வள்ளுவ வளம் (திருக்குறள் வாழ்வியல் விளக்க ஆய்வு நூல்) பொருட்பால் (அதிகாரம் 39 முதல் 63) பகுதி - 2 செந்தமிழ்ச் செம்மல் புலவர் மு.படிக்கராமு க.மு; கல்.இ; வளவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வள்ளுவ வளம் - 2 - பொருட்பால் ஆசிரியர் : புலவர் மு.படிக்கராமு க.மு; கல்.இ; பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2015 தாள் : 18.6 கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 480 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 450/- படிகள் : 1000 நூலாக்கம் : வி. சித்திரா, பிராசசு இந்தியா அட்டை வடிவமைப்பு : கவி. பாகர் அச்சிட்டோர் : பிராசசு இந்தியா திருவல்லிக்கேணி, சென்னை - 5. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2. சிங்காரவேலர் தெரு தியாகராய நகர் சென்னை - 600 017. தொ.பே. 2433 9030. பதிப்புரை நூலாசிரியர் மு. படிக்கராமு அவர்கள், முதுமுனைவர் செந்தமிழ் அந்தணர், தமிழ்க் கடல் இரா. இளங்குமரனார் அவர்களின் அண்ணன் மகன் ஆவார். படித்த குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பதற்கேற்ப நூலாசிரியரின் குடும்பப் பின்புலம் கல்வியின் பெருமையை உணர்ந்த குடும்பம். நூலாசிரியரின் திருமகன் திருமாவேலன் தமிழ் இதழியல் வரலாற்றில் இன்று மிகச்சிறந்த நிலையில் இருப்பவர். தமிழ் - தமிழினம் மேன்மையுறுவதற்கு தனக்குக் கிடைத்த வாய்ப் பினைப் பயன்படுத்திப் பெரும் பங்களிப்பைச் செய்து வருபவர். வள்ளுவ வளம் எனும் பெயரில் நான்கு தொகுதிகளை எம்பதிப்பகத்தின் வழி வெளிக்கொணர்வதில் பெருமையும் உவகையும் கொள்கிறோம். தமிழ் புகுந்த நெஞ்சிற்குத் தளர்வில்லை, உடலுக்கும் முதுமையில்லை என்பார் பாவலலேறு பெருஞ்சித்திரனார். பாவலரேறு பாடலுக்கு இலக்கணமாகவும், இலக்கியமாகவும் நம் கண்முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் இந்நூலுக்கு விரிந்த அணிந்துரை யளித்து இந்நூலின் ஆழ அகலங்களை எல்லாவகையிலும் உயர்த்தியுள்ளார். அய்யா அவர்களின் அணிந்துரைக்குப் பிறகு இந்நூலைப் பற்றி எழுதுவதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. பாவாணர் வழிநிலை அறிஞர்களில் ஒருவரான பெரும்புலவர் செந்தமிழ்ச் செம்மல் மு. படிக்கராமு அவர்கள் எழுதிய வள்ளுவ வளம் நூலினை (4 தொகுதிகள்) வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். இவ்விரு பெருமக்கள் வாழும் காலத்தில் வாழ்கிறேன் என்ற பெருமை ஒன்றே எனக்குப் போதும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்மறையாம் திருக்குறளுக்கு வெளிவந்த சிறந்த உரைகளில் வள்ளுவ வளமும் ஒன்று. இந்நூல் புதியப் பார்வையைத் தருவதுடன் மேலும் மேலும் வள்ளுவத்துக்கு வளமும் வலிமையும் பொலிவும் சேர்க்கும் புதிய வரவாகும். இந்நூலினை உலகெங்கும் வாழும் தமிழர்கள் தம் இல்லங்களில் வாங்கி வைத்துப் பயன்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். - கோ. இளவழகன் நூலாசிரியரைப் பற்றிய குறிப்பு நூலாசிரியர் மு. படிக்கராமு விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் வட்டம், வாழவந்தாள் புரம் என்னும் சீரூரில் வாழ்ந்த வள்ளுவ நெறி வாழ்வராம் உழவர் ப.இரா.முத்தையா, மனைத்தக்க மாண்பர் சீனியம்மாள் ஆகிய நிறைகுணச் செம்மல்களின் மக்களுள் ஒருவர் 1.6.1938இல் பிறந்தவர். இடைநிலை ஆசிரியர் பயிற்சி, தமிழ்ப்புலவர், தமிழ் முதுகலை ஆசிரியர் இளங்கலை பயின்றவர். இராசபாளையம் ஊ.ஒ. தொடக்கப் பள்ளிகளில் ஒன்பது ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும், கோயிற்பட்டி ஆ.வை. மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருபத் தெட்டு ஆண்டுகளும் பணிபுரிந்து 1.6.1996இல் பணி நிறைவு பெற்றவர். செய்யும் பணியைத் தெய்வப் பணியாகக் கருதிச் செப்பமாய்ச் செய்யக் கூடியவர். இராசபாளையம், கோயிற்பட்டித் திருவள்ளுவர் மன்றங்களில் செயலாளராய் அமைந்து தமிழ்த் தொண்டாற்றியவர். முரம்பு பாவாணர் கோட்ட நெறியாளரும் ஆவார். சங்கரன் கோயிலில் இந்து சமயத் தமிழ்ப் பேரவை சார்பில் 133 வாரங்கள் திருக்குறள் தொடர்பொழிவைச் சிறப்புறச்செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் முத்து லக்குமி அவர்கள் இவரின் வாழ்க்கைத் துணைவி ஆவார். நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரி, கணினித்துறைத் துணைப் பேராசிரியர் முனைவர் ப. வேல்மணி அவர்களும் இளையோர் விகடன் ஆசிரியர் ப.திருமாவேலன் அவர்களும் இவருடைய மக்கள் ஆவர். மேலநீலித நல்லூர் ப.மு.தே. fšÿÇ ïa‰ãaš nguháÇa® Kidt® K.át¡Fkh® mt®fS« br‹id gâ‹k¥gŸËÆš g£lªjh§» MáÇauhf¥ gÂòÇí« R.கி. இரேணுகா அவர்களும் மருமக்கள் ஆவர். செந்தமிழ் அந்தணர், தமிழ்க் கடல் இரா. இளங்குமரனார் அவர்களின் தமையனாரின் மைந்தரும் ஆவார். அன்னார் வகுத்துத் தந்த நெறிமுறைப்படி தமிழ் நெறித் திருமணங்களைச் சிறப்பாகச் செய்து வரும், பண்பட்ட பொழிவாளரும் குறள் நெறிப் பரப்பாளரும் ஆவார். அன்னாரின் பண்பையும் தமிழ்ப் பணியையும் பாராட்டிப் பல்வேறு தமிழ் அமைப்புகள், - இளம் தமிழ்த் தென்றல் - அறிவுச்சுடர் - செந்தமிழ்ச் செல்வர் - செந்தமிழ்ச் செம்மல் - `குறளாயச் சான்றோர் - `திருக்குறள் மாமணி - `நூலறி நுண்ணியர் - வாழ்வியல் வழிகாட்டி - தமிழ் அறிஞர் ஆகிய பட்டங்களுடன் திருவள்ளுவர் விருதும் வழங்கிச் சிறப்பித்துள்ளன. வள்ளுவப்பயன் பிரசங்கம் பெருக்கெடுத்தோடிக் கொண்டிருந்த நாளிலே பெருஞ்சொல் விளக்கம் என்னும் ஒரு கலைச்சொல் உருவாகியது. அப்பெருஞ்சொல் விளக்கம், சொற்பொழிவு என்னும் அரிய கலைச் சொல்லாக நெல்லையில் இருந்து தென்றல் உலாவாகத் திகழ்ந்தது. அவ்வருமையான கலைச் சொல்லைத் தந்த பெருமகனார் பால் வண்ணர்! அவர் சொல்லளவில் நில்லாமல் சொற்பொழிவு ஆற்றுப் படை என நூற்கொடையே புரிந்தார்! சொற்பொழிவு நூற்கொடையாதல் தமிழ்த்தென்றல் திரு.வி.க. நிறைமலையாம் மறைமலையடிகள், தவப்பெருந்திரு ஞானியார் அடிகள் முதலோரால் கொள்ளப்பட்டு, கற்பனை அவையங்கூட்டிக் கலைக் கவின் மழையாய்ப் பொழியவும் வழிகாட்டியது. அதனைச் செய்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார். நூல் வள்ளுவம் என்னும் உள்ளுதோறு வகை யூற்றாம் நூல்! அந்நெல்லை மாவட்டம், சங்கர நாராயணர் கோயில் வாழ்நரால் உருவாக்கப்பட்டு ஒண்தமிழ்க் கடனாற்றும் வகையால் அமைந்த, இந்து சமயத் தமிழ்ப் பேரவைக்கண் தொடர் பொழிவாகச் செய்யப்பட்டதே `வள்ளுவ வளம் என்னும் பாரிய பொழிவு நூல். பொழிவாளர் தூத்துக்குடி மாவட்டம் கோயில் பட்டியில் வாழ்நராய் இருந்தும், தம் தலைக்கடன் தமிழ் வளர்ச்சியும் தமிழ்க் குறளும் எனக் கொண்டமையாலும், கேட்குநர் தோட்கும் செவியராக இருந்தமையாலும் வாய்த்த பேறு ஈதாம். பொழிவாளர் புலமைச் செல்வர்: தமிழ் நெறி வாழ்வர்; வழிவழித் தமிழ்க் கொங்கு தேர் வாழ்வுக் குடும்பத்தவர்; தமிழ், தமிழின மீட்டெடுப்பு வேட்கையர். ஆதலால் அரிய பெரிய செயலை எளிமையாய் இயல்பாய்ச் செய்ய வாய்த்ததாம். செய்தவர் எந்தை பெயரர் மு. படிக்கராமர்: புலவர். கலைமுதியர். ஆசிரியப் பணியர்க்கு இயற்கையாகத் தொழில் வகையால் வாய்க்கும் வளம் நாவன்மை; போதிக்கும் திறம்; பொழிவாற்றல்; பலர் தம் தொழிலைத் தொண்டாகவும், மொழி பண்பாட்டு வளர்ப்பாகவும் கொண்டார் அல்லர் கொண்டவர். வினையால் வினையாக்கிக் கொண்டவர் அவர், வித்தின் தன்மை அமைந்த விளைவள வித்தகர்! நூலாசிரியர் மு. படிக்கராமர் தம் பொழிவு நூலால் அவற்றை மெய்ப்பித்திருக்கிறார். திருவள்ளுவர் தம் நூலை 133 அதிகாரங்களாக, அதிகாரம் ஒன்றுக்குப் பத்துப் பாடலாக இயற்றி அறம் பொருள் காமம் என முப்பாற் பகுப்பாக்கினார். பாற்பகுப்பு பழைமையது: தொல்லாசான் தொல் காப்பியன் ஆணை வழியது. அறம் முதலாகிய மும்முதற்பொருள் என்றும் இன்பமும் பொருளும் அறமும் என்றும் ஈரிடங்களில் முறைப் படுத்துகிறார். சங்கச் சான்றோரும் மூவேந்தர் குடையும் செல்லுதலையுந் துணர்ந்து என்றும் மூவேந்தரும் ஒரிமையாராய் வாழ வேண்டும் என்னும் நோக்கில் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல என்று கூறுமளவு தமிழியமாகத் திகழ்ந்தது. தொல்காப்பியர், எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (1169) என்றமையால் எல்லா உயிர்க்கும் பொது வகைத்தாம் இன்பம் போல்வதன்று மாந்தப் பிறப்பர் கொள்ளும் இன்பம். அது பிறை நிலா வளர்பிறையாய் நிறைமதியாய்த் திகழ்வது போன்றது. அதனால் தொல்காப்பியர் காமக் கூட்டம் காமம் சான்ற கடைக் கோட் காலை என ஆளும் ஆட்சிகளாலும், கமம் என்னும் உரிச்சொல் நிறைந்தியலும் என்றமையாலும் காமத்துப் பால் எனப் பெயர் சூட்டினார். கமம் < காமம். முப்பால் பொழிவில் முதற்பால் முன்னே வெளிவந்தது. இதுகால் பொருட்பால் விரிவாக்கத்தால் முப்பாலாக (முப்பகுதியாக) வெளிப்படுகின்றது. முதற்கண் அமையும் பொருட்பால் ஒரு விளக்கம் என்னும் பகுதியில் பொருட்பால் திரட்டாக நூற்பொருள் விரிவாக்கம் பனித்துளிமுன் பனிமலையெனத் தோற்றம் தருகிறது. பழைய உரையாசிரியர்கள் தத்தம் நோக்கிலும் போக்கிலும் இயல் பகுத்து இயைபு காட்டினர் இவரோ. பொருட்பாலில் அமைந்துள்ள 70 அதிகாரங்களையும் கல்வி அறிவுப் பொருள் - 11; செயலாண்மைப்பொருள் - 13; நாட்டாட்சிப் பொருள் - 11; கூடிவாழும் பொருள் - 9 ; பகையும் படையும் - 6 ; களைய வேண்டிய பொருள் - 7 ; போற்றத்தக்கப் பண்புப்பொருள் - 7 ; வளமையும் வறுமையும் - 6 ; எனப்பகுத்தும் தொகுத்தும் கொள்ளலாம் என்பது நுண்மாண் நுழை புலப் பார்வையாம். பொருட்பால் 700 குறள்கள்; உரைவிளக்கம் குறள் ஒன்றுக்கு இரண்டு பக்கங்களுக்கு மேலாக இடம் பெறலால் நூல் 1300 பக்கங்கள் அளவில் விரிவாக்கம் பெறுகின்றது. ஓரதிகாரத்திற்கு ஏறத்தாழ 20 பக்கங்களை எட்டுகிறது. ஏனெனில், பொழிவுப் பொருளின் விரிவு எடுத்துக் கொண்ட பொழுதாலும் கேட்கும் அவைச்சிறப்பாலும், ஒவ்வொரு குறளுக்கும் தரப்படும் சான்றுகள் மேற்கோள்கள் ஒப்புமைப் பகுதிகள் சுட்டல் என்பவற்றாலும் விரிவாக்கமுறுகின்றன. பொழிவு முழுவதும் நூலில் இடம் பெற்றிராது; வேண்டும் சுருக்கம் பெற்றே அமைந்தது - அமையும் - என்பது பட்டறிவால் விளங்கும். அதிகார விளக்கம் என்னும் ஒவ்வோர் அதிகார முகப்பும் முழுதுறு நூற்பார்வையாகச் சிறக்கின்றது. இறைமாட்சி எனின் இறை என்பது முப்பாலிலும் எவ்வெப் பொருள்களில் இடம் பெற்றுள்ளது என்பது குறளும் பொருளுமாக விளக்கப்படுகிறது. அரசர், மன்னர், வேந்தர் என்னும் சொற்களை மிக ஆளும் வள்ளுவர் நிலம் ஆள்பவர் என்றும் ஆள்வது எக்காலத்துக்கும் பொருந்துவதாக அமைந்து விடுகின்றது என்பது அருமைமிக்கதும் அமைவானதுமாம் பொருளாகும். மன்னராட்சி மாறி மக்களாட்சியாகிய காலத்தும் மாறாப் பொருளது அது. குடியாட்சி கோனாட்சி குடிக்கோனாட்சி என மூவகை யாட்சிகளும் பொதுமை யாட்சியுமென இயலும் இக்கால நிலையில் எவ்வாட்சியும் நிலமாள்பவர் என்பதில் அடங்கி விடுதல் கண்கூடு. ஆதலால் எக்காலத் திற்கும் எவ்விடத்திற்கும் எந்நிலைக்கும் திருக்குறள் தக அமைந்த அமைவுடையது என்னும் பெருமை நூலாலும் உரையாலும் மெய்ப்பிக்கப் படும் மேன்மையதாகின்றது. நிலம் ஆள்பவர் என்பதற்கு ஏற்ப ஆள்பவர் என்பதைக் கொண்டதுடன் நில விளக்கமும், நிலவளமும் பிற பிற வளங்களும் வாய்ப்பினும், வேந்து அமையவில்லையேல் பயனில்லை என்றும் குறளைக் காட்டி வேந்து என்பதற்கு ஆள்பவர் எனப் பொருளுரை வழங்குவது காலத்தோடு பொருந்திய சால்புப் பார்வையாய்ச் சிறக்கின்றது. இறைமாட்சிக்கு, இறை மாட்சியனாக இலங்கியவனும் சங்கச் சான்றோருள் ஒருவனாகக் கொள்ளப்பட்டவனுமாம் தொண்டைமான் இளந்திரையன் கூறும் கால்பார் கோத்து என்னும் பாடலை எடுத்துக்காட்டி அதற்கு எளிய இனிய உரைவிளக்கமும் தருதல் அதிகாரப் பொருளாம் பொற்குடத்திற்கு இடப்பட்ட மாணிக்கப்பொட்டு அன்னதாய்ச் சிறக்கின்றது. இனிப் பாடற்கு உரை கூறுங்கால் பாடலை முதற்கண் வைத்து, அதன் விரிவிளக்கமாகப் பொருளை வைத்து, அப்பொருள் விளங்கத் தமிழில் பயிலும் நூற் சான்றுகளை எடுத்துரைத்து, திருக்குறள்களிலேயே அக்குறளை விளக்கும் ஒப்பமைந்தவை உளவாதலையும் தந்து குறளை விளக்கும் முறைமை அவையோர்க்கு மட்டுமன்றிக் கற்போர்க்கும் இன்பம் செய்வதாம். ஒரு குறள் முடிவில் அடுத்த குறளின் பொருள் தொடர்பை இயைத்து விளக்கம் செய்து அக்குறளை வைத்து வழக்கம் போல விளக்கம் புரிவதாய் இருப்பதால் பொருள் தொடர்பு இடையீடு இல்லாப் பொற்றொடரி (பொன்சங்கிலி) என இயைந்து விடுகின்றது. சங்கச் சான்றோர் பாடல் முதல் பிற்றைக் கால நூல்கள் வரை எடுத்துக்காட்டாகக் காட்டப்படுதலாலும் மக்கள் வழக்குகள் சுட்டப்படுவ தாலும் புலமையர் வழக்காலும் பொதுமக்கள் வழக்காலும் திருக்குறள் சிறத்தல் செவ்விதின் நாட்டப்படுகின்றது. நூலைப் பயில்வோர்க்குத் தமிழின் பரப்பு வெளிப்படப் புலப்படுவதாகின்றது. வாழ்வியலொடு பொருந்தா உரைகளும் தற்சார்பு வெளிப்படுத்தும் உரைகளும் பலப்பல உலாவருகின்றன. வாழ்வியலொடு ஒன்றியதும் எச்சார்பும் சாராமல் வள்ளுவர் நெஞ்சக் சார்பாய்க் கொண்டதுமாய் வெளிப்பட்டுள்ள இவ்வுரை வாழ்வாங்கு வாழ நினைப்பவர்க்கு வாய்த்த அரும்பெரும் துணையாம் எனச் சுருங்க உரைத்தல் சாலும். இப்பேரியல் விளக்க நூலை, தாள் விலை, கணினிப்படுத்தல், அச்சிடல், அட்டைகட்டல் என்பவற்றின் செலவு விண்ணேறி நிற்கும் நாளில் துணிந்து வெளியிடல் அரிது! அத்தகைய அரிய பெரிய தமிழ் வளமார்ந்த நூல்களையே தேர்ந்து வெளியிடுதலைத் தனிப்பெரும் நோன்பாகக் கொண்ட தமிழ்ப் போராளி திருமிகு கோ.இளவழகனார் வெளியிடுதல் இயல்பேயாம். முப்பாலின் மூன்றாம் பாலையும் தொடர்ந்து வெளியிடுதல் பேரறப் பொருள் நூல் யாத்த வள்ளுவப் பயனை தமிழ்வையகப் பயனாக நல்கிய பேற்றை வழங்கும் என்பது உறுதியாம். வாழிய நலனே! வாழிய நலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் திருநகர், இள. இளங்குமரன் மதுரை 625006. ஆசிரியர் உரை திருக்குறளில் செறிந்து காணப்படும் பொருள் வளமும், நலமும், மேன்மையும் நுண்மையும் : நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று; நீரினும் ஆரளவின்றே என்பதைத் திருக்குறளைக் கசடறக் கற்று, உணர்ந்து ஆராய்ந்த பெருமக்கள் அனைவரும் நன்கு அறிவர். பிறந்த நாள் தொட்டு, வாழும் காலம் வரை, அனைத்து அகவை யினரும், அனைத்து நிலத்தினரும், அனைத்து நிலையினரும், அனைத்துத் தொழிலினரும், அனைத்துத் துறையினரும், புகழும் நன்மையும், பெருமையும், இன்பமும் பெற்று உயர்ந்தோங்கி வாழ வழிகாட்டும் வாழ்வியல் நூல் திருக்குறள். மக்களில் நூற்றுக்கு நூறு விழுக்காடு தீயவராகவே எவரும் இரார். அங்ஙனமே நூற்றுக்கு நூறு விழுக்காடு நல்லவராகவே அமைந்திருப்பதும் அரிது. ஒவ்வொருவரும் தம்பாலுள்ள குறைகளை உணர்ந்து களையவும், நிறைகளைப் பெருக்கிக் காத்துக் கொள்ளவும் வழி வகுத்துத் தரும் வாய்ப்பான நூல் திருக்குறளாகும். திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பாலாக இயன்ற நூல் எனினும் மாந்தனின் அக வாழ்விலும் புறவாழ்விலும் இரண்டறக் கலந்து நெறி காட்டும் ஒளிவிளக்கு அறமே ஆகும். அறத்தோடு ஒன்றாத எவ்வாழ்வும் வாழ்வாகாது என்பதால், இவ்வாழ்வியல் விளக்க ஆய்வு நூலுக்கு வள்ளுவ வளம் - என்பது தலைப்பாயிற்று. இப்பெயரிட்டவர் என் மைந்தர் ப. திருமாவேலன் ஆவார். எச்சார்பும் இன்றி, நடுவு நிலை நின்று வாழ்வியல் நோக்குடன், அனைவரும் பயன் கொள்ளுமாறு அனைத்துக் குறட்பாக்களும் எளிமை யாய், தக்க எடுத்துக் காட்டுகளுடனும் இலக்கிய மேற்கோளுடனும், வரலாற்றுக் சான்றுகளுடனும், ஒத்த உலக அறிஞர்களின் மணி மொழிகளுடனும் ஒல்லும் வகையான் விளக்கம் பெற்றுள்ளது. ஏற்புடையதன்று எனக் கருதும் யாருடைய எந்த உரையையும் எடுத்துக்காட்டிக் குறை கூறுவதைக் காண்பது அரிது. பல குறட்பாக்கட்கு அறிஞர்கள் கூறும் உரை ஒன்றுக்கு ஒன்று மேலானதாய்க் குறளின் பெருமையை மேலும் உயர்த்துமாறு அமைந்திருக்குமாயின் யான் கற்க வாய்த்த உரைகளை அனைவரும் அறிந்துகொள்வது நலம் எனக் கருதி அங்காங்கே அமைத்துள்ளேன். அதிகாரத் தலைப்பை, முன்னுரை போல் முகப்பில் எடுத்து மொழிவது போல் ஒவ்வொரு அதிகார நிறைவிலும் குறட் கருத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு சில சொற்களால் குறிப்புச் சட்டம் போல் வழங்கப்பட்டுள்ளதையும் காணலாம். நூலின் நிறைவில் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலிலும் அமைந்த 108 அதிகாரங்களில் அமைந்த கருத்துகளில் முதன்மையான ஒன்றைத் தேர்வு செய்து திருவள்ளுவரின் வேண்டுதல் எனும் தலைப்பில் தொகுத்துக் குறள் எண்ணுடன் இடம் பெற்றுள்ளதையும் கண்டு, கற்றுப் பயன் கொள்ளலாம். ஈராண்டுகட்கு முன் அறத்துப்பால் வாழ்வியல் விளக்க ஆய்வு நூலைச் சென்னை நாலாந்தா பதிப்பக உரிமையாளர் உயர் மனச் செம்மல் திருமிகு. பொ. தங்கப் பாண்டியன் அவர்கள் பதிப்பித்துப் பெருமைப்படுத்தினார்கள் நூல் வெளியீட்டு விழாவை மிகச் சிறப்பாச் செய்தவர்கள் தமிழால் உணர்வாள்வோம் குறளால் உலகாள்வோம் எனும் குறிக்கோளுடன் தொண்டாற்றும் கோயிற்பட்டித் திருவள்ளுவர் மன்றத்தினர் ஆவர். பொருட்பால் வாழ்வியல் விளக்க ஆய்வு நூலை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் பதிப்பித்து வெளிக் கொணர்பவர், தனித் தமிழ்த் தோன்றல் உலகவாம் பேரறிவாளர், தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ. இளவழகனார் ஆவார். இந்நூலுக்கும் வள்ளுவப் பயன் எனும் தலைப்பில் அணிந்துரை வழங்கியவர்கள் நிறைமொழிமாந்தர், செந்தமிழ் அந்தணர் திருமிகு. இரா. இளங்குமரனார் ஆவர். அவர்கட்கும் எனக்குத் திருக்குறளின்பால் ஈடுபாட்டை உண்டாக்கிப் படிக்க வைத்து, சிந்திக்க வைத்து, ஆராய வைத்து, பேச வைத்து, எழுத வைத்துத் தூண்டித் துலக்கிவரும் சான்றோர் பெருமக்கள் அனைவர்க்கும் என்றும் நன்றிக் கடப்பாடு உடையேன். `வள்ளுவ வளம் எனும் தலைப்பில் காமத்துப் பால் வாழ்வியல் விளக்க ஆய்வு நூலையும் ஒருங்கே வெளிக்கொணரும் தமிழ்மண் பதிப்பகம் வணங்கத்தக்க உயர் நிறுவனமாகும். நூலைக் கற்போர் தங்கள் கருத்தை எழுத்துவழி தெரிவித்து உதவ வேண்டுகிறேன். நன்றி! அறிவகம் அன்பகத்தான், 31. இராம் நகர், மு. படிக்கராமு மகாராச நகர் (அஞ்சல்) திருநெல்வேலி 627 011. 9952144293 பொருட்பால் ஒரு விளக்கம் 1330 குறட்பாக்களால் ஆக்கப் பட்ட திருக்குறளில் அறத்துப் பாலில் 380 பாடல்களும் பொருட்பாலில் 700 பாடல்களும் காமத்துப் பாலில் 250 பாடல்களும் அமைந்துள்ளன. திருக்குறள் 10 குறள் ஓர் அதிகாரம் எனும் திட்டத்தில் அமைந்ததால் அறத்துப்பால் 38 அதிகாரம்; பொருட்பால் 70 அதிகாரம்; காமத்துப்பால் 25 அதிகாரமாக விளங்குகிறது. திருக்குறளின் உயிர் அறம்; திருக்குறளின் உடல் பொருள்; திருக்குறளின் உணர்வு காமத்துப்பால் என்று கூறலாம். ஒரு நாட்டில் வாழும் அனைத்து உயிரிகட்கும் தேவையான அனைத்து இன்றியமையாப் பொருள்களும் உடையதாய் நாடு அமைந்திருப்பதுடன்; நாட்டு மக்கள் அனைவர் வாழ்வும் பொருளுடைய (குறிக்கோள் உடைய) வாழ்வாக மிளிர வேண்டும் எல்லாரும் தக்காராய், எல்லாரும் தாழ்விலாச் செல்வராய் இலங்க வேண்டும் என்னும் உயர்நோக்கில் திருக்குறளின் பொருட்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் காட்டும் பொருள், பருப்பொருள் மட்டுமன்று நுண் பொருளும் ஆகும். அவை உடைமையாய் உரிமை கொண்டாடப்படு கின்றன. செல்வங்களாய்ச் செழிக்கச் செய்கின்றன. ஆக்கங்களாய் வளர்க்கின்றன; திருவாய் நிறைவளிக்கின்றன. செம்பொருள், நன்பொருள், மெய்ப்பொருள், எண்பொருள், ஒண் பொருள், வேண்டாப்பொருள், ஆன்றபொருள், நற்பொருள், சொற்பொருள், வான்பொருள், உறுபொருள், உல்குபொருள், தெறுபொருள், வேந்தன் பொருள், பொருட் செல்வம், பொருளுடைமை, பொருள் என்னும் பொய்யா விளக்கம், பொருள் என்னும் செல்வச் செவிலிகளையும் திருக்குறளில் கண்டு உணரலாம். உடைமைகளில் அன்புடைமை அறிவுடைமை, ஆர்வம் உடைமை, உள்ளம் உடைமை, ஒழுக்கமுடைமை, தவமுடைமை, பொருளுடைமை, நாநலம் என்னும் நலனுடைமை பண்புடைமை, துணிவுடைமை, நாணுடைமை ஆய உடைமைகைளைப் பெற்று வாழ வழி காட்டுகிறார். அத்துடன் அன்புடையார், அறிவுடையார், ஊக்கம் உடையார், ஒழுக்கம் உடையார், உணர்வதுடையார், நீர்மை உடையார் தவம் உடையார் கண்ணுடையார், செவி உணவிற் கேள்வியுடையார், இளிவரின் வாழா மானம் உடையார், எண் சேர்ந்த நெஞ்சத்திடன் உடையார், மதிநுட்பம் நூலோடு உடையார், நயனொடு நன்றி புரிந்த பயனுடையவராய் இலங்க வேண்டுவதுடன், அழுக்காறு உடையாராகவும் அச்சம் உடையவராகவும், மடியுடையவராகவும் எவரும் இருந்து விடக் கூடாது என்றும் விரும்புபவர் திருவள்ளுவர். செல்வங்களில் அருட்செல்வம், பொருட் செல்வம், பெருஞ்செல்வம், நெடுஞ்செல்வம் சிறப்பீனும் செல்வம், வேண்டாமை அன்ன விழுச் செல்வம், கேடில் விழுச் செல்வம் கல்வி, செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், பொருள் என்னும் செல்வச் செவிலி, பழகிய செல்வம் ஆகிய செல்வங்களைப் பெற்று அனைவரும் வாழ வழி காட்டுவதுடன் அற்கா இயல்பிற்று செல்வம் ஆகவே அற்குப செய்து வாழ் என்றும் உன் செல்வம், செயற்பால செய்யாது இவறியான் செல்வமாக இருக்கக் கூடாது என்றும் உன்செல்வம் பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வமாக இருக்கக்கூடாது அத்துடன் நச்சப்படாதவன் செல்வமாகவோ ஏதமாகக் கருதப்படும் பெருஞ்செல்வமாகவோ அமைந்து விடக் கூடாது என உரிமையுடன் வேண்டுகிறார். அத்துடன் அனைவரும் செல்வர்களாய் விளங்க வேண்டும், அதுவும் தாழ்விலாச் செல்வர்களாகவும், சீருடைச் செல்வர் களாகவும் விளங்க வேண்டும் என விரும்புபவர் திருவள்ளுவர். அனைவரும், அறனாக்கம், அறம் கூறும் ஆக்கம், அருப்பறா ஆக்கம், அரண் சேர்ந்தாம் ஆக்கம், செப்பம் உடையவன் ஆக்கம், மன்னுயிர்க்கு ஆக்கம் மன்னிய ஆக்கம், பொருளாக்கம், நெடி தாக்கம், நன்றாகும் ஆக்கம் பெருக்கி வாழ வேண்டுவதுடன் நடுவிகந்தாம் ஆக்கமோ; அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமோ; வெஃகியான் ஆக்கமோ; களவினால் ஆகிய ஆக்கமோ, கொன்றாகும் ஆக்கமோ பழி மலைந்து எய்திய ஆக்கமோ; யாரும் பெற்று விடக்கூடாது எனவும் வேண்டுபவர் திருவள்ளுவர். அனைவரும் திருப்பெற்ற திருவினராய் வாழ வேண்டும். உங்கள் திரு உலகவாம் பேரறிவாளன் திருவாக இருக்க வேண்டுமே அல்லாது கல்லார்கண் பட்ட திருவாக இருந்து விடக்கூடாது எனவும் விரும்புபவர் திருவள்ளுவர். மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு 396 பயவாக் களர் அனையர் கல்லாதவர் 406 கற்றில னாயினும் கேட்க 414 எனைத் தானும் நல்லவை கேட்க 416 நன்றின்பால் உய்ப்பது அறிவு 422 மெய்ப் பொருள் காண்பது அறிவு 423 புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் 538 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து 645 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல் 724 அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக 711 ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப் பேதையின் பேதையார் இல் 834 ஏவவும் செய்கலான் தான்தேரான் அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய் 848 ஆகிய நெறிகளை உள்ளடக்கிய 40. கல்வி, 41. கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 54. பொச்சாவாமை, 65. சொல்வன்மை, 71. குறிப்பறிதல், 72. அவை அறிதல், 73. அவையஞ்சாமை, 84. பேதைமை, 85. புல்லறிவாண்மை ஆகிய 11 அதிகாரங்களும் கல்வி அறிவுப் பொருள் தொடர்பான ஒரு தொகுப்பாகும். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் 466 ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல் 472 அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் 483 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் 497 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் 505 இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் 517 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை 594 குடியாண்மையுள் வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும் 609 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் 620 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் 622 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை 652 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் 666 பொருள் கருவி காலம் வினை இடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் . ஆகிய நெறிகளைத் தன்னகத்தே கொண்ட 47. தெரிந்து செயல் வகை, 48. வலி அறிதல், 49. காலம் அறிதல், 50. இடனறிதல் 51. தெரிந்துதெளிதல், 52. தெரிந்து வினையாடல் 60. ஊக்க முடைமை, 61. மடியின்மை, 62. ஆள்வினையுடைமை, 63. இடுக்கண் அழியாமை, 66. வினைத் தூய்மை, 67. வினைத் திட்பம், 68. வினை செயல்வகை ஆகிய 13 அதிகாரங்களும் செயலாண்மைப் பொருள் உணர்த்தும் ஒரு தொகுதியாகும். ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்து அமைவு இல்லாத நாடு 740 எனை மாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண் 750 அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு 384 இளையர் இனமுறையர்; என்று இகழார், நின்ற ஒளியோடு ஒழுகப் படும் 698 அறன் அறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை 635 வினைசெய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று 584 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது 690 இறைகாக்கும் வையகம் எல்லாம்; அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் 547 நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும் 553 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து 561 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ் வுலகு 578 என்னும் நெறிகளை மையமாகக் கொண்டு இயங்கும் 74. நாடு, 75. அரண், 39. இறை மாட்சி, 70. மன்னரைச் சேர்ந்தொழுகல், 64. அமைச்சு, 59. ஒற்றாடல், 69. தூது, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்த செய்யாமை, 58. கண்ணோட்டம், ஆகிய 11 அதிகாரங்களும் நாடு ஆட்சியாகிய பொருள் பற்றி விளக்கும் ஒரு தொகுதியாகும். பல்லார் பகைகொளலில் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர் கைவிடல் 450 நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை; தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் 460 விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா ஆக்கம் பலவும் தரும் 522 அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின் கண் அல்லல் உழப்பதாம் நட்பு 787 மருவுக மாசற்றார் கேண்மை ஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு 800 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு 809 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு 819 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து 828 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை 891 எனக்கூடி வாழத் தக்காரிடம் கூடிவாழும் கூட்டுப் பொருளை, 45. பெரி யாரைப் பிழையாமை, 46. சிற்றினம் சேராமை, 53. சுற்றம் தழால், 79. நட்பு, 80. நட்பு ஆராய்தல், 81. பழைமை, 82. தீ நட்பு, 83. கூடாநட்பு, 90. பெரியாரைப் பிழையாமை ஆகிய ஒன்பது அதிகாரங்களில் விளக்குவதை ஒரு தொகுதி யாக நோக்க வேண்டும். கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அதுவே படை 765 பேராண்மை என்ப தறுகண்; ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு 773 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின் 854 கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை 867 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு 874 வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு 882 என்னும் குறட்பாக்கள் பகையும் படையும் பற்றி எடுத்துரைக்கும் 77. படை மாட்சி, 78. படைச் செருக்கு, 86. இகல், 87. பகைமாட்சி, 88. பகைத்திறம் தெரிதல், 89. உட்பகை என்னும் 6 அதிகாரங்களும் ஒரு தொகுதியாகக் கொண்டு ஆராயத்தக்கன. குற்றமே அற்றம் தரூஉம் பகை 434 மனைவிழைவார் மாண்பயன் எய்தார் 901 பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யற்று 913 உண்ணற்க கள்ளை 922 வேண்டற்க வென்றிடினும் சூதினை 931 நிற்கும் கழி பேர் இரையாண்கண் நோய் 946 கரும்பு போல் கொல்லப்பயன்படும் கீழ் 1078 எனும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு விலக்கி வாழ வழி காட்டும் 44. குற்றங்கடிதல், 91. பெண்வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள்ளுண்ணாமை, 94. சூது, 95. மருந்து, 108. கயமை ஆகிய 7 அதிகாரங் களும் களைய வேண்டிய ஒரு தொகுதியாகும். அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் 954 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு 1025 சீரினும் சீரல்ல செய்யாரே, சீரோடு பேராண்மை வேண்டு பவர் 962 பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல் 975 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் 989 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு 994 ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு 1012 ஆகிய போற்றத்தக்க உயர்பண்புப் பொருள்களாம் 96. குடிமை, 103. குடி செயல்வகை, 97. மானம், 98. பெருமை. 99. சான்றாண்மை, 100. பண்புடைமை, 102. நாணுடைமை ஆகிய 7 அதிகாரங்களும் ஒரு தொகுதி யாகவும் மிளிர்கிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் 1033 ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு 760 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று 1008 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது 1041 இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து 1057 இரப்பன் இரப்பாரை எல்லாம், இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று 1067 என்னும் குறள்கள் 104. உழவு, 76. பொருள் செயல் வகை. 101. நன்றியில் செல்வம், 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவச்சம் எனும் 6 அதிகாரங் களிலிருந்து அதிகாரத்திற்கு ஒரு குறளாக எடுக்கப் பட்டனவாகும். இவ் 6 அதிகாரங்களும் பொருட்பாலில் வளமையும் வறுமையும் பற்றி எடுத்து மொழியும் அதிகாரங்களாகும். இவ்வாறு பொருட்பாலில் அமைந்துள்ள 70 அதிகாரங்களையும் கல்வி அறிவுப் பொருள் 11, செயலாண்மைப் பொருள் 13, நாட்டாட்சிப் பொருள் 11, கூடிவாழும் பொருள் 9, பகையும் படையும் 6, களைய வேண்டிய பொருள் 7, போற்றத் தக்க பண்புப் பொருள் 7, வளமையும் வறுமையும் உணர்த்துவன எனப் பகுத்தும் தொகுத்தும் காணலாம். திருக்குறளின் பொருட்பால் வழியாக ஒவ்வொரு மனிதனும் மனிதனாக வாழவும் மதிக்கப்படவும் எவை எல்லாம். தேவையோ அவை எல்லாம் பொருள்கள் எனவும், நாடு நாடாக விளங்கிப் பெருமை பெற வேண்டுவன அனைத்தும் பொருள்களே எனவும் வள்ளுவர் மதிப்பிடுகிறார். பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் ஒருபொருளாக (பொருட்டாக) மதிக்கத் தக்கவராய் வாழ வேண்டும். அறன் ஈனும்; இன்பமும் ஈனும்; திறனறிந்து தீதின்றி வந்த பொருள் 754 என்னும் குறள் நெறிக்கு ஏற்பப் பொருள் திறனறிந்து தீதின்றிவர வேண்டும்; அதனால் அறமும் இன்பமும் மலர வேண்டும்!. 39. இறைமாட்சி திருக்குறளில் முதற்பால் அறத்துப்பால் இறைவாழ்த்துடன் தொடங்குகிறது. மூன்றாம் பாலாம் இன்பத்துப் பால் தகையணங் குறுத்தல் அதிகாரத்தைத் தொடக்கமாகக் கொண்டுள்ளது. பொருட்பாலாம் இரண்டாம் பால் இறைமாட்சியில் தொடங்குவதும் சிந்திக்கத் தக்கதே! இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் (குறள் 10) முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் (குறள் 388) எனும் முக்குறள்களிலும் இறை, இறைவன் கடவுளாகப் போற்றப் படுவதையும், ஓர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை (குறள் 541) எனும் இக்குறளில் இறை நடு நிலைமைப் பொருளிலும், அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெரும் இறை தானே தனக்கு (குறள் 849) இக்குறளில் வரும் இறை துன்பம் என்னும் பொருளிலும் துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறை இறவா நின்றவளை (குறள் 1157) இவண் இறை கையின் மணிக்கட்டு என்னும் பொருளிலும் பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி 1இறைவற்கு 2இறைஒருங்கு நேர்வது நாடு (குறள் 733) இக்குறளில் முதலில் வரும் இறை நாடாள்வோனையும், இரண்டாவது வரும் இறை வரி என்னும் பொருளிலும் வருவதுடன், இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறை காக்கும் முட்டாச் செயின் (குறள் 547) இறைகடியன்என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறை கடுகி ஒல்லைக் கெடும் (குறள் 564) இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது (குறள் 690) உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இவர் (குறள்778) எனும் குறள்களில் நாடாளும் வேந்தனைக் குறிப்பதையும் அறிய முடிகிறது அவ்வாறே, முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் (குறள் 388) எனும் இவ்வதிகாரக் குறளில் இடம் பெறும் இறை, கடவுளாய் மதிக்கப் படும் நாடாள்வோனைக் குறிப்பதை உணர முடிகின்றது. இறை என்றால் வரி என முதலில் குறித்த சொல், பின்னர் வரி வாங்கும் உரிமை யுடைவனாகி நாடாள் வோனையும் குறித்தது. பின்னர் பிறிக்க முடியாது இரண்டறக் கலந்த மதிப்பு மிக்க கடவுளையும், பின்னர் எழுத்தறிவித்த ஆசிரியனையும் இறைவன் எனச் சான்றோர் குறிக்கலாயினர். திருவுடை மன்னனைக் காணிற் திருமாலைக் கண்டேனே எனத் திருவாய் மொழியும் மன்னனைக் கடவுளாகக் கண்டதை மொழியலாயிற்று. ஈராயிரம் ஆண்டுகட்கு முன் மன்னர்ஆட்சிக் காலத்து வாழ்ந்தவர் வள்ளுவர். ஆகலான் நாட்டை ஆளும் தலைமைப் பொறுப்புடையவர்களை அரசர், மன்னர், வேந்தர் எனும் சொற்களால் மிகுதியும், சுட்டுகிறார் எனினும் நிலன் ஆள்பவர் எனப் பொதுச் சொல்லாலும் அவர் குறிக்கத் தவறவில்லை. ஆகவே அரசர், மன்னர், வேந்தர் என வரும் இடங்களிலும் ஆள்பவர் என்றே பொருள் கொள்வோமாயின் எக்காலத்திற்கும் எவ்வகை ஆட்சிக்கும் ஏற்புடையதாக அமையும். எழுபத்து நான்காவது அதிகாரம் நாடு ஆகும். அவ்வதிகாரத்தில் தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு (குறள் 731) எனத் தொடங்கி நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு (குறள் 739) என்பது ஈறாக ஒன்பது குறட்பாக்களிலும் வளமும் நலமும் செறிந்த நல்ல நாட்டின் இலக்கணத்தை விரித்துரைத்த வள்ளுவர் நிறைவாகப் பத்தாது குறட்பாவை ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமைவு இல்லாத நாடு. (குறள் 740) என அமைந்துள்ளார். நாட்டில் எத்தனை வளங்கள் பொருந்தி இருந்தாலும் அந்நாட்டை ஆள்பவரிடம் தகுதி இல்லையேல் நாடு பயனற்ற நாடாகிவிடும் எனக் கூறுவது மிக ஆழமான நோக்காகும். ஆகவே, பொருட்பாலின் முதல் அதிகாரமாக இறை மாட்சியைச் சுட்டலானார். ஏர் உழுதலினும் நலமாகும் எருவிடுதல்; எருவிடுதலினும் நலமாகும் களை எடுத்தல்; களை எடுத்தலினும் நலமாகும் நீர் பாய்ச்சுதல்; நீர் பாய்ச்சுதலினும் நலமாகும் காவல் புரிதல்; காவல் சோர்ந்தால் கைப்பிடி தசவமேனும் களஞ்சியத்திற்கு வந்து சேருமோ? என்பதை ஏரினும் நன்றால் எருவிடுதல், கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு (குறள் 1038) என்னும் உழவு அதிகாரக் குறள் வழி நாட்டுக் காவலைச் சிந்திக்க வைப்பவர் திருவள்ளுவர். நாடாள்வோர் பொறுப்பும் மிகுதி, பணியும் பல, எனினும் அறிஞர் அவர்களின் பணி வகையை 1. காவற்பணி, 2. போர்ப்பணி, 3. ஆட்சிப்பணி, 4. வருவாய்ப்பணி, 5. அறப்பணி, 6.முறை செயற் பணி என ஆறுவகைப் பட்டன என வகுத்துரைப்பர். மன்னன் எப்படி? மக்களும் அப்படி என்பது முடியாட்சிக் காலப் பழமொழி ஆள்பவர் எப்படி? வாழ்பவர்களும் அப்படியே என்பது குடியாட்சிக் காலப் பழமொழி. சக்கரமும் பார்ச் சட்டமும் நன்கு அமைந்து முறைப்படி சேர்க்கப் பெற்ற வண்டியே ஆயினும், அதனைச் செலுத்துபவன் தேர்ச்சி உடையவன் ஆனால்தான், வண்டி கேடு எதுவும் இல்லாமல் இனிது செல்லும். வண்டியைச் செலுத்துவோன் தேர்ச்சி இல்லாதவன் ஆயின் சேற்றிலே அகப்பட்டு வண்டி, சீரழிந்து போகும் அரசியல் என்னும் வண்டியைச் செலுத்தும் ஆட்சியாளனுக்கும் இத்தகு தேர்ச்சி மிகுதியும் வேண்டும் என்பதைத் தொண்டைமான் இளந்திரையன் பாடிய கீழ்க்காணும் புறநானூற்றுப் (185) பாடல் தெள்ளிதின் விளக்குகிறது. கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவல் சாகாடு உகைப்போன் மாணின் ஊறு இன்றாகி ஆறுஇனிது படுமே! உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும் பகைக் கூழ் அள்ளற்பட்டு மிகப்பல் தீநோய் தலைத்தலை தருமே எனக் கூறுவது நல்ல முன்னுரையாக அமைகிறது. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (குறள் 381) வலிமை வாய்ந்த படைப் பெருக்கமும், தகுதி வாய்ந்த குடிமக்களும், வளமை நிறைந்த உணவும், நூலறிவும் நுண்ணறிவும் அமைந்த அமைச்சரும், நல்ல அரசியல் சுற்றமும், அயலவர் எளிதில் உட்புக இயலாத அரணும் தன்னத்தே கொண்ட வளநாட்டை ஆளும் வாய்ப்பினைப் பெற்றவனே ஆட்சியாளருள் எல்லாம் ஏற்றம்மிக்க ஆட்சியாளன் ஆவான். படை, குடி, உணவு, அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறும் சிறப்பாக அமைந்தான் சிறந்த ஆட்சியாளன். ஆறும் ஒன்றை ஒன்று விஞ்சுமாறு சிறப்போடு விளங்க வேண்டும். ஒன்று குறைபடினும் ஆட்சியாளன் சிறப்பைக் குறைத்து விடும் என்பதை உணர்த்தவே ஆறும் உடையான் அரசருள் ஏறு என்றார். ஆள்வோன் தனி நிலையில் பல்வகைத் தகுதிகளும் வாய்க்கப் பெற்றவனாய் இருப்பினும் இவ்வாறும் அருமையாய் அமைவதே ஏற்றம் சேர்க்கும். பத்திமை சான்ற படையும், பலர் தொகினும் எத்திசையும் அஞ்சா எயில் அரணும் - வைத்தமைந்த எண்ணின் உலவா இருநிதியும் இம்மூன்றும் மண்ணாளும் வேந்தர்க்கு உறுப்பு எனக் கூறுவது திரிகடுகம் ஆதலால் மூன்று உறுப்புகளைக் கூறுவதையும் எண்ணிப் பார்க்கலாம். உரைசெயும் அறத்தின் ஆற்றல் ஒருகுடை நிழற்ற, முந்நீர்த் தரைமுழுதும் ஆள வேண்டின் தகைபெறும் அமைச்சு நாடு புரையுறும் அரணே மிக்க பொருள் படை நட்பு என்று ஓதும் வரை செயப் படாத யாக்கை யுறுப்பு என மதித்துக் கோடி என விநாயக புராணம் கூறுவதையும் ஒப்பு நோக்குக. அரசு என்பது ஒரு பொறி. அப்பொறிக்கு அமைச்சர் கண்; நாட்டு மக்கள் கால்; நண்பர் தோள்; ஒற்றர் காது; தூதுவர் வாய், நூல் உள்ளுணர்வு என்பதைச் சூளாமணி, மந்திரக் கிழவர் கண்ணா, மக்கள் தன் தாள்க ளாகச் சுந்தர வயிரத் திண்தோள் தோழராகச் செவிகள் ஒற்றா அந்தர உணர்வு நூலா அரசெனும் உருவு கொண்ட எந்திரம் இதற்கு வாயத் தூதுவர் இயற்றப் பட்டார் எனக் கூறுவதும் ஒருவழி ஒப்பு நோக்கத் தக்கதாகும். கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை (குறள் 765) அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் (குறள் 954) பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று () வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. (குறள் ) நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு (குறள் ) கொளற் கரிதாய்க் கொண்ட கூழ்த் தாகி அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் (குறள் ) எனத் தனித்தனி அதிகாரங்களில் வள்ளுவர் கூறும் ஆறு உறுப்புகளின் சிறப்பினையும் நினைவிற் கொள்வது நன்றாகும். நாடாள்வோர் தீமையையும் பகைமையையும் அழிக்க அஞ்சக் கூடாது; வறியவர்கள் வறுமை தீர வாரி வழங்கும் ஈகையராகவும் இருக்க வேண்டும்; அறியாமையை அகற்றி, எவரும் எத்துறையிலும் ஏமாற்ற வாய்ப்புத் தராத பரந்துபட்ட பல்துறை அறிவுடையவராகவும் விளங்க வேண்டும். தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டாலும், நெருக்கடிக்கு மேல் நெருக்கடி ஏற்பட்டாலும் தாம் மேற்கொண்ட பணிகளில் அசைவிலா ஊக்கத்துடன் செயல் புரிதல் வேண்டும். இந்நான்கு நல்லியல்பு களும் என்றும் குறையாது இருத்தல் வேண்டும். அச்சம் இல்லாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை நான்கும் குறைய விடாமல் காப்பதே ஆட்சியாளர்க்கு இயல்பாகும். அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு (குறள் 382) நிலம் போன்று பொறுமையும், வானம் போன்று விரிந்த அறிவும், காற்றுப் போன்ற வலிமையும், தீப்போன்று தீமையை அழிக்கும் திறனும், நீர் போன்று அருளுடைமையும் உடையவன், நாடு ஆண்டால், அவன் புகழோடு விளங்குவான். அவன் குடிமக்களும் இனிதே வாழ்வர் எனும் கருத்துப்பட சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை வாழ்த்தி முரஞ்சியூர் முடி நாகனார் பாடிய மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வழித் தலைஇய தீயும் தீமுரணிய நீரும் என் றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் வலியும் தெறலும் அளியும் உடையோய் (புறம் 2) எனும் இப்பாடல் வரிகள் ஒப்பு நோக்கத் தக்கனவாகும். தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு (குறள் 383) நாடாள்பவர் தாம் செய்ய வேண்டிய எப்பணியையும் காலந்தாழ்த்தாது உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். தூக்கத்தில் சுகம் காண்பவராய் இருத்தல் கூடாது. கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்ற கல்வியாள ராய்த் தம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆராய்ந்து தெளிவாக முடிவெடுத்துத் துணிவுடன் செயல்படுத்தும் செயலாண்மை உடையராய் விளங்க வேண்டும். ஆட்சியாளரை விட்டு எப்போதும் காலந்தாழ்த்தாமை கல்வியறிவு செயல் துணிவு ஆகிய மூன்று முக்கிய இயல்புகளும் நீங்கி விடல் ஆகாது. அறனிழுக்காது அல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடையது அரசு (குறள் 384) ஆட்சித் தலைவனுக்குரிய அறவொழுக்கத்தினின்று தவறாது, அறம் அல்லாதவை தன்னாட்டில் எவராலும் எவ்வுயிர்களாலும் நிகழ்ந்து விடாமல் காத்து, போர் மறத்திலும் மாசற்ற பெருமை உடையவனாகவும் விளங்குபவனே சிறந்த ஆளுமை உடையவன் ஆவான். அறம் வழுவாது தீது அகற்றி, மறம் வாழுவாது நாட்டின் மானம் காப்பவனே தகுதியுடைய ஆட்சியாளனாவான். கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவரும் என நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் அதனால், நமர்எனக் கோல்கோடாது பிறர்எனக் குணம் கொல் லாது ஞாயிற்றன்ன வெந்திறல் ஆண்மையும் திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையும் மூன்றும் உடையை ஆகி இல்லோர் கையற நீ நீடு வாழிய நெடுந்தகை என பாண்டியன் இலவந்திக்கைப் பள்ளி துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிள நாகனார் பாடிய புறநானூற்றுப் பாடல் நல்லதொரு இலக்கியச் சான்றாகும். வீறின்மையின் விலங்காம் என மத வேழமும் எறியான் ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான் மாறனமையின் மறம் வாடும் என்று இளையாரையும் எறியான் ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் என்னும் சீவக சிந்தாமணிப் பாடலும் அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான் என்னும் புறப்பொருள் வெண்பாமாலைத் தொடரும் மறம் இழுக்கா மானம் உடைமைக்குச் சான்றாகும். மாநிலம் கா வல னாவான் மன்னுயிர்க் காக்குங் காலைத் தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரி சனத்தால் ஊனமிகு பகைத் திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆனபயம் ஐந்துந் தீர்த்து அறங் காப்பான் அல்லனோ? என்னும் பெரியபுராணப் பாடல் அறனிழுக்காது அல்லவை நீக்கிக் காக்கும் அரசுக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாகும். நாடு எல்லா நிலைகளிலும் தன்னிறைவு பெற்றுச் சிறந்த நாடாக விளங்க வேண்டுமானால், ஒவ்வொரு துறை வளர்ச்சியையும் தக்கவாறு திட்டமிட்டு அதனை நிறைவேற்றுவதற்குரிய கட்டமைப்பான சட்டங்களை முதலில் இயற்றுதல் வேண்டும். புத்தாக்கப் பணிகளில் மிகுந்த கவனம் செலுத்திச் செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் முதலில் செய்துவிட வேண்டும். நாட்டு வளர்ச்சிக்குரிய அனைத்துச் செல்வங்களையும் இடரின்றித் தேட வேண்டும். தேடியவை எந்த வழியிலும் வீணாகாதவாறு தக்க வழி முறைப்படி பாதுகாக்க வேண்டும்; நல்லதற்குச் சேதம் ஏற்படாமலும் காக்க வேண்டும் அல்லது நுழைந்து விடாமலும் காக்க வேண்டும். அதிகாரமும் பொருளும் ஒரு இடத்தில் குவிந்து விடாமல் தக்கவாறு உரிய பொறுப்பாளர் வழிப் பங்கிட்டு அளிப்பதுடன் பணியின் தகுதியையும் பயனையும் கருத்தில் கொண்டு முறைப்படி செலவு செய்யப்பட வேண்டும். இயற்ற வேண்டுவனவற்றை இயற்றலும், ஈட்ட வேண்டுவனவற்றை முறையோடு ஈட்டுதலும், தக்காங்கு காத்தலும், துறைவாரியாக ஆக்கப் பணிகட்குப் பகுத்துஅளித்தலிலும் கைக் கொள்ளப்படும் வல்லமைக்கு ஏற்றவாறே அரசின் வல்லமையும் அமையும். இக்குறளைப் பொருளியல் நோக்கோடு தான் சிந்திக்க வேண்டும் என்பதில்லை, பொது நோக்கோடும் சிந்திக்க இடம் தரும் குறளே ஆகும். இதோ குறட்பா இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு (குறள் 385) என்பதாகும். ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்போர் நாட்டு மக்கட்குத் துன்பம் நேரா வகையில் காத்து, நன்மை செய்து உயர்வடையச் செய்வதே அவர்களின் தலையாக கடமையாகும். நீதி கேட்டோ, குறை தீர்க்க வேண்டியோ விரைந்து ஆள்வோரை நேரில் கண்டு உரைக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது தயக்கம் இன்றி உரிமையுடன் சென்று காண்பதற்குச் சிரமமோ தடையோ இருத்தல் கூடாது. எளிமையாகவும் விரைந்தும் காண்பதற்குச் சட்டத்தில் தடை இருப்பினும் நீக்கி விடுதல் வேண்டும் எளிமையாக காண வாய்ப்பு இருக்க வேண்டும். அத்துடன் நாட்டு மக்களிடம் கடுஞ்சொல் கூறாது இனிய சொற்களையே பேச வேண்டும். காட்சிக்கு எளிமையும் கனிந்த மொழியும் உடையவரால் ஆளப்படும் நாடு அனைவராலும் போற்றப்படும். கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்பாணாற்றுப் படையில் தொண்டைமான் இளந்திரையனின் அரசிருக்கைச் சிறப்பை, குணகடல் வரைப்பின் முந்நீர் தாங்கு பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் வேண்டுப வேண்டுப வேண்டுநர்க் கருளி இடைதெரிந் துணரும் இருள்தீர் காட்சிக் கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து உடும்பில் சுற்றமோடு இருந்தோன் என்கிறார். கீழ் கடலாகிய எல்லையிடத்து நீரின் நடுவே ஞாயிற்று மண்டிலம் கதிர் பரப்பித் தோன்றினாற் போன்று விளங்கித் தன்பால் குறை வேண்டி வந்தார்க்கும் முறை வேண்டி வந்தார்க்கும், யார் யார் எதனை எதனை வேண்டினர், அவ்வவர்க்கு அவ்வவற்றை அருளிச் செய்து, பிறர் கூறாமலே குறிப்பால் பிறர் உள்ளத்தை உணர்கின்ற மயக்கற்ற நற்காட்சி யுடையனாய், கொடைக் கடனைச் செய்து முடித்துக் குவியாத உள்ளம் உடையவனாய்க் கொடுமை இல்லாத மந்திரச் சுற்றத்தோடே வீற்றிருந் தான் தொண்டைமான் இளந்திரையன் என்னும் காட்சி நல்ல தொரு எடுத்துக் காட்டாகும். இதனையே திருவள்ளுவர். காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (குறள் 386) என்கிறார். இன்சொல்லே கூறுகின்ற வாயினையும் ஏழையர்க்குப் பேருள்ளத் துடன் வாரி வழங்கும் கைகளையும்உடையவனாய் நாடாள்வோன் விளங்கினால் நாட்டு மக்கள் அவன் சொல்லைத் தெய்வ வாக்காகக் கருதி அவன் சொன்னதைச் சொன்னபடியே செய்து வாழ்வர். அவன் நாட்டு மக்கள் எத்தன்மையராய் இருக்க வேண்டும் என எண்ணுகிறானோ அத்தன்மை வாய்ந்தவர்களாகவே மக்களும் அமைவர். நாடாள்வோன் அதிகாரத்தையும் அஞ்சாமையையும் விட ஆற்றல் மிக்கது இன்சொல்லும், கொடைப் பண்பும் என்னும் இனிய பண்பின் ஏற்றத்தை இன்சொலால் ஈத்தளிக்க வல்லவர்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்து இவ் வுலகு (குறள் 387) எனக் கூறுகிறார். இனியவை கூறலில், நயனீன்று நன்மை பயக்கும், பயனீன்று பண்பின் தலைபிரியாச் சொல் (குறள் 97) எனக் கூறியுள்ளதையும் புகழ் அதிகாரத்தில் ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள் 231) எனக் கூறியுள்ளதையும் மீண்டும் நினைவு கூர்தல் நலம் தரும். இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன் வினையன் தூயன் விழுமியன் வென்றியன் நினையும் நீதிநெறி கடவான் எனின் அனைய மன்னற்கு அழிவும் உண்டாங் கொலோ? என்னும் கம்பனின் கவிதை வரிகள் நல்லதொரு விளக்கமாகும். ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் (குறள் 214) என்னும் ஒப்புரவறிதலில் அமைந்த குறட்பா, பொதுநலன் கருதி வாழ்பவனே உயிர் வாழ்பவனாய்க் கருதப்படுவான். ஒப்புரவு இல்லாதவன் இறந்தாருள் ஒருவனாகவே வைத்து எண்ணப் படுவான் எனக் கூறியுள்ளதையும் புல்லறிவாண்மை அதிகாரத்தில் உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும் (குறள் 850) எனவும், உயர்ந்தோர் உண்மைப் பொருளாகக் கருதுவனவற்றை இல்லை என்று மறுத்துரைப்பவன் இவ்வுலகில் பேயனாக வைத்து எண்ணப் படுவான் எனத் தன்நிலை தாழ்வோரைத் தாழ்ந்த நிலையில் வைத்து எண்ணிய திருவள்ளுவர் உயர்ந்தாரை உயர்ந்த இடத்தில் கொண்டு வைக்கவும் மறக்க வில்லை என்பதற்கு முதல் சான்று இல்வாழ்க்கை அதிகாரத்தில் கூறிய வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (குறள் 50) என்னும் குறளாகும். அவ்வாறு ஆள்வோர்க்கு முதன்மை இடம் நல்கும் பாடலே, முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் (குறள் 388) என்னும்இறைவனை பேரா இயற்கைப் பெரியோனாக்கும் குறளாகும். நன்மை செய்வதிலும் தீமை போக்குவதிலும் நீதி வழங்கு வதிலும் சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் நடுநிலை தவறாது கடமை புரிந்து, நாட்டை ஆளும் ஆட்சியாளன் வடிவத்தால் மனிதனாயினும் செயலால் இறைவன் நிலையில் வைத்து மதித்துப் போற்றத் தக்கவன் ஆகிறான் என்பதுவள்ளுவக் கணக்கீடு ஆகும். முறையோடு ஆள்பவனே இறைவன் ஆவான். சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவனுக்கு உழவர் குடியின் அன்றைய நிலையை எடுத்துரைக்கும் நோக்குடன் வெள்ளைக் குடி நாகனார் பாடிய புறநானூற்றுப் பாடலின் ஒருபகுதி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கதாகும். முறை கேட்க வேண்டி மக்கள் நாடி வந்த போது ஆள்வோர் அவர்களைக் காலத் தாழ்வு சிறிதும் இல்லாமல் கண்டு, அவர்கள் கூறும் குறைகளைக் கேட்டு, முறை வழங்குதல் வேண்டும். அவ்வாறு முறை வழங்குதல் மழை வேண்டும் என்று வேண்டிக் கொண்ட போது பெய்தால் எத்தகைய நன்மை பயக்குமோ அத்தகைய நன்மையை நாட்டு மக்களுக்கு உண்டாக்கும் என்பதை, அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே எனக் கூறியுள்ளதை நினைவிற் கொள்வோமாக! எந்த வேளையினும் நொந்தவர் துயர் கேட்டு இடர் இழைப்பவன் தனது ஏக மைந்தனே எனினும் வதைத்திட ஒல்கான் மாக்களின் சுகநலம் அன்றிச் சிந்தனை மற்றோர் பொருளினில் செலுத்தான், தீமொழி கன விலும் புகலான் தந்தைபோல் தாய்போல் எவரையும் ஓம்பும் தன்மையனே இறை அன்றோ எனக் கூறும் நீதி நூற் கருத்தும் நல்ல சான்றாகும். செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ் தங்கும் உலகு (குறள் 389) பிறர் சொல்லும் குறைபாடுகள் கேட்பதற்குத் தன் காதுகட்கு இனிமையாக இல்லாமல் வெறுக்கத் தக்கனவாக இருந்தாலும் அத்தகைய கடுஞ்சொற்களையும் பொறுமையோடு கேட்கும் குணமுடைய ஆட்சி யாளனின் சீரிய ஆட்சியின் கீழ் இவ்வுலகத்தார் அனைவரும் அமைந்து வாழ்வர். கசப்பான சொற்களைக் கூறுபவனைக் கசக்கிப் பிழிய எண்ணாது பொறுமையுடன் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் பண்பாளன் ஆட்சியில் உலகம் முழுமையும் தங்கும். சங்க காலத்துச் சான்றோர்களில் ஒருவர் ஆலத்தூர்க் கிழார். சோழ நாட்டு மன்னன் கிள்ளிவளவன். அவன் ஒரு பொழுது கரூவூரை முற்றுகை யிட்டிருந்தான். கரூர் மன்னன் கோட்டை யினுள் அடைபட்டிருந்தான். சோழனுடைய வீரர் தன் நகர்ப்புறத்துச் சோலையில் உள்ள காவல் மரங்களை வெட்டினர், அதனால் உண்டாகும் ஓசை தன் செவிப்பட்டும் போர்க்கு வாராது அஞ்சி மடிந்து கிடப்பதுகண்டு, சோழனை நோக்கி, வேந்தனே, காவு தொறும் கடிமரம் தடியும் ஓசை தன்னூர் நெடுமதில் வரைப்பில் கடிமனை இயம்ப ஆங்கினிது இருந்த வேந்தனோடு ஈங்குநின் சிலைத்தார் முரசம் கறங்க மலைத்தனை என்பது நாணுத்தக உடைத்தே என இடித்துரைத்த மொழி கேட்டுச் சினங்கொள்ளாது, தன் தவறு உணர்ந்து முற்றுகையை விலக்கிப் புலவர் பாடும் புகழ் உடையவனாய் விளங்கினான் கிள்ளி வளவன் என்பது நல்ல சான்றாகும். களிற்றின் கன்னத்தால் உரிஞ்சித் தேய்க்கப் பெற்ற சந்தன மரம் நறுமணம் உடையதாக இருக்கும். அதுபோல தம் குடிகளாக இருப்போர் அறியாமல் தவறு செய்வார்களாயின் அதனைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். அத்தகைய ஆள்வோர் வழியில் உலகம் முழுவதும் வழிபட்டுச் செல்லும் என்னும் கருத்தைச் சூளாமணி 262 ஆம் பாடல். கண்ணியல் கடாத்த வேழம் கவுளினால் உரிஞப் பட்டுத் தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப் புண்ணியக் கிழவர், கீழோர் பிழைத்தன பொறுப்பவாயின் மண்ணியல் வளாகம் எல்லாம் வழிநின்று வணங்கும் அன்றே என்பது ஏற்ற சான்றாகும். பாண்டியன் நெடுஞ்செழியன் அரசவையில் கண்ணகி மன்னனைத் தேறா மன்னா? நற்றிறம் படராக் கொற்கை வேந்தே! என்று தான் விளித்தாள்! ஆனால் அவனோ கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று என்றும் தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி என்றும் பண்புடை நன்மொழி கூறி நீதிக்குக் கட்டுப்பட்டான் என்னும் சிலப்பதிகாரச் செய்தியும் சான்றாகவே அமையும். கொடை அளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி 390 ஆள்வோர்க் கெல்லாம் வழி காட்டும் விளக்குப் போன்ற ஆட்சியாளன், நாட்டில் நற்பணி நாளும் நிகழ நன்கொடை வழங்குபவனாகவும், மன்னுயிர் ஓம்பி அருள் ஆள்பவனாகவும், குடி தழீஇக் கோலோச்சும் நேர்மையாளனாகவும், மக்களை எல்லாம் தன்னுயிர் போல் பேணிக் காப்பவனாகவும் விளங்கி நல்லாட்சி புரிபவனே ஒளி போன்றவன் ஆவான். எனக் கூறி அமைகிறார் வள்ளுவர். கொடை, அருள், நேர்மையுடன் குடி நலம் காப்பவன் புகழ்மிக்க ஆட்சியாளனாய் விளங்குவான். தூங்காமை அரணுடைமை படையுடைமை துணிபுடைமை தூய்மை கேண்மை நீங்காமை அறிவுடைமை நாணுடைமை பொறையுடைமை புன்மை நெறிச்செல்லாமை பூங்காமை எனக் கொடுக்கும் கொடை மடமை இவை தழுவிப் புரவு பூண்டோன் தீங்காம் ஐவகைப் பயம் தீர்த்து, ஆறுஅகற்றி ஏழ்நிலம் கோல் செலுத்தா நின்றோன் என்னும் திருவாப்பனூர்ப் புராணப் பாடல் இறைமாட்சியின் தொகுப்பாகும். இறைமாட்சி அதிகாரத்தின் பரப்பு திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் அதிகாரங்களில் ஒருபாதி அதிகாரங்களை நேரடியாகவும், ஏனைய அதிகாரங்களை இலை மறை காயாகவும் தழுவி நிற்பதையும் காணலாம். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண், அஞ்சாமை, ஈகை அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை அறம், மறம், மானம், இன்சொல், பொறை, கொடை, அளி, செங்கோல் என இருபத்தொரு நல்லியல்புகளைத் தன்னகத்தே கொண்டவராய் ஆள்வோர் விளங்கினால் மக்கள் வாழ்வாங்கு வாழ்வர். 1. படை - (படைச்செருக்கு, படை மாட்சி), 2. குடி - (குடிமை, குடி செயல்வகை) 3. கூழ் - (பொருள் செய்ல்வகை உழவு), 4. அமைச்சு - (அமைச்சு), 5. நட்பு - (நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடா நட்பு, பெரியாரைத் துணைக் கோடல், பெரியாரைப் பிழையாமை, சிற்றினம் சேராமை), 6. அரண் - (அரண்), 7. அஞ்சாமை - (ஆள்வினையுடைமை), 8. ஈகை - (ஈகை), 9. அறிவு - (அறிவுடைமை பேதைமை, புல்லறிவாண்மை), 10. ஊக்கம் - (ஊக்கம் உடைமை), 11. தூங்காமை - (மடியின்மை), 12.கல்வி - (கல்வி, கல்லாமை, கேள்வி), 13. துணிவுடைமை - (தெரிந்து செயல்வகை), 14. அறம் - (அறன் வலியுறுத்தல்), 15. மறம் - (பகைமாட்சி), 16. மானம் - (மானம்), 17. இன்சொல் - (இனியவை கூறல்), 18. பொறை - (பொறையுடைமை), 19. கொடை - (ஒப்புரவு அறிதல்), 20. அளி - (அன்பு, அருளுடைமை), 21. செங்கோல் - (செங்கோன்மை, கொடுங்கோன்மை). நாடாள்வோன் குடிமக்கள் அனைவரையும் பேணிக் காக்கக் கடமைப் பட்டவன்; அவன் ஆட்சிச் சிறப்பை உணர்த்த முற்படும் திருவள்ளுவரின் சிந்தனை, நூல் முழுவதும் தழுவி நிற்கும் சிறப்பும் எண்ணத் தக்கதாகும்! ஆள்வோன் அரசருள் ஏறாய் இலங்குக அஞ்சாமையும் ஈகையும் அறிவும் ஊக்கமுமே குறைவற்ற இயல்புகள்! தூங்காமையும் கல்வியும் துணிவும் நீங்காமை வேண்டும் அறன் இழுக்காது அல்லவை நீக்கு மறன் இழுக்கா மானம் போற்று இயற்று! ஈட்டு காத்து, வகு! வல்லவனாய் விளங்கு எளிமைக் காட்சி தருக கடுஞ்சொல் சொல்லாதே இன்சொல் கூறி, வழங்கி வாழ்க முறை செய்து காப்பாற்று புகழ்ச்சிக்கு மயங்காதே குறை கூறுவோர் மொழியைக் குறையின்றிக் கேள்! நல்லோர் ஆட்சியே நாட்டிற்கு விளக்கு 40. கல்வி நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்பது புறநானூற்றில் (187) இடம் பெற்றுள்ள ஔவையார் பாடல்களில் ஒன்றாகும். மருதமும் நிலந்தான், முல்லையும் நிலந்தான், குறிஞ்சியும் நிலந்தான், நெய்தலும் நிலந்தான். இந்நான்கு நிலத்தில் நல்ல நிலம் எது? செயலாண்மை மிக்க நல்லறிஞர் வாழும் நிலமெல்லாம் நல்ல நிலம்தான். என்பதே ஔவையாரின் கருத்து. அவரின் கூற்றுப்படி மாந்தர் வளமே நாட்டு வளம் என்பது புலப்படும். அதனாலேயே சான்றோர் அறிவறிந்த மக்கட் பேறே பேறு என்றும் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றும், மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே என்றும் உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றும் உணர்ந்து போற்றினர். இத்தகைய பெருமைக்குரிய மானிடப் பிறப்பு, தம் பிறப்பிற்குரிய இயல்பினையும் தகுதியினையும், சிறப்பினையும் செம்மையினையும் நிறைவினையும் பெற்று, வளர, வழிகாட்டித் துணைபுரிந்து ஊக்க மூட்டுவது கல்வியேயாகும். கல்வி மனித வாழ்வைப் பெருமைக்குரிய தாக்குகிறது; கல்வி மனிதச் செயலாகும்; கல்வியே மனிதனின் நடைமுறை ஒழுக்கங்களை நெறிப் படுத்துகிறது; கல்வியாலேயே மனிதன் மனிதனாக மதிக்கப்படுகிறான்; கல்வியே வருங்காலக் குமுகாயத்தை வடிவமைக்கிறது. எதிர்கால வாழ்வின் குறிக் கோள்களை எய்துவதற்கு அடிப்படையாக விளங்குவது கல்வியே யாகும். கல்வியானது பரந்த நோக்குடன் செயல்பட்டு, ஒவ்வொரு மனிதனும் தன்னால் இயன்ற அளவு மனித வளர்ச்சிக்கு உறுதுணை புரிவதற்குத் துணை நிற்பதே என்கிறார் பேரறிஞர் நன். கல்வியானது மனிதனிடம் புதைந்து கிடக்கும் நன்மைகளையும் திறன்களையும் ஆற்றல்களையும் வெளிக் கொணர்ந்து, ஆக்க ஆற்றலினை இயக்க ஆற்றலாக வெளிப்படுத்த உதவுகிறது என்பவர் சேம்சு ராய்சு. மனிதனின் தனித் தன்மைகளைப் பொருந்திய வளர்ச்சிக்கு ஈடுபடுத்த உதவுவது தான் கல்வியின் பொருளும் பயனும் ஆகும் என்கிறார் விவேகானந்தர். கல்வியின் பயன் தன்னை உணர்வது என்கிறார் சர் சாண் ஆடம்சு. நீ ஓராண்டிற்குத் திட்ட மிட்டால் பயிர் செய்; பத்து ஆண்டுகளுக்குத் திட்டமிட்டால் மரங்களை வளர்; நூறாண்டு களுக்குத் திட்டமிட்டால் மனிதனை உருவாக்கு எனத் திட்ட மிடுதலையும், வளர்ச்சியையும் பற்றி ஒரு சீனப் பழமொழி கூறுகிறது. நல்ல மனிதர்கள், நல்ல குடும்பம், நல்ல குமுகாயம்,நல்ல நாடு, நல்ல உலகம் உருவாக அடிப்படையாய் அமைவது கல்வியே ஆகும். குழந்தைகள் தம் பெற்றோர் மற்றும் உடன் பழகுவோர் வழி, கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும், உற்றறிந்தும் பல பொருள்களையும், செயல்களையும், செய்திகளையும், பழக்க வழக்கங்களையும், நடைமுறை வாழ்வியல் ஒழுங்குகளையும், கற்கிறோம் என்று தெரியாமேலே கற்றுக் கொள்கின்றனர். பள்ளி செல்லும் முன்பே பேச்சு மொழி ஓரளவு தெளிவு பெற்று விடுகிறது. கற்போரும், கற்பிப் போரும் நீண்ட நெடுங்காலமாக உலகில் இருந்து வந்துள்ளனர். அவ்வவ்வக் கால அறிவு வளர்ச்சிக்கு ஏற்பக் கல்வி புகட்டப்பட்டு வந்துள்ளது. இக்காலம் அறிவு வளாச்சி மேலோங்கி வளர்ந்து வரும் காலம் ஆகவே கல்வி நிறுவனங்கள் வழி கல்வி கற்றல் மிக இளமையிலேயே தொடங்கி விடுகிறது. கற்போர் தொகையும் நாளும் பெருகி வருகிறது. இன்னும் கல்வி ஒளி பரவாத ஊர்களும் வீடுகளும் நாட்டில் இல்லாமல் இல்லை. இன்பத்தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்று உரைக்கும் நிலை எய்தி விட்டால் துன்பம்போம், சுகம் வரும்; நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் என்கிறார் பாவேந்தர் பாரதிதாசனார். ஆகவே, கல்வி வேட்கை மீதூர்ந்த பெருங் கவிஞர் பாரதியார், இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல் என அழுந்த உரைத்தார். புல்லைக் காட்டிக் கொண்டு போனால் அவனைப் பின்பற்றி ஓடும் மாட்டைப் போல நல்லறிவைத் தேடி நான் ஓடுகின்றேன் என ஓடி ஓடித் தேடித் தேடி கற்வர் சாக்ரட்டீசு. நல்ல நூல்களை எனக்குத் தேடித் தருபவர் எவரோ அவரே எனக்கு நல்ல நண்பர் எனக் கூறி நல்ல நூல்களைக் கற்பதைத் தன் நாள் வழிக் கடமையாகக் கொண்டொழுகிய பெருமகன் அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவராக விளங்கிய ஆபிரகாம் லிங்கன். என்னை நடுத்தெருவில் நிறுத்தி வாரந் தோறும் நான்கு கசை அடிகள் தரப் பெறும்; அதனைப் பெற்றால் தான் நீ படிக்க அனுமதிக்கப்படுவாய் எனும் கட்டளையிட்டால் கூட கசையடிக்கு அஞ்சிக் கற்பதை விட மாட்டேன் என்று கூறியவர் சாந்துணையும் தாம் கற்றதோடு அமையாது, உலகம் சாந்துணையும் கற்க, ஒரு ஒப்பற்ற நூலை வழங்கி விட்டுச் சென்ற பொருளியல் அறிஞர் காரல் மார்க்சு. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (குறள் 391) என்பது கல்வி அதிகாரத்தில் அமைந்த முதற் குறள். ஒவ்வொரு வரையும் திருவள்ளுவர் உரிமையோடும், அன்போடும் கற்கு மாறு வேண்டுகிறார். அத்துடன் எவற்றைக் கற்க வேண்டும்? எப்படிக் கற்க வேண்டும்? ஏன் கற்க வேண்டும்? என்னும் மூன்று வினாக் களுக்கும் விடை அளித்து. அவ்வொரு குறளுக்குள் கல்வியை மட்டுமல்ல வாழ்வையே அமைத்துக் காட்டும் திறம் வியற்கற் பாலது. மானிடப் பிறப்புற்ற ஒவ்வொருவரும் கட்டாயம் கற்க வேண்டும்! ஐயம் இன்றி, குற்றம் இன்றி, மாசு நீங்கக் கற்க வேண்டும். கற்க வேண்டிவை மிகுதி வாழ்நாளோ குறைவு ஆகவே, நமக்கு ஈடுபாடும், பயனும் நலமும் தரும் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். அவ்வாறு கற்பவற்றைக் கசடறக் கற்றபின் நாம் கற்றுணர்ந்த நன்னெறிகளைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் எனத் தெளிந்த கல்வி பெறத் தெளிவான வழி உணர்த்துபவர் திருவள்ளுவர். கற்க வேண்டும்! கசடறக் கற்க வேண்டும்! கற்பவை கற்க வேண்டும்! கற்ற பின்னும் கற்க வேண்டும்! நிற்கக் கற்க வேண்டும்! ஏழு சீருக்குள் ஐந்து நெறிகளை அருமையாக உணர்த்தும் திறம் வள்ளுவர்க்கே வாய்த்த திறமாகும். வள்ளுவர் நோக்கு கற்க! நிற்க என்பதாகும்! ஆகவே நிற்க! கற்க! நுண்ணிய நம் மொழியில் அதை கல்! Ú! என ஈரெழுத்து ஆணைச் சொற்களாய் நினைவில் கொள்ளலாம். மனமாசு அகலக் கற்க! என நாமும் வேண்டுவோம்! கற்பது ஏது கொல்! கசடறக் கற்பதே கல்வி எனப் பாரதம் கூறுவதையும், கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்னும் நறுந்தொகை மொழியையும் மாசறக் கற்பதே கல்வி என்னும் மூதுரை மொழியும் குறட் கருத்தின் பிழிவே ஆகும். கற்றவர் என்பவர் கற்றபடி நிற்பவரே என்னும் நபிகள் நாயகத்தின் மொழியும் ஒத்த கருத்தே! படிக்க அறியாதவனைப் போன்றே படிக்கக் கூடாதவற்றைப் படிப்பவனும் அறியாதவன் ஆகிறான் என்னும் தோரோ கருத்து, கற்பவை கற்க என்னும் வள்ளுவர் கருத்தே! தன் மக்கள் படிக்கக் கூடாதது என்று கருதும் எந்த ஒரு வார்த்தையையும் ஓர் ஆசிரியன் எழுதக் கூடாது என இரச்சல் லொவெல் கூறுவது எண்ணத் தக்கது! கற்பவையே எழுதப் பட வேண்டும்! கற்கக் கூடாதவை ஏன் எழுதப்பட வேண்டும். தான் எழுதிக் கெட்டது போல் மற்றவர்கள் படித்துக் கெட வேண்டுமா? கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று, ஒழுக்கத்தில் ஒழுகச் செய்வதே ஆகும் என ரசுக்கின் கூறுவது வள்ளுவரின் கற்க! நிற்க! நெறியேயாகும். ஒவ்வொரு தனி மனிதர் வாழ்க்கையும் இன்பமுடைய தாகவும், நன்மையுடையதாகவும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கல்வி அமைதல் வேண்டும்! வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதே கல்வி என்னும் அறிஞர் பெசுடலசி அவர்களின் கருத்தும் ஒத்த கருத்தே! எப்பிறப் பாயினும் ஏமாப்பு ஒருவற்கு மக்கட் பிறப்பிற் பிறிதில்லை - அப்பிறப்பில் கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன் கண் நிற்றலும் கூடப் பெறின் என்னும் அறநெறிச் சாரப் பாடல் ஏற்புடைய எடுத்துக் காட்டேயாகும். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு (குறள் 392) மனித உடலை எண் சாண் உடம்பு என்பர். அதில் முதன்மையான பகுதி ஒரு சாண் அளவுள்ள தலை; அத்தலையில் தான் ஐம்பொறிகளும் அமைந்துள்ளன. அதில் அறிவு பெறும் வாயில் களில் மிகச் சிறப்புடையது கண்களாகும். கல்வித் துறையின் பிரிவுகள் இன்று கணக்கின்றிப் பெருகி வருகின்றன. எனினும் அவை கலையியல், அறிவியல் என்னும் இரு பெருந்துறைகளின் உட்பிரிவுகளேயாகும். கலை தொடர்பான கல்விக்கு அடிப்படை மொழியின் கண் அமைந்துள்ள எழுத்து களாகும். அறிவியல் தொடர்பான அனைத்துத் துறைக் கல்விக்கும் அடிப்படை எண்களாகும். மாந்தர் பொதுவாக எண் என்று சொல்லும் அறிவியலும், எழுத்து என்று சொல்லும் கலை இயலும் ஆகிய இருவகைக் கல்விப் பிரிவுகளையும், சிறப்பாக வாழ விரும்பும் மக்கள் உயிர்க்குக் கண்ணென்று அறிஞர்கள் சொல்லுவார்கள் எனத் திருவள்ளுவர் சொல்லுகிறார். வாழ்வார்க்கு எண்ணும் எழுத்துமே உண்மையான உயர்ந்த பயனுடைய கண்களாகும். எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் எனவும், எண் எழுத்து இகழேல் எனவும் ஔவையார் கூறியுள்ள தொடர்களையும் நினைவில் கொள்க! ஏரணம் காண்என்பர் எண்ணர் எழுத்து என்பர் இன்புலவோர் சீரணங் காய சிற்றம்பலக் கோவையைச் செப்பிடினே எனக் கூறும் மாணிக்க வாசகரின் மணிமொழியையும் மனத் தகத்துக் கொள்க! எழுத்தறியத் தீரும் இழிதகைமை, தீர்ந்தான் மொழித் திறத்தின் முட்டறுப்பான் ஆகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். எனும் தனிப் பாடல் கருத்தும் அதன் விளக்கம் போல் அமைகிறது. கற்பக் கழிமடம் அஃகும், மடம் அஃகப் புற்கம் தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் - கோளுணர்ந்தால் தத்துவமான நெறிபடரும், அந்நெறி இப்பால் உலகத்து இசை நிறீஇ உப்பால் உயர்ந்த உலகம் புகும் என்னும் நான்மணிக் கடிகையின் கருத்தும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (குறள் 393) கற்றவர் கண்களே கண்கள், கல்லாதவர் கண்கள் புண்கள் கற்றவர் புறக் கண்களுடன் அகக் கண்களும் உடையவராவர், அகக்கண் அருட் கண்ணாகும். அக்கண் பிற உயிர்க்குத் துன்பம் தாராது. துன்பப்படும் உயிரைக் கண்டால் தாமும் துன்புறும் துடிப்புறும், அத்துடிப்பு ஏற்படாக் கண்களில் இருந்து கண்ணீர் வடியாது, நெஞ்சம் நெகிழாது, துன்பம் துடைக்கத் துணிந்து நில்லாது; அத்தகைய அக உணர்வை உருவாக்காத கண்களால் என்ன பயன்? ஓர் உயிர் படும் துயரைக் கண்டு அகக் கண்ணுடைய உயிர்கள் தான் கண்ணீர் வடிக்குமே தவிரக், கண்ணாடி நீர் வடிக்குமா? கண்ணீர் வடிக்காத கண்ணாடிக்கும், அருள் உணர்வு பொங்காத கண்ணுக்கும் எத்தகைய வேற்றுமையும் இல்லை. ஆதலால், கல்விக் கண்ணின் சிறப்பு நன்கு விளங்கும். கண்ணுக்குரிய தன்மை இல்லாத கண் எப்படிக் கண்ணாகும். ஆகவே, திருவள்ளுவர் அதனைப் புண் என்கிறார். உடலுக்கும் உள்ளத்திற்கும் வேதனை தருவது புண்; அது போல் கல்லார் கண்களாலும் வேதனையே விளைவதால் கல்லாதவர்கள் கண்கள் தோற்றத்தால் கண்களாய் இருப்பினும் கண்களுக்குரிய பயன் தராத காரணத்தாலும் அவை கண் என்னும் பெருமைக்குரிய தகுதியை இழந்து புண்ணாகக் கருதப்படுகிறது. கல்லாதவர்க்கு ஒளியுடைய கண்கள் இருந்தாலும் எதனையும் படிக்க இயலாக் குருட்டு நிலையினரே ஆவர். அதே வேளையில் கண்ணொளி இன்றிக் கல்வி ஒளியால் மட்டும் பெருமை பெற்றவர் பலர் உண்டு. அவர்களில் அந்தகக் கவி வீரராகவர் என்பவர் ஒருவர் அவர் தம் நெஞ்சினையே ஏடாகக் கொண்டு படித்தவர். எண்ணற்ற பாடல்களைப் பாடியவர். இலங்கைக்குச் சென்று அந்நாளில் இலங்கையை ஆண்ட மன்னன் பரராச சிங்கனையும் பாடியுள்ளார். வீரராகவரின் திறமையை அறிந்த மன்னன் அவரை அரசவைக்கு வர அனுமதி அளித்தான். அவர் அரண்மனைக்குள் வரும் போது அவர் திறமையை ஆராய விரும்பி வில்லை எடுத்துக் கொண்டு நின்றான் வேந்தன் இலங்கைக் கோமகனாம் இராவணன் இல்லை; ஏழு மராமரங்களும் இல்லை; மாரீசனாகிய மானும் இல்லை; இவ்வாறாகவும் நீ வில்லை எடுத்துக் கொண்டு நிற்பது எதற்காக? எமக்குக் கூறுவாயாக என்னும் பொருள் அமைய ஒரு பாடலைப் பாடினார். அரசன் திகைப்பும் வியப்பும் அடைந்தான். கண்ணொளி அற்ற அப்புலவர் எப்படி இத்திறமை பெற்றார்? எண்ணும் எழுத்தும் கண்களாக இருந்தன; ஒளி ஊட்டின; அதனால் உயர்ந்த அறிவுத் திறம் பெற்றுச் சிறந்தார். முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் என்னும் திருமந்தரம் கல்விக் கண்ணின் சிறப்பினை உணர்த்தும். துணையது வாய்வரும் தூயநற் சோதி துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம் துணையது வாய்வரும் தூயநற் கந்தம் துணையது வாய்வரும் தூயநற் கல்வி என்னும் திருமந்திர மொழியும் ஒப்பு நோக்கத் தக்கதாம். ஊனக்கண் போல ஒருநோக்கோ கல்வி எனும் ஞானக் கண், கோடி நலநோக்கும் - வானக் கண் நின்றொளிரும் ஆதவனும் நேராக இக்கண் எதிர் நன்றொளிரும் அன்றோ நயந்து என்னும் தனிப்பாடல் கருத்தும் இக்குறளுக்கு ஏற்ற விளக்க மாகும். கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும் (குறள் 575) எனக் கண்ணோட்டம் இல்லார் கண்களும் புண்களே என வள்ளுவர் உணர்த்துவதையும் உடன் நோக்குதல் நன்று. லோகமான்ய பாலகங்காதர திலகர் எனது அரசியல் குரு. என்னுடைய 21ஆம் ஆண்டிலிருந்து அதாவது 1893ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் அவருடைய எழுத்தையும் பேச்சையும் கவனமாகப் படித்து வந்தேன். 1914ஆம் ஆண்டில் திலகர் உத்தரவின் படி புனாவுக்குச் சென்று, அவர் வீட்டில் ஒரு வாரம் தங்கினேன். ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு எனது அறைக்கு வந்து, தம் அறைக்கு என்னை அழைத்துச் செல்வார் இரவு 10 மணி வரையில் அவருடன் தங்கிப் பேசுவேன். யாராவது அவரைப் பார்க்க வந்தால். நான் எனது அறைக்குச் சென்று விடுவேன். வந்தவர் பேசி விட்டுச் சென்றதும், எனது குரு மீண்டும் எனது அறைக்கு வந்து என்னை அழைத்துச் செல்வார். ஒவ்வொரு நாளும் காலை, பகல், மாலை, இரவு வேளைகளில் எனது குருநாதர் என்னுடன் உட்கார்ந்து சாப்பிடுவார். வீட்டில் உள்ளவர்கள் பழக்கமான பின் அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். அப்பொழுதும் எனது குரு அடிக்கடி வந்து விசாரிப்பார். என்னை மகிழ்விப்பதற்காக ஒரு நாள் மாலை தம் வீட்டில் சங்கீதக் கச்சேரி ஏற்பாடு செய்தார். ஒரு நாள் ஒரு தியேட்டரில் வேடிக்கைச் சண்டை ஏற்பாடு செய்தார். எனது குரு உள்பட அவர் வீட்டில் இருந்த அனைவரும் என்னை எஜமானனாகவே பாவித்து நடத்தினார்கள். இத்தகைய அன்பும் மரியாதையும் எனது மாமனார் வீட்டில் கூட எனக்கு கிடைத்ததில்லை. அவர் என்னை அன்புடன் கட்டித் தழுவி விடையளித்த பொழுது, என் கண்கள் நீரைப் பெருக்கின எனத் திலகரின் நினைவுகள் மூன்றாம் பாகத்தில் எழுதியவர் வ.உ.சிதம்பரனார். இத்தகைய அறிஞர் சந்திப்பையும் பிரிவையும் கண்டு உளம் நெகிழ்ந்துதான் வள்ளுவர் உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் (குறள் 394) எனப் பாடி இருப்பாரோ? ஒத்த இயல்புடையவர்கள் வேறுபாடின்றி இரண்டறக் கலந்து உறவாடி மகிழ்வதும், பிரிய மனம் இன்றிப் பணியின் பொருட்டுப் பிரிய நேர்ந்தாலும் மீண்டும் என்று சந்திப்போம் என உள்ளத்தில் ஏக்கமும் ஆர்வமும் கொண்டு பிரிதலும் கல்வியாளரின் இயல்பான செயல் முறையாகும். ஆகவே ஒப்புக்குப் பேசிப் பழகுவோரும், கவலையின்றிப் பிரிவோரும், பின்னர் எண்ணியும் பாராதோர் கற்றோர் ஆகார் எனப்தே வள்ளுவர் கருத்து. கற்றவர் கடமை ஒற்றுமை ஆக்கல் ஆகும். கல்வி கற்க விரும்புபவர் எத்தகைய உயர்நிலைக் குடும்பத்தில் பிறந்தவராயினும், தன்னை அந்நிலை கருதிப் பெருமை பாராட்டாமல், தம்மை எளிமையாய்க் கருதிக் கொள்ள வேண்டும். கல்வி கற்பிப்போர் ஏழையாக இருந்தாலும், கற்பவர் மன்னர் குடும்பத்துப் பிறந்தவராயினும் அதனைக் கருத்தில் கொள்ளாமல், ஆசிரியரை எல்லா நிலைகளிலும் மதிப்பு மிக்கராய்க் கருதி நடந்து கொள்ள வேண்டும். கற்பவர் தம்மிடம் இல்லாததை அஃது மிகுதியாக இருப்பவரிடம் வாங்க வந்தவர் போல் பணிவும் அடக்கமும் உடையவராய் நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியரைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவனாகக் கருதிக் கொள்ளும் யாரும் முறையாகக் கற்றுக் கொள்ள மாட்டார்கள். கோடல் மரபே கூறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடன் முனியான் குணத்தொடு பழகி, அவன் குறிப்பிற் சார்ந்து இரு என இருந்து, சொல்லெனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச் செவிவாயாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டு அவை விடாது உள்ளத்து அமைத்துப் போ எனப் போதல் என்மனார் புலவர் எனப் பவணந்தி முனிவர் நன்னூல் இலக்கணத்தில், மாணவர் பாடம் கேட்கும் முறையை விரித்துரைப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர் (குறள் 395) எனக் கூறுகிறார் வள்ளுவர். ஆசிரியரை உடையவராக மதித்துத் தம்மை இல்லாத எளியவராகக் கருதிப் பணிவுடன், தொல்லை துயரத்திற்கு ஆளானாலும் அதனையும் பொருட்படுத்தாது ஆசிரியர் குறிப்பின் வழி நடந்தும் யார் கற்றுக் கொண்டார்களோ அவர்களே கற்றவராய் உயர்வு பெறுவார். யார் யார் தன் குடும்பப் பெருமையால் தன்னைப் பெரிதாகக் கருதிக் கொண்டு உரிய காலத்தில் கற்க வேண்டியவற்றைக் கற்கத் தவறுகிறார்களோ அவர்கள் எத்தகை உயர்நிலைக் குடும்பத்தில் பிறந்தவர் ஆயினும் கீழ்நிலைப்பட்டவராக ஆகி விடுவர். ஆகவே தற்பெருமை கொள்ளாது கற்பதே அனைவரின் முதற் கடனாகும். ஆசிரியர், திரிசிரபுரம் பெரும் புலவர் மீனாட்சி சுந்தரனாரின் இருப்பிடத்தில் தங்கி அவர் குறிப்பு வழி இயங்கி மிகமிகப் பணிவுடன் கற்று மேனிலை எய்தியவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள். உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறுஅரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே என்னும் பழந்தமிழ் வேந்தன் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் புறநானூற்றுப் பாட்டு நல்லதொரு விளக்கமாய் விளங்குகிறது. அறிவு வெளியிலிருந்து வருவதன்று; உள்ளேயே இயல்பாய் உள்ளது; அகத்துள் முன்னமே நிறைந்துள்ள அந்த அறிவை வெளிப் படுத்திக் கொள்வதே கல்வியாம் என்பதே விவேகானந்தரின் தெளிவான கருத்தாகும். சர் சாண் ஆடம்சு அவர்களும் கல்வியின் பயன் தன்னை உணர்வது என உணர்த்துகிறார். மனிதனிடத்தில் இருக்கும் உயர்ந்த சக்தியைக் கண்டுபிடித்து, அதை வளர்ப்பதே கல்வியின் நோக்கமாகும் எனச் சீனப் பேரறிஞர் கன்பூசியசு அவர்களின் கருத்தையும் வள்ளுவரின் தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு (குறள் 396) என்னும் குறளில் கண்டு இன்புறலாம். கேணியில் மணலைத் தோண்டி எடுக்க எடுக்க உள்ளே இருந்து நீர் ஊறிக் கொண்டே வரும். தோண்டும் உழைப்பிற்கு ஏற்றவாறு நீர் ஊறும். நீர்த்தேவை மிகுதியாயின் தோண்டுகிற முயற்சியையும் அதிகப்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும். அத்துடன் மணலில் ஊற்றை நாளும் சிறிது சிறிதாகத் தோண்டிக் கொண்டேயும் இருக்க வேண்டும். நாளும் புதுநீர் ஊற வழி செய்து கொண்டே இருக்கவேண்டும். மணற் கேணி என்பதால் தோண்டுவதும் எளிது என்பதும் புலப்படும். அதுபோல் கற்பதும் எளியது இனியது பயன்தருவது. கற்கும் அளவிற்கு ஏற்பவே அறிவு வளரும். ஆகவே அறிவு பெருக வேண்டு மானால் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு ஓய்வு கிடையாது. கற்பதற்கு வயது வரம்பும் இல்லை. ஆகவே, மரபு வழிநம்பால் பொருந்தி இருக்கும் அறிவாகிய நீர் ஊற்றிலிருந்து, கற்றல் என்னும் முயற்சி வழி அறிவாம் நீரை வெள்ளமெனப் பெருக்கிக் கொள்வதைக் குறியாய்க் கொண்டு கற்பது கடமையாகும். மொழி அறிவும், துறை சார்ந்த தொழில் அறிவும் பெற்றவர்கள் விரிந்து பரந்த இவ்வுலகில் எந்த நாட்டிலும் எந்த ஊரிலும், தக்க உரிமம் பெற்று நிலைத்தும் வாழலாம் தொழில் செய்யலாம். விரும்பிய நாடுகளுக்குச் சுற்றுலாச் சென்று வரலாம். உலகில் எந்த முனையில் வாழ்பவர்களிடமும் அஞ்சல்வழி, தொலை பேசி வழி, கணினி இணையத் தளம் மூலம் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். ஆகவே, கல்வியை நாம் உரிமைப்படுத்திக் கொண்டால் நாம் ஒரு நாட்டில் உள்ள சின்னஞ்சிறு சிற்றூரில் பிறந்தாலும், ஊர், நாடு கண்டம் எனும் எல்லைகளை எல்லாம் தாண்டி உலகக் குடி மக்களில் ஒருவராகலாம். ஆகவே, இளமையிலே அனைவரும் கட்டாயம் தக்க அடிப்படைக் கல்வி கற்று விட வேண்டும். ஏதாவது தவிர்க்க முடியாக் காரணத்தால் இளமையில் கற்க இயலவில்லையாயினும் குற்றம் இல்லை. கற்க எந்த வயதில் வாய்ப்புக் கிட்டினாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வயிற்றிற்கு உணவு போல், அறிவிற்குக் கல்வி உணவு கட்டாயம் வேண்டும். பாடம் ஏறினும் ஏடது கைவிடடேல் பாடை ஏறினும் ஏடது கைவிடல் என்னும் பழமொழிகளை நினைவிற் கொண்டு, எப்படி யாயினும், எப்பொழுது ஆயினும் மானிட இனம் கற்க வேண்டும் என வலியுறுத்தவே, யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு (குறள் 397) என வினா எழுப்பினார். காலமெல்லாம் கற்று வருக! கற்றவனுக்கே எல்லா நாடும் தன்னாடு; எல்லா ஊரும் தன்னூர் என்பதை உணர்க! ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்று நாடு ஆகா தமேவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில் என்னும் பழமொழியும் இக்குறட் கருத்திற்கு அரண் செய்வதே யாகும். மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையான் - மன்னற்குத் தன்தேயம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்னும் மூதுரையும் வேறு ஒரு கோணத்தில் விளக்கம் தருகிறது. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 126) என்பது அடக்க முடைமையில் அமைந்த குறள். ஓடு ஒன்றிற்குள் தன் ஐந்து உறுப்புகளையும் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஒருவர் தம் ஐம்பொறிகளையும் அடக்கும் திறன் பெற்றால் அஃது வாழ்க்கை முழுமைக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கும். ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு (குறள் 974) இக்குறள் பெருமை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளதாகும். ஒருப்பட்டகற்புடைய மகளிரைப் போல், ஆடவனும் தன்னைத் தான் காத்துக் கொண்டு ஒழுகினால் பெருமை பெறுவான் என்று ஒருமையின் தனித் தன்மையை விளக்கும் குறட் பாக்களில் பிறிதொன்றே ஒருமைக் கண்தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398) என்பதாகும். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தன் உறவு வேண்டும் என ஒருமை மனதை விரும்புகிறார் வள்ளலார். முழுமன ஈடுபாட்டுடன் கல்வி கற்க வேண்டும். அவ்வாறு கற்ற கல்வி அழுத்தமாகப் பதியும், படிக்கும் போதே அழுந்தப் பதிந்து விடுமாயின் என்றும் மறக்காது. மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கனியை அம்பெய்தி வீழ்த்த வேண்டும் என்பது போட்டி; மரமோ, கொப்போ, கிளையோ, இலையோ கண்ணுக்குத் தெரியாமல் குறிப்பிட்ட கனி மட்டும் தெரிந்ததால் தான் அருச்சுனனால் மட்டும் அப்போட்டியில் வெற்றி பெற முடிந்தது. விவேகானந்தர் கண்ணை மூடிக் கொண்டு பாடம் கேட்பது வழக்கம். ஆகவே ஆசிரியர் கற்பித்தவற்றில் ஒரு எழுத்துக் கூட விடாமல் அவரால் சொல்ல முடிந்தது. கவனம் சிதறாமல் ஒருமைப்பட்ட உள்ளத்தோடு ஒருவன் கற்கும் கல்வி அப்பொழுது நல்ல பாதுகாப்பாய் அமைவதுடன் வாழ்நாள் முழுமை யும் துன்பத்தில் சிக்காமல் காக்கும், கால்வழியினரும் அறிவுக் காவல் பெற வழி வகுத்ததும் ஆகும். புத்தகங்கள் இளமையில் வழிகாட்டி; பருவத்தில் நல்ல பொழுது போக்கு; நாம் தனிமையில் இருக்கும் போது நமக்கும் பெருந்துணையாக இருப்பதுடன், நாமே நமக்கு ஒரு பெருஞ் சுமையாகத் தோன்றாதவாறு செய்கின்றன! தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது (குறள் 68) என்பது மக்கட்பேறு அதிகாரக் குறள். தம் அறிவினும் தம் மக்கள் மிக்க அறிவுடைமை வாய்க்கப் பெற்றால் அஃது அவர்க்கு மட்டும் அல்லாது குடும்பம் நாடு என்ற எல்லையையும் தாண்டி அஃது உலகத்து உயிர்கட்கெல்லாம் இன்பம் தரும். ஏனெனில் கல்வி ஒரு பொதுமைப் பொருள். ஆகவேதான் அறிஞர்கள் தம் சிந்தனையில் தோன்றிய கருத்தால் அவர்கள் இன்பம் அடைந்தால். அதனை நூல் வடிவாக்கி உலகிற்கு வழங்கு கின்றனர். உலகில் அந்நூல்களைக் கற்றவர்கள் எல்லாம் இன்புறுகின்றனர். அவர்கள் தாம் பெற்ற இன்பத்தைப் படிப்பாளர்களுக்குத் தெரிவிக்கின்றனர். அதனைக் கேட்ட கல்வியாளர்கட்குக் கல்விக் காதல் மேலும் மேலும் பெருகுகின்றது. நல்லது என எதனைத் தெரிவு செய்து கற்றோமோ அல்லது படைத்தோமோ அதற்கு உலகத்தில் நல்ல வரவேற்பு இருக்கு மானால் அக்கல்வியாளனுக்குக் கல்வியின் மீது வெறுப்போ, சோர்வோ ஏற்படாது. கல்வியைப் போல் உலகத்தவரை இன்புறுத்தக் கூடியது வேறு எதுவும் இருக்க இயலாது. கற்றறிந்தார் தாம் எக்கல்வியால் இன்புறுகின்றாரோ அக்கல்வியால் உலகத்தவரும் ஒருங்கே இன்பம் அடைவதைக் கண்டு மேலும் மேலும் ஆர்வத்துடன் கற்பர் என்பதை, தாம்இன் புறுவது உலகு இன்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் (குறள் 399) எனக் கூறுகிறார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் சான்றோர் மொழியையும் ஒப்பு நோக்குக. தன் அறையில், தனக்கு மட்டும் விளக்கைப் பயன்படுத்து பவனைப் போல், மனிதன் தான் பெற்ற கல்வியைத் தனக்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது. கடலின் இருளிலே வெகு தூரத்தில் இருப்போரைக் காண வைக்கும் கலங்கரை விளக்கின் ஒளியைப் போன்று எல்லாருக்கும் ஒருவன் கற்ற கல்வி பயன் தர வேண்டும் என்னும் அறிஞர் பீச்சரின் கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கதாகும். கென்றி போர்டு என்னும் பெயருடைய பெருஞ்செல்வர், ஒரு பள்ளிக்குச் சென்று பார்வையிட்டார். ஒரு வகுப்பினுள் நுழைந்து மாணவர்கள் திறமையைச் சோதிக்க விரும்பினார். கடன் உறுதிப் பத்திரம் ஒன்று மாதிரியாக எழுதிக்காட்ட வேண்டினார். வகுப்பில் இருந்த மாணவருள் பலர் எழுதிக் கொண்டு போய் அவரிடம் காட்டினர். அவற்றுள் ஒரே ஒரு பையன் எழுதியிருந்த பத்திரம் போர்டின் நெஞ்சத்தில் ஆழமாகப் பதிந்தது. திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தார். பின்னர் ஒரு காசோலையை எடுத்து அதில் தம் கையெழுத்து இட்டுப் பள்ளிக் கட்டடத்திற்கு வேண்டிய தொகையை இதில் எழுதிப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரியரிடம் தந்தார். ஆசிரியர்க்கு ஒன்றும் புரியவில்லை அவர் பள்ளிக் கட்டடத்தைப் பற்றிப் போர்டிடம் எதுவும் சொல்லவும் இல்லை நன்கொடை கேட்கவும் இல்லை. கேட்கும் எண்ணமும் தோன்றவில்லை அவ்வாறு இருக்கக் காசோலை எதிர்பாராமல் வந்தால் வியப்படைய மாட்டாரா? இடிந்து போன கட்டடத்தைக் கட்ட முடியவில்லை; பள்ளி வளர்ச்சிக்கு ஏற்றபடி புதுக்கட்டடம் கட்டவும் வாய்ப்பு இல்லை. ஆகவே அக்கட்டடப் பணிக்காகப் போர்டினிடம் பத்தாயிரம் டாலர் கடன் பெற்றுக் கொண்டேன் என்று அம்மாணவன் எழுதியுள்ளான். அவன் எழுதியதில் உள்ள உண்மை யும் நல்லெண்ணமும் என் நெஞ்சைத் தொட்டன. அதனால் மகிழ்வோடு இத்தொகையை வழங்குகிறேன் என்று வள்ளல் கூறினார். ஆசிரியர் மாணவனைப் பாராட்டினார். மாணவன் இன்பம், போர்டின் இன்பமாய் ஆசிரியரின் இன்பமாய் வகுப்பின் இன்பமாய், பள்ளியின் இன்பமாய் நகரின் இன்பமாய் வளர்ந்து இன்புறுத்துவது போலவே கல்வி இன்புறுத்தும்! கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை, (குறள் 400) ஒருவனுக்கு அழியாத, அழிவு செய்யாத உயர்ந்த செல்வம் கல்வியேயாகும். மற்றைப் பொருட் செல்வங்கள் எல்லாம் இயற்கைக் கொடுமைகளாலும், செயற்கைக் கேடுகளாலும் அழிந்து போகும் தன்மை உடையனவே ஆகும். அத்தகைய நிலையற்ற செல்வங்கள் செல்வங்கள் ஆகா! கேடு தாராத உயர்ந்த செல்வம் கல்வி; ஆகவே,கல்விதான் செல்வமாகும். ஏனைய எவையும் செல்வம் ஆகா! வெள்ளத்தால் போகாது; வெந்தழலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறை படாது கள்ளர்க்கோ மிக அரிது காவலோ மிக எளிது, கல்வி என்னும் உள்ளத்தே பொருள் இருக்க உலகெல்லாம் பொருள்தேடி உழல்வது ஏனோ? என்னும் இத்தனிப்பாடல் நல்லதொரு விளக்கமாய் அமைகிறது. அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன்று உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை என்னும் நீதி நெறி விளக்கப் பாடல் நல்லநெறி விளக்கமாகும். கற்பவை கசடறக் கற்க! கற்றபடி நிற்க எண்ணும் எழுத்தும் கண் என்ப கற்றோரே கண்ணுடையவர் உவப்பத் தலைக் கூடுக உள்ளப் பிரிக கல்லார் கடையர் கற்றனைத் தூறும் அறிவு சாந்துணையும் கல்! ஒருமைக் கண் கற்க உலகின்புறுவதைக் காமுறுக கேடில் விழுச்செல்வம் கல்வி 41. கல்லாமை அறிவறிந்த மக்கட் பேறு தன்பால் அமைந்துள்ள உண்மை அறிவை அறியவும், உலகத்தில் முன்னோர்கள் தேடி வைத்துள்ள அறிவின் பெருக்கை அறியவும். உலக இயக்கத்தை அறியவும், வாழ்வியல் நெறி களை அறியவும் தொழிலியல் முறைமையினை அறியவும் நூற்கல்வி மிக இன்றியமையாதது. கல்வியே மனிதனை விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்கு உயர்த்தும்; கல்வியே நன்கு விளையும் பயனுடைய நிலம் போன்றவன் ஆக்கும். கல்வியே உயிர் உடையவனாகவும், உயிர்ப்பு உடையவனாகவும், உணர்வுடைவனாகவும் ஆக்கும். கற்றவன் உடலே அழகிய உடல், கற்றவன் நாவே பயனுனுடைய நாக்கு கற்றவனே வாழத் தகுதி உடையவன். கல்லாதவர் எம் நாட்டில் எவரும் இலர். எல்லாரு ம் கற்றவர்கள் என்று உரைக்கும் நிலையை எய்தி நிலைபெறச் செய்ய வேண்டுவது நாட்டை ஆள்வோரின் தலையாய கடமையாகும். அதுபோல் பெற்றோரின் தலையாய கடமையும் குழந்தைகள் உரிய காலத்தே கல்வி கற்பதற்கு வேண்டிய ஏந்துகளை எல்லாம் செய்து தருவதாகும். பிச்சை, புகினும் கற்கை நன்றே என்பது சான்றோர் மொழி. உயிரோடு இருப்பதற்கான வழிவகைகளைத் தேடிக்கொள்ளும் முயற்சி போலக் கற்பதற்கும் கட்டாயம் முயல வேண்டும். அப்படியானால் தான் நாம் உயிர் வாழ்வதற்கு ஒரு பயன் இருக்க முடியும். ஆகவேதான் திருவள்ளுவர்அறிவு பேறக் கல்வி கற்க வேண்டும் என்பதை உடன்பாட்டால் உணர்த்தியது போல் எதிர் மறையில் வலி யுறுத்துவதே கல்லாமை ஆகும். அமிழ்தின் நன்மையை அறிந்து கொள்வது போல் நஞ்சின் தீமையை யும் அறிந்து கொள்வது, கேடு நீங்கி வாழ்வதற்கு வழி வகுக்கும் அல்லவா? அதுபோல் கல்லாமையை அறிவதாலும் நலப்பாடு உண்டு என்னும் கருத்தால் கால் கொண்டதே கல்லாமை அதிகாரம் ஆகும். அரங்கின்றி வட்டாடி அற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் (குறள் 401) என்பது முதற் குறள். எண்ணரும் பிறப்பில் யாவும் கடந்து மண்ணிடை உயர்ந்த மானுடமாய் வரல் புண்ணிய விளைவின் பொலிவே ஆகும் விலங்கினும் மனிதன் பெரியவன் என்பது பேசும் வகையால் பெருகி வந்தது என்பார் செகவீர பாண்டியனார். மண்ணுலகில் பேசத் தெரிந்த உயிரினம் மனிதனே! ஆனால் வாய் திறந்து பேசுவதெல்லாம் பேச்சாகி விடுமா? நெல்லெல்லாம் நெல்லல்ல - எந்நெல்லில் அரிசியாகிய மணி இருக்கிறதோ அந்நெல்லே நெல்லாகும். நாம் எதைப் பற்றிப் பேச முற்படுகிறோமோ அது தொடர்பான செய்திகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். அதிலும் கற்றவர் முன்னிலையில் பேசப் போகிறோம் என்றால் அவர்க்குத் தெரியாத வற்றையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதியாகும். அறிவு நிரம்புவதற்குத் தேவையான நூல்களைக் கற்காமல், கற்றவர்களிடம் சென்று பேசுதல், வட்டாடுவதற்கு உரிய கட்டங்களை அமைக்காமல் வட்டாடுவதற்கு ஒப்பாகும். நூலறிவு இல்லாதவர் பிறரிடம் பேசித் தம் தகுதியைத் தாமே ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்? தம் உண்மை அறிவுடன், மேலும் விரிவாகவும் ஆழமாகவும்கற்றுத் துறை போகியவர்களே பிறரிடம் அதுபற்றிக் கூறுவதற்குத் தகுதி உடையவர் ஆவர். நூல்கள் மற்றவர்களை நீங்கள் புரிந்து கொள்ளும்படி செய்ய வல்லவை. உங்களை நீங்களே அறிந்து கொள்ளவும் உதவி செய்யும். என எட்வர்டு பிரேக்கர் கூறுவதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இலக்கியச் சான்று அறையும் ஆடரங்கும் மடப்பிள்ளைகள் தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ? இறையும் ஞானமும் இலாத என்புன்கவி முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ? எனக் கம்பர் கம்பராமாயணத்தில் ஆடரங்கு காட்டி அவையடக்கம் பாடியுள்ளதையும் நினைவு கூர்க! ஈன்பருந்து உயவும் வான்பொரு நெடுஞ்சினை பொரியரை வேம்பின் புள்ளி நீழல் கட்டளை அன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டு ஆடும் வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர் என்னும் நற்றிணைப் பாடலிலும் வட்டாடும் அரங்கைக் காணமுடிகிறது. நூலறிவு இன்றிக் கற்றோர் அவை ஏறுதல், அரங்கின்றிக் காய் உருட்டி விளையாடும் சிறியோர் செயலை ஒத்ததாகும். கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற்று அற்று 402 கல்வி அறிவு சிறிதும் இல்லாத ஒருவன் ஓர் அவையில் எழுந்து பேச, அவன் பேச்சைக் கேட்க விரும்புதல், இரண்டு தனங்களும் இல்லாதவளை ஒருவன் மணக்க விரும்புவதற்கு ஒப்பாகும். என்றும் பொருள் கூறலாம். கல்வியறிவு இல்லாதவன் தானும் கற்றோர் அவையில் பேசிப் புகழ்பெற வேண்டும் என்று விரும்பி ஈடுபடுவது இரண்டு தனங்களும் இல்லாத ஒருத்தி, பெண் தன்மையை விரும்புவற்குச் சமம் ஆகும் என்றும் பொருள் கொள்ளலாம். நூலறிவு பெறாதவன் கற்றவன் போல் அவையில் பேச வேண்டும் என ஆசைப்படுவது, தக்க பருவம் எய்தப் பெறாத சிறுமி யொருத்தி காம இன்பத்தை அடையக் கருதுவது போன்றதாகும். எனக் கருத்துக் கொள்ளவும் செய்யலாம். பெண்மைக்குரிய உறுப்புகள் இல்லாதவள் பெண் தன்மையை விரும்புவது போன்றதே கல்லாதவன் சொற்பொழிவு ஆற்ற விரும்புதல். எவ்வினையை ஆற்ற விரும்பினாலும் அதற்குரிய தகுதி இருக்க வேண்டும். தகுதியில்லாதவன் தகுதியான பணியை மேற்கொள்வது அவனுக்கும் நல்லதன்று! பணிக்கும் சிறப்பன்று. என்பதை அழுத்தமாகக் கூற வேண்டும் எனக் கருதிய வள்ளுவர் எவரும் எளிதில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று இவ்வுவ மையைப் பயன்படுத்தினார் போலும், இல்லையேல் கல்லாதான் சொற்கா முறுதல் பொருளொன்றும் இல்லா தான் இன்பமிவர்ந் தற்று என்று கூடப் பாடியிருக்கலாம்! காரணத்தை மேலும் எண்ணி உரைத்தல் கற்றவர் கடனாகும். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் - தானும்தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி என்னும் மூதுரை உவமையை மாற்றிக் கருததுரைப்பது நல்லதொரு சான்றாகும். கற்று அறிவைப் பெருக்கிக் கொள்ளப் பல்வேறு காரணங்களால் பலருக்கு வாய்ப்பு அமையாமல் போகலாம். அஃது பெரிய குற்றம் இல்லை. அவர்கள் கற்பதற்கு எப்பொழுது வாய்ப்புக் கிட்டுகிறதோ, அப்பொழுது அவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கற்றுக் கொள்ள வேண்டுமே யொழிய, கற்காமலே தம்மைத் தாமே கற்றவர் எனக் கருதிக் கொண்டு, பிறரும் தம்மைக் கற்றவர் எனக் கருதி மதிக்க வேண்டும் எனக் கருதி ஏமாற்று வேலையில் ஈடுபடுதல் கூடாது. தாம் கற்கவில்லை; எனினும் இது பற்றிக் கற்றவர்கள் என்ன கூறு கிறார்கள் என்பதைக் கற்றவர் வழி கேட்டு அறிந்து கொள்ள முயல வேண்டும்! முயலவில்லை எனினும் பெருந்தீமை இல்லை; ஆனால் கற்றவர் முன் கேட்பவராய் இருக்க வேண்டுமே ஒழிய ஒரு போதும் பேசுபவராய் இருந்து விடல் கூடாது. அந்நாவடக்கம் ஒன்று இருந்தால் அது ஒன்றே நற்பெயரை ஈட்டித் தரும் எனக் கூற விரும்பிய திருவள்ளுவர், கல்லா தவரும் நனி நல்லர், கற்றார் முன் சொல்லா திருக்கப் பெறின் 403 என்கிறார். கற்றவரின் முன்னிலையில் பேசாதிருக்கும் கல்லாதவர் மிக நல்லவ ராகவே கருதப்படுவார். கல்லாத மூடரைக் காணவும் ஆகாது; கல்லாத மூடர்சொல் கேட்கவும் கடன்அன்று; கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாதமூடர் கருத்தறி யாரோ எனத் திருமூலராலும் கல்லாமை பழிக்கப்படுகிறது. கல்லாத நீண்ட ஒருவன் உலகத்து நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல இருப்பினும் நாய்இருந் தற்றே - இராஅது உரைப்பினும் நாய்குரைத் தற்று என நாலடியார் நவில்வதையும் உடன் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆடவரில் ஒன்றும் அறியாதவன் அஞ்ஞானம் வெளியாகா மல்வாய் மூடல் எனும் ஒருதிரையைச் சுவா தீனமாய்ப் படைத்தான் முளரி மேலோன் தேடருநல் அறிஞர்சபை அம்மூடன் செலின் அவன்வாய் திறவா மோன பூடணமே பூடணத்தின் மேலான பூடணமாய்ப் புனைதல் நன்றே எனும் பத்திரகிரியாரின் பாடல் நல்லதொரு விளக்கமாகும். கற்றார் முன் பேசாத கல்லாரும் நல்லாரே! கல்லாதவனுக்கு ஒரோ வழி தற்செயலாகத் தோன்றும் உயரிய கருத்து மிகச் சிறந்ததாயினும், அறிவுடையார் அவ்வுயர்வுடைய கருத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார். அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுத்து, அவரை மட்டந்தட்டப் பார்ப்பார்களே அல்லாமல் மதித்துப் போற்றமாட்டார்கள். உலகியல் நடைமுறை அப்படித்தான் இருக்கும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அதன் பால் அமைந்துள்ள மெய்ப்பொருள் காணும் அறிவுடையவராய் பெரும்பாலோர் இருக்க மாட்டார்கள் எனக் கருதியே வள்ளுவர். கல்லாதான் ஒட்பம் கழிய நன் றாயினும் கொள்ளார் அறிவுடையார் (குறள் 404) என உலக இயல்பு உரைத்தார். ஒட்பம் = ஒள்-ஒட்பு-ஒட்பம்= ஒளி; மின்னல் போல் தோன்றும் அறிவு ஒளி. நத்தை மணலில் ஊருங்கால் நேருங் கீறலில் தற்செயலாக அமையும் ஓர் எழுத்து வடிவம் போன்றதே கல்லா தான் ஒட்பம் ஆகவே அதை அவனது உண்மை அறிவின் விளைவாக ஒப்புக் கொள்ள மாட்டார். விழி உடையவரும் பாயத் தயங்கும் வளையத்திற்குள், சில வேளை களில் குருட்டுக் கழுதை பாய்ந்துவிடும். அஃது அறிவாலும் திறத்தாலும் நிகழ்ந்தது அன்று. ஏதோ ஒரு சூழ்நிலை தந்த வெற்றியே ஆகும். அவற்றை உணர்த்தவே குருட்டுக் கழுதை விட்டத்தில் பாய்ந்தது போல என்னும் பழமொழி தோன்றியது. வரலாற்றுச் சான்று மன்னன் ஒருவன் வைகறைத் துயில் எழுந்து உலகு நோக்கினான், அவன் கண் பார்வைக்கு முதற்கண் பட்டான் கொல்லன் உலைக்களத்து ஒரு சிறுவன். அச்சிறானைப் பார்த்துத் திரும்பும் போது சுவர் ஆணி அரசன் தலைப் புறத்தை புண்ணுறுத்தியது ஊர்க் காப்பாளரை ஒல்லை ஏவி அந்த இளைஞனைக் கட்டி வரச் செய்தான். ஈசல் இறகு போலும் புண்பட்ட மன்னன். வந்த பையனை விளித்து உனக்குக் கொலைத் தண்டனை விதித்தேம், இவனைக் கொல்லுக என்று ஆணையிட்டான். சாகத் துணிந்த இளையான். ஏது வினவ, அரசன் கூறலுற்றான். யாம் நாட்டுப் புரவலன், விடியற்போது உன் முகத்து விழித்த பெருவேந்தராகிய எமக்கே உன் முதற் காட்சி, தலைப் புண்படுத்துமாயின் நாள்தோறும் உன் அழிமுகத்து விழித் தெழுந்த எங்குடிகள் என்னென்ன பெருங்கேடு உற்றனரோ அறியகில்லேம். மக்கள் பலர்க்கு நலஞ் செய்வான் உன் ஒருத்தனுக்குக் கொலை சூழ்ந்தனம் என்று அச்செங்கோலன் விளம்பினான். அது கேட்டு மதிநலம் வாய்ந்த அச்சிற்றிளைஞன், அமைச்சரீர்! கேண்மின்! என் முகத்து விழித்தமை யால்அரசன் உற்றதோ தலைப்புறச் சிறுகீறல், அரசன் முகத்து விழித்த யான் உறுவதோ உயிர்க்கொலை யார் முக விழிப்பு நாட்டிற்குப் பேரழிவு என்று துணிச்சலாய் வினவி மீட்சி பெற்றான். இச்சிறு பையன் வினா ஒட்பம் காட்டுவது. மக்கள் பால் கல்லாக் குழவிப் பருவத்து ஒளிரும் இயற்கை அறிவெல்லாம் ஒட்பம் எனப்படும். கல்லாதான் ஒட்பத்தை அறிவுடையார் ஏலார் என்றதனால் ஒருவன் ஒட்பம் கல்வியோடு சேர்ந்த வழி அவர் ஏற்பர் என்பது கருத்தாயிற்று. சாணை பிடியா மணி போல்வது ஒட்பம், அஃது நூலோடு தீட்டியவழி - அஃதாவது ஒட்பமும் கல்வியும் இயைந்த புணர்ச்சி - அறிவு என்ற பெயர்க்கு உரித்து என வள்ளுவத்தில் வ.சுப. மாணிக்கனார் தரும் விளக்கம் மணிவிளக்காம். பன்றிக் குருளைப் படாஅம் போர்த்து நிற்பினும் வென்றிக் களிறென விள்ளுப யாவரே? நன்று கல்லார் கவிபாடினும் நாவல்லோர் என்றும் மதிப்பதிலை என்னும் இன்னிசைப் பா இயைந்த எடுத்துக் காட்டாகும். கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் (குறள் 405) நூல்களைக் கல்லாத ஒருவன் தன்னைத் தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் மதிப்பும், அங்ஙனம் அவனைப் பிறர் மதிக்கும் மதிப்பும், அவற்றைக் கற்றவன் அவனைக் கண்டு உரையாடும் போது தளர்ந்து போகும். கற்றவரோடு கலந்து உரையாடிய அளவில் கல்லாதவன் மதிப்பும் கரைந்து போகும். டாக்டர் சாண்சனிடம், பாசுவெல் ஒருநாள் ஒரு நல்ல சமையல் காரன், ஒரு நல்ல கவிஞரை விட சமூகத்திற்கு இன்றியமையாதவர் அல்லவா? என்று கேட்டார். அதற்குச் சாண்சன் இந்த நகரத்திலுள்ள எந்த நாயைக் கேட்டாலும் இந்த விதமாகத் தான் கூறும் என்று பதில் அளித்தார். இங்கிலாந்து நாட்டின் தலைமை அமைச்சராய் இருந்த லாயிட் சார்ச், எல்லா நாடுகளுக்கும் விடுதலை வேண்டும் என்று பேசினார் அவரைக் கேலி செய்ய வேண்டும் என்று எண்ணிய ஒருவன் நரக லோகத்திற்கு என்று கத்தினான். இப்படி ஒவ்வொரு வரும் தத்தம் நாட்டுக்காகப் பரிந்து பேச வேண்டும் என்பதுதான் நான் சொல்ல வந்தது என்றார் லாயிட் சார்ச். என்னும் வரலாற்று நிகழ்வுகளும் நல்ல சான்றுகளே! கல்வி அறிவு இல்லாதவன் கல்வியறிவு இல்லாதவனாகத் தன்னைக் கருதிக் கொண்டால் குற்றம் இல்லை. ஆனால், கல்வி இல்லாதவன் தன்னைக் கல்வியில் ஆதவனாகக் கருதிக் கொண்டால் ஆதவன் ஆய்விடுவானா? காணாமல் வேணதெலாம் கத்தலாம் கற்றார் முன் கோணாமல் வாய் திறக்கக் கூடாதே - நாணாமல் பேச்சுப் பேச் சென்னும் பெரும் பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி என்னும் ஔவையாரின் பாடல் நல்ல சான்றாகும். எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார் ஆயும் கடவுள் அவிர்சடை முன் கண்டளவில் வீயும் சுரநீர் மிகை என்னும் நன்னெறிப் பாடலும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். நெல்லும் கரும்பும் வாழையும் விளையும் நன்செய்யும் நிலம் தான். எப்பாடுபட்டாலும் எப்பயிரும் விளையாத உப்புக் காய வைக்கும் களமாக மட்டும் பயன்படும் களர் நிலமும் நிலந்தான் நிலம் என்று பெயர் அளவில் சுட்டத்தக்கதே அன்றி பயன் அளவில் ஏணி வைத்தாலும் எட்டா உயர்வு உடையது நன்செய் நிலம், மிகக் கீழானது களர் நிலம். பயனற்ற களர் நிலமாகக் கல்வி அறிவில்லாதவர்கள் திருவள்ளு வரின் கண்ணுக்குப் புலப்பட்டிருக்கிறார்கள் ஆகவே, உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர் (குறள் 406) என்கிறார். கல்வி அறிவில்லாதவர் உயிரோடு ஏதோ இருக்கிறார் என்று சொல்லப்படும் தன்மை உடையவரே ஆவர். அத்தகையவர் நிலங்களிலே கீழான பயனற்ற களர் நிலம் போன்றவர் எனக் கூறலாம். கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னைக் கற்றார்கள் உற்று ஓரும் காதலானை என்னும் திருநாவுக் கரசர் வாய்மொழியும் கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன் எனத் திருஞான சம்பந்தரும் எல்லா இடத்தும் உளன் எங்கள் தம் இறை கல்லாதவர்கள் கலப்பு அறியாரே என்னும் திருமூலர் திருமொழியும் ஒப்பிட்டு நோக்கத் தக்கதாகும். கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அறியாமை தான் தீவினையின் மூலவேர் என்னும் பிளேட்டோவின் மெய்மொழியும் உடன் எண்ணத்தக்கதாகும். கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற எம்சிவனைத் திருவூழி மிழலை வீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளம் குளிர என் கண்குளிர்ந் தனவே என்னும் சேந்தனாரின் திருவிசைப்பாவும் நல்ல சான்றேயாகும். கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்குமாறு வேண்டிய வள்ளுவர். மேற்போக்காக நுனிப்புல் மேய்வது போன்று, அங்கொன்றும் இங்கு ஒன்றுமாகப் பரவலாகப் படிப்பதால் பயன் விளையாது என்பதை உணர்த்த வேண்டி, நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று. (குறள்407) என்னும் குறளை யாத்துள்ளார். ஒய்யாரக் கொண்டையில் தாளம் பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் ஆளைப் பார்த்தால் அழகு போல வேலையைப் பார்த்தால் இழவு போல இருப்பதால் பயனில்லை என்ற நோக்குடையவர் வள்ளுவர். மனிதன் உருவத்தால் பேரழகு உடையவனாய் இருப்பதில் ஒன்றும் சிறப்பில்லை. நோய் நொடி இன்றி அகவைக்கு ஏற்ப உடல் நல்ல வளர்ச்சி பெற்று, உழைக்கும் ஆற்றல் உடையதாய் இருக்க வேண்டும். உடலுக்கு உயிர் முக்கியம், உயிர்க்கு அறிவு முக்கியம், அறிவு பெறக் கல்வி கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். நுண்ணிய அறிவுடையோர் படைத்த நுட்பமான நூல்களை மிக்க நுண்ணறிவுடன் கற்க வேண்டும். மாண்பு அமைந்த பெருமக்கள் எழுதிய மாண்பு நிறைந்த நூல்களைக் கற்று மாண்பினைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வு நூல்களை நல்ல ஆய்வு நோக்குடன் மூழ்கி முத்து எடுப்பது போல் ஆழத்திற்குச் சென்று அரிய அறிவுச் செல்வங்களைத் திரட்டுமாறு கற்று, அறிவை நுட்பமும் மாண்பும் கூர்மையும் விரிவும் உடையதாய் ஆக்கிக் கொள்வது ஒவ்வொருவரின் பிறவிக் கடனாகும். ஏனெனில் இது அறிவறிந்த மக்கட்பேறு அல்லவா? அவ்வாறு கற்று அறிவைப் பெருக்கிக் கொள்ளாதான் உடல் வளர்ச்சி யும் அழகுத் தோற்றமும் மண்ணால் வனையப் பட்டு வண்ணம் தீட்டப் பட்ட வெறும் காட்சிப் பொம்மை போன்றதே ஆகும் என்பதே வள்ளுவர் கருத்தாகும். ஆகவேதான் நுண்மாண் நுழைபுலம் வேண்டும் என விழைகிறார். மனிதத் திருக்கூட்டம் மண்மாண் புனை பாவை ஆகி விடாமல் நுண்மாண் நுழைபுலத்தவராய் விளங்க வேண்டுவதே அவர் நோக்கு. குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு என்னும் நாலடியார் காட்டும் நல்லழகும் ஒரு வழிப்பட்டதே யாகும். குலம்மிக உடையர்; எழில்மிக உடையர்; குறைவில் செல்வமும் மிக உடையர் நலம் மிக உடையர் என்னினும், கல்வி ஞானம் அற்பமும் இலா தவரை வலமிகு திகிரிச் செங்கையாய்; முருக்கின் மணமிலா மலர்என மதிப்பேன் சலமிகு புவியில் என்றனன் வாகைத் தார்புனை தாரைமா வல்லான் என்னும் பாரதமும் நல்ல சான்றாகும். எது துன்பம் தருவது? வறுமையா? வளமையா என வினவின் எவரும் வறுமையே துன்பம் தரும் என விடையிறுப்பர். ஆனால் இங்கே வள்ளுவர் பொருள் வளமையே, வறுமையைக் காட்டிலும் துன்பம் தரும் என்கிறார். செல்வம் ஒரு கருவி; நல்ல கருவிதான்; தேவையான கருவிதான் பயனுடைய கருவிதான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை தான். பொருள் நன்மை செய்யப்பயன்படுவது போல தீமை செய்யவும் பயன்படும்; வாழ வைக்கப் பயன்படுவது போல் வீழ வைக்கவும் பயன்படும்; ஆக்கத்திற்குப் பயன்படுவது போல் அழிவிற்கும் பயன்படும். ஆகவே தான் பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள என்றார். அப்படியானால் கீழானவர்களிடம் உள்ள செல்வம் கீழ்மைக்குத் தானே பயன்படுத்தப்படும்! உலகவாம் பேரறிவாளனிடம் பொருந்தியுள்ள செல்வம் நீர் நிறைந்த ஊருணி போல் பயன்படும் எவராலும் விரும்பப்படாதவர் செல்வம் நடுவூரில் பழுத்த நச்சு மரம் போன்றதாகும். ஆகவே, நல்லவர்பால் அமைந்த செல்வம் நன்மைக்குப் பயன்படும், தீயவர்பால் பொருந்திய செல்வம் தீமை செய்யவே பயன்படும். அதுபோல் இன்மையின் இன்மையே இன்னாதது என்பது உண்மைதான் ஆனால் கற்றுணர்ந்த நல்லோர் வறுமைக்கு ஆட்பட நேர்ந்த போதும், தம் வறுமையைப் போக்கிக் கொள்ளவும் நெறி பிறழ்ந்த செயல்களைச் செய்யார்; தாம் பெரிதும் துன்புறவும் மாட்டார்; பிறர்க்குக் கேடும் சூழார். ஆனால், கல்வி அறிவற்றவர் வறுமைக்கு ஆட்பட நேர்ந்த போதும் தம் வறுமையைப் போக்கிக் கொள்ள எதுவும் செய்யத் தயங்கமாட்டார்கள். வறுமையால் தாமும் துன்புறுவர் பிறரையும் துன்புறுத்துவர். இங்கே திருவள்ளுவர் கற்றவர் வறுமையையும் கல்லாதவர் செல்வத்தையும் ஆராய முற்பட்டுப் படைத்த குறளே, நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு (குறள் 408) என்பதாகும். கற்றறிந்த நல்லவர்கட்கு ஏற்பட்ட வறுமையைக் காட்டிலும் கல்வி அறிவு இல்லாதவர்களிடம் பொருந்தியுள்ள செல்வம் மிகவும் துன்பத்தை விளைவிக்கும். கற்றவர் வறுமை அவர்க்கு மட்டும் துன்பத்தைத் தரும். கல்லாதார் செல்வம் அவர்க்கும் பிறர்க்கும் துன்பம் தரும் ஆதலின் நல்லவர் வறுமையினும் கல்லார் திரு தீயது என்றார். கற்றாரைக் கற்றார் எனக் குறிப்பிடாமல் நல்லார் என்னும் நற்சொல்லால் குறித்துள்ளார். ஆகவே இக்கற்றார் நிற்கக்கற்றார் ஆகவே நல்லார் எனப்படுகிறார். கல்வியால் அறிவும், அறிவால் ஒழுக்கமும், பயனாம் என்னும் கொள்கை பற்றிக் கற்றார் நல்லார் எனப்பட்டார். அறியாமை யோடு இளமை கூடுவதாம் ஆங்கே தெரியப்படுவதாம் செல்வம் - சிறிய பிறைபெற்ற வாணுதலாய்! தானே ஆடும்பேய் பறை பெற்றார் ஆடாதோ பாய்ந்து என்னும் பழமொழிப்பாடல் எடுத்துக் காட்டாகும். ஏழை மக்கள் வறுமையால் மூடராய் இருக்கிறார்கள். செல்வர்கள் பேராசையால் மூடராய் இருக்கிறார்கள் என மார்க்சிம் கார்க்கி கூறுவது ஒப்பிட்டு நோக்கத்தக்கதாம். வழி வழியாகப் பண்பட்ட உயர்ந்த குடியில் ஒருவன் பிறந்தும் கல்வி கற்று அறிவைப் பெருகிக் கொள்ளவில்லை இஃது ஒருவர் நிலை. இன்னெருவர் வழிவழி சிறப்போ பெருமையோ இல்லாத தகுதி குறைந்த குடும்பத்தில் பிறந்தாலும். மிக முயன்று கற்று அறிவைப் பெருக்கிக் கொண்டார் இது ஒருவர் நிலை. இன்றைய நிலையில் யார் உயர்ந்தவர்? கல்லாதவர் உயர்குடியில் பிறந்திருப்பினும், கீழ்க்குடிப் பிறந்த அறிஞர்க்கு ஒப்பாக மாட்டார். வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே என்னும் பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் புற நானூற்றுப் (183) பாடலின் வரிகள் நற்சான்றாகும். களர்நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் இடைநிலத்தோர் ஆயினும் கற்றுணர்ந்தோரைத் தலை நிலத்து வைக்கப் படும் என்னும் நாலடிப் பாடல் நல்ல விளக்கம் ஆகும். இதோ வள்ளுவரின் குறள், மேற் பிறந்தார் ஆயினும் கல்லாதார், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு (குறள் 409) என்பதாகும். விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் (குறள் 410) என்னும் குறள் வழியாக அறிவு விளக்கம் பெறுவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவர்கட்கும் கல்லாதவர் கட்கும் உள்ள வேறுபாடு ஆறறிவு பெற்ற மக்கள் இனத்திற்கும், ஐயறிவு பெற்ற விலங்கு களுக்கும் உள்ள அவ்வளவு ஏற்றத் தாழ்வு உடையவர் ஆவர். மக்கட் பிறப்பு எய்தினாலும் கற்றவரே மக்களாய்க் கருதப்படுவர்; கல்லாதார் விலங்கு நிலையிலேயே வைத்து எண்ணப்படுவர். படித்தவனுக்கும் படியாதவனுக்கும் உள்ள வேறுபாடு உயிருள்ள வனுக்கும் இறந்தவனுக்கும் உள்ள வேறுபாடு போன்றது எனக் கூறுபவர் சாண்சன். எல்லா நலமும் ஈந்திடும் கல்வி இல்லா வீட்டை இருண்ட வீடு என்க! படிப்பிலார் நிறைந்த குடித்தனம், நரம்பின் துடிப்பிலார் நிறைந்த சுடுகாடு என்க! அறிவே கல்வியாம்; அறிவிலாக் குடும்பம் நெறி காணாது நின்றபடி வீழும்! சொத்தெலாம் விற்றும் கற்ற கல்வியாம் வித்தால் விளைவன மேன்மை, இன்பம் செல்வம் கடல்போல் சேரினும் என்பயன்? கல்வி இலான் கண்இலான் என்க! இடிக்குரற் சிங்கநேர் இறையே எனினும் படிப்பிலாக் காலை, நொடிப்பிலே வீழ்வான்; கல்லான் வலியிலான், கண்ணிலான், அவன்பால் எல்லா நோயும் எப்போதும் உண்டு! கற்க எவரும், எக்குறை நேரினும் நிற்காது கற்க, நிறைவாழ்வு என்பது கற்கும் விழுக்காடு காணும்; பெண்கள் கற்க! ஆடவர் கற்க! கல்லார் முதியராயினும் முயல்க கல்வியில்! எது பொருள் என்னும் இரு விழியிலாரும் படித்தால் அவர்க்குப் பல்விழிகள் வரும்! ஊமையும் கற்க! ஊமை நிலை போம் ஆமை போல் அடங்கும் அவனும் கற்க! அறத்தைக் காக்கும் மறத்தனம் தோன்றும் கையும் காலும் இல்லான் கற்க! உய்யும் நெறியை உணர்ந்து மேம்படுவான்! இல்லார்க் கெல்லாம் ஈண்டுக் கல்வி வந்தது எனில் கடைத்தேறிற் றே உலகே என்னும் பாவேந்தரின் இருண்ட வீடு ஏற்ற எடுத்துக் காட்டு ஆகும். கற்றறிவில்லா மாந்தர் கண்கெட்ட மாடே யாவர்; மற்றவர் மண்ணின் மீதே மடமையில் மாழ்கி நிற்பர் உற்ற மற்றவர் இவ்வுலகிற்கோர் சுமையே ஆவர். பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய்ப் பிறந்த தாமே என்னும் பாடல் கயவன் கல்வி அருமை அறிந்தது எனும் குறுங் காவியத்தில் இடம் பெற்றதாகும் பாடியவர் கா.நமசிவாயர் ஆவர். நூலறிவு இன்றி அவையில் பேச எண்ணாதே. கற்றார் முன் பேச எண்ணாக் கல்லாரும் நல்லாரே கல்லாதானை அறிவுடையார் மதியார் கல்லாதானை அவன் சொல்லே காட்டி நிற்கும் கல்லாதார் களர் நிலம் போன்றவர் கல்லாதான் எழில்நலம் மண் பாவை போன்றது கல்லார் திரு இன்னாதது கற்றாரே பெருமை உடையவர் கற்றோரே மக்கள் கல்லார் விலங்கு 42. கேள்வி கற்பது ஒரு நாள் பணியோ? சில நாள் பணியோ? பல நாள் பணியோ? அன்று கல்வி கற்பது வாழ்நாள் பணியாகும். இளமை, கல்வி கற்பதற்கே முதன்மை தர வேண்டிய பருவமாகும். நூல்கள் வழி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்வது ஒரு வகை; இன்னொரு வகை கற்றவர் வாய்மொழி கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ளல். முன்னது கல்வி எனப்படுகிறது அஃது கண்ணை முதன்மைப் பொறியாகக் கொண்டு பெறுவதாகும். கேள்வி செவியை முதன்மைப் பொறியாகக் கொண்டு பெறுவதாகும். கேள்வி வழிக் கல்வியே மிக்க பயன் உடையது; ஆகவே தான் பழங்காலத்தில் தக்க ஆசிரியரை அணுகி, அவர் வாய் மொழி கேட்டுக் கேட்டுக் கற்று அறிவை வளர்த்தனர். இன்றையக் கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும் மாணவர்கட்குப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து, வழி காட்டி, கேட்டு அறிவு பெறுவதையே முதன்மையாகக் கொண்டு இயங்கி வருவதும் இயக்கி வருவதும் கண்கூடு. செவி வழிக் கல்வியே நூல்வழிக் கல்விக்கும் அடிப்படை யாகவும் விளங்குகிறது. அதே நேரம் எக்காலத்தும் விலக்கத் தக்கதும் அன்று. தானே கற்றுணரும் திறன் வாய்க்கப் பெற்றவர்க்கும் கேள்வி வழிக் கல்வி பெருந்துணை புரியும். அத்துடன் இளமையில் கற்க வாய்ப்புப் பெறாதவர் களும், ஆசிரியர்கள், அறிஞர்கள் மெய்யுணர் வாளர்கள், பல்துறை வல்லார்கள் பட்டறிவுடையவர்கள். தங்கள் சிந்தனைகளை வாய்மொழி வழி வழங்கி வருகின்றனர். அவற்றுள் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வுக்குத் தேவையான அறிவுரை களையும், அறவுரைகளையும், பண்புரைகளையும், ஒழுக்கவுரை களையும், வாழ்வியல் உரைகளையும் விரும்பிக் கேட்டே அறிவைப் பெருக்கிக் கொள்ள இயலும். கண்ணொளி அற்றவர்களும் செவி வழியாகக் கேட்டு உணர்ந்து அறிவு பெற அரிய வாய்ப்பாகவும் அமைவது கேள்வி ஆகும். கல்வியினும் கேள்வி இனியது; எளியது; எந்த அகவையிலும் பெறலாம். இன்று வானொலியும் தொலைக்காட்சியும் பொழிவு மேடை களும், இசை அரங்குகளும் கேள்வி அறிவை வளர்த்து வருவதைக் கேட்டு இன்பமும் பயனும் பெறார் இரார் எனக் கூறலாம். கனியாக உண்பது கல்வி எனின் கனியைப் பிளிந்த சாறாகப் பருகுவது கேள்வியாகும். சில அறிஞர்களிடம் மணிப் பொழுது உரையாட வாய்ப்புக் கிட்டினால் மணி மணியான அறிவுச் செல்வங்களை அள்ளிக் கொள்ளலாம். சிலரின் பொழிவு வாயிலாக பன்னாள் முயன்று பன்னூல்களைக் கற்றும் அடைய முடியாத நிறைவை ஒரு மணிப் பொழுதில் பெற்றுப் பயன் கொள்ளலாம். நடுமாடும் நூலகங்களாய் விளங்கும் அறிஞர்கள் தொடர்பு எந்நிலையில் வாய்த்தாலும் கேள்விச் செல்வம் பெருக வாய்ப்புண்டு. சிந்தனையாளர், பகுத்தறிவாளர், சமயச் சான்றோர்களின் நிறைமொழி களே உலகின் மறை மொழிகளாகப் போற்றப்படுகின்றன. இளம் பருவத்தில் பள்ளியில் பயிலுங்கால் பெரும் பாலும் கண்ணை மூடிக் கொண்டே பாடங்கேட்பது விவேகானந்தரின் பழக்கம். ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தைச் செவிக் கூர்ப்புடன் கேட்டுக் கேட்டு மனத்தகத்தே பசுமரத்தாணி போல் பதிய வைத்துக் கொள்வதையே வழக்கமாகக் கொண்டு கற்றதால், அவர் கேட்டவற்றில் எதையும் மறந்தார் அல்லர். அவரது நினைவு ஆற்றல் பெருகி வளர்ந்து உலகையே வியப்பில் ஆழ்த்தியது. பொன்விளைந்த களத்தூரில் பிறந்த பொன் வீரராகவர். பிறவி யிலேயே கண்ணொளி இழந்த பேரொளியர் அவர் தம்மைப் பற்றிப் பெருமிதத்துடன் ஏடாயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப் படித்த அறிவாளன், இமயம் முதல் சேது நாடு வரை இணையற்ற படிப்பாளன் எனக் கூற வைத்தது செவி வழிப் பெற்ற அறிவுப் பெருக்கே! பழனி மாம்பழக் கவிச் சிங்க நாவலர், கோயில் பட்டித் திருக்குறள் நினைவுக்கலை ஏந்தல் பெ. இராமையா போன்ற பெருமக்கள் கண்ணொளி அற்றவர்கள். செவி வழிக் கேட்டுப் பெருக்கிக் கொண்ட அறிவுப் பெருக்கே அவர்களைப் புகழ் ஏணியில் ஏற்றியது. கற்பாரும், கற்றாரும் கேட்டும் அறிவு பெறலாம். கல்லாரும் கேட்டு அறிவு பெறலாம். கல்லாரையும் கேள்வி, அறிவர் ஆக்கும் ஆற்றல் வாய்ந்தது. நூலைக் கற்றலின் இயல்பைச் சொல்லின், உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை நடையையும் ஆராய்ந்து அறிதலும், மூல பாடங்களை மறவாது பாதுகாத்தலும், தான் கேட்ட பொருள்களைப் பலகாற் சிந்தித்தலும், ஆசிரியனை அடுத்து அவைகளைத் தன்மனத்துள் அமையும் படி மீட்டும் கேட்டலும், அக்கற்கும் தொழிலை உடையவரோடு பழகுதலும், தான் ஐயுற்ற பொருளை அவரிடத்து வினவுதலும், அவர் வினவியவைகளுக்குத் தான் உத்தரங் கொடுத்தலும் என்று சொல்லப் பட்ட இச்செயல்களை முறையாக மாணாக்கன் கொண்டால் அறியாமையானது அவனை மிகுதியும் விட்டு நீங்கும் எனவும், ஒரு நூலைப் பாடம் கேட்பவன் ஒரு தரம் கேட்ட அளவின் அமையாது, இரண்டு தரம் கேட்பானாயின், அந்நூலிலே மிகுதியும் பிழைபடுதல் இலனாவன் எனவும் மூன்று தரம் கேட்டான் ஆயின், ஆசிரியன் கற்பித்த முறையை உணர்ந்து பிறர்க்குச் சொல்லுவான் எனவும் நன்னூல் காண்டிகை உரை பாடங் கேட்டலின் வரலாற்றைக் கூறும் முறையிலும் கேள்வியே முதன்மை பெற்று விளங்குவதையும் காண நேரிடுகின்றது. மறவுரையும் காமத்து உரையும் மயங்கிப் பிறவுரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை கேட்கும் திருவுடை யாரே பிறவியை மீட்கும் திருவுடை யார் என்னும் அறநெறிச் சாரம் கேள்வி வழிக் கல்வியின் பயனை உணர்த்தும் பாங்கு ஏற்ற முன்னுரையாகவும் அமைகிறது. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (குறள் 411) செல்வம் செல்வம் என்று உலகத்தார் மதித்துத் தேடிச் சேர்க்கிற செல்வங்களில், அறிவைக் கொடுக்கும் கேள்விச் செல்வமும் ஒன்றாகும். அக்கேள்விச் செல்வம் பொருட் செல்வம், மக்கட் செல்வம் போன்ற எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாகும். ஏனெனில் கேள்விச் செல்வம் பெறுவோர் வருந்தி உழைக்க வேண்டிய தேவையோ, பெருமுயற்சி மேற்கொள்ள வேண்டியதோ இல்லை, பெருஞ் செலவு செய்ய வேண்டி அவசியமும் ஏற்படாது. வழங்குபவர் எவ்வளவு வழங்கினாலும் அவர்க்கு நன்மையும் இன்பமும் ஏற்படுமே அல்லாமல், துன்பமோ இழப்போ ஏற்படப் போவதில்லை. பெறும் போதும் இன்பம், எவ்வளவு கேட்டாலும் காது வலிக்காது. வாழ்நாள் முழுமையும் நற்பயனையும் நல்கக் கூடியது. ஆகவே, செவிச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று கூறினார். செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே என ஞான சம்பந்தர் தம் சிவநெறிப் பற்றுக்கு ஏற்ப உரைத்தார். கம்பர்தம் காப்பியத்தில், இராமனை செவியுறு கேள்விச் செல்வன் எனவும், இராமனின் அன்னையாகிய கோசலையை, வானோர் கேள்விச் செல்வம் துய்க்க, வயிற்று ஓர் கிளை தந்தாள் எனவும் கேள்விச் செல்வத்தைக் கம்பர் குறிப்பதுடன், அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் யுள புவித்தலை உயிர்எலாம் இராமன் பொன்முடி கவிக்கும் என்று உரைக்கவே களித்ததால் அது செவிப்புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன் கொலாம் என்னும் கம்பராமாயணப் பாடல் ஏற்ற எடுத்துக் காட்டாகும். செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் (குறள் 412) ஆளும் வளர வேண்டும் அறிவும் வளர வேண்டும் அதுதான் உண்மை யான வளர்ச்சி. உடல் வளர்ச்சிக்கு உணவுதேவை. அறிவு வளர்ச்சிக்கு அறிஞர் வாய்ச் சொல் தேவை. அறிஞர் உரையாகிய கேள்வியும், உடலை வளர்க்கும் ஊட்டமும் உணவு என்றே வள்ளுவர் கருதுகிறார். வயிற்றுக்கு வழங்கும் உணவு பருப் பொருள். செவிக்கு வழங்கும் உணவு நுண் பொருள். உடலை வளர்க்கும் உணவினைத் தேடும் முயற்சியில் எல்லோரும் ஈடுபட்டு இருப்பர். வேளா வேளைக்கு அவரவர் வளமைக்கும் வறுமைக் கும் ஏற்றவாறு உணவினை வழங்கி வயிற்றுப் பசியைப் போக்குவதை எல்லா மனிதர்களுமே வழக்கமாகக் கொண்டுள்ளனர். மனிதர்கள் மட்டுமன்றி உலகில் உயிர் வாழும் அனைத்து உயிர்கட்கும் உணவு வேண்டும். மனிதப் பிறவி மற்றையப் பிறவிகளிலிருந்து வேறுபட்ட அமைப் புடையது. மனிதனே பிறப்பில் உற்ற அறிவை மேலும் மேலும் வளர்த்து வாழ வேண்டியவன். ஆகவே அவன் உடலை வளர்ப்பதை விட அறிவு வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியவன் ஆகிறான். எல்லாரும் அப்படி இயங்கவில்லை ஆயினும் அறிவு வளர்ச்சியில் ஆர்வம் உடையோர் அதற்கே முதன்மை தருவர். அறிவு வேட்கையர் செவி உணவாகிய கேள்வி அறிவு பெறுதற்கு எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் தேடிச் சென்று எப்பொழுதெல்லாம் வாய்ப்புக் கிட்டுகிறதோ அப்பொழுதெல்லாம், யார் யார் மூலம் கிட்டுகிறதோ அவர்கள் வழி எல்லாம் எவ்வளவு கேட்க முடியுமோ அவ்வளவும் கேட்டு அறிவைப் பெருக்கும் பெரு விருப்பம் உடையராகவே இருப்பர். அவர்கள் பெரும்பாலும் வயிற்றுணவைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். செவிக்கு உணவு கிடைக்காத பொழுதுதான் சிற்றளவு உணவினை வயிற்றுக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பர். பண்பட்ட மக்களுக்குக் கேள்வி உணவே சுவைமிக்க உணவு; அதனையே பயனுடைய உணவாகக் கருதுவர். செவி உணவு கிடைப்பதும் அரிது. ஆகவே கிட்டிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்வர். நழுவ விட மாட்டார்கள். கேள்வி உணவிற்கு அளவு இல்லை; எவ்வளவு பெற்றாலும் பயனை மிகுதிப் படுத்துமே அன்றிக் கேடு தாராததும் ஆகும். வயிற்றுக்கு முன் உண்ட உணவு செறித்தபின் பொருந்திய உணவை உரிய பொழுதில் அளவோடு உண்ணக் கொடுக்க வேண்டும். அளவிற்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாகும் என்பது பழமொழி. ஆகவே திருவள்ளுவர் இவை எல்லாவற்றையும் நீடு நினைந்து சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என்றார். அவர் சிறிது எனக் கூறியதைப் பெரிதும் கவனத்தில் கொள்ளவேண்டும். பேருண்டி வேட்கை நோயாளி ஆகவும், சோம்பேறி ஆகவும் ஆக்கும். ஆனால் உண்டி கட்டாயம் வேண்டும்.ஆகவேதான் புறநானூறு உண்டி முதற்றே உணவின் பிண்டம் எனவும் உடம்பார் அழியின் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் எனத் திருமந்திரமும் கூறுகிறது. முன்பு கேட்டது போல் பின்னரும் கேட்க உடம்பு வேண்டும். உடம்பு வேண்டுமானால் வயிற்றுக்கு உணவு வழங்க வேண்டும். ஆனால் செவிக்கு உணவு வழங்குவது போல் மிகுதியாக வழங்குவது நன்றன்று என வள்ளுவர் கருதியதால் தான் சிறிது ஈயப்படும் என கூறினார். அறிவர்களும் அவ்வாறே வழங்குவர். செவிக்குத் தேன்என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் என்னும் கம்பன் கவித் தொடரும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். உணவு உண்பதில் மிகுந்த விருப்பம் உடைய பேருண்டியர், நல்ல நல்ல சுவை உணவுகள் எங்கெங்கு கிடைக்கும் என்பதைத் தேடிக் கண்டு பிடித்துத் தம் உணவு வேட்கையை நிறைவு செய்து கொள்வர்; ஒரு விடுதியில் இட்டலி, ஒரு விடுதியில் வடை; ஒரு விடுதியில் பூரி உண்டபின் மற்றொரு விடுதியில் தேநீர் பருகுவார் இன்றும் இருக்கிறார் கள். அது போலவே, அறிவார்ந்த பயனுடைய சொற்களை அறிஞர் வழி கேட்டு மகிழ வேண்டும் என்னும் விருப்பம் உடையவர்களும் தம் அறிவிற்கு உணவு எங்கு கிடைத்தாலும் எப்பொழுது கிடைத்தாலும் யார் வழியாகக் கிடைத் தாலும் தேடிக் கண்டு கேட்டுத் தம் அறிவைப் பெருக்கிக் கொள்ளத் தவற மாட்டார். நாச்சுவை உடையார் பக்குவமான உணவைத் தேடுகிறார். செவிச்சுவை உடையார் ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் கேட்கும் வாய்ப்பைத் தேடுகிறார். விருப்பமும் முயற்சியும் ஒன்றுதான். உணவு உடம்பை வளர்க்கும் கேள்வி உணர்வினை வளர்க்கும். உடம்பை வளர்க்கும் வேட்கை போல் உணர்வினை வளர்க்கும் வேட்கையரும் உலகில் உள்ளனர் என்பதைத் தெரிவிக்கும் பாடலே செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர்நிலத்து (குறள் 413) என்பதாகும். அவி உணவு கொள்வார் போல் செவி உணவு கொள்வாரும் உண்டு. நூல்களைக் கற்றவரும் தம்மினும் மேலாகக் கற்றவர்கள் கூறும் கருத்துகளையும் கேட்டுக் கொள்வது நல்லது. நூல்களைக் கற்கவில்லை யாயினும் கவலை கொள்ளத் தேவையில்லை. கவலை கொள்வதால் பயனும் இல்லை. கற்கத் தான் வாய்ப்புக் கிட்ட வில்லை. கற்றவர் கூறுவதைக் கேட்க வாய்ப்புக் கிட்டுமாயின் தவறாது கேட்க வேண்டும்! தாமே வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு கேட்டறிய முயல வேண்டும். அப்படிக் கேள்வி வழிப் பெற்ற அறிவு நீர் ஊற்றுப் போன்றது. மழைக் காலத்தில் ஆற்றில் ஓடும் நீரே மக்களின் நீர்த் தேவையை எல்லாம் நிறைவேற்றும். மழை வறண்ட காலத்தும் மண் வறளாமல், பயிர் பச்சைகளையும் உயிரினங்களையும் தளராமல் காப்பது நிலத்தடி நீராகும். அவ்வாறு ஊற்று நீர் துணை நின்று காப்பது போல் கேள்வி வழிப் பெற்ற அறிவும் கல்லாரைத் துன்பத்தினின்று காக்கத் துணை புரியும். ஆற்றில் நீரோட்டம் இல்லையாயினும் ஊற்று நீர் வறட்சி போக்கி வாழ வைக்கும். அது போல் கற்கும் வாய்ப்புப் பெறாதவர்கட்கும் கேள்வி வழி பெற்ற அறிவு துன்பத்தில் துவளாமல் காத்து நிற்கும். என்பதைக், கற்றிலன் ஆயினும் கேட்க; அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை (குறள் 414) எனக் கூறுகிறார். கல்லார் எனினும் என் கற்றவரைச் சார்ந்தொழுக வல்லார்க்கு நல்லறிவு வந்துறூஉம் கற்பனவூழ் இல்லென்று வாளா இராஅது உறுதியுரை நல்லார்பால் கேட்க நயந்து என்னும் இன்னிசைப் பாடலும் கற்றிலன் ஆயினும் கேட்க என்பதனையே வலியுறத்துகிறது. உணற்கினிய இன்னீர் பிறிதுழிஇல் என்னும் கிணற்றகத்துத் தேரை போல் ஆகார் கணக்கினை முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலின் கேட்டலே நன்று. என்னும் பழமொழி கற்றலின் கேட்டல் நன்று என விளக்குவதையும் ஒப்பு நோக்குக! வணிகத்தில் நொடித்துப் போன ஒருவர், ஊரை விட்டுக் கிளம்பினார் உள்ளம் அலைக் கழித்தது, தற்கொலைக்கு ஏவியது. போகும் வழியில் ஒரு கூட்டம் பொழிவாளர், உள்ள முதல்களில் எல்லாம் உயரிய முதல் உள்ளமே ஆகும்; உள்ளம் உடைமை உடைமை, பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்; உடையார் எனப்படுவது ஊக்கம், தளராத ஊக்கம் உடையவன் இடத்துச் செல்வமே வழி கேட்டு வந்து சேரும்; ஊக்கம் உடையார் ஆக்கம் இழந்தோம் என்று வருந்தார். வெள்ளம் போலத் துயரம் அடுக்கி வந்தாலும் ஊக்கம் உடையவன் உள்ளத்தால் எண்ணிய அளவில் ஒழிந்துபோம்; ஊக்கமே கையில் உள்ள அழியாச் செல்வம் என்றெல்லாம் திருவள்ளுவர் சொல்லும ஊக்கம் உடைமையை விரித்துரைத்தார். அவ்வுரையை ஆழ்ந்து கேட்டார் மன உளச்சல் நீங்கியது; தன்னம்பிக்கை பிறந்தது; ஊர் வந்து சேர்ந்தார்; ஊக்கத்துடன் உழைத்தார்; வெற்றி மேல் வெற்றி பெற்றார் ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல் தந்த நற்றுணை அல்லவா? நினைவுக் கலை ஏந்தலாய்ப் போற்றப்படும் பெ. இராமையா அவர்கள் மணவாழ்வு மேற்கொண்டு ஆறு மக்கள் பிறந்த பின்னர் அம்மைநோய்க்கு ஆட்பட்டுக் கண்ணொளி இழந்தவர். ஆகவே மளிகைக் கடைப் பணி பறிபோயிற்று வறுமைக்கு ஆட்பட்டுத் தற்கொலையே வழி என்ற எண்ணத்துடன் ஊருக்கு வெளியே நடந்து சென்றவரை எதிரில் கண்ட ஆசிரியப் பெருமகனார் பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி 618 என்னும் திருக்குறளை எடுத்துக்காட்டி விளக்கினார். அவ்வெடுத்துக் காட்டிற்குத் தாம் எடுத்துக் காட்டாய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்னும் மனநிலைக்கு ஆட்பட்டார். தமக்கு இயல்பாய் உள்ள நினைவாற்றலைத் தக்கவாறு பயன்படுத்த முற்பட்டார். துணைவியாரையும் மகளாரையும் படிக்கச் சொல்லியே திருக்குறளை ஆழமாய்க் கற்றார் வேறு பல இலக்கிய இலக்கண நூல்களையும் செவி வழி கேட்டே பேரறிவாளர் ஆனார் ஆசானின் வாய்ச் சொல் தந்த துணை தனிப் பெருந் துணையாகும். வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் நடந்து செல்வோரும், தொளியில் இயற்கை உரமாக இலைதளைகளை வயலில் போட்டு மிதிப்போரும், வலியவராய் இருப்பினும் கம்பு ஒன்றை ஊன்றிக் கொள்வர்; வயது முதிர்ந்தவர்கட்குக் கால் நடுக்கம் வந்து விட்டால் கையில் தடியொன்றைப் பிடித்துத் தரையில் ஊன்றி ஊன்றி நடப்பர். இருக்கும் இருகாலுடன் மூன்றாவது காலாக அக்கோல் பயன்படும். கால் ஊனமுற்றவர்கட்கும் ஊன்றுகோல் நல்ல துணையாக அமைகிறது. இத்தகைய காட்சியைக் கண்டு படைத்த குறளே, இழுக்கல் உடையுழி ஊற்றுக் கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் (குறள் 415) என்பதாகும். வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் செல்வோனுக்கு ஊன்று கோல் உதவுவது போல் ஒழுக்கம் உடைய பெரியோரின் அறிவுரை கேட்டவனுக்கு வாழ்வில் தளர்ச்சியோ, சோர்வோ, துன்பமோ நெருக் கடியோ ஏற்பட்டுத் தவிக்க நேரும் போது அப்பெரியோர் கூறும் அல்லது முன்பு எப்போதோ கூறிய நல்லுரையே வாழ்வில் தளர்ச்சி போக்கி நல்ல ஊன்று தலை உருவாக்கும். சொன்னவர் நல்லொழுக்க நெறி நின்று வாழ்பவராய் இருக்க வேண்டும். கேட்பவன் உளம் ஒன்றிக் கேட்க வேண்டும். அவர் வாய்ச் சொல் வலிய துணை புரியும் என்பதால் திருவள்ளுவர் ஊன்று கோலையும் ஊற்றுக் கோல் என வல்லினப் படுத்திக் கூறியுள்ளார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரசு இழந்து வனம் புகுந்து மனம் தளர்ந்து தம்பியரோடு வாழ்ந்த தருமருக்கு வியாச முனிவர் கூறிய நல்லுரை ஊன்று கோலாய் உதவியதைப் பாரதம் கூறும். வறுமையால் மடமை தன்னால் வருந்தி நெஞ்சழியும் காலை உறுதிசெய் துணையாம், கற்ற உணர்வினை வளர்க்கும் என்றும் இறுதியில் லாத இன்பம் ஈட்டும் ஆதலினால் கற்று மறுவறும் ஒழுக்கம் உள்ளார் வாய்மொழி கேட்டல் வேண்டும் என்னும் விநாயக புராண விளக்கம் ஏற்படையதே! எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் (குறள் 416) உயர்ந்த பெருமக்கள் கூறும் மெய்ப் பொருள்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். கேட்பது அளவால் மிகக் குறைந்ததாய் இருந்தாலும் பாதகம் இல்லை. அவ்வாறு கேட்டறிதல் அவரவர் கேட்ட அளவிற்கு உயர்ந்த பெருமையை ஈட்டித் தரும். நல்லவை கேட்ட அளவிற்குப் பெருமை தரும். தோண்டிய அளவிற்கு மணல் ஊற்றில் நீர் ஊறும் அதுபோல மக்கட்கு அவர்கள் கற்ற அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என அறிவு பெருகக் கற்க வேண்டும் எனக் கூறியதையும் நினைவுபடுத்திக் கொள்க! fl¥ghiw¡ f«ãia¥ ghiwÆš njŒ¤Jf bfh©oUªjhŸ gh£o ‘V‹ njŒ¡»whŒ? எனக் கேட்டான் பேரன், ஒரு குடைக் கம்பி வேண்டும் அதற்காக என்றாள் பாட்டி... குடைக் கம்பிக்காகக் கடப்பாறைக் கம்பியைத் தேய்க்க வேண்டுமோ? தேய்க்க என்ன பாடு? என்றான் பேரன். தேய்த்துக் காட்டுகிறேன் என்றாள். பாட்டி அப்படியே செய்தார். செய்ததுடன் கடப்பாறைக் கம்பியைத் தேய்த்துக் குடைக் கம்பி செய்ய முடியும் போது, கணக்குப் பாடத்தைத் தானா முயன்று கற்று விட முடியாது? எனப் பேரனைப் பார்த்து வினவினாள் பாட்டி, கணக்கில் கடையவனாக இருந்த பேரன் முதல்வன் ஆனான். சிற்றளவு கேள்வியும் பெரும் பயன் நல்கும். நெசவுத் தொழில் செய்து பிழைக்கும் ஒர் ஏழைத்தாய் ஒரு நாள் தான் நெய்த விலை உயர்ந்த ஆடையைத் தாறுமாறாகக் கிழித்துக் கொண் டிருந்தாள் அதனைக் கண்டு திடுக்கிட்ட மைந்தன் தாயிடம் என்னம்மா இவ்வளவு விலை உயர்ந்த துணியைப் பாழாக்கி விட்டாயே என்று கேட்டான் அவன் தந்தையை இழந்த மகனாவான். jhŒ ‘Éiy ca®ªj c‹ thœitna Ú ghHh¡»¡ bfh©oU¡F« nghJ, ïªj¤J nghdhš v‹d? என்றாள். அக்கேள்வி அவன் மனதில் அழுந்தப் பதிந்தது. கற்றுத் தேர்ந்து பெருமை பெற்றான். சிற்றளவாயினும் நல்லார்வாய் நன்மொழி கேட்க! இராமபிரான் எய்த பாணம் தாடகையின் மார்பை ஊடுருவிச் சென்றதைக் கம்பர், சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் அல்ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரக் குன்றக் கல்ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப் புல்லர்க்கு நல்லார் சொன்ன பொருள்எனப் போயிற்றன்றோ என்னும் கம்பன் குறள் கருத்தை உள்வாங்கிக் கொண்டு எதிர்மறையில் கூறுவதைக் கேட்பதும் இன்பமாகும். மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல் இலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியோ! âUkhš Ó® nfshj brÉ v‹d brÉnah? எனச் சிலப்பதிகாரம் கூறுவதையும் இணைத்துச் சிந்திப்போமாக! வேறு நினையார் பிறிது மொழி கேளார் விளையாடார் விழிகள் தூங்கார் மாறுபடு திசை நோக்கார் மற்றொரு சொல் உரையாடார் வள்ளலார் நூல் கூறும் அவர் முகம் நோக்கிக் கோடாமல் இருந்து செவி கொடுத்துக் கேட்டார் ஆறுசுவை தெரிந்து அமுதம் உண்பவர் போல் சொற்சுவைகள் அருந்தி மாதோ? என்னும் திருக்குற்றாலத் தலபுராணப் பாடல் நல்ல எடுத்துக் காட்டாகும். பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர் (குறள் 417) பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்து அறிந்து, அதன் மேலும் பல்வேறு வகைகளில் நிறைந்த கேள்வி அறிவினை உடையார். தாம் கேட்ட எப்பொருளையும் தவறாக உணரவும் மாட்டார், தம் அறிவிற்கு முழு நிறைவு தராத எச்சொல்லையும் எவர்க்கும் சொல்லவும் மாட்டார். கூர்மையாகக் கேட்கும் திறன் பெற்றோர், அறிவுக்குப் பொருந்தாச் சொற்களைச் சொல்லமாட்டார். நன்கு கேட்பவராலேயே நன்கு பேச இயலும். நுதி இழை மதி எனவும்கம்பரால் இத்திறன் சுட்டப் படுகிறது. வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால் உண்மை இல்லை பொய்யுரை இலாமையால் வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால் எனக் கம்பர் காட்டும் குறிக்கோள் மிக்க நாட்டு நிலையிலும் கேள்வி அறிவே அறியாமையை இல்லை ஆக்கி யுள்ளதையும் ஒப்பிட்டுக் காண வேண்டும். இம்மூ வுலகின் இருள்கடியும் ஆய்கதிர் போல் அம்மூன்றும் முற்ற அறிதலால் - தம்மின் உறழா மயங்கி உறழினும் என்றும் பிறழா பெரியார் வாய்ச் சொல் என்னும் புறப்பொருள் வெண்பா மாலை வெண்பாவும் இக்கருத்தைத் தழுவியதாகும். பாடலொடு பொருந்தி அமையாத இசையால் பயன் இல்லாததுபோல். கண்ணோட்டத்தொடு பொருந்தி அமையாத கண்களாலும் பயன் இல்லை என்றும், கண்ணுடையவர் என்று அறிவாளர்களால் சொல்லப்படு பவர் கற்றோரே, மற்றைக் கல்லாதவரோ, முகத்தில் இரண்டு புண் உடையவரே யாவர் என்றும் கருதுவதை பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் (குறள் 573) கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (குறள் 393) எனக் கண்ணின் உண்மைப் பயனை உணர்த்தியது போல், செவியின் உண்மையான பயனை உணர்த்தும் குறளே, கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி (குறள் 418) என்பதாகும். கேள்வி அறிவால் துளைக்கப் படாத செவிகள் தம் புலனுக்கேற்ப ஓசை ஒலிகளைக் கேட்குமாயினும் அவை கேளாத செவிடர் செவிகளாகவே கருதப்படும். ஐம் பொறிகளின் சிறந்த பயன் அறிவுப் பேறாகும். அதிலும் கண்ணும் செவியும் அறிவு தேடும் மிக முக்கிய பொறிகளாகும். ஆகவே, கேள்வி அறிவிற்கு ஏற்காத செவிகள் கேளாத் தகைய என்றும். கேள்வி அறிவு புகுதற்கு இயற்கைத் துளையினும் வேறான நுண்துளை வேண்டி யிருத்தலின் கேள்வியால் தோட்கப் படாத செவி என்றும் கூறிய நுட்பம் உணரற்பாலது. கல்லான் கண்ணிலான் கேள்வியிலான் செவியிலான் எனக் கருதுகிறார் வள்ளுவர். சவரி என்னும் தவமுதுமகள் கூறிய நெறி முறைகளைப் பரிவோடு கேட்ட இராமபிரானை, கேட்டனன் என்ப மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான் எனக் கூறும் கம்பன் கவி சொல்லும் பொருளும் ஒத்த சான்றாகும். செவிகாள்! கேண்மின்களோ சிவன் எம் இறை செம்பவள எரிபோல் மேனிப்பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ! என அப்பர் சிவநெறி இன்பம் பெறச் செவிகளை வேண்டு வதையும் இணைத்துச் சிந்திக்கலாம். நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது (குறள் 419) பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி என்றவர் வள்ளுவர். அவ்வணிகலன் பெறுவதற்கு வழி சொல்லும் குறளே இஃதாகும். பண்பும் ஒழுக்கமும் செயல் ஆண்மையும் வாய்க்கப் பெற்ற நல்லறிஞர்கள் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பெருநோக்கு உடையவர்கள். அவர்கள் உலகம் உய்யும் பொருட்டு வழங்கும் நல்லுரைகளை ஆர்வத்துடன் கேட்டு அதில் அடங்கியுள்ள நுட்பங்களை எல்லாம் நன்கு உணர்ந்து தம் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளும் பழக்கமும் பயிற்சியும் உடையோர் நுணங்கிய கேள்வியர் ஆவர். அத்தகைய நுண்ணிய கேள்வி வழி அறிவு பெறுவோர் ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கும் ஆற்றலராகவும் முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம் இன்சொல்லே இயம்பு பவராகவும், பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லாதவராகவும், மனத்தொடு வாய்மை மொழிபவராகவும், கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் நாநலம் என்னும் நலனுடைமை வாய்க்கப் பெற்றவராகவும் விளங்குவர். ஆகலான் நுண்ணிய கேள்வி அறிவு பெறாதவர்கள் பணிவுடைய சொற்களைச் சொல்பவராக அமைதல் அரிது என்கிறார். நுணங்கிக் கேட்டவரே! வணங்கி மொழிவர். வீடணனைக் குறித்துப் பேச நேர்ந்த போது, இராமபிரானின் எதிரே வருகிறான் அனுமன். அவனைக் கம்பர், வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் நுணங்கிய கேள்வியான் நுவல்வதாயினான் எனக் குறிப்பிடுகிறார். சொல்லின் செல்வன், நுணங்கிய கேள்வியனும் ஆவான் என்பது நல்லதொரு குறள் விளக்க ஓவியமாகிறது. இராவணன், துரியோதனன் ஆகியோர் நுணங்கிய கேள்வியரும் அல்லர் வணங்கிய வாயினரும் அல்லர் என்பதையே இராமாயணமும் பாரதமும் எடுத்து மொழிகிறது. நுணங்கிய கேள்வியர் பெருகினால்தான் வணங்கிய வாயினர் பெருகுவர். ஆகவே நுணங்கிய கேள்வியர் பெருகட்டும் என்னும் பேருள்ளத்தோடு வள்ளுவன் மொழிந்த குறளே இதுவாகும். மேல்நிலை மாந்தர் கேள்விச் செல்வம் பெறும் வாய்ப்பினை நழுவ விட மாட்டார்கள். அவர்களைப் போல் செவியால் நுகரப் படும் அறிவுப் பொருள்களின் சுவையை உணராது, வாயால் நுகரப்படும் உணவுப் பொருள்களின் சுவைகளை மட்டுமே உண்டு உணரும் தன்மை வாய்ந்த கீழ்நிலை மாந்தர் இறப்பதனால் உலகத்திற்கு எந்த இழப்பும் இல்லை. அத்தகையோர் உயிரோடு இருப்பதனால் உலகத்திற்கு எத்தகைய பயனும் இல்லை என்பது ஒரு பக்கம்இருக்கட்டும். அவர்கட்காவதுஅவர்கள் உயிரோடு இருப்பதால் ஏதேனும் பயன் உண்டோ? இல்லை. வீட்டிற்கும் நாட்டிற்கும் அவர்கள் இருப்பால் பொருள் இழப்புத் தான் ஏற்படும். என்பதால் செவிச் சுவை உணரா வாய்ச் சுவையாளர்களை மக்கள் என்னாது இழிவு தோன்ற மாக்கள் என்றும் குறித்தார். வாய்ச் சுவையில் பேரார்வம் காட்டாது செவிச் சுவையில் பேரார்வம் உடையோர் பெருக்கமே ஒரு நாட்டை தக்கார் வாழும் நாடாக்கும் என்னும் நல்லுணர்வால் படைத்த குறளே, செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? (குறள்420) என்பதாகும். ஒவ்வொருவர் வாழ்வும் பயன்தரும் வாழ்வாக அமைய வேண்டும்! ஒவ்வொருவரின் இறப்பும் நாட்டிற்கு இழப்பாகக் கருதப்பட வேண்டும்! கால் வழியினர் இறப்பு இழப்பாகாமல் காக்கவும் வேண்டும் மேலும் உயர்த்தவும் வேண்டும்! வயிறு வளர்க்கும் ஆர்வத்தை விட அறிவு வளர்க்கும் ஆர்வம் மேலோங்க வேண்டும் என எண்ணியுரைப்பவர் திருவள்ளுவர். இராமாயணத்தில் அயோத்தி நாட்டின் வளம் உரைக்கும் கம்பன், கோதைகள் சொரிவன குளிரிள நறவம் பாதைகள் சொரிவன பருமணி கனகம் ஊதைகள் சொரிவன உறையுறும் அமுதம் காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள் எனக் கூறும் செவி நுகர் கனிகளையும் நுகர்ந்து அறிவைப் பெருக்குவோமாக! செவிச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை செவிக்கு உணவு நிரம்பத் தருக வயிற்றுக்கு உணவு சிறிதே வழங்குக செவிக்குச் சிறந்த உணவைத் தேடிப் பெறுக கற்றிலன் ஆயினும் கேட்க கேள்விச் செல்வம் ஊற்று நீர் போல உதவும் ஒழுக்கம் உடையார் வாய்மொழி கேட்க ஒழுக்கம் உடையார் வாய்மொழி நல்ல ஊன்று கோல் ஆகும் நல்லவை கேள்! நற்பெருமை அடைவாய் கேள்விச் செல்வர் தவறாக உணரார் கேள்விச் செல்வர் அறியாததைக் கூறார் கேள்வி அறிவு பெறாச் செவி பயனற்றதே நுணங்கிய கேள்வியர் ஆகுக வணங்கிய வாயினர் ஆகுக வாயுணவைச் சுருக்கிச் செவியுணர்வைப் பெருக்குக! 43. அறிவுடைமை விரிந்து பரந்து காணப்படும் இவ்வுலகில், எண்ணற்ற வகை உயிரினங் கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றை நம் முன்னோர் அறிவின் அடிப் படையில் ஓரறிவு உயிர்கள், ஈரறிவு உயிர்கள், மூவறிவு உயிர்கள், நான்கு அறிவு உயிர்கள், ஐந்து அறிவு உயிர்கள், ஆறு அறிவு உயிர் என வகைப்படுத்திச் சிந்தித்துள்ளனர். மக்கள் இனமே ஆறறிவும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இனமாகும். ஆகவேதான், மக்கள் இனம் அனைத்து உயிரினங் களிலும் உயர்ந்த இனமாக பெருமைக்குரிய இனமாக, அகத்தும் புறத்தும் நாளும் வளர்ந்து கொண்டும் உலகை வளர்த்துக் கொண்டும் காத்து கொண்டும் வரும் இனமாக விளங்கி வருகிறது. ஆளுமை பெற்ற பேரறிவு வாய்ந்த இனம், மனித இனமே ஆகும். வள்ளுவப் பெருமகனும் மக்கட் பேற்றை விளக்கத் தொடங்கும் போழ்தே, மக்கட் பேறு அறிவறிந்த மக்கட் பேறு ஆகும் எனச் சுட்டியதுடன் அதனினும் நல்ல பேறு பிறிதொன்றினை யாம் அறிந்த தில்லை. எனத் தம் நுண்மாண் நுழை புலத்தால் திட்டமாக ஆய்ந்து கண்டு உணர்த்திய செல்வப் பிறப்பே மக்கட் பிறப்பாகும். ஒவ்வொரு மனிதனின் கண்களும், காதுகளும், மூக்கும், வாயும், மெய்யும் ஆகிய ஐம்பொறிகளும் அறிவை தேடிச் சேர்க்கும் வாயில் களாகும். அவற்றுடன் இயற்கையாய் அமைந்துள்ள பகுத்தறிவும் இணைவதால் அறிவைப் பெருக்கிக் கொள்ள எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. அவற்றைக் கட்டுக் கோப்பாக வளர்க்கப் பெருந்துணை புரிவது அறிஞர்களின் நூல்கள் அவற்றை முறையே கற்கவே பள்ளிகள் தோன்றின. அதன் வழி மானிட இனம் பெற்றுவரும் அறிவுப் பெருக்கம் வியக்கத் தக்கதாய் நாளும் வளர்ந்து வருகிறது. அறிவைப் பெறுவதற்குரிய அடிப்படைக் கூறுகளை இயற்கையாகவே பெற்றுள்ள மனிதன், முதலில் தன்னை அறிதல் வேண்டும். தத்தம் உடலைப் பற்றி அறிதல்; உடல் நலம் பேணுதல் பற்றி அறிதல்; குடும்பத்தை அறிதல்; உறவினர் பற்றி அறிதல்; ஊர், நாடு, மொழி பண்பாடு, ஒழுக்கம், உலகியல், அரசியல், பொருளியல், வாழ்வியல், இயற்கையியல், தொழிலியல், உலக வளர்ச்சியியல், உலக இயக்கவியல் அன்ன பல்வேறு துறைகளைப் பற்றியும் பாங்குற அறிந்து கொள்ள வேண்டும். அறிவதெல் லாம் அறிவேயாகும். இருந்தவற்றையும், இருப்பவற்றையும் பற்றிய தெளிந்த அறிவே, அவற்றில் கழிக்க வேண்டியனவற்றைக் கழிக்கவும், கூட்ட வேண்டிய வற்றைக் கூட்டவும், பெருக்க வேண்டியவற்றைப் பெருககவும் வேண்டிய திட்டங்களைத் தீட்டி, செய்ய வேண்டிய வழி வகைகளை வகுத்துச் செயல்படும் அறிவுத் திறனையும் உருவாக்கும். மொழியியல் அறிஞர் பாவாணர் அறிவு என்னும் சொல்லுக்கு 1. பொறியுணர்வு, 2. உலகியல் அறிவு, 3. பரவல் ஓதி (ஞானம்) 4. மதி, 5. அறிய வேண்டியவை 6. கல்வி, 7. அறியும் ஆதன் (ஆன்மா) 8. அறிவு வடிவான இறைவன் என்னும் எண்பொருளும் உண்டு எனச் சான்றுடன் விளக்குகிறார். திருக்குறள் திருவள்ளுவரின் பரந்து விரிந்த நுண்ணிய அறிவின் படைப்பாகும். இன்பத்துப் பாலில் உணர்வு மேலோங்கி நின்றாலும், அறத்துப் பாலிலும் பொருட்பாலிலும் அறிவாட்சி விஞ்சி நிற்பதைக் காண இயலும். அதிலும் பொருட்பால் அறிவுப் பாலே ஆகும். அனைத்து அதிகாரங்களும் அறிவுக் கண் கொண்டு நோக்கத் தக்க அறிவுக் கருவூலமே எனினும், கல்வியும், கேள்வியும் அறிவுடைமையு மாகிய மூன்று அதிகாரங்கள் உடன்பாட்டு நோக்கிலும், கல்லாமை, பேதைமை, புல்லறிவாண்மை ஆகிய மூன்று அதிகாரங்களும் எதிர்மறை நோக்கிலும் அறிவுடைமையின் தனிப் பெரும் சிறப்பினை விளக்கி யுரைக்கும் சீர்மையைத் தெள்ளிதின் உணர இயலும். தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு (குறள் 396) எனக் கல்வி அதிகாரத்தில் கற்ற அளவிற்கு ஏற்பவே அறிவு பெருகும் எனவும், கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை (குறள் 414) எனக் கேள்வி அதிகாரத்தில் கற்க வாய்ப்பு அமையவில்லை ஆயினும் கற்றார் கூறுவனவற்றைத் தவறாது கேட்டு அறிவினைத் தேடிக் கொள்ள வேண்டும் என வள்ளுவர் கூறுவனவற்றையும் ஓர்க! நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் (குறள் 373) என ஊழ் அதிகாரத்தில் ஒருவன் நுட்பமான பொருள் பொருந்திய நூல்கள் பலவற்றைப் பாங்குடன் கற்றுத் தேர்ந்தாலும் அவரவர்பால் அமைந்துள்ள உண்மை அறிவே மேலோங்கி ஆட்சிபுரியும் என உணர்த்தி உள்ளதையும் நினைவில் கொள்வோமாக! மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துஉள தாகும் அறிவு (குறள் 454) எனச் சிற்றினம் சேராமை அதிகாரத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் பால் அமைந்துள்ள அறிவு, அவரவர் மனத்தின் இயல்பினது எனக் கருதுமாறு தோற்றம் தந்தாலும் அஃது முழு உண்மை அன்று அவரவர் ஒன்றாகி உடனாகிக் கலந்து பழகும் நட்பினரையும், உறவினரையும் பொருத்தே அறிவு அமையும் எனக் குறிப்புக் காட்டியுள்ளதையும் மனத்தகத்தே கொள்ள வேண்டும். அறிவு ஒளிமயமானது; அரச வீதியில் நடக்கவும், மேடு பள்ளங்களைத் தாண்டவும், இயற்கையின் ஆற்றலை உணரவும் அந்த அறிவொளி நமக்கு உதவுகிறது. மனித இனத்தை உயர்த்துவதற்குத் தகுதியான ஏற்ற மரம் அறிவே! மூளையை வளர்ப்பதும் உலகத்தை நாகரிகப் படுத்துவதும் அறிவேயாகும். பேய்களை விரட்டி, பூதங்களை ஓட்டி, இருள் மயமான நாடுகளை ஒளிமயம் ஆக்குவதும் அறிவுதான். அச்சத்தை அகற்றுவதும் ஆண்மையை வளர்ப்பதும் அறிவு ஒன்றுதான் என இங்கர்சால் இயம்பி யுள்ளது ஏற்றதொரு விளக்கமாகும். மனிதனின் உடலுக்கு, உள்ளத்திற்கு உடைமைகட்குத் தொழிலுக்கு, வளர்ச்சிக்குப் போட்டியாலும், பொறாமையாலும், பகைமையாலும் வேறு பல காரணங்களாலும், கேடு, அழிவு, சிதைவு செய்ய, நேரடியாக முற்படு வோரும் இருக்கலாம். தீர்த்துக் கட்ட சூழ்ச்சி செய்ய முற்படுவோரும் இருக்கலாம். காலச் சூழ்நிலையும், இயற்கையின் மாறுபாடும் இடை யூறாய் அமையலாம். எதிர்பாராமல் திடீரெனவும் நெருக்கடி நேரலாம். அவற்றிலிருந்து நம்மைக் காத்து நிலைப்படுத்திக் கொள்வதற்கும் தக்க பாதுகாப்புத் தேவை. அவ்வாறு காத்துக் கொள்வதற்கு ஒரு வலிய கருவி தேவை. அத்துடன் எத்தகைய வலிய கொடுமையான பகையும் நெருங்க முடியாத அரணையும் ஒவ்வொரு வரும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வு ஆகும். அழிவோ, கேடோ, சிதைவோ நேர்ந்து விடாமல் காக்கவும், பகைவரும் அண்ட முடியா வலிய அரணும் எது எனத் திருவள்ளுவரை வினவினர். அவ்வினாவிற்குத் திருவள்ளுவர் அளித்த தெளிவான விடையே. அறிவு அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் (குறள் 421) என்பதாகும். அறிவு ஒரு பயனுடைய வலிமை வாய்ந்த கருவி. அக்கருவியைக் கைக்கொள்ளும் முறைமையால் நம் முன்னேற்றத்திற்கு எத்தகைய தடையும் நேர்ந்து விடாமல் காத்துக் கொள்ள முடியும். அறிவு கருவி மட்டும் அன்று எந்தப் பகைவரும் எத்தகைய சூழ்ச்சி செய்தும் உள்நுழைந்து அழிவு வேலை செய்ய முடியாத பேரரணாகும். அழிவு நேராமல் காத்துக் கொள்ளும் தற்காப்பு அமைப்புக்கு அரண் என்பது பெயர். ஆனால் புறத்தே கல்லாலும் மண்ணாலும் அமைந்த அரணில் பகைவர் வலியராயின் உட்புகுந்து அழிக்க இயலும். அகத்தே உள்ள அறிவும் அரண்தான். அந்த அரணைத் தாண்டி எந்தப் பகைவரும் புகுந்து அழிக்க முடியாது. ஆகவே, அறிவுதான் அழிவு நேராமல் காக்கும் கருவியும் அரணும் ஆகும் எனத் திருவள்ளுவர் தெளிவுபடுத்தி, அறிவைப் பெருக்கி அழிவின்றி வாழ வழிகாட்டுகிறார். அவரே மேலும் இடுக்கண் அழியாமை அதிகாரத்தில் வெள்ளத் தனைய இடும்பை, அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (குறள் 622) எனத் தம் கருத்திற்கு வலிமை சேர்க்கிறார். வெள்ளம் பெருகி வருவது போலத் துயர் பெருகி வந்தாலும். அறிவுடையான் தன் உறுதி மிக்க உள்ளத்தில் அதனைத் தடுக்கவும் விலக்கவும், விரட்டவும் கருதிய உடனே துன்பம் தொலைந்து போகும். நீங்கள் உங்களால் முடிந்த வரையில் துன்பம் விளையாமல் தடுத்துக் கொள்ள முயல்வதும், தடுக்க முடியாத துன்பத்தைக் கூடிய மட்டும் பயன்படுத்திக் கொள்வதும் அறிவுதான் என இரசுக்கின் கூறும் முறையைக் காட்டிலும் திருவள்ளுவர் அழுத்தமாகக் கூறுவதை உணர முடிகிறது. ஒரே நேரத்தில் ஒன்றில் முழுக் கவனம் செலுத்தி, அதில் தளர்ச்சி இல்லாமல் உறுதியாக நிற்கும் ஆற்றலே உயர்ந்த அறிவிற்கு அடையாளம் என அறிஞர் செசுட்டர்பீல்டு கூறும் கருத்தையும் ஒப்பிட்டு நோக்கலாம். அரிச்சுவடி புரட்சியைத் தூண்டும் கருவியாக இருக்கிறது. ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது ஒரு கோட்டை கட்டுவதற்கு நிகராகும். ஒவ்வொரு நூல் நிலையமும் முன்னேற்றப் போருக்குத் தேவையான கருவிகள் நிரம்பிய இராணுவச் சாலை ஆகும் எனக் கூறும் இங்கர்லால் அவர்களின் சிந்தனை வள்ளுவரின் சிந்தனையை அடியொற்றியதாகும். தனக்கு ஒன்று உற்றுழி நிற்பது அறிவு என நான்மணிக் கடிகையும் நவில்கிறது. அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை; அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை; அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின்றன மறைஈறுகள் தாமே என்னும் திருமந்திர மொழியையும் ஒப்பு நோக்குக! புல்லறிவாண்மையில் வள்ளுவரே எதிர்மறை நோக்கில், அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது (குறள் 843) எனக் கூறுவதையும் ஒப்பிட்டு நோக்கினால் அறிவின் அளப்பரிய வலிமை புலப்படும். மனத்தில் நல்ல எண்ணங்களும் தோன்றலாம்; தீய எண்ணங் களும் தோன்றலாம். அது போல் மனம் ஒன்றில் உறுதியாகவும் இருக்கலாம்; நிலைப்பாடு இன்றி அமையலாம்; அது போகிற போக்கில் போக விடாது நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்த வேண்டும். தீய எண்ணத்துடன் தீய வழியில் மனம் செல்ல முற்படும் போதே, தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்துவதுடன் அமையாது நல்ல வழியிலேயே செல்லுமாறும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய வைக்கும் தலைவனே அறிவாகும். என்பதை வள்ளுவர். சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. (குறள் 422) என்கிறார். மனத்தை அது போகும் போக்கிலும் நோக்கிலும் போக விடாமல் தடுத்தல் முதற்பணி. அதனைத் தீமையிலிருந்து விலக்கல் இரண்டாவது பணி, நல்ல வழியிலேயே செல்லுமாறு அழைத்துக் கொண்டு போய்ச் சேர்ப்பது மூன்றாவது பணி. இம் மூன்று பணியினையும் ஒரே குறளில் விளக்கும் திறம் அருமையானது. அறிவு காட்டும் இந்நல்வழிச் சென்று கடமை புரிவோர் குற்றமற்றவ ராய்த் துன்பம் இன்றி வாழ்வர். தீயசெயல்களில் இருந்து விலகுவதே உண்மையான அறிவு எனப் பஞ்ச தந்திரமும் கூறுகிறது. அறிவு வடிவு என்று அறியாத என்னை அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே அறிவு வடிவு என்று அறிந்திருந் தேனே என்னும் திருமந்திரம் நான் அறிவின் வடிவம் என்பதை அறியாமலே வாழ்ந்தேன் ஆனால், குருநாதன் திருவருளால் அறிந்தபின் நான் அறிவு வடிவாகவே விளங்க முயல்கின்றேன் எனக் கூறுவதும் நல்ல விளக்கமாகும். அறிவு தன்மானத்தைத் தோற்றுவிக்கிறது. சிந்தனை அதை உறுதிப் படுத்துகிறது. அறிவு மனிதனின் மனத்தைத் தன்பால் இழுத்துத் தீங்கும் கொடுமையும் விளைவதினின்றும் அவனை விலகக் செய்கிறது என்னும் ரூசோவின் பொன்மொழி நினைவு கூறத்தக்கது. காடும் கரையும் மனக்குரங்கு கால்விட்டு ஓட அதன்பிறகே ஓடும் தொழிலால் பயனுளதோ? ஒன்றாய்ப் பலவாய் உயிர்க்குயிராய் ஆடும் கருணைப் பரஞ்சோதி அருளைப் பெறுதற்கு அன்புநிலை தேடும் பருவம் இதுகண்டீர்! சேர வாரும் செகத்தீரே! எனும் தாயமானவரின் பாடலும் நல்ல சான்றாகும். ஒரு கருத்தை மன்னர் சொல்கிறார் ஆகவே அஃது மெய்மை யானது என்றோ அல்லது அதே கருத்தைக் கூறுகிறவர் இரந்துண்டு வாழ்பவர் ஆகவே அஃது பொய்யானது என்றோ சொல்கிறவரின் தகுதியை வைத்து ஒரு முடிவிற்கு வருதல் ஆகாது. செய்தி பெரிதோ சிறிதோ எதுவாக இருந்தாலும் அதனை சொல்கிறவர் எத்தகையர் என அளந்து பார்க்க முற்படாது, சொல்லப்படும் செய்தியைக் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வதும் அறிவுடைமை ஆகாது அல்லது சிந்தித்துப் பார்க்காமல் இகழ்ந்து ஒதுக்கிவிடுவதும் அறிவுடைமை ஆகாது. எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 423) என்கிறார் திருவள்ளுவர். எந்தப் பொருளைப் பற்றி எவரெவர் சொல்ல எவரெவர் கேட்டாலும் கேட்பவர் கூறுபவரைக் கருத்தில் கொள்ளாது கூறப்படும் பொருளில் உள்ள உண்மைப் பொருளை கண்டு உணர்வதே அறிவுடைமை ஆகும். தெய்வத் தன்மை, மனிதத் தன்மை, பேய்த் தன்மை என்னும் முக்குணங்களும் பெரும்பாலர்க்கு மாறி மாறி வருவதால் நற்பொருள் பகைவர் சொல்லும் சொல்லிலும் தீப் பொருள் நண்பர் சொல்லும் சொல்லிலும் சிறந்த பொருள் இழிந்தோர் சொல்லும் சொல்லிலும், இழிந்த பொருள் சிறந்தோர் சொல்லும் சொல்லிலும் சில வேளைகளில் கேட்கும் நிலை ஏற்படலாம் ஆகவே திருவள்ளுவர் சொல்பவர் முக்கியம் அல்லர் சொல்லப்படும் பொருளே முக்கியம். என்பதை உணர்த்துவான் வேண்டியே எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் என்றார் என்பதை ஆழமாக உணர்ந்து பொருள் காண்பவரே அறிவுடையோர் ஆவர். எப்பொருள் எவ்வியல்பு உடையதாகத் தோற்றத்தில் தெரிந்தாலும் அதன் அழகையோ அழகின்மையையோ கண்டு முடிவுக்கு வாராமல் அப்பொருளில் அமைந்த மெய்ம்மையைக் கண்டு உணர்வதே தெளிந்த அறிவாகும் என்னும் கருத்துப் புலப்படுமாறு, மெய்யுணர்தல் அதிகாரத்தில் எப்பொருள் என்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 355) என யாத்துள்ள திருக்குறளையும் நினைவில் கொள்ள வேண்டும்! ஊகம் உளதேல் சிறுவர் உரையும் கொள்க! ஒழிந்தது அயன் உரை செயினும் திரணம் ஒப்ப ஏகவிடுவாய்; ஞானம் எளிது தோன்ற இயம்பும் உவமானமெலாம் ஏகதேசம் ஆக நினைவாய், உருவமற்ற ஞானம் ஆகாரமாம், உவமை கண்ட தென்னும் மூகரனு பவம் இல்லா விகற்பத் தாலே மொழி குதர்க்கம் அறிவழிக்கும் முயல வேண்டா! என வசிட்டர் இராமபிரானுக்குக் கூறிய அறிவுரை போற்றத் தக்கதாகும். அறிவுடையார் எவ்வளவு அரியதான பொருளையும் தாம் எளிதாக விளங்கிக் கொள்வார். ஆகவே அறிவுடையார் எத்தகைய அரிய பொருளையும் கேட்பவர் நிலை, அறிந்து அவர்கள் எளிதாகவும் தெளிவாகவும் விளங்கிக் கொள்ளுமாறு எடுத்துரைப்பர். சொல்லும் பொருளும் பிறர் மதிக்கத்தக்க பொருளாகவும் இருக்கும். அதனை அவர்கள் மனத்தில் பதியும் படியும் சொல்லும் ஆற்றல் உடையவரும் ஆவர். அறிவுடையார் சொல் வல்லாராக விளங்குவதுடன் கூர்த்த செவியராகவும் விளங்குவர். பிறர் சொல்லும் நுண்ணிய பொருளையும் தான் எளிதாக விளங்கிக் கொள்வதுடன் சொல்லுகிறவர்க்கு முறையாகச் சொல்லத் தெரியவில்லை ஆயினும் அவர் கூறும் செய்திகளில் அடங்கி இருக்கும் உண்மைகளை அறிவுடையோர் தம் அறிவுக் கூர்மையால் கண்டு உணர்ந்து கொள்பவராகவும் இருப்பர். அரிய பொருளையும் பிறர் எளிதாய்ப் புரிந்து கொள்ளுமாறு சொல்லத் தெரிதலும் அறிவுடைமையே! பிறர் எவ்வளவு நுட்பமாகச் சொன்னாலும் தான் அதனை நன்கு கசடறப் புரிந்து கொள்வதும் அறிவுடைமையே! செவியையும் நாவையும் முறையோடு பயன்படுத்துபவனே அறிவுடையவன் ஆவான். எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு 424 என்னும் குறள் இதனைத் தெளிவுபடுத்துகிறது. இழிந்தவன் உயர்ந்தது ஒன்றை இயம்பினும் உயர்ந்தோன் வாயில் இழிந்தது ஒன்று உறினும் உள்ள இயல்பறிந்து ஓம்பி நீக்கிப் பொழிந்தெனப் பிறர்தாம் கூறும் புலப்படாப் பொருளும் தெள்ளி வழிந்தெனத் தெளியக் கேட்போர் மனங்கொளப் புகறல் வேண்டும் என விநாயக புராணம் தரும் விளக்கம் முன்னையக் குறளுக்கும் இக்குறளுக்கும் இணைந்த எடுத்துக் காட்டாகும். தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு என்னும் தொடர்க்குத் திருவிளையாடற் புராணம் காட்டும் உத்திர சன்மன் தக்க சான்றாய் அமைகிறான். பின் பாவலர் எல்லாம் பெருவணிகக் குலமணியை அன்பால் அழைத்து ஏகித் தமது அவையத்திடை யிருத்தா நன்பான் மலர் நறுஞ்சாந்து கொண்டு அருச்சித்தனர் நயந்தே முன்பால் இருந்து அருந்தீந் தமிழ் மொழிந்தார் அவை கேளா, நுழைந்தான் பொருள்தொறும் சொற்றொறும் நுண் தீஞ்சுவை உண்டே தழைந்தான் உடல் புலன் ஐந்தினும் தனித்தான் சிரம் பனித்தான் குழைந்தான் விழிவழி வேலையுள் குளித்தான் தனை அளித்தான் விழைந்தான், புரிதவப் பேற்றினை விளைத்தான் களிதிளைத்தான் பல்காசொடு கடலில்படு பவளம் சுடர் தரளம் எல்லாம் நிறுத்து அளப்பானென இயல் வாணிகக் குமரன் சொல்லாழமும் பொருளாழமும் துலை நாவெனத் தூக்க நல்லாறு அறிபுலவோர்களும் நட்டார் இகல் விட்டார் என நவில்கிறது. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர் (குறள் 417) என்னும் கேள்வி அதிகாரக் குறளும் வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன் கோடல் மாட்சியின் மாசற்றார் கோள் (குறள் 646) என்னும் சொல்வன்மைக் குறளும் ஒப்பு நோக்கத் தக்கனவாகும். சொல்லின் செல்வர் இரா.பி.சேது; பேரறிஞர் அண்ணா, நாவலர் பட்டம் பெற்ற வேங்கடசாமி நாட்டார் போன்ற பெருமக்கள் எடுத்துக் காட்டாய் விளங்கினார்கள். கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி (குறள் 115) என்பது நடுவு நிலைமை அதிகாரத்தில் இடம் பெறும் குறள். வறுமையும் வளமையும் உலகில் காணாத புதுமைகள் அல்ல; ஆயினும் அவற்றைக் கருத்தில் கொண்டு மனத்தின் கண் நடுவு நிலைமை தவறாது இருத்தலே சான்றோர்க்கு அழகு என்பது பொருள். உலக நிகழ்வில் நல்லதும் நடக்கும் அல்லதும் நடக்கும். நீரின்று அமையாது உலகு என்பது உண்மையே அதுபோல். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை (குறள் 15) என்பதும் உண்மையே! மழை அளவின்றிப் பொழிந்தும், பொழியாமலும் உலகம் அழிவிற்கும் அல்லலுக்கும் ஆட்படலாம் அதனை எண்ணி எண்ணி வருந்திப் பயனில்லை. பருவத்தே அளவோடு பெய்து உலகம் செழிக்க வழிவகுத் தமையை நினைந்து நினைந்து மகிழ்வதாலும் பயன் இல்லை. அவ்வக்காலங்களில் எப்படி இயங்கிக் கடமை புரிய வேண்டுமோ அவ்வாறு பணி புரிவதே முறைமை. கணியன் பூங்குன்றனார் என்னும் சங்கச் சான்றோர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் இன்னாது என்றலும் இலமே (புறம் 192) எனக் கூறும் வாழ்வியல் மெய்மை உணர்வு சான்றவர்களே அறிவுடையவர் ஆவர். உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு (குறள் 425) என்னும் குறள் அறிவுடையாரின் தெளிந்த நடுவு நிலையினையும் சார்பு நிலையினையும் விளக்கும் அருமைக் குறளாகும். வாழ்வில் அல்லது உலகில் நல்லது நிகழுங்கால் மகிழ்ச்சியில் திளைத்துத் தலைகால் தெரியாமல் தன்னிலை மறந்து கூத்தாடுவதும், அல்லது எதிர்பாரா வகையில் துன்பம் நேர்ந்த போது மனம் ஒடிந்து சோர்ந்து இயக்கமின்றி ஒடுங்கிக் கிடப்பதும் அறிவுடைமை அன்று. இன்பத்தில் மகிழ்தலும் துன்பத்தில் சோர்தலும்இன்றிக் கடனாற்றி வாழ்வதே அறிவுடைமையாகும். அறிவுடையோரே இவ்வுலகை இயக்குவோர். அவர்கள் வாழும் வாழ்வே உயர்ந்த வாழ்வு. ஆகவே உயர்ந்த அறிவுடையோர் மேற்கொண்டு ஒழுகும் நன்னெறியைப் பின்பற்றி வாழ்வதே வாழ்வியல் செப்பமாகும் அதுவே ஒட்பமாகிய ஒளி எனப்படும். அறிவுடையார் தம்மினும் உயர்ந்த அறிவுடையோர் காட்டிய நெறி பற்றி ஒழுகினால் அவர்கள் வாழ்வு இருள் நீங்கிய ஒளி நிறைந்த வாழ்வாய் இலங்கும் என்பதைத் திருவள்ளுவர், இக்குறள் வழி விளக்கி அமைகிறார். அறிஞர் நடுவு நிலையில் நிற்பர்; இரு கட்சிகளிலும் சேராமல், இரண்டையும் தனக்கு நலந்தருமாறு பயன்படுத்திக் கொள்வர் என அறிஞர் பென் கூறும் பொன்மொழி ஒப்பிடத்தக்கது. அறிஞர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்காக உட்கார்ந்து கொண்டு அழுவதில்லை. ஏற்பட்ட தீமைகளை எப்படி மாற்றுவது என்பதையே உவகையுடன் சிந்திப்பார்கள் என்பது சேக்சுப்பியரின் கருத்தாகும். புத்தர் பிரான், இயேசு பெருமான், நபிகள் நாயகம் போன்ற பெருமக்கள் அத்தகைய அறிவும் ஒட்பமும் உடையவர்கள். அண்ணல் காந்தி அடிகள், வ.உ. சிதம்பரனார், தொழிலாளர் தலைவர் சீவா, தமிழ்த் தென்றல் திரு. வி.க. போன்றவர்கள் அந்த வரிசையில் எண்ணத்தக்க அறிவர்களே ஆவர். எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (குறள் 426) என்னும் திருக்குறள் அறிவிற்குத் தரும் இலக்கணம், திருக்குறள் மிகப் பெரிய வாழ்வியல் செம்மையை விளக்கும் உயர்ந்த நூல் என்பதைத் தெள்ளிதின் புலப்படுத்தும் குறட்பாக்களில் இக்குறட்பாவும் ஒன்றாகும். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் (குறள் 140) எனும் ஒழுக்கமுடைமைக் குறள் வழி ஒழுக்கநெறி நின்று வாழும் உயர்ந்த பெருமக்களோடு இணைந்து வாழும் வாழ்வியல் கல்வியைக் கல்லாதவர் மற்றைப் பற்பல துறைக் கல்விகளைக் கற்று உணர்ந்தவராக இருப்பினும் அறிவில்லாதவராகவே கருதப்படுவார் எனத் திட்டப்படுத்தியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகத்தில் பலநிலைப்பட்டவர்கள் வாழ்கின்றனர். அவர்களில் மிக்க கீழ்நிலைப் பட்டவர்களும் உண்டு. இவர்கள் தம்மையும் கெடுத்துக் கொள்வதுடன் உலக வளர்ச்சியையும் பின்னுக்கு இழுப்பவர்கள் பிறர்க்குக் கேடின்றித் தாம் உண்டு தம் பணி உண்டு என வாழும் நடுத்தரத்தினரும் உண்டு. அதற்கு மேலாகத் தான் நல்வாழ்வு வாழ்வதுடன் மற்றவர்களும் நலத்தோடும் வளத்தோடும் வாழ வேண்டும் எனக் கருதி உற்றுழி உதவி வாழும் உயர் வாழ்வினரும் உண்டு. உயர்நிலை வாழ்வினரே உயர்ந்தோர் ஆவர். அவர்களே உலகின் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும், செழிப்பிற்கும் செம்மைக்கும் அடித் தளமாகவும் அச்சாணியாகவும் விளங்குபவர். அத்தகைய உயர்ந்தோர் எப்படி வாழ்கின்றனர் என்பதைக் கண்டுணர்ந்து தெளிவுக்கு வருதல் வேண்டும். அவர்களுடன் பல வழிகளிலும் நெருங்கிய தொடர்பினை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் வாழும் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்வது வாழும் வழி என்பது மட்டுமன்று. அஃதே உண்மையான அறிவுடைமை ஆகும் என்பதை உணர்த்துவான் வேண்டிப் படைத்த அருமைக் குறளே, எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (குறள் 426) என்பதாகும். உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள் அது வாழ்க்கையில் நீ அடையத் தக்க பெரும் பேறு என அறிஞர் பிளாண்டன் வள்ளுவர் கருத்தை வேறு ஒரு முறையில் விளக்குகிறார். வாழ்வின் பொருளைப் புரிந்து கொள்ளும் பட்டறிவு இல்லாத ஏட்டுக் கல்வி பயனற்றது என்னும் சாமுவேல் சாண்சன் கூற்றும் ஒப்பு நோக்கத்தக்கது. உலகப் போக்கை உற்றுக் கவனிக்க வேண்டும். அதில் உயர்ந்த நோக்குடைய போக்கை நாமும் கற்றுக் கொள்ள வேண்டும். உலகத்தில் உயர்ந்தாரை ஒட்டிக் கொள்ளவும் வேண்டும். அவர்களை ஒட்டி வாழவும் வேண்டும். அஃதே அறிவுடைமை யாகும். நுண்ணிய நூல் பல கற்றவர்கள் எல்லாம் அறிவுடையவர்கள் தானே? என ஒருவர் வள்ளுவரை வினவினார். அதற்கு வள்ளுவர் கற்றவர்களை எல்லாம் அறிவுடையவராகக் கருத முடியாது என விடையிறுத்தார். அப்படியானால் தாங்கள் எத்தகையவர்களை அறிவுடைய வர்கள் எனக் கருதுகிறீர்கள்? என அடுத்த வினாவைத் தொடுத்தார். நடந்தவற்றை அறிந்து கொள்வதுடன் நாளை நடக்கப் போவதையும் முன்கூட்டி அறிந்து கொள்பவர். இதனை இப்படிச் செய்தால் இன்ன பயன் கிட்டும் எனத் தெளிவாக அறிந்து கொள்பவர். எதனைத் தன்னால் செய்ய இயலும் எது ஆகும் பணி; எதுஆகாப் பணி என முன் கூட்டியே ஐயமறத் தெளிந்து கொள்பவரே அறிவுடையார் ஆவர். அப்படியானால் அறிவிலார் யார்? என்னும் வினாவிற்குத் தனியே விடை சொல்லத் தேவை இல்லை எனினும் கூறுகிறேன். முன்னே குறித்தவாறு பின் விளைவை முன் உணர்ந்து தம் பணியையும் வாழ்வையும் அமைத்துக் கொள்ளாதவர் அனைவரும் அறிவிலார் என்றே கருத வேண்டும் என்னும் வாழ்வியல் நோக்கில் மலர்ந்த குறட்பாவே, அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவிலார் அஃதுஅறி கல்லா தவர் (குறள் 427) என்பதாகும். நீங்கள் உங்களால் முடிந்த வரையில் துன்பம் விளையாமல் தடுத்துக் கொள்ள முயல்வதும், தடுக்க முடியாத துன்பத்தைக் கூடிய மட்டும் பயன்படுத்திக் கொள்வதும் அறிவால் தான் என்னும் இரசுக்கின் பொன் மொழி செம்பாதி ஒப்புமை உடையதாகும். நிலத்தை உழுது பண்படுத்துதல் இன்றியமையாத பணி; நிலத்திற்கு உரம் இடுதல் அதனினும் இன்றியமையாப் பணி; களை எடுத்தல் அதனினும் இன்றியமையாப் பணி; நீர் விடுதல் அதனினும் இன்றி யமையாப் பணி; இவை எல்லாவற்றையும் விட மிக இன்றியமையாப் பணி காவல் புரிதல் என்பதை உழவுதிகாரத்தில் ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு (குறள் 1038) எனக் காவலுக்கு முதன்மை தருபவர் வள்ளுவர். நோய், துன்ப துயரங்கள் வந்த பின் தக்க முறைகளில் மேலும் பாதிப்பு இல்லாமல் காத்துக் கொள்ளும் காவல் வந்த பின் காக்கும் காவலாகும். துன்பம் நெருங்கும் வேளையில் முயன்று தக்க தடுப்பு வழிகளைக் கைக் கொண்டு காக்கும் காவல் வருங்கால் காக்கும் காவலாகும். தக்க முன்சிந்தனையுடன் நோயோ, பகையோ, தொல்லையோ தம் வாழ்வில் நேரா வகையில் காத்துக் கொள்ளும் காவலே வருமுன் காக்கும் காவலாகும். இம்மூவகைக் காவல்களிலும் வருமுன் காக்கும் காவலே உயர்ந்த காவலாகும். அவ்வாறு காத்துக் கொள்பவர்களே அறிவுடையவர்கள். திருவள்ளுவர் குற்றங் கடிதல் அதிகாரத்தில் அழிவு வருமுன்னரே தடுத்துத் தம்மைக் காத்துக் கொள்ளாதவன் வாழ்வு தீயின் முன் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல் அழிந்து போம் என்னும் கருத்துப்பட வருமுன்னர்க் காவாதான் வாழ்ககை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் (குறள் 435) எனக் கூறுவதையும் மனத்தில் கொள்க! எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் (குறள் 429) என்னும் குறளை ஒப்பிட்டு நோக்குக! எதிர்காலத்தில் வர வாய்ப்பு உள்ள தீமையினையும் முன்னரே ஆய்ந்து அறிந்து, அது அணுகாதபடி தம்மைக் காத்துக் கொள்ளத் தக்க அறிவினை உடையவர்கட்கு அவர்கள் அஞ்சி நடுங்குவதற்கு ஏதுவாக வரக் கூடிய துன்பம் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறோம். வருமுன் காக்க வல்ல அறிஞர் அதிர்ச்சி தரும் துன்பத்திற்கு ஆளாகார். நாணத் தக்கவற்றுக்கு நாணாமை, தேட வேண்டியவற்றைத் தேடாமை, அன்பு பாராட்டத் தக்காரிடத்து அன்பு பாராட்டாமை, போற்றத்தக்க எவற்றையும் போற்றாமை பேதையின் தொழில் என்பதைப் பேதைமை அதிகாரத்தில், நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் (குறள் 833) என உரைக்கிறார். அவர் இவ்வதிகாரத்தில் அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் (குறள்428) என அறிவுடையார் தொழிலை உணர்த்தும் பாங்கை எண்ணிப் பார்த்தல் வேண்டும். அஞ்சாது துணிந்து செயல்பட வேண்டும் என எல்லாரும் உரைப்பர். திருவள்ளுவர் வாழ்வியல் நெறி காட்டுபவர் ஆகவே, அஞ்சவும் வேண்டும், அஞ்சாமையும் வேண்டும் என உரைக்கிறார். பழியும் தீமையும் கேடும் தரும் செயல்களைச் செய்ய அஞ்ச வேண்டும்; புகழும் நன்மையும் வளர்ச்சியும் தரும் செயல்களைச் செய்ய அஞ்சாமை வேண்டும். இரண்டையும் குழப்பிவிடல் ஆகாது. அஞ்ச வேண்டுவற்றுக்கு அஞ்சாமையும் அஞ்ச வேண்டாத வற்றுக்கு அஞ்சுதலும் பேதையர் தொழில் என்க! அஞ்ச வேண்டுவனவற்றுக்கு அஞ்சி வாழ்தலும் அச்சமின்றித் துணிந்து நின்று செயல்பட வேண்டியவற்றில் அஞ்சாது செயல் படுதலும் அறிவுடையார் தொழிலாகும். அஞ்ச வேண்டுவனவற்றுக்கு அஞ்சாது இருத்தல் அறிவின்மை ஆகும். அஞ்ச வேண்டுவனவற்றுக்கு அஞ்சுதல் அறிவுடையார் செயலாகும். போர்த்துக்கீசியர் ஒரு சமயம் ஒரு முகமதியர் கப்பலைக் கைப்பற்றி, அக்கப்பலில் இருந்த திருக்குரானை ஒரு நாயின் கழுத்தில் கட்டி நகரத் தெருவிலே விரட்டி விட்டனர். அந்த அவமதிப்புச் செயலுக்காக கிருத்தவர்களின் மறை நூலான விவிலியத்தை ஒரு கழுதையின் கழுத்திலே கட்டி விட வேண்டும் என்று அக்பரின் அன்னை கூறினாள். அதற்கு அக்பர் அக்கிரமத்துக்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது ஓர் அரசனுக்கு அழகல்ல. எந்த மதத்தைப் பழித்துக் கூறினாலும் அது கடவுளை அவமதிப்பதாகும் என விடை அளித்தார் என்னும் வரலாறு அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்னும் குறள் நெறிக்குச் சான்றாகும். சிலருக்கு வியப்பான அச்சங்கள் ஏற்படுவதுண்டு. 1. ஆப்பிள் பழங்களைப் பார்த்தாலே கை கால்கள் நடுங்கி ஓடி விடுவார் போலந்து நாட்டு மன்னர் லெடிசுலாசு. 2. பாவிரிடி என்னும் இத்தாலியப் பாவலர் உரோசா மலரின் நறுமணம் வீசினால் பயந்து ஓடி விடுவார். 3. எபர்னான் நாட்டின் மன்னர் ஒருவர் கழுதையைக் கண்டால் மயங்கி விழுந்து விடுவார். 4. மூன்றாம் கென்றி என்னும் அரசர் வீராதி வீரர். இவர் பூனையைப் பார்த்து விட்டால் பயத்தால் அலறுவார். இஃது அஞ்சக் கூடாதவற்றுக்கு அஞ்சும் பேதைமை ஆகும்! அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடையர் ஏனும் இலர் (குறள் 430) என்பது அறிவுடைமை அதிகாரத்தின் நிறைவுக் குறள். அறிவுடையவர் தமக்கு அந்த அறிவைத் தவிரச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்க எந்த உடைமையும் இல்லாதவராக இருந்தாலும், வாழ்விற்குத் தேவையான அனைத்து உடைமைகளும் உடையவர் போல் நிறைவாக வாழ்வார். அறிவு இல்லாதவர் எல்லா வளங்களும் உடையவராக இருப்பினும் ஒன்று மற்ற வறியவர் போல் நிறைவின்றி வாழ்நாளை ஓட்டுவர். இல்லாமைகளுள் எல்லாம் இல்லாமையாவது அறிவு இல்லாமையே! மற்றை இல்லாமைகள் உண்டாயினும் அவற்றை இல்லாமையாக உலகம் கருதுவது இல்லை என்னும் கருத்தைப் புல்லறிவாண்மை அதிகாரத்தில், அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு (குறள் 841) நுண்ணுணர்வு இன்மை வறுமை; அஃதுடைமை பண்ணப்பணைத்த பெருஞ்செல்வம் என நாலடியார் நவில்வதும் நல்லதொரு சான்றாகும். அறிவுடை யார் நெஞ்சகல் இடம் ஆவது அறிவுடை யார் நெஞ்சு அருந்தவம் ஆவது அறிவுடை யார் நெஞ்சொரு ஆதிப்பிரானும் அறிவுடை யார் நெஞ்சத்து அங்கு நின்றானே! என்னும் திருமந்திர மொழியும் தக்க சான்றே! அறியாமை இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம்; குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றும் இடம்; அழிவும் வறுமையும் வாழும் தாயகம் என்னும் இங்கர்சாலின் கருத்து அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் என்னும் குறள் நெறியின் விளக்கமே ஆகும். தன்னைத் தான் அழித்துக் கொள்கிறவன் அறிவுடையவன் அல்லன்:- ஏன் எனில், பகைவராலும் அழிக்க முடியாத கோட்டையாக இருப்பது அறிவு. மனம் போன போக்கெல்லாம் அலைகிறவன் அறிஞன் அல்லன்:- ஏனெனில், நன்மை தீமையைப் பகுத்துணர்ந்து தீமையை நீக்கி, மனத்தை நன்மையில் செலுத்துவதே அறிவு. உலகம் பொல்லாதது என்று பழித்துக் கொண்டு அஞ்சி ஒதுங்கி இருப்பவனோ, பொல்லாமையோடு இணைந்து பிழைக்க வழி தேடுபவனோ அறிஞன் அல்லன்:- ஏனெனில், உலகில் உயர்ந்த பெருமக்களை ஒட்டி வாழ்வதே அறிவு. கற்றதைக் கற்றவாறே ஒப்புவிப்பவன் அறிஞன் அல்லன்:- ஏனெனில் கற்றவற்றை உணர்ந்து தெளிந்து, பிறர் மனத்தில் எளிதில் பதியுமாறு எளிமையாக்கிக் கூறுவதே அறிவின் பயன். பிறர் சொல்வனவற்றை எல்லாம் அவ்வாறே கேட்டு நம்புவோன் அறிஞன் அல்லன்:- ஏனெனில், கேட்டவற்றை எல்லாம் ஆராய்ந்து உண்மை காண்பதே அறிவு. காலம் மாறுவதை அறிந்து தக்க மாறுதல்களைச் செய்யாதவன் அறிஞன் அல்லன்:- ஏனெனில் எதிர்கால நிலைமையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துத் தற்காப்புத் தேடிக் கொள்வதே அறிவின் பயன். நான் எதற்கும் அஞ்சேன் என்று கண்மூடி வாழ்ந்து துன்ப வலையில் வீழ்ந்து வருந்துவோன் அறிஞன் அல்லன்:- ஏனெனில், தீமை என்றும் பொல்லாதது என்றும் பழி என்றும் அறிந்து அஞ்சித் தகாதன செய்யாமல் வாழ்வதே அறிவின் பயன். அறிவு அழிவு நேராமல் காக்கும் கருவி அறிவு பகைவரும் உள்நுழைந்து அழிக்கவியலா அரண் அறிவு மனத்தைச் சென்ற இடமெல்லாம் செல்ல விடாது அறிவு தீமையில் சிக்காது தடுக்கும் அறிவு நல்ல வழியில் போகச் செய்யும் எப்பொருள் பற்றியும் யாரும் பேசலாம் எவர் சொல்லும் எச்சொல்லிலும் உண்மை காண்பதே அறிவு அறிவு மலர்தலும் சுருங்குதலும் இல்லாதது அறிவுடையோர் சேர்க்கை ஒளி உண்டாக்கும் உலகம் உயர்ந்தோர் வழி இயங்குகிறது உயர்ந்தோரைத் தழுவி வாழ்வதே அறிவு ஆவது அறிவார் அறிவுடையார் ஆவது கல்லார் அறிவிலாதவர் அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் எதிரதாக் காப்பவரே அறிவுடையார் அதிர வரும் நோய் அறிவுடையார்க்கு வாராது அறிவுடையாரே உடையார் அறிவிலார் ஒன்றும் இல்லாதவரே 44. குற்றங்கடிதல் பொறுப்புக் கூடக் கூடப் பொறுப்பில் அமர்ந்து ஆள்வோரின் தகுதியும் அதற்கு ஏற்புடையதாக அமைய வேண்டும். ஆகவே திருவள்ளுவர் ஊராட்சி முதல் உலக ஆட்சி வரை ஆட்சிபுரிவோர் நற்குணங்கள் பலவற்றையும் கைக்கொண்டு ஒழுகும் தன்மையராய் விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கொள்கையராக விளங்குகிறார். ஆகவே, இறைமாட்சியில் நாடாள்வோனிடம் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் பொருந்தி இருக்க வேண்டும்; தூங்காமையும் கல்வியும் துணிவுடைமையும் வேண்டும்; அறந்தவறாது தீமைகளை விலக்கலும், மறந்தவறாது மானம் காத்தலும் வேண்டும் எனக் கூறியுள்ளார். அதனுடன் இயற்றுதல், ஈட்டல், காத்தல், வகுத்துச் செயல்படும் வல்லாண்மையும் வேண்டும். எனவும், காட்சிக்கு எளிமை வேண்டும். இன்சொல்லே இயம்ப வேண்டும். கொடுத்து உதவும் குணமும் வேண்டும். முறை செய்து காக்கும் நடுவு நிலைமையும் வேண்டும். வன்சொல் பொறுக்கும் பொறுமையும் வேண்டும். எனக் கூறுவதுடன் அமையாது கொடை, அருள் செங்கோன்மையும் குடிகளைப் பேணிக் காக்கும் பரிவும் பக்குவமும் வேண்டும் எனத் தெளிவுபடுத்தியவர் திருவள்ளுவர் என்பதை மறந்து விடல் ஆகாது. குணத்தை ஆள்பவனே நாட்டை ஆளும் நல்ல ஆட்சியாளன் ஆவான். குற்றங்களை ஆளுவோன் நாட்டை ஆளத் தகுதியற்றவன் ஆவான். நாடாள்வோன் குற்றங்கள் தன்னை அணுக விடாது காத்தல் முதல் காவற்கடமை என்பதைத் தெள்ளிதின் உணர்த்தவே! குற்றங்கடிதல் என்னும் அதிகாரத்தைப் படைக்கலானார். அத்துடன் வெஃகாமையில் நடுவின்றிற் நன்பொருள் வெஃகி குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். (குறள்171) எனவும், கூடா ஒழுக்கத்தில் வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின்? (குறள் 272) எனவும், தெரிந்து தெளிதலில் குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு (குறள் 502) எனவும், செங்கோன்மையில் குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில். (குறள் 549) எனவும், மடியின்மையில் குடிமடிந்து குற்றம் பெருகும், மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு (குறள் 604) எனவும், குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும் (குறள் 609) எனவும், நட்பாராய்தலில் குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இன்னும் அறிந்துயாக்க நட்பு (குறள் 793) எனவும், புல்லறிவாண்மையில் அற்றம் மறைத்தலோ புல்லறிவு, தம்வயின் குற்றம் மறையா வழி (குறள் 846) எனவும் பகை மாட்சியில், குணன்இலனாய்க் குற்றம் பலவாயின், மாற்றார்க்கு இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து (குறள் 868) எனவும் கள்ளுண்ணாமையில் நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு (குறள் 924) எனவும் குடிமையில், குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து (குறள் 957) எனவும், பெருமையில், அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான் குற்றமே கூறி விடும் (குறள் 980) எனவும் கூறும் குறட்பாக்களின் வழி பிறர் பொருளைக் கவர்தல், கூடா ஒழுக்கம், சோம்பல், புல்லறிவு, கள்ளுண்ணல், பிறரின் குற்றம் கூறல் ஆகிய குற்றங்களை எடுத்துரைத்து அவற்றை விலக்கி வாழவும் ஆளவும் வழி காட்டும் வள்ளுவர் குடி செயல் வகையில், குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு (குறள் 1025) எனவும் இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு (குறள் 1029) என்னும் குறட்பாக்களின் வழி ஒவ்வொரு மனிதனும் குற்றமற்றவனாய் விளங்குவதுடன் குடி காத்து வாழ வேண்டும். தன்னைச் சார்ந்து நெருங்கி வாழும் அனைவரும் குற்ற மற்றவராய் வாழ வழி காட்டித் துணை புரிவது தலைவர்களின் தலையாய கடமை என்பதையும் வலியுறுத்துகிறார். என்பதையும் தெரிந்து கொண்ட நாம் குற்றங் கடிதல் அதிகாரத்திற்குள் நுழைவோம். செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து (குறள் 431) என்பது முதற்குறள் பெரிய பதவிகளில் அமர்ந்திருப்போர் எல்லாரும் உயர்ந்தோர் மதித்துப் போற்றும் பெருமிதத் தன்மை உடையவராய் அமைந்து விடுவது இல்லை. ஏனெனில் அன்னார் புறவுலகச் சூழலில் உயர்ந்த இடத்தில் இருப்பவராய்க் காட்சி அளிக்கலாம். பதவிக்குரிய மதிப்பு நிலையற்ற தாகும். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (குறள் 503) எனத் தெரிந்து தெளிதலில் வள்ளுவர் கூறும் வழியே உண்மையான மதிப்பீடாகும். பதவியின் தகுதி உயர்வதற்கு ஏற்ப, பதவியில் அமர்வோர் பண்பின் சிறப்பாலும் தகுதியை உயர்த்திக் கொண்டே வரவேண்டும். பண்பியல் தகுதி இல்லாதவர் பெரும் பொறுப்புக்களை ஏற்பது அவர்கட்குப் பழியையும் வீழ்ச்சியையுமே உண்டாக்கும். நாட்டிற்கும் கேட்டையும் அழிவினையுமே உண்டாக்கும். பெரும் பொறுப்பை ஏற்போர் செருக்கு, சினம், சிறுமை ஆகிய மூன்று தீய குணங்கள் இல்லாதவராய் இருக்க வேண்டும் என முதற்கண் வள்ளுவர் வலியுறுத்துகிறார். அவனுக்குத் தலைக் கனம் கூடிவிட்டது. தலை கால் தெரியாமல் அலைகிறான். அவன் மண்டைக் கனம் கொஞ்சம் நஞ்ச மல்ல! அளவிட்டுச் சொல்ல முடியாது. தலைக் கொழுப்பு ஏறிவிட்டது! யாரையும் மதிப்ப தில்லை தன்னைக் காட்டிலும் விஞ்சியவர் உலகத்தில் யாரும் இல்லை என எண்ணி எவர் சொல்லையும் கேட்பதும் இல்லை. எவரையும் ஏறிட்டும் பார்ப்பதும் இல்லை என மக்களின் திறனாய்வு சில ஆட்சியாளர்களைப் பற்றி உலகில் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்விழி தன்மையை வள்ளுவர் செருக்கு என்கிறார். இதுவே இறுமாப்பு. ஆணவம், தற்பெருமை, திமிர், அகம்பாவம், தன்னிலைமை உணராமை, மிகை நினைப்பு என்ற சொற்களால் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் குறிக்கப்படுகிறது. தானே மிகுதியாகக் கற்ற அறிவாளி என்னும் நினைப்பு ஒருவனுக்கு வந்து விட்டால் அது கல்விச் செருக்காகும். அது போல் தான் ஏற்றுள்ள பதவியே வானளவு அதிகாரம் பெற்ற பதவி என்ற எண்ணம் வந்து விட்டால் அது பதவிச் செருக்காகும். தன்னை விட அழகானவர் யாரும் இல்லை என்னும் எண்ணமே அழகுச் செருக்கு ஆகும். தன்னை வெல்ல உலகில் எந்த வீரனாலும் இயலாது என்ற எண்ணம் உடல் செருக்கு ஆகும். தன்னை விடச் செல்வத்தால் உயர்ந்தவன் எவனும் இல்லை என எண்ணுவது பணச் செருக்காகும். இப்படி எது எதில் தன் உண்மை நிலையை உணராது மிகப் பெரிதாய் எண்ணிக் கொள்கிறார்களோ அவைகள் எல்லாம் செருக்கின் வகைகள் ஆகும். இரசுக்கின் எல்லா விதமான தவறுகளுக்கும் அடிப்படையான காரணம் செருக்கே எனக் கூறியுள்ள கருத்தும் ஏற்புடையதே. காசுலிட்உலகில் வெறுக்கத் தக்கவற்றில் மிகவும் இழிவானது செருக்கே எனக் கூறியுள்ளதும் உண்மை மொழியே. கவிவேமன்னா செருக்குடையவர் ஒருவரைக் கண்ட போதிலும் காணாதவர் போலவும், பிறர் கூறும் சொற்களைக் கேட்ட போதிலும் கேளாதவர் போலவும் இருப்பார்கள். இவர்களைக் கண் பெற்ற குருடர் என்றும் காதுள்ள செவிடர் என்றும் முன்னோர் கூறியது உண்மையே என்னும மொழி பட்டறிவின் வெளிப்பாடே யாகும். திருவள்ளுவரோ செருக்கு இல்லாப் பெருக்கம் வேண்டும் என ஆணையிடுகிறார். செருக்குடையார் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணரார். ஆகவே மேலோரின் துணையையும் நாடார். தக்க துணையையும் தேடார்; கீழ்நிலை மாந்தரை உயர்த்தவும் எண்ணார்; உரிமையும் வழங்கார். போலிப் பாராட்டிற்கு மயங்கித் தன்னிலையில் தாழ்வார். யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் (குறள் 346) எனத் துறவு அதிகாரத்தில் காட்டிய உயர்ந்த வழி என்றும் மனத்தகத்தில் பொருந்தி அமையட்டும். அடக்கமுடைமையில் எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும் செல்வர்கே செல்வம் தகைத்து (குறள் 125) எனக் கூறும் குறள் செருக்கின்றி வாழ வழி காட்டும் குறள். பெருக்கத்து வேண்டும் பணிவு 963 என்னும் முச்சீரும் மானம் என்னும் மூன்றெழுத்தின் முழுமை உணர்த்தும் குறளடி அல்லவா? பெருமை பெருமிதம் இன்மை 979 என்பது தானே வள்ளுவர் உணர்த்தும் உண்மையான பெருமை ஆகவே பெருக்கம் உடையார் செருக்கு இல்லாராக இருந்தால் தான் பெருமிதம் அடைவார். அடுத்து, ஆள்வோர் தம்மை அண்டவிடாது காத்துக்கொள்ள வேண்டியது சினம் என மொழிகிறார். சினம் கொள்ளல் கூடாது என்பதைத் தெரிவிக்க வெகுளாமை எனத் தனி அதிகாரம் படைத்தமை ஒன்றே அதன் கேட்டினைத் தெள்ளிதின் விளக்கும். தன்னைக் கொண்ட வரை அழிக்கும் சினம் என்னும் நெருப்பு. அவருடன் அமையாமல், அவர்க்குத் தக்க காவலாய் அமைந்து நெருங்கி வாழும் சுற்றத்தினரையும் அழிக்கும். தீயவை எவையோ அவை எல்லாம் சினத்தால் உண்டாகும். சினமானது ஒருவன் சிரிப்பையும், மகிழ்வையும் அழிக்கும். சினத்தைக் காட்டிலும் கொடிய உட்பகையானவை எவையும் இல்லை. சினம் தன்னையே கொல்லும் இறந்தார் இறந்தார் அனையர் என வள்ளுவர் மொழிந்த வாழ்வியல் மொழிகளை நன்கு உணர்ந்து தன்னைத் தான் காக்கின் சினம் காக்க வேண்டும் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை என்ற நிலையினை ஆள்வோர் அடைய வேண்டும். ஆகவே, பெருக்கம் உடையார் சினம் இல்லாராய் இலங்க வேண்டும் என வலியுறுத்தலானார். சிறுமை இல்லார் பெருக்கம் பெருமிதம் நீர்த்து என்பதே வள்ளுவர் கணிப்புரை. மலை போன்ற உயர்ந்தவரும் மானத்தில் இழிந்த செயல்களை ஒரு குன்றிமணி அளவினதாகச் செய்ய நேர்த்தாலும் இழிந்தவராகி விடுவார் என மானத்தில் சிந்திக்கத் தூண்டுபவர் திருவள்ளுவர். சிறுமை பெருமைக்கு முரணானது. வள்ளுவர் வாய்மொழிப் படி பெருமை தாராதன எவை? அல்லது எவை எல்லாம் சிறுமையாகக் கருதப்படுவன என எண்ணிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். தீயொழுக்கம், கூடா ஒழுக்கம், பிறனில் விழைதல், பெண் ஏவல் செய்தொழுகல், வரைவின் மகளிர் உறவு, சிற்றினம் சேர்தல் தீ நட்பு, கூடா நட்பு, பெரியாரைப் பேணாது ஒழுகல், பேதைமை, கொலை செய்தல், கொடுங்கோன்மை, கண்ணோட்டம் இன்மை, நெடு நீர், மறவி, மடி, துயில், நாணாமை, நாடாமை, நாரின்மை, போதைப் பொருள் வேட்கை, சூது ஆடுதல், தன் குற்றம் காணாது பிறர் குற்றம் கண்டு உரைத்தல் போல்வன வெல்லாம் சிறுமை எனக் கருதப்படும் இழிதன்மைகள் ஆகும். இவற்றுள் ஒரே ஓர் இழிதன்மை, பெரும் பொறுப்பில் இருப்பவரிடம் பொருந்தி இருக்குமானாலும் அவரை இழிந்த நிலைக்குக் கொண்டு போய்விடும். புகழ்பெற இயலாது. பழிக்கே ஆளாவர். செருக்கும் சினமும் சிறுமையும் உடைமையால் பழிப்புக்கு ஆளான வர்கள்தான் பாரதக் கதையில் வரும் துரியோதனனும் இராமாயணத்தில் இடம் பெற்றள்ள இராவணனும் ஆவர். செருக்கும் சினமும் சிறுமையும் இல்லாப் பெருக்கத்தால் பெருமிதம் எய்திய சிறப்பு பாரதத்துத் தருமனுக்கும் இராமாயணத்து இராமனுக்கும் உண்டு. செருக்கும் சினமும் சிறுமையும் உற்று பெரும் பொறுப்பில் இருந்தும் பேரிழிவுக்கு ஆட்பட்டோர் அரசியல் உலகில் கிட்லரும் முசோலினியும் ஆவர். செருக்கும் சினமும் சிறுமையும் இல்லாது மேலான பதவியில் பெருமிதம் எய்திய சிறப்பு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனுக்கு உண்டு. இறுமாப்பு, சீற்றம், இழிதன்மை ஆய தீய இயல்பு இல்லாதவர் மேம்பாடு உலகத்து உயர்ந்த பெருமக்களால் பாராட்டி மதிக்கப்படும் பெருமிதத் தன்மை உடையதாகும். செருக்கும் சினமும் சிறுமையும் உள்ளார் பெருக்கம் பெரும் பழிக்கு உரியது ஆகும் என்பது சொல்லாமலே புலப்படும். பெருக்கம் பெருமிதமாய் விளங்கச் செருக்கும் சினமும் சிறுமையும் இல்லாதவராய் வாழ்க! ஆள்க! புகழ் பெறுக! செருக்கு, சினம், சிறுமை ஆகிய மூன்றும் இல்லார் பெருக்கத்தின் பெருமையை முதற் கண் எடுத்து மொழிந்த வள்ளுவர். அடுத்த குறளில் தலைமைப் பொறுப்பேற்று ஆட்சியில் அமர்ந்திருப்போரைக் குற்றவாளி ஆக்கும் மூன்று தீய தன்மைகளைக் கூறலானார். இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு (குறள் 432) என்பதே அக்குறள். பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருள் அல்லது இல்லை பொருள் (குறள் 751) ஆகவே செய்க பொருளை 759 ஒண்பொருள் காழ்ப்ப இயற்றுக 760 என வேண்டப்படும் அப்பொருள் திறனறிந்து தீதின்றி வந்த பொருளாக் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதே வள்ளுவர் நெறி. அதனுடன் ஒப்புரவறிதலில் தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 212) இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர். (குறள் 218) எனக் கூறியுள்ளதையும் நினைவில் கொள்ளுதல் வேண்டும். முறையான அறநெறி நின்று பொருளைத் தேட வேண்டும். அதனைத் தானே துய்க்க வேண்டும் என எண்ணாது உலகவர் பசியின்றி வாழ உதவி புரிதலைத் தலையாய கடமையாகக் கொள்ளுதல் வேண்டும் என்பதே குறள்நெறி. தனக்கு உரிமையில்லாத பொருளை அடைய விரும்புதலும் தன்னிடம் உள்ள பொருளைப் பிறர் பயன்பாட்டிற்கு வழங்காமையுமாகிய தீய இயல்பைத் திருவள்ளுவர் இவறல் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். இவறல் - பேராசையும் கருமித் தனமும் ஆகும். இவ்விவறல் இறைக்கு (ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கட்கு) ஏதம் - குற்றமாகும். இவறல் ஒரு குற்றம். மானம் உயிரினும் மேலானது; உயிரை இழப்பினும் மானம் போற்றி வாழ வேண்டும் என வலியுறுத்தும் திருவள்ளுவர் குடிசெயல்வகை அதிகாரத்தில் குடியை மேம்படச் செய்ய முயல்வார் நேரம் காலம் பார்த்துக் கொண்டு சோம்பலுக்கு ஆளாகி உழைக்கத் தவறுதல் கூடாது. அன்னார் வெறும் மானத்தை மட்டும் கருதிக் கொண்டு வாளா இருப்பின் அன்னார் குடி கெடும் என விழிப்புணர்த்தி உள்ளார். அது போல் மானம் போற்றி வாழ்வதுடன்; அம்மானம் உயர்ந்த பண்புடனும் பெருந்தன்மையுடனும் பொருந்தியதாக இருப்பது முக்கியம். உணர்ச்சி வயப்பட்டு தன் மதிப்பினை மட்டும் கருதிச் செயல்படுவது ஆகாது. ஆட்சிப் பொறுப்பில் இருந்து செயல்படுபவர் பெருந்தன்மைக்குப் பொருந்தி வாரா வகையில் மானம் கருதிச் செயல் புரிவது ஒரு குற்றமாகும் என்பதை மாண்பிறந்த மானமும்... ஏதம் இறைக்கு என்கிறார். பல்வேறு முக்கிய பொறுப்புகளைத் தலைமேல் தாங்கிச் செயல் புரியும் ஆட்சியாளரின் பெரும் பொழுது துன்பத்திலும் கவலையிலும் நெருக்கடியிலும் பரபரப்பிலும் போரிலும் கழிவது இயற்கை. ஆகவே அவர்கள் அவற்றுளிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை விருந்து, கலை இலக்கியங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் அவ்வாறு மகிழ்ச்சியோடு இருப்பதற்குத் தேர்வு செய்யும் நிகழ்ச்சிகள் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் நன்மை தரும் நிகழ்ச்சிகளாய் அமைந்து மகிழ்ச்சி ஊட்டுவதாய் விளங்க வேண்டும். இல்லையேல் குற்றம் ஆகிவிடும் என்பதால் மாணா உவகையும் ஏதம் இறைக்கு என்கிறார். பேராசையால் உரிமை இல்லாப் பொருள்களைக் கவர எண்ணுதலும் எவர்க்கும் கொடுத்து உதவாக் கருமித்தனமும் பெருமை தாராத மான உணர்வும் பெருமையும் நன்மையும் தாராத போலி மகிழ்வும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்போர் விலக்க வேண்டிய குற்றங்கள் ஆகும். என்பதை உணர்த்துவான் வேண்டிப் படைத்த குறட்பாவே, இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு (குறள் 432) என்பதாகும். இவறலுக்கு இலக்கியச் சான்று : கலித்தொகை ஈதலிற் குறைகாட்டாது அறன் அறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல முதுமொழிக் காஞ்சி அறத்தான்றின் ஈயாதது ஈகை யன்று கம்பராமாயணம் மாவலி வெள்ளியை நோக்கி, உள்தெறும் வெம்பகை யாவது உலோபம் ஒன்றீகலான் பொருள் காத்தவன் புகழ்எனத் தேயும் கற்பினாள் (சூர்ப்பனகை) தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் (குறள் 433) வசையொழிய வாழ்வாரே வாழ்வார் பிறர் பழியும் தம்பழியும் நாணுவார், நாணுக்கு உறைபதி என்னும் உலகு என்னும் குறள் மணிகட்கு இலக்கணமாய் அமைந்து, கடனாற்றி வாழ்ந்து வரும் புகழ்த் தோன்றல்கள். தமக்குப் புகழும் நாட்டிற்கு நன்மையும் தாராத எந்தச் செயலையும் செய்ய மாட்டார்கள். சூழ்நிலை காரணமாக ஆராய்ந்து பார்க்க நேரம் இல்லா நெருக்கடியில் அறியாமலோ, புரியாமலோ, தெரியாமலோ குற்றம் புரிய நேர்ந்து விடுமாயின், அமைதிக் காலத்தில் தாம் செய்த செயலில் ஏற்பட்ட பிழையை உணர்வர். உணர்ந்து வருந்துவர் தம் செயலுக்குத் தாமே நாணுவர். தாம் செய்த குற்றத்தால் பிறர்க்குப் பாதகமோ இழப்போ ஏற்பட்டு இருக்குமாயின் தாமே முன்வந்து தயங்காது பொறுத்துக் கொள்ள வேண்டுவதுடன் அதற்குரிய தண்டணையைத் தாம் ஏற்றுக்கொள்ளுபவர் எவரோ அவரே பழிக்கு நாணுபவர் ஆவார். பழிக்கு நாணும் இயல்புடையார் சின்னஞ்சிறிய குற்றத்தையும் பேரளவு குற்றம் செய்ததாகக் கருதி வருந்துவர். என்பதை உவமை வழி விளக்க வேண்டும் எனக் கருதும் வள்ளுவர் மிகச் சிறிய தவசமாகிய தினை அரிசியையும் உயர்ந்தோங்கி வளர்ந்து குலை குலையாய்ப் பருத்து உருண்ட பழங்களை வழங்கும் பனை மரத்தையும் காட்சிப்பொருளாக்கி விளக்கும் நுட்பம் அருமையினும் அருமை. செய்ந் நன்றி அறிதலிலும் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் (குறள் 104) எனத் தினையையும் பனையையும் உவமையாய்க் காட்டியுள்ளதும் மனக் காட்சியில் நிழலாடுகிறது. செய்ந்நன்றி அறிதலின் பயனைத் தெரிந்தவர் தமக்கு ஒருவர் தினையளவாம் சிறிய நன்மையைச் செய்தாலும் அதனைத் தினை அளவு நன்மை தானே என்று எளிமையாய் எடை போடாது மனவளத்துடன் பனையளவாம் பெரிய நன்மை யாகக்கருதி நன்றி மறவார். அங்ஙனமே இங்கு தமக்கு பழி நேர்ந்து விடக்கூடாது எனக் கருதிக் கருத்துடன் செயல்புரியும் புகழாளர். நாணுடைமையை அணிகலமாய்க் கொண்ட பண்பாளர். தாம் செய்யும் செயல்களில் ஏதேனும் தினையளவு சிறு குற்றம் ஏற்பட்டு விடுமாயின், அதனைச் சிறு குற்றம் தானே; எனத் தமக்குத் தாமே அமைதி தேடிக் கொள்ளாது, மறைக்க முயலாது, அதனைப் பனையளவு பெருங்குற்றமாகக் கருதி வருந்தி நாணுவர். பழிக்கு நாணுவோர் பதவிகளில் இருக்கும் நாடு நன்னாடாகும். பூட்டிய வீட்டின் கதவை இரவில் கையால் தட்டியது குற்றமாகக் கருதப்பட்டதால் தட்டிய தன்கையைத் தானே துண்டித்துக் கொண்ட பொற்கைப் பாண்டியன் பழிக்கு நாணியவன். மைந்தன் ஓட்டிச் சென்ற தேரில் வீழ்ந்து மாண்டது பசுவின் கன்று. அதன் சாவிற்குக் காரணமானவன் தன் மைந்தன் என்பதை அறிந்து பழி நேர்ந்து விட்டதற்கு நாணி. தன் மைந்தனை அதே தேர்க்காலில் இட்டுக் கொன்று பழி துடைத்தவன் மனுநீதிச் சோழன். ஆராயாமல் கோவலனைச் சிலம்பு திருடிய கள்வன் எனக் கருதிக் கொலைத் தண்டனை விதித்த குற்றத்திற்கு நாணி மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் எனக் கூறி உயிர் துறந்த பாண்டியன் நெடுஞ்செழியன் போன்றோர் இக் குறளுக்கு எடுத்துக் காட்டாய் இலங்கியவர்கள் ஆவர். பனையளவு பெருங்குற்றங்களை அடுக்கடுக்காய்ச் செய்து விட்டு அதனைத் தினை அளவு தானே! உலகில் குற்றம் செய்யாதவர் யார்? எனக் கூறுபவர்களும் குற்றமே செய்யவில்லை எனக் கடைசி வரை சாதிப்பவர் களும், குற்றம் சாட்டியர்களையும் நீதி வழங்கியவர் களையும் தீர்த்துக் கட்ட எண்ணுபவர்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் நாடு என்னாகும் எனவும் சிந்திக்கத் தூண்டுகிறார் வள்ளுவர். அடக்க முடைமையில் எப்பொருளினும் உயர்ந்த பொருளாகக் கருதி ஒவ்வொருவரும் அடக்கத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவ்வடக்கத்தைக் காட்டிலும் உயிர்க்கு மிகுதியான நன்மையைத் தருவது வேறு ஒன்றும் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார். அத்துடன் காக்க வேண்டிய வற்றுள் எவற்றைக் காக்கத் தவறினாலும் நாவு ஒன்றையேனும் தவறாமல் காத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு காக்கத் தவறினால் அவர்தம் சொல்லில் குற்றம் உண்டாக்கப்பட்டுத் துன்புறுவர் எனக் கருதுவதை காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு (குறள் 122) யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு (குறள் 127) எனும் குறட்பாக்கள் வழி அறிகிறோம். ஒழுக்க முடைமையில் பரிந் தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை (குறள் 132) எனும் குறள் வழி காப்பதற்குக் கடினமானது என்றாலும் ஒழுக்கத்தை வருந்தியும் காத்தல் வேண்டும் என வேண்டுகிறார். ஏனெனில் ஒழுக்கமே நற்றுணையாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார். கள்ளாமை அதிகாரத்தில் எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு (குறள் 281) என வலியுறுத்தியுள்ளார். வெகுளாமை அதிகாரத்தில் தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் (குறள் 305) எனச் சினத்தைக் காத்துக் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார். உட்பகை அதிகாரத்தில் உட்பகை அஞ்சித்தற் காக்க; உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் (குறள் 882) என அறிவுறுத்தியுள்ளார். இவற்றின் மூலம் மனம் போன போக்கில் செயல்படாது ஐம்பொறி களையும் கட்டுக்குள் வைத்துக் காக்கத் தவறினால் உயிர்க்கு அழிவு நேரும். ஐம்பொறிகளில் காக்க வேண்டிய முதன்மையான பொறி நாக்கு ஆகும். நாவைக் காக்கத் தவறினால் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புற நேரும். ஒழுக்கத்தைக் காக்கத் தவறினால் இழுக்கு உண்டாகும். பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பாதவாறு மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். தவறினால் இகழ்ச்சிக்கு ஆளாக நேரும். எக்காரணம் கொண்டும் பிறர் மீது சினம் கொள்ளாதவாறு தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும். சினம் ஒரு தற் கொல்லி அஃது கொண்டவனையே அழித்து விடும். எனத் தனித் தனியே கூறிய காவல்களை எல்லாம் ஒருங்கே தொகுத்துக் கூறும் குறளே குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை (குறள் 434) என்பதாகும். குற்றமே பகை : ஆம் நாம் செய்யும் குற்றமே நமக்குப் பகை; அதுவும் எப்படிப்பட்ட பகை முழு அழிவை உண்டாக்கும் பகை; அதனால் தான் அற்றம் தரூஉம் பகை என்றார். அப்படியானால் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? நாம் செய்யும் செயல்களில் அணுவளவு குற்றமும் உண்டகாதவாறு கருத்துடன் காத்துக் கொள்ள வேண்டும். எதைக் காப்பது போல் காக்க வேண்டும்? நம்மிடம் உள்ள மதிப்பு மிக்க பொருள்களை எப்படி வலிய பெட்டியில் வைத்துப் பூட்டி, வீட்டில் உள்ள அறைகளில் எது மிகப் பாதுகாப்பான அறையோ அவ்வறையில் வைத்து உறவினர்கள் நண்பர்கள் கண்களில் கூடப் படாதவாறு வைத்து விழிப்புடன் காத்து வருவது போல் நம்மிடத்து எத்தகைய குற்றமும் எப்பொழுதும் எள்ளளவும் உண்டாகாதவாறு காத்துக் கொள்வது தலையாய கடமை என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகிறார். அழிவு தரும் பகை குற்றம் ; ஆகவே பொருளைக் களவு போய் விடாமல் காப்பது போல் தம்மிடம் குற்றம் உண்டாகாதவாறு காத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் செயற்பாடுகளில் குற்றம் உண்டாகாமல் முதலிலேயே காத்துக் கொள்ள வேண்டும் குற்றம் செய்து விட்டு அதன் பயனைத் துய்க்காமல் தப்பி விடுவதற்கு எத்தனை வகையான முயற்சி களைச் சூழ்ச்சிகளைச் செய்தாலும் செல்வாக்கைப் பயன்படுத்தினாலும், படைப் பெருக்கைப் பயன்படுத்தினாலும் சட்டத்திலிருந்து வேண்டு மானால் தப்பிப் பிழைக்கலாம். ஆனால் அறம் தரும் வினைக் குரிய பயனிலிருந்து தப்பிப் பிழைத்தல் அரிதினும் அரிது என்பதைக் குற்றம் புரிய எண்ணுவோர் அறிந்து தம்மைத் திருத்திக் கொள்ளட்டும் எனக் கருதியே வள்ளுவர் குற்றம் நேர்வதற்கு முன்பே அதை அறிந்து தடுக்கத் தவறியவன் எவ்வளவு பெரிய ஆட்சியாளனாக இருப்பினும் அவன் வாழ்வு அழிந்து ஒழியும் என்கிறார். அழிவு எப்படிப்பட்டதாக இருக்கும்? கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மேல் போட்ட வைக்கோற் கட்டு எப்படிக் கண்ணை மூடி விழிக்கும் முன் எரிந்து சாம்பலாய்ப் போய் விடுமோ அப்படி விரைந்து உருத் தெரியாமல் அழிந்து போய் விடும் என்னும் கருத்தைப் புலப்படுத்தும் குறட் பாவே, வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் (குறள் 435) வரும் முன் காக்கும காவலே அறிவார்ந்த காவலாகும்! பயனுடைய பொறுப்பான காவலாகும். மேல்வரவு அறியாதோன் தற்காத்தல் போல் என முது மொழிக் காஞ்சி கூறுவதையும் ஒப்பு நோக்குக. வள்ளுவர் பொச்சாவாமை அதிகாரத்தில், முன்னுறக் காவாது இழுக்கியான், தன்பிழை பின்னூறு இரங்கி விடும் (குறள் 535) எனக் கூறுவதும் ஒப்பு நோக்கத் தக்கதே. தீமை அல்லது குற்றம் வருவதற்கு முன்னரே காத்துக் கொள்ளத் தவறி மறந்தவன். தீமை வந்த பின்னே தன் குற்றத்திற்குப் பலமடங்கு வருந்துமாறு ஆகி விடும். ஆகவே குற்றத்திற்கு ஆளாகாது காத்துக் கொள்க! கம்பராமாயணத்தில் வானரத் தலைவர்கள் அனைவரும் அச்சம் அகன்று அங்கதனுடன் திரண்டு வருவதனைக் கண்ட இராம பிரான் இலக்குவனை நோக்கி, .......... அரக்கர்தான் அவுணரேதான் எத்தனை உளர்என் றாலும் யான்சிலை எடுத்த போது தொத்துறு கனலில் வீழ்ந்த பஞ்செனத் தொலையும் தன்மை எனக் கூறுவதில் எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் என்னும் வள்ளுவ உவமை கம்பன் கவியில் புதுத் தோற்றம் கொண்டு விளங்குவதைக் காண முடிகிறது. வருமுன் காத்து வாழ்! நாட்டு மக்களில் குற்றம் புரிந்து வாழ்வோர் யார் யார் எனப் புலனாய்ந்து உரைக்கும் புலனாய்வுத் துறையினரும்; குற்றங்களைப் பதிவு செய்து குற்றவாளிகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தும் காவல் துறையினரும்; குற்றங்களைத் தீர விசாரித்துத் தீர்ப்பும் தண்டனையும் வழங்கும் நீதிமன்றத்தினரும், எல்லா நிலைகளிலும் மக்களைக் காக்கும் தலையான பொறுப்பை மேற்கொண்டுள்ள ஆட்சித் துறையினரும் குற்றமற்றவர்களாய்க் கட்டாயம் இருக்க வேண்டும். தன் குற்றத்தை நீக்கிய தலைமையினரே தம் கீழ் வாழும் குடி மக்களின் குற்றங்களைக் கண்டு பிடித்தற்கும், அதன் தீமையையும் இழிவையும் எடுத்து மொழிவதற்கும், திருத்தி நல்வழிப்படுத்து வதற்கும், குற்றங்கள் செய்யாது தடுப்பதற்கும், செய்தவர்களை விசாரிப்பதற்கும், குற்றங்கட்கு ஏற்பத் தண்டனை அளிப்பதற்கும் தகுதி உடையவர்கள் ஆவர். ஒரு தாய் தன் மைந்தனையும் அழைத்துக் கொண்டு புத்தரிடம் சென்றாள். பெருமானே என் மகன் சர்க்கரை அதிகமாக உண்கிறான் அவனுக்கு நீங்கள் அறிவுரை கூறிச் சர்க்கரை உண்பதைத் தடுக்க வேண்டும் என வேண்டினாள். அதனை அமைதியாகக் கேட்ட புத்தர் பதினைந்து நாள் கழித்து வருமாறு வேண்டினார். அவர் கூறியவாறே பதினைந்து நாள் கடந்த பின் புத்தரை வந்து கண்டாள். புத்தர் பையனை அழைத்து தம்பி தாய் சொல்லைக் கேட்டு நட. இனிமேல் சர்க்கரை உண்ணக் கூடாது என அறிவுரை கூறி அனுப்ப முற்பட்டார். அத்தாய் புத்தரிடம் இதனை அன்றே சொல்லி யிருக்கலாம் அல்லவா? ஏன் பதினைந்து நாள் கழித்து வரச் சொன்னீர்கள், என வினவினார். அதற்குப் புத்தர் அன்று நீங்கள் வரும் போதுநானே சர்க்கரை உண்டு கொண்டிருந்தேன். அதை முற்றிலும் விடப் பதினைந்து நாள் தேவைப்படும் எனக் கருதித்தான் நாள் கழித்துவரச் சொன்னேன் இப்பொழுது நான் சர்க்கரை உண்பதை நீக்கி விட்டேன். இனி உண்ணேன். இனிமேல் பிறர் சர்க்கரை உண்பது நன்றன்று என அறிவுரை கூறுவதற்குத் தகுதி வந்து விட்டது. அதனால் இன்று கூறுகிறேன் எனக் கூறினார் என்பது புத்தர் வரலாற்று நிகழ்ச்சிகளில் ஒன்று. புறங் கூறாமை அதிகாரத்தில் ஏதிலார் குற்றம் போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு? (குறள் 190) என மொழிந்த குறள் வழியாகப் பிறர் குற்றத்தைக் காண்பது போல் ஒவ்வொருவரும் தம் குற்றத்தைக் கண்டுணர முற்பட்டால் நிலை பெற்ற மனித உயிர்க்கு எத்தீமையும் உண்டாகாது என உணர்த்தியுள்ளார். அக்கருத்தோட்டத்தில் மொழிந்த பாடலே, தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என் குற்றம் ஆகும் இறைக்கு (குறள் 436) என்பதாகும். நாட்டு மக்கள் செய்யும் குற்றங்களைக் கண்டு பிடித்துப் போக்க முற்படும் பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் தம்மிடம் அத்தகைய குற்றங்கள் ஏதேனும் இருப்பின் அதனை முதற்கண் நீக்கிவிட வேண்டும். முன்பு தன் குற்றத்தைக் கண்டு நீக்கிவிட்டுப் பிறர் குற்றத்தைக் காண முற்படும் ஆட்சியாளர்கட்கு எதிர் காலத்தில் என்ன குற்றமும் உண்டாகாது. குற்றமற்ற ஆட்சியாளர் குற்றம் களைய முற்பட்டால் நற்பயன் விரைந்துகிட்டும். தலைவன் காட்டிய வழியில் மக்கள் நடப்பர். நாடு குற்றமற்ற நாடாகும். அறிவுரை கூறுவதை விட முன்மாதிரியாக நடந்து காட்டுவதே நலந்தரும் முறையாகும். பொருளைத் தீய வழிகளில் தேடவும் கூடாது. தேடிய பொருளைப் பதுக்கி வைக்கவும் கூடாது; தீய செயல் கட்குச் செலவு செய்தலும் கூடாது. நல்ல தொழில்களில் ஈடுபட்டு, எவர்க்கும் தீங்கின்றி, முறையோடு முயன்று, உழைத்துப் பொருளைத் தேட வேண்டும். அதனைத் தக்கவாறு பாதுகாக்கவும் வேண்டும். தன் வாழ்க்கைத் தேவை கட்கு ஆடம்பரம் இன்றி நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வறியவர்கட்கு மனமுவந்து கொடுத்து உதவ வேண்டும். பொது நலம் தரும் பணிகட்குத் தாராளமாக வழங்க வேண்டும். மனநிறைவு தரும் நற்பணிகட்குச் செலவிடுதல் வேண்டும். நெறியல்லா நெறியில் பொருளை ஈட்டி கோடி கோடியாகத் தொகுத்து வைத்துக் கொண்டு அப்பொருளைக் கொண்டு செய்ய வேண்டிய நற்பணி எதுவும் செய்யாது கருமியாக வாழ்பவன் செல்வம் நிலைபெறுதல் இன்றி அழிந்து போகும். என்பதை செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும் (குறள் 437) எனும் குறள் வழி விளக்கிறார். வள்ளுவர் பொருள் செயல் வகையில் அருட் பண்புக்கும் அன்புப் பண்புக்கும் பொருந்தி வாராத பொருளாக்க முறைகளை மேற்கொள்ளாமல் அப்பால் போக விட்டு விட வேண்டும் என்னும் பொருள் ஈட்டும் நெறியை அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் (குறள் 755) என்னும் குறள் வழி தெளிவுபடுத்தினார். நன்றியில் செல்வம் என்னும் அதிகாரத்தில் பிறர்க்கும் வழங்காது தாமும் துய்க்காது கோடி கோடியாய் வைத்திருந்தாலும் அவை இருப்பதாக மதிக்கத் தக்கதன்று எனும் கருத்தை கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல் (குறள் 1005) எனும் குறள் வழி அறிய வைத்துள்ளார். செயற்பால செய்யும் உலகவாம் பேரறிவாளன் செல்வம் ஒன்றா உலகத்து உயர்ந்த புகழை ஈட்டித் தந்து, பொன்றாது என்றும் நிலைபெறும். என இக்குறளுக்கு உடன் பாட்டு நெறியில் பொருள் காணலாம். இதோ வள்ளுவர் வாய்மொழி. செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும் (குறள் 437) செய்ய வேண்டிய நற்பணிக்குப் பயன்படுத்தாத கருமியின் செல்வத்தை எவ்வளவு முயன்று காத்தாலும் காக்க முடியாது; அழிந்து போவது உறுதி. உண்ணான் ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான் துன்னரும் கேளிர்துயர் களையான் - கொன்னே வழங்கான் பொருள் காத்து இருப்பனேல் அஆ இழந்தான் என்று எள்ளப்படும் என்னும் நாலடிப்பாடல் நல்லதொரு விளக்கமாகும். செல்வம் யாரிடத்திலும் நிலையாக இருக்கும் தன்மை உடையது அன்று. ஆதலால் செல்வத்தைப் பெற்றால் பெற்ற உடனேயே நிலைபெற்ற அறச் செயல்கட்குச் செலவு செய்து விடல் வேண்டும் என்னும் நோக்குடையவர் வள்ளுவர் ஆகவே நிலையாமை அதிகாரத்தில் அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் (குறள் 333) என வேண்டியுள்ளார். வாழும் இடமெல்லாம் நிரம்பிய பெரும் பொருளைத் தேடி அதனைப் பிறர்க்கும் உதவாமல் தானும் உண்ணாமல் பொருளை வைத்துக் காத்துக் கொண்டு இருக்கும் கருமி உயிரோடு இருப்பினும் இறந்தொழிந்த வனாகவே கருதப்படுவான். அவனிடம் உள்ள பொருளால் யாருக்கும் எப்பயனும் இல்லை என்பதை நன்றியில் செல்வம் என்னும் அதிகாரத்தில் வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்; அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல் (குறள் 1001) என வருந்தி உரைப்பார். பொருள் இருந்தால் மட்டும் போதும், பொருளைக் கொண்டு உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம் என்று தவறாகக் கருதித் தம்மிடம் உள்ள எப்பொருளையும் எவர்க்கும் உதவாது இறுகப் பற்றிக் கொள்ளும் பொருள் மயக்கத்தால் பெருமையில்லாப் பிறவி என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டி நேரும். என்பதை, பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு (குறள் 1002) இக்கருத்தோட்டத்தில் மலர்ந்த குறளே பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதுஒன் றன்று (குறள் 438) என்பதாகும். பொருளை முயன்று உழைத்துத் தேட வேண்டும். தேடிய பொருளைச் செலவிட வேண்டிய நற்செயல்கட்கும் செலவிடாது எப்பொழுதும் தன் கண்பார்வையிலேயே வைத்துப் பாதுகாத்துக் கொண்டு, உள்ளத்தால் பொருளை இறுகப் பற்றும் கஞ்சத் தன்மை பிற குற்ற வகைகளில் ஒன்றாக வைத்து எண்ணத்தக்கது அன்று. கஞ்சத் தனம் தனி வகைக் குற்றமாகும். குற்றங்கட்கு எல்லாம் தாய் போன்றதாகும். ஆகவே கஞ்சத் தனத்தால் பொருளைக் காத்து வைத்திருத்தல் பெருமைக்கு உரியது என்று எவரும் எண்ணிவிடக் கூடாது. ஒருவனுக்கு பொருள் மீது கொண்ட தீராக் காதலால் கருமித் தனம் தோன்றி விடுமாயின், அவனிடம் உள்ள நல்ல குணங்கள் அனைத்தையும் அழித்து விடும். ஆகவே கருமித்தனத்தை எளிய குற்றமாக எவரும் கருதிவிடல் ஆகாது. அதுவே குற்றங்களில் எல்லாம் பெரிய குற்றமாகும். சுவாகுவும் மாரீசனும் ஆகிய தாடகையின் மக்கள் இருவரும் பாதாளம் சென்றனர். அங்கு சுமாலியோடு கூடி வாழ்ந்தனர். ஆண்டுகள் பல கழிந்தன. மைந்தர்கள் பிரிவால் உண்டான துன்பம் தாடகையை வாட்ட அவள் இக்காட்டைப் பாலைவனம் ஆக்கினாள் எனக் கூறவிரும்பும் கம்பர் சோலைவனம் பாலை வனம் ஆனமையை, உளப்பரும் பிணிப்புஅறா உலோபம் ஒன்றுமே அளப்பரும் குணங்களை அழிக்குமாறு போல் எனக் கூறும் உவமை ஆழமாகச் சிந்திக்கத் தக்கதாகும். தன்னம்பிக்கை வேண்டும். விடா முயற்சி வேண்டும், செயற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும்; பெரும் பெரும் பொறுப்புகளை ஏற்றுத் தலைமை தாங்கி நடத்த வேண்டும். எவரும் குறை கூறுவதற்கு இடமில்லாதவாறு செப்பமாகச் செய்ய வேண்டும்; பிறர் தன்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என எதிர் பார்த்தல் கூடாது. ஆனால் புகழ் தானே தேடி வர வேண்டும். ஒருவன் எவ்வளவு தான் பல்துறைகளிலும் உயர்ந்த அறிவுடைய வனாக இருந்தாலும்; மிகப் பெரிய தொழில் வல்லாளனாக இருந்தாலும், வணிகத்தில் மேலான சிறப்புப் பெற்று விளங்கினாலும், மிகப்பெரிய வீரனாக வெற்றிமேல் வெற்றி பெற்றவனாய் இருப்பினும், பல்கலைச் செல்வனாய் அமைந்திருந்தாலும் பரந்து பட்ட நாட்டையும் பாங்காக ஆளும் திறனில் இணையற்று விளங்கினாலும், இன்னும் எத்தனை துறைகள் உண்டோ அவற்றுள் எல்லாம் மிக உயர்ந்த நிலையில் இருந்த போதும்; தன் அறிவை ஆற்றலை, ஆளுமையை, திறனைத் தானே வியந்து பாராட்டிக் கொள்ளும் தற்பெருமைக்காரனாக ஒருவன் எக்காரணம் கொண்டும் எப்பொழுதும் எங்கும் இருந்து விடல் ஆகாது. தன்னைத் தானே ஒருவன் என்று பாராட்ட முற்படுகிறானோ? அன்றே அவன் முன்னேற்றம் தடைப்பட்டு விடும். எதிரிகளின் உண்மையான ஆற்றலை வலிமையை உள்ளவாறு எடை போடும் தன்மை இல்லாது போய் விடும். தற்புகழ்ச்சியை விரும்புபவன் பிறர் பாராட்டிற்கு எளிமையாய் மயங்கித் தன் நிலையை உணரமாட்டாத வனாய் ஆகிவிடுவான். ஆகவே தன்னை எஞ்ஞான்றும் வியவற்க எனத் திருவள்ளுவர் வேண்டுகிறார் வலி அறிதல் அதிகாரத்தில் அமைந்தாங்கு ஒழுகான், அளவறியான், தன்னை வியந்தான் விரைந்து கெடும் (குறள் 474) என எச்சரிக்கை செய்கிறார். ஒருவன் தன்னைத் தானே வியந்து பாராட்டிக் கொள்வது தன் படத்திற்குத் தானே மாலை சூட்டி வழிபாடு செய்வதற்கு ஒப்பாகும். தற்பெருமை பாராட்டுதல் அறிவார்ந்த தன்மை யன்று; அஃது மடமையின் மிகத் தெளிவான அடையாளம் ஆகும். ஆகவேதான் திருவள்ளுவர் ஒருவன் எப்பொழுதும் எங்கும் தற்பெருமை கொள்ளக் கூடாது என்பதை அழுத்தமாக வலியுறுத்துவான் வேண்டி தன்னை வியவற்க என்று மட்டும் உரையாது வியவற்க எஞ்ஞான்றும் தன்னை எனக் கூறியுள்ளார். ஒவ்வொருவரும் பொருந்தும் வகையால் அற வழிச் செயல்களை இடைவிடாமல் முடியும் இடங்களில் எல்லாம் செய்து வாழ்வதே கடமையாகும். என்பதை அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய்எல்லாம் செயல் (குறள் 33) என வேண்டுவதுடன் நல்வினைகளையும், அருவினைகளையும், இன்பம் பயக்கும் வினைகளையும் ஆள்வினையுடன் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார். ‘Ôait brŒa‰f! செய்யற்க தான் பிறிதின்னுயிர் நீக்கும் வினை செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு நன்றி பயவாவினை என வேண்டுவது போன்ற வேண்டுதலே நயவற்க நன்றி பயவா வினை என்பதாகும். வினை செய்ய விரும்ப வேண்டும்; செய்ய விரும்பும் வினைகள் அனைத்தும் தனக்கும் நாட்டிற்கும் நன்மை தரும் நல்வினைகளாகவே இருக்க வேண்டும். தீமை தரும் வினைகளையோ, கேடு தரும் வினைகளையோ, இழிவை யும், பழியையும், அழியையும் தரும் வினைகளையோ விரும்புதல் கூடாது என்பதை வலியுறுத்த விரும்பி நயவற்க நன்றி பயவா வினை என உரைக்கலானார். சாலையோரம் ஒரு வண்டியில் சிலர் ஒரு பெரிய மரத்தை ஏற்றச் சிரமப்பட்டு ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார். இக்காட்சியை அப்பொழுது அவ்வழியே வந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் சார்ச் வாசிங்டன் கண்டார். மனம் இரங்கியது. அவர்கள் பணிக்கு உறுதுணை புரிந்து விட்டு அமைதியாகக் கிளம்பினார். வேலை வாங்கியவன் நீங்கள் யார்? என வினவினான என்பெயர் சார்ச் வாசிங்டன் அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் என்னைக் குடியரசுத் தலைவர் எனக் கூறுவார்கள் என விடையிறுத்துச் சென்றார் என்பது வரலாறு. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை என்பதற்கு ஒரு சான்று. இலங்கை சென்று சீதையைக் கண்டு மீண்ட அனுமனிடம் வானர வீரர்கள் சென்றது முதல் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் உரைக்கு மாறு வேண்டினர். அதற்கு விடை அளிக்கும் அனுமன் பூண்ட பேரடையாளம் கைக்கொண்டதும் புகன்று, போரில் நீண்டவாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்புச் சிந்தி மீண்டதும் விளம்பான் தான்தன் வென்றியை உரைப்ப வெள்கி என்னும் கம்பன் கவி வியவற்க எஞ்ஞான்றும் தன்னை என்னும் குறள் அடியை உள்வாங்கிக் கொண்டு உரைத்தது ஆகலாம். ஒவ்வொருவரும் எப்பொழுதும் தற்பெருமை கொள்ளாதும் இருக்க வேண்டும் நன்மை தராத செயல்களை விரும்பாதும் இருக்க வேண்டும். என்பதையே, வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க நன்றி பயவா வினை (குறள் 439) என நவிலலுற்றார். நூல் படித்தல், கதை, கவிதை எழுதுதல், ஓவியம் தீட்டுதல், பாடுதல், இசை கேட்டு மகிழ்தல்; நாடகம், திரைப்படம் பார்த்தல் நடித்தல், கலை நாட்டம், சுற்றுலா, ஆடை அணிகலன் மீது பற்று, அழகிய பெரிய வீடு வேண்டும் என விரும்புதல், குறிப்பிட்ட பண்டம், உணவு, குடிவகை மீது தனி விருப்பு; சில மனிதர்கள் மீது அளவு கடந்த பற்று போன்ற பெருமைக்குரிய நல்லதின் மீது கொள்ளும் விருப்பு ஒருவகை. பெண்ணாசை, மது மீது ஆசை, சூதாட்ட ஆசை, புகைத்தல், பொடி உருஞ்சுதல், பேசிக் கொண்டே இருத்தல், தூக்கம், அரட்டை அடித்தல், பிறர் தொல்லை கண்டு மகிழ்தல், கொலை, கொள்ளை, திருடுதல் போன்ற தீமை தரும் விருப்புகட்கு அடிமைப் பட்டவர்கள் பிறிதொரு வகையினர். தீய விருப்பத்திற்கு ஆட்பட்டவர் எதை விரும்புகிறாரோ அதனாலேயே அழிவர். அத்தகையோர் பகைவர்களால் எளிதில் வீழ்த்தவும் படுவர் என்பதை அனைவரும் அறிவர். தீயதின் மீது கொள்ளுகிற பெருவிருப்பு ஒரு தற்குறையாகும் அதனையே பலகீனம் எனச் சுட்டுவர். நல்ல விருப்பையும் பிறர் எவரும் அறிந்து கொள்ளாதவாறு துய்க்க இயலுமாயின் குறையாகக் கருத வேண்டியதில்லை. உள்ளார்ந்த பண்பட்ட கணவன் மனைவியர் தம் காதல் வேட்கையை எவ்வாறு எவரும் அறியாதவாறு துய்த்து மகிழ்கிறார்களோ அவ்வாறு எல்லா விருப்பங்களையும் பிறர் எவரும் அறியாதவாறு துய்த்து மகிழும் தன்னடக்கம் அமரருள் உய்க்கும்; அத்தகையார் தோற்றம் மலையினும் மாணப் பெரியதாகும். அத்தகையவர்களை வீழ்த்த, வெற்றி கொள்ள பகைவர்கள் என்ன சூழ்ச்சி செய்தாலும் பயன்படாது. தன் விருப்பம் வெளிப்படாதபடி வாழ்ந்தால், பகைவர் எண்ணம் நிறைவேறாது. ஆகவே, உயர்ந்த ஆட்சிப் பொறுப்பில் இருப்பவரின் தனி விருப்பம் எவர்க்கும் தெரியக் கூடாது. தெரிந்தால் அதனைக் காட்டியும் வெல்வர்; அது கிடைக்க விடாமல் தடுத்துத் தவிக்க விட்டும் பகைவர் எளிதில் வென்று விடுவர். ..... உட்காது ஒழுகின் பகைவர் எண்ணம் பயமில என்னும் நீதிப் பெருமை நூல் ஓதியும் ஓராய் என்னும் பெருங்கதை வரிகள் குறட் கருத்தை வழி மொழிந்தே ஓதுகிறது. ஆகவே வள்ளுவர் குற்றம் கடிதல் அதிகாரத்தில் நிறைவாகக் கூறுவது, காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் (குறள் 440) என்பதாகும். செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணா உவகை, வருமுன்னர்க் காவாமை, தன் குற்றம் நீக்காது பிறர் குற்றம் காணுதல் செயற்பால செய்யாமை, பழிக்கு நாணாமை, பற்றுள்ளம், தன்னை வியத்தல், நன்றி பயவா வினை நயத்தல், காதல காதல் ஊர் அறிய உய்த்தல் ஆகிய குற்றங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்போர் தனி வாழ்விற்கும் நாட்டு வாழ்விற்கும் கேடு விளைவிக்கும் அடிப்படைக் குற்றங்களாகும். அவற்றை அண்ட விடாது காக்க வேண்டுவது பெருந்தக்காரின் பெரும் பொறுப்பாகும். செருக்கு இல்லார்.... சினம் இல்லார்.... சிறுமை இல்லார்... பெருக்கமேபெருமிதமாகும்” இவறல் ஏதம் மாண்பிறந்த மானம் ஏதம் மாணா உவகை ஏதம் ... இறைக்கு சிறு குற்றத்தையும் பெருங்குற்றமாகக் கருதி வருந்துவோர் பழிக்கு நாணுவர் குற்றம் நுழையாதவாறு காக்க! குற்றமே அற்றம் தரும் பகை! வருமுன்னர்க் காப்பவன் வாழ்வான்! வருமுன்னர்க் காகாதவன் அழிவான் தன் குற்றம் நீக்கு பிறர் குற்றத்தை அகற்று செல்வத்தால் செயற்பால செய்க! செல்வம் கெட விடாதே! பற்றுள்ளம் vன்னும்ïtறன்மைகூlவேகூlhது த‹id¥ òகழாதே!eன்றி gயவாÉiனயைவிரும்பாதேஉன் விருப்பம்உனக்குள்இருக்கட்டும் 45. பெரியாரைத் துணைக் கோடல் வீட்டை ஆளும் இல்லறத் தலைவன் ஆயினும், நாட்டை ஆளும் அரசத் தலைவன் ஆயினும், தன் தகுதியைக் காத்துக் கொள்ளவும், திறமையை வளர்த்துக் கொள்ளவும், குற்றம் உண்டாகாதவாறு காத்துக் கொள்ளவும், குணத்தைப் பெருக்கிக் கொள்ளவும், ஏற்ற பொறுப்பில் ஏற்ற மிக்க பணிகளைச் செய்யவும், இடையூறு இன்றி வாழவும், பணி செய்யவும் தம்மிற் பெரியார் துணை வேண்டற் பாலது எனக் கருதியே குற்றங் கடிதலுக்கும் சிற்றினம் சேராமைக்கும் இடையே பெரியாரைத் துணைக் கோடல் என்னும் அதிகாரத்தைத் திருவள்ளுவர் அமைத்துள்ளார். ஒருவன் எவ்வளவு பெரிய வீரனாக இருப்பினும், அறிஞனாக இருப்பினும், செல்வனாக இருப்பினும், ஆட்சியாளனாக இருப்பினும் தம்மைக் காட்டிலும் பெரியவரைத் தக்க வழியில் தேர்ந்து நட்புக் கொள்ள வேண்டும். பெரியார் நட்பால் சார்ந்ததன் வண்ணமாதல் என்னும் நட்புரிமைக் கோட்பாட்டிற்கு ஏற்பப் பெருமைக்குரிய பண்புகளையும் பெருமையையும் பெறுவர். மாந்தர்க்கு இனத்து இயல்வது ஆகும் அறிவு என்பது வள்ளுவர் வாய்மொழி. ஆதலால் பெரியாரின் பேரறிவும் வாய்க்கும். பெரியாரின் தொடர்பால் மனமும் தூயதாகும். ஆகவே செய்யும் செயல்கள் எல்லாம் தூய செயல்களாகவே செய்வர். இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல் ஆகவே பெரியாரிடம் இணைந்த நட்பாளர் அனைவரும் பெரியாராகவே திகழ்வர். பெரியார் ஆக விழைவோர் பெரியவர்களைத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். கற்பித்த ஆசிரியர்கள், சமயப் பெருமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் போன்றவர்களையும் தமக்கு வழிகாட்டிகளாகக் கொண்டு ஒழுகுவோரும் உள்ளனர். சங்க காலத்து வாழ்ந்த புலவர் பெருமக்களில் பெரும் பாலோர் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் ஆவார். யாதும் ஊரே: யாவரும் கேளிர் எனப் பாடிய கணியன் பூங்குன்றன் உலகம் போற்றும் உயரிய பெரியார் ஆவார். அவர் மொழி அனைவர்க்கும் வழி காட்டும் கலங்கரை விளக்குப் போன்றதாகும். குதிரை மலைத் தலைவனும் கொடை வள்ளலுமாக விளங்கிய அதியமான் நெடுமான் அஞ்சி ஔவைப் பெருமாட்டியைத் தமராகப் போற்றி ஒழுகினான். அவ்வாறே பறம்பிற் கோமான் பாரி, புலன் அழுக்கற்ற அந்தணாளராம் கபிலரை நண்பராகவும் வழிகாட்டும் பெரியராகவும் கொண்டு பாடுபுகழ் பெற்றான். உறையூரைத் தலை நகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட கோப்பெருச்சோழன் புலமை நலம் சான்ற பொத்தியார் கண்ணகனார், புல்லாற்றூர் எயிற்றியனார் ஆகியோரை உயிர் நண்பர்களாகக் கொண்டு வாழ்ந்தான். பிசிராந்தையாரை உணர்வால் நண்பராக ஆக்கிக் கொண்டான். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறன் அறிந்த மூத்த தமிழ் அறிஞர்களாகிய மாங்குடி மருதனார், மாங்குடி கிழார், குறுங்கோழியூர்க் கிழார், குடபுலவியனார், கல்லாடனார், இடைக் குன்றூர்க் கிழார் ஆகிய பெரியார்களைப் பேணித் தமராகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளான் என்பதைப் புறநானூறு என்னும் சங்கத் தொகை நூல் வழி அறிகிறோம். தேசத் தந்தையாம் காந்தியடிகளின் தலைமையை ஏற்று அன்னாரையே வாழ்வியல், அரசியல், சமயவியல் ஆகிய துறைகட்கு வழி காட்டும் பெரியாராகக் கொண்டு வாழ்ந்து வருவோர் உள்ளனர். சீர் திருத்தச் செம்மல், பகுத்தறிவுப் பகலவன் ஈ.வே.இரா. தந்தை பெரியார் எனப் போற்றப் படுவதை அனைவரும் அறிவோம். தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனார் தமிழ் மாமுனிவர் என்றும் தமிழ்ப் பெரியார் எனவும் தமிழறிஞர் களால் போற்றப்படும் பெரியார் ஆவார். செயற்கு அரிய செய்வார் பெரியர் என நீத்தார் பெருமையில் வள்ளுவர் கூறுவதே பெரியார் என்னும் சொல்லுக்கு இலக்கணம் ஆகும். ஒருவர் தம் வாழ்வில் தக்கவரிடம் நட்புக் கொள்ளுவது போல் செய்வதற்கும் அரியவை எவையும் இல்லை என்னும் கருத்துடையவர் திருவள்ளுவர். ஆகவே, எத்தகையவர்களிடம் நட்புக் கொள்ள வேண்டும்? எப்படி நட்புக் கொள்ள வேண்டும்? என்பதையும் விளக்கி வழி காட்டுவது அவரது கடமையாகிறது. நீ நட்புக் கொள்ளத் தெரிவு செய்பவர், ஆவது அறியும், அஞ்சுவது அஞ்சும், மெய்ப் பொருள் காணும் அறிவுடையராக முதற்கண் அமைதல் வேண்டும். அத்துடன் அன்னார் படிப்பறிவுடன் முதிர்ந்த பட்டறிவும் உடையவராயும் விளங்க வேண்டும். அத்துடன் அறநெறிகளை நன்கு அறிந்தவராகவும் இருக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்து முகத்தான் அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை எனக் கூறலானார். அரசியல் அறிந்து, பொருளியல் அறிந்து, ஆட்சியியல் அறிந்து, வணிகவியல் அறிந்து, இன்பவியல் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை எனக் கூறாது அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை என அறனறிந்த மூத்த அறிவுடையா ராகிய திருவள்ளுவர் கூறும் நுட்பம் உணரற்பாலது. ஒருவர் தகுதி உடையவராக மதிக்கப்பட வேண்டுமானால் எவற்றை அறிந்தாலும் அறியாவிட்டாலும் கட்டாயம் அறத்தை நன்கு அறிந்தவராய் இருத்தல் வேண்டும். எவ்வறிவும் அறமாகிய அடித்தளமும் மேலாண்மையும் பெற்றிருக்க வேண்டும். அறமே ஒவ்வொருவர் தகுதியையும் அளந்து அறியும் கருவியாகும். அறனறிந்த மூத்த அறிவுடையார் என்னென்ன திறமைகள் வாய்க்கப் பெற்றவர் என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்களிடம் நட்புக் கொள்வது எளிதன்று அவர்களை அணுகும் முறை தெரிய வேண்டும். எத்தகைய குழப்பமும் இல்லாமல் மிக்க தெளிவுடன் ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும். அன்னாரின் முழு நம்பிக்கைக்கும் உரியவராகவும் விளங்க வேண்டும். அறநெறியை அறிந்து முதிர்ந்த அறிவினை உடையவர் நட்பினைப் பெறுகின்ற முறை அறிந்து ஆராய்ந்து கொள்ளுதல் வேண்டும். தெரிந்து செயல் வகை (47) அதிகாரத்தில், தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் (குறள் 462) எனக் கூறும் குறள் தேர்ந்தெண்ணிச் செய்வதின் உயர் பயனை நன்கு தெரிவித்து ஊக்கமும் நம்பிக்கையும் ஊட்டுகிறது. தெரிந்து செயல் வகை (47) தெரிந்து தெளிதல் (51) தெரிந்து வினையாடல் (52) வினைத் தூய்மை (66) வினைத்திட்பம் (67) வினை செயல் வகை (68) பொருள் செயல்வகை (76) குடிசெயல் வகை (103) என்னும் அதிகாரங்கள் ஆராய்ந்து செயல்பட வேண்டிய இன்றியமையாமையை உணர்த்துவனவாகும். இனியது கேட்பின் தனிநெடு வேலோய்! இனியது இனியது ஏகாந்தம் இனியது! அதனினும் இனியது ஆதியைத் தொழுதல் அதனினும் இனியது அறிவினர் சேர்தல் அதனினும் இனியது அறிவுள் ளாரைக் கனவினும் நனவினும் காண்பது தானே என்னும் ஔவையாரின் தனிப்பாடல் எளிய இனிய விளக்கமாகும். பிறிதோர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் உணர்ந்து பேணாவிட்டால், ஒருவன் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் ஒன்றுமில்லை (315) என இன்னா செய்யாமையிலும் அறிவுடையார் ஆவது அறிவார் (427) எதிரதாக் காக்கும் அறிவினார் (429) என அறிவுடைமையிலும் அறிவுடையார் தன்மையைத் தெளிபடுத்தியுள்ளார். என்பதையும் நினைவில் கொள்க. நண்பனுக்குக் கேடு தருவனவற்றை விலக்குதல், அவனை நல் வழியில் வாழ வழிகாட்டுதல், எதிர்பாரா விதமாகக் கேடு வருமாயின் அவனொடும் சேர்ந்து துன்புறுதல் என்பன உண்மையான நட்பின் இயல்பாகும் (787) என நட்பு அதிகாரத்தில் கூறியுள்ளதையும் மனத்தில் கொள்க! உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் (குறள் 442) என்னும் குறள் நெறி புலப்படும். பெரியவரை நன்கு மதித்து உரிமையுடைய உறவினராகக் கொண்டு ஒழுக வேண்டும் என்பது வள்ளுவர் வேண்டுதலாகும். பெரியார் எப்படிப் பட்டவர்? தனக்கு வந்த துன்பத்தைப் பிறர் எவருடைய துணையையும் நாடாமல், தன்னுடைய தனி ஆற்றலாலே போக்கியவர். எதிர்காலத்தில் இந்த வழி சென்றால் என்னென்ன துன்பங்கள் நிகழ வாய்ப்பு உளது என்பதைத் தம் அறிவுக் கூர்மையால் முன் கூட்டியே உணர்ந்து, துன்பம் வாராமல் தடுத்துக் காத்துக் கொண்ட அறிவாளர் இவரே பெரியார். இப்பெரியார் தந்நலப் பெரியார் ஆவர். நண்பனுக்கு ஏற்பட்ட துன்பதை உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு 788 என்னும் குறள் வழி நின்று நீக்குதலும், எதிர் காலத்தில் அத்தகைய துன்பம் மட்டுமல்லாது எத்ததைய துன்பமும் அணுகவிடாது முன்னும் பின்னும் தக்க பாதுகாவலாய் அமைபவரே பெரியார். இவரே பெரியரிற் பெரிய பிறர் நலம் பேணும் பெற்றியார் ஆவார். தனக்கும் நண்பர்க்கும் வந்த துயரைப் போக்கி, இனித்துயர் இருவர்க்கும் வாரா வண்ணம் முன்கூட்டியே காக்க வல்ல பெரியார் உறவு என்றும் நிலை பெறட்டும். துன்பம் வருமுன்பும் காப்பார். துன்பம் வந்த பின்பும் காப்பார். அவர் என்றும் காப்பார்; எந்நிலையிலும் காப்பார் அத்தகைய பெற்றியாரைப் பேணிக் கொள்க! சிறியார் உணர்ச்சியுள் இல்லை. பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு (குறள் 976 ) என்பது பெருமை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள குறளாகும். பெருமைக்குரியவரைப் போற்றி, அவர் வழியைப் பின்பற்றி வாழ்வோம் என்னும் நோக்கம் சிறுமைப் பண்பினர் உள்ளத்தில் தோன்றுவதில்லை. பெருமைக் குரியவர்களும் பெருமை பெற விரும்புவாருமே பெருமைக் குரியவர்களைத் தேடுவர்; அவர் பெருமையை உணர்வர்; அன்னாரிடம் நட்புக் கொள்வர், தக்கவாறு பயன்படுத்திக் கொள்வர். பெரியார் நட்பு வாய்க்கப் பெறுதலும் எளிதன்று; அரிதே ஆகும். செயற்கரிய யாவுள நட்பின்? அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு? (குறள் 781) என்னும் குறள் நட்பு என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ள முதற் குறளாகும். ஒவ்வொருவர் வாழ்விலும் தக்கவரிடம் நட்புக் கொள்ளுதல் இணையற்ற அரிய செயலாகும். செயலாற்றும் போதும் அந்நட்பே சிறந்த பாதுகாப்பாய் அமையும் என்பதையும் நினைவிற் கொள்க! அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப் பேணித் தமராக் கொளல் (குறள் 443) அரியவற்றுள் எல்லாம் அரிதே என்னும் தொடர் வள்ளுவர் பயன்படுத்திய அரிய தொடராகும். பெரியாரைப் பேணுதல் வேண்டும்; தமராகக் கொள்ளுதல் வேண்டும்; அஃது ஓர் அரிய செயல்; அஃது கிடைத்தற்கரிய பெரும் பேறுமாகும். பொன்னைப் பெறுதல் ஒரு பேறு; பொருளைப் பெறுதலும் பேறுதான்; மக்களைப் பெறுதலும் பேறுதான்; பட்டம் பெறுதல்; பதவி பெறுதல்; ஆட்சி அதிகாரம் பெறுதல் எல்லாம் பேறுதான் இவை அனைத்தையும் விட மேலான அரிய பேறு பெரியாரைத் தமக்குரிய நண்பராகப் பெற்றுக் கொள்வதாகும். என்பதை நன்கு உணர்ந்து உற்றுழி உதவும் உயர்ந்த பண்பமைந்த பெரியாரைப் போற்றி உறவு கொள்ளுதல் வேண்டும். பெரியாரைப் பேணித் தமராக் கொளல்; அரியவற்றுள் எல்லாம் அரிதே! என்னும் குறளின் ஒவ்வொரு சொல்லும் பொன்னிற் பதித்த மணி அன்ன சொற்களாகும். கங்கைக் கரை வேடர் தலைவனாகிய குகன் அறக்கடலாய் விளங்கும் இராமபிரானை நண்பனாக ஆக்கிக் கொண்டது. குகன் பெற்ற பேறுகளில் எல்லாம் உயர்ந்த பேறாகும். இரும்பின் இரும்பிடை போழ்ப-பெருஞ்சிறப்பின் நீருண்டார் நீரான்வாய் பூசுப-தேரின் அரிய அரியவற்றாற் கொள்ப-பெரிய பெரியரான் எய்தப் படும் (நான்மணி 46) என்னும் நான்மணிக் கடிகைப் பாடல் வரிகள் நல்லதொரு இலக்கியச் சான்றாகும். ----------------------- எல்லாம் தலை இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை (குறள் 47) அறிவினுள் எல்லாம் தலை யென்ப, தீய செறுவார்க்கும் செய்யா விடல் (குறள் 203) செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (குறள் 411) உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை, வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை (குறள் 761) ஆற்றுவார் ஆற்றல் இகழாமை, போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை (குறள் 891) எனும் குறட்பாக்கள் திருவள்ளுவர் ஒப்பாய்வு செய்து மிகச் சிறந்ததாகத் தெரிவு செய்து உணர்த்துவனவாகும். அதன் அடையாளமே எல்லாம் தலை என்பதாகும். இந்நடை ஒழுங்கில் படைக்கப்பட்ட குறளே, தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை (குறள்444) என்னும் சிறந்த வலிமையை உணர்த்தும் குறளாகும். வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை (குறள் 153) என்னும் நாற்சீரும் வள்ளுவரின் சீரிய நோக்கைத் தெள்ளிதின் புலப்படுத்து கிறது. அறிவிலாரின் அடாத செயலையும் பொறுத்துக் கொள்ளும் மனவளமே வலிமைகளில் எல்லாம் சிறந்த வலிமையாகும். அத்தகைய மனவளம் மிக்க பொறையுடைமையாளரே பெரியரிற் பெரியர் ஆவர். பொதுவாகப் பிற அறிஞர்களும் உலகவரும் நாடாளும் வேந்தனுக்கு படைமாட்சியே வலிமை எனக் கூறுவர். ஆனால் திருவள்ளுவர் அஞ்சாத வெற்றிப்படை வேந்தர்க்குச் சிறந்த வலிமை எனக் கூறினார் அல்லர். எப்படிக் கூறினார் எனின் வெல்படை, வேந்தன் உறுப்பமைந் துறஞ்சா வெறுக்கையுள் எல்லாம் தலை (குறள் 761) என்கிறார். படை சிறந்த செல்வமாகும் என்பதே வள்ளுவர் கணிப்பு. குடும்பத் தலைவன் ஆயினும் சரி, நாடுகளின் தலைவன் ஆயினும் சரி, ஏன் உலகத் தலைவனே ஆயினும் தம்மைக் காட்டிலும் நிறைந்த அறிவும், உயர்ந்த ஒருக்கமும், சிறந்த பண்பும் வாய்ந்த பெரியாரை, உற்றாராகக் கொண்டு அவரை மதித்துப் போற்றி வாழ்தல் அவர்கள் பெற்றுள்ள உடல் வலிமை, மன வலிமை, பொருள் வலிமை, படை வலிமை, ஆட்சி வலிமை தொழில் வலிமை, மக்கள் வலிமை, சுற்றத்தார் வலிமை அன்ன வலிமைகளில் எல்லாம் மேலான வலிமை யாகும். தம்மினும் பெரியவர் நம்மவராக நடப்பதே இணையற்ற வலிமை சேர்க்கும். அண்ணல் காந்தியடிகளும் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா வும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. போன்றவர்களும் நம்மை உற்றவராகக் கொண்டு ஒழுகினால் அதுவே நமக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் மிகப் பெரிய வலிமையாகும். சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் (குறள் 445) என்னும் இக்குறளில் கற்பன கற்று, எதனையும் நன்கு ஆராய்ந்து, முடிவெடுக்கும் திறன் அமைந்த பெரியாரைச் சூழ்வார் என்னும் சொல் லால் குறிப்பிடுகிறார். சூழ்வார் நாடாள்வோர்க்கு அமைச்சர் போல்வார். குடியாட்சி நாட்டில் தலைமை அமைச்சர்க்கு வாய்த்த தலைமைச் செயலர் போன்றவர், பெரும் பொறுப்புகட்கு உரியவர்களைச் சூழ்ந்து இருக்கத் தகுதியானவர். தீயவரும் தீமையும் ஆள்வோரை அண்டாது காப்போர்; நல்வழியே காட்டுவோர், ஆள்வோர் நாட்டிற்குத் தலைபோன்றவர்; ஆகவே அவர் தலைவர் ஆவார். அவர்க்கும் நாட்டிற்கும் கண் போன்றவர்களே அமைச்சர்கள்; அறன் அறிந்த மூத்த அறிவுடைய பெரியார் ஆவர். அறிவான் மிக்க பெரியாரை ஆட்சியாளர் தமக்குரிய கண்ணாகக் கொண்டு நடக்க வேண்டியிருப்பதால் அத்தகையவர்களை நன்கு ஆராய்ந்து தமக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும் எனவும் பொருள் கொள்ளலாம். நல்லவழிகளை ஆராய்ந்து அறிந்து அதன்படி நடக்கும் பெரியோர் களையே பொருட்டாகக் கொண்டு, உலகம் அவர் வழி இயங்குவதால் ஆட்சிப் பொறுப்பில் இருப்போர் அத்தகைய பெரியாரை நன்கு ஆராய்ந்து பார்த்துத் துணையாகக் கொள்ள வேண்டும். எனவும் பொருள் கொள்ளலாம் பெரியோர்கள் நாட்டின் கண் போன்றவர்; நாடாளு வோர்க்கும் கண் போன்றவர். ஆகவே ஆள்வோர் அவர்களை ஆராய்ந்து அணைத்துக் கொள்ள வேண்டும். சூழ்வாரே கண்: ஆகவே அவர்களைச் சூழ்ந்து கொள்வோம்! மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் (குறள் 742) எனக் கூறப்படும் நான்கும் பகைவர்கள் உள்ளே நுழைய விடாது. தடுத்துக் காக்கும், பகைவர் முற்றுகையால் அழிவோ துன்பமோ நேராதவாறும் காக்கும் அரண் என்பதும் உண்மையே. தரைப்படை, கடற்படை வான்படை என்னும் முப்படைப் பிரிவுகளின் ஆற்றல் மிக்க பேராண்மையும் சிறந்த பாதுகாப்பு என்பதும் உண்மையே! அதனினும் சிறந்த பாதுகாப்பு, பகைவரால் கிட்ட நெருங்க முடியாத துன்பம் தராத, இன்பமே தரும் உயர்ந்த பெருமை தரும் பாதுகாப்பு, தகுதி வாய்ந்த பெருமக்களின் உற்ற துணையாகும். தகுதி வாய்ந்த பெரியவர் கூட்டத்தில் ஒருவனாக இரண்டறக் கலந்து வாழும் ஆட்சியாளனுக்கு எந்தப் பகைவனாலும் எத்தகைய இடை யூற்றையும் செய்ய இயலாது. பெரியார் துணையே பெருந்துணை; பகைவரும் நெருங்க முடியாத நற்றுணையும் ஆகும் என்பதை வலியுறுத்தும் முகத்தான் படைத்த குறளே தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல் (குறள் 446) என்பதாகும். தகுதி வாய்ந்த பெருமக்களின் துணையின்றி வாழுவோன் தனி நிலையில் எத்தகைய ஆற்றல் உடையவனாக இருந்தாலும் படை பலம் உடையவனாக இருந்தாலும் பகைவரால் எளிதில் வீழ்த்தப் படுவான் என்பது உய்த்துணரற் பாலதாகும். வீடணன் பெற்ற வலிமைகளில் எல்லாம் சிறந்த வலிமை தகுதி அற்ற இராவணன் துணையைத் துறந்ததும் எல்லாத் தகுதியும் வாய்ந்த இராமபிரானின் துணையைப் பெற்று ஒழுகியதுமாகும். நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக் கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு (குறள் 784) என்பது நட்பு அதிகாரத்தில் இடம்பெறும் குறள். ஒருவரோடு ஒருவர் நட்புக் கொள்வது சிரித்து மகிழுவதற்காக மட்டுமன்று. வரம்பு மீறிச் செல்லும் இடத்தில் முற்படச் சென்று இடித்துக் கூறி நல்வழிப் படுத்துவதற்கும் ஆகும் என்பது உரையாகும். இஃது நண்பர் கடமையை உணர்த்தும் குறளாகும். நல்லாரிடம் கொள்ளும் நட்பின் பயன் உணர்த்தும் குறளே. இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்? (குறள் 447) என்பதாகும். நல்லது செய்தலைப் பாராட்டிப் போற்றுவது, நல்லது மேலும் பெருக வழிவகுக்கும். ஆகவே நல்லதைப் பாராட்டுவது நன்றேயாகும். அதனினும் நல்ல இயல்பு யாது? தொடர்புடையார் தீய சொல் கூறுவதையோ, தீமை தரும் செயல்களைச் செய்ய முற்படும் பொழுதோ கண்டால் அதனைச் செய்ய விடாது நீக்கும் வண்ணம் தக்க அறிவுரை வழங்கித் திருத்துவது சாலச் சிறந்ததாகும். அறிவுரை வழங்க மேற்கொள்ளும் முறை கண்ணோட்டம் இல்லாத முறையாக இருந்தாலும் முறை பற்றிக் கவலைப் படாது தன்னைத் திருத்தும் உரிமையும் உணர்வும் உடையவரை யார் தக்க நண்பராகக் கொண்டு ஒழுகுவதை வழக்கமாக்கிக் கொண்டவர்களை எவராலும் கெடுக்க இயலாது. இடித்துரைத்துத் திருத்தும் பெரியார் துணை பெற்றவரை உலகத்தில் எவரால் கெடுக்க முடியும்; எவராலும் முடியாது. நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் சோழர் குடி வேந்தர்கள். நெடுங் கிள்ளியின் உறையூரைக் கைப்பற்ற நலங்கிள்ளி படை எடுத்துச் சென்று முற்றுகை இட்டான். இருவரும் மதித்துப் போற்றும் அறனறிந்த மூத்த அறிவுடையாராகிய கோவூர்க் கிழார் இருவர்க்கும் கூறிய இடிப்புரை; இம்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்: கரும் சினை வேம்பின் தெரியவோன் அல்லன்; நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொரு பொருவோன் கண்ணியும்ஆர்மிடைந்தன்றே; ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால் குடிப்பொருள் அன்று நும் செய்தி; கொடித்தேர் நும்மோர் அன்ன வேந்தர்க்கு மெய்ம்மெலி உவகை செய்யும் இவ் இகலே என்னும் புறநானூற்றில் அமைந்த பாடல் (45) இருவரும் பகை ஒழிந்து உறவு கொள்ளத் துணை புரிந்தது. அவ்வாறே, கிள்ளி வளவன் தன் பகைவனான மலையமான் மக்களைக் கொணர்ந்து, கொலையானையின் காற்கீழ் இட்டுக் கொல்ல முயன்ற போது, கோவூர்க் கிழார் கூறிய இடிப்புரை கேட்டுத் தன் கொடுஞ்செயல் தவிர்த்துப் பாடுபுகழ் பெற்றான். சோழ நாட்டை உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பெருவேந்தன் கோப்பெருஞ் சோழன். அவன் பிசிராந்தையார் என்னும் பாண்டிய நாட்டுப் புலவர் பெருந்தகை பால் உணர்வால் நட்புக் கொண்டவன்; பொத்தியார், கண்ணகனார், புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் சங்கத் தமிழ்ச் சான்றறோர்பால் உயிர் நட்புக் கொண்டவன். கோப்பெருஞ் சோழன் தன் மக்களோடு மாறுபட்டு போர்க் கோலம் பூண்டு நின்றபோழ்து புல்லாற்றூர், எயிற்றியனார் உரைத்த அறிவுரை வருமாறு: மண்டமர் அட்ட மதனுடை நோன்தாள் வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே! பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து நின்தலை வந்த இருவரை நினைப்பின் தொன்று உறை துப்பின்நின் பகைஞரும் அல்லர் அமர்வெம் காட்சியொடு மாறுஎதிர் எழுந்தவர் நினையும் காலை நீயும் மற்றவர்க்கு அனையை அல்லை: அடுமான் தோன்றல் பரந்துபடு நல்லிசை எய்தி மற்றுநீ உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும் ஒழித்த தாயம் அவர்க்குரித்து அன்றே அதனால், அன்னது ஆதலும் அறிவோய் நன்றும் இன்னும் கேண்மதி இசைவெய் யோயே எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்குஎஞ் சுவையே! அமர்வெம் செல்வநீ அவர்க்கு உலையின் இகழுநர் உவப்பப் பழிஎஞ் சுவையே! அதனால், ஒழிகதில் அத்தைநின் மறனே வல்விரைந்து எழுமதி வாழ்கநின் உள்ளம் அழிந்தோர்க்கு ஏமம் ஆகுநின் தாள்நிழல் மயங்காது செய்தல் வேண்டுமால் நன்றே வானோர் அரும்பெறல் உலகத்து ஆன்றவர் விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே! என்னும் புறப்பாடல் வழி கோப்பெருஞ் சோழன் இடிக்கும் துணையாராகிய புல்லாற்றூர் எயிற்றியனாரை ஆட் கொண்ட ஆளுமையும் புலப்படுகிறது. கோப்பெருஞ் சோழன் பெரியார் துணையால் குன்றாப் புகழ் பெற்றான். எவராலும் கெடுக்க முடியா உறுதிப் பாட்டினனாகவும் விளங்கினான் என்பது இலக்கியச் சான்று. கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க் கிழார் என்னும் இடித்துரைக்கும் புலவர் பெருமக்களின் நட்பை வள்ளல் பேகன் பெற்றதால் தன் வாழ்க்கைத் துணைவி கண்ணகியின் கண்ணீரைத் துடைத்தான். பின்னர் மனத்திண்மையனாய் மனமொத்த வாழ்வு நடத்தினான். நண்பர்களால் திருந்திய வாழ்வு பெற்றான் என்பதையும் மறந்து விடல் ஆகாது. கடிந்துரைக்கும் நண்பரைப் பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள்! அவர்களை எவராலும் கெடுக்க இயலாது. தவறு நேர்ந்தபோது, அல்லது தவறு நேர வாய்ப்புள்ள போது நல்ல எண்ணத்துடனும் உரிமை உணர்வுடனும் கண்டித்து, தக்க அறிவுரை வழங்கித் துன்பம் நேராவகையில் காக்கும் பெரியார் தொடர்பு எவர்க்கும் வேண்டும். அதிலும் பெரும் பெரும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கட்குக் கட்டாயம் வேண்டும். ஏனெனில் அவர்கள் எந்நேரமும் பரபரப்பான பணிகளுக்கிடையே ஓய்வு ஒழிவு இன்றி விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டியவர்கள். பல நேரங்களில் சில சிக்கல்களில் அமைந்து ஆழமாகச் சிந்தித்து முடிவு எடுக்கக் கூட வாய்ப்பு இல்லாமல் போகலாம். அந்நேரங் களில் உணர்ச்சி வயப்படாத எல்லாம் அறிந்த நடுநிலையாளர்கள் தான் தக்கவாறு நெறிப்படுத்த இயலும். ஆகவேதான் கண்டித்துச் சொல்லத் தக்க பெரியவரைத் துணையாகக் கொண்டவரைக் கெடுக்கும் வலிமை எவர்க்கும் இல்லை என ஓங்கி உரைத்தார் வள்ளுவர். அத்துடன் வள்ளுவர்க்கு நிறைவு ஏற்படவில்லை. ஆகவே உடன் பாட்டில் உரைத்ததோடு அமையாது மேலும் வலியுறுத்துவான் வேண்டி எதிர்மறை நோக்கில், இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (குறள் 448) என உரைக்கலானார். நண்பரால் நன்மையும் பகைவரால் கேடும் விளையும் என்பது பொது விதி. ஒரு பெரு நிலத்தை ஆளும் பல்வகைத் தகுதிகளையும் பாங்குறப் பெற்ற ஆட்சித் தலைவனைப் பார்த்து வள்ளுவர் நீ கேட்டிற்கு ஆளாவாய் என எச்சரித்தார். அத்தலைவன் வள்ளுவனைப் பார்த்து ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? எனக்குப் பகைவர்கள் என எவரும் இலர். நானும் தக்க தகுதிகள் எல்லாம் பொருந்தியவன் எவர்க்கும் துன்பம் இன்றி இனிதே ஆண்டு வருகிறேன். அப்படி இருக்கும் போது நீ கெட்டுப் போவாய் எனக் கூறுகிறீர்களே! ஏன்? என வினவினான். வள்ளுவரோ, உனக்குக் கேடு செய்யும் பகைவர்கள் இல்லை என்பதையும் அறிவேன்; நீயும் யாருக்கும் கேடு செய்தவனும் இல்லை; செய்பவனும் அல்லன். ஆனால் நீ உன்னையே மிகப் பெரியவனாய்க் கருதி நடக்கிறாய்; உன்னிலும் பெரியவர் உலகில் உண்டு என்பதை உணரவும் இல்லை; அத்தகையோர் தொடர்பு வேண்டும் எனக் கருதவும் இல்லை. குற்றம் கண்ட இடத்துக் கடிந்துரைத்து நெறிப்படுத்தும் பெரியோர் பாதுகாவலே உயர்ந்த பாதுகாவல் அதனைத் தேடிக் கொள்ளாதவன் எவ்வளவு பெரிய தலைவனாக இருப்பினும், அவனுக்குக் கேடு செய்யும் பகைவர்களே உலகில் இல்லை என உறுதியாகக் தெரிந்தாலும் அவன் கெடப் போவது உறுதி! என்பதை உணர வைக்கப் பாடிய குறளே! இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (குறள் 448) என்பதாகும். கடிந்துரைப்பாரே கேடு வாரா வண்ணம் காப்பவர் ஆவார். கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம்; களிக்கின் றோயை அடுக்கும் ஈது: அடாதது ஈதென்ற எதுவோடு அறிவு காட்டி இடிக்குநர் இல்லை; உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை முடிக்குநர் என்றபோது முடிவன்றி முடிவ துண்டோ? (சிந்தனை 59) என்னும் பழம் பாடல் தக்க எடுத்துக் காட்டாகும். பொருள் தேட வேண்டும் என்னும் நோக்கில் தான் பல்வேறு பொருள் களை உண்டாக்கும் தொழில்களையும் அவற்றை வாங்கி விற்பனை செய்யும் வணிகமும் செய்ய முற்படுகின்றனர். வைப்புத் தொகையான மூலதனம் கையில் இல்லாது கடன் பெற்று வணிகமோ தொழிலோ செய்ய முற்படுவோர் அதன் வழியாகக் கிட்டும் ஊதியம், பணம் கடனாகத் தந்தவர்க்கே வட்டியாகப் போய்ச் சேருமே அல்லாமல் தொழில் செய்தோர் ஊதியம் பெற இயலுவது கடினமாகும். என்பதனை முதலிலார்க்கு ஊதியம் இல்லை என்னும் தொடரால் தெளிவித்தார். இதனைக் கூறுவது வள்ளுவர் நோக்கமன்று. இதனை உவமையாகக் கொண்டு மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை என்னும் அரிய கருத்தை விளக்குவதே வள்ளுவர் நோக்கமாகும். ஆள்வோர் வெற்றிமேல் வெற்றி பெறலாம்; அளவிட முடியாத வளர்ச்சியால் புகழேணியின் உச்சிக்கும் செல்லலாம். அதற்கு மறுதலையாக அடுத்தடுத்துத் தோல்விகளைச் சந்திக்க நேரலாம்; வளர்ச்சி தடைப்பட்டு நெருக்கடிக்கு ஆளாகலாம். வெற்றியைக் கொண்டாடவும் வளர்ச்சியில் துணை நிற்கவும் ஒருவரும் தேவை இல்லை எனினும் துணைபுரிய வருவோர் எண்ணற்றோர் இருக்கலாம். அதனால் உறும்பயன் என்ன? தோல்வியைத் தழுவுங்காலும் தளர்ச்சிக்கு ஆட்படுங்காலும் தக்கவாறு மன ஆறுதல் வழங்கி, ஊக்க மூட்டி, தளர்ச்சியைப் போக்கி வெற்றிபெற வழி காட்டித் துணைபுரிவோரே உண்மையான நண்பர்; உயரிய பண்பு வாய்ந்த பெரியர்; அத்தகையவரின் துணைவாய்க்கப்பெறாதார் நிலைபேறு அடைதல் இயலாது என்பதனையே: முதலிலார்க்கு ஊதியம் இல்லை; மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை (குறள் 449) எனும் குறள் வழி உணர்த்திப் பெரியார் துணையைத் தேடிக் கொள்ள வேண்டுகிறார். பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் (குறள் 450) என்பது இவ்வதிகார நிறைவுக் குறளாகும். நற்பண்புகள் நிறைந்த பெரியார் ஒருவரிடம் பலநாள் பழகி நட்புக் கொண்ட ஒருவன் திடீரென அவர் தொடர்பை எக்காரணம் கொண்டும் விலக்குதல் கூடாது. முதலில் பழகாமல் இருந்து விட்டால் கூட அதனால் பெருந்தீமை விளையாது. பெரியாரிடம் கொண்ட தொடர்பைக் கைவிட்டால் பெருந்தீமை விளையும். எனக் கூறிய வள்ளுவரிடம் பெருந்தீமை என்றால் எவ்வளவு தீமை? என வினவுவார்க்கு விடையளிப்பார்போல் காரண காரியத்துடன் பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடப் பத்து மடங்கு தீமை தருவதாகும். ஆகவே, நல்லவரிடம் நட்புக் கொள்ளும் முகத்தான் பலருடைய பகைமை வந்து சேரினும் கவலைப்பட வேண்டாம். எக்காரணம் கொண்டும் நல்லார் நட்பை நழுவவிடல் ஆகாது. நல்லாராகிய பெரியார் ஒருவரின் துணை, எண்ணற்ற பகைமையை யும் வீழ்த்தும் ஆற்றல் வாய்ந்ததாகும். தனக்கு நல்லுரை கூறிய வீடணனை இராவணன் ஒல்லை நீங்குதி விழி எதிர் நிற்றியேல், விளிதி என்றனன் அழிவினை எய்தினான்; அறிவு நீங்கினான். அத்துடன் இராவணன் கூட்டிய ஆய்வு மண்டபத்தில் யாரை எல்லாம் விலக்கினான் என்பதற்குக் கம்பர் கூறும் பட்டியல் இதோ, “KidtU« njtU«, k‰W« c‰Wnsh® vidtU« jÉ®f! என ஏய ஆணையான் புனை குழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான் நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான். பண்டிதர், பழையவர், கிழவர், பண்பினர் தண்டல் இல் மந்திரத் தலைவர் சார்க எனக் கொண்டு உடன் இருந்தனன்-கொற்ற ஆணையால் வண்டொடு காலையும் வரவு மாற்றினான். ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்தொழிற்கு ஏன்றவர் நண்பினர் எனினும் யாரையும் வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர் போன்றவர் அல்லரை, புறத்துப் போக்கினான் (கம்பராமாயணம், யுத்த காண்டம் இராவணன் மந்திரப் படலம் 7,8,9) ஆகவே இராவணன் பேரழிவு எய்தினான் என்பது இலக்கியச் சான்றாகும். நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை; (குறள் 460) நல்லதொரு அகச் சான்றாகும். திருவள்ளுவர் காட்டும் பெரியார் செயற்கரிய செய்பவர் ஆவார் அவர் அறன் அறிந்த மூத்த அறிவுடையார் உற்ற நோய் நீக்கி, உறாமை, முற்காக்கும் பெற்றியார், எனவும் சூழ்வார் எனவும் தக்கார் எனவும் துணையார் எனவும் நல்லார் எனவும் சுட்டப்படுகிறார். இவரே பிசிராந்தையார் கூறும் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் ஆவர் அவரே நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் ஊழி பெயரினும் தான் பெயரார்ஆவார். சார்ந்ததன் வண்ணமாகும் என்பது உண்மை மொழி, பெரியாரை அண்டியவர் பெரியார் ஆவார். நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே என்னும் ஔவை மொழியை அமுத மொழியாகக் கொள்க. அறனறிந்த மூத்த அறிவுடையாரிடம் கேண்மை கொள்க அறிவுடையார் திறன் அறிந்து தேர்ந்து கேண்மை கொள்க! உற்ற நோய் நீக்கி, துயர் வாரா வண்ணம் முற்காக்கும் பெற்றியார்ப் பேணுக பெரியாரைப் பேணித் தமராக் கொள்க தம்மிற் பெரியாரைத் தமராகக் கொள்க பெரியார் உறவு வன்மையுள் வன்மை யாகும் அறிஞரே ஆட்சியாளர்களின் கண்கள் பெரியார் தோழனுக்கு எவரும் கேடு செய்ய இயலாது இடிக்கும் துணையாரைப் ஆள்க பெரியார் சார்பே நிலைபேறு நல்லார் தொடர்பைக் கைவிடாதே பெரியார் துணை! பெருந்துணை! -------- 46. சிற்றினம் சேராமை அறிவறிந்த மக்கட் பிறப்பினன் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தின் வகைமை யைத் தெரிய வேண்டும். நிறை மொழி மாந்தனாய்ப் பெருமை பெற வேண்டும். குணம் என்னும் குன்றேறி நிற்க வேண்டும். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுக வேண்டும். அறன் அறிந்து, மூத்த அறிவுடையார் ஆக வேண்டும். உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியராய்ப் பிறங்க வேண்டும். இந்நல்லியல்புகளை நாளும் காக்கவும் வேண்டும்; மேன்மேலும் வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டு ஒழுக வேண்டும். பெரியார் துணை வலிமை சேர்க்கும். அதைக் காட்டிலும் முக்கியம் தீமை புரிவோராய் இருக்கக் கூடாது. தீயவரை நெருங்கக் கூடாது. அண்டவும் அனுமதிக்கக் கூடாது. அமுது பருக வாய்ப்புக் கிட்டவில்லை ஆயின் நன்மை இல்லை எனினும் தீமை இல்லை. நஞ்சு பருகினால் என்னாகும்? பெரியார் துணை தேட முற்படுவதை விட, சிறியார் தொடர்பு ஏற்பட்டு விடாமல் காப்பது மிக முக்கியம் எனத் திருவள்ளுவர் கருதியதனால்தான் பெரியாரைத் துணைக் கோடல் என்னும் அதிகாரம் அமைத்ததோடு நிறைவு அடையாமல் சிற்றினம் சேராமை என்னும் அதிகாரமும் படைக்கலானார். மேலான தன்மை இல்லாதவர் கீழோர் ஆவர், அவரே சிறுமைத் தன்மை உடையவர். அகவையால் முதிர்ந்தாலும் பதவியால் உயர்ந்தாலும், இயல்பால் சிறுமையுடையவர் சிறியோரே யாவர். சிறியார் கூட்டமே சிற்றினம் ஆகும். சிறியோர் கூட்டத்தோடு கூடாமையே சிற்றினம் சேராமை ஆகும். சிறியோராவார் கயவரும், ஐங்குற்றவாளியரும், தன்னலக் காரரும் கல்வி நிரம்பாதவரும், உயர்ந்தோர் உண்டு என்பதை இல்லையென மறுப்போரும் ஆவார் என்கிறார் பாவாணர். சேரமான் கரூவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் இரும் பொறையைக் கண்டு நிறைவு பெற்ற நரி வெரூஉத் தலையார் என்னும் சங்கச் சான்றோர் பாடிய பாடலில், அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயம் கொள்பரோடு ஒன்றாது, காவல் குழவி கொள்பவரின் ஓம்பு மதி அளிதோ தானே அது பெறலருங் குரைத்தே என வேண்டுவது எண்ணிப்பார்க்கத் தக்கது. அருளும் அன்பும் இல்லாதவராய் நீங்காத நரகத்தை அடைபவரோடு ஒன்றாதே என்பதே சிற்றினம் சேராதே என வேண்டுவது ஆகும். சோழன் நல்லுருத்திரன் உயர்ந்த உள்ளமும் பரந்த கல்வி கேள்வி யும், சிறந்த வினைத் திட்பமும் கொண்டவன். முடிவேந்தன் ஆகலின், எப்பொழுதும் இவனைக் குறுநில மன்னரும் செல்வர்களும் சூழ்ந்து கொண்டே இருப்பர். இவர்களின் துணை கொண்டு இவன் அரிய செயல்கள் பல செய்து மிக்க பொருளும் நல்ல புகழும் பெற்றான். இச்செயல்களைச் செய்யுமிடத்துத் தனக்குத் துணையாய் இருந்த மன்னரும் செல்வருமாகிய சுற்றத்தாரின் குணம் செயல்களைப் பயின்று அறியும் வாய்ப்பு இவனுக்குச் சிறப்புற அமைந்தது. அவருள் சிலருடைய கூட்டுறவால் ஆக்கமும், வேறு சிலருடைய துணையால் கேடும் உண்டாகக் கண்டு அவர்களை ஆராய்ந்தான். ஆக்கத்திற்குத் துணையாய் இருந்தவர் உயர்ந்த உள்ளமும், தாம் மேற்கொண்டு கடைப் பிடிக்கும் அறக்கொள்கைகளின் வழுவாது ஒழுகும் மனத் திட்பமும், அதற்கு மாறுபடவும் வேறுபடவும் வரும் பொருள் எத்துணைச் சீரிதாயினும் வேண்டாத விறலும் உடையராதலைக் கண்டான். கேடு நேர்ந்த காலத்து அதற்கு, ஏதுவாய் இருந்தவரை ஆராய்ந்த வழி, அவர்கள், ஏனையர் போல உள்ளத்து உயர்வும் கடைப்பிடியும் விறலும் இலராயினும், உழைப்பார் உழைக்க அவர்தம் உழைப்புவழி வரும் ஊதியத்தை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ சிறுகச் சிறுகத் தாம் பறித்துக் கொள்ளும் பண்பும் அதற்கு ஏதுவாகிய குறுகிய உள்ளமும், தன்னலச் சூழ்ச்சியும், ஒன்று உற்றவிடத்துத் தம்மை விற்றுவிடத் தக்க கீழ்மையும் உடையராதலைக் கண்டுணர்ந்தான். உடனே இக்கீழோரை விலக்கி ஏனையோரைத் தழுவிக் கொள்ள விரும்பிப் பாடிய புறப்பாட்டு. விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர் வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் எலிமுயன்று அனையர் ஆகி உள்ளதம் வளன் வலி யுறுக்கும் உளம் இ லாளரொடு இயைந்த கேண்மை இல்லா கியரோ; கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென அன்றவண் உண்ணாது ஆகி வழிநாள் பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும் புலி பசித்தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மை யொடு இயைந்த வைகல் உளவா கியரோ (புறம் 190) என்பதாகும். இப்புறநானூற்றுப் பாடல் பெரியார் துணைக் கோடலையும் சிற்றனஞ் சேராமையையும் தக்க உவமை வழி விளக்குகிறது. விளைந்த பருவநிலையில் சிறிய இடத்தைப் பார்த்து வளைந்த கதிரைக் கொண்டு தன் வளை நிரம்ப வைக்கும் எலியின் முயற்சி போன்ற சிறிய முயற்சியுடைய உள்ள உறுதி இல்லாதவருடன் பொருந்திய உறவு இல்லாது ஒழிவதாக! வலிய பன்றி இடப்பக்கம் வீழ்ந்ததாக அன்று அவ்விடத்து உண்ணாமல் கிடந்து, மறுநாள் பெரிய மலையின் குகையை விட்டு, வேட்டைக்கு விரும்பி எழுந்து, பெரிய யானையாகிய கொம்பனை, வலப் பக்கத்தே வீழுமாறு செய்யும், புலி பசித்தால் போன்ற, குறையாத கொள்கை அமைந்த, வலியவர் உறவோடு பொருந்தி இருக்கும் நாள்கள் உண்டாவனவாக. என்பதே சோழன் நல்லுருந்திரன் பாடலின் திரண்ட கருத்தாகும். சிற்றினங்களில் எலியும் ஒன்று; எலி அனையாரிடம் உறவு கொள்ளற்க! தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே. தீயாரோடு இணங்கி இருப்பதுவும் தீதே. என்னும் வாக்குண்டாம் தீயவர் உறவு தீதே என்பதை எளிதாக விளக்குகிறது. பெரியாரைத் துணைக் கொண்டார் பெருமையும் சிறப்பும் வலிமையும் அடைவார் என்பது உண்மையானால், சிறியார் நெருக்கத்தால் சிறுமையும் பழியும் இழிவுமே ஏற்படும். என்பதும் உண்மையே! ஒவ்வொருவரும் தத்தம் தகுதியைப் பெருக்கிக் கொள்ளவில்லை ஆயினும், இருக்கும் தகுதியை இழந்து விடுதல் கூடாது. இழக்காமல் இருக்கச் சிற்றினம் சேராமை வேண்டும். வழிபாட்டு நேரத்தில் இறைவன் தன்னோடு இருப்பதால் அப்போழுது கொடிய விலங்குகளைக் கண்டாலும் அச்சம் தோன்றவில்லை. இறை நினைவு இல்லாத போது கொசுவைக் கண்டும் அஞ்சுகிறோம் என்கிறார் ஒரு துறவி. தகுதி அற்றவர் கூட்டுறவு எண்ணற்றவரை வீழ்த்தியிருக்கிறது. கொடுமனக் கூனியின் தொடர்பால் கைகேயி தீராப் பழிக்கு ஆளானாள். துரியோதனனின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணம். சகுனியின் கூட்டே என்பதை அனைவரும் அறிவர். இனம் இனத்தோடு சேர்ந்து வாழ்ந்தால் மரபு நிலை குன்றாதும் மாறாதும் இருக்கும். பசுவின் கன்று பன்றிக் குட்டிகளுடன் வளர்ந்தால் பசுவின் இயல்பு கெட்டு, பன்றியின் இயல்பு பற்றிக் கொள்ளும். ஒருவனது வளர்ச்சியையும் நடத்தையையும் அவனுக்குப் புறம்பே இருந்து கட்டுப் படுத்தும் பலவித ஏதுக்களே சூழ்நிலை ஆகவே நல்ல சூழ்நிலையைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்நிலை தீயதாயின் அண்டவிடாது முயன்று தற்காத்துக் கொள்ள வேண்டும். இவ்வதிகாரத் தலைப்பில் சிற்றினம் எனச் சுட்டப் பட்டுள்ளது. அதற்கு ஏற்ப முதற்குறளில் சிற்றினம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. பத்தாவது குறளில் தீயினம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ஏனைய எட்டுக் குறள்களிலும் இனம் என்னும் பொதுச் சொல்லையே பயன்படுத்தி நல்லினத்தையும் தீயினத்தையும் ஒருங்கே சிந்திக்க வைத்து நல்லினக் கூட்டை வலியுறுத்தும் பாங்கு தனிச் சிறப்புடையதாக விளக்குகிறது. --------- அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் (குறள் 428) என்பது வள்ளுவம். ஆகவே, தீவினை அச்சம் என ஓரதிகாரமே படைத்து அதில் முதற்குறளாக, தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு (குறள் 201) எனப் பாடியுள்ளார். தீய செயல் என்று சொல்லப்படும் இறுமாப்பை அடைய அருளொழுக்கம் உடைய சிறந்தோர் அஞ்சுவர். ஆனால் தீய செயலில் பழகிப்போன கொடியவர் அஞ்ச மாட்டார். இந்நோக்கில் பாடிய குறளே சிற்றினம் அஞ்சும் பெருமை, சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் (குறள் 451) என்பதாகும். பெருந்தன்மை வாய்ந்த பெரியோர் இழிந்த குணம் வாய்ந்த சிறியோர் கூட்டத்தை நெருங்குவதற்கு அஞ்சுவர். சிறியோர் தம்மைப் போன்ற சிறுமைக் குணம் வாய்ந்தோரைக் கண்ட போதே அவரைத் தம் நெருங்கிய சுற்றத் தவராக எண்ணித் தழுவிக் கொள்வர். பெரியவர் சிறியவரோடு பழக அஞ்சுவர்; சிறியார் சிறியாரையே உறவாகக் கொள்ளுவர். இனம் இனத்தைத் தழுவும் இனம் இனத்தோடே என்னும் பட்டறிவு மொழிகள் நினைவு கூறத் தக்கனவாகும். சிற்றினத் தவரொடும் செறிதல் சீரிதோ என்னும் கம்பன் வாக்கும் இதற்கு அரண் செய்யும். ------- நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்பது ஆகும் அறிவு (குறள் 452) அறிவு வளம் ஒவ்வொருவருக்கும் அவரவர் மரபு வழிப்பட்டது என்றும். ஒவ்வொருவரும் தனி நிலையில் கற்று அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், நிலை நிறுத்தவும் பயன்படுத்தவும் முடியும் என்னும் கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் திருவள்ளுவர் அறிவு வளம் தனியுடைமைப் பொருள் அன்று அது ஒரு கூட்டுடைமைப் பொருள் என்னும் கருத்துடையவராகக் காணப்படுகிறார். ஒரே தரம் வாய்ந்த விதையைப் பல்வேறு வகைப்பட்ட நிலங்களில் ஊன்றிப் பயிரிட்டால் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப விளைவுப் பெருக்கம் வேறுபடுவதை உழவர் குடிப் பிறந்தோர் நன்கு அறிவர். வானிலிருந்து பொழியும் நீரை, மண்ணில்படும் முன்பாகவே பல்வேறு இடங்களில் பிடித்து வந்து பருகிப் பார்த்தால் சுவையும் நிறமும் தன்மையும் ஒன்றுபோல்தான் இருக்கும். ஆனால் நீர் நிலத்தில் வீழ்ந்து உள்ளிறங்கி விட்டபின் பல்வேறு இடங்களில். கிணறு தோண்டி நிலத்தடி நீரை எடுத்து வந்து பருகிப் பார்த்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான சுவையும் தன்மையும் நிறமும் வாய்ந்ததாக அமைந்திருப்பதைக் கண்டுணர முடியும். இவ்வியற்கை நுட்பத்தைக் கண்டுணர்ந்த மெய்யியல் அறிஞர் திருவள்ளுவர், நீரானது எந்த நிலத்துடன் சேர்கின்றதோ அந்த நிலத்தின் தன்மையைப் பெற்றுத் தன் இயல்பிலிருந்து முற்றிலும் மாறிவிடும். அது போல மக்களுக்கும் அவர்கள் எத்தன்மை வாய்ந்த இனத்தாருடன் சேர்கின்றனரோ அவ்வினத் தாரின் தன்மைக்கு ஏற்ற அறிவே உண்டாகும் என விளக்குகிறார். மழை தான் பெய்த நிலத்தின் தன்மையைப் பெறும். அறிவு சேர்ந்த குழுவினரின் தன்மையைப் பெறும். உன் நண்பன் யார் எனக் கூறு? நீ எப்படிப் பட்டவன் என்பதை நான் கூறிவிடுகிறேன் என்னும் நன் மொழியும் மாந்தர்க்கு இனத்து இயல்பது ஆகும் அறிவு என்பதையே விளக்குகிறது. செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே (குறள் 40) என்னும் குறுந்தொகைப் பாடல் வரிகளும் நிலத்தியல் பால் நீர்திரிந்து அற்றாகும் என்னும் உவமையை வேறு ஒரு கோணத்தில் கையாண்டுள்ள நுட்பத்தை உணர முடிகிறது. புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு குலத்தியல்பு அழிந்தது, கொற்றம் முற்றுமோ வலத்தியல் அழிவதற்கு ஏது? மையறு நிலத்தியல் நீரியல் என்னும் நீரதால் எனக்கும்பகர்ணன் இராவணனுக்கு அறிவுரை வழங்கும் பகுதியில் கம்பர் இவ்வுவமையைத் தக்கவாறு பயன்படுத்தியுள்ளார். தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம் மருண்ட தன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே! உருண்ட வாய்தொறும், பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி இருண்ட கல்லையும் தன்னிறம் ஆக்கிய இரதம் என்னும் கம்பராமாயணப்பாடல் பிறிதொரு உவமை வழி மாந்தர்க்கு இனத்து இயல்பதாகும் அறிவு என்னும் கருத்துக்கு அரண் செய்வதையும் காண முடிகிறது. ------ மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல் (குறள் 453) மக்களின் உள்ளுணர்வு அவரவர் கற்ற கல்விக்கு ஏற்பவோ? பெற்ற அறிவின் விரிவுக்கு ஏற்பவவோ? அமர்ந்துள்ள பதவிக்கு ஏற்பவோ? தேடிய செல்வத்திற்கு ஏற்பவவோ தோன்றுவது இல்லை. மாசற்ற தூய மனவளம் வாய்க்கப் பெற்றால் அறம், அன்பு, அருள் அடக்கம், பொறை, ஒழுக்கம், தவம், மானம் வீரம், நாணம், அவா இன்மை, வெகுளாமை ஒருபால் கோடாமை, பிறனில் விளையாமை, பிறர் பொருளை விரும்பாமை, பிறன் ஆக்கம் பேணுதல், ஒத்தது அறிதல், ஈத்துவக்கும் இன்பம், இன்னா செய்யாமை போன்ற நல்லுணர்வுகள் உண்டாகும். மாசுற்ற தீய குறுமனம் அமைந்துவிடுமாயின் அதன் வழி கேடும் தீமையும் பழியும் நல்கும் தீய உணர்வுகளே உண்டாகும். மக்களுக்கு உண்டாகும் நல்லுணர்ச்சியும் அவரவர் மனத்தின் தன்மையைப் பொறுத்ததே ஆகும். உணர்ச்சிகளின் பிறப்பிடமாக அவரவர் மனமே அமைகிறது. ஒருவன் தனி நிலையில் ஒழுங்கும், கட்டுப்பாடும், செயல் திறனும் உதவும் பண்பும் வாய்க்கப் பெற்ற சான்றோனாக விளங்கினாலும் புகழ் பெறுதல் அரிதாகும். சான்றோர் சான்றோர் பால என்பதற்கு ஏற்ப தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டு ஒழுகினால் தான் பெரியாராக மதித்துப் போற்றப்படுவார். தம்மைச் சுற்றி எப்பொழுதும் இருப்பவர்கள், தகுதியற்ற சிறுமைத் தன்மை உடையவர்களாக இருப்பின் அவர்களைப் போன்றே பழிக்கு ஆளாக நேரிடும். ஆகவே சேரிடம் அறிந்து சேர வேண்டும். சேரும் இனம் உயர்ந்ததாயின் புகழும், இழிந்ததாயின் இழிவும் ஏற்படுவது இயற்கை. மக்களுக்கு உண்டாகும் உணர்ச்சி அவர் மனத்தைப் பொறுத்தது ஆகும். ஒருவன் இத்தன்மையன் என்று சொல்லப்படும் மதிப்பீட்டுச் சொல் அவன் சேர்ந்து வாழும் கூட்டத்தைப் பொறுத்ததே ஆகும். சான்றோர் மனநலம் நன்குடையவர் ஆயினும் தீயினச் சேர்க்கையால் பெருமை குறைந்து கெடுவர் என்பதை, மனத்தான் மறுவிலர் ஏனும்தாம் சேர்ந்த இனத்தால் இகழப் படுவர்; - புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனம் தீப்பட்டக் கால் நாலடியார் இவ்வாறு கூறுவதும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். நல்லவர்கள் கால்வழி கெடாது, நல்லவர்கள் அல்லாதவர் கால்வழியே கெடும், தீய சேர்க்கையால் பழியும் நற்சேர்க்கையால் புகழும் தத்தம் மன இயற்கைக்கு ஏற்ப உணர்வும் மக்கட்கு உண்டாகும் என்பதைச் சிறுபஞ்ச மூலம் கீழ்க் காணுமாறு கூறுவதும் அருமையான விளக்கமாகும். பாடல் வருமாறு. தக்கார் வழிகெடாது ஆகும். தகாதவர் உக்க வழியராய் ஒல்குவர் - தக்க இனத்தினான் ஆகும் பழியும் புகழும் மனத்தினான் ஆகும் மதி (சிறுபஞ்ச மூலம் 81) --------- என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். அவர்கள் எத்தன்மை உள்ளவர்களாக வளர வேண்டும் என்றும் முன்கூட்டியே சொல்லிவிடுங்கள் அக்குழந்தைகளின் மரபு நிலையைப் பற்றி எனக்குச் சற்றும் கவலை இல்லை. சூழ்நிலையின் உதவி கொண்டே பேரறிஞர்க ளாகவோ, பெருங்குற்றவாளிகளாகவோ அவர்கள் வளரும்படி செய்து காட்டுகிறேன் என்று தீவிரச் சூழ்நிலை வாதிகளில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான வாட்சன் என்னும் உளவியல் அறிஞர் கூறும் கருத்தை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தெளிவுபடுத்திய பேரறிஞர் வள்ளுவர் என்பதை மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துளது ஆகும் அறிவு (குறள் 454) என்னும் குறள் வழி உணர முடிகிறது. சில அறிஞர்களைக் கண்டு அவர்களின் அறிவுக் கூர்மையை வியந்து பாராட்டுகிறோம். அவர்களின் மன வளமே அன்னாரிடம் இத்தகைய அறிவு வளம் பெருகி நிற்பதற்குக் காரணம் என நினைக்கிறோம். இன்னும் நெருங்கிக் காரணத்தை அறிய முற்படுகின்ற போழ்து வேறொரு உண்மை புலப்படுகின்றது. அவ்வுண்மை யாது என வினவின் அவர்களோடு ஒன்றாகி உடனாகிப் பழகியவர்கள் அனைவரும் நல்ல அறிவுடையவர்கள். அந்தச் சேர்க்கை தான் இவருடைய அறிவை மேலும் வளமும் கூர்மையும் உடையதாய் ஆக்கி இருக்கிறது. இவருடைய நுண் மாண் நுழை புலத்திற்கு இனச் சார்பே முக்கிய காரணம் ஆகும். அறிவு மனத்தை ஒட்டியது போல் தோன்றலாம். உண்மையில் அறிவு பழகும் இனத்தை ஒட்டியதே ஆகும். ஓநாயால் வளர்க்கப்பட்ட இரு இந்துக் குழந்தைகளிடம் மானிட இயல்பு குன்றி ஓநாயின் இயல்பு மேலோங்கிக் காணப்படுவதைக் கண்ட அறிஞர்கள் இக்கருத்தை வெளிப் படுத்தியுள்ளனர். கேட்டதைச் சொல்வது கிளியின் இயல்பு. இறைச்சிக் கடைக்காரர் வளர்த்த கிளி வெட்டு, துண்டு துண்டாக்கு! எலும்புக் கறி கிலோ 75 ரூபாய்; எலும்பில்லாக் கறி கிலோ 100 ரூபாய் என்கிறது. ஒரு பண்பட்ட துறவியின் ஆசிரமத்தில் வளர்ந்த கிளி வணக்கம்! வாருங்கள்! அமருங்கள்! உங்களுக்கு ஒரு குறையும் நேராது! வழக்கம் போல் கடவுளை வணங்குங்கள்! கடமை தவறாதீர்கள்! வாழ்த்துகிறேன் என்கிறது. பழகும் சூழலே அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை ஆகும். மனத்தால் தோன்றும் அறிவை விட, இனத்தால் தோன்றும் அறிவே வலிமை உடையது. --------- ஒவ்வொருவரும் குற்ற மற்ற மனத்தினராகவும், குற்றமற்ற செயல் களையே செய்பவராகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க வேண்டு மானால் சேர்ந்து பழகும் கூட்டத்தினரும் குற்ற மற்ற மனமும் குற்ற மற்ற செயல் திறனும் உடையவராய் அமைய வேண்டும். ஒருவருக்கு உள்ளம் தூய்மையாக இருத்தல், அவர் செய்யும் செயல் தூய்மையாக இருத்தல் ஆகிய இரண்டு தன்மைகளும் அவர் சேர்ந்து பழகும் இனத்தின் தூய்மையைப் பற்றுக் கோடாகக் கொண்டே அமையும். மனத் தூய்மை, செயல் தூய்மை இரண்டும் நல்ல கூட்டுறவால் வரும், என்பதை, மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். (குறள் 455) எனும் குறள் விளக்குகிறது. ஒருவர் தாம் செய்யும் தவறுகளை ஒப்புக் கொள்ளுவது தான் உள்ளத் தூய்மையைக் காட்டும் வழி என்னும் அலெக்சாண்டர் போப் கூறும் கூற்று மனத்தூய்மையை அறிய ஒரு வழியாகும். --------- இவர் நடுவு நிலையாளர்: இவர் நடுவு நிலையற்றவர் என்பது ஒவ்வொரு வரும் இவ்வுலகில் வாழ்ந்த போது வைத்துச் சென்ற மக்கள், பொருள், புகழ், பழி முதலியவற்றால் தெரியவரும் என்பதை நடுவு நிலைமை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் (குறள் 114) என்னும் குறள் வழி விளக்கினார். வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின் (குறள் 238) என்பது புகழ்க் குறள். புகழ் என்னும் நிலைப் பொருளைப் பெறாவிட்டால் உலக வாழ்வினர் அனைவர்க்கும் பழியாகும். எச்சம்என்று என் எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்? (குறள் 1004) இஃது நன்றியில் செல்வம் என்னும் அதிகாரத்தில் எச்சத்தை உணர்த்தும் குறள். எவராலும் விரும்பும் செயல் புரியாதவன் இறுதியில் வைத்துப் போவதுதான் என்னவோ? என்னும் போக்கில் நல்ல எச்சம் பெற வழியும் பயனும் கூறும் அருமைக் குறளே, மனம் தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம் தூயார்க்கு இல்லை நன்று ஆகா வினை (குறள் 456) என்பதாகும். யார்க்கு எச்சம் நன்றாகும்? மனத்தூய்மை காத்து வாழ்பவர்கட்கு எச்சம் நன்றாகும். மனத்தூய்மையர் வாய்திறந்து பேசும் சொற்கள் எல்லாம் இனியதாய், பயனுடையதாய், வாய்மையாய், தூயதாய் அமையும். அவ்வாறே அவர்கள் செய்யும் பணி எத்தகையதாய் இருப்பினும் செய்யும் நெறி குற்ற மற்றதாய் விளங்கும். அவர்கட்குப் பழிபிறங்கா அறிவுடை நன்மக்களே தோன்றுவர். அவர்கள் தேடிய பொருள் எதுவாயினும் வழிவழி சிறப்பும் பெருமையும் நல்குவதாய் அமையும். அவர்கள் பயன் கருதாப் பொது நலத்தொண்டால் அழியாப் புகழ் பெற்று விளங்குவர். எவர்க்கு நன்றாகா வினை இல்லை? அறன் அறிந்து மூத்த அறிவுடை யார் என்றும் உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார் என்றும் தகைமாண்ட தக்கார் என்றும் குன்றன்னார் என்றும் ஏந்திய கொள்கையார் என்றும் வள்ளுவரால் குறிக்கப்படும் குற்றமற்ற நல்லார் கூட்டுறவு எவர்க்கெல்லாம் வாய்த்திருக்கிறதோ அவர்கள் செய்யும் எந்தச் செயலும் நற்செயலாகவே இருக்கும். எந்தத் தீய செயலையும் செய்யும் சூழ்நிலை அவர்கட்கு எப்போதும் உண்டாகாது. மனத் தூய்மையர் மண்ணில் விட்டுச் செல்வதெல்லாம் நல்ல தாகவும் நன்மை தருவதாகும் அவர்க்கும் புகழ் தருவதாகவுமே இருக்கும். அத்துடன் கூட்டாளிகளும் மனத்தூய்மையராக அமைந்து விடின் நிகழும் செயலெல்லாம் நற்செயலாகவே அமையும் என்பது உறுதி என்பதே வள்ளுவர் வலியுறுத்தல். ------- மனம் தூய்மையாய் இருப்பதனால் பத்து மனிதர்களின் பலத்தை உடையவராகிறோம் என மனத்தூய்மையால் விளையும் ஆக்கத்தை டெனிசன் என்னும் அறிஞர் கூறுகிறார். பொதுவாக ஒருவன் என்ன செய்ய இயலும் என்பதனை மரபு நிலையாகிய மன நிலையும், ஒருவன் என்ன செய்கிறான் என்பதைச் சூழ்நிலையும் உறுதி செய்கின்றன. சிறுவரின் வளர்ச்சியும் முன்னேற்றமும் மரபு நிலை + சூழ்நிலை என்ற கூட்டலின் விளைவன்று. மரபு நிலை X சூழ்நிலை என்ற பெருக்கலின் விளைவாகும் என்ற கருத்துடையவர் அறிஞர் உட்வொர்த் ஆவார். மானிடப் பிறப்பினர்க்குப் படிப்படியான நல்ல வளர்ச்சியை நல்கக் கூடியது. அவரவருடைய நல்ல மனமே ஆகும். குற்றமற்ற நல்லோரின் கூட்டுறவு பெறத் தக்க எல்லாப் புகழையும் தரும். நன் மனம் ஆக்கம் தரும்; நற்கூட்டு எல்லாப் புகழும் தரும் என்பதை மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இன நலம் எல்லாப் புகழும் தரும் (குறள் 457) என்னும் குறள் வழி தெளிவுபடுத்துகிறார். மனநலம் உள்ளவனிடம் காணப்படும் முக்கியமான பண்புகள். சிலவற்றைக் கண்டால் வள்ளுவரின் உளவியல் அறிவு பலப்படும். 1. தன்னைத்தான் அறிந்து குறைகளை அகற்றி, நிறைகளை வளர்த்துக் கொள்ளுதல். 2. மனப் போராட்டங்கள் இல்லாது இருத்தல், உண்மை நிலை அறிந்து ஒழுகல், நல்ல உடல் நிலை, மன நிலை, மன எழுச்சி, முதிர்ச்சி ஆகியவற்றைப் பெற்றிருத்தல். 3. பிறரால் விரும்பப்படுதல், நண்பர்களைப் பெற்றிருத்தல், தலைமை தாங்கவோ, பின்பற்றவோ தேவைப்படும் திறன்களைப் பெற்றிருத்தல், பல திறப்பட்ட கவர்ச்சிகளைக் கொண்டிருத்தல். 4. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு பயந்து ஒளியா திருத்தல். சிக்கல்களை எதிர் கொண்டு தனது நுண்ணறிவின் துணை யால் சமூகச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவற்றிற்குத் தீர்வு காணல். 5. பொதுவாக உளநலம் பெற்றவனது வாழ்க்கை எந்நிலையிலும் மகிழ்ச்சி நிரம்பியதாகக் காணப்படும். மனநலம் நன்குஉடைய ராயினும் சான்றோர்க்கு இன நலம் ஏமாப்பு உடைத்து (குறள் 458) இயல்பாகவே சான்றோர் மனத்தூய்மையும் மன வளமும் அமைந்தவ ராய் இருப்பர். ஊழி பெயரினும் தாம் பெயரார். எனத் திருவள்ளுவரால் சுட்டப்படுபவர். அவர்கள் வாய்மொழி யும் செய்யும் செயலும் தூயதாகவே இருக்கும் நன்மையே தருவதாக இருக்கும். எனினும் மனநலம் வாய்ந்த சான்றோரும் மன நலத்தை உறுதியுடன் பேணுவதற்கும். தம் வலிமையைப் பெருக்கிக் கொள்வதற்கும், தக்க பாதுகாப்பைத் தேடிக் கொள்வதற்கும் நல்லவர்கள் தொடர்பு கட்டாயம் தேவை. சான்றோர்க்கு மனநலம் நல்லதாக இருப்பினும் பழகும் இனமும் நல்லதாக இருப்பது நனிசிறப்பாகும் என்பதை வலியுறுத்த வேண்டிப் பாடிய குறட்பாவே, மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து (குறள் 458) என்பதாகும். பாலோடு ஆளாய நீர் பால் ஆகும் அல்லது நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் - தேரின் சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல, பெரியார் பெருமையைச் சார்ந்து. என்னும் நாலடியார் பாடலும் இதற்கு நல்ல தொரு இலக்கியச் சான்று ஆகும். --------- மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இன நலத்தின் ஏமாப்பு உடைத்து (குறள் 459) மன நலத்தினால் விளையும் நன்மை அன்றோடு முடிந்து விடுவது இல்லை. வாழ்நாள் முழுமையும் நற்பயன் நல்கும். என்றும் நிலைத்த புகழ் பெறுவதற்கும் அடித்தளமாய் அமையும். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் அறத்தான் வருவதே இன்பம் அறம்... பொன்றுங்கால் பொன்றாத் துணை அஃதொருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்காக்கம் எவனோ உயிர்க்கு? என்னும் வள்ளுவங்கள் அதற்கு அரண் செய்கின்றன. குற்ற மற்ற மனம் பொருந்திய பெருமக்களின் மன நலத்திற்கும் உடல் நலத்திற்கும் வினை நலத்திற்கும் குடும்ப நலத்திற்கும் என்றென்றும் வலிமை கூட்டி நற்காவலாய் அமையும் தகுதி அவர்கள் சேர்ந்து பழகும், குற்ற மற்ற நற்பண்புகள் நிறைந்த சான்றோர் திருக் கூட்டத்திற்கே உண்டு. நல்லோர் கூட்டுறவே எல்லா நிலைகளிலும் சிறந்த பாதுகாப்பாய் அமையும். ஆகவே, சிற்றினச் சேர்க்கைக்கு மறந்தும் இடந்தரல் ஆகாது. நல்லோர் கூட்டைத் தேடிப் பெற்று நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். தூய்மையான இன்பத்தை அறி. இறைவனையும் அறிவாய் என்னும் அரவிந்தர் வாக்கும் ஒப்பு நோக்கத் தக்கது. நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை; தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் (குறள் 460) துணைகளில் எல்லாம் சிறந்த துணை; நல்லவர் நட்பால் பெறும் துணையாகும். நல்லவர் துணைக்கு இணையாக வேறு எந்தத் துணையும் அமைய முடியாது. நல்லவர்களே தமக்கு வேண்டியவர் எவரும் துன்பத் திற்கு ஆளாகிவிடக் கூடாது. தீமை தரும் செயல் எதையும் மறந்தும் செய்துவிடக்கூடாது எனக் கண்ணும் கருத்துமாய் இருந்து காப்பார். தவறு கண்டால் கடிந்து உரைத்துத் திருத்தும் உரிமை உடையவர் அவரே! தீயவரை நண்பராகக் கொண்டவர்களுக்கு அவர் தீயவராகத் தோன்றார். அவரும் நல்லவராகவே நடிப்பார். இவரும் நல்லவர் என்றே நம்புவார். அவரைப் பற்றி எந்த வித ஐயமும் தோன்றாது. தீயவர் பகைவராய் இருந்து கேடு செய்யினும், தக்கவாறு அப்பகைமை யால் விளையும் கேடுகளைத் தடுக்கவும் முடியும், விலக்கவும் முடியும். ஆனால் தீயவரை நண்பராகக் கொண்டால் படக் கூடாத தொல்லை களை எல்லாம் பட வேண்டியது நேரலாம். விரைவில் சேர்ந்தவரைத் தம்மைப் போல் தீயவர் ஆக்காமல் விடமாட்டார். சேர்ந்தே குற்றங்கள் செய்ய நேரிடும். சில குற்றங்களைச் செய்யாது விலகி இருந்தாலும். செய்த குற்றங்கட்கு மட்டும் அல்லாது செய்யாத குற்றங்கட்கும் தண்டனை ஏற்க நேரும். ஆகவேதான் வள்ளுவர் தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் என்கிறார். ஒருவனுக்கு, நல்லவர் நட்பைக் காட்டிலும் மேலான வேறு துணை யும் இல்லை. அவ்வாறே தீயவர் சேர்க்கைப் போலத் தொல்லைப் படுத்துவதும் வேறு இல்லை. நல்லினம் நற்றுணையாம்! தீயினமே கேடு தரும் பகையாம்! நல்லினத்தின் ஊங்கும் துணை இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைவது. அனுமனை நோக்கிச் சுக்கிரிவன் உன்னையே உடைய எற்கு அரியது எப்பொருள் எனக் கூறுவதாக வரும் கம்பன் கவிதை வரி. உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரப் புணருமாம் இன்பம், புணரின் தெரியத் தெரியும் தெளிவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய் என்னும் நாலடியார்ப் பாடலும் தக்க சான்றே! நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று தீயாரைக் காண்பதுவும் தீதே, திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே, தீயா ரோடு இணங்கி இருப்பதுவும் தீது. எனும் வாக்குண்டாம் பாடல்கள் நல்ல எளிய விளக்கமாகும். ------- பெருமையர் சிற்றினம் சேர அஞ்சுவர் சிறுமையர் சிற்றினத்தைச் சுற்றமாகக் கொள்வர் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நீரின் தன்மை மாறும் மாந்தர்க்கு அறிவு இனத்தின் இயல்பால் அமையும் மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆகும் மாந்தர்க்கு அறிவு மனத்து உளதுபோல் காட்டும் மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் மனநலத்தினால் ஆகும் மறுமை இனத்தான் ஆகும் இன்னான் எனப்படும் சொல் இனத்து உளதாகும் அறிவு மனந்தூய்மைக்கு இனந்தூய்மையே அடிப்படை செய்வினை தூய்மை இனந்தூய்மை தூவா வரும் இனம் தூயார்க்கு நன்றாகா வினை இல்லை இன நலம் எல்லாப் புகழும் தரும் சான்றோர்க்கும் இனநலம் ஏமாப்புடைத்து நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல் ---------- 47. தெரிந்து செயல் வகை நாடாளுவோர் பொறுப்பும் கடமையும் பெரிதாகும். அவர்கள் செய்யும் பணிகள் பலவகைப்படும் எனினும் அவற்றை அறிஞர்கள் 1. காவற் பணி, 2. போர்ப்பணி, 3. ஆட்சிப் பணி 4. வருவாய்ப்பணி 5. அறப்பணி 6. முறை செயற்பணி என்னும் ஆறு வகைகளில் அடக்குவர். நாடாளுவோர் பணிகளில் ஒன்றாய் அமைந்துள்ள போர்ப்பணி நான்கு வகையினது. அவையாவன, தெரிந்து செய்தல், வலியறிதல், காலம் அறிதல், இடன் அளிதல் என நான்கு வகைப்படும். தெரிந்து செய்தலைத் தெரிந்து செயல் வகை என்னும் இவ்வதிகாரம் பேசுகிறது. அதாவது ஆட்சித்தலைவன் தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யும் திறம் இங்கு வினைகள் எனப் படுவன போர்ச் செயல்கள் எனப்பரிமேல் அழகர், மணக் குடவர் முதலான உரையாசிரியர் கருதுகின்றனர். மனிதப் பிறப்பே செயலாற்றப் பிறந்த பிறப்பாகும். பொறுப்பு வேறு வேறாய் அமையினும் தத்தம் நிலையில் அனைவரும் செயல்பட வேண்டியவர்களே யாவர். வீடு கூட்டும் செயலாயினும் சரி, வீடு கட்டும் பணியாயினும் சரி, நிலத்தை உழுது பயிரிடும் பணியாயினும் சரி, வீட்டை ஆளும் பணி யாயினும் சரி, ஊரை ஆளும் பணியாயினும் சரி, நாட்டை ஆளும் பெரும்பணி ஆயினும் சரி. எப்பணியையும் அறிவறிந்த மக்கள் நன்கு ஆராய்ந்தே செய்தல் வேண்டும். உழவுத் தொழில் செய்து வாழ வேண்டும் என விரும்பும் ஒருவர் அண்டை அயலில் உழு தொழில் புரிவாரைக் கண்டு தொழிலின் தன்மையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தம் கையில் இருக்கும் தொகைக்கு ஏற்ற அளவு நிலமே வாங்கத் திட்ட மிட வேண்டும். நிலம் நன்னிலமா? நீர் வாய்ப்பு எளிதில் கிட்டுமா? ஊருக்கு அண்மையா? சென்றுவர பாதை வாய்ப்பு உள்ளதா? இந்நிலத்திற்கு இவ்வளவு தொகை தரலாமா? எனத் தொடர்ச்சியாய்ப் பலவற்றை ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்த்தே அம்முயற்சியில் இறங்க வேண்டும். ஆழம் தெரியாமல் காலை வையாதே என்னும் பழமொழி ஆழமான கருத்துடைய தாகும். செய்யும் செயல் எதுவாயினும் ஏன் ஆராய வேண்டும்? எப்படி ஆராய வேண்டும், எத்தகைய செயலைச் செய்ய வேண்டும்? எத்தகைய செயலைச் செய்தல் ஆகாது? என்பன போன்ற அரிய சிந்தனைகளைச் செய்து ஏற்புடைய செயலை, ஏற்ற முறையில் செய்து வெற்றி பெற வழி காட்டும் அருமையான வழி காட்டியே தெரிந்து செயல் வகை என்னும் இவ்வதிகாரம் ஆகும். அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். (குறள் 461) ஆராய வேண்டுவன பல இருப்பினும் இம்முதற் குறளில் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் மூன்று வகைச் சிந்தனை கட்டாயம் வேண்டும் என்கிறார். மூன்றில் முதலில் சிந்திக்க வேண்டுவது இழப்பு பற்றிய சிந்தனை யாகும். பொருள் இழப்பு, கால இழப்பு, உழைப்பு இழப்பு ஏன்? உயிரிழப்புக் கூட நேரும் வினைகள் உண்டு. எவ்வகை இழப்புகள் எவ்வளவு இழப்புகள் நம்மால் தாங்கிக் கொள்ள இயலும் எனத் தெளிவான விவரங்களைச் சேர்த்துக் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். இரண்டாவது சிந்தனை ஆவது பற்றிய சிந்தனையாகும். செயலைச் செய்து முடித்தால் கிடைக்கும் நன்மைகள் யாவை? என்பதையும் நன்கு சிந்திக்க வேண்டும்? போவதையும் ஆவதையும் சிந்தித்துப் பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து கிடைக்கும் வருவாயையும் சிந்தித்தே முடிவுக்கு வருதல் வேண்டும். ஒரு வேலையைச் செய்ய முற்படும் முன் அதற்காக என்னென்ன வகைகட்கு எவ்வளவு எவ்வளவு செலவு செய்ய வேண்டியது இருக்கலாம் என்பதையும் அவ்வேலையை நாம் செய்வதனால் என்னென்ன நன்மைகள் கிட்டும் என்பதனையும் அவ்வேலை முடிந்தபின் அதன் வழியாகப் பின்னர் தொடர்ந்து பார்த்து, செலவை விட வரவும் வழி வழி ஊதியமும் கிட்டும் எனத் தேர்ந்து தெளிந்த பின்னரே ஒரு வேலையில் கால் வைப்பது அறிவார்ந்த செயலாகும். அழிவது எது? எவ்வளவு? ஆவது எது? எவ்வளவு? கிட்டும் ஊதியம் எது? எவ்வளவு? என்பதை நன்கு எண்ணிப்பார்த்து வினை செய்தால் பின் வருந்த வேண்டிய நிலை ஏற்படாது. சேதாரம் இன்றி அணிகலன் செய்தல் இயலாது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரம் பவுணுக்கு இவ்வளவுதான் சேதாரம் இருக்கலாம் என்ற தெளிவும் வேண்டும். ஆட்டில் பாதி ஓநாய் என்பது போல் இருந்தால் பெரிய மந்தையும் என்னாகும்! உழவர் ஒருவர்க்குச் சொந்த நிலம் இருக்கிறது. வாழை பயிரிட எண்ணம் வந்தது. என்ன செய்ய வேண்டும்? நிலத்தைப் பன்முறை உழுது மேடு பள்ளம் இல்லாமல் சமப்படுத்தி முதற்கண் பண்படுத்த வேண்டும். மேல் மண் தேவைப்பட்டால் கொண்டு வந்து நிலத்தில் பரப்ப வேண்டும். புழுதியில் நன்கு செமித்த சாண உரம் இட வேண்டும். வாய்க்கால் வரப்பு, பாத்தி கட்ட வேண்டும். நாம் விரும்பும் நல்ல வாழைத் தூர்களைத் தக்க பணியாள் துணையுடன் ஊன்றி நீர் பாய்ச்ச வேண்டும். அடி ஈரம் இருக்குமாறு தொடர்ந்து நீர் பாய்ச்சி வர வேண்டும். மழை வாய்ப்பையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இடை இடையே உரம் இட வேண்டும். களைகள் முளைத்தால் அகற்ற வேண்டும். மாதம் ஒரு முறை சுற்றிலும் மண்ணைக் கிளறி விட வேண்டும். ஓராண்டு, காற்று மழையால் வாழை சாய்ந்து விடாமல் காக்க வேண்டும். தேவைப் பட்டால் மரக்கம்பு கொண்டு முட்டுக் கொடுக்க வேண்டும். நோய் எதுவும் பற்றாமல் இருக்கத் தக்க மருந்து தெளிக்க வேண்டும். எதிர்பாராமல் ஏதேனும் பூச்சிகள் தாக்கினால் அழிவு ஏற்படாமல் இருக்க உரிய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். வாழையின் பக்கத்தே தோன்றும் கன்றுகளின் இலையும் பயன்படும் பொருள்தான் அதனையும் தொடர்ந்து தக்க வளர்ச்சியில் அறுத்தெடுத்து நாமும் உண் கலமாய்ப் பயன்படுத்திக் கொள்ளலாம். விற்பனை செய்தும் ஓரளவு காசு தேடிக் கொள்ளலாம். வாழைகுலை தள்ளி நன்கு முற்றிய பின்னர் காயாகவே விற்பனை செய்யலாம். பழுக்க வைத்துப் பழமாக வும் விற்கலாம். வாழைப் பூ, தண்டு, மட்டை எல்லாம் பயன்படும் பொருள்களே! காய்த்த பின் தூரை மட்டும் அப்படியே விட்டுத் தொடர்ந்து பயிரிடலாம். வாழை அடி வாழை நம்மை வாழ வைக்கும், செலவும் அதிகம், உழைப்பும் அதிகம், காவலும் மிகுதி, காலமும் அதிகம் எனினும் நிறைந்த வருவாயும் ஈட்டலாம்! எண்ணிச் செய்க! இத்தகைய சிந்தனை எல்லாத் தொழில்கட்கும் தேவை! எப்பணி செய்வோர்க்கும் தேவை! சிந்தித்துச் செயல்படுக! சிறந்த பயன் எய்தலாம்! இழப்பைக் குறைக்கலாம்! ஊதியத்தைப் பெருக்கலாம் எனத் தெளிவும் ஊக்கமும் ஊட்டவே, அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் (குறள் 461) என வள்ளுவர் செயல் நெறி காட்டுகிறார். எந்தச் செயலையும் அவசரப் பட்டுத் தான் தோன்றித் தனமாகச் செய்ய முற்படுதல் நல்ல தல்ல. எல்லாரும் எல்லாந் தெரிந்தவர்கள் என்றும் சொல்ல முடியாது. அதுபோல் எவராலும் செய்ய முடியாத வேலை என்று முத்திரை பதிக்கப் பட்ட வேலை இது என்று உலகில் எந்த வேலையும் இல்லை. தேர்ந்தெடுத்த அறிஞர்களோடு கலந்து ஆராய்ந்து, தானும் தனித் திருந்து சிந்தித்துத் திட்டமிட்டுச் செயல்புரியும் வழி வகையைப் பின் பற்றி எச்செயலையும் செய்யும் வல்லமை வாய்ந்தவர்கட்குக் கிட்டாத அரிய பொருள் என எப்பொருளும் உலகில் இருக்க முடியாது. அரும் பொருளையும் இயல்பாய் அடைய, எண்ணிச் செய்ய வேண்டும். அதனையும் தேர்ந்து எண்ணிச் செய்ய வேண்டும். அத்துடன் தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் எப்பொருளும் கைவந்த பொருளே ஆகும். செயலிலே முடியும் செயல் இது; முடியாச் செயல் இது. என எச்செயலும் இல்லை. செயலில் நமக்குத் தெரிந்த செயலும் இருக்கலாம். நமக்குத் தெரியாத செயலும் இருக்கலாம். முன்பே நாம் குறிப்பிட்ட ஒரு தொழிலில் தன்னிகரற்ற பயிற்சியும் தேர்ச்சியும் திறனும் வல்லாண்மை யும் வாய்ந்தராய் இருக்கலாம். அதை விடுத்து பிறிதொரு தொழிலும் தொடங்கி நடத்த விரும்பு கிறோம் அத்தொழிலில் நமக்குப் படிப்பறிவும் இல்லை பட்டறிவும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் செய்ய எண்ணிய தொழில் செய்யும் தொழிலை விடப் பல வகையிலும் சிறந்த தொழிலாகத் தெரிகிறது. அப்படியானால் நாம் அஞ்சவோ தயங்கவோ வேண்டிய தில்லை. அந்தத் தொழிலைத் திறம்படச் செய்பவர்களில் நம் வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டவர் யார் எனக் கண்டுணர்ந்து, அவர்களைப் பக்குவமாக அணுகி, அத்தொழிலைத் தொடங்கவும், திறம்பட நடத்துவதற்கு ஏற்ற வழி வகைகளை எல்லாம் தெரிந்து கொண்டு, நமக்குள்ள ஐயப்பாடுகளை எல்லாம் போக்கிக் கொள்வதுடன், அவர்களை வழி காட்டியாய்க் கொண்டு முழுவிவங்களை அறிந்து கொண்டு, அதனை நம் தகுதிக்கும் வாய்ப்புக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு முறைப்படுத்திச் சிந்தித்துச் செயல்படும் வல்லமை உடையவர். எந்தத் தொழிலையும் விரைவில் கற்று உயர்நிலை அடைவார் இத்தகைய முறையான வழி முறைகளைப் பின்பற்றிச் செயல்படு பவர்கட்கு செய்ய முடியாச் செயல் என்று எதுவும் இருக்க முடியாது என்பதை வலியுறுத்தித் தன்னம்பிக்கை ஊட்டப் படைத்த குறளே, தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் (குறள் 462) என்பதாகும். எது தெரிந்த இனம். 1.braš புரிய முற்படுவார்க்கு நன்கு தொடர் புடைய, உரிமையும் உறவும் உடைய இனம் என்றும் கூறலாம். 2. தொழில் பற்றிய நுணுக்கங்கள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்து தெளிவு கண்ட இனம் என்றும் கூறலாம். 3. நமக்குத் தேவையான செயலில் முதிர்ந்த பட்டறிவு உடைய இனம் என்றும் கூறலாம். தொழிலுக்குரிய உயர் கல்வியும் தொழில் செய்து முதிர்ந்த பட்டறிவும் உடையவராய் இருப்பதோடு, நம்மையும் நன்கு தெரிந்த வழிகாட்டி அமைந்தால் எத்தொழிலிலும் கொடி கட்டிப் பறக்கலாம். ----------- ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்? (குறள் 463) அறிவுடையார் ஆவது அறிவார். ஆகவே, அறிவுடையார் எச்செயலையும் நன்கு ஆராய்ந்தே செய்வர். நன்மையும் பெருமையும், வளமையும் சேர்க்கும் செயல்களையே செய்வர். வம்பில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள், வேண்டாத வேலையைச் செய்ய எண்ண மாட்டார்கள், முன்னேற விரும்புவார்கள்! எனினும் பேராசைப் படமாட்டார்கள். அவர்கட்கு அவர்களின் உடல் வலிமையும் தெரியும், உள வலிமையும் தெரியும், பொருள் வலிமையும் தெரியும், சூழ உள்ளவர் வலிமையும் தெரியும், தாம் செய்ய முற்படும் செயலுக்கு எவரெல்லாம் போட்டியாக வருவர் என்பதையும் ஓரளவு அறிவார்கள். அவர்களின் வலிமையையும் தக்க வழி முறையில் தெரிந்து கொள்வார்கள். ஆகவே இவர்கள் பேரிழப்புக்கோ பழிக்கோ ஆளாக வேண்டிய நிலை ஏற்படாது. மண்ணாசை கொண்டு அண்டை நாட்டின் மீது படையெடுத்துச் சென்று போரில் தோற்று, தன்னுடைய நாட்டையும் இழக்கும் இழிநிலைக்கு அறிவுடையோர் ஆளாக மாட்டார். பெரும் பதவிக்கு ஆசைப்பட்டு, இருக்கும் பதவியை இழக்க அறிவுடையவர் துணிய மாட்டார்கள். அரசனை நம்பிக் கணவனைக் கைவிட்டது போல செயல்படுவோர் அறிவும் ஆராய்ச்சியும் இல்லாத வர்களே ஆவர். எல்லா நேரங்களிலும், எல்லாப் பணிகளிலும் எல்லா இடங்களிலும் மிகுந்த பயன் அல்லது மிகுந்த வருவாயை ஈட்ட இயலாது போகலாம். எனினும் கைப்பொருளாம் மூலதனத்தை இழந்து விடும் பொருந்தாப் பணி செய்ய அறிவுடையோர்கள் முற்படமாட்டார்கள். பேறுகாலத் தொல்லையில் குழந்தை மாண்டாலும் பாதகம் இல்லை எப்படி ஆயினும் பெரிய உயிரைக் காக்க வேண்டும் என்றுதான் மருத்துவ உலகமும் முயலும், குடும்பத்தார் உற்றார் உறவினர் அனைவரும் அவ்வாறே தூண்டுவர் அஃதே இயற்கையும் முறையும் ஆகும். இரும்பைப் பொன்னாக்கவும், பணத்தை இரட்டிப் பாக்கவும் ஆசைப் பட்டு முயன்று உள்ளதையும் இழந்து போகிறவர்கள் அறிவுடைமையோ ஆராய்ச்சியோ இல்லாதவர் ஆவர். எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் பெரும் பயனைக் கற்பனை செய்து கொண்டு உள்ள மூலதனத்தையும் இழக்கும் செயல்களைச் செய்ய அறிவுடையார் முயற்சி செய்யவும் மாட்டார்கள். பிறரையும் செய்யத் தூண்டவும் மாட்டார்கள். வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால் ஊண்இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின், நெஞ்சத்து ஏண் இகந்து இலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார் சேண் இகந்து உய்யப்போ, நின் செறி தொடி ஒளிய என்றார் என்னும் சீவகசிந்தாமணி (770)ப் பாடல் நல்லதொரு எடுத்துக் காட்டாகும். ---------- தெளிவி லதனைத் தொடங்கார், இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர் (குறள் 464) புகழும் பெருமையும் அடைய விரும்புவோர் எச்செயலையும் செய்யத் தொடங்கும் முன்பே, அச்செயலில் ஈடுபட்டுப் பொருளும் புகழும் ஈட்டிய பெருமக்களிடம் முழு விவரங்களைக் கேட்டறிந்து, தம் படிப்பறிவு, பட்டறிவின் துணைக்கொண்டு நன்கு சிந்தித்து ஒரு தெளிவான முடிவிற்கு வந்த பின்னரே எச்செயலையும் செய்யும் முயற்சியில் ஈடுபடுவர். அவர்கள் தாம் மேற்கொள்ளும் எந்தத் தொழில் மூலமாகவும் தமக்கு இழிவு என்று சொல்லப்படும் குறைபாடு, எக்காரணம் கொண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கருத்துடையவர்களாய் இருப்பர். ஆகவே, தமக்கு முழுத் தெளிவு ஏற்படாத வகையில் எந்தச் செயலையும் செய்ய விரும்ப மாட்டார்கள். தமக்கு இளிவு தரும் குற்றம் நேர்ந்து விடக் கூடாது என அஞ்சி வாழ்வோர் தமக்குத் தெளிவாகப் புரியாத எச்செயலையும் தொடங்கார். தேற்றம் இல்லாதான் துணிவு இன்னா! என இன்னா நாற்பதும் சுருங்கமாகக் கூறுகிறது. ஒடித்து வான்தோள் அனைத்தும் தலைபத்தும் உதைத்து உருட்டி முடித்து, இவ்வூர் முடித்தால் மேல்முடிவது எலாம் முடிந்து ஒழிக! என்று ஊக்கி, எயிறு கடித்து இருகரனும் பிசைந்து எழுந்து நின்று, ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால்; ஒன்று ஊக்கி, ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்தன்றால் பின்தூக்கின் இது சாலப் பிழை பயக்கும் எனப் பெயர்ந்தான். இலங்கையில் இராவணனைக் கண்ட அனுமனின் மன நிலையைக் கம்பர் இவ்வாறு எடுத்துரைக்கிறார். இஃது அனுமன் இளிவென்னும் ஏதப்பாட்டிற்கு அஞ்சுபவன் என்பதற்கு நல்ல சான்றாகும். வகையறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு (குறள் 465) செய்ய முற்படும் செயல் எதுவாயினும் அச்செயலின் வகைகள் அனைத்தையும் நன்கு தெளிவாக ஆராய்ந்து அதன் நுட்பங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டுவது அடிப்படைப் பணியாகும். ஆராய்ந்து அறியாமல் ஒரு செயலைச் செய்தால் என்ன? ஆராயாமல் செயலில் இறங்குவதை விட செயலின்றி இருப்பது மேல். ஏனெனில் ஆக்கம் பெறவில்லையாயினும் கேடாவது இல்லாது இருக்கும். எங்கே போக வேண்டும்? ஏன் போக வேண்டும்? எப்படிப் போக வேண்டும்? எப்பொழுது போக வேண்டும்? என்று கூட எண்ணித் திட்டமிடாதவனால் எங்கே போக முடியும்? எப்படிப் போக முடியும். ஓரூர் செல்ல நடை பாதையும் இருக்கலாம். வண்டிப் பாதையும் இருக்கலாம். பேருந்துத் தடமும் இருக்கலாம். தொடர் வண்டிப் பாதையும் இருக்கலாம். இல்லாது வான ஊர்தியிலும் செல்ல வாய்ப்பு இருக்கலாம். நாம் இதில் எப்பொழுது எப்படிப் போகப் போகிறோம் என்ற தெளிவான திட்டம் தேவை. ஆராய்ந்து தெளிவான முடிவுக்கு வருமுன்பே செயலில் இறங்கினால் வீண் வம்பில் சிக்க நேரிடும். அது நம் எதிராளிக்கு, பகைவர்கட்கு நம்மை வீழ்த்துவதற்குப் பெரிய வாய்ப்பாக அமைந்துவிடும். குடும்பப் பொறுப்பில் இருப்போர் முதல் நாடாளும் பொறுப்பில் இருப்பவர் வரை, அனைவரும் நன்கு ஆராயாமல் ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது பகை என்னும் பயிருக்கு நன்கு பாத்தி கட்டி உரமிட்டு நீர் பாய்ச்சி வளர்ப்பதோர் வழியாகும் என்கிறார் திருவள்ளுவர். அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் (குறள் 461) எனவும் தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய் எனவும் வழிவகை கூறியதை நினைவில் கொள்வதுடன், வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் (குறள் 471) என வலி அறிய வற்புறுத்துவதையும் தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடம் கண்ட பின்னல் லது (குறள் 491) என இடனறிந்து செயல்படத் தூண்டுவதையும் பருவத் தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு (குறள் 482) எனக் காலத்தின் வலிமையை உணர்த்துவதையும், வகையாக ஆராய்ந்து செயல்பட வேண்டும். பகைவர் நெருங்க அஞ்ச வேண்டும். எதிர்ப்பே இல்லாது ஒடுங்க வேண்டும். எல்லாம் நாம் தேர்ந்து தெளிந்து எடுக்கும் முடிவில் அமைந்து இருக்கிறது. எதனையும் ஆய்ந்தோய்ந்து பாராது சொல்லுதலும் செய்தலும் ஆகாது. அங்ஙனமாகவும் இராமன் பொன்மானைப் பார்த்ததும், நுதியுடை மனத்தின் ஒன்றுந் தூக்கிலன், நன்றிது என்றான் எனக் கம்பர் கூறுவது பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு என்பதற்குச் சான்றாகும். அதனுடன் பொன்மான் பற்றி இலக்குவன் இராமனுக்கு விளக்கி உரைப்பதாகக் கம்பன் பாடிய பாடல்களில் ஒன்று பின்நின்றார் இனையர் என்றும் உணர்கிலம்; பிடித்த மாயம் என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம்; முன் நின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல் பொன் நின்ற வயிரத் தோளாய்! புகழ் உடைத்தாம் அன்று என்றான் என்பதாகும். இலக்குவன் கூற்றை இராமன் ஆராயாமல் விட்டதனால், இராவணனின் சூழ்ச்சிக்கு இரையாகி சீதையைப் பிரிய நேர்ந்தது. பெரிய இராம இராவணப் போருக்கு வித்து பெண் மான், பொன் மானை கேட்டதில் அடங்கி இருக்கிறது. -------------------- செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும் (குறள் 466) செய்தக்க செய்ய வேண்டும்; செய்தக்க அல்ல செய்யாமை வேண்டும்; தக்கன செய்; தகாதன செய்யாதீர் என்பதே வள்ளுவர் கட்டளை. இதனை எதிர்மறை நடையில் கூறினால் அழுத்தம் அதிகமாகும் எனக் கருதி செயக் கெடும் என்றார்? எதைச் செய்தால் கேடு உண்டாகும்? செய்யத் தக்க செயல்கள் அல்லாதவற்றைச் செய்தால் கேடு உண்டாகும்; எதைச் செய்யாமல் இருந்தால் கேடு உண்டாகும்? இன்றியமையாது ஒவ்வொருவரும் செய்தே ஆக வேண்டிய கடப்பாடு உடைய செயல்களைச் செய்யாது விட்டு ஒதுங்கு வதாலும் கேடே உண்டாகும் என்கிறார். வேண்டுவன செய்க! வேண்டாதனவற்றைத் தவிர்க! 1. இலனென்று தீயவை செய்யற்க: 205 (தீவினை அச்சம்) 2. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க: தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை 327 (கொல்லாமை) 3. எற்றென்று இரங்குவ செய்யற்க; 655 (வினைத் தூய்மை) 4. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சுன்றோர் பழிக்கும் வினை 656 (வினைத் தூய்மை) செய்யத் தக்கன வற்றில் சில: 1. அன்றறிவாம் என்னாது அறம் செய்க 36 (அறன் வலியுறுத்தல்) 2. துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை 669 (வினைத் திட்பம்) 3. செய்க பொருளை 759. (பொருள் செயல் வகை) -------------------- முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் (குறள் 676) பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் (குறள் 675) எனும் வினை செயல் வகை அதிகாரக் குறள் நோக்கில் மலர்ந்த குறளே! எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு (குறள் 467) என்பதாகும். எச்செயலைச் செய்ய விரும்பினாலும் அச்செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னரே நன்றாக எண்ணிச் செய்தல் வேண்டும். அவ்வாறு அன்றி எத்தகைய திட்டமும் இன்றித் செயலைத் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் போது விவரமாக ஆராய்ந்து கொள்ளலாம் என எண்ணுவது முறையன்று. குற்றமாகக் கருதப்படும். சில வேளைகளில் பேரிழப்பையும் பெருந்துன்பத்தையும் விளைவிக்கும். கிணற்றைத் தாண்டுகிறவன். தாண்டுவதற்குக் காலைத் தூக்கிய பின் ஆராய்ச்சியில் ஈடுபட்டால் என்னாகும். ஆராய்ந்து செயல்படுக! செயலில் இறங்கிக் கொண்டு ஆராயலாம் என எண்ணாதே! செயல்படுத்தத் தொடங்கிய பின் மறு சிந்தனை செய்யாதீர்கள்: செயல்படுவதில் மட்டுமே கவனமாக இருங்கள் என வேண்டுகிறார். எம்.ஆர். காப்மேயர். ஒருமுறை முடிவெடுத்துச் செயல்படுத்த ஆரம்பித்து விட்டால், செயல் மட்டும் தான் தொடர வேண்டும். அதற்குப் பிறகு பலனைப் பற்றிய கவலையே இருக்கக் கூடாது எனக் கூறும் வில்லியம் சேம்சின் கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கது. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிஎன்பது ஔவையார் அமுத மொழி, குதிரை களவு போன பின் கொட்டகையைப் பூட்டுவதும். வாயில் நிலையில் முட்டி மண்டை உடைந்தபின் வணங்கிக் குனிவதால் என்ன பயன்? செயலை மேற்கொள்ளும் வீரர்கள், செயலைத் தொடங்கும் முன்பே முடிவும், பயனும், நேரும் இடையூறுகளும் அவற்றை நீக்கும் வழிகளை யும் எண்ணி மேற்கொள்ளுதல் வேண்டும். அனுமன் இராவணனைக் கண்டதும், அவன் மேல் உண்டான அளவில் சீற்றத்தால் அவனைக் கொல்லலாம் என்று எண்ணுகிறான். சிந்தித்து, அங்ஙனம் செய்தல் ஆகாது; ஆராயாது செய்தலால் அளவற்ற தீமைகள் விளையக் கூடும் என எண்ணி ஒழிகின்றான் என்பதை அறிவிக்க வந்த கம்பர், ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்து உளர் எனினும் சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ என்கிறார். இதில் எண்ணாது செய்பவோ என்ற தொடர் எண்ணித் துணிக என்பதை எதிர்மறை வாய்பாட்டால் வற்புறுத்துவதை உணர முடிகிறது. -------------------- ஆற்றின் வருந்தா வருத்தம், பலர் நின்று போற்றினும் பொத்துப் படும் (குறள் 468) செய்யப்போகும் செயலைப் பற்றியும், அதைச் செய்யும் முறை பற்றியும் வருந்தியாவது ஆராய்ந்து கொள்ள வேண்டும். இல்லையானால் பின்னால் வரக்கூடிய வருத்தங்களைப் பலபேர் துணைநின்று தடுத்தாலும் தடுக்க முடியாது காரியம் கெடும் என்பது நாமக்கல் கவிஞர் உரையாகும். தகுந்த வழியில் முயலாத முயற்சி (தவறு நேர்ந்த பிறகு) பலர் துணை யாக இருந்து பாதுகாத்த போதிலும் குறைபாடு உடையதாகவே இருக்கும். என மயிலை சிவ முத்து பொருள் தருகிறார். ஒரு செயலைச் செய்யும் போதே முழுமையாக முயலாத முயற்சி, பின்னர்ப் பலபேர் துணையாக வந்து உதவினாலும் குறையுடையதாகவே அமையும் என்பது இளங்குமரனாரின் வாழ்வியல் உரையாகும். முறைப்படி உழையாத உழைப்பு, பலர் துணை இருப்பினும் ஓட்டை படும் என்கிறார் வ.சுப. மாணிக்கனார். உரியவர் நெறி தவறாமல் வருந்தி உழைப்பதே முறையாகும். நெறி தவறிச் செய்யப்பட்ட செயலைச் சீர் செய்ய எத்தனைபேர் துணைபுரிந் தாலும் குறை உடையதாகவே அமையும். ஆகவே வழி தவறிய முயற்சி நிறைவு தாராது. தன் தூக்கித் தன் துணையும் தூக்கிப் பயன்தூக்கி மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகி விடும் என்னும் பழமொழிப் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது. நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை (குறள் 469) யாருக்கு நன்மை; எப்பொழுதும் யாருக்கும் நன்மையே செய்வது நல்ல பண்புதான். ஆனால் யாருக்குச் செய்கிறோமோ அவர்கள் இயல்பை அறிந்து செய்வதே அறிவுடைமை. அவ்வாறு இயல்பை அறியாது நன்மை செய்ய முற்பட்டால் சில வேளைகளில் தகுதி அற்றவர்கள் நன்மை பெற வாய்ப்பு ஏற்படலாம். தகுதி அற்றவர்கட்குச் செய்த நன்மை செய்தவரைக் குற்றவாளி ஆக்குவதும் உண்டு. ஒவ்வொருவர் இயல்பையும் அறிந்து அவர்க்குத் தக்கவாறு செயல் ஆற்றுதல் வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்வது கூடத் தவறாகி விடும். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது பழமொழி. அயலான் ஒருவன் ஒருநாள் இரவு மழை பொழியும் வேளையில் பசியோடு வந்தான். அவன் நிலைகண்டு ஒருவர் இரக்கம் கொண்டார். உடையும் உணவும் வழங்கி இரவு தங்கவும் இடந்தந்தார். காலையில் எழுந்து பார்த்தார். ஆளைக் காணவில்லை. வீட்டிலும் பல பொருள்களைக் காண வில்லை. திருடிச் சென்று விட்டான். இப்படி உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்வோரும் உலகில் இருப்பர் எனக் கருதிச் சொல்லிய குறளே அஃது. தாய்மொழிக் கல்வியின் சிறந்த பயன்களை மக்களுக்கு உணர்த்த தமிழகம் எங்கும் ஊர் ஊராகச் சென்று தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்து அரசுக்கு ஆதரவு திரட்ட கால் நடைப் பயணம் மேற்கொண்ட பேராசிரியர் இலக்குவனாரைத் தமிழக அரசு கைதி செய்து வேலூர் சிறையில் அடைத்தது. அவரைக் கல்லூரிப் பணியில் வைத்திருக்கக் கூடாது என நெருக்கடி கொடுத்து பணியிலிருந்தும் வெளியேற்றியது. நன்றாற்றலுள்ளும் தவறுண்டு என்பதற்கு சான்றான நிகழ்வுகளில் ஒன்றாகும். தமிழக அந்நாள் முதல் அமைச்சர் பக்தவத்சலனார் கைதராபாத் உசுமானியா பல்கலைக் கழகத்திற்குத் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு அனுப்ப விரும்பினார். ஆனால் அப்பொழுது பேராசிரியர் இலக்குவனார் அப்பணியை ஏற்க விரும்பவில்லை. நான் தமிழ் நாட்டுக்குள் இருக்கக் கூடாது என முதலமைச்சர் விரும்புகிறாரா? எனக் கருத்துரை வழங்கினார். நீதிபதி பதவியை சர்.சி.பி. இராமசாமி ஐயருக்கு வழங்கத் தலைமை நீதிபதி விரும்பினார். ஆனால் சர்.சி.பி. அதனை ஏற்றுக் கொள்ள வில்லை. திறமை அற்ற வழக்கறிஞர்களே நீதிபதி பதவியை விரும்புவார்கள் என்ற கருத்துடையவராய் இருந்தார். இராசபாளையத்திற்கும் சத்திரப்பட்டிக்கும் இடையில் தங்கள் நிறுவன நகருந்து செல்ல அனுமதி அளித்தால் தாங்களே கல்மாச் சாலை அமைத்துத் தருகிறோம் என்றனர். கல்மண் சாலை இருக்கும் போதே விபத்துகள் நடக்கின்றன. கல்மாச் சாலை போட்டால் நேர்ச்சி மிகுதி யாகும் எனக் கூறி நகரவை மறுத்தது. அவரவர் இயல்பறிந்து செய்யாவிடின் நன்மை செய்வதும் தவறாகி விடும். அல்லது தவறாகத் தெரியும். -------------------- எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு 470 செயலாற்றப் பிறந்தவன் மனிதன். ஆகவே உலைவின்றி உஞற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது வள்ளுவ நோக்கு. ஆகவே, செயல் வேண்டும் என வேண்டினார். சிந்தனை அற்ற செயல் வெற்றியும் பயனும் புகழும் தாராது. ஆகவே எண்ணிச் செயல் வேண்டும் என வேண்டுகிறார். ஆராய்ந்து செயல்படுவதோடு, நாம் செய்யும் செயலால் நாம் புகழும் பெருமையும் அடைய வேண்டும் என்பதையும் இணைத்து வலியுறுத்தும் முகத்தான் எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் என வேண்டுகிற நுட்பம் புலப்படுகிறது. குடும்பத்திற்கென ஒரு தகுதி உண்டு, அவ்வாறே கல்விக்கு ஏற்ற தகுதி ஒன்று உண்டு, அதுபோல் அவரவர் ஏற்றுள்ள பதவி, பணிக்கு என ஒரு தகுதி உண்டு; பொருள் வளத்திற்கு ஏற்ற தகுதி உண்டு! அகவைக்கு ஏற்ற தகுதியும் உண்டு! அத்தகுதிக்கு ஏற்றவாறு செய்யும் செயல்கள் அனைத்தும் அமைய வேண்டும். செயல்களில் உயர்வு தாழ்வு கருத வேண்டியதில்லை. ஆனால் செயல்படும் முறையினால்தான் உயர்வு எய்தவோ? தாழ்வுறவோ நேர்கிறது. கற்றவர் தகுதியற்ற செயல் புரிந்தால் இவனெல்லாம் படித்தவனா படித்து என்ன பயன்? என இகழ்வர். அது போல் பண்பட்ட நற்குடிப் பிறந்தவன் தகுதியற்ற செயல் புரிந்தால் குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு எப்படிப் பட்ட உயர்ந்த குடும்பத்தின் பெயரைக் கெடுக்கப் பிறந்தவன் எனப் பழிப்பர். ஆசிரியர் என்றால் ஒரு தகுதி. நீதிபதிக்கு ஒரு தகுதி, மருத்துவர்க்கு ஒரு தகுதி, ஆட்சித் தலைவர்க்கு ஒரு தகுதியை உலகம் எதிர் பார்க்கிறது. அவர்கள் செயல்பாட்டில் அத்தகுதி இல்லையானால் இவன் ஓர் ஆசிரியனா? நீதிபதியா, மருத்துவரா? ஆட்சித் தலைவரா? என இகழ்வர். ஆகவே, அவரவர் தகுதிக்குப் பொருந்தாத செயல்களைச் செய்யக் கூடாது. உலகத்தில் உயர் நிலையில் வாழும் பெருமக்களின் இகழ்ச்சிக்கு உட்படாத செயல்களைத் தெரிந்து செய்ய வேண்டும். உன் தகுதிக்குப் பொருந்தாத செயலை உலகம் ஏற்காது. ஆகவே உலகம் இகழாதவற்றை ஆராய்ந்து செய்க! ------------- அழிவதூஉம் ஆராய்ந்து செய்க! ஆவதூஉம் ஆராய்ந்து செய்க! வழிபயக்கும் ஊதியமும் ஆராய்ந்து செய்க! தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்க! முதல் இழக்கும் செய்வினை ஊக்காதே தெளிவிலதனைத் தொடங்காதே வகையறச் சூழாது எழாதே செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும் எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவது இழுக்கு ஆற்றின் வருந்திச் செய்க நன்றாற்றலுள்ளும் தவறுண்டு தம்மொடு கொள்ளாத கொள்ளாதுஉலகு எள்ளாத எண்ணிச் செய்க! ------------------- 48. வலியறிதல் ஒவ்வொருவரும் ஊரைப் பற்றி, உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் உருவத்தாலும் அகவையாலும் வேறு பட்டவர் என்பது எவ்வளவு உண்மையோ அது போலவே உடல் வலிமையிலும் உள்ள வலிமையிலும், அறிவின் திறத்திலும், செய்யும் செயலிலும், செயல் ஆண்மையிலும் வேறுபட்டவர்கள் ஆவர். ஒருவர் எளிதாகச் செய்யும் ஒரு செயலைப் பிறிதொருவர் மிக முயன்று செய்கிறார், வேறொருவர் எத்தனையோ வழிகளில் முயன்றும் செய்ய இயலாதும் அல்லல்படுகிறார். காரணம் என்ன? செயல் ஒரு தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் செய்பவர் ஒரு தன்மைப்பட்டவர் அல்லர். ஆகவே, நாம் தனி மனிதர் ஆயினும், குடும்பத்தலைவர் ஆயினும், ஊர்த் தலைவர் ஆயினும், நாட்டுத் தலைவர் ஆயினும், உலகத் தலைவர் களில் ஒருவராய் அமையினும், நாம் ஆற்றும் ஒவ்வொரு செயலிலும் நம் வலிமையை நன்கு உணர்ந்தே செயல்பட வேண்டும். வலிமை முழுமையையும் பயன்படுத்திச் செயல்பட வேண்டுவது கடமையாகும். அதே நேரத்தில் தத்தம் தகுதிக்கும் தரத்திற்கும் திறனுக்கும் விஞ்சிய எச்செயலையும் செய்ய முற்படுவது நன்றன்று. எத்தகைய நலந்தகும் உணவை உண்பதாயினும் அவரவர் உடலின் செரிப்புத் தன்மைக்கு ஏற்ற அளவே உண்ண வேண்டும். அளவிற்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாகும் என்னும் பழமொழி இக்கருத்திற்கு அரண் செய்யும். ஒவ்வொருவராலும் எவ்வளவு எடை உள்ள பொருளைத் தூக்க இயலுமோ அந்த அளவுப் பொருளையே தூக்க வேண்டும். பளு தூக்கும் போட்டியாளர்களும் எத்தனை நாள் பயிற்சி மேற்கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட எடைக்கு மேல் தூக்க இயலாது. அதுபோல் நாடாளும் பெரும் பொறுப்பிற்குரிய ஆட்சியாளர் தம் பொறுப்பில் இயங்கும். ஆட்சிப்பணி, வருவாய்ப்பணி, அறப்பணி, முறை செயற்பணி, காவற்பணி, போர்ப்பணி முதலிய அனைத்துப் பணிகளின் நடைமுறைக்கும் செயற்பாட்டிற்கும் வெற்றிக்கும் நிறைவிற்கும் வலி அறிந்து செயல்படுதல் வேண்டற் பாலதாகும். செய்ய முற்படும் செயலில் தொல்லையும் தோல்வியும் இழப்பும் ஏற்படாமல் காக்க ஒவ்வொருவரும் தத்தம் வலிமைக்கு ஏற்ற செயல் களையே செய்ய எண்ண வேண்டும். தன்னம்பிக்கை கட்டாயம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். தாழ்வு மனப்பான்மை கூடாது அது போலவே மிகை நம்பிக்கையும் கூடாது. நம் கையில் உள்ள வெண்பொன் நூறை, நூறாகவே கருத வேண்டுமே யொழிய ஆயிரமாகக் கருதி ஏமாறவும் கூடாது ஏமாற்றவும் கூடாது. ஆழம் தெரியாமல் காலை விடாதே என்னும் பழமொழி வினைவலி அறிந்து செயல்பட வலியுறுத்தும். எல்லாரும் வெற்றிமேல் வெற்றி பெற்று; அதனால் விருதும் பெருமையும் பெற்று ஓங்கி உயர வேண்டும் என்னும் விரிந்த நோக்குடையவர் திருவள்ளுவர். சுவரை வைத்தே சித்திரம் வரைய முடியும் அடிப்படை சரியாக அமைந்தால் தான் உயர்ந்த மாளிகையோ, கோபுரமோ எழுப்ப முடியும். கோபுர அமைப்பு நமக்கு ஒரு பாடம் புகட்டும், அடிப்பகுதியின் நீளமும் அகலமும் விரிந்து காணப்படும், மேலே செல்லச் செல்ல அளவு குறைந்து கொண்டே போகும். அடித்தளப் பரப்பைக் குறைத்து எங்கும் எவரும் கோபுரம் எழுப்பியதை உலகம் கண்டதில்லை. கோபுரத்தின் உச்சிக்கோ, இமையமலை அன்ன மலைகளின் உச்சிக்கோ எல்லாராலும் செல்ல இயலாது. அதற்கு ஏற்ற உடல் வலிமை யும் மன வலிமையும் உடையவர்களே இத்தகைய முயற்சியில் ஈடுபட இயலும். பொருள் கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும் இருள் தீர எண்ணிச் செயல் (குறள் 675) என்பது வினை செயல் வகை அதிகாரத்து அமைந்த குறட்பாக்களுள் ஒன்றாகும். ஒரு செயலைச் செய்ய முனையுங்கால் எதுபற்றி எல்லாம் அறிய வேண்டும்? பொருள், கருவி, காலம், செயல், இடம் என்னும் ஐந்தையும் அறிய வேண்டும். எவ்வாறு எண்ணிச் செய்தல் வேண்டும்? ஐந்தையும் ஐயமற ஆராய்ந்து அறிந்து செய்தல் வேண்டும் என்கிறார். முன்னேறி மேலே மேலே செல்வது எல்லார்க்கும் பெருமையும் சிறப்பும் நல்கும் என்பது உண்மை. எந்த மரத்தில் நம்மால் மிகுந்த சிரமம் இல்லாமல் எவ்வளவு உயரம் ஏற முடியுமோ அவ்வளவு உயரம் தான் ஏற முயல வேண்டும். நம் முயற்சி நமக்கு வீழ்ச்சியையும் தொல்லையையும் துயரத்தையும் தருவதாய் அமைந்து விடக் கூடாது. நம்மால் சில இலக்கம் தொகை தான் முதலீடு செய்ய இயலுமானால் அதற்கு ஏற்ற தொழிலையே தொடங்க வேண்டும். முதலீடு கோடி போட முடியுமானால் தொழிலை அதற்கு ஏற்றாற்போல் தொடங்கி படிப்படியே விரிவு படுத்த வேண்டுமே யொழிய, முதலில் விரிவாகத் தொடங்கி படிப் படியே குறைக்கும் நிலை ஏற்படக் கூடாது. கூட்டலும் பெருக்கலும் நிகழ வேண்டுமே அல்லாமல் கழித்தலும் வகுத்தலும் இழத்தலும் நிகழ்ந்து விடாதவாறு காத்தலே சிறந்த விழிப்புணர்வு எனக் கருதிப் படைத்த அதிகாரமே வலியறிதல் ஆகும் வலிமையாகிய வலியை உணர்ந்து செயல்பட வேண்டும். வேதனை ஆகிய வலியார்க்கும் எப்பொழுதும் எங்கும் ஏற்பட்டு விடாது காக்க முற்படும் அருட் தந்தையாம் திருவள்ளுவர் படைத்த உயர்ந்த அதிகாரமே வலியறிதல் ஆகும். அயல் நாட்டாரிடம் போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால் உன்னிலும் வலிமை குறைந்தவரிடம் போரிடு. பகைவன் வலியவனாகத் தெரிந்தால் உன் வலிமையைப் பெருக்கு; வலிமை பெருகும் வரைப் பொறுத்திரு! அடங்கி இரு! அதுவே போர் நெறியும், வாழ்வு நெறியும் ஆகும் என்பதையும் வலி அறிதல் உணர்த்தும். வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் (குறள் 471) ஒரு செயலைச் செய்ய வேண்டும் என எண்ணுகிறவன் திடீரெனத் தொடங்கி விடுதல் கூடாது. முதற் கண் செயலின் தன்மையையும், தக்க இடம் தேவையான முதலீடு, மூலப்பொருள், தொழில் நுணுக்கம், தொழிலாளர், உருவாக்கம், விற்பனை போன்ற செயல் தொடர்பான வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாகச் செயலைச் செய்ய எண்ணுகிறவன் தன்னுடைய தொழில் அறிவு, பொது அறிவு, உலகியல் அறிவு, அகவை, உடல் வலிமை, மன வலிமை, பொருள் வளம், குடும்ப நிலை போன்ற தன்பால் பொருந்தி யுள்ள வலிமை களையும் நன்கு ஆராய்ந்து எடை போட்டுக் கொள்ள வேண்டும். நாம் செய்ய முற்படும் தொழிலை இதற்கு முன் யார் யார்? செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தகுதி, திறமை, வாய்ப்பு எவ்வாறு உளது? நாம் தொடங்கும் காலத்தில் வேறு யார் யார்? தொடங்கத் திட்ட மிட்டுள்ளனர். அவர்களின் உண்மையான தனித் தன்மைகளையும் உரிய வாய்ப்புகளையும் தெளிவான புள்ளி விவரங்கள் எடுத்துக் கணக்கிட்டு ஆய்ந்து கொள்ள வேண்டும். நாம் தொழிலைத் தொடர்ந்து நடத்தி வெற்றி காண்பதற்கு யார் யார் எந்தெந்த வழிகளில் துணைபுரிவார்கள்? என்னென்ன பொருள்கள் நமக்கு பக்கத் துணையாய் அமையும் என எதிர் பார்க்கலாம். அத்தகைய பின்னணி களையும் நன்கு ஆராய்ந்து கொள்ள வேண்டும். நாம் செய்யப் போகும் தொழிலில் யார் யாருடைய போட்டியை எதிர்ப்பை எதிர்பார்க்க வேண்டியதிருக்கும் அவர்களின் தனிப்பட்ட வலிமைகளுடன் அவர்கட்கு எந்தெந்த வகைகளில் யார் யார் தக்க துணைபுரிவார்கள். என்பதையும் ஆராய்ந்து கொள்ள வேண்டும். செயலின் வலிமையையும், செய்பவன் வலிமையையும், எதிர்ப்பவன் வலிமையையும், தனக்கும் அவனுக்கும் கிட்டும் துணை வலிமையும் ஆராய்ந்து மாற்றான் வலிமையையும் அவனுக்கு வாய்க்கும் துணைகளின் வலிமையையும், நாம் செய்ய முற்படும் தொழிலின் வலிமையையும் விடச் செயல்பட எண்ணுபவன் வலிமை மேலோங்கிக் காணப் படுகிறதா? என்பதைக் கண்டுணர்ந்து தன்வலி விஞ்சி நிற்பின் துணிந்து செயலில் இறங்கு என்பதே வள்ளுவர் ஆணை. செயல், செய்வான், மாற்றான் துணை என்ற எல்லா வன்மை களையும் சீர்தூக்குக உன் வலி உயர்ந்து நின்றால் செயல் புரியத் துணிக! தன்தூக்கித் தன்துணையும் தூக்கிப் பயன் தூக்கி முற்றவை கொள்வ மதிவல்லார் என்னும் பழமொழிக் கருத்தும் ஒப்பு நோக்கத் தக்கதே! ஒரு நாட்டார் பிறிதொரு நாட்டின் மீது போர் தொடுக்க எண்ணினால் அதற்கு வலுவான, தக்க காரணம் இருக்க வேண்டும். அக்காரணத்தின் வலிமையையும், தன்னாட்டின் முப்படைகளின் வலிமையையும், பகை நாட்டினரின் தனி ஆற்றலையும் படைப் பெருக்கின் ஆற்றலையும், இரு திறத்தார்க்கும் உள்ள பக்கத் துணைகளின் வலிமையையும் சீர் தூக்கிப் பார்த்து, தன் வலிமை மிக்க வலிமையுடையதாய் அமைந்திருப்பின் போர் மேற் செல்ல வேண்டும். அவசரப்பட்டு, தன்முனைப்புடன் வலிமையை உணராது எச்செயலிலும் ஈடுபடுதல் கூடாது. ------------------ ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல் 472 செல்லாதது இல் தன்னம்பிக்கை ஊட்டும் அருமையான சொற்றொடர் ஆகும். முடியாது என்பது என் அகரமுதலியில் இல்லாத சொல் என நெப்போலியன் கூறியது போலவே செய்ய முடியாத செயல் என முத்திரை இடப்பட்ட செயல் எதுவும் இல்லை. தொடங்கிய செயல் எதுவாயினும் தவறாது வெற்றியுடன் முடித்துக் காட்டப் பின்பற்ற வேண்டிய நெறியாது? 1. ஒல்லுவது அறிய வேண்டும், 2, அறிவது எல்லாம் அறிய வேண்டும், 3, அறிந்ததன் கண் தங்குதல் வேண்டும். 4. தங்கிச் செல்லுதல் வேண்டும். அவ்வாறு முயல்வார்க்கு முடியாதது ஒன்றும் இல்லை. முதற்கண் ஒவ்வொருவரும் தம்மால் எத்தகைய செயல்களைச் சிறப்பாக செய்ய முடியும் என்பதைத் தற்சோதனை செய்து உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அச்செயலை நிறைவாகச் செய்வதற்கு ஏற்ற சிறந்த வழி முறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். முழுத் தெளிவு ஏற்பட்டபின் காலங்கடத்தாது, மனத் தளர்ச்சியோ ஊசலாட்டமோ இல்லாது, எடுத்த செயலில் முழுக் கவனம் செலுத்தி, நிலைபெற ஊன்றிச் செயல் புரியும் ஆற்றல் உடையவராய் விளங்க வேண்டும். அத்தகைய முயற்சியாளர்களால் செய்ய முடியாத செயல் எதுவும் இருக்க இயலாது. இயலும் செயலையும் செய்முறையையும் தக்கவழி அறிந்து நடந் தால் எல்லாம் நடக்கும். சீசரின் மனைவி, இரவு தான் கொடுமையான கனவு கண்டதாகக் கூறிச் சீசரை ஆட்சி மன்றம் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். ஆனால் சீசர் மனைவியின் கருத்தைக் கேட்கவில்லை. சீசர் மன்றத்திற்குள் நுழையும் போது துறவி ஒருவர் உள்ளே செல்ல வேண்டாம் என்று தடுத்தார். சீசர் அதனையும் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முற்பட்டார். அப்பொழுது ஆபத்து காத்திருக்கிறது என்று எழுதப்பட்ட கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டும் அதனையும் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றமையால் தான் சீசர் உயிரை விடும்படி ஆயிற்று. சீசரின் செயலும் முடிவும் இக்குறளுக்கு எதிர்மறை எடுத்துக் காட்டாகும். ஒல்வதையும் அறியாது, அறிய வேண்டுவனவற்றையும் அறியாது செயலிலும் ஊன்றுதல் இன்றிச் செய்பவர்களால் எச்செயலையும் செய்து முடிக்க இயலாது. --------------------- திருச்சிராப் பள்ளியிலும் வேறு பல இடங்களிலும் மாவட்டத் துணை ஆட்சித் தலைவராக விளங்கிய திரு பட்டாபிராம பிள்ளை என்பவர் சிறந்த தமிழ்ப் பற்றாளர்; தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றும் இயல்பினர். அவர் வித்தவான் திரு.தியாகராசச் செட்டியாரிடத்தில் மிக்க அன்பு பூண்டவர். அறிவாளிகள் நிலையான காரியங்கள் செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம். ஆகவே அவர் திருவாசகத்திற்கு உரை எழுதுமாறு வித்துவானை வற்புறுத்தினார். அதற்கு வித்துவான் அளித்த விடை நீங்கள் கொஞ்ச மாவது திருவாசகத்தின் பெருமையை அறிந்து கொள்ளவே இல்லை என்று நிச்சயமாகச் சொல்கிறேன். அதற்கு என்னால் உரை எழுத முடியுமா? திருவாசகம் எவ்வளவு! என்னுடைய படிப்பு எவ்வளவு? அதற்கு உரை எழுத வேண்டுமென்றால் வேதம், உபநிடதம், ஆகமங்கள், புராணங்கள் யோக சாத்திரங்கள் முதலியவை தெரிய வேண்டாமா? தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்களையும் சில சைவ சித்தாந்த சாத்திரங்களையுமே படித்த நான் எப்படி எழுத முடியும்? எனக் கூறி மறுத்தமை இக்குறள் வழிச் செயற்பாட்டிற்கு ஏற்ற சான்றாகும். ------------------- உடையர் எனப் படுவது ஊக்கம் (குறள் 591) உள்ளம் உடைமை உடைமை (குறள் 592) ஊக்கம் உடையான் உழை (குறள் 594) மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு (குறள் 595) ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், அசைவிலா உக்க முடையா னுழை (குறள் 594) என ஊக்கம் உடைமையில், ஊக்கம் உடைமையின் தனிப் பெரும் சிறப்புகளை எடுத்து மொழியும் வள்ளுவர். இங்கே வலி அறிதலில் மிகுந்த பட்டறிவுடனும் வாழ்வியல் நோக்குடனும் படைத்த அருமைக் குறளே. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் (குறள் 473) என்பதாகும். நாள் பார்த்து நல்ல இடத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் புடை சூழ சிறப்பாகக் கால்கோள் செய்து தொடங்கப் பட்ட கட்டிடம்; சில நாள் வேலை வேகமாக நடந்து வந்தது. பலநாட்களாகத் தொடர்ந்து வேலை நடை பெறாமல் அடித் தளத்தோடே நிற்கும் கட்டங்களையும், பாதியில் நிற்கும் கட்டடங்களையும் தளம் பூச்சு இல்லாமலே நிற்கிறகட்டடங் களையும் காண்கிறோம்? ஏன்? எல்லா வசதிகளோடும் முறையான அனுமதி பெற்றுத் தொடங்கிய தொழிற்சாலை சில ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வந்தது தற்பொழுது இயக்கம் இன்றி மூடிக்கிடக்கிறதே ஏன்? தான் எளிதாக வெற்றி பெற்று விடுவேன்; பகைவரைப் புறமுதுகிட்டு ஓடுமாறு விரட்டியடிப்பேன் என வஞ்சினம் கூறிப் படை எடுத்துச் சென்ற வன் படைவீரர்கள் பலரைப் போர்க் களத்தில் இழந்து, கருவிகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என்று புறமுதுகிட்டு ஓடி ஒழிகிறானே ஏன்? தம்முடைய உண்மையான வலிமையை உணராது செயலில் இறங்கியதுதான் காரணம். ஆகவே தான் திருவள்ளுவர் தமக்கு உளதாகிய வலிமையை உணர்ந்து பாராமல் ஏதோ ஒரு மன எழுச்சியால் ஒரு செயலைத் தொடங்கி விட்டுப் பின்னர் இடையே கைவிட்டு விட்டவர்களும் உலகில் பலர் உண்டு என்கிறார். செயல் முயற்சி வெற்றி அடைய வலிமையோடு பொருந்திய ஊக்கம் தேவை. வலிமை குறைந்தால் மெலிவே! ஆற்றல் அறியாது ஆர்வத்தால் செயல்பட்டு இடையில் பட்டுப் போனவர் பலர். கம்பராமாயணம் - ஆரணிய காண்டம்-சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இராவணன் நிலவினைப் பழிப்பது போல் கம்பர் பாடிய பாடல்களில் ஒன்று நல்ல எடுத்துக் காட்டாகும். ஆற்றார் ஆகின், தம்மைக் கொண்டு அடங்காரோ என் ஆருயிர்க்குக் கூற்றாய் நின்ற குலச் சனகி குவளை மலர்ந்த தாமரைக்குத் தோற்றாய்: அதனால், அகம் கரிந்தாய் மெலிந்தாய், வெதும்பத்தொடங்கினாய் மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றியாக அற்றாமோ? என்பதாகும். மறப்பினும் ஒத்துக் கொளலாகும்: பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (குறள் 134) கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் ஊண்பதூஉம் இன்றிக் கெடும் (குறள் 166) அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் (குறள் 176) களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் (குறள் 283) வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் (குறள் 435) செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும் (குறள் 437) இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (குறள் 448) செய்தக்க அல்ல செயக்கெடும்: செய்தக்க செய்யாமை யானும் கெடும் (குறள் 466) எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தால் தானே கெடும் (குறள் 548) நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும் (குறள் 553) குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் (குறள் 601) தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும் (குறள் 614) ஏந்திய கொள்கையார் சீறின், இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும் (குறள் 899) குடி செய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து மானம் கருதக் கெடும் (குறள் 1028) எனக் கேடு தரும் நினைப்புகளையும் செயல்களையும் அடுக்கடுக்காய் அடையாளம் காட்டும் வள்ளுவர். வெருவந்த செய்யாமை அதிகாரத்தில். வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் (குறள் 563) கடுங்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும் (குறள் 566) செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் (குறள் 569) என அஞ்சத் தக்க செயல்களைச் செய்பவன் விரைந்து கெடுவான் என்பதை ஒல்லைக்கெடும் நீடின்றிக்கெடும் வெய்து கெடும் என அழுந்த உரைத் தமையையும் ஆராய்ந்து நோக்குதல் வேண்டும். அந்நோக்கில் கேட்டிற்கு ஆளாகாது வாழ வலியுறுத்தும் வலியறிதல் குறளே, அமைந்தாங்கு ஒழுகான், அளவு அறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் (குறள் 474) என்பதாகும். ஒரே ஒரு குறையே ஒருவனை வீழ்த்தி விடும். மூன்று பெருங் குறைகட்கு உரியவனாய் அமைந்ததுடன் அதனையே பெருமை எனக் கருதி நடக்க முற்படுவோன் மிக விரைவில் கெடுவான். அமைந்தாங்கு ஒழுகான் விரைந்து கெடும்; ஒத்தது அறிவானே உயிர் வாழ்வான். பலரோடும் ஒத்து நடவாதவன் கெடுவான்; புலனடக்கம் இன்றி நடந்து கொள்பவனும் கெடுவான்? செய்ய வேண்டிய கடமைகளை அமைதியாகச் செய்யாது ஆர்ப் பாட்டம் செய்பவனும் கெடுவான், உலகியல் நெறிப்படி வாழ்வியலை மேற்கொள்ளாதவன் விரைந்து கெடுவான். கட்டு, திட்டப்படி வாழாதவனும் விரைந்து கெட்டுப் போவான். செயலுக்கு ஏற்ற செயற்பாடு இல்லாதவனும் விரைந்து கெட்டொழி வான் எனவும் உரை காணலாம். அளவு அறியான். விரைந்து கெடும். தன்னுடைய கல்வித் தகுதியை, அறிவுத் தகுதியை, பொருள் தகுதியை, மனவலிமையை, உடல் வலிமை யை செயல் திறனைத் தானே அளந்து அறியும் அறிவுக் கூர்மை இல்லாதவன் விரைந்து கெட்டொழிவான். தன்னை வியந்தான் விரைந்து கெடும்; வியவற்க எஞ்ஞான்றும் தன்னை 439 எனவும் பெருக்கத்து வேண்டும் பணிதல் 963. பணியுமாம் என்றும் பெருமை 978. பெருமை பெருமிதம் இன்மை 979. என்பன வள்ளுவ நெறி. ஓவ்வொருவரும் தம்மிடம் ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டுணர்ந்து சீர் செய்து கொள்ள வேண்டும். தம்மிடம் உள்ள நல்லியல்புகள் எக்காரணம் கொண்டும் தம்மை விட்டு அகன்று விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை, ஆரிருள் உய்த்து விடும் 121 தற்பெருமை உண்மை நிலையை உணர விடாது தடுக்கும். பெருமைக்குரிய செயல்களைச் செய்ய வேண்டும். ஊர் உலகம் நம் செயலைப் பாராட்டுமாறு நடந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் நம்மை நாமே புகழ்ந்து கொள்ளுதல் ஒரு காலத்தும் நமக்கு நன்மை தாராது. வீழ்ச்சியையே உண்டாக்கும் என வள்ளுவர் கருதுவதால் தன்னை வியந்தான் விரைந்து கெடும் என்கிறார். ஒழுகான்-முறைப்படி ஒழுகான் அறியான்-தன்னிலை அறியான்; வியந்தான் தன்னைத் தானே பெரிதாக நினைத்துக் கொள்பவன் மூவரும் விரைந்து கெடுவர். ஒன்னார் அடநின்ற போழ்தின், ஒருமகன் தன்னை எனைத்தும் வியவற்க! என்னும் பழமொழியும் ஒப்பு நோக்கத் தக்கது. மாரீசன் இராவணனுக்கு உரைத்த அறிவுரை எல்லாம் பயனற்ற பின் மாரீசன் கூறிய கூற்று. அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் தருக்கினர் கெடுவர் என்னும் தத்துவம் நிலையிற் றன்றோ. என்னும் கம்பன் வாக்கும் வியந்தான் விரைந்து கெடும் என்னும் வள்ளுவ விளக்கமே ஆகும். -------------------- பீலிபெய் சாகாடும் அச்சிறும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் (குறள் 475) மயில் இறகு மெல்லிது கனம் குறைந்தது. வண்டி வலிய மரத்தாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட திண்ணியது. ஏனைய பாகங்களைக் காட்டிலும் வலிய இரும்பினால் செய்த அச்சு பொருத்தப்பட்ட வண்டி. அவ்வண்டியில் மயில் தோகைதான் ஏற்றியிருக்கிறார்கள் ஆனால் வண்டி சிறிது தூரம் சென்றுள்ளது. மணல் ஓடை ஒன்று குறுக்கிட்டது. வண்டி அவ்வோடையில் இறங்கி மேட்டில் ஏறும் போது வண்டியின் அச்சு முறிந்து விட்டது. வண்டியை நகர்த்த முடியவில்லை. வண்டியைப் பார்த்தவர்கள் எல்லாம் என்ன ஐயா! வண்டி வாங்கி யிருக்கிறீர்கள். மயில் தோகையைக் கூடத் தாங்க முடியவில்லை. உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள் நீங்களும் மேல் பூச்சைப் பார்த்து ஏமாந்து விட்டீர்கள் என ஏளனம் பேசினவர் பலர். அவ்வழியே வந்து அச்சுமுறிந்த வண்டியைக் கண்ட முதியவர். வண்டி நல்ல வலிய வண்டிதான் வண்டி செய்நேர்த்தியில் எத்தகைய குற்றமும் இல்லை. பாரம் ஏற்றுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? ஒரு சரக்குந்தில் ஏற்ற வேண்டிய பாரத்தை இந்த மாடு இழுக்கும் வண்டியில் ஏற்றினால் எப்படி இழுக்கும் என்றார். நாங்கள் என்ன கனமான மரம், கல், இரும்பு போன்றவற்றையா ஏற்றினோம்? மெல்லிய மயில் தோகை தானே? என்றனர். எடை தான் அளவே தவிரப் பொருள் அன்று. இவ்வண்டி தாங்கும் எடை இரண்டு டண். ஆனால் நீங்கள் இரண்டரை டன் மயில் தோகை ஏற்றி இருக்கிறீர்கள் ஆகவே தான் பாரம் தாங்க முடியாமல் வண்டியின் அச்சு முறிந்து விட்டது. அளவிற்கு எதுவும் விஞ்சக் கூடாது. மெல்லிய மயில் தோகையே எனினும் அதனை அளவுக்கு மேல் வண்டியில் ஏற்றினால், வண்டியின் மிக வலிமையான அச்சும் ஒடிந்து விடும் என்ற செய்தியை வள்ளுவர் சொன்னால் தான் தெரியுமா? இஃது பொதுவாகப் பலரும் அறிந்த செய்திதானே! ஆம். ஆனால் வள்ளுவர் இதனைக் காட்சிப் படுத்திப் பலவகையான கருத்துகளை விளக்க எண்ணியுள்ளார். எளிய இனிய சுவையான சத்துணவு எனினும் அளவிற்கு அதிகமாக உண்டால் உடல் நலம் கெடும். நம் உடல் வலிமைக்கு ஏற்ற சுமையையே சுமக்க வேண்டும் இல்லையேல் கழுத்து, முதுகுத் தண்டில் வலி ஏற்படும். ஓரே நேரத்தில் ஒரு வேலையைச் செய்தால் நிறைவாகச் செய்யலாம் சின்னஞ்சிறிய வேலைகள் தானே எனக் கருதிக் கொண்டு பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய முற்பட்டால் பல வேளைகளில் அல்லல்பட நேரிடும். வேளாவேளைக்கு உண்ணாமலும், உரிய நேரத்தில் தூங்காமலும் இரவும் பகலும் ஓய்வின்றிக் கடுமையான வேலைகளைச் செய்தாலும் பின்னர் சலிப்பும் சோர்வும் விரைவில் தளர்ச்சியும் ஏற்படும். ஒருவன் ஆற்றல் மிக்க பெருவீரன்தான், பல்வகைப் போர் நுணுக்கங் களிலும் தக்கபயிற்சி பெற்றவன் தான். எனினும் ஒரே நேரத்தில் நூறு பேர் சுற்றி வளைத்துக் கொண்டால் என்ன செய்ய முடியும்? ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பது பழமொழி, ஒரே நேரத்தில் பலரின் பகையைத் தேடிக் கொண்டால் விரைவில் அழிவது உறுதி. வலிமை குறைந்தவர்கள் என்றாலும் பல சிற்றரசர்கள் ஒன்று சேர்ந்து போரிட்டால், வலிமை மிக்க பேரரசனுக்கும் தோல்வியும் அழிவும் ஏற்படலாம். ஆகவே தன் வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் ஆராய்ந்து தெளிந்து போர்மேற் செல்லவில்லை யானால் வீழ்ச்சியே ஏற்படும். கல்வி, கேடு இல்லாத உயர்ந்த செல்வம் தான்; எனினும், இடைவேளை இன்றிப் படித்துக் கொண்டே இருந்தால் பித்தம் பிடித்து அலைய வேண்டியது நேரிடும். உண்பது,உறங்குவது, படிப்பது, எழுதுவது, ஆராய்வது வேலை செய்வது, பொருள் தேடுவது, செலவு செய்வது, விளையாடுவது போர் புரிவது, கலை ஆர்வம், உறவு, நட்பு, பற்று முதலாய அனைத்திற்கும் அளவு கட்டாயம் வேண்டும் நம் தகுதியையும் தரத்தையும் திறனையும் வலிமை யையும் நன்கு உணர்ந்தே எச்செயலையும் செய்ய முற்பட வேண்டும். இல்லையேல் நன்மை தரும் நற்செயலாலும் தீமையே விளையும். இன்னோரன்ன செயலாண்மை நெறிகளை எல்லாம் உணர்த்தும் விரிந்த நோக்கில்தான் மயில் தோகை ஏற்றப்பட்ட வண்டியின் வலிய அச்சும்; அத்தோகையை அளவுக்கு விஞ்சி ஏற்றினால் ஓடிந்து போகும் எனக் கூறியுள்ளார். .................... துன்னினார் நன்மை யிலராய் விடினும் நனிபலராம் பன்மையில் பாடுடைய தில் என்னும் பழமொழியும் ஒப்பு நோக்கத் தக்கதே! உடையர் எனப்படுவது ஊக்கம் (குறள் 591) உள்ளம் உடைமை உடைமை (குறள் 592) உள்ளுவ தெல்லம் உயர்வுள்ளல் (குறள் 596) உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை (குறள் 600) ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை (குறள் 594) என ஊக்கத்தின் பயனை, நிறைவை பெருமையை, சிறப்பைத் தெள்ளிதின் எடுத்துரைத்தவர் வள்ளுவர். இங்கே, நீங்கள் ஊக்கத்துடன் உழைத்து முன்னேறியமைக்குப் பாராட்டு! இதற்கு மேலும் முன்னேற வேண்டும் என்று முனைந்து நிற்க வேண்டாம். உங்கள் பால் பொருந்தியுள்ள அறிவுக்கும் திறத்திற்கும் இதுதான் நல்ல வளர்ச்சிக்கு அளவு கோல் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை உணர்ந்து அமைதியும் நிறைவும் கொள்க என வேண்டும் விழிப்புணர்வுக்குறளே. நுனிக்கொம்பர் எறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் (குறள் 476 ) என்பதாகும். ஒவ்வொருவரும் தத்தம் தகுதிக்கு ஏற்றவாறு இலக்கு ஒன்றை வகுத்துக் கொண்டு, இலக்கு நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும். இலக்கை அடைந்து விட்டால் மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைய வேண்டும்.. நிற்க வேண்டிய எல்லையில் நிற்காமல் மேலும் செல்ல வேண்டும் என ஊக்கமுடன் சென்றால் விரைவில் அடித்தளம் வந்து சேர நேரிடும் உயிர் இருக்கிறதா? இல்லையா? என்பதை விழுந்த இடத்தைப் பொறுத்தே முடிவு செய்ய இயலும். இறுதி நேரும்: மற்ற வினைகளில் வீழ்ச்சி உடனே ஏற்படாமல் கூட இருக்கலாம். ஆனால் போர் மேற்சென்று வெற்றிமேல் வெற்றி பெற்றவர் களில் தம் வலிமைக்கு ஏற்ற எல்லையில், மேல் முயற்சியை நிறுத்திக் கொள்ளாதவர்கள் எல்லாம், உள்ளது, உரியது, பெற்றது அனைத்தையும் இழந்து தாமும் அழிந்து ஒழிவர். எடுத்த படையெடுப்புகளிலெல்லாம் வெற்றி பெற்று வந்த நெப்போலி யன் உருசியா நாட்டின் மீது படையெடுத்துச் செல்லாமல் இருந்திருப் பான் ஆனால் வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது நிலைத்த பெருமையோடு தன்னாட்டுடன் வென்ற நாடுகளிலும் நல்லாட்சியை நிலைபெறச் செய்து நெடு நாள் வாழ்ந்திருப்பான். வீழாப் புகழ் பெற்றிருப்பான். திருவள்ளுவர் மரம் என்ன மரம் என்றும் சொல்லவில்லை. மரத்தின் உயரத்தையும் சொல்லவில்லை. மரத்தில் ஏறியவன் யார் என்றும் சொல்லவில்லை. ஆனால் முன்னேறத் துடிக்கும் முயற்சியாளன் என்று மட்டும் சுட்டுகிறார். ஏனெனில் வெவ்வேறு தகுதியுடைய மனிதர்கள், அவர்கள் ஈடுபடும் பணிகளும் வேறு வேறானவை ஊக்கமும் ஒரு தன்மைப் பட்டதன்று. ஆகவே, ஒரு மரக்கொம்பின் நுனிக் கண்ணே ஏறி நின்றார். தம் மன வூக்கத்தின் உந்துதலால். அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற முயன் றால், அவர் கொண்ட ஊக்கம் அவர் உயிர்க்கு இறுதியைத் தேடித் தந்து விடும். நுனிக்கு ஏன் ஏறினான்? தேன் எடுக்கவா? கனி பரிக்கவா? எது வாயினும் கருதிச் சென்ற பணியை முடித்து விட்டு மரத்திலிருந்து இறங்கிவருவதே முறையாகும். மேலும் ஏற முயன்றால், முயல்கிறவன் ஒன்று குடிகாரனாக இருக்க வேண்டும், அல்லது மனநலம் குன்றியவனாக இருக்க வேண்டும். தெளிந்த அறிவுடையவர்கள் மரத்தின் உச்சிக்குச் சென்றபின் முயற்சியைக் கைவிட்டு மன நிறைவு அடைவர். ஒவ்வொருவரும் மிகுதியாகத் தம்மை வருத்திக் கொள்ளாமல் தக்க முயற்சி மேற்கொண்டு பணி செய்வது கடமையாகும். வினையின் வலிமையையும், தம்முடைய பல்வேறு வலிமைகளையும் நன்கு சிந்தித்துப் பாராமல்; தளராத ஊக்கமுடன் செயல்பட்டுக் கொண்டே இருந் தால் விரைவில் அழிந்து ஒழிய வேண்டியது ஏற்படும். ஓவ்வொருவரும் தாம் தாம் செய்து வரும் எப்பணியிலும் தம் வலிமைக்கு விஞ்சிச் செயல்பட முயல்வது வெற்றி நல்குவதற்கு மாறாகத் தாங்க இயலா வீழ்ச்சியையே உண்டாக்கும் ஆகவே, எச்செயலிலும் தம் வலிமைக்கு ஏற்ற அளவைத் தாமே உணர்ந்து திட்டப்படுத்திக் கொள்ள வேண்டும். நெடுமரம் நீள்கோட்டு உயர் பாய்தல் இன்னா என்னும் இன்னா நாற்பதின் கூற்றும் ஒப்பு நோக்கத் தக்கது. மிகுந்த வேகம் ஆபத்து மித வேகம் பாதுகாப்பு எனும் குறிப்புரை ஊர்தி ஓட்டுநர்க்கு மட்டுமன்று. அனைவர்க்கும் அனைத்துப் பணிகட்கும் பொருந்தும் குறிப்பே ஆகும். ------------ ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள் 231) உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் (குறள் 232) எனப் புகழ் அதிகாரத்திலும் நல்லாறு எனினும் கொளல்தீது, மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (குறள் 222) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப்பு உழி (குறள் 226) என ஈகை அதிகாரத்திலும் தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 212) ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து (குறள் 220) என ஒப்புர வறிதலிலும் ஈகையின் சிறப்பை எடுத்து மொழிந்து, ஈகை யாளரைப் பெருக்க முனையும் வள்ளுவப் பெருந்தகையே அளவறிந்து ஈக என விரும்பி வேண்டி வலியுறுத்தும் வாழ்வியல் நுணுக்கங்களைக் கண்டுணர் வோமாக! பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை 247 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் 752. பொருள் என்னும் பொய்யா விளக்கம் 753. பொருள் என்னும் செல்வச் செவிலி 757. செய்க பொருளை 759. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை 252. என்னும் வள்ளுவச் சிந்தனைகளை மனத்தகத்தே கொள்வோம். ஆற்றின் அளவறிந்து ஈக, அதுபொருள் போற்றி வழங்கும் நெறி 477. என்னும் குறள் நடைமுறை வாழ்வியல் உணர்த்தும் குறள்களில் ஒன்றாகும். பொருள் திறனறிந்து தீதின்றி வருதல் வேண்டும். அவற்றில் நடைமுறை வாழ்விற்கும் வீண் ஆடம்பரம் இன்றிச் செலவு செய்தல் வேண்டும். எதிர் கால எதிர் பாராச் செலவிற்கு ஒரு பகுதி சேமிக்கப்பட வேண்டும். எஞ்சிய பகுதியை வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை 221. இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் 223. அற்றார் அழிபசி தீர்த்தல் 226 என வள்ளுவர் கூறிய நெறிப்படி, உரியவர்கட்கு அவர்கள் தேவை அறிந்தும், ஈகையர் தம் கைப்பொருளின் அளவிற்கு உட்பட்டு வழங்கி வாழ வேண்டும். அதுவே பொருளின் உண்மையான மதிப்பை உணர்த்தும். தமக்கும் பாதிப்பு இன்றியும், பொருளுக்கும் அழிவு வாராமல் போற்றிப் பேணி பிறர்க்கு உதவி வாழும் முறையான முறையாகும். பொருளை ஆற்றின் ஈட்டுக! அளவு அறிந்து ஈட்டுக! ஆற்றின் ஈக! அளவறிந்து ஈக! பொருளைப் பொருளாகப்போற்றுக! நெறி போற்றி வழங்குக! ---------- பணம் செலவழிப்பதை எல்லாம் எழுதிவை; செலவழித்தது அவசியம் தானா என்று சிந்தித்துப்பார்; சிக்கனம் தானாக வந்து விடும் என்கிறார் வாழ்ந்து காட்டிய வாய்மையாளர் காந்தியடிகளார். வீண் செலவு செய்யாதே கையைக் கெட்டியாகக் கழுத்தில் கட்டிக் கொண்டும் இராதே! கையில் கிடைத்ததை எல்லாம் வீணே வீசி எறிந்து கொண்டும் இராதே. வீணில் பொருளை வாரி இறைப்பவர்கள் எல்லோரும் சைத்தானின் உடன் பிறந்தவர்கள் என்பதில் ஐயம் இல்லை என்பவர் நபிகள் நாயகம். வறுமையை விட, சிக்கனம் இன்மை மிகக் கொடியது என்பது கன்பூசியசின் கருத்து. உனக்கோ, மற்றவருக்கோ நல்லது செய்வதற்காகத் தவிர வேறு எதற்கும் செலவு செய்யாதே. அதாவது எதையும் விணாக்காதே. வருமானத்தை விடக் குறைவாகச் செலவு செய்ய அறிந்து விட்டால் இரசவாத இரகசியத்தை அறிந்து விட்டவன் ஆவாய். சின்னஞ்சிறு செலவுகளைப் பற்றியும் கவனமாய் இரு. அடித்தளத்தில் உள்ள சிறு ஓட்டை ஒரு பெரிய கப்பலையே மூழ்கடித்து விடலாம் என்கிறார். பிராங்கிளின். ஒரு மனிதனுடைய சாதாரணச் செலவுகள் அவனுடைய வருவாயில் பாதியளவு மட்டும் இருக்க வேண்டும். அவன் செல்வனாக விளங்க வேண்டுமானால், மூன்றில் ஒரு பகுதியே செலவழிக்கலாம் என்பது பேக்கனின் அறிவுரையாகும். எனது செல்வம் என் உடைமைகளில் இல்லை. என் தேவைகளின் சுருக்கத்தில் இருக்கிறது என்று கூறுபவர். பிரதர்டன் ஊதாரி வருங்காலப் பிச்சைக் காரன்: கஞ்சன் என்றுமே பிச்சைக் காரன், என்பது போலந்து நாட்டுப் பழமொழி. ஒரு காசு பேணில் இருகாசு தேறும் அளகேசன் (குபேரன்) ஆனாலும் அளவறிந்து செலவு செய்ய வேண்டும். என்பன நம் நாட்டுப் பழமொழிகள். மேற்கண்ட அறிஞர்கள் நோக்கும் வள்ளுவர் நோக்கும் ஒன்றாய் இருப்பினும் அதனை வள்ளுவர் கூறும் முறை தனிச் சிறப்புடையது என்பதை ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை (குறள் 478) என்னும் குறள் வழி அறிகிறோம். கேடு தருவது எது? வருவாய்க் குறைவா? இல்லை செலவு மிகுதியே கேடு தரும் என்கிறார். வரவைப் பெருக்க முயற்சி செய்! முடியவில்லையா? கவலைப் படாதே! அதனால் கேடு ஒன்றும் நிகழ்ந்துவிடாது. ஆனால் பொருள் செலவாகும் வழி மட்டும் விரிந்து விடாமல் பார்த்துக் கொள்! கேடு ஏற்பட வழி இல்லை. கண்வாய்க்கு நீர் வரும் கால்வாய் பெரிதாக இருக்க வேண்டும். கண்வாயிலிருந்து வெளியேறி நிலத்திற்கு நீர் செல்லும் வாய்க்கால் சிறிதாக இருக்க வேண்டுவது அவசியம். ஒரு நாள் பெய்த மழையால் சேர்ந்த நீரை சில திங்கள் சேமித்துப் பயன்படுத்தி விளைவைப் பெருக்கலாம். வரவிற்கு விஞ்சி செலவு செய்தல் கூடாது. ஆகவே ஒவ்வொரு வரும் அவரவர் வருவாய்க்கு உட்பட்டே செலவு செய்யப் பழக வேண்டும். சிறுகச் சிறுக சேமித்தாலும் சிறு துளி பெரு வெள்ளம் போல் செல்வம் பெருகும். வரவு எட்டணாவாக இருந்தால் செலவு ஆறு அணாவாக இருக்க வேண்டுமே யொழியச் செலவு பத்து அணாவாக அமைய என்றும் வழிவைத்து விடக் கூடாது. ஆகாறு அகலலாம்! போகாறு அகலக் கூடாது. போகாறு அகலமானால் கேடு நம்மை விட்டுப் போகாது. -------- அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். (குறள் 479) இருப்பு அளவு தன்னிடம் உள்ள, அசையா, அசையும் பொருள்களின் அளவினையும் தெளிவாக அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும், நாளும் கிட்டும் வருவாயையும் கணக்கில் கொள்ள வேண்டும். செலவுகளில் வணிகம் செய்வதற்காக எடுக்கும் முதற் பொரு ளாயினும், தொழில் தொடங்குவதற்கான அடிப்படைக்குத் தேவையான பொருளாயினும், வீடு கட்டுதல், சொத்து வாங்குதல் போன்றவற்றிற்குச் செலவு செய்யும் பொருளாயினும், குடும்ப வாழ்விற்குப் பல வழிகளில் செலவு செய்யும் பொருளாயினும், பொது நலன் கருதிப் பிறர்க்கு உதவும் பொருட்டு எடுக்கும் பொருளாயினும் ஆகுக! தன் பொருள் வளத்தை அறிந்து, அதற்கு உட்பட்டே செலவு செய்து வாழ வேண்டும். வரவையும் பெருக்காமல் இருப்பையும் அறியாது செல விட்டு வாழ்வோர். நன்றாக வாழ்வது போலவும் நன்றாக இருப்பது போலவும் வெளியே தெரியும் ஆனால் அத்தோற்றம் நெடுநாள் நிலைக்காது! விரைவில் ஒன்றும் இல்லாதவராகவும், ஒன்றுக்கும் பயன் அற்றவராயும் கெட்டழிவர். பொருள் நிலை அறிந்து வாழாதவன் வாழ்க்கை இருப்பது போல தோன்றும், ஆனால் எதுவும் இராது. குந்தித் தின்றால் குன்றும் தேயும் சிறு துளி பெருவெள்ளம் ஆகும் நீரை ஊற்ற ஊற்றப் பெருகும் நீரை எடுக்க எடுக்கக் குறையும். ஓட்டைக் குடத்தில் நீர் ஊற்றி வைத்தால் நீர் தங்குமா? பாரியின் பறம்பு மலையை மூவேந்தரும் முற்றுகையிட்டு இருந்த போது கபிலர் மூவேந்தரிடமும் கூறிய செய்தி கடந்தடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும் பறம்புகொளற்கு அரிதே முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டு நீர் படினீர் செலினே என்னும் பாடல் வழி வெளிப்படுகிறது. பாரியின் கொடைவளம் பாராட்டத் தக்கது தான். அனால் அளவறிந்து வாழத் தெரியாதவன் பட்டியலில் இடம் பெற்று விடுகிறானே! வலி அறிதல் வழி பாரியை அப்படித்தானே கணிக்க வேண்டியுள்ளது. --------- உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும் (குறள் 480) என்னும் அருமைக்குறள் பொருளியல் கண்ணோட்டத்துடன் வாழ்வியல் நோக்கில் வடிக்கப்பட்ட வார்ப்பாகும். ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் (குறள் 214) எனவும் நீர் நிறைந்த ஊருணி போலவும், உள்ளூர்ப் பழுத்த பயன் மரம் போலவும், மருந்தாகித் தப்பா மரம் போலவும் செல்வர் செல்வம் பயன்பட வேண்டும் என்னும் பெருநோக்கு உடையவர் வள்ளுவர். ஆகையினால் தான் ஒப்புரவி னால்வரும் கேடெனின், அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து (குறள் 220) எனவும் சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை (குறள் 230) என வலியுறுத்தி உரைக்கலானார். இருப்பவர் இல்லாதவர்கட்குக் கொடுத்து உதவி வாழ்வதும். இல்லாதவர் இருப்பவரிடம் உதவி பெற்றும் இணங்கி வாழ்வதுவே உலக இயல்பு. ஆகவே வாழ்வியல் நெறி காட்டும் வள்ளுவர், இரத்தலும் ஈதலே போலும், கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு (குறள் 1054) எனவும் மேலுலகம் இலலெனினும் ஈதலே நன்று (குறள் 222) எனவும் உரைத்தார். நல்லாறு எனினும் கொளல் தீது 222 தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு 212 என வாழ்வது மிக உயர்ந்த பெரு நோக்கு வாழ்வாகும். வள்ளல் ஆய், பாரி, குமணன் போல, உலகவாம் பேரறிவாளராக கைமாறு வேண்டாக் கடப்பாடு உடையவர்களாய் வாழும் ஒப்புரவாளர் மிகச் சிலரே ஆவர். ஆனால் சிற்றளவேனும் ஒத்தது அறியும் ஒப்புரவுக்குணம் ஒவ்வொருவருக்கும் இருத்தல் வேண்டும். ஒப்புரவு உணர்வு இல்லார் உயிரற்றவராகவே கருதத் தக்கவர். மக்களில் பெரும்பாலோர் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றாங்கு பொருள் நோக்கு வாழ்வரே யாவர். தேடிச் சேர்த்துள்ள பொருளில் எதன் பொருட்டு எடுத்துப் பயன்படுத்தினாலும் எடுத்த அளவு பொருள் குறையும் என்பது எவரும் அறிந்ததே. ஒப்புரவு என்னும் உயர்ந்த அறப்பணிக்குச் செலவு செய்தால் அமுத சுரபி போல் அள்ள அள்ளக் குறையாது பெருகும் என எவரும் கற்பனையாக நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். ஒப்புரவு செய்வதால் மன நிறைவு ஏற்படலாம். புகழும் பெருமையும் வளர்ந்து பெருகும். ஆனால் அள்ள அள்ள அள்ளிய அளவுப் பொருள் குறைந்து கொண்டேதான் வரும். ஆகவே ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள பொருளின் அளவை அறிந்து அதற்கு உட்பட்டே ஒப்புரவு செய்து வாழ்வது நல்லது. தம்மிடத்தில் உள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பாராமல் ஒருவர் வரம்பு கடந்து பிறர்க்குச் செய்யும் பொருள் உதவியால் அவர்தம் பொருளின் அளவு மிக விரைவிலேயே குறைந்து பின் அழிந்து போகும். களாப்பழம் போன்ற கருநிறத் தண்டினை உடைய சிறிய யாழைக் கொண்டு பாடுதற்கு இனிய பாடலைப் பாடிய பாணர். பரிசில் பெற்றுக் கொண்டு போயினர்; பரிசாகக் களிறுகள் போயினமையால் வெறுமையான நெடிய கட்டுத் தறியில் காட்டு மயில்கள் தத்தம் கூட்டத்தோடு தங்கின; கொடுத்தற்கு இயலாத மங்கல அணி ஒன்று மட்டுமே அணிந்தவராக மகளிர் உளர். இவ்வாறு ஆய் வள்ளலின் அரண்மனை பொலிவு குன்றியது என்று சொல்லுவர் என்னும் கருத்துப் பட ஏணிச்சேரி முடமோசியார், வேள் ஆய் அண்டிரனைப் பாடிய பாடல் புறநானூற்றல் 127 ஆம் பாடலாக அமைந்துள்ளதை இங்கே கண்டு உணரலாம். களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடின் பனுவல் பாணர் உய்த்தெனக் களிறுஇல ஆகிய புல்அரை நெடுவெளில் கான மஞ்ஞை கணனொடு சேப்ப ஈகை அரிய இழையணி மகளிரொடு சாயின்று என்ப ஆஅய் கோயில் வலியறிதல் நோக்கில் ஒப்பு நோக்கத்தக்கது. உன் பொருளுக்கு அழிவு ஏற்பட்டு நீ அல்லல் படா வகையில் அளவறிந்து ஒப்புரவு செய்க! ------- தூக்கிச் செய்க! வினைவலி - தன்வலி மாற்றான் வலி- துணைவலி ஒல்வது அறிக! அறிவது அறிக! அறிந்ததன் கண் தங்கிச் செய்க! உடைத்தம் வலி அறிந்து ஊக்குக! அமைந்தாங்கு ஒழுகுக! அளவு அறிக! தன்னை வியவற்க! மயில் தோகை ஆயினும் வண்டியில் அளவோடு ஏற்றுக! நுனிக் கொம்புக்கு ஏறுவதே ஏற்புடையதன்று ஆற்றின் அளவறிந்து ஈக! பொருளைப் போற்றி வழங்கு வருவாயைப் பெருக்குக! செலவைச் சுருக்குக! அளவறிந்து வாழ்வதே வாழ்க்கை! உளவரை தூக்கி ஒப்புரவு செய்க! தன்னிலை உணர்க! ---------- 49. காலம் அறிதல் ஒரு செயலைச் செய்யுங்கால் பொருள், கருவி, காலம், செயல், இடம் என்னும் ஐந்தையும் மயக்கம் நீங்க எண்ணிச் செய்தல் வேண்டும் என்பதை பொருள் கருவி காலம் வினையிடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் 675. என்னும் வினை செயல் வகை அதிகாரக் குறள் வழி விளக்கினார். எண்ணிச் செய்ய வேண்டிய ஐந்தில் பொருளும் கருவியும் முதலாவதாக வும் செயலும் இடமும் நிறைவாகவும் நிற்கிறது இரண்டிற்கும் நடுவில் மூன்றாவதாகக் காலம் இடம் பெற்ற வரிசை முறையும் எண்ணிப் பார்க்கத் தக்கதே! காலம் அறிந்து செயலாற்றினால் பொருள் கருவியிலோ, வினை இடனிலோ சிற்சில குறைகள் இருப்பினும் அதனையும் ஏற்புடைக் காலம் சீர் செய்து வெற்றியைத் தேடித் தரும் என்பது நடைமுறை உண்மையும் ஆகும். ஆகவேதான் நம் முன்னோர் காலம் பொன் போன்றது என்றும் ஞாலம் செய்யாததைக் காலம் செய்யும் என்றும் ஆடிப்பட்டம் தேடி விதை என்றும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்றும் ஆனைக் கொரு காலம் வந்தால் பூனைக் கொரு காலம் வரும் என்றும் காலம் யாருக்கும் காத்திராது போனால் திரும்பி வராதது காலம். என உரைத்த நன்மொழிகள் எல்லாம் பொன்னே போல போற்றிக் கொள்ளத் தக்கனவாகும். தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை உரிய நாளில் பிறக்க வேண்டும், நாள் தவறுவது தாய்க்கும் நன்றன்று: குழந்தைக்கும் நன்றன்று; அதுபோல் பேச வேண்டிய காலத்தில் பேச வேண்டும், தவழ வேண்டிய காலத்தில் தவழ வேண்டும், நடக்க வேண்டிய காலத்தில் நடக்க வேண்டும், வயதிற்கு ஏற்ற வளர்ச்சி வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? உரிய அகவையில் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்; படிக்க வேண்டிய காலமெல்லாம் படித்துப் பட்டம் பெற வேண்டும். பணி மேற் கொள்ள வேண்டிய காலத்தில் பணியில் ஈடுபட வேண்டும். தக்க வயதில் மண வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும். காலம் தப்பின் காரியம் சிதையும். கை கூடாது. பசிக்கும் வேளை அறிந்து உண்ண வேண்டும்; காலக் கணிப்புத் தேவை. உண்ணல், உறங்கல் முதல் அனைத்துப் பணிகளையும் முறையே திட்ட மிட்டுக் காலம் தவறாது பின்பற்ற வேண்டும். மலம் நீர் கழிப்பிற்கும் கூடக் கட்டாயம் காலம் தவறுதல் ஆகாது. விதைக்கிற காலம் அறிந்து விதைக்க வேண்டும்: அப்படியானால் தான் விளைகிற காலத்தில் விளையும், அறுவடை செய்கிற காலத்தில் அறுவடை செய்ய முடியும். குடை வணிகம் எப்பொழுது நன்றாக நடைபெறும்? செருப்பு வணிகம் எப்போது சீராக நடைபெறும்? என்ற தெளிவு வேண்டும். காலம் அறியா வணிகம் கைப்பொருள் தாராதே! எப்பொருளை எப்பொழுது எங்கே வாங்கி எப்பொழுது எங்கே விற்பனை செய்ய வேண்டும் என்னும் தெளிவால் தானே வணிகத் தொழிலில் வளம் பெருக்குகின்றனர். பெரும் பெரும் பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டியவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்போர். ஆகவே அவர்கள் காலம் அறிந்தே எப்பணியையும் செய்ய வேண்டும். அதிலும் போர்ப்பணிக்கும் பாதுகாப்புப் பணிக்கும். நலத்திட்ட உதவிக்கும் காலப் பொருத்தம் கட்டாயம் வேண்டும். பெருநோய்க்கு மருத்துவம் செய்ய அரசு உதவி வேண்டினவன் மாண்டபின் உதவி கிட்டினால் என்ன பயன்? பசிக்கு உணவு, தாகத்திற்கு நீர், நோய்க்கு மருந்து உரிய காலத்தில் கிட்ட வேண்டும். மிக நெருக்கடியான காலத்தில் ஒருவர்க்குச் செய்த நன்மை அதன் அளவால் சிறியதாக இருப்பினும், பயனை நோக்க இப்பெரிய உலகினும் பெரியதாகும் என்னும் கருத்தை வள்ளுவரின் காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது (குறள் 102) எனும் குறள் வழி அறிகிறோம். மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரத்தில், குறிப்பறிந்து காலம் கருதி, வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் (குறள் 696) எனக் கூறுவதையும். தூது என்னும் அதிகாரத்தில் கடன்அறிந்து காலம் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை (குறள் 687) எனக் குறிப்பிட்டுள்ளதையும் அறியின் காலத்தின் அருமை புலப்படும். தீயை விரைந்து அணைக்க வேண்டும். கட்டிடத்தை ஒரே நாளில் கட்டி முடித்து விட வேண்டும் என எண்ணக் கூடாது. ஆக்கப் பொறுத்தது போல் ஆறவும் பொறுக்க வேண்டும். ஆனால் அலர்ந்து உலர்ந்து ஊசிப் போகவிடக் கூடாது. ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பது பழமொழி. 2006 ஆம் ஆண்டு ஆகஃச்டுத் திங்கள் 2 ஆம் நாள் மாலை 4 மணி 4 நிமிடம் 15 நொடி இனிமேல் எப்பொழுதும் மீண்டும் வரப் போவது இல்லை ஆகவே ஒவ்வொரு நொடியும் பயனுடைய பொழுதாகவே ஆக வேண்டும் ஆக்கவும் வேண்டும். ஒரு மணித்துளியில் உலகில் நடப்பது 1. 6000 விண்கற்கள் மண்ணில் பாய்கின்றன. 2. பூமி தன்னைத் தானே 950 மைல் தூரம் கடந்திருக்கும் 3. 38 புயல்கள் உருவாகி இருக்கும். 4. 1400 க.அடி மழை பெய்திருக்கும். 5. ஆறுகள் 35000 டன் நீரைக் கடலில் சேர்த்திருக்கும். 6. 100 பேர் இறந்திருப்பர். 7. 14 குழந்தைகள் பிறந்திருக்கும். 8. 34 திருமணங்கள் நடந்திருக்கும். 9. 4 இணையர்கள் மண விலக்குப் பெற்றிருப்பர். 10. 3 இலக்கம் தொலைபேசி அழைப்பு வந்தும் போயும் இருக்கும். 11. 63 இலக்கம் வெண்சுருட்டுப் புகைக்கப் பட்டிருக்கும். 12. 6400 காலன் மது குடிக்கப்பட்டிருக்கும். 13. 400 டன் உணவு உண்ணப் பட்டிருக்கும். 14. 300 டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டிருக்கும். 15. 700 டன் இரும்பு வெட்டி எடுக்கப்பட்டிருக்கும். எனக் கூறும் புள்ளி விவரம் காலத்தை எண்ணத் தூண்டுகிறது. பொன்மொழிகள் 1) வாழ்க்கையை வளமாக்க விரும்பினால் காலத்தைக் கண நேரமும் வீணாக்கக் கூடாது. ஏனெனில் காலத்தால் செய்யப் பட்டது தான் வாழ்க்கை என அறிஞர் சாண்டர்சு கூறுகிறார். 2) நேரத்தை வீணாக்காதே ஏதாவது பயனுடையவற்றிலேயே உன்னுடைய எல்லா நேரத்தையும் ஈடுபடுத்து. அவசிய மற்ற செயல்களை எல்லாம் தவிர்த்துவிடு. ஏனென்றால் வாழ்க்கையின் மூலப்பொருளே நேரந்தான் என்கிறார் பிராங்ளின். 3) காலத்தின் நிலையை அறிந்து கொள். காலமே உன் உயிர்; அதை வீணாக்குவது உன்னையே நீ கொலை செய்து கொள்வது போலாகும். என்கிறார் உளவியல் அறிஞர் சேம்சு ஆலன். 4) நமக்கு ஏற்படும் இழப்புகளிலெல்லாம். காலத் தாழ்வினால் ஏற்படும் இழப்புகளே மிக அதிகமாயும், அதிகப் பொருள் மதிப்புள்ளவையாயும் இருக்கின்றன என உரைக்கிறார் எட்வர்ட்சு. 5) கடவுளுக்கு அடுத்த படியாக நேரத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும் எனக் கூறும் லவேட்டரின் கூற்று வள்ளுவரின் காலம் அறிதலுக்கு நல்லதொரு முன்னுரை ஆகும். பகலில் செய்ய வேண்டிய பணிகளும் உண்டு; இரவில் செய்ய வேண்டிய பணிகளும் உண்டு. அதுபோல் வேனிற் காலத்தில் செய்ய வேண்டிய பணிகளும் உள; மழைக்காலத்தில் செய்ய வேண்டிய பணிகளும் உள. என்பதை உணர்ந்து ஏற்ற செயலை ஏற்புடைய காலத்தில் செய்தல் வேண்டும். உறுபசியுடன் இருக்கும் பொழுதோ ஓவாப் பிணியால் பீடிக்கப்பட்ட பொழுதோ! மன வேதனையில் வருந்தும் பொழுதோ? கொடுஞ் சினத்திற்கு ஆட்பட்ட பொழுதோ? சட்டத்திற்குப் பயந்து பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால். ஒப்புக்குச் செய்ததாக இருக்குமே அல்லாமல் நிறைவும் பயனும் நல்குவது அருமை. அவசரப்படாமல் காலம் தாழ்த்தி மெல்லெனச் செய்ய வேண்டிய செயல்களைக் காலம் தாழ்த்தியே செய்ய வேண்டும். காலத் தாழ்வு இன்றி விரைந்து செய்ய வேண்டிய செயல்களைக் காலம் தாழ்த்தாது மிக விரைந்து செய்ய வேண்டும் என்பதை தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க தூங்காது செய்யும் வினை (குறள் 672) எனும் வினை செயல் வகைக் குறள் தெளிவு படுத்துகிறது. நம் உடல் நிலையும் மனநிலையும் அறிவுக் கூர்மையும், செயல் திறனும், நினைவாற்றலும் எல்லா நேரங்களிலும் ஒரு தன்மை உடைய தாய் இருப்பதில்லை. என்பதையும் உணர்ந்து நன்னிலையில் இருக்குங் கால் செயல்பட்டால் நினைத்தது நினைத்தபடி நிகழுறும். காலம் அறிந்து செயல்படுவோம்! காலமெல்லாம் புகழ்பெறுவோம்! ----------- கதிரொளி வீசும் நல்ல பகற் பொழுது வேளை, திருவள்ளுவர் ஓங்கி உயர்ந்த மரங்கள் நிறைந்த தோப்பு ஒன்றில் ஒரு அருமையான மர நிழலில் அமர்ந்து, எதிரே உள்ள மரக் கொப்பில் நிகழும் ஒரு பறவைப் போரை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அஞ்சாமை ஈகை, அறிவு ஊக்கம், நான்கும் நன்கு பொருந்திய படை வலிமை குறைந்த குறுநில மன்னர் ஒருவர் வள்ளுவரை வந்து கண்டார். அவர் வள்ளுவப் பெருந்தகையிடம் ஐயா, அண்டை நாட்டுப் பேரரசரின் படை வலிமையைத் தாங்களும் நன்கு அறிவீர்கள்! அவர் நம் நாட்டின் மீது படை எடுத்துப் போரிட்டு எப்படியாவது வெல்லக் கருதிக் கொண்டிருப்ப தாக ஒற்றர் வழி அறிந்தேன். அவர்படையுடன் எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறும் வலிமை நம் படைக்கு இல்லையே என் செய்வது? என வினவினார். அதற்கு வள்ளுவர் அதோ அந்த மரத்தில் ஒரு பறவைப் போர் நிகழ்கிறது. அதை உற்றுப் பாருங்கள்! என்ன பறவை? ஒன்று காகம், மற்றொன்று கூகை. இரண்டில் வலியது எது? கூகை தான் வலியது. காகம்? வலிமை குறைந்தது. போர் முடிந்து விட்டதா? வெற்றி பெற்றது எது? வலிய கூகையா? மெலிய காகமா? மெலிய காகமே வெற்றி பெற்றது. எதனால் மெலிய காகம் வென்றது? காலம் தந்த வெற்றி! காலம் தந்த வெற்றி என்றால் எப்படி? பகற் பொழுது காகத்திற்கு வலிமையும், கூகைக்கு மெலிவையும் நல்கும் பொழுதாகும். அதனால் தான் வலிய கூகையையும் காகம் எளிதில் வென்று விட்டது. ஏற்ற காலம் வாய்த்தால் காகத்தாலும் கூகையை வெல்ல முடியு மானால், குறுநில மன்னராகிய உங்களால் ஏன் பேரரசரை வெல்ல முடியாது எனத் தளர்ச்சி அடைகிறீர்கள்? ஆரவாரம் இன்றி அமைதியாக மன உறுதியுடன் இருங்கள். பகை மன்னன் வேற்று நாடுகளுடன் போர் புரிந்து களைத்துச் சோர்ந்துவரும் போது நீங்கள் அவர் நாட்டின் மீது படையெடுத்துப் போர் புரியுங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள் தயங்க வேண்டாம்! இதோ அதற்கு ஏற்ற குறப்பா. பகல்வெல்லும் கூகையைக் காக்கை: இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481) சதானந்த முனிவர் கோசிகனுக்கு, வில்லின் வரலாறு கூறி வரு கின்றார். வில்லை எடுத்து வளைக்கும் வன்மை இல்லாத மன்னர்கள் பலர், சனகனோடு சண்டையிட்டனர். சனகன் ஒருவன்: மன்னர்கள் பலர். இருந்தும் தோற்று ஓடினர் என்ற நிகழ்ச்சியை, அற்காக்கை கூகையைக் கண்டஞ்சினவாம் என அகன்றார் என்று கம்பர் உவமையை மாற்றிக் கூறும் அழகு தனியழகே! கடத்திடைக் காக்கை ஒன்றே ஆயிரங் கோடி, கூகை இடத்திடை இரங்கச் சென்றாங்கு இன்னுயிர் செகுத்த தன்றே. எனச் சீவக சிந்தாமணி உவமைக்கு மேலும் வலிமை கூட்டி உரைக்கிறது. காக்கைக்குப் பகல்பொழுது வலிமை தரும் பொழுதாகும். கூகைக்கு வலிமை தரும் பொழுது இரவாகும். கூகை பகலில் சோர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும். கண்ணொளியும் குன்றி இருக்கும் என்று சொல்கிறார்கள். ஆகவே, பகற்பொழுதில் காக்கை தன்னினும் வலிமை வாய்ந்த கூகையை யும் வெற்றி பெற முடிகின்றது. ஆகவே, போர்ப்பணியில் மட்டுமல்ல ஆட்சியாளர் மேற் கொள்ளும் எப்பணியையும் அதற்கு ஏற்புடைய காலத்து மேற்கொண்டால் உறுதியாக வெற்றி பெறலாம். காக்கை வழி பாடம் கற்போம்! காலம் அறிந்து செயல் படுவோம்! காலம் நமக்கு வெற்றியைத் தேடித் தரும் திருத்தூதன் ஆகும். ----------------- பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. (குறள் 482) உலகத்தோடு ஒட்ட ஒழுகலைக் கற்றவரே அறிவுடையார். என்பதை ஒழுக்கமுடைமையில் வலியுறுத்த ஒட்ட ஒழுகல் என்னும் சொற் றொடரைப் பயன்படுத்தியமை போன்று பருவத்தோடு ஒட்ட ஒழுகல் எனக் கூறிக் காலத்தின் வல்லமையை எடுத்து மொழிகிறார். செல்வம் ஓரிடத்தில் நிலைபெற்று இராத் தன்மை உடையது என்பதை அற்கா இயல்பிற்றுச் செல்வம் 333 எனவும், கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று (குறள் 332) எனவும் உரைத்த திருவள்ளுவர் நாம் முயன்று தேடிச் சேர்த்த செல்வம் நம்மை விட்டு நீங்காது நிலையாகப் பொருந்தி இருப்பதற்கு வழி கூறும் அருமைக் குறளே இதுவாகும். ஒவ்வொருவரும் செய்ய முற்படும் செயல் காலத்துடன் நன்கு பொருந்தியதாய் அமைய வேண்டும். ஏற்புடைய காலத்தில் செய்யும் பணியே செல்வம் போன்று நாம் விரும்பும் வளங்களை எல்லாம் நம்மை விட்டுப் போக விடாமல் கட்டி நிறுத்தும் வலிய கயிறு போன்றதாகும். திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு எது? பருவத்தோடு ஒட்ட ஒழுகல். ஆகவே காலம் அறிந்து செயல்படு! நீ தேடிய செல்வம் உன்னை விட்டு நீங்காது. பருவத்தே பயிர் செய் பருவத்தே அன்றிப் பழா என்னும் பழமொழி களும் பருவத்தோடு ஒத்து வாழ் என்னும் ஆத்தி சூடியும் இக்குறட் கருத்திற்கு அரண் செய்வன வேயாகும். சூழ்நிலைகள் சரியாய் இல்லாவிட்டால், எத்தகைய முயற்சியும் பயன் அளிக்காமல் போகலாம். மனிதனுக்கு மீறிய சக்திகள் உண்டு என்பதை மறக்கக் கூடாது என விதுரநீதி கூறுவதும் ஓரளவு இயைந்த கருத்துடைய தாகும். உழவிற்கும் பருவம் வாய்த்து, விதைப்பிற்கும் பருவம் வாய்த்து, வான் மழையும் பருவத்தே பெய்யுமானால் விளைவிற்குக் கேட்கவா வேண்டும். ------------- வினைகளில் அரியவினை எளிய வினை என்றிருக்கிறதா? இல்லை, செயல் திறன் உடையவன் செய்யப்போகும் வினைக்குத் தேவையான கருவிகளின் துணையுடன் பொருத்தமான காலத்தில் செய்ய முற்பட்டால் பெரிய வேலையையும் எளிதாகச் செய்ய இயலும். கருவித் துணை இருந்தும் காலம் துணை செய்யவில்லையானால் சிறிய வேலையையும் செய்யப் பெருமுயற்சி மேற்கொண்டாலும் பயனற்றுப் போகும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது பழமொழி. பல நாடுகளில் வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த நெப்போலியன் உருசியா நாட்டுப் படையெடுப்பில் தோல்வி யுற்றதற்கும். 1962 சீனப் படை யெடுப்பில் இந்தியா தோல்வி அடைந்தமைக்கும் காலம் துணைபுரி யாமையே காரணமாகும். காலம் அறிந்து செய்தால் செய்யும் வினை எல்லாம் நல்வினையே! நலவினையே என்பதை, அருவினை என்ப உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின்! (குறள் 483) என்னும் குறள் விளக்குகிறது. ----------------- காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது (குறள் 102) நன்றி சிறிதுதான், ஆனால் தக்க காலத்தில் செய்யப் பட்டது. ஆகவே அதன் மதிப்பு பேருலகத்தையும் விடப் பெரிதாகிறது. இங்கேயும் காலத்தோடு ஞாலத்தை இணைத்துக் கூறியாங்கு கூறும் குறளே ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தால் செயின் (குறள் 484) என்பதாகும். இக்குறட்பாவில் எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666) என்னும் வினைத் திட்பக் குறளின் உறுதியும் நம்பிக்கையும் செறிந்து காணப்படுகிறது. காலமும் இடமும் அறிந்து இரண்டிற்கும் ஏற்றவாறு முயற்சி செய்து செயல்பட்டால், ஊர், நாடு, கண்டம் எனும் எல்லைகளையும் தாண்டி உலகம் முழுவதையும் கைக்கொள்ளக் கருதினாலும் நடக்கக் கூடியதே ஆகும். காலமும் இடமும் கணித்துச் செய்யின் உலகமே வேண்டினும் கிடைக்கும். நடுவு நிலை பிறழாத மன்னர்க்கு நல்லோர் ஆய்ந்து சொன்ன காலமே கண் வேறு கண் இல்லை என்பதை வசிட்டர் கூற்றாகக் கம்பர். சீலம் அல்லன நீக்கிச் செம்பொன் துலைத் தால மன்ன, தனிநிலை தாங்கிய ஞால மன்னர்க்கு, நல்லவர் நோக்கிய காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ? எனக் கூறுவதையும் ஒப்பு நோக்குக! காந்தியடிகள் தலைமையில் கிளர்ந்தெழுந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் தக்க காலத்தை அறிந்து, உரிய இடத்தையும் தெரிந்து, போராடிய தனால்தான் இந்தியப் பெரு நாட்டிற்கு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைத்தது. காந்தியடிகள் தனிநிலையிலும் எப்பணியை எவ்விடத்தில் எந்நேரத் தில் செய்ய வேண்டுமோ அதனைத் தவறாது செய்து இந்திய வரலாற்றில் மட்டுமல்லது உலக வரலாற்றிலேயே தனக்கெனத் தனி இடம் பெற்றுப் புகழப்படுகிறார். ---------- காலம் கருதி இருப்பர், கலங்காது ஞாலம் கருது பவர் 485. காலம் கருதி இருப்பவர் யார்? ஞாலம் கருதுபவர். காலம் கருதுபவர் எப்படி இருப்பர்? கலங்காது காலங் கருதி இருப்பர். உலகத்தை எல்லாம் தாம் கட்டி ஆள வேண்டும் என்னும் எண்ணத்தை மனதில் கொண்டு இருப்பவர் அதற்கு ஏற்ற கருவிகளையும் வலிமையை யும் உடையவர் ஆயினும், அதற்கு எல்லா வகையிலும் பொருத்தமான காலத்தைப் பொறுமையோடு எதிர்பார்த்துக் காத்து இருத்தல் வேண்டும். ஞாலம் முழுவதும் ஆளக் கருதுபவர், காலம் பார்த்துக் கலங்காது இருப்பர். உலக நன்மையைக் கருதிச் செயல்படுவோர் ஏற்ற காலத்தை எதிர் நோக்கிக் கலங்காது இருப்பர். கலங்காது என்பது உயிரோட்டமான ஒரு சொல், பிறர் அச்சமூட்டி, திண்ணிய மனதைக் கலக்கினாலும் கலங்காது தெளிவுடன் இருத்தல், கலக்கம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டாலும் மன உறுதியுடன் இருத்தல். அமைதியுடன் இருத்தல், அடக்கமாக இருத்தல், பொறுமையுடன் இருத்தல், முழு நம்பிக்கையுடன் இருத்தல், அஞ்சாது இருத்தல், ஆய எல்லாம் கலங்காது இருத்தலே ஆகும். சான்று; காலம் வரும் வரைக் காத்திரு என்பது முன்னோர் மொழி. இடத்தொடு பொழுதும் நாடி எவ்வினைக் கண்ணும் அஞ்சார் மடப்படல் இன்றிச் சூழும் மதிவல்லார்க்கு அரியது உண்டோ? என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் நல்ல சான்றாகும். ------- ஊக்கம் உடையார்: ஊக்கம் உடையவர்கள் எச்செயலையும் உடனுக்குடன் செய்து முடிப்பர். காலத் தாழ்வும் செய்யார். கால நீட்டிப்பும் செய்யார். செய்ய வேண்டிய செயலையும் காலத்தையும் மறக்க மாட்டார்; எப்பொழுதும் சுருசுருப்பாய்ச் செயல் புரிந்து கொண்டு இருப்பார்களே அல்லாமல் சோம்பல் கொள்ள மாட்டார்கள், உழைத்த களைப்பு நீங்க அளவோடு உறக்கம் கொள்வார்களே அல்லாமல் மிகுந்த உறக்கம் என்றும் கொள்ளார். இன்னார் ஊக்கம் உடையவர் ஆயிற்றே சில நாள்களாகக் கவனிக்கிறேன் எந்த வேலையும் செய்யாது வீட்டில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறாரே ஏன்? என்று அவருடைய நெருங்கிய நண்பராகிய திருவள்ளு வரிடம் ஒரு பெரியவர் வினவினார்? திருவள்ளுவர் வினவிய பெரியவரைப் பார்த்துப் புன்னகைத் தவாறே ஆட்டுக் கிடாய் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போரிடுவதைப் பார்த்திருக் கிறீர்கள் அல்லவா? அவை தொடர்ந்து முட்டிக் கொண்டு இராது. ஓடி வந்து முட்டிவிட்டுப் பின் நோக்கிச் சிறிது தூரம் சென்று நின்று நிதானித்துப் பின் வேகமாக ஓடி வந்து முட்டும். அவை பின் நோக்கிச் செல்வது அச்சத்தாலோ, சோம்பலாலோ சோர்வாலோ, தளர்ச்சியாலோ அன்று பகையை வலிமையோடு தாக்குவதற்காகத் தான் பின்வாங்கிச் செல்கிறது. அதுபோல் ஊக்கம் உடையவர் வினை செய்வதற்கு ஏற்ற காலம் வரும் வரை, ஆற்றலை வீணாக்காது வலிமையைப் பெருக்கிக் கொள்ளவே திட்டமிடுகிறார். அது பிறர்க்கு அடங்கி ஒடுங்கிக் கிடப்பது போல் வெளியே தெரிகிறது. அது தான் உண்மை நிலையாகும் என உரைத்த விடையே, ஊக்கம் உடையான் ஒடுக்கம், பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து (குறள் 486) என்னும் குறட்பாவாகும். மன எழுச்சி மிக்கவன் தக்க காலத்தை எதிர் நோக்கிப் பின்தங்கி இருப்பது. போர்க்கடா வலுவாக முன்னேறித் தாக்கும் பொருட்டுப் பின் வாங்கிச் செல்வது போன்றதாகும். புலி பதுங்குவ தெல்லாம் பாய்வதற்கே என்னும் பழமொழியும் இதே கருத்தோட்டம் உடையதாகும். கரிபால்டி 1833 இல் இளம் இத்தாலியர் சங்கத்தில் சேர்ந்தார் மாசினி யும் கரிபால்டியும் இணைந்து தீவிரப் போராட்டங்களில் இறங்கினர். 1834இல் புரட்சி தோன்றியது. கரிபால்டியைப் பிடித்துத் தருவோர்க்குப் பரிசு வழங்குவதாய் அரசு பறை சாற்றியது. அவர் இத்தாலியிலிருந்து தப்பி தென் அமெரிக்கா சென்றார். 14 ஆண்டு கள் அவண் தங்கிக் கொரிலாப் போர் முறையில் பயிற்சி பெற்றார். 1848ஆம் ஆண்டு இத்தாலிக்கு வந்து புரட்சியில் கலந்தார். புரட்சி ஒடுக்கப்பட்டது. மீண்டும் தாய்நாட்டை விட்டு நீங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. 1854இல் திரும்பவும் இத்தாலி வந்தார். 1860இல் சிசிலி நேப்பிள்சு மன்னர் இரண்டாம் பிரான்சிசை எதிர்த்துப் போராடினார். அவருக்கு உதவி புரிந்தவர் சார்டினியா மன்னர் விக்டர் இமானுவேலின் அமைச்சர் காபூர் ஆவார். கரிபால்டி இத்தாலியின் தந்தை எனப் போற்றப்பட்டார். கரிபால்டியின் வீர வரலாறு இக்குறளுக்கு ஏற்ற சான்றாகும். --------------- பொள்ளென ஆங்கே புறம்வேரார், காலம் பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (குறள் 487) எச்செயலையும் அதற்கு ஏற்ற காலத்திலே செய்யும் பழக்கம் உடைய அறிவாளர்களைப் பகைவர் வசைமாரி பொழிந்தாலும், பல்வகைக் கேடு புரிந்தாலும் மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும், இத்திருத் துறந்து ஏகு என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்து முகம் காட்சி வழங்குவது தவிர்த்து உடனுக்குடன் உணர்ச்சி வயப்பட்டு ஆத்திரம் கொண்டு சினத்தை வெளிப்படுத்தமாட்டார்கள். அதே நேரம் பகைவரை மறந்தும் விடமாட்டார்கள். உரிய காலத்தை எதிர்பார்த்து இருப்பர். அதுவரை சினம் உள்ளத்தில் அடைபட்டுக் கிடக்கும். அப்படி உணர்ச்சி வயப்படா உள்ளுணர் வாளர்கள் தான் உரிய காலத்தில் செயல்பட்டு உயரிய வெற்றி பெறுவார்கள். அறிவில்லாதவர்களே அடக்கமின்றி வெளிப் படையாகக் கொதிப்பு அடைவர். காலம் கருதாது கண் மூடித் தனமாய்ச் செயல்பட்டு வீழ்ச்சி அடைவர். அறிவுடையார் காலம் அறிந்தே காரியம் செய்வர். உடனுக்குடன் தம் உணர்வை வெளிப்படுத்தார். உரிய பொழுதை எதிர்பார்த்து உள்ளத்தே குறிவைத்துக் கொண்டு இருப்பர். தம்மோடு பிரிந்திருத்தல் கருதி, ஒருவர் விரும்பத் தகாத செயலைச் செய்தாலும், அம்மாறுபாடு கருதி அவர்க்குத் தீமை செய்யாதிருத்தல் சிறப்பாகும் என்பதைப் பகல்கருதிப் பற்றாசெயினும் இகல் கருதி இன்னா செய் யாமை தலை (குறள் 852) என்னும் குறள் வழியும், மாறுபாட்டிற்கு எதிர் நில்லாமல் ஒதுங்கிச் செல்லுதல் நன்மையாகும். ஆம்மாறுபாட்டை மிகுமாறு ஊக்கப்படுத்தினால், அது அழிவையே ஊக்கப் படுத்தும் என்பதை இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம், அதனை மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு (குறள் 858) என்னும் குறள் வழியும் இகலை வெல்ல வழி காட்டும் திருவள்ளுவர். பகை மாட்சியில் வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக 861. என ஆயுதம் தூக்காது போரிட்டு வெற்றி கொள்ளும் போர் நுட்பத்தை வலியுறுத்தும் திருவள்ளுவர் காலம் அறிதலில் கூறும் போர் நுணுக்கம் தனித் தன்மை வாய்ந்ததாகும். நம்மைப் பகைப்பவர் நம்மினும் வலிமை சான்றவர் என்றால் என் செய்வது? அவர்க்கு மிக உயர்ந்த மதிப்புக் கொடுத்து மிக்க பணிவு காட்டி நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய பணிவு ஒரு நடிப்புத்தானே ஒழிய உண்மையானது அன்று. வலிமை வாய்ந்தவர் என்றும் வலிமை வாய்ந்தவராய் இருக்கப் போவது இல்லை. குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணும் ஆறிடும் மேடும் மடுவும் போலாம் செல்வம் மாறிடும் ஏறிடும் என்பது போல் வலிமை குன்றும் இறுதி நிலை ஏற்படும் காலத்து அவர் உண்மையிலே பிறரைத் தலை தாழ்த்தி வணங்கி வாழும் நிலைக்கு ஆட்படுவார். காலம் ஒருவரை உயர்த்தவும் செய்யும். காலம் கருதி நடவாதவரை வீழ்த்தவும் செய்யும். தலை நிமிர்ந்து நடக்க வைப்பதும் காலம் தான். தலை தாழ்த்திப் பணிந்து நடக்க வைப்பதும் காலமே! என்பதை, செறுநரைக் காணின் சுமக்க: இறுவரை காணின் கிழக்காம் தலை (குறள் 488) என்னும் குறள் மொழி சிந்திக்க வைக்கிறது. --------------------- எய்தற்கு அரியது இயைந்தக்கால்; அந்நிலையே செய்தற்கு அரிய செயல் (குறள் 489) ஒவ்வொருவர் வாழ்விலும் கிடைத்ததற்கு அரிய வாய்ப்பான பொழுது சில வேளைகளில் வாய்க்கும். அப்படிக் கிட்டும் பொழுதைப் பிறர் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து சாதனை புரிவது அறிவுடையோர் கடமை யாகும். கிடைத்தற்கரிய வாய்ப்புக் கிட்டினால் உடனே செய்வதற்கு அரியதைச் செய்து கொள்க! நல்வாய்ப்பை நழுவ விடாதே! சிறு முயற்சியால் பெரும் பலன் கிட்டும் காரியங்களைத் தாமத மின்றிச் செய்ய விதுர நீதி வேண்டுகிறது. ஆத்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மாநில ஆளுநர் கென்றி பீல்ட் கார்னல் உணவு ஆசையால் ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார். அதனால் ஏற்பட்ட இழப்பு மூன்று கோடியாம். காமராசர்க்குத் தமிழக முதலமைச்சர் ஆகும் அரிய வாய்ப்புக் கிட்டியது. கல்வியும் தொழிலும் வேளாண்மையும் வளர வேண்டிய திட்டங்களை எல்லாம் விரைந்து தீட்டி, தக்க வழியில் செயல்படுத்தி அவர்தம் ஆட்சிக் காலத்தைப் பொற்காலம் என்று இன்றும் பாராட்டுமாறு ஆண்டது செயற்கு அரிய செயலாகும். பேரறிஞர் அண்ணாவிற்குத் தமிழக முதலமைச்சர் ஆகும் அரிய வாய்ப்புக் கிட்டியது. சென்னை மாநிலத்தைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தார். சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்டப்படி உரிமை வழங்கினார். இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார். இவை அண்ணா செய்த செயற்கரிய செயல்களில் சிலவாகும். கியூபா நாட்டின் அதிபர் பதவியில் அமரும் அரிய வாய்ப்பு பிடல் காசுட்ரோவிற்குக் கிட்டியது. அரசை நிறுவிய பின்னர்தான் அமெரிக்கா வுடன் உண்மையான போராட்டத்தை நடத்த வேண்டிய நெருக்கடி காசுட்ரோவுக்கு ஏற்பட்டது. நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து அமெரிக்கர்கள் கையில் இருந்த இலக்கக் கணக்கான கெக்டேர் நிலங்களை அரசுடைமை ஆக்கினார். அமெரிக்கர்களிடம் இருந்த சர்க்கரை ஆலைகளை நாட்டுடைமை ஆக்கினார். இதனால், கியூபாவுடன் இருந்த அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டது அமெரிக்கா. வாணிகம், இராணுவம், பொருளாதாரம் என மூன்று வகையான முற்றுகைகளையும் வைத்து கியூபாவை மூச்சுத் திணற வைத்த போது. தக்க காலத்தில் கைகொடுத்து உதவியது சோவியத். ஆனால் அந்த நாடும் சிதறுண்டபோது கியூபாவின் நிலை கவலைக் கிடமானது. அதன்பின் அறிவுப் படையைக் கையில் எடுத்தார் காசுட்ரோ நம் வளத்தை முழுமையாகப் பயன்படுத்தினால் பிறர் கையில் இருக்கும் ரொட்டியைச் சார்ந்து வாழும் காலம் நமக்கு ஒரு போதும் வாராது என்று மக்களுக்குத் தெம்பூட்டினார். கல் எண்ணெய் கிடைக்காமையே பெரிய சிக்கலாக இருந்தது. சரக்குந்துகளுக்கு மாற்றாக மூன்று சக்கர வண்டிகளைக் கொண்டு வந்தார். மிதி வண்டியின் உற்பத்தியைப் பெருக்கினார். வாடகை ஊர்தி களுக்குப் பதிலாக குதிரை வண்டிகளும், இழுவை வண்டிகளும் வலம் வந்தன. அரசிற்குச் சொந்தமான நிலங்களை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து, கூட்டுப் பண்ணைகளை உருவாக்கினார். ஒவ்வொரு அமெரிக்கரும் ஒரு கியூபா குடிமகனை விலைக்கு வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சரி, அப்படியானால் நமக்குரிய விலையை உயர்த்திவிடுவோம் என்று காசுட்ரோ சொன்ன போது நாடே கம்பீரமாக எழுந்து நின்றது. எந்தத் தடையும் தமக்குப் பெரிதல்ல என்று கியூபா மக்கள் மெய்ப்பித்துக் காட்டினார்கள். எய்துவதற்கு அரியது இயைந்தது. காசுட்டோ செய்தற்கு அரிய செய்தார். --------------- கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றதன் குத்து ஒக்க சீர்த்த விடத்து (குறள் 490) காலம் அறிந்து செயல் புரிவதற்குத் தக்க எடுத்துக்காட்டாய் விளங்குவது கொக்கு. நீர் வழிந்து வரும்வாய்க் காலின் கரையில் மிக அமைதியாக நிற்கிறது கொக்கு. எது வரையில்? தனக்கு ஏற்ற இரையாகிய மீன் நீரில் வரும் வரை. மீன் வருவதை உணர்ந்த உடன் மிக விரைந்து சென்று மீனை அலகால் குத்தி எடுத்து விடும். ஒரு செயலை நிறைவேற்றுதற்கு இயலாத பொழுதில் கொக்கைப் போல் அமைதியாகவும் கவனமாகவும் அமைந்திருக்க வேண்டும். செயல் நிறை வேறுவதற்கு வாய்ப்பான பொழுதில் அக்கொக்கு மீனைக் கொத்தி எடுப்பது போல் விரைந்து செயலைச் செய்து முடித்துவிட வேண்டும். கடலைக் கடப்போர் யார்? என வானரர் தமக்குள் கலந்துரையாடினர். நீலன், அங்கதன், சாம்பன் முதலியோர் தம் இயலாமையை உணர்த்தினர். அனுமனே தக்கவன் எனக் கூறிய சாம்பன் அனுமனது ஆண்மையைப் புகழ்ந்து கூறி வரும் போது; அடங்கவும் வல்லீர்; காலம் அது அன்றேல்: அமர்வந்தால் மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர். எனக் கூறுகிறது கம்பராமாயணம். ஒடுங்கி இருந்தே உன்னியது முடிக்கும் கொடுங்கால் கொக்கின் கோளின மாகிச் சாய்ப்பிட மாகப் போர்ப்படை பரப்பி வலிகெழு வேந்தனை வணக்குதும் என்னும் பெருங்கதைப் பாடல் ஒப்பு நோக்கத் தக்கதாகும். ---------- இகல்வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் பருவத்தோடு ஒட்ட ஒழுகுக எவ்வினையையும் கருவியான் காலம் அறிந்து செய்க! காலம் கருதி இடத்தால் செய்க! ஞாலம் கருதினும் கைகூடும் ஞாலம் கருதுபவர் கலங்காது காலம் கருதி இருப்பர் ஊக்கம் உடையான் ஒடுக்கம் வலிமை சேர்க்க பொள்ளென ஆங்கே புறம் வேரார் செறுநரைக் காணின் சுமக்க எய்தற்கு அரியது இயைந்தால் செய்தற்கு அரியது செய் கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து சீர்த்த இடத்துக் கொக்கின் குத்து ஒக்க! ----------- 50. இடனறிதல் எந்தச் செயலைச் செய்ய விரும்பினாலும், மிகத் தெளிவாக, எத்தகைய மயக்கமோ, குழப்பமோ இல்லாதவாறு எண்ணிச் செய்ய வேண்டுவனவற்றுள் இன்றியமையாதன ஐந்தாகும் எனவும். அவ்வைந்தா வன பொருள், கருவி, காலம், வினை, இடம் என்பதை வினை செயல் வகை அதிகாரத்தில் திருவள்ளுவர். பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் (குறள் 675) எனத் திட்டப்படுத்துகிறார். இருள் தீர எண்ணிச் செய்ய வேண்டிய ஐந்தில் ஒன்றாக இடம் சுட்டப்படுவதுடன், நிறைவான இடத்தில் இடம் இடம் பெற்றுள்ளதும் சிந்திக்கத் தக்கதே. தூது அதிகாரத்தில் சிறந்த தூதனுக்கு இலக்கணம் கூறுமிடத்தில் கடனறிந்து காலம் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை (குறள் 687) என்னும் குறளிலும் இடனறிந்து செயல் புரிதலின் இன்றியமையாமை புலப்படுத்தப்படுகிறது. தக்க காலத்தை அறிந்து செயல் படுவதுடன் இடத் தேர்வும் ஏற்புடைய தாக அமைந்துவிடுமாயின் எவ்வளவு பெரிய செயலையும் செய்து முடிக்க முடியும். இவ்வுலகம் முழுவதையும் தன்னாட்சியின் கீழ்க் கொண்டு வர வேண்டுமென்று கருதிச் செயல்பட்டாலும் தவறாமல் நிறைவேறும் என நம்பிக்கை ஊட்டும் திருவள்ளுவர் முன்னையக் காலம் அறிதல் அதிகாரத்தில் ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின் (குறள் 484) என மொழிந்துள்ளதையும் நினைவில் கொள்வோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த இடம், வாழும் இடம், பழகிய இடம் பலவகைகளில் வினை செய்ய ஏந்தாகவும், வலிமையும் நம்பிக்கையும் ஊட்டுவதாகவும் அமைவது இயற்கைதான். ஒவ்வொருவரும் அவரவர் வாழும் இடத்தில் வலிமையும் ஆற்றலும் உடையவராய்ச் செயல்படுவது போன்று புதிய இடங்களில் செயல்பட இயலவில்லை. புதிய இடத்து நீர், காற்று, வெப்பம், குளிர், உணவு, உடை, பழக்க வழங்கங்கள் பலருக்கு ஒத்துப் போவது இல்லை. மனத்தால் பாதிக்கப்படு பவர்களும் உள்ளனர்; உடலால் பாதிக்கப் படுவோரும் உள்ளனர். ஆகவே வினை செயல் வகையில் பாதிப்பு நிகழ்ந்து விடுகிறது. எந்தத் தொழிலையும், செயலையும், வேலையையும், எல்லா இடங் களிலும் செய்துவிட முடியாது. ஆகவே, இடத்திற்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது தொழிலுக்கு ஏற்ற இடத்தை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்தல் கட்டாயம் வேண்டும். ஆகவே, எண்ணித் துணிக கருமம் (குறள் 467) என வேண்டிய வள்ளுவர் வினைவலியும் தன்வலியும், மாற்றான் வலியும், துணை வலியும் தூக்கிச் செயல்பட வேண்டும் என வற்புறுத் தியதுடன், கருவியான் காலம் அறிந்து செய்ய முற்பட்டால் செய்யா முடியாச் செயல் என எச்செயலும் உலகில் இல்லை எனவும் கூறியதுடன் அமையாது. எச்செயலையும் செய்வதற்கு ஏற்ற இடம் அறிந்தே செயல்பட வேண்டும் என வலியுறுத்தும் அதிகாரமே இடன் அறிதல் ஆகும். எத்தகைய தொழில் முனைவிற்கும் இடமே அடிப்படையாகும். தொழில் தொடங்குவதற்கு உரிய முதனிலை சுட்ட வந்த தொல்காப்பியர் உறுப்பாகிய தொழிலையும் அதனைச் செய்பவனையும் அவனால் செய்யப்படும் பொருளையும் கூறி அடுத்துத் தொழிலைச் செய்வதற்கு இன்றியமையாது வேண்டப்படும் நிலம், கருவி, காலம் என்ற மூன்றையும் கூறினார். தன்னூரில் சிங்கம் போல் பிறர்க்கு அச்சத்திற்கு உரியவனாய் பீடு நடை போடும் வீரன், அயலூரில் பூனைபோல் பதுங்கி அஞ்சி நடுங்கி, கோழையாய்த் தளர்ந்து காணப்படுகிறான் ஏன்? அடுத்த தெருவிற்குச் சென்ற நாயை, அத்தெரு நாய் எதிர்த்து விரட்டி வருகிறது, தன் தெரு எல்லை வந்ததும் இதுவரை வாலைச் சுருட்டிக் கொண்டு அஞ்சி ஓடி வந்து நாய் வாலை ஆட்டிக் கொண்டு எதிர்க்கத் தொடங்குகிறதே ஏன்? வேட்டை நாயையும் பாஞ்சாலங்குறிச்சிக் காட்டில் வசிக்கும் முயல்கள் எதிர்த்து விரட்டியது இடம் தந்த வலிமையாகத்தானே இருக்க முடியும். காவிரி ஆற்றில் நீராட்டிப் பிடித்து வந்த அரச யானையை வழியில் இருந்த குடிசைவீட்டுக் கோழி, வழி மறித்து மத்தகத்தில் ஏறிக் கொத்திக் குருதி கொட்ட வைத்து மேலும் செல்லவிடாது ஆக்கிய கோழிக்கு இடம் தந்த வீரந்தானே காரணம்? அது தானே கோழியூராம் உறையூரின் வரலாறு. மண்ணின் தன்மையை நீரும் நீரின் தன்மையை மனிதனும் பெறுவான் என்பதுதானே உலக இயற்கை. பயிருக்கு ஏற்ற நிலம் தேவைப் படுவது போல மனித வாழ்விற்கு ஏற்ற இடம் வேண்டும். நாம் செய்யப் போகும் எவ்வினைக்கும் ஏற்ற இடத்தைத் தேர்ந் தெடுத்துச் செயல்புரிய வேண்டும். செயல் உயர்ந்ததாயினும் பொருத்த மற்ற இடத்தில் செய்ய முற்படுதல் கூடாது. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடம் கண்ட பின்னல் லது. (குறள் 491) எவ்வினையையும் எள்ளற்க: எவ்வினையையும் முற்றும் இடங்கண்ட பின் அல்லது தொடங்கற்க எனப் பொருள் காண வாய்ப்பாக உரைநடையில் இக்குறளைக் கூறலாம். எச்செயலையும் அவசரப்பட்டுத் தொடங்கி விடக் கூடாது. எச்செயலை முறையாகச் செய்து வெற்றியுடன் நிறைவு செய்ய முடியுமோ அத்தகைய செயல்களையே செய்யத் தொடங்க வேண்டும். அதனை முழு நிறைவுடன் செய்வதற்குத் தக்க இடத்தை முதற்கண் தேர்வு செய்யாமல் தொடங்கிவிடல் கூடாது. எச்செயலையும் எளிய செயல் என்றோ? செய்வது மிக எளிது எனவும் கருதி இகழாமையும் வேண்டும். ஏனெனில் எளிதெனக் கருதுவது அரிய செயலாகவும் இருக்கலாம். தொடர்ந்து கடுமுயற்சி மேற்கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படலாம். எவ்வினையையும் தக்க இடத்தில் தொடங்க வேண்டும்! எவ்வினை யையும் எளிதாக எண்ணக் கூடாது. முழுதும் வாய்ப்பான இடம் கிட்டும் வரை எச்செயலையும் தொடங்காதே! புறக்கணியாதே! சேரும் இடத்தைத் திட்டப்படுத்தாமல் புறப்படாதே! மனம் போன போக்கெல்லாம் போக வேண்டா! எவ்வினையையும் தம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி முழுமுயற்சி மேற்கொள்ளாமல் இகழாதே! முதுகலை பயின்று உயர்ந்த மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்ற இளைஞன் ஒருவன். நல்ல திறமையாளன். பல்வேறு இடங்களுக்குப் பணி தேடி அலைந்தான். ஓர் ஆலை உரிமையாளர் உங்களைப் போன்று படித்தவர்கட்கு எல்லாம் வேலை இல்லை. துப்புரவுப் பணி மட்டும் தான் இருக்கிறது என உரைத்தார் அப்பணியையும் விரும்பி ஏற்றுக்கொண்டான். அப்பணியை அனைவரும் பாராட்டுமாறு செய்தான் உரிமையாளர் அனுமதியுடன் கழிவுப் பஞ்சுகளைச் செகரித்துப் பாதுகாத்தான். அக்கழிவுப் பஞ்சு அவனைச் சில ஆண்டுகளில் ஓர் ஆலையின் உரிமையாளர் ஆக்கிய வரலாறும் உண்டு! தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர் (குறள் 464) எனத் தெரிந்து செயல் வகையில் உரைத்ததையும் உணர்ந்து செயல்படுதல் வேண்டும். எந்தச் செயலைச் செய்யச் தொடங்கினாலும் சரி. அது எவ்வளவு அற்பமானதாய் இருந்த போதிலும் சரி. அதை முடித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும் என்னும் கிளாட்சுடன் கூற்றும் ஒப்பு நோக்கத் தக்கதே. பள்ளத் திரைக் கடல் சேது உண்டாக்கப் பரிதிகுலத்து உள்ளுற்ற வள்ளல் புல்லாணி இடம் கண்டு வந்து சென்று விள்ளற் கருஞ்சமம் வென்றான் தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடம் கண்ட பின்னல்லது என்பவே என்னும் திருப்புல்லாணி மாலைப் பாடல் நல்லதொரு எடுத்துக் காட்டாகும். ---------------- முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும் (குறள் 492) மிகப் பெரிய ஆற்றல் பொருந்திய பகைவர்களையும், பிறர் துணை இன்றித் தனித்து நின்றே எதிர்த்துப் போரிட்டு வீழ்த்தும் வல்லாண்மையும், நண்பர்கட்கும் உதவி நாடியவர்கட்கும் எத்தகைய துன்பமும் நேரா வகை யில் காத்து ஆக்கம் பெறச் செய்யும் நல்லாண்மையும் உடையவர்கட்கும், அவ்வலிமை யோடு அவர் இருக்கும் இடம் எவரும் எளிதில் நெருங்க முடியாத நல்ல பாதுகாப்பான அரணாகவும் அமைந்திருக்குமாயின் அவ்வரண் பல வகையான வளாச்சியினையும், நன்மைகளையும், செல்வச் சிறப்பினையும் உண்டாக்கும். வெற்றியைத் தாங்கிக் கொள்வது போல் தோல்வியையும் தாங்கிக் கொண்டு, தளர்ச்சி இன்றித் தொழில் புரியும் ஆற்றல் உடையவர்கட்கும். பாதுகாப்பான தொழில்மனை பல வகையான நலங்களை உண்டாக்கியே தீரும். பாதுகாப்பான இட வாய்ப்பு அமையுமாயின் வலிய முயற்சி உடைய ஆண்மையர் பல்வகையான ஆக்கங்களை எளிதில் பெறுவர். அரண் வலிமை இல்லையேல் வலிமையுடையாரும் ஆக்கம் பெறுதல் இயலாது. பலவகையான திறமை உடையவர்கட்கும் தம் திறமையைத் தக்காங்கு வெளிப்படுத்துவதற்கு ஏற்ற இடம் அமையாத காரணத்தால் ஆக்கம் பெற வாய்ப்பின்றி அல்லல்படுகின்றனர். பாதுகாப்பான இடம் இல்லையேல் உறங்கக் கூட முடியாது; அப்படி யானால் எப்படி வினை செய்ய முடியும்? ஆக்கம் பெற இயலும்? ஆற்றல் உடையாரும் ஆக்கம் பெற வல்லரண் தேவை. --------- ஆற்றாரும் ஆற்றி அடுப, இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின் (குறள் 493) போற்றார்கண் போற்றி, இடன் அறிந்து செயின், ஆற்றாரும் ஆற்றி அடுப எனக் குறளை அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும். ஆற்றாரும் ஆற்றி அடுவதற்கு வழியாது? இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயல்புரிதல் வேண்டும். ஆற்றல் உடையார் ஆற்றல் குறைந்தவர்களை வெற்றி கொள்வது எளிது; ஆற்றல் உடையார் தம்மை ஒத்த ஆற்றலுடையாரிடம் போரிட்டு வெற்றி கொள்ளக் கடு முயற்சி தேவை. ஆற்றல் இல்லாதவர் தம்மை ஒத்த ஆற்றல் இல்லாத வரிடம் முயன்று போரிட்டு வெற்றி பெற இயலும் என்பதை உலகியவில் அனைவரும் அறிவர். திருவள்ளுவர் வலிமை குறைந்தவரும் வலிமை மிகுந்தவரிடம் போரிட்டு வெற்றி கொள்ள முடியும் என நம்பிக்கை ஊட்டி அதற்கு வழியும் கூறுகிறார். போரிட விரும்புகிறவர் உடல் வலிமையோ, படை வலிமையோ, துணைவலிமையோ இல்லாதவராக இருந்தாலும், போரிடத் தாம் தெரிவு செய்யும் இடம், பகைவர் தம்மை நெருங்க முடியாத பாதுகாப்பான இடமாக இருந்து, தற்காத்துக் கொள்ள வாய்ப்பு அமையுமானால் உடல் வலிமையும், படைவலிமையும் துணை வலிமையும் உடைய பகைவரை யும் வலிமை இழக்கச் செய்ய முடியும். என்பது வள்ளுவர் காட்டும் வழியாகும். இடையூறு செய்யக் கூடிய பகைவர்களாலும் நினைத்தபடி இடையூறு செய்ய முடியாத பாதுகாப்பான, தகுதி வாய்ந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டிய செயலைச் செய்தால் ஆற்றல் இல்லாதவர்களும் தாம் செய்ய முற்பட்ட செயலை எளிதாகச் செய்து வெற்றி பெறுவர். நாம் இருக்கும் இடம், பணி செய்யும் இடம், போரிடும் இடம் எது வாயினும் நமக்குப் பாதுகாப்பும் தன்னம்பிக்கையும் வலிமையும் சேர்க்கும் இடமாக இருக்க வேண்டும். இருந்தால் போட்டியாளர்கள் எவ்வளவு ஆற்றல் உடையவர்களாய் இருப்பினும் அவர்களைப் புறங்கண்டு நாம் வெற்றி பெற இயலும். செயல்படும் இடம் ஏற்புடையதாக அமையவில்லை யாயின் ஆற்றல் குன்றி அழிய நேரிடும். --------- எண்ணியார் எண்ணம் இழப்பர், இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் (குறள் 494) என்னும் இக்குறளின் பொருள் காண வாய்ப்பாகத் துன்னியார், இடனறிந்து துன்னிச் செயின், எண்ணியார் எண்ணம் இழப்பர் என அமைத்துக் கொள்ளலாம். திருவள்ளுவரே! எனக்கு வாய்த்த பகைவர், எப்படியாவது நான் செய்யும் தொழிலுக்கும் இடையூறு செய்து என்னை வீழ்த்தி விட வேண்டும் எனத் திட்டமிட்டுச் சூழ்ச்சி செய்து வருவது போல் தெரிகிறது. என்ன செய்வது என எனக்குப் புலப்படவில்லை. நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் எனப் பணிவுடன் வேண்டினார் ஒரு வினை மாட்சியார். திருவள்ளுவர் அவரிடம் நீங்கள் செய்யும் தொழிலில் நுண்ணிய அறிவுடையவர். உங்கட்கு நீங்கள் செய்யும் தொழிலில் நல்ல ஈடுபாடும் கவனமும் கண்காணிப்பும் இருக்கிறது. நீங்கள் பணியமர்த்தம் செய்துள்ள வர்கள் அனைவரும் உங்கள் மீது உள்ளார்ந்த அன்பும் மதிப்பும் கொண்ட மிக நெருங்கியவர்கள் அவர்கட்கு இடையில் ஒன்று கலந்த நல்ல பிணைப்பும் இருக்கிறது. அவர்கள் அனைவரும் சற்றும் விலகி நில்லாது மிக நெருங்கி நின்று தளராத ஊக்கத்துடன் உழைக்கிறார்கள். அவை அனைத்தையும் விட உங்கள் தொழிலகம் அமைத்துள்ள இடம் இருக் கிறதே அஃது மிக அருமையான இடம். உங்கள் அனுமதி இன்றி ஓர் ஈ எறும்பு கூட நெருங்கமுடியாத வாய்ப்பான இடம். பிறகு ஏன் நீங்கள் பகைவர் சூழ்ச்சிக்குப் பயப்படுகிறீர்கள்? உங்கட்கு அமைந்த இட வாய்ப் பினையும் இன்னபிற வாய்ப்பினையும் பகைவர் அறிந்து கொண்ட உடன், தன்னுடைய சூழ்ச்சியை எல்லாம் கைவிட்டு விடுவர்! கவலையை விடுங்கள் செயல் ஈடுபாட்டை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். இடம் உங்கட்கு நாட்டில் தொழில் துறையில் உயர்ந்த இடத்தினை விரைவில் வழங்கும்! வெற்றிமேல் வெற்றி பெறுவீர்கள்! என வாழ்த்தி அனுப்பி வைத்தார். வீழ்த்த எண்ணியவர் எண்ணம் இழப்பர், இடன் அறிந்த துன்னியார் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர். ------------ நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற (குறள் 495) முதலை நெடும் புனலுள் வெல்லும், (முதலை) புனலின் நீங்கின் அதனைப் பிற அடும். என்பது உரை நடைக் குறளாகும். முதலை நீர் வாழ் உயிரினம், அது ஆழமான நீரில் இருக்கும் பொழுது அதனை எதிர்க்கும் உயிரினம் அதனினும் வலிமை உடையதாக இருப்பினும் முதலை எளிதில் வெற்றி கொள்ளும். நீரினுள் இருக்கவேண்டிய முதலை நிலத்திற்கு வந்து விடுமாயின் அதனினும் வலிமை குன்றிய உயிரிகளும் அதனை வென்றுவிடும். என்பது நீர் வாழ் உயிரியாகிய முதலையின் இயற்கை. திருவள்ளுவர் முதலையை எடுத்துக் காட்டாகக் கொண்டு இவ்வதி காரத்தின் மையக்கருத்தை மிக அருமையாகத் தெளிவுபடுத்துகிறார். இடம் விட்டுப் போனால் பலம் கெட்டுப் போகும் என்பதும் தன்னூர்க்கு யானை அயலூர்க்குப் பூனை என்பதும் பழமொழிகள். ஓவ்வொருவரும் தத்தமக்கு வாய்ப்பான இடம் அறிந்தும் செயல்பட வேண்டும். அவ்விடம் செய்யப் போகும் செயலுக்கும் ஏற்ற இடமாகவும் அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் நல்லது. இல்லையேல் அமைத்துக் கொண்டால், குறைந்த முயற்சியால் நிறைந்த பயன் எய்தலாம். ஒருகால் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பொருது வெல்வது குறித்து, அவன் இருந்த தகடூரைப் பகை வேந்தர், தம் படையோடு போந்து முற்றுகையிடக் கருதினர். அதனை ஒற்றரால் அறிந்து வைத்தும் அதியமான் அஞ்சாது, செய்வன செய்து வந்தான். அவனது அரண்மனையில் இருந்த ஔவையார் பகைவர் முயற்சியும் அதியமான் மனவுரமும் அறிந்து, பகைவர்க்கு அதியமானது வலிமையைத் தெரிவித்ததற்குச் செவ்வி பார்த்து இருந்தார். இதற்குள் போர் மூண்டது போரில் அதியமான் பகை மன்னரைத் தன் நகர்ப்புறத்தே வென்று வாகை சூடினான். தோற்ற வேந்தர்க்கு அறிவுறுத்தும் ஆற்றால் ஔவையார், அதியமானது வாகை நிலையைப் பாராட்டி நீவிர், போருடற்றக் கருதியது, அதியமான் இளையன் என்பது பற்றியதாகும். அதனால், அவனை அவன் இருந்த ஊரிடத்தே வெல்லுதலை விரும்பினீர்கள் முழங்கால் அளவிற்றாய நீரில் கிடப்பினும் முதலை பெருங்களிற்றையும் கொல்லும் வலியுடைத்தாம்; அம்முதலை போல்வன் அதியன்; இன்று அறிவிக் கிறேன்; இனியேனும் இவனை இளையன் என்று இகழ்வதை விடுத்து நும்மைப் பாதுகாத்துக் கொண்டு வாழ்மின் என ஔவையார் கூறிய கூற்று, புறப்பாடல் போற்றுமின் மறவீர்! சாற்றுதும் நும்மை ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும் தாள்படு சின்னீர்க் களிறட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை நுண்பல் கருமம் நினையாது. இளையன் என்று இகழில் பெறவரிது ஆடே என்னும் 104 ஆம் புறநானூற்றுப் பாடலாகும் இஃது வள்ளுவரின் குறளுக்கும் பொருளுக்கும் ஏற்ற இலக்கியச் சான்றாகும். ------------------- கடலோடா கால்வல் நெடுந்தேர்; கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) நெடுந்தேர் கடலோடா: நாவாய் நிலத்து ஓடா என்பதே பாடலின் சுருக்கம். தேர் நிலத்தில்தான் ஓடும், நீரில் மூழ்கிவிடுமே தவிர்த்து நீரில் ஓடாது என்பதும். கப்பல் நீரில்தான் ஓடும், நிலத்தில் ஓடாது என்பதும் அனைவரும் அறிந்ததே ஆகும். அறிந்ததைக் காட்சிப்படுத்தி அரிய கருத்தைப் புலப்படுத்து கிறார். இதனை ஒவ்வொருவரும் அவரவர் ஆற்றும் செயல்களுடன் இணைத்துச் சிந்தித்தால் தக்க செயல் முறை விளக்கம் கிட்டும். தேர் என்றாலே கோயில் தேர் நினைவிற்கு வரும். திருவள்ளுவர் தேர் என்று கூறுவதோடு அமையாது நெடுந்தேர் என்பதால் மிக்க உயரமான பெரிய தேரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். தேரே கனமானது பெரியது; உயரமானது; அதில் பொருத்தப் பட்ட சக்கரங்கள் அதற்கு ஏற்ற வலிமை வாய்ந்தனவாகும். இந்த வலிய சக்கரங்களை உடைய உயர்ந்த பெரிய தேர்களை நல்ல சமதளமான வலிய பாதைவழியே தான் இழுக்க முடியும். அதைச் செய்ததன் காரணமும் நிலத்தில் ஓட்டுவதற்காகத் தான் ஆகவே தேர் நிலத்தில் தான் ஓடும். கடலில் ஓட்டுவதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப் பட்டதே கப்பல்கள் ஆகும். நீரில் மிக விரைந்து நீந்திச் செல்லும் கப்பலை நிலத்தில் செலுத்த இயலாது. ஆகவே எவரும் தேரைக் கடலிலும் கப்பலை நிலத்திலும் ஓட்ட எண்ணமாட்டார்கள். இதிலிருந்து நாம் அறிவது என்ன? அல்லது இதன் மூலம் வள்ளுவர் நமக்கு அறிவுறுத்துவது யாது? எந்தச் செயலை எவ்விடத்தில் செய்தால் நன்மையும் வெற்றியும் புகழும் கிட்டுமோ அவ்விடத்தில்தான் அப்பணியைச் செய்ய வேண்டும். இடத்தேர்வு சரி இல்லையானால் முதலும் போய்விடும்; உழைப்பும் வீணாகும்; தோல்விக்கு ஆட்பட்டு அல்லல் உறுதல் ஏற்படும். தொழிலுக்கு ஏற்ற இடத்தை ஆராய்ந்து கண்டுணர்ந்தே எத்தொழிலை யும் செய்ய முற்பட வேண்டும். அல்லது இடத்திற்குப் பொருத்தமான தொழிலைக் கண்டுணர்ந்து செய்ய முயல வேண்டும். எப்படியாயினும் இடத்துணை இன்றியமை யாதது ஆகும். ஆட்டுச் சந்தையில் ஆடுகளைத் தான் விற்கவோ? வாங்கவோ முடியும்; அவ்வாறே மாட்டுச் சந்தையில் மாடுகளைத் தான் விற்கவோ! வாங்கவோ! இயலும். -------------------- அஞ்சாமை அல்லால் துணைவேண்டா? எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் (குறள் 497) அஞ்சாமை தவிர்த்து வேறு துணை வேண்டியதில்லை எப்பொழுது? எஞ்சாமை எண்ணி இடத்தால் செய்தால். தொழில் செய்தல் தொடர்பாக எவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டுமோ அவற்றை எல்லாம் மிகத் தெளிவாகக் குறையின்றி எண்ணிப் பார்க்க வேண்டும். தக்க ஏந்துகள் எல்லாம் அமைந்த இடத்தில்தான் தொழில் செய்ய வேண்டும் அதற்கு மேல் வேண்டிய துணை எது? உள்ளத்தில் அச்சமற்ற துணிவாகிய துணை ஒன்றே துணையாகும். வேறு துணை வேண்டியது இல்லை. சின்ன மருது கம்பீரமும் கட்டழகும், வணக்கமும் நிறைந்த வியத்தகு மனிதன். நல்ல நடத்தையும் எளிதில் எவர்க்கும் காட்சி தரக்கூடிய இயல்பும் படைத்தவன். தன் தலையின் அசைப்பே நாட்டின் சட்டம் எனக் கருதும் மக்களின் தலைவனாய் அவன் விளங்கிய போதிலும், தனியொரு காவலாளியின் பாதுகாப்புக்கூட இல்லாமல் திறந்த வெளியில் வாழ்ந்து வந்தான். 1795 ஆம் ஆண்டு பிப்பரவரி மாதம் நான் அவனைக் காணச் சென்றபோது அவன் இல்லத்தின் உள்ளே புகவும் வெளியே வரவும் எவ்விதத் தடையும் இல்லை என்பதை நேரில் கண்டறிந்தேன். அச்சமயத்தில் குடிமக்களின் தந்தையாய் விளங்கிய அந்த மாவீரனுக்குக் கடவுள் கருணைபுரிய வேண்டும் என்பதே அவன் நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய வேண்டுகோளுமாய் இருந்ததுஎனப் பகைவனான ஆங்கிலேயத் தளபதி கர்னல் வேல்சு எழுதி வைத்துள்ள குறிப்பு அஞ்சாமை அல்லால் துணை வேண்டா என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ற சான்றாகும். குறைவற்ற எண்ணமும் நிறைவான இடமும்; அச்சமற்ற தன்மையும் இருந்தால் எண்ணிய எண்ணியாங்கு எய்தலாம். ஒரு செயலைச் செய்யுங்கால் பொருள், கருவி, காலம், செயல் என்னும் நான்கையும் மயக்கமற எண்ணித் தக்க இடத்தில் செய்ய வேண்டும். அஞ்சாமை ஆகிய துணையும் வேண்டும். ---------------------- சிறுபடையான் செல்லிடம் சேரின்; உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் (குறள் 498) குறைந்த படை வலிமை உடைய ஒருவன் தகுந்த இடத்தைச் சேர்ந்திருந்தால், மிகுந்த படை வலிமை உடையவனுக்கும் அவனை வெல்லக் கருதும் முயற்சி கெட்டுப் போகும். இடவலிமை வாய்த்தால் வலிமை குறைந்த படையாலும், வலிமை மிகுந்த படையையும் வீழ்த்த முடியும். ஒருவன் மிகப் பெரிய படையை உடைய வலிமையாளனாக இருந்தாலும் தன்னிடத்தை விட்டு நீங்கிப் பிறிதொரு இடத்திற்குப் படை யெடுத்துச் சென்று போரிட்டால், எதிராளி படை வலிமை குறைந்தவனாக இருந்தபோதிலும் பெரும் படை உடையவனின் ஊக்கம் குன்றிப் போகும். வலிமை உடைவனும் தனக்குரிய இடத்தை விட்டுப் பெயர்ந்து மாற்றானின் இருப்பிடத்திற்கு, வலியச் சென்று போரிட்டால் வீழ்ச்சியே ஏற்படும்; ஊக்கம் குறைந்து கொண்டே வரும். உறுபடை மன்னர் தம்மை ஊடற்றி ஒன்றானும் இன்றிச் சிறுபடை யவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா செறிஎயிற்று ஆளி வேழப் பேரினம் செகுத்த தன்றே உறுபுலி ஒன்று தானே கலையினம் உடற்றிற் றன்றே என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் தக்க எடுத்துக் காட்டாகும். கல்லுவிட நாகம் கருடா சுகமென்னும் செல்லும் இடம் சேர்ந்தே திருமலையா-வெல்லும் சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் என்னும் திருமலை வெண்பாவும் ஒப்பு நோக்கத் தக்கதே. ------------------- சிறை நலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறை நிலத்தோடு ஒட்டல் அரிது (குறள் 499) நாடாள்வோர்க்கு நல்ல பாதுகாப்பும், படை வலிமையும் மிகத் தேவையானது ஆகும். அவ்வலிமை சிறப்புற அமைந்திருந்தால் தான் பகைவர்களால் தொல்லை ஏற்படாது. அஞ்சி அடங்கி வாழ்வர் என்பது இயல்பான நடை முறையாகும். பாதுகாப்பு வசதிகளும் பிற வலிமைகளால் சிறப்பும் பெறவில்லை எனினும் தம்முடைய நாட்டில் தம் கடமைகளை முறையாகச் செய்து, குடி காத்து ஆளும் ஆட்சியாளரைப் போரிட்டு வெல்ல எண்ணிப் பிறர் பெரும் பாலும் நெருங்க மாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர் ஏனெனில் ஆளுவோரும் ஆளப்படுவோரும் தாம்வாழும் மண்ணின் மீது நீங்காப் பற்றுக் கொண்டவர்கள். நாட்டுப் பற்றுடன் ஒன்றிப் பிணைந்து வாழ்பவர்கள். தாய் நாட்டு மண்ணில் பகைமை கொள்வோர் ஒரு பிடி மண் எடுத்துப் போகவும் இடந்தரார். ஒவ்வொருவரும் அவரவர் இருக்க வேண்டிய உரிமைப்பட்ட இடத்தில் இருந்து முறையோடு ஆள்வதும் வாழ்வதுமே மிகச் சிறந்த வலிமையை நல்கும். சிவபெருமான் கழுத்தில் கிடக்கும் பாம்பு, திருமால் வாகனமாகிய கருடனை நோக்கிக் கருடா சௌக்கியமா? எனக் கேட்டது. அதற்குக் கருடன்! இருக்கிற இடத்தில் இருந்தால் சௌக்கியம் தான் என விடை அளித்தது. காட்டுக்குப் புலிகாவல்; புலிக்குக் காடு காவல் என்பது பழமொழி. உறை நிலம் எவர்க்கும் ஒரு பெரிய வல்லமையைத் தரும். நிலத்தில் நிலைத்து வாழும் மக்களுக்குத் தாக்கும் வழிகளும் நன்றாகத் தெரிவதுடன் நெருக்கடியான வேளைகளில் தப்பிப் பிழைக்கும் வழிகளும் நன்றாகத் தெரியும். பகைவர் உட்புகல் அரிது. நேருக்கு நேர் நின்று போர் புரிய மாட்டாத கோழை, முதுகில் குத்த வருவது போல, வெள்ளை அதிகாரிகள் வீரபாண்டியக் கட்ட பொம்பனை வெல்ல எண்ணற்ற வஞ்சகச் சூழ்ச்சிகளைச் செய்தனர். கிழக்கிந்தியக் குழுமத்தின் வரி வசூலிக்கும் தண்டலர் சாக்சன் பாஞ்சாலங்குறிச்சிக்குத் தான் வராமல் ஒரு வாரத்தில் தன்னை நேரில் கண்டு பேச வேண்டுமென்று வீர பாண்டியனுக்குச் செய்தி அனுப்பினான். நெல்லைக்குக் காணச் சென்ற வீரபாண்டியனை நெடுந்தொலைவு இழுத்தடித்து அவமானப்படுத்தத் திட்டமிட்டான்; திருநெல்வேலி, குற்றாலம், திருவில்லி புத்தூர், சங்கர நயினார் கோயில், திருச்சூழி, அலங்கா நல்லூர், கமுதி என்று இவ்வாறு 400 கல் தூரம் அவனை இழுத்தடித்தான் இக்கொடுமை 23 நாட்கள் நடந்தது. இறுதியாகத் தண்டலர் சாக்சன் இராம நாதபுரத்தில் வீரபாண்டியனைக் கண்டு பேச இணங்கினான் என்ற வரலாறு மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது எனக் கருதி சாக்சன் செய்த சூழ்ச்சியாகும். ---------------------- காலாழ் களரில் நரியடும்; கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு. (குறள் 500) யானையை நரி கொன்றுவிடும் எனத் திருவள்ளுவர் ஒரு வியப்பான செய்தியைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுகிறார். அதுவும் கொல்லும் நரிக்கு எந்த அடைமொழியும் சேர்க்காமல் மிகச் சாதாரணமாக நரி என்று மட்டும் சுட்டுகிறார். யானை, பெண் யானை அன்று, ஆண் யானை, அவ்யானையும் பாகரின் சினத்திற்கும் அஞ்சாதது மட்டுமல்ல, பகைவர் எய்திய வேல் தம் முகத்தில் ஆழப்பதிந்தும் காணப்படும் வீரமிக்க ஆண்யானை. வேல் ஏந்திய வீரரைத் தன் கொம்பினால் குத்திக் கோத்து எடுக்கும் அச்சம் என்பது அறவே நீங்கிய தன்மையை உடைய பெரிய ஆண்யானை. இத்தகைய பெரிய வலிமை பொருந்திய யானையையும் ஒரு சிறு நரியால் எப்படிக் கொல்ல முடிந்தது? சேறு நிறைந்த இடத்தில் யானை நின்று கொண்டிருந்தது. அதன் கால்கள் சேற்றில் ஆழ்ந்து விட்டது. சேற்றை விட்டுக் காலைத் தூக்க முடியவில்லை. காலைத் தூக்க முயல முயல மேலும் ஆழத்தில் கால் இறங்குகிறதே தவிர வெளியே வர முடிய வில்லை. இந்நிலையில் சிக்கிக் கொண்டதால் ஒரு சிறிய நரியாலும் அதனைக் கொன்றுவிட முடிகிறது. யானை பொருந்தா இடத்தில் மாட்டிக் கொண்டதால் அது தன்னுடைய எந்த வலிமையையும் பயன்படுத்த முடியாத சிக்கலில் சிக்கிக் கொள்கிறது. யானை செயல்படா நிலையில் நரி கூட அதனை எளிதில் வீழ்த்தி விடுகிறது. பொருத்தமற்ற இடம் வீரனையும் கோழை ஆக்கிவிடும். பொருந்திய இடம் கோழையையும் வீரனாக்கி விடும். ஆகவே இடம் அறிந்து செயலாற்றுதல் வேண்டும். முழையுறை சிங்கம் பொங்கி முழங்கி மேற் பாய்ந்து மைதோய் வழையுறை வனத்து வன்கண் நரிவலைப் பட்ட தன்றே என்ற சீவக சிந்தாமணிப் பாடல் அடிகள் ஏற்ற சான்றாகும். கூருடை எயிற்றுக் கோண்மாச் சுறவினம் எறிந்து கொல்ல போருடை அரியும், வெய்ய புலிகளும் யாளிப் போத்தும் நீரிடைத் தோற்ற தன்றே! தம் நிலை நீங்கிச் சென்றால் ஆரிடைத்தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா? என்னும் கம்பன் கவியும் நல்லதொரு எடுத்துக் காட்டாகும். பிறர்க்குக் கேடு சூழக் கூடாது என்று அறத்துப் பாலில் ஓதியவர், பொருட்பாலில் இவ்வாறு பிறர் கெடுவதற்கு ஏற்ற காலத்தைப் பார்த்துக் காத்து இருக்க வேண்டும் என்றும், பிறரை வெல்வதற்கு ஏற்ற இடத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்றும் கூறுவது பொருந்துமா என்று கேட்கலாம். திருவள்ளுவர் அறத்துப்பாலில் ஓதியது, தன் நன்மையைக் கருதிப் பிறர்க்குத் தீங்கு செய்யக் கூடாது என்பதே ஆகும். ஆனால் இங்கே அரசியலில் அவர் கூறுவது தனி வாழ்க்கையைப் பற்றி அன்று. பொது நன்மைக்காகப் பொறுப்பு மேற்கொண்டு தலைவனாய் ஆட்சி புரிகின்றவன், பலருடைய வாழ்வைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இடையூறு செய்யும் சிலருக்குத் தோல்வி உண்டாக்குவது கடமை யாகின்றது. எல்லாரையும் மகிழ்விப்பது முடியுமானால் அவ்வாறே எல்லாரும் விரும்புமாறு ஆட்சி செய்யலாம். ஆனால் கருத்து வேறுபாடும் எதிர்ப்பும் இருப்பது இயற்கை. அவற்றைக் கண்டு தயங்கினால் தலைவன் செயலற்று நிற்க நேரிடும். அதைவிட ஆட்சியுரிமையை விட்டு ஒதுங்குவதே மேலானதாகும். ஆகையால் எதிர்க்கும் சிலருடைய இடையூற்றை வென்று கடந்து செல்ல முயற்சி செய்ய வேண்டும். காலமும் இடமும் அறிந்து தக்க செயல் ஆற்ற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். --------------- முற்றும் இடம் கண்டபின் எவ்வினையையும் தொடங்குக எவ்வினையையும் எள்ளற்க அரண் சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும் இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செய்க! இடனறிந்து துன்னியார் துன்னிச் செய்க! முதலை நெடும்புனலுள் வெல்லும் புனலின் நீங்கின் முதலையைப் பிற அடும் கால்வல் நெடுந்தேர் கடலோடா கடலோடும் நாவாய், நிலத்து ஓடாது எஞ்சாமல் எண்ணி, ஏற்ற இடத்தில் செய்க அஞ்சாமை சிறந்த துணை உறு படையானும் சிறு படையானின் இடம் செல்லற்க! மாந்தர் உறை நிலத்தைப் பகைவர் ஒட்டுதல் அரிது காலாழ் களரில் களிறை நரி அடும் ஏற்ற இடம் அறிந்து ஏற்ற வினை செய்க! ---------------------- 51. தெரிந்து தெளிதல் ஊராட்சி முதல் உலகாட்சி வரை, ஆட்சிப் பணி ஆயினும் சரி, உழுதொழில் முதல் எத்தொழிலாயினும் சரி, எவ்வகை உற்பத்திப் பணியாயினும் விற்பனைப் பணியாயினும் சரி, தனிமனிதன் தன் நேரடிப் பொறுப்பில் செய்து கொள்ளத் தக்க பணிகள் தவிர்த்து, மற்றை எல்லாப் பணிகளும் கூட்டு முயற்சிப் பணிகளாகவே அமைந்துள்ளன. தனியுடைமைப் பணி, கூட்டு உடைமைப் பணி, அரசுடைமைப் பணி எதுவாயினும் அதன் உரிமையாளரோ, மேலாண்மையரோ எல்லாப் பணிப் பொறுப்புகளையும் ஏற்று நடத்துதல் இயலாது. ஆகவே, அவ்வவ்பணி கட்டுப் பலரைத் துணையாய் அமர்த்திக் கொள்ளுதல் வேண்டும். செயலின் வெற்றியும் சிறப்பும் பெருமையும் பெரும்பாலும் செயல் புரிவர்களைப் பொறுத்தே அமையும் ஆகலான், யாரை எச்செயலில் ஈடுபடுத்தப் போகிறோமோ அவர் அதற்குத் தகுதியானவரா என்பதை நன்கு ஆராய்ந்து அறிந்து தெளிவு ஏற்பட்ட பின்னரே பணியில் அமர்த்துதல் வேண்டும். இன்று பல்வேறு பெரிய நிறுவனங்கள் மிக விரிந்த நிலையில் தேர்வுகள் நடத்தியே பணியாளர்களைத் தேர்வு செய்கின்றன. மாநில அரசு, நடுவண் அரசு பல பணிகட்டுத் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தியே பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது. கல்விப்பணி, காவல் பணி, வங்கிப் பணி, தொடர்வண்டித் துறைப் பணி போன்ற சில துறைகள் சிறப்புப் தேர்வுகள் நிகழ்த்தித் தக்க பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பணியமர்த்தம் செய்து வருவதை நாம் நன்கு அறிவோம். திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே தக்காரை ஆராய்ந்து அலுவலில் அமர்த்த வேண்டும் என்பதை மிக அழுத்தமாகச் சிந்தித்து உணர்த்தி இருக்கும் நுட்பம் வியக்கற் பாலது. பொதுத் தகுதியும் வேண்டும்; செயலுக்குத் தக்க சிறப்புத் தகுதியும் வேண்டும் என வலியுறுத்துவதுடன், பொதுத் தகுதி நன்கு அமைந்து சிறப்புத் தகுதி இல்லை எனினும், சிறப்புத் தகுதி நன்கு அமைந்து பொதுத் தகுதி இல்லை எனினும் பணி சிறப்பாக அமையாது என்னும் நுட்பத்தையும் உணர வைக்கிறார். செய்தக்கவே செய்ய வேண்டும், என அனைவரையும் வேண்டும் திருவள்ளுவர். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செய்ய வேண்டியனார். கருவியான் காலம் அறிந்து செய்ய வேண்டும் எனவும் வேண்டினார். அஞ்சாமையைத் துணையாகக் கொண்டு, எஞ்சாமை எண்ணி இடத்தால் செய்க என வினையை மாட்சியுடன் செய்ய அடித்தளம் அமைத்துத் தந்த திருவள்ளுவர், அடுத்து நிறுத்த வேண்டிய தூண்களாகப் பணிபுரிபவர்களைக் கருதுவதால் தெரிந்து தெளிதல் என்னும் அருமையான ஆய்வுக் களத்தை அமைத்துள்ளார். பணியாளர் தேர்வில் விருப்பு வெறுப்பிற்கு இடந்தரா நடு நிலைப் போக்கும் நோக்கும் வேண்டும் என விரும்புவது வள்ளுவம். அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறம் தெரிந்து தேறப் படும் (குறள் 501) எனும் குறள் வழி தெரிந்து தெளிதலை வள்ளுவர் தொடங்கி வைக்கிறார். நான்கின் திறம் தெரிந்து தேறப்படும். நான்கு யாவை? அறம், பொருள், இன்பம், உயிரச்சம் என்பவையே அந்நான்காகும். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளும் எத்தகைய அடைமொழியும் இன்றிச் சுட்டப் பட்டுள்ளன; உயிர் என்னும் நான்காம் திறம் உயிர் எனச் சுட்டப் படாமல் உயிரச்சம் எனக் சுட்டப் பட்டுள்ளது. ஆகவே, யாரையும் எடைபோடும் பொழுது அவன் உள்ளத்தில் அறவுணர்வு, பொருளாசை, இன்ப வேட்கை, தன்னுயிர்மேல் அச்சம் ஆகியவை எந்த அளவில் உள்ளது என்பதை பார்? பின்னரே நம்பு! ஒருவனிடம் நம்பிக்கை வைப்பதற்கு முன் அறத்தினை மதித்து நடக்கக் கூடியவனா? நல்வழியில் பொருள் தேடி வாழ்க்கை நடத்து கிறவனா? குற்றமான இன்பங்களை விரும்பாதவனா? துன்பம் நேர்ந்தால் உயிருக்கு அஞ்சும் கோழைத் தனம் இல்லாதவனா? என்ற நான்கையும் தெரிந்து கொண்டு நம்பிக்கை கொள்ள வேண்டும். அறவழியில் நிலைபெறல், பொருள் வழியில் சாயாமை, இன்ப வழியில் கோணாமை, தன்னுயிர்க்கு அச்சமின்மை என்னும் நான்கின் தன்மைகளும் தெரிந்து ஒருவனை அலுவலில் அமர்த்துதல் வேண்டும் எனும் போக்கில் அறிஞர்கள் சிந்தித்து உரைக்கும் உரைகள் தெளிந்த உரைகளே என்பதில் ஐயமின்று. போர்க்களம் போன்று வினைக் களம் அனைத்திலும் போட்டியும் பகைமையும் எதிர்ப்பும் எதிர்பார்க்கக் கூடியதே. ஆகவே, பொறுப்பான எச்செயலையும் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டுமானால், அப் பொறுப்பை ஏற்கக் கூடியவர் கலங்காத மனவுறுதியும் துணிவும் உடைய வராய் இருத்தல் வேண்டும். அஞ்சாமையைத் துணையாகக் கொண்ட வராக இருக்க வேண்டுவது மிக அவசியம். அச்ச உணர்வு உடையவர்களிடம் மனவுறுதியை எதிர்பார்க்க இயலாது. எதிரி விரிக்கும் வலையில் எளிதில் சிக்கிக் கொள்வர். ஆகவே, வினை செய்யத் தேர்ந்தெடுக்கப் படுபவர் அஞ்சா நெஞ்சராய் இருக்க வேண்டும் எனக் கருதி உயிரச்சத்தின் திறமும் அறிந்து தேர்வு செய்ய வேண்டும் என விரும்புகிறார். புகழொடு நன்றியும் இன்பமும் பயக்கும் வினை செய்யத் தேர்ந் தெடுக்கப்படுபவர் துளங்காது தூக்கம் கடிந்து செயல் புரிபவராக இருப்பதுடன். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கையும் நீக்கிய மாசற்ற தூய மனத்தினராய் விளங்க வேண்டும். மனத் தூய்மை யாகிய அறநெறியே செயல் தூய்மைக்கும், நம்பகத் தன்மைக்கும் அடிப்படையாகும். அத்தகைய தூய மனத்தினரிடம்தான் நெஞ்சத்துக் கோடா நடுவு நிலையும், நிலையில் திரியா அடக்கமும். உலகத் தோடு ஒட்ட ஒழுகும் உயர் ஒழுக்கமும், மிகுதியான் மிக்கவை செய்தாரையும் தாம் தம் தகுதியால் வெற்றி கொள்ளும் பொறையுடைமையும் நிலை பெறும் என ஆழ்ந்தகன்று நோக்கியே நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் எனக் கூறுவதில் முதற்கண் அறத்தின் திறம் தெரிந்து தேற வேண்டும் என வலியுறுத்துவாராயினார். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை பொருள் அல்லவரையும் பொருளாகச் செய்ய வல்லது பொருள் ஆகவே பணிபுரிதல் வேண்டும்; அதற்கேற்ற ஊதியம் பெற்று வாழுதல் முறைமையாகும். நேர்வழி ஊதியம் தவிரப் பிறவழிகளில் பொருள் பெற வேண்டும் என்னும் ஆசை விரும்பத் தக்க தல்ல. அலுவலில் இருப்போர் ஏதாவது ஒரு பொருளில் மிகுந்த விருப்பம் உடையவராய் இருந்தால், குறுக்கு வழியில் காரியம் சாதித்துக் கொள்ளக் கருதுபவர் அப்பொருளைக் காட்டியே முறையற்ற செயல்களைச் செய்ய வழி வகுத்துவிடுவர். ஆகவே, தம் உழைப்பிற்கு உரிய முறையான ஊதியம் தவிரப் பிறவழிகளில் பொருள் பெறும் வேட்கையர் பணியில் அமர்த்தப் பெறுதல் நன்றன்று. கையூட்டும் ஊழலும் பெருகவே வழிவகுக்கும் என்பதால் திருவள்ளுவர் பொருள் நிலையிலும் பணியாளர் திறம் தெரிந்து தேற வேண்டுவது மிக இன்றியமையாதது என வலியுறுத்துகிறார். இன்ப வேட்கை இயற்கை உணர்வாகும் உரிய அகவையில் ஒத்த தகுதியுடையவரை மணந்து அன்பால் ஒன்றி இன்புற்று வாழ்வதே முறையான இன்ப நுகர்வாகும். இக்கட்டுப் பாட்டைத் தாண்டி இன்பம் துய்க்க வேண்டும் எனக் கருதுவோர் தக்காராய் இருத்தல் இயலாது. பொன்னுக்கு மயங்குபவனைப் போல் பெண்ணுக்கு மயங்குவோனிடமும் பணியை நம்பி ஒப்படைக்கக் கூடாது. பெண் இன்பம் மட்டுமல்லாது கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புல இன்ப நாட்டத்தில் ஏதாவது ஒன்றில் வரம்பு கடந்த இன்ப நாட்டம் உள்ளவனிடம் செயல் நேர்மையை எதிர்பார்க்க இயலாது. ஆகவே இன்ப நிலையிலும் ஒருவன் திறம் தெரிந்தே தேற வேண்டும் அப்படியானால் தான் ஒருவனிடம் ஒப்படைக்கும் பணி முறையே நிகழும் என ஆழமாக எண்ணியே வள்ளுவர் அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப் படும் என்றார். இவ்வகைத் தேர்ந்து தெளிதல் பின்பற்றப் பட்ட பணிகள் மேலோங்கி வளர்வதையும் அல்லாத நிலையில் பணித் தேர்வு நிகழ்த்தப்படும் பணிகள் எல்லாம் முடங்கிக் கிடப்பதையும் கண்கூடாகக் காண இயலும். இவ்வாய்வு முதல் நிலை ஆய்வாகும். எப்பணிக்கும் தேவையான அடிப்படை ஆய்வாகும். ஆகவே, இது பொது நிலை ஆய்வாகும். பயன் படுத்தப்படும் அளவு கருவிகள் அறம், பொருள், இன்பம், உயிரச்சம் என்னும் நான்காகும். ----------------- குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கத்டே தெளிவு (குறள் 502) குடிப்பிறந்தார் யார்? அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்தல் இலர்; ஒழுக்கமும், வாய்மையும், நாணும் இழுக்கார்; இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர்; நகை, ஈகை, இன்சொல் லோடு எவரையும் இகழா இயல்பினர். ஆகவே நற்குடிப் பிறந்தவர், பணி அமர்த்தம் செய்யத் தக்காராவார். நற்குடிப் பிறப்புடன் செருக்கும் சினமும் சிறுமையும், இவறலும் மாண் பிறந்த மானமும் மாணா உவகையும் கொள்ளாதவராகவும், தினைத் துணைக் குற்றம் வரினும் அதனைப் பனைத்துணையாக் கொண்டு பழி நாணுபவராகவும்; எஞ்ஞான்றும் தன்னை வியவாதவராகவும், நன்றி பயவா வினையை நயவாத வராகவும் இருக்க வேண்டும். இத்தகைய குற்ற மற்ற குணவான்களே! பணியமர்த்தம் செய்யத் தக்கவராவார். பழிதரும் செயல்களைச் செய்வதற்கு வெட்கப்படுதலே நாணுடைமை ஆகும். நாணுடைமையே மாந்தர்க்குச் சிறப்புத் தருவதாகும். நாணுடைமையை அணியாகக் கொள்பவரே சான்றோர். பிறர் பழிக்கும் தம் பழிக்கும் நாணுபவரே நாணுக்கு உறைபதி ஆவார். மேலோர் நாணுடை மையை வேலியாகக் கொண்டு வாழ்வர், நாணாள்பவர் உயிர்ப்பொருட் டால் நாண் துறவார் ஆனால் நாணால் தயங்காது உயிரைத் துறப்பர். இத்தகைய பழிச் செயல்புரிய நாணும் நல்லோனே பணியில் அமர்த்தப் படத்தக்கவன் என மூன்று அளவு கருவி கொண்டு ஆராயத் தூண்டுகிறார். உயர்ந்த குடியில் பிறந்து குற்றங்கள் இல்லாதவனாய், பழிபாவங்கட்கு அஞ்சி நாணும் தன்மை உடையவனையே எப்பணிக்கும் ஆராய்ந்து சேர்ந் தெடுத்தல் வேண்டும். நற்குடியில் பிறந்து, குற்றம் இல்லாமல், பழிக்கு நாணுபவனே நம்பத்தக்கவன். குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு (குறள் 794) என நட்பாராய்தலில் வள்ளுவர் கூறும் குறட் கருத்தும் ஒப்பு நோக்கத் தக்கதே! --------------------- அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு (குறள் 503) நல்ல குடியில் பிறந்தவன் ஆகவும், குற்றங்களை நெருங்க விடாத வனாகவும் பழிச் செயல் புரிய நாணி விலகுபவன் ஆகவும், அற வழி நடப்பவனாகவும், பொருள் வழியில் செவ்வியனாகவும், இன்பநெறியில் கட்டுப்பாடு உடையவனாகவும் இருப்பவனே தக்கவன் ஆவான். அத்தகை யவர்களைத் தேடிக் கண்டுணர்ந்து தக்க பணிகளில் அமர்த்த வேண்டும் என அழுத்தமான கருவிகளைக் கொண்டு ஆராய்ந்தே தெளிதல் வேண்டும் என வள்ளுவர் வலியுறுத்தி யுள்ளதை மேலே கண்டோம். ஆனால், உலகியல் நடைமுறையில் நூற்றுக்கு நூறு விழுக்காடு பொருந்திய தலைவர்களையோ, பணியாளர் களையோ காண்பது எளிய செயலா? எனில் இல்லை என்றே கூறலாம். திருவள்ளுவரும் உலகியல் நோக்கில் எண்ணிப் பார்த்துக் கூறும் குறளே இக்குறளாகும். தெரியுங்கால், அரிய கற்று ஆசற்றார் கண்ணும். வெளிறு இன்மை அரிதே என அமைப்பு மாற்றம் செய்து கொண்டால் பொருள் காண்பது எளிது. ஒருவர் அறிஞர் என்றால் எத்துறையில் அறிஞர் என வினவித்தான் அறிய வேண்டும். கல்வி கடல் போல் பரந்து விரிந்தது; எல்லை காண்பது அரிது. ஒரு துறையில் அரிய நூல்களை கற்றுத் தேர்ந்த பெருமக்களும் இன்னும் தாம் கற்றுணர வேண்டியது ஏராளம் எனக் கருதி மேலும் மேலும் கற்பர். மெய்யுணர்வு பெற்ற புத்தரே, ஒரு பெரிய புளியமரத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய இலை அளவினதே தான் பெற்றுள்ள அறிவு என உரைத்துள்ளார் எனின், முழுதும் முறையுடன் கற்று உணர்ந்தவர் என உலகில் எவரும் இருக்க மாட்டார். ஒருவர் ஒருதுறையில் பேரறிவாளராக இருக்கலாம்; ஆனால் அத்தகையவர்களே பிறதுறைகளில் மிகக் குறைந்த அறிவுடையவராக இருப்பதும் இருக்கக் கூடியதே! கணக்கில் வல்லவர், வரலாற்று அறிவே இல்லாதவராகவும் இருக்கலாம். ஒன்றில் பெரியவர் மற்று ஒன்றில் சிறியவர் என்பது நடை முறை மொழியாகும். அறிவியல் அறிஞர் ஐன்சுடீன் பூனை அடைக்கப் பெட்டி செய்ய வேண்டினார். கை வல்லார் பெட்டி செய்து கொண்டு வந்து கொடுத்தார். பெட்டியைப் பார்த்த ஐன்சுடீன் தாய்ப் பூனை உள்ளே போகவும் வெளியே வரவும் வழி அமைத்துள்ளீர்களே, குட்டிப் பூனை போக வரவழி அமைக்க வில்லையே என வினவினாராம் பெரிய பூனைக்கு வழி அமைத்து விட்டால் சிறிய பூனை அதே வழியைப் பயன்படுத்திக் கொள்ளும் எனக் கைவினைஞர் விளக்கம் சொன்ன பின்னர்தான் புரிந்து கொண்டாராம். முப்பதற்கு மேற்பட்ட மொழிகளைப் கற்றுணர்ந்த மேதை; ஈடு இணை சொல்ல இயலா ஒப்பற்ற மொழி நூல் அறிஞர்தான் மொழி ஞாயிறு பாவணர். ஆனால், வெற்றி பெற்ற முதலமைச்சரைப் பாராட்ட வேண்டுமா? எப்படிப் பாராட்ட வேண்டும் என்பதைச் சிலம்பொலி செல்லப்பனார் உணர்த்தவே உணர்ந்தார் என்பதே உண்மை நிகழ்வு. பிறர் கற்பதற்கு அரிய நூல்களைக் கற்றறிருந்த, குற்றமற்ற அறிஞராக விளங்குபவரையும் ஆராய்ந்து பார்த்தால் அவரிடத்தும் அறியாமையும் காணப்படும். ஆகவே உலகில் அறிஞரிடத்தும் அறியாமையும் இருக்கலாம். கல்வி அறிவு அற்றவரிடத்தும் அறிவுக் கூர்மை இருக்கலாம். ஆகவே, உலகில் எவரையும் ஒன்றும் தெரியாத மூடர் என ஒதுக்கித் தள்ளிவிடவும் கூடாது. இவருக்குத் தெரியாதது உலகில் எதுவும் இருக்க முடியாது என எவரையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பி முடிவெடுத்து விடவும் கூடாது. கற்றறிந்த அறிஞரும் அறியாதவை உலகில் உண்டு என உணர்தல் வேண்டும். அடைக்கலமாக வந்து சேர்ந்த சுக்கீரிவனை இலக்குவன் ஐயமுற்றான் அவனைத் தெளிவிக்க இராமன் உரைத்ததாகக் கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள பாடல் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். வில்தாங்கு வெற்புஅன்ன விளங்கு எழில் தோள! மெய்ம்மை உற்றார் சிலர்: அல்லவரே பலர் என்பது உண்மை பெற்றாருழைப் பெற்றபயன் பெறும் பெற்றி அல்லால் அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர், ஆர்கொல்! என்றான். ஓப்பிட்டு நோக்குக! ---------- குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் (குறள் 504) இவர் மனத்துக்கண் மாசு அற்றவர்; அவர் மனத்துக் கண் மாசு உற்றவர்; இவர் வாழ்வாங்கு வாழ்பவர்; அவர் வாழ்வாங்கு வாழாதவர்; இவர் மனைமாட்சி உடையார்; அவர் மனை மாட்சி இல்லார்; இவர் அன்பு உடையார், அவர் அன்பிலார்; இவர் இனிய கூறுபவர், அவர் இன்னாத கூறுபவர்; இவர் நன்றி மறவார்; அவர் நன்றி மறப்பவர்; இவர் தக்கார்; அவர் தகவிலர்; இவர் அடக்கம் உடையார்; அவர் அடக்கமிலார்; இவர் ஒழுக்க முடையவர்; அவர் ஒழுக்க மற்றவர்; இவர் பொறையுடைமை போற்றி ஒழுகுபவர்; அவர் பொறுமையே இல்லாதவர்; இவர் அழுக்காறு கொள்ளாதவர்; அவர் அழுக்காறு உடையார்; இவர் பிறன் கைப்பொருள் வெஃகார், அவர் நடுவின்றி நன்பொருள் வெஃகுவார்; இவர் புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழார்; அவர் பகச் சொல்லி கேளிர் பிரிப்பார்; இவர் பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார், இவர் பல்லார் முனியப் பயனில் சொல்லுவார்; இவர் தீயவை செய்ய அஞ்சுவார், அவர் தீவினை செய்ய அஞ்சார்; இவர் உலகம் பழித்தது ஒழித்து வாழ்வார்; அவர் மனத்தது மாசாக மறைந்து ஒழுகுபவர்; இவர் பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் என உள்ளத்தாலும் உள்ளாதவர், அவர் களவின்கண் கன்றிய காதலர்; இவர் உள்ளத்தாலும் வெகுளி உள்ளார்; அவர் சினத்தைப் பொருளென்று கொண்டவர்; இவர் இன்னா செய்தார்க்கும் இனியவை செய்பவர், அவர் பிறர்க்கு இன்னா செய்பவர்; இவர் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறியர், அவர் கொலை வினையர். என எவரையும் அடையாளப்படுத்தி உணர்வதற்குப் புற அடையாளம் இல்லை. மாந்தர்களிலும் முழு நல்லவர்களும் முழுத் தீயவர்களும் இரார். குணமும் குற்றமும் ஆகிய இரண்டும் கலந்து அமைந்தவர்களே உலகில் மிகுதியாக இருப்பர். அப்படியானால் பணிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க வழியாது? ஒருவன்பால் பொருந்தியுள்ள நல்ல இயல்புகள் யாவை என்பதை முதலில் ஆராய்ந்து அறிந்து கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து அவரிடம் அமைந்துள்ள தீய இயல்புகளையும் ஆராய்ந்து கணக்கிட வேண்டும். பின்னர் அவ்விரு பகுதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து மிகுந்துள்ளது எது எனக் கண்டுணர வேண்டும். மிகுந்துள்ளது குற்றமே எனத் தெரிந்தால் அவரைப் பணியில் அமர்த்தாது நீக்கிவிட வேண்டும். குற்றம் மிகக் குறைவாகவும் குணமே மிகுந்து காணப்படுமானால் அத்தகைய குணமானவரையே பணியில் அமர்த்துதல் வேண்டும். இதுவே பணிக்கு ஆள்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வழியாகும். எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த தன்மையதே; அதுபோல் தொழில்களும் ஒத்தவையே எனினும் அவற்றைச் செய்யும் செயல் நிலை வேறுபாட்டால் சிறப்பு ஒத்தவை ஆகா என்னும் கருத்தைப் பெருமை அதிகாரத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான் 972. என்னும் குறள் மூலமாகவும். எத்தனை வழிகளால் ஆராய்ந்து தெளிந்த இடத்தும் செயலை மேற்கொண்டு செய்யும் நிலையில் வேறுபட்டு விடும் மாந்தர் பலராவர். என்னும் கருத்தைத் தெரிந்து வினையாடல் அதிகாரத்தில், எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் (குறள் 514) என்னும் குறள் மூலமாகவும். நேராக அமைந்த அம்பும் கொடுமை செய்யும், வளைவாக அமைந்த யாழும் இனிமை செய்யும்; அவற்றைப் போல் தவத்தினரையும் அவரவர் செயல் நிலையால் அறிந்து கொள்க என்னும் கருத்தைக் கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் (குறள் 279) என்னும் குறள் மூலம் கூறிய வழி முறைகளை மனத்தில் கொண்டு எண்ணிப் பார்க்க வேண்டிய குறள். ------------------ பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (குறள் 505) என்பதாகும். நாளும் நல்ல செயல்களை முறையோடும் ஒழுங்கோடும் பிறர்க்குக் கேடு பயக்காமல் செய்து வருபவர் பெருமைக்கு உரியவராக மதிக்கப் படுவார். தமக்கும் பிறர்க்கும் தீமை பயக்கும் கொடுஞ் செயல்களைச் செய்து கட்டுப்பாடும் ஒழுங்கும் இன்றி மனம் போன போக்கில் வாழ்பவர் சிறியவராக இகழப்படுவார். ஆகவே செயலில் செம்மையும் தூய்மையும் திறனும் உடையவர்களே பெரும் பெரும் பொறுப்புகளை ஏற்கத் தக்கவர். அத்தகையவர்களைக் கண்டுணர்ந்து தக்க பணிகளில் அமர்த்த வேண்டும். செயல் திறன் இல்லாச் செல்வச் சிறப்போ, கல்விச் சிறப்போ, உடற் தகுதியோ பிற தகுதிகளோ பயனற்றன வாகும். ஒவ்வொருவரும் தத்தம் குறைபாடுகளை உணர்ந்து போக்கி, நிறை களைக் கட்டிக் காத்து முயன்று உழைத்தால் பெருமை அடைய முடியும். தகுதி இல்லாதவர்களைப் பிறர் பெருமைக்குரியவர்களாக ஆக்க முயன்றாலும் முயற்சி பயன்படாது. அதுபோல் தகுதி உடைய முயற்சி யாளார்களைச் சிறுமைப் படுத்த வேண்டும் என வேண்டாதவர்கள் திட்ட மிட்டுச் செயல்பட்டாலும் இயலாது. .................................... தன்னை இறைவனாச் செய்வானும் தானே தான் தன்னைச் சிறுவனாச் செய்வானும் தான் என்னும் அறநெறிச் சாரப் பாடல்வரிகள் எண்ணிப் பார்க்கத் தக்கன. பெருமையும் சிறுமையும் தான் தரவருமே என்பது வெற்றிவேற்கை. ஐரோப்பாக் கண்டத்தையே தன் படை வலிமையால் மிரட்டி ஆட்டிப் படைத்த நெப்போலியன் முடிவில் தோல்வியைத் தழுவி செயின்ட் கெலினாத் தீவில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்த போது, தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைத் தானே திறனாய்வு செய்து பார்த்துக் கொண்டு என்னுடைய வீழ்ச்சிக்கு என்னைத் தவிர வேறு யாரும் காரணம் இல்லை, எனக்கு என்னை விடப் பெரிய எதிரி எவரும் கிடையாது என்று மனம் விட்டுப் புலம்பினான். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது கணியன் பூங்குன்றனின் கணிப்புரை அல்லவா? நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை நிலை கலக்கிக் கீழிடு வானும் நிலையினும் மேல்மேல்உயர்த்து நிறுப்பானும், தன்னைத் தலையாகக் செய்வானும் தான் என்னும் நாலடிப் பாடலிலும் குறளொளி ஊடுருவி நிற்பதைக் காணலாம். செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலா தார் (குறள் 26) என்னும் நீத்தார் பெருமை அதிகாரக் குறளுக்கும். பெருமை உடையவர் ஆற்றுவார், ஆற்றின் அருமை உடைய செயல் (குறள் 975) என்னும் பெருமை அதிகாரக் குறளுக்கும் அடித்தளம் ஒன்றே யாகும். நற்செயல் புரிந்து பெருமை பெறுக! தீச்செயலில் ஈடுபட்டுச் சிறுமை அடையாதே! செயலுக்கு ஆள்களைத் தேர்ந்தெடுக்கும் போது செயல் திறனையே அளவு கருவியாகக் கொள்ள வேண்டும்; பிற அளவு கருவிகள் பயன்படா! ------------------- அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர்; நாணார் பழி (குறள் 506) அற்றாரை எப்பணிக்கும் தேர்வு செய்தல் கூடாது; ஏனெனில் அவர்களிடம் பற்றும் இருக்காது; பழிக்கும் நாண மாட்டார்கள். பரிமேலழகர், சுற்றம் இல்லாதவர் என்கிறார் ஒழுக்கமற்றவர் என்கிறார் மணக்குடவர். பொருளும் கிளையும் கல்வியும் அற்றார் என்கிறார் பரிதியார். காளிங்கரோ உலகத்துச் சிலரோடு நண்பும் நயமும் அற்று ஒழுகுவார் எனக் கூறுகிறார். தன்னிடத்தே தொடர்பும் பற்றும் அற்றவர் (துறவி, ஏழை, அன்பிலார் என்கிறார் வரதராசனார். ஒரு தொடர்பும் அற்றவர் என்பது ஔவை சு.துரைச்சாமி கூற்று. தேசப் பற்று அற்றார் என்கிறார் தி.ப.சுப்பிரமணிய தாசு. அன்பிலார் என்கிறார் நாமக்கல்லார். நல்ல நெறி இல்லார் என்கிறார் இளங்குமரனார். அத்துடன் நம்பிக்கை அற்றவர்; தகுதி அற்றவர்; கொள்கை அற்றவர்; குறிக்கோள் அற்றவர் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வழியில் அனைவர் உரையும் ஏற்புடையது போல்தான் தெரிகிறது. எனினும் மேலும் சிந்திக்கலாம் போல் தோன்றுகிறது. ஏனெனில் அதிகாரம் தெரிந்து தெளிதல் - அலுவலில் அமர்த்து வதற்குத் தக்கவரைத் தேர்ந்தெடுத்தல் பற்றி ஆராய்கிற அதிகாரம். இங்கே அற்றார் என்பவன் செயல் திறன் இல்லாதவர் எனக் கொள்வது ஏற்புடையதாகலாம். ஏனெனில் செயல் திறன் உடையவர் களிடமே செயலில் ஈடுபாடு இருக்கும். முழுதும் தம்மை ஒப்படைத்து முழு முயற்சி கொண்டு உழைப்பர். திறமை அற்றவர் கட்குச் செயலில் பற்று கட்டாயம் இருக்காது. செயல் திறமையும் ஈடுபாடும் இல்லாதவர் எப்பணியையும் ஏனோ தானோ என்று ஒப்புக்கே செய்து கடன் கழித்துப் பொழுதைப் போக்குவர். அவர்கள் பணி பிறரால் பழிக்கப் படுவது பற்றி அன்னார் கவலைப்படமாட்டார். செயல் திறன் உடையவர்கட்கே செயலில் ஈடுபாடு ஏற்படும்; யாரும் தம் பணியைக் குறை கூறி விடக் கூடாது; பழிப்பிற்கு ஆளாகக் கூடாது எனக் கருதி நாணம் அடைவார். என்னும் போக்கில் ஆராய்ந்தால் செயல்திறன் இல்லாதவரை எந்த அலுவலுக்கும் தேர்ந்தெடுத்தலை கட்டாயம் விலக்க வேண்டும். ஏனெனில் செயல் திறன் அற்றோர் செயலில் ஈடுபாடும் அற்றவராகத் தான் இருப்பர். அவர்களை உலகமே பழித்தாலும் ஒருகாலும் வெட்கப்படமாட்டார் என வள்ளுவர் தம்பட்டறி வால் அரிதியிட்டு உரைக்கிறார். திறமை அற்றவர்களை உயர் நாற்காலியில் அமர விடாதே! அவர்கள் பணி செய்ய மாட்டார்கள். தகுதியானவர்களைப் பணி செய்யவும் விட மாட்டார்கள். முயன்று செய்து புகழ்பெற வேண்டும் என எண்ணவும் மாட்டார்கள். -------------------- காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும் (குறள் 507) எப்பணிக்கும் அப்பணியைப் பற்றிய தெளிந்த அறிவுடையவர்களையே தேர்ந்தெடுத்துப் பணியமர்த்தம் செய்வதே அறிவுடைய செயல். நம்முடைய உற்றார், உறவினர், நண்பர், இனத்தவர், கட்சியினர் நம்மீது அன்புடையவர் என்ற காரணங்களை முன்வைத்து, பணியைப் பற்றி முன் கூட்டியே எவற்றை எல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டுமோ அவற்றில் எதனையும் அறியாதவரை, தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் முயற்சியும் இல்லாதவரைத் தனி விருப்பின் காரணமாய்த் தேர்ந்தெடுத்தல் அறியாமையாகும் என்று சொல்லி நிறுத்திக் கொள்ளாமல் திருவள்ளுவர் பேதைமை எல்லாம் தரும் எனக் கூறியுள்ளதை ஆழமாய்ச் சிந்தித்துச் செயல்புரிதல் வேண்டும். பல வகையான அறியாமைகளைத் தரும் என்றும் கூறாது. பேதைமை எல்லாம் தரும் என்று கூறுவதால் அறிவார்ந்த செயல் எதுவும் நடை பெறாது. எல்லாம் அறியாமையின் உறைவிடம் ஆகிவிடும் எனக் கருதுகிறார். அன்பு, பாசம் இரக்கம் காட்டி உதவ வேண்டிய இடம் பணிக் களம் அல்ல எனத் தெளிவு படுத்துகிறார். குடியாட்சி நாட்டில், வாக்காளர்கள் தகுதியும் திறமையும் அரசியல் அறிவும் தெளிவும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்னும் உள்ளுணர்வும் நூலறிவும் நுண்ணறிவும் பட்டறிவும் இல்லாதவர்களை ஏதோ ஒரு வகையான குறுகிய பற்றின் காரணமாக வேட்பாளர்கட்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்தல். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக் கொள்வது போன்றதாகும் பின் எது எது நடக்கக் கூடாதோ அவைகள் தான் நடக்கும். நாட்டை அறியாமை இருளில் மூழ்க வைத்து விடும் என்றும் எண்ண வைக்கும் அருமைக் குறளாகும் இது. அடுத்த தெரிந்து வினையாடல் அதிகாரத்தில் செய்யும் செயலை நன்றாக அறிந்து, பொறுப்புடன் அதனைச் செய்யும் திறத்தவனை அல்லாமல் மற்றவனைச் சிறந்தவன் என எண்ணிச் செயலைச் செய்ய ஏவுதல் தகுதியன்று என்னும் கருத்துப் புலப்படுமாறு. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று (குறள் 515) எனக் கூறியுள்ளதையும் ஒப்பிட்டு நோக்குதல் வேண்டும். -------------------- தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் (குறள் 508) தேர்ந்தே தெளிய வேண்டும். தேராது தெளிந்தால் என்ன? தேராது தெளிந்தால் துன்பமே ஏற்படும். என எளிமையாகக் கூற விரும்பாத திருவள்ளுவர் தீரா இடும்பை தரும் எனக் கூறிய தோடும் அமையாது வழிமுறை தீரா இடும்பைதரும் என உரைக்கிறார் எனின் தெரிந்து தெளியாமை எவ்வளவு பெரிய அறியாமை என உணர்த்துகிறார். அயலார் ஒருவனைப் பொறுப்பான பணியில் அமர்த்த வேண்டு மானால் அவர் அறவழி நிற்பவரா? பொருள் வழியிலும் அறநெறி பேணு பவரா? கட்டுப்பாடு குலையாது இன்பம் துய்ப்பவரா? நெருக்கடி யிலும் அஞ்சாது பணிபுரியும் ஆண்மையரா? நற்குடிப்பிறந்தவரா? தனி வாழ்விலும் பொது வாழ்விலும் குற்றமற்றவரா? பழிக்கு அஞ்சி நாணுபவரா? என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்புடையவர்களையே பொறுப்பான பணிகளில் அமர்த்த வேண்டும் என்பது வள்ளுவ நெறி! அயலான் ஒருவனை முன்பின் அறியாமலும் அவன் நடவடிக்கை களை ஆராய்ந்து பார்க்காமலும் பணி அமர்த்தம் செய்யும் செயலால் அவனுக்கு மட்டுமன்றி அவன் வழிவருவோர்க்கும் நீக்க இயலாக் கொடுந் துன்பத்தையே கொடுத்துக் கொண்டு இருக்கும். ஆகவே எவரையும் ஆராயாமல் நம்பி பொறுப்பை ஒப்படைக்காதே என விழிப்பூட்டுகிறார். மனோன் மணிய நாடகக் காப்பியக் கதைத் தலைவன் சீவக வழுதி ஆராயாமல் சூழ்ச்சிக்காரக் குடிலனை அமைச்சன் ஆக்கியதால் நேர்ந்த இடும்பைகளைச் சுந்தரனார் எடுத்து மொழிவதும் நல்ல சான்றாகும். ஏமாங்கத நாட்டை இராசமாபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட மன்னன் சச்சந்தன், நேர்மை அற்ற கட்டியங்காரனை அமைச்சன் ஆக்கிவிட்டு, ஓராண்டுக் காலம் தன் மனைவி விசயையுடன் காதல் இன்பத்தில் மூழ்கியதால் ஏற்பட்ட இடும்பைகளைத் திருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணிக் காப்பியத்தில் விரிவாக விளக்கியுள்ளார். எந்தப் புற்றில் எப்படிப்பட்ட பாம்பு இருக்கிறது என்று தெரியாமல் கையை விட்டு கவலைக்கு ஆட்படாதே! புற்று கறையான் புற்றா? பாம்புப் புற்றா தெளிவாக அறிந்து உணர்க! கறையான் புற்று எனக் கருதிப் பாம்புப் புற்றில் ஏறித் துன்பதை தானே தேடிக்கொள்ளாதே என உணர்த்த எண்ணுகிறார். தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் (குறள் 509) தேராது யாரையும் தேறற்க! தேர்ந்த பின் தேறும் பொருள் தேறுக! யாரையும் ஆராயாது நம்பிப் பொறுப்புகளை ஒப்படைத்தல் கூடாது. தெளிவாக ஆராய்ந்து தகுதியானவர் என முடிவுசெய்தபின் நம்பத்தக்கவை களை ஐயுறாது நம்ப வேண்டும்? எத்துணைச் சிறந்தவரையும் எவ்வினைக்கும் ஆராயாது தெளியற்க! ஆராய்ந்து ஒருவரைத் தெளிந்தபின் அவரை நம்பி அவரிடம் ஒப்படைக்கக் கூடிய வினைகளைப் பற்றி ஐயுறற்க! எவரைப் பற்றியும் நன்கு ஆராயாமல் எச்செயலுக்கும் ஒருவரைத் தகுதியானர் எனக் கருதிவிடக்கூடாது. காவல் துறைப் பணிக்குத் தகுதி யானர் என ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரைக் காவல் துறைப் பணிக்கே பயன்படுத்த வேண்டுமே அல்லாமல் கல்வித் துறை போன்ற பிற துறைப் பணிகட்கு அவரைப் பயன்படுத்தல் ஆகாது. அது போல் கல்வித் துறைப் பணிக்குத் தகுதியானவர் என ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் அவரைக் கல்வித் துறைப் பணிக்கே பயன்படுத்த வேண்டுமே அல்லாமல் காவல் துறை போன்ற பிற துறைப்பணிகளில் ஈடுபடுத்த எண்ணக் கூடாது. ஒருவர் எத்துறைப் பணிக்குத் தகுதியாளரோ அத்துறைப் பணியில் அமர்த்தப் பட்டால் தான் அவரும் ஒப்படைப்புடன் பணி செய்ய இயலும். அவர் பணிச் செம்மையால் நாடும் வளர்ச்சி அமையும். ஒருவர் ஆசிரியர் பணிக்கு ஏற்றவர் என்று ஆராய்ந்தபின் உரிய பாடம் கற்பிக்கவும் தகுதி உடையவரா? ஏனவும் ஆராய்தல் வேண்டும். பொது நிலை ஆய்வுடன் சிறப்பு நிலை ஆய்வே வினைக்களத்தில் மிக்க பயன் நல்கும்! ஒரு துறையில் கொடி கட்டிப் பறந்தவர்; பிற துறைக்கு மாற்றப் பட்டதால் ஏற்பட்ட பணித் தேக்கத்தையும் வீழ்ச்சியையும் நாட்டில் பல பணிகளில் கண்டிருக்கிறோம். வரலாற்றுச் சான்று: காவல் துறை உயர் அதிகாரி கே.டி. மாளவியா தம் கண்காணிப்புப் பணியில் தவறி விட்டதாகக் கல்கத்தா பொதுக் கூட்டத்தில் பண்டித நேரு கண்டித்தார். மாளவியா தன் நிலையை விளக்குவதற்கு வாய்ப்புத் தரவில்லையே என வருத்தப்பட்டார். உங்கள் நிலையை விளக்குவதற்கு உங்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் போனதற்காக மிக வருந்துகிறேன் என்று வருத்தம் தெரிவித்தார் பண்டிதநேரு. வாய்ப்பு அளித்தார்; உண்மை நிலையை அறிந்தார்; தெளிவுற்றார். ---------------------- தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் (குறள் 510) பணி வழங்கப்படுவதற்கு முன் எந்தந்தக் கோணத்தில் எல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டுமோ அந்தந்தக் கோணத்தில் எல்லாம் சோதித்துப் பார்த்து ஏற்புடையவர் என நன்கு தெளிந்த பின்னரே எவரையும் உரிய பணியில் அமர்த்துதல் வேண்டும் அதுவே நலம் தரும் முறையாகும். அதுபோல் தக்கவர் எனக் கருதி பணியமர்த்தம் செய்தபின் முழு நம்பிக்கையுடன் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டுமே தவிர்த்துத் தேவை இல்லாமல் வீணாக ஐயம் கொள்ளாமல் இருத்தலே பணி செவ்வையாக நடப்பதற்கு வழியாகும் அதை விடுத்து ஆராயாமல் ஒருவனை ஓர் அலுவலுக்குத் தேர்ந் தெடுத்துப் பணியை ஒப்படைத்தலும் நம்பி ஒப்படைத்தவர் மீது ஐயம் கொள்வதும் நலம் தரும் முறையல்ல எனக் கூறாது, இடும்பை தரும் என்று மட்டும் கூறாது, தீரா இடும்பை தரும் என வலியுறுத்திக் கூறுவதை யும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும். தொழிலில், முதல் இழப்பிற்கும், வளர்ச்சி இன்மைக்கும் தேக்கத் திற்கும் வீழ்ச்சிக்கும் தீராத் துன்பத்திற்கும் காரணம், ஆராயாமல் தெளிவு கொள்ளுதலும், தெளிந்த பின் கொள்ளும் ஐயுறவுமே ஆகும் என்பதை நடைமுறையில் காணமுடியும். ஆராயாது நம்பாதே! நம்பியவர் மீது ஐயம் கொள்ளாதே! என்பது வள்ளுவரின் பணியமர்த்தக் கொள்கை. அறத்தின் திறம் தெரிந்து தேர்! பொருளின் திறம் தெரிந்து தேர்! இன்பத்தின் திறம் தெரிந்து தேர்! உயிரச்சத்தின் திறம் தெரிந்து தேர்! நான்கின் திறம் தெரிந்து தேர்க! குடிப்பிறந்தான் கண்ணே தெளிவு! குற்றத்தின் நீங்கியான் கண்ணே தெளிவு! வடுப்பரியும் நாணுடையான் கண்ணே தெளிவு! எவரிடத்தும் வெளிறு இன்மை அரிது! ஒவ்வொருவர் குணம் நாடுக! குற்றமும் நாடுக! குற்றம் மிகையா? குணம் மிகையா என நாடுக! குணம் மிகை எனின் கொள்ளுக! குற்றம் மிகையானவரைத் தள்ளுக! நற்செயல் பெருமை உடையவர் ஆக்கும்! தீச்செயல் சிறுமை உடையவராகக் காட்டும்! பணித் தகுதி இல்லார் பணியிலும் பற்று வையார்; பழிக்கும் நாணார்! அறியாரைத் தேர்ந்தெடுத்தல் பேதைமையே தரும்! பிறரைத் தேராது தெளியாதே! வழிமுறையையும் துன்பத்தில் ஆழ்த்தாதே! யாரையும் தேராது தேறற்க! தேர்ந்தபின் தேறும் பொருள் தேர்க தேரான் தெளிவும் தீரா இடும்பை தரும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் யாரையும் தேர்ந்து தெளிக! --------------------- 52. தெரிந்து வினையாடல் வினைகளில் புகழும் நன்றியும் பயக்கும் வினைகளையே தலைமேற் கொள்ளுதல் வேண்டும். சான்றோர் பழிக்கும் எவ்வினையையும் என்றும் செய்ய எண்ணவே கூடாது. எவ்வினையைச் செய்ய முற்படுகிறோமோ அவ்வினை செய்யத் தேவையான பொருள்கள் எவை எவை எவ்வளவு எவ்வளவு தேவைப்படும் எனப் பொருளியல் திட்டமும் தீட்டிக் கொள்வதுடன், அதற்குத் தேவை யான முதன்மைக் கருவிகள், துணைக் கருவிகள் எவை என்பதையும் அவற்றை எளிதில் தேடிக் கொள்ள இயலுமா என்பதையும், அதனைத் தொடங்கு வதற்குக் காலம் ஏற்புடையதா? இடம் பொருத்தமானதா? வினையும் நம் தகுதிக்கும் திறனுக்கும் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் ஏற்றது தானா! என்பதை மிகத் தெளிவாக ஆராய்ந்தே திட்டமிட்டுச் செயலில் இறங்குதல் வேண்டும். மன உறுதியே, வினை உறுதி; வினை உறுதியே, உறுதியான வெற்றி. பொறுப்புக் கூடக் கூடத் தனித்துச் செய்யும் வினைகளைக் காட்டிலும், பிறரைக் கொண்டு செய்யும் வினைகளே மிகுதியாகும். ஆகவே, ஒவ்வொரு வினைக்கும் எல்லா நிலைகளிலும் தகுதியானவர்களையே முறையே தேர்வு செய்து பணியமர்த்தம் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து தெளிதல் அதிகாரத்தில் தெரிவித்த வள்ளுவர். அவர்களிடம் எப்படி வேலை வாங்க வேண்டும்; அவர்களை எங்ஙனம் கண்காணிக்க வேண்டும்; மேற்பார்வை இட வேண்டும் என்பதைத் தெள்ளிதின் விளக்கும் அதிகாரமே தெரிந்து வினையாடல் அதிகாரமாகும். தலைவனால், தொழில் உரிமையாளரால் பல்துறை ஆட்சியாளர் களால், நாடாள்வோரால் தக்க பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி யமர்த்தம் பெற்றவர்கள் எப்படிச் செயல்படுதல் வேண்டும்! சிந்தித்துப் பாராமல் தலைவன் கட்டளை களை கண்ணைமூடிக் கொண்டு பின்பற்றுபவனாகவும் இருக்கக் கூடாது, அதுபோல் பணி வழங்கியவனின் குறிப்புகளை உணர்ந்து பாராமல் தான் தோன்றித் தனமாய் தன்மனம் போன போக்கில் செயல்படுகிறவனாகவும் இருத்தல் ஆகாது. பணிபுரிபவனை ஆளும் தலைவன் முறையே செயல்புரிந்து கொண் டிருப்பவன் கடமையில் தேவை யில்லாமல் அடிக்கடி தலையிட்டு, பணி புரிவோர் மனத்தைப் புண்படுத்தவும் கூடாது. தெளிவான காரணம் இல்லாமல் ஐயப்படவும் கூடாது. தலைவன் எல்லாப் பொறுப்பையும் பணிபுரியும் மற்றவரிடம் ஒப்படைத்துவிட்டு கண்காணிக்காமல் ஒதுங்கி இருக்கவும் கூடாது. ஒருவனை ஒரு குறிப்பிட்ட பணிக்குத் தேர்ந்தெடுக்கும் போது எவ்வளவு நன்மையும் ஊதியமும் கிட்டும், எவ்வளவு தீமையும் இழப்பும் ஏற்படும் என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்து, தீமை இழப்பைக் காட்டிலும் நன்மையும் ஊதியமும் மிகுதியாய் அமையும் என முடிவு செய்தால் அத்தகையவனைப் பணியில் அமர்த்துதல் வேண்டும். செயல் உயர்ந்த செயல்தான் ஆனால் அதனை ஒரு முறையில் செய்தால் நன்மை உண்டாகும். ஆனால் அதனையே வேறு ஒரு முறையில் செய்தால் தீமை உண்டாகும். ஆகவே, இவ்விரண்டு வழி முறைகளையும் நன்கு ஆராய்ந்து உணர்ந்து நன்மை தரும் வழியைப் பின்பற்றிச் செயல் புரிகின்றவனே பணிக்கு ஏற்புடையவன் ஆவான். ஒரு செயலைச் செய்வதால் உண்டாகும் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஆராய்ந்து பார்த்து, நன்மையையே விரும்பும் குணம் உடைய ஒருவனையே அச்செயலைச் செய்வதற்குத் தகுதி உடைய வனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனச்சிந்திக்கத் தூண்டு கோலாய் அமையும் குறட்பாவே, நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் 511 என்னும் முதற்பாடலாகும். கடலைக் கடந்து இலங்கை செல்வதற்கு ஏற்றவர் யார்? எனத்தமக்குள் ஆய்வு நடத்தினர். நீலன், அங்கதன், சாம்பன் முதலியோர் தம்தம் இயலாமையை உணர்த்தினர். பின் அனுமனே தக்கவன் எனக் கூறிய சாம்பன் அனுமனின் தனிச் சிறப்புகளை எடுத்து மொழியும் போழ்து, நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி, நவைதீரத் சொல்லவும் வல்லீர்: காரியம் நீரே துணிவுற்றீர்; வெல்லவும் வல்லீர்; மீளவும் வல்லீர்; மிடல் உண்டே, கொல்லவும் வல்லீர்; தோள்வலி என்றும் குறையாதீர் என்னும் கம்பராமாயணப் பாடல் நல்லதொரு இலக்கியச் சான்றாகும். ------------------------- வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை (குறள் 512) செய்க! எதனை? வினையை; யார் வினை செய்க? ஆராய்வான் செய்க வினை. எதனை ஆராய்வான்? உற்றவை ஆராய்வான். உற்றவை எவை? வாரி பெருக்கி வளம் படுத்துதல். என ஒரு முறைப்படுத்திக் கொண்டு சிந்திக்கத் தூண்டும் குறட்பா இதுவாகும். வருவாய் தரும் பணியில் ஈடுபடுத்தப் படுபவன் வினை மாட்சியால் நேர் வழியில் சோம்பலின்றி, ஊக்கத்துடன் தன் முழு ஆற்றலையும் திறனையும் பயன்படுத்தி உழைக்கக் கடமைப்பட்டவன் ஆவான்; உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்னும் நன்மொழிக்கு ஏற்ப, வருவாயை எவ்வளவு பெருக்கிக் காட்ட இயலுமோ அந்த அளவிற்குப் பெருக்கிக் காட்டுவதுடன், தான் ஏற்றுள்ள பணியை நிறைவளப் பணியாக வும் ஆக்க வேண்டும். தான் ஏற்றுள்ள பணிக்குத் தொடர்புடையவற்றில் நாளும் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். வளமைக்கும் காரணம் தெரிய வேண்டும் வளமையில் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியவில்லை என்றாலும் காரணத்தைக் கண்டு உணர வேண்டும். தடைகளை அகற்றவும் தெரிய வேண்டும். நல்வாய்ப்பை நழுவவிடலும் ஆகாது; அத்தகைய செயலும் சிந்தனையும் உடையவனே உண்மையான பணியாளனாக இலங்க முடியும் என்பதைப் பணியமர்த்தி வேலை வாங்கும் பொறுப்பில் இருக்கும் மேனிலையர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெள்ளிதின் விளக்கும் குறளே, வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை (குறள் 512) என்பதாகும். ---------------- அன்பறிவு, தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு (குறள் 513) எத்தகையவர்களிடம் செயல் தெளிவை எதிர்பார்க்க முடியும்? என்னும் வினாவிற்கு விடையளிப்பது போல் அமைந்துள்ள குறட்பா இதுவாகும். தெளிவான பணிச் சீர்த்தியைத் தன் அளவில் தெளிவான தூய மனத்தினை உடையவர்களிடமும் எதிர்பார்க்கலாம். அன்பின் வழியதே உயிர் நிலை எனக் கொண்டு, தந்நல நாட்டம் இன்றித் தம் என்பும் உரியர் பிறர்க்கு என எண்ணி வழங்க விரும்பும் அன்பை அக உறுப்பாய்க் கொண்ட பண்பாளரிடமும் எதிர்பார்க்கலாம். தீது ஒரீஇ நன்றின் பால் உய்க்கும் அறிவும், எப்பொருளிலும் மெய்ப்பொருள் காணும் அறிவும். உலகத்தோடு ஒட்ட ஒழுகும் அறிவும், எதிரதாக் காக்கும் அறிவும், ஆவது அறியும் அறிவும் வாய்க்கப் பெற்ற அறிவுடையார்களிடமும் தெளிவான பணிச் செம்மையை எதிர்பார்க்கலாம். எது மெய்ப்பொருள்? எது பொய்ப்பொருள்; எது நல் வழி; எது அல்வழி; எது நற்பணி, எது தீயபணி; என்பதில் எத்தகைய மயக்கமும் இன்றித் தெளிவாக மெய்ப்பொருளையும், நல்வழியையும், நற்பணியையும் கண்டுணர்ந்து உறுதியுடன் பின்பற்றிச் செயல்புரிபவர்களிடமும் தெளிந்த செம்பணியை எதிர்பார்க்கலாம். ஒருவனை வஞ்சிப்பது அவா; அவாவே துன்பத்துள் துன்பம்; அவா ஆரா இயற்கை; என்பதை உணர்வதுடன் அவா இன்மையே தூய்மை என்றும், அவா அற்றவரே துன்பம் அற்றவர் என்றும், அவா இன்மையே ஒப்பற்ற விழுச் செல்வம் என்றும், அவா இன்மையே பேரின்பம் தரும் என உணர்ந்து செயல்படுவோரிடமும் பணித் தெளிவை எதிர்பார்க்கலாம். எனத் திருவள்ளுவர் ஒருவன் அன்புடையவனாகவோ, அறிவுடையவ னாகவோ, மருள் நீங்கிய தெளிவுடை யவனாகவோ, அவா இன்மை உடையவனாகவோ மட்டும் இருந்தால் பணித் தெளிவு முழுமை பெறாது எனக் கருதுவது மட்டும் அல்லாது அன்பு, அறிவு, தேற்றம், அவா இன்மை ஆகிய நான்கும் நன்கு உடைய வனாய் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அத்தகையவனிடமே செயல் தெளிவும், நிறைவுமுடைய தாக அமைந்திருக்கும். -------------------- கணை கொடிது; யாழ்கோடு, செவ்விதாங் கன்ன வினைபடு பாலால் கொளல் (குறள் 279) என்னும் கூடா ஒழுக்கக் குறளால் அம்பு நேரானாலும் கொடியது; யாழ் வளைவானாலும் இனியது; ஆதலால் செயலால் அவரவரை அறிய வேண்டும் எனவும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972) எனும் பெருமை அதிகாரக் குறளால் எல்லா உயிர்களும் பிறப்பால் ஒப்பானவையே, ஆனால், செயலைச் செய்யும் வகையால் ஒப்புஆகா எனவும் உறுப்புஒத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு (குறள் 993) என்னும் பண்புடைமை அதிகாரக் குறளால் உறுப்புகள் ஒத்திருத்தல் மாந்தர் ஒப்புகை ஆகாது; விரும்பத்தக்க பண்பு ஒத்திருப்பதே ஒப்பாகும் எனவும் ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு (குறள் 1012) என்னும் நாணுடைமை அதிகாரக் குறளால் உணவு, உடை மற்றவை எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை நாணுதலே மக்கட் சிறப்பு எனவும் கூறுமாற்றான் கூறும் குறட்பாவே, எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் (குறள் 514) என்பதாகும். வினை செய்யத் தேர்வு செய்யப்பட்டவன் ஒன்றன் நன்மையையும் தீமையையும் தெளிவாகப் பகுத்துணர்வதுடன் நலம் தரும் வழியிலேயே செயல் புரிபவனாகவும், வருவாயைப் பெருக்கக் கூடியவனாகவும், வளத்தைக் கூட்டக் கூடியவனாகவும், பின் விளைவை எண்ணி விழிப்புடன் செயல்புரிவனாகவும், அன்பும் அறிவும், தேற்றமும் அவா இன்மையும் நன்கு அமைந்துள்ளவன், என நன்கு ஆராய்ந்து தெளிந்த பின்னரே பணி ஒப்படைக்கப்பட்டது எனினும் ஒரு வேலையை மேற்கொண்டு செய்யும் போது அவ்வேலை வேறுபாடு காரணமாகக் குணம் மாறுதல் அடையும் மக்கள் உலகத்தில் பலர் இருப்பர். ஆகவே, எல்லா வகையாலும் ஆராய்ந்து உறுதி செய்து விட்டோம் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது. பதவி உயர்வு காரணமாக மாறுபடும் மக்களும் உண்டு. தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட வினை அல்லது பதவியின் தரத்திற்குத் தகுந்தபடி பேராசைக்கு ஆட்படுவோரும் உண்டு மாந்தர் அனைவரும் தோற்றத்தாலும், உள்ளத்தாலும், உணர்வாலும் செயல்படும் பாங்காலும் வேறுபட்ட வர்களாகவே இருப்பர். ஆகவே, வேறாகும் மாந்தர் பலர் என்றார். முன்னமே நன்கு ஆராய்ந்து பார்த்துத் தானே, பணியை ஒப்படைத்தோம், என்று இராமல் தலைமைப் பொறுப்பாளான் என்றும் கண்காணித்துக் கொண்டே இருப்பதே நல்லது. பணி தேடி வரும் போது நடந்து கொள்வது போலவே பணி பெற்ற பின்னரும் அவ்வாறே அனைவரும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க இயலாது. வீடு தேடி வந்து வணங்கி வாக்குக் கேட்டவர்களில் பலர். ஊருக்கு தெருவுக்கு வந்து கூட வாக்காளர்களின் வர வேற்பைக் கூடப் பெறாதவர்களும் இருக்கிறார்கள். பதவியால் பண்பு மாறியவர்களும் உலகத்தில் உள்ளனர். ஆகவே தொடர்புடையவர்கட்கு விழிப்புணர்வு தேவை. வந்தாளும் மன்னவனை மந்திரிதான் கொன்ற கதை சிந்தாமணிகாண் திருமலையா-முந்தி எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் என்னும் திருமலை வெண்பா ஏற்ற எடுத்துக் காட்டு ஆகும். ---------------------- அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று (குறள் 515) தெரிந்து தெளிதல் அதிகாரத்தில் காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும் (குறள் 507) எனக் கூறினார். அறிய வேண்டியவற்றை அறியாதவரை அன்பு காரணமாகத் தெரிந்தெடுத்தல் முழுமையான அறியாமையாகும் அதே நோக்கிலும் போக்கிலும் வரையப் பட்ட குறட்பா இதுவாகும். பணியமர்த்தம் செய்யப்படுகிறவன் செய்யப் போகும் செயலை முதற்கண் மிக நன்றாக அறிந்திருக்கவேண்டும். கடமை உணர்வுடன், செய்யப் பின்பற்றும் நெறி முறைகளைப் பின்பற்றி செய்து முடிக்கும் திறன் வாய்ந்தவனாக இருக்க வேண்டும். பிற துறைகளில் வல்லவனாக விளங்குகிறவனையோ, தனிப்பட்ட முறையில் நல்ல பண்பாளன் என்பதற்காகவோ பணியமர்த்தம் செய்தல் கூடாது. எவ்வினையையும் தக்க வழியில் செய்து வெற்றி தேடித் தருபவனிடமே ஒப்படைக்க வேண்டும். நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது. செயல் வல்லானாகவும் இருக்க வேண்டும். தெற்ற அறிவுடையார்க்கு அல்லால் திறனிலா முற்றலை நாடிக் கருமம் செய வையார் கற்றுஒன்று அறிந்து கசடற்ற காலையும் மற்றதன் பால் தேம்பல் நன்று என்னும் பழமொழிப் பாடலும் ஒப்பிட்டு நோக்கத் தக்கதாகும். வள்ளற்கு இளையான் பகர்வான் இவன் தம்முன் வாழ்நாள் கொள்ள, கொடுங் கூற்றுவனைக் கொணர்ந்தான்; குரங்கின் எள்ளற்குறு போர் செய எண்ணினான் என்னும் இன்னல் உள்ளத்தின் ஊன்ற, உணர்வு உற்றிலன் ஒன்றும், என்றான். ஆற்றாது பின்னும் பகர்வான் அறத்தாறு அழுங்கத் தேற்றாது செய்வார்களைத் தேர்தல் செவ்விது அன்றால் மாற்றான் எனத் தம்முனைக் கொல்லிய வந்து நின்றான். வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என்! வீர! என்றான். எனச் சுக்கீரிவனை ஐயுற்று இலக்குவன் கூறுவதாக வரும் கம்பராமாயணப் பாடல்கள் இலக்கியச் சான்றாகும். மருந்து அதிகாரத்தில் நோய் நாடி, நோய் முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள் 948) என ஆராய வேண்டுவனவற்றைக் கூறுமாப் போல் கூறும் குறட்பாவே, செய்வானை நாடி, வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல் (குறள் 516) என்னும் குறளாகும். தொழில் செய்பவனுடைய தொழில் திறமையையும் ஆராய வேண்டும். செய்யப் போகும் செயலின் தன்மையையும் ஆராய வேண்டும்; பணி செய்வதற்கு இது ஏற்ற காலம் தானா? இல்லையேல் எது ஏற்ற காலம் என்பதையும் ஆராய்ந்து, எல்லாம் இணைந்து பொருத்தம் உடையதாக அமையுமானால் அத்தகுதியாளனிடம் பொறுப்பினை வழங்கிச் செய்வித்தல் வேண்டும். மும்முனை ஆய்வு தேவை; ஒன்று செய்பவன், இரண்டு செயல் மூன்று ஏற்ற காலம். எனப்பட்டியல் இடுகிறார் வள்ளுவர். இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் (குறள் 517) செயல் செய்ய ஒப்படைக்கும் நுட்பம் உணர்த்தும் அருமைக் குறட்பா இதுவாகும். இச்செயலை இன்ன இன்ன வகையால் இவன் சிறப்பாகச் செய்து முடிப்பான் என்று யாரை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கிறோமோ அவனிடமே அச்செயலைச் செய்யுமாறு ஒப்படைக்க வேண்டும். இதில் வேண்டியவர்; வேண்டாதவர்; கட்சி, அரசியல், சாதி, சமயம் உறவு, நட்பு என்னும் முறை பிறழ்ந்த நோக்கும் போக்கும் உள்ளே நுழைந்துவிடக் கூடாது. நுழைந்தால் எந்தெந்தப் பணிக்கு எவரெவர் தகுதி யற்றவரோ அவரவர் இடம் பெறுவர். எது எது நடக்கக் கூடாதோ அது அதுவெல்லாம் நடக்கும். ஆள்வோர் மிகக் கவனத்தில் கொண்டு பின்பற்ற வேண்டிய குறட்பா (517) ஆகும். நேர்முகத் தேர்வுகள் எல்லாம் நேர்மை முறைத் தேர்வுகளாக நிகழ்த்தப் பட வேண்டும். நோயாளிபடும் துன்பத்தைத் தனக்குற்ற துன்பமாகக் கருதி விரைந்து போக்க முற்படுவரே மருத்துவராய்ப் பணிபுரிய ஏற்புடையவராவார். கட்சியை விட நாட்டு நலம் பெரிது எனப் பண்டிதசவகர்வால் நேரு எண்ணியமையால் நிதி அமைச்சராக ஆர்.கே. சண்முகம் அவர்களையும் சட்ட அமைச்சராக அம்பேத்கார் அவர்களையும் இணைத்துக் கொண்ட சீர்த்தி வள்ளுவர் குறளுக்கு நல்ல சான்று. ஆனால் பொருளியல் வல்லுநர் பா.நடராசன் அவர்களை தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளாமை குறள் நெறிக்கு எதிர்மறைச் சான்றாகும். தலைவர்கள், உயர் அலுவலர்கள் முதலாளிகள் தமக்குத் துணை யாகப் பணியில் அமர்த்தப்படுவோர் தமக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், தகுதியானவர்களைப் பணியில் அமர்த்த விரும் புவார்களா? விரும்ப மாட்டார்கள். தகுதியான பொறுப்புகளில் தகுதியான வர்கள் இடம் பெறவில்லை எனில் தகுதியையும் தரத்தையும் வளர்ச்சி யையும் மலர்ச்சியையும் எங்ஙனம் காண இயலும். தொழில் திறனுக்குக் கல்வித் தேர்வு மதிப்பெண் சிறந்த அளவு கருவியாக அமைய முடியுமா? எண்ணிப்பார்க்க! பள்ளித் தேர்வில் தோற்றவர்களில் பலர் நல்ல தொழில் திறனாளி களாக வளர்ந்து நாட்டையும் வளப்படுத்த முயன்று வருகிறார்கள் என்பதும் உண்மை. ஒவ்வொரு துறைப் பணியும் திறமை வாய்ந்தவர்களால் தான் சிறப்படையும், உற்றான் உறாஅன்எனல் வேண்டா ஒண் பொருளைக் கற்றானை நோக்கியே கைவிடுக்க-கற்றான் கிழவன் உரை கேட்கும், கேளான் எனினும் இழவன் எருதுண்ட உப்பு என்னும் பழமொழிப் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது. ஈசன், குண்டோதர போ என்று அருளும் குன்றுபுரை சோறு கறி உண்டு தொலைப்பதற்கு நாடி இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்னும் முதுமொழி மேல்வைப்பு நல்லதொரு சான்றாகும். ------------------- வினைக்குரிமை நாடிய பின்றை, அவனை அதற்குரிய னாகச் செயல் (குறள் 518) எந்தச் செயலைச் செய்வதற்கு எவன் தகுதி உடையவன் என ஆராய்ந்து தேர்வு செய்தோமோ அவனையே அச்செயலைச் செய்தற்கு முழு உரிமை உடையவனாகச் செய்தல் வேண்டுமே தவிர்த்து மாற்றம் செய்து விடக் கூடாது. வினைக்குத் தக்கவன் என்று தெளிந்த பின்பு அவனையே முழுப் பொறுப்பு உடையவனாக ஆக்குக என்பதே வள்ளுவர் ஆணை. 1933 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பொறுப்பிற்கு நாவலர் ச.சோம சுந்தர பாரதியே தகுதியானவர் எனப் பல்கலைக் கழகம் முடிவு செய்து வேண்டுதல் விடுத்தது. நாவலர் பாரதியார் தான் அப்பணியை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் தமிழ்த் துறை, மொழித் துறையிலிருந்து பிரிந்து தனித் துறையாக இயங்குமாறு செய்தலுடன், தமிழ்த் துறைத் தலைவரின் ஊதியம் பிற துறைத் தலைவர்களின் ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கக் கூடாது. தமிழ்த் துறைப் பணிகளில் யாரும் குறுக்கிடக் கூடாது இம்மூன்று விதிகட்கும் உடன்படுவதாயின் பணியை ஏற்றுக் கொள்ள வரஇயலும் என வேண்டுகோள் விடுத்தார். பல்கலைக் கழகம் அதனை மனமுவந்து ஏற்று அவரைப் பணியமர்த்தம் செய்தது என்பது வரலாற்றுச் சான்றாகும். ------------- வினைக்கண் வினையுடையான் கேண்மைவேறாக நினைப்பானை நீங்கும் திரு (குறள் 519) வினை, செல்வம் தேடுவதற்கு உரிய வினை; அவ்வினையில் எல்லா நிலையிலும் மிகத் தகுதியுடையவன் நியமிக்கப் பட்டிருக்கிறான். அவன் தன் சொந்தப் பணிபோல் கருதி மிக ஈடுபாட்டுடனும் பொறுப்புடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். நிறுவனம் நாளும் வளர்ந்து தனிச் சிறப்புடன் இயங்கி வருகிறது. பொறுப்பாளனின் உண்மையான ஈடுபாட்டைப் போற்றிப் பாராட்டி மகிழ வேண்டிய உரிமையாளர் என்றைக்கு ஐயப்பட்டுத் தவறாக நினைக்க முற்படுகிறாரோ அன்றைக்கே அந்நிறுவனத்தின் செல்வச் செழிப்பு நீங்கி விடும் என வள்ளுவர் எச்சரிக்கிறார். காரியத்தில் கருத்தாய் செயல்படுபவனைத் தவறாக எண்ணுவது உன் செல்வம் தவற வழி வகுக்கும். தக்கவனைத் தக்க இடத்தில் தக்க வைப்பதில் குழப்பம் செய்து நிறுவனத்தைச் சீர்குலைத்து விடக் கூடாது. தக்கவன் மதிக்கப்படவில்லையானால் தக்கவன் எவனும் பணிக்கு வாரான். வந்தாலும் முழுமனத்துடன் பணி புரியான். ஒப்புக்குப் பணி புரிந்தால் நிறுவனம் எந்நிலை உறும் எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறார் வள்ளுவர். உறுமக்க ளாக ஒருவரை நாட்டிப் பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே ஒழிதல் சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை அதுவே குறுமக்கள் காவு நடல் என்னும் பழமொழிப் (121) பாடல் ஒப்பு நோக்கத் தக்கது. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் (குறள் 167) என வள்ளுவர் அழுக்காறாமை அதிகாரத்தில் கூறியுள்ளதையும் மறந்து விடல் ஆகாது. ----------------- ஒவ்வொரு நாளும் நாட்டின் நிலைமையை ஆராய்ந்து அதனை நெறிப் படுத்தாத ஆட்சியாளனின் நாட்டில் நாள்தோறும் நலங்கள் படிப்படியே கேடுறும். என்னும் அரசியல் நெறியைக் கொடுங்கோன்மை அதிகாரத்தில் நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தோறும் நாடு கெடும் (குறள் 553) கூறுவதற்கு முன்பாகவே கூறும் குறளே. நாடோறும் நாடுக மன்னன்; வினைசெய்வான் கோடாமை கோடா துலகு (குறள் 520) என்பதாகும். தொழில் செய்கிறவன் தளராதிருக்கும் வரையில் உலகம் வளமாக இருக்கும். ஆகவே, நாட்டை ஆளும் பொறுப்பில் இருப்போர் தொழில் களும், தொழில் புரிவோரும் தளராமல் இருக்கும்படி, நாள்தோறும் கவனித்துக் கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள் வெறுப்பு அடையாமல் இருந்தால், அந்நாட்டின் வளங்கள் கெடாமல் இருக்கும். அதை அரசுத் தலைவன் கவனித்து, வேலை பார்க்கிறவர்களுக்கு மனக் குறை இல்லாமல் செய்ய வேண்டும். என வள்ளுவர் எண்ண வைப்பதுடன், செயலாற்ற வல்லவன் செம்மையிலேயே உலகின் செம்மை அடங்கி இருத்தலால் நாடாள்வோன் செயலாற்று பவனை நாள்தோறும் தவறாமல் ஆராய்ந்து கொண்டே இருப்பது நல்லது என விளக்குகிறார். -------------- நன்மையும் தீமையும் நாடுக நலம்புரியும் தன்மையன் ஆகுக வாரி பெருக்குக! வளம்படுத்துக உற்றவை ஆராய்க செய்க வினை அன்பு அறிவு தேற்றம் அவாஇன்மை உடையவனாய் விளங்குக! வினை வகையால் மாந்தர் பலர் வேறாவர் செயலாண்மை உடையவனிடமே செயலை ஒப்படை செய்வானையும் ஆராய்க செயலையும் ஆராய்க காலமறிந்து கடனாற்றுக ஆராயாமல் பணியில் அமர்த்தாதே துறைமாறிப் பயன்படுத்தாதே தகுதியானவன் தொடர்பு நிலைக்கட்டும் எப்பணியையும் தலைவன் கண்காணிக்கத் தவறக் கூடாது ---------------- 53. சுற்றந் தழால் தன்னைச் சூழ்ந்துள்ளவர்களை எக்காலத்தும் விடாமல் தழுவிக் கொண்டிருத்தலே சுற்றம் தழால் என விளக்கம் தருபவர் மயிலை சிவமுத்து அவர்கள். தனி வாழ்க்கையில் சுற்றத்தார் அமைவது போல் பொது வாழ்க்கை யிலும் சுற்றத்தார் அமைவது உண்டு. தன் ஏவலுக்கு இயைந்து தொழில் செய்கின்றவர்கள் வேறு; தன்னோடு பல காரணங்களால் நெருங்கிப் பழகுகின்றவர்கள் வேறு. இவ்வாறு பொது வாழ்க்கையில் பழகு கின்ற வர்களையே அரசியலில் சுற்றம் என்று கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாரையும் தழுவி அன்பாக நடப்பது ஆட்சித் தலைவனுடைய கடமையாகும் என அறிஞர். மு.வ. விளக்குகிறார். பல்வேறு துறைகளின் தலைவர், வேந்தனைச் சூழ இருப்பினும், தனி நிலையில் அவனுக்கு உறவினரும் அறிவுடை நண்பரும் உண்டு. அவர்கள் அவனுடைய உடலோடும் உயிரோடும் அன்பால் பிணிப்புண்டவர்கள். அதனால் சுற்றம் எனப்படுகின்றார்கள் எனப் பேராசிரியர் ஔவை. சு. துரைச்சாமி அவர்கள் கூறுகிறார்கள். செல்வமும் செல்வாக்கும் பதவியும் உயர்கிற போழ்து, பிறர் துணை நமக்குத் தேவையில்லை; நம் துணைதான் பிறர்க்குத் தேவை என்று எண்ணுவது மனித இயல்பு. ஆனால், உயர உயரத்தான் அடிப்படை வலுவாக இருக்க வேண்டும் என உணர்ந்து சுற்றத்தினரைத் தழுவி வாழ வேண்டுகிறார். கோபுரத்தின் உச்சியில் உள்ள கலசம் அழகு தரலாம், ஆனால் கோபுரத்தைத் தாங்கி நிற்பது அடித்தளம் அல்லவா? அடிப்படை என்றும் பேணப்படவேண்டும். அடிப்படை பேணிக் காக்கப்பட்டால் தான், கோபுரமும் கலசமும் நிற்கும். இல்வாழ்வான் தாய் தந்தையைப் பேணுவதுடன் துறவியையும், உணவிற்கு வழியற்றவரையும் ஏதிலியரையும் பேணவேண்டும் அத்துடன் குற்றமற்ற அறிஞர்களையும் வாழ்வாங்கு வாழ்பவர்களையும் விருந்தினர் களையும் பேணுதல் வேண்டும் எனத் திருவள்ளுவர் விரும்புவதுடன் அமையாது சுற்றறத்திரையும் பேண வேண்டுமென வேண்டுகிறார். பிறரைப் பேண வேண்டும் என்றால் அடிப்படையாய் உள்ளத்தில் உயிராய் அமைய வேண்டிய உயர்பண்பு அன்பாகும். அன்புத்தாய் பெறும் குழந்தை ஆர்வமுடைமை ஆகும், ஆர்வமுடைமை என்னும் தாய் பெறும் அருமைக்குழந்தை நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பாகும். மனிதனை மனிதனோடு இணைத்துக் கோர்க்கும் சங்கிலி அன்பாகும். -------------------- பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள (குறள் 521) என்பது முதற் குறள். பற்றற்ற கண்ணும் என்னும் தொடர், ஒருவன் செல்வம் தொலைந்து வறியவன் ஆன போதும் எனவும் ஒருவன் அதிகாரம் தொலைந்து வறுமையுற்ற போதும் எனவும் பற்றற்ற துறவி ஆன போதும் எனவும் தொடர்ச்சி விட்டுப் போன காலத்திலும் எனவும் இன்பங்கள் எல்லாம் விட்டுப் போய்த்தனிமையுற்ற காலத்தும் எனவும் அறிஞர்கள் பொருள் காண்கின்றனர். இளமைப் பருவத்தில் எல்லா நிலையிலும் நெருங்கிப் பழகி ஒன்றி வாழ்ந்தவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் தனித்து வாழ வேண்டிய சூழ்நிலையால் பிரிந்து வாழ்ந்தனர். நெடுநாட்களாக எந்த வித ஒட்டும் உறவும் தொடர்பும் கொள்ள வாய்க்கவில்லை. எனினும் இடை இடையே ஒருவரைப்பற்றி ஒருவர் நினைவு கூர்தலும், அந்தப் பழைய தொடர்பை மறக்காமல் நினைந்து பேணுதலும் நல்லியல்பு பொருந்திய சுற்றத்தாரிடம் உண்டு. நல்ல சுற்றத்தார் வறுமையுற்றாலும் பதவி இழந்தாலும், துறவு நெறி நின்றாலும் பழமையை மறவாது போற்றுவர். பழைமை அதிகாரத்தில் எல்லைக்கண் நின்றார் துறவார், தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு (குறள் 806) என்னும் குறள் வழி தொலைவான இடத்தில் தாம் தொல்லைப் படுங்கால், நிலைபெற உதவி நின்றவரின் பழந்தொடர்பை நட்பின் உயர் எல்லையின் நின்றவர் என்றும் கைவிடார் எனக் கூறும் கருத்தும் ஒத்த நோக்குடையதாகும். காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனின் பலராவர்-அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு என்னும் மூதுரை வெண்பா நல்லதொரு எடுத்துக்காட்டாகும். ------------------- விருப்பறாச் சுற்றம் இயையின், அருப்பறா ஆக்கம் பலவும் தரும் (குறள் 522) எந்நிலையிலும் அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்கு அமையுமானால் அது பலவகையாலும் வளர்ச்சி நீங்காத நன்மைகள் பலவற்றையும் இயல்பாக இனிதே வழங்கும். உற்றாரெல்லாம் உறவினர் அல்லர் ஆகலின் விருப்பறாச் சுற்றம் என்றார். மேன்மேற் கிளைத்து வளரும் செல்வத்தை அருப்பறா ஆக்கம் என்றும் கூறினார். இயையின் என்பது இயைதலின் அருமை குறித்து நின்றது. அரும்புதல் என்றால் தோன்றுதல் என்று பொருள். விரும்பு என்பது விருப்பு என ஆயது போல், அரும்பு என்பது அருப்பு என்றாயது. அன்பு குறையாத சுற்றம் இருப்பின் வளர்ச்சி குறையாத முன்னேற்றம் வரும். சுற்றம் தழுவுதல் இழப்பன்று ஆக்கமே ஆகும். --------------- அளவளா வில்லாதான் வாழ்க்கை, குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள் 523) நாம் வாழும் இடத்திலும் பணிபுரியும் இடத்திலும் நம்மைச் சுற்றி வாழ்பவர்களும் பணிபுரிகிறவர்களும் நம் சுற்றத்தார் ஆவர். அவர்களில் அகவை வேறுபாடு, நிறவேறுபாடு, தோற்ற வேறுபாடு, பால் வேறுபாடு, இன வேறுபாடு, மொழி வேறுபாடு, தொழில் வேறுபாடு, பொருள் நிலை போன்ற பல்வேறு வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் உள்ளவர்களாய் இருக்கலாம். எடுத்துக் காட்டாக உயர் அலுவலரும் இருக்கலாம், சிறிய அலுவலகத்தில் ஏவல்பணி புரிவோரும் இருக்கலாம். எந்நிலை மக்களாய் இருப்பினும் அனைவரும் அன்புடன் பழக வேண்டும். இன்ப துன்பங்களில் இரண்டறக் கலந்து கொள்ள வேண்டும். ஒருவர் ஆணையிடுகிறவராகவும் மற்றவர்கள் கைகட்டி, வாய் போத்திக் கேட்டு நடப்பவராகவும் இருத்தல் கூடாது. எல்லாரும் வாழப்பிறந்த மனிதர்கள். பாரதி சொன்னது போல் எல்லோரும் சமம் என்பது உறுதிஆச்சு என்பது நடைமுறை உண்மையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் முதலில் நல்ல அறிமுகம் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர் பற்றிய நிலையையும் அறிந்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகத்தான் அமர்ந்து இனிது நோக்கிப் பணிந்து வணங்கி அகத்தானாம் இன்சொல் கூறி மகிழ்வினைப் புலப்படுத்திக் கொள்ள வேண்டும். மறந்தும் சுற்றத்தார்க்கு கேடு நினைத்தல் கூடாது. யாருக்காவது ஏதேனும் துன்பம் நேரிட்டால், நம் உதவியை அவர்கள் நாடு முன்னரே உடுக்கை இழந்தவன் கைபோல தானே முந்தி விரைந்து சென்று துன்பம் துடைத் தூன்றும் தூணாக விளங்க வேண்டும். இன்ப துன்பங்களை மனத்தில் வைத்துச் சுமக்காமல் சுற்றத்தாரிடம் மனம் விட்டுப் பேசிப் பாரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒருவரோடு ஒருவர் மனங்கலந்து பேசுவது ஒரு மாமருந்தாகும். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல் சுற்றத்திற்கு ஆகவே ஆகாது. சுற்றத்தினருடன் மனங்கலந்து பேசிப் பழகும் தன்மை இல்லாதவன் வாழ்க்கை எது போன்றது? என வள்ளுவர் வினா எழுப்பி விடை தருவார் போல் குளம் பரந்து விரிந்த குளம்தான் ஆனால் குளத்திற்கு எப்பக்கத் திலும் கரையையே காணோம். அப்படியானால் நீர் எப்படி நிறைந் திருக்கும்? நிறைந்திருப்பது போல் தெரியும் ஆனால் பள்ளமான இடத்தில் மிகக் குறைந்த அளவு நீரே தேங்கி நின்று ஒரு போலித் தோற்றம் வழங்குவது அல்லாமல் பயன் பாட்டிற்கு ஆகாது போன்றதாகும் என உவமை வழி விடைதருகிறார். கரையற்ற குளத்தில் நீர் நிரம்பாது அதுபோல் கலந்து பேசிப் பழகாதவன் வாழ்க்கை பெருகாது. ஆகவே, வாழ்க்கை வளத்துடனும், நலத்துடனும் பெருமையுடனும் சிறப்புடனும் நிறைவுடனும் அமைய சுற்றத்தாருடன் மனத்தாலும் கலந்து பேசிப் பழகி வாழ்க! -------------- சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்? (குறள் 524) என்னும் குறளைப் படிக்கின்ற போழ்து. பொது நலன் கருதுபவர், விடாமுயற்சியோடு பொருள் தேடிச் சேர்ப்ப தெல்லாம் தகுதி வாய்ந்தவர் வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்கே என்னும் பொருள் புலப்படுமாறு ஒப்புரவறிதல் அதிகாரத்தில், தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 212) எனக் கூறிய குறட்பாவும். குற்றம் இல்லாதவனாய்த் தன்குடி மேம்படுதற்கு ஆகும் முயற்சியை மேற்கொண்டு வாழ்பவனை, உலகத்தவர் விரும்பித் தம் சுற்றமாகச் சூழ்ந்து கொள்வர் எனும் நோக்கில் குடி செயல் வகை அதிகாரத்தில் குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு (குறள் 1023) என்னும் குறட்பாவையும் ஒருங்கே சிந்திக்கத் தூண்டுகிறது. ஒருவன் முயன்று உழைத்துச் செல்வத்தைப் பெற்றுள்ளான், அச்செல்வத்தைப் பெற்றதனால் அடையப் போகும் பயன் எதுவாக இருக்க வேண்டும் என வினா எழுப்பி வழங்கும் விடை. தன் சுற்றத்தினர் உரிமை யோடும் ஒன்றிய உணர்வோடும் மிகுந்த அன்புடனும் தம்மைச் சூழ்ந்து இருக்குமாறு வாழ்க்கை நடத்துவதுதான். வசதி பெருகப் பெருக இனி நமக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை என்றும் சுற்றத்தினர் தொல்லைப்படுத்துவர் என்றும் கருதி உறவினர்களை அண்டவிடாது வாழும் வாழ்க்கை வாழ்க்கை அன்று என்பதையும் திருவள்ளுவர் உணர வைக்கிறார். செல்வம் பெற்றால் பெற வேண்டும் பயன், சுற்றத்தார் சுற்றி இருக்கு மாறு அன்பு பாராட்டி வாழ்வதே. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது சான்றோர் வாக்கு. அதனாலேயே வெற்றி வேற்கை, செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என உரைத்தது. அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழல் மரம் போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம் போல் பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன் என்னும் நாலடிப் பாடலையும் ஒப்பு நோக்குவோம். -------------------- கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும் (குறள் 525) வறுமையில் வாடுகிறவர்கட்கு அவர்கள் வறுமை நீங்கத் தம்மால் இயன்றதைக் கொடுத்து வாட்டம் போக்கும் பண்பும், எப்பொழுதும் யாரிடத்தும் இனிய சொற்களையே பேசும் பண்பும் இயல்பாக யார் யாரிடம் அமைந்திருக்கிறதோ அவர்கள் எக்காலத்திலும் தனிமைத் துன்பத்திற்கு ஆளாக மாட்டார்கள். ஆனால், தொடர் தொடரான சுற்றத்தாரால் எப்பொழுதும் சூழ்ந்திருக்கப்படுவர். கொடுத்தல் இன்சொல் இரண்டும் இருந்தால் சுற்றம் படைபோல் சூழ்ந்து விடும். அடுக்கிய சுற்றம் என்னும் தொடர் சுற்றமும், சுற்றத்தின் சுற்றமும் அதனது சுற்றமும் ஆகத் தொடர்ந்து படர்ந்து செல்வது. பேரறிஞர் அண்ணா இருந்தால் பொதுக் கூட்டம்; நடந்தால் ஊர்வலம் என அறிந்தோர் கூறுவர். ------------------ மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவரும் ஈங்கில்லை-சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர் என்னும் நல்வழியும். செல்வத்தைப் பெற்றால் சினங்கடிந்து செவ்வியராய்ப் பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு - நல்லதாம் தானம் மறவாத தன்மையேரேல் அஃதென்பர் வானத்து வைப்பதோர் வைப்பு என அறநெறிச் சாரமும் பாடுவதற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் படைத்த திருக்குறளில் ஒருபா பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத் தில் (குறள் 526) என்பதாகும். ஒருவன் ஈத்துவக்கும் இன்பமே பேரின்பம் எனக் கொண்டு, வறியார்க்கு வாரி வழங்கும் பெருங் கொடையாளனாய் இருப்பதுடன், சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி என்பதை உணர்ந்து ஒருவன் இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும் அவன் மீதும் வெகுளி கொள்ளாமையே நன்று எனக் கொண்டு வெகுளிக்கு இடம் தராதவனாகவும் இருந்தால், அவனுக்கு ஒப்பாகச் சுற்றத்தாரைப் பெருக்கியவர்கள் உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். கொடுப்பான், சீற்றம் கொள்ளான் என்றால் அவனே பெருஞ்சுற்றம் உடையவன் ஆவான். ஆகவே, கொடுத்து உதவு! சினம் கொள்ளாதே! சுற்றம் சூழ வாழ்வாய்! -------------- காக்கை கரவா கரைந்துண்ணும், ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள (குறள் 527) என்னும் குறள் வள்ளுவரின் பேருள்ளம் காட்டும் குறட்பாக்களில் ஒன்றாகும். எழுத்துகள் எப்படி அகரத்தை முதன்மையாகக் கொண்டு இயங்கு கிறதோ, அதுபோல் பகுத்து வழங்கி வாழக் கற்பித்தவனையே முதன்மை யாகக் கொண்டு உலகம் இயங்குகிறது என்பதைத் தான் நூல் முகப்பில், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு! (குறள் 1) எனத் தொடங்கியதும், கொல்லாமையில், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322) எனக் கூறியதும், விரும்தோம்பலில், இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விரும்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 81) என உணர்த்தியதும், புகழில், ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள் 231) எனத் தெளிவு படுத்தியதும் ஒப்புரவறிதல் அதிகாரத்தில், ஊருணி நீர் நிறைந் தற்றே; உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215) பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின். (குறள் 216) மருந்தாகித் தப்பா மரத்தற்றால், செல்வம் பெருந்தகை யான்கண் படின் (குறள் 217) எனவும் கூறும் வள்ளுவரின் தனிப் பெருள்ளம்; பிறர் வாழ வாழ் என்பதாகும். அதனை மேலும் விளக்க காக்கையைப் பார்! அது தனக்குக் கிட்டிய உணவை மறைத்துத் தனித்து உண்ண விரும்புகிறதா? இல்லையே! தன் இனத்தைக் கூவி அழைத்துக் கூடி அல்லவா உண்ணுகிறது. அறிவுடைய மனிதன் காக்கையிடம் இருந்து இப்பண்பைக் கற்றுக் கொள்ள வேண்டாமா என வினவுவதுடன். காக்கை போல் யாரெல்லாம் மறைப்பின்றி பகுத்து உண்ணும் இயல்பினைப் பெற்றிருக்கிறார்களோ? அவர்கட்குத்தான் சுற்றத்தினர் பெருக்கமும் இயல்பாகப் பெருகி நிற்கும்! காக்கை போல் சுற்றம் பேணி சுற்றத்தார் பெருக்கத்துடன் பெருமைப் பட வாழ்வோம். நாட்டில் நல்லது நடந்திருக்கிறது என்பதை அறிந்து ஆட்சியாளன் எல்லாரையும் ஒருங்கே பாராட்டிப் பரிசளித்து விடல் கூடாது. இந்நலம் விளைய உழைத்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உழைப்பிற்கு ஏற்பப் பாராட்ட வேண்டுவதே முறைமை. அதுபோல் அல்லது நடந்து வளர்ச்சி குன்றி விட்டது என்பதை அறிந்து அனைவரையும் பழிக்கவோ தண்டிக்கவோ கூடாது. யாரால் இவ்வீழ்ச்சி ஏற்பட்டது என்பதைத் தக்க முறையில் கண்டுணர்ந்தே காரணமாய் அமைந்தவர்களை அவர்கள் செய்த குற்றத்தின் அளவிற்கு ஏற்பவே தண்டனை வழங்குவதும் பழிப்பதும் முறைமையாகும். திருவள்ளுவர், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர் பணிக்களத்தில் பொதுப் பார்வை பார்க்காது வரிசை அறிந்து நோக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் குறட்பாவே. பொதுநோக்கான் வேந்தன், வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் (குறள் 528) என்பதாகும். ஒருதலைவன் அனைவரையும் பொதுவகையால் மதியாமல், அவரவர்க்கு அமைந்துள்ள தகுதிக்கு ஏற்றவாறு தனித் தனியே சிறப்பு வகையால் மதித்துப் போற்றிப் பாராட்டி ஊக்கப்படுத்தும் தன்மை உடைய வனாக விளங்கினால். தலைவன்பால் அமைந்துள்ள சீர் தூக்கிப் பார்க்கும் இயல்பை உணர்ந்து. அவர் மதிக்குமாறு பணி செய்து, எப்பொழுதும் பலர் அவரை நெருங்கி வாழ்வர். தலைவன் தனக்குக் கீழே பணிபுரிபவரின் பணிச் சீர்மையைக் கண்டு உணர வேண்டும். அதற்கு ஏற்றவாறு அவர்களை உயர்த்த வேண்டும். அதுவே பணிக்கும் பணிபுரிவோர்க்கும் மட்டுமல்லாது நாட்டிற்கும் நல்லது. தலைவர்க்கு ஒன்றும் தெரியாது எளிமையாய் ஏமாற்றி விடலாம் என எந்தப் பணியாளனும் எண்ண இடம் தந்து விடல் ஆகாது. ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசின் மாக்கள், வரிசை அறிதலோ அரிதே. பெரிதும் ஈதல் எளிதே மாவண் தோன்றல் அதுநன்கு அறிந்தனை ஆயின் பொதுநோக்கு ஒழிமதி! புலவர் மாட்டே! என்னும் புறப்பாடல் கபிலர் மலையமான் திருமுடிக் காரியை நெறிப் படுத்தப் பாடிய பாடல் அடியாகும். கபிலர் நோக்கும் வள்ளுவர் நோக்கை ஒத்ததாகும். புறப்பொருள், வெட்சித் திணையில் பாதீடு: எனும் துறையில் அமைந்த கொளுவின் இலக்கணமும் விளக்கவுரையும் காண்போம். கொளு:- கவர்கணைச் சுற்றம் கவர்ந்த கணநிரை அவரவர் வினைவயின் அறிந்தீ தன்று ஒள்வாள் மலைந்தார்க்கும் ஒற்றாய்ந்து உரைத்தார்க்கும் புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை மாறட்ட வென்றி மறவர்தம் சீறூரில் கூறிட்டார் கொண்ட நிரை. என்னும் புறப்பொருள் வெண்பா மாலை சிறந்த எடுத்துக் காட்டு ஆகும். ------------- தமராகித் தற்றுறந்தார் சுற்றம், அமராமைக் காரணம் இன்றி வரும் (குறள் 529) முன்பு அன்பான சுற்றத்தினராய் இருந்து, பின் ஏதேனும் ஒரு கரணியம் பற்றித் தலைவனை விட்டுப் பிரிந்து போனவர் மீண்டும் வந்து முன்பு போலவே அன்பான முறையில் உறவாடுதலும் ஏற்படக் கூடியதே. இடையில் அன்பால் பொருந்தாமைக்கு ஏதுவாய் இருந்த சூழல் நீங்கிவிடுமாயின் தாமே வந்து இணைந்து கொள்வர். தலைவனின் தவறான ஒழுக்கத்தினாலோ, அவன் தமக்கு ஏற்காதன செய்ததனாலோ, அவனை விட்டுப் பிரிந்த மெய் அன்பர்களான சுற்றத்தினர். அக்குற்றங்கள் நீங்கின் தாமாகத் திரும்ப வந்து சேர்ந்து கொள்வர். ஆதலால், அதற்கு ஒரு முயற்சியும் வேண்டியதில்லை. என்பது கருத்து. குறிப்பிட்ட ஒரு செயலில் தலைவனின் அணுகு முறை பிடிக்க வில்லை என்றாலும், தன் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அரசியல் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகுவதும், பின்னர் தமக்கு நிறைவு ஏற்பட்டபோது மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுவதும் ஒவ்வொரு கட்சியிலும் இடை இடையே நிகழக் கூடியது தான். தலைவன் மீது எந்நாளும், எல்லாச் செயலிலும் முழு நிறைவு வாய்க்கப்பெறும் என்று சொல்ல இயலாது. பிரியவும் உரிமையுண்டு; இணையவும் உரிமை உண்டு; பிரிவும் இணைவும் இயல்பானதாகும். இன்று அரசியல் கட்சிகளில் ஒரு வேடிக்கை நடந்து கொண்டிருக் கிறது. ஒரு கட்சியில் உறுப்பினராய் இருப்பதுடன் வேறு முக்கியப் பொறுப்பில் அமைந்திருப் போரும் திடீரெனக் கட்சியிலிருந்து விலகிக் கொள்வோரும் உண்டு. அவர்களில் சிலர் வேறு கட்சியில் உடனே சேர்ந்து விடுவதுண்டு. வேறு சிலர் மீண்டும் வெளியேறிய கட்சியிலேயே சேர்ந்துவிடுவதும் உண்டு. வேறு கட்சியிலிருந்து தம் கட்சிக்கு வந்தவரையும், தம் கட்சியிலேயே மீண்டும் வந்து சேர்ந்தவர்களையும் சில தலைவர்கள் அவர்களைத் தனிச் சிறப்புடன் வரவேற்று, முக்கிய பொறுப்பு களையும் வழங்கிப் பெருமைப் படுத்துவதும் நிகழ்ந்து வருகிறது. தம் கட்சிக்கு வலிமை கூடி வருவதாகக் கருதிப் பூரிப்படைகிற தலைவர்களும் இல்லாமல் இல்லை. அத்தகைய தலைவர்கட்காகத் திருவள்ளுவன் கூறும் குறட்பாவே, உழைப்பிரிந்து காரணத்தின் வந்தாளை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் (குறள் 530) என்பதாகும். தன்னிடத்தில் இருந்து பிரிந்து சென்றவர் ஏதோ ஒரு காரணத்தால் மீண்டும் தன்னிடம் வந்தால், தலைவனாக இருப்போன், மீண்டும் வந்தவனுக்கு அவன் விரும்பும் அளவு உதவி புரியலாம். குற்றமில்லை, ஆனால் அவன் ஏன் வெளியேறினான்? மீண்டும் ஏன் வருகிறான்? அவன் எத்தகையவன் அவனை இணைத்துக் கொள்வதால் இயக்கத்திற்கு, நிறுவனத்திற்கு நல்லதா? நன்மை விளையவில்லை எனினும் கேடு விளைந்து விடக் கூடாது என்பதை நன்கு ஆராய்ந்து. விரைவு காட்டாமல் தக்க காலம் பொறுத்து இருந்தே உறவாகக் கொள்ள வேண்டும் எனக் கூறுவது எவ்வளவு நுட்பமான அறிவுரை என்பதைப் பட்டறிந்தவர்களே உணர முடியும். இருந்து, பிரிந்து, ஒரு நோக்கத்தோடு வந்தவனைத் தலைவன் பொறுத்துப் பார்த்து ஏற்றுக் கொள்க! ------------------ பற்றுவிட்டாலும் சுற்றத்தார் பழமை பாராட்டுவர் விருப்பு நீங்காச் சுற்றம் அமைய வேண்டும் வளர்ச்சி நீங்காத ஆக்கங்கள் வந்து சேர வேண்டும் அன்பு கலந்து பேசும் சுற்றம் இல்லாதவன் கரையற்ற குளம் போன்றவன் கொடையும் இன்சொல்லும் கோடிச்சுற்றம் சேர்க்கும் சினம் கொள்ளாதே சுற்றம் பெருகும் பெருங்கொடை பெரும் சுற்றப்படை சேர்க்கும் காக்கை போல் கூடி உண் தலைவா பொதுப் பார்வை பாராதே! தலைவா வரிசை அறிந்து நோக்கு உண்மையான சுற்றத்தார் பிரிந்தாலும் கூடிவிடுவர் பிரிந்தவன் வந்தால் ஆராய்ந்து சேர் ---------------- 54. பொச்சாவாமை செயலாற்றுதலில் கால நீட்டிப்பு மறதி, சோம்பல், மிகுந்த தூக்கம் என்னும் நான்கும் யார் விரும்பி அணியும் அணிகலன்கள் எனில் அழிந்து போகும் தன்மையாளர்கள் விரும்பி அணியும் அணிகலன்கள் என்பதைத் திருவள்ளுவர் மடியின்மை அதிகாரத்தில், நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் எனக் குறிப்பிடுவார் (குறள் 605) அழியப் போகிறவர்கள் விரும்பி அணியும் அணிகலன்கள் போன்ற தீயதன்மைகள் நான்கில் ஒன்றுதான் மறதி அதனைத் திருவள்ளுவர் மறவி என்றும் பொச்சாப்பு என்றும் குறிப்பிடுவார். பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் (குறள் 199) என்னும் குறள் பயனில சொல்லாமை அதிகாரத்தில் இடம் பெறுவது. மயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவினை உடையவர், பயனற்ற சொற் களைத் தம்மை மறந்தும் கூடச் சொல்ல மாட்டார் எனவும் அருளைக் கைவிட்டு அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து வாழ்பவர், தாம் தேடிய பொருளை இழந்து பிறரால் மறக்கப் பட்டவர் என்று சான்றோர் கூறுவர் என்பதை பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி அல்லவை செய்தொழுகு வார் (குறள் 246) என்னும் அருள் உடைமை அதிகாரக் குறள் வழியும், பிறர் பொருளைப் பறித்துக் கொள்ளுதலை விரும்பி, அவர் சோர்வினை எதிர்பார்ப்பவர் இடத்தில் அருளை எண்ணி அன்புடையவராக வாழும் இயல்பு இல்லை என்பதை, அருள்கருதி அன்புடைய ராதல், பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் (குறள் 285) என்னும் கள்ளாமை அதிகாரக் குறள் வழியும் பொச்சாப்பை உணர்த்துகிறார். பொச்சாப்பிற்கு இடம் தந்து விடல் ஆகாது. ஆகவே, செய்ந் நன்றியறிதலில் மறவற்க மாசற்றார் கேண்மை என வேண்டியதுடன் நன்றி மறப்பது நன்றன்று எனத் தெளிவு படுத்தினார். நாம் கண்டவற்றுள், கேட்பவற்றுள், படித்தவற்றுள் உணர்ந்த பயனுடைய செய்திகளில் எதனையும் மறந்துவிடாமல் நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் பொழுது மறவாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தாம் படித்தவற்றுள் ஓர் எழுத்தைக் கூட மறக்காமல், ஏன்? காற்புள்ளியைக் கூட மறக்காமல் எத்தனை ஆண்டுகள் கழித்தும் எக்குறை யும் இல்லாதவாறு கூறும் நினைவாற்றல்வல்லார்கள் வாழ்ந்தநாடு எனப் பெருமைப் படுவதுடன், வாழும் நாடு என்றும் பெருமிதத்துடன் கூறலாம். அதுபோல் தன்னை, தன்வீட்டை உற்றார் உறவினர்களை, நண்பர் களை, நாட்டை, இனத்தை, மொழியை, தொழிலை, தொண்டை, கடமையை உரிய காலத்தில் உரிய முறையில் செய்ய மறந்து பழிக்கு ஆளானவர் களும் நாட்டில் உள்ளனர். ஆகவே, பொச்சாப்புக் கூடாது என்பதை உணர்த்த விரும்பிய திருவள்ளுவர் பொச்சாவாமை எனத் தலைப்பிட்டுள்ளார். பொய்+சு+அம்= பொச்சம் என்றாகும். ஏமம்+ஆப்பு= ஏமாப்பு என்று ஆவது போல், பொச்சம்+ஆப்பு= பொச்சாப்பு என்றாகும். பொச்சம் என்னும் சொல்லுக்கு மறத்தல், குற்றம், பொய்யுடையது, உள்ளீடு இல்லாதது, கடைப்பிடி இன்றி நெகிழ்ந்திருத்தல். பாதுகாத்துச் செல்லுகின்ற பொருட்கண் யாதானும் ஒரு நிகழ்ச்சியான் இடையறவு படுதல் எனப் பல்வேறு பொருள் காண்கின்றனர் அறிஞர்கள். அறிவு, ஆற்றல், படை, அரண், பொருள், புகழ் முதலியவற்றின் மிகுதி யால் மகிழ்ந்து நாடு காத்தல், பகை அழித்தல் முதலான இன்றியமையாக் கடமைகளைச் செய்ய மறந்து சோர்ந்து விடாமையையும் வலியுறுத்துவ தாகவும் பொச்சாவாமையைக் கருதலாம். மறவி இன்றி ஒழுகுதல், அது தனது சோர்வு பார்த்துப் பிறர் வஞ்சகம் செய்யும் இடங்களினும், அறம், பொருள், இன்பம் செய்ய வேண்டும் இடங்களினும் மறத்தல் இன்மை எனக் கூறுவதுடன் பொச்சாப்பு எனினும் மறவி என்னும் இகழ்ச்சி எனினும் ஒக்கும் எனவும் முதல் உரையாசிரியர் மணக் குடவர் கூறுவதையும் மனத்தில் கொள்வோம். பொச்சாவாமை என்பதற்கு மறந்து விடாமை என்பது பொருள். வாழ்க்கையின் இன்பங்களில் ஒருவன் தன்னுடைய கடமைகளையும் நன் முயற்சிகளையும் மறந்து பொறுப்பின்றி இருந்து விடக் கூடாது என்பதைச் சொல்வது. எல்லார்க்கும் பொது அறிவு என நாமக்கல் இராமலிங்கனார் கூறும் விளக்கத்தையும் இணைத்துச் சிந்திக்கலாம். பெரிய பொறுப்புகளையும் பதவிகளையும் ஏற்றுப் பணிபுரிவோர்க்கு ஏற்படும் சிற்றளவுப் பொச்சாப்பும் நாட்டிற்குப் பேரிழப் பினையும் வீழ்ச்சி யினையும் இகழ்ச்சியினையும் உருவாக்கிவிடும். பொச்சாவாமை எவர்க்கும் எப்போதும் வேண்டும். சினம் நகையும் உவகையும் கொல்லும் பகை (குறள் 304) சினம் தன்னையே கொல்லும் (குறள் 305) சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். (குறள் 306) சினத்தை இறந்தார் இறந்தார் அனையர் (குறள் 310) என வெகுளாமை அதிகாத்தில் சினம் தரும் கேட்டினைத் தெரிவித்த வள்ளுவர், அதனினும் தீமை பயப்பது ஒன்று உண்டு எனத் தெரிவிக்கும் குறளே, இறந்த வெகுளியின் தீதே, சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு (குறள் 531) ஆகும். சினத்தின் அளவு கூடக் கூட அது கொண்டவனுக்கு விளைவிக்கும் தீமையும் பெருகிக் கொண்டே போகும். அதனினும் தீமை தரத்தக்கது ஒன்று உண்டு. அஃது எது என வினவின், மிகுந்த உவகையால் மகிழ்ந் திருக்கும் போது சோர்வுற்றுக் கடமையை மறந்து களித்திருத்தலாகும். பெரிய மகிழ்ச்சிக்கிடையே காரியத்தை மறத்தல், மிகுந்த சினத்தைக் காட்டிலும் தீது. வினை செய்யுங்கால், பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்பவற்றால் வரும் களிப்பில் உண்டாகும் மறவி அளவிறந்த வெகுளியினும் தீதாகும். வெகுளி கடும் பசி போன்றது என்றால் சோர்வு அளவிற்கு அதிகமாய் உண்பது போன்றதாகும். பெருங்கதையின் பாட்டுடைத் தலைவன் வத்தவ நாட்டு வேந்தன் உதயணன். தெய்வ யானையால் செயற்கரிய செயல் களைச் செய்தவன். தெய்வயானை அவன் கனவில் தோன்றி, நீ என்மீது பாகரை ஏற்றினாலும் தோல் கயிற்றால் என்னைக் கட்டினாலும் யான் உண்பதற்கு முன்னே உண்டாலும் உன்னை விட்டு நீங்கி விடுவேன் என உரைத்ததைத் தவறாது நெடுநாள் பின்பற்றி வந்தவன். ஒரு நாள் மகிழ்ச்சியில் தெய்வ யானைக்கு உணவு படைப்பதற்கு முன்தான் உண்டதால் தெய்வ யானை அவனை விட்டு நீங்கியது. அதனால் அவனுற்ற அல்லல் கணக்கில் அடங்காததாகும். மகிழ்ச்சியில் சோர்வு என்பது வான ஊர்தி விண்ணில் பறந்து கொண்டிருக்கும் போழ்து வலவன், விசையை நிறுத்தினால் என்னாகும். அது போன்ற வீழ்ச்சியை உண்டாக்குவதே மகிழ்ச்சியில் கொள்ளும் சோர்வு ஆகும். கண்ணபிரான், குந்திதேவியை அழைத்து, உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டான். உடனே குந்தி தேவி, எப்பொழுதும் நீ எனக்குத் துன்பத்தையே கொடுத்துக் கொண்டிரு; அப்பொழுதுதான் எனக்கு எப்பொழு தும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் பேறு கிட்டும். கவலை இன்றி இன்பத்துடன் இருந்து விட்டால் உன்னை நினைக்கக்கூட எண்ணம் வாராது எனக் கூறிய கூற்றையும் ஒப்பு நோக்குக! உரோமாபுரியில் கி. பி. முதல் நூற்றாண்டில் பேரரசராய் விளங்கிய டைட்டசு என்பவர் மிகப் புகழ் பெற்றவர். அவர் ஒருநாள் விருந்துண்ணும் போது தம்முடைய நண்பர்களிடம் நண்பர்களே நான் ஒரு நாளை இழந்து விட்டேன் என்று கூறினார். நண்பர்கள் திகைத்தார்கள். இன்று யாருக்கும் எந்த நன்மையும் செய்ய வில்லை என்றார். நன்மை செய்யாத நாளெல்லாம் இழந்த நாளே என்பது அவர் கருத்து, என்பதையும் சிந்தனையில் கொள்ளலாம். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்வையடா தாண்டவக் கோனே என்னும் சித்தர் நோக்கும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். பொச்சாப்புக் கொல்லும் புகழை; அறிவினை நிச்சநிரப்புக் கொன் றாங்கு (குறள் 532) அறிவினை நிச்ச நிரப்புக் கொன்றாங்கு, புகழைப் பொச் சாப்புக் கொல்லும் என அமைத்துக் கொண்டால் உரை காண்பது எளிது. ஒருவனிடம் வறுமை நிலை பெற்று விடுமாயின் அவனிடம் பொருந்தியுள்ள சிறந்த அறிவும் அழிவுறுமாறு, ஒருவன் பல்வகைச் சிறப்புகளால் புகழாளானாய் உயர்ந்த பின்னர், அவனிடம் மறதி யாகிய தன்மை ஒட்டிக் கொள்ளுமானால் அது புகழை எல்லாம் அழித்து இகழ்ச்சிக்கு ஆளாக்கிவிடும். நாள் தோறும் வருந்தி இரந்துண்ணும் நிலைமைக்கு ஆட்படுதலே நிச்ச நிரப்பாகும். அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும் ஆதலாலும், நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் (குறள் 1046) ஆதலாலும், நிலையான வறுமை ஒருவனது அறிவைக் கெடுக்கும். அதுபோல மறவியும் தற்காப்பு இன்மையாலும், கருமக் கேட்டாலும் புகழை அழிக்கும். வறுமையை நிரப்பு என்பது மங்கல வழக்கான எதிர்மறைக் குறிப்பு. வறுமை அறிவை அழிக்கும் மறதி புகழை அழிக்கும். பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும் சிறந்ததம் கல்வியும் மாயும் - கறங்கருவி கல்மேல் கழுஉங் கணமலை நன்னாட இன்மை தழுவப்பட் டார்க்கு என்னும் நாலடியார் பாடலும் வறுமையால் ஏற்படும் அழிவை விளக்குகிறது. குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புனை விடூஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் ........... .......... பசிப்பிணி என்னும் பாவி என மணிமேகலைக் காப்பியம் விளக்குவதையும் ஒப்பு நோக்குக. ----------- ஈதலும் இசைபட வாழ்தலுமே உயிர்க்கு ஊதியம். புகழ் ஒன்றே இவ்வுலகில் அழியாது நிலை பெறக் கூடியது. வசையொழிய வாழ்வாரே வாழ்வார்; புகழ்பெற இயலாப் பணியில் ஈடுபடுதல் கூடாது. என்னும் கருத்துடையவர் திருவள்ளுவர். பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை; அதுவுலகத் தெப்பால் நூ லோர்க்கும் துணிவு (குறள் 533) என்னும் குறளைப் படைக்கும் போது, இது தன் கருத்து என்றோ? தமிழ் நாட்டவர் கருத்து என்றோ? அறநூலார் கருத்து என்றோ கூறாமல், உலகத்திலுள்ள அனைத்துத் துறை நூலார்க்கும் ஒப்ப முடிந்த முடிவாகும். எனக் கூறுவதிலிருந்து திருவள்ளுவர் அவர் காலத்தில் கற்க வாய்த்த அனைத்துத் துறை நூல்களையும் கற்றுணர்ந்த பேரறிவாளர் என்பது தெள்ளிதின் புலப்படும். கண்ணும் கருத்துமாய் இருந்து கடமை உணர்வுடன் கால நேரத்தைக் கருதாது உழைக்கப் பிறந்தவர்களே மனிதர்கள். மனிதர்களில் யார்யார் தாம் இன்றியமையாது செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டிய முறையில், உரிய காலத்தில் செய்ய மறந்துவிடுகிறார்களோ அவர்கட்கெல்லாம் புகழ் அடையும் தகுதி இல்லை என்னும் முடிவான கருத்து உலகத்திலுள்ள அனைத்துத் துறை நூலார்க்கும் ஒப்ப முடிந்த முடிவாகும் எனத் திருவள்ளுவர் உறுதிப்பட மொழிகிறார். ஒரு பெரிய நாட்டின் உட்துறை அமைச்சர் எனக்கு மறதி அதிகம் எனக் கூறுவாரானல் புகழ்மிக்க செயல்கள் எங்ஙனம் நிகழும். முதல் நாள் கூறிய கருத்தை மறந்து அடுத்த நாள் வேறு ஒரு கருத்தைக் கூறுகிறவர் ஒரு நாட்டின் வெளியுறவுச் செயலாளராய் அமைந்தால் எப்படி அவர்தம் பணியில் புகழ் பெற முடியும்? மறதி உடையார்க்குப் புகழ் பெறும் வாய்ப்பு இல்லை என்பது உலகப் பேரறிஞர்களின் முடிபாகும். பொச்சாப் பிலாதபுகழ் வேள்வித் தீப்போல் எச்சாரும் மின்னும் மழை என்னும் கார் நாற்பதின் பாடல் வரி பொச்சாவாமையின் சிறப்பினை அருமையாக உவமைப் படுத்துகிறது. குறித்த நல்ல வேளையில் திருமணம் நிகழ்த்தப்பட வேண்டும். மணப் பெண்ணுக்கு ஒப்பனை செய்பவர்களாலும் படப்பிடிப்புக்காரர்களாலும் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. திரு நாணை அவையோர்க்குக் காட்டி வாழ்த்துப் பெற மறந்தால் குற்றமில்லை. மணமகளுக்குத் திருநாண் பூட்டவே மறக்கலாமா? -------------- நாடாள்வோரிடம் நாளும் குறையாமல் அமைந்திருக்க வேண்டிய நல்லியல்புகள் அஞ்சாமை, கொடை உள்ளம், அறிவுடைமை, ஊக்கம் உடைமை என்னும் நான்காகும் என்பதை உறுதிப்படுத்தும் திருவள்ளுவர் நான்கில் அஞ்சாமைக்கே முதலிடம் வழங்கியிருப்பதை, அஞ்சாமை, ஈகை, அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு (குறள் 382) என்பதை இறை மாட்சி அதிகாரத்தில் அறிகிறோம். திட்டமிட வேண்டியவற்றைக் குறைவில்லாமல் எண்ணித் திட்ட மிட்டு, தக்க இடத்தில் தக்க வினையைச் செய்ய ஒருவன் முற்பட்டால் அதன் பின் அவனுக்கு வேண்டிய ஒரே துணை அஞ்சாமை மட்டுமே! வேறு துணை வேண்டுவதில்லை என்பதை, அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் (குறள் 497) எனும் இடனறிதல் அதிகாரக் குறள் வழி. இணையற்ற துணை அஞ்சாமை என வள்ளுவர் உறுதி கூறுகிறார். அஞ்சும் அறியான், அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு (குறள் 863) எனும் பகைமாட்சிக் குறள் வழி, பெரும் பொறுப்புகளில் அமர்ந்திருப் பவர்கள் அச்சம் உடையவராய், அறிவிலியாய், பொறுப்புக்குப் பொருத்த மற்றவராய், ஈகைப் பண்பு இல்லாதவராய் இருப்பின் அத்தகையவர்களை வீழ்த்துவது பகைவர்கட்கு எளிய செயல் என விளக்கும் போதும் அச்சம் வீழ்த்துவதில் முதலிடம் பெறுகிறது. ஆகவே, அச்சமே கீழ்களது ஆசாரம் எனக் கயமை அதிகாரத்தில் அச்சத்தின் கீழ்மையை உணர்த்துகிறார், என்பதையும் மனத்தில் வைத்துக் கொள்வோம். அரண் தம் வலிமையைக் காட்ட விரும்புபவர்க்கும் பயனுடைய தாகும். அதுபோல் தங்கள் உயிர்க்கு அஞ்சிப் பாதுகாத்துக் கொள்ள விரும்புவார்க்கும் பயனுடையதாகும் என்பதை, ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் (குறள் 741) எனவும், அரண் எத்தகைய வலிமையும் சிறப்பும் உடையதாக அமைந் திருப்பினும் செயலாற்றும் திறன் இல்லாதவர்கட்கு அது எத்தகைய பயனையும் நல்காது என்பதை, எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண் (குறள் 750) என்னும் அரண் அதிகாரத்தில் தெளிவு படுத்தியதையும் சிந்தனையில் கொண்டு அச்ச முடையார்க் கரணில்லை; ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு (குறள் 534) என்னும் குறட்பாவை உணர்ந்து பார்க்க வேண்டும். மனத்தில் அச்சம் குடி கொண்டவர்கட்கு அடுக்கடுக்கான பாதுகாப்பு அரண்கள் அமைந்திருந்தாலும் அஃது அவர்கட்கு எத்தகைய பயனையும் விளைவிக்கப் போவதில்லை. மனத்துணிவே உண்மையான உறுதியான அரணாகும். நல்லவற்றையும் செய்ய வேண்டியவற்றையும் என்றும் மறவாது செயல்புரிய வேண்டியது மாந்தர் கடனாகும். நல்ல வாய்ப்புகள் சில வேளைகளில் அமையாமல் போனாலும் மறதியின்றி நினைந்து செயல்படு பவர்கட்கு நற்பயன் கிட்டாமல் போகாது. ஆனால், மறதி உடையார் நல்வாய்ப்புகளெல்லாம் பெற்றிருப்பினும் அவற்றால் எத்தகைய நற் பயனையும் அடைய இயலாது. அஞ்சிக் கிடப்பவர்க்கு அரண் இல்லை; மறதி வாய்ப் பட்டார்க்கு எந்நலமும் இல்லை. புகழ் பெற்ற ஆங்கில இதழ் ஒன்றின் ஆசிரியர் செசுடர்ட்டன் ஒரு நாள் தம் இல்லத்திலிருந்து அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருக்கும் போது அலுவலக முகவரி நினைவிற்கு வர வில்லை. மறந்துவிட்டார் வழியில் இதழ் விற்பனை செய்யப்படும் கடையொன்றில் இதழை வாங்கிப் படித்தே முகவரியை நினைவு படுத்திக் கொண்டார் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாகும். தாம் முன்பு குடியிருந்த வீடு மாறி, வேறொரு தெருவில் வேறு வீட்டில் குடிபுகுந்த பின்னரும் பழைய வீட்டிற்குள் நுழைந்த பேராசிரியரும் உண்டு. பயணச்சீட்டு வாங்க மறந்து போய் பயணம் செய்து சோதனை யாளரிடம் சிக்கிக் கொண்டதுடன் தாம் எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதையும் மறந்தவர்களும் மண்ணில் உண்டு. மறதி நன்மையை அடைக்கும் தடுப்புச் சுவராகும். முன்னுறக் காவா திழுக்கியான், தன்பிழை பின்னூ றிரங்கி விடும் (குறள் 535) என்னும் குறளை நோக்கும் போது, பின்னர் வரக் கூடியவற்றை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடிய அறிவாளர்க்கு, அதிர்ச்சி தருமாறு வரக் கூடிய துன்பம் இல்லை, என்பதை எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் (குறள் 429) என அறிவுடைமை அதிகாரத்தில் கூறியதும் ஒரு செயலைச் செய்யும் போதே முழுமையாக முயலாத முயற்சி, பின்னர்ப் பலபேர் துணையாக வந்து உதவினாலும் முழு நிறைவு அடையாது. குறையுடையதாகவே அமையும், என்பதை ஆற்றின் வருந்தா வருத்தம், பலர் நின்று போற்றினும் பொத்துப் படும் (குறள் 468) என்னும் தெரிந்து செயல் வகைக் குறளையும் கவனத்தில் கொண்டு நோக்குவோம். அதனோடு, குற்றம் வருவதற்கு முன்னரே அது வாராமல் காத்தல் வேண்டும். அவ்வாறு காத்துக் கொள்ளத் தவறியவன் வாழ்வு தீயின் முன்னர் வைக்கப்பட்ட வைக்கோற் போர் போல் அழிந்து விடும் என்னும் அறிவுரையை வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் (குறள் 435) என்னும் குற்றம் கடிதல் அதிகாரக் குறளையும் இணைத்துச் சிந்திக்கத் தூண்டும் குறட்பாவே முன்னுறக் காவா திழுக்கியான், தன்பிழை பின்னூ றிரங்கி விடும் (குறள் 535) என்பதாகும். எந்தத் தீமையையும் அது வருவதற்கு முன்னரே வாராமல் காத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு காத்துக் கொள்ளத் தவறியவர்கள் துன்பம் வந்துற்ற காலை, காக்க முடியாமல் திண்டாடுவதுடன், தன் குற்றத்தை எண்ணிப் பல மடங்கு வருந்துமாறு ஆகிவிடும். பொச்சாப்பு உள்ளத்தில் நிகழ்கிற போது அறிவு மழுங்கி விடும். அதனால் வருவதை முன்னறிந்து காக்கும் திறத்தை இழந்து விடுகிறான். அதனால் பின்னே துன்பம் வந்து தாக்கும் போது பெரிதும் வருந்துகின்றான். முன்னை உடையது காவாது இகந்திருந்து பின்னை அஃது ஆராய்ந்து கொள்ளுதல் - இன்னியல் மைத்தடங்கண் மாதராய் அஃதாதல் வெண்ணெய் மேல் வைத்து மயில் கொள்ளு மாறு என்னும் பழமொழிப் பாடல் ஒப்பு நோக்கத்தக்கது. மறந்துமறந்து ஈசன் மலரடியைப் பேணாது பிறந்து இறந்து மாலும் இடரெய்தும் - அறிந்தறிந்து முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்பிழை பின்னூறு இரங்கி விடும். என்னும் முதுமொழி மேல்வைப்புப் பாடல் நல்லதொரு எடுத்துக் காட்டாகும். -------------- விழுப் பேற்றின் அஃதொப்ப தில்லை யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் (குறள் 162) என்னும் அழுக்காறாமை அதிகாரக் குறள்வழி அழுக்காறு கொள்ளாமை ஒப்பற்ற விழுப்பேறு என்றும், வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில் (குறள் 362) என்னும் அவாவறுத்தல் அதிகாரக் குறள்வழி வேண்டாமையே ஒப்பற்ற விழுச்செல்வம் என்றும் இடுக்கண் வருங்கால் நல்குக; அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில் (குறள் 621) என்னும் இடுக்கண் அழியாமை அதிகாரக் குறள் வழி, நகுதலுக்கு இணை யான துன்பம் போக்கி வேறு இல்லை எனக் கூறியாங்கு கூறும் குறளே, இழுக்காமை யார்மாட்டும் என்றும், வழுக்காமை வாயின் அதுஒப்ப தில் (குறள் 536) என்பதாகும். மறதி இல்லாமல் எவரிடத்திலும் எக்காலத்திலும் தவறாமல் நடந்து கொள்ளும் நல்லியல்பு ஒருவர்க்கு இயல்பாகவே அமைந்து இருக்கு மானால், அவர்க்கு அதற்கு இணையான நன்மை தரத்தக்கது வேறு ஒன்றுமில்லை. மறவாத் தன்மை மாபெரும் ஆற்றலாகும் என்று எண்ணுவதுடன் யார் மாட்டும் என்றும் தவறே செய்யாமையுமே ஒப்பற்ற நன்மை தரும் என்றும், யார் மாட்டும் என்றும் தான்பிடித்த நெறி குலையாமல் இயங்குவதும் இணையற்ற நன்மை தரும், என்றும் யார் மாட்டும் என்றும் இகழ்ச்சிக்கு ஆளாகாமல் நடந்து கொள்ள வாய்க்குமானாலும் ஈடற்ற நன்மை அடையலாம் எனப் பொருள் கொள்ளுமாறு இழுக்காமை என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை (குறள் 317) என்னும் இன்னா செய்யாமை அதிகாரக் குறளையும் இணைத்துச் சிந்திப்பது நன்று. -------------- செய்வதற்கு ஏற்ற கருவிகளைத் தேர்ந்தெடுத்து, தக்க காலத்தையும் அறிந்து ஒருவர் செயல் புரிந்தால், அவரால் செய்ய முடியாத செயல் என எச்செயலும் இராது என்பதை, அருவினை என்ப உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் (குறள் 483) என்னும் காலம் அறிதல் அதிகாரக் குறள் வழியும், இச்செயலைச் செய்து முடித்தல் எமக்கு அரிது என்று எண்ணித் தளராமை வேண்டும். அவ்வாறாயின் அதனை முடித்தற்குத் தக்க வலிமையை முயற்சி உண்டாக்கும் எனும் கருத்தை, அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (குறள் 611) என்னும் ஆள்வினையுடைமை அதிகாரக் குறள் வழியும் தம் குடியைக் காலத் தாழ்வு இல்லாமல் உயர்த்தும் முயற்சி மேற் கொண்டவர்க்கு அதற்குரிய வழியை அவர் ஆராய்வதற்கு முன்னரே அது வெற்றியாக முடிந்து விடும் என்னும் நம்பிக்கையைச், சூழாமல் தானே முடிவெய்தும், தம் குடியைத் தாழா துஞற்று பவர்க்கு (குறள் 1024) என்னும் குடிசெயல்வகை அதிகாரத்தில் உணர்த்தியாங்கு உணர்த்தும் குறளே. அரியஎன் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின் (குறள் 537) என்னும் அருமைக் குறளாகும். ஒரு செயலைச் செய்ய முற்படுங்கால் பொருள், கருவி, காலம், வினை, இடம் என்னும் ஐந்தையும் ஆழமாக எண்ணி எத்தகைய மயக்கமோ குழப்பமோ இல்லாமல் தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பணி தொடங்கி முடியும் வரையும் நம்திட்ட வரைவை மறந்து விடாமல் அவ்வப் போது ஒவ்வொன்றையும் செய்து கொண்டே வருதல் வேண்டும். அவ்வாறு செயல்படும் யாருக்கும் செய்ய முடியாச் செயல் என்று சொல்லக் கூடிய செயல் எதுவும் இல்லையாம். பொச்சாவாக் கருவியால் போற்றிச் செயின். அரிய (செயல்) என்று ஆகாதது இல்லை என்பது வள்ளுவர் காட்டும் மறவாமை மாமருந்தின் மாண்பாகும். புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்; செய்யா திகழ்ந்தார்க் கெழுமையும் இல் (குறள் 538) அறிஞர்களால் சிறந்தவை என்று பாராட்டிச் சொல்லப்படும் செயல் களை போற்றிச் செயல் வேண்டும் அவ்விதம் செய்யாமல் அவற்றை மறந்தவர்க்கு எழுபிறப்புகளிலும் நன்மை இல்லை எனும் நோக்கில் காணும் உரைகளும் உண்டு. புகழத்தக்க - புகழ்தரத் தக்க நல்ல காரியங்களை விரும்பிச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியவர்கட்கு ஏழு தலைமுறைக்கும் நன்மை வந்து சேராது எனும் நோக்கில் காணும் உரைகளும் உண்டு. முன்னே செய்து பிறரால் புகழப்பட்ட நல்ல காரியங்களை மறந்து விடாமல் கருத்தோடு செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்து விடுகிறவர்களுக்குப் பின்வரும் ஏழு பிறவிகளிலும் நன்மை இல்லை இத்தகைய போக்கு உரைகளும் உண்டு. சான்றோர்களால் புகழப்பட்ட நற்செயல்களை மறவாமல் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது மறந்தவர்க்கு எக்காலத்தும் நன்மை யாவது இல்லை எனும் போக்கில் காணும் உரையும் உண்டு. சான்றோர்களால் புகழுப்பட்ட, அறிஞர்களால் போற்றப் பட்ட, நாம் புகழ்ந்து போற்றிய, நமக்குப் புகழ் தந்த வினைகளை நமக்குப் புகழ் தரும் வினைகளைப் போற்றிச் செய்வது கடமை. புகழ் வினைகளைச் செய்ய மறந்தோர் அல்லது தவறியவர்கள் அவர்கள் மட்டுமல்லாது கால்வழி யினரும் நன்மை அடைய இயலாது. புகழ்ந்தவை போற்றிச் செய்து வாழ்வைப் பயனும் நலனும் உடைய தாக்குவோம். -------------- இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக, தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து (குறள் 539) ஒவ்வொருவரும் தமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியால் செறுக்குக் கொண்டு கடமையை மறந்து வாழ்க்கையை ஓட்டும் போது, கடமைகளைச் செய்யத் தவறிக் கேட்டிற்கு ஆளானவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு நினைந்துப் பார்ப்போர் எந்நிலையிலும் செய்ய வேண்டிய கடமை தவற மாட்டார். நீ கடமையை மறந்து மகிழ்ச்சியிலே திளைத்திருக்கும் போது, அங்ஙனம் இருந்து கெட்டுப் போனவர்களை எண்ணிப்பார்! என வள்ளுவர் வேண்டுகிறார். சந்தனக் கோலின் அடியைக் கூடத் தாங்க இயலா உயிரினம் பாம்பு; ஆனால் அத்தகைய பாம்பு தீண்டினால் மிகப் பெரிய உயிரினமான யானையும் இறந்துவிடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது, ஐயன் மரைமலர்ப் பாதம் நீங்கா வாழுதி, மன்னர் என்பார் எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் புரிதி! சிற்றடிமைக் குற்றம் பொறுப்பர் என்று எண்ண வேண்டா எனக் கம்பராமாயணத்தில் வாலி, சுக்கிரீவனுக்குப் புகன்ற அறிவுரை ஒப்பு நோக்கத் தக்கது. மூவரை வென்று மூன்று உலகும் முற்றுறக் காவலில் நின்று தம்களிப்புக் கைம்மிக வீவது முடிவு என வீழ்ந்தது அல்லது தேவரை வென்றவர் யாவர் தீமையோர் என வீடணன் தம் தமையன் இராவணனுக்குக் கூறிய இவ்வறிவுரையும் அதற்கு இராவணன் அளித்த கீழ்க்காணும் மறுப்புரையும் எதிர்மறைக்கு எடுத்துக் காட்டாகும். ஊனவில் இறுத்து ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டி கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர்வனம் குறுகி, யான் இழைத்திட இல் இழந்து இன்னுயிர் சுமக்கும் மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார். (கம்பராமாயணம்) இகழ்ச்சியில் கெடுவார்களை எண்ணுக மகிழ்ச்சியின் மனம் மைந்துறும் போழ்தெனப் புகழ்ச்சி நூலுள் புகன்றனர், பூவினுள் திகழ்ச்சி சென்ற செம்பொன்முடி மன்னனே என்னும் 628 சூளாமணிப் பாடல் இக்குறளைப் பொன்னே போல் போற்று வதையும் திருக்குறளைப் புகழ்ச்சி நூல் எனப் போற்றுவதையும் எண்ணிப் பார்க்க! ---------- உள்ளிய எல்லாம் உடனெய்தும், உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் (குறள் 309) எனும் வெகுளாமை அதிகாரக் குறள் வழியாக வெகுளுதலைத் தன் மனத் தாலும் ஒருவன் நினையான் என்றால், அவன் நினைத்தவை எல்லாம் உடனுக்குடன் அடையப் பெறுவான் எனக் குறிப்பதுடன் வினைத்திட்பம் என்னும் அதிகாரத்தில், ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனத் திண்மை உடைய வராக விளங்கினால் அவர் எவற்றை எல்லாம் எண்ணு கிறாரோ அவற்றை எல்லாம் எண்ணியபடியே அடைவார் என்னும் உறுதியை, எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (குறள் 666) எனும் குறள் வழி தெளிவுபடுத்தியாங்கு கூறும் குறளே, உள்ளிய தெய்தல் எளிதுமன், மற்றுந்தான் உள்ளிய துள்ளப் பெறின் (குறள் 540) என்னும் குறளாகும். நினைத்ததை முடிப்பவன் நான் நான் எனப் பாடி ஆட அனைவருக்கும் ஆவல் இருக்கிறது. நான் நினைத்தது நிறைவேற வேண்டும்; அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என வள்ளுவரை ஒரு கூட்டத்தார் வினவி இருப்பர். அவர்கட்கு விடை கூறும் பொருட்டுப் படைத்த பாடலே இதுவாகும். ஒவ்வொருவரும் தாம்தாம் செய்ய எண்ணிய செயலை எப்பொழுதும் மறந்துவிடாமல் தொடர்ந்து எண்ணி முயன்றால் நினைத்தது நினைத்த படியே நிறைவேறுதல் எளிது. எண்ணியதை மறவாதே எண்ண முடிந்தால்; எண்ணியதை எளிதில் எய்து விடலாம். நினைத்ததை மறவாதே நினை. மிகுந்த வெகுளியும் தீதே மகிழ்ச்சியில் சோர்வும் தீயதே பொச்சாப்பு புகழைக் கொல்லும் அறிவினை வறுமை கொல்லும் அச்சமுடையார்க்கு நல்ல வாய்ப்பும் பயன் அளிக்காது தீமையை வருமுன் காக்க வேண்டும் மறவாமை எச்செயலையும் செய்விக்கும் புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் புகழ்ந்தவை மறந்தவர்க்கு எழுமையும் இல் இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக! உள்ளியதையே உள்ளினால் எய்தல் எளிது. ---------- 55. செங்கோன்மை அயல்நாடு சென்று வருந்தி உழைக்கும் நிலையில்லாமல், எளிய முயற்சியால் பெருவளம் நல்கும் நாடே வளநாடாகும். மேல் நீர்,கீழ் நீர் ஆகிய நீரும், வளமான மலையும், ஆறும், காவலும் ஆகியவை நாட்டின் உறுப்புகளாகும். பொருள் வளத்தால் விரும்பத் தக்கதாய், வறட்சியிலும் மிக்க விளைவைத் தரத் தக்கதாய் அமைந்ததே நாடாகும். எவ்வளவு சுமையையும் தாங்கிக் கொள்ளும் திறத்தோடு, தவறாது வரி செலுத்தும் மக்களைக் கொண்டதே நாடு. வறுமை அடையாததாய் ஒரு வேளை வறுமை அடையினும் செழுமை குறையாததாய் உள்ள நாடே நாடு. ஒன்றுபடாப் பலபிரிவும், கெடுக்கும் உட்பகையும் அரசை அழிக்கும் கொலைஞர்களும் இல்லாததே நாடாகும். மிக்க பசியும், நீங்கா நோயும், கெடுபகையும் இல்லாமல் இயங்குவதே நாடாகும். நோய்இல்லாமை, செல்வவளம் விளைவு, இன்பம், பாதுகாப்பு என்னும் அணிகலன் அணிந்ததே நாடாகும். குறையா விளைவு, குணமிக்க பெரியோர், மனவளம் மிக்க பொருளாளர் ஆகியோர் இணைந்து வாழ்வதே நாடு. என நல்ல நாட்டிற்கு இலக்கணம் கூறும் வள்ளுவர் நாடு அதிகாரத்தின் நிறைவுக் குறளாக, ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு (குறள் 740) என அமைத்துள்ளார். நாடு எல்லாவளங்களும் உடையதாய் அமைந்திருப்பினும் சிறந்த ஆட்சி முறைமை இல்லாதநாடு பயனற்றதாகும். உள்ளுறுப்பாம் அன்பு இல்லாதவர்க்கு வெளியுறுப்புகளால் என்ன பயன்! என அன்புடைமையில் வினவியதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. செம்மை+கோல்= செங்கோல், செம்மை +கோன்மை = செங்கொன்மை. அதிகாரத்தலைப்பு செங்கோன்மை என அமைந்துள்ளது எனினும் குறட்பாக்களில் கோல் முறை என்ற சொற்களே வந்துள்ளன. ஆனால், செங்கோல் என்ற சொல்லாட்சியைத் திருவள்ளுவர் இறைமாட்சியிலும் 390 கொடுங்கோன்மையிலும் 556 பயன்படுத்தியுள்ளார். நடுவு நிலைமை அதிகாரத்தில் பயன் படுத்திய தொடர் சமன்செய்து சீர்தூக்கும் கோல் கோல் என்றாலே வளைவு அற்றது அளக்க, நிறுக்கப் பயன்படும் கருவியாகும். அது சமன்மையின், நேர்மையின், அடையாளம். அல்லவை அகற்றி, நல்லவை போற்றிச் சீரும் சிறப்பும் அமையச் செம்மையாக ஆளும் தன்மையை உணர்த்தும் அதிகாரம் ஆகும். 2000 ஆண்டுகளுக்கு முன் கிரீசு நாட்டில் அரிசுடைடிசு என்னும் நீதிபதி இருந்தார். அவர் ஒரு நாள் ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த போது கட்சிக்காரர்களில் ஒருவர் நீதிபதியிடம் இவர் தங்களை மிகவும் இழிவாகப் பேசினார் என்று எதிர்க் கட்சிக்காரரைப் பற்றிச் சொன்னார். அதற்கு நீதிபதி அப்பா நான் இங்கே உன்னுடைய வழக்கை விசாரிக்க வந்திருக்கிறேனே யன்றி என்னுடைய வழக்கை விசாரிப்பதற்கு அன்று என்று கூறினார். கோல் அன்ன செம்மையே செங்கோல் ஆகும். செம்மையான ஆட்சி முறை என்றால் என்ன? என்னும் வினாவிற்கு விடை அளிப்பது போல் அமைந்த குறளே. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை (குறள் 541) என்பதாகும். ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து, அவன் இன்னின்ன வகையால் தமக்கு வேண்டியவன் என்று இரக்கம் காட்டாமல், நடுவு நிலைமையில் நின்று அறங்கூறும் அவையத்தார்களோடு கலந்து தக்க வழியில் ஆய்ந்து செய்யத் தக்கதைச் செய்வதே செம்மையான நீதி முறையாகும். நீதிநெறி கண்ணோட்டத்துக்கு உட்படும் நாட்டில் சமூக ஒழுங்கைக் காண இயலாது என்ற நெப்போலியன் வாக்கையும், நீதியே ஆட்சியின் உயிர், நடுவு நிலைமையே அதன் உடல் என்ற ஐசுடினீயன் கூற்றையும் ஒப்பிட்டு நோக்குக. நமது தேசிய வாழ்க்கையில் அதிகாரத்தை நல்லொழுக்கத் துடனும், செய்முறையை நீதி நெறியுடனும் ஒன்றிணைத்து ஆழ்ந்து ஆராய்ந்து செயல்பட முயலுவோம் என்னும் அறிஞர் சாகீர் உசேன் வேண்டுகோளும் ஒப்புநோக்கத்தக்கதாகும். கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் முறைமைக்கு மூப்பு இளமை இல் என்னும் பழமொழியும், எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால் தங்கண்ண ராயினும் தகவில கண்டக்கால் வன்கண்ண னாகி ஒறுக்க, ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு என்னும் பழமொழிப் பாடலும் ஓர்ந்து கண்ணோடாது யார்மாட்டும் இறை புரிதல் என்னும் அரைக் குறளுக்கு அருமை யான எடுத்துக் காட்டாகும். வழிபடு வோரை வல்லறி தீயே; பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே நீமெய் கண்ட தீமை காணின் ஒப்பநாடி அத்தக வொறுத்தி; வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் தண்டமும் தணிதி பண்டையில் பெரிதே; எனச் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியை, ஊன் பொதிபசும் குடையார் பாடிய புறநானூற்றுப் பாடாண் திணைப் பாடல் யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை என்னும் அரைக் குறளுக்கு நல்லதொரு இலக்கியச் சான்றாகும். கண்ணோடாது ஓர்க! கண்ணோடாது இறைபுரிக! தேர்ந்து முறை செய்க! ---------- வான் நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி (குறள் 542) உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் மழையை எதிர்நோக்கியே வாழ்கின்றன. அதுபோல் நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்போரின் செங் கோன்மையை எதிர்பார்த்தே வாழ்வர். உலக உயிர்களின் நல்வாழ்வும் நலவாழ்வும் வளவாழ்வும் பருவ மழையைப் பொறுத்தே அமையும். அது போல குடிமக்களின் நலவாழ்வும் நல்வாழ்வும் வளவாழ்வும் அந்நாட்டின் ஆட்சியைப் பொறுத்தே அமையும். மழை தவறினால் உயிர்கள் தவிக்கும். ஆட்சி முறை தவறி னால் மக்கள் தவிப்பர். மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை என நான்மணிக்கை நவில்வதையும் எத்தனையும் வான்மறந்தக் காலத்தும் பைங்கூழ்கள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் என்னும் பெருமாள் திருமொழியின் மொழியும் உலகெல்லாம் வான்நோக்கி வாழும் என்னும் வள்ளுவர் கூற்றையே வழிமொழிந்து போற்றுகின்றன. தான்நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோல் நோக்கி வாழும்குடி போன்று இருந்தேனே என்னும் பெருமாள் திருமொழி மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி என்னும் வள்ளுவர் வாய்மொழியைப் பொன்னே போல் போற்றி உள்ளதையும் நினைக்க வேண்டியுள்ளது. கோல்நோக்கி வாழும் குடிஎல்லாம்; தாய்முலைப் பால் நோக்கி வாழும் குழவிகள் - வானத் துளிநோக்கி வாழும் உலகம் உலகின் விளி நோக்கி இன்புறூஉங் கூற்று என்னும் நான்மணிக்கடிகைப் பாடல் நல்லதொரு இலக்கிய மேற்கோள் ஆகும். ஆள்வோர் மழை அனையர், ---------- அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் (குறள் 543) எல்லா உயிர்களிடத்தும் அருள் கொண்டு வாழும் அந்தணர் இயற்றிய நூல்களுக்கும், அறநெறி வாழ்வியல் செம்மைக்கும் அடிப்படைக் காரண மாய் நின்றது. நாட்டை ஆள்கின்றவரின் செங்கோல் சிறப்பே ஆகும். செங்கோல் முறைமைப்படி நாட்டாட்சி நடைபெறவில்லையானால் அருளாளர் படைத்த அரிய நூல்களைப் போற்றுவாரும், அறநெறியைப் பின்பற்றி வாழ்பவர்களும் நாட்டில் குறைவார்கள் ஆதலால் இவ்விரண் டிற்கும் அடிப்படையாய் நிற்பது மன்னவன் கோல் என்றார். செம்மையான அரசாட்சியே அந்தணர் நூலுக்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது. அடிப்படையாய் நிற்பது; துணையாக அமைவது முன்னே நிலை பெற்றது. மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றாம் என்னும் மணிமேகலையின் மணிமொழியும் தவமும் அரசிலா ரில்வழி இல் என்னும் நான்மணிக் கடிகைத் தொடரும் ஒப்பு நோக்கத் தக்கது. ---------- குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு (குறள் 544) ஒருவர் காக்கும் காவலுள் எல்லாம் தலையாய காவலாக இருப்பது தன் உயிர்க் காவல் ஒன்றே ஆகும். தம் உயிரைக் காத்து நெடுநாள் இன்பமாக வாழ்வதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சி யைப் போல், தம் நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் காப்பதற்கு ஆள்வோர் முயற்சி எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் அடிநிழற்கண் உலகமே சூழ்ந்து தங்கும். பெருநிலம் முழுதாளும் ஆட்சியாளன் ஒருவன் தன் நாட்டு மக்களுக்கு எத்தகைய தொல்லையும் ஏற்படாமல், குழந்தையைப் பேணிக் கொள்ளும் பெற்ற தாயைப் போல் பேணிக் காத்து நல்லாட்சி புரிவான் ஆகில் அவன் காட்டும் நல்வழிகளைப் பின்பற்றி அவன் நாட்டினர் நடப்பதுபோல் உலகோரும் அவன் வழியைப் பின்பற்றி நிற்பர். மன்னன் அடிதழீஇ நிற்றல் என்றால் ஆட்சியாளரிடம் நீங்காத அன்புடையவராய் விளங்குவர் என்பதுடன் நாட்டு நலன் கருதி ஆட்சி யாளன் இடும் ஆணையை, இயற்றும் சட்டத்தைத் தவறாது பின்பற்றி அவர் காட்டிய வழியில் நிற்பர் என்பது பொருள். ஆட்சியாளன் நாட்டு மக்களை எல்லாம் தம்மக்கள் போல் பேணிக் காத்தால் உலகமே அவனைத் தாயாக மதித்துப் போற்று வதுடன் அவன் காட்டும் வழியைப் பின்பற்றி நடக்கும். குடிகொன் றிறைகொள்ளும் கோமகற்குக் கற்றா மடிகொன்று பால்கொளலும் மாண்பே - குடிஓம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல. என்னும் நீதிநெறி விளக்கப்பாடல் குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னனுக்கு ஏற்ற எடுத்துக் காட்டாகும். குடிபழியாமை ஓம்பின் கொற்றவேல் மன்னர் மற்றுன் அடிவழிப் படுவர் கண்டாய்! அரும்புகழ் கெடுத லஞ்சி நொடியலோ ரெழுத்தும் பொய்யை நுண்கலை நீத்த நீந்திக் கொடியெடுத் தவர்க்கு நல்கு கொழித்துணர் குமர என்றான் என்னும் சீவக சிந்தாமணிப் பாடலையும் எடுத்துக் காட்டாய்க் கொள்ளலாம். மறந்திலை மயங்கி வையத் தொருவரை ஒருவர் வாட்ட இறந்துஅலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும் அறந்தலை நின்ற வேந்தர் அடிநிழல் அன்றி யார்க்கும் சிறந்த தொன்றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய் என்னும் சூளாமணிப் பாடல் நல்லதோர் இலக்கியச் சான்றாகும். ---------- இயற்கையை அழியாமல் காத்து, இயல் நெறியாகிய நன் னெறியைப் பின்பற்றி ஆளும் ஆட்சியாளனது நாட்டில் பருவ மழையும் தவறாது பெய்யும், அது கொண்டு விளையும் விளைச் சலும் குறையாமல் நிரம்பும். என்னும் கருத்தை விளக்கும் குறளே, இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு (குறள் 545) மழைவளத்திற்கும் தள்ளா விளையுளுக்கும் இயற்கையைப் போற்றும் ஆட்சியாளனே அடிப்படையாய் அமைகிறான். நினவ கூறுவல் எனவ கேண்மதி அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து முறைவேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு உரைவேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகல் ஞாலம் எனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை, வெள்ளைக் குடி நாகனார் பாடிய பாடலில் அமைந்த வரிகள் நல்ல விளக்கமாக அமைகிறது. கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப் பெயல்பிழைப் பு அறியாப் புன்புலத் ததுவே என வேள்பாரியின் பரம்பு நாட்டைக் கபிலர் புறநானூற்றில் கூறும் தொடரும் பழந்தமிழ்ச் சான்றாகும். மழைவளம் சுரக்கு மாறும் வயல்நிலம் விளையு மாறும் விழையறம் வளரு மாறும் வேதநூல் விளங்கு மாறும் தழை பொருள் ஈட்டு மாறும் சமரிடை வெல்லு மாறும் பிழைதய வாழு மாறும் பிறழ்தராக் கோலி னாகும் என்னும் விநாய புராணப் பாடல் இக்குறளுக்கு விளக்கவுரை போல் அமைந்துள்ளதையும் காண்கிறோம். மண்வளம், மலைவளம், காட்டுவளம், கடல்வளம் ஆகிய நானில இயற்கை வளங்களும் குறையாத வண்ணம் ஆட்சி நடக்கும் நாட்டில் பருவமழை தவறாமல் பெய்யும், மழை பெய்தால் நானில விளைச்சலும் பெருகி விளங்கும். பெருந்தகையாளனே! கடும் சினம் உடைய கொல்லும் யானையும், விரைந்து செல்லும் மனச் செருக்குடைய குதிரையும் நீண்ட கொடி விளங்கும் உயர்ந்த தேரும், வலிய புகழ் வாய்ந்த வீரரும் என்னும் நான்கு படைகளும் சிறப்புடையதாயினும், பெருமைமிக்க அறநெறியை அடிப் படையாகக் கொண்டதே அரசின் வெற்றியாகும். அதனால், இவர் நம்மவர் என்று நடுவு நிலை தவறாது; இவர் அயலார் என்று அவர் நல்லியல்பை மறவாமல், கதிரோன் போன்ற சிறந்த வீரத்தை யும், திங்களைப் போன்ற நல்ல மென்மையையும் மழையைப் போன்ற கொடையையும் உடையவனாக, இல்லை என்பார் இல்லை என்னும் படி நீ நெடுங்காலம் ஆட்சி புரிந்து வாழ்வாயாக! எனும் கருத்து அமைய பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை, மதுரை மருதன் இள நாகனார் பாடிய புறப்பாடலின் ஒரு பகுதியைக் காண்போம். கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவரும் என நான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் அதனால், நமர்எனக் கோல்கோ டாது பிறர் எனக் குணம் கொல்லாது ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும் திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையும் மூன்றும் உடையை ஆகி இல்லோர் கையற நீநீடு வாழிய நெடுந்தகை! எனும் புறப் பாடல் உருவாக அடிப்படையாய் அமைந்த குறட்பாவே, வேலன்று வென்றி தருவது, மன்னவன் கோலதூஉம் கோடா தெனின் (குறள் 546) என்பதாகும். நாடாள்வோன் செங்கோன்மை தவறாது நாடாண்டு வந்தால் அவன் படைப் பலங்கொண்டு அண்டை நாடுகளை வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை. அவன் செங்கோன்மையின் சிறப்பாலேயே வெற்றி மேல் வெற்றி பெறுவான். நீதி தரும் வெற்றி! நிகரற்ற வெற்றியாகும்! என்னுடைய உண்மையான பெருமை, நான் நாற்பது போர்க்களங் களில் கண்ட வெற்றிகளில் இல்லை. என்றும் அழிக்க முடியாத எப்போதும் நிலைத்து நிற்கக் கூடிய எனது சாதனை. நான் அளித்த சட்டத்தொகுப்பே ஆகும். நல்ல சட்டங்களும் நடுவு நிலைமை மாறாத நீதி மன்றங்களும் மக்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாய் இருப்பதுபோல் வேறு எதுவும் இல்லை என்னும் நெப்போலியனின் கூற்று நல்லதொரு பட்டறிவுச் சான்றாகும். ஆள்வோனுக்கு வெற்றி தருவது வேலன்று கோடாதே கோலே வெற்றி தரும். ---------- நாடு காப்பவனைக் காப்பது எது? என்னும் வினாவிற்கு விடையாய் அமைந்த குறளே, இறைகாக்கும் வையக மெல்லாம், அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் (குறள் 547) ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பவன் உலகம் முழுவதும் காப்பதைக் கடமையாகக் கொண்டவன். அக் கடமையை அவன் செங்கோன்மை தவறாது நிறைவேற்ற வேண்டும். அவனுக்கும் துன்பம், துயரம் நெருக்கடி ஏற்படலாம். அத்தகைய சூழலிலும் அவனை அவன் கைக்கொண்ட செங்கோன்மை காத்துவிடும். அறநெறி தவறாது ஆள்வோனுக்கு வீழ்ச்சி இல்லை. அறநெறி தவறி ஆட்சி நடத்தியவனை ஆண்டவனாலும் காக்க முடியாது. நாடாளும் வாய்ப்பு அரிய பெரிய வாய்ப்பாகும். அவ் வாய்ப்பைச் செங்கோன்மை தவறிப் பயன்படுத்திவிடக் கூடாது. நெறி காத்தவனை நெறியே காக்கும். வசிட்ட முனிவர் இராமபிரானுக்குக் கூறிய உறுதிப் பொருள்களில் ஒன்று:- இனிய சொல்லினன், ஈகையன் எண்ணினன் வினையன் தூயன் விழுமியன் வென்றியன் நினையும் நீதிநெறி கடவான் எனில் அனைய மன்னற்கு அழிவும் உண்டாம் கொலோ என்பது நல்லதோர் இலக்கியச் சான்றாகும். ---------- எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தால் தானே கெடும் (குறள் 548) நாடாள்வோர் நாட்டு மக்கள் அனைவர்க்கும் பொதுவானவர். அவர்கள் எந்நிலை மாந்தரையும் எளியவர் எனக் கருதி அவர்கள் தம் குறைகளைத் தெரிவித்து நீதி பெற வருங்கால் புறக்கணிக்கவும் கூடாது. காலத்தாழ்வும் செய்து விடக் கூடாது. மக்கள் கூறும் குறைகளை நடுவு நிலை தவறாது, நெறிமுறைப்படி ஆராய்ந்து தக்க நடவடிக்கை உரிய துறை வழி எடுக்க வேண்டும். எந்த ஆட்சியாளன் குறை வேண்டி வருவோரை எளிதாகக் காண வாய்ப்பும் வழங்காமல், அலக்கழித்து, ஒருவழியாய்க் கண்டு கூறிய குறையையும் முறையே ஆராய்ந்து பாராமல், பொறுப்பற்றவனாக நடந்து கொள்கிறானோ அத்தன்மை வாய்ந்த ஆட்சியாளன் தம் தகுதிக் குறை வினால் தானே கேட்டிற்கு ஆளாவான். எளிமையும் நேர்மையுமே ஆட்சியை நீட்டிக்கும். ----------- வேந்தன் தொழில் யாது? என்னும் வினாவிற்கு விடையாய் அமையும் குறளே, குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் (குறள் 549) என்பதாகும். நாட்டு மக்கள் ஒருவருக்கொருவர் துன்புறுத்திக் கொள்ளாமல் காப்பதும் நாடாள்வார் கடமையாகும்; அதுபோல் ஆள்பவர்களாலும் மக்களுக்கு எத்தகைய துன்பமும் நேர்ந்து விடாமல் காப்பதும் நாடாள்வார் கடமையாகும். அத்துடன் மக்கள் துன்பமின்றி இன்புற்று வாழ்வதற்கு வேண்டிய நலன்களை எல்லாம் முறையே செய்து பேணிக் காக்க வேண்டியதும் நாடாள்வோர் கடமையாகும். மக்கள் ஒருவருக்கொருவர் கேடு புரிந்தாலும், பொது நலனுக்குத் தீங்கு புரியும் குற்றம் செய்தாலும், அவர்கள் செய்த குற்றத்திற்கு ஏற்பத் தண்டனை வழங்கவும் நேரிடலாம். ஆள்வோர் குற்றவாளிகளைத் தண்டிப்பது குற்றமன்று. அதுவும் ஆள்வோர் கடமைகளில் ஒன்றே யாகும். குற்றத்திற்குத் தண்டனை அளித்தால் குற்றவாளிகளுக்கு மட்டும் கேவலம். தண்டனை அளிக்காவிட்டால் சமூகம் முழுவ தற்கும் கேவலம் எனச் சிம்மன்சு அறிஞர் கூறுவதையும், எப்பொழுது தண்டனை விதிக்குங்கால் மனச் சான்று அழுகிறதோ அப்போது நீதி பிணமாகி விட்டதாகத்தான் பொருள் என்னும் சேம்சன் அம்மையார் கூற்றும் குற்றம் கடிதல் வடுவன்று என்பதுடன் குற்றம் கடியாமையே வடு என்பதை வலிபுறுத்தும். நாயகன் அல்லன்; நன்மை நனி பயந்து எடுத்து நல்கும் தாய் என இனிது பேணி; தாங்குதி தாங்குவாரை; ஆயது தன்மை ஏனும் அறவரம்பு இகவா வண்ணம் தீயன வந்த போது; சுடுதியால் தீமை யோரை என்பது கம்பராமாயணத்தில் இராமபிரான் சுக்கிரீவனுக்குக் கூறிய அறிவுரைகளில் ஒன்றும் குறட் கருத்துடன் ஒத்தியல்வதை உணர முடிகிறது. ---------- கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் (குறள் 550) 1. தீயிடுவார், நஞ்சிடுவார், களவு கொள்வார், கொலை செய்வார், வழிப்பறிப்பார்; சூறை கொள்வார், பிறர் மனை விழைவார் போன்ற கொடியவர்களுக்கு நாடாள்வோர் கொலைத் தண்டனை அளித்தும் நல்லவர்களைக் காக்க வேண்டியவராய் உள்ளார். 2. பிறரைக் கொலை செய்த கொடியவர்களை நாடாள்வோர் கொலைத் தண்டனை விதித்தும் அச்சுறுத்த வேண்டியராய் உள்ளனர். 3. நாடாள்வோர் நாட்டிற்குக் கேடு செய்த கொடியவர் கட்குக் கொலைத் தண்டம் வழங்கி நாடு காப்பது கடமையாகும். 4. கொலை புரிந்தும் தான் செய்தது குற்றம் என்பதைக் கூட உணராது தான் செய்தது சரியே என வாதாடும் திருந்தாக் கொலைஞர்கட்குக் கொலையே உரிய ஒறுப்பாகும். எனப் பல விதமாக கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் என்னும் தொடருக்குப் பொருள் காணலாம். பைங்கூழ் களைகட்டதனோடு நேர் என்னும் தொடருக்கு, வளர்ந்து பயன் தரும் பயிரைக் கெடுக்கும் களையைப் பொறுப் புணர்ந்த உழவன் வெட்டுவதற்கு ஒப்பானதாகும். கொடியவர்களை நாட்டில் வாழவோ வளரவோ விடுதல் நாட்டைப் பாழாக்கிவிடும். திருத்த முடியாத் தீயவர்களைத் தீர்த்துக் கட்டுவதே நல்லதீர்வு என்பதை அழுத்தமாக வலியுறுத்து வதுடன், குற்றவாளியைக் கொன்றாலும் கொலை கொலைதானே என மனித நேயத்துடன் வாதிடவும் வழி இருக்கிறது. ஆனால் திருவள்ளுவர் தனி மனித உயிரைக் காட்டிலும் கோடான கோடி நாட்டு மக்களின் உயிர் காப்பது பெருங்கடமை யாகும் என்பதை உணர்த்துவதுடன், தீமையை வளரவிட்டால் நன்மை அழிந்துவிடும். களையும் ஒரு பயிர் என்று வாதிடலாமா? பயன் தரும் பயிர் காக்க, பயனற்ற தீமை தரும் களை நீக்கல் உண்மையான நலப்பணி என உணர்த்துகிறார். நன்றி கொன்றரு நட்பினை நார்அறுத்து ஒன்றும் மெய்ம்மை சிதைத்துரை பொய்த்துளார்க் கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ? சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய் என்னும் கம்பராமாயணப் பாடல் - இராமபிரான் வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குப் பட்டம் சூட்டியபின், சுக்கிரீவன் இராமனைக் காண வாராமையால் சினங்கொண்ட இராமன் இலக்குவனை சுக்கிரீவன்பால் அனுப்பும் போது கூறிய இக்கூற்று ஏற்ற இலக்கியச் சான்றாகும். மன்னராட்சிக் காலத்தில் மட்டுமன்றி, குடியாட்சிக் காலத் திலும் கடுங்குற்றம் புரிந்தவர்கள் மரண தண்டனைக்கு ஆளாகி வருவது இன்றும் காணக் கூடியதே! குற்றத்திற்கு ஏற்ற தண்டனை என்பது அரச நீதியாகும். எவனால் உலகுக்கு நன்மை இல்லையோ அவன் தூக்குத் தண்டனைக்கு உரியவன் என்னும் வால்டேர் கூற்றை எவன் உயிருடன் இருப்பது உலகுக்குத் தீமையோ அவன் தூக்குத் தண்டனைக்கு உரியவன் என மாற்றிக் கொண்டால் வள்ளுவநெறி ஆகும். யார் மாட்டும் ஓர்க! யார் மாட்டும் கண்ணோடாது இறைபுரிக! யார் மாட்டும் தேர்ந்து முறை செய்க உலகெல்லாம் மழையை எதிர்நோக்கி வாழும் நாட்டு மக்கள் நல்லாட்சியை நோக்கியே வாழ்வர். அருள் நூலுக்கும் நல்லாட்சியே அடிப்படை அறநெறிக்கும் நல்லாட்சியே அடிப்படை ஆள்வோன் குடிகளைத் தழுவி ஆள வேண்டும் ஆள்வோன் அடியைத் தழுவி மக்கள் வாழ வேண்டும் ஆள்வோன் இயற்கையைக் காக்க வேண்டும் பருவ மழை பொழிய வேண்டும் விளைவு பெருக வேண்டும் செங்கோலே வெற்றி தரும் கோல் ஆள்வோன் நாட்டைக் காப்பது கடமை செங்கோலனைச் செங்கோலே காக்கும் ஆள்வோர் காட்சிக்கு எளியராய் அமைய வேண்டும் ஆராய்ந்தே முறை செய்ய வேண்டும் நடுவு நிலை தவறின் வீழ்ச்சி உறுதி குற்றவாளிகட்குத் தண்டனை அளிப்பது குற்றமன்று கொடியவர்களைக் கொல்லுதல் களை எடுத்தல் போன்றதே பயிர் காக்கக் களை எடுக்கத் தவறக் கூடாது. 56. கொடுங்கோன்மை நாட்டைச் செம்மையாக ஆளும் தன்மையைச் செங்கோன்மை அதி காரத்தில் விளக்கியவர். நாட்டைச் செப்பமாக ஆளவில்லை யானால் ஆள்வோருக்கும் ஆளப்படுவோர்க்கும் ஏற்படும் தொல்லை, துயரங்களை யும் பழியையும் வீழ்ச்சியினையும், கேட்டினையும் எடுத்துக் காட்டி, இரு சாராரையும் சிந்திக்கத் தூண்டி விழிப் புணர்வு கொள்ளவும், நல்லாட்சி அமையவும் அமைக்கவும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை உணர்த்தவும் எழுதப்பட்ட அதிகாரமே கொடுங்கோன்மை அதிகாரமாகும். ஆள்வோர் நாட்டை முறையுடன் ஆள வேண்டும். மக்கள் நிறைவுடன் வாழ வேண்டும். இரண்டும் அற்ற ஆட்சிக்குப் பெயர்தான் கொடுங்கோல் ஆட்சி; வல்லாட்சி; வன்கொடுமை ஆட்சி; பிழை மலிந்த ஆட்சி. அஃது மன்னராட்சியா மக்களாட் சியா என்பதல்ல முக்கியம் எவ்வாட்சியும் கொடுங்கோன்மை ஆட்சியாக அமைந்துவிடல் ஆகாது. உலக நாடுகளில் பல பல்வேறு காலங்களில் பல்வேறு கொடுங் கோலர்களின் ஆட்சிக்கு உட்பட்டு, அல்லல் பட்டுள்ளது. ஒர் அரசன் தன் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காகவும், அதைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் வஞ்சகம், சூழ்ச்சி, பொய்ம்மை ஆகியவற்றை ஈவு இரக்கமற்ற அடக்குமுறையுடன் இணைத்துக் கையாள வேண்டும். ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் இளவரசன், அறநெறிக் கொள்கைகளை அடியோடு புறந்தள்ளிவிட வேண்டும் வலிமை. சூழ்ச்சி ஆகிய இரண்டை மட்டுமே முழுமையாக நம்ப வேண்டும் ஆட்சியைப் பிடித்ததும் ஓர் அரசன் எல்லாக் கொடுமை களையும் உடனே செய்து முடித்து விட வேண்டும். ஆனால், குடிமக்களுக்கான நன்மைகளைச் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து தர வேண்டும். ஒரு மன்னன் அன்புக்கு ஆட்படவும் வேண்டும்; அச்சத்தை விளைவிக்க வும் வேண்டும். இரண்டில் எது நல்லது என்று கேட்டால், அன்புக்கு ஆட்படுவதை விட அச்சத்தை விளைப்பதே பாதுகாப்பானது என இளவரசன் என்னும் நூலில் மாக்கிய வல்லி கூறும் வழிகாட்டுதல் நெறியைப் பின் பற்ற எண்ணுவோர்கள் அனைவரும் கொடுங்கோலர்கள் அவர்கள் புரியும் ஆட்சியே கொடுங்கோன்மை ஆட்சியாகும். நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் பொறையின் நீங்கிய தவமும், பொங்குஅருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ என இராமாயணத்தில் திருவடி சூட்டு படலத்தில் விரத வேடம் குறித்து வினவிய இராமனுக்குப் பரதன் தன் கருத்தை விளக்கிக் கூறும் பாடல்களுள் ஒன்று கொடுங்கோன்மை அரசைக் கோடிட்டுக் காட்டுகிறது. கொலை மேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து (குறள் 551) நன்னிலை மேற் கொண்டு நல்லவை செய்து ஒழுகும் கடப்பாடுடைய வேந்தன், குடி மக்களை எப்படி எல்லாம் துன்புறுத்த முடியுமோ அவ்வவ் வழிகளில் எல்லாம் துன்புறுத்தலை மேற் கொண்டு தீமைகளை அடுக்கடுக் காகச் செய்துவரும் ஆட்சியாளன், ஆட்சியாளன் என்று கூறுவதற்கே தகுதி இல்லாதவன் ஆவான். அப்படியானால் அத்தகையவனை எப்படிச் சுட்டுவது? கொலைகாரன் எனச் சுட்டலாமா? கொலை புரிதலை ஒரு தொழிலாகச் செய்து வருபவர்கள் கொடியவர்கள் ஆவர்; அவர்களைக் காட்டிலும் கொடியர் என அடையாளப்படுத்த வேண்டும் என்கிறார். நல்லதே செய்து குடிமக்களைக் காக்க வேண்டிய பொறுப்புடையரே கேடு செய்வாராயின் அவர் கொலைஞரினும் கொடுங்கொலைஞர் என வள்ளுவரால்தான் கூற முடியும். கல்லா அரசனும் காலனும் நேரொக்கும் கல்லா அரசனிற் காலன் மிக நல்லன் கல்லா அரசன் அறமோரான் கொல்லென்பான் நல்லாரைக் காலன் அணுகி நில்லானே! என்னும் திருமந்திரம் நல்லதொரு விளக்கமாய் அமைந் துள்ளது. வெண்குடைக் கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும் செங்கோலன் அல்லாக் கால் செய்வதென்? பொங்கு படுதிரைச் சேர்ப்ப! மற்றில்லையே! யானை தொடு உண்ணின் மூடும் கலம் என்னும் பழமொழிப் பாடலும் ஒப்பிட்டு நோக்கத்தக்கது. --------- கொடுமைக்கார ஆட்சியாளன் கொடுங்கொலைஞன் என முதற் குறளில் கூறிய வள்ளுவர் வழிப்பறித் திருடன் போன்றவன் எனக் குறிப்பிடும் குறளே, வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு (குறள் 552) கோலொடு நின்றான் குடிமக்கள் தேவை அறிந்து உதவும் கொடை யாளனாக இருக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளன் மக்களின் கையை எதிர்பார்த்துக் கையேந்துபவனாக இருந்தால் அவன் ஆட்சியாளனா இல்லை? வழிப்பறித் திருடன் போன்றவன் என்கிறார். ஆட்சிக்கு அடையாளமாகிய கோலை ஏந்தி நிற்கும் ஆட்சியாளன் குடி மக்களிடம் பொருள் கேட்டு வாங்குதல் தனி வழியில் வேல் வைத்துக் கொண்டு நிற்கும் கள்வன் அவ்வழிவருவானை நோக்கி நின் பொருளைத் தருகிறாயா? அல்லது வேலுக்கு இரையாகப் போகிறாயா? என வினவிப் பெறுவது போன்றதாகும். பெருமுதியரைக் கூற்றம் கொண்டு செல்ல முறைப்படி வந்த பழைய அரசுரிமை அடைந்தோம் என்றால் அடைந்தோம் சிறப்பென்று குடி மக்களிடம் உரிய வரியைக் காட்டிலும் மிகுதியாகப் பெறுதல் இரத்தலைப் போன்றதாம். அத்தகைய சிறப்பில்லா ஆட்சியைச் சிறுமையோன் பெறின் அது பெருமை அன்றாம் என்னும் கருத்து மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூர்இல் ஆண்மைச் சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன்னே; எனச் சோழன் நலங்கிள்ளி பாடிப் புறநானூற்றில் இடம் பெறும் பொதுவியல் திணை பொருள் மொழிக் காஞ்சிப் பாடல் நல்லதோர் இலக்கியச் சான்றாகும். அமெரிக்க நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவன் பிரான்சு நாட்டின் மன்னன் பதினாறாம் லூயி அப்போர் பிரான்சு நாடே வீழ்ச்சி அடையும் அளவிற்கு நிதி நெருக்கடியில் தள்ளியது. மன்னனிடம் இச்சிக்கலை உணர்த்திய போது தொலை நோக்குச் சிந்தனை மக்கள் நலன், நாடு பற்றிய கனவு என்று எதுவும் இல்லாத மன்னர் சொன்னது கருவூலத்தில் நிதி குறைந்து போனால் என்ன? மக்களுக்கு வரியைக் கூட்டிவிட்டால் நிதி நிரம்பிவிடும் என்றான். அந்தக் காலத்தில் ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்த வரி விதிப்பு முறைதான். பிரான்சிலும் அரசனை ஆதரிக்கும் பெரிய நிலக்கிழார்களுக்கு வரி கிடையாது. செல்வம் புரளும் மாதா கோயில்களுக்கும் அதன் குருமார் களுக்கும் வரி கிடையாது. ஆனால் கீழ்த்தட்டு மக்களையோ மன்னர்கள் மேலும் மேலும் வரிபோட்டுக் கசக்கிப் பிழிவார்கள். என்பது வரலாற்றுச் சான்றாகும். நாடாள்வோர் வழிப்பறித் திருடர்கள் போல் அமைந்துவிடக் கூடாது. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும் (குறள் 553) நாடாளும் பொறுப்பு;விடுமுறை இல்லாப் பணி; ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய பணி; பொறுப்பு களைத் துறைவாரி பகிர்ந்தளித்துவிட்டால் மட்டும் போதாது; ஒவ்வொரு துறையிலும் திட்டமிட்ட பணி சீராக நடந்து வருகிறதா எனவும் ஆராய வேண்டும்! குற்றம் குறைகள் நிகழா வண்ணம் கண்காணிக்க வேண்டும். உடனடியாக நிறைவேற்றப் பட வேண்டிய பணிகளில் காலத்தாழ்வு நேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுவது மிக முக்கியம். அன்றன்று செய்யப்பட வேண்டிய பணிகள் முடிந்து விட்டனவா? இல்லை எனில் ஏன்? என ஆராய்ந்து அறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலங்களில் கோப்புகள் காரணம் இல்லாமல் தங்கி, பெருகி விடக் கூடாது. நீதி மன்றம் தீர்ப்புகளை மிக விரைந்து அறிவிக்க வேண்டும். சிற்றூரில் இருந்து பெருநிலம் ஆளுவோர் வரை அனைத்துப் பிரிவு ஆட்சியாளர்களும் தத்தம் கடமைகளைச் செய்வதில் ஒருநாள்கூட இடைவெளிவிட்டு விடல் ஆகாது. ஒவ்வொரு நாளும் நாட்டின் நிலைமையை ஆராய்ந்து, அதனை நெறிப்படுத்தாத ஆட்சியாளரின் நாடு. நாள்தோறும் படிப்படியே நலங் குன்றிக் கெட்டுப் போகும். ஆகவே, ஆட்சியாளன் விருந்து, வேடிக்கை களில் மூழ்கி மகிழ்ந்து காலத்தை வீணாக்கி விடாமல் நாடு காப்பதே தலையாய பணி எனக் கொண்டு இயங்கிக் கொண்டே இருக்கக் கடமைப்பட்டவன் ஆவான். நொடிப்பொழுது கவனக்குறை, சில வேளை களில் பேரிழப்பை உருவாக்கி விடும். சில வேளைகளில் அதை மீண்டும் சீர் செய்யவே இயலாமற் போனாலும் போகலாம். போன உயிரை மீண்டும் உடம்பில் ஏற்ற முடியுமா? எனப் பலவும் வள்ளுவர் எண்ண வைக்கிறார். பாலை நிலத்தைக் கற்பனையில் காட்ட முற்படும் கம்பர், பழிபடர் மன்னன் பரித்த நாட்டினூங்கு அழிவது என் காரணம், அறிஞ! கூறு! என்றான் எனக் கூறுவது சிறந்த ஒப்புமை ஆகும். ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் முறையில் அரசன் நாடுநல்கூர்ந் தன்று என்னும் முதுமொழிக் காஞ்சியின் நன்மொழி நல்ல சான்று. நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாடோறும் நாடி, அவநெறி நாடானேல் நாடோறும் நாடு கெடும், உடன் நண்ணுமால் நாடோறும் செல்வம் நரபதி குன்றுமே என்னும் திருமந்திர மொழி குறளுக்கு நல்லதொரு விளக்கமாய் அமைந்துள்ளது. நாட்டில் நாளும் நலமும் வளமும் பெருக! நாடாள்வோர் நாள்தோறும் நாடி முறை செய்து காக்க வேண்டும். ---------- கூழும் குடியும் ஒருங்கிழக்கும், கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு (குறள் 654) செங்கோன்மை தவறி ஆராய வேண்டியதை ஆராயாமல் தான் தோன்றித் தனமாய் ஆட்சிபுரியும் ஆட்சியாளனால் ஆளப்படும் நாடு, உணவு முதலாகிய நாட்டுச் செல்வங்களையும், நாட்டுப்பற்று மிக்க நல்ல மக்களையும் ஒட்டு மொத்தமாக இழந்து போகும். தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு (குறள்731) என்னும் நாட்டின் இலக்கணம் தவறி தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேராத நாடாக ஆகிவிடும். ஆகவே, சீத்தலைச் சாத்தனார் மணி மேகலைக் காப்பியத்தில், கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூடும் மாறிவறங் கூரின் மன்னுயிர் இல்லை என இக்குறளுக்கு விளக்கம் தருமாறு கூறியுள்ளார். கோள் நிலை திரிந்து, நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி, நீள்நில மாரி இன்றி, விளைவு அஃகிப் பசியும் நீடிப் பூண்முலை மகளிர் பொற்பின் கற்பு அழிந்து அறங்கள் மாறி ஆணையிவ் வுலகு கேடாம் அரசுபோல் கோடின் என்றான். என்னும் சீவக சிந்தாமணிப் பாடலும் குறளுக்கு விளக்கமாய் அமைந்துள்ளது. 1889ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 14ஆம் நாள், அமெரிக்காவின் விடுதலைப் போரின் போது மிகுவலிமை படைத்த இங்கிலாந்துப் படையையே வெற்றி கொண்ட பிரான்சின் படை, கண்கள் சிவக்கச் சினத்துடன் கிளர்ந்தெழுந்த தன் நாட்டு மக்களிடம் தோற்றுப் போய்ச் சரண் அடைந்தது. நாட்டில் புரட்சி உச்சக் கட்டத்தை எட்டியிருந்த சமயம் புரட்சியாளர் களின் கைகளிலிருந்து தப்பிக்க மாறு வேடம் பூண்டு ஓடிய மன்னன் லூயியையும் அவரின் மனைவியையும் புரட்சியாளர்கள் கில்லட்டின் என்ற கருவியின் முன் மண்டியிட வைத்து நரபலி கொடுத்தார்கள் என்ற செய்தி கொடுங்கோலர் வீழ்ச்சிக்கு ஒரு சான்றாகும். உலக வரலாற்றையே மாற்றி அமைத்தவர் அடால்ஃப் கிட்லர். கிட்லர் ஆரம்பித்து வைத்த இரண்டாம் உலகப் போர் ஆறரைக் கோடி மனித உயிர்களைக் காவு வாங்கியது. இதில் மிகப் பெரிய வேதனை என்ன வென்றால், இறந்தவர்களில் ஐந்து கோடிப் பேர் போரோடு எந்தத் தொடர்பும் அற்ற பொது மக்கள். போரினால் இறந்தவர்களின் கதைகளை விட கிட்லர் தன் நாட்டின் சொந்த மக்களுக்கு எதிராகச் செய்த இனப்படுகொலை மிகக் கொடுமையானது. 1945 ஏப்பிரல் 30 உருசிய நாட்டுப் படை கிட்லரை சுற்றி வளைத்ததால் தப்பிக்க வழியின்றி தானும் தன் மனைவி ஈவாவும் தற்கொலை செய்து கொண்டனர். ஆட்சியாளன் நல்லவனாக இருந்தால், அவன் இறந்தும் மக்கள் சோகத்தில் மூழ்கிப் போவார்கள். கொடுங்கோலனாக இருந்தால் மக்கள் உள்ளுக்குள் மகிழ்வார்கள். ஆனால் கம்போடியாவின் மாமன்னன் போல்பாட் இறந்த போது, கம்போடிய மக்கள் ஆத்திரம் அடைந்து, அவர் இறந்தாலும் பரவாயில்லை. அவர் பிணத்தையாவது தூக்கில் போடுவோம் என்று கொதித் தெழுந்தார்கள். அந்த அளவிற்குக் கொடுங்கோலன் போல்பாட் கோல் கோடிய எந்த ஆட்சியாளருக்கும் மரணத்தில் கூட நிறைவு கிடைத்ததில்லை என்பதே உண்மை. --------- அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555) திருவள்ளுவர் காட்டும் படை அல்லாத படை; கண்ணீர் என்னும் புதுமையான புரட்சிப் படை. ஆகவே படை வலிமை வாய்ந்த மாபெரும் ஆட்சியாளர்களே! படைவலிமையோ, ஆள்வலிமையோ, பண வலிமையோ பக்கத் துணை வலிமையோ இல்லை என்பதால் எளியவர் களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; அவர்களால் எந்த விதமான எதிர்ப்பும் இடஞ்சலும் தமக்கு ஏற்பாடாது எனக் கருதி ஆணவத்துடன் வரம்பின்றி கொடுமை செய்யலாம் எனத் திரியாதீர்கள் நீங்கள் தந்த துன்பம் அவர்கள் தாங்க முடியாத துன்பம்; ஆகவே, வேதனை பொறுக்க முடியாமல் கதறி அழுகிறார்கள்; அப்பொழுது அவர்கள் கண்ணில் இருந்து கொட்டும் நீரே உங்களின் வல்லமை பொருந்திய ஆட்சிச் செல்வத்தை அழிக்கும் வலிமை வாய்ந்த படைக் கருவியாகும். அப்படைக் கருவி அனைவரிடமும் உள்ளது. ஆகவே யாரையும் எளியவராய் எண்ணி இன்னல் விளைவிக்காதீர் என எச்சரிக்கும் குறளே இதுவாகும். கொடுங்கோலனின் கொடுமையைக் குடிகளின் ஆற்றொணாத்துயர நெஞ்சே போக்கிவிடும். அதற்கு வேற்றுநாட்டை ஆள்வோன் படைதான் வர வேண்டும் என்னும் அவசியம் இல்லை என்பது கருத்து. செல்வத்தை அழிப்பது துயரப்படுவோர் நெஞ்சே ஆயினும், அதை வெளிப்படையாகத் தெரிவிப்பது கண்ணீர். ஆதலால், அழிப்பு வினை கண்ணீர் மேல் ஏற்றப்பட்டது. எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும்; ஆதலால் கொடுங்கோலனை இறைவனே அழித்து விடுவான் எனவும் கருதலாம். செய்தார்க்குச் செய்த வினை நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் ஆகவே, பிறரை அழவைத்தவன் அழிவான் என்பது உறுதி. தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார் மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால் ஆற்றாது அவரழுத கண்ணீர்அவை அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும் என்னும் பழமொழிப் பாடல் குறளுக்கு விளக்கமாய் அமைந் துள்ளது. அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டேங்கி மல்லல் மதுரையார் எல்லாரும் தாமயங்கிக் களையாத துன்பம்இக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இது வென்கொல் எனவும், கண்ணில்நீர் கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் எனவும், இளங்கோவடிகள் குறளுக்கு இலக்கியம் படைத்துள்ளதைக் காண நேர்கிறது. யார் எப்பணியை மேற்கொண்டு செயல் புரிந்தாலும் தத்தம் முயற்சியாலும் பணிபுரியும் செம்மையால் புகழ் பெறுமாறு செயல்பட வேண்டும், என்னும் பொதுவிதியைத் தோன்றின் புகழொடு தோன்றுக எனத் தெளிவுபடுத்தியவர் திருவள்ளுவர். அத்துடன் நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு (குறள் 234) எனக் கூறுவதுடன், ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில் (குறள் 233) என நிலைத்த பணிகளால் அழியாப் புகழை அனைவரும் அடைய வேண்டும் என விரும்பும் வள்ளுவர், குடிமக்களை விட மிகுந்த பொறுப்புக்கு உரிய ஆட்சியாளர் ஆட்சியின் செம்மையால் புகழ் பெற வலியுறுத்தும் குறட்பாவே, மன்னவர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி (குறள் 556) மன்னுதல் நிலைத்த புகழ் பெறுதலாம். நாடாள்வோர் அனைவரும் மன்னர் என்று அழைக்கப்படுவதில்லை. புகழ்தோன்ற ஆள்பவரே மன்னர் என்று குறிப்பிடத் தக்கவராவார். நாட்டில் நிலையான வளமும் நலமும் பொருந்த யார் ஆட்சி புரிகிறார்களோ அவர்களே மன்னர் ஆவார். ஆளுவோர் பல்வகைக் காரணங்களால் மக்களால் போற்றிப் புகழப் படலாம். இவரே தொடர்ந்து ஆளுதல் வேண்டும், இவர் ஆட்சியே நிலையாக அமையவேண்டும், மாறிவிடக் கூடாது என மக்கள் மனப்பூர்வ மாக நினைத்து போற்றிப் புகழ வேண்டுமானால்; ஆள்வோர் செங்கோல் முறையாகிய நடுவுநிலை தவறாது ஆட்சி புரிய வேண்டும். செங்கோன்மையே நிலையான புகழ்தரும் ஆட்சியை வழங்கும். ஆள்வோர் செங்கோன்மை தவறி, பல்வேறு நன்மைகளைச் செய்தாலும் நிலையான புகழ் பெற இயலாது என்பது மட்டுமல்ல பழிக்கு ஆளாவர். ஆள்வோர் எந்நிலையிலும் செங்கோன்மை தவறி விடக் கூடாது. ----------- துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு (குறள் 557) வான் சிறப்பு அதிகாரத்தில் மழை பெய்யத் தவறின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி13, ஏரின் உழாஅர் உழவர்14, பசும்புல் தலை காண்ப அரிது16, நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும்17, சிறப்பொடு பூசனை செல்லாது18, தானம் தவம் இரண்டும் தங்கா19, யார் யார்க்கும் அமையாது ஒழுக்கு20, எனத் தெளிவாக விரித்துரைத்தார். நாட்டிற்கு மழை இன்மை எப்படிக் கேடு தருமோ, அதுபோல் கேடு தரக் கூடியதுதான் அருளற்ற ஆட்சியாளன் கீழ் வாழும் மக்கள் நிலையும்... மழை இல்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைவிக்கும் துன்பம் எத்தகையதோ அத்தகையதே, ஆளுவோன் அருளின்மை அவன் நாட்டில் வாழும் குடிமக்கட்கு விளைவிக்கும் துன்பமும் ஆம். மழை இன்றேல் உலகம் என்னாகும்? ஆள்வோனிடம் அருள் இன்றேல் குடிகள் வாழுமா? அதனால்தான், இளங்கோவடிகள், மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் மேல்நின்று தான் சுரத்த லான் எனப் பாடியுள்ளார். வான்நோக்கி வாழும் உலகெல்லாம், மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி (குறள் 542) எனச் செங்கோன்மையில் குறிப்பிட்டுள்ளதையும் இணைத்து சிந்திப்போம்! ---------- நாட்டில் அறநெறி தவறாத செங்கோன்மை ஆட்சிநடை பெறு மாயின் எந்நிலை மாந்தரும் அச்சமற்றுத் தொழில் புரிந்து இன்புற்று நிறைவுடன் வாழ்வர். ஆனால், நாட்டில் நன்னெறி போற்றும் நல்லாட்சி அமைய வில்லை யானால் அன்றாடம் உழைத்துக் கால்வயிற்றுக்கு, அரை வயிற்றுக் கஞ்சி குடித்துக் காலங்கழிப்பவர் மட்டும் தான் துன்பப் படுவார்கள் எனச் சொல்ல இயலாது. அவர்களை விட பொருள் வாய்ப்பு உடையவர்கள், பொருளைக் காக்கவும் முடியாமல், முறையாக வாழ்க்கைத் தேவைகளை நிறை வேற்றிக் கொள்ளவும் இயலாமல் அஞ்சி அஞ்சி அல்லல் பட்டு வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். ஆகவே தான் திருவள்ளுவர், இன்மையின் இன்னா துடைமை; முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின் (குறள் 558) என்னும் குறளை வடித்தார். நீதி நெறிப்படி நீதி வழங்காத கொடுங்கோலன் ஆட்சியின் கீழ் வாழநேர்வது இன்பந்தர வேண்டிய செல்வ நிலை, துன்பந்தரும் தன்மை யுள்ள வறுமையினும் துன்பமானதாகும். நீதி இல்லான் ஆட்சிக்கு உட்படின் பொருள் இன்மையினும் உடைமை கேடு தரும். இயற்கையை அழியாமல் காத்து ஆட்சி நடத்தும் ஆட்சியாளனது நாட்டில் பருவ மழையும் அது கொண்டு விளையும் விளைவும் தவறாமல் நிரம்பும் என்பதை இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையும் தொக்கு (குறள் 545) எனச் செங்கோன்மை அதிகாரத்தில் உடன்பாட்டில் கூறிய நம்பிக்கையை எதிர்மறையில் வலியுறுத்தும் குறளே, முறைகோடி மன்னவன் செய்யின், உறைகோடி ஒல்லாது வானம் பெயல் (குறள் 559) நாடாளும் பொறுப்பை ஏற்றுள்ள முதல்வன், தலைவன், ஆட்சியாளன், அமைச்சன், அல்லது மன்னன் என எப்பெயரில் அமைந்திருப்பினும், நன்னெறியாம் அறநெறியைத் தன் வாழ்வியல் நெறியாகவும், பொது வாழ்வுச் செயல் நெறியாகவும் கொண்டு பின்பற்றுவதிலும் செயல் புரிதலிலும் அனைவர்க்கும் முன்னோடி யாகவும் வழிகாட்டியாகவும் விளங்க வேண்டும். விளங்கினால் மக்களுக்கும் அறநெறி இயல்புநெறி ஆகிவிடும். மலைவளமும் காட்டு வளமும் காக்கப்படும். வயல் நிலம் விளைவைத் தட்டின்றி வழங்குமாறு உரிமையுடன் உணர்வுடன் உழைப்பர். இயற்கை முறையே பேணப்பட்டால் மழை வளம் சுரக்கும். ஆள்வோர் அறநெறி பற்றிக் கவலைப்படாது தன் விருப்பம் போல் ஆள முற்பட்டால், மக்களிடம் அறநெறியை எப்படி எதிர்பார்க்க முடியும்? மன்னவன் எவ்வழி? மக்களும் அவ்வழி! ஆள்வோர் எவ்வழி? ஆளப்படு வோரும் அவ்வழி தானே நடப்பர்; மலைகளும் காடுகளும் பேணுவாரின்றி அழிவுறும்; அவை அழிந்தால் மழை எப்படிப் பெய்யும், மழை கூடப் பெய்யாது என்றால் நாடு வளங்குன்றி வறுமை எய்தும்! மக்கள் கடமை தவறுவர்! ஒழுக்கம் குன்றும். ஆகவே இது ஒரு சுழற்சி முறையாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதை உணர்த்தவே மன்னவன் நீதி முறையோடு ஆளாவிட்டால் மழையும் தவறும் எனக் கூறியுள்ளார். மழைகால் ஊன்றா, வளவயல் விளையா, வாய்மையும் சேட்சென்று கரக்கும், தீதுதரப் பிறவும் எல்லா நெறிமாறு படுமே கடுஞ்சினம் கவை இய காட்சிக் கொடுங்கோல் வேந்தன் காக்கு நாடே என்னும் ஆசிரிய மாலைப் பாடல் குறளின் கருத்தை விளக்கும் பாங்கு பாராட்டத்தக்கது. கொள்பொருள் வெஃகி குடிஅலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந்து எல்லை கடப்பாளும் இம்மூவர் வல்லே மழையருக்கும் கோள் என்னும் திரிகடுகப் பாடலில் ஒரு கடுகம் குறட் கருத்தை விளக்க வந்ததாகும். ---------- ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் (குறள் 560) உழுபவனே உழவன்; படிப்பவனே மாணவன்; கற்பிப்பவனே ஆசிரியன். அதுபோல் காப்பவனே காவலன். தொழிலால் அமைந்த பெயருக்குரியோர் அத்தொழிலை முறையே செய்து, அத்தொழிலுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். நாடாளும் பொறுப்பில் அமைந்தோர் அரசியல் சட்டதிட்ட முறைப்படி ஆட்சி நடாத்தாவிடின், அந் நாட்டின் கண் வாழும் மக்களது முயற்சியால் கிட்டும் அல்லது ஆகும் பயன் குறையப் பெறும். அதாவது உழைப்பிற்கு ஏற்ற பயன் கிட்டாது. அதனால், நாட்டில் முன்மையான தொழிலைச் செய்து முறையுடன் வாழ்வோர், தத்தம் தொழிலுக்குரிய நுண் அறிவை மறந்துவிடுவர். திருவள்ளுவர் இக்குறளில் ஆபயன் எனக் கூறியுள்ளதை வினைத் தொகையாகக் கொள்ள வேண்டும். ஆன பயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் என விரித்துக் கொள்க! ஆ என்றால் ஆதல் எனப்பொருள் தரும். அதுபோல் அறுதொழில் என்பதையும் வினைத் தொகையாகக் கொண்டு அறுத்த, அறுக்கின்ற, அறுக்கும் தொழில் எனப் பொருள் கொள்க! அறுத்தல் என்றால் அறுதி செய்தல், அதாவது வரையறை செய்தல். இன்றியமையாத சிறந்த தொழில் என அறுதி செய்யப்பட்ட தொழில் அத்தொழில்களாவன உழவு, வாணிகம், நெசவு, தச்சு, கொல் முதலிய முதன்மையான தொழில்கள். கொடுங்கோலாட்சி நடக்கும் நாட்டில் அமைதி இராது. ஆகையால், இத்தொழில்கள் முறையாக நடைபெறா என்பதாம். மறத்தல் முயன்று செய்யாமை ஆகும். நூல் அத்தொழில்களின் நுட்ப அறிவை உணர்த்திற்று. முறையாகத் தொழிலைக் கற்றுக் கொள்ளவும் எண்ணார்; முறையாகத் தொழிலைச் செய்யவும் எண்ணார்; ஒரு சிலர் நாட்டு நிலை பற்றிச் சிந்திக்காது, கடமையே கண்ணெனக் கருதிச் செயல்பட்டாலும் உரிய பயனைக் கொடுங் கோலர் ஆட்சியில் பெற இயலாது. கொங்கோலன் நாடு கெடும் அறுதொழிலோர் நூல் மறப்பர் என்றால் அறுவகைத் தொழில் செய்வோரும் தத்தமக்குரிய நூல் கற்பதை விட்டு விடுவர் எனவும் கருதலாம். உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை சிற்பம் என்றித் திறத்தறு தொழில் கற்ப நடையது கரும பூமி எனத் திவாகரம் நிகண்டு அறுதொழிலைப் பட்டியலிடுகிறது. அறிஞர் தமிழ் கா. சு. அவர்கள், அறி தொழிலோர் எனப்பாடம் கொள்கிறார். குடிகளை முறை செய்து காக்க வேண்டிய ஆட்சியாளன் காக்கத் தவறினால், முயற்சி செய்வார்க்கு அம் முயற்சியால் இயற்கையாய்க் கிட்டும் பயனும் இல்லாமல் போகும். அறியுந் தொழிலை உடைய கலைஞர் நூலினைக் கற்பதைக் கைவிட்டு அதனை மறப்பர். தொழில் பெருகவும், தொழிலாளர் நலமும் வளமும் பெறவும் கல்வி மேலோங்கவும் நாட்டில் தகுதியான ஆட்சி அமைய வேண்டும். மழையின்றி மாநிலத்தார்க் கில்லை; மழையும் தவமிலா ரில்வழியில்லை; தவமும் அரசிலா ரில் வழி யில்லை; யரசனும் இல் வாழ்வா ரில்வழி இல் என்னும் நான்மணிக் கடிகைப் பாடல் குறள் மணி பதிந்த கடிகையாக விளங்குகிறது. கொலை மேற்கொண்டார் கொடியரே கொலைஞரினும் கொடியவர் அல்லவை செய்து ஒழுகும் ஆட்சியாளர் வரம்பின்றி வரி வாங்குவோன் வழிப் பறியாளனே நாடாள்வோன் நாள்தோறும் நாடி முறை செய்ய வேண்டும் நாளும் நாடிமுறை செய்யா நாடு கெடும் கோல் கோடிய அரசு உணவையும் மக்களையும் ஒருங்கே இழக்கும்! அல்லல் பட்டோர் கண்ணீர் அரசையே அழிக்கும் செம்மையான ஆட்சியே நிலைத்த பெருமை தரும் செங்கோன்மை இன்றிப் புகழ்பெற இயலாது ஆள்வோன் அருள் பருவமழை போன்றது அருளில்லான் ஆட்சி மழை இல்லா மண்ணுலகம் கொடுங்கோலன் ஆட்சியில் செல்வனுக்கே பெருங்கவலை முறையற்ற ஆட்சியில் மழையும் பெய்யாது முறையற்ற ஆட்சியில் தொழிலும் வளராது முறையற்ற ஆட்சியில் வருவாயும் பெருகாது 57. வெருவந்த செய்யாமை அஞ்சத் தக்க செயல்களைச் செய்யாமை வேண்டும் என்பதை உணர்த்த வந்த அதிகாரம் ஆகும். யார் அஞ்சத்தக்க செயல் செய்யாமை வேண்டும்? எனும் வினாத் தோன்றின் நாட்டு மக்கள் அஞ்சுவதும், அமைச்சர் முதலிய அரசு அலுவலர்கள் அஞ்சுவதும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் அஞ்சுவதும் ஆகிய செயல்களைச் செய்யாமை வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதிகாரம். அரசனாயினான் கடிய சொல்லும், கண்ணோட்ட மின்மை யும், குற்றத்தின் மிக்க தண்டமும், நடுநிலை இன்மையும், தன்னைக் காண வேண்டுவார்க்குச் செவ்வி இன்மையும், கண்டால் இன்னா முகத்தினை உடைமையும், காரியத்தைப் பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர் மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாமையும் அப்பிழையால் தன் காரியம் தப்பிய வழி சினந்து அவ்வமைச்சரை வெகுளுதலும், செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகழாவதோர் அரண் செய்து கொள்ளாமை யும் ஆகிய இவைகளெல்லாம் தீங்காக எண்ணி விடல் வேண்டும் என விநாயக புராணம் விளம்புவதை அதிகார விளக்கமாகக் கொள்வோம். கடுமையும் அச்சம் தரும்; கொடுமையும் அச்சம் தரும்; அதட்டுதலும் அச்சம் தரும்; மிரட்டுதலும் அச்சம் தரும்; துன்புறுத்தலும் அச்சம் தரும்; இடையூறு செய்வதும் அச்சம் தரும்; தொல்லை தருவதும் அச்சம் தரும்; இன்னோரன்ன அச்ச மூட்டும் செயல்களை ஆட்சியாளர் செய்தல் விரும்பத் தக்க தல்ல; ஆட்சியாளர் நாட்டு மக்களுக்குத் தாய் போன்றவர். ஆகவே, ஆட்சியாளர் அணுகுமுறையில் தாய்மை மணம் கமழ வேண்டும். நன்றாக ஆராய்ந்து ஒரு பக்கம் சாராது நடுவு நிலைமையுடன் எவரிடத்தும் தெளிவான செயலைச் செய்வதே செங்கோல் முறையாகும். குடிகளைப் பிறர் துன்புறுத்தாமல் காத்துப் பேண வேண்டும். குடிமக் களில் குற்றம் புரிந்தாரைக் குற்றத்திற்குத் தக தண்டித்தல் ஆட்சியாளர் கடமையும் முறைமையும் ஆகுமே தவிர்த்துக் குற்றமாகாது எனும் அரசு முறைமையைச் செங்கோன்மை அதிகாரத்தில், ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை (குறள் 541) குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் (குறள் 549) எனும் குறள்கள் வழி விளக்கிய வள்ளுவர் அதனோடு தொடர்புடைய பிறிதொரு குறிப்பை உணர்த்தவே வெரு வந்த செய்யாமை என்னும் இவ்வதிகாரத்தின் முதற்குறளைத் தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து (குறள் 561) என அமைத்துள்ளார். தலைச்செல்லா வண்ணத்தால் தக்காங்கு நாடுதல் வேண்டும்; ஒத்தாங்கு ஒறுக்க வேண்டும். ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, குற்றவாளிக்குரிய பட்டியலில் அவர் பெயர் பதிவாகி உள்ளது. அவர் வேண்டியவரா? வேண்டாதவரா? அறிமுகமானவரா? அறிமுகம் இல்லாதவரா; என்று வேறுபாடு கருதாது, எச்சார்பும் கொள்ளாது, நடுவு நிலை நின்று முறைப்படி விசாரித்து, குற்றம் புரிந்தது உறுதி என ஆய்வு முடிவு தெரிவித்தால், அவர் செய்த குற்றத்தின் தன்மைக்கும், அளவிற்கும், சூழலுக்கும் ஏற்பவும் தண்டனை வழங்குவது ஆட்சியாளர் கடமையாகும். குற்றம் புரிந்தவர் தான் செய்தது குற்றம்தான் என்பதை உணரவும் வேண்டும். மீண்டும் அத்தகைய குற்றம் புரிய எண்ணாதவாறும், தண்டனையின் அளவு மிகுந்து விடாமலும் நடுவு நிலை தவறாத வாறும், குற்றம் புரிந்தவர்க்கு மட்டுமல்லாது, மற்றவர்கட்கும் அத்தீர்ப்பு ஒருபாடமாகத் தண்டனை அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பி விடவும் கூடாது. குற்றமற்றவன் தண்டனை பெற்று விடவும் கூடாது. தண்டனை யின் நோக்கம் குற்றவாளியைத் திருத்திப் பண்படுத்துவதாக இருக்க வேண்டுமே யொழிய, அவனை வாட்டிவறுத்திப் புண்படுத்துவதாக இருக்கக் கூடாது. முறையே நடு நிலையுடன் ஆராயவும் வேண்டும். தண்டனையும் நடுவு நிலையுடன் வழங்கப்பட வேண்டும். இது ஆள்வோர் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றுள் ஒன்றாகும். தூங்காதே தம்பி, தூங்காதே - நீயும் சோம் பேறி என்ற பெயர் வாங்காதே! என்று தொடங்கும் பாடலில் பட்டுக் கோட்டைக் கலியாண சுந்தரர், போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி யிழந்தான் - உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி யிழந்தான்! கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா! எனப் பாடியுள்ளார். தூக்கம் உடலுக்கு நல்லது. ஆனால் ஓய்வுப் பொழுதில் தூங்க வேண்டும். பணிப் பொழுதில் தூங்கினால் குற்றமாகக் கருதப்படும். மாணவன் தூக்கம், ஆசிரியர் தூக்கம், அலுவலர் தூக்கம், அலுவலகக் காவலர் தூக்கம், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தூக்கம், எல்லார் தூக்கமும் குற்றந்தான். ஆனால் தண்டனையின் அளவு ஒரு தன்மைய தாய் இருக்க முடியுமா? மிதிவண்டி ஓட்டுநர் தூக்கம், துள்ளுந்து ஓட்டுநர் தூக்கம், பேருந்து ஓட்டுநர் தூக்கம்; தொடர் வண்டி ஓட்டுநர் தூக்கம்; வான ஊர்தி ஓட்டுநர் தூக்கம்; இவற்றால் நேரும் இழப்பும் வேறுபடும். ஆகவே குற்றத்தின் தரமும் வேறுபடும் வழங்கப்படும் தண்டனையும் வேறுபடத் தானே வேண்டும். ஆகவேதான் ஒத்தாங்கு ஒறுக்க வேண்டுகிறார். ------------- குற்றம் புரிந்தவர் எவரும் தண்டனையிலிருந்து தப்பி விடக் கூடாது. குற்றம் புரிந்தவனும் மனமுடைய மனிதன். ஆகவே வழங்கும் தண்டனை உளவியல் நோக்கில், மனித நேயத்துடன் அமைவது அவசியம் என வள்ளுவர் நுட்பமாக எண்ணிப் படைத்த அருமைக் குறளே, கடுதோச்சி மெல்ல எறிக, நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் (குறள் 562) என்பதாகும். ஆக்கம் வேண்டுபவர்; ஆக்கம் நீங்காமை வேண்டுபவர்; ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர், குற்றவாளியைத் தண்டிக்கும் போது கடிது ஓச்ச வேண்டும். ஆனால், மெல்ல எறிய வேண்டும். கடிது ஓச்சுதலும் மெல்ல எறிதலும் நுண்ணிய செயல் முறை மட்டுமன்று; கைக் கொள்வார்க்கு மிகப் பெரிய நன்மையையும் தரும். குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும். அத்தண்டனையால் குற்றவாளியின் உயிருக்கோ, உடலுக்கோ, உடைமைக்கோ பேரிழப்பு ஏற்படுத்தி, எழுந்திருக்க விடாமல் வீழ்ச்சி அடையச் செய்துவிடல் கூடாது. எடுத்துக்காட்டாக அடிக்கக் கையை ஓங்குவதைக் குற்றவாளி காணும் போது அடிதாங்க முடியாத பெரிய அடியாக விழும் போல் தெரிகிறதே என அஞ்சி நடுங்க வைப்பதாகவும் இருக்க வேண்டும். ஆனால் அடி அவன் மேல் விழும் போது மிக மென்மையாக இருக்க வேண்டும். அச்ச உணர்வை உண்டாக்க வேண்டும்; அழிக்க வேண்டியது குற்றமே! அன்றிக் குற்றவாளி அல்லன்; குற்றத்திற்குத் தண்டனை வழங்கும் பொறுப்பில் இருக்கும் ஆட்சி யாளர் இந்த நுட்பமான அணுகுமுறையைப் பின்பற்றி வந்தால், அவர்கள் அடைந்துள்ள நல்ல வாய்ப்பு நெடுங்காலம் அவர்களை விட்டு நீங்காது நிலை பெறும். தாம் பெற்றுள்ள தகுதி வாய்ந்த பொறுப்பு, தம்மை விட்டு நெடுங் காலம் நீங்காது இருக்க வேண்டும் என விரும்புபவர், குற்றம் புரிந்தவர் களுக்குக் கடுந்தண்டனை வழங்குவது போல் அச்ச மூட்டி, மென்மையாக அதாவது நோகாமல் தண்டிக்க வேண்டும். ஆக்கம் நெடுநாள் நிலைக்க வன்மையாக ஓங்கி மெல்ல அடி! குற்றம் செய்தவனைத் தண்டிப்பதின் மூலம் அவன் திருந்துவதுடன், மற்றவர்கள் குற்றம் செய்யாமல் தடுப்பது மிக நலம் பயக்கும். ------------- வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் (குறள் 563) ஆக்கம் நெடிது நீங்காது நிலைக்கச் சொன்ன வழியைப் பின்பற்றத் தவறினால், விரும்பவில்லையானால், மறுதலையாகச் செயல்பட்டால் விளையும் கேட்டை உணர்த்தும் குறள் இது வாகும். ஆட்சியாளன் எத்தகையவன்? வெங்கோலன்; எத்தகைய வெங்கோலன்? வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன். வெங்கோலன் ஆட்சி நீடிக்குமா? நீடிக்காது. என்னவாகும்? கெடும்? எப்பொழுது? நெடுநாள் கழித்தா? உடனடியாகவா? உடனடியாகக் கெடும்! கெடும் என்பது நம்பிக்கையா? உறுதியா? உறுதி யாகவே கெடும். குடிமக்கள் அஞ்சத்தக்க செயல்களையே செய்கின்ற கொடுமைக்கார னாக ஆட்சியாளன் எப்பொழுது மாறி விடுகிறானோ அவனது ஆட்சி முழுமையாக விரைவில் உறுதியாகக் கெட்டொழியும். விளைந்த நெல்லை அறுத்துச் சமைத்துக் கவளமாக உருட்டித் தந்தால், ஒரு சிறிய நிலத்து விளைவும் யானைக்குப் பல நாள்களுக்கு உணவாகப் பயன்படும்; ஆனால் நூறு பங்கு பெரிய நிலமாக இருப்பினும் யானை தானே வயலில் புகுந்து உண்டால், அதன் வாய்க்குள் செல்வதினும் காலில் மிதிபட்டுக் கெட்டுப் போவது மிகுதியாகும். அதுபோல் அறிவுடைய ஆள்வோன் செய்யும் முறை அறிந்து வரி கொள்வான் எனின், நாடு கோடிப் பொருளைத் தேடிச் சிறந்து விளங்கும்; ஆள்வோன் முறை அறியான் எனின், நாள்தோறும் தகுதி இல்லா ஆரவாரக் கூட்டத்தோடு இரக்கம் இல்லாமல் எடுக்கும் பொருளை விரும்பினால், யானை தானே உண்ணப் புகுந்த நிலம் போலத் தானும் நுகரப் பெறானாய் நாடும் கெடுதலுறும் எனும் பொருள் விளங்க, காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதினினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடு பெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியாக் கல் என் சுற்றமொடு பரிபுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே எனப் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பியைப் பாடிய புறநானூற்றுப் பாடல் தக்க இலக்கியச் சான்றாகும். ---------- இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் (குறள் 564) மக்கள் வாழ்த்திப் போற்றுமாறு அறமுறைப்படி நாடாளும் ஆட்சியாளர், புகழுடனும் பெருமையுடனும் நெடுங்காலம் வாழ்ந்து ஆள்வார். ஆனால், எங்கள் ஆட்சியாளன் கொடுமை யானவன் என்று நாட்டு மக்கள் வேதனை யால் உரைக்கும் பழிச் சொல்லால் ஆள்வோன் ஆளும் காலம் குறைந்து, வாழும் காலமும் குறைந்து விரைவில் கெடுவான். கள்வனல்லாக் கோவலனைக் கள்வனாகக் கருதி கொலைத் தண்டனை விதித்ததால் கண்ணகியின் பழிச்சொல்லுக்கு ஆளானான் பாண்டியன் நெடுஞ்செழியன். ஆகலான் அவன் வாழ்நாள் விரைந்து முடிந்தது என்பதைச் சிலப்பதிகாரம் உணர்த்தும். இரணியன்போல் அரசாண்டான் கொடுங்கோலன் சாரெனும்பேர் இசைந்த பாவி, சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும்; தருமந் தன்னைத் திரணமெனக் கருதிவிட்டான் சார்மூடன் பொய் சூது தீமையெல்லாம் அரணியத்தில் பாம்புகள்போல் மலிந்து வளர்ந்து ஓங்கினவே அந்த நாட்டில். உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை பிணிகள்பல வுண்டு; பொய்யைத் தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்கள் உண்டு, உண்மை சொல்லோர்க் கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு தூக்குண்டே யிறப்ப துண்டு முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே ஆவிகெட முடிவ துண்டு இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் சாரரசன்; இவனைச் சூழ்ந்து சமயமுள படிக்கெல்லாம் பொய் கூறி அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சடசட வென்று சரிந்திட்டார் புயற்காற்றுச் சூறை தன்னில் திடுதிடுமென மரம்விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே எனச் சார் மன்னன் வீழ்ச்சி பற்றிப் பாரதி பாடிய பாடல்கள் விரிந்த விளக்கமாம். காண்பதற்கு எளிதாக வாய்ப்பு வழங்கிக் காணுங்கால் இன்சொல் கூறும் ஆட்சியாளனை உலகு பாராட்டும் என்பதை காட்சிக் கெளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (குறள் 386) என இறைமாட்சியில் கூறிய நெறியைப் பின் பற்றிக் கூறும் குறளே, அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து (குறள் 565) எளிதில், காண முடியாத அருமையும், ஒரு வேளை காண வாய்த்தால் இனிமையற்ற கடு கடுத்த முகத்தோற்றத்துடன் காட்சி வழங்கும் தன்மை வாய்ந்த ஆட்சியாளனுக்குக் கிடைத்த அரசச் செல்வம், மனிதத் தன்மை யற்ற, அச்சமூட்டும் தோற்றம் கொண்ட பேய் பெற்ற பெருஞ்செல்வம் போன்றதாகும். பேம் என்றால் அச்சம் எனப் பொருள் கூறுவார் தொல்காப்பியர். இங்கே, அச்சமூட்டும் தோற்றமும் புனைவும் கொண்டு மிரட்டித் திரிபவனே பேய் எனச் சுட்டப்படுகிறான். பேஎய் கண்டன்ன துடைத்து என்னும் உவமைத் தொடரும், பேயால் காணப்பட்டால் போல்வதொரு குற்றம் உடைத்து எனப் பரிமேலழகரும், பேயைக் கண்ட தொக்க அச்சம் தருதல் உடைத்து என மணக்குடவரும், பேய் செல்வம் பெற்றதற்கு ஒக்கும் எனப் பரிதியாரும் பேயினது நோக்கம் தாக்கிய உருவானது எத்தன்மை உடைத்து மற்று அத்தன்மைத்தாம் எனக் காளிங்கரும், உரைத்துள்ளனர். பழைய உரைகாரர்கள் யாரும் வள்ளுவர் கூறும் பேய் என்றால் என்ன என்பதைக் கூறவே இல்லை. ஆனால், புத்துரை காரர்களில் ஒருவரான புலவர் குழந்தை அவர்கள் அச்சம் தரும் பொருளைக் கண்டது போல அச்சம் தருதலை உடைத்து எனக் கூறுவதால் பேஎய் என்பதற்கு அச்சம் எனப் பொருள் கொண்டது விளங்குகிறது. இளங்குமரனார் வாழ்வியல் உரைக்கு ஒரு முன்னோட்டம் எனும் தலைப்பில் இயல்பல்லா ஒலியும், இயல்பல்லா அசைவும் அச்சம் உண்டாக்குதல், அவையும் இரவில் உண்டாக்குதல் கண்கூடு. ஆதலின் அவ்வழிப்பட்ட, பேய், அலகை என்னும் சொற்கள் தமிழில் உண்டாயின. நாமம் என்பதும் அச்சப் பொருள் தருவதே (குறள் 149) பெயர் என்னும் பொருள் தரல் தமிழில் இல்லை. திருக்குறளில் அச்சப் பொருள் தரும் சொல்லைப் பெயர்ப் பொருளில் குறித்தமை உரைத் தவறாம் (குறள் 360) பேம், நாம், உரும், அச்சம் என்பது (தொல்காப்பியம் உரி.67) எனத் தெளிவு படுத்தியதுடன் இக்குறளிலும் வெறி கொண்ட பேயன் பெற்ற செல்வம் போன்றது என்பதுடன் பேய் - அச்சம்; அச்சமூட்டும் தோற்றமும் புனைவும் கொண்டுதிரிபவனே பேய் என உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்பதைச் சிந்தையில் கொள்வது அறிவுக்குப் பொருத்தமாகும். மண்குளிர் கொள்ளக் காக்கும் மாபொழிந் தரசர் தங்கள் விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயின் கண்குளிர் கொள்ளப் பூக்கும் கடிகயத் தடமும் காவும் தண்குளிர் கொள்ளு மேனும் தான்மிக வெதும்பு மன்றே என்னும் சூளாமணிப் பாடல் ஒருபுடை ஒப்புமை உடையதாம். வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம் என்னை முன்னே கூறி யிழந்தாரா? தம்மையே முன்னம் இழந்து முடித்தென்னைத் தோற்றாரா? சென்று சபையில் இச் செய்தி தெரிந்துவா என்ற வளுங் கூறியிவன்போகிய பின்னர் தன்னந்தனியே தவிக்கு மனத்தாளாய் வன்னங் குலைந்து மலர்விழிகள் நீர்சொரிய உள்ளத்தை அச்சம் உலைவுறுத்தப் பேய் கண்ட பிள்ளையென வீற்றிருந்தாள் எனப் பாஞ்சாலி சபதத்தில் பேய் உவமையைத் தக்க இடத்தில் பயன்படுத்தியுள்ளதையும் எண்ணிப் பார்க்கலாம். பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் எனவும் பாரதி பேசுகிறான். ------------ கடுஞ்சொல்லன் கண்ணல னாயின், நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும் (குறள் 566) அளவிலாச் செல்வம் உடைய ஒருவன் எப்பொழுது இனிமையாகப் பேசுவதை விலக்கிக் கடுமையான சொற்களைப் பேசுகிறவனாகவும் கண் ணோட்டமாகிய அருள் நோக்கு இல்லாதவனாகவும் ஆகி விடுகிறானோ, அப்பொழுதே அவனிடம் பொருந்தி இருந்த பெருஞ்செல்வம் செல்வோம் என்று கூடச் சொல்லாமல் மிக விரைந்து இருந்த இடமும் தெரியாமல் அழிந்து போகும். சொல்லிலும் பார்வையிலும் கடுமையன் செல்வம் விரைந்து கெடும். தேடிய செல்வம் நிலைக்க வேண்டுமானால் கண்ணோட்டம் கொள்க! இன்சொல்லே பேசுக! ஒன்றில் இரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால் வென்று களம் கொண்ட வேல்வேந்தே! சென்றுலாம் ஆழ்கடல்சூழ் வையத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி ஏழ்கடிந்து இன்புற்றிரு எனப் புறப்பொருள் வெண்பாமாலை - பாடாண்திணை - ஓம்படைத் துறை விளக்கப் பாடல் ஏழ் கடிந்து இன்புற்று இரு எனக் கூறியுள்ளதை இணைத்துச் சிந்திக்கலாம். ஒன்று - மெய்யறிவு; இரண்டு - நன்மை, தீமை; மூன்று - பகை, நட்பு, நொதுமல்; நான்கு - யானை, குதிரை, தேர், காலாள் என்னும் படைகள்; ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகள்; ஆறு - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் அரசுறுப்புகள்; ஏழு - வேட்டம், கடுஞ்சொல், மிகுதண்டம், சூது. பொருள் ஈட்டம்; கள், காமம் இவை ஏழு, கடிய வேண்டிய ஏழில் கடுஞ்சொல், மிகுதண்டம் ஆகிய இரண்டைக் கடுஞ் சொல்லன், கண்ணிலன் எனக் கூறி இரண்டையும் விலக்காது கைக் கொண்டவர் கையை விட்டுச் செல்வம் போய் விடும். அவர் கையில் தங்காது என்பதே வள்ளுவர் கருத்து. ---------- கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் (குறள் 567) ஆட்சியாளன் மாற்றாரை மண்டியிடச் செய்யும் பேராற்றல் பொருந்திய படை வலிமையும், துணை வலிமையும், தன் வலிமையும், அரண் வலிமையும், பொருள் வலியும் மிக்குடையவனாய் இருந்தும், அவன் வாய் பேசும் மொழி கடுமையானதாகவும், குற்றவாளிகட்கு அவன் வழங்கும் தண்டனை வரம்பு கடந்ததாகவுமே அமையுமானால், அவன்பால் பொருந்தியுள்ள பல்வகை வலிய ஆற்றல் என்னும் இரும்பினை எளிதாகத் தேய்த்து அழிக்கும் அரம் போல்வன ஆகும். ஆற்றில் மிதந்து வந்த மாங்கனியை எடுத்து உண்டவளுக்குக் கொலைத் தண்டனை வழங்கிய ஆட்சி உருப்படுமா? அளவு கடந்த சினம், காமம், மிகுந்த கண்ணோட்டம், அச்சம், பொய்யுரை அன்பு மிக உடைமை, இவை போன்ற பிறவும், இவ்வுலகத்தே அறநெறியில் செயல்படும் ஆட்சியாளனின் அரச ஆணைச் சக்கரத்தினைத் தடுக்கும் தீங்குகளாகும். அத்தீங்குகள் நீங்க நற்செயல்கைளைச் செய்து, கடலும் காடும் பல பயன்களைக் கொடுக்க, மக்கள் பிறரை வருத்தாமலும், பிறர் பொருட்களை விரும்பாமலும், குற்றமற்ற அறிவினராய் நன்றாக நடந்து, தம் துணைவி யரைப் பிரியாமல் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு, நோயில்லாமல் முதுமையடைந்த உடலொடு நீங்கும்படி, நெடுங்காலம் ஆட்சி புரிந்த, வலியவர்களின் மரபில் வந்தவனே! என நல்லாட்சியால் கிட்டும் நலத்தையும் கொடுங்கோல் ஆட்சியால் நாடு அடையும் கேட்டி னையும் விளக்கும். சினனே, காமம் கழிகண் ணோட்டம் அச்சம்பொய்ச்சொல், அன்புமிக உடைமை தெறல்கடு மையொடு பிறவும் இவ் வுலகத்து அறம்தெரி திகிரிக்கு வழிஅடை ஆகும்; தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து கடலும் கானமும் பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது மையில் அறிவினர் செவ்விதின் நடந்துதம் அமர்துணைப் பிரியாது, பாத்துண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய ஊழி உய்த்த உரவோர் உம்பல் எனப், பாலைக் கௌதமனார், பல்யானை செல்கெழு குட்டுவனைப் பற்றிப் பாடிய பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தின் இரண்டாம் பாடலில் அமைந்த முதல் பதினொரு அடிகளும் குறளுக்கு நல்ல விளக்கமாய் அமைந்துள்ளது. தன் குற்றத்தை நீக்கான் பகைவனை வெல்லான்; பகைவன் இன்றித் தானே அழிவான். இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு (குறள் 568) எனும் குறளைச் சிந்திக்க முற்படுமுன் நம் நினைவில், வெகுளாமை அதிகாரக் குறள்களில் ஒன்றான, சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று (குறள் 307) எனும் குறள் முன் நிற்கிறது. சினம் கொண்டவன் கெடுவது உறுதி. ஆளுவோரைப் பணிச்சீர்த்தி கண்டு பாராட்டுவோர் இருப்பது போல், பாதிப்புக்கு ஆளானவர் பழிக்கவும் செய்வர். சிலரின் அணுகுமுறை ஆட்சியாளரை உணர்ச்சி வயப்படச் செய்யலாம். ஆனால் பொறுப்பில் உள்ளவர்கள் மிக விரைவில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, தன்னிலைக்கு வந்துவிடவேண்டும். வினைவிளை காலம் ஆதலின் யாவதும் சினையலர் வேம்பன் தேரா னாகி ஊர்க்காப் பாளரைக் கூவி ஈங்கென் தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கென என அமைச்சர் முதலிய அரசியல் சுற்றத்தினரிடம் கலந்து ஆராயாமல் சினமே பற்றுக் கோடாகக் கொண்டு சீற்றத்துடன் குற்றமற்ற கோவலனைக் கள்வன் என நம்பி பாண்டியன் நெடுஞ்செழியன் கொலைத் தண்டனை வழங்கியதால் வளையாத செங்கோல் வளைந்தது. அவ்வொரு கொலைத் தண்டனையால் அவன் அரச வாழ்வு மட்டுமல்ல, மண்ணக வாழ்வும் முடிவுற்றது. பொறுப்பான பணிகளை எல்லாம் ஆட்சியாளர்கள் தம் அரசியல் சுற்றத்தினருடன் கலந்து ஆராய்ந்தே தெளிவான முடிவினை எடுக்க வேண்டும். அதன் பின்னரே முறைப்படி நடைமுறைப் படுத்த, சட்டநெறிப் படி ஆணை வழங்க வேண்டும். அத்தகைய பொறுப்பான அணுகுமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல், தன் சினத்தின் வழியே வந்த சீற்றத்தோடு செயலாற்றினால் அவன் ஆட்சிக்காலம் குறுகிவிடும்; நீடித்தாலும் யாருக்கும் எத்தகைய நற்பயனும் விளையாது. ----------- எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125) என அடக்க முடைமை அதிகாரத்திலும் வியவற்க எஞ்ஞான்றும் தன்னை (குறள் 439) எனக் குற்றங் கடிதல் அதிகாரத்திலும் பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து (குறள் 978) பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் (குறள் 979) எனப் பெருமை அதிகாரத்திலும், தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு (குறள் 201) எனத் தீவினையச்சம் என்னும் அதிகாரத்திலும் அடங்காமை, தற் பெருமை, ஆணவம் இறுமாப்பு, செருக்கு எவர்க்கும் கூடாது என வலியுறுத்துவதுடன், உயர்நிலையில் இருப்போரின் செருக்கின்மை ஆகிய அடக்கமும் அவர்கட்கு மேலும் ஒரு செல்வமாகும் என்னும் வள்ளுவர் நோக்கையும் போக்கையும் மனத்தில் கொண்டு, இனிக் குறளுக்கு வருவோம். செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் (குறள் 569) நானே கடவுள்; நானே திருப்பிறப்பு, நானே மன்னன்; எனக்கு நிகர் எவனும் இல்லை; நானே ஒன்று; மற்றவர்கள் எல்லாம் மதிப்பற்ற வெறும் (0) சுழிகள்; நான் நிற்கச் சொன்னால் நிற்க வேண்டும். இரு என்றால் இருக்க வேண்டும். ஓடு என்றால் ஓட வேண்டும். நான் எதைச் செய்தாலும் யாரும் ஏன்? என்று கேட்கக் கூடாது என ஆணவத்தின் உச்சத்தில் இருப்போர் ஆட்சியாளராய் இருந்தால் அவர்கள் நாளும் பொழுதும் தன்குடி மக்கள் அஞ்சுத் தக்க வினைகளையே செய்வர். ஆனால் அத்தகையோர் ஆட்சி நீடிக்காது, விரைந்து கெடும். ஆகவே, செருக்கு இடை இடையே தலை காட்டுமாயினும்; விரைவில் அடக்கி சமநிலைக்கு வந்துவிட வேண்டும். தம்மைவிட அறிவிலும், ஆற்றலிலும், பண்பிலும், சான்றாண்மையிலும் உயர்ந்த பெருமக்களை மதித்துப் போற்ற வேண்டும். நம்மிடம் உள்ள செருக்கு ஒரு குற்றவாளி; அவனை வெளியில் இயங்க விடாது சிறைப்படுத்த வேண்டும்; என்பது வள்ளுவர் ஆணை. நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை; தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் (குறள் 460) என்பது சிற்றினம் சேராமை அதிகாரத்தில் வள்ளுவர் காட்டும் வழி. பெரியாரைத் துணைக் கோடல் அதிகாரத்தில் அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் (குறள் 441) என வேண்டுவது தனி மனிதனைவிட நாடாள்வோனுக்கு கட்டாயம் வேண்டும். நாடாள்வோன் நெறிமுறை இன்றி நாடாளும் கொடியவனாய் இருக் கிறான். அவனுக்குத் துணையாக இருப்பவர்கள் அறநெறியைக் கற்காத மூடர்கள். அப்படியானால் நாட்டு மக்களின் பாரத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டிய ஆட்சியாளரே நாட்டுக்குப் பாரம் ஆவர். பாரம் சுமக்க வேண்டி யவரே பாரமானால் நாடு என்னாகும் எனச் சிந்திக்கத்தூண்டும் குறளே, கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல், அதுவல்ல தில்லை நிலக்குப் பொறை (குறள் 570) நாட்டுக்குப் பாரமாம் ஆட்சி கடுகி ஒழியட்டும். நரி வெரூஉம் தலையார், சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப் பெருஞ் சேரல் இரும்பொறையை அறிவுறுத்தி வேண்டும். புறநானூற்றுப் பாடலில், அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல் குழுவி கொள்பவரின் ஓம்புமதி அளிதோ தானேஅது பெறலருங் குரைத்தே என வேண்டியதில் தவிர்க்க வேண்டியதைச் சுட்டியதுடன் கைக்கொள்ள வேண்டியதையும் இணைத்து உணர்த்தியது தக்க சான்றாகும். தீயினம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயின் போயினம் படர்ந்து வாழும் புகலிடம் இன்மை யாலே வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய் வையகம் படரு மன்றே என்னும் சூளாமணிப் பாடலும் ஒப்பு நோக்கத் தக்கதாகும்! தக்காங்கு நாடுக! ஒத்தாங்கு ஒறுக்க! தலைச்செல்லா வண்ணத்தால் நாடுக! ஒறுக்க கடிதோச்சுக! மெல்ல எறிக! நெடிதாக்கம் நீங்காமை வேண்டுக! வெருவந்த செய்து ஒழுகேல் வெங்கோலன் விரைந்து கெடுவான். அருஞ்செவ்வியனாகவும் இன்னா முகத்தனாகவும் இராதே! இறை கடியன் என்னும் இன்னாச் சொல்லுக்கு ஆளாகாததே பேய் கண்ட பெருஞ்செல்வமாக இருக்கலாகாது கடுஞ்சொல்லனாக இராதே! கண்ணோட்டம் இல்லாதவனாய் இராதே கடுமொழியும் கையிகந்த தண்டமும் ஆட்சியை அழிக்கும் இனத் தாற்றி எண்ணுக! சினத் தாற்றிச் சீறாதே செருக்கைச் சிறைவை கடுங்கோல் கல்லார் பிணிக்கம் கடுங்கோலன் நிலத்திற்குப் பாரம் ------------ 58. கண்ணோட்டம் அன்பை அடைத்து வைக்கும் கதவு இல்லை; அன்புடையார் கண்ணீரே அன்பைக் காட்டி விடும் என அன்புடைமை அதிகாரத்தில், அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்; ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். (குறள் 71) எனவும் கூறும் வள்ளுவர், மக்கள் பிறவிக்கு அறிவியல் கலையியல் என்று சொல்லப்படும் இரண்டும் கண்கள் ஆகும் எனவும் கற்றவரே கண்ணுடையவர் என்றும், கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்ணுடையரே ஆவர் என்பதையும், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு (குறள் 392) கண்ணுடையர் என்பார் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (குறள் 393) எனக் கல்வி அதிகாரத்திலும், கண்ட அளவில் உட்கருத்தை அறிய முடியவில்லை யானால், அவன் உறுப்புகளுள் கண் என்ன பயனுடையது எனவும், கண் காட்டும் குறிப்பை உணர முடிந்தோர், கண்ணைப் பார்த்தே பகைமையையும் நட்பையும் எளிதில் கண்டு விடுவர் என்பதனை, குறிப்பிற் குறிப்புணரா வாயின், உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் (குறள் 705) பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார் பெறின் (குறள் 709) எனும் குறிப்பறிதல் அதிகாரக் குறள்கள் வழியும், அறிவறிந்த பெரியவர் கண்போல் காட்டுபவர், ஆதலால், அவரை ஆராய்ந்து துணையாகக் கொள்ள வேண்டும் என்பதை, சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் (குறள் 445) என்னும் பெரியாரைத் துணைக் கோடல் அதிகாரக் குறள் வழியும், கண் வெறும் பார்வைப் பொறி மட்டுமன்று என்பதையும் கண் அன்பின் ஊற்று எனவும் கல்வியின் கொள்கலன் எனவும் குறிப்பறியும் நுண்பொறி எனவும் விளக்கியதுடன் அமையாது கண்ணின் பெருந்தகைமையை விளக்க எடுத்துக் கொண்ட அதிகாரமே கண்ணோட்டம் ஆகும். 1. தாய்தன் குழந்தையைப் பார்த்து, கண்ணே! மணியே எனக் கொஞ்சுவாள். 2. அன்புக்கினிய நண்பரை - கண்போல் நண்பின் கேளிர் என்கிறது புறநானூறு 71. 3. மனுநீதி கண்ட சோழனை, மண்ணில் வாழ்தரும் மன்னுயிர்கட் கெலாம் கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன் என்கிறார் சேக்கிழார். 4. தமிழ்த் தாயைக் கரந்தைக் கவியரசு, கண்ணே கண்மணியே! கட்புலஞ் சேர் தேவி எனப் போற்றி வாழ்த்துகிறார். 5. நாவுக்கரசர் திருவே, என் செல்வமே எனத் தொடங்கும் பாடலில், கண்ணே! கண்மணியே மணியாடு பாவாய் என இறைவனைக் குறித்தார். 6. மண்டு பிணியால் வருந்தும் பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண் எனவும் 7. மின்னுமணி பூணும் பிறவுறுப்பு பொன்னே யதுபுனையாக் காணும் கண் ஒக்குமோ காண் எனவும் நன்னெறியும் கண்ணைப் போற்றுவதையும் காணும் நாம் வள்ளுவரின் கண்ணோட்டத்தைக் காண்போம். கண்ணோட்டம் - சட்ட நெறியன்று; அப்படியானால் சட்ட மீறலா எனின் அதுவுமன்று. பின் அது எது? வாழ்வியல் நுண்மை வாய்ந்த அறநெறி. வேண்டியவர்களைக் கண்டால் அவர் சொன்னதை மறுக்க முடியாமை என்கிறார் தமிழ் கா. சு. இரக்கம் என்கிறார் வ. சுப. மாணிக்கனார். அன்பு நோக்கு எனக் கருதுபவர் மாணிக்க வாசகன் அருட் குணத்தால் பழக்க முடையார் சொல்லை மறுக்க முடியா மல் இரக்கங்காட்டுதல் என விளக்கம் காட்டுபவர் புலவர், குழந்தை. பழந்தொடர்பால் ஒத்துப் போகும் தன்மை எனும் கருத்துரைப்பவர் இரா. இளங்குமரனார். தன் உறவினரும் நண்பரும் தன்னொடு பழகியவரும், தன்னொடு தொடர்புடையவரும், தனக்கு உதவினவரும் எளிய வரும் ஆனவர்க்கு நன்மை செய்வதை மறுக்க முடியாத அன்பு. இது அவரைக் கண்டவுடன் அவர் மீது மனம் விரைந்தோடுவது பற்றிக் கண்ணோட்டம் எனப்பட்டது எனக் கண்ணோட்டத்திற்கு விரிவான விளக்கம் தருகிறார் பாவாணர். கண் - புகைப்படக் கருவியினும் மேலான கருவி. எங்கும் பாரடா இப்புவி மக்களைப் பாரடா உனது மானுடப் பரப்பைப் பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம் என்குலம் என்றுன்னைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்! அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை! அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு பிரிவிலை எங்கும் பேதமிலை உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்! புகல்வேன்! உடைமை மக்களுக்குப் பொது என்னும் பாவேந்தர் பாடல் வரிகள் திருவள்ளுவரின் கண்ணோட்டத் திற்குக் கண்ணான விளக்கமாய் அமைந்துள்ளது. எவரையும் வெறுக்காமல், பகைக்காமல், புண்படுத்தாமல், துன்புறுத் தாமல், எவரையும் எளியவராய், மெலியவராய்க், கீழானவராய்க் கருதாமல், பெருந்தகைமையோடும் பரந்த உள்ளத்துடனும் கண்டு, அவர் நலம் பேணல் கண்ணோட்டத்தின் பாற்பட்டதே ஆகும். நம்முடைய எந்தச் செயலாலும் மற்றவர்கட்குத் தொல்லையோ, துயரமோ, இழப்போ ஏற்படாமல் பார்த்து நடந்து கொள்ள வேண்டும். எவ்வுயிரையும் இளிவு செய்யக் கூடாது. தந்நலக் காரர்களால், குறைபாடு உடையவர்களால் உலக இயக்கம் பாதிக்கப்படுவது போல்; நெகழ்ச்சி இன்றி முறுக்கேறிய நரம்பு போலவும், நூல்பிடித்தது போல், கண்ணை மூடிக் கொண்டு சட்டத்தைப் பின்பற்று கிறவர்களாலும் உலக இயக்கம் பாதிப்புக்கு உள்ளாகும். கி. பி. 12ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் செயிண்ட் பிரான்சிசு ஆப் அசிசி என்ற முனிவர் கந்தல் துணி உடுத்திப் பிச்சைக் காரனைப் போல் வாழ்ந்தார். அவர் ஆண்டவனை வணங்கி வேண்டுவது. ஆண்டவனே! உனது திருவருளுக்கு உரிய தொரு கருவியாக என்னை ஆக்கிவிடு! எங்கே பகைமை இருக்கிறதோ! அங்கே அன்பு விதையை விதைக் கட்டும். தீங்கிழைக்கப்பட்டால் மன்னிக் கட்டும். சந்தேகம் உள்ள இடத்தில் நம்பிக்கை ஊட்டட்டும். அப்படியே சோர்வுற்ற போது நம்பிக்கை அளிக்கட்டும். துக்கமுள்ள இடத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும். அண்டர் நாயக! ஆறுதல் பெறுவதற்குப் பதில் ஆறுதல் அளிப்பேன்; அறியப்படுவதற்குப் பதில் அறிந்து கொள்வேன்! நேசிக்கப்படுவதற்கு பதில் நேசிப்பேன்; எப்பொழுதும் நாம் கொடுப்பதிலே தான் நாம் பெறுகிறோம். மன்னிப்பு அளிப்பதிலே தான் நாம் பெறுகிறோம். மரணத்திலே தான் நித்திய வாழ்வு பெறுகிறோம் எனக் கூறி வணங்குவதை வழக்கமாகக் கொண்டவர் என்பது கண்ணோட்டத்திற்கு நல்ல முன்னோட்டமாகும். ---------- பகையாய் இருந்தாரையும் நண்பர் ஆக்கிக் கொள்ளும் பண்புடை யவனின் பெருந்தன்மையால் உலகம் நிலைத்துள்ளது என்னும் பொருள் புலப்படுமாறு, பகைத் திறம் தெரிதல் அதிகாரத்தில் பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற் றுலகு (குறள் 874) எனவும், உலக நடைமுறைப் பண்புடையவர்களிடத்துப் பொருந்தி இருப்ப தால், உலக இயக்கம் தடையின்றி இயங்குகிறது. இல்லையானால் அது மண்ணுக்குள் புகுந்து அழிந்து விடும் என்பதை, பண்புடைமை அதிகாரத்தில், பண்புடையார்ப் பட்டுண் டுலகம்; அதுஇன்றேல் பண்புக்கு மாய்வது மன் (குறள் 996) எனக் கூறியாங்கு உலகம் நிலை பெறுதற்குக் காரணம் கூறும் முக் குறள்களில் ஒன்றே, கண்ணோட்ட மென்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு (குறள் 571) இதுவே கண்ணோட்டத்தில் முதற் குறளாகும். உலகின் தடைபடா ஓட்டத்திற்கும் இதுவே முதன்மையான தாகும். கண்ணோட்டம் என்னும் உயர்ந்த பண்பைத் திருவள்ளுவர் கழிபெருங் காரிகை எனக் குறிப்பிடும் அழகே தனியழகு. எண்சாண் உடம்பிற்குத் தலையே தனிச் சிறப்புடையது. தலையில் உள்ள பொறிகளில் கண் முதன்மை இடம் பெறுகிறது. அது வெறும் பொருள்களைப் பார்க்கும் கண்ணாக மட்டும் இராமல் எழுத்துகளைப் பார்க்கும் கண்ணாக அமைவது சிறப்பு. அத்துடன் முகத்தைப் பார்த்தே அகத்தை உணரும் தன்மை உடையதாக அமையும் கண் அதனினும் சிறப்புக்குரியது. அத்துடன் கண்ணோட்டம் என்னும் அன்பும் அருளும் இரக்கமும் கலந்த மனிதத் தன்மை அமைந்த மனவள நோக்கு கண்ணுக்கு அமையுமானால் அதுவே கண்ணோட்டமாகும். அக்கண்ணோட்டமே மனிதனுக்கு மிகப் பெரிய அழகும் நன்மையும் தருவது. அப்பண்பே வீழும் உலகையும் வீழாமல் காக்கும் வல்லமை படைத்ததாகும். திருவள்ளுவர், நபிகள் நாயகம், இயேசு பெருமான், புத்தர், வள்ளலார், காந்தியடிகள், ஆபிரகாம் லிங்கன், பிளாரன்சு நைட்டிங்கேல், அன்னை தெரசா போன்ற பெரு மக்கள் எல்லாம் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை பொருந்திய நன்மக்களாவர். அத்தகையவர்களால் தான் உலகம் நிலை பெற்றிருக்கின்றது. 1909 ஆம் ஆண்டில் சர். சி. வி. இராமன் இரங்கூனில் நாணய மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். அப்பொழுது ஒரு பர்மாக்காரர், ஒரு தீ நேர்ச்சியில் சேதமாகிக் கருகிப்போன பல கத்தை பணத்தாள்களைக் கொண்டு வந்தார். அதில் உள்ள எண்கள் சரியாகத் தெரியவில்லை. ஆகையால் சர். சி. வி. இராமன் பல வாரங்கள் இடை விடாது அறிவியல் முறையில் ஆராய்ந்து, அதில் மறைந்திருந்த எண்களைக் கண்டுபிடித்தார். அதன் காரணமாக அவர் உரிய தொகை பெறச் செய்த உதவியே கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகையில் ஒரு வகையாகும். அனைவரும் கண்ணோட்டம் கொள்வோம்! உலகை நிலை பெறச் செய்வோம். எவரும் அறிந்து விடுவாரோ எனப் புறத்தே பார்த்துக் கொண்டு, கீழான பழிச்சொல் சொல்பவனையும், தனக்கு அறம் என்று கருதித்தான் இம்மண் சுமக்கின்றதோ? என்னும் பொருளில் அறனோக்கி ஆற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை (குறள் 189) எனப் புறங்கூறாமை அதிகாரத்திலும், கடுமையான ஆட்சியானது அஞ்சத் தக்கவற்றைச் சுற்றமாகக் கொள்ளும் அத்தகைய ஆட்சியல்லது பிறிதொரு பெரும்பாரம் நிலத்திற்கு இல்லை என்பதை வெருவந்த செய்யாமை என்னும் அதிகாரத்தில், கல்லார் பிணிக்கும் கடுங்கோல், அதுவல்ல தில்லை நிலக்குப் பொறை (குறள் 570) என்னும் குறள் வழியும்; பொருள் தேடுவதையே விரும்பி அப்பொருட் பயனாம் புகழை விரும்பாத மக்கள் மண்ணில் பிறத்தல் இந்நிலத்திற்கும் பாரம் என்னும் கருத்துப் புலப்படுமாறு, ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை (குறள் 1003) என நன்றியில் செல்வத்திலும், பிறந்த மண்ணுக்குப் பயனின்றிப் பாரமாக அமைபவர்களைக் கூறியாங்கு கூறும் கண்ணோட்டக் குறளே, கண்ணோட்டத் துள்ள துலகியல்; அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை (குறள் 572) ஆகும். பசியோடு இருப்பவரைக் கண்ணால் காண்கிறோம்; அக்காட்சி நம் மனத்தில் பதிகிறது. எப்படியாவது அவர்களை உண்ண வைக்க மனம் ஏவுகிறது. அதுவே கண்ணோட்டத்தின் செயல், வறியவர், நோயர், ஊனமுற்றோர், அடிமைகள், கல்லா தோர், வேலை கிடைக்காதவர், தொல்லைப் படுவோர், துயரப் படுவோரைக் காணுகிறோம். அவர்களிடம் ஏதேனும் குற்றங் குறைகள் இருக்கலாம். அதைக் கருத்தில் கொள்ளாமல், உதவி பெறுதற்கு உரியவர் என்பதை மட்டும் கருதி, தக்க வழியில் உதவ முற்படுதல் கண்ணோட்டமாகும். உலக வாழ்க்கைச் சிறப்பு கண்ணோட்டத்தைப் பொருத்தே அமைவ தால் அக்கண்ணோட்டம் இல்லாதவர் இவ்வுலகத்தில் இருப்பது மாநிலத் திற்கு வீண்சுமையே யன்றி ஒரு பயனும் இல்லாததே ஆகும். கண்ணோட்டத்தால் உலகம் முறையே இயங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணோட்டம் இல்லாதவர் உலகுக்குப் பாரமே ஆவர். உலகினிலே இருவகை மாந்தர்தான் உண்டு; அவரோ, பிறரைக் கை தூக்கிவிடுவார்; பிறரால் தூக்கப்படுவார். எங்கு சென்றாலும் சீர்தூக்கிப் பார்! இந்த இருவகைப் பிரிவினையே காண்பாய்! ஒருவர் தூக்குவார்; இருபதின்மர் தூக்கப்படுவார்! நீ எந்தப் பகுப்பில் சேர்ந்து சிறப்புறுகிறாய்? தூக்குவோர் சுமையைக் குறைக்கிறாயா? தூக்கப்படுவோருடன் சேர்ந்து துன்புறுகிறாயா? என வினா எழுப்புகிறார் வெ. சாமிநாத சர்மா! நாம் பூமிக்குப் பாரமாய் இல்லாமல்! பாரம் சுமப்பவர்களாய் இருக்க வேண்டும். பண்என்னாம் பாடற் கியைபின்றேன்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் (குறள் 573) மிதியடி நல்ல மிதியடிதான் தரமான தோலால் அழகாகச் செய்யப் பட்டுள்ளது. ஆனால் காலுக்குப் பொருந்தவில்லையாயின் மிதியடியால் என்ன பயன்? நல்ல நூலில் நெய்த துணியில் இருந்து அழகாக வடிவமைக்கப் பட்ட அருமையான உடை. ஆனால் உடலுக்குப் பொருந்த வில்லை யானால் உடையால் என்ன பயன்? விலையை விட, அழகைவிட, மிக முக்கியம் அளவு என்பதை மனத்தில் வைத்துக் கொண்டு குறளை மீண்டும் படிப்போம். பாடற்கு இயை பின்றேல் பண் என்னாம்? கண்ணோட்டம் இல்லாத கண் என்னாம்? இசைக்குப் பாடலா? பாடலுக்கு இசையா? இசை பாடலின் தன்மைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும். பாடலின் பொருளுக்கு ஏற்பவும், உணர் விற்கு ஏற்பவும் சுவைக்கு ஏற்றவாறும் இசை அமைய வேண்டும். இல்லை யேல் பாடலின் நோக்கே மாறுபடுவதுடன் பிழைபடவும் வாய்ப்பு உண்டு. ஆகவே பண் செவிக்கு இன்பந் தருவதுடன் பாடுபவர் கேட்பவர் இருவருக்கும் நிறைவையும் பயனையும் தருதல் வேண்டும். மனத்தில் பாடற் கருத்து நீங்காது இடம் பெறுவதுடன், வாழ்விற்கு வழி காட்டுதலாய் அமைய வேண்டும். அதுவே பாடலைக் கேட்பதால் விளையும் பயன். கண் பார்வை இல்லாதவர்களிலும் பீடும் பெருமையும் துலங்க வாழ்ந்தவர்களும், வாழ்கிறவர்களும் உள்ளனர். கண் ணொளியுடன் பிறந்து பல்வேறு காரணங்களால் கண்ணொளியை இழந்தவர்களும் உலகில் உள்ளனர். படிப்படியே ஒளி குன்றியவர்களும் உள்ளனர். ஆனால் ஒளி யுடன் கூடிய கண்ணுடையோர்கள் எண்ணிக்கையே மிகுதி. பொறி யின்மை யார்க்கும் பழியன்று என்பதே குறள் நெறி! கண்ணுடையவர்களாக வாழ்கிறோமா? அல்லது கண்ணற்றவர் களாக வாழ்கிறோமா? என்பது முதன்மையன்று. ஆனால் அனைவரும் கண்ணோட்டம் உடையவர்களாய் வாழ வேண்டும். கண் அளிக்கும் பயன்களிலும் சிறப்புகளிலும் மிகவுயர்ந்தது கண் ணோட்டம். ஆகவே, திருவள்ளுவர் கண்ணோட்டம் இல்லாதவர்களிடம் பொருந்தி யிருக்கும் கண்கள் பயனற்ற கண்கள் என்கிறார். பணத்தால், பதவியால், மேல் நிலையில் இருப்பவர் நமக்கு அறிமுகம் ஆனவர் என்றால் காணச் செல்கிறோம். சில வேளைகளில் அவர்கள் நடந்து கொள்ளும் முறை நமக்குப் பிடிக்கவில்லை. அப்பொழுது நாம் பதவி, பணம் கண்ணை மறைத்து விட்டது என்றும் கண்தெரியவில்லை எனவும், கூறக் காரணம். கண்ணோட்டம் இன்மையே ஆகும். உலகம் கண் உடையவர்களால் நிரம்புவதுடன் கண்ணோட்டம் உடையவர்களால் நிரம்ப வேண்டும். ----------- உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் (குறள் 574) துன்பத்திற்கு ஆட்பட்டு அழுது புலம்புகிறவர்களைக் காண நேரிடுகிறது. பசியால் துடிப்பவர்களை, நோயால் வருந்துபவர்களைக் காண நேர்கிறது. அவர்கட்கு முழு மீட்சிதர இயலவில்லை. ஆயினும் உடனடியாக ஒரு சிற்றளவு உதவி கூடச் செய்ய நம்மனம் இடம் தரவில்லையானால் கண்கள் இக்கொடுங்காட்சியைக் கண்டதனால் என்ன பயன்? என வள்ளுவப் பெருந்தகை சிந்திக்கத் தூண்டுகிறார். காட்ட வேண்டிய நேரத்தில் காட்ட வேண்டிய சிற்றளவுக் கண்ணோட்டம் கூட காட்டாமல் எத்தகைய உணர்ச்சியும் இன்றி முகத்தில் ஒன்றுக்கு இரண்டு கண்கள் இருப்பதனால் யாருக்கு என்ன நன்மை செய்யப் போகிறது. ஒருவருக்கும் எத்தகைய பயனும் இல்லை. பயனற்ற பொறி இருப்பதை விட இல்லாதிருப்பது நல்லது. மனிதன் தன்னுடைய நலத்தை நாடிக் கொள்வது நல்லது தான். பிறர் துன்பங்கண்டு, கண்ணை மூடிக் கொள்வதோ? உடன் பிறந்தவர்களைக் கூட அயலாராக நோக்குவதோ? தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு தானே என வேதாந்தம் பேசுபவர்களையும் வள்ளுவர் வெறுக்கிறார். ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கட்குக் கண்கள் இருந்து என்ன பயன் என வினவுகிறார். 1946 செப்டம்பர் 10ஆம் நாள் அன்னை தெரசா பார்சிலிங் சென்று கொண்டிருந்தார். வழியில் கண்ட துயரக் காட்சி அவர் மனத்தை உருக்கியது. ஆதரிப்பார் இல்லாத அகதிகள் - உண்ண உணவின்றி அவதிப்பட்டனர்; உடுத்த உடையின்றித் தவித்தனர்; நோய் தீர்க்க மருந்தின்றி அழிந்தனர். இத்துயரக் காட்சி மனத்தை உருக்கியது; எளியவர் துன்பம் துடைப்பது கடமை, அதுவே ஆண்டவன் கட்டளை என உறுதி கொண்டார். கண்ணோட்டத்தால் கண் பெற்ற பயனை உற்றார். உலகம் உயர் நலம் பெற்றது. கண்ணோட்டம் என்னும் அருளொளி பெற்ற கண்களே கண்கள் ஆகும். கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம், அஃதின்றேல் புண்னென் றுணரப் படும் (குறள் 575) எனக் கண்ணைப் புண்ணாக உணர வைத்த குறள். கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (குறள் 393) கல்வி அதிகாரத்தில் அமைத்துள்ளார். கண்ணுடையவர் என்று அறிவாளர்களால் சொல்லப்படுபவர் கற்றோரே. மற்றைக் கல்லாதவரோ, முகத்தில் இரண்டு கண்ணுடை யவராய் இருப்பினும், அவரைக் கண்ணுடையவர் கணக்கில் சேர்க்காது புண்ணுடையவர் என்றே கணக்கிட வேண்டும். தொண்டு செய்யத் தூண்டும் அருள் நிறை நோக்கே கண்ணோட்டம். நல்லுணர்வற்று ஒருவர் படும் துயரத்தைக் கண் பார்த்தும் பாராதது போல் இருக்கிறது என்றால்; அக் கண்ணால் கண்ணுடையவர்கட்கு எத்தகைய பயனும் இல்லை எனக் கூறி அமையாது பிறர் துன்பம் கண்டு துடித்துக் கண்ணீர் கூட வடிக்காத கண் உரியவனைத் துன்பத்தில் ஆழ்த்தி, வேதனைப்பட்டு, துடித்து துடித்துத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழவைக்கும் புண் என வேதனையுடன் கூறுகிறார். பெறற்கரிய பெரும் பேறாம் மானிடப் பிறப்பு உற்று, குறைவற்ற ஒளிதாங்கிய கண்களைப் பெற்ற மனிதர்களே! உங்கள் கண்களை கண்ணோட்டத்தால் அழகுக் கண்கள் ஆக்குங்கள்! புண்கள் ஆக்கி வேதனைப் படாதீர்கள் என உரிமையுடனும் உள்ளன்புடனும் வேண்டும் குறளே, கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம், அஃதின்றேல் புண்ணென் றுணரப் படும் (குறள் 575) என்பதாகும். கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் என்ற சொல்லாட்சி நினைந்து நினைந்து போற்றத் தக்கதாகும். அணிகலம் பூட்டி மகிழ, அழகு பார்க்க ஆசையா? அப்படியானால் கண்ணுக்குப் பூட்டி மகிழுங்கள்! அவ்வணிகலம் கண்ணோட்டம் என்னும் பண்பியல் அணியாக இருக்கட்டும். அது உரிய வர்க்குப் பெருமை சேர்க்கும். நாட்டிற்கு நலம் சேர்க்கும். இக்குறள் காட்டும் நோக்கில், கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம்; காமுற்ற பெண்ணுக்கணிகலம் நாணுடைமை; நண்ணும் மறுமைக் கணிகலம் கல்வி, இம் மூன்றும் குறியுடையார் கண்ணே யுள எனத் திரிகடுகப் பாடல் அதன் அமைப்புக்கு ஏற்ப மூன்று அணிகலன் களைப் பூட்டி மகிழ வேண்டுவதையும் சிந்தனையில் கொள்வோம். அன்பைத் தன்னிடத்துக் கொள்ளாதவர் வாழ்வு, வலிய பாறைமேல் பட்ட மரத்தை ஊன்றி, அது வளரும் என்று எதிர் பார்ப்பது போன்றது, என்பதை அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று (குறள் 78) எனும் அன்புடைமை அதிகாரக் குறள் வழியும், மனவூக்கமே அழியாச்செல்வம் ஊக்கம் இல்லாதவர் மரம் போன்றவர் என்பதை, உரமொருவற் குள்ள வெறுக்கை; அஃதில்லார் மரம்,மக்க ளாதலே வேறு (குறள் 600) எனும் ஊக்கமுடைமை அதிகாரக் குறள் வழியும், மக்களியல்பு இல்லாதவர் கூர்மையான அறிவுடையவராய் இருப்பினும் மரம் போன்றவரே என்பதை அரம் போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர் (குறள் 997) எனப் பண்புடைமை அதிகாரக் குறள் வழியாகவும், மரம் அன்பற்றது; மரம் ஊக்கமற்றது; மரம் பண்பற்றது என்னும் பொருளில் உவமை கூறி எடுத்த பொருளை இனிதே விளங்கியாங்கு விளக்க முற்படும் குறளே, மண்ணோ டியைந்த மரத்தனையர், கண்ணோ டியைந்துகண் ணோடா தவர் (குறள் 576) ஆகும். மரங்களெல்லாம் மண்ணோடு பொருந்தி நின்று வளர்கின்றன. மக்கள் அதனை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் மரத்திற்கு இயக்கம் இல்லை. அதனாலேயே காலோ கையோ உணர்ச்சியற்றுப் போனால் மரத்துப் போய்விட்டது எனக் கூறும் வழக்கு ஏற்பட்டுள்ளது. மனிதன் நல்லுணர்வுடன் உதவும் பண்பாளனாய் விளங்க வேண்டும் என விரும்பும் வள்ளுவப் பெருந்தகை நம் கண் மண்ணல்ல என உணர வைப்பதுடன் மாந்தப் பிறப்பாகிய ஆறறிவுப் பிறப்பை ஓரறிவுப் பிறப்பாகிய மரமாகக் கீழ்மைப்படுத்தி விடாதீர்கள் என வேண்டும் நோக்கத்துடன் தான். கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் மண்ணோடு பொருந்தி நிற்கும் மரத்தைப் போன்றவர் என்கிறார். நாம் மரம் போன்றவர் அல்லர்; நாம் மக்களே என்பதைக் கண்ணோட்டத்தால் காட்டி உறுதிப்படுத்த வேண்டும். மாந்தப் பிறப்பை இழிந்த பிறப்பாகக் காட்ட விரும்பாத திருவள்ளுவர், மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறி களையும் பெற்று விளங்கும் பேற்றிற்கு உரியவர்கள் மக்கள். அதனை எல்லாரும் பயன்படுத் தியே வாழ்ந்து வருகிறோம். ஐம்பொறிகளில் ஒன்று கண் அதனையும் எல்லாரும் பயன்படுத்தியே வாழ்ந்து வருகிறோம். குறுகிய நோக்கில் சிலர் சில வேளைகளில் முறையே பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள். அத்தவறுதலும் எப்போ தாவதுதான் நிகழுமே தவிர்த்து; நிலைத்த தவறாக எல்லாரிடமும் இராது என்பதை உணர்த்த விரும்பும் வள்ளுவர் படைத்த குறளே, கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்; கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் (குறள் 577 ) ஆகும். கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையவராகக் கருதப்பட மாட்டார். ஆனால், கண்ணுடையவர்களில் கண்ணோட்ட மே இல்லாதவர் களும் எவரும் இரார். கண் இல்லாதவர்களாய்க் கூட இருக்கலாம்; ஆனால் கண்ணோட்டம் இல்லாதவராய் எவரும் இரார் என மக்களின் பொது இயல்பை உணர்த்துகிறார். மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் மன்னார்குடி பிண்ட்லே கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார். அது போழுது நிகழ்ந்த நிகழ்வு ஒன்று நெஞ்சை நெகிழ்விப்பது கல்லூரியின் வளர்ச்சி குன்றி வந்தது. இளங்கலை வகுப்பு முதற்கண் நீங்கியது. பின் இடைநிலையும் தேய்ந்தது; உயர் நிலைப் பள்ளியாகச் சுருங்கியது. அந்நிலையில் இளநிலை ஆசிரியர்கள் வெளி யேறும் கட்டாயம் ஏற்பட்டது. பாவாணர்க்கு அவ்விடர் இல்லை எனினும் ஆங்கு வேலை செய்த கோபால கிருட்டிணர் என்னும் தமிழாசிரி யர்க்கு உதவிசெய்யும் முகத்தான் பாவாணர் வெளியேறினார். கோபால கிருட்டிணர் குடியிருந்த வீடு மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்து விட்டது என்றும், அந்நிலையில் அவர் வேலையும் இழந்து வெளியேறினால், மனைவி மக்களோடு மிக அல்லல் படுவார் என்று கருதித் தாமே வேலையை விடுத்து வெளியேறி அவர்க்குப் பாதுகாப்பளித் தார். அந்த அளவிற்குப் பாவாணர் என்ன பெருவாய்ப்பாளரா? இல்லை உள்ளம் இருந்தது; கண்ணும் இருந்தது; கண்ணோட்டமும் இருந்தது. ஈசுவா சந்திர வித்தியா சாகர் கொல்கொத்தா போர்ட் வில்லியம் கல்லூரியில் மாதம் ஐம்பது ரூபா ஊதியத்தில் ஆசிரியராகப் பணிபுரியுங் கால் இலக்கண ஆசிரியர் பணி இடம் ஒன்று உருவாயிற்று. அவ்விடத்தை வித்தியாசாகருக்கு வழங்க பேராசிரியர் மொவாட் அவர்களும் முதல்வர் மார்சல் அவர்களும் பரிந்துரை செய்தனர். ஆனால், வித்தியாசாகர் அவர்களோ அப்பணியை வேலையில்லாத பண்டித தாரகநாத் அவர்கட்குப் பெற்றுத்தர வேண்டும் என விரும்பினார். அவரோ ஐம்பது கல்தொலைவில் உள்ள கல்னா என்ற ஊரில் இருந்தார். அன்று காரிக் கிழமை. விண்ணப்பம் திங்கள் காலையில் கல்லூரியில் இருக்க வேண்டும். வித்தியாசாகர் கல்லூரிப் பணி முடித்து காரிக் கிழமை பிற்பகல் கல்னா என்னும் ஊருக்கு நடந்து சென்று பண்டித தாரக நாத் அவர்களைக் கண்டு விண்ணப்பத்தை எழுதி வாங்கிக் கொண்டு நடந்தே வந்து, திங்கள் காலையில் உரிய நேரத்தில் அலுவலகத்தில் ஒப்படைத்து உரிய பணி கிட்ட உதவிய கண்ணோட்டம் நல்ல தொரு வரலாற்றுச் சான்றாகும். கண் இல்லாமை இழிபன்று ஆனால் கண்ணோட்டம் இல்லாமை இழிவு. கண்முன் நின்று கொண்டு கண்ணோட்டம் இல்லாமல் இடித்துச் சொன் னாலும் சொல்லுக! நேரில் இல்லாதவர்களைப் பற்றிப் பிறரிடம் பழிச் சொல் சொல்லாதே! என்னும் கருத்தைப் புறங்கூறாமையில் கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க; முன்னின்று பின்னோக்காச் சொல் (குறள் 184) கூறிய வள்ளுவப் பெருந்தகை, செங்கோன்மை அதிகாரத்தில், ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை (குறள் 541) எனக் கூறியுள்ளதையும் கண்ணோட்டமின்றி ஆராய்க! என ஆணையிட்ட திருவள்ளுவர் கண்ணோட்டத்தைக் கடைப் பிடிப்பதின் பயனையும் சிறப்பையும் உணர்த்தும் குறளே, கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க் குரிமை யுடைத்திவ் வுலகு (குறள் 578) தாம் எடுத்துக் கொண்ட செயல் எதுவாயினும் அதற்கு எத்தகைய கேடும் நேராவண்ணம் செயல்படுவதே செயற்பாட்டு முறைமையாகும். அதே நேரத்தில் கடுமையைக் கடைப்பிடிக் காமல் நேர்மையையும் கண்ணோட்டத்தையும் சமமாகக் கையாளும் திறமை வாய்ந்தவர்களின் புகழும் சிறப்பும் நாட்டு எல்லை தாண்டி உலகளாவிய பெருமை பெற்று விளங்கும். செயலுக்கும் கண்ணோட்டத்திற்கும் ஒத்த அளவு மதிப்பு வழங்க வேண்டும். ஒன்று கூடி ஒன்று குறைந்து விடல் ஆகாது. நேர்மை எந்த அளவிற்கு முதன்மை வாய்ந்ததோ அந்த அளவிற்குக் கண்ணோட்டமும் முதன்மை வாய்ந்ததாகும். கருமமும் சிதையக் கூடாது; கண்ணோட்டம் காட்டாதும் இருக்கக் கூடாது. இரு திறமும் ஒப்ப வாய்ந்தவர்கட்கு உலக நன்மை அனைத்தும் உரிமையுடையதாகும். கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார் சான்றோ ராவார். ஆகவே பழமொழி நானூறு என்னும் நூலும், தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற நவைக்கப் படும்தன்மைத் தாயினும் சான்றோர் அவைப் படின் சாவாது பாம்பு என நவின்றுள்ளதையும் எண்ணிப்பார்க்க! முகம்மது நபி ஒரு பூனையை அன்போடு வளர்த்து வந்தார். ஒரு நாள் அப்பூனை அவர்மீது தூங்கிக் கொண்டிருந்தது. இறை வனை வணங்கும் நேரம் வந்துவிட்டது. பூனையின் தூக்கத்தைக் கலைக்க நபிகள் விரும்ப வில்லை. தமது மேலாடையின் ஒரு பகுதியை, பூனைக்குத் தொல்லை வராதவாறு வெட்டிவிட்டு, தொழுகைக்குச் சென்றார் என்னும் வரலாற்றுக் குறிப்பும் தக்க சான்றாகும். ஆசிரியர் பரசுராமர் மாணாக்கர் கர்ணன் தொடை மீது தலைவைத்துத் தூங்குகிறார். கர்ணன் தொடையை வண்டு துளைத்துக் குருதி கொட்டு கிறது. ஆசிரியர் தூக்கம் கலைந்து விடக் கூடாது எனச் சற்றும் ஆடாது அசையாது இருந்தான் கர்ணன் என்னும் பாரதச் செய்தியும் ஒத்து நோக்கத் தக்கதே! எல்லாரும் வாழப் பிறந்தவர்களே நாமும் வாழ வேண்டும்; பிறரும் வாழ வேண்டும்; பிறர் வாழவும் நாம் வாழ வேண்டும். குற்றம் கண்டால் திருத்துக! பழிக்காதே! கண்டி! ஆனால் கடும் தண்டனை விதிக்காதே! குறையை அகற்று! நிறைவைப் போற்று! திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று (குறள் 157) எனப் பொறையுடைமை அதிகாரத்திலும் அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் (குறள் 203) எனத் தீவினை யச்சம் எனும் அதிகாரத்திலும் பகல்கருதிப் பற்றா செயினும் இகல் கருதி இன்னாசெய் யாமை தலை (குறள் 852) என இகல் எனும் அதிகாரத்திலும் நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை (குறள் 998) எனப் பண்புடைமை அதிகாரத்திலும் வலியுறுத்தும் நெறி முறையை வலியுறுத்தும் குறட்பாவே, ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை (குறள் 579) புரிந்த குற்றம் கண்டிப்பதற்கு மட்டும் உரியதன்று; தண்டிப்பதற்கும் உரிய குற்றம்தான். ஆனால், அதனைக் கண்டிப்பது நல்லதா? அல்லது தண்டிப்பது நல்லதா? மேனிலை மாந்தர் இரண்டையுமே நல்லது என ஏற்றுக் கொள்ளார். குற்றம் புரிந்தவர்களைக் கண்டிப்பதோ அல்லது தண்டிப்பதோ மேனிலை மாந்தரின் நோக்கமன்று. அவர்கள் குற்றத்தை உணர வேண்டும்; மீண்டும் அத்தகைய குற்றம் புரியும் உணர்வும் அவர்கட்குத் தோன்றாதவாறு செய்ய வேண்டும். அதற்கு வழி அவர்கள் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை வழங்காது பொறுத்துக் கொள்வதே மேலான தன்மையாகும். செய்த குற்றமும் தண்டனை அளிப்பதற்கு உரிய குற்றமாகும். தண்டனை வழங்கும் ஆற்றலும் திறனும் நமக்கு உண்டு எனினும் கண்ணோட்டத்தால் கொள்ளும் பண்பே சிறந்தது. ஒறுத்தலினும் பொறுத்தலே சிறந்தது. ஏனெனில், ஒறுத்தார்க்குக் கிட்டுவதோ ஒரு நாள் இன்பம்; பொறுத்தார்க்குக் கிட்டுவதோ நிலைத்த புகழ். ஈரோடு வேலா இராசமாணிக்கனாரின் புத்தக அங்காடிக்கு ஓர் ஆசிரியர் வந்தார். அவர் நெடுநேரம் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந் தார். பின்னர், விலைமிக்க சில நூல்களைப் பிறர் அறியாவண்ணம் எடுத்துப் பையில் மறைத்துக் கொண்டு எதுவும் வாங்காதவர் போல் வெளியேறினார். அவர் செயலைக் கூர்ந்து கண்ட கருத்து மிக்க கடைப் பணியாளர் பின் தொடர்ந்து, கடை வாயிலிலேயே பையைப் பிடித்துக் கொண்டு வந்து வேலா முன் நிறுத்தி நிகழ்ந்ததைக் கூறினார். ஆசிரியர்க்கு முழுத்தலைக் குனிவாயிற்று. என்ன நிகழுமோ என அஞ்சி நாணினார். ஏன் இவ்வாறு செய்தீர்கள்? ஓர் ஆசிரியர் இவ்வாறு செய்யலாமா? என்றார். அந்தப் புத்தகங்கள் என் தேர்விற்கு வேண்டியிருந்தன; பணம் இல் லாமையால் அவ்வாறு செய்து விட்டேன்; பெருந்தவறுதான் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றார் கைகுவித்து வணங்கினார். இனி இப்படிச் செய்யாதீர்கள்; முடியாத நிலை இருந்தால் அதனைச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்; நான் தட்டாமல் தருகிறேன் என்று சொன்னார் வேலா. அவர் எடுத்துச் சென்ற நூல்களில் அன்பளிப்பு என எழுதிக் கையொப்பமிட்டுத் தந்தார் என்னும் வரலாற்று நிகழ்வு ஒறுத் தாற்றும் பண்பினும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை என்பதற்கு நல்ல சான்றாகும். தன்னிடம் உள்ள குற்றங் குறைகளைத் தானே உணர்ந்து, அவற்றை அகற்றித் தன்னைத் தானே பக்குவப்படுத்திக் கொண்டு அறநெறி பற்றி ஒழுகுவது பண்பாடு. தன்னைப் போல் பிறரும் வாழவழி காட்டி, பிறர் நலத்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு, துணைபுரிந்து வாழ்வதுடன், மறந்தும் பிறன் கேடு சூழாது வாழ்ந்து வழி காட்டுவது நாகரிகம். திருவள்ளுவர் நம் முன் ஒரு நயத்தக்க நாகரிக மனிதரைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்? யார் அவர்! பெயக் கண்டும் நஞ்சுண்ட மைவர், நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் (குறள் 580) கண்ணோட்டம் என்னும் சொல்லுக்கு நயத்தக்க நாகரிகம் என வள்ளுவர் பொருள் விளக்கம் தருவது எண்ணி எண்ணி வியக்கத்தக்க தாகும். வெளிப்படையாகவே தம்மைக் கொல்ல முயலும் கொலைகாரன் மனமும் நோகக் கூடாது என எண்ணும் கண்ணோட்டம் மிக்க சான்றோரே நயத்தக்க நாகரிகம் விரும்புகிறவர் என விளம்புகிறார். நம் கண் எதிரே நஞ்சைக் கலக்கிக் குடிக்கக் கொடுக்கிறார் ஒருவர் என்றால் அவர் எவ்வளவு கீழானவராக இருக்க வேண்டும். அத்தகைய வரையும் பண்படுத்த வேண்டுமே தவிர்த்துப் புண் படுத்துதல் ஆகாது என வள்ளுவர் வலியுறுத்துகிறார். உண்டவரைக் கொல்லவல்லது நஞ்சு. அதனைத் தெளிவாக அறிந் தவர் உண்பாரா? கொடுப்பவர் மனம் கோணக் கூடாது என்னும் நெஞ்ச நாகரிகம் படைத்தவர், தம்மைக் கொல்லும் நஞ்சையும் உவகையுடன் வாங்கி உண்பர். இதனைக் கலித்தொகை உவமை வகையால் கவினுறக் காட்டுகிறது. நஞ்சுயிர் செகுத்தலும் அறிந்துண்டாங்கு அளியின்மை கண்டுநின் மொழி தேறும் பெண்டிர் என்கின்றது. இக்கருத்தினையே, முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் என நவில் கின்றது நற்றிணைப் பாடல். பிறர் துயர்காணப் பொறுக்காத பெருந்தகைமையே நாகரிகம் என்பதைக் கம்பர் ஓரிடத்துக் காட்டுகின்றார். மூக்கு அரியுண்ண சூர்ப்ப நகை, இராமனிடம் உரையாடுகின்றாள். எவரேனும் என் அண்ணனிடம் சென்று, என்னை மூக்கரிந்தார் என்று சொல்லு வாரே யானால், நாகரிகம் அறியாத அவன் அதைக் கேட்டவுடனே சொன்னவர் நாக்கை அரிந்து விடுவான் என்றாள். ஆக்கரிய மூக்குங்கை அரியுண்டாள் என்றாரை நாக்கரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை என்பது கம்பர் வாக்கு. கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் கொண்டு ஆய்ந்து செயலாற்றாமை நாகரிகம் இன்மை என்று தெளிவாக்குகிறார் கம்பர். கோவலன் பிரிவுத் துயரை மறைத்து மறைத்து வாழ்கிறார் கண்ணகியார். தம் துயர் வெளிப்படா வண்ணம் மறைத்தால் கூட, தன் மாமன் மாமியர் பல்கால் அன்புடன் பாராட்டுவதைக் கண்டு ஐயமுறு கிறார். தாம் எய்தும் துயரைக் கண்டு அவர்களும் துயர் எய்தக் கூடாதே என்று அலமருகிறார். தம், பிரிவு நோயையும், ஆற்றாமைத் துயரையும் அவர்கள் அறிந்து கொள்ளா வண்ணம் பொய்யாகப் புன்முறுவல் பூக்கிறார். என்னே நாகரிகத்தின் மாண்பு! நாகரிகத்திற்கு இலக்கணம் வகுத்தார் வள்ளுவர் என்றால், இலக்கியம் காட்டியவர் இளங்கோவடிகள்! நல்வினை உடைய நீரார் நஞ்சுணின் அமுத மாகும் அல்ல தேல் அமுது நஞ்சாகும் என்னும் திருத்தக்கத் தேவரின் நம்பிக்கையும் நாதன் அடியார்க்கு நஞ்சும் அமுதமாம் என்னும் சேக்கிழாரின் உறுதி மொழியும் நம் சிந்தனையில் இணையட்டும். உலக மக்களைச் சிந்திக்கத் தூண்டிய பேரறிவாளன் சாக்கீரடி சுக்கு கிரேக்க நாட்டு நீதி மன்றம் நஞ்சு குடித்துச் சாகக் கட்டளை இட்டது. நஞ்சினை மகிழ்வுடன் உண்டு மாப்புகழ் பெற்றார் சாக்கீரடிசு. உலகில் கண்ணோட்டம் உடையவர் வாழ்வதால் உலகம் வாழ்கின்றது உலக இயக்கமே கண்ணோட்டத்தில் உள்ளது கண்ணோட்டம் இல்லாதவர் உலகுக்குச் சுமை ஆவார் பாடலோடு இசையாத இசை இசையாகாது கண்ணோட்டம் இல்லாத கண்ணும் கண் ஆகாது கண்ணோட்டம் இல்லாக் கண்ணால் என்ன பயன்? கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்? கண்ணோட்டம் இல்லாக் கண்ணே புண் கண்ணோட்டம் இல்லாதவர் மரமாவர் கருமம் சிதையாமல் கண்ணோட்டம் கொள்க! கண்ணோட்டம் உலகப் பெருமை நல்கும் ஒறுத்தலினும் கண்ணோடிப் பொறுத்தலே மேலான பண்பு கண்ணோட்டத்தைக் கைக் கொள்க! நயத்தக்க நாகரிகராய் விளங்குக! ------------ 59. ஒற்றாடல் ஆள்வோர் தன் நாட்டிலும் தன் நாட்டைச் சூழ்ந்த பிற நாடுகளிலும் தமக்கு நட்பாகவோ, பகையாகவோ உள்ள சேய்மை நாடுகளிலும், பகை, நட்பு, நொதுமல் என்னும் முத்திறத்தார் இடத்தும் நிகழ்பவனவற்றை மறைவாக அறிதற்கு ஒற்றரை ஆளுதல். ஒற்றராவார் அவ்வக் காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப மாறுவேடம் பூண்டு, பகையரசர் உள்ளகமும் புகுந்து, பிறர் ஐயுறாவாறு அங்குள்ள அருமறைகளையும் மருமங்களையும் திறமையாக அறிந்து ஒருவேளை ஐயுற்றும் அறிந்தும் பகைவரால் கைப்பற்றப்பட்டு, உயிர்க்கு இறுதி நேரினும், வாய் சோர்ந்து உண்மையை வெளியிடாதவராய், தாம் அறிந்த செய்திகளை எல்லாம் உடனுக்குடன், ஆள்வோர்க்கு மறைவாக வந்து உரைக்கும் மாபெரும் திறவோரும் மறவோருமாவர். ஒற்று, வேய் என்பன ஒரு பொருட் சொற்களே! ஆள்வோர் தம் நாடு காவற்கும், வேற்று நாட்டைக் கைப்பற்று வதற்கும் ஒற்றாடல் இன்றியமையாதது. ஒற்று ஆடலா? ஒற்று ஆளுதலா? ஒற்று, ஒற்று எனக் குறளகத்துப் பயன்படுத்துகிறாரே அல்லாமல் ஒற்றாடல் எனக் குறித்தாரில்லை. ஆனால் ஒரு குறளில் ஒற்றொற்றுணராமை ஆள்க எனக் கை யாண்டுள்ளார். புடைகெட ஒற்றின் ஆகிய வேய் என்கிறது தொல்காப்பியம். மாற்றரசர்க்குப் பக்கத்தே உள்ளார் அறியாதவாறு, தம் ஒற்றரால் அறிந்து கொள்ளப்படும் ஒற்று என்பது பொருள். பற்றார் தம்முனைப் படுமணி ஆயத்து ஒற்று ஆராய்ந்து வகை உரைத் தன்று நிலையும் நிரையும் நிரைப்புறத்து நின்ற சிலையும் செருமுனையுள் வைகி - இலை புனைந்த கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து நள்ளிருட்கண் வந்தார் நமர் என ஒற்றார் பணியைப் புறப் பொருள் வெண்பாமாலை கூறுகிறது. இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது கடவுள் எழுதவோர் கற்கே யாதலின் வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்தலை யேற்ற வரைக ஈங்கென நாவலந் தண் பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா வம்பணி யானை வேந்தர் ஒற்றே தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ அறைபறை யென்றே அழும்பில் வேள் உரைப்ப எனச் சிலப்பதிகாரம் ஒற்றின் பயனும் பணியும் உரைக்கும். ஒற்றரில் சிறப்புப் பிரிவு, குற்றப் பிரிவு என இரு வகையாகப் பகுக்கப்பட்டுச் செயல் புரிந்து வருகிறது. சிறப்புப் பிரிவு 1. ஆட்சிக்குப் புறம்பான கொள்கை பரப்பல், 2. சமய வழக்கு 3. அரசியல் கூட்டம் 4. வகுப்பு வேறுபாடு பற்றியும், குற்றப் பிரிவு - குற்றவாளிகளை அவர் அறியாமல் கண்காணித்தல் செய்வது. அதில் கொலை, கொள்ளை, கள்ள நாணயம் மயக்க மருந்து பற்றிய செய்திகளை உளவறிந்து உரைக்கும். இஃது உள்நாட்டுக் காவல் துறையுடன் இணைந்த பணியாகும். படைத்துறை ஒற்றர் அயல் நாட்டுச் சாதனம், முன்னேற்பாடு, பொருளாதார நிலையும் குறித்து வெளிப்படையாகவும் / மறைவாகவும் அறிந்து உரைப்பர். ஒற்றர்களில் நேரடியாகப் போர்க்களத்தில் சண்டையில் கலந்து கொள்ளுவோரும் உண்டு. போர்க்காலங்களில் மட்டும் வேவு பார்க்கும் ஒற்றர்களும் உண்டு. நிலையான ஒற்றர்களும் உண்டு. நாடாள்வோர் நாட்டுநிலை அறிந்து திட்டமிடவும், தக்க பாதுகாப்பு அமைத்துக் கொள்ளவும் ஒற்று மிகத் தேவையாகும். ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் (குறள் 581) நாட்டின் நல்வாழ்விற்கும் நாட்டை ஆட்சிபுரிபவர்கட்கும் ஊறு செய்யும் தீயவைகளை, ஆட்சியாளர்களே தாமே நேரில் சென்று கண்டறிவது போல ஒற்றர்கள் அறிந்து வந்து சொல்வதால் அவர்களை ஆட்சியாளர்க்குக் கண் என்று அரசியல் அறிஞர்கள் உரைக்கின்றனர். முறை செய்யும் போதும், நீதியை ஆராயும் போதும், நாட்டின் நிலையை அறிந்து செய்வன செய்யும் போதும், அறிவு நிறைந்த சான்றோர் எழுதி வைத்த நூல்கள், அறிவுக்கு எட்டாத நுட்பங்களை உரைக்கின்றன. ஆதலால், அவற்றையும் கண்ணென்பர். அந்த நூல்களைப் போலவே நேரே சென்று காணமுடியாத செயல்களைக் கண்டறிந்து வந்து உரைப்பதால் ஒற்றர்களின் செய்கையும், சான்றோர் நூலின் செய்கையும் ஒத்திருப்பதால் இரண்டையும் சேர்த்து இவை இரண்டும் நாடாள்வோருக்கு சிறப்புக்கண்கள் என்று தெளிய வேண்டும். உளவும், புகழ் பெற்ற நீதி நூலும், ஆட்சியாளர்களுக்குக் கண்கள் என்று தெளிக! கடனறி காரியக் கண்ணவரோடு எனப் பரிபாடலும் மண்ணியன் மன்னர்க்குக் கண்ணென வகுத்த நீதி நூல்கள் எனப் பெருங்கதையும் கூறுவதை இணைத்துச் சிந்தித்துக் கொள்க! ---------- எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் (குறள் 582) எனும் குறள் செங்கோன்மையில் குடிபுரங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் (குறள் 549) எனக் கூறியதையும் நினைவுபடுத்துகிறது. நாட்டில் எப்பொழுதும் நல்லதும் நடக்கும் அல்லதும் நடக்கும். எல்லா மக்களும் எப்பொழுதும் ஒரே நிலையில் இருப்பர் என்றும் சொல்லிவிட இயலாது. நேற்று வாழ்க சொல்லியவன் இன்று ஒழிக சொல்லும் கூட்டத்தில் சேர்ந்திருக்கலாம். நேற்று வரை அஞ்சிக் கிடந்தவன் இன்று அச்ச மூட்டுபவனாய் மாறி இருக்கலாம். ஒருகால் வாழ வழியற்று வருந்தியவன் தற்பொழுது வளமான வாழ்வு பெற்றிருக்கலாம். நோயற்ற வாழ்வு வாழ்ந்தவன்; நோயன் ஆகி இருக்கலாம். நாட்டில் ஒரே நிலையை எப்பொழுதும் எதிர்பார்க்க முடியாது. நேற்று இருந்தவன் இன்று இல்லை; பிறப்பும் இறப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டில் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கலாம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மை மொழி. ஆகவே, நாட்டு மக்கள் அனைவர் நல்வாழ்விற்கும் நல வாழ்விற்கும் பொறுப்பாளனாக விளங்கும் ஆட்சியாளனுக்கு நாட்டில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளையும், தொடர்புடை யவர்களோ? தொடர்புடைய துறையின்ரோ ஆள்வோர் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு முன்னரே, ஆள்வோர் உடனுக்குடன் ஒற்றர்கள் வழியாக அறிந்து கொள்ளுவது இன்றியமையாக் கடமையாகும். அதனைக் கடமை என்ற சொல்லால் உணர்த்தாமல் தொழில் எனக் குறிப்பிட்டுள்ளதை ஆழமாக எண்ணிப் பார்க்க வேண்டும். போற்றத்தக்க, மதிக்கத்தக்க, வணங்கத் தக்க, வணக்கத்தை ஈட்டித் தரத்தக்க கடமை இதுவாகும் என்பதை உணர்த்தவே வேந்தன் தொழில் என்றார் எனக் கருதலாம். எல்லாவற்றையும் ஒற்று மூலம் விரைந்து அறிந்து கொண்டால் தான் தக்க நடவடிக்கையும் விரைந்து மேற்கொள்ள இயலும். யாரிடத்தும் எதனையும் என்றும் உளவால் விரைந்து அறிதல் ஆள்வோர் கடமை. ----------- ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்த தில் (குறள் 583) ஒற்றன் வாயிலாகத் தன் நாட்டில் நிகழும் செய்திகளை மட்டு மல்லாது அண்டை, அயல் நாட்டுச் செய்திகளை எல்லாம் மறைவாக இருந்து அறிந்து வரச் செய்து அவற்றின் வழியாக உண்மை நிலையை உள்ளபடி ஆராய்ந்து அறிய முயலா ஆட்சி யாளன் எச்செயலிலும் வெற்றி பெறத் தக்க வாய்ப்பை இழந்து விடுவான். உளவுத் துறை மூலமாக அறிந்து கொள்ள வேண்டியதை அறிந்து கொள்ளா ஆட்சியாளனுக்கு வெற்றி வாய்ப்பு அரிது. ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரிதல் முன்னினிதே! முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன்னினிதே! பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் வெற்றிவேல் வேந்தர்க் கினிது என்னும் இனியவை நாற்பதுப் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது. ஒற்றின் தெரியா சிறைப்புறத்து ஓர்தும் எனப் பொற்றோள் துணையாத் தெரிதந்தும் - குற்றம் அறிவரிது என்றஞ்சுவதே செங்கோன்மை, சென்று முறையிடினும் கேளாமை அன்று. என்னும் நீதிநெறிவிளக்கப் பாடலும் நல்ல சான்றாகும். ---------- வினைசெய்வார், தம் சுற்றம், வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று (குறள் 584) ஒற்றர்கள் நாட்டு மக்கள் அனைவரையும் ஆராய வேண்டும் என்பது பொது விதி. ஆனால் குறிப்பாக, கட்டாயம் எவரை எல்லாம் ஆராய வேண்டும்? ஏன் ஆராய வேண்டும்? அரசுக்குக் கேடு சூழ்வார் வேறு நாடுகளில் மாத்திரமின்றி உள்நாட்டிலும் இருப்பர். ஆகவே அரசு அலுவலர்கள், பல்வேறு தொழில் புரிபவர்கள், ஆள்வோர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் செயல்களையும் அவர்களின் வாழ்வியல், பொருளியல் நிலைகளையும் ஆராய வேண்டும். ஆளும் கட்சிக்காரர் களையும் ஆராய வேண்டும்; எதிர்க்கட்சிக்காரர்களையும் ஆராய வேண்டும். அவர்கட்கு வேண்டியவர்களையும் ஆராய வேண்டும் வேண் டாதவர்களையும் ஆராய வேண்டும்; நல்ல ஆக்கப்பூர்வமான செயல் களைச் செய்பவர்களையும் ஆராய வேண்டும்; அது போல் அழிவுதரும், பண்பாட்டைக் கெடுக்கும் வினை செய்வார்களையும் ஆராய வேண்டும் ஆராய்ந்து உடனுக்குடன் ஆட்சியாளர்கட்குத் தெரிவிப்பதே ஒற்றர் கடமை யாகும். வினை செய்வார் என்பதால் வேண்டும் வினை செய்வார்; வேண்டாத வினை செய்வார் இருபிரிவினையும் ஆராய வேண்டும். அது போல் சுற்றத் தாரையும் ஆராய வேண்டும் பகைவரையும் ஆராய வேண்டும் என எத்திறத்தாரையும் ஆராய்ந்து உரைப்பதே ஒற்று. ஒற்றர் கண்காணிப்பில் இருந்து எவரும் விலகி விடக் கூடாது. அனைவரின் நாள் வழிச் செயற் குறிப்பு ஒற்றர் வழி ஆள்வோருக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும். ----------- கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகாமை வல்லதே ஒற்று (குறள் 585) ஒற்றர்களில் வல்லவன் தன் இயல்பான தோற்றத்திலும் இயங்கக் கூடாது. பிறர் ஐயப்படாத வடிவத்தில் தோன்றுதல் வேண்டும். கண் எதிரே எத்தகைய கொடியவரைக் காண நேர்ந்தாலும் அச்சம் கொள்ளக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் உரியவர்க்கன்றி, பிறர் யார்க்கும் தம் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தி விடக் கூடாது. தேர்ந்த நடிகனாகவும் இருக்க வேண்டும். அஞ்சாமை வாய்ந்த வீரனாகவும் விளங்க வேண்டும். அடக்கத்தின் கொள்கலனாகவும் விளங்க வேண்டும். அத்தகையவனே வல்லமை வாய்ந்த ஒற்றனாவான். தாயினும் பழகினார்க்கும் தன்னிலை தெரிக்கல் ஆகா மாயவல் உருவத்தான் என்பது கடாஅ உருவொடு என்னும் தொடருக்கு கம்பர் தரும் விளக்கம். இற்றிது காலமாக இலங்கையர் வேந்தன் ஏவ ஒற்றர்வந்து அளவுநோக்கிக் குரங்கென உழல்கின்றாரைப் பற்றினன் என்ப மன்னோ பண்புதான் பலநாள் செய்த நற்றவப் பயன்தந்து உய்ப்ப முந்துறப் போந்த நம்பி! இராவணன் அனுப்பிய ஒற்றரை வீடணனால் எப்படிக் காண நேர்ந்தது என்பதைக் கம்பர் நுட்பமாக உணர்த்துகிறார். ஒற்றாவதை ஐயுறா உருவோடு, துளக்கமின்றி என்செயினும் சோர்விலாததென அறிக என விநாயக புராணம் விளக்குகிறது. ----------- துறந்தார் படிவத்த ராகி இறந்தாய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று (குறள் 586) துறவிகளது கோலம் தாங்கி, புகுவதற்கரிய இடங்களையும் கடந்து உட் புகுந்து ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து, யார் எவ்வளவு நயப்படுத்தி னாலும், துன்பப் படுத்தினாலும் அதனால் சோர் (122) வடையாமல் கடமை புரிபவரே சிறந்த ஒற்றர். எனும் போக்கில் பெரும்பாலோர் உரை கண்டுள்ளனர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடந்தாராமல் துறவியைப் போல இருந்து, தீர ஆராய்ந்து சந்தேகப் பட்டவர்கள் என்ன துன்பந்தந்தாலும், மனந்தளராமல் இருப்பது ஒற்றர் திறமையாகும் என மாணிக்க வாசகம் உரை கண்டுள்ளார். நாமக்கல் இராமலிங்கனார் ஒற்றனானவன் தான் ஆராய்ந்து உளவறிய வந்த செய்திக்குத் தொடர்பில்லாதவனைப் போல் பாவனை செய்து கொண்டு, தான் அறிய வந்த செய்தியின் நுணுக்கங்கள் எல்லா வற்றையும் தீர ஆராய்ந்து கொள்ள வேண்டும் எனக் கண்ட உரையையும் எண்ணிப் பார்க்க! மறைந்தவை கேட்கவற் றாகி, அறிந்தவை ஐயப்பா டில்லதே ஒற்று (குறள் 587) சட்டத்திற்குப் புறம்பான செயல்களும், அத்தகைய செயல்கள் குறித்துத் திட்டமிடுதலும் வெளிப்படையாக அறிந்து கொள்ள வாய்ப் பில்லாது மறைவாகவும் மிகப்பாதுகாப்பான இடத்திலும் தான் நடக்கும். அதில் ஈடுபடுகிறவர்களும் அறநெறி பற்றிக் கவலைப்படாத வஞ்சகர் களாகவும் திருட்டு எண்ணம் கொண்டவர் களாயும் இருப்பர்; எவரையும் எளிதில் நம்பமாட்டார்கள்; எவரைக் கண்டாலும் ஐயப்படுவார்கள்; அவர்கள் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் குறிப்பு மொழிகளும் மறை மொழிகளும் மிகுதியாக இருக்க வாய்ப்புண்டு. மறைத்து நடக்கும் செயல்களை மறைந்து இருந்து விசாரித்து அறிவதில் பல நுட்பங்களைக் கையாள வேண்டி இருக்கும், உள்பணி புரிவோரைக் கைக்குள் போட்டுத் தன்வயப்படுத்தியே பல செய்திகளை உளவறிய இயலும். மறைந்து கேட்டறிந்தாலும் முழுமையாகக் கேட்டறியவும் வேண்டும். கேட்டவற்றைத் தெளிவாகப் புரிந்து, கொள்ளும் திறனும் வேண்டும். ஐயப்பாடு இல்லாது ஆராய்ந்து தெளிந்து முடிவெடுக்கும் வல்லமையும் வேண்டும். அதை ஆட்சியாளர் தக்கவாறு விளங்கிக் கொள்ளுமாறு உணர்த்தும் திறனும் வாய்க்கப் பெற்றவனே ஒற்றனாவான். பகைவன் நாட்டில் தான் இருந்து செய்யும் செய்கை பிறர் மதிக்கத் தக்கது ஆகாதபடி செய்தலும், பகைவனிடத்து நடந்துள்ள செயல்களைக் கேட்டுப்பின் மறவாத கூரறிவுடைமையும், அச் செயலைத் தடையின்றித் தன் அரசனுக்குச் சொல்லுகின்ற தெளிவுடைமையும், அறிவுள்ள ஒற்றனின் தன்மையாகும் என்பதை, எள்ளப் படும்மரபிற்று ஆகலும், உள்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும் ஒள்ளிய ஒற்றாள் குணம் எனத் திரிகடுகம் கூறுவது, குறளுக்கு ஏற்ற விளக்கமாய் விளங்குகிறது. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் (குறள் 588) ஒற்றர்கள் கூர்த்த மதியும் சீர்த்த செய்கையும் உடையவராயினும் அவ்வொற்றர்களை ஆள்கின்ற ஆட்சியாளர்கள் இவர்கட்குக் குறையாத அறிவுடையராய் இருக்க வேண்டும். இவர்களில் ஒருவர் கூறுவதை மாத்திரம் ஏற்றல் கூடாது. வேறு ஒற்றர்களை விடுத்து இருதிறத்தார் கூறுவனவற்றையும் ஒப்ப நோக்கித் தெளிய வேண்டும். ஒற்றன் ஒருவன் உளவறிந்து உரைத்த செய்தியையும் மற்றுமோர் ஒற்றனைக் கொண்டு தீர அறிந்து ஆட்சியாளன் ஒப்பிட்டு அறிந்து கொள்ளல் வேண்டும். ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும் கற்ற மாந்தரைக் கண்னெனக் கோடலும் சுற்றம் சூழ்ந்து பெருக்கலும், சூதரோ கொற்றங் கொள்குறிக் கொற்றவற் கென்பவே என்னும் சீவக சிந்தாமணிப் பாடலின் முதலடி ஈரடிக் குறளை ஓரடியில் சுருக்கி வழங்கியுள்ளதை எண்ணிப்பார்க்க! ----------- ஒற்றொற் றுணராமை ஆள்க, உடன் மூவர் சொற்றொக்க தேறப் படும் (குறள் 589) ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஒற்றர்களை விடுத்துச் செய்திகளை அறிய முற்பட வேண்டும். அங்ஙனம் ஒன்றைப் பற்றி ஆராயத் தனித்தனியே மூன்று ஒற்றர்களை விடுத்து, ஆம்மூவரும் அறிந்து வந்த செய்திகளில் முரண்பாடு இன்றி ஒத்திருந்தால்தான் அச் செய்தி உண்மையானதாய் இருக்கலாம் என்று தெளிவடைதல் வேண்டும். ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறிய முடியாதவாறே இயக்குக? மூவர் ஒன்றுபோல் கூறினால் ஏற்றுக் கொள்க? அறிந்தஒற் றாளர் செறிந்தனர் உரைப்ப ஒற்று மாக்களை ஒற்றரின் ஆயா முன்தனக்கு உரைத்த மூவர் வாயவும் ஒத்தது நோக்கி மெய்த்தகத் தேறி என்னும் பெருங்கதைப் பாடல் குறளுக்கு நல்லதொரு விளக்கமாய் அமைந்துள்ளது. ஒருவரொருவர் தமையறியாது ஒருமை வினைக்கண் மூவர்தமை மருவ விடுக்க! மூவர்களும் வந்து மொழிவ ஒத்துவிடில் கருமம் அதனை மிகத் தெளிக! என்னும் விநாயக புராண விளக்கமும் ஏற்புடையதே! ஒற்றர் துறையின் அனைத்து நடைமுறைகளும், இயக்கமும் செயல் பாடும் வெளிப்படையாக யாரும் அறியா வண்ணம் மறைவாக அதாவது கமுக்கமாக இயங்க வேண்டிய துறையாகும். ஆகவே, ஆட்சியாளர்கள் யார் யாரை எல்லாம் ஒற்றர்களாகப் பணியமர்த்தம் செய்துள்ளார்கள் என்பதே நாட்டு மக்களுக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது. ஆகவேதான் ஒற்றர்களில் மிக நுட்பமாகச் செயல்புரிந்த வல்லார் களை அடையாளம் கண்டு, அவர்களின் பணிச் சிறப்பைப் பாராட்டி ஊக்க மூட்டுவதும் ஆட்சியாளர் கடமைகளில் ஒன்று தான். பிற துறைப் பணியாளர்கட்கு விருது தந்து வெளிப்படையாகப் பாராட்டிச் சிறப்புச் செய்வது போல் செய்தல் கூடாது. பிற துறைகள் வெளிப்படையாய் இயங்கும் துறைகள் அத்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்தவர்களைப் பாராட்டிச் சிறப்புச் செய்வதும் நாடு முழுக்கத் தெரிவது நல்லது. அஃது உரியவர்கட்கு ஊக்கம் தருவதுடன், மற்றவர்கட்கும் பணியில் ஈடுபாட்டை உருவாக்கும் பலருக்கும் அஃதொரு உந்து ஆற்றலாக அமையும். ஆனால், ஒற்றர்கட்குச் செய்யும் சிறப்புகளைப் பலரும் அறியும் வண்ணம் வெளிப்படையாகச் செய்தல் கூடாது. அப்படிச் செய்தால், வெளியே தெரியக் கூடாத செய்திகளை ஆட்சியாளர்களே வெளிப்படுத்திய தாய் விடும். ஆகவே, பலரும் அறிய ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யாதே என ஆணையிடும் குறளே, சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின் புறப்படுத்தா னாகும் மறை (குறள் 590) மறை தொடர்பான அனைத்தும் மறைவாகவே நடக்கட்டும்! ஆட்சியாளர்க்கு ஒற்றும் கண்ணே! ஆட்சியாளர்க்கு உரைசான்ற நூலும் கண்ணே! ஒற்றறிதல் ஆள்வோரின் சிறந்த கடமையாகும் ஒற்றரைத் தக்கவாறு பயன்படுத்துக! ஒற்றுச் செய்தி வெற்றிக்கு வழிவகுக்கும் ஒற்றர், வினை செய்வாரையும் ஆய்க ஒற்றர், வினை செய்வார் சுற்றத்தையும் ஆராய்க! ஒற்றர், வினை செய்வார் தம் பகைவரையும் ஆராய்க! ஒற்றன் ஐயப்படா தோற்றம் கொள்ள வேண்டும் ஒற்றனுக்கு அச்சம் கூடாது ஒற்றனுக்கு எங்கும் புகும் திறமை வேண்டும் ஒற்றன் துறவிக் கோலம் தாங்கலாம் ஒற்றனுக்குப் பணிப்பற்று தவிர வேறுபற்றுக் கூடாது ஒற்றன் இடையூறுக்கு அஞ்சான் ஒற்றன் உரியவரிடமே உண்மை உரைப்பான் ஒற்றன் மறைந்து கேட்டாலும் தெளிந்து உணர்வான் ஒற்றன் கண்டுணர்ந்ததை உரைப்பான் ஒற்றரையும் ஒற்றர் மூலம் அறிக ஒன்றுக்கு மூவர் ஒன்றுபோல் கூறினால் நம்புக ஊரார் அறிய ஒற்றனைப் பாராட்டாதே 60. ஊக்கமுடைமை அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு (குறள் 382) என்பது இறைமாட்சி அதிகாரக் குறள். ஆட்சியாளரிடம் என்றும் குறையாமல் அமைந்திருக்க வேண்டிய இயல்புகள் அஞ்சாமை, கொடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கும் ஆகும் எனத் திட்டப்படுத்தியவர் திருவள்ளுவர். அந்நான்கு இயல்புகளில் ஒன்றான ஊக்கமுடைமையை விளக்குவது இவ்வதிகாரம். உடை போல் என்றும் விலகாது இருக்க வேண்டிய பொருள்களை, செல்வங்களைத் திருவள்ளுவர், உடைமை எனக் குறித்து விளக்கி அமைவது, தனிச் சிறப்புக்குரியதாகும். திருவள்ளுவர், அன்புடைமை, அடக்கமுடைமை, அறிவுடைமை, ஆர்வம் உடைமை, ஒழுக்கமுடைமை, துணிவுடைமை, பண்புடைமை, பொருளுடைமை, பொறையுடைமை, நாநலம் என்னும் நலனுடைமை, நாணுடைமை, நிறைவுடைமை ஆகிய உடைமை களை முன் ஒட்டாகிய அன்பு, அடக்கம், அறிவு, ஆர்வம் ஒழுக்கம், துணிவு, பண்பு, பொருள், பொறை, நலன், நாண், நிறை என்பன வற்றுடன் இணைத்து அவ்வவ் வுடைமைகளை விளக்கி வருகிறார். ஆனால், ஊக்கமுடைமையை ஊக்கம் எனச் சுட்டுவதுடன் உடைமை உடையர் என அடைமொழி இல்லாமல் கூறினாலே அது ஊக்கமுடைமை யையும் ஊக்கமுடையவரையுமே குறிப்பிட்டு உணர்த்துவதுடன், பொது வாக மனம் என்னும் பொருள்படும், உள்ளம் என்று கூறினாலே அஃது ஊக்கமுடைமை ஒன்றை மட்டுமே குறிக்கும் நிலையில் உணர்த்தும் அருமை எண்ணிப் பார்க்கத் தக்கது. ஊக்கமே உடைமை ஊக்கம் உடையாரே உடையர் என்பதே திருவள்ளுவரின் திட்டமான கணிப்பாகும். ஊ, ஊங்கு என்றால் முன் என்று பொருள். ஊங்குதல் = முன் செல்லுதல்; ஊக்குதல் = முற்செலுத்துதல் அதாவது உள்ளத்தை வினை யில் முன் செல்லத் தூண்டுதல். ஊ, ஊங்கு, ஊக்கு, ஊக்கம் என்றாகும். வினை செய்வதில் தளர்ச்சி யின்றி மேன்மேலும் கிளர்ச்சி பெறுதல். உழைக்குமாறு தூண்டும் கிளர்ச்சியும் எழுச்சியும் ஊக்கமாகும். முன்னேற்ற உணர்வு கொள்க இதனையே, விவேகானந்தர், எழுமின்! விழிமின்! கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின் என வேண்டினார். ஒருவன் குறிக்கோளோடு பணி செய்தால்தான் வெற்றி என்னும் ஏணிப் படிகளில் கால்வைக்க முடியும். துன்பம் கண்டு துவளாத நெஞ்சம், சிக்கல்களை எதிர்நோக்கும் துணிவு, அறிவுக் கூர்மையோடு செயல்படும் நுட்பம் ஆகியவை ஒருவனை வெற்றிக்கு ஏற்றிவிடும் ஏணிப்படிகளாக விளங்குகின்றன. உலகில் இத்திறன் வாய்ந்தவர்கள்தான் சோதனைகளை வென்று சாதனையாளர்களாய் உயர்ந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் ஒருவர்தான் புதிய உலகம் எனப்படும் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பசு புதியன படைக்கவும், புதுமைகள் காணவும் பலர் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருந்த பதினான்காம் நூற்றாண்டில் இசுபெயின் நாட்டிலிருந்து புதியதோர் உலகம் காண கப்பலோட்டி கொலம்பசு புறப்பட்டார். வாழ்க்கையில் தாம் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெறும் பொருட்டு, எத்தகைய இன்னல்களையும் இடையூறுகளையும் எதிர் கொள்ள கொலம்பசு அணியமாக இருந்தார். இருபது கப்பலோட்டிகளுடன் ஒரு சிறிய கப்பலில் அவரது கடற்பயணம் பசுபிக் பெருங்கடலில் தொடங்கியது. சுற்றிலும் கடலைத் தவிர வேறு எதையுமே காணாமல் அவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. இவ்விதம் இருபத்துநான்கு நாள்கள் கடந்தன. கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் அவர்கட்குக் கரை எதுவும் தென்படவில்லை. கப்பலில் உள்ளவர்கட்கு உணவும் நீரும் வழங்குவதற்குப் பொறுப் பாளர், ரொனால்டு என்பவர். அவர் தன்னிடம் ஒப் படைக்கப்பட்டவை உணவுப் பண்டங்கள் மட்டுமன்று. மனித உயிர்களும் என்பதை உணர்ந்தார். எனவே, அவர் கவனமாகச் சிந்தித்தார். கப்பலில் எஞ்சியிருந்த உணவும் குடிநீரும் மேலும் இருபத்துநான்கு நாள்களுக்கு மட்டுமே போதுமானவை என்பதைக் கணக்கு எடுத்தார். கப்பலை உடனே திருப்பி வந்த வழியே, வந்த வேகத்திலேயே சென்றாலும் கூட புயலும் மழையும் குறுக்கிடாமல் இருந்தால்தான், இருபத்துநான்கு நாள்களில் உயிருடன் அனைவரும் இசுபெயின் நாட்டை யாவது அடையலாம். மாறாக பயணம் மேலும் ஒரு சில நாள்கள் தொடர்ந்து, கரை காண முடியாமல் போய்விட்டால், கடலிலே அனைவர் வாழ்க்கையும் முடிந்து போகும். என்னும் நிலையைத் தன்னுடன் வந்த சிலரிடம் ரொனால்டு தெரிவித்தார். ஏற்கனவே கடற்பயணத்தால் சோர்ந்து போன சிலரும், உயிரின் மீதும் உற்றார் உறவினர் மீதும் பாசமும் பற்றும் கொண்ட வேறு சிலரும் ரொனால்டின் கருத்தை ஏற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, கப்பலில் கொலம்பசு ஒருவரைத் தவிர, மற்றைய பத்தொன்பது பேரும் ஒருமனதாக முடிவுசெய்து கப்பலைத் திசை திருப்பி தாய் நாட்டை நோக்கிப் பயணம் தொடர முடிவெடுத்தார்கள். முடிவைத் தெரிவிக்கக்கொலம்பசு இருக்கும் தளம் வந்தனர். செய்தியைக் கூறி நாடு திரும்ப கொலம்பசின் அனுமதியை எதிர்பார்த்து இருந்தனர். உணவும் நீரும் உயர்ந்த குறிக்கோள் பயணத்தில் குறுக்கிடுவதா? புதியதோர் உலகம் காணப்புறப்பட்ட பாதையை மாற்றுவதா? இதை கொலம்பசால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. கோழை உள்ளம் கொண்டவர்களைக் கண்டு இரக்கப்பட்ட கொலம்பசு எக்காரணம் கொண்டும் பின்வாங்குவதற்கில்லை. கப்பலை முன்னோக்கியே செலுத் துங்கள் நடப்பது நடக்கட்டும் என்று உறுதியுடன் கட்டளை இட்டார். ஆனால், சிலநொடிகளில் தன் கட்டளை புறக்கணிக்கப்பட்டு, கப்பல் திசை திரும்பித் தாய் நாட்டை நோக்கி நகர்வதைத் தளத்திலிருந்து பார்த்த கொலம்பசு அதிர்ச்சியுற்றார். கொள்கை மாறாமல் அவர் கடமை புரிய நடவடிக்கை எடுப்பதற்குள் மற்றவர்கள்கள் அவர் இருக்கும் இடம் வந்து அவரைக் கைதி செய்தார்கள். கொலம்பசு கப்பல் தளத்திலேயே காவல் கைதியாக்கப்பட்டார். பாய்மரக் கம்பத்தில் அவரைக் கயிற்றினால் கட்டிப் போட்டார்கள். அடுத்த நடவடிக்கையாக ரொனால்டு கப்பலின் தலைமைப் பதவியை எடுத்துக் கொண்டார். திசை திரும்பிய கப்பல் கடலில் வந்த வழியே இசுபெயின் நாட்டை நோக்கிச் செல்ல முற்பட்டது. இப்போது கொலம்பசின் தலைமைப் பதவியும் பறிபோய் விட்டது. நண்பர்கள் பகைவர்கள் ஆகிவிட்டனர். கட்டுண்ட நிலையிலும் புதிய உலகம் காண விரும்பிய கொலம்பசு சோர்ந்துவிடவில்லை. சிந்தித்தார். சிந்தனையில் ஒரு கருத்துத் தோன்றியது. உடனே கொலம்பசு, ரொனால்டை அழைத்து ஒரு சிறு கணக்குப் போட்டார். கப்பலில் உள்ள உணவும் குடிநீரும் எத்தனை பேருக்கு எத்தனை நாளைக்குப் போதுமானது என்று மீண்டும் கேட்டார். இருபது பேருக்கு இருபத்து நான்கு நாள் களுக்கு மட்டும் தான் உணவும் குடிநீரும் தர முடியும் என்பதை நான் ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேனே என்றான் ரொனால்டு. அந்த இருபது பேரில் நானும் ஒருவன் தானே என்று கேட்டார் கொலம்பசு. ஆம்... அதில் என்ன ஐயப்பாடு? உங்கள் உயிரையும் சேர்த்துக் காப்பாற்றுவதற்காகத்தான் உங்களை எதிர்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்தான் ரொனால்டு. நான் ஒருவன் உண்ணாமலும் நீர் அருந்தாமலும் இருந்து விட்டால் என்னுடைய இருபத்துநான்கு நாள்களுக்கு உரிய உணவும் குடிநீரும் எஞ்சிய பத்தொன்பது பேருக்கு மேலும் ஒரு நாளைக்குப் போதும் அல்லவா என்று கேட்டார் கொலம்பசு. ரொனால்டுக்குக் கணக்குப் புரிந்தது. ஆனால், அவ்விதம் கொலம்பசு கணக்குப் போட்டதற்குக் காரணம் என்ன என்பது புரியவில்லை. கொலம்பசு உணர்ச்சி வயப்படாமல் பேசினார். கப்பலை முன்னோக்கி மேலும் ஒருநாள் செலுத்துங்கள். இந்த ஒரு நாளில் ஒரு வேளை நாம் கரை எதையும் காணாவிட்டால் என்னைக் கடலில் தள்ளிவிடுங்கள். அதனால் மீதமாகும். உணவும் குடிநீரும் உங்களுக்கு ஊர் போய்ச் சேரும் வரையில் போது மானதாகவே இருக்கும் என்றான். உடன் வந்தவர்கட்கு இப்போது கணக்கும் புரிந்தது கடமையும் புரிந்தது. கொலம்பசைக் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டார்கள். கொலம்பசின் கருத்துப்படி கப்பல் முன்நோக்கி நகர்த்தப்பட்டது. இருபது மணிநேரம் கடந்தது. கப்பல் கரையைக் கண்டது. ஆம், அன்றுதான் புதிய உலகம் என்று அழைக்கப்பட்ட அமெரிக்காக் கண்டம் கொலம்பசினால் கண்டு பிடிக்கப்பட்டது. ஊக்கமுடைமையின் பல்வேறு கூறுகளை விளக்கிக் கூறும் வரலாறே கொலம்பசின் வரலாறாகும். அஃது எத்துறைச் செயலுக்கும் பொருந்தி அமையும் என்பதை மனத்தில் கொண்டு குறட்பாக்களை வரிசையாகச் சிந்திப்போம்! உடைய ரெனப்படுவ தூக்கம்; அஃதிலார் உடைய துடையரோ மற்று (குறள் 591) என்பது ஊக்கமுடைமையின் முதற் குறள். புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும், யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு (குறள் 78) என்பது அன்புடைமை போற்றும் குறள். காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம் அதனினூங் கில்லை உயிர்க்கு (குறள் 122) என்பது அடக்கமுடைமை போற்றும் குறள். ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் (குறள் 131) என்பது ஒழுக்கமுடைமை போற்றும் குறள். துறந்தாரின் தூய்மை உடையர், இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர் (குறள் 159) என்பது பொறையுடைமை போற்றும் குறள். அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள (குறள் 241) என்பது அருளுடைமை போற்றும் குறள். அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (குறள் 430) என்பது அறிவுடைமை போற்றும் குறள். ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித் தாழா துஞற்று பவர் (குறள் 620) என்பது குறள் ஆள்வினையுடைமை போற்றும் குறள். பண்புடையார்ப் பட்டுண் டுலகம்; அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன் (குறள் 996) என்பது பண்புடைமை போற்றும் குறள். ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு (குறள் 1012) என்பது நாணுடைமை போற்றும் குறள். என உடைமைகளின் சிறப்பையும், வலியுறுத்தி வரும் திரு வள்ளுவர் அறிவுடைமையையும் ஊக்கமுடைமையையும் கூறும் முறை ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை; அறிவறிந்த மக்கட்பே றல்ல பி ற (குறள் 61) என மக்கட்பேறு அறிவறிந்த பேறு என உணர்த்தியவர் திருவள்ளுவர். ஆகவே, அறிவுப் பிறப்பே மனிதப் பிறப்பு; அப்பிறப்பிற்குரிய தனிச் சிறப்பு வாய்ந்த உடைமையைப் பெருக்கி வளர்த்துக் காத்துப் பயன்படுத்த வேண்டுவது பிறவிக் கடமையாகும். மக்கள் பிற உடைமைகளைத் தேடுவதில் மிகு கவனம் செலுத்தி அறிவுடைமையைப் போற்றத் தவறி விடல் ஆகாது என்பதை உணர்த்துவான் வேண்டியும் அறிவைத் தேடிக் கொண்டால் ஏனைய உடைமைகளைத் தேடுவது எளிது என்பதுடன் அறிவுடைமை வாய்க்கப் பெற்றார் பிற உடைமைகளைப் பெறத் தவறார் எனவும் உணர்ந்தமையால் அறிவுடையார் எல்லாம் உடையார் என்றும் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் என அறிவுடைமைக்கு முதன்மை வழங்கினார். அறிவுடைமைக்கு இணையான முதன்மை ஊக்கமுடைமைக்கும் வழங்குகிறார். ஏனெனில் மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் என்பதை உணர்த்தியதுடன் செயலாற்றப் பிறந்த பிறவி மனிதப் பிறவி ஆகவே வினைத் திட்பம் கட்டாயம் வேண்டும். வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் ஆகவே மனிதனின் தனி வாழ்வையும் விட நாட்டாட்சிப் பொறுப்பில் இருப்போர் செய்யும் எச்செயற் பாட்டிலும் கட்டாயம் மன எழுச்சி உடையராக இருக்க வேண்டும். இல்லையேல் ஏனைய உடைமைகளைத் தேடவும் இயலாது; தேடாமல் தானே வந்து எய்தினாலும் கட்டிக்காக்கவும் இயலாது. பயன்படுத்தவும் இயலாது; பயன் பெறவும் இயலாது என்பதை எடுத்துக் காட்டி விளக்க வேண்டிய தேவை வள்ளுவருக்கு நேர்ந்ததால் எடுத்து மொழிந்த குறளே, உடைய ரெனப்படுவ தூக்கம்; அஃதிலார் உடைய துடையரோ மற்று (குறள் 591) உடைமைகளில் அடிப்படையான உடைமையும் முதன்மையான உடைமையும் ஊக்கம் உடைமை ஒன்றேயாகும். ஊக்கவுடைமை இல்லாதார் பிற உடைமைகள் பலவற்றைப் பெற்றிருப்பினும் அவர் முழுநிறைவுடைய உடைமையாளராகக் கருதப்படமாட்டார். ஊக்கமே சொத்தாகும். ஊக்கம் இல்லாதவர்களிடம் பிற சொத்துகள் இருப்பினும் சொத்து உடையவராகார். ஆகவே, ஔவைப் பெருமாட்டியும் ஊக்கமது கைவிடேல் என ஆணையிடுகிறார். ---------- உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் (குறள் 592) உள்ளம் என்னும் சொல் எதனை உணர்த்துகிறது? நிலையான உடைமை எது? நிலையற்ற உடைமை எது? நிலையற்ற உடைமையையும் நிலைபெறச் செய்யும் உடைமை எது? என்னும் வினாக்களுக்கு விடை பகரும் குறள் இதுவாகும். நிலைத்த உடைமையைக் கூறுவதுடன் நிலையா உடைமையை நிலைத்த உடைமை என மயங்கி ஏமாந்து விடல் ஆகாது என்பதையும் இணைத்து உணர்த்த எண்ணிப் படைத்த குறளாகவும் இது அமைந்துள்ளது. பொருளின் தேவையையும் பயனையும் உணர்ந்த திருவள்ளுவர் பொருளின் தன்மையை அற்கா இயல்பிற்றுச் செல்வம் (குறள் 333) கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று (குறள் 322) எனவும் பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள (குறள் 241) என விளம்பியது போல் இங்கும் பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும் என உணர்த்துகிறார். பொருளுடைமையே உண்மையான உடைமை எனக் கருதி, அல்லும் பகலும் அயராது உழைத்து உழைத்துப் பொருளைத் தேடிக் குவித்து மகிழும் செல்வர்களைக் கண்டு திருவள்ளுவர், இன்று உங்கள் உடைமையாய் இருக்கும் பொருள் நாளை யாருடைய உடைமையாக இருக்கப் போகிறதோ? தெரியாது. யாரிடமும் நிலைத்து நிற்காதே! ஆற்று வெள்ளம் பள்ளத்தை மேடாக்கும், மேட்டைப் பள்ளமாக்கி விடுவதைப் போல, பொருட்செல்வமும், ஏழையைச் செல்வனாக்குவது போல், செல்வனையும் ஏழையாக்கி விடும் தன்மை பொருந்தியது. ஆகவே, அதைத் தேடும் போதும் கவனம் வேண்டும்; காக்கும் போது அதனினும் கவனம் வேண்டும்; பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் வேண்டும் என விழிப்புறுத்தும் வள்ளுவர். ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள உள்ளத்தை எப்பொழுதும் எதனாலும் துவளாத எழுச்சியுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். திட்டமிட்டுச் செய்ய முற்பட்ட நல்வினையில் தடை ஏற்பட்டாலும், இடையூறு நேர்ந்தாலும், தொல்லை துயரம் ஏற்பட்டாலும் இழப்பு நேர்ந்தாலும், காலம் நீட்டினாலும் பின்வாங்கி விடாமல் தளரா மனவூக்கம் கொண்டு முன்னேறத் தூண்டும் உள்ளமே ஊக்கும் உள்ளமாகும். அவ்வுள்ளமே உடைமையாகக் கொள்ளத் தக்கது. அத்தகைய ஊக்கமாகிய உடைமையே மெய்யான உடைமையாகும். எதனை இழந்தாலும் உள்ளமாகிய ஊக்கத்தை யாரும் இழந்துவிடக் கூடாது என்னும் பரிவில் வள்ளுவர் இக்குறளை வடித்துள்ளார். ஊக்கமே நிலையான செல்வம்; பொருட் செல்வமோ நிலையற்றது. உள்ளமுடையான் முயற்சி செய்ய ஒருநாளே வெள்ளநிதி வீழும் விளையாதது அதனின் இல்லை என்னும் சீவக சிந்தாமணிப்பாடல் ஒப்பு நோக்கத் தக்கது. அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும் திருவுடையார் ஆயின் திரிந்தும் - வருமால் பெருவரை நாட! பிரிவின்று அதனால் திருவினும் திட்பம் பெறும் என்னும் பழமொழிப் பாடல் நல்லதொரு விளக்கமாய் அமைந்துள்ளது. ----------- ஆக்கம் இழந்தேமென் றல்லாவார், ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார் (குறள் 593) எந்தத் தொழிலிலும் எப்பொழுதும் ஊதியம் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்று சொல்வதற்கு இயலாது. சில வேளைகளில் அடுக்கடுக் கான இழப்புகளும் தோல்விகளும் ஏற்படலாம். யாரெல்லாம் தோல்வி களையும் இழப்புகளையும் பற்றியே எண்ணி வேதனைப்பட்டு, நம்பிக்கை இழந்து முடங்கிவிடுகிறார்களோ அவர்கள் ஒரு காலத்திலும் முன்னேற முடியாது. மனத்தில் ஊக்கமாகிய பெருஞ் செல்வத்தை வைத்திருப் பவர்கள், பொருளாகிய செல்வத்தை எத்தனை முறை இழந்தாலும், இழந்து விட்ட தாகக் கருதிப் புலம்ப மாட்டார்கள். இழப்பிற்குக் காரணம் எதுவாக இருக்கும் என்று பொறுமையாக ஆராய்ந்து பார்த்து முடிவு காண்பார்கள். அவ்வாய்வு முடிவை அடுத்த முயற்சிக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். தோல்விகளைத் தடைக்கற்களாகக் கருதிக் கலங்காமல் வெற்றிப் பாதையின் படிக்கட்டுகளாகக் கருதிக் கொள்வர். ஊக்கமுடைமை இருக்கும் வரை எந்த உடைமையை இழந்தாலும் கவலை ஏற்படாது! துணிவும் ஊக்கமுமே உண்டாகும். அவ்வூக்கம் விரைவில் இழப்பை ஈடுகட்டும், மேலும் மேலும் முன்னேற்றம் அடையச் செய்யும். கார்லைல் எழுதிய பிரெஞ்சுப் புரட்சியின் முதல் பாகம் எழுதப் பட்டிருந்த தாள் கட்டினை எடுத்து, தன் வீட்டுப் பணிப்பெண் இரவு வேளைகளில் புத்தகம் படிக்க வெளிச்சம் வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு தாளாக நெருப்பிலிட்டுக் கொளுத்தி விட்டதாக வெளி யீட்டாளர் சாண்ச் டூவர்ட் மில் காரிலைலிடம் வருந்தி உரைத்தார். செய்தி அறிந்த கார்லைல் சிறிதும் அதிர்ச்சி அடையவும் இல்லை; வருந்தவும் இல்லை. அப்படியானால், அதனை மீண்டும் எழுதித் தருவ தாகக் கூறினார். அதை மீண்டும் எழுதி முடிக்க ஓராண்டுக் காலம் ஆயது. எத்தனையோ துன்பதுயரங்கள் நேர்ந்த போதும் மனம் தளராமல் எழுதி முடித்தார் என்னும் வரலாற்று நிகழ்ச்சி தக்க சான்றாகும். பல பொருள்களையும் செய்யக் கூடிய விதத்தில் மரப்பாலாகிய இரப்பரைப் பக்குவப்படுத்தும் நுட்பத்தைக் கண்டு பிடித்தவர் குட்இயர். இவர் அதற்காகப்பட்ட துன்பமும் துயரமும் கணக்கில் அடங்காது. தமது உடைமைகள் அனைத்தையும் விற்று ஆராய்ச்சிக்குச் செலவு செய்தார். அதனால் குடும்பம் பல நாள்கள் உண்ண உணவிற்கே வழியற்று வாடியது. அவருடைய 12 குழந்தைகளில் 6 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உறவினர்கள் அனைவரும் வெறுத்து ஒதுக்கினர். கடன் கொடுத்தவர்கள் வழக்குத் தொடர்ந்து சிறைத் தண்டனை வாங்கித் தந்தனர் தண்டனைக் காலம் முடிவடைந்து, வெளிவந்த பின்னரும் அவரது ஆராய்ச்சி வேகம் தணியவில்லை கடைசியில் வெற்றியும் பெற்றார் என்பது ஊக்கமுடை மைக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டாகும். மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு (குறள் 610) என்பது மடியின்மை அதிகாரக் குறள். முயற்சி திருவினை ஆக்கும் (குறள் 616) மடியிலான் தாளுளாள் தாமரையினாள் (குறள் 617) என்பன ஆள்வினையுடைமை அதிகாரக் குறளடிகளோடு, ஒத்து இயங்கும் குறளே, ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்; அசைவிலா ஊக்க முடையா னுழை (குறள் 594) ஆக்கம் வழி தேடி எங்கே செல்லும்? அசைவிலா ஊக்கம் உடையவனிடம். எடுத்த செயலை முடிக்கும் முன்எத்தனையோ தடைகள், குறுக் கீடுகள், இடையூறுகள், அச்சுறுத்தல்கள், இழப்புகள், முட்டுப் பாடுகள், தட்டுப்பாடுகள், துன்பங்கள், துயரங்கள், நோய்நொடிகள், ஏற்படலாம். அவற்றைக் கண்டு அஞ்சாமல், மன உறுதியுடன் மேலும் எழுச்சி கொண்டு, பணியை நிறைவுடன் முடிப்பதிலே அசைக்க முடியாத ஊக்கத்துடன் உழைத்தால், பயனை எதிர் நோக்காமல் வினையே உயிர் என உறுதியுடன் விளங்கினால், வரும் வருவாயாகிய செல்வத்தை யாரும் தடுக்க முடியாது. அதற்கு முன் வந்து பழக்கம் இல்லை வழி தெரியாது என்றாலும் தெளிவாக விசாரித்து அறிந்து, தானே வந்து சேரும் என வள்ளுவர் உறுதி மொழி வழங்குகிறார். தளரா ஊக்கத்துடன் உழைப்பது நம் கடமை. செல்வம் தானே வரும். தொடங்குவினை தவிரா அசைவில் நோன்தாள் கிடந்துயிர் மறுகுவ தாயினும், இடம்படின் வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த தாழ்வில் உள்ளம் தலைத்தலை சிறப்பச் செய்வினைக்கு அகன்ற காலை என வெள்ளாடியனார் அகநானூறு, பாலைத் திணையில் பாடிய பாடல் அடிகள் அசைவிலா ஊக்கத்திற்குத் தக்க இலக்கியச் சான்றாகும். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் என்பதற்கு, பெருமுழங்கு திரைவரைகள் நீந்திப்பிணி உறினும் திருமுயங்கல் இல்லைஎனின் இல்லைபொருள் ஈட்டம் ஒருமுழமும் சேறவிலர் எனும் பொருள் ஊர்க்கே வரும்வழிவி னாய்உழந்து வாழ்கதவம் மாதோ என்னும் சீவக சிந்தாமணிப்பாடல் ஏற்ற எடுத்துக் காட்டாகும். ஆக்கம் இங்கு ஒருவரால் அணுக வேண்டுமேல் ஊக்கம் உண் டாவரேல் உறுவர்; அன்னது நீக்கமில் கொள்கையின் நிற்ப ரேஎனின் மேக்குறு பெருந்திரு விரைவின் மேவுமால் என்னும் கந்தபுராணப் பாடல் நல்ல விளக்கமாம். ----------- வெள்ளைத் தனைய மலர்நீட்டம், மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு (குறள் 595) வளர்ந்து வரும் இளைஞர்கள் எப்பொழுதும் திருவள்ளு வரைச் சூழ்ந்து கொண்டு இருப்பர். மழைக் காலம், நாளும் மழை பெய்கிறது. அண்மையில் ஒரு தாமரைக் குளம் இருந்தது. அங்கே, தொடர்ந்து இளைஞர்களை அழைத்துச் சென்றார். தாமரைக் கொடியின் உயரத்தை நாளும் அளக்கச் சொல்லிக் குறித்துக் கொண்டார். முதல் நாள் 8 அடி இருந்தது மறுநாள் 12 அடி இருந்தது, அடுத்த நாள் 15 அடி இருந்தது அப்படிக் கூடிவந்ததையும் குறித்துக் கொண்டார். மழை பெய்வது படிப்படியே குறைந்தது. அதனால் குளத்திற்கு நீர் வரத்துக் குறைந்தது. இப்பொழுது அளந்து கணக்கிடும் போது தாமரையின் உயரம் குறைந்து கொண்டே வந்தது. மழைக் காலத்தில் தாமரையின் உயரம் கூடிக் கொண்டு வந்ததற்கும், கோடைக் காலத்தில் தாமரையின் உயரம் குறைந்து கொண்டே வந்ததற்கும் என்ன காரணம்? குளத்தின் நீர் மட்டம் உயர்ந்தால் தாமரையும் உயரும்; குளத்தில் நீர் மட்டம் எவ்வளவு குறைகிறதோ அதே அளவு தாமரையின் உயரமும் குறையும். ஏன் இதைக் காட்டினேன் குளத்து நீர்ப் பெருக்குப் போன்றதே நாம் தொழில் ஈடுபாட்டில் கொள்ளும் ஊக்கம்; குளத்துநீர் தாமரையை உயர்த்துவது போல்; ஊக்கம் மனிதனை உயர்த்தும். ஆகவே, நீங்கள் எவ்வளவு உயர வேண்டுமென்று எண்ணுகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு ஊக்கமுடன் செயல்படுங்கள் என வேண்டினார். நீர்ப்பெருக்கின் அளவிற்குத் தகுந்தவாறு நீர்ப்பூவின் தண்டின் நீளம் அமையும்; அதுபோல், மாந்தரின் ஊக்கத்தின் அளவுக்குத் தக்கவாறு உயர்வு அமையும். மலரின் நீளம் - நீரின் அளவு; மாந்தர்தம் வாழ்வின் உயர்ச்சி ஊக்கத்தின் அளவு. நெப்போலியன் ஒரு கணக்கின் விடையைக் காண 72 மணி நேரம் விடாது முயன்று வெற்றி கண்டவன். அறிவியல் அறிஞர்கள் அனைவரின் சாதனைக்கும் வெற்றிக்கும் புதிய கண்டு பிடிப்புகளுக்கும் காரணம் அவர்களின் ஊக்க முடைமையே. எகிப்து காட்டின் குடியரசுத் தலைவராக உயர்நிலை எய்திய அன்வார் சதாத் குறைந்த ஊதியத்தில் படைத்துறையில் பணி புரிந்தவர். வருவாய் குடும்பச் செலவிற்குப் போதுமானதாய் இல்லை. சத்துணவு கொடுக்க முடியாமையால் மகளைப் பறி கொடுத்தார். அரசியல் காரணங் களால் படைத்துறைப் பணியிலும் நீடிக்க முடியவில்லை. வறுமையின் கொடுமைக்கு ஆட்பட்டு அல்லலுற்றார். எதை எதை இழந்தாலும் மனந் தளரவில்லை. ஊக்கம் மேலோங்கியது. தம் கடும் உழைப்பால் எகிப்து நாட்டின் குடியரசுத் தலைவராய் உயர்ந்தார் அவரை உயர்த்திக் கொண்டு சென்றது எது? ஊக்கம்! ஊக்கமே! ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனத்திண்மை உடையவராக இருப்பாரானால், அவர் எண்ணியவற்றை எண்ணியபடி அடைவார் எனும் உறுதியை எண்ணிய எண்ணியாங் கெய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (குறள் 666) என வினைத்திட்பத்தில் திட்பமாக உரைத்தார். இஃது எண்ணத்தின் வலிமையை உணர்த்தும் குறளாகும். படைச் செருக்கில் செயல் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை கான முயல்எய்த அம்பினில், யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது (குறள் 772) என்கிறார். காட்டில் தாவி ஓடும் முயலுக்குக் குறிவைத்து வெற்றி கொண்ட அம்பை ஏந்துதலைக் காட்டிலும், பெருமிதமாக எதிர்த்துவரும் யானை மேல் குறிவைத்துத் தப்பிய வேலைப் பிடித்தல் பேரின்பம் தருவதாகும். எளியவரை வெல்வதினும் வலியவருடன் எதிர்த்துப் போரிட நினைப்பது பெருமையாகும். அப்போரில் தோல்வியுற்றாலும் பெருமைக்குரியதே ஆகும். மணல் மேட்டின் மேல் கால் வைப்பேன் என்று கூறிப் பெறும் வெற்றியைக் காட்டிலும், இமய மலை உச்சியில் கால்வைப்பேன் என்று கூறி முயன்று வெற்றி பெற இயலாமல் அடைந்த தோல்வி பெருமைக் குரியதே ஆகும் எனும் நோக்கில் பாடிய குறளே, உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல், மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து (குறள் 596) என்பதாகும். உயர்வு தரும் செயல்களை எண்ணிப் பார்த்து, முழு ஈடுபாட்டுடனும் முழு ஊக்கத்துடனும் செயல்படுதல் வேண்டும். செயல் திட்டமிட்டவாறு உரிய நாளுக்குள் நிறைவேறாமல் காலம் கடந்து கொண்டு இருந் தாலும், அல்லது அச்செயலை முடிக்க முடியாமல் போனாலும், அல்லது அச்செயலால் நாம் எண்ணிய பயன் கிட்டாமல் போனாலும் அல்லது வேறு ஏதேனும் தடை ஏற்பட்டாலும் இழப்பு நேர்ந்தாலும் எந்நிலையிலும் ஊக்கத்தை கைவிட்டு விடக் கூடாது. செயல் நம்மைத் தள்ளினும் நாம் தள்ளாது முயல வேண்டும். உயர்ந்த செயலை ஊக்கமுடன் செய்ய வேண்டும். செயல் முடியா விட்டாலும் பழி ஏற்படாது. முயற்சி முடிவுக்கு முன்வாயில்; மூண்ட பயிற்சி உயர்வின் படியாம்; அயர்ச்சியிலா ஊக்கம், உழைப்பு உண்மை உண்டால், ஒசிவெனினும் ஆக்கம் உறுதி எனல் ஆம் என்னும் உலகியல் நூறு என்னும் நூற்பாடல் ஒப்பு நோக்கத் தக்கதாம். ------------ வினைக் களம், போர்க்களம் போன்றதாகும். செயல்புரியும் தலைவன் யானைப் படை போன்றவன். போர்க்களம் சென்ற யானை மீது பகைவர்கள் எய்தும் அம்பு பாயப் பாய முன்னேறித் தளராது போரிடும். அம்புகள் தன் உடல் முழுமையும் ஆழமாக புகுத்தப் பட்டிருந்தாலும் அதனையும் தாங்கிக் கொண்டு தன் கடமையில் சோர்ந்து போகாமல் தன் பெருமிதத்தை நிலைநாட்டும் இயல்பு யானைக்கு உண்டு. அதுபோல் ஊக்கமுடன் செயல்புரிவர்கட்கு ஏற்படும் துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக் கொண்டும் தளராமல் உறுதியுடன் செயல்படுவர். அம்புகள் தைத்தாலும் யானை வலியைத் தாங்கிக் கொள்ளும். ஊக்கம் உடையார் அழிவிலும் சோர்வடையார். விடுதலைக் கொடியேற்ற முனைந்த திருப்பூர்க் குமரனைக் காவல் துறை ஊர்வலம் புறப்பட்டதில் இருந்து, தாக்கிக் கொண்டு தடுத்து நிறுத்த முற்பட்டது எனினும், குருதி கொட்டினாலும் மூச்சுத் திணறினாலும் பின்வாங்காது கொடியை பறக்கவிட்ட பின்தான் உயிர் விட்டான் என்னும் வீர வரலாறு தக்க சான்றாகும். இதனை எல்லாம் சிந்திக்கத் தூண்டும் குறளே, சிதைவிடத் தொல்கார் உரவோர்; புதையம்பிற் பட்டுப்பா டூன்றும் களிறு (குறள் 597) உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு (குறள் 598) ஊக்கமுடைமையின் தொடர் வெளிப்பாடே ஆள்வினையுடைமை அவ் வதிகாரத்தில் பிறர்க்கு உதவுதல் என்னும் பெருமிதம் இடைவிடா முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த தன்மையிலேயே அடங்கியுள்ளது. முயற்சி இல்லாதவன் செய்ய நினைக்கும் உதவி, எதற்கும் அஞ்சும் கோழை ஒருவன் தன் கையில் கொண்ட படைக்கலம் போலச் செயலின்றி ஒழியும் என்பதை தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு (குறள் 613) தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை வாளாண்மை போலக் கெடும் 614 எனக் கூறும் கருத்தோட்டத்தில் வடித்த குறளே உள்ளம் இலாதவர் எய்தார், உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு 598 செருக்கு என்னும் சொல் பெருமிதம் என்னும் பொருள் தரும். தொல்காப்பியர் கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே என்கிறார். உயர்ந்த கல்வி, சிறந்த வீரம், நிலைத்த புகழ், வறியவர்களை வாழ்விக்கும் கொடைப் பண்பு நான்கும் பெருமிதம் நல்கும் பண்புகளாகும். கொடைப் பண்பால் உண்டாகும் பெருமிதத்தை இக்குறள் சுட்டுகிறது. வள்ளியம் என்னும் செருக்கு என்னும் தொடர் வளம் நிறைந்தவன் என்னும் பெருமிதம், பெருமையுடையவன் என்னும் பெருமிதம், வலிமை யுடையவன் என்னும் பெருமிதம், கொடையாளன் என்னும் பெருமிதம் எனவும் பொருள் தரும் வளமான சொற் தொடர். ஊக்கம் இல்லாதவர்க்கு அதனால் உண்டாகும் முயற்சியும், முயற்சி யால் உண்டாகும் ஆக்கமும், ஆக்கத்தால் உண்டாகும் கொடையும், கொடையால் உண்டாகும் செருக்கும் எய்த வாய்ப்பில்லை. இப்பரந்த உலகில், யான் இரந்துண்டு வாழும் புகழில்லா வாழ்வு வாழாமல், எம்மால் இயன்ற அளவு வறியவர்களின் வறுமை அகல, வாரி வழங்கும் கொடையாளனாக வாழ்கிறேன் என்றும் வாழ்வேன் என்றும் ஒருவன் பெருமிதத்துடன் எண்ண வேண்டுமானால் அடிப்படையில் அவன் ஊக்கமுடையவனாய் இருக்க வேண்டும். உலகத்தில் வள்ளியன் என்னும் உயர்ந்த பெருமிதத்தை ஊக்கம் இல்லாதவர்களால் ஒருகாலத்திலும் அடைய முடியாது. பறம்பிற் கோமான் பாரி, கொல்லி ஆண்ட வல்வில் ஓரி, மாரிஈகை மறப்போர் மலையன், கொடும் பூண் எழினி, பெருங்கல் நாடன் பேகன், மோசி பாடிய ஆய், கொள்ளார் ஓட்டிய நள்ளியும் ஊக்கத்தால் வள்ளியம் என்னும் செருக்கு எய்தியவர்கள். ஊக்கமுடன் உழைக்க வேண்டும்; தேடி யதைத் தாமே துய்க்க எண்ணாமல் வழங்கி வாழ வேண்டும். பெருமிதம் எய்த வேண்டும். தக்க பயிற்சி வழங்கி ஊக்கம் ஊட்டப்பட்ட யானையின் கடமை உணர்வை புதையம்பிற் பட்டுப்பா டூன்றும் களிறு என ஊக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் எடுத்துரைத்தார். காட்டு யானை தன் வலிமையை உணராதது. இங்கே, யானையினும் புலியின் ஊக்கம் பெரிது என்பதை உணர்த்தும் குறளே, பரியது கூர்ங்கோட்ட தாயினும், யானை வெரூஉம் புலிதாக் குறின் (குறள் 599) என்பதாகும். நம் நாட்டுக் காட்டில் வாழும் உயிரிகள் எல்லா வற்றுள்ளும் யானை பெரிய உருவத்தை உடையது; எதிரியைக் குத்தி வீழ்த்துவதற்கு ஏந்தான கூர்மை வாய்ந்த கொம்பு களையும் உடையதுதான். அதன் தோற்றத்தோடு ஒப்பிட்டு நோக்கும் போது புலி மிகச் சிறிய உடம்பினை உடையது. அதற்குக் கொம்பும் கிடையாது. இவ்விரண்டில் எதற்கு எது அஞ்சும்? புலியைக் கண்டால் யானை அஞ்சும். ஏன்? புலியின் ஊக்கமே காரணம். யானை மெய்வலிமை மிக்கதும், குத்தும் உறுப்பு உடையதுமாய் இருந்தும், ஊக்கம் இன்மையால், ஊக்கம் உடைய சிற்றுடம்பு மோழைத் தலைப் புலியால் கொல்லப்படும். நாடாள்வோர் ஊக்கம் அற்றவராய் இருந்து, படைப் பெருக்கமும் கருவிச் சிறப்பும் உடையவராய் இருப்பார் ஆயினும் படைப் பெருக்கோ, கருவிச் சிறப்போ இல்லாத ஊக்கமுடையவரால் வெல்லப்படுவார். ஊக்கமுடைய தனியொரு வீரனும் பெரும்படையை வெல்வான். கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை நனவில் தான்செய்தது மனத்தது ஆகலின் கனவில் கண்டு கதுமென வெரீஇ என்னும் கலித் தொகைப் பாடல் ஒப்பு நோக்கத்தக்கது. அரண்தரு திரள்தோள் சாலவுளஎனின் ஆற்றல் உண்டோ வீரன் காண்டநீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த கழற்கால் திரண்ட தோள் வனத்தைஎல்லாம், சிறியது ஓர் பருவம் தன்னில் இரண்டுதோள் ஒருவன் அன்றோ, மழுவினால் எறிந்தான் என்றாள் என்னும் கம்ப ராமாயணப் பாடல் தக்கதோர் எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. ------------- மண்ணோ டியைந்த மரத்தனையர், கண்ணோ டியைந்துகண் ணோடா தவர் (குறள் 576) எனக் கண்ணோட்டம் இல்லாதவர் மரம் போன்றவர் என்ற திருவள்ளுவர் பண்புடைமையில், அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் (குறள் 997) என மக்கள் பண்பற்றவரும் மரம் போன்றவர் என மரத்தை உவமை ஆக்கி உரைத்தாங்கு உரைக்கும் குறளே, உரமொருவற் குள்ள வெறுக்கை; அஃதில்லார் மரம்;மக்க ளாதலே வேறு (குறள் 600) ஒவ்வொருவருக்கும் உண்மையான வலிமையாய் அமைவது எது? என வினவினால் அவரவர் மனத்தில் பொருந்தியுள்ள ஊக்கம் மிகுதியே உண்மையான வலிமையாகும். ஊக்கம் இல்லா மனிதர்களை மனிதர் எனக் கருதலாமா? ஊக்கம் இல்லாதவர்களை மனிதர்களாகக் கருதக் கூடாது. அப்படியானால் அவர்களை பயனற்ற மரங்களாகவே கருத வேண்டும். ஏன்? ஊக்கம் இல்லாதவன், மனிதன் அல்லன். ஆனால் அவனை மனிதன் என்றே உலகம் கூறுகிறது. மனித உருவம் தாங்கியுள்ளானே? அதுதான் அவனுக்கும் மரத்திற்கும் வேறுபாடு? என்கிறார் வள்ளுவர். ஊக்கம் முரண்மிகுதி ஒன்றிய நற்சூழ்ச்சி ஆக்கம், அவன்கண் அகலாவால் - வீக்கம் நகப்படா வென்றி நலம்மிகு தாராற்கு அகப்படா அரண் இல்லை என்னும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல் உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை என்பதை வலியுறுத்துவதையும் எண்ணிப் பார்க்க! உடலால் பெயரால் மனிதராய் இருப்போர், உணர்வாலும் ஊக்கத் தாலும் மனிதராய் விளங்க வேண்டும். பயனற்ற மரம் போன்றவர் என்னும் இழிமொழிக்கு ஆளாகல் ஆகாது. ---------- ஊக்கம் உடையவரே உடையவர் ஊக்கமற்றவர் உடைமை அற்றவரே உள்ளம் உடைமையே உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும் ஊக்கம் உடையார் ஆக்கம் இழந்து வருந்தார் ஊக்கம் உடையவனிடம் செல்வம் தேடி வரும் வெள்ளத் தனைய மலர் நீட்டம் உள்ளத்து அனையது உயர்வு உள்ளுவ தெல்லாம் உயர்வே உள்ளுக ஊக்கம் உடையார் அழிவுக்கும் அஞ்சார் ஊக்கம் உடையவரே வள்ளலாவார் ஊக்கம் உடைய புலிக்கு யானையும் அஞ்சும் ஊக்கமே பெருவளம் ஊக்கமற்றவர் மரமே யாவார் 61. மடியின்மை ஊக்கமுடைமையை அடுத்து வைக்கப்பட்ட அதிகாரம் மடி இன்மை என்பது ஆகும். மடியைச் சோம்பல் என்றும் கூறலாம். ஆகவே, சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் உழைக்க வலியுறுத்துவதே மடி இன்மை அதிகாரத்தின் நோக்கம். முன்னேறத் துடிப்பார்க்கு ஆகாத குணம் சோம்பல் ஆகும். சோம்பல் வாழ்வு, தேங்கும் வாழ்வாகவும், தேயும் வாழ்வாகவும், தெம்பு இல்லா வாழ்வாகவும், தேம்பி அழும் வாழ்வாகவும் அமைவது உறுதி. FL«g¤ jiyt‹, Kjš ehlhS« jiyt‹