kiwkiya«-- 19 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) கட்டுரை 4  அறிவுரைக் கோவை  உரைமணிக்கோவை ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+304 = 336 விலை : 420/- மறைமலையம் - 19 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலையடிகள் நூற்றாண்டுவிழா! புலன் மழுங்கிக் கிடந்த தமிழர் உள்ளத்துத் தனித்தமிழ் ஒளியேற்றிய அடிகளாரின் பெருமை சொல்லில் அடங்காது. அவர்களின் வாழ்வியல் தொண்டு முக்கூறுகளைக் கொண்டது. மொழித் திருத்தம், சமயத் திருத்தம், இனத் திருத்தம் ஆகியவை அவை. மொழி நிலையில் நெடுங்காலமாக ஆரியத்தால் கட்டழிந்த செந்தமிழைத் தம் வளமை மிகும் புலமைத் திறனால் கட்டறுத்து, மீண்டும் செழுந் தமிழாக உலா வரும் நோக்கத்தையும், வரலாற்றையும் தொடக்கி வைத்த பெருமை அடிகளாரையே சாரும். அடுத்து, போலி மூட நம்பிக்கைகளாலும், சாதிச் சழக்குகளாலும் சீர்கெட்டு வந்த சைவ சமயத்தைத் தம் அகப்புற ஆய்வால் புலந்திருத்திய செவ்வி அடிகளாருடையது. மற்று, ஆரியப் பார்ப்பனரால் தாழ்த்தப்பட்டும், வீழ்த்தப்பட்டும், திசை மாற்றப்பட்டும் நிலை தடுமாறிய தமிழினத்திற்கு, மெய் வரலாற்றுக் கூறுகளைத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் நன்கு எடுத்துக் காட்டி, பழந்தமிழ் வரலாற்றில் ஒளியேற்றிய அவர் உரனுங் கொள்கையும் ஒருங்கு நினைக்கற்பாலன. - பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்ச்சிட்டு குரல் - 8, தி.பி. 2007 - துலை - நளி (நவ. 1975) இசை -12 மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்பதற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருகவேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாராணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழ வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. நூலுரை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1971இல் தொகுத்து வெளியிடப்பட்ட நூலாகும். அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மையும் ஞானயோகமும் முதலாக, சீர்திருத்தக் குறிப்புகள் ஈறாகப் பதினொரு கட்டுரைகளையுடைய தொரு தொகை நூல் இது. இவற்றுள் சில, அடிகளார் சுவடிகளாக வெளியிட்டவை; கட்டுரையாக வரைந்தவை. பொழிவு செய்தவை எனப் பலவகைத் தொகை இது. இயற்கை அழிவுகளை மாந்தரால் எவ்வாறும் நீக்க முடியாமையை விளக்கி நம் அறிவுக்குப் புலனாம் பொருள்களுள் ஒன்றாயினும் மாறா நிலையினவாய் ஒருபடித்தாய் நிற்கக் காண்கின்றோமா? இல்லை! இல்லை! என்கிறார். தோன்றி மறைபவை உண்மைப் பொருளாகா! என்னும் மாறா உண்மைப் பொருளே இறைமை! என்பவற்றை விளக்குவது முதற்கட்டுரை. மக்கட் பிறவியின் இழிபினை இறைவன் முன்னிலையில் எடுத்தெடுத்து விளம்பி அம்மக்கள் உள்ளத்தைத் தூய்மை செய்தற்கண் மாணிக்க வாசகர் திருவாசகத்திற்கு ஈடாவதொரு நூல் எம்மொழியிலும் இல்லை என்பது மாணிக்கவாசகர் மாட்சி. அகர முதலாம் எழுத்துக்களின் தோற்றத்தையும் நுட்பத்தையும் மூச்சுச் செலவுக் குறைவையும் பொருள் நிறைவையும் காட்டுவது தமிழுன் ஒலி எழுத்துகள். தமிழின் பழமையைக் கூறுவது நான்காம் கட்டுரை. உயிரெழுத்தின்இயற்கை எளிமை இயக்கமும் அம்மா, அப்பா என்பதன் இயன் மென்மை வன்மை இயையும் காட்டித் தமிழின்பழமை மாட்சியை விளக்குகிறார். குறளில் காணப்படும் சொற்களெல்லாம் தனித் தமிழ்ச் சொற்களே என்னும் அடிகளர், ஆதிபகவன் என்பதைப் பெற்றோர் பெயராகவே கொள்கிறார். புனைகதைகளின்மேல் கொண்ட நம்பிக்கை வழியது அதுவாம் (திருவள்ளுவர் திருக்குறள்). ஆசிரியர் தொல்காப்பியனார் ஈட்டி வைத்த தொல் காப்பிய முழுமுதல் நூலின்கண் கலவைகாண்டல் ஒருவாற் றானும் இல்லை எனத் தொல்காப்பிய முழு முதன்மையில் கூறுகிறார். குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி எழுதத் தொடங்கியதும் 115ஆம் அடிவரையே முடிய வாய்த்துளது. உரையின் முற்பகுதியும் கிடைத்திலது. பாட்டின் அழகையும் உருக்கும் தன்மையையும் விரியக் கூறிப் பொருட் பாகுபாடு செய்கிறார். நன்றின்பால் உய்ப்பதாம் விழுமிய காதற் குறிஞ்சி ஒழுக்கத்தினைப் பாட்டின் நுட்பம் முதிரச் சுவைக்குமாறு வைத்துப் பிரகத்தனுக்கு ஆசிரியர் அறிவுறுத்த வண்ணம் ஈண்டு ஒரு சிறிது விளக்கப்படலாயிற்று என்க என நிறைவதால் அடிகளா ர்முழுதுற எழுதிய பகுதி வாய்க்கவில்லை என்றே கொள்ள வேண்டியுள்ளது. இளந்தைக் கால வரலாறு என்பது அடிகளின் தொடக்க இருபதாண்டு வரலாறாகும். சிந்தனைக் கட்டுரைகள் என்னும் நூலில் இடம் பெற்றது. சென்னை வடபகுதியில் மணி திருநாவுக்கரசரும் தென்பகுதியில் திரு.வி.க.வும் இருகண்களாகத் திகழ்வதைச் சுட்டி, திருநாவுக்கரசின் சால்பு தொண்டு ஆயவற்றை விரித்துக் கூறும் கையறுநிலை 9ஆம் கட்டுரை. g¤jh« f£Liu, `ïªâ bghJbkhÊah? என்னும் சுவடியிணைப்பாம். அவ்வாறே சீர்திருத்தக் குறிப்புகள் என்னும் சுவடி இணைப்பே பதினொன்றாம் கட்டுரையாய் நூல் நிறைகின்றது. பல்வேறு காலங்களில் பல்வேறு நிலைகளில் எழுத்தாகவும் மொழிவாகவும் வெளிப்பட்ட தொகை இஃதாம். -இரா. இளங்குமரன். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி` புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிவுரைக்கோவை 1971இல் பாரி நிலையம் வெளியிட்ட நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் வெளிவருகிறது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... மறைமலையடிகளாரின் மறைவுக்குப் பின், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் அடிகளாரின் நூல் வடிவம் பெறாத சில கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாக்கியுள்ளனர். அவற்றள் ஒன்றது இது விளங்குகிறது. அடிகளாரின் பல்துறைக் கருத்துகளை இந் நூல்வழி அறிய முடிகிறது. உயிரெழுத்துகள் உணர்த்தும் உண்மைகளைத் தமிழின் ஒலியெழுத்துகள் என்னும் இந்நூற் கட்டுரை உணர்த்துகிறது. ஒலியெழுத்துகள் மூவகையின. ஆய்த ஒலி பற்றுக் கோடும் தடையு மின்றித் தானே இயங்குவதாம். பற்றுக்கோடும் தடையும் உற்றுத் தாமே இயங்குவன உயிரெழுத் துகள் பற்றுக்கோடும் தடையும் உற்றுத் தாமே இயங்காதன ஒற்றெழுத்துகள். மக்கள் உயிர் உணர்வுகளின் மென்மை, வன்மை, ஆறுதல், தேறுதல், வலிவு, பொலிவு ஆகியவற் றோடு அறிவார்ந்த அன்பாம் இன்பநிலை பயப் பிப்பது பாட்டின் பயன்பாடென்பதையும், அக - புறத் தூய்மைகளுக்கு அடிப்படையாயிருத்தலே பாட்டின் குறியென்பதையும் அடிகளார் கூறியுள்ளதை இந்நூற் கட்டுரைகளால் அறிகிறோம். - நா. செயப்பிரகாசு மறைமலையடிகளாரின் இலக்கியப் படைப்புகள் (பக். 26) பொருளடக்கம் பக்கம் அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மையும் ஞானயோகமும் 5 2. தமிழின் ஒலி எழுத்துகள் 31 3. தமிழ் மிகப் பழைய மொழியா மென்பது 56 4. தொல்காப்பிய முழுமுதன்மை 62 5. இளந்தைக் கால வரலாறு 71 6. தமிழ்த் திருவாளர் மணி. திருநாவுக்கரசு முதலியார் 78 7. சீர்திருத்தக் குறிப்புகள் 91 அறிவுரைக்கோவை நூலில் வெளிவந்த `திருவள்ளுவர் திருக்குறள் எனும் கட்டுரை திருக்குறளாராய்ச்சி (மறை மலையம் -10) எனும் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. m¿îiu¡nfhit üÈš btËtªj `ïªâ bghJ bkhÊah? என்னும் கட்டுரை அறிவுரைக் கொத்து (மறைமலையம்-17) என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் எனும் நூலில் (மறைமலையம்-22) மாணிக்கவாசகர் மாட்சி எனும் தலைப்பு இடம்பெற்றுள்ளதால், இந்நூலில் இக்கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. அறிவுரைக்கோவை நூலில் வெளிவந்த குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி எனும் கட்டுரை, முல்லைப்பாட்டு, பட்டினப் பாலை (மறைமலையம் -9) எனும் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. 1. அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மையும் ஞானயோகமும்* எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயலுண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும் இப்பொருள்அப் பொருளென்றே இசைப்ப தென்னே பொதுவில் இறைவர்செயும் நிரதிசய இன்பநடந்தனைநீ கைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே -இராமலிங்க அடிகள் இராமலிங்க அடிகளார் அருளிச் செய்த மேலைத் திருப்பாட்டினை மேற்கோளாக எடுத்துக்கொண்டு அம்பலவாணர் திருக்கூத்தினுண்மையும் ஞானயோகமும் என்னும் எமது விரிவுரையினை நிகழ்த்துவான் புகுகின்றோம் அறிவில்லா எவ்வகைப்பட்ட பொருள்களினகத்துப் புறத்தும், அறிவுடை எவ்வகை யுயிர்களின் அகத்தும் புறத்தும், நிறைந்திருப்பதும் இயற்கையுண்மையும் இயற்கையறிவும் இயற்கையின்பமும் உடையதாகி ஓவாது இயங்குந் திருக்கூத்தை இயற்றுவதும் ஆன உண்மைப்பொருளாஞ் சிவம் ஒன்றே முழுமுதற் கடவுளாகும் என்பதூஉம், இதனுண்மையை யுணர்ந்து அவ்வாற்றாற் சிவவயமாய் நின்றவர்க்குத் தாம் பேரின்பத்தை யடைந்த அவ்வளவில் மனவமைதி பெறாது தாம் பெற்ற பெறலரும் பேற்றை அது பெறாத ஏனை மக்களும் பெறும்படி அவர்க்கு அதனை யெடுத்துக்கூறும் அருளிரக்க முண்டாமென்பதூஉம், அங்ஙனஞ் சிவஞானிகளாயினார் கூறும் மெய்யுரையினை ஏற்று நலம்பெறும் நல்வினை வாயாதார் தமக்குள்ள ஆணவ அறியாமை முனைப்பால் அம் மெய்யுரையினை விடுத்து முழுமுதற் கடவுளல்லாத சிற்றுயிர்களையும் உயிரல் பொருள்களையுந் தெய்வமெனத் துணிந்து இதுதான் கடவுள் அதுதான் கடவுள் என இசைத்துத் தம் பிறவிப் பயனை இழப்பரென்பதூஉம், மற்று அங்ஙனம் அறியாமை வயப்பட்டார் போலாது மெய்யுணர்ந்தார் கூறும் மெய்யுரை யினை ஏற்று அதன்வழி நிற்கவல்ல நல்லார்க்கு எவ்வுயிர்க்கும் பொதுவாய் அருள் வெளியிலே ஆடல்புரியும் அம்பல வாணன் இன்பக் கூத்தினை நினைவு ஒருங்கி உணர்ந்து பிறவித்துன்பமறக் காணும் பேரின்பக் காட்சி வாய்த்தலின் அவர்க்கு உயிரினியல்பு உலகினியல்பு மலத்தினியல்பு முதலாயினவெல்லாம் பட்டப் பகலிற் கண்ணெதிரே காணப்படும் பொருள்போல் நன்கு புலனா மென்பதூஉம் மேலைத் திருப்பாட்டில் நன்கெடுத்து நுவலப்படுதல் காண்க. இனி, இவைதம்மை முறையே விளங்க விரித்து ஆராய்ந்து காணப் புகுவாம். உலகத்தில் நம்மறிவிற்குப் புலனாகும் பொருள்களெல்லாம் அறிவில் பொருளும் அறிவுடைய உயிர்ப் பொருளும் என்னுமிருபெருங் கூற்றில் வந்தடங்குவனவாகும். இவை தம்முள், அறிவில் பொருள் களென்பன தாமே இயங்க மாட்டாவாய்ப் பிறிதொன்று இயக்கினால் இயங்குந் தன்மையவாகும். இனி, அறிவுடைய உயிர்களென்பன தாமே அறிவனவாயும் பிறர் அறிவித்தன வற்றை அறிவனவாயும் பிறர்க்கு அறிவிக்கவல்லனவாயும் உயிரற்ற பொருள்களை இயக்க வல்லனவாயு மிருக்கும். எனவே, உயிரில்லாப் பொருளின் றன்மையும் உயிருடைய பொருளின்றன்மையும் வெவ்வேறாய் ஒன்றினொன்று மறுதலைப்பட்டு நிற்றலின், இவை எக்காலத்தும் எவ்விடத்தும் ஒன்றினொன்று வேறான இயற்கையுடைய வாகவே இருக்குமல்லாமல், அறிவில் பொருள் அறிவுடைப் பொருளாகவும், அறிவுடைப் பொருள் அறிவில் பொருளாக வும் மாறுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் நிகழ மாட்டாதென்க. அற்றேல், மேனாட்டவரில் இயற்கைப் பொருளாராய்ச்சி யிற் சிறந்தாரான பாடியன் (க்ஷயளவயைn) என்பவர், அறிவில்லாத பருப்பொருளினின்றே அறிவுடைய உயிர்ப் பொருள் தோன்றுகின்றதெனப் பல முகத்தானாராய்ந்து கூறிய தென்னையெனின்; அவர் செய்த ஆராய்ச்சி உண்மை யுடையதன்று. ஏனென்றால், அவர் செய்த அவ்வாராய்ச்சி யினைத் திரும்பவும் நுணுகி யாராய்ந்த ‘டிண்டல்’ (கூலனேயடட) என்னும் பேராசிரியர், தாமாராய்ந்து கண்ட முடிபாக, உயிரில்லாப் பொருளிலிருந்து உயிருடைய பொருள் தோன்றாதென்றும், உயிருள்ள பொருட் சேர்க்கையி லிருந்தே பிறிதோருயிர் தோன்றுகின்ற தென்றும் அறிவுறுத்தி யுறுதிகூறியிருக்கின்றார்.* ஆகவே, அறிவில்லாப் பருப்பொரு ளிலிருந்து அறிவுடைய நுண்பொருள் தோன்றுமென்றல் உண்மையாராய்ச்சிக்கு ஒவ்வாதென்று உணர்தல் வேண்டும். இனி, ஏகான்மவாதங் கூறும் ஒரு சாரார் சடமென்றுஞ் சித்தென்றும் இரண்டில்லை; சடமே சித்து, சித்தே சடம், பிரமத்தினின்றே நெருப்பிற் புகைபோல மாயையாகிய சடப்பொருளுண்டாம் என்று கூறுவர். அவர் கூற்று மேலே காட்டிய உண்மையாராய்ச்சிக்கு ஒவ்வாமையானும்; நெருப்பினுண்டாகும் புகை நெருப்பை யணைந்த விறகின் காரியமேயல்லாது நெருப்பின் காரியம் அன்றென்பதற்குக் கனிந்த தணலிற் புகையுண்டாகக் காணாமையே சான்றா மாகலின் இவ்வுவமையின் தன்மையை யுற்றுணராது இதனைக் கொண்டு தூய அறிவுப் பொருளாகிய பிரமத்தி னின்று அறிவில்லாச் சடப்பொருளாகிய மாயை தோன்று மென்றல் ஒருவாற்றானும் பொருந்தாமையானும் ஏகான்ம வாதிகள் கூறும் பொருள் ஏற்கற்பாலதன்று. எனவே, அறிவில்லாப் பொருள்களும் அறிவுடைய உயிர்ப்பொருள் களும் எக்காலத்தும் வெவ்வேறாம் இயல்புடையவாகவே யிருக்கு மென்று கடைப்பிடித்துணர்தல் வேண்டும். இனி, இத்தன்மையவாகிய இரு கூற்றுப் பொருள் களுள், அறிவில்லதாகிய சடப்பொருள் தானே இயங்க மாட்டாதாகலின், அதனை இயக்குதற்கு அறிவுடைய பிறிதொரு பொருளின் சேர்க்கை அதற்கு இன்றியமையாது வேண்டப்படும். அஃதொக்குஞ், சடப்பொருளை இயக்குதற்கு அறிவுடைய உயிர்ப்பொருள்கள் இருத்தலின் அவையே போதும், அவற்றினும் வேறாகக் கடவுளென்று வேறோ ரறிவுப்பொருள் வேண்டப்படுதல் எற்றுக்கு எனச் சாங்கிய மதத்தார் கூறுபவாலோ வெனின்; அவர் கூற்றும் அடாது; ஏனென்றால், அறிவில்லாப் பொருளின் நிலைகளும், அவற்றின் எல்லை காணப்படாத பரப்புகளும், அப்பரப்பு களில் எல்லையில்லாமல் அடங்கிக் கிடக்கும் எண்ணிறந்த பொருள்களுஞ் சிற்றறிவு சிறுதொழில்களுடைய சிற்றுயிர் களால் எங்ஙனமியக்கப்படக்கூடும்? இந்த நிலவுலகத்தின் ஒரு சிறிய விடத்திலிருக்கும் ஒருவன் சில காலிருந்து சிலகாலத்தின் மாய்ந்து போகின்றவனாயுந், தான் உயிரோடிருக்குங் காலத்திலும் பலவகை நோய்களாற் பற்றப்பட்டு அந்நோய் தீர்த்தற்குப் பலவகை மருந்துகளாகிய பருப்பொருளுதவியை வேண்டி நிற்பவனாயுந், தான் உயிர் பிழைத்து வாழ்தற்கு அரிசி பருப்பு பால் நெய் முதலான பருப்பொருட் பண்டங் களினுதவியை இன்றியமையாது வேண்டி நிற்பவனாயுந், தன் கண்ணெதிரே அருகிலிருக்கும் இடங்களையும் பொருள் களையுமன்றித் தன் கட்பார்வைக்குப் புறத்தே அருகிலிருக்கும் பொருள்களையும் தன் கட்பார்வைக் கெட்டாத் தொலை விலுள்ள பொருளகளையுங் காண மாட்டாதவனாயும், நேரே அருகில் உள்ள பொருள் களுள்ளும் மிகச் சிறியனவா யிருப்பனவற்றைத் தெரிந்து கொள்ள மாட்டாதவனாயும், மிகப் பெரியன வாயிருக்குஞ் சுமைகளையும் பொருள் களையும் பிறருடைய பிறகருவி களினுடைய உதவியின்றி அசைக்க மாட்டாதவனாயும் இருத்தலின், இவனது அறிவிற்கும் இவனது ஆற்றலுக்கும் எட்டாத இந் நிலவுலக மாகிய பெரும் பருப்பொருளை இவன் றன்னறிவு கொண்டுந் தன் வலிமை கொண்டும் எங்ஙன மியக்கமாட்டுவான்? பருப் பொருளாகிய இந்நிலவுலகஞ் சிறிது அதிர்ந்தாலும், இதன்கண் உள்ள எரிமலைகள் வெடித்து நெருப்பைக் கக்கினாலும், இதன்கண்ணுள்ள ஆறுங் கடலும் வெள்ளம் பெருகினாலும், இதன்கண் உலவுங் காற்றுச் சூறாவளியாய்ச், சுழன்று அடித்தாலும் மக்களாகிய சிற்றுயிர்களும் இச் சிற்றுயிர்களா லமைக்கப்படும் நாடு நகரங்கள் மாடமாளிகை களும் பொடிப்பொடியாய் நுறுங்கிச் சாம்பலாய் வெந்து புழுதியாய்ப் பறந்து அழிந்துபோவதை எங்கண்ணெதிரே ஒரோவொரு காலங்களில் ஒரோவோர் இடங்களிற் காண்கின்றே மல்லேமோ? சான்பிரான்சிகோ வென்னும் அமெரிக்காவிலுள்ள மாப்பெரு நகரமும், இத்தாலி தேசத்திலிருந்த மெசீனாப் பட்டினமுஞ், சிறிது காலத்திற்கு முன் ஜப்பான் தேயத்தில் டோக்கியோ பட்டினமும் நில அதிர்ச்சியாலும் எரிமலை நெருப்பாலும் அடியோடழிந்து எரிந்து கரிந்த காலத்தில் அங்கங்கிருந்த மக்களெல்லாரும் பட்ட பெருந்துன்பத்தை அறியாதார் யார்? மக்கள் அவை தம்மைத் தடுக்கவல்ல ஆற்றலுடையரா யிருந்தால் அவ்வழிவுகள் நிகழாமல் தடை செய்திருக்கலாமன்றோ? இங்ஙனம் இந் நிலவுலகத்தின் ஒரோவொரு பகுதிகளில் நிகழும் அழிவு நிகழ்ச்சிகளையே அவை நிகழாமல் தடை செய்யவும், அழிந்து நீரிலமிழ்ந்திப் போன நிலப்பகுதிகளை மீண்டும் மேற்கொணர்ந்து நிலைவுறுத்தவுஞ், சிறிதும் ஆற்றலில்லாத நம் மக்கள் இந் நிலவுலகத்தைத் தாமாகவே ஆக்கவும் அழிக்கவும் நிலை நிறுத்தவும் வல்லர் ஆவர் என்று உரைப்பதினும் புல்லியவுரை வேறுண்டோ சொல்லுமின்! தமதுடம்பு பழுதுபட்ட விடத்து அதனையே ஆக்கிக் கொள்ளமாட்டாத நம்மனோர், எண்ணிறந்த பிறவுயிர் களுக்கு எண்ணிறந்த உடம்புகளைப் படைத்துக் கொடுக்க வல்லராதலும், அவ்வுடம்புகளோடு கூடியிருந்து இவ்வுலகத்து இன்பங்களை அவை நுகருமாறு பலவேறு பண்டங்களை யமைத்துவைக்க வல்லராதலும், அவ்வுடம்புகளும் அப்பண்டங் களும் இருத்தற்கு இம் மாப்பெரு நிலவுலகத்தைப் படைக்க வல்லராதலும் யாங்ஙனங் கூடும்? பாருங்கள்! இந்நிலவுகத்தளவிலேயே ஆற்றல் மிகக் குறைந்தவராய் நிலையின்றி உயிர்வாழும் நம்மனோர், இந்நிலவுலகத்துக்கும் எட்டா நெடும் பெருந் தொலைவிலே இடைவெளியிற் சுழன்று செல்லும் பகலவன் மண்டிலந், திங்கள் மண்டிலஞ், செவ்வாய் மண்டிலம், புதன் மண்டிலம், வியாழன் மண்டிலம், வெள்ளி மண்டிலஞ், சனி மண்டிலம் முதலான வெவ்வேறு பேருகலங் களையும்,இவற்றிற்கும் நெடுந்தொலைவிலே இவற்றினும் பல்லாயிர மடங்கு பெரியனவாய்ச் சுழன்று செல்லும் எண்ணிறந்த வான்மீன் மண்டிலங்களையும் எங்ஙனம் படைக்கவும் இயக்கவும் வல்லராவர்? இத்தனை கோடி யுலகங்களையுஞ் சிற்றுயிர்களாகிய நாம் படைக்க மாட்டுவேம், இயக்கமாட்டுவேம், அழிக்கமாட்டுவேம் என்று எவரேனுங் கூற முன்வருவராயின், அவரை மைத்துனர் பல்கி மருந்திற் றெளியாத பித்தனென் றெள்ளிச் சிறுமகாரும் நகையாடு வரன்றோ? ஆகவே, சிற்றறிவினரான உயிர்கள் தாமாகவே மாயையை இயக்கி, அதனிலிருந்து தம்முடம்பு களையும் உலகங்களையும் இவ்வுலகத்துப் பல பண்டங் களையும் படைத்துக் கொள்ள மாட்டுவரென்னுஞ் சாங்கிய ருரை, பிறந்த குழவி தன் தாயினால் எடுத்து அணைக்கப் படாமல் தானாகவே பாலிருக்கு மிடந்தேடி அதனைப் பருகுமென்று கூறுவாருரையோ டொத்து நகையாடற்பால தாய் முடியும். ஆதலால், அறிவில் பொருள்கள் எல்லா வற்றிற்கும் முதற்காரணமாகிய மாயையை இயக்கி, அதன் கணிருந்து சிற்றுயிர்களெல்லாவற்றிற்கும் அவ்வவற்றின் இயற்கைக்கு இணங்கப் பலவேறு வகையான உடம்புகளையும், அவைகள் நுகருதற்குப் பல்வேறு வகையான பண்டங்களை யும், அவைகள் இருந்து உயிர் வாழ்தற்குப் பல்வேறு வகை யான உலகங்களையும் முன்னறிந்து அமைத்து வைத்தற்கு, எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா முதன்மையும் எல்லா இரக்கமும் ஒருங்குடையனாகிய ஒரு முழுமுதற் கடவுள் இன்றியமையாது வேண்டப்படுவ னென்பது தெளிந்த முடிபா மென்றுணர்ந்து கொண்மின்கள்! ஆனது பற்றியே, இராமலிங்க அடிகளார் எப்பொருட்கும் எவ் வுயிர்க்கும் இறைவனாகிய சிவபிரான் உண்டென்பதனை மேலைத் திருப்பாட்டில் நன்கெடுத்து அறிவுறுத்தருளினார். இனி, அப் பெற்றியனான இறைவன் பொருள்களி னுள்ளும் புறம்பும் இருப்பனென்று கூறியதென்னை? இவ்விரண்டன் புறத்தே உருவுடையனாய் இருந்தே இவை தம்மை இயக்க மாட்டுவான் என்று துவிதவாதிகள் கூறுதல் போலாவது, அற்றன்று இறைவன் பொருள்களிலும் உயிர் களிலும் அருவாய் அவற்றின் அகத்தே மட்டும் இருப்பா னல்லது புறத்தே இருப்பானல்லனென அருவவாதிகள் கூறு முரைபோலாவது நுவலாமல், அவை இரண்டனகத்தும் புறத்தும் இருப்பனென அடிகளார் அருளிச் செய்த தென்னையெனிற் கூறு முரை போலாவது நுவலாமல், அவை இரண்டனகத்தும் புறத்தும் இருப்பனென அடிகளார் அருளிச்செய்த தென்னையெனிற் கூறுதும்; கடவுள் உருவமாயே இருப்பனென்றாவது, அன்றி அருவமாயே இருப்பனென்றாவது சொல்லி, எல்லாம் வல்ல அவனது இறைமைக் குணத்தை ஒரு வரையறைப்படுத்தல் அவன்றன் வரம்பிலாற்றலுக்கு இழுக்காய் முடியுமாதலானும். அவன் உருவமாயே இருப்பனென் றுரைப்பின் உருவு உடைய உலகத்துப் பொருள்களில் ஒருவனாய் முடிவன் ஆகலானும், அருவமாயே நிற்பனென் றுரைப்பின் அருவமாகிய வான்வெளி முதலிய பொருள்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படுவனாக லானும், புறத்தே இருப்பவனுக்கு அகத்தே செய்ய வேண்டு வனவும், அகத்தே இருப்பவனுக்குப் புறத்தே செய்யவேண்டு வனவும் அறிந்து செய்தல் இயலாமையானும், பொருள்கள் உயிர்களின் அகத்தும் புறத்தும் இருக்க வல்லவனுக்கே அவ்விரண்டிடத்தும் அவைகட்கு ஆவன அறிந்து செய்ய வல்லவனாகலானும் எல்லாம் வல்ல இறைவன் அருவாயும் உருவாயும் அகத்தும் புறத்தும் வரையறை யின்றி நிறைந்து நிற்பனென்பதே உண்மை முடிபாமென்று ஓர்ந்து கொள்ளல் வேண்டும். இவ்வுண்மை தேற்றுதற்கே ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார், இல்லா முலைப்பாலுங் கண்ணீரும் ஏந்திழையால் நல்லாய் உளவாமால் நீர்நிழல்போல் - இல்லா அருவாகி நின்றனை யாரறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று என்றும், அவர் தம் மாணக்கர் அருணந்திசிவனார், உலகினிற் பதார்த்த மெல்லாம் உருவமோ டருவ மாகி நிலவிடும் ஒன்றொன் றாகா நின்றஅந் நிலையே போல அலகிலா அறிவன் றானும் அருவமே என்னில் ஆய்ந்து குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித்தி டாயே அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற உருவமோ உரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின் அருவமும் உருவா ரூப மானது மன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே என்றும், அருளிச் செய்தனர்கள். வடமொழியில் ஈசா வாசியோநிடதமும், அவனைக் கண்டு எல்லாம் நடுங்குகின்றன, அவனெதற்கும் நடுங்குவதில்லை, அவன் எல்லாவற்றிற்குந் தொலைவிலிருக்கின்றான், அவன் எல்லாவற்றிற்கும் அருகிலுமிருக்கின்றான், அவன் எல்லாவற்றின் உள்ளுமிருக் கினறான், அவன் எல்லாவற்றின் வெளியிலு மிருக்கின்றான் என்று இவ்வுண்மையினையே நன்கெடுத்து மொழிவ தாயிற்று. இனி, இங்ஙனம் பொருள்களின் உள்ளும் புறம்பும் உயிர்களின் உள்ளும் புறம்பும் நிறைந்திருப்பானான இறைவ னியல்பு உணர்த்துவான் புகுந்து, அவன் இயற்கையுண்மையும் இயற்கை யறிவும் இயற்கையின்பமும் வாய்ந்தானாகி யிருப்பனென அடிகள் மொழிந்திட்டார். இறைவனியல்பு இப்பெற்றிய தாமெனவே, இறைவனது உதவியை அவாய் நிற்கும் பொருள்களும் உயிர்களும் அங்ஙனம் இயற்கை யிலேயே உண்மையும் அறிவும் இன்பமும் வாயாவாயிருக்கு மென்பதும் அறிவித்தாராயிற்று. இனி, இம் மூன்று தன்மை களின் இலக்கணங்களும், பொருள்களும் உயிர்களும் இவை தம்மை இயற்கையிலே யுடையவாகாமையும், இறைவ னொருவனே இவை தம்மை இயற்கையே யுடையனாதலும், இறைவனைச் சார்ந்தே உயிர்கள் அவை மூன்றும் நிலையாக எய்தப் பெறுதலும் முறையே விளக்கிச் செல்வாம். முதற்கண் உண்மை என்பது என்றும் ஒருபடித் தாய் நிற்கும் மாறாநிலையே யாகும். நமதறிவுக்குப் புலனாகும் பொருள்களுள் ஒன்றாயினும் மாறாநிலையினதாய் ஒரு படித்தாய் நிற்கக் காண்கின்றோமா? இல்லை, இல்லை. நாம் உயிர்வாழ்தற்கு இடமாயுள்ள இம் மண்ணுலகு எத்தன்மை யதாயிருக்கின்றது? ஒரு காலத்து மேடாயிருந்தது பள்ளமா கின்றது, பள்ளமாயிருந்தது மேடாகின்றது; பண்டைக் காலத்திற் சிறந்த நாகரிக முடையதாய் விளங்கிய குமரிநாடு இப்போது கடலுள் அமிழ்ந்திக் கிடக்கின்றது; கடலுள் மறைந்துகிடந்த எத்தனையோ நிலப்பகுதிகள் இப்போது கடல் நீருக்குமேற் பல தீவுகளாய்க் கிளம்பி யிருக்கின்றன; எத்தனையோ ஆயிரமாண்டுகளுக்குமுன் நாகரிகத்திற் சிறந்த மக்களால் எகுபதி நாட்டில் அமைக்கப்பட்ட பெரிய பெரிய நகரங்களும் அந்நகரங்களிலமைக்கப்பட்ட பெரிய பெரிய அரண்மனைகளும் பெரிய பெரிய கோயில்களும், அங்ஙனமே சாலடி நாட்டில் ஊர் என்னுந் தலைநகரில் எடுப்பிக்கப்பட்ட மிகப் பெரிய அரண்மனைகளும் மிகப் பெரிய கோயில்களும், அங்ஙனமே நமது இவ்விந்திய நாட்டின் வடமேற்பகுதியிற் குடியேறிய பண்டைத் தமிழ் மக்களால் தலைநகராக அமைக்கப்பட்ட அரப்பா என்னும் இடமும் அதன்கண் இருந்த அரண்மனைகளும் கோயில்களும் மண்மூடுண்டு, இப்போது மேல்நாட்டு நன்மக்களால் நிலத்தினின்றும் அகழ்ந்தெடுத்துக் காட்டப்படுகின்றன. முன்னொருகால் மேல்நாடு முழுமையுந் தம் செங்கோல் நீழல் இனிது வைக அரசு செலுத்திய உரோம நகரின் மிக வியக்கத்தக்க மாடமாளிகைகள் அழிந்து பாழாய்க் கிடத்தலை இப்போதுந் திரள்திரளான மக்கள் சென்று பார்த்து வருகின்றனர். இங்ஙனமே இத் தமிழ் நாட்டகத்தும் பழங்காலத்திருந்த தமிழ் வேந்தர் அமைத்த அரண்மனைகளுந் திருக்கோயில்களும் இடிந்து பாழாய்க் கிடத்தல் திருவாரூர், கங்கைகொண்ட சோளேச்சுரம், மகாபலிபுரம், செஞ்சி, வேலூர் முதலிய இடங்களில் இன்றும் எல்லாருஞ் சென்று பார்த்து வருகின்றனர். வைகை முதலிய யாறுகளும் முற்காலத்து ஓடிய வழிமாறி ஓடுகின்றன. மிகப்பழைய நாளில் வடநாட்டில் ஓடிய சரசுவதி என்னும் யாறு இப்போது இல்லாமலே போயிற்று. முன்னில்லாத பல யாறுகள் பின்னர்ப் புதியவாய்த் தோன்றி ஓடாநிற்கின்றன. நாம் உறையும் இந்நிலமண்டிலமே வரவரக் குளிர்ந்து வருகின்ற தென்றும், இன்னும் பல்லாயிர நூற்றாண்டுகள் கழிந்தபின் மக்களும் பிறவுயிர்களும் உயிர்வாழ்தற்கே இசையாதாய் இது மாறுமென்றும் நில நூல் வல்லார்கள் பெரிதாராய்ந்து உரைக்கின்றனர். இப்போது நமக்கு இரவில் ஒளியைத் தரும் நிலா மண்டிலமானது பன்னூறாயிர ஆண்டுகளுக்குமுன் உயிர் வாழ்க்கைக்கு இடமாயிருந்து, பின்னர் வரவரக் குளிர்ந்து உயிர் வாழ்தற்கு ஏலாத இயல்பினதாய் மாறியிருக்கின்றதென வான்நூலாசிரியர்கள் நுவல்கின்றனர். இன்னும் நம் கண்களுக்கு ஆலம்வித்துப் போலவும் மின்மினி யொளி போலவுந் தோன்றா நின்ற எத்தனையோ பெரிய பெரிய உலகங்களில் பற்பல முன்னரே அழிந்துபட்டனவாயும், வேறுபல புதிது தோன்றினவாயும், மற்றும் பல அழிந் தொழியும் நிலைமையில் இருப்பனவாயும் பற்பல மாறுதல்கட்கு உட்பட்டனவாய்ச் செல்லுகின்றன வென்னும் உண்மை வான் நூல் ஆராய்ச்சியாற் புலனாய்க் கொண்டிருக் கின்றது. நாம் நுகரும் பண்டங்கள் நாம் புழங்கும் ஏனங்கள் முதலாயின வெல்லாம் நாளேற நாளேறத் தமது கட்டுச் சிதைந்துந் தேய்ந்தும் அழிந்துபோதல் போலவும், நமக்கு நெருங்கிய தொடர்புடைய நம்முடம்பும் நாளேற நாளேற நரை திரை மூப்புப் பிணிகள் உடையவாகிக் கட்டுத் தளர்ந்து நம்மை விட்டு அழிதல்போலவும், இவ்வுலகமும் இவ் வுலகத்தைச் சூழ்ந்த எண்ணிறந்த உலகங்களும் அவற்றின்கண் உள்ள அளவிலாப் பண்டங்களும் ஒருகாற் றோன்றித் சிலகால் இருந்து பிறிதொருகாற் கட்டுக்குலைந்து காணாமற்போய்விடுகின்றன. ஆகவே, மிகச் சிறியது முதல் மிகப் பெரியதீறான எல்லாவகையான உயிரில்லாப் பொருள் களும் ஒரே நிலையாக இருக்க மாட்டாதனவாய்ச் சிதைந் தொழிந்து போதலால் அவைகளை ஒரே நிலையிலுள்ள உண்மைப் பொருள்களாகக் கூறுதல் இயலாது. இனி, உயிருடைய பொருள்களின் நிலை சிறிது ஆராயற் பாற்று. உயிருடையவைகள் எல்லாம் அறிவுடையன வாய் இருந்தும், அவற்றின் அறிவு என்றும் ஒரே தன்மையதாகச், சுருங்குதல் விரிதலின்றி என்றும் ஒரே அளவினதாக, அகவிருளால் இடையிடையே பற்றப்படாத னவாக விளங்கக் கண்ட துண்டோ? நாம் சிறுமகவாயிருந்த ஞான்று நமதறிவு எந்நிலை யிலிருந்ததென்பது நமக்கே விளங்கவில்லை. ஆனாலும், எத்தனையோ சிறுமகவுகளை நாம் நம் கண்ணெதிரே கண்டு, அவற்றின் இயல்பை உற்றுநோக்குதல் கொண்டு, அவற்றின் அறிவு ஏதோ ஒரு பேரிருளாற் கவரப்பட்டிருக்கின்ற தென்றுந், தாய்தந்தையார் உடன் பிறந்தார் நேயர் ஆசிரியர் முதலான பிற அறிவுடை யுயிர்களின் சேர்க்கையிலிருந்து அம்மகவுகள் சிறிது சிறிதாக அவ்விருள் நீங்கி அறிவு விளங்கப்பெற்று வருகின்றன வென்றுந் தெரிந்து கொள்கின்றோமாதலால், நாமுஞ் சிறு குழவிகளாய் இருந்த ஞான்று ஏனைக் குழவிகளைப் போலவே நம்மை இன்னாரென்றும், நம்மைச் சூழ்ந்தவர் இன்னா ரென்றும், நம்மைச் சுற்றியுள்ள பண்டங்கள் இன்னவை யென்றும் உணரமாட்டாதவர்களாயிருந்தோம் என்பதை ஐயமறத் தெளிந்து கொள்கின்றோம். இதுமட்டுமா, நாம் ஆண்டில் முதிர்ந்தவர்களாய்க் கல்விப் பயிற்சியாற், பேரறிஞர் சேர்க்கையால் அறிவு விளங்கப்பெற்ற பின்னும், நமதறிவு ஒரு தன்மைத்தாய் விளங்குவதின்றிப் பல்வேறு மாறுதல்களின் வயப்பட்டு, நம்மை இடையிடையே துன்புறுத்தி வரக் காண்கின்றேம் அல்லேமோ? நேற்று அறிந்தவைகளிற், சென்ற கிழமையில் அறிந்தவைகளிற், போன திங்களில் அறிந்தவைகளிற், கடந்த ஆண்டு அறிந்தவைகளில் எத்தனைகோடி நினைவுகள் எத்தனை கோடி எண்ணங்கள் நம்மறிவுக்குத் தென்படாமலே மறைந்து போயின! முன்னறிந்தவைகளை இங்ஙனம் நாம் மறந்து மறந்து போதலால் நமக்குவரும் இடர்களுக்கு, நம்மாற் பிறர்க்குவரும் இடர்களுக்கு ஒரு கணக்குண்டோ! முன்னறிந்தவைகளை மறத்தலால், நிகழ்ந்த வைகளை நிகழ்ந்தபடியே சொல்ல மாட்டாதவர்களாய்ப், பார்த்த பொருள் கேட்டபொருள் சுவைத்தபொருள் இயல்புகளை அப்பார்த்த கேட்ட சுவைத்தபடியே நினைவுகூர்ந்து சொல்ல மாட்டாதவர் களாய்ப் பொய்த்துப் பிழைபடுகின்றனம் அல்லமோ? கடந்தவற்றை யறியும் அறிவிற்றான் இத்தகைய மாறுதல்கள் நிகழ் கின்றன வென்றாலும், இப்போது நம் கண்ணெதிரே நிகழ்வனவற்றிலாவது நமதறிவு பொய்படுத லின்றி மெய்யாக அறிதல் செய்கின்றதா? அதுவும் இல்லையே! நாம் நேரே காண்கின்ற பொருளையும் ஆராய்ந்து பார்த்தா லன்றி ஐயமறத் தெளியமாட்டாத வர்களாய் இருக்கின்றோம். ஒரு துண்டு செம்பையும் ஒரு துண்டு பொன்னையும் பளிச்சென்று தோன்ற விளக்கிக் கையிற் கொடுத்தல், அவையிரண்டற்குமுள்ள வேறுபாடு தெரியாமல் எத்தனை பேர் ஏமாந்து போகின்றனர். தித்திப்பான நாரத்தம் பழங்கொடி முந்திரிப்பழம் முதலியன வாங்குபவரில் எத்தனை பேர் அவற்றை நன்கு ஆராய்ந்து பாராமல் வாங்கித், தாம் வாங்கிய தித்திப்புக்கு மாறான புளிப்புடையவாய் இருத்தலைக் கண்டு ஏமாந்து போகின்றனர். மருத்துவரில் எத்தனை பேர் நோயாளிகளின் நோயின் தன்மையை அறியாமல் மாறான மருந்துகளைக் கொடுத்து அவர் கொண்ட நோயை மிகுத்து அவரையுங் கொல்லு கின்றனர்! கணக்கரில் எத்தனை பேர் தவறாகக் கணக்குச் செய்து தாமும் பிழைபட்டுத், தாம் சார்ந்த செல்வரையுங் கெடுத்து விடுகின்றனர்! சமையற்றொழில் செய்வாரில் எத்தனை பேர் காலமும் இடமும் உணவெடுப்பார் உடல் நிலையும் ஆய்ந்து பாராமல் உணவு சமைத்துக் கொடுத்து, அதனை யுண்பார்க்குப் பல கொடுநோய்களை யெல்லாம் வருவித்துவிடுகின்றனர்! நூல் எழுதுவாரில் எத்தனைபேர் காலப்போக்கும் மக்கள் முன்னேற்றமுங் கருதிப் பாராமற் பயனற்ற பொருள்களை எழுதி மக்களறிவு வளர்ச்சியைப் பாழ்படுத்துகின்றனர்! அவருள் எத்தனைபேர் தாம் வழங்கும் மொழியைத் திருத்தமாகப் பயிலாமற் சொற்குற்றஞ் சொற்றொடர்க் குற்றம் பொதுள எழுதியும் அயன்மொழிச் சொற்களை அடுத்தடுத்துக் கலந்தும் அதன் தூய வழக்கை மாயவைக்கின்றனர்! இன்னும் இங்ஙனமே நம் மக்களிற் பெரும்பாலார்-அவர் கற்றவராயினுங் கல்லாதவரா யினுந், தங் கண்ணெதிரே காண்பனவுஞ் செய்வனவுமெல்லாம் உண்மைக்கு மாறாகப் பிழைபடச் செய்து தாந் துன்புறுவ தொடு பிறரையுந் துன்புறச் செய்கின்றனர்! இவ்வாறு இவர்கள் நிகழ்கால நிகழ்ச்சிகளிலேயும் மெய்யொடு திறம்பிப் பொய்படு மறிவினாராயிருக்கக் காண்டலின், இவர்களது அறிவை உண்மை நிலையின தென்றுரைக்க மெய்யறிவு வாய்ந்தார் ஒருப்படுவரோ சொன்மின்கள்! இனி, இங்ஙனங் கடந்தகால நிகழ்ச்சிகளிலும் நிகழ்கால நிகழ்ச்சிகளிலும் அடுத்தடுத்துப் பிழைபடும் அறிவுடைய இவர்கள், புலனுணர்வு, மனனுணர்வுக்கு எட்டாத வருங்கால நிகழ்ச்சிகளை முன்னறிந்து நடத்தல் யாங்ஙனங் கைகூடும்? நாம் நெடுங்காலம் உயிர்வாழ்ந்து இவ்வுலக இன்பங்களைத் துய்ப்போமென்று எண்ணிக் கொண்ட எத்தனைபேர் ஏழை எளியவர்கள் வயிற்றை யொடுக்கிச் சேர்த்த பொருளை அவர் கண்ணீர் சிந்தக் கைப்பற்றிக்கொண்டு வந்த அந் நேரத்திலேயே சடுதியில் உயிர் துறந்து பிணமாய்க் கிடக்கக் கண்டதில்லையா? தமக்குமேல் வலிமையுடையவர்களில்லை யென்று இறுமாந்து வலியற்றவர்களைத் துன்புறுத்தி வந்தவர்கள் தாம் தம்மினும் வலியாரால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கவில்லையா? எத்தனை செல்வர்கள் எத்தனை அரசர்கள் எத்தனை மறவர்கள் தமது நிலையாமையை உணர்ந்து பாராமையால், நாளைக்கு நமது நிலைமை யெப்படியாமோ என்று ஐயுறவு கொள்ளாமையாற் பிறர்க்குத் தீங்கிழைத்துப், பின்னர்த் தாம் இருந்த இடமுந் தெரியாமல் இறந்து போகின்றனர்! வருங்கால வியல்பை உணர்ந்து பார்க்கமாட்டாத நம் மக்களறிவும் அறிவெனப்படுமா? தன் உடம்பினுள்ளுந் தன்னைச் சுற்றிலும் நிகழப்போவன வற்றையே யறியமாட்டாதான் ஒருவன், தான் ஒருவனே பல்லாண்டு நீடுவாழ்வன்-ஏனையோரெல்லாம் நீடுவாழார் எனநினைந்து பிறர்க்கு முன் தானே மாய்ந்து ஏமாற்றம் அடைவனாயிற், சிற்றறிவுடைய இம் மகனறிவு உண்மையை யுள்ளபடி யுணர வல்ல உண்மையுடைய தாமோ? மக்களின் இச்சிற்றறிவுப் பெற்றி தேற்றுதற்கன்றோ ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார், அறிந்தும் அறிவதே யாயும் அறியா தறிந்ததையும் விட்டங் கடங்கி - அறிந்த தெதுவறிவும் அன்றாகும மெய்கண்டான் ஒன்றின் அதுவதுதான் என்னும் அகம் என்று அருளிச் செய்தார். பிற்காலத்தில் தாயுமான அடிகளும் இனியே தெமக்குன் அருள்வருமோ வெனக்கருதி ஏங்குதென் நெஞ்சம் ஐயோ இன்றைக் கிருந்தாரை நாளைக்கிருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே. என்று அருளிச் செய்தமை காண்மின்கள்! இங்ஙன மெல்லாஞ் செல்கால நிகழ்கால வருங்கால நிலைகளை உணரும் உண்மையறிவு வாயாமையால், மக்களும் மற்றையுயிர்களும் இயற்கையுண்மை நிலையுடைய வாகாமை தெற்றென விளங்கா நிற்கும். இதுகாறும் ஆராய்ந்தவாற்றால் உயிரில் பொருள்களும் உயிருள் பொருள்களும் இயற்கையிலேயே உண்மைநிலை யுடையவல்லாமை நன்கு பெறப்படுதலால், உயிர்கள் தாமுந் தம்மை ஓர் அறிவுடைப் பொருளென்று தமதுண்மை உணர் தற்குந், தமக்கு உடம்பும் உலகமும் உலகத்துப் பல்பொருள் களுமாகத் திரிபெய்திப் பயன்படும் மாயையென்று ஒரு பொருள் உண்டு என்று அதன் உண்மையினை அவைகள் அறிதற்குங், கடவுள் என்று ஒரு முழுமுதற்பொருள் என்றும் மாறாத இயற்கை யுண்மை யுடையதாய், அவை இரண்டனையுந் தொடர்புபடுத்துதற்கு வேண்டுமென்பது இன்றியமையாது பெறப்படும். என்னை? தன்னிலே மாறா உண்மைநிலை யில்லா ஒருவன் பிறர்க்கு ஏதொரு நன்மையுஞ் செய்யமாட்டாமை நமது உலக வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழக் காண்டும் அன்றோ? தன் மனக்கினிய நண்பன் பட்டகடனை நாளை வந்து தீர்த்து அவனைச் சிறைபுகாமற் காப்பேன் என்று உறுதிசொல்லிப் போன ஒரு செல்வன் தான் சொன்ன மொழியுந் தன் நினைவும் மாறிவிடுவனாயின், அவன் அவற்கு அவ்வுதவியைச் செய்யா தொழிதல் போலவும், வெப்புநோயால் வருந்து மொருவனுக்கு அந்நோய் தீர்க்க வந்த மருத்துவன் ஒருவன் நாளை விழுமியதொரு மருந்துகொணர்ந் தூட்டி அதனைத் தீர்ப்பேனெனச் சொல்லிப் போய் மறுநாளில் அங்ஙனமே வந்து செய்யா தொழியின் அவன் அவற்குச் சிறிதும் பயன்படாமை போலவும், ஒரு கொடியானால் துன்புறுத்தப் பட்டு நடுநிலை மன்றத்தில் முறையிட்டான் ஒருவனுக்கு முறை செய்யப் புகுந்த ஒரு நடுவன் தன் கடமையினின்றும் வழீஇத், துன்புறுத்திய கொடியன்பாற் கைக்கூலி வாங்கிக்கொண்டு முறைசெய்யாது மாறுவானாயின் அவன் தன்பால் முறை வேண்டினானுக்கு முறை செய்யாது குறை செய்தல் போலவும், இறைவனும் மாறுந்தகையனாயின், அவன் உயிர்களுக்கு ஏதொரு நன்மையும் செய்யமாட்டா நிலையினனாய் விடுவன். மற்று, அவன் எண்ணிறந்த வுயிர்களுக்கும் அவ்வ வற்றின் அறிவு நிலைக்கேற்ப எண்ணிறந்த உடம்புகளைக் கொடுத்து அவற்றின் அறிவை மேன்மேல் விளங்கச் செய்து வருதலையும் அவற்றின் அறிவு விளக்கத்திற்கு இன்றியமை யாத வெயில்மண்டில நிலாமண்டில இயக்கங்களைச் சிறிதும் மாறாமல் நிகழச் செய்து வருதலையும், அவற்றின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத புற்பூண்டு மரஞ்செடி கொடிகளை மாறாமல் விளைவித்து அவை காய் கனி கிழங்கு வித்துக் கீரை முதலான பயன்களைத் தொடர்பாகத் தருமாறு உதவி வருதலையும், மழை பெய்யுங் காலத்து மழைபெய்யவும் அதற்குக் கருவியான குளிர்ங்காற்று வேண்டுங் காலத்துக் குளிர்ங்காற்று வீசவும் மழைக்கு முதலான நீராவி எழுதற்கு வெயில் மிகுங்காலத்து வெயில் மிகுந்து எறிப்பவும் மாறாமற் புரிந்து வருதலையும், இவ்வாற்றால் எல்லா வுயிர்களும் உணவு பெற்று அவற்றை யுட்கொண்டபின் அகத்திருந்து அவ்வுணவைச் சாறுஞ் சக்கையுமாகப் பிரித்துச் சாற்றைச் செந்நீராக மாற்றி உடம்பெங்கும் ஓடச் செய்துஞ் சக்கையை உடம்பினின்று உடனுக்குடன் கழியச் செய்தும் நம் பெருமான் ஒரு நொடிப்பொழுதும் மடிந்திராது பேருதவி யாற்றி வருதலையும், அவன் அமைத்த மாறா நிகழ்ச்சிகளுக்கு மாறுபடாமல் நமது வாழ்க்கையினை நாம் செலுத்தத் தெரியாமல் அறியாமையினாலும் இறுமாப்பினாலுந் தீய இன்ப வேட்கையினாலும் நமதுடம்பை நாமே சிதைத்து விட்ட விடத்து அதனை யொழித்து நமக்கு வேறு புதிய உடம்புகளைக் கொடுத்து நம்மை வேறு வேறு புதிய பிறவிகளில் உய்த்து வருதலையும் நாம் நன்காராய்ந்து ஆழ்ந்து நினையுங்கால், எல்லாம்வல்ல நம் ஆண்டவன் ஒருவனே எக்காலத்தும் எவ்விடத்தும் மாறா உண்மை நிலையுடையனா யிருக்கின்றன னென்பதூஉம், அவன் ஒருவனே எல்லா உயிர்களிடத்தும் - அவை எத்துணை இழிந்தனவாயினும் எத்துணை உயர்ந்தன வாயினும், அவற்றின்பாலெல்லாம் மாறாத அன்பினனாய் மாறா அருளினாய் இருக்கின்றன னென்பதூஉம் உள்ளங்கை நெல்லிக்கனிபோற் றெள்ளத் தெளிய விளங்குகின்றன வல்லவோ? ஆகையால், இயற்கை யுண்மை வாய்ந்தவன் இறைவன் ஒருவனே யல்லாமல் மற்றைய அல்லவென்று மேலைத் திருப்பாட்டில் அடிகளார் அறிவுறுத்தமை சாலப் பொருத்த முடைத்தாதல் கண்டு கொள்ளப்படும். இனி, இவ் வுலகத்தின்கண் உள்ள சிற்றுயிர்களெல்லாம் ஒரே தன்மைத்தாக மாறாது விளங்கும் அறிவுவாய்ந்தவை அல்லவென்பது முன்னரே காட்டப் பட்டமையால், அவ்வுயிர் களெல்லாவற்றிற்கும் வேண்டுவனவெல்லாம் அறிந்து உதவி செய்தற்கு, என்றும் ஒரு பெற்றித்தாய் வயங்கா நின்ற பேரறிவு வாய்ந்த முதல்வன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படுவ னென்பது முடிக்கப்படும். எத்தனையோ உயிர்கள் புதிது தோன்றுவனவாயும், எத்தனையோ உயிர்கள் இறந்து படுவனவாயும், எத்தனையோ உயிர்கள் வேறு பிறவிகளிற் செல்வனவாயும் உயிர்கள் தோற்றக்கேடுகள் இடையறாது எங்கும் நிகழக் காண்டலின் அவ்வவ்வுயிர் களின் அகத்தும் புறத்துமிருந்து அவ்வவற்றின் தோற்றக் கேடுகளை யறிந்து அவ்வவற்றிற்குப் பிறரெவராலுஞ் செய்யமுடியாத பேருதவியைச் செய்யும் பெருமான் அறிவு, எத்துணைப் பெரியதாய் எத்துணை விழுமிய விளக்கத்ததாய் எத்துணை அருளிரக்கம் வாய்ந்ததாய் எத்துணைச் சிறந்த மாறா நிலையினதாய் மிளிர்வதாகல் வேண்டும்! பசித்து உணவு வேண்டி வந்தார்க்கு உணவு கொடுக்கும் ஒருவன், ஓரிடத்தில் ஒருகாலத்துள்ளார் சிலர்க்கு மட்டுமே உணவு கொடுக்க வல்லனாவன்; தெற்கே குமரியிற் பசித்த பலர்க்கும், இடையே சென்னை வேங்கடம் முதலான ஊர்களிற் பசித்தார் பலர்க்கும் அவன் ஒருவனே ஒரே காலத்தில் உணவளிக்க மாட்டுவனோ? மாட்டானன்றே? ஒன்றை விட்டு ஒன்று மிக அகன்றிருக்கும் அவ்வவ்வூர் களிலுள்ள வறிஞர்க் கெல்லாம் அங்ஙனம் அவன் ஒரே காலத்தில் உணவளிக்க வேண்டின், ஆங்காங்கு உணவமைப்பார் பற்பலரை நிறுவிப் பெரும் பொருள் செலவிட்டு அவர் வாயிலாக அங்ஙனஞ் செய்யலாமே யன்றித் தான் ஒருவனாகவே யிருந்து அங்ஙனஞ் செய்யமாட்டுவான் அல்லன். இங்ஙனமே நோய் கொண்டு வருந்துவார்க்கு நோய் தீர்க்கும் மருத்துவனும், ஒருகாலத்து ஓரிடத்துள்ள ஒரு சிலர்க்கு மட்டுமே நோய்தீர்க்க மாட்டுவானன்றி, ஒன்றி னொன்று அகன்றிருக்கும் பற்பல ஊர்களிலுள்ள பற்பலர்க்கும் ஒரேகாலத்தில் நோய்நீக்கமாட்டு வானல்லன்; அன்றி அவன் அங்ஙனஞ் செய்ய வேண்டிற் பெரும் பொருள் செலவு செய்து மருத்துவர் பற்பலரை ஆங்காங்கு ஏவியே நோய் கொண்டார் பல்லாயிரவர்க்கும் மருந்தூட்டி நோய்தீர்க்கற் பாலன். மற்று, எல்லாம் வல்ல கடவுளோ ஓரிடத்தின்றி ஓரூரிலன்றி ஓருலகத் தன்றிப், பல்வேறிடங் களிலும் பல்வேறு ஊர்களிலும் பல்வேறு உலகங்களிலும் நிறைந்து ஆற்று மணலிலும் அளவிடப் படாதனவாய் உள்ள உயிர்த் தொகைகளில் எத்தனைகோடி உயிர்களை ஒரே காலத்திற் காத்து வருகின்றான், எத்தனை கோடி யுயிர்களை ஒரே காலத்தில் தோற்றுவிக்கின்றான், எத்தனைகோடி யுயிர்களை ஒரே காலத்திற் காத்து வருகின்றான், எத்தனை கோடி யுயிர்களை ஒரேகாலத்தில் ஒரு பிறவியினின்று விடுவித்து வேறுபல பிறவிகளில் உய்த்து வருகின்றான், எத்தனைகோடி யுயிர்களை ஒரே காலத்தில் தன் திருவடிப் பேரின்பத்திற் படிவித்து வருகின்றான்! இங்ஙனமாக எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலுந் தான் ஒருவனாகவே யிருந்து, எல்லா உயிர்களின் இயல்புகளையும் அறிந்து, அவ்வவற்றிற்கேற்ற உதவிகளைத் தான் ஒருவனாகவே செய்துவரும் இறைவன்றன் அறிவாற்றல் எவ்வளவு சிறந்ததாய், எவ்வளவு பேரள வினதாய் இருக்கவேண்டு மென்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்! இத்துணைச் சிறந்த அவனறிவு, நம்மனோர்க் குள்ள அறிவுபோல் ஆணவ வல்லிருளில் மறைந்து இருந்து, பின் அதனினின்றும் விடுபட்டு விளங்குவதாய் இருக்கக் கூடுமோ என்பதையும் எண்ணிப் பாருங்கள்! அவனறிவு சிறிது மறைந்திருந்தால், இவ்வுலகமெங்கே, இவ்வுலகத்துள்ள பண்டங்களெங்கே, பல்வகை யுயிர்களெங்கே, ஞாயிறு திங்களெங்கே, எல்லாம் வெறும் பாழாய்வெட்ட வெளியா யிருக்குமல்லவோ? ஆதலால், எல்லாம் வல்ல இறைவனறிவு, நமதறிவுபோல் ஆணவ வல்லிருளிற் சிறிதும் மறையாதாய், என்றும் விளங்கினபடியாயே யிருக்கும் என்பது சிறிதும் ஐயமின்றித் தெளியற்பால தாகும். இது பற்றியே, அடிகளார் அவன் இயற்கை யறிவினனாயே யிருப்பன் என்று மேலைத் திருப்பாட்டில் அருளிச் செய்தாரென்றுணர்ந்து கொள்ளல் வேண்டும். இனி,இறைவன் இயற்கையுண்மையினனாயும் இயற்கை யறிவினனாயும் மட்டுமே இருப்பனென்று உரைப்பின், இவ்விரண்டு இலக்கணங்களும் மாயை ஆணவங்களுக்கும், மாயை ஆணவங் களினின்று விடுபட்ட உயிர்களுக்கும் முறையே பொருந்துவான் செல்லும். என்னை? உடம்பாயும் உடம்பின் கருவிகளாயும் உலகங்களாயும் உலகத்துப் பொருள்களாயுந் திரிபுறாத மாயையின் பகுதி சிறிதாயும், அங்ஙனந் திரியாத பகுதி பெரிதாயும் உளவென்பது ஆராய்ச்சியால் நன்கு புலனாதலின், திரிபில்லாத அதன் முதற்காரணப் பகுதி இயற்கை யுண்மைநிலை யுடையதாதல் தானே பெறப்படுமன்றோ? இங்ஙனமே, பிறவிக்கு வராத உயிர்களும் இன்னும் எத்தனையோ கோடிக்கணக்காய் உள்ளனவாகலின் அவைதம்மைப் பற்றியிருக்கும் ஆணவ மலமுங் காரியப்படாததாய் இயற்கை யுண்மைநிலை வாய்ந்த தாதலுந் தானே பெறப்படுமன்றோ? இவைபோலவே, சதாசிவதத்துவத்தில் வைகுஞ் சதாசிவர் முதலாயினர் இயற்கையிலேயே ஆணவமலப் பற்றுப் பெரிதும் அகன்ற வராய் இயல்பாகவே பேரறிவு விளக்கம் வாய்ந்தவராய் இருத்தலின், அன்னார்க்குள்ள அவ்வறிவு இயற்கையே யுண்மைநிலை யுடையதாதலுந் தானே பெறப்படும்; பெறப் படவே, இறைவன் ஒருவனே இயற்கை யுண்மை யினனாயும் இயற்கையறிவினனாயும் விளங்குவ னென்ற சொற் குற் றமுடைத்தாய் முடியுமாம் பிறவெனின்; அற்றன்று, அக்குற்றம் அணுகாமைப் பொருட்டே இயல் உண்மையறிவு என்ற வளவில் அமையாது, இன்பம் என்பதொன்று கூட்டி, இயல் உண்மை அறிவு இன்பவடிவாகி என்று ஓதி, இறைவன் வரம்பிலின்ப வடிவினனாய் நிற்றல் அவற்குச் சிறந்த இலக்கணமாதல் அடிகள் புலப்பட வைத்தார். அஃதொக்குமா றென்னை? மாயையிற் றிரண்ட பண்டங்களிற் பல இன்சுவையினவாயும், வேறுபல நறுமணத் தினவாயும், மற்றும் பல இன்னோசையினவாயும், இன்னும் பல அழகிய தோற்றத்தினவாயும், பின்னும் பல இனிய மென்மையினவாயும் புகுந்து உயிர்கள்பால் இன்பத்தை விளைக்கக் காண்டலின், மாயையும் இன்பமுடைத் தென்பது போதருமாலோவெனின்; அஃதொவ்வாது; என்னை? மாயையிற் றிரண்ட பண்டங்கள் அறிவுடைய உயிர்கள்மாட்டு இன்ப துன்பங்களை விளைவித்தற்குக் கருவியாமல்லது, அவைதாமே இன்ப துன்பங்கள் உடையவல்லாகலின், மாயை அறிவில் பொருளாதல் கண்கூடாக அறியக் கிடத்தலின், அது தானே தனக்கு இன்பமுண்டென்றாதல் துன்ப முண்டென்றாதல் அறிதல் செய்யாது. கனிந்த பலாச்சுளையைத் தேனொடு கூட்டி யுண்டவனுக்கு, அதன் இன்சுவையினால் இன்பம் மீதூரக் காண்டுமேயன்றி, அப்பலாச்சுளையே அவ்வின்சுவை இன்பத்தை எய்தக் காண்டுமில்லையே. ஒரு கூர்ங்கத் தியாற் கையறுப்புண்டவனுக்கு, அதனால் துன்பம் மீதூரக் காண்டுமே யன்றி, அக்கத்தியே அவன் கையை அறுத்து அதனால் துன்புறக் காண்டுமில்லையே.இவ்வாறே இன்ப துன்ப நிகழ்ச்சிகள் அறிவுடைய வுயிர்கள் பாலன்றி, அவை தம்மை அவற்றின்பால் விளைவிக்கும் மாயையின், காரியங்களில் ஒரு சிறிதும் காண்கிலமாதலின் மாயை அவற்றிற்குக் கருவியேயா மல்லால், அவை தாமே இன்ப துன்பங்கள் உடையவாகா என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த உண்மையேயாம். அஃதொக்குமாயினும், அறிவுடைய உயிர்கள் இன்பம் எய்தக் காண்டலின், அவையும் இன்பமுடைத் தென்பது பெறப்படும்; படவே, இறைவன் ஒருவனே இன்பமுடையன் என்று உரைத்தது இழுக்காமாலோ வெனின்; இழுக்காது; என்னை? உயிர்களெல்லாம் மாயையிற் றிரண்ட பண்டங்களை நுகர்தலானும், அழகு அறிவு அன்புடைய பிறவுயிர்களொடு சேர்தலானுமே இன்புறக்காண்டு மல்லது, அவ்விரண்டன் றொடர்பின்றித் தானே தனித்திருந்து இன்புறும் ஒரு சிற்றுயிரை யாண்டுங் காண்டிலமாகலின் என்பது, இங்ஙனம் பிறிதொன்று இன்புறுத்தினாலன்றி இன்புறல் அறியாத சிற்றுயிர்களை இயற்கை யின்பமுடையன வென்றல் இசையாமையின், முழுமுதற் கடவுளொருவனே இயற்கை யின்ப முடையனென்பது முடிக்கப்படும்; படவே, அவற்குரிய அச்சிறப்பிலக்கணம் பிறிதெதற்கும் உரிமை யாவான் சேறல் இல்லையென்று கடைப்பிடித்துணர்ந்து கொள்ளல் வேண்டும். அதுவேயு மன்றிச், சிற்றுயிர்களெல்லாந் துன்புறுத்தும் பொருட் சேர்க்கையால் துன்புற்றும், இன்புறுத்தும் பொருட் சேர்க்கையால் இன்புற்றும் வருதல் போல், இறைவன் எதனாலேனுந் துன்புறுத்தப்படுதலும் பிறிதெதனாலேனும் இன்புறுத்தப்படுதலும் இல்லானாய், எஞ்ஞான்றும் இன்ப வுருவினனாயே நிற்கும் பெற்றியனாகலின், அவற்குரிய அச் சிறப்பிலக்கணம் பிறிதெதற்கும் உரியதாதல் செல்லா தென்று உணர்தல் வேண்டும். இறைவன் இங்ஙனம் இன்ப வுருவின னாயே நிற்குந் தனிப் பேருண்மை அறிவுறுத்துதற் கன்றோ மாணிக்கவாசகப் பெருமான், சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே வந்தம் அறுக்கும் ஆனந்தமா கடலே என்றும், ஓரின்ப வெள்ளத்து உருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார் என்றும், இங்ஙனமே இராமலிங்க அடிகளார் மகாதேவ மாலையில், தற்போத வொழிவினிடை நிறைந்து பொங்கித் ததும்பிவழிந் தோங்கியெலாந் தானேயாகிச் சிற்போதத் தகம்புறமுங் கோத்துநின்ற சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத்தேவே. என்றும் அருளிச் செய்திருத்தலும் நினைவிற்பதிக்கற்பாற்று. அற்றேல், இறைவனோடொத்த அறிவினராக ஓதப்படுஞ் சதாசிவர் முதலாயினர் மாட்டும் இயற்கையின்பம் உளதாகல் வேண்டாமா லெனின்; அற்றன்று, சதாசிவர் முதலியோர்க்குந் தலைமை செலுத்துதலால் உண்டாகுஞ் செருக்காகிய அதிகார மலம் ஒன்றுண்டென நூல்கள் ஓதுதலின், அவரது அறிவுஞ் சிறிது குறைபாடுடையதேயாகும்; அஃதுடைய தாகவே, அவ்வறிவைப் பற்றி நிகழும் இன்பமுங் குறைபாடுடைய தாகவேயிருக்கும். அதனால், அவர்க்குள்ள அக்குறைபாடு நீங்குவதற்கும், அவர் எல்லாம் வல்ல முழுமுதற் சிவத்தின் உதவியையே அவாய் நிற்றலின், அவரும் அச்சிவத்தின் திருவருட் பேரின்பத்தைத் தலைக்கூடி, அதன்கட் படிந்த பின்னரே நிறைந்த அறிவும் நிறைந்த இன்பமும் உடையராவ ரென்பது முடிக்கப்படும். அங்ஙனம் முடிக்கப்படவே, முப்பத்தாறு பருப்பொருள் நுண்பொருட் படிகளுக்கும், அவ்வப் படிகளில் வைகுவாராய் மும்மல இருமல ஒருமலப் பற்றுடைய மூவகை யாருயிர்த் தொகுதிகளின் நிலைகளுக்கும் அப்பாற்பட்ட இயல்பின தாயுள்ள சிவம் ஒன்றே இயற்கை யுண்மையும் இயற்கை யறிவும் இயற்கை யின்பமும் உடையதாய், எல்லாவற்றையுந் தன் அருள்வெளியிலடக்கி, அவற்றின் மேலும் எல்லை யில்லாத விரிவானதாய் விளங்குமென்பதும் முடிக்கப்படும். அஃதொக்குங், காரியப்படாத மாயையின் பெரும் பகுதி இயற்கையுண்மை யுடையதாதல் முன்னரே பெறப்பட்டமை யின், அஃது அவ்வாற்றல் இறைவனியல்போடு ஒத்ததாவான் செல்லுமா லெனின்; மாயையின் ஒரு பகுதியியற்கை யுண்மை யுடையதாயினும் அதன் மற்றொரு பகுதி இயற்கையுண்மை வாயாதாய்க் காரியப்பட்டு மாறக் காண்டலினாலும், அங்ஙனந் தன்னிலே இருவேறு வகைப்பட்டு நிற்கும் அப் பொருள் ஒரே நிலையினை தென்றற்கு இடம் பெறாமை யினாலும், இறைவன் அதுபோல் அங்ஙனந் தன்னிலே இருவேறு வகைப்பட்டு ஒருவகையிற் காரியமாய் மாறுதலும் பிறிதொரு வகையிற் காரியமாய் மாறாமல் நிற்றலும் ஆகிய வேறுபாடு உடையனல்லானகலானும் மாயை இறைவனே டொத்த உண்மை நிலையினதாதல் செல்லாதென்று கடைப்பிடித்தல் வேண்டும். அஃதொக்குமன்றாயினுஞ், சைவசித்தாந்த நூல்களும் இறைவனுக்கு அருவம் உருவம் என்னும் இருவகை நிலைகளும் உண்டென்றோதுதலின், அவனும் மாயைபோற் காரியப்படுதலுடையனென்பது பெறப்பட்டு, அங்ஙனம் ஓதுமது மாயாவாதக் கொள்கையாய் முடியுமாம் பிற வெனின்; அற்றன்று, இறைவன் மாசற்ற தூய அறிவுப் பொருளே யல்லாமல், அறிவில்லா மாயை போல்வான் அல்லன். அறிவில் பொருள்மட்டுமே ஒருநிலையிலிருந்து பிறிதொரு நிலைக்குத் திரிக்கப்படும்; மற்று அறிவுடைப் பொருளோ அங்ஙனந் திரிக்கப்படுதல் எஞ்ஞான்றும் இல்லை; மண்ணானது குடமாகத் திரிக்கப்படுதல் போல, அம்மண்ணினின்று குடத்தை யுண்டாக்கும் அறிவுடைய னான குயவன் அங்ஙனந் திரிக்கப்படுதல் இலன். இன்னும், மண்ணினின்று குடம் முதலிய பாண்டங்களை உண்டாக்கும் முன்னரே, அவை தம்மையுண்டாக்குங் குயவனது அறிவின் கண் அப்பாண்டங்களின் வடிவங்கள் அமைந்து கிடத்தல் வேண்டும்; அங்ஙனம் அவ்வடிவங்கள் தன் அறிவின் கண் அமையப் பெறாதவன், அப் பாண்டங்களைச் சமைத்தற் குரிய அறிவு வாயாதவனாமாகலின், அவன் அவற்றை ஆக்க மாட்டுவான் அல்லன். ஆகவே, அறிவில்லாத மாயை யிலிருந்து இவ்வுலகங்களும் இவ் வுலகத்துப் பொருள்களும் இவ்வுடம்புகளும் இவ்வுடம்புகளில் அமைந்த கருவிகளும் படைக்கப்படுதற்கு முன்னரேயே, இவற்றை யெல்லாம் படைக்கும் இறைவனது பேரறிவின் கண் அப்பொருள்களின் உருவங்கள் அமைந்து கிடத்தல் வேண்டுமென்பது தெளியப் படும். எங்ஙனங் குயவனதுஅறிவின்கண் அமைந்த உருவங் களோடு ஒத்தவடிவுடைய பாண்டங்கள் மண்ணினின்றும் அவனாற் படைக்கப் படுகின்றனவோ, அங்ஙனமே இறைவனது அறிவின்கண்மைந்த உருவங்களோ டொத்த வடிவுடைய உலகமும் உடம்பும் பிறவும் மாயையினின்றும அவனாற் படைப்படுவனவாகும். எங்ஙனங் குடங்கள் முதலான பாண்டங்களின் வடிவு சிதைந்தழிந்தாலும் அவற்றோடொத்த அறிவினுருவங்கள் குயவனுள்ளத்தின் கண் அழியாவாய் நின்று அப்பாண்டங்களை மறித்தும் மறித்துந் தோற்றுவிக்குமோ, அங்ஙனமே இவ்வுலகங்களும் இவ்வுடம்புகளும் பிறவும் சிதைந்து அழிந்தாலும் அவற்றோ டொத்த அறிவினுருவங்கள் இறைவன் றிருவுள்ளத்தின்கண் அழியாவாய் நின்று அவை தம்மை மீண்டும் மீண்டுந் தோற்றுவியா நிற்கும். இதுகொண்டு, மாயையின் வடிவு அழிதல்போல, இறைவனது அறிவுருவு அழிவதன் றென்பதூஉந் தெற்றென விளங்கும். இன்னும், அறிவுடையோன் என்று உயர்த்துச் சொல்லப் படுபவன், தான் உணர்ந்த பொருள்களின் வடிவங்களோ டொத்த உருவங்களைத் தன் அறிவின்கண் ஐயந்திரிபின்றி அமைத்துக் கொண்டவனேயாவனென் பதூஉம், அறிவில்லா தோன் என்று இழித்துச் சொல்லப்படுபவன் தான் கண்ட எந்தப் பொருளின் வடிவத்தையுந் தன்னுள்ளத்தின்கண் அமைத்துக் கொள்ள மாட்டாதவனேயாவ னென்பதூஉம், இறைவனறிவு இம்மாயையிற் காணப்படும் எல்லா வடிவு களையும் முன்னரே யறிந்த உருவுகளுடையதாயிருப்பி னல்லது இப்பருப்பொருள் வடிவுகள் தாமே தோன்றா வாகலின் இறைவனது பேரறிவு இவையெல்லா வற்றையுந் தன்னகத்தடக்கிய உருவுடையதாயே திகழுமென்பதூஉம் பிறவுங் கடவுளுக்கு அருளுருவம் உண்டு என்னும் எமது கட்டுரையில் நன்கு விளக்கியிருக்கின்றேம்; அவ்விரிவை அதன்கட் காண்மின்கள்! அஃதொக்கும், இறைவனறிவு உருவுடையதாயே நிற்குமெனின், அதனை அருவென்று கூறுதல் என்னை யென்பார்க்கு, உயிர்களும் உயிர்களின் அறிவுங் கண் முதலிய பொறிகளுக்குப் புலனாகாமைபற்றி அருவென்றும், உயிர்களின் அறிவு கட்புலனாக விடினும் புறப்பொருள்களில் தான் கருதிய வடிவினை அமைத்தல் கண்டு அதனறிவு அவ்வடிவினோடொத்த உருவுடைய தென்றுங் கொள்ளுதல் போல, இறைவனும் இறைவன்றன் பேர் அறிவும் பொறி களுக்குப் புலனாகாமை பற்றி அருவென்றும், அங்ஙனமாயினும் அவன்றன் பேரறிவு எண்ணுதற்கடங்கா இத்தனையுடம்பு களையும் அமைத்திருத்தல் கொண்டு இவற்றின் வடிவுகட்கு முதலான உருவுகள் வாய்ந்த பேரறிவினாலேயே அவனிருப்ப னென்றும் விடுத்தல் வேண்டும். எனவே, அறிவெல்லாம் அழியா வுருவங்களுடையவாயேயிருக்கு மென்பதூஉம், அன்னவாயினும் அவை ஊனுடம்பில் அமைந்த பொறிகளின் வாயிலாக அறியப்படாமல் மாசற்ற அறிவுக்கண் கொண்டே காணப்படு மென்பதூஉம் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். திருஞானசம்பந்தர் மூன்றாட்டைச் சிறுமகவாயிருந்தஞான்று கண்டு பாடிய இறைவனுருவம், அவர் தந்தையார் கண் களுக்குப் புலனாகாமல் அவர்க்குமட்டும் புலனான தன்மையை யுற்றுநோக்குங்கால், அவர் கண்ட இறைவனுருவம் அறிவுருவமேயல்லாது ஊனுருவம் அன்றென்பதூஉம், அவரதனைக் கண்டதுந் தமது அறிவுக் கண் கொண்டே யல்லாது ஊனக்கண் கொண்டன் றென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இறைவனுருவம் இப்பெற்றியதாதல் கண்டே அருணந்தி சிவனார். மாயைதான் மலத்தைப்பற்றி வருவதோர் வடிவமாகும் ஆயஆணவம் அகன்ற அறிவொடு தொழிலையார்க்கும் நாயகன் எல்லாஞானத் தொழின் முதல் நண்ணலாலே காயமோ மாயையன்று காண்பது சத்திதன்னால். என்றும், சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும் என்றும் அருளிச் செய்வாராயினர். ஆகவே, இறைவனது பேரறிவு நிலையை யுணர்வாராகிய மக்களின் சிற்றறிவுக் கண்ணுக்கே அவன் அருவமாகப் புலனாகாது நிற்பன்; மற்று, அவன் அருளைச் சார்ந்து, அதனால் மாசுதீர்ந்து தூயரான அன்பரின் தூய அறிவுக்கு, அவன்றன் தூய அறிவுருவநிலை முற்றும் புலனானவாறேயாய் விளங்கா நிற்குமென்று உணர்ந்து கொள்ளல் வேண்டும். இனி, மெய்ப்பொருளாஞ் சிவம் ஒன்றே என்றது, மேற்காட்டியவாற்றான் மாறுந் தகையவான பொருள்களும் உயிர்களும், மாறாநிலையினதான சிவத்தை நோக்க மெய்யல்லா தனவாதல் பெறப்படுதலாற், சிவம் ஒன்றை மெய்ப்பொருளாதல் தெருட்டியவாறு. அற்றேற், சிவமல்லாத பொருள்களெல்லாம் பொய்யென முடிந்து ஏகான் மவாதமாம் பிறவெனின்; அங்ஙனமன்று, நிலை மாறாததே மெய்யென்றும், நிலைமாறுவதே பொய்யென்றும் உலக வழக்கானுஞ் சான்றோர் நூல் வழக்கானும் நன்கறியக் கிடத்தலின், என்றுமில்லாத வெறும் பாழையும் பொய்யை யும் ஒன்றென்றல் அடாது. நில்லாதவற்றை நிலையினவென் றுணரும், புல்லறிவு என்னுந் திருக்குறளும் இக் கருத்தே பற்றி யெழுந்ததாகும் அல்லதூஉம், இல்லாத வெறும் பாழைப் பற்றிப் பேசுவாருங் கேட்பாரும் யாண்டு மிலராகலானும், உயிர்களும் பொருள்களுமிருந்தே முப்பொருளாராய்ச்சி நிகழ வேண்டுமாகலானும், நிலைமாறுவன உள்பொருள்களே யல்லால் இல்பொருள்களாதல் செல்லாமையானும், இதன் கண் ஏகான்மவாதங் கூறுவாருரை ஒருசிறிதும் பொருந் தாதென விடுக்க. சிவம் என்னுஞ்சொற் செம்மை யென்னும் பண்படியாகப் பிறந்து சிவந்த நிறத்தையும், இன்பத்தையும் உணர்த்துஞ் சிறந்த தமிழ்ச் சொல்லாகலானும், இறைவன்றன் அறிவுருச் சிவந்த நிறத்தினதாயும் இன்ப நிலையினதாயும் இருக்கும் உண்மையினை நமக்கு நினைவுறுத்திக், காணவுங் கருதவும் படாத முதல்வன்றன் அறிவுருவினை நாம் காணவுங் கருதவும் எளிதாம்படி வைத்து நமக்கு நினைவொருமை யினைப் பயப்பிப்பதில் இச்சொற்போலக் கடவுளுக்குரிய வேறெச்செல்லும் உதவி புரிவ தின்மையானும், சிவம் என்னும் இச் சொல்லையே கடவுளுக்குச் சிறந்த பெயராக வைத்துப் பண்டைக் காலந் தொட்டு இன்றுகாறும் ஆன்றோர்கள் வழங்கி வருதலானும், ஈண்டு அடிகளாரும் அச் சொல்லையே சிறந்ததாக எடுத்து அருளிச் செய்வாராயினர். அடிகளார் பிறாண்டுஞ் சிவம் பிரமமுடியே என்று ஓதியதூஉங் கருத்திற் பதிக்கற்பாற்று. இனிச், சிவம் ஒன்றே மெய்ப்பொருள் என்று ஆழ்ந் தாராய்ந்து கண்ட தொல்லாசிரியர்களும், அவர்வழி பிழையாதுவந்த அடிகளாருந் தாங்கண்ட அவ் வரும்பே ருண்மையினை, மக்களெல்லாரு முணர்ந்து உய்தல் வேண்டு மென்றெழுந்த பேரிரக்கத்தால் அடுத்தடுத்தெடுத் துணர்த்தி வரவும், அதனைக் கடைப்பிடியாது, பிறந்து பெருந் துன்பங்களிற் பட்டுழன்று இறந்து ஒழிந்த அரசர்களையும் இழிந்த மக்களையு மெல்லாந் தெய்வங்களாக வழிபட்டுப் பிறவியைப் பாழ்படுத்தி இருள் நிரயத்திற்குஞ் செல்லுங் கீழ்மக்களை அது செய்தலாகாதென்று, மேலைச் செய்யுளின் பின்னிரண்டடிகளில் தடுத்தருளினார். இனி, மேலைச்செய்யுளின் இறுதிப்பகுதியில், இறைவன் எல்லாவுயிர்களின் அகத்தே நெஞ்சத்தாமரையின் அறிவு வெளியிலும் புறத்தே எண்ணிறந்த வுலகங்கட் கெல்லாங் களைகண்ணாம் அருள்வெளியிலும் பொதுநின்று இன்ப ஆடல்புரியும் இயல்பினை, ஞானாசிரியன் மெய்யுரை வழிநின்று மூச்சை யடக்கி, மூலத்திலுள்ள குண்டலியை யெழுப்பி அதனோடு உணர்வினை ஒருங்கியைத்துக் கொண்டு, நெஞ்சத் தாமரையின் அகத்தே சென்று கண்டு இன்புறும் ஞானயோகப் பயிற்சி யுடையார்க்கு, எல்லா அறிவும் எல்லா இன்பமும் ஒருங்கெழுந்து பெருகித் தோன்றும் என்றருளிச் செய்து முடித்தமை காண்க! இவ்வுண்மை ஆசிரியர் திருமூலர் அருளிச் செய்த, நாசிக்கு அதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெயுந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே என்னுந் திருப்பாட்டானும் நன்கு தெருட்டப்பட்ட தென்க. அடிக்குறிப்புகள் 1. பல்லாவரம் `பொது நிலைக் கழக இருபதாமாண்டு நிறைவு விழாப் பேரவை முதல்நாள் 2-2-1931இல் நிகழ்த்திய தலைமைப்பேருரை. 2. Life does not appear without the operation of antecedent life” - Fragments of Science by Pro. J. Tyndall, Vol. IIï P. 299. 2. தமிழின் ஒலி எழுத்துகள் சொற்கள் எல்லாம் ஒன்றும் பலவுமாகிய ஒலிகளால் ஆக்கப் படுவனவாம். ஓர் ஒலி தனித்துநின் றாயினும் வேறு ஒலிகளோடு புணர்ந்து நின்றாயினும் ஒரு பொருளை அறிவுறுத்துங்கால் அஃது ஒரு சொல்லாக, இங்ஙனந் தோன்றும் பல சொற்களினது தொகுதியே தமிழ் ஆரியம் ஆங்கிலம் முதலான தனித்தனி மொழிகளாய் நடைபெறு கின்றன. உலகத்தின்கண் உள்ள எல்லா மொழிகளுக்கும் முதல் ஒலிகளே யாயின், அவ்வொலிகளும் எல்லா மாந்த ரிடத்தும் இயல்பாற்றோன்றி ஒரு தன்மைப்பட நிற்குமாயின் அவற்றால் ஆக்கப்படும் எல்லா மொழிகளும் ஒரே இயல் பினவாகக் காணப்படுதல் வேண்டுமேயெனின்; எல்லா மாந்தர்க்கும் எல்லா ஒலிகளும் ஒரு முறையாகவே தோன்றுமாயின் அவற்றால் அமைந்த மொழிகளெல்லாம் ஒரு தன்மையாகவே தான் நிற்கும். மற்று அவ்வொலிகள் ஒவ்வொரு நிலத்தின்கண் உறையும் மக்கட்கு ஒவ்வொரு வகையாய்த் தோன்றுதலின், அவற்றிற்கு ஏற்ப அவ்வொலி களால் ஆக்கப்படும் மொழிகளும் பலதிறப்பட்டு நடக்கின்றன. இனி, ஒவ்வொரு நிலத்தின்கண் உறைவோர்க்கு ஒவ்வொரு வகையான ஒலிகள் தோன்றுதல் ஏன் என்று ஆராய்ந்து பார்ப்பின், ஒரு நிலங் குளிர் மிகுந்ததாய் இருக்க மற்றொரு நிலம் வெப்பம் மிக்க தாயும் பிறிதொன்று சூடுங் குளிர்ச்சியும் ஒன்றினொன்று மிகாமல் ஒத்து நிற்கப் பெறுவதாயும் வேறுபட, இங்ஙனம் வேறுபட்ட அவ்வந் நிலத்தின் காலநிலைக்கு இசைந்த பயிர் பச்சைகளும் அவற்றில் உண்டாம் உணவுப் பொருள்களும் பல்வேறு வகைப்பட, இவற்றை உண்டு உயிர் வாழும் அவ்வந்நிலத்தின் மக்கள் உடம்பு நிலையும் அவர் பேசும் வகையும் அவர் மேற்கொள்ளும் உடையும் வழக்கவொழுக்கங்களும் பலவேறு தன்மையுடை யனவாய்க் காணப்படும். இந்நிலவுலகத்திற்கு நடுவே செல்லும் நடுவரையானது, நமது செந்தமிழ் நாட்டிற்குத் தெற்கெல்லை யாய் விளங்கும் குமரி முனைக்குந் தெற்கே அறுநூறு மைலுக்கு அப்பால் கிழக்கு மேற்கில் நேர் செல்கின்றது. அவ்வரைக்கு நேரே உச்சியிற் பகலவன் செல்லுங்கால் அவ்வரை நெடுகிலும் பக்கங்களிலும் இருக்கும் நாடுகள் இடங்கள் அனைத்தும் ஆற்ற முடியாத வெப்பம் மிகுந்தன வாய் ஆகின்றன. இதனாலேதான், இந்த வரைநெடுக இருக்கும் சிங்கப்பூர், சுமத்திரா, நடு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி முதலான இடங்களெல்லாம் கொடிய வெப்பம் வாய்ந்தனவாய் இருக்கின்றன. இந்த நடுவரைக்கு இன்னுந் தெற்கே செல்லச் செல்ல ஞாயிற்றின் வெப்பங் குறைந்து குறைந்து குளிர் மிகுதிப்படுகின்றது. இந்த நடுவரைக்குந் தெற்கே நெடுந்தொலைவில் இருத்தலினா லேயே ஆத்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முதலான நாடுகள் கடுங்குளிர் மிகுந்தனவாய்யும் செல்லச் செல்லக் குளிர் மிகுதியாகவே காணப்படும். நமது செந்தமிழ் நாடு இந்த நடுவரைக்கு அருகிலிராமலும் அகன்று நெடுந்தொலைவில் இல்லாமலும் இசைவான இடத்திலும் அமைந்திருத்தலால் இதன் கண்ணே குளிரும் வெப்பமும் ஒன்றினொன்று மிகாமல் மக்கள் வாழ்க்கைக்கு இனிதாய்ப் பொருந்தியிருக்கின்றன. மற்று இச்செந்தமிழ் நாட்டை விட்டு வடக்கே செல்லக் செல்லக் குளிர் மிகுந்தே வரும். காசியிலும், அதற்கு வடக்கே இமயமலையிலும், அதற்கும் வடக்கே சீனதேயத்திலும் அதற்கும் வடக்கே மேரு மலையிலும், அதற்கும் வடக்கே சைபீரியாவிலுஞ் செல்லச் செல்லத் தாங்க முடியாத குளிரும் பனிக்கட்டியும் காணப்படுகின்றன. இந்நிலவுலகத்தின் வடக்கு முனையில் உள்ள கடலில் நீருங்கூடப் பனிக்கட்டியாக இறுகியிருக்கின்றது. அங்குள்ள இடங்களெல்லாம் பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கின்றன; அங்கே ஆறு திங்கள் இருளாய் இருக்கும், ஆறு திங்கள் பகலாய் இருக்கும். அதனால், அங்கே புற்பூண்டுகளும் இல்லை. அங்குள்ள மக்களெல்லாம் கடல் மீனையே உணவாகத் தின்கின்றனர். வடமுனைக்குத் தெற்கே பன்னூறு மைல்களுக்கு இப்பால் உள்ள சீனம் திபேத்து முதலான நாடுகளுங் குளிர் மிகுந்தனவாய் இருப்பினும் ஏறக்குறைய நமது தமிழ் நாட்டைப்போலப் பகலிரவுகள் இருப்பினும் பெரும்பாலும் ஒத்திருத்தலால் அவற்றின்கட் புற்பூண்டுகள் பயிர் பச்சைகள் வளரவும், அவற்றின்கண் உறையும் மக்கள் நாகரிக முடைய ராய் வாழவும் வசதிகள் உண்டாகின்றன. என்றாலும், நெற்பயிர் காப்பி கரும்பு கோக்கோ வாழை மா பலா தெங்கு முதலியனவாக நம் நாட்டில் விளைவன அவ்விடங்களிற் பயிராகமாட்டா. அவ்விடங்களில் விளையும் கோதுமை வாற்கோதுமை சோளம் கொடி முந்திரி ஒலிவமரம் தேவதாரு முதலியனவும் அவ்விடங்களில் செழுமையாய் விளைதல் போல நம்நாடுகளில் விளைவதில்லை. இந்நாடுகளிலிருந்து உயிர் வாழும் மக்கள் உடம்பும் அவர்கள் உறையும் பனி நிலத்தின் தன்மைக்குப் பொருந்த இறுகி வெண்மை நிறமும் வலிவும் உடையனவாய்க் காணப்படுகின்றன. வெப்பம் மிகுந்த நடு ஆப்பிரிக்காவில் உள்ள நீகிரோவர் உடம்போ கன்னங்கறேலென்ற கருநிற முடையதாய்க் காணப்படுகின்றது. சூடுங் குளிருஞ் சிறிது ஏற்றத் தாழ்வாக உள்ள இடங்களில் உள்ளவர் உடம்புகளோ சிறிது கறுப்பு நிறமாகவும் அல்லது பழுப்பு நிறமாகவும் ஒவ்வொருகாற் பொன்னிறமாகவும் செம்பு நிறமாகவும் மென்மை யுடையனவாகவும் தோன்று கின்றன. இனிக் குளிர் மிகுந்த நாடுகளில் இருப்பவர் உடம்பு முழுவதும் மறைத்த உடை மேற்கொள்பவராயும் புழுக்கம் மிக்க நாடுகளில் உறைபவர் அரையாடையுடையராயு மிருக்கக் காண்கின்றோம். இவ்வாறு நில இயற்கைக்கு ஏற்றபடி அவவந் நிலங்களில் உறையும் பொருள்கள் சிற்றுயிர்கள் மக்கள் முதலியவற்றின் இயற்கைகளும் பலவேறு வகையவாய்க் காணப்படுதலால், அவ்வந்நிலத்து மக்களின் குரலொலிகளும் பல திறப்பட்டுத் தோன்றுவவாயின வென்று அறிதல் வேண்டும். பெரும்பாலும் குளிர்மிகுந்த நாடுகளில் உறைவோரின் குரலொலிகள் உரத்த ஓசை வாய்ந்தனவாய் இருக்கின்றன. வெம்மை மிக்க இடங்களில் உள்ளாரின் குரலொலிகளோ மெல்லியவா யிருக்கின்றன; இரண்டிற்கும் நடுத்தரமான நிலங்களிலிருப்பவர் ஒலிகள் எடுத்த ஓசைக்கும் படுத்த ஓசைக்கும் நடுவாய் அமைகின்றன. இவ்வுண்மை அவ்வந் நிலத்தின்கண் உள்ள பறவைகள் செய்யும் ஒலிகளின் வேற்றுமையாலும் நன்கு அறியப்படும். பனி மிகுந்த இங்கிலாந்து நாட்டில் உள்ள காக்கைகள் கிரா, கிரா என்று கரையும்; சூடுங் குளிரும் ஒத்த நிலைமையில் அமைந்த இத்தமிழ்நாட்டுக் காக்கைகளோ கா, கா என்று கரைகின்றன; ஆனதனால் ஆங்கில மொழியிற் காக்கைக்குக் குரோ என்னும் பெயரும், நமது செந்தமிழ் மொழியில் காக்கை, காகம் என்னும் பெயர்களும் வழங்கி வருகின்றன. பனி நாடுகளிலிருப்பவர் மிடறு கரகரப்பாய் இருத்தல் இயற்கை யாதலால், அவர்கட்கு இயல்பாக எழும் ஒலிகளிற் பெரும் பாலும் ரகரவோசை கலந்தே நிற்கும். குழந்தைகட்கு இயல் பாற் பிறக்கும் மா பா என்னும் முதல் ஒலிகளே இதற்குச் சான்றாம். பிள்ளைகள் வாயைத் திறக்குங்கால் அகரவொலி இயல்பாற் பிறக்கப் பிறகு திறந்த வாயின் இதழ்களை ஒன்று பொருத்துங்கால் மகரவொலி பிறக்க, இவ்வாறு வாயைத் திறந்து மூடுதலால் அம்மா என்னுஞ் சொற்றோன்றித் தாய்க்குப் பெயராய் வழங்குதல் காண்கின்றோம்; இங்ஙனமே, திறந்த வாயின் இதழ்களைச் சிறிது அழுந்தப் பொருத்து தலால் அப்பா என்னுஞ் சொல் பிறந்து தந்தைக்குப் பெயராய் வழங்கப்படுகின்றது. இந் நிலவுகத்தின்கண் உயிர் வாழும் எல்லா மக்களின் பிள்ளைகளும் அவர் ஒன்றோடொன்று வேறுபட்ட எத்தனை வகையான மொழிகளைப் பேசுவாரா யினும், முதலில் இயல்பாகத் தோற்றுவிக்குஞ் சொற்கள் அம்மா அப்பா என்பனவேயாம். இவ்விரண்டு சொற்களும் முதற்பிறக்கும் ஒலிகளாய் இருத்தலின், இவை எல்லா மொழிகளிலும் தாய்தந்தையரைக் குறிக்குஞ் சொற்களாகவே அமைவன வாயின. உலகமெங்கும் ஒரேபடியாகத் தோன்றும் இவ்வியற்கை மொழிகளுங்கூட அவ்வந்நிலத்தின் றன்மையாற் சிறுசிறு வேறுபாட்டுடனுங் காணப்படா நிற்கின்றன.பனிமிகுந்த நாட்டில் உறைபவரான ஆங்கில மக்கள் மொழியில் மதர் பாதர் என்னுஞ் சொற்கள் தாய்தந்தையரைக் குறிப்பனவாய் இருக்கின்றன. பிள்ளைகட்கு முதலிற் பிறக்கும் ம என்னும் ஒலியே மதர் எனவும், அதன்பின் பிறக்கும் ப என்னும் ஒலியே பாதர் எனவும் திரிபெய்துகின்றன. இச்சொற்களில் ரகர வொலி விரவி நிற்றல் உற்றுணரற்பாலதாம். முன்னரே கூறியபடி, குளிராற் கரகரப்பான மிடற்றின் கண் ரகர வொலி தோன்றல் இயல்பாதலின், மகார்க்கு இயற்கையே தோன்றிய இச்சொற்களிலும் அவ் ரகர வொலி விரவ, அவை மதர் பாதர் என ரகர வீற்றால் முடிந்தன. நமது தமிழ் நாடாகிய இவ்விந்தியாவிற் புகுந்த ஆரியரும் வடக்கே மேருமலையைச் சூழ்ந்த பனி நாடுகளில் உறைந்தவர்களாதலின், அவரது ஆரிய மொழியின்கண் தாய் தந்தையரைக் குறிக்குஞ் சொற்களும் மாத்ரு பித்ரு என ரகரவொலி விரவி நிற்கின்றன. 劉dnk gÅ ehLfËš tH§F« všyh bkhÊfËY« jhŒjªijaiu¡ F¿¡F« ï¥bghJ¢ brh‰fËš ufubthÈ ÉuÉ Ã‰wš fhz¥gL«.* இவ்வாறு அவ்வந்நிலத்தின் பலவகை வேறுபாடுகள் உண்டாதலால், அவர்களிடத்து இயல்பாற் பிறக்கும் ஒலிகளும் பல திறப் படுகின்றன. இப்பலவகை யொலிகளால் ஆக்கப்படும் சொற்களும், அச்சொற்களால் ஆக்கப்படும் மொழிகளும் பல திறப்படுகின்றன. அவ்வந்நிலங்களின் வேறுபாடுகள் அளவுக்கு அடங்காதனவாய் இருத்தலால் அவ்வேறுபாடுகளுக்கு உட்பட்ட மக்களிடத்துத் தோன்றும் ஒலி வேறுபாடுகளும் அளவுக்கு அடங்காதனவா யிருக்கின்றன. ஆகவே, உலகத்தில் வழங்கும் ஒலிகள் அத்துணையும் அளந்தறிந்து முடிவு கட்டல் எவர்க்கும் ஏலாமையின், அவற்றை அறியப்புகுதலும் எமது மொழி எல்லா ஒலிவேறுபாடுகளும் முற்றும் உடையது எனச் செருக்கிக் கூறுதலும் பயன் படாதனவாம். ஆகவே, எல்லா ஒலிவேறுபாடுகளையும் அளந்தறியப் புகுதலை விடுத்து, எல்லா ஒலிகளும் பிறத்தற்கு முதலாய் உள்ள சில ஒலி எழுத்துக்கள் எவையென்று அறிந்து கொள்ளுதலே பயன் மிகுதியும் உடையதாகும். ஒரே மொழியினுள்ளும் ஓர் எழுத்தாதல் ஒரு சொல்லாதல் பலராற் பலவேறு வகையாகச் சொல்லப்படுதலை உற்று நோக்கிக் காண்பார்க்கு யாங்கூறும் இவ்வுண்மை நன்கு விளங்காநிற்கும். இனி இயல்பாற் பிறக்கும் ஒலி எழுத்துக்கள் இவை யென்பது அடைவே காட்டுதும். அகரம்: மூடியிருந்த வாய் திறக்கையில் இயல்பாக எழும் ஒலி அ என்பதே யாகும். சிறுமகார் முதல் ஆண்டில் முதிர்ந்தோர் ஈறாக எத்திறத்தவரும் தமது வாயைத் திறந்த அளவானே இவ்வெழுத்தோசை தோன்றாநிற்றலின் இஃது எல்லாமொழிகளிலும் முதல் எழுத்தாய் நிற்கின்றது. இதுபற்றியே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் அகர முதல எழுத்தெல்லாம் என்றார். அகரம் அல்லாத மற்ற எல்லா எழுத்துக்களையும் வாயைத் திறந்தே சொல்ல வேண்டி யிருத்தலினாலும், வாயைத் திறந்தவுடனே அகரவொலி முதற்றோன்றிப் பின்னர் ஏனையெழுத்துக்கள் பிறத்தற்கு இடஞ்செய்து நிற்றலினாலும் அவ்வகரம் எல்லா ஒலிகட்கும் முன்னதாதலோடு அவற்றின்கட் கலந்தும் நிற்கின்றது. இவ் அகரம் புலப்பட்ட ஓசையும் புலப்படாத ஓசையும் உடைத்து. புலப்பட்ட ஓசை அது தானேயாய் ஒலிக்கும்போது உண்டாவது. புலப்படாத ஓசை வாயானது திறந்தபடியாய் நிற்கும்போது உளதாவது - ஏனை உயிர்மெய்கள் ஒலித்தற்கு இடந்தந்து நிற்குங்கால் தன் ஒலி காட்டாது பிற ஒலிகளை இயங்கச் செய்து அவற்றினுள் விரவி நிற்கும் என்க. உலகு உயிர்கட்குத் தலைவனான இறைவன தியல்பை உணர்த்து தற்கும் இவ்அகர வொலியினையே எடுத்துக்காட்டுப. முதல்வனியல்பை உண்மையான் உணருங்கால் அவன் உலகுயிர்களின் வேறாய், அவற்றிற்கு முதல்வனாய் நிற்ப னென்பது புலப்படும். இனி, உலகுயிர்கள் அவனையின்றி இயங்காமையால், அவன் அவைதன்னுள் இயங்குதற்கு இடந்தந்து தான் அவற்றினுள்ளுமாய்ப் புலப்படாது நிற்பன் என்க. இதனாற் பொருளினியல்பும் அவ்வப்பொருளைப் புலப்படுக்கும் ஓசையினியல்பும் தம்முள் ஒப்புமையுடைய வாதல் காண்க. இவ்வொப்புமை ஏனையுயிர்மெய்கட்கும்உண்டு...mJ பின்னர்க் காட்டுவாம், ஆகாரம்: அகரவொலியின் நீட்டமே ஆகாரமாம். அகரம் சிறிது புலப்பட்டும் புலப்படாதும்நிற்கும்; அதன் நீட்டமாகிய ஆகாரவொலி என்றும் புலப்பட்டபடியாகவே நிற்கும். சிறிது தோன்றியும் தோன்றாமலும் உள்ள இறைவனியல்பை அகரவொலி காட்டா நிற்ப, உலகுயிர்களை இயக்கி அவ்வியக்கத்தால் தன்னிலையைப் புலப்படுத்தி ஐந்தொழிலியற்றும் முதல்வனியல்பை ஆகார வொலி குறிப்பிடா நிற்குமென்க. இகரம்: உலகுயிர்க ளெல்லாம் நிறைந்த இறைவன் போல வாயிடமெல்லாம் நிரம்பிய ஓசையாய் ஒலிக்கும் அகர ஆகாரங்கள் போலாது, இ என்னும் ஒலி வாயின் ஓர் உறுப்பாகிய நாவின்றொழிலாற் பிறத்தலின், இது சிறிது இயக்கமுடைய சிற்றறிவுயிர்களை உணர்த்தும் ஓசையாம். இதன் நீட்டமாகிய ஈகாரவொலி பிறவிவட்டத்திற் செல்லும் சிற்றுயிர்களை உணர்த்துவதாகும். உகரம்: இதழ்களைக் குவித்துக் கூறும் முயற்சியாற் சிறிது இயங்கும் உகரவொலி, பிறவி ஓய்ந்துபோக இறைவன் றிருவடியை நோக்கி மெல்லச் செல்லும் தூய உயிர்க்கு அடையாளமாகும். உகரத்தின் நீட்டமாகிய ஊகாரவொலி முதல்வனடியை நோக்கி முறுகிச்செல்லும் தூய உயிரை உணர்த்தா நிற்கும். இவ்வாறு தோன்றிய அ இ உ என்னும் மூன்றொலிகளில் அகரம் முதற்றோன்றுதலின் அது தோற்றத்தினையும் இகரம் தோன்றிய ஒலி சிறிதுநேரம் நிற்கப் பெறுவதாகலின் அது நிலையினையும், உகரம் அவ்வொலி முடியுமிடமா யிருத்தலின் இறுதியினையும் உணர்த்துகின்றன. உணர்த்தவே, பொருளுலகத்தின் நிகழும் தோற்றம் நிலை இறுதி என்னும் முத்தொழில்களும் ஒலியுலகமாகிய அகர இகர உகரங்களில் அறியக் கிடக்குமென்பது பெற்றாம். இனி, இம் மூன்றெழுத்துக்களும் பிறத்தற்கு இடமாகிய திறந்த வாயின் வடிவினை உற்று நோக்கினால் அது வட்டவடிவினதாய் நிற்றல் புலனாம். அவ்வாயினுள் அமைந்த நா நீண்டிருக்குமாறும் அங்ஙனமே புலனாம். வட்ட வடிவினது விந்துவென்றும் வரிவடிவினது நாத மென்றும் சொல்லப்படுமென்பதனைச் சிவஞானபோத ஆராய்ச்சியில் நன்கு விளக்கியிருக்கின்றோம். விந்து வென்னும் புள்ளி வடிவின் இயக்கமே வரிவடிவாய் நீண்டு ஓசையினைத் தோற்றுவித்தலின், இவ்விந்து நாதச் சேர்க்கையே உலகத்தின் கண் எக்காலும் ஓவாது இசைக்கும் ஓங்காரம் என்றும் பிரணவம் என்றும் கூறப்படும். இனி இவ் ஓங்காரவடிவு மக்கள் வாயின்கண் அமைந்திருத்தலின், அவ்வாயின் கட்டோன்றும் அகர இகர உகரங்கள் ஓங்காரத்தின்கட் டோன்றுவனவாகவே கொள்ளப்படும். அற்றேல், அகரவொலி எல்லாவற்றிற்கும் முதலாய் நிற்கும் இறைவன் போல்வதென்று முன்னே கூறி வைத்து, இப்போது அஃது ஓங்காரத்தின்கட் பிறக்கு மெனக் கூறுதல் மாறாய் முடியுமேயெனின், அற்றன்று, அகர உகரக் கூறுகள் விரவி இசைப்பதே ஓகாரமாகும், அங்ஙனம் விரவிய அக்கலவையொலியுள்ளும் அகர வொலியே முதல் நிற்பதாகலின் அது மாறுகொள்ளாது. மேலும், அகர உகரங்கள் பிரிந்திசைத்தலையே பிறத்தல் என்று ஓதியதல்லது ஓகாரம் வேறாய் அகர உகரங்கள் வேறாய்ப் பிறக்கும் என்பது கருத்தன்று. அற்றேல், ஓகார வடிவிற்றாகிய வாயின்கண் அகர உகர ஒலிகள் தோன்றக் காண்டுமே யெனின்; வரிவடிவும் ஒலி வடிவுமென வடிவுதான் இருவகைப்படுதலின், வாய்வடிவு ஓகாரத்தின் வரிவடிவாய் நிற்க, அதனுள் இசைக்கும் ஓ என்னும் ஓசை ஒலிவடிவாய் நடைபெறும். ஒலியும் வரியுமென வடிவால் வேறுபடினும் தன்மையால் அவை இரண்டும் ஒன்றேயாதலின் ஒன்று மற்றொன்றினுட் டோன்றல் பற்றி அவையிரண்டும் வேறு வேறென்று கொள்ளற்க. ஓவென்னும் ஒலி இசைக்குங்கால் ஓகார வரிவடிவும், ஓகார வடிவினை யுடைய இசைக்கருவிகளின் கண் ஓவென்னும் ஒலிவடிவும் தோன்றுதலை அயல்நாட்டறிஞர் செய்து விற்கும் ஒலியெழுதி* என்னுங் கருவியிற் கண்டுதெளிக. இங்ஙன மாகலின் ஒன்று மற்றொன்றிற் றோன்றல் கொண்டு இது முன்னது இது பின்னது என்று முடிவுகட்டல் ஏலாதென்க. ஆகவே, ஓவென்னும் பிரணவ ஒலியுள்ளும் முதல் நிற்பது அகரமேயாதலின், அதுவே எல்லா எழுத்தொலிகட்கும் முற்பட்டதென்பது மறுக்கப்படாத உண்மையாம் என்க. அது நிற்க. எகரம்: இது கலவை எழுத்தாகும். இவ்வெழுத்தைச் சொல்லுங்கால், வாய் திறத்தலும் நாவின் விளிம்பு மேல் பல்லின் அடியைப் பொருந்துதலும் நிகழ்தலால், வாய் அங்காப்பிற்கு உரிய அகரமும் நாவின் எழுத்தாகிய இகரமும் இதன்கண் விரவியிருக்கின்றன. அதனால், இது கடவுட் டன்மையும் உயிரின்றன்மையும் ஒருங்கு கலந்த குணிருத்திரரைக் குறிக்கும் அடையளமாகக் கொள்ளப்படும். இவ்வெழுத்தின் நீட்டமே ஏகாரமாம் குணிருத்திரருள்ளும் மேன்மை மிக்கவராய் இறைவனருளை நோக்கி நிற்பாரை இவ் ஏகாரம் அறிவிக்கின்றது. ஐகாரம்: இதுவுங் கலவை எழுத்தாகும். இதனுள் அகரம் இகரம் என்னும் உயிரெழுத்தொலிகளும் ய் என்னும் மெய்யெழுத்தொலியும் விரவிநிற்கின்றன. இவ்வெழுத்தின் கண் அகரக்கூறாகிய கடவுட்டன்மை சிறிதும், இகரக் கூறாகிய உயிரின்றன்மையும் யகரக் கூறாகிய மெய்யின் றன்மையும் பெரிதுமாய்க் கலந்து நிற்றலால், கடவுட்டன்மை சிறிதாய் உயிரின்றன்மையும் பிரகிருதிமாயையின் தொடர்பும் பெரிதுமாய் அமைந்த நான்முகன் திருமால் என்னுந் தெய்வங்கட்கு அறிகுறியாய் இவ் ஐகார எழுத்து நிற்பதாகும் என்று உணர்ந்துகொள்க. இவ்வெழுத்தின் கட் கலந்து காணப்படும் அகர இகரங்கள் தோற்றம் நிலையென்னும் இருவகைத் தொழில்களையுங் காட்டுதலாலும் இது படைப்பு நிலையென்னும் இரண்டிற்குரிய தெய்வங்களை உணர்த்துவது பொருத்தமேயாம் என்க. ஓகரம்: இதுவுங் கலப்பெழுத்தே யாகும். இதன்கண் விரவி நிற்கும் ஒலிகள் அகரமும் உகரமும் ஆகும். இனி அகரம் கடவுட்டன்மையினையும், உகரம் இறைவன் றிருவடியை நோக்கி மேலெழும் தூய உயிரினையும் குறிப்பனவாகலின், கடவுட்டன்மையும் தூய உயிரின்றன்மையும் ஒருங்கமைந்த சீகண்ட உருத்திரரை இவ்வெழுத்து அறிவிப்பதாகும். அகர உகரங்கள் தோற்ற ஒடுக்கங்களாகிய தொழில்களை உணர்த்துதலின் அராக தத்துவத்தின் கீழ் நின்ற உலகங்களின் தோற்ற ஒடுக்கங்களுக்குக் காரணரான அவ்வுருத்திர மூர்த்தியை இவ்வெழுத்து அறிவிக்கும் அடையாளமாம் என்றல் வாய்ப்புடைத்தேயாம். இனி இவ் ஒகரத்தின் நீட்டமே ஓகாரமாகும். இது சீ கண்ட உருத்திர புவனத்திற்கும் மேலுள்ள மகேசுரரை உணர்த்தும். ஔகாரம்: இதுவும் அ உ வ் என்னும் மூன்று ஒலிகளின் சேர்க்கையான் ஆய கலப்பெழுத்தாம். அ என்பது கடவுட்டன்மையினையும் உ தூய உயிரினையும் வ் சுத்த மாயையினையும் உணர்த்தும். வ் என்பது சுத்தமாயையினை உணர்த்துதல் யாங்ஙனம் எனின்; இவ்வெழுத்து மெய்யாய் நிற்பினும், உயிரெழுத்தின் முன் உயிரெழுத்து வரும்வழி அவை யிரண்டனையும் உடம்படுத்துதற்கு இடைவந்து நிற்றலின் இதன்கண் உயிரெழுத்தின் றன்மையும் சிறிதுள தென்பது பெற்றாம். இவ்வாறு இஃது உயிர்த்தன்மையும் மெய்த்தன்மையும் உடையதாதல் போலச், சுத்தமாயையும் மாயையாதலோடு இறைவனோடு ஒற்றுமைப்பட்டு நின்று அவற்கொரு சத்தியாய் அமைதலின் அஃது அச்சேர்க்கை யால் இறைமைத் தன்மையும் சிறிது உடைத்தாம். ஆகையால், வகாரம் சுத்தமாயைக்கு அடையாளமாமென்று கொள்ளப் படும். இனிக் கடவுட்டன்மையும் உயிரின்றன்மையும் சுத்தமாயையின் சேர்க்கையும் உடையவர் சதாசிவமூர்த்தியே யாகலின், ஔகாரம் அவரை அறிகுறியாய் நிற்குமென்று ஓர்ந்து கொள்க. அற்றேல், வகரத்தைப் போல் யகரமும் உயிர்களை உடம் படுத்துதற்கு வருதலின் இதனையும் சுத்தமாயையின் அடையாளம் என்று உரையாமை என்னையெனின்; மேலெடுத்துக்காட்டிய உயிரெழுத்துக்களில் இகாரம் கீழ் நின்ற உயிர்களுக்கும், உகாரம் மேல்நின்ற உயிர்களுக்கும் அடையாளங்களாமென வகுத்துக் காட்டினமாதலின், இகாரத்தோ டொத்த உயிர்களை உடம்படுத்து தற்கு வரும் யகரமெய் கீழ்நின்ற உயிர்களோடு இயைந்து நிற்கும் பிரகிருதி மாயையினையும், உகாரத்தோடொத்த மேல் நின்ற உயிர்களை உடம்படுத்துதற்கு வரும் வகர மெய் சுத்தமாயை யினையும் அறிவிக்குமென உரைத்தாம் என்க. இவ்வாறு மேலெடுத்துக் காட்டிய பன்னீருயிர் எழுத்துக்களிலும் முதல் நின்ற அகர ஆகாரங்கள் இரண்டும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை உணர்த்தும் ஒலிகளாய் முதல் நிற்ப, எஞ்சிய பத்தில் இகர இனத்திற் சேர்ந்த இ ஈ எ ஏ ஐ என்னும் ஐந்தும் கீழ்நின்ற உயிர்களையும், உகர இனத்திற் சேர்ந்த உ ஊ ஒ ஓ ஓள என்னும் ஐந்தும் மேல்நின்ற உயிர் களையும் உணர்த்துதல் கண்டுகொள்க. அற்றேல், முழுமுதற் கடவுளை யுணர்த்தும் அகரம் முதல் நின்றாற்போல, தூயவான உயிர்களை உணர்த்தும் உகர முதலாகிய ஐந்தும் அவ் அகரத்தை அடுத்தன்றே நிற்றல் வேண்டு மெனின்; அற்றன்று, கடவுளை முன் உணர்த்தி, மலக்கட்டிற் கிடக்கும் எல்லா உயிர்களையும் அதன்பின் உணர்த்தி, கட்டுவிட்டுக் கடவுளை நோக்கிச் செல்லுந் தூய உயிர்களை அதற்குப் பின் உணர்த்துதலே முறையாகலின் அம்முறைபற்றி அ இ உ என வைத்து, அவற்றின் நீட்டங்களை அவற்றை யடுக்க வைத்தார். குறிலும் நெடிலுமாகிய இவ்வாறெழுத்தின்பின்னர் எ ஏ ஐ என்னும் மூன்றெழுத்துக்களை வைத்த முறையாதெனின், கீழ்நோக்கிச் செல்லும் முறையில் அகர இகரக் கலப்பாலாகிய எகர உயிரினையும் அதன் நீட்டமாகிய ஏகாரத்தினையும் முன்வைத்து, அதன்பின் அகர இகரங்களாகிய உயிர்க்கலப் போடும் ய் என்னும் மெய்க்கலப்புமுடைய ஐகாரத்தை வைத்தார். இங்ஙனமே அகரமாகிய கடவுட்டன்மையும் இகர மாகிய உயிரின் தன்மையுங் கலந்த ருணிருத்திரர் மேலும் ய் என்னும் பிரகிருதி மாயைக்கலப்பும் உடையராய் அவரினுந் தாழ்ந்த நான்முகனுந் திருமாலும் அவர்க்குக் கீழுமாய்த் தத்துவ உலகங்களில் இருப்பரென்க. இனிக் கட்டு நீங்கி மேல் நோக்கிச் செல்லும் உயிர்க்கு அடையாளமான உகரமும் அகரமுங் கலத்தலாற் றோன்றும் ஒகரத்தை ஐகாரத்தின் பின் மேல்நோக்கிச் செல்லும் முறையில் முதல் வைத்து அதன் நீட்டத்தை அதன்பின் வைத்து, அகர உகரங்களோடு அரைப் பங்கு உயிர்போ லியங்கும் எ என்னும் மெய்யெழுத்துங் கலந்த ஔகாரத்தை அதன் பின் வைத்தார். இங்ஙனமே, கட்டு நீங்கி மேல் நோக்கிச் செல்வாரான சீகண்ட உருத்திரர் முதலிலும், அவர்க்கு மேற்பட்ட அநந்த தேவர் அவர்க்கு மேலும், எ என்னுஞ் சுத்தமாயைக் கலப்புமுடைய சதாசிவர் அவர்க்கு மேலுமாய் மேற்பட்ட தத்துவ உலகங்களில் நிற்பரென்க. அநந்த தேவரும் சுத்தமாயைக் கலப்புடையராகச், சதா சிவரை மட்டும் அஃதுடையராகக் கூறிய தென்னை யெனின், அநந்ததேவர் அசுத்தமாயையை அடுக்க உளராய்ச் சுத்த மாயையின் கீழ்நிலையில் நிற்பவராகச், சதா சிவரோ அசுத்தமாயையை முற்றும் அகன்று சுத்தமாயையின் மேல்நிலைக்கண் வைகுவராதலின் அச் சிறப்புப்பற்றி அவர்க்கே அது வரைந்து கூறினாம் என்க. அற்றாயின், ஓரறிவு முதல் ஐயறிவு காறும் உடைய சிற்றுயிர்களும், ஆறறிவுடைய மக்கள் முனிவர் தேவர் முதலான பேருயிர்களும் இப்பன்னீ ருயிரெழுத்துக்களில் எதன்பால் அடங்குவரெனின்; ய் என்னும் மெய்க்கலப்புடைய ஐகாரவுயிரின்பால் அடங்குவர். நான்முகன் திருமால் முதல் ஓரறிவுயிர்கள் ஈறாகவுள்ள எல்லாம் சகலர் எனக் கூறப்படுவரென்று அறிவு நூல்கள் கூறுதலால், ஈண்டு அவர் ஐகாரத்தின்பால் அடங்குவ ரென்றால் பெரிதும் பொருத்தமாவதேயாம். இவ்வாற்றால் அகரம்முதல் ஔகாரஇறுவாயாகக் கிடந்த பன்னீரெழுத்துக்களுமே உயிரெழுத்துக்கள் எனப் படுதற்கும், இவை தமிழ்மொழியின்கண் ஒன்றன் பின் ஒன்றாக அடைவுபடுத்து நிறுத்தப்பட்ட முறையே முறை எனப்படு தற்கும் உரிமையுடையனவாம். இஃது இவ்வாறாகவும், வடநூலால் தமிழின் நெடுங்கணக்கைப் பார்த்து உயிரெழுத்து மெய்யெழுத்துக்களை அடைவு படுத்திக் கொண்ட அளவின் அமையாது, தமிழினுந் தமக்கு உயிரெழுத்துக்கள் மிகுதியாய் உண்டென்று காட்டுதற்குப் புகுந்த பொருந்தாப் பேரவாவால் உயிரெழுத்துக்கள் அல்லாத ரு ரூ லு லூ அம் அஃ என்னும் உயிர்மெய் யெழுத்துக்களையும் அவற்றோடு கலந்து இழுக்கினார்; இவ்வாறெழுத்துக்களிற் கலந்த குற்றியல் உகர ஊகாரங்களையும் அகரங்களையும் நீக்கினால் எஞ்சி நிற்பன ர் ல் ம் ஃ என்னும் மெய்யெழுத்துக்களும் ஆய்தமுமே யாகலின் அவர் உயிர் எழுத்துக்களைப் பன்னிரண்டன் மேலாகப் படைத்திட்டுக் கொண்டது வெறும்பேலியே யாம் என்க. ஃ- ஆய்த எழுத்து. இனி உயிரெழுத்தும் அல்லாதாய் மெய்யெழுத்தும் அல்லாதாய்த் தனித்து நிற்றலிற் றனிநிலை யென்னும் பெயர் வாய்ந்த ஆய்த எழுத்தின் உண்மை யாதெனின் அதனையுஞ் சிறிது விளக்கிக் காட்டுதும். இவ்வாய்தம் எழுத்தொலியாய்ச் சொல்லின் கண் நின்று பொருளை அறிவுறுத்தலின் இது விந்துவின்கணின்றும் பிறப்பதேயாகும். எழுத்தொலியாய்ப் பொருள் அறிவுறுக்கும் ஓசைகளெல்லாம் விந்துவின்கட் பிறப்பனவாகுமென்றும், பொருளறியாத முற்கம் வீளை முதலியன எழுத்தொடு கூடாவாய் விசும்பின்கட் பிறப்பன வாகுமென்றும், அறிவு நூல்கள் கூறா நிற்கும். விந்துவிற் பிறக்கும் ஏனை யொலிக ளெல்லாம் உயிரெழுத்தெனவும் மெய்யெழுத்தெனவும் பிரிந்து பலவேறு உருவினவாய் இயங்க, இவ் ஆய்தவொலி மட்டும் அவ்வுயிர் மெய்களுள் ஒன்றுமாகாமல் இவற்றின் வேறாய்ப் புள்ளிவடிவிற் றனித்து நிற்றலை ஆராயுங்கால் ஏனை யொலிகளெல்லாம் விந்துவின் காரியவொலிகளாய்த் தோன்ற, இஃதொன்றுமட்டும் அங்ஙனங் காரியவொலி யாகாமல் விந்து வென்னும் அக்காரணத்தின் ஒலி வடிவாம் என்பது துணியப்படும். இது விந்துவென்னுங் காரணத்தின் ஒலிவடிவாதல் பற்றியே இதற்கும் புள்ளி வடிவு சொல்லப் பட்டிருக்கின்றது. விந்துவென்பது புள்ளி வடிவின தாதலைச் சிவஞானபோத ஆராய்ச்சியில் விரித்து விளக்கியிருக் கின்றேம்; ஆண்டுக் கண்டு கொள்க. அற்றேல், ஆய்தம் வரிவடிவில் எழுதப்படுங்கால் ஒரு புள்ளியிட்டு எழுதப் படாமல், மூன்று புள்ளியிட்டு எழுதப்படுதல் என்னை யெனின்; விந்து மாயையின் ஒலி தன் நிலையில் ஒலிப்பதாயின் ஒற்றைப் புள்ளியே பெறும்; அவ்வாறன்றி அது அசுத்த மாயையை ஊடுருவி அதன் பின் பிரகிருதி மாயையை ஊடுருவி இயங்குதலால், தான் தனித்து இயங்கு நிலையில் ஒரு புள்ளியினையும், அசுத்த மாயையை ஊடுருவி இயங்கு நிலையில் மற்றொரு புள்ளியினையும், பிரகிருதிமாயையை ஊடுருவி இயங்குநிலையிற் பின்னும் ஒரு புள்ளியினையும் ஆக மூன்று புள்ளியினைப் பெறுவதாயிற்றென்று உணர்ந்து கொள்க. ஈண்டுப் புள்ளி என்றது அது சுழிந்து இயங்கும் வட்டவடிவினையே யாம். அற்றாயின், விந்துவின் ஒலிகளுள் ஆய்தம் ஒன்றனை மட்டும் அவ் விந்துவினோடு ஒற்றுமைப் படுத்திக் காரண வொலி என்றும், மற்றையெல்லா ஒலிகளையும் காரிய ஒலிகள் என்றும் இருவேறு வகைப்படுத்துக் கூறுதலென்னை? மிக நுண்ணிய அவ்வொலிகளுள் இது காரணம் மற்று இவை காரியம் என்பது அறியப்பெற்றிலமாலெனின்; முதற் காரணப் பொருள் நிமித்த காரணப் பொருளால் துணைக் காரணங் களைக் கொண்டு திரிபுபடுத்தப் படுவதே அதன் காரியமாம் என்றும், முதற் காரணப் பொருள் அங்ஙனம் திரிபுபடுத்தப் படாமல் தன் நிலையில் நிற்பதே அதன் இயற்கைக் காரண நிலையாம் என்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இவ்விரு வேறு நிலைகளையும் ஓர் எடுத்துக் காட்டான் விளக்குவாம். களிமண் என்பது ஒரு முதற் காரணப் பொருள், குயவன் நிமித்த காரணன், அவன் திகிரியுங் கோலுமாகிய துணைக் காரணங்களைக் கொண்டு அம்மண்ணைத் திரிவுபடுத்திக் குடம் குடுவை சால் முதலான அதன் காரியப் பொருள்களை வனைந்து வைத்தல் காண்டுமன்றே. அதுபோலவே, விந்து மாயையின் இயற்கைக் காரணவொலி ஆய்தம் என்றும், அக்காரணவொலி உயிர்க் கிழவனாகிய நிமித்த காரணப் பொருளால், தலை மிடறு நெஞ்சு பல் இதழ் நா மூக்கு அண்ணங்களாகிய துணைக்காரணங்களைக் கொண்டு திரிபுபடுத்தப் பட்டு வெவ்வேறு ஒலிகளாகிய காரியங்களாய்த் தோன்றுகின்றன என்றும் உணரற்பாற்று. ஒரே தன்மைத்தாகிய ஆய்தம் என்னும் விந்துவொலி தலை மிடறு நெஞ்சு என்னும் இடங்களைப் பொருந்திப் பல் இதழ் நா மூக்கு அண்ணம் என்னும் உறுப்புக்களின் அசைவாற் பலதிறப்பட்ட எழுத்துக்களாய்க் காரியப் படுத்தப்படலாயிற்று. எனவே, மூன்றிடங்களானும் ஐந்து உறுப்புக்களாலும் திரிபுபடுத்தப்படும் காரிய வொலிகளே வெவ்வேறெழுத்துக் களாமென்பது பெற்றாம். பெறவே, இக்காரிய வொலிகளுக்கு முதலாய் நிற்கும் ஆய்தம் என்னும் காரணவொலி தலை மிடறு நெஞ்சு என்னும் இடங்களைப் பற்றுக்கோடாகக் கொள்ளுதலும், பல் இதழ் நா மூக்கு அண்ணம் என்னும் உறுப்புக்களால் திரிபு படுத்தப் படுதலும் இல்லாத தென்பதூஉம் பெறப்படும். இவ்வாறு இம் மூன்றிடங்கட்கும் ஐந்துறுப் புகட்டும் வேறாய்த் தனித்து நிற்றலினான்றே ஆய்தம் தனிநிலை யெனவும் வழங்கப்பட்டது. இதுபற்றியே ஆசிரியர் தொல்காப்பியனார் ஆய்தத்திற்குப் பிறப்பிட மேனும் உறுப்பின் றொழிலேனுங் கூறிற்றிலர். மற்று இக் கருத்துணராத பவணந்தியாரோ தாமியற்றிய நன்னூலில் ஆய்தக்கு இடந்தலை அங்கா முயற்சி எனப் பிழைபடக் கூறினார். உந்தியிலிருந்து போதரும் வளியோடு கலந்த ஒலி தலை மிடறு நெஞ்சு என்னும் மூன்றிடங்களைப் பொருந் தாமலும், பல் இதழ் நா மூக்கு அண்ணம் என்னும் ஐந்துறுப்புக்களால் மறிக்கப் படாமலும் தன் இயல்பினில் இயங்குவதே ஆய்தம் என்னும் முதற் காரண ஒலியினியற்கை யாம். அவ்வெட்டாலும் தடை செய்யப்பட்டு வேறு வேறாகத் திரிபுற்று நடப்பதே மற்றக் காரிய வொலிகளின் இயற்கை யாம். காரியவொலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோரிடத்தைப் பொருந்தி அங்குள்ள உறுப்புக்களால் மறித்து நிறுத்தப் படுதல் காண்க. ஆய்தமாகிய காரணவொலியோ ஓரிடத்தைப் பற்றி நில்லாமலும் உறுப்புக்களாற் றடைசெய்யப் படாமலும் இயங்குதலைச் சொல்லிக் காண்க. இனிப், பற்றுக்கோடும் தடையுமின்றித் தானே இயங்கு வதூஉம், பற்றுக்கோடுந் தடையும் உற்றுத் தாமே இயங்கு வனவும், பற்றுக்கோடுந் தடையும் உற்றுத் தாமே இயங்கா தனவும் என ஒலி எழுத்துக்கள் தாம் மூவகைய. அவற்றுள் முதலது ஆய்தவொலி; இரண்டாமவை உயிர் எழுத்துக்கள்; மூன்றாமவை ஒற்றெழுத்துக்கள். பற்றுக்கோடுந் தடையும் உற்றுத் தாமே இயங்கும் உயிரெழுத்துக்கள் தமிழ்மொழியில் உள்ளவாறு பன்னிரண்டேயாம் என்பதூஉம், இப்பன்னி ரண்டிற்கு மேற்பட உயிரெழுத்துக்கள் கற்பித்தல் ஒருவாற் றானும் ஏலாதா மென்பதூஉம் மேலே விளக்கிப் போந்தாம். இனிப் பற்றுக்கோடுந் தடையும் பெற்றுத் தாமே இயங்காவாய் உயிரெழுத்துக்களின் உதவியால் இயங்கும் மெய்யெழுத்துக் கள் தமிழில் உள்ளவாறு பதினெட்டுக் கூறுதலே பொருத்தமாதலும், அவற்றின் உண்மை நிலையும் ஈண்டு ஒரு சிறிது விளக்குவாம். பொருளாகிய மாயை வன்மை மென்மை இடைமை என்னும் மூன்று தன்மைகளும் உடையதா தல் போல, ஒலி யெழுத்துக்களாகிய மெய்யும் வல்லினம் மெல்லினம் இடையினம் என மூன்று தன்மைகள் உடையவாம். இவற்றுள் முதல் நா முதல் அண்ணத்தை வலிந்து ஒற்றுதலால் க் என்னும் மெய்யும் மெலிந்து ஒற்றுதலால் ங் என்னும் மெய்யும், இடைநா இடையண்ணத்தை அங்ஙனமே இருவகைப்பட ஒற்றுதலால் ச் ஞ் என்னும் மெய்களும், நுனிநா நுனி அண்ணத்தை அங்ஙனமே ஒற்றுதலால் ட் ண் என்னும் மெய்களும், நுனிநா மேலுள்ள முன்பல்லின் உட்பக்கத்து அடியைப் பரவி அங்ஙனம் இருவகைப்பட ஒற்றுதலால் த் ந் என்னும் மெய்களும், மேல்கீழ் இதழ்கள் அங்ஙனம் ஒற்றுதலால் ப் ம் என்னும் மெய்களும் தோன்றுதலின், அவை அவ்வாறு வாயின் அகத்தே அடியிலிருந்து துவங்கி ஒன்றன் பின் ஒன்றாய்ப் பிறந்து பின்னர்ப் புறத்தே இதழின்கண் வந்து முடியும் முறைபற்றி க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் என்று அடைவுபடுத்து வைக்கப்பட்டன. இனி, மிடற்றினுள் எழுந்த வளியின் ஒலி அண்ணத்தின் முதலைச் சென்று செறிந்து பொருந்துத லானே ய் என்னும் எழுத்தும், நுனிதா மேலண்ணத்தின் இடையைச் சென்று ஒற்றுதலானே ர் என்னும் எழுத்தும், நாவிளிம்பு மேனோக்கிச் சென்று மேலுள்ள முன் பல்லின் உட்புறத்து அடியை ஒற்று தலானே ல் என்னும் எழுத்தும், மேற்பல் கீழ் இதழைப் பொருந்து தலானே வ் என்னும் எழுத்தும் பிறக்கக் காண்டு மாகலின், இந் நான்கும் வாயின் அகத்தே யிருந்து துவங்கிப் புறத்தே வந்து முடியும் அம் முறையே பற்றி ய் ர் ல் வ் என்று ஒன்றன் பின் ஒன்றாக வைக்கப்பட்டன. இனி, நாவின் நுனி மேனோக்கிச் சென்று இடை யண்ணத்தை முழுதுந் தடவுதலால் ழ் என்னும் எழுத்தும், சிறிது தடவுதலால் ள் என்னும் எழுத்தும், அது நுனியண்ணத்தை வலிந்து ஒற்றுதலால் ற் என்னும் எழுத்தும், மெலிந்து ஒற்றுதலால் ன் என்னும் எழுத்தும் பிறத்தல்பற்றி வாயினகத் திருந்து வரவர முன்வரும் அம்முறையே முறையாக ழ் ள் ற் ன் என்னும் அந்நான்கும் ஒன்றன்பின் ஒன்றாய் இறுதிக்கண் வைக்கப்பட்டன. இம் மெய்யெழுத்துக்கள் பதினெட்டனுள் முதற் பத்தும் வாயின் அகத்திருந்து புறத்துவந்து முடியும் முறை பற்றி ஒன்றன்பின் ஒன்றாய் வைத்து, அவை முடிந்தபின் ஏனை நான்கெழுத்துக்களும் அங்ஙனமே வாயினகத்திருந்து புறத்துவந்து முடியும் அம்முறையே பற்றி ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி, அவை முடிந்தபின் இறுதியில் நின்ற ஏனை நான்கெழுத்துக்களும் வாயினகத்தேயே இடையண்ணத் திலிருந்து துவங்கி நுனியண்ணத்தில் வந்து முடியும் அம் முறையே முறையாக ஒன்றன் பின் ஒன்றாக வைத்துத் தொல்லாசிரியர் நெடுங்கணக்கு வருத்திட்டார் என்க. இவ்வொற்றெழுத்துக்கள் பதினெட்டும் உயிரினுதவி யின்றித் தனித்தியங்காமையின், இவற்றின் பிறப்பியல் நன்கு உணர்ந்து கோடற்கு அவற்றை அகரச்சாரியையோடு சேர்த்து க ங ச ஞ என்று கூறிக்காண்க. உயிருமெய்யுமாகிய இம் முப்பதெழுத்துக்களும் நெடுங்கணக்கினுள் இங்ஙனம் ஒன்றன்பின் ஒன்றாய் நின்ற முறை பயில்வார்க்கு இனிது விளங்கும் பொருட்டே ஆசிரியர் தொல்காப்பியனார் எழுத்தோத்தினுட் பிறப் பியல் கூறினா ராகலின், அப்பிறப்புமுறை பற்றியே இம்முப்பதெழுத் துக்களும் நின்றமுறை கடைப்பிடித் துணரற்பற்று. இம்முறை கடைப்பிடித்துணராமையின் பழைய உரைகாரர் மெய் யெழுத்துக்களுட் பின் நின்ற எட்டெழுத்துக்களும் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் முறை கூறித் தொல்காப்பியனார் கருத்தொடு மாறுபட்டு இழுக்கினார். அது கிடக்க. ஈண்டுக் காட்டிய பதினெட்டு மெய்யெழுத்துக்கள் மட்டுமே செவ்வையாகப் பொருத்தப்பட்ட உறுப்புக் களுடைய மக்கள் குறைபாடில்லாத முயற்சியாற் றம்வாயாற் பிறப்பனவாகும். உந்தியினின்றும் மேலெழுந்த ஆய்தம் என்னும் விந்து காரண ஒலியைத் தன்னிலையில் நேரே இயங்கவிடாது மக்கள் தமது நிறைந்த முயற்சியால் தலை மிடறு நெஞ்சு என்னும் மூவிடங்களில் அதனை நிறுத்திப், பல் இதழ் நா மூக்கு அண்ணம் என்னும் ஐந்துறுப்புக்களால் அதனைப் பலவேறுபடத் திரித்துப் பல ஒலிகளாக வெளி விடுகின்றனர். இனி, அவ்விந்துகாரண ஒலி குறைபாடில்லாத உறுப்புக்களாலும் குறைபாடில்லாத முயற்சிகளாலும் இயக்கப்படும்வரை இப்பதினெட்டெழுத்தின் மேற்பட்ட ஒலிகள் தோன்றுதற்குச் சிறிதும் இடமே யில்லை. மற்று, இவ்வாறன்றிக் குறைபாடுடைய உறுப்புக்களும் குறை பாடுடைய முயற்சிகளும் இருந்தால் விந்து காரணவொலி செவ்வனே இயக்கப்படாமற் பலவாறாய் இயங்கி அளவுக் கடங்காப் பலதிறவொலிகளை யெல்லாம் தோற்றுவிக்கும். யாங்ஙனமெனிற் காட்டுதும்; உந்தியினின்றும் எழும் வளியினிசையைத் தடுத்து நாவின் அடியையும் அண்ணத்தின் அடியையும் செவ்வை யாகப் பொருத்திச் சொல்கின்றுழிக் க என்னும் வல்லோசையும், மெலிதாகப் பொருத்திச் சொல்லுகின்றுழி ங என்னும் மெல்லோசையுமே தோன்றா நிற்கும். இவ்வாறன்றி அவ்விரண்டு உறுப்புக்களையும் அளவுக்கு மேல் அழுத்திச் சொல்லப் புகுந்தால் விந்துகாரண வொலியாகிய ஆய்தம் அவ்விரண்டன் இடையிற் சிறிது தடைப்பட்டுப் பின்னர் மிகுதியாய்க் கழிந்துவிடும். ஆகவே வடநூலார் கவ்வருக்கத்தில் இரண்டாவதாகச் சொல்லும் எழுத்தைத் தமிழில் கஃ என்று ஆய்தம் இட்டு எழுதிக் காட்டலாம். இனி அடிநாவும் அடியண்ணமும் வலிதாகப் பொருந்து தலால் ககரமும் மெலிதாகப் பொருந்துதலால் ஙகரமும் தோன்றல் இயல்பாதலால் திங்கள் என்னுஞ் சொல்லிற் போல அவ்விரண்டெழுத்தும் ஒன்று சேர்ந்து வருமிடத் தெல்லாம் அக் கரகவொலி வடநூலார் இசைக்கும் கவ்வருக்கத்தின் மூன்றாவ தொலியை ஒத்து இசைக்கும்; அதனைத் தமிழில் ங்க என ஙகர வொற்றோடு புணர்த்தி எழுதிக்காட்டலாம். இவ்வாறு ஙகர ஒற்றொடு புணர்ந்து இசைக்கும்வழிக் ககரம் இயல்பாகவே அவ்வொலியைப் பெறுதலின் தமிழ் நூலார் அவ்வொலியைக் காட்டுதற்கு வரிவடிவில் வேறு குறியீடு வேண்டராயினார். வடநூலாரோ ஙகர வொற்றோடு கூடாதவழியும் அவ்வொலியைச் செயற்கைப்படுத்துச் சொல்லிச் சொற்களில் இயைத்து வழங்குதலின் அதனை வரிவடிவிற் காட்டுதற்கு வேறுகுறியீடு வேண்டினார். இன்னும் ஙகர வொற்றோடு புணர்ந்துவரும் வழிக் ககரத்திற்கு உண்டாம் இவ்வியற்கை ஓசைக்கும் மாறாக அவர் குங்குமம் முதலான சொற்களில் ஙகரவொற்றின் பின் நின்ற ககரத்தை வல்லோசைப்படச் செயற்கைப் படுத்துங் கூறுவார். இனி, நாவினடியையும் அண்ணத்தினடியையும் மெலிதாகப் பொருத்திப் பின் உரக்கச் சொல்லுங்கால் கவ்வருக்கத்தில் நான்காவதாய் நின்ற எழுத்துத் தோன்றும். மெல்லப் பொருந்திய அவ்விரண்டு உறுப்புக்களும் உரக்கக் கூறும் முயற்சியால் பக்குவிட்டு அகலுதலின் ஆண்டு ஆய்த வொலி மிகுந்து கழிகின்றது. அந்நான்காவது எழுத்தைத் தமிழில் ங்கஃ என்று எழுதிக் காட்டலாம். இங்ஙனமே சவ்வருக்கத்தில் இடைநா இடையண்ணத் தைப் பொருந்த இயல்பாற் பிறக்கும் சகர வெழுத்தைப் பின்னும் அழுத்தி உரக்கச் சொல்லுதலால் ஆய்தவொலி மிகக் கழிந்து இரண்டாமெழுத்துத் தோன்றுதலின் அதனைத் தமிழில் சஃ என்றும், அவ்விரண்டு உறுப்பும் மெலிதாக ஒற்றுதலாற் பிறக்கும் ஞ் என்னும் மெல்லொற்றின் பின் வருடம் சகரம் தஞ்சம் என்னுஞ் சொல்லிற் போல இயற்கை யாகவே மெல்லென்றிசைத்தலின் வடநூலார் கூறும் அம் மூன்றாம் ஒலியைத் தமிழில் ஞ் ச என்றும், அங்ஙனம் மெல்லத் தோன்றும் இவ்வொலியை உரக்கக் கூறுதலால் ஆய்தவொலி மிகக்கழியச் சகரவருக்கத்தின் நான்காம் ஒலி தோன்றுதலின் அதனைத் தமிழில் ஞ் ச ஃ என்றும் எழுதிக் காட்டலாம் என்க. இங்ஙனமே டவ்வருக்கத்தில் நுனிநா நுனியண்ணத்தை ஒற்ற இயல்பாற் பிறக்கும் டகரவெழுத்தைப் பின்னரும் அழுத்தி உரக்கக் கூறுதலால் ஆய்தவொலி மிகக் கழிய வடநூலார் கூறும் இரண்டாம் எழுத்துத் தோன்றுதலால் அதனைத் தமிழில் டஃ எனவும், அவ்விரண்டுறுப்பும் மெல்லப் பொருந்துதலாற் பிறக்கும் ண் என்னும் மெல்லொற்றின் பின்வரும் டகரம் பண்டம் என்னுஞ் சொல்லிற்போல இயல் பாகவே மெல்லென்று ஒலித்தலால் அவர் கூறும் அம்மூன்றாம் ஒலியைத் தமிழில் ண்ட எனவும், இவ்வாறு மெலிதாகத் தோன்றும் இவ்வொலியை உரக்கச் சொல்லுதலால் ஆய்த வொலி மிகக்கழிய அவர் கூறும் நான்காம் ஒலி பிறத்தலின் அதனைத் தமிழில் ண் ட ஃ எனவும் எழுதிக்காட்டலாம் என்றுணர்க. இன்னும் இங்ஙனமே நுனிநா மேலுள்ள முன் பல்லின் உட் பக்கத்துஅடியைப் பரவி ஒற்றுதலால் இயல்பாய்த் தோன்றும் தகரவெழுத்தைப், பின்னும் அழுத்தி உரக்கச் சொல்லுதலால் ஆய்தவொலி மிகக் கழிய வடநூலார் கூறும் இரண்டாம் எழுத்துத் தோன்றுதலின் அதனைத் தமிழில் தஃ என்றும், அவ்விரண்டுறுப்பும் மெலிதாக ஒற்றுதலாற் றோன்றும் ந் என்னும் மெல்லொற்றின் பின் வரும் தகரம் நுந்தம் என்னுஞ் சொல்லிற்போல் இயல்பாகவே மெல்லென்று இசைத் தலால் அவர்கூறும் அம்மூன்றாம் எழுத்தைத் தமிழில் ந்த உரக்கச் சொல்லுதலால் ஆய்தவொலி மிக்குச் செல்ல அவர் கூறும் நான்காம் ஒலி தோன்றுதலின் அதனைத் தமிழில் ந்தஃ என்றும் எழுதிக்காட்டலாம் என்றுணர்ந்து கொள்க. தகர நகரங்களை அடுக்கத் தோன்றும் றகர னகரங்கள் வடமொழியினும் பிறவற்றினும் காணப்படா என்க. இனி, மேல்கீழ் இதழ்கள் ஒன்று பொருந்துதலால் இயல்பாகத் தோன்றும் பகரவெழுத்தைப், பின்னும் அழுத்தி உரக்கக் கூறுதலால் ஆய்தவோசை மிகுந்து செல்ல வட நூலார் பகர வருக்கத்திற் சொல்லும் இரண்டாம் ஒலி பிறத்தலின் அதனைத் தமிழில் பஃ என்றும் அவ்விரண்டிதழ் களும் மெல்ல ஒற்றுதலாற் பிறக்கும் ம் என்னும் மெல்லொற்றின் பின் வரும் பகரம் நம்பன் என்னுஞ் சொல்லிற்போல இயல்பாகவே மெல்லென்று ஒலித்தலால் அவர் கூறும் மூன்றாம் எழுத்தைத் தமிழில் ம்ப என்றும், இங்ஙனம் மெல்லெனப் பிறக்கும் இவ்வொலியை உரக்கக் கூறுதலால் ஆய்தவொலி மிகுதியாய்க் கழிய அவர் கூறும் நான்காம் ஒலி தோன்றுதலின் அதனைத் தமிழில் ம்பஃ என்றும் எழுதிக்காட்டலாம் என்க. இக்கூறியவாற்றல், வாயின் உறுப்புக்களை நிறைந்த முயற்சியோடு பொருத்துகின்றுழி இயல்பாகப் பிறக்கும் வல்லொற்றுகள் தமிழில் உள்ளவாறு க ச ட த ப ற என்னும் ஆறேயாமென்பதூஉம், இவ்வாறனுள் றகரம் அல்லாத மற்ற ஐந்து மெய்களையும் நிறைந்த இயற்கை முயற்சியை விட்டுக் குறைபாடுடைய செயற்கை முயற்சி யால் உறுப்புக்களை வலிந் தொற்றியும் மெலிந்தொற்றியும் ஆய்தவொலியைத் தடைப் படாமற் செல்லவிட்டும் வெவ்வேறு பத்துமெய்களாக வடநூலார் திரித்துக் கொண்டமையின் அப்பத்து மெய்களை யும் மேலை ஐந்து வல்லொற்றுக்களுக்கு இனமான மெல் லொற்றுக்களுடன் அவ் வல்லொற்றுக்களைச் சேர்த்தும், அவ் வல்லொற்றுக் களின் பின் ஆய்தவெழுத்தைச் சேர்த்தும் தமிழ் எழுத்துக் களாலேயே அவற்றை எழுதிக் காட்டலா மென்பதூஉம் நன்கு விளங்கும். அற்றேல், வடமொழி மெய்யெழுத்துக்களும் இறுதிக் கண் நின்ற நான்கு மெய்யெழுத்துக்களையும் தமிழின்கண் தமிழ் எழுத்துக்களாலேயே எழுதிக் காட்டுமாறு யாங்ஙன மெனின்; அம்முறையினையும் ஒருசிறிது விளக்கிக் காட்டுதும். இடைநா இடையண்ணத்தைச் செவ்வனே பொருந்த இயல் பாற் பிறக்கும் சகரவொலியை அங்ஙனம் அவ்வுறுப்புக்கள் செவ்வனே பொருந்தாமல் வைத்து ஆய்தவொலி தடையின்றிச் செல்லுமாறு விட்டுச் சொன்னால் அந்தச் சகர வொலியே அவர்கூறும் அவ்வொலியாய் இசைப்பதைக் காணலாம். அவ்வொலியை வரிவடிவில் எழுதிக்காட்டல் வேண்டின் ஆய்தவெழுத்தைச் சேர்த்து ஃச என்று எழுதுக. ஃசதம் என்றெழுதிச் சொன்னால் வடமொழியில் உள்ள மெய்யின் ஓசையைத் தமிழ்ச் சகரமே காட்டா நிற்கும். இனி, அதற்கடுத்த ஷ் என்னும் வடமொழியோசை நுனி நா நுனியண்ணத்தைப் பரந்து சென்று சிறிது ஒற்றி இடையே ஆய்தவொலி தடைப்படாது செல்லுதலாற் றேன்றுவதாகும். தமிழின்கண் உள்ள ழ் என்னும் ஒலி நுனிதா மேலண்ணத்தின் நடுவைச் சென்று தடவுதலானே பிறப்பதென்பது மேலே காட்டினமாகலின், நுனி நாவின்றொழிலாற் பிறக்கும் ஷ் என்னும் வடமொழி ஓசையும் ழ் என்னுந் தமிழ் ஓசையும் தம்முள் ஒப்புமையுடைய வென்பது நன்கு விளங்கும். ஆகலான், ழ் என்னும் ஒலியில் தடைப்பட்டு நின்ற ஆய்த வொலியை நாவின் நுனி வழியே தடைப்படாது செல்லவிடுத்தால் ஷ் என்னும் வடமொழி எழுத்தோசை தானே தோன்றுவதாகும். ஆதலினால் ழ் என்னும் தமிழ் எழுத்தின் பின் ஆய்த வொலியைச் சேர்த்து ழ்ஃ என்று கூறினால் ஷ் என்னும் வடமொழி ஓசை பிறக்கும் என்று உணர்ந்து கொள்க. ஆகவே, ஈண்டும் குறைபாடில்லாத முயற்சியாற் றோன்றுவது ழகரமாகுமென்றும் குறைபாடுடைய முயற்சி யாற்றேன்றுவது ஷகரமாகுமென்றும் நுண்ணியதாகச் சொல்லிக் காண்க. இனி வடமொழிக்கண் உள்ள என்னும் ஒலி தமிழின்கண் இல்லையாலோ வெனின்; அதுவுங் குறை பாடுடைய முயற்சியாற் றோன்றும் சகரவோசையே யாமென்பதூஉம் ஒருசிறிது விளக்குவாம். இடைநா இடையண்ணத்தைப் பொருந்துதலாற் பிறக்கும் சகர வெழுத்தின்கண் தடைப்பட்டு நின்ற ஆய்தவொலியை அங்ஙனம் தடைப்பட்டு நிற்கவிடாது நேரே செல்ல விடுத்தால் அச்சகரவொலி மாறி நுனி நாவில் வந்து நிற்கப் பின்னும் அவ்வாய்த ஒலியைச் செல்லவிட்டால் என்னும் அவ்வட மொழியோசை தோன்றக் காணலாம். அவ்வொலியைத் தமிழில் ஃசஃ என்று சகரத்தின் முன்னும் பின்னும் ஆய்த எழுத்திட்டு வரிவடிவில் எழுதிக் காட்டலாம். இனி, வடமொழி நெடுங்கணக்கிற் கடைநின்ற ஹ் என்னும் ஒலி தமிழின்கண் உள்ள ஃ என்னும் ஆய்த வொலியே யாகலின், அதனை மொழி முதலிலும் இடையிலுஞ் சேர்த்து வடநூலார் ஹரன் அஹம் என வழங்குஞ் சொற்களைத் தமிழில் ஃஅரன் அஃஅம் என ஆய்தவெழுத்திட்டு எழுதிக்காட்டலாம் என்க. இவ்வாறு தமிழில் இல்லாமல் வடமொழி நெடுங் கணக்கின் மட்டுங் காணப்படும் சில ஒற்றெழுத்துக்கள் அத்துணையும், தமிழின்கண் நிறைந்த முயற்சியாற் பிறக்கும் ஒற்றெழுத்துக்கள் சிலவற்றைக் குறைந்த முயற்சியால் ஆய்தவொலியைத் தடைப்படாது செல்ல விடுத்துப் பிறப்பிக்கத் தோன்றுவனவே யாகுமல்லாமல் உண்மையான் நோக்குங்கால் அவை தனித்தனி மெய்யெழுத்துக்கள் ஆகமாட்டாவென்பது தெற்றெனப் புலப்படும். விந்துவின் இயக்கம் மாயாகாரியப் பொருள்கள் அத்துணையும் இயங்குவதற்குக் காரணமாய் நின்றாற்போல, அவ்விந்துவின் ஒலியாகிய ஆய்தமும் உயிர் ஒற்று என்னும் எல்லா ஒலிகளின் இயக்கத்திற்குங் காரணமாய் நிற்கும் என்க. அற்றேல், அகரவொலி ஒன்றுமே எல்லா வெழுத்தொலிகட்குங் காரணமாய் முன் நிற்பதென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாக ஈண்டு அதனைவிடுத்து, ஆய்த வொலியே அதற்கும் முற்பட்ட காரணமாய் நிற்கும் எனக் கூறிய தென்னை யெனின்; உந்தியினின்றும் எழுந்த வொலியே தலை மிடறு நெஞ்சு என்னும் மூன்றிடங்களின் நிலைபெற்றுப் பல் இதழ் நா மூக்கு அண்ணம் என்னும் உறுப்புக்களின் றொழி லால் வெவ்வேறு ஒலி எழுத்துக்களாய்த் திரிபெய்துகின்றது என்றல் எல்லா ஆசிரியர்க்கும் ஒப்ப முடிந்தமையானும், அக்காரணவொலியின் முதற்காரிய ஒலியே அகரவுயிராக லானும், அங்காந்து கூறுங் காரியப்பாட்டாற் பிறக்கும் அகர ஒலியை முதற்காரணமென்றல் அமையாமையானும் அவ் அகர வொலிக்கும் முற்பட்ட காரணமாய் உந்தியினின்று எழும் ஆய்தவொலியே எல்லா எழுத்தொலிகட்கும் முதலா மென்க. அங்ஙனமாயின் அகர முதல எழுத்தெல்லாம் என்று ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் கூறியதென்னை யெனின்; சொற்களில் இயைந்து பொருள் அறிவுறுக்கும் எழுத்தோசைகள் எல்லாவற்றுள்ளும் முன்நிற்பது அகர வொலியேயாதல் பற்றி அவ்வாறு கூறினார். அல்லதூஉம் அகரவொலி என்றேனும் அகர வெழுத்தென்றேனுங் கூறாமல் அவையிரண்டற்கும் பொதுப் பட அகரம் என்று கூறினாமையால் அகர வொலியும் பிறவெழுத்தொலிகளுந் தோன்றுதற்கு இடமாய் அங்காந்த வாயின்கண் நிற்கும் இடைவெளியே அகரமாமெனக் கருதினார் என்று கோடலும் இழுக்காது. இவ்விடைவெளி வாயிலிருந்து மிடற்றின் வழியாய் உந்திவரையில் நிற்றலும், இங்ஙனம் வாயின் கண் வட்டமாயும் பின்னர் மிடற்றிலிருந்து நீளமாயும் செல்லும் இது வரிவடிவில் எழுதப்படும் அகரத்தின் வடிவு போன்றும் காணப்படுதலும் உற்று நோக்க வல்லார்க்கு இவ்விடை வெளியே விந்துகாரண வொலியாகிய ஆய்தமும் அதன் காரியங்களாகிய அகர முதல் னகர இறுவாயான முப்பதெழுத்துக்களுந் தோன்றுதற்கு நிலைக்களனாம் என்பது இனிது விளங்கா நிற்கும். இவ்விடை வெளியாகிய அகரம் காரண காரியவொலிகள் எல்லாவற்றிற்கும் பிறப்பகமாய் நிற்றல்போல, எல்லாமாய் அல்லதுமாய் எங்கு மாய் நிற்கும் இறைவனும் உலகுயிர்கள் எல்லாவற்றிற்கும் பிறப்பகமாய் நிற்பனென்பதே ஆண்டு ஆசிரியர் கருத்தாதல் துணியப்படும். எனவே, மிக நுண்ணிய இடைவெளி வடிவாய் நிற்கும் அகரமும், அவ்வெளியின் கட்டோன்றி யியங்கும் விந்து காரண வொலியின் முதற் காரியமாய் ஒலிக்கும் அகரமும், அவ்வொலியின் அடையாளமாய் வரிவடிவில் எழுதப்படும் அகரமும் என அகரம் மூவகைத்தாதலும் பெறப்படும் என்க. இனி, இவ்வாறு எல்லா எழுத்தொலிகட்கும் முதற் காரணமாய் நிற்கும் ஆய்தஒலி எழுத்தை முதலெழுத் தென்னாது சார்பெழுத்தென்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியதென்னையெனின்; எல்லா எழுத்தொலி கட்குங் காரணம் ஆய ஆய்தவொலிதான் தனித்து நிற்குமாயிற் சிறிதும் பயன்படாது; மற்று அது தன் காரியங்களாய்த் திரிபெய்தும் வழியும், தன் காரியங்களைச் சார்ந்து நிற்கும் வழியுமே பொருளறிவுறுக்குஞ் சொற்களாய்ப் பயன்படுவ தாகும். எஃகு கஃசு என்னுஞ்சொற்களிற் போல இவ்வாறு தன் காரியவொலிகளில் சார்ந்து நின்றன்றி அது பொரு டராமையினாலும், தன் காரியமான ஓர் எழுத்தொலியையே தான் சார்ந்து நின்று அதனைப் பல வேறு ஒலிகளாய்ப் பலவேறு மொழிகளில் வழங்கச் செய்தலினாலும் அதனை ஆசிரியர் சார்பெழுத்தென்று கூறுவாராயினர். தமிழின்கண் உள்ள ஒற்றெழுத்து உயிரெழுத்துக்களோடு இவ்வாய்த வெழுத்தையும் குற்றியலிகரம் குற்றியலுகரங்களையும் சார்த்தி உலகத்தின்கட் பரவி வழங்கும் எந்த மொழியின் எந்த எழுத்தையும் செயற்கைப் படுத்துப் பிறப்பித்தல் எளிதாம்.* இவ்வாறு காரணவொலியும் காரணப் பொருளுந் தத்தங் காரிய வொலிகளையும் காரியப் பொருள்களையுஞ் சார்ந்து நின்றன்றிப் பயன்படாவென்பதனை ஓர் எடுத்துக் காட்டின் கண் வைத்து விளக்குவாம். நிலத்தின்கண் மண்ணோடு விரவிச் சிதர்ந்து கிடக்கும் பொற்றுகள்கள் அவ்வாறு கிடக்குந்தனையும் பயன்படா. மற்று அவை ஒருங்கெடுத்துத் தொகுத்து உருக்கப்பட்டுப் பொற்கட்டியாயும் பொற் காசாயும் பொற்பணிகளாயும் திரிபுபடுத்தப்பட்டுழியே பயன் பெரிதுடையவாம். இது போலவே, விந்து காரணவொலி யாகிய ஆய்தமும் தன் நிலையில் நின்றக்காற் பயன்படாமை யும், தன் காரிய வொலிகளைச் சார்ந்து நின்றக்காற் பயன்பெரிதுடைத்தாதலும் பகுத்துணரற்பாற்று. இதுகாறுங் கூறியது கொண்டு தமிழ் மொழியின்கண் உள்ள முப்பது முதலெழுத்துக்களும் மூன்று சார்பெழுத்துக்களுமே குறைபாடில்லாத உறுப்புக்களுடைய மக்கள் குறைபாடில்லாத முயற்சியால் இயற்கையாகப் பிறப்பிப்பனவாகுமென்றும், ஏனைமொழிகளில் இவற்றினும் மிகுதியாகக் காணப்படும் ஏனை எழுத்துக்களெல்லாம் இம்முதலெழுத்துச் சார் பெழுத்துக்களின் உதவியால் குறைபாடுடைய முயற்சி கொண்டு செயற்கைப்படுத்து வருந்திச் சொல்லவரும் எழுத்துக்களாம் என்றும், எல்லாவாற்றானும் நிறைவுடைய தமிழ்மொழியின் இவ்வுண்மை யுணராமல் அதனைக் குறைபாடுடைய தெனவும் குறைபாடுடைய ஏனைமொழிகளை நிறைவுடைய வெனவும் கூறும் கூற்றெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் அறிவின் மதுகையின்மையால் வருவனவா மென்றும் உணர்ந்து கொள்க. இன்னும் விரிப்பிற் பெருகும். அடிக்குறிப்பு 1. Anglo - Saxon, modor, faeder; Dutch, moeder, vader; Danish and Swedish, moder, fader; Icelandic, mathir, fathir; German, mutter, vater; Latin, mater, pater; Greek, meter, pater, Persian, mader, padar. 2. Phonograph. 3. இவ்வுண்மையைத் திருவாளர் மாணிக்கநாயகரும் நன்கு விளக்கிக் காட்டுதல் கண்டுகொள்க. 3. தமிழ் மிகப்பழைய மொழியாமென்பது* பரந்துகிடக்கும் இந்நிலவுலகத்தின்கண்ணே பண்டைக் காலந் தொட்டு இலக்கண விலக்கிய வரம்புடைமையாற் சீர்திருந்தி வழக்கமுற்று வாராநின்ற மொழிகள் தமிழ், வடமொழி, இலத்தீன், கிரேக்கு, இப்புரு முதலியனவாம். உலகத்தின்கட் பேசப்படுவன வாகுந் தொள்ளாயிர மொழி களுள் இவ்வைந்தும் வேறு சிலவும் அங்ஙனந் தொன் மொழிகளென் றுயர்த்துக் கூறப்படுதற்கு இடம் பெறுவ தல்லது ஏனைய அவ்வாறு சொல்லப்படா வெண்றுணர்க. இவற்றுள், தமிழ் மொழியை ஒழித்து ஒழிந்த வடசொல், இலத்தீன் முதலியவற்றையெல்லாம் ஐரோப்பியப் புலவர்கள் நன்காராய்ச்சி செய்து அவற்றைப் பண்டைக் காலத்து மொழிகளெனப் பெரிதும் பாராட்டிப் போற்று கின்றார்கள். இனித் தமிழையோ வெனின் அங்ஙனம், உண்மை யாராய்ச்சி செய்ய மாட்டாது நெகிழவிட்டு, அதனைப்பற்றி உரை யுரைக்கும் வழி யெல்லாந் தாந்தாம் மனம் போனவாறு சொல்லி உண்மைப்பொருள் காணாது ஒழிகின்றார். இதற்கென்னையோ காரணமெனின், வடமொழி முதலான சொற்குரிமை பூண்டு அவற்றை வழங்குவாரான நன் மக்கள் பற்று மிகவுடையராய் அவற்றை வளர்க்கும்படி செய்தலோடு, பிறருந் தமக்கநுகூலமாய் நின்றதனை அவ்வாறு வளர்க்கும் படி செய்யுமாறு தூண்டுதலுஞ் செய்து போதருகின்றார். இனித் தென்றமிழ் நாட்டில் தமிழ் வழங்கு மக்களோ அங்ஙனம் நன்கு பற்றுக் கொளவறியாமல் உண்டிப் பொருட்டுப் பொருள் தொகுத்தலின் கண்ணே நிலைபேறு மிகவுடையராய் மொழியாராய்ச்சியிற் சோம்பலுற்று உறங்கிக் கழிக்கின்றார். இனி யிங்ஙனம் ஒழிவாரொழியத் தமிழ்ப் பற்று மிக்குடைய தமிழ்ப் புலவர் ஒரு சிலரும், ஆங்கிலமுந் தமிழும் வல்லார் ஒருசிலரும் மனவெழுச்சியான் முன்வந்து நின்று உண்மையாராய்ச்சி செய்து போதருகின்ற மையின், அந்நல்லார் வழிநின்று யாமும் எம்மாராய்ச்சியிற் கண்டவற்றை விளங்கக் காட்டத் துணிந்து இன்றிதனை விரித்துரைப்பப் புகுந்தாம். இது நிற்க. இனி மேலே காட்டிய பண்டைமொழிகளான தமிழ் முதலான சொற்களுள் இன்றுகாறும் பரவைவழக்காய் வருவது தமிழ் ஒன்றேயாம். அற்றன்று, இலத்தீன் முதலான சொற்களும் ஆண்டாண்டுப் பயிற்சி செய்யப் படுதலும், கற்றறிவுடையோராற் பேசப்படுதலுமுடையன வாய் வருதலின் அவை வழக்கு வீழ்ந்தனவாகா வெனின்; நன்று சொன்னாய், ஒரு சொற் பரவை வழக்குடையதோ அன்றோ வெனத் துணிவுகாண்டல் அவ்வாறன்று, மற்று அது கற்றறிவில்லாச் சிறுமகாரானும் பெண்டிரானும் ஆடவ ராணும் இல்லந்தோறும் உரை வழக்குற்றுப் பெருகி நடைபெறுதலொன்றானே அவ்வாறாதல் இனிது துணியப் படுமென்பது. இனி இலத்தீன் முதலிய சொற்கள் அங்ஙன மில்லந்தோறுஞ் சிறுமகாரானும் பிறரானும் வழங்கப்படுதல் காணாமையானும், தமிழோ அவ்வாறின்றி யாண்டும் பெருகிய வழக்காய்த் தென்றமிழ் நாட்டகத்தே நடை பெறுதலானும் அவ்விலத்தீன் முதலான சொற்கள் உலக வழக்கு வீழ்ந்தனவா மென்பதூஉம், தமிழொன்றே உலக வழக்குடையதா மென்பதூஉந் தேற்றமாம். எனவே, தமிழ் மொழிப்பயிற்சி செய்தல் அவ்விலத்தீன் முதலான ஏனைமொழிப் பயிற்சியினும் பயப்பாடு பெரிதுடையதா மென்பது இனிது விளங்கலின், இப்பெற்றி யறியாத சென்னைப் பல்கலைக் கழகத்தார் தமிழ்ப் பயிற்சி செய்தலை அறவே களைந்துவிடல் வேண்டு மென்றுரைத்த வுரை பெரியதோர் இழுக்குமாம் ஏதமுமாம். இது கிடக்க. இனி அத்தமிழ்மொழி, வடமொழி இலத்தீன் முதலான மற்றவ்வெல்லாச் சொற்களினும் முற்பட்டுத் தோன்றிய பழைமை யுடைத் தென்பது ஒரு சிறிதுரைப்பாம். தமிழ் மொழியிலேயுள்ள சொற்களெல்லாம் அ,ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்னும் பன்னீருயிரெழுத்துக்களையும், இவ்வுயிர்களோடு கூடிய க், ச், த், ந், ப், ம்,வ், ய், ங், ஞ் என்னும் பத்து மெய்யெழுத்துக்களையும் முதற்கொண்டு தொடங்கு கின்றன; ட், ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் எட்டு மெய்யெழுத்துக்களைக் கொண்டு அவ்வாறு தொடங்குகி ன்றில. ஆரியம், இலத்தீன் முதலிய மொழிகளோ இவ் வெழுத்துக்களையும் முதலிட்டுத் தொடங்குஞ் சொற் களுடைய னவாய்க் காணப்படுகின்றன. ஆரிய மொழியிற் காணப்படும் டம்பம், ரத்நம், லவணம் முதலிய சொற்களை அம்மொழியிற் கிடந்தவாறே கூறாது இடம்பம், அரத்நம், இலவணம் முதலியனவாகத் திரித்துத் தமிழ்மக்கள் வழங்குகின்றார். நன்னூல் முதலான இலக்கண நூல்களும் அவ்வாறே வழங்குமாறு விதிக்கின்றன. அச்சொற்களை அம்மொழியிற் கிடந்தபடியே கூறாது. அங்ஙனந் திரித்துக் கூறல் வேண்டுவதென்னை யெனவும், தமிழ்ச் சொற்கள் ட், ண் முதலான அவ்வெட்டு மெய்யெழுத்துக்களை முதல் நிறுத்துத் தொடங்காமை என்னை யெனவும் நுணுகி யாராயும்வழித் தமிழ்மொழி மற்று எவ்வெல்லா மொழிகளினும் பழைதா மென்னும் உரைப்பொருள் தெற்றென விளங்காநிற்கும். அவ்வாறாதல் காட்டுதும். இனி, ஒரு மொழியின் தோற்ற முறையினை நோக்க வல்ல நுண்ணறிவாளார்க்கு, விலங்கினங்களைப்போல் அநாகரிக நிலையிலிருந்து சொற்சொல்லுமா றறியாது குறிப்பா னுணர்த்திப் பின்னும் விளங்காமையான் இயற்கை யினிகழும் ஒலிவகைப்பற்றிக் கூற்று நிகழ்த்திச் சிறிது சிறிதாய்ச் சொற்சொல்லுமாறு அறிந்து அறிவு கூடப் பெற்றுவரும் மக்கட்டன்மையும், தாய் தந்தையர் கூட்டுறவானே சொற்சொல்லுமாறு அறிந்து அறிவுகூடிவருஞ் சிறுமகா ரியல்புந் தம்முளொத்த பெற்றிமையுடையவாமாறு இனிது விளங்கும். எனவே ஒருமொழியின் தோற்ற முறை நன்காராய்ந் தளந்தறிதற்கு இன்றியமையாப் பெருங்கருவியாய் முன்னிற்பது சிறுமகார் வளர்ச்சி முறையை உற்றுநோக்கி யுணர்தலேயாம். உயிரெழுத்துக்களொழிய மெய்யெழுத்துக்களுட் சிறு மகாரான் முதன்முதன் மொழியப்படும் ஒலி யெழுத்து இதழிரண்டனையுஞ் சிறிது மெல்லென்று கூட்டுதலானே பிறக்கும் ம என்பதேயாம். அங்ஙனம் இதழ் கூட்டித் தந் தாயைக் கூவும்வழி அடுத்தடுத்து மா மா என்று சொல்லுதலானே அம்மா என்னுஞ் சொல் தோன்று வதாயிற்று. இனி அவர் அம்மா எனும் அச்சொற் கற்றதுணையானே, தம்மிதழை மேலுஞ் சிறிது வலிந்து இயக்குமாறறிந்து தந்தையைக் காண்டொறும் பா பா என்றழைத்தலானே அப்பா எனுஞ் சொல் வெளிப் படலாயிற்று. இங்ஙனம் மெல்லென்றொலிக்கும் ஒலிநுட்பம் பற்றி மகரத்தையும் அதனோடோரினப்பட்ட எழுத்துக்களையுந் தமிழ் நூலார் மெல்லெழுத்தென் றவ்வாறோதுவாராயினார்; வல்லென்றொலிக்கும் வகைபற்றிப் பகரத்தையும் அதனோடோரினப்பட்ட எழுத்துக்களையும் வல்லெழுத்தென்று அவ்வாறோதினார். இங்ஙனஞ் சிறுமகாரான் முதன் முதன் மொழியப்படும் மெய் ஒலியெழுத்துக்கள் மகரமும் பகரமுமாதல் பற்றியே, உலகத்தின்கட் பரந்து வேறு வேறு வழங்கப்படும் மொழிகளினெல்லாம் தாய்தந்தையரை யழைக்குஞ் சொற்கள் அம்மா அப்பா எனுமிரண்டேயாயின. உலக வியற்கைத் திறம்பற்றி மொழியப்படும் அம்மா அப்பா வென்னுஞ் சொற்பெற்றி தேற மாட்டாத வடநூல்வல்லார் சிலர் அவையிரண்டும் மாதா பிதா வென்னும் வடமொழி களின் சிதைவாய்த் திரிந்து தமிழில் வழக்கமுறுகின்றனவென் றுரைத்து ஏதம்படுகின்றார். இது கிடக்க. இனி மேலே காட்டிய ட், ண் முதலிய எட்டு மெய்யெழுத்துக்களும் நா மேலண்ணத்தைத் தொடுதலானே பிறக்கும் நாவெழுத்துக்களாம். அங்ஙனம் மேலண்ணந் தொட்டு உச்சரித்தற்பொருட்டு வேண்டப்படு முயற்சி உறுப்புக்கள் வலிவேறி வேண்டியவா றியக்கப்படுங் காலத்தே வருவ தொன்றாம். இதழ் நாப் பல்லணத் தொழில்கள் வருந்தி நிகழாக் குழவிப் பருவத்தே யரிது முயலமாட்டா தெளிது செல்லும் முயற்சியே தோன்றா நிற்கும். அங்ஙனம் முயற்சியெல்லாம் எளிது சொல்லா நிற்குங் குழவிப்பருவத்தே நாவினாற் பிறக்குஞ் சொற்றோற்றங் காண்டலரிதினும் அரிதாம். யாமொருநாள் மூன்று அகவை செல்லாநின்ற ஒரு பிள்ளை ஏனைச் சிறு மகார் சிலரோ டொருங்கு விளையாடிக் கொண்டிருத்தலை உற்றுநோக்கி யிருந்தோம்; அப்போது அப்பிள்ளை ராமன் என்னும் பெயருடைய சிறுவனை ஆம ஆம என்றழையா நின்றது; அதனைக் கேட்டலும் எம்முணர் வெல்லாம் ஒருவழி யொருங்கி யதன்கண் உருவி நுழைந் தாராய்வான் புகுந்தன. அங்ஙனம் ஆராய்ச்சி நிகழ்த்த காலத்திலேதான் சிறுமகார் பால் நாவினாற்பிறக்குஞ்சொற் காண்டல் அரிதென்பதெமக் கினிது விளங்கிற்று. இனி நாவினாற் பிறக்கும் ஒலிகொண்டு தமிழ்ச் சொற்கள் தொடங்காமை என்னை யென்னும் ஐயப்பாட்டிணை ஈண்டாராயலுறின், தமிழ்மொழி தோற்றமுற்ற பண்டைக் காலத்தே அதனை வழங்கிய மக்கள் உறுப்புக்கள் உரமேறியரிது முயற்சி செல்லாத இளம் பருவத்தே சொற் சொல்லுந் திறமை யறிதலுறுவா ராயினா ரென்பதூஉம் அப்பருவத்தே முற்பட்டுத் தோற்றமுற்ற மொழி தமிழே யாமென்பதூஉம் நன்றுணரக் கிடக்கின்றன. இனி, வடமொழி, இலத்தீன், கிரேக்கு, இப்புரு முதலான மொழிகளிலே நாவினாற் பிறக்கு மொலியெழுத்துக்கள் முதற் கொண்டெழுந்த சொற்கள் காணக்கிடத்தலின், அம்மொழி களெல்லாந் தம்மை வழங்கிய மக்கள் உறுப்புரம் பெற்று வேண்டியவாறு இயக்கும் பிற்பருவத்தே தோற்றமுற்றெழுந்த இயல்பினவாதல் வெள்ளிடை மலைபோல் விளக்கமுடைய தாகின்றது. எனவே, வடமொழி முதலான நாற்பெரும் மொழிகளும் தோற்றமுற் றெழுதன் முன்னரே, தமிழ்ச் செஞ்சொல் தோற்றமுற்றெழுந்த தொன்மை மாட்சி இனிது விளங்கலின், தமிழ் ஏனை எல்லா மொழிகளினும் பழை தாமென நிறுவுதற்கு யாமெடுத்துக்கொண்ட மேற்கோள் வாய்ப்புடையதாமாறு காண்க. அற்றேலஃதாக, ட், ண் முதலான அவ்வெட்டு மெய்யெழுத்துக்கள் தமிழ்மொழியிற் காணப்படுதலும் அதன் றொன்மை மாட்சிக்கு ஓரிழுக்காமா லெனின்;- அறியாது கடாயினாய், தமிழ் வழங்கு மக்கள் உறுப்புரமேறிய பிற் காலத்தே தோற்றமுற்றெழுந்த அவ்வெழுத்துக்கள் மொழி யிடைப் படுத்து வழங்கக் காண்டலின் அஃதிழுக்காது. அல்லதூஉம், மொழிமுதலிலே நாவெழுத்துக்கள் தொடங்கி யுரைத்தற்கு வேண்டப்படும் அத்துணை முயற்சி, அவற்றை மொழியிடைப்படுத்துரைக்கும்வழி வேண்டப்படாதென்பது ராமன் இராமன் என்னும் இரண்டனையுந் தெரிந்துரைத்துக் காண்க. இங்ஙனம் மொழியிடைப் படுத்தற்கண் முயற்சி சிறுகுதலின் அச்சிறுமுயற்சியாற் பிற்காலத்தே தோற்றமுற்று நடைபெறலுற்ற அந்நாவெழுத்துக்கள் பற்றித் தமிழின் றொன்மை மாட்சிக்கு வரக்கடவதோர் குற்றமில்லையென்று விடுக்க. இது நிற்க. இன்னுமிவ்வாறே தமிழின்கட் காணப்படும் பல நுட்பவேதுக்களால் தமிழ்மொழி மற்றெல்லாச் சொற்களினும் பழை தாமாறு சமயம் நேர்ந்துழி யெல்லாம் விரித்து விளக்குவாம். நமக்கு உற்ற நண்பர்களாயுள்ள புலவர் மாமணிகளுந் தாந்தாம் ஆராய்ந்திட்ட தமிழ்த்தொன்மை மாட்சி விரித்து எழுதும்படி அவர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். அடிக்குறிப்பு 1. அடிகளார் 1902 ஆம் ஆண்டில் தமது அறிவுக் கடல் என்னும் திங்களிதழில் எழுதியது. 4. தொல்காப்பிய முழு முதன்மை இனி ஒரு தமிழ்நூல் அல்லதோர் செய்யுள் குமரி நாடு கடல்கொள்ளப்படுமுன் செய்யப்பட்டது எனத் துணிவு காண்டற்கு அக் குமரிநாடாக, அக் குமரிநாட்டகத்தே கிடந்த பஃறுளி அல்லது குமரியாறாக அவற்றின்கண் மொழியப் படுதல் வேண்டும் என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. பலவேறு காலங்களிலிருந்தே பலவேறு புலவர்கள் பாடிய செய்யுட்களைச் சிதர்ந்து போகவிடாமல் ஒருங்குதொகுத்து அவற்றை அகம் புறமெனக் கடைச் சங்கத்தார் வகுப்ப வழக்க முற்று வருகின்றவற்றுட் புறநானூற்றிலே ஒருசில செய்யுட் களிற் கடல் கொள்ளப்படு முன்னிருந்த பஃறுளியாறு கிளந்தெடுத்துக் குறிக்கப் படுதலால், அச்செய்யுட்புலவர் காலமும் அப்புலவரோ டொருங்கிருந்து செய்யுள்கொண்ட அரசர்காலமும் குமரிநாடிருந்த காலமேயாமென்பது இனிது விளங்கும். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் என்னும் நல்லிசைப்புலவர் தாம் பாடிய ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் என்னுஞ் செய்யுளில் அவனை வாழ்த்துகின்றுழி முந்நீர் விழவி னெடியோன், நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே எனப் பஃறுளி யாற்றைக் கிளந்தெடுத்துக் கூறக் காண்டலால் அவர்காலம் பஃறுளியாறு கடல்கொள்ளப்படு முன்னதாதல் இனிது துணியப்படும். இனித் தொல்காப்பியத்திற்குப் பாயிரஞ் செய்த ஆசிரியர் பனம்பாரனார் வடவேங்கடந் தென்குமரி யாயிடை எனக் குமரியாற்றைக் கிளந்தெடுத்துக் கூறுதலானும் அது குமரியாறு கடல் கொள்ளப்படுமுன் பெழுந்த தொன்றாம். இங்ஙனங் குமரியாறு தெற்கு எல்லையாக வைத்துரைக்கப் பட்டதன்கண் ஐயுறவுகொண்டு, நண்பர் சவரிராய ரவர்கள் குமரி நாட்டிற்கு நடுவிற்சிறந்து விளங்கிய கபாடபுரத்திலிருந்து தமிழாராய்ந்த சங்கத்தார்க்குக் குமரியை எல்லையாக வைத்துக் கூறுதல் யாங்ஙனம் பொருந்துமெனக் கடாவெழுப்பித் தென்னாடு கடல் கொள்ளப்பட்ட பிற்காலத்து மற்றது தெற்கெல்லையாக நிகழ்ந்ததாகலின் அவ்வெல்லை கூறிய அப்பாயிரச் செய்யுள் பனம்பாரனர் செய்ததன்றெனவும், இதற்குக் களவியல் பாயிரவுரையில் இப்பாயிரந் தொல்காப்பியனார் செய்த தென்றும் பிறவுரையாசிரியர் அது பனம்பாரனர் இயற்றிய தென்றுந் தம்முள் மாறுகொண்டுரைத்தலே கரியாமெனவுங் கூறினார்கள். கடல் கொள்ளப்பட்ட குமரிநாட்டின் வடவெல்லை பஃறுளியாறெனவும் தெற்கெல்லை குமரியா றெனவும் இதனிடைக்கிடந்த நாடு எழுநூற்றுக்காவதப் பரப்புளதெனவுந் தொல்லாசிரியர் இனிதெடுத்தோதுதலால் அப்பெரிய தமிழ்நாட்டிற்குக் குமரியாறு தெற்கெல்லை கூறியது பொருத்தமிகவுடைய தேயாம். குமரிநாடு கடல் கொண்ட பிற்காலத்தே செய்யப்பட்ட பாயிரமாயின் வடக்கண் வேங்கடம் ஒன்றுமே எல்லைகூறி மேல் கீழ்த்திக்கு கட்குக் கடலெல்லை கூறியவாறு போலத் தென்றிக்குக்கும் கடலெல்லை கொண்டு வாளாது ஒழிவார். கடல்கொள்ளப் பட்டபின் நூலெழுதிய சிறுகாக்கை பாடினியாரும் இவ்வாறே வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத், தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும், வரைமருள் புணரியொடு பொருது கிடந்த எனப் பாயிரமுரைத்தார். அவ்வாறன்றிக் கடல் கொள்ளப் படாமுன் பரந்துகிடந்த செந்தமிழ் நிலம் வரையறுக்கின்றா ராதலின் குமரியாற்றைத் தெற்கெல்லையாக வைத்துக் கூறினார். அதனை இப்போதுள்ள குமரிமுனை யென மருண்டு பாயிரச் செய்யுள் பனம்பாரனர் செய்த தன்றென் றுரைத்த நண்பரவர்களுரை பொருத்தமின்றாம். அற்றேல், குமரி நாடு கடல்கொள்ளப்பட்டபின் பலவாயிர ஆண்டு கழித்தெழுந்த நன்னூற்பாயிரச் செய்யுளிற் குணகடல் குமரிகுடகம் வேங்கடம் என நிலைவெல்லை கூறியதென்னை யெனின்; செந்தமிழ்த் தனிமொழிப்புறஞ் சிறிது மலையாளங் கன்னடம் துளுவம் முதலிய மொழி களாகத் திரிந்து வேறுபடத் தென்றமிழ்த் தனியகஞ் சிறிது குறுகுங்காலத்தே அந்நூலெழுதப் பட்டதாகலின் அதற்கேற்பச் செந்தமிழ் மணங்கமழாநிற்கு நிலவெல்லை வரையறுத்தற் பொருட்டு அங்ஙனங் குறுக்கி நான்கெல்லை கூறினாராகலின் அஃது ஈண்டைக் கேலாதென்றொழிக. தொல்காப்பியஞ் சிறுகாக்கை பாடினியம் எழுதப்பட்ட காலத்தே செந்தமிழ் மொழிப்பெருமை மேல்கீழ் பாலெல்லாம் ஒருங்கு கவர்ந்து விரிந்ததாகலின், அவர் நூற்பாயிரங்கட்குக் கடலெல்லை கூறினாரென்க. இனித் தொல்காப்பியத்தின்கட் காணப்பட்ட அப் பனம்பாரனார் பாயிரச் செய்யுளையே தொல்காப்பியனார் செய்ததெனக் களவியலிற் காணப்பட்டது அச்சியற்றினேரால் நிகழ்ந்த பிழைபாடாகலின் அஃதீண்டைக்குப் பயன்படாமையறிக. அல்லதூஉம் அது பனம்பாரனார் செய்ததன்றாயின் உரையாசிரியன்மாரெல்லாரும் அதனை ஏன் அவ்வாறு கூறினார்? என்று உய்த்துணரவல்லார்க்கு அப்பாயிரச் செய்யுள் செய்தார் பனம்பாரனாரென்பது தேற்றமாம். இனிப் பஃறுளியாற்றைக் கிளந்தெடுத்துக் கூறிய நெட்டிமையார் செய்யுளிற் பார்ப்பனமாக்கள் விதக்கப்படுதலால் அவர்காலத்திற் பார்ப்பன வகுப்பிருந்த தென்பது பெற்றாம். நண்பர் சவரிராயரவர்களும், அந்தணரெனத் தமிழ் நூலுட் கூறப்படுவோர் ஆரியப்பார்ப்பன ரல்லர், அவர் தமிழ்நாட் டறவோரே என்று கூறுதலால், அவர்கட்கும் இதுவே கருத்தாம் போலும். இங்ஙன மாகலின் ஆசிரியர் தொல் காப்பியனார் கூறிய அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னுஞ் சூத்திரத்தை இடைச்செருகல் என்றுரைப்பதற்கு ஒருப்படுவார் மற்றியார்? இன்னுந் தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தே செந்தமிழ்நாட்டின்கண் வழங்கிய செந்தமிழ் மறைகள் நான்காமென்பதும், அந்நான்மறைவல்ல துறவோராலறிந்து வழிபடப்பட்ட கடவுள் சிவபெரு மானேயாமென்பதும், அத்தெய்வச் செந்தமிழ் மொழி விரிந்த பரந்த நிலவெல்லை பனம்பாரனர் கூறியவாறே நான்கா மென்பதும் விளங்க அந்நெட்டிமையாரென்னும் நல்லிசைப் புலவரோ டொருங்கிருந்த காரிகிழார் நான் மறை முனிவ ரேந்துகை யெதிரே எனவும், முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே எனவும், வடா அது பனிபடுநெடுவரை வடக்குந், தெனாஅ துருகெழு குமரியின் றெற்குங், குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்குங், குடாஅது தொன்று முதிர்பௌவத்தின் குடக்கும் எனவுங் கூறுதலானுங் கண்டுகொள்க. எனவே, நாற்குல வகுப்பு, நாலெல்லை வகுப்பு, நான்மறை வகுப்பு முதலாயினாவெல்லாஞ் செந்தமிழ் நிலத்தே பண்டைக் காலத்துத் தமிழ் மக்களாற் செய்யப் பட்டுப் பின்போந்து கலப்புற்ற ஆரியராற்றழுவி வேறுவேறாக அவர்மொழி யினுஞ் செய்து கொள்ளப்பட்டன வென்றறிக. இது நிற்க. இனி, ஆரியநால்வகைக்குலப் பாகுபாட்டிற்குந் தமிழியற் குலவகுப்புக்குந் தம்முள் வேறுபாடு பெரிதுண்டாம். ஆரியர் பிறப்பு வகையாற் றமக்கு விழுப்பந் தோற்றுவித்தற் பொருட்டு அங்ஙனம் பாகுபாடியற்றினார். தமிழர் ஒழுக்க வகையான் உலகவியற்கைகளுக்கும் அவன் மனைவிக்கும் பிறப்பவன்றான் பிராமணனென்பர். தமிழர் நான்மறைநெறி வழாதொழுக்க நிகழ்த்தி யுலகிற் குறுதி பயப்பவன்றான் பார்ப்பானென்பர். ஆரியர் இவ்வாறே ஏனை இரண்டாம் மூன்றாம் நான்காங் குலத்திற்குங் கூறாநிற்பர். தமிழர் குறும்புகடிந்து போரியற்றி அரண்காவலமைத்துத் தம் கீழ்வாழ்வார்க்கு ஒருபாற் கோடாது ஒப்பவிருந்து நடுவியற்றி யுலகுபுரந்தருளும் அரசனும் அவ்வரசற் குறுதுணையாயிருந்து போரியற்றுஞ் சுற்றத்தாரும் மறவர் அல்லது சத்திரியராமெனவும், ஆநிரை காத்த லுழுதுவித்திடுதல் அரும்பொருள் மாறுதன் முதலிய வொழுக்கம் நிகழ்த்தி நாடுவளம்படுப்பார் வேளாளர் அல்லது வைசியராமெனவும், இம்மூவர்க்கும் உறுதுணையா யுடனிருந்து அவர்க்கு வேண்டுவ வறிந்துறுதி சூழ்ந்து தொழும்பியற்றுவோர் ஏனையோர் அல்லது சூத்திர ரெனவுஞ் சொல்லா நிற்பர். இந்நால்வகுப்பாருந் தத்தங் கரும வகையால் வேறுபடுவாராயினும் ஒருமித்திருந்து உறுவ தாராய்தற்கண் ஒருவரேயாமென்னுங் கடப்பாடுடையர்; ஆரிய வகுப்பாரைப்போல் வேறுவே றிருந்து ஒருமை போழ்ந்து பேரிடருறூஉம் நீரரல்லர் இன்னுந் தென்றமிழ் நாட்டுத் திருக்கோயில்களிற் சிவவழிபாடியற்றும் ஆதிசைவ வகுப்பாரே தென்றமிழ் நாட்டுப் பார்ப்பாராவர். இவரின்ன ராதல் பற்றியே ஆரிய சுமார்த்தப் பார்ப்பனர் இவரை வெறுக்கின்றனர். இவரவரை வெறுப்பாராயினும் ஆதி சைவத் தமிழ்ப்பார்ப்பார்க்குரிய மேம்பாடு ஒரு சிறிதுங் குறைவுபாடெய்துகின்றிலது. ஆரிய சுமார்த்தப் பார்ப்பனர் தென்றமிழ் நாட்டிற்குரிய ரன்றாதல் பற்றியும், அவர் சிவவழிபாடியற்று தற்குரிய அறிவுமுதிர்ச்சி இல்லாமை பற்றியுமன்றே அவரெல்லாந் தமிழச் சிவன்கோயில்களிற் பூசனை இயற்றுதற்கு இடம்பெறாராயினதூஉம், அவரைச் சிவாகமங்க ளெல்லாம் அதிக்ஷிதேணவிப்ரேண என்றொதுக்கியதூ உமென்க. ஆதிசைவத் தமிழப் பார்ப்பன மக்களைப் போலவே விழுமிய வொழுக்கமுடைய ஏனை நன்மக்களுஞ் சிவவழிபாடியற்றுதற் குரிமையுடையராகலான், வேளாள வகுப்பிற் சிறந்தோர் சிலர் ஆசிரியத் தலைமை பூண்டு போதருகின்றார். இங்ஙனம் ஒருவகுப்பார்க்குரிய சிறந்த கருமங்களை வேறோர் வகுப்பார் செய்தற்கிடம் பெறுதல் ஆரியருளின்றாம். ஆகவே, செந்தமிழ்த்தனிமுதன் மக்கள் வகுத்து நிறுத்திய குலநெறி ஆரியமக்கள் வகுத்து நிறுத்திய போற் கொடியதூஉந் தன்னலம் பாராட்டு வதூஉம் அன்றாமென்பது கடைப்பிடிக்க. இனி, ஆரியமக்கட்குரிய பண்டைப் பனுவலான இருக்குவதே இறுதிப் புருடசூத்த மந்திரத்திலேயே அந் நால்வகை வருணப்பாகுபாடு காணக்கிடத்தலானும் மேலே நீர் கூறிய வாதங்களெல்லாம் வலியற்றதாய் விடும் போலு மெனின்; அறியாது கடாயினாய், அப் புருடசூத்தமானது மனிதன் ஆயிரந்தலைகளும் ஆயிரம் விழிகளும் ஆயிரங்கால் களும் உடையனாயிருக்கின்றான். இந்நிலவுலக முழுவதூஉந் தன் முழுநிறைவின்கண்ணே அடக்கி அதனைப் பத்தங்குலப் பரப்பானே மேற்கடந்து சென்றான். இருக்கின்றதும் இருப்பதுமாகிய எல்லாமும் அம்மனிதனேயாம். அவனே சாவைக் கடந்து அதற்கு இறைவனாய் அமர்ந்திருக்கின்றான், உணவினாற் பூரிக்கின்றான். அவன் பெருமை இத்தகையது, மனிதன் இதற்கு மேலானவன்; உளவாவனவெல்லாம் அவனிற் காற்கூறாவனவேயாம். அவனில் மற்றை முக்காற் கூறும் விண்ணில் அழிவின்றி யிருப்பதாம். மனிதன் முக்காற் கூற்றுடன் மேலெழுந்து சென்றான். அவனிற் காற்கூறு மறுபடியும் ஈண்டுப் படைக்கப்பட்டது. உண்பனவும் உண்ணாதனவுமாகிய எல்லாப் பொருள்களிலும் அவன் உள்நிறைந்து யாண்டும் விரிந்தான். விராச அவனிலிருந்து பிறப்பிக்கப்பட்டான், விராசிலிருந்து மனிதன் பிறப்பிக்கப் பட்டான். அங்ஙனம் பிறந்துழி அவன் முன்னும் பின்னுமுள்ள இவ்வுலகத்தின் மேற்சென்று விரிந்தான். தேவர்கள், மனிதனையே பலியாகக் கொண்டு வேள்வி செய்தபோது வசந்தகாலம் நெய்யாகவும் வேனிற்காலம் விறகாகவும் மழைகாலம் தேவருணவாகவும் இருந்தன. முதற்பிறந்த வனான இம்மனிதனை அவர்கள் நாணற்புல்லிற் கிடத்திப் பலியிட்டார்கள். தேவர்களும், சாதியர்களும், முனிவர்களும் அவனை வேட்பித்தனர். அந்தப் பெருவேள்வியிலிருந்து தயிரும் நெய்யுந் தொகுக்கப்பட்டன. அவையே விலங்குகளுந் தீயவிலங்குகளுமாயின. அந்தப் பெருவேள்வியிலிருந்து இருக்குச் சாமசுலோகங்களும், செய்யுட்களும், பசுவுந் தோன்றின. அதிலிருந்து குதிரைகளும் பற்களை இரண்டு வரிசையிலுமுடைய உயிர்வகைகளுந் தோன்றின. தேவர்கள் மனிதனைப் பிறந்த போது, எத்தனை கூறாக அவனை அறுத்தார்கள். அவன் வாய் யாது? தோள்கள் யாவை? எவை அவனுடைய தொடைகளும் அடிகளுமாகச் சொல்லப் படுகின்றன? எனின்; பார்ப்பனர் அவன் வாயாவர் *இராஜந்யர் அவன் தோள்களாக்கப் பட்டார், வைசியர் அவன் தொடைகளாவர், சூத்திரன் அவன் அடியிற் றோன்றினான். அவன் மனத்திலிருந்து திங்களுண் டாயிற்று, ஞாயிறு அவன் விழியிற் றோன்றிற்று, இந்திரனும் தீயும் அவன் வாயிற் பிறந்தனர், காற்று அவனுயிர்ப்பில் தோன்றினான், அவனுந்தியிலிருந்து காற்றும், அவன் நான்கு திசைகளுமாக இவ்வாறு உலகங்க ளுண்டாயின. வேள்வி செய்யுந் தேவர்கள் மனிதனைப் பலியிடும் பொருட்டுக் கட்டிய காலையில், எழுகொம்புகளும் மூவேழு சுல்லிவிறகும் உண்டு செய்யப் பட்டன. தேவர்கள் வேள்வியால் வேள்வி முடிப்பித்தார். இவைதாம் பழங்காலத்துக் கருமங்கள். இந்த வலிய கருமங்கள் துறக்கவுலகத்தைத் தருகின்றன, ஆண்டு முன்னைச் சாதியர்கள் தேவர்களாயிருக்கின்றார் என்று கூறுகின்றது. இம் மந்திரவுரையின் உண்மை தேற வல்லார்க்கு, இவ்விருக்குவேத மேற்பாகங்க ளெல்லாம் விடியற்காலம், தீ, சோமா முதலான உலகியற் புறப் பொருளுபாசனை நெறிவழாது செல்ல அதன் கீழ்ப் பாகமாய் நின்ற இவ்விறுதிப் புருடசூத்தமந்திர மாத்திரந் தத்துவ நுண்பொருள் நிறைந்தொழுகு முறைமையானே இம்மந்திர வுரை ஆரியர் செந்தமிழ் மக்களோ டொருங்கு கூடிய பிற்காலத்தே எழுதிச் சேர்த்துவைக்கப்பட்ட தென்னும் இயல்பினிது விளங்கா நிற்கும். இவ்வாறே இப்புருடசூத்த மந்திரமானது இருக்குவேதத்தின் மற்றைப் பாகங்களைப் போல் அத்தனை பழமையான தன்றென்றும், வடமொழி யுரை நடைச்சுவை பெரிது முதிர்ந்த பிற்காலத்தே எழுதி மொழித்திறம் விளங்கச் சேர்த்து வைக்கப்பட்ட தொன் றென்றும் அறிஞர் மாக்மூலர், கோல்புரூக், வீபர் முதலாயினாருங் கருத்தொருப் பட்டுரையா நின்றார். இன்னும் இதனை விதந்துரைக்கப் புகுதுமாயின் எடுத்த பொருள் பெருகிடுமாதலால் இத்துணையினமைந்தாம்; இவ்வுரைப் பொருளிற் பண்டிதர் சவரிராயர்க்காதல் மற்றையோர்க் காதல் ஐயுறவு தோன்றுமாயின் அதனைப் பிறிதோர்கால் விரித்துரைத்துப் பொருள் நிறுத்துவாம். எனவே, இப்புருட சூத்த மந்திரவுரையின்கண் ஆரிய நால்வகை வருணப் பாகுபாடு காணக்கிடத்தல்பற்றி நாம் எடுத்துக்கொண்ட மேற்கோள் வலியிழத்தல் ஒருசிறிதுஞ் செல்லாதென்றெழிக. என்றிதுகாறும் உரைமொழி விரிந்த தருக்கத்தானே சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்க ளிடையிடையே நுழைந்தனவென்னும் எமதுரைபற்றிப் பண்டைத் தமிழ்ப் பனுவலினெல்லாங் கலவையுண்டாயிற்றென்பது எமக்கும் உடன்பாடாமென்னும் நண்பரவர்கள் உட்கோள் வழுக்கலுறுமாமென்பதூஉம், அச்சிந்தாமணிக் காப்பியந் தமிழ் முதுமக்கள் ஆரியக்காப்பிய விலக்கணம்பற்றி அவ்வழக்கு மிகத் தழீ இ நூலியற்றிய காலத்தே எழுதப் பட்டதொன்றாகலின் ஆண்டுக் கலவையுண்டாதற்குப் போதிய காலமுளதா மென்பதூஉம், ஆரிய மக்கள் வழக்குமிக விரவப்பெறாத பண்டைக்காலத்தே தமிழியன் மாட்சி வகுத்துப் பாகுபாடு நனிவிளங்க இயைபுகாட்டி அரும்பெறல் நிதியமாய் ஆசிரியர் தொல்காப்பியனார் ஈட்டி வைத்த தொல்காப்பிய முழுமுதனூலின்கட் கலவைகாண்டல் ஒருவாற்றாலும் பொருந்துமாறில்லை யென்பதூஉம், யாரோ சிலர் பொய்யாகக் கட்டி வழங்கியவோர் ஐதிகம் பற்றித் தொல்காப்பியம் முன்னிலையிற் பின்னிலை பெருக்க முற்றதென்னுமுரை திட்பமின்றி நுறுங்குமாமென்பதூஉம் இறையானராகப் பொருளுரைக்குப் பாயிரங் கண்ட முசிரியாசிரியர் நீலகண்டனார் கூறுங் களவியல் வரலாறு ஒரோவிடங்களில் வரலாற்றுரையியல் பிறழக்காண்டலின் அவ்வரலாற்றினை ஒரேதுவாகக் கொண்டு பண்டைக் காலத்தே தொல்காப்பியம் வழக்கமின்றி வீழ்ந்ததெனவும் அதனைக் கடைச்சங்கத்தார் திரும்பவெழுப்பிப் பெருக்கி வழங்கப் படுத்தாரெனவுங் கூறுந் துணிபுரை முன்பின் மாறுகோள் பெரிதுற்றுப் போலியாயழிந்துபடுமென்பதூஉம் தொல்காப்பிய மெழுதப்பட்ட காலத்தே ஆரியர் தென்றமிழ் மக்களோடு சிறிது பழகப்புகுந்தாராகலின் அந்நூலுள் வடமொழிக் குறியீடுகள் சிலவும் வருவதறியாது மற்றவை காணக்கிடத்தல் பற்றியே தொல்காப்பியங் கலவை கொண்டதா மெனு முரை வாய்ப்புடைய தாமாறில்லை யென்பதூஉம், நால்வகைக்குல வகுப்புக் கடல்கொள்ளப்படு முன்னெழுந்த பழந்தமிழ்ப் பாட்டுகளிற் காணக்கிடத்தலானும் வடமொழிப் பண்டைப்பனுவல்களில் அங்ஙனங் காணப்படாமை யானும் அவ்வகுப்புத் தமிழ் நாட்டின்கண் உலகிய லொழுகலாறுபற்றிச் செய்துகொள்ளப் பட்டதாமென்பதூஉம் இங்ஙனமாகலின் தொல்காப்பிய நூலிற் காணப்படுங் குலவகுப்புச் சூத்திரங்கள் செருகப்பட்டனவாதல் செல்லா தென்பதூஉம் இருக்கு வேதப் புருடசூத்தமந்திர வுரை பிற்காலத்தே செய்யப்பட்ட தொன்றாகலின் ஆண்டதுபற்றிக் குல வகுப்புத் தமிழ்நாட்டி லுண்டாயிற்றென்னுமுரை பழுதா மாறில்லையென்பதூஉம் இனிது விளக்கித் தொல்காப்பிய முழுமுதனூலின்கட் கலவையுண்டென்னும் நம்முடன் பிறந்தார் சவரிராய பிள்ளையவர்கள் கருத்துப் பொருத்த மிலதென்று காட்டிக் களைந்து தொல்காப்பியம் முழு முதனூலா மென்பது நிறுவினாம். இத் தருக்கவுரையிலே பிழைபாடுளதாயின் நண்பர்-சவரிராயாராதல் ஏனைப் புலவர் பெருமக்களாதல் அதனையெடுத்து வலியுறுத்தி எமக்கு அறிவுகொளுத்துவாராக; இதன்கட் டாமுங் கருத்தொருப்பா டுறுவாராயின் அவ்வொருப்பாடு தெரித்து எம்மை ஊக்கமுறுத்தி யுவப்பிப்பாராக வென்னும் வேண்டு கோளுடையோம். உலகம் உண்மைப்பொருள் தேற்றக் கடவதாக. அடிக்குறிப்பு 1. இங்கு ராஜ்ந்யர் என்று சொல்லப்பட்ட வகுப்பார்தாம் தமிழரன்றுணர்க. 5. இளந்தைக் கால வரலாறு* மறைமலையடிள் சிற்றூருக்குச் சென்ற வரையில் அவரது வரலாறு: 1876 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 15 ஆம் நாளில் மறைமலையடிகள் நாகபட்டினத்திற் பிறந்தவர். இவர் தம் தந்தையார் சோழியச் சைவவேளாளகுலத் தலைவராய்த் தோன்றி, நாகபட்டினத்திற்கு இரண்டுகல் தொலைவிலுள்ள காடம்பாடியிற் பெருஞ் செல்வராய் வாழ்ந்த சொக்கநாத பிள்ளை என்பவரேயாம்; இவர்தம் அன்னையார் பெயர் சின்னம்மை. இவர் பிள்ளைமைப் பொழுதிலே நாகபட்டினத் தின்கண் இருந்த உவெலியன் மிஷன் கல்லூரியில் கல்வி பயிற்றப்பட்டு வருகையில் ஆங்கிலந் தமிழ் என்னும் இரு மொழிகளையும் விரும்பிக் கற்று அவற்றில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரித் தலைமையாசிரியராற் பல பரிசுகளும் அளிக்கப் பெற்று வந்தார். இவர்க்குப் பதினாறாம் ஆண்டு நடக்கையில் தமிழ்மொழி கற்கும் அவா இவரது உள்ளத்தில் அளவு கடந்து எழ, அவ்வவாவினை நிரப்புதற் பொருட்டு, அக்காலையில் நாகபட்டினத்திற் புத்தகக் கடை வைத்துக் கொண்டிருந்த இயற்றமிழாசிரியர் திரு.வெ. நாராயணசாமிப் பிள்ளையவர் களையடைந்து, அவர்கள் பாற் செந் தமிழிலக்கண இலக்கியங்களைச் செவ்வனே ஓதிவரலானார். நாளேற நாளேறத் தமிழ் மொழிச்சுவை இவரது உள்ளத்தைப் பெரிதுங் கவர்ந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் மிக உயர்ந்த நூல்களைக் கற்பதில் இவர்க்கு விழைவு மிகுந்து வந்தமையிற், கல்லூரியிற் கற்பிக்கப் பட்டுவந்த சிறுநூற் பயிற்சி இவரது கருத்துக்கு இசையாதாயிற்று. பதினாறாம் ஆண்டு நடக்கையில், தம்மோடு, உடன் பயிலும் மாணக்கர்க்குத் தமிழறிவுந் தமது சமயவுணர்வும், பெருகல்வேண்டி இந்து மதாபிமான சங்கம் எனப் பெயரிய ஒரு கழகம் புதிதாக நாட்டி அதனை மிகுந்த ஊக்கத்துடன் நடத்தி வந்தார். பதினேழாம் ஆண்டிற் சவுந்தரவல்லி எனப் பெயரிய நங்கையார் இவர்க்கு மனைவியாராக மணம் பொருத்தப் பட்டார். பதினெட்டாம் ஆண்டிற் சிந்தாமணி எனப் பெயரிய ஒருபெண் மகவும் இவர்க்குப் பிறந்தது. இவர் சிறுபிள்ளையாயிருந்த காலத்திலேயே தந்தையை இழந்தமையின், தம் அன்னையின் பாதுகாவலிலேயே இருந்து கல்வி பயின்றனர். கல்லூரியின் ஆசிரியர்களும் இவரோடு உடன்பயின்ற மாணக்கர்களும் இவர்தங் கல்வியறிவின் திறத்தையுங் கூரிய அறிவையுங் கண்டு மிக வியந்து இவர்பால் மிக்க அன்பு பாராட்டினர். அஞ்ஞான்று காரைக்காலில் நடைபெற்ற திராவிட மந்திரி என்னுங் கிழமைத் தாளுக்கு இவர் முதன்முதற் செந்தமிழ்க் கட்டுரைகள் எழுதி வந்தனர். அதன்பின் நாகபட்டினத்திலேயே நடைபெற்ற நாகை நீலலோ சனி என்னுங் கிழமைத்தாளுக்குப் பலப்பல கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் தமக்கு முதன் மகள் பிறந்தபின், குடும்பச் சுமையைத் தம் அன்னையார் மேல் வைத்தல் இனி ஆகாதெனக் கண்டு, 1894 ஆம் ஆங்கிலக் கல்லூரிப் பயிற்சியைவிட்டு விலகி, ஓர் அலுவலிற் புகுதற்கு முயன்றார். அக்காலத்தில் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் அறிவு நூலாசிரியராயிருந்த திருச் சுந்தரம்பிள்ளையவர்கள் எம். ஏ. இயற்றிய மனோன்மணீயம் என்னும் நாடகக் காப்பியத்தைத் தாம் பார்க்க நேர்ந்ததிலிருந்து, தம் இயற்றமி ழாசிரியராகிய திரு. நாராணசாமிப் பிள்ளையவர்களிடஞ் சுந்தரம் பிள்ளையவர்கள் இளந்தைப் பொழுதில் தமிழ்க் கல்வி பயின்றவர்களென்பது தெரிந்து, அவர் கட்குத் தம்மைப் பற்றியுந் தம் ஆசிரியரைப் பற்றியும் அகவற்பாவில் ஒரு கடிதம் வரைந்து விடுத்தார். அதனைக் கண்டு இறும்பூதுற்ற சுந்தரம் பிள்ளையவர்கள் ஆசிரியர் நாராயணசாமிப் பிள்ளையவர் களையும் மறைமலையடிகளையுந் திருவனந்தபுரத்திற்குத் தம்பால் வரும் படி விரும்பி அழைத்து ஒரு கடிதம் போக்கினர். அவ்வழைப்பினுக்கு மிக மனங்களித்துத் தம் ஆசிரியரும் இருவருமாக 1895 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் கடைக் கிழமையில் திருவனந்தபுரத்திற்குச் சென்று சுந்தரம் பிள்ளையவர்களைக் கண்டார். இவர் அகவற் பாவில் எழுதிய கடிதத்தைக் கண்டு இவரை ஆண்டில் முதியவராகக் கருதியிருந்த சுந்தரம் பிள்ளையவர்கள இவர் மிக இளைஞரா யிருத்தலை நேரிற் கண்டவளவானே பெரிதும் வியப்புற்றுத் தாம் முன் எண்ணியதனை மொழிந்தார். ஒரு கிழமை வரையில் இவர் பிள்ளையவர்களோடு அளவளாவி யிருக்கையில் இவர் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை முதலான பழைய சங்கத் தமிழ் இலக்கண இலக்கியங்களிலுஞ் சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் வல்லுநராயிருத்தலை ஆராய்ந்து பார்த்து இத்துணைச் சிறு பொழுதிலே இத்துணையுயர்ந்த நூல்களை இவர் இவ்வாறு பயின்று தெளிந்தமை அரிதரிது எனப்புகன்று அங்ஙனந் தாம் பாராட்டியதற்கு அடையாள மாக ஒரு நற்சான்று இதழும் எழுதித் தந்தனர். திரும்பவும் 1896 ஆம் ஆண்டில் சுந்தரம் பிள்ளை யவர்கள் இவரைத் திருவனந்தபுரத்திற்கு அழைத்து அப்போது மார்த்தாண்டன் தம்பி என்பவரால் வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆங்கிலக் கல்விக் கழகத்தில் இவரைத் தமிழாசிரியராக அமர்த்தி வைத்தனர். திருவனந்தபுர நகரம் அக்காலத்தில் உடம்பின் நலம் பேணுதற்கேற்ற ஒழுங்குகள் அமையப்பெறா திருந்தமையால் இரண்டரைத் திங்கள் மட்டுமே இவர் அங்கிருந்து, பின்னர் அவ்வலுவலைவிட்டு நாகபட்டினந் திரும்பினர். இவர் திருவனந்தபுரத்தில் இருந்த இரண்டரைத் திங்களும், அந்நகரத்துச் சைவர்கள் வைத்து நடத்திய சைவசித்தாந்த சபைகளிரண்டிற் சைவ சித்தாந்த உண்மைகளைப் பற்றிய விரிவுரைகளை இடையிடையே நிகழ்த்தி வந்தனர். இவர் செய்த அவ்விரிவுரைகள் அந்நகரத் திருந்த சைவ நன்மக்களாற் பெரிதுங் கொண்டாடப்பட்டன. அப்போது திருவனந்தபுரம் அரசர்கல்லூரியில் நாடகத் தமிழைப் பற்றி ஒரு விரிவுரை செய்யும்படி சுந்தரம் பிள்ளையவர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கிசைந்து 1896 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 12 ஆம் நாள் இவர் நாடகத்தமிழ் என்பதனைப் பொருளாகக் கொண்டு, மிக ஆராய்ந்து கண்டதோர் அரிய விரிவுரையினை நிகழ்த்தினர். அவ்விரிவுரை நிகழ்ந்த அவையில் சுந்தரம் பிள்ளையவர்களே அவைத் தலைவராயிருந்தது, இவர் செய்த விரிவுரையின் அருமையை மிகவும் வியந்து பேசினர். அவ்அவையிற் குழுமியிருந்த பெருங்கூட்டத்தவர் எல்லாரும் அதனைப் பெரிதும் பாராட்டினர். அப்போது இவர்க்கு ஆண்டு இருபது. அவ்வாண்டின் கடைசியில் இவர் நாகைக்குத் திரும்பினர். இதற்குமுன் இவர் நாகையிற் கல்வி பயின்று வருங் காலத்தில், நாகை வெளிப்பாளையஞ் சைவசித்தாந்த சபையார், சைவப் பெருந்திரு சோமசுந்தர நாயகரவர்களைச் சென்னையினின்றும் இடையிடையே வருவித்து அவராற் சித்தாந்த அரும்பொருள் விரிவுரைகள் நடப்பித்து வந்தனர். நாயகரவர்கள் நிகழ்த்திய அவ்விரிவுரைகள் இளைஞரா யிருந்த மறைமலையடிகள் ஆவலோடுஞ் சென்று கேட்டு அப்பொருள்கள் முழுமையுங் கேட்டபடியே மனத்தமைத்துச் சைவசித்தாந்த வுண்மை தெளிந்து, அதற்குமுன் தாம் பயின்றுவந்த மாயாவாத வேதாந்தம் பொருந்தாமை கண்டு, அதனை அறவே கைவிட்டுச், சைவசித்தாந்த வுண்மைக்கே உழைக்குங் கடப்பாடு மேற்கொண்டு அதன்கண் விருப்பம் மீதூரப் பெற்றார். அவ்வாண்டில் நாகையில் நடைபெற்ற ஸஜ்ஜனப் பத்திரிகா என்னுங் கிழமைத்தாள் ஒன்றில் மாயாவாதி ஒருவர், திரு. நாயகரவர்கள் எழுதிய சிலவற்றை மறுத்து எழுதி வந்தார். அம் மறுப்பினைக்கண்ட மறைமலை யடிகள், நாயகரவர்கள் எழுதியவைகளே பொருத்தமுடை யனவாதலும், அம் மாயாவாதி எழுதியவை பொருத்த மிலவாதலும் நன்கெடுத்துக்காட்டி நாகை நீலலோ சனியில் தொடர்பாகப் பல கட்டுரைகள் வரைந்து, முருகவேள் என்று கைச்சாத்திட்டு வெளியிட்டார். அக்கட்டுரைகளை நோக்கினாரெல்லாம் அவை தம்மை வரைந்த இவர்தம் ஆராய்ச்சி யறிவின் திறத்தையுங் கல்வியறிவின் ஆழத்தையுங் கட்டுரை எழுதும் ஆற்றலையும் மிகுதியும் வியந்து கொண்டாடினர். இக்கட்டுரைகளைச் சென்னையிலிருந்த நாயகரவர்கள் பார்க்க நேர்ந்த போது, அவற்றின் திறத்தை வியந்து அவற்றை வரைந்த முருகவேள் என்பார் யார்? என்று நாகை வெளிப்பாளையம் சைவசித்தாந்த சபையார்க்கு ஒருகடிதம் எழுதிக் கேட்டனர். அச்சபையாருட் பெருமுயற்சி யுடையவரும், மறைமலையடிகட்கு இளமைதொட்டுச் சிறந்த நண்பருமான திரு. மதுரைநாயகம் பிள்ளை யென்பவர் அடிகளின் வரலாறுகளை நாயகரவர்கட்கு உடனே எழுதித் தெரிவித்தனர். நாயகரவர்களும் அடிகளைப் பார்க்கும் விருப்பம்மிக்குத், தாம் அடுத்து நாகைக்கு வருகையில், இவரைத் தம்பால் அழைத்துவரும்படி அவர்க்கு அறிவித்தார். அறிவித்த சில திங்களிலெல்லாம் நாயகரவர்கள் வெளிப் பாளையம் வர இவரும் அவரைச் சென்று கண்டார். நாயக ரவர்கள் இவரை யாராய்ந்து பார்த்து இவரைத் தம் புதல்வர் போற் கருதி அன்பு பாராட்டி வரலானர். நாயகரவர்கள் சென்னைக்குத் திரும்புங் காலையில்; உன்னை விரைவிற் சென்னைக்கு வருவிப்போம்; நீ அந்தப் பக்கங்களில் இருந் தாற்றான் நலமுண்டாம் என்று இவரை நோக்கிக் கூறிச் சென்றார்கள். அவர்கள் அங்கே சென்றபின்னர் இவர்க்கு அன்பான கடிதங்கள் எழுதிவர இவரும் அவரைத் தம் ஆசிரியருந் தந்தையும்போல் எண்ணி அவர்பால் மிகுந்த அன்புபூண்டு கடிதங்கள் எழுதி வரலானர். இந்நாட்களின் இடையில், நாயகரவர்கள் இவர்க்குள்ள சைவசித்தாந்த நுட்பறிவைப் பயன்படுத்தக் கருதிச், சீகாழிச் சிற்றம்பல நாடிகள் அருளிச்செய்த துகளறுபோதம் என்னும் நூலை இவர்பால் விடுத்து, அதற்கோர் உரை யெழுதுமாறு தூண்டினர். அதற்கிசைந்து இவர் அந்நூலின் நூறு செய்யுட்களுக்கும் விழுமியவோர் அருந்தமிழுரை வரைந்து அதனை நாயகரவர்கள்பாற் போக்க, அவர்கள் அவ்வுரையின் நுட்பத்தையுஞ், சித்தாந்தத் தெளிவையும், சொற்சுவை பொருட்சுவைகளையும் உற்றுநோக்கி, இவ்வுரை சிவஞான முனிவர் உரையோடு ஒப்பது என்று வியந்து பேசி, அதனைத் தமது செலவிலேயே அச்சிட்டு வெளிப்படுத்தி னார்கள். இவர் அக்காலத்தே மாயாவாத மறுப்பாக நாகை நீலலோசனி யில் எழுதின கட்டுரைகளிற் சில, நாயகரவர்கள் செலவில் இவர் 1899 ஆம் ஆண்டு வெளியிட்ட சித்தாந்த ஞானபோதம் முதற்புத்தகத்தின் 120 ஆம் பக்கம் முதல் அதன் முடிவுவரையில் அச்சிடப்பட்டிருக் கின்றன. இன்னும் அக்காலத்தே சென்னையிலிருந்த மாயாவாதி ஒருவர், தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறளின் முதற் செய்யுளை மாயாவாதக் கொள்கை யின்பாற்படுத்தி முதற்குறள் வாதம் எனப் பெயரிய ஒரு புத்தகம் எழுதி விடுப்ப, இவர் அதற்கு மறுப்பாக முதற்குறள்வாத நிராகரணம் எனப் பெயர் அமைத்த நூலொன்றை வெளியிட்டார். இவ்வளவும் இவர் நாகபட்டினத்திலிருந்த ஞான்று எழுதியவைகளாகும். அப்போதிவர்க்கு ஆண்டு இருபதரை. இனி நாயகரவர்கள் இவரை நாகையிற் கண்டு அளவளாவிச் சென்றதுமுதல் இவரைச் சென்னைக்கு வருவிப்பதிற் கருத்து மிகலானர். அஞ்ஞான்றுதான், நாயகரவர்கள்பாற் சைவசித்தாந்தமுணர்ந்த திரு. நல்ல சாமிப்பிள்ளை என்பவர் சிவஞானபோதம் என்னும் ஒப்புயர்வற்ற விழுமிய சைவசித்தாந்த முதல் நூலை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளிப்படுத்தினர். அதனை வெளிப்படுத்தியபின், சைவசித்தாந்த உண்மைகளை நன்கு பரவச்செய்தற் பொருட்டு அவர் சித்தாந்த தீபிகை அல்லது உண்மை விளக்கம் எனப் பெயர்வாய்ந்த ஒரு திங்கள் இதழைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தக் கருதி, அதனைத் தம்மோடு உடனிருந்து நடத்தத்தக்கார் எவர் என்று ஆராய்கையில், நாயகரவர்கள் இவரே அது செய்யவல்லார் என்று மறைமலையடிகளைச் சுட்டிக்காட்டி, இவரைத் தம்பாற் சென்னைக்கு வருவித்தனர். அப்போது நல்லசாமிப் பிள்ளை யென்பார் சிற்றூரில் வழக்குத் தீர்க்கும் மன்றத்தில் நடுவராய் அலுவல் பார்த்து வந்தனர். அவர் நாயகரவர்கள் கட்டளைப்படி உடனே சென்னைக்கு வந்து இவருடைய கல்வியறிவினையும் இயற்கையறிவினையுந் தாமும் ஆராய்ந்து பார்த்து வியந்து, தம்மோடு இவரைச் சிற்றூர்க்கு அழைத்துச் சென்றனர். இவரது உதவிகொண்டு, சித்தாந்த தீபிகை எனப் பெயரிய திங்கள் இதழ் தமிழ்ப் பதிப்பின் முதல்இலக்கம் 1897 ஆம் ஆண்டு சூன் திங்கள் 21 ஆம் நாள் வெளிப்படுத்தப்பட்டது. அதன் முதல் ஐந்து இலக்கங்களுக்கே இவர் ஆசிரியராயிருந்து எழுதிவந்தனர். திருமந்திரத் திலுள்ள அன்புடைமை, இரந்தார்க்கீதல், அறஞ்செயான்றிதம் என்னும் மூன்றியல் முப்பது பாட்டு களுக்கும்; சிவஞான சித்தியார் அளவையில் காப்புச் செய்யுளோடு பதினான்கு செய்யுட்களுக்கும்; தாயுமான சுவாமிகள் பாடல் பரிபூரணானந்த போதம் பத்துச் செய்யுட்களுக்கும், பொருள்வணக்கம் எட்டுச் செய்யுட் களுக்கும் எழுதிய விரிவுரைகளும், குறிஞ்சிப் பாட்டைப் பற்றி எழுதிய உரையும், அன்பு, அருள் என்பவற்றைப் பொருளாகக் கொண்ட கட்டுரைகளும் ஆங்கிலத்தினின்று மொழி பெயர்த்து வரைந்த நான்கு செய்யுட்களும் மூன்றுகனவு என்பதும் வேறு சில குறிப்புகளும் அப்போது இவரால் இயற்றப் பட்டு, அச் சித்தாந்ததீபிகை முதல் மூன்றிலக் கங்களில் வெளிப்படுத்தப் பட்டன வாகும். மேற்குறித்த நூல்களுக்கு இவரெழுதிய விரிவுரைகளும், மற்றைக் கட்டுரைகளும், மறைமலையடிகள் புத்திளமைக் காலத்திலேயே எய்திய அரும் பெறற் கல்விப் புலமை யினையும் ஆழ்ந்த அறிவின் றிறத்தையும் விளங்கக் காட்டும் பேரடையாளங்களாய் நிற்கின்றன. இவ்வளவும் இவர் சிற்றூர்க்குச் சென்றவரை நிகழ்ந்த வரலாறாம். இத்துணையே இந்நூலின் உரைக்குறிப்புகளுக்கு வேண்டுவ தாகையால், மேல்நிகழ்ந்த இவரது வரலாற்றினை ஈண்டுக் கூறாது விடுகின்றாம். இவர் சிற்றூரிற் சென்றிருந்தபோது இவர்க்கு ஆண்டு இருபது நிரம்பி ஒன்பது திங்கள் மேல் ஆயின. ஆகையாற் கட்டுரையில் இருபதாண் டென்றது ஒரு குத்து மதிப்பேயாம். 6. தமிழ்த் திருவாளர் மணி. திருநாவுக்கரசு முதலியார் நமது பொதுநிலைக் கழக முதன் மாணவரும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ் ஆசிரியருமான மணி. திருநாவுக்கரசு முதலியார் நிகழும் வைகாசி க0 ஆம் நாள் சனிக்கிழமை (23 - 5- 1931) முற்பகலில் திடீரென இம்மண்ணுலக வாழ்வு நீத்து விண்ணுலகு புகுந்த செய்தி, இத்தமிழ் நாட்டவர் எல்லாரையும் திடுக்கிடச் செய்து, அவர்க்குப் பெருந்துயரைத் தருவதொன்றாய் எங்கும் பரவலாயிற்று. முகிழ்த்து மணங் கமழ்ந்து அழகாய் மலரும் பருவத்தே ஓர் அரிய செங்கழுநீர்ப் பூ அதனருமை யறியான் ஒருவனாற் கிள்ளி யெறியப்பட்டு அழிந்தாற் போலவும் மறை நிலாக் காலத்தே திணிந்து பரந்த இருளின்கட் செல்லும் நெறி இதுவெனக் காட்டுதற்கு ஏற்றி வைத்த ஒரு பேரோளி விளக்குச் சடுதியில் வீசிய சூறைக்காற்றினால் அவிந்து மறைந்தாற் போலவும், நீண்ட நாள் வறுமையால் வருந்திய ஒருவன் புதையலாய்க் கண்டெடுத்த பொன் நிறைந்த குடம் ஒன்று வன்னெஞ்சக் கள்வ னொருவனாற் கவர்ந்து கொள்ளப்பட்டாற் போலவும், இத்தமிழ் நாட்டுக்கு ஒரு கல்வி மலராய், ஓர் அறிவு விளக்காய், ஓர் அருங்குணப் புதையலாய்த் தோன்றிய இவ்விளைஞர் தமது 13 ஆம் ஆண்டில் கதுமெனக் கூற்றாவனாற் கவரப்பட்டது ஒரு பெருங் கொடுமையன்றோ? இச் சென்னை மாநகரில் வட பகுதிக்கு மணி. திருநாவுக்கரசு முதலியாரும் இதன் தென்பகுதிக்குத் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரும் இருபெருங் கண்களாய்த் திகழா நின்றனர்; அவற்றுள் ஒரு கண்ணை இழந்து இப்போதிது துயர் கூர்ந்து நிற்கலாயிற்றே! ஞாயிறு திங்கள் என்னும் இரண்டில் ஒன்று அழிந்து மறைந்தால் திரும்பவும் அதனை யொப்ப தொன்றனைப் பெறுதல் இயலுமோ? அது போலவே, இவ்வருமைத் தமிழ் மகனாரை யொப்பார் ஓர் இளைஞரைத் திரும்பவும் யாம் பெறக் கிடைப்பது அரிதரிது! இவர் 1888 ஆம் ஆண்டு இவர்தம் பெற்றோர் ஆற்றிய தவத்தின் பயனாய்ச், செங்கற்பட்டு மாகாணத்தில் உள்ள மணிமங்கலம் என்னும் ஊரிற் பிறந்தார். இவருடன் பிறந்தாரில் இவர்தம் தம்பியரான திருஞானசம்பந்த முதலியாருங் கோடீசுவர முதலியாருங் கல்வியிலுந் தமிழ்மக்கள் முன்னேற்றத்திற்கு உழைப்பதிலுங் சிறந்து திகழ்கின்றார்கள். பின்னவரான கோடீசுவரர் பி. V., எல். டி. என்னும் ஆங்கிலப் பட்டமும் பெற்றுக் கோவிந்தப்ப நாயகர் கல்விச் சாலைக்குத் தலைமையாசிரியராகவும் அமர்ந் திருக்கின்றார். தமது பிள்ளைமைப் பருவத்தே திருநாவுக்கரசு தம் தந்தையாரால் தமிழ் நூல்கள் கற்பிக்கப்பட்டுவந்ததுடன், ஆங்கிலக் கல்விச் சாலைகளிலுஞ் சேர்ந்து ஆங்கிலமுங் கற்று வந்தார். அக்காலங்களில் இவருக்குக் கல்வி பயிற்றி வந்த ஆசிரியர்க ளெல்லாரும் இவரது நுட்ப அறிவின் திறனையுங் கல்வி கற்பதில் இவர்க்குள்ள வேட்கையினைங் கண்டு பெரிதும் வியந்து இவரைப் பாராட்டி வந்தார்கள் எனவும், தமிழ் ஆங்கிலப் பாடங்கள் எல்லாவற்றிலும் இவர் தம்முடன் பயின்ற உடன் மாணக்கர் எல்லாரையும்விடத் திறமை மிக்க வராயிருந்தன ரெனவுங் கேள்வியுறுகின்றோம். ஆங்கிலக் கல்லூரியில் தொடர்பாகக் கலை பயின்று பட்டம் பெறுதற்குத் தக்க செல்வ வளம் இன்றி, இவர் சிறு பருவத்திலேயே வறுமைப்பட்டமையாற் பத்தாவது வகுப்புவரையிற் பயின்று அதன்பின் கல்லூரிப் பயிற்சியை விட்டு நீங்கினார். அங்ஙனம் ஆங்கிலப் பயிற்சியைவிட நேர்ந்தாலும், தமிழ் நூல் கற்பதில் தமக்குள்ள அவா சிறிதும் நீங்காமல் வரவர வளர்ந்து வந்தமையால், இவர் சென்னையில் திரு. பூவை கலியாணசுந்தர அடிகளைச் சார்ந்து தமிழ் நூல்கள் கற்று வந்தார். பின்னர் இன்றைக்குச் சிறிதேறக்குறைய 23 ஆண்டு களுக்குமுன், எம்மாணவர் நாகை. கேபாலகிருட்டிணன் வாயிலாகத் திருநாவுக்கரசு எம்மை வந்து அடுத்தனர். அப்போது யாம் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தமையாற், சென்னையிலேயே குடியிருப்புக் கொண்டிருந்தேம். கோபாலகிருட்டிணனுந் தாமுமாகச் சில நாட்கள் இவர் எம்மை வந்து கண்டு வருகையில், தமிழிலுள்ள பழைய செந்தமிழ் நூல்களை எம்பால் முறையாகக் கற்க வேண்டுமென்னுந் தமது விருப்பத்தைக் கோபாலகிருட்டிணன் வாயிலாக எமக்கு மெல்லெனப் புலப்படுத்தினார். அது தெரிந்து யாம் ஆங்கிலங் கற்கின்ற மாணவர் தமிழ்நூல்களை மிகுதியுங் கற்பாராயின், தமிழ்நூற் சுவை ஆங்கில நூற்பயிற்சியைத் தடை செய்யும்; ஆதலால், ஆங்கிலத்தை மிகுதியாகவுந் தமிழைச் சிறிதாகவும் பயின்று, ஆங்கிலப் புலமையை முற்றுவித்துக் கொண்ட பின் தமிழை மிகக் கற்றலே வேண்டற்பாலது, என்றேம். அதன்மேல், இவர் ஆங்கிலம் நீளப் பயிலுதற்கு ஏற்ற வசதிகள் பயவாத தமது வறிய நிலைமையினையும், தமிழ் கற்றாவது அறிவு பெறவேண்டுமெனத் தமக்குள் அடங்காது எழும் அவாவினையும் எமக்குத் தெரிவித்தனர். இவர் அவைகளைத் தெரிவித்த முறையானது, எமது நெஞ்சத்தை இளகச் செய்து, அப்போதே இவர்பால் எமக்கு மிக்க அன்பினைத் தோற்றுவித்தது. இவர் வேண்டுகோளுக்கும் இசையலானேம். அது முதல் இவருங் கோபாலகிருட் டிணனும் ஒருங்கு சேர்ந்து, திருமுருகாற்றுப் படையும் நன்னூலும் துவங்கி அவையும் பிறவும் ஒழுங்காக எம்பாற் பாடங்கேட்டு வரலாயினர். இருவரும் நுண்ணுணர்வுடையராகக் காணப்படினும், கோபால கிருட்டிணனுக்கு எழுதும் ஆற்றலே மிகுதியா யுளதென்பதும், திருநாவுக்கரசுக்கு எழுதும் ஆற்றலொடு பேசும் ஆற்றலும் ஒப்ப உளதென்பதும், அப்போதே புலப்படலாயின. இவ்விருவர்க்கும் உள்ள அவ்வேற்றியல்பு, இவர்கள் வளர்ந்து பெரியரான பின்றான் வெள்ளிடைமலை போல விளங்கலாயிற்று. கோபாலகிருட்டிணன் பொருள் பொதிந்த இனிய செந்தமிழ்க் கட்டுரைகள் எழுதுவதிலும், புதிய கதைகள் அமைப்பதிலும் மிக்கு விளங்கினர். ஆனால், அவைக்களங்களிற் கேட்போர் கருத்தை இழுக்கத்தக்க சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் அவர்க்கு வாய்த்திலது. மற்றுத் திருநாவுக்கரசுக்கோ, கட்டிளமைக் காலத்தே கட்டுரைகள் கதைநூல்கள் எழுதுவதிற் கருத்துச் சென்றிலதாயினும், அவைகளிற் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் இவர்தம் அறிவும் ஆற்றலும் ஈடுபட்டிருந்தன. அக்காலத்திலேயே இவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டவர், இவரை மிகவும் கொண்டாடிப் பேசினர். ஒரு பொருளை எடுத்து விரித்துப் பேசுங்காற், கேட்பவரது கருத்து மகிழ்ந்து அதிற் பதியுமாறு நகைச்சுவை தோன்றப் பேசுந் திறம் இவர்க்கு வாய்ந்தாற்போற் பிறர்க்கு வாய்ப்பது அரிது. நகைச்சுவை மட்டுந் தோன்றப் பேசுவார் பலர் உளர்; ஆனால், அவரது உரையில் அறிந்து நினைவுகூரத் தக்க அரும்பொருள்கள் அமையா. மற்றுத் திருநாவுக்கரசு நிகழ்த்தும் உரையிலோ, நகைச்சுவையோடு பொருட் சுவையும் அமைந்திருந்தது. இன்னும், நகைச்சுவை யில்லாமல், உயர்ந்த துறைகளைப் பற்றிப் பேசுங்காலுங், கேட்பார்க்குச் சலிப்பும் உவர்ப்பும் தோன்றாமல் அவர்களது கருத்தை அவற்றின்பாற் பதியவைக்கும் முறையில் அவைதம்மை அழகு படுத்திப் பேசும் வல்லமையும் இவர்க்கிருந்தது. இங்ஙனம் எண்பொருள வாகச் செலச் சொல்லுஞ் சொல்வன்மை இவரது இளம் பருவம் முதல் இவர் இறந்துபடுங் காலம் வரையிற் குன்றாதிருந்தது. இங்ஙனஞ் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் வகையில் இவர் தமக்கிருந்த அறிவாற்றலைச் சிறுபருவ முதலே நூலெழுதுந் துறையில் செலுத்தியிருந்தனராயிற், சைவத் திற்குந் தமிழுக்கும் நிலையான பயனைத் தரத்தக்க பல அருந்தமிழ் நூல்களை இவர் இயற்றியிருக்கலாம். அதைப் பற்றி இவர்க்கு யாம் பலகால் வற்புறுத்திச் சொல்லியும், அதில் இவர்க்குக் கருத்துச் செல்லவில்லை. சிறு பருவத்தில் இவருக்கிருந்த வறுமையானது புராணப் பிரசங்கஞ் செய்யும்படி இவரைத் தூண்டியது. அதனால் வந்த வருவாய் இவரது இளம்பருவ வாழ்க்கைக்கு உதவி செய்தது. பின்னர் இவர் கல்விச் சாலைகளில் தமிழாசிரியராய் அமர்ந்து, தமது வாழ்க்கையை இயன்ற வரையில் வறுமையின்றிச் செலுத்திக்கொள்ள வாய்த்தது முதற்றான், கட்டுரைகள் எழுதும் பழக்கத்தையுங் கைக்கொள்ளலானர். தமது குடும்பச் சுமை முற்றும் இவரே தாங்க வேண்டி யிருந்தமையானும், அச்சுமையை எளிதாக்குதற் கேற்ற செல்வ வளம் இல்லாமையாலுங் குடும்ப வாழ்க்கையை இனிதாக்கு தற்கு வேண்டும் பொருள் வருவாயை நோக்கியே, இவர் திங்கள் இதழ் கிழமை இதழ் நாளிதழ்கட்குக் கட்டுரை யெழுதவும் பள்ளிக் கூடங்கட்குப் பாடப்புத்தங்கள் இயற்றவும் வேண்டிய வரானர். பொருள் வருவாயை நோக்கி எழுதப்படும் எதுவும் பெரும்பாலும் நிலையான பயனைத் தரத்தக்க தாகாது. இதனை நமது தமிழ்நாட்டுச் செல்வர்கள் உணர்ந்து பார்த்து, நூல் எழுதும் ஆற்றல் வாய்ந்த தமிழறிஞர்க்கு வறுமை தீரப் பொருளுதவி செய்திருப்பார் களாயின், இதுகாறும் எத்தனையோ அருந்தமிழ் நூல்கள் பேரறிஞர்களால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும். ஆனால், அச் செல்வர்கள் தமது பெரும்பொருளைப் பயனற்ற தீவினையைப் பெருக்கத் தக்க ஆரவாரமான வழிகளிற் பாழாக்குகின்றனரே யன்றித், தமிழ்மொழியை வளம்படுத்தி வளர்க்குந் துறைகளிற் சிறிதும் பயன்படுத்துகின்றிலர்! மேல் நாட்டவரிற் கற்றவர் தொகையும், அக் கற்றவரால் அரும்பெரும் பொருள் பொதிந்து இயற்றி வெளியிடப்படும் நூல்களின் தொகையும் நாடோறும் பதினாயிரக் கணக்காய்ப் பெருகி வருதலையும், தமிழ் நாட்டவரின் நன்கு கற்ற மிகச் சிலரின் தொகையும் வறுமையால் நாளுக்கு நாள் அருகி வருதலையும் ஒப்பிட்டு எண்ணிப் பார்க்குங்கால், இத் தமிழ் நாட்டவர் எந்த வகையில் முன்னேற்றம் அடையப் போகின்றார்கள் என்னுந் திகில் பெரிதாயிருக்கின்றது; நகைக்குந் துணிக்கும் வீணான வெளிமினுக்குகளுக்கும் வெற்றார வாரங்களுக்கும் இத்தமிழ் நாட்டிற் கணக்கின்றிச் செலவாகும் பொருளையுங், கல்விக்குங் கைத்தொழிலுக்கும் புதிய புதிய ஆராய்ச்சிகளுக்குஞ் சமய அறிவு வளர்ச்சிக்கும் மேனாட்டிற் பயன்படுத்தப்படும் அளவற்ற பொருளையும் ஒப்பிட்டு எண்ணிப் பார்க்குங்கால், இந்நாட்டவர் மேல் நாட்டவரோ டொப்ப நாகரிக இன்ப அறிவு வாழ்க்கையைப் பெறுதல் கனவிலுங் கைகூடுமோ என்று வருந்தி ஏங்க வேண்டியதாயிருக்கின்றது! இந் நாட்டில் வீணாகச் செலவழியும் பெரும்பொருட்டிரள் நூறு கோடியில் ஒரு சிறு பங்காயினுந் தமிழ் கற்றார்க்குப் பயன்படுமாறு வைக்கப்படு மானால் நம் திருநாவுக்கரசை யொத்த எத்தனையோ தமிழ்ப் புதல்வர்கள் தமிழறிவிற் சிறந்து, எத்தனையோ அரும்பெருந் தமிழ் நூல்களை இயற்றி வெளியிட்டிருப்பார்கள்! திருநாவுக்கரசும் இவரைப் போன்ற வேறு சிலரும் அரிய பெரிய தமிழ் நூல்கள் எழுதாமைக்குக் காரணம், அவரது வாழ்க்கை இனிது நடத்தற்குப் போதுமான பொருள் வருவாய் இல்லாமையே யன்றே? ஐயகோ! தமிழறிஞர்க்குள்ள வறுமை எஞ்ஞான்று எங்ஙனம் நீங்கப் போகின்றது நம் அருமைக் கண்மணிகளாம் தமிழிளைஞர் சிலரையும் நாம் இங்ஙனம் விரைவில் இழக்க நேர்வது பெரும்பாலும் அவர்க்குள்ள குடும்பக் கவலையினாலன்றே? இது நிற்க. இனி இவருடைய அறிவு ஆராய்ச்சி நல்லியல் புகளைப் பற்றிச் சிறிது கூறல் வேண்டும்: இவர் இயற்கை யிலேயே கூர்த்த அறிவுடையவர்; தாம் ஒன்று கற்றாற் பின்னர் அதனை நூறாகப் பெருக்கி விடுவர்; அதனைப் பிறர்க்கு விளக்கிச் சொல்லுதலிலும் வல்லர்; அங்ஙனம் விளக்குதற்கு வேண்டிய பலவற்றைப் பல துறைகளிலிருந்தும் புதியவாக எடுத்துச் சேர்த்துக் கொள்வர். குடும்பச் சுமையும் மிகுதியான செலவும் இவற்றின் பொருட்டு ஓயாமற் பொருளீட்டும் முயற்சியும் இல்லா திருந்தால், உணவை ஒழுங்குபடுத்தி நோய்க்கு இடமானவைகளை விலக்கித் தமதறிவையும் முறற்சியையும் ஒருமுகப்படுத்தியிருந்தால், தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள இன்னும் எத்தனையோ அரும்பெரு நூல்களை யெல்லாம் ஆழமாகப் பயின்று, அப்பயிற்சியாலாய பெரும் பயனை இவர் இத் தமிழுலகுக்குத் தந்திருக்கலாம். ஆழ்ந்தகன்ற நூல்களைப் பயின்று அவற்றின் பொருள்களைப் பயன் படுத்தத்தக்க அத்துணைச் சிறந்த இயற்கை யறிவு இவர்க்கு அமைந்திருந்தது. ஆனால், அது பயன்றராமல் இத்துணை விரைவில் மறைந்து போயிற்றே! இவர் எம்பாற் கல்வி பயின்று வெளியேறிச் சொற்பொழிவுகள் நிகழ்த்துகின்ற காலையில், இவரது அறிவானது ஆராய்ச்சி முறையிற் சென்று, தாம் கற்றவற்றிற் பொருந்துவன இவை, பொருந்தாதன இவை எனக் காணும் நீர்மையதா யிருக்கவில்லை. தம் முன்னாசிரியராகிய பூவை கலியாணசுந்தர அடிகள் கொண்டிருந்த ஆரியப் பற்றிலேயே இவர்க்குப் பிடிமானம் மிகுதியாயிருந்தது. எம்முடைய ஆராய்ச்சித்துறைகளிலும், யாம் ஆராய்ந்து கட்டிய முடிபுகளிலும் நீண்ட காலம் வரையிற் பிடிமானம் இல்லாமலே இருந்தார். ஆசிரியர் மெய் கண்டதேவர் அருளிச் செய்த சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே யன்றி வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துச் செய்ததன்று என யாம் ஆராய்ந்துரைத்த முடிவைத் தழுவாமல், அது மொழிபெயர்ப்பு நூலேயென்று எழுதியும் பேசியும் வந்தார். எழுதும்போதும் பேசும் போதுந் தமிழ் மொழியைப் பிறசொல் கலப்பின்றித் தனித் தூய தமிழாகவே வழங்க வேண்டுமென்று யாம் வற்புறுத்தி வருங்கொள்கையில் நீண்ட காலம் வரையில் உடம்பாடில்லாமலே யிருந்தார். வேதம் என்றும் ஆகமம் என்றும் வடமொழியில் வழங்கும் நூல்கள் இறைவன் அருளிச் செய்தனவல்ல என்று யாம் ஆராய்ந் துரைத்த முடிபிற் கருத்தொருப்பா டில்லாமலே யிருந்தார். இன்னும் இங்ஙனமே நூலாராய்ச்சித் துறைகளிலுஞ் சீர்திருத்த முறைகளிலும் யாம் ஆராய்ந்து கொண்ட கோட்பாடுகளில் இவர் உடன்பாடுரையராய் நில்லாமற் றம் முன்னாசிரியராகிய கலியாண சுந்தர அடிகள் சென்ற வழியே சென்றார். என்றாலும் இவர் எம்மிடத்து வைத்த பேரன்பிலும் பெரும் பாராட்டிலுஞ் சிறிதும் பிறழ்ந்தவர் அல்லர். அதனால் எமக்கும் இவர்பாலுள்ள அன்பு சிறிதும் பிறழ்ந்திலது கருத்து வேறுபாடு பற்றி அன்பு சிதையாமலும் பகைமை கொள்ளாமலும் எம்மோடு என்றும் ஒரு நீர்மையராய் ஒழுகிய இவரது சிறந்த உள்ள மேம்பாடானது, கருத்து வேற்றுமை குறித்து அன்பின்றி ஒருவரையொருவர் பகைக்குந் தமிழ்ப் புலவர்க்கும் பிறர்க்கும் அறிவு தெருட்டும் அருமணி விளக்கமாய் நிற்கற்பாலது. யாம் சென்ற ஆராய்ச்சித் துறையிலுஞ் சீர்திருத்த முறையிலும் இவர் முன்னமே எம்மோடு ஒத்து நின்று உதவி புரிந்திருந்தனராயின், இத்தமிழ் நாட்டில் இன்னும் எவ்வளவோ நலங்கள் விளைந்திருக்கும். எம் சைவசமயா சிரியர் தமிழாசிரியர் செய்து வைத்த சீர்திருத்தங்களையே யாம் இருபத்தைந் தாண்டுகளுக்கு முன்னமேதொட்டு எம்முடைய நூல்களாலும் எம்முடைய விரிவுரைகளாலும் ஆங்காங்கு விளக்கி வருகின்றோம். இற்றைக்கு மூன்றாண்டு களுக்கு முன் புதிது தோன்றிய சீர்திருத்தக்காரரது இயக்க மானது உம்முடைய கோட்பாடுகளையே தழுவி யெழுந்த தாயினும், இடைக்காலத்தே எம் சைவ ஆசிரியருக்கு மாறாய்த் திரும்பிச் சைவ சித்தாந்தத்துக்கு உடம்பாடாகாத பௌராணிக சைவர் தம் பொருந்தாக் கூற்றுக்களை எடுத்துக் கொண்டு சிவ பிரானையுஞ் சிவனடியார்களையுந் தமக்குத் தோன்றியவாறெல்லாம் இழித்துப் பேசுவதாயிற்று. அவ்வாறு சைவ சித்தாந்தத்தின்மேல் ஏற்றப்பட்ட பழிகளைக் களைந்து, சைவசித்தாந்த உண்மையினை நாட்டி, அப்புதிய இயக்கத்தாருடன் யாம் போராடிய காலத்தும் யாம் தனி நின்றே அதனைச் செய்யு நிலையிலிருந்தேம். புதிய இயக்கத்தார் நிகழ்த்துந் தடைகட்கு விடை கூறமாட்டாத பௌராணிக சைவர் அவரை யெதிர்ப்பது விடுத்துச் சைவ சித்தாந்த உண்மையினை நாட்டும் எம்மையே எதிர்க் கலாயினர். ஒரு பக்கத்திற் புதிய இயக்கத்தாரும் மற்றொரு பக்கத்திற் பௌராணிகசைவருந் தாக்க, அந்நேரத்தில் யாம் சிவபிரான்றுணையொன்றே கொண்டு, அவ்விருவர்க்கும் ஈடு கொடுத்துச் சைவ சித்தாந்த உண்மையினைத் தனி நின்றே நாட்டும் நிலையினம் ஆனேம். அந்நேரத்தில் நம் அருமைத் திருநாவுக்கரசு நம்முடன் சேர்ந்து நின்று சமயத் தொண்டு செய்திருந்தனராயின் இன்னும் எவ்வளவோ நலங்கள் விளைந்திருக்கும். ஆனாலும், அப்போராட்டந் துவங்கிய இரண்டோ ராண்டுக்குப் பிற் சடுதியில் திருநாவுக்கரசின்பாற் றோன்றிய ஒரு முழு மாறுதலானது எமக்குப் பெருவியப்பினையும் பெருமகிழ்ச்சியினையும் பயந்தது. பாழ்ங் கொள்கையையே விடாப்பிடியாய்க் கொண்ட புதிய இயக்கமும் அவர்க்குப் பழுதாகத் தோன்றலாயிற்று; முழுமுதற் கடவுளான எல்லாம் வல்ல சிவத்தினிலக் கணத்துக்கும், அதனை அறிவுறுத்துஞ் சைவசித்தாந்தத் துக்கும், அதனைத் தனக்கேயுடைய தெய்வத் தமிழுக்குஞ், சைவ ஆசிரியர் மேற்கொண்ட சீர்திருத்தத் துறைகட்கும் முற்றும் முரணான பௌராணிக சைவக் கோட்பாடும் அவர்க்குப் பழுதாகத் தோன்றலாயிற்று. இங்ஙனந் தோன்றிய பின்னர்தான் ஆராய்ச்சி முறையிற் செல்லும் எமது தமிழ்த் தொண்டு சிவத்தொண்டு சிறந்தனவாகு மெனத் திருநாவுக்கரசு நன்கறிந்து, அதுமுதல் எம்முடைய கோட்பாடுகளையே முற்றுந் தழுவி நடக்கக் கங்கணங் கட்டினார். எமது திருத்தொண்டினால் இத் தமிழகத்துக்கு விளையும் நலங்களைப் பகுத்துணர்ந்து பாராமையாற் பௌராணிக சைவரிற் பலர் எம்மைப் புறங்கூறுவாராய்ச் சிறிதுந் திருந்தாதிருக்க நம் அருமைத் திருநாவுக்கரசு உடனே எம் வழிக்குத் திரும்பிப், பழமையை யொட்டிய சீர்திருத்தத் துறையில் இறங்கியது பெரிதும் பாராட்டற்பால தொன்றாயிருந்தது. சென்ற தைத்திங்கள் பூச நாளன்று பல்லாவரத்திற் கூடிய எமது பொதுநிலைக் கழக இருபதாம் ஆண்டு விழாப் பேரவைக் குத், திருநாவுக்கரசு பலவகையில் உதவி செய்ததுடன், பௌராணிக சைவர் பெரிதும் வெருக்கொள்ளத் தக்க மிக உயர்ந்த சீர்திருத்தங் களையும் அஞ்சா ஆண்மையுடன் கொணர்ந்து, எமதும் அவையாராதும் முழு உடன்பாடு பெற்று அவைதம்மை நன்கு நிறைவேற்றி வைத்தார். இவர் இத்துணை அஞ்சா ஆண்மையினராய்த் தமிழ் மக்கள் ஆக்கத்தைக் கோரி உழைக்க முன் வந்ததானது எமக்கு அடங்கா மகிழ்ச்சியினை விளைவித்தது. ஆனாலும், இவர் தமது உணவினை ஒழுங்குப்படுத்தாமலும், உடலோம்புந் தவவொழுக்க முறைகளைக் கைக்கொள்ளாமலும் இத்துணை விரைவில் தமதுடம்பை நீத்து ஏகியது நினைக்குந்தோறும் பெருந்துயரத்தைத் தருகின்றதே! ஆ! ஊழ்வினையின் வலிவை என்னென்பேம்! இனி, இவர்தம் நல்லியல்புகளைப் பற்றிச் சிறிது கூறல் வேண்டும். எவருந் தாம் நல்ல தொன்று செய்தால் அதனை எங்கும் பறையறைந்தாலென வெளிப்படுத்துவர்; நல்ல தல்லாதது செய்தால் அதனைத் தமக்குற்றார்க்குந் தெரிவியார். மற்றுத் திருநாவுக்கரசோ தாம் செய்த நன்மையைத் தெரிவியார்; தாம் நல்ல தல்லாதது ஏதேனுஞ் செய்தால் அதனைத் தெரிவியாதிரார். பிறர்க்குத் துன்பத்தை விளைவிக்கத் தக்க பொய் இவர் வாயில் வருவதில்லை. மனநலன் நன்கு வாய்ந்தாரையன்றி, ஏனையோரை இவர் ஒரு பொருட்படுத்தார். வெளிமினுக்கும் பட்ட ஆரவாரங்களும் இவரை மருட்ட மாட்டவாயின. மிக இளைஞராயிருந்த காலந்தொட்டே இவர் எம் அறிவுரைகளைப் பெரும்பாலும் ஏற்று ஒழுகும் இயல்பினராயிருந்தார்.நெடுங்காலத்திற்கு முன் ஒருகால் இவர் ஆரவாரமான பட்டங்கள் சூட்டிக் கொள்வதில் அவாவுடையராய், அவ்வாறு தாம் புனைந்துகொண்ட பட்டங்கள் பதித்த தாள் ஒன்றை எம்பாற் கொணர்ந்து காட்டினார். அதுகண்டு, யாம், நம் மக்கள் முன்னேற்றத் திற்குஞ் சிவபிரான் றிருவடிக்கும் நாம் இயற்றுந் தொண்டு அவ்வுண்மையே நோக்கியதாய் இருக்க வேண்டுமே யல்லாமல், ஆரவாரமான பட்டங்கள் சூட்டிக் கொள்வதற் கென்று நடைபெறல் ஆகாது. வேண்டுமாயின் நீ தமிழா சிரியராய் வேலைபார்க்கும் நிலையைச் சுட்டிப் பண்டிதர் தமிழாசிரியர், என்பவைகளை மட்டும் நின்பெயரோடு சேர்த்து வழங்கலாம் என்றேம். அது முதல் இவர் வெளி யாரவாரமான பட்டங்கள் புனைந்து கொள்வதை அறவே விடுத்தார். பின்னும், இவர் இளைஞராயிருந்தபோது தமிழிற் பாட்டுகள் கட்டுவதில் மிக்க சுருசுருப்புடையராயிருந்தார். ஒருகால் யாம் இவரை நோக்கி நமது தமிழ் மொழியிற் கோடிக் கணக்கான பாட்டுகள் பாடப் பட்டிருக்கின்றன. ஆனால், உரை நூல்களோ சிலவும் இல்லை. பொதுமக்கட்கு இனி உரைநூல்களே வேண்டும். ஆதலால் நீ பாட்டுப் பாடுவதை விடுத்து உரை எழுதுவதிலேயே பழகல் வேண்டும் என்றேம். அதுமுதல் இவர் பாட்டுப் பாடுதலை விடுத்து உரை எழுதுதலில் திரும்பினார். இங்ஙனமே இவர் தமது இளமைக் காலத்தே எம் அறிவுரைகளைக் கேட்டு அவற்றின்படி நடந்த வகைகள் பல. ஆசிரியர் கூறும் அறிவுரையை ஏற்று நடவாத இஞ்ஞான்றை மாணவர்க்குத் திருநாவுக்கரசின் அரியநடை நல் விளக்காக ஒளிரற்பாலது. இனி இவர் தம் கருத்துக்கு மாறானவரிடத்தும் பகைமை யின்றி அன்பினால் அளவளாவும் இயல்பினரென்பதை முன்னரே எடுத்துச் சொன்னோம். இவ்வருங் குணம் எல்லார்க்கும் வாய்ப்பதன்று. கல்வி யறிவு வாய்ந்த நம்மனோர் எல்லாரும் இந்நல்லியல்பின் விழுப்பத்தை நன்குணர்ந்து என்றைக்கு அதனை யுடையராய் ஒழுகத் தலைப்படுகின்றனரோ அன்று முதற்றான் நம் நாடு செழிப்புறும். நம் அருமைத் திருநாவுக்கரசின் இந்நல்லியல்பும் நம் தமிழறிஞர்க்கும் பிறர்க்கும் ஓர் எடுத்துக்காட்டாக நிற்கற்பாலதாகும். இனி, இவர் தமது சிற்றிளமைப் பருவந் தொட்டே தமது வருத்தத்தையும் பாராமற் பிறர்க்குதவி செய்யும் இரக்க நெஞ்சமும் நல்லெண்ணமும் உடையர். இவர் எம்பாற் கல்வி பயின்று கொண்டிருத்த அந்நாளில் ஒருபோது எம் மூத்த மகள் மிகக் கொடிய காய்ச்சலாற் பற்றப்பட்டு உணர்விழந்து கிடந்தாள். யாங்கள் எல்லோமும் பெருந்திகிலும் பெருங் கவலையுங் கொண்டு அம்மகளுக்கு வந்த அந்நோய் தீர்க்கத் தக்க மருத்துவரை ஒருவர் பின்னொருவராய் வைத்துப் பார்த்து வந்தோம். அவ்வுற்ற நேரத்தில் நாகைக் கோபாலகிரட்டிணனும் நம் அருமைத் திருநாவுக்கரசும் அல்லும் பகலும் எம்மை யகலாதிருந்து பலவகை உதவிகளுஞ் செய்து வந்தார்கள். நோயானது மிக முறுகிப் பேரிடர் பயப்பதாய் நின்ற ஒரு நாளிரவில், இவ்விருவருஞ் சென்று வேறோர் ஆங்கில மருத்துவரை அழைத்து வந்தனர். அப்போது இரவு மணி பதினொன்றுக்குமேல் இருக்கும். வந்த அம்மருத்துவர் தக்க மருந்து கொடுத்து, வேறு சில நுட்ப முறைகளுஞ் செய்து, கடைசியாகப் பாலிற் கலந்து கொடுக்கப் பனிக்கட்டிகள் வேண்டும் என்றனர். அஞ்ஞான்று யாம் சென்னையில் மண்ணடிக்கு அருகிலுள்ள அரமனைக்காரன் தெருவில் ஒரு வீட்டின் மேன்மாளிகையிற் குடியிருந்தேம். யாம் இருந்த அப்பகுதியில் அந்நேரத்தில் எங்கும் பனிக்கட்டிகள் கிடைக்கவில்லை. அதன்மேல் திருநாவுக்கரசு எப்படியாவது அவற்றைக் கொண்டு வருதற் கெண்ணி, எழும்பூருக்கு அருகிற் பனிக்கட்டி செய்யுந் தொழிற் சாலைக்கே போகப் புறப்பட்டார்; கோபாலகிருட்டிணனும் அவருடன் சென்றார். மின்சார வண்டி யாவது குதிரை வண்டி மாட்டு வண்டிகளாவது அந்நேரத்தில் கிடையா மையால் அவர்கள் அந்நள்ளிரவில் கால்நடையாகவே செல்ல வேண்டு வதாயிற்று. யாமிருந்த இடத்திற்கும் பனிக்கட்டித் தொழிற்சாலைக்குஞ் சிறிதேறக்குறைய மூன்றுமைல் இருக்கும். இவர்களிருவரும் பனிக்கட்டிகள் வாங்கிக் கொண்டு திரும்பி வருகையில் இரவு மூன்றுமணி இருக்கும். இவர்கள் அன்றிரவு செய்த அச்செயற்கரிய உதவியால் எம்மகள் நோய் நீங்கி உயிர் பிழைத்தாள். இங்ஙனம் உற்ற நேரத்தில் எவ்வகை இடைஞ்சலுக்கும் அஞ்சாது நின்று நம்பாலன்புடையார்க்கு உதவி செய்யும் விழுமிய நல்லியல்பு இவர்தம் இறுதி நாளளவும் இவர்க்கிருந்தது. யாம் சென்னையிலிருந்த காலமெல்லாம் யாமும் எம்மைச் சார்ந்தாரும் அடுத்தடுத்துக் குளிர் காய்ச்சலாற் பற்றப்பட்டு வருந்தாநின்றேம். இதனைக் கண்ட திருநாவுக்கரசு சென்னைக் குடியிருப்புத் தங்களெல்லார்க்குஞ் சிறிதும் இசையாததா யிருக்கின்றது. உடல்நல மனநலங்களுக்கு இசைந்த பல்லாவரமே தங்களெல்லார்க்கும் பொருந்துவ தாகும் என்று அடிக்கடி வற்புறுத்திச் சொல்லி எம்மை 1911 ஆம் ஆண்டிற் பல்லாவரத்திற் குடியேற்றி வைத்து உதவி செய்தார். இங்ஙனம் பலவகையாலுஞ் சிறந்த தவப்பிறவியினரான நம் அருமைத் திருநாவுக்கரசு நம்மனோரை யெல்லாம் இத்துணை விரைவில் விட்டு நீங்கியதான பெருங்குறை இத்தமிழகத்துக்கு எளிதிற் றீருமோ! எல்லாம் வல்ல சிவபிரான் இவரது சிறந்த உயிருக்கு மறுமை யுலகில் நீண்ட காலம் ஆறுதலைத் தந்தருளி, அதன் பின் இவர் மீண்டும் நம்மிடையே எல்லா வசதிகளோடும் பிறந்து, தாம் அரைகுறையாய் விட்டுச் சென்ற தமிழ்த்தொண்டு சிவத்தொண்டுகளை நன்கினிது முடித்து அதன்மேற் பிறவியெடாராய்ச் சிவபிரான் றிருவடி நீழலில் வைகிப் பேரின்பம் நுகர்ந்திருப்பாராக வென அப்பெருமான் திருவடிப் போதுகளை இறைஞ்சி வேண்டுகின்றேம். இவர் தம் முதன் மனைவிக்குப் பிறந்த ஒரு புதல்வன் உளன். முதன் மனைவி காலமான பின் மணந்து கொண்ட இவர்தம் இரண்டாம் மனைவிக்கு ஐந்து பெண் பிள்ளைகள் உளர். இவர் தம்பியர் இருவர் உளர். இவர் தந் தந்தையார் ஆண்டில் மிக முதியராயிருக்கின்றார். சென்னையில் நம் திருநாவுக் கரசிடம் தமிழ்க் கல்வி பயின்ற இவர்தம் மாணக்கர் பலர் உளர். அவருட் பாரிப்பாக்கந் திருக் கண்ணப்ப முதலியாரும், சென்னை முத்தியால்பேட்டை உயர்தரக் கல்விச்சாலை தமிழாசிரியர் மயிலைத் திரு. முத்துக்குமாரசாமி முதலியாருந் தமிழறிவிற் சிறந்தவர்களாய்த் திகழ்கின்றார்கள். அடிக்குறிப்பு 1. இது `சிந்தனைக் கட்டுரைகள் என்ற தமது நூலின் முதற் கட்டுரையின் விளக்க உரைக் குறிப்புக்களினிடையிற் காணப்படுவதாகும். 7. சீர்திருத்தக் குறிப்புகள் உண்மை அன்பர்கள் வற்புறுத்துக் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, இக்காலத்துக்கு இன்றியமையாது வேண்டப்படும் சீர்திருத்தக் குறிப்புகள் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்டுகின்றோம். சமயச் சீர்திருத்தம் தென்னாட்டிலுள்ள தமிழர்களாகிய நாம் தொன்று தொட்டு ஒரே முழுமுதற் கடவுளை வணங்கி வருகின்றோம். அம் முழுமுதற் கடவுளுக்குச் சேயோன், மாயோன், முக்கண்ணன் என்னும் பெயர்கள் வழங்கி வந்திருக்கின்றன. இச்சிறப்புப் பெயர்களாற் குறிக்கப்படாத போது, வாலறிவன், மலர்மிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமை யிலான், பொறிவாயிலைந் தவித்தான், தனக்குவமை யில்லாதான், அறவாழியந்தணன், எண் குணத்தான், இறைவன், கடவுள் என்னும் பொதுப் பெயர்கள் பொதுவாக எல்லாராலும் வழங்கப்பட்டு வந்திருக் கின்றன. இத்தகைய கடவுள் பிறப்பில்லாதது, இறப்பில்லாதது, எல்லாமறிவது, எங்குமுள்ளது, எல்லாம் வல்லது, அளவி லாற்ற லுடையது, வரம்பிலின்பமுடையது, என்னும் இலக்கணங்கள் உடையதென்பது இத்தமிழ்நாட்டிலுள்ள வர்கள் எல்லாருக்கும் உடன்பாடாகும். இஃது எல்லா வற்றையும் படைத்து அழிக்கும் அப்பனாகவும், படைத்த வற்றைக் காக்கும் அம்மையாகவும் வணங்கப்பட்டு வருகின்றது. இத் தன்மைத்தாகிய கடவுளையே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும், மாணிக்கவாசகரும், திருமூலரும், அப்பர் சம்பந்தர் சுந்தரரும், மெய்கண்ட தேவரும் தாம் அருளிச் செய்த நூல்களிலும் பதிகங்களிலும் எடுத்து விளக்கி வணங்கி வந்திருக்கின்றார்கள். மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் காணாச் சிவபெருமான் என்றும், தேவர்கோ அறியாத தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர் கோனாய்நின்ற முதல்வன் என்றும் மாணிக்கவாசகப் பெருமான் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளையே சிவமென்னும் பெயரால் வாழ்த்தி வணங்கியிருப்பது நன்கு விளங்கும். ஆனால், வடநாடுகளில் கோடிக்கணக்கான சிறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊனுங் கள்ளும் படைத்து வெறியாட்டு வேள்விகள் எடுத்த ஆரியர்கள் இத் தென்றமிழ் நாட்டுக்கு வந்து குடியேறித் தாம் வணங்கிய சிறுதெய்வ வணக்கத்தையும் அவற்றிற்காக எடுத்த வெறியாட்டு வேள்விகளையும் அச்சிறு தெய்வங்களின் மேற் கட்டிவிட்ட புராணக்கதைகளையும் இந் நாடுகளிற் பரவ வைத்தார்கள். இந்நாடுகளில் நாகரிகமும் கல்வியறிவும் இல்லாத கீழ் மக்களை ஆரியர் நடைகளை மிகுதியாய்ப் பின்பற்றிலாயினர். அது கண்ட தமிழ்ச் சான்றோர்கள் ஆரியர் வணங்கிய சிறுதெய்வ இழிவும், தமிழர் வணங்கும் முழுமுதற் கடவுளாகிய சிவத்தின் உயர்வும் புலப்படுத்தல் வேண்டித் தாமும் பல புராணக்கதைகளை உண்டாக்கலாயினர். இவ்வாறு எழுந்த பலப்பல புராணக்கதைகளுட் கடவு ளிலக்கணத்துக்குப் பொருந்துவனவும் அதற்குப் பொருந்தா தனவும் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்து பார்த்துப் பொருத்தமானவைகளை விளக்கி எழுதிப் பொருந்தாதவைகளை விலக்கி விடுவதற்கு உரிய சீர்திருத்தம் முதன்மையாகச் செயற்பாலதாகும். நம் ஆசிரியர்கள் தமது காலத்திருந்த பொது மக்களின் மனச் சார்பை அறிந்து, அவர்கள் பொருட்டுத் தழுவிப் பாடியிருக்கும் புராணகதைகளை யெல்லாம் நாம் அப்படியே தழுவ வேண்டுமென்பது கட்டாயமாகாது. ஏனென்றால், அப்பனை வணங்கும் நமது சைவசமயமும், அம்மையை வணங்கும் வைணவ சமயமும் இக்கதைகளைச் சார்ந்து பிழைப்பன அல்ல. இக் கதைகளின் உதவி வேண்டாமலே இவ்விரு சமயங்களும், மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிய அரிய பெரிய மெய்ப்பொருள்களினாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், நம்முடைய சமயங்களின் உண்மைகளைச் சிவஞான போதம் சிவஞான சித்தியார் என்னும் உயர்ந்த அறிவு நூல்களில் விளக்கப்பட்டபடி இளம்பருவ முதற்கொண்டே நம்முடைய மக்களுக்குக் கற்பித்துவர ஏற்பாடு செய்தல் வேண்டும். இச்சமய உண்மைகளுள் எதனையுங் குருட்டுத் தனமாய் நம்பும் தீய பழக்கத்தை ஒழித்து எதனையும் தம் மறிவால் ஆராய்ந்து பார்க்கவும் தம் மறிவுக்கு விளங்காதவைகளை அறிந்தோர்பாற் கேட்டுத் தெளியவும் அவாவை உண்டாக்குதல் வேண்டும். சிவபிரான் திருக்கோயில்களில் நிறுத்தப்பட்டிருக்கும் சிவலிங்க வடிவானது ஒளிவடிவாய் விளங்கும் இறைவனது நிலையை உணர்த்துவதாகும். இவ்வடிவு எல்லாச் சமயத்தா ராலும் வழுத்தி வழிபடுதற்குரிய பொதுவான அடையாள மாய் உலகம் எங்கும் உள்ளதாகும். எந்தச் சமயத்தாரேனும் எந்தச் சாதியாரேனும் இதனை வணங்குவதற்கு விரும்பிக் கோயிலுள் வருவார்களாயின், அவர்களைத் த டசெய்யாமல், வந்து வணங்குவதற்கு இடங் கொடுத்தல் வேண்டும். என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத் தவர்களும் வந்து இறைஞ்சா நிற்பர். என்னும் தாயுமான அடிகளின் திருமொழியை நம்மவர்கள் எப்போதும் நினைவில் வைத்தல் வேண்டும். ஆனாற் கோயிலுள் வருபவர்கள் எல்லோரும் குளித்து முழுகித் துப்புரவான ஆடை உடுத்து அடக்க வொடுக்கமாய் வாய் பேசாது உட்சென்று வணங்கும்படி செய்தல் வேண்டும். இப்போது கோயிலுள் இறைவனுக்குச் செய்யும் நாள் வழிபாடுகள் பொருத்தமாய் இருந்தாலும், அவை வடமொழி மந்திரங்களைச் சொல்லிச் செய்யப்படுதலின், பொதுமக்கள் அவற்றின் உண்மை அறியாமல் விழிக்கின்றனர். தேவார திருவாசகங்களாற் பாடப்பெற்ற கோயில்களே பாராட்டப் படுகின்றன அல்லாமல், வடமொழி மந்திரங்களுக்காக எந்தக் கோயிலும் பாராட்டப் படவில்லை. ஆதலால், வழிபாடு முழுதும் தேவார திருவாசகத் தமிழ் மந்திரங்களைக் கொண்டே நடைபெறுமாறு ஒவ்வொரு கோயிலிலும் ஏற்பாடு செய்தல் வேண்டும். இனி ஒவ்வொரு கோயிலின் சார்பாக நடத்தப்பட்டு வரும் திருவிழாக்கள் எப்போதும் போலவே எங்கும் நடைபெறும்படி செய்தல் வேண்டும். ஏனென்றால், நாடோறும் நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழப் பாடுபடும் ஏழை மக்களும், செல்வமிகுதியாற் கடவுளை மறந்து சிற்றின்பத்திற் கிடந்துழலும் செல்வர்களும், இவ்விருவர் நிலையிலும் சிறிது சிறிது ஒட்டி நிற்கும் மற்றைப் பொது மக்களும் இத்திருவிழாக் காலங்களிலேதாம் தத்தம் முயற்சிகளினின்றும் ஓய்வுபெற்று நீராடி நல்ல ஆடை அணிகலன்கள் அணிந்து, தம் மனைவி மக்கள் சுற்றத் தாருடன் மன மகிழ்ந்து கடவுள் நினைவும் வணக்கமும் உடைய ராய்ப் பல ஊர்க்காட்சிகளையும் பல மக்களின் தோற்றங்களையும் கண்டு இம்மை மறுமைப் பயன்களைப் பெற்று இன்புறுகின்றனர். இத் திருவிழாக்களும் திருக்கோயில்களும் இல்லை யானால் இந்நாடும் ஏனை அயல் நாடுகளைப்போல் ஓயாத சண்டைக்கு இடமான போர்க் களமாகவே இருக்கும். ஆதலால், திருவிழாக்களை இன்னும் செவ்வையான முறையில் நடைபெறச் செய்வதோடு, அத் திருவிழாக்களின் உண்மையும் பயனும் எல்லார்க்கும் எடுத்துச் சொல்லும்படி கல்வியிற்றேர்ந்த அறிஞர்களுக்குத் தக்க பொருளுதவி செய்து, அவர்கள் அத்திருவிழாக் காலங்களில் ஆங்காங்கு விரிவுரை செய்யும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும். கோயில்களிற் பொதுப் பெண்டிரைத் தொண்டு செய்ய அமைத்தலும், அவர்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டுவதும் அடியோடு விலக்கப்படல் வேண்டும். கோயில்களிற் வழிபாடாற்றுங் குருக்கள்மார் தமிழ் மொழியிற் பயிற்சி யுடையராயும், சைவசித்தாந்தம் நன்குணர்ந்தவராயும் தேவார திருவாசகம் ஓதுபவாரயும் இருக்கும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும். சில கோயில்களிற் றவிரப் பெரும்பான்மையான மற்றைக் கோயில் களில் வழிபாடுசெய்யும் குருக்கள்மார்க்குத் தக்க வரும்படியும் தக்க சம்பளமும் இல்லை. ஆதலால், மிகுந்த வரும்படியுள்ள கோயில்களின் வருவாயிலிருந்து மற்றைக் கோயில் களின் ஏழைக் குருக்களுக்குத் தக்க சம்பளங்கள் கொடுப்பித்தல் வேண்டும். கோயில்களிலுள்ள இறைவன் திருவுருவத்திற்கு எப்போதும் போலக் குருக்கள்மாரே வழிபாடு செய்ய வேண்டுமல்லாமல் வணங்கப் போகிறவர்களெல்லாம் அதனாருகிற் சென்று அதனைத் தொட்டுப் பூசித்தல் வேண்டுமென்பது நல்லமுறையன்று. ஏனென்றால், வணங்கச் செல்பவர்களுக்குக் கடவுள்பால் உள்ள அன்பும் அச்சமும் குறைந்துவிடும்; அவ்விடமுந் தூய்மை கெடும்; மக்களின் நெருக்கடியும் இடைஞ்சலைத் தரும். தாழ்ந்தவர் என்று காட்டும் வேறுபாடுகள் அடியோடு நீக்கப்படல் வேண்டும். சில கோயில்களில் வரும் ஏராளமான வரும்படியிற் கோயிலின் இன்றியமையாச் செலவுகளுக்குப் பயன் படுத்தப்பட்டனபோக, மிச்சத்தைத் தேவார பாட சாலைக்கும், தனித்தமிழ்ப் பாடசாலைக்கும், சைவ சித்தாந்த சபைகட்கும், தமிழ் சைவசித்தாந்த முணர்ந்த ஆசிரியர்க்கும், தமிழ் நூல் எழுதுவார்க்கும், சைவ சித்தாந்த விரிவுரையாளர்க்கும், கோயிலைச் சார்ந்த சத்திரஞ் சாவடிகட்கும் பயன்படுத்தல் வேண்டும். கோயிலின் வரும்படியைக்கொண்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவு கொடுத்தலும், ஆரியவேத பாடசாலை அமைத்தலும், ஆங்கிலப் பள்ளிக்கூடங்கட்குப் பொருளுதவி செய்தலும் அடியோடு நீக்கப்படல் வேண்டும். தமிழ் மொழிச் சீர்திருத்தம் இத் தென்றமிழ் நாட்டிலுள்ள நம்மனோர்க்கு உயிர் போற் சிறந்ததாகிய தமிழ் மொழியானது பல்லாயிர ஆண்டுகளாக உயிரோடு உலவி வரும் சிறப்புடையது. ஆரியம் முதலான பிற மொழிகளைப்போல் இறவாதது. ஆரியத்திலுள்ள கட்டுக்கதைகளைப் போல்வன சிறிதும் இல்லாதது. இயற்கைப்பொருள்களையும் மக்களின் அன்பு அருள் ஒழுக்கங்களையும் கடவுளையும் அடியார் வரலாறுகளையும் பாடின உண்மை நூல்களே நிரம்பி உள்ளது. சாதி வேற்றுமையினையும், ஒருசாதியை உயர்த்தி ஏனைப் பல சாதிகளைத் தாழ்த்தி முறையில்லாத விதிகளை வகுத்த ஆரிய நூல்களைப் போன்ற முறையற்ற நூல்கள் சிறிதும் இல்லாதது. கடவுளின் அருளைப் பெறுதற்கும், வாழ்க்கையின் நலங்களை அடைதற்கும், எல்லா மக்களும் ஒத்த உரிமை உடையரென வற்புறுத்தும் திருக்குறள், பெரியபுராணம் போன்ற உயர்ந்த ஒழுக்க நூல்களையே உடையது. ஆரியத்திலுள்ள கட்டுக்கதைகள் மலிந்த புராண நூல்கள் சிறிதும் இல்லாமற் கடவுள் நிலையினையும் உயிர்கள் நிலையினையும் நுணுக்கமாக ஆராயும்சிவஞான போதம் போன்ற உயர்ந்த அறிவு நூல்களையே உடையது. இத்துணைச் சிறந்ததாகிய இத்தமிழ் மொழி எத்தகைய நுண்ணிய ஆழ்ந்த கருத்துக்களையும் தெரிவித்தற்கு இயைந்த சொல்வளமுடைய தாகலின், ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களை இதன்கட் புகுத்தாமல் இதனையும் இதன் நூல்களையும் எல்லார்க்கும் தனிமையிற் கற்பித்தல் இன்றியமையாததாகும். தமிழ்நாட்டிற் செல்வர்களாயிருப்பவர்களும் பிறருந் தமிழ்மொழிப் பயிற்சிக்கும் தமிழ்க்கல்லூரிகள் அமைப்ப தற்கும் பொருளுதவி செய்யவேண்டுமே யல்லாமல் இவற்றை விடுத்து ஆரியம் ஆங்கிலம் முதலான மொழிப் பயிற்சிக்கும் அதற்குரிய கல்லூரிகட்குமே பொருளுதவிசெய்தல் நன்றாகாது. இத்தமிழ்நாட்டு மக்களெல்லாரும் தமக்குரிய தாய்மொழியிலேயே எளிதாகக் கல்வி கற்பிக்கப்படல் வேண்டும். ஆங்கிலம் முதலிய அயல்மொழிகளிலுள்ள இயற்கைப் பொருள் நூல்களையும் உயிர் நூல்களையும் கடவுள் நூல்களையும் தமிழில் மிகுதியாக மொழி பெயர்த்து அவற்றைப் பயிலும்படி செய்தல் வேண்டும். சைவ மடத்தின் தலைவர்கள், அரசர்க்குள்ள பொருள்களிலும் மிகுதியான பொருள்களை வைத்துக் கொண்டு பாவமான பல துறைகளிலும் அவற்றைப் பாழ்படுத்தி வருகின்றார்கள். சைவசித்தாந்தமுந் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களோ தமது வாழ்க்கைக்கு வேண்டும் செலவுக்குத் தக்க வருவாய் இன்றிப் பெரிதுந் துன்புறுகின்றார்கள். இவ் அறிஞர்கள் மிக இடர்ப்பட்டு எழுதி வெளியிடும் நூல்களின் செலவுக்குக் கூடப் பொருளுதவி செய்வார் எவரும் இல்லாமையின் அவர்கள் படுந் துன்பங்களுக்கு ஓர் அளவே இல்லை. ஆதலாற், சைவமடங்களின் பொருள்களை இத்தகைய அறிஞர்க்கும், சைவசித்தாந்தக் கல்லூரி கட்கும், தமிழ்க் கல்லூரிகட்கும் மிகுதியாய்க் கொடுத்துப் பயன்படுத்தல் வேண்டும். இவ் இந்திய நாட்டில் அரசினை நடத்துதற்கு உதவியாய் நிற்பாரிற் பெரும்பாலார் ஆரிய முறையைத் தழுவிய பார்ப்பனராயும் அவர் சொல்வழி நடப்பவராயும் இருத்தலால், சைவ சமய வளர்ச்சிக்குந் தமிழ் வளர்ச்சிக்குந் தமிழ் உணர்ந்தார் செலவிற்கும் அரசினரிடமிருந்து உதவிபெறுதல் இயலாதாயிருக்கின்றது. இதனை உணர்ந்தாவது தமிழ்நாட்டு மன்னர்களும் சிற்றரசர்களும் சைவசித்தாந்த உணர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தமது பொருளைச் செலவுசெய்தல் வேண்டும். ஆங்கில அரசினாற் போற்றி வளர்க்கப் பட்ட ஆங்கில மொழிப் பயிற்சிக்கே இவர்கள் தம் பொருளைச் செலவுசெய்தல் சிறிதும் பயன்தராததாகும். இனிச், சைவ அவைகளும் தமிழ்க் கழகங்களும் வைத்து நடத்துவோர், தம்முடைய கழகக் கொண்டாட்டங்களுக்குச் சைவமும் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களையே வருவித்து அவற்றை நடத்துதல்வேண்டும். வெறும் பட்டங்கள் வாங்கினவர்களையும் ஆங்கிலம் மட்டும் உணர்ந்தாரையும் வருவித்து ஆரவாரம் செய்தல் பயன்படாது. தமிழ் அறிஞர்களை வருவிப்போர் அவர்கட்குத் தக்கபடி பொருளுதவி செய்தல் வேண்டும். இனித், திங்கள் இதழ், கிழமை இதழ், நாள் இதழ் நடத்துவோர் தம்முடைய இதழ்கட்குக் கட்டுரைகள் எழுதுந் தமிழ் அறிஞர்க்குத் தக்கபடி பொருளுதவி செய்தல் வேண்டுமே யல்லாமல்; அவர்களை வறிதே துன்புறுத்தி அவர்கள் பால் வேலைவாங்குவது நன்றாகாது. தமிழ்கற்றவர்கட்கு எல்லாவகையிலும் பொருளுதவி செய்து அவர்களைச் சிறக்கவைத்தால்தான் இந்நாடு முன்னேற்றம் அடையும். இவர்களைச் சிறக்க வையாமல், வேறு துறைகளில் எவ்வளவு செலவு செய்தாலும் இந் நாடு முன்னேற்றம் அடையாது. இதனை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும். மக்கட் கூட்டச் சீர்திருத்தம் இப்போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்மக்களிற் பெரும் பாலார் எல்லாம்வல்ல ஒருதெய்வத்தை வணங்காமல், இறந்துபோன மக்களின் ஆவிகளையும், பலபேய்களையும் இவைபோன்ற வேறுசில சிறு தெய்வங்களையும் வணங்கி, அவற்றுக்காகப் பல கோடிக்கணக்கான கோழிகளையும் ஆடுகளையும் வெட்டிப் பலியிடுகின்றார்கள். இக்கொடிய செயலை அவர்கள் அறவே விடுமாறு செய்து, சிவம் அல்லது திருமால் என்னும் ஒரு தெய்வத்தையே வணங்கும்படி செய்தல் வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் ஊன்தின்பவரும் ஊன் தின்னாத சைவரும் என்னும் ஒரு பெரும்பிரிவில் நின்றாற் போதும். சைவரிலேயே பல வகுப்புகளும், அங்ஙனமே ஊன்தின்பவர்களிற் பலப் பல வகுப்புகளும் இருத்தல், பொருளற்ற வேற்றுமையாய் ஓயாத சாதிச்சண்டை களை உண்டாக்குவதாய் இருக்கின்றது. பொருளற்ற இவ்வேறு பாடுகளை முற்றும் ஒழிப்பதற்கு எல்லாரும் பெருமுயற்சி செய்தல் வேண்டும். ஊன் தின்னும் வகுப்பினரிலும் அருளொழுக்க முடைய ராய்ச் சைவஉணவுகொண்டு சிவத்தையே வணங்கும் அன்பு மிகுந்து தூயராய் வருவாரைச் சைவராயிருப்பவர்கள் தம்முடன் சேர்த்துக் கொண்டு அவர்களோடு ஏதொரு வேறுபாடு மின்றி உண்ணல் கலத்தல்களைச் செய்தல் வேண்டும். கல்வியிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலும் அருளொழுக்கத்திலும் சிறந்தார்க்கே உயர்வு கொடுக்க வேண்டுமேயல்லாமல் வெறும் பிறப்புப் பற்றி இவ்வியல்புகள் இல்லார்க்கு உயர்வுகொடுத்தல் ஆகாது. என்றாலும், எவரையும் பகையாமல் அவரவர்க்கு வேண்டு முதவிசெய்து, எல்லாரோடும் அன்பினால் அளவளாவுதல் வேண்டும். சத்திரஞ் சாவடிகளிலும் சிறப்பு நாட்களிலும், பிறப்பால் உயர்ந்தவரென்று சொல்லிக் கொள்ளும் ஒருவகுப்பினர்க்கே உணவு கொடுத்தல் பொருள்கொடுத்தல் முதலிய அறங்களைக் குருட்டுத் தனமாய்ச் செய்கின்றார்கள். இதுவும் அறவே தொலைக்கப்படுதல் வேண்டும். உயர்வு தாழ்வு கருதாது அறஞ் செய்யத்தக்கார் எவரைக் காணிணும் அவர்க்கு அறஞ் செய்தலே தக்கது. மாணிக்கவாசகர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலான நம் சமயாசிரியர்கள் பௌத்த சமணமதங்களில் இருந்து சைவ சமயம் தழுவ விரும்பினாரை அங்ஙனம் சைவ சமயத்திற் சேர்த்து அதனைப் பரவச் செய்திருக்கின்றார் களாதலால், நம் ஆசிரியர் காட்டிய அந் நன்முறையைக் கடைப்பிடித்து நாமும் அயற் சமயத்திலிருந்து வருவாரை நம்முடன் சேர்த்துக்கொண்டு எவ்வகை வேறு பாடுமின்றி அளவுளாவுதல் வேண்டும். இவர் தீண்டத்தக்கார் இவர் தீண்டத்தகாதவர் என்னும் போலி வேறுபாடுகளை அறவே ஒழித்துக் கோயில்களும் கல்விச் சாலைகளிலும் எல்லார்க்கும் ஒத்த உரிமை கொடுத்தல் வேண்டும். இதற்கு இன்றியமையாதனவான சைவ உணவு எடுத்தல், குளித்து முழுகித் துப்புரவாய் இருத்தல், நோய்க்கு இடங் கொடாமை முதலான நலம் பேணும் முறைகளை எல்லாரும் உணர்ந்து நடக்கும்படி அவற்றைத்துண்டுத்தாள்களிலும் விரிவுரைகளிலும் ஆங் காங்குப் பரவச்செய்தல் வேண்டும். கல்வியிலும் உடம்பு நலத்திலும் நல்லெழுக்கத்திலும் மேன்மேல் உயர்வதற்குப் பெருந்தடையாய் உள்ள சிறு பருவமணத்தை அறவே ஒழித்தல் வேண்டும். பெண் மக்களுக்கு இருபதாண்டும் ஆண் மக்களுக்கு இருபத்தைந் தாண்டும் நிரம்பும்முன் அவர்களை செய்வித்தல் ஆகாது. அங்ஙனம் மணஞ்செய்யுமிடத்தும் ஒருவரை ஒருவர் அன்புபாராட்டுதல் அறிந்து அதன்பின் அவர்களை மணம் பொருத்தல் வேண்டும். ஆணையாவது பெண்ணை யாவது ஆடு மாடுகளைப்போல் விலைகொடுத்துவாங்குங் கொடிய வழக்கத்தை வேரோடு களைவதற்கு எல்லாரும் மடிகட்டி நிற்றல் வேண்டும். ஏனென்றால் அன்பில்லாத வாழ்க்கையால் வருந் தீமைகள் அளவில்லா தவைகளாய் இருக்கின்றன. அன்பில்லாத சேர்க்கையிற் பிறக்கும் பிள்ளைகள் குறுகிய வாழ்நாளும் பல தீய தன்மைகளும் உடையராய் இருக்கின்றனர். அன்புவளர்ச்சிக்கு ஏதுவாக ஆண்மக்களும் பெண்மக்களுங் கள்ளங்கவடின்றி நடமாடச் செய்தல் வேண்டும். பெண் மக்களைக் கல்வியிலும் நன்முறையிலும் பழக விடாமல், மணங்கூடும் வரையில் அவர்களை அறைகளில் அடைத்து வைப்பது பெருந்தீமைகளை விளைவிக்கின்றது. பெண் மக்களைப் பெரும்பாலுந் தமிழ்முதலிய தாய்மொழிக் கல்லூரியிலேயே கல்வி பயிற்றுவித்தல் வேண்டும். உணவமைத்தல் இல்லறம் நடப்பித்தல் குழந்தைகளைப் பாதுகாத்தல் முதலிய முறைகளில் தேர்ச்சிபெற வேண்டுவது பெண்மக்களுக்கு இன்றியமையாததாகும். ஆண்மக்கள் தாய்மொழியோடு மற்ற மொழிகளையும் நன்கு பயிலச் செய்தல் வேண்டும். முப்பதாண்டுகட்கு உட்பட்ட பெண்கள் கணவனை இழந்து விடுவார்களானால், அவர்களைத் திரும்ப மணஞ் செய்து கொடுத்தல் வேண்டும். ஆண்மக்களில் நாற்ப தாண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம்பெண்களை மணஞ் செய்தல் ஆகாது. அப்படிச்செய்ய முந்துகின்றவர்களை எல்லாவகையாலும் தடை செய்தல் வேண்டும். நாற்ப தாண்டுக்கு மேற்பட்ட ஆண்பாலார் மணஞ்செய்து கொள்ள வேண்டுவார்களானால் தம் ஆண்டுக்கு ஏறக்குறைய ஒத்த கைம் பெண்களையே அவர்கள் மணஞ்செய்து கொள்ளும் படி தூண்டுதல் வேண்டும். தமிழ்மக்களிற் பெரும்பாலார் ஒருவர்பாலுள்ள குற்றங்களை மற்றவர் எடுத்துப் பேசுபவராய்ப் பகைமையையும் மனவருத்தத்தையும் பரவச்செய்து வருகின்றார்கள். இத்தீயபழக்கத்தை ஒழித்தால் அன்றித் தமிழ்மக்கள் முன்னேற்றமடைவது சிறிதும் முடியாது. ஒருவர்பாலுள்ள குற்றங்களை மறைத்து அவர்பாலுள்ள நலங்களை எடுத்துப்பேசுவதற்கே எல்லாரும் விடாப் பிடியாய்ப் பழகுதல் வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு மனமாரச் செய்து, அவர்களை மேன்மேல் உயர்த்திவிடுதல் வேண்டும். தாம்செய்யும் உதவிக்குக் கைம்மாறானதொன்றை எதிர்பார்த்திருத்தல் ஆகாது. அப்போதுதான் நம்முடைய மக்கள் உண்மையான முன்னேற்றத்தை அடைவார்கள். அறிவுரைக்கோவை - முற்றும் - பொருளடக்கம் பக்கம் 1. பொதுநிலைக் கழகம் 107 2. மக்கள் கடமை 124 3. தென்புலத்தார் யார்? 137 4. தனித்தமிழும் கலப்புத் தமிழும் 163 5. இந்திமொழிப் பயிற்சி ஏற்புடைத்தாகுமா? 179 6. நக்கீரனார் தெய்வப்புலமை மாட்சி 187 7. தமிழ்விடுதூது முகவுரை 213 8. சைவசமயத்தின் நெருக்கடியான நிலை 221 9. சைவசமயத்தின் தொன்மையும் தனிச்சிறப்பும் 249 10. உள்ளது போகாது இல்லது வராது 256 11. சைவமும் சைவர் நிலையும் 266 பின்னிணைப்பு அறிஞர் இராசமாணிக்கனார் குறிப்பு உரைமணிக்கோவை நூலில் வெளிவந்த `திருவள்ளுவர் எனும் தலைப்பு திருக்குறளாராய்ச்சி என்னும் (மறைமலையம்-10) தொகுப்பில் சேர்க்கப்பெற்றுள்ளது. `முனிமொழிப் பிரகாசிகை என்னும் தலைப்பு பாமணிக்கோவை (மறைமலையம்-11) தொகுப்பில் சேர்க்கப்பெற்றுள்ளது. 1. பொதுநிலைக் கழகம் தமிழ்நாட்டிலுள்ள தமிழ்மக்கள் தமக்கே உரிய பண்டைப் பேராசிரியரின் அருளுரைகளின் வழிநில்லாது, பிற்காலத்தில் இடையே புகுந்த புராணகதைகளின் வயப்பட்டுப், பல்வகைச் சாதிப் பிரிவுகளும், பல்வகைச் சமயப் பிரிவுகளும், பல்வேறு வழக்க வொழுக்கங்களும் உடையராய் ஒருவரோடொருவர் பெரிதும் மாறுகொண்டு, அன்பு அருள் ஒழுக்கங்களை முற்றும் மறந்து, கல்வியும் ஆராய்ச்சியுமில்லாதவர்களாய் மிகச் சீர்குலைந்து நிற்பாராயினர். தெய்வத் தொல்லாசிரியர்களாகிய தொல்காப்பியர், திருவள்ளுவர், நக்கீரர், மாணிக்கவாசகர், திருமூலர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், பட்டினத்தடிகள், மெய்கண்டதேவர் முதலாயினாரும், அவர்க்குப் பின் அப்பழைய மரபு பிழையாது தாயுமான அடிகளும், அவர்க்குப் பின் இக்காலத்தில் இராமலிங்க அடிகளுந் தோன்றி, எல்லா உலகத்துக்கும் எல்லா உயிர்க்கும் ஒரே முழுமுதற் கடவுள் தலைவராயிருந்து, அவற்றை அசைத்தும் அறிவித்தும் வரும் அருட்பெருஞ் செயலையும், அத்தலைவராகிய தந்தைக்கு எல்லா உயிர்களும் அருமைப் பிள்ளைகளாயிருக்கும் உண்மையையும் நெஞ்சங்கரைக்குஞ் செஞ் சொற் பாடல்களாற் பலகாலும் எடுத்து அறிவுறுத்தி, இடையிலே கலைந்து போன அன்பொழுக்க அருளொழுக்கங்களை மீண்டும் ஒன்று சேர்த்து நிலைபெறுத்துவாராயினர். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் நம் தவ ஆசிரியர் திருமூலரின் மெய்யுரையினைக் கைக்கொண்டு, ஒரே முழுமுதற் கடவுளை, அன்பினால் அகங்கரைந்து உருகி வணங்கும் வணக்கமும், அதனால் உயிர்களெல்லாம் அவன் அருமை மக்களே ஆவர் என்னும் உணர்ச்சியுங் கிளர்ந்து விளங்கினாலன்றி அன்பும் அருளும் இந்நிலவுலகில் நிலைபெறமாட்டா அன்றோ? இதுபற்றியே இராமலிங்க அடிகளார் சமரச சன்மார்க்க சங்கம் அல்லது பொதுநிலைக் கழகம் என்பதனை வகுத்து எல்லாத் தேயத்தார்க்கும் எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவாய் நின்று அருள்வெளியிலே ஆடல் புரியும் அம்பலவாணனாகிய ஒரு தனித்தலைமைக் கடவுளின் வழிபாட்டை வலியுறுத்தி, அவ்வாற்றாற் சாதிப் பிரிவு சமயப் பிரிவு சாதிச்செருக்கு சமயச் செருக்கு முதலிய பொல்லாங்குகளை அறவே ஒழித்து, மேலே காட்டிய தெய்வத் தொல்லசிரியரின் அருளொழுக்க முறைகளை எல்லா மக்களிடையும் பரவச் செய்தற்கு அரிய பெரிய ஏற்பாடுகளெல்லாஞ் செய்து வைத்து மறைந்தனர். ஆனால், அவர்கள் செய்து வைத்த அருமருந்தன்ன ஏற்பாடுகளுங்கூட, நாளடைவில் அறிவு அன்பு அருள் இல்லா நம் மக்களாற் பின்னும் நிலைகுலைக்கப்பட்டுச் சாதி வேற்றுமை சமய வேற்றுமைகளுக்கும், அவற்றால் வரும் போராட்டங்களுக்கும்இடனாக மாற்றப்பட்டு வருவதை வடலூர் செல்லும்அறிஞர் கண்டு வருந்தா நிற்கின்றனர். இங்ஙனமாக நம் தெய்வ ஆசிரியர்கள் நம் மக்கள் முன்னேற்றத்தின் பொருட்டுக் கரைகடந்த பேரருளாற் காலங்கடோறும் புதுக்கிவரும் பழைய தெய்வக்கோட்பாடுகள் இனியாயினும் சிதைவுறாமல் உரம்பெற்று நின்று நம்மனோரை முன்னேற்ற வேண்டும் என்னும் இரக்க எண்ணங்கொண்டே ஆசிரியர் மறைமலையடிகள் இந்நாகரிக காலத்திற்கேற்ற நாகரிக முறையில் அத்தெய்வ ஆசிரியர் கோட்பாடுகளைப் பின்னும் புதுக்கி இக்கழக வாயிலாக எங்கும் பரப்பி வருகின்றார்கள். கடவுள் உணர்ச்சியின் இன்றியமையாமை ஈ எறும்பு முதல் மக்கள் தேவர் ஈறான எல்லா உயிர்களின் நெஞ்சத் தாமரையினுள் விளங்கா நின்ற அருள்வெளியிலும், ஞாயிறு திங்கள் முதலான எண்ணிறந்த உலகங்களையெல்லாந் தன்னகத்து அடக்கி விளங்கும் நுண்ணிய அறிவு வெளியாகிய சிற்றம்பலத்திலும் நின்று எல்லாம் வல்ல இறைவன் இடையறாது தான் ஆடி எல்லாவற்றையும் ஆட்டுவிக்கின்றான். இவ்வாட்டம் எதன் பொருட்டு நடைபெறுகின்றதெனின், சிற்றுயிர்களாகிய நம் அறிவைக் கவிந்திருக்கும் ஆணவ வல்லிருளை நீக்கி, அம்முகத்தால் நமக்குப் பேரறிவையும் பேரின்பத்தையும் வழங்குதற் பொருட்டே அது நடைபெறா நிற்கின்றது. இங்ஙனம் நாம் கேளாதிருக்கையிலேயும் எவராலும் படைக்க இயலாத மிக வியப்பான இவ்வுடம்புகளையும், நாம் இவ்வுடம்புகளோடு இணைந்திருந்து உலவிப் பலவகையான இன்பங்களை நுகருதற்கு இவ்வுலகத்தையும், இதிற் பலபல பண்டங்களையும் நாம் பிறவி எடுப்பதற்கு முன்னமே அமைத்துவைத்து, இப்பிறவியிலேயும்இனி வரும் பிறவிகளிலேயும் நம்முயிர்க்கு ஓர் ஒப்பற்ற துணைவனாயிருந்து நம்மை ஒவ்வொரு நொடியும் ஓவாது பாதுகாத்துவரும் ஓயாத அருளியக்கத்தையே அம்பலவாணன் தன் இன்பக் கூத்தானது அறிவுறுத்துகின்றது. இதன் உண்மை இன்னும் விரிவாக எமது தலைமைப் பேருரையின்கட் காணப்படும். இங்ஙனம் எல்லாம் வல்ல இறைவன்றன் அருளியக்கத்தை எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளும்படி தெரிவிக்கும் அம்பலவாணன் திருவுருவ வழிபாட்டை விடச் சிறந்ததும், சிற்றுயிர்களாகிய நமக்கு இம்மை மறுமைக்குரிய எல்லா நலங்களையும் எளிதிற் பயப்பதும் வேறு ஏதுமே இல்லை. இறைவனை அருளியக்க நிலையில் வைத்து வழிபடும் இஃது எந்தச் சமயத்தார்க்கேனும் எந்தச் சாதியார்க்கேனும் எந்தத் தேயத்தார்க்கேனும் தனி உரிமையாக நிற்பதன்று. உண்மையறிவும் உண்மையன்பு முடையாரெவராயினும்,அவர்க்கெல்லாம்இவ்வழிபாடுமெய்யுரிமையுடையதாகும். ஆதலினாற்றான், முனிவர்களுந் தேவர்களுஞ் சித்தர்களும் ஞானிகளும் யோகிகளும் சமயாசிரியர்களும் அரசர்களுங் கற்வர்களும் மற்றவர்களுமெல்லாம் முழுமுதற் கடவுளை இந்த நிலையில் வைத்தே வழிபட்டுத் தாம் தாம் விரும்பிய இம்மை மறுமை நலங் களைப் பெற்று வந்திருக்கின்றார்கள். இவ்வரும்பேருண்மை, விண்ணவர் இந்திரன் பிரமன் நாரதாதி விளங்குசத்த ரிஷிகள்கன வீணை வல்லோர் எண்ணரிய சித்தர்மனு வாதி வேந்தர் இருக்காதி மறைமுனிவ ரெல்லாம் இந்தக் கண்ணகன் ஞாலம் மதிக்கத் தானேஉள்ளங் கையில் நெல்லிக் கனிபோலக் காட்சியாகத் திண்ணிய நல்லறிவால் இச்சமயத் தன்றோ செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தா ரென்றும் என்று தாயுமான அடிகள் அருளிச் செய்தனர். இன்னும், இவ்வருள் வடிவத்தினைப் பண்டை நாளிலிருந்த எல்லாச் சமயத்தாரும் ஏதொரு வேறுபாடுமின்றி வந்து வழிபட்டு வந்தனர் என்பது பின்னுமவர், சன்மார்க்க ஞானமதின் பொருளும் வீறு சமயசங்கே தப்பொருளுந் தானொன் றாகப் பன்மார்க்க நெறியினிலுங் கண்ட தில்லை பகர்வரிய தில்லைமன்றுட் பார்த்த போதுஅங்கு என்மார்க்க மிருக்குது எல்லாம் வெளியேயென்ன எச்சமயத் தவர்களும்வந்து இறைஞ்சா நிற்பர் என்று அருளிச்செய்தவாற்றால் இனிது விளங்கா நிற்கும். அஃதுண்மையேயாயினும், கடவுளானவர் நாம் நமது முயற்சியாற் சீர்திருத்தி மேலேறுதற்கு வேண்டும் இவ்வுடம்பு முதலிய கருவிகளையும் இவ்வுலகத்துப் பல பண்டங்களையும் அமைத்துக் கொடுத்திருத்தலால், அவற்றைக்கொண்டு நாம் நமது முயற்சியைப் பெருகச் செய்து மேலேறுதலே வேண்டற்பாலது; அதனை விடுத்து எந்நேரமுங் கடவுளே கடவுளேயென்று பேசுவதும் எழுதுவதும் அதனை வழிபடுவதும் ஆகிய செயல்களெல்லாம் பயனில் முயற்சிகளேயாகு மாதலால், அவை விடற்பாலவெனின், நன்று சொன்னாய்; நாம் ஒரு நன்முயற்சியினைச் செய்து மேலேறுதற்கு, அறிவும் ஆற்றலும் வேண்டுமன்றோ? அறிவும் ஆற்றலும் இல்லாதவற்கு எத்தகைய சிறு முயற்சியுங் கைகூடாது. இனி, நாமோ முன்நாட்களில் முனனேரங்களில் நடந்தவைகளை மறந்துபோகின்றோம்; இப்போது நம்மைச் சூழ நடப்பவைகளையும் கண்ணெதிரே கண்டாலன்றி அவற்றின் உண்மையை அறியமாட்டாதவர்களா யிருக்கின்றோம்; இங்ஙனமே அடுத்துவரும் நேரங்களிலும் அடுத்துவரும் நாட்களிலும் நடக்கப் போவனவற்றை அறிய மாட்டாதவர்களா யிருக்கின்றோம். இவ்வளவு சிறுகிய அறிவுடையரா யிருத்தலொடு, பசி காமம் சினம் துயரம் கலக்கம் பகை முதலிய இழிகுணங்கள் தோன்றுங் காலங்களிற் சிறிதாயிருக்கும் இச்சிற்றறிவும் மங்கி மறைந்து போகின்றது. அதுவேயுமன்றிப், பசியெடுத்த காலங்களில் உணவு கிடையாவிட்டாலும், நாவறண்ட நேரங்களில் நீர் அருந்தாவிட்டாலும் எத்துணை வலிமை யுடையவர்களும் இளைத்துக் களைத்துக் கண் பஞ்சடைந்து காது செவிடாகி முயற்சி அவிந்து அடங்கிப் போதலை நாம் பார்த்து வருகின்றோம். இத்தனைக் குறைந்த வலிமையுடைய நாம் எந்த முயற்சியைத்தான் எடுத்து நிறைவேற்ற மாட்டுவோம்? இங்ஙனம் நாம் சிற்றறிவுஞ் சிறுகிய ஆற்றலும் உடையேமாய் இருத்தலினாலன்றோ, நாம் எடுக்கும் எத்தகைய சிறு முயற்சிக்கும் பிறருதவியை நாடவேண்டியவர் களாயிருக்கின்றோம். மனைவி கணவனுதவியையும், கணவன் மனைவியுதவியையும், மக்கள் பெற்றோருதவியையும், குடிகள் அரசனுதவியையும், அறிவிலார் அறிவுடையாருதவியையும், மாணாக்கன் ஆசிரியனுதவியையும், தொழிலாளி தலைவனுதவியையும், இன்றியமையாது வேண்டி நிற்க, உலகியலொழுக்கம் நடைபெறுவதனை உற்று நோக்குங்கால் ஒருவன் தானாகவே ஒரு முயற்சியைத் தனிமுடிக்கமாட்டுவா னென்பது பெரிதும் பிழைபடுவதொன்றாம். அற்றேல், மக்களாயினார் ஒருவர் ஒருவர்க்கு உதவியாய் நின்றே தாம் எண்ணிய முயற்சிகளை இனிது முடிக்கக் காண்டலின், இதுவே அமையும்; இதனின் வேறாகக் கடவுளை வணங்குதலும் வழிபடுதலும் எற்றுக்கு? என்றால் மக்கள் ஒவ்வொருவருஞ் சிற்றறிவுஞ் சிறுகிய ஆற்றலும் உடையராயிருத்தலால், இவர் தாமே ஒருவர்க்கொருவர் உதவியாய் நின்று, தாம் எண்ணிய முயற்சியை முடித்துவிடக்கூடும் என நினைப்பது பெரும் பிசகு, நமக்குத் துணையாய், உதவியாய் நிற்பரென நம்மால் நம்பப்பட்ட வர்கள், நோய்கொண்டமையாலோ நம்மொடு மாறுபட்டமையாலோ, அல்லது பிறர் வயப்படுதலாலோ, நமக்கு உதவியுந் துணையுமாகாமல் நமது முயற்சியினைப் பாழ்படுத்துதலுங் கண்கூடாய்க் காண்டுமல்லமோ? மேலுஞ், சடுதியிலிறத்தலுஞ் சடுதியில் நோய்வாய்ப் படுதலும், பிறத்தலும் ஆகிய நிகழ்ச்சிகள் தம் அறிவாற்றலை முற்றும் கடந்து நிகழ்தல் எல்லராலுந் தெளியப்பட்டுக் கிடத்தலின், நம்மவர் தாமே தம்முள் ஒருவருக்கொருவர் உதவியாய் நின்று தாம் எடுத்த முயற்சிகளை நன்கு முடிக்கமாட்டு வாரென்பதும் போலிப் பொய்யுரையேயாம். எனவே, சிற்றுயிர்களாகிய நமக்குள்ளே அறியாமையும், மறதி சினம் காமம் பகை முதலிய இழிகுணங்களும், இளைப்புக் களைப்புகளும் இல்லாத முற்றறிவும் முழுமுதலாற்றலும் ஒருங்குடைய, ஒரு பெருந் தனித் தலைமைக் கடவுளின் உதவி ஒன்று மட்டுமே நமக்கு எக்காலத்தும் எந்நேரத்தும் எவ்விடத்தும் மாறாத பேருதவியாய் நிற்பதென்பதும், அக்கடவுளின் துணை ஒன்றுமே எஞ்ஞான்றும் மாறாத பெருந்துணையாய் நிற்பதென்பதும் நாம் தெளிதல் வேண்டும். அத்துணைப் பேருதவியும் அத்துணைப் பெருந்துணையுமாய் நிற்கும் முழுமுதற் கடவுள், ஒரு நொடிப் பொழுதும் எம்மை விட்டகலானாய், எமக்கு உள்ளும் புறம்புமாய் நிற்கின்றான் என்னும்பெரு நம்பிக்கையும் பேருறுதியும் வந்தாலல்லாமல், எவனும்எந்த முயற்சியையும் அயர்வின்றி எடுத்து முடிக்கமாட்டுவானல்லன். ஆதலால், எத்தகைய முயற்சிக்கும், எத்தகைய நல்லெண்ணத்துக்கும், எத்தகைய நல்லறிவு நிகழ்ச்சிக்கும், அடிப்படையாய் நிற்கற்பாலது பேரறிவும் பேராற்றலும் உடைய ஒரு முழுமுதற் கடவுளைப் பற்றிய நன்னம்பிக்கை யேயாம், அந்நன்னம்பிக்கையுடையார்க்கு, அவரதுள்ளம் மேன்மேல் அறிவாலும் முயற்சியாலுங் கிளர்ந்தெழுமாதலின், அவர் முயற்சிக்குத் தடைசெய்யத் தருவது ஏதுமே இன்றாம். சமணர்கள் இழைத்த கொடுந் தீங்குகட்கெல்லாஞ் சிறிதும் அஞ்சாது நின்று அவற்றைப் புறங்கண்ட அப்பர் சம்பந்தர் வரலாறுகளும், ஏனைச் சமயக் குரவர்கள் வரலாறுகளும், எஞ்ஞான்றும் அரும் பெரு முயற்சிகளை முடிக்கும் ஏனை அறிஞரின் வரலாறுகளும் யாங் கூறும் உண்மையினை நிலை நிறுத்துதற்குப் போதிய சான்றுகளாம். ஆகவே எத்தகைய முயற்சியைச் செய்தாலும் முழுமுதற் கடவுள் உணர்ச்சியோடு அதனைச் செய்தலே, அதனை நிறைவேற்றிப் புகழ் புண்ணியங்களைப் பெறுதற்கு ஏதுவாம் என்று தெளிக. இனி, மக்கள் முதலிய சிற்றுயிர்களுக்குப் பிறவி வருவதன் நோக்கம் இன்னதென்றாராய்ந்து அதற்கேற்ப நம்முடைய முயற்சிகளைச் செய்தால் மட்டும் நாம் சிறந்த பயனை அடையலாம். பிறவி எடுக்கும் உயிர்கள் தம்முடைய முயற்சியினாலேயே இப்பிறவிகளை அமைத்துக் கொள் கின்றார்கள் என்று எவருமே சொல்லத் துணியார். தம் முடைய முயற்சியினாலேயே இப்பிறவிகளை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் மக்கட்கிருந்தால் தமது விருப்பத்துக்கு மாறாகத் தாம் ஏன் இறந்து போகின்றார்கள்? இறந்துபோவதில் எவர்க்கும் விருப்பம் இல்லாமையோடு இப்பிறவியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்னும் பேரவாவும் பெரு முயற்சியும் எல்லாரிடத்துங் காணப்படுகின்றனவல்லவோ? அப்படியிருந்தும், எல்லாரும் ஏன் இறந்து போகின்றனர்? மக்கள் எண்ணத்துக்கு மாறாக நிகழும் இந்நிகழ்ச்சியை உற்று நோக்குங்காற், பிறவியை வருவிப்பதும், அதனினின்றும் உயிர்களை விடுவிப்பதும் ஆகிய அரும் பெருஞ்செயல்கள் இச்சிற்றுயிர்களின் அறிவாற்றலுக்கு அடங்காமல், அவற்றைக் கடந்து நிற்கும் முழுமுதற் கடவுளின் பேரறிவு பேராற்றல்களின்வழி நடைபெறு கின்றன வென்பது நன்கு புலப்படவில்லையா? ஆகவே, பிறவிகளைத் தரும் முதல்வன் அப்பிறவிகளை உயிர்களுக்கு நிலையாக வையாமல், அடுத்தடுத்து அவற்றை மாற்றிக் கொண்டு செல்வதன் நோக்கம்; இப்பிறவியே பெரும் பயன் அளிப்பதன்று; இனி அடையப் போகும் பெரும் பயனுக்கு இப்பிறவி ஒரு பெருங்கருவியேயாம் என்பதன்றோ? ஆகவே, இனி அடையப்போகும் பெரும் பயனுக்கு ஏற்றபடி, இப் பிறவியின் முயற்சிகளை ஒழுங்கு செய்தல் வேண்டுமே யல்லாமல், இதனையே நிலையாக நினைத்துச் செய்வனவெல்லாம் பழுதாய்ப் போகும். ஆதலால், கடவுளின் திருவுளக் கருத்தையும் சிற்றுயிர்களாகிய நம்முடைய நிலையையும் ஆராய்ந்து இப்பிறவியைப் புனிதமாக்கிக்கொண்டு, இதிற் செம்மையாக நீண்ட வாழ்க்கை செலுத்துவதொடு மறுமை வாழ்க்கைக்கு வேண்டுந் தவ முயற்சிகளையுந் தவ இயல்களையும் விடாப்பிடியாய்க் கைக்கொண்டு நாம் ஒழுகல் வேண்டும். இவ் வுயர்ந்த உண்மைகளைத் தகுதிவாய்ந்தாரெல்லார்க்கும் அறிவிக்கும் முதற்பெருநோக்கங் கொண்டே எம்மால் இப்பொதுநிலைக் கழகம் நிலை பெறுத்தப்படுவதாயிற்று. அன்பு அருள் ஒழுக்கம் எல்லாம் வல்ல இறைவன் அறிவும் அன்பும் அருளுமே உருவாய்க் கொண்டு விளங்குகின்றானென்பது, அவன் அமைத்த அமைப்புகளில் நன்கு புலனாதலால், மக்களாகிய நாமும் அவனைப் போற் பேரறிவும் பேரன்பும் பேரருளும் உடையராகி, அவனது பேரின்ப நிலையை அடையும் வரையில் நமக்குப் பல பிறவிகள் வருமென்பது திண்ணமாய்த் தெரிகின்றது. அப்பிறவிகளைக் குறைத்து இறைவனுடைய பேரின்ப நிலையை நாம் விரைவிற் பெறல்வேண்டுமானால், நாம் நம் அறிவையும் அன்பையும் அருளையும் அளவின்றிப் பெருகச் செய்தல்வேண்டும். எல்லையில்லாத அன்புடைய இறைவனை இடைவிடாது நம் நினைவில் வைத்தால் மட்டுமே, நாமும் நமது நலனை மறந்து எல்லா உயிர்களிடத்தும் எல்லையில்லாத அன்பும் அருளும் உடையராக நடத்தல்கூடும். இவ்வாற்றாற் கடவுளிடத்துப் பேரன்புபூண்டு ஒழுகுவதும், எல்லா உயிர்களிடத்தும் அன்பினால் அகங்கரைத்து ஒழுகுவதும் ஒன்றைவிட்டொன்று பிரியாத அத்துணை ஒருமைப்பாடுடையவாகும். மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களிடத்து இரக்கம்பூண்டு ஒழுகுதலாலும், நம் போன்ற மக்களிடத்து ஏதொரு வேற்றுமையுங் காணாது அவர்பால் அன்பும் அருளும் வைத்து, அவர்க்கு ஆவன செய்து, அவரை அறிவிலும் அன்பிலும் மேலேற்றுதலாலுமே நமக்கு அன்புமருளும் அளவுபடாது பெருகும். உயிர்களிடத்து இரக்கம் காட்டுத லென்பது உயிர்களைக் கொல்லாமையும், அவற்றின் ஊனை உண்ணாமையும் ஆகும். உயிர்களைக் கொல்வோரும் அவற்றின் ஊனை உண்போரும் கொடிய வன்னெஞ்ச முடைய ராதலால் அவர்க்கு அன்பும் அருளும் உண்டாகா. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் (குறள் 251) என்று தெய்வத் திருவள்ளுவர் கூறுதலும், உயிர்க்கொலையும் புலைப்புசிப்பு முடையவர்க ளெல்லாம் உறவினத்தா ரல்லர் அவர் பிறவினத்தார் என்று இராமலிங்க அடிகள் அருளிச் செய்தலும் காண்க. அங்ஙனமே நம்போன்ற மக்களிடத்துச் சாதி வேற்றுமை சமய வேற்றுமை பாராட்டி, அவர்பால் அருவருப்புக் கொள்வார்க்கு அன்பு அருள்கள் உண்டாதல் சிறிது மில்லை யாதலால், அவரும் பொதுநிலைக் கழகமாகிய சமரச சன் மார்க்கத்துக்குப் புறம்பாகுவர். சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி என்றும், சமய வாதிகள் தத்த மதங்களில் அமைவ தாக அரற்றி மலைந்தனர் என்றும் புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயந் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்க என்றும் மாணிக்கவாசகப் பெருமானும், அவரை யொப்பவே, சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அலைதல் அழகலவே என்று இராமலிங்க அடிகளும் மெய்யறிவு கூறியிருத்தல் நினைவிற் பதிக்கற்பாலதாகும். இவ்வாறு சிற்றுயிர்கள் பாற் கொலை புலைதவிர்ந்த இரக்கவொழுக்கமும், நம் போன்ற மக்கள்பாற் சாதி வேற்றுமை சமய வேற்றுமை தவிர்த்த அன்பொழுக்கமும் உடையாரே, உண்மை அருள் உடைய ராய், இறைவனருளை முற்றும் பெறுதற்குரியராதலின், அவரெல்லாஞ் சமரச சன்மார்க்க சங்கத்தராவரென்றும், அவர் மட்டுமே ஓர் உயர் குலத்தவராவ ரென்றும் நன்கு விளக்கி, அருளுடையா ரெல்லாருஞ் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே யாதலினால் அவருடனே கூடித் தெருளுடைய அருள்நெறியிற் களித்து விளையாடிச் செழித்திடுக வாழ்கஎனச் செப்பிய சற்குருவே என்றும், கொலைபுரிவார் தவிரமற்றை யெல்லாரும் நினது குலத்தாரே நீ யெனது குலத்துமுதல் மகனே மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம் வளரவளர்ந் திருக்கவென வாழ்த்தியவென் குருவே என்றும், சாதிகுலம் சமயமெலாந் தவிர்த்தெனைமே லேற்றித் தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே என்றும் இராமலிங்க அடிகளார் அருளிச் செய்திருத்தல் காண்க. ஆதலால், இப்பொதுநிலைக் கழகத்தின் இரண்டாம் பெருநோக்கம் கொலை, புலை, சாதி வேற்றுமை சமய வேற்றுமை தவிர்ந்த அன்பொழுக்கத்தை யாண்டும் பரப்பு தலும், அங்ஙனம் பரப்புதற்கு உதவியாகத் தகுதிவாய்ந்த மாணவரைப் பழக்கி அவரை அந்நிலையில் நிறுத்துதலுமாகும். தமிழ்ப் பயிற்சியின் முதன்மை இனி, மேலே காட்டிய பொதுநிலைக் கழகக் கோட்பாடுகளை எளிதிலே எங்கும் பரவச் செய்தற்குத் தமிழ்மொழிப் பயிற்சியே முதற்பெருங் கருவியாக எடுக்கப்படும். ஏனென்றால், மிகப் பழைய நாகரிக மொழிகளிற் பண்டைக் காலந்தொட்டு இன்றைக்காலம் வரையில் உயிரோடு உலவி மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வருவது தமிழ்மொழி ஒன்றுமேயாகும். பண்டை நாகரிக மொழிகளிற் சிறந்த ஆரியம், கிரேக்கம், இலத்தீன், ஈபுரு முதலான மொழிக ளெல்லாம் எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன்னமே மக்களால் வழங்கப்படாமல் இறந்தொழியவுந், தமிழ்மொழி ஒன்று மட்டுமே அன்று தொட்டு இன்று வரையில் இளமை குன்றாது வளமையிற் றிகழ்வதை உணர்ந்து பார்க்குங்கால், இது தெய்வத் தன்மை வாய்ந்த மொழி என்பது நன்கு புல னாகின்றதன்றோ? தமிழுக்கு இதனினும் மிக்க சிறப்பு வேறு யாது வேண்டும்? மேலும், இறந்துபட்ட ஆரிய மொழிகளிற் பொய்யும் புளுகும் மலிந்த புராண கதைகளும்; கடவுளின் முழுமுதற்றன்மையைக் குறைத்துக், குறைபாடுடைய மக்கள் சிலரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி, மக்கள் அவ்வாற்றால் முழுமுதற் கடவுளைச் சாராது பிறவிக்கடலிற் கிடந்து உழலச்செய்யும் பொருந்தாப் பொய்க்கதைகளும்; ஒரு பிறப்பினரான மக்களில் ஒரு சிறுபாலாரை உயர்த்தி மற்றைப் பெரும்பாலாரைத் தாழ்த்தி அப் பெரும்பாலார்க்குப் பெருந்தீங்கு பயக்குங் கொடிய முறைகளை வகுத்த மிருதி நூல்களும்; வாயற்ற ஏழை உயிர்களைக் கணக்கின்றிக் கொலைபுரிந்துந் கட்குடித்துஞ் சிறுதெய்வ வெறியாட்டெடுப்பிக்கும் வேள்வி நூல்களும்; அச் சிறு தெய்வங்களுள் ஒன்றினொன்றை உயர்த்தி அவை தம்மை வணங்கு வார்க்குட் பெருங்கலகத்தை மூட்டுஞ் சமய வேற்றுமைப் புராணங்களும் நிறைந்திருத்தல் போலாது,இயற்கைத் தோற்ற அழகுகளையும், மக்களின் அன்பொழுக்க அருளொழுக்க விழுப்பங்களையும், உலகியல் நுட்பங்களையும், ஒரு தெய்வ வழிபாட்டில் உள்ளத்தை ஈடுபடுத்தி உருக்குந் தெள்ளமிழ்தப் பாக்களையும், கடவுள் நிலை உயிர்நிலை உயிரைப் பொதிந்த மலநிலை என்னுமிவற்றை ஆழ்ந்து ஆழ்ந்து அறிவு நுணுகி ஆராயும் ஆராய்ச்சிப் பெரு நூல்களையும் உடைய தமிழ்மொழி தெய்வத் தன்மை யுடையதென்பதிற் சிறிதும் ஐயமில்லையன்றோ? மேலும், உலகிற்கெல்லாம் ஒரு தானேயாய் விளங்கா நின்ற முழுமுதல்வனை நேரே காணும் பேறு வாய்ந்த மாணிக்கர், சம்பந்தர் முதலான அருட் குரவர்களெல்லாரும் இதன் தெய்வத்தன்மை உணர்ந்தன்றோ, இறைவனை வழுத்துதற்கும் வாழ்த்துதற்கும் இத்தமிழ் மொழியையே எடுத்து வழங்குவாராயினர்? இதுவேயுமன்றி, மற்றை மொழிகளெல்லாஞ் சினம் வருத்தந் துன்பம் வந்தாற் பிறக்கும் உரத்த ஓசைகளும் குறிப்போசைகளும் நிறைந்திருத்தல் போலாது, மகிழ்ச்சி மிகுந்த அமைதிக் காலத்திற் பிறக்கும் இனிய மெல்லோசைகளே செந்தமிழ்மொழியில் நிரம்பியிருத்தலால், அன்பினால் அகங்குழைந்துருகி அளவளாவுவார் தம் இம்மையின்ப வாழ்க்கைக்கும், இறைவனை அன்பினாற் குழைந்து குழைந்துருகித் தொழுது பாடுவார் தம் மறுமையின்ப வாழ்க்கைக்குத் தமிழ்மொழி யொன்றுமே இசைந்த தன் கருவியாகும்; இவ்வுண்மை கண்டன்றோ ஆசிரியர் இராமலிங்க வள்ளலார், இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணு கின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசு உடையதாய்ப் பாடுதற்குந் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய்ச் சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து, அத்தென் மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்! என்று இறைவனை நோக்கி விண்ணப்பித்தருளினார். ஆகவே இப்பொதுநிலைக் கழகத்தின் மூன்றாம் பெரு நோக்கம் தனித்தமிழ்மொழிப் பயிற்சியையும், தனித்தமிழ் நூற் பயிற்சியையும் எங்கும் பரவச் செய்தலும் மாணாக்கர்க்குப் பயிற்றுதலுமாகும். இந்நோக்கத்தை யடுத்து இக்கால நாகரிக உணர்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்படும் ஆங்கில மொழி நூற் பயிற்சியையும் ஆரிய மொழி நூற் பயிற்சியையும் உடன் சேர்த்துப் பயிற்றுதலும் இக்கழக முயற்சிக்கு உரியதாகும். சென்றகாலத்தில் யாம் ஆற்றிய தொண்டு இனி, யாம் பொதுநிலைக் கழகம் நிலைபெறுத்துதற்கு முன்னமே சைவ சித்தாந்த மகா சமாரசமெனப் பெயரிய பெருங் கழகமொன்றனை 1905ஆம் ஆண்டு தோற்றுவித்து அதனை மிகவுந் திறம்பட நடாத்தி வந்தேம். என்றாலும், சைவ சித்தாந்தத்தின் மெய்ந் நிலையுணராத குறுகிய நோக்க முடைய சைவர்கள், சைவத்தின் சிறந்த உண்மைகளைப் புராணப் பொய்க் கதைகளொடு கலப்பித்துச் சாதி வேற்றுமை சமய வேற்றுமைகளை மிகுதிப்படுத்துதற்கு இடமாய் அவை தம்மைத் திரிபுபடுத்த முனைந்ததோடு எமது விரிந்த நோக்கத்துக்கு மாறாகச் சமாசத்தையும் வேறு படுத்தப் புகுந்தமையால், யாம் அதனொடு கொண்ட எமது தொடர்பை அறுத்து, எமது விரிந்த நோக்கத்திற்கு இசையப் பொதுநிலைக் கழகம் என்பதனை நிறுவி, ஆசிரியர் மாணாக்கர் முறையில் வைத்துச் சைவ சித்தாந்தப் பொது நிலை (சமரச) உண்மைகளை எங்கும் பரவச் செய்தேம். இவ்இரண்டு கழகங்களுந் துவங்குதற்கு முன்னமே 1902ஆம் ஆண்டில் அறிவுக்கடல் (ஞானசாகரம்) எனப் பெயரிய செந்தமிழ் வெளியீட்டைத் துவங்கிச், சைவ சித்தாந்த மகா சமாசம் நிறுவிய காலையில் அதனைச் சமாச வெளியீடாகவும், அச்சமாசத் தொடர்புவிட்டுப் பொதுநிலைக் கழகந் துவங்கிய காலையில் அதனைக் கழக வெளியீடாகவும் நடத்தி வரலாயினேம். இவ் வெளிவீட்டின் வாயிலாகச் செந்தமிழ் நலங்கனிந்த அரிய பெரிய தமிழ் நூல்களும், உயர்ந்த சைவசித்தாந்த உண்மைகள் பொதிந்த அறிவுப் பெருநூல்களும் எம்மால் இதுகாறும் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஞானசாகரந் துவங்குதற்கு முன்னமே, எமது பதி னாறாமாண்டில் நாகபட்டினத்தில் முதன்முதல் நிலை பெறுத்திய இந்து மதாபிமான சங்கத்தில் விரிவுரைகள் நிகழ்த்தத் தொடங்கியது முதல் இதுகாறும் இவ்விந்திய நாட்டிலும் இலங்கையிலும் யாம் நிகழ்த்திய விரிவுரைகள் ஆயிரக் கணக்காகும். சமயத் துறையிலுந் தமிழ்மொழித் துறையிலும் மக்கள் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத பிறதுறைகள் பலவற்றிலும் யாம் இதுகாறும் எடுத்துப் பேசியிருக்கும் அரும்பெரும் பொருள்கள் அளவில்லாதனவாகும். யாம் ஆற்றிய விரிவுரைகளைக் கேட்டு அறிவு விளங்கப் பெற்றார். தொகையும் அளவிடப்படாததாகும், யாம் ஆற்றிய விரிவுரைகளைக் கேட்டு அறிவு விளங்கப் பெற்றார். தொகையும் அளவிடப்படாததாகும், யாம் சென்ற முப்பத்தெட்டு ஆண்டுகளாக நாள் வெளியீடுகள், கிழமை வெளியீடுகள், திங்கள் வெளியீடுகளில் வரைந் திருக்குங் கட்டுரைகளாலும், யாம் பெரிதாராய்ந்து இதுகாறும் வெளிப்படுத்தி யிருக்கும் முப்பத்திரண்டு அரியபெரிய நூல்களாலும் நல்லறிவு பெற்று நம் நாட்டவர் பலதுறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருதல் எவரும் அறிந்ததேயாம். அம்பலவாணர் திருக்கோயில் இனி, முழுமுதற் கடவுள் நிலையை மனத்தளவாய் வைத்து ஆராய்தலாலுஞ், சொல்லளவாய் வைத்துப் பேசுதலாலுமே மக்கள் அக்கடவுளின் பேரின்பப் பேற்றை அடைதல் இயலாது. இவ்வுடம்பையும் இவ்வுடம்பிலுள்ள கண் கால் கை முதலான உறுப்புகளையும் படைத்துக் கொடுத்த முதல்வனுக்கு, அவ்வுடம்பையும் அவ்வுறுப்பு களையும் பயன்படுத்தி, நெஞ்சம் நெக்கு நெக்குருகுதலால் மட்டுமே அவன் திருவருட்பேற்றிற்கு உரியராகலாம். அற்றேற், காணவுங் கருதவும்படாத இறைவனுக்கு நம்முடம்பைப் பயன்படுத்துதல் யாங்ஙனங் கூடுமெனின், சிற்றறிவுஞ் சிறுதொழிலு முடைய மக்களாகிய நம் மனோரின் மனம் ஓர் உருவத்தையே பற்றி நிற்குமல்லது அருவத்தைப் பற்றி நிற்கவல்லதன்று. வடிவம் இல்லாத வெறும் வெளியை எவராவது நினைவில் வைக்கக் கூடுமா? நம் நினைவுகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்ப்போ மானால் ஒவ்வொரு நினைவும் ஒவ்வொரு வடிவத்தையே பற்றிக் கொண்டு நிற்கக் காணலாம். இவ்வாறு வடிவங்களைப்பற்றிய நம்முடைய நினைவின் தொகுதிகளே நமக்கு அறிவாயும் அறிவு வளர்ச்சியாயும் அமைகின்றன. ஏதொரு வடிவத்தையும் அறியவும் நினைக்கவும் மாட்டாத சிறிய கைக் குழந்தைக்கு அறிவு சிறிதுமில்லாமை எவரும் அறிந்ததன்றோ? ஆதலாற், காணவுங் கருதவும் படாத இறைவனை நாம் காணவுங் கருதவுந் தக்க நிலையில் வைத்து வழிபட்டு வந்தாலன்றி, அவனை அறிவதும் அவனை நினைப்பதும், அவன்பால் அன்புபூண்டு ஒழுகுவதும் நம்மனோர்க்குச் சிறிதும் இயலா. ஆகவே, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை நம்போன்ற ஓர் அழகிய வடிவத்தில் வைத்து வழிபடுலே சிறந்த முறையாகும். என்றாலும், அங்ஙனம் நாம் கடவுளின் திரு அடையாளமாக அமைக்கும்வடிவம், அக் கடவுள் இலக்கணத்தை உணர்த்துவதாய் அக்கடவுள் நிலைக்கு மாறுபடாததாய் இருக்கவேண்டும். கடவுளிலக்கணத்தை உணர்த்தாதனவுங் கடவுள் நிலைக்கு மாறாவனவும் ஆகிய வடிவங்களை வைத்து வழிபட்டால் அவ்வழிபாடு கடவுளைச் சார்ந்ததாகாது. ஆனதனாற்றான், பண்டைக் காலத்திருந்த நம் ஆசிரியர் முதற் பின்றைக்காலத்து வந்த இராமலிங்க அடிகள் ஈறாகிய எல்லாரும், முழுமுதற் கடவுள் எல்லா உயிர்களி னகத்தும் எல்லாப் பொருள்களி னகத்தும் அவற்றின் புறத்தும் நிறைந்திருந்து இடையறாது ஆடி, அவற்றை யெல்லாம் ஆட்டும் இன்பக் கூத்தை நாம் நினைவு கூர்தற்பொருட்டு, அவன் ஆடும் நிலையில் ஒரு திருவுருவத்தை அமைத்து அதனை வழிபட்டு வருவராயினர். அவ்வழிபாடு இறைவன் அடையாளத்திலே செய்யப்படினும், அஃது உயிர்களை மேலேற்றும் பொருட்டு இறைவன் இயற்றும் இன்ப அருட்கூத்தின் இயல்பைப் புலப்படுத்தி நம் அறிவையும் அன்பையும் அவன்பாற்பதியவைத்தலின், அதுவே முழுமுதற் கடவுளை வழிபடுஞ் சிறந்த முறையாகும். அம்முறையைப் பின்பற்றியே எல்லாச் சாதியாரும். எல்லாச் சமயத்தாரும் ஏதொரு வேற்றுமையுமின்றி வழிபட்டு உய்யும் பொருட்டு அம்பலவாணர் திருவுருவம் வைத்த கோயிலொன்று எம்மால் அமைக்கப்படலாயிற்று. மணிமொழி நூல்நிலையம் இனிக், கடவுள்நிலையை யுணர்ந்து அவன்றிருவளைப் பெறுதற்கும்; அவனாற் படைக்கப்பட்டிருக்கும் உலகத்தினியல்பையும், இவ்வுலகத்தில் இருக்கும் பலவகைப் பொருள்களினியல்பையும், இவ்வுலகத்திருந்து இங்குள்ள பொருள் களைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிந்து சிலகாலிருந்து சில காலில் மறைந்துபோகும் உயிர்களாகிய நம்மியல்பையும், நம்மிற் பொதிந்திருக்கின்ற மும்மலங்களி னியல்பையும், இம் மலங்களினின்றும் விடுபட்டு நாமடைதற்குரிய பேரின்ப வீட்டினியல்பையும் நாம் நன்குணர்ந்து நம் அறிவை வளர்த்து இன்பத்தைப் பெறுதற்கும் இவ் வியல்புகளையெல்லாம் நமக்கு நன்கு அறிவுறுத்தும் அறிவுடையோர் நூல்களினுதவி நமக்கு இன்றியமையாது வேண்டப்படுவதாயிருக்கின்றது. நூல்களைக் கல்லாதவ ரறிவு எவ்வளவு சிறந்ததாகக் காணப்படினும், அவர் சொல் கேட்கற்பாலதன்று. அவரைக் காண்டலும் ஆகாது என்ப தனை ஆசிரியர் திருமூலர், கல்லாத மூடரைக் காணவு மாகாது கல்லாத மூடர் சொற் கேட்கக் கடனன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராங் கல்லாத மூடர் கருத்தறி யாரே என்று கூறுமாற்றால் அறிந்து கொள்ளலாம். இங்ஙனமே, நம் சைவசமயாசிரியர்களில் திருஞானசம்பந்தப் பெருமான். கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன் எனவுந், திருநாவுக்கரசு நாயனார், கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்க் கற்றார்கள் உற்றோருங் காதலானை எனவுங் கூறுதல் காண்க. ஆதலினாற்றான், கடவுளை வணங்குந் திருக்கோயில்களிலெல்லாம் பலவகைக் கலை நூல்களையும் ஆராய்ந்துணரும் பட்டிமண்டபங்கள் பண்டைக் காலத்தில் வகுக்கப்பட்டிருந்தன. கல்வியறிவு பெரிதுங் குன்றிப்போன பின்றைக்காலத்திலோ அப் பட்டிமண்டபங்களெல்லாம் ஐயகோ! பாழ்மண்டபங்களாய்க் கிடக்கின்றனவே! கடவுளை வழிபடு மிடத்தில் நூலாராய்ச்சியும், நூலாராய்ச்சி செய்யுமிடத்திற் கடவுள் வழிபாடும் ஒன்றை விட்டொன்று பிரியாமலே நடைபெறும்படி மெய்யுணர்வினரான நந்தொல்லாசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தும், அச்சிறந்த ஏற்பாடு பின்னாளிற் சிதைந்து போயிருப்பதைக் காணுங்கால் அறிவுடையார் நெஞ்சம் நீராய் உருகுகின்றதே! .இவ்விரங்கத் தக்க நிலையைக் கண்டே, யாம் முன்னையோர் கொண்ட முறைப்படி பின்னையோருஞ் செய்து நலம் பெறுதற்காக அம்பலவாணர் திருக்கோயிலுடன் மணிமொழி நூல் நிலையமுஞ் சேர்த்துப் பொதுநிலைக் கழக நிலையத்தில் அமைத்திருக்கின்றேம். 2. மக்கள் கடமை தமிழ் நாட்டுத் தாய்மார்களே! உங்களுடைய நன்மையையும் முன்னேற்றத்தையும் நாடி, உங்களுக்கு முதன்மையாக வேண்டும் சில சிறந்தபொருள்களை உங்களுக்கு விளக்கிச் சொல்ல விரும்புகின்றேம். நமது தமிழ் நாட்டைத் தவிர, மற்ற நாடுகளில் இருக்கும் பெண்மணிகள் கல்வியிலுங் கடவுள் வணக்கத்திலும் நாகரிக ஒழுக்கத் திலும் நாளுக்குநாள் பிறைபோல் வளர்ந்து மிகவும் இனி தாக உயிர்வாழ்கின்றார்கள். நமது தமிழ் நாட்டு மாதர்களோ சிறந்த கல்வியுடையவர்களும் அல்லர், உண்மையான கடவுளை வணங்கத் தெரிந்தவர்களும் அல்லர். வேறு எவ்வகையான நாகரித்தில் உயர்ந்தவர்களும் அல்லர், உண்ண உணவும், உடுக்கத் துணியும், இருக்க இடமுங் கிடைத்தாற் போதும் என்றும் இவைகளுக்கு வறுமைப் படாமல் வாழ்வதே இன்ப வாழ்க்கை என்றும் நினைத்து, உணவு உடை இருப்பிடம் என்னும் இவைகளைத் தேடிக் கொள்வதிலும், தேடிய இவற்றை உண்டு உடுத்து உறைவிடமாக்கி உறங்கிக் கழிப்பதிலுந் தம் வாழ்நாளைக் கடத்தி வருகின்றார்கள். உயர்ந்த அறிவாவது உயர்ந்த நோக்கமாவது நம் பெண்மக்களுக்குச் சிறிதும் இல்லை; அல்லது உயர்ந்த அறிவையும் உயர்ந்த நோக்கத்தையும் பெற வேண்டுமென்னும் எண்ணமாவது இவர்களுக்கு இருக்கின்றதோவென்றால், அது தானும் இல்லை. உண்டு உடுத்து உறங்கி வாழ்நாட் கழிப்பதைவிட மக்களால் அடையத் தக்க வேறு சிறந்த பொருள் இல்லையென்றே பெரும்பாலார் நினைக்கின்றார்கள். அப்படி நினைத்தால் மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் வேற்றுமை யாது? மக்களினுந் தாழ்ந்த ஆடு மாடு குதிரை முதல் ஈ எறும்பு புழு ஈறான எல்லாச் சிற்றுயிர்களுங்கூடப் பசியெடுத்தபோது தமக்கு எளிதிலே கிடைக்கும் புல் இலை தழை கிழங்கு கனி தேன் முதலான இரைகளைத் தேடித் தின்றும், மலையருவி ஆறு ஏரி குளங் கூவல் முதலியவற்றின் நீரைப் பருகியும் பசி தீர்ந்தபின் செடிகளின் நடுவிலோ மலைப் பிளவுகளின் இடையிலோ கிடந்து கவலையின்றி உறங்கிக் காலங்கழிக்கின்றன. மக்களுக்காவது உடுக்க ஆடை வேண்டும்; இச்சிற்றுயிர் களுக்கோ ஆடையும் வேண்டுவதில்லை; மழையில் நனையாமலும் பனியிற் குளிராமலும் வெயிலில் வெதும்பாமலும் அவ்வுயிர்களைப் பாதுகாக்கத் தடிப்பான தோலோடு அடர்த்தியான மயிரையுங் கம்பளிப் போர்வைபோல் அவைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கிறான். வெப்பம் மிகுந்த நமது தமிழ்நாட்டில் உள்ள ஆடு மாடுகளுக்குக் குளிரின் துன்பம் மிகுதியாய் இல்லாமையால், அவைகளின் உடம்பின் மேல் அடர்ந்து நீண்ட மயிர்கள் இல்லை. ஆனால், வடக்கே இமயமலையிலும், அம்மலைச் சாரலில் உள்ள இடங்களிலும் போய்ப் பார்த்தால், அங்குள்ள ஆடு மாடுகளுக்கு அடர்ந்து நீண்ட மயிர்கள் இருத்தலைக் காணலாம். ஏனென்றால், அம்மலை நாடுகளில் தாங்க முடியாத பனியுங் குளிரும் மிகுந்திருக்கின்றன; அவ்வளவு பனியிலும் குளிரிலும் அவ்விலங்குகள் வெற்றுடம்பு உள்ளனவாயிருந்தால் அவை உடனே விரைத்து மாண்டு போகும்; ஆதலால் அவ்வாடு மாடுகள் அங்குள்ள பனியிலுங் குளிரிலும் மாண்டு போகாமல் அவற்றைப் பாது காப்பதற்காகவே எல்லா இரக்கமும் உள்ள கடவுள் அவைகளின் உடம்பின் மேல் நீண்டு அடர்ந்த மயிரை வளரச் செய்திருக்கிறான். ஆகவே, உணவின் பொருட்டும், உடையின் பொருட்டும், இருப்பிடத்தின் பொருட்டும் மக்களாகிய நாம் ஓயாமல் அடையுங் கவலையுந் துன்பமும் நம்மிற்றாழ்ந்த சிற்றுயிர்களுக்குச் சிறிதும் இல்லை; வேண்டும்போது இரை தேடித் தின்றும் உறக்கம் வந்தபோது உறங்கியும் ஆணும் பெண்ணுமாய்க் கூடியிருந்து தம் இனங்களைப்பெருக்கியும் அவைகள் கவலையின்றிக் காலங் கழிக்கின்றன. இப்படிப் பட்ட சிற்றுயிர்களின் வாழ்க்கை யையும், உணவுக்கும் உடுப்புக்கும் இருப்பிடத்திற்கும் அல்லும் பகலுமாய்ப் பாடுபட்டு மனைவியாற் கணவனும், கணவனால் மனைவியும் பெற்றோராற் பிள்ளைகளும், பிள்ளைகளாற் பெற்றோரும், ஒரு குடும்பத்தாரால் அவர்களின் சுற்றத்தாரும், ஒரு சுற்றத்தாரால் அவர்களின் குடும்பத்தாரும், ஓர் ஊராரால் அவர் தம் அரசரும், ஓர்அரசரால் அவர் தம் ஊராரும் ஆக எல்லாருமாய் ப் பலவகைத் துன்பங்களுக்கு ஆளாகி நோயிலுங் கவலை யிலும் இடையறாது உழன்று வருந்திவரும் மக்களாகிய நமது வாழ்க்கையையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நமது துன்ப வாழ்க்கையை விட சிற்றுயிர்களின் இன்ப வாழ்க்கை எத்தனையோ மடங்கு சிறந்ததாய்க் காணப்படுகின்ற தன்றோ? தம்மைப் படைத்த உண்மையான கடவுளை நினையாமல் நம் போன்ற மக்களைத் தெய்வமாக வணங்கியும், தம்மையே தாம் பெரியராக நினைந்தும், வாழ்நாள் முதிரா முன்னரே கவலையாலும் நோயாலுங் கூற்றுவன் வாய்ப்பட்டு மடியும் நம் மக்கட் பிறவியைவிட இறைவன் பாதுகாப்பில் அடங்கிக் கவலையின்றி உயிர் வாழும் விலங்கினங்களின் வாழ்க்கை சிறந்ததாயிருக்கின்ற தன்றோ? அங்ஙனம் இருக்க, உண்ணல், உடுத்தல், உறங்கல், இன்புறுதல் என்னும் இவைகளினாலேயே மக்கள் வாழ்க்கையானது சிறந்ததா யிருக்கின்றதென்று நினைப்போ மாயின் அஃது எவ்வளவு பேதைமையாகக் காணப்படுகின்றது1 அப்படியானால் எல்லாப் பிறவிகளையும் விட மக்கட் பிறவியே சிறந்ததென்று அறிவுடையோர்களும் அவர் செய்து வைத்த நூல்களும் சொல்வது ஏன்? என்றால், எந்த வகையில் மக்கட் பிறவியானது மற்றைச் சிற்றுயிர்களின் பிறவியைவிட அங்ஙனஞ் சிறந்தது என்பதை நாம் நன்கு ஆராய்ந்து பார்த்துத் தெளிதல் வேண்டும், மக்களாகிய நாம் பகுத்தறிவு உடையவர்களாய் இருக்க மற்றச் சிற்றுயிர்களோ அத்தகைய பகுத்துணர்வு உடையனவாய்க் காணப்படவில்லை. அதனாலேதான் நமது பிறவி மற்ற விலங்கின் பிறப்பைவிடச் சிறந்ததாகுமென்று அறிகின்றோம். விலங்கு களுக்கு இது நல்லது, இது தீயது என்று பகுத்துணர்தல் இயலாது. அவை வழக்கமாய்த் தின்னுந் தீனியையே உட்கொள்ளும்; பெரும்புதர்களிலும் மலைக் குகைகளிலும் மரநிழல்களிலுங் கிடந்தபடியே நாளைக் கழிக்கும்; இவற்றிற்குமேல் அவைகள் ஒன்றையும் அறியமாட்டா. மேன்மேல் இன்பத்தைப் பெருக்கும் வழிவகைகளும் அவை தெரிந்து கொள்ளல் முடியாது. பிற உயிர்களுக்கு நன்மையாவது இது, தீமையாவது இது என்றும் அவை அறிவதில்லை. இந்த உலகத்தில் நாம் ஏன் படைக்கப்பட்டிருக் கின்றோம்? இந்த உடம்பு ஏன் நிலையாய் இருப்பதில்லை? சிறிது காலத்தில் இந்த உடம்பின் உறவால் வந்த பெற்றோரும், மனைவிமக்களும், உடன் பிறந்தாரும், நேசரும், சுற்றத்தாரும் சூழ்ந்து கொண்டிருக்கவும், இந்த உயிர் திடீரென்று இவர்கள் எல்லாரையும் விட்டு எங்கே போகின்றது? அப்படிப் போகும் உயிரை இவர்கள் ஒருவருந் தடுக்கமாட்டாதவர்களாய் அலறி வீழ்ந்து அழுவது ஏன்? எவராலுந் தடுக்க முடியாத இந்தப் பிறப்பு இறப்புகளை வகுத்தவன் யார்? இவற்றை வகுத்தவனது நோக்கம் யாது? பெருந்துன்பத்திற்கு இடமான இப்பிறப்பு இறப்புகளை நீக்கும் வழி யாது? என்று இங்ஙனமெல்லாம் ஆராய்ந்து பார்க்கக் கூடிய உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியால் அடையத்தக்க பெரும் பயனும் விலங்குகளுக்குச் சிறிதும் இல்லை. மக்களாகிய நாமோ இவைகளை யெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அவ்வாராய்ச்சியால் வரும் பயனை அடையத்தக்க உயர்ந்த நிலையில் இருக்கின்றோம். கிடைத்தற்கு அரிய அவ்வுயர்ந்த நிலையில் இருந்தும், அவ்வுண்மைகளை ஆராய்ந்து பாராமல், விலங்குகளைப் போல உண்பதிலும் உறங்குவதிலுங் காலங் கழித்து, வகை வகையான உடை களை உடுப்பதும், பளபளப்பான நகைகளைப் பூண்பதும், மினுமினுப்பான வண்டிகளிற் செல்வதும், நாளுக்கு நாள் வரும் புதுமைகளைக் காண்பதும், மேலுக்கு மேல் எழும் பாட்டுகளைக் கேட்பதும், ஒன்றுக்குமேல் ஒன்று உயர்ந்த மணப் பண்டங்களை மோப்பதும் கற்கக்கற்க இனிக்குங் கதைகளைக் கற்பதும் ஆகிய இவைகளே மக்கட் பிறவியினால் அடையத்தக்க பெரும் பயன்கள் என்று நம்மவர் நினைப்பார்களாயின், ஐயோ! அவர்கள் விலங்கினங்களினுங் கடைப்பட்டவர் ஆவார்கள் அல்லரோ? ஆதலால், நமக்கு அருமையாய்க் கிடைத்த பகுத்துணர்ச்சியை, நாம் பல வகையான உயர்ந்த வழிகளிலும் வளரச்செய்து அதனால் அழியாப் பெரும்பயன் அடைதல் வேண்டும். இதுவரையிலுமே, பகுத்துணர்ச்சியால் நாம் அடைந்த பயன்களும், அடைந்து வரும் பயன்களும் அளவிடப்படா. நாவுக்கு இனிமையான பண்டங்களை நாளுக்குநாள் புதிது புதிதாகச் செய்யக் கற்று வருகின்றோம்; கண்ணுக்கு அழகாக உடுப்புகளையும் வகை வகையாகச் செய்வித்து அணிந்து வருகின்றோம்: பார்க்கப் பார்க்க கவர்ச்சியைத் தரும் ஓவியங்களை (சித்திரப்படங்களை) எழுதுவித்தும், பாவைகளைச்செய்வித்தும், அவற்றை நம்முடைய இல்லங்களில் வைத்துப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து வருகின்றோம்; மேன்மாடங்களுள்ள மாளிகை வீடுகளையும், அவற்றைச் சூழப் பசிய தோட்டங்களையும் அமைப்பித்து, அவ்வீடுகளிற் களிப்புடன் குடியிருந்தும், அத்தோட்டங்களில் மனக்கிளர்ச்சியோடு உலவியும் வருகின்றோம்; புல்லாங்குழல், யாழ், முழவு முதலான இசைக்கருவிகளின் இனிய ஒலிகளையும், அவற்றோடு சேர்ந்து பாடுவார் தம் இசைப்பாட்டுகளையுங் கேட்டுப் பெருங்களிப்பு அடைந்து வருகின்றோம்; நறுமணம் கமழ் பலவகை மலர்களைச் சூடியும் அம்மலர்களி லிருந்தும் சந்தனக் கட்டை அகிற்கட்டை முதலியவற்றிலிருந்தும் பெற்ற நெய்யையுங், குழம்பையும் பூசியும் இன்புறுகின்றோம். மிக மெல்லிய பஞ்சுகளாலும் பறவையின் தூவிகளாலும் அமைக்கப்பட்ட மெத்தைகளை வழுவழுப்பாகச் செய்வித்த தந்தக் கட்டில்களில் இடுவித்து, அவற்றின் மேற்படுத்து இனிது உறங்குகின்றோம். இன்னும், ஏவற்காரரால் வீசப் படும் வெட்டிவேர் விசிறிகளாலும், தாமே சுழலும் விசிறிப் பொறிகளாலும் வெயிற் கால வியர்வையினையும், புழுக்கத்தினையும், மாற்றி மகிழ்ச்சி அடைகின்றோம். திறமை மிக்க புலவர்களால் எழுதப்படும் புதிய புதிய கதைகளைப் பயின்று உள்ளங்களிக்கின்றோம். இங்ஙனமாக, நமக்குள்ள பகுத் துணர்ச்சியின் உதவியைக்கொண்டு நாளுக்கு நாள் அடைந்துவரும் இன்பங்களை முற்ற எடுத்து முடித்துரைக்கப் புகுந்தால் அவற்றிற்கு இவ் ஏடு இடங் கொள்ளாது. மேலும், நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் மிகுதிக்குத் தக்கபடி நாம் மிகுந்த இன்பத்தை அடைந்து வருவதுடன், பகுத்துணர்ச்சியில் நம்மினும் எத்தனையோ மடங்கு உயர்ந்த அறிவுடையோர்களாற் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பொறிகளின் (இயந்திரங்களின்) உதவியால் நாம் எல்லையில்லாத இடர்க் கடலினின்றும் விடுவித்து எடுக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் புதுப் புது நலங்களை அடைந்து இனிதாக வாழ்நாளைக் கழித்து வருகின்றோம். நீராவி வண்டிகள் ஏற்படாத அறுபது எழுபது ஆண்டு களுக்குமுன் நம்முன்னோர்கள் ஓர் ஊரிலிருந்து தொலைவி லுள்ள மற்றோர் ஊருக்குச் செல்ல நேர்ந்தால், அப்போது அவர்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள்! அக்காலங்களிற் செவ்வையான பாட்டைகள் கிடையா. இருந்த சில பாட்டைகளோ, கல்லும் கரடும் மேடும் பள்ளமும் நிரம்பிக் கால் நடையாய்ச் செல்வார்க்கும், மாட்டு வண்டிகளிற் செல்வார்க்கும் மிகுந்த வருத்தத்தையுங், காலக்கழிவினையும் , பணச்செலவினையும் உண்டாக்கின. அப்பாட்டைகள், காடுகளின் ஊடும், மலைகளின் மேலும், பாலங்கள் இல்லா ஆறுகளின் நடுவுங் கிடந்தமையால், அவற்றின் வழிச் செல்வோர்கள், புலி, கரடி, ஓநாய், பாம்பு முதலான கொடு விலங்குகளாலும், கள்வர்களாலும் அலைக்கப்பட்டுப் பொருளும் உயிரும் இழந்தும், பொருள் இழந்து அரிதாய் உயிர் தப்பியும் துன்புற்றார்கள்; வழியிடையே உள்ள ஆறுகளில் வெள்ளங்கள் வந்துவிட்டால், ஓடம்விடுவார் இல்லாதபோது, அக்கரையில் வந்து சேர்ந்தோர் அங்கேயும். இக்கரையிற் போய்ச்சேர்ந்தார். இங்கேயுமாக, வெள்ளம் வடியும் நாட்கள் வரையிற் கவலையோடு காத்திருந்தார்கள். கடலாற் சூழப்படாத நாடுகளில் இருப்பவர்களே இங்ஙனம் ஓர் ஊருக்குச் செல்ல இத்தனைத் துன்பங்களை அடைந் தார்களென்றால், கடல் சூழ்ந்த இலங்கையில் உள்ளவர் களும், பெருங் கடல்களுக்கும் அப்பால் உள்ள கடாரம் (பர்மா), சாவகம் (ஜாவா), சீனம், பாதளம் (அமெரிக்கா) முதலான நாடுகளில் இருந்த மாந்தர்கள் இப்பரத நாட்டுக்கு ( இந்தியாவுக்கு) வரவும், இங்குள்ள மாந்தர்கள் அவ் அயல் நாடுகளுக்குச் செல்லவும் எவ்வளவு துன்பப்பட்டிருக்க வேண்டும்! அக்கொடிய துன்பங்களுக்கு அஞ்சியே, முற்காலத் திருந்த முன்னோர்களிற் பெரும்பாலார் ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள மற்றோர் ஊருக்குச்செல்வதில்லை; முழு வறுமையாற் பசித்துன்பந் தாங்க மாட்டாதவர்களே தாம் இருந்த ஊரை விட்டு வேறு வளஞ்சிறந்த ஊர்களைத் தேடிச் சென்றனர். மற்றையோர் தாந்தாம் இருந்த இடங் களிலேயே தத்தமக்கு வேண்டிய உணவுப் பண்டங்களைப் பயிர் செய்துகொண்டு பெரும்பாலும் வறுமையிலேயே காலங்கழித்தனர். அக்காலத்தில் ஓர் ஊரில் உண்டாக்கப்பட்ட பண்டங்கள், பிறிதொரு சிறிய ஊருக்குச் செல்வதில்லை. காவிரிப்பூம்பட்டினம், உறையூர், மதுரை, கரூர் முதலான பெரிய தலைநகர்கள் சிற்சிலவற்றிற்கே அயலூர்களில் ஆக்கின பண்டங்கள் விலைப்படுத்த வரும், நிரம்பப் பாடு பட்டு அப்பண்டங்களை அந்நகரங்களிற் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்க வேண்டியிருத்தலால், வணிகர்கள் அவைகளை மிகுந்த விலைக்கு விற்றனர். கடல் தாண்டியுள்ள நாடுகளில் ஆக்கின அரும் பண்டங்கள் கப்பல்களின் வழியாக வரவேண்டியிருந்தமையாலும், அக்காலத்துப் பாய்கட்டிக் கப்பல்கள் கடலிலுள்ள சுழல்களுக்கும் அங்கே வீசும் சூறைக்காற்றுகளுக்குந் தப்பிப் பிழைத்துச்சென்று அயல் நாடுகளிற் கிடைத்த அவ் அரும் பண்டங்களை ஏற்றிக் கொண்டு திரும்பி இங்கு வந்து சேரப் பல திங்களும், பல ஆண்டுகளும் கடந்து போனமையாலும் அவ் அரும் பண்டங்களை மிக உயர்ந்த விலைக்கு விற்பனை செய்தார்கள். அதனால், மிகச் சிறந்த செல்வர்களாய் உள்ள வர்களே அவ்உயர்ந்த பண்டங்களை வாங்கத் தக்கவராய் இருந்தார்கள். மற்றவர்களெல்லாரும் அவைகளை வாங்குதற்கு ஏலாமல் அவற்றைப் பார்த்துப் பார்த்து ஏமாந்தனர். இவைகளே யன்றி, அக்காலத்தில் இன்னும் ஒரு பேர் இடர் இருந்தது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் மிகவும் எட்டியிருந்த ஊர்களில் மழை பெய்ய வேண்டுங் காலத்திற் செவ்வையாக மழை பெய்யாமல் மறுத்து விட்டால், அவ்வூர்களின் விளை பொருள்கள் விளைவு குறைந்து பஞ்சத்தை உண்டாக்கின. விளைந்த ஊர்களுக்கு விரைவிற் கொண்டுபோய்ச்சேர்ப்பிக்க எளிதான வழி அக்காலத்தில் இல்லை. அதனாற் பஞ்சம் நேரிட்ட ஊர் களிலிருந்த குடிமக்கள் அங்கங்கு இருந்த இருந்தபடியே கணக்கின்றி மாய்ந்தனர். ஆனால், இக்காலத்திலோ முற்கூறிய துன்பங்களெல்லாம் ஒழிந்தன. எதனாலென்றாற், பகுத்துணர்ச்சியிற் சிறந்த ஜேம்ஸ் வாட் என்னும் ஒரு துரைமகன் நீராவியின் வல்லமையைக் கண்டுபிடிக்க, அவ னுக்குப் பின்வந்த ஆங்கில அறிஞர் பலர் அந் நீராவியைக் கொண்டு வண்டிகளையுங் கப்பல்களையும், இடர் நேராமல் மிகு விரைவாக ஓட்டத்தக்க முறைகளைத் தெரிந்து கொண்டதனாலேயாகும். ஆறு திங்கள் அல்லது ஓர் ஆண்டு மாட்டு வண்டியிற் சென்று சேரவேண்டும். ஊர்களை இப்போது நீராவி வண்டியில் ஏறி நாலைந்து நாட்களிற் போய்ச் சேர்கின்றோம். முன்னே ஐந்நூறு ரூபா, ஆயிர ரூபா செலவழித்துக் கொண்டுபோய்ச் சேர வேண்டிய இடங் களை, இப்போது நாற்பது ஐம்பது ரூபாச் செலவோடு போய்ச் சேர்கின்றோம். முன்னே வழியின்இடக்காலும், கொடிய விலங்குகளாலும், தீயவர்களாலும் நேர்ந்த இடுக்கண்களெல்லாம் இப்போது இல்லையாயின. பெருங் கடல்களைத் தாண்டிச் செல்லவேண்டிய நாடுகளையெல்லாம் நீராவிக் கப்பல்களின் வழியாய்க் குறித்த காலத்திற் சுருங்கிய செலவில் இனிதாய்ப் போய்ச்சேர்கின்றோம். அந்நாடுகளிலுள்ள அரும் பண்டங்களை யெல்லாம் நாமிருக்கும் நாடுகளுக்கும், நம் நாட்டிலுள்ள விளை பொருள்களை அந்நாடுகளுக்குமாக ஏற்றுமதி இறக்குமதி செய்து, குறைந்த விலைக்கு அவைகளைக் கொண்டுங் கொடுத்தும் வருகின்றோம். பிற நாடுகளிற் புதியன புதியனவாக ஆக்கப்பட்டுவரும் நேர்த்தியான அரும்பண்டங்களைச் செல்வர்களே யன்றி, ஏழைமக்களும் வாங்கத் தக்கபடி அவைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அது மட்டுமோ! ஒருநாட்டில் மழை பெய்யாது பஞ்சம் வந்தால், அயல் நாடுகளில் விளைந்த உணவுப் பண்டங்களை நீராவி வண்டிகளாலும், நீராவிக் கப்பல்களாலும் உடனுக்குடன் அங்கே கொண்டுவந்து சேர்ப்பித்து அங்குள்ள பஞ்சத்தைத் தீர்த்துப், பல்லாயிரம் மக்களை உயிர்பிழைக்கச்செய்கின்றார்கள். இவை போல இன்னும் எண்ணில் அடங்காத எத்தனையோ நலங்க ளெல்லாம், பகுத்துணர்ச்சியிற் சிறந்த ஆங்கிலப் பேர் அறிவாளிகள் கண்டுபிடித்த நீராவிப் பொறிகளால் நாம் அடைந்துவருகின்றனம் அல்லமோ? இவை மட்டுமோ! இலங்கையில் உள்ளவர்கள் இந்தியாவில் இருப்பவர்களோடும், இந்தியாவில் உள்ளவர்கள் இலங்கையிலிருப்பவர் களோடும், ஒரு வீட்டுக்குள் இருப்பவர்களைப் போற் பேசிக் கொள்வதற்கு வாய்த்திருக்கும் வியப்பான வசதியை எண்ணிப் பாருங்கள்! இஃது எதனால் வந்தது? மின்சாரத்தின் இயக்கத்தையும், அதனைப் பயன்படுத்தும் முறைகளையும் ஆங்கில அறிஞர்கள் தமதுபகுத்துணர்ச்சியின் நுட்பத்தாற் கண்டுபிடித்தமை யால் அன்றோ? இலங்கையிலிருப்பவர்கள் இந்தியாவிலிருக்கும் தம் நண்பர்கட்குச்செய்திகள் தெரிவிக்க வேண்டுமானாலும், இந்தியாவிலிருப்பவர்கள் இலங்கையிலிருக்குந் தம் நண்பர்கட்குச் செய்திகள் தெரிவிக்க வேண்டுமானாலும் அவர்கள் அவற்றை ஒரு கடிதத் துண்டில் எழுதித் தந்திச்சாலைக்கு அனுப்பி, அதற்குரிய சிறு கூலிக்காசையுங் கொடுத்து விட்டால் ஒரு மணி நேரத்தில் இந்தியாவிலிருப்பவர்க்கோ, இலங்கையிலிருப்பவர்க்கோ அந்தச் செய்திகள் உடனே தெரிவிக்கப் பட்டிருக்கின்றன. அடுத்த மணி நேரத்தில் அவற்றிற்கு மறுமொழியும் வருகின்றது. இந்தப்படியாகவே, இந்தியா, இலங்கைக்கு ஆறாயிரம் மைல் எட்டியுள்ள சீமை முதலான இடங்களுக்குஞ் சில மணி நேரத்தில் செய்திகள் தெரிவித்தலும், ஆங்காங்குள்ள செய்திகளைத் தெரிந்து கொள்ளுதலும், ஒவ்வொரு நொடிப் பொழுதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆறாயிர மைல் எண்ணாயிர மைல் அகன்றுள்ள நாடுகளெல்லாம், இங்ஙனம் முற்காலத்தில் செய்திகள் அனுப்புதல் முடியுமா? சிறிதும் முடியாதே. இவ்வளவு வசதிகளும் எதனால் வந்தன? ஆங்கில அறிஞர்கள் இடை விடாது தமது பகுத்துணர்ச்சியைப் பயன்படுத்தி மின்சாரம் முதலான கட்புலனாகா நுண் பொருள்களின் இருப்பையும், வலிவையும், இயக்கத்தையும், பயனையும் கண்டுபிடித்தமையால் அன்றோ? இன்னும் ஒரு புதுமையைப் பாருங்கள்! ஒரு நூற் றாண்டுக்கு முன் இருந்த நம் முன்னோர்களிற், பட்ட மரமும் தளிர்க்கக் கேட்ட பறவைகளும் மயங்க இன்னிசை பாடுவதில் வல்லவர்கள் எத்தனையோ பெயர் இருந்தார்கள்! ஆனால், அவர்கள் இறந்ததும், அவர்களின் தேன்போன்ற குரலும் அவர்கள் மிழற்றிய இனிய பாட்டுகளும் அவர்க ளோடு கூடவே இறந்து போய்விட்டன. அவற்றை நாம் மறுபடியும் செவி கொடுத்துக்கேட்பது இனி எக்காலத்தும் இயலாது. இங்ஙனமாக ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டிருந்தோரின் நிலை அவ்வாறாய் முடிய, இந்த ஒரு நூற்றாண்டுக்குள் நாம் பிறப்பதற்கு முன்னிருந்த இசைவல்லோர்களின் நிலை அங்ஙனம் நாம் ஏமாறி வருந்தத் தக்கதாய் முடிந்து போகவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து முக்கனியினுங் கற்கண்டினும் இனிக்கப் பாடிய பாவாணர்கள் இவ்வுலக வாழ்வை நீத்துப்போனாலும், அவர்களுடைய அருமைக் குரல் ஒலியும், அவர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளும் நம்மை விட்டு நீங்கிப் போகவில்லை. எப்படியெனில் அமெரிக்கா தேசத்தில் அறிவியலிற் சிறந்து விளங்கிய எடிசன் என்னுந் துரைமகனால் ஆக்கிய ஒலி யெழுதி (Gramophone) என்னும் பொறியானது, அப் பாவாணர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளையும் அவர்களுடைய இனிய குரலொலிகளையும் அப்படியே பாடிக்காட்ட, அவைகளைக்கேட்டு நாம் வியந்து மகிழ் கின்றனம் அல்லோமோ? அவ் இசைவாணர்கள் இறந்து போயினும், அவர்கள் பாடிய இசைகள் இறந்து போகாமல், நாம் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும்படி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன அல்லவோ? இது மட்டுமா! எந்தெந்தத் தேசத்தில் எந்தெந்த மொழியில் எவ்வெப் பாட்டுக்களை எப்படி எப்படிப் பாடினார்களோ, அவ்வப்படியே அப்பாட்டுக்களையெல்லாம் நாம் இருந்த இடத்திலிருந்தே கேட்டு இன்புறும் பெரும் பேற்றை இவ்விசைக்கருவியானது நமக்குத் தந்திருக்கின்றதன்றோ? இத்தனை இன்பமும் நாம் எளிதில் அடையலானது எதனால்? எடிசன் என்னும் துரைமகனார் தமது பகுத்துணர்ச்சியைச் செலுத்தி எவ்வளவோ அரும்பாடுபட்டு இவ் இசைக் கருவியைக் கண்டு பிடித்ததனாலன்றோ? அவர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தாமல், மற்ற மக்களைப் போல் உண்பதிலும் உடுப்பதிலும் உறங்குவதிலும் தமது காலத்தைக் கழித்திருந்தனராயின், நாம் அருமந்த இசைக் கருவியைப் பெறுதலும், நம் முன்னோர்களின் தித்திக்குஞ் சுவைப் பாட்டுகள், அயல் நாட்டு இசைவாணரின் பல திற வரிப் பாட்டுகள் என்னும் இவைகளைக் கேட்டு மகிழ்தலும் இயலுமோ? இன்னும் பாருங்கள்! நாம் படிக்கும் புத்தகங்களையும், அவ்வவ்வூர்களில் நடக்குஞ் செய்திகளை அறிவிக்கும் புதினத் தாள்களையும் அச்சுப்பொறிகள் சிறிது நேரத்தில் ஆயிரக் கணக்காக அச்சுப் பதித்து நமக்குக் குறைந்த விலைக்குத் தருகின்றன. அச்சுப் பொறிகள் இல்லா முன் நாளிலோ இவ்வளவு எளிதாக நாம் விரும்பிய அரிய பெரிய நூல்களைப் பெற்றுக் கற்றுத் தேர்ச்சி அடைதல் ஏலாது. பழைய நாட்டில் ஓர் ஊரிற் சிற்சிலரே கற்றவராய் இருப்பர். அவர்கள் தாம் கற்கும் நூல்களைப் பனை ஏடுகளிற் பாடுபட்டு எழுதிக் கருத்தாய் வைத்திருப்பர். அவர்கள் தம்மிடம் கல்வி கற்கவரும் மாணாக்கர் சிலர் மட்டும் தம்மிடத்துள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்த்துச் சிறிது சிறிதாய் எழுதிக் கொள்ளும்படி அவர்க்குக் கொடுப்பார்களே யல்லாமல் எல்லாரும் பெற்றுப் பயிலும்படி அவ்வேட்டுச் சுவடிகளை எல்லார்க்கும் எளிதிற் கொடார். அல்லது அப்படிக் கொடுத்தாலுங்கூட ஓர் ஏட்டுச் சுவடியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு நூலை ஒரே காலத்தில் பற்பலர் எப்படி எடுத்துக் கற்க முடியும்? மேலும் தமிழ்மொழியில் உள்ள சிறந்த நூல்கள் பலவும் ஓர் ஊரில் உள்ள கற்றவர் சிலரிடத்தில் ஒருங்கே காணப்படுவதும் இல்லை. ஓர் அருமையான நூலைக் காணவேண்டுமானால் எத்தனையோ ஊர்களுக்குப் போய் அலைந்து திரிந்து தேடிப் பார்க்க வேண்டும்; இப்படித் தேடித் திரிவதற்கு எவ்வளவு நாட்கள் செல்லும்! எவ்வளவு பொருள் செலவாகும்! எவ்வளவு பாடும் உழைப்பும் வேண்டும்! இத்தனை இடர்ப் பாடுகள் இருந்தமையினாலேயே பழைய காலத்திற் கற்றவர் தொகை மிகுதியாயில்லை; கல்வி பரவவும் இல்லை, வளரவும் இல்லை. ஆனால் இக்காலத்திலோ வெள்ளைக்காரர் கண்டுபிடித்த அச்சுப் பொறிகளின் உதவியால் பல்வேறு நூல்களும், பல வேறு புதினத் தாள்களும், ஒவ்வொரு நொடியுங் கோடி கோடியாக அச்சிற் பதிக்கப்பட்டு உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. இதனால், எவ்வளவு ஏழையா யிருப்பவர்களும் சிறிது பொருள் செலவு செய்து, தமக்கு வேண்டிய நூல்களை எளிதில் வாங்கிக் கற்றுக் கல்வியில் தேர்ச்சி பெறுகின்றார்கள். ïjdhš fšÉahdJ v§F« guwJ.; கற்றவர் தொகை மிகுதிப்படுகின்றது. நாகரிகம் எங்கும் பெருகி, எங்கும் அறிவுமணங் கமழ்ந்து இன்ப ஒளி வீசுகின்றது. இத்தனைப் பெரும்பேறுகளும் காக்ஸ்டன் Caxton) என்னும் வெள்ளைக்கார அறிஞர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தி அச்சுப்பொறியைக் கண்டுபிடித்தமையால் விளைந்தவைகள் அல்லவோ? இன்னும் இங்ஙனமே வெள்ளைக்கார துரைமக்கள் அல்லும் பகலும் தமது அறிவைச் செலுத்தி, இதுகாறுங் கண்டுபிடித்திருக்கும் பொறிகளால் இதுகாறும் விளைந்த விளைந்திருக்கின்ற நலங்கள் அளவுக்கு அடங்கா. அவர்கள் இவ்வளவிலே ஓய்ந்து விடாமல், இன்னும் தமது உணர் வினைப் பல துறைகளிற் செலுத்தி இன்னும் பல புதுமை களை நாடோறும் கண்டறிந்து வருதலால், இன்னும் உலகத்தில் உள்ள மக்களுக்கு வரப்போகும் நலங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன! அவை எல்லாம் இப்போது யாரால் அளவிட்டுச் சொல்ல முடியும். ஆகவே பகுத்துணர்ச்சியைப் பெற்ற மக்களாகிய நாம் விலங்கினங் களைப் போல வீணே உண்டு உறங்கி இன்புற்றுக் காலங் கழித்தலிலேயே கருத்தைச் செலுத்திவிடாமல், அப்பகுத்துணர்ச்சியைப் பெற் ற நம்மிற் சிலர் அதனை மிக நன்றாய்ப் பயன்படுத்தி அதனாற் பல புதுமைகளையும், அவற்றாற் பல சிறந்த இன்பங்களையும் கண்டறிந்து, அவற்றால் தாமும் பயன் பெற்றுமற்றையோரையும் பயன்பெறச் செய்து வருதல்போல, நாமும் அவ்வுணர்ச்சியினை மேலும் மேலும் பயன்படுத்தி இன்னும் மேலான இன்பங்களை அடையக் கடமைப்பட்டிருக்கின்றோம். 3. தென்புலத்தார் யார்? திருவள்ளுவர் ஆண்டு 1962 தைப்பூச நாளன்று பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுநிலைக் கழக இருபதாம் ஆண்டு விழாப் பேரவையில் திருவாளர் கி. குப்புசாமி முதலியாரவர்கள் தென்புலத்தார் தெய்வ மென்னுந் திருக்குறளிற் போந்த தென்புலத்தாரென்னுஞ் சொல்லுக்குப் பரிமேலழகியார் உரையைத் தழுவி உரைத்த கொள்கையினை யாம் உடன்படாது, அச் சொல்லுக்கு வேறுபொருள் கூறினேமாக, அதுபற்றி அறிஞர்க்குள் வழக்கு நேர்ந்ததாகலின், யாம் கொண்ட கருத்தினை நன்குவிளக்கிக் காட்ட வேண்டுமென அன்பர் பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, அதனை இங்கே இயன்றமட்டும் விளக்குவான் புகுந்தேம். தென்புலத்தாரென்பதற்குப் பரிமேலழகியாருரைத்த பொருள் இது: தென்புலத்தார் பிதிரர்; பிதிரராவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்றிசை யாதலின் தென் புலத்தா ரென்றார். இனித், தெற்கே குமரிநாடு இருந்தகாலத்து அதன் கண் ஓடிய பஃறுளி யாற்றங்கரையை யடுத்த பெருநாட்டில் அரசு செலுத்திய பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மேலதாகவைத்து நெட்டிமையார் என்னும் நல்லிசைப் புலவர் பாடிய ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் (புறநானூறு, ) என்னுஞ் செய்யுளிலும், தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதர்வர்ப் பெறாஅ தீரும் என்று தென்புலம் வாழ்நர் குறிக்கப்படுகின்றனர். இச் செய்யுளுக் கெழுதப்பட்ட பழைய உரையில் தென்புலம் வாழ்நர் என்பதற்குத் தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியிலிறந்தோர் என்பது பொருளாக எழுதப்பட்டிருக் கின்றது. தென்புலத்தார் என்னுஞ் சொல்லுக்குப் பரிமேழகியா ருரைத்த பொருளும், புறநானூற்று உரைகாரர் உரைத்த பொருளும் ஒன்றோடொன்று ஒவ்வாமல் மாறுபட்டு நிற்றல் மேலேகாட்டிய அவ் விருவ ருரைகளையும் ஒத்து நோக்குவார்க்கு நன்கு விளங்கும். இனி, இவ்விருவேறு உரையுள் எஃது அச்சொற்பொருள் உண்மை யறிவிப்ப தென்பது ஆராயற்பாற்று. இந் நிலவுலக மெங்கணுமுள்ள மக்கட் கூட்டத்தாரிற், பண்டுதொட்டு நாகரிகத்திற் சிறந்தார் முதல் அதிற் சிறவாதார் ஈறான எல்லா வகுப்பினரும் இறந்துபட்ட தத்தம் முன்னோர்களை நினைந்து வழிபாடாற்றி வந்திருக்கின்றனர். தம் முன்னோரை நினைந்து வழிபடாத ஒரு வகுப்பினரை யாண்டுங் காண்டல் இயலாது. எங்கு முள்ள மக்களின் இவ்வியற்கை வழக்கத்துக்கு இசையவே நம் பண்டைத் தமிழ்மக்களுந் தம்மை நாகரிக வாழ்க்கையில் வாழச்செய்த நம் முன்னோரை நினைந்து வழிபாடு செய்து வந்தனர். இவர் அங்ஙனந், தன் முன்னோரை வழிபட்டுவந்த குறிப்புப் புறநானூற்றுரைகாரர் தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர் என்று உரைத்த வுரையால் தெற்றென விளங்கா நிற்கின்றது. மற்றுப், பரிமேலழகியார் உரைத்த உரையோ தமிழரில் இறந்துபட்ட முன்னோரைக் குறியாதாய்த் தென்புலத்தார் என்பதற்குப் பிதுரர் என்று பொருள் கூறி, அப் பிதுரராவார் படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்ட தோர் கடவுட்சாதி என்றும், அவர்க்கிடந் தென்றிசை என்றும் அவர் வரலாறு விரித்தது. எனவே, பிதுரர் என்பார் தமிழரின் இறந்துபட்ட முன்னோரல்ல ரென்பதூஉம், அவர் நான்முகனாற் படைப்புக்காலந் தொட்டே படைக்கப்பட்டுத் தென்றிசைக்கண் வாழும் ஒரு கடவுள் வகுப்பினராவ ரென்பதூஉம் பரிமேலழகியார் கருத்தாகின்றன. ஆனால், வடநூல்களிலோ பிதுரரைப் பற்றிய வரலாறு பரிமேலழகியார் கூறியபடி காணப்படவில்லை. அரி வம்சத்திலும் வாயு புராணத்திலும் அவர் வரலாறு இங்ஙனஞ் சொல்லப் படுகின்றது: தேவர்கள் நான்முகனை வணங்காது இகழவே, அவன் அவர்களைப் பேதையராகும்படி வைதான்; அதுகண்டு அவர் தாஞ் செய்த பிழையைப் பொறுக்கும்படி வேண்ட, அவன் அவர்களை நோக்கி நீவிர் நும்புதல்வர்பால் அறிவுபெறக்கடவீர் என்று ஏவினான். அங்ஙனமே அத்தேவர்கள் தம் புதல்வர்பாற் றவச்சடங்குங் கழுவாய்ச் சடங்குங் கற்றுணர்ந்து, அங்ஙனங் கற்றுணர்ந்தமை நோக்கித் தம் புதர்வர்களையே பிதுரர் என வழங்கினார்; அக்காரணம் பற்றியே தேவர்களின் புதல்வர்கள் முதற் பிதுரராயினர். ஏனைய புராணங்களும் பிதுரர் வரலாற்றை இவ்வாறே நுவல்கின்றன. ஆனால், மனுஸ்மிருதியோ, இரணியகருப்பன் மகன் மனு; அவன் புதல்வர்களான விராஜர், மரீசி, அத்திரி, பிருகு, ஆங்கிரசர், புலத்தியர், வசிட்டர் முதலான ஏழு முனிவர்களின் மக்களே பிதுரர் ஆவரென்றும், இவர்கள் எழுவகைக் கூட்டத்தினராய்ச் சாத்தியர்களுக்கும், அக்நிஷ்வாத்தர் களுக்கும், தைத்தியர் தானவர் இயக்கர் கந்தருவர் நாகர் இராக்கதர் சுபர்ணர் கின்னரர்களுக்கும், பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் பிதுரராவரென்றும் நுவலாநிற்கின்றது (3-194-197) இந் நூல்களிலாதல், ஆபஸ்தம்பர் கௌதமர் வசிட்டர் போதாயனர் இயற்றிய தருமசூத்திரங்களிலாதல் சாங்காயனர் ஆஸ்வலாயனர் பாரஸ்கரர் காதிரர் கோபிலர் இரணியகேசின் ஆபஸ்தம்பர் இயற்றிய கிருகிய சூத்திரங்களிலாதல் மேற்கூறிய பிதுரர் தென்புலத்தில் உள்ளவராகக் குறிப்பிடப்படவில்லை. இனி, இந் நூல்களுக்கும் வடமொழியில் உள்ள மற்றெந் நூல்களுக்கும் முற்பட்டதாகிய இருக்கு வேதமானது எவரைப் பிதுரர் என்று கூறுகின்றதென்பதைச் சிறிது ஆராய்வாம். இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தின்கண் உள்ள பதினைந்தாம் பதிகமானது பிதுரர் கண்மேற் பாடப் பட்டிருக்கின்றது. அதனைப் பாடிய பண்டை ஆரியர், இறந்துபோன நம் முன்னோரையே பிதுரர்களாக விளித்துப் பாடியிருக்கின்றனர்; அவர் பாடிய அப்பதிகத்தின் சில பகுதிகளை இங்கே மொழி பெயர்த்துத் தருகின்றாம்:- சோமபானத்தில் ஒருகூறு பெறுதற்குத் தக்காரான மூதாதைகள் கீழுள்ள நடுவுள்ள மேலுள்ள உலகங்கட்கு மேலேறுக! ஆவிவடிவத்தைப் பெற்ற அவர்கள் அமைதியும் அறமுமுடையராய் யாம் அழைக்குங்கால் வந்து எமக்கு உதவி செய்க! 1 முன்னரே இறந்து போனோரும், அவர்க்குப் பின்னர் இறந்துபோனோரும், இம் மண்ணுலகத்திற்கு அணித்தாகத் தங்கினோரும், வல்லரான தேவர்களிடையே தங்குவோரும் ஆகிய மூதாதைகளுக்கு இவ்வணக்கத்தைச் செலுத்துவோமாக! 2 சோமநறவைப் பெறுதற்குத் தக்காரான, எங்கள் சோமவிருத்திற்குச் சிறப்புடன் வந்தோரான எங்கள் பழைய மூதாதைகளுடன் விழைவுடையாரொடு விழைவுடையனாய்க் களிப்புடையனாய் இயமன் தான்வேண்டியபடி யாமிடும் அவியுணவை அயில்க! 8 தீக்கடவுளே, ஒளியுலகில் உறைபவராய், 3 முதற் பிறந்தவராய், இறைவனை வழுத்துபவராய், அவியுணவை அயில்பவரும் பருகுபவருமாய், மெய்ம்மையுடையவராய்த் தேவர்களோடும் இந்திரனோடும் இயங்குபவராய் உள்ள எம் எண்ணிறந்த பண்டை மூதாதைகளுடன் நீ வருக! 10 ஓ ஜாதவேதனே, இங்கு வந்தவரும் வராதவரும், யாம் அறிந்தவரும் அறியாதவரும் ஆன மூதாதைகள் இத்துணைய ரென்பதை நீ நன்குணர்வை; அவரவர் பங்குக்கென்று நன்கு சமைத்துவைக்கப்பட்ட இவ்வேள்வியை ஏற்றுக் கொள்க! 13 தீயில் எரிக்கப்பட்டவரும், எரிக்கப்படாமற் புதைக்கப்பட்டவரும் ஆன அவர்கள் வானுலகின் நடுவில் தாம் பெறும் அவியுணவினாற் களிகூர்கின்றார்கள்; ஓ முதல்வனே, அவர்கட்கு ஆவியுலகத்தையும் அவர்கட்குரிய ஆவியுடம்பையும், நின்னுள்ளம் வேண்டியபடியே ஈந்திடுக! 14 இங்ஙனம் போந்த பழைய இவ் விருக்குவேதப் பதிகத்தில், ஆரியரின் மூதாதைகளே பிதுரர் ஆதலும்; அவர்கள் தாந்தாஞ் செய்த நல்வினை தீவினைக்கேற்ப இறந்தபின் இம் மண்ணுலகத்திற்கு அணிமையிலும் இதற்கு மேல் நடுவணதான வானுலகிலும் அதற்கு மேலுள்ள துறக்க வுலகிலுஞ் சென்று வைகுதலும்; அவர்தம் மூதாதைகள் இறந்தஞான்று அவர்களுள் ஒரு பகுதியாரை நெருப்பிலிட்டு எரித்தும், மற்றொரு பகுதியாரை மண்ணின் கீழிட்டுப் புதைத்தும் வந்தனரென்பதனால் அப் பிதுரர், பரிமேலழகியார் கூறியபடி அயனாற்படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி யாகாமையுந் தெற்றென விளங்காநிற்கும். ஆரியரின் மூதாதைகளான அப் பிதுரர்கள், இயமன் உலகத்திலும் பகலவன் உலகத்திலுந் திங்கள் உலகத்திலுஞ் சென்று வைகுவரென அவ்விருக்குவேத ஒன்பதாம்மண்டிலத்தின் ---- ஆம்பதிகத்து (8-9-10) ஆஞ் செய்யுட்கள் மொழிகின்றனவே யன்றி, அவர் தென்புலத்தின்கட் சென்று வைகுவரெனக் கூறுகின்றிலது. மேலும், ஆரியர் தம்மைச் சேர்ந்தார் உயிர் துறக்குங்கால் இயமனை வேண்டிப் பாடிய பதிகத்தில், இறந்து செல்வோன் உயிரைநோக்கி, ஓடுக! சரமாவின் குட்டிகளும், பழுப்புநிறத்தொடு பலவரிகளையுடையனவும் நான்கு கண்கள் வாய்ந்தனவும் ஆகிய இரண்டு நாய்களையும் நின் இனிய வழியினிடையே விரைந்து கடந்து செல்க! இயமனுடன் கூடி மகிழ்ந்திருப்பாரான இரக்க நெஞ்சமுள்ள மூதாதைகள்பால் விரைந்து அணுகுக! (இருக்குவேதம் , 10, 14, 10) என்று கூறுதல்கொண்டுந், தம் மூதாதையர் இயமனுலகத்திற்குச் செல்வதாகப் பண்டையாரியர் நம்பி வந்தமை நன்கு புலனாகாநிற்கும். இயமன் தென்புலத்திற்கு உரியவனாகப் பிற்காலத்தெழுந்த வடநூல்கள் நுவலுங்கதை, பண்டை வடநூலாகிய இருக்குவேதத்தில் யாண்டுங் காணப்படாமை கருத்திற்பதிக்கற்பாற்று. அவர் சென்று வைகும் இயமனுலகு, வானநாட்டின் நடுவண் உள்ளதாகவே முன்னர்க்காட்டிய 15ஆம் பதிகத்தின் 14ஆஞ் செய்யுள் ஐயமற வோதுதல் காண்க. இன்னும், அவ்விருக்குவேதப் பத்தாம்மண்டிலத்தின் பதினாறாம் பதிகத்து 3ஆஞ் செய்யுளானது இறந்து செல்லும் ஒருவனுயிரை நோக்கிக் கூறுகின்றுழிப், பகலவன் நின்கண்களைப் பெறுக; காற்று நின் உயிர்ப்பைப் பெறுக; நின் வினைப்பயனுக்குத் தக மண்ணுலகத்திற்கோ விண்ணுலகத்திற்கோ நீ செல்க! நின்வினை அங்ஙனமாயின் நீ நீரினுட் செல்க; அல்லது செடி களினுட் புகுந்து, நின் உறுப்புகள் எல்லாவற்றுடனும் ஆண்டு வைகுக! என் றுரைக்குமாற்றால், நல்வினை செய்த உயிர் விண்ணுலகத்திற் சென்று வாழுமென்பதும், நல்வினை செய்யாத உயிர் மண்ணுலகத்தை யடுத்துப் பேய்களாக அலைந்து திரிதலே யல்லாமல், நீரினுட் புகுந்து நீரணங்காகவுங் கானகத்துள்ள செடிகளினூடே புகுந்து காட்டணங்காகவும் உறையுமென்பதும் பண்டையாரியர்தம் நம்பிக்கையாதல் நன்கு புலனாகின்ற தன்றோ? இங்ஙனமெல்லாம் இறந்துசென்ற உயிர்கள் வைகும் இடங்கள் வான்நடுவணதான இயமனுலகும், ஞாயிறு திங்களுலகும், மண்ணுலகும், மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவணதாம் உலகும், நீருங் காடுமேயாம் என இருக்குவேதம் நுவலக் காண்கின்றனமேயன்றி, அது தென்புலம் என நுவலுதலை அதன்கண் யாண்டுங் கண்டிலேம். அது நிற்க. இனிப், பிதுரரை ஒரு கடவுட்சாதி யென்று கூறிய பரிமேலழகியாருரை ஒரு சிறிதும் பொருந்தாமை இருக்கு வேத ஆராய்ச்சியால் தெற்றென விளங்குதலும் ஈண்டுக் காட்டுவாம். தேவர்கள் இயங்கும் நெறியையும், இறந்து செல்லும் பிதுரர்கள் இயங்கும் நெறியையும், இருக்கு வேதப் பத்தாம் மண்டிலப் பதினெட்டாம் பதிகத்து முதற் செய்யுளும், இரண்டாம் பதிகத்து ஏழாஞ் செய்யுளும் முறையே, ஓ மிருத்யுவே, தேவர்கள் வழக்கமாய்ச் செல்லும் நெறியை அகன்று நினக்குத் தனியேயுரிய நெறியின்கண் இங்கிருந்து புறப்பட்டுச் செல்க! என்றும், அங்கியே, பிதுரர்கள் செல்லும் நெறியை நன்கு தெரிந்து கொண்டு, அதன் நெடுகச் சுடர்ந்தெரிந்து பேரொளி விளக்கத்தைச் செய்க! என்றும் வேறுவேறு கூறுதலை உற்றுநோக்க வல்லார்க்குப் பண்டை ஆரியர்கள் தேவரையும் பிதுரரையும் வேறு வேறாகக் கருதினரே யல்லாமற், பிதுரரையுந் தேவராகக் கருதிற்றிலரென்னும் உண்மை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் நன்கு விளங்கா நிற்கும். ஆகவே, பண்டை யாரியர் இயற்றிய வேத வழக்குக்கு முற்றும் முரணாகப் பிதுரரைத் தேவரென்றுரைப்போர் வேதவழக்கைத் தழுவிய வைதிக ராதல் யாங்ஙனம் என மறுக்க, இருக்கு வேதத்தை எழுத்தெண்ணிப் பயின்றவரும், அதனை முதன்முதல் அச்சிற் பதிப்பித்து, அதன் பதிகங்கள் பலவலற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துதவியருமான மாக்ஸ்மூலர் என்னும் ஆசிரியர் (Professor Max Muller):” வேதத்தில் முதாதையர் அல்லது பிதிரர் தேவர்களுடன் சேர்த்து வழுத்தப்படுகின்றனர்; என்றாலும், அவர்கள் மற்றவருடன் ஒன்றாக வைத்து மயங்கக் கூறப்படவில்லை.. தேவர்கள் பிதுரர்களாதல் எஞ்ஞான்றும் இல்லை. மனுவினாலும் யாஞ்ஞியவற்கியராலும் பிதுரர்கள் ஒரேவொருகாற் பண்டைத் தேவவகுப்பினர் நிலைக்கு உயர்த்தப்பட்டுத் தேவ என்னும் அடைமொழியால் வழங்கப்படினும், பிதுரருந் தேவருந் தனித்தனித் தோற்றமுடைய ரென்பதும், மக்கள் உள்ளமானது தான் வழிபடுதற்கென்று வகுத்துக் கொண்ட இருவேறு நிலைகளைக் குறிப்பவரென்பதும் நாம் எளிதிற் காண்டல் கூடும். இஃது என்றும் மறக்கப்படாத ஒரு பாடமாக இருத்தல் வேண்டும். இருக்குவேத, --ஆம் மண்டிலத்து 52ஆம் பதிகத்தின் 4ஆஞ் செய்யுளில் இங்ஙனங் காண்கின்றோம்: மேலெழுகின்ற விடியற்காலம் என்னைக் காப்பதாக! ஓடுகின்ற யாறுகள் என்னைக் காப்பனவாக! திண்ணிய மலைகள் என்னைக் காக்க! தேவர்களை அழைக்கும் இப்போது பிதுரர்கள் என்னைக் காப்பாராக! இச் செய்யுளில், விடியற்காலமும் யாறுகளும் மலை களுந் தேவர்கள் வணக்க வுரையிற் சேர்த்துச் சொல்லப் படினும், அவற்றின் வேறான இருப்பு உடையராகப் பிதுரர்கள் நுவலப்படுதல் இனிது விளங்குதல் காண்க. இதுவேயுமன்றி, மூதாதையருள்ளுந் துவக்கத்திலிருந்தே இரு வேறு வகையினர் கருதப்படுதலும் நாம் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும்; அவருள் ஒரு பகுதியார் நெடுங்காலத்துக்கு முன்னரே இறந்து போகி அரைவாசி மறக்கப்பட்டவர்களாய்ச், சில குடும்பங்களின் உண்மையில் இல்லாத முன்னோராவர், அல்லது, வேதநூற் புலவரின் கருத்துப்படி மக்கட்டொகுதி முழுதுமே யாவர்; மற்றொரு பகுதியார் சிறிது காலத்திற்கு முன்னரே இறந்துபோகி, இன்னும் பின்னுள்ளோரால் நினைந்து பணியப்படுவோ ராவர். மிகப் பழைய மூதாதையர் பொதுவாகத் தேவர்களுக்கு அணுக்கராவர். இறந்து சென்ற உயிர்களுக்கு அரசனான இயமன்றன் உலகத்திற்குச் சென்று, அங்கே அவர்கள் தேவர் சிலருடன் கூடியிருப்பவராக அடிக்கடி நுவலப்படுகின்றனர். (இருக்குவேதம், ------தேவாநாம் சதமாதா; இருக்குவேதம், ------- தேவநாம் வசநீ) இன்னும், பாட்டனுக்குப் பாட்டனாவார் துறக்க வுலகையும், பாட்டன்மாராவர் வானுலகையுந், தாதையர் மண்ணுலகையுஞ் சார்ந்திருப்பராய், முதற்சொன்னவர் ஆதித்தியருடனும், இரண்டாவது சொன்னவர் உருத்திரருடனுங், கடைசியிற் சொன்னவர் வசுக்களுடனுங் கூடி யிருப்பவராகக் கூறப்படுதலைச் சிலகாற் காண்கின்றேம். இயமனே பிதுரரில் ஒருவனாக வைத்து வழுத்தப் படுதலுடன், அவன் மக்களுள் முதன்முதல் இறந்தவனென்றும், மூதாதையர் செல்லும் நெறியாகி மேற்றிசையிற் பகலவன் மறையுமிடத்துக்குச் செலுத்தா நின்ற பிதிரியானத்தை மிதித்தவனாவன் என்றும் வழுத்தப்படு கின்றான்; (இருக்குவேதம்,க0, உ,எ;க0,கச,க-உ) அவன் வைவசுவதன் என்றும்(க0,ருஅ,க), வைவசுவதன் மகன் என்றுஞ் சொல்லப்படுகின்றான். பின்வந்த அதர்வவேதகாலத்தில் இயமன் மக்களுள் முதற்றோன்றியவனாகக் சொல்லப்படுகின்றான் (அதர்வ வேதம் கஅ, ங, கங இருக்கு வேதம், க0, கச, க - உடன் ஒத்து நோக்குக) என்று மாக்ஸ்மூலர் என்னும் ஆசிரியர் கூறுதல் போலவே, வேதநூலாராய்ச்சி வல்ல கீத் (A.B. Keith) என்னும் அறிஞருந், தேவர்கள் நெறியானது பிதுரர்கள் நெறியின் வேறாவதென்றே அடுத்தடுத்துச் சொல்லப்படு கின்றது; வழியில் நாய்கள் இருக்குமென்பதனால் அந்நெறி யானது தனிப்பட்டதென்பதும், அமைதி வாய்ந்த தேவநெறியாகா தென்பதும் புலனாகின்றன. என்று பெரிதாராய்ந் தெழுதியிருக்கின்றார் . மேலே, மாக்ஸ்மூலர் ஆராய்ந்துரைத்த பகுதியாற், பிதுரர் இருவகையினராய், நெடுங்காலத்துக்கு முன்னரே இறந்துபட்டு, அவர்க்குப்பின் வந்தாரால் மறக்கப்பட்டவரும், பிற்காலங்களில் இறந்துபட்டுப் பின்னுள்ளரால் நினைவு கூரப்பட்டவரும் ஆதலும், அவர் துறக்கம் வான் நிலம் என்னும் உலகுகளைச் சார்ந்து வைகுவார் ஆதலும்; பிதுரர்களுக்குத் தலைவனான இயமனே பண்டொருகால் மக்களுள் ஒருவனாய் இருந்து முதன்முதல் இறந்துபட்டோனாதலும்; அவனும் பிதுரரும் இருக்குமிடம் பகலவன் மறையும் மேற்றிசைக் கண்ணதாதலும் நன்கு புலனாகின்றன. இவை யவ்வளவும் இருக்குவேதப் பதிகங்களால் ஐயமறத் தெரிக்கப் படுமாறும் மேலே அவை தம்மை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கின்றேம். எனவே, பிதுரராவார் அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி என்றும், அவர்க்கிடந் தென்றிசை என்றும் பரிமேலழகியாரும் அவரைப் பின் பற்றினாருங் கூறும் உரை, அவர்தாம் இறைவன் நூலாகக் கொண்ட பண்டை ஆரிய இருக்குவேத வுரைக்கே முற்றும் மாறாய் நிற்றல் கண்டு கொள்க. இனி, வடக்கிருந்த ஆரியர்கள் இறந்துபோன தம் முன்னோரை நினைந்து வழிபட்டு வந்தாற் போலவே, தெற்கிருந்த தமிழர்களும் பண்டிருந்த தமது குமரி நாட்டின்கண் நாகரிகத்திற் றலைசிறந்தாராய் வாழ்ந்து சென்ற நம் முன்னோரை நினைந்து வழிபட்டு வந்தாராகல் வேண்டுமென்பது, தொடக்கத்தில் எடுத்துக்காட்டிய ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் என்னும் பழைய புறநானூற்றுச் செய்யுளிற் போந்த தென்புலம் வாழ்நர் என்னுஞ் சொற்றொடராலும், தென்றிசைக் கண் வாழ்வோ ராகிய நுங் குடியில் இறந்தோர் என்னும் அதன் பழைய வுரையாலும் நன்கு புலனாகின்ற தன்றோ? பண்டை நாளிலிருந்த குமரிநாடு இப்போதுள்ள குமரி முனைக்குத் தெற்கே பெரும்பரப்பினதாய் இருந்தமையும், அதன்கட் பல்லாயிர ஆண்டுகட்குமுன் உயிர் வாழ்ந்த பழந்தமிழ் மக்கள் இம்மை மறுமைக்குரிய எல்லாத் துறைகளிலும் நாகரிகத்திற் றலைசிறந்து நின்றமையும், அந்நாட்டின்கட் செங்கோலோச்சிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்தே தொல் காப்பியம் என்னும் ஒப்புயர்வற்ற செந்தமிழ்த் தனி முதல் நூல் அரங்கேற்றப்பட்டமையும், அஞ்ஞான்றிருந்த செந்தமிழ் மக்களின் நாகரிகத்தி லிருந்தே பிறநாடுகளிலிருந்த ஆரியர், பாரசிகர், எபிரேயர் முதலான ஏனை மக்கட்பிரிவின ரெல்லாருஞ் சிறிது சிறிதாக நாகரிகம் இன்னதெனத் தெரிந்து சீர்திருந்தினமையும், இன்னும் இதனை யொட்டிய பிற வரலாற்றுக் குறிப்புகளும் மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலில் விரித்து விளக்கியிருக்கின்றேம். அத்துணை நாகரிகத்திற் சிறந்த பண்டைத் தமிழ்மக்கள், தாம் இருந்த தென்புலமாகிய தமிழகத்தில் தமக்கு முன்னரே நாகரிகமுடையராயிருந்து இறந்துபோன தம் மூதாதைகளையே தென்புலத்தார் என வழங்கி வழிபட்டு வாழ்ந்து வந்தன ரன்றித், தமக்கு ஏதொரு தொடர்புமில்லாத ஆரியர் தம் மூதாதைகளாகிய பிதுரர்களையாதல், இற்றைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆரியக் குருக்கண்மாராலுந், தமிழ்நாட்டுக் குருக்கண் மாராலுங் கட்டி யெழுதப்பட்ட புராணங்களிற் புதிது புகுந்த அயன் படைப்பான பிதுரர் களையாதல் வணங்கி வந்தவரல்லர். ஆரியக் குருக்கண்மார் புதிது கட்டிய கட்டுப்பாட்டில் அகப்பட்டுத் திவசங் கொடுக்கின்ற இஞ்ஞான்றைத் தமிழர்களுங்கூடத், தம் தாய் தந்தையர் பாட்டன் பாட்டியர், பூட்டன் பூட்டியரை நினைந்து அது செய்யக் காண்கின்றிலேம். இதனாலும், பரிமேலழகியாருரை பண்டைத் தமிழ்வழக்குக்காதல் பின்றைத் தமிழ்வழக்குக் காதல் சிறிதும் இசைந்து நில்லாமை, இதனை நடுநின்று காண்பாரெவர்க்கும் நன்கு விளங்கா நிற்கும். இனி, ஆரியர் தம் மூதாதைகளை வழிபடும் முறையும் தமிழர் தம் மூதாதைகளை வழிபடு முறையுந் தம்மிற் பெரிதும் வேறுபடுவ வென்பது காட்டுதும். ஆரியர்க்கு மிகப் பழைய நூலாகிய இருக்கு, எசுர், சாமம், அதர்வம் முதலிய நான்கு வேதங்களிலேனும், அவற்றின்கட் சொல்லப்பட்ட வேள்விகள் இங்ஙனம் வேட்கற்பால என அவற்றின் முறை களை விரித்து அவ்வேதங்களுக்கு உரை நூல்களாய் எழுந்த பிராமணங் களிலேனும் உயிர்களுக்கு ஊழ்வினையும் மறு பிறவிகளும் உண்டென்பது எட்டுணையுங் காணப்படவில்லை. அதனால், இறந்த உயிர்கள் தாஞ்செய் ஊழ் வினையால் மீளப் பிறக்கும் என்னும் உண்மையைப் பண்டை நாளில் இருந்த ஆரியர்கள் சிறிதும் உணர்ந்தவரல்ல ரென்பது நன்கு புலனாகும். ஆகவே, இறந்து இயமனுலகை யடைந்த தம் முனனோர்கள் எஞ்ஞான்றும் இன்பம் நுகர்ந்தபடியாய் ஆண்டிருப்பரெனவே அவர்கள் நம்பி வந்தார்கள். அவ்வாறு கொண்ட தமது நம்பிக்கைக்கு ஏற்பவே, இறந்து சென்ற தம் பெற்றோர்க்கும் மூதாதையர்க்குஞ், சோமச்சாறு பால் தேன் சுரா நெய் முதலியவை களையுந் தாம் உணவாக அருந்திவந்த விலங்கின் இறைச்சி களையும் படைத்து, நாடோறுஞ் செய்யப்படுவதாகிய பிதிர்யஞ்ஞத்தையுந், திங்கடோறுஞ் செய்யப்படுவதாகிய பிண்டபிதிர்யஞ்ஞத்தையும், ஆண்டுதோறுஞ் செய்யப்படுவதாகிய சிரார்த்தத்தையுஞ் செய்து, தூய புல்லின்மேல் அமர்ந்திருக்கும் மூதாதையரே, வந்து எமக்கு உதவி செய்க; இப்படையலை நுங்களுக்காகச் செய்து வைத்தோம்; அவற்றை ஏற்றுக் கொள்க. மிக மங்களமான விருப்பத்துடன் வந்து, சிறிதும் வருத்த மின்றி எங்களுக்கு உடம்பின் நலத்தையுஞ் செல்வத்தையுந் தந்திடுக! (இருக்கு 10, 15, 4) என்று அவர்களை வேண்டிக் குறையிரந்து வந்தார்கள். இதுவேயுமன்றிப் பழைய ஆரியர்கள் இறந்துபோன நம்மவர்க்குச் செய்து போந்த சவச்சடங்கிற்குந், தமிழ் நாட்டவர் செய்து போந்த சவச் சடங்கிற்கும் உள்ள மாறுபாடு பெரிய தொன்றாய்க் காணப்படுகின்றது. இறந்து போன தம்மவர் உடம்பை ஆரியர் தீயிலிட்டுக் கொளுத்துதற்குமுன், முதலில் ஒரு வெள்ளாட்டையும் அதன் பின் ஓர் ஆவையும் (பசுமாட்டையுங்) கொன்று, அவற்றின் உடம்பிலிருந்தெடுத்த ஊனையுங் கொழுப்பையும் எலும்பின் மூளையையும் அப்பிணத்தின்மேல் முற்றும் பொதிந்து, அதன்பின் அதனைத் தீயிலிட்டுக் கொளுத்தி வந்தனரென்பது இருக்குவேத க0ஆம் மண்டிலத்து ககூஆம் பதிகத்தில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்வாறு செய்வதனால், நெருப்பானது இறந்தவன் உடம்பைச் சுடாதென்று பழைய ஆரியர் நம்பி வந்தனர். இங்ஙனம் பிறவுயிரின் ஊனைப் பொதிந்து தம்மவர் உடம்பை எரித்தால், அவருடம்பை நெருப்புச் சுடாதென்று நம்பின ஆரியர், இறந்து இயமனுலகு சென்ற தம்மவர் எப்போதும் அங்கிருந்த படியே இன்பம் நுகர்ந்திருப்ப ரெனவும், அவர் பொருட்டுத் தாம் இங்கே படைக்கும் ஊனும் உணவும் இயமனுலகி லிருக்கும் அவர்கள்பாற் சென்று அவர்கட்கு உண்டியாகப் பயன்படுமெனவும் நம்பி வந்தது வியப்பன்று; ஏனென்றால், அம்புலியில் ஔவையார் நூல் நூற்கின்றார் என்றால், அதனை நம்புகின்றவர் கூட்டமும் இங்கு மிகுதியாய் இருக்கின்றதன்றோ? மற்றுத், தமிழ்மக்களோ பண்டைக்காலந் தொட்டு இறந்தவுயிர் மீளப் பிறக்கும் என்னும் உண்மையைக் கண்டறிந்தவர் ஆவர், முற்பிறவிகளிற் செய்த வினைகள் ஒரு தொகுதியாய் ஊழ் என நின்று பிற்பிறவிகளுக்குக் காரணமாதலை அவர்கள் நன்கறிந்து, அதனைப் பால்வரை தெய்வம் என வழங்கி வந்தமை, தமிழர்க்குரிய மிகப் பழைய நூலாகிய தொல்காப்பியத்தால் தெளியப்படும், இறந்தவுயிர்கள் தாஞ்செய்த தொகுத்த ஊழ்வினைக்குத் தக மறுபிறவிகளிற் செல்லும்இவ்வுண்மையைக் கண்டறிந்தமையாற், பண்டைத் தமிழ்மக்கள் இறந்துபட்ட தம் பெற்றோர்க்கும் பாட்டன் பாட்டியர்க்கும் ஊணும் உடையும் படைத்து, அவற்றை ஆரியப் பார்ப்பனர்க்குக் கொடுத்தலாகிய சிரார்த்தத்தைச் சிறிதுஞ் செய்தவரல்லர். இப் பிறவியில் நமக்குத் தாய் தந்தையரா யிருந்தவர் இதனை விடுத்து மறுபிறவியில் வேறு தாய் தந்தையர்க்குப் பிள்ளைகளாய்ப் பிறக்கின்றனரல்லரோ? இது நாலடியாரிற் போந்த எனக்குத் தாயாகியாள் என்னைஈங் கிட்டுத் தனக்குந்தாய் நாடியே சென்றாள் - தனக்குந்தாய் ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க் கொண் டேகும் அளித்திவ் வுலகு 15 என்னுஞ் செய்யுளாலும், ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார் தாம் அருளிச் செய்த சிவஞானபோதச் செம்பொருணூலிற், கண்ட நனவைக் கனவுணர்விற் றான்மறந்து விண்படர்ந்தத் தூடு வினையினாற், கண்செவிகெட் டுள்ளதே தோற்ற உளம் அணுவாய்ச் சென்றுமனந் தள்ள விழுங்கருவிற் றான் என்றறிவுறுத்தியவாற்றானும் நன்கு தெருட்டப்படுதல் காண்க. இதுவே யுமன்றி, வடநாட்டில் உள்ள இராமகாளி யென்னுஞ் சிறு பெண்பிள்ளையும், வேறு சிறார் சிலருஞ் சிலபல ஆண்டுகளுக்குமுன் தாம் பிறந்திருந்த பிறவிகளின் வரலாறுகளை நினைவு கூர்ந்து சொல்ல அவ்வரலாறுகள் அத்துணையும் உண்மையா யிருத்தலை அப்பக்கங்களில் உள்ளார் கண்கூடாய் அறிந்திருக்கின்றனர் அல்லரோ? இராமகாளி என்னும் அப்பெண் முற்பிறவியிற் பெற்ற மக்கள், அவளை நோக்கிச் செய்து பார்ப்பனர்க்குக் கொடுத்த ஊணும் உடையும் பிறபண்டங்களும் அவளுக்கு இப் பிறவியில் வந்து பயன்பட்டனவா? சிறிதும் இல்லையே, அதுபோலவே, இறந்துபட்ட தம் தாய் தந்தையரை நோக்கி நம்மனோர் இப்போது செய்யுஞ் சிரார்த்தமும், அதிற் பார்ப்பனர்க்கு அவர்கள் வழங்கும் பண்டங்களும் வேறு பிறவிகளிற் சென்று பிறந்திருக்கும் அவர்களுக்குச் சிறிதும் பயன்படாவென்பது திண்ணம். இவ் வுண்மைகண்டே வேதநூற் புலமையிற் சிறந்த தயானந்தசரசுவதி சுவாமிகளும் தாம் இயற்றிய சத்தியார்த்தப் பிரகாசிகையின்கண், இறந்துபட்ட தம் மவரை நோக்கி நம்மனோர் சிரார்த்தஞ் செய்து பார்ப்பனர்க்கு உணவுப் பண்டங்களும் பிறவும் வழங்கல் பயனற்றதென வற்புறுத்தி வரைந்திருக்கின்றார். ஊழ் வினையும் அதனாற் பிறவிகள் அடுத்தடுத்து வருதலும் அறியாத பண்டையாசிரியர், தம் மூதாதையர் எஞ்ஞான்றும் இயமனுலகில் இருப்பரென நம்பினராகலின், அவர் அவ் வறியா நம்பிக்கையால் தம் மூதாதையரை நோக்கிச் சிரார்த்தங் கொடுத்தது வாய்வதேயாம். மற்று, நம் பண்டைத் தமிழ்மக்களோ மிகப் பழைய நாளிலேயே ஊழ்வினையின் இயல்பும், அதனால் உயிர்கள் அடுத்தடுத்துப் பிறவிகளிற் சேறலும் நன்காராய்ந்து கண்டவராகலின், அவர்கள் தம் மூதாதையரை நோக்கிச் சிரார்த்தங் கொடுத்திலர். மற்று, அவர் தமது பண்டைத் தமிழகத்திலிருந்து உலகமெங்கணும் நாகரிகத்தைப் பரவச்செய்த தம் முன்னோர்கள் அனைவரை யுமே பொதுவாகத் தென் புலத்தார் எனக்கொண்டு அவரை நினைவு கூர்ந்து நன்றிக் கடன் செலுத்தி வந்தனரென்பதே தேற்றமாம், இதுவே தென்புலத்தாரை ஓம்புதலாகு மென்று திருக்குறள் கூறிற் றென்க. அதனாலன்றோ, சிரார்த்தங் கொடுக்கும் முறைகளை வடமொழிக்கண் உள்ள மிகுதி நூல்கள் கூறுமாப் போற், பழைய தமிழ் நூல்கள் எவையுங் சிறிதுங் கூறாவாயின. சிரார்த்தம் திதி, திவசம் முதலிய சொற்கள் வடமொழியே யன்றித் தமிழ்மொழி யல்லாமையுந், தமிழர்க்குள் அவ் வீண் வழக்கம் இல்லாமையின் அதனைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லும் இல்லாமையும் யாங்கூறும் இவ்வுண்மைக்கு உறுபெருஞ் சான்றா மென்க. அற்றேற், பிதுரர்கள் தென்புலத்தில் உள்ளவர்களாகக் கூறும் வழக்கு யாங்ஙனம் வந்தது? எப்போது வந்தது? என்று அறிய விரும்புவார்க்கு, அவ்வரலாற்றினையும் ஈண்டொரு சிறிது விளக்கிக் காட்டுதும், தேவர்கள் உறையுந் துறக்கவுலகம் வடகிழக்கில் உள்ள தெனவும், பிதுரர்கள் உறையும் பிதுரவுலகந் தென்கிழக்கில் உள்ளதெனவுங் கொள்ளும் வழக்கு முதன் முதற் சதபதபிராமணத்திலே தான் காணப்படுகின்றது. இச் சதபத பிராமணம் இயற்றப்பட்ட காலத்தில், ஆரியர்கள் பெருந் தொகையினராகத் தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்திலரேனுந், தென்றமிழ்நாட்டிலிருந்து வடநாடு சென்று போந்த தமிழ்மக்கள் வாயிலாகவும், வடநாட்டிலிருந்து தென்றமிழ்நாடு புகுந்து திரும்பிய தமிழ் மக்கள் வாயிலாகவுந் தமிழ்மக்களின் நாகரிக வரலாறுகளை அறிந்துகொண்ட பண்டை அவ்வாரியர்கள் தாம் இயற்றிய இந் நூலின்கண் தமிழர் வணங்கிய முழு முதற்கடவுளையும், அவர்தம் வழக்க வொழுக்கங்களையுஞ் சிறிது சிறிதாகத் தழுவியுரைக்கலாயினரென்பது ஆராய்ச்சியாற் புலனாகின்றது. தெற்கிருந்து வடநாடு தொடுத்து இவ்விந்தியநாடு முற்றும் அஞ்ஞான்று தமிழ் மக்களே நிரம்பியிருந்தன ரென்பது இஞ்ஞான்றை வரலாற்று நூலாசிரியர் நடுநின்று ஆராய்ந்தெழுதியிருக்கும் நூல்களால் தெற்றென விளங்கா நிற்கும். பாண்டவர் ஐவர்க்குங் குருகுலமன்னர் நூற்றுவர்க்கும் பதினெட்டு நாள் வரையிற் பெரும்போர் நடந்த ஞான்று, பாண்டவர்க்கு நண்பனுந் தென்றமிழ்நாட்டுச் சேரமன்னனுமான உதியஞ்சேரலாதன் என்பான். அப்பாண்டவர் படைக்கு அப் பதினெட்டுநாளும்அறச்சோறு வழங்கிப், பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என அக் காலத்துச் சான்றோர்களால் உயர்த்துப் பேசப் பட்டமை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய மண்டிணிந்த நிலனும் என்னும் புறநானூற்று முதற்செய்யுளால் நன்கறியக் கிடக்கின் றதன்றோ? இவ்வுதியஞ் சேரலாதன் மகனாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பதிற்றுப்பத்தின் கண் மூன்றாம் பத்திற் புகழ்ந்துபாடிய கோதமனார் என்னும் நல்லிசைப் புலவரே பாண்டவரில் முதல்வனான தரும புத்திரனையும் புகழ்ந்துபாடிய விழுக்கடிப்புஅறைந்த என்னுஞ் செய்யுள் ஒன்றும் புறநானூற்றிற் காணப்படுகின்றது. இங்ஙனமே வான்மீகியார், மார்க்கண்டேயனார் என்னும் நல்லிசைப் புலவர்கள் பாடிய செய்யுட்களும் புறநானூற்றின்கட் காணப்படுகின்றன (ஙருஅ ஙசுரு). இனித் தமிழ்ச்செய்யுட் கண்ணும், இறையனாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேய னாரும் வான்மீகனாருங் கௌதமனாரும் போல்வார் செய்தன தலையாய ஒத்து என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் புறத்திணையியல், உஎ ஆஞ் சூத்திரவுரையிற் கூறுதல்கொண்டு, மேற்கூறிய முரஞ்சியூர் முடிநாகராயருங், கோதமனாரும், வான்மீகி யாரும், மார்கண்டேயனாரும் எல்லாம் பாண்டவர் காலத்தவரென்பது உய்த்துணரக் கிடக்கின்றதன்றோ? ஆகவே, வடக்கே பாண்டவ அரசர் இருந்த மிகப் பழையகாலத்தே, இத்தென்னாட்டின்கண் மட்டுமேயன்றி, அவ் வடநாடெங்கணுந் தமிழ்மக்களுந் தமிழ் மன்னர்களுந் தமிழ்ச்சான்றோர்களும் நிறைந்திருந்தனரென்பது பண்டைத் தமிழ்ச் செய்யுள் வரலாறுகளானும் நன்கறியக் கிடக்கின்றமை காண்க. இனிப் பழையநாளில் வடக்கே குடிபுகுந்த ஆரியர் தமிழ்மொழியின் இயல்பையும் அமைப்பையும் நோக்கியே தமது ஆரியமொழியினைச் சீர்திருத்தி, ஏராளமான தமிழ்ச் சொற்களையுந் தம்முடைய ஆரிய நூல்களிற் புகுத்தின ரென்னும் உண்மை இப்போது வடமொழி வல்ல மேல் நாட்டாசிரியர்களாலே நன்கெடுத்துக் காட்டப்பட்டு வருகின்றது. அரை நூற்றாண்டுக்கு முன்னமே கால்டு btš(Dr.Caldwell) என்னும் ஆசிரியர் தாம் அரிதாராய்ந் தெழுதிய திராவிட மொழிகளின் இலக்கண ஆராய்ச்சி என்னும் விழுமிய நூலில், தமிழ்மொழி இவ்விந்திய நாடெங்கணும் அதற்கப்பாலும் பரவியிருந்த உண்மையினை எவரானும் மறுக்க இயலாத அரியபெரிய சான்றுகளால் நன்கு நிறுவியிருக்கின்றார். அவரெடுத்துக் காட்டிய பல சான்றுகளுள், நாவிற் பிறக்கும் மெய்யெழுத்துக்கள் சில தமிழ்மொழி யினத்திற்கே உரியனவென்றுந், தமிழருடன் வந்து கலவாதமுன் அவ்வெழுத்துக்களையுடையரல்லாத ஆரியர்கள், அவருடன் வந்து கலந்த பின்னரே அவற்றை யெடுத்துத் தம் மொழியிற் சேர்த்துக் கொண்டனரென்றுந் தெள்ளிதின் விளக்கிக்காட்டியிருக்கின்றார். இங்ஙனமெல்லாம் மேனாட்டாசிரியர் நடுநின்று மிக ஆழ்ந்தாராய்ந் துரைக்கும் உரை, இச் சதபதபிராமண ஆராய்ச்சியினாலும் மேலும் உரம்பெற்று உண்மையாக விளங்குதலை ஈண்டொரு சிறிது காட்டுதும். இருக்கு, எசுர், சாமம், அதர்வம் என்னும் நான்கு நூல்களில் எங்குங் காணப்படாத மகாதேவன் என்னுஞ் சிவபிரான் றிருப் பெயர் இச் சதபதபிராமணத்தின் ஐந்தாங் கண்டத்திலேதான் (ங, ரு) முதன் முதற் காணப்படுகின்றது. இதுகொண்டு, நாகரிகத்திற் சிறந்த தமிழ் முதுமக்கள் வழிபட்டுவந்த சிவபிரானே எல்லாத் தேவர்க்கும் பெரியோன் என்னும் உணர்ச்சி இந்நூல் எழுதிய காலையிற்றான் ஆரியர்க்கு முதன்முதல் உண்டாயிற்றென்பது நன்கு புலனாம். தாம் வணங்கி வேண்டி வந்த தேவர்களெல்லாருந் தம்போற் பிறந்து இறக்கும் மக்களுயிர்களே யல்லாமற் பிறந்திறவாச் சிவத்தோடு ஒத்தவராகா ரென்னும் மெய்யுணர்வு சதபத பிராமண காலத் தாரியர்க்கு உண்டாயது. அஞ்ஞான்று அவர் தமிழ் மேன்மக்களுக்கு அடங்கி அவர்க்கு அணுக்கராய் ஒழுகி, அவர்பால் அம் மெய்யுணர்வினைப் பெற்றமையினாலேயாம். இவ் வுண்மை இச் சதபதபிராமணத்தின் இறுதிக்கண் உளதாகிய பிருகதாரணியகோபநிடதத்தை உற்று நோக்குதலாலும் நன்கு விளங்கும். கார்க்கிய பாலாகி என்னும் ஆரியப் பார்ப்பனன் அஜாத சத்துரு என்னுந் தமிழ் மன்னனை யடுத்து அவனாற் சிவத்தினியல்பு அறிவுறுத்தப்பட்ட வரலாறு, இப்பிருக தாரணியகோபநிடதத்தின் கண்ணேயே விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கின்றது (உ,ச) தமிழ் அரசர்களையெல்லாம் அஞ்ஞான்றிருந்த ஆரியர் க்ஷத்திரியர் என்று வழங்கின வரலாறுகளை எம்முடைய வேளாளர் நாகரிகம் என்னும் நூலிலுஞ் சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் நூலிலுஞ் சான்றுகளுடன் விளக்கிக் காட்டியிருக்கின்றேம். இன்னும், பண்டைத் தமிழர்கள் முழுமுதற்கடவுளை அப்பன் வடிவிற் சிவபிரானாக வைத்து வணங்கியது போலவே, அதனை அருள்நிலையான அம்மை வடிவில் வைத்துக் திருமாலாகவும் வணங்கிவந்தனர். ஆகவே, வடநாட்டின்கண் இருந்த தமிழரொடு கலந்து அவரது சிவ வழிபாட்டைத் தெரிந்துகொண்டு அதனைப் பாராட்டிய சதபத பிராமணகாலத்தாரியர், அவர் செய்து போந்த திருமால் வழிபாட்டையுந் தெரிந்து அதனையும் இந்நூலின் பதினான்காங் காண்டத்திற் சிறப்பித்துப் பேசியிருக்கின்றார். விஷ்ணு தேவர்களிற் சிறந்தோன் என்னுஞ் சொற்றொடர் இதன்கட் காணப்படுகின்றது. விஷ்ணு என்னுஞ் சொல் இருக்குவேதத்திற் காணப்படினும் ஆண்டது பகலவனையே குறிக்கின்றது. மற்றுச், சதபத பிராமணத்திலோ விஷ்ணு ஒரு தனித் தெய்வமாகவுந், தேவர்க்குள் நிகழ்ந்தபோரில் வெற்றிபெற்றுச் சிறந்த தலைமையுடையதாகவுஞ் சொல்லப்படுகின்றது. இவ்வாறு இத் தெய்வத்திற்கு ஆரியர் தலைமைகொடுக்கத் துவங்கியது, அவர் தமிழரது திருமால் வணக்கத்தைத் தெரிந்துகொண்ட பின்னரேயாமென்பது அறியற் பாற்று. இன்னும், இதன் பத்தாங்காண்டத்தில் வேதங்கள் மூன்று (த்ரயீவித்யா) என்றே நுவலப்படுகின்றன. இதனை உற்றுநோக்குங்காற், சதபத பிராமணம் எழுதப்பட்ட காலத்தில் ஆரிய வேதங்கள் மூன்றே யிருந்தன வென்பதும், இதற்குப் பிற்பட்ட காலத்திலேதான் ஆரியர் அதர்வத்தை யுஞ் சேர்த்து அவற்றை நான்காக்கினரென்பதும், இவர் இங்ஙனந் தம் ஆரிய வேதத்தை நான்காக்கியது. தமிழர்கள் தமது வேதத்தை அஃது அறம் பொருள் இன்பம் வீடு நுகலுதல்பற்றி நான்கு கூறாக வழங்கியது கண்டேயா மென்பதும் இனிது விளங்கா நிற்கும். இன்னும், இந்நூலின் பதினான்காம் காண்டத்திலே சூத்திரம் என்னுஞ் சொன் முதன்முதற் காணப்படுகின்றது. இதற்கு முற்பட்ட இருக்கு முதலான பழைய அரியநூல்களில் யாண்டும் இச்சொற் காணப்படுகின்றிலது. பண்டையாரிய நூல்களில் ஓரிடத்துங் காணப்படாத இச்சொல், முதன் முதல் இச்சதபத பிராமணத்தின்கட் காணப்படுதலை ஆராய்ந்து பார்க்குங்கால், இந்நூல் இயற்றிய காலத்திருந்த ஆரியர் தமிழரொடு கலந்து, அவர் தம் நூலில் வழங்கிய சூத்திரம் என்னுஞ் சொல்லையெடுத்து, இதன்கண் வழங்கிக் கொண்டாரென்பது தெற்றென விளங்கா நிற்கும். இச் சதபத பிராமணம் இயற்றப்படுதற்குப் பன்னூறாண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாகிய தொல்காப்பியச் செந்தமிழ் நூலின்கண், மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு சில்வகை யெழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை யுரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த வொண்மைத் தாகித் துளக்க லாகாத் துணைமை யெய்தி அளக்க லாகா அரும்பொருட் டாகிப் பல்வகை யானும் பயன்றெரி புடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் (மரபியல் 100) என்று போந்த சூத்திரத்தாற் சூத்திரம் என்னுஞ் சொல்லும், அதனால் உணர்த்தப்படும் பாவின் இலக்கணமும் நன்கு அறிவுறுத்தப்பட்டமை காண்க. இவ்வாற்றாற் சூத்திரம் என்பது தனித்தமிழ்ச் சொல்லே யாதலும், அதனைத் தமிழ் மக்களிடமிருந்தெடுத்தே சதபத பிராமணகாலத் தாரியர் வழங்கிக் கொண்டாராதலும் ஐயுறவுக்கு இடமின்றி நிறுவப்படுதல் காண்க. இன்னும், தெற்கே தமிழ்நாட்டின் ஒரு பெரும் பகுதி யாகிய குமரிநாடு கடல்கொண்டழிந்த வரலாறு, இச்சதபத பிராமணத்தின் முதற் காண்டத்தின்கண் (அ, க, க) விரிவாகச் சொல்லப்பட்டிருத்தலால், இந்நூல் அக் கடல்கோளுக்குப் பின்னர் இயற்றப்பட்டமையும், இதனை அக்காலத்து ஆரியர் வடநாடு போந்த தமிழர் பாற் கேட்டுணர்ந்து அதன்கட் குறிப்பிட்டமையும் நன்கு பெறப்படும். அதுவேயுமன்றிப், பாண்டவர் ஐவர் காலத்திற்குப் பின் இச்சதபத பிராமணம் இயற்றப்பட்டதென்பதற்கு, அசுவமேதஞ் செய்து கொலைப் பாவத்தைக் கழுவிக் கொண்டவராகச் சொல்லப்படும் ஜநமேஜய மன்னனும் அவனுடன் பிறந்தாரான பீமசேனன், உக்கிரசேனன் சுருதசேனன் என்னும் மூவரும் இதன் ககூஆங் காண்டத்திற் சொல்லப்பட்டிருத்தலே உறுபெருஞ் சான்றாம். இம்மன்னர் நால்வரும் பாண்டவ அரசரின் வழித்தோன்றல்கள் ஆதல். பாரதக் கதையினை யுணர்ந்தார் எவரும் நன்கறிவர். எனவே, தலைச்சங்கத்திருந்து தமிழாராய்ந்தவரும், பாண்டவர் காலத்தவனான பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனுக்கு நண்பரும் ஆன முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் பெருமான் காலத்திற்குச் சிறிதேறக்குறைய ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரே சதபத பிராமணம் இயற்றப்பட்டதாகல் வேண்டுமென் றுணர்ந்துகொள்க. மேலுஞ், சதபத பிராமணத்திற் குறிக்கப்பட்ட தமிழ் நாட்டுக் கடல்கோளுக்கு முன் பஃறுளி யாற்றங்கரைப் பக்கத்தே பாண்டியன் பல்யாகசலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் வேந்தர் பெருமான் அரசு செலுத்தின வரலாறு, மேலெடுத்துக் காட்டின ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் என்னும் புறநானூற்றுச் செய்யுளால் இனிது விளங்குதலிற், சதபத பிராமணகாலம் இப்பண்டைப் பாண்டி வேந்தன் காலத்திற்கும் பிற்பட்டதாதல் தெற்றெனப் புலனாம். அத்துணைப் பழைய காலத்திருந்த இப்பாண்டி வேந்தன் சிவபிரான் றிருவடிக்கண் மிக்க அன்புடையனா யிருந்தனனென்பது, பணியியரத்தை நின்குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே என்று காரிகிழார் என்னும் புலவர் பெருமான் அவனைச் சிறப்பித்துப் பாடிய புறநானூற்றுச் செய்யுளால் (சா) நன் குணரப்படும். சிவநேயத்திற் சிறந்த இப்பாண்டிய மன்னனை அக்காலத்திருந்த ஆரியக் குருமார் தம் வயப்படுத்தி, அவன் பல யாகங்களைச் செய்யும்படி தூண்டிவிட்டனரென்ப தனால், அவ்வாரியக் குருமார் அத்துணைப் பழைய நாளிலேயே நம் தமிழ்நாடு புகுந்து நம் அரசர்களையுஞ் செல்வர்களையுந் தம் வயப்படுத்தித், தமது வேள்விச் சடங்குக்கு அவர்களை உடன்படுத்திக் கொண்டமை நன்கு புலனாகின்றதன்றோ? இவ்வாறு அவ்வேந்தன் ஆரியக் குருமார் சூழலில் அகப்பட்டுப் பல வேள்விகளைச் செய்ததனாலேயே பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமி எனப் பெயர் வழங்கப் பெற்றான். இங்ஙனமாக, ஆரியக் குருமார் மிகப் பழைய நாளிலேயே வடநாட்டிலிருந்த தமிழ்மன்னர்களான பாண்டவர் முதலாயினாரைத் தம் வயப்படுத்திக் கொண்டாற்போலவே, அவர் தென்றமிழ்நாடு புகுந்து இங்கிருந்த வேந்தர்களையுந் தம் வயப்படுத்திக் கொண்டார். இங்ஙனம், இவர் தமிழ் வேந்தர்களைத் தம் வயப்படுத்திக் கொண்டாலும், அவர்க் குரிய கடவுள் வழிபாடும் ஏனை நல்லொழுக்க முறைகளும் மிக விழுமியவாய் இருந்தமையின், அவை தம்மை அழிக்க மாட்டாராய்ச், சில திரிவுபாடுகளுடன் அவற்றைத் தாமுங் கைக்கொண்டு, தம் நூல்களில் வரைந்துவைத்து ஒழுக லாயினர். இவ்வாறவர் தமிழர்பா லிருந்தெடுத்துத் தாம் கைக்கொண்டொழுகிய ஒழுகலாறுகள் பலவற்றுள் தென்புலத்தார் கடனும் ஒன்றாகும். இனி, இச்சதபத பிராமண காலத்திற்கு முற்பட்டவனாகிய பாண்டியன் பல்யாகசலை முதுகுடுமிப் பெருவழுதி மேல் நெட்டிமையார் என்னும் நல்லிசைப் புலவர் பாடிய ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் என்னுஞ் செய்யுளில், தென்புலத்தார்க்கு நன்றிக்கடன் செலுத்துந் தமிழரின் ஒழுகலாறு நுவலப்பட்டிருத்தலின், இச்சதபத பிராமணம் இயற்றப்படுதற்கு முன்னமே நம் பண்டைத் தமிழ்மக்கள் தெற்கே குமரி நாட்டிலிருந்த தம் மூதாதையரை ஒருங்கே நினைந்து இறைவனை வழிபட்டு வந்தமை தெற் றென விளங்கா நிற்கும். இங்ஙனந்தெற்கிருந்த தம் மூதாதை யர்க்கு நன்றிக்கடன் செலுத்தி வந்த தமிழரது ஒழுகலாறு, இருக்கு எசுர் முதலான மிகப் பழைய ஆரிய நூல்களுள் யாண்டும் நுவலப்படாமையின், அக்காலத்து ஆரியர்க்கு அது தெரியாதென்பதூஉம், மற்று அந்நூல்களுக்குப் பிற்பட்டு வந்த சதபத பிராமணத்தில் அவ்வொழுகலாறு நுவலப்பட் டிருத்தலின் அப்பிற்காலத் தாரியர்க்கே அது தெரியலாயிற்றென்பதூஉம் ஐயுறவுக்கிடனின்றி நாட்டப் பட்டமை காண்க. இனி, ஆரியர் இவ்விந்திய நாட்டிற் புகுந்தகாலந் தொட்டே, தமக்கு ஊண்கொடுத்து உடைகொடுத்து இருக்க உறையுள் கொடுத்துப் பலவகையால் உதவியாற்றி வந்த தமிழ்மக்களைத் தஸ்யுக்கள், தாசர்கள், இலிங்கத்தை வணங்குபவர்கள், வேள்விச் சடங்கு செய்யாதவர்கள், அசுரர்கள், இராக்கதர்கள் என்று இகழ்ந்து வந்தமையோடு, அவர்களைச் சுவடற அழித்து விட வேண்டுமென்றுந், தாம் வணங்கிய இந்திரன், வருணன் முதலான தேவர்களை ஓயாமல் வேண்டி வந்திருக்கின்றார்கள். இக் காலத்துந் தம்மைச் சாமி, சாமி என்று பலவகையாற் கொண்டாடித், தமக்கு வேண்டிய உதவிகளை யெல்லாஞ் செய்து வருந் தமிழ்மக்களை, அவ்வினத்தவர் சூத்திரர் என்னும் மிக இழிவான சொல்லால் வழங்கிவருதல் எவரும் அறிந்ததன்றோ? இங்ஙனம் பண்டைநாள் தொட்டு இன்று காறும் ஆரியரும் அவர் குழுவிற் சேர்ந்து அவர் வண்ணமாயினாரும் தமிழரை நஞ்சாகப் பகைத்துவரும் வரலாறுகளை வேளாளர் நாகரிகம், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் நூல்களில் விரித்து விளக்கிக் காட்டியிருக்கின்றேம். இவ்வாறு தமிழர்பால் ஆரியர்க்கு இயற்கையேயுள்ள நச்சுப்பகைமை, இச்சதபத பிராமண காலத்து ஆரியர்மாட்டுங் காணப்படுகின்றது. இவ் ஆரியர்கள் தாம் தேவரெனவும், தாம் உறையும் வட திசைக்கண் மட்டுமே தேவர்கள் உறையுந் துறக்கவுலகம் உண் டெனவுந், தாம் மட்டுமே அத்துறக்கவுலகு செல்லத் தம்மவ ரல்லாத தமிழர்களாகிய அசுரர்களெல்லாந் தெற்கேயுள்ள கூற்றுவனுலகு செல்வரெனவும் வரைந்திருக்கின்றனர்; அது வருமாறு: சதபதபிராமணம், 13. ஆங் காண்டம், 7 ஆம் அத்தியாயம், 3 ஆம் பிராணம் 7 இரண்டு வேதிகள் இருக்கின்றன, தேவருலகும் பிதுரருலகும் என ஈருலகுகள் உண்டு என்று அவர்கள் சொல்லுகின்றார்கள். ஒன்று (ஒரு வேதி) வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும் இருக்கின்றன; ஏன் என்றால், தேவர்களுலகு வடக்கிலும் பிதுரர்களுலகு தெற்கிலும் உள்ளன; வடபால் உள்ளதனால் அவன் தேவருலகைப் பெறுகின்றான், தென்பால் உள்ளதனால் அவன் பிதுரருலகைப் பெறுகின்றான். 13. ஆங் காண்டம், 8-ஆம் அத்தியாயம், 1 ஆம் பிராமணம், 5. தேவர்கள், தமக்கு எதிரிகளும் பகைவருமான அசுரர்களை அவர்களிருந்த இடங்களினின்றுந் துரத்தி விட்டார்கள். இருக்க இடமில்லாமையால் அவர்கள் வெல்லப்பட்டார்கள். ஆனதனாற்றான், தேவரினத்தைச் சேர்ந்த மக்கள் தாம் புதைக்கும் இடங்களை நாற்கோண வடிவினதாக அமைக்கின்றனர்; மற்று, அசுர இனத்தைச் சேர்ந்த கீழ்நாட்டவரும்(சூத்திரரும்) பிறருமோ தேவர்களால் தாம் தம் இருப்பிடங்களினின்றுந் துரத்தப்பட்டவர்களாதலால், அவற்றை வட்டவடிவினதாக அமைக்கின்றனர். அவன் அவ்விடத்தைக் கிழக்கிற்குத் தெற்கிற்கும் இடையிலே தங்குமாறு அமைத்தான்; ஏனென்றாற், பிதுரர் உலகிற்குச் செலுத்தும்வாயில் மெய்யாகவே அவ்விடத்திலேதான் இருக்கின்றது. இவ்வாறிவர்கள் வரைந்திருப்பதுகொண்டு, வடபால் உள்ளதுதான் தேவர்கள் உறையுந் துறக்கவுலகமாம் என்பதுந், தென்பால் உள்ளதுதான் பிதுரர்கள் உறையும் நரகவுலகமா மென்பதும், ஆரியராகிய தாமெல்லாந் துறக்கவுலகு செல்லத் தமிழாராகிய பிறரெல்லாந் தெற்கேயுள்ள நரகவுலகே செல்வரென்பதும் இவ்வாரியர்க்குக் கருத்தாதல் நன்கறியப்படும். எனவே, தமிழர்க்கு நரகப்பே றல்லது வேறில்லை யென்றும், பிதுரருலகென்பது நரகவுலகே யன்றிப் பிறிதன்றென்றும் இவ்வாரியர் கொண்டமை நினைவில் இருத்திக் கொள்க. இங்ஙனந் தமிழர்மேல் வைத்த நச்சுப் பகைமை காரணமாகவே, தெற்கே நாகரிகமுடையராயிருந்து இறந்துபட்ட தமிழர்தம் மூதாதைகளுக்குரிய தென்றிசையை, உயிரைக் கொள்கை கொள்ளுங் கூற்றுவனுலகாகவும் அவர்தம் பிதுரருறையும் அவ் வுலகை நரகவுலகாகவுஞ் சதபத பிராமணகாலத் தாரியர் எழுதி வைத்தனர். அவர் இத்துணை இழிவு படுத்தி எழுதி வைத்ததனை ஆராய்ந்து பார்க்கமாட்டாத இஞ்ஞான்றைத் தமிழர்களும் பிதுரருலகுதென்றிசைக்கண் உளதென்னும் அவருரையைத் தழுவி, அதற்கியைய ஒழுகலாயினர் கண்டீர்! இங்ஙனந் தென்றிசைக்கண் உறைவார் பிதுரர் என்று கூறிய ஆரியர்க்கு, அவரை அயன்படைப்பான தேவர் என்று மாற்றிச் சொல்வதற்கு மனம் ஒருப்படுமோ? ஒருப்படாதன்றே; ஆனதனாற்றான், சதபத பிராமணத்தின்கண் யாண்டும் பிதுரர் தேவர் குழுவிற் சேர்த்துச் சொல்லப்படாமல், தேவர்களுறையும் வடதிசைக்கு எதிரான தென்றிசைக்கட் கூற்றுவனுலகில் உறைபவராகச் சொல்லப்பட்டன ரென்க. ஆகவே, பரிமேலழகியார் உரைத்தவுரை ஆரியவேத நூலுக்கும், அதற்குரையாயெழுந்த சதபத பிராமணத்திற்கும் முற்றும் மாறாதல் கண்டு கொள்க. அற்றேற், பரிமேலழகியார் பிதுரரை அயன் படைப் பான கடவுட்சாதி யென்றது எங்கிருந் தெடுத்த தெனிற் கூறுதும், வடமொழியில் இஞ்ஞான்று காணப்படும் புராணங்களிற் பெரும்பாலன, தென்னாட்டின் கண் உள்ள சைவர் வைணவர்களால் ஆக்கப்பட்டனவாகும். இச் சைவ வைணவரிற் பெரும்பாலார் பண்டைத் தமிழரின் வழி வந்தவரே யல்லாமல் ஆரியரின் வழிவந்த வரல்லர். என்றாலும், ஆரியர் இந்நாட்டிற் குடிபுகுந்து இங்குள்ள அரசர்களையுஞ் செல்வர்களையுந் தம் வயப்படுத்தித் தம்முடைய ஆட்சியையும் முதன்மையையும் நாட்டவே, அவ ருடைய சிறு தெய்வவணக்க வெளியாட்டு வேள்விகட்குச் சிறிதும் உடம்படாத சைவ வைணவர், ஆரியக் கோட்பாட்டை மறுத்துத் தாம் வணங்கிப் போந்த சிவபிரான் வழிபாட்டையுந் திருமால் வழிபாட்டையும் நிலைநிறுத்துதற்கு, ஆரியர் கொணர்ந்த வட மொழியையே கருவியாய்க் கொண்டு புராணங்களும் ஆகமங்களும் இயற்றினார். இங்குவந்த ஆரியர் தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்றுந், தாம் வழங்கிய மொழியைத் தேவமொழி யென்றுஞ் சொல்லி இங்குள்ள அரசர்களையும் பிறரையும் நம்பச் செய்து, இங்கு எவர்க்குமில்லாத ஒரு பெருஞ் சிறப்பையும் ஒரு பெரும் பாராட்டையுந் தமக்கு உண்டாக்கிக் கொண்டமையினாலே, அவர்களுடைய கோட்பாடுகளை மறுத்துத் தம்முடைய கோட்பாடுகளை நிலைநிறுத்த வேண்டிய இன்றியமை யாமையினையும், அங்ஙனஞ் செய்வது தமிழிலன்றி அவர் சிறந்தெடுத்துப் பாராட்டவைத்த தேவமொழி யென்னும் வடமொழியின்கட் செய்ய வேண்டிய இன்றியமையாமையினையும், அங்ஙனம் அதன்கட் செய்வதூஉம் மக்களாகிய தம் பெயராற் செய்யப்படின் ஆரியராலும் அவர் வயப் பட்டாராலுங் கைக்கொள்ளப்படா தாகலின் தம் பெயரை மறைத்துக் கடவுட் பெயரால் அமைக்கவேண்டும் இன்றியமையாமையினையும் நன்குணர்ந்த சைவவைணவர் தத்தந் தெய்வங்களே அப் புராணங்களையும் ஆகமங்களையும் வடமொழியில் ஆக்கலாயின வென அவற்றில் வரைந்து வைத்தனர். இவ் வடமொழி நூல்களெல்லாந் தமிழ்நாட்டிலுள்ள வர்களாலே இற்றைக்குத் தொள்ளாயிர ஆண்டுகளுக்கு முன்னேதொட்டு நெடுக ஆக்கப்பட்டு வந்தமைக்குச் சான்றுகளும் அந்நூல்களின் பிற வரலாறுகளும் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பெருநூலில் விரித்து விளக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு புராணங்களும் ஆகமங்களும் வடமொழியில் எழுதப்பட்ட பிற்காலத்திலேதான் தென்புலத்து மூதாதையரான பிதுரர்களுந் தேவர்களாக உயர்த்தி நம் தமிழர்களால் எழுதிவைக்கப் பட்டார்கள். ஆரியர்கள் தமிழரை அசுரர்களென்றும், அவருறையுந் தென்றிசையைக் கூற்றுவனுலகென்றும், அதன்கண் இருந்து இறந்து பட்ட மூதாதையரை அக் கூற்றுவலனுலகு சென்று வைகும் பிதுரரென்றும் இழித்துக் கூறினராகலின் அவ் இழிபை மாற்றவே, புராண ஆகமங்க ளெழுதிய தமிழ்க்குருக்கண்மார் அவரை அயன் படைப்பான கடவுட்சாதி யென்று அந்நூல்களில் வரைந்து வைத்தாராகல் வேண்டும். அதனைத் தழுவியே பரிமேலழகியாரும் அவரைக் கடவுட்சாதி யென்று எழுதி விட்டா ரென்க. முற்செய்த நூல் இது பிற்செய்த நூல் இதுவென்று வரலாற்று முறையில் நின்று ஆராய்ந்து பாராமையினாலேயே தமிழ் ஆரியம் முதலான மொழிகளை நன்கு கற்றவர்களும் நூல்களின் உண்மையும் நூலாசிரியர் கருத்தும் உணராராய்ப் பழையவற்றைப் புதியவாகவும் புதியவற்றைப் பழையவாகவும் மயங்கக்கொண்டு, உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் நம்பிப் பெரிதும் பிழைபடுகின்றார். அதுவேயுமன்றி, ஆரியமொழி நூல்களில் எஃது எங்ஙனம் எழுதப்பட்டிருந்தாலும் அதனை அங்ஙனமே நம்பி அறியாமையில் அமிழ்ந்திக் கிடப்பதும் நம்மனோர்க்குள் வேரூன்றிய வழக்கமாய் விட்டது. அதுவல்லாமலும், ஆரியர் தமிழர்க்குச் செய்து போந்த தீமைகளை எடுத்துச் சொல்லி, இனித் தமிழர் அத் தீமைகளினின்றும் விலகி முன்னேற்றமடைதற்குரிய வழி வகைகளைக் காட்டினால், அதனையுங் குற்றமாகச் சொல்வார் தந்நலம் பாராட்டுந் தமிழரிற் பலர் உளராகலின், அவராலும் ஆராய்ச்சியறிவு தடைப்படுகின்றது. என்றாலுந், தென்புலத்தில் மிக்க நாகரிகமுடையராயிருந்து காலஞ்சென்ற தம் மூதாதையர் அனைவரையும் ஒருங்கு சேர்த்து நினைந்து, அவர்க்கு மேன்மேல் நலம் அருள்கவென்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டி நன்றிக்கடன் செலுத்துவதே. அம் மூதாதையர் வழிவந்த தமிழ் மக்களாகிய நமக்கு உரியதாமென்பதூஉம், அதனையே பண்டைத் தமிழ்ச் சான்றோராகிய நெட்டிமையாரும் அவர்வழி பிழையாது வந்த தெய்வப் புலமைத் திருவள்ளுவ னாரும் அருளிய செந்தமிழ்ப் பாட்டுகள் அறிவுறுத்து கின்றன வென்பதூஉம், நம் தமிழ்மக்கட் குரித்தல்லாத பிதுரர் வழிபாட்டைத் தென்புலத்தார் தெய்வம் என்னுந் திருக்குறளுக்கு ஏற்றிச் சொல்லிய பரிமேலழகியாருரை கொள்ளற்பால தன்றென்பதூஉம் இவ்வாராய்ச்சிக் கட்டுரையின்கண் எடுத்துக் காட்டி நம் மக்களை மெய்ந்நெறியில் உய்த்தல் இன்றியமையாததாதல் காண்க. 4. தனித் தமிழும் கலப்புத் தமிழும் மக்கட் கூட்டத்தாரின் நாகரிகமெல்லாம், அவர் வழங்கும் மொழியினால் நன்றாயறியப்படும். நாகரிகமில்லாத மக்களின் மொழியானது நாளுக்கு நாள் உருமாறியும், மற்ற மொழிச் சொற்களொடு கலந்துங் கடைசியில் தானொரு மொழியென்றே நில்லாமல் மாய்ந்து போகின்றது. இதற்குச் சான்றாக உலகமெங்குமுள்ள காட்டு மிராண்டிகளின் மொழிகள் காலந்தோறும் மாறி மாறி மாய்ந்து போதலை வெள்ளைக்கார அறிஞர்கள் எடுத்துக் காட்டி யிருக்கின்றார்கள். ஆகவே, நிலையான நாகரிகமும், நிலையான வாழ்க்கையும், நாளுக்கு நாள் பெருகும் அறிவு விளக்கமும், அரிய முயற்சியும் உடைய மக்களிடத்தல்லாமல், ,மற்றவர்பால் ஒரு மொழி சிறந்து தூயதாய்த் தொடர்பாய் நடைபெறாதென்பது அறிவுடையார்க்கெல்லாம் உடன் பாடாகும். ஆதலால், நாகரிக முடைய மக்கள் தமது மொழியை நன்கு பாதுகாத்து வளர்த்தலிற் கண்ணுங் கருத்துமாய் இருக்க வேண்டுமென்பது சொல்லாமலே நன்கு விளங்கும். மக்களின் முயற்சியால் ஒரு மொழியானது உரம் பெற்று உயிர்ப் புடையதாய் வழங்குதல் போலவே, திருந்திய மொழி வழக்கினாலும், அம்மக்கள் உரம்பெற்று உயிர்ப்புடன் நடைபெறுவர். வலிமையிற் சிறந்த ஒருவனையும், அறிவில் மிக்க மற்றொருவனையும், நல்லியற்கை வாய்ந்த வேறொரு வனையும், அவனவன் சொற்களினாலேயே நாம் அறிந்து கொள்ளலாம். அங்ஙனமே வலிமை யில்லாத ஒருவனையும், அறிவு குறைந்த மற்றொருவனையும், தீயோனான வேறொரு வனையும் அவனவன் சொற்களினாலேயே அறிந்து கொள்ளலாம். ஆகவே, ஒரு மொழி வழக்கிற்கு அம் மொழிக்குரிய மக்கள் இன்றியமையாதவராயிருத்தல் போலவே, நாகரீக வாழ்க்கைக்கும் அவர் தம் மொழி இன்றியமையாதாகுமென்பது பெறப்படும். மக்களை விட்டு மொழியும், மொழியை விட்டு மக்களும் உயிர் வாழ்தல் சிறிதும் இயலாது. எனது விருப்பப்படிதான் யான் பேசும் மொழியைத் திரித்தும், அயல் மொழிச் சொற்களோடு கலந்து மாசு படுத்தியும் வழங்குவேன்; அம் மொழியின் அமைப்பின்படி யான் நடக்கக் கடவேனல்லேன் என்று ஒவ்வொருவனுந் தனது மொழியைத் தன் விருப்பப்படி யெல்லாந் திரித்துக் கொண்டு போவனாயின், சிறிது காலத்தில் ஒரு மக்கட் கூட்டத்தாரிலேயே ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முடியாத வகையாய் ஒவ்வொரு சிறு கூட்டத்திற்கும் ஒவ்வொரு புதுமொழி காலந்தோறும் உண்டாகி அம் மக்களை ஒன்று சேரவிடாமல் அவர்களைப் பல சிறு கூட்டங்களாகப் பிரித்து விடும். முன்னொரு காலத்தில் இவ்விந்திய நாடெங்கும் பரவி யிருந்த தமிழும், தமிழ் மக்களும் இப்போது எத்தகைய நிலையிலிருக்கின்றனர் என்பதை நினைத்துப் பாருங்கள்! முற்காலத்தில் தமிழ்மொழி ஒன்றையே பேசிய தமிழ் மக்களின் தொகை ஆறு கோடியாகும். அப்பெருந் தொகை யான மக்கள் இப்போது சிறு சிறு கூட்டத்தவராய்த் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவு, தோடம், படகம், குடகம், உராவோன், எர்க்கலா, ஏனாதி, பிராகுயி, கோண்டம், பில்லம் முதலான பல்வேறு மொழிகளைப் பேசுவாராய், ஒருவர் பேசுவதை ஒருவர் அறியாமல் விழிக்கும் நிலையில் இருப்பது எதனாலென்பதையும் நினைத்துப் பாருங்கள்! நாகரிகத்தாற் சிறந்த தமிழ், முன்னோர்கள் வழங்கிய செந்தமிழ் வழக்கிற்குச் சிறிதுங் கட்டுப்படாமல் தாந்தாம் விரும்பியபடியே தமிழ்ச் சொற்களைத் திரிபு படுத்தியும், வட சொற்களை ஏராளமாகக் கலந்து மாசு படுத்தியும் வந்த தமிழ்மக்களன்றோ இப்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலான பலவேறு மொழிகளைப்பேசும் பலவேறு இனத்தவர்களாய் ஒருவரை ஒருவர் அறியாமலும், ஒருவரோடொருவர் அளவளாவுதற் கில்லாமலும், ஆங்காங்குத் தன்னந் தனியராய்ச் சிறு சிறு கூட்டத்தவராய் ஆரியர்களுக்கு அடிமைகளாய் வாழ்நாட் கழிக்கின்றனர். ஆதலால், ஒரு மக்கட் கூட்டத்தார் தம்முட் பலவகையாய்ப் பிளவு படாமல் ஒன்றுபட்டிருந்து நன்கு உயிர்வாழ்வதற்கு அவர்கள் தமக்குரிய மொழியைத் திரிபு படுத்தாமலும், அதில் அயல் மொழிச் சொற்களைக் கலவா மலும் மிகவும் கருத்தாக அதனைப் பாதுகாக்க வேண்டு மென்பது புலனாகும். இனி, ஆங்கில மொழியை எடுத்துக்காட்டி, அதிற் பலவேறு மொழிகள் கலந்திருப்பதே அதனுடைய வளர்ச்சிக்கும் பரவுதலுக்குங் காரணம் என்பர் சிலர். ஆனால், ஆங்கில மொழியின் வரலாற்றை அவர்கள் செவ்வையாக அறிந்துதான் பேசுகின்றார்களோ என்பது எனக்கு ஐயமா யிருக்கின்றது. ஆங்கிலமானது சொல் வளமில்லாத ஏழை மொழி; பழைய நாளில் நாகரிக மில்லாத ஒரு சிறு கூட்டத்தவராற்பேசப்பட்ட மொழி; காலங்கடோறும் பிற நாடுகளிலிருந்து வந்த முரடர்களான வேறு வேறு மக்களால் அலைப்புண்டு. அவர்கள் கொண்டு வந்த பல்வேறு மொழி களாற் கலப்புண்டு தன் தூய்மை யிழந்தமொழி; காலங்க டோறும் மாறிக் கொண்டு வந்த மொழி. இதனைப் பேசும் மக்கள் அறிவிலும், முயற்சியிலும் மேம்பட்டு நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்து வழங்கிய பின்னரே, தமது மொழியை இனித் திரிந்து போக விட்டால் தமது வாழ்க்கை நிலையாது என நன்குணர்ந்து, அதற்கு இலக்கண இலக்கிய வரம்பு கோலி அதனைக் கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வருகின்றார்கள். ஆசிரியர் பெயின் மிக்கிள் ஜான் முதலான வர்கள், தமது ஆங்கில மொழியைத் தூயதாகப் பிறமொழிச் சொற்கள் கலவாமல் எவ்வளவு அதனைப் பாதுகாத்து வழங்கக் கூடுமோ, அவ்வளவுஞ் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி எழுதியிருக்கின்றார்கள். இன்றைக்கு ஐந் நூறாண்டு கட்கு முன்னிருந்த ஆங்கில மொழியும், இன்றைக்கு முந்நூறாண்டுகட்கு முன்னிருந்த ஆங்கில மொழியும் வெவ்வேறு மொழிகள் போல் மாறிவிட்டமையால், அக் காலத்தில் எழுதப்பட்ட நூல்களை இப்போது ஆங்கிலம் பயிலுகின்றவர்கள் தெரிந்து கொள்ள முடியாத வர்களாயிருக்கின்றார்கள். சாசர் எழுதிய நூல்களையும், ஷேக்ஸ்பியர் எழுதிய நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவ்வுண்மை நன்கு விளங்கும். ஆங்கில மொழி அத்தகையதாயிருக்க, அதனொடு தமிழை ஒப்பிட வந்த அவர்கள், தமிழின் வரலாறும், அதன் வழக்கும் எவ்வளவு ஆராய்ந் திருக்கின்றார்களென்பது. அவர்கள் சொற்களிலிருந்து விளங்கவில்லை. ஆனாலும், எமக்குத் தெரிந்த மட்டில் எழுதுகிறேன். தமிழின் வரலாற்றையும், வழக்கையும் விரிவாகத் தெரிய வேண்டினால், யாம் நீண்டகாலமாக ஆராய்ந்து எழுதியிருக்கும் நூல்களைப் பார்க்கும்படி வேண்டுகின்றேம். தமிழானது மிகுந்த சொல் வளமுடையது. தமிழையும், பிறமொழிகளையும் நடுவு நின்று நன்கு ஆராய்ந்த கால்டுவெல் முதலான மேனாட்டாசிரியர்கள், தமிழானது பிறமொழிகளின் உதவியைச் சிறிதும் வேண்டாமல் எல்லாத் துறைகளிலும் தனித்தியங்க வல்லது என்றும், ஆங்கிலம் முதலான மற்ற மொழிகளோ பிற மொழிகளின் உதவியை வேண்டாமல் தனித்தியங்க மாட்டாதனவென்றும், தமிழானது பிறமொழிக் கலப்பின்றித் தூயதாக எழுதப்படும்போதும், பேசப்படும்போதும் மிக்க அழகுடையதாய்ப் பிறருள்ளத்தைக் கவருந்தன்மையதாய் விளங்குகின்ற தென்றும் வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் சொல்லிய அவ் வுண்மை எல்லாப் பொருள்களையும் தனித்தமிழில் எடுத்துரைக்குந் திருக்குறள் என்னும் ஒரு நூலைப் பார்த்தாலும், நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதுவும் போதாதேல், திருக்குறளின் காலத்தும் அதற்கு முற்பட்ட காலத்தும், இயற்றப்பட்ட பழைய செந்தமிழ் நூல்களைப் பார்த்தால் தமிழின் சொல்வளம், பொருள்வளம் நன்கு விளங்கும். இவ்வளவு சிறந்த தமிழ் மொழியைப் பேசிய பழைய தமிழ் மக்கள் எவ்வளவு சிறந்த நாகரிகம் வாய்ந்த வர்களாயும், பிற மொழியாளர்களுக்கும். அவர்களுடைய சொற்களுக்கும் அடிமைப்படாத எவ்வளவு தனிப்பெருஞ் சிறப்பு உடையவர்களாயும் இருந்திருக்க வேண்டும்! இத்தகைய தமிழரையும் இத்தகைய தமிழ் மொழியையும், ஆங்கில மொழிக்கும், ஆங்கில மக்களுக்கும் ஒப்பிடுவது எவ்வளவு பொருந்தாததா யிருக்கின்றது! தமிழ்மொழியோ பழைய நாளில் ஒரு சிறு கூட்டத்தவராற் பேசப்படாமல், இவ்வுலக மெங்கணும் பரவியிருந்த பெருந்தொகையினரான நாகரிக நன்மக்களால் வழங்கப்பட்டதாகும். பண்டைத் தமிழ்மக்கள் உழவு, வாணிகம், கைத்தொழில், போர்த்தொழில் முதலிய எல்லாத் துறைகளிலும் ஒப்புயர்வின்றி ஓங்கிப்பொலிந்தமையால், அவர்களை அலைப்பாரும் அவர்கள்வழங்கிய தமிழ் மொழியை அலைத்துச் சிதைப்பாரும் அந்நாளில் இலராயினர். இனித், தமிழோ காலங்கடோறுந் தன்னியல்புக்கு மாறாகத் திரிபு அடைந்துவராத மொழி. தமிழ் இன்ன காலத்திலேதான் தோன்றிய தென்று கட்டுரைத்துச் சொல்லல் இயலாதாயினும், அதன் பழமையை வரலாற்று முறையில் ஆராய்ந்து பார்க்குங்கால். அஃது எகிப்தியர் காலத்திற்கும் முற்பட்டே சிறந்து வழங்கிய தொன்றாகக் காணப்படுகின்றது. இற்றைக்கு ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு இதுகாறும்வழங்கி வருவதாகிய தொல்காப்பிய மென்னும் அருந்தமிழ் நூலை உற்று ஆராயுங்கால் தொல்காப்பியத்திற்கு முன்னமே எத்தனையோ பல சிறந்த தமிழ்நூல்கள் இருந்திருக்க வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகின்றது. இவ்வளவு பழமையான காலத்திலே எழுதப்பட்ட நூல்கள் இப்போது முழுதும் தமக்குக் கிடையாவிடினும் அவற்றிற் சிலசில பகுதிகளும், தொல்காப்பியம் முழுமையுற் தொல்காப்பியத்திற்குப் பின்னெழுந்த பல முழு நூல்களும், அவற்றிற்குப் பின்னே வந்த பத்துப் பாட்டும் எட்டுத் தொகை பதினென் கீழ்க்கணக்கு முதலான பழைய தமிழ்நூல்களுந் தொடர்பாக நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவ்வளவு நூல்களையும் சிறிது உதவிகொண்டு நாம் எளிதிற் கற்றறியத் தக்க நிலையில் இருப்பதை உணர்ந்து பார்க்குங்கால், நம் முன்னோர்கள் நமது தமிழ் மொழியை எவ்வளவு பாதுகாத்துத் திரி படையாமலும், பிறமொழிச் சொற்கலவாமலும் வழங்கி வந்திருக்கின்றனரென்பதை அறியலாம். பெரும்பான்மை யான இந்நூல்கள் திரிபடையாத தமிழில் எழுதப்பட்டிருத்த லினாலேதான், இப்போதும் நாம் அவைகளை எளிதிற்கற்று, நம் முன்னோர்களின் உயர்ந்த சிறந்த கருத்துக்களை அறியப்பெறுகின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட திருக்குறளை நாம் இப்போது எளிதிற் கற்று உணர்தல் போல், இக்காலத்து ஆங்கில மொழியைக் கற்பவர்கள் ஐந்நூறாண்டுகட்கு முற்பட்ட சாசருடைய நூல்களையும், முந்நூறாண்டுகட்கு முற்பட்ட ஷேக்ஸ்பியருடைய நூல் களையும் எளிதிற் கற்றறிதல் கூடுமோ என்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஆகவே, நமது செந்தமிழ் மொழி ஆறாயிரம் ஆண்டுகட்கு மேலாக நம் முன்னோர்களால் திரிபடையாமற் பாதுகாக்கப்பட்டு வந்ததனால் நாம் அடைந்து வரும் பெரும்பயனும், ஆங்கில மொழி, காலங்க டோறும் மாறி வந்ததனால் ஆங்கில மக்கள் நெடுங்காலம் வரையில் அதனாற் பயன் பெறாதிருந்து, அதனால் பெரிதும் இடர்ப்பட்டு, இப்போது அதனைத் திரிபடையாமற் பாதுகாத்து வருதலால் அவர்கள் அடைந்து வரும் நன்மையும் ஆராய்ந்து காண்பவர் தமிழ் பிறமொழிக் கலப்பினால் திரிபடைந்து வருதலாலேயே அதற்கு நன்மையுண்டாகுமெனச் சொல்ல மாட்டார். இனித், தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களைக் குறைக்க வேண்டுமென்றும், அயல் மொழிகளிலுள்ள ஒலிகளைத் தமிழிற் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், அப்போதுதான் தமிழ் வளர்ச்சியடையுமென்றும் கூறுவர் சிலர். நல்லது; தமிழ்ச் சொற்களினாலுந் தமிழ் ஒலியினாலுந் தெரிவிக்கக் கூடாதவை இருப்பினன்றோ அயல்மொழிச் சொற்களையும், ஒலிகளையுஞ் சேர்த்தல் வேண்டும்? உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும், எல்லா அறிவு இயல்களையும் தமிழ்ச் சொற்கள், தமிழ் ஒலிகள் கொண்டே செவ்வையாகத் தெரிவிக்கலாம் என்பது, யாம் எல்லாத் துறைகளிலும் புகுந்து எழுதியிருக்கும் நூல்களைச் சிறிது பார்த்தாலுந் தெரிந்து கொள்ளலாம். மேலுந், தமிழ் நெடுங் கணக்கிலுள்ள முப்பது எழுத்துக்களும் முப்பது ஒலிகளுமே மக்களுக்கு இயற்கையாகத் தோன்றக்கூடியவையென்றும், முப்பது தமிழொலிகளைக் கொண்டே உலகத்திலுள்ள எல்லா மொழிகளின் எல்லா ஒலிகளையும் எளிதில் தெரிவிக்கலா மென்றுங் காலஞ் சென்ற திரு.பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் மிகவும் நுட்பமாக ஆராய்ச்சி செய்து நன்கு விளக்கிக் காட்டியிருக்கவும், அவைகளையெல்லாம் ஆராய்ந்து பாராது தமிழ் நெடுங்கணக்கைக் குறுக்க வேண்டுமென்றும் பிறமொழிச் சொற்களையும் ஒலிகளையும் தமிழிற் சேர்க்க வேண்டு மென்றும் சொல்வது மிகவும் வருந்தத் தக்கது. குறைபாடில்லாத தமிழ்மொழியைச் சீர்திருத்த வேண்டுமென்று சொல்லும் அவர்கள் குறைபாடு நிரம்பிய ஆங்கிலம் முதலான மொழிகளைச் சீர்திருத்த முன்வராததென்னையோ? தமிழ்மொழியிலே தான் இறைவனுக்குப் பெருவிருப்பு என்று எம் தமிழ்ப் பேராசிரியர் எழுதியதை ஏளனமாகப் பேசினர் சிலர். உலகத்தில் உள்ள எல்லாரும் நல்ல சொற்களையும் நல்ல சொற்பேசுவாரையுமே விரும்புகின்றன ரன்றித், தீயச்சொல்லையும், தீயசொற் பேசுவாரையும் விரும்புகின்றனரா? இல்லையே, ஒரு தந்தையானவன் தன் மக்கள் பலருள்ளும் நல்ல சொற் பேசும் நல்ல தன் புதல்வனையே விரும்புகின்றனனன்றித், தீயசொற் பேசுந் தீய தன் புதல்வர்களை விரும்புகின்றனனா? இல்லையே. அதுபோல் எல்லாம் வல்ல இறைவனும் இனிய தமிழ் மொழியையும் அதனைப் பாதுகாத்து வழங்கிய இனிய தமிழ் மக்களையுமே பெரிதும் விரும்பினான் என்றால் அதிற் குற்றமென்னையோ? பண்டைக்காலந் தொட்டு இதுவரையில் வழங்கும் மொழி தமிழைத் தவிர வேறொன்று உண்டென்று விரல்விட்டுக் காட்ட முடியுமா? எகிப்தியம், சாலடியம், அசிரீயம், எபிரேயம், கிரேக்கம், இலத்தீன், ஆரியம், செண்டு, பாலி முதலான பழைய மொழிக ளெல்லாம் எங்கே? அவைகளெல்லாம் பொது மக்களாற் பேசப்படாமல் மாண்டு மறைந்துபோகத் தமிழ் மட்டும் இன்னும் பலகோடி பொதுமக்களாற் பேசப்பட்டு வருவதைத் தாங்கள் எண்ணிப் பார்த்த துண்டா? இப்போது இவ்விந்திய நாட்டிலும் மற்ற ஐந்து நிலப் பிரிவுகளிலும் வழங்கும் பல திறப்பட்ட மொழிகளெல்லாம் நானூறு ஐந்நூறு ஆண்டு கட்கு மேற்பட்டவைகளல்லவென்பதும், அவைகளிற் பழைய இலக்கண இலக்கிய நூல்கள் இல்லை யென்பதுந் தாங்கள் ஆராய்ந்து பார்த்ததுண்டா? இவைகளையெல்லாந் தாங்கள் ஆராய்ந்து பார்ப்பீர்களானாற் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய்ச், சாதி சமயக் குறும்புகளும், புராணப் புரட்டுகளும் இல்லாமற், கடவுளையும், உலகத்தையும், உயிரையும் பற்றிய உண்மைகளையே உள்ளவாறு எடுத்துரைக்கும் அரும்பெரு நூல்களையே யுடைய தமிழ்மொழியிலும், அதனைத் தூயதாக வழங்கிய தமிழ் மேன்மக்களிலும் இறைவனுக்குப் பெரு விருப்பு இருக்கத்தான் வேண்டுமென்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். இறைவனுக்குத் தமிழிற் பெருவிருப்பு உண்மையினாலன்றோ, திருஞானசம்பந்தர் அன்பினாற் குழைந்துருகிப் பாடிய தமிழ்ப் பதிகங்களை நெருப்பில் வேகவிடாதும், நீரில் இழுக்கப்படாமலும் வைத்து இறைவன் அதன் அருமையைப் புலப்படுத்தினான்? இன்னும் பாண்டியன் கொண்ட வெப்பு நோய் தீர்த்ததும், எலும்பைப் பெண்ணாக்கியதும், முதலைவாய்ப் பிள்ளையையழைத்ததும் இன்னும் இவைபோன்ற பல அருள் நிகழ்ச்சிகளைக் காட்டியதுந் தமிழேயன்றிப் பிறமொழி அன்றோ! அல்லது பிறமொழியில் இத்தகைய அருள் நிகழ்ச்சிகளைத் தக்க அகச்சான்று புறச்சான்று களுடன் எடுத்துக் காட்டல் இயலுமா? வெறுங் கதைகளாகப் பின்னோ ரெழுதிவைத்திருப்பவைகளைக் காட்டுவது பயன்படாது. இனி, எடுத்த பொருளைவிட்டுத் திருவள்ளுவரின் திருவுருவம் சைவ அடையாளங்கள் உடையதாகச் செய்யப்பட்டிருப்பது பிசகென்றும், அவ் வடையாளங்களை எடுத்துவிட்டு அவரை எல்லா மதத்தவர்களும் பொதுவான உருவத்தோடு வைக்க வேண்டுமென்றும், சிலர் எழுதியதை ஆராய் வோம், பழைய தமிழ் நூலாராய்ச்சியால், இத் தமிழ் நாடெங் கணும் பழைய காலத்திற் பரவியிருந்தது சைவக்கொள்கையே யென்பது புலனாகின்றது. இதற்குப் பண்டை நாள் முதல் நாடெங்கும் அமைக்கப்பட்டிருக்குஞ் சிவபிரான் திருக்கோயில்களும், சிவனடியாரியற்றிய நூல்களுமே சான்றாகும். திருவள்ளுவரியற்றிய திருக்குறளின் கொள்கைகளை நடுநின்று ஆராய்ந்து பார்க்கும் மெய்யறிவாளர்கள், அது சைவக் கோட்பாடுகளைத் தவிர வேறு மதக் கோட்பாடுகளை உள்ளடக்கியது அற்றென்பதை அறிவார்கள். அவர் கடவுள் வழிபாட்டையும், அக்கடவுள்வழிபாடு செய்யும் உயிர்கள் உண்டென்பதையும் வற்புறுத்திச் சொல்லியிருத்தலாற், கடவுளும் உயிரும் இல்லை யென்னும் பௌத்த சமயத்தை அவர் தழுவியவர் ஆகார். மேலும், தாமே கொல்லாமற் பிறர் கொன்ற உயிரைத் தின்னலாமென்னும் பௌத்த சமயக் கொள்கையை மறுத்து, தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில் 256 என்று அவர் அருளிச் செய்திருப்பதும் அதற்கொரு சான்று. இனி, உயிர்களுண்டென்று சொன்னாலுங் கடவுளில்லை யென்று மறுக்கும் சமணமதத்தவரும் அவர் ஆகார். மேலும், தலையை மழுங்கச் சிரைக்கும் பௌத்தத் துறவிகளின் வழக்கத்தையும் தலை மயிரை நீட்டி வளர்க்குஞ் சமணத் துறவிகளின் வழக்கத்தையும் மறுத்து, மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (குறள் 280) என்று அருளிச் செய்திருத்தலால், அவருக்குப் பௌத்த சமணக் கொள்கைகள் உடன்பாடல்ல வென்பது திண்ணம். இனி, உலகம் பொய் யென்றும், நானே கடவுளென்றும் கூறும் மாயாவாதக் கொள்கையும் அவர்க்கு உடன்பாடன்று. ஏனென்றால், நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை (குறள் 331) என்றும், வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி 10 என்றும், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் (குறள் 10) என்றும் அவர் அருளிச் செய்திருக்கும் குறட்பாக்களே அதற்குச் சான்றாகும். உலகம் பொய்யென்னும் கொள்கை யுடையராயின் இல்லாதவற்றை இருப்ன வென்றுணரும் என்று கூறியிருப்பர். இறைவனே யானென்னும் மாயா வாதக் கொள்கை அவர் நூலில் ஒரு சிறிதுங் காணப்பட வில்லை. இனி, ஊழ்வினையும் மறுபிறப்பும் உண்டென்று அவர் தமது திருக்குறளிற் பல விடங்களிலும் வற்புறுத்தி யிருத்தலால், ஊழ்வினையும் மறுபிறப்பும் இல்லையென்று சொல்லுங் கிறித்துவர் மகமதியரும் ஆகார். மேலும், உயிர்களைக் கொல்லாமையும் ஊனுண்ணாமையும் அவரால் மிகவும் வற்புறுத்திச் சொல்லப்பட்டிருத்தலால், உயிர்க் கொலை செய்தலையும் ஊனுண்ணுதலைங் குற்றமாக நினையாத கிறித்துவ மகமதியக் கொள்கை அவர்க்குச் சிறிதும் உடன்பா டன்றென்பது தெளியப்படுகின்றதன்றோ? இனி, வேள்வியில் உயிர்களைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தேவர்களுக்குப் பலியூட்டுதலால் துறக்கத்தை யடையலாமென்றுங், கடவுள் முகத்தினின்று பார்ப்பனருந், தோளிலிருந்து அரசருந், தொடையிலிருந்து வணிகரும், அடியிலிருந்து சூத்திரந் தோன்றினமையால் மக்களுட் பிறப்பிலேயே வேற்றுமை உண்டென்றும் பார்ப்பனர் கூறுங் கொள்கையை மறுத்து, அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிசெகுத் துண்ணாமை நன்று (குறள் 259) என்று கொல்லா அறத்தின் மேன்மையும், பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (குறள் 972) என்றுஎல்லாரும்பிறப்பளவில்வேறுபாடில்லாதிருத்தலையும், அந்தண ரெனிபோர் அறவோர் ஆதலையும் ஆசிரியர் வற்புறுத்திச் சொல்லியிருத்த லால் அவர் பார்ப்பனக் கொள்கையைச் சேர்ந்தவரும் ஆகார். இனி, மக்களுக்கே பிறவி உண்டென்றும், இறைவன் பிறவி எடாதவனென்றும், தந்திருவடிகளைச் சேர்வார்க்கும் பிறவியை ஒழிப்பவனென்றும் ஆசிரியர், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் எனத் திருக்குறளிற் கட்டுரைத்துச் சொல்லுதலின், இறைவனுக்குப் பத்துப் பிறவிகள் கற்பிக்கும் வைணவ மதமும் அவர்க்கு உடன்பாடன்று, மேலும், இவர் இன்பத்துப்பாலிற் கூறுங் காம இன்ப நுகர்ச்சிக்குத் திருமாலுலகின் இன்ப நுகர்ச்சியினை உவமையாக எடுத்துக் காட்டுதலால் மன மொழிகளுக்கு எட்டாத இறைவன் அருளின்பத்தைப் பார்க்கிலுந் திருமாலுலகின்பந் தாழ்ந்ததொன்றாகவே கருதினாரென்பது இனிது விளங்குகின்றது. ஆகவே, உலகத்தின்கணுள்ள மேற்கூறிய மதத்தவர்க ளெல்லாருந் திருவள்ளுவர் திருக்குறளைத் தத்தமக்குரிய பொது நூலாகக் கைக்கொண்டு பாராட்டுவரென்று தாங்கள் சொல்லுவது பொருந்தாததா யிருக்கின்றது. அங்ஙன மானால், எல்லா மதத்தவரும் திருக்குறளைத் தத்தம் நூலாகக்கொண்டு பாராட்டுவரென்று பழைய தமிழ்ப் புலவரொருவர் கூறியது ஏனென்றால், ஒவ்வொரு மதத்திலும் உள்ளாரில் உண்மை காணும் விருப்பமும் முயற்சியுமுடைய நடுநிலையாளர் இருப்பராதலால், அவர் தம் மதத்துக்கு ஆகாத கொள்கைகள் திருக்குறளில் இருந்தாலும், அக் கொள்கைகள் எல்லாருந் தழுவத்தக்க மெய்ம்மை உடையன வாயுந் தம் மதக் கொள்கைகள் அம் மெய்ம்மை இல்லாதனவாயும் இருத்தலை ஆராய்ந்து காண்பராதலின், அத்தகையவர்களே திருக்குறளைப் பாராட்டுவர் என்பதே அந் நல்லிசைப் புலவரின் கருத்தாகும். கொல்லாமை, புலாலுண்ணாமை ஆகிய திருவள்ளுவரின் கொள்கைகள், அக் கொள்கைகட்கு மாறான கிறிஸ்துவ, மகமதிய, பௌத்த, நாத்திக மதத்தவர்களில் நடுநிலையாளரால் இக்காலத்தில் தழுவப்படுதல் எவரும் அறிந்ததேயாகும். இனி, மேற்கூறிய மதங்களுள் ஒன்றனிடத்திலுஞ் சேராத திருவள்ளுவர், சைவ சமயத்துக்கே உரியவர் என்பது எதனாலெனிற், சைவர்கள் பிறப்பு இறப்பு இல்லாத ஒரு முழுமுதற் கடவுளையே வணங்குதல் போலத் திருவள்ளுவரும் வணங்குதலாலும், உயிர்கள் எக்காலத்தும் உள்ள முதல்கள் என்று சைவர்கள் கூறுதல் போலவே திருவள்ளுவரும் மன்னுயிர் மன்னுயிர் என்று உயிர்களை அடுத்தடுத்துச் சொல்லுதலாலுஞ், சைவர்கள் ஊழ்வினை யும் மறுபிறப்பும் உயிர்களுக்கு உண்டென்று கூறுதல் போலவே அவையிரண்டும் உயிர்களுக்கே உண்டென்று திருவள்ளுவருங் கூறுதலாலும், கொல்லாமை, புலாலுண்ணாமை ஆகிய அறம் சைவ சமயத்துக்கே முதன்மையானவை சைவமென்று அழைத்தலாற் பெறப்படுதலின் அத்தகைய கொல்லா அறத்தைத் தமது நூலெங்கும் வலி யுறுத்துத் திருவள்ளுவரும், அதனாற் சைவ ஒழுக்கமே யுடையவரென்பது பெறப்படுதலா லுஞ், சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் (குறள் 359) என்னுந் திருக்குறளால் இறைவன் திருவருளைச் சார்ந்தார்க்கே அவரைப்பற்றிய இருவினையும் அறியாமையுமாகிய நோய் நீங்குமென்று இவர் கூறும் முடிந்த நிலை சைவ சித்தாந்த முடிந்த நிலையாதல் இத்திருக்குறளை, எடுத்துக்காட்டி அந்நிலையை விளக்குந் திருக்களிற்றுப் படியார் என்னுஞ் சைவ சித்தாந்த நூற்பாவினால் நன்கு அறியப்படுதலாலும் இவர் சைவ சமயக் கொள்கையொன்றே உடையரென்பது ஐயமின்றித் தெளியப்படும். இங்ஙனமாகச், சைவக் கொள்கை ஒன்றேயுடைய திருவள்ளுவர் சைவத்தின் வெளி யடையாளங்களான திருநீறுஞ் சிவமணியும் அணியாமல் வேறு எந்த மதத்தினடையாளத்தை அணியக்கூடும்? அரசன் தனக்குரிய அடையாளங்களாக மணிமுடி கவித்துச் செங்கோல் பிடித்தலும், அமைச்சன் தனக்குரிய அடையாளங்களாக அரசியல் நூல் கையேந்தியிருத்தலும், இல்லறத்தார் தமக்குரிய அடையாளங்களாக வெள்ளாடை யுடுத்தி அணிகலன்களணிதலும், துறவறத்தார் காவியாடை யுடுத்து முக்கோலேந் துதலுஞ் சைவப் பெரியார் திருநீறுஞ் சிவமணியும் அணிந்து சடை வளர்த்தலும், பழைய காலத்திலிருந்தே நடந்து வருகின்றன. மற்றைச் சமயத்தாரிலும் அவர்க்குரிய அடையாளங்களாக உள்ளவை எத்தனையோ பல, இவ்வடையாளங்களை யெல்லாம் எடுத்துவிட்டுப் பிறந்த வடிவத் தோடு இருக்க வேண்டுமென்று ஒருவர் எண்ணுவாரானால், எல்லாரும் அம்மணமாகத்தான் இருக்கவேண்டும். அந்நிலைக்கு மற்றையவர்கள் தாந்தாங்கொண்ட அடையாளங்களை விடாதிருக்கையிற் சைவர்களுக்கு மட்டும் ஒருவர் அறிவு சொல்ல வருவதற்குச் சைவர்கள் தாமா இளைத்த வர்கள்? அது நிற்க. கடவுளை நெருப்புருவில் வைத்து வணங்கி, அந் நெருப்பினால் உள்ளும் வெளியுமுள்ள அழுக்குகள் எரிக்கப்பட்டுத் தூய்மையாவதற்கு அடையாளமாகவே திருநீற்றைச் சைவர்கள் அணிகின்றார்கள். அத்திருநீற்றைக் கையிலெடுக்கும்போது இறைவன் எல்லா அழுக்குகளையும் எரித்துத் தூய்மை செய்கின்றான் என்னும் நினைவு எமக்கு வருதலால் அதனை அந் நினைவுக்கு அடையாளமாகப் பூசுவது குற்றமாகுமா? உலக நினைவிலேயே இழுப்புண்ணும் எமது உள்ளத்துக்குக் கடவுள் நினைவை எமக்கு உண்டுபண்ணும் இவ்வடையாளங்களுந் திருக்கோயில்களுஞ் சிறந்தனவல்லவா? தாழ்ந்த எண்ணங்களை உண்டுபண்ணும் அடையாளங்களாகிய கள்ளுக்கடை, கஞ்சாக்கடை, இறைச்சிக்கடை முதலானவைகளையும் இறுமாப்புக்கு இடஞ்செய்யும் ஆடை யணிகலன்களையும் நீக்குவது பொருந்தும். ஆனால், உலக நிலையாமையினையுங் கடவுள் அருள்நிலையினையும் நினைவுக்குக் கொண்டுவருந் திருநீறு முதலியவைகளை நீக்குதலால் மக்களடையும் பயனென்ன? இவ்வடையாளங்களை நீக்கினவுடனே எல்லா மதங் களும் எல்லாக் கொள்கைகளும் ஒன்றாகி விடுமா? என்று தாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். திருவள்ளுவரின் திருவுருவமானது சைவ அடையாளங் கள் உடையதாக மைலாப்பூர் திருவள்ளுவர் கோயிலிற் பழைய காலத்திலேயே அமைத்து வைக்கப் பட்டிருந்ததால், அதனை அப்படியே ஓவிய மெடுத்து அதனால் அவரை நினைந்து வணங்கும் எம்மனோரை ஒருவர் குற்றஞ் சொல்வது பொருந்துமோ? நாங்களே புதிதாக அச்சைவக் கோலத்தை அத்திருவுருவத்திற்கு அமைத்திருந்தாலன்றோ எங்கள்மீது குற்றஞ் சுமத்தலாம்? ஆனாற் பழைய நாளிலேயே அமைக்கப் பட்ட அதனை அப்படியே வைத்து வணங்கும் எம்மனோரைப் பழித்தல் அடாது. சைவ அடையாளங்களை விட்டாலுந் திருவள்ளுவர் சைவரேயாவர். வெளிக் கோலத்தைப் பற்றி எங்களுக்கு அக்கரையில்லை. கொள்கையே பெரிது. எங்கள் சைவப் பெரியாராகிய சேக்கிழார் அடிகளே எந்நெறியில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரன்றாள் மறவாமை பொருள் என்று எங்களுக்கு அறிவு புகட்டி யிருப்பதை, நாங்கள் மறந்தவர்களல்லேம். அது நிற்க. இனித், தமிழைச் சைவப்பசை கொண்டு ஒட்டி யிருப் பதைப் புய்த்துவிட வேண்டுமென்று சொல்லுகின்றனர். புய்த்து விட்டாற் புத்தர் சமணர் முதலான எல்லாரிடத்துந் தமிழன்னை துள்ளிக் குதிப்பாளென்று கிளர்ச்சியோடு எழுதுகின்றனர். ஆனால், தமிழ் மொழியிணுண்மையோ அதனை வழங்கி வளர்த்த தமிழ்மக்களின் கொள்கையாகிய சைவத்தைத் தனக்கு உயிராய்க் கொண்டு உலவுகின்றது. அவ்வுயிரைப் போக்கி விட்டால் தமிழ் துள்ளிக் குதிப்ப தெங்ஙனம்? பண்டைக் காலந் தொடங்கித் தமிழை வழங்கின வர்களும், வளர்த்தவர்களும் சைவர்களே யல்லாமல் மற்றைய மதத்தவர்களல்லர். இடைக்காலத்து வந்த புத்தர் சமணர்கள் தமிழைக் கைக்கொண்டது தம் கொள்கைகளை அதிற் புகுத்தவே யல்லாமல் வேறன்று! கிறிஸ்துவ, முகமதியருந் தமிழைக் கையாளுவது அதில் தமது கொள்கையைப் புகுத்தவே யல்லாமல் வேறன்று. தன்மதிப்பியக்கத் தராகி ஒருவர் அதனைக் கையாள்வதும் அவர் கொள்கையை அதிற் புகுத்தவே யல்லாமல் வேறன்று, இவைகளை யெல்லாம் அவர் சிறிதாயினும் நினைத்துப் பார்ப்பாரானால் மொழி யானது அம்மொழியை வழங்கும் மக்களின் கொள்கைகளை விட்டுத் தனித்து நடவாதென்பதைத் தெரிந்து கொள்ளலாம். பிற்காலத்திற் புதிய புதியவாகத் தமிழிற்புகும் கொள்கை களெல்லாம் தமிழுக்கு உரியனவுமல்ல; தமிழை வளர்க்க வந்தனவுமல்ல. அவைகளெல்லாம் தமிழை வளர்க்க வந்தன வல்ல வென்பதற்கு அக்கொள்கையினையுடையார் வடமொழி முதலான பிறமொழிச் சொற்களை அதனுள் வரை துறையின்றிப் புகுத்தி, ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற் களை வழங்க விடாமற் செய்த கொடுமையால் நன்றாக அறியலாம். மற்றுத் தமிழுக்கேயுரிய தமிழ் மக்கள் சைவர்களா யிருந்தமையால் அவர்கள் அதனைத் தூயதாகவே வழங்கி வளர்த்து வந்திருக்கின்றார்கள். அதனாற் சைவக் கொள்கை யானது தமிழுக்கு உயிர் போல்வதென்பதும், அதனை அதிலிருந்து பிரித்தல் இயலாதென்பதும் அறிந்து கொள்ளல் வேண்டும். ஒருவர் உண்மையிலேயே தமிழை வளர்க்கும் எண்ண முடையவரா யிருந்தால், மக்கட் கூட்டம், மக்களினம், மக்கள் தொகுதி முதலான தமிழ்ச்சொற் களிருப்ப அவற்றை யெல்லாம் விட்டு மனித சமூகம் என்ற வடசொல்லை எழுதுவாரா? கடலூர் வாணர் என்னுந் தமிழ்ச்சொல் லிருக்கக் கடலூர்வாசி என்று எழுதுகின்றனர். விடை யென்னுந் தமிழிருக்கப் பதில் என்னுந் துலுக்குச் சொல்லை வரைகின்றனர். அவா, ஆவல், விருப்பம் என்னுந் தமிழ்ச் சொற்களிருப்ப அவற்றை விட்டு ஆசை என்றும், சொல், கட்டாயம், ஒலி,ஓசை, மொழி, அறிவு நூல், கலை நூல், புலவர், அறிஞர், கற்றார், நேரம், உதவி, பொருள், திருநீறு, சிவமணி, எல்லாம், ஓவியம், முறை, ஒழுங்கு, சிறிது. நினைத்து, சூழ்ந்து, ஆராய்ந்து, அன்பு, மகன், ஆண்மகன், ஆடவன், ஆள், முதன்மை, வலம் வருதல், வணக்கம் செலுத்துதல் என்னுந் தூய தமிழ்ச் சொற்களிருப்ப, இவற்றை யெல்லாம் விடுத்துப், பதம், வாக்கு, வார்த்தை, அவசியம், சப்தம், பாஷை, விஞ்ஞானம், பண்டிதர், சமயம், உப, விஷயம், விபூதி, உருத்ராட்சம், சகலம், படம், நியாயம், கிரமம், கொஞ்சம், யோசித்து,தயவு, மனிதன், முக்கியம், திக்குவிஜயம், தண்டம், சமர்ப்பித்தல் முதலான வட சொற்களைக் கலந்து எழுதுகின்றனர். தமிழ்ச் சொற்களை வெட்டி வீழ்த்தி வடசொற்களைக் கொண்டுவந்து விதைப்பதுதானா தமிழை வளர்ப்பது? நன்றாக எண்ணிப் பார்த்தல் வேண்டும். 5. இந்திமொழிப் பயிற்சி ஏற்படைத்தாகுமா? இவ்விந்திய நாட்டின் வடக்கே பல ஊர்களிற் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் ஹிந்தி மொழியை, இவ்விந்திய நாடு முழுதுமுள்ள மக்கள் எல்லாரும் பயின்று அதனையே பொது மொழியாக வழங்கிவரல் வேண்டு மென்று, இந்நாட்டின் நன்மைக்காக உழைக்கும் வடநாட்டு அறிஞர் பலருந் தென்னாட்டறிஞர் சிலரும் பேசியும் எழுதியும் வருவதுடன் ஆங்காங்கு இந்திமொழிப் பள்ளிக் கூடங்களுந் திறப்பித்து நடத்தி வருகின்றார்கள். ஆகையால் இந்திமொழி நம் நாட்டவர்க்கு நன்மை செய்யத்தக்க நலனும் ஆற்றலும் உடையதுதானா என்பதனை முதற்கண் ஆராய்வாம். இப்போது, ஆங்கிலக் கல்விக் கழங்களிற் கல்வி பயின்று வெளிவரும் நம் இந்திய மக்களிற் பெரும்பாலார் பொருள்வருவாய்க்கு வேண்டுமளவு சிறிது ஆங்கிலம் பயின்றவராயும், அதனோடு சேர்த்துச் சிறிதே கற்பிக்கப்பட்ட தமிழ் முதலான மொழிகளைத் தப்புந்தவறுமாய்ப் பேசஎழுதத் தெரிந்தவராயும் வெறும் போலிவாழ்க்கையிற் சில்லாண்டுகளே உயிர்வாழ்ந் தொழிதலால், இந்நாட்டின்கட் பெருந்தொகையினராய் வெற்றுயிர் வாழ்க்கை செலுத்துங் கல்லா மாந்தர்க்குந், தமிழ் முதலான நாட்டு மொழிகளை வருந்திக் கற்றும் வறியராய்க் கார்த்திகைப் பிறைபோல் ஆங்காங்குச் சிதறிச் சிற்சிலராய்க் காலங்கழிக்குந் தாய்மொழி கற்ற மாந்தர்க்கும் ஆங்கிலங் கற்றவரால் மிகுதியான பயன் ஏதும் விளைகின்றிலது. இப்படியிருக்க, இத் தமிழ் நாட்டிலும், பிறமொழி பேசும் பிறநாடுகளிலும் அயல் மொழியான இந்திமொழிப் பயிற்சியை நுழைத்தால் அதனாற் பயன் விளையுமோ என்பதனை அறிஞர்கள் ஆழ்ந்தாராய்ந்து பார்த்தல் வேண்டும். இவ்விந்திய தேயத்தின் பற்பல நாடுகளிலும் உயிர் வாழும் மாந்தர்கள் பற்பல மொழிகளைப் பேசுவாராய் இருத்தலின், இந்நாட்டவரெல்லாரும் ஒரு பொது நன்மையின் பொருட்டு ஒருங்குகூடிப் பேசவேண்டிய காலங்களில் இந்தியை அவரெல்லாரும் பொதுமொழியாய்க் கையாளுதலே நன்று என்று தேயத்தொண்டர் சிலர் கூறுகின்றனர். இவரது கூற்றுப் பொருந்தா தென்பது காட்டுவாம். இந்தி மொழியானது வடக்கே பற்பல நாடுகளிற் பற்பல மாறுதல்களோடு பேசப்படுகின்றதே யல்லாமல், அஃதெங்கும் ஒரே வகையாகப் பேசப்பட வில்லை. இங்ஙனம் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் இந்திமொழியை ஆராய்ச்சி செய்த ஆசிரியர்கள் அதனை மேல்நாட்டு இந்தி, கீழ்நாட்டு இந்தி பிகாரி என்னும் மூன்று பெரும் பிரிவுகளாகவும், அப்பெரும் பிரிவுகளினுள்ளே முறையே பாங்காரு, பிரஜ்பாஷா, கனோஜ்,பத்தேலி, உருது; அவதி, பகேலி, சத்தீஸ்வரி, மைதிலி, போஜ்புரி, மககிஎன்னும் பல சிறு பிரிவுகளாகவும் பகுத்திருக்கின்றனர். இன்னும் இந்தி மொழியின் பிரிவுகளாகப் பேசப்படுஞ் சிறு சிறு மொழிகள் மேலும் பற்பல உள. இவ்வாறு இந்தி மொழியின் பலபிரிவுகளாக வழங்கும் பற்பல மொழிகளைப் பேசும் பற்பல நாடுகளில் உள்ளாரும் ஒரு நாட்டவர்மொழியை மற்ற நாட்டவர் அறியாராய் உயிர்வாழ்ந்து வருதலின், இந்தி அவரெல்லார்க்கும் தெரிந்த பொது மொழி எற்றுரைப்பாருரை எங்ஙனம் பொருந்தும்? இங்ஙனம் பற்பல நாடுகளில் பற்பல மாறுதல்களுடன் வழங்கும் பல்வேறு இந்தி மொழிகளில் எதனை இத் தென்னாட்டவர் கற்றுத் தேர்வது? எதனை இவர் கற்றாலும் அதனுதவிகொண்டு இவர் வடநாட்டவ ரெல்லாரோடும் பேசுதல் இயலுமா? இயலாதே. மேற்குறித்த இந்தி மொழிகளே யன்றிச், சிந்தி, லந்தி, பஞ்சாபி, குஜராத்தி, ராஜபுதானி, குமோனி, கடுவாலி, நேபாலி, உரியா, பங்காளி, மராட்டி, சிணா, காஸ்மீரி, கோகிஸ்தானி, சித்ராலி, திராகி, பஷை, கலாஷா, கவர்பாவ, முதலான இன்னும் எத்தனையோ பல மொழிகளும் வடக்கே பற்பல நாட்டின் கண்ணுள்ள பற்பல மாந்தர்களாலும் பேசப்பட்டு வருகின்றன. இம்மக்கட் பெருங் கூட்டத்துடனெல்லாம், இந்தி மொழியில் ஒன்றை மட்டுந் தெரிந்த தென்னாட்டவர் உரையாடி அளவளாவுதல் கூடுமோ? சிறிதுங் கூடாதே; வடநாட்ட வரிலேயே இந்தி மொழியை அறியாமற் பலதிறப்பட்ட பன்மொழிகளை வழங்கும் மக்கட் கூட்டம் பலவாயிருக்க, இத் தென்னாட்டவர் மட்டும் இந்திமொழியைக் கற்றுப் பேசுதலால் யாது பயன் விளைந்திடக் கூடும்? இவ்வியல்புகளையெல்லாம் நடுநின்று எண்ணிப் பார்க்கவல்ல அறிஞர்க்கு, இத்தென்னாட்டவர்கள் தமக்கு எவ்வகையிலும் பயன்படாததுந் தெரியாததுமான இந்திமொழிகளில் ஒன்றைப்பொதுமொழியென வருந்திக் கற்றலால் வீண்காலக் கழிவும் வீண் உழைப்பும் வீண் செலவும் உண்டாகுமே யல்லாமல் வேறேதொரு நன்மையும் பயனும் உண்டாகாதென்பது நன்கு விளங்கும். இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுத் தமிழ்மொழியை நன்கு கற்ற ஆசிரியர்கள் முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை பெரும்பரிபாடல், தொல் காப்பியம், பெருங்கலித்தொகை, குருகு, வெண்டாளி, வியாழ மாலை, முத்தொள்ளாயிரம், நற்றிணை, நெடுந் தொகை, அகநானூறு. புறநூனூறு, ஐங்குறுநூறு, குறுங் தொகை, சிற்றிசை, பேரிசை, பதிற்றுப்பத்து, எழுபது பரிபாடல் குறுங்கலி, திருக்குறள், சிலப்பதிகாரம், மணி மேகலை, திருவாசகம், திருக்கோவையார், சீவகசிந்தாமணி, திருத் தொண்டர் புராணம், சிவஞானபோதம் முதலான அரும் பெரும் தமிழ் இலக்கண இலக்கிய வீட்டு நூல்களும், அவை தமக்குச் சொற்பொருள் நுட்பமுஞ் சுவையும் மலிந்த சிற்றுரை பேருரைகளும் இயற்றித், தமிழை மாறாத நாகரிக இளமை வளத்தில் இன்றுகாறும் இனிது வழங்கச் செய்துவருதலால், அதனை வழங்குந் தமிழ் மக்களெல்லாரும் ஒருவர் ஒருவர்க்கு நெடுந் தொலைவில் இருப்பினும் அதனாற் பேசியும் எழுதியும் அளவளாவி ஓரிடத்திலுள்ள ஒரே மக்களினம் போல் உயிர்வாழ்ந்து வருகின்றனர். மற்று, இந்தி, உருது முதலான வடநாட்டு மொழிகளோ தமிழைப்போற் பழமையானவைகள் அல்ல; மகம் மதிய மதத்தவரான மொகலாய அரசர்கள்வடநாட்டின் மேற் படையெடுத்துப்போந்து, தில்லிப்பட்டினத்தைத் தலைநகராய்க் கைக்கொண்டு, அதன்கண் அரசு வீற்றிருக்கத் துவங்கிய பின்னரே அம்மொழிகள் தோன்றியனவாகும். அக்காலத்தில் தில்லி நகரிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பிராகிருதச் சிதைவான ஒரு மொழி வழங்கிக் கொண்டிருந்தது. தில்லியில் துலுக்கரரசு நிலைபெற்றபின், அவர் கொணர்ந்த அராபி மொழி பாரசீக மொழிச் சொற்கள் அம்மொழியின்கண் ஏராளமாய்க் கலக்கப்பெற்று அவரால் அஃது உருது எனவும் பெயர் பெறலாயிற்று. இதன்பின் நூல் வழக்குடையதாய் இஞ்ஞான்று வழங்கும் இந்தி மொழியானது லல்லுஜிலால் என்பவரால் உருது மொழியினின்றும் பிரித்துச் சீர்திருத்தம் செய்யப்பட்ட தொன்றாகும். இதற்குமுன் உள்ளதான பிராகிருதச் சிதைவு மொழியிற் கலந்த பாரசிக அராபிச் சொற்களை அறவே யொழித்துச் சமஸ்கிருத மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துச் சேர்த்து அவர் இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார். ஆகவே, வடசொற்கலப்பினால் ஆக்கப் பட்டுச் சிறிது காலமாக இப்போது நூல் வழக்கிற் கொணரப் பட்டிருக்கும் இந்தி மொழியை நம் தென்னாட்டவர் கற்றுத் தெரிந்து கொள்வதனால், இவர் வடநாட்டவரெல்லாருடனும் பேசி அளவளாவி விடக்கூடும் என்று சிலர் மடி கட்டி நின்று கூறுவது நம்மனோரை ஏமாற்றும் பொய்யுரையேயாம். கி.பி.1400 ஆம் ஆண்டு முதல் 1470ஆம் ஆண்டு வரையில், அஃதாவது இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னிருந்த இராமானந்தர் எனப் பெயரிய துறவி இராமனையே முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடல் வேண்டுமென்ற கொள்கையை வடநாட்டிற் பல இடங்களிலும் பரவச்செய்து வந்தார். இவர் இராமன் மேற் பாடிய பாடல்கள்தாம் முதன் முதல் இந்தி மொழியில் உண்டானவை. அதனால் அவருடைய பாடல்கள் அடங்கிய இந்தி மொழி நூல் ஆதி கிரந்தம் என வழங்கப்படுகின்றது. இனி, இராமானந்தர்க்குப் பின்அவர் தம் மாணாக்கருள் ஒருவரான கபீர்தாசர் என்பவர் கடவுள் பல பிறவிகள் எடுத்தார் எனக் கூறுவது அடாதென்றும், இறைவனைக் கல் செம்பு கட்டை வடிவில் வைத்து வணங்குதல் பெருங் குற்றமாமென்றும் இந்து சமயக் கிரியைகளுஞ் சடங்குகளும் பொருளற்ற புன்செயல் களென்றும் இந்தி மொழியின் ஒரு பிரிவான அவதி மொழியிற் பாடல்களைப் பாடியிருக் கின்றார். இனிக் கபீர்தாசருக்குப் பின் அவர் தம் மாணாக்கரான நானாக் என்பவர் தம் பாடல்களைப் பஞ்சாபியும் இந்தியுங் கலந்த கலப்பு மொழியில் அமைத்துச் சீக்கிய மதத்தைப் பரப்பினார். இனி, இற்றைக்கு 510 ஆண்டுகளுக்கு முன் தர்பங்கா மாகாணத்தின் கண்ணதான பிசபி என்னும் ஊரில் வித்யாபதி தாகூர் என்ற வைணவர் ஒருவர் இந்தி மொழியின் மற்றொரு பிரிவான மைதிலி மொழியில் கண்ணனுக்கும் அவன் காதலி இராதைக்கும் இடையே நிகழ்ந்த காதல் நிகழ்ச்சிகளை விரித்துப் பல பாடல்களைப் பாடியிருக்கின்றார். இப் பாடல்களையே பின்னர்ப் பங்காளி மொழியில் சைதன்யர் என்பார் மொழி பெயர்த்து, அவற்றை வங்காள தேயமெங்கு பரவ வைத்தனர். இதுகொண்டு. இந்தி மொழி வங்காளதேயத்தி லுள்ளார்க்குள் வழங்காமை அறியப்படுகின்ற தன்றோ? வடநாட்டிற் பெரும் பரப்பினதான வங்காள தேயத்தார்க்கே தெரியாததான இந்தி மொழியைத் தென்னாட்டி லுள்ளவர்கள் பயின்றாலும், இவர்கள் வங்காள மக்களுடன் அதிற் பேசி உறவாட முடியாதன்றோ? ஆதலால், இதுவரையிற் கூறியதுகொண்டு, இந்தி மொழியானது 500 ஆண்டுகளுக்குமுன் நூல்வழக்கில்லாமற் கல்வி யறிவில்லா வடநாட்டு மக்களால் அந்நாட்டின் பல பகுதிகளிலும் பலவாறு திரித்துப் பேசப்பட்டு, ஒருபாலார் பேசும் மொழி மற்றொரு பாலார்க்குத் தெரியாதவண்ணம் வழங்கினமையால், அஃது இஞ்ஞான்றுங் கூடப் பற்பல மொழிகளாகவே பிரிந்து வழங்குகின்றதென்பதும். அதனால் இந்தியை வடநாட்டவர் எல்லார்க்கும்பொதுமொழியெனக் கூறுவாருரை மெய்யாகாதென்பதும், ஆகவே தென்னாட்டவர் இந்தியைப் பயிலுதலால் அதனுதவிகொண்டு வட நாட்டவரெல்லாரோடும் உரையாடி உறவாடல் இயலாதென்பதும் நன்கு விளங்கா நிற்கும். இனி, இந்தி மொழிகள் நாலுகோடி மக்களாற் பேசப் படுதலாகிய தொகை மிகுதியை வற்புறுத்திக் காட்டுவார்க்கு, வங்காள மொழி ஐந்துகோடி மக்களாலும், தமிழுந் தமிழோடினமான மொழிகளும் ஆறுகோடி மக்களாலும் பேசப்படும் பெருந்தொகை எடுத்துக் காட்டப்படும். இந்தியைப்பொது மொழியாக்க வேண்டுமென்று ஒரு சாரார் கூறுவரேல், அதனினும் பெருந் தொகையினரான மக்களாற் பேசப்படும் வங்காள மொழியைப் பொதுமொழியாக்க வேண்டுமென்று வங்காளரும், இவ்விந்திய நாட்டின் நால் எல்லை வரையிலும் பரவியிருக்குந் திராவிட மக்கள் எல்லார்க் கும் முதன் மொழியாவதும், இந்தியாவின் மட்டுமேயன்றி இலங்கை, பர்மா, மலாய்நாடு, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளிற் குடியேறி, வாணிக வாழ்க்கையிற் சிறந்தாராயிருக்குந் தமிழ் மக்கள் அனைவராலும் வழங்கப்படுவதும் ஆன தமிழையே பொது மொழியாகப் பயிலல் வேண்டுமென நந்தமிழ் மக்களும் வலியுறுத்துவரல்லரோ? மேலும், வடநாட்டு இந்தி முதலான மொழிகளின் பாடல்களிற் பெரும்பாலன. நம்போற் பல பிறவிகள் எடுத்துழன்று இறந்துபோன சிற்றரசர்களான இராமன், கிருஷ்ணன், பலராமன், வசுதேவன் முதலானவர்களைக் கடவுளாக வைத்து உயர்த்துப் பாடி யிருத்தலால், அவை பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாகிய எல்லாம் வல்ல சிவத்தை மக்கள் அறிந்து வழிபட்டுத் தமது பிறவியைத் தூய்மைசெய்து உய்தற்குதவி செய்யாமையோடு, அவை உண்மைச் சிவவழிபாட்டை அவர் அடையவொட்டாமலுந் தடைசெய்து மக்கட் பிறவியைப் பாழாக்குகின்றன. மற்று, கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், தேவாரம், பெரியபுராணம், சிவஞானபோதம் முதலான தமிழ் நூல்களோ மெய்யான ஒரு தெய்வம் சிவமேயாதலை விளங்கத் தெருட்டி மக்களுக்கு மெய்யறிவையும் மெய்யன்பையும் ஊட்டி, அவர் இம்மையிலும் மறுமையிலும் அழியாப்பேரின்பத்திற் றிளைத் திருக்குமாறு செய்து, அவரது பிறவியைப் புனிதமாக்குந் திறத்தன. அதுவல்லாமலும், இந்தி முதலான வடநாட்டு மொழிகள், தமிழைப் போற் பழையன அல்லாமையாலும், அவற்றை வழங்கும் மக்கள் பழமை தொட்டு நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்த தமிழ்மக்களைப்போல நாகரிக வாழ்வு வாயாதவர்களாகையாலும், சென்ற 400 அல்லது 500 ஆண்டுகளாகத் தோன்றிய வடநாட்டுப் புலவர்கள் பலரும் பண்டு தொட்டுத் தனித்த பேரறிவு வாய்ந்த தமிழ்ப்பெரும் புலவர் போலாது சமஸ்கிருத புராணப் பொய்க் கதைகளை நம்பி அவற்றின் வழிச்சென்ற மயக்க வறிவின ராகையாலும், உயிர்க்கொலை, ஊனுணவு, கட்குடி, பல சிறு தெய்வ வணக்கம், பலசாதி வேற்றுமை முதலான பொல்லா ஒழுக்கங்களை அகத்தடக்கிய ஆரிய நூல் நெறிகளைத் தழுவிய வடவர் அவற்றை விளக்கி அருளொழுக்கத்தையும் முழுமுதற் கடவுள் வணக்கத்தையும் வற்புறுத்தும் அருந்தமிழ் நூல் நெறிகளைத் தழுவாமையாலும், அவருடைய மொழிகளையும், அவற்றின்கட் புதிது தோன்றிய நூல்களையும் நந்தமிழ் மக்கள் பயிலுதலால், இவர்கள் ஏதொரு நலனும் பயனும் எய்தார் என்பது இனிது பெறப்படும். இங்ஙனம் எல்லா வகையாலுஞ் சிறந்த தமிழ்மொழி இவ்விந்திய நாடு முழுமைக்கும் பொது மொழியாதற்குரிய நலங்கள் எல்லாம் வாய்ந்தாயிருந்தும், அதனைப் பொதுமொழியாக்க முயலாமல், நானூறு ஐந்நூறு ஆண்டுகளாகவே தோன்றிப் பழைய சிறந்த நூற் செல்வமின்றி வறியனவாய்ப் பலவகைக் குறைபாடுகள் உடையனவாய்ப் பெரும்பாலும் நாகரிகமில்லா வடவர்களாற் பேசப்படும் இந்தி முதலான சிதைவுக் கலப்பு மொழிகளை இத் தேயத்திற்குப் பொதுமொழியாக்க வேண்டுமென்று கூக்குரலிட்டு முயல்வோர் உண்மையான தொண்டர்களாவரா வென்ப தனை அறிவுடையோர் ஆழ்ந்து நினைத்துப் பார்த்தல் வேண்டும். இதுகாறுங் காட்டிய உண்மைகளால் இந்தி மொழிப் பயிற்சி நந்தமிழ் நாட்டிற்கு ஒரு சிறிதும் பயன்படாமையினை யறிந்து, அதன் பயிற்சியினைத் தடைசெய்து, நம் தனித்தமிழ்ப் பயிற்சியினையே எங்கும் பரவச்செய்து நந்தமிழ் மக்களைத் தம் தாய்மொழி யறிவில் விளங்கச் செய்வீர்களாக! 6. நக்கீரனார் தெய்வப்புலமை மாட்சி தன்றோ ணான்கி னொன்றுகைம் மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினு மொளிபெரிது சிறந்தன் றனியவென் னெஞ்சே. முகவுரை செழுந்தமி ழென்னுங் கொழுந்தமிழ்க் குழவியை மன்றினுட் குனிக்குங் கொன்றையஞ் சடையோன் மறுமுனி தவத்திற் குறுமுனிக் கருள வாங்கவ னினிதெழுந் தேற்றுப் பாங்குறக் குறங்கினி லிரீஇ வெரிந்புறந் தைவந் தியல்வகை யென்னும் பயில்பா லூட்டிச் சின்னாள் வளர்த்த பின்னர் மன்னிய வெள்ளியம் பலத்துட் டுன்னிய பெருமான் பீடுற வமர்ந்த கூடன்மா நகரின் மெய்பெற விருந்த தெய்வப் புலமைப் பெருமதிப் புலவோர்க் கருவையி னுதவ, வவரு முளந்துளும் புவகையி னலம்பெற வேற்று நூற்பொரு ளென்னுஞ் சீர்க்கலன் செறிந்து நூலெனு மாடையும் வாலரைக் கொளீஇச் சொற்சுவை பொருட்சுவை கனிந்த பற்ப னல்லுணா நாடொறும் பல்வே றூட்டிச் சங்க மென்னும் பொங்குபூந் தடத்தினு மாலவா யென்னுங் கோலமார் காவினும் வடமொழி யென்னு மடங்கெழு தோழியொடு முடம்படுத் தொருங்கு விடுப்பக் குடம்புரை கொங்கைப் பொறைகெழு கொழுந்தமிழ் மங்கை யானா வேட்கையி னாடி மேனாட் கீர னாவிற் சீரிதி னமர்ந்தனள் கவின்கெழு திருமகள் நறும்பொதி யவிழ்க்குங் கொழுந்தா மரையின் மேவி யெழுந்தினி திருந்த வியல்பினா லெனவே. இத்துணைப் பெருஞ்சிறப்பும் ஒருங்கு வாய்ப்பப் பெற்றுக் கடைச்சங்கத்துத் தலைமைப் புலமைத்திற மேற்கொண்டு பொலிந்த ஆசிரியர் நக்கீரனார் பெருமை ஒருநாவுடைய வொருவரால் எடுத்தொரு துறைப்படுத் துரைக்கப்படும் நீரதன்று. ஆயினும், பிற்காலத்தாரிற் சிலர் இவ்வாசிரியருரை வழக்கொடு முரணி அவ்வுரையிற் குற்றங் காண்டலும், அங்ஙனங் குற்றங் கண்டார்க்குத் துணை நின்று அவருரை நிறுத்துதற் பொருட்டு ஆசிரியர் தெய்வப் புலமைத் திறத்தை இழித்துக்கூறி யங்ஙனங் கூறுதலாற் கழுவாயின்றிக் கருநெறி நரகிற் கிடந்துழலுதற் கேதுவாகிய பெரியதொரு குற்றம் புரிந்து வருதலும் பல்கித் தாங்கெடுதலல்லாமலுந் தம்மைச் சார்ந்த அறிவின் மாந்தர்க்கும் அங்ஙனஞ் செய்யக் கற்பித்து ஆரவாரஞ் செய்தலின், அச்செருக்குரையாளர் மறுக்க மொழியவும் நல்லறிவாளர் நயப்பது வேண்டியும் ஆசிரியர் நக்கீரனார் வரலாறும், அவர் தெய்வப் புலவரென்பதும். அவரருளிச் செய்த நூல் வரலாறும், களவியலுரை இவர் கண்டதன் றென்பாருரைக்குமாறும், அங்ஙனங் கூறுவாருரை பொருந்தாதென்பதும், பிற்காலத்தார் இவருரையில் இலக்கண வழுவாராய்ந்தவாறும், அவ்வாராய்ச்சி பயனில் புல்லுரையேயாமென்பதும் பிறவுந் தந்து காட்டி முடித்தலை நுதலியெடுத்துக் கொள்ளப்பட்ட திவ்வுரை யென்பது. நக்கீரனார் வரலாறு இவர் ஆண்டாண்டு மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று கூறப்படுதலானும். பொருளதிகார வுரையில் ஆசிரியர் நக்சினார்க்கினியர் இவரைப் புலவுத் துறந்த பொய்யா நோன்பினர் என்றெழுதலானும் இவர் சைவவேளாளரிற் கணக்கர் வகுப்பிற் பிறந்தவரென்பதும் பெறப்படும். இனியிவரைச் சங்கறுப்ப தெங்கள் குலம் எனுஞ் செய்யுளே பற்றி யக்குலத்தினரென்பாருமுளர்; இவ்வரலாறு ஆன்றோர் நூலுரைகளிற் காணப்படாமையானும் இதனை நிறுத்தும் வேறு உறுதியுரைகள் வேறொருவாற்றாற் பெறப்படாமையானும், தொல்லாசிரியர் மெய்யுரையொடு மாறுபடுதலானும் அங்ஙனங் கூறுவாருரை வறிதாமென் றொழிக. இவர் பிறந்தவூர்மதுரை மாநகரேயாம். இவர் இளம் பருவத்தில் யாங்ஙன மொழுகினா ரென்பதும், இவரது சிறந்த வுரிமைக் குணங்களும், இவர் எக்காலத்து எவ்வரசன் அரசாண்டபோது சங்கமேறியிருந்து தமிழாராய்ந்தா ரென்பதும் பிறவும் ஒருதலையாகத் துணிந்துரைக்கு மெய்ந் நூற்பொருள் காணாமையான் அவை இனிது விளங்கா. இனி இவர் சங்கமேறி யிருந்து தமிழாராய்ந்த ஞான்று இவரைக் குறித்தெழுந்த வரலாறும் ஓரொரு நூலில் ஓரொரு வறாய் ஒன்றோடொன்று மலைவுபட நிகழ்த்தப்படுதலின் அதுவும் ஒருநெறிப் படாதாயிற்று. அதுவும் அவ்வந்நூலிற் கிடந்தவாறே யீண்டெடுத்துக் காட்டுதும். திருவிளையாடற் புராணம் வங்கிய சூடாமணி யென்னுஞ் சண்பகமாறன் மதுரையிற் செங்கோலோச்சி வருநாளில் ஒருமுறை மரங்களும் புதல்களுங் கொடிகளுங் குழைத்து அரும்பவும் தென்றற்காற்றுப் பொதியமலைச் சாந்தத்தின் நறுமணத்தை அளவிக்கொண்டு மலர் முகைகளின் முழுநெறி யவிழ்த்து வண்டினம் யாழினுந் தீவியவாக ஒலிப்ப மெல்லிதின் வீசவும் இளவேனிற் காலம் வந்தது. அக்காலத்து ஒருநாள், சண்பகமாறன் தன் மனைவியோடு ஓரிளமரக்காவிற் புகுந்து ஆண்டுள்ள செய்குன்றின்மேல் வேறு இருந்தான். இருப்ப, மெல்லிதின் வீசுந் தென்றற் காற்றுப் பண்டுபோற் கமழாது வேறொரு தன்மைப்படக் கமழ்ந்தது. கமழ்தலுஞ் சிந்திப்பான், என்னை! இம்மணம் இளமரக்காவின் வாயவிழ்ந்த மலர்களின் மணமன்று. காற்றுக்கு இயற்கையில் மணமில்லாமையின் அதற்குரியதுமன்று. இருந்தவாற்றான் ஈதொரு வேறு தன்மைத்தான மணம் என்றிவ்வா றெல்லா மெண்ணித் திரும்பித் தன் மனைவியை நோக்கினின். நோக்கினாற்கு வாய்ப்புடைத் தாயிற்றொரு கூந்தன் மணமாயிருந்தது. அம்மணம் தன் மனைவியின் கருநெறிக் குழலிலிருந்து மிக வினியதாகக் கமழ்ந்தது. பின்னர், இம்மணம் இவள் கூந்தற்கியல்பினமைந்ததோ, அன்றிப் பூவும் நறுங் கூட்டும் இடப்படுதலிற் செயற்கையானமைந்ததோ, யான் கொண்ட இவ்வையுறவை யுணர்ந்து செய்யுள் செய்ய வல்லார்க்கு ஆயிரம் பொன்றருவேன் என்று கோவில் புகுந்து அவன் தான் எண்ணியவாறே பொன் முடிந்த கிழியைக் கொணர்வித்துச் சங்கப்புலவர் முன் றூக்கினான். இதனைக் கண்ட சங்கப்புலவர் தம்மிற் றனித்தனி தேர்ந்து தாந்தாங் கண்டவாறே செய்யுள் செய்துரைப்ப அவை யொன்றும் பொருளிலவாதல் நோக்கிப் பெரிதும் எய்த்துக் கவலுறுவாராயினார். . இஃதிவ்வாறிருப்ப, ஆதிசைவர் மரபிற் பிறந்து, இளம்பருவத்தே தன்றந்தை தாயொழிய மாணி நிலைமேற் கொண்டொழுகும் தருமியென்னும் இளைஞன் தான் வதுவையயர்ந்து கொள்ளும் பெருவேட்கையால் ஆலவாயி லவிர்சடைக் கடவுள் திருமுன் போந்து குறையிரப்பான்; எந்தையே! அடியேன் தந்தை தாயரைச் சிறுபருவத்தே இழந்தேன்; இப்போது புதுமணங்கூடும் வேட்கையேன்; ஐயனே! என் மனக்கவலை தீர்த்தருளுதற்கு இது பதம்! இல்லறத்தொடு படுதலின்றி யெளியேன் நின்றிருவடிக்கு வழிபாடு செயற் பாலனோ, அல்லனே! நீ எல்லாமறிதி! பாண்டியன் மனக்கோள் உணர்ந்தடியேன் உய்தற்பொருட்டு ஒரு செய்யுளியற்றித் தருக என்றிவ்வாறெல்லாம் இரந்து வேண்டுதலும், சிவபெருமான் இரங்கிக் கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலி னறியவு முளவோ நீயறியும் பூவே எனுஞ் செய்யுளை யியற்றி நல்க, அதனைக்கொண்டு போந்து சங்கப்புலவர் கையிற் கொடுப்ப, அவரும் அச்செய்யுட் சொல்வளமும் பொருள்வளமு மாய்ந்து பார்த்து நல்ல! நல்ல என்று மகிழ்ந்தார். மகிழ்ந்து பாண்டியன் முன்சென் றவருரைப்பப் பாண்டியனுஞ் செய்யுட்பொருள் தன் கருத் தோடியைதலிற் பெரிது முவந்து புலவரொடுஞ் சென்று தமிழ் கொணர்ந்த மறையவன் ஆயிரம் பொன்னும் பெறுக வென்று கூறி நல்கினான். அவ்வாறு வேந்தன் நல்குதலும் அவைப்புறத்துத் தூக்கிய பொற்கிழியை யறுக்கப் புகுந்த மறையவனை நக்கீரனார் விலக்கி இச்செய்யுளிற் குற்றமுள தென்றார். என்றலும் மறையவன் மிக வருந்திக் கொணர்ந்த செய்யுளைச் சிவபெருமான் திருமுன் வைத்து ஐயனே! வறுமையாலடியேன் படுந்துயர் குறிக்கொள்ளேன், சின்னாளுஞ் சிற்றறிவு முடைய புலவர் பேரறிவும் பெருந் தன்மையுமுடைய நின்செய்யுளிற் குற்றங் காண்பதே, அதுவன்றியும் நின்னை நன்கு மதிப்பாரும் இலராவரே, இவ்வாறு நிகழ்ந்த இவ்விளிவரவு நினக்குறுவதன்றி எனக்கொன்றுமில்லை’ என்று மிகவிரங்கிக் கூறுதலும், சிவபெருமான் ஒரு புலவன் போல வடிவுகொண்டு வெளிப்பட்டுச் சங்கத்தார் வைகும் அவைக்களத்தைச் சேர்ந்து அவரை நோக்கி ‘நமது செய்யுட்கு வழுவேற்றினார் யார்? என்றார். உடனே, நக்கீரனார் சிறிதும் அஞ்சாது ‘நாமே அச்செய்யுட்கு வழுவுரைத்தாம்’ என்றுரைப்பச் சிவபெருமான் ‘வழு வென்னை? என்று வினவினார். வினாதலும், அதிற் சொல் வழுவின்று, மற்றுப் பொருள் வழுவுளதாம், என்னை? குழல் நறிதென்றல் கொழுவிய மலர்மணம் பெற்றுழியன்றிக் குழல்தானே இயல்பாகக் கமழுத்தன்மைத்தன்றாம்; அன்றாக, அரிவை கூந்தலினறியவு முளவோ என்று அதற்கு இயல்பிலேயே விரை கமழுந் தன்மையுண்டென உலக வழக்கொடு மாறு கொண்டுரைத்தலி னென்பது என்று விடுத்தார். அற்றேல், * நங்கைப் பெண்டிர்க்குங் குழன்மணஞ் செயற்கைத்தோ வென்றிறைவன் வினாதலும் அதுவு மவ்வாறே யென்றார். பின், வானர மகளிர்க்கும் அம் மணம் செயற்கைத்தோவென, அதுவு மன்னதோ யென்றார். அதன்பின், நீர் வழிபட்டேத்தும் திருக்காளத்தியப்பர் பாகத்தமர்ந்த ஞானப் பூங்கோதையார் ஈர்ங்குழலும் அந்நீர்மையதோவென அதுவும் அந்நீரதே யென்றார் நக்கீரனார். இச்சொற் கேட்டலும் புரிசடைப் பெருமான் எரிவிழித்திமைக்குந் தந்நுதல் விழிதிறப்ப, அதற்கும் அஞ்சாராய் நக்கீரனார் பொய்விழி யிந்திரன்போல் நும் மெய்ம்முழுதும் விழியாயினுஞ் சிறிது மஞ்சேன், நும் பாடல் பொருட் குற்றமெய்தி வடுப்பட்டது தேற்றமேயென்றார். இதற்குள் மதிமுகிழ்ச் சடையோன் நுதல் விழிச் செந்தீ வீசிய வெப்பம் பொறாது பொற்றாமரைத் தடத்துள் விழுந்தார் நக்கீரனார். சிவபெருமானும் தம் வடிவங் கரந்து மறைந்தார். இனி, ஏனைச் சங்கப்புலவ ரெல்லாரும் மெய்விதிர் விதிர்த்து உள்ளமுடைந்து, அரசு போகிய குடியும், விழுமிய நடுமணியிழந்த முத்துவடமும், அறிவின் மக்கள் கல்வியும், கொழுமதியில்லா வானும்போல், நக்கீரனாரைஇழக்கப் பெறுதலாற் பெரிதும் பொலிவிழந்து, வருந்தி இறைவ னொடு வாதுசெய்த பிழை யாங்ஙனந்தீருமோ? உய்வதேது என்று எண்ணிப் பின்னர் ஒருவாறு தேறுதலடைந்து சிவபெருமான் திருமுன்படைந்து அரக்கன் பொருப்பெடுத் தெய்திய விடரைப் போக்கிய இறைவனே; நஞ்சமுண்ட அண்ணலே! நல்லவுந் தீயவுமியற்றினார்க்கு நிரலே இன்பமுந் துன்பமும் மீந்தவரை யுய்விக்கும் பேரருளினை, இங்ஙனம் ஒறுத்தது சால்புடையதாயினும், இப்போது அப்பிழையைப் பொறுத்தருள்க என்று பெரிதுங் குறையிரப்ப, அருள்வள்ளல் உவந்து பொற்றாமரைத் தடத் தருகிற் புலவர் குழாம் நடுவில் தோன்றி நின்று அருட்கண் நோக்கு தலும் நக்கீரனார் பொறிபுலன் கரணங்களெல்லாந் தூய வாகி ஒளிவிரிக்கும் மேலான வடிவத்துடன் அன்புருவாய்க் கரையேறி வந்து பூங்கோதையார் தெய்வக் கூந்தலுக்குக் குறை கூறிய பொல்லா நாவுரையைத் திருக்காளத்தியப்பரன்றி வேறியார் பொறுப்பார் என்று ஆழவாராய்ந்து கைலைபாதி காளத்திபாதி யந்தாதி பாடியருளினார்; அப்போதே கோவப் பிரசாதமும் பெருந்தேவபாணியும் திருவெழு கூற்றிருக்கையும் வேறுவே றியற்றிச் சிவபெருமான் றிருவடிமேற் சாத்தி நாவுரை குழற, மயிர் சிலிர்ப்ப, உள்ளங் குழைந்து உச்சிக்கூப்பிய கையுடன் பன்முறை குடந்தம்பட்டுத் தொழுதங்கிருந்தார். பின்னர்ச் சிலநாட்சென்று ஆலவாயிலழனிறக் கடவுள் குறுமுனிவனை யழைத்து நக்கீரனார்க்கு இலக்கணங் கற்பிக்கச் செய்தன ரென்று மிக விரித்துக் கூறும். இனி, சீகாளத்திப் புராணம் மதுரை மாநகரிற் பாண்டியன் செங்கோலோச்சு நாளில் நக்கீரனார் முதலிய சான்றோர் இறைவனாற் கொடுத்தருளப்பட்ட தெய்வப் பலகை தம்புலமை வரம் பறித்து நிலையிட்டிடந்தர அதன்மீ தேறியிருந்து செழுந் தமிழ் ஆராய்ந்திருந்தார். இவ்வாறிருப்ப ஒருநாட் பாண்டியன் தன் பொன்மாடத்து மேனிலைமேல் தன் ஆருயிர்க் காதலியொடும் அமர்ந்தான். ஆயகாலையில் இளந்தென்றல் அவ்வணங்கின் குழன் மணத்தை அளைந்துகொண்டு வீசப் பாண்டியனும் இது நம் மனைவி குழன் மணமென்று துணிந்து பின்றான் கருதிய விதனையமைத்துச் செய்யுள் இயற்றும் புலவர் ஆயிரம் பொன் கொள்பவென்று அவ்வாயிரம் பொன்னையுமுடிந்த கிழியொன்றைச் சங்க மண்டபத்தின் முன் தூக்கினான். இதனைக் கண்ட சங்கப் புலவரெல்லாருந் தாந்தாங் கண்டவாறே பொருளமைத்துப் பாண்டியனுக் குரைப்ப அவனும் அவற்றையெல்லாம் மறுத்துக் கூறினான். பொற்கிழி யறுப்பவரின்றி யிருந்தது. இவ்வாறிருப்பப் பாண்டிய நாட்டில் மாரிவறண்டு கடுங்கதிர் வெம்மை மிகுந்து உலகமெல்லாம் பொறுக்கலாற்றாத கொடியதொரு வற்கட காலம் வந்தது. உயிர்களெல்லாம் உய்வது காணாமற் பெருந்துயருழந்தனர். அப்போது ஆலவாயிலவிர்சடைக் கடவுளைப் பூசித்து வழிபடுந் தலைமையுடைய தருமியென்னும் அந்தணர் இனி நாம் உயிர் பிழைக்குமாறில்லை யாதலின் வளமலிந்த நாடு நோக்கிச் செல்லுதும் எனத் துணிந்து சிவபெருமான் றிருமுன் படைந்து பெரும் இவ்விடத்தில் இனி யிருந்தாற் சாவேன், வேறு நாடு புகுந்து மழைவளஞ் சுரந்த பின் மீண்டும் இவ்விடமணைந்து நின்றிருவடித்தொழும் பியற்றுவேன் என்று பிரிவதற்காற்றாது தொழுது அழுதார். அழுது அகங்குழையாதே, வழுதி தன் மனத்தடக்கிய பொரு டெரித்துச் செய்யுள் செய்வார்க்குத் தருதற்பொருட்டு ஆயிரம் பொன் முடிந்த கிழியொன்று தூக்கினான். அதனை இச்செய்யுளறைந்து பெறுக என்றருளிக் கொங்குதேர் வாழ்க்கை என்னுஞ் செய்யுளை நல்கினார் ஆலவாயமர்ந்த வண்ணலார். நல்கியதனை யேற்றுப் பாண்டியன் முன் போந்து அவன் செவியிலமிழ்து உகுத்ததுபோற் சொல்ல லும், மற்றவனுமிதனைக் கொண்டுபோய்ச் சங்கப் புலவர்க்குச் சொல்லியவரை யுடம்படுத்துக வென்றான். அந்தணரும் புலவர் முன் அவ்வாறே போந்திசைப்பப் புலவரெல்லாரும் உவக்கும் வழி, ஆங்கவருள் நக்கீரனார் இப்பாக் குற்றமுடைத்து என்றார். v‹wY« kiwat‹ JQ¡F‰W¡ flîËl¤âjid¤ bjÇÉ¥g mtU« òw« nghªJ òytiu neh¡» ‘ïâš tGthuhŒªjh® ah®? என்று கேட்ப, நக்கீரனார் நான் என அவர் குற்றமியாது எனக் குழலுக்குச் செயற்கை மணமன்றி இயற்கை மண மிலதாக, அதனை யுள்ளதுபோற் கூறுதலின் இஃதில்லது கூறலென்னுங் குற்றமாமென்றார் நக்கீரனார். இறைவனார் அரம்பையர் குழலுஞ் செயற்கை மணத்ததோ என, அதுவு மத்தகையதே என்றார் நக்கீரனார். பின் இறைவனார், இறைவி கூந்த லெத்தன்மைத்து என, அதுவு மத்தன்மைத்தே என்றார் நக்கீரனார். உடனே இறைவன் நுதல்விழிதிறப்ப, யான் வடிவெலாங் கண்காட்டினு மஞ்சேன். அச்செய்யுளிற் குற்றங் குற்றமே யென்றார் நக்கீரனார். பின்னர்ச் சிவபெருமான் எம்மொடு முரணி இமயம் பயந்த வுமை கூந்தலுக்குங் குறை சொல்லத் துணிந்தமையால், அறிவிலாய்! நீ குறைநோய் கொண்டு வையமெங்கும் அலைக என, நக்கீரனார் உடனடுங்கி அருட் கடலே! புழுத்தலை நாயினேன் கூறிய அறியாப் பொய்யுரை பொறுத்தருளல் வேண்டும் என்று பலகா லிறைஞ்சி நாத்தழுதழுப்ப வாழ்த்தினார். இவரது வழிபாட்டிற்கிரங்கி அத்தனார் இத்தொழுநோய் கயிலை காணிற் றீரும் என்று மறைந்தார். பாண்டியன் முதலானோரும் இறைவன் திருவிளையாடலை நினைந்து வியந்தார். தருமியென்னுமந்தணர் பொற்கிழி பெற்று வாழ்ந்தார். நாடு வறப்பு நீங்கி வளஞ்சுரந்தது. இதன்பின் நக்கீரனார்க்குத் தொழுநோய் முறுகி விரல் நிரை யழுகி விழுதன் முதலியன முறைமுறை முதிர்ந்து பெருந்துயர் மிக்கது. நக்கீரனாருமிதனைக் கயிலை கண்டு தீர்த்துக் கோடுமென்று ஊக்கிச் சங்கப்புலவர் மிக்க வருந்த அரிதிற் பிரிந்து புறம் போந்து பல நாடு, நகர், காடு, மலை, மரு நிலங்கடந்து காசி, திருக்கேதாரம் முதலிய வடநாட்டுச் சிவப்பதிகளைப் போற்றி, இமயமலைக்குச் செல்லும் வழியிற் செல்வார் கைகால் குறைந்து வெள்ளென்பு தோன்ற மிகவரிதிற் பெயர்ந்து தாம் போம் வழியில் ஒரு பெரிய தட மொன்று கண்டார். அக்குளக்கரை ஒரு பெரிய ஆலமரம் நிற்ப அதனை யடைந்து மனம் விரும்பிச் சிறிதிளைப் பாறினார். அங்ஙனமிருப்புழி, அம்மரக்கோட்டில் ஓரிலை யுதிர்ந்து ஒரு பாதி கரையிலும் பிறிதொரு பாதி நீரிலும்பட விழுந்தது. விழக் கரையில் விழுந்த பகுதியொரு மீனுண் குருகாயும் நீரில் விழுந்த பகுதியதற்கிரையாம் மீனாயும் வடிவங்கொண்டொன்றை யொன்றீர்த்தன. இப்புதுமையைக் கண்டு வியந்து அதனை நோக்கி வைகிய நக்கீரனாரைக் கதுமென ஒரு பெரும்பூதந் தோன்றி, உழைமானிளங்கன்றைக் கவர்ந்த உழுவை போலக் கவர்ந்து சென்று ஒரு மலை முழைஞ்சினுட் புகுத்துத் தாளிட்டுச் சென்றது. செல்ல, அம்மலை முழைஞ்சினுள் முன்னரே யிருந்த தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்பது மக்களும் நக்கீரனாரை நோக்கிச் சொல்வார்: ஐய! நீ வருதலால் ஆயிரமென்னுந் தொகை நிரம்பியது. இப்பூதம் நீராடச் சென்றது. திரும்பி வந்ததும்நம்மையெல்லாம் ஒருங்கே செகுத்து உண்ணும் நீ வராவிடில் இவ்விடர் நேராதுகாண் என்று மிகநொந்து கூறினார். இது கேட்ட நக்கீரனார் அறிவுமாழ்கிச் சிறிதும் இடர்ப்படாது அவர்க்கு நேரும் ஏதத்தை நீக்குதற்கு முருகக்கடவுள் திருவடித் தாமரைகளை வழுத்தி ஆறெழுத்தினையு மோதுவலென்று தெளிந்து அவ்வாறே யோதித் திருமுருகாற்றுப்படை மொழிந்தார். மொழிதலும் அருள் வள்ளலாகிய அறுமுகக் கடவுள் குறுநகை யிலங்கத் தோன்றி, அணுகிய பூதத்தைக் கதையா லடித்து வீழ்த்தி மலை முழையிலுள்ளோரை விடுவித்தார். இதன்பின், நக்கீரனார் முருகனைத் தொழுது மறைமுதல்வ! உமை புதல்வ! ஆலவாயமர்ந்த நீலகண்டனைச் செருக்குரை பகர்ந்த வென் இழுக்க மொழியக் கயிலைகாணுதி யென்றனன் கண்ணுதல், அண்ணலே! இன்னுமது கண்டிலேன், இங்கென் விழுமந் தீர்த்தது காட்டுதியால், என்றழுது குறையிரப்பச் செவ்வேளிரங்கிக் கயிலை யென்று வாளா திசைபுணர்ந்தோதாது கூறினானைய னிதனால், தென் கயிலையாகிய காளத்தியானு மிந்நோய் தீரும் என்று நினைந்து நக்கீரனாரை நோக்கி இப்பொய்கையில் மூழ்கினாற் கயிலைப் பொருப்பைக் காண்பை என, அவரும் முருகனை இறைஞ்சி யேத்தி அவ்வாறே அப்பொய்கையின் மூழ்கிப் பொன்முகலி தீர்த்தத்தி னெழுந்தார். எழுதலும் மேனிமேற் பரவிய நோயுந் தீர்ந்து முளையிள ஞாயிறு விளங்குவதென்ன ஒளிவிரியத் தோன்றிப் பாவிற் பொதிந்து கிடந்த நுண்பொருள் பெற்று உவந்தான் போலச் சிவபெரு மானை நேரிற்கண்டு கைகள் தலைமேற் கூம்பக் கண்ணீர் முத்தென அரும்ப நாவுரை குழறப் பரவிப் பரவிக் காளத்தியப்பரும் கயிலையப்பரும் வேறென்னுங் கருத்தின்றி யொற்றுமை கொளுத்திக் கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி கட்டளையிட்டருளினார் நக்கீரனார் என்று விரித்து விளக்கும். இனி, திருப்பரங்கிரிப் புராணம் தமிழ்க்கடலை யளந்துகொண்ட அறிவின் மாட்சிமைப்பட்ட நக்கீரனார் பரங்குன்றிற் சரவணப்பூந்தடத்தில் நாடொறுங் குடைந்து* பூசனைக்கடன் முறைபெறக் கழிப்பிப் பின் மதுரைமா நகர் செல்வார். இனித் தேவரிற் சிறுநுதலம்மை குறுமருங்கமைந்த மறியமை கையின் மாணிக்க வண்ணரையும் மக்களிற் கயன்மீனுயர்த்திய வழுதியையுமன்றிப் பிறரொருவரையுஞ் செய்யுளிலமைத்துப் பாடுவதில்லை என்னும் உறுதிக்கோளுடையார். இவ்வொழுகலாறுடைய நக்கீரனாரை யொறுத்துத் தான் பாடல் பெறுவதற் கெண்ணிய முருகக்கடவுள் பரங்கிக் குன்றிற் சரவணப் பொய்கையி லவர் நீராடப்போதும்பொழுதறிந்து தன்பாலுள்ள அண்டாபரணனை யழைத்து நக்கீரனை யொருகுறையேற்றி நமது மலையிற் சிறைப் புகுத்தி மீளுக என்று பணித்தார். அப்பணிமேற் கொண்டோன் போந்து, முறைப்படி பூசனைப் பெரும்பயமாற்றி யஞ்செழுத் துருவேற்றிக் கொண்டு கரைமருங்கோங்கிய ஆலமர நிழலில் ஒரு பாறை மீதிருக்கும் நக்கீரனாரெதிரில் பொய்கைக் கரையில் ஓராலிலையைக் கிள்ளியிட அது கரையிலொருபாதியும் நீரிலொருபாதியுமாக விழுந்தது. விழுந்த இலையின் கரையிற் படிந்த ஒரு கூறு குருகாயும் நீரிற் படிந்த பிறிதொரு கூறு கயலாயும் வடிவு திரிந்து, இவ்விரண்டும் இருபுறம் பதைப்பது கண்டார். கண்டு உள்ளம் நைந்து இரங்கி யவற்றினருகிற் போந்து நகத்தாற் கிள்ளிப் பிரித்துவிட, அவையிரண்டும் வாயங்காந்து குருதிகான் றிறந்தன. அக்கணத்தில்! அண்டா பரணன் அழன்று சீறியெதிர்ந்து முருகனுறையு மிக்குன்றிற் கொலைபுரிந்தனை என்றுரைத்து வெருவப் பிடித்துச் சென்று குகையினுட் புகுத்துப் பாறை மூடிப்போயினான். நக்கீரனார் பெரிதும் வருந்தி இது முருகனைப் பாடாக் குறையென்று அருட் குறிப்பாணுணர்ந்து உலகம் என் றெடுத்துக் கிழவன் என்று முடித்துத் திருமுருகாற்றுப்படை யருளிச் செய்தார். இனியிதிற் கிழவன் என்று முடித்தமையாற் கிழவனாய் வருவதற்கு நமக்கு நாட்செல்லும் என்று கனவினருளிச் செவ்வேள் மறைந்தார். இதனை யுணர்ந் தெழுந்த நக்கீரனார் இளையோன் என முடிக்குஞ் சீரை மாற்றிக் கூறுதலும் திருமுருகன் றோன்றி அவர்க்கு அருணல்கினான் என்று சுருங்கக் கூறும். இனி இவை தம்முள் திருவிளையாடற் புராணம், ஆசிரியர் நக்கீரனார் கொங்குதேர் வாழ்க்கை எனுஞ் செய்யுளிற் குற்றமாராய்ந்தவாறும், சிவபெருமான் அவரை யொறுத்துணர்த்தியவாறு மாத்திரமே யுரைப்பச் சிகாளத்திப் புராணம் அவர் அச்செய்யுளிற் குற்றம் ஆராய்ந்தவாறும், அங்ஙனம் ஆராய்தலாற் போந்த பெருங்குற்றங் கடிதற்பொருட்டுக் கயிலைக்குச் செல்லும் வழியில் முருகக்கடவுள் திருவருணோக்கஞ் சித்திக்கப் பெற்றுக் காளத்தி மீண்டு இறைவனைத் தொழுது கிடந்தவாறும் கூறத் திருப்பரங்கிரிப் புராணம் அவர் முருகக்கடவுள் திருவருட் குறிப்பாற் சிறையிடப்பட்டுத் திருமுருகாற்றுப்படை இயற்றியுய்ந்தவாறு மாத்திரமே ஓதி யொழிதன்மேற் கிளந்து கூறிய மூன்று வரலாற்றையும் உய்த்து நோக்குவார்க்கு இனிது விளங்கும். இனி இம் மூவகை வரலாற்றுள்ளும், திருவிளையாடற் புராண முடையார் தன் மனைவி குழன் மணத்தை வியந்து கொண்ட பாண்டியன் வங்கிய சூடாமணி யென்னுஞ் சண்பகமாறனென்பர்; சீகாளத்திப் புராண முடையார் வறிதே பாண்டியனென்று கூறி யொழிந்தார்; திருப்பரங்கிரிப் புராண முடையார் அவ்வரலாற்றை முழுவதுமே கூறாதொழிந்தார். புறநானூறு முதலிய தொகை நிலைச் செய்யுட்களை உற்றுணர்வார்க்கு வங்கிய சூடாமணி சண்பகமாறன் எனும் பெயர்கள் புதுமையுடையனவாய்த் தோன்றும். பழைய தமிழ் வேந்தர்கட்கும் மக்களுக்கும் இடப்பட்டு வழங்கிய பெயர்கள் செவ்விய தமிழ்ச்சொற்களாகவாதல், வடசொற்கள் விரவினும் அவை தமிழ்ச் சொற்போல மெல்லென்றிசைக்கும் மாட்சியுடைய வாகவாதல் நிகழுந்தன்மையவாம்; பாண்டியன் அறிவுரை நம்பி, நெடுஞ்செழியன் உக்கிரப்பெருவழுதி, மாவளத்தான், வேற்பஃறடக்கை பெருநற்கிள்ளி, இளஞ்சேட்சென்னி, சேரமான்மாவெண்கோ, யானைக்கட்சேய் மாந்தருஞ் சேரலிரும்பொறை, உதியஞ் சேரலாதன், இடைக்காடனார், ஒக்கூர்மாசாத்தனார், கண்ணகனார், கயமனார் என்றற் றொடக்கத்துப் பெயர் களே இதனை இனிது நிறுத்துக் கரி போக்குமென்பது. இனித் தமிழிற் றிருவிளையாடற்புராணம் இயற்றிய ஆசிரியர் இவ்வரலாறுகளைப் பன்முறை யாய்ந்து பொருந்தக் கூறுமாறின்றி வடநூலிற் கிடந்தவாறே யெடுத்துத் தமிழில் மொழிபெயர்த்திட்டார். வடநூலாசிரியர் பெரும்பாலும் ஒரு நூலியற்றப் புகுந்துழி உலக வழக்கொடும் ஆன்றோர் வழக்கொடும் மாறுபடாவாறு வரலாற்று முறைமையை யுணர்ந்து ஆய்ந்து பொருந்தக் கூறுவதின்றித் தாந்தாங் கண்டவாறே யொன்றும் பலவு மெடுத்துக் கொண்டு அவற்றை மாற்றியுங் குறைத்தும் வேறு பலவற்றை இடையிற் புகுத்தி விரித்தும் உண்மை தோன்றாவாறு பலபடக் கூறுவர். இவ்வாறியற்றிய நூற்பொருளியல்பு அறியாதார் இதனையே முதனூலாகக் கொண்டு வழிநூல் இயற்றுவர். அங்ஙனமியற்றும் வழி அவ்வழி நூலும் அதனாற் பழுதுபடுமா மென்பது. இனி வடநூற்பொருளைத் தழுவாது செந்தமிழ் நூலியற்றிய தொல்லாசிரிய ரெல்லாரும் உள்பொருளைக் கிடந்தவா றெடுத்து உண்மை தோன்ற உரிமையின் விளக்கி உயர்ந்தாரென்பது சிலப்பதிகாரம், பெரியபுராணம் முதலிய பழைய தமிழ் நூல்களால் உணர்ந்துகொள்க. வட நூலாசிரியர் தம் மொழிமேற் சென்ற கடும்பற்றுள்ளத்தால் தமிழில் வழங்கிய மக்கள் இயற்பெயர்களையும் வடசொல்லாற் றிரித்துக் கூறுதலிற் சண்பகமாறன் , வங்கிய சூடாமணி எனும் இயற் பெயர்கள் தமிழ்ச் சொற்களாய்த் தமிழில் வழங்கியவாறு ஒருவாற்றானும் புலப்படவில்லை அல்லதூஉம், வடநூற் றிருவிளையாடற் புராணமுடையார் தாமே படைத் திட்டுக் கொண் டெழுதியனவோ வென்று எண்ணுதற்கும் இடஞ்செய்து கிடக்கும். என்னை? ஒருவ ரியற்பெயரைக் கூறப்புகுந்தார்க்கு மொழிவேற்றுமைபற்றி அதனையுந் தம் மொழியில் மொழிபெயர்த்துக்கோடல் பெரிதும் இழுக்காய் முடிதலானும், இயற்பெயரைக் கிடந்தவாறே கூறுதலாற் போந்த வழுவின்மையின் அதனையுள்ளவாறே யுணர்ந்தார் இயற்பெயரைக் கிளந்தோதுவராதலானுமென்பது. இனிச் சீகாளத்திப் புராணமுடையார் தாமாராய்ந்தும் பெறப்படாத இயற்பெயரை வடமொழியிற் கிடந்தவாறே கூறாதொழிதல் பெரிதும் நன்கு மதிக்கப்படுவதொன்றா மென்பது. இனிக் கதை வரலாறும் ஒன்றோடொன்று மலைவு படுமாறு காட்டுதும்: திருவிளையாடற் புராணமுடையார் பாண்டியன் இளவேனிற்காலத்தொருநாள் இளமரக்ககாவிற் புகுந்து தன் மனைவியொடு வைகினானெனக் கூறினார்; சீகாளத்திப் புராணமுடையார் பாண்டியன் தன் மாளிகை மேனிலைமேல் தன் மனைவியோடிருந்தானென்றார்; அவர், தாய் தந்தையரை இளம்பருவத்தே இழந்த தருமியென்னும் மறைச்சிறுவன் தான் மணம் புரிதற்குப் பொருள்வேண்டி இறைவனை இரந்தானென்றார்; இவர், பாண்டிநாட்டில் மழைவறங் கூர்ந்து வற்கடகால மிகத் தான் வறுமையால் நலிந்து வேறுநாடு போதற்கெண்ணித் தருமியென்பவன் இறைவனை விடை கேட்ப இறைவனிரங்கிச் செய்யுள் கொடுத்தான் என்றார்; அவர், செய்யுள் பெற்ற தருமி அதனை முதலிற் சங்கப் புலவர்க்குக் காட்ட அவர் நல்லவென்று வியந்து பாண்டியனுக்குச் சென்றுரைப்ப அவனும் மகிழ்ந்து தருமிக்குப் பொற்கிழி அறுத்துக் கொள்ளப் பணிப்ப அவ்வாறே போந்து தருமி அறுக்கப் புகுங்கால் நக்கீரனார் மறுத்தார் என்பர்; இவர், அதனைப் பெற்ற தருமி முதலிற் பாண்டியனிடத்திற் சென்று காட்ட அவன் உவந்து மற்றிதனைச் சங்கப் புலவர்க்கு ஏற்பித் துரைத்திரென அவ்வாறே அவரும் போந்து சொல்லக் கேட்ட புலவருள் நக்கீரனார் இது குற்றமுடைத்தென்றார் என்று கூறினார்; அவர், இறைவன் புலவனாய்த் தோன்றி நீர் வழிபடும் ஞானப் பூங்கோதையார் கூந்தலும் அத்தகை யதோவென்று வினாவினார் என்றார்; இவர், வாளா இறைவி கூந்தலும் அத்தன்மையதோ வென்றாரென்றார்; அவர் இறைவன் திறந்த நுதல்விழி வெப்பம் பொறாது நக்கீரனார் பொற்றாமரைக் குளத்தில் விழுந்தார் என்றார்; இவர், இறைவன் நக்கீரனாரைக் குறைநோய் கொள்கவென அதனை அஞ்சித்தொழுத நக்கீரனாரைக் கயிலை காணில் இது தீருமென்று கூறி மறைந்தான் என்றார். இனிச் சீகாளத்திப் புராணமுடையாரும் திருப்பரங்கிரிப் புராணமுடையாரும் தம்முள் மாறுகொண்டுரைக்கு மாறு காட்டுதும். சீகாளத்திப் புராணமுடையார், நக்கீரனார் கயிலை கண்டு தொழுதற் கெண்ணித் திருக்கேதார முதலிய வடநாட்டுத் திருப்பதிகளைக் கடந்து செல்லுழிச் செல்லு நெறியில் ஒரு குளமும் அதன் கரையிற் செவ்விய ஓர் ஆலமரமும் நிற்பக் கண்டு அதன் நிழலிற் சிறிது இளைப்பாறி யிருப்ப அம்மரத்தின் இலை யுதிர்வையே தலைக்கீடாகக் கொண்டு ஒரு பூதம் அவரை ஒரு மலைக்குகையிற் புகுத்த ஆண்டுத் தமக்கு முன்னிருந்தவரைக் கண்டிரங்கி அவர் பொருட்டுத் திருமுருகாற்றுப்படை மொழிந்து எல்லாரையும் உய்யக் கொண்டாரென்பர்; திருப்பரங்கிரிப் புராண முடையார், நாடொறும் பரங்குன்றிற் சுனையில் நாட்கடன் கழித்துத் தம்மைத் தொழாது செல்லும் நக்கீரனாரைப் பரங்குன்றின் முழையிற் சிறைப் புகுத்திப் பின் ஆற்றுப்படை பாடுவித்தார் முருகக் கடவுள் என்பர். இனி இவற்றுட் பாண்டியன் தன் மனைவியொடு வைகியவாற்றை இடமாத்திரையான் இருவரும் வேறுபடுத்துக் கூறுதலின் அது பெரியதொரு வேற்றுமை யாகாதென்பது. இனி இறைவன்மாட்டு அன்பு முதிர்ந்து பொருண் மேற் சென்ற பற்றைத் துவரத்துறந்து கரணங்கள் தூயவாகி அவ்விறைவன் அருள்வழி நிற்குந் திருத்தொண்டர் இறைவனை எமக்கு மனைவி வேண்டும், பொருள் வேண்டுமென்று குறையிரந்து கொள்ளாது தங்குறையை அறிவித்தன் மாத்திரையில் அமைந்தொழுகுந் தன்மையராகலான் திருவிளையாடற் புராணமுடையார் இறைவனிடத்து உரிமையன்பு முறையுளி நிகழ்த்துத் தருமி யென்பவன்றான் சென்றிறைவனை வதுவையயர்தற் பொருட்டுப் பொருள் தரல் வேண்டுமெனக் குறையிரந் தானாகக் கூறுதல் பொருத்தமின்றாம். இனிப் பாண்டி நாடு முழுவதூஉம் மாரிவறப்ப வளஞ் சுரவாது யாண்டும் வறுமை மிகுந்து மாவும் மக்களும் பெரியதோரிடருழந்தாரென்று அதனைத் தாம் நேரிற் கண்டிருந்த மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் *பன்னீராண்டு பாண்டி நன்னாடு, மன்னுயிர் மடிய மழைவள மிழந்தது என்று நிலையிட்டுரைத்தலானும், இறையனராகப் பொருளுரைப் பாயிரத்தினும் இவ்வாறே கூறப்படுத லானும் அறிவுடை நன்மக்க ளெல்லாரும் இவ்வற்கடகால நிகழ்ச்சியைத் தழீஇக் கொண்டு மொழிதலானும், சீகாளத்திப் புராணமுடையார் அவ்வற்கட காலத்தின் வறுமைநோய் பொறுக்கலாற்றாது தருமி யென்பவர் வேறு நாடு போதற்கு விடை பெறுதல் வேண்டி இறைவனைக் குறையிரந்தாரென்றல் உலக வழக்கொடும் புலனெறி வழக்கொடுந் திறம்பாத மெய்யுரையாம். அல்லதூஉம், தருமியென்பவர் இறைவனை மனைவி வேண்டும் பொருள் வேண்டுமெனக் குறையிரவாது, வறுமைநோய் களைந்து கோடன் மாத்திரையே குறித்து இறைவனை வேண்டினாராகக் கூறும் சீகாளத்திப் புராணமுடையார் கூற்றுப் பெரிதும் நன்கு மதிக்கப்படுவதொன் றாம்; இவர் இவ்வரலாற்றின் மெய்ம்மை யாராய்ந்துணர்ந்து கூறினாரென்பது கடைப்பிடிக்க, இறைவன் தந்த செய்யுளைக் கொண்டு போந்து தருமி யென்னும் மறைச்சிறுவன் சங்கப் புலவர்க்குக் காட்டியவழி ஆங்கே நக்கீரனார் அதைக் குற்றமுடைத்தென இயம்பாது சங்கப்புலவர் அச்செய்யுளை வியந்து கொண்டு போய்ப் பாண்டியனுக்குரைப்ப அவனும் உவகைமிக்குப் பொற்கிழி பெறுகவென்ற சொற்படி தருமி கிழியறுக்கப் புகுந்தவழி யாண்டு அதற்குக் குற்றங் கூறினாரென்றல் ஒரு சிறிதும் பொருந்தாமையான். திரு விளையாடற் புராணமுடையார் கூற்று ஆன்றோர் வழக் கொடு மாறு கொள்ளும். மற்றுச் சீகாளத்திப் புராணமுடையார், செய்யுள் பெற்றுக்கொண்ட தருமி யதனை முதலிற் பாண்டியனுக்குச் சென்று காட்ட அவன் உவந்து இதனைச் சங்கப் புலவர்க் கேற்பித்துப் பின் பொற்கிழி பெறுகவென்று கூறினானென்றும் அவ்வாறே யவர் சென்று அதனை யுரைப்ப அப்போது நக்கீரனார் குற்றங் கூறினாரென்றும் உலக வழக்கொடும் ஆன்றோரொழுக்கத்தொடும் மாறுகொள்ளாவாறு ஓதுதலின் இஃதுண்மை நிறுத்தும் பொன்மொழியாமென்பது. இனி இறைவன் புலவனாய்ப் போந்து நக்கீரனாரை நோக்கி இறுதியில் ஞானப்பூங்கோதையார் குழலும் அத்தன்மையதோவென வினாவினாராகக் கூறும் சீகாளத்திப் புராணமுடையார் கூற்றினுஞ் சிறக்குமாம். என்னை பொதுப்பட இறைவி கூந்தலை யெடுத்துக் கூறுதலாற் கைலைபாதி காளத்தி பாதியந்தாதி பாடுதற்குக் காரணம் பிறிதொன்றாற் பெறப்படாமையா னென்பது. இனித் திருவிளையாடற் புராணமுடையார் இறைவன் திறந்த நுதல்விழி வெப்பம் பொறாது நக்கீரனார் பொற்றாமரையில் விழுந்தார் என்பதூஉம், சீகாளத்திப் புராணமுடையார் இறைவன் அவரைக் குறைநோய் கொள்க வெனக் கூறினானென்பதூஉம் மாறுபடாவாம். என்னை! நுதல்விழி திறந்த வளவில் தம்மெய்யில் வெம்மை மிகப் பொறுக்கலாற்றாக் கொடுந்துயர் விளைதலின், மற்றதனைப் பரிகரித்துக் கோடற்பொருட்டுப் பொற்றாமரைத் தடத்தில் வீழ்ந்து, பின் இறைவனருள் சிறிது முகிழ்த்தலின் அதனை நீக்கிவெளிப்பட்ட நக்கீரனாருக்கு முன்பற்றிய வெம்மையால் மெய்நிலை மாறுபட்டுத் தொழுநோய் முதிர்ந்ததென்பது கருத்தாகலினென்க. இனி, நக்கீரனார் கயிலைகாணச் செல்லும் நெறியிற் பூதத்தினாற் கவரப்பட்டுத் திருமுருகாற்றுப்படை மொழிந்து உய்ந்தாரெனக் கூறும் சீகாளத்திப் புராணமுடையார் கூற்று மெய்ப்பொருள் நிலையிட்டுரைக்கும் அறிவுடை நன்மொழியா மென்பதும், இவ்வாறன்றிப் பரங்குன்றில் முருகக்கடவுள் பாமாலை பெறுதற்கெண்ணி ஒருகாரணங் காட்டியவரை மழைமுழையிற் புகுத்திச் செய்யுள் கொண்டு பின் அவரைச் சிறைவீடு செய்து அருள் புரிந்தாரெனக் கூறும் திருப்பரங்கிரிப் புராணமுடையார் கூற்று உலகநெறியொடு மாறுகொண்டு இயற்கையின் நடவாச் செயற்கைத் திறத்தைப் புனைந்தெடுத்துக் கூறுதலானும், அதனால் தாம் பாமாலை பெறுதற்கெண்ணுதலின் தன்னைப் பற்றுதலென்னுங் குற்றமும் நடுநிலை திரிந்து பொருத்தமி காரணத்தாற் சிறை புகுத்தலிற் சமனிலை வழுவுதலென்னுங் குற்றமும் இறைவன் மாட்டெய்துதலானும், இனி, நக்கீரர்தாமும் முருகக்கடவுளிடத் தெழுந்த அன்பினாற் செய்யுள் செய்யாது அச்சம்பற்றிச் செய்தாரெனவும், சிவபெருமானையே பாடும் வழுவாநோன்புடையாராயின் அந்நோன்போடு இகலிப் பின் முருகனைப் பாடினாரெனவும், முருகக் கடவுள் தாமுந் தம்மாற் றொழப்படுந் தன்மையரல்ல ரென்று எண்ணினாரெனின் அது நூலுணர்வும் மெய்யுணர்வுமின்றி முருகனையும் மூத்தபிள்ளையாரையும் உமாதேவியாரையும் இறைவன்றா னொருவனே கொண்ட பல வேறு பட்ட அருட்கோலங்களாமென்று மறைமொழி கிளந்த மந்திர வுரை யோடு முரணி அக்கோலங்கள் தம்முள் வேறுபாடு கற்பித்துக் கொண்டொழுகுந் தெரிவின் மாந்த ரொழுக்கத்தொடுபட்டுச் சிறுமை எய்தினாரெனவுங் கொள்ளக் கிடக்குமாதலானும் அவருரை பொருந்தாதென்பதும் அறிவுடையா ரெல்லார்க்கும் இனிது விளங்குமென்பது. இனித் திருமுருகாற்றுப்படையில் அஃதியற்றப்பட்ட வரலாறு யாண்டுங் காணப்படாது. அவ்வாறாயினும் அந்நூலில் அதனாசிரியர் திருப்பரங் குன்றை முதலெடுத்தோதுதலின், அவ்வாற்றானது திருப் பரங்குன்றிற் செய்யப்பட்டதென்று உய்த்துணர்ந்து கொள்ளாமோவெனின்; - கொள்ளாமன்றே, ஆசிரியர் நக்கீரனார் மதுரையிற்றோன்றி அதனை யடுத்துள்ள பரங்குன்றின் மிக்க பற்றுடையராகலான் அதுபற்றி யதனை முதலெடுத்தோதினாராதலின்; திருஞானசம்பந்தர் முதலான அருட்டிருவாளருந் தாந்தோன்றிய நகரைச் சிறந்தெடுத் தோதுதலும் இதனோடு ஒருபுடை யொற்றியுணரப்படுமென்பது. இனி ஏட்டுச் சுவடிகளில் திருமுருகாற்றுப்படையின்கீழ்க் குன்ற மெறிந்தாய் எனவும் குன்ற மெறிந்ததுவும் எனவும் இரண்டு வெண்பாக்களெழுதப் பட்டுள்ளன; இவ்விரண்டு வெண்பாக்களின் நடை வளத்தையும், சொல்லமைதி, பொருளமைதிகளையும் உற்று நோக்கும்வழி; அவையிரண்டும் மிகப் பழையகாலத்தன வென்பதும், நக்கீரனார் இயற்றியனவேயாமென்பதும் இனிது விளங்கும். அல்லதூஉம் பத்துப்பாட்டுக்கள் ஒவ்வொன்றின் கீழும் அவ்வப்பாட்டுக்களின் கருத்துப் பொருளை விளக்கியும், அவ்வப்பாட்டுடைத் தலைமக்கள் பெரும்புகழ் கிளந்தும் ஒருவாற்றான் வரலாறு தெரிப்பனவாகிய ஒன்றிரண்டு மூன்று வெண்பாக்கள் எழுதப்பட்டிருத்தலின் மற்றவை அவ்வவ்வாசிரியரால் தாந்தாம் பாடிய பாட்டுக்களின்கீழ் எழுதப்பட்டன வென்பது ஐயுற வின்றித் துணிந்து கொள்ளப் படுமென்பது, இம்முறை வழுவாது அப்பத்துப்பாட்டுக்களின் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படையினும், அதனாசிரியர் தாமும் அதன் வரலாறு கிளக்கும் இரண்டு செய்யுட் களெழுதினார். இனி இவ்விரண்டு செய்யுட்களும் ஆசிரியர்தாம் ஆற்றுப்படை மொழிந்த பொழுதியற்றப்பட்டனவோ, ஆற்றுப்படையை ஏனை யொன்பது பாட்டுக் களுடன் கோவை செய்து முறைப்படுத்திய போது இயற்றப் பட்டனவோவென் றாராயலுறுவார்க்குத் துணிதற்கருவி யின்மையின் அவையும் விளங்கா. ஆயினும், கோவை செய்து முறைப் படுத்தியபோது ஒரு தலையான் அதன் வரலாறு தெரித்தற்பொருட்டு அவை எழுதப்பட்டிருத்தல் வேண்டு மென்பது துணியப்படும். இவ்விரண்டிற் குன்ற மெறிந் ததுவும் எனுஞ் செய்யுளில் இன்றெம்மைக் கைவிடா நின்றமையுங் கற்பொதும்பின் மீட்டமையும் என்று கூறப்படுதலின், நக்கீரனார் மலைமுழையுட் சிறைப்பட்டவாறும், பின் மீட்கப் பட்டவாறும் ஒருதலையான் நிகழ்ந்தன வென்பது பெறப்படும். இனி, குன்றமெறிந்ததுவும் என்னுஞ் செய்யுளும் குன்ற மெறிந்தாய் என்னுஞ் செய்யுளுமொழிய வேறு எட்டுச் செய்யுட்கள் திருமுருகாற்றுப்படைச் சுவடிகளின்கீழ் எழுதப்பட்டிருக் கின்றன. மற்றறிவையும் ஆசிரியர் நக்கீரனார் இயற்றியன கொலென்று ஆராயப் புகுந்தவழி, அச்செய்யுட்களில் வீரவேல் தாரைவேல் தீரவேல் என்றற்றொடக்கத்து விரவியற்சொற்றொடர்களும், நம்புகிலேன் எனுந் தொன்னெறிப்பட்டியலாச் சொல்லமைப்பும், கோலப்பா வேலப்பா முதலிய தொன்றுதொட்டு நடவாவழக்கும் பயிலக்காண்டலானும்,, அவை தம்முள்ளும் இறுதிக்கணின்ற இரண்டு செய்யுட்களும், ஆசையா னெஞ்சே யணிமுருகாற் றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல் எனவும், நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாடோறுஞ் சாற்றினால்-முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தானினைத்த வெல்லாந் தரும் எனவும் நக்கீரனாரைப் படர்க்கைப் படுத்துரைத்துத் திருமுருகாற்றுப்படையைச் சிறப்பித்துக் கூறுதலானும், திருஞானசம்பந்தர் முதலான அருட்டிருவாளர் தாமோதிய பதிகத்தின்கீழ்த் தம்பெயரைக் கிளந்து கூறிப் பதிகச் சிறப்பும் அமைத்துக் கடைக்காப்பிடுமாறு போல, ஆசிரியர் நக்கீரனார் தாமுந் தம் பெயரையும் நூற்சிறப்பையும் அங்ஙனம் படர்க்கைக் கண் வைத்து வேறுபடுத் தோதினாரென்பார்க்கு, இன்றென்னைக் கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவு மெய்விடா வீரன் கை வேல் என்று தம்மைத் தன்மைக்கண் வைத்தோதிய ஆசிரியர் தாமே தம்மைப் பின் படர்க்கையில் வைத்து வேறுபடுத்தா ரென்றல் பொருந்தாமையானும், அன்றி அங்ஙனம் வேறுபடுத்தாரெனக் கொள்ளினும் ஞான சம்பந்தன் உரைசெய்த என்பதுபோல் தம்மை நக்கீரன் றானுரைத்த என்று வைத்துக் கூறுவதன்றி நக்கீரர் தாமுரைத்த என்றுயர்த்துக் கூறுதல் ஏலாமையானும், அவர் தம்மை யங்ஙனம் உயர்த்துக் கூறாரென்பது சிறியேன் சொன்ன வறில்வாசகம் எனப் பிறாண்டும் அவர் கூறுமாற்றால் தெளியக்கிடத்தலானும் அவை பிற்காலத்தாரால் நூற்சிறப்பாக எழுதப்பட்டனவா மென்பது இனிது விளங்கும். அல்லதூஉம், ஆசிரியர், நக்கீரனார் கூறிய இரண்டு செய்யுட்களில்இறுதிச் செய்யுளினிறுதியிற் கிடந்த மெய்விடா வீரன்கைவேல் எனுஞ் சொற்றொடரிலுள்ள வீரவேல் எனுமொழிகளை வேறுபிரித்தெடுத்துக் கொண்டு வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட என்று தொடங்குதலானும், ஏனையொன்பது செய்யுட்களும் அங்ஙனம் அந்தாதித் தொடைப்பட நிகழாமையானும் முன்னிரண்டு செய்யுட்களும் ஆசிரியர் நக்கீரனார் இயற்றினவா மென்பதூஉம், பின்னெட்டும் பிற்காலத்தார் இயற்றினவா மென்பதூஉம் தெற்றென உணரப்படுமென்பது. இனி, இங்ஙனம் ஆசிரியர் நக்கீரனார் வரலாறு பல நூல்களில் ஒன்றோடொன்று மலைவுபட நிகழ்த்தப்படுதலின், மற்றது முழுவதூஉம் பொய்படும் போலுமென நினையற்க. ஆசிரியர் தாம் இறைவன்றந்த கொங்குதேர் வாழ்க்கை எனுஞ் செய்யுட்குக் குறைகூறிய தங்குறு மொழியைப் பொறுத்தருளுமாறு திருவெழுகூற்றிருக்கை யிற் சிறியேன் சொன்ன வறிவில் வாசகம், வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும் எனவும், பெருந்தேவபாணியிற் கூடலால வாய்க்குழகனாவ, தறியா தருந்தமிழ் பழித்தன னடியேன் எனவும் எம்பெருமான் வேண்டியது வேண்டா, திகழ்ந்தேன் பிழைத்தே னடியேன் எனவுங் கூறிக் குறையிரத்தலானும், இவை யெல்லாம் நிகழ்ந்தவிடம் மதுரைமாநகரென்பதூஉம், இறைவன் விழித்த நுதற்கண் வெப்பம் தம் மெய்யிற்பற்றி எரிவு செய்ததென்பதூஉம், திருவெழு கூற்றிருக்கை இறுதி வெண்பாவில் ஆலவாயி லமர்ந்தாய்- தணிந்தென்மேன், மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே எனவும், பெருந்தேவபாணி இறுதி வெண்பாவில் என்மேற், சீற்றத்தைத் தீர்த்தருளுந் தேவாதி தேவனே, யாற்றவுநீ செய்யுமருள் எனவும் அவர்தாமே கூறுமாற்றாற் றெளியக் கிடத்தலானும், இறைவன் றமக்குக் கட்டளையிட்டவாறு கயிலைகாணச் செல்லு நெறியின் மலைமுழையில் தாம் சிறை புகுத்தப்பட்டுப் பின் செவ்வேள் திருவருளால் அதனினின்று மீண்ட முறைமை இன் றெம்மைக், கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பின் மீட்டதுவு, மெய்விடா வீரன்கைவேல் என்றவர் திருமுருகாற்றுப்படை இறுதிவெண்பாவிற் பொதுப்பட வைத்துரைப்பதன்கட் பெறப்படுதலானும், தாங் கயிலைகாணச் சென்றமை முற்றுப்பெறாது வியத்தகு பரிசாற் காளத்தியையே அது வாகக் காணும்படி நேர்ந்த பெற்றிநோக்கி அவ்விரண்டற்கும் ஒற்றுமை கொளுத்திக் கயிலைபாதி காளத்தி பாதியந்தாதி அருளிச் செய்ததனால் அவ்வுண்மையறியக் கிடத்தலானும் அவ்வரலாறு முழுவதூஉம் மெய்ப்ப நிகழந்ததா மென்பது ஐயுறவின்றி நிலையிட்டுரைக்கப்படு மெனக்கொள்க. இனி, இறைவன் றிருவுருக்கொண்டு நக்கீரனார் விழியெதிர் தோன்றினா னெனவும், பின் அவரோடு வழக்காடி மறைந்தானெனவுங் கூறுவனவெலாம் யாண்டும் இயற்கையின் நடவாச் செயற்கையாதலின் மற்றிவையெல் லாம் மெய்த்திறங்கொண்டு நிகழாப் பொய்ப் பொருள்களா மென்று வேறொரு சாரார் தமக்குத் தோன்றியவா றெல்லாம் பிறழக்கூறி நலமுறார், ஆசிரியர் நக்கீரனார்தாமே அங்ஙனம் நிகழ்ந்தவற்றையெல்லாம்இனிதெடுத்துக் கூறுதலின், அப்பெற்றியார் கூறும் அறிவில்லுரை வறிதாய்ப் போலிப்படு மென்பது நல்லுணர்வுடையார் உணர்ந்து கொள்வரென விடுக்க, அல்லதூஉம், மக்கட்பிறவியின் உறுதியுணர்ந்து உலக வாழ்க்கை அலரலொழிந்து அவை மாறிமாறிவரும் இயல்புணர்ந்து கழித்துத் தம்முயிர்க்கு நீங்கா நிலைக்களனா யுள்ள துளக்கறும் பொருளியல்பு அறிந்து அப்பொருட் செயலினும் அறிவினுந் தஞ்செயலும் அறிவுத் தோய்ந்து ஒரு பெற்றிடையேயொரு பேரின்ப நுகர்த்தமைய நினைந்திருக்கும் அறிவுடை நன்மக்கள் பண்டைநாட் டொடங்கி இன்றளவும் நிலவப்பெற்ற இச்செந்தமிழ் நாட்டொடு, அப்பிறவியின் உண்மைப்பயனறியாது தம் வாணாள் முழுவதூஉம் உலகவாழ்க்கையில் அழித்து வேறோருறுதி நாடாது, அங்ஙனங் கழித்தலையே தமக்குப் பெருமதிப்பாகக் கொண்டொழுகும் மாக்கள் நிறையப்பெற்ற ஏனை நாடு களை ஒப்பிட்டு, அவ்வொய்ப்புமையால் இச்செந்தமிழ் நாட்டில் நிகழ்ந்த அரிய பெரிய வியத்தகு நிகழ்ச்சிகளைப் பொய்யென்று நினைந்தொழுகுவார்க்கு நல்லறிவு கொளுத்தி அவரைச் செந்நெறிக் கடாவுதல் ஒருவாற்றானுஞ் சாலாத தொன்றாமென ஒழிக. திருஞான சம்பந்தர் முதலான அருட்டிருவாளருந் தாந்தாம் நிகழ்த்திய அற்புதங்களையும், இறைவன் தமக்குச் செய்யும் அருட்பாடுகளையுந் தாமே தத்தஞ் செய்யுட்களில் அமைத்துக் கூறுதலும், அதனைப் பிற்காலத்தறிவுடை நன்மக்கள் பலரு* மெய்யெனத்தேறி நன்கு மதித்தலுங் காண்க. இறைவன் தன்னடியார் பொருட்டு இயற்றிய திருவிளையாடல்களும், திருத்தொண்டர் பிறருய்யும் பொருட்டு அவ்விறைவன்அருள்வழி நின்று நிகழ்த்திய பேரற்புதங்களும் இச்செந்தமிழ் நாட்டிற்போல வேறு பிறவற்றில் நிகழக்காணாமையான் வேற்று நாட்டிலுள்ள மாக்கள் இன்னோரன்னவற்றைக் கேட்டலும் பெருநகை புரிந்து எள்ளுவர். அது பற்றியவர்க்கு இரங்குவதேயன்றி அவரை யிகழார் பெரியோ ரென்பது. யாவராயினுமாக, இறைவன் ஒரு திருவிளையாடல் புரிந்தானென்றாதல், ஒரு திருத்தொண்டர் ஒரு பெரும் புதுமை நிகழ்த்தினா ரென்றாதல் கேட்டுழிக் கதுமென எள்ளி நகையாடாது அங்ஙனம் நிகழ்ந்ததனுண்மையை ஆராய்ந்துணர்தல் அவர்க்கு இன்றியமையாததா மென்பது கடைப்பிடிக்க. இனி யொருசாரார் திருவிளையாடற் புராணத்தையே கருவியாகக் கொண்டு தமிழ்ச் சங்கமென வொன்றில்லையெனவும், காசியிலிருந்த வடமொழிச் சங்கத்தை நோக்கித் தமிழ்ப்புலவர் புனைந் தெடுத்துக் கட்டிய கட்டுரை யதுவாமெனவும், தமிழ்ப் புலவர் பொய்யும் புளுகும் புனைந்துகொண்டுஅரசரை இரந்து பரிசு பெற்றுண்டு நாட்கழிக்கும் மிடிபடு வாழ்க்கைக் கையறியா மாந்தரெனவும், அவர் கூறுமாறுபோலத் தமிழ் அத்துணைப் பெருஞ் சிறப்பினதும் தொன்றுதொட்டது மன்றாமெனவுந் தமக்குத் தோன்றியவா றெல்லாம் இளி வரக் கூறிப் பெரிது மார்த்தலின், அவருரை புரைபடு முகத்தாற் றிமிழின்றொன்மையும், தமிழிலிருந்து பல சொற்கள் வேறு மொழிகளில் வழங்குதலும், தலைச்சங்கமிகுந்த காலமும் கடைச்சங்க வரலாறும் ஈண்டெடுத்துக் காட்டி நிறுவியவ்வாற்றா னாசிரியர்-நக்கீரனார் காலமுங் காட்டுதும். இனி, இப்போது இந்து மகா சமுத்திரம்என மிகப் புகழ்பெற்று விளங்கும் மாகடல் பல்லாயிரவாண்டுகளுக்கு முன் நிலனாயிருந்த தென்பது ஆங்கில நூல் வல்லார்க்கு இனிது விளங்கும். அவர், பல வேறு வகைப்பட்ட நாடு களிலுள்ள மக்களின் உருவமைப்பும் உறுப்பமைவும் ஒத்துநோக்கி அவர்தம் முன் இனங் கண்டுரைப்பதாகிய மக்களினநூலானும், இயங்கியற் பொருள் நிலையியற் பொருள்களைப் பகுத்துககொண்டு ஆராயும் நூல் களானும், அவ்விந்துமகா சமுத்திரத்திலுள்ள சில தீவுகளிற் கண்டெடுக்கப் பட்ட தமிழெழுத்துக்க ளெழுதிய செப்பேடுகள் கருங்கற்களானும் கிழக்கே சந்தாத்தீவுகள் வரையிலும் மேற்கே மடகாசிகர் தீவுவரையினும் அகன்று கிடந்த இலெமூரியா என்னும் நிலன் ஒருகாலத்தெழுந்த பெரு வெள்ளத்தால் ஆழ்ந்து போயிற்றென்றும், இங்ஙனம் ஆழ்ந்துபோன பெருநிலன் இந்நிலவுலக முழுவதற்கும் நடுவிற்கிடந்த பெரும் பரப்பாகலான் இறைவனாற் படைக்கப்பட்ட மக்கள் முதன் முதல் இந்நிலத்திலிருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து போய் வேறுபட்டன ரென்றும், அவ்வாறிதிலிருந்த தொல்லோர் வழங்கிய மொழி தமிழ்மொழியா மென்றும் பொருளினிது விளங்கச் சொல்லுந்தோறும் காரணங்காட்டி நிறுவி விளக்குவர். இனி வேறொருசாரார் ஆரியர்கள் முதன்முதற் காஸ்பியன் கடலையடுத்த இடங்களிலிருந்து பின் பன்முகமாகப் பரந்து சென்றார்களென்பர். இனிப் பிறிதொரு சாரார் ஆரியர்கள் கா°பியன் கடலையடுத்த இடங்களில் முதன் முதலிருந்தார்களென்பார் மதத்தை மறுத்து, காந்தினேவிய தீப கற்பத்தின் தெற்கில் முதன் முதலிருந்து பின் பன்முகமாகப் பிரிந்து சென்றார்களென்பர்.* அவ்வாறவர் கூறுமாற்றான் ஆரியன் முதன் முதலிருந்து பின் பிரிந்த இடமாத்திரம் பெறப்படுமாமன்றித் தமிழர்களுக்கும் உலகத்திலுள்ள எல்லா மாந்தருக்கும் அஃதே இடமாமென்பது அதனாற் போதராமையின் யாம் முற்கிளந்து கூறிய இலெமுரியா என்னும் நிலப்பரப்பே தமிழர்கள் தொன்றுதொட்டு வதிதற்கு இடமாயிருந்த தென்பதூஉம், அந் நிலப்பரப்பழிந்து படவே அதனுடனழிந்தோர் இந்தியா, மலேய தீபகற்பம், சீயம், பலுசிதானம், பாரசீகம், அராபியா, துருக்கி, கிரீசு, இத்தலி முதலான பல்வேறு வகைப்பட்ட நாடுகளின் தென்பாகங்களிற்சென்று குடியேறி அங்ஙனங் குடியேறிய நாடுகளின் ஒழுகலாற்றிற்கேற்ப நாடொறும் ஒழுக்கமும் உருவமும் மொழியும் வேறுபட்டு வாழ்ந்தார்களென்பதூஉம் இனிது விளங்கும். அதுவன்றே கடவுள்: ஒன்று : எட்டு : கொல் : ஈன் : வேறு: சுருங்குமுதற் பல தமிழ்ச் சொற்கள் பல்வேறு வகைப்பட்ட மொழிகளில் வழங்கப்படுவதூஉ மென்க. இன்னும் இதனாற் போதரும் உண்மை என்னெனின்; பண்டை நாளில் மக்கட் பரப்பென்பது இரண்டு கூறுபட்டு, ஒன்று வடக்கே காந்தினேவிய தீபகற்ப முதலான இடங்களில் வதிய, ஏனையது தெற்கே இலெமுரியா என்னும் பெருநிலப்பரப்பில் வதியப் பின் வடக்கிலுள்ள காந்தினேவிய முதலான இடங்கள் தட்பமிகுந்து உயிர் வாழ்வதற்கு அரிதாய் மாறினமையால் ஆண்டுறைந்த ஆரியர் தென்றிசை நோக்கிப் பன்முகமாய்ப் பரந்து போந்தும் தெற்கிலுள்ள இலெமுரியா என்னும் நிலப்பரப்பு வெள்ளங் கொண்டழிதலின் ஆண்டிருந்தோர் வடதிசை நோக்கிப் பன்முகமாய்ச் சென்றும் ஒருவரோடொருவர் விராய் ஒருவர் மொழியை யொருவர் கற்று ஒருவர் ஒழுக்கத்தை யொருவர் தழீஇ ஒருவரையொருவர் வெற்றிகண்டு ஒருவர் ஒருவரை யாண்டு இவ்வாறெல்லாம் ஒன்றுபட்டு வேறு பிரித்துக் காணப்படா நீர்மையராயினாரென்பதாம். இங்ஙனம் இவ்விருவேறு மக்கட் பகுதிகளும் ஒருங்கு கூடி ஒன்றாய்ச் சமைதலின், மக்கட் பகுதிகளும் ஒருங்குகூடி ஒன்றாய்ச் சமைதலின், தாமரை : மீன்: அடவி : நீர்: தீ: காலம் : உலகம் : மணி : முத்து : மென்மை : கருமை : திண்மை : வன்மை : வெண்மை: பசுமை: கருமை: தண்மை: கவான்: ஊன்: அவை: அந்தி: சுண்ணம்: வண்ணம்: பீழை: விழி: பகு : சுடு: கட்டு: தள்: மிகு: சால்: பற முதலிய செந்தமிழ்ச் சொற்கள் வடமொழியினும், சூரியன் : சந்திரன்: அமிழ்தம்: காரணம்: எந்திரம்: சீக்கிரம்: குங்குமம்: சமுத்திரம்: கருமம்: அற்புதம்: பசு: விரோதி: தேவர் முதலிய வடசொற்கள் செந்தமிழினும் கலந்து வழங்குவனவாயின. இனி, இந்து மகா சமுத்திரம் எனப் பெயரிய மாகடல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரு நிலப்பரப்பா யிருந்ததென்று நீவிர் ஓதியது பெரிதும் வியக்கத்தக்க தொன்றுகாண், ஆயினும், அதனை ஆங்கில நூல் வல்லார் கூறுமாறு பற்றி நீவிரும் எடுத்துக் கொண்டுரைத்தலின் மற்றது எம்மனோரால் தேறப்படு தகையதன்றாம், என்னை? தமிழ் நூலிலிருந்து காரண மெடுத்துக் காட்டி நிறுவாமையான் என்னும் எமக்குறுதி பயத்தற் பொருட்டுத் தமிழ்நூன் முகத்தானும் அதனைச் சிறிது விளக்கிக் காட்டுதும். தமிழில் மிகப் பழங்காப்பியமென அறிவுடையோர் பலரும் ஒத்தெடுத்த சிலப்பதிகார த்திற் கிளக்கப்படுவனயாவும் உண்மைப் பொருள்களா மென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. அதில் ஆசிரியர் - இளங்கோவடிகள் வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள என்றார்; இனி வேனிற் காதையில் நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும் என்புழி உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்குங் குமரியென்னும் ஆற்றிற்குமிடையே *எழுநூற்றுக்காவதவாறும் இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும் ஏழ் மதுரை நாடும் ஏழ் முன்பாலை நாடும் ஏழ் பின் பாலை நாடும் ஏழ் குன்றநாடும் ஏழ்குணகாரை நாடும் ஏழ் குறும்பனை நாடு மென்னும் இந்த நாற்பத் தொன்பது நாடும் குமரி கொல்ல முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல்கொண் டொழிதலாற் குமரிப் பௌவ மென்றார்என்று கூறினார். *இதனால், எழுநூற்றுக் காவதம் அகன்று கிடந்த நாற்பத்தொன்பது நாடுகள் கடல் கொள்ளப்பட்டன வென்பது புலனாம். இந்நாள் அளவைப்படி ஒரு காவத மென்பது பத்து மைலாக எழுநூறு காவதமும் ஏழாயிர மைலெல்லையளவாம். இந்து மகாசமுத்திரம் இப்போது ஆங்கில நூல்வல்லார் அளந்தறிந்த வாற்றான் இரு நூற்றைம்பது இலட்சஞ் சதுர மைலுடைய தென்பதியாரு மறிவர். இதனாலது சிறிதெறக்குறைய ஐம்பது இலட்சம் மைல் நீளமும் ஐம்பது இலட்சம் மைல் அகலமுடைய தென்பது. ஏழாயிர மைல் நிலனாயிருந்து கடல் கொள்ளப் பட்டதென்பது இப்போதுள்ள மோரீசு தீவுக்குத் தெற்கேயுள்ள கெர்கியூலன் என்னுந் தீவுக்கு மிடையிலுள்ள நீளமும் அவ்வளவினதேயாம். ஆகவே நீளத்தில் இப்போ துள்ள குமரிமுனையிலிருந்து கெர்கியூலன் என்னுந் தீவுக்குத் தெற்கிலுள்ளவரையிலும் அகலத்தில் அடகாசிகர் தீவுமுதற் சுமத்திரா, சாவா முதலிய தீவுகளை யுள்ளடக்கிய சந்தாதி தீவகளளவும் நீண்டு விரிந்து கிடந்த குமரிநாடு (இலெமுரியா) கடல்கொண்டொழிந்ததென்க. 7. தமிழ்விடுதூது முகவுரை தமிழ் விடு தூது என்னும் இந்நூல் இதன் ஆக்கி யோரால் திருவாளர் இரத்தினம் பிள்ளை யென்னும் வள்ளல் தமக்காற்றிய நன்றி பலவும் பாராட்டுதல் காரணமாய்த் தமிழ் நலம் துலங்க இயற்றப்பட்டது. செந்தமிழ் வன்மையிற் சிறந்து விளங்கிய கல்விமான்கள் பலரையும் போற்றி உதவி செய்த தமிழ் விழைவுப் பேராண்மைபற்றித் தமிழ்த் தெய்வத்தையே அவ்வள்ளல்பாற் றூதுவிடுத்தற்கு அமர்ந்தனர் இதன் ஆக்கியோர்; இஃது அவர் இந்நூற் காரணப்பெயர் உரைக் குறிப்பின் கண் உரைக்குமாற்றால் நன்கறியப்படும். இனி இந் நூலின்கண் இதன் ஆக்கியோர் செந்தமிழ் இயல்நுட்பந் தொகுத்த தொல்காப்பியப் பேரிலக்கண வரம்பு வழாதும் செந்தமிழ் ஆக்கஞ் சிதையாது விளங்கிய சந்தச் சங்க விழுமிய இலக்கிய மரபு பிழையாதும் சொல்நுட்பம் பொருள்நுட்பம் நனிதுலங்க இயல் இசை நாடகத்தமிழ் விரிவாய் எடுத்துக் கூறியன பல. இதனைக் கற்கு மாணாக்கர் இதன் முதற்பாகப் பொருட்டொடர்பு இனிதறிந்து கோடற்பொருட்டு, அதனை வகுத்துக் காட்டி ஈண்டு ஒரு சிறிது சுருங்க விளக்குவாம். இந் நேரிசைக் கலிவெண்பாவின் முதற்பதினாறு வரி களில் நாமகளை விளித்து முன்னிலைப்படுத்தி, மேல் முப்பத்திரண்டு வரிகாறும் அவள் உருவங் கற்பிக்கப் படுகின்றது. செழுமிய தமிழ்மொழியே நாமகள் தலையாம்; அம் முகத்து இருவிழிகளே எண்ணும் எழுத்துமாம்; இரு செவிகள் கந்தருவப் பாட்டும் தமிழ்ப் பாட்டுமாம்; அணிநா தமிழ்ச் சொல்லேயாம்; முகிழ் நாசி தருக்கநூற் பயனேயாம்; மற்றை யுறுப்புகள் மற்றைத் திசையில் வழங்கும் மொழிகளேயாம். இனி 33ஆவது வரிமுதல் நாமகளாம் ஞான முதல்வியின் றிருமேனிப் பொலிவினை எடுத்து விரிக்கின்றுழி, அஃது இயற்கை, செயற்கை, கற்பனை என்னும் முத்திறப்பட்டு விளங்கு மென்றார். எனவே, அந் நாமகளோடு மிக ஒற்றுமையுற்றுக் கிடக்குங் காரண. உடலாம் இயற்கைத் திருமேனியும் அதன்மேல் உறையாய்ப் பொதிந்து அதனால் நடைபெறும் பெற்றித்தான நுண்ணுடலாகும் செயற்கைத் திருமேனியும், அந் நுண்ணுடலின் கவிப்பாய் அதன் நிகழ்ச்சிகளைக் கசிந்துருகும் அன்பர்க்கு எளிது புலப்படுத்தும் பருவுடலாம் கற்பனைத் திருமேனியும் ஈண்டுக் கூறியவறாயிற்று, இவை மூன்றனுள் நாமகட்கு இயற்கைத் திருமேனியாதற்குரிய கிழமை பெரிதுடையது தமிழ்மொழியொன்றேயா மென்றார். என்னை? படைப்புநாட் டொடங்கி மக்கள் இயற்கையான் வழங்கத் தோற்றமுற்றெழுந்து, ஏனைப் பண்டை மொழிகளெல்லாம் வழக்கு வீழ்ந்து இறந்தொழியத் தான் என்றும் ஓரியல்பினதாய்க் கன்னித் தமிழ் என்னும் பெயர் பூண்டு நடைபெறுதலின் என்க. பண்டை மொழிகளான இலத்தீன், கிரீக்கு, ஆரியம் முத லாயின இறந்துபடவும், அவற்றிற்கும் முற்பட்டுத் தோன்றிய தமிழ் சிறிதும் வடுப்படுதலின்றி இன்றுகாறும் நடைபெறல் அஃது இலேசிலே கூறப்படுதற்குரிய ஓசைமைதியும், பிற நலங்களும் பொருந்தப் பெற்றமையினாலேயாம். இதுபற்றி யன்றே தாமியற்றிய மனோன்மணீய நாடகக் காப்பியத் தமிழ்த் தெய்வ வணக்கத்தில் தத்துவநூற் பண்டிதர், சுந்தரம் பிள்ளையவர்கள், பல்லுலகும் பலவுயிரும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோற் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாநின் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே என்று நன்கெடுத்துக் கூறினார். இன்னும் தமிழ் ஒன்றே எல்லா மொழிகளினும் ஓசைநலமும் முதல் தோற்றமு முடைத்தென்பது எமது ஞானசாகரப் பத்திரிகையின் முதற்பதுமத்தில் தமிழ் வடமொழியின்று பிறந்ததாமா? தமிழ் மிகப் பழைய மொழியாமென்பது என்னும் உரைகளில் மிகவிரித்து விளக்கினாம். அவையெல்லாம் ஈண்டு எடுத்துக் காட்டலுறின் இம் முகவுரை மிக விரியுமென வஞ்சி விடுத்தாம். இது நிற்க, இனி நாமகட்கு நுட்பச் செயற்கையுடலாவது இது வென்று 45ஆவது வரிமுதல் விளக்குவான் புகுந்தனர். தமிழ் மொழியின் திரிபாய் அவ்வந் நாடுகளிலிருந்தோர் தமக்கு இசைந்தவாறு இயற்றிக் கொண்ட குடகம், தெலுங்கம், கன்னடம், துளுவம் என்னும் செயற்கை மொழிகளே அவ்வம்மையின் செயற்கையுடம்பாம். இம் மொழிகளில் தமிழ்ச் சொற்களும் வடசொற்களும் ஒருங்கு விரவிக் கிடத்தல் கண்கூடா யறியப் படுதலின், இவை தம்மைத் தமிழ்த் திரிபெனவுரைத்தல் பொருந்தாதாம் பிற வெனின்; - அற்றன்று, ஒன்று மற்றொன்றனோடு இனமுடைத்தாதல் அவையிரண்டன் பொதுமைக் குணத்தாற் றெளியப்படுமென்பர் தருக்க நூலாருமாகலின் இம்மொழி களின் முதல் தோற்றச் சொற்களைத் தமிழோடும் ஆரியத் தோடும் புடைபட வைத்து ஆராய்ந்துணர வல்லார்க்கு அவை தமிழ் முதல்தோற்றச் சொற்களோடு இயைபு மிகவுடைய வாதலும் ஆரிய முதல் தோற்றச் சொற்களோடு இயைபு சிறிது முடையவாகாமையும் இனிதறியக் கிடக்குமாதலான் அவை தமிழ்த் திரிபென்றல் பொருத்தமேயா மென்றுணர்க. அவை தமிழ்த் திரிபாயவாறு யாங்ஙன மெனிற் கூறுதும். பண்டைக் காலத்தில் ஓரிடத்திருந்து ஏனையோரிடத்திற்குச் சேறல் இக்காலத்திற்போல எளிதன்று. அது பற்றி அவ்வந் நாடுகளிலுறைந்தோர் தத்தம் ஒழுகலாற்றிற்கு இசைந்த நெறியால் சொற்கூறுதலும் சொல்லைத் திரித்து வழங்கு தலுஞ் செய்து போதருவர்; இவர்இங்ஙனந் திரித்து வழங்கு மாறு அறியாத மற்றை நாட்டிலுள்ளார் தாமுந் தம்மியற்கை யால் அங்ஙனமே வழங்கப் பல நூற்றாண்டுகள் கழிதலும் அவ்விருவேறு நாட்டு வழக்கும் மாறுபடுவ வாயின. நாடு மிக விலகியிருக்குமேல் ஆண்டு நடைபெறும் மொழி வழக்கும் மிக வேறுபட்டுக் கிடக்கும்; நெருங்கி யிருக்குமேல் அவ்வேறுபாடு அருகுமென்றுணர்க. நீராவிப்பொறி உதவி பெற்று நாட்டுப் பயணம் எளிது முடியும் இஞ்ஞான்றும் நாட்டு வழக்கு ஒன்றோடொன்று முரண்படுதல் காண்க. இவ் விரிவெல்லாம் ஞானசாகரத்தில் விளக்கிப் போந்தாம். ஆண்டுக் கண்டுகொள்க. இனி அவட்குக் கற்பனைப்பருவுடலானது இயற்கை மொழியான தமிழினும் செயற்கை மொழிகளான குடகந் தெலுங்கம் முதலியவற்றினும் பல சொற்கள் பொறுக்கிக் கசடதப முதலான மெய்யெழுத்துக்களை எடுத்தும் படுத்தும் நலிந்தும் வேறுபடவைத்துப் பல நாட்டினரும் ஒருங்கு சேர்ந்து ஒரு மொழியா யியற்றிய பாலி மொழியாமென்பது. இது பெரும்பாலும் புத்தசமயம் மிக விரிந்து பரந்த ஞான்று, அச் சமயத்தைப் பின் பற்றியோர் பல்நாட்டினரும் அச் சமய ஒழுக்கநெறிப் பொருள் திரிபின்றி உணர்ந்து கோடற் பொருட்டு அச்சமயப் பற்றுடையவர்களாய் விளங்கிய பௌத்த மன்னர்கள் தோற்றுவித்து வழங்கியதான்றாம், கோசலநாடு மிகப் பெரிதாய் வளர்ந்து ஒரு பெருவேந்தன் ஆணைவழி நின்றகாலத்துப் பாலிமொழி மிகப் புகழ் பெற்று வழங்குவதாயிற்றென்றும், அப்போது திருத்தமான வடமொழி தோன்றி நடைபெறவில்லை யென்றும், இவை முற்றும் நன்காராய்ந்த பாலிமொழிப் பண்டிதர் இரை° டேவிட்° இனிது நிறீஇ வரைந்த அரிய வரலாற்று வரையும் இவ் வுண்மையினை வலியுறுத்துமாறு கடைப்பிடிக்க.*மற்று இப் பாலிமொழியும், தமிழ் குடகம் முதலான மொழித்துணையாற் கட்டப்பட்டுத் தோன்றி நடைபெறலாயிற் றென்னும் உண்மையும் அப்பண்டிதர் நன்கு விளக்கிக் காட்டினார். இந் நுட்பங்களெல்லாம் இந் நூலின்கண் இதன் ஆக்கியோர் முன்னரே ஆராய்ந்து கூறிய அறிவுவன்மை மிகவும் வியக்கற் பாலதேயாம். புத்தசமய வளர்ச்சியே இம்மொழியின் தோற்றத்திற்கு ஒரு பெருங்காரணமாயிற்றென்று ஆக்கியோர், ஆதியிலே போதி யடியிருந்த வாமனார் நீதி நெறியருளின் நின்றளிக்க- மேதினியில் எங்கும் பரந்தெண் ணிடவே றிடனின்றித் தங்கும் பலமொழிமாந் தர்தொடர்ந்தே-துங்க உலகமூ லம்மொழியென் றொன்றும் பொருளா லிலகுமொழி பாலியா மென்பர் என்று உரைக்குமாறு நினைவுகூரற்பாலதாம். இனி 81ஆவது வரிக்குமேல் இப்பாலிமொழியினின்றும் பல மொழிகள் எழுந்தனவென்றுரைத்து, அங்ஙனமெழுந்த பலவற்றுள்ளும் வடமொழி கலைமகளுக்கு மேகலைபோல்வதாமென்று புனைந்திடுகின்றார். நான்மறை வழங்கும் ஆரியமொழியும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் னெழுந்த சமக்கிருத மொழியும் தம்முள் வேறுபாடு மிக வுடையனவாம். பின்னெழுந்த சமக்கிருதமொழி எல்லா வமைதிகளும் பொருந்தத் திருத்தப்பட்டு நூல்வழக்காய் மட்டும் நடைபெறுவது. இதற்கு முன்னையதான ஆரியமொழி வேறுபட்ட இலக்கணமுடைத்தாய், ஆரியர் வடமேற்கு நாடுகளிலிருந்து சிந்துநதிக் கரையிற் குடியேறியகாறும் சொல்வழக்காய் நடைபெற்றுப் பிற்றைஞான்று இறந் தொழிந்தது. ஆரியமொழி இந்தியநாட்டிற் புகுதன் முன்னரே தமிழரும் கொலேரியரும் இருந்தனர். புத்தசமயம் விரிந்த பொழுது தமிழினும் பிறவற்றினும் இருந்து பாலிமொழி தோன்றியது. பின் புத்தசமய மொடுங்கி ஆருகதம் தலையெடுத்து விளங்கியஞான்று. ஆருகதர் தஞ்சமயத்திற்குச் சிறப்புரிமையாக ஒரு மொழி இயற்றுவான் புகுந்து, தமிழ் குடகந் தெலுங்கம் முதலியவற்றினும் ஆரியம் பாலியினும் சொற் பொருணயங்கள் பகுத்தெடுத்துப் பின் றாமுஞ் சிலகூட்டி இங்ஙனந் திருத்தியதென்னும் பெயர்க்காரணம் பொள்ளெனப் புலப்படுதல் வேண்டிச் சமக்கிருதம் எனப் பெயரும் அமைத்து ஒரு மொழிகட்டிவிட்டார். இவ் வுண்மை ஆருகதர் தஞ் சமயச் சார்பான நூல்கள் பலவும் மொழிச் சார்பான நிகண்டு முதலாயினவும் சமக்கிருதத்திற் பெருகச் செய்தமையானே நன்றுணரப்படும். இன்னும் அவ்வாருகதர் தமிழ்மொழியைப் போலவே வடமொழியும் மடவிய வெள்ளைக்கிழத்திக்கொரு கண்ணென்று பலரும் பாராட்டுதற் பொருட்டுப் பண்ணும் பஞ்சாதியும் பாட்டும் நிறுத்தமு மாகப் பலப் பல நூலியற்றினார். அது நிற்க. இனி 114ஆவது வரிமுதல் வடமொழியிலுள்ள நூற்றொகை மிகுதி காட்டி, அவ்வாற்றால் அது தமிழோடு ஒப்புமை பெறல் சாலாதென்று வலியுறுக்கின்றார். என்னை? வடமொழி யிலுள்ள அந்நூல்களுள் ஒரோவொன்று தவிர, ஏனைப் பெரும்பாலனவெல்லாம் முன் சொன்ன பொருளையே பின்னும் விரித்தலும், அறிவினுட்பத்திற்குப் பொருந்தாத போலிப் பொய்க்கதைகளை வரம்பின்றிப் பெருக்குதலும்,உலகவொழுக்கத்திற் புல்லியவாய்க் கருதப்படும் புன்செயல்களையெல்லாம் செய விதித்தலும், இரக்கம் சிறிதுமின்றிக் கணக்கற்ற உயிர்களைக் கொலை செய்து வேள்விகள் வேட்கவென வகுத்தலும், கள்ளுண்டல், மகளிரை மிகவிழைந்து கெடுத்தல், சூதாடல், புலாலுண்ணல், மிக்க இணைவிழைச்சு முதலிய பொருந்தா வொழுகலாற்றினைத் தேவர்கட்கேற்றிக் கூறுதலும், இல்பொருள் இல்குணங்களைமிகப் பெருக்கியுரைத்தலும் செய்து போ தருகின்றனவாகலின், இக் குற்றங்கள் சிறிதுமில்லாத் தமிழ்நூல்களோடு அவை சமம் பெறல் எவ்வாற்றானும் இல்லையாம். இனி 129ஆவது வரி முதற் செந்தமிழ்த் தனி முதன்மை அதன் பழமை கூறுமுகத்தாற் காட்டுகின்றார். பாலிமொழியுங் கீர்வாணமுந் தோற்றமுறுதற்கு மிகப் பழையகாலத்தே குமரிநாடு கடல்கொள்ளப்படுமுன் அந்நாட்டின்கண் ஓடிய பேரியாற்றருகின் மணிமலைச் சாரலிற் செங்கோன் என்னும் மன்னர்மன்னன் அவைக் களத்திலே தமிழ் மிகப் பயிலப் பட்ட திறம் எடுத்து விளக்கப்படுகின்றது. இப்போது இந்து மாகடல் எனப் பெயர் பெறுகின்ற மாகடல் பல்லாயிர ஆண்டுகளின்முன் குமரி நாடாயிருந்த தென்பது வடிவேலெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன் மலை யடுக்கத்துக், குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள என்று இளங்கோவடிகள் கூறுமாற்றானும் வேனிற்காதையில் தொடியோள் பௌவம் என்பதற்கு அடியார்க்கு நல்லார் உரைக்குமுரையானும் இனிது விளங்கும். ஜர்மானிய பண்டிதர் ஹெகிள் என்பவரும் குமரிநாடு முன்னிருந்த வுண்மையினை இனிது நிறுவினார். இவ்வரலாறெல்லாம் யாமீண்டு விரிப்பிற் பெருகும். ஞானபோதினி இதழில் யாமெழுதிய வரலாற்று உரையிற் காண்க. இனி, ஆழி யளவுசெய்து வாணையான்-பாழிப் பெருந்தோள் வழுதி என்றது வடிம்பலம்ப நின்ற பாண்டியனைக் குறிப்பிட்டது. இவன் வரலாறு புறநானூற் றுரையினும் மதுரைக் காஞ்சியினுங் காண்க. அப்பாண்டியன் அமர்ந்த தென் மதுரைதான் கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்பது. இப்போதுள்ள மதுரை நகரன்று, அத் தென்மதுரையிலேதான் அப் பாண்டியன் அவைக்களத்து முதற்சங்கம் நிலைபெறலாயிற்று. அச்சங்கத்து வீற்றிருந்தார் அகத்தியனார், முரஞ்சியூர் முடிநாகராயர் முதற்பலர். இதன் ஆக்கியோர் அவலோகித முனிவனும் அச்சங்கத்து வீற்றிருந்தான் எனக் கூறியது பௌத்த நூல் வழக்குப் பற்றி. பின்னர்த் தென்மதுரை கடல் கொள்ளப் படுதலின், வடமதுரையின்கண் இடைச்சங்கமுங் கடைச் சங்கமும் நிலைபெற்றன வென்கின்றார். இனி 151ஆவது வரியிலிருந்து ஆராய்ச்சிவன்மையிலார் ஒரு சாரார் அறிவு மயங்கி வடமொழியிலிருந்து தமிழ் பிறந்ததெனக் கூறும் கையறியாப் போலிப் பொய்யுரையை மறுத்திடுகின்றார். தமிழ் திராவிடம் பாலி முதலியவற்றினின்றும் பிறந்து, தனக்கென ஓரெழுத்தின்றி வடநாட்டிற் பிராகிருத மொழி எழுத்தினையும், தென்னாட்டிற் றமிழ்க் கிரந்த வெழுத் தினையும் துணை கொண்டு நடைபெறும் சமக்கிருதம் தன்னை யீன்றாளைத் தன்மகளெனக் கூறி இழிவுரைப்பது பொருந்தாதென ஒருதாரணமுகத்தான் விளக்குகின்றார். இனி 169ஆவது வரி முதல் செந்தமிழுக்கு இயற்கையிலே யுள்ள தெய்வச் சிறப்பினை எடுத்துரைத்துக் கொண்டுபோய், ஓவிலா ஓராழிச் செங்கோ லுயர்வொப்பி லாவரசே பேராழி போலும் பெரும்புகழாய்-ஓராமல் உன்செயல்க ளெல்லாம் உரைக்கத் தலைப்பட்டால் என்சிறுமைக் குள்ளே யியையுமோ எனத் தமிழ்மொழிப் பண்டைச் சிறப்பினையும், பிற மொழிக்கு அஃதாக்கம் பயந்தமையினையும் ஒருவாறு நன்கு தொகுத்து அறிவுறுத்தினார். இனிஇப்பகுப்பின்கீழ் வருவனவெல்லாம் தமிழ்மொழியிலுள்ள நூற் பொருள்களை எடுத்துக்காட்டி அவற்றின் விரிவும் பயனும் இனிது விளக்கி மேம்படுத்தலின் அப்பகுதி கற்கும் மாணாக்கர் தாமே யறியற் பாலனவாதல்பற்றி விடுக்கின்றாம். அது நிற்க. இதன் ஆக்கியோர் தமக்கு நட்பின் கெழுதகைமை யிழுக்கா. நண்பர் பலரையும் இத்தூதின் இறுதிப் பாகத்திற் றொகுத்துக் கூறியுள்ளார். அவருள் எமக்காசிரியராள திருமிகு வெ. நாராயணசுவாமி பிள்ளையவர்களின் குன மாட்சி வியந்து கூறிய பகுதி இன்றியமையாப் பொருட் பொலிவுடைய தாகலின் அதனை யீண்டெடுத்துக் காட்டி இம் முகவுரையை முற்றுப் பெறுவிக்கின்றாம். --முந்துவளச் சிந்தாமணி யென்னும் யான்பிறந்தசீர்பதியிற் சிந்தா மணிபோலுஞ் சீர்ச்செல்வன்-நந்தாத அங்கிலே யத்தலைவ ராடற் பெருஞ்சேனைத் துங்கத் தலைமைத் துரைத்தனத்தான்-மங்காத் திருவேங்க டாசலமால் செய்ததவம் மைந்தன் உருவோடு வந்ததென உற்றோன்-மருவுநட்பின் என்னிளமை தொட்டின்றும் என்னுளத்து நீங்காது மன்னுழுவ லன்பன் வளர்செல்வன்-சொன்ன கலைவகைக ளென்னோடு கற்றபுலவன் நிலைநற் குணமலைமேல் நிற்போன்-புலமைமிக்க பொய்யா மொழியான் பொருவேன் நினக்கென்னப் பொய்யா மொழியான் பொறைமிக்கான்-நையாமல் நாகையார் பல்லோரை நற்புலவ ராக்குவித்த நாகையாச் சொல்வளவன் நாகரிகன்-ஓகையாற் பாரா யணவரிய பல்புகழான் நல்லவர்சொல் நாராயணசாமி நாவலவன் 8. 8. சைவசமயத்தின் நெருக்கடியான நிலை சைவசமயமானது இருவேறுவகைப்பட்ட மக்கட் கூட்டத்தின் நடுவே அகப்பட்டுக் கொண்டு, ஒரு கூட்டத்தினர் ஒருபுறத்தும் மற்றொரு கூட்டத்தினர் மற்றொரு புறத்துமாக நெருக்க, அந்நெருக்கடியில் நின்றும் பிழைத்தோட வழிகாணாது நசுங்கி உயிர்துறக்கும் நிலையில் நின்று தத்தளிக்கின்றது. அவ்விருவேறு கூட்டத்தினரில் ஒருபகுதி யார் தம்மைச் சைவர் எனவுந் தாமே சைவசமயத்தின் உண்மையை முற்றும் உணர்ந்து அதனைப் பாதுகாப்பவரெனவுங் கூறிக்கொள்ளுவோர் ஆவர்; மற்றவரோ, இச் சைவக்குழுவினர் கூறுவனவே சைவசமயக்கோட்பாடு களாகுமெனப் பிறழ உணர்ந்து, அக்கோட்பாடுகள் தமிழர் முன்னேற்றத்திற்கு இடந் தராமல் அதற்குக் கேடுபயப்பனவாயிருத்தலால், அவை தம்மை வேரோடு களையக்கடவேமென மடிகட்டி நிற்பவர் ஆவர். இவ்விருவேறு வகுப்பினருஞ் சைவ சமயத்தின் உண்மைகளை ஆராய்ந்து அறிந்தவர் அல்லர்; அவ்வவருந்த தத்தமக்கு வேண்டுவன சிலவற்றைச் சைவநூல்களிலிருந்து பொறுக்கியெடுத்துக் கொண்டு, அவைதாமே சைவம் என்பாரும், அவைதாமே தமிழர் முன்னேற்றத்திற்குத் தடையாவன என்பாருமாய்த் தம்முள் இகலிச் சைவ உண்மைகள் சிறிதும் அறியாப் பொதுமக்களைத் திகைப்புறச் செய்கின்றனர். சைவத்தின் உண்மைகளோ ஒரு பேழையிற் பொதிந்துவைத்த மணிக்கோவைகள் போல் என்றும் மங்காது மிளிரும் மாட்சியுடையன; மற்று, அம்மணிப் பேழைமேற் சேர்ந்து அதனை மூடியிருக்குங் குப்பைக் குவியல்களோ மிகவும் அருவருக்கத்தக்க தாழ்ச்சியுடையன. அடியிற்புதைந்த அம்மணிக் கோவைகளை விட்டு, அவற்றின்மேற் குவிந்த குப்பைகளையே பெரிது பாராட்டிப் பாதுகாப்பார்போற், சைவவுண்மைகளைக் கைவிட்டு, அவற்றை மறைத்து அவற்றின் மேற் குவிந்து கிடக்குஞ் சைவமல்லாக்கோட்பாடுகளையே சைவமென விடாப்பிடியாய்க் கைக்கொண்டு நிற்கும் போலிச்சைவர்களே, சைவசமயத்தை ஆராய்ந்து பாராத பிறர் அதனை இகழ்ந்து ஒழிப்பதற்கு இடஞ் செய்து வருகின்றனர். ஆகவே, சைவ சமயத்திற்குத் தீங்கு இழைப்போரிற் சைவப் பெயர் புனைந்து நிற்கும் போலிச்சைவர்களே முதற் பகைவராவர். மற்றை வகுப்பினரோ சைவசமய உண்மைகளை ஆராயமாட்டாராய்ப் போலிச்சைவர் கோட்பாடுகளையே சைவமென நம்பி இகழ்பவராதலால் அவரது பகைமை அத்துணை மிகுதியாக அஞ்சற்பால தன்று; ஏனென்றால், இவர்கள் சீர்திருத்த நெறியிற் செல்பவர்களாயிருத்தலால், உண்மைச்சைவக்கோட்பாடுகளை உணருங்காலத்து இவர்கள் அவற்றிற்கு மாறாய் நின்ற நிலையைவிட்டு ஒருமையுறுதலுங் கூடும். மற்றுப், போலிச்சைவர்களோ சைவமல்லாதவற்றையே சைவமாக இறுகப்பற்றி எவ்வகைச் சீர்திருத்தத்திற்கும் உடம்பட்டு வாராதவராகலின், அவர் உண்மைச் சைவத் தோடு ஒட்டி வருவரென்பது கனவினுங் கருதற்பாலதன்று. இங்ஙனஞ் சைவசமயக் கோட்பாடுகள் அல்லாதவற்றையே சைவசமயமெனக் கொண்டு ஒழுகும் போலிச்சைவர்களின் ஆரவாரம் மிகுந்திருக்குங்காறும், உண்மைச் சைவந் தலையெடாது; அதனாற், புறச்சமயத்தார் சைவசமயக்கோட் பாடுகள் இவையேயெனப் பிழைபட நினைந்து அவற்றை யும் அவற்றோடு உடன்வைத்து உண்மைச்சைவத்தையும் இகழ்ந்துரைக்கும் இகழ்ச்சியுரைகளுங் கிளையாதிரா. ஆகவே, உண்மைச் சைவக்கோட்பாடு இவையென்பதும், அவையல்லாத போலிச்சைவ கோட்பாடுகள் இவை யென் பதும் இங்கே சிறிது பகுத்துக்காட்டுவாம். சைவசமயம் என்பது தென்றமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கே உரித்தான கடவுட்கொள்கை யாகும். காணவுங் கருதவும்படாத அருவநிலையிலுள்ள முழு முதற்கடவுள், உயர்ந்த அன்பும் அறிவும் உடைய பெரியார் சிலர்க்கு அருள்புரிதல் வேண்டி அவர்தங் காட்சிக்குங் கருத்துக்கும் எளியனாய்ச் சிவந்தஒளி வடிவிற்றோன்றி அவரை ஆண்டு கொண்ட வகைமையிலிருந்து, அத்துணை யணுக்கமாய் வந்த அச்சிவந்த திருவுருவத்தையே தமிழ்ச் சான்றோர் அதற்குச் சிறந்த இலக்கணமாய் வைத்துச் சிவன் என்னும் பெயரால் அவனை வணங்கி வருகின்றனர். தீயும் நீரும் ஒருங்கு இயைந்தாலன்றி இவ்வுலகமும் இவ்வுலகத்து நிகழ்ச்சிகளும் நிலைபெறாவாகலான், தீயின் செந்நிறத்தை ஒப்பதான ஓர் ஆண்வடிவும் நீரின் நீல நிறத்தை ஒப்பதான ஒரு பெண்வடிவும் ஒருங்கு இயைந்த ஓர் அருமைத் திருவுருவமே கடவுளுக்கு உண்மைவடிவாதல் வேண்டுமென்பது பண்டைக்காலந்தொட்டு வந்த தமிழ்ச் சான்றோர் கொள்கை யாகும். சேயொளிவடிவிற் சேயோன் ,சிவன் எனவுங், கருநீலவடிவில் மாயோள், மாயோன் எனவும் முழுமுதற் கடவுள் வழங்கப்பட்டு வரலாயிற்று. பிறப்பு இறப்புக்களுக்கு வித்தான இரு வினையும், அவ்இருவினைக்கு வித்தான அறியாமையும் இறைவன் உடையன் அல்லாமையால், அவன் என்றும் விளங்கிய அறிவினனாயே இருப்பனெனக் கடவு ளுண்மையியல்பையுந் தமிழ்ச்சான்றோர் நன்கறிந்திருந்தனர். இங்ஙனம் அவர்கள் கடவுள் நிலையை நன்குணர்ந்தாற் போலவே, கடவுள் அல்லாத சிற்றுயிர்களின் இயல்பையுந் தெளிய அறிந்து நின்றனர்; சிற்றுயிர்கள் அறிவுடையவாயினும், அவற்றின் அறிவு மாசு பொதிந்திருத்தலால் உடம்புகளின் துணையாலன்றி அது விளங்கப் பெறாமை யும், அவ்வாறு அது விளங்கப்பெறுமிடத்தும் புல் மரம் முதலிய உடல்களில் ஓரறிவும், நத்தை கிளிஞ்சில் முதலிய உடம்புகளில் ஈரறிவும், சிதல் எறும்பு முதலிய உடம்புகளில் மூவறிவும், நண்டு தும்பி முதலிய உடம்புகளில் நாலறிவும், விலங்கு பறவை முதலிய உடம்புகளில் ஐயறிவும், மக்கள் உடம்புகளில் ஆறறிவும் படிப்படியே சிறிது சிறிதாக விளங்கப்பெறுதலும், ஒரு பிறவியிற் கொல்லாமை உனுண்ணாமை பொய்யாமை முதலான நல்வினைசெய்து தன்னறிவையும் அன்பையும் வளரச் செய்த ஓருயிர் மறுபிறவியில் அதனினுஞ் சிறந்த ஒரு பிறவியைப் பெற்று அறிவும் ஆற்றலும் மிக்கு விளங்கப் பெறுதலும், அவ்வாறு எடுத்தபிறவியில் நல்வினையைச் செய்யாத உயிர் அடுத்த பிறவியிற் பின்னும் இழிந்த உடம்பைப் பெறுதலும், பிறவிகடோறும் அறிவையும் அன்பையும் வளரச் செய்த உயிர் இறுதியிற் கடவுளின் அருளை முற்றப்பெற்றுப் பிறவியும் மாசுந் தீர்ந்து கடவுளின் அருளொளியிற் கலந்து பேரின்பத்திலிருத்தலும் ஆகிய அச்சிற்றுயிர் நிகழ்ச்சிகளை யெல்லாம் ஐயந் திரிபற ஆராய்ந்து கண்டனர். இனி, ஆறறிவுடைய மக்கட்பிறவியெடுத்த உயிர்கள் தாம்பெற்ற இவ்அரிய பிறவியிலேயே விரைந்து தூயராய் இறைவன் திருவருளின்பத்தைப் பெறுதற்கு இன்றியமையாது செயற்பாலன; தம் மனமொழி மெய்கள் ஒன்றினொன்று முரணாமல் தமக்கும் பிறர்க்கும் பிறவுயிர்க்கும் நலம் பயப்பனவற்றையே ஒருமுகமாய் நாடி நிற்குமாறு பழகுதலும், துன்பத்திற்கு இடனின்றி இன்பத்தையே ஓவாது தருங் கல்வி கேள்விகளிலுந் தவமுயற்சியிலுந் தமது அறிவை நிலைப் பித்தலும், இறைவன்றன் பேரருட்டிறத்தை நினைந்து நினைந் துருகுதலும் ஆமென்பதூஉந் தமிழ்ப்பேரறிஞர் கண்டறிந்த தாகும். இக்கோட்பாடுகள் முற்றும், இற்றைக்கு ஐயாயிரத்து ஐந்நூற்றாண்டுகட்கு முன்னெழுந்த பண்டைத் தமிழ்ப் பெரும் பனுவலாகிய தொல்காப்பியத்திலிருந்து, அதன்வழி வந்த திருக்குறள், திருவாசகம், திருமந்திரம், தேவாரம், சிவஞான போதம் முதலான தனிச் செந்தமிழ்நூல்களிலெல்லாம் முன்னொடு பின் சிறிதும் மாறின்றிக் காணப்படும். இவ்வுண்மை முடிபுகள் இந்நூல்களின் மட்டுமேயன்றி, இச்செந்தமிழ் நாடெங்கணும் அமைக்கப்பட்ட திருக்கோயில் அமைப்பு களிலும் இனிதுவிளங்குமாறு இயைக்கப்பட்டிருத்தலை ஆழ்ந்த கருத்துடையாரெவரும் எளிதில் உணர்வர். இவ் வுண்மைகளை எளிதில் உணர்தற்கும், நினைவை ஒருமுகமாய் நிறுத்தி இறைவன் திருவுருவினை எளிதில் நினைந்து உருகு தற்குந் திருக்கோயில் வழிபாடு பெரிதும் உதவிசெய்தலின், கடவுளை நேரே கண்டவர்களும் அதனைக் கைந்நெகிழவிடாது கடவுள் வணக்கத்திற்கு அதனை இன்றியமையாக் கருவியாய்க் கடைப்பிடித்துக் கொண்டு ஒழுகலாயினர். எனவே, திருக்கோயிலிற் சென்று இறைவன்றிருவுருவிற்கு அடையாள மாக நிறுத்திய அருட்குறியினை வணங்குதலும் வாழ்த்துதலுஞ் சைவசமயக் கோட்பாடுகளுள் ஒன்றாதல் பெறப்படும். இவ்வளவே சைவசமயக் கோட்பாடுகளாகும். இவற்றைக் கைக் கொண்டொழுகுவோர் எவராயினும் அவரெல்லாஞ் சைவசமயத்தவரெனவே படுவர். இக்கொள்கைகள் அத்தனையும் ஆழ்ந்து ஆராய்ந்த அறிவின் நுட்பத்தாற் கண்டு அமைக்கப்பட்டனவாதலால், இக் கொள்கைகட்கு மாறாவன எவையும் சைவசமயத்திற்கு உடம்பாடாகமாட்டா. அங்ஙனமிருந்தும், இப்போதுள்ள சைவரிற் பெரும்பாலார் தமிழிலுள்ள சைவநூல்களை அவற்றின் கருத்தையொட்டி முன்பின் முரணற ஆராய்ந்து பார்க்கும் அறிவாற்றலின்றி, ஆரியர் கூறும் புரட்டுரைகளிற் சிக்குண்டு, சைவக்கொள்கைகட்கு முழுமாறானவைகளையும் அம்மாறுபாடுகள் நிறைந்த ஆரிய நூல்களையுந் தமது சைவசமயத்துக்குரிய நூல்களாகக் கைக்கொண்டு, அவ்வாரிய நூற்சார்பாற் சைவத்திற்குத் தாமாகவும், தாம் தழுவியவற்றை நம்பிக் குறைகூறும் பிறர்வாயிலாகவும் பெருந்தீது புரிந்து வருகின்றனர். இவ்வாறு போலிச்சைவர்கள் கைக்கொண்ட ஆரியநூற் கொள்கைகள் சைவத்துக்கு மாறாய்த் தீங்கு பயத்தலை ஈண்டு ஒரு சிறிது காட்டுதும். ஆரியர் முழுமுதற் கடவுளுணர்ச்சியும் அருளொழுக் கமும் உடையரல்லர். அவர்கள் பண்டைக் காலத்தில் இவ்விந்திய நாட்டுக்கு வடக்கேயுள்ள பனிநாடுகளில் உண்ணச் சோறும் உடுக்கக் கூறையுங் கிடையாமல் விலங்கினங்களைக் கொன்று தின்றுஞ் சோமப்பூண்டில் வடித்த கள்ளை யுண்டும் அலைந்து திரிந்தவர்கள், தமக்கு வேண்டும் இரைதேடிச் சென்ற இடங்களில் உள்ள மக்களோடு ஓயாமற் போராடி அவர்தம் உணவுப்பண்டங்களையும் பிறவற்றையுங் கொள்ளையடித்தவர்கள். தம் பகைவரிற் சிறையாகப் பிடித்துக் கொணர்ந்த எளிய மக்களையுங் கொலைசெய்து அவர்களின் இறைச்சியைத் தீயில் வதக்கித் தின்றவர்கள், போரில் இறந்து பட்ட தம்மவர் சிலரின் ஆவிகளை இந்திரன், வருணன், அதிதி, பூஷன், இயமன், உஷாக்கள், அசுவினிகள், ரிபுக்கள், பிதிர்க்கள் என்னும் பெயரால் தமக்கு வெற்றியுண்டாகும்பொருட்டு வணங்கி வேண்டி வந்ததுடன், அவற்றிற்கு ஆடு மாடு எருமை குதிரை முதலான விலங்குகளையும் போரிலகப்பட்ட மக்களையும் ஆயிரக்கணக்காய்க் கொலைசெய்து வெறியாட்டு வேள்விகள் எடுத்து மிகக் கொடியராயும் ஒழுகினவர்கள், இவர்கள் தாமெடுத்த வெறியாட்டு வேள்விகளில், மேற்குறித்த பேய் வடிவங்களின் மேற்றமது ஆரிய மொழியிற் பாடிய பூசாரிப் பாட்டுகளே இக்காலத்தில் இருக்கு வேதம் எசுர்வேதம் சாமவேதம் அதர்வவேதம் என வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாரியர்கள் இவ்விந்திய நாட்டின் வடமேற்கெல்லை வழியாய் இதனுட் புகுந்த காலத்தில் இதன் வடநாடுகளில் மிக்க சிறப்புடன் வாழ்ந்த தமிழர்களை முதலில் எதிர்த்துப் பார்த்துப், பிறகு அது தமக்கு வெற்றி தராமையின், அவர்களொடு நட்புக்கொண்டு, அவ்வழியே தமிழ் மக்களைத் தம் வலையுள் அகப்படுத்துவாராயினர். அந்நாளில் தாம் கொணர்ந்த ஆரியச் சிறு தெய்வப் பாட்டுகளைத், தமிழரிற் சிறந்த சான்றோர் உதவி கொண்டு நான்கு தொகுப்பாக்கி, அவை தமக்கு வேதம் என்னும் பெயரையுஞ் சூட்டிவிட்டனர். இங்ஙனந் தமிழ்ச் சான்றோர்கள் ஆரியச் சிறு தெய்வப் பாட்டுகளைத் தொகுத்து நால்வகையாகப் பகுத்த காலத்தில், தமிழ்த் தெய்வமாகிய உருத்திர சிவன் மேல் தாம் இயற்றிய சில செய்யுட்களையும் ஆங்காங்கு உடன் சேர்த்து, அந்நூல்கட்குச் சிறப்புத் தந்தனர். தந்துமென்! ஆரியர்கள் சிறு தெய்வ வணக்கத்தினுங் குடி கொலை சூது முதலிய தீவினைகளினும் மிகப் பழகிவிட்டமையின், தமிழ்ச் சான்றோர் காட்டிய முழுமுதற் கடவுளான சிவபிரான் வணக்கத்தைச் சிறிதும் ஏற்றாரல்லர். இதற்கு, இக்கால ஆரியப் பார்ப்பனர் தம் ஒழுகலாறே சான்றாம்; இவர்கள் எத்தகைய சிறு தெய்வத்தையும் வணங்குவர்; எத்தகைய மதத்தையும் பின்பற்றுவர்; ஆனாற், சிவபிரானை மட்டும் வணங்கார்; சைவவொழுக்கத்தையும் பின்பற்றார். இத்தன்மையரான ஆரிய மக்களின் சிறு தெய்வப் பாட்டுகளும், அவர் தம் வெறியாட்டு வேள்விகளின் ஆரவாரவுரைகளுமே பெரும்பாலும் நிரம்பிய இருக்கு எசுர் சாமம் அதர்வம் முதலியஆரிய நூல்களைச் சிவபெருமான் அருளிச் செய்த வேதங்களாகக் கொண்டு, இப்போலியுரையை அழுத்தமாய் கூறுதலிற் போலிச் சைவர்கள் முனைந்து நிற்கின்றார்கள். இவர் தம் இப்போலியுரையையெடுத்துக் கொண்ட பிறர், கொலை குடி மலிந்த இக் கொடிய ஆரிய நூல்கள் தாம் நும்சைவ வேதங்களோ! இவற்றைச் சொன்ன சிவன்றான் நீர் வணங்கும் முழுமுதற் கடவுளோ! அழகிது! அழகிது என்று ஏளனஞ் செய்கின்றனர். போலிச் சைவர்களால் இங்ஙனம் சைவ சமயத்திற்கு வரும் ஏதங்கண்டு, சைவ சமயாசிரியர்கள் தழுவிக் கூறிய ஆரிய வேதங்களென்பன இருக்கு எசுர் முதலிய இந்நான்கும் அல்ல! தமிழ் வேந்தர்களும் முனிவர்களும் அருள்வழி நின்று ஆரிய மொழியில் அருளிச் செய்த உபநிடதங்கள் சிலவே அவையாம்” என்று யாம் ஆழ்ந்தாராய்ந்து, எம்முடைய பண்டைக்காலத் தமிழர் ஆரியர், வேளாளர் நாகரிகம், சாதி வேற்றுமையும் போலிச்சைவரும், மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூல்களில் விரித்து எழுதியும், அவை தம்மை ஒரு சிறிதும் உணர்ந்துபாராத போலிச் சைவர்கள், ‘இவர் சைவ வரம்பை அழிக்கின்றார்! என்று எம்மேற் சீறிப் பாய்கின் றார்கள். எம்மேற் சீறும் இப்போலிகள், புறச்சமயத்தாரும் புது இயக்கக்காரரும் இவர் தம் பாழ்த்த உரைகொண்டே சைவ சமயத்தை இழித்துப் பேளசுதற்கெல்லாம் வகை சொல்ல மாட்டாமல் வாயடங்கி நிற்றலென்னை? மாணிக்கவாசகர் திருஞான சம்பந்தர் அப்பர் சுந்தரர் முதலான தெய்வ அருளாசிரியர் அருளிச்செய்த தேவார திருவாசகங்களில் ‘வேதம்’, ‘மறை’ என்னுஞ் சொற்களாற் குறிக்கப்படுவனவெல்லாம் இருக்கு, எசுர், சாமம், அதர்வம் என்னும் ஆரிய நூல்களேயாகும் என அலறித்திரியும் போலிச்சைவப் புலவர்கள், ‘குடியும் உயிர்க்கொலையுஞ் சூதுங் காமவெறியுஞ் சிறு தெய்வ வணக்கமும் மலிந்த இவ்வாரிய நூல்களை ஒப்புக் கொண்ட நும் சமயாசிரியர் அக்குடி கொலை முதலான கொடுந்தீய ஒழுக்கங்களை ஒப்புக் கொண்டா ரல்லரோ? எனப் புது இயக்கக்காரர் கேட்குங் கேள்விக்கு விடை சொல்லமாட்டாமற் கலங்கி வீணே அவரை வைது ஒளித்தல் என்னை? தேவார திருவாசக ஒரு தெய்வச் செந்தமிழ் மறைப்பொருள்கட்கும் அவ்வாரியச் சிறு தெய்வ நூற் பொருள்கட்கும் ஒற்றுமையுளவேற் காட்டுக என்று சைவ மெய்ச்சான்றோர்கள் கடாவுங் கடாக்கட்கு விடையிறுக்க மாட்டாத சைவப் போலிகள், பிடிதிருநீறும்படிஉருத் திராக்கமும் அணிந்துகொண்டு, சிறு தெய்வ வெறியாட்டுப் பாட்டுகள் நிறைந்த இருக்கு எசுர் முதலான ஆரிய நூல்களையே சமய குரவர்கள் மறைகள் வேதங்கள் என்றாரெனத் தேவார திருவாசகங்களில் அச்சொற்கள் வந்த தொடர்களைப் பக்கம் பக்கமாக அட்டவணையிட்டுக் காட்டிச், சிவபெருமானை அச்சிறு தெய்வங்களினுஞ் சிறியராக்கிக் கொடுந்தீவினைக்கு ஆளாகுதல் என்னை? பிறப்பு இறப்பு இல்லாத் தனி முதற்கடவுளான சிவத்தை யன்றி வேறெதனையுங் கனவிலும் நினையாத சைவ, சமயாசிரியர்கள், பிறப்பு இறப்புக்களிற் கிடந்துழன்று இழிந்த மக்களுஞ் செய்யாத கொடுந்தீ வினைகளைச் செய்த இந்திரன் முதலான தேவர்களையும் அவர்கள் மேற்பாடப்பட்ட பாட்டுக்களையும், வேதம், மறை எனக் கொண்டாடுவரோவென்று யாங் கடாவினால், அதற்கு விடை சொல்லமாட்டாது பட்டுக் கோட்டைக்கு வழியாது? என்று வினாயினாற்குக் கொட்டைப் பாக்குத் துட்டுக்கு எட்டு என்று விடையிறுத்தாரோ டொப்பச், சமய குரவர்கள் இருக்கு எசுர் முதலியவற்றையே சிவபிரான் திருமொழி என்று அருளிச் செய்தார்கள் எனக் கரையா நிற்கின்றனர். இருக்கு முதலிய ஆரிய நூல்களிற் சிவபிரான்மேற் பாடப்பட்ட பதிகங்கள் எத்தனை? ஏனைச் சிறு தெய்வங்கள்மேற் பாடப்பட்டன எத்தனை? என்று யாம் கடாவினால், அதற்கு விடை சொல்ல அறியாது, சிறு தெய்வங்கள்மேற் பாடப்பட்டனவுஞ் சிவபிரான்மேற் பாடப் பட்டனவேயாம் என்று அங்ஙனமே அவர் பொருந்தாவிடை கூறுகின்றனர். சிறு தெய்வப் பெயர்களெல்லாஞ் சிவபிரான் பெயர் களேயாதல் உண்மையென்றாற்,கேநோபநிடதத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் இயக்க வடிவிற்றோன்றிய சிவபிரானை அறிந்திலரென நுவலப்பட்டதும்,மூவரும் முப்பத்துமூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான் எனவும், நூறுகோடி பிரமர்கள் நொந்தினார், ஆறுகோடி நாராயணர் அங்ஙனே, ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர், ஈறிலாதவன் ஈசன் ஒருவனே எனவும் சைவாசிரியர் தந் திருவாசக தேவாரச் செந்தமிழ்மறையிற் கூறப்பட்டதும் என்னை யென்று யாம் கடாவினால், அதற்கு விடை சொல்ல மாட்டாமல் விழிக்குஞ் சைவப்போலிகள், கற்றறிவில்லாச் சைவர் குழுவிற் சென்று சிவபிரான் அருளிச் செய்த ஆரிய வேதங்களை மறைமலை யடிகள் இகழ்கின்றார் எனக் கரைந்து அவரைத் தம் பொய்யுரையால் மயக்குகின்றனர். இருக்கு முதலான ஆரியச் சிறு தெய்வ நூல்கள் சைவ சமய நூல்களேயாதல் உண்மை யாயின், சைவ சமயத்திற்குச் சிறந்த கொல்லா அறமும், திருநீறு உருத்திராக்கம் முதலான சிவ அடையாளமும், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரமும், உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்னுஞ் சிவமூர்த்தங்களும், சிற்றம்பலம் கூடலால வாய் முதலான சிவபிரான் திருக் கோயில்களும், சுத்தமாயை அசுத்தமாயை, வினை, ஆணவம் என்னும் மும்மல இலக்கணங்களும், சுத்த வித்தை ஈசுரம் சாதாக்கியம் சத்தி சிவம் என்னும் ஐந்து சுத்தமாயா தத்துவங்களும், விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் என்னும் மூவகை ஆருயிர்ப் பாகு பாடுகளும், வைரவன் வீரபத்திரன் விநாயகன் சுப்பிரமணியன் முதலான சிவபிரான் திருப்புதல்வர் பெயர்களும், நீர் வேதம் வேதம் எனக் கூவும் இருக்கு நூலின்கண் ஓர் எட்டுணையுங் காணப்படாமை யென்னை? என்று யாம் கடாவினால், அதற்கு விடைசொல்ல அறியாமற் கலங்குஞ் சைவப் போலிகள் வெறுங் குருட்டுத்தனமாய் அலறிக் கூவும் பொருளில் மொழிகளையே சைவ சமய நூலுணர்ச்சி சிறிதும் இல்லாப் போலிச் சீர்திருத்தக்காரர்களும் சைவ சமயத்தைத் தமக்குத் தோன்றிய வாறெல்லாம் புறம் பழித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார். இனிப் புராணங்கள் என்பன இறைவன்றன் வரம்பி லாற்றலையுந், தன்னை நினைந்துருகும் அடியாரைக்காத்தற்கு அவன் செய்த அருட்டிறங்களையும் உயர்ந்த அறிவு இல்லாப் பொது மக்கட்கு உணர்த்தல் வேண்டி இரக்கமுள்ள சான்றோராற் கட்டிவைக்கப்பட்ட பழைய கதைகளை யுடையனவாகும். இவ்வாறு ஆக்கப்பட்ட கதைகள் பண்டைக் காலத்தில் மிகச் சிலவேயாகும். பிறகு எல்லாம் வல்ல கடவுளை வணங்குதற்குத் தக்க பேரறிவும் பேரன்பும் வாயாதவர்கள் தம்மோடொத்த மக்களைக் கடவுளாகப் பிழைபடக் கருதி, அவர் தம்மைத் தாம் வணங்குதல்போல மற்றைப் பொதுமக்களும் வணங்குமாறு செய்தற் பொருட்டு, முழுமுதற் கடவுளை மக்கள் நிலைக்குத் தாழ்த்தியுந் தாம் வணங்கத்துவங்கிய மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியுங் கடவுள் நிலைக்கு மாறான பல கட்டுக் கதைகளைக் காலங்கடோறும் புதிய புதியவாய் உண்டாக்கி, அவைகளையும் புராணங்கள் என்னும் பெயரால் வழங்கவிட்டனர். ஆகவே, கடவுளின் உண்மை இலக்கணங்களைக் கதைகளின் வாயிலாக விளக்கும் பழைய உண்மைப் புராணங்கள் சிலவாயிருப்பக், கடவுள் நிலைக்கு மாறான கதைகள் மலிந்த புராணங்கள் வரவர மிகப் பெருகலாயின. இறைவன் முப்புரங்களை அழித்த கதையுங், காமனை எரித்து அம்மையை மணந்து உலகிய லொழுக்கத்தை நிலைபெறுத்தின கதையுங், காலனைக் காய்ந்த கதையும், நான்முகன் திருமால் கொண்ட செருக்கை அடக்கின கதையும், அவர் நடுவே அடிமுடியில்லாத் தழற்பிழம்பாய் நீண்டகதையும், எல்லா உலகமும் மடிந்த சுடுகாட்டின் கண் ஆடின கதையும், இறைவன் இல்லையென மறுத்துத் தாருகவன முனிவர் வேட்ட வேள்வியினை அழித்த கதையும், இன்னும் இவைபோல்வன சிலவும் எல்லாம் வல்ல முழு முதற்கடவுளின் உண்மையையும் அருளிரக்கத்தையும் ஏழைமக்கட்கு இனிது விளக்கிக் காட்டுஞ் சிறந்த பழங்கதை களாகும். மற்றுக், கந்தன் கதை, விநாயகன் கதை, காளிகதை, கண்ணன் கதை, இராமன் கதை போல்வன வெல்லாம், முழுமுதற் பழங் கடவுளாகுய சிவத்தை இழித்துத், தாந்தாம் பாராட்டிய மக்களை உயர்த்தல் வேண்டிப் பின்வந்தோர் காலங்கடோறுங் கட்டிவிட்ட புதுப்புதுக் கதைகளேயாகும். இவ்விரு வேறு கதைத் தொகுதிகளில் முற்சொன்னவைகளே இறைவன்றன் அருள் ஆற்றல்களை விளக்குஞ் சிறப்பும் பயனும் உடையன; பிற்சொன்னவைகளோ முழுமுதற் கடவுளாம் அம்மையப்பரை மக்கள் வணங்க வொட்டா மற்றடைசெய்தலுடன், மக்கள் தம்போன்ற மக்களையே வணங்கி, ஒரு குருடனும் அவனுக்கு வழிகாட்டச் சென்ற மற்றொரு குருடனும் ஒருங்கு சேர்ந்து ஒருபெரும் படுகுழியில் வீழ்ந்தாற்போல, அவ்வாறு மக்களை வணங்கும் மக்களெல்லாருந் தீவினைப்படும் பள்ளத்தில் வீழ்ந்தாழுமாறு செய்வனவாகும். ஆகவே, புராணங்கள் என்ற பெயரால் வழங்குங் கதைகளுள் எவை கடவுள் நிலையொடு மாறாகாதன? எவை அதனொடு மாறாவன? என்று பகுத்தாராய்ந்து பார்த்துக், கடவுள் இலக்கணத்தை விளக்குஞ் சிறப்பு வாய்ந்த கதைகளை மட்டுந்தழுவி, ஏனையவைகளைத் தழுவாதொழிதலே, நன்மை தீமைகளைப் பகுத்தறிவும் உணர்ச்சி வாய்ந்த மக்கட்பிறவி யெடுத்தார் செய்தற்குரிய அரிய செயலாகும். ஆனால், தம்மையே சைவநுலுணர்ச்சி உடையராகக்கருதி இறுமாந்தொழுகுஞ் சைவப்போலிகளோ, சிவபிரான் இறைமைத் தன்மைக்கு இழுக்கான புராணகதைகளையும் ஏனைச் சிறந்த உண்மைப் பழங்கதைகளோடு ஒப்ப ஒருங்கு வைத்து, அவை எல்லாவற்றையும் நம்புகின்றவர்களே சைவர்கள் எனக் குருட்டுரை கூறித்திரிகின்றனர். இனிப், போலிச் சீர்திருத்தக்காரர்களோ, இக் குருட்டுச் சைவர்களைப் போலவே, தாமும் உண்மையாவன இவை பொய்யாவன இவையென்று பகுத்துணர்ந்து பாராதவர்கனாய், அவ்விரண்டையும் ஒரே நிலையில் வைத்துப் பழித்துப்பேசி, ஒன்றையும் பற்றாத வெறும் பாழ்ங்கொள்கை யினை எங்கும் பரப்பிப், பொது மக்களைத் தீவினைச் சிறையிற் புகுத்தி வருகின்றனர். இங்ஙனம் போலிச்சைவர்களும் போலிச் சீர்திருத்தக்காரர்களுஞ் சைவசமய உண்மைக்கு ஒவ்வாதவைகளை முறையே குருட்டுப் பிடியாய்ப் பிடித்துங் குருட்டுத்தனமாய் அகற்றியும் வருவனவற்றிற் சில ஈண்டு எடுத்துக் காட்டுதும்:- சைவசமய முதலாசிரியராகிய மாணிக்கவாசகருந் திருமூலரும், மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்ததேவருங் காணாச் சிவபெருமான் என்றும், சிவனொ டொக்குந் தெய்வந் தேடினும் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன் கண்ணுத லானொரு காதலின் நிற்கவும் எண்ணிலி தேவர் இறந்தார் ஏனைப்பலர் மண்ணுறு வார்களும் வானுறு வார்களும் அண்ணல் இவனென்று அறியகில் லாரே என்றும் போந்த அருமைத் திருவுரைகளாற், பிறப்பு இறப்புக்களுட் படுவாரான எல்லார்க்கும் மேலாய்த் தான் பிறப்பு இறப்புக்கள் இன்றியிருந்து, அவ்வெல்லாரையும் அப் பிறப்பு இறப்புக்களுட் படுத்துவதாகிய சிவமே முழுமுதற் கடவுளென்று வரையறுத்து ஓதா நிற்கக், குருட்டுச் சைவர் களோ கந்தன், கணபதி, வீரபத்திரன், பிட்சாடணன், வைரவன், காளி முதலான எண்ணிறந்த பிறதெய்வங்களையும் அவற்றை யுயர்த்துங் கதைகளையும் கட்டிவிட்டு அவை தம்மை யெல்லாம் நம்பலாயினர். இவ்வாறு குருட்டுச் சைவர்கள் கட்டிவிட்ட இத்தெய்வங்களையும் இத் தெய்வங் களைப் பற்றிய அருவருப்பான புராணகதைகளையுஞ் சைவசமயத்துக்கு உரியவைகளாகப் பிழைபடக்கொண்ட போலிச் சீர்திருத்தக்காரர்களோ இவை தம்மை இகழ்வதோடு அமைதி பெறாது இத் தெய்வங்களுக்கும் இப் புராணகதைகளுக்கும் அப்பாற் பட்டதாகிய முழுமுதற் சிவத்தையும் இகழ்வர்; உண்மையாய் நடந்த சிவனடியார் வரலாறுகளைக் கூறும் பெரிய புராணத்தையும் மேற் சொன்ன புராணங்களோடு ஒன்றாக வைத்துப் புறம்பழிப்பர். சாதிப்பித்துத் தலைக்கேறிய போலிச் சைவர்களும் அவரோடொத்தாருங், குடிகெடுக்குத் தமது தீய கோட்பாட்டிற்கு இணங்கச், சமரச சன்மார்க்க மாகிய சைவ வுண்மைகளை திரிபுபடுத்தும் நோக்கமே கொண்டு, ஆலாலசுந்தரர் திருக்கைலையில் மாதரைக்காமுற்றகதையுந், திருஞானசம்பந்தர் சமணரைக் கழுவேற்றிய கதையும், இவை போன்ற வேறு சிலவும் புதியவாய்ப் படைத்துப் பெரியபுராணத்தின்கண் நுழைத்துவிட் டிருப்ப, இவை தம்மைப் பகுத்துணர்ந்து பார்க்கும் அறிவாற்ற லில்லாத போலிச் சீர்திருக்காரர்கள் எல்ல செட்டிலக்க ஏகக்க என்னுந்தொலுங்கர் பழமொழிக்கு இணங்கப், பெரியபுராணம் முற்றும் பொய் என்றால் அது பொய்யாய் விடுமோ? கல்வெட்டுப் பட்டயங்களின் சான்றுகளானும், ஏனைச் செந்தமிழ் நுற் சான்றுகளானும், பெரிய புராணத்து அடியார் வரலாறுகள் துய உண்மை நிகழ்ச்சிகளாதல் அறிவிற்சான்ற பெரியார்களால் துணியப்பட்டு வருகின்றதன்றோ? இனி, வரையறுத்து உணரலாகாத அன்பின் உருவே சிவவுருவாமென்று அவ்அரும்பேருண்மையினை வலியுறுத்திச் சைவசித்தாந்த ஆசிரியரான தெய்வத் திருமூலர், அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே என்றருளிச் செய்திருத்தலின் அம் மெய்மொழியைப் பின்பற்றி அன்புருவே சிவம் என்றும், ஏனைக் கல் செம்பு முதலியவற்றிற் சமைத்த வடிவங்களெல்லாம், எல்லையற்ற அவ் அன்பின் நுண்ணிய நிலையினை உணரும் உணர்வும் வலியில்லாத நம்மனோர் அதனை யுணர்தற்கொரு கருவி யாக வகுத்த அடையாளங்களே யல்லால்அவை தாமே சிவமாகா என்றும், ஆகவே, திருக்கோயிலுள்ளிருக்குந் திருமேனிதன்னைச் சிவனெனவே தேறினர்க்குச் சிவனுறைவ னாங்கே எனக் கூறும் அருளுரை போல்வனவெல்லாந் துலாருந்ததி நயம்பற்றி யெழுந்தனவே யென்றற்குச் சிவமல்லாத அப்பருப்பொருள் வடிவுகளைச் சிவமே யெனத் தெளிந்தார்க்கு என்னும் அவ்வுரையே சான்றாம் என்றும், எல்லா மக்களும் ஒருவர்க்கொருவர் அன்பினால் அளவளாவி ஒருவருக்கொருவர் உதவியாய் நின்று அறிவு செல்வம் ஒழுக்கம் முயற்சி முதலியவைகளாற் கீழ்நின்றாரை மேல் நின்றார் உயர்த்தி மக்களுள் அன்பினையும் ஒற்றுமை யினையும் வளரச் செய்வதுடன் மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களையும் கொலையினின்றுங் காத்து அன்பையும் அருளையும் பெருகச் செய்வதே சிவத்தை வழிபடுவார்க்கு இன்றியமையாத கடமையா மென்றும் உண்மையான் உணர்ந்து ஒழுகுதல் உண்மைச் சைவர்க்கு அடையாளங்க ளாகும். மற்றுப், போலிச் சைவர்களோ இவ்வுண்மைகளை நன்குணராதாராய்த் திருக்கோயிலில் மக்களாற் செய்து வைக்கப்பட்டுள்ள கல்வடிவு செம்பு வடிவுகளைக் கடவுளினும் மேலாகக் கருதி, அவை தமக்குந் தம்மினுஞ் சிறந்தாராய்த் தம்மாற் கருதப்படும் பார்ப்பனர்க்குமே உரியவென்றும், அவற்றை யுட்சென்று வணங்குதல் தமக்குந் தம்மோடொத்தார்க்கு மன்றி ஏனையோரிற் கடவுள்பால் எத்துணை அன்புடையார்க்கும் ஆகாதென்றும், ஒழுக்கத் தால் உயர்குணத்தாற் கல்வியால் விழுமியவினையால் அன்பால் அருளாற் சிவநேயத்தால் எத்துணை யுயர்ந்தாரா யினும் அவரெல்லாந் தம்மைத் தாமாகவே தமது சிற்றறிவு முனைப்பாற் பிறப்பளவில் உயர்ந்தாராகச் சொல்லிக் கொள்வார்க்குத் தாழ்ந்தாராவரே யன்றி அவரோடு ஒத்தவராகாரென்றுங்கரைந்து, அன்புருவாஞ் சிவத்தின் நிலையைக் குறைப்பதுடன், அச் சிவத்தின் அருளாற் படைக்கப்பட்ட வியத்தகும் உடம்புகளில் உலவுவாரான தம்மோடொத்த மக்களையுந் தம்மினுங்கீழாகவுந் தம்போன்ற சிற்றறிவு வாய்ந்த தச்சர்களால் ஆக்கப்பட்ட கல்வடிவு செம்பு வடிவுகளினுங் கீழாகவும் இகழ்ந்து, அவர் தம்மோடு ஒருங்கு அளவளாவுதலும் அவர்தம்மைத் திருக்கோயில்களுள் வணங்க விடுதலுஞ் செய்யோமென்று கலாம் விளைத்து வருகின்றனர்! ஐயகோ! இவர்தந் தீச்செயல் அன்பையும் அருளையும் இரக்கத்தையுந் தனக்கு உயிராய்க் கொண்ட சைவசமயத்திற்கு எவ்வளவு மாறானதாயிருக்கின்றது! அதன் மங்காப்பெருமையினை எவ்வளவு மங்க வைப்பதாயிருக் கின்றது! அன்பும் அருளும் இல்லாத அவர்கள், அவ்விரண்டனையுந் தனக்கு இருகண்களாய்க் கொண்ட சைவசமயத்திற்கு உண்மையில் உரிய சைவ ராதல் யாங்ஙனம்? எவரேனுந் தாமாக இலாடத் துற்ற திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி, உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம் நினைந்து என்று சைவசமயாசிரியராகிய திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்திருக்க, அம் மெய்யுரைக்கு மாறாகச் சிவவேடத்தை இகழ்ந்து சாதியை உயர்த்துப்பேசுங் குருட்டுக் குறும்பர்கள் ஒருகாலும் உண்மைச் சைவராதல் இல்லை யென்க. இவ்வாறு சைவவுண்மைக்கு முழுமாறாய்ச் சாதி யுயர்வினைக் கூறித் திரிவாராற் சைவசமயமும் அதற்கு உண்மையில் உரிய சான்றோர்களும் ஒருபுறம் நெருக்கப்படுதல்போலவே, சைவவுண்மையினைப் பகுத்துணர்ந்து பார்க்கமாட்டாத போலிச் சீர்திருத்தக்காரராலும் அது பெரிது நெருக்கப்படுதலைச் சிறிதுகாட்டுவாம். இறைவன் அன்புருவாய் நிற்றல்பற்றிச் சிவன் எனப் பட்டான். இதனை அவர்கள் எடுத்துக்கொண்டு அன்புதான் கடவுளாகு மன்றி, அன்பின்வேறாய்க் கடவுள் என்று ஒருபொருள் இல்லையெனத் திரிபுரை நிகழ்த்துகின்றனர். மற்று, அன்பு என்பதே ஒரு குணம். குணம் எல்லாம் ஒரு பொருளைப் பற்றி நிற்குமே யன்றித் தனித்து நில்லாது. அன்புடையார் இருவரைக் கண்டால் அவர் தமக்குள் நிகழும் நெகிழ்ந்த நிகழ்ச்சியின் அடையாளங்களால் அன்பு இத்தகையது என்ற உணர்கின்றோம். இவ்வாற்றானன்றி அன்பைத் தனிப்படவைத்துணர்ந்தவர்கள் யாண்டுமே இல்லை. இங்ஙனமே, நன்மை என்பதும், அழகு என்பதும், அறிவு என்பதும் அக் குணங்களை யுடையார்பால் வைத்தறியக் கிடக்கின்றவேயல்லாமல்; அவரின் வேறாக அவை தனித்து அறியக்கிடத்தல் யாண்டுமே யில்லை. இங்ஙனமே, வண்ணம், வடிவு, அளவு, சுவை என்னும் நாற்பெரும் பகுப்பில் வந்தடங்கும் எல்லாக் குணங்களுந் தாந்தாம் பற்றி நிற்கும் பொருள்களின் வாயிலாகவே புலனாவதல்லது,அவற்றின் வேறாகநின்று புலனாவனஅல்ல. ஆகவே, அன்பு என்னுந் தனிப்பெரு மென்குணமானது இறைவன்பாற் புலனாதல்போல அவனின் வேறாய்நின்று ஒருவாற்றானும் புலனாதல் இல்லையென் றுணர்க. அற்றன்று, அன்பு என்னும் அம்மென்குணம், மக்கள் ஒருவரோடொருவர்அளவளாய் ஒருமித்து ஒழுகுதற்கண் விளங்கித் தோன்றலால், அங்ஙனம் அவர் ஒருமித்து வாழும் அன்புவாழ்க்கையே கடவுள் எனப்படும், இதனின் வேறாய்க் கடவுள் ஒன்று உண்டெனக் கோடல் மிகையாமாலெனிற், கூறுதும். மக்கள் பெரும்பாலும் ஒருவரோடொருவர் அன்புபூண்டொழுகுவது, அதனால் அவர் தாந்தாம் பெறும் நலங்குறித்தேயாம். தமது நலத்திற்கு இடையூறு நேருங்கால், அவ் விடையூறுசெய்வார்பால் அன்பின்றிப் பகைகொண்டு அவர்க்குத்தீங்கிழைத்தலில் எத்தகையோரும் முன்னணியில் முனைந்து நிற்கின்றனர். தமக்குத் தீங்கு செய்வார்க்குத்தாமுந் தீங்கு செய்யாமல், அவரோடு உண்மையாக உறவுகொண்டு நிற்பார் எவருமே யில்லை. தீங்கு செய்வார்க்கும் நன்மையே செய்தல் வேண்டுமென்று உள்ளக் கிளர்ச்சியோடு உரக்கத்திறமாய்ப் பேசுவோரே, தாம் பிறர்க்குச் சொன்னபடி தாமே நடந்துகாட்டாமல், தம்மைச் சிறிது குறைகூறி னார்க்கும் பெருந்தீங்கியற்றப்புகுவாரானால், மற்றையோரைப்பற்றிக் கேட்பானேன்! தமக்கு இன்னா செய்தார்க்குந் தாம் இனியவே செய்வார் இந்நிலவுலகத்தில் எங்கேனும் உளராயின் அவரைத் தெய்வமாகவே கருதல் வேண்டுமல்லால், அன்னாரை மக்களுள் ஒருவராகக் கருதல் இழுக்காகும். ஏனென்றால், மக்கள் இயற்கையானது எங்கே உள்நுழைந்துபார்த்தாலுந் தமது நலத்திற்கு இடையூறு புரிவாரையுந், தமக்கு இன்னாசெய்வாரையும் பாய்ந்துகொல்லும் நிலையிற்பதுங்கி நிற்றலையே காண்கின்றாம், இவ்வியற்கையினையுடைய மக்கள் ஒருவர்பால் ஒருவர் வைத்தொழுகும் அன்பும் அன்பென்று சொல்லுதற்கு ஏற்றதாமா! இன்று நண்பராயிருந்தவர் நாளைப் பகைவராகின்றார்; நேற்று பகைவராயிருந்தவர் இன்று நண்ப ராகின்றார்; இங்ஙனம் ஒரு நிலையின்றி மாறி மாறிச்செல்லும் மக்கள் வாழ்க்கையில், எல்லாரும் அன்பால் ஒருமித்து வாழ்தல் ஒரு சிறிதுங் காணப்படாமையின், மக்கள் தம்முள் ஒருவர்பால் ஒருவர் அன்புவைத் தொழுகுதலே அமையும்; வேறு கடவுளென்று காணப் படாத ஒன்றைநம்பி அதன்பால் அன்புபூண்டொழுகுதல் எற்றுக்கு? என்று வினாவுதல் மக்களியல்பும் மக்கள் வாழ்க்கையினியல்பும் பகுத்துணர்ந்து பார்க்கமாட்டா மழுங்கிய அறிவினார்க்கேதகும். அற்றன்று, மக்கள் தம்முள் அன்புடையராய் ஒழுகுதல் காணப்படாவிடினும், நாம் மக்கள் எல்லாரிடத்தும் அன்புபூண்டு ஒழுகுதலே செய்வமாயின், அவ்வொழுக்கமே கடவுள் நிலையாம்; இதனின் வேறாகக் கடவுள் என ஒன்றை வைத்து வணங்குதல் வேண்டப்படாதெனின்; நன்றுசொன் னாய். எல்லாரிடத்தும் அன்புபூண்டு ஒழுகுதல் என்பது யாது? அவரவர் விரும்புவன தந்தும், அவரவர் வேண்டுவன செய்தும், அவரவர்க்குள்ள குறைகளை நீக்கியும் அவரெல்லாரும் மதம் உவக்குமாறு ஒழுகுதலன்றோ? இவ்வாறு எல்லார்க்கும் இனியராய் ஒழுகுதல் நம்மில் எவர்க்கேனும் இயலுமோ என்பதை ஆராய்ந்து பார்மின்கள்! எல்லா ரிடத்தும் அன்புபூண்டு ஒழுகுக என்று வாயினால் வெறும் பேச்சாகப் பேசி விடலாமே யன்றிப், பேசியபடி நடப்பது தான் அரிதாயிருக்கின்றது. ஏனென்றால், மக்கள் ஒவ்வொருவரும் பலவேறு வகைப்பட்ட விருப்பமும், பலவேறு வகைப்பட்ட செய்கையும், பலவேறு வகைப்பட்ட குறைபாடுகளும் உடையராயிருக்கின்றனர்; தெய்வ வழிபாட்டிலுங் கொள்கைகளிலும் பலதிறப்பட்டவர்களாயிருக்கின்றார். யாங்ஙனமெனிற் காட்டுதும். மக்களிற் பலர் கள்ளுண்டு களிப்பதில் விருப்பம் மீதுர்ந்திருக்கின்றார்; பலர் ஆடு மாடு கோழி கொக்கு மீன் முதலான சிற்றுயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை வயிறார உண்பதில் அவா மிகுந்து நிற்கின்றனர்; பலர் வேசிமார் வீடே துறக்கமெனக்கருதி அன்னவர்பாற் பெறும் புணர்ச்சியின்பத்தையே துறக்க இன்பமென விழைந்துழல் கின்றார்; வேறுபலர் சூதாடியோ பொய் சொல்லியோ புரட்டுகள் செய்தோ கைக்கூலிவாங்கியோ அழிவழக்குகள் ஆடியோ பிறர் பொருளைக் கவர்ந்து ஆரவாரமாய்ச் செல்வரென வாழ்வதிற் சிறந்து நிற்கின்றனர். இங்ஙன மெல்லாம் பல திறப்பட்ட விழைவுஞ் செயலுமுடையரா யிருக்கும் மக்கட் டொகுதியினர்பால் நாம் அன்புடையராய் ஒழுகுதல் எப்படி? கள்ளுண்பார்பால் நாம் அன்புபூண்டு ஒழுகல் வேண்டுமாயின், அவர் விருப்பப்படி நாமுங் கள் ளுண்டோ, அல்லது அவர் கட்குடிக்க வேண்டிக் காசு கேட்குங்கா லெல்லாம் அவர்க்குக் காசுகொடுத்தோ அவர் நெஞ்சம் உவக்க நடத்தல் வேண்டும். இவ்வாறன்றிக், கள்ளருந்தல் தீது, அதனை ஒழித்திடுக என்று அவர்க்கு அறிவு சொல்லப் புகுவமாயின், அவர் நம்மை யருவருத்துப் பகைகொண்டு நம்மை துன்புறுத்துவராகலின், அவர்பால் யாம் அன்புடையரா யொழுகுதல் யாங்ஙனங் கைகூடும்! அங்ஙனமே சிற்றுயிர்களைப் பதைபதைக்கக் கொன்று அவற்றின் ஊனைத் தின்பவர்கள்பால் யாம் அன்பு பூண்டொழுகுதல் வேண்டுமாயின், ஒன்று அவர் வழியில் நாம் சென்று அவரோடொத்து நடத்தல் வேண்டும், அல்லது அவரை நம் வழிக்குத் திருப்புதல் வேண்டும். ஊன் உண்பார் தொகை மிகுதியாயிருத்தலால் அவர் அத்தனை பேரையும் நம் வழிக்குத் திருப்பிவிடலாமெனக் கருதுவது கனவிலுங் கைகூடற்பாலதன்று. இரக்கமற்ற இவ்வன்னெஞ்சர் எல்லாரிடத்தும் நாம் அன்புபூண்டு நடத்தல் இயலுமோ என்பதனை உணர்த்து பார்மின்கள்! இங்ஙனமே, வேசிமா ரின்பத்தை விழைந்து நிற்பாரோடுஞ், சூது பொய் புரட்டு முதலான தீயசெயல்களில் திறமாய்ப் பழகியிருப்பாரோடுங், கைக்கூலி கொண்டு அழிவழக்காடிப் பிறர் பொருளைக் கவருங் கள்வரோடும் எல்லாம் நாம் அன்புடையராய் நடத்தல் எவ்வாற்றானும் இயலுமோ? இயலாதே. இவரை யொப்பவே, காளி கூளி பேய்ச்சி மாரி மதுரைவீரன் கறுப்பண்ணன் இராமன் கண்ணன் முதலான சிறு தெற்வங்களை வணங்குவார் கூட்டமும் பலப்பலவாய்க் காணப்படுகின்றன. இக் கூட்டங்கள் மாட்டெல்லாம் அறிவுடையார் ஒருவர் அன்புவைத்தொழுகல் ஒருசிறிதும் இயலாதென்பதனை யாம் சொல்லுதலும் வேண்டுமோ! இனிக், கொள்கை யளவிற் பார்த்தாலும் ஒருகூட்டத்தார் தெய்வம் இல்லை யென்கிறார், மற்றொரு கூட்டத்தார் நாமே தெய்வம் என்கின்றார்; ஒரு கூட்டத்தார் அறிவுடைய உயிர்கள் இல்லை, உயிர் எல்லாங் கடவுளே என்கின்றார்; மற்றொரு கூட்டத்தார் கடவுளும் இல்லை, உயிர்களும் இல்லை, எல்லாம் வெறும் பாழே என்கின்றார்கள்; ஒரு கூட்டத்தார் நம்மால் நேரேயறியப்படும் இவ்வுலகம் ஒன்றே மெய், நம்மால் நேரேயறியக்கூடாத மற்றையவெல்லாம் வெறும் பொய் என்கின்றார்; மற்றொரு கூட்டத்தாரோ நம்மாற் காணப்படும் இவ்வுலகமே பொய், நம்மறிவுக்கு எட்டாத கடவுள் ஒன்றே மெய் என்கின்றார். இங்ஙனமே அரசியற் றுறைகளிலும் உலகியலொழுக்கங்களிலும் மக்கட் பகுப்பினர் ஒன்றினொன்று மாறுபட்ட கொள்கைகள் உடையவர்களாயிருக் கின்றனர். இவரெல்லாரிடத்தும் ஒரு நிலையான அன்பு வைத்து அவரவர்க்கு ஏற்றபடியெல்லாம் ஒழுகுதல் எவர்க்கேனும் ஏலுமோ? இன்னும், மக்களுள் நோய்கொண்டார் தொகைக்கும் வறுமைப்பட்டார் தொகைக்கும் கணக்கே யில்லை. அன்னவர்மாட் டெல்லாம் அன்புபூண்டு அவர்க்குள்ள நோயை நீக்கவும் வறுமையைப் போக்கவும் எவராலேனுங் கூடுமோ? அற்றேல், மக்கள்பால் அன்பு பூண்டொழுகுதல் இயலாதாயின், அன்பொழுக்கமே உலகத்தின்கண் இல்லையாய் ஒழியுமேயெனின்; அற்றன்று; மக்கள் எல்லாரிடத்தும் அன்புவைத்து ஒழுகுவோம் எனப்புகுவாரே,அம்மக்களிடத்துக் காணப்படும் அருவருப்பான குணங்களையும் அருவருப்பான செயல்களையுங் கண்டு, தாம் அவர் பால்வைத்த அன்பை யிழந்து வன் கண்ணாராய் மாறுவர். மற்று, மக்கள்போல் மாறுந் தகையன் அல்லானாய், மக்களுக்குள்ள குற்றமுங் குறைபாடும் இல்லானாய் எஞ்ஞான்றும் அன்பே யுருவாய் விளங்கும் எல்லாம் வல்ல இறைவன்பால் அன்புவைத்த வரோ, தம்முடலுயிரெல்லாம் அன்பினாற் புரைபுரை கனிந்து அன்புருவாய் விளங்குவர்; இது குறித்தே தெய்வத்திருமூலர், அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே என்று அருளிச்செய்தார். அது பொருத்தமே யென்றாலுங், காணப்படும் மக்களிடத்து அன்பு பாராட்டமாட்டாத நாம், காணப்படாத இறைவனிடத்து மட்டும் அன்பு பாராட்டுதல் யாங்ஙனங் கூடுமெனிற் கூறுதும். நாம் மக்களைக் காண்கின்றோம் என்பது பிழைபாட்டுணர்ச்சியேயாம். மக்களாகிய உயிர்கள் போர்த்துக் கொண்டிருக்கும் உடம்பைத்தாம் நாம் பார்க் கின்றனமே யன்றி, அவ்வுடம்பில் நிறைந்த உயிரைப் பார்க்கிறோமில்லை. இவ்வூனக்கண்களாற் காணப்படுவனவெல்லாம் அறிவில்லாத பருப்பொருள் வடிவங்களேயாம்; பருப்பொருள் வடிவங்களுள்ளும் மிக நுண்ணியவாயுள்ள வடிவங்களை நம் கண்கள் பார்க்கமாட்டுவன அல்ல; நுண்ணிய பொருள்களை நோக்கி யுணர்தற்குப் பெருக்கக்கண்ணாடி (microscope) முதலான பிறகருவிகளின் உதவி இன்றியமையாது வேண்டப்படுகின்றது. இவ்வாறு அறிவில்லாப் பொருள்களிலேயே மிக நுண்ணியவாய் இருப் பவைகளைப் பார்க்கமாட்டாத நாம், அறிவுப் பொருளாகிய உயிரை எங்ஙனங் காணவல்லேம்! அறிவில்லாப் பொருளாய் முடியுமன்றோ? ஆகவே, நம் ஊனக்கண்களாற் காணப்படுதற்கு உரிய இயல்பு வாய்ந்தது அறிவில்லாப் பருப்பொருளும், ஞானக்கண்களால்உய்த்துணர்ந்து அறியப்படும் இயல்பு வாய்ந்தது அறிவுடைய உயிர்ப் பொருளுமாதல் தெற்றென விளங்கோ நிற்கும். அறிவுடைய உயிர்களெல்லாம் நம் அறிவினால் உய்த்துணர்ந்து அறியப்படுவனவா யிருக்கின்றனவேயல்லாமல், நம் கண்களாற் காணப்படுவனவாய் இருக்கவில்லை. ஆயினும், அவைகளை நம் கண்களாற் காணப்படுவனவாகவே வைத்து அன்பு பாராட்டி வருகின்றோம். தாயானவள் தன் பிள்ளையின் உயிரைக் காணவில்லை, பிள்ளையானது தன் தாயின் உயிரைக் காணவில்லை; மனைவியானவள் தன் கணவன் உயிரைக் காணவில்லை; கணவனானவன் தன் மனைவி உயிரைக் காணவில்லை; அவ்வாறிருந்தும், அவரெல்லாம் ஒருவருயிரை ஒருவர் கண்டாற்போல் ஒருவர்மேலொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்து வருதலைக் காண்கின்றனம் அல்லமோ? ஆகவே, ஒருவருயிர் ஒருவர்க்குக் கட்புலனாகாவிடினுங் கட்புலனாவது போலவே வைத்து அறிவினால் நேரேயறியப்படுதலின், அதனை அறியப்படாத பொருளாகக் கருதுவார் எவருமே யில்லை. இதுபோலவே, கடவுளாகிய அறிவுப் பொருளும் நம் ஊனக்கண்களுக்குப் புலனாவதன்றாய், நம் ஞானக்கண்களால் உய்த்தறியப்படும் நுண்பொருளாய், இவ்வுலகுயிர்களை யெல்லாந் தனக்கு உடம்பாகக் கொண்டு நிறைந்து நிற்றல் நன்கு விளங்காநிற்றலின், இவ்வுலகம் எங்கணுமுள்ள எல்லா மக்களுங், கடவுள் உண்டு என்னும் உணர்ச்சி வலியுடையவர்களாய் அதனை வணங்குதலும் வாழ்த்துதலுஞ் செய்து போதருகின்றார். இவ்வாற்றாற், கடவுள் ஒன்றுமட்டுந்தான் காணப்படாத பொருள் என்று கூறுவாருரை, அவர் தமக்குப் பகுத்தறிவு இல்லாமை யினையே நன்கு காட்டுகின்றது. கடவுளைப் போலவே எண்ணிறந்த சிற்றுயிர்களும் எண்ணிறந்த மக்களுயிர்களும், அவ்வுயிர்களின் பல்வேறு குணங்களும் நம்முடைய ஊனக்கண்களுக்கு ஒரு சிறிதும் புலனாகின்றன. ஆதலால் நம் கண்களுக்கு புலனாகவில்லையே யென்று நுண்ணிய பொருள்களை இல்லை யென்று துணிந்து கூறுதல் ஆகாது. அஃதொக்குமென்றாலும், மக்களுயிரும் மக்களால்லாத பிற உயிரும் பற்பல உடம்புகளிலிருந்து உணவு தேடுதலும் உறங்குதலும் இன்புறுதலும் போராடுதலும் முதலான பலப்பல தொழில்களைச் செய்யுமுகத்தால், உடம்பின் வேறாய் உடம்பிலிருக்கும் உயிர்கள் பல உண்டு என்பதனை நமக்குத் தெளிய உணர்த்துதல்போலக்,கடவுள் என்பதோர் அறிவுப்பொருள் இருப்பதும் உண்மையாயின், அதுவும் அங்ஙனம் பலதொழில்களைச் செய்யும்முகத்தால்தான் உண்டு என்பதனை நமக்குத் தெளிய உணர்த்துதல் வேண்டுமேயெனில்; நம் போன்ற சிற்றுயிர்கட்கும், பேருயிராகிய கடவுட்கும் உள்ள வேற்றுமையினை யறியமாட்டாதாரே இங்ஙனம் வினாவுவர். நம்மையொத்த சிற்றுயிர்களெல்லாம் ஓரிடத்து ஒரு காலத்தில் உள்ள ஒருபொருளை யறியுமேயன்றி, எல்லாவிடத்தும் எக்காலத்தும் எல்லாப் பொருள்களையும் ஒருங்கே அறியமாட்டா. ஒரு மாந் தோப்பில் ஒருபொழுது நிற்கும் ஒருவன் அதன்கண் உள்ள உள்ள பல மாமரங்களில் ஒரு மரத்தினையும், அம்மரத்தின் கட் கனிந்து தொங்கும் பல கனிகளுள் ஒரு கனியினையுமே ஒரு நேரத்திற் காணவல்லுநன் ஆவன்; அவன் ஒருவனே ஒரே நேரத்தில் இவ்வுலகம் எங்கணும் உள்ள மாந்தோப்புகளையும், அதன்கண் உள்ள பலவகையான மாமரங்களையும், அம்மரங்களிலுள்ள இலை பூ காய் கனி முதலான அவற்றின் பயன்களையும் ஒருங்கே யுணர வல்லனாகன்; இங்ஙனம் ஒருகாலத்து ஓரிடத்துள்ள ஒரு பொருளையே ஒருகால் அறியுஞ் சிற்றறிவு வாய்ந்தவர்களா யிருத்தல்பற்றி, மக்களுக்கு அவரவர்தஞ் சிற்றறிவு நிகழ்ச்சிக்கு ஏற்ற சிறு சிறு உடம்புகளே வாய்த்திருக்கின்றன. ஆதலாற் சிற்றறிவு வாய்ந்த அவர்கள் சிற்றறிவு நிகழ்ச்சிக்கு இடமான தம் முடம்புகளையும், அவ்வுடம்புகளிற் புலனாகும் பலவேறு தொழின் முயற்சிகளையுந் தம்முள் எளிதிலே உணரவும் பிறர்க்கு உணர்த்தவும் வல்லுநராகின்றார். மற்றுக், கடவுளோ அங்ஙனஞ் சிற்றறிவுடைய உயி ரன்றாய், எண்ணிறந்த உலகங்களையும் உயிர்களையும் ஒருங்கே யறிந்து, அவை தம்மை யெல்லாம் ஒரு காலத்தின்றி எக்காலத்தும் இயக்குவதாய் எங்கும் நிறைந்து நிற்பதொன்றாகலின், ஓரிடத்துள்ள ஒரு பொருளை யொரு காலத்தன்றி யுணரமாட்டாத நாம், அதன் பெரும் பரப்பையும் அதன் பேராற்றல் நிகழ்ச்சிகளையும் எங்ஙனம் பரந்து நின்று ஒருங்கறிய வல்லேம்! கடவுள் பரந்து நிற்கும் அளவும் நாமும் பரந்து நின்று அறியக்கூடுமாயினன்றோ, அதன் பரப்பும் ஆண்டாண்டு அது நிகழ்த்துந் தொழில் நிகழ்ச்சிகளும் நாம் முற்ற அறிதல் கூடும். அவ்வாறு பரந்து நிற்கும் ஆற்றல் நம்பால் இல்லாதபோது, நாம் அதனை நேரே முழுதுமறிதல் யாங்ஙனங் கூடும்? ஆகவே, நமது பருப்பொருளறிவு கொண்டு இறைவன்றன் நுண்டொழில் நிகழ்ச்சிகளை நாம் உணரல் ஏலாமையே பற்றி, இறைவனை இல்லை யென்றால், அதனியல்பை நுண்ணிதின் உணரமாட்டாதார் வெற்றுரையேயாம். அது பொருத்தமே யென்றாலும், விரிந்து நின்று அறியமாட்டாத நமக்கு நாம் சுட்டியறியும் ஒரோவிடத்தாவது இறைவன் தன்தொழில் நிகழ்ச்சிகளைப் புலப்படுத்தற்பால னல்லனோவெனிற்; பிறவிக் குருடராவார் ஞாயிற்றின் எதிரே நிற்பினும் அதன் ஒளிவிளக்கத்தினைக் காணமாட்டுவாரல்லர்; அதுபோல, ஒவ்வொரு நொடியும் நம் கண்ணெதிரே நடைபெறும் இறைவன் றன்றொழில் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பொருளிடத்துந் தனித்தனியே தேர்ந்துணரமாட்டாத குறை நம்பால் உளதேயன்றி இறைவன்பால் உளதன்று. நமக்குப் புறத்தேயுள்ள பொருள் களில் அவன்றன் அருள் இயக்கங்களைக் காண்டல் ஒருபுறம் இருக்கட்டும். நமதுடம்பின் அகத்தே நடக்கும் அவன்றன் அருள் நிகழ்ச்சிகளையாவது ஒரு சிறிது உற்று நோக்குவேமாயின், அவை நன்கு புலனாம். நாம் வேண்டிய வுணவை வேண்டிய மட்டும் அறிந்து உண்கின்றோம்; ஆனால், உண்ட அவ்வுணவை உடம்புக்கு வேண்டிய பலவேறு சாறுகளாகப் பிரித்து, உடம்பின் எப்புறத்தும் அவற்றைச் செலுத்தி உடம்பை அழியாமல் வளர்க்குஞ் செயலை நாம் ஓர் எட்டுணையாவது அறிந்து செய்கின்றனமா? இல்லையே. தொண்டையை விட்டுக் கீழ் இறங்கியபின் அவ்வுணவு எவ்வெவ்வகையான மாறுதல்களை அடைகின்றனவென்பது நம்மாற் சிறிதும் அறியக் கூடவில்லையே! இவ்வாறு நம் உடம்பினகத்தே ஓவாது நடக்குந் தொழின் முறைகளையே சிறிதேனும் அறியமாட்டாத நாந்தாமா அத்தன்மையவாங் கடவுளின் மிக நுண்ணிய தொழில் நிதழ்ச்சிகளை அறியமாட்டுவோம்! நம்மால் அறிய இயலாத அத்துணை வியத்தகு தொழில்களையும் நம்முடம்பினகத்தே எந்நேரமும் நிகழ்த்தி, நமதுடம்பை வளர்த்து, நமதுயிரை அதன்கண் நிலைபெறச் செய்துவரும் இறைவன்றன் அருட்செயலை நம்மிலே நாம் புலப்படக் கண்டுவைத்தும், அதனையுணராமல், இறைவன்றன் அருட்டொழில் நிதழ்ச்சிகளை யாம் யாண்டுங் கண்டிலேம் எனக் கரைபவர், ஞயிற்றின் ஒளி விளக்கத்தை மறுக்கும் பிறவிக் குருடரேயாவரல்லது மற்றென்னை! அஃது யாங்ஙனம்? உடம்புகடோறும் உள் நிகழும் நிகழ்ச்சிகள் உயிரோடு கூடிய உடம்பினியற்கையாய் நடைபெறுவனவேயல்லாமல், அவை இறைவன்றன் அருள் நிகழ்ச்சிகளேயாம் என்றல் பொருத்தமின்றாம் பிறவெனின்; நன்று சொன்னாய்; உணவுப் பண்டங்களை வித்தி விளைத் தற்கும், அங்ஙனம் விளைத்த விளைவுகளைப்பதப்படுத்திப் பல்வேறு சுவைப்படச் சமைத்தற்கும், சமைத்த அடிசிலுங் கறியும் உண்டற்கும் எல்லாம் அறிவோடு கூடிய முயற்சிகள் வேண்டும்; ஆனால் உண்ட உணவை எவராலும் செய்ய முடியாத வகையிற் பல்வேறு சாறுகளாகப் பிரிவுசெய்து, அச் சாறுகளைஉடம்பெங்குஞ் செலுத்தி, அதனை வளர்த்து நிலைபெறச் செய்யும் அரும் பெருந் தொழிலுக்கு மட்டும் அறிவு வேண்டாம் என்பாரின் அறியாமையினும் மிக்கதொன்றுண்டோ சொன்மின்கள்! அறிவற்ற மாயையின் அணுக்களைப் பலவேறு வியத்தகு முறைகளில் ஒட்டி ஒழுங்குபடுத்தி, அவற்றைப் பயன்படச் செய்தற்கு அறிவு முயற்சி இன்றியமையாததா யிருத்தலை எங்குங் காண்கின்றோம். ஓர் அழகிய இல்லம் அமைப்பதற்கு எவ்வளவு அறிவு முயற்சி வேண்டியிருக்கிறது! இயற்கையிற் காணப்படுந் தேக்குமரந் தானாகவே வாயிற்கால் சாளரக்கால்களாகவும் உத்திரம் கைத்துண்டுகளாகவும் மாறிவிடுமோ? நிலத்தின்கண்ணுள்ள களிமண் தானாகவே இடம் விட்டுப் பெயர்ந்து செங்கற்களாக வடிவு திரிந்து விடுமோ? கடலின் அடிப்படையிற் கிடக்குங் கிளிஞ்சில்கள் தாமாகவே நிலத்தின்மேல் வந்து சுண்ணாம்பாகிச் செங்கற்களொடு சேர்ந்து, சுவர்களை எழும்பி விடுமோ? சிறிதும் ஆகவே. தச்சருங்கொற்றருங் கூலியாட்களுமெல்லாம் ஒருங்கு சேர்ந்து, அவ்வில்லம் அமைப்பதற்கு வேண்டு மளவும் வகையுமெல்லாஞ் செவ்வனே அறிவினார் ஆராய்ந்து பார்த்து, மேற்சொன்ன தட்டுமுட்டுகளை யெல்லாம் ஒருவழித்தொகுத்து, அவ்வவை தம்மை அமைக்க வேண்டும் இடங்களில் அமைத்து எவ்வளவு கருத்தோடு, எவ்வளவு அறிவு முயற்சியோடு அதனை அமைத்து முடிக்கின்றார்கள் எளியதோர் இல்லம் அமைப்பதற்கே இத்தனை அறிவும் இத்தனை அறிவு முயற்சியும் இன்றியமையாதனவாய் வேண்டப்படுமாயின், மக்களுள் எத்தனை அறிவுமிக்காராலும் ஆக்க முடியாத நம் உடம்புகளையும், நம்மினுந் தாழ்ந்த ஏனைச்சிற்றுயிர்களின் உடம்புகளையும் அமைத்து அவை உயிர்களின் அறிவு விளக்கத்திற்குப் பயன்படுமாறு அவற்றினுள்ளிருந்து அவற்றை ஓவாது இயக்கிக்கொண் டிருக்கும் ஆற்றல் எவ்வளவு பேரறிவும் பேராற்றலும் ஓருயிரைப்பற்றி யன்றித் தனித்து நிற்பன அல்லவாகையால், அவ் வியத்தகு குணங்களையுடைய உயிர் முதலே எல்லாம் வல்ல இறைவன் ஆம் என்பது சிறிது உணர்ந்து பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கு மன்றோ? இவ்வாறு இயற்கை யமைப்பிலும், உயிருள்ள உடம்புகளினமைப்பிலும் இறைவன்றன் அறிவாற்றல் நன்கு விளங்கித் தோன்றலால், அவ் வமைப்புகளெல்லாம் அறிவில்லாமலே நடக்கின்றன என்று உரைப்பாரிலும், அறிவிலார் வேறில்லை யென்பதே தேற்றமாம் என்க. இனிக் கடவுளின் அருட்டொழில் நிகழ்ச்சிகள், உயிரில்லாத இயற்கைப் பொருள்களின் அமைப்பிலும், உயிருள்ள உடம்புகளின் அமைப்பிலும் நன்கு விளங்கித் தோன்றலால், அவ்வருள் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொருடம்பிலும் உற்று நோக்கி யுணர உணர, அங்ஙனம் உணர்வார்க்கு அப்பொருள்களிலெல் லாம் நிறைந்து நிற்கும் இறைவன்றன் அருள்நிலை செவ்வனே புலனாம். அது புலனாகப் புலனாக, நாம் எத்தனை முறை வேண்டிக் கேட்டாலும் நமக்கு வேண்டுஞ் சிறிய உதவிகள் தாமுஞ் செய்தற்கு நெஞ்சம் இரங்காத மக்களைப்போல் அல்லாமல், வேண்டிக் கேட்கத் தெரியாத அறியாமையிற் கண் பூவாக் குழவியைப்போல் நாம் இருந்த காலத்துந், தாயினுஞ்சாலப் பரிந்து நமக்கு வேண்டுவன வெல்லாம் முன்னரே யமைத்து வைத்து, அங்ஙனம் அமைத்து வைத்தவைகளை யாம் அறிவு தெரிந்து நுகர்தற்கு உதவியாக வேறெவரானும் ஆக்கமுடியாத இவ்வுடம்பையும் அமைத்துக் கொடுத்து, அங்ஙனங்கொடுத்த பின்னும் உடம்பின் உள் உள்ள கருவிகளைத் தெரிந்து இயக்கும் அறிவாற்றல் சிறிதுமில்லாத எமக்கு உற்ற துணையாய் எமதுயிரிலும் உடம்பிலும் பிரிவின்றி நின்று, அவைதம்மை ஓவாது இயக்கிப் பயன்படுத்தும் ஒப்பற்ற நண்பனாகவும் உடனிருந்து, அவ்வளவி லமையாது நல்லது தீயது பகுத்தறிய மாட்டாது யாம் மயங்கி நிற்குங்காலெல்லாம் எமது நெஞ்சத்தின் கண் நின்று அவற்றைப் பகுத்து அறிவிக்குங் குருவுமாய்த் திகழா நின்ற முதல்வனுக்கு ஏழையேம் எங்ஙனம் நன்றி செலுத்துவேம்! அவன்றன் அருட்பெருமையை எங்ஙனம் பாடுவேம்! எங்ஙனம் பரவுவேம்! என்று ஆற்றாது உருக உருக, அவன்மாட்டு எமக்கு மெய்யன்பு நிகழ்தல் திண்ணமன்றோ? இங்ஙனம் அன்பு நிகழப் பெற்றார்க்கு, இதுகாறும் உலகுயிர்களில் அருவாய் நின்ற ஆண்டவன் உருவாகி அவர் கண்ணெதிரேயும் புலப்பட்டுத் தோன்றி அருள் செய்வன். இவ்வாறு ஆண்டவன் தன் அருளொளி வடிவிற் கட்புலனாய்த் தோன்றி அருள் வழங்கும் உண்மை, மாணிக்கவாசகர் முதலான ஆசிரியர் தம் மெய் வரலாறுகளால் தெற்றென விளங்கா நிற்கின்றது. எனவே, மக்கள் மட்டுமே காணப்படுபொருள், கடவுளோ காணப்படாத பொருள். காணப்படும் மக்களிடத்தே அன்பு பாராட்டுத லொழிந்து, காணப்பாடாத கடவுளிடத்தே அன்பு பாராட்டுதல் வீண் என்பாருரை ஞாயிறில்லை யென்னும் பிறவிக்குருடருரையேயாதல் காண்க. உடம்பில் நிற்கும் மக்களுயிருங் காணப்படாதது, உடம்பு உயிர் உலகுகளில் நிறைந்து நிற்குங் கடவுளுங் காணப்படாதது. உடம்பில் நிற்கும் உயிரை அவ் வுடம்பின்கண் அது தோற்றுவிக்கும் அறிவு நிகழ்ச்சிகளால் நன்குணர்ந்து நாம் அதன்கண் அன்பு வைத்தல் போல, உடம்பு உயிர் உலகுகளில் நிற்குங் கடவுளையும் அவற்றின்கண் அது தோற்றுவிக்கும் அறிவு நிகழ்ச்சிகளால் நன்குணர்ந்து அதன்பாற் பேரன்பு பூண்டு ஒழுகக்கடவே மென்பதும்; அவ்வாறு அன்பினால் அகங்கரைந்து உருக உருகக், கட்புலனாய்த் தோன்ற மாட்டாத உயிர்போலன்றி இறைவன் தன் அருள்ஒளி வடிவிற் கட்புலனாகவுந் தோன்றி அருள்செய்யும் பேராற்றலுடைய னென்பதும் இதுகாறும் விளக்கிய வாற்றால் நன்கு துணியப்படுமென்க. அற்றேல், இறைவன்பால் அன்புபூண் டொழுகுதல் ஒன்றே போதுமோ, நம்மோடொத்த மக்கள்பால் அன்புபூண் டொழுகுதல் வேண்டாமோ வெனில், இறைவன்பால் மெய்யன்பு நிகழப் பெற்றார்க்கு, அவ் அன்புக்கு மாறான வன்னெஞ்சஞ் சிறிதும் உண்டாகாமையின், அத் தன்மை யினாரே எல்லார் மாட்டும் எல்லா உயிர்கள் மாட்டும் அன்பு பூண்டு ஒழுக வல்லாரென்று தெளிக. தீய வொழுக்கங்கள் உடையாரிடத்தும், மாறுபட்ட கொள்கைகள் உடையாரிடத்தும், நோய் வறுமை கொண்டாரிடத்தும் ஒருவர் அன்பு பூண்டொழுகுதல் இயலாதென்று முன்னரே காட்டப் பட்டமையின், இறைவன்பால் அன்பு கொண்டார் மட்டும் எல்லாரிடத்தும் அன்பு வைத்து ஒழுகமாட்டுவா ரென்று கூறிய தென்னையெனின்; உலகத்தின்கண் உள்ள எல்லா மக்களையும் எல்லா உயிர்களையும் அறியாமை யிருளினின்றும் அடுத்து அறிவொளியில் துலங்கச் செய்ய வல்லதும், அவ்வாறு துலங்கச் செய்யும் முயற்சியை இடை யறாது செய்வதும் ஆகிய அளவிலாற்றலும் அளவிலறிவும் உடைய கடவுள் ஒன்றே யன்றி ஏனையோர் அல்லர் என்பதை இறைவன்பால் மெய்யன்பு பூண்ட உண்மையடியார் நன்குணர்வர். ஆகவே, அவர் தனித்தனியே சென்று ஒவ்வொருவர்க்கும் அன்பாவன செய்து ஒழுகுவார் அல்லர்; எல்லார்க்கும் நன்மை செய்வானான இறைவனையே வேண்டி அவர் அம் முகத்தால் எல்லார்க்கும் அன்பு செய்வர்; இது திருஞானசம்பந்தப் பெருமான், வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே என எல்லார்க்கும் எல்லா உயிர்க்கும் நன்மையை வேண்டி வாழ்த்தின பேரன்புரையால் நன்கு விளங்கா நிற்கும். இவ்வளவில் அமையாது, சிவபிரான்றன் மெய்யடியார்கள் தாம் செல்லும் இடங்களில் எதிர்ப்பட்டார்க்குள்ள துன்பங்களை நீக்கி அவர்க்குப் பேரன்பாற் பேருதவிகள் செய் தமையும் நினைவிற் பதிக்கற்பாற்று. என்றித் துணையுங் கூறியவாற்றாற், சைவசமயம் என்பது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபிரானிடத்து மெய்யன்பு பூண்டு ஒழுகி, அம் முகத்தால் எல்லார்க்கும் எல்லா உயிர்கட்கும் அன்பராய் ஒழுகும் மெய்ந்நெறியினை வலியுறுத்துவதா மென்பதும்; இஃதுணராது சாதி யிறுமாப்புத் தலைக்கேறிய போலிச்சைவர்களால் மக்கள்பால் வைக்கும் அன்புக்கு முழுமாறான முறையில் அஃது ஒருபுறம் நெருக்குண்ண, மற்றொரு புறம் போலிச் சீர்திருத்தக்காரராற் கடவுள்பால் வைக்கும் அன்புக்கு முற்றும் முரணான முறையில் நெருக்கப்படுகின்றதென்பதும், இவ்விரண்டினிடை யிலும் அஃது அகப்படாது நிற்றலை விரும்பித் தம்மையுந் தம்மோடொத்த உயிர்களையும் புனிதப் படுத்துதற்கண் முனைந்து நிற்கும் மெய்யன்பர்கள் சிவபிரானிடத்தும் ஏனை யெல்லா உயிர்களிடத்தும் மெய்யன்பு பூண்டொழுகற்பால ரென்பதும் விளக்கப்பட்டன என்க. 9. சைவ சமயத்தின் தொன்மையும் தனிச்சிறப்பும் சைவ சமயம் என்பது இவ்விந்திய நாடு எங்கும் உள்ள தமிழ் நன்மக்களால் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேதொட்டுக் கைக்கொள்ளப்பட்ட கடவுட் கொள்கையாகும். அஃது அவர்களை அறிவிலும் உருக்கத்திலும் ஒழுக்கத்திலும் மேலேறச்செய்து, மற்றை நாட்டவர்க்கு இல்லாத் தனிப்பெருஞ் சிறப்பினை அவர்கட்கே தந்து, மற்றைச் சமயங்களுக்கெல்லாம் மேலான தனி நிலையில் வைகி விளங்குவது. அது, தமிழ் நன்மக்களை அறிவில் மேம்பட்டு விளங்கச்செய்தது எப்படியென்றாற், கூறுதும்: இந்நிலவுலகத்தில் எங்கும் உள்ள எல்லா மக்களும், அவர்கள் நாகரிகத்திற் சிறந்திருப்பினும் நாகரிகம் இல்லாக் காட்டு வாழ்க்கையிலிருப்பினும், எல்லாரும் கடவுள் ஒருவர் உண்டுஎன்னும் உணர்ச்சியும் அக் கடவுளை வணங்கும் விருப்பமும் உடையராய் இருக்கின்றனர். மக்கட்பிரிவினர் எல்லார் வரலாறுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து வரலாற்று நுல்கள் எழுதியிருக்கும் ஆங்கிலஆசிரியர்கள் கடவு ளுணர்ச்சியில்லாத ஒரு மக்கட் கூட்டத்தாரை ஓரிடத்துங் காண்டல் இயலாது என்று முடிவுகட்டிச் சொல்லுகின்றார்கள். நமது நாட்டிலும் மிகத் தாழ்ந்தோர் முதல் மிக உயர்ந்தோர் ஈறாக உள்ள எத்திறத்தாருங் கடவுளுணர்ச்சியும், அவ்வுணர்ச்சிக்கு ஏற்ற பலவகையான வணக்க முறைகளும் உடையராய் இருத்தலை நாடோறும் நாம் எங்குங் கண்டு வருகின்றோம். ஆகவே, கடவுளு ணர்ச்சியுங் கடவுள் வணக்கமும் இல்லாமல் மக்களாய்ப் பிறந்தவர்கள் உயிர் வாழ்தல் இயலாதென்பது இனிது விளங்கும். இனி, மக்கள் எல்லாரும் ஏன் இங்ஙனங் கடவுள் உணர்ச்சியுங் கடவுள் வணக்கமும்உடையரா யிருக்கின்றனரென்றால், அவர்களனைவரும் இந்த உடம்பின் துணையும், இந்த உடம்புக்கு வேண்டும் பொருள்களின் துணையும் வேண்டியவர்களா யிருக்கின்றனர். வியப்பான இந்த உடம்பையும் இந்த உலகத்தையும் இந்த உலகத்துப் பொருள்களையும் மக்கள் தாமாகவே உண்டாக்கிக் கொள்ள வல்லவர்களாய் இல்லை. ஆகவே, இத்தனை வியப்பான பண்டங்களையுந் தமக்கு ஆக்கிக் கொடுக்கத்தக்க பெருவல்லமையும் பேரறிவும் பேரிரக்கமும் உள்ள ஒரு முழுமுதற் கடவுள் கட்டாயம் இருக்கவேண்டுமென்னும் உணர்ச்சி எல்லார் உள்ளங்களிலும் இயற்கையாகவே தோன்றா நிற்கின்றது. இனி, எவராலும் படைக்க முடியாத இத்தனை உடம்புகளையும் இத்தனை உலகங்களையும் இத்தனை அரும் பொருள்களையுந் தமக்குப் படைத்துக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் உண்டு என்னும் உணர்ச்சி வந்தவுடனே, அவனைக் காணுதற்குங் கண்டு வணங்குதற்கும் எல்லாருக்கும் பேரவா உண்டாதலும் இயல்பேயாம். சலவைக்கல்லில் திருத்திச் சமைக்கப்பட்ட மிக அழகான ஓர் உருவத்தையேனும், பல வண்ணங்களாற் குழைத்துத் திறமாக எழுதப்பட்ட ஓர் ஓவியத்தையேனும், வானத்திற் பறக்கும் ஒரு மயிற்பொறியையேனுஞ்,சுவைத்த சொல்லும் பழுத்த பொருளும் நிறைந்த ஒரு நுலையேனும் இயற்றிய கைத் தொழிலாளரும் நல்லிசைப் புலவருந் தமது காலத்தில் உயிரோடிருக்கின்றனர் என்று தெரிந்தால் அவர்களைக் காண்டற்குங் கண்டு வணங்குதற்கும் மக்கள் எவ்வளவு விழைவுடையராய் விரைந்து செல்கின்றனர்! சென்று, அவர் களை மனம் உருகி வணங்கி வாழ்த்தி எவ்வளவு இன்புறு கின்றனர்! சிற்றறிவுடைய மக்கட் பிறவியெடுத்தாரிலேயே சிறிது சிறந்து அறிவுவாய்த்த கைத் தொழிலாளரையும் நல்லிசைப் புலவரையும் அவர் அமைக்கும் உருவ அமைப்பு நூல் அமைப்பின் அழகால் மனம் இழுக்கப்பட்டமக்கள் தேடிச் சென்று கண்டு வணங்கப்பேராவல் கொள்வார் களானால், எவராலும் அமைக்க முடியாத எண்ணிறந்த உடம்புகளையும் எண்ணிறந்த உலகங்களையும் எல்லையற்ற உலகத்துப் பொருள்களையும் நாம் கேளாமலே அமைத்துக்கொடுத்து, மற்றைத் தொழிலாளரும் புலவரும் அழிந்தொழிவது போல் அழிந்தொழியாமல், எக்காலத்தும் எவ்விடத்தும் நம்மோடு உடனிருக்கும் எல்லாம் வல்ல பெருமானைக் காண்பதற்குங் கண்டு வணங்குதற்கும் மக்காளாகிய நாம் இன்னும் எவ்வளவு மிகுந்த பேராவல் உடையவர்களாய் இருக்கவேண்டும். மக்களிற் சிறந்தாரா யுள்ள சிலரைக் கண்டு வணங்குதலாலேயே, நம்மனோர்க்கு அத்தனையன்பும் இன்பமும் உண்டாகுமானால், எல்லாச் சிறப்புக்குந் தலைவனாய் நிற்கும் இறைவனைக் கண்டு வணங்குதலால் நமக்கு இன்னும் எவ்வளவு மிகுதியான அன்பும் இன்பமும் உண்டாகல் வேண்டும்! ஆதலால், மக்களுக்குக் கடவுளுணர்ச்சியுங் கடவுளை வணங்குதலும் வேண்டாவெனக் கரையும் ஒரு சிலரது வெற்றுரை மக்களுக்குச் சிறிதும் பயன்படாதென்று உணர்ந்து கொள்க. இனி, விருப்பு வெறுப்பில்லாத கடவுள் தன்னை மக்கள் வணங்கல் வேண்டுமெனவுந் தனக்குத் திருக்கோயில்களுந் திருவிழாக்களும் அமைத்துத் தன்னை அவர்கள் வழிபடுதல் வேண்டுமெனவும் விரும்புவரோ என வினவி அவர் நம்மனோரை ஏளனஞ்செய்தார். கடவுள் தன்னை மக்கள் வணங்கல் வேண்டுமெனத் தன் திருவுள்ளத்திற் கருதுவது, அதனால் தனக்கு ஒரு பெருமை தேடிக்கொள்ளுதற்கு அன்று, ஒருவன் பிறனொருவனை வணங்குவது அச்சத்தினாலும் நிகழும்; அன்பினாலும் நிகழும், செல்வத்தினாலேனுங் கல்வியினாலேனுந் தலைமையினாலேனும் வலிமையினா லேனும் சிறந்தானாயிருக்கும் ஒருவனைச் செல்வமுங் கல்வியுந் தலைமையும் வலிமையும் இல்லாத பிறர் பெரும்பாலும் அச்சத்தால் வணங்கா நிற்பர்; சிறுபான்மை யன்பினாலும் வணங்கா நிற்பர். மேற்சொன்ன வளங்களுடை யோன் தன்னையே பெரியனாக மதித்துத் தன்னை வணங்குவோரை மதியாது ஒழுகும் வரையில், அவனை வணங்குவோர் அவன்பால் என்றும் அச்சமே கொண்டு நிற்பர். அங்ஙனஞ் செல்வம் முதலிய வளங்களால் உயர்ந்தோன் தன்னை மேலாகக் கருதாது, தன்னை வணங்கு வாரெல்லாரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையனாய் ஒழுகுவனாயின், அவனை வணங்குவார் தமக்குள்ள அச்சந்தீர்ந்து அவன்பாற் பேரன்புடையராய் உளங்குழைந்து உருகி யொழுகுதலையுங் காண்கின்றோம். இவ் வியல்பை உற்று நோக்குங்காற், கடவுளை அச்சத்தால் வணங்குவோர் நிலைக்கும், அன்பினால் வணங்குவோர் நிலைக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளங்கா நிற்கும். கடவுள் ஒப்புயர்வு அற்ற செல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் உடையர். அவரை வணங்காது ஒழியின் நமக்குத் தீங்குண்டாம் என்னும் அளவே கருதி, அவரை அச்சத்தால் வணங்குவோர் தாழ்ந்த நிலையின ராவர். மேற்குறித்த வளங்களையுடைய னாதலுடன், எம்பெருமான் ஒன்றுக்கும் பற்றாத எளியேங்களிடத்து அளவிறந்த அன்பும் இரக்கமும் உடையன் என்று கருதி அவனை அன்பினால் வணங்குவோர் உயர்ந்த நிலை யினராவர். அன்பினால் வணங்கும் உயர்ந்த நிலையினரே கடவுளின் உண்மையை உணர்ந்தாராவர். ஏனென்றாற், கடவுள் எல்லையற்ற செல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் மட்டுமே யுடையரல்லர்; அறியாமையுந் துன்பமும் உடைய எல்லா உயிர்களுக்கும் அவ்விரண்டை யும் நீக்கி, அறிவும் இன்பமும் தருதற்கு அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளின் அருமையை எண்ணிப் பார்க்கப் பார்க்க அவர் எல்லா உயிர்களிடத்தும் எல்லையற்ற அன்பும் இரக்கமும் உடையரென்பது தெளிவாக விளங்குகின்றது. நம் உடம்பிலுள்ள உறுப்புகளிற் கண்ணினுஞ் சிறந்தது பிறி தில்லை; கண் இல்லையானால் நமது அறிவு முக்காற் பங்குக்குமேல் விளங்காது ஒழியும். இத்துணைச் சிறந்த கண்ணையும், இதற்கு அடுத்த சிறப்பிலுள்ள ஏனை உறுப்புக்களையுந் தாமாகவே படைத்துக்கொள்ள வல்லவர்கள் எங்கேனும் உளரோ? இல்லையன்றே! எவரானும் படைக்க முடியாத இவ்வரும் பெறல் உறுப்புக்களை, நாம் கேளா திருக்கையிலும் நமக்குப் படைத்துக் கொடுத்தவன் நம்பால் எவ்வளவு அன்பும் எவ்வளவு இரக்கமும் உடையனாயிருக்கவேண்டும்! இது பற்றியன்றோ மேனாட்டிற் சிறந்த மெய்ந்நூலாசிரியரான பெர்க்சன் (நெசபளடி) என்பவர் கண்ணின் வியப்பான அமைப்பை ஆராய்ந்துகாட்டிக் கடவுளின் அறிவாற்றலையும் அருளையும் நிலை நாட்டினார். ஆகவே. கடவுள்வகுத்த இவ்வியற்கையமைப்பின் திறங்களை ஆராயுந்தோறும் நாம் அவன்றன் ஆற்றலையும் அருளையும் அறிந்தறிந்து மெய்யறிவு விளங்கப்பெறுகின்றோம் அல்லமோ? பேரறிவுடையோன் ஒருவன் வகுத்த ஒரு நீராவிவண்டியின் அமைப்பையேனும், அல்லது அதுபோன்ற மற்றொரு வியத்தகு பொறியையேனும் நாம் ஆராய்ந்து நோக்குந்தோறும், அவனது அறிவின்திறம் நமக்குப் பெரியதோர் இன்பத்தை விளைத்து நமதறிவையும் விரிவுசெய்து விளக்குதல்போல, இறைவன் படைத்த படைப்பின்வழியே அவனது அறிவின் ஏற்றத்தைக் கண்டு நாம் வியந்து மகிழுந்தோறும் நமதறிவும் முறை முறையே விரித்து பேரொளியோடும் விளங்கா நிற்கும். இவ்வாறு இறைவன்றன் அறிவாற்றல் அருளாற்றல்களை அறியு முகத்தானன்றி, நமக்கு உயர்ந்த அறிவு விளக்கம் உண்டாதற்கு வேறு வழி இல்லையாதலால், நமக்குக் கடவு ளுணர்ச்சி வேண்டாமெனப்பகர்ந்துவரும் ஒருசிலரது வழுக்குரை ஏழைமக்களை அறியாமைப் பாழ்ங்குழியில் ஆழ்த்தி அழிப்பனாவா மென்றுணர்மின்கள்! இவ்வாற்றாற் சைவசமயமானது, மக்களுக்கு உரிய அறியாமையும், பிறப்பு இறப்பும் இல்லாப் பெருமுதற் கடவுளான சிவபெருமான்றன் அறிவாற்றல் அருளாற்றல்களை விளக்கும் வழியே மக்க ளெல்லாரையும் பேரறிவுநிலைக்குச் செலுத்துவதோர் ஒப்பற்ற கொள்கையாதலை உணர்ந்து கொண்மின்கள்! இனிக்கடவுள் ஒருவர் இருந்தால், அவர், தம்மை மக்கள் வணங்கல் வேண்டுமெனக் கருதார் என்னுங்கருத்துப் பட ஒருசிலர் உரைக்கும் உரையும் பாழுரையாதல் காட்டுதும்: எல்லாம் வல்ல இறைவன் இவ்வுலகத்தையும் இவ்வுலகத்துப் பொருள்களையும் படைத்து, அவற்றின் நடுவே இவ் வியப்பான இவ்வுடம்புகளிற் புகுத்தி நம்மை வாழச் செய்திருக்கும் வகையினை உற்றுநோக்கும் நுண்ணறிவாளர், இங்ஙனம் அவன் செய்திருப்பது ஒரு சிறந்த நோக்கம்பற்றியே யல்லாமல் வெறும் பாழுக்காக அன்றென உணர்வர். அச்சிறந்த நோக்கம் யாதோவென்றால், நாம் அறிவும் இன்பமும் இவையென உணர்ந்து, நமக்கு இயற்கையாய் உள்ள அறியாமையுந் துன்பமுங் களைந்து, என்றும் அழியாப் பேரின்பத்தில் நாம் நிலைபேறா யிருக்க வேண்டுமென்பதே அதுவாம். உலகத்தின்கண் உள்ள அரிய காட்சிகளையும், இனிய ஒலிகளையும், தீஞ்சுவைகளையும், நறுமணங்களையும், மென்பொருள்களையுங் கண்டு கேட்டுச் சுவைத்து உயிர்த்துத் தொட்டு உணர்தலாலும், அறிவால்மிக்க சான்றாரோடு பழகி அவர் ஆக்கிய நூல்களை ஆராய்ந்து அறிதலாலும் யாம் நாளுக்கு நாள் அறிவும் இன்பமும் இவையென உணர்ந்து அவற்றால் மேன்மேல் உயர்ந்து வருகின்றனம் அல்லமோ? ஆகவே இறைவன் இவ்வுலக வாழ்க்கையினை வகுத்தது, நாம் அறிவில் வளர்ந்து அவனது பேரின்பத்திற் சென்று நிலைபெறுதற் பொருட்டேயாமென்பது நன்கு துணியப்படும். நாம் கடவுளின் பேரறிவினையும் பேரின்பத்தினையும் அறிதற்குக் கருவிகளாகவே அறிவையும் இன்பத்தையும் சிறிது சிறிதே காட்டும் இவ்வுலகத்துப் பொருள்களையும் இவ்வுடம்புகளையும் இறைவன் அமைத்தனனேயல்லாமல் இப்பொருள்களும் உடம்புகளுமே பேரறிவையும் பேரின்பத்தையும் அளிக்குமென அமைத்தானல்லன். ஆதலாற், சிற்றறிவு சிற்றின்பங்களைத் தரும் இவற்றிற் பற்றுவையாமற், பேரறிவு பேரின்பங்களைத் தருங் கடவுளிடத்தில் நாம் பற்றுவைத்தல் வேண்டுமென்பதே அவனது அரும்பெரு நோக்கமாதலால், அந்நோக்கத்தை யுணர்ந்தவர்களல்லாமல் மற்றையோர் இவ்வுலகப்பற்றைவிடார். ஆகவே, இறைவனைச் சார்ந்து வணங்கி அவன்றன் பேரின்பத்தை நாம் பெறுவது அவனது நோக்கத்தோடு ஒத்திருத்தலால், அதுகண்டு இறைவன் திருவுளம் மகிழ்வன். மகன் உயர்ந்தநிலை யடைதல் கண்டு மகிழாத தந்தைதாயரும் உளரோ? எனவே, நாம் இறைவனை வணங்குவது நமக்குப் பெரும்பயன் தருதலோடு, இறைவற்கும் மகிழ்ச்சி தருவதாகலின், அவற்குத் திருக் கோயில்களும் திருவிழாக்களும் அமைத்து வணங்குதலே சிறந்த முறையாமென்க. இஃது உணர்த்துதற்கே அப்பரும், குறி களும் அடைளானமுங் கோயிலும், நெறிக ளும்அவன் நின்றதோர் நேர்மையும், அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும், பொறியி லீர்மனம் என்கொல் புகாததே என்று அருளிச் செய்தாரென்பது. 10 உள்ளது போகாது இல்லது வராது இந்தப் பழமொழி பொதுவாகத் தமிழ் நாட்டில் யாண்டும் பரவி வழங்குவதொன்றாயினும், அதன் பொருள் எந்த நாட்டிலுள்ள எந்தக் குலத்தார்க்கும் எந்தச் சமயத்தார்க்கும் உடன்பாடான பொதுமை யுடையதேயாம். எளிதாக நாடொறும் வழங்கும் இப்பழமொழிப் பொருளருமை உற்றுநோக்குவார்க்கு இனிது விளங்குமாயினும், அதனை ஆழ்ந்து ஆராய்வார் உலகில் ஒரு சிலரேயாவர். ஆகலின், உலகமெல்லாம் ஒப்புக்கொண்டு வழங்கும் இதன் அருமைப்பாடு ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். இனி, இதன் பொருள் முன்னைக்காலத்தும் நிகழ்காலத்தும் வருங்காலத்தும் இருப்புப்பெற்ற ஒரு பொருள் இல்லாமற் போவதுமில்லை, மூன்று காலங்களிலும் இல்லாத பொருள் ஒருகாலத்து உண்டாவதுமில்லை என்பதேயாம். அவ்வாறாயின், விண்ணகத் தாமரை முயற்கொம்பு முதலிய சொல்லாட்சிகள் காணக்கிடத்தல்தான் என்னையெனின்: விண்ணகம் என்பதும் உள்பொருள்; தாமரை என்பதும் உள்பொருள் தாமரை தடாகத்தில் இருப்பது. தடாகத்தின்கண் இருப்புப்பெறுவதாகிய தாமரைக்கு விண்ணகத்தின்கண் நேர்ச்சியில்லாமையால் விண்ணகத்தாமரை என்பது, சொற்கள் தம்முள் இணங்கிப் பொருடருதற்கு ஏதுவாகிய தகுதிப் பொருத்தம் இல்லாமைகாட்டித் தாமரையினிருப்பை விண்ணகத்தின்கண் எதிர்மறுத்தவாறாயிற்று. இவ்வாறே முயற்கொம்பு என்புழியும் முயல் என்பதோர் உள்பொருள்; கொம்பு என்பது பிறிதோர் உள்பொருள். ஆடு, மாடு, மான் முதலியவற்றின்கண் இருப்புப் பெறுவதாகிய கொம்பு என்பதொரு பொருள் தனக்கு நிலைக்களமாகாத முயலின்கண் இருப்புப் பெறுதலாகாமையின் ஆண்டும் அதனை எதிர்மறுக்கும் பொருட்டாகவே அச் சொல்லாட்சி எழுந்ததென்று உணர்க. ஆகலின், அச்சொல்லாட்சிகள் முக்காலத்துமில்லாத வெறும் பொருளைக் குறிப்பன என்பது அடாது; மற்று அவை பொருள்கள் இணங்குதற்கு உரிய நேர்ச்சியில்லாமை மாத்திரையே விளக்குவனவாம் என்றொழிக. இந்த நூலாடையை நீரால்நனை என்பதேயன்றி அதனை நெருப்பால் நனை என்றல் ஏலாமையான், பொருள்கள் தம்முட் பொருந்துதந்குரிய குணநெறி கடைப்பிடியாது, அச் சொல்லாட்சிகள் வெறும் பொருள் குறித்து வந்தனவா மென்பாருரை குழறுபாட்டுரையா மென்று ஒழிக. இதுபற்றியே சேனாவரையாரும் பொய்ப்பொருள் குறிப்பனவும் பொருளுணர்த்துவனவே யாம் என்று உரை கூறினார். எனவே, வெறுமையாக நிற்பதொரு பொருளுமின்றாம்; அதனை குறிக்குஞ் சொல்லுமின்றாம். அற்றேல், வெறுமை என்பது தான் என்னையெனின், உள்பொருளின் எதிர்மறையே அவ்வாறு சொல்லப்படுதலல்லது வெறும் பொருளெனப் பிறிது ஒன்று இல்லை யென்க. இங்கே குடமில்லை படமில்லை என்ற வழிக்குடம் படம் முதலியவற்றின் இருப்பை ஆண்டு மறுத்தவாறன்றி வேறில்லை யென்பதூஉம் உலக வழக்கிற் கண்டு கொள்க. யாங் கூறியதே தருக்க நுலார்க்கும் உடன்பாடாதல் *பிரதியோகி யுணர்ச்சியின்றி அபாவவுணர்ச்சி பெறப்படாது என்று அவர் கூறுமாற்றாற் காண்க. இதனால் தம்முள் நேர்ச்சி யில்லாத பொருள்கள் ஒன்றோடொன்று ஒற்றுமைப்பட்டுத் தோன்றுதல் இல்லையாமென்பதூஉம், இதற்கு முயலின்கண் நேர்ச்சியில்லாத கொம்பு அதன் தலையில் யாண்டுங் காணப்படாது ஒழிதலே ஏதுவாய் நிலைபெறுமென்பது உம் நன்று விளங்கும். இது கிடக்க. இனி ஒருசாரார் பருப்பொருளாகக் காணப்படும் இந்த உலகங்களையும், இவற்றின்கண் அறிவுடையராய் இயங்கும் உயிர்களையும் இறைவன் ஒன்றுமில்லாதவெறும் பாழினின்றும் படைத்திட்டான் என்பவாகலின் இல்லது வாராது என்றல் பொருந்தாதாம் பிறவெனின்;- நன்று சொன்னாய், என்றுமில்லாத பாழிலிருந்து உள்பொருளான இவ்வுலகங்களைப் படைத்திட்டானென்றல் முன்னேயுரைத்த நியாயவுரைக்கு ஒரு சிறிதும் பொருந்தாமையின் அவர் கூறும் உலகப்படைப்பு கொள்ளற்பாலதன்று. அற்றன்று, இறைவன் அளவிறந்த ஆற்றலுடையான் என்பது நுமக்கும் ஒப்ப முடிந்தமையின், அப்பெற்றியனான அவன் இவ்வுலகங்களையும் இன்னும் இவைபோல்வன பிறவற்றையும் வெறும் பாழினின்று படைத்திட்டானென்றல் மாறு கொள்ளாதெனின்;- ஆற்றல் என்பதன் இலக்கணமறியாது கூறினாய். ஆற்றலென்பது அசையாது கிடக்கின்ற ஒரு பொருளை அசைவிப்பதும் அசைகின்ற ஒரு பொருளை அங்ஙனம் அசையாது நிறுத்துதலுமாம். கூட்டல், பிரித்தல், குறைத்தல், மிகுத்தல், திரித்தல், அறுத்தல் முதலிய கருமத் தொகுதிகளும் ஈண்டுக் கூறிய இலக்கணத்தில் அடங்கும். வழுவழுப்பான சமநிலத்திற் கிடக்கும் பருக்கைக்கல்லொன்று தானே இயங்காது. அதனை யாம் எமது சிறுவிரலால்அசைவிக்க அஃது இயங்கும். இயக்கல் கூடாது. அதனை எளிதில் இயக்கும் பொருட்டு ஏதாயினும் பிறிதொரு கருவிகொண்டு தான் அவ்வாறு செய்தல் வேண்டும். அன்றி அக்கருவியும் வேண்டாமல் யாமே எங் கைகளால் முயன்று எடுத்து அதனை இயக்குவோமாயின், எம்மைக் கண்டார் இவர் மிக்க உடற் பலமுடையார் என்று வியந்து பேசுவார். இவ்வாறே யாம் ஒன்றாய்க் கூட்டுதற்கு அருமையான இருப்புச் சலாகைகளை ஒன்று கூட்டியும், இரு கூறாக்குதற்கு அரிய பெருத்த மரங்களை இரு கூறுபடுத்தியும், அறுத்துக் குறுக்குதற்கு அரியவற்றை அறுத்துக் குறைத்தும், திரிப்பதற்கு அரிய இருப்புக்கோல்களை நூல்போல் திரித்தும், பரிய இருப்புத்தூண்களைத் துகளாக்கியும் வன்மை செய்தவழி எம்மைக் கண்டாரெல்லாரும் எம்மாற்றலை மிக வியந்தெடுத்துப் பேசுவர். ஆகவே, எம்முடைய ஆற்றலளவு அவ்வாற்றலால் உய்க்கப்படும் கல் முதலிய பொருளளவுபற்றியே அறியப்படுவதாம். அப்பொருள் சிறிதாயவழி அதனைச் செலுத்துவானாற்றல் சிறிதென்றும், அது பெரிதாயவழி அதனைச் செலுத்துவானாற்றல் பெரிதென்றும் எல்லாரும் முணர்ந்து கொள்வர். இங்ஙனம் பொருள்களின் நிலையை வேறுபடுத்தி அவற்றைத் தொழிற்கண் உய்ப்பதாகிய முயற்சியே ஆற்றல் அல்லது சக்தி என்பதன்றி உள்பொருளை இல்பொருளாகவும் இல் பொருளை உள்பொருளாகவும் செய்வதே ஆற்றலென யாண்டும் பெறப்படுமாறில்லை. யாங் கூறியதே சிறந்த பௌதிக அறிஞர்களாகிய *பால்வர் ஸ்டூவர்ட், ஜோன்ஸ், பெஸன்டன்,+ கூக் முதலானவர்களுக்கும் உடன்பாடாதல் அவ்வவர் நூல்களிற் கண்டுகொள்க. இனி, அவ்வவர் ஆற்றன்மிகுதி அவர் உய்க்கும் பொருட் பரிமாணம் பற்றியே அளந்தறியப்படக்காண்டலால், நாம் வாழ்கின்ற இந்த நிலவுலக வட்டத்தையும் இதனினும் எத்தனையோ மடங்கு பெரிதாகிய ஞாயிறுமண்டல முதலான பல அண்டப்பகுதிகளையும் மிகு புதுமையாக உண்டாக்கி, அவை ஒன்றை ஒன்று இழுக்கும் இழுப் பாற்றலால் விண்ணில்நெறி பிறழாது இயங்கும்படி செய்வித்து அவ்வண்டங்கள் ஒவ்வொன்றிலும் அவ்வவற்றின் தட்பவெப்ப இயல்புக்கேற்ற எண்ணிறந்த உயிர்களை எண்ணிறந்த உடல்களில் அமைத்து அறிவூட்டியும், அவ்வுயிர்கள் செய்யும் வணக்க வழிபாடுகளாகிய நற்கருமங் களையும் அவற்றின் வழுவி அவர் செய்யுந் தீக்கருமங்களையும் அறிந்து அவ்வவர்க்கு ஏற்ற கதி வழங்கியும் பேராற்றல் செய்கின்றவனாகிய இறைவன் அவ்வாறு அளவிறந்த ஆற்றலுடையானென்று சொல்லப்பட்டானல்லது, வெறும் பாழினின்று ஒன்றனைப் படைத்தலானாதல் படைப்புப் பொருளொன்றை வெறும் பாழாக்குதலானதல் அவ்வாறு சொல்லப்பட்டானல்லன் என்று உணர்க. அறிவின்றியும் அறியப்படாமலும் பொய்ம்மையாகக் கிடந்த நுண்ணுலகத் தினையே இறைவன், உயிர்களுக்கு உதவியாதற்பொருட்டு அசேதனவுருவப் பருப்பொருளுருவமாகப் படைத்தான். இத்தனையேயன்றி வெறும் பாழினின்றும் எம்மையெல்லாம் படைத்து ஒரு சிலரை இன்பப் பகுதியின் கண்ணும் ஒரு சிலரைத் துன்பப் பகுதியின் கண்ணும் நிறுத்துதல் இறைவனுக்கு நடுவுநிலை யாகாதெனக் கடாவுவார்க்கு இறுக்கலா காமையானும் அது பொருந்தாதென்றொழிக. இது கிடக்க. இனிப் படைப்பு என்பதுதான் யாதோவெனின் அதனை ஒருசிறிது விளக்குவாம். படைப்பு எனினும் ஒழுங்குபடுத்தல் எனினும் ஒக்கும். யாதினையோ ஒழுங்குபடுத்தலெனின்;- உறுப்பின்றிப் பிண்டமாகக் கிடந்த ஒருபொருளை உறுப்புடைத்தாக நெறிப்படுத்து அமைத்தலாம். அவயவம் எனினும் உறுப்பு எனினும் ஒக்கும். இறைவன்றன் அரும்பேராற்றலால் நிகழ்த்தும் படைப்புக்கு ஒப்பாக எடுத்துக்காட்டப்படும் பொருள் ஒன்று இவ்வுலகி லில்லையாயினும், ஈண்டெடுத்துக்கொண்ட தருக்கம் இனிது விளங்குதற்பொருட்டு ஓருதாரணம் எடுத்துக்காட்டுவாம். தச்சுத் தொழில் செய்வான் ஒருவன் பிண்டமாகக்கிடந்த முழுமரம் ஒன்றை வாளாற் பல துண்டுகளாக ஈர்ந்து, அவற்றையெல்லாம் வழுவழுப்பாக இழைத்துத் திரட்டுவனவற்றைத் திரட்டிக் கடைந்தும், குறைக்குமிடங்களில் அவற்றைக் குறைத்தும் மிகுத்தும் பலவேறுபடுத்திப் பின் அத்துண்டு களை யெல்லாம் ஒன்றாக இயைத்து ஆணியறைந்து ஒரு நாற்காலி செய்யக் காண்கின்றோம். இங்ஙனம் பிண்டமாகக் கிடந்த முழுமரம் ஒன்றைப் பலவாகத் திரித்து உறுப்புக்களையுடைய நாற்காலியாக ஒழுங்குபடுத்து முயற்சியே படைப்பாவதாம். இதுபோல், இறைவனும் உறுப்பின்றி வடிவமற்றுக்கிடந்த மிகுநுட்பப் பொருளாகிய மாயையை மலையுங் காடும் நாடுங் கடலுமாகிய உறுப்புடைய பருப்பொருளுலகமாக ஒழுங்குபட அமைத்து உயிர்களுக்கு உதவியாக வைத்தருளினான். இங்ஙனஞ் செய்யப்படுவதாகிய படைப்பும் மிகுநுண்ணிய உள்பொருண் மாயையிற் செயப்படுவதல்லது வெறும்பாழின்கட் செயப்படுவதன்றாம். ஆகவே, படைப்பு என்பது எக் காலத்தும் இருப்பதாகிய உள்பொருள் ஒன்றனையே வேறு வேறாக ஒழுங்குபடுத்து அமைக்கும் முயற்சியாமென்பது ஈண்டுக் கூறியவாற்றான் இனிது விளங்கும். அற்றேல், அழிப்பு அல்லது சங்காரம் என்னுமுயற்சியாற் உலகங் களெல்லாம் வெறும்பாழாய் அழிந்து படக் காண்கின்றோமாதலின் உள்பொருள் வெறும் பாழாயிற்றாம் பிறவெனின்;- அறியாது கடாயினாய், மலை கட னாடு முதலிய அவயவ வுருவங்களால் பருப்பொருளாகக் காணப்படும் இக்காரிய உலகத்தைத் தத்தம் நுண்ணிய முதற் காரணமாகிய மிகச்சிறிய அணுவடிவங்களாகவும், அதிநுட்ப முதற் காரணமாகிய *மாயையாகவுந் திரித்தருளுகின்ற இறைவன் றிருவருண் முயற்சியே அங்ஙனம் அழிக்குங்காரியமென்று ஓதப்பட்டதல்லது உள்பொருளாக்குவதே அதுவாம் என்பதன்று. இங்ஙனங் காரிய ரூபமாகக் காணப்படும் உலகம் காரணரூபமாய் ஒடுங்குதல் பற்றியே அறிவுடையோர் அதனை நிலையற்றதென்று ஓதுவர். இதனை ஓரெடுத்துக்காட்டு முகத்தானும் விளக்குவாம். குயவன் தன் மதிநுட்பத்தால் மண்ணைத்திரட்டிக் குழித்து வாய் குறுக்கி வயிறு பெருக்கிச் சுள்ளையிலிட்டுச் செவ்வண்ணமாக்கி எமக்கு ஒரு குடந் தந்தான், தர, அதனை யாம் நெடுநாள் பயன்படுத்தி வருகையில் அதுவுஞ் சிறிது சிறிதாகத் தேய்வுண்டு கடைசியிற் குடமென்பதொன்று இல்லையாக முடிந்தது. பொன் அணிகலன் செய்தல் வல்லானொருவன் யாம் தந்த பத்துக் கழஞ்சு பொன்னையுஞ் செவ்விய ஓரணிகலமாக அமைத்து எம் புதல்விக்கு பூட்டினான். அவ்வணிகலத்தைச் சில ஆண்டு கழித்துக் கழற்றி நிறுத்துப் பார்த்தபோது அஃது எட்டுக் கழஞ்சுதான் நின்றது. பின்னுஞ் சில ஆண்டு கழித்து நிறுத்தபோது ஐந்து கழஞ்சுதான் நின்றது. பின்னும் இவ்வாறே நிறுத்து நிறுத்துப் பார்க்கக் குறைந்து கொண்டே போய்க் கடைசியில் அணிகல மென்பதே ஒன்று இன்றாய் முடிந்தது. இனி இங்ஙனங் காட்டிய குடமும் அணிகலமும் இல்லையாய்ப் போன மாயந்தான் என்னை என்று ஒரு சிறுவனைக் கேட்பினும் அவன் தினைத்தினையாகத் தேய்ந்து இறுதியில் அவை யில்லையாயின வென்று மறுமொழி யுரைப்பான். இனித் தேய்தல் என்பதுதான் யாது என்று நுணுகியாராய்ந்து அவனைக் கேட்பினும் அச்சிறுவன் குடமாகவும் அணிகலமாகவும் திரண்டெழுந்த மண்ணும் பொன்னும் துகள் துகளாகப் பிரிந்துபோயினவென்று அறிவுதோன்றக்கூறு வான். இனி அத்துகள்கள் தாம் எங்குச் சென்றினவென வினவின் அவன், அவை எங்குஞ் சென்றில நுட்பவடிவமாக இங்கேதான் இருக்கின்றன என்றும் மொழிந்து எம்மை மகிழ்வித்திடுவான். ஆகவே. காரியரூபமாகத் தோன்றுங் குடமும் அணிகலமுந் தேய்ந்து தேய்ந்து தத்தங் காரணநுட்ப அணுரூபமாக ஒடுங்கிய வழியும் அவற்றின் இருப்பு யாண்டும் உளதாவதேயன்றி வெறும்பாழாதல் ஒருவாற்றானும் இல்லை யாதலான், இதுபோல் உலக இருப்பும் யாண்டும் உளதாவதேயன்றி இலதாதல் இல்லையென் றொழிக. எம்முடைய ஊனவிழிகளுக்குத் தோன்றாமை பற்றி உலக இருப்பை மறுத்துரைத்தல் பெரிதுங் குற்றமாம். ஊசிநுனியிற் றங்கிய நீர்த்துகளை ஆங்கிலேய அறிவுநுற் கலைஞர்கள் அமைத்திருக்கும் *பெருக்கக்கண்ணாடியால் நோக்குவார்க்கு அதன்கண் அடங்கிய அளவிறந்த புழுக்களும் அப்புழுக்களின் வேறுவேறான புதுமைப் படைப்பு வடிவங்களும் அவற்றின் தொழில் வேறுபாடு களும் பிறவும் மிக்க வியப்புடையனவாய் விளங்கும். அக்கருவியின் உதவியின்றி நோக்குவார்க்கு அவை ஒரு சிறிதும் விளங்கா. இங்ஙனஞ் சிற்றறிவுஞ் சிறு தொழிலுமே முகிழ்ப்பதற்கு ஏதுவான கருவிகளுடன் அமைந்த இம்மானுட யாக்கையின்கண் இருக்கப்பெறுவேமாகிய யாம் இறைவன் செய்யும் வியக்கத்தக்க அருட்காரிய வியல்பை எங்ஙனங் காண்பேம்? எவ்வாறு உரைப்பேம்? படைப்புக் காலத்தின் முன்னும் பேரூழிக்காலத்தின் பின்னும், மிகுநுட்ப இன்மைவடிவமாய் ஒடுங்கி விளங்கும் இவ்வுலகங்களையும் இவ்வுலகங்களில் வைகிய உயிர்களையும் யாண்டும் பரவி எல்லாப் பொருள்களையும் இருந்தவாறே கண்டறியும் ஞானக்கண் உடையனாகிய இறைவன் ஒருவனே காண்பான்; அக்காலத்தில் மிகு நுட்பகாரண இன்மைவடிவமான இவ்வுலகங்களெல்லாம் வெள்ளிடையிற் றோன்றும் மலைபோல அவன் ஞானக் கண்ணெதிரே பருப்பொருளாகவே விளங்குவனவாம். இவ்வாறாகலின் ஊழிக்காலத்திலே இவ்வுலகங்களெல்லாம் வெறும்பாழாய் ஒழியும் என்பார் மொழி ஒரு சிறிதும் அடாதபோலியாய் முடியுமென்றுணர்க. உள்பொருளை இல்லாத பாழ்பொருளாகத் திரித்தல் ஒருவரானும் ஒருகாலத்தும் முடிவதன்று என்பது பற்றியே விஞ்ஞானநூல் வல்லராகிய ஆங்கில நன்மக்களும் *பொருளழியாமை என்று தலைப்பெயரிட்டு இப்பொருளைத் தம் நூலுட்பரக்க ஆராய்ச்சி செய்வா ராயினர். இனி, சங்கராச்சாரியார் வேதாந்த சூத்திரவுரையிலே பிரமம் ஒன்றே உள்ள தென்றும் அதற்கு வேறாக ஒரு பொருளில்லை என்றும், காணப்படுகின்ற இந்த வுலகங்களெல்லாம் மெய்யான அப்பிரமத்திலே பொய்யாகத் தோன்றும் பொய்த்தோற்றங்களேயாமென்றும் தமக்கு வேண்டியவாறே யுரைத்தார். இது பொருந்தாமை காட்டு வாம். யாம் அறிவு விளங்கப் பெறாது கிடந்த குழந்தைப் பருவந் தொட்டு இதுகாறும் இவ்வுலகியற் பொருளின்கட் பழகி முதிர்ச்சியடைகின்ற அறிவின் வல்லமையாற் காணப்படாத கடவுள் ஒருவன் உண்டென்றும் அனுமான வுணர்வெல்லாம் காட்சி யுணர்வின் வழி நிதழ்வனவாகலான்; உண்டி சமைக்கின்றஅறையிலே தீ மூட்டக் கண்டு புறம்போந்து மேல் நோக்கியவழிப் புகை சொல்லுதலைப் பன்னாட் கண்டிருந்தான் ஒருவன் தான் வேறு ஓர் ஊர்க்குப்போம் நெறியில் ஒரு கூரையின் மேற் புகை செல்லக் கண்டு ஆண்டு அதன் கீழ் நெருப்புண்டென்று முன்னையறிவொடு சார்த்தியளந் துணர்வானாவது. இவ்வாறு தீ மூட்டக் கண்டு புறம்போந்து மேல் நோக்கியவழிப் புகை சொல்லுதலைக் கண்டு ஆண்டு அதன் கீழ் செருப்புண்டென்று முன்னையறிவொடு சார்த்தியளந்துணர்வானாவது. இவ்வாறு தீ மூட்டுந்தோறெல்லாம் புகை யுண்டாதலை முன்னறியாதான் பின்னொரு காலத்துத் தான் கண்ட புகையினாற் றீயுண் டென்று அறியுமாறு யாங்ஙனம்? ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுக் காண்டலானும், ஒன்றைப் பிறிதொன்றின் வேறாகக் காண்டலானும் மக்களெல்லாம் அறிவுடையராகின்றாரென்பது தருக்கநூலார்க்கெல்லாம் உடன் பாடாம். இங்ஙனங் காணப்படும் உலகத்தாற் காணப்படாத கடவுளையுணர்தல் வேண்டுமென்பது பற்றியே தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் ஆதி பகவன் முதற்றே யுலகு என்று உலகின்மேல் வைத்துக் கூறினார். இனி உலகமே பொய்யாய் ஒழிந்தவழி, அவ் வுலகின்மேல் வைத்து உணரப்படுவதாகிய பிரமமும் பொய்யாய் ஒழிந்திடுமாகலற் பிரமம் மட்டும் உள்பொருளாய் நிலையுமென்று அவருரைத்த வாதம் போலியாயொழியும். அல்லதுஉம், காணப்படாத அருவமாகிய பிரமத்தின்கண்ணே உருவமாகிய இவ்வுலக வேறுபாடுகளை யெல்லாங் காணுமாறு யாங்ஙனம்? அல்லதுஉம் பிரமத்தைத் தவிர வேறு இரண்டாம் ஒரு பொருளில்லையாயின் அப்பிரமத்தின் கண்ணே அவ்வாறு காண்பான் தான் யார்? இவ்வாறு எழூஉம் பல்வகை ஐயங்களாற் சங்கராச்சியார் உரைப்பொருள் ஒருவாற்றானும் பொருந்தாதென்பது இனிது விளங்கலானும், அவருரை, நேரிடையாகக் கண்டறியப்பட்டு எல்லாரானுந் தழீஇக் கொள்ளப்படும் விஞ்ஞானநூற் பொருளோடு இணங்காமல் மாறுகொண்டழிதலானும் சங்கராச்சாரியாரைப் போலவே பிரமத்தைத் தவிர மற்றொழிந்த பொருளெல்லாம் பொய்யாமென்றுரைத்த கான்ட், ஈகிள், பிநோஸா முதலான ஐரோப்பிய அறிஞர்களின் கோட்பாடெல்லாம் விஞ்ஞானநூற் பொருளோடு ஒற்றுமையுறுதலின்றிப் பொய்படுகின்றவென்று அவை யெல்லாம் நன்றாராய்ச்சி செய்து நூலெழுதிய* குரும்ராபர்ட்சன் என்னும் ஆங்கில அறிவுநுற் புலவர் உண்மை தோன்ற நிலையிட்டு உரைத்தலானும் உலகம் பொய்யென்று அங்ஙனங் கூறுவாருரை பொய்யாமென்று மறுக்க. இனி, இங்ஙனம், வெறும்பாழினின்று உலகைப் படைத்தான் என்றும், இறைவனே உலகமாய்த் தோன்றினானென்றும், இறைவன்கண் இவ்வுலகமும் பிறவு மெல்லாம் மயக்கவுணர்வாகத் தோன்றும் பொய்ப் பொருள்களா மென்றுங் கூறுந் சமயிகள் உரை அறிவு நூல் தருக்க நூல் பௌதிகநூல் முதலியவற்றிலுண்மைப் பொய்ப் பொரு ளோடு ஒற்றுமைப்படாமையான், அச்சமயிகளெல்லாம் சமய நுலொடு தத்துவநூல் தருக்க நூல் பௌதிக நூல் முதலியவற்றின் பொருளியையா, மற்று அவை ஒவ்வொன்றுந் தத்தம் நிலையில் மேற்கோளாம் இந்நான் கனையும் ஒன்று சேர்த்து இணக்கியாராய்தல் பொருந்தா தென்று தமக்குத் தோன்றியவாறே கூறி இழுக்குறுகின்றார். யாதாயினும் ஒரு சமயம் மெய்ச்சமயமானால் அச் சமயப்பொருள் எல்லா நுல்களினுண்மைப்பொருளோடும் ஒருமையுற்று எடுத்துக்காட்டாக நிலையுறுதலுறும். ஒருசமயம் பொய்ச்சமயமாயின் அதன் பொருள் மற்றை உண்மைநுற் பொருளோடும் இணங்காமல் மாறுகொண்டு அழிவெய்தும், அற்றேல் அவ்வெல்லா உண்மை நூல் பொருளொடும் இயைபுற்று எடுத்துக் காட்டாய் நிலையுஞ் சமயம் ஒன்று உண்டோவெனின்;- உண்டு. அது தான் சித்தாந்த சைவசமயமாம். யாங்ஙனமோவெனிற் காட்டுதும். ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார், சிவஞான போதத்தில் ஈசுர நிச்சயம் பண்ணுகின்ற முதற் சூத்திரத்திலே உலகாயத சமயியை மறுத்துத் தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின் என்று உலகத்தை எக்காலத்தும் உள் பொருளென்றே நிலையிட்டு உரைத்தலானும், உலகம் இல்பொருளாய் வெறும் பாழினின்றே தோன்றி நின்று அழியுமெனக் கூறும் புத்தரை மறுத்து உலகமுள்ளது, இல்லதற்குத் தோற்றமின்மையின் என வைத்துச் சித்தாந்தப் படுத்திக் கூறலானும் பிறவாற்றானும் என்பது. இவ்வாறு சித்தாந்த சைவம் போதிக்குஞ் சிவஞான போதத்தின்கட் போந்த மெய்ப்பொருள்க ளெல்லாம் ஏனைத் தத்துவ தருக்க பௌதிக நுல்களின் உண்மைப் பொருளோடொருமையுற்று இணங்கி மற்றைச் சமய முடிபொருட்கெல்லாந் தலைமையாய் அமர்ந்திருக்குந் தெய்வப் பெற்றிமை தேறவல்லார்க்கு மெய்யாக நிலைபெறுஞ் சமயமொன்று ஏனை நன்பொருணுல்களொடு மாறுபாடுதல் ஒரு சிறிதுமில்லையென்பது இனிது விளங்கும். இன்னுஞ் சமயம் நேரும்போதெல்லாம் சைவசித்தாந்தப் பொருளொன்றுமே ஏனை உண்மைப் பொருணூல்களோடு இணங்குமாறும், மற்றைச் சமயப் பொருள்கள் அவ்வாறு இணங்காமை முறையே தந்து காட்டுவாம். 11. சைவமும் சைவர் நிலையும் சிவபெருமானொருவனே வழிபடற்பாலனாகிய முழு முதற் கடவுளென்றும் அங்ஙனம் அவனை வழிபடுவார்க்கு இன்றியமையா அடையாளங்களாவன திருநீறு சிவமணியணிதலும் திருவைந் தெழுத்தோதலுமேயா மென்றும் இவற்றையெல்லாம் ஆன்மாக்கள் இனிதுணருமாறு சுருக்கமாகவும் விரிவாகவுந் தெரிக்கலுறும் நூல்கள் வட மொழியில் வேதசிவாகமங்களுந் தென்மொழியில் தேவார திருவாசக முதலிய பன்னிரண்டு திருமுறைகளும் சிவஞானபோத முதலிய பதினான்கு சித்தாந்த அருளோத்துக்களு மாமென்றும் ஆணைவரம்பு நிறுத்தி அவ்வரம்பு கடவாது ஒழுகும் நல்லான்மாக்களுக்கு வீடு பேற்றின்பம் பயப்பது சைவசமயமாம்; இங்ஙனம் கிளந்தெடுத்துக்கூறிய சைவசமய வழிநின்று அச்சமயவிதிகளை வழுவாது கடைப்பிடித்து ஒழுகுங் கடப்பாடுடைய நன் மக்களெல்லாருஞ் சைவ ரென்று வேண்டப்படுவர். இனித் துரியப்பொருளாகிய சிவனை வழிபடுதலும், அவனடையாளங் களாகிய திருநீறு சிவமணியணிதலும் இவற்றை யறிவிக்குந் தேவார திருவாசக முதலிய நூலாராய்ச்சியுமாகிய மூன்றும் ஒன்றை ஒன்று இன்றியமையா நெறிப்பாடுடையனவாம். இங்கே சிவம் என்ற துரியப்பொருள் பிரமன் விண்டு உருத்திரன் என்று அண்டாண்டு உபநிடதங்களில் ஓதப்படும் முப்பொருள்களும் இறுதியில் நின்ற உருத்திரபத வாச்சியப் பொருளன்று. மற்று அது குணப்பொருளாகிய அம் மூன்றனையுங் கடந்து மேல்விரிந்து செல்லும் நான்காவதாகிய துரியப்பொருளாவதாம். இக்கருத்துப் பற்றியே அதர்வசிகோப நிடதத்தில் இவையனைத்தும் பிறக்கின்றன: இப்பிரமன் விண்டு உருத்திரன் இந்திரனென்னுமவரெல்லாம் பிறக்கின்றனர்; பூதங்களோடு புலன்களெல்லாம் பிறக்கின்றன; காரணங்களைத் தோற்றுவிப்பானுந் தியாதாவுமான காரணன்றான் பிறப்பானல்லான்; காரணப் பொருளும், செல்வ மனைத்தையுமுடையானும் அனைத்திற்கும் ஈசுரனுமான சம்பு விண் நடுவிற் றியானிக்கப்படும் என்றும், பஞ்சப்பிரமோப நிடதத்தில் மூன்றவத்தைகளைக் கடந்ததும் துரியப் பொருளும் மெய்ம்மையானதும் ஞானமயமாக வுள்ளதும் நான்முகன் திருமால் முதலியோராற் போற்றப்படுவதும் எப்பொருளும் பிறத்தற்கு நிலைக்களமாவதும் மேலானதும் ஈசபத வாச்சியப்பொருள் என்றும் மறைமொழிகள் ஒருங்கெழுத்து அறுதியிட்டன. இவ்வாறே தேவர்கோ வறியாத தேவதேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை, மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத்தெந்தை என்று திருவாசகத் தமிழ்மறையினும் போந்தவாறு காண்க. இனிச் சுவைதாசுவதரவுபநிடதத்திற் போந்த எவன் தானொருவனா யிருந்துகொண்டே எல்லாப் பொருள்களையு மயக்குவானோ அவன் தன் முழுவல்லமையால் எல்லாவற்றையும் எல்லாவுலகங்களையும் ஆளுகின்றான்; எவன் தோன்றுங்காலத்தும் நிகழுங்காலத்துந் தான் ஒருவனாகவே இருக்கின்றானோ அவனை அவ்வாற்றான் அறிபவர் இறத்தலைக் கடக்கின்றார்கள். ஏனெனில், இவ்வுலகங்களையெல்லாந் தன் முழுமுதன்மையால் ஆட்சி செய்கின்ற உருத்திரக்கடவுள் ஒருவனேயா தலால் அவனுக்கு வேறாகப் பிறிதொரு பொருள் உண்டென்று அறிவுடை யோர் சொல்லார்கள்; அவன் படைப்பானொருவனை உண்டாக்கி எல்லாவுலகங்களையும் படைப்பித்துத் தான் அவ்வெல்லா ஆன்மாக்களிலும் உயிர்க்குள்ளுயிராய் வேறுவே றமர்ந்திருக்கின்றான்; அவன் ஊழிக் காலத்தில் தன் சினத்தீயால் எல்லாவற்றையும் விழுங்குகின்றான்; எல்லாப் பக்கங்களில் விழிகளும், எல்லாத் திக்குகளின் முகங்களும், எல்லாத் திக்குகளிற் புயங்களும், எல்லாவிடங்களிற் பாதங்களும் உடையனாய் விண்ணையும் மண்ணையும் உண்டுபண்ணித் தன் கைகளானும் சிறகுகளானும் அவற்றை ஒழுங்குபடுத்துகிற அவன் ஒருவனே கடவுள்; இங்ஙனம் எல்லாவற்றிற்கும் முதல்வனும், பிறப்புக் காரணனும், தேவர்களையெல்லாம் பிறப்பிக்கின்றவனும், அவருள்ளும் இரணிய கருப்பனை முதலிற் படைத்திட்டவனுமாகிய உருத்திரமூர்த்தி எமக்கு மெய்யறிவைத் தோற்றுவிக்கக் கடவன் என்னும் அருள்மொழி மும்மூர்த்திகளுட்பட்ட குணருத்திரர்மேற் செல்வதின்றித் தத்துவங்களை ஒடுக்கிக் கொண்டு அத்தத்துவங்களுக்கு மேற்பட்டதாய் விளங்குந் துரியமுழுமுதற் கடவுளான பேரழிவு செய்யும் உருத்திரக்கடவுளை வழுத்துதற் பொருட்டு ஆண்டெழுந்த தொன்றாகலின் அதுபற்றி ஈண்டு வரக்கடவதோ இழுக் கில்லை யென்றொழிக. இனி அங்ஙனங் காட்டிய முத்திற முறையுள்ளும் சிவவழிபாடு ஏனையிரண்டினுஞ் சிறந்ததொன்றாதலானும், அச்சிவவழிபாடு பற்றியே அதற்குறுப்புக்களான திருநீறு சிவமணியணிதல் திருவைந்தெழுத்துமறை வேதோபநிடத நூலாராய்ச்சியும் பிறவும் வேண்டப்படுதலல்லது அவ்வழி பாடில்வழி அவை பயப்பாடின்றி வறிது கழிதலானும் அச்சிவவழிபாடு ஒன்று தானே ஏனையிரண்டினுஞ் சிறந்தெடுத்துப் போற்றப்படுந் தலைமையுடைத்தாம். என்னை? கொழுநனை யுடையளான ஒரு தலைமகள் தான் தனக்கினிய அக்காதலனையுடையளான ஒரு தலைமகள் தான் தனக் கினிய அக்காதலனையுடையளாம் அவ்வியைபு பற்றியே அவடனக்கு இன்றியமையாச் சிறப்பினவாகிய மங்கலநாண் மஞ்சட் பூச்சுக் கலவைச்சாந்து நறுமுறிக்கொழுந்து விரை மலர்த் தொடையல் செழும் பட்டாடை முதலியன வேண்டப்படுவதன்றி, அவனில்வழி அவையொருசிறிதும் அவளால் விரும்பப் படாவாகலினென்பது இன்னும், அரசுரிமை பெற்றானோர் ஆண்மகன் தான் அங்ஙனமெய்திய அவ் வுரிமை பற்றியே அதற்கடையாளங்களான மணிமுடியும் வெண் கொற்றக்குடையும் அரசவடையாளமும் அரியணை வீற்றிருப்பும் ஒருங்கு பெற்று ஆட்சிசெலுத்துதலன்றி, அவ்வுரிமையில்லாதானொருவன் அங்ஙனம் அடையாளங் கொள்ளானாகலானுமென்பது. இனிக் கொழுநனையிலளாகிய ஒரு பெண் மகள் மங்கலநாண் முதலிய அழகுடையாளாம் வழி அவளைத் தூர்த்தையென் றுலகம் பழிக்குமாறு போலவும் அரசுரிமை யில்லாதானொருவன் அஃதுடையானே போல, மணிமுடி முதலிய அடையாளங்கொள்வுழி அவனரசனால் ஒறுக்கப் பட்டுச் சிறைக்களத்திடப்படுமாறு போலவும் சிவவழிபாடு இல்லாதானொ ருவன் அஃதுடையானே போலத் திருநீறு சிவமணியணிந்து பிறரை வஞ்சித்தன் மேற்கொண்டவழி அவன் தன் செயலையுணர்வாரெல்லாரானும், ஓ! ஓ! இவன் கொடியன், பாவி, வஞ்சகன், என்று இழித்துக் கூறப்படுதன் மேலும் மறுமையிற் சிவபெருமானால் ஒறுக்கப்படுதலும் உடையனாம் .சிவபெருமானைத் தெய்வமாகக் கொண்டு வழிபடும் நற்குலத்திற் பிறந்த சைவர்களே! எம்மரிய உடன்பிறப்பாளர்களே! நமக்கு இந்தமக்கள் யாக்கையும் அதனினுஞ் சிறந்த சைவகுலமும் முற்பிறவிகளில் ஈட்டிய பெருந்தவப்பயனால் வாய்ப்புப்பெற்றும் அவற்றாற் பெரும் பயனை நாம் ஒரு சிறிதும் எண்ணாமல் வாளாது வாணாளைக் கழித்தல் நன்றோ? நாம் வழிபடும் முழுமுதற்கடவுள் சிவபெருமான் ஒருவனே என்று துணிந்து அவனைப் போற்றும் நன்முறை அறியோமாயின், நாம் எவ்வளவுதான் திருநீறு சிவமணியணிந்தாலும் அவற்றால் நமக்குப் பயன் வருவ தன்று. சிவபெருமானைப் போற்றும் பொருட்டாகவே அவன்றிருவடை யாளங்களான திருநீறும் சிவமணிமாலை யும் அணிகின்றோமென்று அறிந்து அவனை வழிபட்டான் மட்டும் நாம் வேண்டிய வாறெல்லாம் நமக்கு இம்மை மறுமைப்பயன்களை யருளி இறுதியில் அவன்றன் றிருவடிப் பேரின்பத்தையும் நமக்கு ஊட்டுவான். இனி இங்ஙனங் கூறுதல் பற்றி நாம் ஏனைச் சமயங்களையும் அச்சமயிகள் வழிபடுந் தெய்வங்களையும் இகழ்ந்துரைக்கின்றோமென்று நினையாதீர்கள். அங்ஙனம் நாம் ஒருகாலத்துஞ் செய்யோம். நாம் முதல் இதழில் வரைந்த இவ்வுலகின்கட் பல்வேறுபடப் பரந்து கிடக்குஞ் சமயங்களெல்லாந் தம்மைப் பின்பற்றி யொழுகும் ஆன்மாக் களின் பக்குவ முறைமைக்கேற்பவும், அப்பக்குவ முறைமை யால் அவரறிவு விரிந்து செல்லுந் தன்மைக்கேற்பவுந் தாமும் ஒரு நெறிப்படாவாய்ப் பல நெறிப்பட அகன்று தாந்தாம் நுதலிய பொருளையே உண்மையெனத் துணிந்து ஆராய்ந்து அவை தம்மாலுறுதிகொண்டு உய்யுநெறி தேடுகின்றன; இங்ஙனம் ஒன்றினொன்று மறுதலைப்பட்ட இலக்கணங்களுடையவாயினும், ஒன்றினொன்று குறைந்த குணங்க ளுடையவாயினும், ஒன்றினொன் றுயர்ந்த குணங்களுடைய வாயினும் எல்லாச் சமயங்களும் மெய்ச்சமயங்களேயாய், எல்லாம் வீடுபேற்றின்கண் உய்க்கும் வழிகளுந் துறைகளுமேயாய், முழுமுதற் பெருங்கடவுளாகிய தந்தையை ஆன்மாக்களாகிய பசுங்குழவிகள் சென்று அணையுங்காறும் அறிவூண் தந்து வளர்க்குந் தாய்மார்களேயாய் விளங்குவன என்னும் மொழிக் கூறுகளே அதற்குச் சான்றாகும். மற்று நங்கருத்து யாதோவெனின்; - எல்லாச் சமயி களும் தாந்தாம் உண்மையெனக் கொண்டு போற்றுந் தெய்வங்களைத் தாந்தாம் பின்பற்றி யொழுகும் முறை பிறழாது தழுவக்கொண்டு உறுதிபெறல் வேண்டுமென்பதே நங்கருத்தாவதாம். இதனை விடுத்துச் சைவனொருவன் சிவ வழிபாடு நீங்கி வேறு சமயிகள் வழிபடுத் தெய்வங்களைப் பாராட்டிப் போற்றுதலும், அவ்வாறே அவ்வேறு சமயங்கள் தம் மதங்களுக் கிணங்காத பிற சமயத் தெய்வங்களைப் பாராட்டிப் போற்றுதலும் வரம்பழித்துச் செய்யு முறையாதலால் அவை பெரிதும் இடர்ப்படுதற்கேதுவாய் முடியு மென் றொழிக. அற்றேல், சாக்கிய நாயனார் தாந்தழுவிய பௌத்த சமய வழி நின்று உறுதி பெறமாட்டாராய்ச் சிவவழிபாடு இயற்றியது வழுவாம்போலுமெனின், அற்றன்று, அவர் மேலைப் பிறவிகளிற் செய்து போந்த தவ முதிர்ச்சியால் தமக்கு மெய்யறிவு விளங்கி மிகு மேலான பக்குவமுடையராகப் பெறுதலால், அப்பக்குவ நிலைக் கேலாத பௌத்த சமயம் விடுத்து அதற்கேற்பதான சைவம் புகுந்து சிவனை வழிபட்டு உய்ந்தாராகலின் அது வழுவாமாறு யாண்டைய தென்றொழிக. அஃதாயின், அவர் தம் மேலைப் பிறப்புத் தவமுதிர்ச்சிக்கேற்பச் சைவ சமயத்திற் பிறந்து அவ்வாற்றாற் சிவனை வழிபடுதலன்றே மரபா மெனின் நன்று சொன்னாய். அவர் மேலைப் பிறப்புக்களில் அரிதாற்றிய தவவூழ் அவரைச் சைவ சமயத்திற் பிறப்பித்து ஆண்டு நின்றவாறே அவர்க்கு மிகு மேலான பக்குவத்தைப் பயப்பிக்கமாட்டாதாய்ப் பௌத்த சமயத்தின் கண்ணே அவரைப் பிறப்பித்து ஆண்டு நின்றவாறே இடையொரு காலத்து அம்மேலான பக்குவத்தைப் பயப்பிக்கும் பெற்றித் தாய் முற்கொண்டு அமைந்து கிடந்தது; பின் அக்கிடப் பின்படியே முடிந்ததாகலின் அது கடாவன்றென மறுக்க. இனிப் பல்வகைச் சமய முடிபொருள்களையும் நுண்ணிதாக ஆய்ந்து அதனால் மெய்யறிவு மிக விளங்கித் தாம் மெய்யெனக் கண்ட ஒரு சமயத்தைப் பின்பற்றி யொழுகுங் கடப்பாடுடையார்க்குத் தஞ்சமய வரம்புகடந்து சேறல் குற்றமன்றாம். இனி இவ்வாறெல்லா மன்றித் தஞ்சமயப் பொருளுண்மையும் பிற சமயப் பொருளுண்மையும் அளந்தறிய மாட்டாதார் தஞ்சமய வரம்புகடந்து ஒழுகல் பெரியதொரு குற்றமாமென்றொழிக. இனிச் சைவசமயத்திற் பிறந்து சிவனை வழிபடும் நல்வினையுடைய நன்மக்கள் அந்நெறி கடைப்பிடியாது தம் மனம்போனவாறெல்லாம் புகுந்து தம் பெருமையிழத்தல் நன்றன்றாம். சைவ சமயிகள் சிவபெருமானை யன்றி ஏனைச் சமயத் தெய்வங்களை வழிபட இடம் பெறமாட்டார். இதற்குத் திருவாதவூரடிகள் அருளிய, கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும் நள்ளே னிததடி யாரொடல் லானர கம்புகினும் எள்ளேன் றிருவரு ளாலே யிருக்கப் பெறினிறைவா உள்ளேன் பிறதெய்வ முன்னையல்லா தெங்க ளுத்தமனே என்னுந் திருபாக்கே யுறுசான்றாமென்க. இனிச் சிவபெருமானைப் போற்றுஞ் சைவர்களுக்குச் சிவ வழிபாடு ஒன்றே சாலுமாகலின், திருநீறு சிவமணியணிதலும் பிறவும் அவர்க்கு இன்றியமையாதாமென்றுரைத்தவா றென்னையெனின்; - நன்று வினாயினாய், கொழுநனையுடையனான மனைக்கிழத்திக்கு மங்கலநாண் முதலிய அடையாளங்களும், அரசுரிமை யுடையனான ஓராண்மகனுக்கு மணிமுடி முதலிய அடையாளங்களும் இன்றியமையாது வேண்டப்படுகின்றவாகலின், சிவனைப் போற்றுஞ் சைவர்களுக்கு அவையும் இன்றியமையாது வேண்டற்பாலனவேயாம். இனி ஒரு தலைமகட்கும் ஓர் அரசற்கும் அவ்வவர்க்குரிய அன்பும் அதிகாரமுமே சாலுமாகவும், அவற்றின் வேறாக அடையாளங்கள் பிறகோடறான் ஏற்றுக்கென்று ஆராயலுறுவார்க்குத் தந்நிலையில் நின்றவழி உணர்வின்றிக் கிடந்த ஆன்மாக்கள் எழுவகைத் தோற்றத்துட்பட்ட உடல் களையும் அவ்வுடல்களில் இன்ப நுகர்ச்சிக்கு ஏதுவாய்க் கிடந்த மெய், வாய், கண், மூக்குச், செவி முதலிய புறக்கருவிகளையும், மனம் சித்தம் அறிவு ஆணவம் முதலிய அகக் கருவிகளையும் ஒருங்கு தலைக்கூடி உலகத்தோடு ஒருமைப்பாடுற்று அறிவு விரியப்பெறுபவென்பதும், இங்ஙனம் உடலோடு இயைபுறுதன் மாத்திரையானே குறிவழிச் செல்லும் அறிவு முகிழ்க்குமென்பதும் இனிது விளங்கும். குறியெனினும் அடையாளம் எனினும் ஒக்கும். இனி மானுடரெல்லாரும் ஆண் பெண் எனப் பகுக்கப்படும் பகுப்புடையராதலும் அவ்வவர்க்குரிய குறிகுணச் சிறப்பு அடை யாளங்கள் பற்றியேயாம். அவ்வாண் பகுப்பாருள்ளும் இவனெமக்குத் தந்தை இவன் உடன்பிறந்தான் இவன் புதல்வன் இவன் ஏதிலான் இவன் நண்பன் என வுணர்ச்சி வேறுபாடுறுதலும் அவ்வவர்க்குரிய சிறப்பு அடையாளங்கள் பற்றியேயாம். இனி அப்பெண் வகுப்பாருள்ளும் இவள் எமக்குத் தாய் இவள் உடன்பிறந்தாள் இவள் புதல்வி இவள் ஏதிலாள் இவள் கிழமையுடையாள் என்றற்றொடக்கத்தான் வேறு வேறறிதலும் அவ்வவரிடைக் காணப்படும் சிறப்பு அடையாளங்கள் பற்றியேயாம். இனி ஆங்கில நூலாரும் ஒரு பொருளொடு வேறொன்றனை ஒப்பிட்டுக் காண்டலானும், ஒன்றை ஒன்றின் வேறாகக் காண்டலானும் அறிவுமலர்ச்சியுண்டாம் என்று கூறுப, ஆகவே, உலகத்துட்டோன்றி அவ்வுலகியற் பொருளின்கண் அதுவதுவாய்ப் பதியும் அறிவுடைய ஆன்மாக்கள் அடையாளங்கள் பற்றிப் புணர்ச்சியுடையராகப் பெறுதல் இயற்கையாகவே வாராநின்ற நிகழ்ச்சியாதலின், அது தன்னொடு முரணி வேறுவேறையுறல் பொருத்த மின்றாம். இனி இவ்வாறே ஒருவனைச் சைவனென்றும் ஒருவனை வைணவனென்றும் ஒருவனைப் பௌத்தனென்றும் ஒருவனைச் சமணனென்றும் அறியும் அறிவெல்லாம் அவ்வவர்க்குரிய ஈகரவழிபாடு கருமவுறைப்பு நூலாராய்ச்சி முதலிய அடையாளங்கள் பற்றியே நிகழ்வதல்லது பிறிதன்றாம். இனி அவரவர்க்குரிய சமய அடையளங்களும் அவரவர்க்குயிர்போற் சிறந்தனவாய் அவர் செய்யும் இறைவழிபாட்டின்கண் நெஞ்சம் நெகிழ்த்திக் கடவுளன்புச் சுவைமிகுவித்து மேம்பாடுறுவனவாம். இப் பெற்றியவான அவ்வடையாளங்கள் அவ்வச்சமயத்தாரெல்லாரானுங் குறிக்கொண்டு போற்றப்படுவன வாதலின் சைவர்க்கு, திருநீறு சிவமணியணிதல் இன்றியமையா வடையாளச் சிறப்பின வென்பது தெற்றென விளங்கும். இனி, வடமொழியில் வேதாகம நூலாராய்ச்சியுந் தென்மொழியில் தேவார திருவாசக சிவஞானபோத நூலாராய்ச்சியும் வேண்டற்பாலவென்ற லென்னை, திருநீறு சிவமணி புனைந்து திருவைந்தெழுந்தோதி யுண்மையன்பாற் சிவவழிபாடு இயற்றுதலொன்றே யமையுமெனின்; - அற்றன்று, தாம் மட்டும் அங்ஙனம் வழிபட்டு உய்யுநெறி யொன்றே கடைப்பிடித்தல் தன்னைப்பற்றுத லென்னுங் குற்றமாதன் மேலும் பிற உயிர்த்தொகைகள் பிழைத்துப்போம் மெய்ந்நெறிகாட்டி வழிப்படுக்கும் அருளின்றாய் முடிதலானும், அருளின்றாகவே உயிர்கட்குரிய ஏனைக் குற்றங்களெல்லாமும் ஒருங்கு வந்து சேறலானும், அதனாற் பிறவி யறாமன் மேன்மேற் பெருகி வருதலானும் அவர்தாம் உண்மைச் சிவவழிபாடு செய்தாரல்லராவர்; இனித் தாமுய்யும் பொருட்டுச் சிவவழிபாடு இயற்றுதல் போலவே எல்லா உயிர்த்தொகைகளும் உய்கவென்னும் அருள்மிகுந்து அவர் தமக்கெல்லாம் அச்சிவ வழிபாட்டின் அருமை பெருமைகளை விரித்துரைத்து அறிவு கொளுத்தல் வேண்டுமாகலானும், அவ்வாறு அறிவு கொளுத்தற் பொருட்டுத் தம்முரையில் அவரைத் துணிபு ஒருப்படுத்தல் வேண்டு மாகலானும், அங்ஙனந் துணிபொருப்பாடு உறுவித்தற்கு வேதாகம நூலாராய்ச்சி இன்றியமையா நெறிப்பாடுடையதாம் அல்லதூஉம், வேதாகமநூலுரைப் பொருள் செவ்விதின் ஆய்ந்து அவ்வாற்றான் முகிழ்க்கும் மெய்யறிவின்கன் இறையன்புச் சுவைத்தேன் ஓயாது சுரந்து இறவைன் றிருவடி யெண்ணத்தின்கண் மனவெழுச்சி மிகுக்கும் உரிமைப்பாடு விளைதலானும் அவ்வாராய்ச்சி தமக்கும் பயப்படுபெரிதுடைத்தாம். இருவழியானுஞ் சிறந்த வடநூல் தென்னூலாராய்ச்சி சைவரெல்லாரானும் ஒழுங்காகச் செயல்படுதல் வேண்டும். இங்ஙனம் மூவேறு வகைப்படுத்து எடுத்துக்கொண்ட சிவவழிபாடும் திருநீறு சிவமணியணிதலும் திரு வைத்தெழுந்தோதலும் பொருணூலாராய்ச்சியும் சைவசமய நிலைக்குரியனவாம். இனி இக்காலத்துச் சைவர்களுட் சிலர் சிவனை வழி படுதலறியாராய்ச் சிவனென்ன விண்டுவென்ன, எல்லாம் ஒன்றுதான் என்றுரைத்து அன்பிலராய் நாட் கழிக்கின்றார். வைணவசமயிகள் திருமாலையே தாம் போற்றும் முழுமுதற் கடவுளென்று துணிந்து அவ்வாற்றான் வழிபடற்பாலார். சைவர் சிவனையே அங்ஙனத் துணிந்து வழிபடற்பாலார். இம்முறை திறம்பி இரண்டையு மொன்றெனக் கூறி அன்பிலாராய் ஒழுகி நாட்கழித்தல் எந்தச்சமயிக்கும் நன்றாகாது. ஈகரவழிபாட்டிற்கு ஒரு தலையான் வேண்டும் உள்ள நெகிழ்ச்சி எல்லாத் தெய்வங்களையுஞ் சமமாக காணும் பொது நோக்கத்தாள் வருவதன்று. மற்ற அஃது, ஒரு பொருளை ஏனையவற்றினின்றும் வேறுபிரித்துத தலைமைப் பாடுடையதெனக் காணுஞ் சிறப்பு நோக்கத்தால் வருவ தொன்றாம். இவ்வியல்பு பற்றியே உலகெங்கும் பல வேறு வகைப்பட்ட சமயங்களும் சமயத் தெய்வங்களும் பலப் பலவாய் விரிந்தன. அவ்வச்சமயத்தாருந் தத்தமக்கு உள்ள நெகிழ்ச்சி செல்லும் வகையான் தாந்தாம் விரும்புங் குணங்குறி முதலியன கொண்டு தத்தமக்கியைந்த வழியானெல்லாம் சிவபிரானைப் போற்றுதல் செய்து போதருகின்றார். இவ்வாறு விரிந்த சமயங்களையெல்லாம் ஒருமைப்படுத்த லாவது. அல்லதவற்றையெல்லாம் அழிவு செய்து மெய்ச் சமய மொன்றனை நிறுத்தலாவது யார்க்கும் இயல்வதன்று. அங்ஙனஞ் செய்தல் சிவபிரானுக்குத் திருவுள்ளமுமன்று. அவர்க்குத் திருவுள்ளமானால் ஒரு கணத்தில் அவ்வெல்லாச் சமயங்களும் ஒருமைப்பாடுறுமன்றோ? ஆகலான் எல்லாச் சமயிகளுந் தத்தஞ் சமயநூல் ஆணைவரம்பு கடவாது அவ்வச் சமயவிதி வழி யொழுகி அதனால் அறிவு முதிர்ச்சி யடைந்து மேன்மேற் சமயங்களிற் பிறந்து சித்தாந்தமாக நிலைபெறும் முடிநிலைச் சமயமொன்றால் நேரே சிவபிரான் றிருவடிப் பேரின்ப வீடுபேறு பெறற்பாலார். இங்ஙனமின்றித் தஞ்சமய வரம்பு அழித்து அன்பிலராய் எல்லாம் ஒன்றுதான் எனக் கூறுதல் மக்கட் பிறவி பேறு இழப்பதொன்றாய் முடியும். அஃது யாங்ஙனமோவெனின்; - பொருள் வேண்டி ஆடவர் பலர்தோள் முயங்கிக் கழிந்த பொதுமகள் அவ்வாடவர் யாவரிடத்தும் அன்பிலளாம்; அன்பிலளாகவே இன்பநுகர்ச்சியும் அவட்கின்றாம். இனித் தானின்பந் துய்த்தல் குறித்தாளாயின் அவள் தனக்கு இயைந் தானோர் ஆடவனை ஏனை ஆடவரிற் சிறப்பக் கொண்டு அவன்மாட்டுக் கழிபெருங்காதலுடையளாய் இன்பந் துய்ப்பாளாவது. இன்னும் முத்துப் பவளம் நீலம் பச்சை கோமேதகம் புட்பராகம் வைடூரியம் மரகதம் மாணிக்கம் முதலிய நவமணிகளையும் ஆராய்ச்சி செய்தலுறுவான் அத்தொகுதிக்கண் நல்லதொன்று கண்ட வழி அதனை ஏனையவற்றினுஞ் சிறந்தெடுத்து அதன்கண் கழிபெருங் காதலுடையனாய் அதனைப் பொதிந்து வைத்துப் போற்றக் காண்கின்றோம். அங்ஙனமவற்றைப் பகுத்துக்காணும் அறிவின் மதுகையில் வழி அவற்றை ஒன்றுகூட்டி அவற்றின்கண் ஆசையிலானாய் ஒழுகுதலுங் காண்கிறோம். இருந்தவாற்றால் அன்பென்னும் உள்ள நெகிழ்ச்சியுண்டாதற்குப் பொது நோக்குக் கழித்துச் சிறப்பறிவு நோக்குக் கொளல் வேண்டுவது ஒருதலையாம். ஆகவே, சைவர் களாகிய நன்மக்கள் ஏனைச்சமயத் தெய்வங்களைக் கனவினும் நினைதற்கு ஒருப்படாராய்த் தன்கொழுநனிடத்துக் கழிபெருங் காதலுடையளாய் இன்பந்துய்க்கும் மனைக்கிழத்திபோற் சிவபெருமானிடத்து அன்பு நிகழப் பெற்று வழிபாடுசெய்து உய்தல் வேண்டுமென்பது ஈண் டெடுத்துக் கூறியவற்றால் இனிது விளங்கும் இனிச் சைவ நன்மக்களிற் சிலர் திரு நீறு சிவமணி திருவைந்தெழுத்து மறை முதலிய திருவடையாளங்களின்றி சிவவழிபாடு பெரிதுடையோ மாகலான் எமக்கு அவ்வடையாளங்கள் வேண்டா என்றுரைக்கின்றார். அது பொருந்தாதென்பது மேலே விளக்கினாம், ஆண்டுக் காண்க. இனி வேறு சில சைவ நன்மக்கள் வேதாகம முதலிய வட நுலாராய்ச்சியும் தேவார திருவாசக சிவஞானபோதத் தென் நுலாராய்ச்சியும் அரியவாயிருத்தலின் அவற்றின்கண் எமக்கு மனவெழுச்சி சென்றிலது என்று கூறுகின்றார். வட நுலாராய்ச்சி யில்லாதொழியினுந் தமிழ் நுலாராய்ச்சி யேனுஞ் செய்துமென்றால் தமிழ் நுல்கள் செந்தமிழிலக்கணநெறி பிழையா நன்னடையில் எழுதப்பட்டிருத்தலால் அதன்கண்ணும் எமக்கு அறிவு சென்றிலது என்றும் உரைக்கின்றார். நல்லதங்கைக் கதை நளன் கதை இராமன் கதை பாண்டவர் கதை முதலியன போல் அத்தனை எளிதாக வருத்தமின்றி அச்செந்தமிழ் நுல்கள் விளங்கற்பாலனவா? சிவபெருமான் திருவடிப் பேரின்பவீடு, கத்தரிக்காய் புடோலங்காய் முதலிய தாவரவுணவு கொள்ளுதலானும், யாம் சைவரென்று தருக்கிக் கூறுதலானும் எய்தும் எளிமைத்தன்று. அல்லாமலும், உலகவாழ்க்கைப் பெருந் துன்பக்கடலில் தம்மறிவு தோய்ந்து பெருதுந் துயருழவா நிற்பவும் அதன்கண் எல்லாந் தமக்கு வருத்தம் இழையளவுந் தோன்றாது, இம்மை மறுமைப் பயன்றந்து உறுதிகூட்டும் அறிவு நுலாராய்ச் சிக்கண் அவர்க்கு வருத்தந் தோன்றல் நல்வினை முகிழ்ப்பு இல்லாக் குறைபாடாவதன்றிப் பிறிதென்னை? விடியற்காலையில் உறக்கம் நீங்கி எழுந்து இரவில் துயில் கொள்ளுமளவும் மெய்வியர்வரும்பக் கொல், தச்சு, நெசவு, உழவு, பொறைச்சுமை, பகடு உய்த்தன் முதலான அருந்தொழில் பலவியற்றிப் பொருள் சிறிது ஈட்டுதற்கண் நம்மனோர்க்கு வருத்தந் தோன்றுதலில்லை; ஒரு நாழிகைப் போதேனும் நன்மக்கள் குழுவிலிருந்து அறிவு நுலாராய்ச்சி செய்தற்கண் அவர்க்கு வருத்தம் மிகத் தோன்றா நிற்கும். பொய்யுரைத்தும், பொருளுடையாரைக் கண்டால் அவருவக்கும் வகை இச்சகம் பேசியும், நல்லோர் பெரியோரைப் புறம்பழித்தும், கலகவுரை நிதழ்த்தியும், விதண்டை பேசியும் வீணுரை கிளந்தும் நாளொழித்தற்கண் நம்மனோர்க்கு வருத்தந் தோன்றாது; அரை நாழிகைப் போதேனும் கடவுள் தொடர்பான நல்லுரையுரைத்து இன்பமுறுதற்கண் அவர்க்கு வருத்தமிகத் தோன்றா நிற்கும். நாட்டு வளங்கள் பல கண்டும் மலைக்காட்சிகள் பல கண்டும், கடற்காட்சி கண்டு உலாப்போயும், கலைக் கழகங்கள், அறங்கூறு அவையங்கள், தொழிற்சாலைகள், ஓவியச்சாலைகள், இன்பத் தோட்டங்கள், அறச்சோற்று மண்டபங்கள், யாவையு மலிந்த ஆவண வீதிகள் முதலான வருந்தித் திரிந்து கண்டும் நாட்கழித்தற்கண் நம்மனோர்க்கு வருத்தந் தோன்றாது; நல்லறிவுடையோரைக் கண்டு அவரோடு அளவளாவுதற்கண்ணுந் திருக்கோயில் களுக்குச் சென்று சிவபிரான்றிருவுருவத்தைக் கண்ணாரக் கண்டு களிப்பதன்கண்ணும் அவர்க்கு வருத்தம் மிகத் தோன்றா நிற்கும். புளுகுரை கேட்டும் புறம்பழிப்புரை கேட்டும் வம்புரைகேட்டும் வாதுரை கேட்டும் வாளாது நாட்தழித்தற்கண் நம்மனோர்க்கு மகிழ்ச்சிமிகத் தோன்றா நிற்கும்; பெரியோர்சொல் நீதியுரையும் நேர்மையுரையும் அறவுரையும் அறிவுரையும் அன்புரையுங் கேட்டற்கண் அவர்க்கு இகழ்ச்சிமிகத் தோன்றா நிற்கும். என்னே! என்னே! நம்மனோர் செயலிருந்தவாறு! ஆரிய நன்மக்களே! எம்மரிய உடன்பிறப்பாளர்களே! சைவசமய அன்பர்களே! இனி யேனும் இங்ஙனம் நாட்கழியாது அறிவு நுலாராய்ச்சி செய்து சிவபிரானை உண்மையன்பான் வழிபடுதற்கு மடிகட்டி எழுங்கள். உங்கட்கு அறிவு நூலாராய்ச்சி செய்வது இயலாதாயின், அவ்வாராய்ச்சி முதிர்ந்த நல்லோரைக் கூட்டி அவருரைக்கும் நல்லுரைகளைச் செவிமடுத்துப் பிழைக்கு நெறி தேடுங்கள்! முயற்சியுடையா ரிகழ்ச்சியடையார் என்னும் ஔவைப் பிராட்டியார் அருள் மொழி அறிவுரையை நினைவில் வையுங்கள்! காக முறவு கலந்துண்ணக் கண்டீ ரகண்டா காரசிவ போக மெனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏகவுருவாய்க் கிடக்குதையோ வின்புற் றிடநா மினியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாருஞ் செகத்தீரே திருச்சிற்றம்பலம் உரைமணிக்கோவை - முற்றும் - இராசமாணிக்கனார் பார்வையில் - மறைமலையடிகள் (1876 - 1950) 2014இல் நிலவன் பதிப்பகம் வெளியிட்ட தமிழ்ப்புலவர் பெருமக்கள் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இராசமாணிக்கனார் பார்வையில் -மறைமலையடிகள் (1876-1950) 1. கல்விப் பயிற்சி முன்னுரை தமிழ்நாட்டில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் போலவே பெரும்புலவராக வாழ்ந்த சிலருள் மறைமலை அடிகள் ஒருவராவர். அவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மூன்று மொழிகளிலும் வல்லவர்; சைவத்திலும் தமிழிலும் சிறந்த ஆராய்ச்சி பெற்றவர்; பல ஆராய்ச்சி நூல்கள் எழுதியவர்; அவை அனைத்தையயும் கூடுமான வரை பிறமொழி கலவாத தமிழ் நடையிலேயே எழுதி வெளியிட்டவர்; ஐயரவர்கள் வெளியிட்ட பத்துப்பாட்டு முதலிய சங்க நூல்களுக்குப் பொருத்தமான பொருள் கூறக் கூடியவர்; அரிய ஆராய்ச்சி நூல்கள் வரைந்தவர். அவருடைய செய்யுள் நூல் சங்கப் புலவராகிய நக்கீரனார் இயற்றிய திருமுருகாற்றுப் படையை ஒத்திருக்கின்றது எனின், அவரது பெருமையை என்னென்பது! சுருங்கக் கூறின், மறைமலை யடிகள் சிறந்த புலவர்; சிறந்த பேச்சாளர்; அரிய ஆராய்ச்சி யாளர்; மிக உயர்ந்த தமிழ்-ஆங்கில இதழாசிரியர்; செய்யுள் இயற்றுவதிலும் வல்லவர்; செய்யுள்களுக்கு உரை வகுப்பதிலும் இணையற்றவர். அவரைப் போல இப்பண்பு களனைத்தும் ஒருங்கே பெற்ற பெருந்தமிழ்ப் புலவரைத் தமிழகம் கண்டதில்லை என்று அறிஞர் கூறுவர். இத்தகைய தமிழ்ப் பெரியார் வரலாற்றைத் தமிழ் மாணவர்களாகிய நீங்கள் படித்தறிய வேண்டுவது உங்கள் கடமை அல்லவா? பிறப்பு மறைமலையடிகள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த் நாகப்பட்டினத்திற்கு அடுத்த சிற்றூரில் 1876-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15-ஆம் நாள் பிறந்தார். அவர் தந்தையார் சொக்கநாதப் பிள்ளை என்பவர்; தாயார் சின்னம்மையார் என்பவர். அவர்கள் சோழியச் சைவ வேளாள மரபினர். அவர்களுக்குப் பல ஆண்டுகள் வரை பிள்ளைப்பேறு இல்லை. அதனால் சின்னம்மையார் திருக்கழுக்குன்றத்தில் நாற்பது நாள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். இறைவன் திருவருளால் ஒர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்குத் திருக்கழுக்குன்றத்தின் பெயராகிய வேதாசலம் என்பது இடப்பட்டது. அப்பெயரே தமிழில் மறைமலை எனப்படும். பின்னர் இவ்வாசிரியர் துறவு மேற்கொண்டபொழுது அடிகள் என்று அழைக்கப்பட்டார். அதனால் அப்பெரியார் மறைமலை அடிகள் என்று பிற்காலத்தில் அனைவராலும் அழைக்கப்பட்டார். இச்சிறப்புப் பெயரையே நாமும் நூல் முழுவதும் ஆள்வோம். வளர்ப்பு அடிகளின் பெற்றோர் நடுத்தர வளமுடைய குடும்பத்தினர்; ஆதலால் அடிகள் ஓரளவு செல்வமாக வளர்ந்துவந்தார். அவர் சிறு நடை நடந்து, மழலை மொழி பேசி, பெற்றோர் உள்ளங்களைக் கவர்ந்தார்; அவர்கள் உண்ணும்பொழுது ஓடிச் சென்று தம் சிறிய கைகளினால் உணவைத் தொட்டும் பிசைந்தும் துழாவியும், அவ்வுணவை எடுத்துப் பெற்றோர் வாயில் வைத்தும், தாம் எடுத்து உண்டும், பெற்றோரை மனம் மகிழச் செய்தார். கடவுள் அருளாள் பிறந்த அடிகளைப் பெற்றோர்கள் சீராட்டிப் பாராட்டி வளர்க்கலாயினர். இங்ஙனம் பெற்றோர்களால் பேணி வளர்க்கப்படுகையில், அவரது குழவிப் பருவத்திலேயே, தந்தையார் திடீரெனக் காலமானார். எனவே, தாயார் சின்னம்மையார் தம் பிள்ளைக்குத் தாயாராகவும் தந்தை யாராகவும் இருந்து, முழுஅன்பினையும் செலுத்தி வளர்த்து வந்தார். கல்விப் பயிற்சி அடிகள் ஐந்து வயதில் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். விளையும் பயிர் முளையில் தெரியும் என்னும் பழமொழிக்கேற்ப, அடிகள் அச் சிறுபருவத் திலேயே அறிவு நுட்பம் வாய்க்கப் பெற்றிருந்தார்; ஆசிரியர் வகுப்பில் கற்பித்தவற்றை உடனே ஒப்பிக்கும் ஆற்றல் பெற்று இருந்தார். எப்பாடத்தையும் ஒரு முறை படித்தவுடன் அதன் விவரங்களை எடுத்துக்கூறும் வன்மை பெற்றிருந்தார். எல்லா மாணவரிடத்தும் மிக்க அன்பும் மரியாதையும் காட்டிப் பழகிவந்தார்; ஆசிரியன் மாரிடத்து மிக்க பயத்துடனும் பக்தியுடனும் பழகிவந்தார். அவருடைய இத்தகைய சீரிய பண்புகள் ஆசிரியரையும் மாணவர்களையும் ஒருங்கே கவர்ந்தன. இக்கவர்ச்சியால் நாளடைவில் அவர் மாணவர் தலைவர் ஆனார். தமிழ்நூற் பயிற்சி அடிகள் தம் பதினாறாம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் நூல்களைப் படிக்கவேண்டும் என்று விரும்பினார். அவர் ஒரு நாள் நாகைக் கடற்கரையில் அமர்ந்து, கீழ்வருமாறு தமக்குள் எண்ணினார்: ஒவ்வொருவனும் தன் தாய்மொழி நூல்களை நன்றாய்ப் படிக்கக் கடமைப்பட்டிருக்கிறான்; அவ்வாறு படிக்க வேண்டுவது அவனது பிறப்புரிமையாகும். பிழைப்புக்காக வேறு எத்தகைய கல்வியைப் பயின்றாலும் தாய்மொழி வளர்ச்சி கருதித் தாய்மொழியைக் கற்பதும், அந்நூல்களிலுள்ள அருமை பெருமைகளைக் கற்று இன்புறுதலும் அவசியமாகும். இம்முறைப்படி தமிழனாகிய நான் என் தாய்மொழி நூல்களைக் கற்க விரும்புகின்றேன்; அவற்றைக் கற்பிக்கத் தக்க ஆசிரியரைக் காணவேண்டும்; அவரை எவ்வாறேனும் வேண்டிக்கொண்டு அவர் மாணவராதல் வேண்டும். தமிழுக்குப் பெயர்போன நாகை நாகப்பட்டினம் நெடுங்காலமாகவே தமிழுக்குப் பெயர் போனது. இதனை விளக்கக் கீழ்வரும் செவி வழிச் செய்தி அறிஞரால் கூறப்படுகிறது. ஒருமுறை காளமேகப் புலவர் நாகை சென்றார்; சோறு விற்குமிடம் எது? என்று, ஒரு தெருவில் பாக்கு வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கேட்டார்; அதற்கு அவர்கள் நகைத்து, சோறு தொண்டையில் விற்கும், என்று குறும்பாகப் பதில் கூறினார்கள். அதனால் வெகுண்ட காளமேகம் அருகில் கிடந்த அடுப்புக்கரி ஒன்றை எடுத்து, எதிரிலிருந்த ஒரு வீட்டுச் சுவர் மீது, பாக்குத் தெறித்துவிளை யாடுசிறு பாலகர்க்கு நாக்கு . . . . . . . என்பது வரை எழுதி, பசி கடுகியதால், உண்டுவந்து பிறகு பிள்ளைகளை வைது எழுத வேண்டும் என்று, இரண்டாம் வரியை அப்படியே விட்டுவிட்டுச் சென்றார். அவர் செயலைக் கவனித்துக்கொண்டிருந்த பிள்ளைகள், அவர் சென்ற பின், சுவர் அருகே வந்து, அவர் எழுதி விட்டுச் சென்றதைப் படித்தனர். வாக்கியம் குறையாக இருத்தலைப் பார்த்து, ஒரு கரித்துண்டை எடுத்து, நாக்குத் தமிழ்விளங்க நாகேசா, என்று இரண்டாம் வரியை முடித்துவிட்டு, வழக்கம் போல் விளையாடிக்கொண்டிருந்தனர். நாக்குத் தெரித்துவிழ நாகேசா என்று இரண்டாம் வரியை முடிக்கவேண்டும் என்று திரும்பி வந்த காளமேகம், தாம் விட்டுச் சென்றது நிறைவாக்கப் பட்டிருத்தலைக் கண்டார்; அது பிள்ளைகள் செயல் என்பதை அறிந்தார்; அவர்தம் தமிழறிவிற்கு வியந்தார்; அப்பிள்ளைகளை அருகில் அழைத்து ஆசீர்வதித்துச் சென்றார். ஆசிரியர் நாராயணசாமிப் பிள்ளையவர்கள் இத்தகைய தமிழ்ப்பற்று மிகுந்த நாகையில் படித்த அடிகள், தமிழிற் புலமை பெறவேண்டும் என்று விரும்பியதில் வியப்பில்லை அன்றோ? அடிகள் தக்க ஆசிரியரைத் தேடிவந்த பொழுது, திருவாளர் நாராயணசாமிப் பிள்ளை என்பவர் பெயரைக் கேள்விப்பட்டார். பிள்ளையவர்கள் நாகையில் புத்தகக் கடை வைத்திருந்தார். அவர் திருவாங்கூர்ச் சீமையில் சிறிது காலம் இருந்தார். அப்பொழுது அவரிடம், மனோன் மணீயம் என்னும் நாடகநூலைப் பிற்காலத்தில் எழுதி வெளியிட்ட சுந்தரம் பிள்ளைஎன்பவர் தமிழ் கற்றார். நாகையிலும் பலர் அவரிடம் தமிழ் பயின்றனர். அக்காலத்தில் வெளியிடப்பட்டிருந்த எல்லாத் தமிழ் நூல்களும் அவரது புத்தகக் கடையில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. ஆதலால் மாணவர்கள் புத்தகங்களுக்காகத் துன்பமடையவில்லை; வேண்டிய நூல்களை விலைகொடுத்து வாங்கி ஆசிரியரிடம் நன்கு பயின்றனர். பிள்ளையவர்கள் தமது இளமைப் பருவத்தில் பெரும் புலவர் ஒருவரிடம் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல் களையும், பனையோலை ஏடுகளாய்க் கிடந்த சங்க நூல்களை யும், இடைக்காலத்துச் சமய நூல்களையும், பிற்காலத்து இதிகாசப்புராணங்களையும் நன்கு பயின்றவர். அவர் அக்கால முறைப்படி இலக்கண சூத்திரங்களையும் ஆயிரக்கணக்கான செய்யுட்களையும் மனப்பாடம் செய்து பெயர் பெற்றவர். பெரும்பாலும் இலக்கண நூல்களைப் பாராமலேயே அவர் பாடஞ் சொல்லுதல் வழக்கம் எனின், அவரது இலக்கண அறிவை என்னென்பது! அடிகள் பிள்ளையவர்களின் மாணவர் தமக்குரிய ஆசிரியரைத் தேடி அலைந்த அடிகள் தமது நல்வினை காரணமாக, மேற்சொன்ன பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்தார்; அவரது பெரும் புலமையைக் கேள்வியுற்றவர் ஆதலின், அவரை நேரிற் கண்டதும், அவர் திருவடிகளில் தம் முடிபட வீழ்ந்து பணிந்தார். சிவந்த உடல்-திருநீற்றுப் பொலிவு பெற்ற திருமுகம்-பிறரை வசீகரிக்கும் விழிகள்-இனிய பேச்சு இவற்றை உடைய இளைஞர் தம்மைப் பணிந்ததைக் கண்ட பிள்ளையவர்கள், ஆசிகூறி அருகில் அமரச் செய்தார்; அவரது வரலாற்றை வினவினார். அடிகள் தமது நிலையை விளக்கமாகக் கூறித் தாம் வந்த நோக்கத்தையும் கூறினார். தமிழ் கற்க வேண்டும் என்பதில் அடிகளுக்கிருந்த அவாவினைக் கண்ட பிள்ளையவர்கள், எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். அவர் அடிகளை அன்புடன் நோக்கி, தம்பீ! மாணவர் பலர் என்னிடம் தமிழ் பயின்றுள்ளனர்; ஆயின், தமிழ் கற்க வேண்டும் என்பதை உன்னைப்போல் சிறந்த குறிக்கோளாகக் கொண்டிலர். நீ அதனைச் சிறந்த குறிக்கோளாகக் கொண்டிருத்தலால், உனது பிற்கால வாழ்வில் தமிழகம் போற்றத்தகும் பெரும் பேராசிரிய னாக விளங்குதல் உறுதி, என்று வருவது கூறி ஆசீர் வதித்தனர். அன்று முதல், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையர் களிடம் டாக்டர் உ.வே. சாமி நாதையர் பேரார்வத்துடன் தமிழ் கற்றாற்போல, நாகைப் பிள்ளையவர்களிடம் அடிகள் தமிழ் கற்கலானார். உண்மை மாணவர் அடிகள் பிள்ளையவர்களைத் தம்மை வாழ்விக்க வந்த கடவுளாகவே கருதினார்; நாள்தோறும் பிள்ளையவர் களிடம் இருந்து பழகி அவருக்கு அணுக்கத் தொண்டாரானார்; அவருடைய குறிப்பறிந்து அவர் விரும்பின அனைத்தும் செய்தார்; இளைஞரது தமிழ்ப் பற்றும், ஆசிரியரன்பும், பணிவும், எதிர்கால வாழ்க்கையில் விருப்பமும், சமயத்தில் ஆழ்ந்த பற்றும் ஆகிய பண்புகள் அனைத்தையும் கண்டு உள்ளம் இளகிய பிள்ளையவர்கள், தாம் ஈன்ற மகனைப் போலவே அடிகளைக் கருதலானார்; நாள்தோறும் தமிழ்ப்பாடங்களை நன்முறையில் கற்பிக்கலானார். நான்காண்டுகட்குள் அடிகள் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, நாலடியார், திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும் பழுதறப் படித்து முடித்தார்; தம் ஆசிரியரைப் போலவே இலக்கண சூத்திரங்களையும் சிறந்த இலக்கிய நூல்களையும் நெட்டுருச் செய்தார். அப்பருவத்திலேயே பொதுநலத்தொண்டு அடிகள் பிள்ளையவர்களிடம் ஒவ்வொரு நூலாகப் படித்து வரும்பொழுது அதனைப் பிற மாணவர்க்குக் கற்பிக்க விரும்பினார்; அதற்கென இந்து மதாபிமான சங்கம் என்னும் பெயருடன் கழகம் ஒன்றைத் தோற்றுவித்தார்; தம்முடன் பள்ளியில் படித்து வந்த மாணவர்க்குத் தமிழ் அறிவையும் சமய உணர்ச்சியையும் ஊட்ட அக்கழகத்தினைப் பயன்படுத்தினார். தாம் ஆசிரியரிடம் ஒன்றைப் பாடம் கற்பதும், அதனையே தாம் ஆசிரியராக இருந்து பிறர்க்குக் கற்பிப்பதும் ஆகிய முயற்சி அவரைச் சில ஆண்டுகட் குள்ளாகவே பெரும் புலவராகச் செய்தது; பாடம் கற்பிக்கும் சிறந்த ஆசிரியராகவும் செய்தது. இப்பயிற்சியால் அவர் இருபது வயதிற்குள் பெரும் புலவருள் ஒருவராகவும் சிறந்த பேச்சாளராகவும் கருதப்பட்டார். அடிகள் தமிழ் நூல்களைப் படிப்பதோடு ஆங்கில நூல்களையும் நாடோறும் படித்துவந்தார். படிப்படியாக ஆங்கிலச் செய்யுள் நூல்கள் பலவற்றையும் வசன நூல்கள் பலவற்றையும் படித்துமுடித்தார். அப்பயிற்சியின் பயனாக ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் ஆற்றலும் எழுதும் ஆற்றலும் பெற்றார். திருமணம் சின்னம்மையார் தம் செல்வ மைந்தர்க்கு, அவரது பதினேழாம் வயதில் திருமணம் செய்து வைத்தார். அவருக்கு வாய்த்த மனைவியாரது பெயர் சௌந்தரவல்லி என்பது. அவ்வம்மையார் அடிகளை மணந்துகொண்ட அந்நாள் தொட்டுத் தாம் இறக்கும் வரை (ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகள்) பல்லோர் பாராட்டக் கணவர்க்கு ஏற்ற காரிகையராய் நடந்துவந்தார். அவருடைய பணிவு, கணவர் பக்தி, தம் இல்லத்திற்கு வந்தோரிடம் காட்டும் அன்பு, விருந்து உபசரிப்பு இன்ன பிறவும் அடிகள் வீட்டில் ஒருமுறை பழகிய வரும் மறத்தல் இயலாது. சுருங்கக் கூறின், சௌந்தர வல்லி அம்மையாரைப் போன்ற உண்மை மனைவிமாரைக் காணுதல் அரிது. பிள்ளைகளைப் பேணுவதில் அத்தகைய உத்தம தாய்மாரைக் காணுதலும் அருமை. சிந்தாமணி அடிகளின் பதினெட்டாம் வயதில் சௌந்தரவல்லி அம்மையார் ஒரு பெண்மகவைப் பெற்றார். அப்பொழுது அடிகள் மிக விரும்பிப் படித்துவந்த சிந்தாமணி என்னும் தமிழ்ப் பெருங்காவியத்தின் பெயரையே அப் பெண் குழந்தைக்கு இட்டு மகிழ்ந்தார். அடிகள் அந்நிலையிலும் பிள்ளையவர்களிடம் இடைவிடாது தமிழ் பயின்றுவந்தார். 2. பலவகைப் பணிகள் சோமசுந்தர நாயகர் சோமசுந்தர நாயகர் சென்னையைச் சேர்ந்தவர்; சிறந்த சைவசித்தாந்தி; சைவசித்தாந்த உண்மைகளைக் கேட்பவர் உள்ளத்தில் நன்கு பதியவைக்கும் சொல் வல்லமை உள்ளவர்; அவருடைய சொற்பொழிவுகள் தமிழ் நாடெங்கும் நடை பெற்றன; சைவத்தில் சிறந்த சொற்பொழிவாளர் என்று மக்கள் அவரைப் பாராட்டினர். நாகையில் நாயகர் நாகையில் சைவசித்தாந்த சபை ஒன்று இருந்தது. நமது அடிகளும் அதில் உறுப்பினராயிருந்தார். நாயகர், நாகைச் சைவர் வேண்டுகோளின்படி நாகைக்கு வந்தார்; அங்குச் சமயச் சொற்பொழிவுகள் பல செய்தார். அடிகள் அவை அனைத்தையும் விடாமல் கேட்டுவந்தார்; நாயகருடைய தமிழன்பினையும் சைவ நூல்களின் அறிவையும் கண்டு வியப்பும் மரியாதையும் கொண்டார்; நாயகரைத் தமக்கேற்ற சைவசமய ஆசிரியராக மனத்தில் கொண்டார். சமயப் போராட்டத்தில் அடிகள் நாகையில் சஜ்ஜனப் பத்திரிகை என்னும் பெயருடன் வாரந்தோறும் பத்திரிகை ஒன்று வெளிவந்தது. வேதாந்த சாத்திரங்களில் பற்றுக்கொண்ட ஒருவர், நாயகரின் சைவ சித்தாந்த கூற்றுகள் சிலவற்றை மறுத்துப் பல கட்டுரைகள் எழுதிவந்தார். அடிகள் அக்கட்டுரைகளைக் கூர்ந்து படித்தார்; நாயகர் கூறிய கருத்துக்களோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தார்; நாயகருடைய கருத்துக்களே சிறந்தவை என்பதை நன்குணர்ந்தார்; தாம் உணர்ந்த உண்மையைத் தொடர்ச்சியாகப் பல கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார். நாயகர் பாராட்டு முருகவேள் என்னும் புனைப்பெயருடன் அடிகள் எழுதிவந்த கட்டுரைகள் அனைத்தும் சென்னையிலிருந்த நாயகர் படித்தார்; அவை வாதத்திறமையுடன் ஒழுங்கான முறையில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டார். சைவசித்தாந்த உண்மைகளை உறுதிப்படுத்திய அக்கட்டுரைகளை எழுதிய முருகவேள் யாவர்? என்பதை அறிய விரும்பினார்; நாகைச் சைவசித்தாந்த சபையாருக்கு அது குறித்துக் கடிதம் எழுதினார். அச்சபையினர் அடிகளின் வரலாற்றைத் தெளிவாக எழுதி அனுப்பினர். சில மாதங்களுக்குப் பிறகு நாயகர் நாகை சென்றார்; அடிகளை நேரிற் கண்டு அன்போடு அணைத்துக் கொண்டார். அடிகள் சென்னையிலிருந்தால் சைவ சித்தாந்தம் வளரத் தொண்டு புரியலாம் என்று நாயகர் அறிவித்தார்; அடிகளை விரைவில் சென்னைக்கு வருமாறு ஏற்பாடு செய்வதாக நாயகர் வாக்களித்தார். அன்று முதல் அடிகள் நாயகரைத் தம் சமயக் குருவாகக் கொண்டார். கட்டுரை ஆசிரியர் அடிகள் மாணவராக இருந்தபொழுது, காரைக்காலில் இருந்து வெளிவந்த திராவிட மஞ்சரி, என்னும் வாரத் தாளுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார்; பிறகு நாகையில் இருந்து வெளிவந்த நீலலோசனி என்னும் வாரத்தாளிலும் கட்டுரைகள் வரைந்து வெளியிட்டார்; தமிழ் இலக்கியக் கட்டுரைகளும் சைவசித்தாந்த கட்டுரைகளும் அவரால் எழுதி வெளியிடப்பட்டன. நாகை-வேதாசலம் பிள்ளை என்னும் பெயருடன் வெளிவந்த அக்கட்டுரைகள் தமிழ் நாட்டு அறிஞரை மகிழ்வித்தன; அடிகளது புலமைத் திறனையும் நன்கு வெளிப்படுத்தின. சுந்தரம் பிள்ளையவர்களுடன் தொடர்பு திருவனந்தபுரம் அரசர் கல்லூரிப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணீயம் என்னும் தமிழ் நாடக நூலை எழுதி வெளியிட்டார். அதனைப் படித்த அடிகள் அந்நூலைப் பாராட்டிப் பிள்ளையவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். பிள்ளையவர்கள் இளமையில் நாகை-நாராயணசாமிப் பிள்ளையவர்களிடம் தமிழ் படித்தவர் அல்லவா? அதனால் அடிகளும் தம்மாசிரியரிடம் தமிழ் பயின்றவர் என்பதை உணர்ந்த பிள்ளையவர்கள் மிக்க இன்புற்றார்; அடிகளுடன் நெருங்கிய கடிதப் போக்குவரத்தை மேற்கொண்டார். பிள்ளையவர்கள் அழைப்பு பிள்ளையவர்கள் தம் ஆசிரியரையும் அடிகளையும் திருவனந்தபுரம் வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார். அவ்வழைப்பை ஏற்றுக்கொண்ட இருவரும் நாகையிலிருந்து புறப்பட்டுத் திருவனந்தபுரம் சென்று பிள்ளையவர்களைக் கண்டனர்; அவர் விருந்தினராகத் தங்கினர். பிள்ளையவர்கள் அடிகளோடு பேசிப்பேசி அவருடைய தமிழ் இலக்கிய அறிவையும் சமய இலக்கிய அறிவையும் நன்குணர்ந்து பாராட்டினார்; தம் ஆசிரியரைப் பார்த்து, இந்த இளம் வயதில் பெரும் புலவராகவுள்ள இவர் (அடிகள்) பிற்காலத்தில் சிறந்த பேராசிரியராகத் திகழ்வார் என்று சோதிடம் கூறி மகிழ்ந்தார். ஆசிரியரும் அடிகளும் சுந்தரனார் இல்லத்தில் ஒரு வாரம் தங்கியிருந்த பிறகு, அவரிடம் பிரியா விடை பெற்று நாகை மீண்டனர். 3. தமிழ்ப் பேராசிரியர் திருவனந்தபுரத்தில் தமிழாசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களுக்கும் அடிகளுக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்டு வளர்ந்துவந்தது. சில மாதங்கள் கழிந்த பிறகு பிள்ளையவர்கள் அடிகளைத் திருவனந்தபுரத்திற்கு வருமாறு அழைத்தார். அடிகள் அவர் அழைப்புக்கிணங்கித் திருவனந்தபுரம் சென்றார். பிள்ளையவர்கள் அந்நகரத் திலிருந்த ஆங்கிலப் பள்ளியொன்றில் தமிழாசிரியராக வேலை பார்க்குமாறு ஏற்பாடு செய்தார். அடிகள் அவ்வேலையை மகிழ்ச்சியோடு ஏற்றார்; மாணவர் மதித்துப் பாராட்டப் பாடங் கற்பித்தார். ஆயின், அந்நகரத் தட்ப-வெப்ப நிலை அவரது உடல்நலத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர் இரண்டரை மாத காலமே தமிழாசிரியர் வேலையில் இருந்தார். அதன் பிறகு வேலையைவிட்டு நாகைக்குச் சென்றுவிட்டார். ஆயினும் அவர் திருவனந்தபுரத்தில் இருந்த இரண்டரை மாத காலத்தில் அவர் செய்த நற்பணிகள் பலவாகும். அவர் திருவனந்தபுரத்தில் சைவசித்தாந்த சொற்பொழிவுகள் பல செய்தார்; சங்கத் தமிழ் நூல்கள் பற்றி இலக்கியச் சொற்பொழிவுகள் பல ஆற்றினார்; திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் நாடகத் தமிழ் பற்றி ஒரு விரிவுரை ஆற்றினார். அவருடைய சொற்பொழிவுகள் அந்நகர மக்களுக்குத் தமிழிலும் சைவத்திலும் நல்ல பற்றை உண்டாக்கின. அடிகள்-பத்திரிகை ஆசிரியர் திருவாளர் J.M. நல்லசாமிப் பிள்ளை என்பவர் அக்காலத்திலிருந்த மாவட்ட நீதிபதிகளுள் ஒருவர். அவர் சைவசித்தாந்த சாத்திரங்களில் பெரும்புலமை பெற்றவர்; சைவசித்தாந்த உண்மைகள் நாடு முழுவதும் பரவவேண்டும்-அதற்காக ஆங்கிலத் தாள் ஒன்றை நடத்தவேண்டும் என்று விரும்பினார்;அவ்வாறே அச்சமயக் கருத்துக்கள் பரவத் தமிழ்த்தாள் ஒன்றையும் நடத்த விரும்பினார். அதனைத் தம்மோடு உடன் இருந்து நடத்தத்தக்க ஒருவரைத் தேடினார். சோமசுந்தர நாயகர் நமது அடிகளைச் சிபாரிசு செய்தனர். பிளையவர்கள் அடிகளைக் கண்டு உரையாடி அவரது பெரும் புலமையை நன்கறிந்து மகிழ்ந்தார். அவரைத் தம்முடன் அழைத்துச் சென்று பத்திரிகை தொடங்கினார். அடிகள் முதல் ஐந்து மாத இதழ்கட்கு மட்டும் ஆசிரியராக இருந்தார்; பிறகு அவ்வேலையை விட்டு நாகை மீண்டார். பரிதிமாற் கலைஞர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் அக்காலத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாதிரியார் என்பவர். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த புலமை உடையவர்; தமிழ் வளர்ச்சியில் அளவு கடந்த ஆர்வம் உடையவர். எப்பொழுதும் செந்தமிழிலேயே பேசும் நற்பழக்கம் உடையவர்; தமிழ்மொழியை நன்கு ஆராய்ந்து தமிழ்மொழி வரலாறு என்னும் நூலை எழுதியவர்; தமிழில் நாடக நூல் இல்லை என்னும் குறையை நீக்க ரூபாவதி, கலாவதி முதலிய நாடக நூல்களை எழுதியவர்; ஆங்கிலச் செய்யுட்கள் பலவற்றைத் தமிழ்ச் செய்யுட்களாகச் செய்து புகழ் பெற்றவர்; மாணவர் பலரை வீட்டில் வைத்துக் கொண்டு வருவாய் சிறிதும் இல்லாமல் நாள்தோறும் கற்பித்துவந்தவர். இத்தகைய சிறந்த பண்புகளால் அவரைக் கல்லூரி அதிகாரிகளும் பிறரும் பெரிதும் போற்றிவந்தனர். அவரது வடமொழிப் பெயரைப் பரிதிமாற் கலைஞன் எனத் தமிழில் மாற்றிக்கொண்டதைக் கண்ட தமிழ் அறிஞர் அவரைப் பாராட்டிப் புகழ்ந்தனர். அடிகள் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியர் பரிதிமாற் கலைஞருக்கு அடுத்த நிலையில் தமிழாசிரியர் ஒருவர் தேவைப்பட்டார். அப்பதவிக்கு விண்ணப்பங்கள் பல வந்தன. கல்லூரித் தலைவரான மில்லர் துரை விண்ணப்பங் களை யெல்லாம் சாதிரி யாரிடமே கொடுத்துத் தக்காரைத் தேர்ந்தெடுக்குமாறு பணித்தார். சாதிரியார் சிலரைக் கல்லூரிக்கு வரவழைத்து, வகுப்பில் பாடம் நடத்துமாறு ஏற்பாடு செய்தார். அங்ஙனம் பாடம் நடத்திய புலவருள் நம் அடிகளும் ஒருவர். சாதிரியார் அவரையே தமக்கு உதவி ஆசிரியராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அன்று முதல் கலைஞரும் அடிகளும் தமிழக் கடலில் இறங்கி நீந்தலாயினர். டாக்டர் மில்லர் போன்ற ஆங்கிலப் பேராசிரியர்கள் கூட்டுறவால் அடிகள் நாடோறும் ஆங்கில அறிவை நன்கு வளர்த்துவந்தார். அவர் ஆங்கிலத்தில் மாதத்தாள் நடத்தும் வல்லமை பெற்றமைக்குக் காரணம், கிறித்தவக் கல்லூரி நூல் நிலையத்திலிருந்து அவர் கற்ற எண்ணிறந்த ஆங்கில நூல்களே என்னலாம். சூரியநாராயண சாதிரியார் தம் பெயரைத் தமிழில் மாற்றி வைத்துக்கொண்டதைக் கண்ட பின், அடிகள், வேதாசலம் என்னும் தமது பெயரையும் மறைமலை எனத் தமிழ்ப் பெயராக மாற்றிக்கொண்டார். எனினும், அவர் ஆசிரியராக இருந்தபொழுது நாகை-சொ. வேதாசலம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டுவந்தார். சாதிரியாருடைய சேர்க்கை யால் அடிகளுக்குத் தனித் தமிழ்ப்பற்று வளர்ந்தது. தமிழ் தனக்கென இலக்கண வரம்புடைய மிகப் பழைய மொழி; பெரும்பாலான எண்ணங்களை வெளியிட அம்மொழியில் சொற்களுண்டு; சிற்சில சந்தர்ப்பங்களில் பிறமொழிச் சொற்கள் சிலவற்றைக் கடன் வாங்குதல் போதும். ஆகவே, பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலவாமலே தமிழ் எழுதலாம் என்னும் முடிவைச் சாதிரியாரும் அடிகளும் ஒப்புக்கொண்டனர். m‹W Kjš mofŸ TLkhd tiuÆš brªjÄœ¢ brh‰fis¡ bfh©nl f£Liufisí« üšfisí« vGjyhÆd®.* மாணவர் கருத்தைக் கவர்ந்த ஆசிரியர் ஏறத்தாழ இருபது அல்லது இருபத்தொரு வயதுடைய அடிகள் நெற்றியில் திருநீறணிந்து வகுப்பிற்குச் செல்வதும், பண்ணோடு பாடல்களைப் பாடுவதும், செய்யுளில் சொல் அமைதியையும் பொருளழகையும் எடுத்துக் கூறுவதும் பல மேற்கோள்களைத் தந்து செய்யுட் கருத்தை விளக்குவதும், ஆங்கிலம் வடமொழி இவைகளிலிருந்து ஒப்புநோக்குப் பகுதி களைக் கொடுத்தலும் மாணவரைப் பெரிதும் மகிழ்வித்தன. அவர்கள் அவரது பெரும் புலமையையும் கற்பிக்கும் ஆற்றலையும் நன்குணர்ந்து பாராட்டி மகிழ்ந்தனர். செய்யுள் நூல் ஆசிரியர் அடிகள் கல்லூரி ஆசிரியராக இருந்தபொழுது சென்னை அரண்மனைக்காரத் தெருவில் குடியிருந்தார். அவரது பள்ளி வருமானம் போதுமானதாக இல்லை. அதனால் ஒரளவு வறுமைத் துன்பம் குடும்பத்தில் தலை காட்டியது. ஒருமுறை அவர் கொடிய வயிற்று வலியால் துன்புற்றார். அப்பொழுது அவர் தம் நோயை நீக்குமாறு முருகப் பெருமானை வேண்டினார். நோய் நீங்கியதும் அவர் முருகக் கடவுளுக்குத் தம் நன்றியை அறிவிக்க ஒரு மும்மணிக்கோவை நூல் பாடத் தொடங்கினார். எனினும் அந்நூல் தொடர்ந்து பாடப்படாமல் பல காரணங்களால் இடையில் விடப்பட்டு ஒன்றரை ஆண்டுகட்குப் பிறகு நூலாக முற்றுப் பெற்றது. அதன் பெயர் திருவொற்றி முருகன் மும்மணிக் கோவை என்பது. அந்நூல் 1366 அடிகளை உடையது; சொற்சுவையும் பொருட்சுவையும் பொருந்தியது. பழந்தமிழ் நூல்களைப் போன்ற நடையும் அழகும் அமைந்தது. 4. அடிகளின் பிற்கால வாழ்க்கை அடிகளிடம் பயின்ற மாணவர்கள் பரிதிமாற் கலைஞர் 1903-ஆம் ஆண்டு காலமானார். மறைமலையடிகள் அவரது பிரிவால் மிக்க துயருற்றார்; அதற்குப்பின் அக்கல்லூரியில் ஆசிரியராக இருப்பதை வெறுத்தார். சென்னை நகர நெருக்கடி வாழ்க்கை அவரது உத்தியோக வெறுப்பை வளர்த்தது. எனினும் அவர் 1911-ஆம் ஆண்டுவரை வேண்டா வெறுப்புடன் ஆசிரியர் வேலை பார்த்தார்; அக்காலத்தில் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி முதலிய கல்லூரி வகுப்புகளுக்குத் தேவையான ஆராய்ச்சி நூல் களும் வேறு பல நூல்களும் எழுதி வெளியிட்டார். அந்நூல்கள் நாடு முழுவதும் பரவின; கடல் கடந்த தமிழரிடத்தும் பரவின. அதனால் அவர்க்கு யாண்டும் பெரும் புகழ் ஏற்பட்டது. அவர் முப்பது வயதிற்குள் சிறந்த நல்லாசிரியர் என்றும் செய்யு ளாசிரியர் என்றும் உரையாசிரியர் என்றும் ஆராய்ச்சி அறிஞர் என்றும் பண்பட்ட சொற்பொழிவாளர் என்றும் பாராட்டப் பெற்றார். அக்காலத்தில் அவரிடம் கல்வி பயின்று தமிழ்ப்பற்றுக் கொண்ட மாணவர் பலர். அவருள் குறிப்பிடத் தக்கார், தமிழறிஞர் என்று இப்பொழுது பாராட்டப்படும் நாவலர் ச. nrhkRªju ghuâah® ã.V.ã.vš., S. வையாபுரிப் பிள்ளை பி. V., ã vš., T. K. áj«guehj KjÈah® ã.V., பி. vš., C. N. K¤Ju§f KjÈah® ã.V., பி. எல். முதலியோராவர். இவர்கள் அல்லாமல் அடிகள் இல்லத்திற்குச் சென்று தமிழ் பயின்றவர் பலர். அவருள் முதல்வர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியரா யிருந்த மணி. திருநாவுக்கரசு முதலியார் என்பவர். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாகப் பல நூல்களை எழுதி வெளி யிட்டவரும், செந்தமிழ்ச் செல்வி ஆசிரியராக இருந்தவரும் சிறந்த சைவசித்தாந்த சொற்பொழிவாளரும் ஆகிய திரு. இள அழகனார் என்பவர் ஒருவர். சிறந்த நாவல்களை எழுதி வெளியிட்ட நாகை-தண்டபாணிப் பிள்ளை, நாகை-கோபால கிருட்டினப் பிள்ளை முதலியோரும் அடிகளின் மாணவர்களே. அடிகளார் குடும்பம் அடிகளுக்குப் பெண்மக்கள் மூவரும் ஆண்மக்கள் நால்வரும் தோன்றினர். பல அரிய தமிழ் நூல்களை எழுதி வெளியிட்ட திருவாட்டி-நீலாம்பிகை அம்மையார் என்பவர் அடிகளாரது இரண்டாம் மகளார் ஆவர். முதல் மகளார் பல ஆண்டுகட்கு முன்னரே காலமானார். மூன்றாம் மகளார் திருவாட்டி-திரிபுரசுந்தரி என்பவராவர். இவர் சென்னை நகராண்மைப் பெண்பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக இருந்துவருகின்றார். ஆண்மக்கள் நால்வருள் முன்னவர் திருஞானசம்பந்தர். அவர் மலேயாவில் அலுவல் பார்க்கின்றார். அடுத்தவர் பெயர் மாணிக்கவாசகர் என்பது. அவரும் சென்னை நகராண்மைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கின்றார். அடுத்தவர் திருநாவுக்கரசர் என்பவர். இவர் தமிழ்ப் புலவர்; மறை திருநாவுக்கரசு என்று நாட்டவரால் அழைக்கப்படுபவர். இவர் சிறந்த பேச்சாளர்; சைவ சயமச் சொற்பொழிவாளர். நான்காம் மகனார் சுந்தரமூர்த்தி என்பவர். இவர் சென்னையில் மருத்துவராக இருக்கின்றார். மறைமலை அடிகள் மேற்சொன்ன எல்லா மக்களின் தோற்றத்தின் பிறகு, அடிகள் சைவத்தையும் தமிழையும் நாட்டிற் பரவச்செய்ய உறுதிகொண்டார்; அதற்குக் குடும்பப் பொறுப்பில் இருந்து விடுதலை அடைதல் நலமெனக் கருதினார்; வீட்டிலிருந்த படியே இல்வாழ்க்கை அளவில் துறவு பூண்டார்; காவி உடை அணிந்துகொண்டார். அதுமுதல் மக்கள் அவரை மறைமலை அடிகள் என்று அழைப்பா ராயினர். பல்லாவரத்தில் மாளிகை அடிகள் கல்லூரி ஆசிரியர் வேலையிலிருந்து விலகியதும் தமிழகம், இலங்கை முதலிய பகுதிகளில் சுற்றித் தமிழ், சைவம் ஆகிய இரண்டையும் பற்றிப் பல சொற்பொழிவுகள் செய்தார். அவரது பேச்சிலீடுபட்ட பிரபுக்களும் வணிகரும் உத்தியோ கதர்களும் அவருக்குப் பெரும் பொருள் உதவி செய்தனர். அடிகள் அப்பணத்தைக் கொண்டு சென்னையை அடுத்த பல்லாவரத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்டிமுடித்துக் குடியேறினார்; நாளடைவில் பல நூல்களைத் தாமே எழுதி வெளியிட்டுப் பொருளீட்டினார்; சிறிய அச்சகம் ஒன்றை ஏற்படுத்தினார். படிப்படியாக நாற்பதாண்டுகளில் நாற்பதாயிரம் ரூபாய் பெறத்தக்க நூல்நிலையத்தை ஏற்படுத்தினார். வடமொழி நூல்கள், தமிழ் நூல்கள், ஆங்கில இலக்கியம், வரலாறு, சமயம் என்னும் மூவகையில் வெளிவந்த ஆங்கில நூல்களும் அவர் நூல்நிலையத்தை அழகு செய்கின்றன. அடிகள் மறைவு அடிகள் 1950-ஆம் ஆண்டு ஆகடு மாதம் 15-ஆம் நாள் தமது 75-ஆம் வயதில் நோய் வாய்ப்பட்டார்; ஒரு மாத காலம் நோயால் வருந்தி, செப்டெம்பர் மாதம் 15-ஆம் நாள் மறைந்தார். அடிகளது மறைவு தமிழ் நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பெரிய நஷ்டமாகும். சிறந்த பண்புகள் அடிகள் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவர்; உழைப்பே உருவமானவர்; பல நூல்களைத் தாமே படித்துப் படித்துப் பண்பட்ட புலமையடைந்தவர்; ஊக்கம், உழைப்பு மிக்கவர்; தம் மனத்திற்கு மாறாக எதனையும் செய்யார்; எத்தகைய நன்மை வரினும் தம் கொள்கைக்கு மாறானதைச் செய்யாதவர். இத்தகைய மனவுறுதி உடைய பெருமக்களைக் காண்பது மிக்க அருமை அல்லவா? பிறந்தது முதல் தமிழைப் பேசும் தமிழர் தம் தாய் மொழி நூல்களை நன்கு கற்கவேண்டும்; அம் மொழியை நன்கு வளர்க்க வேண்டும்; தமிழ் வளர தமிழ் இனம் வளரும் என்பது அடிகளது அறிவுரை. அழியாப் புகழ் அடிகள் தூய தமிழில் எழுதவேண்டும் என்னும் கொள்கையை வற்புறுத்தி அவ்வாறே எழுதி வெற்றி பெற்றவர். ஆதனால் தமிழ்மொழி வரலாற்றில் அவர் சிறந்த இடம் பெற்றுவிட்டார். அவருடைய மொழி பெயர்ப்பு நூல்கள், செய்யுள் நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், சாதாரணக் கட்டுரை நூல்கள், கடித நூல்கள், சொற்பொழிவு நூல்கள் என்பன நாற்பதாண்டுகளாக நாடெங்கும் பரவி, செந்தமிழ் நடையை நன்மக்களிடையே பரப்பிவருகின்றன. அந்நூல்கள் உள்ளவரை அடிகளது பெயரும் புகழம் அழியாமல் நாட்டில் நிலை பெற்றிருக்கும். அடிகளார் புகழ் எங்கும் பரவுக! இராசமாணிக்கனார் பார்வையில் மறைமலையடிகள் - முற்றும் - மறைமலையடிகள் எழுதிய நூல்கள் (காலமுறைப்படி) 1. முதற் குறள் வாத நிராகரணம் 1898 2. சித்தாந்த ஞானபோதம்- சதமணிக் கோவை 1898 3. துகளறு போதம் 1898 4. முனிமொழிப் பிரகாசிகை 1899 5. வேதாந்த மத விசாரம் 1899 6. வேத சிவாகமப் பிரமாண்யம் 1900 7. திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை 1900 8. சோமசுந்தரக் காஞ்சியும், காஞ்சியாக்கமும் 1901 9. ஞானசாகரம் 1902 10. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை 1903 11. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1906 12. சைவசித்தாந்த ஞானபோதம் 1906 13. பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் 1906 14. முன்பனிக்கால உபந்நியாசம் 1906 15. சாகுந்தல நாடகம் 1907 16. சிந்தனைக் கட்டுரைகள் 1908 17. மரணத்தின் பின் மனிதர்நிலை 1911 18. குமுதவல்லி நாகநாட்டரசி 1911 19. சாதிவேற்றுமையும் போலிச்சைவரும் 1913 20. கோகிலாம்பாள் கடிதங்கள் 1921 21. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921 22. அறிவுரைக் கொத்து 1921 23. யோக நித்திரை அல்லது அறிதுயில் 1922 24. வேளாளர் நாகரிகம் 1923 25. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1930 26. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை 1933 27. சாகுந்தல நாடக ஆராய்ச்சி 1934 28. சிறுவர்க்கான செந்தமிழ் 1934 29. தொலைவிலுணர்தல் 1935 30. மாணிக்கவாசகர் மாட்சி 1935 31. முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவர் 1936 32. தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும் 1936 33. இந்தி பொது மொழியா? 1937 34. மனிதவசியம் (அ) மனக்கவர்ச்சி 1937 35. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1938 36. திருவாசக விரிவுரை 1940 37. தமிழர் மதம் 1941 38. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா 1948 39. திருக்குறள் ஆராய்ச்சி 1951 40. மாணிக்கவாசகர் வரலாறு 1952 41. அம்பிகாபதி அமராபதி 1954 42. இளைஞர்க்கான இன்றமிழ் 1957 43. மறைமலையடிகளார் கடிதங்கள் 1957 44. சோமசுந்தர நாயகர் வரலாறு 1957 45. சிவஞான போத ஆராய்ச்சி 1958 46. அறிவுரைக்கோவை 1971 47. உரைமணிக் கோவை 1972 48. கருத்தோவியம் 1976 49. மறைமலையடிகள் பாமணிக்கோவை 1977 ஆங்கில நூல்கள்: 50. Oriental Mystic Myna bi Monthly 1908 51. Ocean of Wisdom’ bi Monthly 1935 52. The Concemption of God Rudhra 1935 53. The Tamilian and Aryan Forms of Marriage 1936 54. Ancient and Modern Tamil poets 1937 55. Can Hindi be the Lingu franca of India? 1937 56. Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge 1940 மேலே கண்ட வரிசை எண் 1இல் முதற் குறள் வாத நிராகரணம், 2இல் சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவைஉரை, 3இல் துகளறு போதம், 6இல் வேதசிவாகமப் பிரமாண்யம் இந் நான்கு நூல்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆதலான், இத் தலைப்புள்ள நூல்கள் மறைமலையம் தொகுப்பில் இடம்பெறவில்லை.