வள்ளுவ வளம் (திருக்குறள் வாழ்வியல் விளக்க ஆய்வு நூல்) பொருட்பால் (அதிகாரம் 64 முதல் 87) 3 செந்தமிழ்ச் செம்மல் புலவர் மு.படிக்கராமு க.மு; கல்.இ; வளவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வள்ளுவ வளம் - 3 ஆசிரியர் : புலவர் மு.படிக்கராமு க.மு; கல்.இ; பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2015 தாள் : 18.6 கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 488 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 455/- படிகள் : 1000 நூலாக்கம் : வி. சித்ரா, பிராசசு இந்தியா அட்டை வடிவமைப்பு : கவிபாகர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2. சிங்காரவேலர் தெரு தியாகராய நகர் சென்னை - 600 017. தொ.பே. 2433 9030. பதிப்புரை நூலாசிரியர் மு. படிக்கராமு அவர்கள், முதுமுனைவர் செந்தமிழ் அந்தணர், தமிழ்க் கடல் இரா. இளங்குமரனார் அவர்களின் அண்ணன் மகன் ஆவார். படித்த குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பதற்கேற்ப நூலாசிரியரின் குடும்பப் பின்புலம் கல்வியின் பெருமையை உணர்ந்த குடும்பம். நூலாசிரியரின் திருமகன் திருமாவேலன் தமிழ் இதழியல் வரலாற்றில் இன்று மிகச்சிறந்த நிலையில் இருப்பவர். தமிழ் - தமிழினம் மேன்மையுறுவதற்கு தனக்குக் கிடைத்த வாய்ப் பினைப் பயன்படுத்திப் பெரும் பங்களிப்பைச் செய்து வருபவர். வள்ளுவ வளம் எனும் பெயரில் நான்கு தொகுதிகளை எம் பதிப்பகத்தின் வழி வெளிக்கொணர்வதில் பெருமையும் உவகையும் கொள்கிறோம். தமிழ் புகுந்த நெஞ்சிற்குத் தளர்வில்லை, உடலுக்கும் முதுமையில்லை என்பார் பாவலலேறு பெருஞ்சித்திரனார். பாவலரேறு பாடலுக்கு இலக்கணமாகவும், இலக்கியமாகவும் நம் கண்முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் இந்நூலுக்கு விரிந்த அணிந்துரை யளித்து இந்நூலின் ஆழ அகலங்களை எல்லா வகையிலும் உயர்த்தியுள்ளார். அய்யா அவர்களின் அணிந்துரைக்குப் பிறகு இந்நூலைப் பற்றி எழுதுவதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. பாவாணர் வழிநிலை அறிஞர்களில் ஒருவரான பெரும் புலவர் செந்தமிழ்ச் செம்மல் மு. படிக்கராமு அவர்கள் எழுதிய வள்ளுவ வளம் நூலினை (4 தொகுதிகள்) வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். இவ்விரு பெருமக்கள் வாழும் காலத்தில் வாழ்கிறேன் என்ற பெருமை ஒன்றே எனக்குப் போதும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்மறையாம் திருக்குறளுக்கு வெளிவந்த சிறந்த உரைகளில் வள்ளுவ வளமும் ஒன்று. இந்நூல் புதியப் பார்வையைத் தருவதுடன் மேலும் மேலும் வள்ளுவத் துக்கு வளமும் வலிமையும் பொலிவும் சேர்க்கும் புதிய வரவாகும். இந்நூலினை உலகெங்கும் வாழும் தமிழர்கள் தம் இல்லங்களில் வாங்கி வைத்துப் பயன் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். - கோ. இளவழகன் நூலாசிரியரைப் பற்றிய குறிப்பு நூலாசிரியர் மு. படிக்கராமு விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் வட்டம், வாழவந்தாள் புரம் என்னும் சீரூரில் வாழ்ந்த வள்ளுவ நெறி வாழ்வராம் உழவர் ப.இரா.முத்தையா, மனைத்தக்க மாண்பர் சீனியம்மாள் ஆகிய நிறைகுணச் செம்மல்களின் மக்களுள் ஒருவர் 1.6.1938இல் பிறந்தவர். இடைநிலை ஆசிரியர் பயிற்சி, தமிழ்ப்புலவர், தமிழ் முதுகலை ஆசிரியர் இளங்கலை பயின்றவர். இராசபாளையம் ஊ.ஒ.தொடக்கப் பள்ளிகளில் ஒன்பது ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும், கோயிற்பட்டி ஆ.வை. மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருபத்தெட்டு ஆண்டுகளும் பணிபுரிந்து 1.6.1996இல் பணி நிறைவு பெற்றவர். செய்யும் பணியைத் தெய்வப் பணியாகக் கருதிச் செப்பமாய்ச் செய்யக் கூடியவர். இராசபாளையம், கோயிற்பட்டித் திருவள்ளுவர் மன்றங்களில் செயலாளராய் அமைந்து தமிழ்த் தொண்டாற்றியவர். முரம்பு பாவாணர் கோட்ட நெறியாளரும் ஆவார். சங்கான் கோயிலில் இந்து சமயத் தமிழ்ப் பேரவை சார்பில் 133 வாரங்கள் திருக்குறள் தொடர்பொழிவைச் சிறப்புறச்செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் முத்து லக்குமி அவர்கள் இவரின் வாழ்க்கைத் துணைவி ஆவார். நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரி, கணினித்துறைத் துணைப் பேராசிரியர் முனைவர் ப. வேல்மணி அவர்களும் இளையோர் விகடன் ஆசிரியர் ப. திருமாவேலன் அவர்களும் இவருடைய மக்கள் ஆவர். மேலநீலித நல்லூர் ப.மு.தே. fšÿÇ ïa‰ãaš nguháÇa® Kidt® K.át¡Fkh® mt®fS« br‹id gâ‹k¥gŸËÆš g£lªjh§» MáÇauhf¥ gÂòÇí« R.கி. இரேணுகா அவர்களும் மருமக்கள் ஆவர். செந்தமிழ் அந்தணர், தமிழ்க் கடல் இரா. இளங்குமரனார் அவர்களின் தமையனாரின் மைந்தரும் ஆவார். அன்னார் வகுத்துத் தந்த நெறிமுறைப்படி தமிழ் நெறித் திருமணங்களைச் சிறப்பாகச் செய்து வரும், பண்பட்ட பொழிவாளரும் குறள் நெறிப் பரப்பாளரும் ஆவார். அன்னாரின் பண்பையும் தமிழ்ப் பணியையும் பாராட்டிப் பல்வேறு தமிழ் அமைப்புகள், இளம் தமிழ்த் தென்றல், அறிவுச்சுடர், செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ்ச் செம்மல், குறளாயச் சான்றோர், திருக்குறள் மாமணி, நூலறி நுண்ணியர் வாழ்வியல் வழிகாட்டி, தமிழ் அறிஞர் ஆகிய பட்டங்களுடன் திருவள்ளுவர் விருதும் வழங்கிச் சிறப்பித்துள்ளன. வள்ளுவப்பயன் பிரசங்கம் பெருக்கெடுத்தோடிக் கொண்டிருந்த நாளிலே பெருஞ்சொல் விளக்கம் என்னும் ஒரு கலைச்சொல் உருவாகியது. அப்பெருஞ்சொல் விளக்கம், சொற்பொழிவு என்னும் அரிய கலைச் சொல்லாக நெல்லையில் இருந்து தென்றல் உலாவாகத் திகழ்ந்தது. அவ்வருமையான கலைச் சொல்லைத் தந்த பெருமகனார் பால் வண்ணர்! அவர் சொல்லளவில் நில்லாமல் சொற்பொழிவு ஆற்றுப் படை என நூற்கொடையே புரிந்தார்! சொற்பொழிவு நூற்கொடையாதல் தமிழ்த்தென்றல் திரு.வி.க. நிறைமலையாம் மறைமலையடிகள், தவப்பெருந்திரு ஞானியார் அடிகள் முதலோரால் கொள்ளப்பட்டு, கற்பனை அவையங்கூட்டிக் கலைக் கவின் மழையாய்ப் பொழியவும் வழிகாட்டியது. அதனைச் செய்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார். நூல் வள்ளுவம் என்னும் உள்ளுதோறுவகை யூற்றாம் நூல்! அந்நெல்லை மாவட்டம், சங்கர நாராயணர் கோயில் வாழ்நரால் உருவாக்கப்பட்டு ஒண்தமிழ்க் கடனாற்றும் வகையால் அமைந்த, இந்து சமயத் தமிழ்ப் பேரவைக்கண் தொடர் பொழிவாகச் செய்யப்பட்டதே வள்ளுவ வளம் என்னும் பாரிய பொழிவு நூல். பொழிவாளர் தூத்துக்குடி மாவட்டம் கோயில் பட்டியில் வாழ்நராய் இருந்தும், தம் தலைக்கடன் தமிழ் வளர்ச்சியும் தமிழ்க் குறளும் எனக் கொண்டமையாலும், கேட்குநர் தோட்கும் செவியராக இருந்தமையாலும் வாய்த்த பேறு ஈதாம். பொழிவாளர் புலமைச் செல்வர்: தமிழ் நெறி வாழ்வர்; வழிவழித் தமிழ்க் கொங்கு தேர் வாழ்வுக் குடும்பத்தவர்; தமிழ், தமிழின மீட்டெடுப்பு வேட்கையர். ஆதலால் அரிய பெரிய செயலை எளிமையாய் இயல்பாய்ச் செய்ய வாய்த்ததாம். செய்தவர் எந்தை பெயரர் மு. படிக்கராமர்: புலவர். கலைமுதியர். ஆசிரியப் பணியர்க்கு இயற்கையாகத் தொழில் வகையால் வாய்க்கும் வளம் நாவன்மை; போதிக்கும் திறம்; பொழிவாற்றல்; பலர் தம் தொழிலைத் தொண்டாகவும், மொழி பண்பாட்டு வளர்ப்பாகவும் கொண்டார் அல்லர் கொண்டவர். வினையால் வினையாக்கிக் கொண்டவர் அவர், வித்தின் தன்மை அமைந்த விளைவள வித்தகர்! நூலாசிரியர் மு. படிக்கராமர் தம் பொழிவு நூலால் அவற்றை மெய்ப்பித்திருக்கிறார். திருவள்ளுவர் தம் நூலை 133 அதிகாரங்களாக, அதிகாரம் ஒன்றுக்குப் பத்துப் பாடலாக இயற்றி அறம் பொருள் காமம் என முப்பாற் பகுப்பாக்கினார். பாற்பகுப்பு பழைமையது: தொல்லாசான் தொல்காப்பிய ஆணை வழியது. அறம் முதலாகிய மும்முதற்பொருள் என்றும் இன்பமும் பொருளும் அறமும் என்றும் ஈரிடங்களில் முறைப்படுத்துகிறார். சங்கச் சான்றோரும் மூவேந்தர் குடையும் செல்லுதலையுந்துணர்ந்து என்றும் மூவேந்தரும் ஒரிமையாராய் வாழ வேண்டும் என்னும் நோக்கில் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல என்று கூறுமளவு தமிழியமாகத் திகழ்ந்தது. தொல்காப்பியர், எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (1169) என்றமையால் எல்லா உயிர்க்கும் பொது வகைத்தாம் இன்பம் போல்வதன்று மாந்தப் பிறப்பர் கொள்ளும் இன்பம். அது பிறை நிலா வளர்பிறையாய் நிறைமதியாய்த் திகழ்வது போன்றது. அதனால் தொல்காப்பியர் காமக் கூட்டம் காமம் சான்ற கடைக் கோட் காலை என ஆளும் ஆட்சிகளாலும், கமம் என்னும் உரிச்சொல் நிறைந்தியலும் என்றமையாலும் காமத்துப் பால் எனப் பெயர் சூட்டினார். கமம் < காமம். முப்பால் பொழிவில் முதற்பால் முன்னே வெளிவந்தது. இதுகால் பொருட்பால் விரிவாக்கத்தால் முப்பாலாக (முப்பகுதியாக) வெளிப்படுகின்றது. முதற்கண் அமையும் பொருட்பால் ஒரு விளக்கம் என்னும் பகுதியில் பொருட்பால் திரட்டாக நூற்பொருள் விரிவாக்கம் பனித்துளிமுன் பனிமலையெனத் தோற்றம் தருகிறது. பழைய உரையாசிரியர்கள் தத்தம் நோக்கிலும் போக்கிலும் இயல் பகுத்து இயைபு காட்டினர் இவரோ. பொருட்பாலில் அமைந்துள்ள 70 அதிகாரங்களையும் கல்வி அறிவுப் பொருள் -11; செயலாண்மைப்பொருள் - 13 ; நாட்டாட்சிப் பொருள் -11; கூடிவாழும் பொருள் - 9 ; பகையும் படையும் - 6; களைய வேண்டிய பொருள் - 7 ; போற்றத்தக்கப் பண்புப்பொருள் -7; வளமையும் வறுமையும் - 6 ; எனப்பகுத்தும் தொகுத்தும் கொள்ளலாம் என்பது நுண்மாண் நுழை புலப் பார்வையாம். பொருட்பால் 700 குறள்கள்; உரைவிளக்கம் குறள் ஒன்றுக்கு இரண்டு பக்கங்களுக்கு மேலாக இடம் பெறலால் நூல் 1300 பக்கங்கள் அளவில் விரிவாக்கம் பெறுகின்றது. ஓரதிகாரத்திற்கு ஏறத்தாழ 20 பக்கங்களை எட்டுகிறது. ஏனெனில், பொழிவுப் பொருளின் விரிவு எடுத்துக் கொண்ட பொழுதாலும் கேட்கும் அவைச்சிறப்பாலும், ஒவ்வொரு குறளுக்கும் தரப்படும் சான்றுகள் மேற்கோள்கள் ஒப்புமைப் பகுதிகள் சுட்டல் என்பவற்றாலும் விரிவாக்கமுறுகின்றன. பொழிவு முழுவதும் நூலில் இடம் பெற்றிராது; வேண்டும் சுருக்கம் பெற்றே அமைந்தது - அமையும் - என்பது பட்டறிவால் விளங்கும். அதிகார விளக்கம் என்னும் ஒவ்வோர் அதிகார முகப்பும் முழுதுறு நூற்பார்வையாகச் சிறக்கின்றது. இறைமாட்சி எனின் இறை என்பது முப்பாலிலும் எவ்வெப் பொருள்களில் இடம் பெற்றுள்ளது என்பது குறளும் பொருளுமாக விளக்கப்படுகிறது. அரசர், மன்னர், வேந்தர் என்னும் சொற்களை மிக ஆளும் வள்ளுவர் நிலம் ஆள்பவர் என்றும் ஆள்வது எக்காலத்துக்கும் பொருந்துவதாக அமைந்து விடுகின்றது என்பது அருமைமிக்கதும் அமைவானதுமாம் பொருளாகும். மன்னராட்சி மாறி மக்களாட்சி யாகிய காலத்தும் மாறாப் பொருளது அது. குடியாட்சி கோனாட்சி குடிக்கோனாட்சி என மூவகையாட்சிகளும் பொதுமை யாட்சியுமென இயலும் இக்கால நிலையில் எவ்வாட்சியும் நிலமாள்பவர் என்பதில் அடங்கி விடுதல் கண்கூடு. ஆதலால் எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் எந்நிலைக்கும் திருக்குறள் தக அமைந்த அமைவுடையது என்னும் பெருமை நூலாலும் உரையாலும் மெய்ப்பிக்கப்படும் மேன்மையதாகின்றது. நிலம் ஆள்பவர் என்பதற்கு ஏற்ப ஆள்பவர் என்பதைக் கொண்டதுடன் நில விளக்கமும், நிலவளமும் பிற பிற வளங்களும் வாய்ப்பினும், வேந்து அமையவில்லையேல் பயனில்லை என்றும் குறளைக் காட்டி வேந்து என்பதற்கு ஆள்பவர் எனப் பொருளுரை வழங்குவது காலத்தோடு பொருந்திய சால்புப் பார்வையாய்ச் சிறக்கின்றது. இறைமாட்சிக்கு, இறை மாட்சியனாக இலங்கியவனும் சங்கக் சான்றோருள் ஒருவனாகக் கொள்ளப்பட்டவனுமாம் தொண்டைமான் இளந்திரையன் கூறும் கால்பார் கோத்து என்னும் பாடலை எடுத்துக் காட்டி அதற்கு எளிய இனிய உரைவிளக்கமும் தருதல் அதிகாரப் பொருளாம் பொற்குடத்திற்கு இடப்பட்ட மாணிக்கப்பொட்டு அன்னதாய்ச் சிறக்கின்றது. இனிப் பாடற்கு உரை கூறுங்கால் பாடலை முதற்கண் வைத்து, அதன் விரிவிளக்கமாகப் பொருளை வைத்து, அப்பொருள் விளங்கத் தமிழில் பயிலும் நூற் சான்றுகளை எடுத்துரைத்து, திருக்குறள் களிலேயே அக்குறளை விளக்கும் ஒப்பமைந்தவை உளவாதலையும் தந்து குறளை விளக்கும் முறைமை அவையோர்க்கு மட்டுமன்றிக் கற்போர்க்கும் இன்பம் செய்வதாம். ஒரு குறள் முடிவில் அடுத்த குறளின் பொருள் தொடர்பை இயைத்து விளக்கம் செய்து அக்குறளை வைத்து வழக்கம் போல விளக்கம் புரிவதாய் இருப்பதால் பொருள் தொடர்பு இடையீடு இல்லாப் பொற்றொடரி (பொன்சங்கிலி) என இயைந்து விடுகின்றது. சங்கச் சான்றோர் பாடல் முதல் பிற்றைக் கால நூல்கள் வரை எடுத்துக்காட்டாகக் காட்டப்படுதலாலும் மக்கள் வழக்குகள் சுட்டப் படுவதாலும் புலமையர் வழக்காலும் பொதுமக்கள் வழக்காலும் திருக்குறள் சிறத்தல் செவ்விதின் நாட்டப்படுகின்றது. நூலைப் பயில்வோர்க்குத் தமிழின் பரப்பு வெளிப்படப் புலப்படுவதாகின்றது. வாழ்வியலொடு பொருந்தா உரைகளும் தற்சார்பு வெளிப்படுத்தும் உரைகளும் பலப்பல உலாவருகின்றன. வாழ்வியலொடு ஒன்றியதும் எச்சார்பும் சாராமல் வள்ளுவர் நெஞ்சக் சார்பாய்க் கொண்டதுமாய் வெளிப்பட்டுள்ள இவ்வுரை வாழ்வாங்கு வாழ நினைப்பவர்க்கு வாய்த்த அரும்பெரும் துணையாம் எனச் சுருங்க உரைத்தல் சாலும். இப்பேரியல் விளக்க நூலை, தாள் விலை, கணினிப்படுத்தல், அச்சிடல், அட்டைகட்டல் என்பவற்றின் செலவு விண்ணேறி நிற்கும் நாளில் துணிந்து வெளியிடல் அரிது! அத்தகைய அரிய பெரிய தமிழ் வளமார்ந்த நூல்களையே தேர்ந்து வெளியிடுதலைத் தனிப்பெரும் நோன்பாகக் கொண்ட தமிழ்ப் போராளி திருமிகு கோ.இளவழகனார் வெளியிடுதல் இயல்பேயாம். முப்பாலின் மூன்றாம் பாலையும் தொடர்ந்து வெளியிடுதல் பேரறப் பொருள் நூல் யாத்த வள்ளுவப் பயனை தமிழ்வையகப் பயனாக நல்கிய பேற்றை வழங்கும் என்பது உறுதியாம். வாழிய நலனே! வாழிய நலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் திருநகர், இள. இளங்குமரன் மதுரை 625006. ஆசிரியர் உரை திருக்குறளில் செறிந்து காணப்படும் பொருள் வளமும், நலமும், மேன்மையும் நுண்மையும் : நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று; நீரினும் ஆரளவின்றே என்பதைத் திருக்குறளைக் கசடறக் கற்று, உணர்ந்து ஆராய்ந்த பெருமக்கள் அனைவரும் நன்கு அறிவர். பிறந்த நாள் தொட்டு, வாழும் காலம் வரை, அனைத்து அகவையினரும், அனைத்து நிலத்தினரும், அனைத்து நிலையினரும், அனைத்துத் தொழிலினரும், அனைத்துத் துறையினரும், புகழும் நன்மையும், பெருமையும், இன்பமும் பெற்று உயர்ந்தோங்கி வாழ வழிகாட்டும் வாழ்வியல் நூல் திருக்குறள். மக்களில் நூற்றுக்கு நூறு விழுக்காடு தீயவராகவே எவரும் இரார். அங்ஙனமே நூற்றுக்கு நூறு விழுக்காடு நல்லவராகவே அமைந்திருப்பதும் அரிது. ஒவ்வொருவரும் தம்பாலுள்ள குறைகளை உணர்ந்து களையவும், நிறைகளைப் பெருக்கிக் காத்துக் கொள்ளவும் வழி வகுத்துத் தரும் வாய்ப்பான நூல் திருக்குறளாகும். திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பாலாக இயன்ற நூல் எனினும் மாந்தனின் அக வாழ்விலும் புறவாழ்விலும் இரண்டறக் கலந்து நெறி காட்டும் ஒளிவிளக்கு அறமே ஆகும். அறத்தோடு ஒன்றாத எவ்வாழ்வும் வாழ்வாகாது என்பதால், இவ்வாழ்வியல் விளக்க ஆய்வு நூலுக்கு வள்ளுவ வளம் என்பது தலைப்பாயிற்று. இப்பெயரிட்டவர் என் மைந்தர் ப. திருமாவேலன் ஆவார். எச்சார்பும் இன்றி, நடுவு நிலை நின்று வாழ்வியல் நோக்குடன், அனைவரும் பயன் கொள்ளுமாறு அனைத்துக் குறட்பாக்களும் எளிமையாய், தக்க எடுத்துக் காட்டுகளுடனும் இலக்கிய மேற்கோளுடனும், வரலாற்றுக் சான்றுகளுடனும், ஒத்த உலக அறிஞர்களின் மணி மொழிகளுடனும் ஒல்லும் வகையான் விளக்கம் பெற்றுள்ளது. ஏற்புடையதன்று எனக் கருதும் யாருடைய எந்த உரையையும் எடுத்துக் காட்டிக் குறை கூறுவதைக் காண்பது அரிது. பல குறட்பாக்கட்கு அறிஞர்கள் கூறும் உரை ஒன்றுக்கு ஒன்று மேலானதாய்க் குறளின் பெருமையை மேலும் உயர்த்துமாறு அமைந்திருக்கு மாயின் யான் கற்க வாய்த்த உரைகளை அனைவரும் அறிந்துகொள்வது நலம் எனக் கருதி அங்காங்கே அமைத்துள்ளேன். அதிகாரத் தலைப்பை, முன்னுரை போல் முகப்பில் எடுத்து மொழிவது போல் ஒவ்வொரு அதிகார நிறைவிலும் குறட் கருத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு சில சொற்காளல் குறிப்புச் சட்டம் போல் வழங்கப்பட்டுள்ளதையும் காணலாம். நூலின் நிறைவில் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலிலும் அமைந்த 108 அதிகாரங்களில் அமைந்த கருத்துகளில் முதன்மையான ஒன்றைத் தேர்வு செய்து திருவள்ளுவரின் வேண்டுதல் எனும் தலைப்பில் தொகுத்துக் குறள் எண்ணுடல் இடம் பெற்றுள்ளதையும் கண்டு, கற்றுப் பயன் கொள்ளலாம். ஈராண்டுகட்கு முன் அறத்துப்பால் வாழ்வியல் விளக்க ஆய்வு நூலைச் சென்னை நாலாந்தா பதிப்பக உரிமையாளர் உயர் மனச் செம்மல் திருமிகு. பொ. தங்கப் பாண்டியன் அவர்கள் பதிப்பித்துப் பெருமைப்படுத்தினார்கள் நூல் வெளியீட்டு விழாவை மிகச் சிறப்பாச் செய்தவர்கள் தமிழால் உணர்வாள்வோம் குறளால் உலகாள்வோம் எனும் குறிக்கோளுடன் தொண்டாற்றும் கோயிற்பட்டித் திருவள்ளுவர் மன்றத்தினர் ஆவர். பொருட்பால் வாழ்வியல் விளக்க ஆய்வு நூலை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் பதிப்பித்து வெளிக் கொணர்பவர், தனித் தமிழ்த் தோன்றல் உலகவாம் பேரறிவாளர், தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ. இளவழகனார் ஆவார். இந்நூலுக்கும் வள்ளுவப்பயன் எனும் தலைப்பில் அணிந்துரை வழங்கியவர்கள் நிறைமொழிமாந்தர், செந்தமிழ் அந்தணர் திருமிகு. இரா. இளங்குமரனார் ஆவர். அவர்கட்கும் எனக்குத் திருக்குறளின் பால் ஈடுபாட்டை உண்டாக்கிப் படிக்க வைத்து, சிந்திக்க வைத்து, ஆராய வைத்து, பேச வைத்து, எழுத வைத்துத் தூண்டித் துலக்கிவரும் சான்றோர் பெருமக்கள் அனைவர்க்கும் என்றும் நன்றிக் கடப்பாடு உடையேன். `வள்ளுவ வளம் எனும் தலைப்பில் காமத்துப் பால் வாழ்வியல் விளக்க ஆய்வு நூலையும் ஒருங்கே வெளிக்கொணரும் தமிழ்மண் பதிப்பகம் வணங்கத்தக்க உயர் நிறுவனமாகும். நூலைக் கற்போர் தங்கள் கருத்தை எழுத்துவழி தெரிவித்து உதவவேண்டுகிறேன். நன்றி! அறிவகம் அன்பகத்தான், 31. இராம் நகர், மு. படிக்கராமு மகாராச நகர் (அஞ்சல்) திருநெல்வேலி 627 011. 9952144293 பொருட்பால் ஒரு விளக்கம் 1330 குறட்பாக்களால் ஆக்கப் பட்ட திருக்குறளில் அறத்துப் பாலில் 380 பாடல்களும் பொருட்பாலில் 700 பாடல்களும் காமத்துப் பாலில் 250 பாடல்களும் அமைந்துள்ளன. திருக்குறள் 10 குறள் ஓர் அதிகாரம் எனும் திட்டத்தில் அமைந்ததால் அறத்துப்பால் 38 அதிகாரம்; பொருட்பால் 70 அதிகாரம்; காமத்துப்பால் 25 அதிகாரமாக விளங்குகிறது. திருக்குறளின் உயிர் அறம்; திருக்குறளின் உடல் பொருள்; திருக்குறளின் உணர்வு காமத்துப்பால் என்று கூறலாம். ஒரு நாட்டில் வாழும் அனைத்து உயிரிகட்கும் தேவையான அனைத்து இன்றியமையாப் பொருள்களும் உடையதாய் நாடு அமைந்திருப்பதுடன்; நாட்டு மக்கள் அனைவர் வாழ்வும் பொருளுடைய (குறிக்கோள் உடைய) வாழ்வாக மிளிர வேண்டும் எல்லாரும் தக்காராய், எல்லாரும் தாழ்விலாச் செல்வராய் இலங்க வேண்டும் என்னும் உயர்நோக்கில் திருக்குறளின் பொருட்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் காட்டும் பொருள், பருப் பொருள் மட்டுமன்று நுண்பொருளும் ஆகும். அவை உடைமையாய் உரிமை கொண்டாடப்படு கின்றன. செல்வங்களாய்ச் செழிக்கச் செய்கின்றன. ஆக்கங்களாய் வளர்க்கின்றன; திருவாய் நிறைவளிக்கின்றன. செம்பொருள், நன்பொருள், மெய்ப்பொருள், எண்பொருள், ஒண் பொருள், வேண்டாப்பொருள், ஆன்றபொருள், நற்பொருள், சொற் பொருள், வான்பொருள், உறுபொருள், உல்குபொருள், தெறுபொருள், வேந்தன்பொருள், பொருட் செல்வம், பொருளுடைமை, பொருள் என்னும் பொய்யா விளக்கம், பொருள் என்னும் செல்வச் செவிலி களையும் திருக்குறளில் கண்டு உணரலாம். உடைமைகளில் அன்புடைமை அறிவுடைமை, ஆர்வம் உடைமை, உள்ளம் உடைமை, ஒழுக்கமுடைமை, தவமுடைமை, பொருளுடைமை, நாநலம் என்னும் நலனுடைமை பண்புடைமை, துணிவுடைமை, நாணுடைமை ஆய உடைமைகைளைப் பெற்று வாழ வழி காட்டுகிறார். அத்துடன் அன்புடையார், அறிவுடையார், ஊக்கம் உடையார், ஒழுக்கம் உடையார், உணர்வதுடையார், நீர்மை உடையார் தவம் உடையார் கண்ணுடையார், செவி உணவிற் கேள்வியுடையார், இளிவரின் வாழா மானம் உடையார், எண் சேர்ந்த நெஞ்சத்திடன் உடையார், மதிநுட்பம் நூலோடு உடையார், நயனொடு நன்றி புரிந்த பயனுடையவராய் இலங்க வேண்டுவதுடன், அழுக்காறு உடையாராக வும் அச்சம் உடையவராகவும், மடியுடையவராகவும் எவரும் இருந்து விடக் கூடாது என்றும் விரும்புபவர் திருவள்ளுவர். செல்வங்களில் அருட்செல்வம், பொருட் செல்வம், பெருஞ் செல்வம், நெடுஞ்செல்வம் சிறப்பீனும் செல்வம், வேண்டாமை அன்ன விழுச்செல்வம், கேடில் விழுச் செல்வம் கல்வி, செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், பொருள் என்னும் செல்வச் செவிலி, பழகிய செல்வம் ஆகிய செல்வங்களைப் பெற்று அனைவரும் வாழ வழி காட்டுவதுடன் அற்கா இயல்பிற்று செல்வம் ஆகவே அற்குப செய்து வாழ் என்றும் உன் செல்வம், செயற்பால செய்யாது இவறியான் செல்வமாக இருக்கக் கூடாது என்றும் உன்செல்வம் பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வமாக இருக்கக்கூடாது அத்துடன் நச்சப்படாதவன் செல்வ மாகவோ ஏதமாகக் கருதப்படும் பெருஞ்செல்வமாகவோ அமைந்து விடக் கூடாது என உரிமையுடன் வேண்டுகிறார். அத்துடன் அனைவரும் செல்வர்களாய் விளங்க வேண்டும், அதுவும் தாழ்விலாச் செல்வர்களாகவும், சீருடைச் செல்வர் களாகவும் விளங்க வேண்டும் என விரும்புபவர் திருவள்ளுவர். அனைவரும், அறனாக்கம், அறம் கூறும் ஆக்கம், அருப்பறா ஆக்கம், அரண் சேர்ந்தாம் ஆக்கம், செப்பம் உடையவன் ஆக்கம், மன்னுயிர்க்கு ஆக்கம் மன்னிய ஆக்கம், பொருளாக்கம், நெடி தாக்கம், நன்றாகும் ஆக்கம் பெருக்கி வாழ வேண்டுவதுடன் நடுவிகந்தாம் ஆக்கமோ; அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமோ; வெஃகியான் ஆக்கமோ; களவினால் ஆகிய ஆக்கமோ, கொன்றாகும் ஆக்கமோ பழி மலைந்து எய்திய ஆக்கமோ; யாரும் பெற்று விடக்கூடாது எனவும் வேண்டுபவர் திருவள்ளுவர். அனைவரும் திருப்பெற்ற திருவினராய் வாழ வேண்டும். உங்கள் திரு உலகவாம் பேரறிவாளன் திருவாக இருக்க வேண்டுமே அல்லாது கல்லார்கண் பட்ட திருவாக இருந்து விடக்கூடாது எனவும் விரும்புபவர் திருவள்ளுவர். மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு 396, பயவாக் களர் அனையர் கல்லாதவர் 406, கற்றில னாயினும் கேட்க414, எனைத் தானும் நல்லவை கேட்க 416, நன்றின்பால் உய்ப்பது அறிவு 422, மெய்ப் பொருள் காண்பது அறிவு 423, புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் 538, சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து645, கற்றார்முன் கற்ற செலச் சொல்லித் தாம் கற்ற மிக்காருள் மிக்க கொளல் 724, அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக 711, ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் பேதையின் பேதையார் இல் 834, ஏவவும் செய்கலான் தான் தேரான் அவ்வுயிர் போஒம் அளவும் ஓர் நோய் 848. ஆகிய நெறிகளை உள்ளடக்கிய 40. கல்வி, 41. கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 54. பொச்சாவாமை, 65. சொல்வன்மை, 71. குறிப்பறிதல், 72. அவை அறிதல், 73. அவையஞ்சாமை, 84. பேதைமை, 85. புல்லறிவாண்மை ஆகிய 11 அதிகாரங்களும் கல்வி அறிவுப் பொருள் தொடர்பான ஒரு தொகுப்பாகும். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் 466 ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல் 472 அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் 483 அஞ்சாமை அல்லால் துணை வேண்டா, எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் 497 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் 505 இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் 517 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை 594, குடியாண்மையுள் வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும் 609, ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் 620, வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் 622, என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை 652 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் 666 பொருள் கருவி காலம் வினை இடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் . ஆகிய நெறிகளைத் தன்னகத்தே கொண்ட 47. தெரிந்து செயல் வகை, 48. வலி அறிதல், 49. காலம் அறிதல், 50. இடனறிதல் 51. தெரிந்துதெளிதல், 52. தெரிந்து வினையாடல் 60. ஊக்கமுடைமை, 61. மடியின்மை, 62. ஆள்வினையுடைமை, 63. இடுக்கண் அழியாமை, 66. வினைத் தூய்மை, 67. வினைத் திட்பம், 68. வினை செயல்வகை ஆகிய 13 அதிகாரங்களும் செயலாண்மைப் பொருள் உணர்த்தும் ஒரு தொகுதியாகும். ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்து அமைவு இல்லாத நாடு 740. எனை மாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண் 750. அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு 384. இளையர் இனமுறையர்; என்று இகழார், நின்ற ஒளியோடு ஒழுகப் படும் 698. அறன் அறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை 635. வினைசெய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று 584. இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது 690. இறைகாக்கும் வையகம் எல்லாம்; அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் 547. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும் 553. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து 561. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ் வுலகு 578. என்னும் நெறிகளை மையமாகக் கொண்டு இயங்கும் 74. நாடு, 75. அரண், 39. இறை மாட்சி, 70. மன்னரைச் சேர்ந்தொழுகல், 64. அமைச்சு, 59. ஒற்றாடல், 69. தூது, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்த செய்யாமை, 58. கண்ணோட்டம், ஆகிய 11 அதிகாரங்களும் நாடு ஆட்சியாகிய பொருள் பற்றி விளக்கும் ஒரு தொகுதியாகும். பல்லார் பகைகொளலில் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர் கைவிடல் 450. நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை; தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் 460. விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா ஆக்கம் பலவும் தரும் 522. அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின் கண் அல்லல் உழப்பதாம் நட்பு 787. மருவுக மாசற்றார் கேண்மை ஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு 800. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு 809. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு 819. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து 828. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை 891. எனக்கூடி வாழத் தக்காரிடம் கூடிவாழும் கூட்டுப் பொருளை, 45. பெரியாரைப் பிழையாமை, 46. சிற்றினம் சேராமை, 53. சுற்றம் தழால், 79. நட்பு, 80. நட்பு ஆராய்தல், 81. பழைமை, 82. தீ நட்பு, 83. கூடாநட்பு, 90. பெரியாரைப் பிழையாமை ஆகிய ஒன்பது அதிகாரங்களில் விளக்குவதை ஒரு தொகுதியாக நோக்க வேண்டும். கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அதுவே படை 765. பேராண்மை என்ப தறுகண்; ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு 773. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின் 854. கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை 867. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு 874. வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு 882. என்னும் குறட்பாக்கள் பகையும் படையும் பற்றி எடுத்துரைக்கும் 77. படை மாட்சி, 78. படைச் செருக்கு, 86. இகல், 87. பகைமாட்சி, 88. பகைத்திறம் தெரிதல், 89. உட்பகை என்னும் 6 அதிகாரங்களும் ஒரு தொகுதியாகக் கொண்டு ஆராயத்தக்கன. குற்றமே அற்றம் தரூஉம் பகை 434. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் 901. பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யற்று 913. உண்ணற்க கள்ளை 922. வேண்டற்க வென்றிடினும் சூதினை 931. நிற்கும் கழி பேர் இரையாண்கண் நோய் 946. கரும்பு போல் கொல்லப்பயன்படும் கீழ் 1078. எனும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு விலக்கி வாழ வழி காட்டும் 44. குற்றங்கடிதல், 91. பெண்வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள்ளுண்ணாமை, 94. சூது, 95. மருந்து, 108. கயமை ஆகிய 7 அதிகாரங்களும் களைய வேண்டிய ஒரு தொகுதியாகும். அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் 954. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு 1025. சீரினும் சீரல்ல செய்யாரே, சீரோடு பேராண்மை வேண்டு பவர் 962. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல் 975. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் 989. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு 994. ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு 1012. ஆகிய போற்றத்தக்க உயர்பண்புப் பொருள்களாம் 96. குடிமை, 103. குடிசெயல்வகை, 97. மானம், 98. பெருமை. 99. சான்றாண்மை, 100. பண்புடைமை, 102. நாணுடைமை ஆகிய 7 அதிகாரங்களும் ஒரு தொகுதியாகவும் மிளிர்கிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் 1033. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு 760. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று 1008. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது 1041. இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து 1057. இரப்பன் இரப்பாரை எல்லாம், இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று 1067. என்னும் குறள்கள் 104. உழவு, 76. பொருள் செயல் வகை. 101. நன்றியில் செல்வம், 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவச்சம் எனும் 6 அதிகாரங் களிலிருந்து அதிகாரத்திற்கு ஒரு குறளாக எடுக்கப் பட்டனவாகும். இவ் 6 அதிகாரங்களும் பொருட் பாலில் வளமையும் வறுமையும் பற்றி எடுத்து மொழியும் அதிகாரங்களாகும். இவ்வாறு பொருட்பாலில் அமைந்துள்ள 70 அதிகாரங்களையும் கல்வி அறிவுப் பொருள் 11, செயலாண்மைப் பொருள் 13, நாட்டாட்சிப் பொருள் 11, கூடிவாழும் பொருள் 9, பகையும் படையும் 6, களைய வேண்டிய பொருள் 7, போற்றத்தக்க பண்புப் பொருள் 7, வளமையும் வறுமையும் உணர்த்துவன எனப் பகுத்தும் தொகுத்தும் காணலாம். திருக்குறளின் பொருட்பால் வழியாக ஒவ்வொரு மனிதனும் மனிதனாக வாழவும் மதிக்கப்படவும் எவை எல்லாம். தேவையோ அவை எல்லாம் பொருள்கள் எனவும், நாடு நாடாக விளங்கிப் பெருமை பெற வேண்டுவன அனைத்தும் பொருள்களே எனவும் வள்ளுவர் மதிப்பிடுகிறார். பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் ஒரு பொருளாக (பொருட்டாக) மதிக்கத் தக்கவராய் வாழ வேண்டும். அறன் ஈனும்; இன்பமும் ஈனும்; திறனறிந்து தீதின்றி வந்த பொருள் 754. என்னும் குறள் நெறிக்கு ஏற்பப் பொருள் திறனறிந்து தீதின்றிவர வேண்டும்; அதனால் அறமும் இன்பமும் மலர வேண்டும்!. 64. அமைச்சு படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (குறள். 381) என்பது பொருட்பாலின் தொடக்க அதிகாரமாகிய இறை மாட்சியின் முதற் குறளாகும். முடியாட்சிக் காலத்தில் நாட்டை ஆள்வோர் அரசர் எனச் சுட்டப்பட்டார். முடியாட்சி, குடியாட்சி என இருவகை ஆட்சிக்கும் பொருந்துமாறு ஆட்சியாளர் என்னும் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டால், எவ்வாட்சி அமைந்தாலும், எக்காலத்திற்கும் பொருந்தும் பொருள் கொள்ள இயலும். ஆட்சியாளர்களில் எல்லாம் சிறந்த ஆட்சியாளன் யார்? எந்த நாட்டை ஆட்சிபுரிகிறவன் வலிமையான படையையும் தகுதி வாய்ந்த குடிமக்களையும், தேவைக்கேற்ற உணவையும் இடுக்கண் களையும் பண்புடைய நண்பர்களையும், நல்ல பாதுகாப்பையும், நாட்டு நலனையே நாடும் நல்ல அமைச்சர் களையும், சிறப்பாகப் பெற்று யார் நாட்டை ஆள்கிறார்களோ அவர்களே சிறந்த ஆட்சியாளராக விளங்க இயலும். அரசரை ஆட்சியாளர் எனப் பொருள் கொண்டது போல், அமைச்சர் என்ற சொல் இன்று நாடாளும் தலைமை அமைச்சர், அவரோடு இணைந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆளும் அமைச்சர்களையோ மாநில முதலமைச்சர் தலைமையில் இயங்கும் பல்துறை அமைச்சர் அவையினரையும் குறிக்கும் சொல்லாகக் கருதாமல், நாட்டாட்சியில் பெரும் பொறுப்புக் குரியவர்களாக விளங்கும் உயர்மட்ட அரசு அலுவலர்களைக் குறிக்கும் சொல்லாகக் கருதிக் கொள்ள வேண்டும். தலைமைச் செயலாளர், துறைவாரிச் செயலாளர்கள் இயக்குநர்கள் போன்றவர்களாகக் காலத்திற்கு ஏற்றதாகவும், குடியாட்சி முறைமைக்குப் பொருந்துவதாகவும் அமையும். அமை - அமைச்சு - அமைச்சன் அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன். அதாவது ஆள்பவர்கட்குப் பெரும் புகழும், நாட்டுக்கு நலமும், வளமும், பெருகும் வழியில் திட்டம் தீட்டித் தக்க வழியில் செயல்படும் நூலறிவும், நுண்ணறிவும், உலகியல் அறிவும் செய லாண்மையும், சொல்லாண்மையும் நாட்டுப் பற்றும், ஆள்வோர்க்குப் பழிநேராமல் காக்கும் உறுதிப்பாடும் உடையவர்களாய் நாட்டின் உயர்நிலை அலுவலர்கள் அமைய வேண்டும் என விரும்புகிறவர் திருவள்ளுவர். அந்த அடிப்படையில் அமைச்சு குறட்பாக்களை அணுகுவோம். கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு (குறள். 631) பிறர் மிக முயன்றும் செய்வதற்கு அரிய, சிறந்த, இன்றியமையாத செயல்களையும், அச்செயலைச் சிக்கனமாகவும், நேர்த்தியாகவும், குறித்த காலத்திற்குள் செய்து முடிப்பதற்கு ஏற்ற நுண்கருவிகளையும், அதனைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும், அதனைச் செய்ய வேண்டிய முறையினையும், தக்காங்கு எண்ணித் திட்டமிட்டு முறையே செய்யும் அரிய செயல் திறனும் வாய்ந்தவர்களே தகுதியான மேனிலை அரசு அலுவலர்கள் ஆவர். தக்க செயலைத் தக்க கருவி கொண்டு, தக்க காலத்தில் தக்க முறையில் செய்யும் வல்லமை வாய்ந்தவரே சிறந்த செயல் அலுவலர் ஆவார். காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற நூலுற நோக்கி, தெய்வம் நுனித்து அறம்குணித்த மேலோர் சீலமும், புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்து கொண்டு பால்வரும் உறுதியாவும் தலைவற்குப் பயக்கும் நீரார் எனக் கம்பர், இராமயாணம் மந்திரப் படலத்தில் கூறும் அமைச்சர் மாண்பு குறளுக்கு ஏற்ற விளக்கமாகும். ---------------- வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு (குறள். 632) எடுத்த நல்ல செயலைச் செய்யுங்கால் எத்தனை எதிர்ப்பும் இடையூறும் வந்தாலும், அஞ்சாமையும், செய்யும் செயலில் உறுதிப் பாடும், குடி மக்களைச் சீரோடும் சிறப்போடும் காக்கும் பொறுப்பும், தாம் ஏற்றிருக்கும் பொறுப்புக்குத் தேவையான நூல்களைக் கசடறக் கற்ற நிறைந்த கல்வியும், மெய்ப்பொருள் காணும் நுண்மையும், பரந்த உலகியல் அறிவும், ஊழையும் உப்பக்கம் காணும் தளரா முயற்சியும், ஆகிய ஐந்தினையும் சிறப்புறப் பெற்றவனே ஒரு நாட்டரசின் தலைமைச் செயலாளராகப் பொறுப் பேற்றுப் பணி புரிவதற்குத் தகுதியானவர் ஆவார். மேனிலை அலுவலர்க்குச் சிறப்புத் தருவன அஞ்சாமை, குடிகளைக் காத்தல், கல்வி, அறிவு, விடா முயற்சி ஆகிய ஐந்துமாகும். குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம் மடியோம்பும் ஆற்றல் உடைமை - முடியோம்பி நாற்றஞ் சுவைகேள்வி நல்லார் இனஞ்சேர்தல் தேற்றானேல் தேறும் அமைச்சு என்னும் ஏலாதிப்பாடல் பொருந்தி இருக்க வேண்டிய ஐந்துடன் பொருந்தா நான்கையும் இணைத்து உரைப்பதையும் கண்டு கொள்க! ------------- பிரித்தலும் பேணிக் கொளலும், பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு (குறள். 633) ஆளும் தலைமை அமைச்சருக்குத் தக்க துணையாகவும், வழி காட்டியாகவும், நெறிப்படுத்துவோருமாய் விளங்கும் தலைமைச் செயலாளர், தம் நாடு என்றும் வலிமை பொருந்திய நாடாகவே விளங்கக் கடைப்பிடிக்க வேண்டிய சூழ்ச்சித் திறனைத் தெரிவிக்கும் பாடல் இதுவாகும். ஒரு நாடு அயல் நாடுகளுடன் நட்புக் கொள்ளுதல், செய் வதற்கு உரிய ஓர் அரிய செயலாகும். ஏனெனில், போர்ச்செயல் களிலும், ஆக்க வினைகளிலும் தக்க துணைபுரிந்து பாதுகாக்க வல்லது நட்பு நாடுகளே ஆகும் என்பதைச், செயற்கரிய யாவுள நட்பின், அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு? (குறள். 781) என நட்பு அதிகாரத்திலும், குற்ற மற்றவர் நட்பினை அவர் விரும்பும் ஒன்றைக் கொடுத்தும் தழுவிக் கொள்ள வேண்டும். ஆனால், பொருந்தாதார் நட்பினை அவர் விரும்பும் எப்பொருளையும் கொடுத்தாவது விலக்கிக் கொள்வது நல்லது என்பதை, மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு (குறள். 800) என நட்பாராய்தல் அதிகாரத்திலும், தம்மால் செய்ய முடியும் செயலையும் செய்யவிடாமல் கெடுப்பவர் நட்பைச் சொல்லிக் கொள்ளாமலே விலகிப் போவதற்கு வாய்ப்பளிப்பது நல்லதுஎன்பதை, ஒல்லும் கருமம் உடற்று பவர் கேண்மை சொல்லாடார் சோர விடல் (குறள். 818) என தீ நட்பு, அதிகாரத்திலும், செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் அமைந்தவர் நட்பு, நனவில் மட்டுமல்லது கனவில் காணும் போதும் துன்பந்தருவதாகும் என்பதைக், கனவினும் இன்னாது மன்னோ, வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு (குறள். 819) என தீ நட்பு அதிகாரத்திலும், வெளிப்பட நட்பை மிகச் செய்து; உள்ளே நம்மை இகழ் பவரை, நாமும் வெளிப்பட அவர் மகிழுமாறு செய்து, உள்ளத்து நட்பை ஒழிந்து போகும்படி செய்தல் முறைமை என்பதையும் பகையாக இருந்தவர் நட்பினராக வரும் காலம் உண்டாயின், அவர்க்கு முகத்தான் நட்புக் காட்டி, அகத்தான் நட்பை ஒதுக்கி விடுதல் வேண்டும் என்பதையும், மிகச்செய்து தம் எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று (குறள். 829) பகை நட்பாம் காலம் வருங்கால், முகநட்டு அக நட் பொரீஇ விடல் (குறள். 830) எனவும் கூடா நட்பு அதிகாரத்தில், விழிப்புறுத்துபவர் திருவள்ளுவர். என்னும் சிந்தனையுடன் இக்குறட்பாவை நோக்க வேண்டும். நம் நாடு என்றும் எல்லா நிலைகளிலும் வலிமை பொருந்திய நாடாக விளங்குமாறு கண்காணித்துக் கொள்ள வேண்டும். நட்பு நாடுகள் எல்லாம் எப்பொழுதும் நட்புக்குரிய நாடுகளாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. அவற்றுள் எந்த நாட்டுடன் கொண்டுள்ள உறவைத் துண்டித்துக் கொள்வது, நன்மை தரும் என்று கருதினால் உறவை விலக்கிக் கொள்ள வேண்டும். எந்த நாட்டுடன் நட்பை விரிவுபடுத்திக் கொள்வது நல்லதோ அந்நாட்டுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். பகை நாடுகள் வலிமை பெற்று விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றுள் எந்தெந்த நாட்டைப் பிரிக்க முடியுமோ அவற்றையும் செய்ய வேண்டும். நம் நாட்டுடன் முன்பு நட்புடன் விளங்கி, ஏதாவது காரணத்தால் விலகிச் சென்ற நாடு பின் இணைந்து கொள்ள விரும்பினால் இணைத்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்குரிய உத்திகளை எல்லாம் நன்கு அறிந்து, காலம் அறிந்து, செயலாற்றும் வல்லமை பொருந்தியவராய் தலைமை அமைச்சரின் முதன்மைச் செயலாளர் விளங்க வேண்டும் என நாட்டுடன் நாடு கொள்ளும் உறவு நிலையில் சிந்திப்பது ஒரு வகை. ஆட்சி அமைக்க எந்தெந்தக் கட்சிகளைக் கூட்டாகச் சேர்த்துக் கொள்ளலாம். எந்தக் கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சேர்ந்தவர்களில் விலக்கத் தக்க கட்சியை விலக்கல்; எதிர்க் கட்சிகள் வலிமை பெற்றுவிடாமல் அவர்களுக்குள் பிரிவை உருவாக்கல். நம்மிடமிருந்து பிறிந்து சென்றவர் களில் தக்கவர்களை இணைத்து என்றும் வலிமை குன்றிவிடாமல் இருக்கத் தக்கதைச் செய்யும் வல்லமை பொருந்தியவரே முதன்மைச் செயலாளர் ஆவார். பிரிக்க வேண்டியவர்களைப் பிரிக்கவும் தெரியவேண்டும். தக்கவர்கள் பிரிந்து சென்றுவிடாமல் பேணவும் தெரிய வேண்டும்! பிரிந்தவர் விரும்பி மீண்டும் வந்தால் சேர்த்துக் கொள்ளவும் வல்லமை வேண்டும். ------------ தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு (குறள். 634) எந்தச் செயலையும் செய்யத் தொடங்கும் முன்பே நன்றாக ஆராயும் வல்லமையும், செய்யத்தக்க செயல் என்று தோன்றினால் அச்செயல் வெற்றிகரமாக நிறைவேறும் வகையில் திட்டமிட்டுச் செயலாற்றும் வல்லமையும், ஆட்சியாளர்க்கு இச்செயலைச் செய்யலாமா, செய்யக் கூடாதா என உள்ளத்தில் குழப்பம் ஏற்படுமானால், நன்கு சிந்தித்து இரண்டில் ஒன்றை முடிவு செய்து காரணகாரிய விளக்கத்துடன் ஆட்சியாளர் விளங்கிக் கொள்ளுமாறு தெளிவாகவும், துணிவுடனும் எடுத்துச் சொல்லும் வல்லமையும் மன்னர், ஆட்சியில் அமைச்சருக்கும் குடியாட்சியில் முதன்மைச் செயலாளருக்கும் அமைந்திருக்க வேண்டும். தக்கதைத் தேர்ந்தெடுத்தல்; ஆராய்ந்து செய்தல், உறுதியாகச் சொல்லல் மூன்றிலும் வல்லவரே அமைச்சர் ஆவார். தன்னிலையும் தாழாத்தொழில் நிலையும் துப்பெதிர்ந்தார் இன்னிலையும் ஈடிலியல் நிலையும் துன்னி அளந்தறிந்து செய்வான் அரசன், அமைச்சன்யாதும் பிளந்தறியும் பேராற்ற லன் என்னும் சிறு பஞ்சமூலப் பாடற் கருத்தும் ஒப்பு நோக்கத் தக்கதாம். செறிந்தவர் தெளிந்த நூலால் சிறந்தன தெரிந்து கூறி அறிந்தவை ஆற்ற கிற்கும் அமைதியான் அமைச்சன் எனக் கூறுவது சூளாமணி. செம்மையின் திறம்பல் செல்லாத் தேற்றத்தார்; தெரியும் காலம் மும்மையின் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார் என்னும் கம்பன் கருத்தும் வள்ளுவ விளக்கமே! ---------- அறநெறியை அறிந்து தெளிந்த அறிவினை உடையவர் நட்பினைப் பெறுகின்ற முறையறிந்து ராய்ந்து கொள்ளுதல் வேண்டும் என்பதை, அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் (குறள். 441) எனப் பெரியாரைத் துணைக் கோடல் அதிகாரத்தில் குறிப் பிடும் பெரியார் போன்றவரே, ஆள்வோர் கண்ணாக விளங்கும் அமைச்சர் பெருமக்கள் என்பதை உணர்த்தும் குறட்பாவே, அறனறிந் தான்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை (குறள். 635) நாட்டாட்சிப் பாரத்தைத் தம் தலையில் சுமந்து இயங்கும் ஆட்சியாளர் நாட்டு நலன் கருதிச் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளைத் தாமே திட்டமிட்டுச் செயல்படுத்துவது முறைமை அன்று. தகுதிவாய்ந்த பெருமக்களிடம் ஒத்த உரிமையுடன் மனம் விட்டுப் பேசி, கலந்து நிறைகுறைகளை நன்கு ஆராய்ந்தே திட்டமிடல் வேண்டும். ஆட்சியாளரே கலந்து முடிவு செய்வதற்குத் தக்க துணையாக அமைய வேண்டியவர் எத்தகையவராய் இருக்க வேண்டும்? அறம் சிறப்பும் செல்வமும் ஆக்கமும், இன்பமும் புகழும் தரும்! அது அழுக்காறு, பேராசை, பெருஞ்சினம், இன்னாச் சொல் ஆகிய மாசுகளை நீக்கும். அத்தகைய அறநெறிகளை நூலறிவாலும் பட்டறிவாலும், உலகியல் அறிவாலும் நுண்ணறிவாலும் தெளிவாக அறிந்த அறிவுடைமையும், சொல்ல வேண்டிய கருத்தைப் பெரும் பயனும், கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்த் திறனறிந்தும், சோர்விலாதும், அஞ்சாதும், நிரந்து இனிது சொல்லும் வல்லமை உடையவனாகவும், ஆராய்ந்து திட்டமிட்ட நலப் பணிகளைக் காலத்தாழ்வின்றி, தடைக்குத் தயங்காது, எதிர்ப்புக்கு அஞ்சாது நல்லோர் பாராட்டுமாறு செய்து சாதனை படைக்கும் செயல் வீரனாகவும் விளங்குபவனே. ஆட்சியாளர் சம தகுதி வழங்கிக் கலந்து முடிவெடுக்கத் தக்க துணைவராய் அமைவது ஆட்சியாளர்க்கு மட்டுமல்லது நாட்டிற்கும் நல்லதாகும். அறமும் அமைந்த சொல்லும் செயல் திறனும் உடையவனே தெளிவுக்குத் துணையாவான். அறிவு தீமையில் இருந்து நன்றின் பால் உய்க்கும்; எவர் சொல்லிலும் மெய்ப் பொருள் காணும்; அற்றம் காக்கும் கருவி, உலகத்தோடு ஒட்ட ஒழுகுவது; ஆவதை அறியும்; வரக் கூடிய தீமையை முன்னரே அறிந்து காக்கும்; அஞ்சுவ அஞ்சும்; பிறர்வாய் நுண்பொருள் காணும்; ஆகவே, திருவள்ளுவர் அறிவுடையார் எல்லாம் உடையார் எனப் போற்றினார். கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்பது, புறத்திலிருந்து பெற்றது, இது நூலறிவு எனப்படும். ஒவ்வொருவருக்கும் மரபு வழியாலும் சூழ்நிலையாலும் இயற்கையாய் அமைந்துள்ள கூர்த்த அறிவு, அது நுண்ணறிவு என்றும் உண்மை அறிவு என்றும் கூறப்படும் அறிவு. ஒன்று பெற்ற அறிவு; பிறிதொன்று உற்ற அறிவு; இரண்டையும் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்த வாலறிவினர் நாட்டில் தோன்றும் எத்துறை சார்ந்த எப்படிப்பட்ட, சிக்கலானவர்களால் உருவாக்கப்பட்ட சிக்கல்களிலும் உள்ள சிக்கலை நீக்கிச் சீர் செய்து விடுவர். நூலறிவும், நுண்ணறிவும் உடையவர்களால் அறிய முடியாததோ? தீர்க்க முடியாததோ! முடிவு காண முடியாததோ? வெற்றி காண முடியாத வினைகளோ? எவையும் இருக்க முடியாது. வெறும் நூலறிவு ஏட்டுச் சுரைக்காய் ஆகும். நுண்ணறிவு நிலத்தில் காய்த்த சுரைக் காய் ஆகும். நூலறிவும் நுண்ணறிவும் இணைந்ததே உண்பதற்கு ஏற்றவாறு சமைத்துப் பக்குவப்படுத்திய தொடுகறி ஆகும். நூலறிவு பெறு! நுண்ணறிவுடன் சிந்தித்துச் செயல்படுக! எனும் கருத்தை விளக்க வந்த குறளே! மதிநுட்பம் நூலோ குடையார்க் கதிநுட்பம் யாவுள முன்நிற் பவை (குறள். 636) என்பதாகும். ஒன்று நன் றெனஉணர்; ஒருவன் கொள்ளுமேல் அன்றதென்று ஒருவனுக்கு அறிவு தோன்றுமால் நின்றதொன்று உண்டுகேள், நீதி நூலினோடு ஒன்றிநின்று அவரொடும் உணர்க ஒட்டியே என்ற சூளாமணிப் பாடல் ஒப்புநோக்கத் தக்கதாம். ----------- உயர்ந்த பெருமக்கள் வாழ்ந்து காட்டிய ஒழுக்க நெறியைப் பின்பற்றி வாழக் கற்றுக் கொள்ளாதவர்கள், வேறு பல் துறை நூல்களைக் கற்றவர் எனில்; கற்றவர் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அறிவுடையவர் ஆகார் என்பதை, உலகத்தோ டொட்ட ஒழுகல்; பல கற்றும் கல்லார் அறிவிலா தார் (குறள். 140) என ஒழுக்கமுடைமை அதிகாரத்திலும், உலகத்தில் உயர்ந்தோர் எவ்வாறு உயர்ந்த நோக்குடன் வாழ்கிறார்களோ, அத்தகைய வாழ்வியல் நெறியைக் கைக் கொண்டு வாழ்வதே அறிவுடைமை ஆகும் என்பதை எவ்வ துறைவ துலகம், உலகத்தோ டவ்வ துறைவ தறிவு (குறள். 426) என அறிவுடைமையிலும் எடுத்து மொழிந்த நெறியின் தொடர்ச்சியாக மொழியும் குறளே, செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல் (குறள். 637) என்பதாகும். தமிழ் நாட்டில் நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் பகுதியில் பல நூறு கோடி செலவு செய்து தொடங்கப்பட்டுள்ள அணூமின் ஆலை நூலறிவும் நுண்ணறிவும் வாய்ந்த அறிஞர் பெருமக்களின் வழிகாட்டுத லோடுதான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியப் பேரரசும், உருசியா பேரரசும் இணைந்து உருவாக்கிய உயர்ந்த ஆலைதான். ஆனால், அம்மண்ணில் வாழும் மக்களோ தங்கள் உடைமையை அழிக்கவும், உயிரை எடுக்கவும் தோன்றிய எமனாகவும் கருதி உயிருக்கும் அஞ்சாது எதிர்த்துப் போராடுகிறார்கள். செயல்திறன் வாய்ந்த பொறியியல் அறிஞர்களின் அறிவும் அறிவியல் அறிஞர்களின் அறிவும் வெற்றிபெற இயலாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறதே ஏன்? ஆட்சியாளர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது மக்கள் ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளை நம்ப வேண்டும். அல்லது அறிஞர்கள் திட்டத்தின் நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து தீமையை விட நன்மையே மிகுதி. தீமையால் இழப்போ துன்பமோ நேராத வகையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இழப்பு என்று வந்தால் ஆலைக்குள் இருக்கும் எங்களுக்கு வந்தாலும் வெளியில் உள்ள மக்களுக்கு எத்தகைய கேடும்வராது. எதிர் காலத்தில் இந்தப் பகுதி மிகப்பெரிய மேம்பாடு அடையப் போகிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்து பகுதி மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றிருக்க வேண்டும். நூல் அறிவு சிறந்த பேரறிவுதான்; நுண்ணறிவும் அரிய அறிவுதான்; இவ்விரண்டையும் விட மிக உயர்ந்த அறிவு, பயன்பாட்டு அறிவு உலகியல் அறிவு, உலகியல் அறிவு இல்லாமல் வினைக் களத்தில் வெற்றி பெற இயலாது. நூலறிவு கதிரோளி போன்றது என்றும் நுண்ணறிவு மழை நீர் போன்றது என்றும் வைத்துக் கொண்டால் நிலமாகிய உலகியல் அறிவு இல்லையேல் என்செய்ய இயலும். எந்த ஒரு திட்டமும் இடத்தோடும் பொருந்த வேண்டும் காலத்தோடும் பொருந்த வேண்டும் அதை விட அக்கால மக்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். செயலாற்றும் முறைமையை நூலறிவு மூலமாகவும் நுண்ணறிவு வழியாகும் எவ்வளவுதான் அறிந்து கொண்டாலும் போதாது. அத்துடன் திட்டத்தின் பயனாளிகளாக விளங்கும் உலகத்தின் உயர்ந்த மக்களின் இயல்பை அல்லது கருத்தை அறிந்து செயலாற்றினால் தான். திட்டத்தால் பயன் கிட்டும்! திட்டமும் வளரும்! வெற்றி பெறும். மண்ணறிவு இல்லா விண் அறிவு பயன் படாது. ஆகவே உலக இயல்பறிந்து வினை செய்க! நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எல்லாம் தேர்ந்த அறிஞர்களாகவும், அறிஞர்களின் அறிவுரை கேட்டே நடப்பார்கள் எனவும் எதிர்பார்க்க இயலாது. மறுதலையானவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமரும் சூழலும், சில நாடுகளுக்குச் சில காலங்களில் ஏற்படலாம். எதனையும் கற்கவும் இல்லை, அறிவை வளர்த்துக் கொள்ளவும் இல்லை. ஆனால் தன்னைப் பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு, உண்மையான அறிஞர்களை மதிக்காமல் அவர்கள் கூறும் நல்ல அறிவுரையும் கேளாமல்! எனக்கு எல்லாம் தெரியும், எவனும் எனக்கு அறிவுரை கூறத் தேவை இல்லை என எண்ணும் பேதைமை உடையவர்களாய் ஆட்சியாளர் இருப்பினும் நாட்டுக்கும் ஆட்சிக்கும் புகழும் பெருமையும் தருவனவற்றைத் தக்க காலம் தெரிந்து எடுத்துக் கூறி நெறிப்படுத்துவது ஆட்சிப் பொறுப்பில் அவர்க்கு மிக அண்மையில் உள்ள அமைச்சர் அல்லது அவர் நிலையில் அமர்ந்துள்ள உயர் அலுவலரின் கடமையாகும். ஆட்சியாளர் நல்லது செய்யும் போது தலையாட்டலாம். அல்லது செய்யும் போது தலையைக் குலுக்கி விட வேண்டும். தானும் அறியான், பிறர் சொன்னாலும் உணரான் எனினும் ஆட்சியாளனுக்கு எடுத்துக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும். தம்முயிர்க்கு இறுதி எண்ணார் தலைமகன் வெகுண்டபோதும் வெம்மையைத் தாங்கி, நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் கதம்கொள் சீற்றத்தை ஆற்றுவான், இனியன கழறி பதம் கொள் பாகனும் மந்திரிஒத்தனன் பன்னூல் விதங்களால், அவன் மெல்லென மெல்லென விளம்பும் இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது ஓர்யானை என யானைப் பாகனை உவமையாகக் கொண்டு கம்பர் கூறும் விளக்கம் குறட் கருத்திற்கு வலிமை சேர்க்கிறது. உலப்பில் உலகத்து உறுதியை நோக்கிக் குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல் மலைத் தழுது உண்ணாக் குழவியைத் தாயர் அலைத்துப்பால் பெய்து விடல் என்னும் பழமொழிப்பாடல் அமைச்சன் தாய் போன்றவன் எனக் கூறுவது மிகச்சிறப்பு. நிழலில் உள்ள நீர் குடிக்கச் சுவை உடையதாக இருந்து உடலுக்கு நோய் செய்யுமாயின் அது தீயதேயாம். அது போல் உறவினர் இனிமையாகப் பேசிப் பழகித் தீமை செய்வாராயின் தீயவரே ஆவர். வாள் ஒரு போர்க் கருவி என்பதை எல்லாரும் அறிவர். அதுபோல் பகைவர்கள் எதிரிகள் நம்முடன் நேருக்கு நேர் நின்று போர் செய்யக் கூடியவர்கள்; அவர்கள் எட்டி இருப்பவர்கள்; அவர்கள் வருவதும் போவதும் நமக்குத் தெரியும். அவர்களிடம் போரிட நேரும்போது துணிந்து போரிடலாம். வெற்றி பெறலாம். அவர்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், உறவினர்போல் அன்பு காட்டி மிக நெருக்கமாகப் பழகிக் கொண்டு இருப்பவர் உண்மையில் உறவினர் அல்லர்; பின், அவர் யார்? பகைவர் என்றால் மிக அஞ்ச வேண்டும். ஏனெனில் இவர்கள் கூடவே இருந்து நம்மைக் கொன்று புதைக்கக் குழி தோண்டுபவர்கள். நம்முடன் நெருங்கி இருப்பவர்கள் நல்லவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், நம் நலம் நாடுபவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் தீயவர்களாகவும் நமக்குக் கேடு நினைப்பவர்களாகவும் இருந்தால் அவர்கள் நினைப்பதை நினைத்த படி முடிப்பது அவர்கட்கு எளிதாகும். ஆகவே, திருவள்ளுவர், பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் (குறள். 639) என்கிறார். எண்ணிக்கை கற்பனை ஆக இருக்கலாம். ஆனால் எண்ணம் கற்பனை அன்று. பக்கத்தில் இருந்து ஆட்சியாளர்க்குத் தீயவழி காட்டும் அமைச்சன் எழுபது கோடிப் பகைவர்க்கு இணையானவன். எழுபது கோடிப் பகைவரால் விளையும் தீமையைக் காட்டிலும், மிகுந்த தீமையைப் பக்கத்திலிருந்து கேடு நினைக்கும் அமைச்சர் போன்றவர்கள் மிக எளிதில் செய்து விடுவார்கள். இவர்கள் தூங்கும் போது கழுத்தறுப்பவர்கள். நம்பிக்கைத் துரோகிகள். உண்ட வீட்டிற்கே தீ வைப்பவர்கள். பருகத் தரும் பாலிலே நஞ்சு கலந்து தருபவர்கள். நல்லது செய்வது போல் நம்ப வைத்துக் கேடு புரிபவர்கள். ஆகவே, அவர்கள் நினைக்கும் கேட்டை எதிர்ப்பின்றி எளிதாக நிறைவேற்றி விடுவார்கள். இவர்கள் கட்டுச் சோற்றுக்குள் வைத்துக் கட்டப்பட்ட பெருச்சாளிகள்! வணங்கும் கைக்குள்ளும் கத்தியை மறைத்து வைத் திருப்போர். கடிக்கும் வல்லரவும் கேட்கும் மந்திரம், களிக்கின் றோயை அடுக்கும் ஈதுஅடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவுகாட்டி இடிக்குநர் இல்லை; உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை முடிக்குநர்; என்ற போது முடிவு அன்றி முடிவது உண்டோ? எனச் சீதை இராவணனுக்குக் கூறிய நயவுரையைக் கம்பன், குறள் விளக்கமாய் அமைத்துள்ளதைக் காண முடிகிறது. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர் (குறள். 640) எடுத்துக் கொண்ட செயல்களை வெற்றிகரமாக முடித்தற் குரிய திறமை இல்லாதவர்கள், அவற்றைச் செய்யும் முறைகளை நன்கு ஆராய்ந்து தக்கவாறு திட்டமிட்டு அமைத்துக் கொண்டா லும் அவை முற்றுப் பெறா வண்ணமே அவற்றைச் செய்தொழிவர். நன்கு சிந்தித்துப் பார்க்கும் அறிவு மட்டும் இருந்தால் பயனில்லை. அறிவு வளத்திற்கு ஏற்பச் செயல் திறனும் இருக்க வேண்டும். செயல் திறன் அற்ற சிந்தனையாளர் எச் செயலையும் செய்து முடிக்க மாட்டார். செய்யும் திறமையே திறமை -------------- தக்க செயலைத் தக்க கருவி கொண்டு தக்ககாலத்தில் தக்க முறையில் செய்ய வல்லவனே சிறந்த அமைச்சன் கல்வி அறிவுடன் குடிகாக்கும் உறுதியும் முயற்சியும் அமைந்தவனே அமைச்சன் பகைவரைப் பிரித்தல் நண்பரைப் பேணல், தக்கவரை இணைக்க வல்லவனே அமைச்சன் தக்கதை தேர்ந்தெடுத்தலும், தெளிவாகச் செய்தலும் உறுதியாகச் சொல்ல வல்லவனே அமைச்சன் அறநெஞ்சும், அமைந்த சொல்லும், செயல் திறனும் உடையவன் தெளிவுக்குத் துணை புரிவான். நூலறிவுடன் நுண்ணறிவும் உடையவன் சிக்கல் நீக்கும் சீராளன் ஆவான். நூல்பல கல்! உலக இயல்பறிந்து செய் ஆட்சியாளன் அறியாதவனாகவும் உணராதவனாகவும் இருந்தாலும் அறிய உணர்த்துவது அமைச்சர்கடன் பழுதெண்ணும் மந்திரியே பெரும் பகைவன் செயல் திறன் அற்றவர் சிந்தனை உருப்படாது. -------------- 65. சொல்வன்மை சொல், பொருள் உணர்த்தும் கருவி; மாந்தர்தம் நெஞ்ச ஊர்தி; உலகத்தை நெருக்கி வைக்க வல்ல இயக்கி. சொல் என்பது மாந்தர்தம் குறிப்பு உணர்த்துவதற்கும், தேவை நிறைவேற்றத்திற்கும், தம்பட்டறிவால், இயற்கையின் துணைக் கொண்டு படைக்கப்பட்ட செய்நேர்த்தி உடையது. சொல்லின் ஆற்றல் பெரிது ஆவதும் சொல்லால்; அழிவதும் சொல்லால் என்பது பழமொழி. சொல் ஆக்கத்திற்கே அன்றி அழிவுக்கும் ஆதலுண்டு என்பதே அதற்குக் கூற்று என்றொரு பெயரைத் தந்தது. கூறுபடுத்துவது, அழிப்பது, கூற்றெனப்படுதல் அறியத் தக்கது. சொல் எதுவும் பொருள் அற்றதில்லை என்பது தொல்காப்பியர் தெளிவு. அதனால் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். அப்பொருள் பார்த்த அளவில் புலப்படல் உண்டு. ஆழ்ந்து பார்த்து அதன்பின் கண்டு கொள்ளத் தக்கனவும் உண்டு என்பதால், மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்றார். மணி இல்லாத நெல்லை நெல் என்பது வழக்கில்லை. பதர், பதடி என்பனவே வழக்கு. நெல்லில் மணி பிடித்தலைப் பலன் பிடித்தல் என்பர். ஆடு, மாடு கருக்கொள்ளுதல் பலப்படுதல் எனப்படும். மக்கள் வாழ்வில் கொள்ளும் பயன், மற்றை உயிரிகளின் வாழ்வில் பலன் எனப்படுகின்றது. பலன் இல்லா நெல்லும், பயன் இல்லாச் சொல்லும் ஒத்தவை என்பதால் சொல் என்பதற்கு நெல் என ஒரு பொருள் உண்டா யிற்று. நெல் தரும் உணவு சோறு என்றும் சொன்றி என்றும் வழக்கில் ஆயது. பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல் (குறள். 196) என்னும் வள்ளுவ உவமை எண்ணின் உண்மை விளக்கமாம். சொல்லுதலைச் சொல்லுதல் என்று மட்டும் சொல்லாமல், பேசுதல் என்றும் கூறுதல் என்றும், சாற்றுதல் என்றும் மொழிதல் என்றும் என்னுதல் என்றும் கிளத்தல் என்றும் பன்னுதல் என்றும் நுவலுதல் என்றும் உரைத்தல் என்றும் நவிலுதல் என்றும் பகர்தல் என்றும் நொடித்தல் என்றும் செப்புதல் என்றும் அறைதல் என்றும் மாறுதல் என்றும் விள்ளுதல் என்றும் விளம்புதல் என்றும் புகலுதல் என்றும் இசைத்தல் என்றும் கழறுதல் என்றும் இயம்புதல் என்றும் கரைதல் என்றும் சொல்லுதல் உண்டு எனினும் பாவாணர் அவர்கள். ஒருவனிடம் பொதுவாக ஒன்றைத் தெரிவித்தல் - சொல்லுதல் எனவும் ஒருமொழியைக் கையாளுதல் - பேசுதல் எனவும் ஒன்றைக் கூறுபடுத்தி அல்லது வகைப்படுத்திச் சொல்லுதல் - கூறுதல் எனவும், முக்கியமான செய்தியைப் பொதுமக்கட்கு அறிவித்தல் - சாற்றுதல் எனவும், ஒவ்வொரு சொல்லையும் தெளிவாய்ச் சொல்லுதலே - மொழிதல் எனவும் ஒருவன் கூற்றைத் தெரிவித்தல் - என்னுதல் எனவும், ஒரு பொருளைக் குறிப்பிட்டுச் சொல்லுதலே - கிளத்தல் எனவும், பலபொருள்களுள் ஒவ்வொன்றையும் தனித்தனியே குறித்துச் சொல்லுதலே - பன்னுதல் எனவும், நூற்பொருளை நுணுக்கமாகச் சொல்லுதலே - நுவலுதல் என்றும், நூலுக்கு உரை கூறுதல் அல்லது ஒன்றை விளக்கிச் சொல்லுதல் - உரைத்தல் எனவும், ஒரு சொல்லை அல்லது சொற்றொடரைப் பல காலும் ஓதிப் பயிலுதல் - நவிலுதல் எனவும், ஒரு பொருளின் விலையைச் சொல்லுதல் - பகர்தல் எனவும், கதை அல்லது வரலாறு சொல்லுதல் - நொடித்தல் எனவும் ஒரு வினாவிற்கு விடை சொல்லுதல் - செப்புதல் எனவும், ஒன்றை உரக்க அல்லது வலியுறச் சொல்லுதல் - அறைதல் எனவும், உரையாட்டில் மாறிமாறிச் சொல்லுதல் - மாறுதல் எனவும் ஒன்றை வெளியிட்டுச் சொல்லுதல் - விள்ளுதல் எனவும், ஒன்றைப் பலர்க்கு அறிவித்தல் - விளம்புதல் எனவும், ஒன்றை விரும்பிச் சொல்லுதல் - புகலுதல் எனவும் ஒன்றைக் கோவைபட அல்லது ஒழுங்குபடச் சொல்லுதலே - இசைத்தல் எனவும் கடிந்து சொல்லுதலே - கழறுதல் எனவும் இன்னிசையுடன் சொல்லுதல் - இயம்புதல் எனவும், அழுது கொண்டு அல்லது இரங்கிச் சொல்லுதலே - கரைதல் எனவும் முன்னையோர் சொல்லி வந்தனர். அவ்வாறு சொல்லுதலே மரபு போற்றுதலாகும் எனச் சொல்லும் நுட்பம் நினைந்து நினைந்து போற்றத் தக்கதாகும். சொல்லுபவர்கட்கும் கேட்பவர்கட்கும் இனிமை தரும் சொற்களையே சொல்லுதல் வேண்டும் எனவும் இனிமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் கூடாது என்பதை இனியவை கூறல் அதிகாரத்திலும், நாவைக்கட்டாயம் காக்க வேண்டும்; மறந்தும் தீமை தரும் சொல்லைச் சொல்லுதல் கூடாது; தீய சொல் மாறாத தழும்பாக நிலைத்துவிடும் என்பதை அடக்கமுடைமையிலும், சொல்லிற் பயனுடைய சொற் களையே சொல்லுக! பயனற்ற சொற்களைச் சொல்லாது விடுக எனப் பயனில சொல்லாமை அதிகாரத்திலும், தீமை தராத சொற்களையே சொல்லுதல் வேண்டும், மனம் அறியப் பொய் கூறாதே என்பதை வாய்மை அதிகாரத்திலும் அறத்துப் பாலில் சொல்லிய வள்ளுவர் பொருட் பாலில் முதற்கண் சொல் பற்றிச் சொல்லும் அதிகாரமே சொல்வன்மை ஆகும். தான் கருதிய வினை முடியும் ஆற்றால் அமைச்சியல் நடத்தற்கு ஏதுவாய சொற்களைச் சொல்லவல்லனாதல். மேல் ஒரு தலையாச் சொல்லலும் வல்லது 634 என்றதனையே சிறப்புப் பற்றி உரைக்கின்றமை யின் இஃது அமைச்சின் பின் வைக்கப்பட்டது என்பது பரிமேலழகரின் குறிப்புரையாகும். எண்ணிய எண்ணம் முற்றுப் பெறுமாறு சொற்களைத் திறம்படச் சொல்லும் ஆற்றல் என்கிறார் தமிழ்க் கா. சு. பிறர் உள்ளங்களைக் கவரும் வகையில் பேசும் தன்மை என்கிறார் மயிலை சிவமுத்து. பிறர் உளங் கொள்ளுமாறு சொல்லும் திறமை என்பது வாழ்வியல் உரை சொல்வன்மைக்குத் தரும் பொருளாகும். சொல்ல வேண்டிய செய்திகளைக் கேட்பவர் நிலை உணர்ந்து, கேட்பவர் மனத்தில் பதியும் வண்ணம் சொல்ல வேண்டிய முறையில் சொல்லி அறிவூட்டலும், நெறிப்படுத்துவதும், செயல் ஊக்கம் கொள்ளு மாறும் சொல்லும் ஆற்றலே சொல்வன்மை ஆகும். நாநலம் என்னும் நலனுடைமை; அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று (குறள். 641) என்னும் சொல்வன்மை முதற்குறள் நலம் தரும் நல்ல குறள். இதனை ஒத்த குறள் ஒன்றைச் சான்றாண்மை அதிகாரத்தில் காணலாம். அஃது, குணநலம் சான்றோர் நலனே, பிற நலம் எந்நலத் துள்ளதூஉம் அன்று (குறள். 982) சான்றோர் சிறப்பு என்று சொல்லப்படுவது பண்புச் சிறப்பே ஆகும். அப்பண்புச் சிறப்பு, பிற சிறப்புகளாகிய எந்தச் சிறப்பு களிலும் உள்ளடங்காத உயர்வினதாகும். திருக்குறளில் எழில் நலம், இன நலம், குண நலம், துணை நலம், தந்நலம், மன நலம், மிக நலம், மதிநலம், பிற நலம் சான்றோர் நலம், வினைநலம் ஆகிய நலங்களைக் காண வாய்ப்பது போல் இங்கே நாநலத்தைக் காண்கிறோம். அதிகாரத் தலைப்புக்கு ஏற்பச் சொல் நலம் எனக் கூறாது. சொல்லை ஒலிக்க அடிப்படையாய் அமையும் நாக்கு என்னும் நாவே சொல்லும் சொல்லை உணர்த்துகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம் பொறிகளில் வாய் உயர் பொறியாக மதிக்கப்படுகிறது. ஏனெனில் வாயிலிருந்து வெளிவரும் மொழியே ஏனைய உயிரிகளிலிருந்து மனிதனை மேலானவனாக ஆக்குகிறது. ஆகவே, நாவை வெறும் உறுப்பாக மட்டும் கருதி விட முடியாது. மனிதனிடம் புதைந்து கிடக்கும் செல்வங்கள் எவை எவை என்பதை வெளியே காட்டும் கண்ணாடியே நாக்குத் தான். ஆகவே தான், உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்கிறார் பாரதியார். சொல்வன்மை என்று சொல்லப்படும் நலம். ஓர் உயர்ந்த உடைமை யாகும். அந்நாநலம் வேறு எந்த நலங்களோடும் இணைந்த நலம் அன்று. அஃது தனித் தன்மை வாய்ந்த நலமாகும். இந்து சமயத்தின் தனிச்சிறப்பையும் விவேகானந்தரின் போறிவுத் திறத்தையும் ஆழம் காண இயலா ஆழ் கடல் அன்ன பேருள்ளத்தையும் உலகம் உணர்ந்து கொள்ள வைத்தது. சிகாகோ சமய மாநாட்டில் அவர் பேசிய சில மணித்துளிப் பொழிவு தான். ஒவ்வொரு சொல்லும் அறிவுச் செல்வமாய் வெளிவந்தது. உலக அறிஞர்கள்கேட்டு வியந்ததுடன், போட்டி போட்டு அச்செல்வத்தை அள்ளிக் கொண்டனர். அதுபோல் ஆபிரகாம் லிங்கன் கெட்டீசு பர்க்கில் ஆற்றிய உரைதான் அவரை அமெரிக்கக் குடியரசுத் தலைவராகவும் உலகம் போற்றும் உயர்ந்த சான்றோராகவும் ஆக்கிக் காட்டியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி; செயல் வீரர் சத்திய மூர்த்தி, வைக்கம் வீரர் பெரியார் ஈ. வெ.ரா; நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகிய ஐவரும் மிகச் சிறந்த விடுதலைப் போராட்டப் பேச்சாளர்கள். இப்பெருமக்கள் பேசுகின்ற கூட்டங்களில் பல்லாயிரக் கணக்காய் மக்கள் கூடிவிடுவார்கள். நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் சீர்திருத்த உணர்வையும் தங்கள் நாவன்மையால் மக்கள் மனங்களில் பக்குவமாக விதைத்த வித்தவர்கள் இப்பெருந்தகை யாளர்கள். மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும் உகிர் வனப்பும் காதின் வனப்பும் - செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற் கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு என்னும் சிறு பஞ்ச மூலப் பாடல் சிறந்த மேற் கோளாகும்! நாவன்மை நல்ல உடைமையாகும்! அஃது தனித் தன்மை வாய்ந்த உடைமையாகும். ------------ ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள். 642) நல்ல சொல்லால் நன்மை உண்டாகும்; தீய சொல்லால் தீமை உண்டாகும். ஆக்கமும் கேடும் சொல்லால் வருவனவாக இருப்பதால், பேசும் பொழுதில் சொற்களைப் பயன்படுத்துவதில் மிக விழிப்பாக இருக்க வேண்டும். சோர்ந்திருந்து தீய சொற்களைக் கவனக் குறைவால் கையாண்டு, கேட்டுக்கு இடந்தந்துவிடல் கூடாது. சொல்லால் ஆக்கமும் வரும் கேடும் வரும். ஆகவே, ஆக்கம் தருமாறு சொல்லுக! சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே என்னும் இனியவை நாற்பதின் கருத்தும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். சொற்சோர்பு உடைமையின் எச்சோர்பும் அறிப என முதுமொழிக் காஞ்சியின் கூற்றும் சொற் சோர்வு படேல் என ஆத்தி சூடியும் சொல்லின்கண் சோர்வு நேராது மொழிய வேண்டுகிறது. ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும் போக்கப் படுக்கும் புலை நரகத்து உய்விக்கும் காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும் நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே என வளையாபதி கூறுவதையும், திருவள்ளுவரே அடக்கமுடைமை அதிகாரத்தில், யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (குறள். 127) ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும் (குறள். 128) தீயினால் சுட்டபுண் உள்ஆறும்; ஆறாதே நாவினால் சுட்ட வடு (குறள். 129) எனக் கூறியுள்ளதையும் இணைத்துச் சிந்தித்து சொல்லால் கேடு நேராமல் காத்தோம்ப வேண்டும். ------------- கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் (குறள். 643) இக்குறளில் இடம் பெறும் கேட்டார், கேளார் என்னும் எதிர்மறைப் பொருள் உணர்த்தும் சொற்கள் வழக்கில் பயன்படுத்தும் எல்லாரும் விளங்கிக் கொள்ளக் கூடிய எளிய சொற்களாகவே நமக்குத் தெரிகிறது. ஆனால் அறிஞர்கட்கு அரிய சொல்லாகப் புலப்படுகிறது. ஆகவே, கேட்டார் என்னும் சொல்லுக்கு நண்பர், வினவினார் கேள்வியுடையார், சொல்லக் கேட்டவர்; தாம் கற்றதோடு குரவரை வழிபட்டுக் கேட்ட சான்றோர் சுற்றத்தார் என்றவாறெல்லாம் பொருள் கொண்டனர். கேளார் என்னும் சொல்லுக்குப் பகைவர் வினவாதார் கேள்வியறி வில்லார்; சொல்லக் கேளார் பல நூல்களைப் படித்துப் பொருட்பயனை ஆசிரியனை வழிபட்டுக் கேளாதவர்களாய்ப் புவியிடைத் திரியும் புல்லறிவாளர், அயலார், எனவும் பொருள் கொண்டனர். பேசும் போது கேட்டுக் கொண்டிருப்பவர்கள், கவனம் வேறுபக்கம் திரும்பி விடாதவாறு, தம் சொல் வன்மையால் அவர்களின் முழுக் கவனத்தையும் ஈர்த்துக் கவரக் கூடிய தன்மை வாய்ந்ததாகவும், அன்று கேட்கும் வாய்ப்பினைப் பெறாதவர்களும், அதற்காக வருந்தி அடுத்துக் கிடைக்கும் வாய்ப்பினை விரும்பி எதிர்பார்க்குமாறு பேசும் பேச்சினையே அறிஞர்கள் சொல்வன்மை எனச் சொல்வார்கள் எனவும் பொருள் கொள்ளலாம். பத்துப் பாட்டுத் தொடர் பொழிவினை ஓர் அறிஞர் நிகழ்த்துகிறார் முதல் நாள் பொழிவினைக் கேட்டவர் தொடர் பொழிவு நிறைவுறும் வரைத் தொடர்ந்து கேட்கும் வாய்ப்பினை இழந்து விடக் கூடாது. ஒரு பொழிவு கேட்கவில்லை என்றால் கூட அது தமக்குப் பேரிழப்பு ஆகிவிடும் எனக் கேட்டவர் எண்ணுமாறு பொருளாலும், சொல்லும் பாங்காலும் ஈர்க்கும் தன்மை வாய்ந்த தாய்ப் பொழிவு அமைய வேண்டும். முதல் நாள் கேட்கும் வாய்ப்பு பெறாதவர்கள், கேட்டவர்கள் வழிக் கேட்டறிந்து இனி இவ்வாய்ப்பினை இழந்துவிடக் கூடாது என எண்ணி மிக விரும்பிக் கேட்கும் வேட்கையைத் தூண்டுமாறும் பேசுவதே சொல்வன்மை அமைந்த பேச்சாகும் எனவும் மொழியலாம். சொல்லுங்கால் சொல்லின் பயன்காணும் தான்பிறர் சொல்லிய சொல்லைவெலச் சொல்லும், பல்லார் பழித்த சொல் தீண்டாமல் சொல்லும், விழுத்தக்க கேட்டார்க்கு இனியவாச் சொல்வானேல், பூங்குழலாய் நல்வயல் ஊரன் நறுஞ்சாந்து அணியகலம் புல்லினின் ஊடல் இனிது என்னும் தகடூர் யாத்திரைப் பாடல் தக்க இலக்கியச் சான்றாகும். சுருக்கி, மெய் விளக்கி, இனிமையும் பயனும் தொகுத்து, அயலார்மொழி கிடையாத் திருக்கிளர் மொழியைச் சோர்வற, அவைக்கண் செல்லுமாறு அஞ்சுதல் இன்றி, உரைக்கவல் லவரே, அமைச்சர்கள் ஆவர் உறுமுறை பிறழ்தரப் பலவாய் விரிக்கவல் லவரும், கற்றது விளங்க விரிக்க மாட்டாரும் மெல்லியரே என்னும் விநாயக புராணப் பாடல் உடன் பாடாக விளக்கம் தருவதுடன் எதிர் மறையாகவும் விளக்கம் தருகிறது. சமயப் பொழிவில் ஆறுமுக நாவலர், இலக்கியப் பொழிவில் நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார். சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப் பிள்ளை போன்ற பெருமக்கள் இக்குறளுக்கு எடுத்துக் காட்டாய் அமைந்த சொல்வன்மையர். பேரறிஞர் அண்ணா பழையதும் புதியதும் நிலையும் நினைப்பும் நாடும் ஏடும் நல்ல தீர்ப்பு ஆற்றங்கரை யோரம் என்று தலைப்புக் கொடுத்து மிகுதியும் பேசியவர். ஒலிபெருக்கி முன் நின்றபின் தலைப்புக் கொடுப்பார்கள். அப்படியும் பேசி வேண்டியவர்களை மட்டுமல்லாது வேண்டாதவர் களையும் ஈர்த்தவர். அவர் பேச்சைக் காசு கொடுத்துச் சீட்டு வாங்கிக் கேட்டனர் என்பது வரலாற்றுச் சான்றாகும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு எங்கிருந்தாலும் வாழ்க மறப்போம் மன்னிப்போம் வாழ்க வசவாளர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு சட்டம் ஓர் இருட்டறை மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்னும் மணிமொழிகள் அண்ணாவின் சொல்வன்மையால் தமிழக மக்களின் இதயத்தில் ஆழப்பதிந்தவை ஆகும். தீரர் சத்திய மூர்த்தி, புதுக் கோட்டை மன்னர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது. ஆங்கிலப் பேச்சுப்போட்டி ஒன்று நிகழ்ந்தது. அதற்கு ஆர்தர் மேக் என்னும் ஆங்கிலேயர் நடுவராக வீற்றிருந்தார். சத்திய மூர்த்தி அழகொளிரும் ஆங்கில நடையில் தங்குதடையின்றிப் பொருட் செறிவுடன் கொடுத்த நேரத்தைவிட ஐந்து மணித்துளி கூடுதலாகப் பேசிவிட்டு அமர்ந்தார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து குறிப்பிட்ட நேரம் கடந்து எப்படிப் பேசலாம் எனக் கேள்வி எழுப்பினார். உடனே சத்திய மூர்த்தி, அறிவிப்பு மணி அடித்துத் தெரிவித்திருந்தால் குறித்த நேரத்தில் முடித்திருப்பேன். நேரம் இருக்கும் என்னும் நினைவில் பேசிவிட்டேன். தவறு எனில், போட்டியிலிருந்து என்னை விலக்கி விட்டு, மற்ற நண்பர்களின் சிறந்த பேச்சுக்குப் பரிசு கொடுக்கலாம் எனக் கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கி விட்டார் சத்திய மூர்த்தி. அடுத்து அங்கு நடுவராய் அமர்ந்திருந்த ஆர்தர் மேக் கூறினார். தவறு என்னுடையது ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட என்னை மாணவர் சத்திய மூர்த்தியின் பேச்சு மயக்கி விட்டது. அந்த மயக்கத்தில் அறிவிப்புச் செய்ய மறந்து விட்டேன். ஆகவே, என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். பரிசு யாருக்கென நீங்களே கூறுங்கள். அதன்படி முடிவு செய்யலாம் என வருந்திக் கூறினார் அந்த நடுவர். அவையிலிருந்த அனைவரும் ஒன்று போல் சத்திய மூர்த்தி பெயரையே முன் மொழிந்தனர். அவர்களின் கருத்தை ஆர்தர் மேக் வழி மொழிந்து, பரிசைச் சத்திய மூர்த்திக்கு வழங்கினார் என்னும் வரலாற்று நிகழ்வு குறளுக்கு நல்ல எடுத்துக் காட்டாகும். ------------ சிறுமையற்ற இனிய சொல் கூறும் போது மட்டும் அல்லாது எப்பொழுதும் இன்பம் தருவதுடன், முகமும் முகமும் மலரப் பார்த்து மன நிறைவுடன் சொல்லும் இனிய சொல் அறமும் ஆகும். ஆகவே நல்லவற்றை விரும்பி, இனிய சொற்களைச் சொன்னால் தீயவை அழிந்து அறம் பெருகும். சொல்வதானால் பயனுடைய சொற்களையே சொல்லுதல் வேண்டும். எவ்வுயிர்க்கும் யாதொரு தீமையும் உண்டாகாத சொற்களையே சொல்லுதல் வேண்டும். எந்நிலையிலும் வாய்மையே மொழிபவன் தானம், தவம் செய்பவர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாக விளங்குவான். வாய்மை புகழும் தரும், அறமும் தரும். தக்கவற்றைக் கேட்டறிதல் செல்வங்களில் முதன்மையான செல்வம் என்றால். தக்கவற்றைத் தக்கவர்க்குத் தக்க முறையில் சொல்லுவதும் முதன்மையான செல்வ மாகத்தானே இருக்க முடியும். எவ்வளவு சிறிய அளவினது ஆயினும் நல்லவற்றைக் கேட்டால் அக்கேள்வி அறிவும் மிகப்பெரிய நன்மை தரும் என்பது உண்மையானால், எனைத்தானும் நல்லவை சொல்வதும் அனைத்தானும் ஆன்ற பெருமை தரத்தானே செய்யும். அவை அறிந்து ஆராய்ந்து சொல்ல வேண்டியன வற்றைச் சொல்லுதல் வேண்டும் என்னும் தெளிவான நோக்குடையவர் திருவள்ளுவர் என்பதை நாம் எப்பொழுதும் நினை வில் இறுத்தல் வேண்டும். ஒவ்வொருவரும் எங்கும் எப்பொழுதும் சொல்ல வேண்டியதைத் தான் சொல்ல விரும்ப வேண்டும். தேவையற்றதைச் சொல்லிக் காலத்தை வீணாக்கவும் கூடாது. தகுதியைக் குறைத்துக் கொள்ளவும் கூடாது. சொல்ல விரும்பும் பொருளின் தன்மையையும் கேட்பவரின் கேட்கும் திறனையும், தன்னுடைய உண்மையான திறனையும் நன்றாக ஆராய்ந்து இடம் பொருள் உணர்ந்து, ஏற்ற சூழ்நிலையில் தகுந்த சொற்களால் சொல்ல வேண்டும். ஏனெனில், அறத்தை இம்மண்ணில் நிலைபெறச் செய்வதற்கும் அடைய விரும்பும் பொருளை அடைவதற்கும் அந்தச் சொல்வன் மையைக் காட்டிலும் சிறந்தது ஒன்று இவ்வுலகில் இல்லை. சொல்லின் ஆற்றலை உணர்ந்து சொல்! அதுவே அறம்; அதுவே பொருள். சொல் வெறும் ஒலி அன்று சொல் வெறும் எழுத்துக் கூட்டு அன்று. சொல் - அறம்; சொல் - பொருள் என்பதை உணர்ந்து சொல்லைப் பேச வேண்டும். ------------ சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல், அச்சொல்லை வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து (குறள். 645) தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லக் கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்கு உணர்ந்து, தெளிந்து தகுதியும், பொருத்தமும், பயனும் தெளிவும் உடைய சொற்களையே சொல்லுதல் வேண்டும். திருவள்ளுவர் தாம் கூறிய இலக்கணத்திற்கு ஏற்பவே ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களையும் சொல்லியுள்ளார். ஒவ்வொரு சொல்லும் தேர்ந்தெடுத்த மணியான சொற்களாகும். இப்பரந்துபட்ட உலகில் ஈராயிரம் ஆண்டுகளாக அதற்கு இணையாகச் சொல்லத்தக்க நூல் ஒன்று கூடத் தோன்றவில்லை வள்ளுவர் என்றும் வெற்றிப் பெருமிதத்துடன் நின்று நிலைபெறும் சொற்களையே பயன்படுத்தி யுள்ளமையைக் கற்றுணர்ந்து வியப் படைகிறோம். (எடுத்துக்காட்டு) வசையொழிய வாழ்வாரே வாழ்வார்; இசையொழிய வாழ்வாரே வாழா தவர் (குறள். 240) யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (குறள். 300) அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர் (குறள். 997) தொல்காப்பியரும் பிறிதோர் சொல் தம்சொல்லை வெல்லும் சொல் இன்றிப் படைத்த பேரறிஞர் ஆவார். (எ. கா) ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே, இரண்டு அறிவதுவே அதனொடு நாவே, மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே, நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்னும் உயிர்ப் பாகுபாட்டு நூற்பாவையும், மாற்றரும் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்று ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே எனும் மரபியல் இளமைப் பெயர் நூற்பாவையும் காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்னும் கற்பியலில் தவம் உணர்த்தும் நூற்பாவையும் சான்றாகக் கொள்வோம். கணியன் பூங்குன்றனார் சொல்லிய யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்னும் சொல்லை வெல்லும் சொல்லை உலகம் கண்டதில்லை. ஆற்றுதல் என்பதொன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல் என நல்லந்துவனார் நெய்தற் கலியில் மொழிந்த சொற்களை வெல்லும் சொல் காண்பது அரிது. என்வீர இளைஞர்களே அன்பு, நேர்மை, பொறுமை இவை மூன்றும் இருந்தால் போதும். ஒரே நியதி எல்லாச் சுயநலமும் மரணமே. பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பது சாவு. என் குழந்தைகளே உணர்ச்சி கொள்ளுங்கள். உணர்ச்சி கொள்ளுங்கள், ஏழைகளுக்காக, பாமரர்களுக் காக, ஒதுக்கப்பட்டவர்களுக்காக உணர்ச்சி கொள்ளுங்கள். வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். இந்தியாவை உயர்த்த வேண்டும். கல்வியைப் பரப்ப வேண்டும். புரோகிதத்துவத்தின் கொடுமைகளை அகற்ற வேண்டும். இவற்றைச் சாதிக்க உன்னில் ஊக்கத் தீ பற்றட்டும். பிறகு, அதை எல்லா இடங்களிலும் பரப்பு. வழிநடத்திச் செல்லும்போது பணியாளா கவே இரு. ஒரு நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்காதே. எல்லையற்ற பொறுமையுடன் இரு. உனக்கு வெற்றி நிச்சயம்! 1894ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் நியூயார்க் நகரிலிருந்து, சென்னையில் இருந்த தனது தொண்டர் அளசிங்கப் பெருமாளுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதத்தில் இருக்கும் இந்த அறிவுரைகளைக் காட்டிலும் இளைஞர்களுக்கு நான் பெரிதாகச் சொல்ல ஏதும் இல்லை என்று நீதியரசர் சந்துரு கூறுகிறார் என்றால் என்ன பொருள். விவேகானந்தர் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் வெற்றிச் சொற்கள் என்பது தானே காரணம். தெனாலிராமனின் மைத்துனன் ஏதோ பெரிய குற்றம் ஒன்றைப் புரிந்து விட்டார். செய்தி அறிந்த மன்னன் கடுங்கோபம் கொண்டு மரண தண்டனை விதிக்க எண்ணினான். அது தொடர்பாக தெனாலிராமன் மன்னனைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுத் தண்டனையைக் குறைக்கச் சொல்லலாம் என எண்ணிச் சந்தித்தார். அவர் தன் மைத்துனனுக்காகப் பரிந்து பேசத்தான் வந்துள்ளார் என எண்ணிய மன்னன், தெனாலி ராமனை நோக்கி, இந்த வழக்கில் உங்கள் பரிந்துரையை ஏற்க மாட்டேன். நீங்கள் சொல்வதற்கு மறுதலையாகவே செய்வேன் என்றான். சற்று சிந்தித்த தெனாலிராமன் மன்னரை நோக்கி மன்னா அவனை மன்னிக்கக் கூடாது அவனுக்கு மரண தண்டனைதான் வழங்க வேண்டும் என்பதைக் கூறத்தான் வந்தேன் என்றான். மன்னன் மறுதலையாகத் தான் செய்வேன் என்று கூறிவிட்டதால் மரண தண்டனை விதிக்க வாய்ப்பில்லாது போயிற்று. தெனாலி இராமனின் சொல்வன்மை மைத்துனன் உயிரைக் காத்தது. மன்னன் முல்லாவை அழைத்தான். உம்மை எல்லாரும் பெரிய அறிவாளி எனப் பாராட்டுகிறார்கள். நான் உம்மைச் சோதனை செய்யப் போகிறேன். நீர் சொல்வது உண்மையாக இருக்குமானால் உம்தலை வெட்டப்படும். பொய்யாக இருந்தால் உம்மைத் தூக்கில் போட்டு விடுவேன் என்றான். கூடியிருந்தோர் கலங்கினர். ஆனால் முல்லா அஞ்சாது அரசே! நீர் என்னைத் தூக்கில் போடப் போகிறீர் என்றான். மன்னனால் எந்தத் தண்டனையும் வழங்க முடியவில்லை. முல்லா நீர் பெரிய அறிவாளிதான் என்பது எனப் பாராட்டினான். தாம் சொல்வனவற்றை எளிமையாகவும் தெளிவாகவும் பொருள் விளங்குமாறும் கேட்பவர் மனத்தில் ஆழமாகப் பதியு மாறும் சொல்லத் தெரிவதுடன் பிறர் சொல்லும் எத்தகைய நுண்பொருளையும் தான் எளிதாகப் புரிந்து கொள்ளும் திறனுடைமைமே அறிவுடைமையாகும் என்பதை, எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு (குறள். 424) என அறிவுடைமையில் வழங்கிய கருத்தை ஒட்டிப் படைத்த குறட்பாவே, வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் (குறள். 646) இக்குறட்பாவில் திருவள்ளுவர் மாட்சி மாசற்றார் கோள் என்னும் மிக உயர்ந்த சொற்களைக் கையாண்டுள்ளார். மாசிலன் ஆதலே அறம் என்று அறுதியிட்டவர் திருவள்ளுவர், சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள் (குறள். 311) கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் (குறள். 312) எந்நிலையிலும் பிறர்க்கு இன்னா செய்யாமை குற்றமற்ற பெரியோர் கொள்கை எனத் தெளிவுபடுத்திய திருவள்ளுவர் மனைமாட்சியையும் வினைமாட்சியையும் போற்றிய திருவள்ளுவர் மாட்சியின் மாசற்றார் கொள்கை விளக்கும் அருமைக் குறள் இதுவாகும். தாம் பிறர்க்கு எதனைச் சொல்லுகிறோமோ அதனைத் தெளிவாகவும் இனியதாகவும் கேட்பவர்கட்கு ஆர்வத்தை மேலும் உண்டாக்குவதாகவும், சொல்லுபவர் நோக்கம் நிறைவேறுவதாகவும், கேட்பவர்க்கு என்றும் பயன் அளிப்பதாகவும் அமையுமாறு சொல்லவும் வேண்டும். பிறர் சொல்லும் சொற்களைக் கேட்கும் போது அதில் காணப்படும் எழுத்துப் பிழை, ஒலிப்பிழை, சொற்பிழை இலக்கணப் பிழை, பொருட் பிழை. இவற்றையே துருவித் துருவி ஆராய்ந்து குற்றம் காண்பதை விடுத்து, சொல்லுகிறவர் நோக்கத்தை மட்டும் புரிந்து, அதில் அமைந்துள்ள உட்பொருளை உள்ளவாறு அறிந்து கொள்ளுவது குற்றமற்ற உயர்ந்த பண்பமைந்த பெரியோர்கள் விரும்பிப் போற்றும் கொள்கையாகும். பிறர் விரும்புமாறு சொல், பிறர் சொல்லும் சொல்லின் பயனை உணர்ந்து கேள்! தாம் சொல்லும் சொல்லைப் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும் சொல்லின் பயனை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளுதல் குற்றமற்ற உயர்ந்தோர் கொள்கையாகும். கேட்பாரை நாடிக் கிளக்கப்படும் பொருட் கண் வேட்கை அறிந்துரைப்பர் வித்தகர் என்னும் பழமொழி அரைக்குறளுக்கு அமைந்த விளக்கமாம். -------------- சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது (குறள். 647) சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய முறைப்படி சொல்லுவதில் வல்லமை உடையவனாகவும், சொற் சோர்வோ மனச் சோர்வோ, உடற் சோர்வோ இல்லாதவனாகவும், பகைவர்க்கோ அவைக்கோ அஞ்சாதவ னாகவும் இருக்கும் ஒருவனோடு போட்டி போட்டு வெல்லுதல் எவர்க்கும் அரிது. சோர்வும் அச்சமும் இல்லாச் சொல்வல்லமையாளனை யாரும் வெல்ல இயலாது. விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பேச்சுக்கு ஆங்கில அரசு அஞ்சியது. சிவாவின் மேடைப் பேச்சை ஒரு நாளும், செய்தித்தாள்கள் பேச்சு எனக் குறிப்பிட்டதில்லை. வீர முழுக்கம் என்றே குறிப்பிட்டன. தமிழுரையில் பெருநாவலராகத் திகழ்ந்தார். தமிழால் உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யலாமென நம்பினார் சிவா. அக்காலத்தில் சிவா வருகிறார் சிவா உரையாற்றுகிறார் என்றால், மக்கள் பல்லாயிரக் கணக்கில் கூடி, அப்பெருமகனாரின் வீர உரையைச் செவிமடுக்க விரும்பினர். 1921ஆம் ஆண்டில் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கிய காலத்தில் மதுரை மாவட்டத்தில் முதன் முதலாகச் சிறை சென்றவர் சுப்பிரமணிய சிவாதான். மாவட்ட அளவில் மட்டுமின்றி, தமிழ் நாட்டளவில், அப்பெருந்தகையின் மேடைப் பேச்சே, சட்டத்தை மீர வேண்டுமென்ற துணிவை மக்களிடையே உருவாக்கியதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டி, வழக்குத் தொடுத்து, சிவாவிற்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கியது என்னும் சுப்பிரமணிய சிவாவின் வரலாறு எடுத்துக்காட்டான வரலாறு ஆகும். அரசியலில் மிகுந்த செல்வாக்குடைய ஓர் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்களும் கலந்து கொண்டார். அமைச்சர் உரையாற்றிய போது, தமிழாசிரியர்களைக் குறை கூறினார். தமிழாசிரியர்களுக்கு, க, கா என்னும் இரண்டிற்கும் மேல் ஒன்றும் தெரியாது. க என்பது கடவுள்; கா என்பது காதல் கூடியிருந்தோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அமைச்சருக்குப் பின் சொற்பொழிவாற்றிய பண்டிதமணி, தமிழாசிரியர்களுக்கு க, கா என்ற இரண்டிற்கு மேல் ஒன்றும் தெரியாது என அமைச்சர் கூறுவது உண்மைதான். ஆமாம், கடவுளுக்கும் காதலுக்கும் மேலாக எப்பொருள் உள்ளது என்பதை அன்பு கூர்ந்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன் எனக் கூறி அமைச்சரை நோக்கினார். அமைச்சர் புன்னகை பூத்தவாறே அமர்ந்திருந்தார். பண்டிதமணி தம் பேச்சைத் தொடர்ந்தார். அமைச்சர் என்ன? எவராலும் கடவுளுக்கும் காதலுக்கும் மேலாக ஒரு பொருள் உண்டென அறிந்து சொல்ல முடியாது. இவை இரண்டையும் விஞ்சி, ஒரு பொருள் உண்டென ஆங்கிலம் படித்தவர்களும், அரசியல் வல்லுநர்களும் அறிந்து சொல்ல முடியாது தான். இத்தகைய அறியாதார் கூட்டத்தில், இங்கே வீற்றிருக்கும் அமைச் சரும் ஒருவர் எனப் பண்டிதமணி பேசிய பேச்சு குறட்பாவிற்கு ஏற்ற எடுத்துக் காட்டாகும். ----------- விரைந்து தொழில்கேட்கும் ஞாலம், நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (குறள். 648) மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் என வள்ளலார் மொழிந்தது போல் கேட்பவரோடு வேறுபாடு இல்லாமல் கலந்து, சொல்வதை ஒழுங்குபடக் கோத்து இனிமையாகச் சொல்லும் வல்லவர்கள் செய்யச் சொல்லும் தொழிலை உலக மக்கள் விரைந்து செய்து முடிப்பர். முறையாகவும் இனிமையாகவும் நாம் சொன்னால் உலகம் விரைந்து நம் சொற்படி நடக்கும். காந்தியடிகள், பண்டித சவகர்லால் நேரு, விவேகானந்தர், அறிஞர் அண்ணா போன்ற பெருமக்கள் அறிஞர்களாய் விளங்கியதுடன் மக்களோடு இரண்டறக் கலந்து மக்கள் நலனில் மிக்க ஈடுபாடு கொண்டு, சொன்ன கருத்துகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்டதுடன் அன்னாரின் முறையான இனிய வேண்டுகோளை அவர்கள் விரும்பியவாறு நிறைவேற்றிக் காட்டினார்கள். இராமாயணத்தில் இராவணனின் இளவல் வீடணன் இராமனிடம் அடைக்கலம் அடைய வருகிறான். இராமன் வீடணனை அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளலாமா என நண்பர்களுடன் ஆராய்ந்தான் சுக்கிரீவன், சாம்பன், தானை நாயகன் நீலன் மற்றைய மந்திரக் கிழவர் கருத்துகளை எல்லாம் கேட்டும் முடிவுக்கு வராமல் அனுமனைக் குறிப்பான் வினவினான். அனுமனின் பேருரையே இராமனை ஏற்றுக் கொள்ள வைத்தது. அனுமனின் சொல்வன்மைக்குச் சான்றாய் அமைந்துள்ள ஒரு பகுதியைக் காண்போம். ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின் கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்து ஒவ்வாதோ? கொற்ற வேந்தே! பகைப் புலத்தோர் துணை அல்லர் என்று இவனைப் பற்றோமேல், அறிஞர் பார்க்கின் நகைப் புலத்ததாம் அன்றே; நல் தாயம் உளதாய பற்றால் மிக்க நகைப் புலத்தோர், தந்தையர்கள், தம்பியர்கள் தமையர், இவர்தாமே அன்றோ மிகைப் புலத்து விளைகின்றது ஒரு பொருளைக் காதலிக்கின் விளிஞர் ஆவர் ஆதலால், இவன் வரவு நல்வரவே, என உணர்ந்தேன் அடியேன் என்றான் அனுமன். மாருதி அமுத வார்த்தை செவிமடுத்து, இனிதுமாந்தி பேர் அறிவாள நன்று நன்று என்றான் இராமபிரான். ஆர்த்தசபை நூற்றொருவர்; ஆயிரத் தொன்றாம் புலவர் வார்த்தை பதினா யிரத் தொருவர் - பூத்தமலர்த் தண்டா மரைத்திருவே! தாதாகோ டிக்கொருவர் உண்டாயின் உண்டென் றறு என்னும் ஔவையாரின் தனிப்பாடல் நூறுபேரில் ஒருவர் தாம் தக்க அவையில் இருப்பதற்கு உரியவராவார் எனவும் ஆயிரம் பேரில் ஒருவர்தாம் கல்வியறிவு உடையவராய் இருப்பர் எனவும் அவருள்ளும் தக்க மொழியைத் தக்க இடத்தில் சொல்லும் வல்லமை பெற்றவர் பதினாயிரம் பேரில் ஒருவரே ஆவர் எனவும் விளம்புவதை உணர்ந்தால் நிரந்தினிது சொல்லும் வல்லமையின் வல்லமையை வள்ளுவர் கூறிய நுட்பம் புரியும். நிரந்தினிது சொல்லும் வல்லார் தொகை பெருகட்டும்! விரைந்து தொழில் கேட்கும் உலகம் மலரட்டும்! பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சில சொல்லல் தேற்றா தவர் (குறள். 649) மணிக் கணக்காகப் பலவகை ஆற்றல் தோன்ற விரிவாகப் பேசுவதே பேச்சுத் திறமை என நிணைப்பது தவறு. உலகத்தில் மிகப் பெரிய செயல் செய்தவர்கள் எல்லாரும் பெரும் பேச்சாளர் அல்லர். பெரும் பேச்சு வேறு சொல்வன்மை வேறு. பயனற்ற பெரும் பேச்சு வீண்முயற்சியே தவிர, நன்மை சிறிதும் விளைவிக்காது. ஆகவே, குற்றமற்ற சில சொற்களைச் சொல்லிப் பயன் பெறும் வழியைத் தெளிய வேண்டும். இந்தத் தெளிவு இல்லாதவர்களே பல சொற்களைச் சொல்ல விரும்புவார்கள். சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும். தந்தைப் பெரியாரிடம் பொது நலத்தையும் தந்நலத்தையும் விளக்கிச் சொல்லுமாறு ஒருவர் கேட்கிறார். பெரியார் விடை மழை பெய்வது பொதுநலம் நாம் குடை பிடிப்பது தந்நலம் என்றார். இதுவே பல சொல்லக் காமுறாத மன்ற மாசற்ற சில சொல்லல் தேற்றியவர் என்பதற்குச் சான்றாகும். சில்லெழுத்தினானே பொருள் அடங்கக் காலத்தால் சொல்லுக செவ்வி அறிந்து என்னும் ஆசாரக்கோவை அடிகளும் குறள் விளக்கமே. சொல் என்னும் முட்கோலைக் கொண்டு சினந்து எழுதுவதை விரும்புவார்; செம்மையாகக் கற்றறிந்து நடக்கும் திறமையைத் தாம் தெளியார்; தாம் கற்றவற்றைப் பிறர் ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லும் வகை அறியார்; தாம் கூறுவன பிறரால் மறுக்கப்பட்டுத் தோற்பதையும் அறியார்; இவ்வாறு தகவிலராகப் பல உரைக்கும் மாந்தர் உலகில் பலர் என்னும் கருத்தில், சொல்தாறு கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர் கற்று ஆற்றல் வன்மையும் தாம் தேறார் - கற்ற செலவுரைக்கும் ஆறு அறியார், தோற்பது அறியார் பல வுரைக்கும் மாந்தர் பலர் என நாலடியார் கூறும் பாடலும் ஒப்பு நோக்கத் தக்கதாம்! சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே சொல்வன்மை ஆகும்! நிறையச் சொல்ல விரும்புவதைவிட குற்றமற்ற சொல் குறைவாகச் சொல்வதே மேலானது. இணரூழ்த்தும் நாறா மலரனையர், கற்ற துணர விரித்துரையா தார். (குறள். 650) மலர் அழகு தருவதுடன் மணக்க வேண்டும். மணக்கா மலர் பயன் அற்றது ஆகும். தனிமலரல்ல கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் காணப்படும் மலரில் மணமே இல்லை என்றால், பூத்து என்ன பயன்? ஒன்றுமில்லை. மானிடப் பிறப்பு அறிவுப் பிறப்பு, நாளும் அறிவை வளர்க்க வாழ்நாள் முழுமையும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய பிறப்பு. ஆகவே, மாந்தனின் முதற் கடமை கல்வி கற்றல் ஆகும். கல்லாதார் விலங்கு போன்றவர், பயன்படாக் களர் நிலம் போன்றவர், மண் பொம்மை போன்றவர், கண் என்னும் பெயரால் புண்ணுடையவர் எனக் கூறும் திருவள்ளுவர். கல்வியை கேடு இல்லாத உயர்ந்த செல்வம், கல்வி எழுமையும் ஏமாப்புத் தரும்; கற்றவர்க்கு எந்த நாடும் தம் நாடாம் எந்த ஊரும் தம் ஊராம். கற்றவரே கண் உடையவர் ஆகவே, கற்க வேண்டியதைக் குற்றமறக் கற்க வேண்டும்; கற்று அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் எனத் தூண்டியவர் திருவள்ளுவர். அத்துடன் அமையாது கற்ற நூல் காட்டும் நன்னெறிப்படி வாழ வேண்டும் என வேண்டுவதுடன் தாம் பெற்ற கல்விச் செல்வத்தைத் தன்னுடைய தனிஉடைமையாகக் கருதிக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு வரும் தாம் கற்க கல்வியை மற்றவர்கட்குக் கற்பிக்க வேண்டும். தாம் கற்றவற்றில் நல்லவற்றை எல்லாம் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எங்கெங்கே யார்யாருக்குக் கூற முடியுமா அவர்கட்குக் கூறுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். நாம் உணர்ந்ததை உணர்ந்தவாறும், கேட்பவர் உணர்ந்து கொள்ளுமாறும் உரைக்க வேண்டும். அவ்வாறு உரைக்கத் தவறுபவர்கள்; உரைக்க இயலாதவர்கள்; அதிலும் கேட்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளுமாறு உரைக்கத் தகுதியில்லாதவர், தகுதியற்ற மனிதரே! அவரே மலர்ந்து விரிந்தாலும் மணம் பரப்பாத மலரைப் போன்றவர் என்கிறார் திருவள்ளுவர். நாம் கற்றவற்றைப் பிறர் உணர்ந்து கொள்ளுமாறு விரித்துரைக்க வேண்டும். மணக்கும் நறுமலர் போல் அறிவு மணம் பரப்ப வேண்டும். எத்துணைய ஆயினும் கல்வி இடம் அறிந்து உய்த்துணவு இல்லெனின் இல்லாகும் - உய்த்துணர்ந்தும் சொல்வன்மை இன்றெனின் என்னாம்; அஃதுண்டேல் பொன்மலர் நாற்றம் உடைத்து என்னும் நீதிநெறி விளக்கப்பாடல் ஒத்ததொரு நெறி விளக்கும் பாடலாகும். நா நலம் நல்லதொரு நலனுடைமை ஆகும் நாவால் வழங்கும் செல்வம் மிக உயர்ந்த செல்வம் சொல்லால் ஆக்கமும் வரலாம்; கேடும் வரலாம் கேடு வராமல் கவனத்துடன் சொல்லுக! கேட்டார் பிணிக்கும் தகையவாய்ப் பேசுக கேளாரும் கேட்க விரும்புமாறு பேசுக சொல்லைத் திறனறிந்து சொல்ல வேண்டும் திறனறி சொல் சிறந்த அறம் பொருள் தரும் சிறந்த வெற்றி தரும் சொற்களையே சொல்க பிறர் விரும்புமாறு சொல்ல வேண்டும் பிறர் சொல்லும் சொல்லின் பயனை உணர வேண்டும் வேட்பச் சொல்லலும் பயன்பெறக் கேட்டலும் குற்றமற்ற உயர்ந்தோர் கொள்கையாகும் சொல்வல்லவனாய் இரு! சோர்விலாது சொல்! அஞ்சாது சொல்! சோர்விலாத, அஞ்சாத, சொல்லாளனை வெல்லல் அரிது நிரந்து இனிது சொல்லும் வல்லவனாய் இரு வல்லான் சொல்வழி உலகம் செயற்படும் நிறையச் சொல்ல ஆசைப் படாதீர் குற்ற மற்ற சொற்களையே சொல் கற்றதை உணர விரித்துரைப்போம் நறுமணமலராய் மணம் பரப்புவோம்! நாம் நாறா மலரல்லோம்! நாறும் மலராவோம் ---------- 66. வினைத் தூய்மை செயல் வேண்டும் - எண்ணிச் செயல் வேண்டும் - எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும்; செய்தக்க செய்ய வேண்டும் அல்ல செய்யாமை வேண்டும். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல் வேண்டும். காலம் கருதி இடத்தால் செயின் ஞாலம் கருதினும் கைகூடும். எஞ்சாமை எண்ணி இடத்தால் செய்தால் அஞ்சாமை அல்லால் துணை வேண்டா. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல். இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆராய்ந்து அதனை அவனிடத்து விடுதல் வேண்டும். உடையர் எனப்படுவது ஊக்கம். அசைவிலா ஊக்கம் உடைவனிடம் செல்வம் தானே வழி கேட்டு வந்து சேரும். குடி என்பது அணையா விளக்கு. மடியிலா முயற்சியாளன் நினைத்தால் உலகையே அடைவான். முயற்சி திருவினை ஆக்கும். இடுக்கண் வருங்கால் நகுக. வெள்ளத் தனைய இடும்பையும் அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக்கெடும் என்பன திருவள்ளுவரின் வினைக் கோட்பாடு. அவை அனைத்தினும் மேம்பட்டதும் அவை அனைத்திற்கும் மேன்மையைத் தரவல்ல கோட்பாடாக அமைக்கப்பட்ட அதிகாரமே வினைத் தூய்மை ஆகும். மனத் தூய்மையை அடிப்படையாகக் கொண்டதே திருக்குறள் நெறி. மனத்தின்கண் மாசு இல்லையானால், உடல், உடை, உறைவிடம் தூய்மையாக இருக்கும். காற்று, நீர், நிலம், ஊர், தெரு, சாலை, கல்விச் சாலை, தொழிற்சாலை முதலிய அனைத்தும் தூய்மையாக இருக்கும். மனிதன் மனத் தூய்மை உடையவன் ஆனால், மொழியும் தூய்மை பெறும், செயலும் தூய்மை பெறும். வினைத் தூய்மை என்பது மனத்தூய்மையுடன் செய்யப்படும் எவ்வினையும் தூய வினைதான். யார்க்கும் துன்பமோ தீமையோ தாராத வினைகள் எல்லாம் தூய வினைகளே! நல்ல எண்ணத்துடன் நல்வழியில் செய்யப்படும் நற்செயல்கள் அனைத்தும் தூய வினைகளே! வினையும் தூயதாய் இருக்க வேண்டும் வினை செய்யும் வழி முறையும் தூயதாய் இருக்க வேண்டும். குறிக்கோளும் அதை அடைவதற்கான நெறியும் வெவ்வேறு அன்று. நெறி என்பது வெறும் வழிமுறைதானே என்று சிலர் கூறுவர். நெறிதான் அனைத்தும் என்று நான் சொல்வேன் குறிக்கோளையும்,நெறியையும் பிரிக்கக் கூடிய சுவர் எதுவும் இல்லை. நெறியை ஓரளவு உறுதி செய்து கொள்ளும் உரிமையைத் தான் கடவுள் நமக்கு வழங்கி இருக்கிறார். குறிக்கோள் தொடர்பாக நமக்கு எந்தவித அதிகாரத்தையும் அவர் வழங்கவில்லை. நெறியை எந்த அளவுக்குக் கடைப் பிடிக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் குறிக்கோள் கை கூடும். இந்த விதிக்கு விலக்கே கிடையாது. நெறியை வித்துக்கும், குறிக்கோளை மரத்துக்கும் ஒப்பிடலாம். விதைக்கும், மரத்துக்கும் இடையே உள்ள மாற்ற முடியாத தொடர்பு போன்றதுதான் குறிக் கோளுக்கும், குறிக்கோளை அடையும் நெறிக்கும் உள்ள தொடர்பு நெறி தூயதாக இல்லாவிட்டால் குறிக்கோளும் தூயதாக இருக்க முடியாது எனக் காந்தியடிகள் கூறும் விளக்கம் வினைத் தூய்மைக்கு ஏற்ற முன்னுரையாகவும் அமைந்துள்ளது. துறந்தாரின் தூய்மை உடையர், இறந்தார்வாய் இன்னாச் சொல் நோற்கிற் பவர் (குறள். 159) புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (குறள். 298) மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனம்தூயார்க் கில்லைநன் றாகா வினை (குறள். 456) மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் (குறள். 455) தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு (குறள். 688) அவையறிந் தாராய்ந்து சொல்லுக; சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் (குறள். 711) வகையறிந்து வல்லவை வாய்சோரார்; சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் (குறள். 721) ஆகிய குறட்பாக்களில் திருவள்ளுவர், தூய்மை புறந்தூய்மை, அகந் தூய்மை, மனந்தூய்மை, செய்வினை தூய்மை, மனந்தூயார், இனம் தூயார், தூய்மையவர், தூய்மை உடையர் எனத் தூய்மை என்னும் சொல்லைப் பயன்படுத்தியவர் ஆனால், வினைத்தூய்மை என்னும் அதிகாரத்தில் தூய்மை என்னும் சொல் ஆட்சி பெறவில்லை. வினை நலம் முதற் குறளில் அமைந்துள்ளது. நலமற்ற, தூய்மை அற்ற வினைகளை புகழொடு நன்றிபயவா வினை ஒளிமாழ்கும் செய்வினை, சான்றோர் பழிக்கும் வினை, எனவும் இளிவந்த செய்யார் எற்றென்று இரங்குவ செய்யற்க எனவும் பழி மலைந்து எய்திய ஆக்கம் கடிந்த கடிந்து ஓரார் செய்தார் எனவும், சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் எனவும் அழக் கொண்ட எல்லாம் எனும் தொடர்களைக் கையாண்டு வினத் தூய்மையின் நன்மையையும் தூய்மை அற்ற வினையால் விளையும் கேடு களையும் திருவள்ளுவர் அழுத்தமாக உரைப்பதையும் உணரலாம். ஒருவனுக்கு மனத்தில் உண்டாகும் தூய தன்மையும், செயலில் உண்டாகும் தூய தன்மையும் ஆகிய இரண்டும் அவன் சேர்ந்து பழகும் கூட்டத்தின் தூய தன்மை தருவதால் வருவனவாம் என்பதைச் சிற்றினம் சேராமை அதிகாரத்தில், மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் (குறள். 455) எனத் திருவள்ளுவர் கூறியுள்ளதை மனத்தில் கொண்டு வினைத் தூய்மை அதிகாரக் குறள்களை வரிசையாக ஆராய்வோம். வேண்டிய வேண்டியாங்கெ எய்தலால், செய்தவம் ஈண்டு முயலப் படும் (குறள். 265) எனத் தவத்திலும், உள்ளிய எல்லாம் உடனெய்தும், உள்ளத்தால்; உள்ளான் வெகுளி எனின் (குறள். 309) என வெகுளாமையிலும் எண்ணிய எண்ணியாங் கெய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (குறள். 666) என வினைத் திட்பத்திலும் நம்பிக்கை ஊட்டுமாறு போல் நம்பிக்கை ஊட்டும் நலம் தரும் குறளே, துணைநலம் ஆக்கம் தரூஉம், வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் (குறள். 651) என்பதாகும். பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை ஆகிய இரு அதிகாரங்கள் படைத்தவர் திருவள்ளுவர். வந்த துயரை நீக்கி, வர இருக்கும் துயரை வரா வண்ணம் முற்படக் காக்க வல்ல பெரியவரைத் துணையாகக் கொள்ள வேண்டும். பெரியாரை மதித்துப் போற்றித் தமக்குத் துணையாகக் கொள்ளுதல் ஒருவர் வாழ்வில் பெற வேண்டிய அரிய பேறுகளில் எல்லாம் அரிய பேறாகும். நல்லினத்தின் ஊங்கும் துணை இல்லை. இனநலம் ஏமாப் புடைத்து; இன நலம் எல்லாப் புகழும் தரும்; இனம் தூயார்க்கு இல்லை நன்றாகா வினை; இனத்து உளதாகும் அறிவு; இனத்தான் ஆம் இன்னான் எனப்படும் சொல், எனத் துணை நலத்தின் நலப்பாட்டை உணர்த்திய திருவள்ளுவர் இக் குறளில் துணைநலம் ஆக்கம் தரும் என்கிறார். நல்ல துணையால் வளம் பெறலாம். வளர்ச்சி அடையலாம், முன்னேற்றம் வாய்க்கலாம். செல்வம் பெருகலாம். ஆக்கம் ஆக்கும் எதை ஆக்கும்? தகுதியை ஆக்கும், உண்டாக்கும். ஒவ்வொருவரும் தாம்தாம் தூய பணியை மேற்கொண்டு அதை மிகச் செப்பமாகச் செய்வதை ஒரு நோன்பாகக் கொண்டு, முழு ஈடுபாட்டுடனும், கடமை உணர்வுடனும், செய்தால்; அப்பணி நாம் விரும்பிய நமக்குத் தேவையான அனைத்தையும் தரும். நல்ல துணை முன்னேற்றத்தைத் தரும்; நல்ல செயல் வேண்டியன எல்லாம் தரும். வான் வறண்ட காலத்தும் தான்வறளாச் சோணாட்டின் கோனுரிமை இவ்விளைஞன் கொள்ளப் பொறோமென்று சுற்றப் பகைவர்கள் சூழ்ச்சிமிகு கோட்டைக்குள் உற்ற சிறையாக்கி ஒப்பமுறக் காத்திருந்தும் மன்னு கரிகாலன் மாமன் பிடர்த்தலையார் துன்னு துணைநலத்தால் ஆட்சி நலன் கைக்கொண்டான் வல்ல வினை நலத்தால் வாய்ப்ப அரசோச்சிச் செல்லுந் திசையெல்லாம் சேரத் திறைகொண்டு கல்லால் அணைகட்டிக் காவிரிக்குப் பொன்னியெனும் நல்ல பெயரீந்து நளிரிமயத் துச்சி புலிதாங்க ஞாலப் புகழ்தாங்கிக் கற்போர் உளம்வாங்கும் கண்ணன் கவிதாங்கி நின்றான். துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய வெல்லாம் தரும் என்னும் இளங்குமரனாரின் குறள் விளக்கப் பாட்டு நல்ல விளக்கமாகும். தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள். 236) என வாழ்வியல் நெறி உணர்த்திய திருவள்ளுவர் என்றும் ஒருவுதல் வேண்டும்; புகழொடு நன்றி பயவா வினை (குறள். 652) என வேண்டுகிறார். செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய வேண்டும். செய்யக் கூடாத செயல்களைச் செய்யவே கூடாது. வணிகத்தில் தரம் இல்லாப் பொருள்களை மிகுந்த விலைக்கு விற்றல், கலப்படம் செய்தல், சரியான அளவு கருவி பயன்படுத்தாமை, சட்டத்திற்குப் புறம்பான வணிகம், கள்ளக் கணக்கு வைத்தல், கடத்தல் வரி ஏய்ப்பு, ஏமாற்று, வஞ்சகம், திருட்டு கொலை, கொள்ளை, பிறர் உழைப்பை உரிஞ்சல், கள்ளுக்கடை, பரிசுச் சீட்டு, சூதாட்டம், கையூட்டு, ஊழல் போன்ற நேர்மையற்ற செயல்களால் செய்பவர்கள் மிகு பொருள் தேடலாம். ஆனால் அத்தகைய வினைகளால் உயர்ந்தவர்கள் பாராட்டிப் போற்றும் புகழோ நீடித்த நன்மையும் விளையப் போவதில்லை. நன்மைபோல் சில நேரங்களில் ஒரு போலித் தோற்றம் காட்டலாம். ஆனால் ஒரு காலத்திலும் புகழ்பெற இயலாது. நிறைந்த புகழும் நீடித்த நன்மையும் தாராத எந்தச் செயலையும் எவரும் எக்காலத்திலும் செய்ய எண்ணாது கட்டாயம் நீக்கி விட வேண்டும். புகழும், நன்மையும் தரும் வினைகளையே செய்ய முற்பட வேண்டும். திருவில்லி புத்தூரில் நல்லகுற்றாலம் என்னும் வழக்கறிஞர் வாழ்ந்தார். பொய் வழக்கு என உணர்ந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் வழக்கானாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார். அவர் நகர் மன்றத் தலைவராகவும் கோயில் அறங்காவலராகவும், பெல்லிங்டன் நூலகத் தலைவராகவும் ஒரே காலத்தில் பணி செய்தவர். காலம் தவறாது பணிபுரிந்தவர். கோயிலில் மாலை மரியாதையைக் கூட ஏற்றுக் கொண்டவர் அல்லர். வழிபாட்டுப் பண்டங்களைச் சுவை பார்க்கக் கூட வாயில் போடார். அனைத்தையும் நிறுத்துக் கணக்கு எழுத வைப்பார். எவருக்கும் தனி மரியாதையோ சலுகையோ எதிர்பார்க்க முடியாது. நகர் மன்றப் பணிகளில் தவறு நிகழ்ந்து விடாது எவரும் ஏமாற்றி விடாமல் விழிப்பாகக் கண்காணிப்பார் தகுதிக்கே இடம் தருவார் எவர் பரிந் துரையையும் ஏற்றுக் கொள்ளார், நன்கு பணி புரிவோரை மதிப்பார். தொழிலார்களின் தோழராய்ச் செயல்படுவார். எளிமையைப் போற்று வார். கடமையில் கண்டிப்புடன் இருப்பார். அவருக்கு வரும் அஞ்சலும் அந்தந்த அலுவலகங் கட்கே வர வேண்டும் என எதிர் பார்ப்பார். புகழும் நன்மையும் தராத எவ்வினையும் செய்யாத புகழாளர் அவர். சின் சின் குத்திரெசு என்பவர் பிலிப்பைன்சு நாட்டின் தொலைக்காட்சி நடிகை. சுற்றுப்புறச் சூழலைக் காப்பாற்றுவதில் இவர் கொண்ட ஈடுபாடு அளவிட முடியாதது. நான் சிறுமியாக இருந்த போது இயற்கையை மனிதன் காப்பாற்ற வேண்டியதில்லை என்று எண்ணி இருந்தேன். ஆனால் இப்பொழுது என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். நாம்தான் இயற்கையையும், சுற்றுப்புறச் சூழலையும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் சின்சின் குத்திரெசு அடிக்கடி சொல்வது:- உலகைச் சீரழிக்காதீர்கள்! இதை உங்களுக்குக் கொடுத்திருப்பது உங்கள் அப்பனோ பாட்டனோ அல்லர். உங்கள் குழந்தைகள். ஆம்!... அவர்களுக்குரியது இந்த உலகம். இதைப் பொலிவு கெடாமல் காப்பாற்றி அவர்களிடம் ஒப்படையுங்கள் என்பதாகும். புகழும் நன்மையும் தராத வினைகளை எப்பொழுதும் செய்வதை நீக்கிவிட வேண்டும் என்பதற்கு ஒரு உலகச்சான்று. தந்தை ஒருபுறமும் மைந்தர் மறுபுறமும் சிந்தை கொதித்துச் செருச்செய்ய நிற்கின்றார் நொந்து மிக நொந்து தந்தைக்குச் சொல்கின்றார் புந்தி தெளிந்த புலவர் எயிற்றியனார்; வெற்றித் திறங்கொண்ட வேல்வேந்தே! கேட்டருள்வாய் முற்றப் பகைவரோ முன்நிற்கும் நின்மைந்தர் வெற்றி பெறுவாய் வியப்பில்லை, என்றாலும் பிற்றை அரசுரிமைப் பேறிங் கெவர்க்கீவாய்? வேற்றவர்க் கீய விரும்புமோ உன்னுள்ளம்? ஆற்ற லமைந்தோய் ஒருவேளை நீ தோற்றால் மாயாப் பழியன்றோ? என்றார் அதுகேட்ட வீயாப் புகழோன் விறற்கோப் பெருஞ்சோழன் போர்நீர்த்துப் பார் நீர்த்துப் பேர் சேர்த்து வாழ்கின்றான் என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை என்னும் இரா. இளங்குமரனாரின் பாடல் இலக்கியமாகவும் வரலாற்றுச் சான்றாகவும் மிளிர்கிறது. என்றும் புகழொடு நன்றி பயக்கும் வினைகளையே மேற்கொள்வோம்! ------------ ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர் (குறள். 653) இருக்கின்ற நிலையிலிருந்து மேலும் மேலும் வளர்ந்து மேன்மையும் புகழும் அடைய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. மேம்பாடு காசு கொடுத்துக் கடையில் வாங்கும் சரக்கானால் பலரும் எளிதில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். மேம்பாடு என்பது வாழ்வியல் செம்மையாலும், மனத்தூய்மையாலும், செயல் தூய்மையாலும் தானே வந்து வாய்ப்பதாகும். ஆகவே, மேலும் மேலும் வளர்ந்து மேன்மை அடைய விரும்பும் பெருமக்களே! நீங்கள் புகழைப் பெருக்கும் வினைகளைச் செய்ய வேண்டுமே அல்லாமல், புகழைப் பின்னுக்குத் தள்ளிப் பழியை உண்டாக்கும் எவ்வினையையும் செய்ய மனத்தால்கூட எண்ணுதல் கூடாது. புகழ் வளர்க்கும் வினைகளையே செய்க! நினைத்தவாறு மேம்பாடு அடைவீர்கள். புதுதில்லியில் மெட்ரோ தொடர் வண்டியைக் கொண்டு வந்ததில் பொறியாளர் சிரிதரன் அவர்கட்குப் பெரும் பங்குண்டு. ஊழலுக்கு இடம் கொடுக்காமல் இந்தத் திட்டத்தைத் திட்டமிட்ட கால எல்லைக்குள் செயல் படுத்தியவர் இவர். இது மற்றெந்த நாட்டில் நடந்திருந்தாலும் சாதனை இல்லை. இந்தியாவில் இத்தனை திறமையோடும், இத்தனை நேர்மையாகவும் ஓர் உயர் அதிகாரியா என்று சிறிது ஏளனத்தோடு வியப்படைகிறது டைம் இதழ். புகழ் பெருக்கும் செயலாய் மேன்மை அடைந்த சிரிதரன். புகழ் வாழ்க என நாம் வாழ்த்தி அவர்காட்டிய வழி நடப்போம்! நேர்மையினின்று வழுவாது நற்செயல்களைச் செய்து கொண்டிருப் பவன் அறவான். பிறர் மனைவியை நாடாமலும் எவருக்கும் கொடுமை புரியாமலும், தன்னிடம் கடன்பட்டவனிடம் அவன் பத்திரத்தையும் அடமானப் பொருளையும் திருப்பித் தந்தும் எவரையும் கொள்ளையடிக் காமலும், பசித்தவருக்கு உணவும், ஆடை இல்லாதவனுக்கு ஆடை அளித்து, வட்டிக்குப் பணம் கொடாமலும், இலாபம் சம்பாதிக்க விரும்பா மலும், இருப்பவனே அறவான். தவறான காரியம் எதிலும் இறங்காமலும், உண்மை தவறாமல் நீதி வழங்கிக் கொண்டும் இருப்பனே அறவான் என்னும் அறிஞர் மூசானாவார் கருத்தும் ஒத்து நோக்கத் தக்கதாம். மலைபோல ஓங்கு மதயானைக் காற்கீழ் மலையமான் காரியின் மைந்தரைப் போட்டழிக்கக் கிள்ளி வளவன் கிளர்ந்ததனைக் கேட்டறிந்தார், வள்ளற் புலவர்பிரான் வண்டமிழ்க் கோவூரார் உள்ளம் உருகி உயர்கிள்ளி வேந்தனிடம் எள்ளாப் புகழாள! என் சொல்லைக் கேட்டறிவாய் வாய்த்த அருளோர் வழிவந்த காவலன் நீ ஈத்துணும் இன்பொன்றே இன்பென்று கொண்டசீர் ஏந்தலின் மைந்தரிவர்! ஏங்கி அழுதவிவர் வேந்தனே வேழ வரலால் வியக்கின்றார்! என்வேட்கை யான்சொன்னேன் நின்வேட்கை போல்செய்க என்றார்; இளையர் உயிர்பெற்றார்; கிள்ளி நிலவு புகழால் நிலைக்கின்றார் நீருலகில் ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர் என்னும் இரா. இளங்குமரனாரின் பாடலால் குறள் விளக்கம் பெற்று இன்புகிறோம். ----------- இடுக்கட் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர் (குறள். 654) பொய்கைப் புலவன் புகழ்மிக்க மாணவன் தெய்வத் தமிழ்பாடும் தீஞ்சொற் கவிவாணன் சேரன் கணைக்காலன் செங்கண்சேர் சோழனுடன் வீரம் விளங்க வினையாற்றிப் போர்ப்புறத்தில் பற்றுக்கோட் பட்டுக் குடவாயிற் கோட்டத்துக் கொற்றச் சிறையிருந்தான்; கோமான் கணைக்காலன் உண்ணுநீர் வேண்ட உயர்வறியா ஏவலன் எண்ணீர்மை இன்றி ஒரு குவளை நீர்தந்தான் அண்ணல் மனம்வெம்பி ஐயகோ! கெட்டேன் இத் தண்ணீர் பருகியென் மானத்தைத் தாழ்த்தேன்என் றாவி விடுத்தான் அரிதம்மா! அம்மா! இடுக்கட் படினும் இழிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர் என்னும் இரா. இளங்குமரனாரின் பாட்டு குறட் கருத்தைச் சான்றுடன் விளக்குகிறது. நடுக்கற்ற காட்சி யவர் தனித்தன்மை உணர்த்தும் பாடல் இதுவாகும். இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் (குறள். 174) இஃது வெஃகாமை அதிகாரம். பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார், மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் (குறள். 199) இஃது பயனில சொல்லாமை அதிகாரம். இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர் (குறள். 218) இஃது ஒப்புரவறிதல் அதிகாரம். செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன் (குறள். 258) இஃது புலால் மறுத்தல் அதிகாரம். இருள் நீங்கி இன்பம் பயக்கும், மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு (குறள். 352) இஃது மெய்யுணர்தல் அதிகாரம். கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் (குறள். 699) இஃது மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம். திருவள்ளுவர் காட்சியவர் என்னும் சொல்லால் அறிவுடை யவரைத்தான் சுட்டுகிறார். காட்சியவர் அறிஞரில் அறிஞர், அறிவால் ஒளிபெற்று, உலகுக்கு ஒளி செய்பவர்களை உணர்த்து வதுபோல் தெரிகிறது. துன்பம் எல்லா நிலையினருக்கும் வரலாம். ஆனால், துன்பத்தால் சூழப்பட்டபொழுது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகநடந்து கொள்வர். உறுதியும் தெளிவும் கொண்டு தடுமாற்றம் இல்லாது இயங்கும், தேர்ந்து தெளிந்த அறிவுடையோர், எத்தகைய கடுந்துன்பத்தில் சிக்கி அவதிப்பட்டாலும் அத்துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் எனக் கருதி முயல்வர். அம்முயற்சியும், வழியும், புகழும், பெருமையும், தரும் நல்ல வழியாகவே இருக்குமே யொழிய எக்காரணங்கொண்டும் இழிவு தரும் செயல்களைச் செய்ய மாட்டார்கள். நடுங்காத அறிஞர் நெருக்கடியிலும் இழிந்த செயல்களைச் செய்யார். ஆனந்தி இது தனியொரு பெண்ணின் பெயர் அல்ல. நால்வர் அணி குசராத்தை மதக்கலவரம் கிழித்துப் போட்ட போது, அதைத் தடுக்க முடியாமல் காவலர்களே விட்டு விலகிய போது சான்வி, சேசல், நிட்டா, சுமத்திரா என்ற நான்கு பெண்களும் அங்கு போனார்கள். ஆனந்தி என்ற அமைப்பைச் சேர்ந்த இவர்கள்தான் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவக் கைநீட்டினார்கள். கலவரம் ஓய்ந்த பின்னரும் சிற்றூர்களைச் சீரமைக்க, மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற ஏராளமான உதவிகளைச் செய்தனர். எந்தக் கொலை மிரட்டலுக்கும் அஞ்சாமல் இந்தப் பெண்களைப் போன்று செயல்பட்ட மிகச் சிலரால் இந்தியாவின் பெருமையே பல மடங்கு உயர்ந்து விட்டது என்பது ஒரு நடை முறைச் சான்று. எதிரி ஏவியவேல் மார்பில் பாயும் போதும், தான் அஞ்சாது எதிரியைக் கொன்று வெற்றியை விளைவிப்பதால் மட்டும் ஒருவன் வீரனாக முடியாது. எவனொருவன் தான் இறக்க நேரினும், தன்னுடைய படைப்பலம் அனைத்தும் அழிய நேரினும் அறத்தைத் துறவாதவனோ அவனே வீரன் என்பதைச் சுமந்திரனை நோக்கி இராமன் கூறுவதாகக் கம்பர், நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேருற மறப்பயன் விளைக்குறும் வன்மை அன்றரோ இறப்பினும் திருஎலாம் இழப்ப எய்தினும் துறப்பினும் அறம் எனல் சூரர் ஆவதே எனப்பாடிய பாடல் குறளுக்கு விளக்கம் தரும் அருமையான பாடலாகும். ----------- எற்றென் றிரங்குவ செய்யற்க; செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று (குறள். 655 ) நான் எத்தகைய தவறுகளைச் செய்து விட்டேன் என்று பிறகு எண்ணி வருந்தக் கூடிய செயல்களை என்றென்றும் செய்யாது ஒழிக. அத்தகைய குற்றங்களை ஒரு முறை ஏதாவது ஒரு சூழ் நிலையில், நெருக்கடியில், அறியாமையால், கவனக் குறைவால், புரியாமல் செய்ய நேர்ந்துவிட்டால், குற்றமில்லை. ஆனால் குற்றம் எனத் தெரிந்த பின் எந்நிலையிலும் அதனைச் செய்யாமல் இருந்தால்தான் நல்லது. தெரிந்தபின் செய்தால் சிறிய குற்றமும் பெருங்குற்றமாகக் கருதப்படும். என்னும் போக்கில் பெரும் பாலோ உரைகண்டுள்ளனர். ஐயோ என்று யாரும் துன்பப்படுகிற எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது. தவறிச் செய்து விட்டாலும் மறுபடியும் அப்படிச் செய்யா திருப்பது நல்லது. என்கிறார் நாமக்கல் வெ. இரா மலிங்கனார். என்ன தவறு செய்துவிட்டோம் என்று கவலைப் படுவதற்கு ஏதுவாகிய செயல்களைச் செய்யக் கூடாது. அத்தகைய செயல்களை ஒருமுறை ஒருவன் செய்வான் ஆயின் பின் அவற்றைப் பற்றிக் கழிவிரக்கம் கொள்ளாமை நன்று எனப் பரிமேலழகர் உரை கூறுவதுடன் அச்செயற்குப் பின்னிருந்து இரங்குவான் ஆயின், அது (இரங்கல்) தீரும் வாயில் (வழி) அறிந்திலன் எனவும், திட்டமிலன் எனவும் பயனில்லை செய்கின்றான் எனவும் தன் பழியைத் தானே தூற்றுகின்றான் எனவும், எல்லோரும் இகழ்தலின் பின்னிரங்காமை நன்று என்றார். நாம் பின்னால் வருந்த நேரும் செயல்களையும் செய்யக் கூடாது. பிறர் வருத்தமடையக் கூடிய செயல்களையும் செய்யக் கூடாது. ஒரு முறை செய்ய நேர்ந்தாலும், அடுத்த முறை செய்யக் கூடாது. செய்து விட்டு வருந்துவதால் பயனில்லை என்பதை உணர்கிறோம். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான் எல்லாரும் உவப்பதன்றியும் நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே என்னும் நரி வெரூஉத் தலையாரின் புற நானூற்றுப் பாடல் உணர்த்தும் நெறியையும் இணைத்துச் சிந்திப்போம். சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியை ஊன்பொதிப் பசுங்குடையார், செய்திரங் காவினைச் சேண்விளங்கும் புகழ் நெய்தலங் கானல் நெடியோய் எனப் போற்றிப் பாடிய புறப்பாடல் நல்லதொரு சான்றாகும். 30.4.2003 தினமணி இதழில் இளைஞர் சக்தி எனும் தலைப்பில் பாவண்ணன் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. ஒரு செய்தித் தாளின் வெவ்வேறு பக்கங்களில் வெளி வந்திருந்த இரண்டு செய்திகள் ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்துவதாக இருந்தன. இரவு நேரத்தில் பேருந்துக் கிடையில், அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு நாயை அவ்வழியே வந்த நான்கு இளைஞர்கள், எல்லா நடைமுறைச் சிக்கல்களையும் பொறுமை யாக எதிர்கொண்டு உரிய மருத்துவ மனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றி இருப்பது ஒரு செய்தி! வேலை நிறுத்தம் நடைபெறும் ஒரு கல்லூரியின் வாயிலில் நின்றபடி தன் வகுப்புக் காலதர்க் கண்ணாடியைக் குறி பார்த்துக் கல்லை வீசி உடைத்த ஒரு மாணவன் பத்திரிக்கையாளர் தன்னைப் படம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்ததும் இந்தச் சன்னல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? என்று வினவியபடி வேகமாக மீண்டும் மீண்டும் கற்களை வீசி சன்னல்களை உடைத்தபடி இருந்தான் என்பதையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியதுள்ளது. பேதைப் பருவத்துப் பெண்ணொருத்தி பெய்ம்மலர்க் கோதை துவளக் கொழும்பிடி போல் பாய்ந்தாடி ஆற்றில் குளிக்கும் அதுகாலை வெள்ளத்தில் கூற்றே வடிவமாய்க் கொடுமாங் கனியொன்று அடித்து வரக் கண்டாள்; ஆவல் பெருக எடுத்துண்டாள்; ஆள்வோனாம் நன்னன் அறிந்திது குற்றம் பெருங்குற்றம் கொல்லத் தகுகுற்றம் சற்றும் இரங்கேன் எனநின்றான்; பெற்றோர்கள் கன்னி நிறையளவு பொன்னைத் தருகின்றோம் மன்னவ மன்னிப்பாய் என்றென்று நன்னனிடம் பன்னிப் புலம்பினார் பாவியாம் அந்நன்னன் கொன்றே தொலைத்தான் கொடும்பழிக் காளானான் எற்றென் றிரங்குவ செய்யற்க; செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என்னும் இரா. இளங்குமரனாரின் குறள் விளக்கப் பாட்டை நல்ல விளக்கமாய்க் கொள்வோம். இரங்குவ என்றும் செய்யற்க! போற்றுவ என்றும் செய்க! தான் தற்பொழுது வறுமைக்கு ஆட்பட்டு அல்லல்படுவதாக இருப்பினும் அதனைப் போக்குவதற்காகவும் தீய செயல்களைச் செய்தல் கூடாது. வறியவன் தீச்செயல் புரிந்தால் உள்ளதையும் இழந்து மேலும் வறுமையன் ஆவான் என்பதை இலனென்று தீயவை செய்யற்க; செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து (குறள். 205) எனத் தீவினை அச்சத்திலும், ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கொண்ட குற்றமற்ற அறிவினர் தம் இல்லாமையை எண்ணியும் பிறர் பொருளைக் கவர விரும்ப மாட்டார் என்பதை இலமென்று வெஃகுதல் செய்யார்; புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் (குறள். 174) என வெஃகாமை அதிகாரத்திலும், வள்ளுவர் தம் நெறியைத் தெளிவு படுத்தியவர். அதன் உச்சமான நெறியை அழுத்தமாக எடுத்து மொழியும் குறளே, ஈன்றாள் பசிகாண்பா யினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (குறள். 656) ஆகும். உணவு, உடை, உறையுள் மூன்றும் முக்கியத் தேவையாகும். அதிலும் இன்றியமையாத் தேவை உணவாகும். உண்ணும் உணவிற்கே வழியற்ற வறுமை மிகப் பொல்லாதது. அதனாலேயே வள்ளுவர் இன்மை என ஒரு பாவி என்றார். இன்மை வாழ்க்கையை வெறுமை ஆக்கி விடும். எந்நலமும் இல்லாததாக ஆக்கிவிடும். நெருப்பாகிய படுக்கையில் தூங்குவது போன்றதாகும். அது குடிப்பிறப்பின் பெருமையையும், புகழையும், அழிக்கும். பிறப்பொடு பொருந்தாத இழிசொல்லைச் சொல்லும் தளர்ச்சியைக் கூட உண்டாக்கிவிடும். வறுமை வந்தால் அதன் வழியாகப் பலப்பல துன்பங்களும் தாமே வரும் எனப் பட்டறிந்தவர் போல் உரைப்பவர் வள்ளுவர். வீட்டில் உணவில்லை, உணவு ஆக்க வழியும் இல்லை. தானும் பட்டுணி, துணைவியும் பட்டுணி, மக்களும் பட்டுணி நோயும் பாயும் படுக்கையுமாக இருக்கும் வயது முதிர்ந்த தாயும் பட்டுணி. தன் துன்பத்தைத் தாங்கும் வல்லவனாலும் தாய் படும் துயரைத் தாங்க இயலாது. அவள் பெற்றவள், வளர்த்து ஆளாக்கியவள் தெய்வமாகப் போற்றப்படுபவள். அவள் பசியால் துடிப்பதை அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எனினும் எவ்வளவு விரைந்து அறவழியில் பொருள்தேட முடியுமோ அவ்வழியை மேற்கொள்வானே அன்றிச் சான்றோர் பழிக்கு ஆளாகும், தகுதி அற்ற எந்தச் செயலையும் செய்ய எண்ண மாட்டான். வறுமையிலும் மனத்தில் மாசுபடர இடந்தந்து விடலாகாது. ஏனெனில், இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் (குறள். 988) என்பதல்லவா குறள் நெறி! இறந்த மூப்பினராய இருமுது குரவரும், கற்புடை மனைவியும், குழவியும், பசியான் வருந்தும் எல்லைக் கண், தீயன பலவும் செய்தாயினும் புரந்தருக என்றுதான் மனுதரும சாத்திரம் கூறும். எப்படியும் தேடலாம், பலரைக் காக்கச் சிலரைக் கொல்லலாம். என்பதே பொருளியல் மேதை, பொதுவுடைமைத் தந்தை காரல் மார்க்சு நெறி! திருவள்ளுவர் திருநெறி மனமாசு அற்ற அறநெறி ஆகும். அதனால், தன்னைப் பெற்றவள் பசித்துக் கிடக்கும் கொடுமையைப் பழிபிறங்காப் பண்புடை மைந்தன் தன் கண் எதிரே காண்கிறான். வேதனைப்படுகிறான் விரைந்து பொருள் தேடி குடும்ப வறுமையைப் போக்க எண்ணுவான். ஆனால் அப்பணி ஒரு காலத்திலும் சான்றோர் பழிக்கும் வெறுக்கும், ஒதுக்கும் பணியாக இருக்காது. எளிய பணியாக இருக்கலாம். ஆனால் குற்றமற்ற தூய பணியாகவே இருக்கும். குப்பைச் சிறுகீரை உப்பின்றி வேம்வறுமை எப்போ தகலுமோ என் றேங்கும் குடிவாழ்வால் ஈன்றெடுத்த அன்னை இதுகாலம் போதாதோ யான்வாழ்ந்த தென்றென்றருந்துயர் கொண்டேங்கக் காணப் பொறாஅமல் காடு மலைநீந்திப் பேணு வெளிமான் இளவல் வெளிமானைக் காண விழைந்தாரைக் காணாமல் பொன்னீந்தான் குன்றத் தளவேனும் கொள்ளேன் குறை கண்டால் என்று விரைந்தார் எழில் குமணன் பேரன்பில் ஒன்றித் திளைத்தார் ஓர் வேழப் பரிசேற்றுச் செம்மாந்து வந்து செழும்பரிசு கொள்ளென்று தம்மை யுணரா வெளிமாற்குத் தாம்தந்தார் சித்திரனார் அன்னார் செயலாய்ந்தால் என்றென்றும் ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என இளங்குமரனார் காட்டும் பெருஞ் சித்திரனார் படம் நல்ல பாட்டுப் பாடமாகும். சான்றோர் பழிக்கும் பணி செய்யற்க! செய்யும் வினைகளில் சால்பு விளங்கட்டும்! பெற்ற அப்பொழுதில் நன்மை தருவது போலத் தோன்றினாலும், நடுவு நிலைமை நீங்கி வரும் நலங்களை விரும்பாமல் அப்பொழுதே விட்டு விடுக என்பதை நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் (குறள். 113) எனவும் வறுமையும் வளமையும் உலகில் காணாத புதுமைகள் அல்ல, ஆயினும் அவற்றைக் கருதி மனத்தின்கண் நடுவு நிலைமை தவறாது செயல் புரிவதே சான்றோர்க்கு அழகு என்பதை, கேடும் பெருக்கமும் இல்லல்ல, நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி (குறள். 115) எனவும், நடுவு நிலைமையைப் போற்றி நல்ல வழியிலே நடப்பவனுக்கு எதிர்பாராச் சூழலில் வறுமை வரும் எனினும் சான்றோர் அதனால் அவனைப் பழித்துக் கூறார் என்பதைக், கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு (குறள். 117) எனவும் நடுவு நிலை அதிகாரத்தில் கூறுகிறார். மக்கள் வாழ்வில் வறுமையும் வரலாம். செல்வமும் பெருகலாம். ஆனால் எந்நிலையிலும் நடுவுநிலை நிற்றல் வேண்டும். நடுவுநிலைமை தவறி வரும் நலத்தை விரும்பக் கூடாது. நடுவு நிலையர்க்கு வரும் வறுமையை உலகப் பெருமக்கள் இழிவாகக் கருத மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். மனிதனின் தகுதியை அளக்கும் கருவி செல்வம் அன்று. நடுவு நிலைமையே ஆகும். என்னும் அடித்தளத்தில் கட்டிய மாளிகை போன்றதே பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை (குறள். 679) என்பதாகும். பழிபாவம் சூழும் இழிவான செயல்களைச் செய்து கோடி கோடியாய்ச் செல்வத்தைப் பெருக்கி வாழும் வாழ்வைவிட குற்றமற்ற தூய நன்னெறியைக் கைக்கொண்டு செய்யும் செயல்களால் ஒருவேளை இழப்பு ஏற்பட்டு வறுமைக்கு ஆளாகித் துன்புற நேருமாயினும் சான்றோர் அதனைச் சிறப்புக் குரியதாகவே கருதுவர். வ. உ. சிதம்பரனார் தாம் தொடங்கிய கப்பல் கழகப் பொறுப்பில் இருந்து விலகினால், ஆங்கில அரசு ஒரு பெரிய தொகையை அன்பளிப்பாக வழங்கி இருக்கும். நல்ல ஊதியம் தரும் அரசுப் பணியும் கிடைத்திருக்கும். ஆனால் பழி வழியில் கிட்டும் ஆக்கத்தை உதறித் தள்ளியமையால் ஆங்கிலேய அரசால் பகை வராகக் கருதப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே மாட்டுக்கு மாற்றாகச் செக்கிழுத்தார். சொல்ல ஒண்ணாத் துன்பத்திற்கு ஆளானார். அவர் பட்ட துன்பமெல்லாம் நாட்டு நலன் கருதிப் போராடியதால் பெற்றவை. ஆகவே, இன்றும் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்பல் என்று நாடு போற்றுகிறது. செனரல் டயர் சாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்களைக் கண்மூடித் தனமாய்ச் சுட்டு வீழ்த்தி ஆங்கில அரசரால் பெரும் சிறப்புப் பெற்றான். ஆனால் வரலாற்றில் தீராப் பழியை அல்லவா தேடிக் கொண்டான். எம் மக்களை எம் மண்ணில் கொன்றவனை அவன் மண்ணிலேயே கொல்லத் தீர்மானித்த உத்தம் சிங்கடுந்துன்பத்திற்கு ஆட்பட்டான் எனினும் இந்திய வரலாற்றில் புகழ் பெற்றான். பழிவழியில் ஆக்கம் பெறுவதை விடச்சான்றோர் வறுமையில் வாழ்வதே மேலானது எனக் கருதுவர். பழந்தமிழ்ப் பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இனம் பெருவழுதி, உலகம் நிலைத்து நிற்பதற்குக் கூறும் காரணங்களில் புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் என்னும் கொள்கை வழிவாழும் சான்றோர் உலகில் வாழ்வதும் காரணம் எனக் கூறியுள்ள கருத்தையும் எண்ணிப் பார்ப்போம். விளையாட்டில் எப்போதும் ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கிறோம். ஆனால், தொழிலிலோ, ஒழுக்கம் நேர்மை என்பதைப் பற்றிச் சிந்திக்கக் கூட நேரமில்லை என வருந்திக் கூறுகிறார் அறிஞர் இரசுக்கின். சிறியவர் எய்திய செல்வத்தின் மாணப் பெரியவர் நல்குரவு நன்றே - தெரியின் மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின் முது நெய் தீது ஆகலோ இல் என்னும் பழமொழிப் பாடல் ஏற்ற உவமை வழி விளக்குகிறது. வாட்டும் வறுமை பிடர்பிடித்துத் தள்ளவோர் பாட்டுத் திறத்தால் நமையாளும் சாத்தனார் நாடாளும் வேந்தன் குமணனை நண்ணப் போய்க் காடாளும் வள்ளல் குமணனைக் கண்ணுற்றார்; பாடி வருபுலவன் பாழ்துயரை ஓட்டாமை நாடிழந்த கேட்டில் நனியின்னா தென்றெண்ணிப் பொன்னைக் கொடுத்த புகழ்க்கையால் வாள்தந்து தன்னைக் கொடுத்தான் தலைக்கொடை கொள்கென்றே ஏழைப் புலவர் எதுசெய்வார்? ஓடிப் போய்ப் பாழ்நெஞ்சத் தம்பி இளங்குமணன் பண்பெய்தி அண்ணனுடன் வாழ அருள்செய்தார்; ஆனபின் எண்ணு பரிசினை எண்ணாமல் ஊர்சேர்ந்தார் கொல்வறுமைக் காட்பட்டும் தொண்டுக்குக் கூலிபெற ஒல்லாமல் சென்றார்! உயர்கொள்கை வாழ்க! பழிமலைந் தெய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை என்னும் இளங்குமரனாரின் குறள்விளக்க மேற்கோள் பாடல் நமக்கும் உரியதே! பழி இல்லா ஆக்கமே சான்றோர் விரும்பும் ஆக்கமாம்! ----------- நினைப்பவற்றை எல்லாம் மிக உயர்ந்தவையாய் உயர்வு தருவதாய் நினைக்க வேண்டும். நினைத்த தெல்லாம் உடனே நிறைவேறிவிடும் என்று சொல்ல இயலாது. காலம் தாழ்த்திக் கொண்டு செல்லலாம்; தோல்வி கூட ஏற்படலாம் என்றாலும் விடாமல் மேற்கொள்வது பெருமைக்குரியதாகும் என்பதை, உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்; மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து (குறள். 596) என ஊக்கமுடைமையில் தோல்வி ஏற்பட்டாலும், செயல் நிறைவேறுவதில் காலம் கடந்து கொண்டே போனாலும் கவலைப் பட வேண்டாம். உயர்ந்த எண்ணமே உயர்வுதான் எனும் பொருள் பட நெறிகாட்டிய வள்ளுவர் அதே நோக்கத்தை மாற்றுக் கோணத்தில் வலியுறுத்தும் குறளே, கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம் முடிந்தாலும் பீழை தரும் (குறள். 658) என்பதாகும். அறவோர் காட்டிய அறநெறியைத் தவறாது கடைப் பிடித்துச் செயல்படுதல் வேண்டும். அறவோர் விலக்கச் சொன்னவற்றைத் தவறாது விலக்கி விட வேண்டும். ஆனால் அறவோரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட செயல்களை வெறுத்து ஒதுக்காமல் செயல் புரிகிறவர்கள் செயலை முடித்து வெற்றி பெற்று விடுகிறார்களே! வெற்றிதானே நமக்கு முக்கியம் என யாரேனும் வள்ளுவரை வினவி இருக்கலாம். அவர்க்கு விடை அளிக்கும் முகமாக வள்ளுவர் உலகவர்க்கே தெளிவு காட்டுகிறார். நல்ல செயல் வெற்றி பெற்றால் இன்புறலாம்; தீய செயல் வெற்றி பெறக் கூடாது. தீய செயல் வெற்றி பெறுவது இன்பம் தராது. துன்பத்தையே தரும். நல்ல செயல் தோற்றாலும் சிறுமை அன்று; தீய செயல் வெற்றி பெற்றாலும் பெருமை அன்று. சிறுமையே ஆகும். ஆகவே, சான்றோர் விலக்கச் சொன்னவற்றை விலக்காது. செய்தவர்க்குக் காரியம் கை கூடினும் துன்பமே உண்டாகும். ஆகவே சான்றோர் தவிர்க்கச் சொன்ன வினைகளைத் தவிர்த்து விடுவதே நல்லது. ஒருவன் தீய எண்ணத்துடன் பேசும் போதும், காரியம் செய்யும் போதும், மாட்டு வண்டியின் சக்கரங்கள் மாட்டின் பின்னாலேயே சுழன்று செல்வதைப் போல துன்பங்கள் அவனை விடாது தொடர்கின்றன என்னும் புத்தரின் பொன்மொழியையும் இணைத்துச் சிந்திப்போம். மாசாத்தன் மைந்தன் மணித்தோள் புரவலனாம் ஏசாச்சீர்க் கோவலன் தந்த எழிற் சிலம்பைக் கள்ளத்தால் தான்கொள் கயச்சிலம்பாக் காட்டியுளம் கொள்ளத்தான் ஆகாப்பழிசூட்டி ஓர்கொடியன் கொன்றானாம்; கொன்றாலும் வென்றாலும் என்னேதான்! பின்னுற்ற பேரிழவை அந்தோ! உரையேன் கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம் முடிந்தாலும் பீழை தரும் என்னும் இளங்குமரனாரின் பாட்டை உணர்ந்து குறளின் பொருள் உணர்வோம். பிறர்க்குத் துன்பங்களை ஒருவர் முற்பகல் செய்தால், செய்த அவர்க்கு அத்துன்பங்கள் பிற்பகலில் தாமாகவே தேடிக் கொண்டு வரும் துன்பம் எல்லாம், துன்பம் செய்தாரையே தொடர்ந்து வருவனவாம். ஆதலால் தாம் துன்பம் இன்றி வாழ விரும்புபவர் பிறர்க்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யார் என்பதை பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் (குறள். 319 ) நோய்யெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டுபவர் (குறள். 320 ) இன்னா செய்யாமை அதிகாரத்தில் தெளிவுபடுத்திய கருத்தை வழிமொழிந்து வலியுறுத்தும் குறளே, அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை (குறள். 659) பிறரை வருத்தி அழவைத்துப் பெற்ற பொருள்கள் யாவும், பொருள் பெற்றவரையும் வாட்டி வருத்தி அழவைத்து விட்டுத் தான்போகும். அழவைப்பதும் உறுதி, போவதும் உறுதி. நல்ல வழியில் பெற்ற பொருளையும் முதற்கண் இழக்க நேரலாம். அந்த இழப்பும் துன்புறுத்தாது என்பதுடன் அது வேறு ஏதாவது ஒருவகையில் அவனுக்கு நன்மையைத் தரும். நல்ல செயல்களுக்கு உரிய அருட்பயன்கள் காத்திருக்கின்றன. சிறிது தாமதமாக வர நேர்ந்தாலும் அவை வந்தே தீரும் என்கிறார் அறிஞர் காங்கிரீவ். மனம் ஒரு கழனியைப் போன்றது. எதை அறுவடை செய்ய எண்ணுகிறோமோ அதையே அக்கழனியில் விதைத்தல் வேண்டும். எதை விதைத்தாலும் முளைப்பது சுரையாகத்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையல்லவே! பார்த்துப் பார்த்து உடலால் உழைக்க வேண்டும். பார்த்துப் பார்த்துச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். பார்த்துப் பார்த்து மனத்தால் சிந்திக்க வேண்டும். ஒன்றைச் செய்ய விரும்பும் போது மனத்தினால் அது தவறான காரியம் அல்லவே, தீங்கு விளைவிப்பது அல்லவே என்று உற்று நோக்க வேண்டும். தனக்கும் பிறர்க்கும் தீங்கு விளைவிக்காத காரியத்தை மட்டும் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னர் மனம் நோகுமோ. எதன் பயனை அழுது கொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ அது நற்செயல் ஆகாது. என்னும் புத்தர் வாக்கும். குறட்கருத்துக்கு வலுவூட்டும் கருத்தாகும். பறம்பிற்கோன் பாரிஓர் மூவேந்தர் வஞ்சத் திறத்தால் இறந்தான், திகழ்மகளிர் நோநொந் தழுதார்; அரற்றினார்; தாங்காமல் அற்றை முழு நிலவில் எந்தை இருந்தார்; எழிற்குன்றும் எங்கட் கிருந்ததாம், இற்றை நிலவினிலோ தங்கும் இடமற்றோம்; தந்தை இழவுற்றோம் என்றேங்கி நின்றார்; அவர்தந்தை தோழராய் நின்றோங்கு நற்கபிலர் தொண்டால் இன்புற்றார் அழச்செய்தோர் பேரும் அறியோம்! அழுதோர் முழு நிலவாய் வாழ்கின்றார் முற்றத் தெளிந்தால் அழக்கொண்ட வெல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை என்னும் இரா இளங்குமரனாரின் குறள் விளக்கப் பாடல் நல்ல இலக்கியச் சான்றாகும். அழவைத்துக் கொண்டது அழவைத்துப் போகும் நற்பாலவை முன் இழப்பினும் பின் பயன் தரும் யான் வறியவன் என்று கருதி அதனை நீக்குவதற்காகத் தீய செயல்களைச் செய்யாது இருப்பானாக, அவன் தீய செயல் செய்தால் உள்ளதையும் இழந்து மேலும் வறியவன் ஆவான் என்பதை இலனென்று தீயவை செய்யற்க; செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து (குறள். 205) எனத் தீவினை அச்சத்திலும், திருடிச் சேர்த்த செல்வம் அளவில்லாமல் வளர்வது போலத் தோன்றினாலும் விரைவில் அழிந்து போகும் என்பதைக் களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும் (குறள். 283) எனக் கள்ளாமை அதிகாரத்தில் கூறிய அறிவுரைக்கு மேலும் அழுத்தம் தரும் பொருட்டுப் படைத்த குறளே, சலத்தால் பொருள் செய்தேமார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று (குறள். 660) வஞ்சகத்தால் பொருள் தேடி அதனைப் பாதுகாப்பாக வைக்க எண்ணுதல் பச்சைக் களிமண்ணால் செய்து சுடப்படாத மண் பானையில் நீரை விட்டு நிரப்பி வைத்தது போல் ஆகும். பானை மண்ணாகி விடும்! நீர் சேறாகி விடும். வஞ்சக வழியில் பிறரை ஏமாற்றித் தேடிய பொருள் நிலைக்காது. தேடியவனுக்கும் பயன்படாது. அந்தப் புரமே அரசிருக்கை ஆக்கிச்சச் சந்தன் இருந்தான் அவனரசைக் கைக்கொள்ளக் கட்டியங் காரனெனும் தீய மதியமைச்சன் திட்டங்கள் தீட்டினான் தேர்ந்த வொருநாளில் வேந்தனைக் கொன்று வெறுக்கின்ற யாவரையும் ஏந்தும் ஒளிவாட்கு இரையாக்கிப் பாராண்டும் வஞ்சம் மறைந்ததோ! வன்கொடுமைக் காரனென அஞ்சி மறைந்ததோ? ஆட்சி நிலைத்ததோ? வஞ்சம் ஒருநாளும் நில்லா திஃதுண்மை சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று என்ற இரா. இளங்குமரனாரின் குறள் விளக்கப் பாடல் ஏற்ற எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. துணை நலம் ஆக்கம் தரும் வேண்டிய எல்லாம் தருவது வினை நலம் புகழும் நன்மையும் தராவினை செய்யற்க மேலும் மேலும் மேம்பாடு அடைய வேண்டும் புகழைக் கெடுக்கும் செயலைச் செய்யாதீர் இடுக்கண்ணில் இருந்தாலும் இழிவு தரும் செயலைத் செய்யாதீர் சான்றோர் பழிக்கும் வினைகளைச் செய்யாதீர் பழிச் செல்வத்தை விட புகழ்வறுமை சிறந்தது சான்றோர் விலக்கியவற்றை விலக்கிச்செய் அழவைத்துத் தேடியது அழவைத்து ஓடும் வஞ்சகத்தால் தேடிய பொருள் நிலைக்காது வஞ்சகத்தால் வந்த செல்வம் பயன்படாது பச்சை மண்பானையில் நீர்வைக்க எண்ணாதே 67. வினைத்திட்பம் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களாய் அமைந்த திருக்குறளில் இறைவணக்கம் முதல் அதிகாரம் 133வது நிறைவு அதிகாரம் ஊடலுவகை ஆகும். அறுபத்தாறாவது அதிகாரம் வினைத்தூய்மை ஆகும். அறுபத் தெட்டாவது அதிகாரம் வினை செயல் வகையாகும். வினை செயல்வகையில் இருந்து அறுபத்தாறாவது அதிகாரம் நிறைவு அதிகாரம். முன் 66 பின் 66 அதிகாரங்கட்கு இடையே அமைந்துள்ள 67வது அதிகாரமே திருக்குறளின் நடு அதிகாரம், மையமாக மத்தியில் அமைந்துள்ள அதிகாரமாகும். வினைத் திட்பமே திருக்குறளின் மையப் புள்ளி என்பதை உணர்த்தப் படைக்கப்பட்டது போல் அமைந்துள்ளது. ஏனெனில் வினைத் திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு என்பது திருவள்ளுவரின் திட்பமான மொழி. வினை என்னும் சொல்லை அறுபத்தாறு இடங்களில் பயன்படுத்திய திருவள்ளுவர், வினைத் திட்பம், என்பதையோ திட்பம் என்பதையோ வேறு அதிகாரங்களில் பயன்படுத்தியதாய்த் தெரிய வில்லை. கற்பென்னும் திண்மை சால்பென்னும் திண்மையைக் காண முடிகிறது. வினையில்தான் திட்பம் கட்டாயம் வேண்டும் என்பதால் வினைத் திட்பம் என அதிகாரத் தலைப்பையும் அமைத்த நுட்பத்தையும் எண்ணிப் பார்ப்பது ஒட்பம் தரும் என உணர்வோமாக! வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் என்பது உண்மை தான். தூய வினையை மாசற்ற வழியில் செய்ய முற்படுவனுக்குக் கட்டாயம் வினையின் கண் திட்பம் வேண்டும். அதாவது செயலாற்றும் உறுதி வேண்டும். மனத்தில் திண்மை வேண்டும். திண் - திண்பு - திட்பு - திட்பம் என்றாகும். திண்மை -திணுக்கத்தால் (செறிவால்) ஏற்படும் உறுதியாகும். செயலில் ஆழ்ந்த பற்றுக் கொள்ளல், செயலில் முனைந்து நிற்றல், அஞ்சாமை, அடக்கம், முழுக்கவனம், ஆர்வம், அக்கறை, பிடிப்பு, உறுதிப்பாடு, தளராமை, கலங்காமை, தாழாமை, மறவாமை ஒரே நோக்குடன் செயல்படுதல், தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எல்லாம் வினைத்திட்பத்தின் பல்வேறு கூறுகள். நுட்பத்துடன் ஆராய்ந்து திட்பத்துடன் வினை செய்தால், செயற்கரிய செய்யவும் முடியும், உயர்ந்தோர் போற்றுமாறு ஒட்பம் (ஒளி) பெறவும் முடியும். தூய வினைகளையே செய்யத் தேர்வு செய்ய வேண்டும். யார்க்கும் எப்பொழுதும் எள்ளளவும் தீங்கு பயக்கா நல்வழியில் செயல் புரியவும் வேண்டும். மேற்கொண்ட செயலை எப்பாடு பட்டாகிலும் முயன்று வெற்றியுடன் முடிக்கும் உறுதிப்பாடும் வேண்டும். எத்தகைய வினையைச் செய்தால் செய்தவன் நிலைத்த பெருமையையும் அழியாப் புகழையும் பெற முடியுமோ அத்தகைய வினைகளைச் செய்தல் வேண்டும். கல்லணை கட்டுதல் போன்று காலத்தாலும் அழிக்க முடியாத நிலைத்த பயன் தரும் பணிகளைச் செய்தல் வேண்டும். நாம் நம் மன ஆற்றல்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு முகப்படுத்தினால் எச்செயலிலும் வெற்றி காணலாம். பல வேலைகளை விரைந்து செய்ய வழி; ஒரு காலத்தில் ஒரு வேலையைத்தான் செய்ய வேண்டும் என்னும் அயர்லாந்து நாட்டுப் பழமொழியையும் நினைந்து பார்ப்போம். செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம் கையும் காலுந்தான் உதவி - கொண்ட கடமைதான் நமக்குப் பதவி என்னும் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரர் பாடலும் பாடமாக அமையட்டும்! காந்தியடிகள் ஆங்கில அரசுடன் ஒத்துழையாமை இயக்கத்தை உருவாக்கிய போது எல்லாரும் என்னைக் கைவிட்டுச் சென்றாலும், நான் முன் வைத்த காலைப் பின் வைக்காது தன்னந்தனியாய் நின்றே இவ்வியக்கத்தை நடத்திச் செல்வேன் என உள்ள உறுதியுடன் கூறியே களத்தில் இறங்கினார். நாமும் வினைத்திட்பக் குறட்களுக்குள் நுழைவோம். ---------- வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற (குறள். 661) நன்மையான நெறியில் ஒரு செயலை ஆராய்ந்து செய்கின்ற வர்களுக்கு வேறு என்ன வேண்டும்? மனத்திட்பம் அதாவது மனத்தில் உறுதிப்பாடு வேண்டும். ஒரு செயலைச் செய்து முடிக்கும் உறுதி எது என்றால்? மனவுறுதி தான். வேறு வேறு திட்பங்கள் எல்லாம் இருப்பினும் அவை யெல்லாம் மனத்திட்பம் போன்றவை ஆகா என்கிறார். செல்வம் இருக்கிறது; செல்வாக்கும் இருக்கிறது; பதவியும் இருக்கிறது; பரிவாரமும் இருக்கிறது; சுற்றமும் இருக்கிறது; சூழலும் இருக்கிறது; தொழிலும் இருக்கிறது; கருவியும் இருக்கிறது; அவற்றுடன் குடி, படை, நட்பு, அரண் என்பவைகளும் திண்மையாக உள்ளன. அவற்றுடன் தனக்கு உடல் வலிமையும் உண்டு; வலிய துணை வலிமையும் வாய்த்திருக்கிறது. எனினும் தனக்கு மன வலிமை இல்லையேல் எச்சிறு செயலையும் உரிய முறையில் செய்து முடிக்க இயலாது. அஞ்சுபனைக் குஞ்சும் வெருட்டும் என்பது பழமொழி. அஞ்சுபவனுக்கு இருண்ட தெல்லாம் பேய் போலத் தான் தெரியும். மனத்திண்மை இருந்தால் இல்லாமையை இல்லாமை ஆக்க முடியும். தடைகள் எல்லாம் உடைபடும்; புறம்பானவை எல்லாம் உடன்பாடானவை ஆகும். எதிரி எதிரே வாரான்! இடையூறுகளை எல்லாம் தகர்த்தெரிந்து எச்செயலையும் முடிக்க முடியும். ஆகவே, கவிஞன் பாரதி இறைவனிடம் முதலில் வேண்டுவது மனதில் உறுதி வேண்டும் என்பதாகும். மனத்திட்பம் உடைய ஒருவன் உடல் திட்பம் உடைய மற்றொருவனை மிக எளிதில் அடக்கி ஆண்டு விடலாம். ஒரு வட்டரங்குக் காரன் கொடிய சிங்கத்தையும் பெரிய வலிய யானையையும் அடக்கி ஆள்வதைப் போல அடக்கி ஆண்டு விடலாம். பாய்ச்சல் காளை ஒன்று நம் மீது பாய மிக விரைவாய் ஓடி வரும்போது, நாம் அசையாது நின்று அதை உறுத்துப் பார்ப்போமானால் உறுதியாக அது முதலில் நிற்கும் பின் திரும்பி ஓடிவிடும் என்பது உறுதி. கட்டிளங்காளை ஒன்று கட்டுக்கு அடங்காமல் வேகமாகக் கொல்கத்தா வீதியொன்றில் ஓடிவந்தது. தெருவில் நடந்து வந்த மக்கள் எல்லாம் கண்டு அஞ்சி ஓடி ஒழிந்தனர். இளைஞர் விவேகானந்தர் இதனைக் கண்டு வீட்டுக்குள் இருந்து அஞ்சாமல் தெருவிற்கு வந்தார். காளை வரும் வழியில் எதிரே நின்று காளையைக் கூர்ந்து நோக்கிக் கையைக் காட்டினார். ஓடிவந்த காளை நின்றது. திரும்பிப் போகுமாறு கையசைத்தார். சிறிது தூரம் பின்புறம் நடந்தது. விரைந்து திரும்பி இயல்பாக நடந்து சென்றது என்பது வரலாற்று நிகழ்வு. காமராசர் இளைஞராய் இருந்தபோது ஒருநாள் கோயில் யானை பாகனின் கட்டுக்கும் அடங்காது மதம் கொண்டது போல் விருதுநகர் முக்கிய தெருவில் ஓடி வந்தது. கண்ட மக்கள் எல்லாம் அஞ்சி ஓடி மறைந்தனர். அதனை கண்ட காமராசர், விரைந்து கோயிலுக்கு ஓடி யானையைக் கட்டும் சங்கிலியை எடுத்துக் கொண்டு அஞ்சாது யானையின் முன் சென்று, சங்கிலியின் ஒரு முனையை யானையின் துதிக்கையில் கொடுத்தார். யானை அமைதி ஆனாது. சங்கிலியின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு அவர் முன்னே நடந்தார் ஆட்டுக் குட்டிபோல் யானை அவர் பின்னே கோயில் வந்தது என்பதும் நடந்த நிகழ்ச்சிதான். மனத் திட்பமே வினைத் திட்பம். போரிலே கூட புற ஆற்றலினும் மன ஆற்றல் மூன்று மடங்காகும். உலகில் இரண்டு வகையான சக்திகளே உள்ளன. அவை வாளும், மனமுமே. கடைசியில் வாளின் பலம் மனத்தின் பலத்திற்குத் தோற்றுவிடுகிறது என்பதை நாம் எப்போதும் கண்டிருக்கிறோம் என்னும் நெப்போலியனின் கூற்றும் ஒப்பு நோக்கத்தக்கதாகும். மன வலிமையை இழந்து விட்டால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனே! என்கிறார் அறிஞர் கதே. கிட்லர் போர் வீரனாக இருந்த போது, தளபதி தந்த கமுக்கச் செய்தி அடங்கிய அஞ்சலைத் தொலைவில் பாசறையில் இருந்த தன்னாட்டுப் படைத் தலைவரிடம் ஒப்படைக்கக் கொண்டு சென்றார். உயர்ந்த மலையும், பள்ளத் தாக்கும் அமைந்த வழியே கொண்டு சென்றார். பள்ளத்திலிருந்து மலை உச்சி ஏறிக் கீழே பார்த்தார், பகை நாட்டுப் பெரும் படை அணி வகுத்து வந்து கொண்டிருப்பதைக் கண்டார் அஞ்சவில்லை. மனவலிமை மேலோங்கியது. விரைந்து முன்னே சென்று எதிரிப்படைக்கு பின்னோக்கி நடக்க ஆணையிட்டுக் கொண்டே அப்படையை வழி நடத்திக் கொண்டு தந்நாட்டுப்படையின் பாசறை வரைக் கொண்டு சென்று அவர்களைத் திண்டாட வைத்தார். மனத் திட்பமே வினைத்திட்பம் என்பதற்குச் சான்றாய் அமைந்தார். மனவுறுதியே வினையுறுதிக்கு அடிப்படை. ----------- ஊரொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் (குறள். 662) உடன் தொடங்கவும் முடியாது. தொடங்கிய உடனே முடித்து விடவும் இயலாது. நடந்து செல்லும் பாதையில் மேடு பள்ளம்; குண்டு; குழி; கல், மண்; முள், ஆணி; புழு, பூச்சி இருக்கலாம். அவை நம் பயணத்திற்கு இடையூறாய் அமையலாம். அவற்றை ஆராய்ந்து களைய வேண்டிய வற்றைக் களைய வேண்டும்; புறப்பட்டபின் கட்டுப் பாடற்ற ஊர்திகள் வரலாம். கொடிய விலங்குகளின் அச்சுறுத்தல் இருக்கலாம். மழை, வெயில், புயல் போன்றவற்றால் இடையூறு ஏற்படலாம். தளர்ந்து விடக் கூடாது. வினையைத் தொடங்கும் முன்பும், தொடங்கிய பின்னரும் எல்லாம் நல்ல துணையாகவும் உதவியாகவுமே அமையும் என எதிர் பார்க்கக் கூடாது. எந்த இடையூறு இருந்தாலும் நீக்க வேண்டும். செயலாற்றும் போது இடையூறு வந்தாலும் முயற்சியில் தளராது மனஉறுதியுடன் செயல் பட வேண்டும். இடையூறுகளை முன்னமே ஆராய்ந்து கண்டு நீக்க வேண்டும்; கேடு தரத்தக்க வினைகளைச் செய்யாமையும் வேண்டும். இடை யூற்றிற்கு அஞ்சி விலகி விடவும் கூடாது. முன் கண்ட தடையை விலக்குதலும், பின் உற்ற தடைகளுக்குத் தளராமையும், ஆகிய இரண்டும் வினையை வெற்றிகரமாக முடிக்கும் வழி என்பதே வினைத்திட்ப ஆராய்ச்சியாளர் கொள்கையாகும். இமயமலை அதன் கொடுமுடி எவரெசுட்டு சிகரம் ஏறிச் சாதனை படைக்க எண்ணிய போதே பனி, செங்குத்துப் பாறை, மலை வாழ் உயிரினம் போன்றவை மனக்கண் முன் நிழலாடி இருக்கும். அஞ்சாமல் சிக்காமல் செல்லும் வழி முறைகளைக் கண்டுணர்ந்திருப்பார். உணவுத் தொல்லை, பனிப்பொழிவு போன்ற எண்ணற்ற இடையூறுகளின் குறுக் கீட்டையும் கண்டு அஞ்சாமல், மலைக்காமல், தளராமல் சென்றதால் தான் டென்சிங்கால் வெற்றிக் கொடி நாட்ட முடிந்தது. வினை தொடங்கும் முன் உள்ள தடை நீக்கமும், தொடங்கிய பின் ஏற்படும் தடை கண்டு தளராமையுமே வினைத் திட்பக் கொள்கை ஆகும். ---------- கடைக் கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் (குறள். 663) செயலாற்றப் பிறந்தவன் மனிதன். தம் அறிவுக்கும், திறத்திற்கும் ஏற்ற செயலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒன்றைச் செய்யத் தொடங்கும் முன் அதற்குத் தேவையான பொருள், அதற்கு ஏற்ற கருவி, தகுந்த காலம், வினை பற்றிய முன்னறிவு, வினை செய்வதற்கு ஏற்ற இடம் போன்றவற்றைப் பற்றி, நன்கு ஆராய்ந்து தெளிந்து செயலில் இறங்க வேண்டும். வினைகளில் வெளிப்படைத் தன்மை இன்றி மறைத்துச் செய்ய வேண்டிய வினைகளும் உண்டு. அத்தகைய வினைகள் முற்றுப்பெறும் வரை அப்பணி தொடர்பான எந்தச் செய்தியையும் பிறர் அறிந்து கொள்ளா வகையில் மிகக் கமுக்கமாகச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்வதே வினை ஆண்மை, அதாவது வினை ஆளுமை, வினைத் திட்பம் எனப்படும். வினையைத் தொடங்குவதற்கு முன் பல்வேறு கோணங்களில் பல்வேறு முறைகளில் பல்வேறு நாட்களில், பல்வேறு பட்டறிவாளர் களுடன் கலந்து வினையின் தன்மைக்கு ஏற்ப ஆராய்ந்து வினை செய்ய முற்படுவது நல்ல அணுகு முறைதான். தொடங்கிய பின் இடையில் மனக் குழப்பமோ, கலக்கமோ, தளர்ச்சியோ இன்றி இடையில் எது நேரினும் அஞ்சாது அரை குறை இன்றி எடுத்த வினையை வெற்றிகரமாக, முடிப்பது தான் வினை ஆண்மை வினைத்திட்பம் என்று அறிஞர்கள் கூறுவர். எடுத்த செயல் முற்றுப்பெறும் முன்பே பிறர் அறிந்தால், அல்லது பிறர் அறிந்து கொள்ளுமாறு பெருமை பேசித் தம்பட்டம் அடித்தால், அது வீண்வம்பை வலியச் சென்று வாங்கியதற்கு ஒப்பாகும். வினைக்கு வேண்டாத இடையூறுகள் ஏற்படாலாம். வினையை மேற்கொண்டு தொடர முடியாமல் எதிர்ப்போ, பிறர் போட்டியோ ஏற்படலாம். என்ன நிகழும் எனச் சொல்ல முடியாது. உலகம் விரிந்தது. ஒவ்வொருவரும் தத்தம் முன்னேற்றமே குறி என எண்ணும் மனத்தவராய் இயங்கினால் முட்டலும் மோதலுமே நிகழும். ஆகவே, வினைத்திட்பம் வாய்ந்தவர் செய்யும் செயல் முற்றுப் பெறும் முன்பு எவரும் அறிந்து கொள்ள இடம் தர மாட்டார். எடுத்த வினையை இறுதிவரைச் செய்து முடிக்காமல் அரை குறையாக விட்டால், அதுவரை மேற்கொண்ட முயற்சி, செய்த செலவு எல்லாம் வீணாகும். அரைக் கிணறு தாண்டியவனுக்கு ஏற்பட்ட முடிவு போல் ஆகும். வயலுக்கு நீர்வளம் பெருக்க ஒருவன் 10 மீட்டர் ஆழம் வரைக் கிணறு தோண்டினான். தண்ணீரைக் காண முடியவில்லை. இடத்தை மாற்றி நான்கு இடங்களில் தோண்டினான் நீர் வரத்து இல்லை. கைப்பொருள் எல்லாம் செலவானது. கடனும் வாங்கினான். வருவாய் இல்லை. நிலத்தை விற்றே கடனை அடைக்க முடிந்தது. தொட்டதை முடிக்காமல் வேறு வேறு முயற்சி மேற்கொண்டதால் வந்தவினை. நீர்வளம் இல்லாநிலம் என்று சொல்லி ஒருவன் குறைந்த விலைக்கு வாங்கினான். முன்தோண்டப்பட்ட கிணற்றில் மேலும் 5 மீட்டர் தோண்டினான் நீர் வெள்ள மெனப் பெருகிறது. சில ஆண்டுகளிலே நல்ல வளமும் வளர்ச்சியும் எய்தினான். இடையில் முயற்சியைக் கைவிட்டால் நீக்க முடியாத் துன்பமே நிலைக்கும். வினை நன்றாயின் விடாது செய்க! மதிநாடித் தொடங்கிய தொன்றோ முற்ற முடிக்குந் தொழிலல்லால் இடங்கெட வெல்வாய் ஊறுகிடைத்தால் இடையாதீர் எனக் கம்பர் சாம்பவான் கூற்றாகப்பாடும் பாடல் வரிகள் குறள் சிந்தனைக்குத் துணை நிற்கும். இங்கிலாந்து நாட்டின் தலைமை அமைச்சர், தம் அமைச்சர் அவையில் புதிதாக ஒருவரை இணைத்துக் கொள்ள இருப்பதாய்க் கமுக்கமாகத் தன் துணைவியாரிடம் மட்டும் உரைத்தார். அச்செய்தி கமுக்கமாகப் பல இடங்களில் பரவி இரண்டு நாளில் நாழிதழிலும் வந்து விட்டது. அதனால் அவரை அமைச்சர் அவையில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு அமையாது போயிற்று. ஒருவர் குறிப்பிட்ட ஒரு தொழிலைத் தொடங்க ஒரு நல்ல இடம் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். போய்ப் பார்த்து வந்தேன். மிகப் பொருத்தமான இடம் என்று நண்பரிடம் உரைத்தார். அச்செய்தி பக்கத்தில் நின்ற ஒருவர் செவியிலும் விழுந்தது. அவர் சில நாள்களாகவே இடம் தேடிக் கொண்டு இருப்பவர். மிக விரைந்து சென்று அந்த இடத்தைப் பார்த்தார். நிறைவாக இருந்தது. விலை பேசி முன் பணம் தந்து எழுதி வாங்கி விட்டார். அப்படி எத்தனையோ இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு! செயல் முடியும் வரைக் கட்டாயம் கமுக்கம் தேவை. ---------- சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் (குறள். 664) இதைச் செய்வேன், இவ்வாறு செய்வேன் என்று சொல்லுவது எவர்க்கும் எளிதே ஆகும். ஆனால்,சொல்லியவாறு செய்து முடிப்பது எளிமை அல்ல. செயலில் இறங்கும் போதுதான் அதன் அருமைப்பாடு புரியும். ஆகவே, வாயால் சொல்லிக் கொண்டிருப்பதை விடுத்து உள்ளத்தால் திட்பமாக எண்ணிச் செயல் புரிந்து பழக வேண்டும். ஒழுக்கத்தைப் பற்றி விரித்துரைத்தலும், போதித்தலும் எளிய செயல். அதில் தளராது நின்று நடத்தலோ மிகமிக அரிய செயல். அதனைச் செய்து சிறிதும் ஒழுக்கத்தில் தவறாது நிற்பவன் இராமன் என்பதைக் கம்பர், உரைசெயற்கு எளிதும் ஆகி, அரிதுமாம் ஒழுக்கில் நின்றான் என அறிமுகப்படுத்துகிறார். செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான் செய்யத் தெரியாதவன் போதிக்கிறான் என்பது அறிஞர் பெர்னாட்சாவின் கருத்து. சொல் வேண்டாம்; செயலில் காட்டு என்பது சீன நாட்டுப் பழமொழி. தேசத் தந்தை காந்தியடிகள் சொன்னதையே தவறாது செய்து முடித்தார். செய்ய முடிவதையே சொன்னார். இரண்டிற்கும் முரண்பாடு இன்றியும், சொல்லுதலிலும் எளிமையும் உண்டு; அருமையும் உண்டு. அங்ஙனமே சொல்லிய வண்ணம் செய்வதில் எளிமையும் உண்டு; அருமையும் உண்டு! அரிய செயலையும் அஞ்சாது தயங்காது, தளராது செய்து முடிக்கும் மனத்திட்பம் உடையவராய் விளங்கியமையால் நீங்கா உயரிடம் பெற்றார். 1965ஆம் ஆண்டு முகம்மதிய நாடான மலேசியா, சிங்கப் பூரைத் தன் ஆளுமையில் இருந்து வெளியேற்றியது. மக்கள் கண்ணீர்விட்டுக் கலங்கினார்கள். மக்கள் தலைவர் லீக்வான்யூ துயரப்படுவதாலோ, கூடி அழுவதாலோ துன்பங்கள் மறையாது. வாருங்கள் நமது நாட்டை நாமே உருவாக்குவோம் என்று குரல் கொடுத்தார். சிங்கப்பூரின் இருபது இலக்கம் மக்களும் அவர் பின்னால் அணிவகுத்து நின்றனர். முதலில் நாம் வாழும் இடம் தூய்மையாக இருந்தால்தான் முன்னேற்றத்தைப் பற்றியே சிந்திக்க முடியும் எனக் கூறித் துப்புரவு பணியில் இறங்கினார் குடியிருக்க வீடு, உணவு தேடிக் கொள்ள வேலை, அறிவை வளர்த்துக் கொள்ள கல்வி ஆகிய மூன்றும் இருந்தால் நாடு முன்னேற முடியும் எனத் திட்டமிட்டு லீக்வான்யூ மூன்றிலும் முழுக்கவனம் செலுத்தினார். முன்னேறியே ஆக வேண்டும் என்னும் வெறியில் சிங்கப்பூர் மக்கள் ஒரு நாளுக்கு பன்னிரண்டு மணி நேரம் உழைத்தனர். குடிசைகள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆயின. தொழில் பேட்டைகளைத் தொடங்கினார். வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்தது. வெளி நாட்டவரும் தொழில் தொடங்க வாய்ப்பு அளித்தார். வங்கிகளைத் தொடங்கினார். 1975ஆம் ஆண்டு மேலை நாடுகளில் கணினி எழுச்சி தோன்றியது. ஒரு நாள் கூட நாம் கணினிப் பயன் பாட்டில் பிந்திவிடக் கூடாது எனக் கருதி கணினிப் பயன்பாட்டைப் பெருக்கினார். ஆண்டுதோறும் அறுபது இலக்கம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வரத் தொடங்கினர். துணைத் தொழில்கள் பெருகின. வெளிநாட்டுப் பணம் குவியத் தொடங்கியது. முப்பத்தொரு ஆண்டுகள் நாட்டின் தலைமை அமைச்சராக இருந்து அந்த நாட்டின் தலை எழுத்தையே மாற்றி எழுதியவர் லீக்வான் யூ. சொல்லிய வண்ணமே அரிய செயலையும் செய்து உலகத்தவர்களே வியந்து பார்க்க வைத்தவர். சொல்லுவது எவருக்கும் எளிது எனச் சொல்லிவிட்டு மட்டும் செல்லாது. சொல்லிய வண்ணம் அரிய செயலையும் செய்து முடிப்பவர்களே வினைத்திட்பம் உடையவர்கள். அத்தகைய வினைத் திட்பர் தொகை வளர்ந்து பெருக வேண்டும். --------- வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம், வேந்தன் கண் ஊறெய்தி உள்ளப் படும் (குறள். 665) ஒரு நாட்டின் நிறைவான முன்னேற்றம் வினை ஆண்மையர் கைகளில் உள்ளது. நாட்டை வலிமையும், வளமையும் பொருந்திய நாடாக என்றும் வைத்திருக்க வேண்டும் என எண்ணிச் செயல்படும் தலைமைப் பொறுப்பு அமைந்த ஆட்சியாளர்கள் தங்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, தாம் தாம் மேற்கொண்ட செயல்களைத் தம் முழு அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்தி, எவரும் குறைகாண்பதற்கு வாய்ப்பும் வழங்காது, மிகச் செம்மையாகவும், நுட்பமாகவும், சிறப்பாகவும் செய்து முதற்கண் தாம் மனநிறைவு அடைவர். தொழில் நிறுவனம் வளர்வதால் நிறுவனரின் பாராட்டும் கிட்டும். வினைத் திட்பப் புகழ் ஒளி பல திசைகளிலும் பரவும். நிறைவில் நாடாளும் ஆட்சியாளரின் செவிக்கும் செய்தி சென்று அவர்கள் உள்ளத்தில் மதிப்பான இடம் வழங்குவர் நாடு அறிய நல்ல பாராட்டும் தானே கிட்டும். மனத்திட்பத்தால் தனிச்சிறப்புடன் விளங்கும் செயல் ஆண்மையரின் படைப்பு, அல்லது உழைப்பின் மேன்மை நாடு போற்றும் நல்ல நிலையை ஈட்டித் தரும். காந்தியடிகள் பல இன்னல்களுக்கிடையில் ஆங்கிலப் பேரரசோடு பொருது வீரநடை இட்டார் என்றால் அவரது உள்ளம் எத்தகைய உறுதி வாய்ந்த தாய் இருந்திருக்கும். அவர் எச்சூழலிலும் உள்ளம் தளராது முன்னேறிக் கொண்டே சென்றார். அவரது போக்கைக் கண்டு உலகமே வியந்தது. வங்கத்தைச் சார்ந்த சந்திர மண்டல ஆய்வியல் அறிஞர் விட்ணுராம் நர்லிக்கர். அவர் அமெரிக்காவில் பணி புரிந்தார். அவர்க்கு ஊதியம் இவ்வளவு என்று கணிப்பது முறைமையன்று என எண்ணிய நிறுவனம் தொகை நிரப்பாத காசோலையை வழங்கியது. வினைத் திட்பத்திற்குக் கிட்டும் மதிப்பு அளவிடற்கு அரியது. நன்கு மாடு வளர்ப்போரை, சிறப்பாக வேளாண்மை செய் வோரை, ஒவ்வொரு துறையிலிலும் சிறப்பாகப் பணிபுரிவோரை, தொண்டர்களை, படைப்பாளர்களை, அரசு தக்க நிகழ்வில் பாராட்டிப் பெருமைப் படுத்துகிறது. வினைத் திட்பத்தால் வீறு எய்துவோம்! விருது பெறுவோம்! மாண்புறு வோம்! நாடு மலர்ச்சியும், வளர்ச்சியும், எய்தட்டும். 1330 குறட்பாக்களில் சரிபாதியாகிய 665ஆவது குறளை நிறைவு செய்வோம். குறட்பயன் பாதி கண்ட நாம் மீதி காண்போம்! ------------ உள்ளத்தாலும் வெகுளுதலை நினையாதவன். நினைத்த தெல்லாம் நினைத்த உடனே அடைவான் என்பதை, உள்ளிய எல்லாம் உடனெய்தும், உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் (குறள். 309) ஒருவன் எண்ண வேண்டியதை எண்ணி, அதனை மறவாது செய்வானானால் அவன் எண்ணியது எண்ணியவாறு எளிதில் நிறைவேறும் என்பதை, உள்ளிய தெய்தல் எளிதுமன், மற்றுந்தான் உள்ளிய துள்ளப் பெறின் (குறள். 540) எனப் பொச்சாவாமை அதிகாரத்திலும் கூறிய கருத்துகளின் அடிப்படையில் மலர்ந்த குறளே, எண்ணிய எண்ணியாங் கெய்துப, எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (குறள். 666) மன உறுதியால் மலர்ந்த செயல் உறுதி, வெற்றியை உறுதியாய் நல்கும். ஒரு செயலைச் செய்ய வேண்டும் என எண்ணியவர், தம் எண்ணத்தை எக்காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ளாது உறுதியான மன நிலையில் முழுமனத்துடன் ஈடுபட்டால், தாம் நினைத்த செயலை நினைத்த படியே முடித்து அதனால் அடைய எண்ணிய பயனையும் எண்ணியவாறே அடைவர் என்பது உறுதி. கமால் பொறுப்பில்லாமல் அலைவதாகக் கருதிய தாய் கமால் நீ என்னிடம் நான் ஒரு பெரிய மனிதன் ஆகப் போகிறேன் என்று சொன்னாயே அதற்கு ஏற்ற காரியமா? இது என்று வினவினாள். கமால் தாயே நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், கமால் பெரிய மனிதன் ஆகிறானா! இல்லையா? என்று என்று கூறி வீட்டை விட்டுக் கிளம்பியவன் தான். நான் பிறந்த பொன்னாடே நீ ஏன் இப்படி நலிந்து கிடக்கிறாய்? உன் நோயை நீக்க ஏன் எவரும் முன்வரவில்லை! யார் காப்பாற்றினாலும், காப்பாற்றாவிட்டாலும் நான் காப்பாற்றுவேன் என்று கூறிக் கொண்டு அதற்கேற்ற முயற்சியில் இறங்கி அயராது பாடுபட்டுத் துருக்கி நாட்டைத் தூக்கி நிறுத்தினான். அவனைத் தான் துருக்கி நாடு எங்கள் தந்தை என்று போற்றுகிறது. திண்ணிய எண்ணம், எண்ணியதைத் திண்ணமாய் அடையும் என்பதற்கு நல்லதொரு வரலாற்றுச் சான்றாகும். அலெக்சாண்டர் டுமாசு பிச்சை எடுத்துச் சிறை சென்றவர் தான் என்றாலும் எழுத்துப் பணியை விடாது செய்தார். 200 நூல்கள் எழுதினார். உலகப் பெரும் எழுத்தாளர் எனப் போற்றப்படுகிறார். ஒரு வேளை உணவிற்கு வழி இல்லை. மனைவியையும் தாயையும் காப்பாற்ற வேண்டிய நிலை. இப்படிக் குடும்ப நிலை இருந்தாலும் அவர் எழுதிக் கொண்டே இருந்தார். அவருடைய எழுத்துகளை எவரும் ஏறிட்டும் பார்க்கவில்லை. வெளியீட்டா ளர்கள் அவருடைய எழுத்து களைக் குப்பையெனத் தள்ளினர். ஆனால் அவர் வறுமையுடன் போராடினாலும் முயற்சியில் தளராது எழுதிக் கொண்டே இருந்தார். தன்னுடைய படைப்புகள் என்றாவது ஒருநாள் மதிக்கப்படும் என்று நம்பினார். நம்பிக்கை யிலே சில ஆண்டுகள் கழிந்தன. நம்பிக்கை வீண்போகவில்லை. அவருடைய படைப்பு உலகப் புகழ் பெற்றது. பணமும் புகழும் அவரைத் தேடி ஓடி வந்தன. அந்தத் திண்ணிய எண்ணத்து எழுத்தாளர் எமிலிசோலா எண்ணியாங்கு எய்தினார். ஏழ்மையிலும் தனிமையிலும் இருந்த கணித மேதை இராமானுசம் அதைப் பெரிது படுத்தாமல் கணக்கில் முழுக்கவனம் செலுத்தினார். கணிதச் சமன்பாடுகளைப் போட்டுப் பார்க்க நல்லதாள் கூட வாங்கக் காசில்லாமல் பழைய தாள்களைப் பயன்படுத்தியது உண்டு. குடும்பத்தை விட்டுப் பிரிந்ததால் ஏற்பட்ட ஏக்கம் அவரை வாட்டிய போதும் அவற்றை எல்லாம் புறந்தள்ளிய மனஉறுதிதான் உலகமே வியந்து, இன்றும் விடை கண்டு பிடிக்க முடியாத கணித உண்மைகளை உலகிற்கு வழங்கியது. முனிவில்லார் முன்னியது எய்தாமை இல் என்னும் பழமொழியும், இனியாரும் இல்லாதார் எம்மில் பிறர்யார் தனியேம்யாம் என்றொருவர் தாம்மடியல் வேண்டா முனிவில ராகி முயல்க; முனிவில்லார் முன்னியது எய்தாமை இல் என்னும் பழமொழி நானூறுப் பாடல் கருத்தால் ஒத்ததாகும். நினைத்ததை முடிப்பவன் நான் நான் என்று முழங்காது முடிப்போமாக! ------------ உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி அன்னார் உடையது (குறள். 667) திருவையாறு, திருவில்லி புத்தூர்த் தேர். உருவத்திலும் உயரத்திலும் மிகப் பெரியது. உருண்டோடும் மிகப் பெரிய அத்தேர் போன்ற பெரிய மனிதர்களும் உள்ளனர். உருளையில் பொருத்தப்பட்ட அச்சுக் கழன்று விடாது செருகும் அச்சாணி போன்ற மனிதர்களும் உலகில் உள்ளனர். முழுத்தேரை நோக்க உருளை ஆகிய சக்கரம் உருவத்தில் சிறியது தான். ஆனால் சக்கரம் இல்லையேல் தேரை உருண்டோடச் செய்ய இயலாது. சக்கரத்தின் தோற்றத்தோடு ஒப்பிடும் பொழுது அச்சு மிகச் சிறியது. ஆனால் அச்சு இல்லையேல் சக்கரத்தால் பயன் இல்லை. அச்சின் தோற்றத்தோடு ஒப்பிடும் பொழுது கடை ஆணி மிகமிகச் சிறியதுதான் என்றாலும் கடையாணி பொருத்தாமல் தேரைச் செலுத்த முடியாது. சிந்தித்துப் பார்த்தால் மிகப்பெரிய தேரில் மிக முக்கிய உறுப்பு அச்சாணி ஆகும். வினைத் திட்பத்தால் தேர் போன்று உயர்ந்தவர்களும் நாட்டில் இருக்கலாம். வலிய சக்கரம் போன்றவர்களும் இருக்கலாம். அச்சுப் போன்றவர்களும் இருக்கலாம். அச்சின் கடையாணி போன்றவர்களும் இருக்கலாம். உருவம் பெரியதா? சிறியதா என்பது முக்கியமன்று. செயலே முக்கியம். ஆகவே, வெளித் தோற்றத்தைக் கண்டு, ஒருவர் தோற்றத்தில் எளியவராய், சிறியவராய், மெலியவராய், உடற்குறை உடையவராய், பொலிவற்றவராய் இருக்கிறாரே என்று எண்ணி எவரையும் இகழக் கூடாது. ஏனெனில், உருண்டோடும் மிகப் பெரிய தேரின் ஓட்டத்திற்கே அடிப்படையாய் அமைந்துள்ள அச்சாணி மிகச் சிறியது; எளிமையானது. தோற்றத்தில் அச்சாணி போன்ற எளிமையானவரும் வினைத் திட்பத்தால் உலகமாகிய தேரின் அச்சாணியாய் அமைந்து செயல்பட்டு உலகைத் தாங்கிப் பிடிப்பவர்களும் இருப்பர். ஆகவே, எவரையும் இகழக் கூடாது. எளிமையான குறைந்த உடையை அணிந்தே உலா வந்தவர் காந்தியடிகள் அவரால் நாடு பெற்ற நற்பயன் சொல்லில் அடங்காது. பாரதத் தலைமை அமைச்சராய்ச் சிறிது காலமே இருந்தாலும் நாடுபோற்றும் உயர் மனிதர் இலால் பகதூர் சாத்திரி உருவத்தால் குட்டையானவர்தான். தமிழர்களால் மறக்க முடியாத மாமனிதர் பேரறிஞர் அண்ணா உயரம் குறைந்தவர்தான் தோற்றப் பொலிவும் குறைந்தவர்தான். அதுபற்றிக் கவலைப்பட்டவரும் இல்லை. உடையும் மிக எளிய உடையே அணிந்தவர்தான். ஆனால், அச்சாணி போன்று விளங்கினார். பலகற்றோம் யாமென்று தற்புகழ்தல் வேண்டா அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும் சில கற்றார் கண்ணும் உளவாம் பல கற்றார்க்கு அச்சாணி அன்னதோர் சொல் என்னும் அறநெறிச் சாரப் பாடல் அச்சாணி உவமையுடன் கைக்குடை எடுத்துக் காட்டையும் காட்டி விளக்குவது அருமை. மன்னன் மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளுள் ஒன்றென இராமன் கூறுவதாகக் கம்பர், சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யேல் என்பதையும் எண்ணிப் பார்க்கலாம். மாணியாம் படிவ மன்று மற்றிவன் வடிவம் மைந்த! ஆணியிவ் வுலகுக் கெல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற சேணுயர் பெருமை தன்னைச் சிக்கறத் தெளிந்தேன் பின்னர்க் காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறிக் கண்ணன். என்னும் கம்பராமாயணப் பாடலில் அனுமனை இராமன் பாராட்டி, இளவலுக்கு உரைக்கும் போது வள்ளுவத் தாக்கத்தால் கம்பர், ஆணி இவ்வுலகுக் கெல்லாம் எனப் பாராட்டுகிறார். அச்சாணி இல்லாத்தேர் முச்சாணும் ஓடாது என்பது பழமொழி. தேறு கா ரியத்தை முடிப்புழி யன்றிச் செயன்மொழி யாதியால், இடையே வேறுபோ மாறு விளக்குறார் துணிந்த வினைதுளங் காதுவல் விரைவார் வீறுசேர் இவரை உருவுகண் டெள்ளா வேந்தனே வேந்தனாம் மைந்தா என்பது குறளுக்கு விநாயக புராணம் தரும் விளக்கமாம். மகா பாரதத்தில் வீட்டுமப்பருவம் ஒன்பதாம் போர்ச் சருக்கத்தில் கர்ணன் கூறிய கருத்தைக் கேட்ட துரியோதனன் தனது அடுத்த தம்பியை நோக்கி, துச்சாசனனே! இந்தக் கர்ணன் மொழிந்ததை நீபோய் வீடுமனுக்குச் சொல்வாயாக! என்று சொல்ல, நஞ்சை உடையதும், படமெடுத்தாடும் தன்மை உடையதுமான பாம்மை ஒத்த கொடிய அத்துச்சாசனனும், அவ்வீடுமன் உள்ள இடத்தில் ஒரு நொடி அளவுப் பொழுதிலே சென்று சேர்ந்து, விற்கள் பொருந்திய அழகிய எல்லாப் படைகளுமாகிய தேருக்கு நடுவிலே ஒரு அச்சாணியை ஒத்த அவ்வீடுமனுக்கு இந்தக் கர்ணன் மொழிந்ததை ஒழுங்காகச் சொன்னான். இது கர்ணன் கூறியதை வீடுமனிடம் தெரிவிக்குமாறு துரியோதனன் துச்சாதனனிடம் சொல்ல அவன் அங்ஙனமே கூறியதைத் தெரிவிக்கும் பாடல் வருமாறு:- துச்சாதனா இம் மொழி சென்று கங்கை சுதனுக்கு உரைக்க எனவே நச்சு ஆடு அராவை அனையானும் அங்கோர் நொடியுற்று போழ்தின் நடவா எச்சாபம் மன்னும் அணியூகம் ஆன இரதம் தனக்கு நடுவோர் அச்சாணியான அவனுக்கு இவன்சொல் அடையவே புகன்றனன் ஆரோ. பெரும் படையாகிய தேருக்கு அச்சாணி போன்றவன் வீடுமன் என்னும் வில்லிபுத்தூரார் உருவகம் நல்லதோர் இலக்கியச் சான்றாகும். ------------ கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல் (குறள். 668) அறிவு கலங்காது ஆராய்ந்து தெளிந்து தொடங்கிய வினைக் கண் மனம் துளங்காது உடலால் தூக்கம் கடிந்து விரைந்து செயல் புரிக எனக் குறிப்பால் பொருள் உணர்த்தும் சொற்களை வேண்டிய இடத்து இணைத்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தாம் செய்ய விரும்பும் தொழில்களைப் பட்டியலிட்டு அவற்றில் எதைச் செய்வதற்கு நமக்குத் தகுதி இருக்கிறது என்பதைக் கண்டுணர்ந்து அச்செயலைச் செய்வதால் நன்மையும் புகழும் பெற முடியுமா என்பதையும் ஆராய்ந்து குழப்பம் இன்றித் தெளிவான முடிவுக்கு வருதல் வேண்டும். இதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா? கூடாதா? என்ற ஊஞ்சலாட்டம் இன்றி முடிவெடுத்த பின்னரே தொடங்க வேண்டும். தொடங்கிய பின் குழப்பமோ, கலக்கமோ, வருத்தமோ தயக்கமோ இன்றி எடுத்த பணியே குறியாய் ஊக்கத்துடன் காலநேரம் பாராது கருமமே கண் எனக் கருதி காலந் தாழ்த்தாமலும் விரைந்து சிறப்புடன் செய்து முடிப்பதைக் கடமையாய்க் கொள்ள வேண்டும். செய்யும் வினையை நன்கு ஆராய்க! காலம் தாழ்த்தாது விரைந்து செய்க! மயக்கத்துடன் தொடங்காதே! தொடங்கிய பின் தூங்கி விடாதே! நான் எப்பொழுதும் எனது மனத்தைத் தளர்ச்சி அடைய விட்டு விடுவது இல்லை. எச்செயலைச் செய்து முடிக்கவும் குன்றா உழைப்பும், குறையா முயற்சியும் கூர்மையான அறிவும் ஆகியவை மிகவும் தேவை என்கிறார் வினைத் திட்பத்திற்கு எடுத்துக் காட்டாய் செயல்பட்ட அறிவியல் அறிஞர் எடிசன். எடிசனுக்கு அறுபத்து மூன்று அகவை ஆவதற்குள் அவர் கண்டு பிடித்து உலகிற்கு வழங்கிய புதிய கருவிகள் 1328, 2005க்கு மேற்பட்ட கண்டு பிடிப்புகளைப் பதிவு செய்து இருந்தார். தமிழ்த் தாத்தா அறிஞர். உ. வே. சாமி நாத ஐயர் அவர்களிடம் சீவக சிந்தாமணி ஏடு ஒன்றை வழங்கிச் செப்பம் செய்து அச்சிடுமாறு வேண்டியதுடன் அதற்காகும் செலவுத் தொகையைத் தானே வழங்குவ தாகவும் கூறிப் பதிப்புப்பணியில் ஈடுபடத் தூண்டியவர். அப்பொழுது கும்பகோணத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்த சேலம் இராமசாமி முதலியார் அவர்கள். உ. வே. சா. அந்நூல் ஏடுகளைப் பிரித்துப் பார்த்தார். அதில் பல பகுதிகள் சிதைவுற்றிருந்தன. சில இடங்களில் எழுத்துகள் தெளிவற்றுக் காணப்பட்டன. எனவே, அதை ஒப்பு நோக்கிப் பதுப்பிக்க வேறு ஏடுகளும் தேவைப்பட்டன. ஆகவே, ஏடு தேடும் முயற்சியில் முனைந்து ஈடுபட்டார். இரவு பகல்; மழை, பனி, காடு, மேடு என்றெல்லாம் பாராது ஊர் ஊராக அலைந்தார். உணவு உறக்கம் மறந்து கணக்கில் அடங்காத் துயரங்கட்கு ஆட்பட்டார் எனினும் அவற்றை எல்லாம் பொருட் படுத்தாது அலைந்து ஆயிரக் கணக்கான ஏடுகளைத் திரட்டினார். அவற்றுள் சீவக சிந்தாமணி ஏடுகள் 25 அகப்பட்டன. அவற்றை ஆழ்ந்து நோக்கிச் செப்பமான படியை உருவாக்குவதில் பட்ட துயரமும் மிகுதி, உழைப்பும் மிகுதி, உள்ளம் தளராது ஊக்கம் குலையாது ஆறாண்டுகள் ஆற்றிய அரும்பணியால் கிடைத்த மணியே சீவக சிந்தாமணி ஆகும். தமிழ்த் தாத்தாவின் வாழ்வு குறளுக்கு எடுத்துக் காட்டான வாழ்வு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகழ்வாய்ந்த மனிதர்களில் போனபர்ட் நெப்போலியன் மிக்க புகழும் அதிக ஆற்றலும் வாய்ந்த மனிதனாவான். உண்மை உழைப்பின் மூலம் அத்தகைய உயர்ந்த நிலையை அவன் அடைந்தான். ஊக்கமுடைமை, தெரிந்து வினையாடல் இவற்றின் சார்பாளனாக நெப்போலியன் இருக்கின்றான். அவனிடம் ஒன்றும் மந்திர தந்திரங்கள் இல்லை. அற்புதங்கள் இல்லை. அவன் ஒரு உழைப்பாளி; உழைப்பாளி களுக்கெல்லாம் தலைவனான அறிவுள்ள உழைப்பாளி; அவன் ஒரு போதும் உற்சாகமற்று, சோர்ந்து போய் மதியீனனாய் இருக்க மாட்டான். உறுதியுடனும் திட்டத்துடனும் காலம் அறிந்து நடப்பான். அவன் கல்லாலும் செம்பாலும் செய்யப்பட்டதைப் போன்ற ஒரு மனிதன் அல்லன்; ஆகாரமோ உறக்கமோ கொஞ்சமும் இல்லாதபடி பல நாள்கள் சேர்ந்தாற் போல் குதிரை மேல் அமர்ந்து சென்று கொண்டே இருப்பான்; குதிரை அதன் முழு வேகத்தில் செல்லும்; அத்தகைய பேராற்றல் உடையவன்; பாய்ச்சலில் புலியைப் போன்று இருப்பான். அவன் தான் செய்ய வேண்டிய செயலை உணர்வான்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு அவசரக் கட்டத்திலும் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதை அறிந்த மனிதன் அவன். அவன் என்ன செய்ய வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். ஆகவே அவன் குறிக்கோளை நோக்கிப் பறந்து சென்றான். தன் உயிரையே பயணம் வைத்து அதன் முடிவுக்காகப் பாடுபட்டான். என்ன செய்ய வேண்டு மென்று தீர்மானிக்கிறானோ அந்தத் தீர்மானத்தைத் தன் முழுப் பலத்தையும் முழுச் சத்தியையும் கொண்டு நிறைவேற்றினான். அவன் அறுபது போர்களில் போரிட்டான். ஒவ்வொரு வெற்றியுமே ஒரு புதிய ஆயுதமாக இருந்தது எனக் கூறுபவர் அறிஞர் எமர்சன். கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செய்த செயல் வீரன், வினைத் திட்பத்திற்கு எடுத்துக் காட்டாய் வினை மேற்கொண்டவன் நெப்போலியன். சின்னய்யா மிகச் சிறந்த நிர்வாகி. அவரது திறமையால் தான் தினத்தந்தி மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்தது. எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டு இருப்பார். விற்பனையில் தினத்தந்தி மிகப் பெரிய சாதனை படைத்திருக்கிறது என்றால், அதற்குச் சின்ன அய்யாவின் கடும் உழைப்புத்தான் காரணம். நேரு இறந்தபோது தினத்தந்தி 5 லட்சம் பிரதிகள் விற்பனையானது. அது அப்போது மிகப் பெருஞ்சாதனை. அச்சிடுவது, எல்லா ஊர்களுக்கும் அனுப்புவது, விற்பனையைக் கண்காணிப்பது என்பதெல்லாம் மிகப் பெரும்பணி. அத்தனை பணிகளையும் ஒரு சேரக் கவனித்து எந்த இடத்திலும் சிறு தவறும் நேராமல் பத்திரிக்கையை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். அதே நேரத்தில் எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் எது எந்த அளவில் வர வேண்டும் என்பதிலும் அவரது தந்தைக்கு இணையான திறமையைப் பெற்றவர் எனத் தினத்தந்தியின் அதிபர் பா. சிவந்தி ஆதித்தன் பற்றிக் கூறுபவர் தினந்தந்தி இதழின் மேனாள் ஆசிரியர் சண்முக நாதன் அவர்கள். பா. சிவந்தி ஆதித்தன் அவர்கள் குறள் காட்டும் வினைத்திட்பர் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்கியவர். ------------- துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை (குறள். 669) நாம் எத்தகைய வினைகளைச் செய்ய முற்படுதல் வேண்டும்? செய்யும் வினைகளால், செய்பவருக்கும், குடும்பத்திற்கும், சுற்றத்திற்கும், நாட்டுக்கும், நிறைவில் உலகிற்கும் நன்மை இருக்க வேண்டும்; வளர்ச்சி இருக்க வேண்டும்; முன்னேற்றம் இருக்க வேண்டும். புகழும் பெருமையும் கிட்ட வேண்டும். சுருங்கச் சொன்னால் இன்பமாகிய பயன் கிடைக்கும் வினைகளையே செய்ய வேண்டும். எத்தகைய வினைகளைச் செய்யக் கூடாது? நாம் செய்ய முற்படும் வினை சான்றோர் பழிக்கும் வினையாக இருக்கக் கூடாது; அறவோர் விலக்கச் சொன்ன வினையாக இருக்கக் கூடாது. இழிவு தரும் வினையாக இருக்கக் கூடாது. பிறரைத் துன்புறுத்தி அழச் செய்யும் வினையாக இருக்கக் கூடாது. பெற்ற புகழையும் கெடுக்கும் வினையாக இருக்கக் கூடாது. நன்மை பயவா வினையாக இருக்கக் கூடாது. ஆக்கம் கெடுக்கும் வினையாக இருக்கக் கூடாது. நம் வளர்ச்சியைக் கெடுக்கும் எவ்வினையையும் செய்யக் கூடாது. நல்ல வினை செய்யும் போதும் துன்பம் வரலாம். தீய வினை செய்யும் போதும் துன்பம் வரலாம். தீய வினையால் தீமைதான் விளையுமே தவிர்த்து ஒருக்காலும் நன்மை கிட்டப் போவதில்லை. ஆகவே, தீமை தரும் தீய வினைகளைத் துன்பப்பட்டு, துயரப்பட்டு, பெருமுயற்சி செய்து, ஏன் மேற்கொள்ள வேண்டும்? தானே வீழத் தானே குழிதோண்டிக் கொண்ட அறிவற்ற செயல்தானே! நல்ல வினை செய்யும் போதும் ஏற்படும் துன்பத்தை பசித்துன்பம் போல் வெயிலால், மழையால், பனியால், காற்றால் சில வேளைகளில் ஏற்படும் துன்பம் போலவும், கருத வேண்டும். உடையில்பட்ட தூசியைக் கையால் தட்டி விட்டு நடப்பது போல் செயல்பட வேண்டும் வினையில் வருந்தக் கூடாது. துணிவு துணை செய்யும், ஊக்கமது கைவிடேல் என்பது பாட்டி காட்டிய பாதை. நல்வினை செய்யுங்கால் தமக்குத் துன்பம் மிகுதியாக வந்தாலும் அது பற்றி மனம் தளராமல் நிறைவில் இன்பமும் பெருமையும் தரும் வினையை மனத் திண்மையுடன் செய்ய வேண்டுமே தவிர்த்துப் பின்வாங்கக் கூடாது. பிள்ளை பெறுபவளின் துன்பம் பிள்ளை பெற்ற பின் இன்பமாக மாறுவது போல்; முயற்சித் துன்பமும் வெற்றிப் பேற்றால் இன்பமாக மாறும். போர்க்களத்தில் பட்ட புண் வெற்றி விழாவில் புகழின் கண்களாக மதிக்கப் படும். போர்க்குறிக் காயமே புகழின் காயம், யார்க்கது வாய்க்கும் என்கிறது மனோன்மணிய நாடக நூல். நாட்டு விடுதலைப் போரில் கலந்து கொண்டவர்கள். மக்கள் படும் துன்பம் போக்க அயராது போராடிச் சிறை செல்பவர்கள் எல்லாம் நாட்டுக்கும் மக்களும் ஏற்படும் நன்மையையும், இன்பத்தையும் கருதித்தான் தாம் எத்தனை துன்பங்களைத் துய்க்க நேர்ந்தாலும் அது பற்றிக் கவலைப்படாது துணிவுடன் போராடினார்கள். போராடுகிறார்கள். காட்டில் சீதை மானைக் கண்டு பிடித்துத்தர வேண்டுகிறாள். இலக்குவன் அது மாய மானாக இருக்கும் என ஐயப்படுகிறான் இராமபிரான் அப்படி எண்ணவில்லை. பகையுடை அரக்கர் என்றும் பலர்என்றும் பயிலும் மாயம் மிகையுடைத்து என்றும், பூண்ட விரதத்தை விடுதும் என்றல் நகையுடைத்து ஆகும் அன்றே? ஆதலின் நன்றிது என்னா தகையுடைத் தம்பிக்கு அந்நாள் சதுமுகன் தாதை சொன்னான் என்னும் கம்பர் பாடல் குறட் கருத்துக்கு ஏற்ற சான்றாகும். துன்பம் வந்தால் வரட்டும்! இன்பம் பயக்கும் வினையைத் துணிந்து செய்! --------- எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டது உலகு (குறள். 670) எது வேண்டாரை உலகம் வேண்டாது? வினைத் திட்பம் வேண்டாரை உலகம் வேண்டாது. அப்படியானால், உலகம் நம்மை விரும்பிப் போற்ற வேண்டுமானால், நாம் விரும்பும் விருப்பம் வினைத் திட்பமாக இருக்க வேண்டும். நான் செய்யப் போகும் தொழிலைப் பற்றி நன்கு படித்திருக்கிறேன். தொழில் நுட்ப அறிவு மிகுதியும் எனக்குண்டு! தொழிலைப் படித்த பணியாளர்கள் தேவையான அளவு உள்ளனர். நான் தேர்ந்தெடுத்துள்ள இடம் தகுதியான இடம், செப்பமான இயந்திரங்களும் வாங்கி விட்டேன். பொருள் வளத்திற்கும் குறையவில்லை. முறையான அனுமதியும் பெற்று விட்டேன். புதிய தொழில் போட்டி எப்படி இருக்குமோ? என்னென்ன தடை வருமோ? எல்லாரும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்களா? இயந் திரத்தில் கோளாறு ஏற்பட்டால் பேரிழப்பு நேருமே என்ன செய்வது என்று வள்ளுவரைக் கேட்டேன். வள்ளுவர் உன்னிடம் எல்லா வாய்ப்பும் இருக்கிறது என்று சொன்னாயே? ஆம் அவை அனைத்தையும் வைக்கும் பாத்திரம் உன்னிடம் இல்லையே என்றார். எனக்குப் புரியவில்லை. அவரே தொடர்ந்தார். உன் மனத்தில் உறுதி, நம்பிக்கை இல்லையே மனத்திட்ப மாகிய வினைத்திட்பம் இல்லையானால், உன்னிடம் பிற வலிமையாக இருந்து என்ன பயன்? வினைத்திட்பம் உன்னிடம் இல்லையேல் நீ செய்யும் தொழிலே உன்னை விரும்பாது. தொழிலாளரும் விரும்பார். பிற பொருள் களும் உன்னிடம் தங்க விரும்பாது. நாடும் விரும்பாது! உலகமும் விரும்பாது என்று அழுத்திக் கூறினார். அவர் கருத்து என் மனத்தில் ஆழப் பதிந்தது. வினைத் திட்பத்தை உருவாக்கிக் கொண்டேன். தொழிலில் முழு ஈடுபாடு கொண்டேன். தொழில் வளர்கிறது என் நிலையும் உயர்கிறது. படிப்படியே என்னை விரும்புவோர் தொகையும் பெருகி வருகிறது. தொடர்புடையவர்களை எல்லாம் வினைத் திட்பத்தைக் கடைப் பிடிக்க வேண்டி வருகிறேன். நம் முழுமுதல் விருப்பம் வினைத்திட்பமாக இருக்கட்டும்! எத்தகைய சிறப்புடையதாக அரண் அமைக்கப்பட்டிருக்கிறது ஆயினும் செயலாற்றும் வல்லமை இல்லாதவர்களிடத்தில் அதனால் எத்தகைய பயனும் விளையப் போவது இல்லை என்னும் கருத்தை அரண் அதிகாரத்தில், எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண் (குறள். 750) எனக் கூறுவதையும் எண்ணிப்பார்த்தால் வினைத்திட்பம், வினைத்திறன், வினைத்திண்மை, வினைமாட்சி என வள்ளுவரால் சுட்டப்படும் வினை ஆண்மை இல்லாதார் ஆள் எனக் கருதத் தக்கவர் இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறோம். செயலில் காட்டும் உறுதியே மனித வளர்ச்சியை உறுதிப்படுத்தும். ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றுமில்லா மாக்களுக்கோர் கணமும் - கிளியே வாழத்தகுதி உண்டோ? - எனவும் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி - கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்ற லின்றி நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே நாளில் மறப்பாரடி! எனக் கவிஞர் பாரதியார் வினைத் திட்பம் வேண்டா வீணரை விரும்பாது பாடி குறட்கருத்திற்கு வலிமை சேர்க்கிறார். மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண்விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்கவேண்டும் மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம் என்பது பாரதியின் வினைத்திட்ப வேண்டுதலாகும். வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் செயலுக்கு வரும் தடையை நீக்குக! தடை ஏற்பட்டாலும் தளராதே செய்யப் போகும் செயலை முடியும் முன் வெளிப்படுத்தாதே சொல்லுதல் யார்க்கும் எளியதே சொல்லிய வண்ணம் செய்வது அரியது வீரெய்தி மாண்டார் வினைத் திட்பத்தையே நாடு போற்றும் எண்ணியார் திண்ணியராக இருக்க வேண்டும் திண்ணியார் எண்ணியாங்கு எய்துவார் பெரிய தேர்க்கு அச்சாணியே முதன்மையானது எவரையும் உருவுகண்டு எள்ளாதே வினைத்திட்பம் உடையாரை மதி வினையைக் கலங்காது ஆராய்ந்து செய்க! தெளிந்த வினையை நடுங்காது சோர்வின்றிச் செய் இன்பம் பயக்கும் வினையைத் துணிந்து செய் துன்பம் வரினும் இன்பம் பயக்கும் வினை செய் விரும்ப வேண்டியது வினைத் திட்பம் உலகம் விரும்புமாறு வினைத் திட்பம் கொள் மனத்திட்பத்தால் வினைத் திட்பம் உடையவராய் விளங்குவோம்! ------------- 68. வினை செயல் வகை வினையும் வாழ்வும் இணைபிரியாதவைகள் ஒன்றுக்கு ஒன்று உற்ற துணை ஆகின்றன. செய்யும் தொழில் செம்மையாய் இருக்குமிடத்து, வாழ்வு வலுக்கிறது. உயிர் உறுதி பெற்றிருக்கு மிடத்து உழைப்புக்குக் குறையொன்றுமில்லை. உயிரும் உழைப்பும் ஒன்றையொன்று அனுசரித்து ஓங்கி வருகின்றன. இவை இரண்டினுள் முதன்மை வகித்திருப்பது உயிர் என்றும் அது நிலைபெற்று இருந்தால்தான் உழைக்க முடியும் என்றும் மக்கள் பொதுவாகக் கருதுவர். உயிர் நீங்குங்கால் திடமுடைய தேகமும் தானே நின்று விடுவது வெளிப்படை. இவ்விதிக்குச் சான்று சரீர வாழ்வில் பெரிதும் காணலாம். ஆனால் உழைக்கும் வகை தெரியாது அல்லது சோம்பித் திரிந்து உடலையும் உயிரையும் அறவே சீர் குலைத்துக் கொள்வாரும் உளர். சரீரித்தைச் சிரமப் படுத்தாது வைத்திருப்பது அதைப் பேணுதற்கு உற்ற உபாயம் என்று பலர் கருதுகின்றனர். உண்பது போன்று உழைப்பதும் உடல் நிலைத்திருப்பதற்கு இன்றியமையாதது என்பதை அன்னவர் அறிகிறார்கள் இல்லை. தேகவலிவு குன்றுவதும் வியாதி வருவதும் பெரும்பாலும் வேலை செய்யாமை யாலேயாம். திடகாத்திர முள்ள தேகமும் நெடிது சும்மா கிடத்தப் படும்போது முடமாகின்றது. உணவை மட்டும் மட்டுக்குமிஞ்சிப் புசித்து விட்டு உழைப்பு ஒன்றும் இல்லாதவர்களுக்கு ஆயுள் சுருங்கி விடுகிறது. வேலை செய்யாத உடல் வாழ்வுக்கு உரியதன்று என்பது நானாவிதங்களில் நிரூபிக்கப்படுகிறது. சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத முடியும். அவ்வாறே நல்வாழ்வுக்குச் சாதகமாய் இருப்பது திறம் படைத்த தேகம். பின்பு அதன் மூலம் மனவலிமை பெற வேண்டும். ஒரு தேசிய லட்சியத்தின் தூய்மைக்கும் மேன்மைக்கும் தக்கவாறு அத் தேசம் அழியாத் தன்மையுறுகிறது. இக் கருத்தை ஒட்டியேதான் தர்மம் யாண்டும் தலை காக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆதலால், இவ்வையகத்தில் எந்நாளும் வாழ்ந்திருக்க விரும்பும் சமுதாயம் நல்வழியில் ஓயாது உழைக்க வேண்டும். நன்னெறியைக் கடைப் பிடிக்க வேண்டும். உயர் நோக்கத்துக்காக உழைத்து வரும் வரை அந்தச் சமுதாயத்துக்கு அழிவு இல்லை; என்றைக்கும் அது நிலைத்து நிற்கும் என்று சுவாமி சித்பவானந்தர் தம் எதிர்கால இந்தியா எனும் நூலில் கூறியுள்ள கருத்துகள் உழைப்பின் மேன்மையைத் தெள்ளிதின் விளக்குகிறது. எப்போதும் நமக்கு நாமே ஏன்? v‹W ÉdÉ¡ bfh©L ïU¡f nt©L« v‹gij Vbd‹whš ‘v¥go’ v‹gijÉl ‘V‹? என்பதை அறிவதே மிக முக்கியமாகும். எப்படி என்பதைத் தெரிந்து கொண்ட எந்த மனிதனும் தனக்கு ஒரு வேலையைக் கட்டாயம் தேடிக் கொள்வான். ஆனால், ஏன் என்பதைத் தெரிந்து கொண்டவனோ தொழிலைத் தலைமை ஏற்று நடத்தும் உரிமையாளனாக ஆகிவிடுவான். செய்வனவற்றைத் திருத்தமாக நன்றாகச் செய்ய வேண்டும். குப்பை கூட்டுவது, பாத்திரம் துலக்குவது, சிறிய வேலையாக இருக்கலாம். ஆனால் அப்பணியிலும் செய்பவர் திறமையானவரா? நல்ல பண்பாளரா? கடமை உணர்வு உடையவரா? என்பதைப் பணியைப் பார்த்தே தெரிந்து கொள்ள இயலும். இருபது வயது நிரம்பிய இளைஞன் குறைந்தது ஓராண்டாவது வணிகத்துறையில் நேரடியான விற்பனையாளனாகப் பணிபுரியும் வாய்ப்புப் பெற்றால் நல்லது. வீட்டுக்கு வீடு சென்று பொருள்களை விற்பனை செய்தால், செய்யும் வணிகத்திற்கு ஏற்ப ஊதியமும் கிட்டும். அதை விட நாட்டை, நாட்டு மக்களைப் பற்றிக் கிடைக்கும் பட்டறிவு மிக அதிகமாகும். வீட்டுக்கு வீடு சென்று பொருள்களை நேரடியாக மக்களைச் சந்தித்து விற்பனை செய்வது ஒரு பெரிய நுண்கலையாகும். அது புதைந்து கிடக்கும் பொன்னைத் தோண்டி எடுப்பதற்கு ஒப்பானதாகும். பல்வகை உணர்வுகட்கு ஆட்பட வேண்டியது ஏற்படும். எதிர்பாரா வியப்பும் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படலாம் அடுத்த நொடியில் எதிர்மாறான ஏமாற்றம், கவலை, தோல்வி ஏற்படலாம். எல்லாரிடமிருந்தும் எல்லாவற்றிலும் இருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு நாளும் ஒன்று போல் இருப்பதில்லை. விற்பனைக்குக் கொண்டு செல்லும் பொருள்களை வேண்டாம் என்று சொல்வதில் கூட எண்ணற்ற வகை உண்டு. மக்களிடையே பழகவும் நமது திறமையை வளர்த்துக் கொள்ளவும் பெரிய வாய்ப்பாக அப்பணி அமையும். இன்று பெரிய பெரிய தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளாக இருப்பவர்களில் பலர் தம் இளம் வயதில் தெருவில் சென்று விற்பனை செய்தவர்களாகத்தான் இருப்பார்கள். படிப்பறிவை விட, பட்டறிவே செயலில் மேம்படத் துணை நிற்கும். ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பகுதி மேலாளராக இருந்து வந்தவர் ஓய்வு பெற்று விட்டார். உரிமையாளர் அந்தப் பதவிக்கு ஐந்தே ஆண்டு அந்நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த இளைஞர் ஒருவரைப் பணியமர்த்தம் செய்தார். உரிமையாளரின் இந்தச் செயலை நிறுவனத்தில் பணிபுரியும் பலர் விரும்பவில்லை. அவனை விட பணிமூப்பு உடையவர்கள் முப்பது பேர் அங்கே பணிபுரிகிறார்கள். ஆகவே மூத்தவர்கள் அனைவரும் உரிமை யாளரிடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். உரிமையாளர் அவர்கள் அனைவரையும் அழைத்தார். உங்கள் எண்ணத்தை நான் நன்கு அறிவேன். ஆனாலும் ஏன் உங்களை எல்லாம் விட்டுவிட்டு அவனுக்குப் பதவி உயர்வு கொடுத்தேன் என்பதற்கு உரிய காரணங்களை முதலில் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். நம் நிறுவனத்தில் அவன் வேலைக்குச் சேர்ந்தபின் பல தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றுள்ளான். விற்பனைப் பிரிவின் பதவிக்குத் தன்னை முழுத்தகுதி உடையவனாக ஆக்கி இருக்கிறான். அதற்காகத் தன் ஊதியத்திலிருந்தே செலவளித்துப் படித்துள்ளான். கடந்த ஆண்டு வணிக வளர்ச்சி பற்றி மொத்தம் இருபத்து மூன்று கருத்துகள் சொல்லப்பட்டன. அவற்றில் பதினெட்டுக் கருத்துகள் அவனாலே சொல்லப்பட்டவை. அந்தக் கருத்துரு ஒன்றின் மூலம் நம் நிறுவனத்திற்கு வருவாய் மிகப் பெருகி இருக்கிறது. ஆகவே, நிறுவனத்தின் வளர்ச்சியையும், மனிதனின் தன்னம்பிக்கை யையும் கவனிக்கும் போது, அவன் உங்களுக்கெல்லாம் வெகுதூரம் மேலே போய்விட்டான். அவனை விற்பனைப் பிரிவு மேலாளர் ஆக்குவது தவிர்க்க முடியாதது ஆகும் என விளக்கம் அளித்தாராம். வயது மூப்பு ஒரு தனித் தகுதி ஆகிவிடாது. பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் சான்பிரான்சிக் கோவுக்கும் ஒக்லாந்பேக்குக்கும் இடையே ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் நீளம் 7 கி. மீ. பாலம் கட்டி முடிக்கத் திட்டமிட்டது ஐந்து ஆண்டு. பாலப்பணி தொடங்கும் போது அதனைக் கண்ட வண்ணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேலாளர் பாலத்தில் பயன்படுத்தப்படும் இரும்புத் தகடுகளுக்குத் தம் நிறுவனத்து வண்ணத்தை வாங்கச் செய்ய ஒரு வழி கண்டார். பாலம் கட்டப்படும் இடத்திற்கு அண்மையில் உள்ள ஒரு பழைய கோட்டையில் சில இரும்புத் தகடுகளை நிறுத்தி, ஒவ்வொன்றின் மீதும் ஒவ்வொரு வண்ணத்தைப் பூசச் செய்தார். பூசிய நாளையும் குறித்தார். பாலத்தில் கட்டுமானப் பணி முடிந்து, தகடுகளுக்கு வண்ணம் தீட்டப்பட வேண்டிய சமயத்தில் அவர், பாலம் கட்டும் பொறுப்பாளரை அழைத்துச் சென்று, தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பூசிவிட்டுச் சென்ற வண்ணத் தகடுகளைக் காட்டினார். ஐந்து ஆண்டுக் காலமாக மழைக்கும் வெயிலுக்கும் பனிக்கும் ஈடுகொடுத்து நின்ற வண்ணத்தைக் கண்டு பாலம் கட்டும் பொறுப்பாளருக்கு மிகுந்த நிறைவு ஏற்பட்டது. வண்ணம் பூசுவதற்கு ஆணை கொடுத்தார். ஒரு இலக்கத்து அறுபதாயிரம் பவுன் மதிப்புடைய அவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை வேறு எவருமே பெற்றதில்லை அவருடைய வருங்காலச் செயல் திட்டம் நிறுவனத்துக்கும் பெரும் வருவாயை ஈட்டித் தந்தது. செய்யப் போகும் வினையை ஆராய்ந்து, தக்க தூய வினையைத் தேர்ந்து தெளிந்து, வலிமை அறிந்து, காலம் அறிந்து இடம் அறிந்து, தக்கவரைத் தேர்ந்து, பணி அமர்த்தம் செய்து, பணிபுரிபவரைத் தக்கவாறு மேற்பார்வையிட்டு, மனவூக்கத்துடன் சோம்பலின்றி, தளரா முயற்சியுடன், துன்பங்கண்டு துவளாது, மனத்திட்பத்தால் வினைத்திட்பம் உடையவராய் செயல்படுவதுடன், தேர்ந்த வினையைச் செய்ய வேண்டி முறை அறிந்து, செயல்பட வேண்டிய முறையை விளக்குவதே வினை செயல் வகை என்னும் இவ் வதிகாரம் ஆகும். ----------- சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது (குறள். 671) செய்யப் புகுமுன் செயலைப் பற்றிய எல்லா விவரங்களையும் தொகுத்து வைத்து, எத்தகைய ஐயப்பாடும், குழப்பமும் மயக்கமும் இல்லாதவாறு தெளிவாக ஆராய வேண்டியது முதல் நிலை. ஆராய்ச்சி ஆராய்ச்சியாகவே இருந்தால் பயனில்லை. ஆராய்ச்சியின் பயன் திட்டமான முடிவு எடுப்பதாக இருக்க வேண்டும். இஃது அடுத்த நிலை, முடிவெடுத்தால் விரைவில் செயலில் இறங்கி விடல் வேண்டும். அதுவே அதற்கு அடுத்த நிலை. துணிவு கொண்ட பின் செயலை மேற்கொள்ளக் காலத் தாழ்வு செய்வதும், முறையான முயற்சி மேற்கொள்ளாமல் சோம்பலுக்கு இடந்தந்தாலோ அது தீமையையே உண்டாக்கும். ஆராய்ச்சியும் வீண்; முடிவு செய்ததும் வீண்; துணிவு கொண்டதும் வீண்; காலம் நேரம் மட்டுமன்று; பொருளும் வீண்தானே! ஆராய்ந்து துணிவுக்கு வருக! துணிவை உடன் செயற் படுத்துதல் நல்லது! காலம் தாழ்த்துவது தீது! 1. சூழ்நிலைகள் சரியாய் இல்லாவிட்டால் எத்தகைய முயற்சியும் பலன் அளிக்காமல் போகலாம். மனிதனுக்கு மீறிய சக்திகள் உண்டு என்பதை மறக்கக் கூடாது. ஒருவன் இதை எல்லாம் எண்ணாது. வீம்பாக ஒரு காரியத்தைத் தொடங்கி நடுவில் அதனைக் கைவிடும்படி நேர்ந்தால் பிறர் எள்ளி நகையாடுவர் 2. ஒரு காரியத்தைச் செய்தால் அதன் விளைவு என்ன உண்டாகும். இல்லாவிட்டால் என்ன ஆகும் என்று நன்கு ஆராய்ந்த பின்னர் ஒரு செயலை மேற் கொள்ளவோ, விடவோ வேண்டும் 3. சிறு முயற்சியால் பெரும் பயன் கிட்டும் காரியங்களைத் தாமதமின்றிச் செய்ய வேண்டும் எனவும் விதுர நீதி கூறும் செயல் நடை முறைகளையும் ஒப்பு நோக்குக! உறுதி பயக்கும் நல்லுரைகளை வழங்கிய மாலியவானை நோக்கி, மகோதரன் நீ சிறுமை தரும் மொழியைக் கூறியது ஏன் என்று அடக்கி, இராவணனை நோக்கி வென்றியே யாக மற்றுத் தோற்றுயிர் விடுதலாக ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமற்கு உரியதொல்கிப் பின்றுமேல் அவனுக் கன்றோ பழியொடு நரகம் பின்னை என்னும் கம்பரின் பாடல் துணிந்தபின் பின்வாங்குதல் பழி எனக் கூறுவதும் குறட் கருத்திற்கு ஒருவழிச் சான்றாகும். ------------ தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க தூங்காது செய்யும் வினை (குறள். 672) சிலர் எப்பொழுதும் பந்தயக் குதிரைபோல் ஓடிக் கொண்டே இருப்பார்கள்; எருமை மாட்டின் மீது மழை பெய்தாலும் விரைந்து நனையாமல் ஓட வேண்டும் என்று எண்ணாது அசைந்து அசைந்து நடப்பது போல் இயங்குபவர்களும் இருப்பர். உலகில் ஒவ்வொரு வினையும் வெவ்வேறு தன்மை உடையதாகும். செய்யும் முறையிலும் செய்யும் காலத்திலும் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரத்திலும் வேறுபாடு இருக்கலாம். வீட்டுக் கூறையில் தீப்பற்றி எரிகிறது என்றால் எவ்வளவு விரைந்து அணைக்க முடியுமோ அவ்வளவு விரைந்து செயல்பட வேண்டும். அவ்வாறே நேர்ச்சியில் அடிபட்டுக் குருதி கொட்ட வீழ்ந்து கிடப்பவர்க்கு உடனடியாக முதல் உதவியும் செய்து, குருதி ஒழுக்கை மட்டுப்படுத்தி மிக விரைவில் மருத்துவம் செய்யவழி காண வேண்டும். அது போன்று விரைந்து செய்ய வேண்டிய பணிகளை விரைந்து செய்து விட வேண்டும். குடியிருக்க வீடு கட்ட வேண்டும் என்றால் இடத்தேர்விற்கே நாள் ஆகலாம். பதிவு செய்து உரிமை பெறச் சில நாள்கள் ஆகலாம். தொகை சேர்க்க வேண்டும், வரைபடம் வரைய வேண்டும். நகராட்சி மன்ற, நகரமைப்பு அலுவலர் அனுமதி பெற வேண்டும். கட்டடம் கட்டும் பணியை நம் நேரடிப் பொறுப்பில் வைத்துக் கொண்டாலும் சரி, ஒப்பந்தகாரரிடம் ஒப்படைத்தாலும் சரி, கல் மணல், கல்மா மரம் கம்பி, செங்கல் முதலிய பொருள்களை உரிய இடத்தில் இருந்து பெறுதல் வேண்டும். அளந்து மால் குறித்தல், வாணம் தோண்டுதல், அடித்தளம் அமைத்தல், சுவர் எழுப்புதல், நிலை அமைத்தல், மேல் தளம் அமைத்தல், கல்மா பூசுதல், வண்ணம் தீட்டுதல், தளம் போடுதல், சுற்றுச் சுவர் எழுப்புதல் வெளிக் கதவு பொருத்துதல் என ஒவ்வொரு கட்டமாக உரிய நாள் இடை வெளிவிட்டே கட்ட வேண்டுமே தவிர்த்து உடனடியாக அவசரப்பட்டுச் செய்ய முடியாது. நிலத்தை உழுது பண்படுத்த வேண்டிய காலத்தில் பண்படுத்தி, விதைக்கிற காலத்தில் விதை விதைத்து, வாடாமல் நீர் பாய்ச்சி, உரம் இட வேண்டிய நாளில் உரமிட்டு, களையெடுக்கும் நாளில் களை எடுத்து, பயிர் முற்றி விளைய, பயிரைப் பொருத்து கால அளவு வேறு படலாம். பொறுத்து இருந்தே அறுவடை செய்ய முடியும். விதைத்தால் விளையும் காலம் வரைப் பொறுத்து இருந்தே அறுவடை செய்ய இயலும். படிக்கும் மாணவன் எவ்வளவு மதியுடையனாய் இருந்தாலும் அடுத்த மேல்வகுப்பு செல்ல ஓராண்டுக் காலம் பொறுத்தாக வேண்டும். திருமணம் ஆகிக் கருவுற்ற பெண் மகப்பேறு பெறப் பத்துத் திங்கள் பொறுத்தாக வேண்டும். அவசரப்பட முடியாது; கூடாது. நன்றாகச் சிந்தித்து அவசரப்படாமல் ஆர அமரச் செய்ய வேண்டிய செயல்களைப் பொறுமையுடன் நிதானமாகச் செய்து பழகிக் கொள்ள வேண்டும். ஆனால், எல்லாச் செயல்களையும் அப்படிச் செய்ய எண்ணக் கூடாது. காலம் கடத்தாமல் உடனே செய்தே ஆக வேண்டிய செயலை எக் காரணம் கொண்டும் செய்யக் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். உடன் செய்ய வேண்டிய வினை எவை? அவசரம் இன்றி அல்லது காலம் தாழ்த்திச் செய்ய வேண்டிய வினைகள் எவை? என்பதை இயல்பாகவே முடிவெடுக்கும் திறன் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அதிலும் பெரிய பெரிய பொறுப்புகளில் அமர்ந்திருப்போர் மிகத் தெளிவுடன் திட்டமிட்டு முடிவெடுக்க வேண்டும். சில வேளைகளில் நொடிப் பொழுது காலத் தாழ்வு கூட பேரிழப்பை உருவாக்கி விடும். அதுபோல் சில பணிகளில் நொடிப் பொழுது அவசரம் கூட பெரிய வீழ்ச்சியை உண்டாக்கிவிடலாம். ஆகவே, காலம் தாழ்த்திச் செய்ய வேண்டிய வினையைக் காலம் தாழ்த்தியே செய்க! உடனே செய்ய வேண்டிய வினையை உடனே செய்க! மகோதரன் இராவணனை நோக்கி, இனிஇறை தாழ்த்தி யாயின் இலங்கையும் யாமும் எல்லாம் கனியுடை மரங்க ளாகக் கவிக்குலம் கடக்கும் காண்டி எனக் கூறுவதாகக் கம்பர் பாடும் பாடல் அடிகள் தூங்கற்க தூங்காது செய்யும் வினைக்கு ஏற்ற இலக்கியச் சான்றாகும். எதிர்காலச் சந்ததியினரை புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்தும், புகையிலைப் பயன்பாட்டிலிருந்தும் முழுவதுமாக விலகி இருக்கும் படியான பணிகளில் நாம் எல்லாரும் ஈடுபட வேண்டிய அவசரத்தையும், அவசியத்தையும் உணர்த்துவதுதான் என்னுடைய ஆராய்ச்சியின் நோக்கம் என்கிறார் தமிழ்நாடு அரசின் இளம் விஞ்ஞானி விருது பெற்ற அறுவரில் ஒருவரும், சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவ மனையில் உளவியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் விதுபாலா! என்பதைத் தக்க காலத்தே எண்ணிப்பார்க்க வேண்டும். ----------- பொருந்தும் வகையால் அறச் செயல்களை இடை விடாமல், முடியும் இடங்களில் எல்லாம் செய்தல் ஒவ்வொருவர்க்கும் கடமை ஆகும் என்பதை, ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் (குறள். 33) என அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் நெறி உணர்த்தியாங்கு உணர்த்தும் குறளே, ஒல்லும்வா யெல்லாம் வினை நன்றே; ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல் (குறள். 673) செயல்களில் பல வகை உண்டு; செய்பவர் தகுதிக்கு விஞ்சிய அரிய செயல்களும் உண்டு; கடுமையான முயற்சியும், பெரும் பொருள் முதலீடும் இன்றி எளிமையாகச் செய்யும் செயல்களும் உண்டு. எல்லா வகையாலும் செயல்படுபவர் தகுதிக்கும், வலிமைக்கும் ஏற்ற நிலையில் இயல்பாய்ச் செய்து முடிக்கும் செயல்களும் உண்டு! நம் தகுதிக்கு ஏற்ற வினையைத் தேர்ந்தெடுத்து, கால நிலை அறிந்து, இடப்பொருத்தம் அறிந்து செயல்படுகிறோம். அவ்வினை நாம் எதிர்பார்த்தபடியே நன்கு செயல்பட்டு, நற்பயனை நல்கு மாயின் எல்லா வழியிலும் நல்லதே ஆகும். ஆனால் நாம் நினைத்தபடி செயல்பட வில்லையானால் செயல்படாமைக்கு உரிய காரணத்தைக் கண்டு பிடிக்க முயலவேண்டுமே தவிர, நான் பிடித்ததை விட மாட்டேன் எப்படி ஆனாலும் சரி, இதே இடத்தில் இந்த வேலையைச் செய்து கொண்டே இருப்பேன் என்னும் முரட்டுப் பிடிவாதம் பேரிழப்பை உருவாக்கி எழுந்திருக்க முடியாமல் செய்துவிடும். நாம் தேர்ந்தெடுத்த காலம் பொருத்த மற்றதாயின் கொக்கு உறுமீன் வரும் வரைக் காத்திருப்பதுபோல் காத்திருந்து செயல்படுவது தான் அறிவார்ந்த செயல்முறை சில வேளைகளில் நாம் தேர்ந்தெடுத்த இடம், தொடங்கும் போழ்து பொருந்தமான இடமாகத் தோன்றி இருக்கலாம். தொடங்கிய பின்னர்தான் அவ்விடத்தின் உண்மை நிலை விளங்கும் செயல் சீராக நடவாமைக்கு இடம் தான் காரணம் எனக் கருதினால், இடத்தை மாற்றவும் தயங்கக் கூடாது. அதுபோல் கருவிக் குறைவினாலும், பணித் துணைவர் குறைவினாலும் அவற்றைச் சீர்செய்து செயலை வெற்றிகரமாக முடிப்பதற்கு உரிய ஏந்துகளைத் தேடிக் கொள்ள வேண்டும். கோடைக் காலம் மிதியடி வணிகம் செய்; மின் விசிறி வணிகம் செய்! மழைக் காலத்தில் குடை வணிகம் செய்! மழைக்குக் குப்பாயம் விற்பனை செய். மழைக் காலத்தில் வீதிவீதியாகச் சென்று உப்பு வணிகம் செய்ய எண்ணாதே! ஆடி மாதக் காற்றில் பஞ்சுவிற்கச் செல்லாதே! நீ தூற்றப் போகும் போது காற்று வீசினால் தக்கவாறு பயன்படுத்திக் கொள். அது நல்லது. அல்லது காற்றுக்குக் காத்திருந்து வீசும் போது தூற்றிக்கொள். ஆகவே, நம் முன்னோர் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் எனப் பட்டறிந்து மொழிந்தனர். நாம் திட்டமிட்ட படியே வினை முடிந்தால் நல்லது. இல்லையேல் வினையை முடிப்பதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுச் செயல்படு. நினைத்தபடி முடி; இல்லையேல் முடிக்குமாறு நினை. எய்தற் கரிய தியைந்தக்கால்; அந்நிலையே செய்தற் கரிய செயல் (குறள். 489) காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர் (குறள். 485) எனவும் வள்ளுவர் கூறிய காலக்கணிப்பு வினை வல்லார் உள்ளத்தில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அய கோக்கா என்னும் இயந்திரவியல் பொறியாளர் கென்றி போர்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவர் 1978ஆம் ஆண்டு ‘T. 115’ என்னும் சிறிய மூடுந்து ஊர்தி ஒன்றை உருவாக்கலாம் என்று ஒரு மாதிரி ஊர்தி செய்து காட்டினார். ஆனால் போர்டு அதை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார். எனினும் அயகோக்கா அதை எப்பொழுதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். சில ஆண்டு கழித்துத் தாம் தொடங்கிய கிரிசுலர் நிறுவனத்தின் வழி அதனை உருக்கிப் பொருளும் புகழும் பெற்றார். செய்யும்வாய் நோக்கிச் செயல் புரிந்த வினை செயல்வகைக்கு ஓர் சான்றாக விளங்குபவர் அயகோக்கா. வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் (குறள். 674) என்னும் குறட்பாவை வினை செயல்வகையில் காணும் போழ்து, ஆள்வினையுடைமை அதிகாரத்தில் படித்த, வினைக்கண் வினைகெடல் ஓம்பல், வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு (குறள். 612) நினைவுக்கு வருகிறது. எடுத்த செயலை நிறைவேற்றாமல் அரையும் குறையுமாய் விட்டவரை, உலகம் நினைவு கொள்ளாமல் விட்டுவிடும். ஆதலால், எடுத்த செயலில் இடையறவு படாமல் முயலுதல் வேண்டும் என்றார். வினையை தொடங்கினால் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும். முழுவினை செய்யாதவரை உலகம் மறந்துவிடும் ஆகவே, உலகத்தவர் உள்ளத்தில் நாம் நீங்காது நிலைபெற வேண்டுமானால் நம்மால் செய்ய முடியும் வினைகளையே செய்ய முற்படவேண்டும். முயற்சியில் அரை குறை கூடாது. அதுபோல் ஒருவர்க்கொருவர் அல்லது நாட்டுக்கு நாடு பகைமை ஏற்பட்டால் விரைவில் பகைவனை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். அல்லது போரிட்டுப் பகைவனை அழித்து வெற்றி பெற்று விட வேண்டும். பகைமைக்கு அடிப்படையான காரணத்தைக் கண்டறிந்து விரைவில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவுடன் சீனாவும் பாகித்தானும் நடந்து கொள்வது போல் அணையா நெருப்புப் போல் அமைந்திருப்பது நல்லதன்று. என்றாவது இயற்கையாய் வீசும் காற்று, அணையா நெருப்பை வளர்த்து கொழுந்து விட்டு எரியும் பெரு நெருப்பாய் வளர்த்து விடுவது போல் வளர்ந்து பேரழிவை உண்டாக்கிவிடும். ஆகவே, செய்யத் தொடங்கிய ஒரு செயல், தீர்க்கத் தொடங்கிய ஒருபகை ஆகிய இரண்டினையும் அரை குறையாக விட்டு வைத்தல் கூடாது. அவ்வாறு விட்டு வைக்க எண்ணினால், தீயின் ஒரு பகுதியை அணைத்து மற்றொரு பகுதியை அணைக்காமல் விட்டு வைத்தால், அஃது எங்ஙனம் பின் வளர்ந்து கெடுதியை விளைவிக்கு மோ அங்ஙனமே அவ்வரை குறைச் செயலும் அரை குறைப் பகையும் நமக்குத் தெரியாமலே வளர்ந்து கேடு விளைவிக்கும். வினைக் குறையும், பகைக் குறையும் அணையா நெருப்புப் போன்றதாகும் எனத் திருவள்ளுவர் கடுமையாக எச்சரிக்கிறார். பகை எச்சம் தீயெச்சம் போலத் தெறும் என்பது வெளிப் படையாக விளங்குகிறது. திருவள்ளுவருக்கு இங்கே பகை எச்சத்தைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. அவர் நோக்கம் வினை எச்சம் கூடாது என்பதை மிக அழுத்தமாக வலியுறுத்தும் பொருட்டே பகை எச்சத்தை இணைத்துக் கொண்டார். நிலத்து உரிமையாளர்கள் வேளாண்மை செய்யும் நோக்குடன் கிணறு தோண்டினார்கள், தண்ணீரைக் காண முடியவில்லை. ஆனால், கெட்ட வாடை வீசும் ஏதோ ஒரு நீர்மைப் பொருள் வெளிப்படுகிறதே என அஞ்சி குறைந்த விலைக்கு இராக்பெல்லருக்குப் பலர் விற்றுவிட்டனர். அனைத்தையும் வாங்கிய இராக்பெல்லர் மேலும் ஆழமாய்த் தோண்டி, வெளிப்பட்ட நீர்மப் பொருளை ஆராய்ந்தார். நீர்மப் பொருள் மண் எண்ணெய் என்பதைக் கண்டார். அக்கிணறுகள் அவரை உலகப் பெருஞ் செல்வர்களில் ஒருவராய் ஆக்கியது. அரை குறையாய் விட்டவர்கள் ஆளையே காணோம். முதற்போரிலே இலங்கையின் நான்கு வாயில்களிலும் இருந்து வந்த ஒற்றர் வழியாகப் படைகளும் படைத்தலைவர்களும் பிரகத்தனும் இறந்த செய்தியைக் கேட்ட இராவணன் சினங் கொண்டு கூறியவற்றுள் ஒரு பாடலில் கம்பர், கருப்பை போல் குரங்கு ஏற்ற கதிர்சுழல் பொருப்பை ஒப்பவன்தான் இன்று பொன்றினான்; அருப்பம் என்று பகையையும் ஆரழல் நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ குறட் கருத்தைத் தக்காங்கு விளக்கி உள்ளதைக் கண்டுணரலாம். (கருப்பை - எலி) பகை எச்சம் நெருப்பு எச்சம் போல் சுடும் வினை எச்சமும் நெருப்பு எச்சம்போல் சுடும் ஆகவே, பகை எச்சமும் வினை எச்சமும் அறவே ஆகாது. ----------- செய்யத் தக்க வினைகள் அல்லாதவற்றைச் செய்வதால் கேடு உண்டாகும். அவ்வாறே செய்யத் தக்க வினைகளைச் செய்யாமல் விடுவதாலும் கேடு உண்டாகும். ஆகவே, செய்யத் தக்க வினை களையே செய்ய வேண்டும் என்னும் தெளிவான உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் தகுதிக்குப் பொருந்தாத வினை களைச் செய்ய எண்ணுதல் கூடாது. பின்னே மிகுந்த செல்வம் வரும் என்று கற்பனை செய்து கொண்டு, கையில் இருக்கும் பொருளுக்கும் இழப்பை உண்டாக்கி விடல் ஆகாது. தன்னிடத்தில் உள்ளதாம் பொருளின் அளவை அறிந்து வினை செய்யாதவன் வாழ்க்கையில் வளம்பெற இயலாது. வினை செய்வதற்குத் தகுந்த கருவிகளையும் தேடிக் கொண்டு ஏற்ற காலத்தையும் அறிந்து வினை செய்பவர்களால் எவ்வினையையும் இயல்பாய் செய்து முடிக்க இயலும். முழுமையாக நிறை வேறத்தக்க இடம் கண்டால் அல்லாமல் எவ்வினையையும் தொடங்கவும் கூடாது. தொடங்கும் முன்பே இவ்வினையை நிறைவேற்றுதல் எளிது எனக் கருதி எவ்வினையையும் குறைவாக மதிப்பிட்டு விடவும் கூடாது. எண்ண வேண்டியவற்றைக் குறைவில்லாமல் எண்ணித் தகுதியான இடத்தில் வினை செய்ய முற்பட்டால், அஞ்சாமை ஆகிய ஒரு துணை மட்டும் இருந்தால் போதும். எவ்வினை ஆயினும் செய்யத் தொடங்கு முன்னரே நன்றாக எண்ணிச் செய்தல் வேண்டும். அவ்வாறு அன்றிச் செய்யத் தொடங்கிய பின் எண்ணிக் கொள்ளலாம் என்று எண்ணினால் அது தவறான அணுகுமுறை ஆகும். என்னும் கருத்துப் புலப்படுமாறு வினை செய்யத் தக்க வழி முறைகளை வெவ்வேறு அதிகாரங்களில் கூறிய வள்ளுவர் வினை செயல் வகையில் தொகுத்து மொழியும் குறளே, பொருள் கருவி காலம் வினையிடனோ டைந்தும் இருள்தீர எண்ணிச் செயல் (குறள். 675) என்பதாகும். எண்ணாமல் வினை செய்ய முற்படாதீர்! எண்ணிய செய்க! எப்படி எண்ண வேண்டும்? இருள் தீர (மயக்கம் நீங்க) எண்ண வேண்டும்? வினையை மட்டும் எண்ணினால் போதுமா? போதாது. பொருளையும் வினையையும் மட்டும் எண்ணினாலும் போதாது. அதனோடு கருவியை யும் எண்ண வேண்டும். காலத்தையும் எண்ண வேண்டும் இடத்தையும் எண்ண வேண்டும். ஆகவே நாம் உணர வேண்டியது. ஒன்றைச் செய்யத் தொடங்கும் முன் அதற்கு வேண்டிய பொருள் முதலீடு, அதற்கு ஏற்ற கருவி, தகுந்த காலம், வினையின் தன்மை, செய்வதற்கு ஏற்ற இடம் ஆகிய ஐந்தினையும் கட்டாயம் மயக்கம் தீர எண்ணிப் பார்த்துத் தெளிவு கண்ட பின்னரே எச்செயலையும் செய்யத் தொடங்க வேண்டும். இருள்தீர எண்ணிச் செயல் வேண்டும் என்பதை வள்ளுவர் கட்டளையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். காலம் அறிந்தாங்கு இடமறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும் என்னும் நீதி நெறி விளக்கப் பாடலும் குறளுக்கு விளக்கமாக அமைகிறது. தயரதன் அரசவையில் இருந்த அமைச்சர்களின் மாண்பை விளங்குங்கால் கம்பன் படைக்கும் பாடல்களில் ஒன்று, காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற நூலுற நோக்கி, தெய்வம் நுனித்து, அறம் குணிந்த மேலோர் சீலமும், புகழ்க்கு வேண்டும் செய்கையும், தெரிந்து கொண்டு பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார் என்பதாகும். இப்பாடல் குறளை உள்வாங்கிப் படைத்தது போல் அமைந்துள்ளது. துணிவுறும் அளவும் சூழ்ந்து, பின் இராது சூழ்வினை பொருந்தும் வாயெல்லாம் தணிவுஅற முடித்தல், அது தகாது ஆயின் தருபொருள் வினை இடம் காலம் அணியுறு கருவி ஐந்தும் ஆய்ந்து இகலை அடர்த்தல், ஒட்டார்க்கு அழிவுறுங்கால் பணிவு செய் தேனும் காத்தல் முத்தொழிலும் பண்புடை அமைச்சர்தம் தொழிலே என்று இக்குறளுக்கு விநாயக புராணம் தரும் விளக்கத்தையும் ஒப்பு நோக்குக! ------------ முடிவும் இடையூறும் முற்றியாங்கெ ய்தும் படுபயனும் பார்த்துச் செயல் (குறள். 676) இந்த வினையை இப்பொழுது தமக்கு இருக்கும் ஏந்துகளைப் பயன்படுத்தி முயன்று செய்தால் நிறைவேற்றிவிட இயலுமா? என்பதையும் தக்க வழியில் ஆராய வேண்டும். செயல்படும் போது என்னென்ன இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் ஆராய வேண்டும். இந்த இந்த இடையூறுகள் நேர்ந்தால் அதனை எப்படி எப்படி வெற்றி காண்பது என்னும் வழிமுறையையும் தக்கவாறு ஆராய்ந்து கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் கடந்து வினை வெற்றியாய் முடிந்தால், போட்ட முதலுக்கும் பட்டபாட்டிற்கும் ஏற்ப மிகுந்த பயனை நல்குமா என்பதையும் ஆராய்ந்து பார்த்து, ஏற்புடையதாயின் அவ்வினையை விரைந்து செய்க! பயன் என்னாது படுபயன் பார்த்துச் செய்ய வேண்டுகிறார் வள்ளுவர். படு என்னும் சொல் பெருமை அல்லது மிகுதி என்னும் பொருள் தருவதைப் படுகுழி, படுபாவி, படுபொய், படுமோசம், படுசுட்டி என்னும் வழக்கால் உணரலாம். செயல் முடிவு, செயல் தடை, முடிவின் பயன் என்பவற்றை எண்ணிப் பார்த்தே எச்செயலையும் செய்ய வேண்டும். தன் தூக்கித் தன்துணையும் தூக்கிப் பயன்தூக்கி மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகி விடும் என்னும் பழமொழி பகர்வதையும் இணைத்துச் சிந்தித்துக் கொள்வோம். நல்லவும் தீயவும் நாடி, நாயகற்கு எல்லையில் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்! தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார் எனத் தயரத மன்னனின் அரசவையில் வீற்றிருந்த அமைச்சர்களின் மாண்பு கூறும் பாடல், குறட் கருத்துடன் ஒத்து இயைவதாகும். ஓர் ஊரிலிருந்து புறப்படுமுன் செல்ல வேண்டிய ஊரைத் திட்டப்படுத்திப் பயணச் சீட்டை முன்னரே எடுத்துக் கொள்ள வேண்டும். ஊர்தி புறப்படவே சில வேளைகளில் கால தாமதம் ஏற்படலாம். இடையில் எத்தனையோ தடை நேர வாய்ப்பு உள்ளது. அப்படி ஏதாவது நேர்ந்தாலும், அத்தடை கண்டு அஞ்சாது, தயங்காது செல்ல வேண்டும். பயணம் வீண் செலவுப் பயணமாக அமையாது. நற்பயன் நல்கும் பயணமாகவும் இருக்க வேண்டும். ஆற்றைக் கடக்க வேண்டும் கடப்பதால் என்ன பயன்? கடக்க முடியுமா? ஆற்றின் ஆழம் தெரியுமா? ஆழம் தெரியாமல் கால் வைக்கலாமா? எண்ணிச் செய்வது தானே அறிவுடைமை! செயல் முறை. -------------- செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல் (குறள். 677) தொழிலைப் புதிதாகத் தொடங்குபவர் அறிவாளியாக இருக்கலாம். துணி வுடையவராக இருக்கலாம்; சோம்பலின்றி உழைப்பவராக இருந்தாலும் தனக்கு எல்லாம் தெரியும், எவரிடமும் எந்த விவரமும் கேட்டுத் தெரிந்து கொள்ள அவசியம் இல்லை என்று எண்ணும் செருக்கு உடையவராய் இருக்கக் கூடாது. தாம் செய்யப் போகும் தொழிலைப் பற்றிய விவரங்கள் எங்கெங்கே கிட்டுமோ அங்கெல்லாம் சென்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அத்தொழிலை நமக்கு முன் செய்தவர் அல்லது செய்து கொண்டு இருப்பவரின் அறிவுரைகளையும், தொழில் நுட்பங்களையும், வெளியே தெரியாத தெரியக் கூடாதவைகள் எவை என்பதை, நெருங்கிப் பழகிக் கேட்டு அறிந்து மனத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டுவது மிக அவசியம். அது தொழிலில் எதிர்பாராது ஏற்படும் சிக்கல்களை எதிர் கொள்ளவும், வினையை வெற்றியாக முடிக்கவும். மிகுந்த பயன் பெறவும் நல்ல துணையாகவும் வழிகாட்டியாகவும் அமையும். ஆகவே, அச்செயலை முன்னரே செய்து அதன் உட்கூறுகளை எல்லாம் அறிந்த ஒருவன் கருத்தை முதற்கண் அறிந்து கொள்ள வேண்டும். அதுவே, எடுத்த செயலை வெற்றியாகச் செய்து முடிக்க வேண்டியவர் கடைப்பிடிக்க வேண்டிய முறையாகும். உள்ளறிவான் என்பதற்கு, முன் செய்து போந்தவன், அவன் கருத்து, அவன் செய்து போந்த உபாயம். அதனை அறியவே தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம் எனப் பரிமேலழகர் தரும் விளக்கத்தை எண்ணிப் பார்த்துக் கொள்க! சேக்சுப்பிரியர் தரையில் நின்று கண்ட திருவிழாக் காட்சியை, நான் அவர் தோளில் நின்று காண்கிறேன் என்கிறார் அறிஞர் பெர்னாட்சா. ஆம் சேக்சுப்பிரியன் படைப்புகள் அனைத்தையும் ஆழமாகப் படித்து நிறை குறை கண்டவர் பெர்னாட்சா. பெர்னாட்சாவின் படைப்புகளுக்கு சேக்சுப்பிரியரின் படைப்புகள் அடித்தளம் ஆகும். ஆகவேதான் அவ்வாறு உரைத்தார். வழி தெரிந்தவரின் பின்னே நடந்தால், மயக்கமோ, தடுமாற்றமோ இன்றி இனிதே பயணம் செய்யலாம். அன்பரே! தாங்கள் புதிய சாதனைகளைக் கண்டு பிடித்துள்ளீர்கள். அவற்றுள் மிகச் சிறந்த கண்டு பிடிப்பு யாது என்று ஒருவர் கம்பர் டேவியிடம் கேட்டார். அதற்கு அறிஞர் கம்பரி டேவி அளித்தவிடை, நான் மின்சாரம் தொடர்பாகச் சிலவற்றைக் கண்டு பிடித்தேன்; காப்பு விளக்கையும் உருவாக்கினேன்; அதில் எதையும் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்று கூற மாட்டேன். நான் கண்டு பிடித்த மிகச் சிறந்த சாதனை மைக்கேல் பாரடே தான் என விடை அளித்தார். மின்சாரம் தொடர்பாகக் அறிஞர் கம்பரி டேவியின் கண்டுபிடிப்புகளை உள்வாங்கிக் கொண்டு அவரையே வழி காட்டியாய் மைக்கேல் பாரடே கொண்டதால் மின் மாற்றி போன்ற கருவிகள் பலவற்றைக் கண்டுபிடித்து அவரால் உலகிற்கு வழங்க முடிந்தது. தக்கவர்களை வழிகாட்டியாய்க் கொண்டவர்கள் எல்லாம் தாம் மேற்கொண்ட தொழிலில் வியத்தகு சாதனை படைத்துள்ளனர். அதனால் தான் தாய் எட்டடி தாவினால் குட்டி பதினாறு அடி தாவும் என்னும் பழ மொழி எழுந்தது. மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு முறைகளிலும் மொழிகளிலும் மாறக் கூடாது மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது - தன் மானம் இல்லாக் கோழையுடன் சேரக் கூடாது. துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும் வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு வளர்ச்சியிலே வான் முகட்டைத் தொட்டிட வேணும் வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமை வர மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேணும் பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும் என்னும் பட்டுக் கோட்டை மக்கள் கவிஞர் பாடல் வரிகள் உள்ளறிவான் உள்ளம் கொள்ளத் தூண்டுதலாய் அமையும். ----------- வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையார்த் தற்று (குறள். 678) கடைக்குச் சென்று ஒரு பொருளை வாங்கி வருமாறு தாய் கூறுகிறாள். புறப்படுமுன் மைந்தன் அதனோடு வேறு ஏதேனும் வாங்கி வர வேண்டுமா? என மைந்தன் நினைவு படுத்தத்தாய் வேறு சில பொருள் களையும் சேர்த்து வாங்கிவரக் கூறுவதும் உண்டு! வழிபாடு செய்யத் திருக்கோயிலுக்குச் செல்கிறோம் அங்கே ஒரு பெரியவரின் பொழிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பொழிவு கேட்ட நிறைவு இறை வழி பாட்டில் மிகு நிறைவை உண்டாக்குகிறது. மாலை வேளையில் பயிற்சியின் பொருட்டு நடக்கச் செல்கிறோம். கையில் பையும் எடுத்துச் செல்கிறோம். வரும் வழியில் உள்ள கடையில் காய்கனி வாங்கி வருகிறோம். ஒரு நடைச் செலவில் இருவினைகள் நிகழ்கின்றன. அவசரம் இல்லாத பணியாக இருந்தால ஒருபணிக்கு மட்டும் ஒரு நாள் அலைவதைத் தவிர்த்து, பணியின் எண்ணிக்கை மூன்று நான்கு எனக் கூடிய பின் ஒரே நாளில் சென்று எல்லாப் பணிகளையும் சேர்த்து முடித்து வரும் வினை வல்லார்கள் பலர் வாழ்ந்து வழி காட்டுகிறார்கள். ஒரு கல்லில் இரு மாங்காய் என்னும் பழமொழி மூலம் ஒரு முயற்சி இரண்டு பணி செய்யும் தேர்ச்சியை உணர்த்துகிறது. அது போலவே ஆடு மேய்த்த மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்குப் பெண் பார்த்த மாதிரியும் ஆச்சு என்னும் வழக்கு மொழியும் வினையால் வினை ஆக்கிக் கொள்ளும் வினைசெயல் வகையை உணர்த்தும். தமிழக மேனாள் முதலமைச்சர் ம. கோ. இரா அவர்கள் கப்பல் வாங்கச் சப்பான் நாடு சென்ற போது, தம் உடல் நலனையும் ஆய்வு செய்து கொண்டார். அதுபோல் இருதய அறுவைக்காக அமெரிக்கா சென்றிருந்த மேனாள் குடியரசுத் தலைவர் செயில் சிங் அவர்களுடன் சென்றிருந்த மருத்துவருக்கும். அதே நாளில் அதே மருத்துவமனையில் அறுவை மருத்துவம் செய்யப்பட்ட தாம். இவையெல்லாம் வினையால் வினை ஆக்கிக் கொள்ளும் உத்தியாகும். பழகிய யானையைக் கொண்டு பழகாத மதங்கொண்ட யானையைப் பற்றிக் கொள்வது பெரிய உத்தியாகும். அது போன்றதுதான் ஒரு செயலைச் செய்ய எண்ணி ஈடுபட்டவர் அதனோடு தொடர்புடைய இன்னொரு வினையைச் செய்வதற்கும் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு இருவினையையும் ஒரே நேரத்தில் செய்து முடிப்பதாகும். குருடனுக்கு ஒரே மதி என்பது போலவோ, குதிரைக்கு கடிவாளம் போட்டது போலவோ அமைந்து விடாமல் நம்மிடம் பொருந்தியுள்ள வினை ஆண்மைக்கு ஏற்ப ஒன்றிரண்டு வினைகளை இணைத்துக் கொண்டு செய்ய இயலுமாயின் செய்வது நல்லதே. தெள்ளி உணரும் திறனுடையார் தம்பகைக்கு உள்வாழ் பகையைப் பெறுதல் - உறுதியே கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ முள்ளினால் முட்களையு மாறு என்னும் பழமொழிப் பாடல் வினையை வினையாக்கிக் கோடலை வேறு கோணத்தில் வேறு உவமை வழி விளக்குகிறது. ஆணம் உடைய அறிவினார் தம்நலம் மானும் அறிவி னவரைத் தலைப்படுதல் மானமர் கண்ணாய் மறங்கெழு மாமன்னர் யானையால் யானையாத் தற்று எனும் பழமொழிப் பாடலைக் குறட் கருத்துடன் இணைத்துச் சிந்திக்க வேண்டுவல். பகை என்று சொல்லப்படும் பண்பில்லாத செயலை ஒருவன் தன் விளையாட்டுக்காகக் கூட விரும்புதல் கூடாது என்பதை பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று (குறள். 871) எனப் பகைத் திறம் தெரிதல் அதிகாரத்திலும், எல்லா உயிர்களுக்கும் பிரித்தல் என்னும் பண்பில்லாமையைப் பெருக்கும் கொடிய துன்பத்தை, அறிவுடையோர் இகல் என்று கூறுவர் என்பதை, இகலென்ப எல்லா உயிர்க்கும், பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் (குறள். 851) என இகல் என்னும் அதிகாரத்திலும் தனக்குத் தக்க துணையோ இல்லை. ஆனால் பகையோ இரண்டு உள்ளது. அப்படியானால் பகை இரண்டனில் ஒன்றை எப்படியாகிலும் இனிய துணை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் பகையாய் இருந்தாரையும் நட்பாகக் கொண்டு நடக்கும் பண்புடையவனின் பெருந்தன்மையால்தான் உலகம் நிலைத்துள்ளது என்பதை, தன்துணை இன்றால் பகையிரண்டால் தானொருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று (குறள். 875) பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற் றுலகு (குறள். 874) எனவும், பகைத்திறன் தெரிதல் அதிகாரத்திலும் ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்பமாகிய நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்குக் கெடுதல் இல்லாததும், குற்ற மற்றதும் ஆகிய புகழைத் தரும் இகல் என்று சொல்லப்படும் துன்பத்துள் பெரிய துன்பம் ஒருவனிடத்து இல்லாது ஒழியுமானால் அது அவனுக்கு இன்பத்துள் பெரிய இன்பத்தைத் தரும் என்பதை, இகலென்னும் எவ்வநோய் நீங்கின் தவவில்லாத் தாவில் விளக்கம் தரும் (குறள். 853) இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின் (குறள். 854) என இகல் அதிகாரத்திலும் கூறக் கூடிய திருவள்ளுவர், தாம் காட்டும் நெறிப்படி இவ்வதிகாரத்தில் கூறும் குறளே, நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல் (குறள். 679) ஆகும். ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வில் செய்வதற்கு அரிய செயல் நல்லவர்களோடு நட்புக் கொள்ளுதல் ஆகும். நட்புக்கு இணையான பாதுகாப்பு நல்கக் கூடியதும் எதுவும் இருக்க முடியாது. இடுப்பில் கட்டி இருக்கும் உடையை இழக்க நேர்ந்தால், கை தானே போய் உடனே மறைக்க வேண்டியதை மறைக்க உதவுதல் போல், நண்பனுக்குத் துன்பம் வருங்கால் உடனே போய் அத் துன்பத்தை நீக்குவதே நண்பனின் கடமையாகும். நண்பராய் அமைந்தவர்கட்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் நன்மை செய்ய முடியுமோ அத்தகைய நன்மைகளைச் செய்வதும் நட்பாளர்களின் கடமையாகும். ஒரே நேரத்தில் உற்ற நண்பன் ஒருவன் நம்மிடம் ஒரு நன்மையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறான். அதே வேளையில் நம்மிடம் நெடு நாளாகப் பகைமை பாராட்டி வருபவன் ஒருவனுக்கும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவன் நம் தொடர்பில் இல்லாததால் உதவி கேட்கத் தயங்கிக் கொண்டு இருக்கிறான். நாம் நினைத்தால் அவன் துன்பத்தை எளிதில் நீக்கி விட இயலும். ஆனால் அவனோ நம் உதவியை நாடி வரவில்லை. இப்பொழுது யாருக்கு உதவ வேண்டும். இருவருக்கும் உதவ வேண்டும். யாருக்கு விரைவாக முதலில் உதவ வேண்டும்? ஏன் என்னும் வினாவிற்கு விடை அளிப்பது போல் வள்ளுவர், நண்பராய் இருப்பவர்க்கு நன்மை செய்ய வேண்டும் என்பதை அறிஞர்கள், அறநெறியாளர்கள்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. திருவள்ளுவர், நண்பர்கட்கு நன்மை செய்யத் தேவை இல்லை எனவும் கூறவில்லை. நண்பர்கட்கு நன்மை செய்வதில் சிறிது காலத்தாழ்வு ஏற்பட்டாலும் குற்றமில்லை. ஆனால் பகைமை கொண்டு இருப்பவர் களுக்கு மிக விரைந்து நன்மை செய்து அதனால் பகைமையை ஒழித்து நண்பராக்கிக் கொள்வது வினை செயல் நுட்ப முறையாகும். அண்டை அயலாரிடம் பகைமை இன்றி இருப்பதால் கிட்டும் வாய்ப்புக்களும் மிகுதி. கிட்டும் நிறைவும் தனிச் சிறப்புடையது. ஆகவே ஒவ்வொருவரும் பிறரிடம் பகைமை பாராட்டாது வாழ முயலவேண்டும். பகைவரை உடையவன் அமைதியாக நிறைவாகப் பணி செய்ய இயலாது என்பதுடன் நிறைவாகத் தூங்கி, ஓய்வெடுத்துக் கொள்ளக் கூட இயலாது. எப்பொழுதும் அச்சத்துடனும் கவலையுடனும் அல்லது குழப்பத்துடனும் அல்லது சினத்துடனும்தான் இருக்க முடியும், பணி செய்யவும் முடியும். ஆகவேதான திருவள்ளுவர் ஒட்டாமல் இருப்பவரை மிக விரைந்து ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டுகிறார். நட்டார்க்கு நல்ல செயல் இனிது எத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனினும் முன்னினிதே என்னும் இனியவை நாற்பதுப்பாடல் குறளுக்கு எளிய விளக்கமாகும். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சாராக விளங்கிய காலத்தில் எதிர்க் கட்சிக்காரர்களான கருத்திருமன், விநாயகம் அவர் களின் வேண்டுகையை முதலில் விரைந்து நிறை வேற்றிவிட்டு தம் கட்சி உறுப்பினர்களின் வேண்டுகையை வாய்ப்பு உள்ள போழ்து செய்து கொடுப்பார் என்பது குறளுக்கு எடுத்துக் காட்டான நடைமுறையாகும். பெரியவரை மதித்துப் போற்றித் தமக்கு உறவினராகக் கொள்ளுதல், ஒருவர் வாழ்வில் பெற வேண்டிய அரிய பேறுகளுள் எல்லாம் அரிய பேறாகும் என்பதை, அரிய வற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப் பேணித் தமராக் கொளல் (குறள். 443) என்னும் திருக்குறட்பா வழியும், தம்மைக் காட்டிலும் பெரியவர் தமக்கு உறவுடைய ராகுமாறு நடந்து கொள்ளுதல், தமக்கு அமைந்த வலிமைகளுள் எல்லாம் தலையாய வலிமை ஆகும் என்பதைத், தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை (குறள். 444) வந்த துயரை நீக்கி, வர இருக்கும் துயரை வரா வண்ணம் முற்படக் காக்கவல்ல பெரியவரை உறவாகக் கொள்ளுதல் வேண்டும் என்பதை உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் (குறள். 442) என்னும் குறட்பா வழியும் பெரியாரைத் துணைக் கோடல் அதிகாரத்தில், பெரியார் துணையின் பெருந்தக்க நிலையை எடுத்து மொழிந்த வள்ளுவர் வினை செயல் வகையின் நிறைவுக் குறளாக, உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து (குறள். 680) இக் குறட்பாவிற்குத் தமிழ்க் கா. சு. அவர்கள், சிறிய நாட்டினை ஆள்வோர் தம்மினும் பெரிய அரசர் படை எடுத்த இடத்துத் தம் குடியும் படையும் கலங்கும் என்று பயந்து, எதிரிகள் இணக்கத்திற்கு இசைந்தால், அதனைப் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுவர் என உரை கூறுகிறார். நாமக்கல் வெ. இராமலிங்கனார் தம்மிலும் வலிமை மிகுந்தவர்கள் தம்மீது பகை கொண்டு வந்து விட்டால், அவர்களை எதிர்ப்பது மூடத்தனம். இடம், பொருள் ஏவல்களிற் குறைந் தவர்கள், தம்மைச் சேர்ந்தவர்கள் பயத்தால் நடுங்குவதைக் கண்டு, அவர்கட்கு அழிவு வராதிருப்பதற்காகத் தம்மினும் வலிமை யுள்ளவர்களை எதிர்க்காமல் பணிந்து போவார்கள். அதற்காக அவர்களைப் பிறர் குறை கூறினாலும் பொறுத்துக் கொள்வார்கள் என உரை கூறுகிறார். சிறிய நாட்டுக்கு அமைச்சராக உள்ளோர் தம்மினும் வலியார் படை எடுத்த விடத்துத் தம் குடியும் படையும் கலங்கக் கூடும் என்று அஞ்சித் தம்மினும் பெரியாராய அவர்தம் நட்பை மிகவும் தாழ்மையோடு ஏற்றுக்கொள்வர் என மயிலை சிவ முத்து அவர்கள் உரை கூறுகிறார்கள். எதிரி வலிமையாய் இருந்து நம்மிடம் உள்ளோர் அஞ்சும் நிலை ஏற்பட்டால், கொள்கை உறுதியைச் சற்றுத் தளர்த்திக் கிடைத்த வெற்றியை ஏற்றுக் கொள்வது பெரியோர்களின் நடை முறையாகும் எனக் கூறுகிறார் இரா. கனக சுப்புரத்தினம். வலிமை அற்றவர்கள் கூட சுற்றியிருப்பவர்களை அச்சுறுத்து வதற்கு வேண்டிய பலம் கிடைக்கிறது என்றால் பெரியோரைப் பணிந்து வேண்டி, அப்பலத்தைப் பெற்றுக் கொள்வர் எனக் கூறுபவர் ஞா. மாணிக்கவாசகன். சிற்றரசர், குடிமக்கள் நடுங்குவது கண்டு, தூதுவரின் பேரரசரைப் பணிந்து கொள்வர் என்கிறார் வ. சுப. மாணிக்கனார். வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர் என்கிறார் யாதுமாகி தொ. பரமசிவம். வினை செயல் வகையில், உறுதித் தன்மை குறைந்தவர் தம் உள்ளத்துக் கொள்ளும் நடுக்கத்திற்குத் தாம் அஞ்சி, அக்குறை நீங்குவதற்காகத் தம்மினும் பெரியாரைப் பணிந்து அவருதவி கொள்வர் என்கிறார் இரா. இளங்குமரனார். திருக்குறள் ஆழங்காண முடியா ஆழ்கடல். ஆகவே, குறள் கடலுள் அறிஞர்கள் முத்தெடுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாய் விளங்கும் குறட்பாக்களில் இதுவும் ஒன்றாகும். உலகில் வினை செயல் வகையில் வியத்தகு திறனும், நுட்பமும் கைவரப் பெற்றவர்களும் இருப்பர். அத்தகையவர்கள் தனித் தன்மை உடையவர்கள்; அவர்கட்கு பிறர் துணை தேவைப்படாது. ஆனால் வினை செயல் வகையில் திறமையும், தெளிவும் இல்லாதவர்களும் உலகில் இருப்பர். அவர்கள் வினைசெய்வதில் ஊக்கம் கொள்வதற்கு மாறாக, அஞ்சி நடுங்குவார்கள். அவர்கள் வாழ்க்கையில் பின்னடைந்து விடக் கூடாது எனக் கருதும் வள்ளுவர், யார் யாரிடம் என்ன குறை இருக்கிறதோ அக்குறையை நீக்கித் தக்க வழி காட்டியும், வழி கூட்டி துணை புரியும் துறை வல்லாரும், பெருமைக்குரிய நல்லியல்பும் வாய்ந்த பெருமக்களை அணுகிப் பணிந்து அன்னார் உதவியுடன், நடுக்கமும் அச்சமும் இன்றி, வினை செய்யும் வல்லமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே வள்ளுவர் காட்டும் வினை செயல் வகை நுட்பமாகும். வினைக் குறையர், குறையை உணர வேண்டும். குறை நீக்கப் பெரியார் துணையைத் தேடிக் கொள்ள வேண்டும். அப்படியானால் அச்சம் அகலும். ஊக்கம் உடைமை ஆகும். சூழ்ச்சியின் முடிவு துணிவு எய்துதல் துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீதாகும் தூங்கிச் செயற்பால தூங்குக தூங்காது செய்யும் வினை தூங்கற்க ஒல்லும்வாய் எல்லாம் வினைசெய்தல் நன்றே செல்லும்வாய் நோக்கி வினை செய்க வினை எச்சம் தீ எச்சம் போல் தெறும் பகை எச்சம் தீ எச்சம் போலத் தெறும் பொருள் முதல் ஐந்தையும் ஆராய்ந்து வினை செய் வினை முடிவையும் ஆராய்ந்து செய் இடையூறையும் எண்ணிச் செய் வினை முடிவில் கிடைக்கும் பயனையும் கணக்குப் பார்த்துச் செய் உள்ளறிவான் உள்ளம் அறிந்து வினை செய்க வினையால் வினையாக்கிக் கொள்க! யானையைக் கொண்டு யானை பிடிப்பது எளிது நட்டார்க்கு நன்மை செய் ஒட்டாரை விரைந்து ஒட்டிக் கொள் குறை அகலப் பெரியாரைப் பணிந்து கொள் 69. தூது அரசரைப் பொருதுதலும், பிரித்தலும், பேணலும் பற்றி, வேற்றரசரிடம் அரசரும், அமைச்சரும், முனிவரும், புலவரும் சென்று கூறும் செய்தி தூது எனப்படும். அமைச்சர் செல்வதே பெரும்பான்மை. புலவர் சென்றதற்கு ஔவையார் அதிகமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றதை எடுத்துக் காட்டாகக் கொள்க! தூது என்னும் சொல் தூதுச் செய்தியையும் அதனைச் சொல்வாரையும் குறிக்கும். வகுத்துரைப்பார், வழியுரைப்பார் எனத் தூதுவர் இருவகையர். வேற்று நாட்டு அரசன், கேட்கும் வினாக்கட் கெல்லாம் விடையிறுக்கும் அறிவாற்றலும் உரிமையும் பெற்றவர் வகுத்துரைப்பார் எனப்படுவர். அவ்வாறு அன்றிச் சொல்லி விடுத்த செய்தியை மட்டும் சொல்பவர் வழியுரைப்பார் எனச் சுட்டப் படுவர். திருவள்ளுவர் நாட்டை ஆட்சி புரிபவர் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை, காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல் இன்மை, பொறுக்கும் பண்பு, கொடை, அருள், செங்கோல், குடியோம்பல் ஆகிய நல்லியல்புகள் நிரம்பியவராய் அமைந்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார். அதுபோன்றே அரசின் சார்பாளராய் அயல் நாடு செல்லும் தூதுவர் அன்புடைமை, பண்புடைமை, அறிவுடைமை, கல்வியுடைமை, சொல்வன்மை, அஞ்சாமை, துணைமை, துணிவுடைமை, நல்ல தோற்றப் பொலிவு, ஆன்ற குடிப்பிறப்பு உடையவராய் இருக்க வேண்டும் என்பதுதான் திருவள்ளுவர் எதிர்ப்பார்ப்பு. நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவருக்கும், அவர்தம் சார்பில் முக்கியமான செய்திப் பரிமாற்றம் குறித்து அயலகம் அனுப்பி வைக்கப்படும் தூதுவரும் கிட்டத்தட்ட ஒத்த தகுதி உடையராய் இருக்க வேண்டும் என வள்ளுவர் எண்ணுகிறார். இற்றைக் காலத்தில் உலக நாடுகள் பல்வேறு காரணங்களால் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தே இயங்க வேண்டியுள்ளது. எந்த நாடும் தமக்கு வேறு எந்த நாட்டின் தொடர்பும் துணையும் தேவை இல்லை எனக் கூறி ஒதுங்கித் தனித்து நின்று இயங்கவும் இயலாது. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளிலிருந்து, கொண்டும், பிற நாடுகளுக்குக் கொடுத்துமே இயங்கி வருகின்றன. அவ்வாறுதான் இயங்க வேண்டியுளது. ஒவ்வொரு நாட்டின் ஆட்சியிலும் முக்கிய பங்கு ஏற்றுச் செயல்படும் துறை வெளியுறவுத் துறை ஆகும். நாட்டுப் பாதுகாப்பு, அரசியல், பொருளியல், தொழிலியல், வணிகவியல், கல்வியியல், பண்பாட்டு இயல், பொழுது போக்கு இயல், சுற்றிலா இயல், கலையியல், பொறியியல், அறிவியல், மருத்துவ இயல் போன்ற பல்வேறு இயல்களின் வழியாக ஒவ்வொரு நாடும், அந்நாட்டின் வாய்ப்புக்கு ஏற்றவாறு பிற நாடுகளிலிருந்து பெற்றும், பிற நாடுகட்கு வழங்கியும் வருகின்றன. நாடுகளில் வளர்ந்த நாடுகளும் உண்டு; வளர்ந்து வரும் நாடுகளும் உண்டு; வளர்ச்சி அடையா நாடுகளும் உண்டு. இந்நிலையில் வெளியுறவைப் பெருக்கவும், ஒழுங்கு படுத்தவும், மட்டுப்படுத்தவும் வேண்டிய சூழல் ஏற்படும் பொழுதுதான் தூதுவர்களின் பணி தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் தலை நகரத்திலும் பல்வேறு நாட்டுத் தூதரங்கள் அமைந்து அப்பணியைச் செவ்வையாகச் செய்ய வழி கண்டு, நாட்டோடு நாட்டை இணைக்கும் பாலமாய் இயங்கி வருகின்றன. உலக நாடுகளின் வளர்ச்சிக்கும், உறவுக்கும், தக்க நிலையில் பாடுபடும் பொறுப்பு வாய்ந்த தலை மக்களே தூதுவர்கள் ஆவர். இந்திராக் காந்தி இந்தியத் தலைமை அமைச்சராக இருந்து ஆட்சி நடத்தியபோது, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் பேரறிவாளர் நரசிம்மராவ் ஆந்திர அரசியலில் பல்லாண்டுகள் முதல் அமைச்சராகச் சிறப்புடன் ஆட்சி புரிந்த பட்டறிவாளர். இலங்கை வெளிக்கடைச் சிறையில் குட்டி மணி உள்ளிட்ட முப்பத்தேழு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, சினம் கொண்டே இந்திரா காந்தி, இதைப் பார்த்துக் கொண்டு இந்தியா சும்மா இருக்காது எனக் கூறியதுடன், நரசிம்மராவை அழைத்து, அப்போதைய இலங்கையின் தலைவர் செயவர்த்தனே அவர்களிடம் சொல்லச் சொன்னார். இலங்கை சென்றார் ராவ். செயவர்த்தனேயைச் சந்தித்து இங்கு வாழும் தமிழர்கள் சில இலட்சம் பேர் இருக்கலாம். எங்கள் நாட்டில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். எனவே, இது உங்கள் உள்நாட்டு அரசியல் சிக்கல் அல்ல என்று ராவ் அழுத்தமாகச் சொன்னதைக் கோபத்தோடு கேட்டார் செயவர்த்தனே. இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திராக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருபவை. இவை இரண்டுமே இந்தியாவிற்கு எதிரான கட்சிகள் இதைக் கவனத்தில் கொண்டு நமது வெளிநாட்டுக் கொள்கையை வகுக்க வேண்டும் என்று இந்திரா காந்திக்கு இலங்கை அரசியலைத் தெளிவு படுத்தியவர் ராவ். அதனால்தான், நாடாளும் மன்றத்தில் பேசிய தலைமை அமைச்சர் இந்திரா காந்தி இலங்கையில் நடப்பது உள்நாட்டுச் சண்டை அல்ல, இனப் போராட்டம் என்று தெளிவாக அறிவித்தார். இதைக் கவனிக்கச் சரியான ஆளைத்தேடும் வேலை நடந்தது. கோ. பார்த்த சாரதி தேர்வு செய்யப்பட்டார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர். அரசியல் உருவாக்க அவையில் ஒருவராய் விளங்கிய கோபால்சாமி ஐயங்கார் அவர் களின் மைந்தர் இலங்கையில் முக்கியமானவர்கட்கு அறிமுகம் ஆனவர். அவர் கொழும்பு சென்று சிங்களத் தலைவர்கள் அனை வரையும் பார்த்தார். பலரும் அவரை அவமானப்படுத்தினார்கள். நிற்க வைத்துப் பேசினார்கள். ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. கடைசியாகத்தான் தமிழர் தலைவர்களைப் பார்த்தார். தமிழர் பகுதிகளைத் தன்னாட்சி கொண்ட அமைப்பாக மாற்றினால்தான் தமிழர்கள் அமைதியாக வாழமுடியும் என்ற முடிவுக்கு வந்தார். அதை செயவர்த்தனே விடம் எடுத்துச் சொன்னார். இந்தத் திட்டத்திற்கு இணைப்பு சி என்று பெயர். உள்நாட்டுக் குழப்பம். இந்தியாவின் நெருக்கடி இரண்டையும் சமாளிக்க பார்த்த சாரதியின் திட்டத்திற்குத் தலையாட்டிய செயவர்த்தனே பின்னர் எதிர்க்க ஆரம்பித்தார். இந்திராக் காந்தியின் மறைவு அவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது. பேச்சு வார்த்தை தொடங்க வேண்டுமானால் பார்த்த சாரதி வரக் கூடாது என்று தலைமை அமைச்சர் இராசீவ் காந்தியிடம் முதல் நிபந்தனை விதித்தார் செயவர்த்தனே. என்னும் வரலாற்றுச் செய்தி வழியாகத் தூதுவர்களின் தகுதியையும் இயல்பினையும் அறிந்து கொள்வதுடன் வெளிநாட்டு உறவுக்குப் பாலம் அமைப்பவர்கள் என்பதையும் உணர முடிகிறது. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு (குறள். 681) என்னும் குறளைக் காணும் போழ்து, பண்புடைமை அதி காரத்தில் இடம் பெற்றுள்ள, அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு (குறள். 992) என்னும் குறளை எண்ணிப் பார்க்காமல் இருக்க இயலாது. திருவள்ளுவர், நாடாள்வோர் சார்பில் அயல் நாடுகளுக்குத் தூது செல்வோர், தந்நலம் பேணுபவராகவோ, பேராசைக் காரராகவோ, ஒழுக்க மற்றவராகவோ, பண்பிலாதவராகவோ இருந்து விடக் கூடாது, என விரும்புகிறார். ஆகவே, அன்புடைமையாகிய பண்பு உடையராக முதற்கண் விளங்க வேண்டும். நாட்டுப் பற்று மிக அவசியம். தூதுவனின் எண்ணமும் பேச்சும், செயலும் தம் நாட்டிற்கு நன்மையும் பெருமையும் தருவதாய் அமைந்திருக்க வேண்டும். தம் உடல், பொருள், உயிர் மூன்றும் நாட்டு நலத்திற்கே எனக் கருதிச் செயல் படும் அன்புடையாராக விளங்க வேண்டும். அவருடைய முன்னோர்களும் இன்றையக் குடும்ப உறுப் பினர்களும் குருதித் தொடர்புடையவர்களும் நடுவு நிலை தவறாதவர்களாகவும், பழிக்கு நாணுபவர்களாகவும், ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் பேணுபவர்களாகவும், குற்றமற்ற நன்மை தரும் சொற்களையே பேசும் வாய்மையாளராகவும், அன்று மலர்ந்த மலர் முகத்தவராகவும், வறியவர் கட்கு வாரி வழங்கும் கைகளை உடையவராகவும், பிறரைப் பழித்துக் கூறாது இனிய சொற்களையே பேசும் வாயினை உடையவராகவும், நாட்டுக்குக் குறைவை உண்டாக்கும் எச்செயலையும் செய்யாதவராகவும். பண்பின் நிறைவாலும் அறிவுப் பெருக்காலும் ஏற்படும் பணிவு உடையவராகவும், விளங்க வேண்டும், என வள்ளுவர் கருதுவதால் ஆன்ற குடிப்பிறந்தவராகவும் இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறார். அத்துடன் ஆட்சியாளர் விரும்பும் நல்ல பண்புகள் வாய்க்கப் பெற்றவ ராகவும், ஆட்சியாளரை விரும்பும் நல்ல பண்பாளராகவும் அமைவதே தூது சொல்லச் செல்வானிடம் எதிர்பார்க்கும் பண்புகள் ஆகும். ஆகவே தான் திருவள்ளுவர் நல்ல நாட்டுப் பற்று உடைமையும், நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வளர்ப்பும், ஆட்சியாளர் விரும்பும் நல்ல குணங்கள் உடைமையும் ஆட்சியாளர் சார்பில் அயலகத்திற்குத் தூது செல்வானிடம் கட்டாயம் அமைந்திருக்க வேண்டிய பண்புகளாகும் என முதற்கண் கூறுகிறார். அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு நன்குடைமை நல்ல நயனுடைமை - நன்கமைந்த சுற்றமுடைமை வடிவுடைமை சொல்வன்மை கற்றடங்கல் தூதின் கடன் என்னும் பாரத வெண்பாப் பாடல் குறளுக்கு அருமையான விளக்கமாய் அமைந்துள்ளது. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி அமையாத மூன்று (குறள். 682) தூது உரைப்பாரிடம் பல்வகையான நல்லியல்புகள் பொருந்தி இருக்க வேண்டும் எனினும் அவற்றுள் கட்டாயம் இருக்க வேண்டிய தன்மைகள் எத்தனை? அவை யாவை? என்னும் வினாவிற்கு விடை அளிப்பது போல் இக்குறளை அமைத்துள்ளார். அன்புடையவரே நாட்டு நலப் பணியில் ஈடுபடுவதற்குத் தகுதி யுடையவர். அன்பு ஆர்வத்தை உண்டாக்கும் தாயாகும். அன்பே நட்பை உண்டாக்கும் பாட்டியாகும். அறத்தையும் மறத்தையும் துணை நின்று காக்கும் உந்து சக்தி அன்பாகும். அன்பாகிய அக உறுப்பே, புற உறுப்புகளையும் பயன் உடைய உறுப்புகள் ஆக்கும். உண்மையில் இவ்வுடலை உயிருடைய உடலாக்குவது அன்பே! ஆகவே அன்பு தேவை யான பொதுப் பண்பு எனக் குறிப்பிட்டதுடன் அமையாது இன்றியமையா முப்பண்புகளில் அன்பை முதற் பண்பாக உரைத்தார். தூது செல்வோர் கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்றவர் ஆகவும், பரந்துபட்ட பல்துறை அறிவும், ஆழமான அறிவும், நுட்பமான அறிவும், தாம் சென்ற நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்குத் தேவையான முழு அறிவும், எதிராளிக்கு எந்நிலையிலும் குறையாத பேரறிவும் வாய்க்கப் பெற்றவராகவும் இருக்க வேண்டும். உரைக்கும் முறைமையில்தான் தூதின் நோக்கமும் பயனும் சிறப்பும் அமைந்திருக்கிறது. ஆகவே, பயனுடைய சொற்களையே பயன்படுத்தத் தெரிய வேண்டும்; கேட்பவர் செவிக்கும் உள்ளத்திற்கும் இன்பம் பயப்பதாகவும் இருக்க வேண்டும். எதிராளியின் கருத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப வீண் சொற்கள் இன்றிக் கேட்பவை கூர்ந்து கேட்டு, பசுமரத்தில் அடிக்கும் ஆணி போல் மனத்தில் பதியுமாறு பேசும் சொல்வன்மை உடையவராக வும் இருக்க வேண்டும். ஆகவே, திருவள்ளுவர், அன்பால் நிறைந்த உள்ளமும், அறிவால் வளம் பெற்ற மூளையும், முறை அறிந்து சொல்லும் நாவன்மையும் ஆகிய மூன்று தன்மைகளும் தூது உரைப்பார்க்கு இருக்க வேண்டிய இன்றி யமையாத் தன்மைகள் ஆகும், என்கிறார். மாண்டமைந்தார் ஆய்ந்த மதிவனப்பே, வன்கண்மை ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு ஞாலம் அறிந்த புகழ் என்னும் ஏலாதிப் பாடலும் இணைத்துச் சிந்திக்கத் தக்கதே. நூலாருள் நூல்வல்ல னாகுதல், வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு (குறள். 683) தூது உரைப்பான் பணி. இரு நாடுகளிடையே நல்லுறவையும் அமைதியை யும் ஏற்படுத்தும் பணியாக இருந்தாலும் அமைதிக் காலப்பணியாகவே எப்பொழுதும் அமையும் என்றும் கூறிவிட முடியாது. இரு நாடுகள் ஒன்றுக்குள் ஒன்று பகைமை கொண்டு, கரி, பரி, தேர், காலாள் படைகளைத் திரட்டி நேருக்கு நேராக மோதும் போர்க் களத்தில் போர் உச்ச நிலையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், தன்னாட்டுப் படைக்கு வெற்றி மிக்க ஒளிமயமாக இருப்பதை எதிரி நாட்டுப் படைத் தலைவனுக்கு அஞ்சாமல் சென்று எடுத்துரைத்து, தன்னாட்டின் பெருமையைப் பெருமிதத்துடன் உணர்த்திப் போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் சில வேளைகளில் தூதர்க்கு ஏற்படலாம். ஆகவே தூது செல்வோர் சுற்றுலாச் செல்பவர் போன்றவர் அல்லர். எத்தகைய புலமை நலம் மிக்க அறிஞர்களையும் அறிவால் விஞ்சி மேலோங்கி நிற்கும் அறிவாளராகவும் அமைந்திருக்க வேண்டும். அறிவுக் களத்தில் வல்லவனாக விளங்குபவனால்தான் அச்சம் தரும் போர்க்களத்திற்கும் அஞ்சாது செல்லவும் முடியும்; சொல்ல வேண்டிய கருத்தை அஞ்சாது சொல்லவும் முடியும். எண்ணியதை எண்ணியவாறு நிறைவேற்றவும் முடியும். வில்லையும் வெல்ல வல்லது சொல். அறிவுடையார் எல்லாம் உடையார் என்பது பெருமைக்கு சொன்ன சொல் அன்று. பட்டறிவு மொழி ஆகும். ஆகவே, தூது செல்வோன் வீரருள் வீரனாகவும் இருக்க வேண்டும். அறிஞருள் அறிஞனாகவும் விளங்க வேண்டும். எப்பொருள் எவ்வியல்பு உடையதாகத் தோற்றத்தில் தெரிந்தாலும், அதனை அப்படியே கொள்ளாமல் அப்பொருளில் அமைந்துள்ள மெய்ம்மை யைக் கண்டு கொள்வதே தெளிந்த அறிவாகும் என்பதை, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 355) என மெய்யுணர்தல் அதிகாரத்திலும், எந்தப் பொருளைப் பற்றி எவரெவர் சொல்லக் கேட்டாலும், அந்தப் பொருளில் உள்ள உண்மைப் பொருளைக் கண்டுணர்வதே அறிவாகும் என்பதை, எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 423) என அறிவுடைமை அதிகாரத்திலும், கேடில் விழுச்செல்வம் கல்வி எனக் கல்வி அதிகாரத்திலும் கூறிய திருவள்ளுவர், கல்லாமை அதிகாரத்தில் நுண்ணிய விரிந்த ஆழ்ந்த அறிவு இல்லாதவன் ஒருவன் கொண்டுள்ள தோற்றமும் பொலிவும் மண்ணால் செய்து வண்ணம் தீட்டப்பட்ட பொம்மை போன்றதாகும் எனும் கருத்துப்படக் கூறியதை உடன்பாட்டு நோக்கில் நுண்மான் நுழைபுலம் உள்ளான் எழில் நலம் கல்மாண் சிலை அன்னதாகும் எனக் கொண்டு இணைத்தால் தோன்றும் குறளே, அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு (குறள். 624) என்னும் இக்குறள் எவ்வினை செய்வார்க்கும் வேண்டும் பொதுத் தகுதியை உணர்த்துவது போல் அமைந்துள்ளது எனினும் தூது அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளதால் தூது வினை எனக் கொள்கிறோம். அறிவுக் கூர்மையும், கண்டவர் மதிக்கும் அழகிய கட்டுடல், பொருள் புரியாமல் கண்ணைமூடிக் கொண்டு கிளிப்பிள்ளைபோல் மனப்பாடம் செய்து படிக்கும் படிப்பால் பயன் இல்லை என வள்ளுவர் கருதுவதால் ஆராய்ச்சி உணர்வோடு கற்ற கல்வியே வள்ளுவர் கருதுவதால் அதனை ஆராய்ந்த கல்வி என்றார். அறிவு, உருவம், ஆராய்ச்சிப் படிப்பு ஆகிய இம்மூன்றும் நிரம்ப அமைந்தவர் தூது உரைக்கும் பணிக்கு செல்வார்களாக! இம்மூன்றிலும் குறையுடையார் தூதுவராகச் செல்லாதிருப்பதே நாட்டுக்கு நல்லது. மனைத் தக்க மாண்பு பொருந்திய தன் மனைவியாம் கண்ணகியார் கண்ணீர் விட்டுக் கலங்க, வள்ளல் பேகன் நல்லூர் நங்கையுடன் வாழ்ந்ததை விரும்பாத கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர்க் கிழார் போன்ற சங்கச் சான்றோர்களும், உழவர் நலங்காக்கப் பாண்டியன் அறிவுடை நம்பிபால் தூது சென்ற பிசிராந்தையாரும் குதிரை மலைக் கோமான் அதியமான் சார்பாகத் தொண்மானிடம் தூது சென்று போர் விலக்கிய ஔவையாரும் மைந்தரோடு மாறுபட்டுப் போர் மேற்கொண்ட கோப்பெருஞ் சோழனைப் போரை விட வைத்த புல்லாற்றூர் எயிற்றி யனார் போன்றவரும், உரையூரை முற்றுகை இட்டிருந்த சோழன் நலங் கிள்ளியையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் சீர் செய்த கோவூர்க் கிழாரும். கருவூரை முற்றுகை இட்டிருந்த சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்கு அறிவூட்டிய ஆலத்தூர் கிழார் போன்ற பழந்தமிழ்ச் சான்றோர்களும் அறிவு உரு ஆராய்ந்த கல்வி அமைந்த பெருமக்களே ஆவர். கிள்ளி வளவன் கருவூரை முற்றுகை இட்டிருந்தபோதும், அடைபட்டிருந்த கருவூர் மன்னன், சோழனுடைய வீரர் தன் நகர்ப்புறத்துக் காவிலுள்ள காவல் மரங்களை வெட்டுதலால் உண்டாகும் ஓசை தன் செவியில் பட்டும் போர்க்கு வாராது அஞ்சி மடிந்து கிடப்பது கண்டு, சோழனை நோக்கி, வேந்தனே, அடுநை ஆயினும் விடுநை ஆயினும் நீ அளந் தறிதிநின் புரைமை வார்கோல் செரிஅரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர் பொலம்செய் கழங்கில் தெற்றி ஆடும் தண்ஆன் பொருநை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும் கடிமரம் தடியும் ஓசை தன்னூர் நெடுமதில் வரைப்பில் கடிமனை இயம்ப ஆங்கினிது இருந்த வேந்தனோடு ஈங்குநின் சிலைத்தார் முரசம் கறங்க மலைத்தனை என்பது நாணுத்தக வுடைத்தே எனக் கூறிப் போர்புரிதலைத் தடுத்தார். ஆலத்தூர்க் கிழார் என்னும் சங்கச் சான்றோர் எனப் புறநானூற்றுப் பாடல் கூறும் கருத்து புலவரின் அறிவுத் திறத்தையும் ஆராய்ந்த கல்விப் புலமையையும் வெளிப்படுத்தும். தொகச் சொல்லித் தூவாத நீக்கி, நகச் சொல்லி நன்றி பயப்பதாம் தூது (குறள். 685) தூதுவன் நட்பு நாட்டிற்கும் செல்லலாம்; பகை நாட்டிற்கும் செல்லலாம்; பகைமையும் நட்பும் இல்லாத அயல் நாட்டிற்கும் செல்லலாம். எந்த நாட்டிற்குச் சென்றாலும் எந்தச் சூழலில் சென்றாலும் அந்தந்த நாட்டு ஆட்சியாளரிடம் சொல்ல வேண்டிய செய்திகளை ஒழுங்குபடக் கோத்து நன்கு விளங்கிக் கொள்ளுமாறு எவ்வளவு சுருக்கிச் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கிச் சொல்ல வேண்டும். தீது ஒரீஇ நன்றில்பால் உய்க்கும் அறிவு போல் மறந்தும் குற்றமான செய்திகளைக் கூறாது விலக்கிவிட வேண்டும். கேட்பவர் மகிழ்ச்சியுடன் கேட்குமாறும் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய முறைப்படி சொல்லி நாட்டிற்கு நன்மையை உண்டாக்குபவனே சிறந்த தூதனாவான். தூதுவன் தொகச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லுங் கால் தூவாத நீக்கப்பட வேண்டும். நகச் சொல்ல வேண்டும் நன்றி பயக்க வேண்டும். அப்படிச் செயல்படுபவனே தூதன் ஆவான். தூவாத நீக்கி - என்னும் தொடர் அறிஞர்களைச் சிந்திக்க வைத்த தொடராகும். இன்னா காரியங்களைச் சொல்லும் வழி வெய்ய சொற்களை நீக்கி என்பது பரிமேலழகர் சொல்லிய கருத்தாகும். விரும்பாத சொற்களை நீக்கி என்பது மணக்குடவர் உரை. காளிங்கரோ பயன்படாத சொல்லினை நீக்கி என்கிறார். மாணிக்க வாசகன் தீயவற்றை நீக்கி என்கிறார். விடுவனவற்றை விட்டு என்பது வ. சுப. மாணிக்கனார் உரை. வெறுப்பான செய்திகளைச் சொல்லும் போது கடுஞ்சொற்களை நீக்கி எனப் பாவாணர் உரை காண்கிறார். சொல்லக் கூடாதவற்றை விலக்கி என உரை காண்பவர் இளங்குமரனார். நல்லது அல்லாதது, பயன் அற்றது, தீமை தருவது, வேண்டாதது சொல்லக் கூடாதது, கேடு பயப்பது, தேவையற்றது, தகுதியற்றது எல்லாம் நீக்கிவிட்டுச் சொல்ல வேண்டும். தெரிந்ததை எல்லாம் சொல்லி விடக் கூடாது. தெரிவிக்க வேண்டியதை மட்டும் கூற வேண்டும். தொகுத்துக் கூட்டி வகுத்துக் கழிக்க வேண்டியதைக் கழித்து, மனம் மகிழுமாறு நன்மை தருவனவற்றை மட்டுமே தூதுவன் உரியவரிடம் உரைக்க வேண்டும். பசலைக் கொடி போன்ற சுருங்கிய இடுப்பையும், தளர்ந்த நடையை யும், இளமையையும் உடைய பார்ப்பான். இரவில் வந்து தடை இல்லாமல் சென்று சொல்லிய சொற்கள் சிலவாம். அதற்கு ஏணியையும், சீப்பையும் நீக்கினர். போர்த் திறம் மிக்க யானையின் மணியையும் கழற்றி விட்டனர். பார்ப்பான் தூதால் போர் ஒழிந்தது என்னும் கருத்துப் புலப்படுமாறு, மதுரை வேளாசான் பாடிய, வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே ஏணியும் சீப்பும் மாற்றி மாண்வினை யானையும் மணிகளைந் தனவே என்னும் புறநானூற்றுப் பாடல் ஒரு வழிச் சான்றாய் அமைந்துள்ளது. கற்றுக்கண் அஞ்சான் செலச் சொல்லிக் காலத்தால் தக்கத றிவதாம் தூது (குறள். 686) தூதுவன் தன் பணிக்கு இன்றியமையாது வேண்டப்படும் அரசியல் நூல்களையும், அற நூல்களையும், மயக்க மின்றிக் கற்றுத் தெளிந்த அறிவுடையவனாகவும் இருக்க வேண்டும். அக்கல்வியின் நிறைவு அவனுக்குத் தன்னம்பிக்கையையும், மனவுறுதியையும், துணிவை யும் வழங்க வேண்டும். பகைமை கொண்ட நாட்டின் ஆட்சி யாளன் வெகுண்டு நோக்கினாலும், சிறிதும் அச்சவுணர்வு ஏற்படக் கூடாது. தான் சொல்ல வேண்டிய செய்தியைக் கேட்பவன் மனத்தில் நன்கு பதியுமாறு அழுத்தமாகச் சொல்லி விட வேண்டும். நூற்கல்வி பயன்படாதவிடத்துத் தன்மதி நுட்பத்தாலும், உலகியல் அறிவாலும் சூழலுக்கு ஏற்றவாறு, தக்க வழிகளைக் கையாண்டு, சென்ற நோக்கத்தை நிறைவாக நிறைவேற்ற வேண்டும். கல்வி வேண்டும்; அஞ்சாமை வேண்டும்; சொல்வன்மை வேண்டும். காலத்தால் தக்கதை அறிய வேண்டும். இத்தகைய தன்மை தூதுவனுக்கு இயல்பாக அமைந்திருக்க வேண்டும். கோவூர்க் கிழார் என்னும் சங்க காலச் சான்றோர், உறையூரை முற்றுகை இட்டிருந்த சோழன் நலங்கிள்ளியையும், கோட்டையை அடைத்துக் கொண்டு உள்ளிருந்த நெடுங்கிள்ளியையும் தனித் தனியே நோக்கி, கிள்ளியே நீ கரிய பனையின் வெண்ணிறப் பூமாலை அணிந்த சேரனும் அல்லன்; வலிய கிளைகளையுடைய வேம்பின் மாலை அணிந்த பாண்டியனும் அல்லன்; உன்னுடைய மாலையும் ஆத்திப் பூவால் அமைந்ததே; உன்னுடன் போரிடுவோன் மாலையும் ஆத்திப்பூவால் அமைந்ததே; உங்களுள் எவர் ஒருவர் தோற்றாலும் தோற்பது உங்கள் குடியேயாகும்; இருவரும் போரில் வெல்லுதல் என்பது இயற்கை இல்லை; அதனால் குடிக்குப் பெருமை தருவது ஆகாது உங்கள் செயல்; கொடியாடும் தேரையுடைய உமக்கு ஒப்பான வேந்தர்களுக்கு வேண்டாத பூரிப்புத் தருவது இப்போரேயாம் என்னும் கருத்துப்பட மொழிந்து, போரைத் தவிர்த்ததை உணர்த்தும். இரும்பனை வெண்தோடு, மலைந்தோன் அல்லன்; கடுங்சினை வேம்பின் தெரியலோன் அல்லன் நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே; நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே ஒருவீர் தோற்பினும் தோற்பதுஉம் குடியே இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால் குடிப்பொருள் அன்றுநும் செய்தி; கொடித் தேர் நும்மோர் அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும்இவ் இகலே என்னும் புறநானூற்றுப் பாடல் வழியாகக் கோவூர்க் கிழாரின் கல்விச் சிறப்பு அஞ்சாமை சொல்வன்மை, காலம் அறிதல், தக்கதை அறிந்த திறன் அனைத்தும் புலப்படுகிறது. குறளுக்கு நல்ல எடுத்துக் காட்டாய் விளங்கிய சான்றோர் கோவூர்க் கிழார். கடனறிந்து காலம் கருதி இடனறிந் தெண்ணி உரைப்பான் தலை (குறள். 687) என்னும் இக்குறள், சான்றாண்மை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள, கடனென்ப நல்லவை எல்லாம், கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு (குறள். 981) என்னும் குறளையும், ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தாற் செயின் (குறள். 484) என்னும் காலம் அறிதல் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள குறளையும், சொல்வன்மை அதிகாரத்தில் அமைந்துள்ள, திறனறிந்து சொல்லுக சொல்லை, அறனும் பொருளும் அதனினூஉங் கில் (குறள். 644) என்னும் மூன்று குறள்களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்கத் தூண்டுகிறது. வேற்று நாட்டிற்குத்தூது செல்பவன் எச்சூழ்நிலையிலும் தான் வந்த கடமையை மறந்து விடாது, நினைவில் வைத்திருக்க வேண்டும். வேற்று நாட்டை ஆள்பவரின் இயல்பறிந்து, தான் நடந்து கொள்ள வேண்டிய முறையில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அவரை எப்பொழுது கண்டால் அவர் நல்ல மனநிலையில் இருப்பார் என்பதைத் தெரிந்து, அதற்கு ஏற்ற காலத்தைத் திட்டப் படுத்திக் கொண்டு, தான் கொண்டு வந்த செய்தியைச் சொல்லுதற்குரிய இடமும் பார்த்து, தான் சொல்ல வேண்டியவற்றை முன்னமே தன் மனத்தில் ஒழுங்காக எண்ணி வைத்து, அவ்வாறு சொல்பவன் தலையான தூதுவன் ஆவான். காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு ஞாலம் அறிந்த புகழ் என்னும் ஏலாதிப் பாடல் அடிகள் நினைவுகூரத் தக்கதாம். செல்லுங்கால் தேயத்து இயல்தெரிந்து, சென்றக்கால் புல்லிய சுற்றம் புணர்வறிந்து - புல்லார் மனத்தால் பிரித்து வலியால் உதவும் இனத்தால் தெரிவது தூது என்னும் பாரத வெண்பாப் பாடலையும் ஒப்பு நோக்குக! தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு (குறள். 688) திருவள்ளுவர் தூதுவனைத் தூதுவன் எனச் சுட்டாமல் வழியுரைப்பான் எனும் சொல்லால் உணர்த்துகிறார். தூதுவன் இரு நாடும் கூடிவாழ, கூடித் தொழில் செய்ய, கொண்டு கொடுத்து வாழத் தக்க வழியைக் கண்டு உரைப்பவன். அவன் வாய்மையாளனாகவும் இருக்க வேண்டும். வாய்மை எனப்படுவதி யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல் (குறள். 291) என்ற இலக்கணத்திற்கு ஏற்ப எந்த நாட்டிற்கும் எந்தச் சூழ்நிலையிலும் எவ்வகையிலும் யாதொரு தீமையும் பயக்காத சொற்களையே பேசுபவனாக இருக்க வேண்டும். ஏனெனில் மனத் தூய்மையோடு வாய்மை பேசுவது அரிதின் முயன்று செய்யும் தவத்தையும், வறியவரை வாழ வைக்க வழங்கும் தானத்திலும், தலை சிறந்ததாகும். தூதன் உடல், உடை, உள்ளம், மொழி, செயல் ஆகிய அனைத்திலும் அழுக்கு அகற்றித் தூய்மை போற்றுபவனாகவும் இருக்க வேண்டும். தான் பிறர் துணையில் வாழ எண்ணாதவனாகவும் இருக்க வேண்டும். ஒல்லும் வகையான் பிறர்க்குத் துணை நின்று உதவும் மனவளம் பெற்றிருக்க வேண்டும். நல்ல வாழ்க்கைத் துணை, வழித்துணை, பணித் துணையையும் இயல்பாகப் பெற்றிருக்க வேண்டும். நாட்டிற்கு நலம் தரும் பணியில் ஈடுபடுவோர் எதற்கும் எவருக்கும் அஞ்சாது துணிவுடன் செயல் படவேண்டும். தூய்மை, துணைமை, துணிவுடைமை ஆகிய மூன்றின் வாய்மை வழி காட்டுவது தூதனின் சிறந்த பண்பாகும். இராமர் அகத்தியர் ஆசிரமத்தை விட்டுப் பஞ்சவடிக்குப் போகிறார். வழியில் ஒரு மலை உச்சியில் சடாயுவைக்கண்டார் என வரலாறு வகுக்கின்ற கம்பர் சடாயுவின் இயல்புகளாக, தூய்மையன், இருங்கலை துணிந்த கேள்வியன் வாய்மையன், மறுஇலன், மதியின் கூர்மையன் ஆய்மையின் மந்திரத்து அறிஞர் ஆம்என சேய்மையின் நோக்குறு சிறுகணான் தனைக் கண்டார் எனக் கம்பர் பாடிய பாடல் இக்குறளுக்கு நல்லதோர் இலக்கியச் சான்றாய் விளங்குகிறது. விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான், வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன் (குறள். 689) தன் நாட்டு ஆட்சியாளன் சொல்லிவிடுத்த செய்தியை, வேற்று நாட்டு ஆட்சியாளனுக்கு உரிய காலத்தில் உரைக்க வேண்டியவன் தூதன். தூது செல்லும் நாட்டைப் பொறுத்தும், அந்நாட்டை அப்பொழுது ஆளும் ஆட்சியாளரைப் பொறுத்தும், செல்லும் சூழ்நிலையைப் பொறுத்தும், கொண்டு செல்லும் செய்தியைப் பொறுத்தும் வரவேற்பின் தன்மை அமையும். எல்லாம் எதிர்மறையாய் அமைந்திருக்குமாயின், தூதனுக்கு எதிர்பாராத் தீங்கு நேரிடலாம். தூதன் அச்சப்படக் கூடாது. அந்நிலையிலும் அவன் வாயிலிருந்து நாட்டுக்குத் தீங்கு தரும் சொற்களோ, தரமற்ற சொற்களோ குற்றமான சொற்களோ மறந்தும் பேசா திண்ணிய நெஞ்சத்தவனாய் இருக்க வேண்டும். தூதன் கடமையில் கருத்துடையவனாகவும்,வாய்மை போற்று பவனாகவும், நாவன்மை உடையவனாகவும் நாவடக்கம் உடையவனாக வும், அச்சமற்ற பேராண்மை ஆளனாகவும் இருக்க வேண்டும். தூதனாகிய அனுமனைக் கொல்லலாகாது என வீடணன் உரைப்ப தாகக் கம்பர் படைத்த பாடல், பகைப்புலன் நணுகி உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து, பற்றார் மிகைப்புலன் அடக்கி மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட தகைப்புலக் கருமத் தோரைக் கோறலின், தக்கார் யார்க்கும் நகைப்புலன் பிறிது உண்டாமோ நம்குலம் நவை உண்டாமே தக்க எடுத்துக் காட்டாகும். இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் குறுதி பயப்பதாம் தூது (குறள். 690) தூதின் இறுதிக் குறள் இறுதி எனத் தொடங்குகிறது. திரு வள்ளுவர் தூதன் சாவுக்கு அஞ்சாக் கடமைவீரனாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். பிறந்தவர் என்றாவது ஒரு நாள் இறப்பது உறுதி. புகழெனெனின் உயிரும் கொடுக்கலாம். பெறுவது புகழாக இருக்குமானால் இழப்பது உயிராக இருந்தாலும், கிடைத்தற்கரிய பேறுதான். அதனால்தான் திருவள்ளுவர் தான் கூறும் செய்தியால் தன் உயிரை இழக்க நேர்ந்தாலும், சிறிதும் அச்சம் கொள்ளாது. தம் ஆட்சியாளனுக்கு தெரிவிப்பவனே சிறந்த தூதனாவான் எனக் கூறுகிறார். தடுமாற்றம் இன்றித் தகைசான்ற சொல்லான் விடுமாற்றம் வாய்சோரா னாகி - விடுமாற்றம் எஞ்சாது கூறி இகல்வேந்தன் சீறுங்கால் அஞ்சாது அமைவது தூது என்னும் பாரத வெண்பாப் பாடல் இக்குறளுக்கும் முந்திய குறளுக்கும் இணைந்து விளக்கம் தருவது போல் அமைந்துள்ளது. தொண்டை நாட்டை ஆண்ட வேந்தன் தொண்டைமான். அவன் தகடூர் மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின்பால் பகைமை கொண்டான். தன்னிடம் படைவலிமை மிகுந்திருப்பதாக எண்ணி, அவ்வேந்தன் செருக்குற்றான். அவனுடைய அறியாமையை அறிந்த அதியமான், போரின் கொடுமையையும் அதன்கண் அவன் வலிமை இழந்து கெடுவதன் உறுதியையும், அதனால் நாட்டுக்கும் நாட்டு மக்கட்கும் நேரும் கேட்டையும் தெரிந்து கொள்ளுமாறு அறிவிக்கும் பொருட்டு ஔவைப் பெருமாட்டியை அவன்பால் தூது விட்டான். ஔவையார் அதியமானின் தூதராகத் தொண்டை நாடு சென்று மன்னன் தொண்டைமானைக் கண்டார். அவர் வருகையின் நோக்கை உணர்ந்த தொண்டைமான் தன்படைப் பெருமையை அவருக்குக் காட்ட எண்ணி, அவரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று பல்வேறு படைக்கலங்களைக் காட்டினான். அவன் கருத்தறிந்த ஔவையார் தொண்டை மானை நோக்கி, பொருள் மிக உண்டானால் வேண்டும் அளவும் கொடுத்தும், பொருள் குறை உண்டாயின் உடன் வைத்தும் உண்ணும் வறியவர் உறவினனாம் தலைவனும், பெருமைக்கு உரியவனும், எம் வேந்தனும் ஆகியவன் அதியமான். அவன் கொண்ட கூர்மை அமைந்த வேல், பகைவரைக் குத்திப் பக்கமும் நுனியும் முரிந்து கொல்லர் உலைக்களமாகிய சிறிய இடத்தில் கிடக்கின்றன. ஆனால் உன் படையாம் இவையோ மயில் தோகை அணிந்து, மாலை சூட்டி, வலிய திரண்ட பிடியின தாய் நெய்பூசப்பட்டுக் காவல் மிக்க பேரிடத்தில் மிக்க பாது காப்பாய் உள்ளன என்னும் பொருள் தோன்றுமாறு இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து கடியுடை வியன்நகர் அவ்வே; அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொல் துறைக் குற்றில மாதோ; என்றும் உண்டாயின் பதன்கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல் எம் கோமான் வைந்நுதிவேலே எனத் தொண்டைமான் போர்க் கருவிகளைப் புகழ்வது போல இகழ்ந்தும் அதியமான் படைக்கருவிகளைப் பழிப்பது போல் புகழ்ந்தும் தொண்டை மானிடம் நேரடியாக உரைத்தது உயிர்க்கு அஞ்சாது வேந்தர்க்கு உறுதி பயக்கும் தூதர்க்கு ஏற்ற எடுத்துக் காட்டாகும். தூதுரைப்பான் அன்புடையானாய் இருக்க வேண்டும் தூதுரைப்பான் ஆன்ற குடிப் பிறப்பினனாய் இருக்க வேண்டும் தூதுரைப்பான் ஆள்வோர் விரும்பும் பண்பாளனகவும் இருக்க வேண்டும் தூதுரைப்பார்க்கு அன்பு, அறிவு, சொல்வன்மை இன்றி யமையாப் பண்புகளாகும் வெற்றி உரைக்கும் தூதுவன் தேர்ந்த அறிஞனாக இருக்க வேண்டும் அறிவன் அழகன் கல்வியாளனே தூது செல்லத் தக்கவன் தூதுவன் தொகுத்துச் சொல்லி நன்மை உண்டாக்க வேண்டும் தூதுவன் சொல்லக் கூடாதவற்றை விலக்கி நன்மை உண்டாக்க வேண்டும் தூதுவன் கேட்பவர் மகிழுமாறு பேசி நன்மை உண்டாக்க வேண்டும் தூதுவன் கற்றவனாகவும், அஞ்சாதவனாகவும் சொலல் வல்லானாகவும், தக்கதை அறியும் திறனாளியாகவும் விளங்க வேண்டும் தூதுவன் தன்கடமையைக் காலம், இடம் அறிந்து செய்ய வேண்டும் தூய்மையும் துணிவும் துணையும் உடைய தூதனும் வாய்மை வழி போற்ற வேண்டும் தூதுவன் குற்றம் கூறா வல்லவனாக இருக்க வேண்டும் தன் அழிவு கருதாது நாட்டு நலம் நாடுவதே தூதனின் மாண்பு ------------ 70. மன்னரைச் சேர்ந்தொழுகல் மன்னர் என்பது முடியாட்சிக் காலச்சொல். ஆட்சித் தலைவன் என்று வழங்குவதே இன்று பொருந்துவது. ஆகையால், ஆட்சித் தலைவரைப் பொருந்தி நடக்கும் முறை எனக் கொள்வதே தக்கது. இறை மாட்சியில் தலைவனுடைய இயல்பைச் சொல்லும் போது, வந்து காண்பதற்கு எளியவனாய் இருக்க வேண்டும் என்றும், யாரிடத்தும் கடுஞ்சொல் கூறாமல், இன்சொல் பயில வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறியுள்ளார். செங்கோன்மையில் ஆளும் முறை பற்றிக் கூறும் போதும், முறை நாடி வருகின்றவர்களுக்கு எளிய செவ்வி உடையவனாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு எளியவனாய், இனியவனாய்த் தலைவன் நடந்து கொண் டால் அவனை வந்து காண்போர் அளவற்றவராய்ப் பெருகி விடுவார்கள்; அதனால், அவர்களைக் கண்டு இன்சொல் கூறிப் பழகுவதிலேயே தலைவனுடைய காலமெல்லாம் செலவாகும். மற்றைக் கடமைகளை ஆராய்ந்து திறமையோடு செய்வதற்கு வேண்டிய ஓய்வும் அமைதியும் வாய்ப்பும் இல்லாத நெருக்கடி நேரும். ஆயினும், அதைத்தடுத்துக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றோ, எளியவனாய், இனியவனாய் நடக்கக் கூடாது என்றோ தலைவனுக்குக் கூறவில்லை. தலைவனுடைய பண்புகளாகக் கூற வேண்டியவற்றை முன்னே கூறியவர், அவனைச் சார்ந்து பழகுகின்றவர்களுக்கே சில கடமைகளை இங்கே வற்புறுத்துகின்றார் என்கிறார் அறிஞர் மு. வரதராசனார். நாட்டாட்சியில் உயர்ந்த பொறுப்புக்கு உரிய தலைவர் தலைமை அமைச்சர். அவர்க்கு ஆட்சிப் பணியில் துணையாய்; அவரை விடக் குறைந்த அதிகாரம் படைத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், நேர்முக உதவியாளர், துறைச் செயலாளர்கள், போன்ற முக்கிய பொறுப்பில் இருப்போர், தலைமைப் பொறுப்பில் இருப்பவரிடம் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு முறை ஆகும். அதுபோல் மாநில முதலமைச்சரை அணுகி இருந்து பணிபுரியும் பிற அமைச்சர்கள், தலைமைச் செயலர், நேர்முக உதவியாளர், உயர் அலுவலர்கள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் முதலியோர் முதலமைச்சரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டும் ஒரு குறிப்புச் சட்டமாக இவ்வதிகாரத்தை நோக்க வேண்டும். அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் (குறள். 691) நாடாளுவோர் தம் நாட்டு மக்கள் பசி பட்டுணியால் வாடாமல் காக்க வேண்டும்; கொடுமையான நோய்க்கு ஆட்பட்டு மாண்டு போகாமலும் காக்க வேண்டும்; நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் பகைமை உணர்வு தோன்றி, வளர்ந்து பெருகிவிடாமலும் கண் காணிக்க வேண்டும். பல்வேறுபட்ட தன்னலக் குழுக்களும், பாழாக்கும் உட்பகையும் அரசையே ஆட்டிப்படைக்கும். கொலை செய்யவும் சிறிதும் அஞ்சாமல், ஆனால், வெளிப்படையாய்த் தெரியாமல் நாட்டுக்குக் கேடு புரியும் குறும்பர்களும் தலையெடுத்து விடாமல் நாட்டைக் கட்டிக் காக்க வேண்டிய பெரும் பாராத்தைச் சுமக்க வேண்டியவர்கள் ஆட்சியாளர்கள். நாடு நலமாகவும், வளமாகவும், பாதுகாப்பாகவும், நிறைவாகவும் இருக்க வேண்டுமானால், நாடாள்வோர் கவலையின்றி அமைதியாக இருக்க இயலாது. கடல் அலைபோல் எதிர்பார்க்கும் சிக்கல்களையும், எதிர்பாராச் சிக்கல்களையும் கண்டு அஞ்சாது, துணிவுடன் தீர்வு காண வேண்டும். அரசிருக்கை என்பது உள் நாட்டுச் சிக்கல்களும் அயல்நாட்டுச் சிக்கல்களும் படை படையாய் வந்து மோதும் போர்க்களமாகும். ஆகவேதான் சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் கருத்துரையாக இளங்கோவடிகள், மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம் பிழைஉயிர் எய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதகவு இல் எனப் பாடியுள்ளார். ஆட்சிப் பணி, அமைதியை நிலை நாட்டும் பணியே அன்றி, அமைதியாக, கிளர்ச்சி இன்றி உணர்ச்சி வயப்படாமல் இருக்க வேண்டிய பணி அன்று என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இக்குறளை அணுக வேண்டும். வலிய பகையையும் வெல்லும் திறமை வாய்ந்த ஆட்சியரைச் சார்ந்து நின்று பணிபுரிபவர்களும், பல்வேறு காரணங்களால் சேர்ந்து பழகும் வாய்ப்புப் பெற்றவர்களும் பழக்கத்தை வரையறுத்துக் கொள்ள வேண்டும். அளவோடு பழக வேண்டும். அவரை விட்டுத் தூரமாக விலகியும் இருக்கக் கூடாது. அதே நேரம் மிக நெருங்கியும் இருக்கக் கூடாது. ஆட்சியாளர் ஆக்க ஆற்றல் பொருந்திய நெருப்புப் போன்றவர். குளிர் வாட்டுகிறது. உடலுக்கு வெப்பம் தேவைப்படுகிறது. நெருப்பை மூட்டி அதன் வெப்பம் மட்டும் உடலை அணுகுமாறு சிறிது விலகி நின்று தீக்காய்வார்கள். மிக நெருங்கினால் நெருப்பு சுட்டு உடலைப் புண்ணாக்கி விடும். மிக நீங்கினால் வெப்பம் கிட்டாது. குளிர் போகாது. ஆகவே, தீக்காய்வோர் அகலவும் மாட்டார்கள் நெருங்கவும் மாட்டார்கள். தீக்காய்வோர் நெருப்பைப் பயன்படுத்திக் கொள்வது போல் ஆட்சியாளரிடம் அகலாதும், அணுகாதும் தொடர்பை வைத்துக் கொள்க எனத் திருவள்ளுவர் வேண்டுகிறார். தீண்டி னார்தமைத் தீச்சுடும், மன்னர்தீ ஈண்டு தங்கிளை யோடும் எரித்திடும் என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் அடிகள் ஒப்பு நோக்கத் தக்கது. மன்னர் என்பார் எரிஎனற்கு உரியர் என்றே எண்ணுதி என வாலி சுக்கீரிவனுக்குக் கூறிய அறிவுரையில் கூறியதையும் எண்ணிப் பார்க்க! வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்த ரோடும் தீமைதீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவ ரோடும் தூய்மைசால் புணர்ச்சி பேணித் துகளறு தொழிலை யாகித் சேய்மையோடு அணிமை யின்றித் தேவரில் தெரிய நிற்றி என இராமன், சுக்கிரிவனுக்குக் கூறிய அறிவுரை நல்லதொரு விளக்கமாகும். ----------- மன்னர் விழைய விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும் (குறள். 692) உயர்பதவியில் அமர்ந்து ஆட்சி புரிவோர் அனைவரும் மனவளம் படைத்தவர்களாகவே இருப்பர் என எதிர்பார்க்க இயலாது. ஆனால், உயர்பதவி ஆட்சியாளரில் மிகுதியானவர்கள் தம்மை மிக உயர்ந்தவர் களாகக் கருதி நடந்து கொள்வர். தாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை , அணியும் கலன்கள், வாழும் மாளிகை, பயன்படுத்தும் ஊர்தி, இன்னோ ரன்ன நுகர் பொருள்கள் மற்றவர்கள் பயன்படுத்த இயலாத விலை உயர்ந்த, அழகு நிறைந்த, தம்மைக் காண்போர் வியந்து நோக்கி உயர்வாக மதிக்கத் தக்கதாய் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பர். ஆகவே, உயர் பதவியில் அமர்ந்து நாட்டாட்சி புரிவோர் எதை எதை எல்லாம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என எண்ணுகிறார்களோ அந்தந்தப் பொருள்களை அவர்க்குக் கீழ் அமர்ந்து பணிபுரிவோர் விரும்பாமல் இருத்தல் பல வழிகளில் நன்மை தரும். கீழ்ப்பதவியில் உள்ள ஒருவர் ஒரு பெண்ணை மணமுடிக்கலாம் என மனத்தில் எண்ணி இருக்கிறார். அதே பெண்ணை உயர் பதவியில் இருப்பவரும் மண முடிக்க எண்ணுவது போல் தெரிந்தாலே போட்டி போடாமலும், தம் விருப்பத்தை வெளியே தெரிவிக்காமல், உயர்பதவியாளர் விருப்பம் நிறைவேற வழி செய்து, தாம் போட்டியிலிருந்தும் விலகிக் கொள்வது நல்லது. ஆட்சியாளர் விரும்புபவற்றை அவரைச் சார்ந்தவர் விரும்பாது, ஆட்சியாளர் விருப்பம் நிறைவேறத் துணை புரிந்தால், அவரால் நிலையான பல நன்மைகள் தேடி வரும். ஆட்சியாளர் விரும்பு பவற்றைச் சார்ந்து பணிபுரிவோரோ உறவினர்களோ? நண்பர்களோ விரும்பினால் கேட்டிற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். சார்ந்து பண்புரிவோர் பண்பட்ட மனவுணர்வு உடைய வராக இருக்க வேண்டியது அவசியம். அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார் மன்னரின் மேம்படச் செய்யற்க செய்வவேல் மன்னிய செல்வம் கெடும் என்றும் ஆசாரக் கொவை பாடல் குறட் கருத்தை எதிர் மறையில் விளக்குகிறது. -------------- போற்றின் அரியவை போற்றல், கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது (குறள். 693) ஆட்சிப் பணியில் முதல்வர்க்கு அணுக்கமாக இருந்து பொறுப்பான பணி புரிபவர்கள் புடம் போட்ட தங்கமாக இருக்க வேண்டும். தாம் ஏற்றுள்ள பணியில் யாரும் குறை சொல்ல வாய்ப்பு இல்லாதவாறு மனத் தூய்மை யுடனும், நாட்டுப் பற்றுடனும் தலைமைக்குப் பெருமை சேர்க்குமாறும், தலைமையே மனமுவந்து பாராட்டுமாறும் பணிபுரிய வேண்டும். அத்தகைய பொறுப்பில் இருப்போர் தம் பதவியையும் தகுதியையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தம் செயற் பாட்டால் பெரிய பிழை நேர்ந்து விடாமல் கவனத்துடன் காத்துக் கொள்ள வேண்டும். பெரிய பொறுப்புகளில் சின்னஞ் சிறிய பிழைகள் எதிர்பாராமல் ஏற்படலாம். அத்தகைய சிறிய பிழைகளைத் தலைமை ஒரு பொருட்டாகக் கருதாது பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பெரும்பிழை, தம்மால் நேராமல் கட்டாயம் காத்துக் கொள்ள வேண்டும். பெரும் பிழை நேர்ந்து அது தலைமையின் கவனத்திற்கும் சென்று தலைமைக்கும் தொடர்புடையவர்மேல் ஐயப்பாடு ஏற்பட்டு விடுமானால், அது அணைகடந்த வெள்ளம் போல் ஆகிவிடும். அந்த ஐயத் தினின்று தெளிவித்து அவர் குற்றமற்றவர் என்பதைத் தலைமையிடம் எடுத்துரைத்து விளக்கம் அளிப்பது எவராலும் இயலாது. ஐயப்பாடு குற்றவாளிப் பட்டியலில் நிலை நிறுத்திவிடும். ஆகவே, பெருங்குற்றம் நிகழாதபடி காத்துக் கொள்ள வேண்டும் தலைமையே ஐயப்படின் தெளிவித்தல் இயலாது. நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால் பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே கூர்த்த நுண்கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும் ஓர்த்து இசைக்கும் பறை என்னும் பழமொழிப் பாடலும் ஒருவழிச் சான்றாகும். பொறுப்பர்என் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின் ஆர்க்கும் அருவி அணிமலை நன்னாட பேர்க்குதல் யார்க்கும் அரிது என்னும் நாலடியார் பாடல் குறளுக்கு நல்ல விளக்கமாய் அமைந்துள்ளது. ----------- செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியார் அகத்து (குறள். 694) ஆன்ற பெரியார் அகத்து எனச் சொல்லாட்சி அமைந்திருப்பினும் அதிகாரத்தலைப்புக்கு ஏற்ப சிறந்த ஆட்சியாளன் முன்னிலையில் எனப் பொருள் கொள்வதே ஏற்புடைத்து. சிறப்புக்குரிய ஆட்சியாளர் முன்னிலையில் ஓராய்வுக் கூட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தலைமைச் செயலர், துறைச் செயலர்கள், அமைச்சர்கள் முதலிய தகுதி வாய்ந்த பெருமக்கள் அவையில் இருக்கிறார்கள். சிறப்புக்குரிய ஆட்சியாளர் என்பதைக் குடியரசு மரபுப்படி பெருநாட்டு ஆட்சி என்றால் தலைமை அமைச்சர் என்றும், மாநில ஆட்சியாயின் முதல் அமைச்சர் அல்லது முதல்வர் எனக் கொள்வோம். அவையில் கலந்து கொள்வோர் அனைவரும் அவைத் தலைமை ஏற்றுள்ள பெருமக்களிடம்தான் எழுந்து நின்று வினவுதலும், வினாவிற்கு விடை அளித்தலும் விளக்கம் சொல்லுதலும் வேண்டும். தலைவர்க்கும் உறுப்பினர்கட்கும் இடையே ஒரு சங்கிலித் தொடர் போல நேரடித் தொடர்பு மட்டும் கொள்ளுதல் வேண்டுமே அல்லாமல் உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் தலைவர் செவிக்குக் கேட்காதவாறு குனிந்து அல்லது காதுப்பக்கம் வாய் வைத்துப் பேசுவதும் கூடாது. ஒருவர் முகத்தை பிறிதொருவர் பார்த்துக் கொண்டு சிரிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். அவை ஒழுங்கைக் கட்டிக் காக்கவும் வேண்டும். ஆட்சியாளர் வீணான ஐயம் கொள்ளவோ இடம் தரல் ஆகாது. தலைவரையும் மதிக்க வேண்டும். அவையையும் மதிக்க வேண்டும். வீண்பேச்சிற்கோ, குழு உணர்விற்கோ, ஐயத்திற்கோ இடம் தரல் ஆகாது. ஆன்ற பெரியார் முன்னிலையில் பங்கு பெறும் அனைவரும் பெரியாராக நடந்து கொள்ள வேண்டும் எனத் திருவள்ளுவர் எதிர்பார்க்கிறார். நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம் பகையொடு பாட்டுரை என்றைந்தும் - தொகையொடு மூத்தோர் இருந்துழி வேண்டார் முதுநூலுள் யாத்தார் அறிந்தவர் ஆய்ந்து என்னும் சிறுபஞ்ச மூலப் பாடல் கருத்தையும் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம். ------------ எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை (குறள். 695) பெரிய இடத்துப் பழக்கம் பெருநன்மை விளைவிப்பதுடன், பெருந்தீமை பயக்கவும் செய்யும். ஆகவே, தீமை ஏற்பட்டு விடாமல், ஆட்சியாளரின் ஒவ்வொரு சின்னஞ்சிறிய செயலையும், அசைவையும் பார்வையையும், உடனிருந்து பணிபுரிவோரும் பழகுவோரும், நுண்ணுணர்வுடன் கண்டுணரவும் வேண்டும். அதற்கு ஏற்றாற் போல் தம்முடைய செயலை அமைத்துக் கொள்ள வேண்டும். எப்போது அழைத்தாலும் வர அணியமாக இருக்க வேண்டும். அழைத்து, விரைந்து வந்தும் ஏன் வரவழைத்தோம் என்பதையும் மறந்து வேறுபணியில் ஈடுபட்டும் இருக்கலாம். சில வேளைகளில் இப்பொழுது ஏன் வந்தீர் என்று கூட வினவலாம்! போங்கள் பிறகு சொல்லி விடுகிறேன் என்றும் திருப்பி அனுப்பலாம். சற்றுத் தள்ளிப் பல அலுவலர்கள் இருக்கும் போது ஆட்சியாளர் அண்மையில் உள்ள ஒருவரிடம் மட்டும் பிறர்க்குக் கேட்காதவாறு கமுக்கமாக நெடுநேரம் பேசிக் கொண்டிருக்கலாம். அந்நேரம் பிற அலுவலர்கள் வேறு பணியும் செய்ய முடியாமல் சோர்வுற்று மனத்திற்குள் எரிச்சல் அடைய நேரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி மற்றவர்கள் இயங்க வேண்டும் என்பதற்கு வள்ளுவர் காட்டும் உளவியல் சார்ந்த வழிதான், ஆட்சியாளர் யாரிடமும் வெளிப்படையாகப் பேசினால் கூர்ந்து கேட்டுக் கொள்ள வேண்டும். ஆனால், கமுக்கமாகப் பேசினால் அது என்ன செய்தி என அறிந்து கொள்ள எண்ணாதீர்! மறைந்திருந்து கேளாதீர்! அதன் பிறகும் இன்னாரிடம் இன்ன செய்தி பற்றிப் பேசினேன், என்று அவராக முன்வந்து கூறினால்தான் கேட்க வேண்டுமே யொழிய, இன்னாரிடம் இன்ன நேரத்தில் இந்த இடத்தில் மறைவாக என்ன பேசினீர்கள்? என்று ஒரு போதும் கேட்டு அறிந்து கொள்ள எண்ணுதல் கூடாது. என்னும் குறிப்பை வள்ளுவர் வழங்குகிறார். எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாதே! என்ன செய்தி என்று நீயே கேளாதே! ஆட்சியாளரே சொன்னால் கவனமாய்க் கேள்! அதுவே, முறைமை ஆகும். பெருந்தக்கார் சொல்லிற் செவிமடுத்துக் கேட்டிடுக! மீட்டும் வினாவற்க! சொல்லொழிந்தக் கால் என்னும் ஆசாரக் கோகைப் பாடல் பகுதியும் இணைத்துச் சிந்திப்பதற்கு உரியதாகும். சிறப்புற ஓர்வதாயினும், மறைதான் செப்பிடின் கேட்பின் அல்லாது மறப்பினும் தொடரார், ஓர்தரார் அணுகார் மருங்கல் ஆர்வினை வலித்தார் என்னும் வினாயக புராண விளக்கம் ஏற்புடையதே! ------------ ஆட்சியாளரைச் சார்ந்தோர் குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் (குறள். 696) எவ்வளவு முக்கியமான செய்தி குறித்துப் பேச வேண்டுமானாலும் தாம் நினைத்த நேரத்தில் கால நேரம், சூழ்நிலை, ஆட்சியாளர் மன நிலை எல்லாம் அறியாமல் பேசக் கூடாது. ஆட்சியாளரிடம் பேசுகின்ற வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், முதற்கண் அவர்காட்டும் முகக் குறிப்பை அறிந்து கொள்ள வேண்டும். பேசுவதற்கு ஏற்ற காலத்தையும் ஆராய்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். தேர்ந்து முடிவு செய்த காலத்திலும் ஆட்சியாளர்க்கு வெறுப்புத் தோன்றாத வகையில், சொல்ல வேண்டிய செய்திகளை, அவர்மனம் விரும்பும் முறையில் உரிய நேரத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். பெரிய நாட்டை ஆளும் பெரிய பொறுப்பைத் தலைமேல் கொண்டுள்ள ஆட்சியாளரிடம், உடன் பணிபுரியும் அலுவலர்களே பேசுவது எளிதான செயல் அன்று என்பதைக் கவனத்தில் கொண்டு ஆட்சியாளர் குறிப்பறிந்து காலம் அறிந்து, வேண்டிய வற்றை விரும்புமாறு சொல்ல வேண்டும் என்கிறார் வள்ளுவர். விரைந்து உரையார், மேன்மேல் உரையார் பொய்யாய பரிந்துரையார் பாரித்துரையார் - ஒருங்கெனைத்தும் சில்லெழுத்தினாலே, பொருளடங்கக் காலத்தால் சொல்லுக செவ்வி அறிந்து என்னும் ஆசாரக் கோவைப் பாடலும், காவன் மன்னவர் காய்வன சிந்தியார் நாவினும் உரையார் நவை அஞ் சுவார் என்னும் சீவக சிந்தாமணியும், கைவரும் வேந்தன் நமக்கென்று காதலித்த செவ்வி தெரியாது உரையற்க - ஒவ்வொருகால் எண்மையன் ஏனும் அரியன் பெரிதம்மா கண்ணிலன் உள்வெயர்ப்பி னான் என்னும் நீதி நெறி விளக்கமும் வள்ளுவர் குறிப்பறிந்து சொல்லலுக்கு அருமையான விளக்கமாய் அமைந்துள்ளன. குறிப்பொடு காலம் அறிந்து, இறை விரும்பக் கோதுஅறு, பயன்மிகப் பயக்கும், வெறுப்பில வினையை விளம்பி வேண்டாத வினையினைக் கேட்பினும், விளம்பார் என்பது விநாயக புராணம் தரும் விளக்கமாகும். ------------- ஒன்றைச் சொல்ல வேண்டும் இடத்துப் பயனுடைய சொல்லையே சொல்ல வேண்டும். பயனற்ற சொல்லைச் சொல்லாது விலக்க வேண்டும் என்பதைப் பயனில சொல்லாமை அதிகாரத்தில், சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் (குறள். 200) எனப் பொது வகையால் அனைவர்க்கும் கூறியவர் திருவள்ளுவர். பயனில்லாத சொற்களைப் பலபடச் சொல்பவனை அறி வறிந்த மனிதப் பிறப்பினன் என்று சொல்லுதல் கூடாது அவனை மக்களுள் பதர் எனக் கூறுக என்னும் கருத்தை, பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல் (குறள். 196) என்னும் குறள் வழியாகவும் கூறியவர். இனிமைப் பண்பிலிருந்து நீங்காத பயனுடைய சொற்கள், கேட்பவர்க்கு இன்பமும் நன்மையும் விளைவிப்பதுடன் சொல் பவருக்கும் அப்பொழுதில் இன்பம் தந்து பின்னரும் பெருநலங்களைச் செய்யும் என்பதை, நயனீன்று நன்றி பயக்கும், பயனீன்று பண்பின் தலைபிரியாச் சொல் (குறள். 97) என இனியவை கூறல் அதிகாரத்திலும் எல்லார்க்கும் பொதுவாகக் கூறிய நெறியை ஆட்சியாளரை சேர்ந்து ஒழுகுவார் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தும் குறளே, வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல் (குறள். 697) என்பதாகும். ஆட்சியாளரைச் சார்ந்து செயல்படுவோர் நாட்டிற்கும் ஆள்வோர்க்கும் பெரும் பயன் தரும் செய்திகளைத் தம்மனத்துள் வைத்துப் பூட்டி வைக்காமல் ஆட்சியாளர் அது பற்றிக் கேட்க வில்லை எனினும் தாமே முன்வந்து அதனை அவர் விரும்புமாறு உரிய காலத்தில் சொல்ல வேண்டியது இன்றியமையாக் கடமை யாகும். ஆனால், பயனற்ற, தீமை தரும் செய்திகளை ஆட்சியாளரே வற்புறுத்திக் கூறுமாறு கேட்டாலும் அத்தகைய செய்திகளைச் சொல்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில், ஆட்சியாளரின் நேரத்தையும் வீணாக்காது, வேண்டாத செய்திகளில் கவனம் செலுத்தி வீண் குழப்பத்திற்கும் ஆளாக்காமல் காப்பதும் சார்ந்தவர் கடமையே யாகும். வேண்டியதைக் கேளாவிடினும் சொல்லியே ஆக வேண்டும். வேண்டாததைக் கேட்டாலும் சொல்லவே கூடாது. ------------ இளையர் இனமுறையர்; என்றிகழார், நின்ற ஒளியோ டொழுகப் படும் (குறள். 698) ஆட்சித் தலைமையில் இருப்பவர் கீழ்ப் பதவியில் இருப்பவர்களை விட அகவையில் மிக இளையவராக இருக்கலாம். என் மகன் வயது கூட இருக்கமாட்டான். இவனெல்லாம் ஒருதலைவனாக்கும் என்று ஏளனமாய் கருதி நடந்து கொள்ளவும் கூடாது. ஆட்சித் தலைமையில் இருப்பவர் தமக்கு மிக நெருங்கிய உறவினராக இருக்கலாம். குற்றம் இல்லை. ஆனால், உறவினர் என்ற முறைமையை எல்லாம் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர்த்து, அரசு அலுவலகத்தில் உறவு முறை கூறி மிகுந்த உரிமை எடுத்துக் கொள்ளவோ அவர் தம்மை ஒன்றும் சொல்ல மாட்டார் எனக் கருதிக் கொண்டு தலைமைக்கு உரிய மதிப்புத் தாராமல் எளிமையாகக் கருதுவதோ கூடாது. தனி நிலைப் பழக்கம் வேறு; உறவு நிலைப் பழக்கம் வேறு. அரசுப் பணி நிலைத் தொடர்பு வேறு. ஒன்றை ஒன்றோடு இணைக்கக் கூடாது. பணிக் களத்தில் பதவிவரிசை உண்டு; அப்பதவி வரிசை போற்றப்பட வேண்டும். ஆட்சித் தலைமையில் இருப்பவரை உயரம், கனம், நிறம், வயது, உறவு முறை ஆகிய அளவு கருவி கொண்டு அளக்க முற்படல் ஆகாது. தலைமைக்குரிய தகுந்த மதிப்பை எந்நிலையிலும் குறைக் காமல் நடந்து கொள்வதே நல்ல நடைமுறை ஆகும். இளையவன், உறவினன் என எளிமையாகக் கருதாமல் ஆளுவோர் அதிகாரத்தை மதித்து நடக்க வேண்டும். நின்ற ஒளி என்னும் தொடர் அமைந்த பெருமை நிலைத்த தலைமை; நின்ற புகழ்; நின்ற சிறப்பு; அழியா அறிவு என்னும் பொருள் தரும் உயர் தொடராகும். அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும் முழையுறை சீயமும் என்றிவை நான்கும் இளைய எளிய பயின்றனவென் றெண்ணி இகழின் இழுக்கம் தரும் என்னும் ஆசாரக் கோவைப் பாடல் நல்ல விளக்கமாய் அமைந்துள்ளது. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் (குறள். 699) வள்ளுவர் பயன் படுத்தும் அரிய சொல்லாட்சிகளில் காட்சியவர் என்பதும் ஒன்றாகும். காட்சியவர் என்னும் சொல்லுக்கு அறிவுடையவர் என்பது பொருள். வெஃகாமையில் புலம் வென்ற புன்மையில் காட்சியவர் எனவும் பயனில சொல்லாமையில் மருள் தீர்ந்த மாசறு காட்சியவர் எனவும் ஒப்புரவறிதலில் கடனறி காட்சியவர் எனவும் மெய்யுணர்தலில் மீண்டும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு எனவும் வினைத் தூய்மையில் நடுக்கற்ற காட்சியவர் எனவும் பயன்படுத்திய வள்ளுவர் இங்கே துளக்கற்ற காட்சியவரின் தனித் தன்மையைச் சுட்டுகிறார் அசைவு இல்லாத நிலைத்த, உறுதியான நல்லறிவாளர்தான் துளக்கற்ற காட்சியவர். ஆளும் வளர வேண்டும்; அறிவும் வளர வேண்டும்; படிப்பும் வளர வேண்டும்; பதவியும் வளர வேண்டும்; செல்வமும் வளர வேண்டும்; செல்வாக்கும் வளர வேண்டும்; அன்பும் வளர வேண்டும் அடக்கமும் வளர வேண்டும்; ஆட்சியாளர் மதிக்க வேண்டும்; அம்மதிப்புக்கு உரியவராய் என்றும் பணிபுரிய வேண்டும். துளக்கற்ற காட்சியவர் ஆட்சியாளரின் நன்மதிப்புக்கு உரியவராய் மதிக்கப் பட்டாலும், தமக்குப் பெரிய வாய்ப்புக் கிட்டிவிட்டது என்று எண்ணவும் மாட்டார்கள். தம் தகுதிக்குப் பொருந்தாத எந்தச் செயலையும் செய்ய மாட்டார். செறுக்கும் கொள்ளார், தம் பண்பு நிலையில் ஒரு காலும் தாழவும் மாட்டார். பிறழாத அறிவினை உடையவர்க்குப் பெருமதிப்புக் கிட்டினாலும் மதியாதன செய்ய மாட்டார். ------------ பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் (குறள். 700) ஆட்சியாளர் தமக்கு மிக வேண்டியவர்,நெருங்கிய உறவினர், இளமை முதல் நெடுநாட்களாகத் தொடர்ந்து பழகிவரும் நண்பர் என்ற உரிமையும் உணர்வும் உடையோர், தாம் செய்யும் மிகச் சிறிய பணியிலும் கூட, மிகுந்த ஈடுபாட்டுடனும் கவனத்துடனும் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் செய்து ஆட்சியாளரின் பணிச்சுமையைக் குறைத்து, தம் உரிமை உறவைவெளியே காட்டிக் கொள்ளாமல் தலைவர் உதவியாளர் என்னும் பணி நிலைத் தொடர்புக்கு உரியவராய் நடந்து ஆட்சியாளருக்கு அயலார் போல் நடந்து, செயலால் பெருமையையும் சிறப்பையும் ஈட்டித் தருவதே நெடுநாள் தொடர்புக்குப் பெருமை சேர்க்கும். அதனை விடுத்து யாம் ஆட்சியாளர்க்கு மிக வேண்டிய பழந்தொடர்பினன் எனத் தம்பட்டம் அடித்து கொண்டு, ஆட்சியாளர் தாம் என்ன சொன்னாலும் கேட்பார். நான் சொல்லி பல செயல்களை பலர்க்கு முடித்துக் கொடுத்துள்ளேன். ஆகவே, காரியம் ஆக வேண்டியவர்கள் என்னைக் கவனித்துக் கொண்டால் போதும் எந்தக் காரியமும் எளிதில் முடிந்து விடும் எனப் பண்பாடு அற்ற முறையில் நடந்து கொள்வோரின் ஆழமான நட்புக்கும் கேடுவரும். பண்பற்ற செயலை ஆட்சியாளர் அறிய நேரும் போது மிகப் பெரிய கேட்டிற்கு ஆளாக நேரிடும். நல்லது செய்ய வேண்டிய நட்பு, தவறாகப் பயன்படுத்தப்படும் போது பெருங் கேட்டினை விளைவிக்கும். ஆகவே, பழகிய நட்பைப் பண்பு தவறிப் பயன்படுத்தாதீர். கேட்டை விலை கொடுத்து வாங்காதீர் எனத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். மாமனான் என்னும் மதத்தால் உனை இகழ்ந்து தோமுற்றார் தக்கனார் சோமேசா - வாமே பழையம் எனக் கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா நல்லதொரு தொன்மக் கதை வழிச் சான்றாகும். விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும் கீழ்மையர் வெகுள் வுற்றால் பிழை கொல், நன்மைகொல் பெறுவது என்று ஐயுறு பீழையால், பெருந்தென்றல் உழையர் கூவ, புக்கு, ஏகு எனப் பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் பழையம் யாம் எனப் பண்பு அல செய்வாரோ பருணிதர், பயன் ஓர்வார் மண்டோதரியைக் கண்ட அனுமன் கூற்றாகக் கம்பர் பாடிய இப்பாடல் குறளுக்கு நல்ல விளக்கமாகும். ஆட்சியரைச் சேர்ந்து செயல்படுவோர் அகலாது அணுகாது செயல்படுக! தீக்காய்வோர் நல்லதொரு வழிகாட்டி ஆட்சியாளர் விரும்புவதைச் சார்ந்தோர் விரும்பாமை நன்று அணுக்கர்கள் தவறு செய்தல் கூடாது தவறு செய்த அணுக்கரை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது அரசவையில் அடுத்தவர் காதில் பேசாதே அரசவையில் சேர்ந்து சிரிக்காதே எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாதே கமுக்கத்தைச் சொல்லும் படியும் கேளாதே குறிப்புணர்ந்து காலம் அறிந்து வேண்டியதை விரும்புமாறு சொல் தக்கதைக் கேட்காவிடினும் கூறுக தகாதவற்றைக் கேட்டாலும் கூறாதே ஆட்சியாளரை அவமதியாதே அரச இருக்கையை மதித்து நட மதிக்கப்பட்டவர் மதிக்குமாறு செய்பவரே அறிவுடையவர் பழகியவரிடம் என்றும் பண்பு தவறாதீர் பண்பல்ல செய்வான் பாழாவான். ------------- 71. குறிப் பறிதல் பார்த்து அறிதல், படித்து அறிதல், கேட்டு அறிதல், உண்டு அறிதல், முகர்ந்து அறிதல், தொட்டு அறிதல் எல்லாம் அறிவை வளர்க்கும் வாயில்கள் ஆகும். அவற்றைப் பற்றிக் கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, வலியறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், பேதைமை, புல்லறிவாண்மை ஆகிய அதிகாரங்களில் விரிவாக விளக்குபவர் திருவள்ளுவர். பிறர் சொல்லும் சொல்லின் பொருளை அறிந்து கொள்வதும், அதுபோல் பிறர் செய்யும் செயலின் தன்மையைப் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளுதல் பெரும்பான்மையோர்க்கு இயல்பாய் இயலக் கூடியதாகும். ஆனால், ஒருவர் எதுவும் பேசாதிருக்கும் நிலையிலும், அவர் உள்ளத்தில் என்ன நினைவு அலை வீசிக் கொண்டிருக்கிறது என்பதை நுட்பமாய் உணர்ந்து கொள்ளுதல் பெரும் பான்மையோர்க்கு இயலாத காரியமாகும். பிறர் உள்ளக் குறிப்பையும் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்களும் உலகத்தில் இல்லாமல் இல்லை. அரிதாக இருக்கிறார்கள். அத்தகைய குறிப்பறியும் திறன் வாய்ந்தவர்கள் நாட்டாட்சியில் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப் படுவார்கள் ஆயின், பணிகள் செவ்வையாய் நடைபெறும். ஏமாற்று, திருட்டு, போன்ற தீமைகள் நிகழ வாய்ப்புக் குறையும். குறிப்பறியும் ஆற்றல் வாய்ந்தவர்களின் பணி, நாட்டு வளர்ச்சிக்குத் தேவை. அதுபோல் மணப்பருவம் எய்திய கன்னியும் காளையும் வாய் திறந்து பேசாமலே ஒருவர் உள்ளத்து உணர்வை மற்றவர் அறிந்து கொண்டால்தான் காதல் பயிரை வளர்க்க முடியும் எனத் திருவள்ளுவர் கருதுவதால் பொருட்பாலில் குறிப்பறிதல் என ஓரதிகாரம் அமைத்தது போல் இன்பத்தப் பாலிலும் குறிப்பறிதல்110 என ஓரதிகாரம் அமைத்துள்ள நுட்பத்தையும் உணர்த்து பார்த்தல் வேண்டும். பிறர் உள்ளத்தில் எண்ணும் எண்ணத்தை வாயினால் உரைக்காத போதும் அவர் எண்ணியதை எண்ணியவாறே அவர் முகத்தை உற்றுப் பார்த்த அளவிலேயே உணர்ந்து கொள்ளும் நுண்ணறிவே குறிப்பறிதல் ஆகும். ------- கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி (குறள். 701) பணிவுடைமையும், இனியவை கூறலும் மாந்தர்க்கு அணிகலம் ஆகும். எந்நிலையிலும் மனத்தின்கண் நடுவு நிலைமை தவறாது நடந்து கொள்ளுதல் சான்றோர்க்கு அணிகலமாகும். பிணியின்மையும் செல்வமும் விளைச்சலும், இன்பமும் பாதுகாப்பும் ஆகிய ஐந்தன் இணைப்பும் நாட்டுக்கு நல்ல அணிகலமாகும். எனக் கருத்துரைக்கும் வள்ளுவர் உலகத்திற்கு உயர்ந்த அணி கலம் எது? என்னும் வினாவிற்கு விடை அளிக்கும் குறளே இதுவாகும். எல்லா நேரங்களிலும் எல்லாராலும் எல்லாச் செய்திகளையும் வெளிப்படையாகப் பேச இயலாது. அப்படிப் பேசுவதால் சில வேளைகளில் வேண்டாத சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பும் உண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் உரியவரை வாயால் பேச வைப்பதற்குப் பதில், முகத்தால் பேச வைத்துக் கண்ணால் பார்த்தே அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டுமானால் அவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அத்தகைய உணர்திறன் கொண்ட வல்லார்கள். வற்றாத கடல் நீரால் எப்பொழுதும் சூழப்பட்டிருக்கும். இப்பெரிய உலகிற்குமாறாத நீர் போன்று மிகு பயன் நல்குவர்; அணிகலம் போன்று அழகும் பெருமையும் சேர்ப்பர். முகத்தைப் பார்த்தே உள்ளக் குறிப்பை அறியும் உணர்வாளன் உலகத்திற்கு அணிகலம் போன்றவன். தையலை நோக்கிய தலையன், கையினன் வையகம் தரீஇநெடிது இறைஞ்சி வாழ்த்தினான் என்பது அனுமன் இராமனுக்குச் சீதையின் நிலையைக் குறிப்பினால் உணர்த்தும் பாடல். திண்திறல் அவன்செயல் தெரிய நோக்கினான்; வண்டறல் ஓதியும் வலியள், மற்றிவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று எனக் கொண்டனன், குறிப்பினால் உணரும் கொள்கையான் என அனுமன் கூறாமல் காட்டிய குறிப்பை இராமன் உள்ளவாறு உணர்ந்து கொண்ட சிறப்பை உணர்த்தும் இப்பாடல் ஏற்ற எடுத்துக் காட்டாகும். உலகில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்பவன் மேம்பட்ட புகழுலகில் நிலைபெறும் தெய்வங்களுள் ஒரு தெய்வமாக மதிக்கப் படுவான் என்பதை, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (குறள். 50) என இல்வாழ்க்கை அதிகாரத்திலும், நடுவு நிலைமையோடு தன் நாட்டைக் காத்து வரும் ஆட்சியாளன், நாட்டு மக்களால் தெய்வம் என்னும் புகழ் நிலையில் வைத்துப் போற்றப்படுவான் என்பதை முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப்படும் (குறள். 388) என இறைமாட்சியிலும் கூறியாங்கு பெருமைப் படுத்தும் குறளே, ஐயப் படாஅத கத்த ணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் (குறள். 702) ஒருவர் சொல்லும் சொல்லின் பொருளை முழுமையாகப் புரிந்து கொள்வதே எளிமையானதன்று. அப்படி இருக்க இன்னொருவன் மனத்தில் உள்ளதை அவனே வாய்திறந்து சொல்லாமல் இருக்கும் போது, எத்தகைய ஐயப்பாடும் இல்லாமல் மிகத் தெளிவாக ஒருவரால் அறிந்து கொள்ள இயலுமாயின் அவரைச் சாதாரணமான ஒரு மனிதர் எனக் கருதிவிடக் கூடாது; அவர்கள் உயர்ந்த மனிதர்கள்; மிக உயர்ந்த மனிதர்கள் அறிஞர்கள்; அறிஞருள் உயர்ந்த அறிஞர்கள் மெய்ப்பொருள் கண்ட அறிஞர்கள்; அவர்களே வாழ்வாங்கு வாழ்ந்து சிறந்த மாசற்ற மனமுடைய முனிவர்கள். அவர்களே தெய்வமாக மதிக்கப்படுபவர்கள். பிறர் உள்ளுணர்வுகளை உள்ளவாறு உணர வல்லாரைத் தெய்வத்துக்கு இணையாக மதிக்க வேண்டும். ------ நல்ல குடியில் பிறந்து, தனக்கு உண்டாகும் பழிக்கு வெட்க முறுகின்றவனை அவன் விரும்புகின்றவற்றைக் கொடுத்தாலும் நட்புக் கொள்ளுதல் வேண்டும் என்பதைக் குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு (குறள். 794) என நட்பு ஆராய்தல் அதிகாரத்திலும், தன்னை அடுத்து நெருங்கி இருந்து கொண்டு, தன் தகுதிக்குப் பொருந்தாத செயல்களைச் செய்பவனுக்கு எதையாவது கொடுத்தாவது நட்பை விலக்கி விடல் வேண்டும் என்பதைக், கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை (குறள். 867) என்பதை பகை மாட்சிக் குறள் வழியும் ஒரு வணிக உத்தியைப் பயன்படுத்த வழி சொல்லும் திருவள்ளுவர் அதே நெறியைப் பின்பற்றத் தூண்டும் குறளே, குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் (குறள். 703) என்பதாகும். நாட்டை ஆளும் உயர் பொறுப்பில் இருப்பவர்கட்கு கூர்த்த அறிவுடையாரின் நட்பும், துணையும் வழி காட்டுதலும் கட்டாயம் தேவை. அவர்கள் ஒருவரைக் கண்ட மாத்திரத்தில் அன்னாரின் இயல்பை எடை போட்டு அறியக் கூடியவராகவும், அவரின் தோற்றத்தையும், அவர் காட்டும் மெய்ப்பாடுகளையும், குறிப்பாகப் பார்க்கும் பார்வையையும் வைத்து, அவர் மனத்துள் குடி கொண்டிருக்கும் உள்ளுணர்வுகளைக் கண்டுணரும் திறம் பெற்றவராகவும் இருத்தல் நல்லது. அத்தகைய அரிய அறிஞரைத் தம் அரிய உடைமைகளுள் அவர் விரும்பும் எந்த உடைமையையும் மனமுவந்து கொடுத்தாவது, அத்தகையவர்களின் துணையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பு, உணர்வார் குறிப்பு நல்ல துணையாகவும் வழிகாட்டியாகவும் அமையும். -------------- விளங்கிய அறிவினை ஆக்கும் நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், ஆறறிவு மக்களுக்கும் ஐயறிவு விலங்குகளுக்கும் உள்ள அவ்வளவு வேறுபாடு உடையவர் என்பதை விலங்கொடு மக்கள் அனையர், இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் (குறள். 410) எனக் கல்லாமை அதிகாரத்தில் கூறியுள்ளதன் வளர்ச்சி யாக அமைந்த குறளே! குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு (குறள். 704) என்பதாகும். திருவள்ளுவர் மனித உருத்தாங்கியவர்கள் எல்லாரையும் மனிதராகக் கருதாதவர். தோற்றத்தால் மக்களாய் இருப்பவர் களில் கயவர்களும் உண்டு. கல்வி அறிவில்லா மாந்தர் விலங்கு போன்றவர். உயர்ந்தோர் கூறும் உண்மைப் பொருளை ஒப்புக் கொள்ளாத புல்லறிவாளன் பேயனாகக் கருதப்படுவான். மானம் போற்றா மனிதர் தலையின் இழிந்த மயிர் அனையர் தீமை செய்ய நாணாதவன் மரப்பாவை போன்றவன். சொல்வன்மை இல்லாதவர் மணமற்ற மலர் போன்றவர். ஊக்கமற்றவர் மரம் போன்றவர். கண்ணோட்டம் இல்லாதவர் மரத்தனையர், எனப் பகுத்து அடையாளம் காட்டுகிறார். ஒருவன் உள்ளத்தில் எண்ணியதை உரையா முன்பே கண்டு உணரக் கூடியவரும் மனிதர்தான். அவ்வாறு பிறர் உள்ளக் கருத்தை உணர முடியாதவரும் மனிதர்தான். இருவர்க்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும் ஒன்றுபோல் தான் அமைந்திருக்கின்றன. அதுதான் ஒற்றுமை. ஆனால், அறிவால் இருவர்க்கும் இடையே உள்ள வேறுபாடு மிகப்பெரியதாகும். கூறாமலே அறிந்துகொள்ள இயலாதவர் மாந்தர் அல்லர்; அறிவிற் குறைந்த விலங்கு அல்லது மரம் முதலியவைகட்குச் சமமானவர் என்பதை வெளிப் படையாகக் கூறாமல் திருவள்ளுவர் குறிப்பறிதலில் குறிப்பாகக் கூறி உணர வைப்பது நல்லதொரு உத்தியாகும். பிறர் ஒரு செய்தியைக் கூறுவதற்கு முன்பாகவே அவர் உள்ளத்தில் எண்ணிய எண்ணத்தைக் குறிப்பால் உணரும். திறன் வாய்ந்தவர் மேம்பட்ட அறிவாளர் ஆவார். அத்திறன் வாய்ந்தோர் எண்ணிக்கை மிகுதியாக இராது, ஆகவே, மனித உருத்தாங்கியவர் அனைவரும் அறிவால் ஒரு நிலையினராய் இருத்தல் இயலாது. குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். (குறள். 705) காட்ட வேண்டிய அளவில் கண்ணோட்டத்தைக் காட்ட இயலாதவர் முகத்தில் கண் பொருந்தி இருப்பதனால் எத்தகைய நன்மையும் இல்லை. என்பதை, உளபோல் முகத்தெவன் செய்யும், அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் (குறள். 574) என்னும் கண்ணோட்ட அதிகாரக் குறளின் போக்கையும், இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு (குறள். 987) என்னும் சான்றாண்மை அதிகாரக் குறளின் நோக்கையும் உள்வாங்கிக் கொண்டு பாடப்பட்ட குறள்ளே 705ஆம் குறளாகும். புறப் பொருள்களாகக் காட்சி அளிக்கும் பொருள்களை மட்டும் கண்டு, கண்டவாறு மனத்தில் பதிய வைத்துக் கொள்வதுடன் கண்களின் பணிமுடிவடைந்து விட்டதாகக் கருதிக் கொள்ளக் கூடாது. பார்த்து அறிதல் முதல் நிலை: கேட்டறிதல் இரண்டாவது கண் நிலை; கேட்டறி யாமலே குறிப்பாகக் கண்களையும் அவை அமைந்துள்ள முகத்தையும் கூர்ந்து நோக்கிய அளவில் அவர் மனத்தில் என்ன எண்ணுகிறார் என்பதை உய்த்துணர வேண்டும். அவ்வாறு வெளிக் குறிப்பைக் கண்டும் ஒருவரின் உள்ளத்து உணர்வினைப் புரிந்து கொள்ளவோ, தெளிவுகாணவோ விளங்கிக் கொள்ளவோ இயலவில்லை என்றால் ஒளி பொருந்திய கண்களைப் பெற்றதனால் விளையக் கூடிய பயன் என்ன? ஒன்றும் இல்லை. கண்ணிருந்தும் கண்களால் முகத்தைப் பார்த்த பின்னும் உள்ளத்து உணர்வுகளை விளங்கிக் கொள்ள இயலவில்லை எனில், அத்தகைய கண்களைப் பெற்றதனால் அடையக் கூடிய பயன் என்ன? என வினவுகிறார். கண்ணிற் சிறந்த வுறுப்பில்லை என்னும் நான்மணிக் கடிமை கருத்தும், கணையினும் கூரியவாம் கண் என்னும் பழமொழியையும் ஒப்பிட்டு நோக்குக. ------------ அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் (குறள். 706) கண்ணாடியால் முகம் பார்க்கலாம்; முகத்தில் அகம் பார்க்கலாம் என்பதை விளக்கும் அருமைக் குறள். பளிங்குக்கும், பொருளுக்கும் இடையே திரை இல்லையானால், பளிங்கை நெருங்கி இருக்கும் எப்பொருளின் தோற்றத்தையும் நிறத்தை யும் பளிங்கு பளிச்செனக் காட்டுவதை அனைவரும் அறிவர். அது போல் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளில் எது மிகுந்து விளங்குமோ அதனை அவரவர் முகம் தெளிவாகக் காட்டிவிடும். ஆகவே, மனத்தில் எண்ணுவதெல்லாம் மாசற்றதாய், நன்மையும் பெருமையும், உயர்வும் நல்குவதாய் அமைந்திக்க வேண்டும். நாம் குற்றமான செயல் எதையும் செய்யவில்லை; தீமை தரும் சொல் எதனையும் எப்பொழுதும் பேசவும் இல்லை. நாம் உள்ளத்தில் கொண்ட கள்ளமும் கடுப்பும் எவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லையே என்று எண்ணித் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நாம் எண்ணிய எல்லா வித எண்ணங்களையும் நமது முகமாகிய கண்ணாடி களில் நெருங்கி இருப்பவர்கள் கண்டு நம்மை எடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாமல் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் நம் உள்ளம் எப்பொழுதும் நம்மிடம் அமைந் திருப்பது போலவே, முகமும் எப்பொழுதும் நம்மிடமே இருக்கிறது. நமக்குத் தெரியாமலே உணர்வைப்படம் பிடிக்கும் வேலையை முகம் செய்து கொண்டே இருக்கும். ஆகவே தான் நம்மைச் சந்தித்த ஒருவர் நம்மைப் பார்த்த உடனே ஏன் கவலையோடு இருக்கிறீர் எனவும் என்ன புதையல் கிடைத்திருக்கிறதா மிக்க பூரிப்போடு இருக்கிறீர்; எனவும் வினவுகிறார். இன்பம், துன்பம் போன்ற இருவகைப்பட்ட உணர்வுகளையும் முகம் தெளிவாகக் காட்டி விடும். பளிங்காகிய கண்ணாடிக்கும் முகத்திற்கும் காட்டுதல் ஆகிய வினையைச் செய்வதில் ஒற்றுமை உண்டு எனினும் பளிங்கு புறப் பொருளை அகத்தில் காட்டும்; ஆனால், முகம் அகப்பொருளைப் புறத்தில் காட்டும். அகப்பொருளைப் புறத்தில் காட்டுவதும் கண்டு உணர்வதும் அரிய செயல். கூர்த்த மதி உடையவர்களால் தான் பிறரின் அக உணர்வை அவர் முகத்தில் காண இயலும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. இக்கருத்து இலங்கையில் இருந்து மீண்ட அனுமனைக் கண்ட வானரர் வாய் மொழியாக, மாணவாண் முகமே எங்கட்கு உரைத்தது மாற்றம். எனக் கம்பர் கவிதையில் காணப்படுகின்றது. அடைக்கலமாக வந்து சேர்ந்த வீடணனை ஏற்றுக் கொள்ளலாமா என்ற ஆய்வின் போது அனுமன் கூறிய செய்திகளில் உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற மெள்ளத் தம் முகங்களே விளம்பும் என்பதும் ஒன்றாகும். கம்பன் குறளின் சாறாக வடித்துக் கூறும் நுட்பம் உணரத் தக்கதாம். வெள்ளம் வருங்காலை ஈரம்பட் டஃதே போல் கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம் ஒள்ளமர் கண்ணாய்! ஒளிப்பினும் உள்ளம் படர்ந்ததே கூறும் முகம் நோக்கி அறிகல்லாத் தம்முறுப்புக் கண்ணாடி நோக்கி அறிய, அதுவே போல் - நோக்கி முகனறிவார் முன்னம் அறிய; அதுவே மகனறிவு தந்தை அறிவு. என்னும் பழமொழி நானூறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களும் குறட் கருத்தைத் தழுவி எழுந்தனவே ஆகும். ------------ முகத்தின் முதுக்குறைந்த துண்டோ! உவப்பினும் காயினும் தான்முந் துறும் (குறள். 707) என்னும் இக்குறட்பாவில் முதுக்குறைந்தது என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. அது முதுக்கு+உறைந்தது என்பதை முதற்கண் கண்டு கொள்ளுதல் வேண்டும். முது என்பதே சொல்லின் அடி முது என்றால் முதுமையால் உண்டாகும் அறிவு என்பது பொருள். மெது என்னும் சொல்லடி மெதுக்கு என ஆவது போல், முது என்பது முதுக்கு என்றாகும். முதுக்கு உறைதல் என்றால் அறிவு தங்குதல் அல்லது அறிவடைதல் என்பது பொருள். ஒருவர் இன்னொருவர் மீது அளவற்ற அன்பு கொண்டு, ஆர்வத்துடன் கண்டு உரையாடி மகிழவேண்டும் என்று உள்ளத்தில் நினைக்கிறார். அவரை இன்னும் காணவும் இல்லை, மகிழ்ந்து உடையாடவும் இல்லை. மகிழ்ச்சி உள்ளத்தில்தான் உறைந்து கிடக்கிறது. இன்னொருவரை நல்லவர் எனக் கருதி நட்புக் கொண்டார். ஆனால், அவருடைய செயற்பாடுகள் நிறைவு தரவில்லை; அவர் மீது வெறுப்பு வளர்ந்தது. சினம் தோன்றுகிறது. ஆனால், இன்னும் அவரை நேரில் கண்டு தாம் கொண்ட கடுஞ்சினத்தை வெளிப்படுத்த வில்லை. உள்ளத்தில் சினத் தீ கனன்று கொண்டிருக்கிறது. இத்தகைய முரண்பட்ட இரு உணர்வுகளையும் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துவதற்கு முன்பே உணர்ந்து கொள்ளும் நுண்பொறி முகமாகும். அதில் அவ்வுணர்வுகள் பதிவு செய்யப்படும். நுண்ணறிவாளர் அத்தகையவர் முகத்தை உற்று நோக்கியே இப்பொழுது மகிழ்வு நிலையில் இருக்கிறார் என்றோ கடுஞ்சினத்தில் இருக்கிறார் என்றோ முடிவு செய்து அதற்கு ஏற்றாற் போல் தாம் நடந்து கொள்வார்கள். Mfnt jh‹ âUtŸSt® cŸs¤J cz®îfis cŸsthW btË¥gL¤J« Kf¤ij¡ fh£oY« m¿î Ä¡f ntW cW¥ò vJî« ïšiy v‹gij Ãiy eh£lnt ‘Kf¤âD« KJ¡F ciwªjJ c©nlh? என வினா எழுப்புகிறார். நாற்றம் உரைக்கும் மலர்உண்மை, கூறிய மாற்றம் உரைக்கும் வினைநலம், தூக்கின் அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும் முன்னம் முகம்போல முன்னுரைப்ப தில் மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன் முகன் உரைக்கும் உள்நின்ற வேட்கை அகல்நீர்ப் புலத்தியல்பு புக்கான் உரைக்கும், நிலத்தியல்பு வானம் உரைத்து விடும் என்னும் நான்மணிக்கடிகைப் பாடல்களும் திருக்குறளுக்கு விளக்கமாய் அமைகின்றன. ------------ முகம் நோக்கி நிற்க அமையும், அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். (குறள். 708) அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்=புறக் குறிப்புகளைக் கருவியாகக் கொண்டு அரசனின் உள்ளத்தை நோக்கி அதிலுள்ள கருத்தை அறிய வல்ல அமைச்சரை ஆட்சித் துணையாகப் பெற்றால்; முகம் நோக்கி நிற்க அமையும்=அரசன் அவ்வமைச்சரின் முகத்தை நோக்கி, எதிரே நின்றால் போதும்; தன் வாய் திறந்து ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவர் தாமாகச் செய்தியை அறிந்து கொள்வர் என்பது பாவாணர் திருக்குறள் மரபுரை. உள்ளத்தில் எண்ணுவதை அறிந்து, நேர்ந்த இடுக்கணை நீக்குவாரைப் பெற்றால், அவர் முகம் நோக்கி நிற்றலே இடர் ஒழித்தற்குப் போதுமானது என்கிறார். தமிழ் கா.சு.அவர்கள். ஒருவனுடைய உள்ளத்தைக் குறிப்பால் அறிந்து அவனுக்கு உற்றதை உணரக் கூடியவரைப் பெற்றால் அவன் அவர் முகம் நோக்கி நிற்றல் ஒன்றே போதும். வாயினாலோ, செய்கையினாலோ வேறு எத்தகைய குறிப்பினாலோ அவருக்கு அவன் தன் நிலையைத் தெரிவிக்க வேண்டியதே இல்லை என்பது குறிப்பு. என உரை கூறுகிறவர் மயிலை சிவமுத்து. நிகழ்வதை உள்ளத்தால் உணர்வார்க்கு முன்னே முகம் பார்த்து நின்றால் போதுமே என்கிறார். வ.சுப.மாணிக்கனார். ஒருவனுடைய உள்ளத்தை ஊகித்து அறிந்து விடக்கூடிய தனித் திறமை உள்ளவர்கள் அவனுடைய முகத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தால் அது போதும் குறிப்பறிய என்பவர் நாமக்கல் கவிஞர். உள்ளத்தைப் பார்க்கும் கண்களைப் பெற்றவர்களின் எதிரில் நின்றாலே போதுமானது. பேசி விளக்க வேண்டிய தேவை இல்லையாம் என்கிறார் இரா. கனக சுப்புரத்தினம். உள்ளக் குறிப்பைக் கொண்டு ஆங்குள்ள எண்ணத்தை அரிய வல்லாரைப் பெற்றால், அவர்தம் முகத்தை நோக்கி நிற்கும் அளவில் உரையாடி அறிவது போன்ற தெளிவுண்டாகும் என்பது இரா. இளங்குமர னாரின் வாழ்வியல் உரை. சான்றோர்கள் உரை வழி நாம் உய்த்து உணர்ந்து கொள்வது யாதெனின் ஒருவரின் முகத்தை உற்று நோக்கிய அளவில் அவர் உள்ளத்தை ஊடுருவி நோக்கி, உள்ளத்தில் குடிகொண்டுள்ள எண்ணத்தைத் தெளிவாக உணர்ந்து கொள்ளும் திறன் வாய்ந்தோர். அவர் வாய்மொழியைக் கேட்க வேண்டும் என்பதோ? செய்யும் செயலைப் பார்க்க வேண்டும் என்ற அவசியமோ இல்லை. முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டும் போதும். அவர் எண்ணத்தையும் இயல்பையும் தெளிவாக அளந்து அறிந்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் உள்ளத்தால் எத்தன்மையர் என்பது அவரவர் முகத்தில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. அவ்வெழுத்தை எல்லாராலும் காணவோ? படிக்கவோ இயலாது முக வெழுத் தைப் படிக்கத் தெரிந்தவர் பிறர் அகவுணர்வை அறிய முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் போதும் என்பதே வள்ளுவர் கருத்து என்பதை உணர்ந்து கொள்ளலாம். ------------- பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். (குறள். 709) குறிப்பறியும் திறன் வாய்ந்த மெய்யுணர்வாளர்கள் கண் காட்டும் அனைத்து வகைமைகளையும் நுட்பமாகக் கண்டு உணர்ந்து கொள்வர். ஒருவர் கண்ணை மெய்யறிவாளர் தம் கண்களால் உற்று நோக்கி, அறிமுகம் இல்லாதவரை இன்னார் எனக் கூற முடியாதே தவிர்த்து இனியவரா? இன்னாதவரோ? பகைவரா நண்பரா? வேண்டியவரா? வேண்டாதவரா? தம்மை விரும்புபவரா? வெறுப்பவரா? என்பதை இயல்பாய்க் கண்டு உணர்ந்து கொள்வார்கள். ஒருவர் அன்பை அகத்துறுப்பாகக் கொண்டவரா? என்புதோல் போர்த்த உடம்பினரா? மாசற்றார் கேண்மையைப் போற்றுபவரா? துன்பத்துள் துப்பாயார் நட்பைத் துறப்பவரா? தக்காரா? தகவிலரா? ஆமை போல் ஐம்பொறிகளையும் அடக்கியவரா? அடக்கம் போற்றாதவரா? ஒழுக்கத்தை உயிரினும் ஓம்புவரா? இழுக்கத்தால் எய்தாய் பழி எய்தியவரா? பிறன் மனை நோக்காப் பேராண்மையரா? எளிதென இல்லிறப்பவரா? பொறையுடைமை போற்றி ஒழுகுபவரோ? போற்றாதவரா? அழுக்காறு இல்லாத இயல்பினரா? புறனாக்கம் பேணாது அழுக்கறுப்பவரா? நடுவின்றி நன்பொருள் வெஃகுபவரா? அறனறிந்து வெஃகா அறிவுடையவரா? புறங்கூறிப் பொய்த்து உயிர்வாழ்பவரா? எதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்பவரா? பயனில் சொல் பாராட்டுபவரா? பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லாதவரா? பிறன் கேடு சூழ்பவரா? எனைத் தொன்றும் தீவினைப்பால் துன்னாதவரா? தக்கார்க்கு வேளாண்மை செய்பவரா? செத்தாருள் வைக்கப்பட வேண்டியவரா? ஈத்துவக்கும் இன்பம் அறிந்தவரா? தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவரா? வசையொழிய வாழ்பவரா? இசையொழிய வாழ்பவரா? அருட் செல்வம் பெற்றவரா? பொருட்செல்வம் பெற்ற பூரியரா? ஊன் உண்பவரா உண்ணாதவரா? தங்கருமம் செய்யும் தவத்தவரா? ஆசையுட் பட்டு அவம் செய்பவரா? வஞ்ச மனத்தவரா? உலகம் பழித்தது ஒழித்தவரா? களவின்கண் கன்றிய காதலரா? கள்ளாமை காக்கும் நெஞ்சினரா? உள்ளத்தால் பொய்யாது ஒழுகுபவரா? வாய்மை கூறாப் பொய்யரா? சினத்தைப் பொருளென்று கொண்டவரா? உள்ளத் தாலும் வெகுளி உள்ளாதவரா? கறுத்தின்னா செய்தவரா? மறுத்தின்னா செய்யா மாசற்றவரா? கொலை செய்ய அஞ்சுபவரா? அஞ்சாதவரா? யான் எனது என்னும் செருக்கு அறுத்தவரா? செருக்கு உடையவரா? காமம் வெகுளி மயக்கம் விட்டவரா? விடாதவரா? அவாவினை ஆற்ற அறுத்தவரா? அவாவால் வஞ்சிக்கப் பட்டவரா? கசடறக் கற்றவரா? மண்மாண்புனை பாவை போன்றவரா? என்பன போன்ற நல்ல தீய இயல்புகளை அவரவர் கண்களே, கண் காட்டும் குறிப்பு வகைகளைக் கண்டுணர்பவர்க்கு உணர்த்தி விடும். ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி ஊக்கம் உரையார் உணர்வுடையார்-ஊக்க உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார் குறிப்பின் கீழ்ப் பட்ட துலகு என்னும் நாலடிப் பாடல் ஒருவழி ஒப்புமை உடையது. வண்டுளர் அலங்கலாய்! வஞ்சர் வாள்முகம் கண்டது ஓர் பொழுதினில் தெரியும்! கைதவம் உண்டெனின் அஃதவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ? விண்டவர் நம்புகல் மருவி வீழ்வரோ? வீடணன் அடைக்கலப் படலத்தில் அனுமன் கூற்றாகக் கம்பர் பாடிய இப்பாடல் அனுமனின் குறிப்புணர் திறத்தைப் புலப்படுத்தும். ------------ நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்ல தில்லை பிற. (குறள். 710) யாம் நுட்பமான அறிவுடையோம் என்று சொல்லிக் கொள்ளத்தக்க அறிவுடையோர். பிறர் உள்ளக் கருத்துகளை அறிந்து கொள்ளப் பயன் படுத்தும் அளவுகோல் யாது என்று ஆராய்ந்து பார்க்குங்கால், அது கண்ணைத் தவிர்த்து வேறு எத்தகைய கருவியும் இல்லையாம். கண் பொருள்களை, மட்டும் பார்த்து அறியும் கருவி மட்டுமன்று; எழுத்துகளைப் பார்த்துப் படித்துப் பொருள் உணரும் கருவி மட்டுமன்று; கண்ணோட்டத்தை அணிகலமாகவும் கொண்டது மட்டுமன்று; நுட்பமாக எதையும் எவரையும் அளந்து காட்டும் அறிவு சார்ந்த நுண்கருவியும் ஆகும். கூறாமை நோக்கிக் குறிப்பு அறிக குறிப்பு அறிவான் உலகுக்கு அணி ஆவான் ஐயப்படா அது அகத்தது உணர்க அகத்தது உணர்வான் தெய்வம் போன்றவன் குறிப்பிற் குறிப்புணர்வார் நட்பு கொடுத்தும் கொள்ளத் தக்கது குறிப்புணர்வார் மனித உருத்தாங்கிய மேலோர் குறிப்புணர மாட்டாதார் கீழோர் குறிப்பிற் குறிப்புணரும் கண்களே உண்மையான கண்கள் அடுத்தது காட்டும் பளிங்கு நெஞ்சம் கடுத்ததை முகம் காட்டும் முகம் பேரறிவுடன் செயல்படும் உள்ளத்து மகிழ்வை முகத்தில் காணலாம் மன வெறுப்பையும் முகம் காட்டிவிடும் உற்றது உணர்வார் முகத்தை நோக்கினால் போதும் பகைமையையும் கண் உரைக்கும் கேண்மையையும் கண் உரைக்கும் ஒருவரை நுண்ணியர் ஆக்குவது கண்ணே கண்ணே சீர் தூக்கும் கோல் ----------- 72. அவை அறிதல் மாந்தன் நிறை மொழியனாக விளங்க வேண்டும் என்பது வள்ளுவர் எதிர்ப்பார்ப்பு. ஆகவே, முகமும் முகமும் மலர இனிமையாகப் பார்த்து உள்ளத்தோடு பொருந்திய இனிய சொற்களையே பேசுமாறு வேண்டினார். அவரே நேருக்கு நேர் நின்று கண்ணோட்டம் இல்லாமல் இடித் துரைத்தாலும் ஒருவன் முன்னே இல்லாத போது அவனைப் பற்றி மற்றவர்களிடம் குற்றம் கூறிப் பேசி விடாதீர் என்றார். பயனற்ற சொற்களைப் பேசுவதைத் தவிர்த்து, எப்பொழுதும் பயனுடைய சொற்களையே பேச வேண்டினார். ஒருவன் சொற்களில் ஏதாவது ஒரு சொல் தீமை தருவதாக அமைந்து விடுமானால் நல்ல சொற்களின் பயனையும் அது கெடுத்துவிடும். ஆகவே, நாவிலிருந்து தீயசொல் பிறந்து விடாமல் காத்துக் கொள் என வேண்டினார். யாதொன்றும் தீமை இலாத சொற்களையே சொல்லுக! உள்ளத்தால் பொய்யாது ஒழுகுக என வேண்டினார். சொற்களைத் தினறிந்து சொல்லுக! நாம் சொல்லும் சொல்லை வெல்லும் சொல் பிறிது இன்மை அறிந்து சொல்ல வேண்டும். எனச் சொல்லும் நெறி சொன்ன திருவள்ளுவர். அவை அறிந்து பேச வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதிகாரமே அவை அறிதல் ஆகும். மாணவர் அவையில் பேச நேரிடலாம் அவர்கள் விரும்பிக் கேட்குமாறும் அவர்கட்குப் பயன் விளையுமாறும் பேச வேண்டும். மாணவர் அவைகளில் தொடக்கப்பள்ளி மாணவர் அவையா? உயர்நிலைப் பள்ளி மாணவர் அவையா? மேல் நிலைப் பள்ளி மாணவர் அவையா? கல்லூரி மாணவர் அவையா? அதிலும் கலைக் கல்லூரி மாணவர் அவையா? அறிவியல் கல்லூரி மாணவர் அவையா? பொறியியல் கல்லூரி மாணவர் அவையா? வேளாண் கல்லூரி மாணவர் அவையா? மருத்துக் கல்லூரி மாணவர் அவையா? பல்கலைக்கழக மாணவர் அவையா, அதிலும் அஃது எத்துறை மாணவர் அவை என்பதை எல்லாம் நன்கு உணர்ந்து அவ்வவற்றிற்கு ஏற்பப் பேச வேண்டும். அது போல் ஆசிரியர் அவையா? அலுவலர் அவையா? அதிலும் எத்துறை அலுவலர் அவை? தொழிலாளர் அவையா? அதிலும் எந்த வகைத் தொழில் புரிவோர் அவை? பொழுது போக்கு அவையா? கலை அவையா? கட்சி அவையா? அதிலும் ஆளும் கட்சி அவையா? எதிர்க்கட்சி அவையா? சமய அவையா? அதிலும் தான் சார்ந்த சமய அவையா, வேற்றுச் சமய அவையா? புரட்சியாளர் அவையா, அமைச்சர் அவையா, சட்டமன்ற அவையா, நாடாளுமன்ற அவையா? தன்னாட்டு அவையா? அயல் நாட்டு அவையா? நட்பு நாட்டு அவையா? பகை நாட்டு அவையா? உலக நாட்டு அவையா? என்பதை எல்லாம் மிக நன்கு அறிந்து பொருந்தப் பேச வேண்டும். ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தால் செயின் (குறள். 484) கடலோடா கால்வல் நெடுந்தேர்: கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள். 495) என்னும் வள்ளுவ மந்திர மொழிகள் அவை அறிந்து சொல்லு வதற்கும் வழி காட்டும். அவையில் இருப்போரின் தகுதியையும் தரத்தையும் நிலையையும் இயல்பையும் வேட்கையையும் தக்கவாறு அறிந்து கொண்டு அதற் கேற்பப் பேசினால் பயன் கிட்டும் என்பதால் அவை அறிதலை உணர்த்த ஓரதிகாரம் சொல்லலானார். ------------ அவை யறிந் தாராய்ந்து சொல்லுக: சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் (குறள். 711) திருவள்ளுவர் அறிவுடையவர் என்னாது தூய்மையவர் என்ற சொல்லைப் பயன்படுத்தி அறிவுடையவரை அடையாளப் படுத்துவதால். அறிவுடையார் மாசற்ற மனம் படைத்தவராகவும் இருக்க வேண்டும். இறைவாழ்த்தில் கூறியது போன்ற வாலறிவனாகவும் இருக்க வேண்டும். சொல்லுகிறவர் சொன்னபடி வாழ்பவராய் இருந்தால்தான். அவர் சொல்லும் சொல்தக்க பயன் தரும். இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் (குறள். 415) எனக் கேள்வி அதிகாரத்தில் உணர்த்தியதையும் உணர்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். சொற்களின் விரிந்த பரப்பை எல்லாம் கற்று உணர்ந்து அதன் பயனைத் துய்த்த, தூய அறிவுடையோர் தாம் பேசப் போகும் அவையின் தகுதிப் பாட்டை நன்கு அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு ஆராய்ந்து பேச வேண்டும். சொல்லுவோர் சொல்லின் தொகை அறிந்த தூய்மையராகவும் இருக்க வேண்டும். அவை அறிந்து ஆராய்ந்தும் சொல்ல வேண்டும். கேட்பாரை நாடிக் கிளக்கப்படும் பொருட்கண் வேட்கை அறிந்துரைப்பர் வித்தகர்-வேட்கையால் வண்டு வழிபடரும் வாட் கண்ணாய் தோற்பன கொண்டு புகாஅர் அவை. என்னும் பழமொழிப் பாடல் தக்க எடுத்துக் காட்டாகும். தொகைபடு செஞ்சொல், இலக்கணச் சொல்லே, சூழ்ந்திடும் குறிப்புச் சொல் மூன்றின் வகையறிந்து உயர்ந்தோர், ஒத்தவர், தாழ்ந்தோர், மருவு மூன் றவையும் ஆராய்ந்து தகையுற உணர்ந்தோர் அவையின் முந்துரையார் சமத்தின் எவ் வாற்றினும் கிளப்பார் நவை படு தாழ்வின் ஒன்றையும் மொழியார் நவைபடாச் சொற்பொருள் ஆய்ந்தோர் என வினாயக புராணம் கூறும் விளக்கமும் எண்ணிப் பார்க்கத் தக்கதாகும். இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக; சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். (குறள். 712) பேசுகிறவர் தமக்குத் தெரிந்ததை எல்லாம் பேசி விடக் கூடாது. எல்லா அவையிலும் ஒரே வகையான நடையை மட்டும் பின் பற்றக் கூடாது. கால நேரம் தெரியாமல் யாரிடம் பேசுகிறமோ அவர்கள் கேட்கிறார்களா? கேட்கவில்லையா? அவர்கட்குப் புரிகிறதா? புரியவில்லையா? என்பதை எல்லாம் கண்டு கொள்ளாமல் பேசி விடக் கூடாது. ஆர்வமாய்க் கேட்கவில்லையானால், காரணத்தைக் கண்டுணர வேண்டும். குறை அகற்றி, அவர்கள் விரும்பிக் கேட்டுப் பயன்பெறுமாறும், இன்புறு மாறும், அறிவு பெறு மாறும் பேச வேண்டும். புரிந்து கொண்டது போல் தெரிய வில்லையானால், ஏன்? என்பதை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும். சொல் புரிய வில்லையானால், புரியுமாறு எளிய இனிய வழக்கில் பயன்பட்டு வரும் சொற்களைக் கையாண்டு புரிய வைக்க வேண்டும். பொருள் புரிய வில்லையானால் அவர்கள் விளங்கிக் கொள்ளுமாறு எடுத்துக் காட்டுகள் சொல்லி விளங்க வைக்க வேண்டும். முன் சொன்ன செய்தியைப் புரிய வைக்காமல், மிக விரைந்து, இடை வெளி இல்லாமல் அடுத்த செய்திக்குத் தாவிவிடக் கூடாது. கேட்பவர்கள் கேட்கும் எண்ணம் இன்றி, வேறொன்றில் ஈடுபட்டிருக்கும் போதோ, பசி வேளையிலோ தூங்கச் செல்லும் வேளையிலோ, விரைந்து வெளியே புறப்பட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கும் போதோ பேசுவதால் பயன் விளையாது. ஆகவே, சொல்லக் கூடிய சொல்லின் பொருளை அறிந்து கொள்வதுடன், சொற்களைப் பயன்படுத்தும் ஒழுங்கு முறைகளை நன்கு உணர்ந்த நல்லறிவாளர்கள், தாம் பேசும் அவையின் தகுதியையும் தரத்தையும் முதலில் நன்கு தெரிந்து கொண்டு, சொல்ல வேண்டியதைத் தாம் நன்கு உணர்ந்து திட்டப்படுத்திக் கொண்டு, கேட்பவர்கட்கு ஐயப்பாடு ஏற்படாதவாறு. தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ளுமாறே சொல்ல வேண்டும். சொல்லின் கட்டுக் கோப்பைத் தெரிந்த நல்லறிவாளர்; சொல்லும் இடத்தின் தகுதியைத் தெரிந்து கொள்ளாமல் எதையும் சொல்ல மாட்டார்கள். இடம் தெரிந்து சொல்லத் தெரிந்தவரே, நன்னடை தெரிந்த நன்மையர். சொல்லின் நடை தெரிந்த நன்மையர் போல், இடம் தெரிந்து நன்கு உணர்ந்து; நன்கு உணருமாறு சொல்ல வேண்டும். கூட்டத்தின் போக்கும் தெரியாமல் நம் போக்கில் பேசிவிடக் கூடாது. --------- அவையறியார் சொல்லல் மேற் கொள்பவர், சொல்லின் வகையறியார், வல்லதூஉம் இல் (குறள். 713) யார் பேச்சு சிறந்த பேச்சு? அவை அறிந்து பேசுகிறவர் பேச்சே சிறந்த பேச்சு. அவர் கற்று வல்ல அறிஞராகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மிகப் பெரிய மேதைகளிலும் அவை அறியாது பேசிப் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவை அறிந்து பேசும் திறன் ஒன்றை மட்டும் உடைய அரை குறை அறிவுடையோரும். அவையோர் பாராட்டைப் பெற்றுப் போற்றவும் படுகின்றனர். பேசுவதற்கு, அறிவின் நிறைவு மட்டும் இருந்து பயனில்லை. சிந்தனைத் திறம் இருந்தும் பயனில்லை. பேச்சு வன்மை இருந்தும் பயனில்லை. ஆகவே, அவையின் தன்மை அறியாமல், தாம் நினைத்ததை, தாம் நினைத்த முறையில் சொல்லுதலை மேற்கொண்டவர்; சொல்லின் கூறுபாடும் அறியாதவர்; அஃதன்றிக் கலைவன்மையும் இல்லாதவர் என்று தான் கூற வேண்டும், என்றும் கூறலாம். ஒருவர் சொல்லின் வகை அறிந்த திறனுடையவராகவும் இருக்கிறார். எவரையும் வெல்லுமாறு பேசும் ஆற்றலும் கைவரப் பெற்றவ ராகவும் இருக்கிறார். ஆனால், இடம் தெரியாமல் விதைக்கும் விவரங் கெட்டவன் போல் அவையின் தன்மையை உணராது பேசும் தன்மை உடையவனாய் இருக்கிறான் என்றால் அவனிடம் உள்ள மொழிப் புலமையும் சொல்லலாற்றலும் எவ்வளவு நிரம்பி இருப்பினும் அவை இல்லாதவனாகவே கருதப்படுவான். திறன் இருந்தும் அவை அறியார் பேச்சு திறனற்ற வராகவே மதிப்பிட வைக்கும். இலக்கணம் கூறும் சொல்லின் வகைமை. உரைக்கப்படும் பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்தவன் உளம் கொளச் சொல்லுதல் ஆகும். என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். --------- ஒளியார்முன் ஒள்ளிய ராதல்: வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல். (குறள். 714) பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் புதிய ஆய்வு மேற்கொண்டு, ஆய்வேடு வழங்கி அறிஞர் பட்டம் பெற்ற அறிவாளர் கட்கு பட்டம் அளிக்கும் விழாப்பேருரை முதல் நாள் நிகழ்த்திய ஒரு பேரறிஞர். மறு நாள் புதிதாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளியில் அன்று சேர்க்கப்பட்ட முதல் வகுப்பு மாணவர்களை வாழ்த்திப் பேச வேண்டும். இரண்டு அவையின் தரமும் வேறுபட்டது. மலையின் கொடு முடிக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு உடையது. பேச்சாளர் ஒருவர்தான் அவை கலையும் போது இரு அவையினரும் நிறைவுடனும், மகிழ்வுடனும் சென்றனர். இனி இத்தகைய உரையைக் கேட்கும் வாய்ப்பு என்று கிட்டுமோ, என்ற எதிர்பார்ப்புடன் வெளியேறினார்கள். உரையாற்றியவர் அறிஞர்கள் போற்றும் அறிஞராக இன்று விளங்குபவர், ஆகவே, அறிஞர்களே வியந்து பாராட்டுமாறு அரிய பெரிய கருத்துகளைக் கடல் மடை திறந்த வெள்ளம் போல் தங்குதடை இல்லாமல், ஆற்றொழுக்காக வழங்கினார் அவையோர் ஆடாது அசையாது அக்கம் பக்கம் திரும்பாது. கூர்ஞ்செவியராய் இருந்து கேட்டு மனத்தில் பதிய வைத்துக் கொண்டனர். கிடைத்ததற்கரிய புதையல் கிடைத்தது போல் மகிழ்ந்த வேளையில் நம் படிப்பும் ஒரு படிப்பா? நம் ஆராய்ச்சியும் ஓராய்ச்சியா? அவரோடு ஒப்பிடும் போது நாமெல்லாம் அறிஞர் என்று சொல்லிக் கொள்ளலாமா? என்று எண்ணி நாணும்படி அவரின் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாச் சிறப்புரை அமைந்தது. அவரே மறு நாள் தொடக்கம் பள்ளியின் தொடக்க விழாவிற்கு வருகிறார். அவர்தானா என்ன ஐயப்படுமாறு மிக எளிய தூய வெள்ளை நிறக் கைநூல் ஆடை அணிந்து என்று சொல்லக் கூடாது உடுத்தி, குறைந்த விலைத் தோல் செருப்புடன் நடந்து வருகிறார். தனி மேடைஇல்லை வரவேற்பு வளைவு இல்லை. தனிச்சிறப்பு வாய்ந்த இருக்கையும் இல்லை. மாணவர்களோடு மாணவராய் அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் நடுவில் அமர்ந்து கொண்டு, மாணவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாகத் தயக்கமோ, மயக்கமோ, அச்சமோ. கொள்ளாத வகையில் மிக மிக எளிமையான வினாக்களைக் கேட்டார். பிள்ளைகள் கூறும் பாங்கு அறிந்து ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகியும், பெற்றோர்களும் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயர் ஆயினர். ஒரு மணிப்பொழுது ஆயது. விருந்தினராகிய அறிஞர் நான் வரும்போது வெண்கதை வண்ணம் தீட்டப்பட்ட ஒரு பலகையாக வந்தேன். ஆனால் இப்பொழுது பலகை நிறைய அழகழகான அருமை அருமையான ஓவியத்துடன் செல்லுகிறேன். ஒரு செய்தியும் தெரியாதவனாக உள்ளே நுழைந்த நான் உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் அரிய செய்திகளைக் காசு கொடுக்காமலே வாங்கிக் கொண்டு செல்லுகிறேன். எனக்கு அரிய செய்திகளை வழங்கிய எதிர்கால அறிஞர்களாகிய உங்கட்கு நன்றி எனக் கூறி விடை பெற்றுச் சென்றவர் வேறு யாரும் அல்லர் திருவள்ளுவர்தான் அந்த அறிஞர். அறிவு நிலையில் மாந்தரை எத்தனை படி நிலையாகக் பிரிக்க முடிமோ அந்தந்தப் படி நிலையில் இருந்து அவர்கட்கு ஏற்ற நெறியுணர்த்தும் சீராளர் திருவள்ளுவர். ஆகவே தான் அவை அறிதலில், ஒளியார்முன் ஒள்ளியராதல், வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் (குறள். 714) எனப்பாட நேர்ந்தது. அவ்வாறே அறிஞர் அவையில் அறிஞர்க்கு அறிஞராகவும், எளியோர் அவையில் மிக எளிய நடையிலும் பேசிச் சாதனை படைத்த சான்றோர்கள் வரிசையில் விவேகானந்தர் வருகிறார். கிருபானந்த வாரியார் வருகிறார். பேரறிஞர் அண்ணா வருகிறார். இல்வாழ்க்கை .. .. .. பிறன் பழிப்பது இல்லாயின் நன்று 49 தகுதி (நடுவுநிலைமை) என ஒன்று நன்றே 111 பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று 150 அறனல்ல செய்யாமை நன்று 157 பயனில சொல்லாமை நன்று 197 மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று 222 புகழ் இலார் தோன்றலின் தோன்றாமை நன்று 236 ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று 259 இன்னா செயினும்.. .. வெகுளாமை நன்று 308 பொய்யாமை நன்று 323 இரங்குவ.. .. செய்யாமை நன்று 655 சிறியவர் புன் கேண்மை எய்தாமை நன்று 815 ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின், அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று 967 என்பன போன்ற நன்மை தருவனவற்றை கூறிப் பற்றிக் கொள்ள வழி காட்டிய வள்ளுவர் நன்மை தருவன வற்றுள் எல்லாம் மிகு நன்மை தருவது எது என்று ஆராய்ந்து கூறும் குறளே. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே, முதுவருள் முந்து கிளவாச் செறிவு (குறள். 715) என்பதாகும். அடக்கம் அமரருள் உய்க்கும், அடக்கம் உயிர்க்கு ஆக்கம், அடக்கம் சீர்மை பயக்கும்; அடக்கம் செல்வம் தகைத்து, அடக்கம் எழுமையும் ஏமாப்புடைத்து, அடங்கினான் தோற்றம் மலையினும் மாணப்பெரிது, ஆகவே, யாகாவாராயினும் நாகாக்க வேண்டியவர் திருவள்ளுவர் என்பதை நினைவில் கொள்வோம். வணிகத் தேர்ச்சி உடையவர்கள் எந்தெந்தப் பொருள்களை எந்தெந்த இடத்தில் எந்தெந்தக் காலங்களில் வாங்கினால் விலையும் குறைவாக இருக்கும். பொருளும் செப்பமாக இருக்கும் என்று தெரிந்தே வாங்கி வைப்பார்கள். அதுபோல் எந்தப் பொருளை எந்த இடத்தில் எந்தக் காலத்தில் விற்பனை செய்தால் விரைவில் விற்பனையும் ஆகும். நல்ல ஊதியமும் கிட்டும் என்பதை நன்கு தெரிந்தே விற்பனையும் செய்வர். அதுபோல் அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்களும். அறிவைப் பரப்ப விரும்புபவர்களும் தக்க இடமும் காலமும் அறிந்தே செயல்படவேண்டும். திருவள்ளுவர் காலம் அறிதல், இடம் அறிதல், வலி அறிதல் எனத் தலைப்பிட்டுத் தனித்தனி அதிகாரம் படைத்துள்ளதையும் உணர்ந்து பார்க்க வேண்டும். தன்னைக் காட்டிலும் அறிவிலும், பண்பிலும் ஒழுக்கத் திலும் உயர்ந்த சான்றோர்கள் கூடியுள்ள கூட்டத்திற்குச் செல்வதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டுமானால், அவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களிடம் புதிதுபுதிதாக எவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் கேட்டு அறிந்து கொள்வதற்கே அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை விட்டுத் தாம் அறிந்தவற்றை அவர்கள் வினவாமல் இருக்கும் போது நாமே முந்திக் கொண்டு எதனையும் பேசிவிடக் கூடாது. பேரறிஞர் அவையில் ஆசைப்பட்டு முந்திக் கொண்டு பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கும் அடக்கம். நல்லது என்று உயர்ந்தோர்களால் போற்றப்படும் நல்லியல்புகளில் எல்லாம் மிக உயர்ந்ததாகும். அறிஞர் குழுவில் முந்திக் கொண்டு எதனையும் சொல்லாத அடக்கம் மிக நல்ல குணமாகும். இடம் தெரிந்து பேச வேண்டும். -------- ஆற்றின் நிலைதளர்ந் தற்றே, வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு (குறள். 716) என்னும் குறள், பேச்சில் சொற் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் சொற்குற்றத்தின் விளைவு எத்தகையதாய் அமையும் என்பதைத் தக்க உவமை வழி விளக்கும் அருங்குறள் இஃதாகும். காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கத் தவறினாலும், நாவு ஒன்றையேனும் தவறாமல் பாதுகாக்க வேண்டும். நாவை காக்கத் தவறினால் அவர் தம் சொல்லில் குற்றம் உண்டாக்கப் பட்டுத் துன்புற வேண்டி வரும். என்பதை, யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (குறள். 127) எனவும், ஒருவன் சொன்ன பல்லாயிரக் கணக்கான சொற்களின் ஒரே ஒரு சொல் தகுதி அற்றதாய் அமைந்து தீய பயனைத் தந்து விடுமானால், அது ஏனைய நல்ல உயர்ந்த சொற்களின் பயனையும் அழித்து விடும் என்பதை. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். (குறள். 128) எனவும் அடக்கமுடைமையில் தீய சொல் நம் வாயிலிருந்து பிறக்க வாய்ப்பு அளித்து விடக் கூடாது. என அடித்தளம் அமைத்த திருவள்ளுவர் சொற்குற்றத்தின் தீமையை விளக்கும் வளர்ச்சிப் பகுதியில் ஒன்றே இக்குறள். விரிவான நூற்பொருளைக் கேட்டு அவற்றின் உண்மையை ஆராய வல்லவர் குழுமியுள்ள அவையின் கண் சொற் சோர்வுபடுதல், ஒழுக்க நெறியிலே சிறந்தவர் அந்த நெறியிலிருந்து தவறி நடந்தால் அஃது எத்தகைய குற்றமாகக் கருதப்படுமோ அத்தகைய குற்றமாகவே கருதப்படும். ஆறு-நல்லொழுக்கம்; நிலை தளர்தல்-நல்வழியிலிருந்து தவறி நடத்தல்; வியன்புலம்-விரிந்த அறிவு, அகன்ற நூற்பொருள்கள்; ஏற்று-உட்கொண்டு; இழுக்கு - குற்றம். ஆற்றின் நிலை தளர்ந்தற்றே என்பதற்கு ஆற்று வெள்ளத்திலே அகப்பட்டுக் கரையேற இயலாமல் தவிக்கும் ஒருவன் நிலை போன்றது என்று பொருள் கூறுவாரும் உண்டு. என மயிலை சிவமுத்து உரைவிளக்கம் தருகிறார். விரிந்த நூற்பொருளைக் கேட்டு அதன் உண்மையை ஆராயும் அறிஞர் முன், சொற் குற்றப்படுதல், நல்வழியில் செல்கிறவன் அந்நெறியின் வழுவி நிலை தளர்ந்து விழுவதைப் போலும் என்பது தமிழ்க் கா.சு.அவர்களின் பொழிப்புரை. விரிவான அறிவுத் துறைகளை அறிந்து உணர் கின்றவரின் முன்னே, குற்றப்படுதல் ஒழுக்க நெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும். என யாதுமாகி உரை வழங்குகிறது. நல்லொழுக்கத்தில் இருந்து தவறிப் பழியேற்பது போன்றது. ஆராய்ந்தறிந்த அறிவுடைப் பெரியோர் முன் சென்று அவமானப்படும் இழிசொல் என்கிறார் ஞா.மாணிக்கவாசகன். விரிவான அறிவுடையார் முன்னால் சொல் தடுமாற்றம் நேர்ந்தால் கரை உடைந்த காட்டாறு போல், நம் பேச்சு ஒழுங்கையும், ஆற்றலையும், பயனையும் இழக்கும் என்பது இரா.கனகசுப்புரத்தினத்தின் உணர்வுரை. அகன்ற நூலறிவு கொண்டு நன்கு உணர்வார் முன்பு சொற்குற்றப்படுதல். ஒருவன் மேற்கொண்ட ஒழுக்க நெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவது போன்றதாகும். என்கிறார் பேராசிரியர் ப.முருகன். அறிஞர்களின் முன்னால் தவறாகப் பேசுவது ஒழுக்கக் கேடான செயலக்குச் சமமானது என்பது வைகைச் செல்வனின் நவீன உரை. நிரம்பக் கற்றார் முன்னே குற்றப்படுதல், வழியிடை வழுக்கி விழுந்தது போலும் என்கிறார் வ.சுப. மாணிக்கனார். விரிந்த புலமையால் ஆராயவல்ல அறிஞர் முன்னர்ச் சொற் குற்றம் உண்டாகப் பேசுதல், பேராற்று வெள்ளத்தில் நீந்தும் ஒருவன் தன் நிலையில் தளர்ந்தது போல்வதாகும் என்பது இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் உரை. ஒருவர் பெற வேண்டும் சிறப்புகள் அனைத்தையும் தருவது ஒழுக்கமே. ஆதலால் அவ்வொழுக்கம் உயிரினும் மேலானதாகக் கருதிக் காக்கப்பட வேண்டும். என்பதை, ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் (குறள். 131) என்பது வள்ளுவ நெறியாகவான் வியன்புலம் ஏற்று உணர்வார் (விரிந்த புலமையால் ஆராயவல்ல அறிஞர்) முன்னர் சொற் குற்றப்படுதல், ஒருவன் வளர்ச்சிக்குப் பெரிய தடை, அது ஒழுக்கத்திற்கு நேர்ந்த போராட்டம் போன்றதும் ஆகும். உயிர்க்கு நேர்ந்த போராட்டம் போன்றதாக வும் கருதிக் கொள்வதில் குறை யொன்றும் புலப்படவில்லை. அறிஞர் முன் நிகழ்ந்த சொற் குற்றம். ஒருவனுக்கு வீழ்ச்சி தரும் பெருங்குற்றமே ஆகும். ஆகவே, எந்நிலையிலும் சொல்லிழுக்குப்படக் கூடாது. ------------ கற்றறிந்தார் கல்வி விளங்கும், கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து. (குறள். 717) சொற்பொழிவாளர் எத்தகையவர்? கற்றறிந்தார், கேட்கும் அவையோர் எத்தகையர்? கசடறச் சொல் தெரிதல் வல்லார். பேசுபவரும் கேட்பவரும் ஒருவரை ஒருவர் விஞ்சும் அறிவுடையவர்கள். கேட்பவர்கள் எழுத்தெண்ணிப் படித்தவர்கள்; நுண்மாண் நுழை புலம் அமைந்த சொல்லாய்வு அறிஞர்கள். உரையாற்று பவர் கற்க வேண்டிய நூல்களை ஐயம் திரிபறக் கற்ற விழுச் செல்வர். எழுமைக்கும் ஏமாப்புத்தருமாறு ஒருமைக் கண் அமைந்து கற்ற அறிவாளர். தாம் எக்கல்வியால் இன்புறுகிறாரோ அக்கல்வியால் உலகத்தவர்களும் இன்புறுவதைக் கண்டு மேலும் மேலும் ஆர்வத்துடன் கற்று வருபவர். சங்கப் பலகையில் அமர்ந்துள்ள அறிஞர்களின் அறிவுக்கும் விருந் துணவு படைத்து அவர்களின் ஒருமித்த பாராட்டையும் வாழ்த்துதலையும் ஓர் அறிவாளர் பெறுவது அவர்க்குப் பெருமை தருவது மட்டுமன்று, அவருடைய அறிவை மேலும் கூர்மைப் படுத்தும். புகழ்மிக்க இவ்வறிஞர் பேரவையினரே பாராட்டினர் என்னும் தகுதி, நாடெல்லாம் விரைந்து பரவுவதற்கு ஏற்ற வாய்ப்பையும் உருவாக்கித் தரும், பாற்குடத்தில் பெய்த தேனாய் இருபாலும் இன்பமும் பயனும் நல்கும் உவப்பத்தலைக் கூடுதல் ஆகும். குற்றமற்ற சொல்லாய்வாளர் அவையில் பேசும் கல்வி வல்லாரின் கல்வி பட்டை தீட்டப்பட்ட வைரம் போல் மேலும் விளக்கமுறும். ------------ உணர்வ துடையார்முன் சொல்லல்: வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. (குறள். 718) யார் முன் சொல்ல வேண்டும்? உணர்வது உடையார் முன் சொல்லுதல் வேண்டும். உணர்வது உடையார் சொல்லுதல் எதைப் போன்றது? வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிவது போன்றதாகும். மாந்தரின் அறிவு நிலை பல்வேறு வகைப்பட்டது. தாமே கற்று அரிய செய்திகளை எல்லாம் அறிந்து வைத்திருப்பவரும் இருப்பர். சிலருக்கு ஒரு முறை கூறினாலே போதும் நன்கு புரிந்து கொள்வர். சிலருக்கு இரண்டு முறை கூறினால் போதும் நன்கு விளங்கிக் கொள்வர். சிலருக்கு மூன்று முறை கூற வேண்டிய தேவை ஏற்படலாம். சிலருக்குப் பல்வேறு வகையான எடுத்துக்காட்டுகளும் விரிவான விளக்கமும் தந்து பல முறை கூறினாலும் அதன்பின் அவர்கள் நூலை ஒரிருமுறை படித்த பின்பே புரிந்து கொள்வர். அப்படி இருந்தால் சொல்பவர்க்கு எரிச்சலும் வெறுப்பும் ஏற்படும், கேட்டவர்க்கு சலிப்பும் சோர்வும் களைப்பும் ஏற்படும் மனத்தில் ஒரு நிறைவு ஏற்படாது. கேட்டறியும் ஆர்வமும் புரிந்து கொள்ளும் திறனும் ஏற்கனவே நன்கு படித்து உணர்ந்த பயிற்சியும் உடைய ஆர்வலர்கள் நிறைந்த அவையில் பேசும் வாய்ப்புக் கிட்டினால், பேசுபவர்க்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுவது இயல்பு. அது போல் கேட்பவர்களும் பெருவிருப்புடன் கேட்பர். பேசுபவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் மனம் ஒன்றிப் பேசுவர். கேட்பவரும் தன்னை மறந்து உணவை மறந்து, இயற்கை எழுப்புதலைக் கூட உணராது கால நேரம் கருதாமல் கேட்டு இன்புறுவர். நல்ல நிலத்தில் நன்கு பண்படுத்தி, ஏற்ற உரமிட்டு, தேர்ந்தெடுத்த நல்ல விதையை ஊன்றி, நீர் விட்டு முளைத்த பயிர் நோய் நொடி இன்றி நாளும் நன்கு வளர்ந்து வருகிறது. அந்த பயிருக்கு வாடாமல் பாத்தி பாத்தியாய் நீரும் சொரிந்து காத்து வந்தால் பயிரின் வளர்ச்சியும் பயனும் எப்படி இருக்குமோ அவ்வாறே தானே உணரும் திறன் பெற்றார் அவையில் பேசுவதால் விளையும் பயனும் அமையும். பேசினால் உணர்வதுடையார் முன்பேச வேண்டும். நீர் சொரிந்தால் வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிய வேண்டும். அதுவே, நிறைவு தரும் பயனுடைய பணியாகும். செல்லிடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா நல்லறி வாளரின் அவிந்த நாவெலாம். என்னும் கம்பராமாயணப் பாடல் வரிகளும் சான்ற வன்னது தவிர்ந்தனன் உணர்ர்வுடைத் தம்பி என்னும் பாடல் வரியும் ஒப்பு நோக்கத்தக்கதாகும். ------------ புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க; நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார் (குறள். 719) நல்லறிஞர்கட்கு வள்ளுவர் விடுக்கும் வேண்டுகோள் இதுவாகும். தகுதியையும் திறமையையும் அறிய முடியாத கீழ்மக்களும் உலகில் இருப்பர். அத்தகையோர் உயர்ந்த நல்லறிஞர்கள் பேசும் பேச்சின் நுட்பத்தை உணர்ந்து கொள்ள இயலாது. அதோடு பேசுபவரைத் தமக்கும் கீழானவராகக் கருதி இழிவுபடுத்தவும் செய்யலாம். எந்தக் கீழானவர் களும் தாம் அறிவிலிகள் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தம்மை மிக உயர்ந்தவராகவே கருதித் தகுதி இல்லாதவர்களாக நடந்து கொள்வர். அறிஞர்கள் பேச்சில் அவர்கட்கு ஈடுபாடு வராது. ஆகவே, முறையாக அமரவும் மாட்டார். அவர்களுக்குள் பேசிக் கொண்டும். அவையில் செய்யக் கூடாத புகைபிடித்தல் போன்றவற்றையும் நாணம் இன்றித் தமக்குப் பெருமை தருவதாகக் கருதிச் செய்து கொண்டும் இருப்பர். தாமும் கேளார். பிறரையும் கேட்க விடார். ஆகவேதான் திருவள்ளுவர், நல்ல அறிஞர்கள் குழுமியுள்ள நல்ல அவைக்கண் நற்பொருள்களை உள்ளத்தில் நன்கு பதியுமாறு பேசும் வல்லமை பெற்ற அறிஞர் பெருமக்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நல்ல பழக்க வழக்கமும் பண்பாடும் இல்லாத அறிவிலிகள் கூட்டத்தில் மறந்தும் கூடப் பேச ஒப்புதல் தருதல் கூடாது என வேண்டுகிறார். அறிஞர் கூட்டத்தில் பேசும் தகுதி வாய்ந்த அறிஞர்கள் பொதுமக்கள் கூடியுள்ள அவையில் பேசுவதே பயன்படாது என்றால் முழுமூடர்கள் அவையில் பேசி என்ன பயனை அடையப் போகிறார்கள். ஒரு வேளை இழிவுபடுத்தப் பட்டாலும் படலாம். ஏன் பயனற்ற செயலைச் செய்து, வேதனையை விலை கொடுத்து வாங்க வேண்டும். உலகப் பெருந்தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கிற்குத் தலைமை ஏற்கும் முழுத்தகுதியும் வாய்க்கப் பெற்ற மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர். பல தரப்பட்ட பொதுமக்கள் கூடியுள்ள பெருங்கூட்டத்தில் பேச ஒப்புக் கொண்டு பேசிய பேச்சே அவர் உயிரை விரைவில் கொண்டு சென்று விட்டது. என்பது ஒரு பாடம். இராமன் தாடகை மீது அம்பு எய்தான்; அது அவள் நெஞ்சைத் துளைத்து ஊடுருவிச் சென்றது என்ற நிகழ்ச்சியைக் கம்பர், புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே. எனப் பாடியுள்ளதையும் ஒப்பு நோக்குக. இராமனைக் காணச் சென்ற பரதனுடன் போன இசைக் கருவிகளாகிய தாரையும் சங்கமும் தாளம் கொம்பொடு பேரியும் இயம்பில சென்ற; பேதைமைப் பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே எனப்பாடும் கம்பரின் பாட்டு நல்லதொரு விளக்கமாய் அமைந்துள்ளது. கல்லா தவர்கிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை ஒருவற்கு-நல்லாய் இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. என்னும் பழமொழிப் பாடலும் இக்குறட் கருத்தை வழி மொழிகிறது. மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட்டு ஆங்கோர் அஞ்ஞானந் தந்திட்டது ஆங்கு, அறத்துழாய்க் கைஞ்ஞானங் கொண்டொழுகும் காரறி வாளர்கண் சொல்ஞானம் சோர விடல் அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச் சொல் பொருளாகக்கொள்வர்புலவர்; பொருளல்லா ஏழை அதனை இகழ்ந்துரைக்கும், பாற் கூழை மூழை சுவையுணரா தாங்கு என்னும் நாலடியார் நூற்பாடல்களும் தக்க விளக்கமாய் அமைகின்றன. ------------ அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால், தம்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல். (குறள். 720) கற்றுணர்ந்த அறிஞர் பெருமக்கள், தம்மைப் போன்ற கல்வி அறிவு உடைய நன்மக்களிடம் தான் சிறந்த கருத்துக்களைக் கூற வேண்டும். ஏனெனில் அறிஞர் உரைக்கும் அரிய கருத்துகளை ஒத்த அறிவுடையவர்களே விரும்பிக் கேட்பர்; ஐயம் ஏற்படின் விளக்கம் கேட்பர்; சுருக்க வேண்டி யதைச் சுருக்கவும், விரித்துரைக்க வேண்டியதை விரித்துரைக்கவும் வேண்டுவர், குறையாகப் புலப்படுவதை நீக்கவும், நிறைவாகத் தோன்றுவதைப் பாராட்டவும் செய்வர். இருபாலும் நலம் விளையும். அறிஞர்கள் கூறும் கருத்தை உள்வாங்கிக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ இயலாத சிற்றறிவினர் முன் சொல்லப்படும் கருத்து தன் தகுதியை இழந்து விடும் என்பதைத் திருவள்ளுவர் அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் என்னும் உவமை கொண்டு விளக்குகிறார். தூய்மையான பாத்திரத்தில் ஊற்ற வேண்டிய பால் அமிழ்து, தேன் கலந்து குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்பிப் பருகும் பால் அமிழ்தைப் தூய பாத்திரத்தில் ஊற்றுவதற்குத் தவறி வீட்டுக் கழிவுநீர் வெளியே செல்லும் சலதாரை ஆகிய அங்கணக் குழியில் கைதவறிக் கொட்டி விட்டால் அதன்பின்னர் அதற்கு அமிழ்து என்ற பெயரே போய்ச் சாய்க்கடை நீராகி விடும். அறிஞர்களே! நீங்கள் வழங்கும் அமிழ்து அன்ன கருத்துகளைச் சல தாரையில் கொட்டிச் சாய்க்கடை நீர் ஆக்கி விடாதீர்கள் எனத் திருவள்ளுவர் உரிமையுடன் வேண்டுகிறார். கல்வியான் ஆய கழிநுட்பம், கல்லார்முன் சொல்லிய நல்லவும் தீயவாம்-எல்லாம் இவர்வரை நாட! தமரை இல் லார்க்கு நகரமும் காடுபோன் றாங்கு என்னும் பழமொழிப்பாடலும் கருத்து ஒற்றுமை உடையதாகும. பன்றிக் கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால் நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால் குன்றின்மேல் கொட்டும் தறிபோல் தலைதகர்ந்து சென்றிசையா வாகும் செவிக்கு என்னும் நாலடிப் பாடல் பிறிதொரு உவமையும் கூறி விளக்கம் அளிக்கிறது. அமிழ்தைத் தேனில் சேர்க்க வேண்டுமே ஒழிய, சாய்க் கடையில் சேர்த்து விடக் கூடாது. ------------ சொல்லின் தொகை அறிக! தூய அறிவினராய் விளங்குக! அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக! சொல்லின் நடை தெளிக! நல்லறிவாளராய் விளங்குக! அவையின் தகுதி அறிந்து நன்குணர்ந்து சொல்லுக அவையின் தகுதி அறியாமல் பேசாதீர்! அவை அறியார் சொல்லின் வகையறியார் அவை அறியார் திறமையும் பாழாகும் அறிவாளர் அவையில் பேரறிவாளராக ஒளி வீசுக! அறிவிலார் அவையில் மிக எளிமையாய்ப் பேசுக! அறிஞர் அவையில் அடக்கமாய்க் கேள்! அறிஞர் அவையில் முந்திப்பேச எண்ணாதே! விரிந்த அறிவுடையார் முன்னர் சொல்லிழுக்கு நேராமல் காத்துக்கொள் சொற்குற்றம் ஒழுக்கம் தவறிய குற்றம் போன்ற தாகும். குற்ற மற்ற சொல்லாய்வாளர் அவையில் பேசுக! சொல்லாய்வாளர் அவையில் பேசுவார் அறிவு மேலோங்கும்! உணர்வதுடையார் முன் சொல்லுக! வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிதலைக் கண்டு உணர்க! நல்லறிவாளர் புல்லவையில் பேசாதீர்! சாய்க்கடையில் பாலைக் கொட்டாதே! தகுதி அற்றவர் அவையில் சொல்லாதே! ------------ 73. அவை அஞ்சாமை பாரதியார் தம் காலத்து இந்திய மக்களின் நிலை குறித்துப் பாடும் பொழுது, நெஞ்ச பொறுக்கு தில்லையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த மரத்தில் என் பார்; அந்தக் குளத்திலென்பார் துஞ்சுது முகட்டில் என்பார்-மிகத் துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார். சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்-ஊர்ச் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார் துப்பாக்கி கொண்டொருவன்-வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் அப்பால் எவனோ செல்வான்-அவன் ஆடையைக் கண்டு பயந்து எழுந்து நிற்பார் எப்போதும் கைகட்டுவார்-இவர் யாரிடத்தும் பூனைபோல் ஏங்கி நடப்பார் எனத் தன் மன வேதனையை வெளிப்படுத்தினார். அச்சம் அகன்று ஆண்மை மேலோங்க வேண்டும் என்று எழுதியதனாலும் பாடியும் பேசியும் முழங்கிய முழக்கத்தினாலும் விடுதலை உணர்வு கிளர்ந்தெழுந்தது கண்டு வீறு கொண்ட பொழுது அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்பதுஇல்லையே இச்சகத்து ளோறெல்லாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே துச்சமாக வெண்ணி நம்மைத் தூறுசெய்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே. பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே. இச்சைகொண்ட பொருளெலாம் இழந்து விட்ட போதினும அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே. கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே. நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே பச்சையூன் இயைந்தவேற் படைகள்வந்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பது இல்லையே! என ஆங்கிலேயரின் அடக்கு முறைக்குச் சற்றும் அஞ்சாது வீரமுழக்க மிட்டான். என்பதும் நம் சிந்தையில் இருக்கட்டும். அச்சமே கீழ்களது ஆசாரம் 1075. அச்சம் உடையார்க்கு அரணில்லை 534. என்பன வள்ளுவ முடிவுகள். அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கி யல்பு (குறள். 382) என்னும் இறைமாட்சிக் குறள் ஆட்சியாளரிடம் எப்பொழுதும் குறையாமல் அமைந்திருக்க வேண்டிய நான்கு இயல்புகளில் முதலிடம் பெறுவது அஞ்சாமை ஆகும். அத்துடன் இடனறிதலில், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா; எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் (குறள். 497) எனும் குறள் வழி அஞ்சாமை என்னும் ஒரு தன்மை மட்டும் ஒருவரிடம் இருந்தால் போதும். அஃதன்றி வேறு துணை வேண்டுவ தில்லை எனத் தெளிவு படுத்தியுள்ளார். ஆகவே, சொல்வன்மை அதிகாரத்தில், சொல்லுதலில் வல்லமை உடையவனாகவும், சொற்சோர்வு இல்லாத வனாகவும், அவை அஞ்சாதவ னாகவும் இருக்கும் ஒருவனை எதிரி ஆக்கிக் கொண்டு வெல்லுதல் எவர்க்கும் எளிய தன்று, என்பதைச், சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது (குறள். 647) எனக் கூறியுள்ள முத்தன்மைகளில் ஒன்றான அவை அஞ்சாமையை விரித்துரைக்கும் அதிகாரமே இவ்வதிகாரம் ஆகும். அவையினரைக் கண்டு அஞ்சாமல் தடுமாற்றம் இன்றி, சொல்ல வேண்டிய கருத்தைத் தெளிவாகவும் உறுதியாகவும் கூற வேண்டும். அவையில் இருப்பவர்களில் மாறுபட்ட கருத்தும் கொள்கையும் உடையவர்களும் இருக்கலாம். அவர்கள் சில கருத்துகளை மறுக்கலாம். எதிர்க்கலாம். மறுப்புக்குத் தக்க விளக்கம் சொல்ல வேண்டும். எதிர்ப்புக்கு அஞ்சிவிடாது எதிர்ப்பவர்களின் அடிப்படை நோக்கைப் புரிந்து கொண்டு. அவர்களையும் நாம் எடுத்துச் சொல்லுகின்ற முறையால், தம் பக்கம் இழுக்க வேண்டுமே தவிர்த்து; உணர்ச்சி வயப்பட்டுச் சினங்கொள்வதோ வெறுப்புக் கொண்டு அவையை விட்டு வெளியேறவோ கூடாது. எதிப்பவர்கள் கருத்து வேறுபட்டவர்கள் என்று எண்ண வேண்டுமே தவிர்த்துப் பகைவர்களாகக் கருதக் கூடாது. பேச்சுக்குத் துணைபுரியாமல் முட்டுக் கட்டை போடுபவர்கள். விளக்கை அணைப்பவர்கள்; கல் எரிபவர்கள், முட்டை செருப்பு, சாணம் முதலியவற்றை மேடை நோக்கி வீசுகிறவர்கள் இருக்கலாம். ஆகவே தான் அறிவொளி பரப்புவோர்; கொள்கை முழுக்கம் செய்வோர்; கடைகோடி மக்களையும் கைதூக்கிவிட எண்ணுவோர். அறியாமையை, மூடநம்பிக்கையை ஏழ்மையை, வறுமையை விரட்டி, நேர்மை, ஒழுங்கை, கடமையுணர்வை உரிமையை நிலைநாட்ட விரும்புவோரை அதற்கு மாறுபட்டவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்க்கத்தான் செய்வார்கள். அஞ்சாமல் நமக்கும் நாட்டுக்கும் உலகிற்கும் எது நலம் தரும் எனக் கருதுகிறோமோ அக்கருத்தைப் பரப்புவதை விட்டு விடக்கூடாது. 1947 இல் இந்தியா பாகிசுத்தான் என்று நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது, அடுத்து என்ன; என்று முடிவெடுக்க, அகில இந்திய முசுலிம் லீக்கின் தலைமை நிர்வாகக் குழுக்கூட்டம் பாகிசுத்தான் தலைநகரமான கராச்சியில் கூடியது. அந்தக் கூட்டத்தில் இந்திய யூனியன் முசுலீம் லீக் பாகிசுத்தான் முசுலீம் லீக் என இரு தனித்தனி அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டன. இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் அமைப்பாளராக காயிதே மில்லத் நியமிக்கப்பட்டார். கராச்சியில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பாகிசுத்தான் சார்பில் லியாட் அலிகான் கலந்து கொண்டார். இந்தியாவின் சார்பில் காயிதே மில்லத் பங்குகொண்டார். முசுலீம் லீக்கை இரண்டு அமைப்புகளாகப் பிரிப்பது பற்றியும், கட்சியின் சொத்துகளைப் பிரித்துக் கொள்வது பற்றியும் விவாதித்து முடிவெடுக்கப்பட்ட அந்தக் கூட்டத்தின் இறுதியில் காயிதே மில்லத் பேசினார். அவரது பேச்சு அங்கிருந்த அனைவரையும் வியக்க வைத்தது; மலைக்கவும் வைத்தது. ஒன்றாக இருந்த நாம் இன்று வெவ்வேறு நாட்டினராக ஆகிவிட்டோம். உங்கள் நாட்டுக்கு நான் நண்பனாக வந்தால், என்னை நீங்கள் வரவேற்பீர்கள்; மாற்றானாக வந்தாலோ எதிர்ப்பீர்கள். அது உங்கள் கடமை தேசப்பற்று. அதுவே தான் என் நிலையும். இந்தியா உங்களை நண்பனாகக் கருதுகிறது. அதற்கு மாறாக என்னை நீங்கள் நினைப்பீர்களானால் நானே உங்களின் முதல் எதிரியாக இருப்பேன். என்று காயிதே மில்லத் சொல்லிய சொற்கள் வள்ளுவரின் அவை அஞ்சாமைக்கு அருமையான எடுத்துக் காட்டாகும். அதேபோல் வங்க தேசம் தோன்றுவதற்கு முன்பு புதுதில்லி உருது இதழான கீமா காயிதே மில்லத்தைக் கண்ட நேர்காணலில் வங்க தேசம் தொடர்பான சிக்கலில் இந்தியாவுக்கும் பாகிசுத்தானுக்கும் போர் மூண்டால், அப்போது தங்கள் இயக்கத்தின் நிலை என்னவாக இருக்கும் என்ற வினாவிற்கு, காயிதே மில்லத் அளித்த விடைவருமாறு; இந்தியா எங்கள் தாய்நாடு, நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியாவிற்கு யார் யார் பகைவர்களோ அவர்கள் இந்திய முசுலீம் லீக்கிற்கும் பகைவர்கள்தான். எதிரி ஆயுத பலத்தால் நம்மை எதிர்த்தால், நாமும் ஆயுத பலத்தால் எதிர்ப்போம். எதிரியைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்து தோல்வியடையச் செய்வோம். இந்தியா மீது மீண்டும் பாகிசுத்தான் படையெடுக்குமானால் அதன் படைகளை முரியடித்து விரட்ட இந்திய நாட்டைப் பாதுகாக்க-உடல், பொருள், உயிர் அனைத்தையும் ஒப்படைத்துப் போராட இந்திய முசுலீம்கள் அணியமாக உள்ளனர். என்னும் நேர்காணல் பகுதியில் அடங்கியுள்ள சொற்களின் பயன்பாடு அவை அஞ்சாமைக்குச் சான்றாகும். பாறைகளையும், பெருமரங்களையும் புரட்டித் தள்ளிக் கொண்டு, பேராவேசத்துடன் மலை மீதிருந்து ஓடிவருகின்ற காட்டாற்று வெள்ளம் போன்றது தளபதி அண்ணாவின் சொற்பொழிவு என்று சொன்னால் திருச்சி விசுவநாதத்தின் பேச்சைக் கடலோரம் நடந்து செல்லுகிறபோது, நிதானமாக ஆனால், அடுக்கடுக்காக எழும்பி வந்து நம் கால்களை முத்தமிட்டுச் செல்கிற அழகிய அலைகளின் தன்மைக்கு ஒப்பிடலாம் என்கிறார் மா.இளஞ்செழியன். 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கட்குத் தனியானதோர் சிறப்புமிக்க இடம் உண்டு. கி.ஆ.பெ.வி.தமது சொந்தச் செலவிலேயே தமிழகத்தின் அன்றைய 12 மாவட்டங்களிலும் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்துச் சுற்றுப் பயணம் செய்தார் 481 நாள்களில் 314 ஊர்களில் 617 மேடைகளில் பேசினார். தூத்துக்குடியில் மட்டும் ஒரே நாளில் ஏழு கூட்டங்களில் பேசினார் என்ற வியக்க வைக்கும் தகவலை திருச்சி விசுவநாதம் என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் மா.சு.சம்பந்தம் தொகுத்துத் தந்திருக்கிறார். அன்று கி.ஆ.பெ.வி. பேசிய கூட்டங்கள் பெரும்பாலும் எப்படி நடந்தன? மூன்று எடுத்துக் காட்டுகளைச் சுட்டி இருக்கிறார். திருநெல்வேலியில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் கி.ஆ.பெ.வி. பேச ஆரம்பித்த சில மணித்துளிகளில் மேடையை நோக்கிக் கற்கள் பறந்தன. ஒரு கல் கி.ஆ.பெ.வியின் மீது பட்டு குருதிப் பெருக்கை ஏற்படுத்தியது. குருதியைத் துடைத்தபடியே கல்வீச்சுக்கும் மத்தியில் நான் திரும்பி வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வரவில்லை. நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதைவிட தமிழ் வளர்ச்சிக்கு எனது புதை குழி அதிகமாக உதவும் என்று கூறி விட்டுத் தொடர்ந்து பேசினார். திருநெல்வேலியில் மற்றொரு கூட்டம் சந்திப் பிள்ளையார் கோயில் அருகே நடந்த இந்தக் கூட்டத்திலும் கல்வீசப் பட்டது. கல் வீசி எப்படியும் கூட்டத்தைக் கலைத்தே தீர்வது என்று தீர்மானித்து விட்டார்கள். இரண்டு வண்டிகளில் கற்களைக் கொண்டு வந்து குவித்து வைத்துக் கொண்டு இந்தி மோகம் கொண்டவர்கள் சரமாரியாக வீசினார்கள். அனைத்தும் கருங்கல் சல்லிகள். காவல் துறையினர் கல்வீச்சை நிறுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நடத்தவே முடியாது என்ற நிலையில் கூட்டம் கைவிடப்பட்டது. ஆனால், கி.ஆ.பெ.வி. அதற்காக அந்த இடத்தில் பேசுவதைக் கைவிட்டுவிட்டு ஊருக்குத் திரும்பி விடவில்லை. மறுநாள் அதே இடத்தில் கூட்டம் தொண்டர் படை அமைத்து பாதுகாப்பு வளையத்தைப் பலப்படுத்திக் கொண்டு மேடை ஏறிய அவர் ஆறு மணி நேரம் தொடர்ந்து பேசினார். எட்டையபுரத்தில் மற்றொரு கூட்டம் நாவலர் சோம சுந்தர பாரதியார் தலைமை வசிக்க கி.ஆ.பெ.வி. பேசவிருந்த கூட்டம் அது. கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட அரைமணி நேரத்துக்குள் மேடையும் மேடையைச் சுற்றியிருந்த பகுதிகளும் கல்மயமாகி விட்டன. ஓயாத கல்மாரிக்கு நடுவே கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை காவல் துறையும் கூட்டத்தை நிறுத்திவிட வேண்டினர். வேறு வழி இன்றித் தலைவர் கூட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்து விட்டார். அதன் பிறகும் கல்மாரி ஓயவில்லை. காவல் துறையினர் சோம சுந்தர பாரதியாரையும் கி.ஆ.பெ.வி.அவர்களையும் கவனமாகப் பாதுகாத்து மேடைக்கு எதிரே இருந்த ஒரு கட்டடத்தின் வளாகத்திற்குள் அழைத்துச் சென்றனர். அந்த இடத்தை நோக்கியும் கற்கள் இடைவிடாமல் வீசப்பட்டன. கற்களை வீசும் கும்பலில் ஐந்நூறு பேருக்கு மேல் இருந்தனர். கல்லடியைத் தாங்க முடியாத காவல் துறையினர். துப்பாக்கிச் சூடு நடத்திக் கல்வீசும் கூட்டத்தைக் கலைப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த அணியமான போழ்து யாரும் எதிர்பாரா வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. காவலர்களின் துப்பாக்கிமுனைக்கு எதிரில் கி.ஆ.பெ.வி. போய் நின்று கொண்டார். சுடவேண்டா! அவர்களும் தமிழர்களே, இன்றில்லா விட்டாலும், பின்பு ஒரு காலத்தில் தம் தவறுதளை உணர்ந்து திருந்தி விடுவார்கள் என்றார். காவல் துறையினரும் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். சரியாகப் பதினோருஆண்டுகளுக்குப் பிறகு, அன்று கல்வீச்சில் ஈடுபட்டவர்களே கி.ஆ.பெ.வி. அவர்களை எட்டைய புரத்திற்கு அழைத்துச் சென்று, கலைக் கழகத்தைத் திறந்து வைக்க வேண்டினார்கள் கல்வீசிய கைகளால் அவர்க்கு மலர்மாலை அணிவித்தார்கள். மக்கள் மத்தியில், அன்று நாங்கள் இவருக்கு எதிராகக் கல்வீசியதற்கு வருந்துகிறோம். நாங்கள் செய்தது மிகப்பெரிய தவறு என்று மேடை ஏறிப் பேசி வருத்தம் தெரிவித்தார்கள். அவைக்கு அஞ்சாது துணிவுடன் தாம் எண்ணியதை மிடுக்குடன் எடுத்து மொழியும் வல்லாளர்களில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவ நாதம் அவர்கட்குச் சிறப்பிடம் உண்டு. புக்கர் டி.வாசிங்டன் புகழ் பெற்ற பேராசிரியர். சிறந்த எழுத்தாளர். இவர் வெளிஉலகிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்னர் ஒரு நாள் ஓர் ஆலயத்துக்குச் சென்றார். அவர் கறுப்பினத்தவர் என்பதால் ஆலயத்துக்குள் விட மறுத்தனர். அவரோ, நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கடவுள் எனக்குச் சொல்வார் எனக் கூறிவிட்டுத் திரும்பினார். ஆண்டுகள் பல கடந்தன. புக்கர் டி.வாசிங்டன் புகழ்மிக்க எழுத்தாளர் ஆனார். மீண்டும் அதே ஆலயத்துக்குச் சென்றார். அப்போதும் அவரை உள்ளே நுழைய அனுமதிக்காதவர்கள் என்ன கடவுள் உங்களிடம் ஏதாவது சொன்னாரா? என ஏளனமாகக் கேட்டனர். உடனே வாசிங்டன் இப்பொழுது நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன். ஆலயத்துக்கு வரவில்லை ஏனென்றால் கடவுள் என்னிடம் நானே அந்த ஆலயத்துக்குச் செல்வதில்லை... நீ ஏன் செல்கிறாய்? என்று கேட்டார் எனக் கூறிய மறுமொழிக்குள் அஞ்சாமையைக் காணுகிறோம். பெர்னார்ட்சாவும், செசுடர்டனும் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமகால எழுத்தாளர்கள் சா மிக மெல்லிய உடல்வாகு உடையவர். செசுடர்டன்னோ பருமனாக இருப்பார். இருவரும் ஒரு நாள் சந்தித்துக் கொண்ட போது செசுடர்டன் சாவைப் பார்த்து உன்னைப் பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் வந்தது போலத் தெரிகிறதே என்று கேலி செய்தார். உடனே பெர்னாட்சா உன்னைப் பார்த்தால் அந்தப் பஞ்சத்துக்குக் காரணம் என்ன என்பது புரிகிறது. என்றாராம். கலைவாணர் கிருட்டிணன் ஒரு நாடகத்தில் வித்துவான் வேடத்தில் தோன்றினார். வித்துவானுடைய மனைவியாக வந்த நடிகை அவரைக் கொஞ்சம் திண்டாட விட வேண்டும் என்று எண்ணி, தோசம் என்ற வார்த்தைக்கும் சந்தோசம் என்கிற வார்த்தைக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றாள். ஒரு மணித்துளி சிந்தித்த கலைவாணர், நீ கேட்ட இந்தக் கேள்விக்கு வியாக்கியானம் இல்லாமல் வித்தியாசத்தைச் சொல்ல முடியாது. கவனமாய்க்கேள்! உன்னை நானாகக் கிணற்றிலே பிடித்துத் தள்ளினால் அது தோசம்! நீயாயவே விழுந்து விட்டால் அது எனக்குச் சந்தோசம் சரிதானா என்றார். அரங்கில் எழுந்த சிரிப்பொலி அடங்க நெடு நேரமாயிற்று. தமிழாசிரியர் கழகச் சார்பில் மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தெ.பொ.மீ.அவர்களைக் காணச் சென்றோம். அமைந்து வரவேற்றார்; அருமையாய் உரையாடினார். உரையாட்டின் இடையே, தமிழ்ப் புலவர்களுக்குரிய பாடத் திட்டம் பற்றிய உவர்ப்பினை அவர் கூறினார். அது, தமிழ்ப் புலவர்களுக்குரிய பாட நூல்களைப் படித்தால் ஒன்று கிறுக்கனாக வேண்டும் அல்லது காமுகனாக வேண்டும் என்றார். அது பொறுப்பற்ற பேச்சாகத் தோன்றியது. தெருவிலே போகும் தெரியா ஒருவர் சொன்னால் குற்றமில்லை. அவர் ஏக்கம் அல்லது எண்ணம் சொல்கிறார் என்று கொள்ளலாம். அல்லது தள்ளலாம் ஆனால், தமிழ்த் துறையில் கொடி கட்டிப் பறந்தவர். இப்போதிருப்பதோ துணை வேந்தர் பதவியில்! மற்றவர்கள் வருந்தியது எனக்குப் புலப்பட்டது. ஆனால், நான் அமையவில்லை. நீங்கள் இதைச் சொல்லக் கூடாது. பாடத் திட்டத்தை வகுக்கவும் மாற்றி அமைக்கவும் வாய்த்த பொறுப்பில் இருப்பவர்கள் நீங்கள்; அதைச் செய்வதை விடுத்துப் பழிப்பதால் என்ன பயன் என்றேன். எதிர்பாராத இத்தடையால் அவர் நிலை குலைந்தார். நான் என்ன செய்வேன். சிண்டி கேட், செனெட் என்றார். நடைமுறைக் கொள்கை என்றார். நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றால், இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது என்றேன். அதன்பின் உரையாடல் சுருங்கியது. விடை பெற்றுக் கொண்டோம். நண்பர்கள் என்ன நினைத்தார்களோ, நான் அது பற்றிக் கவலைப்படவில்லை. நான் இல்லாத இடத்தில் அவர் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தெரியும்? இன்னொருவரிடம் இதைச் சொல்லி இருந்தால் தேடிப்போயா சொல்லியிருப்பேன்! மேடைகளின் நிலையைக் சொல்லவே இவற்றைச் சுட்டினேன். இரா. இளங்குமரனார் புல் என்னும் தன் வரலாற்று நூலில் பொறித்த செய்தி இஃதாகும். தாம் கற்றதை அறிந்ததை உணர்ந்ததைத் தாமே வைத்துக் கொள்ள எண்ணாது. வழங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஊறிய நீரைத் தேங்கவிடாமல் வாரி வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால்தான் நீரும் புதிது புதிதாக ஊறிக் கொண்டிருக்கும். தேடிய பொருட் செல்வத்தைத் தக்கவர்கட்கு, தக்க பணி கட்கு வழங்க வேண்டியது போல். தேடிய அறிவுச் செல்வத்தையும் பிறர்க்கு வழங்குவதே இன்பமும் பயனும் நல்கும். அறிவுச் செல்வத்தை வழங்குவதில் ஆர்வமும் ஈடுபாடும் இருக்க வேண்டும். முறையாக வழங்க வேண்டும். தெளிவாக வழங்க வேண்டும். மயக்கமோ, தடுமாற்றமோ, தயக்கமோ, அச்சமோ அறவே கூடாது. என்பதால் அவை அறிதல் கூறியதுடன் அமையாது, அவை அஞ்சாமை வேண்டும் என்பதை உரைக்கலானார். அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை என்னும் மணி மொழி, மனத்தில் இருக்கட்டும். ---------- வகையறிந்து வல்லவை வாய்சோரார், சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். (குறள். 721) கற்பவை கசடறக் கற்ற அறிவுடையவர்கள், மொழியின் சொல்வளத்தை சொற்களின் தொகுதியை, அதன் வகையை நுட்பத்தை நன்கு அறிந்த குற்றமற்ற தூய அறிவுடையவர்களாய் முதலில் தம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவையின் வகைகளையும் பரவலாக அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். புலமைமிக்கோர் அவையில் தாம் தேடி வைத்துள்ள அறிவுச் செல்வத்தை வழங்க வேண்டும். அவ்வாறு சொல்லும் போழ்து சொற்குற்றமோ, பொருட்குற்றமோ நேர்ந்து விடாது, தடுமாற்றம் இல்லாமல், ஆற்றொழுக்குப் போல் கருத்துகளை வழங்க வேண்டும். அவையின் தன்மையை அறிந்து கொண்டு, வல்லவர்கள் கூடியுள்ள அவையில் வாய் தடுமாறாமல் பேசுகின்றவர்களே சொற்களைத் தொகுத்துக் குற்றமில்லாமல் பேசத் தெரிந்தவர்கள் ஆவர். நீங்கள் எப்படி இவ்வளவு சிறப்பாகப் பேசுகிறீர்கள் என்று ஒரு முறை சர்ச்சிலிடம் கேட்டதும். அதற்கு உடனே அவர் மேடையில் ஏறிவிட்டதும் அவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் ஒருவனே மேதை என்று நினைத்துக் கொள்வேன் என்றாராம். சொல்வளம் சேர்த்த தூய அறிவினர் எந்த அவையிலும் தடுமாற்றம் இன்றிப் பேசுவர். ------------ கற்றாருள் கற்றார் எனப்படுவர்: கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். (குறள். 722) நல்ல நூல்களைப் படிக்கும் போது, படிப்பவர்கட்கு ஒரு பேரின்பம் ஏற்படும். கற்பவர்கள் தாம் கற்ற நூலைப் பிறர் விளங்கிக் கொள்ளுமாறு விரித்துரைக்கின்றனர். அப்பொழுது சொல்பவரும் இன்புறுகிறார்; கேட்பவரும் இன்புறுகிறார். கேட்பவர் இன்பமுடன் கேட்டு மகிழ்வதைக் கண்ட பேச்சாளருக்கு மேலும் மேலும் கற்க வேண்டுமென்னும் ஆர்வம் வளர்கிறது. கல்விச் செல்வத்தைத் தேடுவதும் இன்பம் தரும்; பெறுவதும் இன்பம் தரும்; வழங்குவதும் இன்பம் தரும். தாம் நூல்வழியாகக் கற்றுணர்ந்த பெருமக்கள் மேலும் மேலும் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேட்கை கொள்வது இயல்பு. ஆகவே, அறிவுச் செல்வம் கிடைக்கும் இடத்தை நாடிச் செல்வர். அவர்கள் தாம் இதுவரை அறியாத, அறிய முடியாத, புதிய புதிய செய்திகளையும், உண்மைகளையும், கருத்துகளையும், கண்டுபிடிப்புகளையும் தக்கவர் வாயிலாகக் கேட்டுப் பயன் பெறும் இடத்தை அவையை நாடிச் செல்கிறார்கள். அங்கே அவர்கட்கு அறிவு விருந்து படைப்போர் அவர்கள் விரும்புமாறும் மனத்தில் பதியுமாறும் புதிய புதிய அறிவுக் கருவூலங் களை வாரி வாரி வழங்குவார்கள் அத்தகையவர்களைக் கல்வியாளர் களில் எல்லாம் மேலானவர்களாக மதித்துப் போற்றுவர். கற்றவர்களே வியந்தும் விரும்பியும் கேட்டு மகிழுமாறும். மனத்தில் பதியுமாறும் அறிவு விருந்து படைக்கும் ஆற்றல் பொருந்திய அறிஞர்களையே மிக உயர்ந்த அறிஞர்களாக அறிஞர்கள் மதிப்பர்; கற்றவருள் உயர்ந்த கல்வியாளர் என்பவர், கற்றவர் அவையில் அவர் மனத்தில் ஆழமாய்ப் பதியும் பாங்கில் எடுத்துச் சொல்பவரே ஆவர். இவர்கள் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் குறிக்கோளுடன் இயங்கும் அறிஞர்கள் ஆவர். இரணியன் வதைப் படலத்தில் பிரகலாதனை அறிமுகப் படுத்துகின்ற கம்பர் அவனை அறிஞரில் அறிஞர் என்கிறார். கற்றாருள் கற்றார் என்னும் வள்ளுவம் இராமாயணத்தில் அறிஞரில் அறிஞர் எனக் கூறப் பட்டுள்ளதை எண்ணிப் பார்ப்போமாக! பகையகத்துச் சாவார் எளியர்; அரியர் அவையகத் தஞ்சா தவர், (குறள். 723) பகையகம் அவையகம் இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டி ஒற்றுமையையும், வேற்றுமையையும் உணர்த்துகிறார். இரண்டிலும் கலந்து கொள்வோர் பேராண்மை வாய்ந்த வீரர்களாக இருக்க வேண்டும். படைவீரர்கள் மனத்திண்மையும் உடல் திண்மையும். நல்ல போர்ப் பயிற்சியும், கருவிகளைத் தக்கவாறு கையாளும் திறனும் வாய்க்கப் பெற்றவர்களாய் இருப்பதுடன் வலிமை வாய்ந்த பகைவர்திறம் கண்டு அஞ்சாதவராயும் இருப்பதுடன், உயிரைப் பெரிது எனக் கருதா நாட்டுப் பற்றாளராகவும் இருக்க வேண்டும். கற்றறிந்த அறிஞர் கூடியுள்ள அவையில் சொற்போர் புரியச் செல்லும் அறிஞர் தாம் கற்க வேண்டிய துறை நூல்களைக் கசடறக் கற்று, பல்வேறு கோணங்களில் ஆய்ந்திருக்க வேண்டும். அரணான கருத்து களையும், முரணான கருத்துகளையும் தொகுத்துக் கோவைப்படுத்திக் கொள்ள வேண்டும். பொருள்வளம், சொல்வளம்; கருத்துவளம் நிரம்பியவராய் இருக்க வேண்டும்.நிரந்து இனிது சொல்லும் சொல் வன்மை வேண்டும். எதிரியின் வினாக்கட்கு விரைந்து ஆணித்தரமாக விடையளிக்கும் திறன் வேண்டும் மாற்றார் கருத்துகளைத் தக்க சான்றுகளுடன் பொய்ப்பிக்கச் செய்ய வேண்டும். சொற்கள் தடுமாற்றமின்றி. ஆற்றொழுக்காக வர வேண்டும். சொல்லாற்றலால் அவையோரையும் நடுவரையும் தம்பக்கம் வருமாறு செய்ய வேண்டும்! எதிர்த்துப் பேசுவோர் ஈடு கொடுக்க முடியாமல், பின்னடையச் செய்ய வேண்டும். வெற்றியை நிலைநாட்ட வேண்டும். நடுவர் மயக்கமின்றித் தெளிந்த முடிவை உரைக்க வழி செய்ய வேண்டும். நடுவர் முடிவை அவையோர் ஒரு மனத்துடன் ஏற்றுக் கொள்ளும் சூழலை உருவாக்கவேண்டும். திருவள்ளுவர், பகைவர் நாட்டிற்கு படையெடுத்துச் சென்று, உயிரைப் பொருட்டாகக் கருதாது நாட்டுக்காகப் போரிட்டு உயிர் விடவும் தயங்காத வீரர்கள் நாட்டில் மிகுதியாக இருப்பார்கள். ஆனால், கற்றோர் அவைக்கு ஆர்வத்துடன் சென்று அஞ்சாமல் சொற்போர் புரிவோர் மிக மிகச் சிலராகவே இருப்பர் என்கிறார். அமர்க்கள வீரர்கள் பல்லாயிரக் காணக்காக நிறைந்து காணப்படும் நாட்டிலும் அவைக்கள வீரர்கள் ஒரு நூறு பேரைத் தேடுதலும் அரிது. பகைக்கு அஞ்சா வீரர்கள் போல், அவைக்கு அஞ்சா வீரர்களும் நாட்டில் பெருக வேண்டும். அஃது அறிவு வளர்ச்சியின் அடையாளம் ஆகும். கவிஞன் பாரதியும் அவைக்கு அஞ்சா அரும் புலமையர். பாரதியார் எட்டையபுரம் மன்னரைக் காணச் சென்ற போது மன்னர் கவிஞருக்கு இருக்கை தரத் தவறிவிட்டார். அந்நிலை கண்ட பாரதியார் கூனிக்குறுகி விடவில்லை. மன்னரைப் பார்த்துப் பாரதியார் நீர் ஊருக்கு வேந்தர் நானோ பாட்டுக்கு வேந்தன் நமக்குள் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது? என்று கூறிவிட்டு, அவருக்கு இணையாக ஓர் ஆசனத்தில் அமர்ந்தார் என்பது வரலாறு. அத்தகைய துணிவும், அஞ்சாமையும் நூறு ஆயிரத்தில் ஒருவர்க்கு அமைந்திருப்பதே அரிது. கம்பராமாயணம் தொடர்பாக நிகழ்ந்த சொற் போர்களில் மிகப்பெரிய வல்லார்களை எல்லாம் வாயடக்க வைத்துத் தம் கொள்கையை அழுத்தமாக வலியுறுத்தி வெற்றி வாகை சூடிய பேரறிஞர் அண்ணா அவையகத்து அஞ்சா அறிஞரில் அரிய அறிஞர் ஆவார். இளைஞன் பாரதியை மட்டம் தட்ட எண்ணிய நெல்லைப் புலவர் காந்திமதிநாதன் தான் கூட்டிய அவையில் பாரதி சின்னப் பயல் என ஈற்றடி கொடுத்து வெண்பாப் பாட வேண்டினார். பாரதியார் பாடலின் மூன்றாம் அடியின் இறுதிச் சீர் காந்திமதி நாதன் என அமைத்து ஈற்றடி பார்அதி சின்னப் பாயல் என முடித்து புலவரை வெட்கித் தலை குனியுமாறு செய்தார். ------------ கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல் (குறள். 724) கால்வாய் வழி மழை நீர் குளத்திற்குத் தடையின்றி வந்து சேர வேண்டும். அதுபோல் நிரம்பிய குளத்து நீர் தடையின்றி வயலுக்குச் சென்று கொண்டிருக்க வேண்டும். அதுபோல் வருவாயையும் கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கைத் தேவைக்குத் தடை இன்றிச் செலவு செய்ய வேண்டும். இவ்விதி பொருட் செல்வத்திற்குப் பொருந்துவது போலவே அறிவுச் செல்வத்திற்கும் பொருந்துமாறு செயல்பட வேண்டும் என்னும் சிந்தனைத் தெளிவுடன் இக்குறளுக்குப் பொருள் காண்போம். கற்ற அறிஞர்கள் முன்னிலையில் தாம் கற்றுணர்ந்தவற்றில் மற்றவர்கட்கு எவை எல்லாம் பயன் அளிக்கும் என்று கருதுகிறார்களோ அவற்றை எல்லாம் அவர் மனம் கொள்ளுமாறு எடுத்து மொழிதல் வேண்டும். அதுபோல் தம்மினும் மேலான அறிவு எவர்பால் எல்லாம் அமைந்திருக்கிறதோ அவர்களை அணுகி அவர்கள் வழி எவற்றை எல்லாம் கற்றுக் கொள்ள முடியுமோ அவற்றை எல்லாம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அறிஞர்களே தாம் கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்று கூறிநாளும் புதிது புதிதாகக் கற்றுத் தெரிந்து கொள்ளும் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். அவ்வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தம்மினும் மிகுதியாகக் கற்ற பெருமக்களிட மிருந்து பெற வேண்டிய அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தாம் கற்றதைப் பிற கற்ற அறிஞர் அவையில் அஞ்சாமல் அவர் மனத்தில் பதியுமாறு எடுத்துரைக்கும் வல்லமை வேண்டும். ஆற்றின் அளவறிந்து கற்க, அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு (குறள். 725) பட்டம் பெறுவதற்காகக் கற்பது ஒருவகை; பதவி பெறுதற்காகக் கற்பது ஒருவகை; பொழுது போக்கிற்காகக் கற்பது ஒருவகை; பண்படுவதற்காகக் கற்பது ஒருவகை; அறிவை வளர்த்துக் கொள்வதற்காகக் கற்பது ஒருவகை. அறிவை வளர்த்துக் கொள்வதிலும் பல நிலையினர் உண்டு. அறிஞர்கள் அனைவரும் தாம் கற்ற கல்வியை அச்சமும் தயக்கமும், கூச்சமும், இன்றி கற்றோர் அவையில் எடுத்துரைத்து விடுவார்களா? தாம் கற்று, கேட்டு, உணர்வது வேறு. பிறர் கேட்டுப் பயன்படுமாறு சொல்லுவது வேறு. அவையில் யார் என்ன வினாத் தொடுத்தாலும், தயங்காது தெளிவாக விடை சொல்லத் தெரிய வேண்டுமானால் அதற்கு ஏற்ற முறையில் கற்றுப் புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வினா, அறிவினாவாகவும் இருக்கலாம், அறியா வினாவாகவும் இருக்கலாம். ஐய வினாவாகவும் இருக்கலாம். உடன்பாடாகவும் இருக்கலாம், எதிர்மறை யாகவும் இருக்கலாம், எந்தவகை வினாவாக இருந்தாலும், அஞ்சாமல் விடை யளிப்பதற்கு ஏற்ற முறையில் கற்றவர்களே, கற்றவர் அவையில் துணிந்து பேச இயலும். ஆகவே, அஞ்சாமல் பேசி மறுமொழி கூறும் வல்லமை பெறுவதற்காகக் கற்க வேண்டிய முறைப்படி, கற்க வேண்டிய அளவறிந்து நூல்களைக் கற்க வேண்டும் எனத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஒருமுறை விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்த சர்ச்சிலைப் பார்த்து ஒரு பெண், மதிப்பிற்குரியவரே! தங்களுடைய எல்லா அம்சங்களும் பிடித்திருக்கின்றன; இரண்டைத் தவிர, ஒன்று உங்களுடைய மீசை, மற்றொன்று உங்களுடைய அரசியல் என்றாராம் அதனைக் கேட்ட சர்ச்சில் சற்றும் தயங்காது தாங்கள் இந்த இரண்டிற்கும் அருகில் வர முடியாது என்றாராம். சேற்றூர் குறுநில மன்னர் சேவுக பாண்டியத் தலைவர். முகவை மாவட்டக் கழகத் தலைவராக இருந்த போழ்து, நடக்கும் பேரவைக் கூட்டங்களில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் வரிசையாகக் கேள்வி கேட்பார்கள்! கேள்விகள் அனைத்தும் முடிந்து விட்டனவா என அவையோரை நோக்கி வினவுவாராம். இன்றைய வினாக்கள் இத்தனை தான் என்று அவையோர் உறுதிகூறிய பின்னர். எந்தக் குறிப்பும் இல்லாமல், வினாத் தொடுத்த வரிசைப்படி ஒவ்வொருவர் வினாவிற்கும் விடையளிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார் என அவையில் கலந்து கொண்ட உறுப்பினர் வழி அறிந்துள்ளேன். அவரெல்லாம் ஆற்றின் அளவறிந்து கற்றவர். ஆகவே, அவை அஞ்சாது மாற்றம் கொடுக்கும் வல்லவராய் விளங்கினார். பேரறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டு ஏல் பல் கலைக்கழகச் சிறப்பு விருந்தினராய்ச் சென்றிருந்த போழ்து, பல்துறைப் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் விடுத்த அடுத்தடுத்த வினாக்கணைகட்கும், எந்த வித அச்சமும், தயக்கமும், தடுமாற்றமும், இன்றி விடை அளித்து உலகப் புகழ் பெற்றார். ஏனெனில் சென்னைக் கன்னிமரா நூலகத்தில் உள்ள நூல்களில் அவர் எடுத்துப்படிக்காத நூல்களே கிடையாது என்று கூறுவர். சமண அறிஞர்களை வாதத்தில் வென்று தம் கொள்கையை நிலை நாட்டிய திருஞான சம்பந்தர் குறளுக்கு ஏற்ற எடுத்துக் காட்டாய் விளங்கிய மெய்யறிவாளர் ஆவார். பொதுவுடைமை பொதுவுடைமை என்று புலம்புகிறாயே! தாலி கட்டிய உன் சொந்த மனைவியைப் பொதுவுடைமை ஆக்கிவிடுவாயா? என்று ஓருவர் தம் எதிரில் இருப்பவரிடம் கேட்டார். உடனே அவர் சற்றும் தயங்காது தனியுடைமை தனியுடைமை என்று தாவிக் குதிக்கிறாயே! நீ பெற்ற பெண்ணையே நீ மனைவி ஆக்கிக் கொள்வாயா? என்று திருப்பிக் கேட்டார். வினாவின் தரத்திற்கு ஏற்பவே விடையின் தரமும் அமையும். திருவள்ளுவர் ஆற்றின் அளவறிந்து கற்கத் தூண்டிய நுட்பத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். ------------ வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு? நூலொ டென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு? (குறள். 756) போர்ப் பயிற்சியும், வீரமும், அஞ்சாமையும், துணிவும் உடையவர்கள் வாள் போன்ற போர்க் கருவிகளைக் கையில் எடுக்கலாம் போர்க் கோலம் பூண்டு நிற்கலாம். ஆனால் போர்ப் பயிற்சியும் வீரமும் துணிவும் இல்லாத அஞ்சிச் சாகும் கோழை யிடம் வாள் போன்ற வலிய போர்க்கருவி இருப்பதால் என்ன பயன்? ஒன்றுமில்லை ஒருவேளை அது எதிரிக்குப் பயன் படலாம். ஆகவே, திருவள்ளுவர் வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என்? என வினா எழுப்பிச் சிந்திக்கத் தூண்டினார். எங்கே அவை அஞ்சாமை யில் ஏன்? நுண்ணவை அஞ்சுபவர்க்கு நூலொடு என்? என்பதை விளங்க வைப்பதற்காக! எண்ணற்ற நூல்களை மிக ஆழமாகக் கற்று புலமையை வளர்த்துக் கொண்ட அறிஞர் பெருமக்களில், பெரும்பான்மை யோர் தாம் கற்றுணர்ந்த நூற்பொருளை அறிஞர் அவையில் அஞ்சாமல் எடுத்து உரைக்கும் திறன் அமையப் பெற்றார்கள் அல்லர். அவையைக் கண்டே அஞ்சி நடுங்குவோர். வாய் குளறுவோர், சொல் தடுமாறுவோர், தொடங்கியதை முடிக்கத் தெரியாமல் திண்டாடுவோர் இல்லாமல் இல்லை. இருக்கிறார்கள். நுட்பமான அறிவுடையோர் கூடியுள்ள அவையில் உரையாட இயலாது அஞ்சுகிற அறிஞர்கள் எண்ணற்ற நூல்களைக் கற்று நினைவில் வைத்திருப்பதனால் யாருக்குஎன்ன பயன்? உரியவர்க்கும் பயனில்லை. அவர் பிறந்த நாட்டிற்கும் பயன்இல்லை. வீரன்கை வாள் பகையை வீழ்த்தி வெற்றியை ஈட்டித்தருவது போல் நூலறிவு பெற்றோர் நுண்ணறிவாளர் அவையிலும் அஞ்சாமல் உரையாடிக் கருத்துப்பரப்பிப் புகழ் பெற வேண்டும் என்பது திருவள்ளுவரின் திருவுள்ளம். வீரர் அல்லார்க்கு வாளோடு என்ன உறவு? அவை அஞ்சு வார்க்கு நூலோடு என்ன உறவு? எனச் சுருக்கமாக வினா எழுப்பி பெருக்கமாகச் சிந்திக்கத் தூண்டுகிறார். ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா என்ற இன்னா நாற்பதின் ஓர் இன்னாவையும் எண்ணிப் பார்ப்போம். அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும், கல்லார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும்-நவையஞ்சி ஈத்துணார் செல்வமும், நல்கூர்ந்தார் இன்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று என்னும் நீதிநெறி விளக்கப்பாடலும் குறளுக்கு நல்லதொரு விளக்கமாகும். வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆளல்லான் செல்வக் குடியுள் பிறத்தலும்-பல்லவையுள் அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும் துஞ்சு ஊமன் கண்ட கனா. என்னும் திரிகடுகம், குறளை மிக ஆழமாய்ப் புரிய வைக்கிறது. ------------ பகையகத்துச் சாவார் எளியர் (குறள். 723 ) வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு (குறள். 726 ) எனப்போர்க்கள உவமை காட்டிய வள்ளுவர் மேலும் ஒரு போர்க் களத்தைக் கண்முன் காட்டி, அவைக் களஅறிஞரை விளக்கும் குறட்பாவே. பகையத்துப் பேடிகை ஒள்வாள்; அவையகத் தஞ்சும் அவன்கற்ற நூல். (குறள். 727) ஆகும். அவையோர் முன் நின்று தாம் கற்ற நூற்பொருளை எடுத்துக் கூற அஞ்சுகிற அறிஞன், போர்க்களம் சென்று எதிரிகளைக் கண்ட உடன் அஞ்சி நடுங்கும் கோழை போன்றவன் என்கிறார் திருவள்ளுவர். அவைக் களம் கண்டு அஞ்சுபவன் கற்ற நூலும், பகைக் களம் கண்டு நடுங்கும் பேடி கையில் பிடித்த ஒளிபொருந்திய கூர்மையான வாளும் பயனால் ஒரு தன்மைப்பட்டதே. இரண்டாலும் இரண்டுகளத்திற்கும் நாட்டிற்கும் எப்பயனும் இல்லை என்பது வள்ளுவர் முடிவு. அமர்க்கோழை வாளும், அவைக் கோழை நூலறிவும் பயன்படா, நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப் புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல்-புல்லார் புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள் வில் லேற்றி இடைக்கலத்து எய்து விடல் என்னும் பழமொழிப் பாடலின் விளக்கம் அருமை. ------------ பல்லவை கற்றும் பயமிலரே, நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். (குறள். 728) தாம் கற்றவற்றைப் பிறர் உணர்ந்து கொள்ளுமாறு விரித்து உரைக்கும் திறமை இல்லாதவர், மலர்ந்து விரிந்தாலும் மணம் பரப்பாத மலரைப் போன்றவர் என்பதை இணரூழ்த்தும் நாறா மலரனையர், கற்ற துணர விரித்துரையா தார் (குறள். 650) எனச் சொல்வன்மையில் சொல்லிய கருத்தை அடியொற்றி மொழிந்த குறள் இதுவாகும். ஒருவர் பல்வகையான அரிய நூல்களைக் கற்றுணர்ந்த அறிஞராய் இருப்பினும் அவர் தகுதிவாய்ந்த பெருமக்கள் கூடியுள்ள நல்லவையில் அவர்கள் மனம் கொள்ளுமாறு சொல்லும் திறமை அற்றவராய் இருப்பார் ஆயின் அவர் கற்ற கல்வியால் அவருக்கோ நெருங்கியவர்கட்கோ, நாட்டுக்கோ எத்தகைய பயனும் விளையப் போவதில்லை. நல்லவையில் நன்கு எடுத்துச் சொல்ல இயலாதவர். பல படித்தும் பயனில்லை. தாளாற்றித் தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 212) என்னும் திருவள்ளுவர் நெறி பொருட் செல்வத்திற்கு மட்டுமன்று. கல்விச் செல்வத்திற்கும் பொருந்துவதே ஆகவே! அறிவை முயன்று தேடு! தேடிய அறிவு உன்னிடமே தேங்கி விடாமல் தக்கவர்கட்கு வழங்கிப் பயன்படுமாறு செய்க! என்பது வள்ளுவர் வேண்டுகை. ஒருவன் அறிவுப் பெருக்கத்திற்கு உரிய நூல்களைக் கற்காமல் கற்றோர் அவையில் பேச விரும்புதல் கட்டம் அமைத்துக் கொள்ளாமலே வட்டாட்டம் ஆடுவது போன்றதாகும் எனவும். கல்வி அறிவில்லாத ஒருவன் கற்றோர் அவையில் பேச விரும்புதல். மார்பகங்கள் இல்லாத பேடிப்பெண் மிக நலம் பெற்ற பெண்ணைப் போல் தானும் இன்பம் பெற விழைவது போன்றது எனவும். தம் அறிவு நிலையை உணர்ந்து கற்றோரிடத்துத் தம் அறியாமை வெளிப்பட உரையாடாது இருப்பாரானால், கல்வி அறிவு இல்லாதவரும் மிக நல்லவரே ஆவர். என்பதையும் அரங்கின்றி வட்டாடி யற்றே, நிரம்பிய நூலின்றி கோட்டி கொளல் (குறள். 401) கல்லாதான் சொற்காமுறுதல், முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று (குறள். 402) கல்லா தவரும் நனிநல்லர், கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் (குறள். 403) என்னும் கல்லாமை அதிகாரக் குறட்பாக்களையும் கவனத்தில் கொள்வோம். ------------ கல்லா தவரின் கடையென்ப, கற்றறிந்தும் நல்லார் அவைஅஞ்சு பவர். (குறள். 729) திருவள்ளுவர் மக்களாய்ப் பிறந்தோர் அனைவரும் கற்க வேண்டும்; கற்கத் தகுந்த நூல்களைக் கற்க வேண்டும். தம்பால் ஏதேனும் குற்றம் இருக்குமாயின் அக்குற்றத்தை நீக்குவதற்காகவும் கற்க வேண்டும். கற்றபின் கற்ற நூல்கள் கூறிய நன்னெறியை வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும் என விரும்புகிறவர். ஆகவே, கல்வியாளர்கள் தூய அறிவு வடிவானவனின் நல்ல அடிகளை வணங்கி அன்னார் காட்டிய வழியைப் பின்பற்றி ஒழுகவில்லை யானால் அவர் கற்ற கல்வியால் பயனில்லை என இறைவணக்கத்தில் கூறியுள்ளார். அவர் இவர் என்று பாராமல் எவரிடத்திலும் பறித்து வாழும் வெறிச் செயலை ஒருவன் மேற்கொள்வான் ஆயின் அவன் கற்றுப் பெற்ற நுட்பமான விரிந்த அறிவால் எப்பயனும் இல்லை என வெஃகாமை அதிகாரத்தில் கூறியுள்ளார். பிறிதோர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் உணர்ந்து அதனை அகற்ற முற்படவில்லையானால் ஒருவன் கற்றுப் பெற்ற அறிவால் ஆகும் பயன் ஒன்றுமில்லை என இன்னா சொய்யாமை அதிகாரத்தில் கூறியுள்ளார். நன்றாகக் கற்றுணர்ந்தும் கற்றவற்றைப் பிறர்க்கு உரைத்தும் தான் அவ்வழியில் அடங்கி நடக்காதவன் மிகப் பெரிய அறிவிலியாகக் கருதப்படுவான் எனப் பேதைமை அதிகாரத்தில் உரைத்தார். மக்கட் பிறப்புக் குரிய பண்புடைமை இல்லாதவர். அறிவில் அரத்தைப் போலும் கூர்மையாளராக இருப்பினும் அறிவில் கடைப்பட்ட ஓரறிவுடைய மரம் போன்றவரே எனப் பண்புடைமையில் கூறுகிறார். கற்றவன் வாலறிவன் நற்றாள் தொழ வேண்டும். பிறன் கைப்பொருளை வெஃகாமை வேண்டும். எவர்க்கும் துன்பம் செய்யக் கூடாது. எவ்வுயிர் துன்புறுவதைக் கண்டாலும் போக்க முற்பட வேண்டும். கற்ற நன்னெறிக்கு ஏற்ப வாழ வேண்டும். மக்கட் பிறப்பிற்குரிய பண்புடைமையைப் போற்றி ஒழுக வேண்டும். என எதிர்பார்ப்பவர். அந்த வரிசையில் அவர் எதிர்பார்க்கும் தகுதி இல்லாதவரை அடையாளம் காட்டும் குறளே. கல்லா தவரின் கடையென்ப, கற்றறிந்தும் நல்லார் அவையஞ்சு வார் (குறள். 729) என்பதாகும். நல்ல நூல்களை நன்கு கற்றுத் தம் அறிவை வளர்த்துக் கொண்டவர்கள். தாம் பெற்ற இன்பத்தையும் பயனையும் மற்றவர்களும் பெறுமாறு நல்லவர் அவையில் எடுத்து மொழிய அஞ்சுபவர்கள் எவ்வளவு தான் கற்றறிந்த மேதைகளாக இருப்பினும் திருவள்ளுவர் அவர்களைக் கற்றறியாதவரினும் கீழ்நிலையில் வைத்து எண்ணத்தக்கவர்கள் ஆவர் என மதிப்பிடுகிறார். படித்தறிந்தும் நல்லவையில் பேச அஞ்சுபவர் படியாதவரின் கீழ் என்பது வள்ளுவரின் கணக்கெடுப்பு. யாரையும் எப்பொருளையும் உலகிற்குப் பயன்படும் பாங்கை வைத்தே மதிப்பவர் திருவள்ளுவர். குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே, கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே, மயரிகள் அல்லாராய் மாண்புடையார்ச் சேரும் திருவும் தீர்வின்றேல் இனிது. என்னும் இனியவை நாற்பதுப் பாடலும் இனிய விளக்கமாகும். அன்பு தங்கிய உடலே உயிர் தங்கிய உடல்; மற்றவை எலும்பு தோல் போர்த்த உயிரற்ற உடல், மிகத் தெரிந்தவர் மனையிலும் தீமை புரிந்து ஒழுகுபவர் இறந்து போனவருள் வேறானவர் அல்லர். உலகோர்க்கு ஒத்ததை அறிந்து வாழ்பவனே உயிர் வாழ்பவன். மற்றவன் இறந்தவரோடு வைக்கத் தக்கவன். சினத்தின் எல்லையைக் கடந்தவர் இறந்தவரே, வாழும் இடமெல்லாம் நிரம்பிய பெரும் பொருளைத் தேடி, அதனைப் பிறர்க்கும் உதவாமல் தானும் உண்ணாமல் வைத்திருப்பவன் உயிரோடு இருப்பினும் இறந்தவனாகவே கருதப்படுவான். கல்வியறிவில்லாதவர் உயிரோடு உள்ளவர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் விதைத்தவித்தின் அளவு கூட விளையாத உவர் நிலம் போன்றவர் என்பவர் திருவள்ளுவர். அவர் கருத்துப்படி அன்புடையார் உயிருடையார்; அன்பிலார் உயிரற்றவர். தம் மனை விரும்புபவர் உயிருடையர்; பிறர் மனை விரும்புபவர் உயிரற்றவர்; ஒப்புரவாளர் உயிருடையவர்; ஒப்புரவு பேணார் உயிரற்றவர்; செல்வத்தை நல்வழியில் பயன் படுத்துபவர் உயிருடையவர்; செல்வத்தை நல்வழியில் பயன்படுத்தாதவர் உயிரற்றவர்; கற்றவர் உயிருடையவர் கல்லாதவர் உயிரற்றவர்; சினம் கொள்ளார் உயிருடையவர், சினம் கொள்வார் உயிரற்றவர் எனச் செயல் நோக்கில் அடையாளப்படுத்தும் போக்கு உடையவர் திருவள்ளுவர். அப்போக்கில் வரைந்த குறளே, உளரெனினும் இல்லாரொ டொப்பர், களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். (குறள். 730) தாம் கற்றுணர்ந்த வற்றையும் கற்றோர் நிரம்பிய நல்லவையில் அவர் மனம் கொள்ளுமாறு சொல்லும் திறமை அற்ற அச்சம் உடையவர், உயிர் வாழ்வார் எனினும் இறந்தாரொடு வைத்து எண்ணத் தக்கவரே யாவர். கற்றவர் அவைக்கு அஞ்சிப் பேச இயலாதவர் மாண்டவருக்கு ஒப்பாவார். சொல்லின் தொகை அறிக! தூய அறிவினராய் விளங்குக! அவையின் வகையினை அறிக! வல்லவையில் சொற் சோர்வு படாதீர் கற்றாருள் கற்றாராய்ப் புகழ்பெறுக! கற்றார் மனத்தில் பதியுமாறு சொல்லுக போர்க்களத்தில் அஞ்சாமல் போரிடுவது எளிது அவைக்களத்தில் அஞ்சாமல் பேசுவது அரிது மிகக் கற்றவரிடமிருந்து அறிவைப் பெறு! தாம் கற்றதைப் பிற கற்றோர்க்கு வழங்கு ஆற்றின் அளவறிந்து கல் அவைக்கு அஞ்சாது மாற்றம் கொடு வன்கண்ணர் அல்லார்க்கு வாளால் பயனில்லை அவைக்கு அஞ்சுவார் பெற்ற நூலறிவால் பயனில்லை பேடிகை ஒள்வாள் போன்றதே அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூலறிவு பல நூல் கற்றால் பயன்படுத்த வேண்டும் அவையில் சொல்ல அஞ்சுபவர் கற்ற கல்வியால் பயனில்லை கல்லாதவர் கடையர் கற்றார் அவையில் பேச அஞ்சுபவர் கல்லாதவரினும் கடையர் அவை அஞ்சுவார் உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் கல்! கற்றதைக் கற்றவர் அவையில் சொல் அதுவே கற்றதனால் ஆய பயன். ------------ 74. நாடு மன்னும் இமயமலை எங்கள் மலையே! மாநிலம் மீது இது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே! இங்கிதன் மாண்பிற்கு எதிர்எது வேறே? பன்னரும் உபநிடத நூல்எங்கள் நூலே! பார்மிசை ஏதொரு நூல், இது போலே! பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே! போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே மாரத வீரர் மலிந்த நன் னாடு மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு, நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு, பூரண ஞானம் பொலிந்தநன்னாடு, புத்தர் பிரான்அருள் பொங்கிய நாடு, பாரத நாடு பழம்பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே! இன்னல்வந் துற்றிடும் போது அதற் கஞ்சோம். ஏழையர் ஆகி இனிமண்ணில் துஞ்சோம், தன்னலம் பேணி இழிதொழில் புரியோம், தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்! கன்னலும் தேனும் கனியும்இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும் உன்னத ஆரிய நாடெங்கள் நாடே! ஓதுவம் இஃதை எமக்கிலை ஈடே! எனக் கவிஞன் பாரதி இந்திய நாட்டின் பழமையைப் போற்றுவதுடன் எதிர் காலத்தில் நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்திப் பாடினான். 1. செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே - எங்கள் (செந்தமிழ்) 2. வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ் நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு (செந்தமிழ்) 3. காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி - யென மேவிய ஆறு பல வோடத் - திரு மேனி செழித்த தமிழ் நாடு. (செந்தமிழ்) 4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம் புறக் காக்கும் தமிழ் நாடு - செல்வம் எத்தனை யுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ் நாடு. (செந்தமிழ்) 5. நீலத் திரைக்கடல் ஓரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரியெல்லை - வட மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு. (செந்தமிழ்) 6. கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்வித மாயின சாத்திரத் தின்மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு. (செந்தமிழ்) 7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி ஆரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்) 8. சிங்களம் புட்பகம் சாவாகம் - ஆதிய தீவு பலவினும் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்) 9. விண்ணை இடிக்கும் தலை இமயம் - எனும் வெற்பை அடிக்கும் திறனுடையார்-சமர் பண்ணிக் கலிங்கத்து இருள்கெடுத் தார்தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்) 10. சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ் நாடு. (செந்தமிழ்) என்பன பழந்தமிழ் நாடு பற்றிய பாரதியின் படப் பிடிப்பு. இந்தியப் பெருநாடு உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு. உலகில் மக்கள் தொகைப் பெருக்கில் இரண்டாவது இடம் பெறும் நாடு. மிகத் திறன் வாய்ந்த அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்களைப் பெற்றிருப்பதில் மூன்றாவது இடத்தில் உள்ள நாடு. வலிமை வாய்ந்த போர்ப்படை வைத்திருப்பதில் உலகில் நான்காவது நாடாகவும், அணு ஆயுதத் திறன் கொண்ட நாடுகளில் ஆறாவதாகவும், விண்வெளி ஆய்வில் ஏழாவதாகவும், தொழில் வல்லமையில் எட்டாவதாகவும் நம் நாட்டின் வளர்ச்சி நிலை அமைந்துள்ளது. வாழும் மக்களுக்கு வேண்டிய உணவு உடை முதலிய எல்லாவற்றை யும் தருவதாகவும், கவலையற்று அமைதியாக வாழ்ந்து இன்புறுவதற்கு ஏற்றதாகவும் நாடு இருக்க வேண்டும். இல்லையானால் அந்த நாட்டில் நல்லரசு அமையாது; மக்கள் கூடி வாழும் வாழ்க்கை நிரம்பாது. ஆகையால் நாட்டின் இயல்பைத் திருவள்ளுவர் தனியே ஓர் அதிகாரத்தில் கூறுகிறார் எனக் கூறுபவர் அறிஞர். மு.வரதராசனார். பொருட் பாலைத் தொடங்கும் திருவள்ளுவர் இறைமாட்சி என்னும் அதிகாரத்தை முன் வைக்கிறார் (39) ஆளுவோன் அல்லது ஆட்சியின் சிறப்பே இறைமாட்சி என்பதை விளக்குகிறார். இறைமாட்சிச் சிறப்புறுப்புகளாக, படை,குடி,கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவற்றை வரிசைப் படுத்துகிறார். இவ்வுறுப்புகளுள் ஒன்றாக எண்ணப்படாதது நாடு என்பதாகும். அரண் பற்றிக் கூறுமுன் கூறுவது நாடு ஆகும். நாடு ஓர் உறுப்பாகக் கூறப்படாதோ எனின் நாட்டுக்குத் தான்- நாட்டு ஆட்சிக்குத்தான் - உறுப்புகளே அன்றி, நாடு என்பது உறுப்பு ஆகாது என்றே, உறுப்பில் அடக்கிக் கூறினார் அல்லர். நாட்டுக்கே படை குடி முதலிய உறுப்புகளோ எனின் ஆம் என்பதே மறு மொழியாம் என்னும் இரா. இளங்குமரனாரின் முன்னோட்டத்துடன் திருவள்ளுவர் காட்டும் திருநாட்டைக் காண்போம். தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு (குறள். 731) என்பது முதற் பாடல். ஒரு நாடு, நிறைவான நல்ல நாடாக விளங்க வேண்டுமானால் மூன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்பதுடன் மூன்றன் இணைப்பும் தக்கவாறு பொருந்தி இருக்க வேண்டும். அம்மூன்றும் யாவை? விளைச்சல், மனிதர், செல்வர் என்னும் மூன்று என்று மட்டும் சொல்லாமல், திருவள்ளுவர் சேர்த்துச் கூறும் அடைமொழி ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் மொழிகளாகும். விளையுளைத் தள்ளா விளையுள் என்கிறார். நாட்டு மக்களின் தேவைக்கும் மிகுதியாக விளைவு இருக்கவேண்டும். விளைவு ஒரு தொடர் வினையாக இருக்கவேண்டும். போதவில்லை, முட்டுப் பாடு, தட்டுப்பாடு என்னும் புலம்பலுக்கு என்றும் எப்பொழுதும், எங்கும் இடம் இல்லாத வகையில் விளைவின் பெருக்கம் அமைந்திருக்க வேண்டும். தேவைக்கு மேல் மிகுந்திருப்பதை அயலவர்கட்கு வழங்கி உதவுபவர் களாக இருக்க வேண்டுமே தவிர அயல் நாட்டாரை தம் உணவுத் தேவைக்கு எக்காலத்திலும் எதிர்நோக்கா அமுதசுரபியாக நாட்டு நிலங்கள் அமைந்திருக்க வேண்டும். நிலங்கள் ஒரு நிலைப்பட்டதாய் இராமல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை நிலமும் நாட்டில் அமைந்திருக்க வேண்டும். நானிலமும் அதனதன் நிலையில் திரியாததாய் அமைந்திருக்க வேண்டும். நீர் வளம் செப்பமாக அமைந்திருக்க வேண்டும். நிலம், மிகு மழையையும் தாங்கக் கூடியதாயும் இருக்க வேண்டும். மழை நீர் வீணாகாதவாறு ஊருணி, குளம், ஏரி, அணைகளில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். மழை பொய்த்தாலும் வறட்சியைத் தாங்கக் கூடிய நிலங்களும் இருக்க வேண்டும். வறட்சிக்கு ஏற்றவாறு பயிரிடவும் தெரிய வேண்டும். பருவகாலம் அறிந்தும் பயிரிட வேண்டும். நிலத்தின் தன்மை அறிந்தும் பயிரிட வேண்டும். அல்லது பயிரின் தன்மைக்கு ஏற்றவாறு நிலம் பண்படுத்தப்படவேண்டும். நில வளம் குறையாமல் காக்க உரமிட வேண்டும். பசிஅறிந்து உண்பது போல், தாகம் அறிந்து பருகுவது போல் நீர் பாய்ச்ச வேண்டும். நோய் பற்றாமல் காக்க வேண்டும். அழிவு நேராமல் காக்க வேண்டும். கருவித் தட்டுப்பாடு இருக்கக் கூடாது. சோம்பலின்றி கால நேரம் அறிந்து மிகுந்த கவனத்துடன் உழைக்கும் உழைப்பாளர் பெருகி இருக்க வேண்டும். விளையுள் குறையாதிருக்க முயற்சியில் பின்னடையா உழைப்பாளர்கள் முதல் தேவையாகும். நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் கல்வி அறிவு, பண்பு, ஒழுக்கம், செயல் அனைத்திலும் சிறப்புற்று விளங்கும் மக்களாய் இருக்க வேண்டும். உழவு, வணிகம், முதல் எத்தொழில் புரிபவர்கள் ஆயினும் தொழிலில் தேர்ச்சி உடையவர்களாய் இருக்க வேண்டும். வயதுவந்தோர் அனைவரும் கட்டாயம் ஏதேனும் ஒரு தொழில் செய்பவராய் இருக்க வேண்டும். கடமை உணர்வுடன் உழைக்க வேண்டும். உடல் வலிமை மன வலிமை உடையவராய் இருக்க வேண்டும். உண்மையிலே உழைக்க இயலாத குறையுடையவர்களை மனச்சோர்வு அடைய விடாமல் காக்கவேண்டும். தத்தம் குழந்தைகள் அனைவரும் தக்க கல்வி பெறச் செய்ய வேண்டும். வாய்ப்புக் குறை உள்ளவர்கட்கு உற்றுழி உதவி வழி காட்டும் மன வளம் பொருந்தி இருக்க வேண்டும். தம்மால் இயன்ற அளவு பிறர், வாழ்வில் முன்னேற வழிகாட்டித் துணைபுரிய வேண்டும். தாம் மட்டு மல்லாது அனைவரும் வாழப் பிறந்தவர்களே என்னும் பேருள்ளம் கொண்டு எவர் வளர்ச்சிக்கும் தடையாய் அமையாது. நாமும் நன்றாக வாழ வேண்டும்; பிறரையும் நன்றாக வாழ விட வேண்டும். பிறர் நன்றாக வாழ வழி காட்டவும் வேண்டும் இயலாதவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்னும் பேருள்ளம் படைத்த பெருந்தகையார் தொகை நாட்டில் பெருகி இருக்க வேண்டும். சங்கச் சான்றோர் பிசிராந்தையார் ஊரில் வாழ்ந்த கற்றுணர்ந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் போல் நாட்டில் சான்றோர் நிறைந்திருக்க வேண்டும். பிறர்க்குத் தொல்லையோ, துயரமோ தாராது, அயராது உழைத்துத் தம் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். தேவைக்கு மேல் தேடியவர்கள் செல்வர்கள் ஆவார். செல்வர்கள் தம்மைப் பெரிதாகக் கருதி, சுற்றத்தினரை விட்டு விலகி விடக் கூடாது. சுற்றத்தினர் எப்பொழுதும் தம்மைச் சூழ்ந்திருக்குமாறு அன்புடனும் அரவணைப் புடனும் வாழ வேண்டும். அவர்கள் வறியவர்கட்கு கொடுத்து உதவும் வள்ளல்களாக விளங்க வேண்டும். அவர்கள்பால் பொருந்தியுள்ள செல்வம் நீர் நிறைந்த ஊருணி போலவும், உள்ளுர்ப் பழுத்த பயன்மரம் போலவும், தன்முழுப் பகுதியாலும் நோய் தீர்க்கும் மருந்து மரம் போலவும் பயன் படவேண்டும். செல்வர்கள் கீழ்மை நோக்கு இன்றி, பிறர்க்கு மறந்தும்கேடு நினையாத மனவளம் மிக்க உயர்ந்த பண்பாளராயும் இருக்க வேண்டும் இவர்களையே திருவள்ளுவர் தாழ்விலாச் செல்வர் என்கிறார். விளைவுப் பெருக்கமும், தகுதி வாய்ந்த பெருமக்களும் பெருந்தன்மை வாய்ந்த செல்வர்களும் நிரம்பி ஒருங்கே இணைந்து வாழும் நாடே நல்ல நாடாகும் என்பதைச் சொல்வதே வள்ளுவர் நோக்கம். விளைவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செல்வர்கள் தாழ்ந்து விடவும் கூடாது. தாழ்ந்தவர் உயர வேண்டுமே ஒழிய உயர்ந் தோர் தாழவும் கூடாது. இரண்டும் செப்பமாக அமைய இரண்டிலும் முழுப்பங்கு பெறுபவர்களும் இரண்டோடும் நேரடித்தொடர்பு இல்லாத வரும் நாடு பண்பாட்டுத் துறையில் மேலோங்கி எல்லாரையும் மக்களாக்கும் மாண்புமிக்க பணியில் ஈடுபட்டிருக்கும் பொது நலம் பேணுவோர் நடுநிலையாளராயும், தக்காராயும் இருந்தால் தான் தகுதி உடைய நாட்டை உருவாக்க முடியும் எனக் கருதுவதால் திருவள்ளுவர் தக்காரை நடுவில் வைத்தார். செல்வர் வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியிருப்பது முடியாட்சி முறைக்கு ஏற்பச் செல்வர் சிலரையே குறிப்பதாகக் கருத இடம் இருந்தாலும், இக்காலத்துக் குடியாட்சி முறைக்கு ஏற்ப எல்லா மக்களையும் குறிப்பதாக நாட்டிற்குப் பொதுவாகவே கொள்ளலாம். குடியாட்சி முறையில் நாட்டின் செல்வநிலை எத்தகையது என்று கருதப்படுதலே தவிர, நாட்டில் உள்ள செல்வர் எத்தனை பேர் என்று ஆராயப்படுவதில்லை. அன்றியும் செல்வர் சிலர் என்ற அளவிலேயே வறியவர் பலர் இருக்க நேரும்: அத்தகைய நாடு சிறந்த நாடு அன்று, வறுமை என்பது எந்த மூலை முடுக்கிலும் இல்லாமல் எல்லாரும் செல்வராக விளங்கும் நாடே நல்ல நாடு. வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் என்னும் கொள்வார் இலாமையின் கொடுப்பாரும் இல்லை என்றும் எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தல் என்றும் புலவர் கண்ட நல்ல கனவிற்கு ஏற்ப, நாட்டு மக்கள் எல்லாரும் தாழ்விலாச் செல்வராக இருப்பதாகக் கொள்ளுதல் பொருந்தும். தாழ்விலா என்ற அடையும் இந்தக் கனவிற்கு ஏற்ற கருத்தைப் பயப்பதாகக் கொள்ளலாம். ஒரு சிலர் செல்வராக விளங்கி மற்றப் பெரும்பாலோரைச் சுரண்டி அதனால் தம் செல்வத்தை மேன் மேலும் பெருக்கிக் கொள்ளும் வாழ்வு குறையுடைய வாழ்வுதான்; தாழ்வுடைய வாழ்வுதான். வறியவர் பெரும்பாலோராக உள்ள நாட்டில் பொருள் குவித்து வைத்திருக்கின்றவர்களைச் செல்வர் என்ற சொல்லால் குறிப்பதும் பொருந்தவில்லை. அவர்களிடம் உள்ள பொருள் மற்றவர் களிடமிருந்து வந்து சேர்ந்துள்ள தொகுதியே அல்லாமல், நாட்டின் பெருமைக்கு ஏற்ற செல்வமாகக் கொள்ளத்தகாதது. ஒரு மாந்தோப்பில் எல்லா மரங்களிலும் மிகுதியாகக் காய்த்துக் கனிந்திருந்தால் அந்த மாந்தோப்பை வளமான தோப்பு என்று கூறலாம். ஆயிரம் மரங்கள் உள்ள அந்தத் தோப்பில் மரத்திற்கு நாலைந்து கனிகளே கிடைத்து, அவற்றை எல்லாம் பறித்து இரண்டு மரங்களின் அடியில் கொட்டிக் குவித்து வைத்திருந்தால், அந்தத் தோப்பை வளமானது என்று கூறமுடியுமா? அந்த இரண்டு மரங்களின் கீழே நாலாயிரம் கனிகள் சேர்ந்து குவிந்திருப்பதைக் கண்டு என்ன வளமான தோப்பு என்று வியப்பது அறியாமையே. மற்ற மரங்களையும் பார்த்து அவைகள் ஒவ்வொன்றிலும் நூறு நூறாகக் கனிகள் இருந்தால் வளமான தோப்பு என்று வாயாரப் புகழலாம்; இல்லையானால் அந்தத் தோப்பைப் போற்றுவதிலும் பயன் இல்லை; அந்த இரண்டு மரங்களைப் பார்த்து வியப்பதிலும் பயன் இல்லை. வாணிகக் காரணத்தால் குவித்துக் கொட்டப் பட்டுள்ள மாங்கனிகளே தவிர, அந்த இரண்டு மரங்களுக்குப் பெருமை தரும் கனிகள் அல்ல என்று உணர வேண்டும். ஒரு நாட்டின் செல்வ நிலையையும் அவ்வாறே ஆராய்ந்து போற்ற வேண்டும். வறியவர் பலரிடமிருந்து ஒரு சிலரிடம் குவிந்துள்ள செல்வம் தாழ்வுடைய செல்வமேயாகும். எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தும் காட்சியே தாழ்விலாச் செல்வக் காட்சியாகும் எனத் தமிழறிஞர் மு.வ. தரும் தாழ்விலாச் செல்வர் பற்றிய விளக்கத்யும் சிந்தனையில் கொள்வோம். குறையாத விளை பொருளும், அவற்றை எல்லாரும் பெற்று நுகரச் செய்யுமாறு அறத்தைப் போற்றும் நன்மக்களும், தாழ்வு இல்லாத செல்வம் உடையவர்களும் ஒருங்கே சேர்ந்திருப்பதே சிறந்த நாடாகும். வண்மை இல்லை ஓர்வறுமை இன்மையால் திண்மை இல்லை; ஓர் செறுநர் இன்மையால் உண்மை இல்லை; பொய்யுரை இலாமையால் வெண்மை இல்லை; பல் கேள்வி மேவலால் எனக் கம்பன் காட்டிய கோசலை நாட்டையும் நினைவில் கொள்வோம். ------------ பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. (குறள். 732) நல்லது செய்யும் இயற்கை வரம்பு கடக்கும் போதும், போர்க் காலங்களிலும் நாட்டில் நெருக்கடி ஏற்படுவது இயல்பு. அத்தகைய நெருக்கடிக் காலத்திலும் குறையாத விளைச்சலைத் தரும் விளை நிலங்களும், அமைந்திருக்க வேண்டும் மக்களின் அன்றாடத் தேவை களுக்கு உரிய எல்லாப் பொருள்களும் எக்காலத்தும் நிறைந்து இருக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு நாட்டின் மீது வெறுப்புத் தோன்றாமல் எப்பொழுதும் எல்லாரும் விரும்பும் நாடாகவும் விளங்க வேண்டும். அயல் நாட்டாரும் நாட்டின் பொருட் பெருக்கையும், விளைபொருள் நிறைவையும் கண்டும் கேட்டும், வருகை தந்து தொழில் செய்யவும் வாழவும் விரும்பும் வளநாடாகவும், நல நாடாகவும் விளங்கும் நாடே சிறந்த நாடாகும். பெரும் வளத்தால் எவரும் விரும்பத் தக்கதாய், நெருக்கடியிலும் மிக்க விளையுள் தரத்தக்கதாய் அமைவதே நாடாகும். எண்ணின் இடர்எட்டும் இன்றிவயற் செந்நெல் கண்ணின் மலரக் கருநீலம் - விண்ணின் வகைத்தாய் வளனொடு வைகின்று வெண்வேல் நகைத்தாரான் தான் விரும்பு நாடு என்னும் புறப்பொருள் வெண்பாப் பாடல் நல்ல இலக்கணமாகும். விட்டில் கிளி நால்வாய் தன்னரசு வேற்றரசு நட்டம் கடும்புனல் கால் எட்டு என்பது எண்ணின் இடர் எட்டு என்பதற்கு விளக்கமாகும். மலிபெரும் பொருளால் பெட்கும் வண்மையும் நாடாது, யாதும் மெலிவுக உதவும் வாய்ப்பும் மெலிகலார் மெலிந்த காலும் நலிதரா வளனும் எல்லாம் நலிவு நீத் தாற்ற ஈண்டும் ஒலிகெழு விளையு ளோடும் உடையது தொண்டை நாடு என்னும் தணிகை புராணப்பாடல் நல்லதொரு எடுத்துக் காட்டாகும். ------------ பொறை யொருங்கு மேல்வருங்கால் தாங்கி, இறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு (குறள். 733) பிற நாடுகள் தாங்கிய மக்களும் கால் நடையுமாகிய பாரம் எல்லாம் தன்னிடத்து வந்து தங்கினும், அவற்றைத் தாங்கிக் காக்க வேண்டும். அத்தகைய மிகுபாரம் தாங்குவதைக் காரணமாகக் காட்டித் தம் நாட்டிற்குச் செலுத்த வேண்டிய புரவுவரியை ஒரு சிறிதும் குறைக்க வேண்டாது. முன்போன்றே முழுவரியையும் விரும்பிச் செலுத்தும் மக்களைக் கொண்டு விளங்கும் நாடே பண்பாட்டிற்கு ஏற்ற நல்ல நாடாகும். பிற நாட்டு மக்கள் கால்நடையுடன் வந்து குடி புகுவதற்குக் கரணியம், பஞ்சம், வெள்ளம், கொடுங்கோல், பகையரசு புகுதல் முதலியவற்றுள் ஒன்றாகும். தாங்குதல் என்றால் சொந்த நாடு போல் உணவளித்துக் காத்தல். அது நிலவிரிவாலும், விளைவுப் பெருக்கத்தாலும், மக்களின் பண்பாட்டாலும், ஆட்சிச் செம்மையாலும் நேர்வதாம். குடிகட்கு வரும் வருவாய் குன்றாமையால் வரிகொடுப்பதும் குன்றாதாயிற்று. நாட்டு மக்கள் எவ்வளவு சுமையைத் தாங்க நேர்ந்தாலும் மனமுவந்து ஏற்றுக் கொள்வதுடன் தம் அரசிடம் எந்த வரிச் சலுகையையும் எதிர்ப்பாராது முழுமனத்துடன் முழுவரியையும் செலுத்துவதைக் கடமையாகக் கொண்ட மக்களைக் கொண்ட நாடே நாடாகும். பல்குழு வேந்தலைக்கும் படர்கொலைக் குறும்பு தீய பல்கும்உட் பகையு டற்றும் பகையுறு பசிதீரா நோய் பல்குறி தானும் இன்றிப் பொறை யொருங்கு உறுகால் தாங்கி நல்கிறை வேந்தர்க்கு உய்க்கும் நலத்தது தொண்டை நாடு என்னும் தணிகை புராணப்பாடல் இக்குறளுக்கும். உறுபணியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு (குறள். 734) என்னும் குறளுக்கும் இணைந்த விளக்கமாய் அமைந்துள்ளது. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு (குறள். 734) நாட்டில் இருக்கத் தகாதவை சில உண்டு. நல்ல நாட்டில் அவை இடம் பெறக்கூடாது. அவை கடுமையான பசி, தீராத நோய், அழிவு செய்யும் பகை என்பன. பசி வேண்டும்; பசித்தால் தான் புசிக்க வேண்டும்: ஆகையால், உழைத்து உடல் நலம் காக்கும் அளவுக்குப் பசிவேண்டும். ஆனால், வறுமைத் தொல்லையால், உணவுப் பொருள் போதாத குறைவால் வரும் பசிக் கொடுமை; வறுமையால் பட்டுணி இருந்து மிகுகின்ற பொல்லாத பசி, ஒரு நாட்டில் இருக்கக் கூடாது. அதனால்தான் பழங்காலத்துப் புலவர்கள் ஒரு நாட்டைச் சிறப்பிக்கும் போது, அதன் மாடமாளிகைகளை வருணித்து மயங்கி நிற்காமல், பசி எனல் அறியாப் பணை பயில் இருக்கை என்று பசி அற்ற நாட்டையே வளமான நாடாகப் பொற்றிப் புகழ்ந்து வந்தனர். அடுத்து நோய் நோய் உடலுக்கு இயற்கை; முதுமையாலும் தளர்ச்சி யாலும் சிறு சிறு நோய்கள் வந்து உடல் அழிவது இயற்கை; அவற்றைப் போக்கும் வழியும் மருந்து என்னும் பகுதியில் கூறப்படுகின்றது. ஆனால் இளமையிலேயே நோய்கள் வருவதும், அவைகள் ஓயாமல் வருத்துவதும், தீராமல் நிற்பதும், தொத்து நோய்களாகப் பரவுவதும் நாட்டின் பெருமைக்குக் குறைவாகும். அடுத்து பகை கருத்து வேறுபாட்டாலும் உரிமைப் போராட்டத்தாலும் எதிர்ப்பு இருப்பது இயற்கை; அத்தகைய எதிர்ப்பினால் அறிவு வளர்ச்சியும் உண்டு. அரசியல் முற்போக்கும் உண்டு; ஆனால் கருத்து வேறுபாடும் உரிமைப் போராட்டமும் ஒருவரை ஒருவர் திருத்தி ஆக்க வேலை செய்விக்கும் அளவில் நிற்காமல், ஒருவரை ஒருவர் கெடுக்கும் அழிவு வேலைக்குத் திருப்புமானால் நாட்டிற்கு இழுக்காகும், ஆகையால் மிக்க பசி, தீராத நோய், அழிக்கும் பகை இம் மூன்றும் சேராமல் இயலுவதே நாடாகும். பசி சேரலாம்; உறுபசி சேரலாகாது, பிணி இருக்கலாம்; ஓவாப் பிணி இருத்தல் ஆகாது, பகை உண்டாகலாம்; செறுபகை உண்டாகக் கூடாது, ஒவ்வோர் அடைமொழியால் ஆவன இவை; ஆகாதன இவை எனத் திட்டப்படுத்துகிறார். பசி இருக்கும்; இருக்கவும் வேண்டும் பிணி இருக்கும்: இருக்கவும் வேண்டும் பகை இருக்கும்; இருக்கவும் வேண்டும் இரவும் பகலும் இணைந்து இருப்பது போல இருக்கும்; இருக்கவும் வேண்டும். காலமும், கோடையும் போல இருக்கும்; இருக்கவும் வேண்டும். ஆனால், ஒரே வெள்ளமாக ஊரையே அழித்துச் செல்லும் வெள்ளமாகக் கார் காலம் இருத்தல் ஆகாது; இருக்கவும் கூடாது. ஒரே கொடு வெப்பமாகத் தீக் குழம்பைக் கக்கிச் சாவ அடிக்கும் அனல் வெப்பமாகக் கோடை இருத்தல் ஆகாது; இருக்கவும் கூடாது. இவற்றைப் போல் ஒரு நாட்டுக்கும் வீட்டுக்கும் உறுபசியும், ஓவாப் பிணியும், செறுபகையும் கூடாது; கூடவே கூடாது. என்பது விளக்கமாம் என இரா.இளங்குமரனார் அவர்கள் விளக்கம் தருகிறார்கள். உறுபசி, உழவரின்மையாலும் நீர்வளம், நிலவளம் இன்மையாலும் நேர்வது. ஓவாப்பிணி, நிலக் கேட்டாலும், நச்சுக் காற்றாலும் தட்பவெப்ப மிகையாலும், நுகர்ச்சிப் பொருள் தீமையாலும் நேர்வது. செறுபகை, அரசன் ஆற்றலும், நல்லமைச்சும், படை வலியும், அரண்வலியும், துணை வலியும் இன்மையால் நேர்வது இக்குறைகளும் கேடுகளும் இன்றேல், அவற்றால் விளையும் தீங்குகளும் இல்லை எனபதாம் என்னும் தேவ நேயப் பாவாணரின் கருத்தையும் இணைத்துச் சிந்திக்க! நலம் பெருகும்! பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி என்னும் இளங்கோவடிகள் வாழ்த்தும் வள்ளுவ விளக்கமாய்க் கொள்ளத் தக்கதாகும். ஒன்றுடைப் பதினை யாண்டைக்கு உறுகடன் இறைவன் விட்டான் இன்றுளீர் உலகத்து என்னும் உடன் உளீர் ஆகி வாழ்மின் பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையும் என்ன மன்றல மறுகு தோறும் மணிமுரசு ஆர்த்த தன்றே என்னும் சீவகசிந்தாமணிப் பாடலும் குறட் கருத்தை வழி மொழிந்து பாடப்பட்டதாகக் கொள்ளலாம். ------------ பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும், வேந்தலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு. (குறள். 735) எந்த நாட்டில், நாட்டின் பொது நலத்தைப் பற்றிக் கவலைப்படாது, மக்களை நேர்வழியில் சிந்திக்க விடாமல், மக்களைக் குழப்பும் குறுகிய நோக்கம் கொண்ட தன்னலம் நாடும் தலைவர்களைக் கொண்ட குழுக்கள் மிகுந்திருக்கிறதோ அந்நாடு தோற்றத்தில் மட்டும் நாடாகக் காட்சி வழங்குமே தவிர்த்து உண்மையில் அதனை நாடு என்று கருதக் கூடாது என்ற தெளிவுடையவர் திருவள்ளுவர் ஆகவே முதற்கண் பல்குழு.... இல்லது நாடு என்கிறார். இவ்வதிகாரத்தில் தான் இப்பல் குழுவைக் காட்டிக் கடிகிறார். நாட்டில் இருக்கக் கூடாத இன்னொன்று, உட்பகை முகத் தோற்றத்தாலும், வாய்ச்சொல்லாலும் நலம் நாடும் நண்பர் போல் நெருங்கி இருந்து, உள்ளத்தாலும், உணர்வாலும், செயலாலும், புறம்பாக இயங்குவோர். உடனிருந்தே அழிவு வேலை செய்யும் இவர்களை அடையாளம் காட்டி விலக்க வேண்டுவது மிக இன்றியமையாதது என்பதால் இவ்வுட் பகையைத் தனி அதிகாரத்தில் விளக்குகிறார். உட்பகை வரைத் திருவள்ளுவர் கேள்போல் பகைவர் எனச் சுட்டுவதுடன் அவர்கள் தொடர்பிற்கு அஞ்ச வேண்டும் என்கிறார் உட்பகை, மட்பகை போன்றது. உட்பகை இனம் கெடுக்கும், குற்றங்கள் பலவற்றை உண்டாக்கும், உட்பகை, உயிரை அழிக்கும் துன்பத்தையும் விளைவிக்கும். உட்பகை உற்ற குடியை ஒன்றுபடுத்த இயலாது. உட்பகை உறுதியாய்க் கேட்டினையே தரும். குடிசைக்குள் பாம்புடன் கூட வாழலாம் ஆனால், பகை உணர்வு கொண்டவர் களுடன் சேர்ந்து வாழக் கூடாது. என்னும் கருத்துகளை உணர்த்துகிறார். உட்பகைவர் நாடாள்வோரை நல்லது செய்ய விட மாட்டார்கள். ஆனால் தீயது செய்ய வழி வகுத்துத் தருவார்கள். குடும்பங்களும் சரி, ஊர்களோ, நகரங்களோ, மாநிலங்களோ நாடுகளோ வளரவோ, முன்னேறவோ, நிறைவாக இயங்கவோ முடியாதவாறு, மறைமுகமாக என்னென்ன இடையூறுகளும் இடைஞ்சல்களும் செய்ய முடியுமோ அவற்றை உண்டாக்கிக் கொண்டே, நல்லது செய்வது போல் நடிப்பார்கள், அத்தகையோர் களின் நடவடிக்கைகளைக். கண்டுணர்வது எளிதன்று, கண்டு பிடித்தாலும், நேரடியாகக் குற்றம் சுமத்தவும் முடியாது. குற்றம் சுமத்தி, நடவடிக்கை எடுத்தாலும் சான்று காட்டி உறுதிப்படுத்த இயலாது. அப்படித்தான் அவர்கள் செயற்பாடுகள் அமைந்திருக்கும். வேண்டியவர்கள் போல் காட்சி வழங்கி வேண்டாதனவே செய்வார்கள். ஆகவே திருவள்ளுவர் பாழ் செய்யும் உட்பகை என்றார். பாலையும் நஞ்சாக்கும் பாவிகள் நாட்டில் இருக்கக் கூடாது. இருக்கவும் விடக்கூடாது. பொறுப்பில் இருப்பவர்கட்கு குறிப்பில் குறிப்புணரும் திறம் கட்டாயம் வேண்டும். முக்கேடர்களில் திருவள்ளுவர் மூன்றாவது சுட்டும் கேடர்; முதன்மையான கேடர் என்பதால். முதற் கேடரைப் பல்குழு என்று மட்டும் கூறியவர், இரண்டாவது கேடரை பாழ்செய்யும் உட்பகை என விரித்து உரைத்தார். ஆனால் மூன்றாவது கேடரை வேந்து அலைக்கும் கொல் குறும்பு என அழுத்தமான அடைமொழியுடன் விளக்கிக் காட்டியுள்ளார். குறும்பர்கள் நேருக்குநேர் போர் புரியும் வீரர்கள் அல்லர். நாட்டுப் பற்றோ, உயிர் இரக்கமோ, கண்ணோட்டமோ, நடு நிலையோ, சிறிதும் இல்லாதவர்கள். உடலை வருத்தி உழைக்க விரும்பாதவர்கள்.பகலில் தூங்கி இரவில் செயல்படும் வஞ்சகக் கழுகுகள். இவர்கள் திருடர்கள், கொள்ளைக் காரர்கள், கொலை காரர்கள், அழிவு வேலை செய்வோர். சிந்திக்கும் திறன் அற்ற கைக்கூலிகள். பிறர் துன்பத்தால் துடிப்பது கண்டு மகிழ்பவர்கள். காரணம் இல்லாமல் நல்லவர்களையும் நல்ல செயலையும் விரும்பாது நாச வேலை புரிவோர். ஊரைத் தீவைத்துக் கொழுத்துவதையும், தொடரிச் சாலையைப் பெயர்ப்பதையும் பொழுது போக்காகக் கொண்டவர்கள். பொதுக் கூட்டம், சட்ட மன்றம், நாடாளு மன்றங்களிலும் கூசாமல் குண்டெரிந்து விட்டுத் தப்பி விடுகிறவர்கள். நாட்டுக்கு வேண்டாதவர்கள் மட்டும் அல்லர்; புறத்தில் நாட்டுக்குக் கேடு செய்து, அகத்தில் தமக்குத் தாமே கேடு விளைவித்துக் கொள்ளும் கேடானவர்களே திருவள்ளுவரால் வேந்தலைக்கும் கொல் குறும்பர்; எனச் சுட்டப் படுகின்றனர். என்பன ஒரு வழிச் சிந்தனையால் பெறப்படும் கருத்துகள். இன்னொரு வகைச் சிந்தனையும் காண்போம். நாட்டில் அழிவு வேலை செய்யும் பகை எழுந்தால், பல வகைக் கட்சிகள் வளரும், கட்சியாளர் தம் கட்சியை வலுப்படுத்தி எதிர்க்கட்சியை அழிக்க முயல்பவர்களே அல்லாமல், நாட்டின் பொது நன்மையைக் கவனிக்க மாட்டார்கள். வெளிப் படையாக எதிர்ப்பவர்கள் இவ்வாறு செய்வார்கள். சிலர் தந்திரத்தையே கையாண்டு, உடன் இருந்தே கெடுதி செய்யும் உட்பகையாக மாறுவார்கள். இன்னும் சிலர், வாணிகம், கைத்தொழில் முதலிய துறைகளைக் கைப்பற்றியும், நிலப்பரப்புகளை வைத்துக் கொண்டும் செல்வாக்குப் பெற்று அரசாங்கத்தை அலைத்துத் தொல்லை கொடுக்கும் கூட்டமாக நிற்பார்கள். எந்த முற்போக்கான செயலுக்கும் இடையூறு செய்து கொண்டு, அரசாங்கம் முன்னேறாத படி பிற்போக்கிலேயே இருக்கச் செய்வார்கள். ஆகவே, பலவகைக் கட்சிகளும், உட்பகையும் அரசாங்கத்தை ஆட்டி அலைக்கும் கூட்டத்தாரும், இல்லாத நாடே நல்ல நாடும். பல்வேறுபட்ட தன்னலக் குழுக்களும், நல்லது நடக்க விடாமல் பாழ் ஆக்கும். உட்பகைகளும், அரசை ஆட்டிப் படைக்கும் கொலைக்கு அஞ்சாக் கொடுமனக் குறும்பர்களும் இல்லாத நாடே நல்ல நாடாகும். அள்ளற் பழனத் தரக்காம்பல் வாய் அவிழ வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப்-புள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல் கோக் கோதை நாடு என்னும் முத்தொள்ளாயிரப் பாடல் காட்டும் கற்பனை நாடு நல்லவர்களே வாழும் நாட்டைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது ஒன்றுபட் டாலுண்டு வாழவே-நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும், இந்த ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும் என்னும் பாடல் வரிகள் நல்லவர் நாட்டை உருவாக்கட்டும். பல் குழு என்பது ஆக்கம் செய்வன அழிவுச் செய்வன என்று இரண்டு உண்டு. அவற்றுள் பாழ் செய்யும் பல் குழு நாட்டுக்கு ஆகாது. உட்பகை என்பது இல்லாமல் இருத்தல் அரிது; இருப்பினும் பாழ் செய்யும் உட்பகையாக இருத்தல் ஆகாது. குறும்பு என்பதும் சூழலால் ஏற்படுவதே எனினும் அக்குறும்பு வேந்தலைக்கும் கொல் குறும்பாக இருத்தல் ஆகாது. இவற்றை எண்ணித் திட்டமிட்டு நிலைப்பாட்டுடன் தடுக்காவிடில் மக்கள் நலனும் இறையாண்மையும் கெட்டொழிதல் உறுதி என்பதாகும் என்னும் இரா. இளங்குமரனாரின் தொகுப்புரையையும் மனத்தில் கொள்ளுதல் வேண்டும். கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை (குறள். 736) பருவ மழை தவறாது பெய்யும் நாடு; வளங்கொழிக்கும் நால்வகை நன்னிலங்களையும் கொண்ட நாடு; வாழ்வாங்கு வாழும் மக்களைக் கொண்ட நாடு; மக்கள் அனைவரும் கற்றவர்கள், மெய்ப் பொருள் காணும் அறிஞர்கள்; நல்ல உழைப்பாளர்கள்; ஒப்புரவாளர்கள் குற்றமற்றவர்கள்; தாம் பிறந்த குடியைமேம்படச் செய்பவர்கள். ஒவ்வொரு துறை அலுவலர்களும் கடமை தவறாது நாட்டு நலம் கருதிப் பணிபுரிவோர். தன்னம்பிக்கை உடையவர்கள். நாடு நல்ல இயற்கை அரண் சூழ்ந்த பாதுகாப்பான நாடு, மக்கள் அனைவரும் யாரையும் பகைவராகக் கருதாப் பண்பாளர் யாதும் ஊரே; யாவரும் கேளிர் எனினும் பெரு நோக்குக் கொண்டு வாழ்பவர்கள். ஆகையால் நாட்டு மக்கள் நலத்தோடும் வாழ்கிறார்கள். ஆகவே, நாட்டில் பசிக்கோ, பட்டுணிக்கோ, கொடு நோய்க்கோ, அழிவு செய்யும் பகைக்கோ இடம் இல்லை. மக்களில் பாழ்செய்யும் பல் குழுவோ, பாழ் செய்யும் உட்பகையோ, அரசை ஆட்டிப் படைக்கும் கொலைக் கஞ்சா குறும்பர்களோ இல்லை. ஒரு வேளை அயலவர் படை எடுப்பால், இயற்கையின் சீற்றத்தால், பேரழிவுவோ, பேரிழப்போ ஏற்பட்டாலும் அதனைத் தாங்கி எதிர் கொள்ளும் முன்ஏற்பாடும் அரசு தக்கவாறு செய்துள்ளது. வந்த துன்பத்தை மிக விரைந்து போக்கித் தன்னிலைக்கு கொண்டு வரும் கூட்டு முயற்சியும் உண்டு. ஆகவே, மலை போல் வந்த துன்பத்தையும், வெயில் கண்ட பனி போல் விரைவில் ஓட்டும் வல்லாளர்களும் குன்றாத விளையுளைத் தரும் நிலவளமும், நிறைந்திருக்கும் நாடே நாடுகளில் எல்லாம் உயர்ந்த நாடாகும். எளிதில் கேடு அடைவதற்கு வாய்ப்பு இல்லாததாகவும். எதிர்பாராமல் ஏதேனும் கேடு நேருமாயினும் அதனாலும் வளமை குன்றாத நாடே முதன்மையான நாடாகும். ------------ இருபுனலும் வாய்ந்த மலையும், வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு? (குறள். 737) எவை நாட்டிற்கு உறுப்புகள்? இருபுனல், வருபுனல், மலை, அரண் என்பன நாட்டிற்கு உறுப்புகளாகும். இருபுனல் என்பது கீழ்நீர், மேல்நீர் என்னும் இரண்டு நீர் என்பார் பரிமேலழகர். நிலை நீரும், ஊற்று நீரும் என்பவர் பரிப்பெருமாள் உண்ணும் நீர், பாசன நீர் என்பார் வரதராசன் கடல் நீர் என்பார் இலக்குவனார். மழைநீர், ஊற்றுநீர் என்பார் இளங்குமரனார். இருபுனலுடன் வருபுனலும் ஓர் உறுப்பு எனக் குறிக்கப்படுவதால், நிலத்து வழி தரையில் ஓடிவரும் அருவி ஆறு முதலிய நீரும் உறுப்பாகும். நாட்டிற்கு மிக முக்கிய உறுப்புளாக மூன்று வகை நீரைக் குறிக்கிறார். ஆறு, ஏரி, குளம், குட்டை, ஊருணி, கிணறு, அணை, அருவி, கடல், ஊற்று ஆகிய அனைத்து நீர் நிலைகட்கும் தாய் நீர் வான் மழையாகும் ஆகவே, இருபுனலில் முதற்புனல் மழை எனக் கொள்வதே சாலப் பொருத்தம் மழை நீரால் நிலத்தில் சேமிப்பாகும் நீர் ஊற்று நீராகும். ஓடி வரும் நீர் ஆற்று நீராகும். ஆகவே, மூன்று வகை நீரையும் மழை நீர், ஊற்று நீர். ஆற்று நீர் எனக் கொண்ட உரைகளை எல்லாம் ஏற்போம். மழை நீர், ஊற்று நீர் ஆகிய இருவகைப் புனலும், இயற்கை வளம் நிரம்பிய மலையும், நிலத்து வழியே ஓடிவரும் ஆறு, ஓடை, கால்வாய் நீரும், பகைவர்களால் எளிதில் உள்ளே நுழைய முடியாதவாறு காக்கும் வலிமை வாய்ந்த பாதுகாப்பு அரணும் நாட்டிற்கு உறுப்புகளாம். நாட்டிற்கு மூன்று நீர் வளமையும் வேண்டும்; மலை வளமும் வேண்டும்; வலிய பாதுகாப்பும் வேண்டும். இவைகள் நாட்டிற்கு உறுப்புப் போல்வன வாகும். ------------ பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (குறள். 738) நாட்டுமக்கள் அகவை முதிர்வால் இறக்க வேண்டுமே ஒழிய; தாய் வயிற்றில் இருக்கும் போதோ? குழந்தைப் பருவத்திலோ? இளமைப் பருவத்திலோ, காளைப் பருவத்திலோ நோய்வாய்ப் பட்டு மடியக் கூடாது. மக்கள் நோயற்று வாழ வேண்டும்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி மக்கள் அனைவரும் அவரவர் தகுதிக்கு ஏற்ற தொழிலைத் தேர்வு செய்து, சோம்பலின்றி ஊக்கத்துடனும், விடாமுயற்சி யுடன் உழைக்க வேண்டும். வினை மாட்சியராய் விளங்க வேண்டும். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்னும் பழமொழிக்கு ஏற்பக் செல்வம் பெருக்கி, சிந்தையிலும் நிறைவு உடையவர்களாய் வாழ வேண்டும்.பிறர் கையை எதிர்பார்த்து வாழ்பவராய் இருக்கக் கூடாது. பிறர்க்கு உதவும் மனம் பெற்ற ஒப்புரவாளராய் விளங்க வேண்டும். அனைவரும் கடமை உணர்வுடன் உழைத்தால் விளைவு பெருகும்; நாட்டின் முழுத்தேவையையும் நிறைவு செய்து, தேவையுள்ள நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் விளைவுப் பெருக்கம் வேண்டும். மக்கள் அறநெறியைக் கடைப்பிடித்து வளர்ந்து, மறந்தும் பிறர்க்கு கேடு நினைக்காது, திறனறிந்து தீதின்றி உழைத்துப் பொருள் தேடித் தனிவாழ்விலும் குடும்ப வாழ்விலும், தொழில் வாழ்விலும், தொண்டு வாழ்விலும் அறத்தால் வருவதே இன்பம் எனக் கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும். அச்சமும் கவலையும் இன்றி வாழ வேண்டும்.உண்ணும் போதும், உழைக்கும் போதும், ஓய்வு கொள்ளும் போதும், உறங்கும் போதும் மக்கள் அச்சமின்றி, கவலையின்றி நிறை மனத்தவராய் விளங்கத் தக்கபாது காப்பு இருக்க வேண்டும். அப்படி இருக்கும் நாடே அழகிய நாடாகும். திருவள்ளுவர் நாட்டிற்கு அணிகலன்கள் ஐந்து பூட்டி மகிழ்கிறார். அவை 1. நோய் இல்லாமை 2. செல்வப் பெருக்கு, 3. நிறைந்த விளைவு, 4. அறவழிப்பட்ட இன்பம், 5.வலிய பாதுகாப்பு, என்னும் ஐந்துமாம். நாம் வாழும் நாடும் இவ்வைந்து அணிகலன்களும் அணிந்து அழகு மிளிரக் காட்சி வழங்கும் நாடாக விளங்கச் செய்வதில் ஒவ்வொருவர் பங்கும் குறையாமல் அமைய வாழ்த்தி வரவேற்போம்! நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல நாட வளம்தரும் நாடு. (குறள். 739) நாட்டில் வாழும் அனைத்து மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்வதற்கு உரிய அனைத்துப் பொருள்களும் அந்தந்த நாட்டில் கிடைக்க வேண்டும். தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும், அரிசிக்கும், பருப்புக்கும், மண்ணெண்ணெய்க்கும் அடுத்த நாட்டை எதிர்பார்த்து வாங்கி வாழ வேண்டும் நிலை; வாங்குவதற்கும் முழுத்தொகையும் கையிலில்லை கடனாகக் கொடுத்து உதவுங்கள், தவணைப்படி வட்டியும் தந்து விடுகிறோம்; என்று கெஞ்சிக் கேட்டு வாங்கி வாழும் நாடு தன் தகுதியை இழந்துவிடும். எந்த நாட்டை எதிர் பார்த்து வாழ வேண்டிய திருக்கிறதோ அந்நாட்டவர்கள் தங்களை மிக உயர்வானவர்களாக எண்ணிக் கொண்டு, மற்றவர்களை அடிமைகளைப் போல இகழ்வாக எண்ணவும் இடம் ஏற்படும். தம் நாட்டில் வாழ வழி இன்றி, அயல் நாடு சென்று, உரிமை இன்றி உழைத்துப் பிழைக்கும் இழி நிலை எந்த நாட்டுக்கும் ஏற்படக் கூடாது. நாடு தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தால்தான் அந்நாட்டை, அந்நாட்டு அரசை, அயல்நாட்டவர் மதிப்பர். நம் நாட்டைப் பிறர் மதிக்க வேண்டுமானாலும், நாமே நம் நாட்டைப் பற்றி பிறரிடம் பெருமையாகக் கூற வேண்டும் என்றாலும், நம் தேவைக்குரிய பொருள்களைப் பிறரிடம் நாம் எதிர்பார்க்கக் கூடாது. பிற நாட்டார் உதவியோ, துணையோ, ஒத்துழைப்போ இல்லாமல், நம் நாட்டில் நாமே உழைத்து நம் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டால்தான் நம் நாடு வளம் தரும் நாடாகக் கருதப்படும். அயல் நாடு சென்று வருந்தி உழைத்துத் தேடும் நிலை ஏற்படாமல், தன் நாட்டிலேயே உழைத்து வாழ, வளம் பெற வாய்ப்புள்ள நாடே நாடாகும். வேள்பாரி பால் மகட்கொடை வேண்டி மறுக்கப்பட்ட தமிழ் வேந்தர் அதுவே வாயிலாக அவன்பால் பகைமை கொண்டனர். மூவேந்தரும் ஒருவர் ஒருவராக அவனொடு பொருதற்கு வந்து தோல்வி எய்தினர். அது கண்ட கபிலர், தமிழ் வேந்தர்களே! ஒருவரேயன்றி மூன்று பேரும் ஓருங்கு கூடி நின்று இப்பறம்பினை முற்றுகையிட்டுக் கொள்ளினும் வேள்பாரியை வெல்லுதல் அரிது; பாரியது இப்பறம்பினைக் கைப்பற்றுதலும் அரிது; பறம்பு நாட்டார்க்கு வேண்டும் உணவு வகையில், உழவரது உழவினை வேண்டாதே இப்பறம்பு மலை நால் வகை உணவுப் பொருளை நல்கும். அவற்றுள் முதலாவது, சிறிய இலையையுடைய மூங்கிலினது நெல் விளையும்; இரண்டாவது இனிய சுளைகளை உடைய பலாவினது பழம் ஊழ்க்கும்; மூன்றாவது, கொழுவிய கொடியை உடைய வள்ளிக் கிழங்கு தாழவிருக்கும்; நான்காவது, அழகிய நிறத்தை உடைய ஒரி பாய்தலான் தேனடை அழிந்து தேன் சொரியும்; வானத்தைத் தொடுவது அவன் மலை; வானத்திலுள்ள விண்மீன்களைப் போல் பெருகியது அம்மலையின் சுனை; ஆங்குள்ள மரங்கள் தோறும் யானையைக் கட்டுவீர் என்றாலும், இடமெல்லாம் தேரினை நிறுத்துவீர், என்றாலும் உங்கள் வலிமையால் பெறமாட்டீர்: போரால் தரமாட்டான். என்னும் பொருள் அமையக் கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடலின் பகுதி. அளிதோ தானே பரியது பறம்பே; நளிகொள் முரசின் மூவரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே; ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளையும்மே; இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க் கும்மே; முன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீது அழிந்து திணி நெடுங் குன்றம் தேன் சொரி யும்மே. வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து மீன்கண் அற்று அவன் சுனையே; ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் தாளில் கொள்ளலீர்; வாளில் தாரலன். என்னும் புறப்பாடல் பகுதி நாடென்ப நாடா வளத்தன என்னும் தொடருக்கு நல்ல இலக்கியச் சான்றாகும். ------------ ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. (குறள். 740) நாடு நாடா வளந்தரும் நாடுதான். பசி, பிணி, பகை, பல்குழு, உட்பகை, கொல்குறும்பும் இல்லாத நாடுதான் கேடுஅறியா வளங்குன்றா நாடுதான். தக்காரும் தாழ்விலாச் செல்வரும், செல்வமும் நிறைந்த நாடுதான். நீர்வளம், நிலவளம், மலைவளம் பொருந்திய நாடுதான். இயற்கையால் நேரும் கேட்டாலும் தாழாத நாடுதான். இயற்கையாகவே நல்ல பாதுகாப்பைப் பெற்ற நாடுதான். எல்லா நலங்களும் வளங்களும் பொருந்திய நாடாக இருக்க வேண்டியது முக்கியம்தான். அதைவிட முக்கியம் நாடாளுவோர் அச்சமற்றவராய், அறிவுடை யவராய், ஊக்கம் உடையவராய், கொடை யாளியாய், அருளாளராய், காட்சிக்கு எளியவராய், கடுஞ்சொல் கூறாதவராய், இன்சொல்லாளராய், அறன் இழுக்காது அல்லவை அகற்றுபவராய், மறன் இழுக்கா மானம் உடையவராய், கடுஞ்சொல்லையும் பொறுக்கும் பண்புடை யவராய், முறைசெய்து குடிகாப்பவராய் துணிந்து செயல் புரிபவராய், காலம் போற்றுபவராய், இயற்றவும், ஈட்டவும், காக்கவும், வகுக்கவும், தெரிந்த நடுநிலையாளராய் விளங்க வேண்டும் என விரும்புபவர் திருவள்ளுவர். ஆகவே, எவ்வளவு சிறந்த நலங்களையும் உடையதாக நாடு இருப்பினும் ஆட்சி புரிவோர் தகுதி அற்றவராய் அமைந்து விடுவாராயின் நாடு பயனற்ற, பண்பாடற்ற நாடாகி விடும் என்கிறார். குடியரசு நாட்டில், குடிமக்கள் குறுகிய நோக்கத்திற்கு இடம் தராமல், தக்காரைத்தக்க ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த, தமக்குரிய வாக்குரிமை யைப் பயன்படுத்த வேண்டும். உருளையையும் பார்ச்சட்டத்தையும் கோத்து உலகில் செலுத்தும் வண்டி, அதனைச் செலுத்துவோன் திறமை உடையவனாக இருப்பின் எத்தகைய இடையூறும் இல்லாமல் வழியில் இனிதாகச் செல்லும். அவ்வாறு திறமையாகச் செலுத்தும் ஆற்றல் வண்டியோட்டுபவனுக்கு இல்லையானால் வண்டி நாள்தோறும் சேற்றிலே பட்டுத் துன்புறும் என்னும் கருத்தமைய மன்னன் தொண்டைமான் இளந்திரையன் பாடி, புறநானூற்றில் இடம் பெறும் கீழ்க் காணும் பாடல் ஏற்ற இலக்கியச் சான்றாகும். கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் மாணின் ஊறுஇன் றாகி ஆறுஇனிது படுமே! உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும் பகைக் கூழ் அல்லல் பட்டு மிகப்பல தீநோய் தலைத்தலைத் தருமே வண்டி செலுத்துபவனைப் போல் வையகத்தைச் செலுத்துபவனும் திறமை உடையவனாக இருந்தால் எத்தகைய இடையூறும் இல்லாமல் ஆட்சி இனிதாக நடைபெறும். திறமை இல்லாதவனாக இருப்பான் ஆனால் உட்பகை, வெளிப்பகை ஆகிய சேறுகளின் இடையே பட்டு அரசியல் வண்டியும் ஆழ்ந்து அல்லலுக்கு உள்ளாகும். என்பது நல்ல தொரு எடுத்துக் காட்டாகும். ஆர்வலஞ் சூழ்ந்த ஆழி யலைமணித் தேரை வல்லான், நேர் நிலத்து ஊருமாயின், நீருபல் காலம் செல்லும்; ஊர்நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும் தார் நில மார்ப! வேந்தர் தன்மையும் அன்னதாமே என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் பிறிதொரு இலக்கியச் சான்றாகும். நாட்டில் தள்ளா விளையுளும் வேண்டும் தக்காரும் வேண்டும் தாழ்விலாச் செல்வரும் சேர வேண்டும். பெரும் பொருள் வளத்தால் அனைவராலும் விரும்பப்படுவது நாடு கேட்டிலும் மிகுந்த விளைச்சல் தருவதே நாடு சுமை கூடினாலும் தாங்கும் திறன் வேண்டும் மக்கள் வரி வழங்கப் பின்வாங்கக் கூடாது உறுபசி வாட்டா நாடே நாடு ஓவாப் பிணியற்ற நாடே நாடு அழிவு செய்யும் பகைமை அற்ற நாடே நாடு பாழ்செய்யும் பல்குழு இல்லாததே நாடு பாழ்செய்யும் உட்பகை அற்றதே நாடு வேந்தலைக்கும் கொல் குறும்பு இல்லாததே நாடு கேடு என்றால் என்ன வென்று அறியாத மக்களைக் கொண்டதே சிறந்த நாடு பேரிடர்க் காலத்தும் வளம் குறையா நாடே மேலான நாடாகும் இருபுனலும் வருபுனலும் நாட்டிற்கு உறுப்புத்தான் வாய்ந்த மலையும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பே பிணியற்ற நாடும் அழகிய நாடே செல்வமும் விளைவும் பெருகியதும் அழகு நாடே இன்பமும் ஏமமும் நாட்டிற்கு நல்ல அணிகள் தன்னிறைவு உடைய நாடே நன்னாடு இறக்குமதியால் வளம் காட்டும் நாடு, நாடாகாது நல்லவர் ஆளும் நாடே நல்ல நாடு எவ்வழி நல்லவர் ஆள்பவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே! 75. அரண் பகைவரால் கைப்பற்றப் படாவாறும் கொள்ளை அடிக்கப் படாவாறும், அழிக்கப்படாவாறும் நாட்டிற்கும். தலை நகர்க்கும் அரசனுக்கும் பாதுகாப் பளிக்கும், இயற்கையும், செயற்கையுமாகிய அமைப்பே அரண் ஆகும். அரண், மதிலரண், நிலவரண், நீரரன், காட்டரண், மலையரண் என ஐந்து வகைப்படும். 1. மதிலரண்-மதில், எயில், இஞ்சி, சோ என நால்வகைப் படும். புரிசை என்பது அவற்றின் பொதுப்பெயர். புரிந்திருப்பது புரிசை, புரிதல், வளைதல் அல்லது சூழ்தல், மதில் நகரைச் சூழ்ந்திருப்பதால் புரிசை எனப்பட்டது. நால்வகை மதிலரண்களுள், உயரமொன்றே யுடையது மதில்; உயரத் தொடு அகலமுமுடையது எயில்; அவற்றொடு திண்மையு முடையது இஞ்சி; அம்மூன்றொடு அருமையு முடையது சோ. ஆகவே, சோ வரனே தலை சிறந்ததாம். உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கும் அமைவரண் என்றுரைக்கும் நூல் (குறள். 743) என்றார் திருவள்ளுவர். நொச்சிப் போரில் வில்லியர் மேல் நின்று மறைந்து அம்பு எய்தற்குரிய புழைகளை உடையது எயில், அம்பெய்யும் புழை, ஏப்புழையென்றும், ஏவறை என்றும் கூறப்படும்.எய்யும் இல்லையுடையது எயில் எனப்பட்டது. செம்பை உருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லால் கட்டின மதில் இஞ்சி என்பர். இஞ்சுதல் இறுகுதல். இஞ்சியது இஞ்சி. செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர் (கும்பகருணன் வதைப்படலம், 159) என்று கம்பரும், செம்பு புனைந் தியற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு (புறம் . 201) என்று கபிலரும் பாடியிருப்பதால், இலங்கையிலும் துவரா சமுத்திரம் என்னும் துவரை நகரிலும் இஞ்சியரண் இருந்தமை அறியப்படும். செப்புக் கோட்டை என்பது இராவணன் கேட்டைப் பெயராக இன்றும் ஈழத்தில் வழங்குகின்றது. மதிலரணை அருமைப்படுத்துவது பொறியாதலால், ஏவறைகளும், பொறிகளும், உடைய இஞ்சியே சோவரணாய் இருந்திருத்தல் வேண்டும். சோவரணும் போர்மடியத் தொல்லிங்கைக் கட்டழித்த என்று ஆச்சியர் குரவையும், சுழல்அழலுள் வைகின்று சோ என்று ஆய்ச்சியர் குரவையும். சுழல் அழலுள் வைகின்று சோ என்று புறப்பொருள் வெண்பா மாலையும் (228) கூறுவதால், இராவணன் நகரிலும் வாணாகரன் நகரிலும் சோவரண் இருந்ததாகத் தெரிகின்றது. மதுரை மதிலரண் பல பொறிகளைக் கொண்டிருந்ததாக இளங்கோ அடிகள் கூறுவதால், அதனை ஒருவகைச் சோவரண் என்னலாம். மதுரைப் புறமதிலில் இருந்த பொறிகளும் கருவிகளும் உறுப்புகளுமாவன:- (1) வளை விற்பொறி - வளைந்து, தானே எய்யும் எந்திரவில். (2) கருவிரல் ஊகம் - கரிய விரலையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி. (3) கல்லுமிழ் கவண்-கல்லெறியும் இருப்புக்கவண் (இடங்கணி) (4) பரிவுறு வெந்நெய்-காய்ந்து இறைத்தலாற் சேர்ந்தாரை வருத்தும் நெய். (5) பாகடு குழிசி-செம்புருக்கும் மிடா. (6) காய்பொன்னுலை-உருகக் காய்ச்சி எறியும் எஃகு உலை. (7) கல்லிடு கூடை - இடங்கணிப் பொறிக்குக் கல்லிட்டு வைக்கும் கூடை. (8) தூண்டில் - அகழியைக் கடந்து மதிலைப் பற்றுவாரை மாட்டி இழுக்கும் தூண்டில் வடிவான பொறி. (9) தொடக்கு - கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி. (10) ஆண்டலை அடுப்பு-பறந்து உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்டலைப்புள் வடிவமான பொறிவரிசை. (11) கவை-அகழியினின்று ஏறின் அதற்குள் விழத் தள்ளும் இருப்புக் கவை. (12) கழு-கழுக்கோல். (13) புதை-அம்புக்கட்டு (14) புழை-ஏவறைகள் (15) ஐயவித்துலாம்-அம்புத்திரள் தொங்கவிட்ட விட்டம். (16) கைபெயரூசி - மதிற்றலையைப் பற்றுவாரின் கையைப் பொதுக்கும் ஊசிப் பொறிகள். (17) சென்றெறி சிரல் - பகைவர் மேற் சென்று அவர் கண்ணைக் கொத்தும் சிச்சிலிக் குருவி வடிவான பொறி. (18) பன்றி-மதிற்றலை ஏறினார் உடலைக் கொம்பால் கிழிக்கும் இருப்புப் பன்றி. (19) பணை-அடிக்கும் மூங்கில் தடி வடிவமான பொறி. (20) எழுவுஞ்சீப்பு -கதவுக்கு வலியாக உள்வாயிற் படியில் நிலத்தில் கீழேவிடும் மரங்கள். (21) கணையம்-கோட்டை மதிற் கதவுக்குத் தடையாக குறுக்கேயிடும் உத்தரம். (22) கோல்-விட்டேறு. (23) குந்தம்-சிறு சவளம். (24) வேல், (25) ஞாயில் - குருவித்தலை எனும் மதில் உறுப்புகள் (26) நூற்றுவரைக் கொல்லி, (27) தள்ளி வெட்டி, (28) களிற்றுப் பொறி (29) விழுங்கும் பாம்பு (30) கழுகுப் பொறி (31) புலிப் பொறி (32) குடப் பாம்பு (33) சகடப் பொறி (34) தகர்ப் பொறி (35) அரி நூற் பொறி முதலியன. இவற்றுள் இறுதியில் குறிக்கப்பட்ட பத்தும், இளங்கோவடிகள் பிற என்னும் சொல்லால் தழுவப் பெற்று உரையாசிரியரான அடியார்க்கு நல்லாரால் பெயர் குறிக்கப் பெற்றவை. தலை நகர்களில், மதில் ஒன்றன்றி, ஒன்றனை யொன்று சூழ்ந்து பலவாய் இருப்பதும் உண்டு, அகமதில்களை விடப் புறமதில்கள் படி முறையில் அரண் சிறந்திருக்கும். கோடுறழ்ந்தெடுத்த என்னும் பதிற்றுப் பத்துச் செய்யுளில் அகமதில், மதில் என்றும், புறமதில் இஞ்சி என்றும், கூறப்பட்டிருத்தல் காண்க. புறமதில்தான் மேற்கூறிய பலவகைப் பொறிகள் அமைக்கப்பட்டிருக்கும். மதிலை யொட்டி உட்புறத்தில் உள்ள மேடைக்கு அகப்பா என்று பெயர். பகைவர் வரவைத் தொலைவிலேயே காணும்படி, புறமதிலின் மேல் பலதிசையிலும் அட்டாலை என்னும் காவற் கோபுரங்கள் அமைக்கப் பட்டிருக்கும். அவற்றிலிருந்து காவல் செய்வார்க்கு அட்டாலைச் சேவகர் என்று பெயர். ஒவ்வொரு மதிலுக்கும் காவலரும், மதில் நாயகன் என்னும் காவல் தலைவனும் இருப்பர். மதிலுள்ள நகர்கள் பெரும்பாலும், கோட்டை, புரி, புரிசை, எயில், கடகம் என்னும் சொற்களுள் ஒன்றைப் பெயராகவோ பெயர் ஈறாகவோ கொண்டிருந்தன. (2) நிலவரண்; நிலவரண் என்பது, பகைவர் அகழி கடந்தவுடன், புறமதிலைப் பற்றாமைப் பொருட்டு அதன் புறத்து விடப்பட்டுள்ள வெள்ளிடை நிலமும்; பகைவர் முற்றுகை நீடித்து இருக்கும் போது, அகத்தார்க்கு வேண்டும் உணவுப் பொருள்களை விளைத்துக் கோடற் பொருட்டுப் புறமதிலின் உட்புறமாக விடப்படும். தண்ணடை நிலமும் என இருவகை. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைர தண் (குறள். 742) என்னும் குறளில், மண் என்றது நிலவரணை. gÇnkyHf® mj‰F btŸËil Ãybk‹W brhšYiu T¿, “kâ‰òw¤J kUÃy« gift® g‰whik¥ bghU£L” v‹W És¡fîiu T¿ ïU¥gijí«; “ehL f©l‹d fiz JŠR Éy§fš” v‹D« gâ‰W¥ g¤J¤ bjhlU¡F (1612) “beLeh£gl milk≠g£l fhy¤nj Éis¤J¡ nfhl‰F, taY« FsK« csthf¢ rik¤J it¤jikah‰ f©lh®¡F ehL f©lh‰ ngh‹w...., இடைமதில், என்று அந்நூலின் பழைய உரை யாசிரியர் விளக்கம் உரைத்திருப்பதையும் காண்க. (3) நீரரண்:- நீரரண் என்பது, புறமதிற் புறத்து ஆறும் கடலுமாகிய இயற்கை நீர்நிலையாகவும், அகழி அல்லது கிடங்கு என்னும் செயற்கை நீர் நிலையாகவும் இருக்கும் அரண். (4) காட்டரண்;- காட்டரண் என்பது, படை மறவர் பகைவர்க்குத் தெரியாமல் மறைந்திருக்கக் கூடியதும், தொகுதியாகப் புக முடியாதது மான மரம் அடர் சோலை. (5) மலையரண்;- மலையரண் என்பது மக்கள் தொகுதியாக ஏறமுடியாததும், மேலிருந்து பெருங்கற்களைக் கீழே எளிதாக உருட்டக் கூடியதும் உச்சியில் போதிய உணவும் உறையுளும் உடையதுமான, பறம்பு போலும் தனிக்குன்று. இது குறுநில மன்னர்க்கு-அவருள்ளும் குறும்பரசர்க்கு - இன்றியமையாதது. சங்க காலத்துக் குறுநில மன்னர் பெரும்பாலும், ஒவ்வொரு மலைக்கிழவராய் இருந்தனர் எனப் பாவாணர் பழந்தமிழாட்சி என்னும் நூலில் தக்க சான்றுகளுடன் விளக்குகிறார். முதல் விடுதலைப் போராட்ட வீரர், நெற்கட்டும் செவ்வல் குறுநில மன்னர் பூலித் தேவரின் வாசுதேவ நல்லூர்க் கோட்டை அளவால் சிறியது.ஆனால், திருநெல்வேலி மாவட்டத்திலேயே மிக்க பலம் வாய்ந்த கோட்டையென கர்னல் காம்பெலால் கருதப்பட்டது. அதனுடைய பலம் பெரிதும் அது அமைந்திருந்த இடத்தையே பொறுத்திருந்தது. கோட்டைக்கு மேற்கிலும் தெற்கிலும் 1300 கெசத் தொலைவில் அடர்ந்த காடு இருந்தது. அதற்கு அப்பால் மேற்கு மலைத் தொடர் தலை நிமிர்ந்து நின்றது. இந்தக் காடுகளில் மறவர் பெருங்கூட்டம் நிறைந் திருந்தது. முற்றுகை இடுவோர் கண்ணில்படாமல், அவர்கள் செயல் களைக் கவனித்துச் சரியான நேரத்தில் அவர்கள் மேல் பாய்ந்து தாக்குவதற்கு இக்காடு மறவர்களுக்குப் பெருந்துணை புரிந்தது. இக்கோட்டைக்கு இரண்டாவதாய் இருந்த பெரிய அரண் நஞ்சு நிறைந்த கரு வேல முட்களால் ஆகிய பலம் பொருந்திய முள்வேலியே ஆகும். இக்கருவேல முட்களைக் கொண்டு திறமையாக முடைந்து வேலி போட்டால், அது கூரிய கம்பிகளால் ஆகிய வேலியைக் காட்டிலும் கடப்பதற்கு அரிதாக அமையும். கோட்டையின் தெற்குக் கிழக்குச் சுவர்களுக்கு அருகிலேயே பேயாறு பாய்ந்தது. இது இன்னொரு வகைப் பாதுகாப்பாகக் கோட்டைக்கு அமைந்தது. கோட்டைச் சுவர்கள் அவற்றின் அளவு காரணமாகவும் பருமை காரணமாகவும் பெயர் பெற்றன அல்ல. சுவர்கள் சுடுமண்ணால் ஆகியவை. அவற்றின் அடித்தளத்தின் அகலம் 15 அடி, மேல் உச்சியின் அகலம் 5 அடி. கர்னல் காம்பெலின் முற்றுகையின் போது இந்தக் கோட்டை யில் ஓர் இடம் ஐந்நூறு முறை குண்டுகளால் தாக்கப்பட்டது. ஆனால் கோட்டையில் ஒரு சிறுபிளவும் ஏற்படவில்லை. கோட்டையின் உறுதியை இது காட்டும். கோட்டை அறுநூற்றைம்பது கெச நீளமும் முந்நூறு கெச அகலமும் கொண்டது. கோட்டையில் நான்கு பெரிய சதுரமான கொத்தளங்கள் இருந்தன. இவை மூலைக்கு ஒன்றாய் அமைந்திருந்தன. ஒவ்வொரு கொத்தளமும் கோட்டையை உள்ளிருந்தும் புறமிருந்தும் காத்தற்குரிய உறுப்புகளைப் பெற்றிருந்தது. கொத்தளங்களின் உச்சிக்குச் செல்லும் வழி செங்குத்தாயும் இரண்டடி அகலமே உள்ளதாயும் இருந்தது. கோட்டைச் சுவர்களின் உட்புறத்தைவிட வெளிப்புறம் செங்குத்தாய் அமைந்திருந்தது. இதனால், கோட்டை தாக்கப்படும் பொழுது தற்காத்துக் கொள்கிறவர்கள் சுவரின் உச்சிக்கு விரைவில் எறிவிடலாம். கோட்டையின் உச்சியில் சிறுபடைக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான துளைகள் இருந்தன. என இராபர்ட்டு ஓர்ம் ஒரு நூலில் எழுதியுள்ளார். அரண் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களிலும் அரண் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. அரண் எனப் பொருள்படும் வேறு எந்தச் சொல்லையும் பயன்படுத்த வில்லை என்பதையும் அறிய முடிகிறது. ஆகவே, அரணை உணர்த்த அரண் என்ற சொல்லைத் தவிர்த்து வேறு சொற்களைப் பயன்படுத்த திருவள்ளுவர் விரும்பவில்லை போலும். ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். (குறள். 741) அரண் நாட்டிற்குக் கட்டாயம் வேண்டும். யாதும் ஊர்; யாவரும் கேளிர் என எண்ணி வாழும் மன வளச் செம்மல்கள் உலகில் மிகச் சிலர்தான் இருப்பர். பெரும்போலோர் தந் நலத்தவராய் இருப்பதுடன் போட்டியும் பொறாமை யும், பேராசையும், பகைமை உணர்வும் கொண்டவர்களாய் இருப்பதால் பிறர் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடையும் மனநிலை அற்றவர்களாய், வீழ்த்த விரும்புபவர்களும் கெடுக்க விரும்புபவர்களும் இயலவில்லை யானால் தடுக்க விரும்பு பவர்களும் உலகில் மிகுந்திருப்பதால் தனிமனிதனுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. மனம் ஒத்து ஒருவர்க்கொருவர் கொண்டும் கொடுத்தும் ஒன்றி வாழும் இயல்பு நாடுகளுக்கிடையே எப்பொழுதும் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கிடையே எத்தனையோ வேறுபாடுகளும் மாறுபாடுகளும் மண்டிக் கிடக்கும் போது. உலக ஒற்றுமையைச் செயல்முறையில் காண்பது அரிதாகும். ஒரு நாடு பிறிதொரு நாட்டைத் தாக்கவும், வீழ்த்தவும், அடிமைப் படுத்தி மேலாதிக்கம் செலுத்தவும் விரும்பும் நிலை இயல்பாகவே கால்கொண்டிருக்குமானால், அறிவு, ஆண்மை, பெருமை போன்ற தன்மைகளில் மேம்பட்ட நாட்டுக்காரர், அயல் நாட்டாரை அமைதியாக வாழ விடமாட்டார்கள். மக்களைக் கற்றார் கல்லாதவர், அறிவுடையோர் அறிவிலார்; ஆற்றல் உடையவர் ஆற்றல் இல்லாதவர்; வீரர் வீரமற்றவர்; என மக்களை இரண்டாகப் பிரித்துக் காண்பது போல், நாடுகளையும் பிரித்துக் காண முடியும். வலிமை உடைய நாடு வலிமை குறைந்த நாடு என நாடுகளை இரண்டாகப் பகுத்து எந்த நாட்டுக்குப் பாதுகாப்பு அரண் கட்டாயத் தேவையாகும் எனத் திருவள்ளுவரே வினவி இருப்பர். தான் கண்ணாடி வீட்டில் இருக்கும் போது எவனும் அடுத்தவர் வீட்டின் மீது கல்லெரிய எண்ண மாட்டான். தான் வாழும் நாட்டின் அரண் தக்க பாதுகாப்பாய் அமையும் என்ற நம்பிக்கை இல்லாத எந்நாட்டானும் அயல் நாட்டின் மீது தன் வலிமையைக் காட்ட, படையெடுத்துச் செல்ல மாட்டான். அதுபோல் வலிமை குன்றிய நாட்டார். அயலவர் எப்பொழுதும் தம்மீது போர் தொடுக்க வரலாம், எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறும் தகுதி தமக்கு இல்லை என்று கருதி அஞ்சி வாழ்பவர்களும் கட்டாயம் தக்க அரண் அமைத்துக் கொள்வதே இயல்பு. ஆகவே, அரண் போர் மேற் செல்லும் ஆற்றலுடையவர் கட்கும் நல்ல பயன் அளிக்கும் பொருளாகும். அது போல் அச்சத்திற்கு ஆட்பட்டுத் தன்னைக் காத்துக் கொண்டால் போதும் என்று கருதுபவர்கட்கும் அரண் பயனுடைப் பொருளாகும். ஆள நினைப்பவர்கட்கும் அரண் வலிமை வேண்டும். வீழாமல் தன்னைக் காத்துக் கொள்ள விரும்புவர்க்கும் வலிய அரண் தேவை. மாறுபட்ட இருவகைத் தன்மை உடையவர்களும் அரணாகிய பொருளை உடையவர்களாக விளங்க வேண்டும். பத்திமை சான்ற படையும் பலர் தொகினும் எத்துணையும் அஞ்சா எயில் அரணும் - வைத்தமைந்த எண்ணின் உலவா விழு நிதியும் இம்மூன்றும் மண்ணாளும் வேந்தர்க்கு உறுப்பு என்னும் திரிகடுகப் பாடலையும் நினைவில் கொள்வோம். ------------ மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் (குறள்.742) மணிபோல் தெளிந்த ஆழமான நீரையுடைய அகழியும், வெட்ட வெளியான விரிந்த நிலப் பரப்பும், பெரிய உயரமான, கண்டாரை மயக்க வைக்கும் மலையும், அழகிய செறிந்த நிழலை உடைய மரங்களைக் கொண்ட காடுகளும் அரணாகும். நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் ஆகிய நான்கும் நல்ல அரணாகவும் அமையும். நானிலமும் அரணாகக் கூறப்பட்டுள; மணிநீர் என்பது நெய்தல் நிலம்; மலையே குறிஞ்சி நிலம்; காடே முல்லை நிலம்; எஞ்சி நிற்பது மருதம், பயிராகும் மண் நிறைந்ததே மருதம் ஆதலின் வள்ளுவர் கூறும் மண்ணே மருதமாகும் என்னும் அறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தனையையும் சிந்தையில் கொள்வோம். நீண்டநீர் காடு களர்நிவந்து விண்தோயும் மாண்ட மலைமக்கள் உள்ளிட்டு-மாண்டவர் ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை வேந்தனா நாட்டல் விதி. என்னும் சிறுபஞ்சமூலப் பாடல் வள்ளுவர் கூறிய நான்குடன் வீரர்களை யும் ஓர் அரணாக இணைத்து ஐந்தாக உரைப்பதும் அருமை. கம்பர் அகழியைப் பொன்விலை மகளிர் மனம் எனக் கீழ் போய் உள்ளது எனக் கூறியுள்ளதையும் காவற்காடு தூங்கு வீங்கு இருட் பிழம்பு என்னலாம் இறும்பு சூழ் கிடந்த சோலை எனக் கூறியுள்ளதையும் இணைத்துச் சிந்தித்துக் கொள்ளலாம். நீரும் அரண்; நிலமும் அரண், மலையும் அரண்; காடும் தக்கவாறு அமையின் அரணேயாகும். ------------ உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல். (குறள். 743) பகைவர்கள் ஏணி வைத்து ஏற முயன்றாலும் ஏற முடியாத உயரம் உடையதாகவும். உள்ளிருப்போர் தடை இன்றி இயங்குவதற்கு ஏற்ற தாகவும், முற்றுகையிடுவோர் அரிதின் முயன்றாலும் தோண்டவோ துளைக்கவோ இயலாத அளவு விரிந்த அகலம் உடையதாயும், பகைவ ராலும் இயற்கையாலும் எளிதில் தகர்க்க முடியாத வலிமை உடைய தாயும், பொறிகளாலும் நெருங்க முடியா அருமைப்பாடு உடையதாகவும் அரண் அமைந்திருக்க வேண்டும் என படைத்துறை நூல்கள் பகர்கின்றன. அரண் உயரமானதாகவும் இருக்க வேண்டும்; அகலம் உடையதாகவும் இருக்க வேண்டும்; வலிமை அமைந்ததாகவும் இருக்க வேண்டும்; அருமையானதாகவும் இருக்க வேண்டும். அரண் இயற்கையாய் அமைந்ததாக இருப்பினும், செயற்கையாக வடிவமைக்கப் படுவதாக இருப்பினும் உயர்வு, அகலம், திண்மை, அருமை நான்கும் உடையதாய் இருக்க வேண்டும் என்பதே நூன்முடிவு. ------------ சிறுகாப்பிற் பேரிடத்த தாகி, உறுபகை ஊக்கம் அழிப்ப தரண். (குறள். 744) அரண் மிகவிரிந்த பரப்பு உடையதாய் இருக்கவேண்டும். ஆனால் அரணில் உள்ளவர்கள் அரண் முழுவதையும் பாதுகாக்குமாறு அரண் இருத்தல் ஆகாது. இருந்தால் பெருமுயற்சியும் வீண்செலவும் ஏற்படும். முழுக்கவனத்துடன் பாதுகாக்க வேண்டிய பகுதி மிகச் சிறிதாக இருக்க வேண்டும். அப்படியானால் தான் பகைவர் உள்ளே நுழைந்து விடாது காப்பது எளிதாகும். பகைவரும் எளிதில் உட்புக இயலாது. அத்துடன் மிக வலிமை வாய்ந்த பகைவரின் ஊக்கத்தை அழிக்க வல்லதாயும் அரண் அமைந்திருக்க வேண்டும். பெருமுயற்சி இல்லாது காக்கக் கூடியதாயும் அரண் இருக்க வேண்டும்.உள்ளே இடம் பரந்து விரிந்து இருக்க வேண்டும். பகைவரின் எழுச்சியை மழுங்கடிப்பதாகவும் அரண் இருக்க வேண்டும்.அரணைக் கண்டே எதிரி பின்வாங்கவேண்டும். ------------ கொளற்கரிதாய்க் கொண்ட கூழ்த்தாகி, அகத்தார் நிலைக்கெளிதாம் நீர தரண். (குறள். 745) அரண் வலிமை வாய்ந்த பகைவராலும் கைப்பற்றுவதற்கு அருமை உடையதாய் இருக்க வேண்டும், உள்ளிருப்போர்க்குத் தேவையான உணவு போன்ற இன்றியமையாப் பொருள்கள் வேண்டிய அளவு உள்ளேயே கிடைக்க வேண்டும். உணவுத் தட்டுப்பாடு இருக்கக் கூடாது. வீரர்களும் தலைவர்களும் உணவுக் கவலை இன்றி இருக்க வேண்டும். உள்ளிருப் போர் தங்குவதற்கு உரிய ஏந்துகளைப் பெற்றிருப்பதுடன், உள்ளிருந்தே சிரமம் இன்றிப் போரிடுவதற்கு ஏற்ற வாய்ப்புகள் எல்லாம் அரணுக்குள் அமைந்திருக்க வேண்டும். முற்றுகை இடுவோர் அரணைக் கைப்பற்றச் சிரமப் படவேண்டும். உள்ளிருப்போர் உள்ளே இருந்து கொண்டே முற்றுகை இடும் பகைவர் களை எளிதில் தோற்று ஓடச் செய்வதற்கு ஏற்ற வலிமையும் வசதியும் உடையதாய் அமைந்ததே அரணாகும். அத்துடன் உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவு உள்ளேயே இருப்பதே சிறந்த அரணாகும். பாரியின் பறம்பு மலை இரங்கத்தக்கது; நடுக்குதல் மிக்க முரசை உடைய மூவேந்தராகிய நீங்கள் முற்றுகை இட்டாலும், பறம்பு உழவர் உழாமல் தரும் நான்கு விளைவுகளையுடையது. ஒன்று, மூங்கில் நெல் விளையும், இரண்டு, இனிய சுளைகளையுடைய பலாப்பழம் கிட்டும்; மூன்று, வளமான கொடியுடைய வள்ளிக் கிழங்கு கிடைக்கும்; நான்கு, அழகிய குரங்கு தாவுதலால் தேனடை அழிந்து தேன் சொரியும்; வானத்தைத் தொடுவது அவன் மலை; வானத்துள்ள விண்மீன்களைப் போல் பெருகியது அம்மலையின் சுனை; ஆங்குள்ள மரங்கள் தோறும் யானையைக் கட்டுவீர் என்றாலும், இடமெல்லாம் தேரினை நிறுத்துவீர் என்றாலும் உங்கள் வலிமையால் பெற மாட்டீர்: போரால் தரமாட்டான். அவன் தருதற்கான வழியையான் அறிவேன்; பதமாகக் கட்டப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழை மீட்டிக் கொண்டு, மணமிக்க நீண்ட கூந்தலையுடைய உங்கள் பெண்டீர் விறலியராகப் பின் வர ஆடியும் பாடியும் சென்றால் பறம்பு நாட்டையும் மலையையும் ஒரு மொத்தமாக வழங்குவான் எனும் பொருள் புலப்படுமாறு கபிலர், பாரியின் பறம்பு நாட்டை முற்றுகை இட்ட மூவேந்தர்களை நோக்கி உரைத்த கீழ்க் காணும் பாடல் இக்குறளுக்கு ஏற்ற இலக்கிய மேற்கோளாகும். அளிதோ தானே, பாரியது பறம்பே, நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன, நான்குபயன் உடைத்தே; ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே; இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க் கும்மே; மூன்றே, கொழுங்கொடி வள்ளி கிழங்குவீழ்க்கும்மே, நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீது அழிந்து திணி நெடுங்குன்றம் தேன்சொரி யும்மே; வான்கண் அற்று அவன் மலையே; வானத்து மீன்கண் அற்றுஅவன் சுனையே; ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் தாளில் கொள்ளலிர், வாளில் தாரலன்; யானறி குவன்அது கொள்ளு மாறே; சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, விரையொலி கூந்தல் நும் விறலியர் பின்வர, ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே. என்பதாகும். ------------ எல்லாப் பொருளும் உடைத்தாய், இடத்துதவும் நல்லாள் உடையது அரண் (குறள். 746) அரணுக்கு உள்ளே இருப்பவர்கட்குத் தேவையான அனைத்து இன்றி யமையாப் பொருள்களும் கட்டாயம் இருக்க வேண்டும் அதுபோல் எந்நேரம் போர் வந்தாலும் அதனைத் தயங்காது எதிர் கொண்டு, நாட்டுக்கு உதவும் நாட்டுப்பற்றும், பேராண்மையும், ஊராண்மையும், சோர்வின்மை யும், துணிவுடைமையும், மானவுணர்வும் மிக்க நல்ல வீரர்கள் எப்பொழுதும் அரணுள் அணியமாக இருக்க வேண்டும். அரணுக்குள் எப்பொழுதும் தேவையான எல்லாப் பொருளும் இருக்க வேண்டும். காலந்தவறாது கடமை புரியும் ஆற்றல் மிக்க வீரர்களும் இருக்க வேண்டும். அரணுள் வீரர்களும் வேண்டும். வீரர்கட்கு வேண்டுவன அனைத்தும் வேண்டும். ------------ முற்றியும் முற்றா தெறிந்தும், அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண். (குறள். 747) பகைவர்கள் படை திரட்டிவந்து கவரக் கருதும் நாட்டு அரணை முற்றுகை இட்டே அடிபணிய வைப்பது ஒரு வழி. இன்னொரு வழி அரணை; முற்றுகை இடாமல் யாரும் எதிர்பாரா வகையில் திடீரெனத் தாக்குதல் நடத்தி வெற்றி பெற எண்ணலாம். இரண்டும் இயலாத வழி குறுக்கு வழியில் அரணுக்குப் பாதுகாப்பாய் இருக்கும் வீரர்களை வஞ்சகத்தால் வயப்படுத்தி ஏமாற்றி அரணுக்குள் நுழைய முற்படலாம். மூன்று வழிகளில் எந்த வழியைப் பின்பற்றியும் பகைவர்களால் கைப்பற்ற முடியாத அருமை உடையதாக எந்த நாட்டு அரண் அமைந்திருக் கிறதோ அதுவே அரண் என்று சொல்லத் தகுதி உடையதாகும். அரண் வலிமை ஆனதாக இருப்பதுடன், கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் பேராண்மை வாய்ந்தவர்கள் அரணைக் காத்து நிற்க வேண்டும். அதனுடன் அழிவின்றறை போகாதாகி வழிவந்த வன்கணதுவே படை என்னும் 764குறளுக்கு ஏற்ற பாதுகாப்புப் படையையும் உடையதாய் அமைந்திருப்பதே அரிய அரணாகும். பகையை அழித்தற்கு வேண்டிய மிகுவலிமை உடையவர்க்கும், அவ்வலிமை யோடு சிறந்த அரண் வலிமையும் சேருமாயின் அது, பலவகை நலங்களை உண்டாக்கும் என்பதை முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும் (492) எனும் இடன் அறிதல் அதிகாரக்குறள் வழி தெளிவு படுத்திய கருத்தை மேலும் உறுதிப் படுத்தும் குறளே, முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண் (குறள். 748) பற்றாற்றிப் பற்றியார்முற்றாற்றி முற்றிய வரையும் வெல்வது அரண் எனக் கொண்டால் பொருள் கொள்வது எளிது. தன்னை விடாதே பற்றிய அகத்தவர், விடாதே முற்றிய புறத்தவரையும் வெல்வதற்குரிய மாட்சி உடையது அரண், என்றும் கூறலாம். வலுவாகச் சூழ்ந்து வளைத்த வரையும். நிலை தளராது நின்று வெல்வதே அரண் என்றும் கூறலாம் புரியவில்லையா. அரண் காக்கும் பணியை முழுவிருப்பத்துடன் ஏற்று, ஒன்றிய உள்ளுணர்வுடன் செய்துவரும் போர் வீரர்கள். பெரும் படை திரட்டி வந்து. பேராற்றலுடன் போர் புரிந்து அரணை முற்றுகை இட்டவரையும் வெற்றி பெற ஏந்தாக அமைந்ததே அரண் ஆகும். அதனால் தான் இடன் அறிதலில், அஞ்சாமை யல்லால் துணை வேண்டா, எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் (குறள். 497) என உறுதி கூறினார். அரண், அளப்பதற்கு அரிய வெற்றியை ஈட்டித்தரும். இடம் கெட்டுப் போனால் பலம் கெட்டுப் போகும் என்பது பழமொழி. அயோத்தியின் மதில் சூரியகுலத்து மன்னர்களை ஒத்துள்ளது என்பதைக் கம்பர். கோலிடை உலகம் அளத்தலிற், பகைஞர் முடித்தலை கோடலின், மனுவின் நூல்நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும் நோக்கரும் காவலின், வலியின் வேலொடு வாள், வில் பயிற்றலின், வெய்ய சூழ்ச்சியின் வெலற்கு அரு வலத்தின் சால்புடை உயர்வின், சக்கரம் நடத்தும் தன்மையின் - தலைவர் ஒத்துளதே என்னும் பாடல் வேறு ஒரு கோணத்தில் குறளுக்கு விளக்கமாய் அமைந்துள்ளதை உய்த்துணரலாம். ------------- முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்டது அரண். (குறள். 749) பகைவர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் படைதிரட்டி வந்து முதற் கண் அரணை முற்றுகை இட்டுப் போரைத் தொடங்குகிறார்கள். அவர்களைப் போரில் முன்னேற விடாமல் தடுப்பதுடன், அவர்கள் வீழ்ந்து அழியுமாறு, பல்வேறு உத்திகளைப் பயன்படுத்திப் போரிடுவதற்கு மேலான போர்க் கருவிகளையும் கொண்டு விளங்கும் அரணே, அரண்களிலெல்லாம் மேம்பட்ட அரணாகும். போர் தொடங்கிய சிறிது பொழுதிற்குள் பகைவரை வீழ்ச்சி அடைய வைக்கும் போர்க் கருவிகளும், கையாளும் தொழில் நுட்பமும், பேராண்மை மிக்க வீரர்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் அரணே, சிறந்த அரணாகும். முந்தி நிற்கும் பகைவர்களின் உடல்களில் நொடிப் பொழுதில் தலைகளே இல்லாத முண்டங்கள் ஆக்கும் திறம் எந்த அரணுக்குள் அமைந்திருக்கிறதோ அவ்வரணே அரண்களில் எல்லாம் மேம்பட்ட அரணாகும். மருங்கு நீர்க்கிடங்கு, வெள்ளிடை கானம் மலைஉற அகன்று, உயர்ந்து, உரங்கொண்டு ஒருங்கு பல்பொறியும் அணிந்து பேரிடத்தாய் உறுசிறு காப்பின் நல்வீரர் நெருங்கு பல்பொருளும் தழுவி, எத்திறத்து நேர்அலர் கொளப்படாது ஆகிச் சுருங்கை ஆதிகளும் பொதிந்து, அகத்து உறைவோர் தொழில் இனிது ஆற்றுவது அரணே. என்னும் விநாயக புராண விளக்கம் ஏற்புடையதே. திருவள்ளுவர் இக்குறளில் முனை முகத்தைச் சொல்வதுடன் வினைமுகத்தையும் இணைத்துச் சொல்லிச் சிந்திக்க வைக்கிறார். முனைமுகம் - போர் செய்யும் இடம் எனக் கொள்வதால் வினைமுகம் - ஆக்கவினை அதாவது பயனுறு தொழில் செய்யும் இடம் எனப் பொருள் கொண்டால் என்ன? போர் என்றாவது நடக்கும், நடக்காமல் இருந்தால் நல்லது தானே! நடந்தால் அழிவு தானே! உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாரதி பாடியது இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கமாக இருக்கலாம். உழுவார் உலகத்தார்க்கு ஆணி (குறள். 1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (குறள். 1033) சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் (குறள்.1 031) எனப்பாடும் திருவள்ளுவர் காட்டும் வினைமுகம் ஆக்க வினையில் வீறு கொண்டு மாண்புறுவது நாட்டுக்கு என்றும் நல்லது தானே! குடி தானே படை, படை தானே குடி. ஆகவேதான் நம் முன்னோர் குடிபடை என்றனர். போர்க் காலங்களில் போர் படையாகச் செயல்படுவோர். ஏனைய காலங்களில் நாட்டுக்கு உழைக்கும் நல்ல குடிமக்களாகச் செயல்படுவது தானே நாட்டுக்கு நல்லது. ஆகவே, இக்குறளுக்கு போர் மேற்கொண்டால் பகைவர்களை வீழ்த்தி அழிக்கும் திறனும், ஏனைய காலங்களில் ஆக்கம் தரும் உழவுமுதலான தொழில் மேற்கொண்டு இணையற்ற பெருமையும் சிறப்பும் எய்துவதற்கும் வாய்ப்பாக அமைந்த இடமே உயர்ந்த அரண் ஆகும். எனவும் சிந்திக்கலாம் அல்லவா? முனைமுகத்தும், வினைமுகத்தும் முத்தரை பதிக்கத் தக்கதாய் அரண் அமைவது சிறப்பாகும். திருவள்ளுவர் நாடு என்னும் முன்னைய அதிகாரத்தில் நாடு பெற்றிருக்க வேண்டிய வளங்களையும், நலங்களையும் ஒன்பது குறள்களில் அணி அணியாய்க் கூறிய வள்ளுவர் நிறைவாகப் பத்தாவது குறளை. ஆங்கமைவெ ய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமைவி ல்லாத நாடு (குறள். 740) என முடித்தது போலவே அரண் அதிகாரத்தை எனைமாட்சித் தாகியக் கண்ணும், வினைமாட்சி இல்லார்கண் இல்லத ரண் (குறள். 750) என்னும் குறட்பாவாகும். மாட்சி மிக உயர்ந்த பொருள் தரும் பண்பும் பயனும் உடைய சொல்லாகும். திருவள்ளுவர், வாழ்க்கைத் துணை நலத்தில் மனை மாட்சியை இரண்டு குறட்பாக்களில் பயன்படுத்தியுள்ளார், அவை மங்கலம் என்பது மனைமாட்சி (குறள். 50) மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் (குறள். 42) என்பனவாகும். அதிலும் மனை மாட்சி எனத் தொடங்கும் (42) குறளின் நோக்கையும் அமைப்பையும் ஒத்து அமைக்கப்பட்ட குறளே( 750) வது குறளாகும். இவ்வதிகாரத்தில் அமைந்துள்ள முன்னய ஒன்பது குறட்பாக்களிலும் அரணின் பயன். அமைப்பு, நுண்மை, திண்மை, பற்றி விளக்கி உரைத்தபின் நிறைவாகக் கூறும் கருத்து மிக நுண்ணிய கருத்தாகும். அரண், அரணுக்குரிய எல்லாத் தகுதியையும் சிறப்பையும் தன்னகத்தே கொண்ட வலிமையுடையதாக அமைந்திருப்பினும். நாட்டை ஆள்கிறவர் களும், படைத் துறையினரும். நாட்டு மக்களும் மனத் தூய்மையும், வினைத்தூய்மையும் வினைத் திட்பமும் ஒருங்கே அமைந்த வினை மாட்சியராய் அமையவில்லையாயின் மாட்சிமையுடைய அரணால் என்ன பயன் விளையும், ஒன்றுமில்லை. இடத்திற்குச் சிறப்பும் இழிவும் இடத்தில் உள்ளவர்களைப் பொறுத்தே அமையும். நல்ல வலிய இடமும் தீயவர்களால் பாழாகிவிடும். ஆகவே, ஆள்வோர் தம்மைத் தகுதி உடையவராய் வைத்துக் கொள்வதுடன். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் (குறள். 517) எனும் தெரிந்து வினையாடல் அதிகாரக் குறளுக்கு ஏற்பப் பணி யமர்த்தமும் செய்யப்பட வேண்டும். வினை மாட்சியரால் தான் அரணை மட்டுமன்று; நாட்டையும் மாட்சிமை உடைய நாடாக்க முடியும். அனைவரும் வினை மாட்சியர் ஆவோம். அரணால் சூழப்பட்ட மனையே அரண்மனை அரண் ஆற்றலைக் காட்டவிரும்புவார்க்கும் பயன் அச்சத்தால் தன்னைக் காத்துக் கொள்வார்க்கும் அரண் பயனாகும். ஆழமான அகழி நீரும் அரண் விரிந்த நிலப்பரப்பும் அரண் உயர்ந்த மலையும் அரண் இருள் நிறை காடும் அரண் அரணுக்கு உயரம், அகலம், திண்மை, அருமை நான்கும் பொருந்த அமைய வேண்டும். அரணில் காக்க வேண்டிய இடம் சிறிதாக இருக்க வேண்டும் அரண் வலிய பகையின் ஊக்கத்தை அழிப்பதாக இருக்க வேண்டும். அரண் பகைவரால் எளிதில் பற்ற இயலாததாய் இருத்தல் வேண்டும் அரணில் இருப்போர்க்கு உணவும் இருக்கவேண்டும் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாக இருக்க வேண்டும் அரணில் எல்லாப் பொருளும் இருக்க வேண்டும் போரை எதிர் கொள்ளும் வீரர்களும் இருக்க வேண்டும் அரண் முற்றுகை இட்டும் பற்ற முடியாததாய் இருக்க வேண்டும் பகைவரின் திடீர்த் தாக்குதலுக்கும் அசையாததாய் இருக்க வேண்டும் அரணைக் காப்போர் பெரும் போரையும் எதிர் கொள்பவராய் இருத்தல் வேண்டும் போர் முனையில் பகைவரை வீழ்த்தும் திறம் வேண்டும் செயல் களத்திலும் சிறப்பும் பெருமையும் அடைய வேண்டும் எல்லா மாட்சிமையும் அரணில் பொருந்தி இருக்க வேண்டும். குடியும் படையும் வினைமாட்சியராய் விளங்க வேண்டும், அரண் வலிமையும் வேண்டும் ஆள்வலிமையும் வேண்டும். ---------- 76. பொருள் செயல் வகை திருக்குறள் அறத்துப் பால், பொருட்பால் காமத்துப்பால் என்னும் முப்பாலால் இயன்ற நூல், நடுப்பாலாகிய பொருட்பாலின், மையப் பொருளை உணர்த்திக்காட்டும் அதிகாரம் பொருள் செயல் வகை என்னும் பெயர் பெற்றது, பொருளும் அதனைச் செய்யும் வகையும் பொருட் செல்வத்தின் சிறப்பும் அதனை ஈட்டும் முறையும் உணர்த்துவதும் ஆகும். பொருள் என்றால் செல்வத்தின் தனித்ததொரு சிறப்புக் கூறு: பணம் மட்டுமே அல்ல. சமுதாய மக்கள். உண்டும், தின்றும், நுகர்ந்தும் வாழ்வதற்குரிய அனைத்து ஆக்கப்படும் பொருளும், எல்லா நுகர் பொருளும் அதாவது எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் வகை அளவுகளால் அளந்தறியப் படும் பருப்பொருள்கள் அனைத்தும் திருக்குறளில் பொருள் என வரையறைப் படுத்தப்படுகிறது. மேலை நாட்டுப் பொருளியலின் தந்தை என்று போற்றப்படும் ஆடம் சுமித் 1776 ஆம் ஆண்டில் பொருளியல் என்பது நாடுகளின் செல்வம் பற்றிய ஆராய்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர், செல்வம் பற்றிய அறிவியல் கலையே பொருள், என்ற எண்ணம் மேலை நாடுகளில் பரவியது. சென்ற நூற்றாண்டில் மார்சல் பொருளியலுக்கு, அரசுப் பொருளியல் என்ற புதியதொரு பெயரைக் கொடுத்தார். மனித இனத்தின் அன்றாட வாழ்க்கையின் செயல் முறைகளைப் பற்றிய ஆய்வே, அரசுப் பொருளியல் என்றார். மேலும் அவர், நல்வாழ்விற்குத் தேவையான உடைமைகளையும் செல்வங்களையும் தேடுவதில் தனி மனிதனும் சமுதாயமும் கொள்ளும் நாட்டத்தையும், பின்பற்றும் செயல் முறைகளையும் ஆராய்ந்து அறிவது அரசுப்பொருளியல், என்பது அவருடைய முடிபாகும். திருவள்ளுவரின் பொருளியல் நோக்கு தனிப் பெருந்தன்மை வாய்ந்தது அஃது வாழ்வியலுடன் இணைந்தது, அறவியலை அடிப்படை யாகக் கொண்டு இயக்கப்படுவது. ஆகவே, திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இருபால்களிலும் எங்கெங்கே பொருளியல் நெறியைச் சுட்ட வேண்டுமோ அங்கெல்லாம் சுட்டத் தவறவில்லை என்பதை மேற்போக்காகக் கண்டாலும் தெரிந்து கொள்ள இயலும். புலால் மறுத்தல் அதிகாரத்தில் அருளாட்சியை விளக்க பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை என்னும் கருத்தை உவமை வழி விளக்குகிறார். அருளுடைமை அதிகாரத்தில் தம் பொருளை இழந்து போனவர். பின் வருங்காலத்தில் தாம் இழந்த பொருளைப் பெற்றுப் பொலிவடையவும் கூடும். ஆனால், அருளை இழந்தவர் இழந்தவரே, அதனை மீண்டும் அடைதல் அரிதாகும் என்கிறார். ஒருவன் தான் கொண்டுள்ள செல்வம் குறையாது இருப்பதற்கு வழியாது? என்றால் அவன், பிறர் உடைமையாகக் கொண்ட பொருளை விரும்பாதிருக்க வேண்டும். என வெஃகாமையில் உரைக்கிறார். அத்துடன் நடுவுநிலைமை இல்லாமல் பிறருடைய நல்வழிப் பொருளை ஒருவன் விரும்பினால் அது அவன் குடியையும் கெடுத்துப் பழியையும் அப்போதே தரும். எவ்வுயிரிடத்தும் அருளை விரும்பி அறவழியில் நின்றவன். பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளை எண்ணினால். எண்ணிய அளவில் கெட்டுப் போவது உறுதி என்பது குறள் நெறி. உலகத்துச் செல்வங்கள் எல்லாவற்றினும் சிறந்த செல்வமாவது அருட்செல்வமே. மற்றைப் பொருட் செல்வங்கள் அருளற்ற கீழோர் இடத்தும் உள்ளன. அருளை விடுத்து அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து வாழ்பவர் தாம் தேடிய பொருளையும் இழந்து உலகத்தவரால் மறக்கப்பட்டவராக ஆகிவிடுவார். பிறர்க்கு உரிய பொருளை வஞ்சகத்தால் பறித்துக் கொள்ள மனத்தாலும் கூட எண்ணக் கூடாது. திருட வேண்டும் என மனத்தளவில் நினைப்பதே குற்றமாகும். பிறர் பொருளைப் பறித்துக் கொள்ளுதலை விரும்பி, அவர் சோர்ந்திருக்கும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பவர் இடத்தில் அருள் நினைவோ, அன்புடைய செயலையோ எதிர்பார்க்க முடியாது. எனக் கள்ளாமை அதிகாரத்தில் கூறுவதைக் காண முடிகிறது. ஊக்கம் உடைமையே நிலையான உடைமையாகும். பொருளுடைமையோ, நிலைபெறுதல் இன்றி நீங்கிப் போகும் என ஊக்க முடைமையிலும் வஞ்சகத்தால் பொருள் தேடி அதனைப் பாதுகாப்பாக வைத்தல், சுடப்படாத மண்பானையில் நீரைவிட்டு நிரப்பி வைப்பது போன்றதாகும் என வினைத் தூய்மையிலும் கூறுகிறார். பண்பால் சிறந்தவர்களின் சீற்றத்திற்கு ஆட்பட்டவர், பலவகைப் பெருமையுடைய வாழ்க்கையும் மேம்பட்ட பொருட் செல்வமும் கொண் டிருந்தாலும் அவர் வாழ்வு பயனற்ற வாழ்வேயாகும் எனப் பெரியாரைப் பிழையாமையில் உணர்த்துகிறார். பெண் ஏவல் கேட்டு நடப்பவர்க்கு அறச் செயலும் இல்லை: சிறந்த பொருட் செயலும் இல்லை; மற்றை இன்பச் செயலும் இல்லை எனப் பெண்வழிச்சேறல் அதிகாரத்தில் பகர்கிறார். பொருளையே குறியாகக் கொண்ட மகளிரைப் போலியாகத் தழுவுதல், இருண்டதோர் அறையில் கிடக்கும் அயலார் பிணத்தைத் தழுவுவது போன்றதாகும். அருளாகிய பொருளை ஆராயும் அறிவு மிக்கார். பொருள் பெறுவதையே நோக்கமாகக் கொண்ட மகளிரின் கீழான இன்பத்தை விரும்பார். என்பது வள்ளுவர் வரைவின் மகளிர் அதிகாரத்தில் வரைந்ததாகும். கள்ளுண்ணாமை அதிகாரத்தில் கையில் இருக்கும் பொருளைக் கொடுத்துத் தன் உடலில் மயக்கத்தைக் கொள்ளுதல். ஒழுக்க முறையை அறியாத் தன்மை உடையதாகும். எனவும் சூது அதிகாரத்தில் உருளுகின்ற சூது வட்டினை ஓயாது உருட்டினால் பொருள் வருவாய், அவனை உருட்டி விட்டு அவனுக்கு மாறானவரிடம் போய்ச் சேரும். சூதாட்டத்தில் கலந்து விட்டால் அது பொருளைக் கெடுக்கும்; பொய்யை மேற்கொள்ளச் செய்யும், அருளை அழிக்கும், பலவகையான தொல்லைகளிலும் உழலச் செய்யும் எனக் கருத்துகளை உலவ விட்டுள்ளார். நன்றியில் செல்வம் என்னும் அதிகாரத்தில் வாழும் இட மெல்லாம் நிரம்பிய பெரும் பொருளைத் தேடியவன், அதனைப் பிறர்க்கும் கொடுத்து உதவாமல் தானும் உண்ணாமல் சேர்த்து வைத்திருப்பவன் உயிரோடு இருப்பினும் இறந்தவனாகவே கருதப்படுவான் செயலற்ற பொருளும் செயலற்ற ஆளும் ஒன்றே, என்பதுடன், விரும்பும் எல்லாமும் பொருளால் ஆகும் என்று பிறர்க்கு உதவாது இறுகப்பிடிக்கும் பொருள் மயக்கத்தால் மானிடப் பிறப்பே பெருமை இல்லாப் பழிப் பிறவி ஆகும் எனவும் அன்பை நீக்கி, அறத்தையும் எண்ணாமல், தம்மையும் வருத்திக் கொண்டு ஒருவன் தேடி வைத்தபொருளின் பயனை அயலாரே கொள்வர்; எனவும் கூறுகிறார். பொது நலங்கருதும் ஒப்புரவாளர் விடா முயற்சியோடு பொருள் தேடிச் சேர்ப்ப தெல்லாம் தகுதி வாய்ந்தவர் வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்கே என ஒப்புரவறிதல் அதிகாரத்தில் தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 212) எனும் குறள் வழியும், வறுமைப் பட்டவரது நலங்களை எல்லாம் அழிக்கும் பசியை நீக்குக; அவ்வாறு நீக்குதலே பொருளைப் பெற்றுள்ள ஒருவன், தன் பொருளைப் பாதுகாப்பாகச் சேர்த்து வைக்கத் தக்க இடமாகும் எனப் பொருட் பயனை, அற்றார் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி (குறள். 226) என ஈகை அதிகாரத்திலும் உரைத்தார். செய்யத் தக்க முறையால், தம் பொருளின் அளவை அறிந்து உதவுதல் வேண்டும். அதுவே, பொருளுக்கு அழிவு வராமல் போற்றிக் கொண்டு பிறர்க்கு உதவும் முறையாகும எனும் நுட்பத்தை வலியறிதல் அதிகாரத்தில். ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி (குறள். 477) என உணர்த்தத் தவறாதவர் திருவள்ளுவர். மிகுந்த பொருள்களால் அனைவரும் விரும்பத் தக்கதாகி, இயற்கை யாகவும் செயற்கையாகவும் எதிர்பாரா இடையூறு நேர்ந்த போதும் மிக நன்கு விளைவதே நல்ல நாடாகும். என, நாடு என்னும் அதிகாரத்தில் எதிர்பார்ப்பதைப் பெரும் பொருளால் பெட்டக்க தாகி, அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு (குறள். 732) எனத் திருவள்ளுவர் விதைத்து வந்த கருத்து மணிகளையும் கவனத்தில் கொண்டு பொருள் செயல் வகை அதிகாரத்திற்குள் நுழைவோம். பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். (குறள். 751) குற்றம் இலனாய் குடிசெய்து வாழ்வான் மதிக்கப் படுவான்; நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் மதிக்கப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயராச் சான்றோர் மதிக்கப் படுவர்; கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் ஆற்றலரும் மதிக்கப்படுவர்; வினைத் திட்பத்தால் வீறு எய்தி மாண்டார் மதிக்கப்படுவர்; புகழ்ந்தவை போற்றிச் செய்பவர் மதிக்கப்படுவர். சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகுவோர் மதிக்கப்படுவர், மெய்ப்பொருள் காணும் அறிவுடையார் மதிக்கப்படுவர். கற்பவை கசடறக் கற்ற கல்வியாளர் மதிக்கப்படுவர். முறை செய்து காப்பாற்றும் ஆட்சியாளர் மதிக்கப்படுவர். சிறப்பென்னும் செம்பொருள் காண்போர் மதிக்கப்படுவர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புபவர் மதிக்கப்படுவர். பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றுபவர் மதிக்கப்படுவர். உள்ளத்தால் பொய்யாது ஒழுகுபவர் மதிக்கப்படுவர். மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று எனக் கொண்டவர் மதிக்கப் படுவர் பழி பிறங்காப் பண்புடை மக்களைப் பெற்றவர் மதிக்கப்படுவர். நிறைமொழி மாந்தர் மதிக்கப் படுவர் பொய்தீர் ஓழுக்க நெறி நிற்போர் மதிக்கப்படுவர். இத்தகைய மேலான தகுதியொன்றும் இல்லாத வர்களும் இவ்வுலகில் மதித்துப் போற்றப் படுகிறார்கள் என்றால் அவர்கள் பொருள் வளம் பெற்றவராய் இருக்க வேண்டும். தகுதி அற்றவர்களையும் தகுதி உடைய பெருமக்களாய் ஆக்கிக் காட்டும் வல்லமை பொருட் செல்வத்திற்கு உண்டு. ஒரு பொருட்டாக மதிக்கத் தகாதவரையும், பொருட்டாக மதிக்குமாறு செய்யும் பொருட் செல்வம் அல்லது வேறு சிறந்த பொருள் உலகில் இல்லை. எனவே, பொருள் என்பது மதிப்பு உடையது. அப்பொருள் மனிதத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கருவி, அதனால் தான் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை (247) என்றார். மனிதத் தேவையும், பயனுமே எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பைத் தருகின்றன. அவையின்றேல் பொருளுக்கு மதிப்பு இல்லை. வென்றி ஆக்கலும், மேதகு ஆக்கலும் குன்றி னார்களைக் குன்றென ஆக்கலும் அன்றியும் கல்வியோடு அழகு ஆக்கலும் பொன்றும் சாகத்தினாய் பொருள் செய்யுமே. என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் மணியான எடுத்துக் காட்டாகும். அளப்பரும் விஞ்சையே அன்றி மேன்மையும் உளப்படு தன்மையும் உயர்ந்த சீர்த்தியும் கொளப்படு கொற்றமும் பிறவும் கூட்டலால் வளத்தினிற் சிறந்தது மற்றொன் றில்லையே. என்னும் கந்த புராணப்பாடலும் தக்க சான்றாகும். பூரியர் தமைவேந்தாக்கம்? புவிபுரப்பிக்கும் துய்க்கும் சீரிய உண்டி சேர்க்கும் தேவர்தம் உலகம் போக்கும் காரியம் அனைத்தும் கூட்டும், கருதலர் தம்மை வாட்டும் கூரியது இதின் மேலில்லை கொழும்பொனீர் கொண்மின் என்றார். என்னும் கம்ப ராமாயணப்பாடலும் பொருள் தரும் சிறப்பைப் பட்டியல் இட்டுக் காட்டுகிறது. .. .. .. என் சொலினும கைத்துடையான் காற் கீழ் ஒதுங்கும் கடன் ஞாலம் என்னும் நீதிநெறி விளக்கப்பாடல் வரியும் தக்க எடுத்துக் காட்டே. இல்லாரை எல்லாரும் எள்ளுவர்: செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. (குறள். 752) பொருட் செல்வம் இல்லாமல் உலகில் எவரும் வாழ முடியாது. பொருள் மிக இன்றியமையாதது. பொருட் செல்வம் உடைய வரையும், இல்லாதவரையும் கண்டு உணர்வது எளிது. பொருள் தனி மதிப்பிற்கு உரியதாய் விளங்குவதால். பொருட்செல்வம் இல்லாதவர்களை, பழகி நட்புக் கொண்டவரும் இகழ்வர்; பகைவரும் இகழ்வர்; அறிந்தவர் அனைவரும் இகழ்வர் அதனால் திருவள்ளுவர் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என்றார். பொருட் செல்வம் உடையவர்கள் தம் வாழ்க்கைத் தேவையை எளிதாய் நிறை வேற்றிக் கொள்வதுடன், வசதியாகவும் வளமாகவும் வாழமுடியும். பொருள் இருப்பதால் கவலை இல்லை. தெம்பும் தெளிவும் இருக்கும். செல்வந்தரை அனைவரும் எளிதாய் அறிந்து கொள்வர். ஊர் அறிய உயர்ந்த வீடு கட்டி வாழ்வதால், செல்வாக்கும் ஏற்படும். அவர் சொல்லுக்குத் தனிமதிப்புக் கொடுப்பர். அவர்கள் இட்ட பணியை நிறை வேற்றப் பலர் காத்திருப்பர். நேரில் காணாதவர்கள் கூட அவர்கள் பெயரைக் கேள்விப் பட்டிருப்பர். அவர்கட்கு வேறு சிறப்புத் தகுதி ஒன்றும் இல்லை எனினும் பொருட் செல்வம் ஒன்றை வைத்தே அவரை வேண்டியவர் வேண்டாதவர் நேரடியாகப் பழகாதவர்களும் கூட அவர்கட்குத் தனிச் சிறப்புத் தந்து மதித்துப் போற்றுவது உலக இயல்பு என்பதை உணர்த்தத் திருவள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன் கூறியது இற்றைக் காலத்திற்குக் கூறிய கருத்துப் போல் அமைந்துள்ளது. செல்வம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர்; செல்வம் உடையவரை அனைவரும் சிறப்புச் செய்வர். எல்லாரும் எள்ளுவர் எல்லாரும் செய்வர் சிறப்பு என எல்லாரும் என்பதைப் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் பயன்படுத்தி யதை ஆழமாக எண்ணிப் பார்க்க வேண்டும். அறம் சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும் (குறள். 1047) என்னும் குறைகளையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் (குறள். 1046) எனக் கூறும் குறள் கருத்தும் இணைத்துச் சிந்திக்கத் தக்கதாகும். பொருள்கை உண்டாய்ச் செல்லக் காணின் போற்றி என்று ஏற்றெழுவர் இருள்கொள் துன்பத்து இன்மை காணின் என்னே என்பாரும் இல்லை எனத் திருவாய் மொழியும் மொழிகிறது. கல்லானே யானாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர், இல்லானை இல்லாளும் வேண்டாள் மற்ற ஈன்றெடுத்த தாய்வேண்டாள்செல்லாது அவன் வாயிற் சொல். என்னும் நல்வழியும் குறட் கருத்தை விளக்க எழுந்ததாகும். ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் கையில் உண்டானால் காத்திருப்பர் ஆயிரம் பேர் என்னும் பழமொழிகள் பட்டறிவு மொழிகள் அல்லவா! இக்குறள் ஆசை காட்டிப் பொருள் தேடத் தூண்டும் குறள் ஆகும். ------------ எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு (குறள். 299) என வாய்மை அதிகாரத்தில் பொய் கூறாமையையே சான்றோர்கள் விளக்காகக் கொள்வர் எனக் கூறிய திருவள்ளுவர். மக்கள் அனைவரும் பொய்யா விளக்காகக் கொள்ளத் தக்கது பொருளே என்பதை உணர்த்தும் குறளே. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. (குறள். 753) என்பதாகும். குடி என்னும் குன்றா விளக்கம் (601) என்பதை மெய்ப்பிக்க, குடிப்பிறந்தவர்கள். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்; அசைவிலா ஊக்கமு டையான் னுழை. (குறள். 594) என்னும் குறளுக்கு இலக்கியம் ஆகலாம். அசைவிலா ஊக்கம் பொருள் என்னும் பொய்யா விளக்கத்தை ஏந்தவைக்கும். பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும் தன்மையுடையது. அற்கா இயல்பிற்றுச் செல்வம் ஆகவே அத்தகைய பொருட் செல்வத்தைப் பெற்றால் அதற்குப ஆங்கே செயல் என்பது திருவள்ளுவர் கட்டளை. இருட்டு வழியில், திருட்டு வழியில், வஞ்சக வழியில் பொருளைத் தேட எண்ணாதீர், இருட்டு வழியில் வந்த செல்வம், வந்த இடம் செல்லும் இடமெல்லாம் இருக்கும் ஒளியையும் இருள் ஆக்கிவிடும். மறந்து விடாதீர். ஆகவே, பொருளை ஒளி மயமான நேர்மையான வழியில் எவரையும் துன்புறுத்தாமல், எவர் வளர்ச்சியையும் தடுக்காமல், கெடுக்காமல் முயன்று உழைத்துத் திருவினைப் பெற வேண்டும். அவ்வொளி வழியில் வந்த பொருளே பொய்யா விளக்கம் அணையா விளக்கு எனப் போற்றப் படும் என்னும் மெய்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். பொருள் பொய்யா விளக்கமாக அதாவது அணையா விளக்காக விளங்கினால் அப்பொருள் விளக்கினைக் கொண்டு எந்த வித நற்பணி களையும் செய்யலாம். வீட்டு எல்லையையும், ஊர் எல்லையையும், மாநில எல்லையையும், நாட்டு எல்கையையும் தாண்டி, நாம் எண்ணும் உலக நாடுகள் அனைத்திலும் பகைமை இருளை அகற்றி நட்பு ஒளியை உருவாக்கலாம். அறியாமை இருளை அகற்றி அறிவு ஒளி ஏற்றும் கல்வி நிலையங்களை எந்நாட்டிலும் உருவாக்கலாம். அகஇருளை அகற்றி உள்ளொளி பெருக்கும் செம்பொருள் காட்டும் நிலையங்களை உருவாக்கி உள்ளொளி உலகமாய் உருவாக்கலாம். நம் திறமையை ஆற்றலை, அறிவை ஆளுமையை அறியாமல் இருந்த நாடுகளை அறியுமாறு செய்யலாம். மின் உருவாக்கும் நிலையங்களை அமைத்து மின் உற்பத்தியினைப் பெருக்கி எந்த நாட்டையும் இரவிலும் பகல் போல் ஒளிமயமாக மாற்றிக் காட்டவும் செய்யலாம். பொருள் என்னும் அணையாத விளக்கினைக் கொண்டு உலகில் மண்டிக் கிடக்கும் இருட்டுத்தன்மைகள் அனைத்தையும் வளரவிடாமல் அறுத்து விட்டு, ஒளிமயமான அனைத்து நற்பணிகளையும் செய்யலாம். இருளகற்றும் அணையா விளக்கு பொருளாகும். சப்பான் நாட்டின் பொருள் வளம் அமெரிக்க நாட்டின் செருக்கைத் தானே அடக்கிவிட்டது. சீன நாட்டின் பொருளாக்கம் முதலாளி தத்துவ நாடுகளின் செருக்கை அழித்தது. ஆனால் இந்திய நாட்டின் பொருளாக்கம் இன்மை பல நாடுகளும் எளிதாக நினைக்க ஏதுவாயிற்று. பொருள் சமுதாயத்தின் ஒளிவிளக்கு. அறம், பொருள் இன்பம் மூன்றும் தனித் தனிப் பொருள்களல்ல. மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து பிணைந்ததே வாழ்க்கை. ஆகலான் அறத்தான் வருவதே இன்பம் (குறள். 39) அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை (குறள். 49) அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை (குறள். 32) பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின், வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (குறள். 44) என எடுத்து மொழிந்த வழித் தடத்தில், மொழியும் குறளே, அறனீனும்; இன்பமும் ஈனும்; திறனறிந்து தீதின்றி வந்த பொருள் (குறள். 754) திருவள்ளுவர் எல்லாப் பொருளும் அறனும் ஈனும் இன்பமும் ஈனும் எனக் கூறினார் அல்லர். திறன் அறிந்து தீதின்றி வந்த பொருளே அறத்தையும் தரும், இன்பத்தையும் தரும் எனும் நோக்கில் கூறியுள்ள நுட்பத்தை உணர வேண்டும். திறனறிந்து வந்த பொருள்கள் அனைத்தும் அறத்தையும் இன்பத்தையும் தந்து விடாது. திறனறிந்து வருவதுடன் எவ்வகைத் தீமையும் எவர்க்கும் ஏற்படாத வகையில் அப்பொருளின் உற்பத்தி அமைந்திருந்தால்தான் அப்பொருளால் அறத்தைச் செய்யவும் முடியும் இன்பத்தை நிறைவாகத் துய்க்கவும் முடியும். தனி மனிதனின் திறனை அறிந்து உழைப்பைப் பெற்று, அந்த உழைப்புக் கேற்ற ஊதியத்தை நல்கி, தனி மனிதனுக்கோ சமுதாயத் திற்கோ எவ்வகைத் தீமையும் இழைக்காமல் வந்த பொருளே அறத்தையும் இன்பத்தையும் தரும். சான்றாக, முதலாளிகளுக்கு முதன்மை தரும் நாடுகளில், உழைப் பாளிகளுக்கு உரிய ஊதியம் தரப்படாமல் அவர்களை வருத்திப் பொருள் உற்பத்தி பெருக்கப்படுகிறது. அதனால் சக்திக் கேற்ற உழைப்பு உழைப்புக் கேற்ற ஊதியம் என்ற கொள்கைக்கு மாறாகச் சுரண்டல் நிகழ்கிறது. நாசீச நாடுகளில் மனிதர்களை இயந்திரங்களாக ஆக்கி, சமுதாயத் தீமைகளுடன் பொருள் உற்பத்தி பெருக்கப்படுகிறது. அவ்வகைப் பொருட் குவியல்களால் அறமும் சமுதாய இன்பமும் பெறப்படுவது இல்லை. குற்ற மற்ற நல்வழியில் பொருளைத் தேடவேண்டும். அப்பொருள் அறமும் தரும் இன்பமும் தரும். உரிய வழியில் ஒன்று பெற்றால் ஒன்று மூன்றாகும். ஐயமிலை இன்பம் அறனோடவையும் ஆக்கும் பொய்யில் பொருளே பொருள் மற்றல்ல பிற பொருளே என்னும் சிந்தாமணியும் ஒன்றுபட்ட நோக்கு உடையதே ஆகும். அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன் திறத்து வழிப்படூஉம் செய்கை போல என்னும் மணிமேகலையின் கருத்தையும் சிந்தனையில் கொள்வோம். ------------ அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் (குறள். 755) திருவள்ளுவரின் பொருளியல் பார்வை தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த தாகும். பொருளைத் தேடுவதிலும் காப்பதிலும் துய்ப்பதிலும் செலவு செய்வதிலும் அறநெறியை விட்டு விலகாது அமைந்திருக்க வேண்டும் என்னும் கோட்பாடு உடையவர். “xUt‹ ïšthœ¡if, gÊ¡FmŠá¥ bghUŸ njo, m¥bghUshš tªj czit¥ gF¤J©gij¡ flikahf¡ bfh©lhš m›thœî thœgt‹ tÊfËš v¥bghGJ« Fiwí©lhjš ïšiy.”(FwŸ. 44) யான் வறியவன் என்று கருதி அதனைப் போக்குவதற்காகத் தீச் செயல்களைச் யாரும் செய்யா திருத்தல் வேண்டும். Ôa brašfis¢ brŒa K‰g£lhš cŸsijí« ïHªJ nkY« t¿at‹ Mth‹.” (FwŸ.205) ஒருவன் தான் கொண்டுள்ள செல்வம் குறையாதிருப் பதற்கு வழியாது? என்றால். அவன் பிறர் உடைமையாக உள்ள பொருளை விரும்பாதிருக்க வேண்டும். (குறள்.178) அருள் நெறியை விடுத்து அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து வாழ்பவர். தாம் தேடிய பொருளையும் இழப்பர். உலகமும் அத்தகையவர் களை மறந்து விடும் என்று சான்றோர் கூறுவர். (குறள்.246) திருட்டினால் தேடிய பொருள் அளவில்லாமல் வளர்வது போலத் தோன்றினாலும் விரைவில் அழிந்து போகும் (குறள்.283) புகழ் உண்டாகத் தக்க பெரும்பொருளைப் பெறுவதாக இருந்தாலும், அப்பொருளுக்காக எவர்க்கும் துன்பம் செய்யாதிருக்க வேண்டும் என்பது குற்ற மற்ற பெரியோர் கொள்கையாகும். (குறள்.311) எளிதில் காண்பதற்கு வாய்ப்பு வழங்காதவனாகவும், எப்பொழுதும் கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனின் பெரும் பொருள் பேயினால் காக்கப்படும் பொருள் போன்று எவர்க்கும் பயனபடாது (குறள்.565) பழிவழியில் தேடிய பெரும்பொருளை விட, நேர் வழியில் வாழும் சான்றோரின் கொடிய வறுமை சிறப்புடைய தாகும். (குறள்.657) மனவுறுதியுடன் சான்றாண்மையைப் போற்றி வாழ்பவர்கட்கு, பொருள் இன்மையும் பெருமை தருமே தவிர்த்து இழிவு தராது. (குறள்.988) கோடி கோடியாய்க் கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும், நற்குடிப் பிறந்தோர், குடிப்பெருமைக்கு இழிவுதரும் எச்செயலையும் செய்யார் (குறள்.954) பெண் ஏவல் கேட்டு நடப்பவர்க்கு அறச் செயலும் இல்லை; சிறந்த பொருட் செயலும் இல்லை; அடிமை போல் நடப்பதால் மற்றை இன்பச் செயலும் இல்லை (குறள்.909) ஒன்றைப் பெற்று அது போல் நூறு மடங்குப் பொருளை இழக்கும் சூதாடிகளுக்கு நலம் பெற்று வாழ்வதற்கு ஏதாவது ஒரு வழி உண்டோ? இல்லை. (குறள்.932) எவராலும் விரும்பப்படாத கருமியின் செல்வம், ஊரின் நடுவிடத்தே கொடிய நஞ்சுமரம் பழுத்திருப்பது போன்றது. (குறள்.1008) பண்பு இல்லாதவன் பெற்ற பெரும்பொருள்; நல்ல பால் அதனை உடைய பாத்திரத்தின் தூய்மை இன்மையால் கெடுவது போல் கெட்டுப் பயனற்றுப் போகும் (குறள்.1000) தெளிந்த நீரிலே வேக வைக்கப்பட்ட புல்லரிசிக் கூழே எனினும், தன் முயற்சியால் வந்ததை உண்பதைக் காட்டிலும் பேரின்பம் வேறு இல்லை, (குறள். 1065) குறையாத விளைவும், தகுதிவாய்ந்த பெருமக்களும் கேடில்லாத செல்வரும் ஒருங்கே சேர்ந்திருப்பது சிறந்த நாடாகும். (செல்வரைச் தாழ்விலாச் செல்வர் எனச் சுட்டியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். (குறள்.731) அருள் கருதி அன்புடையராதல், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார் கண் இல். (குறள். 285) எனப் பொருள் பற்றிய தாளாண்மை நெறியையும் வேளாண்மை நெறியையும் உணர்த்த வேண்டிய இடங்களிலெல்லாம் உணர்த்தி அறநெறி காக்கும் அண்ணல் திருவள்ளுவர் படைத்த முத்தாய்ப்பான குறளே, அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். (குறள். 755) ஆகும் பொருளை எப்படியும் ஈட்டலாம். எனக் கட்டுப்பாடோ ஒழுங்கோ இன்றி மனம்போன போக்கில் ஈட்டுதல் கூடாது. தேடிய பொருளும் உரியவர்கட்கு மேலும் வளர்ச்சியையும் மலர்ச்சியையும் தந்து கொண்டு இருக்க வேண்டும். ஆகவே பொருளாக்கம் எனப்படும். யாருக்கும், எவ்வுயிர்க்கும் சிறிதளவு துன்பமும் ஏற்படாத வகையில் அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் எண்ணி அவற்றின் மாட்டு அருட்பண்பு உடையராகவும் எல்லாரும் நம்மைப்போல் இம்மண்ணுலகில் வாழத் தோன்றியவர்களே என எண்ணிப் பிறர் வளர்ச்சிக்கு நாம் எப்பொழுதும் தடையாக இல்லாதவாறு அமைவதுடன் மெலியவர்களைக் கைதூக்கி விடும் பேரன்புடையவராய்த் தம்மை உருவாக்கிக் கொண்டு, நன்கு திட்டமிட்டு முறைப்படி தொழில் செய்து பொருளீட்டி வாழ வேண்டும். அருட் பண்புக்கும், அன்புப் பண்புக்கும் பொருந்தி வாராத பொருளாக்க முறைகளைப் பின்பற்றக் கூடாது. முறையற்ற முறையை நெருங்கவும் கூடாது. அது நெருங்கி வந்தால், துட்டனைக் கண்டால் தூரவிலகு என்பதற்கு ஏற்பத் தூர விலகி விடவேண்டும். அப்பொருளே பொருளாக்கம் எனப்படுவதுடன் ஆக்கும் பொருளாகும். உறுபொருளும் உலகு பொருளும் தன் ஒன்னார்த் தெறு பொருளும் வேந்தன் பொருள் (குறள். 756) நானிலங்களில் மருத நிலம் ஒன்றே நாட்டு மக்கள் தனி உரிமை ஆக்கப் பெற்று விளை நிலமாக விளங்கியது. ஏனைய குறிஞ்சி, முல்லை, நெய்தல் அதாவது மலை, காடு, கடல் மூன்றும் நேரடியாக நாட்டிற்கு வருவாயைத் தந்து கொண்டிருக்கும். அப்பொருளும் மக்கள், நிலவரிமுதல் பல்வேறு வரிகள் மூலம் நாட்டிற்கு வழங்கும் வரிப்பொருளும் பகைமை கொண்ட நாட்டினை வெற்றி பெறுவதாலும் அழிப்பதாலும், அடக்கி ஆளச் செய்வதாலும் கிட்டும் பொருளும் ஆட்சியாளன் பெறும் பொருளாகும் எனத் திருவள்ளுவர் அவர் வாழ்ந்த முடியாட்சிக் காலத்திற்கு ஏற்ப ஒரு குறிப்புக் காட்டுகிறார் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது. குடியாட்சி மலர்ந்துள்ள இக்காலத்தில் நாட்டுக்கு நாடு, ஆட்சி யாளரைப் பொறுத்து வருவாய் தரும் வழிகள் வேறுபட்டு வருவதைக் காண இயலும். கால் கலத்தால் சேர்பொருளும் கண்ணுற்றார் தேர் பொருளும் நாலிரண்டால் கூடும் நலப்பொருளும்- கோல் தாங்கிக் கோடும் அரசிற் குறியாமே தொல் புவிக் கீழ் ஆடும் பொருளோடணைந்து. என்னும் இன்னிலைப் பாடல் கூறும் பொருள்களையும் எண்ணிப் பார்க்கலாம். மறுக்கும் செயல் நீத்து நடக்கையின் வையத் தோரை ஒறுக்கும் பொருளும் பணி வேட்கையின் ஒன்ன லாரைக் செறுக்கும் பொருளும் கவரார்விளை செல்வ மாக்கள் இறுக்கும் பொருளே இறைவர்க்கு இவர் ஈட்டும் செல்வம் என்கிறது திருவிளையாடற் புராணம் ------------ அருளென்னும் அன்பீன் குழவி, பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. (குறள். 757) ஒவ்வொருவர்க்கும் முதலில் தம்தம் குழந்தைகள் மீது அன்பு இயற்கை யாகத் தோன்றும். அந்த அன்பிலே நெஞ்சம் பழகப் பழகத் தம் உறவினர்கள் நண்பர்கள் வீட்டுக் குழந்தைகள் மீதும் அன்பு படிப்படியாக வளரும். அந்த அன்பிலே நெஞ்சம் தோயத் தோய ஊர், நாடு என்ற எல்லை யையும் தாண்டி உலகத்திலுள்ள எல்லாக் குழந்தைகள் மீதும் அன்பு பரவும், இந்தப் பரந்த அன்பே அருள் எனப்படும். அனைத்துக் குழந்தைகள் மீதும் அன்பு பாராட்டிய மனம். அகவை வேறுபாடு இன்றி வளர்ந்த மக்கள் மீதும் அன்பு செலுத்தும். அதன் வளர்ச்சி அனைத்து மக்களையும் ஒன்றாகக் கருதி அன்பால் உருகும். அவ்வுணர்வு படிப்படியே வளர்ந்து மக்கள் என்ற எல்லையையும் தாண்டி அனைத்து உயிர்களையும் ஒப்பக் கருதி அன்புடன் அரவணைக்கும்.அனைத்து உயிர்களும் துன்பமற்று, இன்புற்று வாழ எண்ணும் உளச் சுரப்பே அருளாகும். அன்புப் பெருக்காம் அருள் உணர்வுடன் எண்ணியும் உலக நலம் கருதி அருளுரை வழங்கியும். உயிர் இரக்கத்தால் தொண்டாற்றி வாழ்பவர்களே அருளாளர் எனப்படுவர். பிற உயிர்களின் துன்பங்கண்டு துடித்து உருகும் அருளாகிய பண்பு, அன்பு என்னும் உயிர்ப் பண்பிலிருந்து தோன்றி வளர்ந்த உயர்ந்த பண்பாகும். திருவள்ளுவர் பண்புகளில் எல்லாம் தாய்ப் பண்பாக விளங்குவது அன்பு எனக் கண்டுணர்ந்து உரைத்தவர். ஆகவே அதிலிருந்து தோன்றி வளர்ந்த அருளை அன்பெனும் அன்னை பெற்ற அருமைக் குழந்தையைக நமக்கு அறிமுகம் செய்கிறார். அருள் என்பது அன்புத்தாய் பெற்றெடுத்த அறம் காக்கும் குழந்தை தான். ஆனால், அன்பு தான்பெற்ற அக்குழந்தையைத் தான் வளர்ப்ப தில்லை. வளர்க்கவும் இயலாது ஏனெனில், அவ்வளர்ப்பு மனத்தில் எண்ணும் எண்ணத்தாலோ, வாயால் சொல்லும் மொழியாலோ மட்டும் வளர்க்கக் கூடியதன்று. ஈகை, ஒப்புரவு போன்ற செயலால் வளர்க்கப் பட வேண்டியதாகும். ஆகவே, அதற்குக் கட்டாயம் பொருட் செல்வம் வேண்டும். பொருட் செல்வத்தால் தான் அருள் உள்ளத்துடன் தொண்டு புரிய முடியும். ஆகவே, திருவள்ளுவர் பொருட் செல்வத்தை வளர்ப்புத் தாயாக உருவகம் செய்தார். ஆகவே அருளைப் பெற அன்பு வேண்டும். அருளைக் கடைப்பிடிக்கப் பொருட் செல்வம் வேண்டும். ஆகவே, பொருட் செல்வத்தை நேரிய வழியில், குற்றமும் தீங்கும் இன்றி, ஈட்ட வேண்டும். அவ்வாறு ஈட்டிய செல்வத்தால் அன்பையும் அருளையும் உலகில் நிலைபெறச் செய்ய வேண்டும் என ஆணையிடுகிறார். அன்புத்தாய் பெற்ற அருளாகிய குழந்தை பொருள் என்னும் வளமான செவிலித் தாயால் வளர்வதாகும். ------------ குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத் தொன்று உண்டாகச் செய்வான் வினை. (குறள். 758) ஒரு செயலைச் செய்ய முற்படுங்கால் பொருள், கருவி, காலம், செயல், இடம் என்னும் ஐந்தையும் மயக்கமின்றித் தெளிவாக எண்ணிச் செய்ய வேண்டும் (குறள்.675) என வினை செயல் வகையில் கூறியவர் திருவள்ளுவர். எடுத்த செயல் இடையூறு இன்றியும், சிரமம் இன்றி எளிதாகவும் இனிதாகவும் நிறை வேறுவதற்குக் கூறும் வழியே இக்குறள். சம வெளியில் ஒரு போர் நிகழ்கிறது. அஃது யானைகள் ஒன்றோடு ஒன்று மோதும் போர். அப்போர்க் காட்சியைப் பார்த்து மகிழ நமக்கு விருப்பம். என்ன செய்ய வேண்டும்? நாம் பக்கத்தில் நின்று பார்க்க எண்ணினால் நமக்குப் பெரிய இடையூறு ஏற்படலாம். யானையின் சினம் நம் மீதும் திரும்பலாம். தொலைவில் நின்றால் தெளிவாகப் பார்க்க முடியாது. என் செய்வது? பக்கத்தில் மலை இருந்தால் மலை மீது ஏறி நின்று கொண்டோம் என்றால் யானைப் போரை எவ்வளவு நேரமானாலும் அச்சம் இன்றி நன்றாகப் பார்த்து மகிழலாம். அதுபோல் நாம் தொடங்கிய செயலைத் தடையின்றி எளிதாக முடிக்க வேண்டுமானால் அச்செயல் செய்யத் தேவையான அனைத்துப் பொருள் களையும் அணியப்படுத்திக் கொண்டு செயலைச் செய்யத் தொடங்க வேண்டும் என்பது திருவள்ளுவர் வழிகாட்டுதல் ஆகும். கையில் பொருளை வைத்துக் கொண்டு செயல்படுதல். மலைமீது நின்று யானைப் போரைக் காண்பது போலாம். வேந்தராகிய யானைகளும், தத்தையாகிய பிடியை உடைய சீவககுமரனாகிய யானையும் தம்மில் பகைமை கொண்டு செய்த போர்த் தொழிலைக் காண்பதற்கு விஞ்சையர் மலை நெற்றியில் ஏறினார் என்பதைச் சீவக சிந்தாமணி. குடையுடை வேந்து எனும் குழாம்கொள் நாகமும் கொடிஎனும் பிடியுடைக் குமர வேழமும் வெடிபடு போர்த்தொழில் காண விஞ்சையர் இடியுடை இனமலை நெற்றி ஏறினார் எனக் கூறும் யானைப் போரையும் ஒப்பிட்டுக் காண்க: ------------- செய்க பொருளை; செறுநர் செருக் கறுக்கும் எஃதனிற் கூரிய தில். (குறள். 759) பொருளாக்கம் அன்புடனும் அருளுடனும் பிணைந்து அமைவுற வேண்டும். இந்த அடிப்படை விதிகளை முதன்மைப் படுத்தி செய்க பொருளை என்கிறார். பொருள் செய்தல் என்பது பணம் ஈட்டிச் சேர்த்தலைக் குறிக்காது. திருவள்ளுவர் பண்ட மாற்றுக் காலத்தில் வாழ்ந்தவர். செய் பொருளை என்றால், பொருளை ஆக்குக என்பதே சரியான பொருளாக இருக்கும். திறனறிந்து தீதின்றி இவற்றப்பட்ட பொருள் பகைவரது செருக்கை அடக்க வல்ல கூரிய எஃகு. பொருளை உற்பத்தி செய்க! பகைவரின் செருக்கை அழிக்கும் கூர்மையான படைக்கலன் அதனைக் காட்டிலும் வேறு இல்லை. பகைவரின் செருக்கை அடக்க, படைத்திறனைப் பெருக்கு என்று திருவள்ளுவர், கூறவில்லை. பொருள் உற்பத்தியைப் பெருக்கு என்கிறார். ஊழையும் உப்பக்கம் காணும் உழைப்பாளர்களால் தான் பொருள் வளம் பெருகும். பொருள் வளம் பெருகினால் வறுமை வாட்டம் நீங்கும். மக்கள் நோயின்றி உடல் நலத்துடன் வாழ்வர். தனி மனிதத் தேவைகளும் நாட்டின் பொதுத் தேவைகளும் நிறைவடையும். அயலவரை எதிர்நோக்கி வாழ வேண்டிய அவசியம் இல்லை. தன்னம்பிக்கையும் பெருமித உணர்வும் உண்டாகும். அயலவர் பகைமை கொள்ளவே துணியார். அவ்வாறு துணிந்து பகைமை கொண்டு போர் தொடுத்தோர் தோல்வி அடைவது உறுதி என்னும் வளர்நிலைகள் அனைத்தையும் உள்ளடக்கியே செய்க பொருளை எனத் திருவள்ளுவர் வேண்டினார். பொருள் வளம் பெருகினால் எண்ணியதை எல்லாம் நிறைவேற்றலாம். பகைமை ஒழிக்கப்படும். செய்க பொருள் ஆருஞ்செறு வாரைச் செறுகிற்கும் எஃகு பிறிதில்லை; இருந்தே உயிரும் உண்ணும் ஐயம் இலை இன்பம் அறனோடெவையும் ஆக்கும் பொய்யில் பொருளே பொருள் மற்றில்லை பிறபொருளே என்னும் சீவக சிந்தாமணிப் பாடலும் ஒத்த கருத்துக் கொண்டதே யாகும். செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உவக்கும் உதவி, ஆண்மையும் இல்லிருந்து அமைவோர்க்கு இல்லென்று எண்ணி ........................... வெஞ்சுரம் இறந்தனர் என்னும் அகநானூற்றுப் பாடல் வரிகளும், பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் ...jU« எனப் பிரிவெண்ணிப்பொருள்வயி‰சென்wநம்காதல®” என்னும் கலித்தொகைப் பாடல் அடிகளும் தெருளா தொழுகும் திறனிலா தாரைப் பொருளால் அறுத்தல் பொருளே என்னும் பழமொழியும் தக்க இலக்கிய மேற்கோள்கள் ஆகும். அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். (குறள். 754) என்னும் குறளில் ஈட்டும் நெறியும் பொருளின் பயனையும் உணர்த் தினாலும் இக்குறள் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் என நெறியை முதன்மைப் படுத்தி வலியுறுத்துவதற்காக வரையப்பட்டதாகும். பொருளின் நிறை பயனை விளக்க வந்த குறளே. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள் ஏனைஇரண்டும்ஒருங்கு (குறள்.760) உண்டாக்கும் பொருள் ஒண் பொருளாக இருக்க வேண்டும். அனைவரும் புகழ்ந்து பாராட்டும் வண்ணம் குற்றமற்ற தூய நெறியில் உண்டாக்கிய பொருள். m¥bghUis எவ்வளவு இயற்ற வேண்டும்? தம்முடைய முழு ஆற்றலையும் பயன்படுத்தி எவ்வளவு மிகுதியாக உண்டாக்க முடியுமோ அவ்வளவு மிகுதியாக உண்டாக்க வேண்டும். ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்குக் கிட்டும் அருமையான வாய்ப்பு யாது? வாழ்வியலுக்குத் தேவையான முப்பொருள்களில் பொருளாகிய பொருளைப் பெருக்கவே கடும் உழைப்புத் தேவைப்படும். அதனை முயன்று பெற்றுவிட்டால் அறமாகிய பொருளும் இன்பமாகிய பொருளும் மிக எளிதில் முயற்சியின்றித் தானே ஒன்று போல் வந்து சேரும். தேடுவது ஒன்று; ஆனால் கிட்டுவது மூன்று. ஆகவே, முதலில் புகழ் தரும் வழியில் புகழ் உண்டாக்கும் பொருளை மிகுதியாக ஈட்டுக! அறப் பயனையும் இன்பப்பயனையும் இணைந்து பெறுக என வள்ளுவர் மக்களை நேரிய வழியில் உழைக்கத் தூண்டுகிறார். சங்க காலச் சான்றோர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும் பெருமநின் செல்வம் எனச் சோழன் நலங்கிள்ளியைப் பாராட்டுங்கால் கூறிய சொற்கள் நல்லதொரு இலக்கியம் ஆகும். ணவடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவணது எய்த, இருதலையும் எய்தும் நடுவணது எய்தாதான் எய்தும், உலைபெய்து அடுவது போலும் துயர் என்னும் நாலடியார்ப் பாடலும் நல்ல மேற்கோளாகும். ------------ பெருந்தடங்கண் பிறைநுதலார்க் கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விழைவன யாவையே என்னும் கம்பராமாயணப் பாடலையும் ஒப்பிட்டு நோக்கலாம். பொருள் எவரையும் பொருளாகச் செய்யும் பொருள் பொருள் அல்லவரையும் பொருள் ஆக்கும் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் பொருள் அணையா விளக்கு பொருள் எங்கும் இருள் அறுக்கும் பொருள், அறத்தையும் இன்பத்தையும் தரும் பொருளைத் திறனறிந்து தீதின்றித் தேடுக அருளுடனும் அன்புடனும் வாராப் பொருளை அண்ட விடாதீர் உறு பொருள், உல்குபொருள், தெறுபொருள் மூன்றும் ஆள்வோன் பொருள் அன்புத் தாய்பெறும் குழந்தை அருள் அருளை வளர்ப்பது பொருள் யானைப் போரைக் குன்றேறிக் காண்க! பொருளை வைத்துக் கொண்டு தொழில் தொடங்கு செய்க பொருளை பொருள் பகை அழிக்கும் படைக்கருவி ஒண்பொருள் காழ்ப்ப இயற்றுக! பொருள் அறத்தையும் இன்பத்தையும் வரவழைக்கும் பொருள் பொய்யா விளக்கு என்பதை மெய்யாக்குவோம் ------------ 77. படை மாட்சி தனக்குத் தீங்கு செய்தவர்களைப் பொறுக்க வேண்டும் என்று தனியொருவனுக்குக் கூறி, தீங்கு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஆட்சித் தலைவனுக்குப் பொதுக் கடமையைத் திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். ஆகையால், பலருக்கு இன்னல் இழைக்கும் கூட்டம் ஒன்று உலகத்தில் இருக்கின்ற வரையில் அதை அடக்குவதற்காகப் படையொன்று இருந்தே தீர வேண்டும். அந்தப் படையைப் போற்றிப் பயன்படுத்துவது தலைவனுடைய கடமையாக இருக்கும். அந்தப் படை முடியாட்சிக் காலத்தில் பெரும் பாலும் வெளி நாட்டோடு போர் செய்வதற்கே பயன்பட்டது. குடியாட்சி முறை பலநாடுகளிலும் செம்மையாக அமைந்து விட்டால், நாட்டு எல்லை காத்தலும், உள்நாட்டுக் கலகங்களையும் குழப்பங் களையும், வரம்பு மீறிய போராட்டங்களையும் அடக்குவதற்கே பயன்படும். திருவள்ளுவர் இரண்டாம் பாலாகிய பொருட்பாலின் முதல் அதிகாரமாக இறைமாட்சி என்னும் அதிகாரத்தை அமைத்ததுடன் முதற்குறளாகக் கூறுவது, படைகுடி கூழ்அமைச்சு நட்ப ரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (குறள். 381) என்பதாகும். இறைவனாகிய நாடாளுவோன், நாடாள்பவர்களில் எல்லாம் மாட்சிமை உடையவனாய்ப் போற்றப்பட வேண்டுமானால், அவன் ஆட்சியின் கீழ் இயங்கும் நாட்டில் படைமாட்சி, குடிமாட்சி, உணவு மாட்சி, அமைச்சர் மாட்சி; நட்பு மாட்சி, அரண் மாட்சியாகிய ஆறு மாட்சிகளும் பொருந்தி இருக்க வேண்டும். மேலே கண்ட ஆறு மாட்சிகளையும் உடைமையாகப் பெற்றவனே சிறந்த இறை மாட்சி பொருந்தியவன் ஆவான். குடி, கூழ், அமைச்சு, நட்பு எனும் நான்கினையும் வரிசையாக இடையில் அமைத்துப் படையை முன் நிறுத்தியதையும், அரணை நிறைவில் அமைத்ததையும் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. பிற நாடுகளைக் கைப் பற்றித் தம் நாட்டின் பரப்பை, ஆளுகையை விரிவுபடுத்தும் ஆசை இல்லாமல் இருக்கலாம். ஆனால், தம் நாட்டின் மீது அயல் நாட்டார் படை திரட்டி வந்து முற்றுகை இட்டாலும், தொல்லை விளைவித்தாலும், தாக்குதல் நடத்தினாலும் அதனால் ஏற்படும் அழிவினின்று காக்கவும், முன்னேறி வரவிடாமல் தடுப்பதும், விரட்டி அடிப்பதும் செய்ய ஒவ்வொரு நாட்டினரும் எப்பொழுதும் அணியமாய் இருக்க வேண்டும் அரண்கள் ஓரளவு பாதுகாப்பு நல்குமே தவிர்த்து, முழுப் பாதுகாப்பு வழங்க இயலாது என்பது மட்டுமன்று, அரணையும் பாதுகாக்க வேண்டிய நிலையும் ஏற்படும். அதற்குக் கட்டாயம் படை வேண்டும். ஒரு நாட்டு அரசிற்குப் படையே அடிப்படை. படை இருப்பின் நாடு இல்லாதவனும் நாட்டைப் பெறலாம்; படை இல்லாவிடின் நாடு உடையவனும் அதை இழப்பான். ஆதலின் படையானது நாடாள்வோர்க்கு இன்றியமையாத உறுப்பாகும். தொல்காப்பியர் மரபியலில் அரசர்க்கு உரியவை எவை என்பதைக் குறிக்கும் நூற்பாவும். படையும், கொடியும், குடையும், முரசும் நடை நவில் புரவியும், களிறும், தேரும் தாரும், முடியும், நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய (தொல் 1571) எனக் கூறுவதிலும், திருவள்ளுவர் பொருட்பாவின் முதற் குறளிலும், சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் என்னும் உத்தியை அடிப்படை யாகக் கொண்டே படையை முதன்மைப் படுத்தி முதலில் கூறியுள்ளனர் என்பது அறிஞர்கள் கருத்தாகும். திருவள்ளுவர் நாட்டுக்குப் படை இன்றியமையாது வேண்டப்படுவது என உரைக்கின்றாரே தவிர்த்து, அவர் கால மரபுப்படி, படையானது போரிடும் இடம் பற்றி நிலப்படை, கடற்படை என இருவகைப்படும் என்றோ, அவற்றுள் நிலப்படை ஊர்தி பற்றி கரி, பரி, தேர் காலாள் என நான்கு வகைப்படும் என்றோ, அவற்றுள் காலாட்படை மீண்டும் கருவி பற்றி விற்படை வாட்படை, வேற்படை என மூன்று வகைப்படும் என்றோ கூறினார் அல்லர். அவை காலந்தோரும், இடந்தோரும் வேறுபடலாம். இன்று தரைப் படை, கடற்படை, வான் படை என முப்பிரிவு கொண்டு விளங்குகிறது. அதன் உட்பிரிவுகள் பலவாக அமைந்துள்ளன. திருவள்ளுவர் மாறா அடிப்படையை மட்டும் உணர்த்தி ஏனைய வற்றைக் காலம் கற்றுக் கொடுக்கட்டும் என விட்டுவிடும் நுட்பம் வியக்கப்பாலதாகும். அதிகாரத் தலைப்பு படைமாட்சி என அமைந்துள்ளது. அவ்வாறே அதிகாரம் (39) இறைமாட்சி, அதிகாரம் (87.) பகைமாட்சி, அதிகாரத் தலைப்பையும் காணுகிறோம். ஆனால் அம்மூன்று அதிகாரங் களிலும் மாட்சி என்ற சொல் கையாளப் படவில்லை. உட்கருத்தை உள்வாங்கி அமைக்கப் பட்டுள்ளது போலும். திருவள்ளுவர் மாட்சி என்னும் சொல்லின் மாட்சியை வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரத்தில், மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். (குறள். 52) மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. (குறள். 60) எனும் குறள்களிலும், சொல்வன்மை அதிகாரத்தில், வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். (குறள். 646) எனும் குறளிலும், அரண் என்னும் அதிகாரத்தில், எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண் (குறள். 750) எனும் குறளிலும் ஆக நான்கு குறட்பாக்களில் மாட்சி மாட்சிமை பெற்று விளங்குகிறது. என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு. படைமாட்சிக்குள் நுழைவோம்! ------------ உரம் ஒருவற் குள்ள வெறுக்கை அஃதில்லார் மரம் மக்களாதலே வேறு. (குறள். 600) என்னும் ஊக்கமுடைமை அதிகாரக் குறளிலும் ஒளிஒருவற் குள்ள வெறுக்கை; இளிஒருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் (குறள். 971) என்னும் பெருமை அதிகாரக் குறளிலும் வெறுக்கை, மனவூக்கத்தை உணர்த்துகிறது. ஆனால் வெறுக்கை செல்வம் என்னும் பொருளை உணர்த்துமாறு அமைந்த அருமையான குறளே. உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை! (குறள். 761) ஆகும். வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் முதன்மையானது எது? படை; எத்தகையது; வெல்படை; எந்நிலையில்? ஊறுக்கு (துன்பத்திற்கு) அஞ்சாத வெல்படையாய் இருக்க வேண்டும். நாட்டில் படையின் பங்கு? முக்கிய உறுப்பு போல் பயன்படுவது. படை நாட்டுக்குத் தேவையான உறுப்புகளில் ஒன்றாய் இருந்தால் மட்டும் போதாது. படையானது உறுப்புக்கு உரிய எல்லாத் தகுதியையும், வலிமையினையும், ஆற்றலையும், அஞ்சாமையையும், பெருக்கத் தினையும் கொண்டு, ஒன்றுபட்டு நாட்டுப்பற்றுடன் காலம் அறிந்து செயல் புரியும் கட்டுக் கோப்பான குறையில்லாத நல்ல உறுப்பாக முதற்கண் அமைந்திருக்க வேண்டும். பகைவர்களால் எவ்வளவு கொடுந்துன்பம் விளைவிக்கப்பட்டு உடலில் குருதி கொட்டப் புண்கள் பல ஏற்பட்ட போதிலும், சிறிதும் மனத்தில் அச்சம் இன்றி, தாய் நாட்டுக்கு வெற்றியை ஈட்டித் தருவது ஒன்றையே கருதிப் போர் புரியும் வீரர்களைத் தன்னகத்தே கொண்ட போர்ப்படையே நாடாள்வோர் அடைய வேண்டிய செல்வங் களிலெல்லாம் முதன்மையான செல்வமாகும். போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ் வீழ்ந்த வேரின்றி வாடும் மரமெல்லாம் - நீர்பாய் மடையின்றி நீள்நெய்தல் வாடும், படையின்றி மன்னர்சீர் வாடி விடும். என்னும் நான் மணிக் கடிகையின் எதிர்மறை எடுத்துக்காட்டு, தக்க சான்றாகும். ------------ உலைவிடத் தூறஞ்சா வன்கண், தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. (குறள். 762) படையில் சேர்வதற்கே வீரமும், அஞ்சாமையும், துணிவும் வேண்டும். உயிர்க்கு அஞ்சுபவர் போர்க்களம் செல்ல இயலாது. போர் அண்மையில் நடந்து. பகைவர் பின்னடைந்து செல்லுமாறு படை முன்னேறிச் செல்லும் போது படையில் சேர்ந்து போர்க்களம் சென்ற படைவீரர்கள் அனைவரும் தளராது ஊக்கமுடன் போர் புரிவது இயல்பு. போர் தம் நாட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள நாட்டில் நடக்கிறது. தனது நாட்டுப் படை முன்னேறிச் செல்வதற்கும் வாய்ப் பில்லை. வீரர்கள் பலர் பகைவர்களால் வீழ்த்தப் படுகின்றனர். வீரர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. களத்தில் போரிடும் வீரர்களின் உடலில் கருவி தாக்கிக் குருதி கொட்டுகிறது. இந்நிலையில் உயிர் பிழைத்தால் போதும் எனக் கருதித் தப்பிவிட எண்ணுவோர் படையில் இருக்கலாம். ஆனால், தம் படைக்கு எவ்வளவு வீழ்ச்சி ஏற்பட்ட போதும். பகைவர்களின் படைக்கருவிகளால் கொடுமையான தாக்குதல்கள் நிகழ்ந்தபோதும். முன் வைத்த காலைப்பின் வைக்காமலும், தனியொரு வனாய் நின்றும் போராடி வெற்றி பெறுவோம். அல்லது வீர மரணம் அடைவோம் என்ற ஒரே முனைப்பில் போர்க்களத்தில் போராடும் துணிவு எல்லாருக்கும் இருக்காது. அப்படி வியக்கத் தக்க துணிவு எப்படை வீரருக்கு இருக்கிறதோ அவர் எண்ணற்ற போர்க்களங்களில் கலந்து கொண்டு பல்வேறு நெருக்கடி களையும் சந்தித்த நிலைத்த படைவீரராகவும் இருக்க வேண்டும், தந்தை, பாட்டான், பூட்டன் ஆகிய முன்னோர்களும் படைவீரர்களாகவே விளங்கி வெற்றியும் விருதும் வீறும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். வழிவழி வீரர்களாக விளங்கியவர் அல்லாமல் ஏனைய வர்களால் மிகப்பெரிய நெருக்கடியிலும், துன்பத்திலும், உடல் தளர்ந்தாலும் மனந் தளராமல் போராடுவது அரிது எனத் திருவள்ளுவர் தேர்ந்து தெளிந்து கூறுகிறார். எங்கும் எந்நெருக்கடியிலும் தளராது போராடும் வீரர்களைக் கொண்ட நாடு வீழ்ச்சி அடையாது என்பது உறுதி. இத்தகைய தளர்ச்சி அடையாத வீரரைத் தான் கம்பர் அழிபடை தாங்கல் ஆற்றும் ஆடவர் எனப் போற்றுகிறார். ------------ ஒலித்தக்கால் என்னாம் உவரி? எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். (குறள். 763) எலிக் கூட்டம் கடல் போல் கத்தினாலும் என்ன பயன்? ஒரு பாம்பு சீறிய அளவில் ஓடிப் போகுமே! எலியாகிய படை திரண்டு கடல் போல் கூடி ஒலித்தாலும் நாகப் பாம்புக்கு எத்தகைய சிறு துன்பமும் விளைவிக்க இயலாது. ஆனால், ஒரு நாகம் மூச்சுவிட்ட அளவிலேயே அளவற்ற எலிக் கூட்டம் அழிந்து ஒழியும். அது போலப் பெரும் படை ஆயினும் வலிமை அற்றதாக இருப்பின் ஆண்மையுடைய ஒருவன் வீரத்திற்கு ஆற்றாது அழிந்து ஒழியும். எண்ணிக்கை முதன்மை அன்று; ஆண்மையே முதன்மை. ஆயிரம் காக்கைக்கும் ஒரு கல் போதும் என்பது பழமொழி. வனம் புகுந்த இராமனைத் தேடிப் படையொடு வந்த பரதனை, இராமனொடு போர்புரிய வந்துள்ளதாகக் கருதிய குகன் கூற்றாகக் கம்பர். எலியெலாம் இப்படை அரவம் யானென ஒலி யுலாம் சேனையை யுவந்து கூயினான் எனக் கூறுவது நல்ல ஒப்புமை ஆகும். 1965 ஆம் ஆண்டு ஆகஃச்டுத் திங்கள் பாகிசுத்தான் படைக்கும் இந்தியப் படைக்கும் சியால் கோட் பகுதியில் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. மிகக் கடுமையான போர். நமது வீரர்கள் மிகுந்த வீரத்துடன் போர் புரிந்து கொண்டிருந்தார்கள். நமது வீரர்களின் போராற்றலைக்கண்டு பகைவர்கள் அஞ்சி நடுங்கினார்கள். சியால் கோட் பகுதியில் பெரிய சுவர் ஒன்று தடையாக நின்று கொண்டிருந்தது. அந்தச் சுவரை இடிக்கத் தேர்ந்தெடுக்கப் பட்ட இருபத்தெட்டு வயது இளைஞர், அஞ்சா நெஞ்சர், கூர்த்த அறிவாளி, பொறியியல் பட்டம் பெற்ற இலக்குமணன் ஆவார். அவர் இரண்டு நண்பர்களின் துணையுடன் சென்று சுவரை வெடி வைத்துத் தகர்த்துத் தூளாக்கினார். சுவர் மறைவில் பாகிசுத்தான் படைவீரர்கள் நிறையப் பேர் போர்க் கருவிகளுடன் இருந்தனர். அவர்களைக் கண்ட இலக்குமணன் ஒரு நொடி திகைத்தார். அடுத்த நொடியில் திட்டம் அணியமாகியது. முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு பகைவர்களைப் பார்த்து மிக்க ஆண்மையுடன் நீங்கள் உயிர் வாழ வேண்டுமா அப்படியானால், உடனே போர்க் கருவிகளை வீசி எறியுங்கள். கைகளை உயர்த்துங்கள். எங்களிடம் சரண் அடையுங்கள்! எங்களுடைய பெரிய பீரங்கிப் படை பின்னால் வருகிறது. எச்சரிக்கை! என வீரமுழக்க மிட்டார். அதனைக் கேட்ட பாகிசுத்தான் வீரர்கள் நடுங்கிக் கொண்டே, கருவிகளைக் கீழே போட்டுவிட்டு! கைகளை தலைக்குமேல் தூக்கி நின்று கொண்டு சரண் அடைந்தனர். இலக்குமணன் நண்பர் இருவருடன் அவர்கள் இருந்த இடம் சென்று, அவர்கள் போட்ட கருவிகளைக் கைப்பற்றினார்கள். அனைத்துப் பாகிசுத்தான் வீரர்களின் கைகளிலும் விலங்கிட்டு நமது படை ஊர்தியில் ஏற்றி நம் படைப் பாசறையில் கொண்டு வந்து இறக்கினார். என்னும் இலக்குமணனின் செயல் முறை இக்குறளுக்கு ஏற்ற சான்றாகும். பரதன் வருகையை ஐயுற்ற குகன் தன் படையோடு தென்கரைவந்து உரைத்த வீர உரைகளில் ஒன்று; மாமுனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும் கோமுனியத் தகும் என்று, மனத்து இறை கொள்ளாதே ஏமுனை உற்றிடில், ஏழு கடற் படை என்றாலும், ஆமுனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ என்னும் கம்பர் பாடலும் நோக்கால் ஒன்று பட்டதாகும். வில்லி பாரதம், வீட்டும பருவம் எட்டாம் போர்ச் சுருக்கத்தில், ஒரு புறத்தில் இராவான் பல வடிவு கொண்டு போர் செய்கிறான் என்பதை வில்லிபுரத்தூரார் ஒரு பக்கத்திலே இந்த வீமன் மைந்தனாகிய கடோற்கசன் போர் செய்து கொண்டு இருக்க, மற்றொரு பக்கத்தில், நாக கன்னிகை ஆகிய உலூபியினது அன்புள்ள மைந்தனாகிய இராவான். அளவில்லாத பல ஆயிரம் வடிவம் கொண்டு, போர் செய்ய வல்ல அரசர்கள் பாம்பின் முற்பட்ட எலிகள் போல் அஞ்சி வருந்தி போர் செய்யும் படைகளோடு இரண்டு பக்கங்களிலும் சிதறிப் போகும்படி, அம்புகளால் ஒப்பில்லாத கொடிய போரைச் செய்தான் என்பதை, ஒருபுடை இவன் போர் செய்ய ஒருபுடை உரக கன்னி அருளுடை மைந்தன் எண்ணில் ஆயிரம் உருவமாகி இருபுடையினும் போர்வேந்தர் எலிகள் போல் ஏங்கி அம்பால் பொருபடை உருண்டு போகப் பொருவில் வெம்பூசல் செய்தான் எனப் பாரதம் கூறுவதும் ஏற்ற இலக்கியச் சான்றாகும். பகைத்திறம் தெரிதல் அதிகாரத்தில், உயிர்ப்ப உளரல்லர் மன்ற, செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார் (குறள். 880) எனக் கூறும் குறளையும் ஒப்பிட்டு நோக்குதல் வேண்டும். ----------- அழிவின் றறைபோகா தாகி, வழிவந்த வன்க ணதுவே படை. (குறள். 764) படை வீரர்கள் வழி வழியாகவே வல்லாண்மைக்குடியில் தோன்றித் தக்க பயிற்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். போரின் கண் தன் நாட்டுப்படைக்கு எந்நிலையிலும் அழிவு இன்றிக் காக்கும் மனத் திண்மை உடையவர்களாய் இருக்க வேண்டும். எதிரி விரிக்கும் வஞ்சக வலையில் சிக்கிக் கொள்ளாத அறிவுத் தெளிவும், மனத்தூய்மையும் நாட்டுப் பற்றும் உடையராயும் இருத்தல் வேண்டும். குன்றா மனவுறுதியும், பகைவரின் வஞ்சகத்திற்கு இரையாகா மாண்பும் வழி வழியாக வீர மறவர் குடிப்பிறப்பும் பொருந்தியவர் பொருந்தி இருக்கும் தன்மை வாய்ந்ததே படையாகும். மண் செறிந்த இவ்வுலகத்தின் கண்ணே பழமையும் தறுகண்மையும் உட்கொண்டு அவற்றின் மாண்பாலே பிறர் அறியா நின்ற மறக்குடியினது வரலாற்றைக் கூறியது என்பதைக் கரந்தைப் படலத்தில் குடிநிலை உரைக்கும் 14வது கொளு. மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும் கொண்டு பிறர் அறியும் குடிவரவு உரைத்தன்று எனக் குறிப்பிடுவதற்கு விளக்கமாய் அமைந்துள்ள வெண்பா, பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் கற்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முற்தோன்றி மூத்த குடி என்னும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல் தக்க மேற்கோளாகும். அதன் பொருள் வருமாறு, பண்டு இந்நிலவுலகம் தோன்றாத படி மறைத்துக் கிடந்த தெளிந்து ஆரவாரிக்கும் கடல் நீர் நாளடைவில் விட்டு நீங்கா நிற்ப, முதன் முதலாக இந்நில உலகத்தின் ஒரு பகுதியாகிய குறிஞ்சி நிலம் தோன்றி, மருதம் முதலிய ஏனைய நிலங்கள் தோன்றாத அப்பழைய காலத்திலேயே, எல்லாக் குடியினும் முற்பட வாளோடே தோன்றித் தறுகண்மையிலே முதிர்ந்த இம்மறக்குடி, பொய்மை நீங்க நாடோறும் தன் மறப்பு கழினை வளர்த்துக் கோடல் ஒரு வியப்பிற்குரிய செயலாகுமோ என்பதாகும். என் தந்தை முன்னாட் போரிலேபட்டுக் கல்லிலே பொருந்தி நின்றான்; என் கணவனும் போர்க் களத்திலே பட்டான்; என் தமையன்மார் பகைவர் முன்னே நின்று போர் செய்து போர்க் களத்திலேயே பட்டனர். என் மகன் கெட்டோடும் தனது படைக்குப் பின்னாக நின்று, பகைமன்னன் மேல் போர்க்கு விரைந்து பகைவர் அம்பு மிக்குத் தைத்தலானே எய்ப்பன்றி போலக் களத்திலே பட்டுக் கிடந்தான் என்பதைக் கன்நின்றான் எந்தை, கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தார் என்னையர்-பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மோலோடி எய்போற் கிடந்தான்என் ஏறு எனப் புறப்பொருள் மாலை கூறும் நிகழ்வும் எடுத்துக் காட்டாகும். ------------ கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல துவே படை. (குறள். 765) எவராலும் எதிர்க்க முடியாத இணையற்ற ஆற்றல் பொருந்தியவன். எவரையும் எளிதில் சாகடிக்கும் வல்லமை பொருந்தியவன் உயிர்களை உடலை விட்டு நீக்குவதே தன்னுடைய நாள் வழிப் பொழுது போக்காகக் கொண்ட காலக்கோளே கூற்றுவன் என்னும் பெயர் தாங்கிப் பெருஞ் சினத்துடன் போர்க்கோலம் தாங்கித் தம்முன் நிற்கக் கண்டு, கூற்றுவனே வந்துள்ளான் என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டும். எதிர்த்துப் போர் புரியத் தயங்காத ஆற்றல் வாய்ந்த ஆண்மையாளர் களைத் தன்னகத்தே கொண்டு விளங்குவதே தகுதியான படையாகும். காலா உன்னைச் சிறுபுல் என மதிக்கின்றேன்! என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன் எனத் துணிந்து பாரதியைப் பாடவைத்த குறளாகக் கூட இது இருக்கலாம். இக்குறளுக்குப் பரிமேலழகர் கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும் நெஞ்சொத்து எதிர் நின்று தாங்கும் ஆற்றலை உடையதே படைஎன உரை கூறுகிறார். கம்பர், சுக்கீரிவன் இராமனிடம் வீடணனைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்ற ஆய்வின் போது, கூற்றுவன் தன்னொடு இவ்வுலகம் கூடிவந்து ஏற்றன் என்னினும் வெல்ல ஏற்றுளம் மாற்றவன் தம்பி என்கின்றான். கம்பர் நமனோடு உலகமே திரண்டு வந்தாலும் எதிர் நின்று வெல்வதே படை என்கிறார். இருவருக்கும் கூடி என்ற சொல்லுக்குப் பொருள் காணும் வகையில் கருத்து வளர்ச்சியில் வேற்றுமை காணப்படுகிறது. கூடி என்பது படைகள் நெஞ்சு ஒத்து என்பது பரிமேலழகர் கருத்து, உலகமே ஒருங்கு கூடி என்பது கம்பர்கருத்து. படையில் தனித் தனி வீரரின் அஞ்சாமையும் ஆற்றலும் சிறப்புடன் அமைவதை விட மொத்தப் படைவீரர்களின் திறமையே முக்கியம். பகைப்படை வலிமை பொருந்தியதாக இருப்பின் படைவீரர்கள் தனித் தனியாகவோ, குழுக்குழுவாகவோ பிரிந்து சென்று போரிட்டுத் தோல்வியைத் தழுவிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் படைவீரர்கள் அஞ்சாமல் ஒருங்கு திரண்டு எதிர்த்து நின்று ஆற்றலைக் காட்டுவதே படைக்கு இலக்கணம் ஆகும். ஆகவே, கூடி என்பது வீரர்களின் ஒன்றுபட்ட கூட்டு முயற்சியையே உணர்த்தவதாகக் கொள்வதே ஏற்புடைய தாகும். அமெரிக்கா தயாரிக்கும் ஒருவகைப் போர் விமானம் சாபர் செட் என்னும் பெயருடையது. அது மிக வலிமை வாய்ந்ததாகும். ஏழாயிரம் அடி உயரம் வரை, பறக்கும் திறன் கொண்டது. பலமணி நேரம் வேண்டு மானாலும் வானத்தில் பறக்கும். பெங்களூரில் தயாரிக்கும் போர் விமானத்திற்கு நாட் என்பது பெயர். அது குறைந்த வலிமையுடையது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பறக்க முடியாது. அதில் ஒருவர்தான் பயணம் செய்ய இயலும். சாபர்செட் பருந்து போன்றது என்றால் நாட் கோழிக்குஞ்சு போன்றிருக்கும். 1965 ஆம் ஆண்டு போர் நடந்து கொண்டிருந்தது. சாம்ப் பகுதியில் பாகிசுத்தான் விமானங்கள் ஏராளமாய்ப் பறந்து குண்டு மழை பொழிந்தன. அனைத்தும் சாபர் செட் விமானங்கள். அவைகளை அழிக்க அனுப்பப்பட்ட விமானப் படை வலவன் கீலர் என்பவர். அஞ்சாமையும் துணிவு மிக்க முப்பது வயது இளைஞர். நாட் போர் விமானத்தில் ஏறிப் போரிடும் பயிற்சி பெற்றவர். வாயு சேனாப் பதக்கம் பெற்றவர். அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றவர். கீலர் நாட் விமானத்தில் ஏறி சாபர் செட் விமானம் ஒன்றுடன் போர்புரியத் தொடங்கினார். சாபர் செட் விமானம் நாட் விமானத்தை விரட்டியது, நாட் விமானமோ நினைத்த திசையில் விரைந்து பறந்தது. சாபர் செட் ஆடி அசைந்து பறந்தது; நாட் விமானத்தைத் துரத்தியது. கீலர் சிறிதும் கலங்காமல் நாட் விமானத்தை மிக நுட்பமாகத் செலுத்திக் கொண்டு இருந்தவர், திடீரென்று சாபர் செட் விமானத்தின் கீழே பறக்கத் தொடங்கினார். நாட் விமானம் சென்ற இடம் சாபர் செட் விமானத்திற்குத் தெரிய வில்லை. வானில் சுற்றிச் சுற்றி நாட் விமானத்தைத் தேடிக் கொண்டு இருந்தது. அந்நேரம் கீலர் சாபர்செட் விமானத்தின் அடிவயிற்றை நோக்கிப் பட பட எனச் சுட்டுத் தள்ளி விட்டு, அந்த இடத்தை விட்டு விலகிப் பறந்தார். சாபர் செட் விமானத்தில் தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரம் வானத்தில் தள்ளாடியது. பிறகு தலை கீழாகத் தரையில் வீழ்ந்து நொறுங்கித் தூளானது. கீலர் குறளுக்கு எடுத்துக் காட்டான படைவீரர். --------------- மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு. (குறள். 766) நாட்டிற்கு வலிமையான பாதுகாப்பு வழங்குவதைக் கடமையாகக் கொண்ட படையையும் பாதுகாக்க வேண்டும். படையைப் பாதுகாக்க வேண்டுவன எவை? எத்தனை? என்னும் வினாவிற்கு விடை அளிக்கும் குறள் இதுவாகும். மறம், மானம், மாண்ட வழிச் செலவு, தேற்றம் என்னும் நான்கும் படைக்குப் பாதுகாப்பாகும். அச்சமற்ற தன்மை, வீரத்துக்குத் தகாத பழி பாவங்களைச் செய்து விடக் கூடாதென்ற மானம் உடைமை, பார்த்தவர்கள் மதிக்கும் படியாக அணிவகுப்புடன் நடக்கும் பீடு நடை, மேற்கொண்ட போரை நடத்த வேண்டிய திட்டத்திலும், முறையிலும் தெளிவான அறிவு ஆகிய இந்த நான்குமே படையின் பெருமைக்குக் காவலாக உள்ளவை. மறம்-வீரம்; மானம்-மானம், தேற்றம் -தெளிவு. எனப் பொருள் காண்பதில் அறிஞர்கள் வேறுபடுவதற்கு வழியில்லை. ஆனால் மாண்ட வழிச் செலவு அறிஞர்களைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. நல்வழிச் சேறல்-என மணக்குடவர், பரிப்பெருமாளும் மாட்சிமைப்பட்ட வழிச் செலவு எனக் காளிங்கரும் முன் வீரராயினார் சென்ற நன்னெறிக் கண் சேறல் எனப் பரிமேலழகரும் கவிராசபண்டிரும். கண்டவுடன் மாற்றாரும் அஞ்சும் கம்பீரமான வழி நடை என நாமக்கல்லாரும். உயர்ந்த வீரர் ஒழுகிய நல்வழியில் ஒழுகுதல் எனப் பாவாணரும். நல்ல மறக்குடியில் பிறந்திருத்தல் மு.வரதராசனாரும். புகழ்பெற்ற முன்னோர் வழிவந்த நன்னடத்தை என மயிலை சிவமுத்தும் புகழ் பெற்ற முன்னோர் நெறியில் நடப்பதும் எனத் தமிழ்க் கா.சுப்பிரமணியனாரும். சிறந்த வழியில் நடக்கும் நடத்தை என யாதுமாகியும் நல்ல நடத்தை என வைகைச் செல்வனும் பொதுமக்களைச் சீண்டாத ஈரம் என இரா.கனகசுப்புரத்தினமும். சிறந்த நடை என வ.சுப.மாணிக்கனாரும் பகை வீரரை அன்றி மற்றவர்க்கு இடையூறு செய்யாத பெருமையான செல்லுகையும் என இரா. இளங்குமரனாரும். மாண்ட வழிச் செலவை மாண்புடனே சிந்தித்து உரைத்துள்ளனர். மாண்ட வழிச் செலவில் தான் படை மாட்சி அமைந்துள்ளது. போர் வீரர்கள் வீரம் உடையவர்கள். மானம் போற்றுபவர்கள் கடமையில் தெளிவுடையவர்கள், நாட்டுப் பற்று உடையவர்கள். நாட்டுக்குப் பகைவர்களே அவர்கட்குப் பகைவர்கள். மற்றவர்களை எல்லாம் உற்றாராக உறவினராகக் கருதி நடக்கும் பண்பாளர்கள், அவர்கள் போர்க் களத்தில் தான் கொலை செய்ய அஞ்சாதவர்கள். ஆனால் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அருளாளர்கள். போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று போரிடுபவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் வணங்கத்தக்க பண்பாளர்களாய் விளங்க வேண்டும் என விரும்புவர் திருவள்ளுவர் ஆகவே அவர்கள் வழிச்செலவு திருச்செலவாக, உயர் பண்புகளின் உறைவிடமாக விளங்குவது நல்ல பாது காப்பாகும் என்கிறார். ------------ தார்தாங்கிச் செல்வது தானை, தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. (குறள். 767) பகைவரது படை எவ்வாறு அணி வகுத்து வருகிறதோ அதற்கு ஏற்றவாறு தம்முடைய படையின் அணிப்பகுப்பையும் அமைத்துக் கொள்ளவும் வேண்டும். பகைவரது முன்னணிப் படையைத் தன்னாட்டுக்குள் நுழைய முடியாதவாறு முன்னே சென்று தடுத்து நிறுத்தி அதன் மேற்சென்று பொருதுவதே போர்ப்படை ஆகும். முல்லை மாலையை உடைய நம் அரசனுடைய காலிலே யாத்த வீரக்கழலினை உடைய போர் மறவரின் செய்தியாவன, தம்முடைய சுற்றத்தாராகிய மறவர்களில் தாம் மேம்பாடு எய்துதல், பகைவரது தூசிப் படையைத் தடுத்து நிற்றல், எம்படை மறவருள் யாம் இத்தகைய சிறப்பினை உடையோம் என்று எண்ணுதல், போரின்கண் விரைந்து அழிக்கும் ஊழித்தீப் போன்று முற்படப்புகுதல் ஆகிய இவைகளாம் என்னும் செய்திகளைக் கீழ்க் காணும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல் வழி அறியலாம். தமருள் தலையாதல், தார் தாங்கி நிற்றல் எமருள்யாம் இன்னம் என்று எண்ணல்-அமரின் முடுகு அழலின் முந்துறுதல், முல்லைத்தார் வேந்தன் தொடுகழல் மைந்தர் தொழில் என்பது இலக்கணவழி நல்ல இலக்கியச் சான்றாகும். அமெரிக்கா பாகிசுத்தானுக்குத் தந்த ஆயுதங்களில் பேட்டன் டாங்கியும் ஒன்று. அது ஒரு புது வகைக் கருவி, பன்னிரண்டு மைல் சுற்றளவு சுடும் திறன் வாய்ந்தது. அப்படிப்பட்ட டாங்குகளில் எழுபதை ஒரே நாளில் நமது படை வீரர்கள் நொறுக்கி இருக்கிறார்கள். அப்துல் அமீது என்னும் இந்திய வீரர் மட்டும் ஒரே நாளில் மூன்று டாங்கிகளை நோறுக்கி இருக்கிறார். அப்துல் அமீது காவல் பொறுப்பில் இருக்கும் போது ஒரு நாள் திடீரென பகைவர்கள் பேட்டன் டாங்குகளுடன் வந்து கொண்டு இருப்பதைக் கண்டார். அவர் கையில் இருந்தது அறுபது அடித்தூரம் வரை சுடும் திறன் கொண்ட சுழல் துமுக்கி மட்டுமே! தன் ஊர்தியை ஓர் ஓரத்தில் நிறுத்தி விட்டு, அதன் மறைவில் நின்று கொண்டே முதலில் வந்த மூன்று டாங்கு களையும் சுட்டு வீழ்த்தினார். நான்காவது டாங்கிக்கு குறிவைக்கும் போது பகைவர்கள் எய்த குண்டு அவர் உடலில் பாய்ந்தது. குருதி கொட்டியது. எனினும் உடன் இருந்த வீரர்களுக்கு செல்லுங்கள்! செல்லுங்கள்! பகைவர் களைக் கொல்லுங்கள் என ஆணையிட்டவாறே உயிர் துறந்தார். இந்தியப் படை வீரர் அப்துல் அமீதின் வீரச் செயலும் சிறந்த எடுத்துக் காட்டாகும். ----------- அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும், தானை படைத் தகையால் பாடு பெறும் (குறள். 767) பகைவர் நாட்டுப் படைகள் எல்லாம் ஒரே தன்மை உடையதாய் இருப்பது இல்லை. நம் படையை விடக் குறைந்த எண்ணிக்கையும் குறைந்த கருவிகளும் குறைந்த திறனும் உடையவர்கள். நாட்டின் மீது படை எடுத்து வந்து போர் தொடுத்தால் வெற்றி பெறுவது எளிது. பகைப் படை இணையான வலிமையும், திறனும், ஏனைய வாய்ப்புகளும் அமைந்ததாக இருப்பின், முழு ஆற்றலையும் பயன்படுத்தி நுட்பமாகப் போரிட்டால்தான் காலந்தாழ்த்தி யாவது வெற்றி கிட்டும். பகைவர் எல்லா நிலைகளிலும் மேம்பட்ட வலிமை உடையரானால், அவரை எதிர்த்து நின்று போர் புரிதல் எளிதன்று! பகைப்படை முன்னேறி வராமல் தடுத்து நிறுத்துவதும், அவர்களின் தாக்குதலைத் தாங்கிக் கொள்வதும் எளிதன்று. ஆனால், படையை வழி நடத்தும் தலைவன் தகுதி பொருந்தியவனாக அமைவான் ஆயின் படைக்குப் போர் மேற்சென்று தாக்கும் வன்மையும், எதிரிப் படையால் தனக்கு அழிவு நேராமல் தாங்கிக் கொள்ளும் வலிமையும் உண்மையிலேயே இல்லாவிட்டாலும், சாதித்துப் பெருமை அடைய முடியும். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் அடற்றகையும் ஆற்றலும் நம் படைக்கு இல்லையே என்று கவலைப் படாமல் துணிந்தால், துணிவே துணை என்பது உண்மை மொழியாய் நின்று உதவும். வலி அறிந்து, காலம் அறிந்து, இடம் அறிந்து போரிட்டால் சிறிய படை கொண்டு பெரும்படையையும் வெல்லலாம். என நம்பிக்கை ஊட்டும் குறட்பா இதுவாகும். ------------ சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. (குறள். 769) படையினரிடம் இருக்கக் கூடாதது சிறுமை, துனி, வறுமை மூன்றுமாகும். படைஞர் நாடு காப்போர்; நாட்டின் மானங்காப்போர்: நாட்டுக்குப் பெருமையையும் உருவாக்கி, மாற்றார் மதித்துத் தலை வணங்குமாறு செய்ய வேண்டியவர். நாடாள்வோரும் நாட்டு மக்களும் அவர்களிடம் வைத்துத்துள்ள மதிப்புக்கும், ஒப்படைத்த பொறுப்பிற்கும், ஏற்றுள்ள பதவிக்கும் ஏற்ற உயர்ந்த பண்பாளர் களாயும் இருக்க வேண்டுமே தவிர்த்து. அவர்களைக் குறைத்து மதிப்பிடும் தீய இயல்புகள் எதுவும் அவர்களிடம் இருக்கக் கூடாது. படைஞர்கட்கு நாட்டின் மீதும், நாடாள்வோர் மீதும், உடன் இருந்து செயற்படும் படைஞர் மீதும், தான் ஏற்றுக் கொண்ட அல்லது பங்கு பெறும் போரிலும் ஈடுபாடு, பற்று நம்பிக்கை இருக்க வேண்டுமே தவிர்த்து, வெறுப்புணர்ச்சி கட்டாயம் இருக்கக் கூடாது. சில நொடி வந்து போகும் வெறுப்பு இருப்பது கூடக் குற்றமில்லை. ஆனால் வேண்டாத, நீக்க முடியாத வெறுப்பாகிய மனக்கசப்பும் இருக்கக் கூடாது. படைஞர்கள் மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார், உறவினர் ஊர், நாடு கடந்தும் போரிடப் போகிறவர்கள். ஆகவே, அவர்கள் வாழ்க்கைத் தேவையை நிறை வேற்றிக் கொள்வதிலோ குடும்பத்தினர் கவலை இன்றி, வளத்தோடும் நலத்தோடும் வாழ்வதற்கும் எந்தப் பொருள் முட்டுப்பாடும் இருக்கக் கூடாது. படைஞர்களிடம் இழிந்த பழக்கங்களும் வழக்கங்களும், நீங்கா வெறுப்புணர்ச்சியும், வறுமைத்துயரும் இல்லையானால் அப்படை வெற்றி கொள்ளும் படையாகும். ------------ ஆங்கமை வைய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு (குறள். 740) என்பது நாடு எனும் அதிகார நிறைவுக் குறளாகும். எனை மாட்சித தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண். (குறள். 750) என அரண் அதிகாரத்தின் பத்தாவது குறளின் அணுகுமுறை போன்றே, இவ்வதிகாரத்தின் நிறைவுக் குறளையும். நிலை மக்கள் சால உடைத்தெனினும், தானை தலை மக்கள் இல்வழி இல் (குறள். 770) என அமைத்துள்ள நுட்பம் உணரற்பாலது. வழி வழி வந்த படைவீரர்கள் நிறைந்த படை வரிசை சிறப்பாக அமைந்து இருந்தாலும், அதனை வழி நடத்திச் செல்லத் திறமையும் தகுதியும் வாய்ந்த ஆற்றல் மிக்க சிறந்த தலைவன் இல்லையானால் பயன் இல்லை. படையின் தகுதி தலைவனைப் பொறுத்தே அமையும். வானரச் சேனையைக் காக்குமாறு இராமன் தம்பிக்கு, காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால், கவியின் சேனை போக்கு அறப் போகித் தத்தம் உறைவிடம் புகுதல் உண்டால்; தாக்கி, இப்படையை முற்றும் தலை துமிப்பளவும், தாங்கி, நீக்குகுதி, நிகுதர் ஆங்கு நெருக்குவார் நெருங்காவண்ணம் என்னும் கம்பர் பாடலும் தக்க சான்றாகும். மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது என்கிறது கொன்றை வேந்தன். தலைவன் நிற்கத் தண்டு நிற்கும்; தலைவன் மயங்கச் சர்வமும் மயங்கும் என்னும் பழமொழியும் ஒத்த கருத்துடையதே! ------------ வலிமை வாய்ந்த படையே முதன்மையான செல்வம் தொல்படை தொலைவிடத்தும் அஞ்சாது போரிடும் எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் கடல் அன்ன கோழைகளையும் வீரன் ஒருவன் வெல்வான் எதிரிகளால் எவ்வழியாலும் வீழ்த்த முடியா வீரர்களைக் கொண்டதே சிறந்த படை எமனுக்கும் அஞ்சா ஆற்றலுடையதே படை எவனுக்கும் அஞ்சாது எதிர்நிற்கும் ஆற்றலுடையதேபடையாகும். படை வீரர்களை மறமும் காக்கும் படைஞர்களை மானமும் காக்கும் படைக்கு ஏமம் மாண்ட வழிச் செலவு படைக்கு ஏமம் தெளிந்த அறிவு பகைப் படையின் போரைத்தடுக்க முயல் முன்னணிப் படையுடன் எதிர்நின்று போரிடு எதிரியைத்தாக்கும் வன்மையும் வேண்டும் படைத் தலைமையால் படை பெருமை பெறும் படையினரிடம் சிறுமை இல்லையாயின் படைவெல்லும் வெறுப்பின்றிப் போர்புரிவோர் வெற்றி பெறுவார் வெல்லும் படைக்கு வறுமை தடையாகும் தக்க தலைமை இல்லாப் படையால் பயன் இல்லை ------------ 78. படைச் செருக்கு பல்வேறு பட்ட தன்னலக் குழுக்களும், பாழாக்கும் உட்பகைகளும், ஆளுவோரை முறையே ஆளவிடாமல் ஆட்டிப் படைக்கும் கொலை செய்யவும் அஞ்சாத குறும்புக்காரர்களும் இல்லாத இனிய நாட்டை உருவாக்க வேண்டுமானால் பெருமிதம் மிக்க படை நாடுகளுக்குக் கட்டாயம் வேண்டும். படை, படையாகச் செயல்பட வேண்டுமானால் நாடாள் வோரிடம் கல்வி, அறிவு, ஈகை, எளிமை, இனிமை ஆகிய மெல்லிய தன்மைகள் மட்டும் இருந்தால் போதாது. அஞ்சாமை, தூங்காமை, ஊக்கமுடைமை, துணிவுடைமை, மறன் இழுக்காமானவுணர்வு ஆகியவன்தன்மைகளும் கட்டாயம் இருக்க வேண்டும். ஆட்சியாளர் மேற்கொள்ளும் எச்செயலையும் நன்கு சிந்தித்தே செயல்பட வேண்டும். ஆராயும் வகையால் ஆராயாமல் ஒரு செயலை செய்யத் தொடங்குவது பகை என்னும் பயிரைப் பாத்தி கட்டி வளர்ப்பது போன்றதாகும். எச்செயலைச் செய்ய விரும்பினாலும் செய்ய முற்படுபவன் தன் வலிமையையும், செயலின் வலிமைகளையும், பகைவர்களின் வலிமை யையும் இருபக்கத்தார்க்கும் துணையாய் அமைவாரின் வலிமையையும் சீர் தூக்கிப் பார்த்துச் செய்தல் வேண்டும். வலிமைஅறியாமல் சிக்கலில் சிக்கிக் கொள்ளல் ஆகாது. பகற் பொழுதில் காக்கை தன்னிலும் வலிமை வாய்ந்த கூகையையும் வெல்வதைக் காணும் நாடாள்வோர். தாம் வெற்றி பெறுவதற்கு ஏற்ற காலத்தை அறிந்து செயலாற்ற வேண்டும். ஊக்கமுடையவன் தக்க காலம் கருதிப் பின்தங்கி இருப்பது, போர்க்கடா முன்னேறித் தாக்குவதற்காகப் பின் வாங்கிச் செல்வது போன்றதாகும். தன்னினும் வலிய பகைவரைக் கண்டால் அவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவது போல் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்க்கு அழிவுவரும் காலத்து நிலைமை தலைகீழாக மாறிவிடும். பகையை அழிப்பதற்கு வேண்டிய முழுவலிமையும் உடையவர் களுக்கும். அவ்வலிமையோடு சிறந்த அரண் வலிமையும் சேருமாயின் அது பலவகை ஆக்கங்களைத் தரும். பெரும் படையுடையவன் எனினும் போர் மேற்கொண்டு சிறிய படையுடையவன் இடத்திற்குச் செல்வான் எனின், அவன் படையின் ஊக்கம் அழிந்து விடும். பாதுகாவல் நலனும் படைச் சிறப்பும் இல்லாதவரே எனினும், அப்பகை மாந்தர் நிலைத்து வாழும் இடத்தை நெருங்கிப் போர் புரிதல் நல்லதன்று. அஞ்சி நடுங்குவார்க்கு எத்தகைய வலிமையான அரணாலும் பாதுகாப்புக் கொடுக்க இயலாது. அம்பு தன் உடலில் ஆழமாய்ப் பாய்ந்து இருந்தாலும் அதையும் தாங்கிக் கொண்டு தன் கடமையில் சோர்வடை யாமல் ஊன்றி நிற்கும் பயிற்சி பெற்ற போர் யானை. அதுபோல் ஊக்கமுடன் போர் புரிவோர் தமக்கு அழிவு வரும் இடத்தும் சிறிதும் பின்னடையார். உடல் பெரியதாகவும், கூர்மையான கொம்பினை உடையதாக இருப்பினும் காட்டில் வாழும் யானை, சிறிய உருவமும் கொம்பும் இல்லாத புலி ஊக்கமாகத் தாக்கும் போது அஞ்சி வெருண்டு விடும். முயற்சி இல்லாதவன் செய்ய நினைக்கும் உதவி, எதற்கும் அஞ்சும் கோழை ஒருவன் கையில் வைத்துள்ள படைக்கலம் போல் பயனின்றிப் போகும். போரையும், செயலையும், தொடங்கினால் அரை குறை இன்றி முடித்து விட வேண்டும். இல்லையேல் அவை அணையா நெருப்புப் போல் வளர்ந்து அழிக்கும். வலிய வீரம் இல்லாதவர் படைக் கருவிகளை வைத்திருப்பதால் என்ன பயன்? ஒன்றுமில்லை. போர் முனையில் பகைவர் வீழ்ந்து அழியுமாறு, செயல் திறங்களில் மேம்பட்ட போர்க் கருவிகளைத் தன்னிடத்தில் கொண்டுள்ளதே சிறந்த அரண் ஆகும். பொருள், பகைவர் செருக்கை அழிக்கும் கூர்மையான போர்க் கருவி ஆகும். போர்க்களத்தில் உதறிவிட்டு ஓடும் அறிவிலாக் குதிரை போன்றவரின் நட்பை விடத் தனிமையாய் இருப்பது மேல். பகைவர் வணங்கும் கையினுள்ளும் கொலைக்கருவி மறைந் திருக்கும். அவர் அழுத கண்ணீரிலும் வஞ்சகம் இருக்கும். உள்ளார்ந்த ஒட்டுறவு இல்லாப் பகைவர்க்குப் பின்னே சென்று, ஒருவன் மானம் கெட வளமாக வாழ்வதைக் காட்டிலும் வளம் குன்றினாலும் மானம் போற்றி வாழ்வதே நல்வாழ்வு. குடும்பத் தலைமை போல், போர்க்களத் தலைமையும் தாங்குவார் மேலேயே வரும். எனப் போர்ப்படை தொடர்பான பல்வேறு கருத்துகளைத் திருக்குறளகத்துக் கற்று உணர்ந்தவற்றையும் சிந்தனையில் கொண்டு இனி அவர் கூறும் படைச் செருக்கைக் காணுதல் நலம் பயக்கும். படைச் செருக்கு, படைகளின் பேராண்மையினையும், படையின் பெருமிதத்தையும் உணர்த்தும். ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே; ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்னும் பாடல் சங்கச் சான்றோர் பொன்முடியார் பாடியது. புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. மைந்தனைப் பெற்று வளர்த்தல் தாயின் தலைமையான கடமை ஆகும். அம்மைந்தனை வீரம் உடையவன் ஆக்குவது தந்தையின் கடமை; போர்க்கு வேண்டிய கருவியை ஆக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை; தக்க படைப்பயிற்சி அளிப்பது ஆள்வோனின் கடமை; என நால்வர் கடமையையும் ஒவ்வொரு அடியில் கூறிய பொன் முடியார், வீரர்களின் கடமையே அனைவர் கடமையினும் சிறப்புக்குரியது என்பதை உணர்த்துமாறு இரண்டு அடிகளை எடுத்துக் கொண்டார். ஒளி வீசும் போர்க் கருவிகொண்டு வெல்லுதற்கரிய போரில் யானையை அழித்து வெற்றியுடன் திரும்புவதே வீரர்களின் கடமை என உணர்த்தினார். நாடு காக்கும் பணியிலும், நாட்டுக்கு நலந்தரும் பணியிலும் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு உயிரையும் ஒரு பொட்டாகக் கருதாது போரிடும் பேராண்மையராய் கால் வழியினர் விளங்க வேண்டும். ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும், பேணித் தென்புல வாழ்நர்க்கு அறுங்கடன் ஈர்க்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தில் கொல் களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி: தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈந்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. எனப் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமை யார் பாடிய பாடல் பழந்தமிழர் போரில் அறம் போற்றிய சீர்த்தியைத் தெள்ளிதின் புலப்படுத்தும். வீறின்மையின் விலங்காம்என மதவேழழும் எறியான் ஏறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சில் என்று எறியான் மாறன்மையின் மறம் வாடும் என்று இளையாரையும் எறியான் ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன். என்னும் சிந்தாமணிப் பாடல் பேராண்மையின் பெற்றியைப் புலப்படுத்தும். ------------ என்ஐமுன் நில்லன்மின் தெவ்வீர்; பலர் என்ஐ முன்நின்று கல் நின்றவர். (குறள். 771) படைவீரன் ஒருவன், தன் நாட்டுப் படையுடன் போர் புரிய வந்த பகைவர்களை நோக்கித் தன் நாட்டுப் படையின் பேராண்மைத் திறத்தையும் தலைவனின் தறுகண்மையையும் நேருக்கு நேர் நின்று எடுத்துரைக்குமாறு அமைந்துள்ள குறட்பாவாகும். நம்பன் சிலைவாய் நடக்கும் கணைமிச்சில் அல்லால் அம்பொன் முடிப்பூண் அரசும் இலை எனச் சீவக சிந்தாமணியில் பதுமுகன் கூறினாற்போல ஒரு வீரன் தன் மறத்தை வேந்தன் மேல் வைத்துக் கூறியவாறு இக்குறட் பாவைக் கொண்டால் இது நெடுமொழி வஞ்சித்துறை சார்ந்ததாகக் கொள்ளலாம். பகைவர்களே! என் தலைவன் பல களங்களில் வெற்றி பெற்றவன் அவனை எதிர்த்துப் போரிட்டவர்கள் அனைவரும் மாவீரர்கள் தான் ஆனால் அவன் அவர்கள் அனைவரையும் வீழ்த்தினான். அவர்கள் அனைவரும் மாண்டனர். ஆனால், எம் தலைவனால் வீழ்த்தப் பட்டதால் மாளாப் புகழ் பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் நினைவுக்கல் அமைத்துப் பாராட்டப்படுகின்றனர். உங்களுக்கும் நடுகல் வேண்டு மானால் எதிர்த்துப் போரிடுங்கள். இன்னும் உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் எம் தலைவன் முன்னே நிற்காதீர்கள்! பின்வாங்கிவிடுங்கள்! நீங்கள் எதிர்க்காமல் பின் வாங்கிச் சென்றால் எங்கள் தலைவனால் உங்கட்கு எந்த இடையூறும் ஏற்படாது. பகைவர்களே! என் தலைவன் முன் போர்புரிய நில்லாதீர்! ஏனென்றால், இதற்கு முன் என் தலைவன் முன்னே நின்று போரிட்டு மாண்டமையால் நடுகல்லாக நிற்பவர் பலர், என எச்சரித்தான். அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பகைமை கொண்ட மன்னரை நோக்கி ஔவையார் கூறியது. போற்றுமின் மறவீர், சாற்றுதும் நும்மை ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும் தாழ்படு சின்னீர்க் களிறட்டு வீழ்க்கும் ஈர்ப்புடை கராஅத் தன்ன என்ஐ நுண்பல் கருமம் நினையாது இளையன் என்று இகழில் பெறல் அரிது ஆடே என்னும் புறநானூற்றுப் பாடல். வீரர்களே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! உமக்கு யாம் சொல்லு கின்றோம்; ஊர்ச் சிறுவர் ஆட்டம் போடுதலால் கலங்கும் காலளவு நீரிலும் முதலை யானையை வீழ்த்துவிடும். அம்முதலை போன்றவன் என் தலைவன்; அவன் ஆற்றலை அறியாமல் இளையவன் என்று இகழ்ந்தால் நும்மால் வெல்லல் அரிது என்பதும் ஏற்ற இலக்கியச் சான்றாகும். களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்; போர் எதிர்ந்து எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்அன் னோனே. என அதியமான் நெடுமான் அஞ்சியின் பொருட்டு ஔவையார் பாடிய இப்பாடலும் தக்க மேற்கோளாகும். ------------ வெற்றிகள் எல்லாம் வெற்றிகள் அல்ல; தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல; வெற்றிகளில் பெருமை தராத இழிந்த வெற்றிகளும் உண்டு. தோல்விகளில் இழிவு தராத போற்றத் தக்க தோல்விகளும் உண்டு. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள் வேண்டும். அக்குறிக்கோள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். பயணம் குறிக்கோளை நோக்கியே செல்ல வேண்டும். நினைப்பவற்றை எல்லாம் உயர்ந்தவையாய் நினைக்க வேண்டும் நிறைவேறுவதில் காலத்தாழ்வு ஏற்பட்ட போதிலும் விடாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பெருமைக்கு உரியதாகும். என்பதை ஊக்கமுடைமை அதிகாரத்தில் உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (குறள். 596) என உரைத்த கருத்தைத் தக்க எடுத்துக் காட்டுடன் விளக்கி உரைக்கும் குறளே. கான முயல் எய்த அம்பினில், யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (குறள். 772) முயல் மனிதனைக் கண்டால் அஞ்சி ஓடும் உயிரினம். மனிதனுக்கு முயலால் எந்தத் தொல்லையும் விளையப் போவது இல்லை. அஞ்சி ஓடும் இயல்பு கொண்ட ஒரு சிற்றுயிராகிய முயலை ஒரு வீரன் தொலைவில் நின்று கொண்டு குறிபார்த்து எய்கிறான். முயல் வீழ்ந்துபடுகிறது. அவ்வீரன் தான் நினைத்ததை முடித்து வெற்றி பெற்று விட்டான். அவன் தான் கொன்ற முயலையும் அதற்குப் பயன்படுத்திய போர்க் கருவியாகிய அம்பையும் எடுத்துக்கொண்டு வந்து திருவள்ளுவர் முன் பெருமிதத்துடன் நிற்கிறான். இன்னொரு வீரன் வேல் ஒன்றைக் கையில் ஏந்திச் செல்கிறான். அவனை நோக்கி உருவத்தில் பெரிய கூரிய கொம்பினையும் உடைய யானை சினத்துடன் விரைந்து செருக்குடன் வருகிறது. அவன் யானை மீது குறிவைத்து வேலை எறிந்தான். ஆனால் அவன் குறியும் தப்பிவிட்டது. யானையும் தப்பிவிட்டது. யானை பின்வாங்கிச் சென்றபின், தான் எய்த வேலை எடுத்துக் கொண்டு சோர்ந்து போய், தான் நினைத்தது நிறைவேற வில்லையே என்ற வருத்தத்துடன் திருவள்ளுவர் முன் தலைதாழ்த்தி நின்றான். திருவள்ளுவர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். பார்த்த பார்வையில் முயலை எய்தவன் தலையும், அவன் ஏந்தி வந்த அம்பும், பெருமிதத்தை இழந்து தாழ்வுற்றது. யானை வேட்டைக்குச் சென்று தோற்று வந்தவன் வருத்தம் நீங்கித் தெளிவு பெற்றான். இருவரையும் நோக்கித்திருவள்ளுவர் காட்டில் அஞ்சி ஓடும் முயலுக்குக் குறி வைத்து வெற்றி கொண்ட அம்பை ஏந்துவதைக் காட்டிலும், பெருமிதமாக எதிர்த்து வரும் யானை மேல் குறி வைத்துத் தப்பிய வேலைக் கையில் பிடித்திருப்பதே பெருமையும் பேரின்பமும் தரும் என்றார். முயல் + அம்பு = வெற்றி; யானை + வேல் = தோல்வி இரண்டையும் வைத்துத் திருவள்ளுவர் உலகிற்குச் சொல்வது. எளிய செயலை முடிப்பதைவிட, செயற்கரிய செயலைச் செய்ய எண்ணுவது மேல்; போரில் எளியவரை வெல்வதினினும், வலியவரை எதிர்த்துப் போரிட நினைப்பதே பெருமையாகும் என்பதாகும். இசையும் எனினும், இசையாது எனினும் வசைதீர எண்ணுவர் சான்றோர்;- விசையின் நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்பெய்த கோல். என்னும் நாலடிப் பாடலும் உவமை வேறுபட்டாலும் நோக்கால் ஒரு தன்மை உடையதாகும். ------------ பேராண்மை என்ப தறுகண்; ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு (குறள். 773) உலகப் பேரறிஞர்களில் வள்ளுவரின் தனிப் பெருந்தன்மையை உலகிற்கு உணர்த்திக் காட்டும் குறட்பாக்களில் இதுவும் ஒன்றாகும். பகைவரை அஞ்சாது எதிர்த்துப் போர் புரியும் வீரச் செயலைப் பெருமை மிக்க ஆண் தன்மை என்று அறிஞர் பாராட்டுவர். தன்னை எதிர்த்த அந்தப் பகைவனுக்கு ஏதோ ஒரு காரணத்தால் துன்பம் நேர்ந்த போது அதையே நல்ல வாய்ப்பாகக் கொண்டு, அவனை வெல்லவோ வீழ்த்தவோ எண்ணாமல் அவனுக்கு என்ன உதவி தேவையோ அத்தகைய உதவியைப் பேருள்ளத்துடன் செய்யும் பெருந்தன்மையை ஆண்மையின் கூர்மை என்பர். அதாவது அந்த ஆண்மையினும் சிறந்த தோர் ஆண்மை என்று அறிஞர் கூறுவர். பகைவரைக் கொல்லுதல் வீரம்; அவர்க்குத் துன்பத்தில் உதவுதல் வீரத்தின் சிகரமாகும். ஊராண்மை என்பது உதவி செய்யும் தன்மையாகும். ஆவூர் மூலங்கிழார் என்னும் சங்கச் சான்றோர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் தோளாண்மையையும் வேளாண்மையையும் புலப்படுத்தும் நோக்கில் , நீ உடன்று நோக்கும் வாய் எரிதவழ நீ நயந்து நோக்கும் வாய் பொன்பூப்பச் செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண் திங்களில் வெயில் வேண்டினும் வேண்டிய விளைக்கும் ஆற்றலை எனப் போற்றும் பாடற் பகுதி நல்லதோர் இலக்கியச் சான்றாகும். சம்புமாலி அனைத்தையும் இழந்து போர்க்களத்தே தனியே நிற்கிறான். அப்போது காலங்கருதி அவனையும் கொன்று. வெற்றி காண வேண்டிய அனுமன் அங்ஙனம் செய்யாது அவனை நோக்கி, எளியோர் உயிர்கோடல் நீதியன்றால், போதி எனக் கூறி அனுப்பி வைத்தான் என்னும் கம்பராமாயணப் பாடல் அடியும் சான்றாகும். தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள்-தெற்ற நவைக்கப் படும் தன்மைத் தாயினும் சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு என்னும் பழமொழிப் பாடலும் குறளுக்கு நல்லதொரு விளக்கமாகும். மாதலி இராவணனைக் கொல்லத் தூண்டிய போது, இராமன், படை துறந்து, மயங்கிய பண்பினான் இடை பெறும் துயர்பார்த்து, இகல் நீதியின் நடைதுறந்து, உயிர் கோடலும் நன்மையோ? கடை துறந்தது போர், என் கருத்து என்றான் என்னும் கம்பரின் பாடலும் சான்றாய் அமைவதைக் காணலாம். ------------ கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். (குறள். 774) ஒரு வீரன் போர்க்களம் சென்றான். யானைப் படையோடு போர்புரியும் சூழல் ஏற்பட்டது. பகைவன் வேலால் அவனை நோக்கி எறிந்தான். அவ்வேல் அவன் மார்பில் பாய்ந்து நிற்கிறது. அப்போது அவ்வீரன் யானையைக் குறிபார்த்து கொண்டிருந்தான். ஆகவே அவன் தன்மீது பாய்ந்த வேலைக் கவனிக்காது. தன்னை எதிர்த்த யானையின் மீது வேலை எறிந்து வீழ்த்தி விட்டான். அடுத்தும் யானை வருகிறது அதனை வீழ்த்தக் கையில் கருவி இல்லையே என எண்ணிக் கவலை கொண்டான். கவலை ஒரு நொடியில் மகிழ்ச்சியாய் மாறியது எதனால், தன் மார்பின் கண் தைத்திருந்த வேலைக் கண்டதுதான் மகிழ்ச்சிக்குக் காரணம் ஆகவே, பறித்த வேலை அடுத்து வந்த யானையின் மீது எய்தினான். நிறைவடைந்தான். கைவேலை யானை மீது எய்த வீரன்; தன் நெஞ்சில் தைத்த வேலைப் பறித்து மகிழ்வான். மெய்வேல் பறித்து மகிழும் வீரன் தான் மெய் வீரன் என்பதை உணர்த்தினான். தன் சாவுக்கு அஞ்சா வீரனவன். களிற்றொடு போக்கல் என்றால் களிற்றினது உயிரைக் கொண்டு போகுமாறு விடுதல்; கைவேலும் கையில் இல்லை அதுவும் களிறோடு போயிற்று. மகிழ்ச்சி ஏன்? தேடியது தேடாமலே கிடைத்ததால் மகிழ்ந்தான். வீரன் எத்தகையவன்? யானையை மட்டுமே தாக்குபவன். தன்னைப் பற்றிக் கவலைப் படாது தற்காத்துக் கொள்ள எண்ணாது. கடமையிலேயே கருத்துச் செலுத்துபவன். போரிடுவதில் குறையாத விருப்பமுடையவன். கலிங்கப் போரில் சோழவீரரும், கலிங்க வீரரும் தம் திறம் காட்டிப் போர் புரிந்தனர். போரில், சில வீரர்களின் இரு தொடைகளும் அறுந்து நிலத்தில் தொங்கின. அந்நிலையில் அவ்வீரர்களை எதிர்த்த வண்ணம் யானைகள் வந்தன; வீரர்கள் சிறிதும் அஞ்சவில்லை.அறுந்த தொடையில் ஒன்றைச் சுழற்றி அக்களிற்றின்மீது வீசி எறிவர்; மீண்டும் எறிவதற்காகவே மற்றொரு தொடையைவிட்டு வைப்பர் என்கிறார் செயங்கொண்டார். இருதொடை அற்று இருக்கும் மறவர்கள் எதிர்பொரு கைக்களிற்றின் வலிகெட ஒரு தொடையைச் சுழற்றி எறிவர்கள் ஒரு தொடையை இட்டுவைப்பர் எறியவே என்னும் கலிங்கத்துப் பரணிப் பாடல் ஏற்ற எடுத்துக்காட்டாகும். அதே கலிங்கப் போரில் இருதிறத்து வீரரும் எதிர்த்துப் போர் புரிகின்றனர். சிலர் அம்புகளை எய்கின்றனர். அவர்களை எதிர்த்து எய்யத் தங்களிடம் கணைகள் இல்லாததை அறிகின்றனர். அதற்காகச் சிறிதும் அவர்கள் கவலை கொள்ளவில்லை. தங்கள் மார்பில் சில கணைகள் பாய்ந்து கிடப்பதைக் கண்டு அகம் மகிழ்கின்றனர். தைத்த கணைகளைப் பறித்து எடுத்துப் பகைவரை நோக்கி எய்தனர் என்கிறார் செயங் கொண்டார். நேர்முனையில் தொடுத்த பகழிகள் நேர் வளைவில் சுழற்றும் அளவினில் மார் பிடையில் குளித்த பகழியை வார் சிலையில் தொடுத்து விடுவரே. எனக் கலிங்கத்துப் பரணி கூறுவது குறளுக்கு அமைந்த விளக்கமாகவும் அமைந்துள்ளது. நீல நிறக் கச்சையையும், பூ வேலைப்பாடு அமைந்த உடையையும், மயில் தோகைக் கண்ணியையும் உடைய பெருந்தன்மை வாய்ந்த வீரன், தன்மேல் வந்த யானையின் நெற்றியில் தன் வேலைச் செல்ல விட்டு. இப்பொழுது தன் உயிரையும் விட்டுப் போரிடுவான் போலும். பகைவர் வேலை வலமாகக் கொண்டு யானையொடு பரவி வரக் கண்டு அவர் எறிந்த வேல், தன் உடலில் பட, அதனைப் பறித்து அவர் கூட்டத்தை அழித்து, அவர்தம் தலைவனைத் தோளொடு தழுவித்தன் உடல் வலிமையால் உயரத் தூக்கி நிலத்தில் மோதி, உயிர் நீங்கிய அவன் உடலைப் பற்றிக் கொண்டு நிற்கிறான். அதனோடு அமையாது மேலும் பொர வருவாரை நோக்கி நின்றமையின் அவனை உலோச்சனார் கண்ணாரக் கண்டார். அவனது நிலைதான் உயிர் முடியும் வரையும் போரிட்டு அழிவது துணிபாக உடையவன் என்றுணரக் காட்டிற்று அதனை இப்பாட்டின்கண் உரைத்துள்ளார். நீலக் கச்சைப் பூவார் ஆடைப் பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியே தன்னும் துரக்குவன் போலும், ஒன்னவர் எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக் கையில் வாங்கித் தழீஇ மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண்டனனே இப்புறப்பாடல் குறட் கருத்தை மேலும் விளக்கிக் காட்டுவதை உணர முடிகிறது. ------------ விழித்தகண் வேல்கொண் டெறிய, அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு (குறள். 775) போர்களத்தில் வீரனொருவன் தன் எதிரே போரிடவரும் வீரனைக் கண்களால் சினந்து நோக்குகிறான். அப்பொழுது பகைவன் இவனைக் குறி வைத்து வேலைக் கொண்டு எறிய முயலுகிறான். அப்பொழுது வீரன் தன் கண் இமைகளைச் சிறிது மூடித் திறந்தாலும். அஃது அஞ்சாமையை உடைய அம்மாவீரனுக்குத் தகுதிக் குறைவாகவே கருதப்படும். பார்த்த கண் பகைவன் வேலுக்கு மூடி இமைப்பினும் அதனைப் பழியாகவும் தோல்வியின் அடையாளமாகவும். புறங்காட்டியதற்கு ஒப்பாகவும், இழுக்காகவும், அஞ்சாமைக்கு அழிவாகவும் அறிஞர்கள் கருதுமாறு குறட்பா அமைந்துள்ளது. வேலும் கணையமும் வீழினும் இமையார் விரியத் தறுகணர் என்னும் பெருங்கதைப் பாடல் வரியும். ஆரமருள் ஆண்டகையும் அன்னவகை வீழும் வீரர் எறி வெம்படைகள் வீழ இமையானாய் என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் அடிகளும் குறட் கருத்தை வழிமொழிந்து உரைப்பதைக் காணமுடிகிறது. ------------- விழுப்புண்படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. (குறள். 776) வீரன் தன் வாழ்நாள்களை எண்ணிப் பார்த்து, அந்த நாள்களுள் தன் மார்பிலும் முகத்திலும் புண்படாத நாள்களைப் பயன்படாது இழுக்கிய நாள்களாகவே கருதி வருந்துவான் எனப் பொருள் கூறலாம். வீரப்புண் படாத நாள்களை எல்லாம் வீரன் குற்றம் செய்த நாள்களாகக் கருதுவான் எனச் சுருக்கியும் உரைக்கலாம். அவ்வாறு சொல்லுக்குச் சொல் நேரடிப் பொருள் காண்பதை விட என்றும் பொருந்துமாறு சிறந்த வீரன், போர்க்குச் சென்று, தன் கடமையைக் சிறப்புறச் செய்து புகழ் அடையாத நாள்களை எல்லாம், தன் வாழ் நாள்களுள் பயனில்லாத நாள்களாகக் கழிந்து விட்டதை எண்ணிக் கவலைப் படுவான் என்றும் பொருள் கொள்ளலாம். நாட்டுக்கு நலம் தரும் பணி செய்து, நாளும் புகழைத் தமக்கும் நாட்டுக்கும் ஈட்டித் தர வேண்டும். புகழ் தரும் பணி செய்யாத, செய்ய முடியாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாகவே கருதப்படும். புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் என்னும் சங்கச் சான்றோர் நெறியை வேறு கோணத்தில் உணர்த்தும் குறளாகும். நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே; இறையுறு விழுமம் தாங்கி அமரகத்து இரும்புதலைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்று வடிந்த யாக்கையன், கொடையெதிர்ந்து ஈர்ந்தை யோனே, பாண்பசிப் பகைஞன், இன்மை தீர வேண்டின், எம்மொடு நீயும் வம்மோ முதுவாய் இரவல, யாம் தன் இரக்கும் காலைத் தான்எம் உண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க் கருங்கைக் கொல்லனை இரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே என்னும் புறநானூற்றுப் பாடல், கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமணனார் ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைப் பாடிய பாடலாகும். நாள் தோறும் தொடர்ந்து கொடுக்கும் செல்வம் உடையவனும் அல்லன், இல்லை என்று கேட்பவர்க்குத் தானும் இல்லை எனச் சொல்லும் இழிவு உடையவனும் அல்லன்; இறையாண்மைக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கிப் போர்க் களத்தில், படைக் கருவிகள் புகுவதால் உண்டாகிய புண்ணின் வலி நீங்கி, மருந்து வெட்டி எடுக்கப்பட்ட மரத்தைப் போல் தழும்பு உடலெல்லாம் கொண்டவனும் பழியில்லாத புகழாளனும், இரவலரை எதிர்ப்பார்த்து இருப்பவனும், ஈர்ந்தூர் என்னும் ஊரினனும், பாணர் பசிநோய்க்கு மருந்து ஆனவனும் உள்ளான். உன் வறுமை நீங்க விரும்பினால் முதிய இரவலனே எம்மோடு வருவாயாக, நாம் அவனை இரந்து வேண்டும் போது அவன் எம் பசி வயிற்றை சுட்டிக் காட்டித் தன்னூரில் உள்ள வலிய கையையுடைய கொல்லனிடம் இரந்து வேண்டுவான். சிறந்த இலை வடிவில் அமைந்த வேலைக் கூர்மை யாக்கித்தா எனவே. என்னும் பொருள்தரும் இப்பாடல் தக்க மேற்கோளாகும். ------------ சுழலும் இசை வேண்டி, வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. (குறள். 777) எண் திசையும் பரந்து நிலைபெறும் புகழை விரும்பும் போர் வீரர்கள் நாட்டு நலத்தையே பெரிதெனக் கருதுவர் அவர்கட்குத் தம் உடைமை, உடல், உயிர் ஒரு பொருட்டன்று. எதனையும் இழக்கத் தயங்க மாட்டார்கள். கடமையைக் கண்ணெனக் கருதிப் போர்க்களங்களில் அவர்கள் பெற்ற வெற்றிக்கு ஏற்ப நாடாளுவோரின் பாராட்டைப் பெறுவர். பண்டு அது வீரக் கழல் எனப் போற்றப் பட்டது. இற்றைக் காலச் சாதனையாளர்கட்கு விருதுகள், பதக்கங்களாகப் பட்டயங்களாகப் பணமுடிப்பாக வழங்கப்படுகிறது. வீரக் கழலால் வீரர்கள் பெருமை அடைவதை விட, வீரர்களின் மேம்பட்ட சிறப்பால் வீரக்கழல் பெருமை அடைய வேண்டும் என விரும்புகிறார் திருவள்ளுவர். தகுதி உடையவர்கட்கே வீரக் கழல் வழங்க வேண்டும். தகுதி உடையவர்களே வீரக்கழலை அணிய வேண்டும். அத்தகையோர் அணிந்தால் கழலுக்கு அழகும் பெருமையும் உயரும். தகுதி அற்றவர் கழலைப் பெறுவதும் அணிவதும் அதன் சிறப்பைக் குன்றச் செய்து விடும். இக்காலத்தில் பட்டம், பதவி, பாராட்டு வழங்கிப் போற்றுபவர் களுக்கும் அதனைப் பெறுபவர்களுக்கும் பாடமாக அமையும் அருமைக்குறள் இதுவாகும். உலகளாவிய புகழை விரும்பி, உயிர் இழப்பைப் பொருட்டாகக் கருதாத வீரர், வீரக்கழல் அணிதல், அக்கழலுக்குப் பேரழகும் பெருமையும் சேர்க்கும் தன்மையாகும். விரும்புவது புகழ்; விரும்பாதது உயிர்; அதனால் அழகு பெறுவது கழல். ------------ உறின்உயிர் அஞ்சா மறவர், இறைவன் செறினும்சீர் குன்றல் இலர் (குறள். 778) போர் வருமானால் தன் உயிரின் பொருட்டுச் சிறிதும் அச்சம் என்பதே இல்லாமல் போர் புரியத் துணிந்த வீரரைப் படைத் தலைவன் சினங்கொண்டு தடுத்தாலும், வீரன் மனம் தளராமலும், தனக்குரிய சிறப்புத் தகுதியிலும் ஒரு காலத்திலும் குறைவு நேருமாறு நடந்து கொள்ள மாட்டான். அத்தகையவனே தூய வீரனாவான். பணிவாங்குவோர் தம் இயல்பில் மாறு பட்டாலும், கொள்கைப் பிடிப்புள்ள வீரன் எப்பொழுதும் தம் சிறப்பில் குன்றான். சோழன் நலங்கிள்ளியின் படைவீரர் இயல்பைக் கோவூர்க்கிழார் போர் எனில் புகலும் புனைகழல் மறவர் (புறம் 31இல்) எனக் குறிப்பிடுகிறார். அவரே 68 ஆம் பாடலில் மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன் உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு ஏவான்; ஆகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப எனப் பாடுவதும் தக்க மேற்கோளாரும். உங்கள் விரிந்த நாட்டில் எம்மோடு போரிடுவாரும் உளரோ என வினாவும் வேந்தனே! அடிக்கும் கோலுக்கும், அஞ்சாத பாம்பு போன்ற இளைய வலிய வீரரும் உளர்; அவரையன்றி மன்றத்தில் தூங்கும் தண்ணுமைப் பறையில் காற்று மோதுதலால் உண்டாகும் ஒலியைக் கேட்டு. அது போர்ப்பறை என்று எண்ணும் எம் தலைவனும் உள்ளான் என்பதை, பொருநரும் உளரோநும் பொருபடை வேந்தே வினவல் ஆனாப் பொருபடை வேந்தே எறிகோல் அஞ்சா அரவின் அன்ன சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளிபொரு தெண்கண் கேட்பின் அது போர் என்னும், என்ஐயும் உளனே. எனச் சங்கச் சான்றோர் ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின் தானை மறம் பற்றிப் பாடிய இப்புறநானூற்றுப் பாடல் ஏற்ற இலக்கியச் சான்றாகும். ------------ இழைத்த திகவாமைச் சாவாரை, யாரே பிழைத்த தொறுக்கிற் பவர். (குறள். 779) தம் நாட்டிற்குப் பலவழிகளில் தொல்லை விளைத்துக் கொண்டிருக்கும் பகை நாட்டை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது இப்படை வீரனின் குறிக்கோள். இக்குறிக்கோளை நிறைவேற்றிக் காட்டுவேன். அதனை என்னால் செய்யமுடியவில்லை எனில் போர்க் களத்தில் இறுதிவரைப் போராடி உயிர் விடுவேன் என வஞ்சினம் கூறிக் களம் புகுந்தான். அவன் தன் குறிக்கோளில் வெற்றி பெற முடியவில்லை. எனினும் அவன் சொன்னவஞ்சின மொழி தப்பாமல் உயிரை விட்டான். ஆகவே, அவன் வெற்றியைத் தவறவிட்டவன் என அத்தகையனை எவரும் பழித்துரைக்க மாட்டார்கள். குறிக்கோளில் கொண்ட குறி தவறி விட்டாலும் வஞ்சினத்தை நிறை வேற்றியதால் அவன் பாராட்டுக்கு உரியவனே தவிர்த்துப் பழிப்புக்கு உரியவன் அல்லன். அவன் போற்றப்பட வேண்டியவனே அல்லாமல் தண்டிக்கப்பட வேண்டியன் அல்லன். வஞ்சினம் தவறாமல் உயிர் கொடுத்தவரை, வெற்றி தவறினார் என்று தண்டிப்பார் உண்டோ? இல்லை. ------------ புரந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்து கோள் தக்க துடைத்து. (குறள். 780) சாதலின் இன்னாதது இல்லை துன்பங்களிலெல்லாம் சாவது போன்ற துன்பம் ஒன்றும் இல்லை என்பது உலகத்து இயற்கை. மண்ணில் தக்காராய் வாழ்ந்து தொண்டாற்ற வேண்டும். நிலவரை நீள்புகழ் ஆற்ற வேண்டும். புகழ் உச்ச நிலையில் நிற்கும் போது சாவு வரவேண்டும் சாவால் புகழ்மிக வேண்டும். மைந்தன் இறப்புக் கண்டு பெற்றோர் கலங்கி அழவேண்டும். வீட்டு வேலைக்காரன் இறப்பு குடும்பத் தலைவன் தலைவியைக் கண்ணீர் வடிக்க வைக்க வேண்டும். அதுபோல் படையில் உள்ள ஒரு வீரனின் செயல் படைத்தலைவனையும், நாட்டுத் தலைவனையும் உளம் உருகி, தம்மை மறந்து அழவைக்க வேண்டும். அப்படிப்பட்ட சாவே சாகாச் சாவு ஆகும். அப்படிப்பட்ட சாவை மனப்பூர்வமாக விரும்பிக் கெஞ்சிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளத்தக்க பெருமை வாய்ந்ததாகும். தம்மைக் காக்கும் புரவலர் கண்களில் அவரையும் அறியாமல் நீர் பெருகுமாறு சாகின்ற சாவு தனிச் சிறப்புப் பொருந்தியதாகும் அத்தகைய சாவு துன்பம் தரும் சாவு அன்று. பெருமை தரும் சாவாகும். அத்தகைய சாவை கெஞ்சிக் கேட்டும் பெற்றுக் கொள்ளலாம். விரும்பி வாங்கும் சாவு; புரந்தார் கண் நீர் மல்க வைக்கும் சாவு. இராவணன் தம்பி கும்பகர்ணன் அவர்கள் இருவரின் தம்பி வீடணன், கும்பகர்ணனை இராமனைச் சரண் அடைவேண்டிய போழ்து கும்பகர்ணன் அளித்த மறுமொழிகளில் நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப் போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர்கொடாது அங்குப் போகேன் புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால் ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண்மேல் என்னும் தொடர்கள் எல்லாம் கும்பகர்ணன் சாக்காட்டை விரும்பி ஏற்றுக் கொண்டவன் என்பதைப் புலப்படுத்தும். கும்பகர்ணன் மறைவு அறிந்து இராவணன் கண்ணீர் விட்டு அழுது புலம்பியது, கும்பகர்ணன் சாவு புரந்தார் கண் நீர் மல்கச் செத்த சாவு என்பதற்கும் பொருந்திய சான்றாகும். காத்தவரைக் கலங்கவைக்கும் சாவு; விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டிய சிறந்த சாவாகும். ------------ பகைவர்களே என் தலைவன் முன் நில்லாதீர் நடுகல் ஆகிச் சிறப்புப்பெற வேண்டுமா? என் தலைவன் முன் வாருங்கள் முயலை வீழ்த்துவதைவிட யானையைக் குறிவைப்பது மேல் எளியவரை வெல்வதை விட வல்லவரை எதிர்ப்பது மேல் போர்க்களத்து வீரம் பேராண்மை ஆகும் துன்புறும் வீரனுக்கு உதவுதல் பெரும் பேராண்மை ஆகும் கைவேல் களிற்றொரு போக்கியவன் வீரன் மெய்வேல் தாங்கியவனும் வீரன் மெய்வேலைக் கைவேல் ஆக்கியவனும் வீரன் பகைவன் வேல் கண்டு கண் இமைப்பதும் இழுக்கு வீரன் நாளும் போரிட விரும்ப வேண்டும் விழுப்புண் பெறும் நாளே பயனுடைய நாள் விழுப்புண் பெறாநாள் பயனற்ற நாள் இசை வேண்டி உயிர் வேண்டார் கழல் அழகுடையது அஞ்சா மறவன், தலைவன் அடக்கினும் அடங்கான் வஞ்சினம் முடிக்க உயிர்விட்டவரை எவரும் பழியார் தலைவனை அழவைக்கும் சாவு தலைமையான சாவு விரும்பி ஏற்கும் சாவு தலைவனையும் கண்கலங்க வைக்கும் சாவு. ----------- 79. நட்பு படைகுடிகூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. (குறள். 381) என்னும் குறட்பா பொருட்பாலின் முதல் அதிகாரமாகிய இறைமாட்சியில் முதலிடம் பெற்றுள்ள குறள் என்பதை அமைவரும் அறிவோம். படை, மக்கள், உணவு அமைச்சு, நட்பு, பாதுகாப்பு என்னும் ஆறு உறுப்புகளையும் சிறப்பாகப் பெற்றிருப்பவன் ஆட்சியாளருள் சிறந்த ஆட்சியாளன். என்பது பொருள் ஆனால், இக்குறளின் உள்ளார்ந்த நோக்கத்தை உணர்ந்து கொண்டால் படை,குடி, உணவு, அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு உறுப்புகளையும் சிறப்பாகப் பெற்றிருக்கும் நாடே நாடுகளுள் சிறந்த நாடாக விளங்க முடியும் என்னும் கருத்தும் நமக்கு விளக்கமாகும். ஆறு அவசிய உறுப்புகளில் நட்பும் ஒன்றாகும். நட்பிற்கு அடி நள் ஆகும். நள் என்றால் நெருங்கு, கூடு, ஒன்றுபடு என்பது பொருள். நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என்னும் ஐந்து அதிகாரக் குறளும் நட்புப் பற்றி விளக்கும். நட்பாராய்தல் அதிகாரம் தோழமைக்கு உரியவரைப்பற்றி ஆராயும்; பழைமை-நெடுங்காலத் தொடர்பின் தன்மையை விளக்கும்; தீ நட்பு-தீயவரோடு தோழமை கொண்டால் விளையும் தீமையை விளக்கும்; கூடா நட்பு-மனத்தொடு பொருந்தாத் தோழமையின் இயல்பு சுட்டும்;நட்பு உடன்பாட்டு நோக்கில் தோழமையின் சிறப்பை உணர்த்தும். ஆற்றல் நிறைந்த அன்புணர்வு வளர்ச்சி பெற்ற நிலையில் அடையும் பெயர்களில் நட்பு என்பதும் ஒன்றாகும். திருவள்ளுவரும், அன்பீனும் ஆர்வ முடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு (குறள். 74 ) என அன்புடைமை அதிகாரத்தில் தெளிவுபடுத்தினார். அந்நட்புக்குத்தான் எவ்வளவு ஆற்றல். மனித குலத்தின் வாழ்வை ஒளியும், பயனும் நிறைந்ததாக ஆக்குவதில் அந்நட்பே தலைசிறந்து விளங்குகிறது. ஆகவேதான் திருவள்ளுவர் செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தில். எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு (குறள். 107) எனக் கூறுவதுடன், மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. (குறள். 106) எனவும் வேண்டியுள்ளார். துன்புற்ற காலத்துத் துணையாளராகவும், தவறிய இடத்து இடித் துரைக்கும் உரிமையாளராகவும் விளங்கும் நட்பின் இயல்பு கூறும் அதிகாரத்திற்குள் நுழைவோம். மற்றவர்களால் செய்வதற்கு அரிய நல்ல சிறந்த செயல்களை மிக இயல்பாகச் செய்பவர்களே பெரியவர் என்பதை நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் செயற்கரிய செய்வார் பெரியர் எனப் பெரியவர்க்கு இலக்கணம் கூறியுள்ளார். எளிய செயல்களைக் கூடச் செய்ய முயலாதவர்களும் உலகில் இருக்கின்றனர்; இன்னும் எளிய செயல்களைக் கூட முயன்றும் முடிக்க முடியாதவர்களும் உலகில் இருக்கின்றனர். செயல்களில் முயற்சி இன்றி எளிமையாய் எவரும் செய்கிற செயல்களும் உண்டு. இயல்பாய் முயன்றால் செய்து முடிக்கக் கூடிய செயல்களும் உண்டு. ஆற்றல் உடையவர்களும் முழுமுயற்சி மேற் கொண்டு அயராது உழைத்தே செய்யக் கூடிய செயல்களும் உண்டு. அத்தகைய செயல்களே செய்வதற்கு அரிய செயல்கள் ஆகும். அத்தகைய செயற்கரிய செயல்களில் எல்லாம் முதன்மையான செயல் யாது? என்னும் வினாவிற்கும், செய்ய முற்படும் செயல்களுக் கெல்லாம் முதன்மையான பாதுகாப்பாக யாரால் விளங்கமுடியும் என்னும் வினாவிற்கும் விடையளிப்பது போல் அமைந்துள்ள குறளே, செயற்கரிய யாவுள நட்பின் அது போல் வினைக்கரிய யாவுள காப்பு, (குறள். 781) உலகம் இருவேறு முரண்பட்ட தன்மையர் சேர்ந்து வாழும் உலகம், செயற்கரிய செய்யும் பெரியவர்கள் மட்டும் வாழும் உலகமன்று; செயற்கரிய செயல்களைச் செய்யாச் சிறியவர்களும் வாழும் உலகம். அறிவறிந்த மக்கள் மட்டும் வாழும் உலகன்று; அறிவறியா மக்களும் வாழும் உலகம். பழிபிறங்காப் பண்புடை மக்கள் மட்டும் வாழும் உலகமன்று, மக்கட் பண்பு இல்லாத மரம் போல்வாரும் வாழும் உலகம்; அன்பை அகத்துறுப்பாய்க் கொண்டு தம் என்பையும் பிறர்க்கு உரிமைப் படுத்துபவர்கள் மட்டும் வாழும் உலகமன்று; என்புதோல் போர்த்த உயிரிலா உடம்பினர்களும் வாழும் உலகம். ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாய்க் காத்து வாழ்வோர் மட்டும் வாழும் உலகமன்று; இழுக்கத்தால் எய்தாப் பழி எய்தி வாழ்வோரும் வாழும் உலகம். வசை யொழிய வாழ்பவர் மட்டும் வாழும் உலகமன்று; இசையொழிய வாழ்வாரும் வாழும் உலகம். இன்னோறன்ன எண்ணற்ற வேறுபட்ட மனிதர்கள் வாழும் உலகத்தில் அவர்களில் நல்லவர் இவர்கள்; தீயவர்கள் இவர்கள் என்று எளிதாக இனம் பிரித்துக் காண முடியுமா? அதற்கென அமைந்த புற அடையாளம் ஏதேனும் உண்டா? இல்லை வள்ளுவரே திகைக்கிறார், அதனால் தான், மக்களே போல்வர் கயவர்; அவரன்ன ஒப்பாரி யாம் கண்ட தில் (குறள். 1071) எனக் கயமை அதிகாரத்தில் யாம் கண்டதில் எனக் கூற நேர்ந்தது. இத்தன்மை வாய்ந்த உலகத்தில் நல்ல நண்பர்களைத் தேடிக் காண்பதும், அத்தகைய நல்லவர்களோடு நட்புக் கொள்ள வாய்ப்பதும் எல்லார்க்கும் எளிதில் கிட்டும் என்று சொல்ல இயலாது. ஆகவே, நல்லவர் நட்புக் கிடைத்தால் அது ஒரு செயற்கரிய சாதனைதான். அதனால் தான் ஒருவர் வாழ்வில் தக்கவருடன் நட்புக் கொள்ளுவது போல் செய்வதற்கு அரிய செயல் வேறு ஏதாவது உலகத்தில் உண்டோ? சொல்லுவீர்! என வினவுகிறார். அதுபோல் நல்ல செயல்களையும் நடை பெற விடாமல் தடுப்பவர்கள் எண்ணற்றோர் இருப்பர் உயிர் காப்பான் தோழன் என்னும் பழமொழிக்கு ஏற்ப, எடுத்த செயல் தடையின்றிச் செயல்பட்டு நிறைவேற, வினைக்கும், வினை செய்வானுக்கும் இறுதிவரைத் துணை நின்று அரணாக அமைந்து காப்பவன் நண்பனாகத் தான் இருப்பான். காவல் துறை, ஆட்சித்துறை, நீதித்துறை எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு அதனதன் எல்லையில் துணை புரிவதுடன் நின்று விடும் என்பதால்தான் திருவள்ளுவர் செயலாற்றும் போதும் அந்நட்புப் போல் அரிய பாதுகாப்பாக இருப்பவை எவை யேனும் உளவா? என வினா எழுப்பி, எவையும் இல்லை என விடை அளிக்க வைத்தார். நல்லவர் நட்புக் கிடைத்தல் எளிதன்று; வேடிக்கையோ விளையாட்டோ அன்று, அது அரிய பொறுப்பு மிக்க செயல் என்பதை உணர்தல் வேண்டும். நட்புப் போல் உலகில் செய்வற்கு அரியது இல்லை; அதுபோல் செயலுக்குப் பாதுகாப்பும் வேறு இல்லை. ------------ நிறை நீர நீரவர் கேண்மை, பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு. (குறள். 782) நீரவர் கேண்மை எத்தகையது? பேதையார் நட்பு எத்தகையது? என்னும் வினாக்கட்கும் உவமை வழி விடை அளிக்கும் அருமைக்குறள். நட்பு நாளும் வளர வேண்டியதே அல்லாமல் தேய வேண்டியது அன்று. ஆனால் சிலருடைய நட்பு வளர்ந்து கொண்டே போவதையும் பார்க் கிறோம். ஆனால் பலருடைய நட்பு வளர் நிலையில் இருந்து படிப்படியே தேய்ந்து அவர் ஆரோ? இவர் ஆரோ என்று முற்றிலும் தொடர்பு அற்றுப் போவதையும் பார்க்கிறோம். திருவள்ளுவர் சுட்டும் நீரவர் கேண்மை மேனிலை மாந்தர், மேனிலை மாந்தரோடு கொள்ளும் நட்பு. அவர்களை நல்லவர், அறிவாளர், பண்பாளர் என எப்படியும் சுட்டலாம். அவர்கள் நட்பு வளரும் தன்மை வாய்ந்தது. எது போல்? பிறை மதிபோல் நாளும் வளர்ந்து முழுமை பெறும் தன்மை யுடையது. வளர்ச்சியும் உண்டு; குளிர்மையும் உண்டு; ஒளியும் உண்டு; நிறைவும் உண்டு. பேதையார் நட்பு, அறிவிலார்களின் நட்பு. முதலில் மிக நன்றாக இருக்கும். ஆனால் ஒருவரை ஒருவர் புரியப் புரிய. ஒவ்வொருவரும் தம் உண்மையான இயல்பைக் காட்டக் காட்டக் படிப்படியே நெருக்கம் குறையத் தொடங்கிப் பகைவர்கள் ஆனாலும் ஆகலாம். ஆகவே அறிவிலாதவர்கட் கிடையே தோன்றும் நட்பு முழுமதியானது நாளும் தேய்ந்து வருவது போல் தேய்ந்து, மதி மறைவது போல் மறைந்து போகும். பேதையார் நட்பு வளராது தேயும். ஒளி குறைந்து கொண்டே வந்து இருளாகும். நிறைவின்றி வெறுப்பாகிப் பகையும் ஆகலாம். பிறைமதிபோல் வளரும் நட்பாக நட்பு அமைய வேண்டும்; முழு மதியாய் ஒளி தந்து நாளும் தேயும் நட்பாக நட்பு அமைந்துவிடக் கூடாது. நாம் நல்லவர்களானால் நாம் கொள்ளும் நட்பு பிறை மதிபோல் அமையும். யார் தீயவர்களோ அவர்கள் நட்பு முழுமதி நாளும் தேய்வது போல் தேயும். பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும் - வரிசையால் வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே தானே சிறியார் தொடர்பு. என்னும் நாலடிப் பாடல் குறட் கருத்தை விளக்கி வலுவூட்ட வந்தது போல் அமைந்துள்ளது. சீவகசிந்தாமணி, நீரவர் கேண்மையை ஒருபகல் பூசின் ஓராண்டு ஒழிவின்றி விடாது நாறும் பெரியவர் கேண்மை போலும் பெறற்கரும் வாசம் எனவும் பேதையார் நட்பைச் சிறியவர் கொண்ட தொடர்பில் செல்லச் செல்ல. அஃகும் நெறி,எனக் கூறுவதையும் ஒப்பிட்டு நோக்கலாம். நவில் தொறும் நூல் நயம் போலும், பயில் தொறும் பண்புடை யாளர் தொடர்பு. (குறள். 783) திருக்குறள் போன்ற பயனும் சுவையும் உடைய நூல்கள் வாழ் நாளெல்லாம் படிப்பதற்கு உரிய நூல்கள் ஆகும். தொடர்ந்து கற்கும் போது நம் வளர்ச்சிக்கு ஏற்ப நூற்பொருளும் நுட்பமும் சுவையும் நமக்குப் புலப்படும். அதைக் காட்டிலும் கற்ற நூலைப் பிறர்க்கு எடுத்து மொழியும் வாய்ப்பு நேரும்போது, ஊன்றிச் சிந்திக்கும் நிலை ஏற்படும். அதிலும் கேட்பவர் களின் ஐயப்பாடுகளுக்கு விளக்கம் செய்யப் புகுங்கால், புதிய புதிய சிந்தனை தோன்ற வாய்ப்பு உள்ளது. ஒரே நூலைப் பல நாட்கள் பல இடங்களில் விளக்கி உரைக்கும் வாய்ப்பு ஏற்படும் பொழுது புதிய புதிய கருத்துகளும், புதிய புதிய நுட்பங்களும், புதிய புதிய நயங்களும் புலப்படு வதற்கு வாய்ப்பு உண்டு. படித்து நயம் காணுவதைக் காட்டிலும், பிறர்க்கு எடுத்து மொழியும் வாய்ப்பால் பெறும் நயங்கள் மிகுதி. அதுபோல் பண்புடையாளர்களின் பண்பு நலங்களை ஒரே நாளில் ஒரு நிகழ்வை வைத்து அளக்க இயலாது. தொடர்ந்து பழகப் பழகத்தான் ஒவ்வொரு நிகழ்விலும் அவர்கள் இயங்கும் பாங்கை உணரமுடியும், ஆகவே, பண்புடையாளர்களின் பண்பைத் தொலைவில் இருந்து கண்டுணர்வதைவிட, நெருங்கிப் பழகி வந்தால்தான் அவர்கள் நல்லியல்புகள் அனைத்தையும் உணர்ந்து கொள்ள இயலும். பண்புடையாளர்கள் நல்ல நூல் போன்றவர்கள். வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. என வள்ளலார் திருவாசகம் பாடியது போல் மனம் ஒன்றிப் பாடினால் அவர் துய்த்த இன்பத்தைத் துய்க்கலாம். அதுபோல் பண்புடையார்களிடம் மனம் ஒன்றிப் பழகி நட்புப் கொண்டால் அளப்பரிய இன்பத்தையும் பயனையும் அடையலாம். நல்ல நூல்களையும் படிப்போம்; படித்ததைப் பிறர்க்கும் எடுத்துரைத்து இன்பம் பெறுவோம். நல்லவர்களிடம் நட்புக் கொண்டு நலமும், பயனும், இன்பமும், அடைவோம். தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. (குறள். 396) என்னும் கல்வி அதிகாரக் குறளையும். அறிதோ றறியாமை கண்டற்றால், காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. (குறள். 1110) என்னும் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரக் குறளையும் இணைத்துக் கொண்டு சிந்திப்போம். நவில்தொறும் இனிய ஞானம் போலப் பயில்தொறும் இனியநின் பண்புடைக் கிழமை உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் இன்புற என்னும் பெருங்கதைப் பாடல் அடிகள் ஏற்ற இலக்கிய மேற் கோளாகும். நூல் உணர்தொறும் உறுநயம் போலக் கழிமகிழ் நாளும், பயில்தொறும் வளரக்கலப்பதே நட்பெனப் படுமால் என்னும் விநாயகபுராணமொழியும் ஒத்த கருத்துடையதே ஆகும். ------------ நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்றி டித்தற் பொருட்டு (குறள். 784) நட்புக் கொள்வதன் நோக்கம் என்ன? நண்பர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுணவு உண்டு தன்னை மறந்து, சிரித்து, மகிழ்ந்து, பொழுதை இன்பப் பொழுதாக்கலாம்; தவறில்லை. ஆனால், அதனொடு மட்டும் நண்பர்களின் பொறுப்பும், கடமையும் முடிந்து விடுவதில்லை. ஒருவர்க்கொருவர் வழிகாட்டித் துணைபுரிய வேண்டும். கடமை தவறாதவராகவும், ஒழுக்கம் தவறாதவராகவும், பண்பாடு போற்றி நடப்பவராகவும் இருக்க வேண்டும். நண்பன் நடக்கும் வழி சரியல்ல ஒழுக்க வரம்பு மீறுகிறான். உழைப்பில் செப்பம் போதாது எனக் கண்டால் தக்கவாறு அறிவுரை கூறி நெறிப்படுத்துவதே நட்பின் நோக்கமாக இருக்க வேண்டும். நண்பர்களில் ஒருவன் செய்யும் தவறை ஏனையோர் கண்டித்து வழிக்குக் கொண்டு வரவில்லையானால். ஒருவர் செய்த பிழை நட்பு வட்டத்தையே பாதிக்கும். பெயரும் புகழும் கெடும். தனக்குத் தொடர் பில்லை என எவரும் தன்னை விலக்கிக் கொள்ள இயலாது. ஆகவே, வரம்பு மீறிச் செல்பவரை நல்வழிக்குக் கொண்டு வர இடித்து உரைக்கவும் தயங்கக் கூடாது. பெரியாரைத் துணைக் கோடல் அதிகாரத்தில், இடிக்குந் துணையாரை ஆள்வாரை, யாரே கெடுக்கும் தகைமை யவர், (குறள். 447) எனவும், இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும் (குறள். 448) எனக் கூறியுள்ளதையும் மறந்துவிடல் ஆகாது. தவறு செய்யும் நண்பனை உரிமையுடன் கண்டித்துத் திருத்து வதற்குத்தானே நட்பே தவிர்த்து சிரித்துப் பேசிப் பொழுது போக்குவதற்கு அன்று. கடிக்கும் வல்வரவு கேட்டும் மந்திரம், களிக்கின் றோயை அடுக்கும், ஈதுஅடாது என்று ஏதுவோடு அறிவு காட்டி இடுக்குநர் இல்லை: உள்ளார் எண்ணியது எண்ணி, உன்னை முடிக்குநர்; என்றபோது, முடிவு அன்றி முடிவது உண்டோ? எனச் சீதை இராவணனுக்குக் கூறுமாறு அமைந்து உள்ள கம்பரின் பாடல் தக்க இலக்கிய மேற்கோள் ஆகும். காய உரைத்துக் கருமம் சிதையாதார் தாயரோடு ஒவ்வாரோ தக்கார்க்கு. என்னும் அறநெறிச் சாரக் கருத்தும் ஒப்பு நோக்கத் தக்கதே ஆகும். ------------ புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். (குறள். 785) நட்பாம் கிழமை உண்டாவதற்கு வேண்டப்படுவது எது? புணர்ச்சியா? பழக்கமா உணர்ச்சியா? புணர்ச்சியும் வேண்டும்; பழக்கமும் வேண்டும்; உணர்ச்சியும் வேண்டும், புணர்ச்சி மட்டும் நட்பாம் உரிமையைத் தந்து விடுமா? தரமுடியாது. பழக்கம் மட்டும் நட்பாம் உரிமையை உண்டாக்கி விடுமா? முடியாது. புணர்ச்சியும், பழக்கமும் சேர்ந்து உரிமையான நட்பை உண்டாக்கி விடுமா? முடியாது. அப்படியானால் நட்பாம் உரிமையைத் தரும் தகுதி எதற்கு உண்டு? உணர்ச்சிக்கு மட்டுமே உண்டு, ஒத்த உணர்வும், புணர்ச்சியும், பழக்கமும், இணைந்து நட்பின் உரிமையை மேம்படுத்தலாம். உள்ளம் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்ட உணர்வின் கலப்பே நட்பாகிய உரிமையைத் தரும். ஆகவேதான் திருவள்ளுவர் நட்புரிமை உண்டாவதற்கு ஒருவரை ஒருவர் கூட வேண்டுவதோ, பழக வேண்டியதோ அவசியம் இல்லை. ஆனால் உணர்ச்சியால் ஒத்த உள்ளமே நட்பாகிய உரிமையைத் தந்து விடும் எனும் கருத்துப்பட மொழியலானார். வீடணனை அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தபின், இராமன், வீடணனை அழைத்துவர சுக்கிரீவனைப் பணித்தான். சுக்கிரீவன் வருவதைக் கண்ட வீடணன் எதிரே வந்தான். இருவரும் தழுவிக் கொண்டதைக் கம்பர், தொல்வரும் காலம் எல்லாம் பழகினும் தூய ரல்லா புல்லலர், உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒருநாள் உற்ற எல்லியும் பகலும் போலத் தழுவினர் எழுவிற் றோளார் எனப் பாடும் பாட்டு, ஏற்ற இலக்கிய மேற்கோளாகும். இக்குறளுக்கு இணையற்ற எடுத்துக்காட்டாய் இலங்கியவர்கள் சோழநாட்டுப் பெருவேந்தன் கோப்பெருஞ் சோழனும், பாண்டிய நாட்டில் பிசிர் என்னும் ஊரில் வாழ்ந்த புலமையாளர் பிசிராந்தையாரும் ஆவர். கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் காண்டல் இல்லாது யாண்டு பலகழிய வழுவின்று பழகிய கிழமையர் ஆகினும் அரிதே தோன்றல், அதற்பட ஒழுகல் என்று ஐயம் கொள்ளன் மின்; ஆரறி வாளீர்; இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே; தன்பெயர் கிளக்கும் காலை, என் பெயர் பேதைச் சோழன் என்னும் சிறந்த காதற் கிழமையும் உடையன்: அதன் தலை இன்னதோர் காலை நில்லலன்; இன்னே வருகுவன்; ஒழிக்க அவற்கிடமே என்னும் புறநானூற்றுப் பாடல் வடக்கிருக்கத் துணிந்த கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் இயல்பு கூறி, வடக்கிருக்க அவர்க்கும் ஓரிடம் ஒதுக்கி வைக்க வேண்டியது ஆகும். தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும் பிசிரோன் என்ப என் உயிரோம்பு நனே! செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே என்பது பிசிராந்தையார் வாரார் என்ற சான்றோர்க்கு அவர் வருவார் என்று கோப்பெருஞ்சோழன் சொல்லிய பாடல் அடிகளாகும். நினைக்கும் காலை மருட்கை உடைத்தே; எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்; அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, இசை மரபு ஆக நட்புக் கந்தாக இனையதோர் காலை ஈங்கு வருதல்; வருவன் என்ற கோனது பெருமையும் அதுபழு தின்றி வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே; அதனால், தன்கோல் இயங்காத் தேயத்து உறையும் சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றுஇசை அன்னோனை இழந்தஇவ் வுலகம் என்னாவது கொல் அளியது தானே! கோப்பெருஞ்சோழன் சொல்லிய படியே அவன் வடக்கிருந்த இடம் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடிய பாடல் இதுவாகும். சோழன் வடக்கிருந்த இடம் வந்த பிசிராந்தையார் தானும் வடக்கிருக்கத் துணிந்ததைக் கண்ட கண்ணகனார். பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும் காலை ஒருவழித் தோன்றியாங்கு, என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப சாலார் சாலார் பாலரா குபவே எனப் பாடிய புறப்பாடலும் உணர்ச்சி ஒத்த நட்பின் கிழமையை உலகம் உள்ளளவும் நிலை நாட்டும். ------------ முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு. (குறள். 786) என்னும் நட்பதிகாரக் குறளைச் சிந்திக்கத் தொடங்கும் போழ்து. புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும், யாக்கை அகத்துறுப் பன்பில் அவர்க்கு (குறள். 79) என்னும் அன்புடைமை அதிகாரக் குறளும் முகத்தான் அமர்ந்து இனிதிநாக்கி அகத்தானாம் இன்சொலினதே அறம் (குறள். 93) என்னும் இனியவை கூறல் அதிகாரக் குறளும். அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. (குறள். 182) பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் (குறள். 187) என்னும் புறங்கூறாமை அதிகாரக் குறள்களும், மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் (குறள். 278) என்னும் கூடா ஒழுக்க அதிகாரக் குறளும் நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள். (குறள். 999) என்னும் பண்புடைமை அதிகாரக் குறளும் நினைவில் தோன்றுவது இயல்பு. திருவள்ளுவர் மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் மன நலத்தின் ஆகும் மறுமை எனச் சிற்றினம் சேராமை அதிகாரத்தில் கூறியுள்ள மொழிகளும் திருவள்ளுவரின் அக நோக்கையும் அகம் பற்றிய மதிப்பீட்டையும் தெளிவாக உணர்த்தி அமைகின்றன. முகம் மட்டும் மலருமாறு பேசிப் பழகி நட்புக் கொள்வது நட்பாகாது. முகமலர்ச்சியுடன் நினைவின் உள்ளிடமாகிய மனமும் மகிழுமாறு நட்புக் கொள்வதே நட்பாகும். அகமலர்ச்சி இல்லாப் புறமலர்ச்சி நட்புக்கு ஏற்புடைத் தன்று. ----------- அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. (குறள். 787) அழிவினவை என ஓரு சொல் நீர்மையாய்க் கொண்டால் கேட்டினைத் தரும் தீய நெறிகள் எனப்பொருள் தரும். அழிவின் + நவை எனப் பிறித்து நோக்கினால், அழிவினைத் தரும் குற்றங்கள் எனப்பொருள் தரும். திருவள்ளுவர் நண்பனுக்கு இடும் மூன்று கட்டளைகள். அல்லது நண்பனுக்கு உரிய மூன்று முக்கிய கடமைகள் எவை? நண்பன் கேட்டினைத் தரும் தீய வழியில் சென்றாலும், அல்லது அழிவினைத் தரும் குற்றம் புரிய எண்ணினாலும், அவனை முதற்கண் தீய வழியில் செல்லவிடாது தடுக்க வேண்டும். அல்லது கேடுதரும் குற்றம் புரியவிடாமல் தடுத்துக் காக்க வேண்டும். இரண்டாவது கடமை; நன்மை தரும் நற்செயல்களை நல்வழியில் செய்ய வழிகாட்டித் துணைபுரிய வேண்டும். மூன்றாவது கடமை; எதிர்பாராவிதமாக நண்பன் துன்பப்பட நேர்ந்தால் அத்துன்பம் நண்பனாலும் நீக்க முடியாததாகவும் அமைந்து விடுமாயின். நண்பன் துய்க்கும் துன்பத்தை மன ஈடுபாட்டுடன் தானும் உடன் இருந்து துய்க்க வேண்டும். நண்பனைத் தீமை செய்யவிடாமல் தடுத்தல்; நல்வழி காட்டல்; துன்பத்தில் பங்கு கொள்ளுதல் மூன்றும் நட்பின் இயல்புகளாகும். புண்பட்ட நெஞ்சைப் புகவிட்டு ஆற்று என்பது பழமொழி. நண்பன் தலையில் சுமையைச் சுமக்க விடலாம். ஆனால் மனத்தில் சுமையைத் தாங்க விடக் கூடாது. நட்பால் இன்பம் இரட்டிப்பாகும் துன்பம் பாதியாகும் என்பது பட்டறிவு மொழி. உயிர் காப்பான் தோழன் என்பது உண்மை மொழி. அதிவீரராம பாண்டியர் தாம் பாடிய வெற்றி வேற்கையில். நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே, ஒரு நாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர் வீழ்க் கும்மே எனக் கூறியுள்ளதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. ------------- உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (குறள். 788) நண்பனுக்குத் துன்பம் வந்துற்றால் அத்துன்பத்தை அவனே உணர்வதற்கு முன்பே மிக விரைந்து உண்மையான நண்பன் போக்கிவிட வேண்டும் என்பதை உணர்த்த வரும் திருவள்ளுவர் இக்குறளைக் கூறுகிறார். ஒருவன் இடுப்பில் உடுத்தி இருக்கும் உடையை மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் சூரைக் காற்றோ, நாயோ, திருடனோ, பகைவனோ மனநலம் பாதிக்கப்பட்டவனோ பறித்துவிடுவான் ஆனால், பறி கொடுத்தவனின் கை அவனது மனத்தின் கட்டளையைக் கூட எதிர்பார்க்காமல் தானே மிக விரைந்து மறைக்க வேண்டியதை மறைத்து மானம் காப்பது போல். நண்பனுக்குத் துன்பம் வருங்கால் உடனே சென்று அத்துன்பத்தை நீக்குவதுதான் உண்மையான நட்பிற்கு அடையாளமாகும். தன்கையே தனக்கு உதவி என்பது பழமொழி. நண்பன், கை போன்றவன் ஆகவே, அவன் உதவியும் தன் கைபோலவே விரைந்து செய்யப்படும். துன்பத்தில் செய்யும் உதவி மானங் காத்தல் போன்ற மாண்புறு செயலாகும் என வள்ளுவர் கருதுவதால் தான் உடுக்கை இழந்தவன் கைபோல் என்ற உவமை வழி உணர்த்தலானார். உடையழி காலை உதவிய கைபோல் நடலை தீர்த்தல் நண்பனது இயல்பு என்னும் பெருங்கதைப் பாடல் அடிகளும் கருத்தொற்றுமை உடையதாகும். கடுக்கை அணிந்த முடியோன் திருவெங்கைக்காரிகையாய் உடுக்கை இழந்தவன் கைஓர் பொருளை ஒழித்ததனைத் தடுக்கை விரைந்தது போல, நட்ட வேந்தன், தனக்குதவி அடுக்கை விழைந்து நினை விடுத்தார் நட்பறிந்தவரே என்னும் திருவெங்கை உலாப் பாடலும் ஏற்ற இலக்கிய மேற்கோளாகும். பொடி அணிந்து எழில் பொங்குறும் அல்லமன் அடியர் தங்கள் அகத்தில் துயரினை உடைஇழந்தவன் ஒருவன் கரம் எனக் கடிதடைந்து களைந்து அருள் செய்யுநாள் எனக் கூறும் பிரபுலிங்கலீலைப் பாடல்குறளுக்கு ஏற்ற விளக்காய் அமைந்துள்ளது. சரண் உனைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம் என்றான் இராமனிடம், சுக்கிரீவன். அவனுக்கு இராமன் அளித்த உறுதி. என்ற அக்குரக்கு வேந்தை, இராமனும் இரங்கிநோக்கி, உன்தனக்கு உரிய இன்பதுன்பங்கள் உள்ள, முன்நாள் சென்றன போக, மேல் வந்து உறுவன தீர்ப்பன்; அன்ன நின்றன, எனக்கும் நிற்கும் நேர் என பொழியும் நேரா. மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை, மண்ணில், நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளைஎனது; என் காதல் சுற்றம், உன்சுற்றம்; நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான் என்னும் கூற்று அருமையான எடுத்துக்காட்டாகும். நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில், கொட்பின்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை. (குறள். 789) மாந்தர் அனைவரும் ஒத்த தன்மையினர் அல்லர். ஆகவே, அவர்கள் கொள்ளும் நட்பும் ஒரே தன்மை உடையதாய் இருக்க இயலாது. அவரவர் தகுதியைப் பொறுத்ததாகவே அமைந் திருக்கும். பல படி நிலைகளை உடையது நட்பு. அவற்றில் எல்லாம் மிக உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கத் தக்க நட்பு எது? என வினவினால் கொட்பின்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை உடையதாக யாருடைய நட்பு அமைந்திருக்கிறதோ அன்னாருடைய நட்பே மிக உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கத் தக்க நட்பாகும். சூழ்நிலை எப்பொழுதும் ஒரு தன்மை உடையதாய் அமையாது. சூழ்நிலை மாறிக் கொண்டே இருப்பது இயல்பு. ஆனால் அச் சூழ்நிலையின் பாதிப்புக்கு ஆட்படாமல், எந்தச் சூழ்நிலையிலும், மனத்தில் கணப் பொழுதும் மாறுபாடோ, வேறுபாடோ கொள்ளாது, மனத்தை சமநிலை யில் நிறுத்தி, தம்முடைய முழுஆற்றலையும் பயன்படுத்தி, நண்பன் நன்னிலையில் நிலை பெறுதற்குச் செய்ய வேண்டிய உதவிகளை இயன்ற வழிகளிலெல்லாம் உறுதியுடன் செய்து கொண்டு இருப்பதாகும். நட்பினுக்குச் சிறந்த நிலை எது என்றால், எக்காலத்தும் மனத்தில் மாறுபாடு இல்லாமல் தன்னால் இயன்ற வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனை இம்மண்ணில் காலூன்றி நிற்க வைக்கும் உறுதிப்பாடாகும். தனி வாழ்விலும், குடும்பவாழ்விலும், தொழில் வாழ்விலும், தொண்டு வாழ்விலும் தான் நன்றாக இருப்பதுடன் தன் நண்பனும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இயன்ற வழிகளிலெல்லாம் உதவி உயர்நிலையில் நிலைபெறச் செய்யும் உறுதியுடன் கூடிய மனவளமே உயர்நிலை நட்பாகும். இனையர் இவமெக் கின்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு (குறள். 790) நட்பு நெஞ்சக் கலப்பால் உருவானதாய் இருக்க வேண்டும். உணர்வின் ஒற்றுமையால் பிறப்பதாக இருக்க வேண்டும். நண்பனைத் தவறு செய்ய விடாது காக்க வேண்டும். தவறு செய்தால் உரிமையுடன் சுட்டிக் காட்டித் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற திருவள்ளுவர் அதற்குப் புறத்தே புனைதல் இருக்கக் கூடாது எனக் கடியும் குறளே இதுவாகும். இவர்தான் என்மீது கொண்ட அன்புப் பெருக்கால் எனக்கு இந்தப் பணியை முயன்று பெற்றுத் தந்தார். அதனால் பொருட் கவலை இன்றி என்குடும்பம் வாழ்கிறது. ஆகவே, இவர் எம் குடும்பத்தைக் காத்த கடவுள் போன்றவர் என்று மற்றவரிடம் பாராட்டுவதோடு அமையாது யானும் அவர்மீது அளவற்ற அன்புடையவனாக நடந்து கொண்டு வருகிறேன். இவர் செய்த உதவிக்குக் கைமாறு எம்மால் செய்யவும் முடியாது இவரும் எதிர்பார்ப்பவர் அல்லர். எனினும் என் மனது கேட்கவில்லை யாம் ஏதாவது இவர்க்குச் செய்ய வேண்டும் என எண்ணினேன். இவர் குடியிருப்பது வாடகை வீடு என எனக்குத் தெரியும். ஆகவே, இவர் குடும்பம் வாழ்வதற்கு ஒரு நல்ல இல்லம் ஒன்றை அமைத்து, அவர் பெயருக்கே ஆவணம் பதிவு செய்து, வற்புறுத்திக் குடியேற வைத்தேன். ஏதோ என்னால் செய்ய முடிந்தது இதுதான் என்ற உண்மையைத் தான் பிறர்க்கு வெளிப்படும் முகத்தான் பாராட்டி கூறினார். அதனை அறிந்த திருவள்ளுவர் இனி இவர்கள் நட்பு தன் சிறப்பினை இழந்து விடும். நட்பும் நெடு நாள் தொடரும் எனவும் சொல்ல இயலாது என வருந்தினார். அவ்வருத்தத்தின் வெளிப்பாடே இக்குறளாகும். இவர் எமக்கு இத்தகைய அன்பு உடையவர்; யாமும் அவர்க்கு இத்தகைய அன்புடையோம் என அதற்கான சான்றுகளையும் எடுத்துக் காட்டிப் பிறரிடம் புனைந்து கூறினாலும் அந்நட்பு தகுதியற்ற கீழான நட்பு எனப்படும், என உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். முகனமர் கிளவி முன்னின்று உரைப்பின் ஏதின்மை ஈனும் ஏனோர் மாட்டு எனக் கூறும் பெருங்கதையின் மொழியையும் எண்ணிப் பார்ப்பது நன்று. நல்ல நட்பு வாய்ப்பது அரிது நட்பு தொழிலுக்குக் காவல் பண்பாளர் நட்பே வளரும் நட்பு பொழுது போக்குவதற்கு அன்று நண்பன் செய்யும் தவறுகளைத் திருத்த வேண்டும் ஒத்த உணர்வே உரிமை நட்புக்குத் தேவை மனம் மகிழுறுமாறு நண்பரிடம் பழகு நண்பனுக்கு நல்வழி காட்டித் துணை நில் நண்பனின் துன்பத்தில் பங்கு பெறு நண்பன் துன்பத்தை விரைந்து போக்குக மாறுபாடின்றி நண்பர்க்கு உதவுக நண்பரை எடை போடாதே நட்பு விலை மதிப்பு அற்றது நட்பில் புனைவுக்கு இடம் தராதே புனைவு நட்பைக் கீழானதாக்கும் ------------ 80. நட்பாராய்தல் நட்பு என்னும் நற்பண்பினை நாடிப் பெற வேண்டியது நன்மக்கள் கடமையாகும். நட்புணர்வு இல்லாமல் சமுதாய நல்லுணர்வு இல்லை. ஒருவர்க்கு ஒருவர் இணங்கி வாழ வேண்டிய நிலையில்தான் எந்தச் சமுதாய அமைப்பும் இருப்பதை அனைவரும் அறிவோம். இணங்கி வாழ வேண்டும் என்பதற்காகக் கண்டவர் களிடம் எல்லாம் இணங்கி வாழ முடியுமா? அப்படி வாழ்வதால் பயன் உண்டாகுமா? காண முடிபவர்களை எல்லாம் காணலாம். பேச முடியவர்களிட மெல்லாம் பேசிக் கொள்ளலாம். ஆனால் காண்பவர், பேசுபவர் அனைவரையும் நண்பராக்கிக் கொள்ளலாமா? கூடாது. நட்புக் கொள்ளும் போது நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும். சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்றே அறிஞர்கள் வேண்டுகின்றனர். ஔவைப் பெருமாட்டியின் ஆணை இணக்கம் அறிந்து இணங்கு என்பதே; என்பதை மறந்துவிடல் ஆகாது. திருவள்ளுவரும் நட்பு என்னும் அதிகாரத்தில் தோழமையின் சிறப்பை எடுத்து, மொழிந்தபின், தோழமை கொள்வதற்குத் தக்கவரைத் தேர்ந்து கொள்ள வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்துவான் வேண்டி நட்பாராய்தலுக்குத் தனி அதிகாரம் வகுத்துக் கூறலானார். மணவுறவு போன்று நட்புறவும் வாழ்நாள் முழுமையும் நீடிப்பதாகும். நல்லவர் நட்பால் ஆக்கமும், தீயவர் நட்பால் அழிவும் நேரும் என்பது உண்மை. ஆகவே, மலர்ந்த முகத்தையும் இனிய சொல்லையும் சான்றாகக் கொண்டு எவரையும் நம்பிவிடாமல், எல்லா வகையாலும் ஆராய்ந்து பார்த்தே, உண்மையான அன்புடையவரைக் கண்டுணர்ந்து நட்புக் கொள்வதே நலம் பயக்கும். உரையால் மட்டும் ஒன்றாகி உள்ளத்தால் பெரிதும் வேறுபட்டுப் பொய்யாக நடிக்கும் போலிகளும் உலகில் உள்ளனர். அத்தகையோர் தொடர்பு, நல்ல மரத்தில் புல்லுருவி வாய்த்துக் கெடுப்பது போன்றதாகும் என்பதைக் கல்லாடம். உயர்மரம் முளைத்த ஊரி போல ஓருடல் செய்து மறுமனம் காட்டும் எனக் கூறுவதையும். தனக்கென ஒரு தகுதியும், உறுதியும் இல்லாமல் ஒவ்வொரு வருக்கும் தக்கவாறு பொய்யாக நடித்து வாழ்பவன், கையும் காலும் தூக்கத் தூக்கும் கண்ணாடிப் பாவை போன்றவன் ஆவான் என்பதைக் குறுத்தொகை. எம்மில் பெருமொழி கூறித் தம்மில் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யும் எனக் கூறுவதையும். உயிரொடும் ஒன்றிய குற்றமில்லாத நண்பன் ஒருவனைப் பெறுவது, என்றும் பெயர்தல் இல்லாத இன்ப உலகத்தைப் பெற்றது போன்றதாகும் என்பதை, உயிர்த்துணைத் தோழன் உளன்என உவந்து பெயர்ச்சியில் உலகம் பெற்றான் போல என்றும், நல்ல நண்பன் வாய்க்கப் பெறாத அல்லல் மிக்க உலக வாழ்வு, ஒளி வெளிப்படுதல் இல்லாத இருள் உலகிடை அழுங்குவது போன்றது என்பதை காதல் தோழனைக் காணாது கலங்கி மாதாங்கு தடக்கை மன்னருள் மன்னவன் நளிகதிர் மண்டில நாள்முதல் தோன்றி ஒளியிடப் பெறாஅ உலகம் போல இருளகம் புதைப்ப மருள்அகத்து எய்தி எனவும் பெருங்கதை நவில்வதைவும் படிக்கும் போழ்து, பள்ளத்தின் வழியே பாய்ந்து செல்லும் வெள்ளம். அதுபோல் உள்ளத்தின் வழியே பாய்ந்து செல்லும் உணர்வாகிய நட்பிற்கு ஆராய்ச்சி மிக இன்றியமையாதது என்பதை உணர்கிறோம். இனி வள்ளுவர் வழியில் நட்பாராய்தலை ஆராய்வோம். ------------ நாடாது நட்டலின் கேடில்லை; நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு (குறள். 791) நட்பை ஆள்பவர்க்கு, நட்டபின் (நட்புக் கொண்டபின்) வீடு (விடுதலை) இல்லை (ஆதலால்) நாடாது (ஆராயாது) நட்டலின் (நட்புக் கொள்வதைக் காட்டிலும்) கேடு இல்லை. என அமைத்துக் கொண்டால் பொருள் புலப்பட்டுவிடும். ஆராயாது நட்புக் கொள்வது போல் கேடில்லை. ஏன்? நட்புக் கொண்டபின் அதனின்று விடுதலை இல்லை. நினைத்த பொழுது இணைந்து, நினைத்த பொழுது விலக்கிக் கொள்வது நட்பன்று, நட்பு படிப்படியாய் வளர்ந்து உச்ச நிலையில் வாழ்நாள் வரை நிலைபெறுவது. ஒருவரோடு ஒருவர் நட்புக் கொண்ட பின் நட்புக் கொண்டவர் நட்பை விட்டு விடுதல் எளிமையான தன்று. ஆகவே, நட்புக் கொள்ளுமுன் நன்கு ஆராய்ந்து நட்புக் கொள்ளவேண்டும். கண்டேன் காதல் கொண்டேன் என்பது போல் ஆராய்ந்து பாராமல் நட்புக் கொண்டால் விளையும் கேடு இவ்வளவு என்று கணக்கிட்டுச் சொல்ல இயலாது ஆகவே, திருவள்ளுவர் ஆராயாது கொள்ளும் நட்பால் உண்டாகும் கேட்டினைப் போல் கேடு தருவது வேறு எதுவும் இருக்கமுடியாது என்னும் கருத்துத் தோன்றுமாறு நாடாது நட்டலிற் கேடில்லை என்றார். பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே என நற்றிணையில் கபிலர் கூறுவதும் ஒத்த கருத்தே! இன்னா செயினும் இனிய ஒழிகென்று தன்னையே தான் நோவலின் அல்லது-துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல், கானக நாட விலங்கிற்கும் விள்ளல் அரிது என்னும் நாலடிப் பாடலும் குறளுக்கு விளக்கமாய் அமைந்துள்ளது. வீடணன் அடைக்கலப் படலத்தில் சாம்பன் கூறும் கருத்துகளில் ஒன்று, கைப்புகுந்து, உறுசரண் அருளிக்காத்து மேல் பொய்க்கொடு வஞ்சனை புணர்ந்த போதினும் மெய்க்கொள விளியினும் விடுதும் என்னினும் திக்குஉறும் நெடும்பழி அறமும் சீறுமால் என்னும் கம்பராமாயணப் பாடலும் தக்கமேற் கோளாகும். பல நாள் பலரோடும் சேர்ந்து ஒத்துக் கலந்து பழகிப் பொருளாகத் தக்காரையே நட்புக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கடித்து உயிரை அழிக்கும் பாம்போடாயினும் கூடிப் பிரிதல் இன்னாமை ஆகும் என்பதை, மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப் பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும் பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு. என்னும் நாலடிப் பாடலும் சிறந்த எடுத்துக் காட்டாகும். ------------- ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை தான்சாம் துயரம் தரும் (குறள். 792) ஒருவனுடைய குணங்களையும், செயல்களையும் நல்லனவா என்று பலமுறையும் பலவகையாலும் ஆராய்ந்து தகுதியானவரே என்ற தெளிவு ஏற்பட்ட பின்பே நட்புக் கொள்ளவேண்டும். அவ்வாறு ஆராய்ந்து பாராமல் நட்புக் கொண்டு அவர் தீயவராக அமைந்து விட்டால், அந்நட்புக் காரணமாகவே இறுதியில் தானே நொந்து நொந்து சாவது போலும் துயரை அடைய நேரும். தீயவனோடு நல்லவன் நட்புக் கொள்ளநேர்ந்தால், அவன் கடன் பெற்றிருந்தால், அக்கடன் சுமையையும் சேர்த்துச் சுமக்க வேண்டி நேரும்; அவன் குற்றம் புரிந்தால் அக்குற்றங்கட்கு உரிய தண்டனையும் அடைய வேண்டியதிருக்கும். அவனைத் தாக்கவரும் பகைவர்களின் தாக்கு தலையும் தாங்க வேண்டியது ஏற்படும். தீயவனோடு சேர்ந்தவனும் தீயவனாகவே கருதப்படுவான். இந்த வீண்பழியை எண்ணி எண்ணி வேதனைப்பட்டுச் சாக நேரும். பலமுறை ஆராய்ந்து கொள்ளாத நட்பு, இறுதியில் தானே சாகும் துயரத்தைத் தரும், விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும் முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா அளிந்தார்கண் ஆயினும், ஆராயா னாகித் தெளிந்தான் விளிந்து விடும். என்னும் பழமொழிப் பாடல் வழி தமக்கு அன்பு உடையவர்களாக விளங்குபவர்களிடமும், அவர்களை முழுவதும் ஆராயாதவனாகி, நம்பிக்கை கொண்டவன், உறுதியாகக் கெட்டே போவான். அப்படி இருக்க, எப்பொழுதும் சினங்கொண்டவர் களைப் போல் மனம் வேறுபட்டவர்களாகி நிற்கும் ஈரமற்றவர்களை நம்ப வேண்டா என்று சொல்லாமலே தெரிந்து கொள்வீர்கள் என்னும் பழமொழிப்பாடற் பொருளும் குறட்கருத்துக்கு அரண் செய்வதே ஆகும். ------------ குணனும் குடிமையும் குற்றமும், குன்றா இன்னும் அறிந்துயாக்க நட்பு, (குறள். 793) நட்புக் கொள்வதற்கு முன் ஒருவனுடைய குண இயல்பையும், அவனுடைய குடிப்பிறப்பையும், அவன்பால் பொருந்தியுள்ள குற்றங் களையும், குறைவில்லாத தொடர்பினரையும் அறிய வேண்டும். நம்முடைய குணத்திற்கும் அவன் குணத்திற்கும் ஒத்து வருமா என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம். முரண்பட்ட குணங்களோ தீய குணங்களோ, தன்னலமும், தற்பெருமையும், பெருஞ்சினமும் அடங் காமையும், பொய்மையும் அமைந்திருந்தால் அத்தகையோரை விலக்கி விட வேண்டும். அன்பு, அடக்கம், பொறுமை இனியவை கூறல், வாய்மை கூறல், ஈகை ஒப்புரவு போன்ற நற்குணங்கள் அமைந்தவர் நட்புக் கொள்ள ஏற்றவர் எனத் தெரிந்து கொள்ள வேண்டும். குடும்பம் வழிவழியாக நடுவு நிலை போற்றும் குடும்பமா? ஒழுக்கமும் வாய்மையும், நாணும் மூன்றிலும் தவறாது நடக்கும் குடும்பமா? மலர்ந்த முகத்தவர்களா? வறியவர்கட்கு வழங்கும் கையர்களா? இன்சொல்லே பேசி எவரையும் எப்பொழுதும் இகழ்ந்து கூறா வாயை உடையவர்களா? புகழ்தரும் பயனுடைய செயல்களையே விரும்பிச் செய்பவர்களா? என்பனவற்றைத் தெரிந்து கொள்வதுடன் பிறர் கையை எதிர் பாராது. உழைத்து வாழும் குடும்பமாக அவர் குடும்பம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். உலகில் குற்றம் சொல்ல முடியாத முழு நிறைவான மாந்தரைக் காண்பது அரிது என்பதைத் தேர்ந்து தெளிந்தவர் திருவள்ளுவர் ஆகவே, நீங்கள் யாரோடு நட்புக் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறீர்களோ, அவர்கள் பால் அமைந்துள்ள குறைபாடுகளையும் அவர்கள் இன்றுவரை செய்தவைகளில் உள்ள குற்றங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவை பொருட்படுத்தத் தக்கனவல்ல என்ற தெளிவு உங்களுக்கு ஏற்படுமானால் தான் நட்புக் கொள்ள வேண்டும். குற்றங்களை அறிந்தே செய்தவர், செய்த குற்றத்தைக் குற்றம் என உணராது, மீண்டும் மீண்டும் செய்தவர் என்றால் அன்னாரைக் கட்டாயம் அண்டவிடல் ஆகாது. ஆகவேதான் திருவள்ளுவர் குணத்தைத் தெரிந்து கொள்வதுடன் குற்றத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். குடிப் பிறப்பைத் தெரிந்து கொள்ள வேண்டியவர் குன்றா இதனையும் அறிந்து யாக்க என அறிவுறுத்துகிறார். பிறந்த குடும்பம் தகுதிவாய்ந்த குடும்பம் தான். அவரும் நல்ல பண்பாளர்தான் குறிப்பிடத் தகுந்தாற் போல் குற்றம் எதுவும் புரியா நிறை மனிதர்தான். இம்மூன்றும் நிறைவாக இருந்தாலும் போதாது. இம் மூன்றையும் விட முக்கிய மானதுதான் குன்றா இனன். குணன், குடிமை, குற்றம் என முன் ஒட்டோ பின் ஒட்டோ அடைமொழியோ இன்றிக் குறிப்பிட்ட திருவள்ளுவர் இனன் எனச் சுட்டும் போது குன்றா இனன் எனக் குறிப்படுவதை எண்ணிப்பார்க்க வேண்டும். பெரியாரைத் துணைக் கோடல் என ஓரதிகாரம் பாடியதுடன் அமையாது அதனை அடுத்தே சிற்றினம் சேராமைக்கு ஓரதிகாரம் ஒதுக்கியவர் திருவள்ளுவர். சிற்றினம் சேராமையின் நிறைவுக்குறள், நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் (குறள். 460) v‹gjhF«., மாந்தர்க்கு இனத்து இயல்பதாகும் அறிவு (குறள். 452) மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் (குறள். 455) இனம் தூயார்க்கு இல்லை நன்றாகா வினை (குறள். 456) இனநலம் எல்லாப் புகழும் தரும் (குறள். 457) இன நலம் ஏமாப் புடைத்து (குறள். 458) இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல் (குறள். 463) என இன நலத்தின் நலன் உரைத்தவர் திருவள்ளுவர். ஆகவே, திருவள்ளுவர் நம்மை நோக்கி வேண்டுவது நீங்கள் நட்புக் கொள்ள இருப்பவரின் குணத்தையும், குற்றத்தையும், குடியையும், அறிந்து கொள்வதுடன் அமையாது அன்னாரின், குன்றா இனனையும் அறிந்து, தக்கதாயின் நட்புக் கொள்க என வேண்டுகிறார். குணம், குற்றம், குடிப்பிறப்பு, குற்றமற்ற இனம் நான்கையும் நன்கு அறிந்து நட்புக் கொள்வோம். குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. (குறள். 794) நீ தேடும் நண்பன் வசதிவாய்ப்பு நிறைந்த செல்வந்தனாக இருக்க வேண்டும் என்று எண்ணாதே! அவன் பொருளியல் வாய்ப்புக் குறைந்த வறுமையாளனாகக் கூட இருக்கலாம். அதனால் குற்றம் ஒன்றும் விளையாது. ஆனால் அவன், அடுக்கியம் கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இவர் (குறள். 954) என்னும் குறளுக்கும் புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் என்னும் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதியின் பொருள் மொழிக்கும் எடுத்துக் காட்டாய் விளங்கும் உயர் குடிப் பிறந்த உயர்ந்த பண்பாளனாகவும் பழிக்கு வெட்கப்படும் நாணுடைமை என்னும் நல்லணி பூண்டவனாக இருந்தால் போதும் அவன் வறுமை போக்க வேண்டு வனவற்றை நீ அவனுக்குக் கொடுத்து அத்தகையவனிடம் நட்புக் கொள்ளுமாறு திருவள்ளுவர் வேண்டுகிறார். உயர்குடியில் பிறந்து தன்னைப் பற்றி உலகம் ஏதேனும் பழிகூறினால் அதற்காக நாணம் கொள்ளும் நல்ல பண்புடையவனை, அவனுக்குத் தேவையனவற்றைக் கொடுத்தும் கூட நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு. (குறள். 502) என்னும் தெரிந்து தெளிதல் அதிகாரக் குறளையும் குறிப்பிற் குறிப்புணர்வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் (குறள். 703) என்னும் குறிப்பறிதல் அதிகாரக் குறளையும், பகை மாட்சியில் கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை (குறள். 867) எனக் கூறுவதையும் தொகுத்துச் சிந்திப்போம். ------------ இடித்துத் திருத்தும் பெரியவரைத் தம்மவராகக் கொண்டு வாழ்கின்ற வரைக் கெடுக்கும் வலிமை உடையவர் எவரும் இலர் என்பதைப் பெரியாரைத் துணைக் கோடல் அதிகாரத்தில் இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கு கைமை யவர் (குறள். 447) ஒருவரோடு ஒருவர் நட்புக் கொள்வது சிரித்து மகிழ்வதற்காக மட்டுமன்று; வரம்பு மீறிச் செல்லும் இடத்தில் முற்படச் சென்று இடித்துக் கூறுவதற்கும் ஆகும் என்பதை நட்பு அதிகாரத்தில் நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு (குறள். 784) எனக் கூறிய கருத்துகளின் விரிவே அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல் (குறள். 795) என்னும் குறட்பா ஆகும். (நல்லது) அல்லது (செய்யும் போது) இடித்து அழுமாறு சொல்லி (உலக) வழக்கு அறியவல்லார் (ஐ) ஆய்ந்து நட்புக்கொளல். என அமைத்துக் கொண்டால் உரை காண்பது எளிது. நண்பனுக்குப் பெற்றோர்க்கும், ஆசிரியர்கட்கும், உள்ள உரிமையை விட மேலான உரிமை உண்டு. நண்பன் நல்லது செய்யும் போது அவனைப் போல மனநிறைவுடன் மற்றவர்களால் பாராட்டவும் இயலாது. அதுபோல மகிழத்தக்க செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் போதும் நண்பர்கள் போல் மற்றவர்கள் சிரித்து மகிழ இயலாது. அது போல் செருக்கால் வரம்பு மீறி நடந்து கொண்டால் தான் செய்தது வரம்பு மீறல் தான் என்று உணர்ந்து அழுமாறு சொல்லும் தகுதியும், நல்லது செய்ய வேண்டியவன் அல்லது செய்து அல்லல்பட நேருங்கால் கண்ணோட்டம் கொள்ளாமல் இரக்கம் காட்டாமல் அன்பை அகத்தே அடக்கி, இனிய சொல் கூறும் வாயால் அழுத்தமான கடுஞ்சொற்களையும் பயன்படுத்திக் கண்டித்தும் உயர்ந்தோர் வாழ்ந்த வாழ்க்கை நெறியில் நடக்க வைக்கும் ஆற்றல் உடையவர் களைத் தேடிப் பிடித்து ஆராய்ந்து நட்புக் கொளல் வேண்டும். செருக்கும் போது அழுமாறு சொல்லியும், தவறும் போது இடித்துக் கூறியும், உலக வழக்கை அறிந்து உணர்த்த வல்லவரை ஆராய்ந்து தேடி நட்புக் கொள்ளுதல் வேண்டும். அத்தகைய நட்பினைத் தேடிக் கொள்ளாமலும், தமக்கு அறிவுரை வழங்கும் தகுதி எவர்க்கு இருக்கிறது என இறுமாப்புக் கொண்டு, வேண்டாததைச் செய்து வம்பில் மாட்டிக் கொண்டு, பெயரையும் புகழையும் கெடுத்து அல்லற்படும் பெரும் பெரும் பதவியாளர்களையும் நாட்டில் காண முடிகிறது. அழ அழச் சொல்வார் தமர் சிரிக்கச் சிரிக்கச் சொல்வார் பிறர் என்னும் பழமொழியையும் நினைவுகூர்வோம். நன்னெறி நீங்கிப் புன்னெறியிலே நண்பன் நடக்கும் போது, பகைவனைப் போல் இரக்கம் சிறிதும் இல்லாமல் இடித்துரைத்தும் திருத்துதல் வேண்டும். இது நல்ல நண்பர் கடமையாகும் என்பதை. நன்றி அன்றிக் கன்றியது கடிதற்குத் தகவில செய்தலில் பகைவர் போலவும் ...... ...... இனியோர்க் கியன்ற படுகடன் எனவும், செயலாற்றும் திறமை இல்லாமல் சோர்வடைந்த பொழுதில் ஒருவனை அவன் ஆண்மை ஒன்றே சோர்வை நீக்கிக் காக்க வல்லது. அவ்வாண்மை போல் உதவுபவரே உண்மை நண்பர். குற்றம் செய்பவரை அவரின் நன்மை ஒன்றே கருதிய பெரியவர்கள் அன்புரையாலும், வன்புரை யாலும் நல்வழிப் படுத்துவர். அதுபோல் நண்பன் தவறிச் செல்லுங்கால் தடுத்து நல்வழிப்படுத்துபவரே உண்மை நண்பினர் என்பதை, அற்றம் காத்தலின் ஆண்மை போலவும் குற்றம் காத்தலில் குரவர் போலவும் ...... .... இனியோர்க்கு இயன்ற படுகடன் எனவும் பெருங்கதை பகர்வதையும் ஒப்பு நோக்கி ஆய்ந்து கொள்வோம். கேட்டினும் உண்டோர் உறுதி, கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். (குறள். 796) ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மேடும் பள்ளமும்; வறுமையும் வளமையும்; இன்பமும் துயரமும் ஏற்படலாம். வளமையோடு இன்புற்று வாழும் காலத்தில் நண்பர்கள் துணை தேவையில்லை. வறுமைக்கு ஆட்பட்டு பள்ளத்தில் வீழ்ந்து துன்புறும் காலத்தில் கைதூக்கிவிடவும் சோர்ந்து விடாது காக்கவும் நண்பர்கள் உதவி தேவைப்படும். வறுமையும் இடரும் வந்து துன்புறுத்தும் காலத்தைத் தீமை தரும் காலமாகக் கருதுவது இயல்பு. ஆனால் திருவள்ளுவர் கேட்டுக்கு ஆளான அக்காலத்திலும் நமக்கு ஒரு நன்மை உண்டு என்கிறார். அது என்ன எனின் அப்பொழுதும் நம்மைவிட்டு விலகாது துன்பத்தில் பங்கு கொள்பவன் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவர்களே உண்மையான நண்பர்கள் என்பதை அறிந்து கொள்வதற்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாகக் கருதிக் கொள்ளலாம். அது ஒரு நன்மை தானே! ஆக்கக் காலத்தில் எல்லா நண்பர்களுமே நல்ல அன்பர்களாகவே தோன்றுவதால் அக்காலத்தில் தனித் தனியே அவர் அன்பை அளந்து அறியும் வாய்ப்பு இல்லை. வீழ்ச்சிக் காலத்தில் மெய்யன்பர் ஒட்டியும், பொய்யன்பர் விலகியும் நிற்பதால் நண்பரின் அன்பளவை அளந்து அறியும் நிலைமை ஏற்படுவதாலும் கேட்டினும் உண்டோர் உறுதி என்றும் அதைத்தவிர்த்து வேறு அளவுகோல் இன்மையால் ஓர் கோல் என்றும் கூறினார். கேட்டினுக்கு ஆளாகும் காலமே உண்மையான நண்பரைக் கண்டுணரும் காலம். ஒருவனின் நற்குண நற்செயலால் அவன் குடிப்பிறப்பு இன்னது எனத் தெளியலாம். அதுபோல் பொருள்வளம் குன்றிய போது உண்மை நண்பர் இவர் என்னும் உண்மையை அறிதல் கூடும் என்பதைத் திரிகடுகம். குறளையுள் நட்பளவு தோன்றும், உறல் இனிய சால்பினால் தோன்றும் குடிமை எனக் கூறுவதையும் ஒப்பிட்டுக் காணலாம். காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர் - ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட தொடர்புடையேம் என்பார் சிலர் என்னும் நாலடிப்பாடல் உலகியல் உண்மையைத் தெளியக் காட்டும். ஆபத்தில் அறியலாம் அருமைச்சிநேகிதனை என்னும் பழமொழியும் ஒத்த கருத்தில் உதித்ததே! தண்டுகொண்டு ஓட்டினும் போகாமல் நம்மைத் தருசிக்கவே பண்டு வந்தோர் இன்று, தாம்பூலம் வைத்துப் பரிந்தழைத்தும் திண்டும் மிண்டும் சொல்லி வாராதிருந்தனார். செய்கையெல்லாம் கண்டு கொண்டோம், இனித் தொண்டு கொண்டோம் கடவுளுக்கு என்னும் வேத நாயகர் தனிப்பாடல் திரட்டுப் பாடலும், குறளுக்கு விளக்கவுரையாய் அமைந்துள்ளதைக் காண முடிகிறது. ------------ ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள். 231) எனப் புகழ் அதிகாரத்தில் உயிர்க்கு ஊதியம் வழங்கிய திருவள்ளுவர். நட்பில் ஊதியம் பெற வழி சொல்லும் குறளே, ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் (குறள். 797) ஆகும். நல்ல குடியில் பிறந்து தீவினைக்கு நாணும் பண்பாளர் களைத் தேடிப்பிடித்து நட்புக் கொள்ளவேண்டும். அத்தகையோர் நட்பு நிலைக்க என்ன விலையும் தரலாம். ஆனால், நாம் நட்புக் கொண்டவரில் ஒருவர் பண்பற்ற அறிவிலி எனத் தெரிந்தால் அவர் நட்பைத் தொடரவிடுவது நல்லதல்ல, அவர் நட்பை விலக்கி விடுதல் வேண்டும். தீயவர் நட்பை விலக்குவதால் பெரிய நன்மை விளையும். திருவள்ளுவர் அறிவிலார் நட்பை விலக்குவது ஒருவனுக்கு மேலான வருவாய் என்கிறார். நல்லவர் பகைவராக இருந்தாலும் கேடில்லை, அறிவிலிகள் நட்பு மிகப்பெரிய கேட்டினை உண்டாக்கும். ஆகவே அறிவிலியின் நட்பை விலக்குவது பெரிய நன்மை தரும் என்பதை ஊதியம் கிட்டும் என்கிறார் திருவள்ளுவர். பேதையார் கேண்மையால் விளையும் கேடுகளிலிருந்து நம்மைக் காக்க விரும்புபவர் என்பதை உணர்த்தும் குறள்களில் இஃது ஒன்றாகும். மனத்தான் மறுவில ரேனும் தாம் சேர்ந்த இனத்தால் இகழப்படுவர்:- புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனந் தீப்பட்டக் கால் என்னும் நாலடிப் பாடல் நவில்வதையும் ஒப்பு நோக்குக! ------------ நினைப்பவற்றை எல்லாம் உயர்ந்தவையாய் நினைக்க வேண்டும். அவை உடனே நிறைவேறாவிடினும்விடாமல் மேற்கொள்ள வேண்டிய பெருமை உடையவை என்பதை, ஊக்கமுடைமை அதிகாரத்தில் உள்ளுவ தொல்லாம் உயர்வுள்ளல்; மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து (குறள். 596) எனவும், போர்வந்த பொழுதில் கீழறுப்புச் செய்யும், நல்லதைப் படியா விலங்கு போன்றவர்தமக்கு நண்பராக இருப்பதைக் காட்டிலும், நண்பரே இல்லாமல் தனித்திருப்பதும் நன்மையாம். நட்புக் கொண்டும் பாதுகாக்க வேண்டிய பொழுதில் பாதுகாப்புத்தராத சிறுமையரின் தீய நட்பை அடைவதினும். அடையாமல் இருப்பதே நன்மைஆகும் என்பதையும் தீநட்பு அதிகாரத்தில் அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை (குறள். 814) செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று (குறள். 815) எனவும் கூறும் குறப்பாக்களின் அடிப்படையில் கூறும் குறட்பாவே. உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு (குறள். 798) ஊக்கத்தை மிகுதிப்படுத்தி, மனத்தை விரிவடைய செய்யும் வினை களையே செய்ய எண்ண வேண்டுமே தவிர்த்து. ஊக்கத்தை குன்றச் செய்யும் வினைகளையோ மன வளத்தைச் சுருங்கச் செய்யும் வினை களையோ செய்ய எண்ணுவது கூடாது. இன்பக் காலத்தை விட, துன்பக் காலத்தில் துணை நிற்கும் மனவுறுதி உடையவர்களையே நண்பர்களாகக் கொள்ள வேண்டுமே தவிர்த்து, துன்பக் காலத்தில் உடன் இல்லாது கைவிட்டு ஓடும் கீழானவர்கள் நட்பைக் கைக் கொள்ளுதல் கூடாது. கப்பல் கவிழ்ந்து போனதால் ஒரு கட்டையைப் பற்றிக் கொண்டவனுக்கு அந்தக் கட்டையும் கையை விட்டுப் போனது போன்றது, அல்லல் மிக்க பொழுதில் துணையாக இருந்தவரும் பின்னர் அவரை விடுத்துச் சென்றுவிடுவது எனும் கருத்தைப் பெருங்கதை. நொப்புணை வலியா நுரைநீர்ப் புக்கோற்கு அப்புணை அவர்வயின் அவன்கை தீர்ந்தாஅங்கு .................. ................... அரும்பிடி நம்மை ஆற்றறுத் தன்றால் எனக் கூறுவதைத் தக்க எடுத்துக்காட்டாய்க் கொள்ளலாம். ஒருவர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் என்றும் சிறப்புக்குரியதாகும். அத்தீமையை முழுமையாக மறந்து விடுவது அதனினும் சிறப்பாகும் எனப் பொறையுடைமையின் சிறப்பை, பொறுத்தல் இறப்பினை என்றும், அதனை மறத்தல் அதனினும் நன்று. (குறள். 152) என ஓர் உயர்ந்த கோட்பாட்டை உணர்த்தியதை நன்கு அறிவோம். அவரே மறக்க நினைத்தாலும் மறக்க முடியா ஒன்றை உணர்த்தும் குறளே, கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை, அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும். (குறள். 799) என்பதாகும். நண்பர் ஒருவர் நெடுநாளாக நட்புக் கொண்டு பழகி வருகிறார். இன்பக் காலத்தில் அவருடைய பேச்சும் செயலும் அவரை உயிர்க்கு உயிரான நண்பராகக் கருதச் செய்தது. மிக உரிமையுடன் பழகினார் உடன் இருந்து உண்டு அன்பு ஒழுக, இனிக்க இனிக்கப் பேசி மகிழ்வூட்டி வந்தார். நண்பர் என்றால் இவர் போல இருக்க வேண்டும் என எண்ணி மகிழ்ந்து பாராட்டியதும் உண்டு. அத்தகைய நண்பர், தம் நண்பர் ஒரு சிக்கலில் அகப்பட்டுத் துன்புறுகிறார் அவர் நினைத்தால் அச்சிக்கலில் இருந்து அவரை எளிதாக விடுவிக்கவும் இயலும்; அத்தகையவர் சொல்லாமல் கொள்ளாமல் தம் நட்பை விலக்கிக் கொண்டார். அவர் சிறிது காலம் துன்புற்றாலும், தன்னம்பிக்கையுடன் உழைத்து பழைய நிலைக்கும் மேலான நிலைமை அடைந்தார். துன்பக் காலத்தில் கைவிட்ட வஞ்சகன் நினைவு அவர் உள்ளத்தில் தங்கிவிட்டது. அவர்க்கு அகவை முதிர்ந்து உயிர் பிரியும் நேரம், குடும்பத்தவர் களையும், உறவினர்களையும், நண்பர்களையும், அழைத்து வாழ்த்தியதுடன் நெடுநாட்களாகப் பகைவர்களாக அமைந்தவர் களையும் அழைத்து வாழ்த்தியவர்; துன்பக் காலத்தில் உடன் இருந்து உதவாமல் கைவிட்டுச் சென்ற போலி நண்பன் செயலை மனத்தால் எண்ணி எண்ணி அவர் உள்ளம் சூடாயிற்று. உடலைச் சுடப்போகும் வேளை உடல் குளிர்ந்து காணப்பட்டாலும் நெஞ்சச் சூடு இறங்க வில்லை. அது விறகுத் தீயுடன் இரண்டறக் கலந்து எரிந்தது. துன்பக் காலத்துக் கைவிட்டவர் நட்பினை ஈமத்தீயில் நினைப்பினும் நெஞ்சும் எரியும். தமக்கு ஒரு தளர்ச்சி வந்த காலத்திலே சேமநிதி ஆவார் இவர் என்று கருதிப் போற்றப்பட்டவரான ஒருவர். ஓர் இடர் வந்த காலத்திலே ஒன்றுக்கும் உதவாதவராக ஏதாவது ஒரு காரணம் காட்டி மனம் மாறினார் என்றால் அதுவே மச்சின்மேல் ஒருவரை ஏற்றிவிட்டு ஏணியை எடுத்துவிடும் செயலை ஒக்கும் என்பதை, பழமொழி நானூறு எய்ப்புழி வைப்பாம் எனப் போற்றப் பட்டவர் உற்றுழி ஒன்றுக்கு உதவலார், பைந்தொடீஇ! அச்சிடை இட்டுத் திரியின், அதுவன்றோ, மச்சேற்றி ஏணி களைவு என வேறு வேறு ஓர் எடுத்துக் காட்டுடன் குறள் கருத்தை விளக்குவதை உணர முடிகிறது. ------------ மனத்தில் மாசில்லா மாமனிதர்களின் நட்பை எந்நிலையிலும் எக்காலத்திலும் மறவாமல் நெஞ்சாறப் போற்றி வருதல் வேண்டும். மாசற்றார் நட்பு என்றும் மனத்தில் வீற்றிருக்க வேண்டும். அதுபோல் துன்பக் காலத்தில் துவள விடாமல் உறுதுணை புரிந்து காத்தவர் நட்பை விடாது பற்றிக் கொள்ள வேண்டும் என என்றும் வாழ்வில் பின்பற்றத் தக்க அறிவுரையைச் செய்ந்நன்றி அறிதலில். மறவற்க மாசற்றார் கேண்மை, துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு (குறள். 106) எனக் கூறியதை நினைவுபடுத்தி வலிமை சேர்க்கும் குறளே, மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு (குறள். 800) ஆகும். குற்ற மற்ற நண்பர் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விடாமலும் காத்துக் கொள்வது நல்லது. நட்புக் கொண்டவர்களில் பொருத்த மற்றவராக எவராது அமைந்து விடுவார் ஆயின் அவர் நட்பைத் தொடரவிடாமல் விலக்கி விட வேண்டும். இரண்டிற்கும் பொருட்செலவு செய்ய வேண்டியது ஏற்பட்டாலும் தயங்காது அவர் விரும்பியதைக் கொடுத்து நட்பைப் பொருத்தம் உடையதாக எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவேதான் திருவள்ளுவர் குற்றமற்றவர் நட்பினை அவர் விரும்பும் எது ஒன்றையும் கொடுத்தும் தழுவிக் கொள்ள வேண்டுவதுடன் பொருந்தாதார் நட்பினை அவர் விரும்பும் எது ஒன்றையும் கொடுத்தாவது விலக்கிக் கொண்டு கவலையற்று இன்புற்று வாழ வேண்டுகிறார். ------------ எவரையும் ஆராயாமல் நட்புக் கொளள்தீர் நட்புக் கொண்டபின் விடுதல் அரிது ஆராயாத நட்பு பெருங்கேடு தரும் குணம், குற்றம், குடி, இனம் ஆராய்ந்து நட்புக் கொள்க நற்குடிப்பிறப்பினனிடம் கொடுத்தும் நட்புக் கொள்க பழிக்கு நாணுவான் நட்பு பொருள் கொடுத்தும் கொள்ளத் தக்கது தவறைக் கண்டிப்பவனைத் தேடி நட்புக் கொள்க உலகியல் அறிவுடையவனிடம் நட்புக் கொள்க கேட்டிலும் உடன் இருப்பவரே உண்மை நண்பர் அறிவிலிகள் நட்பை விலக்குவது ஊதியம் தரும் ஊக்கத்தை குறைப்பதை எண்ணாதே துன்பத்தில் விலகுவானிடம் நட்புக் கொள்ளாதே துன்பத்தில் கைவிட்டால் மனச் சூடு தணியாது மாசற்றார் நட்பைத் தழுவுக தகுதியற்றவர் நட்பை எப்படியாவது விலக்குக ஆய்ந்து ஆய்ந்து கொள்க நட்பு ------------ 81. பழைமை பழகல்-அறிமுகம், முதிர்தல், பயிலல். முதிர்ந்து நிலை பெற்ற நட்பை நிறைமொழி வள்ளலாகிய வள்ளுவர் பழைமை என்று இனிதாய்ச் சொல்கிறார். பழைமை என்பது புதிதாக ஆராய்ந்து, நட்பாகக் கொள்ளுவதோ அல்லது தள்ளுவதோ செய்ய வேண்டியதற்கு இடம் இல்லாதபடி முன்னாலேயே நீண்ட நாள்களாகத் தம் குடும்பத்திற்கு நண்பர்களாக இருந்துவரும் பழைய நண்பர்களைக் குறிக்கும். இவர்களிடம் சிற்சில குறைகள் காண நேர்ந்தாலும் விலக்கப் பாலர் அல்லர். அவர்கள் அந்தச் சிறப்பை இழந்து விடாதபடி நடந்து கொள்ளவும் வேண்டும் என்பதையும் அவர்கள் உரிமையை மிகைப்படுத்தித் தவறு செய்து விட்டாலும் அவர்களைத் தள்ளிவிடக் கூடாது என்பதையும் தெளிவு படுத்தும் அதிகாரம். திருவள்ளுவர் செய்ந் நன்றியறிதல் அதிகாரத்தில் கூறிய மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு (குறள். 106) எழுமை எழுபிறப்பும் உள்ளுர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு (குறள். 107) என்னும் குறட்பாக்களையும், பொறையுடைமை அதிகாரத்தில் மொழிந்த, திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று (குறள். 157) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம் தகுதியான் வென்று விடல் (குறள். 158) என்னும் குறட்பாக்களின் நோக்கும் பழைமையைப் பேணத் துணைநிற்கும். எத்தகைய தொடர்பும் அற்றுவிட்ட பொழுதும் பழந் தொடர்பை நினைத்துப் பேணுதல் நல்ல சுற்றத்தாரித்தே உண்டு என்பதையும், எந்நிலையிலும் பற்றுதல் நீங்காத சுற்றம் ஒருவனுக்கு அமையுமானால், பலவகையாலும் வளர்ச்சிநீங்காத நலங்கள் பலவற்றையும் அது தரும் என்பதையும். பற்றற்ற கண்ணும் பழமைபாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள (குறள். 521) விருப்பறாச் சுற்றம் இயையின், அருப்பறா ஆக்கம் பலவுந் தரும் (குறள். 522) என்னும் சுற்றம் தழால் அதிகாரக் குறள்கள் வழி கூறும் கருத்துகளும் மனத்தில் இருக்கட்டும். யாம் ஆட்சியாளர்க்குப் பழமையான தொடர்பு உடையோம் என எண்ணிப் பண்பாட்டிற்குப் புறம்பான செயல்களைச் செய்யும் உறவுமுறை உரிமை கேட்டை உண்டாக்கும் என்பதை, மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரத்தில் பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். (குறள். 700) எனவும் வள்ளுவர் வழங்கியுள்ள கருத்துகளைக் கவனத்தில் கொண்டு பழைமை அதிகாரக் குறள்களைச் சிந்திப்போம். ------------ முதற் குறள் ஓர் இலக்கணக்குறள் பழைமை என்ற தலைப்பினைக் கண்டு யாரும் மயங்க வேண்டாம். வள்ளுவரே கற்பவர்களை மயங்க வைக்காமல் தெளிவோடு அணுகவைக்க வேண்டும் எனக்கருதியே பழைமை எனப்படுவது யாது?என வினா எழுப்பி விடையளிக்கும் உத்தியைக் கைக் கொண்டு வரைந்த குறளே. பழைமை எனப்படுவதி யாதெனின், யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. (குறள். 801) என்னும் முதற் குறளாகும். பழைமையானது என்ற ஒரு காரணத்திற்காக எதையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. புதுமை என்ற ஒரு காரணத்திற்காக எதையும் மிக உயர்வாகவும் கருதிவிடவும் கூடாது. பழையன எல்லாவற்றையும் கழித்துவிட வேண்டும் என்றோ? புதுமை யானவற்றை எல்லாம் கண்ணை மூடிக் கொண்டே போற்ற வேண்டும் என்றோ எண்ணலாகாது. பழைமையில் இறைமை போல் பழைமைக்கு பழைமையாயும் புதுமைக்குப் புதுமையாயும் என்னும் தொடருக்கு ஏற்ப ஒரு தன்மை உடையதாய் விளங்குவனவும் உலகில் உண்டு. அவைகளில் ஒன்று, உணர்வால் ஒன்றிய நல்லவர்கள், ஒத்த உரிமையால் கொண்ட நெடு நாள் நட்பாகும். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மேடும் பள்ளமும், பெருக்கமும் கேடும்; வளமையும் வறுமையும்; நல்லதும் கெட்டதும்; இன்பமும் துன்பமும், வரவும் செலவும்; உழைப்பும் சோம்பலும், முயற்சியும் முயற்சி இன்மையும்; அடக்கமும் அடங்காமையும்; புகழும் பழியும்; வெற்றியும் தோல்வியும் ஏற்பட்டிருக்கலாம். வாழ்க்கையில் எது எது எப்படி நடந்தாலும், எத்தனை வகையான புற அலைகள் மோதி பிளவுபடுத்த முற்பட்டாலும் எதனாலும் நண்பர்கட்கு இடையே உள்ள உறவை, உரிமையை நட்பைக் கீழ்மைப் படுத்த முடியாமல் ஆழமாகக் கால் ஊன்றி, அடர்ந்து பரந்து, வானுற ஓங்கி நிற்கும் நட்புரிமை எவரிடம் நிலைபெற்று நாளும் வளர்ந்து வருகிறதோ அந்த நட்புக் குத்தான் பழைமை என்ற பெருந்தக்க பெயர். நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவு இன்றே, சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே எனச் சங்கச் சான்றோர் தேவகுலத்தார் பாடிய குறுந் தொகைப் பாடல் காட்டும் பெருமையும் உயர்வும் ஆழமும் உடையதே பழைமைப் பெயர் பூண்ட நட்பு ஆகும். எதனாலும் உரிமையைச் சிதைக்க முடியாத நட்பே பழமை எனப்படும். எவ்வகையாலும் உறவை முரித்துக் கொள்ளாத நட்பே நல்ல நட்பு. சீசரைப் பலர் கத்தியால் குத்தினார்கள் அப்பொழுதும் சாகக் கூடாது; தற்காத்துக் கொள்ள வேண்டும் எதிர்த்துப் போராடி எப்படியாவது உயிர்பிழைக்க வேண்டும் என எண்ணிய சீசர். தன் உயிர் நண்பனாகக் கருதப்பட்ட புரூட்டசும் குத்திய அப்போழுது சீசர் சொன்ன சொல் புரூட்டசு நீயுமா குத்தினாய்! அப்படியானால் நான் மகிழ்ச்சியாகச் சாகிறேன், என்பது. குறளுக்கு ஒருவழிச் சான்றாகும். துரியோதனின் மனைவி பானுமதியுடன் நண்பன் கர்ணன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தான், அவ்விடத்திற்குத் துரியோதனன் வருவதைக் கண்ட பானுமதி எழுந்து நின்றாள். துரியோதனன் வருவதைக் காணாத கர்ணன், பானுமதி தொடர்ந்து ஆட அஞ்சி எழுத்திருப்பதாகக் கருதிய கர்ணன் அவர் இடையில் அணிந்த மேகலையைப் பற்றி அமர வைக்க முயன்றான். அவன் கையில் பற்றிய மேகலையிலிருந்து மணிகள் உதிர்ந்தன. கர்ணன் கலங்கினான். அதற்குள் அவ்விடம் வந்த துரியோதனன் மணிகளை எடுக்கவோ! கோக்கவோ? எனக் கேட்ட வினா இக்குறளுக்கு நல்ல சான்றாகும். சான்றோர் பண்புகளால் உயர்ந்த பெருமக்கள் ஆவர். அன்பு, நாண், ஒப்பரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்புகளையும் ஐம்பொறிகளாகக் கொண்டவர்கள். அவர்கள் பிறர் குணத்தைப் போற்று பவர்கள். எவருடைய குற்றத்தையும் சொல்ல விரும்பா நிறை குணத்தர். பணிவுடைமையால் பகைமையை வெல்லும் ஆற்றல் பொருந்தியவர்கள். தம் தோல்வியைத் தொல்விதான் என எவரிடமும் தயங்காது ஒப்புக் கொள்பவர். தீமையே செய்தவர்கட்கும் நன்மையே செய்பவர்கள் இயற்கை தம் நிலையிலிருந்து மாறினாலும் தம் நிலையை மாற்றிக் கொள்ளாதவர். கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு (குறள். 981) என்னும் குறளுக்கு எடுத்துக் காட்டாய் வாழ்பவர் சான்றோர். அத்தகைய சான்றோர் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடன் ஒன்றை உணர்த்தும் குறளே. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு குப்பாதல் சான்றோர் கடன். (குறள். 802) நண்பர்களுக்குள் பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடோ; வலியவர் மெலியவர் என்ற வேறுபாடோ; உள்ளவர் இல்லாதவர் என்ற வேறுபாடோ; கற்றவர் கல்லாதவர் என்ற வேறுபாடோ? உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடோ கிடையாது ஒருவருக்கொருவர் ஒத்த நிலையினரே, சம உரிமையும் ஒத்த உணர்வும் உடையவர்கள். யாருக்கும் யாரும் அடிமை இல்லை. ஒருவர் சொன்னதைத்தான் இன்னொருவர் கேட்டு நடக்க வேண்டும் கீழ்ப்படிதந்து நடக்க வேண்டும் என்ற நிலை கிடையாது. பாரதி கூறியது போல் எல்லாரும் ஓர்குலம்; எல்லாரும் ஓர் இனம்: எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் விலை: எனக் கருதத்தக்கவர். ஒருவர் துன்பத்தை மற்றவர் தாங்கிக் கொள்ள மாட்டார். நண்பர் நலங்கருதி எதையும் கொடுப்பார் எதையும் இழப்பார். தன் உரிமையையும் நலத்தையும் பேணுவதைவிட நண்பரின் உரிமையையும் நலத்தையும் பேணுவர். இரண்டறக் கலந்த வேறுபாடற்ற சம உரிமை உணர்வே நட்பிற்கு அடிப்படையும் இலக்கணமும் ஆகும். அத்தகைய உரிமை நட்பு நாட்டில் பெருகினால்தான் பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் அரசை அலைக்கழிக்கும் கொல் குறும்பும் இல்லாத நாட்டை உருவாக்க முடியும். ஆகவே நல்லது செய்வதையே உயிர்க் கடனாகக் கொண்டு தொண்டாற்றும் சான்றோர். இத்தகைய உரிமை நட்பை நாட்டில் பெருக்கி வளர்ப்பதை தம் முதன்மைக் கடனாகக் கருதி உழைக்க வேண்டும். உரிமை நட்பு, உப்பில்லாப் பண்டம் போல் ஆகிவிடாமல், உப்பாய்க் கலந்து நட்பைப் பெருமைக்குரியதாக ஆக்குக! சான்றோர்களே! நாட்டில் உரிமை சான்ற நட்புப் பயிரை வளர்த்து நாட்டைச் செழுமைப் படுத்துங்கள்! ------------ பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை (குறள். 803) ஒத்த உணர்வும் உரிமையும் உடைய நெடுங்கால நண்பர்களிடமும் எப்பொழுதும் செய்யும் எல்லாச் செயலையும் கலந்து ஆய்ந்தே செய்ய வாய்க்கும் என்று சொல்லமுடியாது. கலந்து கொள்ள வாய்ப்பில்லா நேரங்களும் இருக்கலாம். சில பணிகளில் மாற்றுக் கருத்து இராது என்று கருதும் பணிகளையும். சில தவிர்க்க இயலாப் பணிகளையும். நண்பர்களில் ஒருவர் மற்றவர்களிடம் கலந்து கொள்ளாமல் நட்பின் உரிமையால் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். தொடங்கிய பணிகள் எதிர்பார்த்த வண்ணம் வெற்றியாய் முடிந்து விடும் என்றும் சொல்ல இயலாது. திட்ட மிட்ட தொகையில் முடிந்து விடும் என்றும் சொல்ல முடியாது. கலந்து செய்திருந்தால் குற்றம் சொல்ல வழியில்லை. கலந்தும் செய்யவில்லை. ஆனால் செயலால் மிகுபொருட் செலவும் தோல்வியும் ஏற்பட்டுள்ள போழ்து நெடுநாள் பழகிய நண்பர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனத் திருவள்ளுவரிடம் வினவி இருக்க வேண்டும் அதற்கு விடை அளிக்கும் வகையில் வள்ளுவர் மொழிந்த வாய்மை மொழியே இக்குறளாகும். உரிமையால் நண்பர்களில் ஒருவர் செய்த செயலை மற்றவர் தானே செய்த செயல் போல் கருதி நடந்து கொள்ள வேண்டுவதே முறைமை யாகும். அப்படிக் கருதி உடன்படும் மனப்பக்குவம் இல்லையானால், இத்தனை நாளாகப் பழகிய நட்பால் என்ன பயன்! ஒன்றுமில்லை. கண்ணாடியை ஒருவர் எடுக்கிறார்கைதவறி விழுந்து உடைந்து போகிறது. நல்லவேளை கையிலோ காலிலோ படவில்லையே! கண்ணாடி உடைந்தால் போகிறது. வேறு ஒன்று வாங்கிக் கொள்ளலாம். கவலைப்பட வேண்டாம் என ஆறுதலும் தேர்தலும் கூறுபவனே நல்ல நண்பன். அவ்வாறு கூறாமல், பார்த்து கவனமாக எடுக்க வேண்டாமா? அது ஒரு நினைவுப் பொருளாச்சே! இனிமேல் இப்படியொரு பொருள் கிடைக்குமா? அவசரப்பட்டு ஒரு நொடியில் பாழாக்கி விட்டீரே! என்று கூறுபவன் நண்பன் என்று கூறிக் கொள்ளத் தகுதியற்றவன் ஆவான். உரிமையோடு செய்ததின் பயன் எப்படி இருந்தாலும் ஏற்று இசைவு அளிக்கவில்லையானால் இத்தனை நாள் பழகிய பழக்கத்திற்குத்தான் என்ன பொருள்! தான், செய்தால் ஒருவிதமாகவும் மற்றவன் செய்தால் வேறு விதமாகவும் அணுகும் போக்கு நட்பில் அமையக் கூடாது. நண்பனால் வெற்றி கிட்டினால் பாராட்ட வேண்டும்! நண்பனால் தோல்வி ஏற்பட்டால் குற்றம் சுமத்தவோ பழிக்கவோ கூடாது. தோல்வி என்றால் தன்னால் ஏற்பட்டது போல் கருதும் மனவளம் உடையதே நெடுநாள் பழகிய நட்பின் பயன். நட்பின் கட்டுமானம் சிதைந்துவிடாமல் காக்க வள்ளுவர் சொல்லும் வழி இதுவாகும். நட்புக் கோட்டையில் சின்னஞ்சிறிய கீறல் கூட ஏற்பட்டு விடக் கூடாது என மிகக் கவனமாய்க் காக்கும் உரிமை பூண்ட காவலர் திருவள்ளுவர் என்பதைப் புலப்படுத்தும் குறட் பாக்களில் ஒன்றே, விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையான் கேளாது நட்டார் செயின் (குறள். 804) பழைமை அதிகாரத்தில் கோலோச்சும் சொல்-கிழமை, கெழுதகைமை, கெழுதகை, பெருங்கிழமை, கேண்மை, நட்பு நாட்டார் தொடர்பு என்பனவாகும். இவற்றுள் கெழுதகைமை மூன்று குறட்பாக்களிலும் அதுவே கெழுதகையால் எனப் பண்பியல் பெயரால் சுட்டப்படும் குறளே இதுவாகும். செய்தவர் யார்? நட்டார் எனச் சுட்டப்படும் பழைமையான நண்பர். எப்படிச் செய்தார்? நண்பரிடம் கேட்டுச் செய்ய வேண்டிய வினையைக் கேட்காமலே செய்தார். ஏன் அப்படிச் செய்தார்? ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு நெடுநாள் பழகிய நண்பன் என்ற உரிமையால் கேளாமல் செய்தார். அச்செயலை விரும்ப வேண்டுமா? வெறுக்க வேண்டுமா? விரும்ப வேண்டும். எப்படி விரும்ப வேண்டும்? நண்பரின் உரிமையான நட்பை எப்படி விரும்புகிறோமோ அப்படியே அவர் உரிமையால் கேளாது செய்த செயலையும் விருப்பத்துடன் வரவேற்க வேண்டும். அத்தகை யவர்களே விழைதகைமை வாய்ந்த கெழுதகையர். கெழுதகையர் கேட்டுச் செய்தாலும் கேளாமல் செய்தாலும் ஒன்றே. கேட்டுச் செய்தாலும் தக்க காரணம் இருக்கும். அவ்வாறே கேளாமல் செய்தாலும் அதற்கும் தகுந்த காரணம் இருக்கும். கேட்காமல் செய்தால் மதிக்கவில்லை என்பது பொருள் அன்று. உரிமையுடையவர்கள் காலம், இடம், வினையின் தன்மை, அதற்கு இருக்கும் போட்டி, இவற்றைப் பொறுத்தே கேட்டுச் செய்வதும் அமையும் கேளாமல் செய்வதும் வாய்க்கும், தூங்கிச் செய்யும் வினையை ஆரஅமரக் கேட்டுச் செய்யலாம். தூங்காது செய்ய வேண்டிய வினையை, அவ்வினையைச் செய்பவருக்கு நல்ல தெளிவு இருக்குமானால், ஒப்புக்குக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கேளாமல் செய்ததை அறிந்த வேண்டாதவர், ஊடு வேலை செய்ய முற்படலாம், ஆகவே அயற்காற்று உள்ளே நுழைந்து விடாமல் காப்பது மிக முக்கியம். நண்பர் நல்ல நண்பர்; நெடுநாள் பழகிய நண்பர்; உரிமை யுடைய நண்பர்; அவர் உரிமையில் செய்த பணியை அவரை விரும்பிப் போற்றுவது போல் நண்பர் கேளாது செய்த பணியையும் கேட்டு இணைந்து செய்தது போல் விரும்பி வரவேற்போம். ------------ பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். (குறள். 805) பழமையான நண்பர் செய்த செயல்களில் ஏதாவது ஒன்று நண்பர்க்கு மனத்தில் வருத்தத்தை உண்டாக்குமாறு அமைந்து விடுமாயின். அதற்குக் காரணம் ஒன்று அவரின் அறியாமையாக இருக்கலாம். அல்லது அவர் கொண்ட நட்புரிமையின் காரணமாக இருக்கலாம் எனக் கருத வேண்டுமே தவிர்த்து, வேண்டுமென்றே ஆணவத்தாலோ, பகைமை பாராட்டவோ? நட்பை விலக்கவோ செய்யப்பட்டதாக எண்ணக் கூடாது. நண்பர் செயல் வருத்தத்தை உண்டாக்கினாலும் வருந்தாது நண்பரை வெறுக்காது தெரியாமல் செய்ததாகவோ? உரிமையால் செய்ததாகவோ தான் கருத வேண்டும். அறிவுடை நம்பி, குறுந்தொகையில் பாடிய நெய்தல் திணைப்பாடல் ஒன்றில் இடம் பெறும் சொற்களும் கருத்தும் குறட்பாவை நினைவூட்டு வதைக் காண்போம். ....... ....... ......... யான் என் பேதைமையால் பெருந்தகை கெழுமி நோதக்க செய்தது ஒன்று உடையேன் கொல்லோ என்பதை ஒப்பு நோக்குக. இறப்பவே தீய செயினும் தம் நட்டார் பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ? - நிறக் கோங்கு உருவ வண்டு ஆர்க்கும் உயர்வரை நாட ஒருவர் பொறை இருவர் நட்பு. எனக் கூறும் நாலடிப் பாடற்பொருளையும் ஒப்பு நோக்குக. தந்தீமை இல்லவர் நட்டவர் தீமையையும் எந்தீமை என்றே உணர்பதாம் - அந்தண் பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப ஒருவர் பொறை இருவர் நட்பு; என்னும் பழமொழியும் தக்க எடுத்துக்காட்டே. ------------ எல்லைக்கண் நின்றார் துறவார். தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. (குறள். 806) என்னும் இக்குறளைச் சிந்திக்க முற்படுங்கால் சுற்றந்தழால் அதிகாரத்தில் முதற்குறளாய் அமைந்துள்ள, புற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள (குறள். 527) என்னும் குறளையும் நினைந்து கொள்க! நட்பு நெறியைப் போற்றுவதில் ஒவ்வொருவரும் அவரவர்க்கு இயன்ற நிலையில் இயன்ற அளவுதான் பின்பற்றி நடப்பவர். நட்பு நெறியை நூற்றுக்கு நூறு பின்பற்றி நட்பின் உயர் எல்லை வரைச் சென்று அங்கே நிலைபெற்று நிற்போர் எண்ணிக்கையில் குறைந்தவர்களே இருப்பர். அவர்களே நட்பு என்னும் நீண்ட நிலப்பரப்பின் எல்லையில் நிற்போர். அவர்கள், தமக்குயார் யார் எங்கெங்கே எப்பொழு தெல்லாம் செய்த சிற்றளவு நன்றியையும் மறவாதவர்கள். அத்தகையவர்கள் ஒருவர் பல்லாயிரம் கல் தொலைவு கடந்து வணிகம் செய்ய அயலகம் சென்ற இடத்தில் அந்நாட்டுக் காவல் துறை அவரை ஐயப்பட்டு கைதி செய்தது அதனைக் கேள்விப்பட்ட அவரை அறிந்தவர் மிக விரைந்து சென்று, அவரின் உண்மை நிலையை எடுத்து மொழிந்து அவர் விடுதலை பெற உதவினார். அந்நிகழ்வு நடந்து பலபத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன எனினும் அவர்கள் நட்பு இன்னும் தொடர்கிறது. காலத்தாலும் இடத்தாலும் வேண்டாதவர் களாலும் அவர்கள் நட்பை விலக்க முடியவில்லை என்பது போன்ற நிகழ்வுகளைச் செவிமடுத்த திருவள்ளுவர் பாடிய பாடல் இதுவாகும். தொலைவான இடத்தில் தாம் தொல்லைப் படுங்காலத்தில் வேண்டுவன செய்து தொல்லையிலிருந்து மீட்டவரின் பழந்தொடர்பை நட்பின் உயர் எல்லைவரைச் சென்று நிலை பெற்றவர்கள். தாம் தம் வாழ்க்கையின் உச்சிக்குச் சென்ற போதும் கைவிடமாட்டார். தொலைதூரத்தில் தொல்லையில் துணை நின்றவர் நட்பை, உயர்ந்த பண்பாளர்கள் எக்காரணம் கொண்டும் எக்காலத்தும் கைவிட மாட்டார். இளங்குமரனாரின் வாழ்வியலுரை தொலைவான இடத்தில் தாம் தொல்லைப்படுங்கால் நிலைபெற நின்றவர் பழந்தொடர்பை, நட்பின் உயர் எல்லையில் நின்றவர் என்றும் கைவிடார் எனவும், கா.சுப்பிரமணியனாரின் தெளிபொருள் விளக்கப் பொழிப்புரை:- நட்பினைப் போற்றி அதன் வரம்பினுள் நிற்பவர் பழைமை பாராட்டும் நண்பரது தொடர்பை, அவரால் கேடுவந்த காலத்தும் விடமாட்டார் எனவும். இரா. கனக சுப்புரத்தினத்தின் உணர்வுரை:- நட்பின் பரந்த எல்லையை உணர்ந்த பண்பாளர்கள், துன்பத்தில் துணைநின்ற நண்பர்களை, அவர்கள் செயலால் அல்லல் நேர்ந்த போதும் தள்ளுவதில்லை எனவும். ஞா. மாணிக்க வாசகனின் தெளிவுரை: எல்லை மீறிய உறவு கொண்டோர், அழிவு வந்தபோதும் காலங்காலமாகத் தொடர்பு கொண்டு நின்றவர்களின் நட்பைக் கைவிட மாட்டார். எனவும் வ.சுப.மாணிக்கனாரின் உரைநடைக்குறள்: துன்பத்தும், நெடுநாள் நண்பர் தொடர்பினைப் பண்பில் உணர்ந்தவர் விட்டு விடார் எனவும் ஒவ்வொருவர் உரையும் ஒவ்வொரு வகைச் சிந்தனையின் வெளிப்பாடாக அமையத்திருக்குறள் இடம் தருகிறது என்பதை உணர முடிகிறது. உரைகாண வாய்ப்பாகக் குறளை எல்லைக்கண் நின்றார் (தமக்குத்) தொல்லைக்கண் நின்றார் தொடர்பைத் தொலை விடத்தும் துறவார் என அமைத்துக் கொண்டு நட்பு நெறி போற்றி அதன் வரம்பில் நிலை பெறுவோர், தாம் தொல்லைப் பட்ட காலத்தில் துணை நின்று, காத்த பழைய நண்பர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு விலகி வெகு தூரம் சென்று வாழும் நிலை ஏற்பட்ட போதும் பழந்தொடர்பைக் கைவிடார் எனவும் பொருள் கொள்ளலாம் போலும் தோன்றுகிறது என என் எண்ணத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல நண்பர்களைப் பிரிக்கும் ஆற்றல் காலத்திற்கும் இல்லை என்பதுடன் இடத்திற்கும் இல்லை என்பதையும் வள்ளுவர் உணர்த்துகிறார். ------------ அழிவந்த செய்யினும் அன்பறார், அன்பின் வழிவந்த கேண்மை யவர். (குறள். 807) அன்புடன் இளமை முதல் பழகிய நட்பினை உடையவர், தமக்குக் கேடு விளையத்தக்க செயல்களைத் தம் நண்பர் செய்தாலும் அவர்பால் கொண்ட நட்பை விலக்கிக் கொள்ள மாட்டார். அன்பும் மாறாது; நட்பும் தொடரும். அன்பின் வழிவந்த கேண்மை தொடங்கிய பின் குற்றம் பார்க்காது. நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக் கண்கண்ட குற்றம் உளவெனினும்-காய்ந்தீயார் பண்கொண்ட தீஞ்சொல் பணைத் தோளாய்! யாருளரோ! தங்கன்று சாக்கறப் பார் என்னும் பழமொழியும், இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும்; பொன்னொடு நல்லில் சிதைத்தீ நாடொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குத லால். இன்னா செயினும் விடுதற் கரியாரைத் துன்னாத் துறத்தல் தகுவதோ-துன்னருஞ்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ கண்குத்திற்று என்றுதம் கை நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேணடும்; நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு. இன்னா செயினும் கலந்து பழிகாணார் சான்றோர் என்னும் நாலடியார் நன்மொழிகளும் குறட்கருத்தை வழி மொழிவனவே ஆகும். ------------ கேளிழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். (குறள். 808) நண்பர்கள் உடலால் இருவராய் உயிரால் இருவராய் இருப்பினும் உணர்வால் ஒன்று பட்டவர்கள் என்றும் சொல்லலாம். நண்பர்கள் இருவரும் பிரிக்க இயலாஉடலும் உயிரும் போன்றவர். ஒருவர் உடலானால் மற்றவர் உயிராவார்; இவர் உயிரானால் அவர் உடல் போன்றவர் என்றும் சொல்லலாம். நண்பர்கள் இருவரின் உடலிலும் ஒரு பகுதியை நண்பர்க்கு எனக் கருதும் கருத்துடையவர். வலப்பக்க உறுப்பெல்லாம் ஒருவர் இடப்பக்க உறுப்பெல்லாம் இன்னொருவர்எனக் கொள்வர். ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பு செலுத்தபவர்கள். ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கை உடையவர்கள். ஒருவருக் கொருவர் நன்மையே செய்பவர். ஒன்றுபட்ட உணர்வு உடையவர்கள். நட்பு, நடுவு நிலை நோக்கை நீக்கிவிடும்; வெறுப்பில்லா விருப்பே ஆளுமை செய்யும். நண்பர்களில் ஒருவர்க் கொருவர் குற்றம் செய்யார்; நன்று என எண்ணிச் செய்தது தீதாகி விடுவதும் உண்டல்லவா? செய்தது நன்மை; ஆனால் விளைந்தது கேடு என்றாலும் அதனை நண்பன் செய்த கேடாக எண்ண மாட்டார்! ஆனால் கேடு நிகழ்ந்து விட்டதே என்றால். அது நண்பர் செய்த கேடன்று; அது காலம் செய்த கேடாக இருக்கலாம். காலம் செய்த கெடுதிக்கு அவர் என்ன செய்வார். அவர் மனம் அறிய நமக்குத் தீங்கு நினைக்க மாட்டார் என்று நினைப்பவரே கெழுதகையாளர்; அவர் கொண்ட நட்பே பழைமை என்னும் கெழுதகைமை ஆகும். தமது நண்பர்களைப் பற்றிப் பிறர் குற்றம் கூறுவதைக் காது கொடுத்துக் கூடக் கேட்க விரும்பாத கெழுதகை நண்பர்களில் ஒருவர் ஏதாவது குற்றம் புரிந்தாலும், அதை நண்பர் செய்த குற்றமாகக் கருதாது காலம் செய்த குற்றமாகவே கருதுவர். காலம் நல்லதையும் செய்யும் அல்லதையும் செய்யும் ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும் அது இப்போது கேடு புரிந்திருக்கிறதே அல்லாமல் நண்பர் மறந்தும் கேடு புரிய மாட்டார் என்று உறுதி கூறும் தன்மையுடையராய் விளங்குவர். ------------ கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு (குறள். 809) இளமையில் தொடங்கிய நட்பு தளர்வோ, தொய்வோ, இடை வெளியோ இல்லாமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருமாறு யார் யாருடைய பழமையான நட்பு அமைந்து விளங்குகிறதோ அவர்கள் அந்நட்பால் அடையும் பயன் மிகுதியாகும். எந்தச் சூழ்நிலையிலும் நல்ல நட்பினை யார் கைவிடாது போற்றி வருகிறார்களோ அவர்களை உலகச் சான்றோர்களும் விரும்பிப் போற்றுவர். ஆகவே, நல்லவர்களோடு நட்புக் கொள்வது பெரிதன்று. அதனைக் கடைசிவரைக் கட்டிவளர்த்துக் காப்பதே பெருமைக் குரியது. நாட்டில் தக்கவர் உருவாவதற்கு நல்ல நண்பர்களின் பெருக்கம் பெருந்துணை புரியும். ஆகவே நாடு போற்றுமாறு நட்புகள் அமையட்டும். பிறரிடம் குற்றம் காண்பதை விடுத்துக் குணங்கண்டு போற்ற வேண்டும். தன் குற்றத்தைத் தானே கண்டு, நீக்கிவிட வேண்டும். தற்பெருமை கூடாது. நண்பரை நன்கு மதிக்க வேண்டும்! நண்பர்க்குத் துன்பம் நேராமல் காக்க வேண்டும். வஞ்சகமோ ஏமாற்றமோ இல்லாத வெளிப்படையான அணுகு முறை வேண்டும். தன்னை மட்டுமன்றித் தன் நண்பரையும் யாரும் குறை சொல்ல வாய்ப்பு உண்டாக்கி விடக் கூடாது. அப்படி நண்பர்கள் நடந்து கொண்டால் மாறுபாடோ, வேறுபாடோ, பிணக்கோ, தடையோ, இடைவெளியோ ஏற்படாமல் நட்பு உறுதியாகத் தொடரும். அத்தகையோர் நட்பையே உயர்ந்தோர் உளப்பூர்வமாக விரும்பி வரவேற்பர். நல்ல பாலும் கெடாதிருக்கப் பால் வைக்கும் பாத்திரம் தூய்மை யானதாய் இருக்க வேண்டும். பாலால் பாத்திரத் திற்கோ, பாத்திரத்தால் பாலுக்கோ கேடு நேராமல் காத்துக் கொள்ள வேண்டும். தூய பாலைத் தூய பாத்திரத்தில் கண்டால் யாருக்கும் விரும்பிப் பருகும் வேட்கை உண்டாகும். நட்பு, தேன் கலந்த பால் போல் அமைய வேண்டும். அமைந்தால் மணமும் சுவையும் வாய்ப்பதுடன் பயனும் சிறக்கும். தனக்கு வரும் துன்பத்தையும் துன்பமாகக் கருதாது இன்பமாகக் கருதி ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஒருவர்க்கு அமைந்து விடுமாயின் அத்தகையவர் நண்பர்களால் மட்டுமின்றி பகைவர்களாலும் மதிக்கப் படுவர். என்பதை இடுக்கண் அழியாமை அதிகாரத்தில் இன்னாமை இன்பம் எனக்கொளின், ஆகும் தன் ஒன்னார் விழையும் சிறப்பு (குறள். 630) எனக் கூறும் கருத்தோட்டத்தில் மலர்ந்த குறளே. விழையார் விழையப்படுப, பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார் (குறள். 810) தாம் இன்று வாழ்க்கையில் வசதி வாய்ப்பில் மிக உயர்ந்த நிலையை அடைந்த போதும். நண்பர் இன்றும் தம்பழைய நிலையிலிருந்து உயர முடியாமல் உடல் வலிமையும் குன்றி, நிறைந்த மக்களுடன் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், பழைய நட்பை மறக்காமலும் சிறிதும் மாற்றமும் இன்றி, ஏற்றத் தாழ்வும் இன்றி ஒத்த உரிமையும் உணர்வும் உடையவராய் நட்பைப் பேணி வருகிறார்கள். அவர்கள் பெருஞ்சிறப்பிற்கு உரியவர்கள். பழைமையில் அவர்களிடம் பகைமை பாராட்டிய வர்களும் கூட பகைமை மறந்து, அவர்களின் நல்லியல்பை மனமுவந்து பாராட்டுவர். நல்ல நண்பர்களைப் பெற்றிருப் பவர்களை யாரும் பகைக்க விரும்ப மாட்டார்கள். வாய்ப்பு அமைந்தால் தாமும் நண்பர்கள் ஆகவே விரும்புவர். நட்பைப் போற்றும் நல்லவர்களைப் பகைவரும் அணுகார். பழிக்கும் இயல்பு பொருந்தியவர்களும் விரும்பிப் பாராட்டுவர். உரிமையை மதிக்கும் நட்பே பழைமை ஆகும் உரிமையால் செய்தவற்றை உணர்வோடு ஏற்க வேண்டும் நட்பிற்கு அடித்தளம் ஒத்த உரிமை நட்புப் பயிரை வளர்ப்பது சான்றோர் கடமை நண்பர் கேட்டும் செய்யலாம் கேளாமலும் செய்யலாம் நண்பரை விரும்புவது போல் நண்பர் கேளாமல் செய்ததையும் ஏற்றுக் கொள்க நண்பர் துன்பம் செய்ய விரும்பார் நண்பரால் துன்பம் ஏற்பட்டால் அறியாமல் நடந்திருக்கும் நண்பர் எடுத்துக் கொள்ளும் உரிமையாலும் துன்பம் நேரலாம் நன்றி போற்றும் பண்புடை நண்பர் நட்பை விடார் தொலைவாலும் தொடர்பு தொலைந்து போகாது அழிவும், அன்புடை நண்பரைப் பிறிக்காது நண்பரைக்குறை கூறார் நல்ல நண்பர் நண்பரைப் பற்றிக் குறைகூறினும் கேளார் நல்ல நண்பர் காலம் கேடு செய்தாலும் நண்பர் கேடு செய்யார் கெடா வழிவந்த கேண்மையராய் விளங்குக உயர்ந்தோர் போற்றும் கேண்மையர் ஆவோம் பழைமை போற்றும் நண்பரே பகைவரும் போற்றும் நண்பர் 82. தீ நட்பு பொறுத்துக் கொள்ள முடியாத கொடுமையானதாய் உள்ளதும், எப்பொழுதும் தீமையே செய்வதாயும் உள்ள தீயோர் நட்பு. நற்குணம் இல்லாதவர்பால் கொள்ளும் நட்பு நன்மை இன்றித் தீமை தரும் நட்பு, தீ நட்பு எனப்படும். நட்பாராய்தலில் பேதையார் கேண்மை என்றும் அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு என்றும், கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை என்றும், ஒப்பிலார் நட்பு என்றும் பொதுப் படவும் சுருக்கமாயும் சொல்லிய தீ நட்பினால் விளையும் கேட்டைச் சிறப்பாகவும், விரிவாகவும் விளக்க மாகவும் கூற முற்படும் அதிகாரமே தீ நட்பு ஆகும். தீயவர் நட்பு தீமையே தரும் ஆதலால், தீயவரோடு நட்புக் கொள்ளல் கூடவே கூடாது என்பதை வலியுறுத்துவதே திருவள்ளுவர் நோக்கமாகும். திருவள்ளுவரால் தீயவர் என்று கணிக்கப்படுபவர் எவரெவர் எனின்;- வன்சொல் வழங்குவோர் செய்ந்நன்றி மறந்தவர் நடுவொரீஇ அல்லவை செய்வோன் தெளிந்தாரில் தீமைபுரிந்து ஒழுகுவார் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப்பான் சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்வார் புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்வார். துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வார் களவின்கண் கன்றிய காதலர் சினத்தைப் பொருளென்று கொண்டவன் கொலை வினையர் ஆகிய மாக்கள் வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் கண்ணோட்டம் இல்லவர் மடிமடிக் கொண்டொழுகும் பேதை பழுதெண்ணும் மந்திரி சான்றோர் பழிக்கும் வினை செய்வோர் ஏதம் கொண்டு ஊதியம் போகவிடும் பேதை ஏவவும் செய்கலான், தான்தேறான் நிறை நெஞ்சம் இல்லவர் எஞ்ஞான்றும் கள்ளுண்பவர் ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர் தலையின் இழிந்த மயிர் அனையர் அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் நாண் அகத்தில்லார் அறைபறை அன்ன கயவர் ஈர்ங்கை விதிராக் கயவர் கரும்பு போல் கொல்லப்பயன்படும் கீழ் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியவர் அனையவரெல்லாம் தீயவர் ஆவர். கால வளர்ச்சியில் தீயவர்களின் வகையும் வளர்ந்துள்ளதை அறிவோம். நல்லவர் தீயவர்களைக் கண்டுணர்ந்து நல்லவர் களிடம் நட்புக் கொள்ள வேண்டும். தீயவர் நட்பு தீமையே தரும் ஆதலால் விலக்கப்பட வேண்டும். ------------ பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலின் குன்றல் இனிது. (குறள். 811) பண்புடையார் கேண்மை பெருகுதல் இனிது; பண்பிலார் கேண்மை குன்றல் இனிது. தீயவரோ நட்புக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவராய் இருக்கிறார்; மிகுந்த அன்பு காட்டிப் பழகுகிறார். என் செய்வது எனத் திருவள்ளுவரிடம் கருத்துக் கூறுமாறு கேட்ட பொழுது அளித்த விடையே இக்குறளாகும். திருவள்ளுவர் பண்பிலார் கேண்மை பெருகலின் குன்றல் இனிது எனக் கூறி அமையாது பருகுவார் போலினும் என்னும் உவமை கொண்டு பண்பிலார் நட்பு குறைவதே நல்லது என்கிறார். பருகுவார் போலினும் என்னும் தொடருக்கு மணக்குடவர்; கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையவராய் இருப்பினும் எனவும் பரிதிப்பெருமாள்:- புசிக்கிற அமிர்தம் போல இதமானாலும் எனவும், காளிங்கர்:- காணுந்தோறும் கண்ணினால் பருகிக் கொள்வார் போன்று இருப்பினும் எனவும் பரிமேலழகர்:- காதன் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் எனவும், கவிராச பண்டிதர்:- வெகுவான சிநேகிதம் இருந்தாலும் எனவும் பரிதியார்:- தோற்றத்தாலும் பேச்சாலும் தன்னை மயக்கக் கூடியவராய் இருந்தாலும் எனவும், வரதராசன்:- காதன் மிகுதியால் தன்னை விழுங்கி விடுவார் போலத் தோன்றினும், எனவும் பாவாணர், நாமக்கல்லார்:- கள் குடிப்பவருக்குக்குள் களிப்பை உண்டாக்குவது போல் எனவும் தமிழ்க்கா.சு:- அன்பினால் விழுங்குவார் போல இருந்தாலும் வ.சுப.மாணிக்கனார்:- ஆர்வம் காட்டினாலும் எனவும், ப.முருகன்;- உணர்ச்சி மிகுதியால் பருகுவார் போலத் தோன்றினாலும் எனவும், ஞா.மாணிக்க வாசகன்:- அன்பால் அப்படியே விழுங்கிவிடக் கூடியவர் போலத் தோன்றினாலும் எனவும் இரா. கனகசுப்புரத்தினம்:- அள்ளிக் குடிப்பதைப் போல் ஆர்வமாய்ப் பழகினாலும் எனவும், யாதுமாகி:- அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் எனவும் வைகைச் செல்வன்: கள்ளைக் குடிப்பது போல இனிமையானதாக இருந்தாலும் எனவும் மயிலை சிவமுத்து;- தமக்கு விருப்பமான ஒன்றை உண்ண விரும்பு வோர் எவ்வளவு ஆவலோடு அதை அணுகுவாரோ அவ்வளவு அன்போடு வந்து ஒருவர் பழகினாலும் எனவும் கூறியிருந்தாலும் இரா.இளங்குமரனார் நீர் வேட்கையுள்ள போதில் பருகுவார் போன்ற நட்பார்வம் உடையவர் எனினும் எனக் கூறுவதே மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. ஆகவே, நீர் வேட்கை மிக மிக பருகும் ஆர்வம் மிகும். நீர் வேட்கை அனைவர்க்கும் பொதுவானது. நீர் வேட்கை இருக்கும் பொழுது நீர் கிடைத்தால் தாகம் உடையவர் எவ்வளவு ஆர்வத்துடன் விரைந்து குடிக்க முயல்வாரோ அப்படி நட்புக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்றால் நட்பை வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் நட்பிற்கு மிக முக்கியம் நல்ல பண்பு. அது இல்லையானால் நட்புக் கொள்ளக் கூடாது. ஆராயாமல் நட்புக் கொண்ட பின்னர் தான், அவர் பண்பற்றவர் எனத் தெரியவந்தது என்றால். நட்பை வளர்த்துப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, படிப்படியே தேய விடுவதே நல்லது எனக் கூறுகிறார். பண்பாடு உடையவர்பால் கொள்ளும் நட்பு வளர வேண்டும். பண்பாடு அற்றவர்பால் கொள்ள நேர்ந்த நட்பைத் தேய்த்துவிட வேண்டும். ------------ உறின்நட் டறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்? (குறள். 812) ஒப்பிலார் கேண்மையைப் பெறுவதனால் நன்மை பெறப் போவதில்லை ஒப்பிலார் கேண்மையை இழப்பதனால் நன்மை எதனையும் இழக்கப் போவதில்லை. ஒப்பிலார் கேண்மையைப் பெறுவதனால் நன்மை இல்லை ஆனால் தீமை உண்டு ஒப்பிலார் கேண்மையை இழப்பதனால் கேடில்லை; நன்மை உண்டு. இக்குறளில் திருவள்ளுவர் சுட்டும் ஒப்பிலார் எத்தகையவர். ஒருவர் பொருள் வளம் உள்ளவராய் இருக்கும் போது நட்புக் கொள்வர். பொருள் குன்றி விட்டால் விட்டு நீங்கி விடுவர். பதவியில் இருக்கும் போது நண்பராய் அமைந்து, பதவி இல்லாத போது நட்பையும் விலக்கிக் கொள்பவர். காரியத்தைச் சாதித்துக் கொள்ள நட்புக் கொண்டு, காரியம் முடிந்தபின் விலகிவிடுபவர். எப்பொழுது யார் ஆட்சியில் இருக்கிறார் களோ அப்பொழுது அவர்களிடம் நட்பும், பதவியில் இல்லாதவர்களிடம் பகைமையும் கொள்வோர். இவர்கள் காரியத்தைச் சாதிக்கயார் காலையும் நாணாமல் பிடிப்பர்; காரியம் முடிந்து விட்டால் காலையும் தட்டி விடுவர். இத்தகைய தீயவர்களிடம் நட்புக் கொள்வதால் பயனும் இல்லை. நட்புக் கொள்ளாததால் இழப்பும் இல்லை. அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு. என வாக்குண்டாம் கூறும் உவமைகளையும் ஒப்பாய்வு செய்யலாம். காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர்-ஏலா இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட தொடர்புடையேம் என்பார் சிலர் என நாலடியார் காட்டும் உலக இயல்பையும் எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது. இராமன், வீடணன் அடைக்கலம் குறித்து நண்பர்களோடு ஆராயும் போழ்து சுக்கிரீவன் கூறியுள்ளவற்றுள், வேண்டுழி இனியன விளம்பி, வெம்முனை பூண்குழி, அஞ்சி வெஞ்செருவில் புக்கு உடன் மாண்டு ஒழிவு இன்றி, நம்மருங்கு வந்தவன் ஆண் தொழில், உலகினுக்கு ஆணி ஆம் அன்றே எனக் கூறி விடணனை இகழ்ந்து நகையாடும் இப்பாடல் குறளுக்கு ஏற்ற இலக்கியச் சான்றாகும். ------------ உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (குறள். 813) நட்புக் கொள்ளப்படுவாரின் நலத்தையும், அருமையையும், பெருமையை யும், நோக்காது, அவரால் தமக்குக் கிடைக்கும் பயனை மட்டும் அளந்துபார்க்கும் தந்நலக் கார நண்பரும். பொருள் கொடுப்பவரை உள்ளத்தால் விரும்பி அன்பு பாராட்டாது, அவர் கொடுக்கும் பொருளை மட்டும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் விலை மகளிரும். பிறர்க்குவந்த கேட்டையும், அவர்படும் துன்பத்தையும் நோக்காது; தமக்குக் கிடைக்கும் பொருளை மட்டும் நோக்கிக் களவு செய்வாரும் ஆகிய மூவரும் பண்பாட்டால் ஒரு தன்மைப் பட்டவரே ஆவர். தமக்கு வரும் பயனை மட்டும் அளவிட்டுப் பார்க்கும் நண்பர் உண்மையான நண்பர் ஆகார். அவர் திருடர் மற்றும் விலை மாதர் போன்றவரே ஆவார். நல்ல நண்பர் கொடுத்து உதவ நினைப்பாரே அல்லாமல், நண்பரிடம் வாங்கிப் பிழைக்க எண்ணார். தவறு செய்துசோர்வுற்ற வழி, மனம் வருந்துமாறு இடித்துரைத்து, எடுத்த வினையை முடிக்குமாறு செய்கின்றவர்கள், பெரியோர்களுக்குத் தாயைப் போன்றவர் ஆவார். ஆனால் கேட்பவர் மனம் உருகுமாறு, வாயளவில் பணிவுடையராகப் பேசி, உள்ள செல்வத்தைக் கவர்ந்து பின் நீங்குகின்றவர்கள் திருடரைப் போன்றவரே ஆவார் எனும் பொருள் விளங்குமாறு. காய உரைத்துக் கருமம் சிதையாதார் தாயரொடு ஒவ்வாரோ தக்கார்க்கு-வாய்பணிந்து உள்ளம் உருக உரைத்துப் பொருள் கொள்வார் கள்வரோடு ஒவ்வாறோ தாம் என அறநெறிச் சாரம் தீ நட்பினார் திருடர்களே ஆவர் எனக்கூறும் கருத்தையும் சிந்தையில் கொள்வோம். உயிர்களைக் கூறுபடுத்தும் கூற்றுவன் உயிரைக் கவரும் நாள் வரையில் அவனும் காத்தே நிற்பான். அதுபோல் கண்ணுள் இருக்கும் கருமணிபோல் அன்புடன் நண்பு காட்டிப் பழகிய போலி நண்பர்களும், தமக்கு ஆகவேண்டிய பயன் முடிந்தது எனக்கருதிய வேளையிலே பகைவர் ஆகிவிடுவார் என்னும் கருத்தோட்டத்தில் அமைந்த பழமொழிப் பாடல். கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும் எண்ணும் துணையிற் பிறராகி நிற்பரால் எண்ணி உயிர் கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணும் துணைக் காக்கும் கூற்று எனத் தீய நண்பரைக் கூற்றுவனுக்கு உவமை ஆக்குவதையும் உடன் எண்ணிப் பார்ப்போம். ஒவ்வொருவரும் தத்தம் உள்ளத்தை மேலும் மேலும் விரிவுபடுத்துதற் குரிய செயல்களையே, நினைக்க வேண்டும். உள்ளத்தைக் குறுகச் செய்வனவற்றை நினையாதிருத்தல் வேண்டும். அவ்வாறே துன்பம் வரும் போது உதவாமல் கைவிட்டுச் செல்வார் நட்பைக் கொள்ளாதிருத்தல் வேண்டும் என்பதை உள்ளற்க உள்ளம் சிறுகுவ: கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு (குறள். 798) என நட்பாராய்தல் அதிகாரத்தில் தெளிவுபடுத்தியதை மேலும் வலியுறுத்திக் கூறும் குறளே, அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை (குறள். 814) போர் வருவதற்கு முன்பெல்லாம் தன்னை எந்நிலையிலும் தாங்குவது போன்று இருந்து, போர் வந்தபின் போர்க் களத்தில் தன்னைக் தள்ளிவிட்டு ஓடிப் போகும் பயிற்சியில்லாப் பயந்த குதிரையைப் போன்றவரிடம் நட்புக் கொள்வதைக் காட்டிலும் யாரோடும் ஒட்டும் உறவும் இல்லாத் தனி வாழ்க்கை சிறந்ததாகும். தீய நண்பர் துன்பமற்ற இன்பக் காலத்தில் நிலையான துணையாவார் போன்று போலியாக நடித்துவிட்டு, துன்பக் காலத்தில் ஒதுங்கி விடுவார் என்பது கருத்து. எய்ப்புழி வைப்பாம் எனப் போற்றப் பட்டவர் உற்றுழி ஒன்றுக்கு உதவலர் - பைந்தொடீஇ அச்சு இடை இட்டுத் திரியின் அதுவன்றோ மச்சு ஏற்றி ஏணி களைவு என்னும் பழமொழிப் பாடல் ஏற்ற எடுத்துக் காட்டாகும். பாப்புக் கொடியாற்குப் பால் மேனியான் போலத் தாக்கி அமருள் தலைப் பெய்யார் - போக்கி வழியராய் நட்டார்க்கு மாதவம்செய் வாரே கழிவிழாத் தோளேற்று வார் என்னும் பழமொழிப் பாடல் வழி அறியும் கருத்து. பாம்புக் கொடியை உடைய துரியோதனனுக்குப் போர் ஏற்பட்டவுடன் அவற்கு உதவாது சென்ற பால் போன்ற உடம்பினை உடைய பலராமனைப் போல, வழி வழியாகத் தம்மோடு நட்பினைச் செய்தார் பொருட்டு, மிகத்துன்புறுத்து போரில் கலந்து கொள்ளாராய், அவர் உயிரைப் பகைவரால் போகச் செய்து, பின்னர் இறந்தார் கடனைச் சிறப்பாகச் செய்பவர்கள், கழிந்த விழாவினை உடைய ஊரில் தம் புதல்வற்கு விழாக் காட்டும் பொருட்டு, அவரைத் தோள் மீது வைத்துச் சுமப்பவரோடு ஒப்பர். என்னும் பழமொழிப் பாடலின் கருத்து குறளுக்கு ஏற்றவிளக்கமாய் அமைந்துள்ளதைக் காணலாம். ------------ செய்தேமம் சாராச் சிறியவர் புன் கேண்மை எய்தலின் எய்தாமை நன்று (குறள். 815) எது எய்தலின் எய்தாமை நன்று? புன்கேண்மையே எய்தலின் எய்தாமை நன்று ஆகும். யாருடைய புன்கேண்மை? சிறியவர் புன் கேண்மை. எத்தகைய சிறியவர்? செய்து ஏமம் சாராச் சிறியவர். நட்புக் கொண்டும் நெடுநாள் ஆகிறது. அவருக்கு நண்பரும் பல்வேறு வகையில் செய்த பல்வேறு உதவிகளையும் பெற்றவர் நண்பருக்கு எதிர்பாரா வகையில் ஏற்பட்ட இடையூற்றின் போது தக்க பாதுகாப்பு வழங்கித் துணைபுரிவது கடமை; ஆனால் அவ்வாறு உரிய நெருக்கடியில் பாதுகாப்பாய் அமையாதவர் பெருந்தன்மை அற்ற சிறியவராக கருதப்படுவார். அவர் இதுகாரும் கொண்ட நட்பும் தீய நட்பே ஆகும். அத்தகைய சிறுமைத் தன்மை கொண்டவரின் தீய நட்பு வாய்க்கப் பெறாமல் இருந்திருக்குமானால் நல்லதாகும். ஆனால் அத்தகைய தீயவர் நட்பு வாய்த்து விடுமானால் பெருந்தீமையே தரும். சிறியவர்பால் கொள்ளும் தீயநட்பு உண்டாவதை விட உண்டாகாமல் இருப்பதே நல்லது. நல்லவரிடம் கொள்ளும் நட்பே உண்மையில் நட்பாகும். ------------ வெளிப்புறப் பகைவர் பலகோடிப் பேர் சேர்ந்து செய்யும் தீமையைக் காட்டிலும், பக்கத்தில் இருந்து தீயதைச் செய்யும் அமைச்சர் ஒருவர் செய்யும் கேடு பெரிதாகும் என்பதை அமைச்சு அதிகாரத்தில், பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் (குறள். 639) எனக் குறிப்பிட்ட நோக்கில் பாடப்பட்ட பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் (குறள். 816) என்னும் குறட்பாவாகும். பொதுவாக நட்பு நன்மைதரும்; பகைமை கேடுதரும் எனக் கருதுவது இயல்பு. அது முழு உண்மையன்று, நல்லவர்களிடம் நட்புக் கொண்டால் தான் நன்மை விளையும். தீயவனிடம் நட்புக் கொண்டால் தீமையே விளையும். தீயவனிடம் கொள்ளும் நட்பே பெருங்கேடு தரும். நல்லவனிடம் கொள்ளும் பகைமை கேடேதராது என்று சொல்ல முடியாவிட்டாலும், தீயவர் நட்பால் விளையும் கேட்டுடன் ஒப்பிட்டால் மிகக் குறைந்தே இருக்கும். அறிவில்லானது மிக நெருங்கிய நட்பினும் அறிவுடையார் பகைமை கோடிமடங்கு நல்லதாகும். பேதை நட்பு பலவகைத் தீங்கை விளைத்தலானும், அறிவுடையான் பகை ஒரு தீங்கும் விளைக்காமையானும் கோடி உறும் என்றார். இழிந்த மாக்களொடு இன்பம் ஆர்தலின் உயர்ந்த மாக்களொடு உறுபகை இனிது என்னும் பெருங்கதைத் தொடரும் ஒத்த கருத்தினதே! சிறுகுணம் அமைந்த, நல்லியல்பு இல்லாத, சிறிய வரிடத்து, அன்புடன் நட்புச் செய்த அளவும் துன்பமே ஆகும். ஆனால், நடுக்கந் தரக் கூடிய செயல்களை விளையாட்டாக ஆயினும் செய்ய விரும்பாத நல்ல அறிவினர்களிடத்துக் கொண்ட பகைமையும் பெருமை அடையும், எனும் பொருள் புலப்படுமாறு அமைந்த, இசைந்த சிறுமை இயல்பிலாதார் கண் பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவினார் கண் பகையேயும் பாடு பெறும் என்னும் நாலடியார் பாடலையும் இணைத்து எண்ணிப் பார்க்கலாம். ------------ முகம் மட்டும் மலருமாறு கொள்ளும் நட்பு, நட்பாகாது; முகத்துடன் நினைவின் உள்ளிடமாகிய மனமும் மலருமாறு நட்புக் கொள்வதே நட்பாகும் (குறள்.786) ஒருவரோடு ஒருவர் நட்புக் கொள்வது சிரித்து மகிழ்வதற்காக மட்டுமன்று; வரம்பு மீறிச் செல்லும் இடத்தில் முற்படச் சென்று இடித்துக் கூறுவதற்கும் ஆகும் (குறள்.784) நண்பனுக்குக் கேடானவற்றை நீக்குதல் நல்ல வழியில் செலுத்துதல், துன்பத்தில் பங்குகொள்ளுதல் நண்பனுக்குத் துன்பம் வருங்கால் உடனே சென்று துன்பத்தைப் போக்குதல், நண்பன் செய்யும் நற்செயல்களில் எல்லாம் பாதுகாப்பாய் இருத்தல், நண்பனின் கடமைகளாகும். மேற்கண்ட இயல்பிற்கு மறுதலையான நட்பு, தீய நட்பு. தீயவர் நட்பை விட பகைமை மேலானது என்பதை உணர்த்தும் குறளே, நகை வகையராகிய நட்பின், பகைவரால் பத்தடுத்த கோடி உறும் (குறள். 817) தீயவர்களில் ஒரு வகையினர் நகை வகையர். அன்னார் அகம் மலர நட்புக் கொள்ளும் தூய அன்புடையவர் அல்லர். உள்ளம் ஒத்த உணர் வுடையவரும் அல்லர்; நண்பன் தவறு செய்தால் கண்டித்துத் திருத்து பவரும் அல்லர்; கேடு வாராமல் காப்பவரும் அல்லர்; நன்னெறியில் வாழ வழி காட்டுபவரும் அல்லர்; துன்புறும் நண்பனுடன் இணைந்து துன்புறுபவரும் அல்லர்; பண்பாளரும் அல்லர். கடமையை விட, உதவியை விட பாதுகாப்பதை விட, நெறிப்படுத்து வதை விட, நெறி உணர்த்துவதை விட சிரிக்க வைத்து தாமும் சிரித்து மகிழ்ந்து பொழுது போக்குவது ஒன்றிற்கே முதன்மை தருபவர். பிறர் எள்ளி நகையாடுமாறு தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர் நண்பனையும் நண்பன் செயல்களையும் ஏளனமாகக் கருதிச் சிரிப்பவர். இத்தகையவரிடம் நட்பைத் தொடர்வது நல்லதன்று; இத்தகைய தீயவருடன் நட்புக் கொள்வதால் கிட்டும் இன்பத்தை விட பகைவர்களிடம் கொண்ட பகைமையால் அடையும் துன்பம், நம்மைப் பல்வழிகளில் பண்படுத்தி ஆற்றல் உள்ள வராகவும் துணிவு உடையராகவும் அஞ்சாமை உடையராகவும் மனவலிமையும் உடல் வலிமையும் உடையராகவும் ஆக்கும். ஆகவே திருவள்ளுவர் நகைவகையர் நட்பு வழி உண்டாகும் இன்பத்தைவிட, பகைவரால் உண்டாக்கப்படும் துன்பம் பலப்பல கோடி மடங்கு நன்மையை உண்டாக்கும் என்கிறார். பகைவர் தீமையே செய்வர். துன்பம் வருத்த வரும் போது அதனை எண்ணித் துன்பப்படாதவர். தம்மை வருத்த வந்த துன்பத்திற்கே துன்பத்தை உண்டாக்குவர். இன்பம் வரும் போதில் இன்பம் என்று அதனை விரும்பாதவன் துன்பம் வரும் போதில் துன்பம் அடைய மாட்டான். தனக்கு வரும் துன்பத்தையே இன்பம் எனக் கொள்பவன். பகைவ ராலும் மதித்துப் போற்றப்படுவான். நகைவகை நண்பன், நஞ்சுகலந்த அமுதம் போன்றவன்; பகைவன் வேப்பெண்ணெய் போன்றவன். நஞ்சு கலந்த அமுது இனிக்கும் ஆனால் உயிரைக் கொல்லும்; வேப்பெண்ணெய் கசக்கும்; ஆனால் நோய் அகற்றும் மருந்தாகும். சிரிக்க வைக்கும் நண்பர் காலத்தையும், சிந்தனையையும், விழிப்புணர்வையும், உழைப்பையும் கொன்று தன்னம்பிக்கையும் பொறுப்புணர்வும் அற்றமடியர் ஆக்கிவிடுவார். அஃது குடி என்னும் குன்றா விளக்கு அணைய அடித்தளம் அமைத்ததாக அமைந்து விடும். ஆகவேதான் பகைவரால் கோடி மடங்கு நன்மை உண்டு என்றார். எண்ணிக்கை கற்பனை ஆனாலும் உண்மை அதுவாகும். நமக்கோ பகைவர்கள் மிகுதியாகப் பெருகி விட்டனரே, நண்பர் எனச் சொல்லின் கொள்ள ஒருவரும் இல்லையே என வருந்தி, தேடிக் கொள்ளும் நண்பர் நகைவகையராக அமைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கும் நண்பர் வேண்டுமே எனக் கருதி நகைவகைய ராகியவர் நட்பைத் தேடிக் கொள்ளக் கூடாது. பகைவரால் நேரும் துன்பம் எதிர்வகைப் பயனைத் தரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று என்னும் பழமொழியும் குறளை நினைவுபடுத்தும், ஒல்லும் கருமம் உடற்று பவர் கேண்மை சொல்லாடார் சோர விடல். (குறள். 818) தீயவர்களில் இன்னொருவகையினர் ஒல்லும் கருமம் உடற்றுபவர்! இவர்கள், தம்மால் செய்யமுடியும் செயலைக் கூட செய்ய வேண்டும் என்ற எண்ணமோ, முயற்சியோ இன்றி வீண்பொழுது போக்கும் மடியர்கள். நண்பர் இயல்பாகச் செய்து முடிக்கக் கூடிய செயலையும் முடிக்க விடாமல் கெடுக்கும் தன்மை பொருந்தியவர், இவர்களே ஒல்லும் கருமம் உஞற்றுபவர் இவர்கள் நட்பை என்ன செய்ய வேண்டும். விலகுமாறும் சொல்லக் கூடாது. விலக்க எண்ணுவதையும் அவர் அறியாவகையில், விலக்குவது தெரியாமல் மிக நுணுக்கமாக, கையில் உள்ள ஒருபொருள் தானே நழுவி விழுவது போல் கைவிட வேண்டும் என வள்ளுவர் சொல்லித் தரும் உத்தி, உளவியல் தெளிவில் மலர்ந்ததாகும். ஏனெனில் நாடாது நட்டலின் கேடில்லை என்று சொன்னதோடு அமையாது நட்டபின் வீடில்லை நட்பாள்பவர்க்கு எனவும் தெளிவு படுத்தியவர், இங்கே, தீயவர் நட்பை விட வேண்டும். கைவிடுவது தெரியாமல் கைவிட வேண்டும் என வழியும் சொல்கிறார். மூர்க்கரோடு இணங்கேல் என்னும் ஆத்திசூடியின் அறிவுரையும் சிந்தனையில் இருக்கட்டும். கெடுவது செய்யின் விடுவது கருமம் எனக் கொன்றை வேந்தன் கூறுவதும் வள்ளுவநெறியே. வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் ஆற்றும் துணையும் பொறுக்க, பொறானாயின் தூற்றாதே தூர விடல் என்னும் நாலடிப் பாடலின் கருத்தும் குறட் கருத்திற்கு அரண் செய்வதே யாகும். கனவினும் இன்னாது மன்னோ, வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு (குறள். 819) வினை வேறு சொல்வேறு பட்டார் தொடர்பு இன்னாது எனக் கூறி அமையாது கனவினும் இன்னாது மன்னோ என்கிறார். நனவில் துன்பம் தரும் என்பதை அனைவரும் அறிவர். வாயால் எதனை எப்படிச் சொல்கிறோமோ அதன்படியே செயல் அமையுமாறு வாழ்வோர் நல்லவர். எவர் சொல்லுவது ஒரு விதமாகவும் செயல் புரிவது அதற்குத் தொடர்பின்றி வேறு விதமாகவும் செயல்படு வார்களோ! அவர்கள் எதையும் நம்பும்படி, பொருத்தமாகப் பேசுவார்கள், அத்தகையோர் பேச்சால் எவரையும் ஏமாற்றி விடுவர். ஆகவே, சொல்லளவில் உளம் ஒத்த நண்பர் போலவும், செயல் அளவில் கொடும் பகைவர் போலும் இயங்கும் தீயவர் நட்பு எப்பொழுதும் துன்பந்தரும். மதியோடும் மனச்சான்றோடும் கூடாத தூக்க நிலையில் காணும் கனவில்கூட துன்பம் தரும் என அத்தகைய தீயவர் நட்பால் உண்டாகும் தீமையின் அளவை விரிவுபடுத்திக் கூறியுள்ளார். உள்ளத்தான் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட! மனத்துக் கண் மாசாய் விடும் என்னும் நாலடிப் பாடலும் நல்ல எடுத்துக் காட்டாகும். ------------ எனைத்தும் குறுகுதல் ஓம்பல், மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு (குறள். 820) நண்பன் செருக்குடன் நடந்து கொள்ளும் போது அவன் தன்னுடைய நிலையை உணரச் செய்ய கண்ணீர் விட்டு அழுமாறு அறிவுரை வழங்கவும், தவறு செய்யும் போது கடுமையான சொற்களையும் பயன் படுத்தி நேரில் இடித்துக் கூறும் உரிமையுடையவனே உண்மை நண்பன். இல்லத்தில் தனியே இருக்கும் போது அன்பர் போல் நட்பாடி, அம்பலத்தில் பலரோடு கூடியிருக்கும் போது, பகைவர் போல் பழிகூறுவார் உண்மையான நண்பர் அல்லர். அத்தகைய தீயவர் நண்பர் என்னும் போர்வையில் எள்ளளவும் தம்மை நெருங்கவிடாதபடி காத்துக் கொள்ள வேண்டும். குற்றத்தை நேரில் கூறிச்சீர் செய்வதும், குணத்தை ஊர் அறியக் கூறிப் பாராட்டுவதும் நல்ல நண்பர் இயல்பு. குற்றத்தை நேரில் சொல்லாமல் அன்புடையவர் போல் நடந்து கொண்டு, ஊர் அறியப் பழி கூறுவோர் தீய நட்பினர் ஆவர். அத்தகை யோரை நெருங்கவிடவே கூடாது. அத்தகைய தீயவர் நட்பாடித் தாம் கேடு புரிவதுடன். ஊரவர் பகைமை பாராட்டி வெறுக்குமாறும் செய்து விடுவர். விலக்கற்பால தீய நட்பினரில் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் மிகப் பெரிய தீயவர் எனக் கூறித் தீ நட்பை நிறைவு செய்கிறார். பண்பிலார் கேண்மை குன்றல் இனிது மக்கள் போலிகள் நட்பைப் பெறுவதால் பயன் என்ன? மக்கட் போலிகள் நட்பை இழப்பதால் என்ன கேடு? உறுவது சீர் தூக்கும் நட்பும் கள்வரும் நேர்? உறுவது சீர்தூக்கும் நண்பர் விலை மகள் போன்றவர்? அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா போன்றவர் நட்பை விடத் தனிமையே சிறந்தது தீயவர் நட்பை விட, நல்லவர் பகை நல்லது சிரித்துப் பேசும் நண்பர் நட்பை விட பகைவரால் உண்டாகும் நன்மை மிகுதி செயலைக் கெடுப்பவர் நட்பைச் சொல்லாமலே விலக்குக சொன்னபடி நடவார் கேண்மை கனவிலும் துன்பம் தரும் நண்பர் போல் காட்டிப், பகைவர் போல் செயல்படுவாரை நெருங்க விடாதீர் அவையில் பழி கூறுவோர் தீயவரே நண்பன் குறையை நேரில் கூறு நண்பன் நிறைவை மன்றத்தில் கூறு நண்பனை நேரில் புகழாதே நண்பனை வீதியில் பழிக்காதே நண்பன் திருந்தச் சொல் நண்பன் வருந்தச் சொல்லாதே ------------ 83. கூடா நட்பு நட்புரிமை உண்டாவதற்கு ஒருவரை ஒருவர் கூடுதலும் பழகுதலும் வேண்டுவன அல்ல. உள்ளத்தால் கொள்ளும் ஒத்த உணர்வே நட்பாகிய உரிமையைத் தந்துவிடும் என்பதையும். முகம் மட்டும் மலருமாறு நட்புக் கொள்வது நட்பாகாது. முகத்துடன், நினைவின் உள்ளிடமாகிய மனமும் மலருமாறு நட்புக் கொள்வதே நட்பாகும் என்பதையும். புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் (குறள். 785) முகம் நக நட்பது நட்பன்று; நெஞ்சத் தகம் நக நட்பது நட்பு (குறள். 786) நட்பதிகாரத்தில், உணர்வால் ஒன்றி அகம் மகிழக்கூடி வாழுவதே நட்பு என உரைத்ததை அறிவோம். அப்படியானால் கூடா நட்பு என்பது யாது? ஒருவரை ஒருவர் கூடி இருந்து கூடி உண்டு கூடி உறங்கி கூடித் தொழில் செய்தும் நெடுநாள் களாகப் பழகி உறவாடிவாழ்ந்தும் உள்ளத்தில் ஒன்றுபட்ட தூய அன்புணர்வு இல்லையானால் அது கூடா நட்பு. நினைவின் உள்ளிட மான, மனம் மகிழ்ச்சி அடையாமல் முகம் மட்டும் மலருமாறு கொள்ளும் நட்புக்குப் பெயர் கூடா. நட்பு ஆகும். மனத்தொடு பொருந்தாத தோழமையின் இயல்பினைக் கூறும் இவ்வதிகாரத்திற்குக் கூடா நட்பு எனத் தலைப்பு அமைந்துள்ளது. ஆனால் இவ்வதிகாரத்திலும் கூடா நட்பு என்ற சொல்லாட்சி இல்லை என்பதுடன் நூலிலும் வேறு எந்த அதிகாரத்திலும் பயன் படுத்தப்படாச் சொல் கூடா நட்பு ஆகும். 1. நேரா நிரந்தவர் நட்பு, 2. இனமல்லார் கேண்மை, 3. மனநல்லர் ஆகுதல் அரிது, 4. அகத்தின்னா வஞ்சர் 5. மனத்தின் அமையாதவர், 6. ஒட்டார், 7.ஒன்னார், 8. ஒன்னார், 9.மிகச்செய்து தம் எள்ளுவார், 10. பகை நட்பாம் காலம் என்னும் சொற்களையும் சொற்றொடர்களையுமே காண்கிறோம் இவற்றின் வழியாக நாம் அறியக் கூடியது. ஒருவனே நண்பனாகவும் பகைவனாகவும் செயல்படுவோரை அடையாளம் காட்டி விழிப்புடன் நட்புக் கொள்ளத் தூண்டும் அதிகாரமாகும். நண்பனைப் போல் பேசிப் பழகினாலும், உள்ளத்தில் பகைமை உணர்வு கொண்டு இயங்குவோர் இயல்பு சுட்டும் அதிகாரமாகும். அடையாளம் காணுதல் எளிதன்று எனினும் முயன்று கண்டு தெளிதல் வேண்டும். வள்ளலாரும் உள்ளொன்று வைத்தும் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என அனைவர் சார்பிலும் இறைவனை வேண்டினார். ------------- சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு (குறள். 821) மாசற்ற மனத்தவராய் ஒத்த உணர்வுடையராய் இன்பத்திலும் துன்பத்திலும் இரண்டறக் கலந்து இயங்குவோரே உண்மையான நல்ல நண்பர்கள். அவ்வாறு இல்லாமல் மனத்தில் நட்புணர்வு இன்றித் தீய எண்ணம் உடையவராய் அது வெளியே தெரியாதவாறு இனிக்க இனிக்கப் பேசிப்பழகி போலியான அன்பு பாராட்டு பவர்களை நண்பர் போல் நடிக்கும் பகைவர் என்று சொல்லலாம். நேரடியாகப் பகைவர் என்றும் சொல்ல வாய்பில்லாதவாறு அவருடைய நடவடிக்கை இருப்பதால் அவரைப் பகைவரின் கூட்டாளி எனவும் கூறலாம். பகைவன் கொலை செய்ய வரும்போது, அதைத் தடுத்து நிறுத்த வாய்ப்பும் வழங்காமல், அன்பால் கட்டி அணைத்துத் தழுவுவது போல் நடிப்பவன், பகைவனாகியகொலை காரனுக்குத் துணைபுரிபவனே ஆவான். திருவள்ளுவர் இத்தகைய உளம் பொருந்தா நட்பாளனை இரும்புப் பட்டடையில் இருக்கும் கல் போன்றவன் என்கிறார். பெரிய நீளமான இரும்புக் கம்பியைத் துண்டு துண்டு ஆக்குவதற்கு முதற்கண் அடைக் கல்லில் வைப்பார்கள். அடைக்கல் பெரிய இரும்புக் கம்பியைத் தாங்கிக் கொண்டு இருக்கிறது. அதன்பின் கம்பியின் மேல் சம்மட்டி கொண்டு அடிக்கும் அடி வலுவாய் விழுந்து துண்டு படுத்த துணைநிற்கும் பட்டடைக் கல் போன்றவர் என்கிறார். நம்முடனே இருந்து நமக்கு நலம் செய்வது போல் காட்டி, பகைவன் நினைத்ததை எளிதே முடிக்கத் துணை புரிபவர்கள் ஆகவே இத்தகையவர் களிடம் பழகுவதில் மிக எச்சரிக்கை வேண்டும். உள்ளத்தோடு உண்மையில் பொருந்தாமல் ஆனால் பொருந்தியவர் போல் காட்டுவார் நட்பு. தக்க இடம் வாய்க்கப் பெறுமாயின், தாங்குவது போல் இருந்து வலுவாய் அடிப்பதற்குப் பயன்படும் பட்டடையில் உள்ள அடைகல்லுக்கு ஒப்பாகும். இத்தகைய நேரா நிரத்தவர்களை உள்ளாளாகப் பயன்படுத்தியே பெரிய பெரிய கொலை, கொள்ளை, திருட்டு அழிப்பு வேலைகள் மிக எளிதாகவும், சுழிவாகவும் நிகழ்த்தப் படுகின்றன. மனத்தோடு பொருந்தாதார் நட்பு, மாபெரும் கேட்டினை விளைவிக்கும். இவர்கள் குறிப்பிட்ட காலம் வரை நல்லவர்களாகவே நடப்பார்கள் ஆனால் அவர்கள் எண்ணிய சரியான இடமும் நேரமும் வாய்க்கும் போது பெருந்துன்பம் விளைப்பார்கள். இவர்கள் தோளில் கைபோடுவது போல், தொண்டையை நெரிப்பர், உண்ணும் உணவில் நஞ்சு கலந்து உண்ண வைப்பர். உடன் தூங்கும் போது தலையில் கல்லைத்தூக்கிப் போடுவர். உடன் துணைக்கு வருவது போல் வந்து, பின்னால் நின்று பாழுங்கிணற்றில் தள்ளி விடுவர். வேண்டாத பணியில் ஈடுபட வைத்து, இழப்புக்கு ஆளாக்குவர். இவர்கள் நம்பிக்கைக்கு உரியவர் அல்லர்; இவர்களைத் தான் கூட இருந்தே குழி பரிப்பவர் என்பர். உளம் பொருந்தாதவர் மீது கொண்ட நட்பு. வாய்ப்புவரின் வலிமையாக அடிக்க உதவும் பட்டடைக் கல் போன்றதாம். ------------- நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை; தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல் (குறள்.460) சிற்றினம் சேராமை அதிகாரத்தின் நிறைவுக் குறளாகிய இதன் வழி ஒருவனுக்கு நல்லவர் கூட்டத்தினும் மேலான துணையாவது இல்லை; அவ்வாறே தீயவர் கூட்டத்தினும் தொல்லைப் படுத்துவதும் இல்லை. எனும் கருத்தை உணர்ந்துள்ளோம். அதன் சாயலில் அமைந்தகுறளே, இனம் போன்று இனமல்லர் கேண்மை, மகளிர் மனம் போல வேறுபடும் (குறள். 822) என்பதாகும். இனம் இனமாகவும், இனமல்லார் இனமல்லாராகவும் அகத்தும் புறத்தும் அமைந்திருந்தால் அடையாளம் காண்பது எளிது: குழப்பத்திற்கும் வழியில்லை. ஏமாற்றுக்கும் வஞ்சகத்திற்கும் இடமில்லாது இருக்கும். பேரினத்தார் பேரினத்தாருடனும்; சிற்றினத்தார் சிற்றனத்தாருடனும் சேர்ந்து நட்புக் கொள்வர், பெருந்தன்மையர், சிறுதன்மையரைக் கண்டு ஒதுங்கிக் கொள்வார்கள். ஆனால் மேலான அன்பும், பண்பும், நண்பும், உடையவரைப் போல நடிக்கும். அன்பும், பண்பும், நண்பும் அற்ற பகைமை உணர்வு கொண்டவர் பகைவராகவே நடந்து கொண்டால் குறை கூற முடியாது. ஆனால் நண்பனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் எத்தகையர் எனில், உள்ளன்பு உடைய மனைவி போல் நடிக்கும் பொருளுக்காக மானத்தை விற்கும் இருமனப் பெண்டிர் பொன்றவர் ஆவார். ஒத்த உணர்வு அற்றவர் நட்புக் கொள்வது, நட்புக் கொள்ள வேண்டும் என்பதற்காக அன்று, பின் எதற்காக எனின் நேரடியாக எதிர்த்துக் கெடுக்க இயலாது எனக் கருதி, கூடிக் கெடுப்பதே நோக்கம். அதுபோல் இருமனப் பெண்டிர் கூடிக் களிக்க இடம் தருவது இன்ப நோக்கத்தால் அன்று; பொருளைக் கவரத் தேடிக் கொண்ட வழியாகும். ஆகவேதான், உள்ளத்தால் ஒன்று பட்டவர் போல் காட்டி ஒன்றுபடாத சிற்றினத்தார் கொள்ளும் நட்பு இருமனப் பெண்டிர் மனம் போல் உள்ளொன்றும் புறத்தொன்றுமாய் வேறுபட்டிருக்கும். மீன் கூட்டம் பழைதாகிய ஆழமான நீர் நிலையில் வாழ்ந்தாலும், புதிதாகிய வெள்ளம் வருமிடத்து அதனைக் கண்டால், தனது பழைய நீர்நிலையை வெறுத்து அப்புதிய வெள்ளத்தே புகுவதற்குப் பெரிதும் விரும்பும்; அங்ஙனமே தேன் துளிக்கின்ற மலர்மாலை அணிந்த கற்பில் மகளிர், காம வேளையே கணவனாகப் பெற்று அவனோடு வாழ்வார் ஆயினும், புதிய ஆடவரைக் காணுமிடத்து, மனம் மாறுபட்டு அவரைத் தழுவ நினைத்து, மனம் உருகும் இயல்புடையர் ஆதலாலும் நீ குறிக் கொண்டு அவரை விரும்புதல் ஒழிக என்னும் பொருள் விளங்குமாறு அமைந்த பள்ள முதுநீர்ப் பழகினும் மீனினம் வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉங் கள்ளவிழ் கோதையர் காமனோடு ஆயினும் உள்ளம் பிறிதாய் உருகலும் கொள் நீ என்னும் வளையாபதிப் பாடல் பிறிதொரு உவமை வழி கற்பில் மகளிர் மனம் வேறுபடுதலை விளக்கிக் காட்டுவதையும் ஒப்பு நோக்குக. தன் கணவன் சிறந்த அழகு மிகுந்தவனும், இளமைப் பருவம் உடையவனும் இசை பாடுதலில் வன்மையுடையவனும், பெண்களின் கண் களைக் கவரும் பார்வை உடையவனும், பொருத்தமான, மேன்மையான இனிய சொற்களை உடையவனும் ஆயினும், கற்பில்லாத மாதர்க்கு வேற்று மனிதர்மேல் மனம் செல்லும் எனும் கருத்து புலப்படுமாறு அமைந்த, எந்தெழில் மிக்கான் இளையான் இசைவல்லான் காந்தையர் கண்கவர் நோக்கத்தான் - வாய்ந்த நயனுடை இன்சொல்லான் கேள்எனினும் மாதர்க்கு அயலார் மேல் ஆகும் மனம் என்னும் நீதி நெறி விளக்கப் பாடலையும் ஒப்புநோக்குக! அட்டாலும் பால்சுவையில் குன்றா தளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்னும் வாக்குண்டாம் பாடலும் ஒரு வழி ஒப்பு நோக்கத் தக்கதே. ------------- திருவள்ளுவர் மக்கட் பேற்றை அறிவறிந்த மக்கட்பேறு எனச் சுட்டியவர். மக்கள் அனைவரும் கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்று, கேடில் விழுச் செல்வமாகிய கல்விச் செல்வராய் விளங்கவேண்டும் என விரும்புபவர். அருமையான நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்த குற்றமற்றவர் இடத்தும், ஆராய்ந்து பார்க்கும் போது, அறியாமை இல்லாமல் இருத்தல் அருமையாகும் என்பதை அரியகற்றா சற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு (குறள். 503) என்னும் தெரிந்து தெளிதல் அதிகாரக் குறள்வழியும். நுண்ணிய பொருள் அமைந்த நூல்கள் பலவற்றை ஒருவன் கற்பான் எனினும் அவன்பால் இயற்கையாய் அமைந்த உண்மை அறிவே மேம்பட்டு நிற்கும். என்பதை நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் (குறள். 373 ) என்னும் ஊழ் அதிகாரக் குறள் வழியும் ஒரு நுட்பத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. கல்வியால் முழுமை பெறல் அரிது; உண்ட உணவில் தங்குவதை விடக் கழிவே மிகுதி ஆவது போல், கற்ற கல்வியில் தங்குவதும் உண்டு, தங்காததும் உண்டு. கற்றதெல்லாம் தங்கினாலும் கற்றவர் பேரறிவாளர் ஆகலாமே தவிர்த்து பண்பாளர் ஆதல் அரிது. பண்பாளராக விளங்காத கல்வியாளர், மேம்பட்ட கூர்த்த மதியாளராய் விளங்கினாலும் ஓரறிவு உடைய மரம் போன்றவரே ஆவர். பண்புடையவர்களே உலகத்தை அழியாமல் காத்து வருகிறார்கள். உயர்ந்த குடிப் பிறப்பும் உள்ளத்தில் உருக்கொள்ளும் அன்புடைமையும் இணைந்தே பண்புடைமையை உருவாக்கும். மக்களுக்கு உண்டாகும் உணர்ச்சி அவரவர் கற்ற கல்விக்கு ஏற்றவாறு அமைவதன்று. அஃது அவரவர் மனத்தைப் பொறுத்தே அமையும். ஒவ்வொருவருக்கும் தூய மனம் வாய்க்க வேண்டுமானால் தூய மனம் வாய்க்கப் பெற்ற நல்லினத்தின் கூட்டும் துணையும் தேவை. ஆகவேதான் திருவள்ளுவர் கல்வி கற்றவர் எல்லாம் பல நல்லக் கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது (குறள். 823) பண்புகளால் சிறந்த பெருமக்கள் அல்லாத மற்றவர்கள் பல வகையான நல்ல நூல்களைக் கற்ற அறிஞர்களாய் இருந்தாலும் அவற்றின் பயனாக தூய அன்பு மனம் வாய்க்கப் பெற்று நட்புக் கொள்வதற்கு ஏற்றவர் ஆவர் எனக் கூற இயலாது. மாண்புடையவர்கட்கே நல்ல மனம் அமையும். நல்ல மனம் அமைந்தவர்களே மாண்புடையவர்கள். நல்ல மனம் வாய்ந்த மாண் புடையோரே நட்புக் கொள்ள ஏற்றவர். நட்புக் கொள்ளத் தக்கவர் அறிவுடையவராய் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் உள்ளன்பினால் சிறந்த நல்ல மனத்தவராய் இருக்க வேண்டியது அவசியம். நட்பு அறிவு வழிப்பட்ட தொடர்பன்று, அன்பு வழிப்பட்ட தொடர்பாகும். முகம் மட்டும் மலருமாறு நட்புக் கொள்வது நட்பாகாது; முகமலர்ச்சி யுடன் நினைவின் உள்ளிடமாகிய மனமும் மலருமாறு நட்புக் கொள்வதே நட்பாகும் என நட்பின் இலக்கணத்தை நட்பு அதிகாரத்தில் முகம் நக நட்பது நட்பன்று நெஞ்சத் தகம் நக நட்பது நட்பு (குறள். 786) எனக் கூறியவர். அகமலர்ச்சி அற்றவர் நட்பை என்ன செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கூறும் குறளே. முகத்தின் இனிய நகாஅ, அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும் (குறள். 824) என்பதாகும். அகத்தின்னா வஞ்சரை அஞ்சப்படும் என்பது திருவள்ளுவர் ஆணை. அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் எனக் கூறிய வள்ளுவர் இங்கே யாரைக் கண்டு அஞ்ச வேண்டும் என்கிறார்? வஞ்சகரைக் கண்டு அஞ்ச வேண்டும் என்கிறார். எத்தகைய வஞ்சகரைக் கண்டு அஞ்ச வேண்டும் எனில், மனத்தளவில் தீய எண்ணம் கொண்டுள்ள வஞ்சகரோடு நட்புக் கொள்ளுதற்கு அஞ்ச வேண்டும். அதைவிட காணும் பொழுதெல்லாம் முகமலர்ச்சி காட்டி இனிக்க இனிக்கப் பேசிக் கொண்டு இருக்கும் போதே மனத்தளவில் தீமையைக் எண்ணிக் கொண்டிருக்கும் வஞ்சகரோடு நட்புக் கொள்ளுவதற்குக் கட்டாயம் அஞ்சத்தான் வேண்டும். முன்நின்று ஒருவன் முகத்தினும் வாயினும் கல் நின்று உருகக் கலந்துரைத்துப் - பின்நின்று இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர் விழித்திமையார் நின்ற நிலை. என அறநெறிச்சாரம் கூறும் கூற்றையும் ஒப்பிட்டு நோக்குக! புண்ணைக் கருவியினால் அறுத்து அதனைக் குணப்படுத்து வார்கள். அவ்வாறின்றி அதனை மறைத்து மூடிவையார். அது போல் வெளிக்கு உறவு காட்டி உள்ளே சினத்துடன் இருப்பவரது நஞ்சு போலும் கொடிய பகைமையை வெளியாக்கி நீக்குதல் வேண்டும். அத்தகைய வஞ்சகமான பகைவர்பால் மிகுந்த அன்பு செய்ய மாட்டார் எனும் பொருள் தோன்ற அமைந்துள்ளது. புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை வெளியிட்டு வெறாதல் வேண்டும் - கழிபெருங் கண்ணோட்டம் செய்யார் கருவிஇட்டு ஆற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து என்னும் நீதிநெறி விளக்கப் பாடலைக் கருத்து விளக்கத்திற்கு மேற் கோளாகக் காட்டலாம். தீ நட்பில் செய்யும் செயல் வேறாகவும், சொல்லும் சொல் வேறாகவும் அமைந்தவர் நட்பு. கனவில் காணினும் துன்பம் தருவதாகும் என்பதை, கனவினும் இன்னாத மன்னோ, வினை வேறு சொல்வேறு பட்டார் தொடர்பு (குறள். 819) என உரைத்தார். ஒருவன் உள்ளத்திலும் பொய்மை இன்றி எண்ணி, வாயளவிலும் பொய்மை இன்றிப் பேசிச் செயலளவிலும் பொய்மை இன்றிப் வாய்மை வழி நின்று செயல்பட்டால் அவன் உலகத்தார் உள்ளங்களிலெல்லாம் நிலை பெறுவான் என்பதை, உள்ளத்தால் பொய்யா தொழுகின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் (குறள். 294) என வாய்மை அதிகாரத்தில் உரைத்தார். மனத்தூய்மை, மொழித்தூய்மை செயல் தூய்மை மூன்றும் ஒரே நேர் கோட்டில் செல்ல வேண்டும். மூன்றிற்கும் அடிப்படை மனமாகும். அதுபோல் நட்பிற்கு அடிப்படையால் அமைய வேண்டியது அன்பு கெழுமிய ஒன்றுபட்ட பொருத்தம். உள்ளம் பொருந்திய அன்புடை நண்பர் நம்பிக்கைக்கு உரியவர். அவரோடு உரிமையுடன் பழகலாம். அவர் நமக்கு நலம் தரும் உண்மை களையே பேசுவார். அவர் பேச்சில் அன்பு இருக்கும் வாய்மை இருக்கும். நன்மை இருக்கும், ஆகவே, அவர் சொல்வதை எழுத்து விடாமல் கேட்கலாம். அவர் வேண்டு கோளையும் அறிவுரையையும் ஏற்கலாம். கிணற்றில் விழச் சொன்னாலும் விழலாம் ஏனெனில் தீமை தருவன வற்றைச் சொல்லார். அவர் சொல்வதை ஐயப்படாமல் முழுமையும் நம்பலாம். ஆனால், மன ஈடுபாடு இன்றி, ஏதோ ஓர் உள் நோக்கத்துடன், ஒருவர் பழகி நட்புக் கொண்டுள்ளார் என்றால் அவர் பேச்சைக் கொண்டு மட்டும் அவரை எடை போட்டு நல்லவர் என்று நம்பி ஏமாந்து விடக்கூடாது. போலி நண்பர்கள் இனிமையாகப் பேசுவார்கள்; வாய்மை போலவே பேசுவார்கள் உள்ளத்தில் உண்மையான நட்புக் கொண்டு மலராத பேச்சு நம்பிக்கைக்கு உரியதன்று. ஆகவே தான் திருவள்ளுவர், மனத்தின் அமையா தவரை, எனைத் தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று (குறள்.825) எனக் கூற நேர்ந்தது. மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை, அவர் கூறுகின்ற சொற்களைக் கொண்டு எத்தகைய சிறிய செயலிலும் நம்பி ஏமாறக் கூடாது. மனம் ஒட்டா ஒட்டு ஒட்டு ஆகாது. ------------- நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் ஒல்லை உணரப் படும் (குறள். 826) போலியான நண்பர், உண்மை நண்பர் போல் பேசிப் பழகினாலும், அடையாளம் கண்டு விட வேண்டும். அடையாளம் காண்பது எளிது என்பதை உணர்த்தும் முகமாகப் பாடிய பாடல் இதுவாகும். உள்ளார்ந்த அன்புடைய நண்பர் போல் நல்லவற்றையே சொன்னார் எனினும் உள்ளத்தால் இணையாதவர் சொற்களே விரைவில் உண்மை நிலையை உணரச் செய்துவிடும். தீப்போலச் சுடும் வெங்காரமானது வெம்மை கொடுப்பதாகக் காணப் படினும், நோயினை நீக்கி உடல் நலம் என்னும் குளிர்ச்சியைத் தரும். நஞ்சானது உடல் புளகம் கொள்ளும் படியாகக் குளிர்ச்சியைக் கொடுத்தாலும் பின்னர் கொன்றுவிடும். அதுபோல நல்லோர் என்ன சொன்ன போதிலும் அதாவது கேட்பவர்க்கு விருப்பமில்லாத சொற்களைச் சொன்ன போதிலும் அவையாவும் பின் நன்மையே விளைவிக்கும். ஆதலால், அவை இனிய சொற்களேயாம். தீயவருடைய கனிந்து தோன்றும் சொல்லும் பின் தீமையே விளைவிக்கும் ஆதலால் நஞ்சே யாகும் எனும் பொருள் புலப்படுமாறு அமைந்த, இனியவர் என்சொலினும் இன்சொல்லே; இன்னார் கனியும் மொழியும் கடுவே - அனல் கொளுத்தும் வெங்காரம் வெய் தெனினும் நோய் தீர்க்கும் மெய்பொடிப்பக் சிங்கி குளிர்ந்தும் கொலும் என்னும் நீதிநெறி விளக்கப் பாடலும் குறளை விளக்கும் பான்மையில் அமைந்துள்ளதைக் காணலாம். ------------- சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் (குறள். 827) பகைவர் வில் போன்றவர் அவர் சொல்லும் வில் போன்ற தே! வில் நாண் ஏற்றி அம்பு எய்யப் பயன்படுத்தப்படும் போர்க் கருவியாகும். வில் வளைந்தது எனினும் மேலும் எவ்வளவு அதிகமாக வளைக்கப் படுமோ அதற்கு ஏற்றவாறு அம்பு வேகமாக உயிர் கொல்லும் வேலையைச் செய்யும். ஆகவே வில் வளைக்கப் படுகிறது என்றால் உயிர்க் கொலை நிகழப்போகிறது என்பது பொருள். அதுபோல் பகைவர் வணங்கிப் பணிந்து கூறும் இனிய சொல்லும் இன்பமும் பயனும் நல்கும் தன்மை உடையதன்று அவர்கள் வில் வணக்கத்திற்கும் தீமை செய்வதே நோக்கம். அதுபோல் அவர்கள் வணங்கிக் கூறுவதன் நோக்கமும் தீமையே செய்வதற்கே ஆகும். ஆகவே, உள்ளத்தால் ஒட்டாதவர் உதட்டளவில் ஒட்டி உறவாடிக் கூறும் பணிவான மொழி கேட்டு மயங்கி ஏமாந்து விடாதீர். ஒன்னாரின் சொல் வணக்கமும் வில்வணக்கம் போன்றே தீமை குறித்ததாகும் ஆகவே, நம்பி ஏற்றுக் கொள்ளாதீர். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து (குறள். 828) நண்பர்களையும், பெற்றோர்களையும், பெரியோர் களையும் கைகுவித்து வணங்கி வரவேற்பது உள்ளன்பின் வெளிப்பாடு. உரிமை உடையார் நோயாலும், வறுமையாலும், முதுமையாலும் துன்புறுவதைக் கண்டாலும் இறக்க நேர்ந்தாலும் தம்மை அறியாமல் கண்ணீர் விட்டு அழுவது இயற்கை. திருவள்ளுவர் வணங்குபவர் யார் என்று பார்! நம்மைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுபவர் யார் என்று பார். வணங்குபவர் உள்ளார்ந்த நட்புடையவர் என்றால் அவர் வணக்கத்தை மனம் உவந்து ஏற்றுக் கொண்டு, நீயும் அவரை மதித்து வணங்கு, அதுபோல் நம்மைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுபவர் நண்பரானால் அவர் கண்ணீரைத் துடை, துன்பத்தில் கலந்துகொள் துன்பத்தை நீக்கத் துணை நில்! தம்மை வணங்குவது போன்று காட்டிக் கொள்ளும் பகைவரின் கைகளின் உள்ளேயும் உயிரைப் போக்குவதற்குரிய கொடிய கொலைக் கருவி மறைந்திருக்கவும் கூடும். அத்தகைய பகைவர் அழுவது போன்று விடும் கண்ணீரிலும் உண்மைக்கு மாறான, வஞ்சகமும் சூழ்ச்சியும் ஏமாற்றும் அடங்கி இருக்கும். பகைவர் வணங்கும் கைகளுக்குள் கொலைக் கருவி ஒளிந்திருக் கலாம். அன்னார் கண்ணீருக்குள் கொலை நோக்கம் ஒளிந்திருக்கலாம் விழிப்புணர்வு வேண்டும். சீவகனின் தம்பி நந்தட்டன் தன் தோழரில் ஒருவனாகிய பது முகனிடம், தொழுத தங்கையின் உள்ளும், துறுமுடி அகத்தும், சோர அழுத கண்ணீரினுள்ளும், அணிகலத்து அகத்தும் ஆய்ந்து பழுது கண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றாது ஒழிக, யார் கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே! சீவக சிந்தாமணிப் பாடல் ஏற்ற இலக்கிய மேற்கோளாகும். கையிலும், முடியிலும், கண்ணீரிலும் அணிகலன்களின் உள்ளும், கொல்லும் கொலைக் கருவி மறைந்திருக்கும் ஆதலால், அக்குற்றத்தை ஆராய்ந்து அக்கூடா நட்புடை யோரைத் தம்மிடத்திலின்று நீக்குக! மற்றும் எவரிடத்தும் தெளிதலைப் பற்றா தொழிக! அன்றித் தெளிதல் உற்றார் விளிதல் உற்றார் என்று எண்ணுக எனக் கூறுவதை ஒப்பிட்டு நோக்குக! ------------- போலி நண்பரைக் கையாள வேண்டிய உத்தியை எடுத்து மொழியும் குறளே! மிகச் செய்து தம்எள்ளு வாரை நகச் செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று (குறள். 829) பகைமை தோன்றாதபடி, மிகுதியாக நட்பே வெளியே தோன்றும் படி செய்து கொண்டு உள்ளத்தால் தம்மை இகழும் தன்மை வாய்ந்த பகைவரைத் தாமும் மகிழ்ச்சிப் படுத்தும் வண்ணம் நடந்து கொள்ளவும் வேண்டும். அவரிடம் நட்புக் கொள்வதில் எச்சரிக்கை உணர்வும் வேண்டும். அத்துடன் அவர்தம் நட்பு தானே அழிந்து போகும்படி நெருங்கிப் பழகாமலும் இருத்தல் வேண்டும். வெளிப்பட நட்பை மிகச் செய்து உள்ளே நம்மை இகழ்பவரை, நாமும் வெளிப்பட அவர் மகிழுமாறு நடந்து கொண்டு, உள்ளத்து நட்பை அழிந்து போகும் படி செய்தலே முறைமை. சுக்கிரீவனுக்கு இராமன் உணர்த்தும் நல்லரசு பற்றிய விரிவுரையில். புகை உடைத்து என்னின், உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் மிகை உடைத்து உலகம்; நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே பகையுடைச் சிந்தையார்க்கும், பயன் உறு பண்பின் தீரா நகையுடை முகத்தை ஆகி, இன்னுரை நல்கு, நாவால் என்னும் கம்பன் பாட்டு சிறந்த மேற்கோளாகும். ------------- அரசியலில் யாரும் நிரந்தரப் பகைவரும் அல்லர்; யாரும் நிரந்தர நண்பரும் அல்லர் என்பர். நெடுநாள் நட்புப் பூண்டு பழகிவந்த நண்பர் ஏதாவது ஒரு காரணத்தால் திடீரெனப் பகைவராக மாறி விடுவதும் உண்டு. வழிவழியாகப் பகைமை பாராட்டி வந்த குடும்பம். ஏதாவது ஒரு நிகழ்வால் மனம் மாற்றம் அடைந்து, பகைமையை மறந்து நட்புக் கொள்ளலாம். பிறர் வியக்குமாறு நண்பர்கள் பகைவர்கள் ஆவதும், பகைவர்கள் நண்பர்கள் ஆவதும் நாட்டில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். இம்மாற்றம் உளப்பூர்வமான மாற்றமாக இருந்தால் கேடில்லை. நெடுநாள் பகைவராகச் செயல்பட்டவர். பகைமையை நீக்கி, நாம் இனி நண்பர்களாக இருக்க வேண்டும். எனக் கூறிக் கொண்டு அழையா விருந்தாளியாய் வந்து சேர்க்கிறார். உடனே அவருக்கு நல்வரவு கூறி, நண்பராக ஏற்றுக் கொண்டு முழுநிறைவுடனும் முழுநம்பிக்கையுடனும் உயர்ந்த மதிப்பு வழங்கி ஏற்றுக் கொள்ளலாமா? ஏற்றுக் கொண்டால் அவரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என வள்ளுவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம் எனச் சென்ற போது வள்ளுவர் வழங்கிய வாய்மொழியே! பகை நட்பாம் காலம் வருங்கால், முகநட் டகநட்பொரீஇ விடல் (குறள். 630) என்னும் குறளாகும். பகையாக இருந்தவர் நண்பராகப் பழகும் காலம் வந்தால் அவரிடம் முகத்தால் நட்புக் காட்டிப் பழகுக! உள்ளத்தில் உயரிய இடம் தராது தவிர்த்து விடுதல் நல்லது ஆகும். உள்ளத்து ஒத்த உணர்வால் கூடும் நட்பே கூடும் நட்பு கூடா நட்பு கொல்லத் துணைபுரியும் நல்லினத்துடன் நல்லினம் இணைவதே நல்ல நட்பு உள்ளத்தால் ஒன்று பட்டவர் நட்பே நிலைக்கும் அகத்தும் புறத்தும் ஒப்ப இயங்குவதே உயர் நட்பு நூற் கல்வியால் அறிவு வளரும் மாண்பு உடையவரே நன்மனத்தர் ஆவர் நட்புக்கு வேண்டியது நூற்கல்வியன்று நல்ல மனமே நல்ல நட்பை உண்டாக்கும் மாசற்ற மனத்தவரே நம்பத்தக்க மனிதர் மனச் செம்மை இல்லார் சொல்லை நம்பாதே உள்ளத்தால் பொருந்தார் சொல் விரைவில் உணரப்படும் நண்பர் போல் நல்லது சொன்னாலும் பகைவர் சொல்லை உணரமுடியும் பகைவர் வணக்கம் பகைமை வணக்கமே பகைவரின் வில்லும் சொல்லும் தீங்கு பயக்கும் பகைவர் வணங்கும் கையில் கொலைக் கருவி இருக்கலாம் பகைவர் கண்ணீருக்குள் கொலை நோக்கம் இருக்கலாம் மகிழப் பேசுவாருடன் மகிழப் பேசிப் பழகுக மனத்தால் இகழ்பவர் நட்பை ஒழித்துவிடு பகைவன் நண்பன் ஆனாலும் அவன் பழைய பகைவன் என்பதை மறந்து விடாதே நண்பன் ஆகும் பகைவனுக்கு முகத்தைக் காட்டு நண்பன் ஆகும் பகைவனுக்கு அகத்தில் இடம் தராதே ------------- 84. பேதைமை அறமும் பொருளும் முறையாக ஆய்ந்து கண்டவர் இடத்துப் பிறன் உரிமையளாம் மனைவியை விரும்பிச் சேரும் பேதைமை இல்லை. (குறள்.141) அறத்தின் கடையவராக நின்றவர் எவருள்ளும் அயலான் மனைவியை விரும்பி அவர் வீட்டு வாயிலில் போய் நிற்பவரைப் போலும் பேதையார் எவரும் இல்லை. (குறள்.142) என்பன பிறனில் விழையாமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துகள். பிறப்பு என்று சொல்லப்படும் பேதைமை விலகிப் போவதற்குச் சிறப்பு என்று சொல்லப்படும் மெய்ப் பொருளைக் கண்டு கொள்வதே அறிவுடைமையாகும் என்பது மெய்யுணர்தல் அதிகாரத்தில் காட்டும் பேதைமை ஆகும். (குறள்.358) ஒன்றை இழக்கச் செய்வதற்குரிய ஊழ் உண்டாகிய போது அது பேதைமையில் ஆழ்த்தும். அதனைப் பெருகச் செய்தற்குரிய ஊழ் உண்டாகிய போது அறிவை விரிவடையச் செய்யும் என்பது ஊழ் அதிகாரத் தில் காட்டும் பேதைமை ஆகும். (குறள்.372) நுணுகி ஆராய்ந்து பெருக்கிக் கொண்ட கேள்விச் செல்வத்தை உடையவர். எச்செய்தியையும் பிழையாக உணர்ந்து பேதைமைத் தனமாகச் சொல்லார். எனக் கேள்வி அதிகாரத்தில் சொல்கிறார். (குறள்.417) அறிவுடைமை அதிகாரத்தில் அஞ்ச வேண்டுவன வற்றுக்கு அஞ்சாது இருத்தல் பேதைமை ஆகும். அஞ்ச வேண்டுவனவற்றுக்கு அஞ்சுதல் அறிவுடையார் செயலாகும் என அறிவிக்கிறார். (குறள்.428) தமக்கு விருப்பமானவர் என்பதற்காக அறிய வேண்டிய வற்றை அறியாதவரை ஒரு செயலுக்குத் தேர்ந்து கொள்ளும் பேதைமை. மற்றை எல்லாப் பேதைமைகளையும் ஒருங்கே தந்துவிடும். எனத் தெரிந்து தெளிதலில் தெளிவிக்கிறார். (குறள்.507) அழிவு செய்யும் சோம்பலைத் தன்னிடத்துக் கொண்டு செயலற்றுக் கிடக்கும் பேதை பிறந்த குடி அவன் அழியும் முன்னரே அழியும் என்பது மடியின்மை அதிகாரத்தில் தெரிவிக்கும் கருத்தாகும். (குறள்.603) அறிவாளர் நட்பு, வளர்பிறை போல் படிப்படியே வளர்ந்து முழுமையாகும் தன்மையது ஆகும். ஆனால், பேதையார் நட்பு, முழுமதி படிப்படியே தேய்ந்து இல்லாமல் போகும் தன்மையது ஆகும். (குறள்.782) இஃது நட்பதிகாரத்தில் அறியப்படும் செய்தியாகும். xUtD¡F nkyhd tUthŒ v‹W brhšy¥ gLtJ, ngijah® e£ig mwnt Éy¡» ÉLjš MF«” vd e£ghuhŒjš mâfhu¤âš brhš»wh®. (FwŸ.797) பழைமை அதிகாரத்தில் வருந்தத் தக்கவற்றை நண்பர் ஒருகால் செய்தார் ஆயினும், அதனைப் பேதைமையால் செய்தது என்றோ மிகுந்த உரிமையால் செய்தது என்றோ உணர்தல் வேண்டும் என உணர்த்துகிறார். (குறள்.805) பெண் வழிச் சேறல் அதிகாரத்தில் மதிக்கத்தக்க நெஞ்ச உறுதி உடையவர்க்கு எக்காலத்தும் பெண் வழிச் செல்லுகின்ற பேதைமை இல்லை. (குறள்.910) என உறுதிப் படுத்துகிறார். இறுகத் தழுவிய கைகளைச் சற்றே தளர்த்தி விட்ட அளவில் வளையலை அணிந்த பேதையாகிய துணைவியின் நெற்றியின் நிறம் மாறிவிட்டது. என உறுப்பு நலம் அழிதலில் பேதை வருகிறாள். (குறள்.238) அதே உறுப்பு நலன் அழிதல் அதிகாரத்தில், தழுவுதலின் இடை வெளியில் குளிர்ந்த காற்றுப் புகுதலால் துணைவியாகிய பேதையின் பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் மாறி விட்டன. எனக் காட்டுகிறார். என் நெஞ்சே! நீ வாழ்வாயாக! காதலராகிய அவர் எம்மோடும் காதல் இல்லாதவராக இருக்க நீ அவரைக் குறித்து எண்ணி வருந்திக் கொண்டிருப்பது பேதைமை ஆகும் எனவும். (குறள்.1242) என் நெஞ்சே! பிரிந்து சென்ற துணைவர் இரக்கம் கொண்டு வந்து உதவுவார் என்று வருந்திக் கொண்டு, மீண்டும் அவர் பின்னே செல்கின்றாய்! நீ எத்தகைய பேதை என உரைத்ததை நெஞ்சொடு கிளத்தல் என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளதையும் அறிய முடிகிறது. (குறள்.1248) கண்ணில் நிரம்பித் தோன்றும் பேரழகமைந்த மூங்கில் போன்ற அழகிய தோள்களை உடைய பேதைக்குப் பெண்மைக் குணம் பிறரினும் மிகுதியானதேயாம் (குறள்.1272) எனக் குறிப்பறிவுத்தலில் கண்டு உரைப்பதையும் காண நேர்கிறது. இவை அனைத்தும் பேதைமை அதிகாரத்திற்கு வெளியே முன்னும் பின்னும் திருவள்ளுவர் உணர வைத்த பேதைமைகள் ஆகும். காமத்துப் பாலில் வரும் பேதைமை காதல் உள்ளம் கொண்ட இளமை வாய்ந்த துணைவியைக் குறிக்கும் உரிமைச் சொல்லாகும், அறத்துப் பாலிலும் பொருட்பாலிலும் இடம் பெறும் பேதைமை வெறுக்கவும் விலக்கவும் வேண்டிய கல்லாமை, அறியாமை, புரியாமை, விளங்காமை, தெரியாமை, தெளியாமை, சிந்தியாமை உணராமை, நன்னெறி நில்லாமை, உழைக்காமை மெய்ப்பொருள் காணாமை ஆகியவற்றை எல்லாம் உணர்த்தும் பொதுச் சொல்லாகத் திருவள்ளுவர் பயன் படுத்தியது போல் தெரிகிறது. பிறனில் விழையாமை, மெய்யுணர்தல், ஊழ், கேள்வி, அறிவுடைமை, தெரிந்து தெளிதல், மடி இன்மை, நட்பு, நட்பாராய்தல், பழைமை, பெண் வழிச் சேறல் ஆகிய அதிகாரங்களிலும் பேதைமை சுட்டப் படுவதோடு அமையாது அதற்கென தனி அதிகாரமும் அமைத்துள்ளமை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. வாய்மை எனப்படுவதி யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் (குறள். 291) என வாய்மைக்கு இலக்கணம் கூறியவள்ளுவர் பழைமை எனப்படுவதி யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. (குறள். 801) எனப் பழமைக்கு இலக்கணம் கூறியது போல் பேதைமைக்கு இலக்கணம் கூறும் குறளே, பேதைமை என்பதொன்றி யாதெனின்ஏதங்கொண் டூதியம் போக விடல் (குறள். 831) நல்ல வருவாய் தரும் அரசுப் பணியைவிட்டு, ஊதியம் பெற வாய்ப்பே இல்லாத தொழிலைச் கைக்கொண்டவர்களும் உலகில் உள்ளனர்; ஆக்கத் தரும் செயலை விட்டு கேடுதரும் செயலை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்; நன்மை தருவனவற்றைச் செய்யாது விட்டு, தீமை தருவனவற்றை விடாது செய்பவர்களையும் உலகில் காண்கிறோம்; புகழ்தரும் பணியையும், வழியையும் விட்டு விட்டு, பழிதரும் பணியை முறையற்ற வழிகளில் செய்பவர்களையும் பார்க்கிறோம். பெருமைக்குரிய செயல்களை விட்டு, சிறுமைக்குரிய செயல்களைச் செய்பவர்களும் இருக்கிறார்கள். செய்ய வேண்டியதைச் செய்யாமல்; வேண்டாததைச் செய்பவர்களும் இல்லாமல் இல்லை; நலந்தரும் உணவை உட்கொள்ளாது கேடு தரும் உணவை உண்பவர் களும் உண்டு; நெறிப்படுத்தும் நல்ல நண்பர்களை விலக்கிவிட்டு நல்லியல்பு இல்லாதாரை நண்பர்கள் ஆக்கிக் கொள்பவர் களையும் காண்கிறோம். நல்ல நூல்களைப் படிப்பதை விட்டு தீய நூல்களைப் படிப்பவர்களும் உலகில் உள்ளனர். நல்ல நிகழ்ச்சி களைக் காட்சிகளைப் பார்ப்பதை விட்டு தரமற்ற நிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் பார்ப்பவர்களும் இல்லாமல் இல்லை. இத்தகைய அறம் பிறழ்ந்த தன்மைக்குப் பெயர் தான் பேதைமை ஆகும். கேட்டை விலக்கி நல்லதைக் கைக்கொள்வது அறிவுடைமை; நல்லதை விலக்கி அல்லதைக் கைக் கொள்வதற்குப் பெயர்தான் பேதைமை ஆகும். பேதைமை என்னும் வித்தில் பிறந்துபின் வினைகள் என்னும் வேதனை மரங்கள் நாறி, வேட்கை வேர் வீழ்த்து, முற்றிக் காதலும் களிப்பும் என்னும் கவடுவிட்டு அவலம் பூத்து மாதுயர் இடும்பை காய்த்து, மரணமே கனிந்து நிற்கும் என்னும் சீவகசிந்தாமணிப் பாடலும் பேதைமை என்பது யாதுஎன வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோடு உண்டுஎனக் கேட்டது தெளிதல் என்னும் மணிமேகலைப்பாடல் அடிகளும் பேய்மை ஆக்கும் இப்பேதைமை கள்வனோடு உடனாய்க் காமுற்றாம் அதன் பயத்தினில் காமனைக் கடந்து நாமரூஉம் புகழ்கெடுப்பதோர் நன்னெறிக் கண்ணும் வாமன் வாய்மொழி மறந்திட்டு மறந்தொழிகின்றோம் என்னும் வீர சோழிய உரையும் ஏற்ற விளக்க மொழிகளாய் விளங்குவதைக் காணலாம். ------------- தமக்கு விருப்பமானவர் என்பதற்காக அறிய வேண்டிய வற்றை அறியாதவரை ஒரு செயலுக்குத் தேர்ந்தெடுக்கும் பேதைமை, மற்றை எல்லாப் பேதைமைகளையும் ஒருங்கே தந்து விடும் என்னும் கருத்தைக் காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும் (குறள். 507) எனத் தெரிந்து தெளிதலில் தெளிவுபடுத்திய வள்ளுவர் பேதைமைகளில் பெரிய பேதைமை எது? என வினா எழுப்பி விடைதருவது போல் அமைந்த குறளே. பேதைமை யுள்எல்லாம் பேதைமை; காதன்மை கையல்ல தன்கண் செயல் (குறள். 832) ஒருவர் பெற வேண்டிய சிறப்புகள் அனைத்தையும் தருவது ஒழுக்கம். ஒழுக்கமே நற்றுணை ஆகும். ஒழுக்கம் உடைமையே உயர்குடித் தன்மை ஆகும். ஒழுக்கத்தைப் பின்பற்றி நடந்தால் மேன்மை அடையலாம் நன்மை என்னும் விளைவு பெறுவதற்காக விதைக்கப்படும் விதையே நல்லொழுக்கம் ஆகும். அத்தகைய ஒழுக்கத்தின் மீது பற்றுக் கொண்டு ஒழுகிவருவது அறிவுடைமை ஆகும். ஒழுக்கம் தவறி நடப்போர் இழிகுடிப் பிறப்பினராகக் கருதப்படுவர். ஒழுக்கம் இன்றி உயர்வு பெறுதல் இயலாது. ஒழுக்கக் குறை பழியையும் துயரையுமே உண்டாக்கும். தீய ஒழுக்கம் அப்பொழுதை அன்றி எப்பொழுதும் துன்பத்தையே தரும். ஒழுக்கமின்மை தகுதியற்ற சொற் களைப் பேசவைக்கும். எனத் தெரிந்தும் ஒருவன் ஒழுக்கமற்ற தன்மை களின் மீதே மனத்தைச் செலுத்தி அதில் அழுத்தமான பற்றும் கொண்டு செயல் பட்டு வருகிறான் என்றால் அதுவே உலகில் நிகழும் பேதைமைச் செயல்களில் எல்லாம் பெரிய பேதைமை ஆகும். இது அறியாமல் நேர்ந்த ஒழுக்கக்கேடு அன்று. அறிந்து தெளிந்து முழுஈடுபாட்டுடன் செய்தே ஆகவேண்டும் எனக் கருதிச் செயல்படும் ஒழுக்கம் இன்மையே பெரும் பேதைமை ஆகும். ஒழுக்க மற்ற தன்மைகளின் மேல் மிகுந்த விருப்பம் காட்டும் செயலே பேதைமைகளில் எல்லாம் பெரும் பேதைமை என்கிறார் பேதைமை அற்ற உலகு படைக்க எண்ணும் பெருந்தக்கார். ------------- உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் (குறள். 394) என்பது கல்வி அதிகாரத்தில் புலவர் தொழில் பற்றிப் பாடிய பாடல். அஞ்சுவ தஞ்சாமை பேதைமை; அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில் (குறள். 428) என்பது அறிவுடைமை அதிகாரத்தில் காணும் அறிவார் தொழில் உணர்த்தும் குறள். குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் (குறள். 549) எனும் குறள் செங்கோன்மை அதிகாரத்தில் வரும் வேந்தன் தொழில் குறித்துக் காட்டும். எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் (குறள். 582) இஃது, ஒற்றாடல் அதிகாரத்தில் இடம் பெற்று வேந்தன் தொழில் உணர்த்தும் பிறிதொருகுறள். அது போல் பேதை தொழில் சொல்லும் குறளே, நாணாமை, நாடாமை, நாரின்மை, யாதொன்றும் பேணாமை பேதை தொழில் (குறள். 833) நல்லதையே செய்ய வேண்டும்; அல்லது செய்வதற்கு நாணவேண்டும்; நாம் உழைத்துத் தேடவேண்டிய பொருள்களைத் தேடிக் கொள்ள வேண்டும்; எதனையும் ஆராய்ந்தே செய்ய முற்படுதல் வேண்டும்; அன்பை உயிராய் உணர்வாய்க் கொண்டும் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். போற்றத் தக்க பண்புகளையும், பொற்றத்தக்க செயல்களையும், போற்றத் தக்க உறவுகளையும் போற்றி வாழவேண்டும். அதுவே மேன்மக்களின் செயல் முறையாகும். நாணத் தக்கவற்றுக்கு நாணாமையும், தேட வேண்டிய வற்றைத் தேடாமையும், அன்பு காட்டத் தக்கவரிடத்தும் அன்பு காட்டாமையும், போற்றத்தக்க எவற்றையும் போற்றாமையும் பேதையின் செயலாகும். நாணுக! நாடுக! பேணுக! அன்புறுக! பேதைமை ஒழியும்; மேதைமை வளரும்! ------------- ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்காப் பேதையின் பேதையார் இல் (குறள். 834) கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்ற கல்வியாளனாக விளங்கும் ஒருவன், தான் கற்ற நூல்களைத் தன்னுடைய நுண்மாண் நுழைபுலத்தால் ஆராய்ந்து அதன் உட்பொருட் களையும் நன்கு உணர்த்த ஆராய்ச்சியாளனாகவும் சிறந்து விளங்குகிறான். அத்துடன் தான் கற்ற நூல்களை எல்லாத் தரத்தினரும் விளங்கிக் கொள்ளுமாறு சுவைபட விரித்துரைக்கும் வல்லமையும் பெற்ற நாவலனாகவும் விளங்குகிறான் அவனை ஊரும் உலகமும் கல்வியில் பெரியவன் என்றும், இணையற்ற ஆராய்ச்சியாளன் என்றும், நானிலம் போற்றும் நாவலன் என்றும் போற்றிப் பாராட்டுகிறது. ஆனால், திருவள்ளுவர் அவனைப் போன்ற பேதை ஒருவனை நான் இதுவரைக் கண்டதில்லை. எத்தனையோ பேதைகளைக் கண்டிருக் கின்றேன். அவர்கள் அனைவரிலும் இவனே மிகக் கீழான பேதையாக எனக்குப் புலப்படுகிறது என்றார். நாங்களெல்லாம் மதித்துப் போற்றும் ஒருவரை, எல்லாம் உணர்ந்த நீங்கள் அப்படிக் கூறலாமா? என உணர்வு வயப்பட்டு வினவினர். திருவள்ளுவர் அவர்களிடம் கல்வி அதிகார முதற்குறளைக் கூறுமாறு வேண்டினார். அவர்கள், கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (குறள். 391) எனத் தெளிவாகக் கூறினர். சரியாகச் சொன்ன அவர்களை வாழ்த்தி விட்டு, நீங்கள் பாராட்டும் ஆள் கற்ற நூல்கள் காட்டும், நன்னெறியைப் பின்பற்றி வாழ்பவரா? அஃகி அகன்ற அறிவென்னாம், யார் மாட்டும் வெஃகி வெறிய செயின் (குறள். 179 ) என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாய் தானே பிறர் பொருள் பறிக்கும் வெறிச் செயல் புரிகிறார். அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய் தந் நோய் போல் போற்றாக் கடை (குறள். 315) என்பதற்கு ஏற்ப பிறர்க்குத் துன்பம் செய்து வாழ்கிறாரே அல்லாமல் பிறர் துன்புறுவது பற்றிக் கவலைப்படாது வாழ்ந்து வருகிறார். அரம் போலும் கூர்மைய ரேனும், மரம் போல்வர் மக்கட் பண்பில்லா தவர் (குறள். 997) எனக் குறள் காட்டும் மக்கட் பண்பு இல்லாதவராய் இயங்குகிறார். வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான் அறி குற்றப் படின் (குறள். 272) என அறிந்தே செய்யும் குற்றவாளியாய் வாழ்ந்து வருகிறார். மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (குறள். 134) அல்லவா? ஆகவே தான் நன்றாகக் கற்றும் தெளிவாக ஆய்ந்து உணர்ந்தும் பிறர்க்கு எடுத்து மொழிந்தும் அவ்வழியில் அடங்கி நடக்காத வரை எப்படி அழைக்கச் சொல்கிறீர்கள்? என்ற வள்ளுவரின் வினாவிற்கு அவர்களே, வள்ளுவப் பெருந்தகையே? தாங்கள் அவர்களைப் பேதையின் பேதையார் எனச் சுட்டியது ஏற்றதே என ஏற்றுக் கொண்டனர். ------------- ஒருமைச் செயலாற்றும் பேதை, எழுமையும் தான்புக்க அழுந்தும் அளறு (குறள். 835) ஒரு செயலைச் செய்ய முற்படுங்கால் பொருள், கருவி, காலம், செயல், இடம் என்னும் ஐந்தின் வாய்ப்பையும் எத்தகைய குழப்பமும் இல்லாத வகையில் தெளிவாக ஆராய்ந்து செய்ய வேண்டும். அதனோடு எடுத்த செயலை நிறை வேற்றும் வகை, செயலாற்றும் போது இடையே உண்டாகும் தடை, அதனை முடித்த போது உண்டாகும் பெரும்பயன் என்பவற்றையும் முன்னரே எண்ணித் தெளிவு பெற்றே செயலில் இறங்க வேண்டும். அத்துடன் ஒரு செயலை வெற்றியாகச் செய்து முடிக்க விரும்புபவன் செய்ய வேண்டும் முறை, அச்செயலை முன்னரே செய்து அதன் உள் நுட்பங்களையெல்லாம் அறிந்த ஒருவனின் கருத்தை முதற்கண் அறிந்து கொள்ள வேண்டும். தக்க முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமலும், தனக்கு அச்செயல் பற்றிய அறிவும் இல்லை; வேறு யாரிடமும் கலந்து கொள்ளாமல் தான் நினைத்த உடனே அச்செயலைச் செய்யச் தொடங்குகிறான் என்றால் அவன் தன் வாழ்நாள் முழுமையும் வெளியேற முடியாத புதை சேற்றுக்குள் தானே புகுந்து வெளியேறவும் முடியாமலும், உடனே சாவும் வராமலும் உள்ளேயே நாளும் வேதனையால் துடித்துக் கொண்டிருப் பதற்கு ஒப்பாகும். ஆழம் தெரியாமல் ஆற்றுக்குள் காலை விட்டு முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்ட கதையாகிவிடும். தெரியாத செயலில் எதனையும் எண்ணிப் பார்க்காமல் தான் தோன்றித் தனமாக ஒரு பேதை எடுக்கும் முடிவு அவன் தனக்குத் தானே, படிக்கட்டும் இல்லாத, ஆழமான, புதைசேறு நிரம்பிய பாழுங் கிணற்றுக்குள் வீழ்ந்து கொடுந்துன்பத்திற்கு ஆட்படும் தன்மை போன்றது ஆகும். பேதை பேதைமையால் செய்யும் செயலே அவன் வாழ்க்கையை வேதனைக்களம் ஆக்கிவிடும். ------------- பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். (குறள். 836) நன்கு ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்யும் செயல்கள் அனைத்தும் எண்ணிய படியே நிறைவேறிவிடும் என்று திட்டமாகச் சொல்ல முடியாது. அப்படி இருக்க, செயலாற்றும் வகை அறியாத பேதை செய்ய முற்படும் செயல் எப்படி நிறைவேறும்? நிறை வேற வாய்ப்பு இல்லை. செயல் நிறை வேறாமல் போனதற்குத் தன்னுடைய அறியாமையே காரணம் என்பதை யும் உணர்ந்து பார்க்கும் அறிவும் இன்றி, கற்பனையாக இன்னார் இன்னாரால்தான் தனக்குத் தோல்வி ஏற்பட்டு விட்டது என அன்னார் மீதெல்லாம் குற்றம் சாட்டிப் பழித்துரைப்பர். ஆடத் தெரியாத நடிகை தனக்கு ஆடத் தெரியாது என்பதை ஒப்புக் கொளள்மல், இந்த கோணல் தெருவில் எப்படி ஆடமுடியும் எனக் கூறியது போல் வேண்டாத காரணம் கூறுவரே அல்லாமல் தன் அறியாமையை உணரவும் மாட்டார் ஒப்புக் கொள்ளவும் மாட்டார். இக்குறட்பாவில் இடம் பெற்றுள்ள கையறியாப் பேதை என்னும் தொடருக்கு ஒழுக்கம் அறியாப் பேதை பயன் அறியாப் பேதை எனப் பொருள் கொள்வதை விட செயலாற்றும் வகை அறியாத அறிவிலி எனப் பொருள் கொள்ளும் அறிஞர்களின் அணுகுமுறையே ஏற்புடையதாகும். ஏனெனில் பொய்படுவது வினை ஆகலான் செயலாற்றும் முறைமை அறியாதான் மேற்கொள்ளும் வினை பொய்படும்; அதற்கு அவன் நினைத்தவர் களை எல்லாம் பழிப்பான். பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் எனப் பேதையின் சொல்லுக்கு வந்த பழமொழியைச் செயலுக்கு எனவும் இணைத்து ஒப்பு நோக்குக! ------------- ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர், பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை (குறள். 837) என்னும் குறளைக் காணும் போது நினைவிற்கு வரும் குறள். சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் (குறள். 524) என்பதாகும். இஃது பண்பும் பயனும் உடையோர் வாழ்வியல் முறையாகும். பேதையர் கவைக்கு உதவார்; பேதையர் முறையே உழைக்கவும் அறியார்; செல்வம் ஈட்டும் வழியும் வகையும் அறியார். புதையல் கிடைத்தது போல், பரிசுச் சீட்டு விழுந்தது போல் ஏதோ ஒரு வகையில் பேதைக்குச் செல்வம் வந்து சேர்ந்திருக்கிறது. சேர்ந்த செல்வம் பேரளவுச் செல்வமாகும். அவனோ மனைவி, மக்கள், பெற்றோர் உற்றார் உறவினர் யார் மீதும் உள்ளார்ந்த அன்பு இல்லாதவன், ஆகவே யாரோ டெல்லாம் ஒட்டும் உறவும் இருக்க வேண்டுமோ அவர்களிடம் எல்லாம் இல்லை. இதனைத் தெரிந்து கொண்ட நல்லியல்பு இல்லாத அயலார் அவரை அணுகி நெருங்கிப் பழகி, அவர் செல்வத்தைப் பலவழிகளிலும் பயன்படுத்திக் கொண்டு வளவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் குடும்பத்தினரோ உற்றார் உறவினர்களோ யாரும் அவரை நெருங்குவதும் இல்லை. அவர் நெருங்க விடுவதும் இல்லை. இப்படிப்பட்ட பேதை ஒருவரைத் திருவள்ளுவர் கண்டு உளம் வருந்திப் பாடிய பாடல் இஃதாகும். தாய், தெருத் தெருவாய் அலைந்து பிச்சை எடுத்துப் பிழைக் கிறாள். மைந்தன் மதுரைச் சித்திரைத் திருவிழாவில் அன்னதானம் வழங்குகிறானாம். பேதையர் பால் வந்த பெருஞ்செல்வம் தக்கார்க்குப் பயன்படாது. தகவிலார் பயன்படுத்திக் கொள்வர். பொன்னின் நிறத்தை உடைய உயர்ந்த செந்நெல் என்னும் பயிர் மேல் மூடிய தாளுடன் உள்ளிருக்கும் கருவும் வாட, மின்னல் மிளிரும் மேகம் கடலுள்ளும் நீர் சொரிந்து பெய்யும். அறியாமை உடைய புன்மக்கள் சிறந்த செல்வத்தை அடைந்தால் அவர் கொடைத்திறமும் அது போன்ற இயல்பினதாகும் என்னும் கருத்தைப் பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள் வாட பொன்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும் வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால் வண்மையும் அன்ன தகைத்து என்னும் நாலடியார் பாடலும் ஒப்புநோக்கத் தக்கதாகும். பேதை கையில் எந்தப் பொருள் அகப்பட்டாலும் நல்லது செய்யப் பயன்படாது. ------------- மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின் (குறள். 838) திருவள்ளுவர் முன்னையக் குறளில் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை என உரைத்தமையால் பொருட் செல்வத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். இங்கோ பேதைதன் கையொன்று உடைமை பெறின் எனப் பொதுவாக உடைமை எனச் சுட்டியுள்ளதால் எந்த நல்ல பொருளை உடைமையாகப் பெற்றாலும் அவன் தகுதியற்ற வனாகவே நடந்துகொள்வான். பேதைககுப் பொருளும் கிடைக்குமாயின் பைத்தியம் பிடித்தவன்கள் குடித்த நிலை போல் ஆவான். குரங்குகட்கு மிளகுத்தூள் கலந்த உணவையும் வைத்துப் பக்கத்தில் குச்சிகளையும் போட்டு வைத்தால் என்ன நடக்கும். அது போலவே இதனையும் கருதிக் கொள்ளலாம். கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களில் சிறந்த மடவோர் உண்டோ? என்ற மணிமேகலை அடிகளும் நல்லதொரு விளக்கமாகும். விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும் வருந்தும் பசிகளையார் வம்பர்க்கு உதவல் இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ஆற்றக் கரும்பனை அன்ன துடைத்து. என்னும் பழமொழிப்பாடற் கருத்தும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். பேதையர்பால் வந்த செல்வம் உறவினர் பசியைப் போக்காது ஆனால் அயலாரை வளவாழ்வு வாழ வைக்கும். மையல் ஒருவன் களித்தற்றால், பேதைதன் கையொன் றுடைமை பெறின். (குறள். 838) இயல்பிலேயே நன்று எது? தீது எது? எனப் பகுத்து உணர இயலாது தவறுகளையே செய்யத்தக்க பேதை கையில் பெருஞ் செல்வமும் சிக்கிவிடுமானால் அவன் எப்படி இயங்குவான்? பித்துப் பிடித்துப் புத்தி தடுமாறி அலைகிற ஒருவனுக்கு அவன் விரும்பும் அளவு கள்ளையும் குடிக்கும் வாய்ப்புக் கிட்டினால் எப்படித் தலைகால் தெரியாமல், கல் மண் தெரியாமல் கட்டி இருக்கும் உடை நெகிழ்வதையும் அறியாமல் தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாமல் தானே உலகத்தில் பெரிய மேதை என்றும் பிதற்றிக் கொண்டு ஆட்டம் போடுவானோ அத்தன்மை யிடையுவனாய் இயங்குவான். ஏர்பெறும் இருநிதிச் செருக்கை எய்திடில் தேர் செவி உடையரும் செவிடர் ஆகுவர் ஓர் தரும் உரைவலோர் ஊமையர் ஆகுவர் கூர்விழி உடையரும் குருடர் ஆவரே எனக் காசி கண்டம் கூறுவதையும் இணைத்து எண்ணுக? வாலிபம் பெருநிலக் கிழமை மாண்பொருள் மேல் அறி விலாமையில் ஒன்று மேவினும் சீலமும் குடிமையும் சிதையுமால்; இவை நாலும் உள்ளவர் செயல் நவில வேண்டுமோ? என்னும் செல்வந்திப் புராண விளக்கத்தையும் ஒப்பு நோக்குக! அறியாமை யோடு இளமை கூடுவதாம் ஆங்கே செறியப் படுவதாம் செல்வம் - சிறிய பிறை பெற்ற வாணுதலாய் தானே ஆடும் பேய் பறைபெற்றால் ஆடாதோ பாய்ந்து என்னும் பழமொழி ஏற்ற மேற்கோளாகும். பேதையர் செல்வம் பெற்றால் பெருங்களி கொண்டு நன்று தீது என ஒன்றுந் தேரார்; தீமையே கன்றி நிற்பர்: பாதகம் அனைத்தும் நாடிப் பழிமிகச் செய்வார்; நல்லோர் ஓதினும் உணரார் நீடு ஒழிவையே உவந்து மாள்வார் என்னும் செகவீர பாண்டியனாரின் பாடலும் நல்ல விளக்கமாய் அமைந்துள்ளது. ------------- என்னைப் பிரிந்து செல்லும் திட்டம் இல்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். அதனை விடுத்துப் பிரிந்து சென்று விரைவில் வந்து விடுவேன் என்பதைச் சொல்வதானால், அப்பிரிவைத் தாங்கி உயிரோடு இருப்பார்க்கே சொல்க எனத் திருவள்ளுவத் தலைவி கூறுகிறாள் என்றால் அவர்கள் நட்பு வளர்பிறை போல் நாளும் வளர்ந்து முழு நிலவாகிய நட்பு, உடம்பொடு உயிரிடை என்னம றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு (குறள். 1122) ஆகவே, வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை; சாதல் அதற்கன்னள் நீங்கு மிடத்து (குறள். 1124) எனச் சொல்ல நேர்ந்தது. நல்லவர் நட்பில் ஏற்படும் பிரிவு பெருந்துன்பம் விளைவிக்கும். பிரிவின்கண் துன்பம் விளைவிக்காத நட்பும் உண்டோ? உண்டு! அதுவே பேதையார் பால் கொண்ட நட்பாகும். பேதையார் நட்பு முழுமதி படிப்படியே தேய்ந்து இல்லாமல் போவது போன்றது எனக் கூறிய திருவள்ளுவர், ஒருவனுக்கு மேலான வருவாய் என்று சொல்லப்படுவது பேதையார் பால் கொண்ட நட்பை அறவே விலக்கி விடுதல் ஆகும் நட்பாராய்தலில் கூறிய கருத்தையும் மறந்த விடல் ஆகாத. தீ நட்பு என்னும் அதிகாரத்தில் பருகுவார் போலினும் பண்பிலாப் கேண்மை பெருகலின் குன்றல் இனிது (குறள். 811) எனக் கூறியுள்ளதை எண்ணிப்பார்க்கும் போது பண்பிலாப் பேதையர் நட்பு தொடர்வது துன்பத்தையே தரும் எனவும் பேதையார் நட்புக் குறையக் குறைய இன்பம் என்றால் அத்தகைய பேதையர் நட்பு விட்டுப் போவது நல்லது தானே. ஆகவேதான் திருவள்ளுவர் பெரிதினிது பேதையார் கேண்மை, பிரிவின் கண் பீழை தருவது ஒன்று இல் (குறள். 839) என உரைக்கலானார். நல்லோர் நட்பு, பிரிவு நேர்ந்தால் பெருந்துன்பம் தரும். ஆனால் பேதையார் பால் ஏற்பட்ட நட்பில் பிரிவு நேர்ந்தால் அப்பிரிவு எத்தகைய துன்பத்தையும் தராது. துன்பம் தராத பிரிவு ஒருவகையில் நல்லது தான். பேதையர் நட்பு, நட்புக் கொள்ளும் காலத்தில் அதனால் துன்பத்தைத் துய்க்க நேர்ந்ததால், பிரிவு பேரின்பம் தருவது போல் தெரிகிறது. பெரிதினிது பேதையார் கேண்மை எனக் கூறுவது, வஞ்சகர் களை வஞ்சப்புகழ்ச்சியால் கூறிப் பழித்துரைக்கும் உத்தியாம். நட்புக் கொண்டிருந்த பேதையார் பிரிந்து சென்றால் நல்லது எனக் கருதி மகிழ்ச்சி அடைவோமாக! கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால், சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் (குறள். 840 ) பள்ளி என்றால் படுக்கை, சமையல் அறை, பள்ளிக்கூடம், திருக்கோயில், தூய்மையான இடம் என்னும் பொருள் தரும் தூய சொல். ஒரு பெருமைக்குரிய நிலையத்தில் கற்றுணர்ந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்கள் கூடி உயர்ந்த நூற்பொருளை ஆராய்ந்து கொண்டிருக்கும் பேரவையில் கல்வி அறிவோ ஒழுக்கமோ நற்பண்போ அற்ற பேதை ஒருவன் அழையா விருந்தாளியாய் உள்ளே நுழைதல் அருவருக்கத் தக்கவற்றை மிதித்த காலைக் கழுவாமல் தூய்மை போற்றப்படும் மதிப்பு மிக்க இடத்தில் வைத்ததற்கு ஒப்பாகும். பேதை சான்றோர் அவையில் புகத் தகுதியற்றவன் ஆவான். ஆன்றவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா எனக் கபிலரும் கூறுகிறார். கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறி வாளர் இடைப்புக்கு-மெல்ல இருப்பினும் நாய்இருந் தற்றே; இராஅது உரைப்பினும் நாய்குரைத் தற்று என்னும் நாலடியார் நல்லதொரு மேற்கோள் ஆகும். ஏதம் கொண்டு ஊதியம் போகவிடுவதே பேதைமை ஒழுக்கமற்ற செயலை விரும்புவதே பெரும் பேதைமை பேதையர் வேண்டாத பொருளையே விரும்புவர் பேதையர் தனக்கு உரிமையில்லாப் பொருளையே விரும்புவர் பேதையர் பழிக்கு நாணார் பேதையர் உழைத்துத் தேட வேண்டியதைத் தேடார் பேதையர் அகத்தில் அன்பிலார் பேதையர் நல்லதைப் பேணார் கற்ற வழி வாழாதவனே பெரும் பேதை கற்றும் அடங்கான் பேதை பேதைமையால் செயல் படுவோன் துன்பச் சேற்றில் அழுந்துவான் பேதையன் செய்யும் வகையறியான் வகையறியான் செயல் பொய்படும் செய்யும் முறை அறியான் குற்றவாளி ஆவான் பேதை தன்குற்றம் உணரான் பேதை பிறர்மீது பழி சுமத்துவான் பேதையின் பெருஞ்செல்வம் உற்றவரைவாட்டும் பேதையர் பெருஞ்செல்வத்தை அயலவர்துய்ப்பர் குடித்த பித்தனும் செல்வப் பேதையனும் ஒன்றே பேதையார் கேண்மை பிரிந்தால் இன்பம் பேதை புக்க சான்றோர் அவை மாசுபடும் பேதை இருந்த இடமும் விளங்காது பேதை போன இடமும் உருப்படாது பேதை கெடுவான்; கெடுப்பான் ------------- 85. புல்லறிவாண்மை அதிகாரத் தலைப்பு புல்லறிவாண்மை என அமைந்திருப்பினும், குறள் பத்தகத்தும் புல்லறிவாண்மை என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. ஆறாம் குறட்பாவில் அற்றம் மறைத்தலோ புல்லறிவு எனும் தொடர் காணப்படுவதால் புல்லறிவு பயன் படுத்தப் பட்டுள்ளதை அறிய முடிகிறது. நிலையில்லாத் தன்மை உடையவற்றை, நிலையான தன்மை உடையவை என்று மாறுபட அறியும் சிற்றறிவினராக இருத்தல் மிக இழிவாகும் என்பதைத் தெளிவுபடுத்தும் நிலையாமை அதிகாரக் குறளாகிய நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை (குறள். 331) என்பதில் புல்லறிவாண்மை என்னும் சொல்லைக் கண்டுள்ளோம். புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க, நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார். (குறள். 719) என்னும் அவை அறிதல் அதிகாரத்தில் புல்லவை என்னும் சொல் காணப்படுகிறது. இவ்வதிகாரத்தில் புல்லறிவு என்னும் சொல் நீங்கலாக அறிவின்மை. அறிவிலான், அறிவிலார், காணாதான், ஏவவும் செய்கலான், தான் தேறான், வெண்மை, கல்லாத மேற்கொண்டு ஒழுகல், உலகத்தார் உண்டேன்பது இல் என்பான் என்னும் சொற்களும் சொற்தொடர்களுமே இடம் பெற்றுள்ளன. ஆகவே, இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் அறிவின்மை யின் இழிவையும், அறிவினான் தக்கார்க்கு வழங்கான். அறிவிலான் தன்னைத் தானே கெடுத்துக் கொள்பவன், தன்னை அறிவுடைய வனாகக் கருதிப் பெருமைப்படும் அறிவிலி, கல்லாதவற்றையும் கற்றதாகக் கூறுபவன், வெட்கப்படாமல் குற்றம் புரிபவன், மறைக்க வேண்டிய செய்தியை நாக் கூசாமல் பேசுபவன்; தானாகச் செய்யத் தெரியாதவன், எவர் சொல்லையும் கேளான். எவரிடமும் எதையும் கற்றுக் கொள்ளான். ஓன்றும் தெரியாமலே எல்லாம் தெரியும் என்று நினைப்பவன், அறிஞர் சொல்வதை எல்லாம் மறுப்பவன் ஆகிய இழிதன்மையரை எல்லாம் ஒன்று சேர்த்து அவர்கட்குப் புல்லறிவாளர் என்னும் பொதுப் பெயர் வைத்து, இவர்களை உலகம் அடையாளம் கண்டு விலகிக் கொள்ள வேண்டும் என்பதற்காக படைத்த அதிகாரமே புல்லறிவாண்மை ஆகும். அறிவு வழி நன்மை செய்தால் அவ்வறிவு நல்லறிவு, அறிவு வழி கீழான செயல்களைச் செய்தால் அவ்வறிவு, புல்லறிவு எனப்படும். அறிவிலாப் பேதை அறியாமையை உணராது தன்னைப் பேரறி வாளனாக எண்ணிக் கொள்ளுவது புல்லறிவு. அதனோடு ஆணவமும் சேர்ந்து கொண்டால் புல்லறிவாண்மை ஆகிவிடும். கல் தன்னைக் கல் என உணர்வது நல்லறிவு; ஆனால் கல் தன்னைப் பொன்னாகக் கருதிக் கொள்வது புல்லறிவு. பத்து ரூபாய்த் தாள் தன்னை 100 ரூபாயாகக் கருதிக் கொள்வது போன்றதே புல்லறிவு ஆகும். நாலடியார் விளக்கவுரையில் பதுமனார்; புல்லறி வாண்மை; அதாவது புல்லிதான அறிவை ஆளும் ஆட்சி, ஏதேனும் சிறிது அறிந்து கொண்டு, எல்லாம் அறிந்தவனாகவும், எல்லாரினும் தான் பெரியன் ஆகவும் தன்னைத் தானே மதித்து வியந்து கூறலும் பிறர் பெருமைகளை அறியாது தான் இகழ்ந்து கூறலுமாம். எனக் கூறுவதையும் சிந்தனையில் கொள்வோம். ------------- ஒருவனுக்கு வறுமையைக் காட்டிலும் துன்பம் தருவது எது என்றால். அவ்வறுமை போலத் துன்பந்தருவது அவ்வறுமையே அன்றிப் பிறி தொன்று இல்லை என்பதை நல்குரவு அதிகாரத்தில் இன்மையின் இன்னாத தியாதெனின்; இன்மையின் இன்மையே இன்னா தது (குறள். 1041) எனக் கூறும் திருவள்ளுவர், சான்றாண்மை அதிகாரத்தில், சான்றாண்மை என்று சொல்லப்படும் உறுதிப்பாடு ஒருவற்கு உண்டானால், துன்பம் தரும் இல்லாமை என்னும் வறுமை பெருமையாகக் கருதப்படுமே அன்றி இழிவு ஆகாது என்னும் நுண்கருத்தை இன்மை ஒருவற் கிளிவன்று; சால்பொன்னும் திண்மை உண்டாகப் பெறின் (குறள். 988) எனச் சான்றாண்மை அதிகாரத்தில் கூறுவதும். நடுவு நிலைமையைப் போற்றி நல்ல வழியில் நடப்பவனுக்குக் கேடு வராது. அப்படி ஒரு கால் கேடுவரும் எனினும் சான்றோர் பழித்துக் கூறார். என்னும் மேன் மக்கள் பார்வையை நடுவு நிலைமை அதிகாரத்தில். கெடுவாக வையா துலகம், நடுவாக நன்றிக் கண் தங்கியான் தாழ்வு (குறள். 117) எனக் கூறியுள்ளதையும் நன்கு உணர்ந்து நோக்குதல் வேண்டும். வறுமைத் துன்பம் கொடியதுதான் அதற்கு ஆட்பட்ட வரை வாழ விடாதும் செய்துவிடும் என்பதும் உண்மைதான். ஆனால், அஃது சான்றோர்களின் பெருமையையோ, நடுவு நிலையாளரின் புகழையோ அழிக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. வறுமையையும் விரட்டி அடித்துவிட்டு வளமை ஆக்கும் ஆற்றல் அறிவுடைமைக்கு உண்டு ஆகவேதான். அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும் இவர் (குறள். 430) என அறிவுடைமை அதிகாரத்தில் உறுதிப்பட மொழிந்தார். உடன்பாட்டு நடையில் கூறிய அதே கருத்தை மேலும் வலியுறுத்துவான் வேண்டி எதிர் மறை நடையில் கூறும் குறளே. அறிவின்மை இன்மையுள் இன்மை, பிறிதின்மை இன்மையா வையா துலகு (குறள். 841) அறிவு இல்லாமையே, இல்லாமைகள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய இல்லாமை ஆகும். உலகில் பொருளில்லாமை போல் எத்தனையோ இல்லாமைகள் இருக்கின்றனவே என்றாலும் அறிஞர் உலகம் அவற்றை எல்லாம் இல்லாமை ஆகக் கருதுவது இல்லை. பொருளற்றார் பூப்பர் ஒருகால் கேடும் பெருக்கவும் இல்லல்ல என்பன உண்மை மொழிகள். அறிவறிந்த மக்கட் பேறு தேட வேண்டிய உடைமை அறிவுடைமை ஆகும். அதில் ஏற்படும் குறையை வேறு எதனாலும் ஈடுகட்ட இயலாது. எதில் பற்றாக்குறை இருந்தாலும் அறிவில் பற்றாக் குறை இருத்தல் ஆகாது. நுண்ணுணர் வின்மை வறுமை; அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் என்னும் நாலடியாரின் ஈரடி வாக்கு, ஈரடிக் குறளுக்குத் தக்க மேற்கோளாகும். அறிவினால் மாட்சியொன்று இல்லா ஒருவன் பிறிதினால் மாண்டது எவனாம் - பொறியின் மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன அணியெல்லாம் ஆடையின் பின் என்னும் பழமொழி நல்ல விளக்கமாய் அமைகிறது. ------------- அறிவிலான் நெஞ்சு வந்தீதல், பிறிதுயாதும் இல்லை; பெறுவான் தவம். (குறள். 842) புல்லறிவாளனாய் நின்ற பொல்லாதவன் ஒருவன், ஒரு நாள் தன்பால் வந்தவனுக்குப் பெரும் பொருளை மனம் உவந்து கொடுப்பதைக் கண்டு ஓர் அறிஞன் பெரும் வியப்படைந்தான். செருக்கும் சினமும் சிறுமையும் கொண்டு நன்று ஈது, தீது ஈது என்பதை ஆராய்ந்து அறிய இயலாப் புல்லனாகிய இவன் என்ன வகையில் இவ்வாறு பெரும் பொருளை வழங்கினான்; போனது போகட்டும், இனி மேலாவது சிறிது அறம் செய்வோம் என்று எண்ணியா? வீட்டுலக இன்பம் கிட்டும் என்று கருதியா? ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்னும் திருக்குறள் கருத்தை உணர்ந்தா? இறந்து போனால் இச்செல்வம் கூடவராது எனத் தெளிந்தா? ஈயார் இழிகுலத்தார் என்ற பழமொழிக்குப் பயந்தா? இப்படுபாவி ஈயாக் கஞ்சன் என்று பிறர் இகழ்ந்து தூற்றுவதை அறிந்தா! அல்லது அஞ்சியா? ஈந்தால் எல்லாரும் புகழ்ந்து சொல்வார்கள் என்று நினைத்தா? அத்தி பூத்தது போல் இப்புல்லன் இன்று மனம் உவந்து கொடுத்ததற்குக் காரணம் யாதோ? எனப் பலவாறு நினைந்து பார்த்தும் தெளிவுறாமல் திருவள்ளுவர் பால் வந்து, பெரியீர்! நல்லறிவு சிறிதும் இல்லாத இன்னான் இன்று இவ்வாறு ஈந்ததற்கு என்ன காரணம் என்று வினவ, அதற்குப் பிறிது யாதும் இல்லை பெறுவான் தவம் என அவனை நோக்கி ஆசான் உணர்த்தியதாக இவ்வருமைத் திருப்பாட்டு அமைந்துள்ளது. நல்லறிவு யாதும் இன்றி மிக்க வன்கண்ணராய் இருப்பினும் சிலர் சில சமயங்களில் துரியோதனன் கன்னனுக்கு அங்க நாட்டைத் தந்தது போல் நெஞ்சுவந்து பிறர்க்குப் பெரும் பொருளைத் தந்து விடுவர்; ஆயினும் அக்கொடை அவர்க்கு இயற்கையாய் அமைந்தது அன்று. பரிசு பெற வந்தவனின் தவக் கோலமும் உண்மையான தவ வலிமையும் நினைத்ததை முடிக்கும் ஆற்றல் பொருந்தியதாகும். அறிவில்லாதவனையும் ஈகையாளனாக மாற்றும் ஆற்றல் தவத்தால் மேம்பட்ட பெருமக்கட்கு உண்டு. அகச் சான்று;- தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (குறள். 268) வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் (குறள். 265) என்னும் குறட்பாக்கள் ஆகும். தரும கோபன், ஆரபன்மனுடைய அமைச்சர்களில் ஒருவன், அவன் சிங்ககிரி மன்னனுமாவான். திருவள்ளுவர் காட்டும் புல்லறிவாளனுக்குத் தக்க எடுத்துக்காட்டாய் விளங்குபவன். அவனிடம் திரிசதன் என்னும் தவச்சிறப்புப் பொருந்திய புலவன் வேள்வி செய்ய வேண்டிய எழுநூறு கோடிப் பொன்னையும் வளம் மிகுந்த மலைச் சாரலையும் வழங்கினான் என்னும் கந்தபுராணக் கூற்று இக்குறளுக்குத் தக்க சான்றாகும். அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. (குறள். 843) பகைவர்கள் எல்லாரும் கேடு புரிவர் என்று சொல்ல இயலாது. கேடு செய்பவரும் எப்பொழுதும் கேடே செய்து கொண்டிருப்பர் என்றும் சொல்ல இயலாது. செய்தாலும் காரண காரியத்தோடு காலம் நேரம் பார்த்து இடம் பொருள் ஏவல் அறிந்தே செய்வர். ஆனால், அறிவிலார் நல்லதை எண்ணார், நல்லதைப் பேசார், நல்லதைச் செய்யார். செய்வதையும் முறையோடும் ஒழுங்கோடும் செய்யார்; அன்பும் பண்பும் நேர்மையும் ஒழுங்கும் இல்லாமையால் குடும்ப ஒற்றுமையையும் கெடுத்து உற்றார் உறவினர்களை அண்டாது; தீயவர்களோடு தொடர்பு கொண்டு தீயதையே செய்து வருவதால் அவர் செயலே அவர்க்கு அடுக்கடுக்கான துன்பத்தைத் தந்து கொண்டிருக்கும். கொள்ளியை எடுத்துத் தலை சொறிந்தது போலவும், யானை தன் தலையில் மண்ணைவாரிப் போட்டுக் கொள்வது போலவும் தமக்குத் தாமே துன்பத்தை விளைவித்துக் கொள்வர். ஆகவே, திருவள்ளுவர் அறிவிலார் என்று சொல்லப்படும் புல்லறி வாளர் தமக்குத் தாமே உண்டாக்கிக் கொள்ளும் துன்பம் பகைவராலும் செய்வதற்கு அருமை உடையதாகும் என மொழியலானார். அறிவில்லாதவர்கள் தமக்குத்தாமே செய்து கொள்கிற துன்பத்தைப் போல, தாம் தம் பகையாளிக்கும் கூடச் செய்ய முடியாது. என நாமக்கல் இராமலிங்கனார் கூறும் உரையும் நன்றாகத்தான் இருக்கிறது. நல்லதொன்றையும் நாடாமல், துள்ளித் திரிந்து, தீயனவற்றையே செய்து ஆப்பு அதனைப் பிடித்து அசைத்து விட்ட பேய்க் குரங்கு போலத் தமக்குத் தாமே துன்பத்தை உண்டாக்கிக் கொண்டு புல்லறிவாளர் அழுந்தி அல்லலுறுவர், தாமேயும் இன்புறார், தக்கார்க்கும் நன்றாற்றார் ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி ஆக்கத்துள் தூங்கி, அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னார் என்னும் நாலடியார்ச் செய்யுளும் தக்க எடுத்துக் காட்டாகும். பேதை யுன்துணை யாருளர் பழிபடப் பிறந்தார் என்று கூனி கைகேயியைப் பார்த்துக் கூறுகிறாள். தனக்கும் தன் குலத்திற்கும் துன்பம் வருவதை அறிந்திருந்தும், உற்றார் உறவினர்க்கும் இனி வாழ்வில்லை என்பதைத் தெரிந்திருந்தும் வாளா இருக்கிறாய். உன்னைப் போல் முட்டாள் யார் என்கிறாள். கூனி தான் கொண்டதை முடிக்கப் பயன்படுத்தும் உத்தி, குறட்கருத்தை வேறு ஒரு கோணத்தில் விளக்குகிறது. ------------- வெண்மை எனப்படுவதி யாதெனின், ஒண்மை உடையம் யாம் என்னுஞ் செருக்கு (குறள். 844) அறிவிலார் தம்மைத் தாமே பேரறிவாளர் எனத் தம்பட்டம் அடித்துக் கொண்டு அடையும் பெருமிதம் இருக்கிறதே அதற்குத் தான் அறிவில்லாத வெள்ளைத் தன்மை என்று பெயர். அறிவில்லாமை குறையே தவிரக் குற்றமன்று. ஆனால் தன் அறியாமையை உணராமலும், தன்னைப் பெரிய அறிவுப் போரொளி யாகவும் எண்ணிப் பெருமிதம் கொள்வதே பெருங்குற்ற மாகும். தன்னை மிக்க தகுதியில்லாதவனாகவும் கருதவைக்கும். வெண்மை என்றால் வெளிற்றுத் தன்மை. வயிரம் கொள்ளாத மரத்தை வெளிறு என்பர். அதுபோல் உள்ளீடு ஆகிய அறிவு இல்லாமையை வெண்மை எனக் கூறியுள்ளார். வெண்மை இல்லை பல்கேள்வி மேவலால் என்பது கம்பர் கண்ட நாடு. அறிவுடையாரை ஒளியார் எனவும், அறிவிலாரை வெளியார் எனவும் சான்றோர் கூறுவர். நாம்பெரியர் என்னும் அதை நாடாது, அடக்கும் அவர் தாம் பெரியர், என்று மறை சாற்றிடும் - நாம் பெரியர் என்பார் சிறியர் இவர் அலாது இவ்வுலகில் துன்பார் சுமப்பார்கள் சொல் எனக் கூறும் சிவபோக சாரம் உடன் எண்ணத் தக்கது. எம்மை அறிந்திலிர், எம்போல்வார் இல்லென்று தம்மைத்தாம் கொள்வது கோளன்று -தம்மை அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர் பெரியராக் கொள்வது கோள் கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின் மைந்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தனென்று எள்ளப் படும் என்னும் நாலடியார் பாடல்களும் ஏற்ற விளக்கமாய் விளங்குகிறது. தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல், தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் -தன்னை வியவாமை யன்றே வியப்பாவது இன்பம் நயவாமை அன்றே நலம் என்னும் நீதி நெறிவிளக்கப் பாடலையும் கருத்து விளக்கத்திற்கு இணைத்துக் கொள்வோம். கல்வியறிவு இல்லாத ஒருவன் கொண்ட மேம்பாடு, அவன் கல்வி வல்லஒருவனைக் கூடி உரையாடத் தொடங்கிய அளவில் தளர்ந்து போகும் என்பதைக், கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் (குறள். 405) எனக்கல்லாமை அதிகாரத்தில் உரைத்தார். அதன் அடிப்படையில் வெளிப்பட்ட குறளே, கல்லாத மேற்கொண் டொழுகல், கசடற வல்லதூஉம் ஐயம் தரும் (குறள். 845) புல்லறிவாளர் தாம் படிக்காத நூல்களையும் படித்ததாகக் கூறிப் பெருமை பாராட்டிக் கொள்வர். தான் கற்று அறியாத செயலையும் தான் கற்று அறிந்துள்ளதாகக் கூறி அச்செயலைச் செய்ய முந்தி நிற்பர். அவர்களின் உரையாடல்களையும், செயற்பாடுகளையும் கண்ணுற்றவர்கள் அவர் களின் அறியாமையை உடன் தெரிந்து கொள்வர். புல்லறிவாளரும் சில நூல்களைக் குற்றமற உண்மையிலேயே கற்றிருந்தாலும்; அவர்கள் கற்றதையும் மற்றவர்கள் ஐயப்படுவார்களே அன்றி நம்பமாட்டார்கள். அது போலவே அவர்கள் கசடறக் கற்ற தொழிலையும் நம்பாது, ஐயக்கண் கொண்டே பார்ப்பர். உண்மைக்கு மாறாக ஒன்றைக் கூறியது புரிந்துவிட்டால் அவர்கள் எதைச் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். பொய்மையை மெய்மை யாகக் காட்ட விரும்பினால், மெய்ம்மையைக் கூட மெய்ம்மை என நிலைநாட்ட இயலாது போகும். யாரும் முழுப் புல்லறிவாளராய் இரார்; ஆனால் புல்லறிவாளர் தம்மிடம் உள்ள சில நல்லறிவையும் நல்லறிவு என உலகம் நம்பிவிடாதபடி நடந்து கொள்வர். தாம் ஆழ்ந்து பயின்றதும் இன்றித் தக்க கேள்வியும் இன்றிப் பள்ளி ஆசிரியர் நெட்டுருச் செய்வித்த மனப்பாடத்தால் தெரிந்து கொண்டதாகிய ஒரு நூற்பாவினை, நற்புலவர் அவையில் சென்று நாணுதல் இன்றி விரித்துரைத்து, அறிவிலான் தனது சிற்றறிவினைக் காட்டிக் கொள்வான் என்பதைக் கற்றுதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதையோர் சூத்திரம்-மற்றதனை நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன் புல்லறிவு காட்டி விடும் என்னும் நாலடிப் பாடல் நன்கு உணர்த்தும். ------------- அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி 846 என்னும் குறளுக்கு மணக்குடவர், தம்பாலுள்ள குற்றத்தைப் பிறர் அறியாமல் தாம் மறையாக் காலத்து, பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்ததும் புல்லறிவு என உரை கூறியுள்ளார். பரிமேலழகர், புல்லறிவாளர் தங்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின் ஆடையால் அற்றம்மறைத் தாராகத் தம்மைக் கருதுதலும் புல்லறிவாம் என உரை வழங்குவதுடன் குற்றம் மறைத்தலாவது அவற்றை இலவாக்குதல், மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்த வற்றை யெல்லாம் மறையாது, தாழ்ந்த தொன்றனையே மறைத்து அவ்வளவாற் தம்மையும் உலக வொழுங்கினராக மதித்தலும் புல்லறி வென்பதாம் எனக் குறிப்புரையும் வரைந் துள்ளார். காணக் கிடைத்த உரைகள் அனைத்தும் முன்னைய உரையாசிரியர் களின் உரையின் தழுவலாகவே காண முடிகிறது. திருக்குறளுக்கு உரை திருக்குறளே என்னும் அடிப் படையில் சிந்திக்க வேண்டிய குறளாக இக்குறள் அமைந் துள்ளது. திருவள்ளுவர், தீய செயல்களைச் செய்ய எவரும் அஞ்சுதல் வேண்டும் என்பதை வலியுறுத்த தீவினை அச்சம் என ஓரதிகாரம் பாடினார். கைக் கொள்ளக் கூடாத ஒழுக்கத்தைக் சுட்டிக் காட்டக் கூடா ஒழுக்கம் என ஓரதிகாரம் பாடினார். எவர்க்கும் துன்பம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்த இன்னா செய்யாமை என ஓரதிகாரம் பாடினார். அத்துடன் அமையாது ஒவ்வொருவரும் தம்மிடம் குற்றம் உண்டாகாவாறு விலக்கி வாழ வேண்டும் என்பதை வற்புறுத்தக் குற்றம் கடிதல் என ஓர் அதிகாரத்தைப் பாடியதுடன் அதனை அறிவுடைமை அதிகாரத்திற்கு அடுத்ததாக வைத்துள்ளதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். தீமை செய்யத் துணிந்த பகைவர்க்கும் மாறி அத்தீமையைச் செய்யாது விடுதல் வேண்டும் அதுவே அறிவுகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவாகும் (குறள்.203) ஒருவன் தனக்கு என்றும் நலமானதையே விரும்புவான் எனின், பிறர்க்குத் தீமை பயக்கும் எச்செயலையும் மனத்தாலும் எண்ணாது இருக்க வேண்டும். மனத்தின்கண் குற்றம் நீங்காமல் படிந்திருக்க, தவத்தினர் போல் தூய நீராடல் முதலியவற்றால் தம்மைப் பொலிவாகக் காட்டிக் கரவாக வாழும் வேடதாரிகளும் உலகில் பலராவர் (குறள்.278) துன்பம் எல்லாம் துன்பம் செய்தாரையே தொடர்ந்து வருவனவாம். ஆதலால், தாம் துன்பமின்றி வாழ வேண்டும் என விரும்புவர் எவரும் பிறர்க்குத்துன்பம் செய்ய எண்ணார் (குறள்.320) பிறர்க்குத் துன்பங்களை ஒருவர் முற்பகலில் செய்தால், செய்த அவர்க்கு அத்துன்பங்கள் பிற்பகலில் தாமாகவே தேடிக் கொண்டு வரும் (குறள்.319) அழிவைத் தரும்பகை குற்றமே ஆகும். ஆதலால் தம்மிடத்துக் குற்றம் உண்டாகாமல் கருத்தோடு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை, குற்றமே காக்கப் பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை (குறள். 434) எனக்கூறும் திருவள்ளுவர், குற்றங்கள் செய்ய அடிப் படையான காரணங்களாகக் கூறுவன. 1. செருக்கு, 2. சினம், 3.சிறுமை, 4. இவறல் (கருமித்தனம்) 5.மாண்பிறந்த மானம் 6. மாணா உவகை 7. தன்னை வியத்தல் 8. நன்றி பயவாவினை நயத்தல் 9.விருப்பத்தை விளம்பரப் படுத்துதல் 10. தன் குற்றம் காணாமை. 11. பிறர் குற்றம் காணல் ஆகியன வாகும். இவற்றில் எந்த அடிப்படையில் குற்றம் செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும். அக்குற்றத்தை மனத்தில் தோன்றிய உடனே, வளரவிடாமல் அழித்து விடவேண்டும். அறிவுடையோர் அக்குற்ற உணர்வைச் செயல் வடிவம் பெறவிடாமல். அது தோன்றிய அகத்திலேயே அதனைச் சாகடித்து விடுவார்கள். ஆனால் புல்லறிவாளர்களோ குற்றத்தைக் குற்றமாகக் கருதாதவர் கள். அதனைப் பெருமையாக எண்ணிக் கொள்வதுடன் பெருமையாகப் பேசுவார்கள். குற்றம் புரிவதையே குணமாகக் கொண்ட அவர்கள் நாளும் பொழுதும் செய்வதெல்லாம் குற்றங்களே, குற்றம் புரிவதையே தொழி லாகக் கொண்ட அவர்கள் தாம் செய்யும் செயலை யாரும் எந்த அரசும் கண்டு கொள்ளக் கூடாது, குறை சொல்லக் கூடாது. அதனால் பாதிக்கப்பட்டவர்களும் குற்றம் சாட்டக் கூடாது. யாரும் பழிக்கவும் கூடாது ஊடகங்கள் அக்குற்றங்களை வெளிப்படுத்தக் கூடாது. புலனாய்வுத் துறையும் கண்டு கொள்ளக் கூடாது. காவல் துறை வழக்குத் தொடுக்கக் கூடாது. நீதி மன்றம் தண்டனை தரக் கூடாது. என்பனவற்றை அடுக்கடுக்காக சிந்தித்து. அக்குற்றங்களை மறைக்க நேர்மையற்ற வழியில் செய்யக் கூடாத தில்லு முல்லுகளும் செய்து குற்றங்கள் வெளியே தெரியாதவாறு மறைக்க மேற்கொள்ளும் அறிவே புல்லறிவாகும். அத்தகைய ஏமாற்று வேலையைத் திறம்படச் செய்பவரே புல்லறிவாளர். அவர்கள் கையாளும் திறமையான தந்திர மந்திரங் களுக்குப் பெயர்தான் புல்லறிவாண்மை. குற்றமே செய்யாமல் மறைப்பதே அறிவு. குற்றங்களை வெளிப்படையாகச் செய்து விட்டு, யாரும் குற்றம் சொல்லாமல் தடுக்க வேண்டும் என்று எண்ணுவதும் புல்லறிவே. கொலையையும் ஊரறியச் செய்து விட்ட பின் மறைக்க வேண்டும் என்று எண்ணுவதே பயன்படாத நேர்மையற்ற, அறம் மறந்த, நீதிகொன்ற புல்லறிவாகும். தம்மிடம் குற்றமான செயல்கள் செய்யும் எண்ணமே தோன்றாதவாறு ஆக்கிவிடுவது அறிவுடைமை ஆகும். ஆனால் குற்றமும் செய்து விட்டு அதனைப் பிறர் அறியாமல் மறைக்க எண்ணுவது புல்லறிவாகும். ஊழல் புரிந்து கோடி கோடியாக ஒதுக்கி விட்டு ஆவணங் களை அழித்துவிடும் அறிவுக்குப் பெயர்தான் புல்லறிவு. ஆவணங்களை அழிவித்துவிட்டால் சட்டத்திலிருந்து தப்பலாம். செய்த குற்றத்திற்கு உரிய அறம் தரும் தண்டனையிலிருந்து தப்பிக்க எவராலும் இயலாது. அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு (குறள். 847) காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கத் தவறினாலும் நாவு ஒன்றையேனும் தவறாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு காக்கத் தவறினால். அவர் தம் சொல்லில் குற்றம் உண்டாக்கப்பட்டுத் துன்புறுவர். எந்தச் செய்தியை வெளிப்படுத்தினால் சொல்பவர்க்கும் கேட்பவர்க் கும் அறிந்து கொள்பவர்கட்கும் நாட்டுக்கும் நன்மை உண்டோ அத்தகைய செய்திகளை மறைப்பது நல்லதன்று. சில செய்திகளை வெளிப்படுத்துவ தனால் நன்மை இல்லாமல் இருந்தாலும் தீமை இல்லை எனில் பொழுது போக்குக்காகப் பேசப்படுமானால் சொல்வதனால் குற்றம் நேர வாய்ப் பில்லை. பிறர்க்கு பிற ஊர்க்கு. பிற நாட்டுக்குத் தெரியக் கூடாத கமுக்கச் செய்தி தமக்குத் தெரிந்திருந்தாலும் உயிரே போவதானாலும் அச் செய்தியை எந்த வகையிலும் அறிவுடையோர் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால், புல்லறிவாளர்களோ யாருக்கும் தெரியாத கமுக்கச் செய்தி தமக்குத் தெரியுமாயின் அதனை வெளிப்படுத்து வதால் தம் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்ற போலியான பெருமைக்கு ஆட்பட்டு, இது கமுக்கச் செய்தி, உங்களிடம் தான் சொல்கிறேன், உங்களிடம் தான் சொல் கிறேன். நீங்கள் யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்ற வேண்டுதலோடு எத்தனை பேர்கட்குச் சொல்ல முடியுமோ அத்தனை பேர்கட்கும் சொன்னால் தான் அவர்கட்குத் தூக்கம் வரும். அப்படிக் கமுக்கச் செய்திகளை அம்பலப் படுத்துவோர் தமக்குத் தானே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள். துன்பமின்றி வாழவேண்டிய மனிதன்; இயற்கை யாலோ பிறராலோ நேரும் எதிர்பாராத துன்பத்தையும் வென்று வாழ வேண்டிய மனிதன். தனக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக் கொள்வானானால், கமுக்கம் காத்துக்கொள்ளா அவன் புல்லறிவை என்னென்பது, திருவள்ளுவர் பல்வேறு துன்பங்களையும் இன்னாத வற்றையும், குற்றத்தையும், உடற் பிணியையும் காமத்தையும் நோய் என்னும் சொல்லால் குறிப்பதுடன் அந்நோய் நீங்கி நலத்துடனும் வளத்துடனும் இன்புற்று வாழவும் வழிகாட்டகிறார். அத்தகைய மனித நேய மிக்க திருவள்ளுவர் வாட்ட சாட்டமாய் வளர்ந்து எழில் மிக்க தோற்றப் பொலிவுடன் இருக்கும் ஒரு மனிதனைப் பார்த்து, இவன் தன்னையும் குடும்பத்தையும், நாட்டையும், உலகையும் வாழ வைக்கப் பிறந்த மனிதனல்லன்! இவன் ஒரு நோய்! இவன் உயிர் போகும் வரை இவன் உலகுக்கு ஒரு நோய் போன்றவன்! நோய் போன்றவன் என வெறுப்புடனும் வேதனையுடனும் கூறுகிறார் என்றால் அவன் எப்படிப் பட்டவனாய் இருப்பான். வள்ளுவரே அவனை எவவும் செய்கலான் தான் தேறான், அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய் (குறள். 848) என்று கூறுகிறார். எல்லாரும் எல்லாச் செயல்களையும் செய்யும் திறமையுடன் பிறந்த தில்லை. எனினும் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரேவோர் தொழில் செய்யும் திறமையையாவது வளர்த்துக் கொள்ள வேண்டும். படித்து அறிய வேண்டியவற்றைப் படித்தும், பார்த்து அறிய வேண்டியவற்றைப் பார்த்தும், கேட்டு அறிய வேண்டியவற்றைக் கேட்டும் அறிந்து தொழில் செய்யும் திறமையை வளர்த்துக் கொண்டும். மூத்தவர்கள் பெரியவர்கள் அறிவுடையவர்கள், தொழிலில் பயிற்சி பெற்றவர்கள் தாமாக முன்வந்து கூறும் வழிவகைகளைக் கேட்டுச் செய்ய வேண்டும். என்ற எண்ணமும் இல்லை; அவனாகப் படித்துச் சிந்தித்து செய் முறைகளைத் தெரிந்து கொண்டவனும் இல்லை. மடி என்னும் மாசுக்கு ஆட்பட்டவனும் இல்லை. எப்பொழுதும் விவரம் இல்லாமல் எதையாவது செய்து கொண்டும் இருக்கிறான். அத்தகையவனால் நன்மை இல்லாமல் போவது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் எப்பொழுதும் அண்டியவர்கள் அடுத்தவர்களை மனநிறைவுடன் வாழவிட மாட்டான். எப்பொழுதும் ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பான். அத்தகையவன் இருக்கிற வரையில் தொடர்புடையோர், எப்பொழுதும் மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாத, ஆனால் விரைவில் உயிரைக் கொல்லாத நீண்ட வாழ்நாளைப் பெற்று நோய்க்கு ஆட்பட்டு வேதனை யுடன் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு ஒப்பாகும். சொந்தப்புத்தியும் இல்லான், சொற்புத்தியும் கேளான் பிறவி நோயாளன் ஆவான். தாடகை நெஞ்சில் இராமன் எய்த அம்பு தங்காது விரைந்து வெளியே போனதைக் குறித்து விளக்குங்கால் கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே எனக் கம்பர் கூறியதையும் எண்ணிப் பார்க்கலாம். ------------- அறிவில்லாத ஒருவனுக்கு ஒன்றை அறிவிக்க முயல்பவன், முடிவில் தான் அவனுக்கு உணர்த்த முடியாமைக்குத் தன் அறியாமையை எண்ணித் தானே வருந்த நேரிடும். ஆனால், அவ்வறிவற்றவனோ தான் முன்பு இருந்த நிலையிலேயே இருந்து கொண்டு தன் அறிவில்லாத் தன்மையை உணராமல் தன்னை அறிவில் ஆதவனாய்த் தனக்குத் தானே எண்ணிக் கொள்வான். அதாவது அறிவற்றவன், தனக்கு அறிவுரை கூறியவனையும் அறிவில்லாதவன் ஆக்கித், தான் எல்லாம் அறிந்தவன் போல், தன் எண்ணத்தில் விடாப்பிடியாய் இருப்பான். என அறிவிலார் நிலையைத் திருவள்ளுவர், காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. (குறள். 849) என மொழிகிறார். புல்லறிவாளர்கட்கு நல்லறிஞர்கள் எவ்வளவு நயம்பட உரைத் தாலும் உணர்ந்து, தம் அறியாமையை ஒத்துக் கொள்ளவும் மாட்டார். திருந்தவும் மாட்டார் என்பதைத் தொன்மக்கதைகளில் இடம் பெற்ற இராவணன், சூரபன்மன், இரணியன், தக்கன் செயல்களால் அறியலாம். தெரிந்திலாதவனைச் சுகமாய்த் தெரியச் செய்யலாம்; விசேடமதாய்த். தெரிந்தவனை நேராய்த் தெரியச் செய்யலாம்; நலம்தீங்கு இது எனவே தெரிந்தும் தெரியா மூடனைச் சீர்திருத்தித் தெரியச் செய்ய எல்லாம் தெரிந்து விதிக்கப்படும் பிரமதேவன் தனக்கும் முடியாதே இடங்கர்வாய் மாமணியை எடுத்திடலாம்: நெடுந் திரை சூழ்தடங் கடலைத் தாண்டிடலாம்; தலையின் மேல் மாலைய தாய்ப்படம் கொள் பாம்பு அணிந்திடலாம்; பாழ்மூடர்க் கறிவுறுத்தி அடங்கி நடந்திடச் செயவல்லார் ஒருவர் இல்லையே. நீனிற மணலில் எண்ணெய் உண்டாக்கினும் கானல்நீர் எடுத்துத் தாகத்துக்கு உண்ணினும் கூன் முயற்கோடு கைக்கொளினும், மூர்க்கரைத் தான் இதப்படுத்திடத் தகாது யார்க்குமே எவன் மதகரியைத் தண்டின் இழையினால் கட்ட வல்லவனோ, எவன் வயிரத்தை வாகை மென்பூவால் இருபிளவாக்க வல்லவனோ, எவன் மதுத் துளியால் உவர்க்கடல் அனைத்தும் இனிமை உண்டாக்க வல்லவனோ அவன் இதவசனத்தாலும் மூர்க்கரை நேராக்கிடச் செய்தல் அரிதே எனப் பர்த்துருகிரி தரும் விரிவான விளக்கத்தையும் சிந்தையில் கொள்வோம். ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க-மூர்க்கன்தான் கொண்டதே கொண்டு விடானாகும், ஆகாதே உண்டது நீலம் பிறிது. எனும் பழமொழிப்பாடலும் குறட்கருத்திற்கு அரண் சேர்க்கும். பூத்தாலும் காயா மரமுமுள- நன்றறியார் மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார்-பாத்திப் புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு என்னும் சிறுபஞ்சமூலப் பாடலும் ஏற்றவிளக்கம் அளிக்கிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். (குறள். 50) என இல்வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ்பவரைத் தெய்வ நிலைக்கு உயர்த்தினார். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப்படும் (குறள். 388) என நடுநிலையோடு நாடு காப்பவன் இறைவனாகப் போற்றப் படுவான் என்றார். ஒத்ததறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் (குறள். 214) என ஒத்தது அறியாது உயிர் வாழ்பவனைச் செத்த பிணத்தோடு சேர்த்தார். அதுபோல் பேய்க் கூட்டத்தில் வைக்கப்பட வேண்டிய மனிதனை அடையாளம் காட்டும் குறளே. உலகத்தார் உண்டென்ப தில்லென்பான், வையத் தலகையா வைக்கப் படும் (குறள். 850) என்பதாகும். உயர்ந்தவனோடு பொருந்தி உறவாடும் வாழ்க்கைக் கல்வியைக் கல்லாதவர், மற்றைப் பலப்பல கல்விகளைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவராகவே கருதப் படுவார் எனும் தெளிவை. உலகத்தோ டொட்ட ஒழுகல்; பலகற்றும் கல்லார் அறிவிலா தார் (குறள். 140) எனும் குறள் வழி நமக்குத் தந்தவர் திருவள்ளுவர். உலகில் உள்ள உயர்ந்த சான்றோர் எவற்றை எல்லாம் தேர்ந்து தெளிந்து மெய்ப்பொருள் எனக் கூறுகிறார்களோ அவற்றை எல்லாம் பொருளற்ற பொருள்கள் எனக் கண் மூடித்தனமாக கூறிவரும் ஒருவன் இம்மண்ணுலகில் மனித உருத்தாங்கி நடமாடினாலும் அவனை அச்சமூட்டும் பொய் மனிதனாகவும் போலி மனிதனாகவுமே கருதி ஒதுக்கி வைக்க வேண்டும். அலகை என்றால் பேய், என்பது பொருள். பேய் என்பது அச்சமூட்டும் தோற்றம் உடைய போலியான பொய் மனிதனைக் குறிக்கும் ஒரு குறிப்பீட்டுச் சொல்லாகும். பரம் ஏது? வினைசெயும் பயன்ஏது? பதிஏது? பசுவேது? பாசம் ஏது? பத்திஏது? அடைகின்ற முத் திஏது அருள்ஏது? பாவ புண் ணியங்கள் ஏது? வரம் ஏது? தவம் ஏது? விரதம் ஏது? ஒன்றும்இலை மனம் விரும்பும் உணவு உண்டு நல் வத் திரம் அணிந்து மடமாதர் தமைநாடி, நறு மலர் சூடி விளையாடி, மேல் கரம்மேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந்தவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும் கயவரைக் கூடாது, அருள் தரம் மேவு சென்னையில் கந்த கோட்டத் துள்வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே. என்னும் வள்ளலாரின் திருவருட்பா ஐந்தாவது திருமுறையில் உள்ள தெய்வமணி மாலைப்பாடல் திருக்குறளை உள்ளத்துக் கொண்டு பாடியது போல் விளங்குவதையும் காண முடிகிறது. உண்மையைப் பொய் என்பான் பேயன். ------------- அறிவின்மையே இன்மையுள் இன்மை பிறிதின்மை நிலைத்த இன்மை அன்று அறிவிலானும் நெஞ்சு உவந்து ஈவான் தவத் தோன் அறிவிலானையும் கொடையாளி ஆக்குவான் அறிவிலார் தமக்குத் தாமே துன்பத் தை உண்டாக்குவர் அறிவிலார் தமக்குப் பகைவரைவிட தீது செய்து கொள்வர் ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கே வெண்மை தன்னை அறிவுடையவனாக எண்ணுவதே புல்லறிவு தெரியாததைத் தெரிந்ததாகக் காட்டாதே குற்றம் புரியவும் எண்ணாதே செய்த குற்றத்தை மறைக்க எண்ணுவது புல்லறிவு கமுக்கத்தைக் காத் து வாழ் வெளியாகும் கமுக்கம் துன்பத்தில் உன்னை அமுக்கும் பெரியோர் அறிவுரைகளைக் கேட்டுச் செய் தானே சிந்தித்துச் செயல்படு ஏவியும் செய்யான் நோயன் ஆவான் தான் தேறான் தேர்ச்சி அடையான் அறிவிலியை அறிவுடையவன் ஆக்க இயலாது அறிவிலிகட்கு அறிவுரை கூற எண்ணாதீர் புல்லறிவன் தான் புல்லறிவன் என்பதை ஒப்பான் உண்மையை மறுப்பவர்களே பேயர்கள் உண்மையை ஏற்றுக் கொள் பொய்மையை அறிந்து அகற்றி வாழ் ------------- 86. இகல் தொடர்பு உடையவரிடத்தில் நட்பு நிலைத்தால், ஒற்றுமையும் ஆக்க வேலையும் பெருகும். வெறுப்பு மிகுந்தால் மாறுபாடும் அழிவு வேலையும் பெருகும். மாறுபாட்டிற்குக் காரணமான வெறுப்பு எண்ணத் தளவில் நிற்பதாகும். அதுவே இகல் என்று கூறப்படும். அழிவு வேலையை வளர்க்கும் வெறுப்பே செயலளவில் மிகுவதாகும். அதுவே பகை என்று கூறப்படும். திருவள்ளுவர் இகலை நீக்கும் வகையில் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்றும், பகையையும் முடியுமானால் நீக்கிக் கொள்ள வேண்டும் என்றும், முடியாத போது போரிட்டு வென்றாவது போக்கிவிட வேண்டும் என்றும் கூறுகின்றார். செயளவில் அழிவு வேலைக்கு முனையும் பகையைத் தாக்கி வெல்லலாம் என்று கூறுகின்றவர். எண்ணத் தளவில் உள்ள இகலை விட்டுக் கொடுத்தாவது நீக்கிவிட வேண்டும் என்று கூறுகின்றார். உலகத்தார் உண்டென்ப தில்லென்பான், வையத்து தலகையா வைக்கப் படும் (குறள்.850) என்னும் குறளே புல்லறிவாண்மையின் நிறைவுக் குறளாகும். மாறுபாட்டை உருவாக்கி வளர்ப்பது பேயன் இயல்பு. மாறுபாட்டை முளை யிலேயே கிள்ளி எறிவது மனித இயல்பாகும். என்பதைத் தெளிவுபடுத்து வதே வள்ளுவர் நோக்கமாகும். புல்லறிவாண்மையை நோய் எனக் குறிப்பிட்டது போல் இகலையும் பகல் என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் என்று கூறுவதுடன் அதனை எவ்வ நோய் என்றும் அதனைத் துன்பத்துள் துன்பம் எனக் கூறுவதையும் சிந்தனையில் கொள்வோமாக! இகல் என்பதாவது யாது? என்னும் வினாவிற்கு விடை யளிக்கும் குறளே முதற்குறளாகிய இகலென்ப எல்லா உயிர்க்கும். பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் (குறள். 851) இகல் ஒரு நோய். எப்படிப் பட்ட நோய்? துன்பத்தைப் பெருக்கும் நோய். எத்தன்மை வாய்ந்த துன்பத்தைப் பெருக்கும் நோய்? பண்பின்மை வாய்ந்த கொடியதுன்பத்தைப் பெருக்கும் நோயாகும். என்ன பண்பின்மையைப் பெருக்கும் நோய்? சேர்ந்து இருப்பதையும் பிரித்து வைக்கும் பண்பின்மை ஆகிய கொடுந்துன்பத்தைப் பெருக்கும் நோய். யார்க்கு? மாந்தர்க்கு மட்டுமா? இல்லை எல்லா உயிர்கட்கும் தான். இஃது யார் கூற்று? திருவள்ளுவரின் தனிப்பட்ட கருத்தா? இல்லை, அறிஞர் உலகம் கூறும் கூற்றேயாகும். இயற்கையாகவே கூடிவாழும் இயல்பு பொருந்திய அனைத்து உயிரினங்களையும் ஒட்டு உறவுகளிலிருந்து, பிரித்து வைக்கும் பண்பு இல்லாமையைப் மிகுதிப் படுத்தி வளர்க்கும் கொடியதுன்பத்தை அறிவுடையோர் இகல் என்று கூறுவர். மாறுபாடு என்னும் நோய் உயிர்களுக்குள் பகையுணர்ச்சியைப் பரப்பும் நோயாகும். திருவள்ளுவர் சேர்ந்து. வாழ்வதைப் பண்புடைமை எனக் கருதுவதால். பிரிவினை உணர்வைப் பண்பின்மை என உணர்த்துகிறார். தங்குமிடம், உணவு, புணர்ச்சி தொடர்பாக அஃறிணை உயிரினங்கட் குள்ளும் இகல் விளைதலின், எல்லா உயிர்க்கும் என்றும் ஒன்றுபட்டிருக்க வேண்டிய இனத்தைப் பல்வேறு பிரிவாகப் பகுத்தலால் பகல் என்றும் கூறியுள்ளார். பகைத் திறம் தெரிதல் அதிகாரத்தில், பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று (குறள். 871) எனக் கூறுவதனையும் சேர்த்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இகலும் பிணியும் இடரிழைக்கு மேனும் இகல் போல் பிணியியற்றல் இன்றாம் - இகலோ நன் நேசங்குலைத்து நிலை பிரித்து நீள்துயராய் நாசம் மிகச் செய்யுமே நாடு என்னும் செகவீர பாண்டியனாரின் பாடல் குறட்கருத்தை விளக்கப் பாடியதேயாம். தம்தோள் வலி மிக்கவர், தாம் ஒரு தாய் வயிற்றின் வந்தோர், மடமங்கை பொருட்டு மலைக்கலுற்றார் சிந்து ஓடரி ஒண்கண் திலோத் தமை காதல் செற்ற சுந்தோப சுந்தப் பெயர்த் தொல்லையினோரும் ஒத்தார் என வாலி, சுக்கிரீவன், போர் நிகழ்வைப்பாடும் கம்பர். நிகும்பன் என்னும் அரக்கனின் மைந்தர்களாகிய சுந்தன் உபசுந்தன் என்போர் ஒருதாய் மக்கள் இணைபிரியாது வாழ்ந்தவர் ஆனால் திலோத்தமை குறித்து இகல் கொண்டு, தம்முள் போரிட்டு மாண்ட கதைபோல் ஆயிற்றே எனப்பாடிய இப்பாடலைச் சான்றாகக் கொண்டு சிந்திப்போம். ------------- பகல் கருதிப் பற்றா செயினும் இகல் கருதி இன்னாசெய் யாமை தலை (குறள். 852) என்னும் இக்குறள், செய்யக் கூடாத இழிவை ஒருவன் தனக்குச் செய்தாலும், அதற்காக மிக வருந்தி, அறநெறிப்படாத செயல்களைச் செய்யாமை நல்லது எனும் கருத்தைப் புலப்படுத்திய, திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று (குறள். 157) என்னும் பொறையுடைமை அதிகாரக்குறளையும். தீமை செய்யத் துணிந்த பகைவர்க்கும், மாறி அத்தீமையைச் செய்யாதுவிடுதல், அறிவுகள் எல்லா வற்றுள்ளும் தலையாய அறிவு என்று ஆய்ந்தோர் கூறுவர் என்னும் கொள்கையை, அறிவினுள் எல்லாம் தலையென்ப, தீய செறுவார்க்கும் செய்யா விடல் (குறள். 203) தண்டித்தே தம் எண்ணத்தை நிறை வேற்றிக் கொள்ளும் தன்மை உடையவரிடத்தும், கண்ணோட்டத்துடன் பொறுத்துக் கொண்டு, தம் கடமையை நிறைவேற்றும் பண்பு தலை சிறந்ததாகும் என்னும் உயர் நெறியை ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும், கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை (குறள். 579) என்னும் கண்ணோட்ட அதிகாரக் குறள் வழியும். தமக்குத் தீயவை செய்தார்க்கும் நல்லவையே செய்யாத போது சால்புடைமை என்ன பயனுடையதாகும்? ஒரு பயனும் ஆகாது. இன்னா செய்தார்க்கும், இனியவே செய்வதே சால்பு, என்னும் உயர் நெறியை, இன்னா செய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு (குறள். 987) என்னும் அதிகாரக் குறள் வழியும் உணர்த்தப்படும் இன்னா செய்யாமைக் கோட்பாட்டை வலியுறுத்தும் குறளே பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை (குறள். 852) ஆகும். திருவள்ளுவரின் நோக்கம் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு, பிறர்க்கு நன்மை செய்து வாழவேண்டும். என்பதாகும், ஆகவே, யாரேனும் உன்னிடம் நட்புக் கொண்டு பழக விரும்பாமல், விலகிச் சென்று விட வேண்டும் என்று கருதி உனக்கு வேண்டாத தொல்லை விளைக்கிறார் எனினும்; அவர் செய்தால் செய்து விட்டுப் போகட்டும், என அமைதி காக்க வேண்டுமே யொழிய, நம் மனத்திலும் வேறுபாட்டை உண்டாக்கிக் கொண்டு அத்தகைய வர்க்கும் தீமை செய்யாது இருத்தலே; நமக்கு நாமே செய்து கொள்ளக் கூடிய சிறந்த நன்மையாகும். தீமைக்குத் தீமை தீர்வாகாது, பகைமையைத் தான் வளர்க்கும். இருபக்கமும் நிறைவின்மையைத்தான் உண்டாக்கும். ஒறுத்தார்க்கொரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் (குறள். 156 ) என்னும் வள்ளுவர் வாக்கை மறந்துவிடக் கூடாது. இகலென்னும் எவ்வநோய் நீங்கின் தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் (குறள். 853) இகல் என்பது துன்பம் தரும் நோய்; ஒற்றுமை என்பது இன்பம் தரும் மருந்து ஆகவே, கவிஞன் பாரதி, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே -நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே, நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த ஞானம் வந்தால்பின் நமக்கெது வேண்டும்? என்னும் அடிப்படையான உண்மையை நாட்டு மக்களுக்கு உணர்த்தினார். ஒவ்வொரு தனி மனிதனும் தனி மனிதனாக வாழ எண்ணாது, அகத்துறுப்பாம் தூய அன்பால், அனைவரையும் அரவணைத்து, மாறுபாடு கொள்ளாக் கூட்டுறவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். குடும்ப ஒற்றுமை காக்கப்பட வேண்டும்; அவ்வாறே மாறுபாடு கொள்ளாத மக்களைக் கொண்டதாக ஊர்கள் அமைய வேண்டும்; அது போல் இனமக்களுக்குள் வேறுபாடோ, கட்சி உறுப்பினர் களுக்குள் மாறுபாடோ? தொழிலகங்களிலோ, நிறுவனங்களிலோ, அலுவலகங்களிலோ, ஆட்சி மன்றங்களிலோ ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும், பகைமையை வளர்க்கும் மாறுபாடு ஏற்படாத ஒன்றுபட்ட சிந்தனை மேலோங்கு மானால், எல்லா நிலைகளிலும் உயர்ந்தோங்கிய வளர்ச்சியினையும், மலர்ச்சியினையும் பெற்று நீடு புகழ் எய்தலாம். இகல் என்னும் துன்பம் தரும் நோய்க்கு இடம் கொடுக்க வில்லையானால் கேடில்லை; குற்றம் ஒழியும் புகழ் உண்டாகும். எவ்வம் என்னும் சொல் துன்பம், வெறுப்பு, இகழ்ச்சி எனும் பொருள்களைத் தரும். தவல் என்றால் தவறு, அழிவு, கேடு எனப்பொருள்படும். தாவில் என்றால் கேடு இல்லாத என்று பொருள். இகலை நோய் என்று மட்டும் தனியே கூறிவிடாமல், இவ்விகலினை எவ்வநோய் என ஏன் கூறியிருப்பார். நோயானது ஓருவனைப் பற்றினால் அவன் அளவில் துன்புறுத்தும், தக்க மருத்துவத்தால் குணப்படுத்தலாம். சில நோய் தானே வந்து தானே போய் விடுவதும் உண்டு. நோய்களில் நலம் தரும் நோய்களும் உண்டு. இவ்விகல் அத்தகைய நோய் அன்று. இது கொண்டவனையும் துன்புறுத்தும், அவனைக் கண்டவனையும் துன்புறுத்தும், குடியையும், இனத்தையும் நாட்டையும், துன்பத்தில் ஆழ்த்துவதற்கு அடிப்படையான நோய், ஆகவே துன்பமே தரும் இவ்விகலை எவ்வ நோய் என்றார் போலும். இகல் அற்ற தன்மை விளக்கம் தரும் என்று மட்டும் கூறாது. அவ் விளக்கம் பிற தன்மைகளிலும் உயர்ந்தது என உணர்த்த, கெடுதல் இல்லாததும், குற்றமற்றதுமான புகழைத் தரும் என்பதை உணர்த்த தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் எனக் கூறியுள்ளதையும். உணர்வுடன் எண்ணிப் போற்ற வேண்டும். ------------- இன்பத்துள் இன்பம் பயக்கும், இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின் (குறள். 854) துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகவும் கொடிய துன்பத்தைத் தோற்றுவிப்பது இகல் என்னும் மாறுபாடே ஆகும். அவ்விகல் என்னும் துன்பம் ஒருவனுக்கு இல்லை யானால் அஃது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தினைத் தரும். மாறுபாடு என்னும் பெருந்துன்பம் ஒழிந்தால் சிறந்த இன்பம் கிட்டும். பரதனைக் கண்டவுடனே வேறுபட நினைந்து இகல் மீதூர்ந்து துன்பம் எய்தித் துடித்த குகன், பரதன் வந்த நோக்கத்தை அறிந்து கொண்டபின் இகல் நீங்கி எப்படி இன்பம் எய்தினானோ, அத்தகைய இன்பத்தை இகலை இல்லை ஆக்கியவர் எய்துவர். கம்பன் கவி வழி காட்சி மாற்றங்களைக் காண்போம். பரதன் வருகையை ஐயுற்று குகன் படையோடு தென்கரை வருதல்:- குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான் தொகைமுரண் சேனையைத் துகளின் நோக்குவான் நகை மிக, கண்கள் தீ நாற நாசியில் புகையுற குனிப்புறும் புருவப் போர்விலான் கட்டிய சுரிகையன் கடித்த வாயினன் வெட்டிய மொழியினன் விழிக்கண் தீயினன் கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன் கிட்டியது அமர் எனக் கிளரும் தோளினன் குகன் உரைத்த வீரவுரை அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே! செஞ்சரம் என்பன தீயுமிழ்கின்றன செல்லாவோ? உஞ்சியிவர் போய்விடின் நாய்க்குகன் என்று எனை ஓதாரோ ஆடு கொடிப்படை சாடி அறத்தவரே ஆள வேடு கொடுத்தது பார் எனும் இப்புகழ் மேவீரோ? நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும் காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ பரதன் நிலை கண்ட குகன் வற்கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை நற்கலையின் மதி என்ன நகைஇழந்த முகத்தானை கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான் விற்கையினின்றும் இடைவீழ, விம்முற்று நின்றொழிந்தான் ஒருவரை ஒருவர் வணங்கித் தழுவ, குகன் பரதனிடம் வந்த காரணம் வினவல்:- வந்து எதிரே தொழுதானை வணங்கினான்; மலர் இருந்த அந்தணனும் தனைவணங்கும் அவனும் அவனடி வீழ்ந்தான் தந்தையினும் களிகூரத் தழுவினான் - தகவுடையோர் சிந்தையினும சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் தழுவின புளிஞர் வேந்தன் தாமரைச் செங்கணானை எழுவினும் உயர்ந்த தோளாய்! எய்திய என்னை என்ன? முழுதுலகு அளித்த தந்தைமுந்தையோர்முறையினின் றும் வழுவினன், அதனை நீக்க, மன்னனைக் கொணர்வான் என்றான் பரதனின் பெருந்தகைமையை உணர்ந்த குகன் அவனை வணங்கிக் கூறல் கேட்டனன் கிராதர் வேந்தன்; கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி மீட்டும், மண் அதனில் வீழ்ந்தான்; விம்மினன் உவகை வீங்க; தீட்டரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில் பூட்டிய கையன், பொய்யில் உள்ளத்தன் புகலலுற்றான் தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி, போயினை என்ற போழ்து புகழினோய்! தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கேழ்ஆவரோ தெரியின் அம்மா! எனக் கம்பன் காட்டும் இக்காட்சி குறளுக்கு ஓவிய விளக்கமாய் அமைந்துள்ளது. இகலுக்கு இடம் தராது இன்புற்று வாழ்வோம். ------------- இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர் (குறள். 855) உலகத்தில் எல்லா வகையாலும் ஒத்திருக்கின்ற இருவரைக் காண முடியாது. ஒரே தன்மையாய்த் தோன்றுகின்ற இரண்டு இலை களையாவது, இரண்டு மலர்களையாவது நுட்பமாக ஆராய்ந்தால் அவற்றிற்குள்ளும் வேறுபாடு காணப்படும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். வேறுபட்டுத் தோன்றுகின்ற இரு பொருள்களுக்குள் ஒற்றுமையும் உண்டு என்கின்றனர். இவ்வாறு ஒற்றுமைக்கு இடையே வேற்றுமையும், வேற்றுமைக் கிடையே ஒற்றுமையும், இயற்கை அமைத்துள்ள பெருமை வியக்கத் தக்கதாக உள்ளது. இந்த உண்மையை உணர்ந்தால், மக்களுக்கு இடையே கருத்து ஒற்றுமை முழுமையாக இருக்க முடியாது என்பதை உணரலாம். ஒருவர் ஒரு செயலைச் செய்வது போல மற்றவர் செய்யவும் முடியாது. ஆகவே, கருத்தும் செயலும் வேறுபடுவது இயற்கை. இந்த வேற்றுமைக்கு இடையே ஒற்றுமையைக் கண்டு, அன்பு கொண்டு நட்புச் செய்வது கடமையே அல்லாமல், சிறு சிறு வேறுபாடு களைக் கண்டு அவை காரணமாக மாறுபாடு கொண்டு பிரிந்து பிளவுபட்டு நிற்பது நல்லது அன்று. ஆனால், உலகத்தில் நாடுகளும், குடும்பங்களும் பிரிந்து மாறுபட்டு நிற்பதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், ஒற்றுமைப் பகுதியைக் கண்டு, அன்பு கொண்டு நட்புச் செய்வது கடமையே அல்லாமல், சிறு சிறு வேறுபாடுகளைக் கண்டு அவை காரணமாக மாறுபாடு கொண்டு பிரிந்து பிளவுபட்டு நிற்பது நல்லது அன்று. ஆனால், உலகத்தில் நாடுகளும் குடும்பங்களும் பிரிந்து மாறுபட்டு நிற்பதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், ஒற்றுமைப் பகுதியைக் காணாமல் வேற்றுமைப் பகுதியைக் கண்டு கண்டு அதை வளர்ப்பதையே கலையாகப் போற்றுவதாகும். அதிலும் நெருங்கிப் பழகுகின்றவர்களுக்குள்ளேயே இந்த மாறுபாடு மிகுதியாக உள்ளது. உடன் பிறந்தார்களுக்குள் இருக்கும் மாறுபாடு வெளியார்க்குள் இல்லை. ஒரு நாட்டு மக்களில் இரு கட்சியார்க்கு இருக்கும் மாறுபாடு ஒரு நாட்டாருக்கும் மற்றொரு நாட்டார்க்கும் இடையே இருப்பது இல்லை. இப்படி மாறுபாடு வளரும் போது, ஒருவர் அல்லது ஒரு சாரார் அதைப் பொருட்படுத்தாமல் விட்டுக் கொடுத்து நடப்பார்களானால் மாறுபாடு முற்றாது மெல்ல மெல்ல மறைந்து பழைய அன்பு வாழும்; நட்பு வளரும்; நன்மை விளையும். மனத்தில் தோன்றுகின்ற மாறுபாட்டை உடனே தாமே விலக்கி நடக்கும் பண்பாடு போற்றும் வல்லவரை, மாறுபாட்டை வளர்க்கும் தன்மை உடையவராய் மாற்றுதல் எவராலும் இயலாது. மாறுபாட்டிற்கு இடந்தராது விலகி நடப்பவரை எவராலும் மாறுபாட்டாளராய் ஆக்க இயலாது. மிகலூக்கல் என்னும் தொடருக்கு வெல்லக் கருதுதல் மேம் பாட்டைத் தள்ளுதல் கோபத்தைத் தூண்டுதல் இகலின் மிகுமாறு ஊக்குதல் என அறிஞர்கள் பொருள் கூறுவர். தலைப்புக்கு ஏற்றவாறு இகலின் மிகுமாறு ஊக்குதல் எனக் கொள்வதே ஏற்புடையது ஆகலாம். இகல் மீக்கொண்டு, தமக்கு எப்பொழுதும் விசுவாமித்திரர் இடர் இழைத்து வந்தும் அதற்கு எதிராகச் செயல்படாமல் வசிட்டர் ஒதுங்கி ஒழுகியது போல் ஒருவன் இகலுக்கு இடந்தராமல் எதிர் சாய்ந்து அமைந்து ஒழுகுவானாயின் அவன் வெற்றியாளனாகவும் புகழாள னாகவும் விளங்குவான். ------------- இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து (குறள். 856) பிறன் தன்னோடு மாறுபடும் போது, அவனைவிடத் தான் எந்த வகையில் தாழ்ந்தவன் எனக் கருதி, அவனைக் காட்டிலும் தான் மிகுதியாக மாறுபட்டு நிற்பதே பெருமை எனக் கருதி, எவன் இயங்குகிறானோ அத்தகையவனது வாழ்க்கை அழிந்து போவதோடு அவனும் விரைந்து அழிந்து போவான். இகலை மிகுதியாக விரும்புவன் வாழ்வும் வளமும் விரைந்து கெடும். இகலை இனிது எனக் கருதி விரும்புபவன், தன் கழுத்தில் தானே கயிறிட்டுத் தொங்கியவன் போல் கெட்டொழிவான். பேரெழில் இளமை ஆற்றல் பெறலரும் வெறுக்கை வீரம் நேரறு சுற்றம் யாக்கை யாவையும் நிலையவன்றே சீரெனப் பட்டதன்றோ நிற்பது, செறுநர் போரில் ஆருயிர் விடினும், வானோர் அருஞ்சிறை விடுவதுண்டோ இறந்திடவரினும் அல்லால் இடுக்கண் ஒன்று உரினும் தம்பால் பிறந்திடு மானந்தன்னை விடுவரோ பெரியரானோர் சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பியானும் துறந்திடேன் பிடித்த கொள்கை சூரன் என்றொருபேர் பெற்றேன் எனச் சூளுரைத்து நின்ற சூரபன்மன் போல் இகலிலேயே மிக ஊக்கி நிற்பவன் வாழ்க்கை முற்றும் பாழ்பட்டு அழிந்து போவான். மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார், இகல்மேவல் இன்னா அறிவி னவர் (குறள். 857) எவர் சொன்னாலும் கேட்பதும் இல்லை; எவருடனும் எச் செயலிலும் ஒத்துப் போவதுமில்லை. தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவனாகக் கருதிக் கொண்டு, மாறுபட்டு எண்ணுவதையும், பேசுவதையுமே வழக்க மாக்கிக் கொண்ட தீய அறிவினர். அதனை மேலும் மிகுதிப்படக் கொள்வாராயின் அவர், எளிதாகப் பிறர்காணும் உண்மைப் பொருளைக் கூட மிக முயன்றாலும் காணமாட்டார். எவரிடமும் மாறுபாடு கொள்ளும் இயல்பினர். நல்லறிவு உடையவராய் இருக்க மாட்டார். அத்தகையோர் மேன்மை தரும் மெய்ப் பொருளையும் காணார். நெஞ்சு பொறுக்கு திலையே - இந் நிலைகெட்ட மனதிரை நினைந்து விட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ? ஐந்து தலைப் பாம் பென்பான் - அப்பன் ஆறுதலை என்று மகன் சொல்லிவிட்டால் நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார் சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும்-ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார். சூது செய்யும் நீசர்களைப் பணிந்திடுவார், ஆத்திரம் கொண்டே இவன் சைவன் - இவன் அரிபக்தன் என்று பெருஞ்சண்டை யிடுவார் எனப் பாரதியார் அவர்காலத்து இந்திய மக்களின் நிலை குறித்து வருந்திப் பாடிய பாடற்பகுதி குறளுக்கு விளக்கமாய் அமைகிறது. ஊனவில் இறுத்து, ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டி கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து, உயர்வனம் குறுகி, யான் இழைத்திட இல்இழந்து, இன்னுயிர் சுமக்கும் மானுடன் வலி, நீ அலாது யார் உளர் மதித்தார் என இராவணன் சினந்து நகைத்து வீடணன் வேண்டு கோளை மறுத்துக் கடிந்து பேசியவற்றுள் அமைந்த இக் கம்பராமாயணப் பாடல் ஏற்ற இலக்கிய மேற்கோளாகும். திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று (குறள். 167) எனப் பொறையுடைமையிலும், அறிவினுள் எல்லாம் தலையென்ப, தீய செறுவார்க்கும் செய்ய விடல் (குறள். 203) எனத் தீவினை அச்சத்திலும் ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும், கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை (குறள். 579) எனக் கண்ணோட்டத்திலும் உணர்த்தப்பட்ட குறள் நெறியை மேலும் வலியுறுத்தி உரைக்கும் குறட்பாவே, இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம்; அதனை மிகலூக்கின் ஊக்குமாம் கேடு (குறள். 858) மாறுபட்ட நோக்குடன் இயங்குவோரிடம் தாம் மாறுபடாமலும் நட்பும் கொள்ளாமல் அதனுடன் எதிராளியின் முனைப்புக் கெடுமாறு, எதிர்த்து நிற்காமல் சந்திப்பைக் குறைத்து ஒதுங்கிச் செல்லுதல் நன்மை தரும். அவ்விதம் நடந்து கொள்ளாமல் அம்மாறுபாடு மிகுமாறு ஊக்கப்படுத் தினால் அவ்வூக்கம் அழிவையே ஊக்கப்படுத்தும். இகலுக்கு இடம் தராது ஆக்கம் பெற வேண்டுமே யொழிய, இகலை ஊக்கிக் கேட்டினைத் தேடிக் கொள்ளதீர்! மக்களிடையே நிலவ வேண்டிய உயர்ந்த உறவு முறையே அறம் என்கிறார் சட்ட அறிஞர் ரெட்பர்ச் மக்கள் இயைந்து வாழ்வதற்கு, நாகரிகமாக நல்வாழ்வு நடத்துவதற்கு ஏற்றவையெல்லாம் அறநெறி என்பது இவரது சமுதாயக் கோட்பாடு இகலை, அழித்துச் சமுதாயம் இன்பத்துள் இன்பத்தைப் பெற வேண்டும் என்பது திருவள்ளுவரின் சமுதாய இன்பக் கோட்பாடு ஆகும். அனைத்து நாட்டுக் கல்வி பண்பாட்டு அறிவியல் கழகம் உலக மக்களை முன்னேற்றவும் உலக அழிவைத் தடுக்கவும் பல நாட்டு நல்லறிஞர்களால் தோற்றுவிக்கப் பட்டதே பன்னாட்டு அமைப்பாகும். அதன் குறிக்கோளை, அக்கழக அமைப்பின் முகப்புரை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. போர் எண்ணம் மக்களுடைய மனங்களிலே தோன்றுவதால், அம்மக்களின் மனங்களில்தான் அமைதிக்கான சமாதானக் காப்புகளை நிலைபெறச் செய்ய வேண்டும் ஈராயிரம் ஆண்டு கட்கு முன்பே திருவள்ளுவர் இக்கருத்தை மேலும் தெளிவாகக் கூறுவதை இக்குறட்பாவால் உணரலாம். இகலிற்கு எதிர் சாய்ந்து ஆக்கம் பெற்றவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். காந்தியடிகள், பேரறிஞர் அண்ணா, புத்தர் மகாவீரர் ஆவர். இகலிற்கு எதிர்சாய்தல் இல்லாமல் சின்னஞ்சிறிய காரணங்களைப் பெரிதுபடுத்தி ஒருவரோடு ஒருவர் மாறுபட்டு நிற்கும் தன்மையால் தான் தமிழினம் வளர வேண்டிய நோக்கில் வளர இயலவில்லை. எதிராளிகள் தமிழினம் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி, மாறுபட்டு இயங்குவதற்குரிய விதைகளை விதைத்து வருகிறார்கள்; அதனையும் உணர முடியாமலும், உணர்ந்தாலும் இனத்தை முன்னிலைப்படுத்துவதற்குப் பதில் தன்னையே முன்னிலைப்படுத்துவ தால் முன்னேற முடியாமல் திண்டாடுகிறது. தனிமனிதன், இல்லம், ஊர், இனம், கட்சி, நாடு என அனைத்து நிலையிலும் இகலிற்கு எதிர் சாய்தல் இன்றி, இகல் மிக ஊக்கியதால் நாளும் கேட்டினை விளைவித்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணமுடியும். ------------- துன்பம் பிறர்க்கு நல் இன்பம் தமக்கெனும் துட்ட மனோபாவாம் அன்பினை மாய்க்கும்; அறம் குலைக்கும்; புவி ஆக்கந்தனைக் கெடுக்கும்! வன்புக் கெலாம் அதுவேதுணை யாய்விடும் வறுமை யெலாம் சேர்க்கும்! என மனவளம் இன்மையால் நேரும் கேட்டினைப் புகன்று தம் வேதனையைப் பாவேந்தர் வெளிப்படுத்துவார். யார் யாரிடம் எல்லாம் இணைங்கிச் சேர்ந்திருந்தால் நன்மை கிட்டும் எனக் கருதுகிறார்களோ அவர்கள் தவறு புரிந்தாலும் குறை சொல்ல மாட்டார்கள்; அவர்கள் தகுதி உடையவர்களா? தகுதியற்றவர்களா? என்றும் ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்; அவர்களிடம் உண்மையிலேயே மாறுபடுதற்கு உரிய தன்மைகள் குடி கொண்டிருந்தாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது அவர்களிடம் வேற்றுமை பாராட்டாது கூட்டாளியாகக் கொள்வார்கள். இது தனது நன்மையாக நடிக்கும் நாடகமாகும். ஆனால் அவர்களே பிறர் ஆக்கம் பெற்றுவிடக் கூடாது; அவர்கள் கேட்டிற்கு ஆளாக வேண்டும் என்று எவர் எவரைக் கணக்கிட்டிருக் கிறார்களோ அவர்களிடமெல்லாம் மாறுபட்டுக் காரணம் இல்லாமலும், அவர் எத்தன்மையர் என்பதையும் பாராமல் கேடு செய்ய எண்ணுவர். இவர்கள் தந்நலக் காரர் மட்டுமல்லர், வஞ்சகர், தீயவராவார். இவர்கள் நன்மை கிட்டுமானால் நல்லவராக நடிப்பார். மற்றவர்க்கு கேடுதரற்கு எவரிடமும் மாறுபாட்டை வளர்க்கும். மனிதப் போலிகள் ஆவர் என இவர்களை அடையாளம் காட்டும் குறளே, இகல்காணான் ஆக்கம் வருங்கால், அதனை மிகல்காணும் கேடு தரற்கு (குறள். 859) அரசியலில் யாரும் நிலையான நண்பர்களும் அல்லர்; யாரும் நிலையான பகைவர்களும் அல்லர் என்னும் முழக்கத்துடன் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியை மாற்றிப் புதுப்பித்துக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் செயல்பாடே இக்குறளுக்கு தக்க எடுத்துக் காட்டாகும். தனக்கு நலம் கிட்டுமானால் எவரிடமும் வேற்றுமை பாராட்ட மாட்டார்கள். பிறரைக் கெடுக்கவே வேறுபாட்டை மிகுதிப் படுத்துவர் இவர்கள் கொள்கை வாதிகள் அல்லர்; வாய்ப்புப் போல் தம் போக்கை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்ப வாதிகள். கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி (குறள். 115) மறந்தும் பிறன்கேடு சுழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (குறள். 204) எனும் குறள் நெறியை மறந்துவிடல் ஆகாது. பிறரொடு கலந்து மகிழும் திறமுடையவர் அல்லாதவர்க்கு மிகப் பெரிய இவ்வுலகம் பகற்பொழுதும் கூட இருள் மூடப்பட்ட பொழுதேயாம் என்பதை, நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள் (குறள். 999) என்னும் பண்புடைமைக் குறள் தெரிவிக்கும். சுற்றத்தினரோடு இரண்டறக் கலந்து அளவளாவுதல் இல்லாதவன் வாழ்க்கை, கரையே இல்லாத குளத்தில் நிறைந்த நீர் போன்றதாகும் எனும் கருத்தை, அளவளா வில்லாதான் வாழ்க்கை, குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள். 523) எனும் சுற்றம் தழால் குறள் வழி அறிகிறோம். பிறரொடு இன்புற உரையாடி நட்புக் கொள்ளும் திறம் அறியாதவரே பிரிவு உண்டாகுமாறு வேண்டாத பேசி உறவினரையும் பிரித்துவிடுவர் என்னும் குறிப்பைப் பகச்சொல்லி கேளிர் பிரிப்பர், நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் (குறள். 187) எனும் புறங்கூறாமை அதிகாரக் குறள் வழி அறிகிறோம். அகன்அமர்ந்து தீதலின் நன்றே முகன்மர்ந் தின்சொல னாகப் பெறின் (குறள். 92) என்னும் இனியவை கூறல் அதிகாரக் குறளையும் இவ்வதி காரத்திலேயே இடம் பெற்றுள்ள இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின் (குறள். 854) என்னும் குறட்பாவின் கருத்தையும் ஒருங்கே திரட்டிடக் கொண்டு சிந்திக்க வேண்டிய குறளே இகலானாம் இன்னாத வெல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு (குறள்.860) என்பதாகும். துன்பங்களுக் கெல்லாம் அடிப்படைக் காரணம் மக்களை ஒருவரோடு ஒருவரை இணையவிடாமல் தடுக்கும் மனமாறுபாடே ஆகும். அதன் முதல் அறிகுறி கடுகடுத்த பார்வையும் வெறுப்பும் ஆகும். மனத்தில் முதலில் தோன்றும் வெறுப்பைப் போக்கி, அன்பையும் ஆர்வத்தையும் உருவாக்கி முகமலர்ச்சி கொண்டு இனிய சாற்களால் பேச முற்பட்டால் இகல் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும். அத்துடன் நமக்கும் மனித நேயம் மிக்க பண்பாளன் என்னும் பெருமைக் குரிய நற்பெயரையும் ஈட்டித் தரும். துன்பமெல்லாம் தரும் இகலுக்கு இடம்தரேல்; சிரித்துப் பழகு. நல்ல நட்பு நலமும் பெருமையும் நல்கும். நேரலார் தங்களை நேர்ந்துளர் எனப் பேரிகல் ஆற்றியே பெரிது மாய்வதும் பூரியர் கடன் அலால் புலமைக்கு ஏற்பதோ? சீரியர் கடனவை தெரிந்து செய்வதே. என்னும் கந்தபுராணப் பாடலும் தக்க மேற்கோளாகும். யாரொடும் பகைகொள்ளலன் என்றபின் போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன் தார் ஒடுங்கல் செல்லாது; அதுதந்தபின் வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? என்னும் இப்பாடல் வசிட்டமுனிவர் இராமனுக்குக் கூறிய உறுதிப் பொருளில் ஒன்றாகக் கம்பர் பாடியுள்ளார். இப்பாடலும் ஏற்புடைய எடுத்துக்காட்டே ஆகும். ------------- இகல் என்பது மாறுபாடாகும் இகல் என்பது பகைமையாகிய பண்பின்மையை வளர்க்கும் நோயாகும் பகைவர்க்கும் இன்னா சொய்யாதீர் இகல் அகற்றி நற்புகழ் பெறுக! இகல் துன்பம் தரும் நோய் இகல் ஒழிந்தால் நல்லின்பம் விளையும் துன்பத்துள் துன்பம் இகல் இகலை விலக்கியவரிடம் யாரும் மாறுபடார் இகலை விரும்புவான் விரைவில் கெடுவான் இகலை விரும்புவோர் இன்னா அறிவினர் இகல் விரும்பி மெய்ப்பொருள் காணான் இகல் இலான் ஆக்கம் பெறுவான் இகலுக்கு இடந்தந்தவன் அழிவைத் தேடுபவன் தான் நன்மை அடைய மாறுபடான் பிறனைக் கெடுக்க மாறுபடுவான் மாறுபாடே துன்பங்களின் தாய் புன்னகை நட்பை வளர்க்கும் சிரித்துப் பழகிச் சிறப்பினைப் பெறுக நகைமுகத்தால் பண்பாளன் என்னும் பெருமை அடையாளம் நல்லுணர்வு நல்லுறவை உண்டாக்கும் ------------- 87. பகை மாட்சி மாறுபாட்டைப் பாராட்டாமல் மறந்து ஒழுகுவதால் நன்மை உண்டு. ஒருவர் மாறுபாட்டையே பாராட்டி வந்தாலும், மற்றொருவர் ஒற்றுமைக்கு உரிய பகுதிகளையே பாராட்டி உறவு கொண்டாடுவதால் அந்த மாறுபாடு மறைவதும் உண்டு. ஆனால், எண்ணத்தளவில் நிற்காமல், செயலளவில் அதை வளர்த்து அழிவு வேலை தொடங்குவோரை என்ன செய்வது? அவர்கள் செய்யும் தீமையை எத்தனை முறை பொறுப்பது? பொறுப்பதாலும் பயனில்லை என்று பட்டறிவால் உணரும் போது வாளா இருக்க முடியுமா? தனி வாழ்வில் அவ்வாறு பிறர் தீமை செய்யச் செய்ய பொறுமையே மேற்கொண்டு வாழலாம்: பிறர் செய்யும் தீமையை ஏற்று அழியினும் அழியலாம்; இது அறத்துப் பாலில் காணும் அறநெறியாகும். ஆனால், பொதுவாழ்வில் பிறர் தீமையைப் பொறுப்பதற்கு ஓர் அளவு உண்டு; இன்னா செய்யாமல் வாழ்வதற்கு ஓர் எல்லை உண்டு. அந்த அளவு மீறின் பொறுப்பதே குற்றமாகும். பகையைத் தாக்கி அழிக்காமல் வளர விடுவதே குற்றமாகும். ஏன்? பொது வாழ்வில் பலருடைய நல்வாழ்வைப் போற்றுவது அறம் ஆகுமே அல்லாமல், தீமை செய்யும் சிலரைப் பொறுத்து அவர்களுக்கு இடம் கொடுப்பது அறம் அன்று. தீமை செய்யும் சிலரை ஒறுத்து அடக்கி வெல்ல முயல்வது அறம் ஆகுமே அல்லாமல், அவர்கட்கு இயைந்தாற் போல் நடந்து பலருடைய வாழ்வில் அமைதி குலைவதையும், அல்லல் மிகுவதையும் பார்த்துக் கொண்டிருப்பது அறம் அன்று. ஆகையால், இகல் வேண்டா என்று அறிவுறுத்தியது திருவள்ளுவர் வேறு வழி இல்லாமல் வளர்ந்து விட்ட பகைமையை ஒழிப்பதே கடமை என்று இங்கு கூறுகின்றார். பகை என்னும் சொல்லில் பகுப்பு அல்லது பிரிவு என்றுதான் பொருள் கொள்ள இடம் இருக்கிறதே அன்றி, ஒருவர்க் கொருவர் கெடுதி செய்து கொள்வதைப் பற்றிக் கருத்து இல்லை. பகை கொண்டவர் என்றால் ஒருவருக்கொருவர் நீங்கி இருக்கின்றார் என்று மட்டும்தான் கருத்தாகும். ஒன்றார் என்னும் சொல்லானும் இவ்வுண்மை தெளிவாகிறது. பொருந்தார் என்பது மட்டுந்தான் அதற்குக் கருத்து. ஒன்றாத செயல் ஒரோஒருகால் தீங்கு செய்யும் நிலையில் முற்றி விடுதலும் உண்டு. அந்நிலையில் பகைமை என்பது செற்றம் என்று வழங்கப்படும். மாறுபட்டோர் ஆகிய மாற்றாரை அது செறுகின்ற நிலைமை அடைந்து விடுகின்றது. அதிகாரத்தின் தலைப்பு பகைமாட்சி என்பதாகும். அது பகையினது மாட்சி என விரியும். மாட்சி மாண்பு ஆகும். மாண்பு நன்மை எனும் பொருள் தரும் நற்சொல் ஆகும். பகை தரும் நன்மையையும்; பகைக்கத்தக்கவரை பகைக்க வேண்டும்; அத்தகையோரைப் பகைப்பது பெருமை தரும். நல்ல குடியில் பிறந்து, தனக்கு உண்டாகும் பழிக்கு வெட்கம் உறுகின்றவனை அவன் விரும்புகின்றவற்றைக் கொடுத்தும் நட்புக் கொள்ளுதல் வேண்டும் என்பதைக் குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு (குறள். 794) என நட்பாராய்தல் அதிகாரத்தில் வேண்டியவர் திருவள்ளுவர். அத்துடன் ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் (குறள். 797 ) எனவும் வேண்டினார். அதனுடன் அமையாது. மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு (குறள். 800) என்னும் வேண்டுதலும் வள்ளுவர் உடையதே. நல்லினத்தின் னூங்குந் துணையில்லை; தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். (குறள். 460) எனச் சிற்றினஞ் சேராமல் நல்வழி காட்டுபவரும் திருவள்ளுவரே. சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும் பொறைக்கு சங்கச் சான்றோர் நரிவெரூஉத் தலையார் அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல் குழவி கொள்பவரின் ஓம்பு மதி என வழங்கும் அறிவுரையையும் எண்ணிப் பார்ப்போம். வின்சுடன் சர்ச்சில் இங்கிலாந்தின் தலைமை அமைச்சராக இருந்த பொழுது மேசர். சர்.பால் பெரிசு என்பவர் சர்ச்சிலின் செயலராகப் பணி புரிந்து வந்தார். தன் நண்பர் ஒருவருக்கு அரசுப் பணியகத்தில் ஒரு வேலை கொடுத்து உதவ வேண்டிய சூழ்நிலை சர்ச்சிலுக்கு ஏற்பட்டது. வேலையில் அமர்த்தம் செய்யும் அதிகாரம் செயலர் பெரிசிடம் இருந்ததால் சர்ச்சில் தன் நண்பருக்கு ஏதாவது ஒரு வேலை போட்டுக் கொடுக்கும்படி செயலருக்கு அந்த நண்பர் வழியாக ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார். செயலர் பெரிசிடமிருந்து சர்ச்சிலுக்கு வந்த மறுமொழி தங்கள் நண்பர் எந்தப் பதவிக்கும் பொருத்தமானவர் அல்லர் என்பது. கடிதத்தைக் கண்டதும் ஆத்திரம் அடைந்த சர்ச்சில் நண்பருக்கு உதவ முடியவில்லையே என்று வேதனைப்பட்டு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். நாட்டின் தலைமை அமைச்சராக இருக்கும் தான், என் நண்பருக்கு வேலை கொடுக்கப் பரிந்துரை செய்யக் கூடாதா? என்று கேட்டிருந்தார். அக்கடிதத்திற்குச் செயலர் பெரிசு அனுப்பிய பதில். தலைமை அமைச்சர் அவர்களே! திறமையானவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள். அல்லது திறமை இல்லாதவர்களை விட்டு விலகி விடுங்கள் எனபதாகும். நிறைவில் பெரிசு அளித்த மறுமொழியில் காணப்படும் தொடர்கள் அனைவரும், சிறப்பாகப் பெரும் பொறுப்புகளில் அமர்ந்திருப்போர் பின்பற்ற வேண்டிய தொடர்கள் ஆகும். அன்பிலன், ஆன்ற துணையிலன், தான் துவ்வான், அச்ச முடையவன், அறிவிலான்,அமைவிலான், ஈகலான், வெகுளியுடையவன் நிறையிலன், வழி நோக்கான், வாய்ப்பன செய்யான், பழிநோக்கான், காணாச்சினத்தன், கழிபெருங் காமத்தன், மாணாத செய்வான், பண்பிலான், என்னும் பதினாறு வகையினரும் நட்புக் கொள்ளத் தகுதியற்றவர்கள் ஆவர். இத்தன்மையரை நெருங்கவிடக் கூடாது. சேர்ந்து இருப்பவரிடம் இத்தன்மை பொருந்தி இருக்குமானால் பிரிந்து விட வேண்டும். அல்லது பிரித்து விடுதல் வேண்டும். பிரிப்பதும் எண்ணிப் பார்த்துச் செய்ய வேண்டிய நுண்மை உடையதாகும். அதிலும் யாரைப் பிரிக்க முடியுமோ அவர்களையே பிரித்தல் வேண்டும். யாரைப் பிரிப்பதால் நன்மை உண்டாகுமோ அத்தகையவர்களைப் பிரிக்க வேண்டும். யாரைப் பிரித்தால் கேடு விளையுமோ அவர்களைப் பிரிக்க முயலக் கூடாது. பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் கைக்கொள்ள வேண்டிய நுட்பங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு விளக்கும் அருமையான அதிகாரமே பகை மாட்சி ஆகும். ஒருவன் தன்னினும் வலிமை குறைந்தவனைத் தாக்கச் செல்லும் போது, தான் தன்னைப் பார்க்கிலும் வலிய ஒருவன் முன் நிற்கும் நிலையுண்டானால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்து நடந்து கொள்ளுமாறு, வலியார்முன் தன்னை நினைக்கத் தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து (குறள். 250) என அறத்துப் பாலில் அருளுடைமை அதிகாரத்தில் தனி மனித வாழ்வுக்கு நெறிகாட்டிய வள்ளுவரே பொதுவாழ்வில் மேற்கொள்ள வேண்டிய வழி முறை பற்றிக் கூறும் போது பின்பற்ற வேண்டிய நுட்பத்தை, இப்பகை மாட்சி அதிகாரத்தின் தொடக்கக் குறளாகக் கூறுவதே, வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேல் மேக பகை (குறள். 861) எனும் குறளாகும். பகை கொண்டு பொது வாழ்விற்கு நன்மை செய்ய முயலும் போது, யாருடன் பகை கொள்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். வெல்லக் கூடிய இடத்தில் மட்டுமே பகை கொள்ள வேண்டும். தம்மைவிட வலிமை மிகுந்தவர்களைப் பகைத்து எதிர்ப்பதால் நோக்கம் நிறைவேறாது தோல்வியும் அழிவும் நேரும். ஆகையால் அவர்களை எதிர்க்காமல் இருந்து துன்புறுவதே நல்லது. வலியவர்களோடு மாறுபட்டுப் பகைமை கொள்வதைக் கைவிட வேண்டும். மெலியவர்களோடு பகை கொள்வதை விரும்பி மேற்கொள்ள வேண்டும். திருவள்ளுவர் இங்கே ஓம்பா மெலியார் எனக் குறித்துள்ளார். தம்மைத்தாமே காத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாத மெலியவர் ஆகவே அத்தகைய மெலியார் மேல் பகை கொள்வதை விரும்பி வரவேற்க வேண்டும். எனவே தான் வலியறிதல் அதிகாரத்தில், வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் (குறள். 471) என வலி அறிந்தே, வெல்லும் வலிமை இருந்தால்தான் களத்தில் இறங்க வேண்டும். தன்னின் மிக்க ஆற்றல் வாய்ந்த பகைவனோடு போர் செய்தல் ஆகாது; மேகம் ஒரு பொழுதும் காற்றிற்கு எதிர்முகமாகச் செல்வதில்லை என்பதே அதற்கு எடுத்துக்காட்டு ஆகும் எனக் கூறும் சுக்கிர நீதியையும் ஒப்பு நோக்குக! வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை புலிகலாம் கொல்யானைப் பூங்குன்ற நாட! வலியலாம் தாயக்கு வலித்து ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க போற்றாது கொண்டு அரக்கன் போரில் அகப்பட்டான் நோற்ற பெருமை உடையாரும் கூற்றம் புறங்கொம்மை கொட்டினார் இல் என்னும் பழமொழிப் பாடல்களும் ஏற்ற எடுத்துக் காட்டுகளாகும். ------------- அன்பிலன்; ஆன்ற துணையிலன்; தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு (குறள். 862) பகைவன் வலிமையை அழிக்க வேண்டுமானால் ஒருவனிடம் இன்றி யமையாது இருக்க வேண்டுவன யாவை? அன்புடைமை ஆன்ற துணை யுடைமை, ஊக்கமுடைமை ஆகிய மூன்றும் அமைந்திருக்க வேண்டும். ஆகவே தான் திருவள்ளுவர் ஒருவன் அக உறுப்பாகிய அன்பு இல்லாதவனாகவும், சிறந்த துணை இல்லாதவனாகவும், அவற்றோடு தானும் வலிமை இல்லாதவனாகவும் இருப்பானேயானால் அவன் தன் மேல் வரும் பகைவன் வலிமையை எங்ஙனம் தொலைப்பான்? என வினவுகிறார். பகைவன் வலிமையைத் தொலைக்க இயலாது. தனக்கும் வலிமை இருக்க வேண்டும்; வலிமை வாய்ந்த சிறந்த துணையும் இருக்க வேண்டும். இருந்தால்தான் தன்னை எதிர்க்கும் பகைவன் வலிமையைத் தொலைக்க முடியும். திருவள்ளுவர் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்: என்பரியும் எதிலான் துப்பு எனப் பகைமாட்சி அதிகாரத்தில் வினவுவது வெளிப்படை யாகப் புரிகிறது. அவ்விரண்டிற்கும் முன் அன்பிலன் எனக் கூறுவதை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. அன்பிலார் தமக்கு எது கிடைத்தாலும் தாமே வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பாரே அல்லாமல் எதையும் எவர்க்கும் மனம் உவந்து வழங்க வேண்டும் என மனத்தால் கூட நினைக்க மாட்டார். அன்பிலார் பாலை வனத்தில் நட்ட பட்ட மரம் போன்றவர், அன்பிலார் எலும்புக் கூட்டைத் தோல் கொண்டு மூடிய உயிரற்ற உடம்பினரே ஆவர், அன்பிலார் பிறர் நலம் நாடும் ஆர்வம் கொள்ளார். அன்பிலார்க்கு நல்ல நண்பர்களும் கிடைக்கவும் மாட்டார்கள்; இவர்கள் நல்ல நண்பர்களைத் தேடிடவும் மாட்டார். எலும்பு இல்லாத சிற்றுயிர்களை வெயில் காய்ந்து வருத்துவதுபோல் அன்பிலார் அறக்கதிரின் தாக்குதலுக்கு ஆளாவர். அன்பிலார் இல்வாழ்க்கையும் பண்பற்ற வாழ்க்கையாகத்தான் அமையும். அன்பிலார் கொலைக்கு அஞ்சார். அன்பிலார் சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகார். அன்பிலார் வேந்தலைக்கும் கொல் குறும்பராய் இருப்பர். அன்புடையார் தம் பொருளை மட்டுமன்றிப்பிறர் நலம் கருதித் தம் உடல் உறுப்புகளையும் வழங்கத் தயங்கார். அன்புடையார் பிறர் நலம் கருதி உழைக்கவே இவ்வுடலைப் பெற்றுள்ளோம் எனக் கருதிப் பிறர் துன்பம் கண்டு உருகுவர். அன்புடையார் அனைவரையும் விரும்பி அரவணைத்துக் கொள்வார். அன்புடையார் நட்பைப் பெருக்கி வாழ்வர். எவர்க்கும் தீங்கு எண்ணார்; எவ்வுயிரையும் துன்புறுத்தார் எப்போதும் சுற்றத்தார் சுற்றப்பட வாழ்வர்; நாடு நலமும் வளமும் பெறத்தம் பங்களிப்பை வழங்கிக் கொண்டே இருப்பர். என்றவாறு சிந்திக்க வழிகாட்டும் வள்ளுவர். அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை (குறள். 76) என்னும் குறட்பாவில் மறத்திற்கும் அஃதே துணை எனக் கூறியுள்ள நுட்பத்தை உணர்ந்தால் அன்பிலன் .......... ஏதிலான் துப்பு என்பரியும் என அன்பிற்கு முதன்மை தந்தது புலப்படும். அன்பும், அமைந்த துணையும் தன்னாற்றலும் உடையவன், பகைவனின் வலிமையை எளிதில் அழிப்பான். ------------- எத்தகையவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்? என்னும் வினாவிற்கு விடையாய் அமைந்துள்ள குறளே, அஞ்சும்; அறியான்; அமைவிலன்; ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு (குறள். 863) என்பதாகும். திருவள்ளுவர் நாடாள்பவரிடம் குறையாது அமைந்திருக்க வேண்டிய இயல்புகளை அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு (குறள். 382) என இறை மாட்சியில் வரையறை செய்து உரைத்துள்ளார். அஞ்சுவ தஞ்சாமை பேதைமை; அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில் (குறள். 428) என அறிவுடைமையில் அஞ்சுவதற்கும், அஞ்சாமைக்கும் இலக்கணம் கூறினார். அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் (குறள். 497) என இடனறிதலில் அஞ்சாமையின் சிறப்பை எடுத்துரைத்தார். உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை (குறள். 761) எனும் படை மாட்சிக் குறள் வழி அஞ்சாத வெற்றிப்படை நாடாள் வோருக்கு முதன்மையான செல்வ மாகும் என உரைத்தார். எந்நிலை மாந்தரும் எவர்க்கும் எதற்கும் அஞ்சாதவராய் இருக்க வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருப்போர் தாம் அச்ச மற்றுச் செயல் புரிவதுடன் பகைவர்க்கு அச்சமூட்டுபவராகவும் கட்டாயம் அமைந்து இருக்க வேண்டும். அறிவுஅற்றம் காக்கும் கருவி, செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் (குறள். 421) அறிவுடையார் ஆவது அறிவார் (குறள். 427) எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் (குறள். 429) அறிவுடையார் எல்லாம் உடையார் (குறள். 430) என அறிவின் ஆளுமைப் பயனை அறிவுடைமையில் விளக்கியவர் திருவள்ளுவர். ஒழுக்க முடைமை குடிமை (குறள். 133) ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை (குறள். 137) நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் (குறள். 138) பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை (குறள். 132) என ஒழுக்கத்தால் அடையும் நலப்பாடுகளை ஒழுக்க முடைமையில் உரைத்தவர் திருவள்ளுவர். நல்லா றெனினும் கொளல்தீது; மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (குறள். 222) ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் (குறள். 223) சாதலின் இன்னாத தில்லை, இனிததூஉம் ஈதல் இயையாக் கடை (குறள். 230 ) என வறியார்க்கு வழங்கி வாழ்வதே வாழ்க்கை நெறி என்பதை ஈகை அதிகாரத்தில் உணர்த்தியவர் திருவள்ளுவர். ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல தூதியம் இல்லை உயிர்க்கு (குறள். 231) உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ் (குறள். 232) எனப்புகழ் அதிகாரத்தில் ஈத்துவக்கும் இன்பமும் பயனும் அடைய வேண்டிய வள்ளுவர். பெரும் பெரும் பொறுப்புகளில் உள்ளவர்களிலும் அஞ்சி அஞ்சிச் சாகிறவர்களும் தீது ஒரீஇ நன்றின்பால் உய்க்கும் அறிவு இல்லாப் பேதையர்களும், ஒழுக்கம் பேணா இழி பிறப்பாளர்களும், அறனறிந்த மூத்த அறிவுடை யாரிடம் கேண்மை கொள்ளாது, இழி குணத்தவர்களே எப்பொழுதும் தம்மைச் சூழ்ந்திருக்குமாறு வாழ்பவர் களும், ஈத்துவக்கும் இன்பம் அறியாது, தாம் தேடிச் சேர்த்த பொருள்களில் எதையும் எவர்க்கும் வழங்காது தாமே தனித்துத் துய்ப்பவர்களும் இருக்கிறார்களே இவர்கள் ஏற்றுள்ள பதவி நிலைக்குமா? இத்தகை யோரைப் பகைவர்கள் ஒரு பொருட்டாக எண்ணார்; விரைவில் எளிதாக இவர்களை அழித்து விடுவார்களே ஏன் இப்படி இருக்கிறார்கள் என அவர்கள் பால் இரக்கம் கொண்டு வருந்துகிறார். அஞ்ச வேண்டாதவற்றுக்கு அஞ்சுபவன்; அறிய வேண்டியதை அறியாதவன்; நல்லவர்களுடன் பொருந்தி நடக்காதவன் நல்லொழுக்கம் இல்லாதவன் வறியவர்வாட்டம் போக்க வழங்கி வாழாதவன் பகை வனால் எளிதில் அழிவுறுவான். அஞ்சாதே! அறிவைப் பெருக்கு! பொருந்தி நட! வழங்கி வாழ்! உன்னைக் காணப் பகைவர் அஞ்சுவர். ------------- நீங்கான் வெகுளி, நிறையிலன், எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது (குறள். 864) தீயவை எவையோ அவையெல்லாம் சினத்தால் உண்டாகும்; ஆதலால் எவரிடத்தும் சினம் கொள்ளாமல் மறந்து விடல் வேண்டும் (குறள்.303) சினமானது ஒருவனுக்கு வெளிப்படத் தோன்றும் சிரிப்பையும் அழிக்கும்; உள்ளத்து உண்டாகும் மகிழ்வையும் அழிக்கும், ஆதலால் சினம் பகைகளிலெல்லாம் கொடுமையான பகையாகும்(குறள். 304) ஒருவன் தன்னைத் தானே அழிவிலிருந்து காக்க விரும்பினால், தன்னிடம் சினம் உண்டாகாமல் காத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு காக்கத் தவறினால், அச்சினமே அவனை அழித்துவிடும் (குறள்.305) தன்னைக் கொண்டவரை அழிக்கும் சினம் என்னும் தீ, அவருடன் நில்லாமல் அவர்க்குத் துன்பக் காலத்தில் தக்க காவல் அரணாய் விளங்கிய சுற்றத்தினரையும் அழிக்கும் (குறள்.306) சினம் தற்கொல்லியே ஆகும். பகைக் கொல்லி அன்று! அடக்கம் என்னும் உயர்தன்மை ஒருவரை அழியாய் புகழ் நிலையுள் சேர்க்கும். அடங்காமை என்னும் இழிதன்மை நீங்காப் பழி என்னும் இருளில் கொண்டு சேர்க்கும் (குறள். 121) ஓர் ஓட்டுள் தன் ஐந்து உறுப்புகளையும் அடக்கும் ஆமையைப் போல் ஒருவர் தம் ஐம்பொறிகளையும் அடக்கும் திறம் பெற்றால் அஃது எக்காலத்திற்கும் பாது காப்பாகும் (குறள்.126) காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கத் தவறினாலும் நாவு ஒன்றையேனும் தவறாமல் பாதுகாக்க வேண்டும. அவ்வாறு காக்கத் தவறினால், அவர் தம் சொல்லினால் குற்றத்திற்கு ஆட்பட்டுத் துன்புறுவர் (குறள்.127) நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும் (குறள். 154) எனும் திருவள்ளுவரின் திருநெறிக்கு மாறாக நிறையிலனாக ஒருவன் இருந்தால் அவன் திறமை இல்லாதவனாகத் தான் இருப்பான். ஆகவே, திருவள்ளுவர். சினம் தனக்கு ஏற்படாமல் காத்து வாழ வேண்டிய மனிதன் சினமே தனக்குப் பெருமை எனக்கருதி எந்நேரமும் சினம் உடையவனாகவும், மனக்கட்டுப்பாடும் அற்று, நெஞ்சை நல்ல எண்ணங்களில் நிலைக்கச் செய்யும் மனவுறுதியும் இல்லாதவனாக எவனெல்லாம் இருக்கிறானோ அவனை யாரும் எப்பொழுதும் மிக எளியவனாகவே கருதுவர். அத்தகையவர்களால் பகைவர்களை வெல்ல இயலாது ஆனால் பகைவர் அத்தகையவனை எப்பொழுதும் எவ்விடத்தும் எளிதாக வென்று விடுவர். ஆகவே வெகுளிக்கு இடம் கொடேல்; நிறை நெஞ்சனாய் இரு! உன்னை எவரும் எப்பொழுதும் எங்கும் வெல்லல் அரிது. வெகுளாமையையும் நிறையுடைமையையயும் போற்றி வாழ்பவனை எவரும் எளிதில் எடைபோட இயலாது. ------------ வழிநோக்கான் வாய்ப்பன செய்யான், பழி நோக்கான் பண்பிலன் பற்றார்க் கினிது (குறள். 865) எதனையும் வழிமுறை அறிந்து அறநெறி தவறாது செய்ய வேண்டும்! வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும்; செய்யத் தக்க செயல்களையே செய்ய வேண்டும். அச்செயல் பயனுடைய செயலாகவும் இருக்க வேண்டும். கிடைத்தற்கு அரிய வாய்ப்பான பொழுது கிடைக்குமானால், அவ்வாய்த்த பொழுதிலேயே பிறரால் செய்வதற்கு அரிய செயல்களையும் செய்து விடல் வேண்டும. புகழ்வரும் செயல்களையே செய்ய வேண்டும். பழிவரும் செயல் களைச் செய்யாது விலக்கி விட வேண்டும். பழிக்கு அஞ்சி நல்வழியில் பொருள் தேட வேண்டும் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாய்ப் பேண வேண்டும் பிறன் மனை நோக்காப் பேராண்மை வேண்டும். பிறர் பொருளை வெஃகாமை வேண்டும். புறங்கூறாமை வேண்டும். தினை அளவு குற்றத்தையும் பனை அளவாகக் கருதிப்பழிக்கு நாண வேண்டும். ஆள்வினை இன்மையே பழி என்பதை உணர்ந்த முயற்சியாளராய் விளங்க வேண்டும். பழிவழி வந்த செல்வத்தை விடப்புகழ் வழி வறுமை சிறந்தது என உணர வேண்டும். பிறர்க்கு உண்டாகிய பழியையும் தமக்கு உண்டாகிய பழியையும் எண்ணி நாணி நடக்கவேண்டும். நாணுடைமையே மாந்தர்க்குச் சிறப்புத் தரும். பழிபிறங்காப் பண்புடைமக்களே மக்கள் ஆவர்; அகத்தில் அன்பு வேண்டும்; பயனுடைய சொற்களையே பேச வேண்டும் பிறர் இயல்பு அறிந்து நன்மை செய்ய வேண்டும். தண்டிக்கத் தக்கவரிடமும் கண்ணோட்டம் கொண்டு பொறுத்தாற்றும் பண்பு வேண்டும். ஆட்சியாளரிடம் தீக்காய்வார் போல் அகலாதும் அணுகாதும் செயல்படும் பண்பு வேண்டும். பண்புடையாளர் தொடர்பு வேண்டும். பழந்தொடர்பைப் போற்றும் பண்பு வேண்டும். பகைவர்களையும் நண்பர்கள் ஆக்கும் பண்பு வேண்டும். வரைவின் மகளிரை நெருங்காமை வேண்டும். சூதாட்டத்தில் இறங்காமை வேண்டும். குடிப்பெருமை காக்கும் பண்பும் வேண்டும். நயனொடு நன்றி புரிய வேண்டும் விளையாட்டில் கூட பிறரை இகழாப் பண்பு வேண்டும். எவரிடமும் எளிமையாய்ப்பழகவேண்டும். பகைவர்க்கும் அருள்புரியும் பண்பாளராய் விளங்க வேண்டும். பிறரோடு கலந்து மகிழும் பண்பு வேண்டும். வழி அறிந்து வாய்ப்பான செயல்புரிந்து பழிக்கு நாணும் பண்பாளன் ஆக விளங்குவோனைக் கண்டு பகைவர் அஞ்சுவர். செயலாற்றும் வழியையும் ஆராயாதவனாகவும், வெற்றி வாய்ப்புள்ள செயல்களைச் செய்யாதவனாகவும், தன்னைப் பிறர் பழித்துரைப்பதைப் பற்றிக் கவலைப்படாதவனாகவும் நற்பண்புகளே இல்லாதவனாகவும் இருப்பவனையே பகைவர் எளிதில் வென்று இன்புறுவர், இவர்கள் தனக்கு இன்னாதவர்; ஆனால் பகைவர்க்கு இனியவர். ------------ காணச்சினத்தான்; கழி பெருங் காமத்தான் பேணாமை பேணப் படும் (குறள். 866) நான்காவது குறளில் நீங்கான் வெகுளி சொன்ன திருவள்ளுவர் காணாச் சினத்தான் என்னும் குறைபாடு உடையவரைச் சுட்டுகிறார், காணாச் சினத்தான் என்னும் தொடருக்குப் பரிமேலழகர் தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியுடையான் என்றும். பரிதியார்;- அளவுபடாத கோபத்தை உடையவன் என்றும், மணக்குடவர்:- மீண்டு பாராத சினத்தனுமாய் என்றும், நாமக்கல்லார்;- காரணம் காணாமல் கோபிக்கிறவன் என்றும் காளிங்கர்: -ஈண்டு இதுக்குத் தகாது என்று நோக்காது செய்யும் சினத்தை உடையோனுமாய் என்றும் வரதராசன்;- அறிவை மறைக்கின்ற கோபத்தை உடையவன் என்றும். தமிழ்க்காசு: உலக இயல்பு அறியாத சினத்தை உடையவன் என்றும். மு.வ. : உண்மை காணாத சினம் என்றும் மயிலை சிவமுத்து:- தன் நிலையையும் பிறர் நிலையையும் எண்ணிப் பாராமல் பிறரைக் கோபிக்கும் குணமுடையவனும்என்றும் ஞா.மாணிக்கவாசகன்: காரண காரியம் அறிந்துணராமல் கோபம் கொள்பவன் என்றும், ப.முருகன்:- உண்மையினை உணராது எடுத்ததற்கெல்லாம் கடுஞ்சினம் கொள்ளும் மூர்க்கக் குணத்தான் என்றும், வைகைச் செல்வன்:- கண்மூடித் தனமான கோபம் என்றும் இரா.கனக சுப்புரத்தினம்:- நடுவு நிலையுடன் சிந்திக்காமல் கோபப் படுபவன் என்றும், ஆர்.பி.சாரதி;- கண்மண் தெரியாத கோபத்தையும் என்றும், வ.சுப.மாணிக்கனார்: புரியாத சினமும் என்றும் இரா. இளங்குமரனார்:- விளைவை எண்ணிப் பாராத சினத்தினன் என்றும். உரை கூறுகின்றனர். சினம் கொண்டவரை அழிக்கும் நெருப்பு; அந்நெருப்பிலிருந்து அவரைக் காக்க முற்படும் சுற்றத்தையும் அழிக்கும். சினம் மின்சாரத்தீ போன்றது. தம் கையால் நிலத்தில் ஓங்கி அடிப்பது போன்றது தான் சினம் கொள்வதும் சினத்தை இறந்தார், இறந்தார் அனையர் எனச் சினத்தின் தீமையைத் தெளிவுபடுத்தியவர். காணாச்சினம் எந்நிலையிலும் எவரும் கொள்ளக் கூடாத சினமாகும். எல்லாரையும் சிந்திக்கத் தூண்டும் திருவள்ளுவரை வணங்குவோம். விளைவை எண்ணிப் பாராத சினத்தினன், மிகப்பெரும் காமத்தினன் என்னும் இவர்கள் பகைமையைப் பகைவர்கள் மிக எளிதில் வெல்ல முடியும் ஆகையால் இத்தகையவர்கள் நண்பர்களாக இருக்கத் தகுதி அற்றவர்கள். அவர்களைப் பகைவர்களாக ஆக்கிக் கொள்வது நல்லது. பகைவர்களாக வைத்துக் கொள்வதற்கு இவர்கள் மிகப் பொருத்தமானவர் ஆவர். காணச் சினத்தான் கழிபெருங் காமத்தான் என்பதற்கு கம்பராமா யணத்தில் தக்க எடுத்துக் காட்டாய் அமைந்தவர்கள் இராவணனும் வாலியும் ஆவர். ஆகவேதான் இராமபிரான் அவர்கள் பகையை விரும்பி ஏற்றுக் கொண்டான். சினமும் காமமும் வரம்பு கடந்தால் வானுயர் தோற்றம் எவன் செய்யும் கீழானவன் ஆக்கி விடும். வெளிப்படத் தோன்றும் குறிப்புகளால் உள்ளத்தின் உட்குறிப்பை அறிய வல்லவரைத் தம் அரிய உடைமைகளுள் அவர் விரும்பும் எதனையும் கொடுத்தும் துணையாகக் கொள்ளத்தகும் என்னும் குறிப்பைக் குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் (குறள். 703) எனக் குறிப்பறிதல் அதிகாரத்தில் கூறியுள்ளார். நல்ல குடியில் பிறந்து, தனக்கு உண்டாகும் பழிக்கு நாணுகின்ற வனை, அவன் விரும்புகின்றவற்றைக் கொடுத்தும் நட்புக் கொள்ளுதல் வேண்டும் என்பதைக் குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு (குறள். 794) எனவும், குற்ற மற்றவர் நட்பினை அவர்விரும்பும் ஒன்றைக் கொடுத்தும் தழுவிக் கொள்க! பொருந்தாதார் நட்பினை அவர் விரும்பும் ஒன்றைக் கொடுத்தாவது விலக்கிக் கொள்க! என்னும் நுட்பத்தை, மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு (குறள். 800) எனவும் நட்பாராய்தல் அதிகாரத்தில் அறிவுறுத்திய திருவள்ளுவர் பகை மாட்சியிலும் அதே உத்தியைப் பயன்படுத்த வேண்டும் குறளே கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை (குறள். 867) என்பதாகும். நாம் நல்லவராக இருப்பதுடன் நம்மோடு நெருங்கி இருந்து பழகுகிறவர்களும் நெருங்கி இருந்து பணிபுரிகிறவர்களும், நெருங்கி இருந்து தொண்டாற்று கிறவர்களும் நல்லவர்களாக அமைய வேண்டும். அமைந்தால் எல்லாம் சிறப்பாகவும் நிறைவாகவும் இருக்கும். பொருந்தாத செயல்களைச் செய்வோர் நெருங்கி இருந்தால் நன்மை விளைய வாய்ப்பில்லை. ஆகவே, நெருங்கி இருந்து கொண்டே பொருத்தமற்ற செயலில் ஈடுபடுபவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. கட்டாயம் அவர்கள் உறவைத் துண்டித்து விட வேண்டும். வாய்ச் சொல்லால் அணுகும் முறையால் பிரிக்க முடிய வில்லை என்றால் அவர்கள் விரும்பும் பொருளைக் கொடுத்தாவது விலக்கிவிட வேண்டும். நெருங்கி இருந்து தீமைசெய்து கொண்டிருப்பவன் நண்பனாக வைத்துக் கொள்ளத் தகுதி அற்றவன் ஆவான், அத்தகையவன் நண்பனாக இருப்பதைவிடப் பகைவனாக இருப்பது நல்லது. ஆகவே, செலவைப் பொருட்படுத்தாது அவனைப் பகைவன் ஆக்கிக் கொள்க! நாட்டில் ஊழல் மிகுவதற்கு அடிப்படைக் காரணம் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களோடு நெருங்கி இருப்போர் தகுதியற்ற வர்களாக இருப்பதே ஆகும். ஆகவே தான் திருவள்ளுவர் பெரியார் துணைக்கோடல் வேண்டும் என்பதுடன் அமையாது சிற்றினம் சேராமை வேண்டும் என வலியுறுத்தலானார். உடல் உறுப்புகள் ஒத்திருத்தல் மக்களொடு ஒத்தது ஆகாது. பொருந்தி அமைந்த பண்புகள் ஒத்திருத்தலே மெய்யான ஒப்பாகும் என்னும் விளக்கத்தையும் மக்கட் பிறப்புக்குரிய பண்புடைமை இல்லாதவர், அறிவில் அரத்தைப் போலும் கூர்மையாளரே எனினும் அறிவில் கடைப்பட்ட ஓரறிவுடைய மரத்திற்கு ஒப்பானவரே என்னும் பகுப் பாய்வையும், பண்புடைமை அதிகாரத்தில், உறுப்பொத்தல் மக்கள் ஒப்பன்றால்; வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு (குறள். 993) அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லா தவர் (குறள். 997) என்னும் குறட்பாக்களின் வழியும், சான்றோர் சிறப்பு என்று சொல்லப்படுவது பண்புச் சிறப்பே ஆகும். அப்பண்புச் சிறப்பு பிற சிறப்புகளாகிய எந்தச் சிறப்புகளிலும் உள்ளடங்காத உயர்வினதாகும் எனும் தெளிவைக் குணநலஞ் சான்றோர் நலனே; பிறநலம் எந்நலத் துள்ளதூஉம் அன்று (குறள். 982) எனச் சான்றாண்மை அதிகாரக் குறள் வழியும் புலப்படுத்தியுள்ளார். முழு அழிவைத் தரும் பகை குற்றமே ஆகும், ஆதலால் குற்றம் தம்மிடத்து உண்டாகாமல் கருத்தோடு காத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குற்றம் கடிதல் அதிகாரத்தில் குற்றமே காக்கப் பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை (குறள். 434) எனவும் எடுத்து மொழிந்தவர் திருவள்ளுவர். எந்தக் குற்றமும் புரியாது குணம் என்னும் குன்றேறி நிற்பவனே நல்லினத்தைச் சேர்ந்த மாந்தன் ஆவான். அவனவனின் நற்குணங்களும் நற்செயல்களுமே அவனவன் வாழவும் வளரவும் துணைபுரியும். ஆனால் எதிர்மறை ஆனவரை நம் கவனத்திற்குக் கொண்டுவரும் குறளே. குணனிலனாய்க் குற்றம் பலவாயின்: மாற்றார்க் கினனிலனாம் ஏமாப் புடைத்து (குறள். 868) நல்ல குணம் எதுவுமே தன்னிடம் இல்லாதவன். அடுக்கடுக்காகத் தன்னால் எத்தனை வகையான குற்றங்களைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தவனுக்கு ஏற்படும் துன்பத்தில் இருந்து காக்கத் துணைபுரிய எவரும் இருக்க மாட்டார்கள். தனியனை வீழ்த்துவது பகைவர்க்கு எளிது. அத்தகைய பகைவர்கட்கு இவனால் எத்தகைய துன்பத்தையும் விளைவிக்க இயலாது. இத்தகையர்களை யார் பகைக் கிறார்களோ அவர்களுக்கு நல்ல பாதுகாப்பும் ஆகும். ------------ செறுவார்க்குச் சேணிகவா இன்பம், அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின் (குறள். 869) அழிவு வராமல் காக்கும் பயனுறு கருவியாகவும், பகைவரும் உட்புகுந்து அழிக்க முடியாத பாதுகாப்புக் கோட்டையாகவும் விளங்கும் அறிவு இல்லாதவனாகவும், அஞ்சக் கூடாதவற்றுக்கு அஞ்சி நடுங்கும் கோழை யாக இருப்பவனும் பகைவனாக அமைந்தால் அத்தகைய பகைவனை எதிர்த்து வெற்றி கொள்ளவிரும்புபவர் வெற்றிக் கனியைப் பெறுவதில் காலத்தாழ்வு ஏற்படாது. அறிவின்மையும் அச்சம் உடைமையுமே அழிவினை அளிக்கும். ஆகவே, அஞ்சும் அறிவிலிகளை அஞ்சாது பகைக்கலாம். எளிதில் அழித்து வெற்றி இன்பம் பெறலாம். ------------ கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி. (குறள். 870) பகைக்கத் தக்கவரைத் தக்க நேரத்தில் பகைக்க வேண்டும். அதனால் பல நன்மைகள் கிட்டும். புகழும் பெறலாம். பகைக்க வேண்டியவரைப் பகைக்கத் தயங்குவோரும்! பகைக்க அஞ்சுபவரும், பகைக்க விரும்பாதவரும் பல்வேறு தொல்லைகட்கு ஆட்பட்டுப் பழிக்கு ஆளாவார். பொது அறிவு நூல்களையோ, அறநெறி நூல்களையோ அரசியல் அறிவு நூல்களையோ, போர்க்கலை நூல்களையோ கற்காத அறிவிலியைக் கட்டாயம் பகைத்துக் கொள்ள வேண்டும். படிக்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைக் கூட ஒருவன் செய்யவில்லையானால். அத்தகையவனைத் தேடிப் புகழ் ஒரு காலத்திலும் வராது. கல்லானை அண்ட விடாது பிரித்து, நல்லவர் கூட்டால் நற்பணிபுரிந்து புகழ் பெறுக! பகை மாட்சி என்பது வலியார் பகை கொள்ளேல், சுற்றம் வலிகள் பொருள் நட்பே படையின், மெலியார் அச்சம் அறியாமை மேவரித்தன்மை, கொடை இன்மை, நலியா வெகுளி, மறையின்மை, நனியாம் காமம், கல்லாமை ஒலியார் பழி நோக்காமை, மறுவுடையார் இவர் மேல் பகையுறுக என்றாங்கு அறிவின்மை முதலிய குற்றங்கள் உடைமையால் பகையை மாட்சிப் படுத்தல். அதாவது படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும் நல்லறிவுடைமை, நீதி நூல் வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் இருவகைத் துணையுமுள்ள வலியார் மேல் பகையாய் எதிர்த்தலை ஒழிக்க வேண்டும். அவ்விருவகைத் துணையினும் சுற்றம் பொருள் நட்பு படை என்னும் இவைகளிலும் மெலியாராய் உள்ளார். அஞ்ச வேண்டாத வற்றுக்கு அஞ்சுவோர், அறிய வேண்டும் அவற்றை அறியாதார், பிறரோடு பொருத்தமில்லாதார், யாவர் மாட்டும் ஈகை இல்லாதார், நலியாத வெகுளியை உடையார், நீதி நூல் களைக் கல்லாதார், தமக்குவரும் பழியை ஆராயாதார், பண்பில்லாதார் என்னும் இவர்களோடு பகையாதலை யொழியாது விரும்பல் வேண்டும் என்னும் விநாயக புராணத் தொகுப் புரையையும் சிந்தனையில் கொள்வோம். வலியவர்க்குப் பகைவர் ஆகாமல் பார்த்துக் கொள்க மெலியவர் மேல் பகை கொள்ள விரும்புக! அன்பிலான், பகை அழிக்கும் வலிமை இலான் தக்க துணை இல்லாதவன் எப்படிப்பகைவனை அழிப்பான் வலிமையிலான் பகைவனை அழியான் அச்சம் உடையவன் பகைவனுக்கு எளியவன் அறிவிலானைப் பகைவன் எளிதாகக்கருதுவான் தகுதி அற்றவன் பகைவர்க்கு எளியவனே! கருமி பகைவர்க்கு மிக எளியவன் அஞ்சாதே! அறிவைவளர்! பொருந்திநட; கொடுத்து வாழ் கோபக்காரனும் மனவுறுதி அற்றவனும் பகைவனால் எளிதில் வெல்லப்படுவான் வழி நோக்கான் தனக்கு இன்னான் பகைவர்க்கு இனியன் வாய்ப்பன செய்யான் பகைவர்க்கு இனியன் பழிநோக்கான் பகைவர்க்கு இனியன் பண்பிலன் பகைவர்க்கு இனியன் காணாச் சினத்தான் பகைவர் விரும்பும் பகைவன் கழிபெருங்காமத்தான் பகைமை பகைவரால் விரும்பப்படும் அடுத்துக் கெடுப்பவனை அண்ட விடாதீர் மாணாத செய்வானைக் கொடுத்தும் விலக்கு பண்பற்றவன் பகை பாதுகாப்பானது குற்றவாளிகளைப் பகைப்பது குற்றமன்று தற்காப்பும் ஆகும். அஞ்சும் அறிவிலான் பகை பகைப்பவர்க்கு விரைந்து வெற்றியும் இன்பமும் தரும் கல்லானைப் பகையான், புகழ் பெறான் செய்தக்க செய்யான் புகழ் அடையான் ---------- திருவள்ளுவரின் வேண்டுதல்கள் 1. பொய்தீர் ஒழுக்க நெறி நிற்க வேண்டும் 6. 2. வான் அமிழ்தம் என்பதை உணர வேண்டும் 11. 3. எவ்வுயிர்க்கும் செந்தண்மைபூண்டு ஒழுக வேண்டும் 30. 4. அன்றறிவாம் என்னாது அறம் செய்ய வேண்டும் 36. 5. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ வேண்டும் 47 6. ஏறு போல் பீடு நடை போட வேண்டும் 59 7. அறிவறிந்த நன்மக்கள் பேறு பெற வேண்டும் 61 8. அன்பை அகத்துறுப்பாய்க் கொள்ள வேண்டும் 61 9. முகனமர்ந்து நல்விருந்து ஓம்ப வேண்டும் 84 10. நல்லவை நாடி இனியவே சொல்ல வேண்டும் 96 11. நன்றல்லது அன்றே மறக்க வேண்டும் 108 12. நெஞ்சத்துக் கோடாமையை அணியாய்க் கொள்ள வேண்டும் 115 13. யாகாவார் ஆயினும் நாகாக்க வேண்டும் 127 14. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் வேண்டும் 140 15. பிறன்மனை நோக்காத பேராண்மை வேண்டும் 148. 16. பொறையுடைமை போற்றி ஒழுக வேண்டும் 154 17. யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறவேண்டும் 162 18. பிறன்கைப்பொருள் வெஃகாமை வேண்டும் 178 19. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண வேண்டும். 190 20. சொல்லிற் பயனுடைய சொற்களையே சொல்ல வேண்டும் 200 21. செறுவார்க்கும் தீய செய்யாமை வேண்டும் 203 22. தக்கார்க்கு வேளாண்மை செய்தல் வேண்டும் 212 23. இலனென்னும் எவ்வம் உரையாது ஈதல் வேண்டும் 223 24. தோன்றின் புகழொடு தோன்ற வேண்டும் 236 25. நல்லாற்றான் நாடி அருளாள வேண்டும் 242 26. பிறிதொன்றன் புலாஅல் உண்ணாமை வேண்டும் 257 27. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை வேண்டும். 261. 28. உலகம் பழித்ததை ஒழிக்க வேண்டும் 280 29. எனைத்தொன்றும் கள்ளாமை காக்க வேண்டும் 281 30. யாதொன்றும் தீமை இலாத சொலல் வேண்டும் 291 31. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க வேண்டும் 305 32. பிறிதின் நோய் தந்நோய் போல் போற்ற வேண்டும் 315 33. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப வேண்டும் 322 34. செல்வம் பெற்றால் அற்குப செயல் வேண்டும் 333 35. யான் எனது என்னும் செருக்கு அறுக்க வேண்டும் 346 36. சிறப்பென்னும் செம்பொருள் காண வேண்டும் 358 37. அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெட வேண்டும் 369 38. உலகத்து இருவேறு இயற்கையை உணரவேண்டும் 374 39. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் வேண்டும் 388 40. கேடில் விழுச்செல்வமாம் கல்வி கற்க வேண்டும் 400 41. நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொள்ளாமை வேண்டும் 42. எனைத்தானும் நல்லவை கேட்கவேண்டும் 416 43. தீதொரீஇ நன்றின் பால் உய்க்க வேண்டும் 422 44. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண வேண்டும் 436 45. பெரியாரைப் பேணித் தமராக் கொள்ள வேண்டும் 443 46. மனநலம் உடையார்க்கும் இனநல ஏமாப்பு வேண்டும் 458 47. எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும். 470 48. ஆற்றின் அளவறிந்து ஈதல் வேண்டும் 477 49. பருவத்தோடு ஒட்ட ஒழுக வேண்டும். 481 50. எஞ்சாமை எண்ணி இடத்தால் செயல் வேண்டும் 497 51. கருமத்தைக் கட்டளைக் கல்லாய்க் கொள்ள வேண்டும். 505 52. வினை செய்வானை மன்னன் நாள்தோறும் நாட வேண்டும். 520 53. சுற்றத்தால் சுற்றப்பட ஒழுக வேண்டும் 524 54. புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும். 538 55. மன்னன் குடிதழீஇக் கோலோச்ச வேண்டும் 545 56. நாள்தொறும் நாடி முறை செய்ய வேண்டும் 553 57. கடிதோச்சி மெல்ல ஏறிய வேண்டும். 562 58. கருமம் சிதையாமல் கண்ணோட வேண்டும். 578 59. சிறப்பறிய ஒற்றின் கண் செய்யாமை வேண்டும் 590 60. உள்ளுவதெல்லாம் உயர்வே உள்ள வேண்டும் 596 61. மடி கொன்று குடியைக் குடியாக்க வேண்டும். 602 62. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும். 611 63. இடுக்கண் வருங்கால் நக வேண்டும். 621 64. உலகத்து இயற்கை அறிந்து செயல் வேண்டும். 637 65. கற்றது உணர விரித்துரைக்க வேண்டும் 650 66. இடுக்கட் படினும் இளிவந்த செய்யாமை வேண்டும் 654 67. எண்ணிய எண்ணியாங்கு எய்த வேண்டும். 666 68. வினையால் வினையாக்கிக் கோடல் வேண்டும் 678 69. தூதர்க்கு அன்பு அறிவு சொல்வன்மை வேண்டும் 682 70. மன்னர் விழைப விழையாமை வேண்டும். 692 71. ஐயப் படாஅது அகத்தது உணர வேண்டும். 702 72. உணர்வது உடையார்முன் சொல்ல வேண்டும். 718 73. கற்றார்முன் கற்ற செலச்சொல்ல வேண்டும் 722 74. பசியும் பிணியும் பகையும் சேராநாடு வேண்டும் 734 75. ஆற்றுபவர்க்கும் அஞ்சித்தற்போற்றுபவர்க்கும் அரண்வேண்டும் 741. 76. பொருள் திறனறிந்து தீதின்றி வர வேண்டும் 754 77. உறுப்பமைந்து ஊறஞ்சாவெல்படை வேண்டும் 761 78. புரந்தார்கண் நீர்மல்கச் சாக வேண்டும் 780 79. உடுக்கை இழந்தவன்கைபோல இடுக்கண் களைய வேண்டும் 788 80. பழிநாணுவானைக் கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும். 796 81. கிழமையைக் கீழ்ந்திடா நட்பு வேண்டும் 801 82. பண்பிலார் கேண்மை குன்றல் வேண்டும். 811 83. அகத்தின்னா வஞ்சரை அஞ்ச வேண்டும் 824 84. ஓதி உணர்ந்து பிறர்க்கு உரைத்துத் தானடங்கவேண்டும் 834 85. உலகத்தார் உண்டு என்பதை ஏற்க வேண்டும் 850 86. இகல் என்னும் துன்பத்துள்துன்பம் கெடல் வேண்டும் 854 87. வலியார்க்கு மாறேற்றல் ஓம்ப வேண்டும் 861 88. இளைதாக முள்மரம் கொல்ல வேண்டும் 879 89. கேள்போல் பகைவர்தொடர்புக்கு அஞ்ச வேண்டும். 881 90. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை வேண்டும் 891 91. பெண்ணேவல் செய்தொழுகா ஆண்மை வேண்டும் 907 92. பொருட் பொருளார் புன்னலம் தோயாமை வேண்டும். 914 93. கட்காதல் கொண்டு ஒழுகாமை வேண்டும். 921 94. வென்றிடினும் சூதினை விரும்பாமை வேண்டும் 931 95. அற்றால் அளவு அறிந்து உண்ண வேண்டும். 943 96. குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டும் 960 97. பெருக்கத்துப்பணிவும், சுருக்கத்து உயர்வும் வேண்டும். 963 98. ஆற்றின் அருமை உடைய செயல் ஆற்ற வேண்டும். 975 99. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்ய வேண்டும். 987 100. பயனுடையார் பண்பு பாராட்ட வேண்டும் 994 101. பொருளானாம் எல்லாம் என்று மருளாமை வேண்டும் 1002 102. பிறர் நாணத்தக்கது தான் நாண வேண்டும் 1018 103. குற்றமிலனாய்க் குடி செய்து வாழ வேண்டும் 1025 104. உழுவார் உலகத்தார்க்கு ஆணி என வேண்டும் 1032 105. இன்மையை இன்மை ஆக்க வேண்டும் 1041 106. இகழாது எள்ளாது ஈவாரைக் காண வேண்டும் 1057 107. இரந்து உயிர் வாழாமை வேண்டும் 1062 108. மக்களெல்லாம் மக்களாய் வாழவேண்டும் 1071. ---------------- வள்ளுவம் வாழ்வியல் ஆக வேண்டும்