச்சன்போலப் பிரித்துப் பதிக்கும் வேதனையும், கேவலம் ஒரு நூலைப் பிரித்துப் பதித்து இரு கூறாக்கும் போலிச் சாதனையும் ஒழிந்துமாயும் என்பதும் உண்மையான தமிழ் வேலி வளரும் என்பதும் என் துணிபு. 16. திருக்குறளும் தம்மபதமும் தமிழ்க்காப்பியம் எல்லாம் ஒவ்வோர் குறிக்கோட்பரப்பு நோக்கி எழுந்தனவே. எனினும் பல காப்பியங்கள் வெளிப்படை யாகவே தத்தம் சமயவியக்கத்தை முன்னிட்டுத் தோன்றியவை. கதை நாட்டமும் கற்பனையோட்டங்களும் இருந்தாலும் இப்பனுவல்களில் சமயக் கொள்கைகள் யாண்டும் வலியுறுத்தப் படுகின்றன. சமயநெறிச் சொற்கள் விளக்கம் பெறுகின்றன. பாத்திரங்களைச் சமயத் தூதுக்களாக வைத்து இலக்கிய வடிவங்களில் நூலியற்றுவது இக்காப்பியர்களின் நோக்காகும். இவற்றுள் மணிமேகலை துறவு எனப்படும் மணிமேகலைக் காப்பியம் முழுதும் பௌத்தம் தழுவியது. பௌத்தத் தமிழ்க்காப்பியச் சாத்தனார் தம் நூலுள் திருக்குறட் கருத்துக்களையும் தொடர்களையும் நிரம்ப ஆளுவர். பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி எனவரும் மணிமேகலைப் பகுதி உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு என்ற குறளின் மறு தோற்றமாகும். இளங்கோவடிகள் ‘முற்பகற் செய்தான் பிறன்கேடு’ எனத் திருக்குறளைச் சாயல்படத்தான் எடுத்தாண்டார். சாத்தனாரோ தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பெய்யில் புலவன் பொருளுரை தேறாய் என்று திருக்குறளை யாப்பாங்கு எடுத்தாண்டதோடு தமிழிலக் கியவுலகில் முதன் முதலாகத் திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் என்ற சிறப்புப் பெயராற் பாராட்டினார். திருக்குறட் கடவுள் வாழ்த்தில் வரும் பகவன், அறிவன், அறவாழி, அந்தணன், பிறவிப் பெருங்கடல் முதலான பல தொடர்கள் மணிமேகலை ஆட்சி பெறுகின்றன. திருக்குறள் பௌத்தச் சார்பினது எனச் சாத்தனார் கருதியிருப்பாரோ என்று எண்ணுதற்கு மணிமேகலைக் காப்பியச் சொல் வரவுகள் சான்றாகின்றன. திருக்குறளைப் பௌத்தப் பனுவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்ற ஆய்வுக்குச் சாத்தனார் முன்னோடியாக விளங்குவர். இக்கட்டுரைக்கண் திருக்குறட்கும் புத்தபெருமானின் தம்மபதத்துக்கும் அறஞ்சொல்லும் நடையொற்றுமைகளைக் காண்போம். ‘தம்மபதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நூல் தமிழ் மறையாகிய திருக்குறள்’ என்று தம்மபத மொழி பெயர்ப்பாளர் இராமசாமி கூறுவர். இரு நூல்களிலும் காணத்தகும் ஒப்புமைகளுள் பத்தினை அட்டவணைப்பர் அறிஞர் திருநாவுக்கரசு. தம்மபதம் கருத்துடைமை, சிந்தனை, மலர்கள், பேதை என்றவாறு 26 இயல்களும் 421 பதங்களும் கொண்டது; புத்தரின் சமயக் கோட்பாடுகளைத் தெளிவாகவும் அழுத்த மாகவும் உவமைச்சுவை தோன்றவும் கூறுவது; இரட்டைச் செய்யுள் அமைப்பினது. அஃதாவது ஒவ்வோர் அறக்கருத்தும் இருசெய்யுட்களில் நிறைவுபெறும். அத்தொடர்ச்சிக்குக் காரணம் எதிர்மறைக் குறிப்பாலும் உடன்பாட்டாலும் கூறும் நெறியேயாகும். மனமாசுகள் நீங்காமல் எவன் அடக்கமும் உண்மையும் இல்லாதவனோ அவன் சீவரவுடைக்கு அருகனல்லன் (9) மனமாசுகள் நீங்கி எவன் எல்லாப் பண்புகளிலும் நிலைத்து நின்று அடக்கமும் உண்மையும் உள்ள வனோ அவனே சீவர வுடைக்கு உரியவன் (10) செய்கையாற் காட்டாமல் ஒருவன் வாயால்மட்டும் மதுரமாகப் பேசுதல் அழகும் நிறமும் அமைந்த மலர் மணமற்றிருப்பதுபோலப் பயனற்றதாகும் (51) சொல்லியவண்ணம் செயல்புரியும் ஒருவனுடைய மதுரமான பேச்சு அழகும் நிறமும் அமைந்த மலர் மணம் பெற்றிருப்பதுபோற் பயனளிப்பதாகும் (52) இவ்வாறு மனத்தூய்மையும் சொற்செயலும் பற்றி இருமுகத்தால் வரும் இரட்டைப்பதங்கள் தம்மபத நூலில் பலவுள. ஒரு பதத்துள்ளேயும் இருமுகம் வாராமல் இல்லை. கருமிகளே தேவர் உலகை நண்ணுவதில்லை மூடர்களே ஈகையைப் போற்றுவதில்லை ஆனால் ஞானி ஈகையில் இன்புற்று மறுபுலகிலும் நலம் அடைகின்றான் இவ்வொரு பதத்தில் தீமையும் நன்மையும் உள. இருபதமாகுக, ஒருபதமாகுக, எதிராகவும் நேராகவும் கூறும் இணைநெறியை இந்நூலிற் பரக்கக் காண்கின்றோம். இந்நெறிமை திருக்குறளில் பல அதிகாரங்களிலும் உள. அதிகாரத் தலைப்புக்கூட, கல்வி, கல்லாமை; செங்கோன்மை, கொடுங்கோன்மை; பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினஞ் சேராமை; ஊக்கமுடைமை, மடியின்மை; இரவு இரவச்சம் என்று இருமை வகைபட வருதலும் உண்டு. நட்பினை ஐந்ததிகாரம் விதிமுகத்தானும் பன்னிரண்டதிகாரம் எதிர்மறை முகத்தானும் கூறுவர் திருவள்ளுவர் என்பதனைப் பரிமேலழ கரும் குறிப்பிட்டுள்ளார். தம்மபதம் போலத் தீமை நன்மைகளை இரட்டைச் செய்யுளாக அமைக்காவிட்டாலும் இன்ன அறத்தைச் செய்வதால் வரும் நன்மைகள் இவையென ஒரு பாங்காகவும் செய்யாமையால் வரும் குற்றங்கள் இவையென மறுபாங்காகவும் திருக்குறள் தொகுத்துக் கூறுகின்றது. எனவே உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் கூறும் தம்மபத நடை நெறியைத் திருக்குறளிற் காணலாம். செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலா தார் (26) இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை (50) ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி (137) நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் (138) சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். (200) வசையொழிய வாழ்வாரே வாழ்வார்; இசையொழிய வாழ்வாரே வாழா தவர் (240) பொருளற்றார் பூப்பர் ஒருகால்; அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது (248) முயற்சி திருவினை யாக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் (616) பணியுமாம் என்றும் பெருமை: சிறுமை அணியுமாம் தன்னை வியந்து (978) இவ்வாறு வரும் இருமுகக் குறள்கள் பலவுள. இந்நடை யின் பயன் செய்யத்தக்கது இது, செய்யத்தகாதது இது என்பதனை ஒருங்கு நினைவுபடுத்துவதாகும். நன்னெறியும் அல்நெறியும் கலந்திருக்கலாம் என்று எண்ணுவார்க்கும் ஒழுக்கமும் இழுக்கமும், பயன் சொல்லும் பயனிலாச் சொல்லும், இசையும் வசையும், முயற்சியும் மடிமையும், பெருமையும் சிறுமையும் கலந்திருக்கலாம் என்று அமைதி கூறுவார்க்கும் இதுதான் அறம் என்று மறுத்துத் தெளிவுபடுத்து வதும் இந்நடைப் பயனாகும். இந்நடையின்கண் தம்மபதத்துக்கும் திருக்குறட்கும் ஓர் நுண்ணிய வேறுபாட்டினையும் காணலாம். படைக்கப்பட்ட யாவும் துக்கமயமானவை எனவும் இருளே இவ்வுலகின் இயற்கை எனவும் நால்வகை வாய்மைகளுள் துக்கமே முதலுண்மை எனவும் என் பிள்ளைகள் என் செல்வம் என்ற சிந்தனை மூடமாம் எனவும் நம் உலகத்தையும் பிறப்பையும் துன்பப்பார்வை செய்வதும் முழுத்துறவு கூறுவதும் பௌத்தம். இல்லறவின்பங்களையும் உலகியல் வாழ்வுகளையும் தம்மபதம் குறிக்கவில்லை. ஆதலின் இரட்டைநெறியில், பெரும்பாலும் முதற்கூறெல்லாம் எதிர்மறையாகவே, தீமையைச் சுட்டுவதா கவே தம்மபத அமைப்பு உள்ளது. இவ்வமைப்பு பௌத்தக் கோட்பாட்டுக்கு ஏற்றது. பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பே ரின்பம் என்ற மணிமேகலையும் இப்பௌத்த அறநடையை ஆளக்காணலாம். திருக்குறளின் வாழ்வுக் கோட்பாடு இல்லறமும் துறவறமும் இணைந்தது; பாலின்பத்தை உரிய பருவங்களிற் போற்றுவது. ஐம்புலவின்பம் நன்கு முறையாகத் துய்க்கவேண்டும் என்பதற் காகவே காமத்துப்பால் பாடினார் திருவள்ளுவர். தம் பொருள் என்ப தம்மக்கள் எனவும் பெருமவற்றுள் நன்மக்கட்பேறே சிறந்தது எனவும் குழந்தைச் செல்வத்தை மதித்து ஓரதிகாரம் கண்டவர். ஆதலின் தம்மபதம் போல் இரட்டைமுக நடையை வள்ளுவர் மேற்கொண்டாலும், ஒழுக்கத்தால் மேன்மை எய்தலாம், அரியன செய்வார் பெரியர், முயற்சி திருவினைத் தரும், நாடென்ப நாடா வளத்தன, உள்ளம் உடைமை உடைமை, கண்ணோட்டத்துள்ளது உலகியல், சிற்றினம் அஞ்சும் பெருமை, அறிவுடையார் ஆவது அறிவார், அறிவுடையார் எல்லாம் உடையர், கண்ணுடையர் என்பவர் கற்றோர், தலைப்பட்டார் தீரத் துறந்தார், தவஞ் செய்வார் தங்கருமம் செய்வார், தோன்றிற் புகழொடு தோன்றுக, அடக்கம் அமரருள் உய்க்கும், அறத்தான் வருவதே இன்பம் எனப் பல குறள்களில் முதற்கண் விதிமுக நடைப்படுத்துவதை அறிகின்றோம். இவ்வொப்புப் பார்வையால் ஒருவர் கோட்பாட்டிற்கும் அவர் மொழி நடைக்கும் தொடர்பு உண்டு என்ற திறனியல் தெளிவாகின்றது. 17. தேசியமறை திருக்குறள் நம் பாரத அன்னை தேசியப் பாடல் உடையவள், தேசியக் கொடி உடையவள், மயில் என்ற தேசியப் பறவை உடையவள், பாடற் பண்ணைக் கேட்கும் போதும் கொடியுயர்வைப் பார்க்கும் போதும் மயிலாட்டத்தைக் காணும்போதும் பாரதத் தாயின் புகழோசையும் வானப் பெருமையும் இயற்கையழகும் நம் உயிரகத்து நாட்டுப்பற்றை உரத்தோடு வளர்க்கின்றன. பாடல், கொடி, பறவை இவற்றோடு தேசிய நூல் என அறிவுப்பனுவலும் சேர்ந்தால், பாரத மக்களின் எண்ணங்கட்டு ஆக்கமான பற்றுக்கோடு கிடைக்கும். பாடல், கொடி, பறவை போலச் சின்னமாக இராமல் மக்கட்கு உள்ளொளியும் ஒருமைச் சுடரும் பரப்பும் திருவிளக்காகத் தேசிய நூல் விளங்கும். பாரத மன்பதையும் ஆட்சியாளிகட்கும் உண்மை நெறிகாட்டி இடித்துரைத்து நேர்மைத் தடத்து இயக்கும் சான்றோன் போலத் தேசியநூல் வழி காட்டும். ஆதலின் அறமும் அறிவுஞ் சான்ற தேசிய நூல் ஒன்று பல்வகை வேறுபாடுமிக்க பாரதத் தாயின் அழுத்தமான ஒருமைப்பாட்டுக்கு இன்றியமையாதது. தேசியமறை வேண்டும் என்பது உடன்படத் தக்க கருத்துத் தான். ஆனால், ஒரு சிந்தனை. பாரதம் பன்மொழி வளம் உடைய நாடு; ஒவ்வொரு இந்திய மொழியிலும் பெருஞ் சான்றோர்கள் எழுதிய உயர்பனுவல்கள் பல உண்டு. எந்த நூலைத் தேசிய மறையாகக் கொள்வது? எப்படித் தேர்ந்தெடுப்பது? தேர்வுக் குரிய நெறிமுறைகள் என்ன? இவை சிக்கலுக்கும் கிளர்ச்சிக்கும் உரியனவல்லவா? ஆம், உரியனவே. பாரத மறை சிறிய பொருள்களைத் தேர்ந்து கொள்வதிற்கூடப் பல முடிச்சுக்கள் உள. மனித மனம் இயல்பாக ஓடுவதில்லை. மனிதவினங்கள் பலவாக, நோக்கங்கள் பலவாக, சார்புகள் பலவாக, எதிர்பார்ப்புக்கள் பலவாக வளர்ந்து அரிதிற்பட்ட இவ்வுலகத்து, இயல்பாக நடப்பது எதுவுமில்லை என்றாலும் வேற்றுமைக்கட்கிடையேதான் ஒற்றுமையைத் தேடிப் பிடித்து வாழ்ந்து வருகின்றோம். வாழவேண்டும், வளர வேண்டும் என்பதில் வளமார் நம்பிக்கை இருக்கும் வரை ஒற்றுமையின் நரம்பு நமக்குத் தென்படவே செய்யும். இந்திய விடுதலை வரலாறு காட்டும்உண்மையும் விடுதலைக்குப் பின் இந்திய வளர்ச்சி காட்டும் ஒளியோட்டமும் இதுவேயாகும். ஆதலின் தேசிய மறை ஒன்று இந்திய வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்ற கருதுகோளை நாம் முதற்கண் ஒத்துக் கொண்டுவிடில், அத்தகைய இந்திய மறையொன்று காண்பதில் ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகின்றேன். அமைப்பியல் தேசிய நூல் எங்ஙனம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு ஒரே ஒரு விதி போதுமானது. உரிமை இந்தியாவுக்கு அரசியலமைப்பு என்ற நிலைக்கலம் உண்டு. இது பாராளு மன்றம் கண்ட முடிவு. பாராளு மன்ற உறுப்பினர்கள் ஒத்துக் கொண்ட அமைப்பு. முப்பத்தேழு ஆண்டுகளாக இந்த அமைப்பியலையே இந்தியவியலாகப் போற்றி மதித்து நடைமுறை செய்து வருகின்றோம். உச்சநீதி மன்றம் வரை எந்த நிறுவனமும் இந்த அமைப்பியலுக்குக் கட்டுப்பட்டது. அடிப்படை உரிமைகளும் வழிகாட்டிக் கோட்பாடுகளும் கொண்ட நம் அரசியல் அமைப்பில் சமயச் சார்பின்மை, மன்னாயம், பொருளாதாரம், அரசியல் பற்றிய நலப் பாங்குகள் சொல்லப்பட்டுள. இது மாற்ற முடியாத உறுதிப்பாடு. ஆதலின் இந்திய நூல்களுள் எந்த நூல் நம் அரசியலமைப்புக் கோட்பாடு கட்கு ஒத்தியங்கி வருகின்றதோ அந்த நூலைத் தேசிய நூலாக ஏற்றுக்கொள்ளலாம். தேசிய நூலைத் தேர்வதற்கு அரசியல மைப்பே விதிமுறை. நம் அமைப்பியலின் விரிந்த பகுதிகளைக் காண்போம். 1. மன்னாயத்தில், பொருளாதாரத்தில்,அரசியலில் நீதி, தகுதிச் சமம், சட்ட வாய்ப்பு, எண்ணம், வெளிப்பாடு, நம்பிக்கை, மதம், வழிபாடு பணி, உறவு, செயல் இவற்றின் உரிமைகளைச் சட்டம் பொதுவொழுங்குக்கு உட்பட்டு இந்திய மக்கட்கெல்லாம் இந்திய அமைப்பு உறுதி செய்கின்றது. 2. நல்வள நாடு காணவும் தம்மதிப்பு வழங்கி அனைத்துக் குடிமக்களிடையே இயக்கவுறவு வளர்க்கவும் இவ்வமைப்பு முயல்கின்றது. 3. மக்களின் உரிமைகட்கும் தன்னுணர்வுகட்கும் காப்பாளி யாக முறை மன்றத்தைப் பொறுப்பாக்குகின்றது. 4. ஒவ்வொருத்தரின் வாழ்வும் தன்னுணர்வும் உடைமையும் காக்க அடிப்படையுரிமை விதிகள் முற்படுகின்றன. 5. முழுமையான சமயச் சார்பற்ற அரசையே அரசியல மைப்பு உறுதி செய்கின்றது. எல்லாக் குடிஞர்க்கும் மதம் வழிபாடு மனச்சான்றில் தன்னுரிமையுண்டு. மதம், நம்பிக்கை, சாதி, கொள்கை, பால் என்ற எந்த வேறுபாடு மின்றிச் சம ஆட்சி உரிமையும் எல்லாக் குடிமக்கட்கும் உண்டு. 6. மன்பதைக் குடிநலச் சமன்மை இந்திய அரசியலில் அடிமணையாகும். சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்று உறுதி செய்கின்றது. குடிமக்களிடையே மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் என்ற காரணத்தால் வேறு பாடு செய்வதை விலக்குகின்றது; பொதுப்பணியலுவல் நிலையில் சமவாய்ப்பினை அனைவர்க்கும் அளிக்கின்றது; தீண்டாமையை ஒழிக்கின்றது. 7. அமைப்புப் பாயிரம் பின்வரும் எழு வகை உரிமைகளை உறுதி செய்வது: அ. பேச்சுரிமை, கருத்து வெளியீட்டுரிமை ஆ. குழுக்கூட்டவுரிமை இ. தொடர்புரிமை ஈ. செல்லுரிமை உ. வசிக்குமுரிமை, தங்கு நிலையுரிமை ஊ. உடைமையுரிமை எ. பணி, வினை, வணிகம், தொழில் உரிமைகள். ஒவ்வொரு குடியாளின் திறன் வளர்ச்சிக்கு இவ்வேழு அடிப்படை உரிமைகளும் இன்றியமையாதவை என்க. 8. அமைப்பு வழித் தீர்வுரிமை ஒவ்வொரு குடிக்கும் உறுதி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடிமக்கள் அடிப்படை யுரிமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முறை மன்றங்களை அணுகலாம். மக்கள் நல்வாழ்வும் குறைதீர் முறையும் நம் அமைப்பி யலில் இருபெருங் கண்கள் என்று மேற்காட்டிய கோட்பாடுகள் உள்ளங்கை நெல்லிபோல் தெரியப்படுத்தும். அமைதியான இணக்கமான முறையில் சாதியற்ற வருக்கமற்ற பைஞ்ஞிலத்தை உருவாக்குவதே நம் தேசியக் கொள்கை என்று பண்டித சவகர்லால் நேரு வலியுறுத்தியிருப்பது உயர்ந்த கருத்தாகும். இதுகாறும் சுட்டிய அமைப்புக் கொள்கைகளிலிருந்து இந்தியாவுக்குத் தேசியநூலைத் தேர்வு செய்வது எவ்வாறு என்பது புரிந்துவிடும். நூற்றுக்கு மேலாக வழங்கி வரும் இந்தியச் செம்பனுவல்களுள் மதச்சார்பின்மை, சாதிச் சார்பின்னை, சமனியம், உரிமையம் தழுவிய நம் அரசியலமைப்புக்கு இணக்க மாகப் பொருந்தி வரும் பனுவல்கள் எவை என்று மதிப்பிடுங்கள்; நடுவுநிலைமையோடு சீர் தூக்குங்கள். எத்துணை நூல்கள் கிடைக்கின்றன என்று எண்ணிப்பாருங்கள். மதிப்பியல் ஈண்டு ஒன்றினை விழிப்பாகக் கருதிக் கொள்வது நல்லது. எப்பொருளும் தன் மதிப்பிற் குறைபாடு உடையதில்லை. ஒத்துப் பார்ப்பதால் குறைபாடுடையது என்று சொல்வதற்கும் இல்லை. இவ்வுடை தனக்குப் பொருந்தவில்லை எனின் நன்கு இன்னொரு வர்க்குப் பொருந்தும், இவ்வுணவு தனக்கு ஏலாது எனின் மற்றொருவர்க்கு ஏலும், இக்கைந்நாழி தனக்கு அழகு செய்யாதெனின், ஏனையோர்க்கு அழகாகும். இப்பெண் தன் பிறப்பேட்டிற்கு இசையாள் எனில் பிறர் பிறப்பேட்டிற்குப் பொருந்தும். அதுபோலவே சில பல நூல்கள் தேசிய நூல் என்ற பார்வைக்கு ஒவ்வா எனின், அவை உயர் நூல்கள் அல்ல என்பது கருத்தன்று. அவ்வாறு கருதுவது பேதமையாம். தொல் காப்பியம் சிலப்பதிகாரம் திருவாசகம் உயர் நூல்களே; எனினும் நம் அரசியலமைப்புக் கூறுடையனவல்ல. இப்போதுவியல்பை உணர்ந்து இக்கட்டுரையே இகலின்றிச் சிந்திக்கவேண்டும். சமயச் சார்பு வேதம், உபநிடதம், கீதை, இராமாயணம், பாரதம் என்பன உலகறிந்த இந்தியப் பெரு நூல்கள். காலங்கடந்து ஊழி தோறும் வாழ்வதனால் அவற்றின் உயிர்ப்பாற்றல் பெறப்படும். அவற்றின் பெருமையும் தாக்கமும் வாதாடுகளத்துக்கு உரியவை யல்ல. தேசிய நூல் என்ற அரசியலமைப்பு வட்டத்துக்கு இவை நெருங்கி வருமா என்பதுவே வினா. சமயச்சார்பின்மை நம் அரசியலமைப்பின் அகவிதி. இந்நிலை வேதமுதலான வைதிக நூல்கட்குப் பொருந்துமோ? வேறு எத்துணை வகைச் சிறப்புக்கள் இருப்பினும், சமயச் சார்பின்மை என்ற ஒரு கோட்பாடு இவற்றைப் புறப்படுத்திவிடுகின்றது. இந்தியாவின் மதம் இந்துமதம் ஆம் என்று ஒரு சமயம் துணிந்த அரசியல மைப்பு இருந்திருக்குமேல், வேத முதலியவற்றைத் தேசிய மறையாகக் கருதும் பெற்றியுண்டு. இன்றைய அமைப்பு நிலை அதுவன்றே. வேதங்கள், இந்து வைதிக சமயஞ் சார்ந்தவை என்ற கருத்தினை யாரும் விட்டுக் கொடுக்க உடன்படார்; உடன்பட்டாலும் வேதத்தின் உட்பொருளை மறைக்க முடியுமா? உபநிடதம், கீதை, இராமாயணம், பாரதம் என்ற தொல்பெரு நூல்களும் சமய முழு நூல்களே. இதனை உறுதிப்படுத்த மேற்கோள்கள் வேண்டா. அந்த நூல்களே வெள்ளிடைமலை. மீண்டும் சொல்லுகின்றேன். தேசிய நூல் என்ற வரை கோட்டிற்குப் பொருந்தாமையினால், நம் அரசியலமைப்புக் கோட்பாடுகளைச் சொல்லாமையினால், வேத முதலான மெய்யியல் நூல்கள் மதிப்புக்குன்றா. அவ்வத்துறையில் அவற்றுக்கு மரபான ஏற்றம் உண்டு. ஆத்திசூடி முதுகலை வகுப்புக்குப் பாடமாக இன்மையினால் அது கூறும் அற நெறிகள் தாழ்ந்தவை என்று சொல்வாருளரோ? சொன்னால் நகைப்பிடமாகும். வேதம் முதலானவை தேசிய நூலாகக் கருதவியலாமைக்கு முதன்மையான காரணம் ஒரு சமயச் சார்பாகும். இதற்கு மேல் விரித்து மேற்கோள் காட்டிப் பெருக்குவது நாகரிகமன்று. ‘எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது’ என்பது போல ஒவ்வொரு நூலும் சிறப்புப் பெறும் ஒரு துறையுண்டு. குறளமைப்பு நம் அரசியலமைப்பின் சமயச் சார்பின்மை, பிறப்பில் வேற்றுமையின்மை, சாதிப் பார்வையின்மை, பல்வேறு உரிமைகள், ஒத்த சமய நிலைகள், உழைப்பு வாய்ப்புக்கள், பொருட்பங்கீடுகள், அறங்கடவா முறைகள், அரசின் குறிக் கோள்கள், ஆள்வாரின் தகுதிகள், ஆட்சி செங்கோன்மைகள், ஆண் பெண்பாற் சமம், எல்லார்க்கும் கல்வி, நலிந்தோர் காப்பு, சட்ட நேர்மை, மன்பதையொழுங்கு, படைத்திறம், உழவின் சிறப்பு, வறுமையின்மை, குடும்ப இன்பநலம் எல்லாம் கூறும் இந்தியத் தொல் பெருநூல் நற்காலமாக ஒன்று உண்டு. ஈராயிரம் ஆண்டாக நம்மிடம் உண்டு. அந்நூல் அரசியல மைப்பின்படி, இந்தியப் பதினைந்து மொழிகளுக்குள் ஒன்றாக எண்ணப்பட்ட தமிழ் மொழியில் உண்டு. அதுதான் பொய்யில் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். இத்தகு பெற்றிமை நிறைந்த ஓர் இந்தியத் தமிழ்நூல் உண்டு என்பதனைப் பன்னூறாண்டுக் காலமாக வெளியுலகம் அறியும். தனிமறை, பொதுமறை, உலகமறை, உயிர்மறை, மக்கள்மறை, ஒழுக்கமறை, செயல்மறை என்று எண்ணிறந்த பாராட்டுச் சொற்கள் தமிழ் மறையான திருக்குறட்கு உண்டு. மேலை நாட்டறிஞர்களும், கீழை நாட்டறிஞர்களும் மக்களினப் பார்வையுடைய திருக்குறளின் பொதுத்தன்மையைப் போற்றினர், போற்றி வருகின்றனர். யார் தூண்டுதலுமின்றி ஞாலப்பன் மொழிகளில் திருக்குறள் பெயர்ப்பாகி வருகின்றது. இந்தியப் பழநூல்கள் எல்லாம் அவ்வுலக நோக்குடையன எனவும் திருக்குறள் ஒன்றுதான் இவ்வுலக வாழ்வுக்கு முதலிடம் கொடுப்பது எனவும் பேரறிஞர் குழாம் தெளிவு செய்கின்றது. தமிழில் எல்லாச் சமயக் காப்பியங்களும் திருக்குறளைத் தமக்குப் பொருந்திய நூலாக மேற்கொண்டு வரும் வரலாற்றை அறிவோம். ஒரு சார்பின்மை திருக்குறளின் கடவுள் வாழ்த்து அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க எண்குண வடிவாக இறைவனைக் காண்கின்றது. ஒவ்வொருவரும் இவ்வதிகாரம் தன் சமயம் கூறுவது எனக் கருதிக் கொள்ளுமாறு இறைத் தொடர்கள் போலிந்து தோன்று கின்றன. அயல் மதங்களான கிறித்தவமும் முகமதியமும்கூடத் தஞ்சமயக் கூறுகளை முதலதிகாரத்தில் பார்க்கின்றன. என்ன வியப்பு! கடவுள் இல்லை என்ற இன்மைக்கோளிகளும் இவ்வதி காரத்தை வரவேற்கின்றனர். இவ்வதிகாரச் சொற்கருத்துக்கள் சீர்திருத்தத் தந்தை பெரியார்க்கும் உடன்பாடு எனின், மக்களினத்தைப் பிறப்பால் வேற்றுமை செய்யாத மனித வினவொருமைப்பாட்டு மறை உலகத் திருக்குறள் என்பதற்கு மேலும் சான்று வேண்டுமோ? பன்னாட்டு மொழியறிஞர்களின் நூல்களிலிருந்து சமயவினச் சாதியற்ற திருக்குறளின் ஒருமைப் பார்வைக்கு மேற்கோள் காட்டுவதாயின், அது தனிக்களஞ்சியமாகிவிடும். குறள் தோன்றிய நாள்தொட்டே வேற்றுமை செய்யா இதன் பொது வீற்றினை அறிவுலகம் மதித்து வந்திருக்கின்றது. சமயக் கணக்கர் மதி வழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன் என்று கல்லாடம் அவ்வுலகம் பற்றிய சமயச் சார்பின்மையை யும், உலகியல் கூறிய மக்கட்பொது நிலையையும் தெளிவாக்கு கின்றது. ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி என்று திருவள்ளுவமாலை சமயங்கடந்த நிலையை எடுத்துக் காட்டுகின்றது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று தேசியமாக்கவி பாரதியார் பாடுவரேல், உலகிற்கே திருக்குறள் உரியது என்று பாடுவரேல் ‘திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும்’ என்று திறம்பாடுவ ரேல், உலகிற்கு ஒரு நூலான திருக்குறள் பாரதத்தின் தேசிய மறையாவதற்குத் தகுதிமிக்கதன்றோ? திருக்குறள் ஒருசமயம் வலியுறுத்தாத நூலாக இருந்தமை யின், இடைக்காலத்தில் அதன் செல்வாக்கு அரசியலில் ஏற்படவில்லை. களப்பிரர், பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், குறுநிலமன்னர் எல்லோரும் சமண சைவ வைணவ சமயங்களையும், அகச்சமயங்களையும் அரசு மதங்களாகத் தழுவிக் கொண்டனர். மதங்கள் காரணமாகப் பெரும் போர்களும் நிகழ்ந்தன. இந்நிலைக்கு அருட்பாசுரங்கள் அரசியற் செல்வாக்குப் பெற்றன. அருளாளர்கள் ஆட்சியில் பெரும்பங்கு கொண்டனர். ஆதலின் ஒரு சமயவூற்றம் இல்லாத, ஓரதிகாரத்திலேயே கடவுள் வாழ்த்தினை முடித்துக் கொண்ட திருவள்ளுவரையும், திருக்குறளையும் இடைக்கால ஆட்சிகள் ஒதுக்கிவிட்டன. எனினும் அதன் கருத்தாற்றலும், மொழியாற்ற லும், உலகவடிப்படையும் இலக்கியவுலகை விடாது அறிவாட்சி செய்து வந்திருக்கின்றன. திருக்குறளைத் தொடாத தமிழ்நூல் இல்லை. அப்படியிருப்பின் அது தமிழ்நூல் என்று மதிக்கப் பெறுவதில்லை. நற்பேறாக இன்று திருக்குறட்கு ஆள்காலம் வந்துள்ளது. 1950 ஆம் ஆண்டில் வரைவு பெற்ற சமயச்சார்பற்ற இந்திய அரசியலமைப்பிற்குத் தேசிய மறையாகும் பொருத்த மாக, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் திருக்குறள் தோன்றிக் கிடக்கின்றது. பாரதக் குறள் நாடு, அரசு, அரசின் நோக்கம், அரசின் உறுப்பு, இறைமை, அமைச்சு, நீதி, படை, ஆட்சி, நீதி, விளைவு, வருவாய், செலவு, மக்கள் நலம், கல்வி, தொழில் என்று நூற்றுக்கு மேற்பட்ட கூறுகளை அமைப்பியல் முறையில் தெளிவித்தி ருப்பது திருக்குறள். அன்று முடியரசு முறை இருந்தபோதிலும், அரசிலும், அமைச்சிலும், தூதிலும், பிறவற்றிலும் பரம் பரையைத் திருவள்ளுவர் இயம்பவில்லை என்பதனை நாம் நன்கு எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லார்க்கும் தகுதிவழி சுட்டியுள்ளாரே யன்றிக் குருதிவழி சொல்லவில்லை. பொருள் வழியோ, மதவழியோ, இடவழியோ கூறவில்லை. திருக்குறட் கோட்பாட்டினைச் சுளை சுளையாக அப்படியே தேன் கலந்து உரித்து வைத்தாற்போல நம் அமைப்பியற் பாயிரம் விளங்கு கின்றது. ‘திருக்குறளும் பாரத வமைப்பியலும்’ என்பது தனி நூலுக்கு ஏற்றபொருள். தேசியமறை திருக்குறள் என்பதற்குத் தக்காங்கு வேண்டுவன சில சொல்லி முடிப்பேன். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (423) என்பதால் எல்லார்க்கும் சிந்தனையுரிமையும், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு (392) என்பனால் எல்லா இருபாலார்க்கும் கல்வியுரிமையும், விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648) என்பதனால் குடிமக்கட்குப் பேச்சுரிமையும், அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (555) என்பதனால் பாதிக்கப்பட்டோர்க்கு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் உரிமைக் குறிப்பும், முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் (616) என்பதனால் உழைப்புரிமையும், ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை (541) என்பதனால் யாவர்க்கும் ஏற்ற நீதியுரிமையும் திருக்குறள் வழங்கும் உரிமை வள்ளுவங்களாம். அதிகாரந்தோறும் நுணுகிப் பார்ப்பின், குடிமக்களின் உரிமைப்பாடுகளும், அவர்கள் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைப்பாடுகளும் புலப்படும். கள்ளுண்ணாமை, சூதாடாமை, வரைவின் மகளிர் முதலான அதிகாரங்களால் அரசுக்குரிய மக்கட் சீர்திருத்தத் திட்டங்களும், மருந்து என்ற அதிகாரத்தால் மக்கள் உடல் நலங்காணும் ஒழுங்கு முறைகளும் திருக்குறள் வெளியிடும் வாழ்வுச் செம்மை வள்ளுவங்கள், நாடு என்ற அதிகாரத்தில், உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு (734) பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு (735) என்ற குறட்கள் ஆட்சியாளர் கொள்ள வேண்டிய வளமார் நோக்கங்களைக் காட்டுகின்றன; இன்று நம்மை அச்சுறுத்தும் பயங்கரப் போக்குக்களையும் சாதி, சமய, இனக்கலவரங்களால் திடீரெனக் கிளம்பும் ஆர்ப்பாட்டங்களையும் கண்டிக்கின்றன. இவையில்லாமல் எல்லா மக்களும் உரிமையுணர்வோடு நடமாடுவதே நாடு என்று வலியுறுத்துவது திருக்குறள். தேசிய மறைக்குத் திருக்குறளைக் காட்டிலும் தகுதியான நூல் வேறுண்டோ? தமிழர் கடன் வட மொழியிலோ இந்தியிலோ திருக்குறள் போலும் ஒரு நூல் இருந்தால் இதுவரை தேசிய மறையாகி இருக்கக்கூடும். தேசிய மறையாக வேண்டும் என்ற உணர்வாவது பெருகி யிருக்கக் கூடும். அதனாலென்ன? இந்திய மொழிகளுள் தமிழும் ஒன்றல்லவா? அது உலகளாவிய ஒரு இந்திய மொழியன்றோ! தேசிய கீதம் இந்திய மொழிகளுள் ஒன்றான வங்காளத்தில் இருக்கும்போது, தேசியமறை இந்திய மொழிகளுள் ஒன்றான செந்தமிழில் இருக்கலாமன்றோ? இவ்வாறு ஒவ்வொரு இந்திய மொழிக்கும் மையவரசில் ஒரு பெரும்பேறு வழங்கப்படுமாயின், இந்தியவொருமைப்பாடு புத்தொளி பெறும், புதுவன்மை பெறும். தேசிய மறையாகத் தக்க திருக்குறள் தமிழில் உண்டு என்று எடுத்துச் சொல்வதும் மையவரசு எற்றுக்கொள்ளச் செய்வதும் தமிழர் தம் கடமையாகும்; உள்ளது கூறுவது உரிமையுமாகும். 18. நிகழ்காலப் பார்வை திருக்குறள் பாரத நாட்டின் தேசிய மறையாகக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுவதற்குத் தமிழ்பற்றுக் காரணமில்லை. மக்கட் கணக்கில் உலகில் இரண்டாவது பெருநாடான பாரதம் எதிரிகட்கு வல்லரசாகவும் ஒன்னார் களை வெல்லரசாகவும் குடிகட்கு நல்லரசாகவும் வளர்ந் தோங்கி ஞாலமதிப்புப் பெறல் வேண்டும் என்ற நாட்டுப்பற்றே நம் தலையாய நோக்கமாகும். தூய பெருஞ் சிந்தனைகள் கொண்ட அறிவு நூல் வழிகாட்டியானால், நாடு வலுப்பெறும், ஆட்சியாளர்கள் தம் குற்றங் குறைகளை உணர்வர், குடிமக்கள் ஒழுங்கும் வளமும் எய்துவர். திருக்குறள் தேசிய மறையாக ஒத்துக்கொள்ளப்படுவதால், அந்நூலுக்கு முன்பில்லாத தனிப்பெருமை கூடிவிடப் போவதில்லை. முன்னரே திருக்குறள் நூற்றுக்கு மேலானவர்க்கு மொழிகளில் பெயர்க்கப்பட்ட சிறப்புடையது. இதனால் உலக இந்திய மொழியான தொல் தமிழுக்கும் கூடுதலான பெருமை சார்ந்துவிடப் போவதில்லை. ‘என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான்’ எனப் பெருங்காப்பியக் கம்பர் பாடியபடி, அகத்தியன் என்பானும் தொல் முதுபழங் காலத்தே தமிழ் கற்றுப் புகழடைந்தான். தொல்காப்பியம் சங்கவிலக்கியம் திருக்குறள் சிலப்பதிகாரம் பல்சமயக் காப்பியங்கள் திருவாசகம் முதலான நிலைச் செல்வங்களைப் பெற்றெடுத்த தமிழன்னைக்குத் திருக்குறள் தேசிய மறையாவதால் எக்களிப்பு உண்டாகாது. பாரதியின் சொற்படி வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து முன்னரே வான் புகழ்கொண்ட தமிழ்நாடு. எது தேசியமறை? நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று வீண்மை பேசுபவர்கள்தாம் தேசியக் கொடி, தேசியப் பறவை, தேசியப் பாட்டுப் போதும் என்று வாளாவிருப்பர். கொடி முதலியன அறிவூட்டுமா? செவ்வழிகாட்டுமா? சிந்தனை தூண்டுமா? அறிவுக் களஞ்சியமான சால்புநூல் தேசிய மறையானால் அன்றோ, எண்ணங்கள் வளரும், செயல்கள் பெருகும், ஆக்கங்கள் பரவும். நம் அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு ஏற்ற நூல்தான் தேசிய மறையாகக் கொள்ள முடியும். சமயச் சார்பின்மை, சமனியம், குடியொருமை, உரிமைப்பாடுகள் கழறும் நூல்தான் தேசிய மறையெனக் கருதப்படும். நாமறிந்த அளவில், திருக்குறள் ஒன்றே மிக்க பொருத்தமுடையது. வேறு இந்திய நூல்கள் இருந்தால், அரசியலமைப்போடு ஒத்திட்டுப் பாருங்கள். திருக்குறளினும் மிகுந்த தகுதியானது என்றால், தேனைத் தேசிய மறையென விதிப்போம். இதில் நமக்கு இகலில்லை. எப்படியும் தேசிய மறைவேண்டும் என்பதுவே நம் உள்ளக்கிடக்கை. திருக்குறட் கண்கள் திருக்குறள் தேசியமறை ஆகுக; பிறிதொருநூல் ஆகுக. எவ்வாறாயினும் பாரதநாட்டின் பல்துறை வளர்ச்சிக்கும் ஆக்கச்சிந்தனைக்கும் நடுநிலையான ஆட்சிக்கும் குடிமக்களின் நல்லுறவுக்கும் எல்லாம் வழிகாட்டும் ஆற்றல் திருக்குறட்கு உண்டு. நம் அரசியலமைப்பின்கண் கோட்பாடுகளும் நெறிமை களும் ஆட்சிப் பிரிவுகளும் உரிமை வரம்புகளும் மாநிலவுறவு களும் முறை மன்றவமைப்புக்களும் இன்னபிறவும் உளவேயன்றி, ஆக்கத் திட்டங்கள் இல; சிந்தனையூற்றுக்கள் இல; எதிர்காலப் பார்வைகள் இல. அமைப்பியற் கோட்பாடுகளைச் செயற்பாடு ஆக்குவதற்கு வேண்டும் சிந்தனைப் பாதைகளையும் வளத் திட்டங்களையும் சொல்லப் பிறந்தது திருக்குறள். ஆதலின் நிகழ்காலத்தில் இந்தியாவின் மேம்பாட்டிற்குத் தேவையான சில கருத்துக்களைத் திருக்குறட் கண்கொண்டு பார்ப்போம். திருக்குறள் அறத்திற்காக வெற்றென அறந்தொடுக்கும் அடுக்கு நூலன்று. நடைமுறைச் செயல் நோக்கில் நிகழ்கால நடப்புக்களை முன் வைத்து வினையியக்கம் சாற்றும் இயக்க நூல். பழைய நிகழ்வுகளை மொழிந்த வரலாற்றுக் கதை நூலன்று; நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லாது நடக்க வேண்டிய நிகழ்வடிவங்களைக் காட்டும் ஆக்கநூல் ஆதலின் நாட்டின் இன்றைய நடப்புக்களோடும் மக்களின் இன்றைய வாழ்வுப் போக்கோடும் மன்பதையின் இப்பொழுதைய நடவடிக்கைக ளோடும் திருக்குறள்களை ஒட்டி உராய்ந்து பொருத்திப் பார்மின். நடப்பு நிகழ்ச்சிகளைத் திறன்செய்ய நாம் அஞ்சு கின்றோம். யார் என்ன நினைத்துக் கொள்வரோ என்று நிகழ்வுத் திறனாடப் பின் வாங்குகின்றோம். உரை விளக்கம் காண முனைகின்றோமே யன்றி, நம் கண்முன் நடக்கும் நடப்பியலைத் திருக்குறட்கு எடுத்துக்காட்ட மடிகின்றோம். பாரத இராமாயண இதிகாச மாந்தர்களையும் புராணத் தேவர்களையும் அவ்வுலகப் புனைவுகளையும் கொண்டு, இவ்வுலக வாழ்வு அறைந்த திருக்குறட்கு விளக்கஞ் சாற்றி வருகின்றோமேயன்றி, இப்பைஞ்ஞிலத்தில் நம் கண்ணெதிரே நடந்துகொண்டிருக்கும் நிகழியங்களையும் நடக்க வேண்டிய முன்னேற்றங்களையும் திருக்குறளோடு பொருத்திக் காட்டும் அறிவும் துணிவும் இன்னும் நமக்குப் படவில்லை. உரைகளுக்கு அப்பால் நின்று உலக நடக்கையொடு திருக்குறளை வைத்துக் கணித்துச் செயல்படக் காணும் நிகழ் பார்வை இனியாவது பிறக்குமாக. இவ்வகையில் இற்றைப் பாரத நிகழ்ச்சிகளில் வைத்துத் திருவள்ளுவரின் சிந்தனைகளைத் தெளிந்து காண்போம். இந்திய முன்னேற்றங் கட்கு எவ்வண்ணம் வள்ளுவங்கள் உதவுவ என்ற நேர் காட்சியை அரசியல் நடப்பில் பொருத்தியுணர்வோம். இந்தியா வல்லரசு அயல்நாட்டு உறவுகளில் ஓர் அரசுக்கு இளக்காரமில்லாத ஏற்றமும் ஒத்த செல்மதிப்பும் தருவது படை வலிமையும் போராண்மையும் ஆகும். அமெரிக்கா, உருசியா, பிரிட்டன், பிரான்சு, சீனா போல இந்தியாவும் ஒரு வல்லரசாகி ஐ.நா.வின் காப்புக் குழுவில் இதுகாறும் வல்லிடம் பெற்றிருக்க வேண்டும்; தடுப்பொளி கொண்டதாக விளங்கியிருக்க வேண்டும். உரிமை பெற்று நாற்பதாண்டுகளாகியும் வல்லரசாக வேண்டும் என்ற உயரெண்ணம் இந்திய ஆட்சியாளர்க்கும் இல்லை; பாரதர்கட் கும் இவ்வெண்ண முனைப்புத் தோன்றவில்லை. ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற திருக்குறட்படி வல்லரசாகும் மேலெண்ணமே இல்லாதபோது, ஒரு நாடு தன் தகுதிக்கேற்ப எண்ணத் தெரியாதபோது, தன் பரப்புக்கும் குடித்தொகைக்கும் உரிய மானநிலையினின்று கீழிறங்கியபோது ஏனைய நாடுகள் பாரதத்தைச் சில்லரசுகளுள் ஒன்றாகத்தான் சிற்றினமாகத்தான் கருதுகின்றன. வல்லரசோடு இனமாக உலக வரலாற்றில் எண்ணப்படவேண்டும் என்ற முனைப்பின்றி, இலங்கை, பங்களாதேசம், பாகித்தான், நேபாளம், மாலத்தீவு இவற்றோடு கூட்டொருமை சேர்ந்தால், ஓரடிக் குள்ளனும் எட்டடி நெடியனும் இனமான கேலிதான். ‘இனம்போன்று இனமல்லார் கேண்மை’ என்ற குறட் சூட்டுக்கு இந்தியாவா எடுத்துக் காட்டாக வேண்டும்? உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து (680) பெரிய வல்லரசாக இருந்தால், சிறிய நாட்டினர் அஞ்சி அமைதியுடன்பாட்டிற்கு வந்து வீழ்வர் என்பர் அரசியற் பேராசான் திருவள்ளுவர். இதற்கு நேர்மாறாகப் பாரத வரசு நடந்து கொண்டு வருகின்றது. இலங்கைக்குக் கச்சத்தீவை விட்டு கொடுத்ததும், நம் எல்லை நெடுக முள்வேலி போடப் பங்களாதேசம் மறுப்பதும், பாகித்தான் நம்மேல் இருமுறை படை தொடுத்ததும், நினைத்தபோதெல்லாம் காசுமீரத்தைச் சிக்கலாக உலகவரங்கில் கிளப்பிக் கொண்டிருப்பதும், நேப்பாளம் சீனாவோடு நெருக்கமாக உறவாடுவதும், சீனா திபேத்துப் பகுதியைப் பிடித்துக் கொண்டதோடு அருணாசல மாநிலவுரிமை கொண்டாடுவதும், பாகித்தானும் மேலை நாடுகளும் பஞ்சாபின் கொடியவர்கட்குப் பயிற்சியளிப்பதும், இலங்கை தமிழினப் படுகொலையில் மேலும் மேலும் இந்தியவுறவை அலைக்கழித்து வருவதும் இன்னோரன்ன அரசு வட்டாரப் போக்குகள் பாரத நாட்டின் நிலைக்கு உகந்தனவல்ல. பாரதம் பற்றிப் பக்கத்து நாடுகட்கு அச்சம் என்பதில்லை. யானை ஏதும் செய்யாது, இது கோயில் யானை என்று பன்றிக்குட்டிகள் விளையாடுகின்றன. துதிக்கையையும் மருப்பையும் தடவிப் பார்க்கின்றன. யார் தாக்கினாலும் பாரதம் ஓலமிடும்; எல்லாம் பேச்சு வார்த்தையில் முடித்துக் கொள்ளலாம் என்று அமைதிக் குரல் பேசும்; வன்முறையால் தீர்வு காண முடியாது என்று பறைசாற்றும்; ஒருக்காலும் முந்துற்றுத் தாக்காது; பிற நாடு தாக்கினாலும் தன்னைக் காத்துக்கொள்ளும் அளவே எதிர்த்தாக்குச் செய்யும்; இந்த இந்தியக் கருத்தெல்லாம் ஏனை நாடுகட்கு ஆத்திசூடியாயின. ஒரு நிகழ்ச்சிக்கு இந்திய என்ன கதைக்கும் என்பது உலக அரசியல்பாதிகட்கு முன்கூட்டியே மனப்பாடம். பாரதம் பரப்புக்கும் குடித்தொகைக்கும் ஏற்ப வலுவுடைய நாடில்லை; அதட்டி அறைகூவும் ஆதிக்க முனைப்பும் ஆட்சியாளர்க்கு இல்லை; உள்ளதைக் காத்துக்கொண்டாற்போதும் என்ற அடக்கவாதிகள் என்பது அரசியலுலகில் கல்வெட்டாயிற்று. யானைக் காலன் கதையே நம் வலியாகும். இருவகை யறங்கள் தனி மனித அறம் வேறு, ஆட்சியறம் வேறு; வீட்டறம் வேறு, நாட்டறம் வேறு; வீட்டுக் காப்பு வேறு, நாட்டுக் காப்பு வேறு; தனிப் பெருமை வேறு, அரசுத் தண்டனை வேறு; இவ்வுண்மைகளைத் திருக்குறள் அறத்துப்பாலிலும் பொருட் பாலிலும் தெளிவுபட விதிக்கின்றது. தன் குடி மக்களின் நலத்திற்காக, தன் நாட்டின் வளத்திற்காகப் பகைகளை எப்படி ஒடுக்க, அடக்க, ஒழிக்கவேண்டும் என்ற சூழ்ச்சிகளை அரசியல் நூலான திருக்குறள் வெளிப்படையாகப் பகர்கின்றது. பகைமாட்சி, பகைத்திறந்தெரிதல் என்ற இரண்டு செய்கையும் திருக்குறள் பிறவாத பல அயல்நாடுகட்குப் புரிந்திருக்கின்றது. சாணக்கியமும் திருக்குறளும் கீதையும் பிறந்த பாரத நாட்டினர்க்குப் புரியவில்லை. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேல் மேக பகை (861) வலியாரை எதிர்க்காதே; நோஞ்ச சமயம் பார்த்து மெலியாரை நன்றாகத் தாக்கு, பகைத்துக்கொள் என்பது அரசு வள்ளுவம். பக்கத்துச் சிறிய நாடுகள் பாரதத்தை இவ்வாறுதான் தாக்குகின்றன, பயமுறுத்துகின்றன. சித்திரப் புலியாக நம்மைக் கருதிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு இளக்காரங்கள் கொடுத்துவிட்டோம் என்ற நாணங்கூடத் தோன்றவில்லை நமக்கு. நாம் விடுதலை பெற்றபின், இந்தியாவின் உட்பகுதியான ஐதராபாத்தைச் சுற்றி வளைத்துத் தாக்கி வாகை சூடிய ஒன்றல்லது, பக்கத்து நாடுகளின்மேல் வெட்டும் புலிபோல் நாம் பாய்ந்த வஞ்சி வரலாறு உண்டா? பாயும் என்ற அச்சமாவது பக்கத்து நாடுகட்கு உண்டா? மூன்றாமவர் தலையீடின்றி எந்தச் சிக்கலையும் கலந்துரையாடலில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று எப்போதும் இந்தியத் தலைவர்கள் கிளி போலவும் பதிவுச் சுருள் போலவும் சொல்வார்கள் என்பது உலகறிந்த பள்ளிச் செய்தி. படை வலிமை அணுக்குண்டு முதலான நுண் படைகள் செய்யும் நுட்பவாற்றல் எங்கட்கு உண்டு; இவற்றை ஆக்க வல்ல அறிவியல் வல்லுநர்கள் எம் நாட்டில் உளர்; ஆனாலும் உலகவமைதி நோக்கி இந்தியா இவற்றைச் செய்யாது; அழிமயப் படைகளால் உலகம் அழியாது காப்பதே எங்கள் நாட்டின் வேதக் குறிக்கோள் என இவ்வாறு நாடாளும் நம் பாரத முனிவர்கள் நாளும் சொல்லுகின்றனர்; எங்குச் சென்றாலும் சாற்றுகின்றனர்; எந்த உலகவரங்கிலும் முரசறைகின்றனர். இஃது ஒருபாலாக, பாகித்தான் அணுக்கருவி செய்கின்றது; அதற்கு அமெரிக்க உதவுகின்றது; இன்னும் பல்வகை ஆயுதங் களை அமெரிக்கா பன்னூறாயிரம் கோடி தாலரில் வழங்கு கின்றது; இப்படி உதவுவதெல்லாம் இந்தியாவைப் பாதிக்கும்; பாகித்தானுக்கு அமெரிக்க ஆயுதங்கள் வழங்கிச் சமநிலையைக் கெடுக்கக்கூடாது என நம் ஆட்சியினோர் அமெரிக்காவை வேண்டுகின்றனர், பேச்சு நடத்துகின்றனர். நாம் கெஞ்சக் கெஞ்ச அமெரிக்கா அதிகவளவில் நுண்ணடு படைகளையும் எச்சரிக்கை வளிதாங்கிகளையும் பாகித்தானுக்கு மேன்மேலும் வலிந்து அள்ளிக்கொட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கின் றோம். நம் படைவன்மை கண்டு பாகித்தான் முறையிடுவதற்கு மாறாக, பாரதப் பெருநாடு முறையிட்டு அமெரிக்காவிடம் மனுநீதி கேட்பது நாட்டுக்கே அவமானம், பேரவமானம். இதற்குத் திருக்குறள் அன்றே என்ன சொல்லி வைத்திருக் கின்றது? சிந்திப்போம், செய்வோம். வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு (878) எவ்வகையால் எல்லாம் நாட்டை வலிமைப்படுத்த வேண்டுமோ அனைத்தும் செய்து வன்மை பெருக்குக; வலிமிகுத்து நாட்டைக் காக்க; இவ்வாறு முற்பட்டால் வகைபரின் ஆதிக்க முனைப்பும் தாக்கச் செருக்கும் தானே மாய்ந்தொழியும் என்று துணிவாகச் சாற்றுவர் அரசியலறிஞர் திருவள்ளுவர். வலியை மிகுத்துக் கொண்டால், எதிரிக்கு உன் நாட்டைப் பற்றி இளக்காரம் தோன்றாது; வேறு பக்கம் பார்ப்பான் என்பது இதன் கருத்து. இரு வல்லரசுகளும் நாற்பதாண்டுகளாக அணுக்குவியல் வைத்திருப்பதால் அழியாவுலகம், பாரதம் அணுவாயுதம் செய்வதால், ஒன்றி ரண்டு செய்து வைத்துக் கொள்வதால் அழிந்துவிடுமா? இவற்றைச் செய்தால் இந்தியாவின் நிதியாற்றல் தாங்காதா? பங்களாதேசத்தின் பாரத்தைச் சுமந்த இந்திய மக்கள் இச்செலவைத் தாங்க மாட்டார்களா? வள்ளுவர் சொற்படி, பிரிவினைக் காலத்தும் பிறாண்டும் பொறையொருங்கு மேல் வந்தபோது மானந்தாங்கிய நாடல்லவா? பாரதம் அணுவாயுத வல்லரசாக ஓங்கி நிமிர வேண்டும் என்று யான் வலியுறுத்துவதன் நோக்கம், அண்டை நாட்டைக் கைப்பற்றுவதற்கன்று; ஆட்சியாதிக்கம் செய்வதற்கன்று; எதிரிகளே அடங்கியிருங்கள், வாலை இந்தியத் திசை நோக்கி நீட்டாது சுருக்கிச் சுருட்டிக் கொள்ளுங்கள் என்று எச்சரிப்பதே யாகும். மல்லினாற் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்பால் வில்லினாற் சொல்லி னல்லது வெந்திறல் வெள்கச் சொல்லினாற் சொலக் கற்றிலம் யாம். என்று இலக்குவன் லல்லாண்மை பேசியபடி, பாரதம் போர்த் துடிப்பு மிக்கது என்பதனை முன்கூட்டியே உணரச் செய்வதற் கேயாம். ‘மேவற்க மென்மை பகைவரகத்து’ (877) எனத் திருக்குறள் பகைவர்க்கு இளக்காரம் கொடுப்பதைக் கண்டிக்கும், சோரம் போகாதே என்று இடிக்கும். இடங்கொடேல் திருக்குறட் பொருட்பாலை நிகழ்கால நடப்போடு வைத்துப் பார்க்குங்கால், இந்தியா கடைப்பிடிக்கத் தவறிய, இனியேனும் கடைப்பிடிக்க வேண்டிய அயல்நாட்டுக் கோட்பாடு புலப்படும். உலக மதிப்பு என்று பொய்ம்மானம் கருதியும், அமைதி அமைதி என்ற அளவுக்கு மீறிப்பறை சாற்றியும், பேச்சு வார்த்தையே எங்கள் தீர்வுமுறை என்று ஓயாது கூறியும் வருவதனால், எதிரிகட்கு நம்மைப் பற்றிக் குளிர்விட்டுப் போயிற்று. சிக்கலின் தொடக்கத்திலேயே எதிரிகளை நாம் உணர வைப்பதில்லை. இடைக்காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் வலிமையை வளர்க்குமாறு இடங்கொடுத்துக் கொண்டிருப்பதே நம் இன்னா அயல்முறை யாயிற்று. இலங்கைத் தமிழர் இனப்படுகொலையில் இலங்கை யதிபரும் அமைச்சர்களும் நம் அரசு கூப்பிட்டபோதும் கூப்பிடாத போதும் ஓடிவந்த காலம் ஒன்றுண்டு. பின் என்னா யிற்று? நம் அமைச்சர்கள் மாறி மாறி இலங்கையதிபரைக் காண வானிற் பறந்த நிலையைக் கண்டோம். வாலை விட்டுத் தும்பையும் நழுவவிட்ட கதையாயிற்று. இப்போது இலங்கைக் கொடுமை முன்னையினும் மக்கள் மேல் குண்டுகள் வீசும் கடுமையாகிவிட்டது. இந்தியா விடுதலை பெற்றபோதுதான் பாகித்தானும் தனி நாடாக விடுதலை பெற்றது. அதன்படை வலிமை இன்று நம்மை விதிர்விதிர்த்து மலைக்கச் செய்கின்றது. நம் பரப்பளவில் நான்கில் ஒரு கூறான பாகித்தான் வலிமை கண்டு, அந்த வலிமைக்கு இடங்கொடாதே என அமெரிக்கா விடம் பரிந்து கேட்கின்றோம். தூது மூலமும் அமைச்சர்கள் மூலமும் வேண்டுகோள் செய்கின்றோம். யார் யாருக்குப் பயப்படுவது என்பது மாறிக்கிடக்கின்றது. இளைதாக முள்மரம் கொல்க; களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து (879) என்ற ஒரு குறளையேனும் பாரதத் தலைவர்கள் விடுதலை பெற்றஞான்று படைச் செயற்படுத்தியிருந்தால், வல்லரசுகள் வல்லரசான இந்தியாவைக் கெஞ்ச வேண்டியதிருக்கும்; எதிரிகளைத் துளிர்க்கும்போதே வற்றச் செய்யாமல், பேச்சு வார்த்தைகளை நீட்டித்துக் கொண்டேயிருந்தமையால் பக்கநாடுகள் வைரம் பெற்றன. படை முதன்மை படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (381) என்ற குறள் எந்த நாட்டு அரசியல்வாதிகளின் சிந்தனைக்கும் உரியது. அமெரிக்காவும் உருசியாவும் மீவல்லரசுகள் என்று உலகம் ஒப்புக்கொள்வதற்குக் காரணம் என்னை? மக்கட் பெருக்கமா? செல்வப் பெருக்கமா? பழமைச் சிறப்பா? நாகரிகக் கலைப் பெருமையா? உலகத்தையே ஒரு நொடியில் நூழில் ஆட்டவல்ல நுண்திண்படை மீவலிமையே காரணம். அதனாலன்றோ படையாண்மையைக் குறைத்துக் கொள்ள அவை அஞ்சுகின்றன. ஏனை நாடுகளும் இவற்றுள் ஒன்றைச் சார்ந்திருப்பதன் ஏது அவற்றின் படைத் துணையன்றோ? இவ்விரு வல்லரசுகளும் சிலவகைப் படைக் குறைப்புக்கு நெருங்கி இன்று உடன்பாடு காண வந்தாலும், அதற்குப் பின்னும் மிக நுண்ணிய அழி படைத்திறன்கள் மறைவாக அவற்றிடம் இருக்கவே செய்யும். தன் சமனிலை கீழ்ப்படுமாறு அவை தாழ்ந்து பின் போகா என்பது தெளிவு. எனவே, வல்லரசு என்பதற்கு ஒரே பொருள் படை வலிமை மிக்க நாடு என்பதே. மேலே காட்டிய படைத் திருக்குறள் இதனை வலியுறுத்தும். அரசுக்குரிய ஆறு உறுப்புக்களுள் முதற்கண் எண்ணப்படுவது படை. அயல்நாட்டுக் கொள்கையில் ஒரு நாட்டின் வலிவும் மெலிவும் படை மதுகையைச் சார்ந்தது. வள்ளுவர் அறைந்த இம் முதலுண்மையை வல்லரசுகளும் போற்றுகின்றன. பாகித் தானும் தமிழ் வள்ளுவத்தை உறுதியாகப் பின்பற்றுகின்றது. பாகித்தான் அதிபர் படைத் தளபதியாதலால், அமெரிக்காவின் வாய்ப்பைப் பெற்றுப் போராண்மையை வேக வலுப்படுத்திக் கொள்கின்றார். அதனால் உருசியாவும் அண்மைக்காலத்தில் பாகித்தானை மிக்க நட்பாக்கிக் கொள்ள முயல்கின்றது. இதுவே பயன் காண் அரசியல். பண்டை மறம் முற்காலப் பாரதத்தில் ஆட்சியாளர்களாக இருந்தோ ரெல்லாம் பெண்கள் உட்பட வீரர்களாக விளங்கினர். போர்க்கலைகள் அவர்கட்கு முதற்கலையாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன. தொன்மை இந்திய நூல்கள் அனைத்தும் இதற்குச் சான்றாவன. கீதையருளிய கண்ணனும் போர்ப்பறந் தலையில் பாத்தசாரதியாக இருந்தவனே. கீதையின் உட் கருத்தினை அறிஞர்கள் பலவாறாக இயம்பினாலும், உற்றாரை எதிரிகளாகக் கண்டு அன்பும் இரக்கமும் கசிந்த அருச்சுனனைப் போர் செய்யத் தூண்டிய கடமையைக் காட்டியது கீதைப் பெருநூலே. வில்லினை யெடடா - கையில் வில்லினை யெடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா வாடி நில்லாதே - மனம் வாடி நில்லாதே - வெறும் பேடியர் ஞானப் பிதற்றல் செய்யாதே எனத் தேசியக்கவி பாரதியார் கீதையை மறக்கீதையாகக் காண்கின்றார். வில்லினைக் கீழே போட்டுவிட்டுத் தேரில் உட்கார்ந்த அருச்சுனனுக்கு, ‘உயிர் அழிவதில்லை’ யாராலும் கொல்லப்படுவதில்லை. யார் யாரையும் கொல்லவியலாது’ என்று கண்ணபெருமான் மிகப் புதிரான ஒரு மெய்ம்மையை விரித்துரைக்கின்றார். ஏன்? மறம் இன்றேல் உலகில் அறம் தழைக்காது. மன்பதையில் போருணர்ச்சி குன்றினால் தீயவர்களின் கொடுஞ்செயல்கள் பெருகிவிடும். பண்டைத் தமிழகம் அறத்திற்கு நிகராக மறத்தையும் போற்றியது. உலகச் செயல்களைக் காதற் கூறாகவும் மறக் கூறாகவும் கண்ட தமிழ்ச் சான்றோர் அகத்திணை புறத்திணை என இருவகையிலக்கியம் பாடினர். சங்க காலத்தில் காதல் மாந்தர்கள் வேலும் வாளும் ஏந்திய மறவோராகவும் வாழ்வு நடத்தினர். வீரத் தாய்மார்களின் மறவுணர்வைப் புறநாநூறு சிறுகதையாகப் பாடும். செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமக னல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே இப்புறநாநூற்றில் குடும்ப முழுதும் படைப்பயிற்சி பெற்று நாடு காக்கப் போர்க்களம்புக்கு மடிந்த வீரச் செய்தியைக் கற்கின்றோம். தன் பெருங் குடும்பத்து ஆடவர் என்பார் அனைவரும், தந்தை அண்ணன் தம்பி கணவன் பால்குடி மறந்த சிறுமகன் எல்லோரும் பொருகளத்து எதிரிகளை அழித்துத் தாமும் மாள்வதையே தமிழ் மகள் காதலித்தாள். வீட்டுப் பற்றிலும் நாட்டுப் பற்றே அவள் நோக்கம். ‘ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே’ என்ற பொன் முடியார் செய்யுளில் போர்க்களம் செல்வதற்காகவே மகனைப் பெறுகின்றோம் என்ற தமிழ்த் தாயரின் பூட்கை தெளிவாகும். இத்தகைய மறக் குடிகளை மூதின் முல்லை எனவும் இல்லாண்முல்லை எனவும் புறத் தமிழிலக்கணம் பாராட்டும். கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தார் என்னையர் - பின்னின்று கையோய்க் கணையுதைப்பக் காவலன் பின்னோடி எய்போற் கிடந்தானென் ஏறு என்ற புறப்பொருள் வெண்பாமாலை ஒரு மறக் குடும்பத்தின் முழுத் தியாகத்தைப் பெருமிதமாகப் பாடுகின்றது. இல்லற நங்கையவள் ஒவ்வொருவராக இறந்தார்களே, எனக்குச் சோறு போடுவார் யார் என்று ஒப்பாரி வைக்காமல், மாரடிக்காமல், என் மகன் முள்ளம்பன்றி போல எங்கும் வேல் பாய்ந்து போலிந்து கிடக்கின்றான் என ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அவனை ஈன்ற ஞான்றினும் உவகையடைகின்றாள். அதனாலன்றோ, கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி என்று தமிழினக் குடிகள் மலைமேற் பிறக்கும்போதே, உடன் பிறப்பாக வாளோடும் மறத்தோடும் தோன்றின என வரலாறு முரசறையும். எங்கும் மறவுணர்வு நம் இந்தியப் பெரு நாட்டிற்கு இன்று ஒருதலையாக வேண்டிய ஒருணர்வு மறவுணர்வு. எல்லா இளைஞர்க்கும் போராண்மைப் பயிற்சி வேண்டும். இமய முதல் குமரி வரை மறவுணர்ச்சி பரவுமாறு கல்வித் திட்டம் வழி செய்யுமாக. ஆண்மைத் திறனும் மறநாட்டமும் பரவினால், இன்று மிகுந்து காணப்படும் பயங்கரக் கூட்டம் ஒழியும். நம் இளைஞர்களின் ஆற்றல் மறநெறிப் படுத்தப்பட்டால், கரைக்குள் அணைக்குள் அடங்கிய வெள்ளம்போல, நாட்டுக்குப் பயனும் ஆக்கமும் தரும். இளையோரின் ஆண்மைக்கு நல்ல போக்கிடம் காட்டாமை யாற்றான், அன்னோர் உணர்ச்சி திரிந்து அறிவு இரிந்து பயங்கர அங்கணத்துள் விழுகின்றனர். வெறும் ஏட்டுக்கல்வி புரையோடி விட்டது. மறமும் ஆண்மையும் சான்ற கல்வியே இன்றைய இந்தியாவின் வலிமையைப் பெருக்கும். வல்லரசின் நலங்கள் நம் பாரதம் வல்லரசாகும் தகுதியெல்லாம் உடையது; வரலாற்றை நோக்கினால் வல்லரசாக இருந்த பொற் காலங்கள் உண்டு. வல்லரசாக வேண்டும் என்ற எண்ணம் இல்லாமையே நம்மைப் பிடித்திருக்கும் பெரும்பீடையாகும். இக்காலத்து நுட்பம் மிகுந்த படைப்பெருக்கத்தால், அயல் நாட்டுறவிலும் உள்நாட்டு முன்னேற்றத்திலும் பல நன்மாற்றங்கள் ஏற்படும். வல்லரசு என்ற நிலைக்கு உயர்ந்தால், உலக வரலாற்றில் இன்றும் எதிர்காலத்தும் இந்தியாவுக்குப் புதிய மதிப்பு ஏற்படும். வல்லரசுகளும் இந்தியாவைப் பார்க்கும் அரசியல் நாட்டம் ஏற்றமாக இருக்கும். படைப்பெருக்கம் என்பது கேவலம் ஆயுதப் பெருக்கமட்டுமன்று, அதனால் நுழைபுலங்கள் சான்ற அறிவியல் துறைகள் நாட்டின் நாலு திசைகளிலும் பெருகும். பேரறிவாளி களும் இளைஞர்களும் புத்தார்வம் கொண்டு ஆக்க அறிவியற் கண்டுபிடிப்பில் ஈடுபடுவர். அறிவியல் நாட்டம் பரவினால், பல்வேறு மூடவேட்கைகள் குறையும். அண்மைக் காலமாக இந்திய மக்கட்குத் திடீரெனக் கோடியன் ஆகலாம் என்ற பரிசுச் சீட்டு வேட்கை, வீணே காலங்கழிக்கும் இராசிபலன் வேட்கை, மனம் மெலிவிக்கும் தாழ்ந்த திரைப்பட வேட்கை என்றிவையெல்லாம் கூடி வருகின்றன. பாரதநாடு இடைக்காலத்தில் அடிமைப்பட்டு அல்லலுற்றதற்கு ஒரு பெருங்காரணம் அவ்வுலக முத்திப் பற்றாகும். மக்களின் அறிவும் ஆரவாரமும் முத்தித் திசை திரும்பி மேனோக்கிச் சென்றதால், சமயம் என்னும் பெயரால் வேள்விகளும் சடங்குகளும் வெள்ளக்காடு போல் பெருகிய தால், நாட்டுப்பற்றும் இவ்வுலக நோக்கமும் குறைந்து போயின; ஆண்மையும் ஆள்வினையும் மறவுணர்வும் பழுதடைந்தன. இக்கருத்தினை ஒரு சாரார் உடன்படார் என்றாலும், அவ்வுலக வீட்டுப்பற்று நாட்டுப்பற்றை மிகவும் மழுக்கிவிட்டது என்று நான் நம்புகின்றேன். மறுபடியும் சில ஆண்டுகளாகச் சமய ஆரவாரங்களும் சமயப் பூசல்களும் வேள்வி விழாக்களும் அளவிறந்து சமய மறுமலர்ச்சியாகத் தோற்றி வருவது கண்டு, இப்பழம் போக்கு பாரத நாட்டிற்கு மறைமுகக் கேடுதருமோ என்று கவல்கின்றேன். விடுதலைக்குப் போராடிய ஒரு நூற்றாண்டுக் காலத்தில் சமயச் சடங்குகளும் அவ்வுலக முத்தி நாட்டமும் அடங்கிக் கிடந்தன என்பதனை இந்திய விடுதலை வரலாறு காட்டும். நாட்டு விடுதலையும் மக்கள் ஒற்றுமையும் நோக்கி நம் உரிமைப் போர்த்தலைவர்கள் சமயப் போக்குக்களைத் தலைதூக்காமல் வழிப்படுத்தினர் என்பதனையும் நாம் வரலாறு சான்றாக அறிவோம். ஆதலின் அவ்வீட்டுப் பற்றைக் குறைத்து இந்திய நாட்டுப்பற்றைத் தூண்டும் நல்லுணர்வை உடனடியாக வளர்ப்பது இன்றையத் தேவை. வல்லரசாகும் புதுக் குறிக்கோளோடு படைபெருக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தால், நம் இளைஞர்கள் பண்டை மறவர்கள் போல நாட்டன்பு கொள்வர்; சமய வினப்பூசல்கள் கொடிகாட்டிப் பறக்காமல், தேசநாட்டம் முதன்மையாகும். பஞ்சாப்பு முதலான பகுதிகளில் தொல்லை தரும் பயங்கரக் கொடுமைகள் வேரற்று அழியும். முனைப்பைச் சிதைத்தல் மீண்டும் இரு குறட்களைப் பாரதத்தின் நிகழ்காலப் பார்வையாகச் சிந்தித்து இக்கட்டுரையை முடிப்பாம். படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (381) கட்டுரையின் தொடக்கத்தேயும் இக்குறள் காட்டப் பட்டது. நாட்டின் ஆறு உறுப்புக்களுள் படைவலிமை முதன்மைத் தலையாயது என்பது மட்டும் கருத்தன்று. குடிகள் நலம், பொருளாதார வளம், ஆட்சித் திறன், அயலுறவுப் பெற்றி, எல்லைக்காப்பு என்ற ஏனையைந்தும் படைவலிமைக்கு உட்பட்டவை என்ற முழு வட்டமும் இதனால் உணரத்தகும். படை மாட்சியின்றேல் ஏனை மாட்சிகள் சிறவா என்பது திருக்குறள் வலியுறுத்தும் அரசுக் கோட்பாடு. செறுநர்களைப் படையியக்கிப் போராடித் தொலைப்பது வெற்றியாயினும், அந்த அளவுக்கு இடங்கொடுக்கலாகாது என்பதும் நம்மேல் ஒரு கை பார்க்கலாம் என மாற்றார் எண்ணத் தொடங்கும் ஆணவத்தை அரும்பிலேயே கிள்ளி யெறிவதுதான், தொட்டாற்சிணுங்கி போல ஒன்னாதார்தம் இகலுணர்வைத் தாமே பின் வாங்கிக் கொள்ளுமாறு அச்சங்காட்டி வைப்பது தான் அரசியல் வெற்றி என்பதும் திருக்குறள் கற்பிக்கும் பாடம் ஆகும். உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார் (880) மேவலர் தம் படை வகுப்பைச் சிதைப்பதற்குமுன், முந்துற்று, படையெடுக்க விழையும் அவர் தம் கூரான வீறாப்பையும் இறுமாப்பையும் செம்மாப்பையும் சிதைக்க வேண்டும். இதுவே கலங்கா ஆட்சி வாழ்வு தரும் என்ற முன்நோக்கு வள்ளுவம் இந்திய ஆட்சியாளர்க்கு இன்றியமை யாதது. இதுவரை இவ்வாறு ஒரு நிகழ்ச்சியிற்கூட நம் அரசு நடந்து காட்டியதில்லை. சில திங்கட்கு முன் பாகித்தான் மேற்கெல்லைகாறும் படையணியைக் குவித்து நன்னடை செய்தபோது, எதோ ஒருவகை மறந்தோன்றி, நாமும் இராசத்தான் மண்டலத்து நம் நடையாளர்களைப் பெருந்தொகையாகச் சேர்த்தோம். இதன் பயன் என்ன? உடன்பாடு ஏற்பட்டு இரு பக்கமும் பின்வாங்கின. இந்த நொச்சிப்போக்கு வள்ளுவர்க்கு உடன்பாடில்லை. அவர் சொற்படி, பாகித்தான் சூழ்ச்சியை ஒற்றரால் முன்னரே மோப்பம்பிடித்துப் பாரதம் படைத் தொகையை எல்லைக்கண் முன்பே நிறுத்தியிருந்தால், நம் படைத்தகை கண்டு பாகித்தான் துணுக்குற்றிருக்கும். அதன் போருயிர்ப்புச் சிதைவுபட்டிருக்கும். ஆனால் நாம் ஒத்துக்கொண்டாலும் கொள்ளாவிடினும், அரசு வள்ளுவங்களைப் பாகித்தானும் ஏனை அயல்நாடுகளும் கடைப்பிடித்து வருவதைக் காண்கின்றோம். நாம் சோரம் போகிக் கொண்டேயிருக்கின்றோம். இது ஆட்சி முறை இல்லை. இகழ்வான புகழ் நம் தலைவர்களின் ஓயாத ஒழியாத இடைவிடாத உலகவமைதிக் குரலால், மறப்போராண்மையுணர்வு நம் பொது மக்களிடத்தும் இளைஞரிடத்தும் குன்றிய அளவோடு நிற்கவில்லை; நிலம் நீர் வான் எனும் முப்படைஞரிடத்தும் தளபதிகளிடத்தும் நாட்டுக்காப்பு துறைஞரிடத்தும் எல்லை மறவோரிடத்தும் மறவுணர்வு குறைந்து, அறவுணர்வும் அறமொழியும் வளரக் காண்கின்றோம். இது பாரத நாட்டின் அவலக்காட்சி, அழகில் காட்சி, அன்பில் காட்சி என்பதை உணர்வார் இல்லை; உணர்த்துவாரும் இல்லை. இந்தியத் தலைவர்கள் வேத காலத்திலிருந்து உலகவமைதியைக் காக்கப் பிறந்தவர்கள் எனப் பலநாடுகள் நம் தலைவர்களைப் புகழ்ந்து முடிசூட்டுவதால், அப்புகழ்க்கடலில் மக்களும் திளைத்துக் கிடப்பதால், அயலகக் கொள்கைகளில் விடுதலை பெற்ற நாள் முதல் மாற்றம் என்பது இன்மையால், நம்மை நாமே மறித்துப் பார்க்கும் அறிவும் நமக்கு இல்லாமற்போய்விட்டது. இந்த இளக்கமான ஏமாற்றமான இளிவரலான அவலநிலையை இனிமேலும் நாம் உணர்ந்தால் நல்லது. இன்றேல் என்ன புதுவடிமை வருமோ? நினைக நினைக நினைக இந்தியா தலைமையான வல்லரசாக வேண்டும்; வல்லரசாக முடியும்; வல்லரசாகும் தகுதியுண்டு. இந்திய மக்கள் வழிவழி மறம் நிறைந்த வீரர்கள்; நாட்டிற்கு உயிர் வழங்க அஞ்சாத தீரர்கள்; உடல் வன்மையும் மனவன்மையும் பெருகிய சான்றோர்கள். இந்தியா பல வளமுடைய பெருநாடு; மக்கள் வளமும் இயற்கை வளமும் கொண்டது. எவ்வகைப் படைப் பெருக்கத்துக்கும் படைச் செலவுக்கும் ஈடு கொடுக்க வல்லது. நினைத்தால், வல்லரசு ஆகலாம்; அணுக்குண்டும் அதன் மேற்குண்டும் செய்யலாம்; நாடு முழுதும் மறவுணர்வு பெருக்கலாம். நினைத்தால், நுண் படையாயுதங்களையும் வான்படையூர்திகளையும் பிற நாடுகளிடம் விலைக்கு வாங்காமல் படைப்பெருக்கம் எய்தலாம். நுண்ணறிவியல் வளர்க்கலாம். நினைத்தால், தேசிய முழு நீர்த் திட்டம் வரைந்து, வள்ளுவர் வான்சிறப்பின்படி, வெள்ளத்தாலும் வறட்சியாலும் நிலமும் நிதியும் கெடாது எல்லார்க்கும் வேலை வாய்ப்பு வழங்கி மக்கள் வாழ்வின் செல்வத் தரத்தை உயர்த்தலாம். நினைத்தால், இந்திய நாட்டு மொழிக்கெல்லாம் ஆட்சியிலும் கல்வியிலும் ஒத்த சமவாய்ப்பும் சமனிலையும் வழங்கிச் சிற்றூரும் பெருநகரமும் அறிவியல் மேம்பாடு பெறச் செய்யலாம். இவையெல்லாம் வருவதற்கு என்ன வேண்டும்? வல்லர சாக வேண்டும் என்ற ஒரு நினைப்பு வேண்டும். நினைப்பது யார்? நினைவூட்டுவது யார்? நினைவென்னும் வித்தணு இல்லாத போது விளைவுண்டாகுமா? கருவுண்டாகுமா? ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ எனவும் ‘உள்ளியது எய்தல் எளிது’ எனவும் வள்ளுவர் உறுதியாகக் கூறிவிட்டார். நாம் வல்லரசாக வேண்டும் என எண்ணவே மறுக்கின்றோமே; அணுக்குண்டும் பிறவும் செய்வதற்கு நினைக்கவே மறுக்கின் றோமே; நம் நாடு வல்லரசாய் இலங்கி விளங்கி ஓங்குவதற்கு நாமே தடையாய் இருக்கின்றோமே; உலக அமைதி பேசிப் பேசி நம் உள்நாட்டு அமைதியைப் பலரும் கெடுக்க இடங்கொடுக் கின்றோமே. என் செய்வது? இந்தியா வல்லரசு ஆகுக; இந்திய மக்கள் மறம் பெறுக; திருக்குறள் வழி காட்டுக. நம்பிக்கையோடு முடிக்கின்றேன். எண்ணிய எண்ணியாங் கெய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (666) இப்பொய்யாக் குறளின்படி, பாரதம் படை வலிமிக்க வல்லரசு ஆகுக என்று எண்ணுவோம்; திண்ணமாக எண்ணு வோம். பாரதியார் பாடியபடி, இதனை அடைந்துவிட்டோம் என்று ஒரு நாள் ஆடுவோம் பள்ளுப் பாடுவோம். சங்கநெறி முதற் பதிப்பு 1987 இந்நூல் 1987இல் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. சங்க நெறி கற்போம் ச. மெய்யப்பன் எம்.ஏ அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூதறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகள்அனைத்தையும் வகைப்படுத்தி, ஓரினப் பொருளை ஒரு தலைப்பின் கீழ் நூலாக்கும் திட்டத்தில் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் வரிசை ஆய்வாளருக்கு மிகுந்த பயனை அளிக்கும்; இவ்வகை நூல்கள் வருங்கால ஆய்வுக்கு அடிப்படையாய் அமைவன. ஆய்வுக்களங்கள் பல அமைந்த இக்கட்டுரைகள் அனைத்தும் ஒரு நூலாக அமைவதால் பயன் மிகுதியாகிறது. குறிப்பிட்ட துறையில் பார்வை நூலாக அமைகிறது. இவ்வகை நூல்கள் மேற்கோளாட்சிக்கு மிகுதியும் பயன்படுவன. செம்பதிப்புக் கேற்ப, கட்டுரைகள் ஒருசேர வரிசைப் படுத்தப்பட்டுள்ளன; வகைமைப் படுத்தப்பட்டுள்ளன. பேரறிஞர் ஒருவர் ஒரு துறையைப் பற்றி நீண்ட நெடிய காலம் சிந்தித்த சிந்தனைகள் எல்லாம் அவராலேயே ஒழுங்குபடுத்தப் பெற்று ஒரு நூலாக அமைக்கப் பெறுவது பல்வகைப் பலனைத் தரும் அரிய முயற்சி, பெரிய முயற்சியாகும். ஆசிரியர் இக்கட்டுரைகளை மறுபரிசீலனை செய்து, சீர்திருத்தி, செம்மைப்படுத்தி, முறைப்படுத்தி வகைமைப் படுத்தி நூலாக்கியுள்ளது வளர் தமிழ் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும். இத்தொகுப்பு நிகழ் கால ஆய்வு வளத்திற்குக் கண்ணாடி. பேராசிரியரின் ஆய்வு வன்மைக்கு, அருந்தமிழ் ஆற்றலுக்கு இந்நூல் வரிசை பெருமை சேர்ப்பன. மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார் சங்க இலக்கிய வல்லுநர். சங்க இலக்கியச் சால்பு உணர்ந்த சான்றோர். பாட்டும் தொகையும் பகுதறக் கற்றவர். சங்க அகத்திணை மரபுகளை ஆய்ந்தவர். சங்க இலக்கியப் பரப்பும் பாங்கும் பண்பும் ஆராய்ந்த பண்பாளர். சங்க இலக்கியத்தின் தூய்மையையும் தாய்மையையும் போற்றுபவர். சங்க இலக்கியம் பரவ வழிவகுப்பவர். சங்க இலக்கியத்தைப் பல்வகைச் செம்பதிப்புகளாகக் கொணரும் நோக்குடையவர். சங்கப் புலவர்களைச் சான்றோராகக் கருதி வழிபடும் மரபைப் போற்றுபவர். அவர் எழுத்திலும் பேச்சிலும் சங்க இலக்கியச் செல்வாக்கைக் காணலாம். சங்க இலக்கியமே தமிழர் வாழ்வின் உயிரெனக் கருதுபவர். சங்க நெறிக் காவலர். இந்நூல் சங்க இலக்கிய ஆய்வாளருக்கு ஒரு வழிகாட்டி. மாணிக்கனாரின் புதிய சொல்லாக்கங்கள் தமிழுக்குப் புதுவரவும் தமிழுக்கு ஆக்கமும் ஆம். இந்தத் தலைமுறையில் இவரைப்போல் புதிய சொற்களைப் படைத்தவர் இலர். வாழும் சொற்களைப் படைப்பதில் வல்லவர்; பழஞ்சொல் புதுப்பிப்பதிலும் வல்லவர். இவர் படைத்த பல சொற்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப் பெற்று, நாளும் பயன்படுத்தப் பெற்று வருவது இவரது சொல்லாக்கச் செந்நெறிக்குச் சான்றாகும். இவருடைய சொல்லாக்கங்களைச் செய்தி இதழும் வானொலியும் நாளும் பயன்படுத்துவதே இவரது மொழிக் கொடைக்கு ஒப்பற்ற சான்றாகும். வெல்லும் சொல் படைக்கும் வித்தகரெனத் தமிழ்கூறு நல்லுலகம் போற்றுகின்றது. இவர் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்குகிறார். இவர் நடை சொற் செட்டும் சுருக்கமும் தெளிவும் செறிவும் திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. புலமை நலம் சான்ற பெருமித நடை இவர் நடை. பழந்தமிழ்ச் சொற்கள் மிகுந்துவரும் இலக்கிய நடை. புதுச்சொற்கள் பொலியும் புதுவகை நடை. எல்லா வகையாலும் இவரது நடை தனித்தன்மை சான்றது. பேராசிரியருடைய மூன்று வரிகளைக் கொண்டே அவர் தமிழ்நடையின் தனித் தன்மையினை இனம் காணலாம். அவர் பயன்படுத்தும் சொற்கள், சொல்லாக்கம், சொல்லாட்சி ஆகியவை அவர் நடையின் இயல்பினை இனங்காட்டுவன. ஆய்வு அவருக்கு இயல்பாக அமைந்ததொன்றாகும். திருக்குறளைச் செயல் நூலாக வள்ளுவமாக நூலாக்கினார். கம்பனைக் கற்கும் நெறியில் புதிய தடம் அமைத்தார். அகத்திணையியல் ஆய்வில் ‘தமிழ்க் காதல்’ நெறி விளக்கினார். இவை என்றும் தமிழுக்குப் பொன்றாப் புகழ் தருவன. ‘மறைமலை அடிகளாரின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும் திரு.வி.க வின் மொழி நடையும் சமுதாய நோக்கும் பேராசிரியரின் எழுத்தில் பளிச்சிடுவ தாகத்’ திறனாய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். வெள்ளிவிழாக் கண்ட தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் அளவிடற் கரியன. தமிழ் மக்களின் நீண்ட நெடிய கனவு களுக்கு உருவம் கொடுக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புக் குழுவின் தலைவராகயிருந்தார். சாதனை களால் சிறந்து விளங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியத் தகைஞராக, சிறப்புப் பேராசிரியராக நியமிக்கப் பெற்று, உரை எழுதி வருகிறார். புலமையாலும் தலைமையாலும் சிறந்து விளங்கும் இவர்கள், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவராகத் திகழ்கிறார். அவரது நூல்களை வெளியிடுவதில் உவகையும் களிப்பும் பூரிப்பும் சூடி மகிழ்கிறோம். ஆசிரியர் முன்னுரை பேராசிரியர் அறிஞர் இராமானுசனார் ஐ. நா. ஆதரவில் வெளியிட்ட ‘Poems of Love and war’ என்ற நூலின்கண், சங்கப் பாடல்கள் பலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பதினைந்தாண்டு உழைத்து ஆங்கிலக் கவியாகப் படைத்துள்ளார். இந்நூல் உலக வரவேற்புக்கு உரியதாக விளங்குகின்றது. சங்கத் தமிழ் இலக்கியத்தை அறியாதார் இந்திய நாகரிகத்தின் தனிச் சிறப்புடைய இலக்கிய நிறைவை அறியாதவர் எனவும், இவை சமயஞ் சாராத இலக்கியத் தொகைகள் ஆதலால் சமயச் சார்பு மிக்க பிற்காலத்தார் இவற்றைக் கல்லாது ஒதுக்கி விட்டனர் எனவும், உண்மை கூறப்புகின், சங்கப் பனுவல்கள் காலத்தை வென்று மன்னிய செவ்விலக்கியம் எனவும் பேராசிரியர் இராமானுசர் ஆங்கிலத்தில் வல்லமையாகக் கூறியிருப்பது இந்தியக் கண்களையும் உலகக் கண்களையும் விழிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கின்றேன். தமிழ்க் காதல் குறித்த என் ஆங்கில நூலிலும் தமிழ் நூலிலும், பேராசிரியர் சோதிமுத்து மரபு குன்றாமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஐங்குறுநூற்றின் என் அணிந்துரை யிலும் சங்கவிலக்கியம் உலகமாட்சி கொண்டது என்ற குறிக்கோளைப் புலப்படுத்தியுள்ளேன். இவ்விலக்கியம் காலத்தாற் பழமையே யன்றி, முன்னேற்றக் கருத்துக்களால், காலையில் மலரும் நாண்மலர் போன்றது. தமிழ் நாகரிகம் என்பது இவ்வுலகக் களம் கண்ணியது; பசியும் பிணியும் பகையும் நீங்கி வாழும் நலப்பாடு கொண்டது; வையத்துள் வாழ்வாங்கு வாழும் உறுதி காட்டுவது; சாதிக்கட்டு சமயக்கட்டு மதக்கட்டு கட்சிக்கட்டு பிறப்புக்கட்டு என்றினைய இக்கட்டுக்கள் புகாத மக்கட் சமன்மை பற்றியது; பொருளாதாரத்திற் கூடக் கொடையால் செல்வச்சமம் காண்பது; செங்கோல் ஆட்சியில் புலமைச் சான்றோர்களின் பங்கு தழுவியது; ஆள்வாரைச் செவி கைப்ப இடித்துரைத்துத் திருத்தும் அறிவுடையது. இங்ஙனம் நற்கூறுபல பொதிந்த தமிழ் நாகரிக மாண்பினைச் சங்கவிலக்கியங்கள் கண்ணாடி போலக் காட்டி நிற்கின்றன. இவை இன்றைய இந்தியக் குடியரசின் ஒத்துரிமைக் கோட்பாட்டிற்கு ஒத்துவரும் பேதமிலா இலக்கியங்கள் ஆகும். சாதியடைகளோ சமய வெறிகளோ இனக் கலவரமோ இல்லாத நல்லுலகத்தை இப்பனுவல்கள் போற்றுகின்றன. காதலும் வீரமுமே இவற்றின் பாடு பொருள்கள் என்பது முழுவுண்மையன்று. இவற்றைப் பாடுங்கால் கருப்பொரு ளாகவும் செய்திப் பொருளாகவும் பல துறையறிவுகள் கட்டுமானமாகின்றன. எனவே சங்கவிலக்கியங்கள் தமிழ்த் தேசியவிலக்கியங்கள் எனவும் பாரதத்தின் இவ்வுலக நாகரிக மறைகள் எனவும் உலகின் மக்கட் பண்பிலக்கியங்கள் எனவும் கருதற்குரியவை. சங்கப்பனுவல்கள் விழுமிய பண்பினால் உலகம் தழுவியவை எனினும் மொழியால் தமிழினத்துக்கு நெருக்கமானவை. இவ்வகையில் தமிழர்கள் நற்பேற்றினர். மொழியால் நடையால் கடினமானவை. விளங்காதவை என்ற மிகத் தவறான மயக்கம் ஒரு சாராரிடை எப்படியோ பரவிக் கிடக்கின்றது. எத்துணையோ அறிவில் மயக்கங்களுள் இதுவும் ஒன்று. கடினமான வேற்று மொழிச் சொற்கள் நிறைந்த சிறுகதை புதினங்கள் எங்கட்குப் புரிகின்றன என்று பகரும் ஊனத் தமிழ்மக்கள் தூய தமிழ்ச் சொற்களால் ஆகிய நம் சங்கப் பாடல்கள் புரியவில்லை என்பது புதிராகத் தோன்றுகின்றது. எந்த மொழி வரலாற்றிலும் இல்லாதபடி, நானூறு புலவர்கள் மக்கள் நலம் நோக்கிக் கட்டுக் கோப்பாகப் பாடிய செய்யுட்களே சங்கவிலக்கியம் ஆம். இவற்றைத் தண்ணென்ற ஒழுக்கம் உடையன எனவும் இப்புலவர்களைச் சான்றோர் எனவும் கம்பர் காப்பியப் பாராட்டுச் செய்வர். ‘நீண்ட தமிழ்’ எனவும் ‘என்றுமுள தென்றமிழ்’ எனவும் கம்பர் போற்றிப் புகழ்வதற்குச் சங்கவிலக்கியச் செல்வமே காரணமாம். இந்நூல்கள் பழமைப்பட்டன, விளங்கா என்று சொல்வோரை நம்பவேண்டா. குறுந்தொகை என்ற நூல் 400 செய்யுட்கள், 2500 அடிகள் கொண்டது. அச்சு வடிவில் 100 பக்கம் வரும். அக்கறையோடு ஒரு திங்கள் மும்முறை தொடர்ந்து படித்தால், குளிர்நீர், இளநீர் போல எளிமையும் இன்சுவையும் தோன்றுவதோடு, பெருமிதமும் செம்மாப்பும் உயரும். தமிழ்ப்பிறப்பு எடுத்த தமிழர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருதிங்கள் சங்கவிலக்கியக் கல்விக்குப் பயன்படுத்தக் கூடாதா? பயன்படுத்தி அரிய சிந்தனைக் களஞ்சியத்தைத் தேடிக் கொள்ளக் கூடாதா? குறுந்தொகை ஒன்றோடு உறவு கொண்டாலே, சங்கத் தமிழ் நாகரிகம் நம்மோடு படிந்துவிடும். மனைமாட்சி யில்லாவிட்டால் எனைமாட்சியும் இல்லை என்று திருக்குறள் கூறுவது போல, சங்கக் கல்வி பெறாவிட்டால் தமிழனுக்கு ஏனைக் கல்வியால் இனப் பெருமையில்லை என்று கூறுவேன். தமிழ்க்காதல் என்னும் என் ஆய்வுடை நூலின்கண் அகத்திணை நெறிகள் விரிவாகவும் நுணுக்கமாகவும் சொல்லப் பட்டுள. சங்க நெறி என்ற இந்நூலின்கண் பெரும்பாலும் புறத்திணை பற்றிய கட்டுரைகள் உள. புறத் தொகை நூல்களுள் பதிற்றுப் பத்து பல வகையாலும் தனித்தன்மை கொண்ட தாகலின், அதன் பெற்றிகள் ஐந்து கட்டுரையாக வளர்ந்தன. புறநானூறு பற்றியும் வரம்பான சில புது ஆய்வுகளைக் காணலாம். தமிழ் வான்மீகியார், பறம்புப்போர் வஞ்சனையா? முத்தொகை வாழ்த்துக்கள் என்பன ஆய்வுக் கிளர்ச்சிக் கொண்டவை. மரபின் வந்த எட்டுத் தொகை பத்துப்பாட்டுக்கள் பெரும்பாலும் அடியளவால் கொண்ட தொகைகள் ஆகும். சமரசம் அரிதின் முயன்று பதிப்பித்த சங்கவிலக்கியம் ஆசிரிய முறையால் அமைந்த தொகுப்பாகும். இப் பதிப்புக்கள் சிலவகையாய்வுக்குப் பயன்களமாயின. கால முறைப்பதிப்பு என ஒன்று வந்தால், ஆய்வுக் களங்கள் இன்னும் பல்கும்; முடிவுகளும் உறுதியாகும். இப்பணி எதிர்காலத் தமிழாக்கப் பணிகளுள் முதன்மை பெறும் என எண்ணுகிறேன். இலக்கிய விளக்கம், தொல்காப்பியப் புதுமை, தொல்காப்பியத் திறன், எந்தச் சிலம்பு, சிந்தனைக் களங்கள் என்ற என் முன்னை உரைநடை நூல்களில் பரவிக் கிடந்த சங்கவிலக்கியம் பற்றிய கட்டுரைகள் சங்க நெறி என்ற இப்புதுத் தலைப்புடை நூலின்கண் ஒருங்கு குடிகொண்டுள. ஒரு பொருட்பட்ட என் கட்டுரையெல்லாம் இணைந்து ஒரு நூற்பதிப்பாதல் நல்லது என்று திரு ச. மெய்யப்பனார் விரும்பிய வண்ணம், தொல்காப்பியக் கடல், திருக்குறட் சுடர், சங்க நெறி, காப்பியப் பார்வை, இலக்கியச்சாறு, தமிழ்க்கதிர் என்றாங்கு என் கட்டுரைகள் ஆறு வண்ணம் பெற்றுப் புதுப்பொலிவு எய்துகின்றன. என் எழுத்துக்களை புதிய வடிவாக்கி உயர்தரமாகப் பதிப்பிக்கும் மணிவாசகர் பதிப்பகத்திற்கும் பதிப்புச் செம்மல் திரு. ச. மெய்யப்ப னார்க்கும் உளமார்ந்த நன்றிக் கடப்பாடுடையேன். கதிரகம் வ. சுப. மாணிக்கம் காரைக்குடி வைகாசி (2018) பொருளடக்கம் 1. தூய இலக்கியம் 163 2. வாழ்க்கைத் துணை 171 3. இலக்கியப் படிப்பினை 179 4. சங்க நெறிகள் 186 5. உரை நெறிகள் 198 6. அருஞ் சொற்களா? 204 7. சான்றோன் 211 8. காதற்போர் 220 9. நான்மாடக்கூடல் 226 10. போர்க்களம் 233 11. வரிசைப்பாட்டு 239 12. தமிழ் வான்மீகியார் 245 13. பறம்புப் போர் வஞ்சனையா? 251 14. பாரி மனைவி 258 15. பதிற்றுப்பத்தின் அறிமுகம் 270 16. பதிற்றுப்பத்தின் கொடை 278 17. பதிற்றுப்பத்தின் மறம் 285 18. பதிற்றுப்பத்தின் பா நலம் 292 19. பரிபாடற் குமரன் 300 20. முத்தொகை வாழ்த்துக்கள் 306 21. புதிய சிறப்புப் பெயர்கள் 311 22. சங்கவிலக்கியப் பாடம் 322 23. துறையாசிரியர்களின் உரைநடை 328 24. காலமுறைப் பதிப்பு 348 1. தூய இலக்கியம் சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இஃது அகத்திணை யிலக்கியம் புறத்திணை யிலக்கியம் என இருவகைப்படும். அகத்திணை கூறும் பொருள் என்ன? காதலும் குடும்ப வாழ்க்கையும். இந்த வகையிலக்கியம் தமிழுக்கே உரிய பெருமையுடையது என்று பிறமொழி கற்றார் எல்லாம் தெளிவாகச் சொல்லி யுள்ளனர். அகத்திணை தமிழினத்தின் தனிப் படைப்பு. தமிழ் சொல்லிக் கொடுப்பது என்றால் அகத்திணை சொல்லிக் கொடுப்பது -- அதாவது அன்பான காதலுறவையும் அன்பான இல்லற வாழ்வையும் சொல்லிக் கொடுப்பது என்பது நம் முன்னோர் கருத்து. திருவள்ளுவர் காமத்துப் பால் என்ற அகத்திணை பாடினார். ‘உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ் இன்துறை’ என்று மணிவாசகர் அகத்திணையை ‘இன்துறை’ எனத் திருக்கோவையாரில் பாராட்டுகின்றார். இத்தகைய இலக்கியத்துறை தீந்தமிழிலே தான் உண்டு என்பது அவர் கருத்து. புவியினுக் கணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற்றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார் (ஆரணி - சூர்) என்பது இராமாயணம். அகத்திணையின் உலக மதிப்பையும் பொருட்சிறப்பையும் நெறியையும் தெளிவையும் ஒழுக்கத்தையும் காட்டுவதற்கு ஒரு முழுப் பாடலே தொடுத்தார் கம்பர். சங்கப் பாடல்கள் 2381. இவற்றுள் அகத்திணைப் பாடல்கள் 1862. அதாவது முக்காற் பாகம். சங்கப் புலவர்களின் தொகை 473. இவருள் அகத்திணை பாடினோர் தொகை 378. அதாவது முக்காற்பாகத்தர். இதனால் அகத்திணையின் சிறப்பும் பரப்பும் அதனை நுனித்து ஆராய வேண்டிய நம் கடமையும் பெறப்படும். சங்கத்துக்குப்பின் எழுந்தக் காப்பியங்களிலும் அருட்பாசுரங் களிலும் சிற்றிலக் கியங்களிலும் நாட்டுப் பாடல்களிலும், ஏன்? இன்று பல்கிவரும் திரைப்பாடல்களிலும் தமிழன் பாடிக் களிக்கும் காதற்பாட்டு எதிலும் -- அகத்திணையின் சாயல் படியாமல் இருப்பதில்லை. ஆயினும் அகத்திணையின் அடிப்படை யுண்மைகள் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாகத் தெளிவின்றியும் திரிபாகவும் கற்பிக்கப்பட்டு வரக் காண்கின்றோம். கி.பி. நாலாவது நூற்றாண்டுக்குப் பின், பிறராட்சியாலும் பிறமொழித் தாக்க லாலும் சங்கத் தமிழ்க் கல்வி முறை மாறிவிடவே, தொல் காப்பியத்துக்கும் சங்க இலக்கியத்துக்கும் கலப்புப் பொருள்கள் உரைக்கப்பட்டன. குலம் சாதி சமயம் கடந்த அன்பு ஒன்றையே காதலுக்கு முதலாகக் கொண்ட அகத்திணைக்கும் பிற்காலப் பிரிவுக் கூறுகளைப் புகுத்தி விளக்கஞ் செய்தனர் இடைக்காலோர். அகத்திணை, கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்ற தலையாய குறியீடுகளுக்குக்கூட அன்பும் அறமும் அல்லாத விளக்கங்கள் எழுதுவதும் கற்பிப்பதும் ஒரு மரபு போல வந்திருத்தலின், 1500 ஆண்டு களாக அகத்திணையின் உண்மையும் பொதுமையும் ஒழுங்கும் புதைகுழிப்பட்டன. தமிழ் கண்ட தன்னேரில்லாத அகத் திணையின் இடைக்கதை இவ்வாறாயிற்று. ஆதலின் உண்மையைக் கண்டு தெளிதற்கு ஒரு சில சங்கப் புலவர் களையோ ஒரு சில சங்கப் பாடல்களையோ ஒரு சோற்றுப் பதம்போல் பார்ப்பது தகவாகாது. 378 அகப் புலவர்களையும் ஒருங்கு வைத்துப் பலவகைப் படுத்தியும் பல தொகைப் படுத்தியும் அலசல் வேண்டியதாயிற்று. அங்ஙனம் அகத்திணை குறித்துத் தேர்ந்து ஓர்ந்து நான் கண்ட முடிபுகளில் மூன்றினை இங்கு வானொலிக்கின்றேன். அகத்திணையின் பொருள் ஆண், பெண் காதல் பற்றியும் பாலிணைவு பற்றியும் எல்லா மொழியிலும் எல்லா இலக்கியங்களும் பாடுகின்றன; கற்பனைப் படுத்துகின்றன; தித்திக்க மொழிகின்றன. அவ்வாறாக, தமிழ் அகத்திணைக்கு என்ன தனிப்பெருமை என்று கேட்கலாம். காதல் பாடுவதால் அகத்திணைக்குச் சிறப்பு என்பதில்லை. இவ்வகையான காதலை இவ்வகையாகத் தான் பாடுவது என்ற கட்டுப்பாடே அகத்திணையின் சிறப்பு, காதற் பொருளிலும் கட்டுப்பாடு; அதனைச் சொல்லும் முறையிலும் கட்டுப்பாடு. இவை அகத்திணை நெறிகள். காதலுலகம் மிகப்பெரிய உலகம். அங்கு எத்தனையோ கலவரங்கள், சரிவுகள், குழிகள், பழிகள், கட்டாய மணம், வரன் கொடை, கணவன் மனைவி ஒருவரையொருவர் ஐயப்பாடு, குணக்கேடு, கள்ளக்காதல், கள்ளப்பேறு, கருவழிப்பு, விட்டோடுதல், வழக்காடுதல், குடுமி பிடித்தல், கூந்தல் பிடித்தல், எவ்வளவோ நிலையழிவுகள் பாலுறவில் உள்ளன. உலகில் நடப்பன எல்லாம் பாடலாமா? புதினங்களும் சிறுகதைகளும் நாடகங்களும் காப்பியங்களும் இவற்றைச் சுவைபடப் பலபடப் புனைகின்றன. வழிப்படுத்துவதைக் காட்டிலும் சுவைப்படுத்துவதே இவற்றின் ஆசை. பிற இலக்கியங்கள் சுவைக்காக எக்காதலையும் பாடும்; எப்படியும் பாடும். புரண்டோடும் வெள்ளத்துக்கு உள்ள கரையையும் இடித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் இலக்கியங்களே பல. இவை தனி மனிதன் அறிவுக்குச் சுவை யாவன; ஆனால் தனி மனிதனுக்கும் மன்னாயத்துக்கும் நச்சாவன. அகத்திணை அன்புக் காதலை மட்டுமே பாடும்; அறிவுறுத்தும்; இயல்பாகச் சில சிக்கல்கள் தோன்றும் போது, காதலர்கள் எப்படி அன்பாக நடந்து இணைந்து கொள்ள வேண்டும் என்று வழியும் பொறுப்பும் காட்டும். அஃது ஒரு தூய இலக்கியம். தன் மகள் ஒருவனோடு கொண்ட காதலுறவு அவள் குடும்பத்தார்க்குப் பிடிக்க வில்லை. மகள் செய்தியறிந்த அன்னையும் துடிக்கின்றாள்; இப்படி நடந்து விட்டதே என்று உடன் பிறந்த அண்ணன்மார்களும் சினங்கொண்டு அத்தலைவனைப் பகையாகக் கருதி அம்பும் வில்லும் பார்க்கின்றனர். ஒருநாள் முழுதும் சினம் தணிந்த பாடில்லை. முடிவு நாம் நினைப்பதுபோலப் புதினமாகவில்லை, சிறுகதையாக வில்லை. அவரும் பெதரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து ஒரு பகல் எல்லாம் உருத்தெழுந் தாறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை (கலி. 39) வெகுண்ட அண்ணன்மார் தம் தங்கை என்ன குற்றஞ் செய்தாள், அவளைக் காதலித்தவனும் செய்த குற்றம் என்னோ? தம் வாழ்வுக்கு உரியவர்களை அன்பினால் தேர்ந்து கொள்வது குற்றமில்லை; அது தானே கற்பு என்று அறிவு வந்து, தாம் செய்ததற்கு வெட்கப் பட்டனராம். இவ்வண்ணம் காதலர்களுக்கேயன்றித் தொடர்புடைய வீட்டார்க்கும் நேர் வழி காட்டுவது அகத்திணை; சிறிய சிக்கலைப் பின்னிப் பெருஞ் சிக்கலாக்காமல் தொடக்கத்தி லேயே நெறிப்படுத்துவது அகத்திணை. அகத்திணைப் பாடல் அமைப்பு சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை, தேவந்தி, மாசாத்துவான் என்று இயற் பெயர்கள் வருவது போலவும், இராமாயணத்துத் தசரதன், கோசலை, கைகேயி, இராமன், சீதை, இலக்குவன் என்று பாத்திரப் பெயர்கள் வருவது போலவும் அகப்பாடலில் யாருக்கும் பெயர் சொல்லக்கூடாது என்பது உயிரான இலக்கணம். மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர் (தொல். 999) என்று தொல்காப்பியம் விதிக்கின்றது. காதலர்கள் ஒத்த நல்ல அன்புடையவர்கள்தானே; பெயர் சொன்னால் காதல் குறைவு பட்டுவிடுமா என்று கேட்கலாம். மக்கள் பெயர் தாங்கி வரும் காதல், காதற்பாட்டு ஆகுமேயன்றி அகம் என்ற பாட்டாகாது. அகப்பாட்டு பொதுவானது; பெயரில்லாமையினால் படிப்பவர் ஒவ்வொருவரும் எனக்கு எனக்கு என்று கொள்ளத்தக்க உரிமையுடையது. தலைவி தன் காதலன் தொடர்புப் பெருமையைச் சொல்லும் ஒரு குறுந்தொகைப் பாடல்: நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று: நீரினும் ஆரள வின்றே; சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (குறுந். 3) என் காதலனுடைய நட்பு நிலத்தைக் காட்டிலும் அகலமானது, வானத்தைக் காட்டிலும் உயரமானது, கடலைக் காட்டிலும் ஆழமானது, எவ்வகையிலும் அளவை கூற முடியா நிறையுடையது என்று பெயர்ச்சுட்டின்றி வரும் போது, இப்பாடல் ஒவ்வொருவர்க்கும் உடைமை யாகின்றது. தலைவன், தலைவி, காதலன், காதலி, தாய், தந்தை, செவிலி, தோழி என்று உறவுப் பெயர் சொல்லலாம்; மலை, கடல், நாடு, ஊர் என்றவாறு நிலப்பெயர் சொல்லலாம்; ஆயர், வேட்டுவர், உழவர் என்றாங்கு தொழிற்பெயர் சொல்லலாம். எப்படியும் பெயர் ஒருவரைச் சுட்டாமல் பொதுமை தழுவவேண்டும் என்பது அகப்பாட்டின் மாறாத அமைப்பு. மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துனைப் போற்றி சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே (திருவா. 1) என்பது திருவாசகம். இத்தகைய அருட்பாடல்களிலும் இயற்பெயர் வரவில்லை, பொதுமையுண்டு என்றாலும் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. ‘உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழவிடேன்’ என்ற போதும் ‘என்னை யாண்டு கொண்டான் என் சிறுமை கண்டும்’ என்றபோதும், ‘உன் அருள் பெறு நாள் என்றென்றே வருந்துவனே’ என்றபோதும் இவை பொதுநடையாக இருந்தாலும் மணிவாசகரின் பயில்வு என்று சொல்லு கின்றோம்; பாடற் பொருளுக்கும் பாடியவர்க்கும் தொடர்பு ஊட்டுகின்றோம். அகத்திணைப் பாடலில் வரும் காதற் பொருளுக்கும் பாடிய அகப்புலவர்க்கும் பயில்வு சொல்லு கின்றார் என்று தொடர்புபடுத்தவே கூடாது. காதலன் விரைவில் மணஞ் செய்து கொள்ளாத போது வருந்திக் கதறிய காதலியின் ஒரு குறுந்தொகைப் பாடல்: முட்டுவேன்கொல்? தாக்கு வேன்கொல்? ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு ஆஆ ஒல்லெனக் கூவு வேன்கொல்? அலமரல் அசைவளி யலைப்பவென் உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே (குறுந். 28) ஒருவனோடு என் காதலை வீட்டார் அறியவில்லை; எதனோடும் என் தலையை முட்டிக் கொள்ளலாமா? உடலை இடித்துக் கொள்ளலாமா? ஏதாவது ஒரு சாக்குப் போக்குச் சொல்லி ஆ ஓ என்று அலறலாமா? அப்போது தூங்கும் வீட்டார் விழித்துக் கொண்டு இந்த நள்ளிரவில் என்ன வந்தது என்று கேட்கமாட்டார்களா? என்று இன்னணம் புலம்புகின்றாள் களவுத்தலைவி. இவ்வகப் பாடலை யாத்தவர் ஒளவையார். பாடினார் என்ற கட்டுத் தொடர்வு தவிரப் பாட்டின் பொருளோடு ஒளவையார்க்கு ஒரு சுட்டுத் தொடர்பு பொருத்திக் குறிப்பாகவும் கூறக் கூடாது. இஃது அகப்பாடலைக் கற்கும், கற்பிக்கும் முறை. அகத்திணை நோக்கம் பிறர் வாழ்க்கைக் குறிப்போ, பெயர்க் குறிப்போ தோன்றாது யாத்த தூய காதல் இலக்கியம் அகத்திணை. தமிழ்ச் சான்றோர்கள் இத்தகைய அடக்கமான காதல் இலக்கியத்தை ஏன் கண்டுபிடித்தனர்? உலக நிலைபேறு காதலில் உண்டு; அஃது அன்பான அடக்கமான காதலில் உண்டு. மிண்டிய, மண்டிய, திமிறிய பாலுறவு ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்லதன்று; மக்கட் சமுதாயத்துக்கும் நல்லதன்று. பாலுறவு விலங்கு முதலியவற்றுக்கும் உண்டென்றாலும், அவ்வுணர்வு அஃறிணைக்கு ஒரு வரம்பில் அமைந்துள்ளது. இனப்பெருக்கம் வேண்டிய பருவ காலங்களில் பாலெழுச்சி தோன்றுகின்றது; பின்னர் மடிந்து விடுகின்றது. மக்களோ மனவுணர்வு உடையவர்கள். ஆடல் பாடல் கேளிக்கைகளாலும் ஓவியங்களாலும் இன்சுவைச் சொற்களாலும் பாலெண்ணத்தை உரமிட்டு வளர்த்துக் கொள்பவர்கள்; இனப்பெருக்க நாட்டமின்றி இன்பம் நாடியே உறவாடுபவர்கள். ஆதலின் மக்கட்குப் பாலுறவுக் கல்வி இன்றியமையாதது. மரவியல் விலங்கியல் உடலியல் போலப் பாலியலை அறிவியல் முறையிலும் கற்கலாம்; அது உணர்ச்சியைத் தொடாது. இலக்கிய முறையே நெஞ்சையும் உணர்ச்சியையும் இயக்க வல்லது. ஆதலின் மக்கட்கு ஆண் பெண் உறவுக் கல்வியையும் குடும்பக் கல்வியையும் கற்பிப்பதற்கென்று கண்ட தூய இலக்கியமே அகத்திணை. ஆணும் பெண்ணும் ஒருவர் காதல் விருப்பத்தையும் அளவையும் மற்றொருவர் புரிந்து கொள்ளவேண்டும். இன்பக் குறைவு தோன்றக்கூடாது. ஒளிவும் மறைவும் ஒப்புக் காண்டலும் கூடா. இன்ப நிலையில் பெருமை சிறுமைக்கு இடமில்லை. நிறைவான இன்பத்துக்கு ஊடல் வேண்டும். ஊடல் குறைவு பட்டால் உள்ளமும் குறைவு படும். குடும்பப் பொறுப்பு தலைவியுடையது. தலைவனையும் திருத்தும் உரிமைக் கற்புச் சான்றவள் தலைவி. காதலர்கள் தம்முள் பூசலைப் புறத்துத் தோன்றாது ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். ஒருகால் ஒத்துவராத பூசல் வந்தால், பிரிய நினைக்கக்கூடாது. பெற்றோர்களின் துணை கொண்டும், சான்றோர்களின் துணைகொண்டும் குடும்ப ஒருமையைக் காத்துக் கொள்ளவேண்டும். குடும்பம் மன்னாயத்தின் ஓர் உறுப்பு என்ற எண்ணத்தோடு ஒற்றுமையாகவும் முயற்சி யாகவும் உதவியாகவும் இல்லறத்தை நடத்த வேண்டும். இங்ஙனம் இன்பவுறவிலும் மன்பதையுறவிலும் நாணமும் கற்பும் தழுவிய இல்லறக் கல்வியை அகத்திணையிற் கற்கின்றோம். பண்டைத் தமிழர் கண்ட அகத்திணையின் தூய்மையையும் உலகப் பொதுமையையும் இற்றைத் தமிழர் உணர வேண்டும். இந்த அகத்திணைக் கல்வி இளைஞர்கட்கு இளமையில் முறையாகக் கற்பிக்கப்பட்டால், இன்பக் குமுறல்களும் குடும்பக் கோணல்களும் குறைவுபடும் என்பது யான் கண்ட அகத்திணை ஆராய்ச்சியின் முடிவு எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் என்பர் பாலியலறிஞர் தொல்காப்பியர். 2. வாழ்க்கைத் துணை இந்நாள் மக்களுலகமும் மாணவவுலகமும் பிறர் பலர் சொற்பொழிவைக் கேட்பதில் பேரார்வம் உடையனவாய் விளங்குகின்றன; பெரும்பொருள் செலவிட்டுக் கேள்விச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. இத்தமிழ் உணர்ச்சி வரவேற்றற்கு உரியது; வாழ்த்துதற்கும் உரியது. கேள்வி அறிவுக்கு இன்றியமையாதது என்றாலும், கற்றற்கு உரிய வாய்ப்புப் பெற்றவர்களும், வாய்த்த பருவம் உடையவர்களும் அவ்வாய்ப்பைப் புறக்கணித்துக் கேள்வியிலேயே காலந் தள்ளுதல் ஆகாது. ‘கற்றிலனாயினும் கேட்க’ என்ற திருக்குறளில் கல்விக்கு முதன்மை கொடுத்தல் காண்க. ஆதலின் கல்விச் செல்வம் ஈட்டுதற்குரிய பருவத்தில், மேடைக் கேள்விச் செல்வத்திற்கு மாணவர் ஆசைப்படுதல் அத்துணை அறிவு நலம் அன்று; ஆக்கமும் அன்று. ஒருநூல் மருத்துவம், உழவியல், பொறியியல் என்றினைய தமிழ் வழங்காக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் கேள்வியால் பெருகியோடும் தம் தமிழுணர்ச்சியை நிலைப் படுத்திக் கொள்ள வேண்டும். இன்றேல், இவ்வுணர்ச்சி வெள்ளம் தமிழ்ப்பைங்கூழை அழித்துத் தமிழ் நாட்டை அறுத்தோடிச் செய்துவிடும். ஓடிச்சாடும் காட்டாற்றை அணைகட்டிப் பயிர்வளம் காண்கின்றோம்; மின்சாராற்றலைக் கம்பிப்படுத்தி ஒளி பெறுகின்றோம்; பரந்த களத்தைச் செதுக்கி வழிநடையாக்குகின்றோம். தமிழ்க்காதல் சின்னாளில் சாதல் எய்தாதபடி ஒரு நூல் வழிப்படுத்த வேண்டும். சிறந்தவையென யாரும் ஒப்பும் நூல்கள் பல தமிழில் உள. குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, பெரியபுராணம், இராமாயணம், அருட் பாசுரங்கள் என்றின்ன வகையில் ஒரு முழு நூலையாவது வாழ்க்கைத் துணை நூலாகக் கொண்டு பயிலுங்கள். தமிழில் உள்ள எல்லா நூல்களையும் படிமின் என்று அறிவுரை சொல்லவில்லையே என்று சில உள்ளங்கள் எண்ணலாம். முழுதும் கற்க முயல்வார் முயல்க. ஒவ்வொரு நாளையும் கடத்தி மகிழும் வாழ்க்கைப் பேராட்டம் பெரிதாகிவரும் இஞ்ஞான்று, எல்லாத் தமிழும் கற்றாகுக என்ற சொல்லறம் செயலில் ஒதுக்கப்படும்; என்றாலும் ஒரு பிறப்பிற்கு ஒரு பெருந்தமிழ் நூலையாவது கல்லாதவன் தமிழனா? நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ, சொல்லீர்! எடுத்த இத்தமிழ்ப் பிறப்பில் இணையற்ற ஒரு தமிழ்ப் பனுவலைக் கூடக் கற்க இயலவில்லையே; பொழுதெல்லாம் சோற்றுக்கே போகு தந்தோ என்று கூறிக் கழிக்கும் தமிழ்ப் போலியன் வள்ளுவர் நடைப்படி, அவியினும் வாழினும் தமிழுக்கும் தமிழகத்திற்கும் என்? குறள்மூலம் தமிழ்நாடு என்பது நம் தாயகத்தின் பெயர். நாட்டின் பெயரே ‘தமிழை நாடுக’ என்று மொழிப்பற்றையும் குழைத்து ஊட்டக் காண்மின். தமிழைப்படி என்று ஏவல் செய்வதை ஓர்மின். ஆதலின் சீப்பு, கண்ணாடி முதலிய புழங்கு பொருள்கள் போல, ஒரு பெருந் தமிழ் நூலையும் உங்கள் கண் பார்வையில் வைத்து அடிக்கடி பயன் படுத்துங்கள். சிறந்த ஒரு நூலை நீரே குறிப்பிடுக என்பீராயின், திருக்குறள் என்பேன். அந்நூல் எல்லோரும் கற்றற்குத் தகுவது, வாழ்வு வேண்டும் என்பவர் கற்றுத் தீரவேண்டுவது, தமிழ் வகுத்த அகமும் புறமும் தழுவியது, வரப்பண்ணுதற்கு எளியது, இனியது, கைக்கு அடக்கமாவது, அணியாவது, வாழ்வே பொருளானது. சில குறள்களுக்குப் பொருள் விளங்காமையை - பொருள் வேற்றுமைகளைப் பொருட்படுத்தற்க. குறள் மூலத்தைக் கற்று அருஞ்சொற் பொருள் அறிந்து இடையறாது நினைக. இதற்குப் பின் திருக்குறள் பற்றிப் பல்லோர் எழுதிய உரைகளையும் உரைநடைகளையும் காலத்திற்குத்தக அறிந்து தெளிக. இவ்விளக்க நூல்களைப் படிப்பது கல்வியை வளர்க்கும். குறள் மூலத்தைப் போற்றிக் கற்பதுதான் வாழ்வை வளர்க்கும். நூலின் துணை ‘வாழ்க்கைத் துணை’ என்ற தலைப்பு நும் வாணாள் முழுதும் ஒரு பெருந் தமிழ்ப்பனுவலைத் துணையாகக் கற்க என்ற கருத்தைக் குறிப்பது என நீவிர் எண்ணியிருப்பீர். முறையான கல்வி பெறுதற்குத் தமிழ் வகுப்புத் தொடங்கும் இவ்விழாவிற்கு இத்தலைப்பு ஏற்றதேனும் நீவிர் கருதும் பொருளில் நான் முதன்மையாகப் பேச நினைக்கவில்லை. வாழ்க்கைத் துணையாவாள் மனைவி என்னும் பொருள் மேல் உரையாற்றுவன் என்று சிலர் பலர் கருதியிருத்தலும் கூடும். இத்தலைப்பு இக்கருத்தின் மேலும் எழுந்ததன்று என்று முதற்கண்ணே தெளிவித்து விடுவன். மயங்கிய ஒரு தலைப்பைக் கொடுத்து மயக்க அவாவினேன் அல்லேன். என் கருத்துக்கு ஏற்ற தொடர் இதுவென எனக்குப்பட்டது. இத் தொடர் மனையாளைக் குறிப்பது பொருத்தமில்லையா? என ஐயுறலாம். ஆராய்வோம். வாழ்க்கைத் துணை யார் வாழ்க்கைக்கு யார் துணை? ஆண் வாழ்க்கைக்குப் பெண் துணை என்றால் வாழ்வெனப்படுவது ஆடவனுக்கு உரித்தென்றும், பெண் அதற்கோர் கருவி என்றும் பொருள் படவில்லையா? வாழ்வென்பது பெண்ணுக்கு இல்லையா? பெண் வாழ்க்கைக்கு ஆண் துணையென்று இத்தொடர்க்குப் பொருள் கொண்டால் இழுக்கு என்னையோ? மணமில் ஆண் தனிமையும் அன்ன பெண் தனிமையும் வாழ்வெனப்படா. காதலி இழந்த தபுதார நிலையும் காதலன் இழந்த தாபத நிலையும் (தொல். 1024) என்ற முதனூற்படி, இல்லறத்து ஒருவரை இழந்து இருப்போர் நிலை கைம்மையாகுமேயன்றி வாழ்க்கை யாகாது. இல்வாழ்க்கை என்பதனை வாழ்க்கையெனச் சுருங்கச் சொல்கின்றnhம். ‘வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’, ‘வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்’ என்ற குறட் பகுதிகளுக்கு ஆடவன் வாழ்க்கை என்று ஒருபாற்படப் பொருள் கொள்ளாது, இல்லற வாழ்க்கை என இருபாற் பொதுமைப்படப் பொருள் கொள்ளவேண்டும். இங்ஙன் பொருள் கொண்டாலும், ‘வாழ்க்கைத் துணை’ என்னும் தொடர் திருக்குறளில் மனைவியையே குறித்து நிற்கின்றது. அதற்குக் காரணம், இல்லாள் என்னும் பெயரும் விருந்தோம்பல் முதலாம் இல்லறக் கடமைகளும் அவளுக்கே, தமிழ் நாகரிகப்படி உரியனவாம். ‘புகழ் புரிந்த இல்லிலோர்’ என இல் என்னும் பெயர் மனைவிக்கே உரித்தாதல் காண்க. அறிவர் துணை திருக்குறட்படி, வாழ்க்கைத்துணை என்பது மனைய வளைச் சுட்டுமாயினும், நாம் இன்று அப்பொருளிலே மட்டும் ஆளவேண்டும் என்பதில்லை. கணவன் மனைவி கூட்டுறவு வாழ்க்கை எனப்படுதலின் அவர் வாழ்க்கைக்குத் துணை பிறர் வேண்டும். இல்வாழ்வு துனியாற் பிரிவின்றி, அறியாப் பிணக்கத்தால் அழிவின்றி நீடித்து இயங்குதற்குச் சான்றோர் துணை வேண்டும். இக்கருத்தை அறிவுறுத்தவே இத்தலைப்பினைக் கொண்டேன். ஆணும் பெண்ணும் உள்ளம் ஒத்துத் தாமே மணம் புணரவேண்டும் என்று களவு பேசும் தமிழுக்கு, காதலைப் பொருளாகக் கொண்டு அகத்திணை கண்ட தமிழுக்கு இக்கருத்து முரணில்லையா? அகவொழுக் கத்திற் புறத்தார் தலையிடலாமா? என்று நீவிர் வெகுண்டு வினவலாம். ‘யாணம் சான்ற அறிவர் கண்டோர்’ (1447) கற்பில் கூற்றிற்கு உரியர் என்று தொல்காப்பியம் மரபு சுட்டுகின்றது. இடித்துவரை நிறுத்தலும் அவர தாகும் கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் (தொல். 1100) கணவன் மனைவி என்னும் இல்லறவுறுப்பினர் அறிவோர்க்குக் கட்டுப்பட்டவர் என்றும் குடும்பத்துக்கு மாறாக நடப்பாரேல் அவரைத் திருத்தும் கடப்பாடு அறிவோர்க்கு உரியது என்றும் தமிழ் முதல்வன் மிக வெளிப்படையாகவே கற்பியலில் கூறிப்போதல் எண்ணத் தகும். பேகன் திருத்தம் வள்ளல் பேகன் மன்னன் இனத்தவன். அவன் தன் மனைவி கண்ணகியைத் துறந்தபோது, அகத்துறை பாடிய கபிலர் முதல் நால்வர் இஃது ஒருவன் தனதொழுக்கம் என்று வாளா இருந்தனரா? மன்னன் ஆயிற்றே எனப் பின் வாங்கினரா? அவன் இருப்பிடம் தேடிச்சென்று வல்லவாறு தாக்கி இடித்துரைத்த ஐந்து பாடல்களைப் புறநானூற்றில் பார்க்கின்றோமே. ‘குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே, (புறம் - 143)’ எனக் கரைந்து திருத்துகின்றார் கபிலர். ‘பசித்தும் வாரேம் பாரமும் இலமே’ (ஷெ - 145) என்று வெறித்து நகையாடுகின்றார் பரணர். ‘தண்கமழ் பேதை புனைய வண்பரி நெடுந்தேர் பூண்க நின்மாவே’ (ஷெ - 146) என மன்னனை ஏவுகின்றார் அரிசில்கிழார். ‘புதுமலர் கஞல இன்று பெயரின் அதுமன் எம்பரிசில்’ (ஷெ - 147) என்று புதுப்பரிசு வேண்டுகின்றார் பெருங்குன்றூர் கிழார். ஆதலின் குடும்ப நல்வாழ்விற்கு சிறு பெருந்தடைகளை அகற்றிக் குடும்பச் சகடத்தை ஓட்டுவிப்பதற்கு, சான்றோர் துணைமையை நம் நாகரிகம் விதிக்கின்றது என்பதனை இலக்கணத்தாலும் இலக்கியத்தாலும் அறிகின்றோம். நாட்டுப்பற்று நாடெனப் படுவது வீட்டின் கூட்டம். வீடுகள் வாழ்வறியாது நிலைகுலையுமேல், நாடு முடிவில் அடிமைப்படும். வீட்டின் செம்மையே நாட்டின் செம்மையாகக் கண்டவன் தமிழன். மக்கள் தம் வீட்டைக் காக்கும் பற்றொடுதான் நாட்டுப் பற்றுக்கொள்ப. அணையின் நீர்நலம் பயிர்நலமாதல் வேண்டும். நாட்டு வளர்ச்சி வீட்டு நலமாய் முடிதல் வேண்டும். நாடு வீடு காப்பதால் வீடு நாடு காக்க விழைகின்றது. மகளிர் மேற்றாக மூதின் முல்லைத் துறையும் பண்டு ஏற்பட்டது. கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தார் என்னையர்-பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் பின்னோடி எய்போற் கிடந்தானென் ஏறு (வெண்பாமாலை. 176) நாட்டிற்கெனப் பொருகளத்துத் தன் தந்தை, தன் கணவன், தன்னுடன் பிறந்தாரெல்லாம் செத்தொழிய பெற்ற ஒரு மகனையும் சாகக்கொடுத்தாள் ஓர் இல் மகள் என்றால், நாடு காப்பது வீடு என்ற அடித்தளம் பெறப்பட வில்லையா? செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே (புறம். 179) சங்ககாலத் தமிழ் மகளிரின் நாட்டுப்பற்று இத்தகையது. தமிழ்நாடு இல்லற வாழ்வைப் பெரிதும் போற்றியது. தமிழரசு குடும்ப ஆணிவேர் அறாது. வழியுற ஆவன எல்லாம் செய்தது. தமிழ்ப் புலவோர் கணவர் மனைவியரின் பிணக்குக்களை அரும்பிலேயே அறிவுறுத்திக் கிள்ளியெறிந்தனர். சான்றோர் துணை காதலர்க்கு உடல் இரண்டு உள்ளம் ஒன்று எனக் காவியம் ஓவியமாகப் புனைந்தாலும், நடைமுறையில் காதலர் உள்ளங்கள் கடிய கொடிய உள்ளங்களாக இருத்தல் காண்கின்றோம். கணவன் அல்லது மனைவியின் உடல் கிணற்றில், குளத்தில், ஆற்றில், கடலில் மிதக்கவும், கயிற்றில் தொங்கவும், புகையூர்தித் தடத்துக் கிடக்கவும் அவலப்படுகின்றோம். இவை காதலைக் காக்க வந்த சாதல் அல்ல. காதலை அறிவோடு பேணிக்கொள்ளத் தெரியா மையால் விளைந்த சாதலாகும். இன்று செய்தித்தாள்களில் குடும்பக் கோணல்கள் பத்தி பத்தியாக வெளி வருவ. வீட்டின் இழிவு நாட்டின் செய்தியாக வருவதை மக்கள் விருப்புற்றுப் படிக்கின்றனர். நாடு நன்னாடாக வேண்டுமேல், வீடு இன்ப வீடாதல் வேண்டும். தலைவன் தலைவி பிணக்கமில் வாழ்வு நடத்த வேண்டும். பிணக்கம் பெருகுங் கால் பொய்ம்மானம் நச்சாது, தமிழியற்படி, சான்றோர் துணையைத் தாமே நாடவேண்டும். இந்நாட்டம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்று. பெரியாரைத் துணைக்கோடல் அரசாட்சிக்கே யன்றி இல்லாட்சிக்கும் இன்றியமையாதது. ஒற்றுமை வெவ்வேறிடத்துப் பிறந்து வேறு வேறு சூழ்நிலையில் பல்லாண்டு வளர்ந்தஇருவர் மணம் கொள்கின்றனர். எல்லா வகையானும் இவ்விருவர் மனமும் இயல்பாக ஒன்றிவிடும் என எதிர்பார்ப்பது தவறு. ஒருவர் சொற்போக்கையும் சொற் குறிப்பையும் ஏனையவர் மயக்கமறப் புரிந்து கொள்ளவே நாட் பிடிக்கும். இம் முன்னிலையைப் பண்டைத் தமிழர் பக்குவமாக ஊன்றி நோக்கினர். தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே (குறுந். 167) வரைந்து கொடுத்தபின், செவிலி தலைவியின் வீடு அடிக்கடி செல்வது வழக்கம். விருந்துண்பது நோக்கமன்று; இல் வாழ்க்கையைக் காண்பது நோக்கம். கணவனொடு மாறுபட்ட குறிப்புப் புலப்பட்டால், நேர்படுத்துவது நோக்கம். தற்கொண் டானையும் பேணுவது மனைவி பொறுப்பாதலின், வீட்டியல் என்பது பெண்ணியல் ஆகும். ‘நன்கு ஆக்கி முறுவல் பூத்துச்சோறிட்டாள். விரும்பி அவனும் உண்டான்; இவள் முகம் மலர்ந்தது’ என்று தான் கண்ணாரக் கண்ட ஒற்றுமையைச் செவிலி நற்றாய்க்கு உவந்து கூறுகின்றாள். இல்லறம் தழைக்கின்றது. காதற் கருவிலிலுருந்து குழந்தைக்கனி பழுக்கின்றது. இன்பக் குழவியை இடையூறு என்று எண்ணாது நடுவே கிடத்திப் பெற்றோர் இருபாலும் துயில்கின்றனர். காதல் அகலுகின்றது, கடமை குறுக்கிடுகின்றது. மறியிடைப் படுத்த மான்பினை போலப் புதல்வன் நடுவணன் ஆக நன்றும் இனிது மன்றவவர் கிடக்கை முனிவின்று நீனிற வியலகங் கவைஇய ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே (ஐங். 401) முக்கூட்டுக் குடும்பக் காட்சியைக் கண்ட செவிலித்தாயின் மகிழ்ச்சி எவ்வுலகமும் கடந்தது. மான் குடும்பமாக, இயற்கைக் காட்சியாகக் களிக்கின்றாள் அவள். பெற்றோர் மாறுபாட்டைப் பிறந்த குழந்தை தணிக்கும் ஆதலின் மக்கட் பேறுவரை தாய் வீட்டார் வந்து வந்து மகளின் இல்லற வொழுங்கைப் பார்த்துக் கொள்வது தொன்மைத் தமிழ் நாகரிகம். இடித்துரை தலைவன் பரத்தை வேட்டையனாய்த் திரிந்தலைந் தான்; மனைவி பொறுக்கும் நிலையின்றி அலமந்து அவனை மிக வெறுத்தாள். அவன் வீடு வர இசைந்தான் இல்லை. தலைவி கவலையால் அறிவு பிறழ்ந்து கடமை தவறினாள்; அன்பினால் நாளும் அவல நீர் வடித்தாள். தன்னிலை என்ன? தன் குடும்பநிலை என்ன? குழந்தைகள் எதிர்காலம் என்ன? இவைபற்றி அவளுக்கு நினைவோடவில்லை. இந்நிலையில் தோழி துணையானாள்; கணவன் மாட்டு எழுந்த சின வுணர்ச்சியை மட்டுப்படுத்தினாள்; சினத்தால் பிறர் அடைந்த கேடுகளைப் பார் என்று ஏதுக்காட்டினாள்; அறிவு நிலைக்குக் கொண்டு வந்தாள் பரத்தமை தாங்கலோ இலனென வறிதுநீ புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை அதுபுலந் துறைதல் வல்லி யோரே செய்யோள் நீங்கச் சில்பதம் கொழித்துத் தாமட் டுண்டு தமிய ராகி ............................ வைகுநர் ஆகுதல் அறிந்தும் அறியார் அம்மவஃதுடலு மோரே (அகம். 316) என்று பாடுகின்றார் ஓரம்போகியார். ‘கணவன் நிலை கிடக்க; குழந்தைகள் நிலையை நினை’ என்று எடுத்துக் காட்டும்போது, வளரும் இளமுகங்களைக் காண்கின்றாள்; ‘பொறுத்தல் இறப்பினை என்றும்’ என அமைதிப் படுகின்றாள். தோழி துணையாய் இடித்துரையாவிடில், குடும்பப் பிரிவேற்பட்டுக் குழந்தைகள் கஞ்சிக்கல்லையும் அன்றோ? 3. இலக்கியப் படிப்பினை கலை என்பது இயற்கை தழுவி மக்கள் ஆக்கிக் கொண்ட ஓர் அறிவுப் படைப்பு. அப்படைப்பிற் பெரியது இலக்கியக் கலை. இலக்கியம்போல் விரிந்ததும் பரந்ததும் மனித இனம் முழுதையும் உட்கொண்டதும் ஆகிய கலை வேறொன்று இல்லை. இலக்கியத்துக்கு நீண்ட வரலாறும் எண்ணிறந்த புலவர்களும் இருப்பதுபோல் வேறு கலைகளுக்கு இல்லை. காலத்தை நீந்தி வாழும் திறம், பலர் புகழைப் பதிவு செய்து கொள்ளும் திறம் இலக்கியத்துக்கே நிறைய உண்டு. இதனால் இலக்கியத்தை நெடுங்கலை எனவும் ஓவியம் சிற்பம் முதலிய கலைகளைக் குறுங்கலை எனவும் கூறலாம். மனித இனத்தின் தனிப் பேறு மொழி, மொழி வளருந் தோறும் நாகரிகம் வளர்ந்துள்ளது. அம்மொழி கொண்டு இயங்கும் கலை இலக்கியமே, மொழி எல்லார்க்கும் பொதுச் சொத்து. அம் மொழி வழிப்பட்ட இலக்கியமும் எல்லார்க்கும் பொது. நல்வாழ்வுக்கும் வாழ்வின் விரிவுக்கும் சிந்தனை யோட்டம் வேண்டும். அச்சிந்தனைச் செல்வத்தை இலக்கியத்தில் கடல் போலப் பெறுகின்றோம்; விலையின்றி மலிவாகவும் பெறுகின்றோம். ‘கற்றனைத்து ஊறும் அறிவு’ என்றார் வள்ளுவர். அவ்வறிவு இலக்கியக் கல்வியில் ஊறி வருவது போல் ஏனைக் கல்வியில் ஊறுவதில்லை. அகத்திணை இலக்கியம், புறத்திணை இலக்கியம், காப்பிய இலக்கியம், நீதி யிலக்கியம், பாசுர இலக்கியம், சிற்றிலக்கியம், இலக்கண இலக்கியம் எனப் பல்வேறு இலக்கியங்கள் பெற்ற இனம் தமிழினம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய இவ்விலக்கியங்களில் பழமையான சிந்தனைகளையும், புதிதாகப் புகுந்த சிந்தனைகளையும் அறிகின்றோம். பெரும் பந்தாட்டம் பழகுபவனுக்குச் சின்ன இடம் போதாது. ஓடியாடித் திரிந்து விழுந்து நோக்கம் போல் விளையாடுதற்குப் பரந்த இடம் வேண்டும். அது போல் சிந்தனையைத் தீட்டிக் கொள்ளு தற்குச் சின்னஞ்சிறு இலக்கியங்களோ சிறு வளர்ச்சியுடைய இலக்கிய மொழியோ துணை செய்யமாட்டா. நாம் பெற்ற தவத்தால் தமிழர்க்குப் பெரும் பெரும் இலக்கியங்களும் தமிழ் மொழிக்குச் சங்கம் கண்ட நீண்ட வரலாறும் உண்டு. வாழ்வாங்கு வாழ விரும்புவார்க்கெல்லாம் இலக்கியக் கல்வி இன்றியமையாதது. ஏன்? இலக்கியம் என்பது மனித வாழ்க்கையை ஆராய்ந்து கூறும் அறிவியல் ஆகும். ஏனை அறிவியல்கள் வாழ்க்கைக்குத் துணையான பொருள் களையே ஆராய்ந்து நிற்க, இலக்கியமோ வாழ்க்கை தன்னையே ஆராய முற்படுகின்றது. பல்வேறு மாந்தர்களின் நெஞ்சோட்டங் களையும் அறிவோட்டங் களையும் வாழ்வு தாழ்வுகளையும் பண்பின் நிறைவு குறைவுகளையும் நுணுகி அலசி இசைந்தும் இடித்தும் வெளிப்படுத்துகின்றான் புலவன். புலவன் என்பவன் வெற்றெழுத்தாளன் இல்லை; வாழ்வியலைப் புலப்படுத்துபவன். அவன் இயற்றிய இலக்கியத்தைக் கற்கும்போது, வாழ்க்கையில் இன்ன சமயத்து விழிப்பாக இருக்க வேண்டும், இன்ன பண்புடைய வனோடு இப்படிப் பழக வேண்டும், இன்ன துன்பத்து இப்படிக் கடக்க வேண்டும் என்ற படிப்பினைகளைப் புரிந்து கொள்கின்றோம். இலக்கியம் பலர்தம் வாழ்க்கையைப் பற்றிப் பாடினாலும் அது தொகுத்துக்கூறும் வரலாற்று நூலன்று. வாழ்ந்த விதத்தின்மேல் ஆராய்ச்சி செய்வது இலக்கியம். யாராக இருந்தாலும் நன்றினை நன்றெனவும் தீதினைத் தீது எனவும் எடுத்துக்காட்டுவது இலக்கிய அறம். இன்னவன் போல வாழ்வை நடத்த வேண்டும் என்று உடன் பட்டாலும் இன்னவன்போல் வாழ்வைப் பாழாக்கக் கூடாது என்று எதிர்மறையாலும் இலக்கியத்தில் வாழ்க்கை விளக்கம் பெறுகின்றோம். நல் வாழ்வுக்கு முதலீடு கல்வியோ செல்வமோ பதவியோ அன்று; சிந்தனை வளர்ச்சியே சிறந்த வாழ்வுக்கு முதல், அறிவுடையார் எல்லாம் உடையார் என்பர் வள்ளுவர். சுருங்கச் சொல்லின் இவ்வறிவு என்னும் சிந்தனைப் பயிரைப் புலவர்களாகிய உழவர்கள் இலக்கியம் என்னும் நன்செய்யில் வளர்க்கின்றனர். இனி, இலக்கியப் பண்ணையில் ஏற்கனெவே வளர்ந்து கிடக்கும் சில சிந்தனைகளைக் காண்போம். உலகவாழ்வு என்பது இல்லறத்தை நிலைக்களனாகக் கொண்டு இயங்குவது. அகத் தாக்குதல் புறத் தாக்குதல்களி லிருந்து இல்லறத்தை நடத்திச் செல்லுதற்கு ஓயா ஒழியாச் சிந்தனை வேண்டும். நல்ல இல்வாழ்க்கைக்குத் தற்கொடை மனம் வேண்டும். சரிநிகர் சமானம் என்பது மனிதப் பொது விதி. விட்டுக் கொடுக்கும் தன்னீகை இல்லறத்தின் சிறப்பு விதி. குடும்பத்தில் குற்றம் வராதபடி காக்க முற்படுவானுக்குப் பல துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும், விடுதலை இல்லை என்று அறிந்த வள்ளுவர் இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ! என்று உணர்ச்சி யாகவும் இரக்கமாகவும் வினவுகின்றார். இத்தகைய தன்னளி மனப்பான்மையைச் சங்க இலக்கியத்தின் அகத்திணைப் பாடல்கள் விரித்துரைக்கின்றன. காதல் மணத்துக்குப் பெற்றோர்கள் உடன்படாத போது, தலைவி தலைவனோடு உடன்போகின்றாள். அவன் நாட்டிற்கே சென்று சிலநாள் தங்கியிருந்து தாய்வீடு திரும்புகின்றாள். திரும்பி வந்த தலைவியைப் பார்த்து, நீ சென்ற நாட்டில் குடிப்பதற்குத் தண்ணீர் அவ்வளவு நன்றாக இருந்திராதே; அதனையுமா குடித்தாய் என்று தோழி கேட்டபோது தலைவி கூறும் விடை: அன்னாய் வாழிவேண்டு அன்னைநம் படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு உவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலிழி நீரே (ஐங். 103) நம் தோட்டத்துத் தண்ணீர் தேனைவிடப் பாலைவிட இனியது தான். இதனைவிட இனியது ஒன்று இருப்பதை அறிந்தேன். உடன்போக்குச் சென்ற வழியில் ஒரு குட்டை இருந்தது. நீரில் அழுகிய இலைகள் கிடந்தன. வழி விலங்குகள் குடித்தபின் தண்ணீர் கொஞ்சமே இருந்தது. அதுவும் கலங்கலாக இருந்தது. தாகம் தணிய அள்ளிப் பருகினேன். அதன் சுவைக்கு நம் தோட்டத்து நன்னீர் நிகராகாது என்றாள் தலைவி. தலைவியின் உண்மைக் கருத்து என்ன? ஒருத்திக்குக் காதலன் உள்ளவிடத்துக் கலங்கிய நீரும் நல்லதாகும்; அவனில்லாத இடத்துத் தேனும் பாலும் இன்னாதவையாகும். காதலிக்குப் பொருள் வளம் முக்கியமன்று; காதலனை நீங்காத புணர்ச்சியே முக்கியம். ‘ஒன்றன் கூறாடை உடுப்பவரே யாயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை’ என்பது கலித்தொகை. ஓருயிரும் ஈருடலுமான காதலர்களுக்கு வறுமை பெரிதன்று; ஓராடையை உடுத்திக் கொண்டே வாழலாம் என்பது இதன் கருத்து. இதனால் கற்பின் திண்மையையும் வசதியை ஈகம் செய்து கொள்ளும் காதற் சிந்தனையையும் அறிகின்றோம். கோப்பெருஞ்சோழன் பண்புகள் நிறைந்த சங்கப் பெருமகன்; பிசிராந்தையார் என்னும் புலவர்க்கு உயிர் நண்பன்; தமிழர் வரலாற்றில் மனம் ஒன்றிய நட்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவன். எனினும் அவன் மக்கள் இருவர்க்கும் அவனுக்கும் அரசு காரணமாகப் பகை ஏற்பட்டது. மக்கள் இருவரும் சேர்ந்து கொண்டு தந்தை மேல் போர் தொடுத்தனர். தமிழகப் புகழ் வாய்ந்த சோழனும் தந்தை என்ற நிலையை விட்டு அரசன் என்ற முறையில் எதிர்த்து வந்த மக்கள்மேல் போரிட முனைந்தான். வேறு வகையாக அவனால் சிந்திக்க முடியவில்லை. இச் சூழ்நிலையைத் தடுக்க எண்ணினார் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார்; இந்தக் குடும்பப் போர் குடிக்கும் அரசுக்கும் நல்லதில்லை என்று தெளிந்தார்; வேண்டு மென்றே போர் தொடுத்திருக்கும் இளம் பிள்ளைகளுக்கு அறஞ் சொல்வது செவியேறாது என்று கருதி, புலவரை மதிக்கும் பண்புடைய தந்தை சோழனுக்கே சிலவற்றை சிந்திக்கச் சொன்னார். ‘உன்னை எதிர்க்கும் இருவர் யார்? உன் மக்கள் அல்லவா? அவரை எதிர்க்க வந்த நீ யார்? அவர் தம் தந்தை அல்லவா? பெற்றவனும் பிறந்தவர்களும் அடித்துக் கொள்வது உறவா? முறையா? இப்போரில் நீயே வெல்வாய் என்று வைத்துக்கொள். வென்றபின் இவ்வரசுரிமையை யார்க்குக் கொடுக்கப் போகின்றாய்? என்றும் இவ்வுரிமைக்கு உரியர் நின் மக்களே. போரில் எது நடக்கும் என்று யார் அறிவார்? நீ தோற்கவும் செய்யலாம். அப்போதும் உரிமை அவர்களையே சேரும். நின் மக்கள் வலிந்து கைப்பற்றி னார்கள் என்ற பழிச்சொல்லை நீ அடையாமல், அவர் கட்கும் அடைவிக்காமல், நீயே முந்தி விட்டுக் கொடுத்து ஈகப் புகழ் அடை. உங்கள் குடிப்போர் பக்கத்து நாட்டரசர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதற்கு முதிர்ந்த அரசியல் அறிஞனாகிய நீ இடங்கொடாதே’ நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே; அமர்வெஞ் செல்வ நீயவர்க்கு உலையின் இகழுநர் உவப்ப ப்பழியெஞ் சுவையே; அதனால், ஒழிகதில் அத்தை நின்மறனே; வல்விரைந்து எழுமதி வாழ்கநின் உள்ளம் (புறம். 213) இவ்வாறு எயிற்றியனார் சோழனுக்கு எடுத்துரைத்தார். இது செவ்வைதான் என்று அவனுக்குப் பட்டது. அரசையே துறந்து வடக்கிருந்தான் சோழன். புலவர் சிந்தனை பூசலைத் தடுத்தது. சிறியோர் வாழ்விலும் பெரியோர் வாழ்விலும் ஏதோ சில போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டேதான் உள. எவ்வளவு ஆற்றல் உடையவர்கள் நெஞ்சத்தும் கவலை யணுக்கள் உள்ளன. எண்ணித் துணிக கருமம் எனவும், பின் வருந்தும்படியான காரியங்களைச் சிந்தனையின்றி விரைவுபட்டுச் செய்து விடாதே எனவும், குன்றுபோல் வாழ்வில் உயர்ந்தாரும் வீழ்ச்சி யடைவதற்கு நேரமாகாது, குண்டுமணியளவு பெருந்தீமை செய்தாற்போதும் எனவும் திருக்குறள் எச்சரிக்கின்றது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் சிந்திக்கத் தவறிய சிந்தனை என்ன? தண்டனையில் கொலைத் தண்டனை கடைசி யானது. அது காமத்தாலோ வெகுளி யாலோ மயக்கத்தாலோ செய்தற்கு உரியதில்லை. எவ்வளவு கேட்புக்கள் நடத்திக் கொலைத் தண்டனையை விதிக்க வேண்டும்? அப்படி விதிப்பதாயினும் அரசன் மிகப் பொறுப்போடு தான் முன்னின்று அதனைச் செய்ய வேண்டும். கொலையினும் கொடியவனைக் கொலை செய்யலாம்; ஆனால் அவ்வொருவன் கொலை, வாழும் மக்கட்கு மிக நல்லதாக இருத்தல் வேண்டும். மன்னா யத்துக்கு அவன் ஒரு களையாக இருந்தால், ஏனைக் குடிப் பயிர்கள் வளர்வதற்கு அக்களையை வேரொடு பறிக்கலாம் என்று வள்ளுவர் மிகவும் விழிப்பாக இத்தண்டனை பற்றி மொழிகுவர். பாண்டியன் இத் தண்டனையை மிக மேலோடாகச் செய்தான். கோவலன் கையில் சிலம்பைக் கண்டால், சிலம்போடு அவனையும் சிறைப்பிடித்து வருக, கொலைத் தண்டனை அளிக்கின்றேன் என்று கூறியிருக்கலாம்; அப்படிச் சொல்லாது, சிலம்பு இருப்பது உண்மையானால், அவனைக் கண்ட இடத்திலே கொல்லும் உரிமையைக் கேவலம் ஊர்க் காவலர்களுக்கு அளித்தான். கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப மண்ணக மடந்தை வான்துயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை யூழ்வினை யுருத்தென் ஊர்க் காவலர்களுள் ஒரு கல்லாக் களிமகன் கோவலனை வாளால் வெட்டினான் என்பதிலிருந்து, பெரிய தண்டனையைச் செய்யும்படி சிறியவனுக்கு அதிகாரம் கொடுத்த தவறு புலனாகின்றது. களை பறிப்பதாக எண்ணி நாற்றையே பறித்துவிட்டான் பாண்டியன். பறிபட்ட நாற்று பாண்டியன் குலத்துக்கே ஊறாகி விட்டது. ‘யானோ அரசன் யானே கள்வன்’ என்று நெடுஞ்செழியன் தன் மனைவியோடு மாய்ந்தான். சிறுதவற்றால், தமிழகத்தின் இரு பெருங்குடிகள் வாழ்விழந்தன. பலர் செய்த தவறுகளை இலக்கிய வாயிலாக நாம் அறியும்போது, நம் வாழ்வின் போக்குக்கள் புலனாகின்றன. நான் ஆர், என் உள்ளம் ஆர், என் சிந்தனை ஆர், என் செயல் ஆர், என் சிறுமை ஆர் என்ற தன் எண்ணங்கள் கிளைக்கின்றன. இலக்கியக் கண்ணாடி முன்னோர் வாழ்வுகளையும் வீழ்வுகளையும் நமக்குக் காட்டிக் கொண்டே நிற்கின்றது. ‘வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய்’ என்ற திருவாசகப் பகுதியும், முறை மாறி நடந்தால், ‘கெடுவல் யான் என்பது அறிக’ என்ற திருக்குறட் பகுதியும் முயல்க, மயங்கற்க, விழிப்பாக நடக்க, முறையாக ஒழுகுக, தன் கேட்டுக்கும் பிறர் கேட்டுக்கும் உரியன செய்யற்க என்று நம் சிந்தனையைச் சோம்ப விடாது தூண்டிக் கொண்டே இருக்கின்றன. வாழ்தற்கு உரிய சிந்தனைகளை வளப் படுத்துவது இலக்கியம், வீழ்தற்குச் செய்யும் சிந்தனைகளில் விழிப்பைத் தருவது இலக்கியம். 4. சங்கநெறிகள் 1. அன்பு நெறிகள் தமிழ் மொழிக்கு உயிரும் உடம்பும் என்று மதிக்கத் தக்க சங்க விலக்கியம் என்பது பெரும்பாலும் காதல் வாழ்வு பற்றிக்கூறும் அகவிலக்கியமாகும். அகப்பொருள் இலக்கியம் என்ற பெயர் பெற்றிருப்பினும், இல்லற வாழ்வுக்குத் தொடர்பான உலகச் செய்திகளும், இயற்கைச் சூழல்களும், அரசியல் போரியல் நெறிகளும், உயர்ந்த எண்ணங்களும், நல்ல வழக்க வொழுக்கங்களும் இவ்விலக்கியத்தில் நிரம்பவும் தெளிவாகவும் பொதிந்து கிடக்கின்றன. சங்கத்தொகை நூல்களுள் அகநானூறு நீண்ட அடிகள் கொண்ட பனுவலாதலின் எல்லா வகையிலும் பல்வேறு குறிப்புக்களும் நெறிப்பாங்குகளும் கொண்டதாக விளங்குகின்றது. மேலும், சங்கப் புலமைச் சான்றோர்கள் இயற்கைச் சூழ்நிலையில் வாழ்ந்து மரம், செடி, கொடிகள், பறவை, விலங்கு முதலான இயற்கை யுயிர்களின் வாழ்விய லையும் உணர்வியலையும் கசடற அறிந்தவர்களாதலின் அவர்தம் அறிவாற்றலை அகநானூறு விரிவாகப் பகர்கின்றது. முதற்கண் அகநானூறு கூறும் அன்பு நெறியைக் காண்போம். அன்பு என்பது மக்கட்கு மட்டும் உரிய உணர்வன்று. எல்லாவுயிர்க்கும் உயிராக விளங்கும் குணம் அன்பாகும். அதனாற்றான் ‘அன்பின் வழியிது உயிர்நிலை’ என்று பொது நோக்கிற் கூறினார் வள்ளுவர். அன்பு பொதுப் பெருஞ் சிறப்பினது ஆதலின் ‘அன்பென்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்ததில்லை’ என்று கம்பர் அதன் தனித் தன்மையை அழுத்தமாகப் பாடினார். பறவை விலங்கு இனங்கட்கும் அன்பு வெளிப்பாடு உண்டு. மரஞ் செடி கொடிகட்கும் அன்புச் செயல் உண்டு. இவ்வுண்மை எங்குஞ் செயற்கையறிவும் செயற்கை மோகமும் உடைய இக்காலத்தவர்க்கு எளிதிற்படாது. அகநானூற்றுக் காலம் இயற்கை யறிவுக் காலம். ஆண்மான், பெண்மான், குட்டிகள் என்ற ஒரு குடும்பம், கொலை வில்லை ஏந்திய வேட்டுவன் அம்பு தொடுத்தபோது பெண் மான் இறந்துவிட்டது. அந்த இறப்பைப் பொறாது துயருற்ற ஆண்மான் புல்மேயவில்லை; சிறிதும் நீர் பருக வில்லை; நடக்கவும் முடியவில்லை. தன்னுடலில் அம்பு தைத்ததுபோல மாழ்கி அந்த இடத்திலேயே சோர்ந்து கிடந்துவிட்டது. கைம்மைப் பட்ட இவ்வாண்மான் செத்திருக்கவும் செய்யும்; தான் காக்க வேண்டிய மறிக்குட்டிகள் இருப்பதை நினைந்து மடியவில்லை. கணையிடக் கழிந்ததன் வீழ்துணை யுள்ளிக் குறுநெடுந் துணைய மறிபுடை யாடப் புன்கண் கொண்ட திரிமருப் பிரலை மேய்பதம் மறுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து நெய்தலம் படுவிற் சின்னீர் உண்ணாது எஃகுறு மாந்தரின் இனைந்துகண் படுக்கம் (அகம்.371) என்ற இளங்கீரனார் பாடலில் இரலைக் கணவன், மான் மனையாளிடத்தும் மறிக் குழந்தைகளிடத்தும் கொண்ட அன்பும் குடும்பப்பொறுப்பும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன; வழி காட்டவும் செய்கின்றன. ஒரு யானைக் குடும்பத்தின் அன்பு, ஆண் யானையாகிய களிறும் பெண் யானையாகிய பிடியும் உணவு தேடி மலைப்பக்கம் சென்றன. ஓரிடத்துச் சுரபுன்னையும் வாழையும் வளர்ந்தோங்கிய சாரல் இருந்தது. முதற்கண் அவற்றைத் தின்னச்சென்ற களிறு விரும்பித் தின்னும் மகிழ்ச்சியில் அறியாது அருகிருந்த படுகுழியிற் காலை வைத்து உள்ளே விழுந்து விட்டது. நேர்குத்தான ஆழ்குழியாதலின் ஏற முடியவில்லை. இல்லறக் காதலும் ஒட்பத் திறலும் வாய்ந்த பெண் யானை உடனே அடுத்திருந்த பெருமரக்கிளைகளை முறித்து வருந்தும் தன்யானைக் கணவன் ஏறி வருவதற்குப் படிகள் அமைத்துக் கொடுத்தது. ஆண் யானையும் தப்பிப் பிழைத்துத் தன் காதற்பிடியொடு புறப்பட்டது. இந்த அகநானூற்றுச் செய்யுளில் வரும் அன்புடை யானைக் குடும்பத்தை எண்ணித்தான் ‘காதன் மடப் பிடியோடும் களிறு வருவன கண்டேன்’ என்று அப்பரடிகள் பாடினார் போலும். பெண் யானை இத் தந்திரம் செய்திராவிட்டால் கானவர் ஆண் யானையைப் பிடித்து அடிமைப்படுத்தியிருப்பர். தற்காத்துத் தற் கொண்டானையும் காத்த சிறப்பு இந்தப் பிடிக்கு உண்டு. இந்த அன்பு நிகழ்ச்சியை, கழைநரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு வாழை யோங்கிய தாழ்கண் அசும்பில் படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலியப் பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் (அகம். 8) என்று நான்கு அடிகளில் பாடுவர் பெருங் குன்றூர்கிழார். ஆய் எயினன் என்ற வீரன் பறவையினங்களை நன்கு வளர்த்துக் காப்பவன். அதனால் அவன்பால் எல்லாப் பறவைகளும் அன்பு காட்டின. பாழி என்ற போர்க்களத்தில் மிஞிலி என்பவன் ஆய்எயினனைக் கொன்று விட்டான். கொன்ற நேரம் கடுமையான நண்பகல், எயினனது சிதைந்த உடம்பு போர்க்களத்தில் வெயிலிற் கிடப்பதைக் காணப் பொறாத பருந்து முதலான பறவைகள் ஒருங்கு கூடித் தஞ்சிறகுகளை யெல்லாம் மேலே குடையாகப் பரப்பிப் பறவைக் காதலன் உடலை வெயிலிற் படாமல் காத்தன. பகலிற் கண் தெரியாத கூகை தான் இந்தச் செய்ந்நன்றி நிகழ்ச்சியிற் கலந்து கொள்ள முடியவில்லையே என்று வருந்திற்றாம். பறவையினம் ஒரு மனிதனிடம் காட்டிய வியத்தகு அன்புச் செயலைப் பரணர் நான்கு பாடல்களில் பாராட்டுகின்றார். எனவே அகநானூறு மக்களின் அன்பொன்றனையே பாடவில்லை; ஏனையுயிர்களின் அன்புகளையும் பாடிப் பாராட்டுகின்றது. இதுவே சங்கவிலக்கியத்தின் தனி மாண்பு. 2. மனித நெறிகள் ‘அறிவறிந்த மக்கட்பேறு’ என்று வள்ளுவப் பெருமகன் சொல்லியபடி, அறிவுடையவனே மனிதன் எனப்படுவான். பிறிதோர் உயிரின் துன்பத்தை உணரும்போது தான் நமக்கு அறிவுண்டு என்று சொல்ல வேண்டும். அங்ஙனம் உணராத நிலை அறிவு என்ற பெயருக்குத் தகுதியில்லை, இவ்வுலகமும் இவ்வுலகத்து உயிர்களும் நமக்காக இருக்கின்றன எனவும், நமக்குப் பணி செய்ய வேண்டும் எனவும் மனிதவினம் மடம்பட்டு வீறு பேசுகின்றது. இவ்வுலகம் எல்லாவுயிர்க்கும் பொது என்ற அறிவும், ஏனையுயிர்கட்கும் மனிதன் தொண்டு செய்ய வேண்டும் என்ற அறிவும் இன்றைய மக்கள் வாழ்வில் பதியவில்லை. தன்னலத்துக்காகப் பிறவுயிர்களை வருத்தி வாழும் போக்குத்தான் இன்று வளர்ந்துவரும் அறிவியலு லகில் பெருகி வருகின்றது. அகநானூறு போன்ற சங்க விலக்கியங்கள் படிப்பது பரவினால், பரப்பப்பட்டால், மனித நெறி என்ற இரக்கப் பண்பும் தன்னல மறுப்பும் நாட்டில் வளரும். ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’ என்ற தொடரை நாம் அடிக்கடி கேட்கின்றோம். இத் தொடர் அகநானூற்றில் வரும் அழகுத் தொடர் என்ற நினைவூட்ட விரும்பிகின்றேன். முறைப்படி கற்பித்தால், அகநானுற்றுச் செய்யுள் ஒவ்வொன்றும் சிறுகதை போலவும், ஒருறுப்பு நாடகம் போலவும் விறுவிறுப்பாக இருக்கும். மனிதர்கள் பின்பற்ற வேண்டிய அவ்வளவு அறநெறிகள் அகநானூற்றில் உள்ளன. தலைவனும் வண்டும் பற்றிய ஒரு காட்சி: தலைவியைப் பிரிந்து நெடுந்தொலை சென்ற தலைவன் வினையை வென்றியொடு முடித்துக் கொண்டு கார்காலத் தொடக்கத்தில் வீடு திரும்புகின்றான்; வீடு நெருங்குகின்றது. மாலைப் பொழுதிற்குள் தலைவியைக் கண்டு இன்புற வேண்டும் என்று அவன் நெஞ்சு வேகப்படுகின்றது. மன வேகத்திற்கேற்பக் குதிரையும் வேகம். இத்தலைவன் வேகத்தேரில் வருகின்ற வழியோ பெருஞ்சோலை; வண்டுகள் மலர்களொடு பிணைந்து கிடக்கின்றன. ஒரு சிந்தனை தலைவனுக்கு வருகின்றது. ஓடுகின்ற நேரில் கிண் கிண் என்று ஓசை செய்யும் மணியின் நாவினைக் கயிற்றாற் கட்டி ஓசையை அடக்குகின்றான். குதிரை பறக்கின்றது; ஆனால், மணியொலியில்லை. ஏன் இவ்வாறு செய்தான்? தன் இன்ப வேட்கைக்காகப் பூஞ்சோலையிற் பிணைந்து கிடக்கும் வண்டுகளின் இன்பத்தைக் கலைக்கலாமா? கெடுக்கலாமா? தொல்காப்பியர் கூறியபடி, இவ்வுலகில் எல்லாவுயிர்க்கும் இன்பந் துய்கும் உரிமையுண்டல்லவா? இந்தப் பொதுச் சிந்தனை தோன்றியதும் தலைவன் மணியின் நாவைக் கட்டினான். நாலறிவுடைய வண்டின் இன்பத்தை மதித்ததனால் இத்தலைவன் ஆறறிவுடைய மனிதன் ஆனான். பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேரன் (அகம். 4) என்று குறுங்குடி மருதனார் இவன் செயலை மாண்வினை என்று பாராட்டுகின்றார். வேட்டுவனும் ஆண் பன்றியும் எதிர்ப்பட்ட ஒரு காட்சி: ஓர் ஆண் பன்றி தன் பெண் பன்றியொடும் குட்டிகளொடும் இரை தேடிப் புறப்பட்டது. அப்போது வேட்டுவன் ஒருவன் தன் வேட்டை நாயைப் பன்றிமேல் ஏவினான். ஆண் பன்றி அந்நாயைத் துரத்தி ஓட்டியது. மேலும் வேடுவர்கள் தன்மேல் வாராமல் எதிர்த்து விலக்கியது. விலக்கியதோடு போய்விடாமல் தன் குட்டி களையும் பன்றிப் பெண்ணையும் காவலான இடத்தில் வைத்துவிட்டு, வில்வேடுவன் வருகின்ற வழிபார்த்து அவனைத் தாக்குதற்காக அசையாது சினத்தொடு நின்று கொண்டு இருந்தது. இவ் வீரக் காட்சியைக் கண்டான் வேடுவன், ஒரு சிந்தனை அவனுக்குப் புறப்பட்டது. அதுதான் மனிதச் சிந்தனை. அவ்வாண் பன்றியைக் கேவலம் பன்றியாக அவன் நினைக்கவில்லை. அதனைத் தன் தலைவனாகக் காண்கின்றான். வழிபார்த்து நிற்கும் தன் எதிர்ச் செயலைத் தன் தலைவன் போர்க்களத்துப் பகைவர் படையை விலக்கித் தடுப்பதற்கு முன்னிற்பதாகக் காண்கின்றான். வீர வுணர்ச்சி விலங்கிற்கும் உண்டு என்று உணர்ந்தவுடனே, ‘பன்றியே நீ என் தலைவனுக்கு ஒப்பாவாய்’ என்று பாராட்டி விட்டுத் தொடுத்த அம்பை எடுத்துக் கொண்டு செல்கின்றான் என்று கபிலர் ஓர் அரிய நிகழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார். அரும்புழை முடுக்கர் ஆட்குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கிக் கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி மடைசெலல் முன்பின்தன் படைசெலச் செல்லாது அருவழி விலக்குசெம் பெருவிறல் போன்மென எய்யாது பெயரும் (அகம். 248) என வரும் பண்பு மனிதநெறி தழுவியது. ஒரு மனிதன் தன் மனைவி மக்களைக் காக்க நினைக்கின்றான். ஓர் ஆண் பன்றி தன் பெண்ணையும் குட்டிகளையும் காப்பாற்றும் பொருட்டு வீரங் கொள்கின்றது. இத்தற்காப்புச் செயலைத் தன்செயல் போல உணர்பவன்தானே மனிதன். அத்தகைய அறிவுடை இரக்க மனிதர்களை அகநானூற்றில் நிறையப் பார்க்கலாம். 3. பொருள் நெறிகள் ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று மிகவும் வெளிப்படையாக மனத்திற் பதியும்படி திருக்குறள் கூறுகின்றது. தமிழ் நூல்கள் செல்வத்தை நன்கு ஈட்டித் திரட்டி நல்ல வழியில் தனக்கும் பிறர்க்கும் பயன்படுத்த வேண்டுமென்று கூறுமே யன்றிச் செல்வத்தைத் தேட வேண்டாம் என்று முயற்சியைத் தடுப்பதில்லை. தமிழர் திருமண வாழ்வைக் குடும்ப வாழ்வு என்று சொல்லாமல் இல்லறம் என்று உயர்த்துக் கூறுவதிலிருந்தே கணவனும் மனைவியும் இன்பம் துய்க்கும் அளவில் நில்லாமல் அறங்களும் செய்ய வேண்டுமென்ற கருத்துப் பெறப்படும். அகப் பொருளிற் பொருள் வயிற்பிரிவு என்பது இன்றியமையாத பிரிவாகும். சங்க விலக்கியங்கள் இன்பப் பொருள் பற்றிப் பாடினாலும் இன்பத்துக்குத் துணையான ஏனைச் செய்திகளை விரிவாகக் கூறுகின்றன. ஆதலின் சங்கப் பனுவல்களை வாழ்க்கையிலக்கியங்கள் என்று மதிக்க வேண்டும். பொருள் ஏன் தேட வேண்டும்? உள்ள செல்வம் போதாதா? பொருளீட்டத்துக்காகத் துன்பப்பட வேண்டுமா? இளமையில் இன்பத்தைத் துறந்து, மனைவியைப் பிரிந்து நெடுந்தொலை செல்லலாமா? இன்பம் பெரிதா? பொருள் பெரிதா? என்ற பல பொருள் நெறிகளை அகநானூறு தெளிவிக்கின்றது. திருமணமாவதற்குமுன் செலவும் தொடர்பும் பொறுப்பும் குறைவு. மணமானபின் தன் குடும்பம் என்ற கட்டு ஏற்படுவதால் உறவுகள் பெருகுகின்றன; உலகத் தொடர்புகள் விரிகின்றன; பழியின்றிப் புகழ்பெறும் எண்ணங்கள் மலர்கின்றன. பெற்றோர், மனைவி, மக்கள் இவர்களைப் போற்றவும், உறவினர்க்கும் ஊரார்க்கும் உதவவும், வறியவர்க்கு வழங்கவும், தம்மை இகழ்ந்து செருக்கித் திரிவாரை அடக்கவும் பொருளின் துணை வேண்டும். கேள்கே டூன்றவும் கிளைஞ ராரவும் கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் (அகம். 93) என்று நக்கீரனார் கூறுவதுபோல, குடும்பமானவுடன் முதற்கண் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்குச் செல்வம் வேண்டுமல்லவா? ஒரு கணவன் சிந்திக்கின்றான்: இளைய மனையாளின் புதிய இன்பத்தையே நினைந்துருகி ஊரிலிருந்தால், நண்பர்கள் நெருங்க மாட்டார்கள், குறைவார்கள்; உற்றார் துன்பம் பெருகிக் கொண்டிருக்கும்; செல்வம் ஈட்டி வந்து பக்கத்து நன்றாக வாழ்பவர்களின் வளத்தைப் பார்க்கும்போது பொறாமையும் ஏற்படும். நட்டோ ரின்மையும் கேளிர் துன்பமும் ஒட்டா துறையுநர் பெருக்கமுங் காணூஉ ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய மென்முலை முற்றங் கடவாதோர் (அகம். 279) என்று இவ்வாறு ஒரு குடும்பத் தலைவன் புகழையும் இகழையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஊரில் இருக்க விரும்பாமல் பொருளீட்ட நெடுந்தொலை செல்கின்றான். சில குடும்பத்தில் பெற்றோர் தொகுத்த செல்வம் பிள்ளைகட்கு இருக்கும். முன்னோர் ஈட்டிய பொருளை வைத்துச் செலவு செய்து இளங்காதலர்கள் இன்பக்காலம் கழித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? இப்போக்கை நன்னெறியென்று சங்க நூல்கள் போற்றுவதில்லை. இன்பம் துய்த்தாலும் ஈதல் வழங்கினாலும் ஒவ்வொருவரும் தாந்தாம் புதிதாக ஈட்டிய பொருளிலிருந்தே வாழ்க்கை நடத்துதல் வேண்டும் எனவும், இன்னொருவர் தேடிய செல்வத்தைக் கொண்டு வாழ்தல் பகைவர்களின் கேலிக்கு இடமாகும் எனவும் பாலைபாடிய பெருங்கடுங்கோ எச்சரிக்கின்றார். உள்ளாங் குவத்தல் செல்லார் கறுத்தோர் எள்ளல் நெஞ்சத் தேஎச்சொல் நாணி (அகம். 111) என்றபடி இருப்பதை வைத்துக் கொண்டு வீட்டில் தங்கி விடாமல், மற்றவர் சொல்லும் ஏளனத்துக்கு நாணப்பட்டுப் பொருளீட்டப் பிரிகின்றான் ஓர் இளங்காதலன். திருமணமாகிப் பல்லாண்டுகள் மனைவியொடு கூடி வாழ்வதைச் சங்கக் குழுவாயம் விரும்புவதில்லை; பாராட்டிப் பாடுவதுமில்லை. அங்ஙனம் பல்லாண்டு தங்கி விட்டால் பின்னர்ப் பிரிய விரும்பான்; மடியனாவான், பிறருக்குப் பாரமாகவும் ஆகிவிடுவான். இவன் பிறரைத் தாங்குவது போய் உறவெல்லாம் இவனைத் தாங்க வேண்டிய மாறுநிலை ஏற்படும். ஆதலால் பொருள் காரணமாகவோ, போர் காரணமாகவோ திருமணமான; புதிதிலே பிரிந்து செல்வதைத்தான் அகநானூறு முதலான சங்கப் பனுவல்கள் வலியுறுத்துகின்றன. வண்டுபடுபு இருளிய தாழிருங் கூந்தற் சுரும்புண விரிந்த பெருந்தண் கோதை இவளினுஞ் சிறந்தன்று ஈதல் நமக்கு (அகம். 161) என்றபடி, மாலைமணமும் கூந்தல்வனப்பும் உடைய இவளைவிட ஈதலறமே சிறந்தது என்று கடமையுணர்வோடு ஓர் இளந்தலைவன் கடிதிற் பிரிகின்றான். சங்ககால மகளிர்கள் இன்பக் கருவிகள் அல்லர். பிரிவில் பெரிதும் இரங்கி துயருற்றாலும், தலைவன் கடமை செய்யப் புறப்படுவதை முழுதும் தடுப்பதில்லை. வருந்தி விடுத்தாலும் வாழ்த்திக் கொண்டிருத்தல் சங்கப் பெண்களின் சால்பாகும். தன் கணவன் வீரத்தாலும் கொடையாலும் குடிக்குப் புகழ் சேர்ப்பதையே அவர்களும் விரும்பினர். எத்துணையோ தலைவியர்கள் சென்ற தலைவன் கடமைக்கு வேண்டிய நாளெல்லாம் இருந்து வருக; வினைமுடித்துப் பொருளீட்டி வருக; நோயின்றி நலமாக வருக என்று இல்லிலிருந்து நாளும் வாழ்த்துவதை நல்ல அகநானூறு எடுத்துக் காட்டுகின்றது. என், ஆய்நலம் தொலையினும் தொலைக வென்று நோயில ராகநங் காதலர் (அகம். 115) நோய்நாம் உழக்குவ மாயினுந் தாந்தஞ் செய்வினை முடிக்க தோழி (அகம். 155) நாமழத் துறந்தன ராயினும் தாமே... செழுநகர் நல்விருந் தயர்மார் ஏமுற விழுநிதி எளிதினின் எய்துக (அகம். 205) என்று புலவர் பலர் பாடியபடி, கணவன் தன் பொருளீட்டுங் கடமையிலும் பிறர்க்கு உதவி செய்யும் குறிக்கோளிலும் சங்கப் பெண்குலம் ஒத்துழைத்தது என்பதனை அக நானூற்றால் அறிகின்றோம். 4. உலக நெறிகள் உலக நடப்பிற்கும் ஒரு குடும்பத்தின் நல்வாழ்விற்கும் பல்வேறு அறங்கள் தேவைப்படுகின்றன. விரும்பினும் விரும்பாவிடினும், ஏற்பினும் ஏலாவிடினும் ஒவ்வொரு வர்க்கும் பிறரோடும் பிறவுயிரினங்களோடும் தொடர்புகள் நரம்பு மண்டலம் போல் பின்னிச் செறிந்து கிடக்கின்றன. பல அறங்களை வாழ்வில் கடைப் பிடிப்பவர்கள் அமைதியான உலக இயக்கத்துக்கு வழி செய்வோர் ஆவர். அகநானூறு இல்லற வாழ்வு பற்றி மொழியும் பனுவ லாயினும் மன்னாய நலத்துக்கு வேண்டிய பல நெறியறங்கள் நல்ல தெளிவான மொழி நடையிற் சொல்லப்பட்டுள. உலகம் என்பது குடும்பங்களின் தொகுதி. வாழைத் தோப்பில் ஒரு மரம் நோயுற்றாலும் அந்நோய் ஏனையவற்றுக்கும் பரவுமாப்போல, ஓர் ஊரில் ஒரு குடும்பம் இயல்பான அறநெறி பிறழ்ந்தால் அத்தீவளி எங்கும் பரவி விடும். ஆதலின் நன்னெறியைப் போற்றுவது ஊரார் கடனாகும். இன்று எல்லாம் அரசின் பொறுப்பு என்று விட்டுவிட்டு அவரவர் காரியம் பார்ப்பது போன்ற தன்னலப் போக்கு சங்ககாலத்து இருந்ததில்லை. ஊரின் ஒழுங்கு தம் பொறுப்பு என்று ஒவ்வொரு ஊராரும் கருதினர்; குற்றம் இழைப்பாரை ஊர்ப்பெரியோர் கூடித் தண்டித்தனர். ஓர் இளம் பெண்ணின் கற்பைக் கெடுத்த கயவனுக்கு ஊர்ச் சான்றோர் தண்டனை கொடுத்த செய்தியை அகநானூறு கூறுகின்றது: திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய அறனி லாளன் அறியேன் என்ற திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய் முறியார் பெருங்கிளை செறியப் பற்றி நீறுதலைப் பெய்த ஞான்றை வீறுசால் அவையத் தார்ப்பினும் பெரிதே. (அகம். 526) காதலித்த பெண்ணை ஒருவன் கைவிட்டு விட்டான், தனக்குத் தொடர்பில்லை என்று பொய் கூறினான். சான்றுகளால் தொடர்புண்டு என்ற உண்மையைத் தெளிந்த ஊர்க் கூட்டத்தார் கற்பொழுக்கத்திற்குப் புறம்பாக நடந்த அக்கயவனை ஊரார்முன் மரத்திற் கட்டிச் சுண்ணாம்பு நீற்றினை அவன் தலையில் வைத்து ஒறுத்தார்கள் என்ற வரலாற்றுக் குறிப்பினால், சங்கத் தமிழ்க் காலம் கற்புக்கு உயர்ந்த தனி மதிப்புக் கொடுத்த காலம் என்பது பெறப்படும். இன்பத் துறையில் கற்பு என்ற ஒருமைநிலை பிறழ்ந்தால், வேறு எந்த உலக நெறியும் வெறியாகத்தானே போகும். உலகநடப்பிற்குத் தொழில் வேற்றுமைகள் உடம்பின் உறுப்புக்கள் போல வேண்டும். தொழில் வேற்றுமை குலவேற்றுமையாகவும், உயர்வு இழிவாகவும் கருதல் கூடாது. பிறர் உழைப்பால் நாம் வாழ்கின்றோம்; நம் உழைப்பினால் மற்றவர் வாழ்கின்றனர். இவ்வுண்மையை உணர்ந்த சங்க மக்கள் ஒத்த மதிப்பொடு யாரொடும் பழகினர். அகநானூற்றில் வரும் முல்லைப் பாடல்கள் உலகச் சமநெறியைக் காட்டுகின்றன. வினையை முடித்த தலைவன் பாகன் ஓட்டத் தேரில் வேகமாக வருகின்றான். வீடு வந்துவிட்டது; இறங்குக என்று பாகன் சொல்லும் போது, தலைவன் ‘இவ்வளவு விரைவாக எப்படி வந்தாய்? காற்றையே குதிரையாகப் பூட்டினையா? உன் மனத்தைக் குதிரையாகப் பூட்டினையா? என மனமாரப் பாராட்டி விட்டு, தன் மார்போடு தேர்ப்பாகனைத் தழுவிக் கொண்டு தன்மனைக்குள் புகுந்தான். மனையாளோ தேர்வலவனையும் வரவேற்று, விருந்து பெற்றேன் என்று மகிழ்ந்தாள். வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ மானரு வாகநின் மனம்பூட் டினையோ உரைமதி வாழியோ வலவ எனத்தன் வரைமருள் மார்பின் நளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே (அகம். 384) தேரோட்டிதானே என்று எண்ணாது போர்ப் புகழ்த் தலைவன் தோளொடு தோள் தழுவினான் என்பதனையும், திண்ணை வெளியில் இருக்கச் செய்யாது வீட்டிற்குள்ளேயே கொண்டு சென்றான் என்பதனையும், இல்லற நங்கை தேரொட்டி வந்த தொழிலாளியை நல்விருந்தாக மதித்துப் போற்றினாள் என்பதனையும் நினைக்கும் போது, சங்ககாலம் மீண்டும் நம் நாட்டிற்கு இக்காலத்து வாராதா என்று ஆசை பிறக்கின்றது. உலக வியக்கத்தின் ஒழுங்கு என்பது அரசியல் ஒழுங்கைப் பொறுத்தது. சங்க காலம் முடியரசுக் காலமாயினும் நடைமுறையில் மக்களை மதிக்கும் குடியரசுப் பண்பு அன்று நிலவியது. அரசனுக்கும் சான்றோர்களுக்கும் பெருந் தொடர்பு இருந்தது. எவ்வகை அரசு முறையினும் மானவுணர்வுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். ஈனமற்ற மானம் உடையவனே தூய வழிகாட்டி யாவான். வெண்ணிப் பறந்தலை என்ற போர்க்களத்தில் சோழன் கரிகாலனுக்கும் சேரன் பெருஞ்சேரலாதனுக்கும் கடும் போர் நடந்தது. சோழன் விட்ட அம்பு சேரனது மார்பைத் துளைத்து முதுகுவரை பாய்ந்து முதுகுப்புண் செய்தது. நேர்நின்று சேரன் மார்பிலேதான் அம்பினை ஏற்றான் என்றாலும், புறப்புண் ஏற்பட்டு விட்டதே என்று மனஞ்சோர்ந்து மானத்தால் மாழ்கினான்; இந்த இழிவுக்குப் பின் ஆட்சி எதற்கு என்று அரசைத் தானே துறந்து உயிர் விடும் நோக்கத்தொடு வடக்கிருந்தான். இந்த மானச் செய்தியைக் கேட்ட சேர நாட்டுப் பெரு மக்களும் நட்பிற் பிரியாது சேரனொடு வடக்கிருந்து ஒக்க உயிர் துறந்தனர். கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருதுபுண் நாணிய சேர லாதன் அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் அரும்பெறல் உலகத் தவனொடு செலீஇயர் பெரும்பிறி தாகி யாங்கு (அகம். 55) என்ற அகநானூற்றுச் செய்யுளில் வரலாற்றுக் கவிஞரான மாமூலனார் சங்கத் தமிழர் கொண்டொழுகிய மானத்தையும் நாணத்தையும் நட்பையும் உயிர்த் துறவையும் சிறந்த உலக நெறியாக உவமையில் வைத்துக் காட்டுகின்றார். இதனால் தன்னலமற்ற அரசியல் வாழ்வே சிறந்த உலகநெறிக்கு அடிப்படை என்பது பெறப்படும். 5. உரை நெறிகள் உரை எழுதுவது தமிழ்மொழியில் ஒரு தனித்துறையாக வளர்ந்துள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றில் நூலாசிரியர் களுக்குச் சமமாக உரையாசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். மிகப் பழமையான இலக்கியங்கள் நிறைந்த தமிழ் மொழிக்கண் உரைகள் தோன்றுவது இயல்பே. நூலாசிரியரின் கருத்தை வெளிப்படுத்துவதே உரையின் ஒழுக்கம். தன் கருத்து எதுவாக இருந்தாலும் இன்னொருவன் எழுதிய நூலில் அதனை ஏற்றிக் கூறலா காது. அப்படிச் செய்வது உரை வழுவாகும். ஒரு நூலின் கருத்தையோ பாட்டின் பொருளையோ காண்பதற்குப் பல அறிவுக் கூறுகள் வேண்டும். இது இன்ன காலத்துத் தோன்றிய நூல் என்ற காலவறிவும், இக்காலத்து இச் சொல்லுக்கு இப்பொருள் என்ற சொல்லறிவும், இன்ன காலத்து இருந்த பழக்க வழக்கங்கள் இவை என்ற சமுதாய அறிவும், இத் தொடர் ஓடிக் கிடக்கும் முறை இது என்ற நடையறிவும், நாட்டின் வரலாற்றறிவும் இன்ன பிறவும் இருந்தால் தான், உரையெழுதும் போது நினைவுக்கு வந்தால் தான் பொருளை முரணின்றிக் காண முடியும். இப்படிச் சொன்னால் நயமாக இருக்கும் என்று முன்னே கருதிக் கொண்டு பார்ப்பதால் பல பிழைகள் படிந்து விடுகின்றன. ஒரு நூல் இலக்கிய அறிவை மாத்திரம் தருவதில்லை. மக்கள் வாழ்வின் பல்வேறு கூறுகளும் அமையப் படைப்பது தான் இலக்கியம். அத்தகைய கலைக்குப் பொருள் காண வேண்டும் எனின், பொருள் காண்பார்க்குப் பல துறையறிவு வேண்டும் என்பது தானே விளங்கும், சில பாடல்களுக்குப் பிழையாகப் பொருள் எழுதப்பட்டிருப்பதையும், பலர் வழி வழியாகச் சொல்லி வருவதையும் இக்கட்டுரையில் எடுத்துக் காட்டுவேன். இதுவரை கண்ட பொருள் தகுமா? நான் இப்போது சொல்வது தகுமா? என்று முடிவு காண்பது கற்பவர் பொறுப்பு. 1. பட்டினப்பாலை செல்லா நல்லிசை யமரர் காப்பின் நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் இவ்வடிகள் பட்டினப்பாலையில் வருவன. தமிழகத்திற்கு வந்த இறக்குமதிப் பண்டங்களையும் இறக்குமதி செய்த நாடுகளையும் பற்றி அறிவதற்கு இவ்வடிகள் துணை புரிவன. சங்க காலத்தில் குதிரைகள் அயல் நாட்டிலிருந்து கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டன. செல்லா நல்லிசை அமரர் காப்பின் நீரின் வந்த நிமிர்பரிப் புரவி என்பதற்கு, கெடாத நல்ல புகழுடைய தேவர்கள் காக்கக் குதிரைகள் வந்தன. என்பது நச்சினார்க்கினியர் உரை. அலைபெருகிப் புயல்வீசிக் கப்பல் கவிழாமல் தேவர்கள் காத்தனர் என்பது இவர் கருத்து. இது புராணவுரை. சங்ககாலம் இயற்கையோடு இயைந்தது என்பதும் வழக்கை ஒட்டியது என்பதும் பலர் அறிந்ததே. ஆதலின் சங்கப் பாடலுக்கு முதலில் இயல்பாகக் பொருள் காண முயல வேண்டும். எப்படைக்கும் காலாட்படையின் துணை தேவை. பிற நாட்டிலிருந்து குதிரைகள் ஏற்றி வரும்போது பகைவர் அவற்றை வழிமறித்துக் கொண்டு போகவும் கூடுமன்றே. அதனைத் தடுப்பதற்குக் குதிரை ஏற்றி வரும் கப்பலிலேயே காலாட்படைகள் உடன் வருதலுண்டு. அமர் - போர்; அமரர் - போர்வீரர். தென்னிந்திய வணிகம் என்ற கட்டுரையில் வரலாற்றுப் பேராசிரியர் ச.க. கோவிந்தசாமி பிள்ளை அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் வாங்கி வந்த காலத்துக் காலாட்படை கூடவரும் வழக்குண்டு என்பதனை எடுத்துக் காட்டியுள்ளனர். ஆதலின் ‘செல்லா நல்லிசை அமரர் காப்பின்’ என்ற பட்டினப்பாலை அடிக்குப் புறங் கொடுக்காத புகழ் வாய்ந்த வீரர்கள் காத்துவர என்பதே பொருளாகும். செல்லா நல்லிசை என்ற தொடரை ஓடாப்பூட்கை என்பதனோடு ஒப்பு நோக்குக. 2. திருக்குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (972) இக்குறள் பலர் அறிந்தது. எல்லா உயிரும் சரிநிகர் சமானம் என்ற கொள்கையைக் காட்டுவதற்கு, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுபோல் இக்குறளையும் கையாளுகின்றோம். பரிமேலழகர் முதலாக எல்லா உரையாசிரியர்களும் பிறரும் வழி வழியாக இன்றுவரை இக் குறளுக்கு இப்பொருளையே கூறி வருகின்றனர். எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் என்ற பழந் தமிழ்க் கோட்பாட்டை நான் மறுக்கவில்லை. மறுக்க முற்படுவதாக யாரும் தவறுபட எண்ணக் கூடாது. இக் கருத்து இக்குறளில் உண்டா? என்பதையே சிந்திக்க வேண்டும். குறளின் இயல்பான நடையோட்டத்தைக் காண வேண்டும். பெருமை என்ற அதிகாரத்தில் இக்குறள் வருகின்றது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளின் தொடரை, எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும் என்று மாற்றிப் பொருள் கொண்டு வருகின்றோம். குடிநீர் என்பதனை நீர்குடி என்று சொல்வதுபோல இருக்கிறது. இம்மாற்றம் பொருந்துமா? ஒரே தாய் தந்தைக்குப் பிறந்த பிள்ளைகளாக இருந்தாலும், அப்பிள்ளைகள் எல்லோரும் ஒரே பெருமையுடையவர்களாக இருப்பதில்லை, ஏன், செய்தொழில் வேற்றுமை காரணமாக என்பர் வள்ளுவர். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் ஒருவன் செய்யும் வினையே கட்டளைக்கல் என்பர். ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் எனவும், ‘பிறப்போரன்ன உடன் வயிற்றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்’ எனவும் வரும் புறநானூற்றுப் பகுதிகளை (183) ஒப்பு நோக்குக. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது பெயரெச்ச நடை, முற்றுநடை யன்று. ஒக்கும் என்பது ஈண்டு செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம். ‘ஒரே தாய் வயிற்றுப் பிறப்பு ஒத்த எல்லாக் குழந்தைகளுக்கும்’ என்பது பொருள். இக் குறளடியும், ‘பிறப்போரன்ன உடன் வயிற்றுள்ளும்’ என்ற (183) புறநானூற்றடியும் ஒரு நடையாக, ஒரே கருத்தாக அமைந்திருத்தலைக் காண்க. 3. இராமாயணம் விற்பெரும் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்த ளாய நங்கையைக் கண்டே னல்லேன் இற்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை யென்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன் கம்பரின் இப்பாட்டு பலர் அறிந்ததொன்று. இலங்கையில் சீதையின் இருப்பிடத்தைக் கண்டு வந்த அனுமன் அதனை இராமனுக்கு கூறும் பாட்டு. இலங்கையில் சீதையின் புறவுருவத்தை நான் பார்க்கவில்லை; குடிச் சிறப்பு, பொறுமை, கற்பு இசை வடிவான பண்புருவத்தையே கண்டேன் என்று நயம்பட அனுமன் கூறியதாகப் பொருள் சொல்லி வருவதைக் கேட்கின்றோம். இந்நயத்துக்குச் செய்யுட் சொற்கள் இடங் கொடுக்கின்றனவா? முன்பின் போக்கு இடங் கொடுக்கின்றதா? இலங்கை வெற்பில் தன் கூந்தலையும் முகத்தையும் கண்ணையும் காதையும் அழகு செய்து கொண்ட சீதையைப் பார்க்கவில்லை என்றா அனுமன் கூறினான்? நற்பெருந் தவத்தளாய நங்கை என்றல்லவா கூறினான்? பெருந்தவம் உடைய நங்கையைக் காணவில்லை என்று பொருள் கூறுவது நயமாகுமா? ‘நங்கையைக் கண்டேனல்லேன்’ என்று மாத்திரம் பிரித்துக் கொண்டு நயங்காணுவது பொருத்தமாகாது. ‘நற்பெருந் தவத்தளாய நங்கை’ என்று முன்வரும் அடைமொழியையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். அங்ஙனம் இணைத்துப் பார்த்தால் நற்பெருந்தவத்தளாய நங்கையைக் கண்டேன், நல்லேன் எனவே பிரிக்கவேண்டும். அல்லேன் என்ற பிரிவு பொருட் பிழை. நல்லேன் என்பதற்குத் தவஞ்செய்யும் சீதையைக் காணும் நல்லபேறு பெற்றேன் என்று பொருளாகும். தவஞ் செய்த தவமாம் என்பதனை ஒப்பு நோக்குக. 4. புறநானூறு அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூம் தும்பை ஈரைம் பதின்மரும் பொதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் (புறம். 1) என்ற புறநானூற்றடிகள் வரலாற்றுக்குப் பயன்படுவை. பல்வேறு கருத்துரைகள் வரலாற்றாசிரியர்களால் இவ்வடிகளுக்கு எழுதப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். பாரதப் போரில் பாண்டவப் படைக்கும் துரியோதனப் படைக்கும் சேரன் சோறிட்டான் என்று இவ்வடிக்குப் பொருள் கூறுவது வழக்கம். இக்கருத்துக்கு இவ்வடிகளில் இடமுண்டா? ஒரு காலத்து ஒரு கருத்தைச் சொல்லி விட்டால், பின்னர்க் கற்பவர் திரண்ட நோக்கில் பார்க்கின்றனரேயன்றி மூலத்தோடு சொல்தோறும் பொருத்திப் பார்ப்பதில்லை. இரு படைக்கும் ஒப்பாகச் சோறு வழங்கினான் என்ற பொருள் எவ்வண்ணம் பெறப்படுகின்றது? ஐவரொடு சினந்து அன்னவர் நாட்டை நூற்றுவரும் கைப்பற்றினார்கள்; அந்நூற்றுவரும் போர்க் களத்து ஒழியும்படி பெருஞ்சோறு கொடுத்தான் என்பது இப்பகுதியின் நேர் பொருள். நூற்றுவரும் ஒழியப் பெருஞ் சோறு கொடுத்தான் என்பதிலிருந்து சேரன் பாண்டவர் பக்கம் துணையானவன் என்பது பெறப்படும். இது ஒரு கருத்துரை. இன்னும் ஒன்றுண்டு. சோறு என்பது வேறு, பெருஞ் சோறு என்பது வேறு. பெருஞ்சோறு புறப்பொருள் பற்றிய ஒரு குறியீடு. போர்க்குப் புறப்படும் படையாளர்க்கு அரசன் வழங்குகின்ற உணவு பெருஞ்சோறு என்ற அடை புணர் மொழியால் சுட்டப்படும். வஞ்சித் திணையில் பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை (1008) என்பர் தொல்காப்பியர். எனவே உதியஞ் சேரலாதன் பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தான் என்றால் யாருக்குக் கொடுத்தான் என்பது வினா. நூற்றுவர்க்கும் கொடுக்கவில்லை; ஐவர்க்கும் கொடுக்கவில்லை. தன் படைக்குப் பெருஞ்சோறு கொடுத்தான் என்பது கருத்து. இதன் குறிப்பு என்ன? பாண்டவர்க்குச் சேரன் பெரிய துணைப்படை அனுப்பினான் என்பது. இவ்விடத்துத் தான் பாட்டின் நடையோட்டத்தைப் பற்ற வேண்டும், ஒழியப் பெருஞ் சோறு கொடுத்தான் என்பது நடை முடிவு. உண்ணுஞ்சோறு ஒழியக் கொடுத்தான் என்பது பொருந்தாது. சோற்றுக் கொடையால் பொருகளத்து ஒழிக்கவும் முடியாது. நூற்றுவர் ஒழியத் தன்சேனைக்குப் பெருஞ் சோறு இறுதிச் சோறு கொடுத்து விடுத்தான் என்பதே பொருள். பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் (புறம். 235) என்று அதிகமானை ஒளவையார் போற்றுவர். ஒளவையார் தொண்டை மானுழை தூது சென்ற அரசியற் புலவர் ஆதலின், தன் படையாளர்க்குப் பெருஞ்சோறு வழங்கிய போது, அவரையும் இவ்விருந்திற் கலந்து கொள்ளச் செய்தான் அதிகமான். பெருஞ்சோறு என்பது பொருள் வரம்பான ஒரு துறைச் சொல் என்று கருதாமையாலும், பெரும் என்பதனை வெற்றடையாகக் கருதினமையாலும் பிழையான பொருளுக்கு இடனாயிற்று. மேற்காட்டிய சிலவற்றால், எவ்வெக் காரணங்களால் பொருட் பிழைகள் வருகின்றன என்று அறிந்து கொள்ளலாம். ஒன்றன் பொருளைக் காண வேண்டுவார் பல நிலையையும் நாடிப் பொருளைத் தெளிய வேண்டும். தவறான பிரிவானால் பொருள் மறையும்; நடையோட்டத் தைச் செவ்வன் கொள்ளாமையால் பொருள் மறையும்; இது நயம், இது தான் கருத்தாதல் வேண்டும் என முன்னரே துணிந்த ஆசைத் திரையால் பொருள் மூடி மறையும். இத் தவறுகளுக்கு இடங்கொடாது பார்ப்பதே உரை நெறி. 6. அருஞ்சொற்களா? செய்திகளையும் விளம்பரங்களையும் சிறு கதை களையும் புதினங்களையும் படிப்பவர் சொல்தோறும் நின்று சுவைத்துப் படிப்பதில்லை; படிக்க வேண்டுவதும் இல்லை. திரண்டக் கருத்துக்களைக் கண்டளவில் அமைதியடைகின்றனர். இப்பகுதிகளில் தமிழ்ப் புதுச் சொற்களோ பிற மொழிப் புதுச்சொற்களோ இருப்பினும், பொதுவாய கருத்தை ஒருவர் அறிவதற்கு அச்சொற்கள் அத்துணைத் தடையாக இருப்ப தில்லை. ‘இறந்த காலத்தின் இறவா வரம் பெற்றுவிட்ட சம்பவங்கள்’, ‘வாயிலிருந்து வெளிப்பட்ட வெண் புகையைச் சமந்தரக் கோடுகளாகவும் சுருள் சுருளாகவும் காற்றிலே மிதக்கவிட’ என்ற தொடர்கள் ஒரு சிறு கதையில் வருகின்றன. ‘மின்னொளியின் தன்னொளியால் கண் விழிகள் பறிக்கப் பட்டுக் கதறுகின்றான்’, ‘ஆற்றொணாத் துயரடைகின்றான்’, ‘விடை வெண்திரை விளக்கும்’, ‘தத்தை மொழி பேசும் திலகம் என்றெல்லாம் திரைக்கதைச் சுருக்கத்தில் வந்துள. இவற்றைச் சொல் சொல்லாக மக்கள் கூர்ந்து நோக்குவதிலர்.’ இலக்கியம் கற்கப் புகுவாரோ பொருள் விளங்கா அருஞ் சொற்கள் வரக்கண்டு மேலோடாது நின்றுவிடுப. நாங்கள் அறியக்கூடிய சொற்களை வைத்து இலக்கியஞ் செய்யவில்லையே புலவன்; அவனுக்கு எளியனவாய் இருந்த சொற்களையெல்லாம் பாடலின் தலைமேல் சுமத்தி யுள்ளானே என்று சினமுறுப, இலக்கியம் என்பது ஒரு சொற் கட்டிடம். வளமான கிளவிகளை ஈட்டிய புலமைக் கொற்றன் நுண்ணிய செஞ்சொற்களைத் தொடுத்துக் கவிதைத் தெய்வமனை எடுக்கின்றான். சொற்களின் நிலையழகால் பொருளழகு மிளிர்ந்து விளங்குகின்றது. கருத்தைப் பிண்டமாக அறிவது இலக்கியத்தின் பயனன்று; ‘செய்தி சொல்லும் நாளேடன்று இலக்கியம்.’ இலக்கியத்தின் உட்பொருள் அறிய, முதற்கண் சொற்பொருள் அறிவு வேண்டும். சொற்பயிற்சி இலக்கியப் பயிற்சிக்கும் இலக்கியப் படைப்பிற்கும் நனி இன்றியமையாதது. நீத்துப் பயிற்சி இல்லாதான் நீராழம் காண மாட்டான். ஆதலின் தமிழறிவு தேடுவார் பாட்டுக்களில் புதுச்சொல் வரும்போது பொன் பெற்றார் போல விளங்கிப் போற்றிக் கொள்ள வேண்டும். அச்சொற்களை அறிவுப் பகையென மயங்கி இலக்கியத் தினின்று புறங்காட்டி ஓடி விடக் கூடாது. இலக்கியத் தரம் உடையதாய ஒரு பாட்டோ உரைநடையோ தோன்றுங்கால், சில அருஞ்சொற் கிளவிகள் கட்டாயம் கலந்தே தீரும். இக் கலப்பு இலக்கியத்தின் இயற்கை. இக்காலக் குழந்தைக்கெனப் பாரதி பாடிய புதிய ஆத்திசூடி ‘ஞமலி போல் வாழேல்’, ‘ஞிமிறென இன்புறு’, ‘ரோதனம் தவிர்’ ‘ரௌத்திரம் பழகு’ என்று பாடல்கள் தொடுக்கின்றது. அவர் தம் பாப்பா பாட்டிலும் வன்னம், ஆன்றோர்கள், மதி என்றின்ன அருஞ் சொற்களைக் காண்கின்றோம். கவிமணி தேசிக விநாயகரின் குழந்தைப் பாடல்களிலே வட்டு, அல், ஞாலம், வானம், ஒளிறும், ஆழி முதலாய சொல்லருமைகள் உள. சின்னஞ் சிறு இலக்கியங்கள் கற்பார்க்குங்கூட அருஞ்சொல் வந்து நிற்கும். ஆதலின் கற்கண்டு அஞ்சுவதுபோலச் சொற்கண்டு அஞ்சுதல் அழகாகாது; அறிவு பயவாது. இலக்கியம் கற்குந்தோறும் சொற் செல்வம் பெருகுவது கண்டு மகிழ்க. இனி நாம் அருஞ்சொற்கள் என்று கருதுபவை உண்மையில் அருஞ் சொற்களா? இலக்கியவுலகிற்கெனப் புலவர் தாமே படைத்துக்கொண்டனவா? என்னும் வினாக்கள் எழுகின்றன. மக்கள் வழங்கும் சொற்களை வைத்துக் கொண்டு புலவோர் செய்யுள் ஏன் செய்தலாகாது? என்ற ஓர் எதிர்ப்புணர்ச்சி கிளம்பும்போது, அன்னோர் யாப்புக்குக் கொண்டவை வழக்கில் இல்லாத சொற்களா? என மறித்து வினாவின், நிலை புலப்படும். கற்பவர் அறிவுக்குப் பொருள் தெரியாமையால், பாட்டிற் பயிலும் சொற்கள் வழக்கில் இல்லாச் சொற்கள் என்று ஆகுமா? ஒரு மொழியில் எண்ணிறந்த சொற்றொகுதி உண்டு. கலைக்கும், குலத்துக்கும், தொழிலுக்கும், சூழ்நிலைக்கும், தகப்பகுதிச் சொற்கூட்டம் பல்வகை உள. ஒரு மாவட்டத்தில் வழங்கும் சொற்கள் மற்றொரு மாவட்டத்தில் வழங்கா. புலவர்கள்கூட ‘அறிதோறு அறியாமை கண்டற்றால்’ என்றபடி வழக்கிடைப் புதியவாய் அறிந்து வரும் சொற்கள் அளவில. பிறமொழிப் பெருங் கல்வியாளரும் அம்மொழியின் அகர முதலை அடிக்கடி புரட்டிப் பார்த்துச் சொற் பொருளை அறிதல் நாம் காணாததன்று. தமிழ்மொழியில் அருஞ்சொல் என ஒரு சொற்குழு இல்லை; தமிழ் மொழியில் ஒருவர்க்கு அருஞ்சொல் பலர்க்கு மிகப் புரிந்த சொல்லாக இருக்கலாம். அகரமுதலைப் பார்த்தளவில், அறிந்தார் வாய்க் கேட்டளவில், அருஞ்சொல்லின் அருமை மறைந்தொழிகின்றது; அருஞ்சொல் அறிசொல்லாகின்றது. மக்கள் வாழ்க்கையே இலக்கியத்தின் பொருள். அவ்வாழ்க்கை பற்றிய சொற்கள் வழக்கில் உளவாதலின், புதுச் சொற் படைத்துக்கொள்ள வேண்டும். கடப்பாடு புலவனுக்கு இல்லை. மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான (தொல். 1590) எப்பொருள் எச்சொல்லின் எவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே (நன். 388) என இலக்கண நூல்கள் சொல் மரபை வற்புறுத்தல் காண்க. ‘தாழ்ச்சி உயர்ச்சி சொலல்’, ‘நடையும் பறப்பும் உணர்’ ‘வண்டிகள்’, ‘வேலையனைத்தையும் செய்யும் வினைச்சி’, ‘வில்லர் வாழ்வு’ குன்றி என வாங்கு சொல்லிடைப் புது வடிவங்களையும்; தமிழோசை, தமிழ்ச்சாதி, தமிழ் முழக்கம், கவிப் பெருக்கு, வெள்ளிப் பனிமலை, வெண்பனி முடியிமயம், மணிக்கொடி, வீட்டுவார்த்தை எனவாங்கு தொடரிடைப் பல புதுப் புணர்ச்சிகளையும் பாரதியார் படைத்துள்ளார். இங்ஙன் வழக்குச் சொல்லடிப்படைமேல் ஆக்கஞ் செய்யும் உரிமையும் ஆற்றலும் புலவனுக்கு உண்டேயன்றி, சொல் வேரின் அடிப்படையைப் படைக்கும் உரிமை அவனுக்கில்லை. மீறிப் படைப்பானாயின், மரபுநிலை திரியிற் பிறிதிபிறி தாகும் (தொல். 1691) என்று முதனூலாசிரியன் அச்சுறுத்துவன். வழக்கிலக்கணம், செய்யுளிலக்கணம் என ஒரு வேறுபாடு இலக்கணத்தில் உண்டு. ‘போக்கின்றென்ப வழக்கினுள்ளே’ (65) ‘வழக்காறல்ல செய்யுளாறே’ (501) ‘முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே’ (522) என்றபடி, இருவகை வேற்றுமைகளை விதந்து கூறுவர் தொல்காப்பியர். அங்ஙன் வழக்கிற்கே வருஞ்சொல் செய்யுட்கே வருஞ்சொல் எனச் சொற்றனிமை செய்யாமை அறியவேண்டும். அத்தகைய ஒரு சொற்கூட்டம் தமிழ் மொழியில் இன்மையே முதனூலாசிரியன் வேற்றுமை தெரிக்காமைக்குக் காரணமாம். ஒருமுறை பொருளைத் தெரிந்து கொண்டபின், அருஞ்சொல் என்ற அடைநிலை நிற்குமா? வெளிப்படும் வரை தானே மறை எனப்படும். இத்தொல்மரபும் மெய்வழக்கும் தெளியாமல், ‘செய்யுட்கு உரியன உரிச்சொல்’ அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் ஐந்தாவது கருத்தரங்கு - 1973. என்று நன்னூலார் மயங்கி எழுதிவிட்டார். நாம் இயல்பாகப் பேசிவரும் வாய்ச்சொற்களை இப்போது ஆராய்வாம். அருஞ்சொல்லின் முடி எனத் தக்க இச் சொல்லையுமா நம் நா சொல்லுகின்றது என நினைப்பார்க்கு வியப்பு உண்டாகினும் உண்டாகலாம். தாய் மொழியாதலால், பல பெருந்தமிழ்க் கிளவிகளை உரிய பொருளில் இயல்பாகச் சொல்லுகின்றோம், புரிந்து கொள்கின்றோம். நம் பேச்சினை ஒருவர் இடைமறித்து, நீர் சொன்ன சொல்லுக்குப் பொருள் என்ன ஐயா என்று கேட்டால், அப்போது அறிவோம், நம் வாய்ச் சொற்களுக்குப் பொருள் தெரியாமல் பேசி வருகின்றோம் என்று. ‘வளியென வரூஉம் பூதக்கிளவி’ (தொல். 242) வளிமிகின் வலியும் இல்லை (புறம் 91), ‘வளிவழங்கு மல்லல்மா ஞாலம்’ (குறள் 245) எனவரும் இலக்கியப் பகுதிகளில் ‘வளி’ என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன? பார்வைக்கு இஃது ஓர் அருஞ்சொல்தானே. சூறாவளி என்ற வழக்கைக் காண்மின். காற்று இதன் பொருள் என்று இப்போது விளங்கும். மிகப் பழங்காலத்து வளி என்னும் சொல்தான் பெரு வழக்காக இருந்தது. நிலம் தீ நீர்வளி விசும்பு (தொல். 1589), விசும்பு தைவரு வளியும் (புறம் 2) வளி முதலா எண்ணிய மூன்று (குறள். 941) என ஐம்பூதங்களைக் குறிப்பிடு முறையில் வளிச் சொல்லையே கையாண்டனர். காற்று என்பது அன்று அரிய வழக்கு. மெய் வாய் கண் மூக்கு செவி என்பன ஐம்பொறிகள் எனப்படும். ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை என்னும் ஐம்புலன்களை உட்கொள்ளுதலால், இவை பொறி எனப் பெயர் பெற்றன. பொறி என்பது ஒன்றை உள்வாங்கிக் கொள்ளும் கருவிக்குப் பெயர். எலிப்பொறி என்னும் வழக்குத் தொடரைக் காண்க. பொறிவாயில் ஐந்தவித்தான் (குறள். 6), புலனைந்தும் பொறிகலங்கி (சம்பந்தர் தேவாரம்) என்ற இலக்கியத் தொடர்களையும் காண்க. பொறி என்பதற்கு நல்லூழ் என்ற பொருளும் உண்டு. பொறிகெட்டவன் என்னும் வழக்கைக் காண்மின். பொறியின் யாத்த புணர்ச்சி (தொல். 1057) பொறியறு நெஞ்சத்து (சிலப் 3069) என்ற செய்யுள் அடிகளையும் காண்மின். பா-பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை என்பர் பேராசிரியர். பா என்ற சொற்குப் பரப்பு என்னும் பொருளைச் சிறுமியர் உடையாம் பாவாடையிலும், தில்லை மன்றத்துப் பொங்கற் பாவாடையிலும், பால் மருள் மருப்பின் உரல் புரை பாவடி (கலி. 21) என்ற சங்கத் தொடரிலும் பார்க்கலாம். ‘மாடு நின்ற அம் மணிமலர்ச் சோலை புக்கான்’ அநுமன் என்பர் கம்பர். பசுமாடு காளைமாடு என்று பொருள் செய்தால் எளிய சொல் என்பீர்கள். கால்மாடு தலைமாடு என வழங்குகின்றோமே, காற்பக்கம் தலைப்பக்கம் என்பதன்றோ உரை. மாடு-பக்கம்; எனவே கம்பர் தொடருக்குப் பக்கத்து வானளவு உயர்ந்து நின்ற சோலை என்பது பொருள். ‘மாடல்ல மற்றையவை’ (400) என்ற திருக்குறளுக்குப் பிற செல்வங்கள் கல்விச் செல்வத்தின் பக்கம் இருப்பத் தகுதியற்றன எனப் பொருள் செய்யலாம். அறிவன் முல்லை, கணிவன் முல்லை, இல்லாண் முல்லை, மூதின் முல்லை எனப் புறத்திணையில் பல துறைகள் வரும். இயல்பு, நிலை, தன்மை என்பது முல்லைச் சொல்லின் பொருள். தன்னிலை மாறியவனை, மொல்லை மாறி (முல்லை மாறி) என வழக்கில் வையக் கேட்கின்றோம். விய்யுஞ் சமயத்துக்கூட உதவாதவன் என்று ஒருவர் சினந்து உரைத்தபோது, இதன் கருத்து என்ன என்று எண்ணலானேன். ‘காதலன் தன்வீவும் காதலி நீ பட்டதூஉம்’ என்பது சிலப்பதிகாரம் (அடி. 4658) வீவு-திடீரெனச் சாதல். வாழ்வரசி என்பதனை வாவரசி என ழகரமின்றிச் சொல்லுகின்றனர். அதுபோல், தமிழ் தொன்மை மொழியாதலின், வீழ்வு என்பது வீவு என இளங்கோவின் காலத்தே மரூஉ ஆயிற்றுப் போலும். திடீரென இறக்குங் காலத்துக் கூட உதவாத கொடியன் என்ற கருத்தை, விய்யும் (வீயும்) சமயம் என்னும் தொடர் குறிக்கின்றது என்று சிலப்பதிகாரத்தால் அறிந்தேன். ‘கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை, உள்ளினும் உள்ளஞ்சுடும்’ (799) என்ற திருக்குறளை ஒப்பு நோக்குக. ஐயனார்க்கு மண்சுதையால் குதிரைகள் செய்து கோயிலின்முன் வைப்பது வழக்கம். இவ்விழாவிற்குப் புரவி எடுப்பு என்பது பெயர். புரவி - குதிரை. பால்புரை புரவி நால்குடன் பூட்டி எனப் பொருநராற்றுப்படையில் இச்சொல் வருதல் காண்க. புரட்டாசித் திங்களில் குழந்தைகள் அம்பெடுத்து வாழைமரத்தைக் குத்தும் விழா இன்றும் நடைபெறுகின்றது. மானம்பு (மகார் நோன்பு என்பதன் மரூஉ) என்றும், கிலுகிலுப்பை எடுத்தல் என்னும் இவ்விழாவினை அழைக்கின்றனர். மகாஅர் அன்ன மந்தி மடவோர் நகாஅர் அன்ன நளிநீர் முத்தம் வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கி..... கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடும் ஒரு குரங்கு நத்தைக் கிழிஞ்சலில் முத்துக்களை இட்டுக் குலுக்கி விளையாடுவதை மேற்கண்டவாறு புனைகின்றார் சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் நத்தத்தனார். திண்ணைப் பள்ளியில் விடுமுறைக்கு ‘வாவு’ என்ற ஒரு சொல்வழக்கு உண்டு. பதினைந்து நாட்கு ஒரு முறை - நிறை நாளும் - மறை நாளும் விடுமுறை அளிப்பது பண்டை வழக்கம். ஆதலின் பதினைந்து என்ற பொருள் தரும் உவாச்சொல் விடுமுறையைக் குறிப்பதாயிற்று. உவாஅப் பதினான்கு என்பது இலக்கணத்து வரும் ஒரு தொடர். ‘உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை’ (புறம். 3) என்பது நிறைமதியைக் குறிக்கின்றது. ஆராய்ச்சி, நாற்று, ஞாயிற்றுக் கிழமை, திங்கட்கிழமை, ஓட்டாஞ்சில், மாணி, மாரியம்மை, கார்காத்தார், முருகன், காவடி, கழைக்கூத்து, அண்ணன், அண்ணி, கண்டது கடியது, கீரையாய்தல், ஆவுடையார், புடைவை, மடைப்பள்ளி, அக்காரவடிசில் எனவாங்கு எண்ணில் சொற்களைத் தமிழ் மக்கள் மிக இயல்பாக நீரோட்டம் போல் வழங்குப; என்றாலும் அவற்றின் சொற்பொருள் அறியார். வழிவழியாக வந்த பொருள் பிறழாது சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அச் சொற்களை இலக்கியத்துக் காணுங்கால் புதியன என்று தடுமாறுகின்றனர். வழக்கு நினைவு வருவதில்லை. ஒருவன் ‘என் தாய் மலடி’என்பது போல இன்னோர் நிலை காணப்படவில்லையா? மக்கள் தம் வாய்ச் சொற்களுக்கு - வழக்குச் சொற்களுக்கு - இது பொருளென அறிந்து கொள்வராயின், இலக்கியத்து வரும் சொற்களை இன் முகத்தோடு வரவேற்பர். இன்னோர்க்கு இலக்கியம் தானே செம்பாகம் விளங்கிவிடும். 7. சான்றோன் நம் தமிழ்மொழி உலகத்து இன்று வழங்கும் மொழிகளுக்குளெல்லாம் மிகப்பழமையானது. முதிர்ந்த மொழியாதலின், கடல்போல எவ்வளவோ சொற்களும் சொல்லமைப்புகளும் பொருள் நுணுக்கங்களும் விரிவுகளும் தமிழில் காணப்படுகின்றன. பதினாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தில் மொழிச்சங்கங்கள் தோன்றின. இதன் கருத்து என்ன? அவ்வளவு காலத்துக்கு முந்தியே தமிழ் முதுபழமையும் ஆராய்ச்சிக்கு உரிய நுண்வளமும் உடையதாயிற்று என்பது தெளிவு. இயற்கைத் தமிழ் ஒரு பொருள் பழமைப் படப்படக் கவர்ச்சி இழப்பது பொதுவியல்பு. இவ்வியல்பைக் கடந்தது தமிழ்மொழி. ‘ஆயுந் தொறும் இனிதாம் தமிழ்’ என்றார் ஒருவர். தமிழின் தொன்மையை ஆராய ஆராயப் புதை பொருளிடங்கள் போலன்றி மணிச்சுரங்கங்கள் போல, நல்வாழ்வுக்கு வேண்டியன கிடைக்கின்றன. சில பொருள்களுக்குப் பழமை புதுமை என்பது இல்லை. இவ்வேறுபாடுகள் மக்களாகிய நாம் நம் தெளிவுக்கு வைத்துக் கொண்டவை. சிறந்த இயற்கைப் பொருள்கள் என்றும் ஒரு தன்மையுடையனவாக விளங்குகின்றன. தமிழ் ஆழமான பழமையும் உயரமான புதுமையும் வாய்ந்தது; தோண்டத் தோண்ட ஒளிதரும்; வளர்க்க வளர்க்க நிழல் தரும். எக்காலத்தையும் தழுவிக்கொண்டு வாழும் தற்காப்புத் தன்மை தமிழுக்கு உண்டு. எவ்வளவு கடல்கோள்கள், எவ்வளவு சமயப்பூசல்கள், எவ்வளவு அயல்மொழித் தாக்குதல்கள், எவ்வளவு தமிழ் மக்களின் அறியாமைகள், எவ்வளவு மறைந்த சிறு பெரு நூல்கள்! இவ்வளவு இடையறாத் தொல்லைக் குண்டுகளிலிருந்தும் தப்பிப் பிழைத்து வருகின்ற தமிழ்த் தன்மையை - இன்றும் பிழைத்து வருகின்ற தமிழின் தனியாற்றலை - நாம் காண்கின்றோம். தமிழ்க்கதிர் தமிழிலக்கிய வரலாறு தமிழ் வளர்ந்து வந்த நிலையை மட்டும் காட்டவில்லை; தமிழுக்குத் தன் மக்களாலும் அயலவர்களாலும் வந்த பேரிடையூறுகளையும், அவற்றைத் தமிழ்க்குமரி பல்வேறு வடிவு கொண்டு ஓடியும் ஆடியும் பாடியும் சாடிச்சென்ற பேராற்றல்களையும் காட்டுகின்றது. முன்போல் இனியும் இடையூறுகள் வந்தாலும் தமிழ் வெல்லும், தமிழ் வளரும் என்ற நம்பிக்கையும் தமிழிலக்கிய வரலாறு நமக்கு ஊட்டுகின்றது. ஓங்க லிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ் இங்ஙனம் தாய்மொழியை ஞாயிற்றொடு இணைத்துப் புலவர் பாராட்டுகின்றார். ஞாயிறு உள்ளளவும் தமிழ் வாழும் என்பது அவர் கருத்து. தமிழ் உள்ளளவுந்தான் ஞாயிறு வாழும் என்றும் சொல்லலாம் அன்றோ? தமிழுக்கு நல்ல வருங்காலம், பெருங்காலம் உண்டு. தமிழ்த்தாய்தான் தமிழினத்தை வாழ்விப்பாள் என்பதனை இதுவரை உணராதவரும், உணர்ந்ததை உடன்படாதாரும், உணர மறுத்தாரும் இப்போது விளங்கிக் கொண்டு வருகின்றனர். தமிழ் தான்பிறந்த நாட்டிலும், பரவி வேரூன்றிக் கிளை பெருக்கிய நாட்டிலும் இன்று நன்றாகத் தொல்லைப் படுவது தமிழ் வளரும் என்பதற்கு மற்றொரு சான்று. துன்பம் இல்லாதாருக்கு மனவேகம் இராது; மனவேகும் இல்லாதாருக்கு அறிவோட்டம் இராது; அறிவோட்டம் இல்லாதார்க்கு உயிரோட்டம் இராது. தமிழ் படும் நெருக்கடியால் வீறுடைய நல்லிளைஞர்கள் பெருகி வருகின்றனர். ‘எறிகோல் அஞ்சா அரவின் அன்ன மள்ளரும் உளரே’ என்று பாராட்டத்தக்க தமிழ் மள்ளர்கள் இன்று எங்கும் பயின்று வருகின்றனர். தமிழ் மலர்ச்சி தமிழ் மீண்டு தழைக்கும் என்பதற்குத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் இன்று பரவி வருவது இன்னொரு சான்று. சங்க நூல்கள் சாதி மதம் கட்சி முதலான பிரிவுகள் இல்லாத இயற்கை நூல்கள்; இவ்வுலக வாழ்வு நோக்கித் தோன்றிய பண்பு நூல்கள். உலகம் உள்ளளவும் வீடு காக்கும் மெய்க் காதலும் நாடு காக்கும் மெய்வீரமும் தேவை. இவற்றையே சங்கநூல்கள் பாடுதலின், சங்கக்கல்வி எல்லார்க்கும் தேவை. இன்று வீரவுணர்ச்சி நாடு முழுதும் வேண்டப்படுகின்றது. தமிழ்த் தாள்களிலும் மேடைப் பேச்சுக்களிலும் புறநானூற்று வீரப்பாடல்கள் பொங்கி வருகின்றன. சங்கப்பாக்களுக்கு என்றும் உயிருண்டு என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு. முதுபாட்டன் முதலாகச் சிறு பேரன் ஈறாக வீரக் குடும்பங்களைக் காணவேண்டுமெனின், அத்தகைய தமிழ்க் குடி களைக்காட்டுவன சங்க இலக்கியங்கள் அல்லவா? சான்றாண்மை மெய்வீரம் பரவியிருந்த காலத்துப் பரவியிருந்த ஒரு சொல் சான்றோன் என்பது. தமிழ்மொழிக்கண் பெரு மதிப்பு உடைய சொல் இது. அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனப் பல குணங்களும் நிறைந்தவர் சான்றோர் எனப்படுவார். பெருவாழ்வுக்கு ஒரு குணம் இருந்தாற் போதாது. அன்புடையவனுக்கு அறிவில்லை; கல்வியுடையவனுக்கு இரக்கமில்லை; பொதுநலத் தொண்டனுக்கு நாணமில்லை; எழுத்தாளனுக்குக் குறிக்கோள் இல்லை என்றால், உள்ள குணத்துக்கு ஊறு ஏற்படும். ஓருறுப்பு மட்டும் அழகாக இருந்தாற் போதாது. உறுப்பைச் சுற்றியுள்ள உறுப்புக்களும் ஓரளவு அழகுடையனவாக இருத்தல்வேண்டும். அப்போது தான் சிறந்தது சிறப்படையும். பல குணங்களும் வேண்டும் என்பதனைக் காட்டுவதற்கே ‘சான்றாண்மை’ என்ற அதிகாரத்தைப் படைத்தார் திருவள்ளுவர். ‘ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’ என்ற புறத் தொடரில் சான்றோரின் பல குணங்களையும் அறியலாம். பெண் சான்றோர் சான்றோன் என்ற பெயரைப் பெறுவது பண்டைத் தமிழரின் புகழ்நோக்காக இருந்தது. இப்புகழ்ப் பெயர் பெண்பாலர்க்கும் பொது. ‘தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றவர் (பரிபாடல். 20)’ என்ற தொடர் கற்புடைப் பெண்டிரைக் குறிக்கும். பூதப் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி தீப்பாயும்போது ‘பல்சான்றீரே பல்சான்றீரே’ (புறம். 256) என விளிக்கின்றாள்; தன்னைத் தீப்பாய விடாது விலக்கும் பெண்களைப் பார்த்துத் தான் கூறுகின்றாள். முன் இருப்போர் பெண்கள் என்பது, பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கரி தாகுக என்று இகழ்ந்து கூறுவதிலிருந்து புலனாகின்றது. எனவே பல் சான்றீரே! பல்சான்றீரே! என்பது இப்புறப் பாட்டில் பெண் சான்றோர்களையே குறிக்கும். சான்றோர் என்ற சொல் பெரியவர் என்ற சொல் போன்றது. பெருமை பலவகைப்படும். கல்வியில், பதவியில், வயதில், செல்வத்தில், புகழில், உடலில், பெருமை வாய்ந்தாரை யெல்லாம் பெரியவர் எனலாம். சான்றோர் என்பதற்கு நன்கு அமைந்தவர் என்பது பொருள். புலமை யால் அமைந்தோரும், நற்குணங்களால் அமைந்தவரும், புகழால் அமைந்தவரும் சான்றோர் ஆவர். இன்னதனால் அமைந்தவர் என விரித்து இச்சொல்லுக்கு உரையாசிரியர்கள் பொருள் எழுதியுள்ளனர். வீரச்சான்றோர் இனி நாம் அறிய வேண்டுவது சான்றோர் என்னும் கிளவி வீரரையும் சங்ககாலத்தில் குறித்தது என்பதாம். இப்பொருள் உண்டு என்பதை நாம் மறந்து விட்டோம். அறிந்த சிலரும் கூட, வீரரைக் குறிப்பது பெரு வழக்காக இருந்தது என்பதனை அறியவில்லை. அதனால் சான்றோன் என வந்த பல சங்க அடிகளுக்கு உண்மைப் பொருளைக் காணத் தவறிவிட்டோம் சொற்பொருள் புலப்படாதபோது, ஓரினத்தின் நாகரிகமும் புலப்படாதன்றோ? எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை (பதிற்று. 14) கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர் (மே. 82) தேர்தர வந்த சான்றோர் எல்லாம் (புறம். 63) அமரின் இட்ட அருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் றீரே (மே. 31) மேற்காட்டிய நான்கு இடங்களிலும் சான்றோர் என்பதற்கு வீரர் என்ற பொருள் வெளிப்படை. வேறு பொருள் சொல்லுவதற்கு இயலாதபடி, சான்றோர் மெய்ம்மறை, தானைச் சான்றோர், தேர் தரவந்த சான்றோர், பாசறைப் பல்சான்றீர் எனத் தொடர்களும் தெளிவாக அமைந்துள் ளன. ஆதலின் உரையாசிரியர்களும் பதிப்பாசிரியர்களும் இப்பொருளை முன்னரே எடுத்துக் காட்டியுள்ளனர். மேற்காட்டிய சில இடங்களிலேயன்றி இன்னும் சங்க இலக்கியத்துப் பல இடங்களில் வீரர் எனப் பொருள் கொள்ளுவதற்கு இடமுண்டு என்பது என் கருத்து. ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஓளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம். 312) பலரும் அறிந்த புறப்பாடல் இது. யானையைக் கொல்லுதல் காளையின் கடன் எனவும், அதற்கு யார் யார் என்னென்ன துணை செய்யவேண்டும் எனவும் கூறுவது இப்பாட்டு. ஒவ்வொருவர் துணையும் வீரக் குறிப்பு உடையதாக இருத்தல் வேண்டும். அவ்வாறே இப்பாட்டின் ஒவ்வோரடிக்கும் பொருள் காணவேண்டும். நன்னடை புறத்திணை கண்ட தமிழினத்தின் படை பற்றிய சொற்கள் மறைந்துவிட்டன. அங்ஙனம் மறைந்த மறக் கிளவியுள் ஒன்று ‘நன்னடை’ என்பது. நன்னடை என்பதற்கு ஒழுக்கம் என இடைக்கால முதல் நாம் பொருள் கொண்டு வருகின்றோம். இராணுவப்பயிற்சி என்பது இச் சொல்லின் பழம் பொருள். இப்பயிற்சியை அளிக்க வேண்டிய கடமையுடையவன் அரசனே. தனிப்பட்டோர் அளிப்பதற்கு இல்லை. அடியெடுத்து வைக்கும் நடையொழுங்கிலிருந்து தான் படைப்பயிற்சி தொடங்கு கின்றது. ஆதலின், நன்னடையாளர் என வீரர் பெயர் பெற்றனர். நடைப்பயிற்சி இன்றேல் களிற்றை எறிய முடியுமா? பயிற்சி இல்லாதானைக் களிறு தூக்கி எறிந்து விடாதா? ஆதலின் வீரன் கடமையைக் கூறும் இச் செய்யுளில், அதற்குத் துணையான வீரப் பயிற்சி கூறவேண்டும். ஆதலின் நன்னடை என்பது பண்டு வழக்கில் இருந்த படைச்சொல் என அறிக. பெண் கடமை நாட்டுக்கு வீரர்கள் தேவையாதலின் ஆண் மக்களைப் பெற்றுக் கொடுத்தல் பெண்டிரின் கடமை. இக்கடமையை ஒவ்வொரு தமிழ்ப்பெண்ணும் பண்டு உணர்ந்திருந்தாள்; வீரனாகப் பிறந்து வளர்ந்து, தான் பார்க்க வீரனாக மடிவதையே அவள் விரும்பினாள்; புறமுதுகு காட்டினான் என்று கேட்டபோது, கோழைக்குப் பாலூட்டிய மார்பை அறுத் தெறிவேன் என்று துடிதுடித்தாள்; போர்க் களத்துக்குக்கூடச் சென்று தன் கோலால் பிணங்களைப் புரட்டிப் பார்த்தாள்; கணவன் இறந்த பின்னும் தன் ஒரே சிறுமகனைப் போர்க்கோலம் செய்து வேலைக் கையில் பிடிக்கச் சொல்லிப் போகவிட்டாள்; என்றும் தன் மகன் போர்க்களத்தில் பொழுது போக்குவதையே பெருமையாக எண்ணினாள். பெற்றமகன் நாட்டின் வீரனாகச் சாவதே, தமிழ்க்குடித் தாய்க்குப் புகழ் தந்தது. பெற்று வளர்த்த மகனைச் சான்றோன் ஆக்குதல் -- வீரனாகச் செய்தல் தந்தையின் கடமை; அவனுக்கு கூரிய வேல் கொடுத்தல் கொல்லன் கடமை; மறப்பயிற்சி யளித்தல் அரசன் கடமை; பலர் கடமைகளைப் பெற்ற மகன்தன் கடமை போர்க் களத்தில் படையிற் சிறந்த யானையை வெட்டி வீழ்த்தி வெற்றியோடு வீட்டுக்கு வருதல். சான்றோன் என்பதற்கு வீரன் எனவும் நன்னடை என்பதற்கு படைப்பயிற்சி எனவும் இவ்வாறு பண்டை மொழிப்படி பொருள் கொண்டாற்றான், அப் புறப்பாட்டு சொல்தோறும் அடிதோறும் வீரநோக்கு உடையதாகத் தெளிவுபடும். குறட்பொருள் திருக்குறள் சங்க இலக்கியங்களைத் தழுவியெழுந்த தமிழ்ப் பெருநூலாகும். திருவள்ளுவர் சங்கச் சான்றோர்களின் பொருளையும் சொல்லையும் பொன்னேபோல் தழுவிக் கொண்ட பெருந்தமிழ்ப் புலவர். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (69) தன்மகனைப் போர்க்களத்தில் மடிந்த வீரன் எனக் கேட்ட தாய் அவனைப் பெற்ற காலத்தைக் காட்டிலும் மிக்க மகிழ்ச்சி அடைவாள் என்பது இக்குறளின் கருத்து. சான்றோன் - கல்விகேள்விகளால் நிறைந்தவன் என்று பொருள் கொள்ளும் முறை ஈண்டுப் பொருத்தமில்லை. போர்க்களத்தில் நிகழும் மகனது வீரச்செயல்களைத் தந்தை காண்பான்; தாயோ காண்பதற்கில்லை. மகன் பக்கத்து மறவர்களோ எதிரிகளோ வந்து சொன்னாற்றான் தாய்க்குத் தெரியும். ஆதலின் ‘சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்று கூற வேண்டிய தாயிற்று. நரம்பெழுந்து உலறிய நிரம்பா மென்றோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறினன் என்று பலர் கூற (புறம். 278) என வரும் பகுதியில் போர்க்குச் சென்ற மகன் செயலைப் பலர் கூறத் தாய் கேட்டாள் என்பது தெளிவு. கல்வி அறிவுகளால் சான்றோன் ஆயின், தாய் நேரே அறிந்து கொள்ளத் தடையில்லை. மடிவில் மகிழ்ச்சி மகனைப் பெற்ற காலத்தைவிடப் பெரிதான மகிழ்ச்சியைத் தாய் எப்போது அடைவாள்? இக்கேள்விக்குச் சங்ககாலத்து ஒரே ஒரு விடைதான் உண்டு. களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே (புறம். 277) படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே (புறம். 278) ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (குறள். 69) வீரன் என்பதற்காகத் தாய் ஓரளவு மகிழ்ச்சி அடைவாள்; யானையைக் கொன்று வெற்றியோடு வந்தான் என்தற்காக ஓரளவு மகிழ்ச்சி அடைவாள். இச்செயல் களுக்காகப் பெருமகிழ்ச்சி அடையமாட்டாள். யானையை வெட்டித் தானும் பட்டனன், உயிர் விட்டனன் என்னும் போதுதான் போர்க்களத்தினின்று வாராது, விழுப்புண் பட்டு அவ்விடத்தே படுமகனாகக் காணும்போதுதான் தாய்க்குப் பெரு மகிழ்ச்சி உண்டாகும். தான் பெற்ற மகன் தானிருக்கும்போதே வீரனாக இறந்த ஞான்றுதான், ஈன்ற ஞான்றினும் தாய் பேருவகை அடைவாள். நல்வீரனாக வாழ்ந்தால் தாய் பெருமகிழ்ச்சி அடைய மாட்டாளா? மாட்டாள்; வீரனாக இறந்தால்தான் அவளுக்குப் பேருவகை ஏற்படுமா? ஆம். இன்று வீரன் நாளைப் போரிற் கோழையாகலாம். பல நாட் செய்த வீரங்கள் ஒரு நாட் கோழைக்கு ஈடாகா. தன் மகனது வீரவாழ்வன்று. வீரச்சாவுதான் தாய் விரும்பிய பெரு நோக்கம். அச்சாவுதான் அவளுக்கு அவனைப் பெற்ற காலத்திலும் பேருவகையை அளிப்பதாயிற்று. புறநானூற்றுப் பாடல்களும் திருக்குறளும் ஈன்ற ஞான்றினும், ஈன்ற பொழுதின் எனவும் உவகை பெரிதே, பெரிது உவந்தனளே, பெரிதுவக்கும் எனவும் ஒன்றுபோல் சொல்லாட்சி செய்தலைக் காண்க. இவ் வொற்றுமையைப் பார்க்கும்போது, ‘சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்பதற்கு வீரனாகப் போர்க்களத்தில் மடிந்தான் என வீரச் சாவைக் கேட்டதாய் என்று பொருள் படுகின்றது. இங்ஙனம் திருக்குறளுக்குப் பொருள் கொள்ளல் சங்க மரபுக்கு இசைந்ததாகும். ‘ஈன்ற பொழுதில்’ என்ற வெளிப்பட்ட தொடர் அழுத்தத்திலிருந்து, ‘போரில் மடிந்த பொழுது’ என்ற கருத்தை வருவித்துப் பொருள் காண வேண்டும். தாயாகும் பண்டைத் தமிழ்க்குமரியின் வாழ்க்கை நாட்டு நோக்கமுடையது; நாட்டுக் காவலுக்குத் தன் மக்களை வழங்கும் வீரநோக்கம் உடையது. சான்றோன் -- போரில் உயிர் வழங்கியவன் என்று மகன் புகழ் கேட்பதே தாய்க்குப் புகழ். வேறு வகையாக அவன் இறப்பது அவளுக்குப் பழி, மக்களை மைந்தர்கள் என்று இன்றும் நாம் வழங்குகின்றோம். மைந்தர்கள் என்பதற்கு வலியுடைய வர்கள், வீரர்கள் என்பதே பொருள் வலியற்றவர்களும், வீரமற்றவர்களும் மைந்தர்கள் ஆகார் என்பது பெறப்பட வில்லையா? ‘பெற்றோரெல்லாம் பிள்ளைகள் அல்லர்’ என்பது நறுந்தொகை. 8. காதற்போர் எல்லா உணர்ச்சிகளும் எல்லா மக்களிடத்தே உண்டு என்றாலும், ஒவ்வோர் உணர்ச்சி ஒவ்வொருவரிடத்தும் சிறப்பாகக் காணப்படும். எல்லாப் பண்புகளும் எல்லாக் குழுவாயத்திடம் உள என்றாலும் ஏதாவது ஒரு பண்பு ஒவ்வொரு இனத்திலும் மிகுந்து காணப்படும். எப்பண்பு எவ்வினத்தில் மிகுந்துள்ளது என்பதை அறிவது எப்படி? இனத்திற்கு உரிய தனிப் பண்பினை நீரும், நிலனும், மலைகளும் காட்டா. காட்டவல்லது இலக்கியம் ஒன்றே. இனப்பண்பு ஓரினத்தின் இலக்கியங்களைக் கற்கும்போது அந்த இன மக்களின் அறிவோட்டங்களையும், உள்ளோட்டங் களையும் கண்ணாடிபோல் தெரிந்து கொள்கிறோம். மன்னாயத்தின் பண்புகளைக் கொண்டே இலக்கியம் எழுவதால், அவற்றைக் காண்பது சிறிதும் கடினமில்லை. ஓர் இனத்தின் பண்பும் காலப்போக்கில் மாறிமாறி அமையும். இத்தகைய பண்பு மாற்றங்களைம் அவ்வக் காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் காட்டி விடுகின்றன. இலக்கியம் என்பது ஓரினத்தின் நாகரிகத்தையும், நாகரிக மாற்றத்தையும் காண்பதற்கு உரிய மெய்யான சான்றாகும். நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை என்பது போல, இலக்கியம் தன் மக்களின் நாகரிகத்தை ஒளிப்பதில்லை. வஞ்சித்துக் காட்டுவதில்லை. இலக்கியங் களை நம்பி மக்களின் நாகரிகத்தைத் தெளிவாகத் துணிந்து விரிவாக எழுதலாம் என்பது என் கருத்து. தமிழினப் பண்பு தமிழினத்தின் தனிப்பண்பு யாது? பல்வேறு பண்புகள் இருந்தாலும், விரிந்து பரந்து எல்லாச் செயல்களிலும் புகுந்து கிடக்கும் தலைமையான பண்பு எது? தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் நமக்குக் கிடைத்துள்ள பழம் பெரும் நூல்கள். இந்நூல்களை ஒரு சில நாட்கள் படித்துப் பார்த்தாலும் மேற்சொல்லிய வினாவிற்கு ஏற்ற விடையை எளிதாகக் கண்டு கொள்ளலாம். ஒரு மன்னாயம் காதலில் பேருணர்ச்சி கொண்டிருக்கும்; ஒரு மன்பதை போரில் பேருணர்ச்சி கொண்டிருக்கும். நம் தமிழ்க் குழுவாயத்தில் காதலுணர்ச்சிக்கும் இடமுண்டு; போர் உணர்ச்சிக்கும் இடமுண்டு. எனினும் எந்த உணர்ச்சி மிகுதியாக இருந்தது? காதலுக்காகப் போர் செய்தனரா? போருக்காகக் காதல் செய்தனரா? என்று நீங்கள் கேட்பீர்கள். இரண்டு உணர்ச்சிகளும் சமநிலையில் இருந்தன எனவும், காதலோ வீரமோ ஒன்றைவிட்டு ஒன்று மிகுதியாகச் சென்றதில்லை எனவும் பழைய நூல்கள் நமக்குக் காட்டுகின்றன. தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் என ஒரு பகுதி உண்டு. இப்பகுதி அகம், புறம் என இரு பிரிவுப்படும். அகமாவது காதல் பற்றியது; புறமாவது போர் பற்றியது. அகக்காதலையும் புறப்போரையும் கூறுவதே பொருளதி காரம் ஆகும். ஒரு நாணயத்திற்கு முன்பின் என இரு பக்கம் உண்டு. முன்பக்கம் நன்றாக இருந்து பின்பக்கம் தேய்ந்திருந் தாலும் காசு செல்லாது; பின்பக்கம் நன்றாக இருந்து முன் பக்கம் சிதைந்திருந்தாலும் காசு நாணயப்படாது. நாணயத் தின் எப்பக்கம் சிறந்தது என்பது சரியான கேள்வியில்லை. எப்பக்கம் சிறவாவிட்டாலும், நாணயத்தின் மதிப்புக் கெட்டு விடும். இருபக்கமும் ஒத்த சமநிலை பெற்றிருந்தாற்றான் நாணயம் வழங்கும். நாணயம் போன்றது தமிழர் கண்ட பொருளதிகாரம். இருதிணைச் சமம் காதலும் மிகுந்திருக்கலாம்; மறமும் மிகுந்திருக்கலாம்; இரண்டும் மிகுந்த நிலையிலும், இரு நுனிகளைச் சேர்ப்பது போலச் சமனிலை வேண்டும். ஆதலால் வாழ்க்கை என்ற நாணயத்திற்குக் காதலை அகம் என்றும், மறத்தைப் புறம் என்றும் ஒன்றன்பின் ஒன்றாக, மார்பும் முதுகும் போல, வகுத்துக் காட்டினர் தொல்காப்பியர். ‘அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கம் திறம்படக் கிளப்பின்’ ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே’ ‘வஞ்சி தானே முல்லையது புறனே’ ‘உழிஞை தானே மருதத்துப் புறனே’ ‘வாகை தானே பாலையது புறனே’ என இன்ன அகத்திற்கு இன்னது புறம், இன்ன புறத்திற்கு இன்னது அகம் என்று தமிழிலக்கணம் சுட்டிச் செல்வதிலிருந்து, காதலும் வீரமும் இரண்டறக் கலந்த ஒரு கூட்டுணர்ச்சியே தமிழினத்தில் தலைமைப் பண்பு என்று நாம் தெரிந்து கொள்கின்றோம். நீரும் சுவையும் போலவும், பூவும் நிறமும் போலவும், உள்ளங்கை புறங்கை போலவும், தமிழினத்தின் வாழ்க்கையில் அகமும் புறமும் ஒரு பொருளாகக் கலந்திருந்தன. இத்தலைமைப் பண்பினைக் காதல் என்ற ஒரு சொல்லாற் சொல்வதும் பொருத்தம் இல்லை; போர் என்ற ஒரு சொல்லாற் சொல்வதும் பொருத்தமில்லை; ஆதலின் காதற்போர் என்ற ஒரு தொடரால் குறிப்போம். ஒரு கருத்தை ஒரு சொல்லால் குறிக்காது ஒரு தொடர் கொண்டு குறிப்பதும் மொழி வழக்கே. தாய்மொழி, தாய்நாடு, நாட்டுப்பற்று எனச் சொல்லும் வழக்கை ஒப்பு நோக்குக. காதல் இயல்பு காதலுணர்ச்சி உயிர்கட்கு இயல்பானது. அவ்வுணர்ச்சிக்குத் தனிப்பயிற்சி வேண்டியதில்லை. உடல் வளரும் தோறும் உடலோடு ஒட்டிய காதலுணர்ச்சியும் வளரக் காண்கின்றோம்; மேலும் காதல் இயல்பான உணர்ச்சியாதலின் வாழ்க்கையில் ‘காதல் கொள்வேன்’ என்று யாரும் குறிக்கோள் கொள்வதில்லை. மக்கட்குப் போருணர்ச்சி ஒரு வகையால் செயற்கையானது; பல்வேறு பயிற்சியால் வளர வேண்டுவது. எல்லா மக்களுக்கும் உடம்பில் ஆற்றல் உண்டென்றாலும் அந்த ஆற்றலைப் போராற்றல் என்று சொல்ல முடியாது. விலங்கினங்களுள் யானை பேராற்றலு டையது என்பதனை நாம் அறிவோம். எனினும் அப்பேராற்றல் போராற்றலாக ஆவதற்குப் பயிற்சி வேண்டுமன்றோ? ஆற்றல் மிக்க யானைக் கூட்டம் பயிற்சி பெற்ற பின்னர் தான் யானைப் படையென்று பெயர் பெறுதற்கு உரியதாகும். அது போல, மக்கள் வன்மையுடையவர் களாயினும் மக்கட்படை ஆகவேண்டுமேல், அதற்கு ஒழுங்கான நன்னடைப் பயிற்சி இன்றியமையாதது. ஒரு மகன் நன்னடைப் பயிற்சி பெற்ற பின்னர் தான் மறவன் என்ற பெயருக்கு உரியனவாக விளங்குகின்றான். வாழ்விற்குக் காதலும் வீரமும் வேண்டும்; எனினும் காதல் இயல்பானது: காதல் செய்வேன் என்று கொள்கை கூற வேண்டாதது. புறப்பொருளான வீரமே பயின்று வருவதற்கு உரியது; நாடு காக்கப் போர் செய்வேன் என்று கொள்கை கூறுதற்கு உரியது. அதனாலன்றோ ‘களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ என்று பொன்முடியார் ஆடவனுக்குக் கொள்கையை வகுத்துக் காட்டினார். மறப் பயிற்சி சங்க காலம் எல்லா ஆடவர்களுக்கும் வீரப் பயிற்சி கொடுத்த காலமாகும். குழந்தை நிலையிலேயே இவ்வீரப் பயிற்சி தொடங்கி விட்டது என்பதனைப் புறப்பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன. இப் பயிற்சியின் இன்றியமை யாமையைச் சங்ககால அன்னையர்கள் நன்கு உணர்ந்திருந் தார்கள் என்பதனை நாம் எவ்வாறு அறிகின்றோம்? புறநானூற்றில் வீரம் பற்றிப் பேசுகின்ற பொதுப் பாடல்கள் பெண்பாற் புலவர்களால் பாடப்பட்டிருத்தலின், தம் ஆண்மக்கள் மறவர்களாக விளங்க வேண்டும் என்ற நோக்கம் தாய்மார்களுக்கு இருந்தது என்பதனைத் தெளிவாக அறியலாம். சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டுள னோவென வினவுதி என்மகன் யாண்டுள னாயினும் அறியேன் ஓரும் புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே (புறம். 86) ‘நின் மகன் எங்கே’ என்று ஓர் இளைய நங்கை ஒரு தாயைப் பார்த்து வினவுகின்றாள். இந்த வயிற்றில் பிறந்தான் என்பது தெரியும்; எங்குச் சென்றானோ தெரியவில்லை; போர்க் களத்துக்குச் சென்றால் கட்டாயம் காணலாம் என்பது தாயின் விடை. வயிறு என்னும் குகையிலிருந்து வந்த நாள் முதல் போர்க்களத்தில் திரிகின்றான் என்று சொல்லும் பெருமித நடையிலிருந்து, தாயின் வீர மனப் பான்மையைக் கண்டு கொள்கின்றோம். கேட்பவளும் பெண் ஆதலால் அவளுக்கு உவப்பான விடை இதுவே என்றும் அறிந்து கொள்கின்றோம். எனவே பண்டைப் பெண்ணுலகம் ஆடவன் மறவன் ஆவதையே விரும்பிற்று, மதித்தது என்பது தெளிவு. தாய் நோக்கம் பழந்தமிழ் மகளிர் நாட்டுப்படைக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே ஆண் மக்களை ஈன விழைந்தனர்; வீரனாக வேண்டும் என்ற நினைவோடு பாலூட்டினர். விழுப்புண் பட்டு வீரனாக மடியாமல், புறப்புண் பட்டுக் கோழையாக மடிந்திருப்பானாயின், அங்ஙனம் கோழையாக மடிந்தது அவன் குற்றமன்று; கோழைப்பால் ஊட்டிய தன் குற்றம் என்று முலையை அறுத்துக் கொண்டு கழுவாய் செய்ய விரும்பினர். மண்டமர்க் குடைந்தன னாயின் உண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே (புறம். 278) காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண் புலவர் பாடியது இப்புறப்பாட்டு. என்ன உணர்ச்சி! என்ன வேகம்! தடிகொண்டு நடக்கும் கிழவியாயினும், மகன் புறமுதுகு காட்டினான் என்று கேட்டதும், போர்க்களத்திற்கே புறப்பட்டு விட்டாள். அவன் அங்ஙனம் செய்திருப்பானாயின் அந்த இடத்திலேயே அவன் வாய் வைத்த தன் முலையை அறுத்தெறிவேன் என்று கையில் ஒரு வாள் எடுத்துக் கொண்டும் போயினாள். அங்கு மடிந்து கிடந்த பிணங்களை, என்ன துடிப்பு, அவ் வாளாலே புரட்டினாள். மகனைக் கண்டாள், பல துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்த வீரமகனைக் கண் கொண்டு கண்டாள்; அவனைப் பெற்ற நாளைக் காட்டிலும் பெரிதும் மகிழ்ந்தாள். ஏன்? எந்த நோக்கத்திற்காகப் பெற்றாளோ அது நிறைவேறி விட்டதன்றோ? 9. நான்மாடக்கூடல் கூடல் என்பது மதுரைத் தலைநகரைக் குறிக்கும் ஒரு பழம் பெயர். சிறிது தமிழ் கற்றவனுக்கும் கூடல் மாநகரை நினைக்கும் போது. எவ்வளவோ எண்ணங்கள் கூட ஒடி வருகின்றன. தமிழும், தமிழ்ச் சங்கமும், சங்கப் புலவர்களும், நிலை பெற்று வழிகாட்டும் தொல்காப்பியமும், சங்க இலக்கியமும், சங்கம் புரந்த பாண்டிய குலத்தாரும், பாண்டிய வேந்தர்களின் வஞ்சினப்பாட்டும், கோப்பெருந்தேவி துஞ்சின பாட்டும், நெடுஞ்செழியன் கல்விப்பாட்டும், அறிவுடை நம்பியின் மக்கட் பாட்டும், வையை நீராடலும், நீராடல் பாடிய பரிபாடலும், நிலைத்த வாழ்வுக்கு நிலையாமை ஓதும் மதுரைக் காஞ்சியும், உரைச் சிறப்பு வாய்ந்த இறையனார் களவியலும், உலகப்புகழ் ஓடிய திருக்குறள் அரங்கேற்றமும், திருவள்ளுவ மாலையும், கண்ணகியாரின் சீற்றமும், மதுரை மறுகெல்லாம் கற்பின் கொழுந்து படர்ந்தோடிய ஓட்டமும், பாண்டியன் உயிர் விட்ட செங்கோலும், இவ்வரலாற்றிற் பிறந்த சிலப்பதி காரமும், நெருப்பிற் கருகாமல் நீரில் அமிழாமல் தமிழ் தழைத்த பாசுரங்களும், அறுபத்து நான்கு திருவிளையாடற் புராணங்களும் இங்ஙனமாகப் பல நினைவுகள் மதுரை நகரோடு பின்னிக் கிடக்கின்றன. பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை என்று வரந்தருவார் உள்ளம் தமிழை எண்ணுங்கால் மதுரையை எண்ணுகின்றது. தமிழ்ச் சங்கம் எந்நாட்டுதலைநகராயினும் ஆகுக. தலைநகர் எனின் அங்கு மொழியும் இலக்கியங்களும் உருப்பெறுதல் வேண்டும். பலவூர் மக்கள் வந்து கூடும் இடமன்றோ தலைநகர்? அங்கு எப்பண்பு பெறுகின்றது, அப்பண்போ பண்பின்மையோதான் அகநாட்டிலும் பரவும். இது மொழி நூலோர் கண்ட உண்மை. இவ்வுண்மையைப் பண்டைத் தமிழ்ப் புலவர் நன்கு அறிந்திருந்தனர்; கடல்கோளால் நாடழிந்தாலும் சங்கம் அழியாது தொடர்ந்து போற்றினர். தமிழெனத் தகும் நற்றமிழை எங்கும் பரப்பினர். ‘மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ எனச் சின்னமனூர்ச் செபேடு வழி வழி பாராட்டுவது போல, நற்றமிழுக்கு மதுரை இடமளித்தது. பருவநிலைக்கேற்பப் பாடல்கள் எழுந்தன. இளவேனிற் காலத்து வையைப் பெருக்கில் மகிழ்ந்தாடும் மதுரைக் காதலர்கள் பழம்பாட்டுக்களைப் பாட மாட்டார்கள். அவர்கள் பாடுதற்கென அன்றலர்ந்த நாண் மலர்போல் மிகப் புதிய உணர்ச்சிப் பாடல்களைப் புலவர்கள் யாத்துக் கொடுப்பார்கள் என்று பின்வரும் கலித்தொகையால் அறிகின்றோம். நிலனாவிற் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார் புலனாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ இவ்வாறு சங்கம் வைத்துப் பாடல்கள் வழங்கிய தலைநகராதலின், ‘தமிழ்கெழுகூடல்’ ‘கூடற்றமிழ்’ ‘தமிழ் வையை’ எனவும் ‘கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்’ எனவும் மதுரைநகர் எல்லோராலும் பாராட்டும் முதன்மை பெறுகின்றது. கூடற்பெயர் பாண்டியன் தலைநகருக்கு மதுரை என்பது பெயரா? கூடல் என்து பெயரா? மதுரைக் காணடம் என்று இளங்கோவடிகள் பெயரிட்டுள்ளார். மதுரை மருதனிள நாகனார், மதுரைக் கணக்காயனார், மதுரைக் கண்ணனார் எனப் புலவர் பெயர்கள் மதுரைப் பேர் கொண்டனவாகவுள என்றாலும் சங்கப்பாடலுள்ளும் சிலப்பதிகாரத்துள்ளும் பார்க்குமிடமெல்லாம் கூடல் என்னும் பெயரே மிகுந்து வருகின்றது. கூடல் மகளிர், மன்னவன் கூடல், கூடற்பதி, கூடற்றெய்வம், கூடற்காவதம் என்று அமைந்த தொடர்கள் பல. ஆதலின் புலவர் வழக்கில் மதுரையும் மக்கள் வழக்கில் கூடலும் பயின்றனவோ என்று ஒருவாறு கருதலாம். காவிரிப் பூம்பட்டினம், புகார் எனவும், புதுச்சேரி, பாண்டிச்சேரி எனவும் ஆறாங்கல், நமுன சமுத்திரம் எனவும் வரும் இரு வழக்குகளை ஒப்பிடுக. எவ்வாறாயினும் மதுரை என்ற சொல்லின் பொருள் அவ்வளவு தெளிவாகப் புலப்படவில்லை. கூடல் என்பதன் பொருளை இயல்பாக யாரும் அறிவர். உணர்ச்சித் துடிப்புக் காட்ட விரும்பும் புலவன் ஒரு சிலரே அறியும் அரிய சொற்களை மேற்கொள்ளான். கொள்வா னாயின், கேட்போர்க்குச் சொற்பொருள் அறியும் நாட்டம் தோன்றுமேயன்றி உணர்ச்சி தோன்றாது. ஆதலின் பொருளறிந்த பழகு தமிழ்ச் சொற்களையே உணர்ச்சிக்குப் பயன்படுத்துவான். கண்ணகியின் விழி நீர்ப் பெருக்கையும் ஒற்றைச் சிலம்பையும் உயிர் போன தோற்றத்தையும் விரிந்த கருங் கூந்தலையும் கண்டானோ இல்லையோ, பாண்டியன் உயிர் விட்டான். காவி யுகுநீரும் கையிற் றனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன் காடெல்லாம் சூழ்ந்த கருங்குழலும் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான். இச் சிலப்பதிகார வெண்பாவில் ‘கூடலான் கூடாயினான்’ என்ற யாப்பால் எழும் வேகம் மதுரையான் மாண்டான் என்று சொன்னால் எழுமா? தலைவன் வருவானோ வாரானோ என்று குறி பார்க்கத் தலைவி வட்டமாக ஒரு கோடு கிழிப்பாள். வட்டத்தின் இரு முனையும் விலகாது ஒத்துக்கூடி ஒன்றானால், தலைவன் வந்து கூடுவான் என்று அவள் நம்புவாள். இவ்விளையாட்டுக்குக் ‘கூடலிழைத்தல்’ என்பது பெயர். பாண்டியனைக் காமுற்ற பெண் கூடலிழைத்துப் பார்க்க ஆவலோடு எண்ணுகின்றாள். கூடலிழைப்பைச் சொல்ல வந்த முத்தொள்ளாயிர ஆசிரியர், கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவேனேற் கூடென்று--கூடல் இழைப்பாள்போற் காட்டி யிழையா திருக்கும் பிழைப்பிற் பிழைபாக் கறிந்து என்று பாட்டினைத் தொடங்கி ஓரோசை படுமாறு முடிப்பர். இவ்வாறு மதுரை என்னும் சொல்லைக் காட்டிலும் கூடல் என்னும் தலைநகர்ச் சொல் இலக்கியத்துக்கு ஓசையும் ஓட்டமும் பயந்து நிற்கின்றது. மாடக்கூடல் கூடல் என்பதுதான் தலைநகரின் பெயர். ஒரு பொருளைச் சிறப்பிக்கப் பல அடைமொழிகள் கொடுப்பது புலவர் மரபு. கலிகெழு கூடல், நிலைகெழு கூடல், மாபெருங் கூடல், தோலாக்கூடல் என்றெல்லாம் கூடலுக்கு அடைகள் இலக்கியத்து வந்துள்ளன. நான்மாடக்கூடல் என்பது அவ்வடை மொழிகளுள் ஒன்றே. நான்மாடம் என்ற தொடரால் மதுரை நகரின் கட்டட அமைப்பை அறிந்து கொள்ளலாம். ‘மாட மதுரையும் தருகுவன்’ எனப் புறநானூறும், ‘மதிமலி புரிசை மாடக் கூடல்’ எனத் திருமுகப் பாசுரமும், ‘மாடமதுரை மகளிர்’ எனச் சிலப்பதிகாரமும் பல இடங்களில் சுட்டுவதால், மதுரையின் தெருத்தோறும் மாடி வீடுகள் இருந்த அழகு விளங்கும். மிகப் பழங்காலத்து ஒரு மாடி கொண்ட கட்டடம் தோன்றியதே ஒரு சிறப்பு. அதுவும் மதுரைக்கண் நான் கடுக்கு மாளிகைகள் அமைந்திருந்த கட்டடக்கலையின் வனப்பைக் காட்ட நான்மாடக்கூடல் என்று புலவர் பாராட்டுவராயினர். கணவனை இழந்து சந்துதொறும் கதறியோடிய கண்ணகி, நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின் என்று அழைத்துப் புலம்புகின்றாள். சேய்மாடக் கூடல், நீள்மாடக் கூடல், நெடுமாடக் கூடல் என்ற அடைகளால் பல மாடிகள் வானோக்கி வளர்ந்த கட்டடப் போக்குப் பெறப்படும். எழுநிலை மாடத்தரமியம் என்பது புகார்ச் சிறப்பு. மதுரையமைப்பு தெருவெனப்படும் நகர அமைப்பும் மதுரைத் தலை நகருக்கு என்றும் அமைந்த ஒரு தனிச்சிறப்பு. இச் சிறப்பினை இன்று காண்பதுபோல் சங்ககாலத்தும் காண்கின்றோம். கூடல் நகர் தாமரைப்பூவை யொக்கும்; அதன் தெருக்கள் தாமரையின் அகவிதழ் புறவிதழ்களை ஒக்கும்; அரசன் அரண்மன தாமரை நடுவண் இருக்கும் கொட்டையை ஒக்கும் என்று பின்வரும் பரிபாடல் மதுரையமைப்பை வடித்துக் காட்டும். மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுஞ் சீருர் பூவின் இதழகத் தனைய தெருவம் இதழகத்து அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில் இதனால் கூடல் நகரின் பொலிவையும் தெருக்களின் வரிசையையும் அரண்மனையின் வட்ட வடிவத்தையும் புலவர் புலப்படுத்துவர். இங்ஙனம் மதுரையின் சிறந்த வனப்புக்களுள் நான்மாடக் கட்டடமும் ஒன்று என அறிவோமாக. தமிழ் வையை தமிழ் நாகரிகத்தை வையை நாகரிகம் என்று குறிப்பிடலாம். ‘தமிழ் வையை’ எனப் பாராட்டுவர் ஆசிரியர் நல்லந்துவனார். உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி என்று சேரகுல இளங்கோ வாய்கொள்ளாது புகழ்வர். வையைக் குலமகளைக் கண்ட கோவலனும் கண்ணகியும் ‘புனல்யாறன்று இதுபூம்புனல் யாறு’ எனத் தொழுது செல்கின்றனர். வையைப் பெருக்கில் ஆடாதாரில்லை; ஆடியும் குளித்தும் ஊடல் தீராதாரில்லை. காதலர்களின் தீராப் பிணக்கையும் தீர்க்கும் நீர்மையுடையதென வையை கருதப்பட்டது. களிப்பர் குளிப்பர் காமம் கொடிவிட அளிப்ப துளிப்ப ஆங்காங் காடுப ஆடுவார் நெஞ்சத் தலர்ந்தமைந்த காமம் வாடற்க வையை நினக்கு என்றாங்கு, தலைவியர் பலர் வையையை வாழ்த்தி வந்தனர். மைந்தரும் மகளிருமே யன்றிக் களிறுகளும் பிடிகளும் நீண்ட கைகோத்து வையைப் பெருக்கில் காதலாடின. பரிபாடல் என்னும் சங்க இலக்கியம் வையைக் கவிதை என்னும் அளவிற்கு நீராடிய நாகரிகத்தையும் உள்ளம் ஒன்றிய காதலையும் பலபடப் புனைகின்றது. வையை ஓட்டத்தையும் ஆட்டத்தையும் பரிபாடல்கள் நடைப் படுத்துகின்றன. பெயலாற் பொலிந்து பெரும்புனல் பலநந்த நலநந்த நாடணி நந்தப் புலனந்த வந்தன்று வையைப் புனல் கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு தேடித் தேடிச் சிதைபு சிதைபு சூடிச் சூடித் தொழுது தொழுது இவ்வாறு நந்த நந்த என்ற மெல்லொளியால் இனிமையையும், கூடிக் கூடித் தேடித் தேடி என்ற அடுக்கால் விரைவையும் வையைப் பாடலில் ஓசை கொண்டு பொருள் காட்டுவர் புலவர். பரங்குன்று மதுரையை நினைத்தால் தமிழும், தமிழை நினைத்தால் வையையும், வையையை நினைத்தால் திருப்பரங்குன்றும் நம் நினைவில் ஒரே தொடர்பாகப் படுகின்றன. வையை யாடும் தலைவன் தன் ஒழுக்கத்தில் நம்பிக்கை பிறக்க, தலை தொட்டேன் தண்பரங்குன்று என்று பரங்குன்றின் மேல் தலைவிக்கு ஆணையிடுதல் பண்டைய மரபு. குன்றம் உள்ளளவும் மதுரை குன்றாது என்று இணைத்து வாழ்த்துகின்றார் தமிழ்ப்புலவர். குன்றுத லுண்டோ மதுரை கொடித்தேரான் குன்றமுண் டாகு மளவு என்று நம்பிக்கை தந்து வினவுகின்றார். சேர சோழ பாண்டிய அரசுகள் திகழ்ந்த பண்டை நாளில் மூன்று பெருந்தலைநகரங்கள் விளங்கின. பின்னர்ச் சேரர் மூதூராம் வஞ்சி தமிழகத்தின் புறம்பாயிற்று. சோழர் மூதூராம் காவிரிப்பூம்பட்டினம் கடலோடு கலந்து விட்டது. பாண்டியர் தலைநகரமாகிய மதுரையே இன்றுவரை சீரோடும் சிறப்போடும் இலங்குகின்றது. கண்ணகியின் கற்புத் தீ பரவியதால் நிலைகெழு கூடலாக நீடு வாழ்கின்றது. உலகம் கண்ட தலைநகரங்கள் எத்துணை? புதிதாகத் தோன்றிவரும் தலைநகர்கள் எத்துணை? தமிழ் நாகரிகம் கண்ட மதுரை பழமைக்குப் புழமையாய், மூதூராய், புதுமைக்குப் புதுமையாய்ப் புத்தூராய்த் தழைப்பதைக் காண்கின்றோம். உலகம் ஒரு நிறையாத் தானோர் நிறையாப் புலவர் புலக்கோலாற் றூக்க--உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக் கூடல் நகர் என்று உலகத்தை ஒரு தட்டிலும் மதுரையை ஒரு தட்டிலும் வைத்துச் சீர்தூக்கி மதுரையின் புகழ்ப் பாரத்தைப் போற்றினான் ஒரு தமிழ்ப் புலவன். அவன் வாக்கு இன்று வரை பொய்யாகவில்லை; என்றும் பொய்யாகாது. 10. போர்க்களம் போர் என்பது பகையான அரசர்கள் தம்முள் மலைந்து கொள்ளும் நாட்டுப் பெருஞ் சண்டையைக் குறிக்குமே யல்லது, மக்கள் ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ளும் வீட்டுச் சிறு சண்டைகளைக் குறிக்காது. ஆதலின் போராவது அரசியலோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியாகும். ‘போரெனிற் புகலும் புனைகழல் மறவர்’ (புறம் 31) என்று கோவூர் கிழார் பாராட்டுமாறு, பண்டைத் தமிழர்கள் போர்வேட்கை மிக்கவர்களாய் வாழ்ந்தனர். தமிழக எல்லைக்குள் மூவேந்தர்களும் குறுநில மன்னர் களும் நாளோயாது கலாமிட்டுப் போர் மேற்கொண்டன ராதலின், போரச்சம் என்பது தமிழனத்துக்கு அரிய பொருளாயிற்று. போர் என்ற சொற்கேட்டால், வைக்கோற் போரைக் குறிக்கலாம் என்பதைக்கூட மறந்து போர்க்களம் நோக்கின தமிழ்க் கால்கள். அற்றைத் தமிழகத்துப் போரெனின் நன்றெனப் புறப்பட்டார் பலராதலின், ‘பகையகத்துச் சாவார் எளியர்’ (723) என்றார் வள்ளுவர். போரவை இன்று மாணாக்கர்கள் நன்னடை என்னும் இராணுவப் பயிற்சி பெறுதற்கு நாட்டுப்படைக் குழுக்கள் உள்ளன அல்லவா? இதுபோல் பண்டைத் தமிழகக் காளைகள் நன்னடைப் பயிற்சி பயிலுதற்குப் போரவை, முரண்களரி எனப் பல பயில்வுக் கழகங்கள் இருந்தன. ஒளிறுவாள் அருஞ் சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம் 312) என்று ஒவ்வோர் இளைஞனுக்கும் உரிய நாட்டுக் கடமையைப் பழந்தமிழ் நாடு வலியுறுத்திற்று. நின் மகன் எங்கே என்று வினவிய ஒரு நங்கைக்கு ‘என் மகன்... தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே’ (புறம் 86) என மறுமொழிகின்றாள். தாய் காவற்பெண்டு. வினாவிய பெண்ணும் அத்தகைய மகனைப் பெற்றெடுக்க வேண்டும்; அல்லது, பெற்றுள்ள மகனை விளையாடு களத்திற்கன்றிப் பொருகளத்திற்குச் செல்லப் பழக்க வேண்டும் என்பது காவற்பெண்டின் குறிப்புப் போலும். தமையனையும் கணவனையும் போரில் இழந்த ஒரு தமிழ்ப்பெண் மீண்டும் போர்ப்பறை கேட்டுத் தன் சிறுவனைப் போர்க்கோலஞ் செய்தாள்; வேல் கைக்கொடுத்து இதோபார்! போர்க்களம் என்று காட்டிச் செல்கென ஏவினாள் என்பது புறநானூற்றில் ஒரு காட்சி. போர்கள் ஊருக்கு அணிமையில் நிகழ்வதுண்டு என்று இதனால் அறியலாம். இவ்வண்ணம் போர்மூச்சு தமிழக மண்ணில் யாண்டும் ஓடி உலாவிய தன்மையால் புறத்தினை என்னும் அரிய இலக்கியப்பிரிவு இலக்கண வடிவில் தமிழ் மொழிக்கண் தோன்றவதாயிற்று. ‘வீரஞ் செறிந்த தமிழ்நாடு’ என்றார் பாரதியாரும். போர்க்களத்தைக் குறிப்பதற்கு களம் என்று சொன்னால் தமிழில் போதுமானது. ‘களம் புகலோம்பு மின்’ (புறம் 87) ‘பொருநரும் உளரோ நீ களம் புகினே’ (புறம் 90) என்ற ஆட்சிகளை நினைக. களம் பாடியது என்பது பரணிநூலின் உட்பிரிவுகளுள் ஒன்று. சமம், பறந்தலை, அமர்க்களம், செருக்களம் எனப் பல சொற்கள் போர்க்களத்தைக் குறிக்கத் தமிழில் உள்ளன. போரில் எல்லாப் பொருள்களும் அழிந்து தரை மட்டமாகுவதால் சமம் என்றும், ஊருக்குப் புறம்பான வெள்ளிடையில் போர் நடக்குமாதலின் பறந்தலை என்றும், விருப்பத்தோடு உயிர் வழங்கும் இடமாதலின் அமர்க்களம் என்றும், செருக்கு™ர்ச்சியோடு போர் செய்வாராதலின் செருக்களம் என்றும் காரணப் பெயர் பெற்றிருத்தல் கூடும். ஒருவன் சினந்தெழுந்து தாறுமாறாக ஆர்ப்பாட்டஞ் செய்து குதிப்பானேல், என்ன அமர்க்களம் பண்ணுகின்றான் என்னும் சொல்வழக்கை நாம் அடிக்கடி கேட்கின்றோம். போர்ப்புனைவு பொருகளத்தைப் பாடிய புவலர்கள் இருவகையர். போர்ப்பூசல்களை நேரிற் கண்டு பாடியவர் ஒருவகையினர், இவர்தம் போர்ப் பாடல்களில் உணர்ச்சியும் உண்மையும் அறமும் அளவறி கற்பனையும் அமைந்திருக்கும். போர் களைக் கண்ணாற் பாராதே இதன் கொடுமை இப்படித் தான் இருக்குமென்று கருதிப் பாடியவர் மற்றொரு வகையினர். இன்னோர் தம் இலக்கியங்களில் பாட்டு மிகுதியும் புனைவு மிகுதியும் நய மிகுதியும் சொல்லடுக்கும் வெளிப்படும். புராணப் போர்களைப் பாடிய புலவர்களின் நூல்களில் வியப்பாற்றல் தோன்றுமேயல்லாது பேராற்றல் கற்பவர்க்குத் தோன்று வதில்லை. எவ்வாறாயினும் போர்க்களக் காட்சிகளைப் பாடாத தமிழ்ப் பேரிலக்கியம் இல்லை. அக்காட்சிகள் சிலவற்றை இனிக் காண்போம். போர்க்களம் என்பது உயிர்கள் தொகையாக மடியும் கொலைக்களம் என்பது பொதுவான கருத்து. இக்கருத்திற் கேற்ப இன்னாக் கொடுங்காட்சிகள் இலக்கியத்து இடம் பெறலாயின. யானையொடு யானை இடிப்பதும், குதிரை யொடு குதிரை தாவுவதும், தேரொடு தேர் சாடுவதும், ஆளோடு ஆள் தாக்குவதும், வாளோடு வாள் உரசுவதும் வேலொடு வேல் வீசுவதும், அம்பொடு அம்பு விடுப்பதும் ஆகிய காட்சிகள் பழம்போரை நினைக்கும் போது நமக்கு வழக்கமாகத் தோன்றுகின்றன. உயிரினங்கள் உடல் துணி பட்டும் தலை தகர் பட்டும் செவி யறுபட்டும் கண் குழிபட்டும் நாத்துளைபட்டும் குடல் புறம்பட்டும் காலொடி பட்டும் வாலறுபட்டும் உறுப்பறைகளாய் உறுப்பிலிகளாய்க் கிடக்கும் அவல நிலையை இலக்கியங்கள் உருக்கமாய் எடுத்துரைக்கும். பொருங்களத் தாடவர் பொருவில் பைந்தலை அரும்பெறற் கண்ணியோ டற்று வீழ்வன கருங்கனிப் பெண்ணையங் கானங் கால்பொர இருங்கனி சொரிவன போன்ற என்பவே (சிந்தாமணி. 2236) காலாட் படைகளின் தலைகள் பனங்குலையிலிருந்து காய்கள் உதிர்வன போல உருள்கின்றன என்று எளிதாகச் சொல்லுவர் திருத்தக்கதேவர். குருதியின் நதிவெளி பரக்கவே குடையினம் நுரையென மிதக்கவே கரிதுணி படுமுடல் அடுக்கியே கரையென இருபுடை கிடக்கவே (கலிங். 410) குருதி ஆறாக ஓடுகின்றது; அவ்வாற்றில் பகைவரின் வெண்கொற்றக் குடைகள் நுரைகளாக மிதக்கின்றன; யானையின் கால்வெட்டுக்கள் இருபுறமும் கரையாகக் கிடக்கின்றன என்று உருவகத்தால் போர்க்களத்துப் புண்ணாற்றின் ஓட்டங் காண்கின்றார் செயங்கொண்டார். தமிழ் முதற்பெரு நூலாகிய தொல்காப்பியத்தின் புறத்திணையியலில் பல போரோவியங்கள் உள்ள. ஒரு வீரன் உடலின் நாற்றிசையிலும் வேல்களும் அம்புகளும் பாய்ந்து நிரம்பவே மயங்கி விழுகின்றான். அவனுடலில் மண் ஒட்டுமா? மண் ஒட்டாதபடி அவன் உடம்பைப் போர்க் கருவிகள் தாங்குகின்றன. அந்நிலையில் நிலந் தீண்டாமலே அவன் உயிர்போகின்றது. இதனை அரிய வீரத்தின் நிலை என்று மதிக்கின்றார் தொல்காப்பியர். கணையும் வேலும் துணையுற மொய்த்தலிற் சென்ற வுயிரின் நின்ற யாக்கை இருநிலந் தீண்டா அனைநிலைவகை (தொல். 1016) இப் பெருநூலின் காஞ்சித் திணையில் வெருவரத்தக்க மகளிர் வீரச் செயல்கள் கூறப்பட்டுள்ளன. தன் கணவன் உயிரைப் போக்கிய வேலைக் கண்டு அவ்வேலாலே தன்னுயிரையும் போக்கிக் கொண்டாள் ஒரு பெண் என்றும், கணவன் தலையொடு தன் மார்பையும் முகத்தையும் சாத்தி வைத்தளவில் உயிர்விட்டாள் ஒரு பெண் என்றும் மறக்காட்சிகள் சுட்டப்பட்டுள்ளன. களிற்றுப்படை பண்டைப் போரில் யானைப்படையே சிறந்தது என்று கருதப்பட்டது. ‘களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடன்’ என்றார் பொன்முடியார். ‘வெளிற்றுப் பனந் துணியின் வீற்று வீற்றுக் கிடப்பக் களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை’ (புறம். 35) என்ற அடிகளில் யானையின் உருட்டுக் கால்கள் பனந்துண்டுகள் போல வெட்டுண்டு இரத்தமின்றி வெளிறிக் கிடக்கின்றன என்பர் வெள்ளைக்குடி நாகனார். களவழி என்பது பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூலாகும். இது நாற்பது வெண்பாக்கள் உடையது. அளவிற் சிறிதாயினும் போர்க்களம் என்னும் ஒரு பொருளையே விரித்துக் கூறும் சிறப்பினது. சோழன் செங்கணானுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் நடந்த போரின் களத்தைப் பாடவந்த புலவர் பொய்கையார் களிற்றுக் காட்சிகளையே மிகுதியாகப் புனைகின்றார். இரத்த வெள்ளத்தில் மூழ்கியவர்கள் ஒடிந்த யானைக் கொம்பு களைப் பிடித்துக்கொண்டு எழுவர்: இதுவரை கரிய மலை போன்றிருந்த யானை இப்போது இரத்தந்தோய்ந்து இங்குலிக மலை போல ஆயிற்று; யானை மேல் பதிந்து மேலே தோன்றும் அம்புத் தலைகள் மலைமேல் வரிசையாக இருக்கும் குருவிக் கூட்டத்தை ஒக்கும்; வீரர்வெட்டிய யானைக்கைகள் இடியேறுபட்ட மலைப்பாம்புகள் போலப் புரளும்; யானையின் கைவெட்டிலிருந்து ஒழுகும் அரத்தம் பையிலிருந்து சொரியும் பவளம் போலும்; யானை முறித்து ஒடித்த குடைகள் சிதறிக் கிடக்கும் போர்க்களம் தச்சனது தொழிற்களத்தை ஒக்கும்; குருதியுட் படிந்து மேலே தோன்றும் யானை செவ்வானத்துத் தோன்றும் மேகத்தை நிகர்க்கும் என்று பலவாறு யானைப் போர்க் காட்சிகளையே கூறுவர் பொய்கையார். தமிழிலக்கியத்து யானையைக் குறித்து எழுதிய போர்க் கற்பனைகள் பல. அவையெல்லாம் முத்தொள்ளாயிர நூலில் வரும் ஒரு கருத்துக்கு இணையில்லை. அக்கற்பனை தனக்குவமையில்லாதது. பாண்டியன் யானை பகைவர்களின் மார்பகங்களைக் குத்திக் குடைகின்றது. இக் குடைவை ஒரு புதுநோக்காகப் பார்க்கின்றார் ஒரு புலவர். கொம்பாகிய எழுத்தாணியால் பகை மன்னர்களின் மார்பாகிய ஓலைகளில் எழுதியது என்பது அவர் நோக்கு. குழந்தை பிறந்தது என்றால் என்ன குழந்தை என்று எல்லோருக்கும் கேட்கத் தோன்றுகிற தன்றோ? அது போல, யானை எழுதிற்றென்றால் என்ன எழுதிற்று எனக் கற்பவர்கள் அறிய விரும்புவது இயல்பே. ‘பகை மன்னர்களே! உங்கள் நாடெல்லாம் எம் அரசனுக்குச் சொந்தம்’ என்று கல்வெட்டுப் போல மார்புவெட்டு வெட்டிற்று என்பர் முத்தொள்ளாயிரவர். மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் உருத்தகு மார்போலை யாகத் -- திருத்தக்க வையகம் எல்லாம் எமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு. 11. வரிசைப்பாட்டு பாட்டு என்றால் உணர்ச்சி துள்ள வேண்டும், கற்பனை செறிய வேண்டும், உவமை கலக்க வேண்டும், எதுகை மோனை இணைய வேண்டும், நயம் கனிய வேண்டும், நோக்கு இருக்க வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாகச் சங்கப் பாட்டு என்றால், இயற்கை தழுவ வேண்டும். இங்ஙனம் பாட்டுக்கு ஓர் அளவுகோல் செய்து வருகின்றோம். பின்வருவது ஓர் உரையாடல் சான்றோர்கள் : (பிசிராந்தையாரைப் பார்த்து) உம்முடைய பெயரை நெடும் பல்லாண்டுகளாகக் கேட்டு வருகின்றோமே. நீர் பெரிய கிழவராக இருத்தல் வேண்டுமே. வயது பல ஆகியும் உமக்கு நரை ஏற்பட வில்லையே. பிசிராந்தையார் : (சிரித்துக் கொண்டு) உங்கள் கேள்வி கேட்க வேண்டிய கேள்வி. சுருக்கமாகச் சொல்லி விடுகின்றேன். என் மனைவி இல்லறப் பண்பெல்லாம் நிறைந்தவள். எனக்குப் போதுமான ஆண் மக்களும் பெண் மக்களும் உளர். என் உடன் பிறப்பாளர்கள் என்னோடு ஒற்றுமையாக நடந்து கொள்பவர்கள். என் நாட்டு அரசன் முறை தவறாது குடிகளைக் காப்பவன். என் ஊரில் கல்வி வேள்வி அறிவு பண்பு எல்லாவற்றிலும் சிறந்த பெரியவர் ஒருவர் அல்லர், பலர் இருக்கின்றார்கள். எந்நலத்திலும் குறை வில்லாதபோது, நரை எப்படி வரும்? இந்த மாதிரியான பேச்சு இன்றும் இல்லையா? இப்பேச்சுத் தன்மையில் என்ன பாட்டுமை இருக்க முடியும் என்று கருதுகின்றோம்? பின்வருவது இவ்வுரையாடல் அமைந்த ஒரு சங்கப் பாட்டு; யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின், மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையரென் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே. (புறம். 191) முதற்கண் இச்செய்யுட் பொருளை அலசுவோம். வயது நனிமுதிர்ந்தும் முதுமை காட்டும் நரைதிரை தோன்ற வில்லையே என்பது கேள்வி. அதற்கு விடையாக நான்கு கருத்துக்களைப் பிசிரார் சொல்கின்றார். தன் குடும்ப நலம், தன் பொதுக் குடும்ப நலம், தன் ஆட்சி நலம், தன் ஊர் நலம் எல்லாம் யாதும் குறைவில்லை. தொடர்பான இடமெல்லாம் நலம் பயப்பனவாக இருக்கையில் நரைக்கு இடமில்லை. பிசிரார் மொழிந்த நான்கு நலங்களுள் தன் குடும்ப நலம், தன் பொதுக் குடும்ப நலம் என்ற இரண்டனையும் அகச் சூழ்நிலை எனவும் ஏனைய இரண்டனையும் பொதுச் சூழ்நிலை எனவும் பகுத்துக் கொள்ளலாம். ‘இளையர்’ என்பதற்கு ஏவலாளர் என்று இதுகாறும் பொருள் சொல்லப்பட்டு வருகின்றது. மனைவி, மக்கள், வேந்தன், ஊர்ச் சான்றோர் என்போர் இயல்பான தொடர்பினர், விலக்க முடியாத உறவு நிலையினர். இந்நிலையினரோடு எண்ணத் தக்கவர் அல்லர் ஏவலாளர்; விலகற்கும் விலக்கற்கும் உரியர். ஆதலின் ‘என் இளையர்’ என்பார் உடன் பிறப்பினரே ஆவர். ‘மாண்ட என் மனைவி’ என்ற நடையை ஒப்பு நோக்குக. திண்பொருள் எய்தல் ஆகும்; தெவ்வரைச் செகுக்கல் ஆகும்; நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணல் ஆகும்; ஒண்பொரு ளாவ தையா உடன்பிறப் பாக்க லாகா; எம்பியை ஈங்குப் பெற்றேன் என்னெனக் கரிய தென்றான் (சிந்தா. 1760) என்பர் திருத்தக்க தேவர். ‘நரையில’ என்ற தொடர்ப் போக்கு நரை திரை முதலாயின என்பதைக் குறிக்கும். ‘நீ சொன்ன நேரத்தில் வரவில்லையே?’ என்பது ஒரு மடக்குக் கேள்வி. உடன்பட்டதாக ஒன்றைக்கொண்டு மேலொன்றைச் சொல்லுகின்ற வாய்ப்பாடு உடையது. ஆண்டு பலவாகியும் நரையில்லையே என்பது ஒரு மடக்குக் கேள்வியே. முதுமை வந்தாலன்றோ நரைவரும்; எனக்கு இன்னம் முதுமை தொடரவில்லையே. சூழ்நிலைகள் நலமாக இருத்தலால் என் இளமை நீடிக்கின்றது. முதுமையே தொடங்காதபோது நரை இல்லையே என்ற வினாவுக்கு இடமில்லை என்பது புலவரின் குறிப்பு. பாட்டின் வடிவம் ‘யாண்டு பலவாக’ என்பது சங்கச் சான்றோர் கவியினுள் ஒன்று. இதனைப் பாடிய பிசிராந்தையார் அகநானூற்றில் ஒன்று, நற்றிணையில் ஒன்று, புறநானூற்றில் நான்கு என ஆறு பாட்டாசிரியர். ஏனைய பாடல்களில் உவமை முதலாயின உள. இப்பாட்டிலோ உவமையில்லை, கற்பனையில்லை, இயற்கை யில்லை என்பது வெளிப்படை. இவை இல்லாவிட்டாலும் இது பாட்டாகாதா? சிந்திப் போம். உவமை முதலாயின இல்லாவிட்டாலும் ஒரு செய்யுள் பாட்டாகலாம். ஏன்? உவமை என்றின்னவை பாட்டின் புறக்கூறுகள். எண்ணிய கருத்தை ஒழுங்குபடப் புனையும் அமைப்பே பாட்டின் வடிவம். புறக்கூறுகள் இன்றியும் வடிவச்செம்மை வரும். கண்ணகி கற்பழகி; அணிகலன்கள் அவளுக்கு இயல்பாக வேண்டுவ தில்லை; அவளழகு செய்யாக் கோலம். ஆதலின், கூடல் மகளிர் கோலங் கொள்ளும் ஆடகப் பைம்பூண் அருவிலை யழிப்பச் செய்யாக் கோலமொடு வந்தீர் (சிலப். 16) என்று மாதரி கண்ணகியின் அணியில் திருமேனியைப் பாராட்டுகின்றாள். சீதை இயற்கைப் பேரழகி; மேலணிகள் அவளழகை மிகுக்கவில்லை. மாறாக மறைக்கின்றன என்று கருத்துக்கொண்ட கம்பர், அமிழிமைத் துணைகள் கண்ணுக்கு அணியென அமைக்கு மாபோல் உமிழ்சுடர்க் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் அமிழ்தினைச் சுவைசெய் தென்ன அழகினுக்கு அழகு செய்தார் இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ (பால. கோல) எனச் சீதைக்கு அணியழகு செய்வாரை அறியாதவர் என்று சாடுகின்றார். இயற்கையழகு என்பது பாட்டுக்கும் பொருந்தும். வடிவொழுங்கு பட்டாங்கு இருப்பின், உவமை முதலாயின வேண்டுவதில்லை. இவ்வொழுங்கு இல்லாத பாட்டு, புடவைக்கடைப் பார்வைப்பாவை போல என்ன செய்யழகு செய்தாலும் உயிர்ப்பு இராது. வரிசையழகு ‘யாண்டு பலவாக’ என்ற பாட்டில் கருத்தொழுங்கு உண்டு. கருத்தைச் சொல்வதில் வரிசையுண்டு. ‘வரிசை அறிதலோ அரிதே’ என்பர் கபிலர். ‘மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையர் என் இளயைரும்’ ஒருவனுக்கு மனைவியும் மக்களும் முதல் நெருக்கமானவர்; உடன் பிறந்தார் அடுத்து நெருக்கம் ஆனவர்; வேந்தனும் ஊர்ச்சான்றோரும் அடுத்தடுத்த நிலையில் நெருக்கத்தினர். முன்னவர் இருவரும் ஒருவனுக்கு நேரடித் தொடர்பினர். அவர்தம் நலமும் தீங்கும் ஒருவரை விரைவில் சென்று சாரும். வேந்தனும் சான்றோரும் பொதுத் தொடர்பினர். அவர்தம் செயல்கள் பலரைச்சார்வன. இங்கு முறை வைப்பில் நினைக்கத்தக்க ஒன்று உண்டு. தன் ஊர்ச்சான்றோரை மூன்றாவதாக வைத்து எல்லார்க்கும் பொதுவான வேந்தனை நான்காவதாக இறுதியில் வைத்திருக்க வேண்டும். மனைவி, மக்கள், உடன்பிறந்தார், வேந்தன் என்றிவ் வகையினர் நன்மைக்கும் தீமைக்கும் இடமானவர்; சான்றோர் நலமே செய்பவர் ஆதலின் முறை மாறி வைத்த முறை பெறப்படும். ‘வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்’ என்று எதிர் மறுத்து மொழிவதாலும், ‘ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்’ என்ற விளக்கத்தாலும் வரிசைக் கருத்துத் தெளிவாகும். சான்றோர் என்பதற்கு வீரர் என்ற பொருளும் உண்டு. அச் சான்றோரைச் சுட்டவில்லை என்று காட்ட ‘ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்’ என்று பொருள் விரித்தார் பிசிரார். எனவே நரையில்லையே என்ற வினாவிற்குக் காரணம் மொழியும் போது, நான்கு தொடர்பு களை - வாழ்க்கைச் சூழ்நிலைகளை - நெருக்களவில் வரிசைப்படுத்திய வடிவு பாட்டின் வடிவமாகும். உவமைப் பாட்டு, கற்பனைப்பாட்டு, உணர்ச்சிப்பாட்டு என்பது போல வரிசைப் பாட்டும் ஒரு செய்யுள் முறை அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் மங்கல வணியிற் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாணுதல் திலகம் இழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி (சிலப். 4) என்பது அவ்வுணர்ச்சியில் எழுந்த வரிசையடிகள் கோவலன் பிரிந்தபோது, கண்ணகி தன்னைச் சிறிதும் அழகுபடுத்திக் கொள்ளவில்லை என்பதனை அடிமுதல் கூந்தல் முடிவரை உறுப்புக்களை ஒரு வரிசைக்கு உட்படுத்திப் புனைகின்றார் இளங்கோ. பாட்டின் வடிவம் பகுதிப் பொருள்களை நாட்டும் வரிசையில் நடந்திய லும்மே செய்யுள் உள்ளமைப்பு. இல்லமைப்பு என இருவகை யுடையது. ஒரு பொருளினைப் புனைந்து விளக்குங்கால், இன்ன கருத்து வரலாம் என்பது ஒரு முறை. இன்னது வரக்கூடாது என்பது ஒரு முறை. தம் நீண்ட இளமைக்குக் காரணம் கூறுவார், மனைவி மக்கள் உடன்பிறந்தார் வேந்தன் சான்றோர் இனையவரின் நிறைவையும் ஒற்றுமை யையும் செம்மையையும் சால்பையும் கூறினார். தன் நல்ல பழக்கவழக்கங்கள் காரணம் என்று சொல்லியிருக்கலாம்; தன் கல்வியறிவு ஒழுக்கம் காரணம் என்று சொல்லி யிருக்கலாம்; நால்வரோடு தன்னை யுளப்படுத்தி ‘வாழ்வாங்கு வாழும் மாசில் வாழ்க்கையன்’ என்று முதலிலோ இறுதியிலோ மொழிந்திருக்கலாம். இவ்வாறு தன்னைப்பற்றிக் கூறா இல்லமைப்பால் பிசிராந்தையாரின் மனவொழுங்கையும், அவர் ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோருள் ஒருவர் என்பதனையும் உணர்ந்து கொள்கின்றோம். 12. தமிழ் வான்மீகியார் பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம் ஒருபக லெழுவ ரெய்தி யற்றே வையமுந் தவமூந் தூக்கிற் றவத்துக் கையவி யனைத்து மாற்றா தாதலிற் கைவிட்டனரே காதலர் அதனால் விட்டோரை விடாஅள் திருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே (358) இது வான்மீகியார் பாடிய புறநானூற்றுப் பாடல். சங்கவிலக்கியத்துள் இவ்வொரு பாடலே இவர் பெயராற் காணப்படும். வான்மீகியார் இராமாயணப் பெருங்காப்பியம் படைத்தவர் என்பது உலகறிந்த செய்தி. அக்காப்பியத்தின் அடிப்படையறம் இப்புறநானூற்றில் பொதிந்துள்ளது. இப்பாடலின் வான்மீகியார் தமிழரே என்பது பலர் ஒப்பிய கருத்து. ‘வடமொழியில் வல்ல முனிவர் பெயர்களைப் பண்டைத் தமிழாசிரியர் புனைந்து விளங்கினர் என்பது செந்தமிழ் நாட்டு நல்லிசைப் புலவர் பெயர்கள் பல கொண்டு தெரியலாம். இனி வடமொழியில் உள்ள வான்மீகி முனிவர் வழியினர் இவராவரென்று கருதுவாரும் உண்டு’ என விளக்குவர் மகாவித்துவான் இராகவையங்கார் (தமிழ் வரலாறு, பக். 249). உரைவேந்தர் ஒளவை துரைசாமி பிள்ளையும் இக்கருத்துடையவரே. இப்புறத்தைப் பாடியவர் மூலவான்மீகியாரா? அவருக்குப் பின் தோன்றிய அப்பெயர் கொண்ட வான்மீகியாரா? என்பது நம் சிந்தனைக்குரியது. இராமாயண வான்மீகியார் தமிழ் மொழியையும் தமிழகத்தையும் நன்கறிந்தவர். சீதை பெருமாட்டியுடன் அனுமன் மதுரமொழியில் உரையாடினான் என்ற சுந்தர காண்டத் தொடரில் தமிழ் மொழியே மதுரமொழி எனப்பட்டது என்று பலர் கருத்துரைப்பர் (தமிழ் வரலாறு, பக். 7-8). பொன்மயமான, முத்துமணிகளால் அணி செய்யப்பெற்ற ஒளியான தகுதியுடைய பாண்டியன் கபாடத்தைப் பாருங்கள் என்று வானரப்படைகட்கு வழிநெறி காட்டுகின்றது வான்மீகம். ஆதலின் மூல வான்மீகியாரைத் தமிழராகக் காண்பதற்குச் சில சான்றுகள் முளைக்கின்றன. வான்மீகியார் தமிழரே என்று தென் புலோலியூர் கணபதிப்பிள்ளை ஒரு கட்டுரையில் முடிவு செய்வர். இவர்தம் சில விளக்கங்கள் அத்துணைச் சிறப்பிலவெனினும், இவர் தம் கட்டுரை மேலாய்வுக்குத் தூண்டு கோலாக நிற்கின்றது. இராமாயணக் கதைகளும் மகாபாரதக் கதைகளும் தமிழர் மிகப் பழங்காலத்தே யறிந்தவை. சங்கத் தொகை கட்குக் கடவுள் வாழ்த்துக்கள் பாடப் பாரதம் பாடிய பெருந் தேவனாரைத் தேர்ந்தனர் என்றால், தமிழ் மன்பதைக்குப் பாரதக் கதையில் ஊறிய ஈடுபாடு தெளிவாம். சங்க அகத் தொகையிலும் புறத்தொகையிலும் இராமாயண நிகழ்ச்சிகள் உவமைகளாகவும் செய்திகளாகவும் பயில்கின்றன. வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பௌவ மிரங்கு முன்றுறை வெல்போ ரிராமன் அருமறைக் கவித்த பல்வீ ழாலம் போல ஒலியவிந் தன்றிவ் வழுங்க லூரே (அகம். 70) என்ற கடுவன் மள்ளனார் அகப்பாடலும், கடுந்தெற லிராமன் உடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை யிழைப் பொலிந்தாங்கு (புறம். 378) என்ற ஊன்பொதி பசுங்குடையார் புறப்பாடலும் இராமாயணக் கதைகளைப் புனைகட்டாக நினைக்காமல் நடந்த வரலாறாகவே கூறும் பெற்றியும், இராமனெனச் சீதையெனப் பெயர்சுட்டும் மெய்ம்மையும், தெரிதரு உவமையாக ஆளும் இலக்கியப் பாங்கும் எண்ணத் தக்கவை. இராமாயணத்தின் பெருநிகழ்ச்சிகள் வான்மீகி காலத்திற்கு முன்பே நடந்தவை எனவும் நாரதரும் பிரமனும் அந்நிகழ்ச்சியாறுகளை வான்மீகிக்குக் கூறினர் எனவும் அறிகின்றோம். இராமாயண வரலாற்றை வான்மீகிக் காப்பியத்திற்குப் பின் தமிழுலகம் அறிந்து கொண்டது என்று கருதுவதற்கில்லை. இந்நிகழ்ச்சிகள் நாடுபலவும் அரசு பலவும் தழுவிய பெரியனவாதலானும் அற்றைத் தமிழகத் தின் ஒற்றுமுறையும் தகவல் தொடர்பு முறையும் பரந்திருந்தவை யாதலானும், இராமன் வரலாறு உடனுக்குடன் தமிழுலகுக்குத் தெரிந்திருந்தது என்று கொள்ள வேண்டும். சங்கவிலக்கியத்தில் வரும் ராம காதைக் குறிப்புக்கள் நேரடிக் கேள்வியினை உறுதிப்படுத்துகின்றன. இதனால் நாம் உயத்துணரக் கிடப்பதென்ன? ‘பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்’ என்ற இப்புறப்பாட்டு புறநானூற்றுப் பாடல்களுள் மிகத் தொன்மையான செய்யுளாகும் எனவும் முதற்சங்கத்தைச் சார்ந்தது எனவும் ஊகிக்கலாம். முதற்சங்கத்திருந்த புலவருள் வான்மீகனாரும் ஒருவர் என இறையனா ரகப்பொருள் உரை குறித் திருப்பதும், இனித் தமிழ்ச் செய்யுட்கண்ணும் இறைய னாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் வான்மீக னாரும் கௌதமனாரும் போல்வார் செய்தன தலையாய வோத்து என்று நச்சினார்க்கினியர் எண்ணியிருப்பதும் இதற்கு மேலும் சான்றுகளாம். இம்முதற்கங்க வான்மீகியார் புறம்பாடிய வான்மீகியினும் வேறு என்று உ.வே. சாவும் கலைக் களஞ்சியமும் மொழிவதற்கு ஏற்ற காரணமில்லை. இராமாயணத்தின் முழுநிலையறம் ‘பருதி சூழ்ந்த’ என்னும் இப்புறப்பாட்டில் வடிவு பெற்றுள்ளது. இவ் வறத்திற்கு எடுத்துக்காட்டு இராம வரலாறாகும். இப்பாட்டின் கருத்து ‘ஞாயிற்றின் ஒளி பரவிய இப்பேருலகம் ஒரு பொழுதில் பலர்கை மாறி மாறிச் செல்லும் அத்துணை நிலையாமையுடையது. உலகுடைமை என்பது மாயமாகும். உலகாட்சி என்னும் அரசாட்சி பெரியதா? அதனைத் துறந்து செல்லும் தவக்காட்சி பெரியதா? இவ்வினாவைச் சமன் செய்து சீர்தூக்கிப் பார்த்தால் பேரண்டம் எனக் கருதிக் கொண்டிருக்கும் இவ்வையம் சிறிய கடுகெடைக்குக்கூட நில்லாது. ஆதலால் மெய்ப்பொருளைக் காதலிப்போர் இவ்வாட்சியை உதறிவிட்டனர். அங்ஙனம் கைவிட்டவரைத் திருமகள் விடாது பிடித்துக் கொள்வாள். ஆட்சியைக் கைவிடாது பற்றிக் கொண்டோர் திருமகளால் என்றும் கழிக்கப்பட்டவர்’ என்பது இப்பாட்டின் அறவுரை. இராமபிரான் பெருவாழ்வுக்கு முதற்கண் நடந்த நிகழ்ச்சி ஆட்சித் துறவேயாகும். ஆழிசூ ழுலக மெல்லாம் பரதனே யாள நீபோய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருந் தவமேற் கொண்டு என்ற கைகேசி வரத்தில் வையமும் தவமும் பற்றிய முரணிலையைக் காண்கின்றோம். ‘இப்பொழுது எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே’ எனவும், ‘இருளுடையுலகந் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான்’ எனவும் வரும் கம்பர் சொற்களால் அரசாட்சியை இராமன் மனம் இயல்பாக நாடியதில்லை என்ற மெய்ம்மை பெறப்படும். தனக்கு உலக வாழ்விலும் உலகச் செல்வத்திலும் அரசிலும் ஒருபோதும் நாட்டங் கிடையாது; தவ வாழ்வையே தான் விரும்புபவன் என்று கைகேசிக்கு இராமன் மறுமொழிந் தான் என்று வான்மீகமும் கூறும். ஆதலின் வான்மீகியார் பாடிய இப்புறப்பாட்டு இராமாயணத்தின் அறவெண் ணெயைத் திரட்டி உருட்டி வைத்தாற்போல ஆட்சித் துறவையும் தவமாட்சியையும் ஒருசேர வைத்து அறிவுறுத்து கின்றது. இவ்வுண்மையைத் தெளிந்த இளங்கோ, அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி என்று இராமன் அரசு கைவிட்ட எளிமையையும் தவம் புக்க அருமையையும் இணைத்துக் காட்டுவர். இளங்கோ வடிகளும் குடவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த தவத்தோரல்லவா? இப்புறப்பாட்டில் இன்னும் சில குறிப்புக்கள் உண்டு. அறங்கூறுவார் நிகழ்காலத்தாலோ எதிர்காலத்தாலோ தொடர்வினை முடிப்பர். ‘அறிவுடை யோன் ஆறு அரசுஞ் செல்லும்’ (புறம். 183) எனவும் புகழெனின் உயிருங் கொடுக்குவர் (புறம் 182) எனவும் நடைப்படுதல் காண்க. வான்மீகியார் புறப்பாட்டில் ‘கைவிட்டனரே காதலர்’ என இறந்த காலத்தால் வினைமுடிப்பது ஏதோ ஒரு வரலாற்றுச் சுட்டு உடையது போலத் தோன்றவில்லையா? வான்மீகியாரோடு தொடர்பு கொண்ட சுட்டு யாதாக இருக்கலாம்? ‘காசில் கொற்றம்’ என்று கம்பர் பெருமான் குறிப்பதுங்கூட பதினான்கு ஆண்டுகள் காடு சென்று மீண்ட தவவென்றியேயாகும். நம் இராமாயணத்தின் இறுதி இராமன் மீண்டு தம்பியரோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தொடக்கத்தைச் சுட்டியமை கின்றதே யன்றி ஆட்சிப் படலங்களைக் கூறவில்லை. ஆதலின் ‘காசில் கொற்றம்’ என்ற கம்பரின் தொடர் இராமன் தவவென்றியையே குறிப்பதாகும். ‘விட்டோரை விடாஅள் திருவே’ என்ற புறவடியில் ‘திரு’ என்பது சீதையை நினைவுபடுத்தும் சுட்டு என்று கொள்வது மிகையாகாது. அயோத்தியரசை விட்ட இராமனை விடாது சீதையும் உடன் சென்றாள் என்பது நாம் அறிந்த கதை. ‘கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை’ என்று இன்னொரு புறப்பாட்டும் (368) இயைத்துக் காட்டும். ‘சீரை சுற்றித் திருமகள் பின்செல’ என்ற கம்பர் பாடலில் ‘விடாள் திருவே’ என்னும் வான்மீகியின் சொல்லாட்சி போற்றப் பட்டிருத்தலைக் கண்டு மகிழ்வோம். வான்மீகி என்ற பெயர்க்கு வேறு வேறு கருத்துக் கூறினாலும், தூய்மை மிக்கவர் என்ற ஒரு பொருள் சொல்லவும் இடமுண்டு. வால் என்ற தமிழ்ச்சொல் தூய்மை, வெண்மை என்ற பொருள் தரும். வாலறிவன் என்பது திருக்குறள். வாலி என்பது வாலுடையவன் என்றும் வெண்மை நிறத்தன் என்றும் பொருள் படும். குரக்குச் சேனைக்குத் திருப்பாற் கடலை உவமை கூறுவர் கம்பர். வடமொழி பண்டும் யார்க்கேனும் வழக்குத் தாய் மொழியாக இருந்தது என்று கூறுவார் அரியர். பாரத மொழிகளுள் ஒன்றே வடமொழிக் கல்வியாளர்க்கும் மாநிலந்தோறும் தாய்மொழியாக இருந்தது; இன்றும் இருக்கக் காண்கின்றோம். இந்நிலையில் இராமாயண வான்மீகியார்க்குத் தமிழ் தாய்மொழி என்று கருதலாம். அவர் காலத்துத் தமிழே செம்மொழியாகவும் பாரதத்துப் பரவிய வழக்கு மொழியாகவும் இருந்தது. மேலும் வான்மீகயார் பாடல் வேறு எந்த இந்திய மொழியிலும் உளதாக வரலாறு இல்லை. 13. பறம்புப் போர் வஞ்சனையா? சங்க இலக்கியங்கள் தனியிலக்கியங்கள் அல்ல; தொகையிலக்கியங்கள்; அரச வரலாறும் போர் வரலாறும் மன்னாய மரபும் கலையியலும் அறிவியலும் பின்னிப் பொலியும் பதிவிலக்கியங்கள். இந்நூல்கள் இலக்கிய வடிவில் எல்லையில்லாப் பொருள்களைச் சொல்லிக் கொண்டிருக் கின்றன. பல தலைப்புக்களில் வகுத்தும் தொகுத்தும் திரட்டுமளவிற்குக் கருத்துக்கள் சொற்செறிவில் உறைந்து கிடக்கின்றன. ‘கடலினுள் நாய் நக்கியாங்கு’ எனவும், ‘வெள்ளத்துள் நாவற்றி யாங்கு’ எனவும் மொழிந்தாற் போல, சங்க இலக்கியப் பரவையில் இதுவரை நடந்திருக்கும் ஆராய்ச்சி தவச்சிறிதென்க பண்டை வரலாற்றாய்வுக்குப் புறநானூற்றின் ஒவ்வொரு பாட்டும் ஒரு கல்வெட்டே.. வரலாற்றறிஞர் இடைக்காலக் கல்வெட்டுக்கு நல்குகின்ற மதிப்பினுங் கூடுதலாகச் சங்கப் பாடல்களுக்கு நல்கவேண்டும். ஏன்? இடைக்காலம் கற்பனை ஓங்கிய இலக்கியக் காலம் ஆதலின் கல்வெட்டுக்களிலும் கற்பனைக் கூறு ஓடியுள்ளது. சங்க காலம் தன்மைக் காலம்; சங்கப் பாடல்கள் வரலாற்று நிகழ்வுகளைப் பட்டாங்குக் காட்டும் தன்மைப் பாடல்கள். ஆதலின் அவற்றை அடிப்படையிலேயே நம்பி ஆராய்ச்சி கட்டலாம். சங்க மெய்ப் பனுவல்களை இலக்கியத் திறன்களுக்கேயன்றி வரலாறு முதலான பல்பொருள் ஆராய்ச்சிக்கும் விரிவாகப் பயன்படுத்த வேண்டும் என்பது என் உட்கிடை. 1. வேந்தர்கள் பாரியின் பறம்பை முற்றிய போரைப் பற்றிக் கபிலர் புறநானூற்றில் பல பாடல்கள் யாத்துளார். பாரி மகளிரின் பாடலும் (புறம். 112) நக்கீரரின் பாடலும் (அகம். 78) இப்போரைக் கூறுகின்றன. ஒளவையாரின் பாடலும் (அகம். 313) கபிலரின் பதிற்றுப்பத்துப் பாடலும் (41) இப்போர்க் குறிப்பு உடையன. பறம்புப் போர்பற்றிப் பாரிகாதை பாடிய இராகவையங்கார் நுண்ணாராய்ச்சி செய்திருக்கின்றார். வேங்கடசாமி நாட்டாரும் வேங்கடராசுலு ரெட்டியாரும் பாரி வரலாற்றைக் கபிலர் வரலாற்றொடு இணைத்துத் தொகுத்துள்ளனர். (1) பறம்புப் போருக்குக் காரணம் பாரி தன் மகளிரை மணஞ்செய்து கொடுக்க மறுத்தது; (2) சேர பாண்டிய சோழராகிய முடியுடை வேந்தர் மூவரும் இப்போரில் ஈடுபட்டவர்; (3) பாரியை இரந்து பெற்று வஞ்சித்துக் கொன்றனர். இம்மூன்று கருத்துக்களும் கபிலர், பாரி வரலாறுகளில் தவறாது இடம் பெறக் காண்கின்றோம். தீர்ந்த முடிபு போலப் பாட நூல்களிலும் உரைகளிலும் வழிவழி எழுதிவரக் கற்கின்றோம். இவ் வரலாற்றை ஆயுந்தோறும் ஐயங்கள் கிளைக்கின்றன. திரிபுகள் பல்குகின்றன. பலவற்றுக்கு அமைதிபடக் கூறலாமேயன்றி அறிவுபடக் கூறுமாறில்லை. மேற் சுட்டிய மூன்று கருத்துக்களுமே மறுவாராய்ச்சிக்கு உரியவை யெனினும் இக் கட்டுரையில் பாரியை வஞ்சித்துக் கொன்றனரா என்ற ஒரு செய்தியை ஆய்வோம். 2. வென்றெறி முரசின் வேந்தரெம் குன்றுங் கொண்டார்யாம் எந்தையும் இலமே (புறம். 112) என்ற பாரி மகளிர் செய்யுட்கு, ‘ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும் வஞ்சித்துக் கொன்றமையின்,’ ‘வென்றெறி முரசின் வேந்தர் என்றது ஆண்டு இகழ்ச்சிக் குறிப்பு’ என உரையாசிரியர் அணிபடக் கூறியுள்ளார். விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே (புறம். 109) யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே (மே.. 110) என்பன கபிலர் பாடற் பகுதிகள். போரால் பெற முடியாது, இரவால் பெறலாம் என்று கபிலர் மொழிந்த தனையே ஒரு சூழ்ச்சியாக மேற்கொண்டு மூவேந்தரும் கூத்தராய் வேடம் பூண்டு பாரியைப் பசிரிலாகப் பெற்று வஞ்சித்துக் கொலை செய்தனர் என்று கருதுவர் இதுவரை ஆய்குநர். நெஞ்சிற்றுப் போகாமல் நின்றேவேள் பாரியினை வஞ்சித்துக் கொன்றார் மறமன்னர் (பாரிகாதை. 430) மேலைக் கருத்துக்குப் புறநானூற்றிலிருந்தோ பிற சங்க நூல்களிலிருந்தோ சான்று காட்ட வழியின்மையின், பழையவுரைகாரர் ‘இகழ்ச்சிக் குறிப்பு’ என எழுதிய தனையே சான்றாகக் காட்டினர் பாரிகாதையார். மூவேந்தர்கள் தாமே பாண்வேடம் பூணாது படையாளன் ஒருவனை இரவலனாக விடுத்து பாரியைப் பெற்றுக் கொன்றனர் என்று மூவேந்தர்க்குப் பெருமை தோன்றக் கதை புனைந்தார் ஆசிரியர். இப்பகுதிக்கு ‘வஞ்சித்துக் கொன்ற திறம்’ என்பது பெயர். ‘அவனை வஞ்சத்தாற் கோறல் கருதினர். அதற்கொரு சூழ்ச்சியும் புரிந்தனர். நஞ்சனையார் புரிந்த வஞ்சனை இன்னதென யாரால் இயம்பலாகும்’என்பது நாட்டார் விளக்கம் (கபிலர் 49) இன்னவகை வஞ்சனை என்று நாட்டார் தெளிவிக்கா விட்டாலும் வஞ்சத்தாற் கொன்றனர் என்பதனை உடன் படுவர். ‘பாரியொடு பொருது தோற்றோடிய வேந்தர் அவனை வஞ்சனையாற் கொல்ல எண்ணிச் சூழ்ச்சி செய்தனர்’ என்று எழுதிய இரெட்டியார் புறப்பாட்டின் (112) உரையையே அடிக்குறிப்பில் சான்று காட்டினர். புறநானூற்று விளக்கவுரையாசிரியர் ஒளவை துரைசாமி பிள்ளை ‘வேள் பாரியைப் போருடற்றி வேறல் அரிதென உணர்ந்த தமிழ்வேந்தர் இரவலர் வடிவிற் போந்து அவனையே இரந்து நிற்ப’ (புறம். 108) என்று விளக்குவர். ‘தமிழ் நாட்டு வேந்தர் மூவரும் போரில் வெல்ல வொண்ணாமையின் வஞ்சித்துக் கொன்றனர் என்பர்’ என்பது மூதறிஞர் உ.வே.சா. வின் கருத்து (புறநானூறு - பாடப்பட்டோர் வரலாறு). 3. ‘வென்றெறி முரசின் வேந்தர்’ என்ற பகுதிக்குப் பழையவுரைகாரர் ‘வஞ்சித்துக் கொன்றமையின்’ என்று எழுதிய குறிப்புப் பொருந்துமா? அக்குறிப்பினை மூலச் சான்றாகத் தழுவித் தமிழறிஞர்கள் பாரி வஞ்சனையாற் கொலையுண்டான் என்று எழுதிக் கொண்டு வரும் மரபு பொருந்துமா? முதன்முறை போரிட்ட காலை நாடும் குன்றும் பாரிவயின இருந்தன. அவற்றைக் கைப்பற்ற மாட்டாமல் முதற் போரில் தோற்றோடினர் என்ற செய்தி ‘ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய கடும்பரிப் புரவிக் கைவண்பாரி’ (அகம். 78) என வரவுப் புலவர் நக்கீரரால் தெளிவாக்கப் பட்டது. ‘பகைவர் ஓடுகழற் கம்பலை கண்ட செரு வெஞ்சேஎய் பெருவிறல் நாடே’ (புறம். 120) என்ற கபிலர் பாட்டாலும் பாரி முதல் வென்றி பெறப்படும். இப்போருக்குப் பின், முந்நூறு ஊர்கள் கொண்ட பறம்பு நாட்டினை இரவலர்களுக்கு வழங்கி விட்டான் பாரி. எஞ்சியிருந்தது குன்று ஒன்றே. முதற்போருக்குமுன் ‘நாடும் குன்றும் ஒருங்கீயும்மே’ என்று மொழிந்த கபிலர் மறுமுனை வந்த வேந்தரை விளித்து, ‘யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே’ என்று குன்றை மட்டும் குறிப்பிட்டார். நாடு போயிற்றே என்று கருத வேண்டா, அதற்கு ஈடாக ‘யாமும் பாரியும் உளமே’ என்று கூடுதல் காட்டினார். முடிவாக மறுபோரில் வெற்றிபெற்றுக் குன்றைக் கொண்டனர் என்ற கருத்தை ‘வென்றெறி முரசின் வேந்தர்’ என்ற பகுதி குறிப்பதாகக் கொள்ளலாம். கடல்கண் டன்ன கண்ணகன் றானை வென்றெறி முரசின் வேந்தர் (புறம். 351) விசும்புகண் புதையப் பாஅய் வேந்தர் வென்றெறி முரசின் நன்பல முழங்கி (குறுந். 380) என்ற அடிகளில் வந்தன போன்ற மரபடையாகவும் கருதிப் போகலாம். 4. பாரியை வஞ்சித்துக் கொன்றனர் என்பதற்குச் சங்க மூலம் எதுவும் இல்லை. போர் நடக்கும் காலத்துப் பாடல் மூன்றே பாடிய கபிலர், பாரி இறந்தபின் இருபத்திரண்டு பாடல்கள் பாடியுள்ளார். வஞ்சனைக் குறிப்பு என்னும் இல்லை. வஞ்சக் கொலையாயின் இருங்கோவேளை இகழ்ந்ததுபோல வேந்தர்களையும் இகழாதிருப்பாரா? பெண் கொலை புரிந்த நன்னனைத் தூற்றிப் பாடியது போலப் பிற சங்கச் சான்றோர்கள் இழித்துப் பாடியிருக்க மாட்டார்களா? ‘விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் ஆர ஆடினிர் பாடினிர் செலினே’ என்று துணிவாக அளக்கமாக மூவரையும் முன்னிறுத்தி மொழிந்த கபிலர் வஞ்சனைக் கொள்கையாயின், மறைக்கவேண்டிய காரணம் என்னோ? எந்தையும் இலமே என்று பாரி மகளிரும் இயல்பான சாவுபோல ஏன் கூறவேண்டும்? பகைவர் பாரியை இரந்து பெற்றிருப்பாராயின், அக் கொடை மடத்தை எதனினும் புகழ்ந்தன்றோ பாடியிருப்பார் கபிலர்? யாமும் பாரியும் உளமே என்று பெருமிதமாகச் சொல்லிய தஞ்சொல்லைச் சூழ்ச்சிக்குப் பயன்படுத்தி பாரியைக் கொடையால் கொன்றிருப்பார் களாயின், தஞ்சொல்லின் இன்னா விளைவை யுணர்ந்து கபிலர் புலம்பியிருக்க மாட்டாரா? ஆதலின் வஞ்சித்த கொடைக் கொலை என்பதற்கு நனிமூலமும் இல்லை எனவும் பழையவுரைகாரர் பின்னுள்ளோர்க்குப் பிழைபட வழி காட்டிவிட்டார் எனவும் அறியவேண்டும். இவ்வுரை காரரும் இன்ன வகையால் வஞ்சித்துக் கொன்றனர் என்று எழுதாமை காண்க. 5. நட்டனை மன்னோ முன்னே இனியே பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சி (புறம். 113) என்ற பாடலில் ‘பாரிமாய்ந்தென’ என்றே பாடுகிறார் கபிலர். மாய்த்தென என்று பிறவினையாகப் பாட வில்லை. ஆதலின் வேந்தரொடு இறுதிவரை போரிட்டுப் போர்க்களத்துப் பெருவீரனாக மாய்ந்தான் பாரி என்று கொள்ளவேண்டும். புலர்ந்த சாந்திற் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலர இரவலர் இனைய வாராச் சேட்புலம் படர்ந்தோன் (பதிற்று. 61) என்றும் கபிலர் செய்யுளில் ‘மலர்ந்த மார்பின்’ என்று வீரமாகக் குறிப்பிடல் நோக்கத்தகும். ஏறைக்கோனைக் குறமகள் இளவெயினி ‘சிலை செல மலர்ந்த மார்பின்’ (புறம். 157) என்று பாடுதலை ஒப்பு நோக்குக. புறநானூற்றின் 236 ஆம் பாட்டு கபிலரின் இறுதிப் பாடல் என்று சொல்லத்தகுவது. பாரியின் பெரும் பிரிவைப் பொறாது வடக்கிருக்கும் கபிலர் பாடியது. இச் செய்யுட்கு ‘வேள்பாரி துஞ்சியவழி அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது’ என்று நிகழ்விடம் குறிக்கப் பட்டுள்ளது. பாரியை வஞ்சித்துக் கொல்லவில்லை என்பதற்குத் துஞ்சுதல் என்ற இவ்வினையை விட வேறு சான்று வேண்டுங் கொல்? குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்ற துஞ்சலாட்சிகள் நாம் அறிந்தனவே. எனினும் ஒரு வேறுபாடு. இன்ன இடத்துத் துஞ்சிய என்று சுட்டியது போலப் பாரிக்குத் துஞ்சின இடம் சுட்டவில்லை, உள்ளூர்ப் போர்க்களமாதலின், வெளிமான் துஞ்சியபின், (புறம். 207, 238) ‘வெளிமானுழைச் சென்றார்க்கு அவன் துஞ்ச’ (மேற்படி. 237) என வரும் இடங்களை ஒப்பிடும்போது, பிறிதொரு மரபும் புலப்படும் போலும். துஞ்சிய இடஞ் சுட்டுதல் வேந்தர்கள் அளவிலே காணப்படுதலின் அம்மொழி மரபு குறுநில மன்னர்க்கு உரியதில்லை போலும். 6. யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே (புறம். 110) என்று வேந்தரிடம் வீறுமொழிந்த கபிலர், பாரி போருக்கு இறுதியாகப் புறப்படுங்காலை, தாமும் அருஞ்சமத்துக்கு உடன் போக எண்ணினார். துணையாக நின்று வாழ்தல் அல்லது பொருகளத்தே அவனொடு சாதல் எனத் துணிந்தார். முன்னினும் தானை பெருக்கி மறுபோருக்கு மூவரும் வந்துளராதலின் இம்முறை எதிர்க்கும் பாரியின் இறுதி கபிலருக்குத் தெளிவாயிற்று. நண்பனைச் செருக்களத்துப் போக விட்டுத் தாம் அவனது இல்லது இருக்க விரும்பவில்லை. ‘யாமும் பாரியும் உளமே’ என்று சொல்லியாங்கு ஒன்றிய காட்சியைப் படுகளத்துக்கும் உடன் சென்று காட்டத் துடித்தார். பாரி அவர் வரவுக்குச் சிறிதும் உடன்பட்டானில்லை. அறவே மறுத்துவிட்டான். மறுத்துத் தானே போய்ப் பொருது மடிந்தான் பெருந்தகு சிறப்பின் நட்பிற் கொல்லாது ஒருங்குவரல் விடாஅது ஒழிகெனக் கூறி இனையை (புறம். 236) என்பது கபலரின் வடக்கிருப்புப் பாடல். மாய்ந்தென, மலர்ந்தமார்பு, துஞ்சியவழி என்று இருத்தலானும், கபிலர்தம் பிற்றைப் பாடல்களிலோ, செய்யுட்களின் நிகழ்விடக் குறிப்புக்களிலோ வஞ்சித்துக் கொன்றமை சிறிதும் சுட்டப்படாமையாலும் கொடை யாளனாகிய பாரி மூவரையும் முற்றப் பொருது நன்னடை யாளனாகவே மாய்ந்தான், மாய்ந்து வாராச் சேட்புலம் படர்ந்தான் என்று கொள்வோமாக, ‘வஞ்சித்துக் கொன்றமையின்’ என்ற உரைகாரர் குறிப்பை எவ்வகை மூலமும் இன்மையின் கொள்ளாமாக. 14. பாரி மனைவி கபிலரின் ஏழாம் பத்து சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்மேற் பாடப்பட்டது. இப்பத்தினைத் தழுவிப் பதிற்றுப்பத்தின் பொதுவமைப்பும் ஏழாம் பத்தின் சிறப்புக் கூறும் கொண்டது இக்கட்டுரை. பதிற்றுப்பத்தின் பொதுக்கூறுகள் 1. குடிவரவு : பதிற்றுப்பத்து இலக்கிய நெறிப்படி அமைந்த ஒரு வரலாற்றிலக்கியம். இதனைச் செய்கை யிலக்கியம் என்று குறிக்கலாம். வரலாற்றுணர்ச்சி தமிழர் களுக்கு இல்லை என்று நிலவி வரும் கருத்து நிலவக் கூடாக் கருத்தாகும். பதிற்றுப்பத்தும் அதன் பதிகங்களுமே வரலாற்றெழுத்துக்குத் தக்க சான்றுகள். சங்க காலத்திலேயே மூவேந்தருள் சேரர் போக்கில் சில தனிமாறுகள் காணப் படுகின்றன. பதிற்றுப் பத்துப் போலக் குல வரலாற்று நூல் ஏனையிரு வேந்தர்க்கும் அமைய வில்லை. இந்நூல் பெரும்பான்மை ஆசிரியப்பா வானும் சிறுபான்மை வஞ்சி கலந்த ஆசிரியப்பாவானும் இயல்வது. முதற்பத்தும் பத்தாம் பத்தும் இல்லையாக, இடை எட்டுப் பத்துக்கள் இன்று பதிற்றுப்பத்தாக இருக்கின்றன. இவ் வெண்பது செய்யுட்களை ஒருங்கு நோக்கின் குடிவரவு கூறும் இப் பத்தினைப் பாடுவது எப்படி என்ற சில பொது வமைப்புக்கள் தெளிவாகும். ஒரு புலவர் இரு சேரவேந்தர் களைப் பாடவில்லை. ஒருசேர வேந்தனை இரு புலவர் இருபத்தாகப் பாடவில்லை. ஒரு வேந்தனுக்கு ஒரு புலவர் ஒரு பத்து என்பது இதன் வாய்பாடு. ஆதலின் பதிற்றுப்பத்து என்றால் பாடப்பட்ட சேரரும் பதின்மர், பாடினோரும் பதின்மர், பாடியதும் ஒவ்வொரு பத்து என்பது கணக்கு. 2. பெருங்கொடை : இப் பத்து குலப்பத்து ஆதலின் இவற்றைப் பாடிய புலவர்க்குச் சேரர்கள் அளித்த நன்கொடைகள் சங்க காலத்தில் அளவாற் பெரியன. இவ்வளவு பெரிய கொடைகளைச் சோழ பாண்டியர்கள் செய்ததில்லை. சேர வேந்தர்கூட, வேறு புலவர்கட்கு வழங்கியதில்லை. இரண்டாம் பத்துக் குமட்டூர்க் கண்ணனார் உம்பற்காட்டு ஐந்நூறூர்ப் பிரமதாயமும் தென்னாட்டு வருவாயிற் பாகமும் பெற்றார். மூன்றாம் பத்துப்பாலைக் கௌதமனார் ஒன்பது பெருவேள்வி செய்யப் பெற்றார். நாலாம் பத்துக் காப்பியாற்றுக் காப்பியனார்க்கு நாற்பத்து நூறாயிரம் பொன்னும் ஆட்சியிற் பாகமும் கிடைத்தன. ஐந்தாம் பத்துக்குப் பரணர் உம்பற் காட்டு வருவாயையும் சேரன் மகன் குட்டுவன் சேரலையும் அடைந்தார். ஆறாம் பத்துக்குக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணமும் கிடைக்கப் பெற்றார். ஏழாம் பத்துப் பாடிய கபிலர் சிறுபுரம் என நூறாயிரம் காணமும், வாழியாதன் நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்கு எட்டிய வரை கொடுத்த நாடும் பெற்றனர். அரிசில்கிழார்க்குத் தம் எட்டாம் பத்துக்கு ஒன்பது நூறாயிரம் காணமும் அரசு கட்டிலும் அமைச்சும் கிடைத்தன. பெருங்குன்றூர் கிழார்க்குத் தம் ஒன்பதாம் பத்துக்கு முப்பத்தீராயிரங் காணமும் ஊரும் மனையும் ஏரும் பிறவும் கிடைத்தன. பாரி முல்லைக் கொடிக்கு நிறுத்திய தேர்க் கொடையும் பேகன் மயிலுக்கு வீசிய போர்வைக் கொடையும் உணர்ச்சியளவில் பெரிய கொடைகள், கொடைமடங்கள். மேல் எண்ணிய சேரர் கொடைகளோ அருமையிலும் அளவிலும் பெரியன. இப்பத்துப் பாடுநர்க்கு இவ்வளவு பெருங் கொடை செய்தலே மரபு என்பதனை இதனால் அறியலாம். இக்கொடை கற்பனையன்று என்பதற்கு அகச்சான்றும் உண்டு. இளஞ்சேரல் இரும்பொறையை ஒன்பதாம் பத்திற் பாடிய பெருங்குன்றூர் கிழார், உவலை கூராக் கவலையின் நெஞ்சின் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே (பதிற். 85) என்று கபிலர் பெற்ற பல்லூர்க் கொடையை வெளிப்படுத்துவர். பழைய உரையாசிரியரும், ‘அவன் முன்னோருடைய கொடைச் சிறப்போடு படுத்து அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று’ என்று இப் பாட்டிற்குக் கருத்துரைப்பர். துறக்கப்பட்ட கண்ணகி காரணமாகப் பேகனைப் பாடியவர் நால்வர். கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் என்ற அவர் தம் பாடல்கள் புறநானூற்றில் உள (143, 144, 145, 146, 147). இந் நால்வரும் பதிற்றுப் பத்தும் பாடியுள்ளனர். இவருள் ஒருவராய்க் கபிலர் காலத்தவரான பெருங்குன்றூர் கிழாரே கபிலர் தமக்கு முன் பெற்ற ஊர்க்கொடையைப் பாடியவர் என்பது நினையத்தகும். ஆதலின் பதிற்றுப் பத்தின் பதிகங்களின் முடிவில் குறித்த கொடைகள் சான்று டையனவே. 3. தேவிச்சுட்டு : சேரர் குலப் பத்துப் பாடும் புலவர்கள் முன்னைப் பத்துக்களைப் பார்ப்பதும் அதன் முறைகளைத் தழுவிப் பாடுவதும் ஒரு மரபு. பாடும் முறையுள் ஒன்று பாட்டினில் அரச மாதேவியையும் சுட்டிக் கூறல். புறநானூற்றில் மன்னர்களைப் பாடிய பாடல்கள் நிரம்புவுள. அங்கு மனைவியொடு மன்னனை விளித்துப் பாடும் முறை சிறுவரவினும் சிறுவரவு. புறநானூற்றிலுங் கூட, சேர வேந்தர்களைப் பாடும் செய்யுட்களில் மனைவியர் இடம் பெற்றிலர். ஆனால் பதிற்றுப்பத்தின் எல்லாப் பத்திலும் அவரவர் தேவிமார் பாடற் சுட்டுப் பெறுகின்றனர். எனவே தேவிச்சுட்டு பதிற்றுப்பத்தின் வரன்முறை என்பது தெளிவு. ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ (14) திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ (24) வாணுதல் கணவ மன்னர் ஏறே (38) அன்னோர் பெரும நன்னுதல் கணவ (42) ஆன்றோள் கணவ சான்றோர் புரவல (55) சேணாறு கற்பிற் சேயிழை கணவ (65) சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ (88) இவ்வாறு ஏழு பத்துக்களில் இல்லவளொடு கணவ என்று விளித்துப் பாடியிருப்பதை அறிக. அரிசில்கிழார் பாடிய எட்டாவது பத்தில் இவ்வகை விளியில்லாவிட்டாலும் எழுபத்து நாலாவது பாடல் முழுதும் தேவியோடு இருந்து சேரன் வேள்வி செய்தலையும் வழி வழி வாழத் தேவி அருளிய மகப்பேற்றையும் விரித்துப் பாடுகின்றது. சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல் வேறுபடு திருவின் நின்வழி வாழியர்......... ஒடுங்கி ரோதி ஒண்ணுதல் கருவில் எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் காவற் கமைந்த அரசுதுறை போகிய வீறுசால் புதல்வற் பெற்றனை (பதிற். 74) என்ற அடிகள் மருமக்கள் தாயமின்றி மக்கள் தாயத்தைக் குறித்தலும் காணலாம். “மக்களுட் பெண்பாலைப் பாடுதல் சிறப்பன்மையின் ‘செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ’ (புறம். 13) என்றாற் போலச் சிறுபான்மை ஆண் மக்களொடு படுத்துப் பாடுப” என்பது நச்சினார்க்கினியர் கருத்து. சிறுபான்மை எனவும் சிறப்பன்று எனவும் அவர் கருத்துரையில் வருவன பொருந்தா. மகளிரைச் சார்த்துப் பாடுதல் பெரும்பான்மை என்பது பதிற்றுப்பத்தால் பெறலாம். சார்த்துவகையாற் பாடுவதல்லது தனித்துப் பாடுதல் இல்லை என்று கூறலாமேயன்றி, சார்த்துவகை சிறப்பில்லை என்று கூறல் பொருந்தாது. அரசரின் வீரர்களும் முன்னோர்களும் நாடும் சாத்துவகையாலே பாடலில் இடம் பெறுப. சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக் கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக் குன்றுநிலை தளர்க்கும் உருமிற் சீறி ஒருமுற் றிருவர் ஓட்டிய வொள்வாள் செருமிகு தானை வெல்போ ரோயே (பதிற். 63) சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ (பதிற். 43) இவை வீரர்களைச் சாத்து வகையால் சுட்டுதலின் சிறப்பில எனலாமா? அரசனுக்குச் சிறப்பே இல்லாள், மறவர், சான்றோர், பாணர் முதலிய சார்ச்சியினால் வருவதன்றே. இவ்வுண்மை கருதி, பதிப்பாசிரியர் மூதறிஞர் உ.வே. சா. மகளிரைச் சாத்து வகையாற் பாடுதலன்றித் தனித்துப் பாடுதல் மரபன்றாதலின் இங்கே சேரனொடு சேர்த்தி அவன் மாதேவியைச் சிறப்பித்தார். (பதிற். 14 உரைப்பகுதி) என்று விளக்கஞ் செய்வர். சிறப்பன்று என்ற நச்சினார்க்கினியர் கருத்துக்கு, ‘சிறப்பித்தார்’ என்ற உ.வே. சா. வின் விளக்கம் மறுப்பாதலை உணரலாம். 4. வரலாற்றறிவு : முன் பத்துக்களைப் பார்த்த பின்னரே பின்பத்துக்களைப் பாடுவது மரபு என்பதற்கு மேலும் ஒரு சான்று பார்ப்போம். முன்புலவர்களின் கருத்துக்களே யன்றி அடி முழுவதும் தழுவிக் கொண்ட பாடல்கள் பின்பத்துக்களில் உள. ஒரு சில காட்டுக்கள் : அலங்குகதிர்த் திருமணி பெறூஉம் அகண்கண் வைப்பின் நாடுகிழ வோனே (58) - காக்கை பாடினியார் நச்செள்ளையார் இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே (66) - கபிலர் இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் அகன்கண் வைப்பின் நாடுகிழ வோயே (76) - அரிசில் கிழார் இவ்வாறு ஆறாம் பத்தின் அடிகள் ஏழாம் பத்திலும் எட்டம் பத்திலும் தழுவப்பட்டுள. வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் (58, 67) காஞ்சி சான்ற வயவர் பெரும (65, 90) பணிந்துதிறை தருபநின் பகைவ ராயின் (59, 62) இனைய அடிகளை அசையும் சீரும் அசைவின்றி வழிப்படுத்தினர், எடுத்தாண்டுளர். இதனால் பதிற்றுப்பத்து பாடப்பட்ட சேரர்க்கு மாத்திரம் வரலாற்று நூலாக இல்லை; அன்னோரைப் பாடவரும் புலவர்க்கும் பாடுமுன் பார்க்கவேண்டிய வரலாற்றுக் கல்வி நூலாக இருந்துளது என்பது தெளிவு. இதுகாறும் குடிவரவில், பெருங் கொடையில், மனைவியைச் சார்த்துப் புகழ்தலில், பாட்டுத் தழுவலில் பதிற்றுப்பத்தின் பொது நுண்கூற்றினை எடுத்துக் காட்டினேன். 5. கபிலர் கண்ட புதுப் பாரி : இனி, கபிலரது ஏழாம் பத்தின் சிறப்பியலைக் காணலாம். இப்பத்தின் இலக்கியத் திறன், இலக்கணப்பெற்றி குறித்தும் உரையாளர்தம் நிறைகுறை குறித்தும் ஆராயலாம். ஆயினும், பத்தினுள் முதற் செய்யுள் ஒன்றே இன்றைய அலசற்கு உரியது. அச்செய்யுள் வரலாற்று முரணும் உரைப்பூசலும் உடையதாதலின் வல்லிய ஆராய்ச்சி வேண்டி நிற்கின்றது. பல அடிகள் ஆய்வுக்கு வேண்டுதலின் 19 அடியுடைய அவ்வாசிரியப் பாடல் முழுதையும் தருவன் : பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல் ஓவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன நல்லோள் கணவன் பொன்னின் அன்ன பூவிற் சிறியிலைப் புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ புலர்ந்த சாந்திற் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலர இரவலர் இனைய வாராச் சேட்புலம் படர்ந்தோன் அளிக்கென இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன் ஈத்த திரங்கான் ஈத்தொறு மகிழான் ஈத்தொறு மாவள் ளியனென நுவலுநின் நல்லிசை தரவந் திசினே யொள்வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை நிலவின் அன்ன வெள்வேல் பாடினி முழவிற் போக்கிய வெண்கை விழவின் அன்ன கலிமகி ழானே. இம்முதற் பாட்டு ஆய்வுக்கும் சிறப்புக்கும் உரியது என்பதற்கு ஒரு சான்று, என் ஆசிரியப்பெருந்தகை பாரிகாதை ஆசிரியர் மகாவித்துவான் இரா. இராக வையங்கார் இதனைச் சொல்லாலும் பொருளாலும் தழுவி நான்கு வெண்பாப் பாடியுள்ளனர் என்பதாம். ‘பலாஅம் பழுத்த பசும் புண்ணரியல்’ என்ற முதலடி சிறிதும் சிதைவின்றி அப்படியே பாரிகாதையில் வெண்பாவின் முதலடியாக விளங்குகின்றது. சங்ககாலத்தில் புலவர் பாடிய புலவரான கபிலர், பாரி இருந்தவரை மூவேந்தர் யாரையும் பாடியதில்லை. பாரி போன்ற குறுநில மன்னர்களான ஓரி, காரி, நள்ளி முதலியோரை ஓரளவு பாடியுள்ளார். மூவேந்தரைப் பாடார் கபிலர் என்ற தனிநிலை அவருக்கு இருந்தது போலும். புலனழுக்கற்ற அந்தணாளரான கபிலர் பாடலுக்கு மூவேந்தர் ஏக்கற்றிருந்தனர் போலும். ‘பாரியொருவனும் அல்லன் மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே’ என்ற அவர் கருத்தினால் வண்மைக்குப் பாரியைத் தவிர வேறு யாரையும் நிகரெனப் பாடுதற்கு மதியாத ஒரு நிலை எய்தினர் என்பது குறிப்பிற் பெறப்படும். கபிலர்க்கும் பாரிக்கும் இருந்த பெருங்கேண்மை அக்காலத்துத் தமிழகம் முழுவதும் தெரிந்திருந்தது. வேறு யாரையும் கபிலர் நண்ணார் என்பது உலகக் கருத்து. இந்நிலையில் கபிலர் சேரவேந்தன் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடினார் என்றால் அதற்கு ஒரு காரணம் வேண்டும். அக்காரணத்தை உலகமும் எதிர்பார்க்கும். ஏன்? சேரவேந்தனே எதிர்பார்ப்பான். ஆதலின் தன்னிலையை விளக்கவேண்டிய கபிலர் இம்முதற் பாட்டில், பாரி இறந்ததனால் உன்னிடம் இரக்கவரவில்லை; பாரியின் முழுக்கொடைப் பண்பு உன்னிடம் இருப்பதனால் பார்க்க வந்தேன் என்று கட்டுகின்றார். பழுமரம் தேரும் பறவைபோல யாரையும் யாண்டும் பாடும் உரிமையுடையவர் புலவர். ஏனைப் பத்துப் பாடிய புலவர்கள் தம் பாட்டில் இத்தகையதொரு காரணம் கூறவில்லை. ஏன்? யாரையும் பாடிப்போம் பொது வழக்கம் அவர்கள்பால் இருந்தது. கபிலர் தனி வழக்கம் உடையவராய் இருந்தவர் என்பதனை அவர்தம் முதற்பாட்டே காட்டிக் கொடுக்கின்றது. இது இப்பாட்டின் ஒரு சிறப்பு. செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றிக் கபிலர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இரண்டு உள (8,14). கபிலர் பாரி மாய்ந்தபின், மூவேந்தருள் இச்சேரன் ஒருவனையே பாடினார் என்பதும் நினையத்தகும். புறப்பாடல் இரண்டும் சேரநாட்டில் பாடப்பெற்றனவே. அவற்றுள் கைகுலுக்கிய பாடல் (14) முன்னது எனவும், படுஞாயிறு பற்றிய பாடல் (8) பின்னது எனவும் கொள்ளலாம். 6. பாவையன்ன நல்லோள் யார்? ஓவத் தன்ன வினைபுனை நல்லில் பாவை யன்ன நல்லோள் கணவன் இவ்வடிகளில் பாரியின் மனைவியைச் சார்த்திப் பாடினவர் கபிலர் என்று கூறி வருகின்றோம். பாரி வாழ்ந்த காலத்தும் இறந்த காலத்தும் புறப்பாடல் ஒன்றிலாவது அவன் மனைவிச் சுட்டு இல்லை. ‘அரிவையர் தந்தை நாடே’ (புறம். 117) ‘இரும்பல் கூந்தல் மடந்தைர் நாடே’ (மே. 120) என்ற தொடர்களே வருவன. பாரி காதையார் பாரி இறந்து வான் புக்கபோது மனைவியும் உடனுயிர் நீத்தாள் என்று ஊகிப்பர். அவர் சொல்லுங் காரணம்: ‘பாரியின் அருமைத் துணைவியாகிய கற்புடையாட்டி நல்லாள் பாரியைப் பிரிந்திருந்தாள் என்பதற்கு நூல்களில் யாண்டும் மேற்கோள் காணப் படாமையானும், கபிலர் பாரி மகளிருடன் பாரி மனைவி யையும் அழைத்துச் சென்றார் என்று கேட்கப்படாமை யானும் பாரி மனைவி நல்லாள் என்றும் பெயர்க் கியையப் பாரியுடன் வான்புக்கனள்’ (பாரிகாதை : முகவுரை-41). இங்ஙனம் கருத்துக் கொண்டதற் கேற்ப, பொன்னஞ் சுடராய்ப் புகழ்மெய்யோ என்றேத்த மின்னும் விறற்பாரி வேள்வான்கண்டு -- அன்னாள் சேர்ந்து என்னீத்துப் போதியோ என்றால் இதுபுகுமுன் மெய்ந்நீத்துப் புக்காள் விசும்பு (பாரி. 443) எனக் கணத்தில் உயிர் விட்டு வானடைந்தாள் என்று கதை புனைவர். இக்கருத்துக் கொள்ளத் தக்கதா? அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம்எங் குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தரெம் குன்றுங் கொண்டார்யாம் எந்தையும் இலமே (புறம்.112) என்பது பாரி மகளிர் பாட்டு. அவலக் காலத்துத் தந்தையும் தாயும் இருந்திருந்தால் அப் பெண்குழந்தைகள் எந்தையும் உடையேம் என்று மட்டும் பாடியிருப்பார்களா? தந்தையொடு தாயும் போயிருந்தால் யாம் எந்தையும் இலமே என்று தந்தையை மட்டும் சுட்டியிருப்பார்களா? மிகவும் எண்ணத்தக்க மறுப்பு இது. இருமுறை சொல்லும் போதும் தாய் நினைவு வரவில்லையென்றால், தாய் இப்போர் நிகழ்ச்சிக்குப் பல்லாண்டுகட்கு முன்னே இறந்துவிட்டாள் என்பதுவே கருத்து. மனைவி உடனுயிர் துறந்திருந்தால் இப்பேரவலத்தைத் தாயும் தந்தையு மற்ற குழந்தைகள் என்று கபிலர் கையறுநிலைப் பாடல்களில் பாடியிருப்பார்மன். உடனுயிர்த் துறப்பானால் வேறு புலவர்களும் அகத்திலோ புறத்திலோ சுட்டியிருப்பர்மன். ஆதலின் பாரியின் மனைவி பறம்புப் போர்க் காலத்திலோ போர்க்கு அணிய காலத்திலோ இறக்க வில்லை எனவும் நினைவுக்குத் தோன்றாப் பல்லாண்டுகட்கு முன்னே இறந்தனள் எனவும் கொள்ளவேண்டும். பாரி மகளிர் பருவம் ஒத்த வயதினராதலின் இரட்டைப் பிள்ளைகள் ஆகலாம். இவ்விரட்டைப் பேற்றைத் தாங்காமல் தாய் இவ்விருவரை ஈன்றபின் இறந்திருக்கலாம். அதனால் இப்பெண் குழந்தைகள் தாய் முகம் அறியாதவர்களாகத் தந்தையின் காப்பிலும் கபிலரின் பொறுப்பிலும் வளர்ந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. இவ்வூகம் எத்தன்மைத்தாயினும், பாரியின் மனைவி பறம்புப் போர்க்காலத்தில் இல்லை என்பது பாரி மகளிரின் பாடலாலும் கபிலரின் புறப்பாடல்களாலும் தெளிவு. பாரிமகளிரை உடன்கொண்டு பறம்பு விடுத்துச் செல்லும் கபிலர், பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே (புறம். 113) என்று அவலவிடை புலம்புவர். ‘பாரி மாய்ந்தென’ என்று மட்டும் குறிப்பிடல் எண்ணத்தகும். பாரியும் மனைவியும் மாய்ந்தென என்று கூறினாரல்லர். 7. நல்லோள் கணவன்: பாரி மனைவி இல்லா நிலையில், புறப்பாடலில் அவளிறப்பைச் சுட்டா நிலையில், கபிலர் சேரன் முன், ஓவத் தன்ன வினைபுனை நல்லில் பானை யன்ன நல்லோள் கணவன் என்று பாரியை மனைவியொடு சார்த்திக் கூறினார் என்று பொருள் கோடல் தகுமா? பாவையன்ன நல்லோள் கணவன் என்ற உவமையினால், அவன் மனைவி மிக்க இளமை யுடையவள் என்று கொள்ள வேண்டி வரும். மணப் பருவத்துக்குரிய இருமகளுடைய பாரியின் மனைவியைப் பாவையன்னள் என்று உவமித்தல் இலக்கியம் ஆகுமா? இதனால் நான் துணிந்து கூற எண்ணும் கருத்து: பாவையன்ன நல்லோள் கணவன் என்ற அடி இதுவரை உரையாசிரியர்களும் பிறரும் கருதி வந்தபடி, பாரியையும் பாரியின் மனைவியையும் குறிக்கவில்லை. நல்லோள் கணவன் பாரியல்லன் என்பது என் ஒரு முடிபு. இப் பாட்டின் பிற அடிகளையும் இவ்விடத்துச் சேர்த்து நினையுங்கள், பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல் பலாப்பழம் பழுத்து வெடித்த பிளவிலிருந்து ஒழுகும் தேனை வாடைக்காற்று தூற்றும் நாடு பொருந்திய வெற்றியாளன் என்பது இதன் பொருள். பாரி இறந்ததனால் பறம்பு மலையின் வளம் காப்பின்றிக் கெட்டொழிந்ததைப் புறநானூற்றில் பலபடப் பாடி இரங்கும் கபிலர் இங்ஙனம் பலாப்பழத் தேனை நன்முறையில் புனைந்தார் என்றல் பொருந்தாது. சேரன்முன் பாரியின் கொடையைச் சுட்டல் பொருந்துமேயன்றி அவன் நாட்டின் வளத்தையும் இல்லின் ஓவியத்தையும் நல்லாளின் பாவைமையையும் எடுத்துரைத்தார் என்பது இடமுரணாகும். மேலும் வாடை துரக்கும் என்ற நிகழ்காலப் பெயரெச்சம் அழிந்த பறம்பு நாட்டுக்கு அடைபடாது. ஆதலின் நாடுகெழு பெருவிறல் என்பதும் உரையாசிரியர்களும் பிறரும் கருதி வந்தபடி பாரியைக் குறியாது என்பது என் ஒரு முடிபு. மேலும் தொடரும் அடிகளை ஆராய்வோம். பொன்னின் அன்ன பூவிற் சிறியிலைப் புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ என்ற அடியில் தோல்வியுற்று மாய்ந்த பாரியை உன்னத்துப் பகைவன் என்றல் சாலாது. இக் கட்டுரையின் முற்பகுதியில், பின் பத்துப் பாடுநர் முன்பத்துக் கருத்துக்களைத் தழுவிக் கொள்ளுவதைக் காட்டினேன். கபிலருக்குமுன் நான்காம் பத்துப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் ‘புன்கால் உன்னம் சாய’ (பதிற்று. 40) என்று சேரமான் நார்முடிச் சேரலை உன்னம் சாய்த்தவன் எனப் பாராட்டியுள்ளார். அதன் தழுவலே ‘புன்கால் உன்னத்துப் பகைவன்’ என்ற கபிலரடியாகும், ‘தந்தை தோழன்’ (புறம். 201) எனவும், கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் (புறம் 236) எனவும் கபிலர் பாடுதலின் பாரியும் கபிலரும் தோழமையுடையவர் என்பது பெறப்படும். ஆதலின் எங்கோ என்று கபிலர் பாரியை வேறு விதமாகப் பாடினார் என்றலும் ஏலாது. இம் மறுப்புக்களின் முடிநிலை யாது? பெருவிறல், நல்லோள் கணவன், புன்காலுன்னத்துப் பகைவன், எங்கோ என்ற பெயர்கள் இதுகாறும் எண்ணி எழுதி வருவதுபோலப் பாரியைக் குறிக்கவில்லை. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனையே குறிப்பன என்பது என் கருத்துரை. இப் பொருள்கோளுக்குத் தக்கபடி முதற் பாடலை, வலிந்தன்று, இயல்பாகவே கொண்டு கூட்ட இடனுண்டு. ஈத்தது இரங்கான் ஈத்தொறு மகிழான் ஈத்தொறு மாவள் ளியனென நுவலுநின் நல்லிசை தர வந்திசினே என்ற அடிகளில் இரங்கான், மகிழான், மாவள்ளியன் என வரும் முற்றுக்களுக்கு எழுவாய் எது? பெருவிறலும் நல்லாள் கணவனும் பகைவனுமாகிய எங்கோ கொடுத்தது பற்றிக் கவலைப்படான், கொடுக்கும் தோறும் புகழ் வருவது பற்றி மகிழ்ச்சி கொள்ளான், கொடுக்கக் கொடுக்க மேலும் வண்மையுடையான் என்று புலவர் பாடும் நின் நல்லிசை அழைக்க வந்தேன் என்று இப்பாட்டின் முடிபை இயைபுபடக் கொள்ளலாம். எங்கோ என்பது சேர மன்னனைக் குறிக்கும். இவ்வாறு கொண்டால், பாரி மனைவி பற்றிய பெரிய முரணும் வேறு சில முரண்களும் நீங்குகின்றன. நீங்கவே, கபிலரின் ஏழாம் பத்தும் அவர்தம் புறநானூற்றுப் பாடல்களும் பாரி மகளிரின் பாட்டும் வரலாற்று முரணின்றி விளங்கக் காண்கின்றோம். இங்ஙனம் முடிபு கொள்ளவே, இம் முதற்பாட்டில் பின் வரும் இடைப்பட்ட அடிகள் மட்டுமே பாரியைக் குறிப்பனவாம்: புலர்ந்த சாந்திற் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலர இரவலர் இனைய வாராச் சேட்புலம் படர்ந்தோன் 15. பதிற்றுப்பத்தின் அறிமுகம் என் வானொலிச் சொற்பொழிவுக்கு வாய்த்த சங்க இலக்கியம் பதிற்றுப் பத்தாகும். இந்நூல் குறித்து நான்கு சொற்பொழிவுகள் நிகழ இருக்கின்றன. இம் முதற் பொழிவில் பதிற்றுப்பத்தின் கருத்து, அமைப்பு, சிறப்பு, மன்னர்கள், புலவர்கள், பதிப்பு முதலியன பற்றிய அடிப்படைச் செய்திகளைத் தொகுத்து வானொலிக் கேள்வியாளர்க்கு அறிமுகப்படுத்துவேன். ஒரு நூலின் உள்ளோட்டத்தை உணர்வதற்குமுன் அந்நூல் எப் பொருளை எம்முறையிற் கூறுகின்றது என்ற மேலோட்டத்தைத் தெரிந்து கொள்வது நல்லது. நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறமென்று இத்திறத்த எட்டுத் தொகை என்ற எட்டுச் சங்கப் பனுவல்களுள் பதிற்றுப்பத்தும் ஒன்றாகும். பதிற்றுப்பத்து என்றால் நூறு என்பது பொருள். பத்தாவது பெருக்கல் வாய்பாடு ஒப்பிக்கும் போது எட்டுப்பத்து எண்பது, ஒன்பது பத்துத் தொண்ணூறு, பைத்துப்பத்து நூறு என்று திண்ணைப் பள்ளிச் சிறுவர்கள் கூறக் கேட்கிறோம் அல்லவா? வயிற்று வலியை வைத்துவலி எனவும் பயற்றங்காயைப் பைத்தங்காய் எனவும் மருவி வழங்குதல் போலப் பைத்துப் பத்து என்பதும் மரூஉ வழக்காகும். நூறு பாடல்கள் என்று ஒரேடியாகச் சொல்லாமல் பத்துப் பத்து என்று பிரித்துக் காட்டியதன் கருத்து என்ன? பத்து அரசர்கள்மேல் பப்பத்துச் செய்யுளாகப் பத்துப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள் ஆதலின் அவ்வமைப்பைக் காட்டப் பதிற்றுப்பத்து என்ற பெயர் வைக்கப்பட்டது. புற இலக்கியம் பண்டைத் தமிழர் பல்வகை இலக்கியம் கண்டவர் எனினும் அகம் புறம் என்ற இருவகை இலக்கியங்கட்கே முதன்மை கொடுத்து இலக்கண வரையறை காட்டிக் கற்பித்தனர். அதனால் அகத்திணை புறத்திணை என்னும் திணைப் பாகுபாடுகளும், அகவிலக்கியம் புறவிலக்கியம் என்ற திணையிலக்கிய வகைகளும் தமிழுக்கே உரியனவாயின. இவற்றையே பண்டைச் சான்றோர்கள் பெரிதாகப் போற்றினமையின், பிறவகை இலக்கியங்கள் மின் மினியாயின. எட்டுத் தொகையுள் புறநானூறும் பதிற்றுப் பத்து முழுதும் புறத்திணை நுவலும் புறநூல்கள்: எனினும் பதிற்றுப்பத்து புறப் பதிற்றுப்பத்து என்ற அடைபெறவில்லை, புறநானூறே அந்த அடைக்குரியதாக வழங்கி வருகின்றது. பல புறத் திணைகளும் பல புறத்துறைகளும் வென்றி தோல்வி, கொடை கொடாமை, வாழ்தல் வைதல், வாழ்தல் சாதல், போர் அமைதி என்ற பன்னிலையுணர்ச்சிகளும் சேர பாண்டிய சோழர், குறுநில மன்னர், தனித்தோர், பொது மக்கள் முதலானோரும் நூற்றுக்கு மேலான புலவர்களும் புற நானூற்றில் இடம் பெற்றிருத்தலின், அதற்குப் புறம் என்ற அடை சாலப் பொருந்துவதாகும், குறுந்தொகை, நற்றிணை இரண்டும் அகத்திணையாயினும் அவை அகக் குறுந்தொகை, அகநற்றிணை என்ற அடைபெறவில்லை என்பதையும் முதல் கரு உரிப் பொருள் என்ற முக்கூறும் சிறப்பாக உடைய அகநானூறே அகம் என்ற அடைப்பேற்றுக்கு உரியதாயிற்று என்பதையும் நாம் ஒப்பு நோக்க வேண்டும். புறநானூற்றின் நிலையில் வைத்துப் பதிற்றுப்பத்தை எடை போடுதல் கூடாது. வண்ணச் சோலையும் வேண்டும்; வாழைத் தோப்பும் வேண்டும். பல சரக்கு அங்காடியும் வேண்டும்; ஒரு சரக்கு அங்காடியும் வேண்டும். புற நானூறு பல் பொருள் பற்றி ஒவ்வோரளவு பாடியிருக்கும் தொகை நூல். பதிற்றுப்பத்து ஏறக்குறைய ஒரு பொருளை விரிவாகப் பாடியிருக்கும் கட்டுரை நூல். அதனாலன்றோ நச்சினார்க் கினியார் ‘பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலிற் பாடாண் திணையே ஆயிற்று’ என்று ஓரினம் காட்டினர். பதிற்றுப்பத்தின் இழப்பு பதிற்றுப்பத்து என்ற தலைப்புக்கு ஏற்ப நூறு பாடல்கள் இருக்க வேண்டும்; ஆனால் இடைப்பட்ட எண்பது பாடல்களே இன்று உள. முதற்பத்தும் இல்லை; பத்தாம் பத்தும் இல்லை. தமிழ் இலக்கிய வரலாறு அறிந்தவர்கள் உள்ளது குறைவாகத் தான் இருக்கும் என்பதனை அறிவார்கள். புறநானூற்றில் நானூறும் உண்டா? ஐங்குறு நூற்றில் ஐந்நூறும் நற்றிணை நானூற்றில் நானூறும் உண்டோ? எழுபது பரிபாடலில் இன்று எவ்வளவு உள? முத்தொள்ளாயிரத்தில் திருப்பதிகள் போல் நூற்றெட்டுத்தானே கிடைத்திருக் கின்றன. ஐம்பெருங் காப்பியத்தில் வளையாபதி குண்டலகேசிகள் எங்கே? மூவரின் பெரும் பகுதித் தேவாரங்கள் எங்கே? தொலைந்த இலக்கியங்கள், இலக்கணங்கள், இலக்கண இலக்கிய உரைகளைச் சொல்லப்புகின், அது இழந்த தமிழ் இலக்கிய வரலாறாகப் போய் முடியும். தமிழரின் போற்றாத் தன்மையைக் காட்டும் புண்ணேடாக நீளும். ‘பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலின்’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுதலின், அவர் காலத்து அதாவது பதின்மூன்றாம் நூற்றாண்டில் நூறு பாடல்களும் வாழ்ந்தன என்று அறிகின்றோம், என்பதில் அடங்காத சில பதிற்றுப் பத்துப் பகுதிகள் இளங்பூரணர் உரையிலும் நச்சினார்க்கினியர் உரையிலும் காணப்படுகின்றன. அது போல் புறத்திரட்டு என்ற இடைக்காலத் தொகை நூலிலும் காணப்படுவ. இதனால் புறத்திரட்டின் காலமாகிய பதினைந்தாம் நூற்றாண்டுவரை பதிற்றுப்பத்து முழுதும் வழங்கியிருந்தது என்று உய்த்துணரலாம். இப்போது பதிற்றுப்பத்துப் பதிப்புக்களில் 83 முழுப் பாடல்களும் ஒரு பாடலின் 3 அடிகளும் இன்னொரு பாடலில் விசயந்தப்பிய என்னும் முதலடியின் பாதிச் சீரும் உள்ளன. நச்சினார்க்கினியரின் உரையில் ‘எரியெள்ளுவன்ன நிறத்தன்’ என்று தொடங்கும் 12 அடிச் செய்யுள் கடவுள் வாழ்த்தாகக் காட்டப்படுகின்றது. ஏனைச் சங்கத் தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து இருப்பதுபோலப் பதிற்றுப் பத்துக்கும் அப்படி ஒன்று இருந்திருக்க வேண்டும் அல்லவா, என்று கருதிய பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை சங்க இலக்கியம் என்ற தன்னிகரற்ற முழுப் பதிப்பில், ‘எரியெள்ளு வன்னநிறத்தன்’ என்ற செய்யுளைப் பதிற்றுப் பத்துத் தொகையின் கடவுள் வாழ்த்தெனத் தலைப்பிட்டுப் பதிப்பித்து உள்ளனர். இக்கருத்து நாவலர் வேங்கடசாமி நாட்டார்க்கும் பதிற்றுப்பத்தின் உரையாசிரியர் ஒளவை துரைசாமிபிள்ளைக்கும் உடன்பாடே. வரலாற்றிலக்கியம் வரலாற்றுணர்வு தமிழர்க்கு இல்லை என்ற ஒரு கருத்து பலரிடைப் பரவலாகவும் சிலரிடைப் பதிவாகவும் நிலவி வரக் காண்கின்றோம். இக்கருத்து தவறானது, அடிப்படை யற்றது என்பதற்குப் பதிற்றுப்பத்து ஒன்று போதும். ஓர் அரச குலத்தினரை மேற்கொண்டு அவர்தம் வழியையும் ஆட்சியையும் போரையும் பண்புகளையும் மன்னாயத்துக்கு வேண்டுமளவு தொடுத்துச் சொல்லும் வரலாற்றியலக்கியம் பதிற்றுப் பத்தாகும். தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்று தொல்காப்பியம் கருப்பொருளை எண்ணுங்கால், செய்தி என்பதனையும் ஒரு கருப்பொருளாகக் கூறியிருக் கின்றது. செய்தி என்றால் செயல் என்பது பொருள். ஆநிரை மேய்த்தல், வேட்டையாடல், தினை விதைத்தல், மீன் உணங்கல், உப்பு விற்றல் என இவ்வாறு திணைநில மக்கள் செய்யும் தொழில்களைச் செய்திகள் என்று உரை யாசிரியர்களும் பின்வந்த இலக்கணங்களும் குறுகலாகக் குறித்துள்ளனர். இவை மட்டும் செய்திகள், செயல்கள் அல்ல, அரசும், அமைச்சும் பிற துறையினரும் ஆற்றும் பலவினை களும் தொல்காப்பியர் கூறும் கருப்பொருளாகிய செய்தி என்பதில் அடங்கும் என்பதனையும், இத்தகைய கருப்பொருட் செய்திகள் அகநானூற்றில் நிரம்ப இடம் பெற்றுள்ள என்பதனையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும், ஆதலின் பதிற்றுப்பத்து சேரர் குலத்தின் செய்தியை முதன்மையாகக் கூறும் வரலாற்றி லக்கியம் ஆகும். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே வரலாற்றுக்கு இங்ஙனம் ஒரு தனி நூலமைப்பினைத் தமிழர் கண்டிருந்தனர், கொண்டிருந்தனர் எனின், தமிழர்க்கு வரலாற்றுணர்வு இல்லை என்ற கருத்துக்கு மடிப்படையல்லது அடிப்படை உண்டோ? சேரர்களும் புலவர்களும் முற்கூறியபடி முதற்பத்தும் இறுதிப்பத்தும் இன்றி நடுவில் உள்ள எட்டுப் பத்துக்களே பதிற்றுப்பத்தில் உள. இப்பாடல்களைப் பெற்ற சேர வேந்தர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செல்வக் கடுங்கோ, பெருஞ்சேரவிரும்பொறை, இளஞ்சேரலிரும் பொறை என்ற எண்மர் ஆவர். இவர்கள் ஒருவர்பின் ஒருவராகச் சேரநாட்டை ஆளவில்லை. சேர குலத்தில் உதியன் மரபு எனவும் பொறையன் மரபு எனவும் இருவேறு கிளைகள் இருந்தன. இந்த எட்டு மன்னர்களில் முதலைவர் உதியன் மரபினர்; பின் மூவர் பொறையன் மரபினர். இவ்வெண்மரும் ஆண்ட ஆண்டுகளைக் கூட்டிப் பார்ப்பின் 259 ஆண்டு வரும். ஆனால் அவ்வாறு கூட்டுதல் கூடாது. இவர்களிற் பலர் சேரநாட்டின் வேறு வேறு பகுதிகளைச் சமகாலத்து ஆண்டனர் என்ற கருத்தை எண்ணிக் காலத்தைக் கணக்கிடின், பதிற்றுப்பத்து சேரநாட்டின் 125 ஆண்டு வரலாற்றைக் கூறுவது என்று மதிப்பிடலாம். மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மான் நல்லினி ஈன்ற மகன் என்பது இரண்டாம் பத்துக்குரிய பதிகம். இப்பத்துக்குரிய சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவன் உதியன் சேரலின் மகன் என்று இப்பதிகம் கூறுவதால், தொலைந்த முதற்பத்து தந்தை உதியன்சேரலின்மேற் பாடப்பெற்றது என்று துணிய இடனுண்டு. தொலைந்த பத்தாம் பத்து யாணைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன்மேல் பாடப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சி யாளர் கருதுப. எட்டுப் பத்துக்களைப் பாடிய புலவர்கள் முறையே குமட்டூர்க் கண்ணனார், பாலைக் கௌதமனார், காப்பி யாற்றுக் காப்பியனார், பரணர், காக்கை பாடினியார், நச்செள்ளையார், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் என்ற எண்மர் ஆவர். அவருள் பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர்கிழார் நால்வரும் ஒருங்கு சென்று, தன்மனைவி கண்ணகியைக் கைவிட்டிருந்த வள்ளல் பேகனை இடித்துரைத்துத் திருத்தினர் என்று புறநானூறு தெளிவாகக் கூறுகின்றது. ஆதலின், இந் நால்வரும் வயதில் வேறுபாடு இருந்தாலும் சமகாலப் புலவர்கள் என்று துணியலாம். ஒருவன் இல்லறத்தைத் திருத்தப் புகுந்த இவர்கள் மிக இளைஞர்களாக இருந்திரார். 35 வயதுக்குக் குறையாதவர்களாக இருத்தல் வேண்டும். இந்நால்வரும் சமகாலப் புலவோர் எனின் இவர்தம்மால் பதிற்றுப்பத்துப் பாடப் பெற்ற செங்குட்டுவன், செல்வக் கடுங்கோ, பெருஞ்சேரலிரும் பொறை, இளஞ்சேரலிரும்பொறை என்ற சேர வேந்தர் நால்வரும் சமகாலத்தவர்களாக அல்லது சமகாலம் ஓரளவு வேறுபட்டவர்களாக ஆட்சி செய்தனர் என்று கொள்ளலாம். மறைந்த முதற்பத்தினை முரஞ்சியூர் முடிநாகரும் பத்தாம் பத்தினைக் குறுங்கோழியூர்க் கிழாரும் பாடியிருக்கலாம் என்று புறநானூற்றிலிருந்து ஊகிக்க இடனுண்டு. பதிப்புக்கள் தமிழ்ப் பெருந்தந்தை மூதறிஞர் உ.வே. சாமிநாதையர் ‘பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்’ என்ற பெயரால் 1904இல் முதற் பதிப்பை ஆறு ஏடுகள் பார்த்து வெளியிட்டனர். ஐயர்தம் பதிப்புச் செம்மையை ஞாலம் அறியும். அறிஞர்க்கு வழிகாட்டும் முன்னுரை, விளக்கம், மேற்கோள், ஒப்புமைப் பகுதி, அரும்பத அகராதி, பொருளகராதி என்ற பல் கூறுகள் அவர் பதிப்பின் உறுப்புக்கள். ஆதலின் உ.வே.சா. வின் பதிற்றுப் பத்துப் பதிப்பு ஏழாம் பதிப்பு, எட்டாம் பதிப்பென நீடித்து வருவதில் வியப்பில்லை. உரைவேந்தர் ஒளவை துரைசாமி பிள்ளை எழுதிய ‘பதிற்றுப்பத்து மூலமும் விளக்கவுரையும்’ என்ற அரிய நூலைச் வைச சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1950 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இப்பதிப்பு பழைய உரைக் குறிப்பினை விளக்குவதோடு நூல் முழுதுக்கும் புதிய பதவுரையை நல்குகின்றது. யாழ்ப்பாணம் பண்டிதர் அருளம்பலவனார் ‘பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை’ என்ற பெரு நூலினை இரு பாகங்களாக 1960 ஆம் ஆண்டிலும் 1963 ஆம் ஆண்டிலும் வெளியிட்டனர். இந்த யாழ்ப்பாணப் பதிப்பில் புதிய விளக்கங்களும் மிகுதியான ஒப்புமைப் பகுதிகளும் உள. மேலும் இவ்வாசிரியர் இளம்பூரணர் நச்சினார்க்கினியர் உரைகளிலும் புறத்திரட்டிலும் கிடைத்த பதிற்றுப்பத்துப் பகுதிகளுக்கும் உரைவரைந் துள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இப் பதிப்புப் பெரிதாகவும் அச்சுவனப்பினதாகவும் திகழ்கின்றது. ஐயர் பதிப்பு, ஒளவைப் பதிப்பு, அம்பலவனார் பதிப்பு மூன்றினாலும் பதிற்றுப்பத்து அறிஞர்களிடத்தும் மாணாக்கர் களிடத்தும் நன்கு பரவியுள்ளன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆதரவில் என் ஆசிரியப்பெருந்தகை அறிஞர் அ. சிதம்பரநாதன் தலைமையில் பதிற்றுப் பத்து மாநாடு நடந்தது. அப்போது எட்டுப் பேராசிரியர்கள் எட்டுப் பத்தினையும் பற்றிச் சொற்பொழிந் தனர். இவை தலைமையுரையோடு ‘பதிற்றுப் பத்துச் சொற்பொழிவுகள்’ என்ற நூலுருப் பெற்று 1955 இல் வெளிவந்தன. சேரர் வரலாற்றில் இரு சிக்கல்கள் தோன்றி வரலாற்று அறிஞர்களின் அறிவைத் தூண்டின. ஒரு சிக்கல், சேரர் தலை நகர் மலைநாட்டின் திருவஞ்சைக் களமா திருச்சிராப்பள்ளியை அடுத்த கருவூரா என்பது. இன்னொரு சிக்கல், சேரர் மக்கள் தாயிகளா மருமக்கள் தாயிகளா என்பது. இவ்விரு சிக்கல் பற்றி எழுந்த ஆய்வுப் போரில் பதிற்றுப் பத்தும் அதன் எட்டுப் பதிகங்களும் ஆராய்ச்சி மன்னர்களின் படைக் கருவிகளாக விளங்கின. இவ்வகையில் பதிற்றுப்பத்து வரலாற்று ஆசிரியர்கள் நடுவண் பெரிதும் பரவிற்று. அதனால் ‘வஞ்சிமாநகர்’, ‘சேரன் வஞ்சி’ முதலான நூல்களும், சேரர் தலைநகர், சேரர் வஞ்சியும் சிலாசாசன வழக்கும், சேரர் தாயமுறை, சேரவேந்தர் தாய வழக்கு என்ற கட்டுரைகளும், கவிமணி பாடிய ‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற நகைப்புக் கவிதையும் தோன்றின. பதிற்றுப்பத்தின் சிறப்பினையும் வரலாற்று உண்மை களையும் பற்றி ஐயங் கொண்ட அறிஞர்களும் உண்டு. அந்த ஐயம் பொய்யடிமையில்லாத புலவர்கள் வாழ்ந்த தமிழ் வையத்துக்கு உரியதன்று; ‘ஐயந்தெளிமின் அறிந்தோர்ப் பேணுமின்’ என்று பறைசாற்றுவது போல 1965இல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த புகளூரில் ஆறு நாட்டான் குன்றில் ஒரு கல்வெட்டுக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இக்கல்வெட்டினைப் படித்து அறிந்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் ‘சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்’ என்ற கட்டுரையில், ‘இக் கல்வெட்டு கருவூரிலிருந்து ஆட்சி செய்த சேரல் இரும்பொறை மன்னர்கள் பொறித்தது. பதிற்றுப் பத்திலும் ஏனைய சில சங்க நூல்களிலும் பாடப்பெற்ற பழந்தமிழ் மன்னர்கள் இவர்கள். இக் கல்வெட்டு ஏறத்தாழ கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது’ என்று உள்ளம் மகிழ்ந்து எழுதுகின்றார். ஆதலின் கல்வெட்டுச் சான்றுபட வரையப் பெற்ற வரலாற்றிலக்கியம் எனப் பதிற்றுப்பத்தை வானொலிக் கேள்வியாளர்கட்கு முதற்கண் அறிமுகப் படுத்துவதில் நான் பெருமிதங் கொள்கின்றேன். 16. பதிற்றுப்பத்தின் கொடை சேர பாண்டிய சோழர் என்ற மூவேந்தரைக் குறிப்பிடுங்கால் தொல்காப்பியர் ‘வண் புகழ் மூவர்’ என்று அடை கொடுத்துச் சிறப்பிப்பர். மன்னர்கள் ஆட்சி வன்மையும் படை வன்மையும் உடையவர்களாக இருப்பதும், இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பொதுத்தன்மை. கொடை யாளிகளாக இருப்பது சிறப்புத் தன்மை. தமிழக வேந்தர்கள் பொதுவான வீரப்புகழோடு சிறப்பான கொடைப்புகழும் வாய்ந்தவர்கள் என்பதனை எடுத்துக்காட்டவே ‘வண் புகழ் மூவர்’ என்று அடை புணர்த்தினார் தமிழ் முதல்வராகிய தொல்காப்பியர். இம்மூவேந்தரின் கொடைப் பெருமைக்குச் சங்கப் பனுவல்கள் சான்றாகி நிற்கின்றன. பாரியின் கொடை யேற்றம் கூற வந்த கபிலர் ‘பணைகெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளியோன்’(புறம். 119) என்று தமிழக வேந்தர்களின் கொடையோடு உறழ்ந்து பாடுவதால், இவ்வேந்தர்களின் கொடைப் பண்பு பெறப்படும். பதிகச் சிறப்பு சங்ககால மூவேந்தர்கள் ஒருவர்க்கொருவர் கொடைத் திறம் குறைந்தவர்கள் அல்லர் எனினும், சேரர் தம் கொடைப் பெருமையைக் காட்டும் குறிப்புக்களே நமக்கு நிரம்பக் கிடைத்துள. சேரர் வன்மைகள் தொகையிலும் பெரியன; வகையிலும் பன்மையன; துறையிலும் விரிந்தன. புறநானூறு மூவேந்தர்க்கும் பொது. பதிற்றுப்பத்தோ சேரர்க்குக் கூடுதலானது. சேரர்தம் புகழே பாடும் பதிற்றுப்பத்து என்னும் தனியுடைமையைப் பெற்றிருத்தலால், அவர் கொடையையும் வீரத்தையும் பிற மாட்சிகளையும் விரித்து நிரல்பட எழுதும் வாய்ப்பு எழுத்தாளர்க்குக் கிடைக்கின்றது. பதிற்றுப்பத்தின் கூடுதற் சிறப்புக்கு ஒரு காரணம் ஒவ்வொரு பத்தின் இறுதியில் உள்ள செய்யுள் வடிவான பதிகமும் அதனோடு ஒட்டிய சிறு உரைநடைப் பகுதியும் ஆகும். எட்டுப் பதிகங்களும் அவற்றை அடுத்த எட்டு உரைநடைப் பகுதிகளும், சொல்லப்புகின், பதிற்றுப்பத்தின் மூலச் செய்யுட்களைக் காட்டிலும், எண்ணிறந்த, இன்னும் ஆராய வேண்டிய வரலாற்றுக் களஞ்சியமாக விளங்குகின்றன. பத்துக்குரிய சேரவேந்தனின் தந்தை பெயர், தாய் பெயர், தாயின் தந்தை பெயர் என்று மெய்ப் பெயர்களையும், அவன் போர்ச் செயல்களையும், போரிடங்களையும், கல்வி முதலான ஆற்றல்களையும், அவன் பெயரையும், பாடிய புலவன் பெயரையும் செய்யுட் பதிகம் கூறுகின்றது. உரைநடைப் பகுதியில் பாடிய புலவன் பெற்ற பரிசில் வகைகளும் சேர வேந்தனின் ஆட்சியாண்டும் குறிக்கப் பெற்றுள. ‘பதிற்றுப் பத்தினைத் தொகுத்துதவிய புலவர் பெருந்தகை பதிகங் களையும் உரைநடைப் பகுதிகளையும் சேர்க்காமல் இருந்தி ருந்தால், இவ்வரிய நூலின் வரலாற்றி னையும் அருமை பெருமை களையும் பின்னுள்ளோர் அறிந்து கொள்வது இயலாதது ஆகும்’ என்று போற்றிக் கூறுவர் கல்வெட்டுப் பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார். பதிற்றுப்பத்தின் பழைய உரை யாசிரியர் மூலத்தோடு ஒப்பப் பதிகத்திற்கும் உரைநடைப் பகுதிக்கும் குறிப்புரை எழுதி யிருப்பதிலிருந்து, இவற்றின் பழமையும் கருத்துத் தகுதியும் பெறப்படும். இன்றைய என் சொற்பொழிவுத் தலைப்பு ‘பதிற்றுப் பத்தின் கொடைச் சிறப்பு’ என்பதாம். இச்சிறப்பினை விரித்துரைத்தற்குப் பதிகத்தின் உரைநடைப் பகுதிகள் நிரம்பிய கருத்துக் கொடை செய்கின்றன. சேரவேந்தனிடம் ஒவ்வொரு புலவனும் பத்துப்பாட்டுப் பாடிய பின் பெற்ற பரிசில் யாது என்பதனை இப்பகுதிகள் பெருமிதமாக விளம்புகின்றன. பெருங் கொடைகள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் புலவர் குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற்காட்டு ஐந்நூறு ஊர்களை இறையிலியாக - வரி விலக்காக - அளித்து முப்பத்தெட்டு ஆண்டுகள் தென்னாட்டு வருவாயிற் பாகம் கொடுத்தான். அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் மாலைக் கௌதமனார் பாடினார். நீர் வேண்டியதை என்னிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று கட்டற்ற வாக்கு அளித்தான் சேரன். நானும் என் மனைவி பார்ப்பனியும் சுவர்க்கம் புக வேண்டும் என்று புலவர் வேண்ட, அதனை ஏற்றுச் சேரன் பத்துப் பெருவேள்வி நடத்திச் செலவு செய்தான். நார்முடிச் சேரல், புலவர் காப்பியாற்றுக் காப்பிய னார்க்கு நாற்பது நூhறாயிரம் பொன் ஒரே முறையில் அளித்துத் தன் ஆட்சியுரிமையில் சில அதிகாரங்களை வழங்கினான். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் புலவர் பரணர்க்கு உம்பற்காட்டு வருவாய் முழுதையும் அளித்துத் தன் மகன் குட்டுவன் சேரலையும் புலவர்க்குத் தொண்டு செய்யப் பணித்தான். ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைப் பாடியவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார். இவர் பெண் புலவர் ஆதலின் நகைகள் செய்து அணிந்து கொள்ளுக என்று ஒன்பது காநிறைப் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் கொடுத்ததோடு தன் அரசவைப் புலவராகவும் வீற்றிருக்கச் செய்தான். ஏழாம் பத்துக்கு உரிய செல்வக் கடுங்கோ வாழியா தன் புலவர் கபிலர்க்கு, என் சிறிய கொடையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பணிந்து மொழிந்து நூறாயிரம் பொற்காசு கொடுத்தான்; அதனோடு அமையாது அவரை அழைத்துச் சென்று நன்றா என்ற பெயருடைய மலையேறி நின்று தன் கண்ணிற்கு எட்டிய நாட்டுப் பகுதியெல்லாம் கபிலர்க்கு உரியன என்று கையாற் காட்டி வழங்கினான். அரிசில் கிழாரின் பத்துப்பாடலைப் பெற்ற பெருஞ்சேரல் இரும்பொறை, தான் தன் கோப்பெருந் தேவியொடு அரண்மனைக்கு வெளியே வந்து நின்று, அரிசில் கிழாரைப் பார்த்து, ‘ஐய! இந்த அரண்மனை இனிமேல் உம்முடையது; இவ்வரசு கட்டில் நீர் வீற்றிருப்பதற்கு உரியது’ என்று அனைத்தும் வழங்கினான். இந்நிலை தமக்குக் கிடைத்தால் என்ன செய்திருப்போம்? சேரனையும் அவன் தேவியையும் அப்படியே வெளிக்கடத்தி அரசு கட்டிலில் அட்டணைக்கால் போட்டு நம் தேவியோடு அமர ஆசைப்பட்டிருப்போம். அரிசில் கிழார் சங்கச் சான்றோர் அல்லவா? சேரனைப் பார்த்து, ‘நீயே அரண்மனைக்குள் சென்று அரசிருக்கையில் இருந்து ஆள வேண்டும் என்பது என் வேண்டுகோள். நீ ஆளும் பரிசிலை எனக்கு நல்குக’ என்று இரந்து கேட்டார். புலவரின் அவாவின்மையை அறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஒன்பது நூறாயிரம் பொற்காசு அவர்க்குக் கொடுத்து, தனக்கு நல்வழி காட்டும் அமைச்சராக வைத்துக் கொண்டான். இளஞ்சேரல் இரும்பொறை புலவர் பெருங்குன்றூர் கிழார்க்கு வியப்படையாதாரும் வியப்புறும்படி முப்பத்தீ ராயிரம் பொற்காசு நேரிற்கொடுத்து, புலவர் தம் ஊர் போய்ச் சேரும் முன்னே அவர் பிறந்த ஊரையும் வதியும் இல்லத்தையும் வளப்படுத்தி நிலபுலங்களும் அருங் கலங்களும் பிறவகைகளும் அளித்து, அரசுப் பெருமையாகக் காவலர்களையும் உடன் விடுத்தான். மேற்கூறிய சேரர் பெருங்கொடைகளைக் கேட்கும் போது நமக்கு வாயூறுகின்றது. ஒரு பத்துப்பாட்டுக்கு நூறாயிரக் கணக்கான பொற்காசா, நிலையான வருவாயா, ஆட்சி யுரிமையா அமைச்சுப் பதவியா, அரசவைக் கவியா, அரசன் மகன் பணியாளா, துறக்கச் செலவா என்றெல்லாம் மூக்கிற் கைவைத்து மருளுகின்றோம். இப்பெருங் கொடைகள் உண்மை யல்ல. பதிகம் உரைநடைப் பகுதிகள் நம்புதற்கு உரியனவல்ல என்று ஒரு சிலர் எளிதாகச் சொல்லி விடுகின்றனர். என் செய்வது? அறுபது படி கொண்ட அரிசி மூட்டை விலை உரூபா மூன்று ஆகவும் பவுன் விலை உரூபா பதின்மூன்று ஆகவும் இருந்த காலம் ஒன்று உண்டு என்றால் எதிர்காலம் நம்புமா? அதுபோல் பண்டைக் கொடைகளும் கொடையுணர்ச்சியும் தன் செலவு ஒன்றினையே கற்பனை காணும் இக்கால மன்பதைக்குப் புரியா. காலமாற்றத்தில் உண்மைகள் கனவுகளாகத் தோன்றும். கொடைச் சான்றுகள் புலவர்க்கு வழங்கிய சேரர்தம் கொடைகள் மெய்யானவை என்பதற்கு அகச் சான்றுகள் உ.ள. கபிலர் ஏழாவது பத்தினைச் செல்வக்கடுங்கோ வாழியாதன்மேற் பாடினார் எனவும் அதற்குச் சேரன் நன்றா என்னும் குன்றேறித் தன் கண்ணிற் பட்ட ஊரையெல்லாம் கபிலர்க்கு வழங்கினான் எனவும் உரைநடைப் பகுதி கூறுவதை மேலே கண்டோம். இக்கொடை பொய்யாக் கொடை, கபிலரின் சமகாலத்தவரும், இளஞ்சேரல் இரும்பொறைமேல் ஒன்பதாம் பத்துப் பாடியவரும் ஆன புலவர் பெருங்குன்றூர் கிழார், தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற் கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைச் சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் உவலை கூராக் கவலையில் நெஞ்சின் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே என்று உவமையில் வைத்துச் சிறப்பாகப் பாடியுள்ளார். சேரனது பகைவர்கள் அஞ்சி நடுங்கிப் போட்டுச் சென்ற வேல்கள் எவ்வளவு எண்ணிக்கை தெரியுமா? கபிலர் சேரனிடம் பெற்ற ஊர் எண்ணிக்கையை விட அதிகம் என்று முடிக்கின்றார். மூன்றாம் பத்துக்குரிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் பார்ப்பனர் பாலைக் கௌதமனாரின் செய்யுளை ஏற்றுக்கொண்டு அவரும் அவர் மனைவியும் சுவர்க்கம் புகப் பெருவேள்விகள் செய்து கொடுத்தான் என்று உரைநடைப் பகுதி கூறிற்றல்லவா? இக்கொடையும் பேருண்மை என்பதனை, நான்மறை யாளன் செய்யுட் கொண்டு மேனிலை யுலகம் விடுத்தோன் என்று சேரர் குலத்தோன்றலாகிய இளங்கோவே வஞ்சிக் காண்டத்தில் பாடியிருப்பதனால் தெளியலாம். ‘பதிற்றுப் பத்தும் பதிகங்களும்’ என்ற கட்டுரையில் கல்வெட்டறிஞர் பண்டாரத்தார் ‘மேலே குறிப்பிட்ட சேர மன்னர்களின் செயல்கள் வெறும் புனைந்துரைச் செய்திகள் அல்ல என்பதும் அவை வரலாற்றுண்மைகளேயாம் என்பதும் சேரநாட்டில் ஆங்காங்குக் கிடைக்கும் சான்றுகளால் தெள்ளிதிற் புலனாகின்றன’ என்று பல வழக்காறுகளைக் காட்டி நிறுவியுள்ளார். ஒத்த பதிற்றுப் பத்து கூத்தர்க்கும் பாணர்க்கும் பரிசிலர்க்கும் புலவர்க்கும் மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் வரையா ஈகை வழங்கியுள்ளனர் என்பது உண்மை. இக்கொடைக் குறிப்புக்களை புறநானூற்றிற் காணலாம். ஆனால் பதிற்றுப்பத்தின் கொடை ஒரு தனி வகையாகச் சார்ந்தது. புறநானூற்றில் ஒரு புலவர் பல வள்ளல்களைப் பாடி யிருப்பதையும், ஒரு வள்ளல் பல புலவர்களால் பாடப் பெற்றிருப்பதையும் பார்க்கின்றோம். பாட்டின் எண்ணிக்கை கூடுதலும் குறைவுமாக இருக்கும். மேலும் புறநானூற்றுப் பாடல்கள் பல, சில நிகழ்ச்சிகள் நடந்தபோது பாடப் பெற்றவை. தனிநிகழ்ச்சிப் பாடல்களேயன்றி நூலமைப்பு டைய வரிசைப் பாடல்கள் அல்ல. பதிற்றுப்பத்து நூல் வனப்புடையது, இயல்பான வரலாற்றறிவில் எழுந்தது; பாடப்படுவோனும் ஒருவனே பாடும் புலவனும் ஒருவனே, பாடலும் ஒரு பத்தே என்ற எழுத்து வேலிக்குள் அமைந்தது. ஒரு புலவர் இருபத்தைப் பாடவில்லை; ஒரு சேரன் இருபுலவரின் பாடலைப் பெற வில்லை. பாடலும் ஒருவனுக்கு எட்டு, இன்னொருவனுக்கு பன்னிரண்டு என்பது இல்லை. இவ்வாறு பதிற்றுப்பத்து அடிப்படை வரம்பினது ஆதலின், இப்பத்தினைப் பாடும் புலவர்க்கு நிகரற்ற கொடை கொடுப்பது சேரர் குல மரபாயிற்று. எல்லாவகையாலும் ஒரு நிகர் என்பதனை முன்னரே கண்ட ஒரு புலவன் எட்டுத்தொகை இவையெனப் பாடிய வெண்பாவில், ‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு ஒத்த பதிற்றுப்பத்து’ என்று கூறும்போது, பதிற்றுப்பத்துக்கு ‘ஒத்த’ என்ற உண்மை யடையைக் கொடுத்திருக்கின்றான். அவன் திறனாய்வுக்கு நன்றி. ஆளுக்கு ஒரு பத்துப்பாடி நாற்பதினாயிரம் நூறாயிரம் எனப் பொற்காசுகளும் பிறவும் பெற்றனர் புலவர். அப்பரிசில் பெரிதா?அவர் பாடல் பெரிதா? நிலையுடையது எது? சேரர்கள் அன்று தம் உடைமைகளைப் பரிசி லாகக் கொடுத்திராவிட்டாலும், மாயும்போது உடைமைகளும் மாயுமல்லவா? மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே என்றபடி, பொருள் என்பது புகழுக்கு ஒரு கருவி என்பதனை மரபாக அறிந்த சேரர்கள் தங்கட்குத் தமிழில் ஒரு குல இலக்கியத்தைத் தேடிக்கொண்டனர். அன்று எழுந்த சேரர் குல இலக்கியம் இன்று தமிழின இலக்கியமாக, தமிழினத்தின் கொடைத்திறம் காட்டும் வரலாற்று ஞாயிறாக விளங்குகின்றது. ஒருவன் உடைமை கொடைமையாக மாறும்போது, அக்கொடைப் பயன் பொதுப் பயனாக மலர்கின்றது என்பதனை நாம் அறிவோமாக. 17. பதிற்றுப்பத்தின் மறம் ‘பதிற்றுப்பத்தின் அறிமுகம்’ என்ற என் முதற் சொற்பொழிவில், இத்தொகை நூலின் பெருமைகளையும் வரலாற்றுத் தன்மையையும் இதுவரை வந்த பதிப்புக்களின் பெற்றிகளையும் சிறந்த ஆராய்ச்சி நூல்களின் பெயர்களையும் அறிமுகப்படுத்தினேன். ‘பதிற்றுப்பத்தின் கொடைச் சிறப்புக்கள்’ எனப் பெயரிய இரண்டாவது சொற்பொழிவில், பதிகங்களின் அமைப்பினையும் பாடிய புலவர்கள் பெற்ற வரைவிலாப் பரிசுகளையும் அவற்றிறின் மெய்ம்மைகளையும் நிறுவிக் காட்டினேன். ‘பதிற்றுப்பத்தின் மறம்’ என்ற இம் மூன்றாவது பொழிவில், சேரமன்னர்தம் போர் முறைகளையும் வென்றிகளையும் படை மறவர்கள் தம் வன்மைகளையும் போரால் வந்த நலம் தீங்குகளையும் திறன்படக் காண்போம். கல்வியின் பயன் செய்திகளை அறிந்து கொள்ளுதல் மட்டுமன்று; அச்செய்திகளைச் சீர்தூக்கும் அறிவுடைமையும் கல்வியின் பயனாகும். சீர்தூக்காச் செய்தி செரியா உணவுக்கட்டி போன்றது. சேரரின் தொன்மை மூவேந்தரை எண்ணும்போது சேர பாண்டிய சோழர் என்று எண்ணுவது மரபு. மூவேந்தர்தம் அடையாளப் பூக்களை எண்ணுங்கால் ‘போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந்தானையர் மலைந்த பூ’ என்று தொல்காப்பியம் சேரர்க்குரிய பனம்பூவை முதற்கண் கூறும். வரலாற்றுப் பாடல்களின் தொகையான புறநானூற்றில் சேர மன்னன் பாட்டே முதற்பாட்டாக அமைந்திருக்கின்றது. பண்டைச் சேரர் கொடையிலும் பெரியராய், படையிலும் பெரியராய் இருந்தமையின், மூவேந்தர் வரிசையில் முன்னிடம் பெற்றனர் போலும். புறநானூற்றின் முதற் பாடலைப் பாடிய முரஞ்சியூர் முடிநாகராயர், அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என்று பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் பாரதப் போரில் தருமனுக்குத் துணைப்படை போக்கியதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றார். இதனால் ஏனை இரு வேந்தர்களைக் காட்டிலும் சேர வேந்தரின் தொன்மையும் படைப் பெருக்கமும் வடநாடு மதித்த பெருமையும் விளங்கும். உதியன் சேரலாதன் புகழ் வடநாடும் தென்னாடும் இடையின்றிப் பரவி இருந்தமையின், பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்று வாழ்க என்று வாழ்த்துவர் புலவர். இவ்வுதியஞ் சேரலாதனே மறைந்த பதிற்றுப்பத்தின் முதற்பத்துக்கு உரியவன் எனவும் பதிற்றுப்பத்து என்ற ஒரு வரலாற்று இலக்கியத்தைச் சேரர் குலத்துக்கு முதற்கண் தொடங்கி வைத்தவன் எனவும் கொள்வதில் தவறில்லை. பதிற்றுப்பத்து அரசர்களின் பெரும்பாலார் பெயர்கள் வீரக்குறிப்பு உடையன. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற பெயர்கள் வீர அடைகள் பெற்றுள. நாலாம் பத்துக்குரிய அரசன் ஏதோ ஒரு சூழ்ச்சி காரணமாகத் தம் குலத்துக்கு உரிய போந்தைக் கண்ணியும் எழு முடியும் கிடைக்காமையினால், களங்காய்க் கண்ணியும் நார்முடியும் அணிந்து கொண்டான் என்பதும் மறக்குறிப்பேயாகும். ஆறாம் பத்துக்கு உரிய சேரன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியம் என்ற இடத்து வருடை யாட்டைக் கைப்பற்றியதனால் இப்பெயர் பெற்றான் என்று பலர் குறித்துள்ளனர். அது காரணமாயின் யாடு என இருத்தல் வேண்டும். நாம் இன்று ஆடு என்று கூறுவதைச் சங்கத் தமிழர் ‘யாடு’ எனக் கூறினர். ஆதலால் ஆடுகோட்பாடு என்பதற்கு ‘வெற்றி பெறுதலையே கொள்கையாகவுடைய’ எனப் பொருள் கொள்வது நல்லது. பதிற்றுப்பத்தின் அமைப்பு வேறு தொகைகளுக்கு இல்லாத சில அமைப்பு பதிற்றுப்பத்துக்கு உண்டு. அவற்றுள் ஒன்று ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பது. புண்ணுமிழ் குருதி, செங்கை மறவர், நில்லாத் தானை, பூத்த நெய்தல் என இவ்வாறு பாட்டில் வரும் சிறந்த தொடர்களால் எண்பது பதிற்றுப்பத்தும் வேறு வேறு பெயர்கள் பெறுகின்றன. சிறந்த தொடர்களால் பெயர் கொடுப்பது என்ற இலக்கிய வழக்கு ஏனைத்தொகைகளிலும் உண்டு. செம்புலப் பெயல் நீரார், அணிலாடு முன்றிலார், குப்பைக் கோழியார், தொடித்தலை விழுத்தண்டினார் என்றாங்கு பல சிறப்புப் பெயர்களைக் குறுந்தொகை புறநானூறு முதலான சங்க நூல்களில் பார்க்கின்றோம். ஆனால் ஒரு வேறுபாடு. இங்கெல்லாம் குப்பைக்கோழி என்ற சிறந்த தொடர் குப்பைக்கோழியார் என ஆர் விகுதி பெற்றுப் பாடிய புலவர் பெயராக வரும். பதிற்றுப்பத்தில் வரும் சிறப்புத் தொடர்கள் மலைபடுகடாம் என்பதுபோலப் பாட்டின் பெயர்களே. ஆர் விகுதி பெறுதலும் இல்லை, சிறப்புக் பெயராக வழங்குதலும் இல்லை. மறத்தொடர்கள் சேர மன்னர்களின் கொடைத்திறம், ஆட்சித் திறம், கல்வித்திறம், இல்வாழ்க்கை முதலான பல மாட்சிளைப் பதிற்றுப்பத்துப் பாடியிருந்தாலும், மறத்திறமே தலையான பாடு பொருளாகும். கொடையும் ஆட்சியும் இன்பமும் பிறவும் வீரத்தின் சார்புப் பொருளாகவே நிற்கின்றன. ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு என்று கண்டோம். அவ்வாறு வரும் எண்பது பெயர்களிற் பல தொடர்கள் வீரம் குறிக்கும் தொடர்கள் என்பது நினையத்தகும். சேரனது அம்பு பகைவர் மார்பினைப் பிளக்கத் திடீரென்று விழுப்புண்ணிலிருந்து பீறிட்டு வந்த இரத்தம் ‘புண்ணுமிழ்குருதி’ எனப் பெயர் பெறும். இளங்கோ தம் குல வரலாறு கூறும் பதிற்றுப்பத்தைப் படித்தவர். இத்தொடர் அவரைக் கவர்ந்தது. கல்லாக் கயவன் சட்டெனக் கோவலனை வெட்டியபோது குபுகுபுவென்று குதித்துப் பரவிய இரத்தத்தை, ‘புண்ணுமிழ்குருதி பொழிந்துடன் பரப்ப’ என்று பதிற்றுப்பத்து நினைவோடு பாடினார் இளங்கோ. போர்க் களத்தில் ஒருசேரத் தலைவெட்டப் பெற்ற குறையுடல்கள் பல இடங்களில் சிலநேரம் ஆடும் காட்சியை, ‘மெய்யாடு பறந்தலை’ என்று ஒரு வீரத்தொடர் குறிக்கும். பகைவரது வாளால் தாக்குண்ட சேரன் யானைகள் புண்தாங்கிப் பாசறைக்கு வந்தன; பாசறை முழுதும் யானையுடல்களின் புண்மணம் கமழ்ந்தது; அதனால் பாட்டின் பெயர் ‘புலா அம் பாசறை’ ஆயிற்று. இங்ஙனம் மறம்வீங்கு பல்புகழ், நிரைய வெள்ளம், வலம்படு வென்றி, ஏவிளங்கு தடக்கை, வென்றாடு துணங்கை, நிறம்படு குருதி, வினைநவில் யானை எனவரும் பாட்டின் பெயரெல்லாம் மறஞ்சுட்டுவனவே. சேரர்களின் போர் வென்றிகளைப் பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் காட்டுகின்றன. மூலச் செய்யுட்களில் இல்லாத சில புது வென்றிகளைப் பதிகங்களால் அறிகின்றோம். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரைச் சிறைப்படுத்தி எண்ணெயைத் தலையில் ஊற்றி அவர்தம் கைகளைப் பின்னே கட்டினான் எனவும், களங்காய்க் கண்ணிநார் முடிச்சேரல் யானைகளை இழுத்துச் செல்லுமளவு இரத்தப் பேராற்றை உண்டாக்கினான் எனவும், கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் போரில் மடிந்த பகை மன்னனது கைம்மைப் பெண்டிரின் கூந்தல்களைக் கயிறாகத் திரித்து யானையைக் கட்டினான் எனவும் பதிகங்கள் வெளிப்படுத்துகின்றன. அழிவு மறம் சேரர் கொடையில் எவ்வளவு வன்மையுடையவரோ அவ்வளவு படையில் வன்மையுடையவர் எனவும், இரவலர் களுக்கு எவ்வளவு இரக்கம் உடையவரோ அவ்வளவு பகைவர்க்கு இரங்காமையுடையவர் எனவும் பதிற்றுப் பத்துப் புலவர்கள் போரழிவை வருணிப்பதி லிருந்து நாம் வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம். ஆரல் மீன்கள் துள்ளும் ஆட்டுக்கிடை கட்டிய வயல்கள், பன்றி கிண்ட உழவேண்டாமலே விதைத்த செயல்கள், எருமையை உண்ண அழைக்கும் கரும்பின் பாத்தியிற் பூத்த நெய்தல்கள், வளைந்த தலையுடைய முதுபசுக்கள், ஆம்பற் பூவை உண்ணும் ஆடிடங்கள், தென்னையும் மருதமும் பூம்பொய்கையும் செழித்த ஊர்கள் இவ் வளங்களால் புலவர் பாடுதற்கு அமைந்த நலமான பகைவர் நாடுகளைப் பொலிவழிய அச்சம் பெருக யமன் புகுந்த உடல்போலச் சேரலாதன் கண்சிவந்து கவினழித்தான். அதனால் அந்தச் செழிப்பிடங்கள் யாதும் முளையாப் பாழிடம் ஆயின. ஒன்னார் நாடுகள் முன்பிருந்த வாழ்நிலையையும் சேரன் படையெடுத்தபின் இருக்கும் பாழ் நிலையையும் கண்ணுற்றவர் கட்கு உள்ளம் அழியும், ஊக்கம் சரியும், எண்ணம் நடுங்கும். சேரனொடு பகைக்கும் முனைப்பே வராது. பாடல் சான்ற பயங்கெழு வைப்பின் நாடுகவின் அழிய நாமந் தோற்றிக் கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் ..... உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்து உள்ளுநர் பனிக்கும் பாழா யினவே என்று சேரன் அட்டூழியத்தை - மாற்றலரை வெருவரச் செய்யும் போர்முறையைப் பாடுகின்றார் குமட்டூர்க் கண்ணனார். குதிரைப்படைகள் புகுந்து வயலைச் சிதைத்தமையால் கலப்பைகட்கு வேலையில்லை. மதம் ஒழுகம் யானைக் கூட்டம் வயல் முழுதும் நடமாடியதால் பயிர் வளம் என்பதில்லை. வீரர்கள் புகுந்தமையால் மக்கள் கூடிய மன்றங்கள் கழுதை அடையும் குட்டிச் சுவர்கள் ஆயின. பகைவரின் மதில்கள் காப்பும் கதவும் இன்றி வெற்றிடமாயின. மேலும் சிவந்த நெருப்புக் கொழுந்து காற்றோடு கூடியதால் நெறியெல்லாம் பெரும் பாழாயின. இதற்குக் காரணம் உன்னைப் பகைத்துக்கொண்டது. மாவாடிய புலம் நாஞ்சில் ஆடா கடாஅஞ் செவ்விய கடுங்கண் யானை இனம்பரந்த புலம் வளம்பரப் பறியா நின்படைஞர் சேர்ந்த மன்றம் கழுதைபோகி நீ உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா என்று பல்யானைச் செல்கெழுகுட்டுவனது போரின் விளைவுகளை, இயற்கைச் சிதைவுகளைப் பாராட்டுகின்றார் பாலைக்கௌதமனார். கலையுணர்வும் மறவுணர்வும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கலையுணர்வுடையன், நாட்டியவிருப்பன், இசைப்பாடலில் ஈடுபாடன்; ஒளி நெற்றியும் ஒதுங்கிய பார்வையும் புன்சிரிப்பும் செவ்வாயும் மென்னடையும் வாய்ந்த விறலியர்கள் சதுரப்பட ஆடும் போது தன்னை மறப்பவன்; வேறு கடமைகளைக் கூடச் சிறிது மறந்து பாடலிலும் ஆடலிலும் மனங்கூடுபவன்; இவனது இக்கலைப் போக்கைக் கண்ட சிலர் சேரலாதன் மனம் மெலிந்தவன், விறலியர் பெண்மையில் உள்ளம் இழந்தவன் எனக் கருதினர். இதனைக் கேள்விப்பட்ட புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் சேரலாதனையே பார்த்து, நின் உரம் அறியாதோர் நின்னை மெல்லியன் என நினைப்பர்; ஆம், கலையாடுகளத்தில் நீ மெல்லியனே. மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம் வலைவிரித் தன்ன நோக்கலை கடியையால் நெடுந்தகை செருவத் தானே போர்க்களத்திலோ எனின், தடுத்தற்கரிய சினமும் கரிய பெரிய உடம்பும் உடைய எமன் எங்கும் வலைவிரித்தாற் போன்ற கொலைப்பார்வை யுடையவன் நீ என்று சேரலாதனின் கண் கடுமையைச் சுட்டிக் காட்டுகின்றார். காதற் களத்திற்போலப் போர்க்களத்திலும் கண்ணின் நிலையைத் தொட்டுக் காட்டினாற் போதும் போலும். யானைப் படை சேரநாடு வேழம் உடைத்து. ஆதலின் சேரப் படைகளில் களிற்றுப்படைக்கு முதன்மையுண்டு. மூவேந்தரும் யானைப்படை உடையவர்களாக இருந்தாலும் சேரர்பாலே அப்படை மிகுதியிருந்தது. சேரரின் யானைப்படை எவ்வளவு என்று கேட்கின்றீர்களா? எண்ணிச் சொல்ல முடியாது. கொங்கு நாட்டில் உள்ள பசுக்கூட்டம் எவ்வளவோ அவ்வளவு இருக்கும் என வேடிக்கையாகக் கூறுகின்றார் அரிசில்கிழார். சேரர் யானைப்படைமேல் மிக்க பற்றுடையவர். அவற்றுக்கு வேண்டிய போர்ப் பயிற்சியை அளித்தனர். அவை தொழில் நவில் யானை, வினைநவில்யானை எனச் சிறப்புப் பெயர்களைப் பெற்றன. போராண்மை மிகுதியால் களிறுகள் மதம் மிக்குச் சினம் மிக்கு மறவர்தம் கை கடந்து சென்றபோது, களிற்றின் மதத்தையடக்கப் பிடியைச் சேர்ந்தனர் என்ற வழக்கத்தை ஒரு பதிற்றுப்பத்து எடுத்துக் காட்டுகின்றது. களிறுகள் பெரும்புண் உற்றபோது, கடலிற் செல்லும் பெருமரக் கலத்தின் ஓட்டையை விரைந்து செப்பம் செய்வதுபோல, மருத்துவஞ் செய்து துயர் துடைத்தனர் எனப் பதிற்றுப்பத்து இன்னொரு வழக்கத்தை கூறுகின்றது. யானை வென்றியே பெருவென்றி என்ற மறக்கோட்பாடும் ‘களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடன்’ என்ற ஆண் கோட்பாடும் தமிழகத்திற் சேரராற் பரவியிருக்க வேண்டும் என்ற உணர்ச்சியைப் பதிற்றுப்பத்து நமக்கு உணர்த்துகின்றது. 18. பதிற்றுப்பத்தின் பா நலம் சங்க இலக்கியம் என்பது அருமை, ஆற்றல், இனிமையுடைய ஒரு தொடர். சங்க இலக்கியம் தமிழுக்கும் தமிழினத்திற்கும் ஒப்புயர்வில்லா இயற்கை இலக்கியம். ‘செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்’ என்று தொல்காப்பியப் பாயிரம் மொழிவது போல், தமிழ் மண்ணில் பிறந்து உரம் பெற்றுத் தழைத்துக் கிளை பெருக்கிய நில இலக்கியம். காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நாடக இலக்கியம், புதின இலக்கியம் என்றாங்கு பல தொடர்களை நாம் கேட்கின்றோம். இவைகள் இலக்கிய வகைகள், காப்பிய இலக்கியம் என்றால் இலக்கிய வகைகளுள் காப்பியம் ஒன்று என்பது பொருள். அதுபோல் சங்க இலக்கியம் என்பது இலக்கிய வகைகளுள் ஒன்றன்று. சங்கங்கள் இருந்த காலத்து, அவற்றின் ஒப்புதல் முத்திரை பெற்றுத் தோன்றிய இலக்கியம் எனப் பொருள்படும். ஆதலின் கட்டுப்பாடான கட்டுப்படியான இத்தொல்லிலக்கியத்தை ‘நன்பாட்டு’ என நாவுக்கரசரும், ‘உயர் மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்’ என மணிவாசகரும், ‘சான்றோர் கவி’ எனக் காப்பியக் கம்பரும் பாராட்டியுள்ளனர். ஈராயிரம் ஆண்டுகளாகியும் சங்கப் பனுவல்கள் இன்னும் இலக்கியப் பசும்பூஞ்சோலையாகக் காலங் கடந்த கற்பக வாழ்வினைப் பெற்று வருவதற்குக் காரணம் உணர்ச்சிக் கட்டுப்பாடு, சொல்லில் மிகையும் குறையும் சிறுமையும் இல்லாத ஆட்சிகள், உணர்ச்சியில் படுஎழுச்சியும் படு வீழ்ச்சியும் இல்லாத சமநிலைகள், வாழ்வுக்கு எட்டியும் ஒட்டியும் வரத்தக்க அறிவு முறைகள், இலக்கியச் சுவையால் வாழ்வொழுங்கு செய்யவல்ல நடைத்திறங்கள் - இவை சங்க இலக்கிய மாட்சிகள் ஆகும். இலக்கியச் செறிவு பதிற்றுப்பத்து எல்லாச் சங்க இலக்கியத்துள்ளும் செறிவு மிக்கது என்பதனைத் தமிழறிஞர்கள் ஒருமுகமாக உடன்படுவர். சொல்லாலும் சொற்றொடராலும் நடையாலும் நடையின் மடையாலும் பொருளாலும் பொருளின் வீற்றாலும் பதிற்றுப்பத்து நல்லிலக்கியம் எனினும் ஒரு வல்லிலக்கியம் என்பது புலவர்களின் மதிப்பீடு. புலவர் வகுப்புக்கும் முதுகலை வகுப்புக்கும் பாடத்திட்டத்தில் அகநானூறு 50 பாடல்கள், புறநானூறு 100 பாடல்கள், குறுந்தொகை 100 பாடல்கள், ஐங்குறுநூறு 100 பாடல்கள், கலித்தொகை 30 அல்லது 40 பாடல்கள் இடம்பெறும். அவைபோல் பதிற்றுப்பத்தும் ஒரு சங்க நூலாயினும் 10 அல்லது 20 பாடல்களே பாடம் பெறும். இதனை நடுவு நிலைமைக் குறைவு என்று சொல்லக்கூடாது. பதிற்றுப் பத்தின் இலக்கியச் செறிவும் நிறைவுமே காரணம். பதிற்றுப்பத்தின் பொருளமைப்பும் செய்யுள் யாப்பமைப்பும் ‘ஒத்த பதிற்றுப்பத்து’ என்று சுட்டியதற்கு ஒப்ப, ஒரு நிகரான கட்டுப்பாடு உடையவை. இது வரலாறு கூறும் இலக்கியம் ஆதலின் கற்பனையாகக் கண்டபடி பாட முடியாது. இலக்கியச் சுவைக்காக உண்மைகளை மாற்றித் திரிக்காமல், உண்மைகளை உண்மைகளாகவே நிறுத்தி இலக்கியச் சுவை செய்ய வேண்டும். வரலாற்றை வரலாற்று நூலாக எழுதுவது எளிது. அதனை உள்ளது திரிக்காமல் வரலாற்றிலக்கியமாகப் பாடுவது எளிதன்று. நாள் வாழ்க்கைக் கடிதங்கள், செய்திக் குறிப்புக்கள் எழுதுதல் பலர்க்கு ஒல்லும். உடைமை முறிகள், ஒற்றி யாவணங்கள், சட்ட நடைகள் வரைய எல்லார்க்கும் இயலா; பயிற்சி வேண்டும்; முன்னுள்ள படிகளைப் பார்த்துச் சில வாசகங்களை அமைக்க வேண்டும். பதிற்றுப்பத்து இலக்கியமாயினும், இந்த வரைநிலை அதற்கு உண்டு. அதனாலன்றோ ஒவ்வொரு பத்துக்கும் சோழர்கால மெய்க்கீர்த்தி போலப் பதிகம் ஒன்று இணைவதாயிற்று. ஏனைத்தொகை நூற் செய்யுட்களுக்கு இல்லாத பதிகம் என்ற ஓர் சேர்க்கை இருப்பதால் பதிற்றுப் பத்தின் வரலாற்று முதன்மையை உணர்கின்றோம். அவ்வுணர்வோடு அதன் பாநலத்தை, இலக்கியச் சுவையைப் பார்க்க வேண்டும் என்றும் உணர்ந்து கொள்கின்றோம். பரணர், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார், நச்செள்ளையார் பாடல்கள் பிற தொகைகளிலும் உள்ளன. எனினும் அத்தொகைப் பாடல்களுக்கும் அவர்தம் பதிற்றுப் பத்துப் பாடல்களுக்கும் அமைப்பிலும் நடையிலும் வேறுபாடு உண்டு. காரணம் மேற்கூறியாங்கு பதிற்றுப்பத்து வரலாற்று வேலியுடையது. சேரனைப் பாடப் போந்த பதிற்றுப்பத்துப் புலவர் ஒவ்வொருவரும் முந்திய பத்துக்களைப் பார்த்து அவற்றின் பொதுவமைப்பினை வாங்கிக் கொண்டனர்; புறத்துறையில் எந்த அளவு இலக்கியச் சுவை செய்யலாம் என்று அளவறிந்து கொண்டனர்; முன்பத்தில் உள்ள சிறந்த தொடர்களையும் அடிகளையும் தழுவிக் கொண்டனர்; ஆதலின் ‘ஒத்த பதிற்றுப்பத்து’ என்ற அடை பன்மாணும் உண்மையானது என்பதனை நாம் உணர்கின்றோம். வரலாற்று நூலன்று பதிற்றுப்பத்து ஓர் வரலாற்று நூலன்று; அது வரலாற்றிலக்கியம் எனப்படும். புலவன் என்ற பாட்டாளி வரலாற்றுப் பொருளை உணர்ச்சி நீரிற்போட்டு யாப்புக் கல்லில் ஒலிக் குழவியால் ஆட்டிக் கவி மாவாகப் பிசைந்து இலக்கியப் பணியாரமாகச் செய்கின்றான். ஒரு பொருள் இலக்கியம் ஆகும்போது சூடும் சுவையும் பிறக்கின்றன; உணர்ச்சியும் நயமும் தோன்றுகின்றன. எப்பொருளும் உயர்பொருளாயினும் இழிபொருளாயினும் இலக்கியச் சீனி தோயும்போது இனிமை கலக்கின்றது. ஆதலின் பதிற்றுப்பத்தில் வரலாற்றுப் பொருள்கள் இலக்கிய வண்ணம் பெற்றிருத்தலால் அதன் பாடல்கள் கவர்ச்சியில்லாமல் எங்ஙனம் இருக்கும்? இருக்க முடியும்? சொல்லும் நடையும் நெகிழ்ந்த செய்யுட் களாயின், கவர்ச்சியும் சுவையும் பளிச்சென ஓரிரு பார்வையில் தோன்றும். செறிந்த நடையும் முதிர்ந்த சொற்களும் திணிந்த கருத்தும் உடைய பதிற்றுப்பத்து விளங்குதற்குப் பல பார்வை. பன்முறை படிப்பு - வேண்டும் என்பதில் ஐயமில்லை. சுரங்கப் பொருள் மேலேயா கிடக்கும்? பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பெயர் உண்டு என்று முன்பு கண்டோம். அப்பெயர் அப்பாட்டில் உள்ள நல்ல தொடரால் அமைந்தது. ஏனைத்தொகை நூற் செய்யுட்களுக்கும் அவ்வாறு சிறந்த தொடராற் பாட்டின் பெயர் வைத்திருக்கலாமே? அங்ஙனம் வையாது பதிற்றுப் பத்துக்கு மட்டும் வைப்பானேன்? காரணம் பதிற்றுப்பத்து சிறந்த தொடர் முத்துக்கள் நிரம்பிக் கிடக்கும் இலக்கியக் கடல்; தமிழ் மணங் கமழும் இனிய தொடர்ப்பூங் கொத்துக்கள் மேவிக் கிடக்கும் இலக்கியப் பூங்கா; வெளிப்படையாக எடுத்துக்காட்டிய எண்பது பெயர்கள் தாம் சிறந்த தொடர்கள் என்று எண்ண வேண்டா. ஒவ்வொரு பாட்டிலும் நல்ல பல நயத் தொடர்கள் உள. திரள்பூங்கடம்பு. இடங்கவர் கடும்பு, திண்பிணியெஃகம், போர்ப்புறுமுரசம், பீரிவர் வேலி, முழவிமிழ் மூதூர், தூங்கெயிற் கதவம், பனைதடிபுனம் என்றாங்கு தொல்காப்பியர் காட்டும் வண்ணச் சினைச் சொற்கள் மலிந்து கிடப்பது பதிற்றுப்பத்து. கன்னித் தமிழ் பதிற்றுப்பத்தின் தமிழ் நடையை இன்றைய தமிழர் நிலையையும் அவர் தமிழறிவு நிலையையும் தமிழ் நிலையையும் கொண்டு, யாரும் பார்க்க மாட்டார்கள். வேற்று மொழியும் வேற்றுக் கல்வியும் எண்ணத்தில் உதியா இயல்புக் காலம் பதிற்றுப்பத்தின் காலம். அன்றைய தமிழர்க்கு அத்தமிழ் எளிதாகவும் இனிதாகவும் வழக்கொடு பட்டதாகவும் இருந்தது. ஈராயிரம் ஆண்டுப் பிந்திய இன்றுகூடப் பதிற்றுப்பத்துத் தமிழ் பழகுதமிழ் என்பது என்போல்வார் கருத்து. சங்க நூலில் நூறு செய்யுட்களையோ பதிற்றுப் பத்தில் இரண்டு மூன்று பத்துக்களையோ பயில்வருத்தம் பாராது சிலமுறை படித்துப் பயிலுங்கள், அருமை எளிமையாகும். உழைப்பு மேலும் சங்க இலக்கியம் படிக்கத் தூண்டும் அழைப்பாகும். எக்காலத் தமிழும் என்றும் விளங்கும் என்பது கருதியன்றோ கன்னித் தமிழ் என்று நம் அன்னைத் தமிழை வணங்குகின்றோம். நடைத் திறம் பதிற்றுப்பத்தின் பாநடை போர்க்கள யானைபோலப் பெருமிதமுடையது; தொய்வில்லாது, எதனையும் கடந்து செல்லும் வேகம் உடையது; மறம் பாடும் தொகையாதலின் அசையும், சீரும், தொடையும், அடியும் எழுச்சிபட அமைந்திருப்பது. உளைப் பொலிந்த மா இழைப் பொலிந்த களிறு வம்பு பரந்த தேர் (பதிற். 22) எறிந்து சிதைந்த வாள் இலை தெரிந்த வேல் பாய்ந் தாய்ந்தமா (பதிற். 69) களிறு கடைஇய தாள் மாவுடற்றிய வடிம்பு சமந் ததைந்த வேல் கல்லலைத்த தோள் வில்லலைத்த நல்வலத்து (பதிற். 70) இவ்வடிகளின் ஒலிகள் குதிரை யானை தேர்ப் படைகளின் போர் முழக்கத்தைப் புலப்படுத்த வில்லையா? பதிற்றுப் பத்தில் நாற்சீர் ஆசிரிய அடிகளின் நடுவே இருசீர் வஞ்சியடிகள் கலந்து கலந்து வருகின்றன. போரின் நடுக்கத்தையும் அடுக்கத்தையும் காட்டுவதற்கு வஞ்சியோசை களைப் பதிற்றுப்பத்துப் புலவர்கள் ஆண்டிருக்கின்றனர். சேரர்களின் மறத்தையும் கொடையறத்தையும் முன்னிலைப்படுத்திப் பாராட்டும் போக்கினது பதிற்றுப் பத்து. முன்னிலைக்கு வேண்டுவது விளிநடை. காப்பியாற்றுக் காப்பியனார் நார்முடிச்சேரலை, செயலமைக் கண்ணிச் சேரலர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை! பாணர் நாளவை வாணுதல் கணவ! மள்ளர் ஏறே வையற விளங்கிய வடுவாழ் மரபின் வசையில் செல்வ! வான வரம்ப! என்று எழு சிறு தொடர்களாக அடுக்கி விளிக்கின்றனர். கோவலனைக் கொன்று சிலம்பொடு வருமாறு பாண்டியன் நெடுஞ்செழியன் தன் படையாளரைப் போக்கினான். அப்படையாளருள் ஒருவன் கோவலனைப் பார்த்ததுமே, ‘இவன் நல்லவன், இவன் கொலை செய்தற்கு உரியவன் இல்லை’ என்று கூறிவிட்டான். முதற் பார்வை ஒரு மதிப்பு. அதுபோல் பாட்டின் முதலடிகட்கும் மதிப்பு உண்டு. கற்பவரை ஈர்க்கும் ஆற்றல் முதலடியிலே இருக்குமாறு புலவன் செய்யுள் தொடுக்க வேண்டும். பதிற்றுப்பத்தில் ஈர்க்கும் எடுப்படிகள் பலவுள்ளன. உனக்கு ஒப்பாகச் சிந்தித்தால் யாரும் ஒப்பிலை: ‘புரைவது நினைப்பிற் புரைவதோ இன்றே’ (17) என்பது ஒரு முதலடி. அறவே அழிந்தது நீ கோபித்துப் பார்த்தமையால்: ‘சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின்’ (27) என்பது ஒரு முதலடி. உலகத்திற் செல்வர் பலர் இல்லாமல் இல்லை: ‘உலகத் தோரே பலர்மற் செல்வர்’ (38) என்பது ஒரு பாட்டின் முதலடி. உன்னை எல்லாரும் வண்மையுடையவன் என்று சொல்லியதைக் கேள்விப்பட்டுக் காண வந்திருக்கின்றேன்: ‘வள்ளியை என்றலிற் காண்கு வந்திசினே’ (54) என்பது இன்னொரு பாட்டின் முதலடி. பாட்டின் முதலடி கோபுரம் போல் இருப்பின், கோயில்போல் பாட்டிற்குள் செல்லும் மனவெழுச்சி ஏற்படும். பதிற்றுப்பத்தில் முதலடிகளே அன்றி ஏனைய பல அடிகளும் ஒருமுறை படித்தாலும் உள்ளீர்க்கும் மொழிக் கவர்ச்சியுடையவை. நொசிவுடை வில்லின் நொசியா நெஞ்சின் (45) வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை (48) புலர்ந்த சாந்திற் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி (61) நொசி நொசியா, வணங்கிய வணங்கா, புலர்ந்த புலரா என்ற உடனெதிர் நடைகள் மலையேற்றம்போல் இல்லையா? குறிப்புளம் பாநலம் என்பது ஒலிநயம் மட்டுமன்று; தொடை நயம் மட்டுமன்று. இவற்றினும் மேலான ஒன்று உண்டு. சொல்லுங் கருத்தைப் புதிய புதிய முறையிற் சொல்ல வேண்டும். செய்திபோல் மிகவும் வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பு முறையிற் புலப்படுத்த வேண்டும். நிலபுலத்தில் ஒரு விதைபோட்டுப் பலமணி பெறுதல் போலச் செய்யுட்புலத்தில் ஒரு குறிப்பு பல குறிப்பை நல்க வேண்டும். குறிப்பில்லாச் செய்யுள் எண்ணில்லா நாணயத் தாள் போன்றது. பதிற்றுப்பத்து மறமும் கொடையும் பற்றி நிரம்ப மொழிந்தாலும் இன்பம் பற்றிய துறைப்பாடல்களும் இடையிடையுள. இவை சில பாடல்களாக இருந்தாலும் பதிற்றுப்பத்தின் இலக்கியச் சுவையை இன்பச் சுவையாக்குகின்றன. ஒன்பதாம் பத்துப்பாடிய பெருங் குன்றூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறை தன் அரண் மனைக்கு வருவான், பார்க்கலாம் என்று எதிர் பார்த்திருந்தார். பல நாளாகியும் வரவில்லை. தேவியின் பிரிவுத் துன்பத்தைக் கண்டபின் அவன் இருந்த போர்க்களப் பாசறைக்குச் சென்றார். சேரன் பகைவரிடம் திறையாகப் பெற்ற பொற்கட்டிகளை வீரர்களுக்கு வழங்கி வீட்டிற்கு வாராமல் மீண்டும் மீண்டும் புதிய போர்களை நடத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு மேலும் மேலும் போர் வேட்கை பெருகிற்றேயொழிய மனைவியை எண்ணும் காமவேட்கை தோன்றவில்லை. அவனைத் திருத்தி வீட்டுக்கு செல்லவைப்பது எப்படி? ‘சேரலாத! ஒன்று வேண்டுவன். நின் மனைவி மலரணிந்து அழகுகொள்ள ஒரே ஒரு நாள் குதிரையேறி நீ இல்லம் செல்லக்கூடாதா? இதனால் என்ன பயன் தெரியுமா? உன் பகைவர்கள் ஒரு நாளாவது நன்றாகத் தூங்கிப்போகட்டும். உன் பெருந்தோளுக்கும் ஒருநாள் புதிய உறவு கிடைக்கட்டும்’ எனக் கிழார் மொழிந்தார்: மாணிழை அரிவை காணிய ஒருநாள் பூண்க மாளநின் புரவி நெடுந்தேர் முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது தூவெதிர்ந்து பெறா அத் தாவின் மள்ளரொடு தொன்மருங் கறுத்த வஞ்சி அரண்கொண்டு துஞ்சா வேந்தரும் துஞ்சுக விருந்து மாக நின்பெருந் தோட்கே (பதிற். 81) இதனால் சேரனுக்குப் போரே தொழில்! பாசறையே குடில் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவன் போருணர்ச்சிக்குக் குற்றம் வாராதபடி ‘பகைவேந்தர்க்கு ஒருநாள் ஓய்வுகொடு; மறுநாள் அவர்கள் புதிய படையோடு வருவார்கள்’ என்று குறிப்பிடுகின்றார். இதன்மேலும் ஒரு குறிப்பு உண்டு. சேரன் தேவி பிரிந்து வாடுதல் போலப் பகை மன்னர் தேவிகளும் பிரிந்து வாடியிருப்பரன்றே; சேரன் தன் அரண்மனை சென்றால் மாற்று வேந்தர்களும் தத்தம் அரண்மனை செல்வர். தேவி சேரனைப் பெற்று இன்புறுவது போல, ஏனைத் தேவிமாரும் தம் கணவர்களைப் பெற்று இன்புறுவர். தம் சேர அரசனின் தேவிக்கும் மாற்றரசர்களின் தேவியர்க்கும் ஒரு சேர வாழ்வளிக்க விரும்பும் குறிப்பு பெருங்குன்றூர் கிழார் பாட்டில் அமைந்து கிடக்கின்றது. புறத்தோடு அகத்தை நினைவும் இணைவும் படுத்துகின்றார் கிழார். இப்பதிற்றுப்பத்து அகநானூற்றுச் சுவையை அளிக்க வில்லையா? நவில்தொறும் நூல் நயம் என்பது பதிற்றுப்பத்தளவில் நீண்ட நெடிய உண்மை. சொற்பொருள் அறிய, செய்யுளின் தொகைப்பொருள் தெரிய, வரலாற்றுண்மைகளின் வைப்புப் புலப்படப் பன்முறையும் பதிற்றுப்பத்தைப் படிக்க வேண்டும். பாட்டின் பெயர்ச் சுவையும் பாடல்தோறும் குறிப்புச் சுவையும் சுவைக்க, ஏனைச் சங்கநூல்களோடு ஒப்பிட்டுக் காண, துறையும் வண்ணமும் தூக்கும் விளங்க, பதிகமாட்சி தெரிய, பழைய உரையைப் புதிய உரைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கப் பன்முறையும் பதிற்றுப்பத்தைப் படிக்கத்தான் வேண்டும். ஏன்? நாம் நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வழி வழி வாழ்கின்றோம் அல்லவா? 19. பரிபாடற் குமரன் பரிபாடல் என்ற தொகைநூலில் 22 முழுப்பாடல்கள் உள. இவை திருமால், செவ்வேள் என்ற இரு தெய்வங் களையும் வையை என்ற ஓர் யாற்றினையும் பொருளாகக் கொண்டு பாடுபவை. இவற்றுள் திருமாலுக்கு உரிய பாடல்கள் ஆறு; செவ்வேளுக்கு உரியவை எட்டு. முன்பு பரிபாடல் 70 பாடல் கொண்டதாய் இருந்தது எனவும் 8 திருமாலுக்கும், 31 செவ்வேளுக்கும் இருந்தன எனவும் ஒரு தனி வெண்பாவால் அறிகின்றோம். இதனாற் பரிபாடற் காலத்தில் செவ்வேளுக்கு இருந்த செல்வாக்குப் பெறப்படும். வேறு எக்கடவுளுக்கும் அமையாத நிலையில் திருமுருகாற்றுப்படை என்ற தனிநெடும்பாட்டு தொகை நூலில் இடம் பெற்றிருப்பதும் முருகவேளின் சிறப்பு நிலைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். சிவன், திருமால், வாலியோன், முருகன் என்ற கடவுளரெல்லாம் ஒத்த பொதுநிலையில் வைத்துப் பாராட்டப் பெறுவதைப் புறநானூறு முதலான தொகை நூல்கள் காட்டுகின்றன. பின்னர் வளர்ந்த தெய்வத் தலைமைப் பூசலில் திருமாலும், செவ்வேளும் முதன்மை யிடம் பெறுவதைக் காண்கின்றோம். இவ்விருவருள்ளும் தலைமையிடத்தை முந்திப் பற்றிக் கொண்டவன் குமரக் கடவுள் என்று சமய வரலாறு புலப்படுத்துகின்றது. முருகன் முழு முதல் மண்மிசை யவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப் புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும் மலர்மிசை முதல்வனும் (பரி. 8.1) என்ற பரிபாடல் திருமால், சிவன் முதலான எல்லாத் தேவர்களும் ஒருங்குகூடி முருகப்பெருமானைக் கண்டு வணங்க, திருப்பரங்குன்று வந்து தங்கினன் என்று தெரிகின்றோம். அயன், அரி, சிவன் மூவரையும் தலைவராகச் செய்த முழுத்தலைமை பெற்றவன் முருகனே என்று முருகாற்றுப்படையும் பகர்கின்றது (முருகு. 162). இதனாலன்றோ பரிபாடலும் முருகாறும் ஒன்றுபட்டாற்போல் ‘பெரும் பெயர் முருக’ எனச் செவ்வேளை மீமிசைச் சொல்லால் வீறுபெற விளிக்கின்றன. நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற் சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை சிறப்பினுள் உயர்பாகலும் பிறப்பினுள் இழிபாகலும் ஏனோர்நின் வலத்தினதே (பரி. 5. 17) என்ற அடிகள் குமரக்கடவுளின் எல்லையின்மையையும் தனக்குவமையில்லாத் தன்மையையும் ஏனையோரைக் கட்டுப்படுத்தும் மேலாண்மையையும் வெளிப்படுத்து கின்றன. ‘அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக’ எனவும், ‘பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்’ எனவும், ‘நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய்’ எனவும் வரும் முருகாற்றுப்படையின் அடிகள் பரிபாடற் கருத்தை வலுப்படுத்துனவாம். இதனால் தமிழகச் சமய வரலாற்றில் சிவன் மகனாகவும், திருமாலின் மருமகனாகவும் உறவுபெறும் சிறுகுமரன் முழுமுதற் கடவுளாக, எல்லோரும் வழிபடும் தெய்வமாக ஒரு காலத்தில் உயர்நிலை பெற்ற அருமையை அறிகின்றோம். அதனால் மறுமை வாழ்விற்கும் இம்மை வாழ்விற்கும் வேண்டுவார்க்கு வேண்டுவனவெல்லாம் வழங்கும் தெய்வம் என்ற பெருநம்பிக்கை பரிபாடற் காலத்துப் பொதுவாகத் தமிழகத்தும் குறிப்பாகப் பாண்டி நாட்டிலும் பரவலாயிற்று. உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை யொருவரையான் பின்செல்லேன் என்ற வெண்பாவினால் இந்நம்பிக்கைப் பெருக்கத்தை உணரலாம். ‘எருமை யிருந்தோட்டி எள்ளீயுங் காளை’ என்பது நல்லந்துவனார் பாடிய பரிபாடலின் ஓரடி. எமனது ஆணையையும் எளிதாக மாற்றவல்ல ஆற்றலுடையவன் முருகன் என்பதனால் மக்கள் இத்தெய்வத்தின் மேல் வைத்திருந்த பெரும்பற்று வெளிப்படை. முருகனும் இம்மையும் செவ்வேள் முதற்பெருங்கடவுளாயினும் மானிடம் போலக் காதல் வாழ்வும் இல்லற வாழ்வும் நடத்தியவன். குன்றம்பூதனார் பாடுவது போலத் தமிழினம் போற்றும் களவு நெறியை மேற்கொண்டு குறமகள் வள்ளியை மணந்தவன். ‘நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே’ (பரி. 14, 22) என்று முருகன் உலகியற் காதலைப் பாராட்டுவர் கேசவனார். களவின்றி மணந்த தெய்வ யானையிடத்துக் காட்டிலும் களவால் மணங்கொண்ட வள்ளியிடத்து முருகனுக்கு ஈடுபாடு பெரிதும் உண்டு. ஆதலால், குறப்பிணாக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச் சிறப்புணாக் கேட்டி செவி (பரி. 19.95) என நப்பண்ணனார் இக்காதலை விதந்து போற்றுவர். பரிபாடலில் முருகக் குமரனைத் தொழுவோர் மக்களினத்தர் ஆதலின் வள்ளிவயக் காதலைச் சிறப்பாகப் புகழ்வது இயல்பேயாகும். பரிபாடலில் திருமாலைப் பற்றிய பாடல்கள் போலன்றிச் செவ்வேளைக் குறித்த எட்டுப் பாடல்களும் புணர்தல், ஊடல் போன்ற இன்பக் குறிப்புக்களைத் தொகுத்து சுவைபடச் சொல்கின்றன. முருகன் குறிஞ்சிக்கிழவன் என்ற தமிழ்க் கொள்கையை மறவாமல் செவ்வேளைப் பாடிய எட்டுப் புலவர்களும் காதற் செய்திகளை மடுத்துள்ளனர் என்று அறிய வேண்டும். கற்பினை நெறியூ டற்பிணைக் கிழமை நயத்தகு மரபின் வியத்தகு குமர (பரி. 9.81) என்றபடி இல்லற நெறியில் வந்த மனைவியரின் ஊடலுரிமைக்கு நயந்து பணிபவன் முருகன் என்று காண்கின்றோம். குமரன் என்ற சொல் பரிபாடலில் வரும் இடம் இது ஒன்றே. செவ்வேள், முருகன் என்ற பிற பெயர்களை ஆளாமல் காதலுக்குரிய குமரப்பருவம் காட்டும் குமரன் என்ற பெயரை ஊடற் செய்தியில் குன்றம் பூதனார் ஆண்டிருப்பது அவர்தம் இலக்கிய நுட்பத்தைப் புலப்படுத்தும். மேற்காட்டியாங்கு முருகப் பெருமான் நம்போல் உலகியல் வாழ்வும் நடத்தும் கண் கண்ட தெய்வமாதலின் அவனை எதற்கும் அணுகுதல் மக்கட்கு எளிமையாயிற்று. அதனால் பரத்தையொழுக்கம் உடைய தலைவன், முருகன் மேலும் வள்ளி மேலும் பரங்குன்றின் மேலும் வேல் மயில் மேலும் எளிதாகச் சூள் கூறுவான் எனவும், தலைவியோ எளியனாயினும் முருகனின் தெய்வச் சீற்றத்தை உணர்ந்து சூள் கூற விடாது தன் தலைவனைத் தடுப்பாள் எனவும் எட்டாம் பரிபாடல் இருநிலையையும் தெளிவிக்கின்றது. கனவிற் றொட்டாது கைபிழை யாகாது நனவிற் சேஎப்பநின் நளிபுனல் வையை வருபுனல் அணிகென வரங்கொள் வோரும் கருவயி றுறுகெனக் கடம்படு வோரும் செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும் ஐயமர் அடுகென அருச்சிப் போரும் (பரி. 8. 103) என்பதனால் பொருளும் பொன்னும் போகமும் வேண்டி மகளிர் பரங்குன்றத்து முருகனை வழிபடுவர் என்பதனை நல்லந்துவனார் விரிவாகப் பாடுவர். தெய்வத்தின்பால் இம்மை நலன்களை இரப்பதனால் குறைவில்லை என்ற கொள்கையும் இதனாற் பெறப்படும். இறைவன் தாள் அடைந்தார்க்கு மனக்கவலைகள் நீங்குமென வள்ளுவரும் கூறவில்லையா? பன்மணம் மன்னும் பின்னிருங் கூந்தலர் கன்னிமை கனிந்த காலத் தார்நின் கொடியேற்று வாரணங் கொள்கவழ மிச்சில் மறுவற்ற மைந்தர்தோள் எய்தார் மணந்தார் முறுவற் றலையளி யெய்தார்நின் குன்றம் குறுகிச் சிறப்புணாக் கால் (பரி. 19, 89) என்ற பகுதியிலிருந்து கணவன்மார்களின் முழு அன்பைப் பெறவேண்டி இல்லறப் பெண்களும் நல்ல கணவன்மாரைப் பெறவிழைந்து கன்னியர்களும் முருகனின் ஊர்தியான யானை உண்ட கவளத்தின் எச்சத்தை உண்பர் என்ற சமய வழக்கை அறிகின்றோம். இதனாள் செவ்வேள் இம்மை நலஞ் செய்யும் எதனையும் அருள்வான் என்ற வாழ்வுடை நம்பிக்கை சிறப்பாகப் பெண்ணினத்திற்கு இருந்தமை தெளிவாம். முருகனும் வீடுபேறும் பரிபாடலின்படி, செவ்வேள் முழு முதற் கடவுளாதலின் அவனைத் தொழுவாரெல்லாம் சுற்றத்தோடு அவன் அடியுறைக்கண் வாழும் பேரின்பத்தையே நாடுகின்றனர். எட்டுப் பாடல்களில் ஏழு பாடல்கள் கடவுள் வாழ்த்து என்ற துறையாக அமைந்திருப்பதே இதற்குச் சான்று. விட்ட அந்த ஒரு பாடலுங்கூட (பாடல் : 14) பருவங்கண்டு அழிந்த தலைமைகளைத் தோழி வற்புறுத்தியது என்று அகத்துறையாக இருந்தாலும், அன்னை யாகலின் அமர்ந்தியாம் நின்னைத் துன்னித் துன்னி வழிபடு வதன்பயம் இன்னு மின்னுமவை யாகுக தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே (பரி, 14, 29) என்று முருகவேளைத் தோழி பரவுதலாக முடிதலால் இதனையும் கடவுள் வாழ்த்தாகவே கருதலாம். மேலும் இப்பாடலில் வரும் பலவடிகள் முருகன் விளியாகவே உள்ளன என்பதும் நினையத்தகும். கடுவன் இளவெயினனாரின் ஐந்தாம் பரிபாடல் இறுதியடிகள் பின்வருமாறு: நின்குண மெதிர்கொண்டோர் அறங்கொண்டோ ரல்லதை மன்குண முடையோர் மாதவர் வணங்கியோ ரல்லதை செறுதீ நெஞ்சத்துச் சினநீடி னோரும் சேரா வறத்துச் சீரி லோரும் அழிதவப் படிவத் தயரி யோரும் மறுபிறப் பில்லெனு மடவோருஞ் சேரார் நின்னிழ லன்னோ ரல்லது இன்னோர் சேர்வா ராதலின் யாஅ மிரப்பவை பொருளும் பொன்னும் போகமு மல்லநின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே பிறவிப் பெருங்கடல் யார் யார் நீந்துவர்? யார் யார் நீந்தார்? செவ்வேளிடம் இரக்கத் தகாதவை எவை? இரக்க வேண்டுபவை எவை என்ற கருத்துக்கள் இவ்வடிகளில் தெளிவாக்கப்பட்டுள. இறுதியடிகளில் செவ்வேளின் முழு முதன்மை வலியுறுத்தப்படுவது நினையத்தகும். பொருளும், பொன்னும், போகமும் இம்மைக்குரியன. ஆதலாலும் இவற்றை மக்களிடமும் பெறலாம். ஆதலாலும் இறைவன் ஒருவனுக்கே உரிய அருள், அன்பு அறம் என்ற மூன்றினையுமே இரக்க வேண்டும் என மன்பதைக்கு அறிவுறுத்துகின்றார் இளவெயினனார். சங்கத்தொகை நூல்களுள் தமிழரின் கடவுட் கொள்கயை இவ்வளவு விரிவாகவும், தெளிவாகவும் கூறிய செய்யுள் இப்பரிபாடலே யாகும். 20. முத்தொகை வாழ்த்துக்கள் எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு மூன்றுக்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவன் மேலன என்பது தெளிவு. இவற்றால் அறியலாகும் சைவவுண்மைகளை ஒருங்கு சேர்த்துக் காண்போம். குறுந்தொகைக்கு முருகன் மேலும் நற்றிணைக்கு மாயோன் மேலும் இப்பெருந்தேவனார் வாழ்த்துப் பாடியுள்ளார். நற்றிணைக் கடவுள் வாழ்த்து மாயோன் மேலாகும் என்ற பின்னத்தூரார் கருத்து உரைவேந்தர் ஒளவை துரைசாமி பிள்ளைக்கு உடன் பாடில்லை. ‘எரியெள்ளுவன்ன நிறத்தன்’ என்பது பதிற்றுப்பத்து வாழ்த்தாக இருக்கலாம் என்று பலர் கொள்ப. இதுவும் சிவன்மேலது. பாடினோர் பெயர் தெரியவில்லை. கலித்தொகைக் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது. நெய்தற் கலி பாடிய நல்லந்துவனாரே இவ்வாழ்த்துப் பாடியவர். பரிபாடற்குக் கடவுள் வாழ்த்து என ஒன்றில்லை யெனினும், ‘ஆயிரம் விரித்த அணங்குடை’ என்ற திருமால் பாடலைக் கடவுள் வாழ்த்தாகக் கொள்ளலாம். பத்துப்பாட்டுக்கும் முதலில் உள்ள திருமுருகாற்றுப்படை கடவுள் வாழ்த்தாகலாம். இவ்வாறு எட்டுத் தொகைக்கும் பத்துப்பாட்டுக்கும் ஓராற்றால் கடவுள் வாழ்த்துக்கள் உள என்று அமைதி கொள்வோம். தாம் எழுத முற்பட்ட நூல் இனிது முடிதற்பொருட்டு நூலின் முகத்தே கடவுள் வாழ்த்து வைக்குமுறை இடைக்கால வழக்கு என்பதனை இலக்கிய வரலாற்றில் அறிகின்றோம். கடல் கோளாலும் பிறவற்றாலும் சங்கப் பல நூல்கள் அழிந்தொழிந்த அச்சத்தால், கடவுள் வாழ்த்து பிற்காலத்து நூன்மரபாயிற்று என்று சொல்லலாமேயன்றிக் கடவுள் வாழ்த்து என்ற எண்ணக்கோளும் அச்சொற்றொடரும் பிற்காலத்து எழுந்தன என்று கொள்ளுமாறில்லை. ‘கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்ற கருத்தும் தொடரும் தொல்காப்பியத்தே காணக் கிடக்கின்றது. கடவுள் வாழ்த்துக் குறித்த சில வளர்ச்சிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். முழுமுதற் கடவுள்தான் தன் சமய முழுமுதற் கடவுள் தான் - கடவுள் வாழ்த்துப் பொருளாக வேண்டும் என்பது பிற்கால மரபு. சிந்தாமணி, பெரியபுராணம், இராமாயணம், சூளாமணி, வில்லிபாரதம், சீறாப்புராணம், தேம்பாவணி முதலிய காப்பியங்களிலும் வீரசோழியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களிலும் இம்மரபினைக் காண்கின்றோம். எப்பொருளிலும் இருப்பவன் இறைவன் என்ற மெய்ம்மையால், பண்டைக் காலத்து எப் பொருளையும் கடவுளாக மதித்துப் பாடும் நிலை பரவியிருந்தது. இதனை, கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்ற தொல்காப்பியம் தெளிவிக்கின்றது. அதனாலன்றோ இளங்கோவடிகள் திங்கள், ஞாயிறு, மாமழை, பூம்புகார் நான்கினையும் நூலின் தொடக்கத்தில் போற்றிப் பாடினார். இன்னொரு வளர்ச்சியும் ஈண்டு நினையத்தகும். முன்னே யிருந்தாலும் நூலுக்குப் புறமாகக் கடவுள் வாழ்த்துப் பாடுதல் பின்னை மரபு. முற்காலத்து நூலின் ஒரு கூறாகவே இவ்வாழ்த்து அடங்கியிருக்கும் என்பதனைத் திருக் குறளிலும் சிலப்பதிகாரத் திலும் காணலாம். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையும் பரிபாடலில் ‘ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை’ என்ற திருமால் பாடலும் முதற்கண் கடவுள் வாழ்த்தாக நின்று தொகையின் கூறுகளாகின்றன. எனவே நூலாக வாழ்த்து, நூற்புற வாழ்த்து என்ற இருவகைப் பாங்குகளைக் கடவுள் வாழ்த்து காட்டுகின்றது. பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்துக்கள் நூற்புறஞ்சார்ந்தன. சங்கப்பாடல்களைத் தொகை செய்த காலத்து, நூற்கள் வாழக் கடவுள் வாழ்த்து வேண்டும் என்ற கோள் வலுப்பெற்றது. அங்ஙனம் எல்லாத்தொகைக்கும் பாடும் பெருமையைத் தொகை செய்தோர் பெருந்தேவனார் ஒருவர்க்கே அளித்தனர். அவர் சங்க மரபையும் தொகை யளவையும் உட்கொண்டு, ஐங்குறு நூற்றுக்கு மூன்றடியிலும் நற்றிணைக்கு ஏழடியிலும் அக நானூற்றுக்குப் பதினாறு அடியிலும் கடவுள் வாழ்த்து யாத்தனர். சங்கவிலக்கியத்தில் பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் அத்துணை ஆட்சியில்லை யாதலாலும், சிவநெறிக்கே ஆட்சி மிகுதியாக இருந்ததாலும் நடுநிலை கோடாது சிவனுக்கே மிகுதியான கடவுள் வாழ்த்துப பாடல்கள் செய்தனர். பெருந்தேவனார் காலத்துக் கணபதி வழிபாடு புகுந்திருக்கலாம் என்று கொண்டாலும் சங்கவிலக்கியத்தில் அதற்கு இடமின்மையின் அதற்கு வாழ்த்துப் பாடவில்லை. முருகப் பெருமான் சங்ககாலத் தெய்வமாக இருந்தமையின் குறுந்தொகைக்கடவுள் வாழ்த்து அவனுக்கு உரியதாயிற்று. ஒளவை துரைசாமி பிள்ளையின் குறிப்புப்படி, நற்றிணையும் சிவன் மேலது என்று கொண்டால், ‘எரியெள்ளுவன்ன நிறத்தன்’ பாடல் பெருந்தேவனார் பாடியது என்று கொண்டால் எட்டுத் தொகையுள் ஐந்து சிவன் மேலவாம். எனினும் பெருந் தேவனார் பாடியன என்று தெளிவாக அறிந்த ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்ற முத்தொகைக்கடவுள் வாழ்த்துக்களைச் சைவநெறி பற்றிச் சிந்திப்போம். ‘நீலமேனி வாலிழை பாகத்தொருவன்’ என்ற ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்தும், ‘கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்’ என்ற அகநானூற்று வாழ்த்தும், ‘கண்ணி கார்நறுங் கொன்றை’ என்ற புறநானூற்று வாழ்த்தும் ஒரே பாங்கில் அமைந்தவை. இறைவனுடைய புறவுருவத் தோற்றமும் அத்தோற்றத்துக்குரிய உறுப்புக்களும் கருவிகளும் நிறங்களும் நம் கண்முன் சொல்லோவியமாக வழங்கப் படுகின்றன. தெய்வத் தோற்றப் புனைவே இம்முப்பாடல்களின் நோக்கம். ‘உயிரா வணமிருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி’ என்று தேவாரம் பாடுமாறு சிவக்கோலம் நம் நெஞ்சில் விழும் வண்ணம் இம் முப் பாடல்களும் இறைவனது உறுப்புக்களை அணி செய்கின்றன. அதனாலன்றோ சமணர் எனப்படும் உரையாசிரியர் இளம் பூரணர் கூட அக நானூற்றுக் கடவுள் வாழ்த்தில் நெஞ்சழுந்திய வராய் ‘யாழ்கெழு மணியிடற்று அந்தணனது சிவானு பூதியில் பேருலகம் தங்கிற்று’ என முழு முதன்மை காட்டினார். ‘இஃது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது’ எனவும் பேராசிரியர் உலகப் பொதுமை சுட்டினார். கொன்றைமாலை, பூணூல், நெற்றிக்கண், கணிச்சி மழுவேல், செந்நிறமேனி, வாலெயிறு, புரிசடை, இளம்பிறை, விடையூர்தி, ஊர்திக்கொடி, புலித்தோல், கரகம், மணிமிடறு, நீலமேனி பாகம் என்ற பொருள்கள் சிவன் பகுதிகளாக இடம் பெறுகின்றன. அகமும் புறமும் நீண்ட பல அடிகள் உடையனவாதலின் உறுப்புக்கள் பல சொல்ல இடனுண்டு. ஐங்குறுநூறு சிலவடியது ஆதலின் முதன்மையான ஒன்றைத்தானே கூறவேண்டும். கூறமுடியும். அம்முதன்மை என்ன? அம்மையப்பன் வடிவம். பிற எத்தெய்வத்துக்கும் இல்லாத உருவம் இது. அத்தனிச் சிறப்புக் கருதி, நீல மேனி வாலிழை பாகத் தொருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே என்று சத்தி சிவவுருவைப் பாடினார் பெருந்தேவனார். ‘பெண்ணுரு ஒரு திறனாகின்று’ என்று புறநானூற்றிலும் ‘சேர்ந்தோள் உமையே’ எனப் பெயர் சுட்டி அகநானூற்றிலும் நினைவூட்டினார். முத்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடல்களிலும் இடம் பெறும் தலையாய சைவ நெறி மாதொரு கூறன் என்பது. அனைத்துச் சைவ மெய்ம்மைகட்கும் மாதொரு பாகம் அடி முதலாதலாலும் அவனருள் என்பது உமையம்மை யாதலாலும் பெருந்தேவனார் இவ்வுண்மையை நிறை மொழிந்தார். பதிற்றுப்பத்துக் கடவுள் வாழ்த்திலும் ‘இரண்டுரு வாய் ஈரணி பெற்ற எழிற்றகையன்’ என்று மங்கை பங்கு குறிக்கப்படுகின்றது. நல்லந்துவனார் கலித்தொகைக் கடவுள் வாழ்த்தில், பாணியும் தூக்கும் சீரும் என்றிவை மாணிழை யரிவை காப்ப ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி என்றாங்கு சத்தியும் சிவமுமாய உடனிலை போற்றப் படுகின்றது. ‘சிவனெனும் நாமம் தனக்கே யுடைய செம்மேனி யெம்மான்’ என்று அறுதியிட்டு உரைப்பர் அப்பரடிகள். ‘செவ்வானன்னமேனி’ எனச் செம்மேனி இடம் பெற்றதே யன்றிச் சிவன் என்னும் பெயர்ச்சொல் இக்கடவுள் வாழ்த்துக்குரிய இடம் பெறவில்லை. அந்தணன், அருந்தவத்தோன் என்ற பொதுப் பெயர்களே ஆளப் பெற்றுள. ‘மந்திரமாவது நீறு’ என்பர் திருஞானசம்பந்தர். ‘பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்’ என்பர் சேக்கிழார். கொன்றை, வெள்ளிய பூணூல், நெற்றிக்கண் இவற்றைப் பெருந்தேவனார் குறித்தனரேயன்றித் தூய வெண்ணீறு துதைந்த மேனியைக் குறிக்கவில்லை. யாழ் கெழு மணியிடறு பாராட்டப் படுகின்றதேயன்றி நமச்சிவாய வாழ்க என்ற ஐந்தெழுத்து குறிப்பாகவும் சொல்லப்படவில்லை. கி.பி. நாலாவது நூற்றாண்டில் பாடப்பெற்றனவாகக் கருதத்தகும் இக்கடவுள் வாழ்த்துப் பாடல்களில் சிவன், திருநீறு, திருவைந்தெழுத்து என்ற முக்குறிப்பும் இன்மை பெருஞ் சிந்தனைக்குரியது. 21. புதிய சிறப்புப் பெயர்கள் சைவசித்தாந்த சமாசத்தின் சங்க இலக்கியப் பதிப்பின்படி 102 சங்கப் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் இல்லை. ஏன் இல்லை? சிதறிக்கிடந்த பாடல்களைத் தேடித் தொகுத்துக் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு எனப் பெயரிட்ட காலை, தொகுத்த சான்றோர் ஆசிரியர் பெயரில்லாத செய்யுட்கெல்லாம் சிறந்த தொடரால் பெயர் அமைத்தனர் என்று கூறிவருகின்றோமே; செம்புலப் பெயல்நீரார், அணிலாடு முன்றிலார், விட்ட குதிரையார், நெடுவெண்ணில வினார் என்றினைய பெயரெல்லாம் தொடரால் இட்ட பெயர் என்று எடுத்துக் காட்டு கின்றோமே; இவ்வகையில் ஓர் ஐயம். பெயரில் செய்யுட்கட்குத் தொகுத்தோர் பெயரிட்டனர் எனின், இந்த 102 பாடல்கட்கும் உள்ள பெயரோ தொடர்ப் பெயரோ இருந்திருக்க வேண்டும் எனவும் பின்னர் அவை மறைந்திருக்க வேண்டும் எனவும் கருத வேண்டும். இதுபற்றி நெடிது ஆய்ந்த அறிஞர் மொ. அ. துரையலங்கனார் ‘இந்த நூற்றிருபாக்களின் ஆசிரியர் களுடைய பெயரிருந்த பகுதிகளைச் சிதல்கள் அரித்திருக்கக் கூடுமென எண்ணலாம். இவ்விளக்கம் குறைந்துபட்டுச் சிதைந்த நிலையில் நமக்குக் கிடைத்துள்ள பாடல்களுக்குப் பொருந்துமேயன்றித் துறைவிளக்கம் முதலியவற்றைச் சிறிதும் சிதைவின்றிக் கொண்டுள்ள பாடல்களுக்கு பொருந்தாது. துறைவிளக்கம் முதலியன பெற்று ஆசிரியர் பெயர் மட்டும் இல்லாத 74 பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. சிதல்கள் ஆசிரியரின் பெயரை மட்டும் மதித்துத் தங்களுக்கு இரையாக்கிக் கொண்டன என்றெண்ணுவது பொருத்தம் உடையதன்று’ என்று நகைச் சுவைபடத் தெளிவுபடுத்துவர். ஆதலின் செம்புலப் பெயர்நீரார் போன்ற சிறப்புப் பெயர்கள் முன்னரே இருந்தவை எனவும், சில செய்யுட்குத் தொகுத்த காலத்தும் பெயரில எனவும், தொகுத்தோர் யாதொரு பெயரும் இட்டிலர் எனவும் கொள்ளவேண்டும் என்பது என்னுடையக் கருத்து. குறுந்தொகை தொகுத்தவர் முதலில் சிறப்புப் பெயரைக் குறித்தனர் எனவும் பின்னர்த் தொகுக்கப்பட்ட நூல்களிலும் அப்பெயர் அப்புலவர்க்கு வழங்கப்பட்டது எனவும் மூதறிஞர் உ.வே. சா. கூறுவது பொருத்தமில்லை. ஏனைப் பாடல்கள் இப்புலவர் எழுதியவை என்று எவ்வாறு தெரியும், முன்னரே அவற்றுக்கு ஓர் ஆசிரியக் குறிப்பு இல்லாவிட்டால்? சில புலவர்கள் சிறப்புத் தொடர்களால் பெயர் பெற்றனர் என்பதனை உடன்படுகின்றேன். ஆனால் அப்பெயர்கள் அப்புலவோர்க்கு முன்னரே இயற் பெயர் போலவோ இயற்பெயரோடு அடுத்தோ வழங்கப்பட்டன என்றும் இயற்பெயர் வீழச் சிறப்புப் பெயரே பெயராயின எனவும் எவ்வாறாயினும் தொகுத்தோர் பெயரீடு செய்யவில்லை என்றும் நாம் கொள்வோமாக. சிறப்புத் தொடர்களின் காலம் சங்கப்புலவர்கள் 473 பேர் என்று சொல்லுகின்றோம். இப்பெயர்கள் பலவகைப்படுகின்றன. சிறந்த தொடர்களால் பெயர் பெற்றோர் பார்வைக்குச் சிலராகத் தோன்றினாலும், பலர் பெயர்கள் ஒருவகையால் சிறப்புப் பெயர்களாகவே காட்சியளிக்கின்றன. அரிசில்கிழார், கோவூர்கிழார், ஆவூர் கிழார், கூடலூர் கிழார், பெருங் குன்றூர்கிழார், ஐயூர் மூலங்கிழார் இவையெல்லாம் இயற் பெயர்கள் அல்ல; இளந்தச்சனார், பெருந்தச்சனார், வேளாசான், பெருங் கொல்லன், பொன் வணிகனார், மதுரைக் கணக்காயனார், முதுகூத்தனார் என்பனவும் இயற்பெயர்கள் அல்ல; தேவகுலத்தார், செம்பியன், சேரமான் எந்தை, காவற்பெண்டு என்பனவும் இயற்பெயர்கள் அல்ல. இவ்வாறு அலசிப் பார்த்தால் 473 பெயர்களுள் இயல்பான இயற்பெயர்கள் செம்பாகமே இருக்கும். ஏனையவெல்லாம் தொடராலோ, ஊராலோ, தொழிலாலோ, குலத்தாலோ அமைந்த பெயர்களாகக் காணலாம். ஆதலின் சிறப்புத் தொடர் முதலான பெயர்கள் தொகுப்புக்கு முன்னரே வழங்கியவை என்று முடிவாகக் கொள்ளலாம். ஒவ்வொரு தொகை நூலுக்கும் தொகுத்தார் தொகுப் பித்தார் முதலான சில குறிப்புக்கள் உள. பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு முதலிய தொகை நூல்களின் இறுதியில் தொகுத்தோர் முதலான செய்திகள் இருந்திருத்தல் கூடும். இத்தொகைகளின் இறுவாய்கள் சிதைவுபட்டமையின், இக்குறிப்புக்கள் கிடைக்கப் பெற்றிலோம். கலித்தொகை ஐங்குறுநூறு இரண்டுக்கும் உரிய புலவர்கள் ஒரு கைவிரலினரேயாதலின், ஆசிரியர் பெயர் ஆராய்ச்சிக்கு அதிகச் சிக்கல் இல்லை. அகநானூற்றுக்குத் தொகுத்தோர் முதலிய செய்திக் குறிப்புக்களுடன் இவை பாடின கவிகள் நூற்று நாற்பத்தைவர் என்ற புலவர் தொகையும் உண்டு. குறுந்தொகைக்கும் இவ்வாறே இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர் என்ற குறிப்பு உண்டு. நற்றிணைக்கோ எனின் பிறகுறிப்புக்கள் உள; பாடிய கவிகளின் தொகைச் சுட்டு இல்லை. பெயரில் பாடல்கள் 102 சங்கப் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் இல்லை. அதன் தொகைப் பகுப்பு சங்க இலக்கியப் பதிப்பின் படி பின்வருமாறு: 1. அகநானூறு 3 2. குறுந்தொகை 10 3. நற்றிணை 56 4. பதிற்றுப்பத்து 6 5. பரிபாடல் (திரட்டு) 13 6. புறநானூறு 14 102 அகநானூற்றுக்கும் குறுந்தொகைக்கும் பாடிய கவிகள் இத்துணையர் என்று வரையறுத்திருத்தலின், இப்போது பெயரின்றிக் காணப்படும் 3 அகநானூற்றுப் பாடலுக்கும் 10 குறுந்தொகைச் செய்யுட்கும் பெயர் இருந்திருக்க வேண்டும். பதிற்றுப்பத்தில் முதற் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லையாதலின், பெயர் தெரியா 6 பாடல்கள் எப்பத்தினைச் சேர்ந்தனவோ? இருபாக்கள் முற்றுஞ் சிதைந்துள. எஞ்சிய நான்கு செய்யுளில் இன்ன சேரனுக்கு உரியவை என்று சொல்லத்தக்க குறிப்பில்லை. பரிபாடல் எழுபதில் 22 பாடலே கிடைத்தவையாதலின், ஆசிரியர் பெயர் தெரியாத 13 பாடல் மறைந்தவற்றின் பகுதிகளாக இருக்கலாம். இவற்றில் ஐந்து வெண்பாக்களும் உள. பெயரில்லாப் புறநானூற்றுப் பாடல்களில் சிதைவில்லாதவை 6, சிதைந்தவை 8. இவையெல்லாம் பாடல் 243 என்ற தொடரெண்ணுக்குப் பிற்பட்டவை. தொகுத்த சான்றோர்கள் தேடியவற்றுள் சிதைவில்லாத முழுப் பாடல்களையே தொகுத்தனரா? சிடைக்குங்கால் முழுமைப் படுத்திக் கொள்ளலாம் என்று சிதைந்தவற்றைக் கிடைத் தளவில் தொகுத்து வைத்தனரா என்பதும் சங்க ஆய்வுக்கு உரியது. முழுமையாகத் தொகுத்த பின்னும் பிற்காலத்துச் சில சிதைந்தன, விடுபட்டன என்பதில் ஐயமில்லை. ஐங்குறுநூற்றில் 129, 130; நற்றிணையில் 234; புறநானூற்றில் 267, 268 இவையெல்லாம் முழுதும் நழுவிப்போயின. இளம்பூரணர் நடைப்படி கூறின், ஏடு பெயர்த்தெழுதினார் விழ எழுதினார் போலும். எனினும் சில பாடல்கள் சிதைவாகக் கிடைத்தன வற்றையும் இருக்கட்டும் என்று தொகுத்து அகப்படுத்தினரோ என்று ஆராயலாம். நற்றிணைத்தொகை ஆசிரியர் பெயரில்லாச் செய்யுட்கள் நற்றிணை யிற்றான் 56 உள்ளன. இவை தொகையின் முதலிலிருந்தே காணப்படுவ என்றாலும் வரிசையெண் நூறிலிருந்து இருநூறுக்குள் பெயரில்லாதவை 41 பாடல்கள். இவற்றுள்ளும் 160 முதல் 186 வரை 27 பாடல்கள் பெயரின்றி ஒரு சேரத் தொடர்ந்து வருகின்றன. 385ஆம் பாடல் இறுதி மூன்று நான்கு அடிகள் சிதைந்துள்ளது என்பது தவிர வேறு சிதைவில்லை. ஆதலின் ஆசிரியர் பெயரை மட்டும் -- அந்த ஒருவரியை மட்டும் கறையான் உண்டதென்றோ பெயர்த்தெழுதுவார் விட்டனர் என்றோ கொள்ளுதல் சாலாது. அகநானூற்றுக்கும், குறுந்தொகைக்கும் பாடிய கவிகள் இத்துணையர் என்று தொகுத்தோர் குறிப்பிட்டிருத்தல்போல, நற்றிணைக்குக் கவித்தொகை குறிக்கவில்லை என்பது நினையத்தகும். பெயரில் பாடல்கள் விரவியும் மிக்கும் இருந்தமை தொகை குறிப்பிடாமைக்கு காரணம் போலும். சங்க இலக்கியப் பதிப்பில் ஆசிரியர் பெயர் இல்லாத செய்யுட்கள் 102. இவற்றுள் 96 செய்யுட்குச் சிறந்த தொடரால் புதிய சிறப்புப் பெயர்கள் இக்கட்டுரைக்கண் புனைந்து காட்டப்பட்டுள. இப்புதியவை பழையவை போல, அவ்வப் பாடல்களின் ஆசிரியர் பெயர்களாக எழுத்தாளர் கையிலும் சொல்லாளர் வாக்கிலும் வழக்குப் பெறும் என எதிர்பார்க்கிறேன். ஏனைய ஆறும் பதிற்றுப் பத்துப் பாடல்கள். இத்தொகையில் பாடற்பெயர் கொடுப்பதே மரபாதலின், இந்த ஆறு செய்யுட்கும் சிறந்த தொடரால் பாடற் பெயர் தந்திருக்கின்றேன். உரைவேந்தர் ஒளவை துரைசாமிபிள்ளை புறநானூறு 361ஆம் பாடலுக்குக் கயமனார் பாடியது என்ற குறிப்பு ஒரு கையெழுத்துப் படியில் காணப்படுகின்றது என்று எடுத்துக்காட்டி யிருத்தலின், அப்பெயரும் ஏற்கத்தகும். இப்பாடலுக்கு நான் வைத்திருக்கும் சிறப்புப் பெயர் ஆராக் கூற்றினார் என்பது. நற்றிணையிற்றான் பெயரில் பாடல் பலவாக உள எனவும் இதனைத் தொகுத்தார் கவித்தொகை கணக்கிட வில்லை எனவும் அறிவோம். எனினும் பேராசிரியர் ஒளவை துரைசாமிபிள்ளை தாம் அரிதில் தேடித்தொகுத்த தேவர் ஏடு, புதுப்பட்டி ஏடு என்ற இரு ஏடுகளின்படி தம் 1966, 1968ஆம் ஆண்டு நற்றிணைப் பதிப்புக்களில் ஆசிரியர் பெயர் இல்லாத 56 செய்யுட்கும் பாடியோர் பெயர் காட்டியுள்ளனர். நற்றிணைப் பதிப்புக்கள் நற்றிணையை முதற்கண் பதிப்பித்த பின்னத்தூராரும் சங்க இலக்கியப் பதிப்புக்குப் பெருந்துணை செய்த பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையும் பார்வையிட்ட ஏடு பலவற்றிலும் இந்த 56 பாடலுக்கும் ஆசிரியர் பெயர் இல்லை. அவர்கள் பார்த்த படிகள் பழமையுடையனவா? பேராசிரியர் ஒளவை துரைசாமிபிள்ளையிடம் உள்ள இரு ஏடுகளும் பழமை யுடையனவா? என்று காணவேண்டும் மேலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஏட்டிலும் சென்னை அரசினர் கையெழுத்து நூல் நிலைய ஏட்டிலும் பெயர் வரிகள் மட்டும் இல்லாமைக்குக் காரணம் ஏன் என்பதும் ஆராயத்தகும். தேவர், புதுப்பட்டி இரு ஏடுகளில் மறைந்த பெயர்கள் எல்லாம் காணப்படினும் முன்னை ஏடுகளிற் போலவே நற்றிணை 234ஆம் பாடல் முழுதும் கிடைக்கவில்லை. 385ஆவது பாடலும் சிதைந்த அளவே காணப்படுகின்றது. இவையொரு பாலாக, 1962இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் வெளியிட்ட நற்றிணையுரைப் பதிப்பில் ‘சான்றோர் வருந்திய வருத்தமும்’ என்று தொடங்கும் பாடல் 234ஆம் பாடலாகக் காட்டப்பட்டிருக்கின்றது. ‘இப்பாட்டு இறையனார் அகப்பொருள் 28ஆம் சூத்திர உரையில் மேற்கோளாக வருகிறது’ என்ற குறிப்பையும் இப்பதிப்பிற் காணலாம். எனினும் பேராசிரியர் ஒளவை தம் உரையை 1968இல் பதிப்பித்தாரேனும், கழகப் பதிப்பின் பாடலை ஏற்றுக் கொண்டிலர். தாம் அண்மையிற் கண்டு பிடித்த இரு ஏடுகளிலும் 234ஆம் பாடல் இன்மையும் ‘இப்பாட்டு இறந்தது’ என்ற குறிப்பு எழுதப்பட்டிருத்தலும் அங்ஙன;ம ஏலாமைக்குக் காரணம் ஆகலாம். நற்றிணைப் பதிப்புக்கள் இவ்வாறு சிக்கலாக மேலும் ஆய்வுக்குரியவாக இருத்தலின், பின்னத்தூரார் பதிப்பின்படியும், சமாசப் பதிப்பின்படியும் புதிய சிறப்புத் தொடர்களைப் படைத்திருக்கின்றேன். பாடியோர் இயற்பெயர்கள் மயக்கமின்றித் தெரியுங் காலத்து அவற்றை ஒருதலையாக ஏற்கவேண்டும் என்பதே என் கருத்து. புதிய சிறப்புப் பெயர்ப் பட்டியல் பாடலெண் சிறப்புப்பெயர் அகநானூறு 114 சிறுபுன்மாலையார் 117 வணர்குரல் வாரியார் 165 தாழிக்குவளையார் குறுந்தொகை 191 பொம்மலோதியார் 201 நீலமென் சிறையார் 256 மாக்கொடியறுகையார் 313 நீத்துநீரிருங்கழியார் 321 மலைச்செஞ்சாந்தினார் 326 துணைத்த கோதையார் 375 பானாள்யாமத்தார் 379 பழங்குழியார் 381 அல்லல்நெஞ்சினார் 395 நிறையொல்லாதார் நற்றிணை 8 பகைத்தழையார் 10 பிழையாநன்மொழியார் 22 கையூணிருக்கையார் 24 ஆட்டொழிபந்தினார் 45 சிறுநல் வாழ்க்கையார் 46 பறையறை கடிப்பினார் 84 சுடுமண் தசும்பினார் 92 பாடுநடை வழலையார் 107 ஆனாக்கௌவையார் 108 பழகிய பகையார் 11 1 திரைச்சுரநீந்தியார் 115 தடங்கடல் வாயிலார் 125 நிலங்கண்டன்னார் 126 வெண்புறக்களரியார் 132 ஒன்றெறிபாணியார் 134 அவ்வாய்த்தட்டையார் 160 எதிர்த்ததித்தியார் 161 இம்மென்பறவையார் 162 வழிநாரூசலார் 163 வைகுறு வனப்பினார் 164 உலகுமிக வருந்தியார் 165 பணைத்த பகழியார் 166 கடலினும் பெரியார் 167 பா அய பசப்பினார் 168 கசிந்த தீந்தேனார் 169 நெடுஞ்சுவர்ப்பல்லியார் 170 ஒருவேற்கோடியார் 171 ஊரான்கன்றினார் 172 நிறைபடுநீழலார் 173 கனவினுங்காட்டியார் 174 வீழாக்கொள்கையார் 175 சிறுதீவிளக்கினார் 176 யாழோர்த்தன்னார் 177 எழுதெழிலார் 178 நல்கூர் பேடையார் 179 இல்லெழுவயலையார் 180 விரவுவெள்ளரிசியார் 181 சிறுபல் பிள்ளையார் 182 பனியலையார் 183 வறுநீர் நெய்தலார் 184 ஒருமகளுடையார் 185 அகலிலைக் காந்தளார் 186 வேனிலோதியார் 188 மெல்விரல் மோசையார் 189 வாய்நூற் சிலம்பியார் 190 திதலையெஃகினார் 192 உருவத்துருவினார் 193 அட்டரக்குருவினார் 195 கல்லென்புள்ளினார் 207 சுருங்கிய நரம்பினார் 229 வடுக்கொள முயங்கியார் 235 அரவுவாளார் 271 மாயிருந்தாழியார் 355 கொழுமடல் வாழையார் 385 இரைநசையார் 396 கவின்பெறு தோகையார் புறநானூறு 244 தொடியிற்பொலியார் 256 கலஞ்செய்கோவினார் 257 சிறுபரலன்னார் 263 கொல்புனற்சிறையார் 297 நனைமுதிர்சாடியார் 307 பண்கொளற்கருமையார் 323 உறைகழிப்பறியார் 327 கொடுத்தபிச்சிலார் 328 சிறுநறுமுஞ்ஞையார் 333 மாரிப்பேருறையார் 339 கடலாடியார் 340 மணிப்பொறியார் 355 ஊரதுநிலைமையார் 361 ஆராக்கூற்றினார் (கயமனார்) பரிபாடல் கடவுள் வாழ்த்து மருளருதேர்ச்சியார் 22 காரணிகூந்தலார் 1 திரட்டு சூடாநறவினார் 2 “ காமக்கிழமையார் 3. “ செறுநர்விழையார் 4. திரட்டு வீழுங்காரிகையார் 5. “ மொய்குழலையார் 6. “ புலக்கோலார் 7. “ கோழியினெழார் 8. “ தமிழ்வேலியார் 9. “ செய்யாட்கிழைத்தார் 10. “ மகரகுண்டலத்தார் 11. “ பார்த்துவப்பார் பதிற்றுப்பத்து எரியெள்ளுவண்ண - காலக்கடவுள் இருங்கண் யானை - ஊர்திக்கான்முளை இலங்குகொடி - கதித்தெழுமாதிரம் வந்தனென் - நகைசாலிருக்கை பேணுதகு - பெண்ணியல்பு விசயந்தப்பிய - விசயம் 22. சங்கவிலக்கியப் பாடம் பல்கலைக் கழகங்களில் நம் பண்டைத் தமிழ்ச் செல்வமான சங்க இலக்கியங்கள் எவ் வகுப்புக்கு எந்த அளவு பாடமாக அமைந்துள்ளன; எவ்வாறு அமைந்தால் நல்லது என்பது பற்றி ஒரு சில கருத்துரைகளைக் கூற முற்படுகின்றேன். இன்றைய நிலை சங்க இலக்கியம் பள்ளிகளிலும் கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் இடம்பெற வேண்டிய அளவில் ஒரு விழுக்காடு கூட இடம் பெறவில்லை என்பதனை முதற்கண் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பாடத்திட்டத்தில் புகாதபடி சங்கப் பனுவல்களை இரும்புத் திரைப்படுத்தியிருக்கின்றோம். தமிழ்க் கிழவன் உ.வே.சா. எட்டுத் தொகை பத்துப்பாட்டுகட்கு மறுபிறப்பாக உயிர்கொடுத்திருந்தும், பாடத்திட்டம் என்னும் நல்லுணவு வழங்க நாம் பின்வாங்குகின்றோம். பள்ளிகளில் மாணவன் பதினைந்து ஆண்டுக்காலம் படிக்கும்வரை சங்க இலக்கிய அடிப்படை பெறானாயின், பல்கலைக் கழகத்தில் என்ன பேரடிப்படை கட்ட முடியும்? 2381 சங்கப் பாடல்கள் இருந்தும் ஒன்பதாவது வகுப்பு வரை மாணவர்களுக்கு ஒரு சங்கப் பாடல் கூடத் தெரியாது. பத்தாவது தமிழ்ப் பாடநூலில் இறுதிக்கண் பல்சுவை என்ற பகுதியில் மூன்று புறநானூற்றுப் பாடல்கள் உள. இவ்வாறே பதினோராவது தமிழ்ப்பாட நூலிலும் மூன்று பாடல்கள் உள. பாரி முல்லைக் கொடிக்குத் தேரீந்தது. பேகன் மயிலுக்குப் போர்வை யளித்தது, அதிகமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்கியது. ஒளவையார் தொண்டைமானிடம் தூது சென்றது, வீரத் தாயர்கள் போர்க்களம் புகுந்தது என்றவாறு பண்டைப் புறச் செய்திகள் பள்ளிப் பாட நூலில் உரைநடைப் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் பெற்றுள. உயர்நிலைப் பள்ளிப் படிப்பை ஆண்டுதோறும் முடித்து வரும் இரண்டு இலட்சம் தமிழ் மாணவர்கள் கற்ற சங்கப் பாடல்கள் புறநானூற்றிலிருந்து ஏழெட்டு இருக்கலாம். கொடையைப் பாராட்டும் சங்கப் பனுவல்கட்கு நாம் பாடத்திட்டத்தில் வழங்கும் நன்கொடை இது. உயர்நிலைப் பள்ளியைக் கடந்து பல்கலைக் கழகத்துக்குச் சென்றால் முதற் பகுதியான தமிழ்ப் பாடத்தில் புறநானூற்றிலிருந்து ஏழெட்டுப் பாடல்களும், குறுந்தொகை யிலிருந்து ஐந்தாறு பாடல்களும் அமைந்து கிடக்கும். பட்ட வகுப்புப் பாடத்திட்டிலோ புறநானூற்றில் பத்துப் பன்னிரண்டும், பத்துப்பாட்டில் ஒன்றும், கலித்தொகை போன்ற அகச் செய்யுட்களில் நாலைந்தும் இடம்பெறும். சங்க இலக்கியம் அகம் , புறம் என இருவகைப்படும் என நாம் அறிவோம். சங்கப் பாடலின் தொகை 2381. இவற்றுள் அகத்திணைப் பாடல்கள் 1862 பட்டம் எய்தும் மாணவன் படித்த அகப் பாடல்களோ பத்தளவு. புறத்திணைப் பாடலின் தொகை 519. அம் மாணவன் படித்த புறப்பாடல் 40 அளவு இருக்கும். புகுமுக வகுப்பிலும் பட்ட வகுப்பிலும் சேர்த்துத் தமிழகப் பல்கலைக் கழகங்களில் 80000 மாணவர்களாவது தமிழ் முதற்பகுதி பயில்வர். இவர்கள் கற்றுத் தெரிந்த சங்க அகப்பாடல் பத்து, புறப்பாடல் நாற்பது என்ற புள்ளிக் கணக்கை நினைத்துப் பார்த்தால், ‘நெஞ்சு பொறுக்குதில்லை’ என்ற பாரதியாரின் தமிழ்த் தொடர்தான் முன்னிற்கின்றது. தவறான கருத்துக்கள் சங்க இலக்கியம் பற்றி இரண்டு தவறான கருத்துக்களை இதுவரை பரப்பி அதற்குப் பாடத்திட்ட வாயிலை அடைத்திருக்கின்றோம். இன்னும் இத் தவற்றை விலக்கத் தமிழறிஞர்கள் முயலவில்லை. சங்க நூல் கடினமான வழக்கிழந்த சொற்கள் கொண்டது; விழுந்த இலக்கணம் உடையது; வாழ்வுக்கு ஒட்டாத கருத்தைக் கூறுவது; பொதுவாக இற்றைத் தமிழ் மன்பதைக்குப் புரியாதது என்றெல்லாம் மாணவர்களும் பொதுமக்களும் பயமுறுத்தப்பட்டுள்ளனர். ஆங்கிலம் நன்கு படித்தவர்கள் கூட, ஆங்கிலர் ஆயினும் அல்லாதவர் ஆயினும் ஆங்கில அகராதியை எப்போதும் பார்வை நூலாகப் பக்கத்து வைத்திருப்பதைக் காண்கின்றோம். புதுவொலிப்போ புதுச்சொல்லோ வந்தால் உடனே அகராதியை விரித்துப் பார்ப்பது வழக்கம். அதனைக் கல்வி முறையாக அன்றி அவமானமாகக் கருதவில்லை. பண்டு நிகண்டு தந்த பயனை இன்று அகராதி தருகின்றது; ஆங்கிலக் கட்டுரையில் புதுக் கிளவியைப் பார்த்தால், எழுதினோர் மேல் சினப்பதில்லை; இப்படிப் புதுச்சொல் திணித்து எழுதினால், பேசினால் ஆங்கிலம் வளருமா என்று கொதிப்பதில்லை. தமிழுக்கு வந்தால் நாம் சொல்லும் அறம் வேறு, படிப்பவனுக்குத் தெரிந்த சொல்லுலகத்திற்குள் எப் புலவனும் தன்னை அடக்கி எழுத வேண்டும் எனவும் தெரியாத தமிழ்ச் சொற்கள் வந்தால், பண்டித நடை எனவும் பகரக் காண்கின்றோம். உலகம் ஒரு படி ஏணியில் தெரியுமா? கடல் கலயத்தில் அடங்குமா? சொற்செல்வம் பெருகாதபோது, அறிவுச் செல்வம் யாண்டுப் பெருக்கெடுத்து ஓடும்? இன்று தமிழ் குன்றியிருப்பதற்கு ஒரு பெருங் காரணம் மாணவர்கள் சொல்வறியவர்கள் என்பது என் கருத்து. சங்கக் கல்வி பற்றி முதுபெரும்புலவர் பண்டிதமணி கதிரேசனார் கூறியிருப்பது: ‘சங்கப் பாடல்கள் தோன்றிய காலத்து அந்நடை எளிமையாக இருக்கலாம். அக்காலத்துப் பயிற்சியில் முதிர்ந்த செந்தமிழ்ச் சொற்கள் இயல்பாக வழங்கப் பட்டிருக்கக் கூடுமாதலின் அப் பாடல் நடைகளும் அங்ஙனமே அமைந்துள்ளன என்று கோடல் பொருந்தும். இற்றை ஞான்று மொழி நடையில் முதிர்ந்த பழஞ்சொற்களும் தொடர்களும் சிறிது சிறிதாகக் கைவிடப்பட்டு வந்தமையால் முன்னைப் பாடல் நடைகள் நமக்கு எளிமையில்லாதனவாகக் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களுள் ஒரு சிலவற்றைத் தெளிவாகப் பொருளுணர்ந்து படித்து அடிக்கடி பழகி வருவோமாயின் இந்நடையும் நமக்கு எளிமையாக அமையும். பண்டிதமணியின் இப் பொன்மொழியை நினைவு கொண்டு தமிழ்க் கருவூலமாகிய சங்கச் செல்வத்தை எல்லாத் தமிழ் இளைஞரும் துய்க்கும்படி பாடத் திட்டத்தில் சங்கப் படிகளைக் கட்டவேண்டும். சங்கப் பனுவல்கள் விளங்காதவை என்று சொல்வது மாபெருந் தவறு. அவற்றை விளங்கிக் கொள்பவர்களாக நாம் வளரவில்லை என்பதுவே மாபெரும் உண்மை. கம்பர் பாராட்டு சொல்லைப் போலப் பொருள் பற்றியும் ஒரு தவறான எண்ணம் சங்க நூலுக்குப் பரவியிருக்கின்றது அகத்திணைப் பாடல்கள் காமங்கலந்த கவிமயக்கப் பாடல்கள் எனவும் அவற்றைப் பாடமாகப் பள்ளிகளில் கல்லூரிகளில் வைத்தால் இளைஞர்தம் மனம் திரியும் எனவும் கருதிக் கொண்டிருக் கிறோம். பெருங்காப்பியப் புலவரான கம்பர் நம்மைப்போல் கருதிற்றிலர். புவியினுக் கணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற் றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கம் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார் என்று சங்க அகத்திணை இலக்கியத்தை ஆற்றுக்கு உவமையாக வைத்துப் பாராட்டியுள்ளார். சங்கநூல் அகம், புறம் என்ற இருவகைத்து என்றாலும் தமிழுக்குச் சிறப்பான அகமே கம்பர் போற்றுதலுக்கு உரியதாகின்றது. அகஇலக்கியம் உலகிற்கு அணியாகும்; இன்றியமையாத பொருளுடையது; கட்டுப்பாடான நெறியது; தெளிவும் இனிய ஒழுக்கமும் கொண்டது; இக் கவிகைளைப் பாடியோர் சான்றோர் என்று மூன்று அடிகளில் அகவிலக்கியத்தின் நற்கூறுகளை எடுத்துக் காட்டுகிறார் கல்வியிற் பெரிய கம்பர். ஆதலின் அகவிலக்கியம் தவறுடையதன்று; அதனை அங்ஙனம் நினைக்கும் நம் நினைவே தவறுடையது என்பது வெளிப்படை. இப்போது அகத்திணைப் பாடல்கள் பாடமாக இல்லையே. இளைஞர்கள் மனமெல்லாம் திரியாமல் இருக்கின்றனவா? வியப்பு என்னவெனின்ன திரிக்கக் கூடியவற்றையெல்லாம் மாணவர்கள் கற்க வைத்து, நெறிப்படுத்தக் கூடிய அகவிலக்கியத்தைப் பாடத்தில் சேர்க்க மறுக்கின்றோம். பொய் மெய்யாகவும் மெய் பொய்யாகவும் தோன்றும் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு. ‘தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர் கவி’ என்ற கம்பரின் தொடரை மீண்டும் நினைத்துக் கொள்ளவேண்டும். ஆற்றுக்கு உவமைப் படுத்தியதிலிருந்தே அகத்திணை கரைகடவா ஆற்றொழுக்கம் போன்ற இயல்புடையது என்பது பெறப்படும். புதிய பாடத் திட்டம் தமிழிலக்கியங்களை முற்காலம், இடைக்காலம், தற்காலம் என்று காலப் பாகுபாடு செய்கின்றோம். கீழ் வகுப்புக்களில் தற்காலக் கவிதைகளும், உயர்நிலைப் பள்ளிகளில் இடைக்காலக் கவிதைகளும், கல்லூரி--பல்கலைக் கழகங்களில் முற்காலச் சங்கக் கவிதைகளும் கூடுதலாக இடம் பெறல் சிறந்தது. இந்தப் படிமுறை மாணவர்களின் மொழி வளர்ச்சிக்கும் தமிழ்க் காப்புக்கும் நல்லது. இன்று பள்ளிகளிலும் சரி, பல்கலைக் கழகங்களிலும் சரி, தமிழ்ச் செய்யுள் நூல்கள் என்பவை திரட்டுக்களாகவே உள்ளன. இத்திரட்டு நூல்கள் தேர்வுக்குப்பின் எங்கோ போய்க் கிடக்கின்றன. இவ்வகையில் உயர்நிலைப் பள்ளிக்கும் பல்கலைக் கழகத்திற்கும் வேறுபாடில்லை. பல்வகை நூலிருந்து பாடமாகச் செய்யுள் பொறுக்குதல் என்பதை உயர்நிலைப் பள்ளி அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அகலப் படிப்புக்கு உரியது உயர்நிலைப்பள்ளி, ஆழப் படிப்புக்கு வழி காட்ட வேண்டியது பல்கலைக்கழகம். ஆதலின் புகுமுக வகுப்பிலும் பட்ட வகுப்பிலும் திரட்டினை அறவே ஒழித்து, முழு நூல்களாகவோ ஒரு நூலின் பெரும் பகுதிகளாகவோ செய்யுட் பாடத்தைப் பாடக் குழுவினர் அமைப்பாராக. இப் புதுமுறை பாடநூலைப் போற்றி வைத்துக் கொள்ளும் ஆர்வத்தையும் மீண்டும் மீண்டும் அதனைப் படிக்கும் விழைவையும் பெரு மாணவர்களுக்கு உண்டாக்கும். இவ்வாறு பாடம் அமைக்குங்காலை பல்கலைக் கழகப் பாடத்தில் பாதியளவாவது சங்க நூல்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பது என் வேட்கை. இலக்கணம் பற்றியும் ஈண்டு ஒரு கருத்துக் கூறுவேன். இன்று பட்டப் படிப்பு வரை எழுத்திலக்கணம் சொல்லிலக்கணங் களையே பன்னிப் பன்னிக் கற்பித்துக் கொண்டு வருகின்றோம். இந்த இரண்டு இலக்கணங்களையும் உயர்நிலைப் பள்ளி அளவில் நிறுத்திக் கொண்டு கல்லூரிப் படிப்புத் தொடக்க முதல் பட்டம் பெறும் நான்காண்டிற்கும் அகப்பொருள் புறப்பொருள் இலக்கண அடிப்படைகளைத் தொல்காப்பிய முறையில் பாடமாக வைப்பது, நல்ல தமிழறிவிற்கு வேண்டப்படுவது, உலக மொழிகளில் பொருளிலக்கணம் கண்ட ஒரே ஒரு மொழி தமிழ் என்பது அறிஞர் துணிந்த முடிபு. அங்ஙனம் தமிழுக்கே வாய்த்த தனிப் பொருளிலக்கண நலங்களை அறியாது பெறும் பட்டம் தகுதிப் பட்டம் ஆகாது. காப்பியத்துச் சில பகுதிகளையும் பிரபந்தங்களில் சில செய்யுட்களையும் அறநூல்களிற் சில பாடல்களையும் மறுபடி மறுபடி பட்ட வகுப்புக்களுக்கு வைத்துக் கொண்டிராது, பல்கலைக் கழகத்தின் தமிழ் முதற் பகுதியில் பெருமளவு சங்க இலக்கியங்களும், அவற்றுக்கு விளக்கந் தரும் பொருளிலக்கணங்களும் பாடமாதல் வேண்டுகின்றேன். சங்க இலக்கியம் இயற்கையோடு இயைந்த இலக்கியம், சங்க காலத்துச் சாதியில்லை; இராமலிங்கர் கண்டிக்கும் மதநெறியில்லை; ஆதலின் பேதத்துக்கு இடமில்லை. வேண்டுமென்று உணர்ச்சிகளையும் கிளர்ச்சிகளையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கதையில்லை, பாலுணர்ச்சியாயினும், நாட்டுப் பற்றாயினும் அளவுபட அறிவுபட அறம்படச் சொல்வது சங்க இலக்கியம். இலக்கியம் இலக்கியத்திற்காகவே என்று எண்ணாமல் உலகில் அமைதியும் உறவில் அன்பும் மன்பதைக் கண் ஒழுங்கும் நாட்டப்பட வேண்டும் என்ற குறிக்கோளில் எழுந்த மனித இலக்கியம்; அகத்துக்கும் புறத்துக்கும் ஏற்ற மருந்திலக்கியம். தெளிந்து கூறின், குடியரசுக்குப் பொருந்திய கொள்கை யிலக்கியம். ஆதலின் சங்க இலக்கியம் பாடம் வைக்கும் அளவிற்கு மனிதப் பண்பு வளரும், உணர்ச்சி யொழுங்கு ஏற்படும், இயற்கை வழி தோன்றும் என்பது என் கருத்து. பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்திசையும் பொருட்கிசையா இலக்கணமில் கற்பனையே என்று சங்கப் பனுவல்களின் தனிப்பெருமை பாடுவர் மனோன்மணிய ஆசிரியர் சுந்தரனார். 23. துறையாசிரியர்களின் உரைநடை தமிழின் உரைநடை வளர்ச்சி இலக்கிய வரலாற்று ஆய்வில் ஒரு பெரும் பகுதியாகும். அண்மையில் வளர்ந்து வரும் உடைநடைவகை பண்டு இருந்ததில்லை என்பது வெளிப்படை. கதைகள், கலைகள் கூட முன்பு பாட்டென்ற ஒரு வடிவிலேயே எழுதப்பட்டன; அவையெல்லாம் இன்று உரைநடை வடிவில் எழுதப்படுகின்றன, உயர்ந்தோர் தாழ்வர், தாழ்ந்தோர் உயர்வர் என்பதற்குப் பாட்டின் வீழ்ச்சியும் உரைநடையின் எழுச்சியும் சான்றாகின்றன. எனினும் மக்கள் பேச்சு வழக்கு பாட்டாக இருந்திருக்க முடியாது. சொற்பொழிவுகளும், கற்பித்தலும், பாட்டின் விளக்கங்களும் பாட்டாக இருந்திரா. அதுபோல் இசையொடு பட்டனவும், மனத்துக்குரியவையும் காலங்கடந்து நிலைக்க வேண்டிய செய்திகளும் கவிகளாகவே தோற்றம் பெறும். ஆதலின் பாட்டும் உரைநடையும் கூடவோ குறையவோ எக்காலத்தும் உடன்பிறப்புப் போல் மொழியின் இரு வடிவங்களாக இருந்து வந்திருக்கின்றன. அவையிரண்டும் தழுவிநில்லாத காலமே இல்லை என்று கூறி விடலாம். ‘நூலினான உரையினான’ (தொல். 1422) எனவும், ‘உரைவகை நடையே நான்கென மொழிப’ (தொல். 1430) எனவும் வரும் தொல்காப்பிய நூற்பாக்களால் தமிழில் உரைநடையும் தொன்மைப் பிறப்புடையது என ஐயமறத் தெளிய லாம். இவ்வுரைநடை வரலாற்றை எழுதும் எழுத்தாளர்கள் தொல்காப்பிய நூற்பாக்களைச் சுட்டி, உரைவகை நான்கு வகைப்படும் என்பதற்கு உரைப் பெரு மக்கள் கூறிய எடுத்துக் காட்டுக்களையும் தந்து, சிலப்பதிகாரத்தில் பயின்று வரும் உரைப்பாட்டு மடைகளையும் நினைவுபடுத்தி, இறையனாரகப் பொருளில் விரிந்து கிடக்கும் உரைநடையை விளம்பி, அதன்பின் பல்வேறு இலக்கண இலக்கிய உரையாசிரியர்களின் உரைநடை களையும் தொட்டுச் சொல்லி, மணிப்பிரவாளக் கலப்பையும் வெளிப்படுத்தித் தற்கால உரைநடை வளர்ச்சிக்கு வந்து சேருதல் மரபுப் போக்காக உள்ளது. இவ்வளர்ச்சியின் சில் வேறுபடிகளில் ஒரு படி இதுகாறும் ஏனோ தானோ இடம் பெறவில்லை. அது ஒரு படி மட்டும் அன்று; பின் வந்த உரைநடைக்கெல்லாம் முதுபடி என்று நினைக்கும்போது நாம் பழங் கல்வெட்டுக்களைக் கண்டெடுப்பது போல் இறும்பூது எய்துகின்றோம். நூலாசிரியர், உரையாசிரியர், நூலுரையாசிரியர், பாடலாசிரியர், தொகுப்பாசிரியர் என்ற கூட்டத்தோடு இதுவரை தமிழுலகம் மறந்திருந்த துறையாசிரியர் என ஒரு கூட்டத்தையும் தமிழ் வளர்ச்சியில் நாம் கூட்டிக் கொள்ள வேண்டும். சங்கப் பாடல்கள் தேடித் தொகை பெற்றபோது மூலங்கள் மட்டும் தொகுக்கப் பெற்றனவா? மூலங்களோடு துறைகளும் உடனிருந்தனவா? அன்றித் தொகுத்தகாலைத் துறைக்குறிப்புப் புதுவதாக எழுதிச் சேர்க்கப்பட்டனவா? எப்பொழுது எட்டுத் தொகைட்குத் துறைகள் எழுதப் பெற்றன? அத்துறையாசிரியர்களின் புலமையும், உரைநடைத் தன்மையும் யாவை? உரைநடை வளர்ச்சிக்கு அத்துறையாசிரியர்கள் ஆற்றிய தொண்டு எத்தகையது? இன்னோரன்னவை-இதுகாறும் ஆய்வாளர் கண்ணிற் படாதவை - இக்கட்டுரைச் சிந்தனைக்கு உரியவையாகின்றன. சங்கப் பாடல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. மூன்றாம் அல்லது நாலாம் நூற்றாண்டு என்று கருதலாம். அகநா னூற்றுக்கும் ஐங்குறுநூற்றுக்கும் தொகுத்தார் தொகுப்பித்தார் பெயர்களும், குறுந்தொகைக்குத் தொகை முடித்தான் பெயரும், நற்றிணைக்குத் தொகுப்பித்தான் பெயரும் தெரியவருகின்றன. கலித்தொகையை நெய்தற் கலி பாடிய நல்லந்துவனார் கோத்தார் என்ப. புறநானூற்றுக்கும் பதிற்றுப்பத்துக்கும் பரிபாடலுக்கும் இப்பெயர்கள் காணப்படவில்லை. கலித்தொகைக்கு உரையொடு துறையும் எழுதிய கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் பேருரை யாசிரியர் ஆதலின் அவர்தம் உரைநடையியல்பு தனியாய்வுக் குரியது. பழந்துறையாசிரியர் இனத்தில் இவர் எண்ணப்படார். பதிற்றுப்பத்துக்கும், பரிபாடலுக்கும், பத்துப்பாட்டுக்கும் உள்ள துறைகள் சிற்சிலவேயாகலின் அவையும் இக்கட்டுரைக்கண் இடம்பெறா. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறு நூறு, புறநானூறு என்ற ஐந்துக்கும் ஏறக்குறைய 2100 துறைகள் உள. இத்துறைகளைத் தொகுத்துத் தனிநூலாகத் துறைநடைகள் என்ற பெயரால் பதிப்பிடின் (அத்தகைய ஒரு பதிப்பு ஆய்வுக்கு வேண்டும்) 200 பக்க அளவு வரும் கி.பி. நாலாம் நூற்றாண்டில் தோன்றிய உரைநடை நூல் என அதனைப் போற்றவேண்டும். அங்ஙனம் போற்றவே தமிழ் உரைநடை வரலாற்றில் இந்நூல் பழமைபெற்று முதலிடம் பெறும் என்பதும் குறுந்தொகைத் துறையாசிரியர், நற்றிணைத் துறையாசிரியர், அகநானூற்றுத் துறையாசிரியர் ஐங்குறுநூற்றுத் துறையாசிரியர், புற நானூற்றுத் துறையாசிரியர் என ஐந்து உரைநடை யாசிரியர்கள் இடம் பெறுவர் என்பதும் நினையத்தகும். ஈண்டு எடுத்துக்கொண்ட ஐந்தொகைகளில் முதல் நான்கும் அகத்தொகைகள்; துறைகள் கூற்றுவகையால் அமைந்தவை. இவ்வகையில் புறநானூறு வேறுபட்டது. புறநானூற்றுத் துறை என்னும்போது துறையோடு பாடல் எழுந்த நிலைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவூழிக் கோவூர்கிழார் பாடி உய்யக் கொண்டது’ என்றாங்கு ஒவ்வொரு பாடலுக்கும் வரும் பாடிய சூழ்நிலையையும் துறையின் ஒரு கூறாகக் கொண்டு ஆராய வேண்டும். புறநானூறு தொகை பெற்ற பின்னரே திணைதுறையும், சூழ்நிலையும் எழுதப்பட்டன. திணையும் துறையும் அவை எனவும், அவனை அவர் பாடியது எனவும், முன்போந்த செய்யுளோடு தொடர்பு படுத்திக் கூறுவதால் தெளியலாம். இச்சுட்டுநடைகள் திணை, துறை போலச் சூழ்நிலையிலும் வருதலால் இரண்டினையும் எழுதினார் ஒருவரே எனவும், புறநானூற்று உரைநடை யாய்விற்குச் சூழ்நிலைப் பகுதிகளும் உரியவாம் எனவும் கருதுகின்றேன். குறுந்தொகைத் துறையாசிரியர் அகத்தொகைகளுக்கு உரிய துறையாசிரியன்மார் உரைநடையில் சில பொதுமரபுகளைக் காணலாம். அத்துறைகள் தொல்காப்பியம் போன்ற இலக்கண வழிப்பட்டனவாதலின் யார் துறை எழுதினும், இயற்பழித்தல் இயற்படமொழிதல், வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது, மகட்போக்கிய செவிலித்தாய் கூறியது, பருவங்காட்டி வற்புறுத்தியது, பிரிவிடை மெலிந்த கிழத்தி கூறியது, நொதுமலர் வரவு கூறி வரைவுகடாயது, வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது, கழற்றெதிர்மறை, காமமிக்க கழிபடர்கிளவி, வாயில்மறுத்தது, தோழி குறை நயப்பக் கூறியது, சிறைப்புறம், பொருள் வயிற்பிரிந்த தலைமகன் இடைச்சுரத்துத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது, தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது என்றினைய தொடர்கள் இயல்பாக வரும். அன்ன மரபுத் தொடர்களை விடுத்து, ஒவ்வொரு துறையாசிரியரிடத்தும் காணத்தகும் தனித் தன்மைகளையே இக்கட்டுரை புலப்படுத்த முயல்கின்றது., குறுந்தொகை நாலடிச் சிற்றெல்லை எட்டடிப் பேரெல்லையுடையது என்ற பாட்டின் வரம்பை நாம் அறிவோம். அடியளவாற் சிறியதாயினும் இதற்கு எழுதப் பட்ட துறைகள் அகநானூறு, நற்றிணைத் துறைகளைக் காட்டிலும் விரிவும் விளக்கமும் வாய்ந்தவை. இத்துறை விளக்கத்தால் குறுந்தொகைப் பாடல்களின் சூழ்நிலைகள் பொலிந்து தோன்றுகின்றன. ‘வண்டுபடத்ததைந்த கொடி யினர்’ (குறுந். 21) என்ற ஐந்தடிப் பாட்டுக்கு எழுதப்பட்ட துறை: ‘பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, அவர் வரக்குறித்த பருவ வரவின்கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு என்று தன்னுள்ளே கவன்றாட்கு அவளது குறிப்பறிந்த தலைமகள் கானம் அவர் வருங்காலத்தைக் காட்டிற்றாயினும் யான் இது கார்காலமென்று தேறேன் அவர் பொய் கூறாராகலின் எனத் தான் ஆற்றுவல் என்பது படச்சொல்லியது.’ இத்துறை நடையுள் பருவம் வருந்துணையும் ஆற்றுவித்தாள் தோழி; ஆற்றுவிக்குமாறு எவ்வாறு என்று தானே தன்னுள்ளே கவன்றாள்; அவளது குறிப்பை அறிந்தாள் தலைமகள்; அவர் பொய் கூறாராகலின் யான் ஆற்றுவேன் என்று கூறினாள் எனப் பல முற்றுப் பொருள்கள் இருந்தும் தோழி கவன்றாட்குத் தலைமகள் சொல்லியது என எச்சங்கள் இடையிடை கலந்த ஒரே முற்றுத் தொடராக இத்துறை ஓடிக் கிடப்பதைக் காண்கின்றோம். மேலும் செய்யுளின் இறுதி ஈரடிகளைத் துறைக்குள் உரைநடைப் படுத்து மடுத்திருப்ப தையும், தேறேன் பொய் கூறாராகலின் எனக் காரிய காரணநடை செய்திருப்பதையும் காண்கின்றோம். இங்ஙனம் 2, 26, 30, 91, 121, 130, 141, 244, 267, 282, 289, 313, 353, 380, 388, 398 ஆம் செய்யுட்கட்கு எழுதப்பட்ட துறைவிரிவுகளை ஒப்பு நோக்கிடுக. குறுந்தொகைத் துறையாசிரியர் தொல்காப்பியப் புதுமை சான்றவர் என்பது துறைக்கிடையே தொல்காப்பிய நூற்பாக்களையும் தொடர்களையும் மேற்கொள்ளுவதால் தெளியலாம். மெய்தொட்டுப் பயிறல் முதலாயின (குறுந். 2) என்ற துறைப் பகுதி ‘மெய்தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல் இடம்பெற்றுத் தழால் இடையூறு கிளத்தல்’ என்றாங்கு வரும் களவியல் நூற்பாவை (1047)க் குறிக்கும். அந்நூற்பாவில் வரும் பலவற்றையும் சுட்டுவான் இத் துறையாசிரியர் ‘முதலாயின’ என்ற சொற் பெய்துள்ளார். ‘உயிர்செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉமாம்’ என்ற (குறுந். 159) துறையும், ‘நாளது சின்மையும் இளமையது அருமையுங் கூறிச் செல வழுங்கியது’ என்ற (குறுந். 267) துறையும் இடைச்சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையும் காட்டி என்ற (குறுந். 390) தொடரும் முறையே தொல்காப்பியத்தின் 1056, 981, 985 ஆம் நூற்பாக்களை நினைவு படுத்துவனவாம். குறுந்தொகை 14ஆம் செய்யுட்கு எழுதியுள்ள துறையாவது: ‘மடன்மா கூறு மிடனுமா ருண்டே என்பதனால் தோழி குறைமறுத்துழித் தலைமகன் மடலேறுவல் என்பது படச் சொல்லியது.’ இதனால் தொல்காப்பியத்தின் 1047ஆம் நூற்பாவை அப்படியே மேற்கொண்டார் என்பதும், இவர்தம் குறுந்தொகைத் துறை தொல்காப்பிய வழிப்பட்டது என்பதும் உணரத்தகும். ஏனைய துறையாசிரியர்கள் இவர்போல் அத்தணைத் தொல்காப்பியத் தடம் பட்டவர்கள் இல்லை என்று ஒப்பீட்டால் அறியலாம். அகப்பாட்டுக்குத் துறையென்றளவில் ஒழியாது, துறை நயங் காட்டி உணர்ச்சி மீதூர எழுதும் போக்கு இத்துறை யாசிரியர் பால் உண்டு. பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணாப் பொழுது பெரிதாகலின் வேறுபட்ட கிழத்தி (48) என முரண் காட்டியும், சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ (104) என அறஞ்சுட்டியும் மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும் (267) என உலகியல் மொழிந்தும் காலத்து வந்திலரென்று வேறுபட்டேனல்லேன்; அவரைப் புறத்தார் கொடியரென்று கூறக்கேட்டு வேறுபட்டேன் (289) என அமைதி கூறியும், அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ(313) என உழுவலன்பு புலப்படுத்தியும், அவர் பிரிய ஆற்றேனாயினேன் அல்லேன்; அவர் போயின கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன் (283) என வருத்தம் உரைத்தும், அவர் வரவு நமக்கு ஆற்றாமைக்குக் காரணமாம் (153) என உண்மை செப்பியும் வரும் துறைக்குறிப்புக்கள் ஆசிரியரின் அகப்பொருள் நுண்மான் நுழைபுலத்தைப் பகர்கின்றன. தொடர்களை இடையில் முற்றுப்படுத்தாது எச்சமாக எழுதிச் செல்லும் பெரும் போக்குடைய இத்துறையாசிரியர் சுவைக் களைப்பு உண்டாகாதபடி சில இடங்களில் இடை யிடையே அற்றற்று முற்றாகத் தொடுக்கும் நடைப்பான்மையைக் காண்கின்றோம். உடன்போயினபின்றைத் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள்; நிற்பச் செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது (குறுந். 15). பனிப்பருவங் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரியப் பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும் (குறுந். 308) என்ற காட்டுக்களில் நின்றாள் நிற்ப எனவும், பிரிந்தான் பிரிய எனவும் வரும் நடைகளைக் காண்க. தலைவன், தலைவி, செவிலி என்ற சொற்களைக் காட்டிலும் தலைமகன் தலைமகள் செவிலித்தாய் என்பனவே இத்துறை நடையில் பயில்கின்றன. தலைமகற்கு, தலைமகட்கு, பாகற்கு, பாங்கற்கு, வாயில்கட்கு, தெய்வத்திற்கு, நெஞ்சிற்கு என உகரச் சாரியை இல்லாத வடிவங்களும், அல்ல குறிப்பட்டு மீள்கின்றான், வரைவிடை வைத்துப் பிரிவான், வினைமுற்றினான் என வினையாலணையும் பெயர்களும் பயின்று வருகின்றன. ஆற்றாயாகின்றது, ஆற்றாளாகிய, தூதுவிடுவாளாக என்றாங்கு ஆகு என்னும் துணைவினைச் சொற்களும், காண்கின்ற காலத்து, ஒழுகா நின்ற என நிகழ்காலம் காட்டும் புதிய இடைநிலைகளும், தலைவனையும், தலைவியையும் குறிக்க முறையே நம்பெருமான், எம்பெருமாட்டி என்ற சொற்களும், இல்லத்தினைக் குறிக்கக் கடிநகர் என்ற சொல்லும் இத்துறைநடையில் காணப்படுகின்றன. நற்றிணைத் துறையாசிரியர் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூற்றுத் துறை யாசிரியர்கள் பாட்டிற்கு உரிய துறையை எழுதும்போது, ‘என்பது செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டோர் கூறியது’ (குறுந். 7), ‘என்பது பிரிவிடையாற்றாளாய் தலைமகள் தோழிக்குச் சொல்லியது’ (அகம். 1), ‘என்பது தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது’ (ஐங். 107) என்றவாறு என்பது என்னும் சொல்லால் தொடக்கஞ் செய்வதைக் காண்கின்றோம். நற்றிணைத் துறையாசிரியரோ ‘இது பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது’ என்று இது என்ற சுட்டுச் சொல்லால் தொடங்குவர். இத்துறையாசிரியரின் உரைநடை சிலவிடங்களிற்றான் நெடிய நடையாகக் காணப்படுகின்றது. ஓர் எடுத்துக்காட்டு (நற். 386): ‘இது பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவலென முற்பட்டாள், தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்தும் பிறிதொன்றன் மேல் வைத்துப் பாவியேன் இன்று பேதமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப்புணர்ந்து வழிபடுவேன் ஆவேன் மன்னோ எனச் சொல்லியது’ இப்பகுதிக்கண் இவ்வாசிரியரின் உரைநடையியல்புகள் சில வெளிப்படுகின்றன. மறுத்தந்த, மறுத்தரும், மறுத்தராநின்றான், மறுத்தரா நின்ற எனப் பலவடிவங்கட்கு உரிய மறுத்தரல் என்ற வினைச்சொல்லும்; முகம்புக்கது முகம்புக்க, முகம்புக் கவளாய் என வடிவங்கள் பெறும் முகம்புகுதல் என்ற வினைச் சொல்லும்; இல்லத்தைக் குறிக்க மணமனை என்ற சொல்லும்; வற்புறா நின்ற, ஆற்றாளாகி நின்ற, மீதூர்கின்றாள் என்ற நிகழ்கால இடைநிலை களும்; புக்கவவளாய், தாங்கலளாய், ஆற்றுவிக்கல்லாயினாட்கு என அல் எதிர்மறையிடை நிலையும்; முற்றினை எச்சப்படுத்தும் ஆய் என்ற சொற்சேர்க்கையும்; எழுவாய் நிலையில் தான் என்ற சொல்லும்; தன்னுள்ளே என்ற சொல்லாட்சியும் இவர் நடையில் வருகின்றன. குறுந்தொகைத் துறையாசிரியர்போல இவரும் தலைவனை எம்பெருமான், பெருமான் (399), எனவும், தலைவியை எம்பெருமாட்டி (386) எனவும் கூறுவர். தலைமகன் தலைமகள் போலத் தலைவன் தலைவி என்ற சொற்கள் ஒக்கப் பயில்வனவாயின. இடந்தலைப்பாட்டினை இரண்டாங் கூட்டத்து எதிர்ச்சி என்பர் இவ்வாசிரியர். பொதுவாகத் துறையாசிரியர்களின் நடையில் ஆகுதல் என்ற சொல்வடிவங்கள் கூடுதலாக வருகின்றன. ஆற்றானாய தலைவன், ஆற்றாதாகிய நெஞ்சு, ஆற்றாளாய தலைவி, ஆற்றாளாயின தோழி, பிரியாராகாரோ, ஆற்றானாயினன், ஆற்றாளாய் நின்ற, ஆற்றுவிக்கல்லாளாயினாள் என்று வருதலால் இவர்தம் உரைநடையும் அப்பொதுக் கூற்றுக்கு விலக்கன்று என்பது போதரும். ஆறுதன்வினை; ஆற்று பிறவினை. எனினும் ஆற்றுதலைத் தன்வினையாகவும் ‘வி’ ஈறுசேர்த்து ஆற்றுவி என்பதனைப் பிறவினையாகவும் கொள்ளும் வழக்காறு இடைக்காலத் தொடக்கத்தே வந்துவிட்டது. இவ்வாசிரியர் ஆற்றுவி என்ற வடிவத்தைப் பல இடங்களில் ஆண்டாலும், ‘தலைமகளைத் தலைமகன் ஆற்றியது’ என்ற (256) ஓரிடத்து ஆற்று என்பதனையே பிறவினைப் பொருளில் ஆளும் தனித்தன்மையைக் காண்கின்றோம். அகநானூற்றுத் துறையாசிரியர் இத்துறையாசிரியர் பலவரிகள் வரத் துறையெழுதியவர் அல்லர். மிகவும் ஆற்றொழுக்காகத் துறைகாட்டிச் செல்லும் இயல்பினர். அகநானூறு பதின்மூன்றடிச் சிறுமையும் முப்பத்தொன்றடிப் பெருமையும் கொண்ட நெடுந்தொகை யாதலின், துறையை விரித்துக்கூற இவர் விரும்பவில்லை என்று காரணம் கூறலாம். ஏனைத் தொகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்புக் குறிப்பு இத்தொகைக்கு உண்டு. ‘இத் தொகைக்குக் கருத்து அகவலாற் பாடினான் இடையள நாட்டு மணக்குடியான் பால் வண்ண தேவனான வில்லவதரையன்’ எனவும், ‘நெடுந்தொகை நானூறுங் கருத்தினோடு முடிந்தன’ எனவும், கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத் தகவொடு சிறந்த அகவல் நடையாற் கருத்தினி தியற்றி யோனே எனவும் வருங்கறிப்புக்களால் இவ் வகநானூற்றுக்கும் பாட்டு வடிவில் கருத்துரையொன்று இருந்தது என்பது தெளிவாகும். இதுவேறு எத்தமிழிலக்கியத்துக்கும் இல்லாத புதுமை யாதலின், கருத்து என்பதன் அமைப்பை தாம் புரிந்து கொள்ள இயலவில்லை; எனினும் அங்ஙனம் ஒன்று இருந்தமையினால் இத்துறையாசிரியர் சுருக்கமாகத் துறையெழுதினார் என்றும் கொள்ளலாம். எனினும் மிகச் சில பாடல்கட்கு துறைவிரிவு இல்லாமல் இல்லை. இரண்டு எடுத்துக்காட்டுக்கள் : ‘முன்னொரு காலத்து நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான் தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலநயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய்ப் பொருள் முடித்து வந்த தலைமகன் பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. (3) ‘தலைமகன் தோழியை வாயில் வேண்டி அவளால் தான் வாயில் பெறாது ஆற்றாமையே வாயிலாகப் புக்குக் கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.’ (26) தலைமகள் சொல்லியது, தோழி சொல்லியது தலைவன் சொல்லியது என ஒரே வினைமுற்றுப் பலதுறைகளில் திரும்பத் திரும்ப வருகின்றது. சில பாடல்களுக்கு இரண்டாவது துறை காட்டும்போது, சொற்றதூஉமாம் என்ற முடிபைக் காணலாம். ‘போகாநின்ற தலைமகன்’ (239, 279, 280, 287, 289) என்ற தொடரும் பரக்கக் காணலாம். கண்ணுற்று நீங்கும் தலைமகன் (10, 90, 92, 150, 162, 280) என்ற தொடரில் கண்ணுற்று என்ற சொல்லாட்சி இவர் துறைநடைக்கே சிறப்பாக உரியது. ஓசை நயம்படத் துறைத் தொடர்கள் எழுதப்பட்ட இடங்களும் உண்டு. ‘தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன்’ (198) எனவும், ‘உடன்போக்கு உடன்படுவித்த தோழி’ (287) எனவும், ‘தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது’ (216) எனவும், ‘பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்கு தலைமகள் சொல்லியது’ (309) எனவும் வரும் நடைகள் ஒலியோட்டம் உடையன. அகநானூறு திணைகாட்டும் எண்வைப்பினாலும், களிற்றியானைநிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்ற முப்பாகுபாட்டினாலும், வில்லவ தரையன் அகவலாற் பாடிய கருத்தினாலும், 90 செய்யுள்வரை பழையவுரை உடைமையாலும் ஏனைத் தொகைகட்கு இல்லாச் சிறப்புடையது. அதன் மேலும் துறையாசிரியர் தரும் ஒரு சிறப்புண்டு. தொகை செய்தபின் துறையாசிரியர் அதற்கேற்பத் துறையெழுதியவர் என்பதனை நினைவு கொள்ள வேண்டும். செய்யுள் 39 எண் முறையாற் பாலை. ‘போற்றாயாகலிற் புலத்தியால் எம்மே’ என வரும் அடியால் உரிப் பொருளாற் புணர்ச்சி எனக் கொள்ளக் கிடக்கின்றது. இம் முரண் தோற்றத்தை அறிந்த துறையாசிரியர், ‘பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது’ எனத் துறை வரைந்தபின் ‘இப்பாட்டு நிலத்தாற் பாலை, என்றும் காட்டியுள்ளார்’ 139ஆம் செய்யுளில் முல்லைத் திணைக்குரிய முதல் கருப்பொருள்கள் புனையப்படுகின்றன. தொகுத்த முறைப்படி அச்செய்யுள் பாலையாகும். அதற்கேற்ப ‘பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது’ எனத் துறையும் வரைந்து ‘இப்பாட்டுத் தொழிலாற் பாலையாயிற்று’ எனக் காரணமும் கூறுவர். தொழில் என்பது உரிப்பொருளைக் குறிக்கும். செய்யுள் 255 குறிஞ்சிக்குரிய கூதிர்க்கால வருணனை யுடையது. தொகுத்த எண் நிலையால் இது பாலைத் திணையாதல் அறிந்த துறையாசிரியர் ‘பிரிவிடை வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லியது’ எனத் துறையும் எழுதி ‘இப்பாட்டு தொழிலாற் பாலை’ எனத் தெளிவுஞ் செய்வர். எண்வழிப்பட்ட தொகை கொண்ட அகநானூறு ஒன்றுக்கே இவ்விடர்ப்பாடு ஆதலின் தெளிவு செய்யும் பொறுப்பு இத்துறையாசிரியர்க்குச் சார்ந்தது. திணைத்தெளிவு மட்டுமின்றி வேறுபல தெளிவுகளும் தரும் கருத்துத்துளிகள் இத்துறையாசிரியர் ஒருவர் பாலே காண்கின்றோம். இப்பாட்டு மருதத்துக் களவு (156), இப் பாட்டு இரவுக்குறி (112), இப்பாட்டு எதிர்காலம் நோக்கிற்று (217), இப்பாட்டு பகலே சிறைப்புறம் (228) எனக் கைகோள் முதலிய விளக்கம் தந்தும்; பொங்கழி என்பது தூற்றாப்பொலி (37), இப்பாட்டினுட் புருவை என்பது இளமை (88), இப்பாட்டினுள் காழியர் என்பது வண்ணாரை (89), இப்பாட்டினுள் அறுமீன் என்பது உரோகிணி (141), என இன்னும் சில சொற்களுக்குப் பொருள் சுட்டியும்; சில இடங்களில் (174, 194, 216, 236, 238), பாட்டிற்கே முடிவுக் கருத்து வெளிப்படுத்தியும் இத்துறையாசிரியர்; துறையாசிரியர் என்ற அளவில் அமையாது சிறுகுறிப்பாசிரியராகவும் விளங்குவர். 24 இடங்கள் இவ்வாறு அமைந்துள்ளன. இவை 256 பாட்டுவரைதான் காணப்படுகின்றன. அதிலும் 256 ஆவது பாட்டின் குறிப்புச் சிதைந்து போயிற்று. ஐங்குறுநூற்றுத் துறையாசிரியர் அகத்துறையாசிரியர்களுள் குறுந்தொகைத் துறை யாசிரியரும் ஐங்குறுநூற்றுத் துறையாசிரியரும் தலை சிறந்தோர் ஆவர். அவ்விருவருள்ளும் பின்னவருக்கே முதன்மை யுண்டு. துறை விரிவும், நயமும், வளர்ச்சியும், புதுமையும்பட இறுதிவரை எழுதிச் செல்லும் மனப் போக்கும், நடை பல காட்டும் மொழிப்போக்கும் இவர் பால் நிரம்பவுண்டு. இங்ஙனம் இவர் சிறந்து நிற்பதற்கு ஐங்குறுநூற்றின் அமைப்பு ஒரு காரணம். ஒவ்வொரு பொருள்மேல் 10 பாடல்கள், ஒவ்வொரு திணைமேல் 100 பாடல்கள். ஐந்து திணைக்கு 500 பாடல்கள் வரிசையாக உள்ளமையின், பாட்டுத்தோறும் துறைவேறு காட்டி நயப்பிக்க வேண்டிய கடப்பாடு இவரதாயிற்று. முன்னரே பப்பத்தாகப் பொருள் இனம்பட்டுக் கிடந்தமையின் அப்பத்து தம்முள் துறை வேற்றுமை காட்டினாற் போதும் என்ற சூழ்நிலையுதவியும் இவர்க்கு வாய்த்தது. மேலும் பாடிய புலவர் ஐவரேயாதலின் அவர் கருத்தோட்டத் தொடர்ச்சி யைக் காண்பது இவர்க்கு எளிதாயிற்று. சங்க இலக்கியத்துள் அகத்தொகைக்குத் துறை யெழுதுவதில் ஓர் இயல்பு காணப்படுகின்றது. பாட்டுக்களின் அடிமிகுந்த அகநானூறு நற்றிணைத் தொகைகளுக்குத் துறைகள் குறைவாக எழுதப்பட்டுள. பரிபாடலில் வரும் நீண்ட அகச்செய்புட்களும் பத்துப்பாட்டில் வரும் முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு என்ற நெடிய செய்யுட்களும் சிறிய துறைகளே பெற்றுள. அடி குறைந்த குறுந்தொகை விரிந்த துறைவளம் உடையதாகவும், அதனினும் அடி குறைந்த ஐங்குறுநூறு துறைவளம் மிக்கதாகவும் காணப்படுவ. இதனால் அடிச் சிறுமையைத் துறைவளத்தால் பெருமைப் படுத்த எண்ணினரோ துறையாசிரியர்கள் எனக் கருத இடனுண்டு. பல செய்யுட்களின் துறைகள் நெடிய விரிந்த நடை யுடையன. ஓர் எடுத்துக்காட்டு: (ஐங். 53) தலைவி தன்னுடன் போய்ப் புனலாடியவழி. இது பரத்தையருடன் ஆடிய துறையென நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை யுணர்ந்த தலைமகன் மனைவயிற் புகுந்துழி தெய்வங்கள் உறையுந் துறைக் கண்ணே நாம் ஆடினவதனாற் பிறந்ததுகொல் நினக்கு இவ்வேறுபாடு என்று வினாயினாற்கு அவள் சொல்லியது. இந்நடையில் பல்வேறு முற்றுக்கள் பெயரெச்சமாகவும், வினையெச்சமாகவும் படுத்தப்பட்டு நீண்ட ஒரு தொடராக ஓடுவதையும் பல அகத்துறைகள் ஒரு துறையாக அடங்கிக் கிடப்பதையும் காணலாம். மரபுநிலை திரியாமல் புதுப்புதுப் பொருள்களை விரவிக் கொள்ளலாம் என்று மொழிந்த தொல்காப்பியத்தின்படி, ஐங்குறுநூற்றுத் துறைகள் புதுப் பொலிவுடையன; வேறெங்கும் காணற்கரியன. இதனால் இத்துறையாசிரியனின் படைப்பாற்றலை உணர்கின்றோம்; துணிவையும் புலமையையும் போற்றுகின்றோம். ‘அறத்தொடுநிலை பிறந்தபின்னும் வரைவு நீடிற்றாக மற்றொரு குலமகளை வரையுங்கொல் என்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி அவட்குச் சொல்லியது ’ (ஐங். 108). ‘உடன்போயின தலைமகள் மீண்டு வந்துழி நின் ஐயன்மார் பின்துரந்து வந்த விடத்து நிகழ்ந்தது என்னை என்ற தோழிக்கு நிகழ்ந்தது கூறித் தலைமகன் மறைதற்கு உதவி செய்த மலையை வாழ்த்தியது’ (ஐங். 312) ‘பாசறைக்கண் வேந்தனொடு வினைப் பொருட்டாற் போந்திருந்த தலைமகன் அவ்வேந்தன் மாற்று வேந்தர் தருதிறைகொண்டு மீள்வானாகப் பொருந் துழித்தானும் மீட்சிக்குத் தேர்சமைத்த எல்லைக் கண்ணே அவ்வரசன் பொருத்தம் தவிர்ந்து மீண்டும் வினைமேற் கொண்டானாகச் சொல்லியது’ (ஐங். 449). ‘புணர்ந்துடன் போகியவழித் தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய் அதனை முன்னே அறிவித்து நாம் மணம் புணர்த்த ஒழுகாதுபோயினள் என்று நொந்து சொல்லியது’ (ஐங். 379) அறத்தொடு நிலைக்குப்பின் வரைவு நீடிக்க ஐயப்படுதலும், ஐயன்மார் பின்வந்தவிடத்து நிகழ்ந்தது கேட்டலும், மீண்டும் பொருதுதல் கூறலும், நற்றாய் முன்னமே மணஞ் செய்ய நினைத்தலும் அகப்பொருளில் மாட்சிமையும், இனிமையும் வாய்ந்த புதுக்குறிப்புகளாம். இன்னோரன்ன வளர்ச்சிகள் இவர் துறையிற் பலப்பல. இத்துறையாசிரியரின் துறை நயத்திற்கு ஒரு காரணம் ஒரு கூற்று வினவ மற்றொரு கூற்று விடை கூறுவதாக மேற் கொண்ட போக்காகும். எண்ணிறந்த துறைகள் வினா விடை அமைப்புடையனவே. இவ்வெழுச்சிப் போக்கு இவர்க்கே பெரும்பான்மை உரியது. ஐங்குறுநூற்றின் முதலாவதாம் மருதத்திணையின் முதலாவதாகிய வேட்கைப் பத்துக்கு வரைந்த துறைகள் : ‘புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி இது தகாது எனத் தெளிந்த மனத்தனாய் மீண்டு தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைமகன் தோழியோடு சொல்லாடி யான் அவ்வாறொழுக நீயிர் நினைத்த திறம் யாது? என்றாங்கு அவள் சொல்லியது’ (1-5). ‘களவினிற் பலநாளொழுகி வந்து வரைந்து கொண்ட தலைமகன் தோழியோடு சொல்லாடி, யான் வரையாது ஒழுகுகின்ற நாள் நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது? என்றாற்கு அவள் சொல்லியது’ (6-10). இவர்தம் வினாவிடை நெறியால், ‘அவன் மார்பை நினைந்து ஆற்றாயாகின்றது என்னை?’ (14) ‘நின்கண் மலர்ச்சிக்குக் காரணம் என்?’ (189) ‘மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?’ (193) ‘பிரிவுடம்பட்டும் ஆற்றா யாகின்றது என்னை?’ (431) ‘பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே; நீ வேறுபடுகின்றது என்னை?’ (476) எனப் பெரும்பகுதி கூற்றும் மாற்றமுமாகத் துறைநடை அமைந்திருக்கக் கண்டு பெரிதும் இன்புறுகின்றோம். புதுமைப்படவும், உணர்ச்சிபடவும், மெய்ப்பாடு தோன்றவும் மூலமே எழுதும் ஆற்றலுடையவர் இத்துறையாசிரியர். இவர் துறைகளே கவிதைகள். கவிதைத் தன்மை உரைநடைக்கும் உண்டு என்ற இலக்கியக் கொள்கைக்கு இவர் துறைநடைகள் நிகரில் சான்றுகள். ‘தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினால் உணர்ந்த தோழி அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைந்து ஆற்றாயாகின்றது என்னை என்றாட்கு அவன் கொடியனேயாயினும் அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலையுடைத்து ஆதலாற்காண் என்று சொல்லியது’ (ஐங். 14). ‘முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறி நாற்றத்தால் பண்டைய வளவன்றி வண்டுகள் மொய்த்தனவாக இதற்குக் காரணம் என் என்று வினவிய செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று தலைமகன் சிறைப்புறத் தானாகத் தோழி சொல்லியது’ (ஐங். 93). ‘வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணங் கூறிய வழி அவனுக்கு இல்லாதனவே கூறுதலால் இப்பொழுது காண் என் மேனி பசந்தது எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது’ (ஐங். 35). புறத்தொழுக்கம் பற்றிய நுண்குறிப்புக்கள் துறைகளில் மலிந்து கிடக்கின்றன. பரத்தை யொழுக்கத்திற் பன்னாள் சென்ற தலைவன் இது தகாது என மணந்தெளிகின்றான் (1-5); சேணிடைப் பிரிந்து வந்த தலைமகனுக்குப் புறத்தொழுக்கம் விரைவில் உளதாயிற்று (15); பரத்தையிற் பிரிதல் ஆடவர்க்கு இயல்பன்றே என்று கூறுகின்றாள் தோழி (17); நாடு கடந்த பிரிவைப் பன்னாட் பொறுத்திருந்த தலைவி, தலைவன் பரத்தையிற் பிரிந்து உள்ளூர்க் கண்ணே உறைதலின் ஆற்றேனாகின்றேன் என்கின்றாள் (19); களவினிற் புணர்ந்து வரைந்த பின் தலைமகனுக்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று (22); பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான் (24); உலகியல் பற்றித் தலைவன் தன் மனைக்கண் ஒரு ஞான்று வந்தான் (40); வரைந்த அணிமைக்கண்ணே புறத்தொழுக்கம் ஒழுகினான் (55); வதுவை யயர்ந்தான் ஒரு பரத்தையைச் சின்னாளில் விட்டு மற்றொரு பரத்தையை வதுவையயர்ந்தான் (61); இது மறைத்தற்கு அரிது என உடன்பட்டு இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது என்றான் (61) என்றினைய மருதவொழுக்கத் துறைக்கூறுகள் சுவைபடப் புலப்படுத்தப் பட்டுள்ளன. அகப்பொருள் முறைப்படி தலைவியின் தோழியே கூற்றுக்கு உரியவள்; கேட்போளாகவும் இடம் பெறுபவள்; பரத்தையின் தோழி பற்றி எவ்வகைக் குறிப்பும் இல்லை. ஐங்குறுநூற்றுத் துறையாசிரியர் பரத்தைக்கு ஒரு தோழியுண்டு (37-40) எனக் குறிப்பர். தோழிக்குரைத்த பத்து என்ற பகுதியில் தோழி என்பது இருவரின் தோழியையும் குறிக்கின்றது என்ற புதுவளர்ச்சியை நாம் உணர வேண்டும். தோழி கூற்றுப்பத்து (51-60) என்ற பகுதி முழுவதும் தலைவியின் தோழிக்கே உரியதாக வுளது. ஆதலின் பரத்தை தோழி கூற்றுக்கு உரியவள் ஆகாளோ என்ற வினா வெழும். அவளும் கூற்றுக்கு உரியவளே என்பது, ‘தன்னொடு கூடாது தனித்துப் புலனாடு கின்றான் எனக் கேட்டுத் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை தானும் தனியேபோய்ப் புனலாடி னாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று தான் அறியான் போல நகையாடிக் கூறிக் கைப்பற்றிய வழி அவள் தோழி சொல்லியது’ (ஐங். 79) என்னும் துறையால் தெளிவாகும். எனவே பரத்தை தோழி அரியவரவினளாயினும் கேட்பதற்கும் கூற்றுக்கும் உரியவள் என்ற புது வளர்ச்சியை இத்துறையாசிரியர் தோற்றுவிக்கின்றார். புலந்தவழி, பெற்றுழி என்ற ஈறுகளும்; கேட்கு மாற்றால், என்னாங்கொல், பொருட்டு, என்னை, பன்னாள், சின்னாள் என்ற சொல்லாட்சிகளும்; நான் இந்த, தாங்கள் செலுத்துகின்ற, தொடங்காநின்றாள் என்ற வடிவங்களும்; அணிமை அணுமை என்ற மாற்று வடிவங்களும்; பசந்தன காண், வந்தனகாண் என்ற காணீறும்; போர் நிறுத்தம் என்ற பொருளில் பொருத்தம் என்ற சொல்லாட்சியும்; அகம்புகல் மரபின் வாயில்கள், பின் முறையாக்கிய பெரும் பொருள் வதுவை என்ற தொல்காப்பியத் தொடர்களும; நீர் இனியவல்ல என்ற பன்மை முடிவும்; பரத்தையொழுக்கத்தைக் குறிக்கப் புறத்தொழுக்கம் என்ற சொல்லும் இவர் துறை நடையிற் குறிப்பிடத்தக்கன. பல்வகைச் சிறப்பினையும் நோக்குங்காலை ஐங்குறு நூற்றுத் துறையாசிரியர் துறையாசிரியருள் தலையாயவர் என்பதும், அடிகுறைந்த ஐங்குறுநூற்றுக்குச் சிறப்பு துறையினால் மிகுந்துளது என்பதும், துறையாராய்ச்சிக்கு இங்குக் குறிப்புக்கள் பலவுள என்பதும், உரைநடை வளர்ச்சியில் இவர் துறைநடைத் தொன்மைக்கு இடம் உண்டு என்பதும் நாம் அறியத் தக்கவை. துறையாசிரியர்களுள் இவரை ஓரளவு காலத்தாற் பிந்தியவராகக் கருதலாம். புறநானூற்றுத் துறையாசிரியர் முன்னர் கூறிய, நான்கு துறையாசிரியர்களும் அகத்தொகை சார்ந்தவர்கள். இத்துறையாசிரியரோ புறம் பற்றியவர். புறநானூற்றுத் துறை என்று சொல்லும்போது பாட்டின் சூழ்நிலைப் பகுதியையும் கொள்ளவேண்டும் என்ற குறிப்பினை முன் சுட்டியுள்ளேன். இஃது எல்லார்க்கும் உடன்பாடாக இராது எனினும் தொன்மை யுரைநடை ஆராய்ச்சியில் இப்பகுதியையும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும் என்ற கருத்து பலர்க்கு முரணாகாது என்று நம்புகின்றேன். அகத்துறையாசிரியர்களிடை இயற்பழித்தல், இயற்பட மொழிதல் என்பன போன்ற மரபு வாய்பாடுகளை ஆளும் பொதுப்போக்கு உண்டு. அங்கு வரும் அகமாந்தர்களும் மரபுவழிப்பட்டவரே. சூழ்நிலைகளும் ஓரளவே விரிவுக்கு உரியவை. புறத்தில் பாடல்தோறும் சூழ்நிலை வேறுபடும்; மாந்தர் வேறுபடுவர். புறம் பன்மைசான்ற பகுதிகள் உடையது. ஆதலின் புறத்துறையாசிரியருக்கு அரசியலறிவு, வரலாற்றறிவு, குழுவியலறிவு முதலான பல்துறையறிவு இன்றியமையாதவை. புறம் நடைமுறை வாழ்க்கைத் தொடர்பு உடையது. ஆதலின் சொல்லாட்சிகள் விழிப்பாகவும், உண்மையாகவும் இருத்தல் வேண்டும். சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது, சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பரணர் பாடியது என வரும் குறிப்புக்களைப் பார்க்குங்கால் அவனை அவர் பாடியது என்ற வாய்பாடு பெறப்படும். செயப்படு பொருள் முன்னரும் எழுவாய் பின்னரும் இவ்வாய்பாட்டில் அமைந்துள. அகத்தொகையில் என்பது, இது என்ற தொடக்கச் சொற்கள் இருப்பக் கண்டோம். இத் தொகையில் அன்ன சொல் யாதும் இல்லை. மேலும் அத்தொகைகள் கூற்றினவாதலின் தலைமகன் சொல்லியது, உரைத்தது என்ற வினைச் சொற்களால் முடிந்தன. இத்தொகைக் கண் பாடியது என்ற சொல்லே பெரும்பாலும் இறுதியாக வருகின்றது. பாடியது என்பதற்குப் பாடிய பாட்டு என்பது பொருள். எல்லாப் புறப்பாடல்களும் பாடியது என்ற சொல்லால் முடியவில்லை. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாட்டு (71), பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டு (72), சோழன் நலங்கிள்ளி பாட்டு (73), கணியன் பூங்குன்றன் பாட்டு (192), ஒரேருழவர் பாட்டு (193) எனவரும் இடங்களும் உள. இதனால் பிறர்மேற் பாடப்பெற்ற நிலையில் பாடியது என்ற சொல்லையும் அங்ஙனம் இல்லாத் தன்னிலையில் பாட்டு என்ற கிளவியையும் பயன்படுத்தினர் என்று கொள்ளலாம். இதற்கும் சில விலக்கு (194, 195) இல்லாமல் இல்லை. மேலும் பாடியது, பாட்டு என்ற இறுதியில்லாமல் நிகழ்ச்சிக்கேற்ற வேறு வினை முடிவுகள் பெற்ற இடங்களும் உள. மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி கோவூர்கிழார் பாடி உய்யக் கொண்டது (46), நெடுங்கிள்ளி ஒற்று வந்தான் என்று கொல்லப்புக்குழி கோவூர்கிழார் பாடி உய்யக் கொண்டது (47), கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது (114), வெள்ளைக்குடி நாகனார் பாடிப் பழஞ்செய்க் கடன் வீடு கொண்டது (35), சான்றோர்க்கு அவர் வருவார் என்று சொல்லியது (215), தீப்பாய்வாள் சொல்லியது (246), என வரும் இறுதிகளும் உண்டு. உ.வே.சா. பதிப்பின்படி 269ஆம் செய்யுட்குப்பின் இறுதிச்சொற்கள் பெரும்பாலும் இல. இயற்பெயர் கூறிப் பின்னர் நிகழ்ச்சியடைப்பெயர் கூறி எழுதும் நடை இத்துறையாசிரியரின் தனித்தன்மையாகும். இது பிற்காலத்து வழக்கு வீழ்ந்தது; வீழத்தகாதவொன்று. 1. அதிகமான் பொருது புண்பட்டு நின்றோனை ஒளவையார் பாடியது (புறம். 93). 2. அதிகமான் பொருது புண்பட்டு நின்றபோது ஒளவையார் பாடியது. 3. பொருது புண்பட்டு நின்ற அதிகமானை ஒளவையார் பாடியது. இம் மூன்று தொடர்களில் முதலது பழங்காலத்தது. இரண்டாவது தொடர் முதற்றொடரின் பொருளை மாறாமல் தருகின்றது. மூன்றாவது தொடரில் ஒரு காலத்துப் போர் செய்து புகழ் பெற்ற அதிகமானைப் பின்னொருகாலத்துப் பாடியிருக்கலாம் என்ற பொருள் கொள்ள இடமுண்டு. இன்ன நிகழ்ச்சியின்போது பாடியது என்ற தெளிவுக்கு இறுதித் தொடர் அவ்வளவு பொருத்தமில்லை. பழந் தொடரோ நிகழ்ச்சியையும், நிகழ்ச்சி செய்தானையும் வினையாலணையும் பெயர் முறையில் ஒருங்கிணைத்துக் காட்டுவதை உணரவேண்டும். புறநானூற்றுத் துறையாசிரியர், துயிலெழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை (50), ஒருங்கிருந்தாரை (58), பொருது புறப்புண் நாணி வடக் கிருந்தானை (65), அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை (100), அவன் கோவலூர் எறிந்தானை (99), மூவன் பரிசில் நீட்டித்தானை (209), தீப்பாய்வாள் (246) எனவும் இவ்விடங்களில் நிகழ்ச்சிப் பெயர்நடையை மிகவும் ஆளுவர். இவர் இந்நடையிற் கன்றியவர் என்பது, ‘சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும், தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவுழி கைகரப்ப வெகுண்டு வட்டுக் கொண்டெறிந்தானை சோழன் மகனல்லையென நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது (43)’ என்ற நெடுந்தொடராற் பெறப்படும். மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி (46) எனவும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியைப் பாடியது (45) எனவும் பிற இருவகைத் தொடர்கள் இவர்தம் துறைநடையில் அருகி வந்துள. புறத்திணைக்குச் சூழ்நிலை எழுத வந்த ஆசிரியராதலின் அரசியலறிவு இவர்க்கு இன்றியமையாதது. இவர் அவ்வறிவு வாய்ந்தவர் என்பதனைத் துறைநடையால் அறிகின்றோம். வலிதிற்போய்க் கட்டில் எய்தினானை (17) எனவும், பழஞ்செய்க்கடன் வீடு கொண்டது (35) எனவும், ஒற்று வந்தான் என்று கொல்லப்புக்குழி (47) எனவும், முரசு கட்டில் அறியா தேறிய (50) எனவும், பொருது பற்றுக் கோட்பட்டு (74) எனவும், சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையன் (125) எனவும், படைக்கலக் கொட்டில் காட்ட (95) எனவும், அவன் மக்கள்மேற் சென்றானை (213) எனவும் வரும் சொல்லாட்சிகள் இத்துறையாசிரியர் தம் அரசியற் புலமையை நமக்குப் புலப்படுத்துகின்றன. தமிழ் உரைநடை வரலாற்றில் துறையாசிரியர்களின் உரைநடை என்ற ஒரு தொல்பகுதி இதுகாறும் இடம் பெற்றிலது என்பதனைத் தமிழுலகிற்கு முந்துற எடுத்துக் காட்டி அப்பெருமக்கள் தம் புலமை, நடை முதலியவற்றைச் சில கூறளவில் புலப்படுத்துகின்றது இக்கட்டுரை. இப் பொருளில் இதுவே முதற் கட்டுரையாதலின் துறை யாசிரியர்கள் பல்வேறு பாங்கினை விரித்துக் கூற இயல வில்லை. அகத்துறை விளக்கத்திலும், வளர்ச்சியிலும் ஒப்பீடு செய்யத் தக்க குறிப்புக்கள் உள. இத்துறை நடைகள் கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தன என்று கொள்ளக் கிடத்தலின் தமிழ்மொழியின் கூறுகள் குறித்து வரலாற்று முறையில் ஆராயவும் நிரம்ப வாய்ப்புண்டு. சங்கத்தொகை நூல்கட்கு ஒருமையோட்டத்தினை அளித்தவர்கள் இத் துறையாசிரியர்கள் என மதிக்கின்றேன். குறுந்தொகை முதலான தொகைச் செய்யுட்களைப் பாடினோர் பலப் பலர். அவை ஒவ்வொன்றும் தனிப் பாடல்கள். தொகை என்பது பலர் பாடிய தனிச் செய்யுட் களின் திரட்டு. இத்தொகைத் திரட்டுக்குத் துறைகள் முதலிலிருந்து இறுதிவரை ஒருவர் எழுதியிருத்தலின் துறையில் இத்தொகை ஒவ்வொன்றும் ஒருமைக் காட்சி எய்துகின்றது. பன்மைக்கிடையே துறை என்ற ஒருமையிழை ஓடுகின்றது. சமரசம் தொகுத்து வெளியிட்ட சங்கவிலக்கியம் அகர முதல் ஆசிரியர் வரிசைப்படி எட்டுத்தொகை, பத்துப்பாட்டுச் செய்யுட்களை ஒழுங்குபடுத்திக் காட்டுகின்றது. சிலவகை ஆராய்ச்சிக்கு அகரமுதற் பதிப்பு இன்றியமையாதது என்பதில் ஐயமில்லை. எனினும் துறையாசிரியர்களின் ஆராய்ச்சிக்குத் தனித் தனித் தொகைப் பதிப்பு என்றும் இருந்து கிடைத்து வருதல் வேண்டும். பழந் தொகைப் பதிப்பும் காக்கப்பட வேண்டியது என்தற்கு இக்கட்டுரைப் பொருள் ஒரு பெருஞ் சான்றாகும். 24. கால முறைப் பதிப்பு எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற சங்கவிலக்கியங்கள் ஒரு நூற்றாண்டுக் காலமாகப் பல முனையிலும் ஆய்வு பெற்று வருகின்றன. சங்கப்பனுவல்களே நாம் பெற்றுள்ள தமிழ்க் கருவூலங்கள். ஆதலின், அவை ஆய்பு முதன்மையும் பரப்பும் பெறுவது இயல்பேயாகும். பெருகி வரும் இவ்வாய்வுப் பொலிவில் ஒரு முழுக் குறைபாடு உண்டு என்பதனைப் பலர் உணர்வதில்லை. அடியளவுப் பதிப்பு சங்கத்தொகைகள் பெரும்பங்கு அடியளவாலும் திணை முறையாலும் அமைந்தன. 2381 பாடல்களுள் 1200 பாடல் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என அடியளவால் அமைந்தவை; அடியளவோடு அகத்திணைப் பொருள் வரம்பும் உடையவை. திருமுருகாற்றுப்படை முதலான பத்துப்பாட்டு நூற்றிலும் மேம்பட்ட அடியளவால் ஒரு தொகுதிப்பட்டவை; அகமும் புறமும் கொண்டவை. 498 ஐங்குறுநூறும் 150 கலித்தொகையும் அகத்திணை முறையானவை. 22 பரிபாடல்கள் திருமால் செவ்வேள் வையை என்ற முப்பொருள் மேலன. 80 பதிற்றுப்பத்து சேரமன்னர்களைப் பற்றிய புறச் செய்யுட்கள். 398 செய்யுள் கொண்ட புறநானூறு ஒரு தொகையாயினும் தொகை முறையில் ஆங்காங்கே சில நெறிகள் உள. ஐங்குறுநூறு, கலித்தொகை என்றிவற்றைத் தொகைப் போலிகள் என்று சொல்லலாம். இவை தனிப்பாடல்கள் அல்ல. ஓர் ஆசிரியன் ஒரு பொருள்மேல் திட்டமிட்டு எழுதிய தொடர்பாடல்கள், ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், நல்லந்துவனார் முதலிய சான்றோர்கள் சங்ககால நூலாசிரியர்கள் என்ற தகுதிக்கு உரியோராவர். பத்துப் பாட்டும் இத் தன்மையவே. ஆசிரியப் பதிப்பு அடியளவாலும் பிறவாற்றாலும் வகைபெற்ற இத் தொகைகள் கற்பவர்க்கு எளிய துணையாவனவன்றி ஆராய்ச்சி முடிவுக்கு நுண்துணையாகும் புலத்தொகுதிகள் அல்ல. சைவ சித்தாந்த மகாசமாசம் 1940இல் வெளியிட்ட சங்கவிலக்கியப் பதிப்பு ஆசிரியர் அகரவரிசையாக அமைந்தது. ஓர் ஆசிரியரின் புலமையைக் காண்பதற்கும், ஒரு சேர்ந்த மூலக் கையடக்க மாதலின் எளிமையாகப் புரட்டிப் பார்த்து ஒப்பீட்டாய்வு செய்வதற்கும் இப்பதிப்பு பெருந்துணை சான்றது. இப் பதிப்பினையும் ஒரு தொகை என்றே கருதலாம். இப்பதிப்பின் அருமை பெருமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பழந்தொகைகளைப் போல இவ்வாசிரியத் தொகைப் பதிப்பும் என்றும் கிடைக்குமாறு போற்றிக் கொள்ள வேண்டும். திi ணெப்பதிப்பு குறிஞ்சித்திணை, மருதத்திணை, பாலைத்திணை, வாகைத் திணை, பாடாண்டிணை என்றாங்கு திணை வகையாய்வுகள் அறிஞப்பட்டத்துக்கு வழங்கப் பெற்றன. இவ்வாய்வாளிகள் தமக்குரிய திணைப்பாடல்களைத் தொடுத்துக் கொண்டு ஆய்வுக்களம் புகுந்துள்ளனர். இக்கைத் தொகைகள் பதிப்புருவம் பெறாவிடினும், ஒரு நெறிப்பட்ட தொகைகள் என்று வைத்துக் கொள்ளலாம். முதல்கரு அடிப்படையில் நோக்குவார்க்கு இத்திணைத் தொகைகள் நல்வாய்ப்பின. ஆய்வுக்கு இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட தொகையேடுகள் இன்னும் சிலவுள. அடியளவுப்பதிப்பு, ஆசிரியப்பதிப்பு, திணைப்பதிப்பு இவையெல்லாம் ஆய்வுக்கு உகந்த மரபாக இருந்து வருகின்றன என்பதில் ஐயுறவில்லை. இவ்வகைப் பதிப்புக் களும் தொடர்ந்து நிலைபெற்று வரல் வேண்டும் என்பதிலும் அவை சில துறை ஆராய்வுக்கு ஏற்ற பெற்றியன என்பதிலும் மறு சிந்தனையில்லை. எனினும் சங்கவிலக்கியம் பற்றி இதுகாறும் வந்த பல்வகைப் பதிப்புக்களிலும் இனிவரும் புதிய வகைப்பதிப்புகளிலும் எல்லாம் ஒரு பொது நெறி என்றும் அடிப்படையொழுங்கு இருக்க வேண்டும் என்பது இக்கட்டுரையின் முடிவு. அனைத்துப் பதிப்புக்களிலும் இடங்கொண்டாக வேண்டிய இந்நெறியைச் சிறப்பு நெறி என்று கொள்ளலாம். காலமுறைப் பதிப்புக்கள் ‘காலம் உலகம் உயிரே உடம்பே’ என்ற தொல்காப்பியம் வரிசைப் படுத்தியபடி இயற்கைக்கும் செயற்கைக்கும் இன்னநாளில் இது பிறந்தது, இது முன், இது பின் என்ற காலவட்டம் இன்றியமையாதது. ஒன்றன் காலப் பிறப்பும் பிறவற்றோடு அதன் கால நிற்பும் செய்திச் செம்மைக்கு வேண்டற்பாலன. இவ்வொழுங்கு வரலாற்றுக்கு மட்டும் உரியதன்று. ஓராற்றல் நோக்கின், எல்லாமே வரலாறு என்ற ஊழுக்கு வந்து சேருபவை. ஆதலின் சங்க இலக்கியத்தின் 2381 பாடல்களையும் இதுமுன், இதற்குப் பின் இது என்ற காலவடைவுக்குக் கொண்டு வரல் வேண்டும். நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியராக இருந்தபோது, சங்கப் பதிப்புக் காலத்திட்டத்தில் தமிழ்த் துறை ஈடுபட்டது. முயற்சி பதிப்புத் திருவை ஆக்காவிட்டாலும், இவ்வகைப் பதிப்பு வரன் முறை ஆய்வுக்கு ஒருவந்தம் வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. குறிப்பாக ஈரிடங்களைக் காண்போம். எழுவர் புறநானூற்றில் (158) குமணனைப் பாடும் பெருஞ்சித்திரனார் பாரி முதலாக எழுவள்ளல்களைச் சுட்டி இவரனைவோரும் இறந்தபின் குமணன் வள்ளலாக விளங்குகின்றான் என்று காலம் சுட்டுவர். சிறுபாணாற்றுப் படை பாடிய இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பேகன் முதலாக வள்ளல் எழுவரை வரிசைப்படுத்தி இவ்வனைவரும் தாங்கிய ஈகைநுகத்தை ஓய்மான் நல்லியக் கோடன் ஒருவனே தாங்கினான் எனக் காலமுறையைப் புலப்படுத்துவர். இதனால் குமணனும், நல்லியக் கோடனும் எழுவர்க்குப்பின் வெவ்வேறிடத்து ஒருகாலத்து வாழ்ந்த வள்ளல்கள் என்ற காலக் குறிப்பையும் பெறுகின்றோம். எழுவர்பற்றிய இவ்வீரிடங்களையும் இவ்வெழுவரைப் பாடிய பல்வேறு புலவர்களின் பாடற் குறிப்புக்களையும் அடித்தளமாகக் கொண்டால், ஆயிரத்துக்கு மேற்பட்ட சங்கப்பாடல்கள் காலமுறை பெறும். இவ்வெழுவரும் குறிப்பிட்ட ஆண்டிற் பிறந்து அனைவரும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இறந்தார்கள் என்று சொல்லவியலாது. புறநானூறு தொகுக்கப்பட்ட முறையில் இவ்வெழுவரின் வரிசை வேறாகவுள்ளது. மூன்றையும் பின் வருமாறு அட்டவணைப் படுத்தலாம். எண் சிறுபாண் புறம் : 158 புறநானூறு 1. பேகன் பாரி அதிகமான் 2. பாரி ஓரி பாரி 3. காரி மலையன் காரி 4. ஆய் எழினி ஆய் 5. அதிகன் பேகன் பேகன் 6. நள்ளி ஆய் நள்ளி 7. ஓரி நள்ளி ஓரி இவ்வெழுவர் பற்றிய செய்யுட்களைக் கூர்ந்து நோக்கின், ஒழுங்கான காலமுறை கிடைக்கும். அதிகமானும் அவன் மகன் பொருட்டெழினியும் பாடப் பெற்றிருத்தலால், புறநானூற்றுத் தொகுப்பின்படி, எழுவருள் அதிகமான் முதியவனாகவும் முன் இறந்தவனாகவும் கருத இடனுண்டு. மேலும் சிறுபாணாற்றுப்படை வள்ளல் எழுவரோடு நில்லாது இன்னும் வரலாறு பொதுளத் தமிழகவரசு நிலை பற்றியச் சில குறிப்புக்களைத் தருகின்றது. எழுவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன் வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே (49-50) கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே (65-67) நாடா நல்லிசை நந்றேர்ச் செம்பியன் ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே (82-83) என்ற பகுதிகள் சேரநாட்டிற் குட்டுவனும் பாண்டிய நாட்டிற் செழியனும் சோழநாட்டிற் செம்பியனும் ஆண்டனர் என்ற செய்தியையும், மூன்று தலைநகரும் ‘வறிதே’ என்பதனால் அங்குக் குறிப்பிடத்தக்க நல்லாட்சிகள் இல என்ற காட்சியினையும், எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் விரிகடல் வேலி வியலகம் விளங்க ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள் (113-115) என்பதனால் தமிழக முழுதிற்கும் நல்லியக் கோடன் ஓரு வள்ளலாக விளங்கினான் என்ற கருத்தினையும் புலப்படுத்துகின்றன. இவ்வரசியற் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டால், இன்னும் பல சங்கப் பாடல்கள் காலவடைவு பெறலாம். இங்ஙனம் 2381 செய்யுட்களையும் இது முன் இது பின் என்ற கால வரம்புகாட்டும் பதிப்பு பலநலம் பயப்பதோடு ஆய்வு முடிபுகளையும் திறப்படுத்தும், பல்வேறு குழும வழக்காறுகளை அறுதியிடுதற்கும் இலக்கண யாப்பு வளர்ச்சிகளைத் தொடுப்பதற்கும் இப்பதிப்பே நல்லடியாகும். வேற்று மொழிகள், அயல் வழக்குகள், புராணக் குறிப்புக்கள், மீயியற்கைகள் என்றிவற்றின் வரவினை மதிப்பிடுதற்கும் இப்பதிப்பே வலிவுதரும். முற்சங்கப்பாடல்கள் தொல்காப்பியத்துக்கும் இன்றுள்ள சங்கச் செய்யுட்கும் நீண்ட இடைவெளியுண்டு என்று கருதி வருகின்றோம். தொல்காப்பியம் முழுமையாகக் கிடைத்திருக்கும்போது அக்காலச் செய்யுள் சிலவாவது நிலைபெற்று வந்திருக்க மாட்டாவா? மேலும் 2381 செய்யுட்களின் காலவெல்லைகள் என்ன? எல்லாம் குறிப்பிட்ட ஒரு நூற்றாண்டைச் சார்ந்தன என்று அடக்கிவிட முடியுமா? செவ்விய காலவடைவு செய்ய முடிந்தால், இச்சங்கத் தொகுதியுள் சில செய்யுட்கள் தொல் காப்பியத்துக்கு முந்தியனவும் உடனானவும் உடன்மருவினவும் இருத்தல் கூடும். பாடியோர் பெயர் தெரியாமல், கூகைக்கோழியார், சிறுவெண்டேரையார், அணிலாடு முன்றிலார், குப்பைக் கோழியார் என்றின்ன சிறப்புப் பெயர் பெற்ற பாடல்கள் தொல் சங்ககாலத்தனவாகவும் இருக்கலாமன்றோ. புற நானூற்று இறுதியில் வரும் தாபதவாகை, மூதின்முல்லை, மகட்பாற் காஞ்சி முதலான சில துறைப் புறங்களும், வான்மீகியார், கோதமனார், மார்க்கண்டேயனார் முதலானோர் புறங்களும் முற்சங்கத்துக்குரியனவா என்று சீர்தூக்க வேண்டும். தொல்காப்பியம் வாழ்ந்த நிலையில் அதற்கு முன்னோ உடனோ அடுத்துப் பின்னோ ஒரு செய்யுளும் வாழவில்லை என்ற பொது முடிவு தெற்றெனப்படவில்லை. மொழிநிலையிலும் ஒழுகலாறு நிலையிலும் வைத்துப் பார்த்தால், தொல்காப்பியம் கண்ட இலக்கணத்துக்குச் சில இலக்கியச் செய்யுட்களாவது சங்கத் தொகையிற் காண முடியும். இங்ஙனம் வரும் முடிபு தவறான ஒரு கருத்துக்குத் தோற்றரவு ஆகாது. எட்டுத்தொகையுட் சில செய்யுட்கள் தொல்காப்பியத்துக்கும் பொருந்திய இலக்கியங் களாகப் படின், அவற்றைத் தொல்காப்பியத்துக்கு முன் அல்லது உடன் காலமாகக் கொண்டு போக வேண்டுமே யன்றி, கி.மு. காலத்துக்குக் கணிக்க வேண்டுமேயன்றித் தொல்காப்பியத் தைக் காலக்கீழிறக்கம் செய்யக் கூடாது. தனிப்புலவரின் கால வடைவு சங்கப் பாடற்கால முறைப்பதிப்புக் காண்பதற்குப் பல நெறிகள் உள. அவற்றுள் தலையாய ஒன்றினை இக் கட்டுரையிற் சுட்டுவல். முதற்கண் தனித்தனியாக ஒவ்வொரு புலவரின் செய்யுட்களையும் காலமுறைப் படுத்திக் கொள்ள வேண்டும். இப்பாடல்கள் அகத்திலும் புறத்திலும் இருந்தாலும் திணை நோக்காமல் கால வரலாற்று நோக்கில் வகை செய்யவேண்டும். அகத்திணைச் செய்யுட்களைக் கால கணிப்புச் செய்வது இடர்ப்படுமென நானும் அறிவேன்; எனினும் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற தொகைகளில் அறுபது விழுக்காடு வரலாற்றுக் குறிப்பு டையன. ஆதலின் நேரிய ஆய்வுக்கு அத்துணைத் தொல்லையில்லை. எவ்வளவு கூர்த்து ஆராய்ந்தாலும் கணிசமான செய்யுட்கள் கால முறைப்படா. அன்னவற்றை, ‘ஆசிரியர் பெயர்காணாப் பாடல்கள்’ என்று சமாசப்பதிப்பு தொகைப்புறவைப்புச் செய்வது போல, ‘காலமுறை காணாப்பாடல்கள்’ என்று தலைப்பிட்டு எதிர்கால ஆய்வுக்கு வழிகாட்டலாம்., காலவடைவு காண்பதற்கு வரலாற்றுச் சான்றுதான் முதன்மை என்பதில்லை. இலக்கணம், மொழி, மரபு, நடை, கொள்கை, ஒப்பீடு என்றிவையும் சான்றாவன. இந்நெறிகளை மேற்கொளின் 2381 சங்கச் செய்யுட்களுள் மூன்றில் இரண்டு பங்கு - ஏறக்குறைய 1500 செய்யுட்குப் பேரிடரின்றிக் காலமுறை காட்ட முடியும். சான்றுகள் புதிதுபடக் கிடைக்குந்தோறும் ஆய்வுக் கூர்மைகள் பெருகுந் தோறும் காலமுறை காணாப் பாடல்கள் சிலவும் பலவும் கால வயப்படலாம். முன் சொல்லியாங்கு ஒவ்வொரு சான்றோரின் தனித் தனிச் செய்யுட்களையும் முதற்கண் காலவடைவு செய்து கொள்ளல் தகும். இப்பதிப்புக்கு இதுதான் பெரிய முதற்படி. பல செய்யுள் யாத்த கபிலர், பரணர், நக்கீரர், மாமூலனார், ஒளவையார், பெருங்கடுங்கோ, வெள்ளி வீதியார், கோவூர்கிழார் பாடல்களைக் காலக்கோட்படுத்தினால் பெரும்பகுதி காலவடைவு துலங்கிவிடும். சில செய்யுள் பாடிய சான்றோர் பலரையும் சிறு சிறு கட்டுரைகளில் ஆராயலாம். இவ்வடிப்படைத் தமிழாக்கத்தில் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகள் ஆய்வினை மேற்கொள்ளல் தகும். முதுகலைக் கட்டுரைக்கும் முதுகலை ஆய்வுப் பட்டத்துக்கும் அறிஞர் பட்டத்துக்கும் முதுகலை ஆய்வுக்கும் சங்க விலக்கியங்களின் காலமுறைப் பொருளைச் சிற்றளவாகவோ பேரளவாகவோ வரம்புபடுத்தி நிறைவு காணலாம். காலமுறையிற் கட்டுண்ணா எவ்வகை ஆய்வும் ஆய்வு முடிவுகளும் வேரூன்றா மரம் போலவும் சுருங்கட்டு இல்லா அரமியம் போலவும் சரிவுபடுவன ஆதலின் நீண்ட இக்குறையைத் தமிழாய்வுலகம் விரைவில் நீக்க வேண்டும். இப்பதிப்புக்குப்பின் எழும் ஆராய்வுகள் தனி வனப்புடையன வாகப் பிறக்கும் என்பது என் துணிவு. எடுத்துக்காட்டு ஒரு நிகழ்ச்சியைக் கரு வைத்துச் சில பாடல்களின் கால முறையை எடுத்துக்காட்டாக விளக்க விரும்புகின்றேன். ஆதிமந்தியின் காதலனைக் காவிரி அடித்துக் கொண்டு போயிற்று எனவும், அதனை அறியாது நாடு நாடாக ஊர் ஊராகத் தேடியலைந்து ஆதிமந்தி பேதுற்று அமைந்தனள் எனவும், மருதி என்பவள் காவிரி கவர்ந்ததை ஆதிமந்திக்கு உணர்த்திக் கடலில் மாயந்தாள் எனவும் பரணர் பாடிய அகநானூற்றில் நான்கு (76, 135, 222, 236) பாடல்களாலும், வெள்ளிவீதியார்பாடிய ஓர் அகநானூற்றுப் பாடலாலும் (45) அறிகின்றோம். தன் காதலன் பிரிவைத் தாங்க மாட்டாது நெடிய பாலை வழிகளில் வெள்ளிவீதி புறப்பட்டு அலைந்தாள் என்று ஒளவையார் ஓர் அகப்பாடலில் (147) உவமையாகச் சுட்டியுள்ளார். ஆதிமந்தியம் வெள்ளிவீதியும் பாடிய குறுந்தொகைப் பாடல்கள் (31, 27) பெயர் சுட்டா, சுட்டுதல் கூடா அகப்பாடல்களாயினும், காலப் பதிப்புக்குக் குறிப்புப் பொருண்மையுடையனவாக எடுத்துக் கொள்ளலாம். இச்செலவு வரலாற்றை மையமாக வைத்து இவை குறித்த எட்டுச் செய்யுட்களைக் காலவடைவு செவ்விதாகச் செய்யலாம். தொகைகளில் இவற்றின் கிடக்கை வேறு; கால முறைப் பதிப்பில் வரும் இவற்றின் வரிசை நிலை வேறு. 1. குறுந்தொகை (31); ஆதிமந்தி யாண்டும் காணேன் மாண்டக்கோனை என்று தானே புலம்புதல். 2. அகநானூறு (135, 236, 222, 76) : பரணர் பாடல்கள்; ஆதிமந்தியின் வெளிச் செலவை மேற்கோள் காட்டுதல். 3. குறுந்தொகை (27) : வெள்ளிவீதியார் பாடல்; தலைவன் பிரிவால் வந்த தன் ஆற்றாமையை வெளிப்படுத்தல். 4. அகநானூறு (45) : வெள்ளிவீதியார் பாடல்; ஆதிமந்தியின் துன்ப அலைவை மேற்கோள் காட்டல். 5. அகநானூறு (147) : ஒளவையார் பாடல்; வெள்ளிவீதியின் ஊர் கடந்த செலவை மேற்கோள் காட்டல் இங்ஙனம் பாடல்களைக் கணித்த காலமுறைப்பாடு மேலும் சில தெளிவுகளைப் பிறப்பிக்கின்றது. ஒளவையாருக்கு முற்பட்டவர் பரணர் எனவும் வெள்ளிவீதியின் புறச்செலவுக்கு முந்தியது ஆதிமந்தியின் தேடற் செலவு எனவும் அறிகின்றோம். ஆதிமந்தியின் அலைந்த திரிபுக்கு முன் எப்பெண்ணையும் பரணர் மேற்கோள் காட்டாமையால், அகநானூற்றின் ஐந்திடங்களில் இஃதொன்றே பரக்கப் பேசப்படுவதால், இத்தகைய தேடு படலத்துக்கு முன்னோடி ஆதிமந்தியே யாவள் என்ற ஒரு வழக்காற்றின் தோற்றக் காலத்தையும் ஊகிக்கலாம். ஆதிமந்தியைப் போல என்று வெள்ளிவீதியும், வெள்ளி வீதியைப் போல என்று ஒளவையாரும் சுட்டுவதனால், வெள்ளிவீதி இத்தகைய ஒரு புதுமைப்பெண் ஆவதற்கு ஆதிமந்தியின் வாழ்வறிவே தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும் எனவும் புதிய குழுமப் போக்கை உணர்கின்றோம். ‘நாணிலும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தது’ என்ற தொல்காப்பியத்தின்படி, நாணம் கடந்தது எனக் கருதத்தகும் இப்புறம்போக்கு அக்காலத்து ஆதிமந்திக்குப்பின், காதலர்களை நெடுங்காலம் பிரிந்திரங்கும் தலைவியரிடத்து எண்ண வடிவாயிற்று எனவும் கொள்ள இடமுண்டு. இவ்வகையான செந்தெளிவுக்கு ஆய்வு காட்டியாக இருத்தலாலும், சங்கத்துக்குப் பின் வந்த வளர்ச்சிகட்கும், சங்கத்தெளிவு இன்றியமையாதது ஆதலாலும், சங்க விலக்கியக் காலமுறைப் பதிப்பு நம் எதிர்கால எழுத்துத் திட்டங்களுள் முதலுரிமை பெறல் வேண்டுமென அவாவுகின்றேன். மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்பு வாய்மை வாழ்வு வாய்மை வாழ்வைத் தன் வரலாறாகக் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு நிலைகளையும் தன் அக வாழ்விலும் புற வாழ்விலும் கடைப்பிடியாய்க் கொண்ட குறிக்கோளர். வள்ளல் பாரியும் வாய்மொழிக் கபிலரும் வாழ்ந்த பறம்பு மலைப் பகுதியைச் சார்ந்த ஊராகிய, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச்சிவபுரி, தமிழ்நாட்டு சபைகளுள் தொன்மையும் தொண்டுஞ் சிறந்த சன்மார்க்க சபை அமைந்த ஊர் என்பதோடு, அந்தச் சபை நிறுவுவதற்குப் பெருங்காரணமாக இருந்த பண்டிதமணியாரின் மாணவர் “வ.சுப. மாணிக்கனார் பிறந்த ஊர்” என்ற பெருமையையும் தரித்துக்கொண்டது. 17.4.1917 இல் வ.சுப்பையா செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் மகனாய்த் தோன்றினார். அண்ணாமலை என்பது இவரது இயற்பெயர். பின், மாணிக்கம் என அழைக்கப்பட்டார். நகரத்தார் குல மாணிக்கமாக, தமிழ் மாணிக்கமாகத் திகழ்ந்தார். பெற்றோர் இருவரையும் சிற்றிளம் பருவத்தே இழந்து, வறுமை யுற்ற நிலையில் பதினோராவது வயதில் பருமா சென்று வட்டிக் கடையில் சிறுகணக்கனாகச் சில ஆண்டுகள் பணிசெய்தார். ஒரு நாள் கடையில் சோதனைக்கு வந்த அதிகாரியிடம் தான் ஊரில் இல்லை எனக் கடை முதலாளி சொல்லச் சொன்னபோது, `அப்படிப் பொய் சொல்ல முடியாது’ என மறுத்துப் பேசவே, வேலை இழந்து ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். பெற்ற கல்வி பொருள் முட்டுப்பாட்டோடு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் புலவர் வகுப்பில் சேர்ந்து பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் ஆய்வாளனாகவும் ஆசிரியனாகவும் பணியேற்றார். விடா முயற்சி கொண்டு பி.ஓ.எல்., எம்.ஓ.எல்., எம்.ஏ., பிஎச்.டி போன்ற பல பட்டங்களைப் பெற்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, துறைத் தலைவராகவும் கல்லூரி முதல்வராகவும் உயர்ந்தார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்தார், முத்துறை இணைந்த இந்திய மொழிப்புலத் தலைவராக. பட்டங்களும் விருதுகளும் செம்மல், முதுபெரும் புலவர், பெருந்தமிழ்க் காவலர், முதுமுனைவர் (டி.லிட்), முதுபேராய்வாளர், திருவள்ளுவர் விருது, முது ஆராய்ச்சியாளர், தொல்காப்பியத் தகைஞர் ஆகிய பல பட்டங்களைப் பெற்றார். வள்ளுவத்தின் மீது இவர் கொண்ட ஈடுபாடு, அதை வாழ்வுநூலாய் நிலைநிறுத்திய எழுத்துத்திறம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதத்தில் தமிழக அரசு “திருவள்ளுவர் விருது” வழங்கி கௌரவித்தது. மாணிக்கத் தலைமை காரைக்குடித் தமிழ்ச் சங்கம், காரைக்குடித் தமிழ் உயர் ஆராய்ச்சி மையம், தமிழ்ப் பல்கலைக்கழக வல்லுநர் குழு, புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வல்லுநர் குழு, தமிழகப் புலவர் குழு, அனைத்திந்தியப் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபைக் கல்லூரிக் குழு, பண்டிதமணி மு. கதிரேசனாரின் நூற்றாண்டு விழாக் குழு ஆகியவற்றுக்குத் தலைமை கொண்டதோடு, தமிழ்நாடு தெய்வீகப் பேரவை அறிவுறைஞ ராகவும், தமிழ்வழிக் கல்வி இயக்க நிறுவனராகவும் விளங்கினார். தில்லைத் திருக்கோவில் பொன்னம்பலத்தின்கண் திருமுறைகள் ஓதி வழிபடும் வாய்ப்பை ஏற்படுத்தியவராகவும் திகழ்ந்தார். பட்டங்களும் பதவிகளும் இவரைத் தேடி வந்து பெருமை சூடிக்கொண்டன. அரிய பட்டங்கள் பல பெற்றாலும் துணைவேந்தர் பதவிவரை வகித்தாலும் முறையான பள்ளிக்கல்வி பெறும் வாய்ப்பிழந்தவர் இவர். இழந்த வாய்ப்பை ஈடு செய்யும் வகையில் கடுமையாக உழைத்து, ஆழமாகப் படித்து, தமிழ்மொழி வானில் ஒளிவிடும் மாணிக்கமாய்ச் சுடர் வீசினார். மாணிக்கத் தமிழ் தமிழ் இலக்கிய உலகில் மிக உயரிய ஆய்வு நூல்களாகக் கருதப்பெறும் `தமிழ்க் காதல்’, `வள்ளுவம்’, `கம்பர்’ போன்றவை இவர்தம் உன்னதப் படைப்பாற்றலுக்குச் சான்று பகர்பவை. இவரது செம்மாந்த மொழி நடையும், வலுவான பழமைத் தளத்தில் புத்தம்புதியது சமைக்கும் புலமைத் திறனும், ஆழ்ந்து அகன்ற ஆய்வுப் போக்கும், புதிய சொல்லாக்கத் தரவுகளையும் வரவுகளையும் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தன; அடுத்து வந்தவர்களும் பின்பற்றிப் போற்றும் “மாணிக்கத் தமிழ்” நடை, வழக்கிற்கு வந்தது. தமிழ்வழிக் கல்வி தமிழ்மீது கொண்ட அளப்பரிய அக்கறையாலும் ஈடுபாட்டாலும் தமிழ்வழிக் கல்வியைத் தன் இறுதி மூச்சுவரை வற்புறுத்திவந்தார். அதன் தொடக்க முயற்சியாக, மேலைச் சிவபுரியில் தமிழ்வழி மழலையர் பள்ளியை நிறுவினார். குடும்பம் ஆண் மூன்றும் பெண் மூன்றுமாக ஆறு குழந்தைகளைப் பெற்றுத்தந்த வாழ்க்கைத் துணை ஏகம்மை ஆச்சியுடன் அனைத்தையும் பகிர்ந்துகொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர். இவர் எண்ணங்களையும் எழுத்துக்களையும் செயல் வடிவமாக்கியவர் திருமதி ஏகம்மை மாணிக்கம் அவர்கள். ஆசிரியர்கள் தனக்கு குருவாக இருந்தவர்களை ஒளியாகவும் தெய்வத் தோற்றங்களாகவும் கண்டவர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் நடேச அய்யர், ஆங்கில ஆசிரியர் கோபாலன் நாயர், இந்தி ஆசிரியர் மு. கோ. வேங்கடகிருட்டிணன், வடமொழி ஆசான் பி.சி. இராமானுசாச்சாரியார், பிரெஞ்சு மொழியாளர் சிவப்பிரகாசம், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா. இராகவையங்கார், இராமசாமிப் புலவர், ரா. கந்தசாமி, ஆ. பூவராகன் பிள்ளை, மு. அருணாசலம் பிள்ளை ஆகியோரை நினைக்குங்கால் அச்சங் கலந்த பணிவு, அறிவு கலந்த நன்றியுணர்வு ஏற்படுவதாகக் குறிப்பிடுவார். இவர்களுள், உற்றுழி உதவிய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரின் மீது இவர் கொண்ட பெருமதிப்பும் பேரன்பும் காரணமாகத் தன் காரைக்குடி இல்லத்திற்குக் `கதிரகம்’ எனப் பெயரிட்டு ஆசிரியரின் இல்லத்திற்குள்ளே வாழ்ந்தவர். மாணிக்க அறம் 1986இல் விருப்பமுறி எழுதினார். அதில் தம் சொத்துக்களில் ஆறில் ஒரு பங்கினை ஒதுக்கி, மேலைச் சிவபுரியில் ஒரு அறநிலை ஏற்படுத்தவும் அதில் வரும் வருமானத்தினைக் கல்வி, மருத்துவம், நலவாழ்வு, குழந்தைகள் நலன், அஃறிணை உயிர்களின் நலம் முதலான பொது நலங்களுக்குச் செலவிட வேண்டும் என்று எழுதிவைத்து, புதிய வள்ளலாராய்த் தன்னை வரலாற்றிற்கு அடையாளம் காட்டியவர் இந்த மாமனிதர். மாணிக்க விதை தமிழுக்குத் தொல்காப்பியத்தையும் வாழ்வின் உயர்வுக்குத் திருக்குறளையும் உயிர்த் தூய்மைக்குத் திருவாசகத்தையும் வழிகாட்டிய தமிழ் மறைகளென வாழ்ந்தவர் மாணிக்கனார். மேலைச்சிவபுரியில் உதித்து, அண்ணாமலையில் பூத்து, அழகப்பரிடம் காய்த்து, மதுரையில் பழுத்த மாங்கனி மாணிக்கம், தமிழ் நெஞ்சங்களில், 24.4.1989 திங்கட் கிழமையன்று, விதையாய் விழுந்து அமரத்துவம் கொண்டது. `கதிகரம்’ வ.சுப. மாணிக்கனாரின் மக்கள் காரைக்குடி 21.03.2016