மாணிக்க விழுமியங்கள் - 2 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) ஆய்வு நூல்கள் 2  தமிழ்க் காதல் - முதல் பதிப்பு 1962 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 2 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+472 = 488 விலை : 455/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 336 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல், சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம், புலமை நலத்திற்குக் `கம்பர் ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்jதுறையெல்லா«வாய்ந்jதுறையாக்» வைத்தநீ எங்களின் வைப்பு இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு ஜா. ஜெயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள் எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல். இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர் என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம் மற்றும் `திருக்குறட்சுடர். திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள். தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க! இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தள மாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்பு களாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத் திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே லேவாதேவி என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு கதிரகம் என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை என்னும் குறிப்பேட்டில் நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல் என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம், `தமிழ்க்காதல், `கம்பர், `சிந்தனைக்களங்கள் போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை தமிழ்க்காதல் முதற் பதிப்பு 1962 இந்நூல் 1980இல் பாரிநிலையம் வெளியிட்ட 3ஆம் பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முகவுரை காதல் உடலுக்கு நல்லது. உள்ளத்துக்கு நல்லது, ஊருக்கு நல்லது, உலகத்துக்கே நல்லது. அந் நல்ல காதல் எது? காதல் என்பது உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப் பசி, அப்பசி தீர்க்கும் உணவு நெறி எது? அஃறிணையுயிர்களின் காதலாவது கல்லாக் காமம், இயற்கை வீறு. மொழி பேசும் மக்களினத்தின் காதல் நினைவில் இனித்து, அறிவில் விளங்கிக் கல்வியில் வளர்வது, அவ் வளர்ச்சிக் கல்வி எது? காதலையும் அதன் உணர்வையும் அதன் கல்வியையும் தெளிய வேண்டின், தெளிவுக்கு வேறிடம் இல்லை. தமிழ்ப் பேரினம் கண்ட அகத்திணையை நாடுக. தொல்காப்பியம் சங்கவிலக்கியம் திருக்குறள் என்ற முத்தமிழக நூல்களைக் கற்க முந்துக. காதல் சான்ற தமிழியங்களையெல்லாம் தெளிந்து நுகர்ந்து குடிதழைத்து வாழ்க. நெறியாகவும் அளவாகவும் உரமாகவும் நாணமாகவும் கற்பாகவும் காமக்கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழிற்றான் உண்டு. அதுவே அகத்திணை. இத் திணைக்கல்வி பருவம் வந்துற்ற நம்பியர் நங்கையர்க் கெல்லாம் வேண்டும், வேண்டும். அன்னவர் திருமணம் நறுமணம் பெறும். அக் காதலர்தம் வாழ்வில் உள்ளப்பூசல் இராது. ஊடற்பூசலே இருக்கும்; வெங்கட்சினம் இராது, செங்கட் சினமே இருக்கும். அகத்திணை கற்ற கணவனும் மனைவியும் பிறந்த உலகை மதிப்பர். எடுத்த உடம்பை மதிப்பர், கொண்ட மணத்தை மதிப்பர், ஒருவர் ஒருவர்தம் காம நாடிகளைப் புரிவர், காமக்குறைவு கடமைக் குறைவாம் என்று உணர்வர், வித்தில்லாக் காமப் பழத்தை உண்பர், மெய்யின்பத்தை உயிரின்பமாகப் போற்றி ஒழுகுவர், அகத்திணை வாழ்க்கையை அன்புத்திணை வாழ்க்கையாகக் காண்பர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டத்துக்கு யான் எழுதிய ஆங்கில நூலின் முடிபுகள் இத்தமிழ் நூற்கண் விரிவாகவும் விளக்கமாகவும் அமைந்துள. இந்நூலின் செம்மைக்கு உதவிய திருக்குறள் உரை வேற்றுமை ஆசிரியர் இரா. சாரங்கபாணி எம்.ஏ. அவர்கட்கு நன்றியன். இந்நூலைச் செவ்வனம் பதிப்பித்த காரைக்குடி தென்னிந்திய அச்சகத்தார்க்கு நன்றியுடையேன். இந்நூலைக் கற்கத் தொடங்குவோர் இறுதியில் உள்ள அகத்திணைக்கல்வி என்னும் பகுதியை முதற்கண் கற்க வேண்டுவன். கதிரகம், வ.சுப. மாணிக்கம் காரைக்குடி, 15.6.1962. என் அன்புறை மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களுக்கு பார்காத்தார் ஆயிரம்பேர்; பசித்தார்க் காகப் பயிர்காத்தார் ஆயிரம்பேர்; பாலர்க் காக மார்காத்தார் ஆயிரம்பேர் வாழ்ந்த நாட்டில் மனங்காத்த தமிழ்த்தாய் என் உடைமை யெல்லாம் யார்காத்தார் எனக்கேட்க, ஒருவன் அம்மா யான்காப்பேன் எனவெழுந்தான் சாமி நாதன் நீர்காத்த தமிழகத்தார் நெஞ்சின் உள்ளான் நிலைகாத்த மலையிமய நெற்றி மேலான். பொய்யாத தமிழ்க்குமரி ஈன்ற சாமி! போகாத புகழ்க்கன்னி மணந்த நாத! செய்யாத மொழித்தொண்டு செய்த ஐய! சிறுகாத நெஞ்சத்தேம் வணங்கு செம்மல்! எய்யாத திருவடியால் எண்பத் தாண்டும் இளையாத உள்ளத்தால் எங்குஞ் சென்று நெய்யாத தொன்னூல்கள் நிலைக்க வைத்த நீங்காத தமிழ்க்குயிரே! நின்தாள் வாழ்க. வ. சுப. மாணிக்கம் உள்ளுரை 1. அகத்திணை ஆராய்ச்சி 7 2. அகத்திணைப் பாகுபாடு 29 3. அகத்திணைத் தோற்றம் 103 4. அகத்திணைக் குறிக்கோள் 206 5. அகத்திணைப் பாட்டு 295 6. அகத்திணைப் புலவர்கள் 324 7. அகத்திணைக் கல்வி 449 பொருட் குறிப்பு 467 1. அகத்திணை ஆராய்ச்சி சங்க இலக்கியமும் அகத்திணையும் (காதலும்) என்பது யான் ஆராயக்கொண்ட ஆய்பொருள். சங்க இலக்கியமாவது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமேயாம். இது பலர் ஒப்பிய முடிபு.1 இப்பதினெட்டுந்தாம் காலக்கூற்றுவனின் தமிழ்ப் பசிக்கு இரையாகாது, தப்பி வந்த பழந்தமிழ் இலக்கியப் படைப்புக்கள். சங்கத் தனிப்பாடல்களின் தொகை 2381 என்ப; அதனுள் அகத்திணை நுதலியவை 1862 என்க. சங்கப் புலவர் தொகை 473 என்ப; அதனுள் அகம் பாடினோர் 373 சான்றோர் என்க. அகம் புறம் என்னும் இருதிணை வடிவமைந்த பொருளிலக்கியம் இன்றும் அறிவுலகிற்குப் புதியது, தமிழ்மொழி ஒன்றின் கண்ணேதான் காணப்படுவது என்று பன்மொழி யறிஞர்கள் செவ்வனம் மொழிகுவர். தமிழர் இலக்கண வடிவு கொடுத்த இருதிணையுள்ளும், ஆராயுங் காலைச் சிறந்து நிற்பது எது? புறத்திணைப் பொருளான வீரம் மக்களுள்ளும் சிலர்க்கே தகுவது; நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே (புறம், 312) என்றபடி, படைப் பயிற்சியால் வருவது. அகத்திணைக்குப் பொருளான காமமோ ஆண் பெண் என்னும் பால்வாய்ந்த உயர்திணை அஃறிணை உயிர்க்கெல்லாம் பொதுவாயது; எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (தொல்: 1168) என்று பாலியலறிஞன் சுட்டியாங்கு, உடம்போடு ஒட்டிய இயற்கைத்து, ஆதலின், அகப்பாடல் உயிரிகள் பிறந்ததற்கும் பிறப்பிப்பதற்கும் அடிப்படையான இன்ப வுணர்வை - உலகின் மருங்கு அறாது வழிமுறை காக்கும் காமத்துடிப்பைப் - பொருளாகக்கொண்ட தலைமையுடையது என அறியத்தகும். புலவனுக்கு மதம் எனப்படுவது ஆண் பெண் காதலே. அக்காதல் இலக்கியத்தின் வற்றா ஊற்றிடங்களுள் ஒன்று. கவிதை யெண்ணத்தை உருவாக்கும் சார்புகளுள் ஒன்று எனக் கவிஞனுக்கும் காதலுக்கும் அமைந்த நட்பினை எடுத்து மொழிவர் ஆங்கிலப் பேராசிரியர் ஆர்போர்டு2. சங்கப் புலவோர் தாம் மெய்யாகக் கண்ட இவ்வுலக மனப்பட்டவர். ஆதலின், உலகம் நீடுவாழ உயிர்க்கொடை செய்யும் காமம், அன்னவர் நெஞ்சினைக் கொள்ளை கொண்டதும், தமிழ்ப் பாடலுக்குத் தலைப்பொருளாயதும் வியப்பாமோ! தமிழ்த் தொல்லிலக்கணன் தொல்காப்பியன் அகத்திணையின் இயல்பு தெரிவிக்க, அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என இயல் நான்கு வகுத்துள்ளனன். புறத்திணையின் இயல்பு தெரிவிக்கவோ, அவனால் எழுதப்பட்ட இயல் ஒன்றே. சங்கப் பெருஞ் சான்றோர் கபிலர், ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினார்: விரும்பியவர் அவனுக்கெனத் தாமே குறிஞ்சிப்பாட்டு ஒன்று இயற்றினார். இஃது ஓர் அகத்திணைப்பா. கபிலர் புறம் பாடாது அகம் பாடிய நோக்கம் என்ன? தமிழினத்தின் அறிவுச் சின்னம் அகத்திணைப் படைப்பு; தமிழ்மொழியின் தனி வீற்றினை அயல் மொழியான் உணரவேண்டுமேல், அவனுக்கு முதலில் கற்பிக்கவேண்டும் பொருள் அகப்பாட்டே என்று அவர் உள்ளிருப்பர். புலவர் பாராட்டிய புலவர் கபிலராதலின், வேற்று மொழியிற் பெறலரும் தமிழ்க் கூறுகளை, அறியவும் அறிவுறுத்தவும் வல்லார் அவரன்றி யார்? ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது எனக் குறிஞ்சிப் பாட்டுக்குத் துறைக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலியது என்று இறையனார் அகப்பொருள் உரையாளர் குறிக்கின்றார். ஒண் தீந்தமிழின் துறை வாய் நுழைந்தனையோ என்று திருக்கோவை பாடும்.3 ஈண்டெல்லாம் தமிழ் என்னும் சொல் அகத்திணைக்கு மறுபெயராய் நிற்றல் காண்க. ஒரு மொழியின் பெயர் அம்மொழி பெற்றிருக்கும் இலக்கியப் பல்வகையுள் ஒருவகை இலக்கியத்திற்கு மட்டும் பெயராய்ச் சிறப்பித்து ஆட்சி செய்யப்படுமானால், அவ் விலக்கியவகை அம்மொழியிலல்லது பிற எம்மொழியிலும் காண்பதற்கில்லை என்பதுதானே கருத்துரை. இதனால் உலக மொழிகளுள் தமிழ்மொழியின் ஒரு தனிச்சிறப்பும், தமிழிலக்கிய வளத்துள் அகத்திணையின் முதற்சிறப்பும் விளங்கித் தோன்றும். தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன். (பரிபா: 9) தள்ள வாராக் காதற் பொருளின் இலக்கணம் கூறும் தமிழை ஆராயாதவரே, மலையிடத்து நிகழும் களவொழுக்கத்தை ஓர் ஒழுக்கமென ஏற்றுக்கொள்ளார் என்று குன்றம் பூதனார் காரணம் கூறிக் கழறுவர். பிற மொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உடையனவே யன்றி, மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணம் கண்டவையல்ல. தமிழ் மொழியோ எனின், முவ்விலக்கணமும் நிறைந்தது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத அறிவுக் குறையுடையார் காதற் களவைக் குறைகூறுவர் எனவும், தமிழை ஆய்ந்தவர் களவு நெறியை உடன்படுவர் காண் எனவும் மேலைப் பரிபாட்டால் தெளிகின்றோம். தமிழின் தன்னேரின்மைக்கு அகப்பொருள் இலக்கணம் கண்டது காரணமாம் என்பது மேலும் வலியுறும். பாண்டிநாடு பன்னீராண்டுப் பஞ்சம் நீங்கிச் செழித்த பின், பாண்டியன் தமிழ்ப்புலவர்களைத் தேடிக் கூட்டிவரச் செய்தனன் என்றும், எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் வல்ல புலவர்களே நாட்டிற் காணப்பட்டனர்; பொருளதிகாரம் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அது கேட்ட பாண்டியன், என்னை! எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேம் எனின், இவை பெற்றும் பெற்றிலேம் எனக் கவன்றான் என்றும், இறையனார் அகப்பொருளுரையில் ஒரு வரலாற்றுக் கதை வருகின்றது. பின் நடந்தது என்ன? ஆலவாய்ப் பெருமான் அருளால், அறுபது சூத்திரம் கொண்ட அகப்பொருள் நூலைப் பெற்றான் பாண்டியன் எனவும், இது பொருளதிகாரம் என்று மகிழ்ந்து உரை வகுப்பித்தான் எனவும் அறிகின்றோம். பொருளதிகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய வேந்தனுக்குத் தொல்காப்பியம் போல முழுப்பொருளதி காரத்தை இறையனார் அருளிச் செய்யாததையும், அகப் பொருள் நூல் பெற்ற வேந்தன் தானும், புறப்பொருள் நூலும் கிடைத்திருப்பின் என் மகிழ்ச்சி பெரிதாயிருக்கும்; இறைவன் இவ்வருளுக்குப் போற்றி என்று ஓர் அமைதிக் குறிப்பேனும் சொல்லியிருக்கலாம்; அங்ஙனம் சொல்லாததையும், இது பொருளதிகாரம் என்று முழு நிறைவு கொண்டதையும் எல்லாம் எண்ணுங்கால், பொருள் என்பது பண்டு அகத்திணையையே நினைப்பித்த சிறப்புநிலை புலப்படும். அகப் பாடல் இயற்றுதற்கு, நிலத்தின் காலத்தின் இயற்கையறிவு வேண்டும். மரஞ் செடி கொடி பறவை விலங்குகளின் தன்மைக் கல்வி வேண்டும். அஃறிணை யுயிர்களின் இன்பப் புணர்வை, மக்களின் இன்பப் புணர்வோடு தரஞ்செய்து பார்க்கும் சீர்மை வேண்டும். காதல்வாய்ப் பழகும் இளநெஞ்சங்களின் தூய எண்ண நாடிகளைக் கற்பனையால் அளந்து கவின்செய்யும் மனப்பதம் வேண்டும். சங்க இலக்கியத்து அகத்திணைப் பாடற்றொகையும், அகம் பாடினோர் தொகையும், புறத்திணையினும் மும்மடங்கு மிக்கிருத்தலை மதிக்குங்கால், சங்கச் சான்றோர் அகம் பாடுவதையே புலமைக்கிடனாகப் போற்றினார் என்ற கருத்து வெளிப்படுமன்றோ? டாக்டர் வரதராசனாரும் டாக்டர் தனிநாயக அடிகளும் சங்க இலக்கியத்தின் இயற்கைப் பகுதிகளைத் திறம்பட ஆராய்ந்துள்ளனர். இயற்கையை இயற்கைக்காகவே பாடும்நிலை - அதனைத் தனிப் பொருளாகக் கொண்டு கருத்துரைக்கும் துறை - சங்க காலத்தில் இருந்ததில்லை என்றும், மக்களின் ஒழுகலாற்றிற்கும் சிறப்பாகக் காதலொழுக்கத்திற்கும் பக்கப் பொருளாகப் பாடும் சார்பு நிலையே இயற்கைக்கு அன்றை இலக்கியத்தில் இடமாய் இருந்தது என்றும், அவ்விருவரும் தத்தம் நெறியால், அறுதியிட்டுரைப்பர். இவ்வகைக் காரணங்களைக் கூட்டிப் பார்க்கும்போது, சங்க இலக்கியத்தில் அகத்திணைப் பொருள் பெற்றிருக்கும் மேம்பாட்டினை மட்டுமோ அறிகின்றோம்? சங்க காலப் பண்பை ஆராய்குநர் முதற்கண் ஆராய வேண்டுவது அகத்திணை என்பதும், அகத்திணையைக் கற்று ஓர்ந்து நுணுகி ஒரு தெளிவு பெற்றாலல்லது. பண்டைப் பெருந்தமிழினத்தின் நாகரிகச் சால்பினை நாம் கண்டவர்கள் ஆகோம் என்பதும் புலனாகவில்லையா? II என் அகத்திணை ஆராய்ச்சிக்குச் சங்கத்தொகைப் பனுவல்களே கருவியாம். 2381 சங்கப் பாடல்களுள் 1862 அகத்திணை நுதலுமவை. இத்தொகை பின் வருமாறு: அகநானூறு(முழுதும்) 400 பாடல்கள் நற்றிணை ... 400 பாடல்கள் குறுந்தொகை …. 401 பாடல்கள் ஐங்குறுநூறு ... 5 00 (129,130ஆம் பாடல்கள் தொலைந்தன) கலித்தொகை ... 149 பரிபாடல் ... 8 (22 பாடல்களுள்) பத்துப்பாட்டு ... 4 (10 பாடல்களுள்) ------------ கூடிய அகப்பா ... 1862 ------------ அகநானூறு நற்றிணை குறுந்தொகை என்ற முதன் மூன்று தொகைகளும், தொகை முறையில் ஒன்றுபோல் வனவே. இவற்றுள் அடங்கிய பாட்டுக்களைப் பாடினோரும் பலர். அவர் பாடிய அகத்துறைகளும் பல. இங்ஙன் ஒத்த அமைப்புடையவை ஒரு தொகையாகாது. மூன்று தொகைகள் ஆயதற்குக் காரணம் அடிக்கணக்கே என்பது அறிந்த செய்தி. 4 முதல் 8 அடியுள்ள பாக்கள் குறுந்தொகைப் பட்டன. 9 முதல் 12 அடிப் பாக்கள் நற்றிணையாயின. 13 முதல் 31 அடிப் பாடல்கள் நெடுந்தொகை என்னும் அகநானூறாக அமைந்தன. பாடினோர் அடிக் கணக்கை மனத்தில் வைத்துப் பாடவில்லை என்பதும், அடியெல்லை வகுத்துக் கொண்ட திறம் தொகுத்தோர்க்கு உரியது என்பதும் நம் நினைவிற்கு வேண்டும். கடலால் கறையானால் அயல் நாகரிகத்தால் தமிழ் மக்களின் பேணாப் பெரும் பேதைமையால், ஐயகோ! அழிந்து போய நூல்கள் அளவிலவே; எஞ்சிய சில நூற்பாடல்களையேனும் தேடித் தொகுக்க வேண்டும், தொகுத்துக் காக்கவேண்டும் என்னும் துடிப்பு அன்றொருநாள் எழுந்தபோது இத் தொகை நூல்கள் உருவாகின. சிதறிக்கிடந்த தனிப்பாக்களுக்கு நூல் வடிவருளிய நன்மக்கள் அனைத்துப் பாடல்களையும் ஒரு தொகையாக்கின், பெரிதாய் விரிந்து பரவலற்று மீண்டும் அழியினும் அழியும் என்று அஞ்சிய நல்லச்சமே, தொகை பலவாயதற்குக் காரணம் என்று கருதலாம். பாடினோர் அடியளவை நினைந்திலர் எனினும், அடியின் சின்மையானும் பன்மையானும், ஓராற்றால் பொருளாட்சி வேறுபடக் காண்கின்றோம். அடி பலவாய அகநானூற்றில் உரிப்பொருளைக் காட்டிலும் முதற்பொருள் கருப்பொருள் களான இயற்கை பலபடப் புனையப்பட்டுள்ளது. இப் புனைவுகள் நிறந்தீட்டவல்ல ஓவிய வனப்பின. கருத்தை உளங் கொளச் சொல்லுமளவில் அமையாது. கண் கொளவும் சொல்ல விரும்பும் புலவன் தக்க புறத்தோற்றம் அமைப்பான். அப்போது அடிகள் பலவாய்விடும். பன்மலர் பூத்தாலன்ன காதலியைப் பிரிந்த காதலன் பொருளீட்டச் செல்லும் வழி, கொலைஞரும் கள்வரும் விலங்கும் வெப்பமும் நீங்காத நீரில் வெஞ்சுரம் என்று சுட்டச் சில்லடிகள் போதுமா? நினைத்த வினையை இடையூறு கடந்து இனிது முடித்த தலைவன் தலைவியின் நினைவோடு வரும் வழி, நீர் நிரம்பி நிலமறையப் பூப்பொதுளிப் பக்க மெல்லாம் பசுமை இலங்கக் கலைமான் பிணைமானோடு துள்ளித் திரியும் முல்லைக்காடு என்று சொல்ல, அடிகள் பல வேண்டுமன்றோ! தலைவனுடன் போகிய மகளுக்கு இரங்கும் தாய், சிறுமியின் மேனிமென்மை, மனத்திண்மை, தான் அவளை வளர்த்த ஓவியம், தன்னிடம் ஒரு சொற் சொல்லாது சென்ற அன்பின்மை, சுரநெறியின் அச்சமும் எல்லாம் ஒருங்குதோன்றப் புலம்புங்கால், பாட்டு நெடும் பாட்டாகிவிடும். ஓர் ஊரை ஒரு நாட்டை ஓர் அரசனைப் பாட்டுப்படுத்த முனைந்த புலவனுக்குத் தொடர்பான சில வரலாற்றுக் கூறுகள் கண்முன் நிற்கின்றன. அவற்றைச் சுருங்கச் சொல்லுதற்கும் அடிகள் பலவேண்டும். அரசியல் வாழ்க்கை வாழ்ந்த பரணர் நக்கீரர் கல்லாடர் மாமூலர்தம் அகநானூற்றுச் செய்யுட்களின் நெடுமைக்கு இதுவே காரணமாம். மகட்போக்கிய தாயிரங்கல், வினைமுற்றி மீளுந் தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறல், இடைச் சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சினைக் கழறல் என்பனபோன்ற சில துறைகளும், முதல் கரு உரி என்ற முப்பொருளின் முழுக் காட்சியும், போர்க்களச் செய்தியும், பிற அகத்தொகைகளினும் அகநானூற்றிற்றான் பொலிந்து தோன்றுவ. இப்பொருள் மாட்சி அடி நீட்சியால் ஏற்பட்டது. அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்ற மறுபெயர் இக்குறிப்பை உட்கொண்டதாகும். 9-12 அடி யெல்லைப்பட்ட நற்றிணைத் தொகையில், முதல் கரு உரி என்ற மூன்றும் பெரும்பாலும் தன்னொத்து விளங்குதலைக் காண்கிறோம். வரலாற்றுச் செய்திகள் நீண்டு போகாமல் அடக்கமாகக் குறிக்கப்பட்டுள. நெடுந்தொகை போல விரிவும் குறுந்தொகைபோலச் சுருக்கமும் இன்றி, இடைநிகர்த்தாய் அளவுபட அமைதலின், நல் என்ற அடை இத்தொகைக்கு வழங்கப்பட்டது. 4-8 வரையான குறுந்தொகைச் சிற்றடிகள் முதலும் கருவும் நன்கு புனையப் பெரிதும் இடந்தரா. உரியோ அகப்பாட்டில் கட்டாயம் இடம் பெறவேண்டும் பொருள் ஆதலின் இத் தொகைக்கண் உரிப்பொருள்கள் முதலாட்சி பெறலாயின. இயற்கைப் பொருள் அழகு காட்டுவது. அவ்வழகினை இலக்கியத்திற் காண இயற்கைபற்றிய அறிவு வேண்டும். காதல் என்னும் உரிப்பொருளோ இயல்பிலே இன்பம் ஊட்டும் மெலிய உணர்ச்சியாதலின், அத் தொகைகளுள் உரிப்பொருள் சிறந்த குறுந்தொகையை முதற்கண் பலர் கற்பாராயினர். பலர் கற்கும் நூலாகத் திகழ்ந்தமையின், உரையாசிரியர்களும் இத்தொகையிலிருந்தே பெரிதும் மேற்கோள் காட்டுவாராயினர். சுருக்கம் எளிமை இனிமையோடு இருந்தமையால், அகப்பாடல்களைத் தொகுக்க முயன்ற சங்கச் சான்றோர், முதன்முதல் குறுந்தொகையைத் தொகுத்துத் தொகைப் பயிற்சி பெற்றனர். அகம் என்னும் ஒரு பொருள் நுதலிய, ஆசிரியம் என்னும் ஒரு பாவால் ஆகிய 1200 பாடல்களையும் ஒரு தொகையாக்க வேண்டும்; அங்ஙனம் ஆக்காது, அடிக்கணக்கை அளவாகக் கொண்ட காரணம் என்ன? எட்டடி வரையுள்ள பாடல்களில் உரிப்பொருள் சிறந்தும், பன்னிரண்டடி வரையுள்ள பாடல்களில் முதல் கரு உரி ஒத்தும், முப்பத்தொன்றடி வரை யுள்ள பாடல்களில் முதல் கரு உரி விரிந்தும் நிற்றலை மேலே விளக்கினோம். ஆதலின் முவ்வகைப் பொருளாட்சியே முவ்வகை அடிக்கணக்கிற்கு ஏதுவாயிற்று என்பது என் துணிபு. இத்துணிபிற்கு எடுத்துக்காட்டாக மூன்று தொகையிலிருந்தும் கபிலர் பாடல்களையே தருதும்:- குறுந்தொகை - 153 குன்றக் கூகை குழறினும் முன்றிற் பலவின் இருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் அஞ்சுமன் அளித்தென் னெஞ்சம் இனியே ஆரிருட் கங்குல் அவர்வரியிற் சாரல் நீளிடைச் செலவா னாதே. 5. நற்றிணை - 353 ஆளில் பெண்டிர் தாளிற் செய்த நுணங்குநுண் பனுவல் போலக் கணங்கொள ஆடுமழை தவழுங் கோடுயர் நெடுவரை முடமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம் கல்லுழு குறவர் காதல் மடமகள் கருவிரல் மந்திக்கு வருவிருந் தயரும் வான்றோய் வெற்ப சான்றோ யல்லையெங் காமங் கனிவ தாயினும் யாமத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானை வெஞ்சின வுருமின் உரறும் அஞ்சுவரு சிறுநெறி வருத லானே. 11. அகநானூறு - 82 ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கிற் கோடை யவ்வளி குழலிசை யாகப் பாடின் னருவிப் பனிநீ ரின்னிசை தோடமை முழவின் துதைகுர லாகக் கணக்கலை யிகுக்குங் கடுங்குரற் றூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டு யாழாக இன்பல் லிமிழிசை கேட்டுக் கலிசிறந்து மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவள ரடுக்கத் தியலி யாடுமயில் விழவுக்கள விறலியிற் றோன்று நாடன் உருவ வல்விற் பற்றி யம்புதெரிந்து செருச்செய் யானை சென்னெறி வினாஅய்ப் புலர்குர லேனற் புழையுடை யொருசிறை மலர்தார் மார்பன் நின்றோள் கண்டோர் பலர்தில் வாழி தோழி யவருள் ஆரிருட் கங்கு லணையொடு பொருந்தி ஓர்யா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே. 18. திருக்குறட் காமத்துப்பால் அகப் பொருளைச் சங்கத் தொகை நூல்களினும், நனி சுருங்கிய இரண்டடிகளால் கூறும். இச் சிறு வெள்ளடிகள் முதற்பொருள் கருப்பொருள்களைச் சிறிது புனையவும் இடந்தாரா என்பது வெளிப்படை. ஆகலின் திருவள்ளுவர் உரிப்பொருளே பொருளாகக் காமத்துப்பாலை யாத்துள்ளார். திருக்குறள் - காமத்துப்பால் கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. (1100) கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள. (1101) அகப்பாட்டின் அடி நீளநீள இயற்கைப் புனைவுக்கு இடமுண்டு என்றும், அடி சுருங்கின் அப்புனைவு சுருங்கிப் போம் என்றும் அடியாராய்ச்சியால் நாம் தெளிகின்றோம். ஐங்குறு நூற்றுக்கும் கலித்தொகைக்கும் தனித்தனி ஐந்து புலவோர் ஆசிரியர் ஆவர். இவ்விரு நூலும் குறிஞ்சித் திணை முல்லைத்திணை மருதத்திணை நெய்தற்றிணை பாலைத்திணை என ஐவகை உட்பிரிவுகள் திணையடிப்படையில் கொண்டவை. உருத்திரசன்மனார் தம் நுண்மதியால் அகநானூற்றுக்கும் ஐவகைத் திணைப்பாங்கு வகுத்துத் தந்துள்ளார். ஐங்குறு நூற்றுப் பாக்கள் 3-6 அடி யெல்லையன. இவ்வடிச் சிறுமையால், இந்நூலும் குறுந்தொகை போல உரிப்பொருளையே சிறக்கப் பாடுகின்றதெனினும், குறுந்தொகைச் சுவைக்கு ஐங்குறுநூறு ஈடாகாது. குறுந்தொகை பலர் யாத்த பாடலின் தொகுதி. வேறு வேறு காதற்றுறைகளின் மேல், இருநூற்றுக்கு மேற்பட்ட புலவர்களின் அறிவுக்கூறு ஆங்குச் சுவைசெய்யக் காண் கின்றோம். அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு கலித்தொகை என்ற அகத்தொகை ஐந்தினுள்ளும், ஐங்குறு நூற்றுக்குத் தான் தக்கார் ஒருவரால் துறைகளும் நுண்மைகளும் நயம்படக் காட்டப்பட்டுள. அகவிலக்கியத்தை நாட வேண்டும் நெறி யாது? எந்நெறி நாடினால் பாடியோன் கருத்துச் சிறக்கும்? என்பதுபற்றிய அறிவை, இத் துறை நயங்கள் நமக்குக் கற்பிக்க வல்லன. இந்நூல் போலவே நடையாலும் பொருள் நுணுக்கத்தாலும் இவ்வுரையும் மிகப் பாராட்டற் பாலது. இவ்வுரை இல்லையாயின், இந்நூற்பாக்களிலுள்ள உள்ளுறை யுவமம் முதலியனவும் மற்ற அருமை பெருமைகளும் நன்கு புலப்படா.... பழைய உரையில்லாத செய்யுட்களுக்கு உள்ளுறையுவமம் முதலியவற்றைப் புலப்படுத்தி ஏதோ ஒரு வகையாக உரையெழுதி இதனுடன் பதிப்பிக்கலாம் என்ற விருப்பம் சில சமயம் எனக்கு நிகழ்ந்ததுண்டு; நிகழ்ந்தும் இந்நூலையும் இவ்வுரையையும் உற்றுநோக்க அவ்விருப்பம் அடியோடே மாறிவிட்டது என்று பதிப்பாசிரியர் டாக்டர் உ.வே.சா. மொழிகுவது இவ்வுரைக் குறிப்பின் தனித்தன்மைக்கு ஒரு பாராட்டு. பிற நான்கு அகத்தொகையிலும் காணப்பெறாத் தனிக் கூறு கலித்தொகையில் காணத் தகும். அகத்திணையாவது கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என எழுபாற் படுவது. ஐந்திணைக்குரிய பாடல்களே ஏனைத்தொகையில் உள. ஏழு திணைக்குரிய பாடல்களையும் கொண்டிலங்குவது கலித் தொகையே. கைக்கிளை பெருந்திணைச் செய்யுட்கள் சங்க விலக்கியத்து மிகச்சில. அச்சில தாமும், கலித்தொகை ஒன்றிற்றான் காணப்படுவ. அகத்திணை மாந்தர்களின் இனிய இன்னா உணர்ச்சிகளையும் உரையாடல்களையும் உள்ளங் கிளருமாறு இலக்கியப்படுத்தற்குக் கலிப்பாவின் துள்ளொலி மிக இசைவதாகும். ஏறு தழுவி வரைந்து கொள்ளுதல் என்னும் முல்லைத் துறைப் பாக்கள் கலித்தொகையிலன்றிப் பிற தொகை நூல்களில் காணுமாறில்லை. வெறியாட்டு, மகட் போக்கிய தாயிரங்கல் என்ற துறைப்பாக்களோ கலித்தொகையில் இல்லை. பரிபாடல் இருபத்திரண்டு பாடல் கொண்ட தொகை நூல். இவை தெய்வம், காதல், நீர்விளையாட்டு என்றின்ன சில பொருள் பற்றியவை. இவற்றுள் 6, 7, 10, 11, 12, 14, 16, 20 என்ற எண்ணுடைய எட்டுமே அகப் பரிபாடல்கள். இவை 32-140 அடியெல்லை கொண்டவை. அகநானூற்றுப் பாடல் 31 அடியோடு முடிவது என்பது ஈண்டு நினையத்தகும். வைகைப் புதுப்பெருக்கையும், நீரோட்டத்தையும், வகைவகையான காதலர்தம் ஊடல் விளையாட்டையும், நீளத்தொடுத்தற்குப் பரிபாடலின் அடி நீட்சி வேண்டற்பாலது. மருதத்திணை பெரும்பாலான அகப் பரிபாடல்களின் உரிப் பொருளாம். பத்துப்பாட்டு நூலில், அகஞ் சார்ந்தவை நான்கே. முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை என்ற இந்நான்கும் 101-301 அடிக்கு உட்பட்டவை. குறிஞ்சிப்பாட்டு நிரல்பட இனிதாகக் களவொழுக்கத்தை விரித்துச் சொல்லும். வேற்றுப்பொருள் இதனகத்துச் சிறிதும் விரவவில்லை. பிற மூன்று பாட்டுக்களிலும் உரிப்பொருட் பகுதி குறைவாக வருதலின், அவ்வாசிரியர்கள் அகப்பொருளைத் தலைக்கீடாக வைத்துப் புறப்பொருளைச் சிறப்பித்தனர் என்று கொள்ளலாம். நெடுநல்வாடை அகப்பாட்டன்று என்பது நச்சினார்க்கினியர் முடிபு. இம்முடிபே இன்றுவரை புலவர்தம் வழக்காறாயிற்று. இது தவறுடைத்து என்றும், நெடுநல்வாடை மாசில் அகப்பாட்டே என்றும் ஆசிரியர் நக்கீரரை ஆராய்வுழி நிறுவியுள்ளேன். III பேராசிரியர் சீனிவாச அய்யங்கார் தமிழ் வரலாறு, என்னும் ஆங்கிலப் பெருநூலில் அகப்பாடல்களை வரலாற்று நோக்கம்பட ஆராய்ந்தார். பதிப்பின் வேந்து டாக்டர் உ.வே. சாமிநாதையர் தம் குறுந்தொகைப் பதிப்பில், அகப் பொருள் குறித்து ஓர் இருபது பக்கம் கொண்ட நூலாராய்ச்சி காணப்படும். இவ்வாராய்ச்சி அகவிலக்கிய மெல்லாம் தழுவிய நிறையுடையதன்று; குறுந்தொகையளவில் அமைந்த செறிவுடையது; எனினும், உ.வே.சா.வின் சங்க நூற்பதிப்பும் பிற நூற்பதிப்பும் எம்போலும் ஆய்வியல் மாணாக்கர்க்கு இத்துணை தான் பயன் சுரப்பன என்று அளவிட்டுரைக்க முடியுமா? பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளையின் பழந்தமிழர் நாகரிகம், புலவர் இளவழகனாரின் பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை என்ற நூல்கள் அகத்திணை பற்றியன எனினும், இடைக்காலத்திய திருக்கோவைப் பாடல்களை விளக்கிப்போம் அளவில் அமைந்தன. டாக்டர் மு. வரதராசனார் நெடுந்தொகை விருந்து குறுந்தொகை விருந்து என்பன போன்ற தலைப்பு நிலையில் ஒழுங்குற எழுதிய நூல்கள் பல. இவையும் ஒவ்வொரு தொகைநூல் அளவில் நின்ற ஆராய்ச்சி என்பது பெயர் தன்னானே விளங்கும். கலித்தொகைச் சொற் பொழிவுகள், அகநானூற்றுச் சொற்பொழிவுகள், ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள் என்ற வகையில் பல்லோர் ஆற்றிய பல பொழிவுகள் தொகுப்பாய் நூல்வடிவம் பெற்றுள. இவ்வெல்லாம் சங்கப் பனுவல்களை எளிமை செய்து மக்களிடைப் பரப்பும் தமிழ் வளர்ச்சி நோக்கத்தில் தோன்றிய பொது வெளியீடுகள். ஆராய்ச்சியொளி ஆங்காங்கு மின்னும். எல்லா அகத்தொகைகளுக்கும் இப்பொழிவுகள் உளவேனும், திணை துறை புலவர் என்ற எவ்வகையான் நோக்கினும், அவை சால்புடையன அல்ல. ஒவ்வொரு தொகையையும் பிரிவு பலவாக்கிக் கொண்டு பேசினோர் மிகப் பலராவர் என்பது நினைவுகூரத் தகும். அகத்திணை மேலவாய் இதுகாறும் முன்னையோர் எழுதியவை ஆராய்ச்சி முற்றா எனினும், அவற்றிடைக்கண்ட ஒளிச் சிதறல்கள் சில; என் அறிவினைக் கிளறிய கருத்துக் கருவிகள் சில; வழுவற்க என்று துணி வோட்டம் தந்த வழுக்கிடங்கள் சில. இவற்றை அடிக்குறிப்பிற் காணலாம். ஆராய்ச்சி முன்னோடிகளுக்குப் பின்னோடிகள் எவ்வகைப் புதுமைக்கும் கடப்பாடுடையர். எனைத்தானும் அகத்திணையை ஆராய்ந்தார்க்கெல்லாம் நன்றியன். உயர்ந்த பதிப்புக்களால் தமிழ்த் தொண்டு ஆற்றிவரும் சைவ சித்தாந்த மகா சமாசம் எட்டுத்தொகை பத்துப் பாட்டுக்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரால், ஒரு பெருந்தொகையாக்கி 1940இல் வெளியிட்ட அடக்க மூலப் பதிப்பு ஆராய்ச்சிப் பெருஞ்சாலைக்கு ஒரு கைகாட்டி. இப் பதிப்பகத்துச் சங்கப் புலவர்கள் அகரவரிசையாக அமர்ந் துள்ளனர்; பலதொகையினும் புக்குக்கிடந்த ஒருவர்தம் பாடல்கள் அவர் பெயரின்கீழ் ஒருங்கு சேர்ந்துள்ளன. பழம் புலவரைப் பற்றிய திறனாய்வுக்கு இப்பதிப்பு இணையற்ற வழித் துணை. அகத்திணையின் முழுத் திறங்காண இதுபோன்ற பல்வகைப் பதிப்புக்கள் வேண்டும் என ஆய்வுக்கிடையே எனக்குப்பட்டது. குறிஞ்சித்திணை முல்லைத்திணை என்றாங்கு, திணைத் தலைப்புக்கொண்டு பாடல் தொகுத்த திணைப் பதிப்புக்கள் என்ன, துறை நோக்கம்பட ஒரு திணைக்கு அமைந்த பாக்களையெல்லாம் ஓரிடப்படுத்திய துறைப் பதிப்புக்கள் என்ன, தலைவன் தலைவி தோழி எனக் கூற்றுக்கள் அடிப்படையில் ஒருவர்க்கு உரிய செய்யுளெல்லாம் ஒருங்கு தொக்க கிளவிப் பதிப்புக்கள் என்ன ஆக்கப் பதிப்பீடுகள் வரின், பதிப்பேருழவர்கள் பல்குவர்; ஆராய்ச்சிவளம் பெருகும். IV ஒரு நூலின் செல்நெறியறிந்து கற்குங்காலை கற்பார்க்கு ஆசிரியன் கண்ட புதிய உண்மைகளின் வன்மையும் வரம்பிகவாத் திண்மையும் விளங்கித் தோன்றும். சிலவற்றை விரித்துச் சொல்லுவானேன், சிலவற்றைச் சுருக்கிச் சொல்லு வானேன், சிலவற்றைச் சொல்லாதே விடுப்பானேன் என்ற கூறுகள் தெளிவாகும். நாட்பட்ட கருத்தாயிற்றே, பலர் கட்டிய கருத்துக்கெல்லாம் அடித்தளமாயிற்றே என்று மலையாது அடிதொட்டு ஆராய்ந்த ஆழம் புலப்படும். பின் வரும் ஆய்நெறிகள் என் நூலைக் கற்கும் அன்பர்களின் நினைவுக் குரியவை. 1. சங்க இலக்கியத்து அகத்திணை பற்றிய 1862 பாடல்கள் அனைத்தையும் ஒரு சேர வைத்து ஆராய்ச்சிக்கு மேற் கொண்டதூஉம் இதுவே முதன்முறை. அவ்வனைத்தும் ஒருவரால் ஆராயப்படுவதூஉம் இதுவே முதன்முறை. ஆதலின் எனது ஆராய்ச்சி, பரப்பால் முழு நோக்கும் பார்வையால் ஒருநோக்கும் செலுத்தப்பெற்றது. 2. சங்க இலக்கியத்தில் களவுப் பாடல் இவ்வளவு, கற்புப் பாடல் இவ்வளவு, ஒருதுறைக்கு அமைந்த பாடல் இவ்வளவு என்றும், ஒரு புலவன் இயற்றிய பாடல்களுள் இவையிவை இவ்வளவு என்றும் எண்ணிச் செய்த ஆராய்ச்சி இது. இவ்வகைக் கணக்கு செவ்விய சில முடிபிற்கு வேண்டப்படும். 3. தமிழ்மொழிக்கண் தோன்றிய அகப்பாடல்களில் இன்று தொன்மையானவை சங்க அகப் பாடல்களே. இவை முதன்முதல் எழுந்தவையல்ல. எனினும், அகத்திணையின் பொருட்பாங்கினைக் காட்டுக்களால் விளங்க அறிந்து கொள்வதற்கு இவையல்லது வேறு இலக்கியச் சார்பில்லை. அகவிலக்கணத்தில் ஒரு தெளிவு பிறக்க, அகவிலக்கியத்தை ஆராயவேண்டும். அகவிலக்கியத்தில் ஒரு தெளிவு தோன்ற அகவிலக்கணத்தை நாட வேண்டும். இங்ஙன் வித்தும் மரமும், மரமும் வித்தும் போல, இலக்கண இலக்கியங்களின் உறவிருத்தலின், இரண்டும் ஒரு நிலையில் வைத்து ஆராயப் பட்டாலல்லது அகத்திணைத் தெளிவு முற்றத் தோன்றாதாகும். ஆதலின், அகத்திணையின் பாகுபாடு, அகத்திணையின் தோற்றம், அகத்திணையின் குறிக்கோள் என முதற்கண் மூன்றியல் வகுத்துக் கொண்டேன். வகுத்து, ஐயங் களைந்து திரிபு அகற்றி, வழிவந்த பிழைத்தடங்களைப் புரட்டி, என் அறிவிற் பட்டாங்கு, அகத்திணை நுண்மைகளைப் பன்மாணும் புலப்படுத்த முயன்றுள்ளேன். சங்க அகப்பாக்கள் பின்னெழுந் தவையேனும், போதிய சான்றளிப்பன என்பது ஆராய்ச்சிக் கிடை விளங்கலாயிற்று. 4. அகத்திணையாராய்ச்சி இலக்கியம் இலக்கணம் என்ற இரு நெறிப்படும். மேற்சுட்டியாங்கு இலக்கிய நெறிப்பட்ட ஆராய்ச்சிக்குச் சங்கப்பாடல்களே தொன்மை சான்றவை. இலக்கண நெறிப்பட்ட ஆய்வுக்குப் பழம் பெருந் தொல்காப்பியம் உண்டு. இந்நூல் தானும் தமிழ் மொழியில் தோன்றிய முதல் இலக்கண நூலன்று என்பதும், இதுவரை கிடைத்துள்ள தமிழ் நூற்கெல்லாம் காலத்தால் மூத்த முதன்மையுடையது என்பதும் நினைவு கொள்ளவேண்டும். தொல்காப்பியம் என் ஆய்வுக்குத் தனிப்பொருளன்றேனும் இன்றியமையாத பற்றுக் கோடாதலின், வேண்டுழி வேண்டும் நூற்பாக்கள் ஆளப்பட்டுள. 5. தொல்காப்பியத்தின் உரையாளர்கள் தம் உரைக் கிடையே சுட்டிப் போந்த அகத்திணைக் குறிப்புக்கள் சிலபல. அவற்றின் திறம் நாடிப் பொருந்துவன கொண்டுள்ளேன். 6. அகத்திணைக்குப் பாடுபொருள் காதலாதலின், காதல் உள்ளத்தோடு இயைந்ததாதலின், இந்நூலாராய்ச்சி பெரும்பான்மை உளவியல் பிடித்துச் செல்வதாகும் என்று. குறிக்கொள்க. நெஞ்சக்களத்து விளையாடுங் காதலை ஆய் பொருளாகக் கொண்டவர்க்குப் பாலுளக் கல்வி - ஆண் பெண் காமம் பற்றிய பாலறிவு - தெரிய வேண்டும். மேலைநாட்டுப் பால்நூற்களிலிருந்து சிற்சில மேற்கோள்களை இந்நூலிடைக் காணலாம். பிறநாட்டு அறிஞர்கள் ஆராய்ச்சி மதுகையாற் கண்ட பாலியல் மாண்பெல்லாம் தமிழ் அகவிலக்கியத்துப் பண்டும் உண்டு எனக் காட்ட முனைதல் (ஒருவர்க்குக் குற்றமின்றேனும்) என் உட்கிடையன்று. அகத்திணைக்கு அடித்தளமாம் காதற்கூறுகள் இற்றைய பாலியலறிஞர்க்கும் உடன் பாடாவனவே என்று விளக்குமுகத்தால் அம் மேற்கோள் கள் வேண்டப்பட்டன. 7. என் ஆராய்ச்சிக்குத் தலையாய நெறி உளவியல் மேற்றாகலின், அகப்பாட்டின் இலக்கிய வனப்பை ஈண்டுப் பெரிதும் கூறிற்றிலன். அகப்புலவர்களை ஆராயுங்காலும் காதல் மாந்தரின் பாலுணர்ச்சிகளைப் புலப்படுத்தும் ஆற்றல் அன்னோர் எவ்வளவு உடையவர் என்பது குறித்தே விளக்கம் செய்தேன். 8. அகத்திணையின் அடிக்கூறுகளையும் அகச் சான்றோரின் பால்பாடுந் திறத்தையும் தெளிவித்தற்கு வேண்டுந் துணையே இயற்கை யாராய்ச்சி இந்நூலகத்து வருவதாகும். V இனி நூலினுட் புகுந்து, அகத்திணையின் தொகைவகை முறை தோற்றங்களையும், பிறர் கருத்தின் தகவு தகாமை களையும். புலமையின் ஆழ அகலங்களையும் சீர்பெற ஓர்ந்து காண்பதற்கு முன்னர், வரும் இயல்கள்தோறும் அமைந்து கிடக்கும் பொருட்பொதிவைக் குறிப்பாக இவண் எழுதுவன். 2. அகத்திணைப் பாகுபாடு என்னும் இயலில், அகத் திணையின் முழு வனப்புத் தோன்றக் காணலாம். இத்திணை எழுவகைப்படும். இவ்வகைகளுக்கு நிலப்பிரிவு காரணமன்று; காதல் மாந்தரின் மனப்பாங்கு - பாலொழுக்கமே - காரணமாம். அகத்திணையும் ஐந்திணையும் ஒன்றல்ல. ஒரு பொருட் கிளவிகள் அல்ல; ஒன்றெனக் கருதிய முதற்பிழை பல பிழைகட்குத் தாயாயிற்று. அகத்திணையின் உயிர்நாடி காதலோரின் உள்ளப் புணர்ச்சியல்லது பிறிதில்லை. ஐந்திணைக்குரிய களவு கற்பு நெறிகளின் பொதுவியல்பு, பல்வேறு துறைகளுக்குக் காணப்படும் பாடற்றொகை, ஒவ்வோர் துறையைச் சிறந்து பாடிய புலவோர்கள், கைக்கிளை பெருந்திணைக்கு வகுத்த துறைச் சின்மை பற்றிய கருத் தோட்டங்களை அறிவீர். தலைவனுக்கு ஒரு தோழனும் தலைவிக்கு ஒரு தோழியும் ஐந்திணையில் வரும் காரணமும், வெறியாட்டு, அலர், அறத்தொடு நிற்றல் துறைகளின் செந்நலமும் விளங்கும். தலைவியின் உடன்போக்குக்கு அவள் தன் தாய்முன் நிற்க அஞ்சும் அச்சமே காரணமாம். உணர்ச்சியுடைய களவுக் கைகோள் ஒப்ப உணர்வுடைய கற்புக் கைகோளும் இலக்கியத்துக்கு ஏற்ற பொருளாகப் புலவரால் போற்றப்பட்டது. தலைவனது வண்டுத்தன்மையைச் சான்றோர் உடன்பட்டிலர் என்பதை வாயில் மறுத்தல் வாயில் நேர்தல் என்ற துறைகள் காட்டும். இன்ன பொதுப்பட்ட ஆய்வுகளை இவ்விரண்டாவது இயலிற் கண்டுகொள்க. 3. அகத்திணைத் தோற்றம் என்னும் இயற்கண், அகத்திணை தோன்றிக் கூர்ந்த வரலாற்றைச் சமூக, நில, உளவியல்கள் பற்றிய அடிப்படையில் காட்டுவன். சங்க இலக்கியம் அகத்திணைக்குத் தொடக்க இலக்கியம் அன்றேனும், தோற்றப் பழமையை நோக்கத் தொன்மை பிந்தியதேனும், யான் மேற்கொண்ட அகவொழுக்க ஆராய்ச்சிக்கு வேண்டிய சான்றூட்டம் நல்கவல்லது. பழந் தமிழினத்தின் எண்ணம் செயலெல்லாம் வாழும் உலகியல் நோக்கின. அகத்திணைக்கு பாடுபொருளான பால்வேட்கை தமிழ் மன்பதையின் வாழ்வுக்கோளொடு முற்றும் இயைந்தது. அகவிலக்கிய மாளிகைக்கு வேண்டும் கட்டுமானப் பொருள்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்தே கொள்ளப்பட்டவை. களவுமுறை நாடெங்கும் காணக்கிடந்த ஓரொழுக்கமாகும். அதற்குத் தமிழ்ச் சமுதாயம் ஊட்டமொடு ஒப்புதல் அளித்தது. ஒவ்வொரு கற்பும் களவின் வழிப்பட்டதுவே என்றும், களவின் வழிவந்த கற்பே தான் சிறப்பினது என்றும் பலர் கொண்டிருக்கும் கருத்து தமிழர் நெறி என்க. களவின்வழி வராது பெற்றோர் தாமே முடித்த மரபுத் திருமணங்கள் சமுதாயத்தாலும் சான்றோராலும் மேலாகவே மதிக்கப்பெற்றன. பெண்ணொருத்தி குமரிமை கழிந்து மனைவிமை எய்தினாள் என்பதனைக் காட்டும் செய்குறியே காரணமாம். சிலம்பு கழித்தலும் மலரணிதலும் பண்டு நடைமுறையில் இருந்த காரணங்களாவன. பழந்தமிழோர் நிலத்திணைக் காட்சியும் அறிவும் மிக்கவர். அன்னவர் நிலனோக்கும் உலக வாழ்வையே கண்ணியது. அகத்திணைத் தோற்றத்தில் சமய சாதிகளுக்கு என்னானும் இடமில்லை என்பது தெளியத்தகும். அகத்திணை யிலக்கியத்துத் தலைவன் தலைவியாகப் பாலைத்திணை மக்கள் பாடப்பெறவில்லை. சங்க காலத் தமிழகத்துக்குப் பிறநாடு களோடு கடல் வாணிகம் நன்கு இருந்தும், இவ்வாணிகங் கருதி ஆண்மக்கள் தலைவியரைப் பிரிந்திருந்தும், கடற்பிரிவை ஒரு சிறந்த பிரிவு வகையாகக் கொண்டு பாலைத்திணையில் புலவர்கள் பாடத் தவறியது ஏனோ? அற்றைத் தமிழினர் அஃறிணை உயிர்களின் இன்பச் செய்கைகளை உயர்திணைக் காதற் கண்ணோடு பார்த்தனர். அன்னோர் காதலெண்ணத்தின் ஓர் இழையாகவே இயற்கை ஓடிக்கிடந்தது. தமிழினத்தின் நெஞ்சியல் அல்லது உள்ளியல் அகத்திணைக்குக் கருவை வழங்கிற்று எனவும், அக்கரு பருத்துப் பெருகிப் பரந்து வளர்வதற்கு வேண்டும் ஊட்டங்களைத் தமிழ்ச் சமுதாயமும் தமிழ்நிலமும் தமிழ்நிலத்துப் பருவ காலமும் உதவின எனவும் நாம் அறிவோமாக. அகத்திணையை ஈன்று புறந்தந்த தமிழ்த் தன்மையை இம் மூன்றாவது இயல் காட்டும். 4. அகத்திணைக் குறிக்கோள் என்னும் இயலகத்து, கைக்கிளை பெருந்திணை ஐந்திணைப் பகுப்புக்களின் அழகிய நோக்கங்களை உணர்வீர். கைக்கிளையும் பெருந்திணையும் அகத்திணையாக எண்ணப்படுதலின், இவை ஐந்திணையோடு ஒத்த தரத்தனவே. ஏழு பாலொழுக்கங்களையும் அகம் என்ற பொதுப் பெயரால் எண்ணித் தொகுத்தற்கு ஒரு பொதுத் தன்மை உண்டு. தடுமாறு காட்சியால் ஆணிடை எழுந்த பாலுணர்ச்சியின் நிலையா மனப்பதத்தைப் புலப்படுத்துவது கைக்கிளையின் உட்கிடை. இதனால் கண்டானுக்கும் காணப்பட்டாளுக்கும் யாதொரு மாசும் பழியும் இல. கைக்கிளையாவது அகத்திணையின் முதிராக் குறுங்கரு என்றும், ஓரேருழவன் போல ஒரே துறைகொண்டு ஒரு திணையாயிற்று என்றும் அறிய வேண்டும். வலிந்து பற்றிய புணர்ச்சியே பெருந்திணை என்று இதுவரை கூறிவரும் கருத்து அடிப்பிழை. தூய காதலர்களிடை அளவுகடந்து போய் சில பால்வினை களைப் புலப்படுத்துவதே பெருந்திணையின் உட்கோள். உள்ளம் புணர்ந்த காதலர்களும் உடல்புணரும் காமக் கூட்டங்களை நீட்டியாது மதித்தொழுக வேண்டும். பெருந்திணையாவது அகத்திணையின் முதிர்ந்து வீழ்கரு என்றும், இத்திணைக்கு உரிய துறை நான்கும் தனிநிலை யுடையனவல்ல. சில ஐந்திணைத் துறைகளின் சார்புடையனவே என்றும் நினையல் தகும். ஐந்திணையே அகத்திணையின் இயல்பான வளர்கரு. இத் திணையில் வரும் பலவகைத் துறைகள் எளிய மெல்லிய இனிய சால்பின. மக்களது இயல்பும் திரிபுமாகிய பலப்பல பாலோட்டங்களையும் பாலுறவுகளையும் முழுக்கச் சொல்லுவதாக ஐந்திணை தன்மேலிட்டுக் கொள்ளவில்லை; மேலிட்டுக் கொண்ட காதற்செய்திகள் கூட ஒரு நிலையைக் கடந்து செல்லுவதற்கு இடங் கொடுக்கவில்லை. காமக் கிளர்ச்சியை உள்ளத்தோடு உடம்பிடை உணரவல்ல பருவ மக்களின் தூய மனக்கூறு மெய்க்கூறுகளைப் புலனாக்குவதே இத் திணையின் நெறி. ஐந்திணை ஒரு தொடர்கதை அன்று; நெஞ்சம் ஒன்றிய காதலர் பற்பலர் வாழ்க்கைக்கண் வேறு வேறு காலத்து வெவ்வேறு சூழ்நிலையில் ஆங்காங்கு நிகழ்ந்து வரும் தனி நிகழ்ச்சிகளின் ஒரு கோவை; அவ்வளவே, ஐந்திணைக்கண் தலைவனது பரத்தமை கூறல் பொருந்துமா? எனின், அது சமுதாயத்தின் பொதுமனப்பாங்கினைப் பொறுத்தது. காம வாழ்க்கையில் காதலன் காதலி தம் உள்ளப்புணர்வே அகத் திணையின் உயிர்நாடி. இந் நாடி கொண்டு காமக் காதலைப் புனைவதே அதன் குறிக்கோள். 5. அகத்திணைப்பாட்டு என்னும் இயலுள் அகத் திணையில் பொருளுக்கு மட்டும் வரம்பன்று; பொருளைச் சொல்லும் முறைக்கும் வரம்பு உண்டு என்பது கற்கத்தகும். வரம்பிட்ட பாற்பொருளும் வடித்திட்ட இலக்கியமுறையும் இரண்டறக் கலந்த ஒருமைப்பண்பே அகம் எனப்படும். பொருட் கூற்றிலும் அதனைப் புலப்படுத்தும் நெறியிலோ சிறிது வழுவினும் போதும். ஒருபாட்டு யாப்பு வழுவாத போதும் அகப் பாட்டன்று என்று தள்ளப்படும். சுட்டிப் பெயர்கூறா இலக்கணமும் அதன் உட்கருத்தும், அகம் என்ற சொல்லின் வழக்குப் பொருளும், அச் சொல் இலக்கியப் பெயராய் ஆளுதற்கு உரிய தகையும், தமிழ்ச்சங்கம் இருந்த உண்மையும், அகத்திணைப் படைப்புக்கு அச்சங்கம் உதவிய அறிவுத் திறமும் இவ்வைந்தாம் இயலால் விளங்குவன. 6. அகத்திணைப் புலவர்கள் என்னும் இயலின்கண் முன்னை இயல்களிற் காட்டிய ஆராய்ச்சிக் கூறுகளின் விளக்கமாக, அகப்புலவோர்தம் செய்யுட்களை நுணுக்கங் காண முயல்வேன். பாடல் எண்ணளவுப்படி அகப்புலவர்களின் எண்ணளவுப்பட்டியலை முதற்கண் காணலாம். பொருளிலும் எவ்வளவோ அடக்குமுறை, அதனை ஆளவேண்டும் முறையிலும் எவ்வளவோ அடக்குமுறை கொண்ட அகத்திணை யிலக்கியம் கவிஞர்களின் கற்பனைச் சிறகை ஓடிக்காதா? கவிதை ஆர்வத்தை ஒடுக்காதா? எண்ணப் புதுமையைக் கொல்லாதா? என்று ஐயப்படலாம். அகவிலக்கண விதிகளை மரபெனக் கொண்டு அறிவறிந்து அடங்கிப் பாடிய காரணத்தினாற்றான், சங்கப் புலவர் எல்லார்தம் பாடல்களும் காலங் கடந்த ஞாலமதிப்பைப் பெற்று வழிவழி வாழ்கின்றன. காதற்பாட்டு மரபுக்கும் உரிமைக்கும் இடைநிலைப்பட்ட மெல்லிய ஒரு சம நிலையை வேண்டிநிற்கும். இச்சமநிலை ஒரு பாற் கோடினாலும் அப்பாட்டிற்கு நல்லுருத் தோன்றாது என மணமும் அறங்களும் என்ற நூலாசிரியர் பெத்தரண் ரசல் மொழிகுவர்4. இம்மொழிவு தமிழ் அகச் செய்யுட்களுக்கு நல்விளக்கமாம். முந்நூற்றெழுபத்தெட்டு அகப்புலவோருள் முப்பதின்மர் தாம் இவ்வியலில் ஆராய்ச்சிப் பட்டனர். பலர் விலக்குண்டதற்கு என்ன முறையும் குறையும் கூறமுடியும்? முப்பதினோர் ஆராய்ச்சிக்கே இவ்வியல் பிற இயல்களினும் நீண்டுவிட்டது. இனியும் நீட்டிப்பது நூலுக்கு வனப்பளிக்காதன்றோ? அற்றைக் கல்விமுறை கற்றார்க்கெல்லாம் அறிவுச் சமநிலையும் புலமைச் செம்மையும் கொடுத்த பெற்றியதாக விளங்கிற்று. ஆதலின் சங்கப் புலவர்களை அவர் பாடிய பாடல் எண்ணிக்கையைக் கொண்டு அளத்தல் பொருந்தாது. அதனால் பத்தினும் குறையப் பாடியோர் சிலரும் என் ஆய்வுக்கு உரியோராயினர். பாடல் பல பாடினோர் ஆய்வுக்குப்பொருள் பெரிதும் உதவுவோர் ஆதலின், அப் பலரைக் கூறாது விடுகை சாலாது. இப் பலருள்ளும் சிலர் விடுபட்டனர். மாமூலனார் முப்பது அகம் பாடிய புலவர், வரலாற்றுச் செய்திகளைத் தொடுத்துச் சொல்லும் இயல்பால், இவர் தம் அகப்பாக்களும் தடைப்பட்டு இயலுவன. நக்கீரர், பரணர் பாடல்களை ஆயுங்காலை, இவ்வகைப்பட்ட போக்கு விரிவாகக் காட்டப்பட்டிருத்தலின், மாமூலனார் விட வேண்டியவராயினார். முப்பதின்மரே இவ் வாறாவது இயற்கண் ஆராயப்பட்டவர் எனினும், முன்னியல் களில் வேறு சில புலவர்களும் ஆராயப்பட்டமை நினைவுக் குரியது. 7. அகத்திணைக் கல்வி என்னும் முடிபியலில், பாலன்பு, பெண்ணுரிமை, பாற்கல்வி என்ற முப்பெருங் கருத்துக்கள் மீண்டும் வலியுறுத்தப்பெறும். அகந்தோய்ந்த மெய்யின்பத்தை மெய்யின்பமாகப் போற்றியது சங்ககாலம். காமம் என்னும் சொல் இழிகாமத்தைக் குறித்தது பிற்கால வழக்கு. பொதுவான மெய்வேட்கையைக் குறிக்கவே இச்சொல் பண்டு வழங்கிற்று. அகவிலக்கியம் உள்ளக் காதலோரின் பல்வேறு தூய பால்நிலை களைப் பாட்டுப் படுத்தும். பழந்தமிழ்ச் சமுதாயம் பெண்ணினத்தை நல்லினமாகக் கொண்டாயிற்று. காதற் செய்கையிலும் இல்லறத்திலும் உரிமையளித்த பெற்றி இதற்கு ஒரு சான்று. அகமாந்தர்களுள் தலைமை தலைவிக்கே என்றும், பிற மாந்தர்கள் தலைவி வழிப்பட்டவர்களே என்றும், தலைவியின் பண்புகள் முதலாவது கற்புடைத்திண்மையே என்றும், பிற பண்புகள் கற்பினைச் சார்ந்து பொலிவனவே என்றும், நாம் தெளிய வேண்டும். தமிழ்ச்சான்றோர் காதற் காமத்தை ஒரு தனிப் பொருளாகப் போற்றி ஒரு தனியிலக்கிய வகையே படைத்த நோக்கம் காதற்பருவம் புகும் இரு பாலார்க்கும் ஒழுக்கமுடைய காமக்கலையைக் கற்பிப்பதுவே என்பது என் துணிபு. கணவன் மனைவியின் இளமைப்பருவ உடற்புணர்ச்சி காதலொழுக்கத்தின் செவ்விய பாகம் என்பது அக நூலோர் துணிபு. உள்ளத்தோடு இயைந்த உடற் கல்வியைச் சிறப்பிக்கும் அகத்திணைப் பாற்கல்வி உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டல் என்பர் திருவள்ளுவர். VI அகத்திணை பற்றிய என் ஆய்வுரை புதுக்கூறுகள் கொண்டது என்று சொல்லிக்கொள்ள என் உள்ளம் விழைந்து நாணுகின்றது. அகத்துறைகள் முறையாகவும் முழுமையாகவும் இந்நூலில் ஆயப்பட்டுள. பொருளை வகுத்துக்கொண்ட பகுப்பும், நோக்கிய நோக்கும், காட்டிய சான்றுகளும், செய்த விளக்கங்களும், கொண்ட முடிபுமெல்லாம் தமிழின் மேல்வளர்ச்சிக்குப் புதிய ஊக்கந்தரும் முயற்சிகள் என்று கற்பவர் கருத்திற் படுமாயின், என் உள்ளம் உள்ளுள் உவக்கும். ஆன்லிச்சு என்னும் அறிஞன் பண்டை கிரேக்க நாட்டின் பால்வாழ்க்கை எனப் பெயரிய நூலின் முன்னுரையில் எழுதிய கருத்து பழந்தமிழகம் கண்ட அகத்திணையை ஆராயும் என் கருத்துக்குப் படியெடுத்தது போல இருப்பக் கண்டு வியந்தேன். முன்னுரையனைய இம் முதலாவது இயலைப் படித்து முடிக்கும் நீவிர். தம் முன்னுரை முடிவில் ஆன்லிச்சு வரைந்த நோக்கைப் படிமின்:- இம் முன்னுரையைப் படித்த நீங்கள் புலனின்பம் பற்றிய கிரேக்கக் கோட்பாட்டை வேண்டுமளவு அறிந்தீர்கள். இக் கண்கொண்டு இனிவரும் இயல்களில் கிரேக்க நாகரிகப் பண்பின் சிறந்த கூறுகளை அறிந்து கொள்வீர்கள். இந்நூலைக் கற்றபின், ஓரினத்தின் உறவைப் பெறுவீர்கள். அவ்வினம் பிற மக்களினம் போலாது. இன்பத்தை வாழ்க்கையின் அடிப்படை யாகக் கொண்டது; அவ்வின்பத்தை உயர்ந்த அறங்களோடு தழுவிக்கொண்ட அறிவுடையது; அதனால் பண்பட்ட வாழ்க்கையை ஞாலத்துக்குப் பரப்பியது; அவ்வினம் மனிதவினம் உள்ள எல்லாக் காலத்தும் பாராட்டத்தக்கது என்று கண்டு கொள்வீர்கள்5 அடிக்குறிப்புகள் 1. சங்க இலக்கியம், முன்னுரை. gXVI; சமரசப் பதிப்பு 2. Professor C.H. Herford: Shakespeare’s Treatment of Love and Marriage and other essays. p. 152. 3. ஒண் தீந் தமிழின் துறை - அகத்திணையின் துறை என்பது பொருள். அகமும் புறமும் தமிழின் துறைகளாவன என்று கோவையுரையாசிரியர் சொல்வது பொருத்தமில்லை. அகத்தையும் புறத்தையும் திணையெனச் சுட்டுவதே மரபும் முறையுமாம். 4. Love poetry depends upon a certain delicate balance between convention and freedom and is not likely to exist in its best from where this balance is upset in either direction. - Bertrand Russel: Marriage and Morals p. 62. 5. The reader will now have learnt enough of the Greek gospel of hedone (sensual pleasure) to be able to consider in following chapters the most important manifestations of Greek culture from this point of view. He will then make the acquaintance of a people which certainly like no other, make sensuality the basis of life, but which knew also how to combine this sensuality with hither ethics and thereby created a culture of life which mankind will admire until the end of all time. - Hans Licht: SEXUAL LIFE IN ANCIENT GREECE 2. அகத்திணைப் பாகுபாடு அகப்பொருள் புறப்பொருள் என்னும் தமிழ் நூல்வகை இரண்டனுள் சிறந்த அகத்திணையாய்வு இனிப் பன்முறையான் மேற்கொள்ளப்படும், ஆய்வுக்கிடை எத்தனையோ கருத்து மாறாட்டங்கள் வல்லவன் இட்ட முடிச்சுப்போலத் தோன்றி நம்மை மலைவிக்கின்றன; குழந்தைக்குப் போடும் புதிர்கள் போல நம்மறிவைச் சோதிக்கின்றன. கயிறு செய்வோன் முடிச்சோடு செய்வதில்லை. அதனைப் பயன்கொள்வோர் தம் அறியாமை யாலும் துணிச்சலாலும் முடிச்சுக்கள் பட்டு விடுகின்றன. புதிர்கள் போடுவார்க்கேனும் விளங்கவேண்டு மல்லவா? சிலர்க்குப் புதிர்கள் இடத் தெரியுமேயன்றி அவற்றை விடத்தெரியா. இங்ஙனமாக அகத்திணைக்குக் காலந்தோறும் ஏறிய முடிச்சுக்களும் பலவாயின. இப்படி முடிச்சுக்களை - கடும் புதிர்களைக் - கண்டு மலையாதும், இடையில் தோன்றிய முடிச்சு எடுத்துப் புதிர்விடுத்துப் போவதுதான் ஆய்முறை என்று மயங்காதும், ஆய்வாளன் அகத்திணை மூல இலக்கியத்தோடு நேரடி அறிவுத் தொடர்பு கொள்வானாயின், ஆண்டவனோடு நேரடி நெஞ்சுத் தொடர்பு கொள்ளும் அடியவன் போலச் செம் பொருள் காண்பான். மரபியல், நூலியல், அறிவியல் உளவியல் பற்றிச் சொல்லுங்காலைத் தம் முயற்சிக்கு ஏற்ப அகத்திணை ஐயங்கள் அகன்றொழியக் காண்பான். தொல் பழம் படைப்பான அகவிலக்கியத்தின் உள்ளங்காண முயலும் நமக்கு. இற்றைத் தமிழ் மொழியின், நாகரிகத்தின் வேறுபாட்டால் ஐயப்பாடு பல தோன்றுதல் இயல்பினும் இயல்பே. ஐயத்தோற்றம் உண்மைத் தோற்றத்துக்கு வழிகாட்டும் ஆதலின், அகத்திணைக் கல்வியாளர்க்கு உண்டாம் ஐயக்கூறுகளை முதற்கண் மொழிகுவல். (அ) அகத்தின் இலக்கணம் யாது? அகப்பாட்டு என்பது காதற் பாட்டாயின், காதற்றிணை என்று பெயர் வைத்திருக்கலாமே? அகத்திணை எனப் பெயரியதேன்? அகம் காதல் என்பன ஒருபொருட் பன்மொழியா? இடைக்கால உரையாசிரியர்களும் இக்காலப் புலவர் பெருமக்களும் அகத்திற்குக் கூறிவரும் இலக்கணம் தகவுடையதா? (ஆ) அகத்திணை எழுவகைப்படும் என்ற பாகுபாடு இசையுமா? இவ்வெண்ணிக்கைதானும் பிழையெனத் தோற்றவில்லையா? சங்கவிலக்கியத்து 1862 அகப்பாக்களுள் கைக்கிளைக்கு நான்கே. பெருந் திணைக்குப் பத்தே உரியவாகக் கற்கின்றோமே! கைக் கிளை பெருந்திணைகள் அகமாயிருப்பவும், சங்கச் சான்றோர் இவற்றைப் போற்றிப் பாடல் பல செய்யாமைக்கு ஏதுவென்னையோ? தமிழ் இலக்கிய மெல்லாம் அகம் புறம் என்னும் வகையிரண்டாய் அடங்கும் என்ற கருத்துரை ஏற்புடைத்தா? (இ) தமிழ்மொழிக்கண் அகத்திணை நூல் பிறத்தற்கு உதவிய சூழ்நிலைகள் யாவை? அகத்திணைக்கு விதிகள் வகுத்தார் யாவர்? ஒப்பற்ற அறிவு முனைவன் ஒருவன் இது விதி. இது மரபு என்று கற்பித்தருளினானோ? அன்றிப் பலர் கூடி ஆய்ந்த அறிவுக் காட்சியின் விளைவோ? அகவிலக்கியம் இலக்கிய வுலகிற்கு ஒரு தனித்தமிழ் ஞாயிறு எனவும், எண்ணம் நுண்ணிய தமிழறிவினோர் அகலக்கருதி ஆழநினைந்து படைத்தளித்த இலக்கியப் புதுக்கோள் எனவும் சொல்லி மகிழ்வோமேல். அன்ன புதுப் படைப்பினைச் செய்தற்கு உரிய நோக்கம் என்ன? அந்நோக்கம் அறவழிப்பட்டதா? தலைவன் தன் கற்புடை நல்லாளை அழவைத்துப் பரத்தை வேட்டம் நாடு கின்றான்; இந்த இல்லற வழுக்கலை ஒரு திணைப் பொருளாகக் கொண்டு அகத்திணை பாடுகின்றதே! இதுவா நோக்கம்? இதுவா அறம்? (ஈ) பாடுவார்க்கு ஏராளமான விதிகளை இம்மியும் வழுவலாகா மரபென விதிக்கும் அகவிலக்கணம் கற்பனை யூற்றுக்குக் கல்லாகாதோ? அறிவுக் கூர்மையை மழுக்கும் அரம் ஆகாதோ? அவை அக்கால அகப்புலவர்கள் தொல் காப்பியம் கூறும் அகவிதிகளை முழுதும் பின்பற்றினர் கொல்? முரணியனவும் பெருக்கியனவும் உளவோ? இவ்வாறு அகத்திணை குறித்து ஐயவினாக்களை அடுக்கிச் சொல்லுதலோ எளிது; அறிவொக்கும் விடைத் தெளிவு காண்பது அத்துணை எளிதன்றேனும், காண முயல்வதும் முயல்விப்பதும் இவ்வாராய்ச்சியின் பாடாகும். சங்க விலக்கியமே நாம் பெற்றிருக்கும் தமிழ் நூல்களுள் தொன்மை யான அகவிலக்கியம். இலக்கிய இலக்கண ஆராய்ச்சி, காதலர்கள் போல் தம்முள் பிரிந்து நில்லாதவை; பிரிக்க முடியாதவை; வலிந்து பிரித்தால் வளப்படாதவை. ஆதலின், அகவிலக்கியமும் அகவிலக்கணமும் சங்கநூற் செல்வங்களின் பெருந்துணை கொண்டு ஒருங்கு ஆராய்தற்குரியன. ஆயுந் தோறும் மேலெண்ணிய ஐயச் சிக்கல்கள் ஒருவாறு அறுபடக் காண்பீர். அகத்திணைப் பிரிவுகளின் அடிப்படை 1. கைக்கிளை 2. குறிஞ்சி 3. முல்லை 4. மருதம் 5. நெய்தல் 6. பாலை 7. பெருந்திணை எனப்பட்ட ஏழும் அகத்திணைப் பாகுபாடாம். இவற்றுள் குறிஞ்சி முதல் பாலை இறுதியாகிய இடைநின்ற ஐந்தும் ஐந்திணையென ஒரு கூட்டாக வழங்கப்படும். இப்பிரிவுகளுக்கு அடிநிலைக் காரணம் யாது? கைக்கிளையாவது ஒருதலைக்காமம் என்றும், ஐந்திணையாவது ஒத்த காமம் என்றும், பெருந்திணையாவது ஒவ்வாக்காமம் என்றும் அறிந்தோர் சொல்லுவர். இங்ஙனம் காமத் தன்மைகள் அடிப்படை ஆகுமாயின், ஐந்திணையை ஒரே பிரிவாகக் கொண்டு, அகத்திணைப் பிரிவுகள் மூன்றெனல் பொருந்துமே யன்றி ஏழெனல் பொருந்தாதுகாண். மேலும், கைக்கிளை பெருந்திணை என்னும் பெயர்க்குறிகள் தம் காமத்தன்மை சுட்டும் கை, பெரு, அடைகள் பெற்றுள. அது வொப்ப அன்புத்திணை என்ற பெயரன்றோ ஐந்திணைக்கு வருதல் வேண்டும்? ஐந்திணை என எண்ணடையிருத்தல் ஒக்குமா? ஆதலின் அகப்பிரிவுகட்குக் காமத்தன்மை அடிப்படையாகாது. தமிழ் அகத்திணை கூறும் பல்வேறு காதற் கூறுகள் தமிழகத்தின் பல்வேறு நிலக்கூறுகளைச் சார்ந்து எழுந்தவை என ஒரு கோட்பாடு உளது.1 நம் தாயகத்துப் பாலை என்று சுட்டிக் காட்டத்தக்க நிலப்பால் இல்லை (தொல். 947). குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நாற்றிணைகளுக்கே இயல்பான நிலப்பாங்குகள் உள. இதனால் நானிலம் என்பது உலகிற்கு ஒரு பெயராயிற்று. பாலைக்கு இயல்நிலம் இன்றேனும், திரிநிலம் உண்டு என்றும், காடும் மலையும் கோடைத் தீ வெப்பத்தால் தத்தம் பசுமை இழந்த திரிநிலையே பாலை என்றும் சிலப்பதிகாரம் நன்கு தெளிவுபடுத்தும். வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும். (சிலப். 15, 9599) ஒரு காலவேற்றுமையால் இரண்டு திங்கள் இயல்புமாறித் தோன்றும் நிலச்செயற்கையே பாலைத்திணைக்கு இடமாம். எனினும், நிலையா நீரில்லா நிலத்திலிருந்து நீடித்து நிலைக்கும் பன்னூறு பாலைப்பாடல்களை விளைவித்துக்கொண்ட சங்ககாலச் சொல்லேருழவர்களின் இலக்கிய உழவு அறிவின் கொழு முனைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இங்ஙன் பாலைத் திணைக்கு ஒருவகையான நிலம் உண்டென்று கொள்ளினும், கைக்கிளை பெருந்திணைகட்கு எவ்வாற்றானும் நிலம் இல்லை என்பது நூன்முடிபு. ஆதலின் எழுதிணை அகப்பிரிவு நிலவடிப் படை கொண்டது என்றலும் பொருந்தாமை காண்க. திணை ஏழாயினமைக்குக் காரணம் முக்காமத் தன்மையும் அன்று; நானிலப் பாங்கும் அன்று; எழுவகைக் காதலொழுக்கங் களே - உரிப்பொருள்களே - ஆம், என்று அறிவோமாக. இவ்வொழுக்கங்கள் தனி நிலைகொண்டவை; தம்முள் தொடர்பு வேண்டி நில்லாதவை என்பது நீள நினையத்தகும் ஒரு சிறப்பியல்பு. ஆதலாலன்றோ குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவை ஒத்த காமத்தன்மையால் ஒன்றாயினும், ஐந்திணை எனத் தனிநிலை குறிக்கும் எண்ணுப் பெயர் பெற்றன. குறிஞ்சி முதலாய குறியீடுகள் அவ்வந் நிலத்துக்கு உரிய மலர்களின் பெயர்களே என்றும், இப் பெயர்கள் பின்னர் உரிப்பொருள்களைப் புலப்படுத்தும் குறியீடு களாயின என்றும் கருதுவர் ஒரு சாரார்.2 அற்றன்று என மறுத்துக் குறிஞ்சி முதலாயவை புணர்தல் முதலாய உரிப் பொருள்களை முதற்கண் தருவன எனவும் பின்னரே மலர்களையும் நிலங்களையும் குறிக்கப் போந்தன எனவும் கருதுவர் மற்றொரு சாரார்.3 முதற்பொருள் எது? வழிப்பொருள் எது? எனத் துணிவதில் இன்னோர் மாறுபடுவர். இருவகைப் பொருளும் குறிஞ்சி முதலாம் சொற்களுக்கு முன்னோ பின்னோ உண்டு என்பதிலும், அகத்திணை யிலக்கணம் வகுத்த நாளில் இருபொருளும் வழங்கின என்பதிலும் இன்னோர் வேறு பட்டிலர். எனினும் கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் எழுதிணை என எண்ணுங்கால், குறிஞ்சி முதலாம் சொற்கள் தரும்; தரவேண்டும் பொருள்கள் என்ன? நிலமில்லாக் கைக்கிளை பெருந்திணை களோடு எண்ணப்படுதலின், இவற்றுக்கு நிலப்பொருள் செய்தல் ஆகாது; உ ரிப்பொருள் கோடலே முறை என்பது தெளிவு. ஐந்திணையுள் அடங்கிய ஒவ்வொன்றும் தனித்திணையாகக் கருதப்பட்டமையின், அவையப் புலவர்கள் ஐந்திணை மேலும் பாடாது ஆளுக்கு ஒரு திணையாக இலக்கியம் கண்டனர். மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன் கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு. எட்டுத்தொகையுள் ஐங்குறுநூறும் கலித்தொகையுமே பாடினோர் எண்ணிக்கை குறைந்த நூல்கள். ஆண்டும் திணைக்கொரு ஆசிரியரான செய்தியை - ஐந்திணையையும் ஓராசிரியன் பாடா முறையை - மேலை வெண்பாக்கள் அறிவிக்கும். பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி மருதனிள நாகன் மருதம் - அருஞ்சோழன் நல்லுருத் திரன்முல்லை நல்லந் துவனெய்தல் கல்விவலார் கண்ட கலி. பெருங்கடுங்கோ பாலைத்திணை (பிரிவு) ஒன்றனையே பாடிப் பாலை பாடிய என்ற சிறப்புப் பெற்றவர். ஒரு திணைக் குரிய உரிப்பொருளைப் பாடுங்காலும், எல்லாத் துறை மேலும் பாடாது ஒரு துறையளவில் பாடிநின்ற அகப் புலவர் பலர். வெறி பாடிய காமக்கண்ணியார் ஒரு துறை பாடிய சிறப்புப் புலவர். மேலும் முதல் கருப்பொருள்களைச் சிறிதும் கூறாதே உரிப்பொருள் மட்டும் கூறும் அகப்பாடல்களும் பலவுள. நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி அமைதற் கமைந்தநங் காதலர் அமைவில ராகுதல் நோமென் னெஞ்சே (குறுந். 4) உரிப்பொருள் ஒன்றே நுவலும் இவ்வனைய பாக்கள் பாலைத்திணை, குறிஞ்சித்திணை யெனச் செவ்விதின் பெயர் பெறுகின்றன. காரணம் திணைமையாவது உரிப்பொருளே பற்றியது. முதலும் கருவுமோ அப்பொருட்குத் துணைமையாம் அத்துணையே. ஆதலின் அகத்திணை எழுமைப் பகுப்பு காதலர்களின் கைக்கிளை புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் பெருந்திணை என்னும் காமவொழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று தெளியத்தகும். அகத்தின் இலக்கணம் என்னை? அகம் என்ற கிளவிக்குப் பொருள் என்னை? இவை இனித் தொடர்ந்து ஆயவேண்டுமவை எனினும், இப்போது ஆய்வு பெறுமாறில்லை. இடையே சிலபல அகச்செய்திகள் விளக்கம் பெற்ற பின்பு, இவ்வாய்வைத் தொடங்குவது தெளிவுக்கும் முடிபுக்கும் எளிமை செய்யும். அகத்திணையும் ஐந்திணையும் அகத்திணைப் படைப்பில் கைக்கிளை பெருந்திணை களைவிட ஐந்திணை பல்லாற்றானும் மேலாயது என்பதற்கு உறழ்கூற்று வேண்டா. அகத்திணைத் தொல்லாசிரியர் தொல்காப்பியர் கைக்கிளை பெருந்திணைகளின் பொருள் களை இருவேறு தனிச்சிறு சூத்திரங்கள் அளவில் (995, 996) அகத்திணையியல் இறுதிக்கண்ணே சொல்லி அமைகுவர். கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் (949) என எண்ணுங்கால் முதலிடம் பெற்ற கைக்கிளைகூடப் பொருள் கூறுங்கால் அவ்விடம் பெறாமை கருதத்தகும். கைக்கிளைக் குறிப்பே, பெருந்திணைக் குறிப்பே என்று இவ்விரு திணைகளின் சிறுநிலை தோன்ற அவற்றின் பொருட் சூத்திரங் களை முடித்துக் காட்டுவர். குறிப்பு என்ற சொற்பெய்வால் இவ்விரு திணைகள் விரித்துப்பாடும் பெற்றியவல்ல என்று சுட்டுவர். இதனால் தொல்காப்பியம் ஐந்திணையே அகத்திணை என்பதுபோல, ஐந்திணையின் இலக்கணக் கூறுகளைப் பலபட விரித்துரைப்பக் காணலாம். அகத்திணையியல் 55 நூற் பாக்களைக் கொண்டது. அகத்திணை எனப் பொதுப் பெயர் பூண்டிருந்தும், இதன் 50 நூற்பாக்கள் ஐந்திணையின் நெறிகளையே விரித்து மொழிதல் காண்க. களவியல் கற்பியல் பொருளியல் மெய்ப்பாட்டியல் எனப்படும் பிற நான்கு இயல்களுங்கூட ஐந்திணை நுவலும் அமைப்பினவாகவே உள. ஐந்திணைக் காதல் அறநலத்தது, உலகம் ஒப்புவது, மக்கட்கு இயல்வது, இலக்கியத்துக்கு இசைந்தது. இன்ன நன்னயங்களை நோக்கிச் சங்கப் புலமையினோர் ஐந்திணைத் துறைகளையே பெரிதும் பாடினர். தொல்காப்பியர் செய்தது போலக் கைக்கிளை பெருந்திணைகட்கு உரிய ஒதுக்கிடம் நல்கினர். இப்பாங்கின்படி, ஐந்திணை பெரிதும், ஏனை இருதிணை சிறிதுமாக இந்நூலிலும் ஆராய்ச்சிப்படும். ஐந்திணை இவ்வளவு மேலாந் தரத்ததெனினும், அகத்திணை ஐந்திணை என்ற சொற்கள் ஒருபொருட் பன்மொழியாகா என்பது அறிக. இவற்றை ஒன்றெனக் கருதியும், கைக்கிளை பெருந்திணைகளை அகத்தின் வேறெனக் கருதியும் வளர்ந்த எழுத்தெல்லாம் பெரும் பிழை. அகத்திணையின் கண் கைக்கிளை வருதல் திணை மயக்காம் பிறவெனின், கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவாய எழுதிணையினுள்ளும் கைக் கிளையும் பெருந்திணையும் அகத்தைச் சார்ந்த புறமாயினும் (பா. 4) என்னும் திருக்கோவை யுரையாசிரியர் கருத்துரை இப்பிழையிடங்களுள் ஒன்று. ஒருகுடிப் பிறந்த பல்லோருள் சிலர் சிறப்புற்றும் மற்றும் சிலர் சிறப்பின்றியும் இருத்தற்காக. அன்னோர் ஒரு குடிப்பிறப்புக்கு இழுக்குண்டோ? ஐந்திணை நோக்கக் கைக்கிளை பெருந்திணைகள் சிறப்பிலவாகலாம்; எனினும், அவ்விரண்டும் எழுதிணை எனப் பட்ட அகத்திணை யாதற்கு இழுக்கில்லை. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை யென்ப (தொல். 946) என்ற தொன்னெறிப்படி, அகத்திணை முதலாகவும் இறுதியாகவும் எண்ணுப்பெற்ற கைக்கிளை பெருந்திணைகளை அகத்தைச் சார்ந்த புறம் என்று கோவையுரையாசிரியர் குறிப்பது அடி முரணில்லையா? இவ்விரண்டையும் புறமாக்கிய அவர். அகத்தை என்ற சொல்லால் முழுதும் ஐந்திணையைத் தானே கருதிவிட்டார் என்பது புலப்படவில்லையா? கைக்கிளை பெருந்திணைகளின் பெருமைப்பாடு எவ்வாறாயினும், அவற்றை அகத்திணைப் பகுப்பினின்றும் தள்ள முடியா மைக்கும், ஐந்திணையோடு உடனெண்ணுதற்கும் குருதி யொப்பன்ன பண்பொப்பினை இவற்றிடைத் தமிழ் மூதாளர் கண்டிருத்தல் வேண்டும். அவ்வொப்பினைப் பின்னியல்களில் விரிப்பாம். இவ்விரண்டனையும் சேர்த்துக் கொள்ளாவிடின், அகத்திணை நகமற்ற விரல்போலவும், படியற்ற மனைபோலவும் முழுவனப்பில் ஒரு குறைவுடையதாகத் தோன்றும் என ஈண்டுக் குறிப்பிடல் போதும். ஏழுதிணைகளையும் ஒருங்கு சுட்ட வேண்டுங்கால், அகத்திணை என்னும் பொதுக் குறியீட்டை ஆளுதல் தொல்காப்பிய வழக்கு. புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது அகத்திணை மருங்கின் அளவுத லிலவே. (தொல். 1000) அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணம் திறப்படக் கிளப்பின் (தொல். 1001) அகத்திணைப் பொதுப்பெயரை ஐந்திணைப் பிரிவின் மறு பெயராகத் தொல்காப்பியம் ஆண்டதில்லை. மக்கள் நுதலிய அகன் ஐந்திணை (999) அன்பொடு புணர்ந்த ஐந்திணை (1037) என்றாங்கு உரிய பிரிவுப் பெயரால் விதந்து சொல்லும் நடை நினையத்தகும். அகன் ஐந்திணை என்ற பொதுவடையால், ஐந்திணை அகத்திணையுள் ஒருவகை என்பதும், அகக்கைக் கிளை அகப்பெருந்திணை எனப் பிறவகைகளும் உள என்பதும் கொள்ளக்கிடத்தல் காண்க. அன்பின் அகத்திணை களவெனப் படுவது என்னாது, அன்பின் ஐந்திணை களவெனப்படுவது என்று இறையனாரும், அகத்துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவி என்று கம்பரும் விழிப்போடு சொற்பெய்தலை ஒப்பு நோக்கவேண்டும். ஆதலின் கைக்கிளை பெருந் திணைகள் குறைந்த பாடல்கள் உடையனவே யெனினும், அகத்திணை ஆராய்ச்சியில் இடம்பெற வேண்டியவை என்பது தெளிவு. 1. ஐந்திணை - களவியல் - இயற்கைப் புணர்ச்சி அகத்திணையின் பெருங்கூறான ஐந்திணைக் காதல் களை இனி ஆராய்வோம். சங்க அகப் பாடல்களைச் சான்றாகக் கொண்டு ஐந்திணைத் துறைகளின் திறன் காண்போம். களவொழுக்கம் கற்பொழுக்கம் என ஐந்திணை இருபாற்படும் என்று பொதுவாகக் கூறினாலும், குறிஞ்சிக் களவு குறிஞ்சிக் கற்பு, பாலைக்களவு பாலைக்கற்பு, முல்லைக் களவு, முல்லைக் கற்பு, மருதக்களவு மருதக்கற்பு, நெய்தற்களவு நெய்தற்கற்பு எனத் திணைதோறும் இரண்டும் கொள்ளத் தகும். இங்ஙனம் கொள்வதால் களவுக்காதலும் கற்புக் காதலும் எல்லா நிலத்திலும் நிகழ்வனவே என்னும் உலக வழக்கம் பெறப்படும். காதலுக்குக் காரணம் காமப்பருவம் எய்திய நங்கை, தாய் ஏவற்படி தினைப் புனம் செல்கின்றாள். தோழியரும் உடன்செல்கின்றனர். முற்றிய கதிர்களைக் கவரும் கிளிக்கூட்டத்தைத் தட்டைக் கருவிகொண்டு வெருட்டுகின்றனர். அருவியாடியும் தழை கொய்தும் மலர் தொடுத்தும் வந்து அசோகந்தண்ணிழலில் அமர்கின்றனர் (குறிஞ்சிப் 39, 102). குமரப்பருவம் எய்திய நம்பி தன் வேட்டைநாயொடு மலையெலாம் சுற்றித் திரிகின்றான். பல் மணம் கமழும் தலைமாலை அணிந்த இவ்வேட்டுவக் குமரன் நங்கை இருக்குமிடத்துக்குத் தானாக வந்து சேருகிறான் (அகம். 28). தன் அம்பால் புண்பட்ட மதயானை இப்பக்கம் போந்ததுண்டோ? போக நீவிர் கண்ட துண்டோ? என்று மலரூதும் வண்டின் இசைக்குச் செவி கொடுத்திருந்த இளம் பெண்களை உசாவுகின்றான் (அகம். 388). அப்போது அவனுக்குக் காதற்குறிப்பு இல்லை. மார்பில் செங்கழுநீரும் தலையில் வெட்சிப்பூவும் ஆகத்துச் சந்தனப் பூச்சும் கையில் வில்லம்பும் கொண்டு முன்னிற்கும் இளைஞனுக்கு முன்னே இளமாதர்கள் நிற்கக் கூசினர்; வினாவுக்கு மறுமொழிய அன்னோர் நாவெழவில்லை. இதற்கூடே நம்பியின் கண்ணும் நங்கையின் கண்ணும் நட்புக்கொண்டன; காதலாடின; காமத்தீப்பற்றின (அகம். 48). கண்டதும் காதல் என்பது இதுவே. கண் தரவந்த காம ஒள்ளெரி (குறுந். 305) என்று குப்பைக் கோழியார் காமத்தின் பிறப்பிடமாகக் கண்ணைக் கூறுவர். கல்லொடு கல் சேர்ந்து தீ உண்டாவதுபோலக் கண்ணொடு கண்ணும் சேர்ந்து தீ உண்டாம்; அது காமத்தீயாம் என்று இப்புலவர் குறிப்பிப்பர். கல் பிறப்பித்த தீ பஞ்சு முதலான பற்று பொருள் இல்லை யாயின் வளராது. கண் பிறப்பித்த காமத்தீ தானேயும் வளர வல்லது என்பதை ஒள்ளெரி என்னும் அடையால் அறியலாம். கண்கள் கலந்தபின் காதலர்தம் உள்ளங்கள் கலக்கின்றனவா? முன்னரே உள்ளங் கலந்தமையைக் காட்டும் அறிகுறியா கண்கலப்பு? நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும். (தொல். 1041) ஒன்றுபட்ட உள்ளக்குறிப்பைத் தலைவன் பார்வை தலைவிக் கும், அவள் பார்வை அவனுக்கும் உரைக்கின்றன. ஒரு கருத்தை வாயாற் சொன்னால் வெளிப்படையாக நன்கு விளங்கும். வாயாற் சொல்லிக் கொள்ளுதல் காதலுலகிற்குப் பொருந்துமா? காதல் நோயை வளர்க்குமா? ஆதலின் காதலர்கள் உள்ளக் கருத்தைக் கண்ணாற் சொல்லிக்கொள்ப. அஃது அவர்கட்கு வாயாற் சொல்லிக் கொள்வதுபோலப் புரியும். வாயின் செயலைக் கண் செய்தலால், நாட்டம் இரண்டும் உரையாகும் என்பர் தொல்காப்பியர். காதற் களத்தில் கண்ணுக்குரிய மதிப்பு சிறிதும் வாய்க்கில்லை. வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல என்பர் திருவள்ளுவர். கண்தந்த காமம் என்பதற்காகக் காமத்துக்குக் கண் காரணமாய்விடுமா? வீரனைப்பெற்ற வயிறு (ஈன்ற வயிறோ இதுவே புறம். 89) என்றால், வீரன் பிறப்புக்கு வயிறு காரணம் என்று சொல்ல மாட்டோம். ஆதலின் உள்ளக் காமம் கண்ணில் வெளிப்பட்டது என்பதல்லது காமத்துக்கும் கண்ணுக்கும் பிறப்புத் தொடர்பின்று. பால் வேறுபட்ட ஆண்மையும் பெண்மையும் பார்த்ததும் உள்ளம் பறிகொடுத்துக் காமப் பித்தேறுதற்குக் காரணம் என்கொல்? இவ்வினா இன்னும் தீரா வினாவே. காதல் காரணம் என்று எளிதாகச் சொல்லி விடுகின்றோம். காதல் என்பதுதான் யாது? இதற்கு அறிவியலும் விடை கூற ஒண்ணாமையைக் கென்னத்து வாக்கர் பாலுடலியல் நூலில் ஒப்புகிறார்:- பாலுணர்வு பற்றி ஒரு பொருத்தமான கொள்கையை நாம் கூறுவதற்கியலவில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். பெண்ணொருத்தியைக் காண்கின்றான்; அவள் மொழியைக் கேட்கின்றான்; அவள் மணத்தை மோக்கின்றான்; அவள் மெய்யைத் தீண்டுகின்றான். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் போது உள்ளம் காமத்தின் கொள்கலம் ஆகின்றது. உடம்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை யெல்லாம் புணர்ச்சியிற்போய் முடிவடையும் காதலின் புறநிலைகளைக் கண்டு கூறுமளவே அறிவியல் செய்யக்கூடியது. அதன் தோற்றத்தை இது தெளிவாக்குமா? இல்லவே இல்லை.4 ஏராளமான இளைய ஆண்களும் பெண்களும் நாள்தோறும் சாலையிலும் சோலையிலும் ஒருவரையொருவர் காண் கின்றனரே; கண்டும், ஒருவன் யாரோ ஒருத்திமேல் காதல் கொள் கின்றான்; ஒருத்தி எவனோ ஒருத்தன்பால் கண்சாய்க்கின்றாள். பலரை விலக்கி ஒருவரைத் தேர்ந்து விரும்பும் இச்சிறப்புப் பார்வைக்குக் காரணம் இதுவென உயிரியல் நூலும் சொல்ல முடிவதில்லை. இஃது ஆய்வுக்கு உரிய அரிய சிக்கல் என்று நம் முன்னோரும் கருதினர். வாளாவிராது காரணங்காண முயன்றனர். ஆண் பெண் என்பன படைப்புத் தொடக்கத்து ஒரே ஒரு பொருளாம் என்றும், அன்று முதல் ஒன்றாய் இணையப் பாடுபடுகின்றன என்றும் காதலுக்கு விளக்கம் கூறுவர் பிளேட்டோ.5 இஃது உமையொரு பாகன், அருத்த நாரீசுவரன் எனச் சிவனுக்கு ஆண்பாதி பெண்பாதி உருவம் கற்பிக்கும் இந்துப் புராணத்தைப் போன்றது. ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப (தொல். 1038) உயர்ந்த பாலின் ஆணையால் - நல்லூழின் ஏவலால் - காதற் காட்சி நிகழும் என்பர் தொல்காப்பியர். கிழவன் கிழத்தியைக் காண்பான் என்றோ. கிழத்தி கிழவனைக் காண்பாள் என்றோ எழுவாயும் செயப்படு பொருளுமாகத் தொல்காப்பியம் நடை தொடுக்கவில்லை. முந்திக் காதலித்தவர் யார்? என்ற வினாவுக்கு இடம் வையாமல், இருவர் பார்வையும் ஒரே நேரத்தில் விழுந்தது என்ற காதலியல்பு புலப்பட, கிழவனும் கிழத்தியும் காண்ப என இருவரையுமே எழுவாயாக வைத்துக் காட்டும் நடைப்பாடு அறியத்தகும். இப் பாலாட்சியைச் சங்கப் புலவர்களாம் பேரிசாத்தனாரும் அம்மூவனாரும் ஒப்புப: பால்வரைந் தமைத்தல் அல்லது அவர்வயின் சால்பளந் தறிதற்கு யாஅம் யாரோ (பேரிசாத்தனார்;(குறுந். 366) பிறிதொன் றாகக் கூறும் ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே. (அம்மூவனார்; ஐங். 110) ஒரே பாடலின் ஆசிரியர் மோதாசனார் காதற் பாங்கை அழுந்த ஆராய்ந்தார். காதலராவார் வெவ்வேறிடத்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. முன்பின் முகமறியாப் புதியவர் களாதல் வேண்டும் என்பதில்லை. நாள்தோறும் பல்கால் பழகிக்கொண்டு வரும் ஓர் இளையானும் இளையாளும் என்றோ ஒருநாள் திடீரெனக் காதல் தோன்றப் பார்த்தல் இயல்பேயாம். ‘சிறுவன் சிறுமியாய் இருந்த பருவத்து இவ் விருவரும் தலைமுடி பற்றியிழுத்து அடித்துக் கொண்டனரே; செவிலியர் இடைமறித்து விலக்கவும் விடாது சண்டை யிட்டனரே; இன்றோ இணைந்த மலர்மாலை போல மணமக் களாக விளங்கக் காண்கின்றோம்; நல்லூழின் விளையாட் டன்றோ இது! என்று தலைவன் தலைவியைச் சிறுபருவம் தொட்டு அறிந்தோர் அவ்விருவர் தம் உடன் போக்கைக் கண்டு பாலாற்றலை வியக்கின்றனர். இவனிவள் ஐம்பால் பற்றவும் இவளிவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஏதில் சிறுசெரு உறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்னவிவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே. (குறுந். 229) மோதாசனாரின் இப்பாடல் பாலதாணையின் என்ற தொல்காப்பியத்துக்கு நல்விளக்கமாதல் காண்க. இளம்பூரணர் தொல்காப்பியத்தின் முதலுரையாசிரியர். இவர் உரை உள்ள உரைகளுள் ஏற்றமுடையது. ஒன்றே வேறே (1038) என்னும் நூற்பாவிற்கு, ஒருவரையொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சிவேட்கை தோற்றாமையின், பாலதாணையான் ஒருவரையொருவர் புணர்தற் குறிப்போடு காண்ப என்றவாறு என அரிய விளக்கம் தருவர் இளம்பூரணர். கண்டதும் காதல் - கண்ட முதற்பார்வையிலே காதல்கொண்டு விடுதல் - என்ற கோட்பாட்டை ஒருபால் மறுப்பர். ஆண் பெண் பாலர்களைச் சந்திக்கச் செய்வது விதியின் வேலையன்று. அவர்கள் முதன்முறை சந்திக்கலாம்; பலமுறை சந்தித்தும் இருக்கலாம். இச் சந்திப்பெல்லாம் பாலதாணையில்லை. முதல்நாள் முதற்பார்வை யிலோ, பின்னால் பல பார்வையிலோ, ஒரு பார்வையைக் காதலோடு பார்க்கச் செய்வதே விதியின் ஆணை என்று தெளிவிப்பர் உரையாசிரியர். இக் காதற்புணர்ச்சி - விதி கூட்டிய முதலுறவு - இயற்கைப் புணர்ச்சி என்று பொதுவாகப் பெயர் பெறும். தலைவனும் தலைவியுமாம் விதி முன்னரே உண்டெனினும் தோன்றாது, காலம் பார்த்து அடங்கியிருக்கும். காலமாவது இருவரும் காமம் நுகர்வதற்குரிய குமரப் பருவம். அப்பருவம் வாயாதார்க்குக் கண்ணில் காதல்நோக்கம் எழாது; பிறர் கண்ணில் எழுந்த காதல்நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் அறிவும் இராது. ஆதலின் அடங்கியிருந்த விதி, புணர்தற்குரிய இருவரும் ஆளான பின்னர்த்தான் வெளிப்படுவது முறையும் பயனுமாம். இதுகருதியே, தொல்காப்பியமும் இறையனார் அகப்பொருளும், காமப்புணர்ச்சி என்று இம் முதற் புணர்ச்சிக்குப் பெயரிட்டுள. இக்குறியீடு இயற்கைப் புணர்ச்சி என்ற குறியீட்டினும் விரும்பத்தக்கது. இதுவரை ஆராய்ந்த காமத் தொடர்புபற்றி இறையனாரகப் பொருள், திருக்கோவை யார்6 உரையாசிரியர்களும் தொடைவிடைபட எழுதியுள்ளனர். உள்ளப்புணர்ச்சியும் மெய்யுறுபுணர்ச்சியும் ஆண் பெண் உறவுக்குக் காதல் காரணம் என்றோம். காதலுக்குப் பால் காரணம் என்றோம். அறிதோறும் அறியாமை கண்டதல்லது என்ன விளக்கம் கண்டோம்? பாலாவது யாது? பாலதாணை என்பது என்? பால் கூட்டு வித்தற்குக் காரணம் என்ன? ஒத்த தலைவனும் தலைவியும் பாலதாணையால் காதற் குறிப்பொடு காண்பர் எனின், அவ் விருவரும் ஒத்தவர்களாக இருப்பதற்குக் காரணம் பிறிதுண்டோ? ஒப்பு என்பது எது? அஃது ஒரு பிறவியொப்பா? பல்பிறவி யொப்பா? இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியரென் கணவனை யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. (குறுந். 49) நினக்கிவன் மகனாத் தோன்றி யதூஉம் மனக்கினி யாற்குநீ மகளா யதூஉம் பண்டும் பண்டும் பல்பிறப் புளவால் கண்ட பிறவியே யல்ல காரிகை (மணிமே. 24, 56-9) என்று இலக்கியம் கூறுமாங்கு, தலைவன் தலைவியர் வழிவழிக் கணவன் மனைவியரா? இன்ன ஐயங்கள் நம் அறிவில் கிளைக்கின்றன. திருக்கோவை உரைப் பேராசிரியர் காதல் வாழ்க்கையில் விதிக்கு உயரிய மதிப்பு நல்கவில்லை. பாங்கற் கூட்டம் தோழியற் கூட்டங்களுக்குப் பாங்கனும் தோழியும் துணை யாவார் அத்துணையல்லது தலைவன் தலைவி காதலுக்குக் காரணமாகார் அன்றே; அதுபோல இயற்கைப் புணர்ச்சியில் விதி கூட்டுவித்த துணையல்லது அவர்தம் அன்புக்குக் காரணமாகாது என்பது அவ்வுரையாசிரியர் துணிபு; நிற்க. காதலர்தம் மனவொற்றுமையே அகத்திணையின் உயிர்ப் பண்பு. இவ் வொற்றுமையை உள்ளப் புணர்ச்சி என்று அகவிலக்கணம் கூறும். எவ்வகை அகத்திணைப் பாடலுக்கும் அகத்துறைப் பாடலுக்கும் உள்ளப் புணர்ச்சி இன்றியமை யாதது; புற நடையில்லாதது; இறைமை சான்றது. அகப் புலவர் இவ் வடிப்படைக்கு ஊறுபட யாதும் கூறார்; ஊறுபடா நிலையில் யாதும் கூறுவர். இப் பேருண்மை இவ் வாராய்ச்சி முழுவதும் நீள நினைய வேண்டுவது என்று குறிக்கொண்மின். ஆளான தலைவன் தலைவி உள்ளம் புணர்ந்தபின் உடற் புணர்ச்சிக்கு அவாவுதல் முறையே. மனம் ஒன்றிய காதலோர் உடல் ஒன்றுதற்குத் தக்க தனியிடம் தேர்வர். இடம் வாய்ப்பின் இன்பப்பாயல் கொள்ளப் பின் வாங்கார். பெற்றோரைக் கலந்து மேல்செய்வன செய்வோம் என்னும் அறிவு ஓடார். மண் சுழலினும் கடல் பொங்கினும் மலை பெயரினும் விண் வீழினும் அரசு விதிப்பினும் மக்கள் எதிர்ப்பினும், வருவது வருக என்று, அச்சம் அறியார். காதல் காதல் காதல், காதல் நீங்கிற் சாதல் சாதல் சாதல் என்னும் பேராண்மை கொண்ட இளைய உள்ளங்கள் பெற்றோர்க்கு அஞ்சியோ பிற அச்சங்கொண்டோ புணர்ச்சியைத் தள்ளிப்போட எண்ணா. இடம் வாயாமையின் புணர்ச்சி நிகழாதிருக்கலாம். இடம் வாய்த்தும் தாய்துஞ்சாமை நாய்துஞ்சாமை முதலான இடையூறுகளால் புணர்ச்சி தடைப்பட்டிருக்கலாம். உள்ளம் கலந்த சின்னாட்களில் திருமணம் நடைபெற்றிருக்கலாம். களவுக்காலத்து உடற் கூட்டுறவே இல்லை என்றும், அது கூடாது என்றும் கூறுவார் கொள்கை பிழையாம்; இயற்கை யுணர்ச்சிக்கு முரணாம். கற்பு எனப்படுவது காதலர்தம் மெய்த்தொடர்புக்குப் பின்வரும் ஒழுக்கமன்று. ஒருவரை யொருவர் உள்ளத்தால் நினைத்த அப்பொழுதே கற்பென்னும் திண்மை வேண்டப்படும். மெய்ப்புணர்வு பட்டபின், பெற்றோர் இசையாராயின், என்செய்வது? கற்புக் கெடுமன்றோ; அன்னோர் இசைவு தெரியும்வரை உள்ளம் புணர்ந்த அளவில் வைத்துக் கொள்வோம் என்ற பகுத்தறிவு உண்மைக் கற்புத்திறமாமோ? உள்ளத்தான் வேட்கை செல்லினும் மெய்யுற்றாராயிற்று என அறுதியிட்டுரைப்பர் இறையனாரகப் பொருள் உரையாசிரியர். ஆதலின் கற்புக் கருதி, களவில் மெய்யுறார் என்பது அறமாகாது. களவுக் காதலத்து மெய்யின்பம் துய்த்தமை பற்றிய அகப் பாடல்கள் பலவுள. மெய்யுறும் செய்கை இன்றாயின், இரவுக் குறி முதலான எத்துணையோ துறைகள் சிறந்த பயனிலவாய் ஒழியுங்காண். அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப்பொலிந் திலங்கும் எயிறுகெழு துவர்வாய் ஆகத் தரும்பிய முலையள் பணைத்தோள் மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு பேயும் அறியா மறையமை புணர்ச்சி. (அகம். 62) தலைவன் முதற்புணர்ச்சியை மீண்டும் நினையும் பாட்டு இது. மாநிறத் தலைவியின் செவ்விதழ் சுவைத்து, அரும்பிய மார்பையும் அகன்ற தோளையும் தழுவி நுகர்ந்த மறைத்தற்கரிய முதற்கூட்டுறவை நினைவு கொள்கின்றான். பேயும் நடமாட்டம் ஒடுங்கித் தூங்கும் நள்ளிரவில் துய்த்த களவுப் புணர்ச்சி என்று பெருமிதங் கொள்கின்றான். உள்ளப் புணர்ச்சிக்கு மறைவிடம் வேண்டியதில்லை. பேயும் அறியா நடுயாமம் வேண்டியதில்லை. ஆதலின் பரணர் இப் பாட்டில் களவுக் காதலரின் மெய்ம் முயக்கத்தைக் கூறுகிறார் என்பது வெளிப்படை. முன்பின் யாதொரு உறவும் முகவறிவும் இல்லாதார் உள்ளம் அன்புற்று உடல் இன்புற்ற காட்சியை ஒரு குறுந்தொகைப் பாட்டால் அறிகின்றோம். காதலன் உணர்ச்சி நிறைவில் காதலியை நோக்கி, இப்போது நம் உடல்களா கலந்தன? அன்புடை நெஞ்சந் தாம் கலந்தனவே (குறுந். 40) என்று நாகரிகமாக நலம் பாராட்டு கின்றான். 2. இடந்தலைப்பாடு தற்செயலாக ஒருநாள் கண்ட இருவர் உள்ளம் புணர்ந்தனர்; காதலராயினர். அடங்கிய வேட்கை பெருகிற்று. முதல்நாள் கண்டவிடத்தே இன்றும் காணலாம் என்ற நம்பிக்கையோடு தலைவன் தானே அவ்விடம் செல்கின்றான். ஆராக் காதலுடைய தலைவியும் அவனுக்கு முன்னரே வந்து அங்கு நிற்கின்றாள். ஏன்? ஒருமுறை ஆண் புல்லியபின், பெண்ணுக்குக் காமம் சிறக்கும். முன்போல் தோழியரொடு விளையாட வந்தும் விளையாட்டில் மனங்கொள்ளாள்; பூப்பறித்து மலர் தொடுக்க உள்ளம் நாடாள். அவள் காதற் பெருக்கை உணர்ந்த தலைவன், ஆடலும் தொடுத்தலும் செய்யாது தனித்துநிற்கும் நீ யாரோ; உனக்கு என் வணக்கம். கண்டவர் கண்ணைப் பறிக்கும் அழகியே! கடல் வாழ் தெய்வமோ நீ? யாரை யோநிற் றொழுதனம் வினைவுதும் கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப் பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ (நற். 155) என்று தன் காதற்பறையை முழக்குகின்றான்; அழகுத் தெய்வமாகத் தொழுகின்றான். வளை ஒலிப்ப நண்டினை ஆட்டுபவளே! நண்டினை ஆட்டுபவள் போலக் கூந்தலால் முகத்தை மறைத்து நிற்பவளே! மாலை மறையின் நின் முயக்கம் கிடைக்கும் (ஐங். 197) என்று வாயூறி மொழிகின்றான். என் சொல்லுக்கெல்லாம் மறுமொழி சொல்லாது நாணுபவளே! நின் நாணம் என் காமத்தைப் பெருக்கின் தாங்குவது எப்படி? (காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ - நற். 79) என்று தானே, தானே பன்னுகிறான். இடந்தலைப்பாடு பற்றி மூன்று பாடல்களே (ஐங். 197; நற் 39; 155) சங்கவிலக்கியத்தில் உள. புர்ச்சி வேட்கை காணப்படு வதன்றிப் புணர்ந்த குறிப்புச்சிறிதும் இப்பாடல்களில் இல்லை. இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியற் கூட்டம் என்ற குறியீடுகள் காதலரிடைப் புணர்ச்சியுண்டு என்பதை வெளிப் படையாகக் காட்டுவது போல, இடந்தலைப்பாடு (தொல். 1443) என்னும் குறியீடு காட்டவில்லை. இதன் உட்கோள் என்ன? கண்டால் முயங்குதல், முயங்குதற்கே காணுதல் என்பது ஆசைக்காமம் ஆகுமன்றி அன்புக் காமம் ஆகாது. காதலர்கள் புணர்வு விருப்பின்றியும் கண்டு கொள்வார்; காணுந்தோறும் புணர்வு மேற்கொள்ளார் என்பது (கீழான பருவ எழுச்சிக்கு இடங்கொடா) உயர்ந்த காதலாகும். இயற்கைப் புணர்ச்சியில் கண்டு கலந்த தலைவனுக்கும் தலைவிக்கும் அவ்வளவில் மனநிறைவு ஏற்படுமா? பிரிந்த பின் புணர்ந்த நினைவும் புணர்ந்தார் உருவமும் நெஞ்சை அரித்தன. புதிய பெரிய உறவை மீண்டும் ஒருமுறை களித்துக் காண்பதே இடந் தலைப்பாடு. இத் தலைப்பாட்டால் ஆரா இளைய நெஞ்சங்கள் வேகந் தணிகின்றன; அமைதிக்கு வருகின்றன; நம்பிக்கை கொள் கின்றன. 3. பாங்கற் கூட்டம் இடந்தலைப் பாட்டின் பின்னர், நண்பன் தலைவனைக் காண்கின்றான்; முகச்சோர்வைக் கண்டு இரவெல்லாம் உறக்க மில்லையோ என்று பொதுப்படக் கேட்கின்றான். காமத்தைப் பற்றி வெளிப்படையாக உரையாடல் ஆண் நண்பர்களின் மனக்கூறு, உறங்கவில்லையோ என்ற வினாவுக்கு ஒரு குறச்சிறுமியின் தண்ணீர்போலும் மென்சாயல் தீப்போலும் என் நெஞ்சுரத்தை அவித்து விட்டது; சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென உரனவித் தன்றே (குறுந். 95) என்று தலைவன் ஒளிவு மறைவின்றிப் பெருமிதம் தோன்ற மறுமொழிகின்றான். இவ்வொழுக்கம் நின் அறிவுக்கும் பெருமைக்கும் குடிமைக்கும் தகுமோ என்று இடிக்கும் நண்பனுக்கு, இவையெல்லாம் உன்னைவிட எனக்குத் தெரியும். அவள் குவளைக்கண்ணைப் பார்ப்பதற்குமுன் பேச வேண்டிய பேச்சுக்கள் எனத் தலைவன் எதிருரைக்கின்றான் (நற். 190). அறிவுநிலையில் நிற்கும் இளம்பாங்கன், தலைவி அரியவள்; அவள்நினைப்பை விட்டொழி (நற். 201) என்று மேலும் தடுத்துரைப்பவே, தலைவன் ஆற்றலன் ஆயினான். காமக் கிறுக்கனாய்க் காதற்பித்தனாய்க் கைகடந்து பேசல் ஆனான். கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சில் ஓதிப் பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம் ஒருநாட் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. (குறுந். 280) இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளாக அன்பன் கருதுவான். போர்க்களம் புக்குப் புண்படாத நாளெல்லாம் புறங்கொடுத்த நாளாக மறவன் கருதுவான். அகம் புகுந்தவளின் மெல்லிய ஆகத்தை மேவாத நாளெல்லாம் வாழா நாளாகக் காதலன் கருதுவான். மக்கள் ஆண்டு பலவாக ஆயிரம் ஆயிரம் நாட்கள் வாழ்கின்றனர். பலர் வாழ்க்கையை நினைந்து பார்ப்பின், எல்லா நாளும் சிறப்பின்றி ஒருநாள் போலவே கழிகின்றன. இன்ன நிலையை மேற்காட்டிய குறுந்தொகைத் தலைவன் வெறுக்கிறான். இதுவரை வாழ்ந்ததை வாழ்க்கையாக அவன் மதிக்கவில்லை. இனியும் இவ்வாறு செல்வதை அவன் விரும்பவில்லை. நினையத்தக்க வினைச்சிறப்புடைய ஒரு நாளாவது வேண்டும் என்றும், அந்நாள் தன் உள்ளம் கவர்ந்த கள்வியின் ஆகத்தைத் தழுவும் நாளே என்றும், அதன்பின் வீண்வாழ்க்கை சிறுபொழுதும் வேண்டாம் என்றும், ஆராக் காதலால் தன் நண்பன் அதிரும் குறிக்கோளைச் சொல்லு கிறான். கேளிர் கேளிர் என்று தோழனை அன்புதோன்ற அடுத்தடுத்து விளித்தல் காண்க. உண்மை நட்பு மறுப்பறியாது; காமத்துக்குக் கண்ணில்லை (குறுந். 78); அந்நோய் பற்றிய தலைவனுக்கு எப்போதும் உறக்கமில்லை (ஐங். 173); என்செய்வது என்று இயல்பு உணர்ந்த தோழன் தலைவன் சொன்ன குறியிடம் செல்கின்றான். முன்னரே வந்து நிற்கும் தலைவியின் அன்பைக் கண்டு வியக்கின்றான் (ஐங். 174). பாங்கனால் தலைவனுக்குத் தலைவியோடு ஒரு கூட்டம் நிகழ்கின்றது. இது பாங்கற்கூட்டம் எனப்படும். பாங்கற் கூட்டம் பற்றி 27 அகப்பாடல்கள் உள. இவற்றுள் பாங்கன் கூற்றாய் வருவன இரண்டே. (குறுந் 78; 204). எஞ்சிய இருபத்தைந்தும் தலைவன் கூற்றாவன. சங்கப்புலவர்களுள் மிளைப் பெருங் கந்தனார் என்பவரே தலைவன் கூற்றாகவும் பாங்கன் கூற்றாகவும் இரு பாடல்கள் பொருள் தொடர்ச்சி படப் பாடியிருக்கக் காண்கின்றோம். சங்கப் பாடல் எல்லாம் ஒன்றோடொன்று கருத்துக் கோவையில்லாத் தனித்தனித் துறைப் பாடல்களே; எனினும் கந்தனார் போலும் ஓரிரு புலவர்கள் சில துறைத் தொடர்பு அமையப் பாடிய கோவைப் பாடல்களும் உள என்பது குறிப்பிடத்தகும். மிளைப்பெருங் கந்தனார் காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகுமென் றாண்மதம் போலப் பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே (குறுந். 136) இது தலைமகன் பாங்கற்கு உரைத்தது. காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே (குறுந். 204) இது தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. இருபாட்டிலும் முதலடிகள் இரண்டும் ஒத்தன. காமம் என்னும் சொல் பண்டு இடத்திற்கேற்ப உயர்காமத்தையும் இழிகாமத்தையும் குறித்தது போலும். ‘உயர்ந்த காமத்தை இழிவான காமமாக உலகோர் கருதுவர்; அவ் வுயர்காமம் இழிகாமம் போல வருத்தமும் நோயும் தருவதில்லை’ என்று மிளைப்பெருங் கந்தனார், காதலை நுகர்ந்த தலைவன் வாயிலாகவும், அவனை இடித்துரைக்கும் அறிஞன் வாயிலாகவும் உலகோர்க்கு மறுப்பு உரைப்பர்; காமத்தின் சிறப்பைப் புலப்படுத்துவர். இவ்வுயர் காமமாவது யாது? அன்புடைய எதிர்பாலாரைக் காணும்போது வெளிப்படுவது என்கின்றான் தலைவன். இஃது இவன் துய்த்துக் கண்டது. காமமாவது ஒரு மனநிலை; விரும்பினோரை அது விடாது; வெறுத்தோரை அது தொடாது என்று இடித்துரைக்கின்றான் பாங்கன். இஃது இவன் துய்ப்பின்மையால் வந்த அறிவுரை; அல்லது, கடமையுணர்ச்சியால் எழுந்த உரை என்றும் கொள்ளலாம். பாங்கற் கூட்டச் செய்யுட்கள் எல்லாமே அறிவுச் செறிவும் இலக்கியப் பொலிவும் உடையன. காதலியர் தம் கண் என்னும் பின்னா வலையுள்ளும், கூந்தல் என்னும் பின்னிய வலையுள்ளும் பட்ட ஆடவர் தம் நெஞ்சத் துடிப்பைக் காட்டுவன. இப் பாடல்களால், காதலாவது ஒற்றுமை வேற்றுமைத் தரம் பார்த்து ஆராய்ச்சிசெய்து அறிவுநிலையில் நிகழ்வதன்று; “இதற்கிது மாண்டது என்னாது அதற்பட்டு ஆண்டொழிந்தன்றே மாண்தகை நெஞ்சம்” (குறுந். 184) என்று ஒரு தலைவன் கூறியபடி, காரணம் கடந்த தூய மனநிலையில் அமைவது என்ற உண்மையைக் கற்கின்றோம். ஐந்திணை இலக்கிய மாந்தர்களில் பாங்கன் படைப்பு இருவகைப் பயனுடையது. செகப்பிரியர் எழுதிய ‘பன்னிரண் டாம் இரவு’7 நாடகத்தில், இலீரியாக் கோமகன் ஆர்சினோ செல்வப் பெருமாட்டி ஓலீவியாவைக் காதலிக்கின்றான். இவன் காதலுக்கு அவள் இணக்கக் குறிப்பு நல்கவில்லை. ஆதலின் தன் பாங்கன் செசாரியோவைத் தூது விடுக்கவே. அவன் ஒலீவியாவை நேரிற் கண்டு அவள் தனியழகையும் ஆர்சினோவின் பெருங்காதலையும் கவிஞன் போல எடுத்தியம்பு கின்றான். ‘மிக நலம் பெற்ற நீ ஒரு தமியளாய் மூப்படையலாமா? உன் எல்லையற்ற அழகுக்கு உலகில் ஒரு படி வேண்டாமா?’ என்று இனிக்கப் பேசுகின்றான். ‘இங்ஙன் தலைவியாவாளைப் பாங்கன் நேர்நின்று காணலும் முன்னின்று மொழிதலும் தமிழ் அகத்திணைக்கு ஒவ்வா; தமிழகம் பெற்ற மகளிர் நாணத்துக்கு ஏலா. ஈண்டு பாங்கன் தலைவியைத் தான்காண்பான். அவளால் காணப்பட்டான். தலைவி பாங்கன் தன்பக்கமாகச் செல்வதைக் கண்டாலுங்கூட, அவனை ஒரு வழிப்போக்கன் எனவே கருதி விடுவாள். தன்னைப் பார்த்துவரத் தலைவன் விடுத்த தோழன் என எண்ணாள். ஏன்? தலைவனது தோழர்கள் யார் என்பது பற்றி அவளுக்குத் தெரியாது. “தோழியற் கூட்டம் போலப் பாங்கன் உரையாடி இடைநின்று கூட்டாமையின்” (தொல். 1047) என நச்சினார்க்கினியரும், “தன் வயிற்பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யான்” (தொல். 1443) எனப் பேராசிரியரும் பாங்கன் கருமத்தை வரையறுத்தல் காண்க. குறித்த இடத்துத் தலைவி வந்து நிற்கின்றாளா? என்பதைப் பார்த்துச் சொல்லும் ஓர் அறிவிப்பாளனே பாங்கனாவான். எனினும், இவன் தொடர்பால் அகத் தலைவனுக்கு இருநலம் உண்டு. இன்ப, வெள்ளத்தால், துன்பப் புயலால் நெஞ்சு அலையும்போது, அவற்றைப் பிறரிடம் பேசினால் ஆறுதல் உண்டாகும். கேட்பதற்கு உற்ற நண்பர்களும் நண்பிகளும் வேண்டும். தலைவன் எதிர்பாரா நிலையில் ஒரு நங்கை பால் காதல் கொண்டு தன் நெஞ்சகத்தைப் புதிய உணர்ச்சிகளுக்குப் பறிகொடுத்து விட்டான். காம வணுவும் காம சுரமும் அவன் உள்ளத்தைத் தின்றன. ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. (குறுந். 58) என்றபடி, களவுத்தலைவன் தன்வயம் இழந்து, காமவயத்தன் ஆனான். திருமணத்துக்குப்பின் தலைவி உடன்வாழ்வாளா தலின், தலைவனது காமவேகத்துக்கு இடனில்லை. களவொழுக்கத்தோ அவள் காணற்கும் கலத்தற்கும் அரியவள். அதனால் அவனுக்கு மேலும் காமசுரம் பெருகின், உயிர் போதலும் கூடும்; அறிவு திரியவும் செய்யும். இந்நிலையில் பாங்கன் ஒரு பற்றுக்கோடு. அவனிடத்துத் தன் தலைவியைத் தெய்வச்சாயல் உடையவள், மெல்லியவள் அரும்பிய முலையள், சிவந்த வாயினள் (ஐங். 255) என்று சொல்லுந் தோறும், சிறுபாம்புக்குட்டி காட்டானையை வருத்தியது போல அவள் மெல்லுறுப்புக்கள் என்னைத்தாக்கின (குறுந். 119) என்று சொல்லுந்தோறும் தலைவனுக்கு மனவேகம் தணியவும், அறிவு நிலைக்கு வரவும் காண்கின்றோம். தலைவன் கூற்றாக 25 பாடல் இருப்பதற்கு இவ்வுளவியலே காரணமாம். பாங்கன் தலைவனுடன் சேர்ந்து அவன் செல்லுழி எல்லாம் செல்லும் வழக்கமுடையவன். விட்டுப் பிரியாத தோழமை கொண்டவன். தலைவன் ஒருத்திபாற் பட்ட பின்னும், பாங்கன் முன்போல் உடன்வருதல் தகாதன்றோ? இதனை அவன் எப்படி அறிவான்? தலைவனது புதிய உணர்ச்சியையும் புதிய உறவையும் அவன்தன் மெய்ப்பாட்டாலும் சொல்லாலும் தெரிந்து கொண்ட பாங்கன் குணமும் குலமும் அறிவும் சுட்டி மாற்ற முயல்கின்றான்; பயனின்மை கண்டபின் அவனோடு கூட வருவதை நிறுத்திக்கொள்கின்றான். இதனால் தலைவனுக்குத் தலைவியைக் காணவேண்டும்போது தனித்துச் செல்லும் பெருவாய்ப்புக் கிடைக்கின்றது. இவ்வாறு பாங்கன் தலைவனது காமப்புதுமையைக் காதுகொடுத்துக் கேட்கும் செவியனாய், மேலும் சிறிது இடையூறும் செய்யாத தோழனாய்க் களவின் தொடக்கத்தே வந்து போய்விடக் காண்கின்றோம். ஐந்திணை இலக்கியத்து இவன் வரவு இதனொடு முற்றும். மேல் விளக்கிய இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு பாங்கற்கூட்டம் என்ற மூன்று காட்சிக்கும் குறியிடம் ஒன்றே ஆகவும், தலைவன் இடந்தலைப்பாடுபோல் மீண்டும் ஏன் தானே சென்றிருத்தல் கூடாது? பாங்கனை விடுத்ததன் நோக்கம் என்ன? பல் இழந்த கிழப்பசு இளம்புல்லைத் தடவி மகிழ்ந்த மனவின்பமே காமவின்பம்; காமமாவது தன்னை உணர்ந்தார் உணராதார் எனப் பாராது எல்லாரையும் பற்றும் பெரும் பேதைமையுடையது; இனி உள்ளல் கூடாது என்றெல்லாம் காதல்காயும் தலைவனைப் பாங்கன் நகையாடி இடித்துரைக் கின்றனன். தன் வேட்கை தக்கதே என்றும், இடிப்புரையால் ஒழியாதது என்றும் உணர்த்த விரும்பினான் தலைவன். பாங்கன் தன் சொல்லை நம்பான்; தன்னை மயக்கியவளைக் கண்டால் நம்புவான்; பின்னர் இடித்துரையான் என எண்ணினான். அம்ம வாழி கேளிர் முன்னின்று கண்டனி ராயிற் கழறலிர் மன்னோ... நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற் போதுபுறங் கொடுத்த உண்கண் மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே (அகம். 130) தோழ! என்னைப் பிணித்தவளின் நோக்கு மதர் மதர்ப்பு உடையது. அவள் கண் பசுமைக்குக் கைபடாத, வண்டுவாய் திறந்த துறையிடத்து வளர்ந்த நெய்தற்பூவும் நிகராகாதே. இந் நோக்கழகியை முன்னின்று நீ ஒருமுறை கண்டுவிட்டாற் போதும்; பின் என்னைக் கடிந்துரையாய் என்று ஏவவே, பாங்கனும் தலைவன் சொன்ன குறியிடம் சென்று, அத்தகை யாளைக் காண்கின்றான். நெய்தற்பூ மணக்கும் கூந்தலழகியின் பிடிப்பட்டோர் இரவும் உறங்குவாரோ? பாம்பு கடித்தன்ன பாடுபடாரோ? என்று பாங்கனே உணரக் காண்கின்றோம். இரவி னானும் இன்துயில் அறியாது அரவுறு துயரம் எய்துப தொண்டித் தண்ணறு நெய்தலின் நாறும் பின்னிரும் கூந்தல் அணங்குற் றோரே. (ஐங். 173) 4. தோழியிற் புணர்ச்சி சங்க இலக்கியத்து 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 40 பாடல்களே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்ற மூன்று வகைக்கும் உரியன. எஞ்சிய 842 பாடல் -95 விழுக்காடு-தோழியிற் புணர்ச்சி என்னும் ஒரு வகைக்கே வருவன. இதனால் தோழியின்றிக் காதலர்களின் களவொழுக்கம் நீளாது என்பதும், ஐந்திணை இலக்கியப் படைப்புக்குத் தோழி என்னும் ஆள் (பாத்திரம்) இன்றியமையாதவள் என்பதும், தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம். தோழியின் தொடர்புக்குப் பின்நிகழும் காதற் செய்திகள் அளவில. அவற்றையெல்லாம் இங்குக் கூறப் புகுதல் மிகையும் குறையுமாம், வேண்டுமளவே விளம்புவல். காதலியைத் தற்செயலாக எவ்வளவு நாள் காண முடியும்? பாங்கன் எவ்வளவு உதவி செய்வான்? நினைத்த விடமெல்லாம் சுற்றித்திரியும் போக்குரிமை ஆடவர்க்குத் தமிழ்ச் சமுதாயத்து உண்டு. அன்ன உரிமை குலமகளிர்க்கும் குமரியர்க்கும் இல்லை. யாயே கண்ணினும் கடுங்கா தலளே எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப எவனில குறுமகள் இயங்குதி என்னும் (அகம். 12) காப்பும் பூண்டிசின் கடையும் போகலை பேதை யல்லை மேதையங் குறுமகள் (அகம். 7) இரவும் பகலும் தாய் தந்தையின் கடுங்காப்புக்கு இல்லக் குமரியரை உள்ளாக்குவது தமிழ் நாகரிகம். வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் எனச் சிலப்பதிகாரமும், கன்னிக் காவலும் கடியிற் காவலும் விலைமகளிர்க்கு இல்லை என மணிமேகலைக் காப்பியமும் மொழிதல் காண்க. ஒருகால் பெற்றோர் இசைவுபெற்று வெளிச் செல்லினும் விடாது தோழியும் உடன் செல்வாள். யாமே பிரிவின் றியைந்த துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே (அகம். 12) எனத் தலைவி தோழியின் இணைபிரியாக் கேண்மையைக் கபிலர் இல்பொருளுவமை என்னும் கற்பனையால் வெளிப் படுத்துவர். இவ்விருவரும் ஒருநாள் நீர்விளையாடப் பார்த்த தலைமகன் அவர்தம் கடுநட்பைத் தெளிந்தான். தெப்பத்தின் தலைப் பாகத்தைத் தோழி பிடித்தால், இவளும் அப் பாகத்தையே பிடிக்கின்றாள். அவள் அதன் கடைப்பகுதியைத் தழுவினால் இவளும் அதனையே தழுவ முந்துகின்றாள். தோழி தெப்பப்பிடி வழுவி நீருள் மூழ்கினால், இவளும் உடன் மூழ்குவாள் போலும் (குறுந். 222) எனக் கண் சான்றாகத் தலைவன் கண்டு கொண்டனன். தோழி நீங்கா ஓர் இடையூறு என்றும், தோழியின் தோழமையைப் பெற்றாலன்றித் தலைவியின் தோளைப் பெறுதல் அரிது என்றும் அவனுக்குப் புலனாயிற்று. களவுத் தொடர்பைத் தோழிக்கு உணர்த்துவது எங்ஙன்? தலைவி நாணொடு பிறந்து நாணிலே வளர்ந்தவள். ஆதலின் தோழியிடத்துத் தன் புதிய உறவைக் கூறவே கூறாள். கூறும் பொறுப்போ கூசாப் பிறப்பினனாகிய ஆடவனைச் சார்ந்தது. தோழியும் தலைவியும் ஒருங்கு இருக்கும்போது சென்று வெளிப்படையாகவோ குறிப்பாகவோ களவை நயமாகப் புலப்படுத்தல் தலைவன் முறையாகும். ஒன்று, இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும் உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல் நல்லார்கட் டோன்றும் அடக்கமும் உடையன் இல்லோர் புன்கண் ஈகையிற் றணிக்க வல்லான் போல்வதோர் வன்மையும் உடையன் அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டீ சுடரிழாய் (கலி. 47) எளிமை, பெருமிதம், அறிவு அடக்கம், அருள் ஆற்றல் உடைய ஒரு நம்பி எவ்வன்மையும் இல்லாத என்பால் வந்தான்; நின்னை இன்றி எனக்கு வாழ்க்கை இல்லை என்றான்; ஒரு பெண்பொருட்டுத் தன் ஆண் தகுதிகளை யெல்லாம் கை விட்டான். இவன் சொல் நம்பத்தக்கதோ? தனி ஒரு பெண்ணால் ஆராய்ந்து உண்மை காணும் தகுதியுடையதோ? என இவ்வாறு தலைவனின் தோற்றத்திலும் பண்பிலும் தோழி ஈடுபட்டாள். அவன் குறையை முடித்து வைக்கவும் எண்ணினாள். எனினும் தலைவியை அணுகுவது எப்படி? களவுச் செய்தி தோழிக்குத் தெரியும் என்று அறிந்தாற்கூட அவள் நாணம் பொறுக்காதே? மெய்யான நிகழ்ச்சியைச் சொல்லியோ (கலி.60), பொய்யாக நிகழ்ச்சியைக் கற்பித்தோ (கலி. 37; அகம். 32) இரு பொருள் படும்படி தொடரமைத்து, எவ்வகையானும் தலைவியின் மெல்லிய நாணம் ஊறுபடாதவாறு, அவள் நெஞ்சத்தை அறிய முயல்க என்று தொல்காப்பியர் வழி கூறுவர். மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் (தொல். 1059) மகளிற்கு நாணுணர்ச்சி மிகக் கூரியது. ஒரு பெண்ணின் காதலுள்ளத்தை நெருங்கிப் பழகும் மற்றொரு தோழிப் பெண் வினவத் துணியாள். என் தோழி நனி நாணுடையவள் (ஐங். 205) என்று தன் தலைவியின் இயல்பை ஒரு தோழியே கூறுதல் காண்க. தோழி என்னை, ஈன்று வளர்த்த தாய்கூடத் தன் ஒரு மகளின் காதற்கரவைக் கேட்க அஞ்சுவாளென்றால் திருநுதல் நல்லவர் நாணின் நுண்மை அறியத்தக்கதோ? தன்மகள் போக்கைத் தாயே அறிந்துகொள்ளட்டும்; இது பற்றி நமக்கென்ன கவலை என்று வாளா இராது. வாய் கொழுத்த ஊர்ப் பெண்டுகள் ஒருநாள் இருநாள் அல்ல, பலநாள் வந்து வந்து என்னிடம் என்மகள் பற்றிச் சொல்லுகிறார்கள். யானோ அவளிடம் அதுபற்றி ஒன்றும் வாய்திறப்பதில்லை. ஏதும் கேட்கப் புகின், நாணம் அவளைக் கொல்லும். ஆதலின் ஊரார் சொல்லும் செய்தியை மிகவும் மறைத்து வைத்துக் கொள்கிறேன். உவக்குந ளாயினும் உடலுந ளாயினும் யாயறிந் துணர என்னார் தீவாய் அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் இன்னள் இனையவள்நின் மகளெனப் பன்னாள் எனக்குவந்த துரைப்பவும் தனக்குரைப் பறியேன் நாணுவள் இவளென நனிகரந் துரையும் யான் (அகம். 203) என ஒரு தாய் கூற்றில் வைத்துக் கபிலர் பெண்பாலின் நாணச் செவ்வியைப் புலனாக்குவர். குமரியர் தம் காமக் குறிப்பைச் சொல்லாலும் வெளிப்படுத்துவதில்லை. எண்ணத் தாலும் அறிய இடங்கொடுப்பதில்லை. ஆகலின், அன்னவர் அகமனத்தைக் காண்பதற்கு ஒருவழி போதாதென்று தோழிக்கு எழுவழி கூறுவர் தொல்காப்பியர். அவையாவன, 1. புதிய மணம், 2. புதிய களை, 3. புதிய ஒழுக்கம், 4. உணவில் மனம் செல்லாமை, 5. செயலை மறைத்தல், 6. தனியே செல்லல், 7. தனியே இருத்தல். மடலேறுதல் தலைவியின் நற்குறிப்பு அறிந்தபின், காதலர்கள் பகலும் இரவும் காணவும் கூடவும் தோழி வழிசெய்வாள். இயற்கைப் புணர்ச்சி முதலான முன்னைக் கூட்டங்கள் நிகழ்ந்த இடத்தே நிகழும். தோழி கூட்டுவிக்கும் கூட்டங்களோ வேறுவேறிடத்து நடக்கும். இன்ன இடம் என்று களம் சுட்டுவது, தோழியின் பொறுப்பாகும். இக்காட்சிக் களங்கள் பகற்குறி. இரவுக்குறி எனப்படும். தலைவனோடு தலைவியின் உறவை அறிந்து கொண்ட பின்னும், தோழி தலைவனுக்கு இடையூறு போலக் காட்டிக் கொள்வாள். அவனது பொங்கிய காதலுக்குச் செவிசாயாள். அவன் அரிது முயன்று ஆர்வத்தோடு கொண்டு வரும் கையுறையை ஏற்க மறுப்பாள். வேண்டுமென்றே கூட்டம் நிகழாவாறு நாட் கடத்துவாள். தலைவியின் அருமையைத் தலைவன் உணர வேண்டும் என்பதும், தலைவனின் உறுதியைத் தான் உணர வேண்டும் என்பதுமே தோழி இங்ஙனம் செய்வதன் நோக்கம். அகத்திணைக்கண் மடல் அல்லது மடல்மா என்பது பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையைக் குறிக்கும். இக் குதிரைக்கு ஆவிரம்பூ மாலையும் மணியும் அணிதல் உண்டு. (குறுந். 173) காமுற்ற பெண்ணை எய்தப்பெறாத ஆடவன் மார்பில் எலும்பு மாலையும் தலையில் எருக்க மாலையும் கொண்டு மடல்மாமேல் ஏறித் தெருவில் வருவான் (குறுந் 17, 182). இவ்வழக்கு மடலேறுதல் எனப்படும். இதனால் தலைவனின் திட்பத்தையும் அவன் காதற்கு இலக்கான நங்கையையும் ஊரார் அறிவர்; மேலும் அரம்போலும் பனங்கருக்குப் பட்டுப்பட்டு அவன் மேனியிலிருந்து ஓடிவரும் குருதியொழுக்கைக் கண்டு இரக்கங் கொள்வர். இன்ன காதலனுக்கு மகளைக் கொடுக்க மறுக்கலாமா என்று அவள் பெற்றோரைக் குறையுங் கூறுவர். ஆதலின் ஊரறிய மடலேற்றம் நிகழாதபடி மணங்கள் முடிந்து விடும் என அறியலாம். தோழி, முன் சொல்லியபடி தலைவனது குறைக்குச் செவிசாய்க்காது, கையுறைக்குக் கைகொடாது காலந் தாழ்த்தும்போது, இனி மடலேறுவது தான் எண்ணியது எண்ணியாங்கு எய்துவதற்கு வழி என்று அவன் அவளிடம் கூறுவான். மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே (குறுந். 71) இக்கூறுகை தோழிக்குச் சிறிது கலக்கத்தை உண்டாக்கும். அதன்பின் தோழி துணையால் களவு நீளவும் காமம் செழிக்கவும் காண்கின்றோம். சங்கப் புலவர் மாதங்கீரனார் பாடிய செய்யுட்கள் இரண்டே (குறுந். 182; நற். 377.). அவ்விரண்டும் மடல் மாத் துறை பற்றியன. மடல்பாடிய மாதங்கீரனார் என்ற சிறப்புப் பெயர் இப்புலவர்க்கு வழங்கியிருத்தலைக் கருதுங்கால், இரண்டு சிறிய பாடல்களுக்காக இப் பெயர் பெற்றிரார் என்றும், இவ்வொரு துறையில் பல பாடல்கள் ஆக்கியிருப்பர் என்றும் துணியலாம். மடல்மாப்பொருள் குறித்துப் பதின்மூன்று பாட்டுக்கள் சங்கஇலக்கியத்து உள. இவற்றுள், நற்றிணை 143, 152, 342, 377; குறுந்தொகை 14, 17, 32, 173, 182 என்ற ஒன்பதும் ஐந்திணைக்கு உரியவை. கலித்தொகை 128, 139, 140, 141 என்ற நான்கும் பெருந் திணைக்கு உரியன. ஐந்திணை மடலுக்கும் பெருந்திணை மடலுக்கும் நுண்ணிய பெரிய வேறுபாடு உண்டு. மடல்மா ஏறுவேன் என்று வாயளவிற் சொல்லுதல் ஐந்திணையாம். மடல்மா கூறும் இடனுமார் உண்டே (தொல். 1047) என்பது இலக்கணம். அவ்வாறன்றி மாமேல் ஏறியே காட்டும் செய்கை பெருந்திணையாய் விடும். ஏறிய மடற்றிறம் (தொல். 969) என்ற தொடரில் ஏறிய எனவரும் இறந்த காலவினை பெருந்திணை யிலக்கணத்தைச் சுட்டுதல் காண்க. பகல் இரவுக் கூட்டங்கள் களவொழுக்கம் திடீரென நின்றுபோதற்கு இடனுண்டு. தோழியின் உறுதுணையால் அது நீடித்து ஓடுகின்றது. தோழி பெண்ணாயினும் பணிமகளாகலின், தலைவியைவிடத் தனித்துச் செல்லும் உரிமையும் கடமையும் அவளுக்கு உண்டு. காதலோர் தம் கூட்டத்துக்குத் தகும் இடம் எது? தகுங் காலம் எது? என்று அவளால் காணமுடியும். எனினும், அவளும் ஒரு குமரியாதலானும் ஏவல் மகளாதலானும் சில எல்லைக்கு உட்பட்டே உதவிசெய்யக் கூடும். அவளுடைய சுற்றுச் செலவும் ஓரளவுபட்டதே, மறைவொழுக்கத்தைச் சமுதாயப் பெருங் கண்கள் பார்த்துக் கொண்டிரா; சுற்றுப் புறக் குளவிகள் கொட்டாது விடா; எண்ணவூசிகள் துளையாது போகா; ஆதலின் காதற்களவுக்கு உலகில் புகலிடம் இல்லை. களவைக் கற்பாக்கினாலல்லது உலகுக்கு உறக்கம் இல்லை. மலர்ந்த வேங்கை மரநிழலில் தலைவனொடு ஒக்க இருந்து கதிர்தின்ன வந்த கிள்ளைகளை இருவரும் எழுந்து ஒட்டி அருவியாடிச் சந்தனம் பூசி மகிழ்ந்த இன்பப் புணர்வுக்கு இனி வாய்ப்பு உண்டோ? தினைக்கதிர்கள் முற்றி விளைந்தன. வேட்டுவர் கொய்து செல்வர். ஆதலின் புனங்காவலைச் சாக்காக வைத்துத் தலைவனொடு அளவளாவுதல் இனிமேல் இயலாது (நற் 259) என்று தோழி தலைவிக்கு அறிவிக்கின்றாள். தலைவனுக்கும் அது கேட்கின்றது. முற்றிய தினை களவொழுக்கத்திற்கு முதல் இடையூறாகும். தலைவி புனங் காத்தல் இல்லெனவே, பகற்காட்சியும் புணர்ச்சியும் இல்லை யன்றோ. பின்னர் இரவுக்குறிக்கு வழிசெய்க என்று தலைவன் தோழியைக் குறையுற்று நிற்பான். இரவுக் களவின் தொடக்கத்துக் கூட்டம் தலைவி வீட்டின் புறத்து நடக்கும் என்றும், சிலநாளைக்குப்பின் அச்சம் ஒழிந்து உள்மனையிலும் சென்று களவு நிகழ்த்துவர் என்றும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுவர் (தொல். 1076). மனையோர் கிளவி கேட்கும் வழி என்பதனால், வீட்டின் புறமாவது வீட்டார் பேசுவது கேட்கக் கூடிய அருகு என்பது பெறப்படும். புதியராய் இல்லம் வந்தார் யார்க்கும் விருந்தோம்புதல் தமிழர்தம் இல்லறமரபு. மாலைப் போது கதவைச் சார்த்துவதற்கு முன் விருந்தினராய் வெளியில் நிற்பார் உண்டோ? எனக்கேட்டுச் சார்த்தல் பண்டைப் பழக்கமாம் (குறுந். 118). ஒரு சமுதாயத்தை அது நம்பும் பழக்க வழக்கங்களைக் கருவியாகக் கொண்டே ஏய்த்துவிட முடியும். ஆதலின் களவுத் தலைவன் தலைவியின் இல்லத்துக்கு மாலையிற் செல்லுதலும், அவள் தாய் அவனை விருந்தினன் எனக் கருதி முறையாக வரவேற்றலும் உண்டு. எனினும் ஒரு தாய்க்கு உறக்கம் வரவில்லை. குமரி வாழும் வீட்டகத்துப் புதிய ஓர் இளைஞன் வருதலும், இரவில் தங்குதலும் அவளுக்கு ஐயத்தை உண்டாக்கின. தாயின் விழிப்பு இரவுப் புணர்ச்சிக்குத் தடையாயிற்று. எதிர் பார்த்தது நடவாமையின், மகளுக்கு ஒரே சினம். அரிதாக ஒரு நாள் நம் மகிழ்ச்சிக்கு உரிய விருந்தினன் வந்தான் பகைவன் வந்த ஊரினர்போல அன்னை தூங்க வில்லை. காதலர் தம் இன்பத்துக்குக் குறுக்காக நின்ற இவள் நரகத் துன்பம் என்றும் பெறுக. பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக ஊரிற் றுஞ்சலோ இலளே. (குறுந். 292) எனப் பெண்ணாக ஈன்று குமரிவரை வளர்த்த தாயையும் மகள் சபிக்கக் காண்கின்றோம். பருவத் துணிச்சல் இது. பெற்ற மகளைக் காவல் செய்யும் தாயைப் பெண் கொலை புரிந்த நன்னனோடு ஒப்பிடும்போது, இளம் பெண்ணின் ஆராக் காமவுணர்ச்சியையும், அதனால் வரும் வெகுளி யுணர்ச்சி யையும், அன்னையை நன்னனெனக் கருதும் வெறுப்புணர்ச்சி யையும் உணர்ச்சியுடையோர் புரிந்துகொள்ள முடிகின்றது. காதலர்கள் காதலிக்கும் தொடக்கத்துத் தம்மை எதிர்நோக்கி யிருக்கும் துன்பத் தொகையைப் பற்றி அறியார். அதுபோல் துன்பமலையை இன்பக் கடலுக்குள் தூக்கி எறியும் வன்மை காதலுயிர்களுக்கு உண்டு என்பதையும் அறியார். காலப்போக்கு காதலின் பேராற்றலையும் வழி துறைகளையும் மெல்ல மெல்ல அன்னோர்க்குக் கற்றுக் கொடுக்கும். காதல் வெள்ளத்து மூழ்கிய ஆடவன் மதயானைகளையும் சுழித் தடித்துக் கொண்டோடும் காட்டாற்று வெள்ளத்தைப் பொருட்படுத்தாது குறுக்கே பாய்ந்து ஆண் பன்றி போல நீந்தித் தலைவியைக் காண நடுயாமத்துப் புறப்படுகிறான். இரவுக் குறியிடம் வந்து நிற்கிறான் (அகம் 18). கூர்த்த மதியுடைய மடந்தை, முருகன் போலும் முன்சினம் கொள்ளும் தந்தை வீட்டில் இருப்பவும், காற் சிலம்பை ஓசையிடாதபடி கட்டிக் கொண்டு, ஏணிமேல் ஏறித் தோட்டத்து இறங்கி, மழை சோ எனப் பெய்யும் நள்ளிரவில் காதலன் அகலத்தைத் தழுவுகிறாள் (அகம். 158, 198). இதுபற்றிக் கேட்கும் செவிலிக்கும், நீ கண்டது கனவு எனவும், வேண்டிய வடிவம் எடுத்து மலர்சூடி நம் தோட்டத்து ஒரு பேய் வந்து போவதை அறியாயோ எனவும் தோழி நகையாகவும் நயமாகவும் வேறொன்று சொல்லி மழுப்பக் காணலாம். முன்பில்லாத ஆற்றலும் துணிவும் ஒட்பமும் காமத்தால் உண்டாகும் என்ற அடிப்படையில் இரவுக் குறிப்பாடல்கள் அமைந்துள்ளன. தோழியின் நோக்கம் ஐந்திணை இலக்கியத்துத் தோழி என்னும் ஆளைப் படைத்த பயன் என்ன? அவள் துணையின்றிப் பகற்குறி, இரவுக்குறிகள் நிகழா; களவொழுக்கம் நீடிக்காது; ஆதலின் தோழி வேண்டும் எனப் பலர் கருதுவர். இக்கருத்துப் பிழை பட்டது. களவு நீளவேண்டும் என்பதும், காதலாயினார் இரு வகைக் குறிகள் நிகழ்த்த வேண்டும் என்பதும் அகத்திணையின் நோக்கம் இல்லை. பால் வயத்தால் தாமே கண்டு தம்முட் புணர்ந்த களவுக் காதலர்கள் கற்பாக வேண்டும்; வெளிப் படையாக மணந்து இல்லறம் நடத்த வேண்டும் என்பதே அதன் நோக்கம். இந்நோக்கத்தை நிறைவேற்ற வருபவளே தோழி என அறிக. இதனால் தோழி கற்பொழுக்கத்திற் காட்டிலும் களவொழுக்கத்தில் இன்றியமையாதவள் என்பதும் விளங்கும். நோக்கம் நிறைவேறத்தக்க காலம் வாயாவிட்டால், களவு நீடிக்கும் என்றும், நீளும்போது பகற்புணர்ச்சி, இரவுப் புணர்ச்சிகள் நடைபெறும் என்றும் கொள்ளவேண்டும். காமம் காழ்க்கொண்ட இளைய நெஞ்சங்களுக்கு மேல் செய்ய வேண்டுவன புலப்படா. எண்ணிப்பார்க்கும் அறிவு சில நாளைக்குத் தோன்றாது. இவ்விருவர் செய்கையைத் தோழி அறிவுநிலையில் நின்று நாடுகிறாள். களவு நீடிப்பின், வரத்தகும் கேடுகளைக் காண்கின்றாள். இளையளாயினும் பொறுப்பு உணர்ந்தவளாதலின், திருமணம் செய்து கொள்க என்று தலைவனை இடித்துரைக்கின்றாள். இவள்மீது வைத்த அன்பால் முதலைகள் வழி மறித்துக் கிடக்கும் கடற்கரையில் மீன் கூட்டம் துள்ளும் உப்பங்கழிகளை நீந்தி இரவென்று பாராது நீயோ வருகின்றாய். இவளோ நீ வரும் வழியின் கொடு மையை எண்ணிப்பார்த்துத் தன் பேதைமையால் கலங்கு கின்றாள். நஞ்சுண்ட இரட்டைக் குழந்தைகளுக்கு வருந்துவது போலக் காமங்கொண்ட உங்கள் இருவர் பொருட்டு நான் அஞ்சுகிறேன். கொடுங்கால் முதலைக் கோள்வல் ஏற்றை வழிவழக் கறுக்கும் கானலம் பெருந்துறை இனமீன் இருங்கழி நீந்தி நீநின் நயனுடை மையின் வருதி இவள்தன் மடனுடை மையில் உயங்கும் யானது கவைமக நஞ்சுண் டாஅங்கு அஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே (குறுந். 234) என்று தலைவனது அன்பையும் தலைவியின் அறியா மையையும் தன் அச்சத்தையும் சுட்டிக்காட்டித் தலைவனுக்கு வரைவு ணர்ச்சி ஊட்டக் காண்கின்றோம். திருமணம் தவிர்க்க முடியாதது; இன்றியமையாதது. இதனைப் புரிந்து கொள்ளு வோமேல், நயமும் பொருத்தமும் உடையதாகத் திருமணத்தைச் செய்ய முயல்வோம் என்று அறிஞர் பென்னாட்சா மணங் கோடல் என்னும் நூலின் முன்னுரையில் குறிப்பிடுவர்.8 களவொழுக்கம் தூயது. கள்ளவொழுக்கம் தீயது. களவுக் காதலர் மனமாசற்றவர், மணந்து கொள்ளும் உள்ளத்தினர், வெளிப்பட்ட பின்னும் வாழ்பவர். கள்ளக் காதலர் தம்முள் அன்பற்றவர், மணம் என நினையா வஞ்சகர். வெளிப்படின் மாய்பவர் அல்லது மாய்க்கப்படுபவர். காதலுக்குத் திருமண மின்றேல் சமுதாயத்துக்கு வாழ்வில்லை. ஆதலின், அகத்திணை கண்ட தமிழ்ச் சான்றோர் வரைவை - மன்றலை - வலியுறுத்தினர் எனத் தெளிக. தோழி களவொழுக்கத்தில் பேரிடம் பெற்றிருப்பற்கும் 882 களவுப் பாடல்களில் பாதிக்குமேல் வரைவுத் துறைகளாய் இருப்பதற்கும் திருமணக் கொள்கையே ஏதுவாகும். நள்ளிரவில் தலைவன் வரும்வழி யானையும் புலியும் பாம்பும் நடமாடுவது; தடம் குறுகலும் வழுக்கலும் அமைந்தது. மழை இடி மின்னலோடு கொட்டுவது. மரப்பொந்தும் செடித் தூறும் கொடிப் பிணக்கமும் உடையது. நடுயாமம் எனக் காலம் பாராதும், உயர்ந்து சரிந்த சிறிய இட்டிடை என இடம் பாராதும், காதல் வலியே வலியாகத் தலைவன் வருவது தோழிக்கு நல்ல வரவாகப் படவில்லை. மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ இன்றுதலை யாக வாரல் (அகம் 312) திருமணம் உடனே செய்துகொள்ள விரும்பினாலும் செய்து கொள்க; இனிமேல் இரவுக்குறி வராதே என்று தோழி கடுமையாக முன்னுறுத்தக் காண்கின்றோம். வழியச்சம் தோழிக்கே இருக்கும்போது, தலைவிக்கு எவ்வளவு இருக்கும்? செங்குத்தான யானை போலும் ஓங்கலின்மேல் கயிறுபோலும் ஒற்றைச் சிறுதடத்து இருளில் தலைவன் வருகின்றானே; ஈரம் வழுக்கிப் படுகுழியில் விழுதலும் கூடுமே; அங்கிருந்து அடிதாங்கி அணைத்தற்கு ஆள் வேண்டுமே என்று என் நெஞ்சு என்னைக் கேளாது உன்னிடமும் சொல்லாது புறப்பட்டுப் போய்விட்டது. எவன்கொல் வாழி தோழி மயங்கி இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானம் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே (அகம். 128) எனத் தலைமகன் கேட்குமாறு தோழிச் சொல்வது போலத் தலைவி தன் அச்சத்தைப் புலப்படுத்துகின்றாள். இரவுக்குறி வந்த தலைமகனை, வழி கொடியது. உன் உயிர்க்கு ஊறுவந்தால் இவளுயிர் என்னாகும்? இனி இரவில் வருவதைத் தவிர்க. பழங்கள் தொங்கும் காந்தட் சோலையில் பகல் நீ வரினும் புணரலாம் (அகம். 18), என்று கூறுவதும், பகல் வந்தொழுகும் தலைமகனை, பெருங்களிறு புலியொடு பொருது வலி சோரும் மலைச்சாரலில் நடுயாமத்து வருக, ஏதத்துக்கு நாணோம் (குறுந். 88) என்று கூறுவதும், நீ பகல் வரின் ஊரார் அலருக்கு அஞ்சுகின்றோம்; இரவுவரின் புலிக்கு அஞ்சுகின்றோம்; ஆதலின் இரவும் பகலும் வராதே (அகம். 118) என்று கூறுவதும், அடிக்கடி இவ்விடம் வருக, அவ்விடம் வருக என இடமாற்றி உரைப்பதும் எல்லாம், பார்வைக்குத் தலைவனை அலைய வைத்து அலைக்கழிவு செய்வதுபோல் தோன்றினும், அவன் நாள் நீடிக்காமல் தலைவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதே பொறுப்புடைய தோழியின் உட்கிடையாகும். தோழியின் செய்கையெல்லாம் வரைதல் வேட்கைப் பொருள (தொல். 1155) என்று தொல்காப்பியம் எடுத்துக் காட்டுதல் காண்க. காதலர்கள் அன்புடையவர் களாயினும், களவு என்பது எப்படியும் களவுதானே. அதற்குரிய அச்சமும் இடையூறும் சூழ்நிலையும் வெளிப்பட மணந்தாலன்றி எங்ஙனம் ஒழியும்? இதனை அறிவுடைத் தலைவன் அறியாதானல்லன். மணமே மறைவுக்கு முடிவு என அவன் அறிந்திருந்தும், அச்சநிலையில், களவு தரும் பேரின்பம் கருதி, அதனில் சின்னாள் நீடித்தொழுக விரும்புவான். எனினும் தோழியின் முடுக்கும் வேறுபல இடையூறுகளும் விரைந்து மணக்குமாறு தலைவனைத் தூண்டும். சங்கப் பெரும் புலவர் பரணர் களவுநெறிக்கு வரும் முட்டுப்பாடுகளை யெல்லாம் அடுக்கி ஒரு பாட்டில் (அகம். 122) சொல்லுவர். இப்பாட்டு அவலச் சுவைக்குப் பேரிலக்கியம். நாள்தோறும் எதிர்பார்த்திருந்த கூட்டம் நாள்தோறும் வந்த புதிய இடைஞ்சலால் நடவாமற் போயிற்று என்றும், இங்ஙனம் ஏழுநாள் ஏழு இடையூறுகள் ஏற்பட்டன என்றும், இது எங்கள் குறையுமன்று, யார் குறையுமன்று, களவின் குறை என்றும் ஒரு தலைவி ஏங்கி இரங்கி மொழிகின்றாள்:- விழாக் காலத்துத்தான் ஊர்மக்கள் தூங்க மாட்டார்கள். இவ்வூராரோ விழா இல்லாக் காலத்தும் உறங்குகின்றிலர். ஒருகால் இவ்வூரினரும் வாணிகம் பெருத்த கடைத் தெருவினரும் தூங்கிப் போனாலும், என் தாயென ஒருத்தி இருக்கின்றாளே, எப்போதும் வெடுக்கென்று கொத்துகின்ற அவளுக்கு உறக்கம் என்பது ஒன்று வருவதேயில்லை. என்னை வீட்டகத்துப் பூட்டி வைக்கும் அன்னை மறந்து ஒரு வேளை தூங்கிவிடினும், ஊர் காவலர்கள் விழித்த கண்ணராய் வேலேந்தி மூலை முடுக்கெல்லாம் கிடுகிடெனச் சுற்றித் திரிவர். ஒரு சமயம் அவர்கள் தூங்கினும், வால் மடங்காக் காவல் நாய் விடாது குரைக்கும். ஓயாது குரைத்து அயர்ந்து அக் கூரிய பல் நாய் ஒரு கணம் கண் சாயினும், வெண்ணிலா வானத்து நின்று பகல்போலப் பேரொளி வீசும். மதியும் தண்கதிர் சுருக்கி மலைக்குள் மறையும்போது, இன்னாக் குரல் கொண்ட கோட்டான்கள் வீட்டெலிகளை இரைகொள்ள வேண்டி, பேய் திரியும் நடுச்சாமத்து விடாது குழறும். கோட்டானும் கத்துதல் நின்றபோது, விடிவை அறிவிக்கும் கோழி கூவும். இவ்விடையூ றெல்லாம் இல்லாத நாளொன்றில்லை. ஊராரும் தாயாரும் காவலோரும் நாயாரும் தூங்கித் திங்களும் தோன்றாது கோட்டான் குழறாது கோழி கூவாது ஒரு நள்ளிரவு வரப் பெற்றோனாயின், ஐயகோ, நாள்தோறும் பயனின்றி வந்த அவர் அன்று வராதிருந்து விடுவார். தித்தன் உறந்தைக் காட்டுப்பாதை எவ்வளவு முட்டுப்பாடு உடையது. அவ்வளவு இடர்ப்பாடு நிரம்பியது நம் களவு நெறி. எல்லாம் மடிந்த காலை ஒருநாள் நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே அதனால் ................... நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கல்முதிர் புறங்காட் டன்ன பல்முட் டின்றால் தோழிநங் களவே. (அகம். 122) வெறியாட்டு தன்மகள் மேனி நாள்தோறும் மெலிவதைப் பார்த்து நற்றாய் (செவிலித்தாய்) கவல்கிறாள். உண்மையான காரணம் அவளுக்குப் புலனாகவில்லை. மரபுவழிப்பட்ட தாயாதலின், இம்மெலிவு முருகனால் வந்தது என்று நம்பி, முருக பூசை செய்யத் துணிந்தாள். இதுவே வழியெனக் கிழவிகளும் கூறினர். வீட்டில் நல்லதோர் இடத்து நடுயாமத்துப் பூசை தொடங்கிற்று. முருக பூசாரி வேலன் எனப்படுவான். தினையை இரத்தத்திற் கலந்து எறிந்து முருகனைக் கூவி அழைப்பதும், வெறியாட்டு என்னும் ஆவேசக் கூத்தை ஆடுவதும், கழற்சிக்காயிட்டு நோய்க்குக் காரணம் கூறுவதும் வேலன் வழக்கம். யார் நோய்க்கும் முருகென மொழிதல் அவன் வாய் மரபு (அகம். 22; ஐங் 249) வழக்கம்போல, இவள் முருகேறப்பட்டவள் என்று தாய்க்குக் கூறினான். தன் காதல் நோய்க்குப் பிறிதொரு காரணம் - தெய்வச் சார்பு ஆகுக - கற்பிக்கப்படுவதைக் கற்புடைக் குமரி பொறாள் அன்றோ? ஆயினும் என் நோய் காதல் நோய்; தலைவன் மார்புத் தழுவலால் வந்த நோய். கடவுளான நீ இதனை அறிந்திருப்பாய். அறிந்து வைத்தும், மரபறிவு அன்றி மெய்யறிவு இல்லாத பூசாரி அழைக்கத் தோன்றிய முருகனே! என் சொல்வது? கடவுளாயினும் உனக்குத் தன்னறிவு இல்லை. இத்தகைய இடங்களில் இனி வாராது வாழ்க; அருவி யின்னியத் தாடும் நாடன் மார்புதர வந்த படர்மலி யருநோய் நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே (நற். 94) எனத் தெய்வத்தை எள்ளுகின்றது கற்பு. கற்புச் சினக்கும் போது தெய்வம் முன்னிற்குமோ? காதல் நோயைக் கழற்சிக் காயால் அறியலாம் என்றால், இவள் கற்பு மேன்மைக்கு அவமானம் என்பது தோழி கருத்து; நன்றால் அம்ம நின்ற இவள் நலனே (ஐங். 248) எனினும், இவ்வெறியாட்டுக் காலத்துக் களவுத் தொடர்பைத் தாய் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ அறிய வாய்ப்பு உண்டு. அறிவித்து விடவும் தலைவியும் தோழியும் முயல்வர். ஒருதாய் கட்டுவிச்சியை அழைத்துத் தன் மகளின் நோய்க் காரணத்தை வினவினாள். முறத்தில் நெற்களைப் பரப்பி எண்ணிக் குறி சொல்வது கட்டுவிச்சியின் வழக்கம். குறி சொல்லும்போது பல்வேறு மலைகளைச் சொல்லிப் பாடுவது உண்டு. அதன்படி முதிய அகவல்மகள் (கட்டுவிச்சி) தமிழ் நாட்டு ஒவ்வொரு மலையாகப் பாடிக்கொண்டு வந்தாள். தங்கள் தலைவன் வாழும் மலையைப் பாடியபோது, அகவல் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர், நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே (குறுந். 23) என்று தோழி இடைப்புகுந்து உரைக்கப் பார்க்கின்றோம். பிற மலைகளை மேலே பாடாதபடியும், தலைவனது மலையையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கும்படியும் கட்டு விச்சியை வேண்டினாள் தோழி. தோழியின் துணிச்சல் தாயின் சிந்தனையைத் தூண்டுமன்றோ? ‘ï«kiy bah‹¿š ït® f£F