வள்ளுவ வளம் (திருக்குறள் வாழ்வியல் விளக்க ஆய்வு நூல்) காமத்துப்பால் (அதிகாரம் 109 முதல் 133) 5 செந்தமிழ்ச் செம்மல் புலவர் மு.படிக்கராமு க.மு; கல்.இ; வளவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வள்ளுவ வளம் - 5 - காமத்துப்பால் ஆசிரியர் : புலவர் மு. படிக்கராமு க.மு; கல்.இ; பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2015 தாள் : 18.6 கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 336 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 315/- படிகள் : 1000 நூலாக்கம் : வி. சித்திரா, பிராசசு இந்தியா அட்டை வடிவமைப்பு : கவி. பாகர் அச்சிட்டோர் : பிராசசு இந்தியா திருவல்லிக்கேணி, சென்னை - 5. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2. சிங்காரவேலர் தெரு தியாகராய நகர் சென்னை - 600 017. தொ.பே. 2433 9030. பதிப்புரை நூலாசிரியர் மு. படிக்கராமு அவர்கள், முதுமுனைவர் செந்தமிழ் அந்தணர், தமிழ்க் கடல் இரா. இளங்குமரனார் அவர்களின் அண்ணன் மகன் ஆவார். படித்த குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பதற்கேற்ப நூலாசிரியரின் குடும்பப் பின்புலம் கல்வியின் பெருமையை உணர்ந்த குடும்பம். நூலாசிரியரின் திருமகன் திருமாவேலன் தமிழ் இதழியல் வரலாற்றில் இன்று மிகச்சிறந்த நிலையில் இருப்பவர். தமிழ் - தமிழினம் மேன்மையுறுவதற்கு தனக்குக் கிடைத்த வாய்ப் பினைப் பயன்படுத்திப் பெரும் பங்களிப்பைச் செய்து வருபவர். வள்ளுவ வளம் எனும் பெயரில் நான்கு தொகுதிகளை எம் பதிப்பகத்தின் வழி வெளிக்கொணர்வதில் பெருமையும் உவகையும் கொள்கிறோம். தமிழ் புகுந்த நெஞ்சிற்குத் தளர்வில்லை, உடலுக்கும் முதுமையில்லை என்பார் பாவலலேறு பெருஞ்சித்திரனார். பாவலரேறு பாடலுக்கு இலக்கணமாகவும், இலக்கியமாகவும் நம் கண்முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் இந்நூலுக்கு விரிந்த அணிந்துரை யளித்து இந்நூலின் ஆழ அகலங்களை எல்லாவகையிலும் உயர்த்தியுள்ளார். அய்யா அவர்களின் அணிந்துரைக்குப் பிறகு இந்நூலைப் பற்றி எழுதுவதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. பாவாணர் வழிநிலை அறிஞர்களில் ஒருவரான பெரும்புலவர் செந்தமிழ்ச் செம்மல் மு. படிக்கராமு அவர்கள் எழுதிய வள்ளுவ வளம் நூலினை (4 தொகுதிகள்) வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். இவ்விரு பெருமக்கள் வாழும் காலத்தில் வாழ்கிறேன் என்ற பெருமை ஒன்றே எனக்குப் போதும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்மறையாம் திருக்குறளுக்கு வெளிவந்த சிறந்த உரைகளில் வள்ளுவ வளமும் ஒன்று. இந்நூல் புதியப் பார்வையைத் தருவதுடன் மேலும் மேலும் வள்ளுவத் துக்கு வளமும் வலிமையும் பொலிவும் சேர்க்கும் புதிய வரவாகும். இந்நூலினை உலகெங்கும் வாழும் தமிழர்கள் தம் இல்லங்களில் வாங்கி வைத்துப் பயன்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். - கோ. இளவழகன் அருவிப் பொழிவு வள்ளுவ வளம் என்னும் நூல் பொழிவு வழியாக வெளி வந்தது. பொழிவு, சாரல் அன்று; தூறலும் அன்று; கருமுகில் குவிந்து மலைமேல் கவிந்து முகடுகளில் இருந்து அருவியாகப் பொழிந்த பொழிவு நூல்! சொற் பொழிவு, வான்மழை பொழிந்த தேன் மழைப் பொழிவாகத் திகழ்ந்த நூல்! பொழிவு இனிமையின் பெருக்காய் இல்லையேல், 133 பொழிவுகள், கிழமை தோறும் குழுமி, இரண்டரை ஆண்டுகள் ஒருவரே பொழிய வாய்க்குமா? கடந்த விழாவுக்கு - ஆம்! - ஆண்டு விழாவுக்கு அவர் வந்தார். இவ்வாண்டு விழாவுக்கு இவரை அழைக்கலாம் என்னும் சுவை அமைப்பரும் கேட்பரும் உள்ள கால நிலையில், தொடர்ந்து திருக்குறள் முழுதுற ஒருவரே அதிகாரம் அதிகாரமாய்ப் பொழிய வாய்த்த அவை அமைப்பரும், கேட்பரும், தொல்காப்பியர் கூறிய எட்டுவகை நுதலிய பெருமையமைந்த கட்டமை அவையமாகவே இருக்க வேண்டும். பொழிவரும் தோட்கும் செவியர் வேட்கும் பொழிவராக இருந்திருக்க வேண்டும்! சுவைமல்கப் படைக்கும் கடை உணவே எனினும், தொடர்ந்து உண்ணுவார் எவர்? வேறுகடை நாடுவது ஏன்? ஆனால், தாயமை உணவு நாளெல்லாம் - வாழும் நாளெல்லாம் சுவையாய் - அதன் பின்னரும் சுவை நினைவாய் அமைவானேன்? உணர்ந்து உணர்ந்து உயிர் நேயம் கலந்து ஆக்கி அமைத்து, அமைவுறத் தக்கதாகப் படைக்கிறார்! மக்கள், மருமக்கள், பேரர், உற்றார், உறவர், விருந்தர் அனைவரும் சுவைக்க உண்கின்றனர். அத்தகையரையே வள்ளுவ ஆசிரியப் பெருந்தகை, உணர்வது உடையார்முன் (உணர்வது உடையார்) சொல்லல் வளர்வதன் பாத்தியுள் (வான் மழை) நீர் சொரிந்தற்று என்கிறார்! ஆதலால் அவையரையும் சுவைப் பொழிவரையும் நீவிர் நல்ல களப்பணியாளர் வாழிய வாழிய என வாழ்த்தி மேலே செல்கின்றேன். அறம் பொருள் இன்பம் என முந்தையர் தமிழ்நெறி கொண்டதைத் தொல்காப்பியர் சுட்டுகிறார். இன்பமும் பொருளும் அறமும் என்றும் கூறுகிறார். மூவேந்தர் முக்குடை வரிசையாகச் செல்வதை, அறம் பொருள் இன்ப வரிசையொடு ஒப்பிட்டுப் புறப்பாடலும் சொல்கிறது. ஆனால், வள்ளுவமே அறம் பொருள் காமம் என்கிறது! அதனை உறுதிப் படுத்தும் வகையில் மூன்றாம் பாலில் 39 இடங்களில் காமம் என்னும் சொல்லை ஆள்கிறார். இரண்டே இடங்களில் அதுவும் முடிவுப் பாடல் இன்பம் என இரண்டுமுறை பயன்படுத்துகிறார். அதே பாடலில் காமம் என்பதும் அதற்கு எனச் சுட்டுச் சொல்லுமாய் இருமுறை வரவே விசைக்கின்றார். காமம் சான்ற கடைக்கோட் காலை முதலாகத் தொல் காப்பியர் பயன்படுத்துகிறார். இன்பம் என்பது எல்லா உயிர்க்கும் பொது எனவும் அவரே சொல்கிறார்! காமம் நிறைந்து இயலும் என்பதை உரியியலில் குறிக்கிறார். பிறை மதி போலும் இன்பம், நிறைமதிக் காமமாய் மாந்த உயிரிடத்தே விளங்குதலை அவர் வழியாகவே பெற வாய்க்கிறது! வள்ளுவர் தொல்காப்பிய வழிஞர்; ஆயினும், அவர் தோள்மேல் இருந்து நோக்கியர்; உலக நூல் செய்தவர்; உய்திநெறி உண்மையைக் கண்டு உரைக்கும் வகையால் உரைத்தவர்! நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பனவும், பிற்றை ஐந்திணை நூல்களும் தொல் காப்பியர் உரிப்பொருள் வைப்பு முறையை வைத்தவாறே வைக்காது நடையிடவும் வள்ளுவம் ஒன்றே புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் முறைமையில் ஒவ்வோர் உரிப்பொருளுக்கும் ஐந்தைந்து அதிகாரங்களாய் இருபத்து ஐந்து அதிகாரங்கள் பாடிக் காமத்துப் பால் எனப் பெயர் சூட்டப்பட்டதுமாம். இவற்றை உட்கொண்டே பொழிவாளர், பொழிவை அமைத்துக் கொள்வது பாராட்டுக்கு உரியதாம். இறையனார் களவியல் என்ன கூறுகிறது என்பது பெயராலேயே விளங்கும். ஆயினும் உரை இது தமிழ் கூறிற்று என்கிறது, அதன்பொருள் என்ன? களவு வழிக் கற்பு தமிழ்நெறி என்பதாம். பத்துப்பாட்டில் ஒன்று குறிஞ்சிப்பாட்டு. கபிலர் பெருமானால் பாடப் பட்டது. பாடியது, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப் பாடியது என்பதாம். அகவாழ்வு, அறவாழ்வு! அதுவே தமிழ்வாழ்வு என்பது தானே பொருள்! திருவள்ளுவர் நூல் தொடக்கத்தில் அகர முதல எனத் தொடங்கியது போலக் காமத்துப் பாலையும் அணங்குகொல் எனத் தொடங்கியதும் எண்ணினால் அவர் நுண்ணோக்குப் புலப்படும். நூல் நிறைவே அன்றிக் காமத்துப் பால் நிறைவும் ன கர இறுவாயே. அகர முதலே எனச் சிறக்கும். முன்னைப்பால்களைப் போலவே காமத்துப் பாலையும் அதிகாரத் தொடக்கத்திலேயே அவ்வதிகாரப் பொருளை விளக்கி, எடுத்த அதிகாரத் தொடர்பை விளக்கி ஒவ்வொருபாடல் பொருளை விளக்கிப் பாடலோ, பாடலைக் கூறிப் பொருளோ கூறி ஒவ்வொன்றற்கும் சங்கச் சான்றோர் தொடங்கி இன்றை வரையுள்ள திருக்குறள் ஆய்வர் உரைகளையோ, பாக்களையோ மேற்கொள் காட்டி அதிகார நிறைவில் அதிகாரத் திரட்டுரையை வரிசைப் படுத்தி மேல் மேலே செல்கிறார் பொழிவர் படிக்கராமர்! இது மேற்கோள், ஒரு வழிமேற்கோள், முழுதுறுமேற்கோள், இலக்கிய மேற்கோள், ஒரு வகை மேற்கோள், தக்க மேற்கோள், வாழ்வியல் மேற்கோள் எனச் சுட்டுகிறார். ஒரு குறளுக்கு ஒத்த குறள்களை யெல்லாம் ஒரு தொகைப் படத் தொகுத்துக் காட்டுகிறார். ஒன்றற்கு மேற்பட்ட பொருள்களைச் சில குறள்களுக்கு எடுத்து வைத்து, இவ்வாறு கொள்ளவும் இடமுண்டு என்கிறார். விரிவான சான்றுகளும் மிக விரிவான சான்றுகளும் காட்டுவதுடன் பொருள் அளவே கூறி அமையவும் செய்கிறார் (1178, 1182, 1187, 1188, 1223, 1240, 1256, 1278-1280) வள்ளுவச் சிறப்பை நயந்து பாராட்டி வியப்புறுத்தும் இடங்கள் உண்டு. (1264, 1302) அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் உள்ள வேறுபாட்டை அருமையாக விளக்கும் இடம் உண்டு (1255) வாழ்வியல் சான்றுகளும் புனைவுச் சான்றுகளும் உண்டு (அதி.123; பக்.208; பக்.287) தனிப்படர் மிகுதியின் தொடக்கம் (அதி.120) காதற் சிறப்புரைத்தலாய் விரிவாதல் நயமிக்க தாகும் (140-141) ஒன்றை ஒன்றால் பெருக்கினால் ஒன்றுதான் (பக் 39) மின்மினி விளக்கை உலகப் பெருவிளக்கு ஆக்குபவர் (பக்.99) நெடும் பிரிவுக்குப் பயிற்சியே பொழுதுவழி நாள் வழிப் பிரிவு (பக் 103) மானம் கருதிவாழ்வைப் பாழாக்கிக் கொள்ளக்கூடாது (கு. 1178); (பக்.133) என்பன போல்வன ஆழமிக்கவை. சில விளக்கங்களின் மேற்கோள்கள் மிகை எனத் தோன்றினும் அவை அந்நூலையும், அவ்வுரையையும் தேடாமல் கைமேல் கனியாகச் செய் திட்ட உத்தி எனல் அமைவு! தொடர்ந்து ஒருவர் உரையை ஒப்பிட்டுக் காட்டுதல் எளிதில் கருத்துப் பரவச் செய்யும் எண்ணம், என அமையலாம்! திருவள்ளுவர் வேண்டுதல் என நிறைவில் 108 மணிகளைக் கோத்து வைத்தது அறம் பொருள் கோத்த மணிமாலையன்னதாம்! காமத்துப்பலோ நூன்முறை! குறிஞ்சித்திணை, முல்லைத் திணை ஆகியவை புணர்தலுக்கும் இருத்தலுக்கும் மட்டுமே உரியவை? எல்லாத் திணைகளும் எல்லா உரிப்பொருள்களுக்கும் உரியவை தாமே! அவ்வவ் விடத்துக்கு; அவ்வக் காலத்துக்கு மட்டுமே உரியவை எனல் வாழ்வியல் நோக்கு ஆகாதே! இத்தகு பேருரை விளக்க நூல்களை வெளியிடல் எளிதன்று! ஆனால், அப்பணியே தமிழ்மொழி இன மீட்டெடுப்புப் பணியாகக் கொண்டு, தொகுதி தொகுதிகளாகவும், தொடர் தொடராகவும் வெளியிடுதலைப் பிறவி நோக்காகக் கொண்ட தமிழ் - தமிழினப் போராளி திருமிகு கோ. இளவழகனார்க்கு இயல்பாகவும் எளிதாகவும் ஆகின்றன என வாழ்த்துதலும், அவற்றை வாங்கிப் பயன்படுத்தலும் பிறரை வாங்கத் தூண்டலும் கடப்பாடம்! வாழிய நலனே! வாழிய நலனே! திருவள்ளுவர் நிலையம் இன்ப அன்புடன், 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை -625 006. ஆசிரியருரை வள்ளுவர் குறள் தமிழில் தனிமுதல் அறநூலே - நாவலர் பாரதியார் இன்பத்துப்பாலை அனைவரும் குற்றமற்ற முறையில் படித்து இன்புறுமாறு எழுதப்பட்டிருத்தல் பாராட்டத் தக்கது. -மேனாட்டுத் தமிழறிஞர் போப். உலகம் போற்றும் ஒப்பற்ற வாழ்வியல் நூலாம் திருக்குறளில் அமைந்துள்ள மூன்றாம் பாலாகிய காமத்துப்பால், கற்பனை வளம் செறிந்த கவிதைப் பூஞ்சோலையாகும். தொல்காப்பியர் காட்டிய நெறி நின்று, தமிழ் அக இலக்கண மரபு போற்றும் அருமையான பகுதியாகும். அன்பு கெழுமிய காதல் வாழ்வே உலகை வாழ்வாங்கு வாழும் உலகாக்கும். ஆகவே, திருக்குறளில் உள்ள அறத்துப் பால் பொருட்பால் கற்பார் காமத்துப் பாலை ஒதுக்கி விடாமல் கட்டாயம் கற்று இன்பமும் பயனும் அடைவது நன்று. நான் என் இருபத்தைந்தாம் அகவையில் திருமண வாழ்வு மேற்கொண்டவன். ஐம்பதாம் அகவையில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோயில் இந்து சமயத் தமிழ்ப் பேரவை சார்பில் `சங்கர நாராயணர் திருக்கோவிலுக்குள் திருக்குறள் வாழ்வியல் விளக்க ஆய்வுப் பொழிவினை முப்பாலுக்கும் முறையே நிகழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றவன். அறத்துப்பால், பொருட்பால் விளக்கவுரை நிகழும் போழ்து அதனைத் தடைப்படுத்த முயன்ற சமயப் பற்றாளர்கள் கூடக் காமத்துப் பால் ஆய்வுரையினை அவரவர்கட்கு வாய்ப்பான இடங்களிலிருந்து கேட்டு இன்புற்றனர் என்றால் திருவள்ளுவரின் காமத்துப் பாலின் மேன்மை புலப்படும். ஐம்பதாம் அகவையில் முப்பாலையும் தொடர்ந்து பொழிவு செய்யும் வாய்ப்புக் கிட்டியாங்கு, எழுபத்தைந்தாம் அகவை கடந்து எழுத்துவழி நூலாக்கும் வாய்ப்புக் கிட்டியமை மன நிறைவு வழங்குகிறது. வள்ளுவ வளம் என்னும் தலைப்பில் அமைந்த வாழ்வியல் விளக்க ஆய்வு நூலின் பெருள் வளத்தைச் செழிக்க வைத்த நூல்கள். 1. தொல்காப்பியம் 2) அகநானூறு, 3) நற்றிணை, 4) குறுந்தொகை, 5) ஐங்குறுநூறு 6) கலித்தொகை 7) சிலப்பதிகாரம் 8) சீவக சிந்தாமணி 9) மணிமேகலை 10) பழமொழி 11) நாலடியார் 12) இன்னிலை 13) தினைமாலை 14) கம்பராமாயணம் 15) தேவாரம் 16) திருக்கோவையார் 17) திருவாய்மொழி 18) தாயுமானவர் பாடல் 19) பெருங்கதை 20) முத்தொள்ளாயிரம் 21) நளவெண்பா 22) கலிங்கத்துப் பரணி 23) யசோதரா காவியம் 24) சூளாமணி 25) யாப்பருங்கலக் காரிகை 26) கந்தபுராணம் 27) தஞ்சைவாணன் கோவை 28) திருவெங்கைக் கோவை 29) கோடீச்சுரக் கோவை 30) குலோத்துங்க சோழன் கோவை 31) திருவெங்கைக் கலம்பகம் 32) திருக்கைலாய ஞான உலா 33) கூர்ம புராணம் 34) தணிக்கைப் புராணம் 35) பிரமோத்தர காண்டம் 36) பிரபுலிங்கலீலை 37) திருவாரூர் நான்மணி மாலை 38) முதுமொழி மேல்வைப்பு 39) தினகர வெண்பா 40) இரங்கேச வெண்பா 41) சோமேசர் வெண்பா 42) தனிப்பாடல் திரட்டு. ஆகியனவாகும். உரை நடையாலும் கவிதையாலும் கருத்துக் கொடை வழங்கி வழங்கி வழிகாட்டிய பெருமக்கள் 1. மணக்குடவர் 2. பரிமேலழகர் 3. காளிதாசர் 4. பரிதியார் 5. பரிப்பெருமாள் 6. தண்டபாணி தேசிகர் 7. கவிராச பண்டிதர் 8. புலவர் குழந்தை 9. வள்ளலார் 10. பாரதியார் 11. பாரதிதாசனார் 12. கவிமணியார் 13. கண்ணதாசனார் 14. திருக்குறள் பெ. இராமையா. 15. மு. வரதராசனார் 16. இரா. இளங்குமரனார் ஆகிய தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் ஆவர். வாழுத்துரை வழங்கி நூலுக்கு அணி சேர்த்துள்ள வாழும் வள்ளுவப் பெருந்தகை திருமிகு. இரா. இளங்குமரனார் அவர்கட்கும். நூலைச் செப்பமாய்ப் பதிப்பித்து வெளிப்படுத்தும் தமிழ்த் தொண்டையே வாணாள் தொண்டாகக் கருதி அயராது உழைத்து வரும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப் போராளி திருமிகு. கோ. இளவழகனார் அவர்கட்கும் உளங்கனிந்த நன்றி. வேறு எச்சார்பும் இன்றித் திருக்குறள் சார்பு ஒன்றையே நோக்காகக் கொண்டு ஒல்லும் வகையான் என்னால் உருவாக்கம் பெற்ற இந்நூன் மலரைத் தமிழன்னையின் திருவடியில் இட்டு வணங்குகிறேன். தமிழுலகம் ஏற்றருள வேண்டுகிறேன். வள்ளுவம் வாழ்வியலாய்த் துலங்க வேண்டும். அன்பகத்தான் அறிவகம் மு. படிக்கராமு 31. இராம் நகர், மகாராச நகர் அஞ்சல் திருநெல்வேலி, 627011. 9952144293. நூலாசிரியரைப் பற்றிய குறிப்பு: நூலாசிரியர் மு. படிக்கராமு விருதுநகர் மாவட்டம், இராச பாளையம் வட்டம், வாழவந்தாள் புரம் என்னும் சீருரில் வாழ்ந்த வள்ளுவ நெறி வாழ்வராம் உழவர் ப.இரா. முத்தையா, மனைத்தக்க மாண்பர் சீனியம்மாள் ஆகிய நிறைகுணச் செம்மல்களின் மக்களுள் ஒருவர் 1.6.1938இல் பிறந்தவர். இடைநிலை ஆசிரியர் பயிற்சி, தமிழ்ப்புலவர், தமிழ் முதுகலை ஆசிரியர் இளங்கலை பயின்றவர், இராசபாளையம் ஊ.ஒ. தொடக்கப் பள்ளிகளில் ஒன்பது ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும், கோயிற்பட்டி ஆ.வை. மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருபத்தெட்டு ஆண்டு களும் பணிபுரிந்து 1.6.1996இல் பணி நிறைவு பெற்றவர். செய்யும் பணியைத் தெய்வப் பணியாகக் கருதிச் செப்பமாய்ச் செய்யக் கூடியவர். இராசபாளையம், கோயிற்பட்டித் திருவள்ளுவர் மன்றங்களில் செயலாளராய் அமைந்து தமிழ்த் தொண்டாற்றியவர். முரம்பு பாவாணர் கோட்ட நெறியாளரும் ஆவார். சங்கரன் கோயிலில் இந்து சமயத் தமிழ்ப் பேரவை சார்பில் 133 வாரங்கள் திருக்குறள் தொடர்பொழிவைச் சிறப்புறச் செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் முத்து லக்குமி அவர்கள் இவரின் வாழ்க்கைத் துணைவி ஆவார். நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி, கணினித்துறைத் துணைப் பேராசிரியர் முனைவர் ப. வேல்மணி அவர்களும் இளையோர் விகடன் ஆசிரியர் ப. திருமாவேலன் அவர்களும் இவருடைய மக்கள் ஆவர். மேலநீலித நல்லூர் ப.மு.தே. கல்லூரி இயற்பியல் பேராசிரியிர் முனைவர் மு.சிவக்குமார் அவர்களும் சென்னை பதின்மப்பள்ளியில் பட்டந்தாங்கி ஆசிரியராகப் பணிபுரியும் f.கி.ïnuQfh அவர்களும் மருமக்கள் ஆவர். செந்தமிழ் அந்தணர், தமிழ்க் கடல் இரா. இளங்குமரனார் அவர்களின் தமையனாரின் மைந்தரும் ஆவார். அன்னார் வகுத்துத் தந்த நெறிமுறைப் படி தமிழ் நெறித் திருமணங்களைச் சிறப்பாகச் செய்து வரும். பண்பட்ட பொழிவாளரும் குறள் நெறி பரப்பாளரும் ஆவார். அன்னாரின் பண்பையும் தமிழ்ப் பணியையும் பாராட்டிப் பல்வேறு தமிழ் அமைப்புகள்: இளம் தமிழ்த் தென்றல் அறிவுச் சுடர் செந்தமிழ்ச்செல்வர் செந்தமிழ்ச் செம்மல் குறளாயச் சான்றோர் திருக்குறள் மாமணி நூலறி நுண்ணியர் வாழ்வியல் வழிகாட்டி பண்பாளர் தமிழறிஞர் ஆகிய பட்டங்களுடன் திருவள்ளுவர் விருதும் வழங்கிச் சிறப்பித்துள்ளன. காமத்துப் பால் விளக்கம் வாழ்வியல் நூலாம் திருக்குறளின் மூன்றாம் பகுதி, இன்பத்துப்பால் எனச் சுட்டப்படுகிறது. எனினும், தோன்றிய காலத்தில் இட்டு வழங்கிய பெயர் காமம் என்றே இருந்திருக்க வேண்டும். காமம் மூன்றாம் பாலாய் இடம் பெற்றிருப்பினும் வாழ்வியலுக்கு ஏற்ப அடித்தளமாய் முதன்மை வாய்ந்ததாய் விளங்க வேண்டியது காமத்துப்பாலே. குறள் என்ற மூன்றெழுத்து நூலில் அமைந்துள்ள பகுப்பு களும் மூன்று. முதற்பகுப்பு அறம் என்ற மூன்றெழுத்தாலும் இரண்டாம் பகுப்பு பொருள் என்ற மூன்றெழுத்தாலும் அமைக்கப் பட்டது போலவே மூன்றாம் பகுப்பும் காமம் என்ற மூன்றெழுத்துச் சொல்லாகவே அமைக்கப்பட்டிருக்கும் என்பதுடன். மூன்றாம் பாலில் காமம் என்ற சொல் முப்பத் தொன்பது இடங்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இன்பம் என்ற சொல் இடம் பெற்றது 1166, 1330 என்னும் இரண்டு குறட்பாக்களில் மட்டுமே. அத்துடன் அக்குறளில் காமம் என்ற சொல்லும் இல் லாமல் இல்லை. இன்பம் என்பது எல்லா உயிர்களுக்கும் அமைந்த உயிர் உரிமை! அவ்வுரிமை அவ்வுயிர்களின் பிறப்போடே தோன்றி, வளர்ந்து, பெருகி வரும், தன்மை உடையதாகும். ஆகவே இவ் வியற்கையின் நுட்பத்தைப் பழந்தமிழ்க் காவலர் தொல்காப்பியர். எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என அழகாகப் படம் பிடித்துக் காட்டினார். இன்பம் என்பது எல்லா உயிரிகளுக்கும் பொது வகைப் பட்டது. ஆனால் காமமோ அத்தகையதன்று. அஃது ஆறறிவு உயிராகிய மாந்தர்க்கே சிறப்பு உரிமைஉடையதாகும். ஏனெனில் காமம் உடலின் அளவில் நில்லாமல், நெஞ்சின் நிறைவாகி, ஈருயிர் ஓருயிராய் ஒன்றும் பெருமை வாய்ந்தது என்பதைக் காமம் என்னும் சொல்லே தெரிவிக்கும் ஆகவே திருவள்ளுவர் மூன்றாம் பாலில் காமம் என்ற சொல்லைப் பயில வழங்கினார். கமம் நிறைந்தியலும் என்கிறார் தொல்காப்பியர். கமம் முதல் நீண்டு காமம் ஆயிற்றாம். இதனைக் காமஞ் சான்ற என்பார் தொல்காப்பியர். சாலுதல் என்றால் நிறைந்து அமைதல் என்பது பொருளாகும். காமம் சான்ற என்ற தொடருக்கு முழு விளக்கமாய்த் திருக்குறளின் மூன்றாம் பாலாகிய காமத்துப்பால் அமைந்துள்ளது. என்பது தெள்ளிதின் புலப்படும். வேற்று வாடை எதுவும் கலக்காத தூய தமிழ் மணத்தோடும், மாறாத் தமிழ் மரபோடும் அமைந்து விளங்குவது திருக்குறளின் காமத்துப்பால் என்பதை அதன் அதிகாரப் பெயராலும், வைப்பு முறையாலுமே வெளிப் படையாக அறிந்து கொள்ளலாம். தமிழர்க்குத் தனிச் சிறப்பாக அமைந்தது பொருள் இலக் கணம். அப்பொருள் அகம், புறம் என இரு வகைப்படும். அகப்பொருள், முதல், கரு, உரி என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளது. அம்முப்பொருள்களுள், முதற் பொருளை விடக் கருப் பொருளும், கருப்பொருளை விட உரிப் பொருளும் உயர்ந்தது என்பது தொல்லாசிரியர் துணிவு. அவ்வுரிப் பொருளையே பொருளாகக் கொண்டு அமைந்தது திருக்குறளின் காமத்துப் பாலாகும். தொல்காப்பியர் எப்படிப்புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பனவும் இவற்றின் நிமித்தங்களும் உரிப் பொருள்கள் என ஒரு ஒழுங்கில் வைத்தாரோ அவ்வொழுங்கில் ஒரு சிறு மாற்றமும் செய்யாமல் அப்படியே போற்றிக் கொண்டவர் தாம் திருவள்ளுவர். உயிர் தளிர்க்கச் செய்யும் உறைவு இடமாய் விளங்கும் காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்களைக் கொண்டது. தமிழ் நெறி உரிப்பொருள் களோ ஐந்து வகைப் பட்டவை. ஆகவே, ஓர் உரிப் பொருளையும் அதன் சார்பையும் விளக்க ஐந்து அதிகாரமாய், ஐந்து உரிப்பொருள்களுக்கும் ஐந்தைந்து அதிகாரங்கள் பாடித் தமிழ் நெறியை மெய்ப்பித்த தமிழ்நெறிக் காவலர் திருவள்ளுவர் ஆவார். (அ) புணர்தலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் முதல் ஐந்து அதிகாரங்கள். 1. தகையணங்குறுத்தல் 2. குறிப்பறிதல் 3. புணர்ச்சி மகிழ்தல் 4. நலம் புனைந்துரைத்தல் 5. காதற் சிறப்புரைத்தல். (ஆ) பிரிதலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் இரண்டாம் ஐந்து அதிகாரங்கள். 1. நாணுத் துறவுரைத்தல் 2. அலர் அறிவுறுத்தல் 3. பிரிவாற்றாமை 4. படர் மெலிந்திரங்கல் 5. கண் விதுப்பழிதல். (இ) இருத்தலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் மூன்றாம் ஐந்து அதிகாரங்கள். 1. பசப்புறு பருவரல் 2. தனிப்படர் மிகுதி. 3. நினைந்தவர் புலம்பல் 4. கனவு நிலை யுரைத்தல் 5. பொழுது கண்டிரங்கல் (ஈ) இரங்கலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் நான்காம் ஐந்து அதிகாரங்கள். 1. உறுப்பு நலனழிதல் 2. நெஞ்சொடு கிளத்தல் 3. நிறையழிதல் 4. அவர் வயின் விதும்பல் 5. குறிப்பறிவுறுத்தல் (உ) ஊடலாகிய உரிப்பொருளையும் அதன் சார்பையும் விளக்கும் ஐந்தாம் ஐந்து அதிகாரங்கள். 1. புணர்ச்சி விதும்பல் 2. நெஞ்சொடு புலத்தல் 3. புலவி 4. புலவி நுணுக்கம் 5. ஊடலுவகை. ஒவ்வோர் ஐந்தனுள்ளும் இடை நின்றது உரிப்பொருளையும் முன்னுள்ள இரண்டு அதிகாரங்களும் பின்னுள்ள இரண்டு அதிகாரங்களும் அதன் சார்பு நிலைகளையும் விளக்கி நிற்பதையும் கண்டு கொள்ளலாம். போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங் குறிஞ்சி ஆக்கம்சேர் ஊடல் அணி மருதம் - நோக்குங்கால் இல்லிருக்கை முல்லை இரங்கல் நறுநெய்தல் சொல்லிருக்கும் ஐம்பால் தொகை என்னும் பழம் பாடல் ஐந்திணையையும் ஐந்திணை ஒழுக்கத்தையும் தெளிவுபடுத்தும். உளம் ஒன்றிய காதலர் வாழ்வைக் கற்பனை நயத்துடன் வள்ளுவர் வரைந்த ஓவியக் கூடமாய் விளங்கும் காவியச் சோலையே காமத்துப்பால். காமத்துப்பால் தலைவன் மீது காதல் கொண்ட தலைவி, அவனைக் கொண்கன், கொண்டான், கொழுநன் என அழைக்கப் படுவதுடன் அவர், இனியர், உற்றார், கலந்தார், கள்வன், காதலவர், கேள், துணை, நச்சியார், நயந்தவர், நயப்பித்தார், பரிந்தவர், பெட்டார், பேணியார், மணந்தார், வீழ்வார், வேண்டியவர், வேந்தன் என்றெல்லாம் உயரிய சொற்களால் சுட்டப்படுவது நினைந்து பார்க்கத் தக்கதாகும். அவ்வாறே காமத்துப்பால் தலைவி மீது காதல் கொண்ட தலைவன் அவளை, அசையியல், அணியிழை, அரிவை, ஆயிழை, இல், இல்லவள், இல்லாள், இவள், ஒண்டொடி, ஒண்ணுதல், ஒள்ளமர்க் கண்ணாள், ஒளியிழை, கண்ணிறைந்த காரிகை, குறுந்தொடி, சேயிழை, திருநுதல், துணை, பணிமொழி, பூவன்ன கண்ணாள், பெண், பெண்டகை, பெண்டிர், பேதை பொருளாள், மகளிர், மடந்தை, மடவால், மலரன்ன கண்ணாள், மனை, மனையாள், மாணிழை, மாதர், வாழ்க்கைத் துணை, என்றெல்லாம் அழைக்கும் அழைப்பே அவர்களின் உள்ளத்தையும் உயர்வையும் படம் பிடித்துக் காட்டும். பொருளடக்கம் பதிப்புரை 3 அருவிப் பொழிவு 5 ஆசிரியருரை 10 நூலாசிரியரைப் பற்றிய குறிப்பு 13 காமத்துப்பால் ஒரு விளக்கம் 15 109. தகையணங்குறுத்தல் 21 110. குறிப்பறிதல் 31 111. புணர்ச்சி மகிழ்தல் 43 112. நலம் புனைந்துரைத்தல் 59 113. காதற் சிறப்புரைத்தல் 70 114. நாணுத் துறவுரைத்தல் 81 115. அலர் அறிவுறுத்தல் 97 116. பிரிவாற்றாமை 107 117. படர் மெலிந்திரங்கல் 123 118. கண் விதுப்பழிதல் 132 119. பசப்புறு பருவரல் 141 120. தனிப்படர் மிகுதி 152 121. நினைந்தவர் புலம்பல் 165 122. கனவு நிலை உரைத்தல் 178 123. பொழுது கண்டு இரங்கல் 190 124. உறுப்பு நலன் அழிதல் 205 125. நெஞ்சொடு கிளத்தல் 215 126. நிறையழிதல் 227 127. அவர் வயின் விதும்பல் 237 128. குறிப்பறிவுறுத்தல் 249 129. புணர்ச்சி விதும்பல் 262 130. நெஞ்சொடு புலத்தல் 275 131. புலவி 286 132. புலவி நுணுக்கம் 299 133. ஊடல் உவகை 313 காமத்தில் வளரும் அறம் 325 109. தகையணங்குறுத்தல் குயில் கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த மயில்ஆடிக் கொண்டிருக்கும்; வாசம் உடைய நற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர் ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிகஉண்டு; பூக்கள் மணங்கமழும்; பூக்கள் தோறும் சென்று தேனீக்கள் இருந்தபடி இன்னிசை பாடிக் களிக்கும்; வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு, காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு, நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்று சொல்லிடுவார் எனப் பாவேந்தர் காட்டும் சஞ்சீவி மலைச் சாரல் போன்ற கைபுனைந்தி யாற்றாக் கவின் பெறுவனப் பெல்லாம் ஒருங்கு திரண்ட இடத்திற்குச் சென்றான் இயற்கை வனப்பில் ஒன்றிய உள்ளங் கொண்ட, பேராண்மை யும் பேரறிவும் பேரன்பும் உருக் கொண்ட, பேரழகுவாய்ந்த கட்டிளங்காளை அப்பொழுது திடிரென மின்வெட்டுப் போல அவன் காணும் தொலைவில் ஓர் அழகிய உருவம் அவன் கண்களில் தென்பட்டது. அதனைக் கண்டவுடன் அவன் திண்ணிய நெஞ்சத்தில் ஏதோ ஓர் இன்ப அதிர்ச்சி தோன்றியது. அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். என் கண்ணைக் கவ்வி நெஞ்சைக் கலக்கும் இவ்வுருவம் கண்டவரை வருத்தும் இச்சோலையில் வாழும் தெய்வப் பெண்ணாக இருக்குமோ? அப்படியும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை; ஒரு வேளை இவ்வழகிய சோலையில் வாழும் அழகிய மயிலோ? அப்படியும் சொல்ல முழுவாய்ப்பு இல்லை; மக்கள் இனத்தைச் சேர்ந்த திரண்ட கூந்தலை உடைய பெண்ணாக இருக்குமோ? இவ்வழகிய உருவம் மூன்றில் எந்த வகையைச் சார்ந்தது என முடிவு செய்ய முடியாமல் நெஞ்சம் மயங்குகின்றதே என எண்ணி அவ்வழகில் சொக்கி அப்படியே நின்று விட்டான் என்பதை வள்ளுவர், அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ, கனங்குழை மாதர்கொல்! மாலும்என் நெஞ்சு (குறள் 1081) என அழகில் மயங்கிய மனத்தவனை நம் கண்முன் நிறுத்திக் காமத்துப் பாலுக்குத் தோற்றுவாய் காட்டுகிறார். எழுதலாகா உருவும் தன் வருத்தமும் பற்றி அணங்கு கொல் என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி ஆய்மயில் கொல் என்றும் தன் நெஞ்சம் சென்றமையும், அவள் எதிர் நோக்கியவாறும் பற்றி `மாதர் கொல் என்றும் கூறினார் எனப் பரிமேலழகர் வழங்கும் குறிப்புரையும் எண்ணிப் பார்க்கத் தக்கது. திருவளர் தாமரை சீர்வளர் காவிகள், ஈசர் தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்கு பைங்காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ மருவளர் மாலை ஓர் வல்லியின் ஒல்கி அனநடை வாய்ந்து உருவளர் காமன்தன் வென்றிக் கொடி போன்று ஒளிர்கின்றதே என்னும் திருக்கோவையார் செய்யுள் இயற்கைப்புணர்ச்சியில் காட்சியை விளக்க அமைந்தது நல்லதொரு எடுத்துக்காட்டாகும். போதுலாஞ் சிலையோ பொருவேற்கணோ மாதுலா மொழியோ மடநோக்கமோ யாது நான் அறியேன் அணங்கன்னவள் காதலாற் கடைகின்றது காமமே என்னும் பதுமையார் இலம்பகத்தில் உள்ள இச்சீவகசிந்தாமணிப் பாடல் ஒருவகையில் மேற்கோளாய் அமைகிறது. ------------ நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து (குறள் 1082) தான் காண்பது தெய்வப் பெண்ணும் அன்று, அழகிய சிறந்த மயிலும் அன்று, திரண்ட கூந்தலை உடைய பெண் தான் என ஓரளவு தெளிவு பெற்று அவளை உற்று நோக்கினான். தன்னை நோக்கிய அவ்வழகனை நோக்கிய அவ்வழகியும் அவனைப் போலவே நோக்கினாள். இவன் அவளை நோக்கிய நோக்கு அவளுக்கு அப்பொழுது என்ன உணர்வை உருவாக்கிற்றோ தெரியவில்லை. ஆனால் அவள் நோக்கிய நோக்கு இவனுக்குத் தானே பகையைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் பொருந்திய தெய்வப் பெண்ணாகிய ஒருத்தி, தான் தனித்து வந்து தாக்குவதோடு அமையாது, பெரும் படை கொண்டு வந்து தாக்குவது போன்ற உணர்வுக்கு ஆட்பட்டான். ஒத்த பருவத்தினர் நோக்கைக் கம்பனும், அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்றும், நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேலினை என்றும் பாடுவதும் ஒப்பு நோக்கத் தக்கதே. பூக்கவின் கொண்ட புகழ்சால் எழில்உண்கண் நோக்குங்கால் நோக்கின் அணங்காக்கும் சாயலாய் என்னும் கலித்தொகைத் தொடரும் தக்க மேற்கோள் ஆகும். ------------ பண்டறியேன் கூற்றென் பதனை; இனியறிந்தேன் பெண்தகையால் பேரமர்க் கட்டு (குறள் 1083) காளைக்குக் கன்னியின் நோக்கு தெய்வப் பெண் தன் படைக் கருவி கொண்டு தாக்குவது போல் வேதனைப் படுத்தியது. வேதனை எல்லை தாண்டி உயிர்ப் போராட்டமாக இருப்பதாக உணர்ந்ததால் இப்பொழுது இப்படி எண்ண முற்பட்டான். எப்படி? கூற்றம் மிகக் கொடுமை செய்யும் என்று பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேனே அன்றி, இதற்கு முன்னர் நான் அக்கூற்றைக் கண்டதே இல்லை. ஆனால் இப்பொழுது நேரிலேயே கண்டு விட்டேன். ஆம். அது பெண் தன்மையுடனும், போர்த் தொழில் புரியும் அகன்ற கண்களுடனும் அல்லவா தோற்றம் அளிக்கிறது என மனத்தில் உணர்ந்தான். வண்ண மேகலைத் தேர்ஒன்று வாள் நெடும் கண் இரண்டு, கதிர் முலைதாம் இரண்டு உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ? எனச் சீதையைக் கண்ட இராமன் எண்ணுவதாகக் கம்பன் பாடும் பாட்டும் தக்க மேற்கோளாகும். மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் ஆண்மையில் திரிந்துதான் அருந்தொழில் திரியாது நாணுடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப் பன்மொழி நரம்பின் திவவியாழ் மிழற்றிப் பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டென எனச் சிலப்பதிகாரம் இந்திர விழா எடுத்த காதையில் கூறும் கூற்றும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். ------------ கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால், பெண்தகைப் பேதைக்கு அமர்த்தன கண் (குறள் 1084) காளைக்கு அக்கன்னியைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் வேட்கை உள்ளத்தில் பொங்கி வழிகிறது. ஆனால் அவள் கண்களை ஓரக் கண்ணால் பார்க்க முடிகிறதே தவிர நேருக்கு நேராகப் பார்க்கத் துணிவு பிறக்கவில்லை. ஆனால் சிந்தனை ஓடுகிறது. பெண்ணிற்குரிய சிறந்த குணங்களெல்லாம் வாய்க்கப் பெற்ற இம்மங்கையின் கண்கள் தம்மைக் கண்டோர் உயிரை விழுங்கும் தோற்றம் உடையதாக அல்லவா அமைந்துள்ளது. ஆகவே, அவளின் ஏனைய பொறிகளின் அமைந்த தோற்றத்தோடு ஒப்பிடுகையில் இவள் கண்கள் மாறுபட்ட தன்மை உடையதாக அல்லவா தோன்றுகிறது என எண்ணுகிறான். கூற்றமோ, கண்ணோ, பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து (குறள் 1085) காளையைக் கானகத்தில் கண்ட கன்னி அவன் புறத் தோற்றம் கண்டு மயங்கி அவன் நெஞ்சத் தூய்மையை அறியாது காதல் வயப்பட்டுத் தலையாட்டுபவள் அல்லள். அவள் குறிப்பறியும் திறன் வாய்க்கப் பெற்ற கூர்த்த மதியுடையவள். ஆகவே, தன்னை எதிர்பாரா வகையில் கண்ட காளையைப் பார்த்து அவள் பார்த்த பார்வை அவன் தகுதியை, ஆற்றலை, வீரத்தை அளந்து பார்க்கும் பார்வை அது கூற்றுவனைப் போலப் பார்க்கும் அச்ச மூட்டும் பார்வை! ஒன்று. தனிமையில் தன்னைக் காண நேர்ந்தவர் கொடுமைக்காரராய் இருந்தால் என் செய்வது எனக் கலங்கி மருண்டு பார்க்கும் பார்வை ஒன்று. யாருக்கும் யாரும் அஞ்சத் தேவையில்லை. எதிர்பாராமல் ஏதேனும் இடையூறு நேர்ந்தாலும் அதிலிருந்து நம்மைக் காக்கத் தகுதியான துணையொன்று கிட்டிவிட்டது என மன நிறைவுடன் பார்க்கும் பார்வை ஒன்று. இம்மூன்று தன்மைகளும் ஒருங்கே அமைந்ததாக அவள் பார்வை அமைந்துள்ள நுட்பத்தை நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால், கண்ணல்ல தில்லை பிற என்னும் குறளுக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் காளை அவளை உற்று நோக்கித் தனக்குள் இம்மெல்லியலாளின் கண் வருத்த மடையுமாறு பார்ப்பதால் அவை கூற்றமோ? என்னை அன்புடன் நோக்குவதால் கண்ணோ? மருண்டு பார்ப்பதால் மானோ? இம்மூன்று தன்மைகளும் ஒருசேர விளங்குகிறதே என்று வியந்தான். கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேரெழில் சிறப்பினைக் கம்பன், கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம் வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள் சொல்லும் தன்மைத்து அன்றுஅது குன்றும் சுவரும் திண் கல்லும் புல்லும் கண்டு உருக, பெண்கனி நின்றாள் என்னும் பாடல் ஒருவகை மேற்கோளாகும். சிலப்பதிகாரம் கானல் வரியில் எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும் கறைகெழுவேல் கண்ணோ கடுங் கூற்றம் காணீர் என்பதையும் ஒப்பு நோக்குக. ஒன்றே உயிரை உடையீர், ஒருவிப் போமின் இவள்கண் அன்றே கூற்றமாகி, அருளாது ஆவி போழ்வது என்றே கலையும் சிலம்பும் இரங்க, இனவண் டார்ப்பப் பொன்தோய் கொடியின் நடந்து புனல் சேர் பவளைக் காண்மின் எனச் சீவகசிந்தாமணி, குணமாலையார் இலம்பகத்தில் சீவகன் கூறும் கூற்றும் ஒப்பு நோக்கத் தக்கதே. கன்னியின் கண்கள் அச்சமூட்டும் கண்களாகவும் அஞ்சும் கண்களாக வும் அமைந்த கண்களாகவும் முத்திறம் காட்டுவதைக் கண்டு வியந்தான் காளை. என்னை யார் என்று நினைத்தாய்? என்னை நெருங்கினால் கொன்று விடுவேன். நான் எதற்கும் அஞ்சாதவள் என்ற குறிப்பினைத் தன் கண்பார்வை வழியே உணர்த்தினாள். நடுங்கிப் போன காளை, தான் நடுங்காது இருக்கக் கண்ட வழியைத் தெரிவிக்கும் பாடலே, கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்னிவள் கண் (குறள் 1086) என்பதாகும். வில்லினை ஒத்த வளைந்த இக்கன்னியின் கண்கள் ஆடாமல் அசையாமல் மூடுதல் இல்லாமல் விழித்தது விழித்தவாறே பார்ப்பதால் தான் காளை நடுங்கிப் போனான். ஆகவே, கன்னியின் வளைந்த புருவங்கள் வளையாமல் விழித் திரை கண்களைச் சற்றே மறைக்கு மாயின், அதன் பின் இவள் கண்கள் தான் நடுங்கத் தக்க துன்பத்தைச் செய்ய மாட்டா : என்று கற்பனை செய்கிறான். கன்னியின் கழுத்துக்கு மேலே தன்பார்வையைச் செலுத்திய காளை தன் பார்வையைச் சற்றே தாழ்த்தி நோக்கிய போது தோன்றிய கற்பனை கடாஅக் களிற்றின்மேல் கட்படாம், மாதர் படாஅ முலைமேல் துகில் (குறள் 1087) என மலர்ந்தது. தலைவியின் நிமிர்ந்த கொங்கைகளின் மேல் ஆடை போர்த் தப்பட வில்லையானால் அவை எனது உயிரை வருத்தும். அவ்வாறு அவை எனது உயிரை வருத்தாதபடி, அவள் கொங்கை களின் மீது அணியப்பட்ட ஆடை. துன்புறுத்தும் தன்மையினை உடைய மதம் பிடித்த ஆண் யானையின் கண்களை மறைத்து இட்ட முகப்படாம் போன்று அமைந்துள்ளதாக எண்ணினான். இயற்கைப் படைப்பில் ஆற்றல் மிக்க இருபெரும் பண்புகள் காதலும் வீரமும் ஆகும். இரண்டிலும் மிகப் பெரும் ஆற்றல் வாய்ந்தது காதலே என்பதைத் தம் பட்டறிவால் உணர்ந்து கொண்ட பெருவீரன் பேசும் பேச்சே, ஒண்ணுதற் கோஓ உடைந்ததே, ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (குறள் 1088) போர்க்களத்தில் வலிமை பொருந்திய பகைவரும் அஞ்சி நடுங்கத்தக்க என் தோள்வலிமையும் மனவலிமையும் பெருமிதமும் உடைய எனது பேராண்மை, ஒளி பொருந்தி விளங்கும் இவளின் அழகிய நெற்றிக்கு எதிர் நிற்க முடியாமல் தோற்று விட்டதே என்று தன் தோல்வியைக் காதலின் வெற்றியாகக் கொண்டு உள்ளத்தில் மகிழ்வு எய்துகிறான். எம் தோழ! இளையோர்க்குக் காவலாக விளங்கும் நண்பனே! புலவர்க்கு உற்ற தோழனே! நான் சொல்வதைக் கேட்பாயாக! கரிய கடலின் நடுவே, வளர்பிறையில் எட்டாம் நாள் பக்கத்தில், பசுமையான வெள்ளிய நிலவை வீசும் பிறைமதி தோன்றினாற் போல தலைவியின் கூந்தலுக்கு அயலதாக விளங்கிய அவளது சிறுநுதல், புதிதாகப் பிடிக்கப்பட்ட யானை யைப் போல என்னைக் கட்டிப்போட்டு விட்டது. (ஓர் அழகி என் நெஞ்சை அகப்படுத்திக் கொண்டு விட்டாள்) எனும் பொருள் தோயக் கோப்பெருஞ்சோழன், எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப! புலவர் தோழ! கேளாய் அத்தை! மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல் புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே! எனத் தலைமகன் பாங்கற்கு உரைக்குமாறு பாடிய குறுந்தொகைக் குறிஞ்சித் திணைப் பாடல் ஏற்ற எடுத்துக் காட்டாகும். ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆகக் கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தென்; வீரக்கோட்டி பேசுவார் ஒருவற்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்த ஆசைநோய் கொன்றது என்றால், ஆண்மைதான் மாசுணாதோ? என, மாயா சனகப் படலத்தில் இராவணன் பீடத்தில் வீற்றிருந்து, சீதையை நோக்கிப் பேசுவதை உணர்த்தும் கம்பராமாயணப் பாடல் ஒருவகை மேற் கோளாகும். பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் கணியெவனோ ஏதில தந்து (குறள் 1089) என்ற குறளைச் சிந்திக்க முற்படுங்கால், இனியவை கூறலில், பணிவுடையன் இன்சொல னாதல் ஒருவற்கு கணிஅல்ல மற்றுப் பிற (குறள் 95) என்றும், சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி (குறள் 118) என்று நடுவு நிலைமையிலும், கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்னென் றுணரப் படும் (குறள் 575) என்று கண்ணோட்டத்திலும், நாணுடைமையில் அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேல் பிணியன்றோ பீடு நடை (குறள் 1014) என இருபாலர்க்கும் பொதுவாய் அமைய வேண்டிய அணிகளை உணர்த்திய திருவள்ளுவர் பெண் பாலுக்குரிய சிறப்பு அணியினைச் சுட்டிக்காட்டும் குறள் இதுவாகும். பெண் மானைப் போன்ற அழகிய மெல்லிய நோக்கும், நாணமும் ஆகிய இரண்டும் இவளுக்கு இயற்கை அளித்த நல்ல அணிகளாகத் திகழ்கின்றனவே! அவ்வாறு இருக்க செயற்கையான வேறு அணிகலன் களைக் கொண்டு வந்து அணிவது என்ன பயனைத் தரும்? வேறு அணிகலன்கள் தேவையற்றது என்பது பொருள். நறுமலர்க் கோதைநின் நலம் பாராட்டுநர் மறுவில் மங்கல அணியே யன்றியும் பிறிதணி அணியப் பெற்றதை எவன் கொல்! பல்லிருங் கூந்தற் சின்மலர் அன்றியும் எல்லவிழ் மாலையொடு என்னுற் றனர்கொல்! நானம் நல்லகில் நறும்புகை யன்றியும் மான்மதச் சாந்தொடு வந்ததை என்கொல்? திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்? திங்கள்முத் தரும்பவும் சிறுகிடை வருந்தவும் இங்கிவை யணிந்தனர் என்னுற்றனர் கொல் எனக் கோவலன் பாராட்டுவதாக இளங்கோவடிகள் பாடுவதற்கு இக்குறள் தூண்டுதலாய் அமைந்திருக்கும் போலும். உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று (குறள் 1090) நன்கு காய்ச்சி வடிக்கப்பட்ட மதுவும் மகிழ்ச்சியைத் தரும். காதலும் மாந்தர்க்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதில் கள்ளும் காதலும் மகிழ்ச்சி தருவதில் ஒரு தன்மைப்பட்டது என்றாலும் மது உண்டவர்கட்கு மகிழ்ச்சியைத் தருமே அல்லாது, இவள் காதலைப் போலக் காண்டார்க்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஆகவே மகிழ்ச்சி தருவதில் சிறப்பிடம் பெறுவது காதலே ஆகும். ஆகவே, நினைந்தவர் புலம்பலில் உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது (குறள் 1201) எனவும் புணர்ச்சி விதும்பலில், உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு (குறள்1281) எனவும் பாட நேர்ந்ததையும் உடன் எண்ணிப் பார்க்க நேர்ந்தது. அணங்கா! மயிலா! மாதரா! மாலும் என் நெஞ்சு அவள் நோக்குதல் தாக்கணங்கின் தாக்குதலாகும் கூற்று, பெண்தன்மையால் பேரமர்புரியும் கண்ணை உடையது கண்டார் உயிருண்ணும் கண்ணள் பெண்தகைப் பேதைக்கு மாறுபட்டன கண்கள் மடவரல் நோக்கில் மூன்றைக் காணலாம் மடவரல் நோக்கில் கூற்றமும் ஆவாள் மடவரல் நோக்கில் கண்ணும் ஆகும் மடவரல் நோக்கில் மானும் ஆவாள் இவள் நோக்கு கூற்றமா? கண்ணா? மானா? மூன்றுமா? கொடும் புருவம் கோடி நடுங்க வைக்கிறது தலைவன் ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் பீடு உடை யவன் பீடுடையான் ஒண்ணுதற்கு உடைந்தான் அவள் பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாள் மான் நோக்கும் நாணும் உடையாளுக்கு வேறு அணிகலன் எதற்கு மான் நோக்கும் நாணுமே பெண்ணுக்கு அணி அடுநறா உண்டாரை மகிழ் செய்யும் காமம் கண்டாரையும் மகிழ் செய்யும். 110. குறிப்பறிதல் திருக்குறளில் இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்று உள்ளது. அதுவே குறிப்பறிதல் என்பது. பொருட்பாலில் அமைச்சியலிலும் குறிப்பறிதல் உண்டு. காமத்துப்பாலில் குறிஞ்சித் திணையிலும் அது உண்டு. பொருட் பாலில் குறிப்பறிதலை விளக்கும் திருவள்ளுவர், நெஞ்சம் கடுத்ததைக் காட்டுவது முகமே என்றும், அந்த நெஞ்சக் குறிப்பை அளந்தறிவது கண்ணே என்றும் கூறுகிறார். அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் (குறள் 706) குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் (குறள் 705) அந்த அதிகாரத்தில் இறுதியாக இரண்டு குறளில் உள்ளத்தில் பகையையும் நட்பையும் வெறுப்பையும் விருப்பத்தையும் கண்ணே சொல்லிவிடும் என்றும், உள்ளக் கருத்தை நுட்பமாக அளந்தறியும் கருவியாகப் பயன்படுவது கண்ணே என்றும் தெளிவாக்குகிறார். பகையும் கேண்மையும் கண்ணுரைக்கும், கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் (குறள் 709) நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்ல தில்லை பிற (குறள் 710) பிறனுக்கு உரியவளைத் தான் பெற விரும்புவது கொடுமை. தன்னை விரும்பாத ஒருத்தியைத் தான் விரும்புவது கயமை. தன்னைப் பற்றி அறியாத ஒருத்தியைத் தான் அறிந்து நாடுவது குற்றம். தன்னைப் புறக் கணிக்கும் ஒருத்தியைத் தான் நாடி நிற்பதுபேதைமை. தன்னை வெறுத்து ஒதுக்கும் ஒருத்தியைத் தான் நினைந்து வருந்தி உடைவது ஆண்மைக்கு இழுக்கான கோழைத்தன்மை. இவற்றை நன்கு உணர்ந்தவன் தலைவன். ஆகையால் தொடக்கத்தில் அணங்கோ, மயிலோ, மங்கையோ? என்னும் அளவில் உடற்கவர்ச்சியில் மயங்கினாலும் அதன் பிறகு தலைவி யின் கண்களின் வாயிலாக உள்ளக் கவர்ச்சியும் பெற்ற பிறகே வருந்தத் தொடங்கினான். அவளும் தன்னை விரும்புகிறாள் என்று அறிந்த பிறகே தன் உள்ளத்தைப் பறி கொடுக்கிறான். இதை அறிவிப்பதே காமத்துப் பாலில் அமைந்த குறிப்பறிதல் என்னும் பகுதி. தலைவி விரும்புவதை அறிந்தே தலைவனும் விரும்புகிறான் என்னும் இந்த ஒத்த அன்பை இந்தப் பகுதி விளக்கு கின்றது என்பது முனைவர் மு. வ. அவர்கள் தரும் விளக்கமாகும். மணப் பருவம் எய்திய கன்னிப் பெண்ணும் கட்டிளங் காளையும் காதல் வயப்படும் முன் ஒருவர் உள்ளக் குறிப்பை மற்றவர் அறிந்து கொள்வதே குறிப்பறிதல் ஆகும். இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக் கொன்றந்நோய் மருந்து (குறள் 1091) கன்னியும் காளையும் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்து இருக்கிறார்கள். இன்னும் வாய் திறந்து ஒரு சொல்லும் பேசவில்லை. கன்னியின் ஒளி அமைந்த கண்களின் பார்வையில் அமைந்த நோக்கு ஒரு தன்மைப்பட்டதாய் அமையவில்லை. உள்நோக்கம் இரண்டு வகைப் பட்டதாய் அமைந்து உள்ளது. அதிலே காதல் நோயை உண்டாக்கும் நோக்கும் இருக்கிறது. அக்காதல் நோயைத் தணிக்கும் மருந்து போன்ற பார்வையாகவும் இருப்பதைக் கண்டு வியக்கிறான். மகிழ்கிறான். துன்பம் தரும் நோக்கும், துன்பம் துடைத்து இன்பம் தரும் நோக்கும் உடையவளாய் இருப்பது அவனை ஈர்க்கிறது. நஞ்சும் அமிர்தமுமே போல் குணத்த பொருகயற்கண் எனச் சீவகசிந்தாமணி கூறுவதையும் ஒப்பு நோக்குக. பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழ மின்னும் பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக் கண்களே! எனக் கூறும் திருக்கோவையார்ப் பாடல் வரியும் ஏற்ற மேற்கோளாகும். மண்ணிற் சிறந்த புகழ்த் தஞ்சை வாணன் மலைய வெற்பில் பெண்ணிற் சிறந்தஇப் பேதைதன் பார்வை பெருவினை யேன் எண்ணிற் சிறந்த இருந்துயர் நோய்தனக் கின் மருந்தாய் கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே. எனக் கூறும் தஞ்சைவாணன் கோவைப் பாடல் தக்க எடுத்துக் காட்டாகும். கண்களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில் செம்பாகம் அன்று பெரிது (குறள் 1092) தன் எதிரே தென்பட்ட கன்னியைக் காளை நெடுநேரம் பார்த்துக் கொண்டு நிற்கிறான். அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவனைக் காணாதவள் போல் நின்று கொண்டிருக்கிறாள் அவள். அவன் பார்வை எப்பொழுது விலகுகிறதோ அந்த நொடிப் பொழுதில் அவனுக்கும் தெரியாமல் அவனைக் கடைக் கண்ணால் அவள் பார்க்கும் பார்வை இருக்கிறதே அது தனித் தன்மை வாய்ந்ததாகும். தலைவி தன் உள்ளத்தைப் பறி கொடுத்து, தன் காதல் விருப்பத்தைத் தெரிவிப்பதில் பாதிக்கும் மேல் முடிவிற்கு அவள் வந்து விட்டாள் என்பதைச் சொல்லாமல் சொல்லும் அடையாளமே அவன் காணாப் பொழுதில் அவனைக் கள்ளமாகப் பார்க்கும் கடைக்கண் பார்வையாகும். கேட்டறியும் ஆர்வம் மிக்கவர் இருக்கும் அவையில் ஒன்றைச் சொல்லுதல் தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீர் சொரிந்தாற் போலும் நன்மையாம் என்பதை அவையறிதல் அதிகாரத்தில், உணர்வ துடையார்முன் சொல்லல், வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று (குறள் 718) என்றார். வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்தற்று எனும் உவமையைத் தழுவி அமைந்த உவமைக் குறளே, நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள், அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர் (குறள் 1093) என்பதாகும். காதல் தலைவன், அவளை நோக்காத போது அவள், அவனை அன்போடு பார்த்தாள். பார்த்தவள் பார்த்துக் கொண்டே இராமல் நாணத்தால் தலையைத் தாழ்த்தினாள். அவள் அவ்வாறு நோக்கி இறைஞ்சிய நிகழ்வை எண்ணி எண்ணி மகிழ்ந்து அஃது எங்கள் அன்புள்ளங்களுக்கிடையே முளைத்த காதலாகிய பயிர் செழித்துவளர அவள் பாய்ச்சிய நீராகும் என முடிவு செய்தான். காதல் வாழ்வில் தலைவி, தலைவன் பாராதபோது பார்ப்பதும், தலைவன் பார்க்கும் போது, தலைவி பாராது தலையைத் தாழ்த்துவதிலும் அடங்கி இருக்கும் குறிப்பு தலைவி மனமார ஏற்றுக் காதலை வளர்க்க விரும்புகிறாள் என்பதாகும். தோழி தலைவியிடம் அடியே! ஒருவனுக்கு வந்த கேட்டைப்பார். அவன் என்ன பெறத் தகாதவன்? விரும்பியவற்றை எல்லாம் பெறத் தக்கவன் போல் இருந்தான். செல்வம் இருந்து வறுமையுற்ற சான்றோர், தமது துன்பத்தை நீக்கக் கூடிய உறவினரிடம் சென்று சொல்ல வாய் எழாமல் திரும்புவர். அமைதி இல்லாதவராய்ப் பலமுறை செல்வர். ஆனால் ஒரு முறையும் சொல்லார். அது போல் அவன் பலமுறை வந்து என்னைப் பார்த்தவாறு நிற்பான். நான் நோக்கினால் தலை குனிவான் என்னும் பொருள் புலப்படுமாறு கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி அடிகள் கீழ்வருமாறு :- எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண் செல்வம் கடைகொளச் சாஅய்ச், சான்றவர் அல்லல் களைதக்க கேளிர் உழைச்சென்று சொல்லுதல் உற்று, உரைக்கல்லா தவர் போலப் பல்லூழ் பெயர்ந்து என்னை நோக்கும், மற்று யான் நோக்கின் மெல்ல இறைஞ்சும் தலை என்னும் பாடல் வரிகள் இலக்கிய மேற்கோளாகும். யான்நோக்குங் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் (குறள் 1094) தலைவன் அவளைப் பார்க்கிறான்; அவன் பார்ப்பதை அறிந்த அவள் அவனைப் பாராது நிலத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். அதனைக் கண்ட அவன் அவளை எப்பொழுது பார்க்காமல் நிற்கிறானோ அப்பொழுது அவள் அவனைப் பார்த்து மெல்லென நகுகிறாள். தன்னைக் கண்ட தலைவனைக் கண்ட அவள் உள்ளத்தில் அவனைப் பற்றிய மதிப்பு உயர்ந்தது. வாழ்வில் இணைய உங்கட்கு விருப்பமானால் தனக்கும் விருப்பமே என்பதைக் குறிப்பால் உணர்த்துவதே மெல்லிய புன்னகையாகும். தோட்டத்து வாசல் திறந்திருக்கும் - தினம் சொர்ணம் வந்தால், கொஞ்சநேர மட்டும் வீட்டுக் கதைகளைப் பேசிடுவாள் - பின்பு வீடுசெல்வாள், இது வாடிக்கையாம் சேட்டுக் கடைதனிற் பட்டுத்துணி - வாங்கச் சென்றனன் சுந்தரன் தாய் ஒருநாள்! பாட்டுச் சுவைமொழிச் சொர்ணம் வந்தாள் - வீட்டில் பாடம் படித்திருந்தான் இளையோன். கூடத்திலே மனப் பாடத்திலே - விழி கூடிக் கிடந்திடும் ஆணழகன், ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் - அவள் உண்ணத் தலைப்படு நேரத்திலே பாடம் படித்து நிமிர்ந்த விழி - தனிற் பட்டுத் தெரிந்தது மானின் விழி! ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன் ஆயிரம் ஏடு திருப்புகின்றான். பாவேந்தர் பாரதிதாசன் பாடிய காதற்குற்றவாளிகள் எனும் தலைப்பில் அமைந்த கவிதைகளின் இப்பகுதியும் ஒப்பு நோக்கத் தக்கதே. குடும்ப விளக்கில், மாவர சான தந்தை மலர்க்குழல் என்னும் அன்னை நாவர சான தம்பி உடன்வர நகைமுத் தென்னும் பாவையும் விருந்தாய் வந்தாள்; என்னுளந் தனிற் படிந்தாள்; ஓவியம் வல்லாள், என்றன் உருவையும் எழுதி னாளே! என்னையே தனி யிருந்து நோக்குவாள்; யான்நோக் குங்கால் தன்னுளம் எனக் கீவாள் போல் தாமரை முகம்கவிழ்ந்து புன்னகை புரிவாள், யானோர் புறஞ் சென்றால் அகந்துடிப்பாள் பின்னிய இரண்டுள் ளத்தின் பெற்றியும் அறிந்தார் பெற்றோர். என்னும் பாடல்கள் குறளுக்கு இயல்பாய் அமைந்த விளக்கமாகும். குறிக்கொண்டு நோக்காமை யல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் (குறள் 1095) தலைவன் தான் கண்ட அக்கன்னியின் சின்னஞ்சிறிய அசைவையும் உற்று நோக்கி, அவளின் உள்ளுணர்வினை ஆராய்ந்து கொண்டே வருகிறான். அவன் அவளை ஏறிட்டுப் பார்ப்பது போல் அவள் வைத்த கண் மாறாமல் இன்னும் தன் நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் முறையில் நேருக்கு நேராகப் பார்க்க வில்லை என்பது உண்மை தான் ஆனால் பார்க்காமலும் இல்லை. எப்படிப் பார்க்கிறாள்? அவள் பார்ப்பதை யாரும் கண்டுவிட வாய்ப்பு வழங்காமல், இயல்பாய்த் திறந்திருக்கும் கண்களில் ஒன்றைச் சுருக்கி அவனைக் கண்டு, அதில் ஒரு நிறைவு கண்டு தனக்குள்ளேயே மகிழ்ந்து கொள்வதைக் கண்டு அவளின் உள்ளுணர்வில் நிறைவு கொண்டு அவள் உள்ளத்தால் நெருங்கி வருவதாக உணர்கிறான். உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும் (குறள் 1096) காதலர்கள் இருவர் ஓரிடத்தில் சந்தித்து, முன் அறிமுகம் இல்லாதவர் கள் போலவே தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள் அவர்கள் தொடர்பு இல்லாதவர்கள் போலப் பேசிக் கொண்டாலும், அச்சொற்கள் காதலர் சொற்கள்தான் என்பதைப் பிறர் விரைவில் அறிந்து கொள்வர். அவர்களின் பேச்சில் காதல் மொழி இல்லை யெனினும், அவர்களின் அகவையும், அவர்களின் பார்வையும் அவர்கள் காதலர்கள் என்பதை உணர்த்தி விடும். சொல்லால் மறைக்க முயன்றாலும் அவர்களின் கண்பார்வை தெளிவுபடுத்தி விடும். ஒளிவீசும் வளையல் அணிந்தவளே! ஒரு செய்தி சொல்லுகிறேன், கேள். தெருவில் நாம் கட்டி விளையாடும் மணல் வீட்டைக் காலால் எற்றி அழித்து, தலையில் பொருந்திய பூமாலையை இழுத்து அறுத்து, சித்திரம் எழுதிய நமது பந்தைப் பறித்துக் கொண்டு ஓடி, இவ்வாறெல்லாம் நாம் வருந்தும்படி வன்மை செய்யும் அந்த சிறுபட்டி, அன்றொரு நாள் நானும் அன்னையும் வீட்டில் இருந்த பொழுது வந்து, வாயிலில் நின்று வீட்டினுள் இருப்போரே! நான் நீர் வேட்கை கொண்டேன் என்று கூவினான். அன்னை பொற்செம்பில் நீர் ஊற்றி அவனுக்குக் கொடுத்துப் பருகச் செய்க என்றாள். வந்தவன் அந்தப் பட்டிதான் என்று அறியாமல், தண்ணீர் கொண்டு சென்றேன். அவன் என் கையை வளையல்களோடு சேர்த்து இறுகப் பிடித்து இழுத்தான். யான் திடுக்குற்று அஞ்சி, அம்மா! இவன் செய்த செயலைப் பார் என்று கூவினேன். அன்னையும் அலறிக் கொண்டு ஓடிவர, யான் நடந்ததை மறைத்து, தண்ணீர் பருகிய போது விக்கினான் என்றேன். அன்னை அதை நம்பி, அவனை, மெல்லவே பருகலாகாதா? என்று கோபித்துக் கொண்டு, அவன் தொண்டையைத் தடவி விட்டாள். அன்னைக்குத் தெரியாமல் அந்தக் கள்ளன் கடைக் கண்ணாலேயே என்னைக் கொன்று விடுபவனைப் போலப் பார்த்தான். இத்தகைய அவனது குறும்பால் ஒரு மகிழ்ச்சி தரும் சந்திப்பு நிகழ்ந்தது எனும் கருத்து புலப்படுமாறு கபிலர் குறிஞ்சிக் கலியில் சுடர்த் தொடீஇ! கேளாய், தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள், அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்! உண்ணுநீர் ஊட்டிவா என்றனள்; என யானும் தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு அன்னாய்! இவனொருவன் செய்தது காண் என்றேனா அன்னை அலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக் கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன் எனப்பாடிய அகப்பாடல் ஒருவகையில் மேற்கோளாய் அமைகிறது செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு (குறள் 1097) ஒரு கன்னியும் காளையும் ஒருவரை ஒருவர் நேரில் கண்டு, காதல் கால் கொள்ளத் தொடங்கும் போழ்து அவர்கள் பார்வையை வைத்தும், அவர்கள் பேசும் சொற்களை வைத்தும் அவர்கள் காதல் வயப்பட்டவர்கள் என்பதைப் பிறர் வெளிப்படையாக அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லாதவாறே அமைந்திருப்பது இயற்கை. ஆகவே, உள்ளத்தில் பகையுணர்வு இன்றிக் கூறப்படுகின்ற சிறிய கடுமையான சொற்களும், வெளிப் பார்வைக்குப் பகைமை போன்று தெரிகின்ற முறையில் பார்க்கின்ற பார்வையும், தொடர்பு இல்லார் போன்று தொடர்பு உள்ளார் செய்யும் குறிப்புச் செயல்கள் ஆகும். அதன் உட்பொருள் உரியவர்கட்கு அன்றி மற்றவர்கட்குப் புலனாகாது. என்பது ஒரு காதல் நுட்பமாகும். அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் (குறள் 1098) தலைவன் தலைவியை ஏக்கத்துடன் நோக்கும் போது அவள் தன் அன்பை வெளிக்காட்டும் முகத்தான் மெல்லென புன்னகை செய்கிறாள். அசையும் பூங்கொடி போன்ற மெல்லியலாள் நகைப்பில் தென்படும் அழகைக் கண்டு தலைவன் மகிழ்கிறான். அசையியல் என்று ஒரு தலைவன் தான் விரும்பும் தலைவியை அழைக்கிறான் என்றால், அவள் எத்தகைய இனியவளாக இருந்திருக்க வேண்டும். அழைப்பவனும் எத்தகைய நயவோனாக இருந்திருக்க வேண்டும். அசை வளி என்பது தென்றல் காற்று. இவன் வாழ்வுக்குத் தென்றலாய் வாய்த்தவள். அத் தென்றலாய் அசை நடை புரிகின்றாளாம். அந்நடையும் நடைக்குறிப்பும் உள்ளம் கொள்ளை கொள்ளும் ஒப்பற்ற அழகாக உள்ளனவாம். அவளை அவன் ஆர்வத்தால் நோக்கக் களங்கமற்ற பச்சைக் குழந்தையாய்க் கரவற்று மெல்ல நகைக்கிறாளாம். அறிவும் பண்பாடும் திருந்த வடிவுதிருந்தும் என்னும் மாந்தவியல் கொள்கைக்கு இக்குறள் கூறும் செய்தியினும் வேறு சான்று வேண்டுமோ! என்னும் இளங்குமரனாரின் விளக்கம் நல்லதொரு விளக்காகும் உள்ளத்தால் ஒன்றுபட்ட உயர்மனக் காதலர்களிடம் அமைந்துள்ள சிறப்பியல்பு ஒன்றனை எடுத்துக் காட்டும் குறளே, ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலர் கண்ணே உள (குறள் 1099) யாதும் தொடர்பில்லாத அயலவரை, எந்த நோக்கமும் இல்லாது இயல்பாய்ப் பார்த்துக் கொள்வது போல புறத்தார் கவனம் இவர்கள்பால் பதியாதவாறு பொதுப் பார்வை பார்த்துக் கொள்ளும் இயல்பும், உள்ளத்தால் ஒன்றுபட்ட, உணர்ச்சிவயப் படாத பண்பட்ட மனம் பொருந்திய இளம் காதலர்களிடத்திலும் காணலாம். காதலார் திறத்துக் காதலாக்கிய காதலாரை ஏதிலார் போல நோக்கின் இருமடங்காக எய்தும் என்னும் சூளாமணி அடிகள் தக்க மேற்கோளாய் விளங்குவதுடன் பொது நோக்கு நோக்குவதால் பயன் இரு மடங்காகும் எனக் கூறும் நுட்பம் போற்றத்தக்க தாகும். பொருட் பால் குறிப்பறிதல் அதிகாரத்தில், முகம்நோக்கி நிற்க அமையும், அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் (குறள் 708) நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்ல தில்லை பிற (குறள் 710) எனும் குறள்களின் வழியாகக் கண்களால் பிறரின் நுண்ணுணர்வையும் கண்டு கொள்ளவும் இயலும் தன்னுடைய நுண்ணுணர்வைப் பிறர்க்கு உணர்த்தவும் இயலும் என்பதைத் திருவள்ளுவர் உணர்த்தி யுள்ளார். கனாயம புதா என்னும் சப்பான் நாட்டுப் பெண்மணி 55 வயதில் கைகால்கள் செயலிழந்து, பேச்சும் இழந்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசை. ஓர் உதவியாளரை வைத்துக் கொண்டு கண் இமைகளை அசைத்து கண்சாடை மூலமாக 280 பக்கங்களில் ஒரு புத்தகம் எழுதச் செய்தாள். அதற்கு இரண்டு ஆண்டுகள் ஆயின. என்னும் வரலாறும் கண்ணின் நுண்பயனை உணர்த்தும் என்பது புறத்திணை சார்ந்ததாகும். அகத்திணையில் கண்ணின் பயன்பாட்டைத் தொல்காப்பியர், நாட்டம் இரண்டும் அறிவு உடம் படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும். என உரைத்துள்ளார். அதன் வழி நின்று திருவள்ளுவர், கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல (குறள் 1100) என்கிறார். கருத்தொருமித்த காதலர் இருவரின் விழிகளும் இணைந்த நோக்கு உடையனவாகி, அன்பு செய்யுமானால் அது ஒன்றே அவர்களின் காதலின் ஆளுமையைத் தெளிவுபடுத்தி விடும். அதற்கு மேல் வெளிப்படையாக உன்னை நான் விரும்புகிறேன். நீ என்னை விரும்புகிறாயா? என்றெல்லாம் வாய்மொழியாகப் பேசி ஒப்புதல் வாங்க வேண்டியதில்லை. உள்ளம் ஒன்றவில்லையானால் வாய்ச்சொல் தேவையற்றது. கண் பார்வையால் உள்ளம் ஒன்று பட்டதை உணர்ந்து கொண்ட பின் பேசும் பேச்சிற்கு எனத் தனிப்பயன் எதுவும் இல்லை. இதனையே மனோன்மணியம் உளத்தொடு உளஞ்சென்று ஒன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் என உரைக்கிறது. இராமனும் சீதையும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்வதைக் கம்பன் இக்குறளுக்கு விளக்கம் தருவது போல் பாடியுள்ளதையும் காண்போம். எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றையொன்று உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். நோக்கிய நோக்கு எனும் நுதிகொள் வேல் இணை ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன, வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும் தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே. பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால், வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார். மருங்கு இலா நங்கையும் வசையில் ஐயனும் ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் கருங்கடற் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ? வள்ளுவனின் ஈரடிக் குறளுக்குக் கம்பன் பதினாறு அடிகளில் தரும் விளக்கம் கற்று இன்புறத் தக்கதாகும். இவளிடம் நோய் நோக்கும், மருந்து நோக்கும் உண்டு. கண் களவு நோக்கம் காமத்தில் பெரும் பகுதி. நோக்கி இறைஞ்சுதல் யாப்பினில் அட்டிய நீராகும் நோக்குங்கால் நோக்காது, நோக்கி மெல்ல நகுவாள் ஒரு கண் சிறக்கணித்தாள் போல நோக்கி நகுவாள் செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் செறாஅச் சிறுசொல் உறாஅர் போன்று உற்றார் குறிப்பு செற்றார் போல் நோக்குதல் உறாஅர் போன்று உற்றார் குறிப்பு அசையியற்கு உண்டு ஆண்டோர் ஏஎர் தலைவன் நோக்கப் பசையினள் பைய நகும் காதலர் ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குவர் கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒக்க வேண்டும் நோக்கு ஒக்கின் வாய்ச் சொல் தேவையில்லை. 111. புணர்ச்சி மகிழ்தல் மணப்பருவ முற்ற கன்னியும் காளையும் புணர்ச்சியை மகிழ்ந்து கூறுதல் கண்டு, ஆராய்ந்து காதல் கொண்டு, காதலால் உள்ளம் ஒன்றுபடும் ஒவ்வொருவர் வாழ்விலும் பெறும் இயற்கை இன்பம், ஈடு இணையற்ற இன்பமாகும். புறவாழ்க்கையில் ஒருவரோடு ஒருவர் சேர்ந்தால் இருவர் ஆவர். ஆனால் அக வாழ்வில் ஒருவரோடு ஒருவர் இணைந்தாலும் இருவர் ஆகார். ஒருவரே ஆவர். ஏனெனில் அகவாழ்வில் முதன்மை பெறுவது உடலன்று. உள்ளமாகும். இரண்டறக் கலந்த ஒருமை உணர்வே அதற்குக் காரணம் ஆகும். காதலால் ஒருவரோடு ஒருவர் இணைவது கூட்டல் கணக்கன்று. பெருக்கல் கணக்கு ஒன்றை ஒன்றால் பெருக்கினால் கிடைப்பது ஒன்றுதான். ஆகவே திருவள்ளுவர் அமைத்துள்ள புணர்ச்சி மகிழ்தல் அதிகார எண் 111 பொருத்தமாக அமைந்துள்ளது. திருவள்ளுவர் மக்கள் இனத்தைப் பத்து வகையினராகப் பகுத்து, அப்பத்துவகையினரும் காதல் இணைப்பால் உற்ற உணர்வு களைத் தத்தம் இயல்பிற்கு ஏற்றவாறு உணர்ந்து இன்புறும் பாங்கு தனிச் சிறப்புடைய காவியமாகும். 1. ஐம்புல இன்பத்தையும் ஆரத் துய்க்க விரும்புபவர். 2.பன்முறை நோய்வாய்ப் பட்டு நலம் பெற்றவர். 3. பேரின்பப் பெருவாழ்வு பெற விரும்புபவர். 4. குளிர் காயும் பழக்கம் உடையவர். 5. நினைப்பதெல்லாம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுபவர். 6. உடல் நலனைப் பேணுபவர். 7. பகுத்துண்ணும் பண்பாளர். 8. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதவர். 9. அற்றால் அளவறிந்து உண்பவர். 10. நூல்களை ஆராயும் நுண்ணறிவாளர் என்பவர்களே திருவள்ளுவர் பகுத்துள்ள பத்துவகைக் காதலர்கள். முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்! பின்னர் அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப் பட்டாள் நங்கை தலைவன் தாளே என்னும் நாவுக்கரசரின் தெய்வீகக் காதலை உணர்த்தும் பாடல் மானிடக் காதலுக்கும் பொருந்துவதே ஆகும். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள (குறள் 1101) இயற்கை அழகிலே தோய்ந்தவன் வள்ளுவக் கணவன்; அவன், கண் கவர் காட்சிகளால் தன்னை மறந்து அக்காட்சியாகவே மாறிவிடுபவன். கானகமா வானகமா அவை யெல்லாம் அவனுக்குத் தேனகங்கள்! அத்தகு காட்சிச் செல்வன் அவன். குயிலின் இசையா, வண்டின் ஒலியா, அருவியின் முழக்கா, காற்றின் அசைவா, ஆற்றின் செலவா அனைத்தும் இசை வெள்ள இன்பமாகக் கொள்ளும் கூர்ஞ் செவியன் அவன். வளமான குடும்பம், வாய்ப்பான ஏந்துகள்; வாய்க்குச் சுவை சுவையாய் ஆக்கிப் படைக்கும் அருமையர், தேனா, பாலா, பழங்களா, பண்டங்களா, இன்குடி நீர் வகைகளா,- எவற்றுக்கும் குறைவில்லாமல் சுவை நலம் கொள்ள வாய்த்த சுவைஞன் உலவுங்கால் பூம்பந்தர்; துயிலுங்கால் பூமலர்ப் படுக்கை; நீராடிய பின் நறுமணப்புகை; உடல் வெப்பம் தீர நறு மணக் கலவைப் பூச்சு; உடுக்கும் உடையில் நறுமணத் தெளியல் என முகர்ச்சிக்குக் குறைவில்லாத் துய்ப்பன். முழுநிலாப் பொழிய, தென்றல் வருட அருவி நீர் வழிய, பன்னீர் துளிக்க, மென்பட்டுத் தழுவ, பஞ்சணை மயக்க மெய்யின்பம் காணும் மேதக வெல்லாம் அமைந்தோன், கண்பெற்ற பேறே காண்! செவி பெற்ற பேறே காண்! வாய் பெற்ற பேறே காண்! மூக்குப் பெற்ற பேறே காண்! உடல் பெற்ற பேறே காண்! என அவற்றை யெல்லாம் தனித்தனி துய்த்துத் தனி இன்பப் பேறு அடைந்தோன்! அவன் தன் பிறவி பெற்ற பயனை இன்றுதான் பெற்றானாம்! இதுவரைப் பெறாத இன்பமெல்லாம் இன்றுதான் பெற்றானாம்! அவனே பேசுகின்றான் : அவனே பேசட்டும்! அவன் இன்பத் தளிர்ப்பை அவனே பேசட்டும். இதுவரை என் கண்ணுக்கு இன்பம் தந்தவை காதுக்கு இன்பம் தந்தில; காதுக்கு இன்பம் தந்தவை கண்ணுக்கு இன்பம் தந்தில; இவ்விரண்டற்கும் இன்பம் தருவனவும் மூக்குக்கு இன்பம் தந்தில; அப்படி மூக்குக்கு இன்பம் தரவல்லன எனினும் நாவுக்கும் இன்பம் தாரா! இவை எல்லாவற்றிற்கும் இன்பந்தருவன உண்டோ? உண்டெனினும் அவை உடலுக்கும் உயிருக்கும் இன்பம் தருமா? என்னே விந்தை! என்னே வியப்பு! என்னைத் தேடி வந்து இவ்வைந்து இன்பங்களையும் ஓரிடத்தே ஒரு காலத்தே தந்து நின்றதே ஓர் அன்புப் பிழம்பு! ஆம்! என் உயிர்த்துணை! உயிர்க்கு உயிராம் துணை! அதற்கு இணை உண்டோ? உண்டோ? கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள என்பது இரா. இளங்குமரனார் தரும் விளக்கமாகும். கண்ணால் கண்டும், செவியால் கேட்டும், நாவால் சுவைத்தும் மூக்கால் நுகர்ந்தும், உடம்பால் தொட்டும் துய்க்கப்படும் ஐம்புல இன்பங் களும் ஒளிபொருந்திய வளையல் அணிந்த இவளிடத்திலே உள்ளன. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பொருள்களால் நுகரப்படும் ஐவகை இன்பமும் ஒரு காலத்தே இவளிடமே நுகரப் பட்டதென மகிழ்ந்தனன். பொன்னின் சோதி, போதினிள் நாற்றம், பொலிவேபோல் தென்னுண் தேனின் தீம்சுவை, செஞ்சொற் கவி இன்பம் - கன்னிம் மாடத்து உம்பரின் மாடே களி பேடொடு அன்னம் ஆடும் முன்துறை கண்டு அங்கு அயல் நின்றார் எனக் கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேரெழில் சிறப்பினைக் காட்டும் கம்ப ராமாயணப்பாடலில் குறள் மணம் வீசுகிறது. கண்ணகியைக் கோவலன், மாசறு பொன்னே! வலம்புரிமுத்தே! காசறு விரையே! கரும்பே தேனே எனப் பாராட்டும் மொழிகளிலும் இளங்கோவடிகள் ஐம்புல இன்பத்தை எடுத்து மொழிகிறார். கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை மேம்படுத்தாள். எனத் திருக்கைலாய ஞானவுலா போற்றுகிறது. வாயினும் செவியினும் கண்ணினும் மூக்கினும் மேதகு மெய்யினும் மோதல் இன்றி உண்டும் கேட்டும் கண்டும் நாறியும் உற்றும் மற்றிவை அற்றம் இன்றி ஐம்புல வாயிலும் தம்புலம் பெருக வைகல் தோறும் மெய் வகை தெரிவார். எனப் பெருங்கதையிலும் குறட் கருத்து இடம் பெற்றுள்ளதை உணரவியலும். பிணிக்கு மருந்து பிறமன், அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து (குறள் 1102.) இதுவரைச் சில நோய்கட்கு ஆட்பட்டவன் என்பதுடன் மருத்துவத் துறை சார்ந்த அறிவும் உடையவன்; ஆகவே அவனுக்கு எந்தெந்த நோய் வந்தால் அதைக் குணப்படுத்த என்னென்ன மருத்துவம் செய்ய வேண்டும் என்பது நன்கு தெரியும். அழகிய அணிகலன்களை அணிந்த அவன் காதலியால் வந்த காதல் நோய்க்கும் பல்வகையான மருந்துகளைப் பயன்படுத்திப் பார்த்தும் நோய் அகலவில்லை. ஆனால் அவள் வந்து இணைந்தவுடன், நோய் அகன்றதை உணர்ந்து காதலியால் வந்த நோய்க்கு வேறு மருந்து இல்லை காதலி தரும் காதல் இன்பமே மருந்து என்பதை உணர்ந்து எண்ணி எண்ணி மகிழ்கிறான். எது நோயை உண்டாக்குமோ அதுவே நோயைக் குணப் படுத்தும் என்பது கி. பி. 1755இல் செர்மனி நாட்டைச் சார்ந்த கானிமன் என்னும் மருத்துவ அறிஞர் மெய்ப்பித்துக் காட்டிய ஒல்லியல் மருத்துவ முறை யாகும் என்பதையும் எண்ணிப் பார்ப்போம். அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து என்கிறார் திருவள்ளுவர். தானே மருந்து என்பதில்தான் வாழ்வியல் நெறியும், ஒழுக்கமும் பண்பாடும் அமைந்து கிடக்கிறது. காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமே தவிர்த்து, காதலித்தவரைக் கைவிட்டு மற்றொருவரை மண முடித்தல் ஆகாது. நோயையும் நோய் நீக்கும் முறையையும் தெளிவாக அறிந்து கொண்டவர் தன் காதல் பட்டறிவை வெளிப்படுத்தும் குறள் இதுவாகும். பெருந்தோள் குறுமகள் அல்லது மருந்து பிறிதில்லை யான் உற்ற நோய்க்கே என்னும் நற்றிணைத் தொடரும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். மந்திரம் இல்லை வேறோர் மருந்தில்லை மையல் நோய்க்குச் சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுதலால் அமுதச் சொல்லீர் என்னும் கம்பன் கவிதையும் ஒன்றுபட்ட கருத்தையே விளம்புகிறது. இறை இன்பமே பேரின்பம் என அழுத்தமான நம்பிக்கை கொண்டு இறைவழிபாட்டில் மிக ஒன்றிய ஈடுபாடு கொண்டவன், தான் காதலியுடன் இரண்டறக் கலந்த கலப்பால் மலர்ந்த பட்டறிவை உணர்த்தும் குறளே! தாம்வீழ்வார் மென்தோள் துயிலின், இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு (குறள் 1103) நானும் இதுவரை தாமரைக் கண்ணான் உலகில் கிடைப்ப தாகச் சொல்லப்படுகிற இன்பத்திற்கு இணை வேறு உலகில் இல்லை என நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுது என் கருத்தை மாற்றிக் கொண்டேன். நான் விரும்பும் என் அன்புத் தலைவியின் தோள்மேல் துயின்ற பின்னர் இதைவிட தாமரைக் கண்ணான் உலகில் கிட்டும் இன்பம் இனியதாக இருக்க இயலாது என உணர்ந்து கொண்டேன் என்கிறான். இருவரும் ஒத்த அன்புடையவரானால் காதலியின் மென்தோள், மேலுலகத்தினும் மேலானது என்பதும், அவள் தோளில் துயின்று பெறும் இன்பம் திருமாலின் மேலுலக இன்பத்தினும் மேலான இன்பமாகும் எனத் தன் பட்டறிவை விளக்கும் பாங்கு! அருமையிலும் அருமை. விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும் இரண்டும் தூக்கின் சீர் சாலாவே பூப்போல் உண்கண், பொன்போல் மேனி மாண்வரி அல்குல், குறுமகள் தோள் மாறு படுஉடூஉம் வைகலொடு எமக்கே எனப் பரூஉ மோவாய்ப் பதுமன் பாடிய குறுந்தொகைப் பாடல் தக்க எடுத்துக் காட்டாகும். நீங்கின் தெறூஉம், குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்? (குறள் 1104) மலைப் பகுதியில் வாழும் தலைவன், குளிர் காலத்தில் குளிரின் தாக்குதலில் இருந்து, தன்னைக் காத்துக் கொள்ள, மலையில் கிடைக்கும் குச்சிகளில் நெருப்பு மூட்டி மிக நெருங் காமலும், மிக விலகாமலும் இருந்து குளிர் காய்வதைப் பழக்கமாகக் கொண்டவன். அவனுக்கு நெருப்பை நெருங்கினால் சுடும் என்பதும் மிகத் தள்ளி இருந்தால் குளிர் போகாது என்பதும் நன்கு தெரியும். அவன் தக்க பருவம் எய்திய பெண்ணைக் காதலித்தான். அவள் பக்கத்தில் இருக்கும் போது மெல்லெனக் குளிராக இருப்பதாக உணர்ந்து மகிழ்கிறான். அவள் அவனை விட்டு விலகி இருக்கும் போழ்து அவன் உடல் நெருப்பாய்ச் சுடுவது போலவும் அவனுக்குத் தெரிகிறது. அவளை அவன் பயன்படும் நெருப்பாகவும் கருதுகிறான். ஆனால் காதலியாகிய நெருப்பின் வேறு பாட்டையும் உணர்கிறான். ஆகவே, அவன் வாய் முணுமுணுக்கிறது விலகினால் சுடும்; நெருங்கினால் குளிரும்; இத்தகைய வியப்பான தீயைத் தன் தலைவி எங்கிருந்து பெற்றாளோ? என வியப்பெய்த்துகிறான். நீரின் தண்மையும் தீயின் வெம்மையும் சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரும். சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே என்னும் பழம்பாடல் தக்க மேற்கோளாகும். கானகத்திற்கு உடன்வர அணியமான சீதையை நோக்கி, காட்டின் கொடுமை கூறி இராமன் தடுத்தபோழ்து சீதை, நின், பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்றாள் என்னும் தொடர் ஏற்ற இலக்கிய மேற்கோள் ஆகும். தேனை நினைத்தால் இனிக்குமா? பார்த்தால் கூட - கையில் எடுத்தால் கூட - இனிப்பதில்லையே! நாவில் விட்டால் தானே இனிப்பு. யாழை நினைத்தால் செவிக்கு இன்பம் உண்டோ? யாழைக் கண்டாலும் கையால் எடுத்தாலும் செவிக்கு இன்பம் ஆவது இல்லையே! கலை நயம் பொருந்த மீட்டிய இசை செவியைத் தழுவினால்தான் இன்பம். தென்றலை நினைத்தால் உடலுக்கு இன்பமா! வாயிலையும் பலகணிகளையும் மூடி வைத்துக் கொண்டு தென்றலை நினைத்தால் உடலுக்கு இன்பம் உண்டாகிவிடுமா? வெயிற் காற்றோ, விசிறிக் காற்றோ தென்றலாகிவிடுமா? அதுவும் மாலைப் பொழுதில் மதியம் ஒளிவீச மணப்பந்தல் தாவி வரும் தென்றல் இன்பத்தை - நினைவு மட்டும் தந்து விடுமா! ஆனால், நினைத்த பொழுதிலேயே நினைத்த இன்பமெல்லாம் உடனுக்குடன் தந்து விடுகிறாளே என் உயிர்த் துணை! உரிமைத் துணை! அத்துணை நேரில் நின்று வழங்கினால்தான் இன்பமா? இல்லையே! நேரில் இல்லாமலும், நினைத்த நினைத்த இன்பங்களை எல்லாம் நெஞ்சில் சுரக்கச் செய்து விடுகின்றாளே! என இளங்குமரனார் விளக்கம் தரும் குறள். வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள் (குறள் 1105) பூங்கொத்துகளை அணிந்த கூந்தலை உடைய என் தலைவியின் தோள்கள் விரும்பிய பொழுதில் விரும்பிய பொருள் கிடைத்து விரும்பும் புதிய புதிய இன்பத்தினைத் தருவன போலவே இன்பம் தருகின்றன என்கிறான். விரும்பிய பொருள் விரும்பியவுடன் கிடைத்தால் கிடைக்கும் இன்பம் போன்றதே அவள் தோள் தரும் இன்பம். அவள் மனோரஞ்சித மலர் போன்றவள். ஈட்டம் சால் நீள்நிதியும் ஈர்ங்குவளைப் பைந்தடஞ்சூழ் மோட்டு வளம் சுரக்கும் ஊரும் முழுதீந்து வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்மென்தோள் பூட்டார் சிலை நுதலாள் புல்லா தொழியேனே சீவக சிந்தாமணி, குணமாலையார் இலம்பகத்தில் இடம் பெறும் இப்பாடலையும் சான்றாய்க் கொள்வோம். ஆற்றங் கரையிலே நிற்கும் இத்தென்னை மரங்கூட வாடி விட்டதே; வறண்டு விட்டதே பட்டே போகுமோ எனக் கசிந்தேன்; ஆனால் வானமுதாகிய மழை பொழிந்தது; ஆற்றின் வழியேயும் நீர் ஓடியது; வான் மழைப் பொழிவும் மண்வழிக் கசிவும் தென்னைக்கு அமுதமாகிவிட அது தளிர்த்துக் குலுங்கிய குலுங்கல் என்னை மகிழ்விலே குலுங்கச் செய்தது. முற்றாக உதிர்ந்து போயினவே மாவிலைகள்! மொட்டை மரமா இது! என மயங்குகின்ற வேளையிலே, இளவேனிற் பருவம் தவழ்ந்தது. யார் சொல்லி வைத்தார், இளவேனில் வந்த தென்று. குஞ்சு நெருப்புப் போலப் பிஞ்சு இலைகள் துளிர்த்துக் குழந்தை யாட்டம் போட்டுக் கொஞ்சியதே! பருவக் கொடையாம் அமுதத்தால் இக்காட்சிக் கொடை மட்டுமா? கனிக் கொடையும் கொட்டுமே! காற்றிலே முரிந்தது முருங்கை! முடிந்து விட்டதா வாழ்வு. பக்க மெல்லாம் தழைத்துக் கிளைத்துப் புத்தம் புதுத்தளிர் துள்ளுகிறதே! வேருக்கு வாய்ந்த நீரும் உரமும் அல்லவோ மொட்டைத் தலைக்குப் பசும் போர்வை போர்த்தி விட்டன. இவையெல்லாம் ஓரறிவு உயிரிகள்! ஓடி நடவாதவை! உள்ளம் இல்லாதவை! உரையாடாதவை! வாடிக் கிடந்த அவை தளிர்த்ததை உணரும் யான், இப்பொழுது யானே தளிர்க்கக் காணுகிறேன். அவற்றின் இலைத் தளிர்ப்புப் போல்வதோ கிளைத் தளிர்ப்புப் போல்வதோ என் தளிர்ப்பு? உயிர்த் தளிர்ப்பு அல்லவோ என் தளிர்ப்பு! உயிரும் தளிர்க்குமா? தளிர்க்க வைப்பார் உண்டா? தளிர்க்க வைப்பார் இருந்து, தளிர்க்க வைத்தலைக் கண்டு கொண்ட எனக்கு ஐயம் உண்டா? உயிர் தளிர்க்கச் செய்வது நீர் அமிழ்தும் பால் அமிழ்தும் பயன் அமிழ்தும் என்றால், இவ்வெல்லாம் கூடிய கூட்டமிழ்தால் செய்யப்பட்டது அல்லவோ என் துணையின் உடல் என்பது இரா.இளங்குமரனார் தரும் விளக்கம். உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக் கமிழ்தின் இயன்றன தோள் (குறள் 1106) எனும் குறளுக்கு ஆம். உடல் நலம் பேணி, உடல் வளம் காத்து, உடல் வளர்ச்சியை விரும்புவோர் அதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். உடலைப் பல்வேறு நிலைகளில் பேணி வந்தவர். தலைவியைத் தழுவும் உரிமை பெற்ற பின்னர், முன்னர் எப்பொழுதும் உணராத மலர்ச்சியையும் வளர்ச்சியையும் இப்பொழுது கண்டு மகிழ்கிறார். ஆகவே, இவளோடு இணைவதற்கு முன்னர் வாடி இருந்த என் உயிர், நான் அவளைத்தொடும் போதெல்லாம் தளிர்க்கும்படி அவளுடைய தோள் கள் வெறும் எலும்பாலும் தோலாலும் ஆக்கப் பட்டதன்று. அமுதத்தால் செய்யப் பட்டிருக்க வேண்டும் என எண்ணி எண்ணி மகிழ்கிறான். அமிழ்தைத் தீண்டி இன்னுயிர் தளிர்க்கட்டும். பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (குறள் 44) இஃது இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் இடம் பெற்ற குறளாகும். பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது (குறள் 227) இஃது ஈகை அதிகாரக் குறள்களில் ஒன்று. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322) இஃது கொல்லாமை அதிகாரக் குறள். இம்மூன்று குறட் பாக்களும் வள்ளுவம் போற்றும் தலையாய அறம் பகுத்துண்ணல் என்பதை எடுத்துக்காட்டுவதுடன் காமத்துப் பாலிலும் மறவாமல் பகுத்துண்ணும் அறத்தை அமைந்த இடத்தில் நினைவுபடுத்தும் குறளே, தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (குறள் 1107) என் பெற்றோரொடும் இருந்தேன். அவர்கள் அறிவறியச் செய்து ஆளாக்கிய பின்னரும் அவர்களுக்குத் துணையாக நான் நிற்பது அல்லாமல் அவர்கள் துணையில் வாழ்வது தக்கதா? செய்யாமல் செய்த அவர்கள் உதவிக்கு - காலத்தினால் அவர்கள் செய்த உதவிக்கு - பயன் கருதாமல் அவர்கள் செய்த உதவிக்கு இணையான உதவியை நான் செய்ய முடியாவிட்டாலும், இயன்ற உதவியைச் செய்யலாமே. மேலும், நானும் அவர்களைப் போல் என் கடனைச் செய்யக் கூடியவன்தான் என்னும் உறுதிப்பாட்டை உண்டாக்குதல் என் கடன் அல்லவா? அதனால், எனக்கென, வருவதற்கு இருக்கும் என் சிறிய குடும்பத்துக்கென. ஒரு வீட்டை நானே அமைத்துக் கொள்ளுதல் கடமை என மேற்கொண்டேன்; அவ்வீட்டில் - யானே என் முயற்சியால் கட்டிய - பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் புகுந்த நான் பெற்ற இன்பம் எத்தகையது. நானே பூரிப்படைந்து நான் என்னைப் பாராட்டிக் கொள்வது போலல்லவா மகிழ்ந்தேன். அது மட்டுமா? என் உழைப்பால் என் கைநிறைய வருவாய் வந்த போது அமைந்த மகிழ்வுக்கு அளவேது? அதனினும், அவ்வருவாயால் ஆக்கப்பட்ட உணவை - காய்கறிகளை வந்த விருந்தினர்க்கும் உற்றார் உறவினர்க்கும் என் கையாலேயே வழங்கிய இன்பந்தான் எத்தகையது? என எண்ணி எண்ணி அயர்ந்தேன்! இன்றுதான் தம் இல்லத்தில் இருந்து தாம் தேடிய பொருளால் வந்த உணவை பகுத்துண்ணும் இன்பத்துக்கு இணை உண்டு - எனக் கண்டேன். அவ்வின்பம் என் துணையொடும் கொண்ட இன்பமாம் என இரா. இளங்குமரனார் தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (குறள் 1107) என்னும் குறளுக்கு விளக்கம் தருகிறார்கள். பகுத்துண்டு வாழும் பண்பாளனாகிய தலைவன், அழகிய மாநிறம் உடைய தன் தலைவியின் மேனியைத் தான் தழுவுகின்ற போது அடையும் இன்பம். அறமுறை பிழையாமல், தன் முயற்சியால் தேடப்பட்ட பொருளைக் கொண்டு ஆக்கிய உணவை, முறையாக நடத்துகின்ற இல்லற வாழ்வில் பலருக்கும் பயன் படுமாறு பகுத்துக் கொடுத்துத் தானும் இணைந்து கூடி உண்டு மகிழ்கின்ற இன்பத்தைப் போன்றல்லவா விளங்கு கிறது என்கிறான். இக்காமத்துப் பால் குறளுக்குள்ளே முப்பாலும் கலந்த இன்பம் மண்டிக் கிடக்கிறது. தம் இல் இருத்தல் - பொருட்பால்; தமது பகுத்து உண்ணல் - அறத்துப்பால்; அரிவை முயக்கு காமத்துப் பால். காமத்துப் பாலின் நிறைவிற்குப் பொருட்பாலும் அறத்துப் பாலும் தக்க துணையாய் அமைய வேண்டும் என்னும் வேட்கையர் திருவள்ளுவர். அத்துடன் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாகிய அறமான பகுத்துண்ணலை மாந்தன் மறந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பவர் திருவள்ளுவர். எல்லாக் காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம். இருவர் மனம் கலந்தபின், நெஞ்சம் ஒன்றான பின், இருவர் என்ற நிலை மாறி ஒருவர் என்ற நிலை உண்டாகி விடுகிறது. காதலன் காதலியை நெஞ்சத்திலே கொண்டமையால் அவள் என்ன நினைக்கிறாளோ, அதனையே அவன் எண்ணுகின்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது. இந்த நிலையிலேயே காதலியும் இருக்கிறாள். இதனையே கண்ணதாசன், நான் பேச நினைத்த தெல்லாம் நீ பேச வேண்டும் என்கிறார். கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விடாது பயன்படுத்திக் கொள்ளும் நுகர்வாளனாகிய தலைவன், புணர்ச்சிக் காலத்தே காற்றுக் கூட இருவர்க்கும் இடையே ஊடுருவிச் செல்ல முடியாத படி அவ்வளவு நெருக்கமாக இணைந்து கலந்து பெறுகின்ற இன்பம் இருவர்க்கும் பேரின்பமாகும் என நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து மகிழும் மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் குறளே, வீழும் இருவர்க் கினிதே, வளியிடை போழப் படாஅ முயக்கு (குறள் 1108) ஆகும். முயக்கில் மட்டுமல்லாது எக்காலத்தும் கணவன் மனைவியின் உறவிற்கிடையே அயற் காற்றின் நுழைவிற்குக் கூட இடந்தந்து விடல் ஆகாது. என்னும் வாழ்வியல் நுட்பமும் வளியிடை போழப் படாஅ என்னும் குறிப்பில் அமைந்து கிடக்கிறது. உருவத்தால் இருவராகி உள்ளத்தால் ஒருவரானார் எனக் கூறும் சூளாமணியும் நீங்கலர் ஒருவருள்புக்கு இருவரும் ஒருவராகித் தேங்கமழ் அமளி தேம்பச் செறிந்தனர் திளைத்து விள்ளார் எனக் கூறும் யசோதர காவியமும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். தூமலர்த் தாமரைப் பூவின் அம்கண் மாஇதழ்க் குவளை மலர்பிணைத் தன்ன திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண் அணிவளை முன்கை, ஆய் இதழ் மடந்தை வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் கவவுப் புலந்து உறையும் கழிபெருங் காமத்து இன்புறு நுகர்ச்சியில் சிறந்தது ஒன்று இல் என அன்பால் பொழிந்த என்மொழி கொள்ளாய், பொருள்புரி வுண்ட மருளி நெஞ்சே! என்னும் அகநானூற்றுப் பாடற் பகுதி எயினந்தை மகனார் இளங்கீரனார், பொருள்வயிற் பிரிந்து போகா நின்ற தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியதில் குறட் கருத்து மிளிர்வதைக் காணலாம். அன்புடையார் இருவர் தமக்குள் அன்பு குறையாமல் மேலும் வளர்தற் பொருட்டு எவ்விதக் குற்றமும் நேராத காலத்தும் யாதேனும் ஒன்றைக் கூறிக் கோபம் கொண்டவரைப் போல் பிணங்கி இருத்தல் ஊடல் எனப்படும். இன்பத்தை மிகுவிப்பது புணர்தல் மட்டுமன்று. புணர்தலாகிய இன்பத்தை மிகுதிப்படுத்த ஊடுதலும் வேண்டும்; ஊடலை உணர்தலும் வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் குறளே, ஊடல், உணர்தல், புணர்தல்இவை காமம் கூடியார் பெற்ற பயன் (குறள் 1109) காதல் தலைவன் அற்றால் அளவறிந்துண்ணும் பழக்க முடையவன் மட்டுமல்லன் சுவை மாற்றத்தில் சுவை காணும் சுவைஞனும் ஆவான். அவன் தன் பட்டறிவைப் பகர்கிறான். நிலையான அன்பால் பிணைக்கப் பட்ட காதலர்கள், தாம் மேற்கொள்ளும் புணர்ச்சி மேலும் இனிதாதல் பொருட்டு ஒருவரோடு ஒருவர் இடையே காரணம் இல்லை என்றாலும் காரணத்தைக் கற்பித்துக் கொண்டு ஊடல் கொண்டு பிணங்கி இருத்தலும் வேண்டும். அதனை நீள விடாது ஊடலைப் போக்கிக் கொள்ளவும் வேண்டும். பின் கூட வேண்டிய காலத்துக் கூடலும் வேண்டும். அன்பால் கூடிய தலைவன் தலைவியர்க்குப் புணர்தல் மட்டுமே பயன் என்றும் கருதி விடலாகாது. ஊடலாலும் பயன் உண்டு; ஊடலைப் போக்குவதாலும் பயன் உண்டு! கூடி இன்புறுவதாலும் பயன் உண்டு என்னும் அகவாழ்வின் நுட்பத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். கட் கினியாள், காதலன் காதல் வகை புனைவாள், உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள் - உட்கி இடனறிந்து ஊடி, இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண். என்னும் நாலடியார் பாடலும் குறள் நெறியை வழி மொழிந்தே அடியிடுகிறது. முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ்நகை பெற்றம் எனா மகிழ்நர் மணித்துவர்வாய் கனிபவள் உளத்தருகே வருதலும் முத்துதிரும் கயல்கள் இரண்டுடையீர் கடைதிறமின் திறமின் என்னும் கலிங்கத்துப் பரணியின் கடைதிறப்புப் பாடலும் ஒப்பு நோக்கத் தக்கதே. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு (குறள் 396) எனக் கல்வி அதிகாரத்திலும் நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு (குறள் 783) என நட்பிலும் அறிவு வளர்ச்சி பற்றிக் கூறிய வள்ளுவர், புணர்ச்சி மகிழ்தலில் காட்டும் அறிவின் பிறிதொரு கூறு. அறிதோ றறியாமை கண்டற்றால், காமம் செறிதோறும் சேயிழை மாட்டு (குறள் 1110) காலமெல்லாம் கல்வியிலே போக்கியுள்ளேன்; கற்றதைச் சிந்திப் பதிலே போக்கியுள்ளேன்; கற்றோரொடும் அளவளா வலிலே, கற்றோர் அவையிலே கேட்பதிலே, கற்றோர் அவையில் எடுத்துரைப்பதிலே - போக்கியுள்ளேன். அறிவால் வளர்கின்றேன்: வளர வளர நேற்று வரை, போன நொடிவரை அறியாதவை எவை எவை என்பதை அறிகின்றேன். அறியாத போதெல்லாம், அறிந்து கொண்டதாகத் தோன்றிய அறிவு, அறிய அறிய அறியாதவையாகி அகல்வதைக் கண்டு பூரித்தேன். இப்படி இயற்கை வளம் உள்ளதே. இதற்கு இணை உண்டோ, உண்டோ? என்று எண்ணினேன்! எண்ணினேன்! இளைத்தேன்; தோற்றேன்! ஆனால் இப்பொழுதுதான் அறிய அறிய அறியாமை புலப்படுதலுக்கு இணை உண்டு என்பதை நூற்றுக்கு நூறு கண்டு கொண்டேன். அஃது என் உயிர்த் துணையோடு பெறுகின்றேன்; அதுதான், புதுப்புது இன்பம், பெறப் பெறப் பெறாத இன்பம் ஈதெனக் காட்டுவதாக அமைகின்றது! இவ்வின்பத் தளிர்ப்பைப் பெறாது இருப்பேனேல், அறிதோறும் அறியாமை காணும் இரண்டலா ஒருமை இன்பப் பேற்றை இத்துணைத் தெளிவாக அறிந்திருக்க மாட்டேனோ? ஆண்பால் எனவும் பெண்பால் எனவும் இருபால் படைத்து அவற்றின் இணைவுக்குப் பாலமாகப் பால் உணர்வையும் படைத்து, துய்க்கும் வாயில்களையும் இயல்பாகப் படைத்து உலகை இயக்கும் இயற்கை எத்துணை அரிய படைப்பாளி! அம்மவோ! இவ் வியற்கை விந்தையே விந்தை என்பது இரா. இளங்குமரனார் தரும் விளக்கமாகும். நூல்களை ஊன்றி ஆராயுந் தோறும் முன்பு தமக்கிருந்த அறியாமையை உணர்ந்து கொள்வது போல், சிறந்த அணி கலன்களை அணிந்த தன்னவளைக் காதல் விருப்பால் சேருந்தோறும் புதுமையாய் மேன் மேலும் இன்பம் மிகுந்து தோன்றுவதை உணர முடிகிறது என்கிறான் நூலாராய்ச்சியில் தோய்ந்த காதல் தலைவன். அறிவிற்கு எல்லை இன்மையான் மேன்மேல் அறிய அறிய, முன்னை அறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி மேன்மேல் செறியச் செறிய முன்னைச் செறிவு, செறியாமையாய் முடியா நின்றதெனத் தன் ஆராமை கூறியவாறு என்பது பரிமேலழகரின் விளக்கவுரையாகும். கல்வி இன்பத்தையும் கலவி இன்பத்தையும் ஒப்பிட்டு உரைக்கும் அறிவு போற்றத்தக்கதாகும். சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக் கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல் கற்றொறுந்தான் கல்லாத வாறு என்னும் பழமொழி அறிதோறும் அறியாமை கண்டற்றால் என்னும் கருத்தை வழி மொழிகிறது. உணர்ந்தார்க்கு உணர்வறியோன் தில்லைச் சிற்றம் பலத் தொருத்தன் குணத்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாயின் கொடியிடைத்தோள் புணர்ந்தார் புணரும் தோறும் போகம் பின்னும் புதியதாய் மணந்தாழ் புரிகுழலாள் அல்குல் போல வளர்கின்றதே என்னும் திருச்சிற்றம்பலக்கோவையார் பாடல் மேற்கோளாய்க் கொள்ளத் தக்கதாகும். புணர்ச்சி மகிழ்தல் என்னும் அதிகாரம். குறிஞ்சித் திணையின் உரிப்பொருளாகிய புணர்தல் ஒழுக்கத்தைச் செவ்விதின் விளக்கி அமைகிறது. ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள. அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு தீ யாண்டுப் பெற்றாள் இவள் வேட்ட பொழுதின் அவை அவை போலுமே பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள் தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் வளியிடை போழப் படாஅ முயக்கு காமம் கூடியார் பெற்ற பயன் அறிதோறும் அறியாமை கண்டற்றால் என்னும் சொற்றொடர் புணர்ச்சிகளும் எண்ணி எண்ணி இன்புறத் தக்கனவாகும். 112. நலம் புனைந்துரைத்தல் தலைவியின் அழகைத் தலைவன் மிகுதியும் வியந்து பாராட்டும் பாங்கை விரித்துரைக்கும் அதிகாரம். சிலப்பதிகாரத் தலைவன் கோவலன் தான் மணந்த கண்ணகியின் அழகினைப் பாராட்டி உரைக்கும் மொழிகள் ஒட்டு மொத்த விளக்கமாக அமைவதை முதற்கண் காண்போம். தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத் தாயினும், உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின் பெரியோன் தருக திருநுதல் ஆகென அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப் படைவழங்குவதோர் பண்புண்டு ஆகலின் உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில் இரு கரும் புருவ மாக ஈக்க, மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின் தேவர் கோமான் தெய்வக் காவற் படை நினக்கு அளிக்க அதன் இடைநினக்கு இடையென அறுமுக ஒருவனோர் பெறுமுறை இன்றியும் இறுமுறை காணும் இயல்பினின் அன்றே அஞ்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது. மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின் சாயற் கிடைந்து தண்கான் அடையவும் அன்னம் நன்னுதல் மென்னடைக் கழிந்து நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும் அளிய தாமே சிறுபசுங் கிளியே குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின் மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது உடன்உறைவு மரீஇ ஒருவா வாயின. நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர் மறுவில் மங்கல அணியே அன்றியும் பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்! பல்லிருங் கூந்தல் சின்மலர் அன்றியும் எல்லவிழ் மாலையொடு என்னுற் றனர்கொல்! நானம் நல்லகில் நறும்புகை யன்றியும் மான்மதச் சாந்தொடு வந்ததை என்கொல் திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்! திங்கள் முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும் இங்கிவை அணிந்தனர் என்னுற் றனர்கொல்! மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே தேனே! அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெருமட மகளே! மலையிடைப் பிறவா மணியே என்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ! யாழிடைப் பிறவா இசையே என்கோ! தாழிருங் கூந்தல் தையால் நின்னையென்று உலவாக் கட்டுரை பலபா ராட்டி என்னும் கோவலன் கண்ணகியின் நலம் புனைந்து உரைத்தவற்றை முன்னுரையாகக் கொண்டு மேற்செல்வோம். தலைவனுக்குத் தான் விரும்பிக் காதலிக்கும் தலைவியின் மெல்லிய தன்மை மிக மிக வியப்பாகத் தோன்றுகிறது. அவளுடைய மென்மை எத்தன்மைத்து என்று ஒப்புமை சொல்ல வேண்டும் எனச் சிந்திக்கிறான். மலரை ஒப்புமை சொல்லலாம். மலர் என்றால் எல்லா மலர்களும் ஒரு தன்மைப் பட்டதா? இல்லையே மெல்லிய மலர்களில் எல்லாம் மெல்லிய மலர் எதுவாக இருக்கும்? எனச் சிந்தித்த போழ்து அனிச்ச மலர் நினைவிற்கு வந்தவனாய் தலைவியின் மென்மையை அனிச்ச மலரின் மென்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போதும். அதனினும் தன் காதலி மென்மையளாய்த் தோன்றியிருக்கிறாள் அப்பொழுது பாடிய குறளே, நன்னீரை வாழி அனிச்சமே; நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் (குறள் 1111) அனிச்ச மலரே! அனிச்ச மலரே! நீ மலர்களிலெல்லாம் மென்மையான தன்மை உடையவளாய் விளங்குகிறாய்! ஆகவே, நீ உன் மென்மைத் தன்மையுடன் என்றும் வாழ்வாயாக! நீ மலர்களில் மென்மையளாக இருக்கலாம்; உன்னை விட மெல்லிய தன்மை உடையவளும் உலகத்தில் இருக்கிறாள். அவள் யார் என்கிறாயா? அவள் தான் நான் பெரிதும் விரும்புகின்ற என் பேரன்பிற்குரிய காதலி ஆவாள்! என அனிச்ச மலரை வாழ்த்தும் அன்புத் தலைவனை நமக்கு முதற்கண் அறிமுகம் செய்து வைக்கிறார் திருவள்ளுவர். நன்னீர் - நல்ல தன்மை; யாம் வீழ்பவள் - என்னால் விரும்பப் படுபவள். உலகத்தில் காணப்படும் மலர்களில் எல்லாம் சிறந்த புதுமலர் தலைவியின் அருமைக் கண்களே எனக் கருதும் தலைவன் தன் பேதை நெஞ்சை நோக்கி உள்முகமாகக் கூறும் குறளே, மலர்காணின் மையாத்தி நெஞ்சே, இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று (குறள் 1112) மனமே! மனமே! உன்னைத் தான் கேட்கிறேன்! பலராலும் நாளும் பொழுதும் பார்க்கப்படுகின்ற தாமரை, குவளை, நீலம் முதலிய அழகிய சிறந்த மலர்களை நீ காணும் போது என் தலைவியின் அழகிய கண்கள் இம்மலர்களை ஒத்திருப்பதாக எண்ணி மயங்கு கிறாயே! அப்படி ஒரு மயக்கம் உனக்கு வரலாமா? பலராலும் காணப்படும் பூக்கள் தம் ஒருமை உணர்வை இழக்கும் பொது மகளிர் போன்றதல்லவா? நான் ஒருவனே உரிமையுடனும் ஒத்த அன்புடனும் காணும் இவள் கண்களுக்கு எப்படி ஒப்பாகச் சொல்ல முடியும்? என்னே உன் அறியாமை! என நெஞ்சைக் குறைபட்டுக் கொள்ளும் முகத்தான் தன் தலைவியின் பேரழகு வாய்ந்த கண்களைக் கண்ட தன் வியப்பைப் புலப்படுத்துகிறான். ஒப்பாகாதவற்றை ஒப்பாம் என எண்ணி மயங்குவதே மை யாத்தல் ஆகும். இறுமாத்தல், செம்மாத்தல் என்பன போன்ற ஒரு சொல்லே மையாத்தல் ஆகும். மேகம், மை முதலிய கரிய பொருள்களைக் கண்டால் சீதாபிராட்டி, இராமபிரானின் திருமேனி பற்றிய எண்ணம் வரக் கண்ணீர் பொழிகின்றாள் என்பதைக் கம்பர், அரிய மஞ்சினோடு அஞ்சன முதலிய அதிகம் கரிய காண்டலும் கண்ணினீர் கடல்புகக் கலுழ்வாள் எனக் கூறும் செய்தி ஒருவழி ஒப்புமையாகும். தனக்கு உரிமைப்பட்ட தன் அன்புடைக் காதலியாகிய தமிழச்சியைக் கூர்ந்து நோக்குகிறான் ஐவகை நிலங்களின் கருப் பொருளை ஒரு சேரக் காணும் உணர்வு பெற்றவனாகிறான். உணர்வு குறுவெண் பாட்டாகிறது. பாடுகிறான். முறிமேனி, முத்தம் முறுவல், வெறிநாற்றம் வேல்உண்கண் வேய்த்தோள வட்கு (குறள் 1113) யான் விரும்பும் எனக்குரிய தலைவியின் உடலோ மாந்தளிர் போன்றது; அவள் பற்களோ முத்துப் போன்றன: மணம் இயற்கையாய் அமைந்த முல்லை மலர் போன்றது; மைதீட்டப்பட்ட அழகிய கண்களோ வேல் போன்றும் தோள்கள் மூங்கில் போன்றும் இருக்கின்றனவே எனக் கண்டு கண்டு, எண்ணி எண்ணிப் பூரிப் படைகின்றான். மூங்கில் போன்ற தோள்; மாந்தளிர் போன்ற உடல்; முத்துப் போன்ற பல்; மலர் அன்ன மணம்; வேல் அன்ன கண் வாய்ந்தவள் தலைவி எனத் தலைவன் புனைந்துரைக்கிறான். மூங்கில் - குறிஞ்சி நிலக் கருப்பொருள் மாந்தளிர் - மருத நிலக் கருப்பொருள் முத்து - நெய்தல் நிலக் கருப்பொருள் மலர் - முல்லை நிலக் கருப்பொருள் வேல் - பாலை நிலக் கருப்பொருள். கவர்ச்சி மிக்க காந்தள் மலர்; மொட்டவிழ்ந்த முல்லைப்பூ; மணம் மிக்க குவளை மலர் - இவற்றால் ஆகிய மாலை எவ்வாறு இருக்கும்? அம்மாலையினும் மணம் மிக்க மேனி, என் காதலி மேனி! தளிரினும் மென்மை மிக்கவள் என் காதலி! வனப்பு மிக்கவள் என் காதலி! தழுவத் தழுவ நீங்காத இன்பத்தைத் தருபவள் என் காதலி என்கிறான் குறுந்தொகைக் காதலன் என்பதை உணர்த்தும் இதோ சிறைக் குடி ஆந்தையாரின் குறுந்தொகைப் பாடல் :- கோடல், எதிர் முகைப் பசுவீ முல்லை நாறு இதழ்க் குவளையொடு இடைப்பட விரைஇ ஐதுதொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே என்பது ஏற்ற இலக்கிய மேற் கோளாகும். மாலைப் போதில் சோலையின் பக்கம் சென்றேன் குளிர்ந்த தென்றல் வந்தது வந்த தென்றலில் வாசம் கமழ்ந்தது வாசம் வந்த வசத்தில் திரும்பினேன் சோலை நடுவில் சொக்குப் பச்சைப் பட்டுடை பூண்டு படர்ந்து கிடந்து குலுக்கென்று சிரித்த முல்லை மலர்க் கொடி கண்டேன்; மகிழ்ச்சி கொண்டேனே! என்னும் பாவேந்தர் பாடலும் தக்க மேற்கோள் ஆகும். காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ஒவ்வேம் என்று. (குறள் 1114) பெண்களின் கண்களுக்குக் குவளை மலர்களை உவமையாகக் கூறுவது மரபு. ஆனால், வள்ளுவரின் காமத்துப்பால் தலைவனோ, தன் காதலியின் கண்களில் விளங்கும் அழகு, குவளை மலர்களிலே இல்லை என்று கருதுகிறான். இந்தக் குவளை மலர் என் காதலியின் கண்களைக் காண வில்லை. காணும் ஆற்றல் அதற்கு இல்லை. ஒருகால் அத்தகைய ஆற்றல் அமைந்து என் காதலியின் கண்களின் அழகை ஒரு முறை பார்த்தாலும் போதும் இந்தக் கண்களின் அழகுக்கு முன் நாம் எங்கே என்று கருதி இந்தக் குவளை மலர் நாணம் கொண்டு கவிழ்ந்து நிலத்தினை நோக்கும் என எண்ணுகிறான். குவளைகள் இவள் கண்ணைக் காண நேர்ந்தால், தன் அழகுக் குறையை உணர்ந்து நாணித் தலை குனியும். அவ்வாறு தலைவியின் அழகை எடுத்துரைப்பதோடு, குவளை மலர்களுக்குக் காணும் ஆற்றல் இல்லை என்ற குறையையும் சுட்டிக் காட்டி, காணும் ஆற்றல் இருந்தால் கவிழ்ந்து நிலன் நோக்கும்; அந்த ஆற்றல் இல்லாத மலர்கள் காணும் கண்களோடு ஒப்புமை கொள்வது எங்கே? காண இயலாத மலர்கள் நாணப் போவதும் இல்லை; செருக்கை விடப் போவதும் இல்லை என்னும் எள்ளற் குறிப்பும் போற்றத் தக்கதே. கம்பராமாயணம், பாலகாண்டம் நீர் விளையாட்டுப் படலத்தில் இடம் பெறும் தள்ளி ஓடி அலை தடுமாறலால் தெள்ளு நீரின் மூழ்கு செந்தாமரை புள்ளிமான் அனையார் முகம் போல் கிலாது உள்ளம் நாணி ஒளிப்பன போன்றவே எனும் பாடலை இலக்கிய மேற்கோளாய்க் கொள்ளலாம். அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள், நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (குறள் 1115) தலைவன் தலைவி மீது கொண்ட அன்புப் பெருக்கால் அவளை மிக மெல்லிய மலரான அனிச்ச மலரினும் மெல்லியளாகக் கருதியவன். அவள் இப்பொழுது தன் கூந்தலில் அனிச்ச மலரின் காம்பையும் கிள்ளாது வைத்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டு அச்சம் கொண்டான். அவனை அறியாது அவன் கண்ணில் இருந்து நீர் கொட்டத் தொடங்கியது. ஏன்? காம்பு களையா அனிச்ச மலரைத் தாங்கும் உடல் வலிமை தன் தலைவிக்கு இல்லையே! இடை முறிந்து விட்டால் என்னாவது? மங்கல இசைக் கருவிகள் முழங்க மணவிழா நடத்தும் வாய்ப்பு நீங்கி, பிணப்பறை ஒலிக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாதே என வருந்தி, விரைந்து மலரின் காம்பை நீக்க முயன்றிருப்பான் என எண்ணுவதில் தவறில்லை என எண்ணுகிறேன். கற்பனை எல்லை கடக்கும் போது வேண்டாத சிந்தனையும் ஏற்படும் போலும். ஆகவே, அச்சமும் எல்லை மீறுகிறது. கால் என்றால் காம்பு; களையாள் என்றால் நீக்காமல்; பெய்தாள் - என்றால் சூடினாள்; நுசுப்பு இடையாகும். நல்ல பறை - மங்கல வாத்திய இசை. படாஅ - என்றால் ஒலிக்க மாட்டார். அவள் மென்மையைப் பேணி நடந்து கொள்ளும் நல்ல தலைவனாக இருக்கிறான். அவன் அன்பு உள்ளத்தைப் போற்றத்தான் வேண்டும். மதியும் மடந்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய மீன் (குறள் 1116) காதலியின் முகத்தைத் திங்களோடு ஒப்பிடவும் தலைவனுக்கு மனம் வரவில்லை. அவன் வானத்தில் விளங்கும் திங்களின் அழகைப் பார்க்கிறான். அவனுக்கு விண்மீன்கள் இங்கும் அங்கும் அலைவன போல் தோன்றுகின்றன. இப்படி விண்மீன்கள் ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் அலைவதற்குக் காரணம் என்ன என்று எண்ணிப் பார்க்கிறான். வானத்து நிலவு என் காதலியின் முகம் ஆகிய இரண்டும் ஒரே தன்மை உடையதாகத் தோன்றுதலால் எது திங்கள்? எது என் காதலியின் முகம் என்று வேறுபாடு அறிய முடியாத நிலையில் அந்த விண்மீன்கள் கலங்கித் திரிகின்றன போலும் என எண்ணுகிறான். வானத்து உலவும் விண்மீன் கட்கு எது திங்கள், எது தலைவியின் முகம் எது எனக் கண்டறிய இயலாது விண்மீன்கள் கலங்கி அலைகின்றன. விண்மீனுக்கு வேறுபாடு தெரிகிறதோ இல்லையோ? தலைவனுக்கு மதிக்கும் மங்கை முகத்திற்கும் வேறுபாடு காண இயலாது மருள்கிறான் என்பது புலப்படுகிறது. தலைவியின் முகமும் மதியும் ஒன்று போல் ஒளிவீசுவதாகக் கருதினான் ஆயினும் தலைவனுக்கு மதிக்கும் முகத்திற்கும் ஒரு பெரிய வேறுபாடு இருப்பது விளங்குகிறது. மதியில் மறு (களங்கம்) உள்ளது. என் காதலியின் முகத்தில் மறு இல்லை. குறைவாக இருந்து படிப்படியே வளர்ந்து நிறைவது மதி. எப்பொழுதும் முழுமதியாய் இருப்பதில்லை. பின்னர் படிப்படியே தேயும் இயல்பினது மதி. ஆனால் என் காதலியின் முகமோ என்றும் குறையாமல் நிறைந்து முழுவடிவுடன் என்றும் இயல்பாக விளங்குவது என்ற வேறு பாட்டையும் நினைந்து மகிழ்கிறான். அறுவாய் - குறைந்த நிலை (தேய்பிறை) நிறைந்த - வளர்ந்துள்ள (வளர்பிறை) அவிர் - ஒளிர்கின்ற; மறு - களங்கம். காதலி முகத்தில் திங்கள் போல் களங்கமும் இல்லை; குறைந்து நிறையும் தன்மையும் இல்லை. கம்பராமாயணம் சுந்தர காண்டம் ஊர் தேடு படலத்தில் அனுமன் இலங்கை அக நகரினுள் சீதையைத் தேடியதை உணர்த்தும் பாடல்களில் ஒன்றாகிய, முயல் கருங்கறை நீங்கிய மொய்ம்மதி அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர் இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினார் நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான் என்பது தக்க இலக்கிய மேற்கோளாகும். குறிஞ்சிக் கலியில் 62ஆம் பாடலில் தலைவன், தலைவியைக் குறிக்க மையில் மதியின் விளங்கு முகத்தாரை எனப் பயன் படுத்தும் தொடர் ஒரு மேற்கோளாகும். இதனை எல்லாம் எண்ணத் தூண்டும் குறள், அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து (குறள் 1117) மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி (குறள் 1118) நிலவே! நீ வாழ்வாயாக! இம் மாதர் முகத்தைப் போல நின்னாலும் ஒளி வீசி விளங்க முடியுமானால் நீயும் என் காதலுக்கு உரிமை பெறுவாய்! ஆனால், நினக்குக் களங்கம் இருத்தலின் அங்ஙனம் ஒளிவீசல் இயலாது. ஆகவே, என் காதலுக்கு உரிமை பெறும் தகுதியும் உனக் கில்லை. எனினும் என் வாழ்த்து உனக்கு எப்பொழுதும் உண்டு என நிலவினைப் பார்த்து உரைக்கின்றான். இக்குறளுக்குக் கண்ணதாசன் இந்த நல்லெழில் யார்க்கு வாய்ப்பதோ இந்த மேனியின் இணைஎவண் உள்ளதோ? இந்த மார்பகம் இந்த நல்லிடை இந்த இன்பம் என்றும் நிரந்தரம் சொந்தமானது பேரெழில் என்று யான் துன்ப மற்ற உலகினில் ஆடினேன் எனப் பாடுகிறார். மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி (குறள் 1119) முழுமதியே! ஒளி, வடிவம் ஆகியவற்றில் உனக்கும் என் காதலிக்கும் இடையே ஓரளவு ஒப்புமை உள்ளது. ஆயினும், பண்பிலே, கற்பு நெறியிலே நீ என் காதலிக்கு ஒரு சிறிதும் ஒப்பாக மாட்டாய், மலர் போலும் கண்ணினை உடைய என் காதலியின் முகத்தைப் போன்ற பெருமைக் குரியவளாக நீயும் விளங்க வேண்டுமானால், நீ உன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். என் கண்ணுக்கும் கருத்துக்கும் உரியவளாய் என் காதலி எனக்கு மட்டும் காட்சிக்கு உரியவளாய் அமைந்திருப்பது போலவே நீயும் ஒருவர்க்கு மட்டுமே காட்சி தரல் வேண்டும்! உலகப் பொதுவாய்ப் பலரும் காணும் படியாக இனிமேல் நீ தோன்றல் ஆகாது. என மதியை மதித்து அது மதிப்புப் பெற வழி கூறுகிறான். மலர்க் கண்ணாளின் முகம் போல் ஆக விரும்பினால் பலர் காணத் தோன்றாதே! அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் (குறள் 1120) தலைவன் தன் தலைவியின் மென்மையைப் பல்வேறு கோணங் களில் எண்ணிப் பார்க்கிறான். அவன் அவள் காலடியின் மென்மையைச் சொல்லுகின்ற பாங்கு தனித் தன்மை உடையதாகும். மிக மெல்லிய தன்மையுடையது எனக் கூறப்படும் அனிச்ச மலரும், அன்னப் பறவையின் நொய்மையான இறகும் கூட அவளது மலரினும் மெல்லிய காலடிகட்கு முதிர்ந்த நெருஞ்சியின் முள் போலக் குத்துமே என்று கவலைப்படுகிறான். அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிமலர்க்கு சனித்த நெருஞ்சிப் பழமென்று அறிந்தும் தகுதர வின்றி மனித்தர் வழங்கும் வெங்கோடும் பாலை வழி ஒருநாள் இனித்த மொழியுடை யாரை எவ்வாறு கொண்டேகுவனே! என்னும் திருவெங்கைக் கலம்பகப் பாடல் குறள் விளக்க மேற்கோளாகும். அம்மெல் அனிச்சம் மலரும் அன்னத் தூவியும் வெம்மை யாம் என்று அஞ்சி மெல்ல மிதியாத பொம்மென் நிலவ பூம் போதான நின் அடி போற்றி! என்னும் சீவகசிந்தாமணிப் பாடலும் ஏற்ற இலக்கிய மேற்கோளாகும். இவ்வதிகாரக் குறள்களில் மலர்களும் மதியும் சிறப்பிடம் பெற்றிருக்கக் காண்கிறோம். அனிச்ச மலர் (1111,1115,1120) மூன்று குறள் களில் குறிக்கப்பட்டுள்ளது. குவளை மலர் (1114) ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது. இவள் கண் பலர் காணும் பூ ஒக்கும் என (1112) ஒரு குறளில் வரும் மலர் பற்றிய பொதுக் குறிப்பு இங்கு நினைவு கூரத் தக்கது. தலைவன் மதியைப் பற்றிக் கூறுவதாக (1116-1119) நான்கு குறள்கள் அமைந்துள்ளன. காதலன் தன் காதலியின் தோற்றப் பொலிவு அவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. அதிலும் கண் அழகில் சொக்கிப் போகிறான். அதிலும் அவள் பால் அமைந்துள்ள மென்மை கண்டு வியக்கவும் செய்கிறான். வன்மை அற்ற மென்மையாக இருக்குமோ என அஞ்சவும் செய்கிறான். மொத்தத்தில் அவள் அழகிற்கு அவனுக்கு உவமை சொல்ல அவன் மனம் இடந்தரவில்லை. அனிச்ச மலரினும் மென்னீரள் காதலி நெஞ்சே! இவள் பிறர் அறியா மலர் அவன் விரும்பும் தலைவி பூந்தளிர் போன்ற மேனியள் முத்துப் போன்ற பல் அழகி இயற்கை மணமாய் மணப்பவள் வேல்போலும் ஒளிக் கண்ணள் மூங்கில் போலும் தோளுடையவள் குவளை மலர்களே மாணிழையின் கண்களுக்கு ஒப்பாகாது கால்களையா அனிச்ச மலரையும் தாங்கா மெல்லியள் மதியும் மடந்தை முகனும் அறியாது கலங்கும் விண்மீன் மாதர் முகத்தில் மதிக்குப் போல் மறு உண்டோ மாதர் முகம் போல் மதியே ஒளி செய்தால் நீயும் காதலிக்கத்தக்கவள். மதியே, நீ என்னவள்போல் விளங்கப் பலர் காணத் தோன்றா திருப்பாயாக அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சி முள். 113. காதற் சிறப்புரைத்தல் காதற் சிறப்புரைத்தலாவது, தலைமகன் தன் காதல் மிகுதி கூறுதலும், தலைமகள் தன் காதல் மிகுதி கூறுதலும் ஆம். இது புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வது ஆகலின், புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்துரைத்தல் ஆகியவற்றின் பின் வைக்கப்பட்டது. இவ்வதிகாரத்தின் முதல் ஐந்து பாடல்கள் தலைமகன் கூற்றாகவும், பின் ஐந்து பாடல்கள் தலைமகள் கூற்றாகவும் அமைந் துள்ளன. இது குறிஞ்சித் திணையின் ஐந்தாவது அதிகாரமாகவும் நிறைவு அதிகாரமாகவும் விளங்குகிறது. திருவள்ளுவர் மக்கட் பேறு அதிகாரத்தில், அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் (குறள் 64) மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (குறள் 65) எனவும், புணர்ச்சி மகிழ்தலில் உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு கமிழ்தின் இயன்றன தோள் (குறள் 1106) எனவும் கூறிய கருத்தை ஒட்டி மலர்ந்த குறளே இது! பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி லூறிய நீர் (குறள் 1121) இனிய மென்மையான மொழிகளைப் பேசுகின்ற தன் காதலியின் முத்துப் போன்ற தூய வெண்நிறப் பற்களிலிருந்து ஊறும் நீர். நல்லாவின் பாலோடு மலைத்தேன் கலந்தாற் போலும் இனிய சுவை உடையதாய் இருக்கின்றதே எனத் தலைவியிடம் மகிழ்ந்துரைத்தான். பணிமொழி - மென்மையான இன்சொற்களையே பேசும் தலைவி; வால் - தூய, வெண்மையான; எயிறு - பல். என் உதட்டில் கசிவதும் தேனே - உண்மையில் என் பேச்சும் உன்தமிழ் தானே? பொன்னேட்டில் புகழ் தீட்டு வோம் - இன்பப் புது வாழ்வை நிலை நாட்டுவோம். என்னும் பாவேந்தர் பாட்டு தக்க மேற்கோளாகும். .......... கரும்பின் கால்எறி கடிகைக் கண்அயின் றன்ன வால் எயிறு ஊறிய வசையில் தீம்நீர் என்னும் காலெறி கடிகையாரின் குறுந்தொகைப் பாடலும் தக்க எடுத்துக் காட்டாகும். உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு (குறள் 1122) அன்பிற் சிறந்த காதலர் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாத வாழ்க்கைத் துணையாக அமைகின்றார்கள். ஒருவர் பிரிந்தால் மற்றொரு வருக்கு வாழ்க்கை இல்லை என்று உணரக் கூடிய அளவுக்கு உறவு வளர்ந்து முதிர்ச்சி அடைகின்றது. காதலியோடு தானும், தன்னோடு காதலியும் கொண்ட உறவு எத்தகையது எனத் தனிமையில் எண்ணிப் பார்க்கிறான். உடம் புக்கும் உயிருக்கும் உள்ள உறவு எத்தன்மையதோ அத்தகைய உயர்ந்த உறவே தம்முடைய உறவு என்று எண்ணி எண்ணி மகிழ்கிறான். மலைமீது ஏறி மலை வளம் கண்டு மகிழ்ந்த காதலர்கள் மாலைப் பொழுதும் கழிந்து, இரவு வந்ததும் இறங்கினார்கள்; மலையடி வாரத்தில் உள்ள பாடி வீட்டில் தங்கினார்கள்; என்ற வரலாற்றினைக் கூறுகின்ற கம்பர், காதலர்களை, ஒருவருக் கொருவர் ஊனும் உயிரும் அனையார் என்று அறிவிப்பது குறள் காட்டும் இணைப்பே ஆகும். இக்குறட் கருத்திலும் உவமையிலும் தோய்ந்த பாவேந்தர் பாரதிதாசனார் பாடும் நானும் அவளும் அவளும் நானும் நானும் அவளும்; உயிரும் உடம்பும் நரம்பும் யாழும்! பூவும் மணமும் தேனும் இன்பும்! சிரிப்பும் மகிழ்வும் திங்களும் குளிரும்! கதிரும் ஒளியும் நானும் அவளும் மீனும் புனலும், விண்ணும் விரிவும் வெற்பும் தோற்றமும், வேலும் கூரும் ஆனும் கன்றும், ஆறும் கரையும் அம்பும் வில்லும், பாட்டும் உரையும் நானும் அவளும் அவளும் நானும் அமிழ்தும் தமிழும் அறமும் பயனும், அலையும் கடலும் தவமும் அருளும், தாயும் சேயும் தாரும் சீரும், வேரும் மரமும் அவளும் நானும் அவலும் இடியும் ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும் அணியும் பணியும் அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும் ஆட்சியும் உரிமையும்; அளித்தலும் புகழும் அவளும் நானும் என ஒற்றுமையை அடுக்கடுக்கான உவமை வழி விளக்கிக் குறள் விளக்கம் தருகிறார். கருமணியிற் பாவாய்நீ போதாய்; யாம்வீழும் திருநுதற் கில்லை இடம் (குறள் 1123) காதலி தன் கண்ணிலேயே இருப்பதாக உணர்கிறான் தலைவன். அவள் அவன் கண்ணைவிட்டு நீங்காதவளாய் வாழ்கிறாள்; அவளே அவன் கண்ணில் கருமணியாக இருக்கிறாள். இவ்வாறு எண்ணிய போது அவனுக்கு ஒரு குறை தெரிந்தது. தன் கண்ணில் கருமணி இயற்கையாக அமைந்திருப்பதையும் கருமணியில் பாவை ஒன்று இருப்பதையும் நினைந்து பார்த்தான். காதலிக்கு இங்கே நிலையான இடம் வேண்டுமே இந்தப் பாவை ஏன் இங்கே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்தது. உடனே அவன் பாவையை விளித்துப் பின்வருமாறு கூறுகிறான். என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ இங்கிருந்து போய்விடு. நீ இங்கே இருப்பதால், யான் விரும்பும் காதலிக்கு இடம் இல்லாமல் போகிறது; எனவே உன்னை விடச் சிறந்த அவளுக்கு இடம் தந்து நீ வெளியேறி விடு என வேண்டுகிறான். சிவபெருமான் உமையம்மைக்குத் தம் உடம்பின் இடப்பாகத்தை அளித்தார்; திருமால் திருமகளுக்குத் தன் மார்பினைத் தந்தார்; நான்முகன் கலைமகளுக்குத் தம் நாவினைக் கொடுத்தார். வள்ளுவர் படைக்கும் காதலன் தன் உள்ளம் கவர்ந்த காதலிக்கு எந்த இடத்தைத் தருவது என எண்ணிப் பார்க்கிறான். இதுவரை யாரும் தராத - தர நினைக்காத இடமாக இருக்க வேண்டும் என நினைக்கிறான். கண்ணிற் சிறந்த உறுப்பு இல்லை அல்லவா? ஆகவே தன் கண்ணன்னாளுக்குத் தன் கண்ணையே தங்க இடம் ஒதுக்கித் தருகிறான். வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து (குறள் 1124) ஆராய்ந்த அழகிய அணிகலன்களை அணிந்துள்ள இவள் என்னைச் சேரும் போது, உயிர்க்கு உடம்பில் வாழ்வது எப்படி இன்பம் அளிக் கின்றதோ, அப்படி எனக்கு இன்பத்தைத் தருகின்றாள். இவள் என்னை விட்டுப் பிரியும் போது, இறத்தல் என்பது உயிருக்கு எவ்விதத் துன்பத்தைத் தருகின்றதோ, அவ்விதத் துன்பத்தைத் தருகிறாள். கூடும் போது இன்பம் கூடுகிறது. பிரியும் போது துன்பம் கூடுகிறதே என்ற இருவேறு நிலையையும் எண்ணிப் பார்த்துப் பிரிவின்றி வாழ வழி காண்கிறான். இப் பிறப்பில் இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற வாக்குறுதியைச் சீதை இராமனிடம் பெற்றாள் என்று கூறப்படுகிறது. இந்த வாக்குறுதியைத் தான் மண்ணிலே பிறந்த எந்த மங்கையும் மணவாளனிடம் வேண்டுவாள். இக்குறிப்பை உணர்ந்த தலைவன் தலைவியிடம் நான் வெறும் உடல், நீ தான் உயிர், உன்னிடம் கூடின போது உயிருடன் வாழ்வதாக நினைக்கிறேன்; நீ போன பின் நான் உயிரற்றவன் போல் இருக்கிறேன். ஆகவே, நீ இன்றி நானில்லை என்றான். நாயகியின் உயிரைத் தாங்கி நிற்கும் உடல்தான் நாயகனே அன்றித் தனித்து வாழ்ந்தால் அது உயிரற்ற உடல்தான் என்றும் கூறுகிறார் வள்ளுவர். உள்ளுவன் மன்யான் மறப்பின்; மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் (குறள் 1125) காதலின் பேராற்றலை உணர்த்தும் குறள். ஒளி பொருந்திய போர் புரியும் தன்மையுடைய கண்களைப் பெற்றுள்ள என்னவளின் குணங்களை அடிக்கடி நினைந்து பார்த்து மகிழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவள் குணங்கள் பற்றிய நினைவு எப்பொழுதும் உள்ளத்திலிருந்து அகலாது ஆழப்பதிந்து விட்டது. மறந்தால் தானே மீண்டும் நினைக்க முடியும் மறக்கவே இல்லை என்றால் நினைப்பதற்கு வழி இல்லையே என்னும் கவலையும் போற்றத்தக்க கவலைதான். இஃதும் அவன் காதல் மிகுதியைப் புலப்படுத்துகிறது. உன்னை நான் மறந்தறியேன் மறந்தால் உயிர்விடுவேன் என்னை நீ மறந்து விடுவாயோ? மறந்தால் நான் என்ன ஆவேன் என எங்கோ படித்த பாடலும் ஏற்புடையதாயின் மேற் கோளாய்க் கொள்வோம். காதலின் சிறப்பைத் தலைவன் உரைத்ததைக் கேட்ட நாம் தலைவியின் காதல் ஆழத்தைக் காண்போம். கண்ணுள்ளிற் போகார், இமைப்பின் பருவரார் நுண்ணியரெம் காத லவர் (குறள் 1126) தலைவியும் தலைவனைப் போலவே கற்பனையில் மூழ்கிப் பலவாறு எண்ணுகிறாள்; விளையாட்டுத் தன்மையோடு என்னென்னவோ கூறுகிறாள். என் காதலர் எந்நேரமும் என் கண்ணிலேயே இருக்கிறார். என் கண்ணை விட்டு நீங்குவதே இல்லை. யான் கண்ணை மூடி இமைக்கும் போதும் அவர் துன்புறுவதும் இல்லை. எவ்வளவு நுட்பமான உடம்பினை உடையவராகவும், நுண்ணறிவு உடைய வராகவும் இருந்தால், அவர் இவ்வாறு என் கண்ணிலேயே நிலையாகக் குடியிருக்க முடியும்? என்னும் வியப்போடு தலைவி எண்ணிப் பார்க்கிறாள். நுண் பொருளாய் அருவமாய் எப்போதும் நீங்காமல் இருந்து என் காதலர் கண்ணினுள் புகுவதும் இலர்; பருப் பொருளாய் - உருவமாய்க் கண்ணில் இருந்து, இமைக்கும் போது உறுத்துவதும் இலர். ஆகவே, என் காதலர் மிக நுட்பமானவர் என்று தலைவி வியப்பதாகவும் கூறலாம். பருவருதல் வேறு; பருவரல் வேறு. பருவருதல் - பருப்பொருளாய்த் தோன்றுதல். பருவரல் - வருந்துதல். இங்கு பருவரார் எனக் கூறும் திருவள்ளுவர் பருப்பொருளாய்த் தோன்றி உறுத்துததும் இலர் எனக் கருதியதாகக் கூறலாம் - ஏனெனில் நுண்ணியர் என்ற வியப்புக்கு இதுவே பொருந்தும். கண்ணில் சிறு துரும்பு விழுந்தாலும் இமைக்குந் தோறும் அஃது எவ்வளவு உறுத்துகின்றது. தலைவர் எவ்வளவு பெரிய மனிதர், கண்ணினுள்ளே போய் மறையாமல், அதன் மீது இருந்தாராயினும் இமைக்கும்போது சிறிதும் அவ்விமைகளுக்கு உறுத்தாமல் இருக்கிறாரே என்பது தான் தலைவியின் வியப்பு. என் கண்ணுள் நின்றுநீங்கார்; இமைப்பேனாயின் இவட்கு உறுத்தும் என்று பருவந்திருப்பதும் செய்யார்; ஆதலான், எம்மால் காதலிக்கப்பட்டார் நுண்ணிய அறிவுடையார் என்று மணக் குடவர் கூறுவதும் இக் கருத்துடையதே. காதல் நோயால் சீதை உள்ளம் நைந்து உருகுவதை உணர்த்தும் பாடல்களில் ஒன்றாகிய, விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இம் மண்ணுளே இழிந்தது என்ன, வந்துபோன மைந்தனார் எண்ணுளே இருந்த போதும், யாவரென்று தேர்கிலேன் கண்ணுளே இருந்த போதும், என்கொல்காண் கிலாதவே. என்னும் இராமாயணப் பாடலையும் ஒருவகையில் மேற் கோளாய்க் கொள்ளலாம். கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து (குறள் 1127) தலைவனை எந்நேரமும் நினைந்து நினைந்து உருகும் தலைவி தன்னைப் புனைந்து கொள்வதையும் மறந்து விடுகிறாள்; மறுத்தும் விடுகிறாள்; நினைவு ஒன்றே அவளுடைய வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. கண்ணுக்கு மைதீட்டிக் கொள்ளவும் மனம் இல்லாமல் அவள் எந்நேரமும் தன் காதலனையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். என் காதலர் எப்பொதும் என் கண்ணினுள் இருக்கின்றார். இந்த நிலையில் நான் கண்ணுக்கு மைதீட்டினால் காதலரைச் சற்று நேரம் காணாமல் இருக்க நேருமே. மை தீட்டும் நேரத்தில் அவர் மறைந்து விடுவாரே ஆகையால் நான் கண்ணுக்கு மைதீட்ட மாட்டேன் என்று கூறுகிறாள். வாயும் திரை உகளும் கானல் மட நாராய்! ஆயும் அமலரும் துஞ்சினும் நீ துஞ்சாயால் நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல் நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயோ என்னும் நம்மாழ்வார் திருவாய் மொழியும், மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றும் எல்லாம் உறங்கும் கண்ணுறங்கேன் எம்இறைவர் காதலால் பைங்கிளியே! என்னும் தாயுமானவர் பாடலும் ஒப்பு நோக்கத்தக்கது. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து (குறள் 1128) தலைவனையே நினைத்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு உண்ண வும் மனம் இல்லை. என் காதலர் என் நெஞ்சிலேயே எப்பொழுதும் இருக்கின்றார். என் நெஞ்சை விட்டு அவர் இமைப் பொழுதும் நீங்குவதே இல்லை. இந்த நிலையில் சூடானவற்றை நான் எப்படி உண்பேன்! சூடான பொருளை உண்டால் அதன் வெப்பம் அவரைத் தாக்குமே என்று கூறி உண்ணவும் மறுத்து விடுகிறாள். உண்ண வேண்டும் என்ற எண்ணமே அவள் உள்ளத்தில் தோன்றவில்லை. வெளியே குளிர் வாட்டுகிறது. தலைவியைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் உண்ணும் உணவு, பருகும் பானம் அனைத்தும் சூடாகவே இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள். தலைவியும் நேற்றுவரை சூடாக விரும்பி விரும்பி உண்டவள்தான். தலைவனை இதயத்தில் குடியமர்த்திய பின் அவன் உடலில் சூடுபட்டுவிடக் கூடாது என எண்ணும் மெல்லிய உள்ளம் தலைவியின் உள்ளம் என்பது புலப்படுகிறது. தோழி! நம்மைப் பிரிந்து தலைவர் மிகச் சேயதாகிய நாட்டார் ஆயினும் நம் நெஞ்சிற்கு மிக அருகில் உள்ளவரே ஆவார். மேலும், கீழே விழுது தொங்கும் தாழையினுடைய முற்றி வளர்ந்து வளவிய மொட்டு, நாரை கோதுகின்ற அதன் சிறகினைப் போல மடல் விரிந்து மலரும் கடற்கானலை நண்ணிய நமது சிற்றூர் முற்றத்தில், அவரது தண்ணிய கடல் நாட்டு அலைகள் வந்து வந்து செல்லும் என்ப எனப் பொருள்படுமாறு, வள்ளுவன் பெருஞ்சாத்தன். வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை குருகுஉளர் இறகின் விரிபுதோடு அவிழும் கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் திரை வந்து பெயரும் என்ப நத்துறந்து நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியரே, தண்கடல் நாட்டே! எனப் பாடிய குறுந்தொகைப் பாடலை மேற்கோளாய்க் கொள்வோம். இமைப்பின் கரப்பாக் கறிவல்; அனைத்திற்கே ஏதிலர் என்னுமிவ் வூர் (குறள் 1129) கண்களை இமைத்தால் கண்ணுள் இருக்கும் காதலர் மறைவாரே என்று எண்ணி, நான் என் கண்களை அகலமாக விரித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நான் இயல்பாகக் கண்ணை இமைத்துப் பார்க்கவும் வாய்ப்பு அற்றவளாய் வருந்துமாறு என் காதலர் என்னை விட்டுப் போய்விட்டார் என்றும், அவர் உண்மையில் என் மீது அன்பு இல்லாதவர் என்னும் இவ்வூரார் அவரைக் குறை கூறுகின்றனரே! அதனைத் தான் என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அவரைப் பற்றி, அவர் என்மீது கொண்ட காதல் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும். எங்கள் காதலுக்குள் இவர்கள் ஏன் நுழைய வேண்டும்? இவர்கள் உதவியை நான் நாடினேனா? எனக் கூறுகின்றாள். அஞ்சனம் தீட்டாமையும், உணவைக் குறைத்து உண்பதையும், தூக்கம் இல்லாமையையும், காதலிக்கு ஏற்படும் துன்பங்கள் என்று தொல்காப்பியம், இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல் எதிர்பெய்து பரிதல், ஏதம் ஆய்தல் பசியட நிற்றல் பசலை பாய்தல் உண்டியிற் குறைதல் உடம்பு நனி சுருங்கல் கண்துயில் மறுத்தல் எனக் கூறுவதையும் எண்ணிப் பார்ப்போம். உவந்துறைவர் உள்ளத்துள் என்றும், இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர் (குறள் 1130) என்கிறாள் தலைவி. அவளுக்கு அப்பொழுது உள்ளுவன் மன்யான் மறப்பின், மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் (குறள் 1125) எனத் தலைவன் கூறியது நினைவிற்கு வருகிறது. என் காதலர் எப்போதும் என் உள்ளத்தே மகிழ்வோடு தங்கி இருக்கிறார். இதனை அறியாத இவ்வூரார், அவர் பிரிந்திருக் கின்றார் என்றும், அன்பில்லாதவர் என்றும் பழித்துக் கூறுகின்றனர். முழு உண்மை யும் தெரிந்தால் சொல்ல வேண்டும். அதை விடுத்து ஊரவர் ஏன் இந்த வேண்டாத வேலையில் ஈடுபட வேண்டும்? எனத் தலைவி கருதுவது புலப்படுகிறது. காதற் சிறப்புரைத்தல் கற்பனை நயம் மிகுந்த ஓர் அதிகார மாக விளங்குகின்றது. முனைவர் மு. வ. அவர்கள் கூறுவது போல் திருவள்ளுவர் படைத்து அளிக்கும் காதலர்கள் கற்பனை விளையாட்டுகள் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அழுவதிலும் கற்பனை உள்ளது மகிழ்வதிலும் கற்பனை உள்ளது. அவர்களுடைய கற்பனைகள் வாழ்க்கையோடு ஒட்டாத கற்பனை களாக இருப்பினும் காதல் மனத்தின் அருமையான விளையாட்டுகளாக விளங்குகின்றன. கலைச்சுவை நிறைந்து காணப்படுகின்றன. தோழி! கடலிலே விரைந்து செல்லக் கூடிய படகினை உடைய பரதவர்கள் வலிமையான கயிற்றின் நுனியில் உளிகளைக் கட்டி அவ்வுளியினைக் கொண்டு பெரும் மீன்களைக் கொல்வர். நள்ளிரவு வேளையில் மீன் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்று அதிகாலையில் மீன்களை எல்லாம் பிடித்துக் கொண்டு மீள்வர். பின்னர் பிடித்த மீன்களைக் கரைகளில் குவித்து விட்டுப் புன்னை மர நிழலில் அமர்ந்திருப்பர். மேலும் தேன் மணம் கமழுகின்ற கள்ளினைச் சுற்றத்தாரோடு அருந்தி மகிழ்வர். அத்தகைய சீர்படைத்த ஊரினைச் சார்ந்தவன் நம்முடைய தலைவன். அவன் நெஞ்சத்திலிருந்து ஒருபோதும் நீக்கி அறியான். அவன் நெஞ்சிலே யாம் தங்கி இருப்பதனால் பிரிவை எண்ணி நான் கலங்கவில்லை என்பதால் என் நெற்றியில் பசலை நோய் உண்டாகாது என்று தலைவி கூறினாள் என்பதை, மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் பாடிய கீழ்க் காணும் நற்றிணைப் பாடல் மேற் கோளாய்க் கொள்ளத் தக்கதாகும். அம்ம வாழி தோழி! நன்னுதற்கு யாங்குஆ கின்றுகொல் பசப்பே நோன்புரிக் கயிறுகடை யாத்த கடுநடை எறிஉளித் திண்திமில் பரதவர் ஒண்சுடர்க் கொளீஇ நடுநாள் வேட்டம் போகி வைகறைக் கடல்மீன் தந்து கானற் குவைஇ ஓங்குஇரும் புன்னை வரிநிழல் இருந்து தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்தி பெரிய மகிழும் துறைவன்எம் சிறிய நெஞ்சத்து அகல்பு அறியானே. உடம்பொடு உயிரிடை நட்பு வாழ்தல் உயிர்க் கன்னள் சாதல் அதற்கன்னள் நீங்குமிடத்து மறப்பறியேன் கண்ணாள் குணம் நுண்ணியர் எம் காதலர் கண்ணுள்ளார் காதலவர் நெஞ்சத்தார் காதலவர் உவந்துறைவார் உள்ளத்துள் என்றும் என்னும் பாலொடு கலந்த தேன் மொழிகள் காதலர் உள்ளத்தாலும் உணர்வாலும் ஒன்றியவர் என்பதைப் புலப்படுத்தும்! 114. நாணுத் துறவுரைத்தல் 114 நாணுத் துறவுரைத்தல் முதல் 118 கண் விதுப்பழிதல் ஈறாக அமைந்துள்ள ஐந்து அதிகாரங்களும் பாலைத் திணை உரிப்பொருளாகிய பிரிதல், பிரிதல் நிமித்தம் அடிப்படையில் படைக்கப்பட்ட ஒழுக்கமாகும். ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்ட தலைவனும் தலைவியும், தாம் காதல் கொள்வதை ஒருவருக்கொருவர் உணர்த்தி ஆகவேண்டும். நான் உன்னை காதலிக்கிறேன் என்பதைச் சொல்லவும் உணர்த்தவும் நாண் உடைமை மாந்தர் சிறப்பு எனக் கருதித் தயங்கி வெளிப்படுத்தத் தவறினால், காதல் கைகூடவும் தவறிவிடும். ஆகவே! நாணத்தை விட்டுத் தம் உள்ளுணர்வை இருபாலாரும் வெளிப்படுத்துவதை இவ்வதிகாரம் உணர்த்துகிறது. பழந்தமிழ் இலக்கண மரபுப்படி மடலேறுதல் என்னும் உத்தி பயன்படுத்தப்படுவது மேலோங்கி உள்ளதைக் காண முடிகிறது. காமநோய் முற்றி வயிரம் பாய்ந்து மிகுமானால், ஆடவர் குதிரை எனப் பனை மடல் ஏறியும் அதனை ஊர்வர், குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூவையும் அடையாளப் பூப்போலச் சூடிக் கொள்வர். நாற் சந்தியில் இவளால் இவன் இவ்வாறு ஆனான் என ஊராரால் ஆரவாரிக்கவும் படுவர்; தம் கருத்து நிறை வேறா விட்டால் சாகவும் துணிவர் எனும் பொருள் தோன்றுமாறு பேரெயின் முறுவலார் பாடிய குறுந்தொகைப் பாடல், மாஎன மடலும் ஊர்ப; பூஎனக் குவிமுகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே. எனக் கூறுகிறது. ஓங்கிரும் பெண்ணை மடலூர்ந்து என் எவ்வநோய் தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக வீங்கிழை மாதர் திறத் தொன்று நீங்காது பாடுவேன் பாய்மா நிறுத்து என்னும் கலித்தொகையைச் சான்றாய்க் கொள்ளலாம்! இப்பாடல் அடிகள் கலித்தொகையில் அமைந்த 139ஆம் பாடலில் இடம் பெற்றுள்ளது. பாடலின் முழுக் கருத்தையும் காண்போம். நற்பண்புகளெல்லாம் அமைந்தோரே! வாழ்க! என்றும் பிறர் துன்பமும் உமது துன்பம் எனக் கருதிப் பாதுகாத்து அவ்வறத்தின் பயனை அறிதல் சான்றோர் அனைவர்க்கும் கடமை. ஆதலின், இங்கிருக்கும் சான்றோரே! உமக்கு ஒன்றைத் தெரிவிக்கின்றேன். கண்ணை மறைத்துப் பெய்யும் மழையில் மின்னும் மின்னல் போல, ஒளியும் எழிலும் உடையாள் ஒருத்தி வந்து, எனக்கு அருள் செய்து, என் நெஞ்சில் இடம் கொண்டாள். அதன் காரணமாகப் பன்னாள் உறக்கம் இன்றி வருந்தி (அவளைப் பெற வேறு வழி இல்லாமையால் மடலேறத் துணிந்தேன். ஆவிரம்பூ மாலை மார்பில் அசைய எருக்கம் பூக் கண்ணியைத் தலையிற் சூட்டி, பனங்கருக்குக் குதிரைக்கு மணிகட்டி, அதனைக் குதிரையாகவே பாவித்து, மடலூர்கின்றேன். அப்பெண் தந்த துன்பங்களுள் ஒன்றைப் பொறுத்தற்கரிய துன்பத்துக்கு ஆறுதலாகப் பாடுவேன் கேட்பீராக! இனிய மொழி பேசும் அந்தப்பெண் என்னிடம் காதல் கொள்ளாமல், எனக்கு உண்டாக்கிய காம நோயாகிய கடலில் மூழ்கி, இரவும் பகலும் துன்ப அலைகள் மோத, இந்த மடற் குதிரையைத் தெப்பமாகக் கொண்டு, இதனை யான் ஏறும் குதிரை என்று பாவித்துக் கடந்து கரையேற முயல்கின்றேன். எனக்கு மயக்கத்தை உண்டாக்கிய அவள் என்னை ஏறச் செய்து விட்ட இம்மடல், யானுற்ற தீரா நோய்க்கு ஒருவாறு மருந்தாகின்றது. இயற்கை அழகுடன் அணியழகும் எய்தி, மன்மதன் விடுத்த படை என வந்த அவள், பிறர் கண்டு எள்ளி நகையாடுமாறு யான் கலக்கமுற, என் எதிர்வந்து எனது நாணாகிய உயர்ந்த கோட்டை மதிலை வளைத்துக் கொண்டு அதனை உடைத்து உட்புகுந்து என் இயல்புகளை அழிக்கின்றாள். அவ்வாறு காமப் பகையைத் தேடிக் கொண்ட எனக்கு, அவள் ஏறச் செய்வித்த இம்மடல் ஒருவாறு துணையாய் உள்ளது. முல்லை மொட்டினை ஒத்த பல்வரிசையையும் இனிமை விளைக்கும் புன்னகையையும் கொண்ட அழகியாகிய அவளை என் நெஞ்சம் மறக்க இயலவில்லை. ஆகையால் என் உயிர் மெல்ல மெல்லத் தேயும்படி காமத்தீ கொழுந்து விட்டு எரிகின்றது. அக்காமக் கொடு நெருப்புக்கு அவள் என்னை ஏறுவித்த இம்மடல் ஒருவாறு நிழலாய் அமைகின்றது. சான்றோரே! என் துன்பம் பற்றி உங்களுக்கு அறிவித்து விட்டேன். பெரியோர் உயர்நிலைக்கு உரியவன் என்று கருதிய ஒரு மன்னன் அவர் காட்டிய நன்னெறியில் தவம் செய்ய முயன்று, இடையில் அதனைக் கைவிட்டு விண்ணுலகப் பேற்றை இழந்து போக நிற்பானாயின் அப்பெரியோர் அவனை மீட்டுச் செவ்விதின் நிறுத்தித் துயர் தீர்த்து, அவ்விண்ணுலகப் பேற்றையும் பெறச் செய்வது போல, என் துன்பத்தைக் கேட்ட நீவிர் அதனைத் தீர்த்தல் கடமையாகும். இக்கலித்தொகைக் கருத்துகளை முன்னுரையாகக் கொண்டு, அதிகாரக் குறள்களை வரிசையாய் காண்போம். காமம் உழந்து வருந்தினார்க் கேமம் மடல்அல்ல தில்லை வலி (குறள் 1131) காதல் என்னும் நோய்க்கு ஆட்பட்டு வருந்துவோர். அந்நோய் தரும் வேதனையிலிருந்து விடுபட்டுத் தன்னைத் தானே காத்துக் கொள்ளவும் வழி தேட வேண்டும். காதல் காதலாக மட்டும் நின்று விடாமல் நிலையான இணைப்பாக மலரவும் வழி வகை செய்தல் வேண்டும். அஃது தக்க பாதுகாப்பானதாகவும் அமைய வேண்டும். காதலை மூடி வைத்து வருந்திக் கொண்டிருக்கக் கூடாது. நாணத்தை முதற்கண் விட்டு விட வேண்டும்; காதலை வெளிப் படுத்தத் தயங்கக் கூடாது. தான் முன் வந்து மானம் பாராது. காதல் கொண்டதையும், அதனால் வருந்துவதையும், அவ்வருத்தம்போக்க விரைந்து மணம் முடித்துக் கொள்ள விரும்புவதை மடல் (கடிதம்) வழி தெரிவிப்பது, வலிமையான பாதுகாப்பான வழியாகும். மடல் என்பதை மடல் ஏறி ஊரிலுள்ள பெருமக்கள் அறிந்து கொள்ளுமாறு செய்வதும் சிறந்த வழியாகும். சான்றோர் பெருமக்கள் அத்தலைவன் படும் துன்பத்தைக் கண்டு அவன் துயர் தீர்க்க விரைந்து முற்படுவர். தலைவியின் விருப்பத்தையும் அறிந்து பெற்றோர் ஒப்புதலும் பெற்று அவர்கள் வாழ்நாளெல்லாம் இணைந்து வாழ வழி காண்பர். தலைவன், சான்றோர் உதவியை நாடிச் செல்லாமல் மடல் ஏறுதல் வழியாகத் தெரிவித்தல் மிகப்பெரிய அறிவார்ந்த உத்தியாகும். அழகு ஒழுகும் அசைந்து நடக்கும் நடையையுடைய இளம் தலைவி, நாம் விடுதற்கு அமைந்த நம் தூதுரைக்குச் சிறிதும் மனம் நெகிழ்ந்து இசைந்திலள், இனியான் இவள்பால் கொண்ட காதல், வளம் நிறைந்த உச்சியை உடைய பனைமரத்தின், முற்றி விளைந்த பெரிய மடலால் செய்த குதிரைக்கு, மணிகள் பொருந்திய பெரிய கழுத்தணியை முறைப்படி அணிவித்து, யான் சுடுகாட்டு வெள்ளெலும்பை அணிந்து, பிறர் இகழுமாறு அக்குதிரை மீது தெருவில் தோன்றி, என்றேனும் ஒரு நாள், என் பெரு நாணைக் கைவிட்டுத் தெருவில் இழுக்கப்படுமாறு ஓர் அவல நிலையையும் தருமோ? (மடலேறுதலே இனி வழியாகத் தோன்றுகிறது என்று தன்நெஞ் சிற்குக் கூறித் தேற்றிக் கொள்கின்றான்). எனும் பொருள் விளங்குமாறு மடல் பாடிய மாதங்கீரனார் பாடிய குறிஞ்சித் திணைப் பாடலாகிய விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல் மணிஅணி பொருந்தார் மரபிற் பூட்டி வெள்ளென்பு அணிந்துபிறர் எள்ளத் தோன்றி ஒருநாள் மருங்கில் பெருநாண் நீங்கித் தெருவின் இயலவும் தருவது கொல்லோ? கலிழ்கவின் அசைநடைப் பேதை மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே எனும் குறுந்தொகை ஏற்ற மேற்கோளாகும். தலைவன் தோழியின் உதவியுடன் தலைவியை அடைய எண்ணு கிறான். தலைவியோ திருமணத்தில் நாட்டமுடையவளாகக் காணப் பட்டாள். எனவே தோழி, அவனுக்கு உதவ மறுக்கின்றாள். இச் சூழலில் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுவது போல் மடல் பாடிய மாதங்கீரனார் பாடிய கீழ்க் காணும் நற்றிணைப் பாடலும் மேற்கோளாய்க் கொள்ளத் தக்கதாகும். மடல்மா ஊர்ந்து மாலை சூடிக் கண்அகன் வைப்பின் நாடும் ஊரும் ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டி பண்ணல் மேவல மாகி அரிது உற்று அது பிணி ஆக விளியலம் கொல்லோ அகல் இரு விசும்பின் அரவுக்குறை படுத்த பசுங்கதிர் மதியத்து அகல் நிலாப் போல அளகம் சேர்ந்த திருநுதல் கழறுபு மெலிவிக்கும் நோய்ஆ - கின்றே என்னும் பாடலும் தக்க மேற்கோளாகும். இதன் பொருள்: - கரிய அகன்ற வானத்திடத்தே, பாம்பினால் விழுங்கப் பட்டுப் பசுமையான கதிர்களை வீசும் நிலவைப் போலக் கூந்தல் சூழ்ந்த நெற்றியை உடையவள் தலைவி. அவளை எண்ணி நாளுக்கு நாள் என் உடல் மெலிந்து நோயால் பாதிக்கப் பட்டுள்ளேன். தலைவியை அடைவதற்காகப் பனை மடலாலே செய்த குதிரையின் மீது ஏறி வந்தும் ஆவிரை மற்றும் எருக்க மலர்களால் ஆன மாலையைச் சூடியும் நாடு தோறும் ஊர் தோறும் அழகிய நெற்றியை உடைய தலைவியைச் சிறப்பித்துக் கூறியும், செல்லாமல் அவளையே எண்ணி அதுவே நோயாகி இறந்து போவேனோ என்று தன் நெஞ்சிற்குத் தலைவன் கூறினான். இங்கே எண்ணிப் பார்க்க வேண்டிய அரிய குறிப்புச் சங்க காலத்தில் மண முடிக்க மேற்கொள்ளப்பட்ட வழி முறைகளில் மடல் ஏறுதல் என்பதும் ஒன்று. மடலேறுவேன் எனத் தலைவன் கூறுவது உண்டே தவிர மடல் ஏறிய செயல் வாராது. மடல் ஏறின் பெருந்திணையாகிய பொருந்தாக் காமம் ஆகிவிடும். தரவு : வார்உறு வணர்ஐம்பால், வணங்குஇறை, நெடுமென் தோள் பேரெழில் மலர்உண்கண், பிணை எழில் மான் நோக்கின் கார் எதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதல் கூர்எயிற்று முகைவெண்பல், கொடி புரையும் நுசுப்பினாய் நேர் சிலம்பு அரிஆர்ப்ப நிரைதொடிக்கை வீசினை ஆருயிர் வௌவிக்கொண்டு அறிந்துஈயாது இறப்பாய் கேள்! தாழிசை : உளனாஎன் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக இளமையான் உணராதாய் நின்தவறு இல்லானும் களைநர்இல் நோய் செய்யும் கவின்அறிந்து அணிந்துதம் வளமையால் போத் தந்த நுமர்தவறு இல் என்பாய்? நடைமெலிந்து அயர்வுறீஇ நாளும்என் நலியும் நோய் மடமையான் உணராதாய், நின்தவறு இல்லானும் இடைநில்லாது எய்க்கும் நின் உருவறிந்து அணிந்துதம் உடைமையால் போத்தந்த நுமர்தவறு இல்என்பாய்? அல்லல்கூர்ந்து அழிவுற அணங்காகி அடரும் நோய் சொல்லினும் அறியாதாய், நின்தவறு இல்லானும் ஒல்லையே உயிர் வௌவும் உருவறிந்து, அணிந்துதம் செல்வத்தால் போத்தந்த நுமர்தவறு இல் என்பாய்? எனவாங்கு, ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை, யான் மற்றிந் நோய் பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிதாயின் பொலங்குழாய் மறுத்து இவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்குவென் போல்வன்யான் நீபடு பழியே என்னும் கபிலரின் குறிஞ்சிக் கலிப்பாடல் விரிவான விளக்கமாய் அமைந்துள்ளது. நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து (குறள் 1132) என்பது அகவாழ்க்கை நெறி. புற வாழ்க்கை நெறி ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு (குறள் 1012) நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர் (குறள் 1017) உயிரைத் துறந்தும் நாணத்தைக் காக்க நெறி காட்டிய வள்ளுவர், இங்கே காதல் வெற்றி பெற நாணத்தை விட நேரிடும் என்பதை உணர்த்துகிறார். காதல் கொண்ட தலைவன் காதலியை அடைய வாய்ப்பில்லாது காலம் கடக்கிறது. அதனால் காதல், நோய்போல் வாட்டுகிறது; துன்பம் நாளும் மிகுந்து தாங்கிக் கொள்ள முடியாதவன் ஆகிறான். காதல் நோயின் தாக்கத்தைத் தாங்கிக் கொள்ள இயலாத அவனுடைய உடலும் உயிரும் இனிக் காதலை வெளிப்படுத்தாமல் மறைத்து வைப்போமானால் வேண்டாத விளைவு ஏற்படும் என எண்ணி நாணத்தை விடுத்துக் காதலை ஊரவர் அறிந்து கொள்ளும் பொருட்டு மடல் ஏறத் துணிந்தான். பொன் போன்ற ஆவிரைப் புதுமலர்களைச் சேர்த்துக் கட்டிய, பல நூலால் ஆன மாலைகளை அணிந்த பனங் கருங்காற் செய்த குதிரையில், அதன் கழுத்துமணி ஒலிக்க ஏறி, வெட்கத்தைத் தொலைத்து, பழியொடு பரவி உள்ளத்துள் வாட்டும் காம நோய் நாளுக்கு நாள் மிகுதிப்பட இன்னாரால் செய்யப்பட்டது இக்காம நோய் என்று நான் வெளிப்படுத்த அதனை அறிந்த இவ்வூரார், அவள் எதிரே நின்று அவளது பழியைத் தூற்றுவர். இவ்வாறு செய்யயான் முடிவு செய்துள்ளேன் ஆதலின், இப்போது நீங்கள் என் வேண்டுகோளை மறுத்ததைப் பற்றிக் கவலைப் படாது செல்ல நினைத்துள்ளேன் எனத் தலைவன் தோழிக்கு உரைத்தான் என்பதைக் குறுந்தொகையில் மதுரைக் காஞ்சிப் புலவன் பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பன்னூல் மாலைப் பயன்படு கலிமாப் பூண்மணி கறங்க ஏறி, நாண் அட்டு பழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப இன்னள் செய்தது இது வென முன்நின்று அவள்பழி நுவலும் இவ்வூர் ஆங்குஉணர்ந் தமையின் ஈங்கு எதுமார் உளெனே! எனப் பாடிய பாடல் தக்க மேற்கோளாகும். நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல் (குறள் 1133) காதலனும் நல்லவன்; காதலியும் நல்லவள். அவர்கள் கொண்ட காதலும் நெறியானதே. ஆயினும் அவர்கள் காதலுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. தன் பெற்றோர் திருமணத்திற்கு உடன்பட மாட்டார்களே என்று காதலி அவனோடு பழகவும் அஞ்சினாள்; தயங்கினாள். இதைக் கண்ட காதலன், அவளுக்குத் தன்மேல் அன்பு இல்லை என்று எண்ணி விட்டான். நான் இவ்வளவு உண்மையாக ஆர்வத்தோடு அன்பு செலுத்தியும், இவள் என் அன்பைப் புறக்கணிக்கின்றாளே என்று வருந்தினான். இந்த எண்ணம் அவனுடைய அன்பான நெஞ்சை அறுக்கும் வாள் ஆயிற்று. அவனுக்கு வாழ்க்கையே வெறுத்தது. மடல் ஏறி உயிர் துறப்பதே கடமை என்று உணர்ந்து விட்டான். எண்ணங்கள் மாறி மாறி வருகின்றன. மடல் ஏறித் தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்று எண்ணுகிறான். அடுத்தாற் போலவே அவனுடைய இளமை வாழ்க்கை - காதலுக்கு முன் வாழ்ந்த பெருமிதமான வாழ்க்கை நினைவிற்கு வருகின்றது. நான்கு பேர் - ஊரார் - பழிக்கும் படியான நிலைமையை அடைந்து சாவது என் வாழ்க்கை ஆகிவிட்டதே. இப்படி நாணம் இழந்து சாக வேண்டுமா? நான் இதுவரையில் எப்படி வாழ்ந்தேன்? செய்யத் தகாத வற்றை எப்போதுமே செய்ததில்லை. அத்தகைய நாணம் என்னிடம் இருந்தது. இன்று பிறர் பழிக்கும் நிலைமை அடைகின்றேன். என்பால் இயற்கையாய் அமைந்த நாணுடைமை என்ன ஆயிற்று. என் வீரம் - ஆண்மை எல்லாராலும் போற்றப்பட்டு வந்தது. இப்போது இவ்வாறு ஒரு பெண்ணுக்காகச் சாகும் நிலைமை வருகிறது. என்னுடைய நாணுடைமையும் பேராண்மையும் பழங்கதை ஆகிவிட்டன. முன்னொரு காலத்தில் இவை என்பால் இருந்தன என்று சொல்லும் நிலைமை வந்து விட்டது. இன்று இருப்பது இந்த மடலேறும் நிலை தான் எனக் குழம்பிய நிலையில் தவிக்கிறான். முன்னாளில் நாணமும் பகைவரும் பாராட்டும் நல்ல ஆண்மையும் உடையவனாக இருந்த நான், இன்று காதல் நோய்க்கு ஆட்பட்டதால் நாணத்தையும் நல்லாண்மையையும் இழந்து, ஊர் நடுவே மடலேறும் நிலைமைக்கு ஆளாகி விட்டேனே! என வருந்தும் தலைவனைக் காணுகிறோம். காமக் கடும்புனல் உய்க்குமே, நாணொடு நல்லாண்மை என்னும் புணை (குறள் 1134) தலைவனிடம் நேற்று வரையில் நாணம் என்னும் சிறந்த பண்பும் இருந்தது. போரிட அஞ்சாப் பேராண்மையும் இருந்தது. உயர்ந்த பண்பாளன், சிறந்த வீரன் என்று ஊரும் உலகும் போற்றிப் புகழும் நிலையில் இருந்தான். இன்று தன்னிலையை எண்ணிப் பார்க்கும் போது அவை தன்னை விட்டு நீங்குவதை உணர்கிறான். கரை கடப்பதற்கு உதவி வந்த தெப்பமே இப்போது வெள்ளத்தில் அகப்பட்டுக் கைக்கு எட்டாமல் விரைந்து புரண்டு ஓடுவது போல், அவை அவனை விட்டு நீங்குவதை உணர்கிறான். காதல் பெரிய வெள்ளம்; மிக வேகமாகக் கரை புரண்டு ஓடும் வெள்ளம். அந்த வெள்ளத்தில் நாணமும் நல்லாண்மையும் அகப்பட்டுக் கொண்டன; வெள்ளம் அவற்றை வேகமாக அடித்துச் செல்கின்றது. அவனால் அவற்றை மீட்க முடியவில்லை. இதுவரையில் என் வாழ்க்கையை நான் நன்றாக நடத்து வதற்குத் தெப்பம் போல் எனக்கு உதவியாக இருந்த இந்த நாணமும் ஆண்மையும் இன்று இந்தத் தெப்பமே எனக்கு எட்டாமல் காதல் வெள்ளத்தில் அகப்பட்டு அடித்துச் செல்லப்படுவதை உணர்கின்றேன். எனக்கு இனி வாழ்வு ஏது? என வருந்துகிறான். காணுநர் எள்ளக் கலங்கித் தலை வந்துஎன் நாண் எழில் முற்றி உடைத்து உள்ளழித்தரும் மாணிழை மாதராள் ஏஎர்எனக் காமனது ஆணையால் வந்த படை. என்னும் 139ஆம் கலித்தொகையில் இடம் பெற்ற அடிகள் ஏற்ற மேற்கோளாகும். தொடலைக் குறுந்தொடி தந்தாள், மடலொடு மாலை உழக்கும் துயர் (குறள் 1135) காதலினால் தலைவனுக்கு ஏற்படும் மாற்றங்களைத் தொல் காப்பியம். பெற்ற வழி மகிழ்ச்சியும், பிரிந்தவழிக் கலங்கலும் நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் ......... தோழி நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி மடன்மா கூறும் இடனுமா ருண்டே. எனக் கூறுவதையும் சிந்தனையில் கொள்வோம். மனம் ஊசல் போன்றது. தெற்கே எந்த அளவிற்குச் செல்கின்றதோ, அந்த அளவிற்கு வடக்கிலும் சென்று ஆடியே தீரும். அதுவே ஊசலின் இயற்கை. ஒரு பொருளின் மேல் மிகுதியான விருப்பம் வைத்து மகிழ்ச்சி கொண்டால், அந்தப் பொருளை விட்டுப் பிரியும் போது அவ்வளவு மிகுதியான வருத்தமும் ஏற்பட்டே தீரும். மருத்துவருக்குத் தன் குழந்தையிடம் பற்று மிகுதி; அதனால் தன் குழந்தை, நோயால் வாடும் போது அவருடைய மனம் மிகுதியாக வருந்துகிறது. அதே மருத்துவரிடம் எத்தனையோ குழந்தைகள் நோய்க்கு மருந்து நாடி வருகின்றன. அந்தக் குழந்தை களின் மேல் அவர்க்குப் பேரன்பும் இல்லை; பற்றும் இல்லை; அதனால் அந்தக் குழந்தைகள் நோயால் துடிக்கும்போது, அவருடைய மனம் துடிப்பதில்லை. அவை களின் நோயைப் பார்த்து மருந்து கொடுத்தலை ஒரு கடமையாகச் செய்து விட்டுக் கவலை இல்லாமல் காலங் கழிக்கிறார். காதலன், முன்னெல்லாம் நாணமும் நல்லாண்மையும் உடையவனாக இருந்தேனே என்று வருந்துகின்றான். இது உண்மை தான், முன்னெல்லாம் அவனுடைய மனம் கவலை இல்லாமல் இருந்தது. நாணமும் நல்லாண்மையும் உடையவனாக, அவன் எந்தப் பெண்ணிடமும் பற்றுக் கொள்ளாமல், கடமையைச் செய்து வந்தான். அதனால் இதற்குமுன் வருந்த வேண்டிய நிலையும் இல்லை; பிறர் பழிக்கு ஆளாகும் நெருக்கடியும் ஏற்பட்டதில்லை. ஆனால், இப்போது சில நாள்களாக அவன் கொண்ட காதலால், அவனுடைய மனம் ஒரு பெண்ணினிடம் தீராத பற்றுக் கொண்டுவிட்டது. உயிர்க்கும் உடம்புக்கும் உள்ளது போன்ற பற்று ஏற்பட்டு விட்டது. அதனால் அவளுடன் வாழ்தலையே உயிருடன் வாழ்வதாகவும் அவளைப் பிரிந்து வாழ்தலைச் சாவாகவும் உணர்கின்றான். காதல் நிறை வேற இடம் இல்லை என்று அறிந்ததும் அவனுடைய மனம் வாழ்வை வெறுத்துச் சாவை வரவேற்கின்றது. ஆகவே, இத்தலைவன், தொடுத்து அணிந்த சிறிய வளையல்கள் நிறைந்த கைகளை உடைய என் காதலி எனக்கு இப்பொழுது தந்து கொண்டிருப்பது மடலேறும் துணிவையும், மாலை நேரத்துக் காதல் நோயையும் தான். மின்னற் கொடியோ அல்லது கனவோ, என்று கருதும்படி அவள் புன்னகையோடு என் முன்னே வந்து என்னைக் கூடிப் பின்னர் மறைந்தாள். அழகிய தந்தங்களை உடைய யானை மதங் கொண் டமையால், பாகனின் ஏவலைக் கேளாமல், தன்னைப் பணிய வைக்கும் அங்குசத்தை மீறி ஓடுவது போல், என் வரம்பில் நில்லாத அறிவையும், அறிவினால் ஆய்ந்து மேற்கொண்ட அடக்கத்தையும், நாணத்தையும் யான் கடைப்பிடிக்க இயலாதவாறும், அதைக் கண்டு பிறர் என்னை எள்ளி நகையாடுமாறும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு சென்றுவிட்டாள். பிறகு அவளைக் காண்பதே அரிதாகியது. அவளை எவ்வாறு காண்பேன்? அதற்குரிய வழியாது? ஒருவாறு வழி புலப்படுகின்றது. நூலில் அழகிய மயில் இறகு, பூளைப் பூ, ஆவிரம் பூ, எருக்கம் பூ ஆகியவற்றைத் தொடுத்து மடற் குதிரையின் கழுத்தில் கட்டி, அப்பெண்ணினது ஊர்த்தெருவில் அம்மடலை ஊர்ந்து, இங்குள்ள எல்லாரும் இவளை இவன் பாடுவதைக் கேளுங்கள் என்று கூறிப் பாடுவதே வழியாகும். ஒளிபொருந்திய அணிகலன்களை உடையவள் என் காதலுக்குப் பரிசாக, விரும்பித் தந்தவை, என் நெஞ்சு நிறைந்த கவலையும், கருக்கு நிறைந்த பனைமடல் குதிரையுமே ஆகும் எனப் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ள கீழ்க்காணும் கலித்தொகைப் பாடல் வரிகள் தக்க மேற்கோளாகும். எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் தொழில் மாறித் தலைவைத்த தோட்டிகை நிமிர்ந்தாங்கு அறிவும், நம் அறிவாய்ந்த அடக்கமும், நாணொடு வறிதாகப் பிறர்என்னை நகுபவும், நகுபுஉடன் மின்அவிர் நுடக்கமும் கனவும்போல் மெய்காட்டி என்நெஞ்சம் என்னோடு நில்லாமை, நனிவௌவித் தன்நலம் கரந்தாளைத் தலைப்படுமாறு எவன்கொலோ? மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்துயாத்து மல்லல்ஊர் மறுகின்கண் இவட்பாடும் இஃதுஒத்தன் எல்லீரும் கேட்டீமின் என்று; படரும் பனைஈன்ற மாவும் சுடரிழை நல்கியாள் நல்கி யவை காதலில் நம்பிக்கை இருந்தபோது, இவளை அடிக்கடி நினைக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. மறந்தால்தான் நினைக்க முடியும். நான் மறப்பதே இல்லையே! எப்படி நினைக்க முடியும்? என்று முன்பு கூறித் தன் காதலைப் பற்றிப் பெருமைப் பட்டான்; மகிழ்ச்சியுற்றான் என்பதைக் காதற் சிறப்புரைத்தல் ஆகிய முந்திய அதிகாரத்தில், உள்ளுவன் மன்யான் மறப்பின்; மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் (குறள் 1125) எனக் கூறிய தலைவன் இன்று காதலில் நம்பிக்கை அகன்றதும், மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன், மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண் (குறள் 1136) என்கிற நிலைக்கு ஆளாகி விட்டான். காதல் கை கூடாமையால் மடலூறுதல் பற்றிய நினைவிலேயே பொழுது கழிகிறது. ஆகவே பகலெல்லாம் ஓய்வும் அமைதியும் நிறைவும் அற்ற கவலை மனத்தில் மண்டிக் கிடக்கிறது. இரவிலாவது தூங்கி ஓய்வு கொள்ள முடிகிறதா என்றால் அதுவும் முடியவில்லை. ஆகவே பகலிலும் இரவிலும் கண்களை மூடித் தூங்க இயலாது விழித்துக் கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தலைவன் வருந்துகிறான். பெண்ணிற் பெருந்தக்க யாவுள, கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் (குறள் 54) vd thœ¡if¤ Jiz ey¤âš ‘bg©Â‰ bgUªj¡f ahîs? என வினா எழுப்பியவர் திருவள்ளுவர். பெண் வழிச் சேறலில், பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து (குறள் 907) என உறுதிப்படுத்தினார். பெண்ணிற் பெருந்தக்கது இல் எனப் பெண்மையின் இணையற்ற பெருமையை எடுத்து மொழியும் குறளே, கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் (குறள் 1137) என்பதாகும். காதலன் வாடி வதங்கித் தன் காதலை மடலேறி உலகுக்குப் பறை சாற்றுகிறான். அது போல் ஏன் காதலி தன் காதலை உலகிற்குச் சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. தலைவனுக்கு ஏற்பட்ட ஆறாத காதல் தலைவிக்கு ஏற்படவில்லையா? வினாக்களை வள்ளுவப் பெருந்தகை எழுப்பி, அதற்குப் பதிலையும் தருகிறார். தலைவியும் காம வயப்பட்டவள்தான். ஆனால், அவள் பெண், அச்சம், மடம், நாணம் என்ற பண்பாடுகள் அவளைத் தடுத்து நிறுத்துகின்றன. அவள் தன் காதலைச் சிறப்பித்துக் கூறினால் தன்னடக்கத்திற்கு மாசு ஏற்படுவதோடு, பிறர் நகைக்கவும் ஏதுவாகுமே என்று அஞ்சுகிறாள். அவளுக்குக் கடல் போலக் காதல் ஏற்பட்டாலும் அதனை அடக்கி விடுகிறாள். அதனால்தான் திருவள்ளுவர் கடலைப் போல அளவிட முடியாத காம நோயால் வருந்தினாலும், மடலேறுதல் மூலமாகப் பிறர்க்கு வெளிப் படுத்திப் பயன்பெற வேண்டும் என எண்ணாது துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் தகுதிவாய்ந்த பெண் பிறப்புப் போல மிக்க தகுதியுடைய ஒன்று உலகில் இருக்க முடியாது. ஆகவே, கவிமணி தேசிய விநாயகர் மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என விளம்பினார். கண்ணும் வாளற்ற கைவளை சோருமால் புண்ணும் போன்று புலம்புமென் நெஞ்சரோ எண்ணில் காமம் எரிப்பினும் மேல்செலாப் பெண்ணின் மிக்கது பெண்ணல்லது இல்லையே என்று கூறும் சீவகசிந்தாமணிப் பாடல் குறளை வழி மொழிந்து உரைப்பதைக் காணலாம். கண்ணிலாம் கவினொளிக் காளைமார் திறத்து உண்ணிலா எழுதரு காம ஊழ்எரி வெண்ணிலா சுடர்சுட விரிந்து நாண்விடாப் பெண்ண லால் பிறிது உயிர் பெரிய தில்லையே என்னும் சூளாமணிப் பாடலும் சிறந்த எடுத்துக் காட்டாகும். நிறையரியர் மன்அரியர் என்னாது, காமம் மறையிறந்து மன்று படும் (குறள் 1138) காப்புச் சிறை மிக்குக் காமம் பெருகிய வழி சொல்லியது. வலியவர் மெலியவர்; வறியவர் செல்வர்; கற்றவர் கல்லாதவர் என்பன போன்ற வேறுபாடு காமத்திற்கு இல்லை. காமத்தின் தாக்குதலுக்கு எந்நிலையினரும் உட்பட்டவர்களே! இவர் நிறையில்லாதவர் என்றும் இவர் இரங்கத் தக்கவர் என்றும் தரம் பிரித்துப் பாகுபாடு செய்தெல்லாம் எண்ணிப் பாராது காமநோயானது எத்தகைய கட்டுக் காவலுக்கும் உட்படாது, மறைப்பைக் கடந்து மன்றத்தில் தானாகவே வெளிப்படும் தன்மை வாய்ந்தது ஆகும். இவர் மனத்திண்மை உடைய பேராண்மையர் இவரைத் தாக்கி வெல்லுதல் அரிது என்று அச்சம் கொள்ளாமலும், இவர் வலிமையற்ற மெலியவர் இரக்கம் காட்ட வேண்டியவர் என்று சிறிதும் கண்ணோட்டம் கொள்ளாமலும் காமம் மறைக்க முடியாமல் ஊரெல்லாம் அறியும் செய்தி ஆகிவிட்டதே. இதுதான் காமத்தின் இயற்கைத் தன்மை போலும். அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு (குறள் 1139) காதல் கொண்ட பெண் ஒருத்தி, தான் இன்னார் மீது காதல் கொண்டுள்ளேன் என்ற செய்தி தன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்ற துணிச்சலில் இவள் இயல்பாக ஊர்த் தெருவில் நடந்து செல்கிறாள். ஆனால், அவள் காதல் கொண்ட செய்தி ஊர் முழுக்கப் பரவிக் கிடக்கிறது. மக்களில் கண்டும் காணாதது போல் முணுமுணுக் கிறவர்களும் இருக்கிறார்கள். வெளிப்படையாகப் பேசுபவர்களும் இருக்கிறார்கள். களவொழுக்கத்தை ஊரினர் வெளிப்படக் கூறாது முணு முணுத்தால் அதற்குப் பெயர் அம்பல்; வெளிப்படக் கூறினால் அலர் என்று சுட்டப்படும். காதல் செய்தி அம்பலும் அலரும் ஆயிற்று என்றால் காலங் கடத்தாது அறத்தொடு நிற்க வேண்டியதுதான் முறை. பசியும், நோயும், துன்பமும் உற்றவர்களால் உணரமுடிவது போல் பிறரால் உணர முடியாது. மண்டையடியும் தலையடியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது பழமொழி. யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு (குறள் 1140) செவிலிக்கு அறத்தொடு நின்று யான் நிற்குமாறு என்ன என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைமகள் தன்னுள்ளே சொல்லிய தாகவும் கருதலாம். செய்தி அறிந்த ஊர் மக்கள் தலைவியைக் காணும் போது எள்ளி நகைப்பதைக் காதால் கேட்பதுடன் கண்ணாலும் காண நேர்ந்த போது வருந்திக் கூறியதாகவும் கொள்ளலாம். யான் இப்பொழுது அடைந்துள்ள காதல் நோய் போல், நீங்கள் முன்போ இப்பொழுதோ அடையவில்லை. ஆகவே காதலின் ஆற்றலை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. ஆகவே, உங்கட்கு என்னைப் பார்த்தால் ஏளன மாய்த் தெரிகிறது. சிரிக்கிறீர்கள். ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும். சிந்தித்துப் பார்த்தால் சிரிக்க மாட்டீர்கள்! காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடல் நோனா உடம்பும் உயிரும் மடலேறும் காமம் கடும் புனல் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் காமம் மறையிறந்து மன்று படும். 115. அலர் அறிவுறுத்தல் காதல் மிகுதியைப் பலரும் பலபடப் பேசுதல். ஐந்திணை இலக்கியத்துக்கு அழகு செய்பவர் உள்ளூர்ப் பெண்கள். அலரின்றேல் அகவிலக்கியம் உப்பின்றி இருக்கும். அல்லது செய்தல் ஓம்புமின் (புறம் 195) என்பதற்கு நேர்மாறாக ஊர்ப் பெண்டிர் செய்வது அல்லதே ஆயினும், சமுதாய நெறிக்கு நல்லது என்ற கருத்தால் தமிழ்ச் சான்றோர் ஊராரையும் அகத்திணை இலக்கியத்துப் போற்றிக் கொண்டனர். களவிலும் கற்பிலும் ஊரார்க்கு இடனுண்டு. ஊரார் என்பது ஆண் பெண் இருபாற்கும் பொதுச் சொல்லாயினும் அகத்திணையில் பெண்டிரையே குறிக்கும். வீட்டகத்துச் செய்திகளை அடுக்களைப் புகைபோல் நுழைந்து காணும் ஆசையும், கூடி இருந்து முணுமுணுத்துப் பேசும் துணிவும் பெண் சமுதாயத்துக்குப் பிறவிக் குணம் போல்அமைந்துவிட்டது. ஒரு குமரியின் காதலொழுக்கம் பற்றி ஊர் மகளிர் வாய்க்குள் பேசிக் கொள்வது. அம்பல் எனவும், வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் பெயர் பெறும். அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் (நற்றிணை 143) அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர் (அகநானூறு 203) என இவ்வாய்ப்பாடு களை அகப் புலவர்கள் குறிப்பிடுவர். களவொழுக்கம் வேண்டிய தலைமகன் பிறர் கூறுகின்ற அலர் தன்னைப் பாதிக்கின்றவற்றைத் தோழிக்கு அறிவுறுத்தலும், வரைவு, உடன் போக்கு ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை வேண்டிய தலைமகளும் தோழியும் அவ்வலரை, அத்தலை மகனுக்கு அறிவுறுத்தலுமாம். அது நாணுத் துறந்த வழி நிகழ்வது ஆகலான் நாணுத் துறவுரைத்தலின் பின் வைக்கப்பட்டது. அலர்எழ ஆருயிர் நிற்கும்; அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால் (குறள் 1141) அலர் தூற்றுவதில் முனைந்துள்ள ஊரார், காதலுக்குத் தீமை செய்ய முயல்வதாக எண்ணுகிறார்கள்; அலர் தூற்றுவதால் காதலை அடக்கி விடலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் அது நேர்மாறாக விளைகின்றது என்கிறான் தலைவன். காதலியைக் காண முடியாமல் கலங்கித் துன்புறும் நிலையில் பிரிவாற்றாமையால் உயிர் இழப்பது போல் வருந்தும் நிலையில் இருக்கும் அவனுக்கு ஊராரின் அலர், உயிரைக் காப்பது போல் உள்ளதாம். ஊரார் இந்த உண்மையை அறியவில்லை. அதனால்தான் அலர் தூற்று கிறார்கள். அலரால் காதலர்க்கு நன்மையே ஏற்படுகிறது என்று தெரிந்தால் அவர்கள் அவ்வாறு தூற்றுவதைக் கைவிட்டு விடுவார்கள். அந்த உண்மை அவர்கட்குத் தெரியாது. அது காதலர்களின் நற்பேறுதான். ஊரார் தூற்றும் அலரால் பல நலங்கள் உண்டு. “kz§ fkG« fl‰ nrhiyÆš v§fŸ ï‹g¥ òz®it¤ jL¤J É£lnj; ehŸnjhW« tªj njiu ÃW¤â É£lnj” (e‰¿iz 203) v‹W jiyÉ áy gy nghJ myiu¥ gʤjhY«, ‘v« m‹id v‹id å£oDŸ mil¤J it¥gj‰F C® thŒ m‹nwh fhuz«; ïÅ v‹ khÃw mHF, bt©Âw¥ griyah»¥ nghFnkh? (நற்றிணை 63) என்று ஊராரை வைதாலும் முடிவில் அலரின் நல்விளைவைத் தலைவியும் தோழியும் அறிந்தே இருந்தனர். ஒரு தாய் தன்மகளைச் சிறிது கடிந்துரைத்தாள். அது தெரிந்த முல்லை நிலப் பெண்கள் இவளுக்கு இவனோடு தொடர்பு உண்டு என அலர் தூற்றினர். அவ்வலர் கேட்ட தலைவி வருத்தப்பட வில்லை. தன்னை அவனோடு சேர்த்துப் பேசப் பேச அவளுக்குப் பெரு மகிழ்ச்சி. ஊருக்கு உண்மை தெரிந்தது என்றும், இனித்தன் வீட்டார் அவ் விளைஞனுக்கே தன்னை மணம் செய்து வைப்பர் என்றும் கற்புக்கு ஊறுபாடு இல்லை என்றும் நன்முறையில் மதிக்கின்றாள். ஒண்ணுதால் இன்ன உவகை பிறிது யாதுயாய் என்னைக் கண்ணுடைக் கோலள் அலைத்தற்கு என்னை மலரணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி அலர் செய்து விட்டது இவ் வூர் என்னும் கலித்தொகை (105) பாடல் வரிகள் தக்க மேற்கோளாகும். மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி (குறள் 1119) என நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில், தலைவியை மலரன்ன கண்ணாள் எனக் கூறியாங்கு கூறும் குறளே, மலரன்ன கண்ணாள் அருமை அறியா தலரெமக் கீந்ததிவ் வூர் (குறள் 1142) தலைமகன் ஊரவர் கூறும் அலருக்கு அஞ்சி அடங்கி நடக்க வில்லை. மலர் போலும் கண்ணையுடைய தலைவியின் அரிய நலங்களை அறியாது இந்த ஊரார் அவளை எளியவளாகக் கருதி அலர் கூறுவதே அவன் உள்ளத்தைச் சிறிது வருத்துகிறது. எனினும் அலர் தூற்றியது இவ்வூர் என்று கூறாமல் அலர் எமக்கு ஈந்தது இவ்வூர் என்று கூறுகின்றான் தலைமகன். இத் தொடருக்கு ஊரவர்தாம் கூறும் அலரால் அவனை எனக்குக் கொடுத்து உதவுகின்றனர் எனவும் பொருள் கூறலாம். அருமை உடையவளை அருமையான அலர் மூலம் அருமை யானவனிடம் அருமையாய்க் கொண்டு வந்து சேர்த்தது இவ்வருமையான ஊர். உறாஅதோ ஊரறிந்த கெளவை? அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து (குறள் 1143) ஊரார் எங்கள் காதலை அறிந்து தூற்றும் அலரானது ஒரு பெரிய நன்மையைச் செய்கிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டு விரும்பிக் காதல் கொண்டது உண்மை. ஆனால் முறையாக இணையவில்லை. பிரிந்தே இருக்கிறோம். நினைத்த நேரத்தில் சந்திக்க முடியாத தடைகளும் இருக்கின்றன. ஆனால் ஊர் மக்கள் தூற்றும் அலர், அவள் சேர்க்கையைப் பெறாமல் இருக்கும் பொழுதே பெற்றாற் போன்ற இன்பத்தை அளிக்கும் தன்மை உடையதாய் அமைந்துள்ளது. ஆகவே, ஊரவர் கூறும் அலர் அலராக மட்டும் அமையாது உண்மையாகவே நடக்கட்டும். கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து (குறள் 1144) ஊரவர், அலர் தூற்றுவதைக் கேட்டுத் தலைவன் உள்ளத்தில் வருத்தம் கொள்ளவில்லை. ஊரவர் வழங்கும் அவ்வலர் மொழிகளால் தன் காதலுக்கு, வலிமையும் வளர்ச்சியும் பெற்றதாக உணர்கிறான். ஆகவே, என் காமம் இவ்வூரார் எடுக்கின்ற அலரால் வளர்வதாயிற்று; அவ்வலர் இல்லையானால் அது தன் இயல்பு இழந்து சுருங்கிப் போய் விடும் என்பது அவனது எண்ணமாகும். (கவ்விது - வளர்வதாயிற்று; தவ்வென்னும் - சுருங்கும்). பொய், திருடு போன்ற குற்றங்கள் எக்காலத்தும் உலகவரால் ஏற்றுக் கொள்ளப்படாத குற்றங்கள். அவை உண்மையில் பழிப்புக்கும் தண்டனைக்கும் உரிய குற்றங்கள். ஆனால் காதல் சிலர்க்குச் சில வேளைகளில் குற்றமாகத் தோன்றுமே தவிர அஃது உண்மையில் குற்றம் அன்று. காதல் மனிதர்க்கு இயற்கையாக அமைவது; அதற்குச் சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடுதான் செயற்கையானது. சமுதாயம் முதலில் எதிர்ப்புக் காட்டும் ஆனால் காலப் போக்கில் குற்றமாகக் கருதாது ஏற்றுக் கொண்டுதான் வருகிறது. பொய், திருடு போன்றவை வயிற்றை அடிப்படையாகக் கொண்டு பொருள் தேடும் முயற்சியுடன் தொடர்புடையதாகும். ஆனால் காதல் உயிர் வாழ்வின் அடிப்படையானது. அதனால்தான், ஊராரின் பழிச் சொல்லுக்கு அஞ்சும் அச்சத்தையும் கடந்து, இக்காதல் உணர்ச்சி மேலோங்கி வளர்கிறது. உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று (குறள் 1090) எனும் குறள் வழி தகையணங்குறுத்தல் அதிகாரத்தில், கள் போன்று காமமும் மகிழ்ச்சி தரும் என்றாலும் கள்ளை உண்டால்தான் மகிழ்ச்சி உண்டாகுமே அன்றி, காதலைப் போலக் கண்டாலே மகிழ்ச்சிதரும் தன்மை இல்லை என ஒரு வேறுபாடு கூறியதை அறிவோம். நினைத்தவர் புலம்பல் அதிகாரத்தில், உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது (குறள் 1201) எனும் குறளில் கள் உவமம் வருகிறது என்றாலும் கள் குடித்தவர் களையே மகிழ்வூட்டும். காமமோ நினைத்துப் பார்த்தாலே மகிழ்வூட்டும் தன்மை வாய்ந்தது என்று சொல்வதற்கு முன்பாகக் கள்ளுடன் ஒப்பிட்டுக் கூறும் காதல் குறளே, களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால், காமம் வெளிப்படும் தோறும் இனிது (குறள் 1145) என்பதாகும். ஊரவர் எடுக்கின்ற அலர் காதல் கொண்ட தலைவனின் வேட்கையை மிகுதிப்படுத்தி இன்பத்தைத் தருகின்றது. கள்ளுண்டு மகிழ்பவர்கட்குப் போதும் என்ற நிறைவைக் கள் உண்டாக்காது. மேலும் மேலும் குடித்து மகிழவே தூண்டிக் கொண் டிருக்கும். அதனை வேடிக்கையாக இப்படிச் சொல்வார்கள். கள் குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களைப் பார்த்து முதற் குவளை நீ குடி! மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்,! எனக் கள் வஞ்சினம் கூறிக் கூறி நிலையான குடிகாரன் ஆக்கிவிடும். கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண் பதையே விரும்புவது போல், காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட அதனைக் கேட்கும் போதெல்லாம் தலைவனுக்குக் காதல் வேட்கை மிகுவதை எண்ணி மகிழ்கிறான். கம்பர், கள்ளைக் காமபானமாக எண்ணிக் கள் காமத்தை மிகுவித்து, நுகர்ச்சியைப் பெருக்கி இன்பத்தை மிகுவிப்பது என்றும் சொல்ல எண்ணி யிருக்கிறார். அதனால் அரக்க மாதர் நிகழ்ச்சியிலே வைத்து, வருத்திய கொழுநர் தம்பால் வரம்பின்றி வளர்ந்த காமம் அருத்திய பயிர்க்கு நீர்போல் அருநறவு அருந்து வாரை அனுமன் கண்டதாகக் கூறி இன்பத்துறையில் காதலுக்குக் கள் இன்றியமையாதது ஆகும் எனக் கூறியுள்ளதையும் இணைத்துச் சிந்திக்கலாம். நற்குடிப் பிறந்தாரிடத்துத் தோன்றும் சிறு குற்றமும் வானத்து முழு மதியில் தோன்றும் கறைபோல் பலரும் அறியப் பெருகித் தோன்றும் என்னும் கருத்தைக் குடிமை அதிகாரத்தில் இடம் பெற்ற குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம், விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து (குறள் 957) எனும் குறள் வழி உரைத்தார். நிலவு உயரத்தில் தோன்றுவது; உலக மக்கள் அனைவரும் காணக் கூடியது. ஆகவே, நிலவின் வளர்ச்சியையும் பலரும் காண்பர்; நிலவின் தேய்வையும் காண்பர்; அதில் உள்ள களங்கத்தையும் அனை வரும் காண்பர். அதுபோல் நிலவு மேகக் கூட்டங்களால் மறைக்கப்பட்டாலும், மறைக்கப்பட்ட நிலை மாறினாலும் அனைவரும் காண்பர். கதிரொளியின் நிழல் பட்டு, முழுதும் மறைக்கப்பட்டாலும், குறைந்த அளவில் மறைக்கப் பட்டாலும் அனைவரும் அறிவர். கதிரொளியால் நிலவு மறைக்கப்படுதலை நிலவைப் பாம்பு தீண்டுவதாகக் கூறும் தொன்ம நூல் கூற்றொன்றும் மண்ணில் உலவு கிறது. அலர் பரவுவதைத் திங்களைப் பாம்பு கொண்டற்று எனும் உவமை வழி விளக்குகிறார். திங்களைப் பாம்பு தீண்டுவது இருக்கட்டும், திங்களை எது தீண்டினாலும் அனைவரும் உடன் அறிந்து விடுவர் என்பதாக மனத்தில் கொண்டு குறளைக் காண்போம். கண்டது மன்னும் ஒருநாள்; அலர் மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று (குறள் 1146) காதல் வயப்பட்ட நாங்கள் இருவரும் இணைந்து கண்டது ஒரே ஒருநாள் தான். ஆனால் ஊர்மக்கள் அந்த ஒரு நாள் சந்திப்பை மிகப் பெரிதுபடுத்தி அலர் தூற்ற முற்பட்டார்கள். நிலவைக் கதிர் நிழல் பற்றுவது எப்படி உலகறி செய்தி ஆயிற்றோ அது போல் எங்கள் காதலும் அலர் வழி ஊரறி செய்தி ஆகிவிட்டது. அரும்பு நிலைக் காதலை பூத்த மலர் போல் மணம் பரப்ப வைத்தது ஊரவர் கூறிய அலர்தான். ஆகவே அலர் கூறிய ஊரவர்கட்கு நன்றி கூறத் தான் வேண்டும். அவர்கள் தான் மின்மினி விளக்கை, உலகப் பெரு விளக்காய் ஆக்கியவர்கள். ஊரவர் கெளவை எருவாக, அன்னைசொல் நீராக நீளுமிந் நோய் (குறள் 1147) தலைவனும் தலைவியும் காதல் கொண்டு பிறர் அறியா வண்ணம் பழகிய பழக்கத்தை ஊரார் அறிகின்றார்கள். அலர் தூற்றுகின்றார்கள்; இது அன்னைக்கும் தெரிய வருகின்றது. அவளும் மகளை வெகுண்டு பேசுகிறாள். தலைவியோ ஊராரின் அலரைக் கேட்டுப் பொறுக்கின்றாள்; அன்னையின் கடுஞ் சொல்லையும் கேட்டுப் பொறுக்கின்றாள். பொறுக்கப் பொறுக்க அவளுடைய காதல் மேலும் மேலும் வளர்கின்றது. பெருகுகின்றது. ஊரவர் எடுக்கின்ற அலரை எருவாகவும், அன்னை வெகுண்டு சொல்லும் வசை மொழிகளை நீராகவும் கொண்டு இக்காம நோயாகிய பயிர் செழித்து வளர்கிறது என்கிறாள் தலைவி. இக்குறளின் கருத்தும் உவமையும் நம்மாழ்வாரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுள்ளது. ஊரவர் கெளவை எருவிட்டு அன்னை சொல் நீர்மடுத்து ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள் பேரமர் காதல் கடல்புரைய விளைவித்து காரமர் மேனி நங்கண்ணன் தோழி கடியனே என்னும் திருவாய் மொழி தக்கமேற்கோளாகும். நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல் 1148. காதல் கொழுந்து விட்டு எரியும் நெருப்புப் போன்றதாகும். அக்காதல் தீயை வளர விடாமல் அணைத்துவிட வேண்டும் என்பது ஊர்மக்களின் எண்ணம். வெளிப்படாமல் மறைவாக நடந்து வந்த காதலை அணைக்க அவர்களின் காதலைப் பற்றியே பேசிப் பழி தூற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் எண்ணம் அலர் நீர் போன்றதாகும். ஆகவே காதல் நெருப்பை எளிதில் அணைத்து விட முடியும் எனக் கருதினர். அலர் என்பது நெய் என்பதை அவர்கள் அறிய வில்லை. நெய்விட்டு நெருப்பை அணைக்க முயன்றது போல் ஆயிற்று அலர் மூலம் காதலை அழிக்க முயன்றது. அலர் கூறிக் காதலை வளர்த்த ஊரவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். ஊர்தான் பேசுகிறதே நமக்கு எதற்கு வம்பு? என்று காமத்தை அடக்க முயன்றேன். ஐயோ! என்ன செய்வேன்? நெய்யால் நெருப்பை அணைக்க முயல்வது போல் அது மேலும் மேலும் வளர்கிறதே என்பது கவிஞர் கண்ணதாசன் விளக்கமாகும். தெளிந்து தீவினையைச் செற்றார் பிறவியின் தீர்வர் என்ன விளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும் நெளிந்து உறை புழுவை நீக்கி, நறவு உண்டு நிறைகின்றேனால் அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின். என்னும் பாடல் கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் - தான் மது வுண்டு மயங்கியதற்குச் சுக்கிரீவன் இரங்கிக் கூறியதாகும். குறளில் அமைந்த உவமையைக் கம்பன் கையாளும் திறத்தை எண்ணி வியக்கலாம். அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார் பலர்நாண நீத்தக் கடை (குறள் 1149) வரைவிடை வைத்துப் பிரிவின் போது ஆற்றாளாகிய தலை மகள், தலைவன் சிறைப் புறத்தானாதல் அறிந்து, அலர் அஞ்சி ஆற்ற வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது கண்டார் நாணும் நிலைமையை உடைய நாம் நாணுதல் எங்ஙனம்? தம்மை எதிர்ப்பட்ட போது நின்னைப் பிரியேன்; அஞ்சு தலை ஒழிவாயாக என்று உறுதி மொழிந்த தலைவரே இன்று கண்டார் பலரும் நாணும் வகையில் எம்மை விட்டு நீங்கியபின், நாம் இன்று ஊர் மக்கள் சொல்லும் பழிச் சொல்லுக்கு நாணுவது தகுமோ? தகாது எனத் தலைவி கூறுகிறாள். ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப் பிரிதல் அச்சம் உண்மை யானும் அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்குமென்று அஞ்சவந்த ஆங்கிரு வகையினும் நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும் என்னும் தொல்காப்பியப் பொருளியல் 29ஆம் நூற்பாவின் அடித்தளத்தில் மலர்ந்த குறளே, தாம்வேண்டின் நல்குவர் காதலர், யாம்வேண்டும் கெளவை எடுக்குமிவ் வூர் (குறள் 1150) தலைவி தம் காதல் எப்படி நிறைவேற வேண்டும் என விரும்பி னாளோ அதையேதான் ஊர் மக்கள் தாம் கூறும் அலர் வழி வெளிப்படுத்தி னார்கள். இனி நாம் காதலிக்கும் தலைவரும் எம் விருப்பத்தை இனிதே நிறைவேற்றி வைப்பார். தலைவியின் விருப்பமே ஊரவர் விருப்பம்; ஊரவர் விருப்பமே தலைவர் விருப்பமாக மலரும் எனத் திடமாக நம்பினாள். தலைவன் சிறைப் புறத்தான் ஆதலை அறிந்த தோழி, அவன் கேட்டு உடன் கொண்டு செல்லவாவது, வரைந்து கொள்ளவாவது கருதும் படியாகத் தலைவியை நோக்கி ஊரார் அலர் தூற்றலாலே அதனை அறிந்த அன்னை ஒறுப்ப யான் வருந்துகின்றேன். ஆதலால் தலைவனோடு நீ செல்லுமாறு கருதுகின்றேன். அங்ஙனம் சென்ற பிறகு இவ்வூர் யாது செயற்பாலது? வேண்டுமேல் அலர் கூறி ஒழியட்டும் எனத் தோழி கூற்றாக உலோச்சனார் பாடிய நற்றிணை 149ஆம் பாடல் தக்க மேற்கோளாகும். சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப அலந்தனென் வாழி தோழி கானல் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல் கடுமா பூண்ட நெடுந்தேர்க் கடைஇ நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு செலவு அயர்ந் திசினால், யானே அலர் சுமந்து ஒழிகஇவ் அழுங்கல் ஊரே! என்பதாகும். அலர்எழ ஆருயிர் நிற்கும் மலரன்ன கண்ணாள் உறாதோ ஊரறிந்த கெளவை கவ்வையால் கவ்வியது காமம் காமம் வெளிப்படுந் தோறும் இனிது ஊரவர் கெளவை எருவாக நீளுவது காதல் அன்னைசொல் நீராக நீளும் நோய் காதல் நெய்யால் நெருப்பை அணைக்க முடியுமா? கெளவையால் காமத்தை அணைக்க முடியாது. யாம் வேண்டும் கெளவை எடுக்கும் இவ்வூர் எனும் தொடர்கள் நினைவில் நிற்கட்டும்! 116. பிரிவாற்றாமை தலைவனின் சின்னஞ்சிறிய பிரிவையும் தலைவியால் தாங்கிக் கொள்ள இயலாது வருந்தும் வருத்தத்தை உணர்த்தும் அதிகாரம். பாலைத் திணையின் உரிப்பொருளாகிய பிரிதல் ஒழுக்கத்தை அழுந்த உரைக்கும் அதிகாரமுமாகும். இங்கே சுட்டப்படும் பிரிவு, நாள் வழி அலுவலுக்கோ தொழிலுக்கோ போய் வரும் பிரிவுதான்! நெட்ட நெடுங்காலப் பிரிவும் அன்று! நெட்ட நெடும் இடப் பிரிவும் அன்று! பெரும் பிரிவு பின்னே உண்டாயினும் தாங்குதற்குரிய பயிற்சி நிலையே பொழுது வழி மற்றும் நாள்வழிப் பிரிவுகள் ஆகும். அருந்துதல் பொருந்துதல் ஆகிய அவ்வளவிலேயே வாழ்வுச் சுருக்கம் உடைய உயிரிகளுக்கே, பிரிவும் கூடலும் தவிர்க்க முடியாமல் இருக்கும் போது, மாந்தர் வாழ்வில் பிரியாமையை எதிர்பார்க்க முடியுமா? இதனால் தானே பழந்தமிழ் அகப்பாடல் பெருந்திரட்டு நூலாம் அகநானூற்றில், நான்கு திணைகளுக்கும் 200 பாடல்கள் ஆக, பாலை என்னும் பிரிவுக்கு மட்டும் 200 பாடல்கள் உள்ளன. இனிப் புணர்தல் என்னும் குறிஞ்சித் திணை ஒன்று நீங்கிய முல்லை, மருதம், நெய்தல் என்னும் மூன்று திணைகளுமே பிரிதல் சார்பு உடையவைதாமே. அவ்வாறானால், எட்டில் ஒரு பங்கு தானே கணவன் மனைவி இல்லத்தில் கூடி இருக்கும் பொழுது! எஞ்சிய ஏழுபங்குப் பொழுதுகளும், இருபால் கடமைகளும் இனிதின் இயலுதற்கு அமைந்த பிரிவு உடையவை அல்லவோ! அதற்கு இயல்பான பயிற்சி, தொடக்க முதலே வேண்டியிருத்தல் கட்டாயம் அல்லவோ! இவ்வொழுக்க இயல், உலகியல் நிலைக்குத் தன்னைத்தான் கொண்ட கடைப்பிடிகளால் சீராக்கிக் கொள்கிறாள் வள்ளுவர் படைக்கும் மனைவி! அதனால் கடமைக்குத் தடையாக அவள் இருப்பதும் இல்லை. அவனும் அவ்வாறாக இருப்பானும் அல்லன். ஏனெனில் தங்களைப் புரிந்து கொண்டதுடன் வாழ்வியலையும் புரிந்து கொண்டவர்கள். மனைவியின் பெருமைகளையும் அருமைகளையும் எப்படி எப்படி யெல்லாமோ பேசிய கணவன் அவளைத் தவிக்க விட்டு விட்டுப் பிரிந்து செல்வது அறமா? முறையா? உடம்பொடு உயிரிடை நட்பு என்று அவளுக்கும் தனக்கும் உள்ள உரிமையை உணர்ந்து உணர்ந்து போற்றியவன், அதனை மறந்து பிரியலாமா? மலரினும் மெல்லியது காமம்; சிலரே அதன் பதன் அறிந்து வாழ்வு நடத்த இயலும்; அப்பேறு எனக்கு வாய்த்தது எனப் பெருமிதப்பட்டுக் கொண்டவன். அப்பெருமிதம் காற்றில் பறக்க வன்கொடுமையாய்ப் பிரிந்து செல்லலாமா? என்றெல்லாம் கணவன்மேல் கண்டபடி குறை சொல்லத் தோன்றலாம். அவ்வாறு கூற முற்படுவார் வாழ்வியலும் உளவியலும் அறியாராம். அறைகாத்தான் பெண்டிழந்தான் என்பது பழமொழி. ஒவ்வொரு பிறவிக்கும் உரிய கடமைகள் உண்டு. அக்கடமைகளை மறந்து வீடே - மனைவியே - தஞ்சமாகி விட்டால் குடிநலமும் உலக நலமும் கெட்டுப் போகும். அக்கணவன் மனைவியர் இன்ப வாழ்வும், பழகப் பழகப் பாலும் புளிக்கும் பன்னீராண்டு சென்றால் தேனும் புளிக்கும் என்பது போல் வெறுப்புக்கு ஆளாகி விடும். அறுசுவைப் பொருளே எனினும் மீளவும் மீளவும் அதனையே உண்டு கொண்டிருந்தால் வெறுத்தே போகும். அவ்வெறுப்பு என்ன செய்யும், வேறு வகை, மாறு வகைச் சுவை இன்பத்தைத் தேட வைக்கும். ஆனால், அச்சுவைக்கு இடைவெளி உண்டாயின் - அச்சுவை நினைவே நினைவாய் இருந்து, அதனை மீளவும் எப்பொழுது பெறுவோம் என்னும் ஏக்கமே முதிர்ந்து முதிர்ந்து, அதனை அடையும் நாளையே எண்ணி அமையும் அதன் சுவை குறையாமல் நெஞ்சில் நிறைந்து நிறைந்து பெருகும். தோழியே தொலைவான நாட்டிலிருந்து செல்வங்களை ஈட்டிவர விரும்பி மூங்கில் போன்ற எனது தோள் மெலியப் பிரிந்து சென்றார் தலைவர். அவர் பிரிந்து சென்ற காடோ மிகவும் கொடுமையானது. நிலமே பிளக்குமாறு வெப்பத்தைக் கக்கும் சூரியனின் கதிர் எங்கும் பசுமை இல்லாதவாறு செய்து விட்டது. அதனால் வற்றிப் போன நிழல்தரா மரங்களே காணப்பட்டன; பாறைகளும் கொதித்தன; சுனைகளும் நீரின்றியுள்ளன. அந்நிலத்தில் நெல்லைச் சொரிந்தாலும் பொரிந்து விடும் அளவில் வெப்பம் மிகுதியாக உள்ளது. இதனால் வழிச் செல்வோர் எவரும் செல்லாததால் வழிப்பறிக் கள்வர்களும் தம் தொழிலை மறந்து வறுமையில் வாடும் அளவிற்குக் காடு பொலிவற்றும் காணப்படுகிறது. அங்கு வீசும் சூறாவளிக் காற்றால் ஈரமற்று உலர்ந்த முருங்கை மரப்பூக்கள் நீர்த்துளிகளைப் போல் உதிர்ந்து கடலுக்குக் கரையமைத்தாற் போல் பரவிக் கிடக்கின்றன. இத்தகைய காட்டு வழியில் பொருள் தேடச் சென்ற தலைவர், அஞ்சத் தக்க குதிரைகளை உடையவனும் தலையில் கண்ணி மாலையையும் காலில் வீரக் கழலையும் அணிந்தவனும் முருகனைப் போன்ற போர்த் திறமையுடன் மழவரை வென்ற வெற்றியை உடையவனும் ஆகிய வேள் ஆவி என்பானது யானைகள் நிறைந்த பொதினி மலையில் சிறுவர்கள் அரக்குடன் சேர்த்துச் செய்த சாணைக்கல் போல உறுதியாகப் பிரிய மாட்டோம் என்று முன்பு கூறிய சொல்லை மறந்து விட்டாரே! என்பது பொருளுக்குப் பிரிந்த தலைவன் நெடுநாளாகியும் வாராததால் முன்பு பிரிய மாட்டேன் என்றவர் பிரிந்து தங்கி விட்டாரே என்ற ஆற்றாமையால் தலைவி தோழியிடம் கூறுவதாக மாமூலனார் பாடிய அகநானூற்று முதற்பாடலாம் பாலைத் திணைப் பாடலின் திரண்ட கருத்தாகும். பாடல் வருமாறு :- வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல், உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்போர் நெடுவேள் ஆவி, அறு கோட்டு யானைப் பொதினி ஆங்கண் சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கல்போல் பிரியலம் என்றசொல் தாம் மறந்தனர் கொல்லோ, தோழி சிறந்த வேய்மருள் பணைத்தோள் நெகிழ, சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார், நிலம்பக அழல்போல் வெங்கதிர் பைதுஅறத் தெறுதலின் நிழல் தேய்ந்து உலறிய மரத்த, அறை காய்பு அறுநீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின் உகுநெல் பொரியும் வெம்மைய, யாவரும் வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய சுரம் புல் என்ற ஆற்ற அலங்குசினை நார்இல் முருங்கை நவிரல் வான்பூச் சூரல் அம் கடுவளி எடுப்ப ஆர்உற்று உடைதிரைப் பிதிர்வின் பொங்கிமுன் கடல்போல் தோன்றல, காடு இறந்தோரே என்னும் இப்பாடல் பாலைக் காட்சியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாலைக் கலிப் பாடல்களில் ஒன்று. தோழி கூற்று: துறை: தலைவனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, இவ்வகைப்பட்ட சுரத்தைப் பொருள் காரணமாகப் பிரிகின்றீர் எனக் கேட்டபின், இவ்வகை ஆகற்பாலன எனச் சொல்லிச் செலவு அழுங்கு வித்தமை தலைவிக்குச் சொல்லியது. தரவு : வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச் சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி, யார்கண்ணும் இகந்து செய்து இசைகெட்டான் இறுதிபோல் வேரொடு மரம் வெம்ப, விரிகதிர் தெறுதலின், அலவுற்றுக் குடிகூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகிக் கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடி யவன் நிழல் உலகு போல் உலறிய உயர்மர வெஞ்சுரம்: தாழிசை : இடை கொண்டு பொருள்வயின் இறத்திநீ எனக் கேட்பின், உடைபு நெஞ்சு உகஆங்கே ஒளிஓடற் பாள்மன்னோ? படையமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ புடை பெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள்; முனிவு இன்றி, முயல்பொருட்கு இறத்திநீ எனக் கேட்பின், பனியகண் படல்ஒல்லா, படர் கூர் கிற்பாள் மன்னோ? நனிகொண்ட சாயலாள் நயந்துநீ நகையாகத் துனிசெய்து நீடினும் துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்; பொருள் நோக்கிப் பிரிந்துநீ போகுதி எனக் கேட்பின், மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல்கூர்கிற் பாள்மன்னோ இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்றநின் அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள்; என ஆங்கு, வினைவெஃகி நீசெலின் விடும் இவள் உயிர்எனப் புனைஇழாய்! நின்னிலை யான்கூறப் பைஎன நிலவு வேல் நெடுந்தகை நீளிடைச் செலவு ஒழிந் தனனால் செறிக நின் வளையே. தெளிவுரை :- வறியவனது இளமைப் பருவ உடல் போல வாடிய கொம்புகள், கொடுக்க மனம் இல்லாதவனுடைய செல்வம் போல், சேர்ந்தவர்க்கு நிழல் தராத வெறுமை - கடுமையான வெயிலால் இவ்வாறு ஆகிய மரம், எல்லார்க்கும் தீங்கு செய்து பழி சேர்த்த ஒருவன், இறுதிக் காலத்தில் உறவினரோடு அழிவது போல், வேரொடு கருகிச் சாய்ந்தது. பொருளாசை யால், கொலைக்கு அஞ்சாத அலுவலர்களைக் கொண்டு, மக்கள் அலற அலறப் பொருள் தண்டும் அரசனது நாட்டைப் போல், அந்தக் காடு காய்ந்து கிடக்கின்றது. படுக்கையில், தனது அணைத்த கை நழுவ, நீ அறியாது சுற்றிப் புரண்டாலும் அந்த உறக்கத்திலும் தனிமையை உணர்ந்து வருந்து பவள் தலைவி, அத்தகையவள் இப்பொழுது நீ புணர்ச்சியைப் புறந்தள்ளிப் பொருள் ஈட்டுவதற்கு அவளைப் பிரிந்து அக்காட்டின் வழியே சென்றால், மனம் உடைவாள். அதன் பின்னும் பொலி விழந்து வாழ்வாளோ? மாட்டாள். அவள் மிக மெல்லியள், நீ விளையாட்டாக ஊடல் கொண்டு, அதில் காலத்தை நீட்டித்தாலும். அந்தப் பிரிவில் கண்கலங்குவாள். அத்தகையவள், நீ துன்பம் ஏதுமின்றிப் பொருள் ஈட்டுவதற்குப் பிரிந்தால் உறக்கம் இல்லாமல் கண்ணீர் வடித்துக் கொண்டு பலவும் எண்ணி வாழ்ந்திருப்பாளோ? மாட்டாள். கலங்க வைக்கும் கடும்பார்வை சிறிதும் இன்றிக் கருணை பொங்கப் பார்க்கும் உன் பார்வை சிறிது மாறினாலும். அவள் வருந்துவாள். அத்தகையவள், நீ பொருள் கருதிப் பிரிந்தால், மருண்டு நோக்கும் பார்வை மறைய, மயக்கம் மிகுந்து வாழ்ந்திருப்பாளோ? மாட்டாள். இவ்வாறு, அழகிய அணியை அணிந்தவளே! நான் தலைவனிடம் நீ பொருள் சேர்த்தலை விரும்பிப் பிரிந்து சென்றால் இவள் உயிர் விடுவாள் என்று உன்னுடைய நிலையை எடுத்துக் கூறினேன். அவரும் மெல்லெனச் சிந்தித்துப் பிரிந்து போகும் எண்ணத்தைக் கைவிட்டார். ஆதலால் உன்னுடைய கைவளையல்கள் கழன்று வீழாமல் இருப்பன ஆகுக. இன்னவாறு விரித்துரைத்து விளங்க வைக்கப்படும் பிரிவாற்றாமைச் செய்திகளைத் திருவள்ளுவர் ஈரடிக்குள் எவ்வளவு நுட்பமாக எடுத்து மொழிகிறார் என்பதைக் குறள்வழிக் காண்போம். உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு (குறள் 1122) எனக் காதற் சிறப்புரைத்தல் அதிகாரத்தில் கூறி உரிமை பாராட்டியவன் தான் திருக்குறள் காட்டும் காமத்துப்பால் தலைவன் என்பதை மனத் தகத்துக் கொண்டு முதற் குறளை அணுகுவோம். செல்லாமை உண்டேல் எனக்குரை, மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை (குறள் 1151) எதையும் தாங்கும் இதயம் பெற்றவள்தான் தலைவி. தலைவன் எப்பொழுதும் தன்னோடே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவள். தலைவன் கடமை கருதிப் பிரிந்து செல்ல வேண்டிய சூழலில் இருக்கிறான் என்பது தலைவிக்கும் தெரிந்த வேளையில் தலைவன் தலைவியிடம் ஏதோ பேச வேண்டும் என நெருங்குகிறான். தலைவி அது பிரிவைத் தெரிவிக்கும் செய்தியாகத்தான் இருக்கும் எனக் கருதிக் கொண்டு தலைவனிடம் இப்பொழுது என்னிடம் என்ன செய்தி சொல்லப் போகிறீர்கள்? பிரிந்து செல்வதில்லை. என்கிற செய்தியாக இருந்தால் மட்டும். என்னிடம் சொல்லுங்கள். மகிழ்ச்சியாகக் கேட்டுக் கொள்வேன். அவ்வாறின்றிப் பிரிந்து சென்று திரும்பி வரும் செய்தியாக அஃது இருக்குமானால், நீங்கள் போவதைத் தான் என்னால் பார்க்க இயலும்: நீங்கள் திரும்பி வருவதைக் காண நான் இருக்க மாட்டேன். அப்பொழுது யார் உயிருடன் இருக்கிறார்களோ அவர்களிடம் சொல்லிக் கொள்ளுங்கள்! எனத் தலைவி உரைக்கிறாள் என்றால் அவர்களின் காதலின் ஆழமும் அழுத்தமும் புலப்படும். என்னோடு சொல்லுக செல்லாமை உண்டெனின், ஈரமதி தன்னோடு மல்கு சடையாளர் வெங்கைத் தடம் சிலம்பில் பொன்னோடு சொல்லுக, நீ நின் செலவைப் பொருள் நினைந்து முன்னோடு பின்னும் இழப்பான் கருதிய முன்னவனே! என்னும் திருவெங்கைக் கலம்பகப் பாடல் ஏற்றதொரு மேற்கோளாய் அமைந்துள்ளது. இன்கண் உடைத்தவர் பார்வல்; பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு (குறள் 1152) மனித மனம் துன்பக் காலத்தில் எதிர்கால இன்பத்தை எண்ணி மகிழவும் செய்யும்; இன்பக் காலத்தில் இன்புறாது எதிர்காலத் துன்பத்தை எண்ணி வேதனைப் படவும் செய்யும் என்பதை உணர்த்தும் உளவியல் நோக்குடைய குறள் இதுவாகும். தலைவி, தோழியை நோக்கி, தோழி முன்பெல்லாம் அவரது பார்வை யில் எப்பொழுது கூடுவோம் என்ற ஆர்வ நோக்கம் இருந்தது. அதனால் அது இன்பப் பார்வையாய் அமைந்தது. இன்று அவரோடு கூடி இன்புறும் வேளையில் நாளைப் பிரிவாரோ என்ற கவலையே மேலோங்கி நிற்கிறது. இன்புறும் வேளையில் பிரிவு நினைவு தோன்றித் துன்புறுத்துகிறது என்கிறாள். பிரிவை விடப் பிரிவு நினைவு துன்பமானது என்பது புலப்படுகிறது. நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே! புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்குஇன் புதுமலர் முட்பயந் தாஅங்கு இனிய செய்தநம் காதலர் இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே! என அள்ளூர் நன்முல்லையார் பாடிய குறுந்தொகைப் பாடல் ஒருவழி ஒப்புமை உடையதாகும். கலந்து பேச வருவார்; அவர் காதல் பார்வை தருவார்; பின்னிப் பிணைந்து அவர் பார்க்கும் பார்வை அள்ளிச் சொரிந்தது இன்பத்தை அன்று இப்பொழுது அவர்பார்க்கும் அன்புப் பார்வை அச்சம் தருகிறது. கவலையை வளர்க்கிறது கலங்க வைக்கிறது. காரணம் - இது பிரிவுப் பார்வை அல்லவோ? என்பது கவிஞர் கண்ணதாசன் விளக்கமாகும். அரிதரோ தேற்றம், அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான் (குறள் 1153) உலகில் தண்மை இருப்பது போல் வெம்மையும் இருக்க வேண்டும்; வயிற்றில் உண்ட நிறைவு இருப்பது போல். உண்ட உணவு செரித்துப் பசித்த வயிறும் ஆக வேண்டும். அது போல் அக வாழ்வில் கூடுதல் இருப்பது போல் பிரிதலும் இருக்க வேண்டும். பிரியாமை என்பது உள்ளத்திற்கே அன்றி உடலுக்கு அன்று. மனிதனுக்கு உணவு எவ்வளவு இன்றியமையாத் தேவையோ அந்த அளவிற்கு உழைப்பும் இன்றி யமையாதது. வினையே ஆடவர்க்கு உயிர் என்பது சங்கத் தமிழ் நெறி. எல்லார்க்கும் எல்லாக் காலத்தும் இருக்கிற இடத்திலிருந்தே பொருள் தேடும் வாய்ப்பு அமைவது அரிது. அதிலும் கணவனும் மனைவியும் ஓரிடத்தில் இணைந்தே உழைத்து, இணைந்தே ஓய்வு கொண்டு, இணைந்தே தூங்கும் சூழலும் அமைவது அதனினும் அரிது. தலைவன் தலைவியர் இணைந்து வாழ்வது எவ்வளவு இயற்கையோ அதுபோல் கடமையின் பொருட்டுப் பிரிந்தும் இருக்க வேண்டியது இயல்பும் முறையும் ஆகும். இல்லற வாழ்வு நெறிமுறையில் கற்றார் கல்லாதார் என வேறுபாடு காண வேண்டியதில்லை. இல்லற ஒழுங்கு அனைவர்க்கும் ஒரு தன்மைப்பட்டதே. ஆகவே, ஆயிரம் தான் அறிவுடையவர்களாகக் கணவன் மனைவியர் இருந்தாலும் அவர்கள் ஒரு நாள் ஒரு பொழுதாவது பிரியாமல் வாழ இயலாது. ஆனால் அன்பே உன்னை விட்டு நொடிப் பொழுது கூடப் பிரிய மாட்டேன் என்று அன்பால் கூறும் கூற்று உண்மையானதாக இருத்தல் இயலாது. ஆறுதல் உரையாகத்தான் இருக்கும். அதை நம்பி ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது. பால் உணர்வைத் தாண்டிய கடமையும் பொறுப்பும் அனைவர்க்கும் உண்டு என்பதை மறந்துவிடலாகாது. கடமை உணர்வு மேலோங்கும் போது, காதல் தானே சற்று பின்வாங்கிக் கொள்வது தானே இயல்பு. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு (குறள் 1154) முழுமையான இன்ப நிலைக்களமாக இல்லறம் மேற்கொண்ட கணவன் கடமை கருதிப் பிரிதலால், உடல்தான் பிரிகின்றதே அன்றி உள்ளம் பிரிவது இல்லை. மாறாக உள்ளம் விரியவே செய்கின்றது. எங்கே சென்றாலும் என்ன செய்தாலும் செயலற்ற பொழுதுகளில் எல்லாம் தன் துணையின் நினைவே நினைவாய்த் தன் கடமையை விரைவில் வெற்றியாக முடித்து அவளைக் கூடுவதையே கருதுகின்றான். இல்லத்தில் அவன் நினைவே நினைவாக இருப்பவளும் செல்பவன் செல்லும் வழியெல்லாம் சேம வழியாக என்றும், எடுத்த செயலெல்லாம் இனிது வெல்க என்றும் அவன் எண்ண மாகவே வாழ்கிறாள். இன்றே வருவாரா? இப்பொழுதே வருவாரா? v« ftiy ÔUkh? என்று நொடி நொடியும் எதிர் நோக்குகிறாள். காற்றின் அலைப்பும், மரத்தின் அசைவும், தெருவின் ஒலியும் எல்லாம் எல்லாம் கணவன் திரும்பி வந்து விட்டான் என்னும் நினைவை உண்டாக்க, வாயிலுக்கும் உள்வீட்டுக்குமாய் ஊமை நடை போடுகிறாள். கண் மூடிப் படுத்தாலும் இரவெல்லாம் தூக்கம் இல்லாதவளாய், ஒரு வேளை தன்னை மறந்து உறங்கினும் கனவுக் காட்சியாய்ப் பொழுது கழிய எதிர் நோக்கி வாழ்கிறாள். இவை இருபாலும் இன்பம் பெருக்கும் இயற்கை நெறிகள். ஆதலால், பிரிந்தவர் கூடினால் அவர்கள் பெறும் இன்பம் பேசவும் கூடுமோ? என்று பெருகுதற்குரிய வழியைப் பழி சொல்லி, வாழ்வியல் பழியாக்கி விடுதல் கூடாதாம். முன்பு அருள் மிகுந்தவராய், நான் உன்னை என்றும் பிரியேன் அஞ்ச வேண்டா என்று சொல்லிய தலைவர் பின் பிரிந்து செல்வாரானால், அவர் கூறிய உறுதிமொழியை நம்பிக் கவலையற்றுத் தெளிவோடு இருந்தது குற்றம் ஆகுமா? ஆகாது. ஏனெனில் பிரிந்து சென்ற தலைவனின் நோக்கம், தலைவியை வருந்தச் செய்ய வேண்டும் என்பதற்கு அன்று. குடும்ப வாழ்விற்குப் பொருள் முட்டுப்பாடு நேர்ந்து விடக் கூடாது குடும்பக் கடமைகள் தட்டியின்றி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனும் பிரிவுக் கவலையை மனத்தில் சுமந்து கொண்டு செல்கிறானே தவிர்த்து, மகிழ்ச்சியுடன் செல்லவில்லை என்பதும் தலைவி அறியாதவள் அல்லள். இந்தக் காலத்துக் காதலர் - கணவன் மனைவி - வாழ்க்கை தொடங்கியபின், உன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்று உறுதி கூறுவதும் இல்லை. பிரியாமல் இருக்க வேண்டும் என்று உறுதிமொழி கேட்பதும் இல்லை. பழங்காலத்தில் காதலன், காதலிக்குக் கூற வேண்டிய முதல் உறுதி, உன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்பது. காதலனைப் பற்றிக் கொள்ளும் முதல் ஐயப்பாடும், என்னை விட்டு, வெளி நாட்டிற்குப் பிரிந்து செல்வாரோ என்பதே ஆகும். ஆகவே, சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண விழாவில் காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் வாழ வாழ்த்தப்படுகின்றனர். தலைவன் எக்காரணம் கொண்டும் தன்னைவிட்டுப் பிரிந்து செல்ல விடக் கூடாது என்ற கருத்துடைய தலைவி, மறைந்திருக்கும் தலைவன் அறிந்து கொள்ளுமாறு தோழியிடம் உரைப்பது போல் அமைந்த குறளே, ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல், மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு (குறள் 1155) என் உயிரைப் பாதுகாப்பதாய் இருந்தால், காதலர் என்னைப் பிரிந்து செல்ல எண்ணியுள்ள எண்ணத்தைத் தடுக்க வேண்டும். அங்ஙனம் தடுக்காமல் அவர் விரும்பியவாறு பிரிந்து செல்வாரானால் பின் நான் அவரைக் கூடுதல் இயலாது. அவர் பிரிவைத் தாங்கிக் கொண்டு என்னால் உயிர் வாழ இயலாது எனக் கூறுகிறாள். தலைவன் கடமை மேற்கொண்டு பிரிந்து செல்லவிருப்பது போல் தெரிகிறது என உரைத்த தோழிக்குத் தலைவி கூறுவது போல் அமைந்த குறள், பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை (குறள் 1156) வெளிநாட்டிற்குச் சென்றுவர முயல்கிறான் காதலன். கடமை காரணமாகப் பிரிந்து போய்வர வேண்டியுள்ளது என்பதைத் தன் துணைவியிடம் சொல்லவும் அஞ்சுகிறான்; அவளிடம் எப்படித் தான் சொல்வது என்று கலங்குகிறான். குறிப்பால் புலப்படுத்த முயல்கிறான். காதலி அதை உணர்ந்து கொள்கிறாள். பிரிவைப் பற்றி நினைக்கவும் முடியாமல் என் உள்ளம் வருந்துகிறதே! அவர் என்னிடம் வந்து அதைப் பற்றிச் சொல்லவும் துணிவார்போல் உள்ளதே என்று எண்ணுகிறாள். உடனே என்ன கல் நெஞ்சம்! என்ன துணிவு! பிரிவைப் பற்றி என்னிடம் சொல்லும் துணிவும் பெற்று விட்டார் என்றால், அப்படிப் பட்டவர் நெஞ்சில் அன்பு ஏது? போய் விரைவில் திரும்பி விடுவதாகக் கூறினாலும் அவரை எப்படி நம்புவது? சொல்லத் துணியும் அளவிற்குக் கல்நெஞ்சம் உடையவர் திரும்பி வந்து அன்பு செலுத்துவார் என்று ஆசைப் படுவதும் வீண்தான் என்கிறாள். தலைவர் தம் பிரிவைப் பற்றித் தெரிவிக்கும் அளவுக்குக் கல் நெஞ்சம் உடையவரானால், அத்தகையவர் திரும்பி வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது என வருத்தத்துடன் எண்ணுகிறாள். துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை? (குறள் 1157) தலைவன், தலைவியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளான்; தலைவி தற்பொழுது தனிமையில் வாடுகிறாள் என்ற செய்தியை ஊரில் யாரும் யாருக்கும் கூறினால் தான் பிறர் தெரிந்து கொள்ள முடியும் என்பதில்லை. தலைவிக்குத் தலைவனைக் காண முடியவில்லையாகலின் உடலில் மெலிவு தோன்றுகிறது. உடல் மெலியும் போது முன் மணிக்கட்டைக் கடவாமல் கைகளை ஒட்டினாற்போல் கிடந்த வளையல்கள் கழன்று வீழ்கின்றதைக் காண்பவர்கள் அனைவரும் தலைவன் பிரிந்து சென்றுள்ளான் போலும் என்பதைத் தெரிந்து கொள்வர். கையிலிருந்து கழன்று விழும் வளையல்களே தலைவன் பிரிவை ஊர் அறியத் தூற்றி விடுவதாகத் தலைவி கூறுகிறாள். வாழ்வில் இன்பம் பெற்றவர்களின் உடல் நலமாகவும் வளமாகவும் இருக்கும். ஆனால் அவர்கள் வாழ்வில் துன்பம் வந்த போது உடல் மெலியத் தொடங்கும். உடல் மெலிந்து விட்டதைப் பெண்கள் தங்கள் வளையல் கைகளிலிருந்து கழன்று வீழ்வதால் அறிந்து கொள்வார்கள். கணவனுடன் வாழாத பெண் என்று பலர் ஏசுவார்கள் என்று நினைக்கிறாள் தலைவி. தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியை இவள் வெளிப்படையாக யாரிடமும் கூறாவிட்டாலும் இவளுடைய மேனியின் மெலிவாலேயே அறிந்து கொள்வார்கள். இதனை ஐங்குறுநூறு, துறைநணி ஊரனை உள்ளிஎன் இறையேர் எல்வளை நெகிழ்போ டும்மே எனக் கூறுவதையும் சான்றாகக் கொள்ளலாம். அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி - இறையிறந்த அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன் செங்கோன்மை செந்நின்ற வாறு. என்னும் முத்தொள்ளாயிரப் பாடல் தரும் விளக்கம் போற்றத் தக்கதாகும். இன்னா தினனில்லூர் வாழ்தல்; அதனினும் இன்னா தினியார்ப் பிரிவு (குறள் 1158) மாந்தர்க்கு இனத்து இயல்பதாகும் அறிவு 452. இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல் 453. இனம் தூயார்க்கு இல்லை நன்றாகா வினை 456. இனநலம் எல்லாப் புகழும் தரும் 457. இனநலம் ஏமாப்பு உடைத்து 458. நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை; தீ இனத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் 460. ஒத்த உணர்வுடைய தூய இனத்தாருடன் கூடி வாழ்வதால் கிட்டும் நலங்களையும் கிட்டும் சிறப்புகளையும் எடுத்து மொழிந்ததுடன் தீய இனத்தவரின் கூட்டு ஆகவே ஆகாது என உணர்த்தியவர் திருவள்ளுவர். சார்ந்தன் வண்ணமாகும் என்பது மெய்யியல் கோட்பாடு. நாம் வாழும் நாடும் நல்லவர் வாழும் நன்னாடாக இருக்க வேண்டும். ஒத்த உணர்வுடைய நன்மக்கள் வாழும் ஊரில் வாழ்ந்தால் தான் நம் வாழ்வு இனிய வாழ்வாக மிளிரும். நாம் நல்லவராய் இருப்பதுடன் நாம் வாழும் ஊரில் உள்ளவர்களும் நல்லவர்களாய் இருக்க வேண்டும். நல்லவர் உறவு என்றும் நிலை பெற வேண்டும். ஒத்த உணர்வுடைய நல்லவர்களைப் பிரிந்து வாழும் நிலை எவர்க்கும் ஏற்படக் கூடாது அப்படி யாருக்கெல்லாம் நல்வாழ்வு அமைகிறதோ அவர்களெல்லாம் பேறு பெற்றவர்கள் ஆவர். எது இன்ப வாழ்வு? ஒத்த உணர்வுடைய நல்லவர்கள் வாழும் ஊரில் வாழும் வாழ்வு; எது துன்ப வாழ்வு? ஒத்த உணர்வுடையவர்கள் யாரும் இல்லாத ஊரில் இருந்து வாழ்வதே துன்ப வாழ்வு. அதனினும் கொடுமை யான துன்பம் எது? அதனினும் துன்ப மிக்கது இனிய துணைவரைப் பிரிந்து ஒத்த உணர்வு இல்லாத மக்கள் வாழும் ஊரில் வாழ்வதாகும். ஒத்த உணர்வுடையோர் வாழும் ஊரில், உயிரினும் இனிய துணைவருடன் கூடி வாழும் வாழ்வு நிலைக்க வேண்டும். பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைவி எம்மையும் உடன் கொண்டு செல்மின் என வேண்ட, உடன்படாது அவன் பிரியலுற, தனது இறந்துபாடு தோன்றத் தலைவி கூற்றாகப் பாலைக் கலியில், பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய பாடல்: தரவு: இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர் புலம்கடி கவணையின் பூஞ்சினை உதிர்க்கும் விலங்குமலை வெம்பிய போக்குஅரு வெஞ்சுரம் தனியே இறப்ப, யான் ஒழிந்து இருத்தல் நகுதற்கு ஒன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே; இனியான் உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன்; தாழிசை: தோள் நலம் உண்டு துறக்கப் பட்டோர் வேண் நீருண்ட குடை ஓர் அன்னர்; நல்குநர் புரிந்து நலன்உணப் பட்டோர் அல்குநர் போகிய ஊரோர் அன்னர்; கூடினர் புரிந்து குணம்உணப் பட்டோர் சூடினர் இட்ட பூவோ ரன்னர்; என வாங்கு யானும் நின்னகத்து அனையேன்; ஆனாது கொலைவெங் கொள்கையொடு நாய்அகப் படுப்ப வலைவர்க்கு அமர்ந்த மடமான் போல நின்னாங்கு வரூஉம்என் நெஞ்சினை என்னாங்கு வாராது ஓம்பினை கொண்மே. இதுவாகும். அதன் தெளிவுரை வருமாறு :- தினைப் பயிரில் மேயும் யானையை வெருட்டுபவர் அதற்குப் பயன்படுத்தும் கவணையால் மலைச்சாரலில் உள்ள பூச்செடிகளில் இருந்த பூக்களை உதிர்த்து விடுவர். அந்த வழியில் நீ பொருள் தேடுவதற்காகத் தனியே செல்ல யான் இங்கேயே தங்கியிருத்தல் இரக்கமனமுடைய இவ்வூரார்க்குச் சிரிக்கத் தக்க பொருளாய் விடும். யான் பிரிவுத் துயர் காரணமாக இனிமேல் உண்ணேன்; உயிர் வாழேன். தலைவர் தம் தோளின் மென்மையை அனுபவித்துப் பிரியப்பட்ட தலைவியர், நீர் வேட்கையால், பனை ஓலையில் செய்து நீர்பருகிப் பின் கீழே போட்டு விட்ட குடையை ஒப்பர். தலைவரால் விரும்பி அருள் செய்யப்பட்டு அவர் நுகர்ந்தபின் பிரியப்பட்டோர். வாழ்ந்த மக்கள் வெற்றிடமாக விட்டுச் சென்ற ஊரை ஒப்பர். தலைவரால் விரும்பிக் கூடிக் குணங்களை அனுபவித்து அவரால் பிரியப்பட்டோர் மக்கள் சூடிக் கழித்த பூவை ஒப்பர். உன்மனத்தில் யானும் இக்குடையையும் ஊரையும் பூவையும் போன்றவளே. வேட்டைக் காரருடன் செல்லும் நாய் ஒரு மானைத் துரத்தி, அதனைத் தான் கொல்ல நினைக்கும் போது, அந்த மான் வேட்டைக் காரனிடம் அகப்பட்டது போல என்மனம் என்வயமாக நில்லாமல், உன்னைத் தொடர்ந்தே வருகின்றது. அதனை நன்கு பாதுகாப்பாயாக! எனும் கலித்தொகை தக்க இலக்கிய மேற்கோளாகும். தொடிற்சுடி னல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ? (குறள் 1159) தீ சுடும் தன்மை உடையது என்று சொல்லப் பட்டாலும், நெருங்கி நின்று தொட்டால் தான் சூட்டை உணர முடியும். விலகி நின்றால் சூட்டை உணர முடியாது. ஆனால் காமமாகிய நெருப்பு மாறுபட்ட தன்மை உடையது. காதலர்கள் இணைந்து இருக்கும் போது நீர் போன்ற குளுமை நல்கும் காமத்தீ. காதலர் பிரிந்து வாழும் போது தான் சுடும் தன்மை வாய்ந்த வியப்பிற்குரிய தீ ஆகும். தலைவன் பிரிவு தலைவியைப் படுத்தும் வேதனையின் வெளிப்பாடு. உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியின் கொள்ளினும் சுட்டிடும் குறுகி, மற்றதைத் தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால் கள்ளினும் கொடியது காமத் தீயே. என்னும் கந்த புராணப் பாடலையும் மேற்கோளாய்க் கொள்ளலாம். சீதை இராமனிடம், நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு என வினவுவது குறள் விளக்கமாகும். அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர் (குறள் 1160) தலைவனுடைய பிரிவிற்கும் மனப்பூர்வமாக உடன்பாடு தெரிவித்துப் பிரிவினால் உண்டாகும் அனைத்துத் துன்பங்களையும் பொருட்படுத்தாது தாங்கிக் கொண்டு, பிரிந்த பின் பொறுமையைக் கடைப்பிடித்து, எதனையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இவ்வுலகத்தில் வாழ்பவர் பலர் இருக்க லாம் என்பது உண்மைதான். அதுபோல் அனைவராலும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு வாழ இயலாது என்பதும் உண்மைதான். தன்னால் தலைவன் பிரிவை தாங்கிக் கொள்ளவே இயலாது என்கிறாள் தலைவி. செல்லாமை உண்டேல் எனக்குரை அவரை எதிர் பார்த்து நிற்றல் இன்பம் தரும் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு இன்னாது இனனில் ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு காமநோய் போல் விடிற் சுடல் ஆற்றுமோ தீ பிரிவாற்றி வாழ்வார் பலர் 117. படர் மெலிந்திரங்கல் தலைமகன் தான் காதலித்த தலைவியை மணம் முடிக்கும் முன்பும் பின்பும் பொருள் தேடவும் கல்வி கற்கவும், போர்ப்பணி முதலிய பணி காரணமாகவும் தலைமகளைப் பிரிந்து செல்வது இயல்பும் இயற்கையும் ஆகும். ஏனெனில் வினையே ஆடவர்க்கு உயிர் ஆகலான், தலைமகன் வினை மேற்கொள்ளுவது, அவன் கடமையும் பொறுப்பும் ஆகும். தக்க வினைமேற் கொண்டு பொருள் தேட முயலாதோன்; ஆண்மகன், தலைவன் என்னும் தகுதியை இழந்து விடுகிறான். ஆகவே, பிரிந்து சென்று வருவது இன்றியமையாதது எனினும் தலைவியோ தலைவன் மீது கொண்ட அன்பால் தலைவன் தன்னை விட்டுப் பிறிந்து செல்வதைத் தாங்கிக் கொள்ள முடியாத தன்மை உடையவள் ஆகிறாள். படர் மெலிந்து இரங்கல். படரான் மெலிந்து இரங்கல் என விரியும் அதாவது பிரிவாற்றாளய தலைமகள் தான் உறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும் நினைத்தலின் அந்நினைவான் மெலிந்து இரங்கல். மறைப்பேன்மன் யானிஃதோ நோயை, இறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் (குறள் 1161) பிரிவால் வருந்தும் தலைவியிடம் தோழி, உயிரினும் சிறந்தது நாணம்; ஆகவே நீ நாணத்தை விட்டு உன் காம நோயைப் பிறர் அறிந்து கொள்ளுமாறு செய்துவிடாதே என வேண்டிய தோழியிடம் தலைவி உரைத்தது. தோழியே! தலைவன் பிரிவால் எனக்கு ஏற்பட்டுள்ள பெருந்துன்பத்தை யாரும் அறிந்து விடக்கூடாதே என்று எண்ணி எண்ணி மறைக்க முயலுகிறேன். முயற்சியில் ஒன்றும் குறைவில்லை. ஆனால் மறைக்க முடியவில்லையே! யான் மறைப்பதற்காக எடுக்கும் முயற்சியின் பயன். ஆற்று மணலில் தோண்டிய ஊற்றிலிருந்து நீரை இறைக்க இறைக்க எப்படி நீர் ஊறிக் கொண்டே வருமோ அப்படி என் உணர்வை அடக்க முடியாமல் மேலோங்கிக் கொண்டே இருக்கிறது. என் செய்ய? எனத் தலைவி தலைவன் பிரிவால் ஏற்பட்ட துயரத்தைப் புலப்படுத்துகிறாள். ஓடும் தடங்கண் மணற்கேணி யாகஅவ் வூற்றிறைக்கு நீடும் புளின முலையாக் குறைவும் சூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேல் பாடும் சுரும்பலர் மொய்குழல் தேம்பிப் பதைத்திடுமே. என்னும் திருவெங்கைக் கோவைப் பாடல் தக்க மேற்கோளாகும். கரத்தலும் ஆற்றேன்இந் நோயை நோய்செய்தார்க் குரைத்தலும் நாணுத் தரும் (குறள் 1162) தோழி தலைவியிடம் காமநோயை மறைத்து வாழ முடிய வில்லையானால் அத்துன்பத்தைப் பிரிந்து சென்ற தலைவர்க்குத் தூது மூலம் அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறாள். அதற்கு விடையாகத் தலைவி:- எனது காம நோயை இவ்வூரில் உள்ளார் அறியாமல் மறைத்து வைக்கவும் என்னால் முடியவில்லை. இதற்குக் காரணமான என் தலைவருக்குத் தூதனுப்பித் தெரிவிக்கலாம் என்றாலோ இது நாணத்தைத் தருகின்றது என மறுமொழி தருகிறாள். செல்லாமை உண்டேல் எனக்குரை, மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை என்று சொன்ன தலைவி, இப்போது கணவன் பிரிந்து சென்றும் உயிரோடு இருக்கிறாள். இந்நிலையில் அவள் முன்னர்ச் சொன்ன சூளுரை பொய்யாகி விடுகிறது. அதனை எண்ணும் போது அவளுக்கு நாணம் உண்டாகின்றது. எனவே இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தலைவி இப்பொழுது வருத்தத்தைத் தாங்க முடியாமல், வெளிப்படையாகத் தூதனுப்ப முடியாமல் திண்டாடுவதையும் உணர முடிகிறது. இராமன் மீது காதல் கொண்ட சூர்ப்பணகை இராமனை வணங்கி நாணி நின்று உரையாடுவதில் ஒருபாடல் தாம் உறு காமத் தன்மை தாங்களே உரைப்பது என்பது ஆம்எனல் ஆவது அன்றால் அருங்குல மகளிர்க்கு அம்மா! ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன்? யாரும் இல்லேன்; காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி என்றாள். என வேண்டுவது தக்க எடுத்துக் காட்டாகும். மேலும் தலைவி தோழியினிடம் தனது துன்ப நிலையைத் தெரிவிக்கலானாள். தலைவர் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதனால் தன்னிடம் உண்டாகும் காம நோயும் அதனை உண்டாக்கிய தலைவர்க்குச் சொல்லாது தடுத்து நிறுத்தும் நாணமும் ஆகிய இரண்டும் அவளது உடம்பை வருத்துகின்றன. உடம்பினுள் அமைந்திருக்கும் உயிர் ஒரு காவடித் தண்டு. அத்தண்டின் இருபுறமும் காமமும் நாணும் தொங்குகின்றன. இரண்டும் சுமக்க முடியாத பெரும் சுமைகள். இவற்றைத் தாங்கி நிற்பது உடம்பு. எனவே தலைவி, தனது உடம்பு பொறுக்காது இற்று விடுமோ? என்று ஐயுறுகிறாள் என்பதை உணர்த்தும் குறளே, காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்; என் நோனா உடம்பி னகத்து (குறள் 1163) நலிதரும் காமமும் கெளவையும் என்றிவ் வலிதின் உயிர்காவாத் தூங்கியார்க் கென்னை நலியும் விழுமம் இரண்டு. என்னும் நெய்தற்கலிப் பாடல் வரிகள் தக்க மேற்கோளாகும். நெஞ்சொடு கிளத்தல் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு (குறள் 1247) என்னும் குறளையும் இணைத்துச் சிந்திப்போம். காமக் கடல்மன்னும் உண்டே; அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல் (குறள் 1164) கணவனும் மனைவியுமாகக் காட்சி தரும் இருவருள் கணவன் பொருள் தேடும் பொருட்டுப் பிரியுங்கால், தலைவி காமக் கடலுள் அகப்பட்டாள். அகப்பட்டாலும் அக்கடலைக் கடப்பதற்குரிய தெப்பத்தால் அதனை எளிதில் கடப்பர் என்று கூறிய தோழிக்குத் தலைவி:- காமமாகிய கடல் இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால், அக்கடலை நீந்திக் கடந்து செல்வதற்கு வேண்டிய பாதுகாவலான தெப்பம் ஒன்றும் என்னிடம் இல்லையே என் செய்வது? என வருந்தி உரைப்பது போல் அமைந்த பாடலே இதுவாகும். கண்ணும் வாளற்ற கைவளை சோருமால் புண்ணும் போன்று புலம்புமென் நெஞ்சரோ எண்ணில் காமம் எரிப்பினும் மேல்செலாப் பெண்ணின் மிக்கது பெண்ணல்லது இல்லையே என்னும் சீவக சிந்தாமணிப் பாடலும், கண்ணிலாம் கவின்ஒளிக் காளைமார் திறந்து உண்ணிலா எழுதரு காம ஊழ்எரி வெண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப் பெண்ணிலாப் பிறிதுயிர் பெரியது இல்லையே. என்னும் சூளாமணிப் பாடலும், கைம்மிகுங் காமங்கரை காண்கிலன் அழுந்தலின் ஐயம்மிகுங் கணைமதன் அம்புமீக் குளிப்பவும் பைம்மிகுபொன் அல்குலாள் படாமுலை புணைஎன மைம்மிகுங் களிற்றரசன் மாரன்கடல் நீந்துவான் என்னும் உதயணகுமாரக் காவியப் பாடலையும் மேற்கோளாய்க் கொள்வோம். பிரிந்து பொருள் தேடச் சென்ற தலைவனை விரைந்து வரவழைக்கும் பொருட்டுத் தூது அனுப்பத் தோழி வேண்டியும் தலைவி செய்யவில்லை. அதனால் தலைவி மீது தோழிக்கு வருத்தம். அதன் வெளிப்பாடாய் மலர்ந்த குறளே! துப்பின் எவனாவர் மற்கொல், துயர்வரவு நட்பினால் ஆற்று பவர் (குறள் 1165) இன்பம் செய்வதற்குரிய நட்பின் கண்ணே துன்பம் செய்யும் தன்மை உடையவர்; துன்பம் செய்வதற்குரிய பகைமையின்கண் என்ன செய்வாரோ? இன்பம் தருவதே நட்பின் இயல்பு. நம் தலைவரோ நட்பாய் இருக்கும் போதே நமக்குத் துன்பம் விளைவிக்கிறார். அத்தகையர் துன்பமே செய்யும் பகைமையின்கண் யாது செய்வாரோ? நீ சிந்தித்துக் கவனமாக நடந்து கொள் ஏமாந்து விடாதே என விழிப்பூட்டுகிறாள். தோழி தன் கடமையைத் தெளிவாகச் செய்கிறாள். இன்பம் கடல் மற்றுக் காமம்; அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது (குறள் 1166) உலகில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இயல்புடையன. இன்பம் என்று சொல்லும் போது தலைவிக்குக் காம இன்பமே கடல் போல ஆழமாயும் அகலமாயும் தோன்றும். காமவின்பம் ஒன்றுதான் துய்க்குந் தோறும் துய்க்குந் தோறும் தெவிட்டாத இன்பத்தைத் தருவது. அவ்வின்பம் கிட்டாத போதும் அதன் நினைவைத் தந்து துன்பத்தையும் தரும். அந்தத் துன்பமும் கடலைக் காட்டிலும் பெரிதாகத் தோன்றும். இங்கு வள்ளுவர் காம இன்பத்தைக் கடலுக்கு ஒப்பிடுகிறார். கடல் நீர் மிகுதியின் காரணமாகத் தனது வெண்ணிறம் மாறி நீல நிறமாகி விடுகிறது. அது போல் தலைவியின் அன்பும் மிகுதியாகி, மனத்தின் உண்மை நிலையை மாற்றி விடுகிறது. எவ்வாறு கடல் உலகம் முழுவதும் சூழ்ந்துள்ளதோ அது போலவே தலைவியின் காமமும் அவள் உடல் முழுவதும் படர்ந்திருக்கிறது. கடலில் எண்ணற்ற அலைகள் எழுவது போல் தலைவன் பிரிந்து வாழும் காலத்தில், தலைவியின் மனத்திலே எண்ணற்ற எண்ண அலைகள் தோன்றும். எவ்வாறு கடல் பொங்கும் போது பலவிடங்கள் அழிந்து போகின்றனவோ அதுபோலவே, தலைவியின் துன்ப நினைவுகள் பொங்கி எழும் போது அவள் உடல் மெலியத் தொடங்குகிறது. தலைவனைப் பிரிந்த தலைவியின் துன்பத்திற்கு ஓரெல்லை கூற முடியாது. அது கடலினும் பெரியது ஆகும். காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின் ஏம இருக்கையே தூம் திரையாம் - ஏமத் தீண்டு ஆம்பரலே தோன்றும் அளியூடல் ஆம்பரலில் தெற்றித் தெறிப்பாம் ஒளியொளியாய் கண்ணே சீர்த்து என்னும் இன்னிலைப் பாடலை ஒப்பு நோக்கலாம். இன்பம் கடல் மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது (குறள் 1166) என்னும் குறளைச் சொக்கப்ப நாவலர் முலையார் முயக்கினும் அல்லா விடத்தினும் ஊரிமுந்நீர் அலையார் அமுதமும் நஞ்சமும் போல அணங்கனையாய் தொலையாத இன்பமும் துன்பமும் காட்டுவர் தூங்கருவி மலையா சலத் தமிழ் தேர்வாணன் மாறை நம் மன்னவரே. என்னும் தஞ்சை வாணன் கோவைப் பாடல் உரைக்கு மேற்கோளாய்க் காட்டி விளக்குகிறார். இதன் பொருள், அணங்கு அனையாய்! ஒலிக்கும் அருவியை உடைய பொதிய மலையிற் பிறந்த தமிழை ஆராய்ந்த வாணன் மாறை நாட்டு நம் மன்னன், மார்பு பொருந்திய புணர்ச்சியினும் பிரிவினும் பெருமை பொருந்திய முந்நீராகிய கடலிடத்துப் பிறந்த அமுதும் நஞ்சும் போலத் தொலைவில்லாத இன்பமும் துன்பமும் காட்டுவார். ஆதலால் இரண்டினும் வல்லவராய் இருந்தார் என்பதாகும். காதலால் வரும் இன்பம் கடல் அளவு பெரியது. பிரிவுத் துன்பம் கடலை விடப் பெரிதாக அல்லவா தெரிகிறது. தோழி தலைவி படும் பிரிவுத் துயரைக் கண்டு தானும் வருந்தி, காம நோயில் அமிழ்ந்து விடாதே! மனத்தை ஒருமுகப்படுத்தி ஆற்றியிரு என வேண்டிய போது தலைவி தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்திய பாடலே, காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன் (குறள் 1167) தோழி! காமத்தை ஆற்றுக என எளிதாகக் கூறிவிட்டாய்! நான் என்ன காமத்தை ஆற்றக் கூடாது என்றா எண்ணுகிறேன். நானும் காதல் எனப்படும் பெருவெள்ளத்தில் மூழ்கி விடாமல் அயராது நீந்திக் கரையை அடைந்து விட வேண்டும் என்று எண்ணித் தூக்கமும் இன்றி யாரொருவர் துணையும் இன்றி நள்ளிரவிலும் நீந்திக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனாலும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இன்னும் கரையே தென்படவில்லையே என் செய்வது? எனத் தான் உறும் துயரைப் புலப்படுத்துகிறாள். மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை (குறள் 1168) அய்யோ பாவம் இரவுப் பொழுது! அது உலகத்து உயிர்களை எல்லாம் உறங்க வைக்கின்றது. ஆனால் அது உறங்காமல் விழித்துக் கொண்டே இருக்கிறது. நானும் பிரிவால் வருந்தி அவரை நினைத்துக் கொண்டே இரவு முழுவதும் தூங்காமல்தான் இருக்கிறேன். இப்பொழுது தனிமையில் இருந்த இரவுக்கு நானும், தனிமையில் இருக்கும் எனக்கு இரவு தான் துணை! எங்கள் இருவரைத் தவிர எல்லாரும் கவலை இன்றித் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணுவதுடன் இரவிற்குத் துணையாக அமையும் வாய்ப்புக் கிடைத்ததில் அவளுக்கு ஒரு நிறைவு ஏற்பட்டுள்ளது போலும் எனத் தெரிகிறது. வரைவிடை வைத்துப் பிரிந்த வழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது. பதுமனார் பாடிய குறுந்தொகைப் பாடலாகிய, நள்ளென்று அன்றே யாமம் சொல் அவிந்து இனிது அடங் கினரே மாக்கள்; முனிவு இன்று நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சா தேனே என்பது குறளுக்குத் தக்க மேற்கோளாகும். பாடலின் பொருள்:- நள்ளிரவாகிய யாமமும் இருள் செறிந்துள்ளது. சுற்றியுள்ள மக்களும் பேச்சடங்கி, இனிதாக உறங்கி அமைதி ஆயினர். பரந்த இடத்தை உடைய இவ்வுலகமும், தடை ஏதுமின்றி உறங்குகிறது. உறுதியாக யான் ஒருத்தியே உறக்கமின்றித் தவிக்கிறேன் என்பதாகும். கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா (குறள் 1169) அவரோடு கூடியிருந்த காலத்துக் குறைவாய் அமைந்த இரவுப் பொழுது, அவர் பிரிந்த பிறகு நீடித்து நின்று வருத்துகின்றது. பிரிந்து சென்ற அவர் கொடியவர் என்றால், அப்பிரிவுத் துயரைத் பெரிதாக்கும் இரவுப் பொழுது அவரினும் கொடியதாகும். தோழி! இந்தக் கடற்றுறை பொருந்திய சிற்றூரானது, நாம் தங்கியிருத் தற்குரியதான தகுதியுடையது அன்று. ஏனெனில் கடற்கரைச் சோலை யினை உடைய சேர்ப்பனது கொடுமையை நினைத்துப் பெருகுகின்ற துயரத்தோடு வருந்தியவராக நடு யாமத்திலும் உறக்கங் கொள்ளாது, தங்குபவரை ஏனென்றும் கேளாது துயிலுதல் பொருந்திய கண்களை உடைய அறிவில்லா மாக்களோடு நெடிதான இரவுப் பொழுதினையும் இஃது உடையதாகும் எனும் பொருள் அமைந்த, உறைபதி அன்றுஇத் துறைகெழு சிறுகுடி கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள் துஞ்சாது உறைநரொடு உசாவாத் துயில்கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே என்னும் கொல்லன் அழிசி பாடிய குறுந்தொகைப் பாடல் தக்க மேற்கோளாகும். யாமத்து ஞாலத்து உயிரெல்லாம் கண்துஞ்சும் நல்லிருள்கூர் காலத்தும் துஞ்சாதுன் கண். என்னும் கைலைபாதி அடிகளும் ஒப்ப நோக்கத்தக்கதாகும். உள்ளம் போன் றுள்வழிச் செல்கிற்பின், வெள்ளநீர் நீத்தல மன்னோஎன் கண் (குறள் 1170) என் காதலர் சென்றுள்ள இடத்திற்கு என் மனம் விரைவாகக் செல்வது போல், என் கண்களாலும் செல்ல முடியுமானால் அவை கண்ணீராகிய வெள்ளத்தில் நீந்திக் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படாது. தலைவனை விரைந்து நேரில் பார்த்தாக வேண்டும் என்னும் வேட்கையை இவ்வாறு புலப்படுத்துகிறாள். இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும். இன்பம் கடல் துன்பம் அதனிற் பெரிது. காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன். இரா கொடியார் கொடுமையின் தாம் கொடிய. காமக் கடல் உண்டு! ஏமப்புணை இல்லையே இன்பம் கடல் - துன்பம் அதனில் பெரிது கொடியார் கொடுமையின் கொடியது இரவு உள்ளம் போன்று உள்வழிச் செல்லாது கண் கண் வெள்ளத்தில் நீந்துகிறது. ----------- 118. கண் விதுப்பழிதல் பிரிந்து சென்ற தலைவனை விரைந்து காண வேண்டும் என்னும் துடிப்பால் வருந்துவது மனம் என்றாலும் காதலைத் தொடங்கி வைத்ததும் கண்; கூடிக் களித்த போதும் பெரும் பங்கு ஏற்றதும் கண்: பார்த்தால் பசி தீரும் என்பது பழமொழி : பார்க்க முடியாமையால் பசி மேம்படுவதால் கண்கள் விரைந்து காணக் கொள்ளும் வேட்கையால் எழும் வருத்தத்தைப் புலப்படுத்தும் அதிகாரமே கண் விதுப்பழிதல் ஆகும். விதுப்பு, விரைவையும், அழிதல், வருந்துவதையும் உணர்த்தும். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு (குறள் 392) எனக் கல்விக் கண்ணையும் உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் (குறள் 574) எனக் கண்ணோட்டக் கண்ணையும், குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்? (குறள் 705) எனக் குறிப்பறியும் கண்ணையும் காட்டி அமைந்ததுடன், கொடுங்கோன்மை அதிகாரத்தில் அல்லல்பட் டாற்றா தழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 565) எனக் கண்ணீரின் பேராற்றலைப் படைச் செருக்கு அதிகாரத்திலும், புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகோள் தக்க துடைத்து (குறள் 780) எனப் பெருமிதம் தரும் கண்ணீரையும், கூடா நட்பு என்னும் அதிகாரத்தில் தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து (குறள் 828) என வஞ்சகக் கண்ணீரையும் பொருட்பாலில் காட்டிய வள்ளுவர் காமத்துப் பாலில் காதலர் கண்களையும் அன்பின்பால் உகுக்கும் கண்ணீரின் வழி பண்பட்ட மனங்களைப் படம் பிடித்துக் காட்டு வதை உணர முடிகிறது. என்பதை மனத்தகத்துக் கொண்டு கண்விதுப்பழிதலைக் காண்போம். -------------- கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ, தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது (குறள் 1171) நான் இன்று இத்தீரா நோயைத் துய்ப்பதற்குக் காரணம். இத்தலை வரின் பிரிவே! தலைவரை என்னோடு இணைப்பதற்கு அடிப்படையாய் அமைந்தது கண்களே! ஆகவே, காதல் நோயை உண்டாக்குவதற்குக் காரணமாய் அமைந்த கண்களே இப்பொழுது ஏன் அழ வேண்டும்? மனம் அழுவது சரி. நோயை உண்டாக்க முதற் காரணமாய் அமைந்த கண்களே அழுவது எனக்குப் பொருத்தமாகத் தெரியவில்லை என எண்ணுகிறாள். அசோக வனத்தில் அரக்கியர் கூட்டத்திடையே சீதை உற்ற துயரநிலையைப் படம் பிடித்துக் காட்டும் கம்பன். துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்எனவும் அழுதல் அன்றி, மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் எனக் கூறும் தொடர்களை ஒப்பு நோக்கலாம். ----------- தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்ப தெவன்? (குறள் 1072) உண்கண்-காதலரது அழகை உண்ட கண்: பைதல்-துன் பம்; உழப்பது-துன்பத்தால் துடிப்பது. பின்னர் என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சிறிதும் சிந்திக் காமல் அன்று அவரை ஆர்வத்துடன் பார்த்து அவர் அழகில் ஈடுபட்டு, உள்ளத்தைப் பறிகொடுக்கக் காரணமாய் அமைந்த கண்கள், இன்று ஏற்பட்டிருக்கும் இத்துன்பத்திற்கு நாம் தானே பொறுப்பு என்று உணர்ந்து பொறுமையோடு இருக்கவேண்டும். அவ்வாறு இன்றி இன்று துன்பம் உறுவது எதற்காக! வரைவிடைப் பிரிந்து காலம் நீட்டித்த போழ்து, தலைவி பிரிவை ஆற்ற இயலாது, நாணுவரை கடந்து கலங்கி மொழிந்து, அறிவழிந்து அவன் வந்து சாரத் தெளிந்த கண்டோர் கூற்றாய் அமைந்த நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலி 25ஆம் பாடலில் இடம்பெற்ற 19-23 கீழ்க்காணும் அடிகள் ஒப்பு நோக்கத் தக்கனவாகும். எல்லா! நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் எற்சிதை செய்தான் இவன் என உற்றது இதுவென எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின் பைதல வாகிப் பசக்குவ மன்னோ? என் நெய்தல் மலரன்ன கண். இதன் பொருள்:- சான்றோரே! நீவிர் உனக்கு அவனால் வந்த துன்பம் யாது? என்று கேட்பீராயின், என் அழகைச் சிதைத் தவன் இவன் என்றும், அவனால் யான் உற்ற துன்பம் இதுவென்றும் தெளிவுற எடுத்து உரைக்கும் அறிவு எனக்கு இருந்தால், நெய்தல் மலர் போன்ற என் கண் வருந்தி அழுது வெளுத்துப் போயிருக்குமா? என்பதாகும். கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து (குறள் 1173) எனது கண்கள் அன்று எதையும் ஆராயாமல் விரைந்து அவரைக் கண்டு மகிழ்ந்தன. இன்றோ அதே கண்கள் அழுகின்றன. சேர்த்து வைக்கக் காரணமான கண்கள்! பிரிவைத் தாங்க முடியாமல் அழுகின்றன. கண்களின் அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் சிந்தித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. பிரிவு துன்பத்தைத் தருவதாக இருப்பினும் காதல் வாழ்வின் சிறப்பு அதில் தான் அடங்கி இருக்கிறது. ---------- பெயலாற்றா நீர்உலந்து உண்கண், உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து (குறள் 1174) பெயல் ஆற்றா - அழமாட்டாதவாறு, உயல் ஆற்றா - பிழைக்க முடியாதவாறு; உய்வில் நோய் - தீராத காம நோய். மை தீட்டப் பெற்ற என் கண்கள் நான் தப்பிப் பிழைக்க முடியாதவாறு தீராத காம நோயை என்னிடத்திலே உண்டாக்கி நிறுத்தி விட்டுத் தாமும் அழமுடியாதவாறு நீர் வறண்டு விட்டன. செய்தார்க்குச் செய்த வினை பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் என்பதற்கு ஏற்ப எனக்குத் தீங்கு செய்தமையால் தனக்குத் தீங்கு தானே வந்தது என்றாள். இன்று அழும் ஆற்றலும் இழந்து கண்ணில் நீரும் வற்றிப் போயிற்று. படலாற்றா பைதல் உழக்கும், கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண் (குறள் 1175) படல் ஆற்றா - மூட இயலாத, கண் இமைகளை மூடித்தூங்க முடியாத: பொறுக்க முடியாத. பைதல் - துன்பம்; உழக்கும் - துன்பத்தால் உழலும். பரந்துபட்ட கடலைக் கூட ஒப்புமை சொல்ல முடியாத அளவிற்குப் பெரிய காம நோயை எனக்குத் தந்த கண்கள், அத்தீவினை காரணமாக இன்று தாமும் தூக்கம் இல்லாது துன்புறுகின்றன. இராமனுக்கும் சீதைக்கும் மணவுறுதி செய்யப்பட்டு மணம் நிகழும் முன் சீதையின் சிந்தையையும் சொல்லையும் எடுத்து மொழியும் பாடல்களில் ஒன்று:- இடையே வளைசோர, எழுந்து விழுந்து அடல் ஏய் மதனன் சரம் அஞ்சினையோ? உடல் ஓய்வுற நாளும் உறங்கலையால்! கடலே - உரை! நீயும் - ஓர் கன்னி கொலாம் என்னும் இப்பாடலும், ஆரணிய காண்டம், அயோமுகிப் படலம், சீதையின் பிரிவை ஆற்ற இயலாமல் இராமர் துயருறலில் ஒன்று;- மயிலியல் பிரிந்தபின், மான நோயினால் அயில்விலன் ஒரு பொருள், அவலம் எய்தலால் துயில் விலன் என்பது சொல்லற் பாலதோ உயிர், நெடிது உயிர்ப்பிடை ஊசலாகுவான். என்னும் பாடலும் ஒரு வகையில் மேற்கோளாய்க் கொள்ளலாம். ---------- ஓஓ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது (குறள் 1176) ஓஓ-மிகுதிப் பொருள் தரும் குறிப்புச் சொல். இதன் + பட்டது= இதற்பட்டது-நோயில் நன்றாக மாட்டிக் கொண்டது. தலைவனைப் பிரிந்து வாழும் தலைவி பெருந்துன்பத்திற்கு ஆட்பட்டுள்ளாள்; எல்லா வேதனையும் மனத்தையே தாக்கும் அந்தத் தாக்குதலுக்கு முழுமையாக இரையாகி விடாமல் அவளைத் தற்காத்துக் கொள்வதற்குப் பயன்படும் உத்திதான் கண்கள் அழுது வருந்துவது எனக்கு மிக இன்பமாக இருக்கிறது என்று எண்ணுவதும் ஆகும். அழுவது இவள் கண்கள்தானே! இவளிலிருந்து கண்களைத் தனிமைப்படுத்த முடியாது. எனினும் தனிமைப்படுத்தி எண்ணுவது துன்பச் சுமையைக் குறைக்க உதவும் ஆகவே தான். எமக்கு இந்தக் காதல் நோயை உண்டாக்கிய கண்கள் தாம் விரித்த கண்ணிவலையில் தாமே மாட்டிக் கொண்டு துன்புறுவதைக் காணும் போது என் மனத்திற்கு மிக மிக இன்பமாக இருக்கிறது என்கிறாள். எதன் மீதாவது பாரத்தை ஏற்றி வைத்து விட்டுத் தலைவி தன் மனச் சுமையைக் குறைக்க வழி கண்டது போற்றத் தக்கதாகும். கண்கள் அன்று காதலரை விரும்பி விரும்பி உள்ளம் உருகிக் காணத் துடித்தன. அது செய்த வேலையால் தான் காதல் வலையில் மீள முடியாது மாட்டிக் கொள்ள நேர்ந்தது. ஆகவே காதலரைக் சிற்றளவு நேரங்கூட பிரிந்து இருக்க மனம் இடம் தர மறுக்கிறது. அவரோ கடமை கருதி, உரிய காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்று விட்டார். அவர் வருகையை எதிர் பார்த்தும் வாராமை கண்டு, கண்கள் அழுதன. அழும் கண்களை எண்ணி ஆற்றாமை பெரிதாயிற்று. எண்ணிப் பார்த்தேன் அன்று தலைவரைக் கண்டு காதலுக்கு வித்திட்ட கண்கள் மீது எனக்கு வெறுப்பும் சினமும் மிகுந்தது. ஆகவே, நான் கண்களை நோக்கிக் கண்களே நீங்கள் துன்புற்றுத் துன்புற்று உங்கள் கண்களுக்குள் உள்ளே உள்ள நீரும் இல்லாமல் வற்றிப் போகட்டும் எனக் கோபத்தில் கூற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்த்தும் குறளே, உழந்துழந் துள்நீர் அறுக; விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். (குறள் 1177) என்பதாகும். உழந்து என்றால் வருந்தி என்பதும் நீர் அறுக என்றால் கண்ணினுள் உள்ள நீரும் வற்றிப் போவதாக என்பதும் விழைந்து என்றால் விரும்பி என்பதும் இழைந்து என்றால் உருகி எனவும் பொருள் கொள்க! ---------- பேணாது பெட்டார் உளர்மன்னோ, மற்றவர்க் காணா தமைவில கண் (குறள் 1178) பெட்டார் இன்றும் உளர்; ஆனால் இன்று எப்படி இருக்கிறார்? பேணாது உளர். ஆனால், தாம் வந்து விரும்பிக் காணாத வரை; வெறுத்து ஒதுக்க மனமில்லை. அவர் வந்து கண்டாலும் சரி; காணாவிட்டாலும் சரி! என் கண்கள் அதனைத் தகுதிக்குறை என எண்ணாது தாம் விரைந்து பார்த்தே ஆக வேண்டும் என்னும் உறுதியில் இருக்கிறது. தம்மை வந்து கண்டவரைத் தான் காண வேண்டும். காணாத வரைத் தாம் போய்க் காணக் கூடாது. என்ற உலகியல் நெறி புறவாழ்க்கைக்கு உரியதாகும். அக வாழ்வாம் காதல் வாழ்வில், அடைத்து வைக்க முடியாத, அன்பு உள்ளத்தில் இருப்பதால், மானம் கருதி வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளக் கூடாது. பிரிவுத்துயரில் தலைவனை வெறுப்பன போல் எண்ணிய தெல்லாம் பிரிந்து சென்ற தலைவன் வந்தவுடன் பெருவிருப்பாய் மாறிவிடும். தம்மைப் பேணாதவரை விரும்புவார் உலகத்தில் இல்லாமல் இருக்கலாம். பேணிய காதலன் தற்பொழுது பேணாது பிரிந்து சென்றுள்ளான். விரைவில் பேண வருவான் அவனைத் தலைவியின் கண்கள் தேடுவதில் தகுதிக் குறை ஒன்றும் இல்லை. தோழி! என் நெஞ்சம் நோகும்; என் நெஞ்சம் நோகும்! பிரிவினால் யான் வருந்தி அழ, இமையைத் தீய்ப்பது போல் கொட்டும் வெப்பம் மிக்க என் கண்ணீரைத் தடுத்து என்னுடன் அளவளாவி மகிழ்வுதற்குரிய நம் காதலர் அவ்வாறு நடந்து கொள்ளாது பிரிந்து வருத்துதல் கண்டு என் நெஞ்சம் நோகும்! எனும் கருத்தடங்க, காமஞ்சேர் குளத்தார் பாடிய, நோம் என் நெஞ்சே! நோம் என் நெங்சே! இமைதீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி அமைவதற்கு அமைந்த நம் காதலர் அமைவில ராகுதல் நோம் என் நெஞ்சே! என்னும் குறுந்தொகைப் பாடல் தக்க இலக்கிய மேற்கோளாகும். ---------- வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் (குறள் 1179) காதலர் வாராத போது அவர் பிரிவைத் தாங்க மாட்டாமல் என் கண்கள் உறங்குவதில்லை; அவர் வந்த போது மீண்டும் பிரிந்து விடுவாரோ என்று அஞ்சி அவை உறங்குவதில்லை. ஆதலால் இருவகையிலும் நிறைந்த துன்பத்தையே என் கண்கள் நுகர்கின்றன. சுற்றிச் சுழன்று வந்து அசையும் தென்றல் காற்று என்னை அலைத்து வருத்துதலால், என்னைப் போட்டுக் குமையும் காம நோயினை அறியாமல், நன்கு அயர்ந்து உறங்குகின்ற இவ்வூரின் மேல் எனக்கு வரும் சீற்றத்தால் அவர்கள் மீது முட்டிக் கொள்வேனோ? அவர்களைத் தடி கொண்டு தாக்குவேனோ? அல்லது தனி ஒருத்தியாகிய யான், ஒரு வெறி பிடித்தது போன்ற தன்மை மேலே பொங்கி எழுதலால் ஆஅ! என்றும் ஒல் என்றும் வாய்விட்டு அலறி எல்லாரையும் எழுப்பும் பொருட்டுக் கூவுவேனோ? அந்தோ! உறக்க மின்றித் தனியே புலம்பித் துடிக்கின்றேனே. எனும் பொருள் அமைய, முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல் ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ! ஒல்! எனக் கூவு வேன்கொல்? அலமரல் அசைவளி அலைப்ப என் உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே என்னும் ஔவையாரின் குறுந்தொகைப் பாடல் தக்க இலக்கிய மேற்கோளாகும். --------- ஒருவர் கொண்டுள்ள அன்பினைப் பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் மறைவு இல்லை. அன்பு செலுத்தத் தக்கவரைக் கண்ட அளவில் அவர் கண்ணில் துளிக்கும் கண்ணீரே அதை வெளிப்படுத்தி விடும் என்னும் கருத்தை அன்புடைமையில் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் (குறள் 71) என உரைத்ததுடன் கண்ணீரைக் கணீர் என உரைத்த நுட்பத்தையும் உணர்ந்த நாம் கண் விதுப்பழிதல் அதிகார நிறைவுக் குறளுக்கு வருவோம். மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் ரகத்து (குறள் 1180) அடிக்கும் பறை போல உண்மையை உள்ளவாறே வெளிப்படுத்தி விடும் கண்ணையுடைய எம் போன்றவர் எந்தச் செய்தியையும் ஊரார்க்குத் தெரியாமல் மறைத்து வைக்க இயலாது. ஏனெனில் நாவைத் தான் என்னால் அடக்க முடியுமே தவிர்த்து, கண்களைத் துன்பத்தில் கண்ணீர் விடாமல் தடுக்க இயலாது. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ? உவப்பினும் காயினும் தான்முந் துறும் (குறள் 707) என்னும் குறிப்பறிதல் அதிகாரக் குறளும் அரண் செய்யும். “f©jh« fYœtJ vt‹? தெரிந்துணரா நோக்கிய உண்கண் கதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும் பெயலாற்றா நீர் உலந்த உண்கண், படலாற்றாப் பைதல் உழக்கும் நோய் செய்த கண் இதற்பட்டது இனிது உழந்துழந்து உள்நீர் அறுக பேணாது பெட்டார் உளர் மன்னோ? கண் வாராக்கால் துஞ்சா; வரின் துஞ்சா மறைபெறல் ஊர்க்கு அரிது அன்றால் அறை பறை கண்ணார். -------------- 119. பசப்புறு பருவரல் 119, பசப்புறு பருவரல், 120, தனிப்படர் மிகுதி, 121, நினைந்தவர் புலம்பல் 122, கனவு நிலை உரைத்தல் 123, பொழுது கண்டு இரங்கல் ஆகிய ஐந்து அதிகாரங்களும் முல்லைத்திணை உரிப் பொருளாகிய ஆற்றி இருத்தல் ஒழுக்கத்திற்கு இலக்கியமாகும். அதில் முதல் அதிகாரமாக அமைந்துள்ள பசப்புறு பருவரல்-பசலை என்னும் நிறவேறுபாடு காரணமாகத் தோன்றிய வருத்தத்தைக் கூறுகிறது. காதல் இன்பத்திற்கும் இறை இன்பத்திற்கும் ஒற்றுமை ஒன்று உண்டு. காதலனைப் பிரிந்த காதலி விழி சோர்ந்திடக் கண்ணீர் உகுக்கின்றாள். அது போல ஆண்டவனை வேண்டி நிற்கும் அடியார்களும் அவனைப் பாடிப் பாடி விழி சோர்ந்திடும் அளவும் கண்ணீர் உகுத்துக் கொண்டே இருக்கிறார்கள். உறங்க வேண்டிய வேளையில் உறங்காமல், உண்ண வேண்டிய வேளையில் உண்ணாமல், தங்களை மறந்த நிலையில் இருக்கும் இருவர், கணவனைப் பிரிந்த மனைவியும் ஆண்டவனைத் தேடிச் செல்லும் அடியார்களும் என்றால் மிகை ஆகாது. கண் துஞ்சாமல் காம வேதனையால் அல்லற்படும் போது, பசப்பு என்கிற நிறவேறுபாடு தலைவியிடம் ஏற்படுகிறது. கண் வேதனைக்குப் பின் சொல்ல முடியாத வருத்தம் காரணமாகத் தலைவியின் மேனி நிறம் மாறி விடுகிறது. அதனையே குறள் பசப்புறு பருவரல் என்கின்றது. அது பசப்புற்ற பருவரல் என விரியும். அதாவது பசப்புறுதலால் ஆகிய வருத்தம் இதனைப் பந்தெறிந்த அயர்வு என்பது போலக் கொள்க! இலக்கணங்களில் கொண்டு கூட்டுப் பொருள் கோளுக்கு எடுத்துக் காட்டும் கீழ்க்காணும் பாடல் பசலையின் நிறத்தையும் விளக்கும்: பாடல் வருமாறு:- தெங்கங்காய் போலத் திரண்டு உருண்ட பைங் கூந்தல் வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்றார் வரின். இப்பாடலின் பொருளைக் காண, வங்கத்துச் சென்றார் வரின் அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் மாமேனி, தெங்கங்காய் போலத் திரண்டு உருண்ட வெண் கோழி முட்டை உடைத்தன்ன பசலை தணிவாமே எனக் கொள்ள வேண்டும். உடைத்த கோழி முட்டையின் நிறம் போன்று இருப்பது பசலை என்பதை அப்பாடல் விளக்குகிறது. இராமனைப் பிரிந்த சீதையின் தோற்றத்தைக் கம்பன், துயில்எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள் வெயிலிடைத் தந்த விளக்கென ஒளியிலா மெய்யாள் என்றும், ஆவிஅம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள் தூவி அன்னம் மென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள் தேவு தெண்கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள் எனப் பாடியுள்ளது தக்க சான்றாய் அமையும். பசப்பு, பசலை, மாமை எனப் பல பெயர்களால் இலக்கியங் களில் வழங்கப்படுகிறது. தலைவனைப் பிரிதலால் உண்டாகும் ஒருவகைப் படர்நோய். இதனை அழகுத் தேமல் என்பதும் உண்டு. பசப்பு நிறனாகும் எனத் தொல்காப்பியம் கூறுகிறது. இது பயப்பு எனப் போலியாகவும் வழங்கும். நாருரித்த ஆம்பல் தண்டு போன்ற நிறம் என நற்றிணை நவில்கிறது. பசந்தன்று என் மாமைக் கவினே என ஐங்குறுநூறு கூறுவதால் மாமை, பசப்பு முதலியன ஒருபொருட் சொற்கள் எனலாம். எள்ளுடைப் பொரி விரவின உளசில இளநீர் எனக் கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்து நகர்ப் படலத்தில் கூறுவதால், அதன் நிறம் தெரிவிக்கப் பெறுகிறது. இது நிறமாற்றமும், தினவு நோயுமாகும். அதனாலேயே பசப்பு உறு பருவரல் எனப்பட்டது என்கிறார் ச.தண்டபாணி தேசிகர். நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன், பசந்தஎன் பண்பியார்க் குரைக்கோ பிற (குறள் 1181) முன்பு தலைவன் கடமை கருதிப் பிரிந்து சென்று வர, ஒப்புதல் அளித்த தலைமகள், அஃது ஆற்றாது பசந்த வழித்தனக்குத் தானே சொல்லிக் கொண்டது - யான் செய்து கொண்ட துன்பத்தினை இனி ஒருவர்க்கு உரைத்தலும் பழிப்பாகும். என்னை உளமார விரும்பும் தலைவர் பிரிந்து செல்ல உடன் பட்டயான் அதனைத் தாங்கிக் கொள்ள இயலாது. நிறம் மாறுபட்ட இயல்பினை யாரிடம் போய்ச் சொல்ல முடியும். பசலை நோயானது என் உடலிடத்ததாக ஆகிவிட்டது. எனது விருப்பமோ அவரது அன்பற்ற நெஞ்சமாகிய புகுதற்கரிய இடத்தின் கண்ணதாய் இருக்கின்றது. என்னும் பொருள் புலப்படுமாறு வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார், பயப்பு என்மேனி யதுவே! நயப்பு அவர் நார்இல் நெஞ்சத்து ஆரிடை யதுவே எனக் குறுந்தொகையில் கூறுவது தக்க மேற்கோளாகும். தேர் செலுத்துவதில் கைவன்மை மிக்க பாகனே! நீ வாழ்க! பசலை படர்ந்தமையால் துன்பம் வருத்த வாடி இருக்கும் அன்பு மிக்க இனிய தலைவியின் நகைபொருந்தின முகத்தினை அடையத் தேரைச் செலுத்தினை. வளம்வரும் மழை பொழிந்த வெண்ணிறக் களர் நிலமான காட்டில் வளைந்த அடியினை உடைய பிடா மரத்தின் கண்ணே, வீசுகின்ற குளிர்ந்த காற்று வீசும் போதெல்லாம் நிலவின் ஒளி என்று சொல்லுமாறு கூட்டமான அரும்புகள் விரியும். கூரிய அழகிய வெண்மையான பற்களையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய மகளிரது ஒழுங்கு முறைப்பட்ட தோளி என்னும் விளையாட்டைப் போல, மெல்லென மயில் கூட்டங்கள் ஆடி இயங்கும் மரங்கள் அடர்ந்த காட்டு வழி அது. அவ்வழியில் இடையில் இருள் வரும் முன்னரே, விரைந்து கழலின் ஒலி போல ஒலிக்கும் நாவினை உடைய தெளிந்த மணிகளின் ஒலி முழங்க, ஒளி திரண்டாற் போல நிமிர்ந்து செல்லும் செலவினை உடைய குதிரைகளை வயப்படுத்தும் கடி வாளத்தை ஆராய்ந்து செலுத்தி, விளக்கமான கொடிஞ்சி மொட்டு அழகுடன் விளங்கும் தேரினை நீ விரைந்து செலுத்துவாயாக! எனும் பொருள் துலங்க, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறும் கூற்றாக அமைந்த, வளமழை பொழிந்த வால்நிறக் களரி உளர்தரு தண்வளி உறுதொறும் நிலவு எனத் தொகுமுகை விரிந்த முடக்கால் பிடவின் வைஏர் வால் எயிற்று, ஒள் நுதல் மகளிர் கைமாண் தோளி கடுப்ப, பையென மயிலினம் பயிலும் மரம்பயில் கானம் எல்லிடை உறாஅ அளவை, வல்லே, கழல் ஒலி நாவின் தெண்மணி கறங்க நிழல் ஒலிப்பு அன்ன நிமிர்பரிப் புரவி வயக்குறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து இயக்குமதி-வாழியோ, கையுடை வலவ பயப்புறு படர் அட வருந்திய நயப்புஇன் காதலி நகைமுகம் பெறவே என்னும் (344) அகநானூற்று முல்லைத் திணைப் பாடலை மேற்கோளாய்க் கொள்ளலாம். --------- அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு (குறள் 1182) இப்பசலையை நீக்க வேண்டும் என வேண்டிய தோழிக்குத் தலைவி கூறுவது போல் பாடல் அமைந்துள்ளது. இப்பசலைக்கு உரிமை அதிகம். என் அன்புத் தலைவர் தந்தார் என்னும் உரிமையால், இப்பசலை நோய், படர்கொடியைப் போல் உடலை அது பற்றிப் படர்வதற்கு ஏற்ற பந்தல் எனக் கருதிப் படர்ந்துள்ளது. ---------- சாயலும் நாணும் அவர்கொண்டார். கைம்மாறா நோயும் பசலையும் தந்து (குறள் 1183) தோழி உரிமையுடன் தலைவியிடம் உன்பால் இயற்கையாய் அமைந்த அழகினையும், பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் நாண் உடைமையையும் நீ இழந்து விடாமல் பிரிவுத் துன்பத்தை ஆற்றி இருக்க வேண்டும் என வேண்டிய பொழுது, அவளுக்கு மறுமொழி கூறு முகத்தான் தலைவி தோழியை நோக்கி, இப்பொழுது நீ சொல்லி என்ன செய்ய, பிரிகின்ற போதே அவ்விரண்டிற்கும் கைம்மாறாக இக்காம நோயினையும், பசலையையும் எனக்குத் தந்துவிட்டு என் மேனி அழகினையும் நாணுடைமையையும் அவரே கொண்டு போய் விட்டாரே! என்கிறாள். நாணை எடுத்துக்கொண்டு நோயையும், அழகை எடுத்துக் கொண்டு பசலையும் தந்தார் எனக் கூட்டி எதிர் நிரல் நிறை அணியாகக் பொருள் கொள்ள வேண்டும். இனி எடுத்துக் கொண்டு சென்ற தலைவர் கொண்டு வந்து கொடுத்தால் தான் நாணும் அழகும் வரும். அவை வந்தால் தான் நோயும் பசலையும் போகுமே தவிர்த்து, நானாகவே கொள்ளவோ, தள்ளவோ இயலாது என்பதைத் தெளிவுபடுத்துகிறாள். தலைவன் தோழியின் உதவியுடன் தலைவியைக் கூடினான்; பிறகு முறைப்படி தலைவிக்கு ஆறுதல் கூறிப் பொருள் தேடப் பிரிந்தான். இதனால் உடல் வாடியதால் வேறுபாட்டுடன் மெலிந்த தலைவி, தோழியிடம் தன் ஆற்றாமையைக் கூறுகிறாள். தோழி! தூசி படிந்த அழுக்கு முற்றிலும் நீங்கப் பாகனால் கழுவப்பட்ட யானையைப் போலப் பெரிய மழை அடித்துப் பெய்ததால் கழுவப்பட்ட கரிய சருச்சரையை உடைய உருண்டை வடிவக்கல், பசுமை தவழும் காட்டில் ஒரு பக்கத்தே கிடக்கும். அத்தகைய மலைநாடன், பிரிவால் காம நோயைத் தந்தனன்; அதனால் குவளை மலர் போன்று இருந்த என் அழகிய கண்கள், இப்பொழுது முழுவதும் பசலை நிறம் ஆகிப்போயின! எனும் பொருள் அமையக் கபிலர் பாடிய குறுந்தொகைப் பாடல். மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல் பைதல் ஒருதலை சேக்கும் நாடன் நோய்தந் தனனே தோழி பசலை ஆர்ந்தன குவளை அம் கண்ணே! என்பது தக்க இலக்கிய மேற்கோளாகும். வரிசையாக இதழ்கள் அமைந்த மலர்கள் பலவற்றுள்ளும் தேர்ந் தெடுத்த மலர் போன்றவை தலைவியின் கண்கள். அவை பசலை பாயுமாறு தொலைவில் இருக்கும் மலை நாடன் பிரிந்தான். அதனால் தலைவி உடல் மெலிந்தாள். அது காதல் நோய் என்று அறியாமல், வெறியால். தீரும் நோய் என்று அன்னையும் தவறாக உணர்ந்தாள். வெறியெடுத்தும் தீராமல், தலைவியோடு தாயும் வருந்தினாள். அதனால்,, தலைவியே உங்கள் களவொழுக்கத்தை அறிவிக்காமல் விடுவது கொடிய தாகும் எனும் பொருள் அமைய அறத்தொடு நிற்பதைத் தலைவி ஏற்க வேண்டித் தலைவியிடம் தோழி சொல்லும் துறையில் அமைந்த, அறியா மையின் வெறியென மயங்கி அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனால் எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ் ஆய்மலர் உண்கண் பசப்பச் சேய்மலை நாடன் செய்த நோயே என்னும் (242) ஐங்குறுநூற்றுப் பாடலும் தக்க மேற்கோளாகும். ----------- உள்ளுவன் மன்யான்: உரைப்ப தவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு (குறள் 1184) யான் எப்பொழுதும் என் துணைவரைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கிறேன். யாரிடம் பேச நேர்ந்தாலும் அவருடைய நற்குணங்களைப் பற்றியே புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும் போது எனக்கும் தெரியாமல் கள்ளத்தனமாகப் பசப்பு என்மேல் எப்படி வந்தது? ஏன் வந்தது? எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்கிறாள். பிரிகின்ற போது தலைவர் தெளிவித்த சொற்களையும், அவர் நற்றிறங் களையும் அறிவாய் ஆகலின், காலம் நீட்டியாது தலைவர் வருவார் எனக் கூறிய தோழிக்குத் தலைவி உரைத்தது இதுவாகும். மனமும் வாயும் அவரை மறவாது இருக்க அவ்விரண்டன் வழிப்பட்ட உடம்பின்கண் பசலை வந்தமையின் அதனைக் கள்ளத்தனமாக வந்தது என்கிறாள். பிற, ஓ, மன், ஆல்-நான்கும் அசைச்சொற்கள். ------------- உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது (குறள் 1185) அதோ பார்! என் தலைவர் என்னைப் பிரிந்து செல்வதை, இதோ பார் அதற்குள் என் மேனியில் பசலை நோய் படர்ந்து விட்டது. உவக்காண் என்றால் சற்றுத் தொலைவில் அங்கே பார் என்பது பொருள். இவக்காண் என்றால் அண்மையில் இங்கே பார் என்பது பொருள். தோழி! அலைகள் மணலைக் கொண்டு வந்து சேர்க்கும் கடற்கரைத் தலைவன், மின்னலைத் தோற்றுவிக்கும் கருவியவாய்ப் பெய்யும் மழையானது தூற்றிக் கொண்டிருக்க, வானத்தில் பறக்கும் அன்னப்பறவை மேலே உயரப் பறப்பது போலத், தேர்த்தட்டு முதலிய பொற்படைகளால் பொலிவுற்றதும் தந்தத்தால் செய்யப் பட்டது மாகிய வெண் தேரில் ஏறி, கலங்கிப் பாயும் கடலலைத் துளிகள் சக்கரத்தை நனைப்ப, தலைவன் இப்பொழுதுதான் பிரிந்து சென்றனன். ஆனால் அதற்கு முன்பாகவே என் இனிமை தவழும் அழகிய நெற்றியில் பசலை பரவுகிறது. என்னிலும் முன்னதாக இந்த நுதல், பிரிவை எவ்வாறு அறிந்து கொண்டது. இது வியப்பே என்னும் பொருள் புலப்படுமாறு உலோச்சனார் பாடிய கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடல் தக்க மேற்கோளாகும். பாடல் வருமாறு;- மின்னுச் செய் கருவிய பெயன் மழை தூங்க விசும்புஆடு அன்னம் பறைநிவந் தாங்குப் பொலம் படைப் பொலிந்த வெண்தேர் ஏறிக் கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன் யாங்கு அறிந் தன்றுகொல்-தோழி! என் தேம்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே! என்பதாகும். --------- விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (குறள் 1186) விளக்கு ஒளி குறையும் நேரம் பார்த்து வந்து பரவக் காத்திருக்கும் இருளே போலத் தலைவன் தழுவுதல் இல்லாத நேரம் எப்போது கிடைக்கும் என்று இப்பசலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். தலைவன் இறுகத் தழுவாது இருக்கும் நேரம் பார்த்து வரும் பசப்பு. தலைவன் பிரிந்து சென்றபின் விட்டு வைக்குமா? பாசியானது மக்கள் கையிட்டு நீருண்ணும் போது விலகியும், அவர் கைகளை எடுத்தவுடன் மீளவும் படர்ந்தும் தோன்றுமாறு போலத் தன் மேனியின் பசலையும் தலைவன் உடன் இருக்க நீங்கியும் அவன் பிரியப் படர்ந்தும் தன்னை வருத்தும் என்கிறாள் தலைவி, எனும் கருத்தமைந்த பரணரின் குறுந்தொகைப்பாடல் தக்க எடுத்துக்காட்டாம். பாடல் வருமாறு:- ஊர்உண் கேணி உண்துறைத் தொக்க பாசி அற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. என்பதாகும். --------- புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்: அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு (குறள் 1187) முன்னொரு நாள் காதலரைத் தழுவிக் கிடந்த நான் அறியாமல் சற்று விலகினேன்:அவ்வாறு புடைபெயர்ந்தேனோ இல்லையோ உடனே என் உடலில் பசப்பு கையால் அள்ளிக் கொள்வது போல வந்து நிறைந்து விட்டது. அப்புடைப் பெயர்ச்சிக்கு உள்ளாக. அள்ளிக் கொள்ளும் அளவு பசலை மிகுந்து காணப்படும், அவ்வாறானால், இப்பிரிவினால் என்னாகுமோ என்று கவலைப்படுகிறாள். -------------- பசந்தாள் இவள்என்ப தல்லால் இவளைத் துறந்தார்அவர் என்பார் இல் (குறள் 1188) தலைவியின் பசலை படர்ந்த மேனியைக் கண்டு கவலை கொண்ட தோழி! மனத்திண்மையுடன் ஆற்றியிராமல் இவ்வாறு பசலை படர இடந்தரலாமா? எனச் சொல்லிய தோழியை நோக்கித் தலைவி, இவள் ஆற்றியிராது பசலை நிறம் அடைந்தாள் என எல்லாரும் என்னைப் பழித்துக் கூறுகின்றனரே அல்லாமல், இவளை இவ்வாறு தவிக்க விட்டு அவர் பிரிந்து போய் விட்டாரே! இவ்வாறு போகலாமா? என அவரைக் குறை சொல்வார் யாரையும் காண வில்லையே என்கிறாள். -------- பசக்கமன் பட்டாங்கென் மேனி, நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் (குறள் 1189) தலைவி தோழியிடம் தோழி! என்னிடம் நயமாகப் பேசிப் பிரிந்தவரை நீ நல்லவர் என்று சொல்வது உண்மையானால். என் மேனி மேல் பசலை இன்று மட்டுமல்ல என்றும் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர் நல்லவரானால், வல்லவரானால், உத்தமரானால், உயர்ந்தவர் ஆனால், தான் பிரிவதற்கு என்னை உடன்பட வைத்த என் காதலர், திரும்பி வருவார் என்றால், அவர் வரும்வரை என் மேனியில் பசலை நிறம் இருக்கட்டும் என்பது கண்ணதாசன் விளக்கமாகும். --------- பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே, நயப்பித்தார் நல்காமை தூற்றா ரெனின். (குறள் 1190) தலைமகள் பொறுத்துக் கொள்ளும் பொருட்டுத் தோழி தலைமகனைக் குறை கூறிப் பழித்துரைத்ததை விரும்பாத தலைவி இயற்படச் சொல்லியது. நம்மைத் தம்முடைய பிரிவை ஏற்கச் செய்த துணைவர் பிரிந்து சென்று வருத்தமூட்டுவதை நம் வாழ்வில் ஈடுபாடு கொண்ட நல்லவர்கள் யாரும் பழித்துக் கூறவில்லை என்றால் நான் பசப்பு நோய்க்கு ஆளானவள் என்னும் பட்டியலில் என் பெயரும் இடம் பெறுதல் எனக்கு இன்பமே ஆகும் எனத் துன்பத்தையும் இன்பமாகக் கருதும் மனநலம் வாய்க்கப் பெற்றவளாய்த்தலைவி விளங்குகிறாள். அவர் நல்லவர்: ஊர் உலகம் அவரைப் பழிக்கக் கூடாது. என் துயரம் பற்றி எனக்குக் கவலை இல்லை எனத் தன் மன உணர்வைத் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள். இவளது காதலன் எங்கேயோ போய்விட்டான் என்று ஊரார் தூற்றாமல் இருப்பார்களானால், பசலை கொண்டவள் என்று பெயர் எடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை; அதுவும் நன்மைக்கே! என்பது கண்ணதாசன் விளக்க மாகும். ------------- நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ? இவர் தந்தது என் மேனி மேல் பசப்பு சாயலும் நாணும் அவர் கொண்டார் மைம்மாறா நோயும் பசலையும் தந்தார் உள்ளுவன் மன் யான் உரைப்பது அவர் திறமால் கள்ளம் பிறவோ பசப்பு உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்மேனி பசப்பூர்வது விளக்கு அற்றம் பார்க்கும் இருள் கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு இவளைத் துறந்தார் அவர் என்பார்இல். பசக்க மன் பட்டாங்கு என்மேனி நயப்பித்தார் நன்னிலையர் நயப்பித்தார் நல்காமை தூற்றார். பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே ---------- 120. தனிப்படர் மிகுதி இஃது முல்லைத் திணையின் இரண்டாம் அதிகாரம். தலைவி தனிமையால் அடையும் மிகுந்த துன்பத்தை உணர்த்தும் அதிகாரம் ஆகும். காய்ச்சப்பட்ட மது உண்டார்க்கு மகிழ்ச்சியைத் தருமே அல்லாது. காமத்தைப் போலக் கண்டார்க்கு மகிழ்ச்சியைத் தருவது இல்லை என்பதைத் தகையணங்குறுத்தலில் உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று (குறள் 1090) எனவும் காதலை நினைத்தாலும் கூட நீங்காத பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. ஆதலால் குடித்தால்தான் களிப்பு உண்டாக்கும் மதுவினும் காதல் இனியதாகும் என்பதை நினைந்தவர் புலம்பல் அதிகாரத்தில், உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது (குறள் 1201) எனவும், நினைத்த அளவில் களிப்பு உண்டாதலும், காணும் அளவில் மகிழ்வு உண்டாதலும் மதுவுக்கு இல்லை. ஆனால் அவை காதலுக்கு உண்டு என்பதைப் புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில், உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு (குறள் 1281) எனவும், தீ தொட்டால் சுடுவது அல்லது காமத் தீ போல், தொடுதலை விட்டுச் சென்றால் சுடுகின்ற தன்மையை உடைய தாகுமோ? ஆகாது என்பதைப் பிரிவாற்றாமையில் தொடிற்சுடி னல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ (குறள் 1159) எனவும், காதலால் வரும் இன்பம் கடலளவு பெரியது என்றால் அக்காதல் பிரிவால் வருந்தும் போது உண்டாகும் துன்பம் அக்கடலை விடப் பெரியதாகும் என்பதைப் படர் மெலிந்து இரங்கல் அதிகாரத்தில், இன்பம் கடல் மற்றுக் காமம்: அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது (குறள் 1166) எனவும், விரும்புகின்ற துணைவரை நினைத்த அளவில் வருகின்ற தோர் இன்பம் பிறிதொன்றும் இல்லை. ஆதலால், காதல் எவ்வளவு சிறியது என்றாலும் அது இனியதேயாம் என்பதை நினைந்தவர் புலம்பலில், எனைத்தொன் றினிதேகாண் காமம்; தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில் (குறள் 1202) எனவும், காதல் என்பது மெல்லிய மலரினும் மெல்லியது; ஆதலால், அதன் சரியான பக்குவம் அறிந்து, அதன் பயனை நன்கு கொள்பவர் மிகச் சிலரே என்பதைப் புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில், மலரினும் மெல்லிது காமம், சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் (குறள் 1289) எனவும், காமத்தின் தனிப் பெரும் சிறந்த தன்மைகளைப் பரவலாக எடுத்து மொழியும் வள்ளுவர் காமத்தின் பிறிதொரு சிறப்பை எடுத்துமொழியும் குறளே. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி (குறள் 1191) கணவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் துன்பப்படும் தலைவிக்குத் தோழி உன் காதலர் உன்னைக் காட்டிலும் வருத்தம் அடைவார்; அதனால் மிகவும் விரைவாக வந்து விடுவார். பின் நீ எப்போதும் போல் அவருடன் இணைபிரியாது இன்பம் துய்க்கலாம் என்று ஆறுதல் கூறினாள். அதற்குத் தலைவி, தோழி! தம்மால் காதலிக்கப்படும் தலைவரைக் காதலிக்கப் பெற்ற மகளிரே காமநுகர்ச்சி என்னும் விதையற்ற நறுங் கனியைப் பெற்றவராவர் என மறுமொழி தந்தாள். அதாவது, மனைவி மட்டும் கணவனிடம் இடையறாத அன்பும் பிரியமும் உடையவளாக இருந்தால் போதாது: கணவனும் அம்மனைவி யிடத்து அதே போல் இடையறாத அன்பு உடையவனாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் குறித்த இன்பம் தலைவிக்குக் கிட்டும். இதில் தலைவிக்கு ஐயம் ஏற்பட்டது. நம் காதலர் பிரிதலே யன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனி யாம் பெற்றிலேம் என்பதாயிற்று என்று பரிமேலழகர் விளக்கம் தந்துள்ளார். இது, விதையில்லாப் பழம் வரும் குறள். பழத்தைச் சுவைக்கும் போது, இடையில் விதைகள் வருவது இடையூறாய் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உடல் உள்ளம், உயிர் என்னும் மூன்றாலும் ஒன்றுபட வேண்டும். அப்படி ஒன்று படாத நிலையில் அவர்களை இணைத்து வைத்திருக்கும் கவர்ச்சி குறையும். அதனால் மனவேறுபாடு தோன்றும். அந்த வேறுபாடு, புணர்ச்சி என்னும் கனியைச் சுவைக்கும் போது விதைகள் போல் வந்து இடையூறு செய்யும். அந்த மனவேறுபாடு தோன்றாமல் காக்க, இல்லத்தரசிகட்குச் சில பொறுப்புகள் உண்டு. தன்னைக் காணும் போது கணவனுக்குத் தோன்றும் கிளர்ச்சி குறையாமல் பார்த்துக் கொள்ளுதல் அளவோடு தன்னை வெளிக் காட்டும் பெண்கள் மீது கவர்ச்சியும் கிளர்ச்சியும் குறைவதில்லை. புணர்ச்சியை மாதம் ஒரு முறை அல்லது இருமுறை என்பது போல் அளவாய் வைத்துக் கொள்ளுதல். பகலில் புணர்ச்சியை முற்றிலும் தவிர்த்தல். புணர்ச்சிக்கு முன் உடல் தூய்மையில் கவனமாய் இருத்தல். இருவர் உள்ளமும் ஒன்றுபட்ட ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே புணர்ச்சியை மேற்கொள்ளுதல், கணவனின் உடல்வளம், உடல் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புணர்ச்சி மேற்கொள்ளல். இப்படிப் பொறுப்புணர்வுடன் வாழ்க்கை நடத்தும் மன மொத்த தம்பதியர்கட்கு இடையே அதாவது தாம் வீழ்வார் தம் வீழப்பட்டவர்க் கிடையே மனவேறுபாடு என்ற பேச்சிற்கே இடமில்லை. கணவன் வேறொரு பெண்ணைக் கற்பனை செய்து கொண்டு, தன்னைப் புணராமல், கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்று 1101 என்னும் ஐம்புல இன்பத்தையும் தன்னை நினைத்துக் கொண்டே துய்க்கும் படியான பெரும் பேற்றைப் பெறுவதே தாம் வீழ்வார் தம் வீழப் பெறும் பேறாகும். மகளிர் மாற்றானைக் கற்பனை செய்வது பெரும்பாலும் இல்லையாதலால் ஆண்களை மட்டுமே சுட்டினேன் என்பது திருக்குறட் கவனகர் பெ.இராமையா அவர்கள் தரும் விளக்கமாகும். கணவனும் மனைவியும் உள்ளார்ந்த நிலையில் விரும்பு வராகவும் விரும்பப்படுவராகவும் அமையப் பெற்றால் அவர்கள் துய்க்கும் இன்பம், விதையில்லா இனிய கனியை உண்ணும் இன்பம் போன்றதாகும். யாழ்கொன்ற கிளவி யாள்தன் அமிழ்து உறழ் புலவி நீங்கிக் காழ்இன்றிக் கனிந்த காமக் கொழுங்கனி நுகர்ந்து காதல் தாழ்கின்ற தாம மார்பன் தையலோடு ஆடி விள்ளான் ஊழ் சென்ற மதியம் வெய்யோன் ஒட்டி ஒன்று ஆயது ஒத்தான் என்னும் சீவகசிந்தாமணிப் பாடல் உவமையும் பொருளும் ஒன்ற அருமையான விளக்கமாய் அமைந்துள்ளது. இதன் பொருள்:- காதலால் தங்குகின்ற சீவகன், இனிய மொழி பேசும் சுரமஞ்சரியின் ஊடலை நீக்கி, அவளோடே கூடி, நீங்காதவனாய் விதையின்றிப் பழுத்த காமமாகிய கனியை நுகர்ந்து, முறையால் நிறைந்த முழுமதியைக் கதிரவன் பொருந்தி ஒன்றான தன்மையை ஒத்தான் என்பதாகும். --------------- வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று (குறள் 11) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை (குறள் 12) நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு (குறள் 20) தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55) வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி (குறள் 542) என்னும் குறட் பாக்களையும் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (குறள் 1033) வசையொழிய வாழ்வாரே வாழ்வார் (குறள் 240) என்னும் குறள் மணிகளையும் ஒருங்கே நினைவு படுத்தும் குறளே, வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி (குறள் 1192) கணவனுக்கு மனைவி இன்றியமையாதவள், அதேபோல் மனைவிக்குக் கணவன் இன்றியமையாதவன். இதனை இருவருமே நன்கு அறிதல் வேண்டும். இவ்வுணர்வு ஏற்பட்டு விட்டால் குடும்பத்தில் பிளவோ, பிணக்கோ வாராது. உயிர்களுக்கு மழை மிகவும் இன்றியமையாதது. இது பற்றி வள்ளுவர் வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் வற்புறுத்திக் கூறியுள்ளார். ஆனால் மழையும் காலத்தில் பெய்ய வேண்டும். அளவறிந்து பெய்ய வேண்டும். காலம், அளவு இரண்டும் இன்றி மேகம் தொழிற்பட்டால், குறித்த இன்பமும் விளைவும் மக்களுக்கு ஏற்படாது. இதனால் விளையும் கேடுகளே பலவாகும். கணவனும் மனைவியும் பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். ஆனால் பிரிவுக்குப் பின் உண்டாகும் கூட்டம் காலத்தால் ஏற்பட வேண்டும். பிரிவு அளவு கடந்து நீட்டித்தல் கூடாது. அளவு கடந்த பிரிவும் காலங்கடந்த கூட்டமும் இல்லறத்திற்கு இன்பம் பயக்க மாட்டா. இந்நிலையில்தான் தலைவிக்கு ஐயமும் வருத்தம் மிகுதியும் தோன்றும். நம் காதலர் நம்மை விரும்பாமையினாலே அவரது அருளும் அன்பும் நமக்கு இல்லையாதலால் மழையின்றி வாடும் மக்களைப் போல் இறந்து படுதலே நமக்கு உரியது என எண்ணித் தலைவி மிக்க வருத்தம் அடைந்தாள். விரும்பும் துணைவிக்கு விரும்பும் துணைவன் செய்யும் அன்புப் பெருக்கு, உழவர்க்குப் பருவம் தவறாமல் பெய்யும் மழை போன்றது என்பது உண்மைதான். ஆனால் அத்தலைவி பருவ மழை பொய்த்தமை யால் வாடும் உழவன் நிலையினளாக இருக்கிறாள். தோழி, கொடிச்சி காவல் இருக்கும் தினைப் பயிரில் முற்றிய பெருங்கதிர்களை மந்தி கொய்தது; பின்னர்ப் பாயும் தொழிலை அன்றிப் பிறவற்றைக் கல்லாத கடுவனுடன் மலை மீதேறித் தான் கொய்த தினையைக் கவுள் நிரம்ப அதக்கி அடக்கியது; அது மழை பெய்தலினால் புறம் நனைந்த நோன்பியர் தைத்திங்கட் பிறப்பில் நீராடி நோன்பு முற்றி இருந்து உண்ணுதல் போலத் தோற்றம் அளித்தது. அத்தகைய மலை நாடன், கதிர் பிடிக்கத் தொடங்கி வாடிய நெற்பயிர்க்கு நடு இரவில் மழை பெய்தாற் போல வந்துள்ளான். விரைவில் நின்னை மணம் புரிவான்; நீவிர் வாழ்க எனும் பொருள் அமையத் தோழி கூற்றாக மருதனிள நாகனார் பாடிய கீழ்க் காணும் நற்றிணைப் பாடல் தக்க மேற்கோளாகும். கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை முந்து விளை பெருங்குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி அங்கை நிறைய நெமிடிக் கொண்டுதன். திரை அணல் கொடுங்கவுள் நிறைய முக்கி வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தைஊண் இருக்கையின் தோன்றும் நாடன் வந்தனன் வாழி! தோழி! உலகம் கயம் கண் அற்ற பைது அறு காலைப் பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்என் யாமத்து மழைபொழிந் தாங்கே என்பதாகும். வாழ்வார் என்னும் சொல்லால் உழுதுண்டு வாழ்வாரை உணர்த்தும் திருவள்ளுவர் தமிழனின் மரபையும், பண்பாட்டையும், தொன்மைச் சிறப்பையும் உணர்த்தி அமையும் நேர்த்தி போற்றி வணங்கத் தக்கதாகும். ------------- வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு (குறள் 1193) தம்முடைய வாழ்வைப் பற்றிய கவலையோ, மயக்கமோ, புலம்பலோ, இல்லாது மண்ணில் வாழும் மக்கள் அனைவரும் இன்புற்று நிறைவுடன் வாழவேண்டும் எதிலும் குறை இருப்பதாக எண்ணுவதற்கும் வாய்ப்பு இல்லாத பெருமிதம் மிக்க வாழ்வு வாழ வேண்டும் என விரும்புபவர் திருவள்ளுவர். ஆகவே, வாழ்க்கைத் துணை நலத்தில், பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு (குறள் 58) எனப் பண்பட்ட வாழ்வு மேற்கொள்ளும் இல்லறத்தார் பெருமையை எடுத்து மொழிந்த வழித் தடத்தில் மலர்ந்த இக் குறளில் அன்புப் பெருக்கால் ஒருவரை ஒருவர் விருப்புடன் வாழும் தலைவன் தலைவியரே யாம் என்றும் நிறைவான வாழ்வு வாழ் வோம் என்று தலை நிமிர்ந்து பெருமிதத்துடன் கூறி மகிழும் நிலை உண்டாகுமே தவிர்த்து, ஒத்த அன்போ, ஒத்த உணர்வோ, ஒத்த விருப்போ இல்லாதவர்கட்கு பெருமிதவாழ்வு இல்லையாம். எந்தப் பக்கம் எந்த வேளையில் விருப்பக் குறை ஏற்பட்டாலும் அவ்வாழ்வு நிறைவற்ற வாழ்வாகவே அமைந்து விடும் என்னும் வாழ்வியல் நுட்பத்தை எடுத்துக் காட்டும் குறள்களில் இதுவும் ஒன்றாகும். வீழுநர் என்றால் தம்மால் விரும்பப்படும் கணவர் என்றும், வீழப்படுவார் என்றால் விரும்பப்படுகின்ற மனைவி என்றும்: செருக்கு என்றால் பெருமிதம் என்றும் பொருள் கொள்வோம். ----------- வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின் (குறள் 1194) தலைவனும் தலைவியும் ஒத்த அன்புடையவர்கள். உடலும் உயிரும் போல் ஒன்றியவர்கள். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள விருப்பமும் ஒருவர்க்கொருவர் விஞ்சிய விருப்புடையவர்களாக அமைந்துள்ளனர் அவர்களையோ அவர்கள் காதலையோ குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், ஊர்மக்கள், மற்றும் அறிந்தவர்கள் யாரும் விரும்பவில்லை. எனினும் அவர்கள் உறவு உயர்ந்த உறவே! திருவள்ளுவர் போன்ற சான்றோர் போற்றும் நல்லுறவே ஆகும். திருவள்ளுவர் இக்குறளில் அதற்கு மாறுபட்ட உறவு ஒன்றைச் சிந்திக்க வைக்கிறார். தலைவனும் தலைவியும் தனித்தனியே மிக்க நல்லவர்கள்; பண்பாளர்கள்; நேர்மையானவர்கள்; ஒழுக்க மானவர்கள் அதில் யாரையும் யாரும் குறை சொல்ல இயலாது. ஆனால் தலைவி தலைவனை எந்த அளவு விரும்புகிறாளோ அந்த அளவிற்குத் தலைவி மீது தலைவனுக்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒத்த விருப்பம் இருக்குமானால் இவ்வளவு நாள் பிரிந்திருக்கமாட்டான். குறித்த நாளும் கடந்து விட்டது. தலைவியைக் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஊர்மக்கள், அறிமுகமானவர்கள் அனைவரும் விரும்பு கிறார்கள். ஆனால் அவள் தலைவனால் விரும்பப்படவில்லை ஆயின் அவள் உறவற்ற வளாகவே கருதப்படுவாள். அகவாழ்வில் காதலன் காதலி உறவே உயர்ந்த உறவாகும். கணவன் மனைவி உறவுடன் மற்றவர்கள் உறவும் இணைவது சிறப்புக்குரியதே. ஆனால் கணவன் மனைவி உறவில் செழுமை இல்லை யேல் அவர்வாழ்வு வறண்ட வாழ்வே ஆகும். நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ, தாம் காதல் கொள்ளாக் கடை (குறள் 1195) அன்பை உயிராய்க் கொண்டு மலர்வதே காதல் வாழ்வு, இங்கே ஒரு தலைவி தலைவன் மீது பேரன்பு செலுத்துகிறாள். ஆனால் தலைவனோ தலைவியின் அன்பைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் தலைவி இருக்கும் இடம் தேடி, வேளா வேளைக்குச் சுவையான உணவு, வகை வகையாய் வருகிறது. நாளும் விதவிதமான புத்தாடைகள் வந்து கொண்டு இருக்கின்றன. குடியிருக்க அழகிய எல்லா வசதிகளும் நிரம்பிய அரண்மனை போன்ற வீடும் உண்டு; நாகரிக உலகிற்கு ஏற்ற புத்தம் புதிய ஊர்திகளும் உண்டு; நினைத்த ஊர்தியில் நினைத்த நேரத்தில் சென்று வரலாம். எந்தத் தேவைக்கும் எந்தக் குறையும் இல்லை. ஆனால், தலைவி மீது தலைவன் அன்பு செலுத்துவது இல்லை என்றால் அத்தகைய வாழ்வால் என்ன பயன் ஒன்றும் இல்லை. ------------ ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது (குறள் 1196) முழுமதி போல வளர்ந்து பெருகிய இல்வாழ்விலே கணவனும் மனைவியும் ஆகிய இருவர்க்கும் ஒத்த அன்புணர்வும் கால் கொண்டிருப்ப துடன் ஒத்த பொறுப்பும் உண்டு என்பதை விளக்கவே கா என்னும் காவடியை அருமையான உவமையாகக் கொண்டார். பாரம் சுமப்பவர் தோளில் பாரத்தை வைத்துச் செல்வது உண்டு. பண்டு முதல் இன்று வரைத் தொடரும் பழக்கமே அது. தோளால் சுமக்க ஒரு தடி உண்டு. அதற்குக் கா என்பது பெயர். அத்தடியின் இருபக்கங்களிலும் பொருள்களைச் சமமாக வைப்பதுடன் தோளில் அக்காவை வைக்கும் நிலையிலும் முன்னும் பின்னும் கூடாமல் குறையாமல் சரிசம நிலையில் வைப்பர். இல்லாக் கால் சற்றே நிறை கூடிய பக்கம் கவிழ்ந்து தொல்லை ஆக்கும். கா எப்படிச் சமமாகப் பாரம் தாங்கப் பயன் படுகிறதோ அவ்வாறே கணவனும் மனைவியும் குடும்பப்பாரம் தாங்குபராக அமைய வேண்டும் என்கிறார். காவே காவடியாகவும் காவட்டாகவும் சொல்லப்படுவதுவும் உண்டு. காதல் ஒரு பக்கம் மட்டும் அமைந்திருந்தால் துன்பமே. காதல் காவடிபோல் இரண்டு பக்கமும் சமமாய் அமைந்திருக்கு மானால் இன்பமாகும். ----------- பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றுறொழுகு வான் (குறள் 1197) காமன் என்பான் ஒரே நேரத்தில் காதலர் இருவரிடமும் தன் ஆளுமை யைச் செலுத்தக் கூடியவன் அல்லன். அவன் ஒருவர் பக்கம் நின்று தன் வேலையைக் காட்டுபவன் ஆவான். அவனுக்கும் அவன் வேலை தான் குறியே அல்லாமல் காமத்துக்கு இலக்கானார் படக்கூடிய நோயையும் துன்பத்தைப் பற்றி எல்லாம் அவனுக்குக் கவலை இல்லை. அதனால் அவன் அவர்கள் எந்நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவன் கண்டு கொள்வது இல்லை. காமன் அவனுக்கு என ஒப்படைக்கப்பட்ட வேலையை மட்டும் செய்பவன் ஆவான். அவன் விதைப்பான்; விதைத்து விட்டுப் போய் விடுவான்: விளைவு பற்றி எண்ணிப்பாரா இயல்புடையவனே காமன் ஆவான். சீதை, இராமனை விட்டுப் பிரிந்தபின் புலம்பினாள். இராமனுக்குத்தன் மேல் அன்பு இல்லையோ எனவும் ஐயுற்றாள் அப்பொழுது முழு நிலவு தோன்றியது. உடனே அவள், என்னை ஏன் வருத்துகின்றாய், நிலவே! நீ இராமனைப் பார்த்து வருத்து என்கிறாள். இதனைக் கம்பர், கல்லா மதியே! கதிர்வாள் நிலவே! செல்லா இரவே! சிறுகா இருளே! எல்லாம் எனையே முனிவீர்! நினையா வில்லாளனை, யாதும் விளித்திலிரோ என்பது தக்க இலக்கிய மேற்கோளாகும். ----------- வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணார் இல் (குறள் 1198) காதலர் இருவரும் ஒருவர்பால் ஒருவர் கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும், உற்றறிந்தும் இன்புற்று வாழ வேண்டியவர்கள். கடமை கருதித் தலைவன் தலைவியைப்பிரிய நேர்வது இயல்பு. பிரிவின் காலமும் தூரமும் எவ்வளவு குறைவானதாக இருக்குமோ அவ்வளவிற்கு நல்லது. பிரிந்து சென்ற தலைவனைப் பற்றிய செய்திகளை அறிய விரும்புபவள் தலைவி, ஆகவே இடைஇடையே ஊர் செல்பவர்களிடம் தலைவன் தேடிய பொருள்களில் சிலவற்றைக் கொடுத்து இவன் நலத்தைத் தெரிவிப்பதுடன் அவள் நலத்தைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். பிரிந்து சென்ற தலைவர் குறித்த காலத்தில் வரவும் இல்லை. கண்டவர்கள் யாரும் வந்து நல்ல செய்தி எதையும் இதுவரைச் சொல்லவும் இல்லை. இந்நிலையில் தாம் பேரன்பு கொண்ட தலைவரை எண்ணி எண்ணித் துன்புறும் துயரம் இருக்கிறதே அது மிகக் கொடுமை யானது. ஆகவே, காதலர் இடத்திலிருந்து தூதுவர் மூலமாகக் கூட ஓர் இனிய சொல்லும் கேட்க வாய்ப்பின்றி, உலகத்தில் வாழ்கின்ற வர்களைப் போல இரங்கத்தக்கவர் உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். துன்பங்களிலெல்லாம் பெருந்துன்பம், காதலரின் இனிய சொல்லைக் கூடக் கேட்க முடியாது வாடும் காதலி துய்க்கும் துன்பமாகும். நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு (குறள் 1199) நான் காதலித்த காதலர் மிக நல்லவர், உயர்ந்த பண்பாளர்; சிறந்த ஒழுக்க சீலர்; தெளிந்த அறிவுடையவர்; நினைத்ததை முடித்துக் காட்டும் வினையாண்மையர் என்மீது பேரன்பு உடையவர்தான். அவர் கடமை கருதிப் பிரிந்து சென்றமையால் அவர் அன்பைப் பெற இயலாது வாடுகிறேன். ஆனால், என்னை வந்து காணும் ஊர் மக்கள் அனைவரும் அவர்பால் அமைந்துள்ள பல்வேறு சிறப்புகளையும் என்னிடம் போற்றிப் புகழ்கின்றனர். தலைவரின் புகழ், மொழிகளைக் கேட்டு என் செவி உற்ற இன்பம் மிகுதியாகும். தலைவனைப் பற்றிய புகழ் மொழி கேட்ட தலைவி, பிரிவுத் துன்பத்தைப் புறம் தள்ளி மகிழ்கிறாள். தலைவன் அன்பு இப்பொழுது கிட்டவில்லை. அஃது அவளுக்கு வருத்தம். ஆனால், தலைவனைப் பற்றிய புகழ் மொழிகள் அவள் துன்பத்தை நீக்கி, இன்புற வைக்கிறது. தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய் போல் தன் கணவனைச் சான்றோன் எனக் கேட்ட மனைவியும் கேட்டு இன்புறுவாள். உறாஅர்க் குறுநோய் உரைப்பாய்! கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு (குறள் 1200) காதலனைப் பிரிந்த தலைவி, கடற்கரைக்குச் சென்றாள். கடல் அலை கள் பொங்கிக் குதித்துத் துள்ளி அடுக்கடுக்காய் வந்து கொண்டிருப்பதைக் காண்பதில் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை. தான்படும் துன்பத்தை அலைகள் உணராமல் தான் மகிழ்ச்சியாய்த் தலைவனுடன் கொஞ்சிக் குலாவி மகிழும் காட்சியைத் தனக்குப் புலப்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்கிறது என நினைத்து ஒரு கணம் மனத்தில் நினைவலை ஓடுகிறது. மறுகணம் எண்ணுகிறாள். கடல் நீர் கொந்தளித்து அலைவது அதன் இயல்பு. நாம் காதலிக்கும் தலைவர் தற்பொழுது அன்பு செலுத்தவில்லை யானால் கடலலை என் செய்யும்? நீ உறும் துன்பத்திற்கும் கடலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அல்லது கடல் சொல்லித்தான் நீ உன் தலைவரைக் காதலித்தாயா! இல்லை அல்லவா! நெஞ்சே நீ கவலைப் படாதே! தேவையில்லாமல் யாரையும் வெறுத்துக் கோபம் கொள்ளாதே! சரியா? சரியாயின் நெஞ்சே நீ வாழ்வாயாக! கடல் உன்னை வருத்தம் அடையச் செய்வதாக எண்ணாதே! அதன் மீது சினங்கொள்ளாதே! அதனிடமே உன் துன்பத்தை உரை! நல்ல பயன் கிட்டும். இக்கரையிலிருந்து நீ எண்ணுவது போன்றே அக்கரையிலிருந்து தலைவர் எண்ணலாம். கடல் அலை போல் உணர்வு அலைகளும் ஒன்று சேர்க்கும். ஆகவே! நெஞ்சே! வாழிய! வாழிய! தாம் வீழ்வார் தாமும் வீழும் பேறு பெறுக! காமத்துக் காழில் கனி பெறுக! வாழ்வார்க்கு வானம் பயக்க வேண்டும் வீழ்வார்க்கு வீழ்வார் அளி செய்க! காதலர்கட்கு வாழுநம் என்னும் செருக்கு வேண்டும் வீழ்வார் வீழப்படுவார் கேண்மை வேண்டும் காதல் கொள்ளாதவரைக் காதலிக்காதே! காமம், காப்போல இருதலையானும் இனிது காமம் ஒருதலையான் இன்னாது காமன் ஒருவர்கண் நின்றொழுகுவான் காமன், பருவரலும் பைதலும் காணான் வீழ்வாரின் இன்சொல் பெற்று வாழ்க! வீழ்வாரின் இன்சொல் பெறாதவர் வன்கணார் நசைஇயார் நல்க வேண்டும் நசைஇயார் இசை செவிக்கு இனிது நெஞ்சே கடலைப் பழிக்காதே! கடலிடம் துன்பத்தை உரை! துன்பத்தை அடக்கி வைக்காமை நலம் தரும் 121. நினைந்தவர் புலம்பல் நினைந்தவர் புலம்பல் என்னும் இவ்வதிகாரம் காமத்துப் பாலின் நடுவண் அதிகாரமாய் அமைந்துள்ளதுடன், முல்லைத் திணை உரிப் பொருள் உணர்த்தும் இடை அதிகாரமுமாகும். தலைவனோடு கூடி இன்புற்ற தலைவி, பிரிந்து வாழும் நாட்களில், கூடி இன்புற்ற நாட்களை எண்ணி மனத்தின் கண் அசை போடுவதாகும். கண்டும் கேட்டும், உண்டும், உயிர்த்தும் உற்றறிந்தும் கூடி இன்புற்று வாழ்வதே காதல் வாழ்வாகும். பிரிவுக் காலத்திலும் தனிமையில் நினைத்தாலே இன்பம் தர வல்லது காதல் வாழ்வு. கூடி இன்புற்ற காலம் அளவால் சிறிதாயினும், அதனை நினைத்துப் பார்ப்பது துன்பத்தை வரவொட்டாமல் தடுத்து விடும். இருவர் நினைவும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். ஆனால் தலைவி நினைப்பது போல் தலைவன் நினைப்பதாய்த் தெரியவில்லை. தலைவி தன் நெஞ்சில் தலைவரை நீங்காது குடியிருக்க வைத்திருப்பது போல் தலைவன் நெஞ்சில் தலைவி நிலைத்த இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தலைவர் தன் நெஞ்சில் தலைவியை நுழைய விடாதவர். நாண மின்றித் தலைவியின் நெஞ்சமாகிய வீட்டிற்குள் ஓய்வின்றி வந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம். தலைவனோடு கூடி இன்புற்ற நாள்களை நினைத்துக் கொண்டு இருப்பதால்தான் உயிரோடு இருக்க முடிகிறது. வேறு எதனாலும் அன்று. தலைவரை நினைத்துக் கொண்டு இருக்கும் போதே. பிரிவுத் துன்பத்தால் உள்ளம் சுடுகின்றதே! நினைக்க மறந்தால் என்ன ஆவாள்! தலைவரைத் தலைவி எத்தனை முறை நினைத்தாலும் தலைவர் கோபப்பட மாட்டார். நாம் இருவரும் ஒருவரே என்று அன்று சொன்னவரின் அன்பின்மையைக் கண்டு உள்ளம் அழுகிறாள். நிலவே, தலைவரைக் காண்பதற்கு முன் மறைந்து விடாதே. என்னும் போக்கில் தலைவி நினைந்து புலம்புவதே இவ்வதிகாரக் கருத்தாகும். -------------- உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று (குறள் 1090) எனத் தகையணங்குறுத்தலிலும், உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு (குறள் 1281) எனப் புணர்ச்சி விதும்பலிலும் காமத்தோடு கள்ளை ஒப்பிட்டுப் பேசியது போன்ற பாடலே உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது (குறள் 1201) கள்ளும் பெருங்களிப்பை உண்டாக்கும்; அதுபோல் காமமும் பெருங் களிப்பை உண்டாக்கும்; கள்ளைக் குடித்தால் தான் களிப்பு உண்டாக்குமே தவிர்த்துப் பார்த்தாலோ, நினைத்தாலோ களிப்பு உண்டாகாது. ஆனால், காதலை மனத்தால் நினைத்தாலும் கூட நீங்காத பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. ஆதலால், குடித்தால் மட்டுமே களிப்புண்டாக்கும் கள்ளினும் காதல் இனியது எனக் காதலர்கள் உணர்கின்றனர். உணர்ந்து பிரிந்திருக்கும் வேளையிலும் நினைந்து நினைந்து மகிழ்கின்றனர். --------- எனைத்தொன் றினிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில் (குறள் 1202) பிரிவுக் காலத்திலும் தாம் விரும்பும் காதலரை நினைத் தாலும், பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. காதல் கொண்டு வாழும் கால அளவு குறைவானதாக இருந்தாலும் காதலால் பெறப்படும் இன்பத்தை வேறு எதனாலும் பெற முடியாது. காதலர் நினைவு தோன்றினாலே இன்பம்தான். காதல் எவ்வளவு குறைந்த கால அளவினதாக இருந்தாலும் காதல் இன்பந்தரும். அத்துடன் விரும்புகின்றவரை நினைத்த அளவிலேயே இன்பம் தரும். அவ்வாறு நினைத்தாலே வரக் கூடிய இன்பம் வேறொன்றும் இல்லை. ----------- வழுத்தினாள் தும்மினே னாக: அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று (குறள் 1317) தும்முச் செறுப்ப அழுதாள், நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று (குறள் 1318) எனப் புலவிநுணுக்கத்தில் தும்மலை வைத்து விளையாட வைப்பதற்கு முன் வரும் தும்மல் பாடலே, நினைப்பவர் போன்று நினையார்கொல்; தும்மல் சினைப்பது போன்று கெடும் (குறள் 1203) தலைமகளைப் பிரிந்து அவன் நினைவால் வருந்துகின்ற தலைமகள் தோழியிடம் தோழியே, எனக்குத் தும்மல் வருவது போல் தோன்றி வாராமல் அடங்கி விடுகிறதே! ஆதலால் என் காதலர் நினைப்பது போல் இருந்து நினையாமல் இருந்து விடுகின்றாரோ! என நினைக்கிறேன். நான் நினைப்பது சரிதானே? என்கிறாள். சேய்மைக் கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப் பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்னும் உலகியல் நெறி பற்றித் தலைமகன் எடுத்துக் கொண்ட வினை முடிவது போன்று தோன்றி, முடியவில்லை போலும் அதனால் தான் தும்மல் வருவது போல் வந்து நின்று விட்டது என்கிறாள். தோழி! வாழ்க இதைக் கேள்; மேகம் தரை குளிர மழை பெய்து விட்டு, மலையை நோக்கிப் புறப்பட்டு விட்டது. ஆயினும் அதில் சிறிது தங்கி இரவில் தூவானம் தூவுகிறது. கார் காலம் ஓய்ந்திடக் கூதிர் காலம் வந்துவிட்டது. வாடைக் காற்று வீசுகிறது. இக்காற்றினால் செங்காந்தள் செடிகள் தழைத்து விளக்குச் சுடர் எரியும் அகலைப் போல அரும்பு விரியப் பெறுகின்றது. முசுண்டையின் பெரிய பூக்கள் பச்சைப் பசேலென்று புதர்களை அழகுபடுத்துகின்றன. அது இரவு நேர வானத்தை அழகு படுத்தும் விண்மீன்களைப் போல இருக்கின்றது. வயல்களில் கரும்புகள் நீண்டு உயர்ந்து நிற்க, அவற்றின் குருத்துகள் விரிந்து வாடையில் அசைய, திரண்ட காம்பையுடைய அதன் பெரிய பூக்கள், ஈரமாகிச் சுருங்கிப் போயின. அது நாரைகள் மழையில் நனைந்தது போல் இருக்கிறது. வாடையோ, இக்கூதிர் காலத்தைத் தனக்குப் பக்க பலமாகக் கொண்டு வேகமாக வீசி அச்சம் தருகிறது. மாலையும் அதனோடு சேர்ந்து கொண்டு, இரக்கம் இல்லாமல் வாட்டுகிறது. என் மனத்தில் தெளிவு இல்லை. இந்த நிலையில், என் மேனியில் பழைய அழகு மாறி வெளுப்பேறி விட்டது. இந்த நிலை வந்தும் தலைவர் யாரிடமாவது என்னைப்பற்றி விசாரித்திருக்கலாம். அதைச் செய்யவில்லை. ஆதலால் அவர் பொருள் ஈட்டுவதே கண்ணும் கருத்துமாய் இருந்து என்னை நினைக்க வில்லையோ? அல்லது நினைத்தாலும் வேலை மிகுதியால் விசாரிக்க மறந்தாரோ? எனும் பொருள் அமைய கழார்க் கீரன் எயிற்றியனார் பாடிய அகநானூறு 235 ஆம் பாடலாகிய, அம்ம வாழி, தோழி-பொருள் புரிந்து உள்ளார் கொல்லோ? காதலர் உள்ளியும் சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ? பயன்நிலம் குழைய வீசிப் பெயல்முனிந்து விண்டு முன்னிய கொண்டல் மாமழை, மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப வாடையொடு நிவந்த ஆய்இதழ்த் தோன்றி, சுடர்கொள் அகலின் சுருங்குபிணி அவிழ சுகிமுகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான்பூ விசும்பு அணி மீனின் பசும்புதல் அணிய களவன் மண் அளைச் செறிய அகல்வயல் கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ மாரிஅம் குருகின் ஈரிய குரங்க நனிகடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி பனிகடி கொண்ட பண்பில் வாடை மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய நுதல் இறை கொண்ட அயல் அறி பசையொடு தொல் நலம் சிதையச் சாஅய் என்னள் கொல்? அளியள், என்னா தோரே என்னும் பாடல் விரிவான இலக்கிய மேற்கோளாகும். ----------- யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெம்நெஞ்சத்து ஓஓ உளரே அவர் (குறள் 1204) எம்முடைய நெஞ்சத்தில் அவர் எப்பொழுதும் உள்ளவராய் இருக்கின்றார்; ஆனால், அவ்வாறே அவர் உள்ளத்தில் நாமும் நீங்காமல் இருக்கின் றோமோ இல்லையோ? என்பது தெரியவில்லை. அவர் நெஞ்சத்தில் நாம் இருந்தும் வினைமுடியாமையால் இன்னும் வரவில்லையோ அல்லது வினை முடிந்தும் நெஞ்சில் இல்லாததால் வரவில்லையோ? என்பது கருத்து. பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலம் வந்தும் அவன் வரவில்லை என்பது உண்மை. காரணம் யாதாக இருக்குமோ என எண்ணிப் பார்க்கிறாள். ஓ-என்பது இடைவிடாமையை உணர்த்துகிறது; ஓஒ உளரோ என்பது எப்போதும் உள்ளத்தில் உள்ளவராகவே இருக் கிறார் என்பதை உணர்த்துகிறது. தோழி! கடலிலே விரைந்து செல்லக் கூடிய படகினை உடைய பரதவர்கள் வலிமையான கயிற்றின் நுனியில் உளிகளைக் கட்டி, அவ்வுளி யினைக் கொண்டு பெரும் மீன்களைக் கொல்வர். நள்ளிரவு வேளையில் மீன் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்று, அதிகாலையில் மீன்களை எல்லாம் பிடித்துக் கொண்டு மீள்வர். பின்னர்ப் பிடித்த மீன்களைக் கரைகளில் குவித்து விட்டுப் புன்னை மர நிழலில் அமர்ந்திருப்பர். மேலும், தேன் மணம் கமழுகின்ற கள்ளினைக் சுற்றத்தாரோடு அருந்தி மகிழ்வர். அத்தகைய ஊரினைச் சார்ந்தவன் நம்முடைய தலைவன், அவன் நெஞ்சத்திலிருந்து என்னை ஒருபோதும் நீக்கி அறியான். அவன் நெஞ்சிலே யாம் தங்கி இருப்பதனால் பிரிவை எண்ணி நான் கலங்கவில்லை என்பதால் என்நெற்றியில் பசலை நோய் உண்டாகாது என்று தலைவி கூறினாள். இஃது கீழ்க் காணும் மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார் பாடிய, அம்ம வாழி தோழி! நன்னுதற்கு யாங்குஆ கின்று கொல் பசப்பே நோன்புரிக் கயிறு கடை யாத்த கடுநடை எறிஉளித் திண்திமில் பரதவர் ஒண்சுடர் கொளீஇ நடு நாள் வேட்டம் போகி வைகறைக் கடல் மீன் தந்து கானற் குவைஇ ஓங்கிரும் புன்னை வரிநிழல் இருந்து தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்தி பெரிய மகிழும் துறைவன்எம் சிறிய நெஞ்சத்து அகல்பு அறியானே. என்னும் நற்றிணைப் பாடல் தக்க இலக்கிய மேற்கோளாகும். அளியளோ அளியள் என் நெஞ்சு அமர்ந்தோளே! என்னும் சிறைக் குடி ஆந்தையாரின் குறுந்தொகைப் பாடல் அடி தலைவன் நெஞ்சில் தலைவி இருத்தலை விளக்கும். -------------- தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத் தோவா வரல் (குறள் 1205) தம்முடைய நெஞ்சில் யான் வாராமல் இருக்கும்படி காவல் போட்டு வைத்திருக்கும் எம் காதலர். எம்முடைய உள்ளத்தில் இடைவிடாமல் வந்து நிற்கிறாரே அவருக்கு நாணமாக இருக்காதா? இதற்கெல்லாம் நாணப்படுபவராக இருந்தால் அவர் உள்ளக் கதவை என் வருகைக்காக எப்பொழுதும் திறந்தே வைத்திருப்பார். ஒருவரைத் தம்மிடம் வருவதற்கு ஒருகாலும் உடன்படாது, தாம் அவரிடம் பலகாலும் செல்லுதல் நாணிலார் செயலாகலின் நாணார் கொல் என்றாள். தோழி! பிரிவுத் துன்பத்தாலே பொறுத்தற்கு அரிதானதாய் வரும் துயரத்தால் வருந்துதற்கும் நாம் ஆற்றல் இல்லாதவர் ஆயினேம், அதற்கு மேலாக இறந்து படுதலை எண்ணினாலோ, அதனைக் காட்டிலும் அச்சம் கொள்கின்றோம். அந்தோ! நல்ல மலை நாட்டை உடையவனான நம் தலைவன் இருவரும் பிரியா நட்பினர் என்று, பிறர் ஏளனமாக உரைக்கும் பழிச்சொல்லுக்குத் தான் அஞ்சினானோ? ஊரவர் பலரும் ஒருங்கே அஞ்சுகின்ற இரவின் நடுயாமத்தும், என் நெஞ்சத்தே அல்லாது, தான் நேராக வருதலை இப்போது அறியானாயினானே அதுதான் அவனுக்கு உயர்வாகுமா? ïjid¢ brhšthahf! எனப் பொருள் கொள்ளுமாறு மாங்குடிக் கிழார் பாடியுள்ள கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடல் தக்க மேற்கோளாகும். உரைத்திசின் தோழிஅது புரைத்தோ அன்றே அருந்துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்தலைப் பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும் அன்னோ இன்னும் நன்மலை நாடன் பிரியா நண்பினர் இருவரும் என்னும் அலரதற்கு அஞ்சினன் கொல்லோ, பலருடன் துஞ்சுஊர் யாமத் தானும் என் நெஞ்சத்து அல்லது வரவு அறியானே ஒப்பிட்டு நோக்குவோம். ------------- மற்றியான் என்னுள்ளேன் மன்னோ, அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன் (குறள் 1206) அவரொடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைந்து துன்புறுகிறாய்; அதனை மறந்து விடுவதே நல்லது என்று தோழி தலைவியை வேண்டுகிறாள். தலைவியின் அணுகுமுறை வேறு விதமாக இருக்கிறது. ஆகவே தலைவி தோழியை நோக்கி, என் காதலரோடு நான் கூடி இருந்த நாள்களில் நுகர்ந்த இன்பத்தை நினைந்து கொள்வதால் தான் அந்நினைவு தரும் இன்பத்தில் உயிரோடு இருக்கிறேன். அதனால் அன்றி மற்று வேறு காரணம் இல்லை எனத் தெளிவுபடுத்தினாள் தலைவி. என்னுளேன் என்றால் எவ்விதம் உயிர் வாழ்வேன் என்றும்; உள்ள என்றால் நினைத்துப் பார்க்க எனவும் பொருள் கொள்ள வேண்டும். --------- கேடுவரும் போது கைவிட்டுச் செல்பவர் நட்பு, அழிவுற்று உயிர் விடப் போகும் போது நினைத்தாலும், நினைத்த உள்ளம் வேதனைப்படும் என்பதைக் கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் (குறள் 799) எனச் சுடும் உள்ளத்தை எடுத்துக் காட்டிய வள்ளுவர் காமத்துப் பாலில் காட்டும் சுடும் உள்ளமே. மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளஞ் சுடும் (குறள் 1207) என்பது நான் அன்பு செலுத்தும் என் துணைவரை ஒரு போதும் மறந்த தில்லை. அவர் நினைவால் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே பிரிவுத் துன்பம் என்னைப் படாதபாடு படுத்துகிறதே. மறந்து விட்டால் என் நிலை என்ன ஆகுமோ என எண்ணிப் புலம்புகிறாள். தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும்-இந்த வைய முழுதுமில்லை தோழி! கண்ணன் முகம் மறந்து போனால்-இந்தக் கண்கள் இருந்து பயனுண்டோ? எனும் பாரதியாரின் பாடல் வரிகளும் தக்க மேற்கோளாகும். அன்னாய், தோழி! மலை மீது மர உச்சியில் உள்ள பரணில் இருந்த மலை மகன் அங்கு விலங்கினம் வந்து தாக்காதபடி மாட்டி வைத்த நறுமணமுள்ள கொள்ளிகள் வானத்து மீன்களைப் போல, மலையின் கண் அங்கங்கே விட்டு விட்டு ஒளி வீசும். அத்தகைய உயர்ந்த மலை நாடனுடைய சந்தனம் பூசி அலர்ந்த மார்பைப், பிரிந்திருந்து நினைத்தால் உள்ளத்தின் உள்ளே உள்ள காமநோய் பெருகுகிறது. அம்மார்பை அடைந்து அணைத்துக் கொண்டால், உடனே அக்காம நோய் நீங்குகிறது. இங்ஙனம் நீங்கிப் போவதன் காரணம் என்ன? இது வியப்பாக இருக்கிறது. அல்லவா? வரைந்து கொண்டு பிரியாது இருந்தால் இந்நோய் முற்றிலும் நீங்கும் என்பது குறிப்பு. இஃது மாடலூர்க் கிழார் பாடிய பாடலின் திரண்ட கருத்தாகும். பாடல் வருமாறு: குறுந்தொகை 150 சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி வான மீனின் வயின்வயின் இமைக்கும் ஓங்குமலை நாடன் சாந்துபுலர் அகலம் உள்ளின் உள்நோய் மல்கும் புல்லின் மாய்வது எவன்கொல் அன்னாய் என்னும் பாடல் தக்க மேற்கோளாகும். ----------- எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு (குறள் 1208) இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வார் என்ற தோழிக்குத் தலைவி உரைத்தது. நான் காதலரை எந்த வகையால் எவ்வளவு அதிகமாக நினைத்தாலும் என் நினைவு எப்படிப்பட்டதாய் இருப்பினும் அந்நினைவுகளில் சில அவருக்குச் சினத்தை உண்டாக்கக் கூடிய தாய் இருப்பினும் அவர் என் மீது எக்காரணம் கொண்டும் சினங்கொள்ளமாட்டார். அவர் எனக்குத் தரும் சிறப்பு அத்தகையது ஆகும். அவரைப் பற்றி எந்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கும் உரிமையை எனக்கு வழங்கியுள்ளார். சினங்கொள்ளாமை அவரின் தனிச் சிறப்பாகும். உள்ளிய எல்லாம் உடனெய்தும், உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் (குறள் 308) என்பது வாழ்வியல் நெறி அல்லவா? ------------- விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து (குறள் 1209) தலைமகனிடமிருந்து தூதுவரக் காணாது வருந்துகின்ற தலைவியை ஆற்றியிரு என வற்புறுத்தும் தோழியிடம் தலைவி, நீ வேறு, நான் வேறு அன்று; நம் இருவருக்கும் ஒரே உயிர் என்று சொன்னவர். இப்போது அன்பில்லாமல் மிகவும் நினைந்து எனது இனிய உயிர் அழிகின்றதே என வருந்திப் புலம்பினாள். பண்டு நாம் வேறல்லம் என்பதொன்று உண்டால் அவனொடு மாறுண்டோ நெஞ்சே நமக்கு எனும் கலித்தொகைப் பாடல் வரி ஒப்பு நோக்கத்தக்கது. இன்னுயிர் வேறல்லம் என்ற சொல் கவிஞர் பாரதியாரின் உள்ளத்தில் தனி இடம் பெற்றது. ஆகவே கவிஞர். பாயும் ஒளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பியடி நானுனக்கு வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம். தூய சுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு, பூணும் வடம் நீ எனக்கு புது வயிரம் நானுனக்கு காணுமிடந் தோறும் நின்றன் கண்ணின் ஒளி வீசுதடி மாணுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா! வானமழை நீ எனக்கு வண்ணமயில் நானுனக்கு பானமடி நீ எனக்கு பாண்டமடி நானுனக்கு! ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம் ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நானுனக்கு! பண்ணுசுதி நீ எனக்குப் பாட்டினிமை நானுனக்கு எண்ணிஎண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலைநின் சுவைக்கே! கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே கண்ணம்மா! வீசு கமழ் நீ எனக்கு விரியுமலர் நானுனக்கு பேசு பொருள் நீ யெனக்கு பேணுமொழி நானுனக்கு நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப் பேன்? ஆசை மதுவே, கனியே அள்ளு சுவையே கண்ணம்மா? காதலடி நீ எனக்கு காந்தமடி நானுனக்கு வேதமடி நீ எனக்கு! வித்தையடி நா னுனக்கு போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே! நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! நல்ல உயிர் நீ எனக்கு நாடியடி நானுனக்கு செல்வமடி நீ எனக்கு சேமநிதி நானுனக்கு எல்லை யற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே! முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே கண்ணம்மா! தாரையடி நீ எனக்கு தண்மதியம் நானுனக்கு வீரமடி நீ எனக்கு வெற்றியடி நானுனக்கு தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெலாம் ஓருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே கண்ணம்மா! எனப் பாடிப்பாடி பரவசம் ஊட்டுகிறார். ----------- விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி! மதி (குறள் 1210) நிலவே! நீ வாழ்வாயாக! என் மனத்தை விட்டு நீங்காது. என்னை விட்டுப் பிரிந்து போனவரை என் கண் அளவால் ஆயினும் எதிர்ப்படுவ தற்காக நீ மறையாதிருப்பாயாக! கண்ணளவில் எதிர்ப்படுவதாவது, நிலவு இருவராலும் பார்க்கப் படுவதால் இருவர் கண்களும் அதனிடத்தே ஒன்று சேர்வது. அதை நினைத் தேனும் ஆறுதல் அடையலாம் என்று எண்ணி நிலவினை மறையா திருக்கும் படி தலைவி வேண்டுகிறாள். நிலவே! எனது நெஞ்சத்தை விட்டுச் சிறிதும் நீங்காமல் இருந்தே! தம் நெஞ்சில் அன்பில்லாமல் பிரிந்து போன என் கணவரைக் கனவினாலாவது கண்களால் மீண்டும் கண்டு மகிழ விரும்புகிறேன். ஆனால், கனவிலும் அவரைக் காண விடாதபடி எனது உறக்கத்தைக் கெடுத்து ஒளி செய்து கொண்டிருக்கிறாயே! என்றும் கூறலாம். திங்களே! நீ வாழ்வாயாக! நினைவை விட்டு நீங்காராய் நீங்கிச் சென்ற துணைவரை யான் கண்ணினால் காண வேண்டும். ஆகவே நீ மறைந்து விடாமல் ஒளி வீசுவாயாக! என வேண்டு வதாகவும் கொள்ளலாம். -------------- கள்ளினும் இனிது காமம் காமம் உள்ளினும் பெரு மகிழ்வு செய்வது எனைத்தொன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார் நினைப்ப வருவது காமம் நினைப்பவர் போன்று நினையார் கொல் எம் நெஞ்சத்து உளரே அவர் யாமும் உளேம் அவர் நெஞ்சத்து தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவாது வரல் அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன் மறப்பறியேன் மறப்பின் எவனாவன்? உள்ளினும் உள்ளம் சுடும் எனைத்து நினைப்பினும் காயார் விளியும் என் இன்னுயிர் மதியே காதலரைக் காண ஒளிதா! --------------- 122. கனவு நிலை உரைத்தல் காதல் இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உணர்ச்சி, பரபரப்பான கடமைகள் மிகுந்த சூழ்நிலையில் வாழ்வோராக இருந்தாலும், காதலரின் நெஞ்சம் தம் துணையை நினைந்து நினைந்து ஏங்குவது இயற்கை. அமைதியும் ஓய்வும் மிகுந்த சூழ்நிலையில் வாழ்வோரின் நெஞ்சம் அவர்களைவிட மிகுதியாகத் துணையை நினைந்து ஏங்கு வதையே அவர்கள் வாழ்வாகக் கொள்வார்கள். மனம் எதை மிகுதியாக நினைந்து ஏங்குகிறதோ. அது கனவிலும் வந்து அமையும். பகலெல்லாம் அதையே எண்ணி எண்ணி ஏங்கிய பிறகு, இரவில் ஓய்ந்து உறங்கும் மூளையில் அந்த எண்ணமே மேலெழுந்து நிற்கும். இவ்வாறு மூளையில் மேலெழும் எண்ணமே கனவு எனப்படுவது. கனவு என்பது உறங்கும் மூளையின் கற்பனை. கற்பனை என்பது விழித்த மூளையின் கனவு. இவ்வதிகாரம்-தலைவி தான் கண்ட கனவின் நிலையை எடுத்துரைப்பதாகும். காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து? (குறள் 1211) தலைவி தன் காதலரை நினைந்து ஏங்கியபடியே பகற் பொழுதைக் கழிக்கிறாள். அவர் எங்கே இருக்கிறாரோ? என்ன செய்கிறாரோ? எப்போது திரும்புவாரோ? என்று பலவாறு எண்ணி ஏங்குகிறாள். இவ்வாறான ஏக்கத்திற்கு இடையே பகற்பொழுதெல்லாம் கழிந்த பிறகு, இரவு வருகிறது. இரவிலும் நெடு நேரம் உறக்கம் இல்லாமல் விழித்தபடியே வருந்துகிறாள். இறுதியில் எவ்வாறோ அரிதில் வந்து அமைகிறது. உறக்கம். அந்த உறக்கத்தில் கனவு ஒன்று வருகிறது. கனவில் பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஒரு தூதன் வருகிறான். தலைவரைப் பற்றிய செய்தியைக் கூறுகிறான். அதைக் கேட்கும் தலைவி மகிழ்ச்சியுறுகிறாள். உடனே, கனவு கலைகிறது. விழித்துப் பார்க்கிறாள். கண்டது கனவே என்று உணர்கிறாள். கனவு உண்மையன்று; வந்தவன் உண்மையான தூதன் அல்லன். ஆயினும் அந்தக் கனவு அவள் துயரத்தை மாற்றி விடுகிறது. துயரத்திற்கு மருந்தாக வந்த கனவின் ஆற்றலையும் கனவு செய்த நன்மையையும் நன்றியுணர்வொடு எண்ணிப் பார்க்கிறாள். யான் பிரிவால் வருந்திக் கொண்டிருப்பதை அறிந்து அது தீராக் காதலர் அனுப்பிய தூதோடு வந்த நல்ல கனவினுக்கு யான் என்ன விருந்து செய்யப் போகிறேன்? என்று அன்போடு எண்ணி மகிழ்கிறாள். கணவனுடன் படைத்துறையிலோ அயலகத்திலோ பணிபுரி வோரில் யாரேனும் விடுமுறையில் வரும்போது தத்தம் நண்பர்கள் இல்லத்தில் கொடுப்பதற்கு ஏதேனும் கொண்டு வருவர். அவ்வாறு வந்து கண்டு செல்பவர்கட்குச் சிறப்பான வரவேற்பும், தக்க விருந்தும் தனிக் கவனிப்பும் நடப்பது இயல்பு. உரியவரை நேரில் கண்டது போன்ற மகிழ்ச்சியும் மன நிறைவும் உள்ளார்ந்த அன்புடையவர் கட்கு ஏற்படுவது இயற்கை. கனவிலும் வந்த விருந்தினரைப் பேணும் கடப்பாட்டில் தலை நிற்போர் தமிழர் என்பதைப் புலப்படுத்தும் குறள்களில் இதுவும் ஒன்று என்பதை அறிய இயல்கிறது. -------- கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின், கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன் (குறள் 1212) கயல் மீன் போன்ற மையுண்ட என் கண்கள் உறங்காமல் கிடந்து தொல்லைப்படுகின்றன. உறங்குமாறு நான் அவற்றைக் கெஞ்சுகிறேன். என்பால் இரக்கம் கொண்டு அவை உறக்கங் கொள்ளுமானால், நான் அப்போது காணும் கனவில் என் காதலரைக் கண்டு, நான் இதுகாறும் இறந்துபடாமல் தப்பிப் பிழைத்திருப்பதற்கு உரிய காரணத்தை அவரிடம் கூறுவேன். கண்கள் தன் வேண்டுதலை ஏற்றுத் தூங்கினால்; கனவில் வரும் தலைவரிடம் தான் பிழைத்திருப்பதற்கு உரிய காரணத்தைக் கூறும் வாய்ப்புக் கிட்டும் என எதிர்பார்க்கிறாள். கயல் - கெண்டை மீன்; உண்கண் - மைதீட்டிய கண்; கலந்தார்க்கு - என்னைச் சேர்ந்த காதலர்க்கு; உயல் - உயிர் வாழ்ந்திருத்தல். நனவில் கண்டு பேசும் வாய்ப்புத் தள்ளிப் போனாலும் கனவிலாவது வாய்க்காதா என அன்பு உள்ளம் ஏங்குகிறது. --------- துணைவரோடு யான் இனிதாகக் கூடியிருந்த நாளை நினைத்துக் கொள்வதால் தான் உயிரோடு உள்ளேன். அதனால் அன்றி, மற்று எதனால் உயிரோடும் உள்ளேன் என்பதை நினைந்தவர் புலம்பல் அதிகாரத்தில். மற்றியான் என்னுள்ளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன் (குறள் 1206) என உரைத்தவாறும், தம் ஆற்றலைக் காட்டுதலை விரும்பித் தம் ஊக்கமே துணையாகப் பிரிந்து சென்ற துணைவர் வருவதை விரும்பி இன்னும் உயிரோடு உள்ளேன் என்பதை அவர்வயின் விதும்பலில் உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன் (குறள் 1263) எனக் கூறுவதற்கும் இடையில் கூறும் குறளே, நனவினான் நல்கா தவரைக் கனவினான் காண்டலின் உண்டென் உயிர் (குறள் 1213) நான் விழித்திருக்கும் போது வந்து என்னை இன்பக் கடலில் ஆழ்த்தாமல் விட்டுப் பிரிந்திருக்கிறார் என் காதலர். அவரைக் கனவிலாவது கண்டு இன்பம் கொள்வதனால் தான் எனது உயிர் இன்னும் என்னை விட்டு நீங்காமல் இருக்கிறது. நனவில் தலைவர் அன்பைத் துய்க்கும் வாய்ப்புக் கிட்டாத என்னால் எப்படி உயிர் வாழ முடிகிறது? என்றால் நாளும் இரவில் அவரைக் கனவில் கண்டு கொண்டு இருப்பததால் உயிரோடு இருக்க முடிகிறது. நேர்ந்த கனவில் எம்மை நேற்றிரவு வந்து நீ சேர்ந்தறியாய் கோவை தினகரா-போந்து என்னும் தினகர வெண்பா அடிகளும். செய்தவஞ்சேர் வாணனது செவ்வி கனா நிலையில் எய்தினாள் அன்றோ இரங்கேசா-பைய என்னும் இரங்கேச வெண்பா அடிகளும் தக்க மேற்கோள்கள் ஆகும். -------------- கனவினான் உண்டாகும் காமம், நனவினான் நல்காரை நாடித் தரற்கு (குறள் 1214) நனவில் வந்து அன்பு செய்யாத என் காதலரைக் கனவானது தேடிக் கொண்டு வந்து கொடுப்பதால் அக்கனவிலே எனக்கு இன்பம் உண்டாகின்றது எனப் பொருள் கொள்வதுடன், நனவுப் பொழுதில் வந்து நன்மை செய்யாத துணைவரைத் தேடித் தருவதற்குக் கனவுப் பொழுது உதவுவதால் அதன் மேல் எனக்கு ஆவல் உண்டாகின்றது என்றும் பொருள் கொள்வதுடன். கண்டு மகிழ முடியாத இடத்திற்கு என் காதலர் சென்று விட்டார். அத்தகையவரைத் தேடி அழைத்து வந்து இன்பம் தருகிறது கனவு எனவும் பொருள் கொள்ளலாம். அல்லமனை மாயை கனவில் அணைந்ததனால் சொல்லரிய இன்பமுற்றாள் சோமேசா! என்னும் சோமேசர் வெண்பா தக்க மேற்கோளாகும். தோழி! வாடைக் காற்றால் அசைந்து ஆடிய தாழையின் மேல் இருந்த நாரை, நடு நிசியில் நம்மைப் பிரிந்து மறந்துள்ள தலைவரைப் போல - நம் துயரை அறியாமல் நம்மைப் போல் காம நோயால் வருந்தாமல், நம்மீது கருணையும் இன்றிவிடாமல் கூவும் கடல் நிலத்துத் தலைவனைக் கண்டவளைப் போலப் புதிதாக ஓர் அழகு பெற்றுள்ளாயே என்று வினவுகிறாய்! உண்மையில் வராத அந்த அன்பில்லாதானையான் கனவில் கண்டு செய்த செயலைக் கூறுவேன். கேட்பாயாக! அவன் உன்னைப் பிரிந்தால் உயிர் வாழேன் என்றான். அவனைப் பிடித்துக் கொண்டு, நீ கொண்ட அழகை இப்பொழுது தா என்று அவனை வளைத்துக் கொண்டேன். அவ்வாறே அவன் அதனைத் தருவான் போல என்னைத் தழுவி இனி வருந்தாதே என்று அருள் செய்தான். அடுத்து, யான் என்னைத்தான் மறந்தீர், உமக்கு விருப்பமான சேர்க்கையையும் மறந்தீரோ என்று மனம் நிலையழிந்து அழுதேன். அவன் யான் என் செய்வேன்? இங்குக் காவல் பெரிதாயிற்று. நீயும் அக்காவலில் அகப்பட்டு வலையில் அகப்பட்ட மயிலைப் போல வருந்தி இருக்கின்றாய் என்று தெரிகிறது. என் பிழையைப் பொறுப்பாய் என்று என் அடியில் வீழ்ந்து பணிந்தான். அப்பொழுதும் யான் கோபம் தணியாமல் அங்ஙனம் வணங்கி நின்ற அவனை என் மாலையால் அடித்தேன். அவன், இதற்கு யான் செய்த தவறு யாது என்று கூறி நடுங்கி நின்றான். ஆயினும் என்னைக் கோபியாது. நீ பெரிதும் அறியாமை உடையவள் ஆதலின் இவ்வாறு சினம் கொள் கின்றாய் என்று என் கோபத்தை மாற்றினான். தோழி! இவ்வாறெல்லாம் யான் கனவில் கண்டேன். காட்சி சிறக்க இவ்வாறு கனவில் வந்த தலைவன் நேரிலும் வருவான் வந்து அருள் செய்வான், என்ற நம்பிக்கையின் எல்லையில் எனது பெறுதற்கரிய உயிர் நிற்கின்றது எனும் தெளிவுரை காணுமாறு. தோள்துறந்து அருளா தவர்போல் நின்று வாடை தூக்க வணங்கிய தாழை ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை நளி இரும் கங்குல் நம்துயர் அறியாது அளியின்று, பிணியின்று விளியாது நரலும் கானல்அம் சேர்ப்பனைக் கண்டாய் போலப் புதுவது கவினினை! என்றி யாயின் நனவின் வாரா நயனி லாளனைக் கனவில் கண்டு யான் செய்தது கேள்இனி தாழிசை: அலந்தாங்கு அமையலென் என்றானைப் பற்றி என் நலந்தாராயோ எனத் தொடுப்பேன் போலவும் கலந்து ஆங் கேஎன் கவின்பெற முயங்கிப் புலம்பல் ஒம்பு என அளிப்பான் போலவும் முலை இடைத் துயிலும் மறந்தீத் தோய் என நிலை பழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் வலையுறு மயிலின் வருந்தினை பெரிது எனத் தலையுற முன் அடிப் பணிவான் போலவும், கோதை கோலா இறைஞ்சி நின்ற ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும் யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே பேதையை பெரிது எனத் தெளிப்பான் போலவும் ஆங்கு, சுரிதகம்: கனவினால் கண்டேன் தோழி, காண்தகக் கனவில் வந்த கானல்அம் சேர்ப்பன் நனவின் வருதலும் உண்டு என அனைவரை நின்றது என் அரும்பெறல் உயிரே என்னும் நல்லந்துவனார் பாடிய நெய்தல்திணை, கலித்தொகைப் பாடல் தக்க இலக்கிய மேற்கோளாகும். ----------- நனவினாற் கண்டதூஉம் ஆங்கே; கனவும்தான் கண்ட பொழுதே இனிது (குறள் 1215) முன்னர்க் காதலர் அருகே இருக்கும் போது நான் அவரிடம் பெற்ற இன்பம் அந்த நேரத்தில் தான் இனிதாய் இருந்தது. அவர் பிரிந்த பிறகு கனவில் கண்டு நான் பெறுகின்ற இன்பமும் காணும் பொழுதுதான் இனிதாய் இருக்கிறது. காதலைப் பொறுத்த வரையில் கனவும் நனவும் ஒரே மாதிரிதான் போலும். கனவில் துய்த்த காதல் இன்பம் கனவு காணும் சிறிது நேரத்திற்குத்தான் என்றால், நனவில் துய்த்த காதல் இன்பமும் கலவி செய்கிற சிறிது நேரத்திற்கு மட்டுந் தானே? என்ன வேறுபாடு? ------------- நனவென ஒன்றில்லை யாயின் கனவினான் காதலர் நீங்கலார் மன் (குறள் 1216) விழித்திருக்கின்ற ஒரு நிலை இல்லாது இருக்குமானால் கனவில் வந்து என்னைக் கலவி மயக்கத்தில் ஆழ்த்துகின்ற காதலர் எப்போதுமே என்னைவிட்டுப் பிரியாமல் இருப்பார். நனவு என்று ஒன்று இல்லையானால் கனவில் தோன்றிய காதலர் பிரிய மாட்டார் எனக் கனவை நினைத்து மகிழ்கிறாள். காதலனை நாளும் கனவு அணைந்தே சாரதைதான் மூதுவகை யுற்றாள் முருகேசா! என்னும் முருகேசர் வெண்பாவையும் எண்ணிப் பார்க்கலாம். ------------ நினைந்தவர் புலம்பலில் தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத் தோவா வரல் (குறள் 1205) என வினவியது போல் வினவும் குறளே, நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்எம்மைப் பீழிப் பது? (குறள் 1217) நான் விழித்திருக்கும் போது வந்து என்னிடம் அன்பு செய்யாத கொடுமையை உடைய என் காதலர், என் கனவிலே மட்டும் வந்து என்னை வருத்துவது என்ன காரணத்தால்? நேரிலே வந்து அன்பு செய்யாத கொடியவர் கனவிலே வந்து என்னை ஏன் வருத்த வேண்டும் எல்லாத் துன்பதைக் காட்டிலும் கொடிய துன்பத்தை ஒரு தேவதை ஒருவனுக்குத் தர நினைத்தது. முந்திரிப் பழக் கொடியை அவனுக்குப் பசி எடுத்த போதெல்லாம் அவன் முன் காட்டி, பின் இழுத்து அவனைப் பட்டுணி போட்டது. அதுபோல இன்பத்தைக் காட்டி இன்னலைத் தரும் அவர் மிகவும் கொடியவர். சூரியன் அத்தமன கிரியை அடைந்து மறைந்தது. ஒளி ஏதும் அற்ற அந்த நிலையை நோக்கி, உலகம் தலை மீது கொண்டு தன்னை ஏத்துமாறு சந்திரன் எழுந்தான். செக்கர் வானம் திகழ்ந்த அந்த மாலை நேரத்தில் நாரைக் கூட்டம் ஒலி அடங்கி முதுமொழியை ஓர்ந்து இருக்கும் முக்கோல் அந்தணர் போலச் சலனம் ஏதும் இன்றி மணல் மேட்டின் மீது தங்கி இருக்கும் கடல் நிலத்துத் தலைவனே! அழகிய சிறகினையுடைய குருகுக் கூட்டம் ஒலிக்கும் போது இவள் உன் தேர் மணி ஓசை என்று கருதுவாள். ஆனால், உடனே அந்த ஓசை உள்ளடங்கிப் போகக் கண்டு அது கடற்கரைச் சோலைப் பறவைகளின் ஒலி என உணர்ந்து, நீ வாராமை கண்டு தனிமை ஆற்றாது வருந்துகின்றாள். நீர்ப்பரப்பிலிருந்து தலைதூக்கிப் பார்க்கும் பூக்கள் மணம் வீசும்போது அது உன் மார்பில் அணிந்த மாலையின் மணம் என்று இவள் கருதுவாள். ஆனால், உடனே அசைந்து வரும் தென்றல் காற்று மலர்களின் மணத்தைச் சுமந்து வந்து வீசிய போது, அவை உப்பங்கழியில் பூத்த மலர்கள் என உணர்ந்து. நீ வாராதது கண்டு அறிவு மயங்கி வருந்துகின்றாள். தலைவி தனது உயர்ந்த மனையிடத்து மனத்தைக் கட்டுப் படுத்த முடியாதவளாய் உன்னையே நினைத்துத் தன்னை மறந்த நிலையில் சிறிதே கண்ணயர்ந்த போது, நீ அவளது தோளைத் தழுவுவது போல ஒரு தோற்றத்தைக் கண்டு அது உண்மை என்று கருதி உன்னைத் தழுவ முயன்று பின்னர்த்தான் கண்டது கனவு என்று அறிந்து செய்வதறியாது கலங்குகின்றாள். இவ்வாறு பலவும் நினைந்து வருந்தும் துயரமிக்க நெஞ்சினால் காமநோய் காரணமாகக் கவலைப்பட்டுத் துன்பத்துள் அழுந்தும் என் தோழியின் மதிபோன்ற ஒளி முகம் புது நலம் பெறுமாறு உனது தேர், பயணத்துக்கு ஆயத்தப்படுவதாக! எனத் தெளிவுரை காணுமாறு அமைந்த கீழ்க்காணும் நல்லந்துவனார் பாடிய நெய்தற் கலிப்பாடல் தக்க இலக்கிய மேற்கோளாகும். 126 தரவு: பொன்மலை சுடர்சேரப் புலம்பிய இடன் நோக்கித் தன் மலைந்து உலகுஏத்தத் தகைமதி ஏர்தரச் செக்கர்கொள் பொழுதினான் ஒலிநீவி இனநாரை முக்கோல்கொள் அந்தணர் முதுமொழி நினைவார்போல் எக்கர்மேல் இறைகொள்ளும் இலங்குநீர்த் தண்சேர்ப்ப! தாழிசை: அணிச்சிறை இனக்குருகு ஒலிக்குங்கால் நின்திண்தேர் மணிக்குரல் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே உள்ளான்ற ஒலியவாய் இருப்பக்கண்டு அவைகானல் புள்என உணர்ந்துபின் புலம்பு கொண்டு இனையுமே! நீர்நீவிக் கஞன்றபூக் கமழுங்கால் நின்மார்பின் தார் நாற்றம் என இவள் மதிக்கும் மன்; மதித்தாங்கே அலர் பதத்து அசைவளி வந்து ஒல்கக் கழிப்பூத்த மலர் என உணர்ந்துபின் மம்மர்கொண்டு இனையுமே! நீள் நகர் நிறையாற்றாள் நினையுநள் வதிந்தக்கால் தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன்; மதித்தாங்கே நனவெனப் புல்லுங்கால் காணாளாய்க் கண்டது கனவுஎன உணர்ந்து, பின் கையற்றுக் கலங்குமே எனவாங்கு, சுரிதகம்: பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின் அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி மதிமருள் வாள்முகம் விளங்கப் புதுநலம் ஏர்தரப் பூண்கநின் தேரே! ------------ துஞ்சுங்கால் தோள்மேல ராகி, விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து (குறள் 1218) யான் உறங்கும் போது என் தோளின் மேல் இருப்பவராகிய என் துணைவர், யான் உறக்கம் நீங்கிக் கண்விழிக்கும் போது கவனித்தால் என் நெஞ்சத்தில் இருக்கிறார். எப்பொழுதும் என்னுடன் இருக்கிறார். பிரிவுக் காலத்திலும் பிரிவு உடற் பிரிவே அன்றி உள்ளப் பிரிவு அன்று. கனவு, உடற் பிரிவும் இல்லை என்பதை உணர வைக்கிறது. களியானைத் தென்னன் கனவின் வந்து என்னை அளியான் அளிப்பானே போன்றான்- தெளியாதே செங்காந்தள் மெல்விரலால் சேக்கை தடவந்தேன் என்காண்பேன் என்னலால் யான் என்னும் முத்தொள்ளாயிரப் பாடலும் தக்க மேற்கோளாகும். உறக்கம் உடலுக்கு இன்பம்; விழிப்பு உயிருக்கு இன்பம். தலைவன் கனவில் தலைவியின் தோள்மேலனாதலை விளக்கும் கலித்தொகை பாடல் வரிகள்: பாயல் கொண்டு என்தோள் கனவுவார் தோள் மேலாய் என நின்னை மதிக்குமன், மதித்தாங்கே சான்றாய் விளங்குவதுடன், தலைவி உறக்கம் நீங்கி விழிக்குங் கால் நெஞ்சத்தவனாய்த் தலைவன் விளங்குவதை, தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமையெடுத்துப் பற்றுவேன் என்று யான் விழிக்குங்கால் மற்றுமென் நெஞ்சத்துள் ஓடி ஒளித்தாங்கே, துஞ்சாநோய் செய்யும் அறனில் லவன் என்னும் கலித்தொகைப் பாடல் வரிகளும் தக்க மேற்கோளாகும். பரவையார் ஆற்றாமை கண்டு தோழி கூறுவதாக அமைந்த, தம்பிரான் தோழர் தமையிகழ்ந்த தோழிக்கு மங்கை பரவை மறுத்துரைக்கும்-எங்கிருந்தும் துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தவர் ஆவர் விரைந்து என்னும் முதுமொழி மேல் வைப்புப் பாடலும் தக்கதொரு எடுத்துக் காட்டாகும். -------- நனவினான் நல்காரை நோவர், கனவினான் காதலர்க் காணா தவர் (குறள் 1219) கனவில் தம் துணைவரைக் கண்டு மகிழ மாட்டாதவரே, நனவில் வந்து நன்மை செய்யாத அவரைக் குறித்து வருந்தி உரைப்பர். ஆனால் இத்தலைவி தலைவரைக் காண்பதால் வருந்தி எதனையும் யாரிடமும் உரைக்க மாட்டாள். பலரும் அறியும் படியாக அவர் கனவில் வந்து இன்பம் தராததால் அன்பில்லாதவர் என்று இவ்வூர்ப் பெண்கள் என் காதலரைத் தூற்று கின்றனர். பாவம்! அவர்களுக்கு உண்மை தெரியாது. அவர்களும் ஒரு காதலரைப் பெற்றிருந்தால் அவர் பிரிவுக் காலத்தில் கனவில் வந்து களிப்பு ஊட்டும் உண்மையைத் தெரிந்திருப்பார்கள். கண்ணுறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலங்குங் கனவே கண்டு உளம் மகிழ்வேன், கனவொன்றோ நனவின் எண்ணடங்காப் பெருஞ்சோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு பகல் காணாது இன்புறச் செய்கின்றார். மண்ணுறங்கும் மலையுறங்கும் அலை கடலும் உறங்கும் மற்றுள எல்லாம் உறங்கும் மாநிலத்தே நமது பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட் சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்! நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது என்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே என்னும் வள்ளலாரின் வேண்டுதலும் மேன்மை மிகு மேற்கோளாகும். ----------- நனவினான் நம்நீத்தார் என்பர்: கனவினான் காணார்கொல் இவ்வூ ரவர் (குறள் 1220) நனவுப் பொழுதில் நம் துணைவர் நம்மை விட்டு அன்பில்லாமல் பிரிந்து சென்று விட்டதாக இவ்வூரார் எம் தலைவரைப் பழித்துக் கூறு கின்றனர். இவ்வூரார் அவரவர் கனவில் அவரவர் கணவரைக் கண்டு மகிழும் வாய்ப்பினை என்னைப் போல் யாரும் அடைந்திருக்க மாட்டார்கள் போலும் கனவில் அவர்கள் கண்டு மகிழ்ந்திருந்தால் எம்மைக்குறை கூறார் எனத் தலைவி எண்ணுகிறாள். பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவி கனவு செய்யும் நன்மையை, உதவியை உணர்ந்து போற்றுகிறாள்: காதலர் தூதொடு வந்த கனவினை! நன்றியுணர்வோடு நினைவு கூர்கிறாள். கனவினால் காண்டலின் உண்டு என் உயிர் என்று தான் பிரிவாற்றி உயிர் வாழ்ந்திருப்பதற்கான காரணத்தைக் கூறுகிறாள். கனவில் காதலரைக் காண்பது அவளுக்கு இனிய அனுபவமாக இருக்கின்றது. நனவு என ஒன்று இல்லையாயின் கனவினால் காதலர் நீங்கலர் என்று கூறுகின்றாள். காதலர் ஒரு போதும் நனவில் வந்து அருள் செய்யாமல், நாள்தோறும் கனவில் வருவதே அவள் உள்ளத்தை வருத்துகின்றது. காதலர் தூதொடு வந்தது கனவு கனவினுக்கு விருந்து செய்வேன் கண் துஞ்சின் கலந்தார் உயல் உண்மை சாற்றுவேன் கனவினான் காண்டலின் உண்டு உயிர் கனவினான் உண்டாகும் காமம் நனவினாற் கண்டதும் கண்ட பொழுதே இனிது கனவும் தான் கண்ட பொழுதே இனிது கனவினான் காதலர் நீங்கலர் நனவினான் நல்காக் கொடியார் துஞ்சுங்கால் தோள் மேலர் விழிக்குங்கால் நெஞ்சத்தவர் கனவினான் காதலர் காணாதவர் நோவர் கனவினான் காணார்கொல் இவ்வூரார் 123. பொழுது கண்டு இரங்கல் தலைவன் பிரிவை ஆற்றி இருத்தலாகிய முல்லைத் திணை ஒழுக்கத்தின் நிறைவு அதிகாரம் பொழுது கண்டு இரங்கலாகும். இங்கே பொழுது என்னும் சொல் மற்றைப் பொழுதுகளை நீக்கி, மாலைப் பொழுதின் வருகையால் தலைவி வருந்துவதையே உணர்த்தும். காலையிலே உடல் நரம்புகள் சுறுசுறுப்புடன் இருப்பது இயற்கை; அப்பொழுது நரம்புகள் ஒருவகை முறுக்குடன் இருக்கின்றன என்று சொல்லலாம். பகலில் உழைக்கும் உடல் உழைப்பாலும், சிந்தனை முதலிய மூளை உழைப்பாலும் நரம்புகள் சோர்வு அடைகின்றன; முறுக் கான நிலைமை மாறி நெகிழ்ந்து மென்மை அமைகின்றன. அதனால் காலையில் உள்ள இயற்கையான மனமகிழ்ச்சி மாலையில் இருப்பது இல்லை. அதற்கு ஈடு செய்வதற்காகத் தான், மாலையில் நண்பர் கூட்டம், ஆடல் பாடல், தேநீர் விருந்து, உலாவல், கண்ணிற்கு இனிய காட்சி, சுவை மிகுந்த பேச்சு முதலியவற்றை வாழ்க்கையில் அமைத்து மகிழ்கிறோம். சிலர் குடித்து மயங்குவதில் ஈடுபடுவதற்குக் காரணமும் இதுதான். மாலையில் சோர்வும் துன்பமும் உணராமல் இருப்பதற்கே அவர்கள் மயக்கப் பொருளை நாடுகிறார்கள். இவ்வகையான பொழுது போக்கு இல்லையானால், மாலைக் காலம் ஒருவகைச் சோர்வான காலமாகவே உணரப்படும். இந்த உண்மை மற்றக் காலங்களில் தெரிவதைவிட ஒருவருடைய வாழ்வில் துன்பம் நேரும் போது நன்றாகப் புலப்படுகிறது. தனித்திருந்து தானே அடைய வேண்டிய துயரம் நேரும் போது மனம் நண்பர் கூட்டத்தையோ, ஆடல்பாடல் களையோ, வேறு வகைப் பொழுது போக்கையோ நாடுவதில்லை. அந்தத் துயரத்திலே ஆழ்ந்து இருப்பது ஒன்றே வழி ஆகின்றது. அவ்வாறு துயரத்திற்கு ஆளானவர்களும் காலையில் வருந்து வதைவிடப் பல மடங்கு மிகுதியாக மாலையில் வருந்துகிறார்கள். இவ்வாறு துன்பம் மிகுவதற்குக் காரணம் மாலைக் காலம் என்று தோன்றும். ஆனால், உண்மைக் காரணம் மாலைக் காலம் அன்று: அப்போது உடல் நரம்புகள் உற்றிருக்கும் சோர்ந்த நிலையே காரணம் ஆகும். உடல் நரம்புகள் சுறுசுறுப்புடன் இருக்கும் போது மகிழ்ச்சி இரண்டு மூன்று மடங்கு வளர்கிறது; உடல் நரம்புகள் சோர்ந் திருக்கும் போது அந்த மகிழ்ச்சி குறைகிறது; ஆனால், துன்பமோ இரண்டு மூன்று மடங்கு பெருகுகிறது. நோயாளிகளின் மன நிலையைக் கொண்டும் இதைக் கண்டு கொள்ளலாம். எந்த நோயும் காலையில் நலிவு செய்தலை விட, மாலையில் மிகுதியாக நலியச் செய்கிறது. நோயாளியின் மனமும் அப்பொழுது பெருந்துயரம் அடைகிறது. ஆகையால், உடல் நரம்புகளின் நிலையை ஒட்டி மனநிலையும் மாறுவதை உணரலாம். காதல் நோய் உற்றவர்களின் மன நிலையும் இப்படிப் பட்டதே. பிரிந்த காதலனைப் பற்றி நினைந்து நினைந்து வருந்தும் நங்கையின் மனம், காலையில் எப்படியோ ஒருவாறு தேறி இருக்கிறது; அவளுடைய முயற்சி இல்லாமலும் துயரம் குறைந்திருக்க முடிகிறது; ஆனால், மாலையில் அந்தத் துயரம் படிப்படியாக வளர்ந்து விடுகிறது. அவள் எவ்வளவு முயன்றாலும் துயரத்தை அடக்குவது அரிது ஆகிறது; தோழி முதலானவர்கள் எவ்வளவு தேற்றினாலும் பயன் விளையாமற் போகிறது. இதற்கு உண்மையான காரணம் மாலைப் பொழுது அன்று; உடல் நரம்புகளை ஒட்டி அமையும் மனநிலையே காரணம் ஆகும். ஆனாலும் மாலைப் பொழுது தான் துயரத்தை வளர்த்து வருத்துகிறது என்று சொல்லுவதும் பாடுவதும் வழக்கம். புகை வண்டியிலே செல்லும் போது காணும் மரங்கள் எல்லாம் ஓடுவது போல் தோன்றும்; தோன்றும் தோற்றம் உண்மை அன்று என்பது நமக்குத் தெரியும். ஆனால் குழந்தை மனம் அந்த மரங்களின் ஓட்டத்தைக் கண்டு வியப்பு அடைகிறது. பூமி சூரியனைச் சுற்றி வருவதாக அறிவியல் விளக்குகிறது. ஆனால் சூரியன் பூமியைச் சுற்றி வருவதாகச் சொல்லும் கற்பனையில் அழகு உள்ளது. தோன்றும் தோற்றம் பொய்யாக இருக்கலாம்; ஆனால் அதைக் கொண்டு வளரும் கற்பனை அழகாக அமைகிறது. பொய்யின் அடிப்படையிலே வளர்ந்த கற்பனையே ஆனாலும் மெய்யான அனுபவங்களை உணர்த்தும் ஆற்றல் அதற்கு அமைந்துள்ளது. காதலனைப் பிரிந்த நங்கை ஒருத்தி, தன் துயரம் வளர்வதற்குக் காரணம் மாலைப் பொழுதுதான் என்று பழிக்கிறாள். அது பொய்தான். ஆனாலும் புலவர் அதைக் கற்பனை ஆக்கிப் பாடும் போது உண்மையான அனுபவ உணர்ச்சிகளை உணர்ந்து மகிழ்கிறோம் என முனைவர் மு.வ. அவர்கள் கூறும் விளக்கத்தை முன்னுரையாகக் கொண்டு அதிகாரத்திற்குள் நுழைவோம். -------- மாலையோ அல்லை; மணந்தார் உயிருண்ணும் வேலை நீ வாழி பொழுது! (குறள் 1221) பொழுதே! நீ மாலையோ எனின் அல்ல; மணந்தவர்களின் உயிரை உண்ணும் கடலாவாய்; நீ வாழ்வாயாக! என்பவர் புலவர் குழந்தை. பொழுதே! நீ தட்பம் உடையை அன்மையான் மாலை அல்லை; முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதோர் வேல் ஆகுவை என்கிறார் மணக்குடவர். இக்காலத்தை எம்வயின் வந்துற்ற மாலைப் பொழுதே! நீ பண்டு போலக் காலை கழிந்தால் வரும் மாலையாய் வந்தாய் அல்லை; மற்று நின்னோடு கூடினாராகிய எம்மைப் போலத் தனித்து இருந்தாரை உயிர் பருகுவது ஒரு கூற்று நீ என்கிறார் காளிங்கர். மாலையே! நீ மாலை என்னும் பொழுது அன்று. துணைவரோடு கூடி இருந்து பிரிந்த மகளிர் உயிரைக் குடிக்கும் வேல் ஆயினை! நீ வாழ்க! என்பது இரா.இளங்குமரனாரின் வாழ்வியல் உரை. துணைவர் உடன் இல்லாமையால் மாலைப் பொழுது மகிழ்ச்சி தரும் பொழுதாக இல்லை. உயிர் வாங்கும் கொலைக் கருவியாம் வேல் போல் வேதனைப்படுத்துகிறது. அதுபற்றிய கவலை மாலைப் பொழுதிற்கில்லை! ஆகவே தலைவி தம்மை வேதனைப் படுத்தும் மாலைப் பொழுதை வாழ்த்துவது போல் வசைபாடுகிறாள். கதிரவன் பரந்த உலகத்தைத் தெளிவாகக் காட்டும் தன் கதிர்களையே வாயாகக் கொண்டு வெளிப்படுத்திய பகல் நேரத்தை அதே வாயினால் விழுங்கியது போல ஒடுக்கிக் கொண்டு மலையில் மறைய, அதனால், சக்கரப் படையை உடைய திருமாலின் நிறம் போலக் கரிய இருள் இயல்பாகப் படர அதனைத் தனது நிலவு ஒளியால் புறங்காண்பது போல அழகிய திங்கள் வானவீதியில் தோன்றிற்று. மகளிர் தம் கணவரைக் கூடித் துயில் பெற்ற கண்கள் போலத் தண்டுகளோடு கூடிய தாமரைப் பூக்கள் குவிந்தன. தமது புகழைப் பிறர் கூறக் கேட்ட சான்றோர் போல மரங்கள் தலை சாய்த்து உறங்கின. பிரிந்த மகளிரை நகையாடுவது போலப் புதர்கள் மொட்டு அவிழ்ந்த பூக்களை உடையவை ஆயின. அம்மகளிரை வருத்தும் புல்லாங்குழல் இசைபோல வண்டுகள் ஓசை எழுப்பின. பறவைகள் தமது குஞ்சுகளை நினைந்து கூட்டுக்குத் திரும்பின. பசுக்கள் தம் கன்றுகளைக் காணும் வேட்கையோடு மன்றில் புகுந்து நிறைந்தன. காடுகளில் விலங்குகள் தத்தம் மறைவிடங்களில் ஒடுங்கின. அந்தணர் மறைமொழி ஓதி அந்திக் காலத்தை வரவேற்றனர். மகளிர் விளக்கில் செஞ்சுடர் பொருந்தி ஒளி ஏற்றினர். இவ்வாறாக இருளோடு கூடிய மாலை பலவகையான ஒளி பெற்று வந்து சேர்ந்தது. கணவரைப் பிரிந்த மகளிரது உயிரை வாங்கும் கொடிய காலம் என்று இதனை அறியாமல், அறிவு மயங்கியோர் காலங்களில் இதுவும் ஒன்று என்று கூறி மகிழ்கின்றனரே. எனும் பொருள் புலப்படுமாறு நல்லந்துவனார் பாடிய நெய்தற் கலி-கீழ்க்காணும் சங்கப் பாடல் தக்க மேற்கோளாகும். அகன் ஞாலம் விளக்கும் தன் பல்கதிர் வாயாகப் பகல் நுங்கி யதுபோலப் படுசுடர் கல்சேர இகல் மிகு நேமியோன் நிறம் போல இருள் இவர நிலவுக் காண்பதுபோல அணிமதி ஏர்தரக் கண்பாயல் பெற்றபோல் கணைக்கால மலர் கூம்பத் தம்புகழ் கேட்டார்போல் தலைசாய்த்து மரம் துஞ்ச, முறுவல்கொள் பவைபோல முகை அவிழ்பு புதல்நந்தச் சிறுவெதிர்ங் குழல்போலச் சுரும்பு இமிர்ந்து இம் எனப் பறவைதம் பார்ப்பு உள்ளக் கறவைதம் பதிவயின் கன்று அமர் விருப்பொடு மன்றுநிறை புகுதர மாவதி சேர மாலை வாள்கொள் அந்தி அந்தணர் எதிர்கொள் அயர்ந்து செந்தீச் செவ்வழல் தொடங்க வந்ததை வால் இழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும் காலை யாவது அறியார் மாலை என்மனார் மயங்கி யோரோ மாலை உயிருண்ணும் வேலை ----------- புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை (குறள் 1222) மனம் தனக்கு என்று ஒரு நிலையான போக்கு இல்லாதது. இப்போது ஒரு பொருளைப் பற்றி ஒரு வகையாக எண்ணும் சில நொடிப் பொழுது கழிந்தவுடன், இதே மனம் இதே பொருளைப் பற்றி வேறொரு வகையாக எண்ணும். அடிக்கடி மாறுவது மனத்தின் இயற்கை. அறிவின் திட்பம் உடையவர்க்கே மனம் அடங்கி ஒரு நெறிப்பட்டு நிற்கும். காதலர் உணர்ச்சி வயப்பட்டவர் ஆதலால், அவர்களின் மனம், ஒரு நெறியில் நிற்காமல் மாறி மாறி அலைவது இயற்கையாகும். காதலனைப் பிரிந்து வருந்தும் நங்கை தன்னை ஒரு பக்கம் வைத்து உலகை ஒரு புறம் பார்க்கிறாள். ஒரு சமயம், இந்த உலகமும் தன்னைப் போல் துயரப்படுவதாக உணர்ந்து உருகுகிறாள். மற்றொரு சமயம் உலகம் தன் துயரத்திற்குக் காரணமாக இருப்பதாக எண்ணி நோகிறாள். இங்கே, இவளுடைய பிரிவாற்றாமை மாலைப் பொழுதில் மலர்கின்ற துயரமாக இருப்பதால் அந்த மாலைப் பொழுதையே எண்ணிப் பார்க்கின்றாள். மாலை நேரத்தில் ஒளி குறைந்துள்ள காட்சி, இருந்த அழகை இழந்துவிட்டு வருந்தும் காட்சி போல் தோன்றுகிறது. பகலெல்லாம் பறவை விலங்குகளின் வாழ்க்கையிலும், மக்களின் வாழ்க்கையிலும் இருந்து வந்த ஆரவாரமும் மகிழ்ச்சியும் விரைவான போக்கு வரவும் பரபரப்பும் மாறி, அமைதியும் அடக்கமும் ஓய்தலும் ஒடுங்குதலும் இருப்பதையும் காண்கிறாள். உலகம் ஏதோ ஒரு வகையாக மாறிவிட்டது போல் அவள் உணர்கிறாள். இத்தனை நாளாக இருந்து வந்தது போல் இராமல், இன்றைய மாலையில் உலகமும் தன்னைப் போல் வாடி வருந்துவதாக உணர்கிறாள். இத்தனை நாளாக உலகம் மாலை வேளையில் அடங்கி ஒடுங்கி அமைதியாய் ஓய்ந்து வந்திருக்கின்றது. ஆனால், இவள் அதை உணராத காரணம் என்ன? அப்பொதெல்லாம் இவளுடைய மனத்தில் துயரம் இல்லாமல், மகிழ்ச்சி இருந்து வந்தது. அதனால் இவள் இத்தனை நாளாக மாலைப் பொழுது பொலிவு இல்லாமல் விளங்குவதை உணரவில்லை. தலைவலி இன்னது என்று அறியாத ஒருவன், உலகத்தில் தலைவலி பரவி இருப்பதை நன்றாக உணரமாட்டான். அவனுக்கு ஒரு நாள் கடுமையான தலைவலி வந்தால் தான் தலைவலி பொல்லாதது என்பான். தலைவலி வந்தவர்களோடு பேசுவான். உலகத்தில் தன்னைப்போல் பலரும் தலைவலியால் வருந்துவதை உணர்வான். அப்பாடா! எந்த நோய் வந்தாலும் வரலாம். தலைவலி வரக் கூடாது. இதற்கு ஒரு நல்ல மருந்து கண்டுபிடிக்கக் கூடாதா? தலைவலியால் எத்தனை மக்கள் வருந்து கிறார்கள். உலகமெல்லாம் தலைவலி இருப்பதாகத் தெரிகிறதே என்பான். இது போலவே, ஒரு துன்பத்தைப் பட்டறிந்த பிறகே, அந்தத் துன்பம் உலகெல்லாம் இருப்பதாக உணர முடிகிறது. இந்த நங்கையும் அப்படித் தான் மாலைப்பொழுது பொலிவற்றது என்ற உண்மையைத் தன் வாழ்க்கை அனுபவத்திற்குப் பிறகு உணர்கிறாள். இவளுக்கு இப்போது தன்னுடைய உடலின் வாட்டமும் வருத்தமும் நினைவுக்கு வருகின்றன. நான் வாடி வருந்தக் காரணம் உண்டு. காதலர் கல்மனத்தோடு என்னை விட்டுப் பிரிந்தார். அதனால் நான்வாடி வருந்துகிறேன். இந்த மாலைப் பொழுதும் என்னைப் போலவே வாடி வருந்தியுள்ளதே இதற்குக் காரணம் என்ன? இந்த மாலைப் பொழுதும் என்னைப் போல் ஒருவரைத் துணையாக நம்பி வாழ்ந்து வந்ததோ? அந்தத் துணை பிறகு கைவிட்டுப் பிரிந்து போனதோ? என் துணைபோல் இதன் துணையும் வன்னெஞ்சம் உடையதோ என்கிறாள். புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை (குறள் 1222) புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணே போல் துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால் என்னும் சிலப்பதிகாரக் கானல்வரிப் பாடல்வரி ஏற்ற மேற்கோளாகும். சுக்கிரீவன் இராம இலக்குவர்க்கு வைத்த விருந்தில் பெண்கள் யாரும் பரிமாறலில் கலந்து கொள்ளாத நிலையைக் கண்ட இராமன் சுக்கிரீவனிடம்:- பொருந்து நன்மனைக்கு உரிய பூவையைப் பிரிந்துளாய் கொல்லோ நீயும் பின்? என்றான் என்னும் கம்பன் பாட்டும் அதே நோக்கில் மலர்ந்த தாகும். கடும்பகல், ஞாயிறே! எல்லாக் கதிரும் பரப்பிப் பகலொடு செல்லாது நின்றீயல் வேண்டுவல், நீ செல்லின் புல்லென மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக் கொல்லாது போதல் அரிதால்; அதனொடுயான் செல்லாது நிற்றல் இலேன் என்னும் நல்லந்துவனாரின் நெய்தற் கலிப் பாடல் வரிகள் ஒரு வழி ஒப்புமை உடையதாகும். பிரிவிடை ஆற்றாள் எனக்கவன்ற தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்னும் கருத்துத் தோன்றுமாறு மாமிலாடன் பாடிய குறுந்தொகைப் பாடல், ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து எருவின் நுண் தாது குடைவன ஆடி இல்இறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும் புலம்பும் இன்று கொல் தோழி அவர் சென்ற நாட்டே? என்னும் பாடலின் தெளிவுரை:- தோழீ! ஆம்பலின் வாடிய பூவைப் போன்ற குவிந்த சிறகை யுடையதாய் வீடுகளில் தங்கும் ஊர்க்குருவி, வீட்டின் முற்றத்தில் உலரப் போட்டிருக்கும் தானியங்களைத் தின்று, பசுக்கள் கட்டியிருக்கும் தொழு வத்தில் உள்ள எருவின் நுண்ணிய பொடிகளைக் குடைந்து விளையாடி, வீட்டின் இறப்பிலே உள்ள தனது கூட்டின் கண்ணே, தன் குஞ்சுகளுடன் தங்கியிருக்கும் படியான பிரிந்தார்க்குத் துன்பம் தரும் மாலைப் பொழுதும் தனிமைத் துயரும், நம் தலைவர் சென்றுள்ள நாட்டிலும் இல்லாது போகுமோ? இருக்கும் அவற்றைக் கண்டு, அன்பு மீதூரப் பெற்று அவர் திரும்புவார் என்பது தலைவியின் நம்பிக்கை ஆகும். இதனையும் மேற் கோளாய்க் கொள்வோம். மாலையே உன் துணையும் வன் கண்ணதோ --------- ஆற்ற வேண்டும் என்ற தோழிக்குத் தலைவி சொல்லியது. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் (குறள் 1223) என் காதலர் என்னோடு இருக்கும் போது என்முன் நடுக்கம் அடைந்து ஒளி குன்றி வந்த மாலைப் பொழுது, நான் என் காதலரைப் பிரிந்திருக்கின்ற இப்பொழுது எனக்கு என் துணைவர் மேல் வெறுப்பை உண்டாக்கி, என் துன்பம் மேலும் மேலும் பெருகுமாறு வருவதாயிற்று. தலைவர் உடன் இருக்கும் போது நெருங்க அஞ்சிய மாலைப் பொழுது அவர் உடன் இல்லாத போது பெரும்பாடு படுத்துவதாக எண்ணித் தோழியிடம் உரைக்கிறாள். காதலர் இல்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும் (குறள் 1224) காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்க்க வந்த மாலைப் பொழுது; காதலர் உடன் இல்லாத இப்பொழுது கொலைக் களத்தின் கண் கொலைஞர் வருவது போல் அல்லவா வருகின்றது. காதலர் உள்ள பொழுது இன்பம் செய்த மாலைப் பொழுது, இப்பொழுது தனக்குத் துன்பம் செய்வதாக உணர்கிறாள். ஓர் எயிற்றை உடையதொரு பெரும்பேய், உலகத்தை விழுங்கும்படி வாயை அங்காந்து நின்றாற் போல இம்மாலை, திங்களாகிய எயிறு நிழல் உமிழ்ந்து இலங்கச் செக்கர் வானாகிய வாயை அங்காந்து என்னை இன்றே விழுங்குதற்கு வந்துற்றது அல்லவோ, இனி என் ஆவி இதன் கண்ணதோ என் கண்ணதோ? அறிகிலேன் என்றாள். என்னும் பொருள் அமைந்த சீவகசிந்தாமணி, கனக மாலையர் இலம்பகப் பாடல் தக்க மேற்கோளாகும் பாடல் வருமாறு:- ஒன்றே எயிற்ற ஒரு பெரும் பேய், உலகம் விழுங்க அங்காந்து நின்றாற் போல நிழல் உமிழ்ந்து நெடு வெண் திங்கள் எயிறிலங்க இன்றே குருதி வானவாய் அங்காந்து என்னை விழுங்குவான் அன்றே வந்த திம்மாலை அளியேன் அளியாதாங்கொல்! மிதிலைக் காட்சிப் படலத்தில் மாலைப் பொழுதில் சீதையின் புலம்பலில் ஒன்று வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர் தமைக் காணேன், எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருளூடே ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இம்மாயம் உரைத்தாரோ? அளியென் செய்த தீவினையோ! அன்றில் ஆகி வந்தாயோ! என்னும் கம்பன் பாட்டும் தக்க மேற்கோளாகும். ---------- காலைக்குச் செய்தநன் றென்கொல்? எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை (குறள் 1225) யான் தலைவரோடு கூடி இருந்த காலங்களில் காலை மற்றும் மாலைப் பொழுது துன்பம் செய்யா இன்பப் பொழுதாகவே கழிந்தது. ஆனால் தலைவரைப் பிரிந்து வாழும் இப்பொழுது காலைப்பொழுது இன்பப் பொழுதாக உள்ளது என்று சொல்ல இயலாது எனினும் அப்பொழுது துன்ப உணர்வு இன்றி இயல்பாய்க் கழிகிறது. ஆனால் மாலைப் பொழுது துன்பந்தரும் பொழுதாகவே அமைந்து விட்டது. காலைப் பொழுதின் மீது நட்புணர்வு பூண்டு அதற்கு நான் எந்த நன்மையும் செய்யவும் இல்லை. அதுபோல் மாலைப் பொழுதின் மீது பகைமை பாராட்டி அதற்கு நான் எந்தத்தீமையும் செய்ய எண்ணவும் இல்லை. எனினும் காலை என்னிடம் நடந்து கொள்வது போல் மாலை நடந்து கொள்ளவில்லையே அதற்கு ஒரு தீங்கும் செய்யா என்னிடம் இப்படி நடந்து கொள்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. காலைப் பொழுது போல் மாலைப் பொழுதும் துன்பம் தராது இயல்பாய் நடந்து கொண்டால் நல்லது என நினைக்கும் நினைவின் வெளிப்பாடே இக்குறளாகும். மை வான் நிறத்து, மீன் எயிற்று வாடை உயிர்ப்பின், வளர்செக்கர்ப் பைவாய் அந்திப் படஅரவே! என்னை வளைத்துப் பகைத்தியால் எய்வான் ஒருவன் கை ஓயான் உயிரும் ஒன்றே; இனிஇல்லை; உய்வான் உற, இப்பழி பூண உன்னோடு எனக்குப் பகை உண்டோ? என்னும் இப்பாடல் மாலைப் பொழுது வந்துற்ற போது சீதை புலம்பிய புலம்பல்களில் ஒன்றாகும். இஃது குறளுக்கு மேற்கோளாயும் விளங்குமாப் போல் கம்பர் அமைத்துள்ளார். ----------- மாலைநோய் செய்தல், மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன் (குறள் 1226) இன்று இப்படித் துன்புறுகின்ற நீ அன்று அவர் பிரிவிற்கு உடன்பட்டது ஏன்? என வினவிய தோழிக்குத் தலைவி விடை அளிக்கும் பாங்கில் அமைந்த குறள் இதுவாகும். காதலரோடு நான் இணைந்து இருக்கின்ற பொழுது வந்த மாலைப் பொழுதுகள் இன்பம் செய்தனவே அன்றித் துன்பம் செய்தனவல்ல. அன்றே அது தன் குணத்தைக் காட்டி இருப்பின் நான் அவர் பிரிந்து செல்வதற்கு உடன்பாடு தெரிவித்திருக்க மாட்டேன் அவர் பிரிந்து சென்ற பின்னர் வந்த மாலைப் பொழுதே துன்பம் செய்வதை இப்போதுதான் அறிந்து கொண்டேன். மாலைப் பொழுதைப் பற்றிய புரிதல் அவர் பிரிந்த பின்னர் ஏற்பட்டதாகக் கூறுகிறாள். தலைவன் பிரிந்த காலத்தில் அப்பிரிவினால் உண்டாகிய துன்பத்தைத் தாங்க இயலாத தலைவி, தன் ஆருயிர்த் தோழிக்குத் தன் மன வருத்தத்தைக் கூறும் பாங்கில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய குறுந்தொகைப் பாடல்; நெடுநீர் ஆம்பல் அடைப்புறத் தன்ன கொடு மென் சிறைய கூர் உகிர்ப் பறவை அகல் இலைப் பலவின் சாரல் முன்னிப் பகல் உறை முதுமரம் புலம்பப் போகும் சிறுபுன்மாலை உண்மை அறிவேன் தோழி அவர் காணா ஊங்கே என்பதாகும். அதன் பொருள்: தோழி! ஆழமான நீரில் நிற்கும் ஆம்பல் இலையின் புறப்பக்கத்தைப் போல வளைந்த மெல்லிய சிறகை உடையன வாகிய கூர்மையான நகங்களை உடைய வௌவால்கள், அகன்ற இலைகளை உடைய பலா மரங்கள் உள்ள மலைப் பக்கத்தை நோக்கிப் பகலில் அவை தங்கி இருந்த பழைய மரங்கள் புலம்ப அங்கிருந்து பறந்து செல்லும் சிறிய புல்லிய மாலைப் பொழுது எனும் ஒன்று உள்ளதை அவரைப் பிரிந்துள்ள காலத்தில் மட்டுமே உணர்வேன். உடன் இருக்கும் போது காலத்தைப் பற்றிய நினைவே எழுவதில்லை. எல்லாப் பொழுதும் இன்பப் பொழுதே! அதிலும் மாலை மகிழ்விப்பதில் முன்நிற்கும். என்னும் இக்குறுந் தொகைப் பாடல் திருக்குறளுக்கு அருமையான விளக்கமாய் அமைந்துள்ளது. ------- மாலைப் பொழுதில் மட்டும் இத்தன்மை உடையவளாய் ஆவதற்குக் காரணம் என்ன என்று வினவிய தோழிக்குத் தலைவி உரைக்கும் பாங்கில் அமைந்த குறளே, காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய் (குறள் 1227) இக்காதல் நோய் திடிரென மாலையில் வெளிப்பட்டுத் துன்புறுத்துவது அன்று. காதல் மலர் போன்று வளரும் தன்மை உடையது. காதலாகிய மலர் ஒவ்வொரு நாளும் காலைப்பொழுதில் அரும்புபோல் தோன்றிப் பகற் பொழுதெல்லாம் மொட்டுப் போல் திரண்டு மாலைப் பொழுதில் மலர் போல் விரிகின்றது. இஃது தலைவர் உடன் இருக்கையில் இன்பம் தரும் மலராய் மணக்கும் தலைவர் பிரிந்து சென்ற காலங்களில் நோயாய்த் துன்பம் தரும். துன்பத்தின் எல்லையையும் இன்பத்தின் எல்லையையும் எட்டும் பொழுது மாலைப் பொழுதாகும். பருவத்தால் அரும்பிப் போதாய்ப் பையவே அலர்ந்து முற்றி மருவித்தேங் கனிகொண் டுள்ளான் என்னும் சூளாமணிப் பாடல் வரிகளும் காலை அரும்பிப் பகலெல்லாம் போதாய் இருந்த காமமலர் மாலை மலர்ந்து பொறாமல் ஒரு மாய நாம மணிவல்லி முலை இருந்து புறம் போந்து விரிவென் நிலாமென் முற்றத்தில் பீலி மஞ்ஞை என வீழ்ந்து மத நோய் மிகவாய்ப் பிதற்றுமால்! என்னும் பிரபுலிங்கலீலைப் பாடல் தக்க விளக்கமாகும். ---------- அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை (குறள் 1228) காதலருடன் கூடியிருந்தபோது இனிதாக இருந்த ஆயன் ஊதும் புல்லாங்குழல் அவர் பிரிந்துள்ள இப்போது நெருப்பைப் போல சுடுகின்ற மாலைப் பொழுதிற்குத் தூதாக வந்து பின் என்னைக் கொல்லும் ஆயுத மாகவும் இருக்கின்றது என்கிறாள் தலைவி. காலையில் கதிரவன் தன் கதிர் மண்டலம் பரப்பி மாலை நேரத்தில் மலையில் மறைந்தனன்; பறவைகள் தம் குஞ்சுகள் இருக்கும் கூட்டில் அடைந்தன; காட்டில் ஆண் மான் பெண் மானைத் தழுவி நின்றது. முல்லை மலர் பூத்தது; காந்தள், புதரில் விளக்குப் போல மலர்ந்தது. காளையும் பசுவும் ஒன்றனின் ஒன்று தழுவி, எழுந்த மணியோசை கோவலர் இசைக்கும் குழலிசையோடு இழைந்து குழைந்தது. இத்தகைய சூழல் நம் தலைவர் சென்ற ஊரிலும் ஏற்படுமாயின் கட்டாயம் தலைவர் திரும்பி வந்திருப்பார். மேற்குறிப்பிட்ட கார்கால நிகழ்வுகள் அங்கு ஏற்படவில்லை போலும் என்றனள் தலைவி என்பது சேதம் பூதனார் பாடிய நற்றிணைப் பாடலின் தெளிவுரையாகும். பல்கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றிச் சேய் உயர் பெருவரை சென்று அவண் மறையப் பறவை பார்ப்புவயின் அடையப் புறவின் மாயெருத்து இரலை மடப்பிணை தழுவ முல்லை முகைவாய் திறப்பப் பல்வயின் தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ மதர்வை நல்லான் மாசில் தெண் மணி கொடுங்கோற் கோவலர் குழலோடு ஒன்றி ஐதுவந்து இசைக்கும் அருளில் மாலை ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் இனைய ஆகித் தோன்றின் வினைவலித்து அமைதல் ஆற்றலர் மன்னே என்னும் நற்றிணைப் பாடலை ஒருவழி மேற்கோளாய்க் கொள்ளலாம். --------- பதிமருண்டு பைதல் உழக்கும், மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து (குறள் 1229) மாலைப் பொழுது தன்னை வருத்துவதாகக் கருதி அதன் மீது வெறுப்புற்றவள். பின்னர்த் தன்னைப் போலவே மாலைப் பொழுதும் வருந்துவதாக எண்ணி அதனிடம் இரக்கம் கொண்டாள். அத்துடன் அமையாது இப்பொழுது தான் வாழும் ஊரை நோக்கியும் இரக்கம் கொள்கிறாள். ஊராரின் வாழ்வில் ஒருவகை மயக்கம் இருப்பதாக உணர் கிறாள். அவர்கள் அனைவரும் பகலில் இருந்தது போல் இப்போது இல்லை. என்ன காரணத்தாலோ மயங்கித் துன்புறுவது போல் தோன்றுகிறார்கள். மாலைப் பொழுது வந்து படரும் போது எனக்குத்தான் அறிவு மயங்குகிறதோ என எண்ணினேன். இந்த ஊரும் என்னைப் போல் மயங்கித் துன்பத்தால் வருந்துகிறதே என வருந்துகிறாள். பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர் (குறள் 1230) நேரம் சிறிது கழிகிறது. நங்கையின் அறிவு தெளிகிறது. தன் துயரத்தின் உண்மையான காரணம் தெரிகிறது. காதலன் பொருள் தேட வேண்டும் என்று நாட்டை விட்டுப் பிரிந்து சென்ற முயற்சியே தன் துயரத்திற்குக் காரணம். இவ்வாறு தன்னைத் துன்பத்திற்கு ஆளாக்கிப் பொருளைத் தேடிச் சென்றவர் எவரோ அவரையே நாடுகின்றது மனம். அதனால் மயங்கி வரும் மாலைப் பொழுதில் உயிர் வாடி வருந்துகின்றது. அந்தக் காதலன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து போன அன்றே இந்த உயிர் துன்பம் தாங்க முடியாமல் மாய்ந்திருக்க வேண்டும். அப்போது மாயாத உயிர். இப்போது இந்த மாலைக் காலத்தில் மாயும் போல் தோன்றுகிறது என உணர்கிறாள். -------- மாலை மணந்தார் உயிருண்ணும் வேல் எம்கேள்போல் வன்கண்ணதோ நின்துணை மாலை துனி அரும்பித் துன்பம் வளர வரும் மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும் காலைக்குச் செய்த நன்று என்? மாலைக்குச் செய்த பகை என்? மணந்தார் அகலாத காலை அறிந்திலேன் மாலை மலரும் நோய் காலை அரும்பு; பகல்போது; மாலை மலர் மாலைக்கு அழல் போலும் தூது மாலை குழல் போல் கொல்லும் படை மாலை அழல்; கொல்லும் படை பதி மருண்டு பைதல் உழக்கும் மாயா உயிர் மருள் மாலை மாயும் ------------------- 124. உறுப்பு நலன் அழிதல் 124 உறுப்பு நலன் அழிதல் அதிகாரம் முதல் 128. குறிப் பறிவுறுத்தல் ஈறாக அமைந்துள்ள ஐந்து அதிகாரங்களும் நெய்தல் திணையின் உரிப் பொருளாகிய இரங்கல் ஒழுக்கம் உணர்த்துவன வாகும். உறுப்பு நலன் அழிதலாவது தலைமகளது கண்ணும் தோளும் நுதலும் முதலாய உறுப்புகள் நலன் அழிந்தமை கூறுதல். காதன் மிக்கு இரங்குவாள் அக்காதலை அயலார் அறியாமல் அடக்கின காலத்து, வெம்மையுற்ற கொடி போல அனைத்து உறுப்பும் வாடுதலான் இது பொழுது கண்டு இரங்கலின் பின் கூறப்பட்டது என்பது மணக் குடவர் கருத்து. இதனை ஒட்டியே பரிமேலழகரும் இஃது, இரக்கம் மிக்குழி நிகழ்வது என்கிறார். 117, படர் மெலிந்திரங்கல், 118, கண் விதுப்பழிதல், 119, பசப்புறு பருவரல் என்னும் முன்னைய அதிகாரங்களில் தலைவியின் மெலிவையும், அவளது கண்களின் வருத்தத்தையும், மேனியின் பசலையையும் கூறிய ஆசிரியர் இவ்வதிகாரத்தில் தலைவியின் கண், தோள், நுதல் ஆகிய உறுப்புகள் நலன் அழிதலைச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார். பசந்து பனிவாரும் தொழிலால் கண்ணின் அழகு அழிந்தமையை நான்கு பாடல்களில் (1,2,9,10) கூறியுள்ளார். தலைவியின் தோள் நலம் கெட்டமையை ஐந்து பாடல்களிலும் (3,4,5,6,7) நுதல் பசந்து அழகு அழிந்தமையை ஒரு பாடலிலும் (8) அவர் பாடியுள்ளார். இங்ஙனமாக கண், நுதல், தோள் என மூன்று உறுப்புகளின் நலன் அழிவு கூறுவதால் ஆசிரியர் பொதுவாக உறுப்பு நலன் அழிதல் என்று இவ்வதிகாரத்திற்குப் பெயர் இட்டனர் என்பர் மு.சண்முகம் பிள்ளை. இவ்வதிகாரத்தின் இரண்டு பாடல்களில் (9,10) ஆசிரியர் சிறு சிறு அடைகளைக் கையாண்டு தலைமகளது உறுப்பு நலனைப் புலப்படுத்தி யுள்ளார். ஒன்பதாவது பாடலில் பெருமழைக் கண் எனக் கண்ணின் அழகையும், பத்தாவது பாடலில் ஒண்ணுதல் என நுதலின் அழகையும் போற்றிப் பாடியுள்ளார். இவ்வதிகாரத்தில் முதல் ஐந்து பாடல்கள் தோழியின் கூற்றாகவும், அடுத்த இரண்டு பாடல்கள் தலைவியின் கூற்றாகவும் இறுதி மூன்று பாடல்கள் தலைவன் கூற்றாகவும் அமைந்துள்ளன. உறுப்பு நலன் அழிதல் அதிகாரக் குறள்களை ஆராய்வதற்கு முன் (112) நலம் புனைந்துரைத்தல் அதிகாரக் குறள்களை மனத்தகத்தே கொள்வோம். நன்னீரை வாழி அனிச்சமே; நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் (குறள் 1111) மலர்காணின் மையாத்தி நெஞ்சே, இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று (குறள் 1112) முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு (குறள் 1113) காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ஒவ்வேம் என்று (குறள் 1114) அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (குறள் 1115) மதியும் மடந்தை முகனும் அறியாப் பதியிற் கலங்கிய மீன் (குறள் 1116) அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து (குறள் 1117) மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி (குறள் 1118) மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி (குறள் 1119) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் (குறள் 1120) எனும் குறள்களை நினைவில் கொண்டு உறுப்பு நலன் அழிதல் அதிகாரக் குறள்களை வரிசையாகக் காண்போம். -------------- சிறுமை நமக்கொழியச் சேண்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் (குறள் 1231) ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. பிரிவாற்றாமையாகிய இத்துன்பம் நம்மிடத்தே நிற்க, நெடுந்தொலை வில் சென்ற காதலரை நீ நினைந்து அழுதமையால் உன் கண்கள் ஒளி இழந்தன. அதனால் முன்னே உன் கண்களுக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று அக்கண்கள் நாணிவிட்டன என்றாள். சிறுமை - ஆற்றாமையாகிய துன்பம்; சேண் சென்றார் - நெடுந்தூரம் சென்றவர்; உள்ளி - எண்ணி. தலைவியின் கண்கள் பேரழகு வாய்ந்தனவாக விளங்கியனதான். ஆனால் தலைவி, தலைவன் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாது கண்ணீர் விட்டு அழுததாலும் தன்னைப் பேணிக் கொள்ளாமையாலும் அவள் கண் அழகு குன்றியமை கண்டு தோழி புலம்புகிறாள். --------- நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண் (குறள் 1232) தன்னை நெருங்கியதன் வடிவத்தையும் வண்ணத்தையும் தெளிவாகக் காட்டும் கண்ணாடி போல், நெஞ்சத்தில் மிகுந்து தோன்றும் உணர்வை முகம் வெளிப்படக் காட்டும் என்பதைக் குறிப்பறிதல் அதிகாரத்தில் அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் (குறள் 706) எனக் கூறியுள்ளதையும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் பழமொழியும் உணர்த்தும் உண்மை. மனத்தில் இருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் முகம் தெளி வாகக் காட்டுவதுபோல் துன்பத்தையும் கவலையையும் தெளிவாக முகம் காட்டி விடும். மணம் முடித்து மகிழ்ச்சியோடு வாழ்ந்த போதும் தலைவியைக் கண்டவர்கள் இன்று தலைவி உடல் அழகு குன்றி, ஒப்பனையும் இன்றி, கண்ணீர் வழியும் கண்களோடு இருப்பதைக் கண்டாலே அவளிடமோ நெருங்கி இருப்பவர்களிடமோ எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லாமல் தலைவரின் அன்புப் பிணைப்பு இல்லாமல் இருக்கிறாள் என்பதை எவரும் எளிதில் அறிந்து கொள்ளுமாறு அவள் கண்ணீர் கண்களே அறிவித்துவிடும். ஆகவே, நீ உன் துன்பத்தை அடக்கிக் கொள்ளுவதே! நல்லது எனத் தோழி வேண்டுகிறாள். ----------- தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் (குறள் 1233) நிறம் மாறிக் கண்ணீர் வடிக்கும் கண்களைக் கண்டவர்கள் தலைவரைப் பிரிந்து வருந்துவதைத் தெரிந்து கொண்டு ஒரு விதமாகப் பார்க்கிறார்களே ஆகவே, பிறர் அறியுமாறு அழக்கூடாது எனக் கட்டுப் படுத்திக் கொண்டாள் எனினும் மணந்து தலைவனோடு இணைந்து வாழ்ந்த காலத்தில் பருத்து அழகுடன் விளங்கிய தோள்களைக் கண்டவர்கள் இப்பொழுது அழகு குன்றி மெலி வடைந்துள்ள தோள்களைக் கண்ட மாத்திரத்தில் உன் தலைவர் உன்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டனர். யாரும் உன் தலைவர் பிரிந்து சென்ற செய்தியைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதவாறு உன் மெலிந்த தோள்களே அறிவித்து விடுகின்றன. ஆகவே, பிரிவுச் செய்தி பிறர்க்குத் தெரியக் கூடாது என்று கருதினால் உன் தோள்கள் மெலிய விடாதவாறும் நீ பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தோழி, தலைவியை வேண்டுகிறாள். தோழி! பழைமையான நீரை உடைய கடலின் அலைகள் வந்து மோதி விளையாடும் பறவைகள் ஒலிக்கும் கடற்கரைச் சோலையில் கொத்தாக மலரும் புன்னை மரங்கள் உள்ள மேட்டு மணல் நிழலில் முதன் முதல் இருவரும் கூடி மகிழும் குறி வாய்த்த பொழுது, கடற்கரைத் தலைவனைக் கண்டன எம் கண்களே! அதில் ஐயம் இல்லை. ஆனால் அவன் கூடினால் மாட்சி மிக்க அழகை அடைந்து, பின்பு அவன் பிரிந்தால் மெலிந்து நெகிழ் பவை எம் அகன்ற மெல்லிய தோள்கள் ஆயின. இது என்ன காரணமோ? கண்டது கண், கேட்டது செவி ஆனால் தண்டனை அனுபவிப்பது தோள்கள் ஆயின ஏன்? என்னும் இது தலைவன் தன்னைப் பிரிதலாகாது என்பதை இது மற்று எவனோ தோழி! முதுநீர்ப் புணரி திளைக்கும் புள் இமிழ் கானல் இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல் புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற் கண்டன மன்எம் கண்ணே: அவன் சொல் கேட்டன மன்எம் செவியே; மற்று அவன் மணப்பின் மாண்நலம் எய்தி, தணப்பின் நெகிழ்ப என் தடமென் தோளே! என வெண்மதிப் பூதியார் பாடிய குறுந்தொகைப் பாட்டு தக்க மேற்கோளாகும். ----------- பணைநீங்கிப் பைந்தொடி சோரும்; துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் (குறள் 1234) துணை நீங்கித் தொல் கவின் வாடிய தோள் துணைவர் பிரிந்து சென்றதால் அவரால் பெற்ற செயற்கை அழகையும் இயல்பாய் அமைந்த இயற்கை அழகையும் இழந்த தலைவியின் தோள்கள். பணைநீங்கிப் பைந்தொடி சோரும்-அதனோடு அமையாமல் அதற்கு மேலே தம் பெருமையையும் இழந்து மெலிவுற்றதால் முன்கையில் அணிந்திருந்த வளைகள் கழலுகின்றன. இதனைக் கண்ணுற்ற தோழிக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. தலைவியின் கைகளை மிக நெருக்கமாகப் பற்றி அழகு செய்த வளையல்கள் கழன்று வீழ்வதைக் கண்டு, தலைவர் எப்படி இருந்த தலைவியை இப்படி ஆக்கி விட்டாரே என எண்ணி வருந்துகிறாள். அன்பு கொண்டவரின் பிரிவு ஆளையே உருக்கிவிடும் என்பது தான் உண்மை என்பதை உணர்த்தும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும். ---------- கொடியார் கொடுமை உரைக்கும், தொடியொடு தொல்கவின் வாடிய தோள் (குறள் 1235) தொடியொடு தொல்கவின் வாடிய தோள், கொடியார் கொடுமை உரைக்கும். கொடியார் - தழுவும் கை சிறிது விலகினாலும் தாங்கிக் கொள்ள இயலாத தலைவிக்குக் கால நீட்டிப்பு என்னென்ன துன்பத்தை உண்டாக்கும் என்பதைச் சற்றும் எண்ணிப்பாராத கொடுமைக்காரரது; கொடுமை - கொடுமையை; உரைக்கும் - தாமே சொல்லு கின்றன; தொடி யொடு - வளையல்களும் கழன்று; தொல் கவின் வாடிய தோள் - பழைய இயற்கை அழகையும் இழந்த இத் தோள்கள், (இனி அதனை வெளியே தெரியாதவாறு எங்ஙனம் மறைக்க இயலும்) தலைவியே! வளையல்களுடன் தமது அழகையும் இழந்த உன் தோள்கள் தலைவரது அன்பு இல்லாமையைப் பிறர்க்குத் தெரிவித்து விடுகின்றன என்றாள் தோழி! ----------- தலைமகளை ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது தொடியொடு தோள்நெகிழ நோவல், அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து (குறள் 1236) தோழி! தலைவர் என்னைத் தனியே விட்டுப் பிரிந்து சென்றார். என்மீது பேரன்பு உடையவரின் பிரிவு எனக்குப் பெருந்துன்பத்தை விளைவித்து விட்டது. கைகளில் இறுக்கமாக அணிந்திருந்த என் வளையல்கள் இப்பொழுது கையில் நிற்காது சுழன்று விழுமாறு என் தோள்கள் அவ்வளவு மெலிவடைந்து விட்டன. என்று நீ கூறுவது உண்மைதான். தலைவர் காரணம் இல்லாமல் காலந்தாழ்த்த மாட்டார்; அவர் நின்ற சொல்லர், நீடு தோன்று இனியர் ஆகவே, அவரைக் கொடுமைக்காரர் என்று பழித்துக் கூறாதே! நான் எனக்குற்ற துன்பத்தைத் தாங்கிக் கொள்வேன், ஆனால் அவரைக் கொடியவர் என யாராவது கூறினால் என்னால் தாங்கிக் கொள்ள இயலாது. ஆகவே, நீ நான் வேதனைப்படுமாறு அவரைக் கொடியவர் என்று எக்காரணம் கொண்டும் கூறிவிடாதே என்ற பாங்கில் மலர்ந்த குறள் இதுவாகும். தோழி! பிளவுகளையும் குகைகளையும் உடைய மலை முழுவதும் கமழும் அசையும் கொத்துகளாக உள்ள காந்தளின் நறுமணமுள்ள தாதை ஊதுகின்ற தும்பி என்னும் வண்டு, பட மெடுத்த பாம்பு உமிழும் மணிபோலத் தோன்றும், அத்தகைய மூங்கிலை வேலியாக உடைய மலை நாட்டிற்கு உரியவனுக்கு என் வளையல்கள் நழுவின; தோள்கள் மெலிந்தன. இனி விடுவதற்கு நாணமும் உண்டோ? அது முன்பே தொலைந்தது எனும் பொருள் பயக்குமாறு ஆசிரியன் பெருங்கண்ணன் - தலைவன், தனது வீட்டின் பக்கத்தே கேட்கும் அண்மையனாக இருக்கத் தோழிக்குக் கூறுவாள் போல் தலைவி கூறுமாறு பாடிய குறுந்தொகைப் பாடல்: தொடி நெகிழ்ந் தனவே, தோள்சா யினவே, விடும் நாண் உண்டோ? தோழி! விடர் முகைச் சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் நறுந்தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி பாம்பு உமிழ் மணியின் தோன்றும் முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே இப்பாடல் ஒரு வழி மேற்கோளாய்க் கொள்ளத்தக்கதாம். கருத்தால் ஒப்பமை உடைய தெனினும் குறட்தலைவியின் பண்பாட்டை நெருங்க முடியாததாகவே அமைந்துள்ளதையும் உணர முடிகிறது. --------- தோழி, தலைவனைப் பழிப்பதைத் தாங்கிக் கொள்ள இயலாத தலைவி தன் நெஞ்சிற்குச் சொல்லியது. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோள் பூசல் உரைத்து (குறள் 1237) தலைவர் பிரிவால் தலைவி வாடினாள்: தலைவியின் மெலிந்த தோள். மெலிவுக்குக் காரணமானவரைக் கொடியவர் என்று பழி தூற்றும் நிலைமையை உண்டாக்கி விட்டது. தலைவர் விரைந்து வந்து சேர்ந்தால் தலைவியின் தோள் மெலிவு நீங்கிப் பூரிக்கும், அதனை ஊரார் கண்டால் தலைவரைப் போற்றுவர். ஆகவே தலைவரிடம் நேரில் சென்று தன்னுடைய நிலையை எடுத்துரைத்து அழைத்துவரத் தகுதியும் உரிமையும் உடையவர் யார் இருக்கிறார்? என ஆராய்ந்த தலைவி தன் நெஞ்சமே உள்ளதை உள்ளவாறு உரியவரிடம் எடுத்து மொழியும் திறன் வாய்ந்தது என்ற முடிவிற்கு வந்தவளாய் தன் நெஞ்சை வேண்டுகிறாள். நெஞ்சே! என்னைப் பிரிந்ததால்; பிறரால் கொடியவர் எனக் கூறத் தக்க நிலைக்கு ஆளான என் தலைவரிடம் நீ விரைந்து சென்று, என் தோள் மெலிவால் அவர்க்கு உண்டான பழியை எடுத்துரைத்து; அவர்க்கு நேர்ந்த பழியையும் எனக்கு நேர்ந்த மெலிவையும் போக்கி உனக்குப் பெருமையைத் தேடிக் கொள்வாயாக எனத் தன் நெஞ்சை எவர்க்கும் தெரியாதவாறு உருக்கமாக வேண்டுகிறாள். தன் நெஞ்சே தனக்குத் துணை என எண்ணும் நிலைக்கு வந்து விட்டாள். ஆம்! அகப் பொருளுக்கு அகம் தானே துணை நிற்க முடியும். ------------ வினை முடித்துத் திரும்பும் தலைமகன் முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது:- முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் (குறள் 1238) தன்னை இறுகத் தழுவிய கைகளை, இவளுக்கு நோவு தரும் என நினைத்து ஒரு நாள் யான் சிறிது தளர்த்தினேனாக! அதைக் கூடத் தாங்கிக் கொள்ள இயலாமல் பைந்தொடிகளை அணிந்த பேதையாகிய என்னவளின் நெற்றியானது நிற வேறுபாடு அடைந்தது. அத்தகைய மெல்லியளாளின் நெற்றி இவ்வளவு பிரிவுக்கு என்ன ஆகிஇருக்குமோ என அவள் நெற்றியைப் பற்றியே எண்ணத் தொடங்கிவிட்டான். வினை முடித்துத் திரும்பிவரும் தலைமகன் தனது கை விலகுத லாகிய சிறிய பிரிவினால் உண்டாகிய தலைமகளது நுதற் பசப்பைக் கருதி விரைந்து செல்ல எண்ணினான். ------------ காற்றும் நடுவே புகுதற்கு முடியாதவாறு நெருங்கித் தழுவும் தழுவுதல், ஒத்த அன்புடைய துணைவன், துணைவி ஆகிய இருவர்க்கும் இணையில்லாத இன்பமாகும் என்பதைப் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் வீழும் இருவர்க் கினிதே, வளியிடை போழப் படாஅ முயக்கு (குறள் 1108) வெளிச்சத்தின் முடிவைப் பார்த்துப் பரவுதற்குக் காத்துக் கொண் டிருக்கும் இருட்டைப் போல், துணைவன் தழுவுதலின் முடிவைப் பார்த்துப் பரவுதற்குக் காத்துக் கொண்டிருக்கும் பசப்பு நோய் துணைவரோடு தழுவிக் கிடந்தேன். சிறிதே விலகினேன், அவ் வளவுக்குள் பசலையோ அள்ளிக் கொள்ளும் படியாக நிறைந்தது என்பதைப் பசப்புறு பருவரல் அதிகாரத்தில், விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (குறள் 1186) புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு (குறள் 1187) எனச் சிறு இடைவெளியைக் கூடத் தாங்க இயலா மெல்லிய அன்புள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டியாங்கு அமைந்த குறளே முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண் (குறள் 1239) தலைவன் கூற்று;- நான் அவளைத் தழுவி நின்ற காலத்தே குளிர்ந்த காற்று இடையே நுழைந்த அந்த இடையீடும் பொறாமல் என் காதலியின் பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் வேறுபட்டன. அத்தன்மையான கண்கள், மலைகளும் காடும் நாடும் ஆய இடையீடுகளை எல்லாம் எங்ஙனம் பொறுத்தன அக்கண்கள் இப்போது எவ்வாறு ஆயினவோ என எண்ணி வருந்தினான். ------------- கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு 1240 தழுவித் தளர்ந்ததும் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிப் பசலை நிறம் அடைந்தது. அதைப் பார்த்ததும், கண்களில் பரவிய பசலை நிறமோ, தமக்கு முந்திக் கொண்ட நெற்றியை நினைந்து வருந்தியது. காதலியின் ஒளி பொருந்திய நெற்றி பசலை நிறம் உற்றதைக் கண்டு அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்தது. தலைமகன் தனது சிறிது பிரிவினால் தலைமகளது உறுப்புகள் ஒன்றின் ஒன்று முற்பட்டு நலன் அழிந்தமையை எண்ணி வருந்தினான் என்பதை உணர்த்தும் பாடலாகும். -------- நறு மலர் கண்டு நாணின கண் பசந்து பனிவாரும் கண் நயந்தவர் நல்காமை சொல்லும் கண் மணந்த நாள் வீங்கிய தோள் தணந்தமை சால அறிவிக்கும் தோள் பணை நீங்கிப் பைந்தொடி சோரும் துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் கொடியார் கொடுமை உரைக்கும் தோள் தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக் கூறாதே வாடுதோள் பூசல் உரைத்துப் பாடுபெறு நெஞ்சே! முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது நுதல் முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றது கண் ஒண்ணுதல் கண்டு கண்ணும் பருவரல் எய்தியது --------- 125. நெஞ்சொடு கிளத்தல் அஃதாவது, ஆற்றாமை மீதூரத் தனக்கோர் பற்றுக்கோடு காணாத தலைமகள் தன் நெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுதல். இஃது உறுப்புகள் தந்நலன் அழிந்த வழி நிகழ்வ தாகலின், உறுப்பு நலன் அழிதலின் பின் வைக்கப்பட்டது என்பது பரிமேலழகர் விளக்கமாகும். மணக்குடவர்:- நெஞ்சொடு கிளத்தலாவது - நெஞ்சு முன்னிலை யாகத் தலைமகள் சொல்லுதல், காதல் அடக்கல் ஆற்றாதார் பிறர்க்குச் சொல்லுவதற்கு நாணித் தன் நெஞ்சிற்குச் சொல்லி ஆற்றுதலான் அதன் பின் இது கூறப்பட்டது என்கிறார். தலைவி தன் துயரைப் பிறர்க்கு உரையாது தன் நெஞ்சிற்குக் கூறுதல். தன் நெஞ்சிற்குக் கூறுவதால் துன்பச் சுமை குறையும். நெஞ்சு என்னும் பொருள் தரும் வேறு எந்தச் சொல்லையும் பயன்படுத்தாமல் பத்துக் குறள்களிலும் நெஞ்சு இடம் பெற்று நெஞ்சில் நிற்கிறது. நெஞ்சம் என்பது மிக விந்தை ஆனது. பல வேளைகளில் நாம் அதன் போக்கின் படியே விட்டுப் பின் தொடர்கிறோம். அதனால் நாமும் நம் போக்கும் தனியே விளங்குவது இல்லை. ஆனால் சில வேளைகளில் நெஞ்சத்தின் போக்கு ஒன்றாகவும், நம்முடைய போக்கு வேறொன்றாகவும் இருக்கும். அதைத்தான் நெஞ்சப் போராட்டம், உள்ளப் போராட்டம், அகப் போராட்டம் மனப் போராட்டம் என ஏதாவது ஒரு பெயரால் சுட்டுகிறோம். ஊருக்கு இன்றைக்கே புறப்படலாம் எனத் துணியும் போது நெஞ்சம் வேண்டா எனத் தடுத்து நாளைக்குப் புறப்படச் சொல்லித் தயங்கும். ஊருக்கு நாளைக்குப் புறப்படுவோம் என்று நாம் துணிந்தால், நெஞ்சம் இன்றைக்கே புறப்படுதல் நல்லது என்று தூண்டும். ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று நெஞ்சம் விரும்பி அலையும். அந்தப் பொருளைப் பெற்று விட்ட பிறகு, நெஞ்சம் அந்தப் பொருளை மறந்து வேறு ஒன்றை நாடும். இவ்வாறு நெஞ்சம் வேறு போக்கில் நிற்பதற்கு ஒரு காரணம் கூறத் தேவையில்லை. பலூனில் ஒரு புறத்தை அழுத்தினால் மற்றொரு புறம் மேலெழுவது போன்றது இது. மூளையில் பல்வகை அனுபவங்கள் தொடர்புபட்டுப் பதிந்துள்ளன. ஒரு பகுதியில் நாம் முனைந்து நிற்கும் போது, அதற்குத் தொடர்பான மற்றொரு பகுதியின் அனுபவம் மேலெழுந்து நிற்கிறது. அதைத்தான் நமக்கும் நம்நெஞ்சத்திற்கும் போராட்டம் என்கிறோம். வேடிக்கையாகப் பார்த்தால் நம் நெஞ்சம் அடிக்கடி நமக்கு எதிர்க்கட்சி யாக அமைவதை உணரலாம். காதலர் வாழ்விலும் இத்தகைய நெஞ்சப் போராட்டத்தைக் காணலாம். காதலர் ஒன்று வேண்டும் என்று முனையும் போது நெஞ்சம் அது வேண்டா என்று தயங்கும். ஒன்றைச் சிறந்தது என்று போற்றும் போது நெஞ்சம் அதில் குற்றம் கண்டு ஒதுங்கும். இவ்வாறு எதிர்க்கட்சியாக நிற்கும் நெஞ்சத்தின் தன்மை விந்தையானது எனலாம். நெஞ்சம் சிறிய துன்பத்தைப் பெரிது படுத்தவும் செய்யும்; பெருந் துன்பத்தைச் சிறு துன்பமாகவும் கருதும். இதுவெல்லாம் வாழ்வில் வரும் போகும்; ஆகவே துன்பம் வந்தால் கவலைப் படவும் கூடாது. இன்பத்தில் வரம்பு கடவாமலும் நெஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளவும் செய்யும். துன்பத்திற்கு வடிகால் தேவை. புறவாழ்வில் ஏற்பட்ட துன்பங்களை அன்புடையவர்களிடம் கூறினால் பாரம் குறையும். காதல் வாழ்வில் ஏற்படும் துன்பத்தைப் பிறரிடம் கூற இயலாது. ஆகவே, தலைவி தன்னிலிருந்து தன்நெஞ்சை அயன்மைப்படுத்திக் கொண்டு, நெஞ்சத்திடம் கூறுவது உளவியல் நோக்கில் அமைந்த வாழ்வியல் உத்தியாகும். அந்நோக்கில் மலர்ந்த அதிகாரமே நெஞ்சொடு கிளத்தல் ஆகும். ---------- தலைமகள் தன் ஆற்றாமை தீரும் திறத்தை நாடியதே. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து (குறள் 1241) நெஞ்சே! எவ்வநோய் தீர்க்கும் மருந்து எனைத் தொன்றும், நினைத் தொன்று சொல்லாயோ? தலைவனைப் பிரிந்த தலைவி தனிமையில் வாடுகிறாள்: மாலைப் பொழுது கொலைக் களத்து ஏதிலர் போல வந்து உயிரை வதைப்பதாக உணர்கிறாள், கண்கள் கண்ணீர் உகுத்து, மாசு படிந்து பொலிவு இழந்தன, தொல் கவின் வாடிய தோளில் தொடிகளும் கழல்கின்றன; பேதையின் நுதலும் பசந்தது; ஊண், உறக்கம், உரையாடல் ஒப்பனை எதுவுமின்றி, பித்துப் பிடித்தவள் போலக் காணப்படும் தலைவியை அவள் நெஞ்சு கவலையை விட்டுக் கடமையைச் செய்ய ஏவுகிறது. தலைவி நெஞ்சே! நெஞ்சே! காதலால் வளர்ந்து ஒன்றாலும் தீராத பெரும் பிரிவுத் துன்பமாகிய இந்நோய் நீங்கத் தக்க மருந்து ஒன்றனைக் கண்டு பிடித்து எனக்குச் சொல்ல மாட்டாயா? என வேண்டுகிறாள். கன்னி மட நெஞ்சே! காம நோய், தீர்த்து வைக்கும் நல்ல மருந் தொன்றை நமக்கு நீ சொல்லாயோ? சொல்லும் மருந்தெனக்குச் சுகம் கொடுக்க மாட்டாதோ என்னும் கண்ணதாசன் விளக்கத்தையும் எண்ணிப் பார்ப்போம். -------------- காதல் அவரில ராகநீ நோவது பேதைமை வாழியஎன் நெஞ்சு (குறள் 1242) தலைவியால் பிரிவுத்துன்பத்தைத் தாங்கிக் கொள்ள இயல வில்லை. தலைவன் விரைந்து வந்து அன்பு செலுத்த வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது. பிரிந்து சென்று நாள் கடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்க்குத் தலைவியைப் போன்ற ஆர்வமும் அன்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அன்புடையவராய் இருந்தால் இதுவரை வருகை தராமல் இருக்கமாட்டார். இத்தகைய சூழலில் தலைவி தம் நெஞ்சிற்கு என் நெஞ்சே! நீ வாழ்வாயாக! காதலராகிய அவர் எம்மோடும் காதல் இல்லாதவ ராக இருக்கிறார். அத்தகையவர் நம்மைத் தேடி விரைந்து வருவார் என வீணான நம்பிக்கை கொண்டு அவரையே எண்ணி வருந்திக் கொண் டிருப்பது அறிவுடைய செயலாகத் தெரியவில்லை! அறியாமையே ஆகும் எனக் கூறி மன உணர்வை மாற்ற விரும்புகிறாள். காதல் அவரிலராக என்ற தொடருக்கு - அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கிறார் எனப் பொருள் காண்பதுடன் காதல் கொண்டவர் இங்கே இல்லாது இருக்க எனவும் பொருள் கொள்ளலாம் காதல் இல்லை காதலர் இல்லை இரண்டிற்கும் பொருந்தும். காதல் இளநெஞ்சே! காதலர்க்குக் காதல் இல்லை: நீ மட்டும் அவர் முகத்தை நினைத்துக் கிடப்பதென்ன? வாடிக் கிடப்ப தென்ன? வருந்தியே துடிப்பதென்ன? பேதையே நின் செயலும் பேதைமை தான் ஆகுமடி என்கிறார் கண்ணதாசன். ----------- இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே! பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல் (குறள் 1243) உள்ளி = நினைந்து; பரிதல் எனவருந்துவது ஏன்? பரிந்து உள்ளல் = இரங்கி நினைத்தல்; பைதல் நோய் = துன்ப நோய்; என்பது பொருள். இருந்து என்னும் சொல்லிற்கு அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்து படுவதும் செய்யாது இருந்து எனப் பரிமேலழகரும், இறந்து படாது இருந்து என மணக் குடவரும் பொருள் கூறுகின்றனர். நெஞ்சே! நமக்கு இத்துன்ப நோயினைத் தந்தவரிடம், நம்மீது இரக்கம் கொண்டு நம்மைப் பற்றிய நினைப்பே இல்லையே! அவர் அத்தன்மை யராக, நீ இங்கே இருந்து கொண்டு அவரையே நினைந்து வருந்திக் கொண்டிருப்பதால் என்ன பயன்? எனத் தலைவி வினவுகிறாள். நீண்ட பெருமூச்சு தாலாட்டும் என் நெஞ்சே! நீ இருப்பது என்னுடனே! நினைப்பதோ அவர் முகத்தை! வாடுவதும் அவர்க்காக! வருந்துவதும் அவர்க்காக! இவ்வளவும் தந்தவர்க்கோ இன்னும் நம் நினைவில்லையே! எனக் கண்ணதாசன் விளக்கம் தருகிறார். -------- கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவைஎன்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று (குறள் 1244) காதலனைப் பிரிந்தபின், பிரிவாற்றாமையால் வருந்தும் காதலி ஒருத்தியின் துயரத்தை விளக்குகிறார் திருவள்ளுவர். அவளுடைய வாயாலேயே அந்தத் துயரம் புலப்படும் படியாகச் செய்கிறார். காதலனைக் கண்டு நாள்கள் பல ஆயின. காண வேண்டும் என்ற ஆசையால் நாள்தோறும் வேளை தோறும் எதிர்பார்க்கிறாள். காதலன் வரும் வழியை அடிக்கடி பார்க்கிறாள். அவன் வந்து நிற்கும் இடம் முதலியவற்றையே நோக்குகிறாள். என்ன வேலை செய்தாலும். எவர் வந்து போனாலும், கண்கள் அப்போது கூட, அந்த வழியையும் இடத்தையுமே நோக்கிய வண்ணம் இருக்கின்றன. அவளுடைய நெஞ்சமோ, ஊர்ச் செய்திகளில் ஆர்வம் கொள்ள வில்லை, குடும்பச் செய்திகளிலும் ஆர்வம் கொள்ளவில்லை. தோழி முதலானவர்கள் நெருங்கி வந்து பேசும் போதும் அவர்களின் பேச்சிலும் ஈடுபடாமல் அரை குறையாய்க் கேட்டுக் கொண்டே, அந்த அன்பு நெஞ்சம் காதலனை நினைந்து நினைந்து ஏங்கி வருந்துகிறது. தோழி முதலானவர்கள் பேசும் போது ஊம் கூட்டுகிறாள். ஏதேனும் கேள்வி கேட்கும் போதும் ஊம் என்கிறாள். கேட்ட கேள்வியையும் கவனிக்காமல், எதைப் பற்றி எண்ணிக் கொண்டு இருக்கிறாய்? என்று அவர்கள் குறை கூறும் போதுதான், தன் நிலை அவளுக்குத் தெரிகிறது. உண்ணும் உணவிலும் அவளுடைய நெஞ்சம் பதியவில்லை. தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலும் ஆர்வம் இல்லை. கடமைகளையும் புறக்கணித்து மறந்து, காதலனைத் தேடிப் போய்விடுகிறது அவளுடைய நெஞ்சம். இந்த நிலையில் தனித்து வருந்தி வாடி மெலியும் தலைவியின் துயரத்தை விளக்க வேண்டும் என்று முயல்கிறார் திருவள்ளுவர். ஒரு நாடக மேடை அமைக்கிறார் அந்தக் கற்பனை நாடக மேடை யில் நடிப்பவள் காதலி ஒருத்தியே, வேறு யாரும் நடிப்பதற் கில்லை அவளுடைய தனிமைத் துயரைப் புலப்படுத்தும் நாட கத்தில் வேறு யாரும் வருதல் பொருந்தாது. ஆயினும் கற்பனை நாடகம் திறம்பட அமைகிறது. நால்வர் நடிக்கும் மேடையாக அமைக்கிறார் திருவள்ளுவர். தாய் ஒருத்தி; குழந்தைகள் மூன்று. நோயால் வாடி மெலிந்தவள் அவள். தன் குழந்தைகளைத் தானே சீராட்டிப் பாராட்டி வளர்க்கும் உடல் வலிமை இழந்து விட்டாள். ஆனால் இளங்குழந்தைகள் வீட்டுக்குள்ளே கட்டுப்பட்டுக் கிடக்க விரும்பவில்லை; வெளியே சென்று யாரையாவது துணையாகக் கொண்டு விளையாட விரும்பு கின்றன. பெரிய குழந்தை தானாகவே தெருவுக்குப் போய் விளையாட வல்லது. சின்னக் குழந்தைகளோ, அப்படிப்பட்டவை அல்ல. அவற்றிற்கு ஒரு துணை வேண்டும். அவைகளும் வெளியே போய் வேடிக்கை பார்க்கத் துடிக்கின்றன. தொந்தரவு செய்கின்றன; தாயை வற்புறுத்துகின்றன. நான் போக வேண்டும், நானும் போக வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்துகின்றன. அம்மா வா போகலாம், வா போகலாம் என்று தாயைத் தின்கின்றன. தாய் என்ன செய்வாள்! நோயுற்று மெலிந்த தன் உடல் கொண்டு வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்ல அவளால் முடியவில்லை. பெரிய குழந்தையைப் பார்த்து வேண்டுகிறாள்; என்னை வற்புறுத்தித் தின்கிறார்கள். இவர்கள், நீ போகிறாய் அல்லவா? இவர்களையும் உன்னுடன் அழைத்துச் செல் என்று சொல்கிறாள். இரங்கத் தகுந்த இந்தத்தாயின் காட்சி நம் மனக்கண் முன் தோன்றுமாறு செய்கிறார் திருவள்ளுவர். நாடகம் கற்பனையாய் அமைகிறது. பிரிவாற்றாமையால் வருந்தும் காதலி தன் நெஞ்சைப் பற்றி எண்ணுகிறாள். நெஞ்சம் தன்னைவிட்டு, தன் குடும்பம், தன் உறவு, தோழியர் சுற்றுப்புறம், ஆடல் பாடல் எல்லாவற்றையும் விட்டு, காதலனை நாடிச் செல்வதை உணர்கிறாள். அந்த நெஞ்சம் தன்னை விட்டு இவ்வாறு செல்லும் போதெல்லாம், கண்கள் காதலனைக் காணத் துடிப்பதை உணர்கிறாள். காதலன் வரும் வழியையும் பழகிய இடத்தையுமே கண்கள் அடிக்கடி கண்டு கண்டு, அந்த அழகனுடைய வடிவத்தைக் காணத் துடியாய்த் துடிப்பதை உணர்கிறாள். கண்கள் அவளைத் தூண்டுகின்றன. இருந்த இடத்தை விட்டு எழுந்து, குடும்பத்தை விட்டுப் பிரிந்து, காதலன் வரும் வழியில் போய் அவனைக் காண வேண்டும் என்று அவளை வற்புறுத்துகின்றன. நெஞ்சமோ இவ்வாறு துடிப்பதும் இல்லாமல் வற்புறுத்துவதும் இல்லாமல் அவளைக் கேளாமலே போய்க் கொண்டிருக்கிறது. கேளாமல் போய்க் கொண்டிருக்கும் தன் நெஞ்சத்தைக் கூவி அழைத்து நிறுத்துகிறாள் காதலி ஏ நெஞ்சமே! நீ மட்டும் போகிறாயே, இந்தக் கண்களும் அவரைக் காணத்துடிக்கின்றன. அதற்காக என்னைப் பிய்த்துத் தின்கின்றன. இவற்றையும் உன்னோடு அழைத்துக் கொண்டு போ என்கிறாள். கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று (குறள் 1244) உருவமற்ற காதல் துயர் உருவம் பெற்று விட்டது. காதலியின் நெஞ்சம் நடந்து போகிறது. கண்கள் சிறு குழந்தைகளாகக் கற்பனை வடிவம் பெற்று, மெலிந்த தாயை வற்புறுத்துகின்றன. அவள் நெஞ்சை நோக்கிக் கூறி வேண்டுகிறாள். நெஞ்சம் போவதை நிறுத்திக் கேட்கிறது. ஒருத்தியின் துயர் ஒரு நாடகம் ஆகிறது; நால்வர் நடிக்கும் நாடகம் ஆகிறது. கலங்கி வருந்தும் துயரம் என்ற ஒன்று, திருவள்ளுவரின் கற்பனையில் உருவம் பெற்று அமையும் நாடகக் காட்சி இது என இந்தக் கோணத்தில் இக்குறளுக்கு விளக்கம் தருபவர் முனைவர். மு.வ. அவர்களாவர். --------- செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம் உற்றார் உறாஅ தவர் (குறள் 1245) நெஞ்சே யாம் உற்றால் உறாதவரை யாம் செற்றார் எனக் கைவிடல் உண்டோ இல்லை என்பதே விடை. நெஞ்சே! நாம் விரும்பித் தேடுவது போல் அவர் இப்போது விரும்பித் தேடவில்லை என்பதற்காக அவர் நம்மை வெறுத்து விட்டார் எனக் கருதி நம் காதலைக் கைவிட முடியுமோ? அப்படிக் கைவிட்டவர் உண்டோ? வேகப்பட்டு எந்த முடிவிற்கும் வந்து விடாதே எனத் தலைவி தன் நெஞ்சத்தை வேண்டுகிறாள். ஆசை இள நெஞ்சே! அவரை நாம் விரும்பு கிறோம். நம்மை அவர் விரும்பவில்லை. நாடிவர நினைக்கவில்லை. அதற்காக நம்மை அவர் வெறுத்து விட்டார் என்று நாளும் கற்பனைகள் செய்தாலும் கைவிடவே முடியாதே என்பது கண்ணதாசன் விளக்கம். ---------- கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு (குறள் 1246) என் நெஞ்சே! யான் தம்மோடு புலந்தால் அப்புலவியைக் கலவி தன்னானே நீக்க வல்ல காதலரைக் கண்டால் பொய்யாகவேனும் ஒருமுறை புலந்து பின் அதனை நீக்க மாட்டாய்! அது கூடச் செய்ய முடியாத நீ இப்பொழுது அவர் மீது பொய்யான கோபம் கொள்கிறாய். அதனால் பயன் என்ன? நெஞ்சே! கூடிக் கலந்து ஊடி உணர்த்தும் துணைவரை நீ கண்டால், அவரை வெறுத்துவிடக் கருதாத உனக்கு இப்பொழுது பொய்யான சினம் ஏன் தோன்ற வேண்டும்? துடி துடிக்கும் என் நெஞ்சே! தூயவராம் காதலரை ஊடுங்கால் ஊடி, எனைக் கூடுகின்ற கோமானைக் காணுங்கால் நீயும் கசந்து கொள்ள மாட்டாயே! புலம்புவது என்னேடி பொய்க் கோபம் தானேடி என விளக்கம் தருபவர் கண்ணதாசன். ---------- காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பி னகத்து (குறள் 1163) எனப் படர் மெலிந்திரங்கல் அதிகாரத்தில் கூறியதை உட்கொண்டும். உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று என்னும் தொல்காப்பிய நெறியையும் அடியொற்றி மலர்ந்த குறளே, காமம் விடுஒன்றோ, நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு (குறள் 1247) நெஞ்சே! ஒன்று நாணத்தை விடமாட்டாயானால் காம வேட்கையை விட்டு விடு. ஒன்று காதல் வேட்கையை விட மாட்டாய் ஆயின் நாணத்தை விட்டுவிடு. இவ்விரண்டில் ஒன்றையும் விடாமல் இருப்பது உன் எண்ணம் ஆனால், ஒன்றுக் கொன்று பகையான இரண்டினை ஒரு சேரத் தாங்கும் ஆற்றல் என்னிடம் இல்லை. காமமா? நாணமா? ஒரு சொல்லில் விடைகூறு என்று நெஞ்சிடம் கெஞ்சிக் கேட்கிறாள். தோழி! நாணம் என்னும் நற்பண்பு இது காறும் நம்மோடு இருந்து, மிக நீண்ட காலமாகத் துன்புற்றது. இனி வெள்ளிய பூவைக் கொண்ட கரும்பினை உடைய, உயர்ந்த மணல் மேடாகிய சிறிய கரையானது, இனிப் புது வெள்ளம் பாய்ந்து உடைதலால், அழிந்து கரைந்து போனாற் போல, நமது நாணமும் தாங்கக் கூடிய அளவு வரைத் தாங்கி இப்போது காமமானது மிகுந்து நெருக்குதலால் என்னிடம் நிலைபெறாது கழிகின்றது. அது இரங்கத்தக்கது எனும் பொருள் பயக்கும். அளிதோ தானே நாணே நம்மொடு நனி நீடு உழந்தன்று மன்னே! இனியே வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை தீம்புனல் நெரிதர வீய்ந்து உக் காஅங்குத் தாங்கும் அளவைத் தாங்கிக் காமம் நெரிதரக் கைந்நில் லாதே (குறள் 149) என்னும் வெள்ளி வீதியாரின் குறுந்தொகைப் பாடலை மேற்கோளாய்க் கொள்ளலாம். ஆற்றாத சிறு நெஞ்சே! ஆசை வலைப்பட்டு விட்டாய், காமத்தை விட்டு விடு! கன்னியாய் வாழுகிறேன். இல்லை, நாணத்தை விட்டு விடு நானவர்பால் ஓடுகிறேன். முன்னாலே காமம் முகம்பார்க்கச் சொல்லுதடி பின்னாலே நாணம் பிடரி பிடித்திழுக்கு தடி! என்ன நான் செய்வேனோ? இரண்டும் பொறுப்பதில்லை என்பது கவிஞர் கண்ணதாசன் விளக்கமாகும். ---------- பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு (குறள் 1248) என் நெஞ்சே! நம்மை விட்டுப் பிரிந்தவர், பிரிவால் தாமும் வருந்தி, மீண்டும் அவர் வந்து அருள் செய்யமாட்டார். என்று கவலைப்பட்டு அவர் பின் செல்கிறாய், உனக்கு அறிவிருந்தால் அவரைத் தேடிப் பின்னே செல்வாயா? அறிவிலி ஆகையால் பின் சென்றாய் என்கிறாள் தலைவி. பிரிந்து சென்றவர் இரக்கம் கொண்டு வந்து உதவி நிற்பார் என நம்பி வருந்திக் கொண்டு அவர் பின்னே செல்லும் நெஞ்சைப் பேதைமை உடைய நெஞ்சாகத் தலைவி கருதுகிறாள். பொறை யறியாய் பூ நெஞ்சே! போனவர்தான் போனாரே! துன்பத்தை எண்ணித் துணைக்கு வந்து நிற்காமல் அவர்க்காக ஏங்கி அவர் பின்னால் ஓடுகிறாய்! பேதைச் சிறுமனமே! பேதைமை தான் உன் குணமே என்பது கவியரசர் தரும் விளக்கமாகும். --------- உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு (குறள் 1249) என் நெஞ்சே! காதலர் உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதும் உனக்குத் தெரியும் அப்படி இருக்க நீ அவரை நினைத்து எவரிடத்திற்கு தேடி அலைகின்றாய்? ஏழைக் குணம் படைத்த என் நெஞ்சே! நீ யறிவாய் காதலர் நம் உள்ளத்தில் கலந்து நிற்கும் தெய்வமடி ஏன் அவரைத் தேடுகிறாய் எங்கெங்கோ ஓடுகிறாய் எனக் கண்ணதாசன் குறளை எளிமையாகவும் அழுத்தமாகவும் விளக்குகிறார். ----------- துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா இன்னும் இழத்தும் கவின் (குறள் 1250) தலைவர் நம்மோடு சேர்ந்து இருக்காமல் பிரிந்து சென்று விட்டார் எனினும் அவரை நெஞ்சத்தில் இருக்க வைத்து அன்பு செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அப்படி இருக்க நாம் மேலும் மேலும் அழகை இழந்து வருந்திக் கொண்டிருக்கும் காரணம் தான் புரியவில்லை. ஆனாலும் ஒன்று அன்புடைய என் மனமே! நெஞ்சில் சிலையாக நிற்கின்றார் அவர் என்றும் ஏனோ நாம் எழில் இழந்தோம்? ஏனோ நாம் அழகிழந்தோம். ------------ எவ்வ நோய் தீர்க்கும் மருந்து சொல்லாயோ நெஞ்சே! காதல் அவரில ராக நீ நோவது பேதைமை இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே! கண்ணும் கொளச் சேறி நெஞ்சே! செற்றார் எனக் கைவிடல் உண்டோ நெஞ்சே பொய்க் காய்வு காய்தி நெஞ்சே ஏன்? நன்னெஞ்சே காமம் நாண் இரண்டில் ஒன்றை விடு பிரிந்தவர் பின் செல்வாய் பேதை நெஞ்சே உள்ளத்தார் காதலவராக துன்னாத் துறந்தாரை நெஞ்சத்துடையேம் -------------- 126. நிறையழிதல் திருவள்ளுவர் படைக்கும் காமத்துப்பால், தலைவி பெண்மைக்குப் பெருமை சேர்ப்பவள்; மனைத்தக்க மாண்புடையவள்; கற்பென்னும் உள்ளத்திண்மை வாய்க்கப் பெற்றவள்; ஒருமையுள் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கும் ஆற்றல் பொருந்தியவள்; ஒழுக்கத்தை உயிரினும் மேலாய்ப் பேணுபவள், அத்துடன் அடைக்கும் தாழ் அற்ற அன்பை உயிராய்க் கொண்டவள். உடலுடன் உயிருக்கு உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகைய தொடர்பு எனக்கும் என் தலைவிக்கும் உள்ள தொடர்பு என்று தலைவன் கூறும் கூற்றுக்கு உரிமைப் பட்டவள். அற்றால் அளவறிந்து உண்பவள்தான்; ஆனால் அவளுக்கு இப்பொழுது கொடும்பசி; வயிற்றுப் பசியையும், அறிவுப் பசியையும் தாங்கு மட்டும் தாங்கிய பயிற்சி உடையவள்தான்; காமப் பசியையும் தாங்கும் மட்டும் தாங்கியவள்தான். ஆனால் தலைவன் பிரிவு தந்த துன்பத்திற்கு, அவளுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது. ஆகவே, தலைவன் மீது கொண்ட காதல் உணர்வை அடக்க முடியா நிலையில் அதனை வாய்விட்டுக் கூறுதலே நிறையழிதல் அதிகாரத்தின் உட்கிடக்கை ஆகும். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் (குறள் 71) என அன்புடைமையிலும், காமக் கடும்புனல் உய்க்குமே, நாணொடு நல்லாண்மை என்னும் புணை (குறள் 1134) என நாணுத் துறவு உரைத்தலில் உரைத்த அடித் தளத்தில் எழுந்த சுவரே, காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு (குறள் 1251) நாணும் நிறையும் நீ ஆற்ற வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது:- நாணுத்தாழ் வீழ்த்த, நிறை என்னும் கதவு (ஐ) காமக் கணிச்சி உடைக்கும். வலிய தேக்கு மரத்தால் செய்த அழகிய வேலைப்பாடு அமைந்த கதவையும் இரும்புக் கோடரி கொண்டு தாக்கினால் உடைந்துவிடும் என்பது அனைவரும் அறிந்த பொதுச் செய்தியாகும். திருவள்ளுவர் நாணம் என்னும் தாழ் பொருத்தப்பட்ட நிறையாகிய கதவும் காமமாகிய கோடரி கொண்டு தாக்கினால் தாக்குப் பிடிக்க இயலாது உடைந்து போகும் என்னும் உண்மையை விளக்குகிறார். தலைமகள் தோழியிடம், நாணமாகிய தாழ்கோத்த நிறை என்னும் கதவைக் காமம் என்னும் கணிச்சி முறித்தலால் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது என உரைக்கிறாள். சிந்தையைச் சீதையிடத்து விட்டு இராமன் முனிவருடன் போதலைக் கம்பன், அந்தம்இல் நோக்கு, இமை அணைகிலா மையால் பைந்தொடி ஓவியப் பாவை போன்றனள், சிந்தையும் நிறையும் மெய்ந்நலனும் பின்செல மைந்தனும் முனியொடு மறையப் போயினான் என்னும் பாடலும், சீதையின் காதல் நோயை பிறை எனும் நுதலவள் பெண்மை என்படும்? நறை கமழ் அலங்கலான் நயன கோசரம் மறைதலும், மனம் எனும் மத்த யானையின் நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே எனவும் கூறும் கம்பராமாயணப் பாடல் தக்க மேற்கோளாகும். ------------- காதலுக்குக் கண் இல்லை என்பது பழமொழி, கண் உறுப்பைக் குறிக்காமல் கண்ணோட்டம் என்னும் உணர்வைக் குறிக்கும். காதல் எனப்படும் கடுமையான வெள்ளத்தை நீந்திக் கரை காணற்கு இல்லேன்: நள்ளிரவிலும் எனக்குத் துணை யாரும் இன்றி யானாகவே உள்ளேன் என்றும் தான் உறங்காமல் உலகத்து உயிர்களை எல்லாம் உறங்கச் செய்கின்ற இவ்விரவின் நிலை இரங்கத் தக்கது. துணைவரின் பிரிவால் உறங்காமல் இருக்கும் என்னை அல்லது எவருமே அதற்குத் துணை இல்லை என்பதைப் படர் மெலிந்திரங்கலில் காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன் (குறள் 1167) மன்னுயிர் எல்லாம் துயிற்றி, அளித்திரா என்னல்ல தில்லை துணை (குறள் 1168) என உரைத்த முறையில் உரைக்கும் குறளே, காமமென ஒன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் (குறள் 1252) நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்பட வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. காமம் என்று சொல்லப்படும் ஒன்று எல்லாரும் தொழிலற்று ஓய்வாக உறங்கும் நள்ளிரவிலும் என் நெஞ்சை ஏவல் கொண்டு ஆள்கின்றது. அஃது கண்ணோட்ட மற்றதாகும். தலைமகள் தோழியிடம் காமமானது என் நெஞ்சைத் தன் வயப்படுத்திக் கொண்டு, கண்ணோட்ட மின்றி நள்ளிரவிலும் என்னை வருத்துகின்றது என்றாள். இதோ எனக்கு உண்டாகிய பிரிவு நோயைப் பிறர் அறியாவாறு மறைப்பேன். ஆயினும் என்ன? இறைப்பவர்க்கு ஊற்றில் சுரந்து மிகுகின்ற நீர் போல் அது பெருகிக் கொண்டே உள்ளது என்பதைப் படர் மெலிந்து இரங்கல் அதிகாரத்தில், மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் (குறள் 1161) எனக் கூறியுள்ளதை அறிவோம். அதே கோணத்தில் அணுகும் குறளே. மறைப்பேன்மன் காமத்தை யானோ: குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும் (குறள் 1253) மகளிரால் காதல் வேட்கையை அடக்கிக் கொள்ளுதல் இயலும் என உரைத்த தோழியிடம் தலைமகள்:- நான் அடக்கமும் நாணமும் உடையவள் என்பதை நீ நன்கு அறிவாய். நீ சொல்லாமலே யான் உற்ற காம வேட்கையைப் பிறர் அறியாதவாறு அடக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அதுவோ என் குறிப்பின் வழி நில்லாது தும்மலைப் போல வெளிப் பட்டு விடுகின்றது. தும்மலை அடக்க முடியாதது போலவே காம வேட்கையை மறைக்க முடியாது என்பது இயற்கை. -------- இவர் மனத்தை அடக்கிக் காக்க முடியாதவர். மிகுந்த இரக்கத்திற்கும் உரியவர் என்று எண்ணிப் பாராமல் காதல் மறைவைக் கடந்து ஊர் அறிய வந்து விட்டதே. இஃதென்ன? எனும் கருத்துப்பட நாணுத்துறவு உரைத்தல் அதிகாரத்தில், நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும் (குறள் 1138) என உரைத்த திருவள்ளுவர் அதே நோக்கில் பாடிய குறளே. நிறையுடையேன் என்பேன்மன் யானோ; என்காமம் மறையிறந்து மன்று படும் (குறள் 1254) என்பதாகும். என்னை நானே அடக்கம் உடையவள் என்று இதுவரையில் எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டு இருந்தேன். ஆனால் என் காதல் கதை மறைத்தலைக் கடந்து ஊர் அம்பலத்தில் பலரும் வெளிப்படையாகவே பேசும் எல்லைக்கு வந்து விட்டது. அடக்கம் உடையவர்களாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலாதது காமம். மன்செய்த முன்னாள் மொழி வழியே அன்ன வாய்மை கண்டும் என்செய்த நெஞ்சம் நிறைவு நில்லா எனது இன்னுயிரும் பொன்செய்த மேனியன் தில்லை உறாரின் பொறையரிதாம் முன்செய்த தீங்குகொல்? காலத்து நீர்மை கொல்? மொய் குழலே இஃது தீதறு கண்ணி தேற்றத் தேறாது பேதுறு கிழவி புலம்பியது எனும் திருக்கோவையார் குறளுக்கு இயைந்த மேற்கோளே! ----------- தன்னை மதித்துத் தம்முடன் சேர்த்துக் கொள்ளாதவர் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவன் தன் நிலையிலேயே நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று என்பதை மானம் என்ற தலைப்பில் பொருட்பாலில் அமைந்த அதிகாரத்தில், ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று (குறள் 967) என உரைத்த மாண்புமிக்க நெறி புறவாழ்வில் போற்றத்தக்க நெறியாகும். அகவாழ்விற்கு அஃது ஏற்புடையதன்று என்பதை உணர்த்தும் குறட்பாவே, செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று (குறள் 1255) என்பதாகும். நம்மை மறந்தவரை நாமும் மறந்து விடுவோம் என்ற தோழிக்குத் தலைமகள், நம்மை விட்டு நீங்கிப் போனவர் பின் செல்லாத பெருமித உணர்வு பொது வாழ்வு நெறியாகும். அஃது காம நோய்க்கு ஆட்பட்டவர்கள் பின்பற்றி ஒழுகும் நெறி அன்று. தான் துன்பம் அடையுமாறு தலைவன் தன்னைப் பிரிந்து சென்றும், மானமிழந்து தன் மனம் அவனையே நாடுதலின், காமம் உடையவர்க்குச் செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை உண்டாகாது என்கிறாள் தலைவி. மானம் பார்த்தால் வாழ்வு பாழாய்விடும் என்னும் வாழ்வியல் நுட்பம் உணர்ந்தவள் தலைவி. செல்லுபவர் - செலவு மேற்கொண்டவர் என்பது பொருள். சென்றார் என்றாலும் செற்றார் எனினும் பொருள் ஒன்றே ஆகும். ----------- செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர் (குறள் 1256) இப்படி என்னை விட்டுப் பிரிந்து சென்றவர் பின்னே நாணத்தையும் மானத்தையும் விட்டு என் மனம் செல்ல விரும்பு கிறது என்றால்! நான் அடைந்துள்ள துன்பம் எப்படிப்பட்டதாய் இருக்கும் ஆ! அது மிகவும் இரங்கத்தக்கதே! எனக் கூறி வருந்தினாள் தலைவி. பொறுக்கும் அளவு பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக் கொண்டவள் தான் துன்பத்தின் சுமை மிகுந்ததால் மானம் நாணம் என்னும் மானுடப் பண்பு பற்றிய சிந்தனையே இன்றித் தலைவன் இருக்கும் இடம் தேடிப் போக எண்ணுகிறாள். --------- நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ட செயின் (குறள் 1257) தலைவி தலைவன் மீது தீராக் காதல் கொண்டவள்; தலைவனும் தலைவி மீது உள்ளார்ந்த காதல் பெருக்குடையவன் இருவரும் பிரிவின் பின் கூடுகின்றனர். பிரிவுக் காலத்தில் தலைவிக்குத் தலைவன் மீது வெறுப்பும் சினமும் வருத்தமும் இருந்தது உண்மை. அவர் வந்த பின் முகம் கொடுத்துப் பேசக் கூடாது என்றும் கூட எண்ணி இருக்கலாம். வந்தவன் பேரன்புடன் வந்தான். அவன் வந்தவுடன் இவளுக்கு அவன் விருப்பத்தை நிறைவேற்றுவது தவிர வேறு எந்த எண்ணமும் தோன்ற வில்லை. இரண்டறக் கலந்த அன்புக் கூட்டில் நாணம் என்பது அவள் அறியாப் பண்பாகிறது. மற்றவர்கள் என்ன நினைத்தாலும் குறை கூறினாலும் அது பற்றிய கவலை அவட்குச் சிறிதும் கிடையாது. உரிமைப் பட்டவர்கள் தழுவுதலில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்ற தெளிந்த முடிவிற்கு வந்துள்ளாள். ஆகவே நாணென ஒன்றோ? அறியலாம் என உரைத்தாள். ---------- அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555) ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை (குறள் 985) எனக் கொடுங்கோன்மையிலும் சான்றாண்மையிலும் கூறிய ஆற்றல் மிகு படையல்லாப் படையின் ஆற்றலை உணர்த்தும் பிறிதொரு குறள்;- பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை (குறள் 1258) திருவள்ளுவர் இக்காதல் தலைவனை பணிமொழி பேசுகிறவனாகக் காட்டுவதுடன் அவனைக் கள்வன் என்கிறார். அதிலும் அவர்க்கு நிறைவு இல்லை போலும் அதனால் இவன் எளிமையான கள்வன் அல்லன் என்பதை உணர்த்த மாயக் கள்வன் என்று கூறுவதில் கூட அவர்க்கு நிறைவு ஏற்படவில்லை போலும் ஆகவே பன்மாயக் கள்வன் எனப் பெருங் குற்றவாளியாகக் காட்டுகிறார். அவள் உள்ளத்தைக் கவர என்னென்ன தந்திர மந்திரங்களைக் கையாள வேண்டுமோ அவற்றை எல்லாம் கையாளும் தேர்ச்சி மிக்கவன் அவன், அவள் கையைப் பிடிப்பதுடன் காலைப் பிடிக்கவும் தயங்காதவன். உள்ளத்தில் பேரன்பு உடையவன். அவன் வாய் வீரம் பேசும் வாயன்று அன்பும் பணிவும் இனிமையும் உடைய சொற்களையே பேசுகிறவன். அவனுடைய மென் சொற்கள் வலிமை மிக்க பெண்மைக் கோட்டையை யும் தகர்க்கும் படைக்கருவி ஆகி விடுகிறது. அவன் தவறே செய்திருந்தாலும் வாக்குத் தவறியிருந்தாலும், இவள் மனம் புண்பட்டு இருந்தாலும், அவனை வெறுத்து ஒதுக்க வேண்டும் என உறுதி கொண்டிருந்தாலும், வந்த தலைவன் நடந்து கொண்ட பாங்கு, அவளின் வேண்டாத உறுதிகளை எல்லாம் உடைத்தெறிந்து விட்டது. ஆகவே, தோழியிடம், பலவகை மயக்கச் செயல்களைச் செய்ய வல்ல காதலராம் உள்ளம் கவர் கள்வரின் பணிவான இனிய சொற்கள் நம் பெண்மையை உடைக்கின்ற படைக்கலமாக ஆகி விட்டது என உரைக்கிறாள். இராமனைக் கண்டு காதல் நோயுற்ற சீதை. பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும் எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன் மண்வழி நடந்து அடிவருந்தப் போனவன் கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம் எனப் புலம்புவதாக அமைந்த கம்பன் பாட்டும் தக்க மேற்கோளாகும். --------- அவர் வயின் விதும்பலில், புலப்பேன்கொல், புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின் (குறள் 1267) எனவும், புணர்ச்சி விதும்பலில், ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதென் நெஞ்சு (குறள் 1284) எனவும் பாடுவதற்குத் தோற்றுவாயாய் அமைந்த குறளே. புலப்ப லெனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு (குறள் 1259) பிரிந்து சென்ற என் தலைவர் காலங்கடந்து முன்பு வந்தபோது அவரோடு அன்பில்லாதவள் போல் பிணங்கி இருத்தல் வேண்டும் என எண்ணிச் சென்றேன். ஆனால், நான் அவரைக் கண்டவுடன் என் மனமானது என்னை விட்டு நீங்கி அவரோடு இணங்கி இரண்டறக் கலந்து விட்டது கண்டு என் உறுதியை விட்டுத் தழுவினேன் எனத் தோழியிடம் உரைக்கலானாள். --------- நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல் (குறள் 1260) உள்ளன்புடைய காதல் தலைவிக்கு வள்ளுவர் வழங்கும் பட்டம் நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார் என்பதாகும். எரி முன்னர் வைத்தூறு எரிந்து எரிந்து சாம்பல் ஆகிவிடும். நெருப்பு அழிக்கவும் செய்யும் ஆக்கவும் செய்யும். பக்குவப்படுத்தவும் செய்யும். சமையல் அறையில் அடுப்பில் மூட்டிய நெருப்பெல்லாம் கடினத் தன்மை கொண்ட உணவுப் பண்டங்களை உண்பதற்கு ஏற்றவாறு பக்குவப்படுத்தும் வேலைக்குத்தான் பயன் படுத்துகிறோம். சமைத்தல் என்றாலே பக்குவப்படுத்துதல் என்று தான் பொருள். நிணமாகிய கொழுப்பை நெருப்பில் இட்டால் உருகி நீர்மத் தன்மையைப் பெற்றுவிடும். அப்படிப் பிறர் துன்பம் கண்டால், கேட்டால் உருகிப் போகும் மனம் படைத்தவள் தலைவி. தனக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடியவள்; எவ்வுயிர்க்கும் மறந்தும் துன்பம் செய்ய எண்ணாதவள் மட்டுமல்லள் பிறிதின் நோய் தந்நோய் போல் கருதிப் போக்க முற்படும் உயிர் இரக்க அறிவுடையவள். ஆகவே, காதல் வயப்பட்டுக் கூடி மகிழ எண்ணி வந்தவனை விளையாட்டாகக் கூட சிறு பொழுதும் ஏமாற்றித் துன்புறச் செய்து விடக் கூடாது என்று கருதுகிற அன்பின் வழியதாய உயிர் நிலை பெற்றவளே திருக்குறள் காட்டும் காதல் தலைவி. ஆகவே அவள் தீயில் இட்ட கொழுப்பைப் போல உருகும் தன்மையுள்ள நெஞ்சினை உடைய எம் போன்றவர்களால் தம் துணைவர் தம்மை நெருங்கிய போது அவரோடு பிணங்கி நிற்க வேண்டும் என்ற எண்ணம் வரவே வராது என்கிறாள். நெருப்புறு வெண்ணெயும், நீர் உறும் உப்பும் என இங்ஙனே பொருப்புறு தோகை புலம்புறல் பொய் அன்பர் போக்கு மிக்க விருப்புறு வோரை விண்ணோரின் மிகுத்து நண்ணார் கழியத் திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திரு நுதலே என்னும் திருக் கோவையார் பாடலும் தக்க மேற்கோளாகும். ---------- நிறைக் கதவை காமக் கணிச்சி உடைக்கும் காமம் கண்ணின்று யாமத்தும் ஆளும் காமம் தும்மல் போல் தோன்றிவிடும் காமம் மறை இறந்து மன்றுபடும் காம நோய் உற்றார் செற்றார்பின் செல்வர் காம நோய் உற்றார் அறியாதது மானம் எற்று என்னை உற்ற துயர்? நாண் என ஒன்று அறியலம் காமத்தால் பேணியார் பெட்ட செயல் வேண்டும் பன் மாயக் கள்வன் கள்வன் பணிமொழி பெண்மை உடைக்கும் பணிமொழி பெண்மை உடைக்கும் படை நெஞ்சம் கலந்தால் உடலும் புல்லும் நெஞ்சம் கலந்தோர் புலத்தல் இயலாது நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினாள் தலைவி காதலால் உருகுவோர் புணர்ந்து ஊடார் ------------- 127. அவர் வயின் விதும்பல் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் காண அவாவி, உள்ளமுருகி விரைதல், பிரிவில் மறுகி இருந்த இருவரும் மேல் யாதும் ஆற்ற முடியாமல், ஆற்றாமை மீதூர்ந்து தனித்தனி அடைய விரைந்ததை இஃது உணர்த்துகின்றமையான் அவர்வயின் விதும்பல் என வந்தது. விதும்பல் - விரும்புதல்- துன்பத்தை விரைந்து போக்க விரும்புதல். மகக்காண் தாயின் மிகப்பெரிது விதும்பி எனப் பெருங் கதையில் விரும்புதல் பொருளிலிலேயே விதும்பி கையாளப் பட்டுள்ளது. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் (குறள் 1261) அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நாள்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அதுவேயன்றி, கண்களும் அவர் வரவைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து புல்லியவாயின என்பது தலைவி கூற்றாகும். வாள்- வாள் ஒளியாகும் என்பது தொல்காப்பியம். வருவார் அவரெனவே வழிபார்த்து ஒளியிழந்த கண்களுக்கே உரிமை கொண்டேன் என் தோழி! நாள் கணக்கைக் காட்ட நாள்தோறும் நாள்தோறும் சுவர்கள் முழுவதிலும் சுண்ணாம்புக் குறிபோட்டு சுட்டு விரல் கூடத் தேய்ந்ததடி என் தோழி! என்பது கண்ணதாசன் விளக்கமாகும். மாமூலனார் அகநானூற்றில் தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியதாகப் பாடிய பாடலின் பகுதி. நோற்றார் மன்ற தாமே கூற்றம் கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர் எனத் தாள் வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர் நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து ஆழல் வாழி! தோழி! என்னும் வரிகள் மேற்கோளாய்க் கொள்ளத்தக்கதாகும். தெண்ணீர் அணிசிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின் பண்ணீர் மொழி இவளைப் பையுள் எய்த பனித்தடம் கண்ணுள் நீர் உக, ஒளிவாடிட நீடு சென்றார் சென்றநாள் எண்ணீர்மையின் நிலனும் குழியும் விரல் இட்டு அறவே. என்னும் திருக்கோவையார் தக்க எடுத்துக்காட்டாகும். ஆற்றாமை மிகுதலின் போது எப்போதும் தலைவரை நினைத்துக் கொண்டு இருப்பதை விட்டுச் சிறிது போது மறக்க வேண்டும் என்று வேண்டிய தோழிக்கும் தலைவி அளித்த மறுமொழி. இளங்கிழாய் இன்று மறப்பின் என்தோன்மேல் கலங்கழியும் காரிகை நீத்து (குறள் 1262) விளங்குகின்ற அணிகளை உடையவளே! நீ கூறுமாப்போல் காதலரை இன்று மறப்பேன் எனின், என் மெல்லிய தோள்கள் மேலும் மெலிந்து அழகை இழக்கும். கையில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று விடும். ஆகவே காதலரை மறப்பதால் இழப்புத்தான் அதிகமாகுமே தவிர நன்மை ஒன்றும் விளையப் போவது இல்லை. இழை = அணிகலன்; காரிகை = அழகு; கலம் = அணிகலம் (வளையல்) கழியும் = கழன்றொழியும். இலங்கிழாய் = விளங்கிய அணிகளை உடையவளே! என்றது தோழியை; இலங்குதல் = விளங்குதல், ஒளிர்தல். இலங்கு நிலவின் இளம்பிறை போல என ஐங்குறுநூறு கூறும். ஐகார ஈற்றுப் பெயர் விளியேற்குங்கால் ஆய் எனத் திரியும் ஆதலால் இழாய் என நின்றது. இ ஈ யாகும், ஐ, ஆய் ஆகும் என்பது தொல்காப்பியம். காதலரைக் காணாமல் கைவளையைத் தானிழந்தேன் மற்றும் அவரை நான் மறந்துவிட்டால் என்னாவேன்? தோளும் மெலியுமடி! தோளில் அணிந்திருக்கும் சங்கிலியும் அட்டிகையும் தானே கழலுமடி! என விளக்கம் தருபவர் கண்ணதாசன். மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன் (குறள் 1206) என நினைத்தவர் புலம்பலிலும், நனவினான் நல்கா தவரைக் கனவினான் காண்டலின் உண்டென் உயிர் (குறள் 1213) எனக் கனவுநிலை உரைத்தலிலும். செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை (குறள் 1151) எனப் பிரிவாற்றாமை அதிகாரத்திலும் கூறிய தலைவி உயிர் வாழ்வது எப்படி? உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன் (குறள் 1263) என்னைத் துணையாகக் கொண்டு என்னிடம் இன்பம் துய்த்தலை விரும்பாது, போரில் வெற்றி பெறுதலை விரும்பித் தம்முடைய ஊக்கத்தையே துணையாகக் கொண்டு சென்றுள்ள என் காதலரின் வருகையை விரும்பி நான் இன்றளவும் உயிரோடு இருக்கின்றேன். உரன் என்றால் வலி, அறிவு, ஊக்கம் என்பது பொருள். உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து என்னும் தொடரைப் புறநானூற்றில் காணலாம். பொருள்நசை உள்ளந் துரப்பத் துறந்தார் வருநசை பார்க்கும்என் நெஞ்சு. என்னும் திணைமாலைப் பாடலும் தக்க மேற்கோளாகும். நிலத்தில் வீழ்ந்து வணங்கி வேண்டிய இராவணனிடம் சீதை உரைத்தது:- ஊண் இலா யாக்கை பேணி உயர்புகழ் சூடாது உன்முன் நாண்இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும் பூண்எலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக் காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய். என்னும் கம்பராமாயணப் பாடலும் தக்க மேற்கோளாகும். பொருநாண் மதனை அழித்தே இமையப் பொருப்பன் மனத்து இருநாள் அதில்தரும் வெங்கைப் புரேசர் செழும் சிலம்பில் கருநாண் மலர்விழி மாதே என்றாயினும் காதலர் ஈங்கு ஒருநாள் வருவர் என்றே நின்றது ஆவி உடலகத்தே. என்னும் திருவெங்கைக்கோவைப் பாடலும் மேற்கோளாய்க் கொள்ளத் தக்கதாகும். வாணிகத்தில் போரில் வகையாக வெற்றிபெற ஊக்கமே துணையாக ஊர்விட்டு ஊர் நடந்தார் அன்னவரைக் காண்கின்ற ஆசையால் தானேடி இன்னும் உயிரோடு இருக்கிறேன் என் தோழி! என்பது கண்ணதாசன் விளக்கமாகும். கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளித் கோடுகொ டேறும்என் நெஞ்சு (குறள் 1264) பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி நீங்கிய காமத் தவராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூடின காமத்துடனே நம்மிடம் வருதலை எண்ணி, என் நெஞ்சு வருத்தம் ஒழிந்து மேன்மேல் பணைத்து எழா நின்றது. என் நெஞ்சு கோடு கொடு ஏறும் - வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும், அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பு ஆகலின் கூடிய காமமொடு என்றார். கோடு கொண்டு ஏறுதலாகிய மரத்தது தொழில் நெஞ்சின் மேல் ஏற்றப் பட்டது. கொண்டு என்பது இடை குறைந்து கொடு என நின்றது என்பது பரிமேலகர் உரை. தோழி! நம்மைப் பிரிந்த காதலர் பண்டு நம்மோடு கலந்த காலையினும், இன்னும் இங்ஙனம் வரும் என்று கொண்ட அவ் வரவை நினைந்து, மற்று இது பற்றுக்கோடாக முன்னம் போல் உக்குச் செல்லாது (சிதறிச் செல்லாது) பணைத்து ஏறுகின்றது காண் நெஞ்சமானது; எனவே இதுவும் அவர் வருவதற்கு ஒரு குறியாகும் என்று இன்புற்றாள். என்பது காளிங்கர் உரை. கோடு கொடு ஏறும் = என்னும் தொடருக்கு மணக்குடவர் மரத்தின் மேலேறிப் பாரா நின்றது. உயர்ந்த மரத்தின் மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாம் என்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினார் எனக் கூறுகிறார். பரிதியார் ஆசை என்னும் மலையில் என் நெஞ்சு ஏறிப் பார்க்கும் என்பது அவர் பார்வை. கூடியிருந்த காதலை மறந்து பிரிந்து சென்ற துணைவர் வருவதை விரும்பி, என் மனம் மரத்தின் கிளைமேல் ஏறி அவர் வழி பார்த்திருக்கும் என்பது இரா. இளங்குமாரனாரின் வாழ்வியல் உரை. காமம் மறந்து விட்டார் காலத்தால் பிரிந்து விட்டார் மாமலையில் ஏறியன்றோ மன்னவரை நான் தேடுகின்றேன் மரக்கிளையில் ஏறியன்றோ மணந்தவரைத் தேடுகின்றேன். என்பது கண்ணதாசனின் தேடலில் கிடைத்தது. வள்ளுவர் புலமைக் கொடுமுடியில் இருப்பதால் தொட்டனைத்தூறும் மணற்கேணி ஆகிறது குறள் மணி. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்எம் மென்றோள் பசப்பு (குறள் 1265) தலைமகனது வரவைக் கூறிப் பொறுக்க முடியாதவளாய்ப் பசலை நிறம் அடையாதே என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. என் கண்கள் நிறைவு அடையும் வகையில் என் காதலனை யான் காண்பேனாக, அவ்வாறு கண்ட பின்பு எனது மெல்லிய தோளில் நிறவேறுபாடு தானே நீங்கும். தலைமகன் வரவைக் கேட்ட அளவால் என்தோளின்கண் பசப்பு நீங்காது என்பது குறிப்பு. தலைமகள் தோழியை நோக்கிக், காதலனை யான்கண்ட பிறகே என்தோளின்கண் பசப்பு ஒழியும் என்றாள். காதல் பெருமகனைக் கண்ணாரக் காண்பேன் நான் கண்டவுடன், என் தோளின் கட்டழகு மீளுமடி,! பசலை தெளியுமடி! பழைய நிலை தோன்றுமடி. என்பது கண்ணதாசன் உரைவிளக்கம். வானுயர் வெற்பன் வருவான் கொல் தோழி! என்மேனி பசப்புக் கெட. என்னும் திணைமாலையையும் மேற்கோளாய்க் கொள்வோம். காதலன் வந்தவுடன் காதலி நின்ற நிலையை ஐங்குறுநூறு:- தோள் கவின் எய்தின; தொடி நிலை நின்றன நீள்வரி நெடுங்கண் வாள்வனப் புற்றன ஏந்து கோட்டி யானை வேந்து தொழில் விட்டென விரைசெலல் நெடுந்தேர் கடைஇ வரையக நாடன் வந்த மாறே. என்பதும் தக்க மேற்கோளாகும். வருகமன் கொண்கன் ஒருநாள்; பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட (குறள் 1266) இவ்வளவு நாளாய் வாராத என் கணவன் ஒரு நாள் வருவானாக! வந்தால் என்னைத் துன்புறுத்துகின்ற பசலை நோய் முழுவதும் நீங்கும்படி அவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளாலும் பருகுவேன். தலைமகள் தோழியை நோக்கிக், காதலன் என்னிடத்து ஒருநாள் வருவான்; வந்தால் அவனைக்கூடித் துன்பத்தை நீக்குவேன் என்கிறாள். கூரா ராழி வெண்சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் ஒருநாள், மண்ணும் விண்ணும் மகிழவே என்னும் திருவாய் மொழியும் குறட்கருத்தைத் தழுவியதே. இராமபிரான் காட்டு வாழ்வு முடிந்து மீண்டும் வந்து திருமுடி சூடிய போது நிலமகள் அடைந்த மகிழ்ச்சியைக் கம்பர், பன்நெடும் காலம் நோற்றுத் தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற பின்நெடும் கணவன் தன்னைப் பெற்று, இடைப்பிரிந்து, முற்றும் தன்நெடும் பீழை நீங்கத் தழுவினாள், தளிர்க்கை நீட்டி நன்நெடும் பூமிஎன்னும் நங்கை தன் கொங்கை ஆர! எனப் பாடிய பாடலும் ஒருவகையில் ஒப்பு நோக்கத்தக்கது ஆகும். ஒருநாள் அவரிங்கே ஓடிவந்தால் போதுமடி துன்பநோய் தீருமடி சுகவாசம் தோன்றுமடி இன்பம் பெருக்கெடுத்து இரவெல்லாம் ஓடுதடி! என்பது கண்ணதாசன் விளக்கம் புலப்ப லெனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்த லுறுவது கண்டு (குறள் 1259) நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல் (குறள் 1260) என நிறையழிதலில் கூறியதை அடியொற்றி, ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதென் நெஞ்சு (குறள் 1284) எனப் புணர்ச்சி விதும்பலில் கூறுவதற்கும் இடையில் அக் கருத் தோட்டத்தில் மலர்ந்த குறளே! புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின் (குறள் 1267) என்பதாகும். கண்ணன்ன கேளிர் ஒரு அருமையான தொடர். கண்போல் சிறந்த காதலர் வருவாராயின் அவர் வரவு காலத்தாழ்வு ஏற்பட்டு விட்டதை எண்ணி அவருடன் பிணக்கம் கொள்ளக் கடவேனோ? அல்லது எனது ஆற்றாமை காரணமாகத் தழுவக் கடவேனோ? புலத்தலும் புல்லுதலும் ஆகிய இவ்விரண்டும் வேண்டுதலால் அவ்விரு செயல்களையும் கலக்கக் கடவேனோ? யாது செய்யக் கடவேன். தலைமகள் தோழியை நோக்கிக், காதலர் வந்தால், யான் புலத்தல், புல்லல், கலத்தல் என்பனவற்றுள், யாது செய்யக் கடவேன் என்றார். கண்போன்ற காதலரைக் கண்டால் நான் என்ன செய்வேன்? ஊடல் புரிவேனோ? உடன்பட்டு நிற்பேனோ? ஆவி கலப்பேனோ அரை மயக்கம் கொள்வேனோ? என்பது கண்ணதாசன் விளக்கம். தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி தோன்றலோடு ஊடு கெனோ? உயிர்உருகு நோய் கெடக் கூடுகெனோ? அவன் குணங்கள் வீணையில் பாடுகெனோ? பலப்பலவும் பன்னினாள் என்னும் கம்பராமாயணம், உண்டாட்டு படலப் பாடல் குறளை நினைவு படுத்துகிறது. வினைகலந்து வென்றீக வேந்தன், மனைகலந்து மாலை அயர்கம் விருந்து (குறள் 1268) நம் தலைவன்தான் கலந்து கொண்ட வினையில் சிறப்புடன் பணி புரிந்து நாட்டிற்கு வெற்றியை இன்று பகற்பொழுதே ஈட்டித்தந்த தலைவனைப் பெருமையுடனும் அன்புடனும் மகிழ்ச்சி யுடனும் வரவேற்று இன்று மாலையே நம் மனையில் சிறப்பான விருந்தளித்து, மகிழ்ச்சியைக் கொண்டாடுவது நம் கடமையாகும் எனத் தலைவி தோழியிடம் உரைப்பதாகப் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது. வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகனை நோக்கிப் பாகனே! வலிய வாளினை உடைய நம் அரசன் பகையைத் தணித்து விட்டான்; ஆதலால், இங்கு இனி அமர் செய்ய வேண்டியதில்லை! நிலத்தைக் கொட்டுவது போல நடக்கும் கால்களை உடைய நடைத்தொழில் பயின்ற குதிரையைப் பிடரியில் கட்டிய மணிகள் ஒலிக்குமாறு நின்தேரில் பூட்டி விரைந்து செலுத்துவாயாக! தலைவி பெரிதும் அழுவாள்; அவள் விடும் கண்ணீர் மார்பிலே அணிந்துள்ள பூண்களில் பட்டுத் தெறிக்கும். அழகிய மாமை நிறத்தை உடைய காதலி எமக்கு விருந்து செய்யும் விருப்பினளாய் அட்டில் சாலையில் புகுந்து உணவு படைப்பாள், நம்மை நோக்கி மகிழ்ச்சியோடு இனிய நகை செய்வாள்: அது கண்டு மகிழ விரைந்து தேரைச் செலுத்துவாயாக என்னும் பொருள் தருமாறு அகம்பன் மாலாதனார் பாடிய கீழ்க்காணும் நற்றிணைப் பாடல் ஒருவழி மேற்கோள் ஆகும். இருநிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று ஆதி போகிய அசைவில் நோன்தாள் மன்னர் மதிக்கும் மாண்வினைப்புரவி கொய்மயிர் எருத்தின் பெய்ம்மணி ஆர்ப்பப் பூண்கதில் பாகநின் தேரே! பூண்தாழ் ஆக வனமுலைக் கரைவலம் தெறிப்ப அழுதனள் உறையும் அம்மா அரிவை விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய முறுவல் இன்னகை காண்கம் உறுபகை தணித்தனன் உரவுவாள் வேந்தே தலைவன் கூற்றாகக் கொண்டால், நாம் முழுமூச்சுடன் ஈடுபட்டு இன்றே போரை முடித்து நாட்டுக்கு வெற்றியை ஈட்டித் தந்தால், நாம் தத்தம் மனைவியரோடு இணைந்து உளம் கலந்து மாலைப்பொழுதே விருந்துண்டு வெற்றி விழாவைக் கொண்டாடலாம் என வீரன் தன்னுடன் இணைந்து போர்ப் பணியில் ஈடுபட்டுள்ள தோழர்களிடம் தன் உணர்வை வெளிப்படுத்தி ஊக்க மூட்டியதாகவும் கொள்ளலாம். நாட்டு வினைக்கு முதன்மை தரும் ஒரு காதல் தலைவனின் உட்கிடக்கையின் படப்பிடிப்பாகும். ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேண்சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு (குறள் 1269) நெடுந்தொலைவு சென்ற துணைவர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்குபவர்கட்கு நாள்நெருங்க நெருங்க ஒருநாள் செல்லுதல் ஒரு நாள் 24 மணி நேரம் போவது 24 மணி நேரம் போல் தெரிய வில்லை. 168 மணி நேரம் போவது போல் தெரிகிறது. பிரிவுத்துயரை மிகுத்துக் காட்டும் குறள்களில் ஒன்றாகும். நேரம் ஓடுகிறது. ஆனால் கடிகையாரத்தின் முள் நகர மறுப்பது போல் தெரியும். அதனால் ஒருநாள் எழுநாள் போல் செல்லும் என்றுரைத்தார் வள்ளுவர். பொதுவான காதலர் நிலை உரைப்பதாகவும் கொள்ளலாம். நீயும் பாங்கல்லை காண்நெஞ்சமே நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால் காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால் மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே தெய்வங்காள்! என் செய்கேன் ஓரிரவு ஏழூழியாய் மெய்வந்து நின்று எனதாவி மெலிவிக்கும் கைவந்த சக்கரத்து என்கண்ணனும் வாரானால் தைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தானகுமே! என்னும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி தக்க மேற்கோளாகும். பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால் (குறள் 1270) பிரிவு தலைவியின் உள்ளம் தாங்கும் வரம்பிற்கு உட்பட்ட தாய் இருக்க வேண்டும்! நாளும் எதிர்பார்த்து ஆற்றி இருந்தும், தலைவன் வந்து தலைவிக்கு மனநிறைவை உண்டாக்கத் தவறி அவள் உள்ளம் ஏமாற்றத்தின் உச்சத்திற்கும் சென்று நொறுங்கிக் கட்டுக்குலைந்து விட்ட பின், தலைவன் வருவது உறுதி ஆனாலும் நம்பிக்கையோ மகிழ்வோ ஏற்படப் போவதில்லை. அவன் வந்து சேர்ந்தாலும் எத்தகைய நற்பயனும் விளையப் போவதும் இல்லை. அவன் விருப்பத்துடன் வந்து தழுவி இன்புறுத்த முயன்றாலும் எத்தகைய பயனும் இல்லை. தலைவன் வருகையும், தழுவலும் இன்பமும் நிறைவும் தலைவிக்கு ஏற்படுத்த வேண்டுமானால், ஏமாற்றத்தால் தலைவியின் உள்ளம் உடைவதற்கு முன் தலைவன் வந்து சேர வேண்டும். அணை உடையாமல் காக்க வேண்டும்; அதுபோல் உள்ளம் உடையாமல் காக்க வேண்டும். உடல்வாழ்வு வாழ்வன்று; உள்ளத்தால் வாழ்வதே வாழ்வு. ஆகவே, தலைவன் தலைவியர் எந்நிலையிலும் ஒருவர் உள்ளத்தை ஒருவர் உடைத்துச் சிதைத்து விடக் கூடாது. தலைவர் சென்ற நாளொற்றித் தேய்ந்தது விரல் தலைவர் வருகையை எதிர்பார்த்து வாளற்றுப் புற்கென்றது கண் தலைவர் மறந்தால் தோள் மெலியும் அழகு குன்றும் வளையல் சுழலும் தலைவர் ஊக்கமே துணையாகப் பிரிந்து சென்றார் தலைவி, தலைவர் வருகையை விரும்பி உயிரோடு உள்ளாள் பிரிந்தார் வரவு உள்ளி உள்ளம் மரத்தின் மீது ஏறிப்பார்க்கும். கொண்கனைக் கண்ணாரக் கண்டால் பசப்பு நீங்கும் கொண்கன் ஒருநாள் வருவான் பைதல் நோய்கெடப் பருகுவாள். கண்ணன்ன கேளிர் வந்தால் தலைவி புலப்பாள் புல்லுவாள்; கலப்பாள். கலந்த வினையில் நாட்டுக்கு வெற்றி வழங்குக! மனைகலந்து மாலை விருந்து அயர்க பிரிந்து வருந்தும் தலைவிக்கு ஒருநாள் எழுநாள் போல் செல்லும். தலைவியின் உள்ளம் உடைந்தபின் தலைவன் வந்தும் பயனில்லை நெருங்கினாலும் பயனில்லை தழுவினாலும் பயனில்லை தலைவன் தலைவியின் உள்ளம் உடையாமல் காக்கவேண்டும் 128. குறிப்பறிவுறுத்தல் ஒன்றை வெளிப்படக் கூறாது இருந்தும் அதனைக் குறிப்பால் அறிய வல்லவன், எக்காலத்தும் வற்றாத நீர் சூழ்ந்த உலகுக்கு அணிகலம் போல்வான். எனும் கருத்தைப் பொருட்பாலில் 71ஆம் அதிகாரமாக இடம் பெற்றுள்ள குறிப்பறிதலில் கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி (குறள் 701) என உரைத்துள்ளதையும் அறிவோம். காமத்துப்பால் 110 ஆம் அதிகாரமும் குறிப்பறிதல் ஆகும். இதன் முதற் குறள், இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக் கொன்றந்நோய் மருந்து (குறள் 1091) அதன் நிறைவுக்குறள், கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல (குறள் 1100) என்பதாகும். காமத்துப்பாலில் 110ஆம் அதிகாரத்தில் மணப்பருவம் உற்ற கன்னியும் காளையும் ஒருவர்க்கு ஒருவர் இசையும் உள்ளக் குறிப்பை அறிதலின் பயனை உணர்த்திய பின் அதனோடு தொடர்புடைய குறிப்பறிவுறுத்தலை 128 ஆம் அதிகாரமாக அமைத்துள்ளார். மேல் தலைமகள் குறிப்புத் தலைமகன் அறிந்தான் என்ற தல்லது. இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கின தலைமகள் குறிப்புத் தோழி அறிதலும், இரந்து பின் நின்ற தலைமகன், தோழி குறிப்பு அறிதலும், குறை நயப்பித்த வழித் தலைமகள் குறிப்புத் தோழி அறிதலும், நொதுமலர் வரைய வந்துழி வேறுபட்ட தலைமகள் குறிப்புச் செவிலி அறிதலும் பிரிதல் உற்ற தலைமகன் குறிப்புத் தலைமகள் அறிதலும், பிரிவு உணர்த்தச் சென்ற தோழி குறிப்புத் தலைமகள் அறிதலும், அவ்வழித் தலைமகள் குறிப்புத் தோழி அறிதலும் இவை எல்லாம் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்பு இத்துணையும் பிரிந்துழி நிகழ்பவை கூறினார் ஆதலானும் இனிப் புணர்ச்சி விதும்பல் கூறுகின்றார் ஆதலானும் ஈண்டு கூறப்பட்டது என அதிகார விளக்கம் தருபவர் பரிப் பெருமாள் ஆவார். தலைமகன், தலைமகள் தோழி என்றிவர் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல். இது பிரிந்து போய தலைமகன் வந்து கூடியவழி நிகழ்வது ஆகலின் அவர்வயின் விதும்பலின் பின் வைக்கப்பட்டது. என்பது பரிமேலழகர் விளக்கமாகும். தலைமகன் தன் குறிப்பினைத் தலைமகளுக்கும், தலைமகள் தன் குறிப்பினைத் தலைமகனுக்கும் அறிவுறுத்தலே குறிப்பறி வுறுத்தல் ஆகும். கரப்பினும் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்க லுறுவதொன் றுண்டு (குறள் 1271) துணைவியே! நீ சொல்லாது மறைத்தாய் ஆயினும், அதற்குக் கட்டுப்படாது உன்னை மீறி, உன் மையுண்ட கண்கள் எனக்குத் சொல்லுவதான செய்தி ஒன்று இருக்கிறது. உன் கண்கள் குறிப்பால் உணர்த்தும் செய்தியை நீயே வெளிப்படை யாக வாய் திறந்து கூறுவாயாக எனத் தலைவன் தலைவியை வேண்டுகிறான். பகைமையும் கேண்மையும் கண் ணுரைக்கும் (குறள் 709) என்னும் குறிப்பறிதல் அதிகாரத் தொடரும். ஒருவன் முகம் உரைக்கும் உண்ணின்ற வேட்கை என்னும் நான்மணிக்கடிகைத் தொடரும் ஒப்பு நோக்கத்தக்கன. இன்று இவ்வூர் அலர்தூற்ற எய்யாய் நீ துறத்தலின் நின்றதன் எவ்வநோய் என்னையும் மறைத்தாள்மன்! வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி நின்றுநீர் உகக்கலுழும் நெடும் பெருங்கண் எனத் தோழி கூற்றாய் அமைந்த நல்லந்துவனாரின் நெய்தற் கலித் தாழிசை தக்க மேற்கோளாகும். (கலித்தொகை 124) மதுரை மாதரி இல்லத்தில் தன் தவற்றை உணர்ந்து உரைத்த கோவலன் கண்ணகியிடம், இருமுதுகுரவர் ஏவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு எழுகென எழுந்தாய் என்செய் தனையென! என வினவிய போழ்து கண்ணகி, அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்துஎதிர் கோடலும் இழந்த என்னை, நும் பெரும்மகன் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் மாபெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் முந்தை நில்லா முனிவிகந் தனனா அற்புளம் சிறந்தாங்கு அருண்மொழி யளைஇ எற்பாராட்ட யான்அகத்து ஒளித்த நோயும் துன்பமும் நொடிவது போலும் என் வாயல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்தப் போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்றுஎழுந் தனன்யான் என்றவள் கூற எனக் கூறப்படுதலில் குறட்கருத்து மண்டிக்கிடப்பதைக் காணலாம். இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென் இல்லவள் மாணாக் கடை (குறள் 53) பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்? (குறள் 54) தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் (குறள் 56) என்னும் வாழ்க்கைத் துணை நலக்குறள்களையும் பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் கணியெவனோ ஏதில தந்து (குறள் 1089) என்னும் தகையணங்குறுத்தல் குறளையும் கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் (குறள் 1137) எனும் நாணுத் துறவுரைத்தல் குறளையும் காத்தலும் ஆற்றேன்இந் நோயை நோய்செய்தார்க் குரைத்தலும் நாணுத் தரும் (குறள் 1162) காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்,என் நோனா உடம்பின் அகத்து (குறள் 1163) எனும் படர்மெலிந்திரங்கல் குறள்களையும் ஒருங்கே சிந்திக்கத் தூண்டுவதுடன் கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்து புறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் என்னும் தொல்காப்பிய 1098 வது நூற்பாவையும் செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலான எனக் கூறும் 1155 ஆம் தொல்காப்பிய நூற்பாவையும் நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா ஆர்க்கும் சிலம்பே அணி முரசா- வேற்படையும் வாளுமே கண்ணா வதன மதிக்குடைக் கீழ் ஆளுமே பெண்மை அரசு என்னும் நளவெண்பாப் பாடலையும் ஒருங்கே நினைவுபடுத்தும் குறளே, தலைவன் தனிமையில் நினைந்து பார்க்கும், கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது (குறள் 1272) என்னும் அருமைக் குறளாகும். என் கண் நிறைந்த அழகையும் மூங்கில் போன்ற தோள் களையும், பேதைமையையும் உடைய பெண்ணாகிய அவளிடம் நிறைந்துள்ள நல்லியல்புகள் பெருமைக்குரியன என எண்ணி எண்ணிப் பார்த்துத் தலைவன் பெருமைப்படுகிறான். அவன், புற அழகினும் அக அழகே பெரிது என நோக்கும் பண்பாளன். காரிகை என்றால் அழகு காம்பு என்றால் மூங்கில், நீர்மை என்றால் தன்மை இனிய நல்லியல்புகள். கண் நிறைந்த காரிகை என்றது காதலியின் பேரழகை வியந்து, அவளது எழில் வடிவம் இவனது கண்ணையும் கருத்தையும் கவர்ந்துள்ளமை இதனாற் புலனாம். கண்ணுள் இருந்தாய்; எண்ணுள் நிறைந்தாய் எனத் தன் காதலியை நினைந்து கரைந்தார் உண்டு. காம்பேர் தோள் - மூங்கிலை ஒத்த தோள்களை உடைய ஏர் இதில் உவமை உருபாக நின்றது. கயலேர் கண் பனி மல்க முகையேர் இலங்கு எயில் இன்னகை மாதர். (நெய்தற்கலி) இவற்றுள் ஏர் உவம உருபாக வந்துள்ளமையையும் நினைந்து கொள்வோம். காதலிக்கு என்னாது பேதைக்கு என்றது. அவளது வெள்ளை உள்ளத்தை உட்கொண்டு கூறியதாகக் கொள்வோமாக! மணியில் திகழ்தரு நூல்போல், மடந்தை அணியில் திகழ்வதொன்று றுண்டு (குறள் 1273) மணியால் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியால் திகழ்வது ஒன்று உண்டு என்றும் மணியைக் காட்டிலும் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியைக் காட்டிலும் திகழ்வது ஒன்று உண்டு என்னும் பாங்கிலும் நோக்கலாம். கோக்கப்பட்ட கண்ணாடி மணிக்குள்ளே இருந்து புறத்தே தெரிகின்ற நூலைப் போல், அம் மடந்தையின் புறத்தே விளங்கும் அழகிற்குள் அமைந்து அகத்தே விளங்குவதாகிய நல்ல குறிப்பு ஒன்று உள்ளது. நூல் - நூற் கயிற்றையும் புத்தகத்தையும் குறிக்கும். அணி - அழகையும் அணிகலனையும் உணர்த்தும். மணி - மாணிக்கத்தையும் ஒளியையையும் சுட்டும். மென்னூல் எழினியின் உள்ளே கதிர்த்த விளக்கொளி போல் நன்னூல் கிளந்த அணியுள் கிடந்தோர் நலம் திவளும் பன்னூறு கோடிநற் பாங்கியல் சூழப் மைம்பூம் பொழில்வாய்ப் பொன்னூ புரங்கள் புலம்பப் புகுநம் புனக்கிளிக்கே என்னும் தணிகைப் புராணப்பாடலும் தக்க மேற்கோளாகும். அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (குறள் 1081) எனும் தகையணங்குறுத்தல் குறளையும் பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து (குறள்1102) என்னும் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் அமைந்துள்ள குறளையும் ஒப்பு நோக்கலாம். முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு (குறள் 1274) திரண்டு விரிய உள்ள மலரின் மொக்கின் உள்ளே நறுமணம் வெளிப்படாது அடங்கிக் கிடக்கும். அதுபோல் வெள்ளை உள்ளம் படைத்த என் தலைவியின் புன்முறுவலுக்குள்ளே நல்ல குறிப்பொன்று மறைந்து கிடக்கும் எனத் தலைவியின் புன்முறுவல் கண்டு, அதனுள் அமைந்த நற்குறிப்பை ஆராய்கிறான். அவள் குறிப்பு அவனுக்கா தெரியாது? முகையின் வடிவத்தையும் நிறத்தையும் காணலாம் அது போல் நகையின் அழகைக் காணலாம். நகைக்குக் காரணமான உணர்வு உரியவர்க்கே புரியும் தன்மை உடையதாகும். வருந்தும் துன்ப இருள் அகற்றி வயங்கும் அமரர் கடைந்து முனம் அருந்தும், அமிழ்திற் கையறவுற்று அழியும் ஆவி தவிர்ப்பிக்கும் செருந்தி கமழும் பூங்கோதைத் தெய்வக் கமல முகத்தரும்பி முருந்தும் வெள்ளைநிலாக் கொழுந்தும் முத்தும் பொருவு முகில் நகையே! என்னும் கூர்மபுராணப் பாடலும் மேற்கோளாய்க் கொள்ளத் தக்கதாகும். ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும் சீதைதன் நடையை நோக்கிச் சிறியது ஓர் முறுவல் செய்தான் மாதுஅவள் தானும் ஆண்டு வந்து நீர்உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள் கோதாவரி ஆற்றங்கரையில் இராமனும் சீதையும் இயற்கைக் காட்சி களைக் கண்டு மகிழ்வதில் ஒன்றைக் கம்பராமாயணம் காட்டும் இப்பாடல் தக்க மேற்கோளாகும். இருநோக் கிவளுண்கண் உள்ள;தொருநோக்கு நோய்நோக் கொன்றந்நோய் மருந்து (குறள் 1091) என்னும் குறிப்பறிதல் அதிகாரக்குறளையும் பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து (குறள் 1102) எனும் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரக் குறளையும் உடன் எண்ண வைக்கும் குறளே, செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன் றுடைத்து (குறள் 1275) ஆகும். நெருங்கிய வளையல்களை அணிந்த தலைவி என் உள்ளத்தைப் பிறர் அறியாதவாறு கொள்ளை கொண்டாள். அப்பொழுது அவள் செய்து விட்டுச் சென்ற குறிப்பு. யான் அடைகின்ற பெருந்துன்பத்தைப் போக்கும் மருந்து ஒன்றும் அவளிடத்தில் உள்ளதைக் குறிப்பாகக் காட்டுவதாக அமைந்துள்ளது. செறிதொடிப் பொன்னேர் மேனிமடந்தை என்னும் தொடரை ஐங்குறுநூற்றில் காணலாம். எனது பெருமை மிக்க நெஞ்சமே! கீழ்க்காற்றால் ஏற்படும் பெரிய மழை மேற்குத் திசையில் எழுச்சியுற்று, மழை பொழிந்து தளையச் செய்த சந்தன மரத்தின் மணம் கமழும் அரைத்த சந்தனக் கட்டையோடு, பலபிற பொருள் களையும் சேர்த்துக் கூந்தலில் பூசி அழகுபெற வாரி அது காய்ந்த வழி, சந்தனத் துகள்கள் உதிர ஐவகையாக வகுக்கப்பட்ட கூந்தலை உடையவள் தலைவி. அவளைச் சுற்றிப் பெரிய கண்களை உடைய தோழியர்கள் மகிழ்ந்து செல்கின்றனர். அவர்களுடன் தலைவியின் தந்தைக்கும் சொந்தமான தேர் இயங்குகின்ற பெரிய மணல் வெளியில் பந்து ஆடுதற்காக நம்பால் அன்பு இல்லாத இளைய மகள் அவர்களுடன் செல்லுகின்றாள் இதனால், நெஞ்சே! தலைவியை இரந்து வழிபட்டு நில்! ஏனென்றால், நான் உற்ற நோயினால் ஏற்பட்ட அவலத்திற்கு அன்பில்லாதவள் போல் செல்கின்றாள் என்றாலும் அவளே எனக்கு மருந்தாவாள்; பிறிதொன்றும் இதற்கு மருந்தாகாது; எனவே அவளை இறைஞ்சி வழிபடுதல் அன்றி, வேறு வழி எனக்குத் தோன்றவில்லை என்று தன் நெஞ்சிற்குத் தலைவன் கூறினான் எனும் செய்திகளைத் தன்னகத்தே கொண்ட, கொண்டல் மாமழை குடக்குஏர்வு குழைத்த சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப் புலவர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப் பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவிலாட்டி அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம் அருந்துயர் அவலந் தீர்க்கும் மருந்து பிறிது இல்லையான் உற்ற நோய்க்கே 140. என்னும் பூதங்கண்ணனார் பாடிய நற்றிணைப் பாடல் நல்லதொரு இலக்கிய மேற்கோளாகும். பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல், அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து (குறள் 1276) மிகப்பெரியதாக அன்பு பாராட்டி, மிக்க விருப்பத்துடன் கூடிக் கலக்கும் செய்கை, பொறுத்தற்கு அரிய அன்பில்லாப் பிரிவு விரைவில் வர இருப்பதைக் குறிப்பால் உணர்த்துவது போன்று உள்ளது என்ற கலக்கம் தலைவியின் மனத்தில் எழுகிறது. பதுமையை விட்டுப் பிரிய எண்ணிய சீவகன் அன்பு பாராட்டி உரையாடினான் வினைக்கும் செய்பொருட்கும் வெயில் வெஞ்சுரம் நினைத்து நீங்குதல் ஆண்கடன்; நீங்கினால் கனைத்து வண்டுணும் தோகையர் தங்கடன் மனைக்கண் வைகுதல் மாண்பொடு எனச் சொன்னான். விரைசெய் தாமரைமேல் விளையாடிய அரச அன்னம் அமர்ந்துள வாயினும் நிரைசெய் நீலம் நினைப்பில என்றனன் வரைசெய் கோல மணங்கமழ் மார்பினான் சீவகன் இவ்வாறு உரைத்ததாகப் பதுமை தன் தாயிடம் கூறினாள். அதனைக்கேட்ட தாய் உரைத்த மறுமொழி. அன்னம்தான் அவன்; தாமரைப்போது நீ நின்னை நீங்கினன் நீங்கிலன் காதலான் இன்னதால் அவன் கூறிற்று எனச் சொன்னாள் மன்னன் ஆருயிர் மாபெருந் தேவியே. எனும் சிந்தாமணிப் பாடல் தக்க மேற்கோள் ஆகும். துணைவரொடு கூடி இருந்த நாளில் பருத்திருந்த தோள்கள். இப்போது மெலிவடைந்தமையால் அவர் பிரிந்து சென்றதை மிக நன்றாக அறிவிப்பன போலும் என்பதை உறுப்பு நலன் அழிதலில் தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் (குறள் 1233) எனக் கூறியதை அடிப்படையாய்க் கொண்டு மலர்ந்ததே, தண்ணந் துறைவன் தணந்தமை, நம்மினும் முன்னம் உணர்ந்த வளை (குறள் 1277) குளிர்ச்சி பொருந்திய அழகிய நெய்தல் நிலத் தலைவனாகிய துணைவன், பிரிந்து செல்ல வேண்டியுளது என்ற செய்தியை நமக்குத் தெரிவிக்கவில்லை. நமக்கு அவர் பிரிந்து செல்லும் செய்தி தெரிவதற்கு முன் தலைவர் பிரியப் போகிறார் என்பதை வளையல்கள் முன்னமே உணர்ந்து கொண்டன. ஆகவே தோளை உடனே மெலிவித்து அவை கழன்றுவிழத் தொடங்கி விட்டன எனத் தன் உடற்குறிப்பைத் தானே கண்டுணர்ந்து வருந்துவது புலப்படுகிறது. அதுபோல் தலைவனின் ஒவ்வொரு அசைவையும், பார்வையையும் சொல்லையும் தலைவியின் உடல் உறுப்புகள் அனைத்தும் உற்று நோக்கிக் கொண்டே இருக்கின்றன. என்பதையும் அறிய முடிகிறது. நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து (குறள் 1278) தலைவர் என்னைப் பிரிந்து சென்றது நேற்றுத்தான். ஆனால் பிரிவுத் துன்பத்தால் உண்டாகும் பசலை என் உடலில் தோன்றி ஏழு நாள்கள் ஆகிவிட்டன என்கிறாள் தலைவி. பிரியவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிரியப்போகிறார் என்றே உள்ளுணர்வே பிரிவுத் துன்பத்தை உண்டாக்கி விடும். அதுவே காதல் வாழ்வின் தனித்தன்மை. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது (குறள் 1279) தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறான் என்பதை ஏழு நாள்களுக்கு முன்னே உணர்ந்து கொண்ட உணர்வுக் கூர்ப்புடையது அவளது மேனி. அதிலிலும் குறிப்பறிதலில் கண் முந்தி நிற்கும் என்றாலும், உணர்ந்த குறிப்பை நடைமுறைப்படுத்துவதில் வேகமானது அவளது தோள். ஆகவே அது மெலிந்து பசலை பூத்து வருகிறது. இத்தகைய சூழலில் தலைவன் தன் கடமையை எடுத்துரைத்து, விரைவில் வினைமுடித்துத் திரும்பி விடுவதாகக் கூறித் தலைவியின் உடன்பாட்டை எதிர்பார்த்து நிற்கிறான். தலைவி வாய்திறந்து ஒரு சொல்லும் பேசவில்லை. ஆனால் அவள் கையில் அணிந்துள்ள வளையலையும் பார்த்தாள்; அவனையும் ஏறிட்டுப் பார்த்தால், அடுத்துத்தன் மெல்லிய தோளை உற்று நோக்கிவிட்டுத் தலைவன் முகத்தைப் பார்த்தாள் மூன்றாவதாகத் தன்னுடைய அழகிய கால் அடியையும் பார்த்துவிட்டு அவனைப் பார்த்தாள்; தொடி, தோள், அடி என்னும் மூன்றையும் ஏன் பார்த்தாள்? அது தவிர வேறு ஒன்றும் செய்யவும் இல்லை; சொல்லவும் இல்லை. இதைக் கொண்டு அவள் எண்ணம் யாதாக இருக்கும் என எண்ண முற்பட்டான். பிரிந்து செல்வதை அவள் விரும்பவில்லை. பிரிவுத் துயரைத் தாங்கிக் கொள்ளும் வன்மை அவளுக்கு இல்லை. பிரியும் முன்பே தோள் மெலிந்து பசலை பூத்து வளையல்களும் கழலுமானால் பிரிந்து சென்றால் என்ன ஆவேனோ? உங்களோடு நானும் உடன் நடந்து வர என்கால்களில் வலிமை உண்டு என்பதை உணர்த்தவே அடியை நோக்கினாள் என்பதைக் குறிப்பால் உணர்ந்து கொண்டவன். பிரிவைத் தாங்கும் வலிமை அவளுக்கு வரும் வரை பயணத்தைத் தள்ளி வைப்போம் என்று எண்ணிக் கொண்டு! பிரியேன்! கவலைப்படாதே எனத் தேற்றி இருப்பான் எனக் கருதலாம். எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125) எனும் குறள் மணியையும், செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான. என்னும் தொல்காப்பியத்திற்கு இலக்கியச் சான்று காட்டுவது போல் அமைந்த குறளே, பெண்ணினான் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு (குறள் 1280) வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக் கொள்ளுதல், தமது இயல்பாகிய பெண் தன்மையுடன், மேலும் ஒரு தனிச்சிறப்புடையது என்று அறிஞர்கள் கூறுவர். என்பதுடன் நெய்தல் நில உரிப்பொருளாகிய இரங்கல் ஒழுக்கம் நிறைவு பெறுகிறது. கரப்பினும் கண் உரைக்கல் உறுவது உண்டு. கண்நிறைந்த காரிகை கண் நிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதை பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு முகைமொக்குள் உள்ளது நாற்றம் பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்றுண்டு செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்து. பெட்கக் கலத்தல் அன்பின்மை சூழ்வது. நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. சென்றது நேற்று; மேனி பசந்து ஏழுநாள் ஆயிற்று தொடி நோக்கினாள் ஏன்? மென்தோள் நோக்கினாள் ஏன்? அடி நோக்கினாள் ஏன்? அவள் செய்தது தொடி, தோள் அடி நோக்கியது மட்டும் தான். பெண்ணினான் பெண்மை கண்ணினான் காம நோய் சொல்லல் 129. புணர்ச்சி விதும்பல் 129. புணர்ச்சி விதும்பல் 130. நெஞ்சொடு புலத்தல் 131. புலவி. 132. புலவி நுணுக்கம் 133. ஊடல் உவகை ஆகிய திருக்குறள் காமத்துப்பால் நிறைவு அதிகாரங்கள் ஐந்தும் மருதத்திணை உரிப் பொருளாகிய ஊடல் ஒழுக்கம் பற்றி உரைப்பனவாகும். மருதத்திணையைச் சங்க நூல்களாகிய அகநானூறு முதலியவை கூறும் முறை வேறு; திருக்குறள் கூறும் முறை வேறு. திருக்குறள் காட்டும் மருதத்தில் பரத்தை என ஒருத்தி இல்லை; தலைவன் பரத்தையை நாடிச் செல்வதும் இல்லை மற்ற நூல்களில் பரத்தையும் உண்டு; பரத்தையோடு தலைவன் களிப்பதும் உண்டு. பொருள் காரணமாக மகளிர் சிலர் ஒழுக்கத்தை விற்பதும் கூடாது. ஒழுக்கமற்ற அந்த மகளிரை ஆடவர் நாடுவதும் கூடாது. என்று பொருட்பாலில் வன்மையாகக் கடிந்தவர் திருவள்ளுவர். வரைவின் மகளிர் (92) என்ற அதிகாரம் திருவள்ளுவரின் சீர்திருத்தத்தை விளக்குவது. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணம்தழீஇ யற்று (குறள் 913) எனவும் வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு (குறள் 919) எனவும் கூறி வெறுப்பூட்டியவர் திருவள்ளுவர். தனக்கென, மனைத்தக்க மாண்புடையாளைத் தேர்ந்து, வாழ்க்கைத் துணையாக்கி வாழ்வாங்கு வாழ அறத்துப்பாலில் வழிகாட்டியவர் தனக்கு உரிமைத் துணையாக ஆக்கிக் கொண்ட பெண்ணைத் தவிர்த்து வேறு எந்தப் பெண்ணையும் காமக்கண் கொண்டு நோக்குதல் அறமன்று என வலியுறுத்தப் பிறனில் விழையாமை வேண்டும் என்றார். பிறன் மனை நோக்காத பேராண்மை என்றதுடன். பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல் (குறள் 141) என ஆடவர் கற்பொழுக்கம் போற்றி வாழ வழிகாட்டியவர் வள்ளுவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புணர்ச்சி விதும்பலாவது, பிரிந்து கூடின தலைமகனும் தலைமகளும் புணர்தல் வேண்டி ஒருவரின் ஒருவர் முந்து முந்து விரைதல் என்பது மணக்குடவர் விளக்கமாகும். தலைமகள் பிரிவு ஆற்றாது உடன்போக்கு, உடன்பாட்டுக் குறிப் புணர்த்தலும் தலைமகன் பிரிவின்மைக் குறிப்பு உணர்த்தலும் புணர்ச்சிக்கு ஏதுவாகலின் குறிப்பறிவுறுத்தலின் பின் வைக்கப்பட்டது என்பது பாவாணரின் அதிகார வைப்பு விளக்கமாகும், தலைவனும் தலைவியும் கூட விரும்பி விரைதலை உணர்த்தும் அதிகாரமாகும். தகையணங்குறுத்தலில் உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று (குறள் 1090) எனவும் நினைந்தவர் புலம்பலில், உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது (குறள் 1201) எனவும் காமத்திற்கும் கள்ளிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை எடுத்து இயம்பியாங்கு மொழியும் பிறிதொரு குறளே, உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு (குறள் 1281) என்பதாகும். தலைமகனைக் கண்ணுற்ற இடத்துப் புலவியைக் கருதின தலைமகள், புணர்வு வேட்கையால் சென்ற நெஞ்சினைக் கண்டு தன்னுள் வியந்து கூறியதாகப் பரிப்பெருமாள் கூறுகிறார். கள்ளும் காமமும் களிப்பும் மகிழ்ச்சியும் உண்டாக்கும். ஆனால் நினைத்த அளவில் களிப்புறுத்தும் தன்மையோ கண்ட அளவில் மகிழ்ச்சி உண்டாக்கும் தன்மையோ கள்ளிற்கு இல்லை; பருகினால் தான் களிப்புறுத்தவும் மகிழ்வுறுத்தவும் செய்யும். ஆனால் காமத்தை நுகராமலே காதலரை நினைத்தாலே களிப்பூட்டும்; காதலரைக் கண்ட அளவிலேயே மகிழ்ச்சியை உண்டாக்கும் இயல்பு வாய்ந்ததாகும். ஆகவே, நினைத்த அளவில் களிப்பு உண்டாதலும், காணும் அளவில் மகிழ்வு உண்டாதலும் மதுவுக்கு இல்லை; ஆனால் அவை காதலுக்கு உண்டு எனத் தலைவனை நினைந்தும் கண்டும் களிக்கவும் மகிழவும் செய்தாள். நினைத்தால் இனிப்பதென்ன? நேர்கண்டால் மகிழ்வதென்ன? கள்ளல்ல தோழி! காமம் அதன் பெயரே என்கிறார் கண்ணதாசன். உள்ளல்- ஊன்றி நினைத்தல், நினைப்பு எல்லாச் செயல்கட்கும் மூலம் ஆதலால் அதன் முதன்மை தோன்ற முதலிற் குறித்தார். களித்தலும் மகிழ்தலும் இன்பநிகழ்ச்சிகள் ஆயினும் - களிப்பு- உணர்ச்சியோடு ஒன்றி நிற்கும்; மகிழ்ச்சி- உணர்வு உரு ஒழிந்து பரவசமாய் மருவி எழும். கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேரெழில் காட்சிகளை விளக்கும் பாடல்களில் இரண்டு ஒப்பு நோக்கத்தக்கனவாம். கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை இவை எல்லாம் வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள் கொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண் கல்லும் புல்லும் கண்டுஉருக பெண்கனி நின்றாள் வெங்களி விழிக்கு ஒரு விழவும் ஆய், அவர் கண்களின் காணவே களிப்பு நல்கலால் மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள் எங்கள் நாயகற்கு, இனியாவது ஆம் கொலோ என்னும் கம்பராமாயணப் பாடல் தக்க மேற்கோளாகும். பெருமை சிறுமையை ஒப்பிட்டு விளக்கத் திருவள்ளுவர் பனையை யும், தினையையும் உவமையாகக் கொண்டு, அறத்துப் பாலில் செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தில் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் (குறள் 104) எனவும் பொருட்பாலில் குற்றம் கடிதல் அதிகாரத்தில் தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் (குறள் 433) எனவும் உவமை வழி விளக்கியாங்கு விளக்கும் குறளே, தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் (குறள் 1282) பனை அளவு மிகுந்த காதல் கொண்டவர்களும் விளையாட்டாகத் தினையளவு ஊடல் கொண்டாலும் அது காதல் இன்பத்தைக் கெடுத்து விடும். ஆகவே பனைஅளவு மிகுதியாகக் காதல் நிரம்பி வருமானால் அதனைத் தக்கவாறு பயன்கொள்ள வேண்டுமே ஒழிய, அப்பொழுது காதலர் இருவரில் ஒருவர் கூட தினையளவு கூட ஊடல் கொள்ளாமல் நடந்து கொள்ளுதல் வேண்டும். பனையளவு காமம் படையெடுத்து வரும்போது தினையளவு கூடச் சிறு கோபம் கொள்ளாமல் சேரும் சுகமே சிறந்த சுகம் என் தோழி! என்கிறார் கண்ணதாசன். பேணும் விருப்பம் இல்லாமலே பேணும் விருப்பம் இருப்பதாகக் காட்டிய என் துணைவர் உள்ளார்! அத்தகையர் உள்ளமை அறிந்தும் அவரைக் காண முடியாமல் என் கண்கள் அமைதியற்று உள்ளன என்பதைக் கண் விதுப்பழிதல் அதிகாரத்தில், பேணாது பெட்டார் உளர்மன்னோ, மற்றவர்க் காணா தமைவில கண் (குறள் 1178) எனும் குறளை அடியொற்றி அமைந்ததே பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண் (குறள் 1283) என்பதாகும். கொண்கன் (என்னைப்) பேணாது பெட்பவே செய்யினும் (அவரைக்) காணாது அமைவிலகண் எனவும், கொண்கனை (நான்) பேணாது பெட்பவே செய்யினும் (என்) கண் (அவரைக்) காணாது அமைவில என அமைத்துக் கொண்டாலே பொருள் புரிந்துவிடும். என் தலைவர் உடனிருந்து என்னைப் பேண வேண்டும் என்று கருதாதவராய்த் தான் விரும்பிய செயல்களையே செய்து கொண்டிருந் தாலும் என் கண்களுக்கு அவரைக் காணாமல் அமைதி ஏற்படாது. என் வாக்குக் கேளாமல் என்னைக் கலக்காமல் தன் போக்கில் எந்தன் தலைவனவன் சென்றாலும் கண்ணனை நான் காணாமல் கண்ணுக்கு அமைதி இல்லை என்கிறார் கண்ணதாசன். மாணா செயினும் மறுத்தாங்கே நின்வயின் காணின் நெகிழும் என் நெஞ்சாயின் என்றுற்றாய் பேணாய்நீ பெட்பச் செயல் என்னும் மருதக் கலித்தாழிசை தக்க மேற்கோளாகும். துனிதீர் கூட்டமொடு துன்னார் ஆயினும் இனிதே, காணுநர் காண்புழி வாழ்தல் கண்ணுறு விழுமம் கைபோல் உதவி நம்முறு துயரம் களையார் ஆயினும் இன்னாது அன்றே அவரில் ஊரே என மதுரை மருதனிள நாகனார் பாடிய நற்றிணைப் பாடல் நல்லதொரு மேற்கோள் ஆகும். தோழி! குட்டையான தண்டினை உடைய கூதளஞ் செடி, மேல் காற்றால் அசைகின்ற, உயர்ந்த மலைமேல் பெரிய தேன் அடையைக் கண்ட பெரிய கால்களை உடைய முடவன் கீழே இருந்தபடி, தன் உள்ளங் கையைச் சிறுகுடை போலக் குவித்து, மேலே உள்ள தேன் அடையைச் சுட்டிக் காட்டி நக்கி இன்புற்றாற் போல, நம் காதலர் நமக்குத் தண்ணளி செய்யார், விரும்பாராயினும் அவரைப் பல முறை கண்ணாற் கண்டால் அதுவே நம் உள்ளத்திற்கு இனிமை தருவது ஆகின்றது எனும் பொருள் தோன்றப் பரணர் பாடிய குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கியாங்கு, காதலர் நல்கார் நயவார் ஆயினும் பல்காற் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே என்னும் குறுந்தொகைப் பாடல் தக்க மேற்கோளாகும். கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட அடியன் அறிவருமேனி மாயத்தன் ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவன்என்றே கிடக்கும் என்னும் திருவாய்மொழியும் தக்க மேற்கோளாகும். ஊடற்கண் சென்றேன்மன் தோழி, அதுமறந்து கூடற்கண் சென்றதென் நெஞ்சு (குறள் 1284) தோழியே! ஊடல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் நான் அவர் இருக்கும் இடம் சென்றேன். ஆனால் அவரை நெருங்க நெருங்க என் நெஞ்சம் ஊடல் கொள்ள வேண்டும் என்பதை மறந்து கூட வேண்டும் என்ற எண்ணத்தோடு செல்வ தாயிற்று என உண்மையைத் தோழியிடம் உரைத்தாள். ஆடாமல் அசையாமல் அவர்அருகே சென்றவுடன் ஊடுவோம் என்றே தான் உள்ளத்தில் நினைத்திருந்தேன். கூடுகட்டும் நெஞ்சோ என் கொள்கை மறந்து விட்டு கூடவே சென்றதடி கூடலுக்கே சென்றதடி என்கிறார் கண்ணதாசன். எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண் பழிகாணேன் கண்ட இடத்து (குறள் 1285) கண்ணுக்கு மைதீட்டும் கோலை நன்கு பார்த்திருக்கிறேன் என்றாலும் கண்ணுக்கு மைதீட்டும போது மைதீட்டும் கோலைக் கண்களால் காண முடியாது. அதுபோல் உடன் இல்லாத போது அவர் செய்த தவறுகளை வரிசை வரிசையாக எண்ணிப் பார்க்கும் நெஞ்சம் அவர் வந்தவுடன் அவர் செய்த தவறுகளைக் கூறி ஊடல் கொள்ள வேண்டும் என எண்ணி இருந்தவள் அவரைக் கண்டவுடன் அவரைப் பற்றிய தவறுகள் எதுவும் நினைவிற்கு வரவில்லை. அவருடைய நல்லியல்புகளே என் நெஞ்சத் திரையில் படமாக ஓடுகிறது. எனத் தோழியிடம் அவரைக் கண்டஇடத்துப் பழி காணேன் என உரைத்தாள். வண்ண மலர் விழிக்கு மைஎழுதும் வேளையிலே எழுதுகின்ற கோலை எந்தக் கண் காணுமடி? கோமகனைக் காணாக்கால் குற்றங்கள் நினைக்கின்றேன். அருகினிலே பார்த்தவுடன் அத்தனையும் மறக்கின்றேன் என்கிறார் மறக்க முடியாக் கவிஞர். தோழி! வாழி! நீண்டு திரண்ட தோளின் வளையல்கள் நெகிழுமாறு செய்து கொடியவனாகிய, குன்றுகள் சூழ்ந்த நாடன், நம்மை மறந்து நெடுநாள் பிரிந்து வருகின்ற சமயத்தில் உன் இனிய முகத்தை மாறுபட வைத்துக் கொள்ளாமல் தெய்வத் தன்மையுடைய நின் கற்பினால், அவனை எதிர்சென்று வரவேற்றுப் பேணிய நீ உறுதியாக மடமை யுடையாய், என்று என்னை வினவிய, தோழியே! நீ வருத்தம் உறாதே ஏன் அவ்வாறு தலைவனை ஏற்றுக்கொண்டேன் என்றால், என் தலைவன் சான்றோன் ஆவான். சான்றோர்கள் தங்களை யாரும் புகழ்ந்தாலும் அவர்க்கெதிரே தலைகுனிந்து நாணுவர். நன்கு சிந்திக்குமிடத்து அப்படிப் பட்டவர்கள் பழி எதுவும் நேர்ந்தால் எங்ஙனம் தாங்குவார்கள்? அதனால் தான் முகம் சுளிக்காமல் வரவேற்றேன் என்றாள் தலைவி தோழியிடம் இக்கருத்தமைந்த பாடலைப் பாடியவர் கிடங்கில் குலபதி நக்கண்ணன். குறுந்தொகையில் இடம்பெறும் அவர்பாடல் வருமாறு:- நெடிய திரண்ட தோள்வளை ஞெகிழ்ந்த கொடிய னாகிய குன்றுகெழு நாடன் வருவதோர் காலை இன்முகம் திரியாது கடவுட் கற்பின் அவன்எதிர் பேணி மடவை மன்ற நீ எனக் கடவுபு துனியல் வாழி தோழி! சான்றோர் புகழும் முன்னர் நாணுப! பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே. இக்குறுந்தொகை பாடல் தக்க மேற்கோள் ஆகும். காணுங்கால் காணேன் தவறாய: காணாக்கால் காணேன் தவறல் லவை (குறள் 1286) காணுங்கால் காண்பேன் இனியவை: காணாக்கால் காண்பேன் தவறாயவை! என்றும் கூறலாம். யான் துணைவரை நேரில் காணும் பொழுதில் அவர் செய்தவற்றில் தவறானவற்றை எண்ணிப் பார்க்கவே தோன்றாது. அவரின் நல்லியல்பு களும் நற்செயல்களும் சாதனைகளுமே நினைவில் முன் நிற்கும். அவரை நேரில் காணும் வாய்ப்பு இன்றிப் பிரிந்து வாழும் காலத்தில் அவருடைய நற்குணங்களோ நற்செயல்களோ நினைவிற்கு வருவ தில்லை. ஆனால் செய்த தவறுகளையே எண்ணிக் கொண்டு இருக்கிறேன். பிரிவு தலைவனைக் குற்றவாளியாகக் கருதச் செய்யும். கூடி இன்புறுங்கால் தலைவன் சான்றோனாகக் கருதப்படுவான். இரண்டும் நடுவு நிலைமையான கணிப்பு அன்று; அறிவுக் கண் கொண்டு நோக்காது. உணர்ச்சி வயப்பட்டு எடுக்கும் முடிவாகும். கண்ணாலே காணுங்கால் காதல் பெருக்கெடுத்து குற்றமே காணாமல் கூடிக் கலக்கின்றேன் காணாத போதெல்லாம் களங்கம் நினைக்கின்றேன் என்பது கண்ணதாசன் நினைப்பு. பேணும் கொழுநர் பிழைகள் எலாம் பிரிந்த பொழுது நினைந்து அவரைக் காணும்பொழுது மறந்திருப்பீர்! கனப்பொற் கபாடம் திறமினோ என்னும் கலிங்கத்துப் பரணிப் பாடலும், மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன்; கண்டக்கால் பூணாகம் தாவென்று புல்லப் பெறுவேனோ நாணோடு உடன்பிறந்த நான். என்னும் முத்தொள்ளாயிரப் பாடலும் தக்க மேற்கோளாகும். காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை (குறள் 1134) என நாணுத் துறவு உரைத்தலிலும், காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன் (குறள் 1167) எனப் படர் மெலிந்து இரங்கலிலும் காட்டப் பட்ட புனல், வேறு வடிவம் பெற்று வரும் குறளே, உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து? (குறள் 1287) என்பது ஆகும். தம்மை இழுத்துக் கொண்டு போய்விடும் என்பதைத் தெரிந்திருந்தும் வெள்ளத்தில் பாய்ந்து துன்பத்திற்கு ஆளாபவர் போல், தெரிந்து கொண்டே பொய்யாக ஊடல் கொண்டு துன்புறுவது அல்லாமல் வேறு என்ன நன்மை கிடைக்கப் போகிறது. உய்த்தல் என்றால் தள்ளுதல் அல்லது இழுத்துச் செல்லுதல் என்பது பொருள். தண்புனல் வண்டல் உய்த்தென எனும் தொடர் ஐங்குறு நூற்றில் வந்துள்ளது. பின்னின்று உய்த்தர இன்னே வருகுவர் என்பதை முல்லைப்பாட்டில் காணலாம். வெள்ளத்தில் வீழ்ந்து விட்டால் மீளமுடியாது என்று தெரிந்தும் குதிப்பார்கள் சில மனிதர்! அதுபோல, ஊடல் மடமை என உள்ளம் அறிந்திருந்தும் ஊடுவதால் லாபம் என்ன? உரைசெய்வாய் என் தோழி! என உரைப்பவர் கண்ணதாசன். இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு (குறள் 1288) உள்ளங்கவர் கள்வனே! இழிவு தரத்தக்க துன்பத்தையே விளை வித்தாலும் கள்ளுண்பவர்கட்குக் அக்கள்ளின் மீது விருப்பம் செல்லுதல் போல், நீ எனக்கு இழிவு தரத்தக்க துன்பத்தை விளைவித்தாலும, இன்பம் தரும் நின் மார்பின் மீதே எனக்கு விருப்பம் உண்டாகிறது. கள்ளற்றே மார்பு - அன்புற்று இன்புற்றார் பட்டறிவின் வெளிப்பாடு. கள்வனே! காதலனே! கண்டவர்க்கு நகைப்பாகத் துன்பம் நீ செய்தாலும் சுகமான உன்மார்பு மதுவாய் இனிப்பதென்ன? மறுபடியும் கேட்பதென்ன? எனக் கேட்பவர் கண்ணதாசன். நவ்வி நோக்கியர் இதழ்நிகர் குமுதத்து நறுந்தேன் வவ்வு மாந்தரின் களிமயக்கு உறுவன மகரம் எனப் பம்பை வாவிப் படலத்தில் கம்பன் கூறும் உவமையையும் ஒப்பிட்டு நோக்குக! ஊடலைத் தெளிவித்தும் தலைவி ஊடல் தீரா நிலையில் தலைவன் கூறியது:- மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் (குறள் 1289) காமம் முரட்டுத் தனத்துக்கோ வன்மைக்கோ, கொடுமைக்கோ இடம் தராது மிக மென்மையாக அணுக வேண்டியதாகும். மெல்லிய மலர்களிலும் மென்மையானது காதல் மலர் ஆனால் இயல்பான பக்குவம் அறிந்து அதனைத் தக்கவாறு பயன்படுத்தி நோகாமல், நோகவைக்காமல் பயன்கொள்பவர்களின் எண்ணிக்கை உலகில் குறைவாகத்தான் இருக்கும் போலும் என்று வள்ளுவர் கூறும் கூற்றில் அறிவறிந்த மக்களினும் அறிய வேண்டியதை அறிந்து பயன்படுத்தும் பண்பினராய் இல்லையே என வருந்திக் கூறும் வருத்தம் புலப்படுகிறது. செவ்வி- நல்ல பயன்; ஏற்ற காலம். காதற் குறிப்பும், காம வேட்கையும் காமநுகர்ச்சியும் இன்பமும் ஒரு காலத்தே ஒத்து நுகர்தற்கு உரியார் இருவர். அதற்கேற்ற இடமும் காலமும் கருவிகளும் பெற்றுக் கூடி நுகர வேண்டுதலின் அதன் செவ்வி தலைப்படுவார் சிலர் என்றும் அவற்றுள் யாதானும் ஒன்றினால் சிறிது வேறுபடினும் வாடுதலின் மலரினும் மெல்லி தென்றும் கூறினார் எனவும் சிந்திக்கலாம். பூவைவிட மெல்லியது பொங்கிவரும் காமமது (காமம்+அது; காமம்+மது) அதனை அறிந்தவரும் அதனாலே மகிழ்ந்தவரும் எத்தனை பேர் பூமியிலே? ஏதோ சில பேர் தான் என்கிறார் கண்ணதாசன். கயங்கெழு நறுமலர் கயங்குறா வகைப் பயங்கெழு தேனுகர் சுரும்பின் பான்மை போல் வயங்கிழை மகளிரை மனம் திருத்தியே முயங்கினார்க் கன்றி மற்று இன்பம் உற்றுமோ? என்னும் பிரமோத்தரக் காண்டப் பாடலும் தக்க மேற்கோளாகும். கண்ணின் துனித்தே கலங்கினாள்; புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று (குறள் 1290) என் காதலி முன்னொரு நாள் தன் கண்ணினால் மாத்திரமே பிணக்கம் தெரிவித்து, என்னை அணைத்து இன்புறுதலில் என்னைக் காட்டிலும் ஆர்வம் கொண்டு விரைந்ததால், தான் பிணங்கிய நிலையை எண்ணிக் கலங்கினாள். உள்ளம் ஒத்த காதல் வயப்பட்டவர்கள் ஓர் உணர்வால் ஊடல் கொள்ள எண்ணலாம். ஆனால் அவர்கள் ஊடல் சிறிது பொழுது கூட நிலைக்காது என்பதே உண்மைக் காதலர் வாழ்விலிருந்து அறிந்த உண்மையாகும். கண்ணளவில் தானே காட்டினாள் ஊடல் அவள்? தன்னளவில் என்னைத் தழுவத்தான் ஆசை வைத்தாள் என்னை விடப் பேராசை; எல்லாம் மறந்து விட்டாள்! கண்டாள்; சிரித்தாள் கலங்கினாள்; கூடிவிட்டாள். என்கிறார் கவியரசர் கண்ணதாசன். உள்ளக் களிப்பதும் காமம் கண்டு மகிழ்தலும் காமம் தினைத் துணையும் ஊடாமை வேண்டும். கொண்கனைக் காணாது அமையல கண். ஊடற்கண் சென்றாலும் நெஞ்சு கூடற்கண் செல்லும் கொண்கனைக் கண்ட இடத்துப் பழிகாணாள். காணுங்கால் தவறாய காணாள்! பொய்த்தல் அறிந்து புலத்தல் பயனற்றது! கள்ளற்றது காதலன் மார்பு மலரினும் மெல்லியது காமம் காமத்தின் செவ்வி தலைப்படல் வேண்டும் புணர்ச்சி விதும்பலில் தலைவனுக்குத் தலைவி குறைந்தவள் அல்லள் 130. நெஞ்சொடு புலத்தல் 125வது அதிகாரம் நெஞ்சொடு கிளத்தல் ஆகும். அஃது ஆற்றாமை மீதூரத் தனக்கொரு பற்றுக் கோடு காணாத தலைமகள் தன்னெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுவதாகும். நெஞ்சொடு புலத்தல் என்னும் இவ்வதிகாரம் விளம்புவது. காரணம் உண்டாய வழியும் புலக்கக் கருதாது புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும் தலைமகன் புலத்தலும் ஆம். தலைவன் தலைவியர் அவரவர் மனத்தோடு பிணங்குதல் ஆகும். அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக் காகா தது (குறள் 1291) தலைமகன்கண் தவறு உண்டாய வழியும், புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைவி சொல்லியது: நெஞ்சே! நம் காதலருடைய நெஞ்சம் நம்மை நினையாது அவருக்காக நிற்பதைக் கண்டும், நீ எமக்காக நிற்காமல் அவரை நினைப்பது யாது கருதி! என வினவுகிறாள். அவர்க்கு ஆதல் அவர் கருதியதற்கு உடம்படல்; எமக்கு ஆகாதது என்றது- புலவிக்கு உடம்படாமையை. ஒரு செயலைத் தாமாக அறிந்து செய்ய மாட்டாதவர் செய்வாரைக் கண்டாயினும் செய்வர்; நீ அதுவும் செய்கின்றாய் இல்லை என்பதாம். அறியா மட நெஞ்சே அவர் நெஞ்சு அவர் பக்கம் அவர் ஆசை போலே அவர் நெஞ்சு நடக்குங்கால் என் ஆசை போலே ஏன் நீ நடக்கவில்லை? என்பது கண்ணதாசன் விளக்கமாகும். மருதன் இளநாகனாரின் மருதக்கலி 67 ஆம் பாடல், தரவு: கார்முற்றி இணர்ஊழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பு எய்தி, இருநிலம் தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன் நீர்முற்றி மதில் பொரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற்று ஒன்று அறியாத புரிசைசூழ் புனல்ஊரன் தாழிசை: நலத்தகை யெழில் உண்கண் நல்லார்தம் கோதையால் அலைத்தபுண் வடுக்காட்டி, அன்பின்றி வரின் எல்லா! புலப்பேன் யான்! என்பேன்மன்; அந்நிலையேஅவற்காணின் கலப்பேன் என்னும்இக் கையறு நெஞ்சே! கோடுஎழில் அகல்அல்குல் கொடியன்னார் முலை மூழ்கிப் பாடுஅழி சாந்தினன் பண்புஇன்றி வரின் எல்லா! ஊடுவேன் என் பேன்மன்; அந்நிலையே அவற்காணின் கூடுவேன் என்னும்இக் கொள்கைஇல் நெஞ்சே! இனிப்புணர்ந்த எழில்நல்லார் இலங்கு எயிறு உறாஅலின் நனிச்சிவந்த வடுக்காட்டி, நாணின்றி வரின் எல்லா துனிப்பேன்யான் என்பேன்மன்; அந்நிலையே அவற்காணின் தனித்தே தாழும் இத்தனிஇல் நெஞ்சே! எனவாங்கு சுரிதகம்: பிறைபுரை யேர்நுதால் தாம் எண்ணி யவையெல்லாம் துறைபோதல் ஒல்லுமோ? தூவாகாது, ஆங்கே அறைபோகும் நெஞ்சுடை யார்க்கு. என்னும் பாடல் தக்க மேற்கோளாகும். உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு. (குறள் 1292) என் நெஞ்சே! நம்மிடம் இப்போது அவர் அன்பில்லாதவராக இருக்கிறார் என்பதை உள்ளவாறு நீ அறிந்திருந்தும். நாம் சென்றால் அவர் நம்மீது வெறுப்புக் கொள்ளாமல் நடந்து கொள்வார் என்று நினைந்து அவரிடம் சேர்கிறாயே, இதைக் காட்டிலும் விஞ்சிய ஓர் அறியாமை உலகில் உண்டோ? எனத் தன் நெஞ்சைக் கேட்கிறாள். நம்மிடத்து அன்பில்லாத் தலைவரிடத்து நெஞ்சே! அவர் வெகுளார் என்று எண்ணிச் செல்லுதல் தகுதியன்று என்றாள் தலைவி. அடக்கமிலா என் நெஞ்சே! அன்பறியாக் காதலரைக் காணும் போதெல்லாம் கலந்து விளையாடுகிறாய்! அவர் வெறுக்கமாட்டார் என்று அறிந்தா நீ ஓடுகிறாய்? என்கிறார் கண்ணதாசன். தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி, உடன்சென்ற நெஞ்சினைத் தலைமகள் நினைந்து கூறியது:- கபிலர் பாடிய கீழ்க்காணும் ஐங்குறுநூறு பாடல் தக்க மேற்கோளாகும். வருவது கொல்லோ தானே வாராது அவணுறை மேவலின் அமைவது கொல்லோ! புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை இருவி யிருந்த குருவி வருந்துறப் பந்தாடு மகளிரிற் படர்தரும் குன்றுகெழு நாடனொடு சென்றவென் நெஞ்சே. என்பதாகும். இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு (குறள் 752) எனப்பொருள் செயல் வகையிலும், உறின்நட் டறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என் (குறள் 812) எனத் தீ நட்பு அதிகாரத்திலும், அறச்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும் (குறள் 1047) என நல்குரவு அதிகாரத்திலும் கூறிய வறுமையின் இழிவை உவமையாகக் கொண்டு அமைக்கப்பட்ட குறளே, கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ? நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல் (குறள் 1293) நெஞ்சமே! நீ என்னைக் கைவிட்டு உன்விருப்பப்படி அவரைப் பின் தொடர்ந்து செல்வது எதனால்? ஏழையாகி விட்டவர்களை உற்றார் உறவினரும் கைவிட்டு விடுவர் என்னும் பழமொழிக்கு நீயும் உட்பட்டவள் ஆகிவிட்டாயா? என வினவுகிறாள். நலம் வாழி! என் நெஞ்சே! நாடி நீ ஓடுவதேன்? நமக்குத்தான் நாதி இல்லை நண்பரில்லை, சொந்தமில்லை என்பதனால் தானே? எடுத்துரைக்க மாட்டாயோ? எனக் கண்ணதாசன் எடுத்துரைக்கிறார். முட்டின் றொருவர் உடைய பொழுதின்கண் அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக் கெட்டார்க்கு நட்டாரோ இல். என்னும் பழமொழிப் பாடல் உவமைக்கு நல்ல விளக்கமாய் அமைந்துள்ளது. நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் பயன்இன் மையிற் பற்றுவிட்டு ஒரூஉம் நயனின் மாக்கள் போல வண்டினம் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர என்னும் அந்தி இளங்கீரனாரின் அகநானூற்றுப் பாடல் வரிகள் தக்க மேற்கோளாகும். இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே! துனிசெய்து துவ்வாய்காண் மற்று (குறள் 1294) நெஞ்சே! நீ அவரைக் கண்டதும் அவர் தவறு நோக்கி முன் புலந்து பின் இன்பம் துய்க்க வேண்டும் எனக் கருதமாட்டாய்: உன்னைப் பற்றி எனக்குத் தெரியும். இனி அப்படிப்பட்ட முடிவு களை உன்னுடன் கலந்து எண்ணுவதற்கு வேறு ஆளைப்பார்? நான் உன்னை நம்பமாட்டேன். என உரைத்தாள். கூடி முடிவெடுத்தவர்களே முடிவுப்படி நடக்கவில்லை யானால், அத்தகையவர்களைக் கலந்து முடிவெடுக்கச் சேர்த்துக் கொள்ளலாமா? என எண்ணுகிறாள். உயர்வறியா என் நெஞ்சே! ஊடலையும் கொள்ளாய் நீ ஊடும் சுகம் தனையும் உணர்ந்து கொள்ள மாட்டாய் நீ இனி உன்னை நான் கேட்க ஏதுமில்லை செய்தியடி. என்கிறார் கண்ணதாசன். வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா, ஆயிடை ஆரஞர் உற்றன கண் (குறள் 1179) எனக் கண்விதுப்பழிதலில் வெளிப்படுத்திய உணர்வை ஒத்த குறளே, பெறாஅமை அஞ்சும்; பெறின்பிரி வஞ்சும் அறாஅ இடும்பைத் தென் நெஞ்சு (குறள் 1295) வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் கூறியதாகும். என் மனம் காதலரை அடையாத போது அவரை அடைய வில்லையே என அஞ்சுகிறது. அவரை அடைந்த போது, என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்று அஞ்சுகிறது. இதனால் என் மனம் எப்போதும் தீராத துன்பம் உடையதாக இருக்கின்றது எனக் கூறுகிறாள். காணாத போதும் கலங்குதடி என்நெஞ்சு பெற்று விட்ட பின்னாலும் பிரிவாரோ என்றஞ்சும் இருந்தாலும் துன்பமடி இழந்தாலும் துன்பமடி. என்பது கண்ணதாசன் விளக்கம். நெஞ்சொடு கிளத்தல் அதிகாரத்தில், கண்ணும் கொளச்சேறி நெஞ்சே, இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று (குறள் 1244) எனக் கூறிய நோக்கில் மலர்ந்த குறளே, தனியே இருந்து நினைத்தக்கால், என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு (குறள் 1296) காதலரைப் பிரிந்து தனித்து இருக்கையில், அவரைப் பற்றி நினைக்கும் போது, என் நெஞ்சு என்னைத் தின்பது போலத் துன்புறுத்திக் கொண்டு இருந்தது எனத் தோழியிடம் உரைக்கிறாள். தலைவன் பற்றிய நினைவு தலைவிக்குத் துன்பத்தைத் தந்துள்ளது. அத்துன்பம் எத்தகையது? தின்பது போன்ற துன்பம் தின்பது போன்ற துன்பம் எப்படி இருக்கும், பண்டம் ஒன்றைத் தின்னுதல் என்றால் கடித்து மென்று விழுங்கி முன்னைய வடிவத்தை அழித்து விடுகிறோம். அது போன்ற வேலையை நெஞ்சு செய்து அதாவது படாதபாடு படுத்தி, உடலையும் உருக்குலைத்து விடும் அத்தகைய துன்பமே தினியது போன்ற துன்பம் எனக் கருதலாம். கவிஞர் கண்ணதாசனும், தனிமையிலே நானிருந்து தவியாய்த் தவிக்கையிலே துணையாக நில்லாமல் துடித்துத் துயர் கொடுத்துத் தின்றதடி, என்னை சிறுமையுள்ள என் நெஞ்சம் எனக் கூறுகிறார். நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு (குறள் 1297) என்னை மறந்த காதலரைத் தான் மறக்க மாட்டாத மாட்சிமை யும் அறிவும் இல்லாத என்நெஞ்சுடன் கூடி, என் உயிரினும் சிறந்த நாணத்தையும் மறந்து விட்டேன் எனத் தலைவி தோழியிடம் உரைப்பதாகக் கொள்ளலாம். நாண் மறத்தல்:- இராமனைக் கண்ட சீதா பிராட்டி காதல் நோய் மிக்கு வருந்த, அவளைச் சேடியர் அழைத்துப் போய்ச் சீதமலர் அமளியில் சேர்த்திய நிகழ்ச்சியைக் கூறுகின்ற கம்பர். பிராட்டியின் நிலையாக கலங் குழைந்து நெடுநாணும் கண்ணற என்கிறார். பெண்களுக்கு நாணம் இன்றியமையாத குணம். ஏனைய பெண்மைக் குணங்கள் எல்லாம் நாணத்தையே அடிப்படையாகக் கொண்டு வளர்வன. மங்கல நாண், மங்கலப் பெண்ணுக்கு எத்துணை இன்றியமை யாததோ, ஈகையரிய இழை என்று சங்கப் புலவனால் பிரிய இயலாத் தன்மையது எனப் பேசப்படுகிறதோ அதுபோல நாணமும் பெண்களால் பிரிய இயலாதது. அத்தகைய நாணம் பிராட்டிக்கு இராமனைக் கண்டதால் கண்ணற்றுப் போயிற்றாம். கண் அறுதலாவது இருந்த சுவடும் அறிய இயலாத வண்ணம் அழிதல். நெடுநாண் என்ற சிறப்பு அடைமொழி உயிரோடு தோன்றி, உணர்வு வளர உடன் வளர்ந்து வந்த தொன்மையைக் காட்டி நிற்பது. வள்ளுவர் கூறிய நாணும் மறந்தேன் என்றதன் விளக்கமே நாணும் கண்ணற என்றது என்பது தெளிவு. உயிரினும் சிறந்ததாகிய நாணினையும் மறந்தேன் என்ற வள்ளுவர் வாயுரையைக் கருத்திற் கொண்ட கம்பர், அத்தகைய நாணும் பிராட்டியினிடத்துச் சுவடும் தெரியாமல் கெட்டது என்றதில் ஒரு சிறப்பு உள்ளது. மறந்தால், மறந்த பொருள் பின்னொருக்கால் யாதாயினும் ஒரு சுவடு பற்றி நினைவுக்கு வரக் கூடும். சுவடும் அறிய இயலாத வண்ணம் கெட்டால் மீளுமாறில்லை என்ற காதலின் உயர் நிலையை உணர்த்தக் கூறியமை நினைந்து இன்புறுதற் குரியது. பாழும் மனத்தில் பட்டுவிட்ட காரணத்தால் நாணம் இழந்தேன்: நலம் இழந்தேன், அம்மம்மா! நெஞ்சோடு சேர்ந்த நிலையை மறந்து விட்டேன். என்பது கண்ணதாசன் உரைவீச்சு. எள்ளின் இளிவாம்என் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு (குறள் 1298) உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு, நம்மை இகழ்ந்து சென்றார் என்று நாமும் இகழ்வோமாயின் பின் நமக்கு இழி வாகுமென்று எண்ணி அவர்பால் அமைந்துள்ள சிறப்புகளையே நினைத்துக் கொண்டுள்ளது. கொண்ட பின்னாலே குலம்பேசக் கூடாது பாவியெனச் சொல்லி பழிபேசக் கூடாது. என்றே என் நெஞ்சம் எப்போதும் நினைக்குதடி உயர்ந்த குணங்களையே ஒவ்வொன்றாய்ச் சொல்லுதடி. என்கிறார் கண்ணதாசன். நண்பனுக்குக் கேடுதருவனவற்றை விலக்குதல், அவனை நல்வழி யில் செலுத்துதல் தவிர்க்க முடியாமல் கேடு வருமாயின் அவனொடும் துன்புறுதல் என்பன நட்பியல்புகள் ஆகும் என்பதுடன் இடுப்பு உடை பறிகொடுத்தவனின் கை தானே போய் உடனே மறைத்து உதவுதல் போல், நண்பனுக்குத் துன்பம் வருங்கால் உடனே போய் அத்துன்பத்தை நீக்குதல் நட்பாகும் என்பதை நட்பு அதிகாரத்தில், அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு (குறள் 787) உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் 788) எனும் குறட்பாக்களின் வழி உரைத்தவர் என்பதை அறிவோம். துன்பத்தைப் போக்கத்தக்க துணை வேண்டும் என்பதும் அனைவரும் அறிந்ததே. தக்கதுணை காலத்தால் அனைவருக்கும் கிட்டும் என்றும் சொல்லஇயலாது. எந்தத் துன்பத்திலும் தளர்ந்து விடாது காப்பது அவரவர் உள்ளமே ஆகவேதான் இடுக்கண் அழியாமை அதிகாரத்தில் வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (குறள் 622) என மெய் நம்பிக்கை ஊட்டினார். தலைவியின் துன்பத்திற்குத் தலைவன் காரணமாக அமைந்து விட்டானே அல்லாமல் துன்பத்தைப் போக்குபவனாக அமைய வில்லையே! தலைவரால் வந்த துன்பத்தைத் தலைவர்தான் போக்க வேண்டும். இல்லையேல் நெஞ்சம், எத்துன்பத்தையும் தாங்கும் வல்லமை உடையதாக இருக்க வேண்டும். தேடாமலே எப்பொழுதும் நம்முடனே இருப்பது நெஞ்சு; அது உடனடியாகத் துன்பத்தில் துணைபுரியலாம். ஆனால் தலைவிக்குத் தன்நெஞ்சத் துணையும் கிட்டவில்லை போலும் ஆகவேதான் துன்பத்திற்கு யாரே துணையாவார்; தாமுடைய நெஞ்சம் துணையல் வழி? (குறள் 1299) என்கிறாள். துன்பப்பொழுதில் நீங்காத துணையாக இருக்க வேண்டியது அவரவருடைய நெஞ்சமே ஆகும். ஆனால், எனக்கு என் நெஞ்சமே துணையாக அமையாத போழ்து வேறு யார் துணைக்கு வருவார்கள்? எவரும் வாரார்; வந்தாலும் நெஞ்சத்துணை அல்லாத வழி எப்பயனும் கிட்டாது என்கிறாள். வஞ்சம் துயரமெல்லாம் வந்துவிட்ட நேரமதில் நெஞ்சே துணையாக நிற்கவில்லை என்ற பின்னர் அம்மா எனக்கு இனிமேல் யார்தான் துணையாவார் என்பார் கண்ணதாசன். தஞ்சம் தமரல்லர் ஏதிலார்; தாமுடைய நெஞ்சம் தமரல் வழி (குறள் 1300) தலைவி எண்ணுகிறாள்; தமக்கு எப்பொழுதும் துணையாக இருந்து உதவ வேண்டிய நெஞ்சம், தனக்குத் துன்பம் தந்து கொண்டிருக்கும் தலைவரிடமே சென்று விடும் போது; உறவினர் அல்லாத அயலார் அயலாராகவே இருப்பது இயல்புதானே! தம் நெஞ்சம் தம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுச்செயல் படவில்லை என்றால் வாழ்வில் நினைத்த எந்த நன்மையையும் அடைய இயலாது. கொண்டவனே நாய் என்றால் வந்தவர்கள் பேய் என்பார் மனமே பகையானால் மற்றவர்கள் என்னாவார் என்கிறார் கண்ணதாசன். அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் சரிதான் நெஞ்சே நீ எவன் எமக்கு ஆகாதது? நெஞ்சே! உறாஅதவர் செறாஅர் என என் சேறி! கெட்டார்க்கு நட்டார்இல் நெஞ்சே! நீ பெட்டாங்கு அவர்பின் செல்லல் ஏன்? நெஞ்சே! துனி செய்து துவ்வாய்! நெஞ்சே! நின்னொடு சூழ்வார் யார்? என் நெஞ்சு பெறாஅமை அஞ்சும் அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு. என்னைத் தினிய இருந்தது என் நெஞ்சு. நாணும் மறந்தேன் அவரை மறக்காத மாணா மடநெஞ்சம் அவரை எள்ளின் இளிவாம் என்று எண்ணும் நெஞ்சம் உயிர்க்காதல் நெஞ்சு அவர்திறம் உள்ளும் துன்பத்திற்கு யாரே துணையாவார்? தாமுடை நெஞ்சே துணை ஏதிலார் தமரல்லர் தாமுடை நெஞ்சே தமர் நெஞ்சம் தமர் அல்வழி, எவரும் தமர் அல்லர் 131. புலவி மருதத்திணை ஒழுக்கமாகிய ஊடலை உணர்த்தும் நடுவண் அதிகாரம் புலவி ஆகும். 111வது அதிகாரமாகிய புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில், பிணங்குதலும், பிணங்குதல் நீங்குதலும், கூடி இன்புறுதலும் ஆகியவை நிலையான அன்பு கூடிய துணைவியர் பெற்ற பயன்களாம் என்பதை ஊடல் உணர்தல் புணர்தல் இவை,காமம் கூடியார் பெற்ற பயன் (குறள் 1109) எனவும், 129 வது அதிகாரம் புணர்ச்சி விதும்பல் ஆகும். ஊடுதலுக்குக் காரணம் இருந்தும் ஊடல் கொள்ளாது கூட விரும்புதல் ஆகும். தோழியே பிணங்குவேன் என எண்ணிக் கொண்டு துணைவரிடம் யான் சென்றேன். ஆனால் என் நெஞ்சம் அதனை மறந்து அவரொடு கூடுவதற்குச் சென்றுவிட்டது என்பதை, ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதென் நெஞ்சு (குறள் 1284) என உரைத்துள்ளார். புலவி- சினங் கொண்டவர் போல் காட்டிக் கொள்ளும் ஒரு பொய்யான காதல் விளையாட்டு ஆகும். வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. அதாவது பரத்தையிடம் இருந்து பிரிந்து வந்த தலைமகன் தலைவியை மீண்டும் சந்திக்கத் தோழியின் மூலம் முயல்கிறான். அப்போது தோழி அவனை நோக்கி, அவனது கூடா ஒழுக்கத்தைச் சுட்டிக் காட்டி வாயில் மறுத்துக் கூறியதாக அள்ளூர் நன்முல்லை யார் பாடிய மருதத் திணைப்பாடல்:- சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான் ஊர்மடி கங்குலில், நோன்தளை பரிந்து கூர்முள் வேலி கோட்டின் நீக்கி, நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய அம்தூம்பு வள்ளை மயக்கி, தாமரை வண்டுஊது பனிமலர் ஆரும் ஊர யாரை யோநிற் புலக்கேம் வார்உற்று, உறைஇறந்து ஒளிரும் தாழ்இரும் கூந்தல் பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து, வதுவை அயர்ந்தனை என்ப, அஃதுயாம் கூறேம், வாழியர், எந்தை செறுநர் களிறுடை அருஞ்சமம் ததைய நூறும் ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க, சென்றீ, பெருமநின் தகைக்குநர் யாரே? என்னும் அகநானூற்றுப் பாடலுக்குத் தெளிவுரை: பரத்தையிடமிருந்து வந்த தலைவன் தலைவியை அடையத் தோழி மூலம் முயற்சி செய்தான், அவள் அவனது கூடா ஒழுக்கத்தைச் சுட்டி, நாங்கள் யார் உன்னைத் தடுக்க என மறுத்துக் கூறிய பாடல் இதுவாகும். தலைவனே! சாணத்தாலும் நீராலும் சேறாக்கிக் கொண்டதால் தங்கும் இடத்தை வெறுத்து, கட்டப்பட்ட கயிற்றையும் அறுத்துக் கொண்டு, தம் கொம்பால் வேலியை நீக்கியவாறு வயலில் உள்ள மீன்கள் எல்லாம் அஞ்சி ஓடுமாறு இறங்கி, அங்குள்ள வள்ளைக் கொடிகளைச் சிதைத்து, இறுதியாகத் தாமரை மலரைத் தின்னும் எருமைகள் உடைய ஊரை உடையவனே! உன்னோடு ஊடுதற்கு நீ என்ன உறவு உடையாய்! நீயோ மேகம் போன்ற கருங்கூந்தலை உடைய ஒருத்தியை எம் இல்லத்திற்குக் கொண்டு வந்து காட்டிப் பின்னர் அவளை மணந்து கொண்டதாக இவ்வூரார் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் அப்படிக் கூற மாட்டோம். போரில் யானைகளைக் கொல்லும் ஒளிமிக்க வாட் படையுடன் விளங்கும் செழியனது நெற்குவியல் நிறைந்த அள்ளூரைப் போன்ற வளாகிய எனது தலைவி நெகிழ்ந்து வீழினும் வீழ்க! ஆனால் நீயோ நினைத்த இடத்திற்குச் செல்ல உன்னைத் தடுப்பவர் யாருளர்? குடும்பப் பொறுப்பின்றி இருக்கும் உன்னால் தலைவி வருந்தினும் நீ நினைத்ததைச் செய்ய யார் தடை செய்ய முடியும்? எனவே நீ எங்கட்கு என்ன உறவு எனக் கூறித் தோழி மறுத்தாள் எனக் கொள்க! சிறப்புக்குறிப்பு:- எருமை தனது இடமான கொட்டிலை நீராலும் சாணத்தாலும் தானே சேறாக்கிக் கொண்டு, கட்டையும் அறுத்துக் கொண்டு, வயலுக்குக் காவலாய் இருந்த முள் வேலியையும் கொம்பினால் நீக்கி, மீன்கள் அஞ்சுமாறு தாமரையைச் சுற்றியுள்ள வள்ளையை மயக்கி, வண்டுகள் ஊதும் தாமரையை ஆராய்ந்தது போல, நீயும் உன்னால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இத்தலைவியை வேறுபடுத்தி நாணமாகிய கட்டையும் அறுத்து, பரத்தையர்க்குக் காவலான வேலியைப் பாணன் மூலம் நீக்கி, அப்பரத்தையரின் தோழிமார் அகல, அப்பரத்தையரின் தாயாரையும் மயக்கி, உளம் மகிழ்ந்த உன்னை எங்ஙனம் எதிரேற்றுக் கொள்வோம் எனத் தோழி வெறுத்துக் கூறியதாகும். ஊடலுக்குப் பரத்தையர் ஒழுக்கைக் காரணமாகக் காட்டுவதை நீக்கி வேறு ஏதாவது காரணத்தை மையமாகக் கொண்டு சிந்தித்தால் புலவிக்கு ஏற்ற முன்னுரையாக இதனைக் கொள்ளலாம். புல்லா திராஅப் புலத்தை; அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது (குறள் 1301) தலைவனைப் பிரிந்து தனிமைத் துயரில் வாடி வருந்தியவள். அவள் உற்ற துன்பத்தை அவனுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணுகிறாள். பிரிந்து சென்ற தலைவன் கடமை முடிந்து ஆர்வத்தோடு கூடி மகிழ எண்ணி வரும்போது, ஊடல் கொண்டு தலைவன் தழுவுவதற்குச் சிறிது நேரம் வாய்ப்புத் தரக் கூடாது; அப்பொழுது அவன்படும் துயரத்தைக் காண வேண்டும் எனத் தனக்குள் தானே எண்ணிக் கொண்டாள் எனவும் கொள்வதுடன் தோழி கூற்றாகக் கொண்டு தலைவர் கொள்ளும் காதல் நோயின் துயரைச் சிறிது பொழுது காண்போம். அதற்காக அவர் தழுவ வருங்கால் தழுவாமல் இருந்து பொய்ச்சினம் கொள்வாயாக எனத் தோழி, தலைவியை வேண்டுவதாகவும் கொள்ளலாம். நெஞ்சே நீ வாழி! நெருங்கி வா என் தோழி! ஊடலுக்கு என்னோடு ஒத்துழைக்க வேண்டுமடி; அன்பன் அடைகின்ற அவதியினைக் காண்பதற்கு தலைவனவன் வந்தவுடன் தழுவாமல் ஓடி விடு என்கிறார் கண்ணதாசன். உப்பமைந் தற்றால் புலவி, அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் (குறள் 1302) சமையற் கலையின் திறம் உப்புப் போடுவதில் அமைந்திருக்கிறது. ஒருபடி அரிசிக்கு ஒரு கைப்பிடி அளவு உப்புப் போதும். பிடி அளவு சிறிது குறைந்தால் குற்றம் இல்லை; ஆனால் கூடினால் உண்ண முடியாது. என்பது அனைவரும் அறிந்த எளிமையான உண்மை. உப்பின் பயன்பாட்டிற்குள் திருவள்ளுவர் வாழ்க்கைத் துய்ப்பின் அருமையை விளக்கும் பாங்கு வியப்பிற்குரியது. இனிப்புப் பண்டத்தின் இனிப்புச் சுவையை இனிதே உணர் வதற்கும் உண்பதற்கும் அதிலிருந்து வேறுபட்ட காரச் சுவை இருப்பது நல்லது. அதுவும் அளவோடு இருக்க வேண்டும். மழையின் பயனைத் துய்க்க கதிர்வெப்பம் தேவை. ஆனால் கதிர்வெப்பம் மிகுந்தால் தாங்க இயலாது. கூடல் இன்பத்தை இன்பம் ஆக்க ஊடல் வேண்டும். ஆனால் ஊடல் மிகச் சிற்றளவாக இருக்க வேண்டும். சிற்றளவு என்றால் என்ன? உணவுப் பண்டங்கட்கு போடும் உப்பின் அளவு போல் இருக்க வேண்டும். அளவு தாண்டிவிடக் கூடாது. உப்புப் போட வேண்டும். ஆனால் அளவு கூடி விடக் கூடாது. அதுபோல் காதல் வாழ்வு சுவைக்க ஊடல் தேவைதான். ஆனால் ஊடல் கூடினால் காதலர் கூடமுடியாது. கூடவே முடியாததாகவும் கூட ஆக்கிவிடும். ஆகவே ஊட வேண்டும்! அளவில் கவனம் தேவை எனத் தலைவி தன் நெஞ்சிற்கு அறிவுறுத்துவதாகக் கொள்ளலாம். இலவின் இதழ்ச் செய்யவாய் மங்கை; உப்பமைந் திட்டது போல் புலவி, அது மிகுந்தற்றாகும் நீட்டிடல், பொன் மலர்த்தார் நிலவிடு வார்சடைச் கோடீச்சுரேசர் நெடுங்கிரிமேல் பலவின் புகழ் மன்னர் உன்தாள் பணிந்தனர் பார்த்தருளே! என்னும் கோடீச்சுரக்கோவைப் பாடல் தக்க மேற்கோளாகும். ஓரளவு உப்பிருந்தால் உணவு சுவையாகும் உப்பளவு அதிகரித்தால் எப்பொருளும் கெட்டுவிடும். ஊடலும் அது போல்தான் உடன்படுவாய் என்நெஞ்சே! என்பவர் கண்ணதாசன். விளையாடு! விளையாட்டை வினை ஆக்கிவிடாதே! அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால், தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் (குறள் 1303) ஒருவர் பொறை இருவர் நட்பு என்பது பழைய பட்டறிவு மொழி. ஒருவர் ஊடல் கொள்கிறார் என்றால் அவரை வழிக்குக் கொண்டுவரும் முயற்சியில் இன்னொருவர் ஈடுபட வேண்டுமே யொழிய போட்டி போடக் கூடாது. துன்பப்பட்டவர் தான் தன் மனத்தில் கொண்ட வருத்தத்தை ஊடல் வழி வெளிப்படுத்துகிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகவே, உணர்ச்சி வயப்படாமல் தன்னிலை விளக்கம் தந்து, தன்னிடம் தவறு இருக்குமானால் பொறுத்துக் கொள்ள வேண்டுவதுடன், தவறு செய்ய வில்லை; ஆனால் தவறு என்ற எண்ணம் தலைவிக்கு எப்படியோ ஏற்பட்டு விட்டது என்றால் தயங்காமல் பொறுத்துக் கொள்ள வேண்டுவதுடன், அவளை அதை மறந்து மகிழ்விக்க வேண்டிய வழி வகைகளைத் தேட வேண்டுமே தவிர்த்து தன்பால் குற்றமே இல்லை என்பதை நிலைநாட்ட முயலக் கூடாது. அதற்கு உரிய நேரம் அதுவன்று. ஆகவே எக்காரணம் கொண்டும் தம்மோடு புலவி கொண்டு இருப்பவரை வயப்படுத்தாமலோ, தழுவாமலோ விட்டு விடுதல் கூடாது. ஊடியவரைத் தழுவத் தவறினால் துன்பமுற்றவர்க்கு மேலும் துன்பம் செய்தது ஆகும். வருந்திப் புலவி கொண்டவரை மேலும் வருந்த விடல் ஆகாது. கோபம் சிறிதளவு கொள்வோம் மறுபொழுது கொஞ்சாமல் விட்டுவிட்டால் கொடுமை செய்த பேர்பெறுவோம். என்கிறார் கண்ணதாசன். ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று (குறள் 1304) மரம் தாங்கும் வறட்சியைச் செடி தாங்காது; செடி தாங்கு வறட்சியைக் கூட, கொடி தாங்காது. ஏற்கனவே நீர்ப்பதம் இன்றி வாடிக் கிடக்கும் கொடிக்கு நீர்விட்டுக் காப்பதே கடமை அதை விடுத்து, ஏற்கெனவே வாடிவிட்டது இனிப் பிழைக்காது; ஆகவே அந்தக் கொடி இருப்பதால் பயன் ஒன்றும் இல்லை என்று கருதும் பேதையரும் உலகில் இருப்பர். அதுபோன்ற பேதைமையான செயலே ஊடி இருப்பவரின் உள்ளக்குறிப்பை உணர்ந்து அரவணைத்துக் கொள்ளாதவர்களின் செயலும் ஆகும். ஆகவே, ஊடல் கொண்டவரின் ஊடலை நீளவிடாது விரைந்து கூட முயல்பவரே காதல் கொடி வாடாமல் காப்பவர் ஆவார். ஊடியவர் வாடிய கொடிக்கு ஒப்பானவர். அவர் வாட்டம் போக்குவதே ஊடலுக்குக் காரணமானவரின் கடமையாகும். அவர் ஊடல்; என் ஊடல் அடுத்த கணம் தெளிய வைத்தல் அதுதானே நியாயம்? அல்லாமல் காதலரை நீங்கிவிட்டால் என்னாகும் நீரில்லாக் கொடி ஒன்றின் வேரை யறுப்பது போல் வேண்டாத வேலையாகும் என்கிறார் கண்ணதாசன். பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு (குறள் 58) என உடன்பாட்டு நோக்கிலும் புகழ்புரிந்த இல்லிலோர்க்கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை (குறள் 59) என எதிர்மறை நோக்கிலும் எடுத்து மொழிந்த கருத்திற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் குறளே, நலத்தகை நல்லவர்க்கேர் புலத்தகை பூவன்ன கண்ணா ரகத்து (குறள் 135) நற்பண்புகள் எல்லாம் ஒருங்கே அமைந்த நல்ல துணைவர்க்குப் பெருமை தரும் அழகாவது, பூப்போலும் கண்களை உடைய துணைவி யரிடத்து உண்டாகும் ஊடலின் சிறப்பாகும். தலைவி பூவன்ன கண்களை உடையவளாக இருக்க வேண்டும். தலைவன் நலத்தகை நல்லவனாகவும் இருக்க வேண்டும். இருந்தால் தலைவியின் ஊடல் சிறப்பு, தலைவனுக்குத் தனி அழகுதான். இருவரும் குற்றமற்றவர்கள்: உடலும் உயிரும் போல் ஒன்றிய உள்ளன்புடையவர்கள். ஆகவே தலைவியின் ஊடல் தலைவனுக்குத் தனிப்பெருமை தருகிறது. நலம் மிக்க காதலர்க்கு நல்லவர்க்கு அழகென்ன? மலர் போன்ற கண்ணுடைய மங்கையுடன் ஊடல் செய்தல் என்கிறார் கண்ணதாசன். துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று (குறள் 11306) துனி இல்லாயின் காமம் கனி அற்று (போன்றது) புலவி இல்லாயின் காமம் கருக்காய் அற்று (போன்றது) உயர் மதிப்பிற்கும் நற்பயனுக்கும் உரியது கனி; மதிப்புக் குறைவிற்கும் நற்பயனுக்குப் பக்குவப்படா நிலையில் உள்ள பருவம் காய்ப்பருவம். காய்ப்பருவத்தில் உண்ண எண்ணல் ஆகாது; கனிப்பருவத்தில் உண்ண மறந்து காலந்தாழ்த்திவிடக் கூடாது. காதலர்கள் சினம் கொண்டது போல் நடிக்கும் பிணக்கு- காதல் விளையாட்டில் இன்பத்தை மிகுவிக்கும் ஓர் உத்தியாகும். பிணக்கின் முதல்நிலை புலவி எனப்படும். அதன் அமைந்த நடுநிலை ஊடல் எனப்படும். அதன்மேல்நிலை அல்லது முதிர் நிலை துனி எனப்படும். பிணக்கு புலவியாகத் தொடங்க வேண்டும். அது ஊடல் வரை வளர்ந்து உணர்வு நிலைக்குத் திரும்பிவிட வேண்டுமே ஒழிய அதனைத் துனியாக முதிரவிடக் கூடாது. துனி அழுகிய கனி நிலை ஆகும். ஆகவே காதலரிடையே புலவி இல்லாமல் இருக்கக் கூடாது. ஆனால் துனி இருக்கவே கூடாது. புலவி கட்டாயம் தேவை; துனி கூடாது. தலைமகள் தன் தலைவரிடம் நீடித்த பெரும் பிணக்காகிய துன்பத்திற்கு இடந்தராமல் நடந்து கொள்வாளாயின் அவள் காதல் வாழ்வு, பக்குவமாய்ப் பழுத்த நறுங்கனிபோல் இன்பந்தரும். காதல் வாழ்வு இன்ப வாழ்வாக இலங்க இடை இடையே சிறு பிணக்காகிய புலவியும் இருக்க வேண்டும். புலவி இல்லையானால் காமம் பழுக்காத காய்போல் இனிமை இன்றி இருக்கும் என்பதைத் தன் பட்டறிவால் உப்பமைந்தற்றால் புலவி என்பதை உணர்ந்து புலவியை நீட விட்டுத் துனி ஆக்கிக் கொள்ளக் கூடாது எனத் தன் வாழ்வியல் முறையை வடிவமைத்துக் கொள்கிறாள். துனி இல்லாததாகவும் காமத்தை அமைத்துக் கொள்வதுடன் புலவியுடன் கூடியதாகவும் அமைத்து இன்புற்று வாழ வேண்டும் என வள்ளுவர் வழிகாட்டுகிறார். ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவதன்றுகொல் என்று (குறள் 1307) இன்பத்தை மிகுவிக்கத் துணைபுரியும் தன்மை வாய்ந்த ஊடல் கொள்வதிலும் ஒரு துன்பம் உண்டு. ஊடல் நீள நீளக் கூடி மகிழும் நேரம் குறைந்து விடுமே, என்ற எண்ணம் எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது துன்பப்பொழுதே ஆகும். கூடலுக்குரிய நேரம் குறைவதே ஊடலால் உண்டாகும் துன்பம் வேறு எந்தத் துன்பமும் உண்மைக் காதலர் வாழ்வில் தோன்றாது. நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி (குறள் 1308) தலைவனாயினும், தலைவி ஆயினும் இருவரும் தம் துன்பத்தையே தாம் உணர்ந்து அதையே பெரிதுபடுத்தி எண்ணுவதோ புலம்புவதோ தகுதியுடையதன்று. தலைவன் தன்துன்பத்தைப் பற்றி எண்ணிக் கவலைப்படாது. தலைவி உற்ற துன்பத்தை எண்ணி வருந்துகிறவனாகவும் விரைந்து போக்க முற்படுபவனாகவும் இருக்க வேண்டும். அது போல் தலைவியும் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடியாக இருப்பதுடன், தலைவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை எண்ணி வருந்தி, விரைந்து அவர் கவலையை மாற்ற வேண்டும் என்றும் எண்ணுபவளாய் இருக்க வேண்டும். தலைவி துன்புற்றாள் என்பதை உணர்ந்து உதவி செய்யும் துணைவராக அவர் இல்லாத போது அவரை நினைந்து வருந்திக் கொண் டிருப்பதால் என்ன பயன்? ஒன்றுமில்லை. இதனைக் கண்ணதாசன் அவர் நடையில், கண் கலக்கம் காணாத கணவர் இல்லா வேளையிலே யாரைத்தான் நோவதடி? யாரிடத்துச் சொல்வதடி? என்கிறார். நீரும் நிழலது இனிதே; புலவியும் வீழுநர் கண்ணே இனிது (குறள் 1309) உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத நீரும் வெயிலில் இல்லாமல் குளிர்ச்சி தரும் நிழலினிடத்து இருக்குமாயின் குளுமை சார்ந்த இனிமை உடையதாய் இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். அதுபோல் கலவிக்கு இன்றியமையாப் புலவியும் அன்புடைய காதலரிடத்து உண்டாயின் இன்பம் தரும். அன்பில்லாதவரிடத்துக் கொள்ளும் புலவி துன்பமே தரும். நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சி மிக்கு விடாய் தணித்தலின் இனி தாயிற்று. வீழுநர்:- ஆற்றாமைக்கு நோதலும், கூடற்கண் வேட்கையும் உடையவர் எழுகின்ற ஊடல் இருவருக்கும் பொதுவானால் நிழலடியில் இருக்கின்ற நீர் போல் இனிக்குமடி. என்கிறார் கண்ணதாசன். கானல்வரிப் பாடல் கேட்ட மாநெடுங்கண் மாதவியும் மன்னுமோர் குறிப்புண்டு, இவன் தன்னிலை மயங்கினான் எனச் கலவியான் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ்வாங்கித் தானுமோர் குறிப்பினள் போல் கானல்வரிப் பாடற்பாணி நிலத் தெய்வம் வியப்பெய்த நீள் நிலத்தோர் மனம் மகிழக் கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் பாடத் தொடங்குமன். எனப்பாடினாள் மாதவி. அதுகேட்ட கோவலன் கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என யாழிசைமேல் வைத்துத் தன் ஊழ்வினைவந்து உருத்ததாகலின் உவவுற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தனனாய்க் பொழுதீங்குக் கழிந்ததாகலின் எழும் என்று உடன் எழாது ஏவலாளர் உடன் சூழ்தரக் கோவலன் தான் போனபின்னர்த் தாதவிழ் மலர்ச்சோலை ஓதையாயத்து ஒலியவித்துக் கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்குத் காதலன்உடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள். என்னும் சிலப்பதிகாரக் கானல்வரி விழுநர் அல்லாக்கால் புலவி இன்னாது என்பதற்கு எடுத்துக் காட்டாகும். ஊடல் உணங்க விடுவாரோ டென்நெஞ்சம் கூடுவேம் என்ப தவா (குறள் 1310) தலைவி ஊடல் கொண்டிருந்தால், தலைவன் ஊடலைத் தணித்து மகிழ்வூட்ட வேண்டும். ஆனால் ஒரு தலைவன், தலைவி ஊடல் கொண் டிருக்கும் பொழுதில் அதனைத் தணிக்காமல் அவளை வருந்தவிடுகிறான். அப்படி வருந்தச் செய்பவனைத் தாமும் வருந்தும்படி செய்ய வேண்டும் என்று அவள் நெஞ்சம் வீம்பு பாராட்டாமல் கூடிக் களிக்க எண்ணுவது ஆசைப் பெருக்கே ஆகும். ஊடலால் வாடவிடுவாரைக் கூட நினைப்பது அடக்க முடியா ஆசையே! ஊடல் தெளிவித்து உற்சாகம் கொடுக்காமல் வாடவிட்ட காதலரை மனமே நினைப்ப தென்ன? கூட நினைப்ப தென்ன? கொண்டுவிட்டஆசையன்றோ? என்கிறார் கண்ணதாசன். காதலருடன் புலந்து புல்லாதிருக்க வேண்டும் அவர் உறும் அல்லல் நோய் கண்கம் சிறிது. உப்பமைந் தற்றால் புலவி உணவில் உப்பு மிகக் கூடாது ஊடலும் நீளக் கூடாது அலந்தாரை அல்லல் நோய் செய்யாதே புலந்தார் புல்லலைத் தவிர்க்காதே ஊடியவரை உணர வேண்டும். வாடியவள்ளி போன்றவளே ஊடியவள் ஊடியவளை வாட விடாதீர். தலைவர் நலத்தகை நல்லார் தலைவி பூவன்ன கண்ணாள் நல்லவள் புலவி நல்லவர்க்கு அழகு துனி இல்லையாயின் காமம் கனி புலவி இல்லாயின் காமம் கருக்காய் காமத்திற்குப்புலவி தேவை; துனி கூடாது ஊடலால் கூடலைக் குறைக்கும் துன்பம் உண்டு நொந்தது அறியாக் காதலரை நினைத்து நோவது எவன்? நீரும் நிழலது இனிது புலவியும் வீழுநர் கண்ணே இனிது. ஊடலால் உணங்கவிடுவாரையும் கூட விரும்புவது காதல் நெஞ்சம் 132. புலவி நுணுக்கம் என்னைவிட வயதில் மூத்த ஓர் அழகான விதவையைத் திருமணம் செய்து கொண்டேன். என் புது மனைவிக்குக் கிட்டத் தட்ட என் வயதில் ஒருமகள் இருந்தாள். ஒருநாள் தற்செயலாக என்தந்தை அந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல் வயப்பட்டுத் திருமணம் செய்து கொண்டார். இதனால் என் அப்பா எனக்கு மருமகன் ஆனார். இப்படியாக என்மகள் எனக்குத்தாய் ஆனாள். ஏனென்றால் அவள் இப்பொழுது என் தந்தையின் மனைவி. என் அப்பாவின் மனைவிக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் இப்போது எனக்குப் பேரன். எப்படி என்றால் அவன் என்மகளின் மகன். ஆகவே, என் மனைவி இப்போது என் தாயின்தாய். அதாவது அவள் என் மனைவியாக இருந்தாலும் அவள் எனக்குப் பாட்டி. என்மனைவி எனக்குப் பாட்டி என்றால் நான் அவளுக்குப் பேரன். கடைசியில் என் பாட்டியின் கணவன் என்ற முறையில் எனக்கு நானே தாத்தா! இப்படி எல்லாம் திருமண உறவு நிகழ்வது மேலை நாடுகளில் உண்டு. பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருஎன முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே என தொல்காப்பிய நெறிவழி, காதல் வாழ்வு தொடங்கும் தமிழ்நாட்டுக் காதலனுக்கும் காதலிக்கும் பத்துவகையான ஒப்புமை இருக்க வேண்டும் என நெறிப்படுத்தி வாழ்ந்த திருமண வாழ்வே தமிழன் வாழ்வு. அத்துடன் நிம்பிரி, கொடுமை, வியப்பொடு புறமொழி வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல், ஏழைமை மறப்போடு ஒப்புமை என்றிவை இன்மை என்மனார் புலவர் என்னும் தொல்காப்பிய நூற்பா வழியாக நேயமின்மை, இரக்கமின்மை, புகழ்தல், புறத்தார்க்கும் புலனாகாமை, கடுஞ்சொற்கள், மறவி, சோம்பி இருத்தல், குடிமைச் சிறப்பை உயர்வாக எண்ணி இன்புறல், பணிவுடைமையை மறத்தல் ஒப்பிட்டு நோக்கல் ஆகிய பத்தும் இல்லாமை நல்லது எனக்கூறுவர் அறிவுடையோர் என்பதை எண்ணினால் பழந்தமிழரின் கட்டுப்பாடான காதல் வாழ்வு புலப்படும். கட்டுக் கோப்பான காமத்துப்பாலின் நிறைவிற்கு முந்திய இவ்வதிகாரம் புலவி நுணுக்கம் ஆகும். தலைமகனிடம் தவறு இல்லை ஆயினும், தனது காதல் மிகுதியாலும், சொல் எச்சத்தினாலும், குறிப்பு எச்சத்தினாலும் வேறுபடப் பொருள் கொண்டு தலைமகள் புலந்து கூறுதல். இது செவ்வையில் தோன்றாமை யின் உள்ளுறை ஆயிற்று. புலவியினும் நுண்ணிய புலவி கூறினமையால் வேறுபடுத்து அதன்பின் கூறப் பட்டது என்பது பழைய உரையாசிரியர் களில் ஒருவரான பரிப்பொருள் கூறும் அதிகார விளக்கமாகும். காமத்துப்பாலில் வள்ளுவர் காட்டும் காதலன் குறை இல்லாத உயர்பண்பினன்; காதலியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுக்கும் தன் உள்ளத்தில் இடம் தராதவன். தன் காதலியைப் போலவே கற்பு நெறியைப் போற்றி வாழ்பவன், காதலியால் அவனிடம் ஒரு தவறும் காண முடியவில்லை. அவன் என்றும் அவ்வாறே வாழ வேண்டும் என்றும் அவன் அன்பு எக்காலத்திலும் தனக்கே உரிமை ஆனதாக விளங்க வேண்டும் என்றும் அவள் விரும்புகிறாள். அவளது ஊடல் தவறு கண்டு கொள்ளும் ஊடல் அன்று; தவறு நிகழாமல் காப்பதற்காகக் கொள்ளும் ஊடலாகும் எனக் குறள் காட்டும் காதலர் என்னும் நூலில் முனைவர் மு.வ. அவர்கள் நுணுக்கமாக விளக்கம் தருகிறார். கணவனுக்கும் மனைவிக்கும் ஊடல், பேச்சு வார்த்தை முறிந்து போய் இருவரும் மௌனப் போராட்டத்தில் இருந்தனர். ஒருவாரம் ஆயிற்று. ஒருவரும் மௌனத்தை உடைப்பதாக இல்லை. அன்று கணவனுக்கு மனைவியின் உதவி தேவைப்பட்டது. மறுநாள் முக்கியமான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதி காலையிலே துயில் எழ வேண்டும். ஆனால், மனைவியிடம் முதலில் பேசி, போராட்டத்தில் தோற்க மனமில்லை. ஆகவே, ஒரு துண்டுச் சீட்டில் காலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பவும் என்று அவளுக்குக் குறிப்பு எழுதி வைத்தான். மறுநாள் காலை... தூக்கம் கலைந்து எழுந்து அவன் மணியைப் பார்த்தான்; மணி எட்டு; சினம் பொங்க இவள் என்ன மனைவி என்று அவள் மீது பாயப் போனவனை அவன் படுக்கையில் இருந்த ஒரு துண்டுச் சீட்டு தடுத்தது. அதில் அவன் மனைவி குறிப்பு எழுதி வைத்திருந்தாள். இப்போது ஐந்துமணி எழுந்திருங்கள் சீட்டு எழுப்புமா? புலவி இப்படி இருக்கலாமா? அப்படியானால் எப்படி இருக்க வேண்டும்? வாழ்வு சிறக்க வழிகாட்டும் வள்ளுவரைக் கேட்போம்! பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்; நண்ணேன் பரத்தநின் மார்பு (குறள் 1311) மேலாடை இன்றிக் காற்றுவாங்கக் காலார நடந்து சென்று விட்டு மீண்ட தலைமகன் நீராடி, தூய ஆடை அணிந்து, தன்னைச் சற்றே ஒப்பனை செய்து கொண்டு இரவு உரிய பொழுதில் படுக்கை அறையில் நுழைந்தான். அப்பொழுது தலைவி அவனை நெருங்க விடாது ஒன்று உரைத்தாள். என் மார்பை நீ மட்டும் கண்டு மகிழ்வது போல், உன் மார்பை நான் தவிர வேறு எந்தப் பெண்ணும் விருப்பத்துடன் கூர்ந்து பார்ப்பதை நான் விரும்புவதில்லை. அந்த உரிமை எனக்கு மட்டும் தான் உண்டு என இதுநாள் வரை எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நீ உன் மார்பை எதிர்ப்பட்ட பருவப் பெண்கள் அனைவரும் கூர்ந்துபார்த்துக் கண்டு களிக்கு மாறு இப்பொழுது தெருவழியே அழகு நடை நடந்து வந்திருக்கிறாய். பெண்தன்மை உடையார் எல்லாரும் தம் கண்களால் உன்னைப் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்வது போல் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பார்த்து நுகர்ந்த உன் அகன்ற மார்பினை நான் தழுவ மாட்டேன் என உரைத்து ஊடல் கொண்டாள். தவறு செய்யாத் தலைவனிடம் ஊடல் கொள்ள, தலைவி கண்டு பிடித்த காரணம் நுணுக்கமான காரணம் ஆகும். மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி (குறள் 1119) என முழுமதியையே வேண்டிய தலைவன் அவன் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. முழுமதியையே பலர்காணத் தோன்றாதே என வேண்டும் தலைவன் தான் பலர் காணத் தோன்றலாமா? அவ்வாறு தோன்றினால் தலைவி தாங்கிக் கொள்வாளா? தரைமகள்தன் கொழுநன்தன் உடலம் தன்னைத் தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்ணாட்டு அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் ஆவிஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்! என்னும் கலிங்கத்துப்பரணிப் பாடல் ஒருவகையில் மேற்கோளாகும். கணவன் மனைவியை, ஓவியக்காட்சி காண அழைத்த போது, மனைவி கணவனிடம் அங்கே ஆண் உருவம் வரையப் பட்டிருக்குமாயின் நான் பாரேன்! பெண் உருவம் வரையப் பட்டிருக்குமாயின் நீங்கள் பார்க்க நான் பொறேன் என்றாளாம். இந்நிகழ்வில் குறளின் தாக்கத்தைக் காணலாம். ஊடி இருந்தோமாத் தும்மினார், யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து (குறள் 1312) ஊடற் காலத்து இல்லம் வந்த தலைவன் உடன் இல்லாத போது தலைமகள் நிகழ்ந்ததைத் தோழியிடம் கூறுதல். ஒருநாள் நானும் தலைவரும் ஊடல் கொண்டு, ஒருவரோடு ஒருவர் நேருக்கு நேர் பார்க்காமல் யாதொன்றும் பேசாது அமைதியாக இருந்த பொழுது, ஊடலை நீள விடவும் கூடாது, தான் முன் கூட்டிப் பேச்சையும் தொடங்கக் கூடாது என எண்ணிய தலைவர் ஒரு தும்மல் போட்டார். தும்மல் வேண்டுமென்றே செயற்கையாகப் போட்டதுதான். தும்மல் போடக் காரணம் தமிழர் மரபுப்படி ஒருவர் தும்மினால் அடுத்திருப்பவர் நீடு வாழ்க என்று வாழ்த்த வேண்டும். அம்மரபுப்படி நான் நீடு வாழ்க என வாழ்த்தினால் ஊடல் நீங்கிவிடும் எனக்கருதியே தும்மினார் எனத் தலைவி தோழியிடம் உரைப்பது போன்றதாகும். நான் என்காதலரைக் கோபிப்பதுபோல் ஊடல் கொண்டேன். நம்குலத்தில் யாராவது தும்மினால் வாழ்க என்று சொல்வது மரபு அல்லவா? அப்படியே நானும் சொல்வேன் என்று எண்ணி அவர் தும்மினார். என்பது கண்ணதாசன் விளக்கம். கோட்டுப்பூச் சூடினும் காயும், ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று (குறள் 1313) தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு நீவிர் கூடி ஒழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது என்ற தோழிக்குத் தலைமகன் தந்த விளக்கம். கிளைகளில் உள்ள மலர்ந்த பூக்களை அழகாகச் சூடிக் கொண்டு வந்தாலும் இம்மாலை நீங்கள் என்னை மகிழ்விப்பதற்காக அணிந்து கொண்டு வரவில்லை. எவளோ ஒருத்திக்கு ஏதோ குறிப்புக் காட்டு தற்காகச் சூடினீர் என்று என்மீது சினங்கொண்டு பிணங்குகிறாள். அவள் கொண்ட ஊடலை எவ்வாறு தணிப்பது என எனக்குப் புரியவில்லை. என்னைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் ஐயப்படுகிறாளே! என்செய்வது? நீதான் அவள் ஐயத்தைப் போக்க வேண்டும் எனத் தலைவன் தோழியிடம் தெரிவிக்கின்றான். நான் மலையில் இருந்து ஒருமலர் பறித்தேன் அந்த மலரினை என்மார்பில் சூடிக் கொண்டேன். அவளோ, உடனே யாரை ஏய்க்கின்றீர்? எவளோ ஒருத்திக்கு இந்த அழகைக் காட்டுவதற்குத் தானே இந்த மலரைச் சூடி இருக்கின்றீர்கள்? என்று ஊடல் கொண்டாள். யாரினும் காதலம் என்றேனா, ஊடினாள் யாரினும் யாரினும் என்று (குறள் 1314) உலகத்தில் உள்ள காதலர்கள் அனைவரிலும் நான் மேலான காதல் உடையவன். என்னைக் காட்டிலும் காதலிமேல் அன்புடையவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்னும் நோக்கத்தில் யாரினும் காதலம் என்றேனா அதனைக் கேட்ட நம் தலைவி எனக்குக் காதலியர் பலர் இருப்பதாகவும் அவர்கள் அனைவர் மீதும் கொண்டுள்ள காதலைவிட அவளிடத்தில் கொண்டுள்ள காதல் மிகுதி என நான் கூறியதாக அவள் கருதிக் கொண்டு, யாரினும் யாரினும் காதலம் எனவினவிக் கொண்டு ஊடுகிறாள். நான் காதலிக்கும் மற்ற மகளிர் யார் யார் அதைச் சொல்லுங்கள் சொல்லுங்கள் எனக் கூறி ஊடல் கொள்கிறாள். யான் அன்பு மிகுதியால் யாரினும் எனக் கூறியதற்கு அவர் வேறுபடப் பொருள் கொண்டு ஊடுகிறாள் என்செய்வது? எனத் தலைவன் தோழியிடம் உரைக்கிறான். என்னம்மா இது? யாரையும் விட உன்மேல் காதல் கொண்டிருக்கிறேன் என்றேன். யாரையும் விடவா? அப்படி என்றால் உங்களுக்கு இன்னும் எத்தனை காதலிகள் இருக்கின்றார்கள் என்று மேலும் கோபம் கொண்டாள். என்பது கண்ணதாசன் விளக்கம். போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலங்கொள் திண் மாறன் அனையான், மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் கார்அன்ன கூந்தல் குயில் அன்னவள், கண் புதைப்ப ஆர் என்னலோடும், அனல் அன்ன அயிர்த்து உயிர்த்தாள். என்னும் கம்பராமாயணம், பாலகாண்டம் பூக்கொய் படலத்தில் அமைந்த பாடலும் மேற்கோளாய்க் கொள்ளத் தக்கதாகும். இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள் (குறள் 1315) இந்தப் பிறப்பில் நான் உன்னை விட்டுப் பிரியவே மாட்டேன். இணைந்தே வாழ்வேன் என்றேன். இந்தப் பிறப்பு என்று நான் சொன்ன சொல் அவளுக்கு வேறு விதமான எண்ணத்தை உருவாக்கி விட்டது. உயிரோடு இருக்கும் வரை என்ற பொருளில் தான் கூறினேன். அவள் சினங்கொண்டு அப்படியானால் அடுத்த பிறவியில் சேர்ந்து வாழும் எண்ணம் இன்றிப் பிரியக் கருதுகின்றீரோ? என்று கூறிப் பிணங்கினாள். அப்பொழுது அவள் கண்களைப் பார்த்தேன். அவை நீரால் நிரம்பி இருந்தது. என்றும் பிரியாத வாழ்வு வாழ விரும்புபவள் தலைவி. தாமரைப் பொகுட்டின் மேய தாக்கணங்கு அனையாய்! நெஞ்சம் ஏமுற வரினும் நின்னை இம்மையிற் பிரியேன் என்ன வாம மேகலையி னாளும் மறுமையிற் பிரிவை என்னாக் காமரு குவளை போலும் கண்பனி யுகுப்ப நின்றாள். என்னும் நளவெண்பாப் பாடலும் மேற்கோளாய் அமைந்துள்ளது. அணிலின் பற்களைப் போன்ற முட்களை உடைய மகரந்தம் முதிர்ந்த முள்ளிச் செடிகளையும் நீலமணி போன்ற நிறமுள்ள கரிய நீர்ப்பரப்பையு முடைய கடற்கரைக்குத் தலைவனே! இப்பிறப்பு நீங்கி மறுபிறப்பு வருமாயினும் நீயே என் கணவனாக ஆகுக; யான் உனது நெஞ்சுக்கு உகந்தவளாக ஆகுக! எனும் பொருள் அமைந்த அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப! இம்மை மாறி மறுமை ஆயினும் நீஆ கியர்என் கணவனை யான்ஆ கியர்நின் நெஞ்சுநேர் பவளே. என்னும் அம்மூவனார் பாடிய குறுந்தொகைப் பாடலையும் மேற்கோளாய்க் கொள்ளலாம். வந்து எனைக் கரம்பற்றிய வைகல்வாய் இந்த இப் பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்! ஈண்டு நான் இருந்து இன்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத் தீண்டலாவது ஓர் தீவினைதீர் வரம் வேண்டினாள், தொழுது என்று விளம்புவாய். என இலங்கைச் சிறை இருந்த சீதை இராமனிடம் கூறுமாறு அனுமனிடம் தெரிவித்த இக்கூற்றும் சான்றாகக் கொள்ளத் தக்கதாம். சரிதான் போ! நான் ஒன்று சொல்லுகிறேன் கேள்! நீ என்ன நினைத்தாலும் சரி இந்தப் பிறப்பில் நாம் பிரியவே மாட்டோம் என்றேன் அப்படி யென்றால் அடுத்த பிறவியிலே பிரிந்து விடுவோமா? என்று சொல்லி அழ ஆரம்பித்தாள் என்கிறார் கண்ணதாசன். உள்ளினேன் என்றேன் மற்றென் மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள் 1316. பிரிவுக் காலத்தும் உன்னை இடையின்றி நினைத்துக் கொண்டே இருந்தேன் என்னும் கருத்தால் உள்ளினேன் அதாவது நினைத்தேன் என்று கூறினேன். அதனை மறந்திருந்தால் தானே பின் நினைப்பது கூடும் என்று கருதி, என்னை மறந்து விட்டீர் என்று சொல்லி, முன் தழுவுதற்கு இருந்தவள் அதைவிட்டு ஊடலானாள். அடிப்பாவி! உன்னைத்தானே நினைத்தேன் என்றேன். நினைத்தீர்களா? மறந்தால் அல்லவா நினைப்பதற்கு என்னை மறந்தும் கூட இருந்தீர்களா? என்று மேலும் கோபம் கொண்டாள். என்கிறார் கண்ணதாசன். குன்றாத வண்மைக்குமரா குலோத்துங்கன் கோழி வெற்பில் நன்றாம் உமைவிடுத் தேகும் அந்நாட்டின் அருங்குழலாள் ஒன்றாயினள் அன்றி என்பார்வையும் என் உளமும் விட்டுச் சென்றால் அன்றோ அணங்கே நினைத்தேன் என்று செப்புவதே! என்னும் குலோத்துங்க சோழன் கோவைப் பாடலும் மேற்கோள் ஆகலாம். நினைந்தவர் புலம்பலில் நினைப்பவர் போன்று நினையார்கொல், தும்மல் நினைப்பது போன்று கெடும் (குறள் 1203) எனத் தும்மல் வந்தும் வாராததை ஒரு நோக்கிற்குப் பயன் படுத்திய வள்ளுவர் புலவி நுணுக்கத்திற்கும் தும்மலைக் காட்டிக் கலங்க வைக்கும் குறளே, வழுத்தினாள் தும்மினே னாக, அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று (குறள் 1317) என்னுடன் கூடி இருந்தாள் தலைவி; அப்பொழுது இயல்பாய் எனக்குத் தும்மல் வந்தது; தும்மினேன். அவள் நீடு வாழ்க என என்னை வாழ்த்தினாள். அவ்வாறு மன நிறைவுடன் வாழ்த்தியவளின் உளநிலை சற்று நேரத்தில் மாறிவிட்டது. போட்டாளே ஒருபோடு! நேரில் இல்லாத நேயம் உடைய யாராவது நினைத்தால் தானே தும்மல் வரும். உம்மை நினைந்து வருந்துகின்ற மகளிருள் யார் இப்பொழுது நினைத்ததால் தும்மினீர் எனக் கேட்டு விட்டு ஊடல் கொண்டு கேவிக் கேவி அழத் தொடங்கி விட்டாள். யாரேனும் அன்புடையார் நம்மை நினைத்த போது நமக்குத் தும்மல் வரும் என்பது தமிழர் நம்பிக்கை. உடனே தும்மல் வந்தது; தும்மினேன் வாழ்க என்று வாழ்த்தினாள் உடனே என்ன நினைத்தாளோ? என்னவோ? வேண்டியவர்கள் நம்மை நினைத்தால்தான் தும்மல் வரும் என்பது மரபு அல்லவா? அதை மனதில் கொண்டு எவள் நினைத்து உங்களுக்குத் தும்மல் வருகிறது, என்று அழுதாள். என்கிறார் கண்ணதாசன். காதல் விளையாட்டில் தும்மல் இன்னும் விட்ட பாடில்லை ஆகவே, தும்முச் செறுப்ப அழுதாள். நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று (குறள் 1318) எனக்குத் தும்மல் தோன்றிய போது, தும்மினால் யாருள்ளித் தும்மினீர் என்று ஊடல் கொள்வாளே என அஞ்சி, வந்த தும்மலை அடக்கினேன். இப்பொழுது அடக்கியதும் வம்பாய்ப் போய் விட்டது. nf£lhns xU nfŸÉ, ‘c«Kila fhjš kfË® c«ik Ãid¥gJ vd¡F¤ bjǪJ Él¡ TlhJ v‹W kiw¡»‹¿nuh? என்று சொல்லிப் புலந்து அழுதாள். தும்மினாலும் குற்றம் தும்மலை அடக்கினாலும் குற்றம் என் செய்வது? மீண்டும் ஒருதும்மல் வந்தது அவள் கோபிப்பாளோ என்று அடக்கிக் கொண்டேன். பாருங்கள், பாருங்கள்: யாரோ ஒருத்தி உங்களை நினைக்கிறாள்: தும்மல் வருகிறது அது எனக்குத் தெரிந்து விடும் என்றுதானே அடக்குகிறீர்கள்? என்று மேலும் அழுதாள். என்பது கண்ணதாசன் விளக்கம். தன்னை உணர்த்தினும் காயும், பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று (குறள் 1319) ஊடல் கொண்ட தலைவியின் ஊடலைத் தணிக்கத் தலைவன் எவ்வளவு பணிய முடியுமோ அவ்வளவு பணிந்து வேண்டினான். அதனைக் கண்ணுற்ற தலைவி, பிற மகளிர் ஊடல் கொண்ட பொழுதும் நீர் இவ்வாறு தான் கூசாமல் பணிந்து வேண்டியிருப்பீர் போலும் என்று சொல்லிச் சினங்கொள்கிறாளே, தவிர்த்து ஊடலை விடுவதாகத் தெரியவில்லையே என் செய்வது என வருந்தினான். இல்லையடி கண்ணே! இதோ பார்? என்று கெஞ்சினேன்! சரி!சரி! புரிகிறது. எல்லாப் பெண்களிடமும் இப்படித் தான் கொஞ்சுவீர்களோ? என்று மேலும் கோபம் கொண்டாள். என்பது கண்ணதாசன் விளக்கம். ஆதிபகவன் தனது ஊடல் தணிப்பான் பணிய, அவ்விறைவன் பாதம் இறைஞ்சும் அதற்கும் நெற்றிப் பகையும் அல்குற்பகையுமாம் சீதமதியும் அரவும் விழுச் செயற்கும் உவகை செயாமல், அலை மாதுபணியும் அதற்கு மனமகிழும் உமையை வணங்குவாம். என்னும் பிரபுலிங்கலீலைப் பாடல், தன்னிகரிலாத் தலை வரும் ஊடற்காலத்துத் தலைவியைப் பணிந்தே வேண்டுபவர் என்பதைப் புலப்படுத்தும். உமிழ்தேன் பிலிற்றும் ஒள்ளிணர்க் கூந்தல் அமிழ்துகு மழலை அம்மென் தீஞ்சொல் சில்லரித் தடங்கண் மெல்லியல் ஒருத்தி வரிசிலைத் தடக்கைக் குரிசில் மற்றொருவன் பொன்னை மார்பிற் பொலன்கலன் இமைப்பத் தன்னிருந் தோற்றம் தரிக்கலள், வெகுண்டு மாலாயினனென வணங்கினை இரத்தலின் தோலா மொழியை வாழிய பெரிதெனப் புலத்தனள் எழுதலும், கலங்கினள் வெரீஇக் கண்மலர் சிவப்ப மெய்பசப்பு எய்தலின் தானும் மாலாந் தன்மையள் கொல்லெனத் தேறினன் தாழ்ந்து சிலப்படி திருத்திப் பஞ்சியிற் பொலிந்த குஞ்சியன் இரப்பக் கூடினள் அல்லள்; கூடாள் அல்லள்; கைமிகு சீற்றமும் காதலும் அலைப்ப வெள்ளப் புணர்ச்சியின் வேட்கையுள் ளடக்கி உள்ளப் புணர்ச்சியள் ஊடினள் நிற்பது தாதவிழ் தெரியற் சாக்கியர் பெருமான் காதல் உட்கிடப்பக் கல்லெறிந் தற்றே. என்னும் திருவாரூர் நான்மணிமாலை தக்கதொரு மேற்கோளாகும். நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று (குறள் 1320) ஊடல் பொழுதில் தான் ஊடலை நீக்குவதற்காக என்ன அன்பான சொற்களைக் கூறினாலும், அவளை மகிழ்விக்கும் பொருட்டு என்ன நல்ல செயல்களைச் செய்தாலும் அது அவளுக்கு மேலும் சினத்தையே உருவாக்குகிறதே என எண்ணி ஒன்றும் செய்யாமல் ஒன்றும் பேசாமல் அவளுடைய தோற்றப் பொலிவைக் கண்ணாரக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டிருந்தேன். அதனைக் கண்டுணர்ந்து கொண்டு கேட்டாளே ஒரு கேள்வி நான் வெலவெலத்துப் போனேன். அப்படி என்ன கேட்டாள் என்கிறீர்களா? நீர் யாரை மனத்தில் நினைத்துக் கொண்டு என்னுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றீர் என்று என்னைப் பார்த்துக் கூறி விட்டுக் கொண்டாளே சினம் அதன் அழகே தனித்தன்மை வாய்ந்ததாகும். அவளது ஊடல் எனக்கு வியப்பாக இருந்தது. ஊடல் கொண்ட அவள் முகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஓகோ! வேறு எவளோ ஒரு பெண்ணோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ? என்று மேலும் அழுதாள். என்கிறார் கண்ணதாசன். மாதர்தன் வனப்பு நோக்கி மகிழ்ந்துகண் இமைத்தல் செல்லான் காதலித் திருப்பக் கண்கள் கரிந்துநீர் வரக்கண்டு அம்ம! பேதைமை பிறரை யுள்ளி அழுபவர் சேர்தல் என்றாள் வேதனை பெருகி வேற்கண் தீயுமிழ்ந் திட்ட அன்றே. என்னும் சீவகசிந்தாமணிப் பாடல் சீவகன் நோக்குவதைக் கண்டு இலக்கணை புலவி கொண்டதை உணர்த்தும் இப்பாடலும் தக்க மேற்கோளாகும். மூச்சுவிடினும் முனிவள் அதுவுமோர் சூழ்ச்சியாம் என்று துணிந்து. பெண்ணியலார் பொதுவுண்பார் நின் மார்பு. பொதுவுண்ட மார்பு நண்ணேன். யாம் தம்மை நீடு வாழ்க என்பேன் என்று தும்மினார் கோட்டுப்பூச் சூடினும் காயும் யாரினும் காதலம் என்றாலும் ஊடுவாள். இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றாலும் அழுவாள் உள்ளினேன் என்றாலும் ஏன் மறந்தீர் என்பாள். வழுத்தினாள் தும்மினேனாக! யாருள்ளித் தும்மினீர் என்று அழுதாள். தும்முச் செறுப்ப அழுதாள். நுமர் உள்ளல் மறைத்தீரோ என்று அழுதாள் தன்னை உணர்த்தினும் காயும். பிறர்க்கு நீர் இந்நீரர் ஆகுதிர் என்று காயும் நினைத்திருந்து நோக்கினும் காயும் யாருள்ளி நோக்கினீர் என்று காயும். ஊட நினைத்தால் ஊடலாம்! 133. ஊடல் உவகை திருக்குறளின் நிறைவுப் பாலாய் அமைந்துள்ள காமத்துப் பாலின் நிறைவு அதிகாரமாகும். இஃது நிறைவுத் திணையாகிய மருதத்தின் உரிப்பொருளாகிய ஊடல் ஒழுக்கத்தை உணர்த்தும் நிறைவு அதிகாரமும் ஆகும். ஊடல் உவகையை ஆராய முற்படும் முன் 111 வள்ளுவர் கூறும் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரக் கருத்துகளை நினைவில் கொள்வோமாக! காணல், கேட்டல், உண்ணல், முகர்தல், தொடுதல் ஆகிய ஐவகை இன்பமும் தலைவியிடத்தே உண்டு. ஒவ்வொரு நோய்க்கும் மருந்து வேறொன்றாகும். ஆனால், காதலி தந்த நோய்க்குக் காதலியே மருந்தாவாள். தம் அன்பிற்குரிய துணைவியைத் தழுவி உறங்குவதினும் இனியதோ மாயவன் உலக இன்பம். விலகினால் சுடவும், நெருங்கினால் குளிரவும் கூடிய நெருப்பை இவள் எங்கே பெற்றாள்? பூங்கொத்து அணிந்த இவள் தரும் இன்பம், விரும்பிய பொழுது விரும்பியது கிடைத்தது போன்ற இன்பமாகும். தழுவுந்தோறும் உயிர்வளர்வதால் இவள் உடல் அமுதத்தால் செய்யப்பட்டது ஆகுமோ? இவளால் அடையும் இன்பம் தம் வீட்டிலிருந்து தம் உணவை விருந்தோடு உண்பது போன்றதாகும். இருவர்க்கும் இடையே காற்றும் புக இடம் இல்லாதவாறு இணைந்து தழுவுதல் இருவர்க்கும் இணையில்லா இன்பமாம். காதலால் கூடிப் பெறும் இன்பம் அறிய அறிய அறியாமை புலப்படுவது போல் புதுப்புது இன்பமாம். ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் (குறள் 1109) ஊடுதலும், ஊடுதல் நீங்குதலும் கூடி இன்புறுதலும் ஆகிய மூன்றுமே நிலையான அன்பு கூடிய துணைவன் துணைவியர் பெற்ற பயன்களாகும். காதல் வாழ்வில் புணர்தலால் பெறும் இன்பம் போன்றே ஊடலால் பெறும் இன்பமும் ஆகும். ஆகவே, இவ்வதிகாரத்திற்கு ஊடல் உவகை எனத் தலைப்பிட்டுள்ளார் கூடுதல் - நிலவொளி போன்றது என்றால். ஊடுதல்- கதி ரொளி போன்றதாகும். வெயிலில் இருந்தால்தான் நிழலின் அருமை தெரியும். காதல் வாழ்வில் கடமையின் பொருட்டு ஏற்படும் பிரிவு- தலைவி யைப் பண்படுத்தும், அதுபோல் தலைவி கொள்ளும் ஊடல் தலைவனைப் பண்படுத்தும் தன்மை வாய்ந்ததாகும். இல்லை தவறவர்க் காயினும், ஊடுதல் வல்லது அவரளிக்கு மாறு (குறள் 1321) தலைவர் குற்றமற்றவர்தான். நன்றாற்ற லுள்ளும் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (குறள் 469) என்னும் நடைமுறை இயல்பிற்கு ஏற்ப அவர் அன்பு பாராட்டும் முறை ஊடல் கொள்வதற்கு வழிவகுத்து விடுகிறது என்று பொருள் கொள்வது ஒரு முறை. தலைவர் மேல் தவறு ஒன்றும் இல்லை என்றாலும், அவர்மேல் எதை யாவது ஒன்றைக் கற்பித்துக் கொண்டு ஊடுவது, தலைவர், தலைவிமீது கொள்ளும் அன்பை மேலும் மிகுதிப்படுத்தும் ஓர் உத்தியாகும். அணைத்தோளாய், தீயாயரைப் போலத் திறனின்று உடற்றுதி காயும் தவறிலேன் யான். எனும் கலித்தொகை வரிகளும் உடன் வைத்து எண்ணிப் பார்க்கத் தக்கது. பாவம் அவர் அவர்மேல் எந்தக் குற்றமும் இல்லை. எதற்காக நான் அவரோடு ஊடல் செய்தேன்? அவருடைய ஆசை மேலும் மேலும் வளரட்டும் என்று தான். எனக் கண்ணதாசன் எளிமை ஆக்கித் தருகிறார். தலைவன் மீது ஊடல் கொள்ளக் காரணம் யாது என வினவிய தோழிக்குத் தலைவி அளிக்கும் விடை தோழி! புகழ் மிகுதிப் படும்படியாக வாழ்கின்ற செல்வமானது நாளுக்கு நாள் வளரும். வேகமாகச் செல்லக் கூடிய யானை ஒன்று, கரு நிறத்தை உடைய புலியைக் கண்டு அஞ்சி அந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்றது. யானை தன் கோபம் தணியுமாறு வேங்கையின் அடி மரத்தைக் குத்தித் தனது பெரிய கோபத்தைத் தணித்துக் கொண்டது. அத்தகைய குன்றுகளுக்கு உரியன் நம் தலைவன். அவன் செய்த செயலை எண்ணி மனம் வருந்தி ஊடல் கொண்டுள்ளேன். நான் கொண்ட ஊடலைத் தெளிவிக்கக் கருதி என்னிடம் வந்துள்ளாய். தலைவன் புலவி நீக்கப் பணிவுகாட்டும் வன்மையை உடையவன் என்பதனை நீ காண்பாய் என்று தலைவி கூறினாள் இச்செய்திகளை உள்ளடக்கிக் கபிலர் பாடிய நற்றிணைப் பாடல், இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்தொறும் பொலியும், கதழ்வாய் வேழம் இருங்கேழ் வயப்புலி வெரீஇ, அயலது கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப் பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன் நனிபெரிது இனியன், ஆயினும் துனிபடர்ந்து ஊடல் உறுவேன் தோழி, நீடு புலம்பு சேண் அகல நீந்தி புலவி உணர்த்துதல் வன்மை யானே! என்பது தக்க மேற்கோள் ஆகும். புலவி கொள்ளாத போழ்தும் நிறைந்த இன்ப அன்பைப் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கும் போது, புலவியால் வருந்துவது ஏன்? என்ற தோழிக்குத் தலைமகள் அளித்த விடையே ஊடலில் தோன்றும் சிறுதுனி, நல்லளி வாடினும் பாடு பெறும் (குறள் 1322) எனும் இக்குறளாகும். ஊடுதல் காரணமாக அவருக்கு என்னிடம் உண்டாகும் சிறு வெறுப் பினால் என்தலைவர் என்மீது கொள்ளும் அன்பு சிறிது குறையுமாயினும் ஊடல் நீங்கிய பின்னர் அவருக்கு அவ்வெறுப்பும் நீங்கி, அவர் பாராட்டும் அன்பும் முன்னிலும் சிறந்திருக்கும். அந்த ஊடலில் எனக்குக் கூடக் கொஞ்சம் துன்பந்தான் பாவம்! இவ்வளவு கெஞ்சியும் நாம் மிஞ்சுகிறோமே என்றுதான் நினைத்தேன். அந்தக் கோபத்தில் அவர் அன்பு கொஞ்சம் வாடினாலும் பின்னர் பெறுவது இன்பமல்லவா? என்பது கண்ணதாசன் விளக்கம். தோழி! மிளகுக்கொடி வளரும் மலையடுக்கமாகிய அவ்விடத்தில், தளிரைத் தின்னும் குரங்குகள் கூட்டமாகச் சேர்ந்து இருக்கும் பெருமலை நாடனாகிய தலைவன் பழகுதற்கு இனியவன் ஆவான். ஆதலினால் நமக்கு உறவானவர்களினால் ஏற்படும் இன்னாமையை விட, இனிதென்று கூறப்படும் அத்துறக்க உலகமும் இனிமையுடையதாகுமா? நமக்கு நெருங் கினவர்களால் ஏற்படும் துன்பத்தைத் தாங்குவதில் உள்ள இன்பம் துறக்க வுலக இன்பத்தை விடக் கூடுதல் என்பது மிக உயர்ந்த மனித நேய வெளிப்பாடாகும், தலைவன் இனியவன் ஆதலின் அவன் பிரிவால் ஏற்படும் துன்பம். பின்னர் அவன் வரவால் இரட்டிப்பு இன்பம் ஆகிவிடும் என்னும் பொருள் அமைந்த கறிவளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங்கல் நாடன் இனியன் ஆகலின், இனத்தின் இயன்ற இன்னா மையினும் இனி தோ இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே! என்னும் கபிலரின் குறுந்தொகைப்பாடலையும் யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே! என்னும் ஒப்பற்ற குறுந்தொகைப் பாடலையும் நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் (குறள் 452) என்னும் குறளையும், ஒக்க நினைந்து பார்க்கத் தூண்டும் குறளே! புலத்தலின் புத்தேள்நா டுண்டோ? நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து (குறள் 1323) எந்த நிலம் வானத்து மழையை உள்வாங்கிக் கொண்டு, நீர்வளமும் நிலவளமும் தக்கவாறு பொருந்தி அமைந்திருக்கிறதோ அவ்வாறு ஒன்றுபட்டுக் கலந்து சிறந்து வாழும் காதலர்தம் வாழ்வில் கொள்ளும் ஊடலைக் காட்டிலும் புத்தின்பம் தரும் இடம் உலகில் வேறு எங்கும் இல்லை. மண்ணும் தண்ணீரும் கலந்து ஒரே நிறம் ஆனது போல் என்னோடு கலந்தவர் அவர் அவரோடு ஊடல் கொள்வதிலே இருக்கிற இன்பம் ஏழு உலகத்திலும் காணக் கிடைக்காது என்பது கண்ணதாசன் விளக்கம். அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555) இஃது கொடுங்கோன்மையில் வள்ளுவர் காட்டும் ஒரு புரட்சிக் கண்ணீர்ப் படை. ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை (குறள் 985) இஃது சான்றாண்மையில் வரும் பணிவின் ஆற்றல் உணர்த்தும் படையாகும். பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம் பெண்மை உடைக்கும் படை (குறள் 1258) இஃது நிறையழிதலில் காதலனின் பணிமொழியின் ஆற்றல் உணர்த்தும் படையாகும். அஃதொத்த படை ஒன்றை உணர்த்தும் குறளே, புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என் உள்ளம் உடைக்கும் படை (குறள் 1324) தலைவனை ஆர்வத்துடன் வரவேற்காமலும், இனிய மொழி பேசாமலும், நெருங்கி வராமலும் தலைவி வெறுப்புடன் சினம் கொண்டவள் போல் காட்டிக் கொள்வதே ஊடல் ஆகும். இவ் வூடல் இருவரும் கூடிப் பெறும் இன்பத்தை விடாது துய்க்க வழி வகுப்பது ஆகும். மன உறுதியுடன் தலைவனிடம் ஊடல் கொண்டிருந்த தலைவி எண்ணுகிறாள் என் மனஉறுதியாகிய வலிய கோட்டையைத் தகர்க்கும் வலிமை வாய்ந்த படை வேறு எங்கிருந்தும் படையெடுத்து வரவில்லை. ஊடலில் இருந்துதான் என் உள்ளம் உடைக்கும் படையும் தோன்றியுள்ளது என எண்ணி மகிழ்கிறாள். அன்புடையவர்களால் ஊடலின் காலத்தை முதலில் அவர்கள் எண்ணிய நேரம் வரைக் கொண்டு செல்ல முடியாது. உறுதியை மறந்து கூடி இன்புறும் நிலைக்கு ஆட்படுபவர்களே அன்புடைய இணையர்கள் ஆவர். தலைவன் துன்பப்படுவதைக் கண்டு மகிழவேண்டு மென்றே கொண்டது ஊடல். ஆனால் அவ்வூடல் தனக்கும் துன்பத்தை விளைப்ப தால் தலைவி விரைந்து ஊடலைக் கைவிட்டு விடுவாள் என்பதைத் தான் உள்ளம் உடைக்கும் படை எனும் வலிமையான சொற்களால் கூறுகிறார். தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்தோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து (குறள் 1325) தவறு இல்லாக் காதலர்கள்; அத்துடன் ஒருவர்மீது ஒருவர், ஒருவர்க் கொருவர் குறையாத அன்புடையவர்கள். அத்தகையவர்கள் கூடித் தழுவினால்தான் இன்பம் பெற முடியும் என்பதில்லை. ஊடல் கொண்டு நெருங்காமல் விலகி இருப்பதிலும் வேறு ஒருவகையான இன்பம்கிட்டும் என்பதைப் பட்டறிந்த தலைவனும் தலைவியும் உணர்ந்து மகிழ்கின்றனர். அற்றால் அளவறிந் துண்க;அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு (குறள் 943) இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய் (குறள் 946) என்னும் மருந்து அதிகாரக் குறட்பாக்களை நினைவு கூரும் வகையில் அமைந்த குறளே! உணலினும் உண்ட தறல்இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது (குறள் 1326) உயிர் வாழ இன்றியமையாத் தேவை உணவு. ஆகவே, உணவு உண்பதில் தவறக்கூடாது. உணவில் மணமும், சுவையும் சத்தும் இருக்க வேண்டும். உணவினை உண்ணும் ஆர்வமும் உண்டாகும் உண்ணும் போது இன்பமும் உண்டாகும். உண்பது இன்பம்தான். உண்ட உணவு உரிய வேளையில் செரிமானம் ஆக வேண்டும். இல்லையேல் துன்பமாகும். ஆகவே உண்ட உணவு செரித்தால்தான் நன்மை, இல்லையேல் தீமையும் துன்பமும் நோயும் தரும். ஆகவே, உண்ணும் உணவின் சுவையால் உண்டாகும் இன்பத்தைக் காட்டிலும், அவ்வளவு செரித்தலால் உண்டாகும் இன்பம் மிகுதியாகும். இஃது ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் பட்டறிந்த உண்மையாகும். இவ்வறிந்த உண்மையைக் கொண்டு வள்ளுவர் காமவாழ்வின் நுட்பத்தை விளக்குகிறார். தலைவன் தலைவியர் கூடி வாழ்வதில் இன்பம் உண்டு அல்லவா அதைவிடச் சிறந்த இன்பம் தரவல்லது ஊடி இருத்தல் என்கிறார். உண்பதை விட, உண்ட உணவு செரித்துப் பசிப்பது இன்பம்; அது போல் காமத்தால் இன்பம் கூடிப் பெறும் இன்பத்தை விட ஊடிப் பெறும் இன்பம் மிகுதியாகும். புலவியில்லாத கலவி பசியில்லாத உணவுபோல் புன்மையுறும். திருநீலகண்டநாயனார் துணைவியோடு கூடிப்பெற்ற பெருமை யை விட ஊடிப் பெற்ற பெருமையே பெரிதும் மதிக்கப் பெற்றது. தலைவன் தலைவியர் நாளும் கூடிக் களிக்க எண்ணாது; கூடாது விலகி இருக்கும் நாளை மிகுதிப்படுத்திக் கொள்வது நலனும் பயனும் நல்கும் என்பதையும் சேர்த்து எண்ணவைக்கும் குறள் இதுவாகும். கலவி ஆகிய காமத் தின்பயன் புலவி யாதலால் பொன்னங் கொம்பனார் உலவு கண்மலர் ஊடற் செவ்வி நோக்கு இலைகொள் பூணினார் இதயம் போழ்ந்ததே என்னும் சீவகசிந்தாமணிப் பாடலும் தக்க மேற்கோளாகும். எந்தச் செயலிலும், போட்டிகளிலும் இலக்கை எய்தியவர் தான் வென்றவர். வெற்றி இலக்கை அடைய முடியாதவர் தோற்றவர். வெற்றி பெற்றவர்தான் வென்றவர்; தோல்வி அடைந்தவர் தோற்றவர் ஆவர். வென்றவரைத் தோற்றவராகவோ, தோற்றவரை வென்றவராக கருத முடியாது என்ற உண்மையை அனைவரும் அறிவர். திருவள்ளுவரும் அறம் பொருளில் அவ்வாறுதான் கருதினார். ஆனால் காமத்துப் பாலில் நுணுக்கமான வாழ்வியல் காட்ட முற்படும் பொழுது மாறும் நிலையை உணர்த்தும் குறட்பாவே, ஊடலில் தோற்றவர் வென்றார்; அதுமன்னும் கூடலின் காணப் படும் (குறள் 1327) என்பதாம். தோற்றவர் வென்றார் என்பது உண்மையா? ஆம்! எங்கே? காதல் வாழ்வில் நிகழும் ஊடற் போரில். அது எப்பொழுது காணப்படும்? அது தலைவன் தலைவியர் கூடி வாழும் போழ்து காணப்படும். காமம் நுகர்வதற்குரிய இருவருள், ஊடலில் தோல்வி அடைந்தவரே, வென்றவராகக் கருதப்படுவார்? அவ்வெற்றி அப்பொழுது காணப்படாத தாயினும் பின் புணர்ச்சியின் போது அவரால் அறியப்படும். தோற்றவர் என்றால் ஊடலை நீள விடாமல் நீக்கியவர். அவர் புணர்ச்சியின் போது பேரின்பம் அடைவர் என்பதனால் அவரை வென்றவர் என்றார். சீதையைப் பிரிந்த பின் பிரிவுத்துயர் ஆற்றாமல் வாடும் இராமபிரான் கடற்கரையில், உள்நிறை ஊடலிற் தோற்ற ஓதிமம் கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன் எனக் கூறும் கூற்று, தக்க மேற்கோளாகும். நானும் ஊடல் கொள்கிறேன் அவரும் ஊடல் கொள்கிறார். யாராவது ஒருவர் தான் வெற்றி பெற முடியும்? மற்றொருவருக்குத் தோல்வி தானே? ஊடலை யார் தாங்க முடியாமல் தோற்று விடுவார்களோ? அவர்கள் தான், கலவிசெய்யும் போது அதிகச் சுகத்தை அனுபவிப்பார்கள். என்கிறார் கண்ணதாசன். கண்டுகேட் டுண்டுயிர்த்துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள (குறள் 1101) தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு? (குறள் 1103) இவை கூடலில் தோன்றும் இன்பத்தை உணர்த்தும். ஊடல் இன்பத்தை உணர்த்தும் குறட்பா, ஊடிப் பெறுகுவம் கொல்லோ, நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு (குறள் 1328) இவள் நெற்றியில் வியர்வை துளிர்க்குமாறு இவளுடன் கூடி இப்பொழுது பெற்ற இன்பத்தை இன்னும் ஒருமுறை இவள் ஊடி நாம் பெறுவோமாக! ஊடாமல் கூடிப் பெறும் இன்பத்தைவிட முதலில் ஊடிப் பின்கூடிப் பெறும் இன்பம், மிகுஇன்பம் பயத்தலான் ஊடிப் பெற விரும்புகிறான். ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா (குறள் 1329) ஒளிமிக்க அணிகலன்கள் அணிந்த என் துணைவி இன்னும் எம்மோடு ஊடல் கொள்ளட்டும்; அங்ஙனம் அவள் ஊடல் கொண்டு நிற்பதற்கும், அவ்வூடலை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்பதற்கும் தேவை யான நேரம் கிடைத்தற் பொருட்டு இவ்விரவு விடியாது நீளட்டும் என்பது தலைவன் எண்ணம். தலைவி மேலும் மேலும் ஊடல் கொள்ளட்டும்! ஊடலைத் தணிக்கப் பணிந்து கொண்ட இரவு நேரம் நீளட்டும்! யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானூட யானுணர்த்தத் தானுணரான்- தேனூறு கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம் எய்தாது இராக்கழிந்த வாறு. என்னும் முத்தொள்ளாயிரப் பாடல் தக்க மேற்கோளாகும். அகரத்தில் தொடங்கிய திருக்குறள் ன் என்னும் நிறைவு எழுத்தில் நிறைவடையும் குறள். ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் (குறள் 1330) ஊடிப் பிணங்குவதே காமத்திற்கு இன்பம். அப்படிப் பிணங்குகின்ற ஊடலுக்கும் இன்பம் தருவது, ஊடல் நீங்கி அவர் அன்போடு கூடித் தழுவும் உயர்ந்த இன்பம் ஆகும். புலவியில் ஈடுபட்ட அரக்கியர் ஆடையில் தீப்பற்றியது. புலவியின் கரை கண்டவர் அமிழ்துணப் புணரும் கலவியின் கரை கண்டிலர் என்பது கம்பராமாயணப் பாடற்பகுதி. நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக் கலவியும் புலவியும் காதலற் களித்து என்னும் சிலப்பதிகார வரிகளும் மேற்கோளாகும். ஊடுதல் காமத்திற்கு இன்பம் கூடி முயங்குதல் அதற்கு இன்பம். தவறே இல்லாத தலைவர் அரவணைப்பைக் கூட்டவே ஊடுதல். ஊடலில் சிறுதுனி தோன்றும் ஊடலால் நல்லளி வாடினும் பாடு பெறும் புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ? அவர்கள் நிலத்தொடு நீர் இயைந்து அன்னார்? புல்லி விடா அப் புலவி புலவியுள் தோன்றும் உள்ளம் உடைக்கும் படை. தாம் வீழ்வார் தவறிலர் தாம் வீழ்வார் மென்தோள் அகலுதலிலும் இன்பம் உண்டு உணலினும் உண்டது அறல் இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. ஊடலில் தோற்றவர் வென்றார். அது கூடலில் காணப்படும். கூடலில் தோன்றுவது உப்பு (இன்பம்) ஊடிப் பெறுகுவம் உப்பு. ஒளியிழையே ஊடுக ஊடல் தணிக்க நீடுக இரா. காமத்திற்கு இன்பம் ஊடுதல் அதற்கு இன்பம் கூடி முயங்கல் ஊடியும் கூடியும் இன்புறுக! காமத்தில் வளரும் அறம் 1. பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் கணியெவனோ ஏதில தந்து 1089. 2. அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் 1098. 3. வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள் 1105. 4. தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு 1107. 5. அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு 1110. 6. உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு 1122. 7. நெஞ்சத்தார் காதலவராக, வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து 1128. 8. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் 1137. 9. இன்னா தினனில்லூர் வாழ்தல்; அதனினும் இன்னா தினியார்ப் பிரிவு 1158. 10. காமமும் நாணும் உயர்காவாத் தூங்கும்;என் நோனா உடம்பின் அகத்து 1163. 11. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால், வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி 1192. 12. ஒருதலையான் இன்னாது காமம்;காப் போல இருதலை யானும் இனிது 1196. 13. எனைத்து நினைப்பினும் காயார்; அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு 1208. 14. தொடியொடு தோள்நெகிழ நோவல், அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து 1236. 15. உள்ளத்தார் காத லவராக, உள்ளிநீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு 1249. 16. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை; காமநோய் உற்றார் அறிவதொன் றன்று 1255. 17. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ, புணர்ந்தூடி நிற்பேம் எனல் 1260 18. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து 1268. 19. பெண்ணினான் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு 1280. 20. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் 1282. 21. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து 1285. 22. மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் 1289. 23. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ? நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல் 1293. 24. எள்ளின் இளிவாம்என் றெண்ணி, அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு 1298. 25. துன்பத்திற்கு யாரே துணையாவார், தாமுடைய நெஞ்சம் துணையல் வழி? 1299. 26. உப்பமைந் தற்றால் புலவி, அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் 1302. 27. நீரும் நிழலது இனிதே, புலவியும் வீழுநர் கண்ணே இனிது 1309. 28. புலத்தலின் புத்தேள்நா டுண்டோ, நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து. 1323. 29. உணலினும் உண்ட தறல்இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது 1326. 30. ஊடலில் தோற்றவர் வென்றார்; அதுமன்னும் கூடலின் காணப் படும். 1327 வள்ளுவம் பரவ வேண்டும்! வாழ்வியல் துலங்க வேண்டும்! உள்ளுவது உயர்வு வேண்டும்! உரையெலாம் செயலில் வேண்டும்! எள்ளுவ தவிர்க்க வேண்டும்! ஏதிலார்ப் பொறுக்க வேண்டும்! கொள்ளுவது அறமாய் வேண்டும்! கொடைவளம் வேண்டும் வேண்டும்! திருவள்ளுவரின் வேண்டுதல் 1. பொய்தீர் ஒழுக்க நெறி நிற்க வேண்டும் 6. 2. வான் அமிழ்தம் என்பதை உணர வேண்டும் 11. 3. எவ்வுயிர்க்கும் செந்தண்மைபூண்டு ஒழுக வேண்டும் 30. 4. அன்றறிவாம் என்னாது அறம் செய்ய வேண்டும் 36. 5. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ வேண்டும் 47 6. ஏறு போல் பீடு நடை போட வேண்டும் 59 7. அறிவறிந்த நன்மக்கள் பேறு பெற வேண்டும் 61 8. அன்பை அகத்துறுப்பாய்க் கொள்ள வேண்டும் 61 9. முகனமர்ந்து நல்விருந்து ஓம்ப வேண்டும் 84 10. நல்லவை நாடி இனியவே சொல்ல வேண்டும் 96 11. நன்றல்லது அன்றே மறக்க வேண்டும் 108 12. நெஞ்சத்துக் கோடாமையை அணியாய்க் கொள்ள வேண்டும் 115 13. யாகாவார் ஆயினும் நாகாக்க வேண்டும் 127 14. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் வேண்டும் 140 15. பிறன்மனை நோக்காத பேராண்மை வேண்டும் 148. 16. பொறையுடைமை போற்றி ஒழுக வேண்டும் 154 17. யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறவேண்டும் 162 18. பிறன்கைப்பொருள் வெஃகாமை வேண்டும் 178 19. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண வேண்டும் 190 20. சொல்லிற் பயனுடைய சொற்களையே சொல்ல வேண்டும் 200 21. செறுவார்க்கும் தீய செய்யாமை வேண்டும் 203 22. தக்கார்க்கு வேளாண்மை செய்தல் வேண்டும் 212 23. இலனென்னும் எவ்வம் உரையாது ஈதல் வேண்டும் 223 24. தோன்றின் புகழொடு தோன்ற வேண்டும் 236 25. நல்லாற்றான் நாடி அருளாள வேண்டும் 242 26. பிறிதொன்றன் புலாஅல் உண்ணாமை வேண்டும் 257 27. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை வேண்டும். 261. 28. உலகம் பழித்ததை ஒழிக்க வேண்டும் 280 29. எனைத் தொன்றும் கள்ளாமை காக்க வேண்டும் 281 30. யாதொன்றும் தீமை இலாத சொலல் வேண்டும் 291 31. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க வேண்டும் 305 32. பிறிதின் நோய் தந்நோய் போல் போற்ற வேண்டும் 315 33. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப வேண்டும் 322 34. செல்வம் பெற்றால் அற்குப செயல் வேண்டும் 333 35. யான் எனது என்னும் செருக்கு அறுக்க வேண்டும் 346 36. சிறப்பென்னும் செம்பொருள் காண வேண்டும் 358 37. அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெட வேண்டும் 369 38. உலகத்து இருவேறு இயற்கையை உணரவேண்டும் 374 39. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் வேண்டும் 388 40. கேடில் விழுச்செல்வமாம் கல்வி கற்க வேண்டும் 400 41. நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொள்ளாமை வேண்டும் 42. எனைத்தானும் நல்லவை கேட்கவேண்டும் 416 43. தீதொரீஇ நன்றின் பால் உய்க்க வேண்டும் 422 44. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண வேண்டும் 436 45. பெரியாரைப் பேணித் தமராக் கொள்ள வேண்டும் 443 46. மனநலம் உடையார்க்கும் இனநல ஏமாப்பு வேண்டும் 458 47. எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும். 470 48. ஆற்றின் அளவறிந்து ஈதல் வேண்டும் 477 49. பருவத்தோடு ஒட்ட ஒழுக வேண்டும். 481 50. எஞ்சாமை எண்ணி இடத்தால் செயல் வேண்டும் 497 51. கருமத்தைக் கட்டளைக் கல்லாய்க் கொள்ள வேண்டும். 505 52. வினை செய்வானை மன்னன் நாள்தோறும் நாட வேண்டும். 520 53. சுற்றத்தால் சுற்றப்பட ஒழுக வேண்டும் 524 54. புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும். 538 55. மன்னன் குடிதழீஇக் கோலோச்ச வேண்டும் 545 56. நாள்தொறும் நாடி முறை செய்ய வேண்டும் 553 57. கடிதோச்சி மெல்ல ஏறிய வேண்டும். 562 58. கருமம் சிதையாமல் கண்ணோட வேண்டும். 578 59. சிறப்பறிய ஒற்றின் கண் செய்யாமை வேண்டும் 590 60. உள்ளுவதெல்லாம் உயர்வே உள்ள வேண்டும் 596 61. மடி கொன்று குடியைக் குடியாக்க வேண்டும். 602 62. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும். 611 63. இடுக்கண் வருங்கால் நக வேண்டும். 621 64. உலகத்து இயற்கை அறிந்து செயல் வேண்டும். 637 65. கற்றது உணர விரித்துரைக்க வேண்டும் 650 66. இடுக்கட் படினும் இளிவந்த செய்யாமை வேண்டும் 654 67. எண்ணிய எண்ணியாங்கு எய்த வேண்டும். 666 68. வினையால் வினையாக்கிக் கோடல் வேண்டும் 678 69. தூதர்க்கு அன்பு அறிவு சொல்வன்மை வேண்டும் 682 70. மன்னர் விழைப விழையாமை வேண்டும். 692 71. ஐயப் படாஅது அகத்தது உணர வேண்டும். 702 72. உணர்வது உடையார்முன் சொல்ல வேண்டும். 718 73. கற்றார்முன் கற்ற செலச்சொல்ல வேண்டும் 722 74. பசியும் பிணியும் பகையும் சேராநாடு வேண்டும் 734 75. ஆற்றுபவர்க்கும் அஞ்சித்தற்போற்றுபவர்க்கும்அரண்வேண்டும் 741. 76. பொருள் திறனறிந்து தீதின்றி வர வேண்டும் 754 77. உறுப்பமைந்து ஊறஞ்சாவெல்படை வேண்டும் 761 78. புரந்தார்கண் நீர்மல்கச் சாக வேண்டும் 780 79. உடுக்கை இழந்தவன்கைபோல இடுக்கண் களைய வேண்டும் 788 80. பழிநாணுவானைக் கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும். 796 81. கிழமையைக் கீழ்ந்திடா நட்பு வேண்டும் 801 82. பண்பிலார் கேண்மை குன்றல் வேண்டும். 811 83. அகத்தின்னா வஞ்சரை அஞ்ச வேண்டும் 824 84. ஓதி உணர்ந்து பிறர்க்கு உரைத்துத் தானடங்கவேண்டும் 834 85. உலகத்தார் உண்டு என்பதை ஏற்க வேண்டும் 850 86. இகல் என்னும் துன்பத்துள்துன்பம் கெடல் வேண்டும் 854 87. வலியார்க்கு மாறேற்றல் ஓம்ப வேண்டும் 861 88. இளைதாக முள்மரம் கொல்ல வேண்டும் 879 89. கேள்போல் பகைவர்தொடர்புக்கு அஞ்ச வேண்டும். 881 90. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை வேண்டும் 891 91. பெண்ணேவல் செய்தொழுகா ஆண்மை வேண்டும் 907 92. பொருட் பொருளார் புன்னலம் தோயாமை வேண்டும். 914 93. கட்காதல் கொண்டு ஒழுகாமை வேண்டும். 921 94. வென்றிடினும் சூதினை விரும்பாமை வேண்டும் 931 95. அற்றால் அளவு அறிந்து உண்ண வேண்டும். 943 96. குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டும் 960 97. பெருக்கத்துப்பணிவும், சுருக்கத்து உயர்வும் வேண்டும். 963 98. ஆற்றின் அருமை உடைய செயல் ஆற்ற வேண்டும். 975 99. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்ய வேண்டும். 987 100. பயனுடையார் பண்பு பாராட்ட வேண்டும் 994 101. பொருளானாம் எல்லாம் என்று மருளாமை வேண்டும் 1002 102. பிறர் நாணத்தக்கது தான் நாண வேண்டும் 1018 103. குற்றமிலனாய்க் குடி செய்து வாழ வேண்டும் 1025 104. உழுவார் உலகத்தார்க்கு ஆணி என வேண்டும் 1032 105. இன்மையை இன்மை ஆக்க வேண்டும் 1041 106. இகழாது எள்ளாது ஈவாரைக் காண வேண்டும் 1057 107. இரந்து உயிர் வாழாமை வேண்டும் 1062 108. மக்களெல்லாம் மக்களாய் வாழவேண்டும் 1071. ---------------- வள்ளுவம் வாழ்வியலாய்த் துலங்க வேண்டும் பொழுதுகள் : பெரும்பொழுது, சிறுபொழுது பெரும்பொழுது : 6 பருவங்கள் பருவங்கள் மாதங்கள் 1. கார் காலம் : மடங்கல் (ஆவணி), கன்னி (புரட்டாசி). 2. கூதிர்காலம் : துலை (ஐப்பசி), நளி (கார்த்திகை). 3. முன்பனிக் காலம் : சிலை (மார்கழி), சுறவம் (தை). 4. பின்பனிக் காலம் : கும்பம் (மாசி), மீனம் (பங்குனி). 5. இளவேனில் காலம் : மேழம் (சித்திரை), விடை (வைகாசி). 6. முதிர்வேனில் காலம் : ஆடவை (ஆனி), கடகம் (ஆடி). சிறுபொழுது வைகரை (நள்ளிரவு) : 2-6 காலை : 6 -10 நண்பகல் : 10 - 2 எற்பாடு : 2-6 மாலை : 6-10 இரவு : 10 - 2 தமிழில் மாதங்கள் தை - சுறவம் மாசி - கும்பம் பங்குனி - மீனம் சித்திரை - மேழம் வைகாசி - விடை ஆனி - ஆடவை ஆடி - கடகம் ஆவணி - மடங்கல் புரட்டாசி - கன்னி ஐப்பசி - துலை (துலாம்) கார்த்திகை - நளி மார்கழி - சிலை தமிழ் கிழமைகள் திங்கள் - திங்கள்கிழமை செவ்வாய் - செவ்வாய்க்கிழமை புதன் - அறிவன் கிழமை வியாழன் - வியாழக்கிழமை வெள்ளி - வெள்ளிக்கிழமை சனி - காரிக்கிழமை ஞாயிறு - ஞாயிற்றுக்கிழமை