kiwkiya«-- 18 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) கட்டுரை 3  சிறுவர்க்கான செந்தமிழ்  இளைஞர்க்கான இன்றமிழ் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+288 = 320 விலை : 400/- மறைமலையம் - 18 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந் திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைந்த அடிகளார்! தமிழ் ஞாயிறு ஆங்கிலம், ஆரியம், தீந்தமிழ் - என்ற மூன்றையும் துறைபோக முற்றக்கற்ற ஒரு மூதறிஞர் எந்தம் அடிகள். மும்மொழிகளையும் ஒருசேர இவ்வாறு தமிழுலகில் மாசறக் கற்ற நல்லாசிரியர் இவர்க்கு முன்னுமில்லை; இவர்க்குப் பின்னு மில்லை. இது தமிழ் வரலாறு. வடமொழியும் தமிழும் வேறு வேறு என்பதை விளக்கிக் காட்டினார். ஆசிரியர் சிவஞானமுனிவர். (18ஆம் நூற்.) வட மொழியை அறவே அகற்றிவிட்டுத் தமிழ்தனித்து இயங்கவல்லது என்பதை ஆராய்ந்து சொன்னார் டாக்டர் கால்டுவெல் (19ஆம் நூற்.) அவ்வாறு பல்லாயிரம் ஏடுகள் தமிழில் எழுதிக் காட்டினார் ஆசிரியர் மறைமலையடிகள். (20ஆம் நூற்.) மொழி வரலாற்றில் இந்த மூன்றும் மூன்று மாணிக்க உண்மைகள். அடிகளார் ஏற்றிய விளக்கு இன்னும் எரிகின்றது சான்றோரே! எம்மை மறந்தாலும் யாம் மறக்க மாட்டேமால், நீவீர் அடிவைத்து நடந்த அவ்வழியை எமது நெஞ்சு நாடுகிறது. அடிகள் மறைந்த அத்திசை நோக்கி எந்தலை தாழ்வதாக! - வித்துவான் அ. கிருஷ்ணமூர்த்தி (பக். 48) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்ப்பரபாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருகவேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம் நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணிய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமிகள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் (நூல் தொகுப்புகள்) 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களை தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. நூலுரை இளைஞர்க்கான இன்றமிழ் இதன் முதற்பதிப்பு அடிகளார் விருப்ப ஆவணப்படி 1957 இல் வெளிவந்தது. பள்ளிக் கூடங்களில் பயிலும் சிறார்க்கு இனிய எளிய திருத்தமான தனித்தமிழில் எழுதப்பட்ட பாடநூல்கள் இல்லாப் பெருங்குறையை நீக்கும் பொருட்டு 1934 இல் சிறுவர்க்கான செந்தமிழ் என்னும் நூல் எழுதியதைச் சுட்டும் அடிகள் நோக்கைக் குறிப்பிட்டு, இதுகால் இளைஞர்க்கான இன்றமிழ் வெளியிடுவதைப் பதிப்புரை வெளிப்படுத்துகிறது. திங்களைத் தொழுதல் முதலாக மக்கள் வாழ்க்கை ஈறாக 13 கட்டுரைகளையுடையது இளைஞர்க்கான இன்றமிழ். இனிமை தந்து மகிழ்விப்பதால், `திங்கள் என்றும், நாளும் வளர்தலால், `கலையோன் என்றும், இரவில் விளங்குதலால் `இரவோன் என்றும், அலவன் என்றும் `அல்லோன் என்றும் காலவரை யறை செய்தலால் `மதி என்றும் இடை இடையே கறையுடைமையால், `களங்கன் என்றும் பிறை நிலையில் வளைந்த தோற்றம் தருதலால், `குரங்கி என்றும் அக் கறை முயல்போல் தோற்றம் தருதலால், `முயற்கூடு என்றும் பெயர் பெறும் என்பதைப் பொருளொடு புணர்த்து விளக்குகிறார். தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டும் அருமையை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறப்பாடல் வழியில் காட்டுகிறார். இவ்வாறே எடுத்த பொருளின் பெயர் விளக்கம் - பயன் விளக்கம் - சான்று விளக்கம் எனக் காட்டிக் கட்டுரை எழுதும் பயிற்சியில் வல்லராம் வகையில் நூல் யாத்துளார். `நிலையானம் என்பதை, `நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பதற்கு மட்டும் 14 சான்றுகள் காட்டுகிறார். `காலதியன் கிரிசெலான் கதை என்பதொரு கதை இடம் பெறுகிறது. இத்தாலிய நாட்டுக் கதை. இக் கதை விரிவுடையது. மணங் கொள்ள விரும்பாத மன்னனை நாட்டுமக்கள் மணங்கொள்ள வற்புறுத்த, அவன். யான் என்னுடைய கண்களைக் கொண்டே ஒரு மணமகளைத் தேடிப் பெற வேண்டுமே அன்றிப் பிறருடைய கண்களைக் கொண்டு அவளைத் தேடி அடைதல் கூடாது என்று கூறி அவ்வாறே தேடி அடைந்து, மேன்மையுற்ற கதை அதுவாம். பழந்தமிழர் காதல் வாழ்வின் `பிழிசாறு அனையது இது. திருவள்ளுவ மாலை - கபிலர் அகவல் முதலாம் பிற்காலப் புனைவில் அடிகள் நம்பிக்கை கொண்டது, நம்பமுடியாததாகவே உள்ளமை உண்மையாம்! திருவள்ளுவர், திருவள்ளுவர் வாழ்க்கை, அறஞ்செய்கை, வள்ளுவர், வள்ளுவம் பற்றியவை. கானத் தோகை தேவமணி கதை என்பது, உள்ளொத்த காதலராகத் திகழ்ந்த கானத் தோகையும் தேவமணியும், அவர்கள் பெற்றேர்களால் வெற்றிபெற இயலா நிலையில், இருவரும் ஒருதுறவுமடம் சார்ந்து ஒருவரை ஒருவர் அறியாராய் வாழ்ந்து, அறிந்த பின்னரும் அத்துறவில் நிலைத்த பெருவாழ்வு உரைப்பதாம். நல்லபடைப்பு. மனோன்மணீயம் சுந்தரனார் படைப்பான சிவகாமி சரிதத்தின் சாயல் இக் கதையமைப்பில் புலப்படுகின்றது! - இரா. இளங்குமரன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி` புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். சிறுவர்க்கான செந்தமிழ் 1964இல் பாரி நிலையம் மூன்றாம் பதிப்பாக வெளியிட்ட நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகிறது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை.. எளிய நடையிலும், பள்ளிச் சிறார் பயன்மிகப் பெறும் வகையிலும், தமிழறிவு தழைக்கும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது. சிறுவர்க்கான கடமைகளைக் கூறும் அடிகளார், சிறு கதைகள் பலவற்றின் வழியாகச் சிந்தனைகளை வளர்த் துள்ளார். அடிகளார் சொல்வளனும் கற்பனை வளனும் இந்நூற் செய்திகளுக்குத் துணை நிற்கின்றன. ஆய்வு நெறிகளையும் ஆய்வுப் பயன்களையும் ஆய்வாளர் இயல்புகளையும் அடிகளார் விளக்கி யுள்ளார். உலக நிகழ்ச்சிகளை உற்றுநோக்கி ஆராயும் ஆய்வே, உண்மைப் பயன்மிகு ஆய்வாகும். செந்தமிழ்வழி சிறுவர்க்கான சிறந்த கருத்து களை அடிகளார் அன்பு வடிவிலும் கூறியுள்ளார். நல்லெண்ணமும் நன் முயற்சியும் கொண்டால் செல்வத்தையும் சிவத்தின் அருளையும் கொள் ளலாம் எனக் கூறும் இந்நூலுக்கு ஆர்வந்தூண்டும் அறிவார்ந்த ஆங்கில முன்னுரை மேலும் அழகு சேர்க்கிறது. - நா. செயப்பிரகாசு மறைமலையடிகளாரின் இலக்கியப் படைப்புகள் Preface “Tamil can readily dispense with the greater part or whole of Sanscrit, and by dispensing with it rises to a purer and more refined style, where as English cannot abandon its Latin without abandoning perspicuity.:” -Dr. Caldwell in his “Comparative Grammar of the Dravidian Languages,” 3rd edition, P.47. This great truth discriminatively perceived and impartially proclaimed by Dr. Caldwell the greatest Dravidian philologist, concerning the richness of the Tamil language and the poverty of the other, it is regrettable even Tamil scholars of the land have not sufficiently recognised. How rich, pure and elegant in words and phrases the ancient Tamil literature had been, how simple, yet how lovely, original, edifying and true to nature had the conceptions of its poets and prose writers shone, but to what a poor, mixed, inelegant and low style has the language of its modern literatue fallen, and to what an artificial, ugly, slavish, corrupted and false mode of strain the thoughts and ideas of its authors are fettered, a slight comparison of the two literatures will easily disclose. As has been truly observed by J.A. Symonds, “The genius of a language is the genius of the race which made it.” This significant fact as applying to Tamil cannot be expressed so well as in the notable works of Dr. Gilbert Slater who writes thus: “The very character of the Tamil language, the perfection with which it has been developed into an organ for precise and subtle thought, combined with the fact that it represents a much earlier stage in the evolution of inflexional language than any Indo-Germanic tongue, suggests, though of course it does not prove, the priority of the Dravidians in attaining settled order and regular government.” (The Dravidian Element in Indian Culture, p 70) Though Dr. Slater, in claiming “a greater antiquity for Dravidian than for Aryan civilisation”, only suggests, from a correct understanding of the perfect structure of Tamil, the fact that the Tamilians had attained to a settled order of society and government long before the Aryan people settled into order yet an attentive study of the very ancient Tamil work the Tholkappiam and such old Tamil classics as the Pathuppattu, the Purananuru and others will afford proofs indisputable for substantiating what the learned doctor has hinted above. As the primary function of language is to facilitate the communication of ideas among a people by means of sounds commonly recognised by them, as the growth of civilisation among them can increase only in proportion as they imbibe the thoughts and ideas of their own inteligent men and make them the guiding principle of life, and as this intermingling of thoughts and ideas cannot take place but through their own recognised, connected, significant sounds called their mother tongue, it had become absolutely necessary for them to preserve their language from constant change and decay and make its usage pure and stable. It is only in the midst of peoples who thus advance in civilisation that the necessity of keeping their tongue pure, undefiled and fixed is deeply felt. Others who take no effort at all to better their condition but are content with the mere satisfaction of their animal appetites, care so little to stamp the usage of their speech that in a round of ten or twenty years a new langauge comes to life among them and in another round it dies away. After quoting many instances to show how languages, like mushrooms, rise and perish rapidly among savages, the great and distinguished linguist Prof. Max Muller says: “We read of missionaries in Central America who attempted to write down the language of savage tribes, and who compiled with great care a dictionary of all the words they could lay hold of. Returning to the same tribe after the lapse of only ten years, they found that this dictionary had become antiquated and useless. Old words had sunk to the ground and new ones had arisen to the surface; an to all outward appearance the language was completely changed.” (The science of Language, 1899, Vol. I. p66) It must be obvious then how important it is for a civilized people to keep their language intact and maintain its purity to an utmost extent. Still, however civilized a people may be, all the persons who compose it cannot exert themselves to keep their language pure and fixed since laziness in an inborn principle in many which renders them indifferent to a correct pronunciation of words and sentences. And is close association with this principle of laziness which inwardly undermines the structure and stability of a language, another equally baneful, springing from the desire for imitation, comes rather outwardly from the contact of two peoples speaking or using two different languages, and induces them to import the words and phrases of the one into the other. Unless the mischief played by these two evil principles is checked strongly and in time, a language cannot live long but will quickly pass away and with it all scope for culture and civilisation will also pass away. Now where can we look for a potent power to come from and check the operation of the two evils but from the small but active and intelligent section of a people which forms the centre radiating knowledge and civilisation al around. If a people could be so fortunate, like the Tamilians or the Egyptians, as to possess early among them an intelligent class who, by creating a literature and committing it to writing, made a persistent effort to check the decay of their language and the promiscuous mixture of foreign elements in it, their language, theirs alone, would acquire a vitality that would keep it permanently living, But for the creation and existence of a large and rich literature possessing a many-sided interest for its people, it would not have been possible to arrest the change and decay of a language. Prof. Sayce pertinently well observes: “Destroy literature and facility of intercommunication, and the languages of England and America would soon be as different as those of France and Italy” (The science of Languageï 1900, Vol p 210). When one grasps the importance of this circumstance which controls the fate and destiny of a language it would become clear to his or her mind why Tamil has lived so long and still continues to live in all its youthful vigour, even after such cultured languages of high antiquity as the Egyptian, the Accadian, the Assyrian, the Hebrew, the Aryan and so on have ceased to exist. So far as we can compute on historical grounds, it is for more than ten thousand years that the Tamil language is being spoken and written. And to invigorate its constitution in addition to its innate vitality it possesses a vast, varied, original, useful and highly interesting literatue produced from 5000 B.C. up to the present times. The great and momentous fact must be borne in mind that, of the few cultivated languages of the ancient world, Tamil alone, as I just pointed out, is still living in all its richness and youthful vigour, all others of the modern world being only five or six hundred years old and even among these, except some European languages, few own original literatures as pure Tamil. To many it might look a surprising circumstances that Tamil should outlive all other ancient languages, that it should still display so much virility as argues for its perennial existence. But the secret is not far to seek, although it has eluded the notice of even erudite scholars. The words, phrases and sentences of Tamil require but little effort on the part of the speaker to utter them properly. The sounds of each letter and word issue forth from the throat and mouth normally and naturally, giving no trouble whatever to the speaker. That all its twelve vowels and eighteen consonants constitute the only natural and normal sounds that could come out from the human voice with the least effort, can be shown clearly by inquiring into the phonetic and physiological laws that lie at their basis; but in a short preface like this it is not possible to enter into that profitable study. We have already shown that laziness in pronunciation forms one of the main factors that lead to the constant change, decay and death of languages. But in the case of Tamil, however lazy a man might be, he cannot pronounce its words so badly as to efface their identity altogether. On the other hand, the words themselves, without requiring much effort, flow out from him like the rhythm of a sweet tune issuing forth from the strings of a harp touched by summer breeze. For the Tamil lanugage does not possess such hard consonants, hissing sounds and aspirates as are possessed by Sanscrit, Hebrew and other cognate languages. It is this distinct melliflous character of its sounds that has preserved and still preserves Tamil from any disastrous change and decay. To this day even the illiterate Tamil peasants understand the classical poetic language of the Thirukkural that was composed at the beginning of the Christian era. When I had been at Jaffna during my lecturing tour, I was struck with wonder when I heard from the lips of its people many pure Tamil words used in ancient Tamil classics, but which have fallen into disuse in Madras and suburban cities. Even big cities like Madras where all sorts of people speaking all sorts of languages mix and mingle together, all those who speak Tamil speak it purely whether they be the born Tamils or others who have adopted it merely for social intercourse or business purposes. In the colloquial Tamil scarcely one percent of either Sanscrit or other foreign words mixes. But the mischief that affects it badly comes mainly from the circle of English-knowing brahmin and non-brahmin officials, who speak neither pure Tamil nor pure English, but mix the two together so badly and ridiculously that neither a Tamilian nor an Englishman understands their language but turns aside with disgust. Besides introducing into their spoken and written Tamil many an English word and phrase, nay even whole sentences, the brahmins and their followers import into it Sanscrit and Hindustani terms also. This “constant degradation of language” in the words of Pater, “by those who use it carelessly,” at present affects Tamil so wholly by the slipshod fashion in which it is handled by the so called educated people. Whether your speak English, or whether you speak Tamil or any other language, you must learn to use it in such a way as to make your ideas quite intelligible to the people who are born and bred in that language. The standard by which one ought to measure the nature and use of a language must be the extent of its usage among the largest portion of its people in the daily intercourse of their life. As the educated section forms a very small minority of almost all the people in the world, especially in this country not only is it an inconsiderable part, but it also concerns itself less about the welfare of the masses than its own, the present fashionable mode of their easy talk cannot, with any propriety, be taken as the standard for using a language like Tamil which has been cultivated for more than fifty centuries and is spoken still by more than twentyone millions in Southern India and Ceylon alone. As days advance with the spread of English education, the gulf between the educated and the uneducated Tamils also widens, their being little understanding between them and little sympathy with each other. The root-cause of this may, by all careful observers, be traced to the inadequate instruction imparted in Tamil to students reading from the High School to College classes. The object of the following treatise therefore is to remedy this defect at first by feeding properly the acquisition of the knowledge of Tamil at its very root, and secondly by acquainting the young mind not only with a knowledge of actual facts but also with practical moral maxims clothed, of course, in the attractive allegorical form called the fable. To attain my first object the whole work is written in pure but simple Tamil, only here and there so interspersed with the words and phrases taken from the classical Tamil literature, as to make their meaning easily understood by their context and help the students in this way early to store in their memory a considerable number of fine and beautiful words and expressions they will frequently meet with in their later course of higher Tamil studies. Although I have in this prose work scrupulously avoided quoting any poetic, yet the synonyms given at the opening of each original essay and the classical terms and expression used here and there, will, I hope, greatly contribute to a sound knowledge of Tamil, of its structure and peculiarities, and aid the student to understand any poetical composition also to some extent. The manner of writing employed in this book, besides increasing the student’s knowledge of Tamil, will also enrich his Tamil vocabulary and serve him in good stead to communicate easily to his countrymen the ideas he has imbibed from the various branches of English learning. My second object is to strike out a new path in the treatment of subjects, keeping in view the wide and amazing extension of knowledge achieved by the European nation, whole still clinging to some extent to the ancient mode of classifying subjects as laid down in the great Tamil grammar and rhetoric the Tholkappiam. Almost all the Tamil texts now in use never deviate from the beaten track of repeating the mythical stories of the Ramayana and the Mahabharata, as if the incidents related in them had been actual historical occurrences and of omitting for the most part real daring adventures and soul-inspiring deeds of the heroes who actually existed in countries other than India. By this blind belief and persistent treatment of worn - out myths , by this wanton neglect doggedly maintained towards the actual greatness of the heroes of other countries, these Tamil texts, at the very time of its genial growth, blunt the historic sense of the pupils and breed in its stead an undesirable credulity which never leaves them even after years of their excellent culture in English. I have, therefore, completely left out all kinds of Indian myths in this books and brought in mainly actual historical incidents and a few supernatural events related in the reliable works in English. In rooting up blind belief and credulity from the mind of the young pupils, it is not my desire that they should be taught to disbelieve completely all occurrences of a wonderful and supernatural character. On the other hand, it is my earnest wish that they should be instructed so as to acquaint themselves early not only with what occur ordinarily within nature and human nature but also with those that occur rarely at fitful intervals within, near and beyond them, provided they belong to the class of cases proved by careful, intelligent and disinterested witnesses. Here too the students must be on their guard, lest they should fall into the error of extending theit belief from one proved supernatural and superhuman case to many an unproved one. This careful cultivation of mind, while it is plastic, will tend to make it susceptible of receiving into it only those ideas that are true, real and wholesome, and free from deceptions and will conduct it ultimately to and region where truth alone shine. For, greater than truth there is nothing to be attained by the human soul. Finally, it is my sacred duty to emphasize the importance of diligently cultivating a pure Tamil style both in speaking and writing, for that alone could urge the student to stretch his vision over the vast domain of the very valuable old Tamil literature in search of new words and expressions which lie abundantly there and which will readily serve him to express his precious new ideas in Tamil without seeking the aid of any foreign tongue. The more one exercises his mind in expressing himself clearly in his own mother tongue, the more will his powers of concentration and expression increase, and the better can he serve his country, language and religion. Further, that each and every word of pure Tamil bears on its face the mark of elegant use to which it was put for more than six thousand years by the very intelligent and highly civilized forefathers of the Tamil people, that these words, instead of becoming worn out and unfit for further use like the words of the dead languages, have, on the contrary, gained immense vitality and fresh life as times went on, every patriotic son of Tamil must impress on his mind indelibly. No filial son of Tamil can discard this priceless heritage of his own and go seeking after the aid of others that belong to those who bear no good will towards him, without degrading himself into beggarry and bringing contempt on his great forefathers and on the great language they used and cherished with so much love. Dear sons of Tamil, awake from this negligent torpor, serve your mother with filial piety and sincere heart, and reinstate her once pure and undimmed glory! Pallavaram, Vedachalam 25th March, 1934 பொருளடக்கம் பக்கம் 1. பகலவன் வணக்கம் 13 2. உலக இயக்கம் 16 3. குறிஞ்சி - மலை 22 4. முல்லைக் - காடு 27 5. மருதம் - விளைநிலம் 33 6. நெய்தல் - கடல் 38 7. பாலை வெளி 44 8. சிறுவர்க்குரிய நாட் கடன்கள் 50 9. ஆலமரமும் நாணலும் 58 10. ஒரு நாயின் அரிய செயல் 59 11. ஒரு தாயின் நல்லெண்ணம் 61 12. ஒரு கௌதாரியும் குறவனும் 62 13. ஒரு பெண்பிள்ளையும் பெட்டைக் கோழியும் 62 14. சுருக்கமான நல்லறிவு 63 15. நரியும் சேவலும் 63 16. கல்வியும் ஓய்வும் 65 17. வறுமை 67 18. வாழ்க்கையே நாடகம் 67 19. ஒரு கிண்ணம் தண்ணீர் 68 20. ஒரு பொன்மீன் 71 21. நீண்டகாலக் கடன் 75 22. ஞாயிறும் திங்களும் 75 23. உதவிச்சம்பளங் கேட்டல் 76 24. ஒரு மீகாமனது கனவு 77 25. ஒரு கடல் மனிதன் 78 26. உற்று நோக்கி ஆராய்தல் 81 27. ஓநாயும் கொக்கும் 87 28. ஒரு பருந்தும் சில புறாக்களும் 88 29. இரண்டு பண்டப்பைகள் 89 30. குடியானவனும் பாம்பும் 89 31. உறைநீர்க்கட்டிமேல் உடல்பருத்த மாது 90 32. பன்றி எண்ணிக்கை 91 33. திறமையுள்ள நாய் 91 34. பழக்கத்தின் வலிவு 93 35. அருளுடை ஊழியம் 94 36. கோட்டையைக் காத்த கோதை 96 37. மறைபொருட் காட்சி 98 38. மதிப்பரிய மணிக்கலன் 100 39. ஓர் அரசியல் தலைவரின் அரிய இயற்கை 102 40. உழைப்பினால் உயர்ந்த ஒரு கதை நூலாசிரியர் 103 41. ஒரு வணிகனும் குறளியும் 105 42. ஓர் அரசிளம் செல்வியின் வைரமணிகள் 112 43. ஏழைக்குடிகளும் அரசனும் 113 44. சேவலும் கழுகும் 114 45. நாட்டு எலியும் நகரத்து எலியும் 115 46. கவித்தலை மலைக்கோட்டை 118 1. பகலவன் வணக்கம் பகலவன் என்னும் தமிழ்ச் சொல் சூரியனைக் குறிப்பதாகும். சூரியன் என்னும் சொல் வடநாட்டில் இருந்த ஆரியர் வழங்கிய வடசொல் ஆகும். இத்தென்னாட்டில் உள்ள தமிழர்கள் பழைய காலத்திலிருந்து பகலவனை ஞாயிறு, கதிரவன், சுடரவன், பரிதி, என்றூழ், கனலி, எல்லோன், வெயிலோன், வெய்யோன் முதலான பல செந்தமிழ்ப் பெயர்களால் வழங்கி வந்திருக்கின்றனர். இராக்காலத்தில் தூக்கத்தில் இருந்த நாம், பகலவன் கிழக்கே தோன்றும் விடியற்காலையில் கண்விழித்து எழுந்து, அவனைப் பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தவர்களாய் நிற்கின்றோம். கிழக்கே கடல் மட்டத்திற்கு மேல் ஞாயிறு வட்டமாய்ப் பளபள என்று வருகையில் அஃது ஒரு பொன் உருண்டையைப் போல் தோன்றுகின்ற தன்றோ? அப்போது அதனைச் சூழ அதிலிருந்து பாயும் ஒளி பல்லாயிரக் கணக்கான பொற்கம்பிகள் போல் நீண்டு செல்லுதலைப் பாருங்கள்! இராப்பொழுதில் எங்கும் பரவியிருந்த இருளைத் துரத்திக் கொண்டு கதிரவன் வானத்தின்மேல் எழும்பும் இந்தக் காட்சியை நாம் காண்கையில், அது சிவந்த திருமேனி உடையனாகிய முருகப்பிரான், கறுத்த உருவத்தினை உடைய அரக்கர் கூட்டத்தின் மேல் பல்லாயிரக்கணக்கான தன் அம்புகளை ஏவி அவர்களைத் துரத்திக் கொண்டு வருவது போல் தோன்றுகின்றதன்றோ? மிகுந்த ஒளியுடன் விளங்கும் அச்சுடரவனுக்குக் கீழே பச்சை நிறத்துடன் காணப்படும் கடலானது அம்முருகப்பிரான் ஏறியிருக்கும் பச்சைமயில் போலவும், அக்கடலில் எழுந்து எழுந்து கீழே விழுந்து உலாவும் அலைகளானவை அந்த மயில் இறக்கைகளை விரித்து அடித்துப் பறந்து வருவது போலவும் தோன்றுதலை நோக்குங்கள்! இங்ஙனமாக, அப்பரிதி வானவனது தோற்றம், ஒளிவடிவான கடவுளின் தோற்றத்தையே ஒத்திருக்கின்றது. அது அல்லாமலும், அக்கடவுள் எல்லா உயிர்களையும் அறியாமை என்னும் இருளினின்றும் விடுவித்து, அவற்றின் அறிவை விளங்கச் செய்தல் போல, இவ் என்றூழும் உறக்கத்திலிருந்த எல்லா உயிர்களின் அறிவையும் எழுப்பி, அவைகளைப் பலவகை முயற்சிகளில் ஏவுகின்றது பாருங்கள்! கனலி தோன்றுகிற விடியற்காலத்தில் கோழி கூவுகின்றது, காக்கை கரைகின்றது, மாந்தோப்புகளின் உச்சி யிலே குயிலின் இனிய ஒலி கேட்கிறன்து. இன்னும் எத்தனையோ பறவைக் கூட்டங்களின் எத்தனையோ வகையான ஓசைகளும் தோன்றுகின்றன. இரவெல்லாம் கொட்டிலில் கிடந்த ஆக்கள் (பசுக்கள்) தொகுதி தொகுதியாக வெளி நிலங்களில் புல்மேயப் போகின்றன. உழவர்கள் எருதுகளை ஏரிற்பூட்டி வயல்களை உழத் துவங்குகின்றனர். இரவு முழுவதும் தூக்கமயக்கத்துடன் சரக்குவண்டிகள் ஓட்டி வந்த வண்டிக்காரர்கள் அச்சரக்குப் பொதிகளைப் பண்டசாலை முற்றங்களில் இறக்குகின்றனர். பல்வகைப் பொருள்களை விற்கும் கடைக்காரர்கள் எல்லாம் தத்தம் கடைகளை வரிசை வரிசையாகத் திறந்து வைத்து, அவைகளை வாங்க வருவார்க்கு விற்பனை செய்கின்றனர். பல்வகைக் கைத்தொழிலாளர்களும் தத்தம் தொழிற்சாலைகளுக்குச் சென்று தாம்தாம் செய்யும் தொழில்களைச் செய்யத் துவங்குகின்றனர். அரசியல் தொழில் பார்ப்பவர் தத்தம் அரசியல் நிலையங்களுக்குச் செல்லுதலையும், பள்ளிக் கூடங்களில் கல்வி பயிலும் சிறுவர்களும், கல்லூரிகளில், பல்கலை பயிலும் இளைஞர்களும் தத்தம் கழகங்களுக்கு ஏகுதலையும் பாருங்கள்! கடவுள் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களில் எல்லாம் கதவு திறந்து குருக்கள்மார் காலை வழிபாடு செய்வது எவ்வளவு சிறந்த மகிழ்ச்சியினைத் தருகின்றது! இங்ஙனமெல்லாம் நடைபெறும் உயிர்களின் இத்தனை முயற்சிகளுக்கும் காரணமாவது எல்லோனது தோற்றமே என்பது நன்றாய் விளங்குகின்றதன்றோ? இதுமட்டுமோ! நமது உயிர்வாழ்க்கைக்குக், கட்டாயமாக வேண்டப்படும் நெல், கோதுமை, பயறு, பச்சைக்காய்கறி முதலியவைகளை நாம் விளைத்துக் கொள்ளுதற்கும் வெயிலோனது வெயிலொளியே காரணமாயிருக்கின்றது. வெயில் வெளிச்சம் படாவிட்டால் எந்தப் புற்பூண்டும், எந்த மரஞ்செடி கொடியும் செவ்வையாக வளர்ந்து பயன் தரமாட்டா. இன்னும், மழைக்கால, பனிக்காலங்களில் நமது உடம்பு குளிரால் விறைத்துப் போகாமலும், நாம் புழங்கும் தண்ணீர் பனிக் கட்டியாக இறுகிப் போகாமல் இருப்பதற்கும் வெய்யோனது வெப்பம் முதன்யைக வேண்டியிருக்கிற தன்றோ? நாம் இருக்கும் இடங்களெல்லாம் பனிமூடிப் போகுமானால், நாம் எந்தப் பண்டத்தையாவது பயன்படுத்திக் கொள்ள முடியுமா? நமதுடம்பு விறைத்துப் போகுமானால் நாம் உயிரோடிருத்தல் இயலுமா? இயலாதே? ஆதலால், நாம் நமது உயிர் வாழ்க்கையைச் செவ்வனே நடைபெறுவித்தற்கும், நமது வாழ்க்கைக்குக் கட்டாயமாக வேண்டப்படும் எல்லாப் பண்டங்களும் நமக்குப் பயன்படும் நிலையிலிருந்து உதவு வதற்கும் வெய்யோனுடைய ஒளியும் வெப்பமும் முதன்மையாக இருத்தலை நாம் கருத்திற் பதித்துக் கொள்வோமாக! இவ்வாறு, எல்லா உயிர்களுக்கும் அறிவையும் முயற்சியையும் எழுப்புதலிலும், அவ்வுயிர்களை உடம்புகளில் தோன்றச் செய்து அவற்றைப் பாதுகாத்தலிலும், அவ்வுயிர்கள் நுகர்ச்சிக்கு வேண்டிய எல்லா உணவுப் பொருள்களையும் விளைத்துத் தருதலிலும் பகலவனுடைய தன்மையும் செயலும் கடவுளின் தன்மையையும் அருட்செயலையும் ஒத்திருத்தலால், அப்பகலவனையே கடவுளாக அல்லது கடவுளின் ஒளி வடிவாகக் கருதிக், காலையில் அவன் கிழக்கில் எழும்போதும், மாலையில் அவன் மேற்கில் மறையும் போதும் அவனை உள்ளம் உருகிக் கைகூப்பித் தொழுவோமாக! 2. உலக இயக்கம் நாம் உறையும் இவ்வுலகமானது வான் வெளியில் பந்து போல் சுழலும் ஓர் உருண்டை வடிவினதாகும். நாம் இருக்கும் இதன் மேற்பரப்பின் மையத்திலிருந்து இதனை ஊடுருவித் துளைத்துக் கொண்டு அளந்தபடியே நாம் இதன் கீழுள்ள மேற்பரப்பின் மையத்திற் சென்று சேரக் கூடுமாயின், இஃது 7,900 மைல் குறுக்களவுள்ளதாய் இருத்தலை அறிந்து கொள்ளலாம். இதன் சுற்றளவோ 25,000 மைலாகும். இஃது உருண்டை வடிவினதென்பது எங்ஙனம் அறியக் கூடுமெனின், நாம் ஒரு கடற்கரையிற் சென்று நின்று, அக்கரையை நோக்கி வரும் ஒரு கப்பலைக் காண்குவமாயின், நெடுந்தொலைவிலிருந்து வரும் அக்கப்பலின் மேலுள்ள பாய்மரங்களே முதன்முதன் கட்புலனாகும். பின்னர் அது இந்நிலச்சரிவில் பரவி நிற்கும் கடல்மேல் ஏறிக் கிட்ட வரவரப் பாய்மரத்தின் கீழுள்ள அதன் முழுவுடம்பும் பையப்பைய நன்கு புலனாய்த் தோன்றும். அங்ஙனமே, நாம் நிற்கும் கரையின் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுத் தொலைவிற் செல்லும் ஒரு மரக்கலமானது கடல்நீர் சரிவின் கீழ் இறங்க இறங்க அதன் முழுவுடம்பும் சிறிதுசிறிதாய் மறைந்துபோக, அதன் மேலுள்ள பாய்மரங்களே பின்னும் சிறிது நேரம் வரையில் கட்புலனா கின்றன. பின்னும் பின்னும் அது கீழ் இறங்க அதன் பாய் மரங்களும் மறைந்து போகின்றன. இதனால் இவ்வுலக மானது உருண்டை வடிவினதாதல் பெறப்படுகின்றதன்றோ? இன்னும் நமது இலங்கைத் தீவின் தென்முனைக் கண்ணதான மாத்தளை யிலிருந்து புறப்பட்டுக் கிழக்கு நோக்கியே செல்லும் ஒரு நாவாயானது, மீண்டும் அம்மாத்தளைத் துறைமுகத் திலேயே வந்து சேரக் காண்டலாலும் இந்நிலவுலகம் உருண்டை வடிவினதென்பது விளங்கா நிற்கின்றது. இதற்கு ஒரு பந்தின் நடுவில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து புறப்பட்டு நேரே செல்லும் ஓர் எறும்பு திரும்பவும் அப்புள்ளியிலேயே வந்து சேர்தலை எடுத்துக் காட்டலாம். அதுவேயுமன்றித், திங்கள் மறைவு (சந்திரகிரகண) காலத்தில், அதன்கண் காணப்படும் இவ்வுலகத்தின் நிழலானது வட்டவடிவினதாய்க் காணப்படுவ தாலும் இஃது உருண்டை வடிவினதாதல் தெளியப்படும். அவ்வாறாயின் பந்துபோல் உருண்டிருக்கும் இந்நிலமண்டிலம் வான்வெளியில் ஏதொரு பற்றுக்கோடும் இன்றிச் சுழன்று செல்வது ஒரு பெரும் புதுமையாகத் தோன்று கின்றதன்றோ? எனின்; ஆம்; ஆராய்ந்து பாராதவர்க்கு அது புதுமைதான். ஆராய்ந்து பார்ப்பவர்க்கோ, அதன் உண்மை நன்கு விளங்கும். சிறுமியர் இருவர் எதிர் எதிரே நின்று தம்கைகளைக் கோத்துப் பிடித்துக் கொண்டு பின்னே சாய்ந்த வண்ணமாய்த் தும்பி சுற்றுதலைப் பாருங்கள்! அங்ஙனம் சுற்றுங்கால் பின்னே சாய்ந்திருக்கும் அவ்விருவருங் கீழ் விழாதது ஏன்? அவர்கள் தம் கைகளை நீட்டி இறுகப் பிடித்திருத் தலாலன்றோ? அது போலவே, பகலவன் மண்டிலமானது இந்நிலவுலகத்தை இழுக்க, இஃது அதனை இழுக்க, இவ்வாற்றல் ஒன்று மற்றையதை விட்டுப் பிரியாதாய் வான்வெளியிற் சுழன்று செல்கின்றதென்க. அங்ஙனமாயின், அறிவில்லாத இவ்விருவேறு உலகும் அறிவுடைய சிறுமகாரைப்போல் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டு செல்லுதல் யாங்ஙன மெனின், அறிவுடைய உயிர்கள் மட்டுமே ஒன்றையொன்று இழுப்பன, மற்றைய இழா என்று கொள்ளுதல் பொருந்தாது. அறிவில்லாத பொருள்களும் ஒன்றையொன்று இழுக்க வல்லனவாய் இருக்கின்றன. ஒரு காந்தக்கல் தன் பருமனுக்கு ஏற்பச் சிறிய பெரிய இரும்புத் துண்டுகளை இழுத்தல் காணலாம். அக்காந்தக் கல்லை ஒரு கடிதத்தின் கீழ் பிடித்து, அக்கடிதத்தின் மேல் சில ஊசிகளை வைத்துக் கீழுள்ள காந்தக் கல்லை நெடுக இழுத்தால் மேலுள்ள இரும்பூசிகளும், அதனால் இழுக்கப் பட்டு, அக்கடிதத்தின் மேல் நகருதலைப் பார்க்கலாம். அறிவில்லாத காந்தம் இங்ஙனம் இழுக்கும் ஆற்றல் வாய்ந்ததாய் இருத்தல் போலவே, அறிவில்லாத ஞாயிற்று மண்டிலமும், வானவெளியினூடு இந்நிலவுலகத்தை இழுக்க, இதுவும் அதனையிழுக்க இரண்டும் இடைவெளியிற் சுழன்று செல்கின்றனவென்று ஓர்ந்துகொள்க. இராக்காலத்தில் நமக்கு நிலவொளியினைத் தரும் திங்கள் மண்டிலமும் இந்நிலவுலகத்தால் இழுக்கப்பட்டு, இதனைச் சுற்றியபடியே ஞாயிற்றினையும் சுற்றிச் செல்கின்றது. இங்ஙனமே, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி முதலான உலகங்களும் ஞாயிற்றினை இழுக்க, அது மற்று இவ்வுலகங்கள் எல்லா வற்றையும் ஒருங்கே இழுக்க, இவை தாமும் தம்முள் ஒன்றை யொன்று சன்னல் பின்னலாய் இழுக்க எல்லாம் வான் வெளியிற் பற்பல பந்துகள் போல் ஞாயிற்றினைச் சூழ்ந்து செல்லா நிற்கின்றன. அற்றேல், மற்றை ஆறு மண்டிலங்களும் ஞாயிற்றினைச் சூழ்ந்து செல்கின்றனவென்று கொள்ளுதல் என்னையெனில்; இவ்வேழு உலகங்களிலும், ஞாயிறு ஒன்றுமே மிகப்பெரியது. நாமிருக்கும் இந்நிலவுலகத்தைவிட ஞாயிற்று மண்டிலம் பன்னிரண்டு நூறாயிரம் மடங்கு பெரியதாய் இருக்கின்றது. அதற்கு அடுத்தபடியாகப் பெரியதாய் உள்ளது வியாழ மண்டிலமே ஆகும்; இவ்வியாழன் நமது மண்ணுலகத்தினும் ஓராயிரத்து நானூறுமடங்கு பெரியது. இதற்கு அடுத்தபடி பெரியது சனி மண்டிலம். இதற்குச் சிறியது நமது மண்ணுலகு. நமது மண்ணுலகுக்கும் சிறியது வெள்ளியுலகு. அதற்கும் சிறியது செவ்வாய் உலகு. அதற்கும் சிறியது புதனுலகாகும். இங்ஙனம் மற்றை ஆறும், பகல் மண்டிலத்திற்குச் சிறியனவாய் இருத்தலால், சிறியவாகிய அவை பெரியதாகிய பகலுலகினால் ஈர்க்கப்பட்டு அதனைச் சூழ்ந்து ஓடியபடியாய் உலவுகின்றன என்றுணர்ந்து கொள்க. இனி, முருகப்பிரானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் தொண்டர் சிலர், அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலைச் சுற்றி நிலத்திற்கிடந்து புரண்டுகொண்டே வலம் வருதலை நீங்கள் பார்த்திருக்கலாம். அங்ஙனம் புரண்டு வலம் வருபவர் முதலில் தம்மைத்தாம் சுற்றிப் பின்னர் அக்கோயிலைச் சுற்றி வலம் வருதல் போலவே, இவ்வுலகமும் முதலில் தன்னைத் தான் சுற்றிப் பிறகு ஞாயிற்று மண்டிலத்தினைச் சுற்றி வருகின்றது. இஃது ஒருமுறை தன்னைத்தான் சுற்றுதலுக்கு இருபத்து நான்கு மணி நேரம் பிடிக்கின்றது. மேற்கிலிருந்து கிழக்கு முகமாய் இஃது இங்ஙனம் தன்னைத்தான் சுற்றுங்கால் ஞாயிற்றினை நோக்கி இயங்கும் இதன் ஒருபாதி பகல் வெளிச்சம் உடையதாகவும், ஞாயிற்றின் முகமாய்த் திரும்பாத அதன் மறுபாதி இருண்ட அல்லது நிலவொளி கெழுமிய இராப்பொழுது உடையதாயும் காணப்படுகின்றன. நாம் உறையும் இத்தென்தமிழ்நாட்டில் பகலவன் உச்சியில் விளங்கும் வேளை நண்பகற் பொழுதாயிருக்கையில், நமக்குநேரே கீழ் உள்ள அமெரிக்கா தேயம் நள்ளிராப் பொழுது வாய்ந்ததாய் இருக்கின்றது; நமது தமிழ்நாட்டிற்கும் அமெரிக்கா தேயத்திற்கும் நடுவில் உள்ளதாகிய இங்கிலாந்து தேயமோ அப் போது விடியற்காலம் உடையதாய்த் திகழ்கின்றது. இவ்வாறாக இவ்வுலகம் இருபத்துநான்கு மணிநேரத்தில் தன்னைத்தான் சுற்றியபடியாய், தன்னிலும் பன்னூறாயிர மடங்கு பெரிதான பகலவன் மண்டிலத்தை முற்றுஞ் சுற்றி வருவதற்கு முந்நூற்று அறுபத்தைந்தேகால் நாட்கள் ஆகின்றன. இங்ஙனம் இது ஒருமுறை கதிரவனைச் சுற்றி வருங்காலமே ஓர் ஆண்டு (வடமொழியில் வருஷம்) என்று சொல்லப்படுகின்றது. அங்ஙனம் வெய்யவன் உலகினைச் சுற்றிச் சுழன்று வருதல் உண்மையாயின், இதன் இயக்கம் நமக்குப் புலனாகாமையும், பகலவனே இதனைச் சுற்றி வருபவனாகப் புலப்படுதலும் என்னையெனின்; இஃது ஒரு மணிநேரத்தில் ஆயிரம் மைல் விழுக்காடு கதிரவன் மண்டிலத்தை மிகு விரைவாகச் சூழ்ந்து சுழலுதலால், அத்துணை விரைவாகச் செல்லும் இதன்கண் உயிர்வாழும் நமக்கு இதன் இயக்கம் புலனாகாது போக, இதனாற் சுற்றப்படும் பகலவனே இதனைச் சுற்றி வருபவன்போல் புலப்படுகின்றான். ஒரு மணிக்கு முப்பது மைல் விழுக்காடு ஓடும் புகைவண்டியில் செல்லும் நம்மனோர்க்கே அப்புகை வண்டியின் ஓட்டம் புலப்படாமல் அதன் இருபக்கத்தும் நிற்கும் நிலனும், மரஞ்செடி கொடிகளுமே ஓடுவது போல் புலப்படுமாயின், நினைத்தற்கும் அரிய கடுவிரைவுடன் ஒருமணி நேரத்திற்கு ஆயிரம்மைல் விழுக்காடு சுழன்றோடும் இந்நிலவுலகின் இயக்கம் நமக்குத் தென்படுமோ சொல்லுங்கள்! ஆகவே, நிலையில் உள்ளது போல் காணப் படுவது பற்றி இம்மண்ணுலகு நிலம் என்னும் பெயரால் வழங்கப்படினும், ஆராய்ந்து பார்க்குங்கால் வானக்கடலில் இது மிகுதியும் விரைந்து ஓடும் ஓர் ஓடமாகவே காணப்படு கின்றது என்க. இனி, இந்நிலவுலகத்தின் இயக்கத்தில் வேறொரு முதன்மையான தன்மையும் உளது. இது தெற்கு வடக்கில் செங்குத்தாய் நின்றபடி சுழலாமல் தன் பருமன் 360 பங்கில் சிறிதேறக்குறையப் பதினைந்து பங்கு சாய்ந்தபடியாய் ஞாயிற்றினைச் சுற்றிச் சுழன்று செல்கின்றது. இங்ஙனம் சாய்ந்து சுழல்வதனால் இதன் வடமுனை தென்முனைகள் ஆறு திங்கள் பகலவன் முகமாய் திரும்பியும் பின் ஆறு திங்கள் பகலவனை விட்டுத் திரும்பியும் சுழல்கின்றன. அதனால் அவ்விரு முனைகளில் உள்ள நாடுகள் ஆறு திங்கள் ஒளியும் பின் ஆறு திங்கள் இருளும் வாய்ந்தனவாய் இருக்கின்றன. வடமுனையைச் சார்ந்த நாட்டின் கண்ணதான மேருமலையைச் சூழ்ந்த பகுதிகளில் ஆறு திங்கள் கதிரவன் ஒளியும், மற்றை ஆறு திங்கள் அவன் அங்குக் காணப்படாமையின் இருளும் தொடர்பாய் இருக்கின்றன என்று மாபாரத வனபர்வம் (163, 37, 38) பகர்வதும் நமது நிலவுலகின் சாய்ந்த இயக்கத்தால் அவ்விரு முனைகளில் காணப்படும் அவ்விருவகை நிகழ்ச்சிகளையே குறிப்பிக்கின்றது. ஆதலினால் தான், வடமுனையில் உறையும் மக்களுக்கு ஆறு திங்கள் ஒரு பகற்பொழுதாயும், மற்றை ஆறு திங்கள் ஓர் இராப்பொழுதாயும் இங்குள்ளவரால் கொள்ளப் பட்டு வருகின்றன. வடதேயங்களில் உறையும் மக்களைத் தேவர்களாகக் கொள்ளுதல் இத்தென்னாட்டவர்க்கு வழக்கம். ஆதலால், பகலொளி வீசும் ஆறு திங்களையும், அத்தேவர்கட்கு ஒரு பகற் பொழுதாகவும், அவ்வொளியின்றி இருள்சூழ்ந்த ஏனை ஆறு திங்களையும் அவர்கட்கு ஓர் இராப்பொழுதாகவும் இந்நாட்டவர் பண்டுதொட்டு வழங்கி வருகின்றனர். இந்நுட்பங்கள் எல்லாம் பண்டை ஆரியமக்களின் பழைய உறையுளை நன்காராய்ந்த பாலகங்காதர திலகரால் விரிவாக எடுத்து விளக்கப்பட்டிருக்கின்றன. வடமுனையில் உள்ளார்க்கு ஒவ்வோராண்டிலும் பகலவனொளி முதன்முதல் கட்புலனாய் தோன்றும் விடியற்காலம் பங்குனித் திங்கள் ஒன்பதாம் நாள் துவங்குகின்றது. அதிலிருந்து ஆறு திங்கள் வரையில் சுடரவன் ஒளி வானின் கண் துலங்கிய படியாய் இருந்து புரட்டாசித் திங்கள் எட்டாம் நாள் மறைந்து போக, அதிலிருந்து மறு பங்குனி வரையில் அவ்வடநாடுகள் இருள் சூழப் பட்டனவாய் இருக்கின்றன. அங்ஙனம் இருள் சூழ்ந்திருந்தாலும், பகலவன் தோன்றுவதற்கு முன் அறிகுறியாகக் காணப்படும் வைகறைப் பொழுது பங்குனிக்கு மூன்று திங்கள் முன்னரே மார்கழித் துவக்கத்தில் அந்நாட்டவர் கண்கட்குப் புலனாகுதலால்தான்இத்தென்னாட்டவர்கள் தேவர்கட்குப் பொழுது விடியும் காலமாக மார்கழித் திங்களைக் கொண்டாடி வருகின்றார்கள். ஆறு திங்கள் இருளில் கிடந்து மூழ்கும் மக்கட்கு ஒரு வகையில் ஆறுதலும் மகிழ்ச்சியும் தரும் பொருட்டு, இறைவன் அவ்வடமுனை நாடுகளுக்கு ஒரு பெரு மின்னல் ஒளியினைச் சிறிதுகாலம் வரையில் வானின்கண் தோற்றுவித்து வருதலையும் சிறார்கள் கருத்திற் பதித்து, இறைவனது பேரருள் திறத்தை வியந்து வாழ்த்துவாராக! 3. குறிஞ்சி-மலை நாம் உயிர்வாழும் இந்த நில உலகமானது, மலையும், கடலும், காடும், நாடும் என நான்கு பகுதிகளாக நம்முடைய பழந்தமிழ் நூல்களில் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்நான்கும் அல்லாத வெறு மணல்வெளியும் உண்டு. மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியென்று சொல்லப்படும். மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினை உடையது. மல் என்றால் வலிமை. மலைகளெல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை ஓங்கல், பிறங்கல், பொருப்பு, வெற்பு, என்றும், ஓரிடத்தில் குறுக்கே வளர்ந்து நீண்டு கிடக்கும் மலையை விலங்கல் என்றும், ஒன்றன் மேலொன்று அடுக்குஅடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை அடுக்கல் என்றும், எதிரொலி செய்யும் மலையைச் சிலம்பு என்றும், மூங்கிற்காடுகள் உள்ள மலையை வரை என்றும், காடுகள் அடர்ந்த மலையை இறும்பு என்றும், சிறிய மலையைக் குன்று, குவடு, குறும்பொறை என்றும், மண் மிகுந்த மலையைப் பொற்றை, பொச்சை என்றும், மலைப் பக்கத்தைச் சாரல் என்றும் பழைய தமிழ்நூல்கள் கூறா நிற்கும். மலைகளின் இயற்கை அழகைக் காணவேண்டுமானால் தெற்கே திருக்குற்றாலம், பாவநாசம் முதலிய இடங்களிலுள்ள மலைகளையும் கிழக்கே கீழ்க்கணவாய் மலைத் தொடரில் உள்ள சேர்வராயன் மலையையும், நடுவே நீலகிரி மலையையும், மேற்கே புனலூர் பக்கமாய் உள்ள மலையாளத்தையும், வடக்கே இமயமலையையும் போய்ப் பார்த்தல் வேண்டும். தெற்கேயுள்ள பாவநாச மலையடிவாரத்தில் தனிநிற்கும் சிவபிரான் திருக்கோயிலும், அதன் வலப்புறத்தும் எதிரிலும் ஓடிவரும் பொருநையாறும் (தாமிரபருணி) அவ்வாற்றங் கரையில் வான் அளாவி நிற்கும் மரங்களும், அவ்வாற்றங்கரையின் அப்பக்கத்தே நெடுகத்தோன்றும் மலைத்தொடரின் ஓரிடத்தில் முகடு சிவந்த ஓடுகள் வேய்ந்து உடம்பெல்லாம் வெண்மையாக அமைக்கப்பட்டுத் தோன்றும் பஞ்சாலைக் கட்டிடங்களும், கோயிலின் பின்புறத்தே அவ்வாற்றின்கண் காணப்படும் மண்டபங்களும், அம்மலைத் தொடர் எங்கும் உள்ள அடர்ந்த காடுகளும் புதிது சென்று பார்ப்பவர்களுக்கு அவர் முன்னறியாத ஓர் இன்பவுணர்வினை ஊட்டி அவருள்ளத்தைக் கிளரச் செய்கின்றன. வைகாசித் திங்கள் முடிவில் அங்கேசென்று, அத்திருக்கோயிலிலிருந்து ஒரு நாழிகை வழி நடந்து சென்றால், அகத்தியர் கோயிலொன்று காணப்படும். மலைப் பக்கத்தி லிருந்து விரிந்த வெள்ளாடை தொங்க விட்டாற் போலக் குமுகுமு என்ற ஓசையுடன் கீழ்விழும் அருவியின் காட்சி எத்தகையவர் உள்ளத்தையும் கவரும் தன்மையதாய் விளங்குகின்றது. அவ்வருவிநீர் கீழ்விழும் இடத்தில் மிக ஆழ்ந்ததொரு மடு அமைந்துள்ளது. அம்மடுவுக்குச் செல்லும் ஓர் ஒற்றையடிப்பாதை செங்குத்தான மலைச்சுவரை அடுத்துப் போகின்றது. அப்பாதையில் செல்லுங்கால், கீழ் இறங்கும் அருவி நீர்த் திவலையும் சாரற்காற்றும் செல்வோரின் முகத்திலும் உடம்பிலும் எதிர்த்து அறைவது போற்படும்; அப்போது கண்விழித்துப் பார்த்தாலும் வருத்தமாயிருக்கும். என்றாலும், அதற்கு அஞ்சாது எதிரேறிச் சென்று, அம்மடுவில் மிகவும் விழிப்பாய் இறங்கி முழுகினால், மிகக் குளிர்ந்த அந்நீரின் முழுக்கு மிக்கதொரு மனக்களிப்பினையும் ஆறுதலையும் தரும்; உடம்பின் நலத்திற்கும் மிக ஏற்றது. அவ்வளவு நடந்து சென்று, அம்மடுவில் முழுக இயலாதவர்கள், அம்மடுவில் நிறைந்து வழிந்து, மேற்சொன்ன அகத்தியர் கோயில் பக்கமாய் விரைந்து ஓடிவரும் பொருநை யாற்றிலேயே நீராடலாம். ஆனால், அவ்விடத்தில் அவ்வாறு ஆழம் இன்றி இடுப்பளவிற்கும் குறைந்த நீர் உடையதாய் ஏகுதலால், அதில் படுத்தபடியாயிருந்து முழுகுதலே கூடும். அங்ஙனம் முழுகுங்கால் விழிப்பாயிருக்க வேண்டும். ஏனெனில் அவ்வாற்றின் நீர் மலைமேலிருந்து கீழ்விழுந்து மிகு விரைவாய் செல்வதனால், ஆளை நிலைக்கவிடாமல் புரட்டித் தள்ளிக் கொண்டு போய்விடும். மேலும், அவ்யாற்றின் அடிப்படை யெங்கும் ஒருபெரும் பூசனிக்காய் பருமன் உள்ள உருண்டைக் கற்கள் நிறைந்திருக்கின்றன! அதனால், அதன் அடியிற் காலைப்பதியவைத்து நிற்றலும் முடியாது; சிறிது பிசகி விழுந்தாலும் புரண்டாலும் மண்டை அடிபடும்; உடம்பும் கால்கைகளும் அவற்றில் உரைசிக் காயப்படும். ஆனாலும், விழிப்பாயிருந்து நீராடுபவர்க்குப் பளிங்குபோல் தெளிந்து ஓடும் அதன்நீர் மேனிமேற் குளுகுளுவென்றுபட்டுப் பேரினிமை யினைத் தரும். நீராடியபின் அவ்வாற்றங் கரையினிடத்தே இருக்கும் அகத்தியர் கோயிலில் சென்று இறைவனை வணங்குவது உள்ளத்தைப் பேர் அருள் இன்பத்தில் அமிழ்த்தும். சுற்றி வானோங்கிய மலைகளும் காடுகளும் அடர்ந்திருக்க, எதிரே உள்ளதொரு மலை முகட்டிலிருந்து பால் ஒழுகுவது போல் ஓவென்ற இரைச்சலுடன் அருவி நீர் விழ, விழுந்த அந்நீர் திரண்ட கற்களின் மேல் விரைந்தோடிச் செல்ல, அங்ஙனம் அந்நீர் செல்லும் பொருநை ஆற்றங்கரைமேல் அவ்அகத்தியர் கோயில் தனிமையில் நிற்க. அதனுள் ஒரு குருக்கள் வழிபாடு செய்யும்போது, அங்கே வணங்கச் செல்வோர் மனம், உலக நினைவுகளை விட்டு, அங்குள்ள இயற்கைக் காட்சிகளின் அழகால் மேல் உந்தப்பட்டு, உயிர்களின் தனித்த துணையற்ற நிலைமையினையும், அந்நிலைமையில் இறைவன் ஒருவனே அவ்வுயிர்கட்கு ஒப்பற்ற துணைவனாய் வாய்த்துள்ள அருமையினையும் நினைந்து நினைந்து நெக்குவிட்டு உருகுகின்றது. இப்பாவநாசக் காட்சியினை ஒப்பவே, திருக்குற்றால மலை அடிவாரத்திலும் பெரியதொரு பழைய சிவபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. அதன் அருகேயும், மலை மேலிருந்து விழும் பெரியதோர் அருவி வீழ்ச்சி காண்டற்கு மிக இனியதோர் அழகினை உடைத்தாய்த் திகழ்கின்றது. வேனிற் கால நடுவில் இவ்வருவியில் தலைமுழுகுதற் பொருட்டுப் பல்லாயிரக்கணக்கினரான மக்கள் இத்தென்னாடு எங்கணு மிருந்து வந்து திரள்கின்றனர். இத்திருக்குற்றால மலையின் அடிவாரத்திலிருந்து மேலே செல்லுதற்குத் திருத்தமான அகன்றதொருபாதை அமைக்கப்பட்டிருக்கின்றது. இது வளைந்து மேலே சண்பகாடவி வரையில் செல்கின்றது. இதனூடு செல்கையில் இதன் இருபுறத்தும் ஓங்கி வளர்ந்திருக்கும் அடர்ந்த மரக்காடுகளின் காட்சி மனத்திற்கு அச்சத்தோடு கலந்த ஒரு மகிழ்ச்சியினைத் தோற்றுவிக்கும். சண்பகாடவியின் அருகே அழகியதொரு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது; அங்கே அருவி விழும் இடத்தின் பக்கத்தே ஒரு குகையும் உளது; இருபது ஆண்டு களுக்குமுன் யாம் அங்கே சென்றபோது இளம்பருவத்தினரான ஒரு துறவி அக்குகையில் தங்கியிருந்தனர். எம்மைக் கண்டதும் முகம் மலர்ந்து வரவேற்றுத், தாம் இருக்கும் அக்குகையின் உள்ளே எம்மை அழைத்து, அதன் உள் அமைப்பை எமக்குக் காட்டினார். இருபெருங் கற்பாறைகள் ஒன்றையொன்று தொடுதலால் அஃது ஒரு சிறிய அறைபோல் இயற்கையமைப்பு வாய்ந்திருந்தது. அதனுள் உயரமான ஒருவர் நேராக நிற்றல் இயலாது. குனிந்தபடியாகச் சென்றுதான் இருக்கவேண்டும். நான்கு பேர் இருக்கவும், இருவர் படுக்கவும் போதுமான இடந்தான் உளது. அத்துறவி அக்குகை வாயிலில் சிறு செங்கல் சுவர் எழுப்பி அதில் ஒரு சிறு கதவு பொருத்தி இருந்தார். வெளிக்காற்று உள்ளே நுழைவதற்காக அக்கதவின் மேற் பகுதியில் சிறுசிறுதுளைகள் உண்டு. இராக்காலத்தில் அருவி நீர் குடிக்கவரும் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி முதலான விலங்குகள் உருமும் ஓசையும் அவை ஒன்றை யொன்று சினந்து தாக்கிச் செய்யும் இரைச்சலும் பெருந் திகிலை விளைக்குமென்றும், நிலாக்காலத்தில் அக்கதவின் துளைவழியே தாம் அவ்விலங்குகளின் வடிவத்தைப் பார்ப்பது உண்டென்றும் அவர் எமக்குக் கூறினார். கீழே மலையடி வாரத்தில் விழும் அருவியைப் பார்க்கிலும் மேலே சண்பகாடவியில் விழும் அருவிநீர் குளிர்ந்ததாய் இருக்கின்றது; தண்ணீரின் அளவும் சிறிது குறைந்ததாக இருத்தலால் தலைமேலும் உடம்பின் மேலும் அதனைத் தாங்கி முழுகுவது இங்கே எளிதாயும் மிக இனிதாயும் இருக்கும். இனிச் சண்பகாடவியைத் தாண்டி, இன்னும் மேலேறி உயரத்திலுள்ள தேனருவிக்குச் செல்லத் திருத்தமான அகன்ற பாதை இல்லை. இண்டு இடுக்குத் தெரியாமல் அடர்ந் திருக்கும் பெருங்காடுகளின் ஊடே ஓர் ஒற்றையடிப் பாதைதான் செல்கின்றது. அப்பாதை நெடுக உதிர்ந்த இலைச் செத்தைகளும், வேர்களும், கொடிகளும் நிரம்பியிருத்தலால் அவற்றின்மேல் நடப்பது அச்சந்தரும்; இடையிடையே சிறுசிறு மலைப்பிளவுகளும் உண்டு; ஆனாலும், அவைகளை எளிதில் தாண்டிச் செல்லலாம். திடீரென்று, யானை, வேங்கைப் புலி, முள்ளம்பன்றி முதலான மறவிலங்குகள் வந்து குறுக்கிடுதல் உண்டாகையால், மேலே தேனருவிக்குச் செல்வோர் ஒருவர் இருவராய் போதல் கூடாது. ஐந்தாறு பேர்க்குக் குறையாமற் கையில் தடிக்கம்பு தாங்கி இரைச்சல் இட்டுக்கொண்டே பகல் வேளையிற் செல்லவேண்டும். இங்ஙனம் சென்றால் தேனருவியைப் போய் அடையலாம். அடைந்ததும் அங்குள்ள காட்சி கண்ணும் மனமும் கவர்ந்து மேல் ஓங்கி விளங்குதல் அறியப்படும். அங்கே விழும் தேனருவியானது மிகவும் செங்குத்தான ஒரு மலைச் சுவரின் மேலிருந்து வழிகின்றது. அவ் வருவிச் சுவருடன் வலப்புறத்தில் இணைந்திருக்கும் கற்பாறை, மேலே குடைகவித்தாற் போல் அமைந்துள்ளது; மேலிருந்து தேனருவி வழியும் மூலையில் நாலைந்து தென்னைமர உயரத்தில் வட்டமான ஒரு பெருந்தேனடை இருந்தது. அவ்வளவு பெரிய தேன் அடையை யாம் வேறு எங்குமே கண்டதில்லை. அதன் குறுக்களவு சிறிது ஏறக்குறையப் பத்து அடி இருக்கும். அதன் நிறஞ் சிறு சிவப்பாய் இருந்தமையால், அது காலையில் எழும் பகலவன் வடிவை ஒத்திருந்தது. அத்தேனடையின் பக்கத்துள்ள மூலை மேலிருந்து அருவிநீர் வீழ்தல் பற்றியே அதனைத் தேனருவியென வழங்குகின்றனர் என்றும், எக் காலத்துமே அத்தேனடை அங்கு இருக்கும் என்றும் எம்முடன் வந்தார் சொல்லக் கேட்டோம். தேனருவி கீழ்விழும் இடம் ஆழ்ந்த ஒரு சிறு குட்டமாயிருக்கிறது. மேலிருந்து விழும் நீரின் கடுமையால் அக்குட்டம் நுரையும் குமிழியும் உடையதாய் ஓயாது நிறைந்து தன்னிலிருந்து மற்றொரு சிற்றருவியினை உண்டாக்க, அச்சிற்றருவியே வரவரப் பெரிதாகிக், கீழே சண்பகாடவியிலும், அதற்கும் கீழே திருக்குற்றாலப் பெருமான் கோயிலின் பக்கத்தும் போய் வீழ்கின்றது. தேனருவியின் கீழ் உள்ள குட்டம் ஒரு கற்பாறையின் குடையில் அமைந்திருத்தலால், அதன்கண் நிரம்பும் நீர் மிக்க தெளிவுடையதாய் தூய்தாய் மிகக் குளிர்ந்து இருக்கின்றது. 4. முல்லை-காடு மரங்கள் அடர்ந்த நிலப்பகுதியே பெரும்பாலும் காடு என வழங்கப்பட்டு வருகின்றது. காடும் காடு சார்ந்த இடமும் முல்லையெனப் பெயர் பெறுமென்று தமிழ் நூல்கள் கூறாநிற்கும். பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறு மரங்கள் மிடைந்த காட்டை இறும்பு, குறுங்காடு என்றும், சிறு தூறுகள் பம்பிய காட்டை அரில், அறல், பதுக்கை என்றும் மிக முதிர்ந்து முற்றிப்போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை, சுரம், பொதி என்றும் அரசனது காவலிலுள்ள காட்டைக் கணையம், மிளை, அரண் என்றும் பண்டுதொட்டுத் தமிழ்மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர். இங்ஙனம் பலவகையால் வழங்கப்படும் காடுகளில் பெரும்பாலான மலைகளின் மேலும் மலைகளின் கீழும் மலைசார்ந்த இடங்களிலுமே காணப்படுகின்றன. சிறுபான்மைய கடல் சார்ந்த இடங்களில் இருக்கின்றன. திருமறைக்காடு (வேதாரணியம்) என்னும் சிவபிரான் திருக்கோயில் உள்ள ஊரையடுத்த காடு கடலடுத்த நிலத்தின்கண் உள்ளது. பனங்காடு உடைவேலங்காடு முதலியன பாண்டிநாட்டில் இராமேசுவரம், திருச்செந்தூர் முதலியவைகட்கு அண்மையவான கடல்சார்ந்த இடங்களில் மிகுதியாய் உள்ளன. வான் அளாவிய மரங்கள் அடர்ந்து, தொலைவிலிருந்து நோக்குவார்க்குப் பசுந்தழைப் போர்வையுடன் தோன்றி, அவர்தம் கண்ணையும் கருத்தையும் கவர்வனவாய், அருகே சென்று தம்முள் நுழைந்து நோக்குவார்க்குப் பல்வேறு வகையான பருத்துயர்ந்த மரங்களும் செடிகொடிகளும் வாய்ந்தனவாய், உள்ளே செல்லச்செல்ல இருண்ட இடங் களும் இடையிடையே பகலவன் வெளிச்சம்படும் சந்துவெளிகளும் தம் அகத்து உடையனவாய், நீர் ஊற்றுகளும் சிற்றருவிகளும் ஆங்காங்கு அமையப்பெற்று அவற்றை அடுத்துள்ள மரஞ்செடி கொடிகளில் பலவகைப் பறவைக் கூட்டங்களும் அவற்றின் ஒலிகளும் நிரம்பப் பெற்றவனவாய் தம்முள் செல்வாரின் உள்ளத்தை அச்சுறுத்தும் யானை புலி கரடி பெரும்பாம்புகளின் அடிச்சுவடுகளும் உடற்பதிவுகளும் பொருந்தினவாய், சருகுகள் பூக்கள் கனிகள் வித்துகள் இடங்கள் தோறும் உதிரப் பெற்றனவாய், இடை யிடையே பட்டு வீழ்ந்து உள் இயங்குவாரின் வழிகளை மறிக்கும் உலர்ந்த மரங்களும் கோடுகளும் வளார்களும் முட்களும் வேர்களும் கொடிகளும் துதைந்தனவாய் உள்ள பெருங்காடுகளைப் புனலூர், நீலமலை, திருக்குற்றாலமலை, அழகர்மலை, பாவநாசமலை, வெள்ளிமலை, மருதமலை, சேர்வராயன்மலை, இமயமலை முதலான மலைப் பாங்கு களுக்கு யாம் சென்ற காலங்களில் கண்டு, முன்னறியாத ஒரு பெருமகிழ்ச்சியும் இறும்பூதும் எய்தினோம். இத்தகைய பெருங்காடுகளைப் பாராதவர்களுக்கு, ஓரறிவு உயிர்களின் அமைப்பில் இறைவன் தோற்றுவித்திருக்கும் வனப்பும் உயர்ந்த காட்சியும் வியப்பும் பயனும் ஒரு சிறிதுமே விளங்கா. கானகத்தின் கவினைக் கானகத்திலன்றி வெறெங்கும் காணல் இயலாது. எத்தனை வடிவான இலைகள்! எத்தனை நிறமான மலர்கள்! எத்தனை சுவையான காய்கள்! எத்தனை இனிப்பான பழங்கள்! எத்தனை வகையான மரங்கள் செடிகள் கொடிகள்! அம்மம்ம! இறைவன் படைப்பின் பல்வேறு வகையான வியத்தகு அமைப்பும், அழகும் ஒருங்கு பொதுளிய அடவிகளின் விழுமிய தன்மையை எங்ஙனம் கூறுவேம்! எவ்வாறு காட்டுவேம்! கானகங்களின் அடர்ந்துயர்ந்த தோற்றத்தைக் காண்கையில் உள்ளமும் உணர்வும் மேலுயர்ந்து செல்கின்றன! வியப்பும் புதுமையும் கருத்தைக் கவர்ந்தெழுகின்றன! அவை மட்டுமோ! நின்ற நிலையில் நிற்கும் மரஞ் செடி கொடிகளாகிய ஓரறிவுயிர்கள், இடம் விட்டுப் பெயரும் ஏனை உயிர்களுக்கு எத்தனை வகையிற் பயன்படுகின்றன! நீரும் நிழலும் உணவும் தூய காற்றும் அவைகள் அனைத்துயிர்கட்கும் அளித்து வருகின்றன காண்மின்கள்! காடுகள் இல்லையாயின், வெய்யவன் சுடுகதிர்களால் வெதுப்பப்படும் இந்நிலம் நீர்ப்பசையற வறண்டு விடும்; ஆவியாக மாறி வானின்கண் சென்ற நீர் குளிர்காற்று வீசுதற்கு வழியின்மையால் திரும்ப மழையாகக் கீழ் இறங்காது. ஆகவே, உணவுப் பண்டங்களைத் தரும் மரம் செடி கொடிகளும் ஏனைப் பயிர்களும் உண்டாகா. இவ்வுண்மை, காடுகளை அழித்துவிடும் இடங்களில் மழை அருகிப் போதலால் நன்கு தெளியப்படும். உணவே அன்றி, நமதுயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தூய காற்றும், காடுகளில் துவன்றிய மரஞ்செடி கொடிகளினாலேயே நாம் வரப்பெறுகின்றோம். இவ்ஓரறி வுயிர்த்தொகுதிகள் மிகுந்தில்லாமல், ஏனை உயிர்த்தொகுதிகளே எங்கும் மிகுந்திருக்குமாயின் இவை வெளிவிடும் நச்சுக்காற்றை இவ்வுயிர்களே மீண்டும் மீண்டும் உட் கொண்டு, அதனால் நோய்ப்பட்டுச் சில நாட்களில் இறந்தொழியும். மற்றுக் கானகங்களிலும் பிற இடங்களிலும் உள்ள மரம் செடி கொடிகள் பயிர்களோ ஈரறிவு முதல் ஆறறிவு ஈறாக உடைய ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, நடப்பனவாகிய சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், மக்கள் முதலான இயங்குமுயிர்கள் வெளிவிடும் நச்சுக் காற்றை உள்ளிழுத்து, அதன் நச்சுத் தன்மையை நீக்கித் தூய காற்றை வெளிவிட்டு அதனை எங்கும் பரவச் செய்கின்றன. இவ்வுண்மை, பயிர் பச்சைகள் இல்லாத நகரங்களில் இருப்பவர்கள் அடுத்தடுத்து நோய்களாற் பற்றப்பட்டு விரைவில் மாய்ந்து போதலாலும், மரம்செடி கொடிகள் நிறைந்த நாட்டுப்புறங்களில் இருப்பவர்கள் நோயில்லா யாக்கையினராய் நீண்டகாலம் நன்கு உயிர் வாழ்தலாலும் இனிதறியப்படும். இனி, உலகத்திலே மிகப்பெரிய காடுகள், வட அமெரிக்கப் பெருந்தேயத்தின் ஒரு பகுதியாகிய கனடா நாட்டின் கண்ணேதான் இருக்கின்றன. இங்குள்ள காடுகளின் அளவு முந்நூற்று எழுபத்தைந்து கோடி காணிகளாகுமென்று கணக்கெடுத்திருக்கிறார்கள். தென்னமெரிக்க தேயத்திலும், இத்துணைப் பெரிய காடுகள் இருந்தாலும், அவைகளில் மரங்கள் மிக அடர்ந்திருத்தலாலும், கொடிய காட்டுவிலங்குகளும் நச்சுப் பெரும்பாம்புகளும் மிகுந்திருத்தலாலும் அவற்றினுள்ளே மக்கள் நுழைந்து சென்று பார்த்தலும் அவற்றை அளவெடுத்தலும் இயலவில்லையென்று ஆராய்ந்துபோய்க் காணும் ஆசிரியர்கள் அறிவிக்கின்றார்கள். ஐரோப்பியப் பெருந்தேயத்தின் வடபகுதியில் உளதாகிய உருசியா தேயத்திலும் மிகப்பெரிய காடுகள் இருக்கின்றன என்றும், அவற்றின் அளவும் சிறிதேறக்குறைய முந்நூற்றெழுபத்து ஐந்து கோடி காணிகளாகுமென்றும் இத் துறையில் வல்ல அறிஞர் கணக்கெடுத்துரைக்கின்றனர். இனி உயரத்திலும் பருமனிலும் குறைந்த அளவினவான மரங்கள் நிறைந்த குறுங்காடுகள் பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் ஆங்காங்குக் காணப்படுகின்றன. திருமறைக் காட்டிற்கும் கோடியக்கரைக்கும் இடையிலுள்ள காட்டைக் குறுங்காடு என்றே கூறுதல் வேண்டும். இராமேசுவரத்திற்கும் பாம்பனுக்கும் இடையிலுள்ள காடும் குறுங்காடேயாகும். திருச்செந்தூரையடுத்த நெய்தல் நிலப் பகுதிகளிலுள்ள பனங்காடு உடைவேலங்காடுகளும் குறுங்காட்டில் சேர்ந்தனவேயாகும். இனிச், சிறு தூறுகளும் குறுஞ்செடிகளும் பம்பிய காடுகளும் உண்டு. யாமிருக்கும் இப்பல்லவபுரத்திற்கு அருகில் தூறுகளும் சிறு செடிகளும் நிறைந்த ஒரு நீண் டகன்ற காடு உளது. இன்னோரன்ன சிறு காடுகள், மேற்கூறிய பெருங்குறுங் காடுகளைப் போல் காட்சிக்கு இனியனவாய் இல்லாவிடினும், நிலத்தின் வறட்சியைத் தணித்து, ஏழை எளியோர்கள் விறகுவெட்டி விற்றுப் பிழைப்பதற்குப் பெரிதும் உதவியாகின்றன. இனி, மிக முதிர்ந்து முற்றிப்போனமையால் அடர்ந்தில்லாமல் அலைசலாயிருக்கும் இலைகளையும், அவ்விலைகள் தாமும் இல்லாமல் வெறுங்கோடுகள் கொம்பு களையும் உடைய பெரிய மரங்கள் நிறைந்த காட்டின் பகுதிகளைக் கோயம்புத்தூர்க்கடுத்த வெள்ளிமலைப் பெருங்காட்டின் இடையிடையே கண்டு வந்தோம். தழைந்த பசியமரத் தொகுதிகளைக் கண்டுகளித்த கண்களுக்கு, வற்றலாய் நிற்கும் இம்மரங்களின் தோற்றம் வருத்தத்தை விளைவித்தது. செல்வத்தின் செழுமையால் கிளைஞரும் நண்பரும் சூழ வாழ்ந்து வந்தவர் ஒரு சிலர் சிறிது காலத்தில் அச்செல்வத்தை யிழந்து, சுற்றத்தார் எவருமின்றி, உடம்பின் ஒளியும் உள்ளக் கிளர்ச்சியும் அற்றுத் தனிநிற்றல் போலவும், இளமையும் அழகும் துலங்கத் தலைமையில் வீறி நின்றார், பிறர் சிலர் அவ்விளமையும் அழகும் தலைமையும் மாறி வற்றிய யாக்கையினராய் வருந்தி நிற்றல் போலவும், பச்சென்ற பொதுளிய இளந்தழைகள் உதிர்ந்து புட்களும் அவ்விலங் கினங்களும் அணுகப் பெறாமல் நீர்ப்பசையற்று வளார்களாகிய பழுத்த தலைமயிர்கள் காற்றில் அலையக் கோடுகளாகிய கைகளை நீட்டி விரித்துத் தமது வாட்டத்தைக் குறிப்பவனவாய்க் காணப்பட்ட அம்மரங்களின் தோற்றம், உயர்நிலை விரைவில் மாறப்பெறும் மக்களின் இவ்வுலகவாழ்வின் நிலைமையைக் குறிப்பதொன்றாகவே எமக்குத் தோன்றியது. இனிக், கரிந்த மரங்களையுடைய பொச்சைக்காடுகள் கதிரவன் வெப்பத்தால் கனன்று கொண்டிருக்கும் மணல் வெளிகளாகிய பாலை நிலங்களிலேதாம் அருமையாய்க் காணப்படும். இனி, முதலிற் கூறிய பெருங்காடுகளெல்லாம், பெரும்பாலும் ஆங்காங்கு அரசு செலுத்தும் அரசர்களின் காவலில் வைக்கப்பட்டு, அவர்கட்குப் பல வகையில் ஏராளமான வருவாயைத் தந்து வருகின்றன. காடுகளில் மிகுதியாக வளரும் தேக்கு, பாலை, முதிரை, ஆச்சா முதலான மரங்கள் வீடுகள், தொழிற்சாலைகள், கப்பல்கள், படகுகள் முதலியன அமைப்ப தற்கேற்ற வலிவுவாய்ந்து நீண்டகாலம் கெடாதிருப்பன வாதலால், அவற்றால் அரசர்கட்கு வரும் வருவாய் மிக்க அளவினது. மேல்பால் உள்ள சாலடி நாட்டில் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்திற்சிறந்து விளங்கிய அரசர்கள் அமைத்த பெரிய கோயில்களும் அரண்மனைகளும், நமது தமிழ்நாட்டின் மேல்கரைமலைகளில் வளரா நின்ற தேக்கு மரங்களைக் கொண்டே கட்டப்பட்ட பான்மையினைப் பழைய வரலாற்று நூலாசிரியர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இம்மரங்களேயன்றி அகில் சந்தனம் முதலான மணம் கமழ் மரங்களும், விலையுயர்ந்த யானைகளும், யானைக் கொம்புகள் - எலும்புகளும், மான்தோல் - புலித்தோல்களும், மயில் தோகைகளும், தேன் கூடுகளும், அரக்கும், நாவியும், பலவகைக் காய்கனி கிழங்குகள் வித்துக்களும் காட்டின் கணிருந்து நிரம்பப் பெறுதலின், இவைகளாலும் அரசர்கள் மிகுந்த வருவாயை அடைகின்றனர் என்பது. 5. மருதம் - விளைநிலம் நெற்பயிர் விளையாநின்ற வயல்நிலத்தையும் வயல்சூழ்ந்த இடத்தையும் மருதம் என்று தமிழ்நூலார் பண்டைக்காலந்தொட்டு வழங்கி வருகின்றனர். பழைய காலத்தில் நெற் பயிரிடுதற்கேற்றவைகளாகத் திருத்தப்பட்ட நிலங்கள், மருத மரங்களின் அருகேயிருந்தமையாற்போலும், அவற்றிற்கு மருத நிலம் என அவர் பெயர் அமைத்தனர். வயல்நிலத்தைப் பண்ணை, பணை, செய், செறு, கழனி, பழனம், விளையுள், புலம், வரப்புள் என்னும் பல சொற்களால் தமிழ் மக்கள் வழங்கி வருகின்றனர். பழைய நாட்களில் மாந்தரின் தொகை பெருகப் பெருக, அவர்களுக்கு வேண்டிய அளவு உணவுப் பண்டங்கள் மலை களிலும், கடல்களிலும், காடுகளிலும் கிடைப்பது அரிதாயிற்று. மலைகளிலும், காடுகளிலும் உள்ள கனிகள், வித்துக்கள், கிழங்குகளையும் மான், மரை, கடம்பை, ஆடு, மாடு, பன்றி முதலிய விலங்குகளையும் கடல்களிலுள்ள மீன்களையும் தின்று வந்த மிகப் பழைய முன்னோர்கள், தமது தொகை பெருகப் பெருக அவை போதாமை கண்டு, ஆடு மாடுகளை மிகுதியாக வளர்த்து அவற்றின் பயன்களான நெய், பால், தயிர் முதலியவை களையும் காடுகளில் ஆங்காங்கு இயற்கையாக வளர்ந்து கிடந்த அவரை, துவரை, மொச்சை, காராமணி, உழுந்து, பயறு, கடலை, எள்ளு முதலான பண்டங்களையும் உட்கொண்டு உயிர் வாழ்ந்து வந்தார்கள். காலஞ் செல்லச் செல்ல அவர்களின் தொகை பின்னும் பின்னும் பெருகலானமையின், இயற்கையில் கிடைத்த இத்தனை உணவுப் பண்டங்களும் அவர்கட்குப் போதா ஆயின. இதற்கென் செய்வது என்று, அவர்களுள் அறிவால் மிக்க சிலர் எண்ணிப் பார்க்கப் பார்க்க, இயற்கையாக வளரும் கூலங்களின் வித்துக்களை மட்டும் எடுத்து, வேறு மரஞ்செடிகொடிகள் இல்லாத வெளி நிலங்களைக் கீறி அவற்றுள் விதைத்தால், அவை மிகுதியான விளைச்சலைத் தருமெனக் கண்டறிந்தார்கள். அறிந்தபின் அறிஞர்களும் அவரது ஏவல்வழி நின்றவர்களும் வெட்ட வெளியாகக்கிடந்த நிலங்களைக் கோல்களாலும், குந்தாலிகளாலும் கிளறிக் கொத்தி அவற்றின்கண் அவ்விதைகளை இட, அவை வேண்டிய அளவு வெயிலும் மழையும் பெற்று, வேறு மரஞ்செடி கொடிகளின் இடைஞ்சல் இல்லாமையின், ஒன்று நூறாகப் பயன்தரலாயின. இங்ஙனம் முதன்முதல் செயற்கைப் பயிர் செய்வதற்கு வெளி நிலங்களே பயன்பட்டமையின், அவை வயல், புலம் என்று பெயர் பெறலாயின. வயல் என்னும் சொல்லுக்கு முதற்பொருள் வெளியென்பது ஆகும். புலம் என்னும் சொல்லும் எவை தம்மாலும் மறைக்கப்படாமல் கண்ணுக்குப் புலப்பட்டுக் கிடக்கும் வெளியிடத்தையே உணர்த் தும். மேலும், இயற்கையில் வறிதாய்க் கிடந்த வெளிநிலம் அறிவர் சிலரால் முதன்முதல் கிண்டிக் கிளறிப் பயிர் செய்வதற்கு ஏற்றபடியாகச் செய்யப்பட்டமையின் பின்னர் அது செய் என்றும், பண்ணப்பட்டமையின் பண்ணை, பணை என்றும் செறப்பட்டமையின் அதாவது கீறப்பட்டமை யின் செறு என்றும் வழங்கப்படலாயிற்று. இவ்வாறு முதலில் தொடங்கிய பயிர்த்தொழிலைச் செய்யச் செய்ய, மேலும்மேலும் அதனைத் திறமாகச் செய்யும் வழி வகைகளை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள். வல்லென்று கெட்டியாயிருக்கும் நிலத்தில் மென்பதத்தவான நெல்லும், ஏனை மணிகளும் வேர் ஊன்ற மாட்டாமல் பட்டுப் போதல் கண்டு வன்பாலான நிலத்தை மென்பாலாக்கும் முறை கண்டு கொண்டார்கள். நிலத்தைக் கிளறி அதற்குத் தண்ணீர் பாய்ச்சினால் மண்ணும் தண்ணீரும் கலந்து அது மென்பதப் படுதல் அறிந்தனர். இங்ஙனம் கிளறுதலாலும் தண்ணீர் பாய்ச்சுதலாலும் இறுகிய மண் கழன்று நிலம் மென் பதம் அடைதலின், அங்ஙனம் கழன்ற வயல்நிலம் கழனி எனப்பட்டது. அதன்மேல், பயன்படுத்தப்பட்ட அக்கழனியில் வித்திய நெல் ஒன்று பல்லாயிரமாய் பயன் தந்ததாகலின் பின்னர் அது பழனம், விளையுள் எனப் பெயர் பெறலாயிற்று. பயன், பழம், பழன், விளைவு முதலியன எல்லாம் ஒரே பொருளைத் தரும் சொற்களாகும். அங்ஙனம் விளைந்த நிலம் முதலில் பலர்க்கும் பொதுவாயிருந்ததனால், அதன் விளைவை அவரெல்லாரும் தத்தமக்கு வேண்டிய அளவு பங்கிட்டுக் கொண்டு வைத்து வாழ்ந்தார்கள். பிறகு நாள் செல்லச் செல்ல, நன்றாக உழைத்துப் பாடுபடுபவர்களும், பாடுபடாமல் சோம்பலுற்று இருப்பவர்களும் விளைந்த பொருள்களைத் தாம்தாம் வேண்டும் மட்டும் எடுத்துக் கொள்ள விடுதல் முறையாகாதென்று உணர்ந்தனர். உணர்ந்து அவரவர் எவ்வளவு பாடுபடக் கூடுமோ அவ்வளவு பாட்டுக்குத்தக்க நிலத்தை அளந்து வரம்பு கட்டி அவரவர்க்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். முதலில் பலர்க்குப் பொதுவாய்க் கிடந்த நிலப்பரப்பு பின்பு ஒவ்வொருவர்க்கோ அல்லது ஒவ்வொரு குடியினர்க்கோ உரியவாம் பல பகுதிகளாகப் பங்கிடப்பட்டு இடையிடையே வரம்பு உயர்த்தப்பட்டமையின், அவ்வாறு வரம்புக்கு உள்ளடங்கிய வயல்கள் வரப்புள் என்று வழங்கப்படுவ வாயின. வரம்பு என்பது வரப்பு என வலித்தது. இவ்வாறாகத் தமிழில் வயல் நிலத்திற்கு வழங்கும் பல சொற்களையும் ஆராயவே, பண்டைக் காலத்திருந்த தமிழ் முதுமக்கள் முதன்முதல் பயிர்த்தொழில் எவ்வாறு செய்ய அறிந்து, அதனை எவ்வாறு செய்து, எவ்வாறு பயன்படுத்தி இன்று காறும் வாழ்ந்து வருகின்றனர் என்னும் வரலாறு நன்கு விளங்குதல் கண்டுகொள்க. இனித் தொன்றுதொட்டுப் பயிர்த்தொழிலைப் பெருக்கி வாழும் உழவு வாழ்க்கை, தமிழ் மக்களிடம் மிகுந்து காணப்படுதல் போல், உலகத்திலுள்ள வேறு எந்த மக்களிடத்தும் மிகுந்து காணப்படவில்லை. மற்றை மாந்தர்கள் தத்தம் நாடுகளில் சிற்சில பகுதிகளிலேதாம் உழவுத் தொழிலை நடத்தி வரக் காண்கின்றோம். மற்றும் தமிழ்மக்களோ தாம் உறையும் இத்தென்னாடு முழுதும் நெற்பயிரும், பிறபயிரும் விளைத்து இனிது வாழ்ந்து வருகின்றனர். இத்தமிழ்நாட்டின் வடஎல்லையாகிய திருவேங்கடமலையிலிருந்து, தென்கோடி யாகிய குமரிமுனை வரையிலும் கீழ்கரை, மேல்கரை வரையிலும் எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேலென விளங்கும் நெல் வயல்களே நிறைந்து காணப்படுகின்றன. இதற்குக் காரணம் என்னென்றால், தமிழ் நாட்டின்கண் ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், கால்வாய்களும் மிகுந் திருத்தலே ஆகும்; வேறு நாடுகளிலோ அவை அங்ஙனம் மிகுந்திருக்கவில்லை. வடபெண்ணை, பாலாறு, தென் பெண்ணை, காவிரி, வைகை, பொருநை, நெய்யாறு முதலியன நீர்நிரம்பி ஓடுதலும், இவற்றால் நீர் ததும்பிப் பொலியுங் குளங்களும் தாமரைவாவிகளும் பெரிய பெரிய ஏரிகளும், அவற்றிலுள்ள நீரைக் கொண்டு சென்று கோடிக் கணக்கான வயல்களை ஊட்டும் கால்வாய்களும் இத்தென்னாட்டின்கண் அடுத்தடுத்துக் காணப்படுதல் போல வேறெங்கும் காணப் படுதல் இல்லை. சோழ நாட்டிற்கு ஓர் உயிராய் நின்று நிலவும் காவிரியாறு, நெடுந் தொலைவிலுள்ள மேற்கரை மலை களிலிருந்து திரட்டிக் கொணரும் வண்டல்கள் இந்நாட்டின் வயல்களிலும் படுகைகளிலும் படிந்து நிலத்தை மிகவும் செழுமையுறச் செய்கின்றன. பாண்டிநாட்டில் ஓடும் வைகை, பொருநை முதலான ஆறுகளும், காவிரியாற்றிற்கு அடுத்த படியாக அந்நாட்டின் மருதநிலங்களை வளப்படுத்தும் தன்மையனவாகவே இருக்கின்றன. இங்ஙனமாக இத் தென்னாட்டின் இயற்கை அமைப்புப் பயிர்த் தொழிலுக்குப் பெரிதும் ஏற்ற பல நலங்களும் பொருந்தி இருத்தலால், எத்தனையோ ஆயிர ஆண்டுகளாக இதன்கண் உயிர்வாழும் தமிழ்மக்கள் அத்தொழிலைச் செவ்வையாக நடத்திக்கொண்டு இனிது காலம் கழித்து வருகின்றனர். இன்னும், இத்தென்நாட்டின்கண் உள்ள மருத நிலங்களில் நெற்பயிர் மட்டுமே அன்றித் தென்னஞ் சோலைகளும், மாந்தோப்புகளும், கமுகந் தோட்டம் - வாழைத் தோட்டங்களும், எலுமிச்சை, நார்த்தை, பலா, கரும்பு முதலியன செழித்திருக்கும் தோட்டக் கால்களும், இஞ்சி, மஞ்சள், மிளகாய், சேம்பு, கருனை முதலியன வளர்ந்திருக்கும் கொல்லைகளும், கண்ணையும், கருத்தையும் கவரும் வனப்பும், பயனும் மிக்கனவாய் ஆங்காங்கு அடர்ந்து காணப்படுகின்றன. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இத்தனை உணவுப் பண்டங்களும் எளிதிலே விளைத்துக் கொள்ளுதற்கேற்ற வசதிகள் இயற்கையே அமையப்பெற்ற இத்தென்னாட்ட வர்கள், தமக்குச் சிறப்பாக உரிய உழவுத் தொழிலை மேன்மேற் செவ்வையாகச் செய்து வருவார்களானால், அவர்கள் ஏனைநாட்டு மக்களைச் சார்ந்து பிழைக்க வேண்டியதிராது. மற்றைத் தொழில்களைச் செய்யும் மற்றை நாட்டவர்களே இத்தென்னாட்டவர் உதவியை எதிர்பார்த்துப் பிழைக்க வேண்டியவராவர். சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை. (திருக்குறள் 1031) 6. நெய்தல்-கடல் பழைய தமிழ் நூல்களில் கடலையும் கடல் சார்ந்த நிலத்தையும் நெய்தல் என்று அறிவுடையோர் வழங்கியிருக்கின்றனர். கடல் என்னும் சொல் கட்பார்வையினைக் கடந்து நிற்பது என்னும் பொருளைத் தரும். கடலினது எல்லை அதனை நோக்குவாரது கண்ணுக்குப் புலனாகாமையின், அஃது அங்ஙனம் பெயர் பெறலாயிற்று. இனிக், கடலானது எந்நேரமும் பேர் இரைச்சல் இடுவது பற்றி ஆர்கலி, நரலை, குரலை, அழுவம் என்றும், பரந்திருப்பது பற்றிப் பரவை என்றும், ஆழ்ந்திருப்பது பற்றி ஆழி என்றும், உப்புநீர் உடைமை பற்றி அளக்கர் பௌவம் உவரி என்றும், மழை முகிலை உண்டாக்குதல் பற்றிக் கார்கோள் என்றும், மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் மூன்றுக்கும் காரணமாதல் பற்றி முந்நீர் என்றும் பல சொற்களால் வழங்கப்படுகின்றது. கடற்காட்சியினைக் காணல்வேண்டினால் சென்னை, நாகை, திருச்செந்தூர், தென்குமரி முதலான பட்டினங்களில் கடற்கரையோரங்களில் சென்றிருந்து காணல் வேண்டும். விடியற்காலையில் ஞாயிறு கிழக்கே தளதளவென்று எழும்போது உண்டாகும் கடலின் தோற்றம் பெரிதும் உள்ளத்தைக் கவரும் தன்மையதாய்ப் பொலிகின்றது. பகலவன் எழுவதற்கு முன் நீலநிறமாயிருந்த ஆர்கலியின் நீர்ப்பரப்பு அவனது ஒளிபாய்ந்த அளவில் பச்சென்ற நிறமுடையதாக மாறி மிளிர்கின்றது; ஞாயிற்றின் கதிர்கள் அதன்மேல் துள்ளுவது போல் காணப்படுகின்றன. கடலின் பரப்பும் கீழ்பால் வானும் ஒரு பெருவிளக்கமுடையதாய்த் திகழ, அவை இரண்டன் ஓரங்களும் பொருந்தும் இடத்தே கதிரவன் நெருப்புத் திரளைப் போல் தோன்றும் காட்சி இவ்வுலகமே தன்வாயைத் திறந்து தன் அகத்திருந்த ஒரு பெருந் தீக்கட்டி யினைக் கக்குதல்போல் இருக்கின்றது. அப்போது கடல்நீர் குன்றின் குவடென உயர்ந்து, பிறகு சுருண்டு கீழ்விழுங்கால் வெள்ளை வெளேல் என்ற அலைகளை உண்டாக்க, அவ்வலைகள் ஓவென இரைந்து வருதலைப் பார்க்கும்போது, அவை, போர்முனையில் வரிசை வரிசையாக நிறுத்தப்பட்ட வெள்ளைக் குதிரைகள் தம்முடைய கழுத்தி லிருந்து தொங்கும் வெள்ளிய கூந்தல் அலைய அலையக் கனைப்பொலியுடன் பாய்ந்து வருவது போல் தோன்றுகின்றன. அந்நேரத்தே பாய்கட்டிக் கப்பல்களும் நீராவிக் கப்பல்களும் கரைகாணப்படாத அப்பரவையினூடு தன்னந்தனியே செல்லுதலைக் காண்கையில், நமதுள்ளத்தே ஒரு வியப்பும் அச்சமும் உண்டாகின்றன. எல்லையும் ஆழமும் தெரியாத இப்பெருநீரிலே இம் மரக்கலங்கள் எங்ஙனம் எல்லைகண்டு செல்கின்றன! இவைதம்மை எல்லைகண்டு செலுத்தி அப்பா லுள்ள நாடு நகரங்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கும் மீகாமனுடைய கருத்தும் கூர்ந்த அறிவும் உணர்ந்து பார்க்கும் கால் பெரு வியப்பினை விளைவிக்கின்றன அல்லவோ! ஆழமும் அறியாமல், காற்றுக்கும், மழைக்கும் உள்ளாகிக், கடவுளை யன்றி வேறேதொரு துணையும் இல்லாமல் செல்லும் அக்கப்பல்களைக் காணும்போது அச்சமும் உண்டாகின்றது. கரையிலிருந்து நோக்குவார்க்கே இத்தகைய வியப்பும் அச்சமும் தோன்றுமானால், நடுக்கடலிலே கப்பலிலிருந்து சுற்றி ஒரே வெள்ளக் காடாயிருத்தலை நோக்குவார்க்கு இன்னும் எத்தனை வியப்பும், திகிலும் உண்டாகா நிற்கும். ஒருகால் யாம் தூத்துக்குடியிலிருந்து கப்பலேறிக் கொழும்பு மாநகர்க்குச் செல்லா நிற்கையில் இத்தகைய நிகழ்ச்சியால் எமது நெஞ்சம் அசைவுண்டது. யாம் கப்ப லேறிய மாலை கப்பல் துறைமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கையில் நள்ளிரவில் எழுந்து கடலையும், வானத்தையும் நோக்கினோம். வானில் வெண்திங்கள் நிலவொளி விரித்து வழங்கியது. அவ்வொளி பட்டுக் கட்புலனுக்கு விளங்கா நின்ற கடலிடமெல்லாம் தூய வெண்பட்டாடை விரிக்கப்பட்டாற் போல் வெளேலென ஒளிர்ந்தது. ஆ! அக்காட்சியின் வனப்பை என்னென்போம்! அதனைக் கண்டு வியந்த வண்ணமாய்ச் சுற்றிலும் பார்வையைச் செலுத்தி எட்டி நோக்கத் தொலைவிலுள்ள பௌவத்தின் பரப்பு வரவர மங்கலாய் இருளோ எனத் தோன்றியது! அருகில் காணப்படும் நிலவொளிப் பரப்பிலிருந்து, தொலைவில் தோன்றும் இருள்மிகு பரப்பினுட் கப்பல் தனியே விரைந்து செல்லும் செலவினைக் கண்டு எமதுள்ளத்தே முன்னறியாத ஒரு நடுக்கம் தோன்றியது! யாம் ஏறியிருந்த அக்கப்பலின் தனிமையையும், அதனுள்ளிருக்கும் எமது தனிமையையும் நினைத்து, அந்நேரத்தில் எல்லாம் வல்ல ஆண்டவன் துணையை அன்றி வேறேதும் இல்லாமை கண்டு எமது நெஞ்சம் நெக்குருகியது! கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் எவரேனும் கப்பலேறிச் செல்வராயின், அவர்க்குக் கடவுள் நம்பிக்கை தானே உண்டாகுமென அப்போது நன்கு உணர்ந்தோம். ஆராய்ச்சியும் அறிவும் இல்லாமல் விலங்கினங்களைப் போல் கப்பலேறிக் கடல் கடப்பாரைப் பற்றி இங்கே நினைக்க வேண்டுவதில்லை. ஆராய்ச்சியும் அறிவும் உணர்வெழுச்சியும் உடையாரே மரக்கலச் செலவால் அறிவும் இன்பமும் கடவுள் நம்பிக்கையும் எய்துவர் என்றுணர்தல் வேண்டும். இன்னும், கடலுக்கு அருகிலுள்ள ஓர் உயர்ந்த மலை மேலேறிக் கடற்பரப்பினையும், அதனையடுத்த துறைமுகப்பட்டினத்தையும் நோக்குவார்க்கு, இறைவன் வகுத்த இயற்கைக் கடலமைப்பும், மக்கள் வகுத்த ஒரு பட்டினத் துறை முகச் செயற்கை அமைப்பும் ஒருங்கு இணைந்து, ஒருபெரும் புதிய காட்சியினைப் பயந்து, அவரது உள்ளத்தினை இன்னும் ஆழ்ந்த நினைவிலே புகுத்தா நிற்கும். இறைவன் வகுத்த இயற்கையமைப்புகள் எங்ஙனம் அழகும் பயனும் வாய்ந்து திகழ்கின்றனவோ, அங்ஙனமே மக்கள் எழுப்பிய உயர்ந்த மாட மாளிகைகளும் தொழில் நிலையங்களும் அவை தம்முள் பலவற்றின் கொடுமுடிகளும் காட்சிக்கினியவாய்ப் பயன்சிறந்து திகழா நிற்கின்றன. இதனை எண்ணிப் பார்க்கையில் மக்களின் அறிவும், முயற்சியும் கடவுளின் அறிவு முயற்சிக்கு ஒரு புடை ஒத்த தெய்வத்தன்மை வாய்ந்தனவாகவே தோன்றுகின்றன. இயற்கைப் பொருளியக்கங்கள் ஒரோவொருகால் மக்களின் அறிவு முயற்சியைச் சீர்குலைத்துச் சிதைப்பனவாய் இருப்பினும், அவற்றிற்கு அஞ்சித் தமது முயற்சியைக் கை சோரவிட்டு அறிவு குன்றிப் போகாமல், அவர்கள் மேன்மேல் அறிவு மிகப் பெற்று அதனால் அரியபெரிய முயற்சிகள் செய்து அவற்றொடு போராடி வெற்றி கொண்டு நிற்கும் பேராண்மை, மலைமேலிருந்து இவ்விரு வேறு அமைப்புகளையும் நோக்கு தலால் நம் கட்புலனெதிரே நன்கு விளங்கா நிற்கின்றது. அங்கும் இங்குமாய் அலையும் கடலின் எதிரே உயர்நிலை மாடங்களும் தொழில் நிலையங்களும் அலைவின்றி வீறி நிற்கும் காட்சி அறிவுடை மக்களின் அசையா உள்ளப் பான்மையினை அறிவிக்கின்றதன்றோ? இனிக், கடலின் பரப்பு, இந்நிலத்தின் பரப்பைவிட மும்மடங்கு பெரியதாயிருக்கின்றது. ஆனதனால்தான் தமிழ் மக்கள் அதனைப் பரவை என்று வழங்கி வருகின்றனர். நிலத்தைவிட நீரின் அளவு இத்துணை மிகுதியாய் இருக்க வேண்டுவது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், நிலம் வன் பொருளாயும், நீர் மென் பொருளாயும் இருத்தலினாலும், நிலத்தின்கண் பயிராகும் பயிர் பச்சைகள் முதல் சிற்றுயிர்கள் பறவைகள் விலங்குகள் மக்கள் ஈறான எண்ணிறந்த கோடி உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கும் கடலின்கண் உயிர் வாழும் அளவிறந்த கோடி உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கு மெல்லாம் நீரின் உதவியே இன்றியமையாததாய் இருத்த லினாலும், நிலமானது தன்னளவில் மாறாமல் நிற்க நீரானது நிலத்தினுள் சுவறுவதோடு மீண்டும் மழையாய் இறங்குவதற்கு ஆவியாக மாறி வானின்கண் முகிலாய் உலவவேண்டி யிருத்தலினாலும், நிலத்தை வளமுடையதாக்கி உயிர்களைப் பல்கச் செய்யும் நீர், நிலத்தினும் மிகுந்த அளவினதாக இறைவனால் அமைத்து வைக்கப்பட்டதென்றும் உணர்தல் வேண்டும். இனிக், கடலைவிட ஆழத்தின் மிக்கதொரு நீர்நிலை எங்கும் இல்லாமையால், ஆழி என்னும் பெயர் கடலுக்குரிய தொன்றாகப் பண்டுதொட்டுத் தமிழில் வழங்கி வருகின்றது. நமது இவ்விந்திய நாட்டை அடுத்திருக்கும் இந்தியமாக்கடல் பெரும்பான்மையான இடங்களில் பன்னீராயிர அடி - சிறிதேறக்குறைய இரண்டேகால் மைல் ஆழமுடையதாக இருக்கின்றது; மற்றும் சிற்சில இடங்களில் அஃது இரண்டே கால் மைலுக்கு மேல் நாலே கால் மைல் வரையில் ஆழமுடையதாக ஆராய்ந்தறியப்பட்டிருக்கின்றது. சாவகத் தீவுக்குச் (Java) தென்னண்டையிலுள்ள கடற் பகுதியோ நாலேகால் மைல் ஆழமுடைய தொன்றாக ஆராய்ச்சி வல்ல ஆசிரியரால் அளந்து காணப்பட்டிருக் கின்றது. இனி, இவ்விந்திய மாக்கடலினும் ஆழமுடையது ஆட்டுலாந்திகு மாக்கடலேயாம்; தென் அமெரிக்காவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையிலேயுள்ள மேல் இந்தியத் தீவுகளின் வடக்கே நிற்கும் இம்மாக்கடற் பகுதியின் ஆழம் சிறிதேறக்குறைய நாலேகால் மைல் ஆகும். இனி, இப்பெருங் கடலினும் ஆழம் வாய்ந்தது அமைவுப் பெருங்கடலே ஆகும். இஃது அமெரிக்கப் பெருந்தேயத்திற்கும், ஆசியா ஆதிரேலியப் பெருந் தேயங்கட்கும் இடையிலே நிற்கின்றது. இது சிற்சில இடங்களில் ஐந்து மைல் ஆறு மைல் ஆழமும் வாய்ந்த தொன்றாக அளந்தறியப்பட்டுள்ளது. இன்னும் இஃது எவ்வளவு மிகுதியான ஆழமுடையது என்பதனை முற்றும் அளந்து காண்டல் இயலாததாய் இருக்கின்றதென ஆராய்ச்சி வல்ல ஆசிரியர் நுவல்கின்றனர். எனவே, இந்நிலவுலகத்தைச் சூழ்ந்த பேராழியின் ஆழம் ஆறுமைல் வரையில் செல்வ தென்பது நன்கறியப்பட்டிருத்தலால், அக்காரணம் பற்றி அதனை ஆழியென வழங்குவது பெரிதும் பொருத்த முடையதாதல் காண்க. இனிக், கடலின்கண் உள்ள நீர் உப்பாயிருத்தல் ஏன் என்றறிய அறிஞர் சிலர்க்கு அவா எழும். கடலுக்கு மிக அருகில் உள்ள சில கிணறுகளில் தீஞ்சுவைத் தண்ணீர் கிடைப்ப தாயிருக்க, அவற்றையடுத்திருக்கும் கடலில் மட்டும் உப்பு மிகுந் திருத்தல் வியக்கத் தக்கதன்றோ? இவ்வேறுபாட்டிற்குக் காரணம் என்னையென்று ஆராய்ந்து பார்த்தால், கடலின் நீர் மேல்நீராயிருப்பதும், அதனையடுத்துள்ள நல்ல கிணற்றுநீர் கீழ்நீராயி ருப்பதுமேயாம் என்பது புலனாகும். நிலத்தின் பல பகுதிகளிலும் மலைகள் மேலும் பெய்த மழை நீர் ஆங்காங்கு பலவகை உப்புகளையும் கரைத்தெடுத்து ஆறுகளின் வழியே கொணர்ந்து கடலின்கட் சேர்த்துவிடுகின்றது; விடவே கடல் மேல் நிற்கும் நீர் உப்புடையதாகின்றது. மற்றுக் கடலடுத்த கிணற்று நீரோ கிணற்றின் அடிப்படையிலிருந்து மேலே சுரப்பது; அவ்வடிப்படையிலுள்ள நிலம் உப்பில்லாததாயின் அதன்கட் சுவறிய மழைநீரும் தூயதாய் இன்சுவை மிகுந்து பருகுவதற்குப் பயன்படுவதாய் நிற்கும். அவ்விருவகை நீரும் வேறுபடுவதற்குக் காரணம் இவையேயாதல் கண்டு கொள்க. கடல் நீரில் எழுவகையுப்புகள் கரைந்து கலந்திருக்கின்றன என்று அறிஞர்கள் பகுத்துணர்ந் திருக்கின்றார்கள். இங்ஙனமாகக் கடல் உப்பு நீர் உடையதாதல் பற்றி அஃது உவரி என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறெல்லாம் தமிழ் மக்கள் பண்டுதொட்டுக் கடலுக்கு வழங்கிவரும் பல பெயர் களைக் கொண்டு, அவர்கள் இவ்வையம் சூழ்ந்த கடலின் இயற்கைத் தன்மைகள் பலவும் நன்கு ஆராய்ந்துணர்ந் தவர்களாதல் தெளிந்து கொள்ளப்படுமென்க. 7. பாலை வெளி பாலைவெளி என்பது புல் பூண்டுகள் மரஞ்செடி கொடிகள் வளராத மணல் நிலமும், பாறை நிலமும் ஆகும். நிலம் நன்றாய் நனைந்து வளம்பெறாததாய் வேண்டும் அளவு மழை பெய்யாமலும் கீழே நீரூற்றுகள் இல்லாமையாலும் பச்சைப் பயிர்கள் சிறிதும் வளராத பெருநிலப் பரப்புகளே பாலை நிலங்கள் என்று சொல்லப்படுகின்றன. உயிர் வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டப்படும் எந்தப் பயிரும் இவற்றின்கண் நிலை பெறாமையால், வேறு சிற்றுயிர்களும், விலங்குகளும், மக்களும் இப்பாலைவெளிகளில் காணப்படுவ தில்லை. நிலத்தின் கீழ் ஆழமாக வேர் ஊன்ற வல்லனவும் மழையினுதவியை எதிர்பாராமலே வளரத் தக்கனவுமான சப்பாத்திக் கள்ளி அல்லது நாகதாளி என்னும் முட் செடிகளும் இவற்றை ஒத்த வேறு சில செடிகளுமே சில பாலை வெளிகளில் செழிப்பாகக் காணப்படுகின்றன. எட்டி பழுத் தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன என்னும் பழமொழிப்படி இந் நாகதாளிச் செடிகள் மக்களுக்கும் பிற உயிர்களுக்கும் பெரும்பாலும் பயன்படுதல் இல்லாமையால், வறண்டு வற்றிய பாலை நிலங்களுக்கு ஏற்ற செடிகள் இவையே ஆகும். மழையும் ஆறும் ஏரியும் குளமும் நீரூற்றும் மலிந்த இத்தென்னாட்டின்கண் வறண்ட பெரிய பாலைவெளிகள் எங்குமேயில்லை. திருச்செந்தூர் இராமநாதபுரப் பக்கங் களில் காணப்படும் நெய்தல் நில மணற் பரப்புகளைப் பாலைவெளி என்று கூறுதல் ஆகாது. ஏனென்றால், அம்மணற்பாங்குகளில் பனை தென்னை உடை கருவேல் முதலான மரங்களும், எல்லா உயிர்களுக்கும் பயன்படத்தக்க ஏனை பயிர்ப் பச்சைகளும் செழுமையாய் வளர்ந்து பயன்தரக் காண்கின்றோம். இத்தென்னாட்டிற்கும், இதனை அகத்தடக்கிய இவ்விந்திய நாட்டிற்கும் புறம்பே உள்ள நிலப்பகுதிகளிலேதாம் எட்டுணையும் பயன்படாப் பெரிய பெரிய பாலை வெளிகள் அமைந்திருக்கின்றன. இப்பாழ் நிலங்கள் பெரும்பாலும் இந்நிலவுலகத்தின் மேல்பால் எல்லையிலேயே காணப்படுதலை நினைவில் வைத்தல் வேண்டும். இந்நிலவுலகத்தில் காணப்படும் பெரும் பாலைவெளிகளாவன; சகாரா, கலகாரி, கொலொராடோ, ஆதகாமா, மேல் ஆத்திரேலியா, கோபி முதலானவைகளே ஆகும். இவை தம்முள் சகாரா என்னும் பாலைவெளியே உலகத்தில் மிகப் பெரியது. இஃது ஆப்பிரிக்கா தேயத்தின் வடபகுதியில் உள்ளது. இதன் நீளம் மூவாயிரம் மைல், அகலம் ஆயிரம் மைல் என்று கணக்கெடுத்திருக்கிறார்கள். இது பெரும்பாலும் மஞ்சள் நிறமான புதைமணல் வாய்ந்தது. இதன்கண் வீசுங் கடும் சுழற்காற்று இதன் மணலை மலை போல் மேலெழுப்பிச் சுழற்றிக் கொண்டு செல்லும் தோற்றமானது. மஞ்சள் மலையொன்று மேலெழுந்து விரைந்து சுழல்வதையே ஒத்திருக்கும். இங்ஙனம் எழுந்து சுழலும் மணற் குன்றானது ஒரோவொருகால் அப்பாலை வெளியில் வழிச் செல்லும் வணிகர் குழுவை அப்படியே தன்னுட் புதைத்து விடுதலும் உண்டு. அதனால் அவ்வெளியினூடு செல்லும் வணிகர் கூட்டங்கள் அக்காற்று வீசாத காலம் பார்த்தே அதன்கட் செல்வர். மேற்குறித்த சுழற் காற்றினால் ஆங்காங்குத் தொகுத்துச் சேர்க்கப்பட்டிருக்கும் மணற் குன்றுகள் இப்பாலை நிலமெங்கும் காணப்படுகின்றன. இவைகளுட் சில கடல் மட்டத்திற்கு மேல் ஆயிர அடி உயரமுள்ளனவாகவும் இருக்கின்றன. இம்மணற் குன்றுகளே அன்றிச் சிவந்த மலைப் பாறைகளும் இவ்வெளியின் இடையிடையே சிதறித் தோன்றுகின்றன. இம்மலைப் பாறைகளுக்கும் மணற் குன்றுகளுக்கும் நடுவே பள்ளத் தாக்குகளும் உள்ளன. நீர்ப்பசை அற்று வறண்டு எந்தப் பக்கத்தில் பார்த்தாலும் மணலும் மணற்குன்றுகளும் மலைப்பாறைகளும் உடையதாய் கதிரவன் வெப்பத்தால் அழன்று கனலாயிருக்கும். இப்பெருமணற் பரப்பானது நோக்குவார்க்கும் தன்னூடு வழிச் செல்வார்க்கும் பெருநடுக்கத்தை விளைவிப்பது எனினும், இஃது இடை யிடையே ஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் கொழுமையான பேரீச்ச மரத் தோப்புகளும் இளமரக் காக்களும் வாய்ந்துள்ளன என்றால் எவர்க்குதாம் வியப்புண் டாகாது? இது கொண்டு எத்தனைக் கொடிய இயற்கை யமைப்பிலும் உயிர்களுக்கு இனியவான மென்தன்மைகள் உள்ளடங்கி இருக்குமென்பது இனிது புலனாகின்றதன்றோ? உயிரைக் கொள்ளை கொள்ளும் கொடிய நெருப்புக் காற்றுக்கும் கதிரவன் வெப்பத்திற்கும் அஞ்சாமல் அவற்றையும் ஊடுருவி வரும் அரும் பெருமுயற்சியுடையார்க்கு, ஆண்டவன் தன் தண்ணருளை வழங்கும் அடையாளமாகவே, வளப்பம் மிகுந்த இத்தோட்டங்களைத் தருதல் வேண்டும். இவற்றின் கண் ஓவாது சுரந்து ஒழுகும் நீர் ஊற்றுகளும் அவற்றால் நீர் நிறைந்து நிற்கும் வாவிகளும் பால்போலுந் தீஞ்சுவை அமிழ்தை, நாவறண்டு உடல் கரிந்து வரும் வழிப்போக்கர்க்கு ஊட்டு கின்றன; இவற்றில் செழுமையாய் வளர்ந்து பச்சைப் பசேலென நிற்கும் பேரீச்ச மரங்கள் அத்தி மரங்கள் நாரத்தை மரங்கள் கொடி முந்திரிக் கொடிகள் முதலியன, தம்மகத்துக் குலை குலையாய் தாமாகவே பழுத்துத் தொங்கும் கற்கண்டு அனைய கனிகளை ஏராளமாய்த் தந்து அவர்தம் கடும் பசியை ஆற்றுகின்றன. இவைகளே அன்றி, நெல்லும் வேறு சில பயறுகளும் கூட அவ்இளமரக்காக்களின் ஊடே ஊடே தாமாகவே செழிப்பாய் வளர்ந்து வழிச் செல்வார்க்கு வேண்டும் உணவுப் பொருள்களை உதவுகின்றன. இப்பெரும் பாலைவெளியினூடு அஞ்சா நெஞ்சினராய் வழிச் செல்லும் வணிகர் யாவர்? அவர் எவ்வாறு அப்புதை மணற்பரப்பைக் கடந்து செல்கின்றனர்? என்னும் வினா இயல்பாக எழுமாதலால், அவற்றிற்கு விடையும் சிறிது இங்கு இயம்புவாம். இப்பாலை நிலத்திற்குக் கிழக்கெல்லையிலுள்ள அரேபியா தேயத்து அராபிக்கார வணிகர்களே தம் பெண்டு பிள்ளைகளுடன் அம்மணல்வெளியைக் கடந்து செல்கின்றார்கள். இவர்கள் அதன் ஊடு செல்வதற்குப் பயன்படுத்துவன ஒட்டகங்களே ஆகும். ஒட்டகத்தைத் தவிர வேறு எந்த விலங்கும் புதைமணலிற் பெருஞ் சுமைகளைச் சுமந்து கொண்டு கடவாது. ஏனென்றால் ஒட்டகத்தின் காலடிகள் அகலமாய் பிளவின்றி உரலடி போல் சப்பையாய் தசை மிகுந்து இருத்தலால் அவை மணலுள் அழுந்தா; மற்றும், குதிரைக் குளம்படிகள் குறுகலாய் கெட்டியாய் இருத்தலாலும், மாட்டின் குளம்புகள் பிளப்புள்ளனவாய் அங்ஙனமே சிறியவாய் கெட்டியாய் இருத்தலாலும் அவ் இருவகை விலங்குகளின் கால்களும் புதைமணலிற் புதைந்துவிடும்; ஆகையால், இவை மணல் வெளிகளில் நடவா. ஆனது பற்றியே அராபி வணிகர்கள் இம்மணல் வெளியினூடு செல்வதற்கு ஒட்டகங்களையே பழக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஒட்டகங்கள் பசுந்தழைகளையும், தண்ணீரையும் தவிர வேறு எதனையும் உட்கொள்வதில்லை; அதனால் அவற்றை வளர்ப்பவர்க்குச் செலவு சிறிதுமே இல்லை. அது அல்லாமலும், ஒட்டகமானது ஓரிடத்தில் தண்ணீர் பருகினால், திரும்பப் பல நாட்கள் வரையில் தண்ணீர் வேண்டாது; ஏனென்றால், அதன் வயிற்றகத்தேயுள்ள தண்ணீர்ப்பை ஒரு பெரிய குடத்தின் அளவுள்ளது; ஓரிடத்திற் பருகிய நீரினால் அஃது அதனை நிரப்பிக் கொள்ளுமாயின், அது நீர்விடாயின்றிப் பல நாட்கள் உயிர்வாழ வல்லது. ஆகவே, நூற்றுக்கணக்கான மைல் வரையில் தண்ணீர் சிறிதும் கிடைக்கப் பெறாத சகாராப் பாலை வெளியில் எத்தனையோ திங்கள் வழிச் செல்ல வேண்டியவர் களான அராபி வணிகர்க்கு ஒட்டகத்தினும் பயன்படும் வேறொரு விலங்குண்டோ! ஆகவே, அராபி வணிகர்கள் தம்முடைய ஒட்டகங்களின் மேல் அம்பாரி கட்டி, அதில் தம் பெண் பிள்ளைகளையும், உணவுப் பண்டங்களையும், வணிகச் சரக்கு களையும் ஏற்றிக் கொண்டு, இப்பாலை நிலத்தினூடு நெடுவழி செல்வார்கள். இவ்வணிகர்கள் இதன்கண் ஒருவர் இருவராய் செல்லார்கள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வணிகர்கள் ஒருங்கு சேர்ந்துகொண்டுதான், அஞ்சத்தக்க இந்நெடுவழியில் செல்வார்கள். ஒட்டகங்களின் மேல் ஒருவர் பின் ஒருவராய் தேர்வடம் பிடித்தாற்போல் இவ்வணிகர் குழாஞ் செல்வதைக் காணுங்காட்சி பெரியதொரு புதுமையாய் வேடிக்கையாய் இருக்கும். இவ்வாறு செல்லும் அராபி வணிகர்கள் நூற்றுக்கணக்கான மைல் கடந்து சென்று, இப்பாலைவெளியின் இடையிடையே உள்ள வளவிய பசுமரத் தோட்டங்களில் சில நாட்கள் தங்கித் தங்கி இளைப்பாறிக், கடைசியாகப் பல முகமாய்ப் பிரிந்து, இப்பாலை நிலத்தின் மேல் விளிம்பைச் சூழ விளங்கா நிற்கும் நகரங்களுள் சென்று தாம் கொண்டு சென்ற சரக்கு களை விலைசெய்து விட்டு, அவ்வந்நகர்களில் கிடைக்கும் வேறு பண்டங்களை ஏற்றிக் கொண்டு, சென்ற வழியே திரும்பித் தம் ஊர்க்கு மீள்வர். இங்ஙனமாக இச்சகாராப் பெரும் பாலை நிலமும் அராபி வணிகரின் வாணிகச் செலவுக்குப் பயன்படுதல் கண்டு கொள்க. இப்பாலைவெளியின் இடையிடையே அமைந்துள்ள கொழுவிய பசுமரத் தோட்டங்களில் கொடிய கொள்ளைக்காரர்கள் குடியிருந்து கொண்டு வழிப்பறி செய்வது வழக்கம். ஆயினும், அராபி வணிகர்கள் படைக்கலன்கள் பூண்டு பெருங் கூட்டமாய்ச் செல்லத் துவங்கிய பின், அக்கொள்ளைக்காரரின் கொட்டம் அடங்கியது. சகாரா நிலத்திற்கும் அதனைச் சூழ்ந்த நகர்கள் பலவற்றிற்கும் உரியவரான பிரஞ்சு அரசியலாரும், அக்கொள்ளைக் கூட்டங்களின் குறும்பை அடக்கி, அப்பாலைவெளி நெடுகப் புகைவண்டி விடுதற்கும், பாட்டை அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இனிச், சகாராவுக்குப் பிற்சொல்லப்பட்டதாகிய கலகாரி என்னும் பாலைவெளி, தென்னாப்பிரிக்காவில் நாரத்தையாற்றிலிருந்து (Orange) அறுநூறு மைல் நீளமுடைய தாகக் கிடக்கின்றது. இதில் உப்பளங்கள் மிகுதியாய் இருக்கின்றன. இனிக், கொலொராடோ என்னும் பாலை நிலம், வட அமெரிக்காவின் இணையரசு நாடுகளின் மேற் பகுதியில் தொகுதி தொகுதியான மலைத் தொடர்கள் வாய்ந்ததாய்ப் பசுமரம் ஏதுமின்றிப் பாழாய்க் கிடக்கின்றது. ஆனாலும், இதன் மையத்தில் உள்ள மலைகள் மட்டும் அருவி நீரும், அதனாற் செழுமையான காடுகளும் உடையதாய்த் திகழ்கின்றன. இனி, ஆதகாமா என்னும் பாலைவெளி தென்னமெரிக் காவில் வடசில்லி நாட்டை அடுத்துள்ளது. இதுவும் மலைப் பாறைகளாலும், அவை தம்மிலிருந்து சிதர்ந்த குண்டுக் கற்களாலும் நிறைந்திருக்கின்றது. இதன்கண் அடர்ந்து முளைத்திருக்கும் ஒரு வகை நாகதாளிகள், குதிரைகளையும் குதிரைமேற் செல்லும் ஆடவரையும் தமக்குள் மறைத்து விடத்தக்க அத்துணை உயரமுள்ளன. இனி, மேல் ஆத்திரேலியாவிலுள்ள பாலைவெளியின் இயல்பை இன்னும் எவரும் சென்று காணவில்லை. மற்றும் நமது இந்திய நாட்டுக்கு வடக்கே நெடுந்தொலைவில் உள்ள மங்கோலியா தேயத்தில் கோபி என்னும் பாலைவெளி இருக்கின்றது. இது, சகாரா வெளியைப் போல் புதை மணல் நிறைந்ததாயும் கொடிய சூறை அனற்காற்றால் திரட்டிக் குவிக்கப்பட்ட மணற் குன்றுகளும், அவற்றினிடையே பல பள்ளத்தாக்குகளும் உடையதாயும் இருக்கின்றது. இது வெயிற் காலத்தில் வெப்பம் மிகுந்தும் குளிர்காலத்தில் குளிர்மிகுந்தும் கிடக்கின்றது. இனி, நமது தமிழ்நாட்டின் தெற்கே இருந்து கடலுள் அமிழ்ந்து போன பண்டைத் தமிழகமாகிய குமரி நாட்டின் நடுவே ஒரு பெரும் பாலைவெளி மணல் நிறைந்ததாய் இருந்தமையும், அதனூடு சென்று வணிகம் புரிந்த வணிகர் குழாங்கள் ஒட்டகங்கள் மேல் இவர்ந்தே அதனைக் கடந்தைமையும், அப்பண்டைக் காலத்தில் இயற்றப்பட்ட அரும் பெருந் தமிழ் முதல் நூலாகிய தொல்காப்பியத்தில் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறும் குறிப்புகள் கொண்டு நன்குணரப் பெறுகின்றோம். 8. சிறுவர்க்குரிய நாட்கடன்கள் சிறுவர்கள் எல்லாரும் காலையில் கிழக்கே வெயில் வெளிச்சம் தோன்றும்போது உறக்கம் நீங்கி எழுதல் வேண்டும். தூக்கம் என்னும் இருளில் அறிவு இழந்து புதைந்து கிடந்த உயிர்களெல்லாம் அவ்விருளினின்றும் மீண்டெழுந்து அறிவு வெளிச்சம் பெறுதற்கு, அப்போது வெளியே தோன்றும் வெயில் வெளிச்சமே உதவியும் அடையாளமுமாய் இருக்கின்றது. ஆதலால், காலைப் பொழுதில் ஒரு நொடியும் வீண்போகாமல் அந்நேரத்தில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் பழக்கத்தைச் சிறுபருவத்திலேயே பழகிக் கொள்ளுதல் முதன்மையானது. பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுவர் சிலர் இரவின் பிற்பகுதியில் நான்கு மணிக்கெல்லாம் துயில் நீங்கி எழுந்து தம்முடைய பாடங்களை விடியும் மட்டும் ஓதி, அதன்பின் கதிரவன் தோன்றும் விடியற்காலையில் மறுபடியும் உறங்கு கின்றனர். மற்றும் சிலர் அங்ஙனம் உறங்காமல் தமக்குரிய முயற்சிகளைச் செய்யப் புகுகின்றனர். இவ்வாறு செய்வது பிசகு. கதிரவன் மேல்பால் மறைந்து மாலைக் காலத்தில் மட்டும் ஒன்பது மணி வரையில் இளஞ்சிறார்கள் தம்முடைய பாடங்களை விளக்கு வெளிச்சத்தில் ஓதலாமேயன்றி, இராக்காலத்தின் பிற்பகுதியில் உறக்கம் நீங்கி அங்ஙனம் ஓதுவது ஆகாது. ஏனென்றால் நூல் ஓதும் மாணாக்கர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் இரவின் பிற்பகுதியிலேதான் அயர்ந்த தூக்கம் நிகழ்கின்றது; அப்போதுதான் அவர்களுடைய மூளையானது இனிதாக ஆறுதலுற்றிருக்கின்றது. மக்கள் மட்டுமேயன்றி எல்லாச் சிற்றுயிர்களும் அந்நேரத்தில் இனிய துயிலில் அமர்ந்திருக்கின்றன. கதிரவன் எழுவதற்கு முற்பட்டதாகிய அவ்வைகறைப் பொழுதில் வீசுங் குளிர்ந்த மெல்லிய காற்றானது, அத்துயிலுக்கு இனியதாய், எல்லா உயிர்கட்கும் பெரியதோர் ஆறுதலைத் தருகின்றது. அவ்வளவு அமைதிக்கு ஏற்ற அந்நேரத்தில் கண் விழித்திருந்து நூல் ஓதிய மாணாக்கர்க்குத் தலைவலியும் மயக்கமும் காய்ச்சலும் வயிற்றுளைச்சலும், அடுத்தடுத்து வருதலை யாம் பலகாற் கண்டிருக்கின்றோம். அதுவேயுமன்றிப், பாரி மாநகரத்தி லுள்ள ஆசிரியர்கள், தம் மாணாக்கர்களை விடிய இரண்டொரு மணிநேரத்திற்கு முன்னமே படுக்கையினின்றும் எழச் செய்து நூல் ஓதப் புரிந்து வந்த காலங்களிலெல்லாம், அவர்கள் பகற்பொழுது முழுவதும் தூக்கமயக்கம் உடைய ராயும் சுறுசுறுப்பு இல்லாதவராயும் இருந்தன ரென்றும், அங்ஙனம் செய்யாது விடியும் வரையில் அவர்கள் அயர்ந்து தூங்குமாறு விடுத்து, விடிந்தபின் அவர்கள் தாமாகவே எழுந்து தத்தம் கடமைகளைச் செய்யுமாறு ஒழுங்கு செய்தபிறகே அவர்கள் தெளிந்த அறிவும் சுறுசுறுப்பு முடையராய் ஒழுகின ரென்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே, பகலவன் கிழக்கே தோன்றும் காலை ஆறு மணிக்கெல்லாம் சிறுவர்கள் தாமாகவே உறக்கம் நீங்கி எழுதலே நன்றென்று உணர்ந்து கொள்க. அங்ஙனம் துயில் நீங்கி எழும்போதே ஒளி வடிவான கடவுளை நினைந்து வணங்குக. கடவுளை நினைந்து உருகிய பெரியோர்கள் அக்கடவுள்மேல் பாடிய இரண்டொரு பாடல்களை மெல்லிய இனிய குரலில் பாடி அவரை வணங்குதல் மிக நன்று. தன்னினும் சிறந்த தன்னைப் படைத்த ஆண்டவனது அருளொளியை இவ்வாறு காலையில் தன் அறிவு மலரும் காலத்திலேயே நன்றியுடன் நினைந்து குழையும் நெஞ்சுடைய ஒருவனுக்கு அந்நாள் முழுதும் அவன் அகத்தும் புறத்தும் அருள் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும். அவனது அறிவு துலக்கமாய் இருக்கும். அவன் எந்த நன் முயற்சியிற் புகுந்தாலும் அது செவ்வனே நிறைவேறும். அவனைக் காண்பவர்கள் எல்லாரும் அவன் மீது அன்புடையராவர். இவ்வாறு கடவுளைத் தொழுதபின் குளிர்ந்த நீர்கொண்டு கண்களைக் கழுவித் துடைத்துவிட்டுக், கண்ணாடியில் தன் முகத்தையும், அதன்பின் இரவிவன்மரையொத்த சிறந்த ஓவிய ஆசிரியர் வரைந்த அழகிய ஓவிய உருவங்களையும் உற்று நோக்கி மகிழ்க. உள்ளமானது வேறுநினைவுகளால் கலக்குறாது தெளிவாய் இருக்கும் விடியற் காலையிலே இங்ஙனம் அழகிய உருவங்களைப் பார்த்துவரும் சிறார் நாளேற நாளேற அழகிய உருவும் விழுமிய அறிவும் செழுவிய செயலும் உடையராகுவர். அதன்பின் கட்டாயமாகச் செய்தற்குரியது வயிற்றில் உள்ள மலச்சக்கையை வெளிப்படுத்துவதேயாகும். சிறுவர் சிலர் பலர் காலையில் இதனைச் செய்யாமல் ஓதுதல், எழுதுதல் முதலான முயற்சிகளைச் செய்துவிட்டு, அதன்பின் மலங் கழிக்கச் செல்கின்றனர். விடியற்காலையிலேயே வெளிப்பட வேண்டிய சக்கை வெளிப்படாமல் குடலுக்குள் இருக்குமாயின், அது கருகிக் குடரைப் புண்படுத்துவதுடன், இரத்தத்தையும் நஞ்சாக்கும். அதனால் மூலச்சூடும், கண்ணெரிவும், மேனி யெங்கும் சொறி சிரங்கும் ஒவ்வொருகால் வயிற்றுளைவும் உண்டாகும். ஆதலால் காலையிற் செய்யவேண்டிய முதன் முயற்சி மலநீர் கழித்தலேயாம். நகரங்களின் உள்ள மாணாக்கர்கள் தம் வீட்டுக்குப் புறம்பே சென்று குடரைத் துப்புரவு செய்தல் இயலாது. ஆனால், நகர்ப்புறங்களிலும் நாடுகளிலும் இருப்பவர்க்கோ அவ்வசதியுண்டு. ஆகையால் அத்தகையவர்கள் காலையில் ஒருகல் தொலைவுக்குக் குறையாமல் நடந்து சென்று, ஒதுக் கிடங்களில் குடரைத் துப்புரவு செய்து திரும்புக. இல்லங்களில் கட்டுப்பட்டு நிற்கும் நச்சுக்காற்றையே எந்நேரமும் உள்ளிழுக்கும் சிறுவர்க்கு, இங்ஙனம் வெளியே செல்வதால் தூயகாற்றை உட்கொள்ளும் சிறந்த நன்மை உண்டாகின்றது. அதனொடு கை கால் முதலிய உறுப்புகள் நன்கு அசைந்து உடம்புக்கும் வலிவையும் நலத்தையும் தருகின்றன. நகரங்களில் உறையும் சிறாரும் இயன்ற மட்டும் காலை மாலை வேளைகளில் உலாவுதல், நடத்தல், ஓடல், குதித்தல், பந்தாடல் முதலிய உடற்பயிற்சிகளில் தமதுடல் நலத்திற்கும் ஒழிவு நேரத்திற்கும் வேண்டுமளவு கட்டாயம் பழகிவரல் வேண்டும். குடரைத் துப்புரவு செய்தபின், ஆலங்குச்சி வேலங்குச்சி நுணாஇலை முதலியன கொண்டு பற்களை நன்றாகத் தூய்மை செய்க. இவை அகப்படாக்கால், வெள்ளிய பட்டுப் போன்ற தூய சாம்பலை வடிகட்டி வைத்துக் கொண்டு, அத்தூளை யிட்டுப் பல் துலக்கலாம். அல்லது உப்பும் அடுப்புக்கரியும் சேர்த்து அரைத்த பொடி கொண்டும் பல் தேய்க்கலாம். இவைகளைத் தவிரப் பலராற் செய்து விற்கப்படும் பற் பொடிகளைப் பயன்படுத்துதல் நன்றன்று. அதற்குமேல் வெந்நீரிலாயினும், தண்ணீரிலாயினும் நீராடுக. சீயக்காய்ப் பொடி கொண்டாவது, வெள்ளை ரோசாச் சவர்க்காரங் கொண்டாவது எண்ணெய்க் கசண்டையும், அழுக்கையும் கழுவிவிடுக. தலைக்கு நெய்ப்பானது ஏதுந் தேய்த்து முழுகல் வேண்டினால், எள்நெய், தேங்காய்நெய், வாதுமைநெய், ஆவின் நெய் முதலியவற்றுள் எது நலந் தருவதாகக் காணப்படுகின்றதோ அதனைப் பயன்படுத்திக் கொள்க. நெய்முழுக்குச் செய்யும்போது வெந்நீரில் முழுகுதலே மிகச் சிறந்தது. நெய் முழுக்கு ஆடிய நாட்களில் நீர்க் கோவையினை விளைவிக்கும் குளிர்ந்த உணவுப் பண்டங்களை விலக்கி விடுக; அங்ஙனமே அந்நாட்களில் மூளைக்கும் உடம்புக்கும் மிகுந்த உழைப்பினைத் தருதல், நூல் ஓதும் மாணாக்கர்க்கு ஆகாது. நீராடியபின் தோய்த்துலர்ந்த தூய ஆடைகளையே உடுத்துக. முன்நாள் கட்டியிருந்த ஆடையைப் பின்நாளில் உடுத்தல் சிறிதும் ஆகாது. உடம்பிலிருந்து வெளிப்படும் பல்லாயிரக்கணக்கான நச்சுப் பூச்சிகளும், ஊரிலுள்ளார் உடம்புகளிலிருந்தும் தெருப்புழுதி சாக்கடைக் குப்பைகளிலிருந்தும் வெளிப்படும் பல கோடிக்கணக்கான நச்சுப் புழுக்களும் முன்நாள் உடுத்த உடைகளில் ஒட்டியிருக்குமாதலால், அவைகளை அறவே விலக்கித் தூயவைகளையே உடுத்துக. இவ்வாறு நீராடி வந்த பின்பு இறைவனைத் தொழுது, காலை வேளையில் எளிதாகச் செரிக்கத்தக்க நொய்ய உணவு எஃது இசைந்ததோ அதனை உட்கொள்க. ஆனாலும் காப்பி தேயிலை கொக்கோ முதலிய பருகுநீரில் நோய்க்கு வித்தான புளிப்பு நஞ்சு உளது என்று அறிவில் சிறந்தோர் ஆராய்ந்து உரைத்தலால், அவைகளை முற்றுமே விலக்கி விடுதல் வேண்டும். அவற்றிற்கு மாறாகக் கொத்துமல்லி, நன்னாரிவேர், ஏலக்காய் என்னும் மூன்றும் கலந்து இடித்ததூளை நீரிலிட்டுக் காய்ச்சிக் காய்ச்சிய நீரை வடிகட்டி ஆவின்பாலும் பனங்கருப்பட்டியும் சேர்த்துப் பருகுக. இது மிகவும் குளிர்ச்சி செய்வதாகக் காணப்பட்டால் சுக்குத்தூளும், அவற்றோடு கலந்து கொள்ளலாம். இங்ஙனம் செய்துகொள்ள இயலாத வர்கள் ஆவின்பால் சேர்த்த பச்சரிசிக் கஞ்சி குடிப்பது நன்று. அதுவும் செய்ய இயலாதவர்கள் பழையசோறு சிறிது உட் கொள்ளுதல் நன்று. இவ்வளவும் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்திற்குள் செய்து முடித்துக் கொள்ளலாம். காலையில் ஆறுமணிக்குத் துயில் நீங்கி எழுந்த ஒரு சிறுவன் ஏழு அல்லது ஏழரை மணிக்குள் மேற்கூறிய காலைக் கடன்களை ஒழுங்காகச் செய்து முடித்துக் கொண்டு, அதன்பிறகு தன் பாடங்களை ஓதத் துவங்கல் வேண்டும். பாடம் ஓதும் போது தன் கருத்தை வேறொன்றிலும் செல்ல விடாமல், எந்தப் பாடத்தில் எந்தப் பொருள் சொல்லப்படுகின்றதோ அதில் தன் நினைவைப் பதித்தல் வேண்டும். நினைவைப் பல இடங்களில் சிதறவிட்டுக் கொண்டு, தவளை போல் எவ்வளவு கூவிப் பயின்றாலும், பாடப் பொருள் மனத்திற் பதியமாட்டாது. உரத்துக் கூவாமல் மெல்லிய குரலிலாவது, அன்றி வாய்திறவாமல் அமைதியா யிருந்தாவது பாடப்பொருளையும் சொல்லையும் பொருள் செவ்வையாகத் தெரிந்து கொண்டு பயிலுதல் முதன்மை யானது. இதற்கு அகராதியைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு, சிறிதும் சோம்பாது, தெரியாத சொற்பொருள்களை அதன்கண் பார்த்துப்பார்த்துத் தெரிந்து கொள்க. அன்றாடம் பாடத்தில் வரும் அருஞ்சொற்பொருளையும், முதன்மையாக நினைவில் வைக்க வேண்டிய பகுதிகளையும், பாடச் சுருக்கங் களையும் ஒருகுறிப்பேட்டில் அவ்வப்போது குறித்து வைத்துக் கொண்டு, அவைகளைப் பின் நாட்களில் திருப்பித் திருப்பிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வருக. கணக்குப் போடுதல், தேசப்படம் வரைதல், ஓவியம் எழுதுதல் முதலான பயிற்சிகளைச் செய்தற்கு நேரம் மிகுதியாய் வேண்டுமாதலால், முதலிலேயே இவைகளைத் துவங்கி விடாமல், விரைந்து படிக்கக் கூடிய பாடங்களை முதலில் எடுத்துப் பயின்று, அதன்பின் இவைகளைச் செய்து பழகுக. அவ்வாறின்றி, முதலில் கணக்குப் போடுதல் முதலான பயிற்சிகளைச் செய்து நேரத்தைக் கழித்து விடும் மாணாக்கர்கள் பின்னர் ஓதவேண்டிய பாடங்களுக்கு நேரம் இல்லாமையால் அவற்றைப் பயிலாமலேயே பள்ளிக்கூடம் சென்று ஆசிரியரால் ஒறுக்கப்படுவதுடன் ஆராய்ச்சியிலும் தவறிவிடுகின்றனர். ஆதலால், முதலில் எளிதாகப் பயின்று கொள்ளத் தக்கவைகளையே தெரிந்து பயிலுதல் வேண்டும். இவ்வாறு ஒன்பது அல்லது ஒன்பதரை மணிவரையில் அன்றாடப் பாடங்களையும் பழம் பாடங்களையும் பயின்ற பின், நேரந்தவறாமல் பத்துமணிக்கெல்லாம் பிள்ளைகள் பள்ளிக் கூடங்களுக்குப் போய்த் தத்தம் வகுப்புகளில் தத்தம் ஆசிரியரை அன்புடன் வணங்கி அமைதியாயிருந்து, அவர் கற்பிப்பவை களை அவாவுடன் கேட்டு உள்ளத்தில் நன்கு பதித்தும், அவர் கேட்கும் வினாக்கட்குப் பொருத்தமான விடைகள் மொழிந்தும், தம்மோடு உடன்பயிலும் மாணாக்கருடன் அன்புடன் கேண்மை கொண்டும் ஒழுகுதல் வேண்டும். இக்காலத்தில் பெரும்பாலும் எல்லாப் பள்ளிக் கூடங் களும் காலை ஒன்பதரை அல்லது பத்து மணிக்குத் துவங்கு வதால், அவைகளிற்பயிலும் மாணாக்கர்களுக்கும், அம் மாணாக்கர்களைப் பயிற்றும் ஆசிரியர்களுக்கும் காலைக் கடன்களை முடித்து அன்றாடப் பாடங்களைப் பார்த்து உள்ளத்தில் அமைத்துக் கொண்டு வருவதற்கு நேரமும் வசதியும் இருக்கின்றன. ஆனால் சிலபல திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டும் காலை எட்டுமணிக்கெல்லாம் துவங்குகின்றன. அப்பள்ளிக்கூடங்கட்குச் செல்லும் பிள்ளைகள் மிகச் சிறிய பருவத்தினராய் இருத்தலால், அவர்கள் மேற்கூறிய காலைக்கடன்களை எல்லாம் தெரிந்து செய்யக்கூடியவர் அல்லர் என்றாலும், அவர்தம் பெற்றோர்கள் அவர் செய்யக் கூடியவைகளை ஒழுங்காகச் செய்து பள்ளிக்கூடம் செல்லும் படி பழக்கி வருதல் முதன்மையானது. இனிப் பகல் உணவு எடுப்பதற்கென்று கொடுக்கப்படும் ஒரு மணிநேர ஒழிவு நேரத்தில், சிறுவர்கள் உணவு கொண்ட பின், தம் தோழர்களுடன் இனிதாக விளையாடல் வேண்டும். ஒருவரையொருவர் பகைத்தலும் திட்டுதலும் அடித்தலும் கூடா. கெட்ட நடவடிக்கையுள்ள பிள்ளைகளுடன் நேசம் கொள்ளுதலும் ஆகாது; பகைத்தலும் ஆகாது. அவர்களுடன் நேசங்கொண்டால் அவர்களுடைய தீய இயற்கை உமக்கும் படிந்துவிடும்; அவர்களுக்கு வரும் துன்பம் உம்மையும் சாரும். அவர்களைப் பகைத்தாலோ, அவர்கள் உம்மைப் பழிப்பர், ஏசுவர், அடிப்பர், பிறரை ஏவியும் உமக்குத் தீங்கு செய்வர். ஆதலால், அவ்விருவகையிலும் அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல், அவரைக் காண நேரும்போதெல்லாம் இனிமை யாகச் சில சொற்களைப் பேசிவிட்டுப் போய்விடுக. இனிப், பிற்பகல் முடிவில் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குத் திரும்பும்போதும் தம் தோழர்களுடன் அமைதியாகத் திரும்பல் வேண்டும். வீட்டுக்கு உடனே திரும்பாமல் மைதானங்களில் விளையாடுதற்கேனும், கடற்கரைகளில் உலவுவதற்கேனும் கடைத்தெருவுகளிற் பண்டங்கள் வாங்குவதற்கேனும், ஏரி குளம் கூவல் கால்வாய் ஆறுகளில் நீராடுதற்கேனும் செல்ல வேண்டியிருந்தால், அங்ஙனஞ் செல்வதைக் காலையிலேயே நும் பெற்றோர் களுக்குத் தெரிவித்து, அவர்கள் நும்மைத் தேடி அலைந்து துன்புறாமல் செய்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட இடங்களில் விளையாடுவதாயிருந்தாலும், மன மகிழ்வாய்ப் பொழுது போக்குவதாயிருந்தாலும், அல்லது நுமக்கு வேண்டுபவைகளை வாங்கிப் போவதாய் இருந்தாலும், உடம்பைப் பழுதுபடுத்திக் கொள்ளாமல் நோயை வருவித்துக் கொள்ளாமல் வண்டி, குதிரை, மாடு முதலியவற்றிற்கு இடையே செல்லாமல், கடைகளில் பண்டங்களைக் களவு செய்யாமல் பொய்பேசாமல் நுமக்கும் நும் பெற்றோர்க்கும் தீங்கும் துன்பமும் உண்டாக் காமல் அறிவாய் நேர்மையாய் நடந்து கொள்க. மாலையில் இருண்டுபோன பின் வெளியிடங்களில் சிலகாலம் இருளில் போக நேர்ந்தால் கையில் விளக்கில்லாமற் போகலாகாது. இன்ன நேரத்தில் வீட்டுக்குத் திரும்புவோம் என்று பெரியோர்களிடம் சொல்லி வந்தபடி, தவறாமல் அந்நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிவிடுதல் இளைஞர்களுக்குப் பெரும் கடமையாகும். இங்ஙனம் மாலையில் வீட்டிற்கு வந்த பின்னாவது அன்றி வருவதற்கு முன்னாவது வயிற்றிலுள்ள மலச்சக்கையைக் கழித்துவிடுதல் வேண்டும். பள்ளிக்கூடப் பிள்ளைகள் காலை மாலை இருபொழுதும் தவறாமல் மலச்சக்கை கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வார்களானால், அவர்கட்கு எத்தகைய நோயும் வராது. இக்காலத்து இளைஞர்கள் ஆண்டு முதிரா முன்னரே மூக்குக் கண்ணாடி இடுவது, மலச்சக்கையை நீக்கி உடம்பைத் துப்புரவாக வைத்துக் கொள்ளாமை யினாலேதான். மலக்குடலில் அழுக்குச் சேரச் சேரக் கண்ணொளி மங்கும்; மூளை தெளிவாய் இராது. ஆதலால், மாணாக்கர் அனைவரும் தமது மலக்குடலை இரண்டு வேளையும் துப்புரவு செய்வதில் கருத்தாயிருக்க வேண்டும். அதில் கருத்தில்லாத பிள்ளைகளை அவர்தம் பெற்றோர்கள் கருதிப் பார்த்தல் கட்டாயமானது. மாலையில் இல்லந்திரும்பிய பின் கட்டியிருந்த ஆடைகளைக் களைந்துவிட்டுத் தூயன உடுத்து, இறைவனை வணங்கி நல்ல சிற்றுண்டி அருந்தி, இளைப்பாறி, ஒளி மிகுதியு முள்ளதொரு விளக்கு வெளிச்சத்தில் அதனொளி நேரே கண்ணுட்படாமல் ஒரு பச்சைக் காகிதத்தாற் சிறிது அதனை மறைத்து வைத்துக் கொண்டு பாடங்களை ஓதுதல் வேண்டும். சாய்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும், குனிந்து கொண்டும் ஓதாமல் நேரிருந்து ஓதுக. ஒரேயிருப்பாயிருந்து ஓதாமல் முக்கால் மணிநேரத்திற்கு ஒருகாற் பாடத்தை விட்டெழுந்து, கண்களைக் குளிர்ந்த நீராற் கழுவி, ஐந்து நிமிஷம் உலவி, அதன்பின் ஓதுக. இவ்வாறு மாலையில் ஒன்பது அல்லது ஒன்பதரை மணி வரையிற் பாடங்களைச் செவ்வையாகப் பயின்று, அதன்பின் உணவுகொண்டு உலவி உறங்குக. இங்ஙனமாகப் பகற் பொழுதையும் இரவின் முற்பொழுதையும் ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டியிருக்கச், சிறுவர்களிற் பெரும்பாலார் முறைதவறி அப்பொழுதுகளை வீணே கழித்துவிட்டு, இரவில் வயிறுநிறைய உணவு கொண்டபின் கண்விழித்திருந்து பன்னிரண்டு ஒரு மணிவரையிலும், அல்லது விடியும் முன் நான்கு மணியிலிருந்து காலை ஏழுமணி வரையிலும் நூல் ஓதுகின்றார்கள். இப்படிச் செய்பவர்கள் எல்லாரும் கண்ணோய் வயிற்றுநோய் மண்டைக் கிறுகிறுப்பு காய்ச்சல் இருமல் முதலிய நோய்களால் அடுத்தடுத்துத் துன்புறுத்தப்பட்டுக் கல்வியில் தேர்ச்சிபெறாது ஒழிதலுடன், மெலிந்து நரைத்து பழுத்து ஆண்டு முதிரா முன்னரேயும் மாண்டு போகின்றார்கள். ஆதலால், இரவில் வயிறு நிறைய உண்டபின் ஓதுதலும் ஆகாது. ஒன்பதரை மணிக்குமேல் உண்டபின் விழித்திருந்து பயிலுதலும் ஆகாதென்று கடைப்பிடிக்க. 9. ஆலமரமும் நாணலும் ஓர் ஆற்றங்கரையில் ஓங்கி வளர்ந்து அடிபெருத்த ஓர் ஆலமரம் இருந்தது; அதன் அருகே சில நாணல் புற்களும் வளர்ந்திருந்தன. அவ்வாற்றில் வெள்ளம் பெருகியோடும் போது, அந்நீரோட்டத்தின் வழியே அந்நாணற் புற்களும் வளைந்து கொடுத்து, வெள்ளம் குறைந்த பின் முன்போல் நிமிர்ந்து நிற்கும். அங்ஙனமே பெருங்காற்று வீசும்போது அது வீசும் முகமாகவே அப்புற்கள் தலைவளைந்து கொடுத்துக் காற்றுத் தணிந்த பின் முன்போலவே தலைநிமிர்ந்து நிற்கும். இதனை அருகிருந்து கண்ட ஓர் ஆலமரமானது அந்நாணற் புல்லை நோக்கி ஏளனஞ்செய்து, நீங்கள் ஏன் என்னைப் போல் தலைநிமிர்ந்து நில்லாமல் நீருக்கும் காற்றுக்கும் தலைவளைந்து கொடுக்கின்றீர்கள்? என்று வினவியது. ஐயா, உங்களைப் போல் எங்களுக்கு உடம்பில் வலிவில்லை; ஆகையால், தலைவளைந்து கொடுப்பதன்றி வேறு என் செய்ய வல்லோம்! என்றன நாணற்புற்கள். அச்சொற்கேட்டு அவ்வால மரம் தன் வலிமையை வியந்து இறுமாந்து நின்றது. பின்னர் சிலநாளில் ஒரு பெரும் புயற்காற்று வீச, அவ்வாற்றில் வெள்ளமும் பெருகி வந்தது. அப்போது அவ்வாலமரம் வெள்ளத்தால் வேர்கள் மேலே கிளப்பப்பட்டும் கிளைகள் காற்றால் அலைக்கப்பட்டும் கீழே சாய்ந்து விழுந்தது. நாணற்புற்களோ அவையிரண்டுக்கும் தலைவளைந்து கொடுத்து, அவை ஓய்ந்தபின் என்றும்போல் தலைநிமிர்ந்து நின்றன. ஆகவே, இறுமாப்புடையவர்கள் தமக்கு மேற்பட்ட வலிமையுடையவர்களால் தலைதாழ்த்தப்படுவார்கள் என்பதும், பணிவாய் நடப்பவர்கள் எல்லாராலும் பாராட்டப் பட்டு என்றும் சிறந்த நிலையில் இருப்பார்கள் என்பதும் இதுகொண்டு அறிந்து கொள்க. 10. ஒரு நாயின் அரிய செயல் இவ்விந்திய நாட்டின்கண் உள்ள இரெயிப்பூருக்குப் பதினொரு கல் தொலைவில் ஒரு நாயினுக்கு எடுக்கப்பட்ட ஒரு சிறு கோயில் உண்டு. அதனுள்ளே ஒரு நாயின் சிறுவடிவம் வைக்கப்பட்டிருக்கின்றது. அதனை அங்குள்ள அவ்வூரவர்கள் போற்றி வருகின்றனர். அக்கோயில் அமைக்கப்பட்ட வரலாறு இது: கூவி விற்கும் வணிகன் ஒருவன் தனக்குக் கடன் கொடுத்த ஒருவனாற் கடனைத் திருப்பிக் கொடுக்கும்படி ஒரு நாள் நெருக்கப்பட்டான். வணிகன் அப்போது தன் கையில் பொருள் இல்லாமையால் தன்னுடைய நாயையும் ஒரு பொன் கழுத்துப் பட்டிகையையும் அக்கடனுக்கு ஈடாக வைத்துவிட்டுப், பணங்கொண்டுவருவதாகத் தன் ஊருக்குப் போனான். பிறகு சிலநாட் சென்றன. ஒருநாள் இரவில் திருடர்கள் கடன் கொடுக்கும் அச்செட்டியாரது இல்லத்தினுள்ளே நுழைய, அது கண்ட நாய் அத்திருடர்களை நோக்கிக் குரைத்தது. திருடர்கள் அந்நாய்க்கு வேண்டிய இறைச்சி உணவினை அதன் முன்னே எறிந்தும், அஃது அவ்வுணவினை ஒரு பொருட் படுத்தாது மீண்டும் மீண்டும் குரைக்கலாயிற்று. இதற்குள் அத்திருடர் சிலர் அச்செட்டியாரது பணப்பெட்டியைத் திறந்து, அப்பொன்கழுத்துப் பட்டிகையையும் பிற நகைகளையும் எடுத்துக் கொண்டு ஓட முயன்றனர். ஆனால், அந்நாயோ அவர்களை ஓடவிடாமல் மறித்துக் குரைத்துப் பேரிரைச்சல் இட்டமையால், அவ்வீட்டவர்களும் அண்டை அயலாரும் விழித்து ஓடிவந்து அத்திருடர்களைப் பிடித்துக் கொண்டனர். அச்செட்டியாரும் தம்முடைய நகைகளை மீண்டும் பெற்றார். இதனால் மிகவும் களிப்படைந்த அச்செட்டியார் அந்நாய் செய்த உதவியைப் பெரிதும் வியந்து, அந்நாயின் தலைவன் பட்ட கடனை விடுவித்து, அங்ஙனம் தாம் விடுவித்ததனை ஒரு துண்டுக் கடிதத்தில் வரைந்து, பின்னர் அக்கடிதத்தினை ஒரு சுருளாக்கி அதன் கழுத்திற்கட்டி, அந்நாயினையும் விடுதலை செய்தார். விடுபட்ட நாய் இரவெல்லாம் மகிழ்ந்தோடி வந்து விடியற்காலையில் தன் தலைவன் இருக்கும் இடத்தண்டை அடைந்தது. அதனைக் கண்ட அதன் தலைவன் கடை கெட்டநாயே, நான் கொடுக்க வேண்டிய கடனை வந்து தீர்க்கு முன் நீ ஏன் இங்கு ஓடிவந்தாய்? என்று சினந்து ஒரு தேங்காய் பருமன் உள்ள ஒரு கருங்கல் துண்டை எடுத்து அதன்மேல் உரமாய் வீசினான். அக்கல்லெறி பட்டதும் அந்நாய் சுருண்டு வீழ்ந்து அலறி இறந்தது. அதன் பின் அத்தலைவன் அந்நாயின் கழுத்தில் ஒரு கடிதச் சுருள் கட்டியிருக்கக் கண்டு, அதனைப் பதைபதைப்புடன் அவிழ்த்துப் பார்க்க, அது தமக்குச் செய்த பேருதவியையும், அதனாற் கடனை விடுவித்து அந்நாயையும் விடுதலை செய்வித்த தமது மகிழ்ச்சியையும் அச்செட்டியார் எழுதியிருத்தல் நோக்கி, அவன் தன் நன்றியறிவுமிக்க நாயை ஆராயாமல் விரைந்து கொன்ற பிழையை நினைந்து நினைந்து ஆற்றாது நெஞ்சம் நெக்குருகலானான். பின்னர் அதன் நன்றியை நினைவுகூர்தற்கு அறிகுறியாகவே அதற்கொரு சிறுகோயிலும், கட்டிவைத்தான். 11. ஒரு தாயின் நல்லெண்ணம் ஊமையும் செவிடுமாயுள்ள ஒரு பெண்மகள் ஒருவனுக்கு மணஞ்செய்விக்கப்பட்டுச் சில்லாண்டுகளில் ஒரு பெண் மகவை ஈன்றாள். தான் பிறர் பேசுவதைச் செவியினாற் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் கூடா விட்டாலும், பிறர் தம் வாயின் இதழ்களை அசைத்துப் பேசுவது போல் தான் பேசுதல் இயலா விட்டாலும், காதினால் கேட்பதும் வாயினால் பேசுவதும் நலஞ் சிறந்தனவாக இருக்கவேண்டுமென்றும் தனக்கு அவ்விரண்டும் இல்லாதது ஒரு பெருங்குறைபாடே என்றும் தனக்குள் எண்ணிவந்தாள். ஒருநாள் அவள் தான் ஈன்ற மகவினைத் தொட்டிலிற்கிடத்தி அதன் பக்கத்தே அமர்ந்திருக்கையில் தன்னைப்போலவே தன் பிள்ளையும் ஊமையும் செவிடு மாயிருக்குமோ, அல்லது மற்றவர்களைப் போல் பேசவும் கேட்கவும் வல்லதாய் இருக்குமோ என்று ஐயுறவுகொண்டு கவலைப்படுவாளானாள். தன்மகவு வளர்ந்து நடமாடும் போதன்றோ அது பேசவும், கேட்கவும் வல்லதென்பதை அவள் குறிப்பாக அறியக் கூடும். ஆனால், அதுவரையில் தன் மகவின் நிலையை அறியாமலிருத்தல் அவளால் இயலுமோ! மனந்துடிக்கின்றது! என் செய்வாள்! பாவம்! முடிவாக அவள் உள்ளத்தில் ஒன்று தென்பட்டது. உடனே தன் அருகில் கிடந்த ஒரு குழவிக் கல்லை எடுத்துக் கொணர்ந்து தன்மகவு உறங்கும் தொட்டிலின் பக்கத்தே நிலத்தின்கண் திடுமென எறிந்தாள். எறிந்த அக்குழவிக்கல் நிலத்தில் தாக்கி எழுப்பிய பேரோசை கேட்டு உறங்கிய மகவு திடுக்கிட்டு விழித்து வாய்திறந்து அழுதது. அக்குறிப்பினைக் கண்ட அத்தாய் தான் ஈன்ற மகவுக்கு ஓசையைக் கேட்கும் செவியுணர்வும், கேட்டு வாய்திறந்து அழுதமையால் பேசுந்தன்மையும் உண்டென்பதறிந்து மகிழ்ச்சியால் கண்ணீர் சிந்தினாள். 12. ஒரு கௌதாரியும் குறவனும் ஒருகால் ஒரு குறவன் ஒரு சிறு காட்டின்கண் வைத்த கண்ணியில் ஒரு கௌதாரிப் பறவை அகப்பட்டுக் கொண்டது. அதனை அவன் அந்தக் கண்ணியினின்றும் எடுத்துத் தன் உணவுக்காகக் கொல்லப் போகையில், அஃது அவனை நோக்கி, ஐய என்னைக் கொல்லாமல் விட்டுவிடு! யான் உனக்கு வேலைக்காரனாயிருந்து மற்றைக் கௌதாரிப் பறவைகள் கூட்டம் கூட்டமாய் வந்து உன் வலையில் அகப்பட்டுக் கொள்ளும்படி செய்வேன் என்றது. அது கேட்ட அக்குறவன், நின் நண்பர்களை எல்லாம் கொன்று, நீ மட்டும் உயிரோடிருக்க எண்ணுகின்றாய்; ஆதலால், நீ விரைந்தொழியக் கடவாய் என்று விடை பகர்ந்தான். 13. ஒரு பெண்பிள்ளையும் பெட்டைக்கோழியும் நாட்டுப்புறம் ஒன்றில் ஒரு மாது பெட்டைக் கோழியொன்றனை வளர்த்து வந்தாள். அக்கோழி நாடோறும் ஒரு முட்டை இட்டு வந்தது. இது கண்ட அப்பெண், எனது கோழி நாடோறும் ஒரு முட்டைதான் இடுகிறது; இனி அது நாள் ஒன்றுக்கு இரண்டு முட்டை இடும்படி செய்வேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பிறகு ஒவ்வொருநாளும் முன் கொடுத்ததற்குமேல் இரண்டத்தனை மடங்கு வாற்கோதுமை அதற்கு இரையாகக் கொடுக்கத் தலைப்பட்டாள். இங்ஙனம் அவள் மிகக் கொழுமையான தீனி கொடுத்துவரவே அப் பெட்டைக் கோழி தன் உடம்பினுள்ளே கொழுப்பு மிகுதியாக வரப்பெற்று ஒரு முட்டை தானும் ஈனாமல் மலடாய்ப் போயிற்று. 14. சுருக்கமான நல்லறிவு விலையுயர்ந்த கொழுமையான உணவுகளையே மிகுதியாய்த் தின்றுவந்தமையால், கை காற் பிடிப்பு நோய் கொண்டு வருந்திவந்த ஒருவர் தமது நோய்க்கு மருந்து கேட்கும் பொருட்டுப், புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர்பாற் சென்றார். சென்று அவர்க்குத் தமது நோயின் தன்மையை எடுத்துரைக்க, அதுகேட்ட அம்மருத்துவர் நீர் நாடோறும் ஆறு அணாவுக்கு மேற்படாத உணவு கொண்டால் அந்நோய் தீரும் என்று மொழிந்தார். 15. நரியும் சேவலும் ஒரு கால் ஒரு நரி சேவல் ஒன்றிருக்கும் இடத்தண்டை வந்து, அதனைப் பிடித்துக் கொண்டு போவதற்குச் சூழ்ச்சி செய்தது. உடனே தன் அறிவிற்பட்டபடி அது சேவலை நோக்கி, உன் தந்தைக்குப் பாட்டுப் பாடத் தெரிந்ததுபோல உனக்குப் பாடத் தெரியுமா என்று அறிய விரும்புகிறேன்! என்றது. அவ்வாறு அது சொல்லியதைக் கேட்ட சேவல் உடனே தன் கண்களை மூடிக் கொண்டு கூவிப் பாடத் தொடங்கியது. அது கண்மூடிய நேரத்தில் நரி அதன் மேற்பாய்ந்து அதனைக் கௌவி எடுத்துக் கொண்டு ஓடலாயிற்று. அவ்வூரில் உள்ளவர்கள் அதனைக் கண்டு, ஐயோ! நரி நம் சேவலைத் தூக்கிக் கொண்டு போகின்றதே! எனக் கூவினர். அப்போது சேவல் நரியை விளித்து, ஐய, ஊரார் சொல்வதை நீங்கள் அறியவில்லையா? தமக்கு உரிய சேவலை நீங்கள் எடுத்துச் செல்கின்றீர்கள் என்கின்றார்களே. யான் உங்களுக்கு உரியேனன்றி அவர்களுக்கு உரியேன் அல்லன் என்பதை அவர்கட்குச் சொல்லுங்கள் எனப் புகன்றது. அங்ஙனம் அது புகன்ற படியே நரி தன் வாயைத் திறந்து, இஃது எனக்குரியது, உங்களுக்கு உரியதன்று எனக் கூறவே, சேவல் நரியின் வாயினின்றுந் தப்பிப் பறந்துபோய் ஒரு மரத்தின் மேல் அமர்ந்தது. அமர்ந்து, யான் அவர்களுக்கு உரியேனன்றி, நினக்கு உரியேன் அல்லன் எனக் கரைந்தது. ஆகவே, நிலையறியாமற் பேசுவது பிசகென்பது இதனால் அறியப்படும். 16. கல்வியும் ஓய்வும் கல்வி கற்பவர்களுக்கு இடையிடையே ஆறியிருத்தலும் ஓய்ந்திருத்தலும் பயன் தருவனவாகும். மக்களின் மனமானது, வளைக்கப்படாதவரையில் வலுவுடையதாய் இருக்கும் ஒரு வில்லின் தன்மையை ஒத்ததாயிருக்கின்றது என்றாலும், ஒருவன் தன் உள்ளத்தின் ஓட்டத்தை எப்போது தடுத்தாளல் வேண்டும், அல்லததனை எப்போது விடுத்தாள வேண்டும் எனப் பகுத்துணர்ந்து நடக்கின்றானோ அதுதான் அவனது உணர்வுக்குச் சிறந்த தன்மையாகும். இருவகையிலும் ஒரு கட்டுப்பட்டு நடவாமல் மிகமும் முரமாய் நடக்கும் ஓர் ஆண் மகனை யான் அறிவேன்; அவனுக்கு நடுப்பட்ட நிலைமை என்பதொன்றில்லை; தான் செய்யும் கல்விப் பயிற்சியை எப்போது விட்டுவைக்க வேண்டும், மறுபடியும் எப்போது தொடங்க வேண்டும் என்னும் அறிவும் அவனுக்கில்லை. அவன் ஏதாவதொன்றை எழுதப்புகுந் தானாயின், பகற்பொழுதோடு இராப்பொழுதினையும் ஒருங்கு சேர்த்துக் கொண்டு, தானாகவே களைத்துக் கீழ்விழும் வரையில், தன்னை நெருக்கிப் பிழிந்த படியாய்ச் சிறிதும் ஓய்வெடாது அதனைச் செய்வன். பிறகு அதனைவிட்டு வேறுமுகமாய்த் திரும்புவனாயின், எல்லா வகையான விளையாட்டுக்களிலும் அவன் ஒரு வரை துறையின்றிப் புகுந்து ஈடுபட்டிருப்பான்; மீண்டும் அவன் நூல்களைக் கையில் எடுக்கும்படி செய்வது எளிதிற் கூடுவதன்று; என்றாலும் எப்படியோ அவன் திரும்ப நூல் ஓதத் துவங்குவானாயின், அம்முயற்சியில் வரவர அழுந்தி அதனோடு உருகி ஒன்றுபட்டுப் போவான். அப்போது அவனுடைய அறிவாற்றல் கள் முற்றும் புதுக்கப்பட்டுத் தோன்றும்; தன்னளவுக்கு மிஞ்சியே தான் விழைந்ததனைச் செய்திடுவன். அங்ஙனம் மட்டுப்படாது செல்லுதலால், அவனது கல்விப் பயிற்சியையும் அளவுபடுத்துதல் ஏலாது. தனக்குள்ள அறிவாற்றல்களை எவ்வாறு ஒழுங்குபடுத்தல் வேண்டும், அவற்றை எவ்வாறு அளவுபடுத்தி நடப்பித்தல் வேண்டும் என்பதனை அவன் எட்டுணையும் அறியான்; அவனது மட்டுப்படா ஆற்றல் அவனுக்கே மாறாய் நின்றது. அவன் அறிவில் வல்லவனாயிருந்த தொன்றுமட்டும் அன்று; பேசுதலிலும் எழுதுதலிலும் அவனை ஒப்பாரும் மிக்காரும் எவருமேயில்லை. எனினும் அவனது கூர்த்த அறிவு வெளியே புலப்படுவதில்லை; அது புலப்படுவது ஒரு குற்றமாக அவனது பகுத்தறிவுக்குத் தோன் றியது; ஏனென்றால், ஒளிக்கப்பட்டதைவிட ஒளிந்திருப்பதே தீங்கு பயப்பது. அவன் தான் பேசும் மொழிகளை உழைப்பெடுத்துப் பேசுவதில்லை. கட்டாயமாக இருந்தால் அல்லாமல், அல்லது ஏதேனும் ஊதியம் வருவதாய்க் காணப்பட்டால் அல்லாமல், அவன்தான் வழக்கமாய்ப் பேசும் பெரும்பாட்டையை விட்டுப் பிசகிப் போவதில்லை. எதனாலெனின், தான் பேசும் பொருளை விளக்குதற்குத் துணையாயின் அல்லது, வெறும் வனப்புக்காக உவமை உருவகங்களைக் காட்டிச் சொல்லுதல் ஆகாதென்பது அவன் கருத்து. ஒழுங்காக இருக்கவேண்டுவதொன்றனைத் திரிபு செய்தலும் பிணித்தலும் அளவுக்கு மிஞ்சி வெறிபிடித்தவர் தம்செய்கையேயாமென்று அவன் எண்ணினான். 17. வறுமை வறுமையானது தகாத செயல்களைச் செய்யும்படி மக்களை ஏவுகின்றது; ஆயினும், நேர்மையுள்ளவர்கள் அத்தகைய செயல்களைச் செய்தல் ஆகாது. வறுமை வந்த காலத்திலேதான் அவர்கள் தமது மனநிலையை உரப்படுத்துதல் வேண்டும். ஒருவன் பசித்து வருந்தினாலும் பிறரைச் சார்ந்து பிழைத்தல் தக்கதன்று. 18. வாழ்க்கையே நாடகம் நமது உயிர்வாழ்க்கை முழுதும் ஒரு நாடகமே எனக் கருதுகிறேன். அதில் ஒவ்வொருவனும் தன்னை மறந்து பிறன் ஒருவனைப் போல் நடக்கப் பாடுபடுகின்றான். நாம் நம்முடைய உண்மை நிலைக்குத் திரும்பமாட்டாதவர்களாய்ப் பிறரைப் பார்த்து அவர்களைப் போல் நடப்பதிலேயே உறைத்து நிற்கின்றோம். இஃது எதனை ஒத்திருக்கிறதென்றால், இளஞ்சிறார் தெற்றுவாய் உடைய சிலரைப் பார்த்து, அவரைப் போல் தாமும் தெற்றித் தெற்றிப் பேசுதலையே ஒத்திருக் கின்றது. அங்ஙனம் அச்சிறுவர் தெற்றித் தெற்றி நெடுகப் பேசிவரவே, சிறிது காலத்தில் அவர்களும் தெற்றுவாய் உடையராகின்றனர். முதலிற் பழகிய அத்தீயபழக்கம் பின்னர் எக்காலும் மறக்கப்படாத வேறோர் இயற்கையாய் விடுகின்றது என்று நாடக நூலாசிரியரொருவர் (Ven Jonson) அறிவுரை புகல்கின்றார். 19. ஒரு கிண்ணம் தண்ணீர் முதலில் ஆடுமேய்க்கும் இடையனாயிருந்து பின்னர்க் கடவுளின் திருவருளால் அரசியல் நிலைக்கு உயர்த்தப்பட்டுச் செங்கோல் செலுத்திய பண்டைக்காலத்து மன்னன் ஒருவன் (David) தன்மேற் பகைகொண்ட வேறொரு கொடுங்கோல் மன்னனாலும் நாகரிகமில்லாக் கொடிய கூட்டத்தாராலும் இருபக்கமும் துன்புறுத்தப்பட்டு, அதனால் தனது அரச வாழ்க்கையைத் துறந்து, தன் அருமைப் பெற்றோர்களைப் பாதுகாவலான ஓரிடத்திற் கொண்டு போய் வைத்துத் தான் மேய்ப்பனாயிருந்தபோது, அறிந்திருந்த ஒரு சுக்கான் கல்மலைப்பாங்கு சென்று அங்குள்ள குகைகளையே தனக்கு உறைவிடமாய்க் கொண்டிருந்தான். கடவுளின் அருளுக்கு உரியனான இம்மன்னன் இங்ஙனம் ஏழ்மை நிலையை அடைந் தானாயினும், அவனது தெய்வத் தன்மையானது அவன்றன் படைவீரர் பலரை அவன்பால் வருவித்தது; மனத்துயர் கொண்டோரும், கடன்பட்டு நொந்தோரும், மனக்குறை யுடையோரும் அவன்பால் இருத்தலை விரும்பி அவனிடம் வந்து குழுமினர்; இவர்களுட் சிலர் படைஞராய் இருந்த காலத்து வென்றியில் சிறந்து முதன்மை பெற்று விளங்கி னோராவர். இவர்கள் எல்லாரும் தம் இளைய மேய்ப்ப மன்னன் சொல்வழி நடப்பவராய், எவர்க்கும் எந்த வகையிலும் தீங்கு செய்யாது ஒழுகினோராவர். அவ்விளைய மன்னனோ மிடிப்பட்ட இந்நிலையிலும் இறைவனை மறவாத வனாய்த் தனது யாழையியக்கிப் பல அருட் செம்பாடல்களை உளங்கரைந்து பாடும் வழக்கம் மேற்கொண்டான். அன்பும் அருளும் ததும்பும் அவ்விசைப்பாட்டுகளைக் கேட்ட அப்படை வீரர்களெல்லாரும் தமது வறுமையையும் துன்பத்தையும் மறந்து, கடவுள்பாற் கசிந்த உள்ளத்தினராகித் தம் மன்னன்பால் நிலைபெற்ற பேரன்புடையரானார். இம்மன்னனும் இவன்தன் படைஞரும் அடைக்கலம் புகுந்த அவ்வெறுமலைப்பாங்கு கதிரவன் வெப்பத்தால் அழற்சி மிக்கதாயிருந்தது. அம்மலை முகட்டினூடு இருந்த ஒரு பெரும் பிளவின் அடியிடமெல்லாம் உடைந்த கற்பாறைத் துண்டுகள் இறைந்து கிடந்தன. அதன் இருபுறத்தும் செங்குத் தாய் நின்ற சுற்றுச் சுவர்களின் கரை ஓரத்தில் மலையாடுகள் அடிவைப்ப தற்கும் போதுமான இடம் கிடையாது. இத் தன்மைத்தாகிய மலைப் பிளவின் கண் உள்ள ஒரு செங்குத்தான குன்றின் உச்சியிலேதான் அவ்விளைய மன்னன் புகலிடமாய்க் கொண்ட ஒரு கொடுமுடி இன்றும் காணப்படுகிறது. அதன் குறுகிய வாயினுள்ளே நுழைந்து சென்றால், படியடுக்குகள் உடைய குகையொன்று சிறுகிய வழிகளும் பெருகிய மண்டபங்களும் மாறிமாறி வாய்ந்தனவாய் அமைந்திருத்தல் காணப்படும். என்றாலும், அவ்விடம் நெருக்கமாய் வெப்பம் மிக்கு இருந்தது. ஒரு செடிதானும், மரந்தானும் இல்லாமல், ஆள்வழக்கம் அற்றுப் பாழாய் வெய்தென நிற்கும் அவ்விடத்தைத் தனக்குப் புகலிடமாய்க் கொண்ட அவ்இளைய மன்னன், தான் முன்னே அரசாண்ட இனிய செழுமையான நாட்டையும், அதன்கண் ஆங்காங்குப் பச்சைப் பசேலென வளர்ந்திருக்கும் கோதுமைப் பயிர் களையும், சன்னல் பின்னலாய்ப் படர்ந்திருக்கும் கொடி முந்திரிக் கொடி களையும், குளிர்ந்த தீஞ்சுவைத் தண்ணீர் சுரந்து ஒழுகப் பெறும் வாவிகளையும், அவ்வாவிகளின் நீர்பாய் மடைகளின் பாங்கரிருந்து தான் முன்னர் இறைவன் மேல் இசைப்பாட்டுகள் மிழற்றின வகைகள் எல்லாம் நினைந்து பெருமூச்செறிந்தான்! எறிந்து ஐயோ! யான் இருந்து இசைமிழற்றின அந்நீர் நிலையிலிருந்து ஒரு கிண்ணம் தண்ணீர் எவரேனும் எனக்குக் கொணர்ந்து கொடார்களா! என்று ஆற்றாது கூறினான். அச்சொற்கேட்ட அவன்றன் படைஞரில் மூவர் தம் மன்னனது வேட்கையை நிறைவேற்றத் தீர்மானித்தனர். அவர்கள் புகலிடமாய்க் கொண்ட அம்மலையரணுக்கும், அரசன் அத்துணை ஆவலொடு வேண்டிய நீரினையுடைய வாவிக்கும் இடையே அவர்க்குப் பெரிதும் தீங்கிழைத்த கொடிய காடவர் கூட்டம் படை கொண்டிருந்தது. என்றாலும், தம் தலைவன் மேல் அவர்கள் வைத்த பேரன்பானது அப்பகைவர் கூட்டத்திற்கு அஞ்சுமா! உடனே அம்மூவரும் தாமிருந்த உச்சிமலைப் பிளவினை விட்டுக் கீழிறங்கினர். எப்படியோ அவர்கள் அப்பகைவர்தம் படையினூடே சென்று, தம்மரசற்கு விருப்பமான நீரூற்றிலிருந்து நீரை முகந்தெடுத்து, அதனைச் சுமந்த வண்ணமாய் அப்பகைவர் படையினூடே தானே திரும்பிப் போந்து, தமது மலையுச்சியின் கொடுமுடியில் அதனைக் கொணர்ந்து சேர்ப்பித்தனர். தம் தலைவனது வேட்கையை ஆற்றும் பொருட்டுத் தம்முயிரையும் பொருட் படுத்தாது பகைவரூடு சென்று அவர்கள் அந்நீரினைக் கொணர்ந்த செயற்கருஞ் செயலை நோக்கவே, அம்மேய்ப்ப அரசனது நெஞ்சம் நெக்குருகலாயிற்று. அத்துணை அரிதிற் போந்த அந்நீர் மிகவும் புனிதமானதென்றும், அதனைத்தான் பயன்படுத்திக் கொள்ளுதல் தகாதென்றும் அவன் எண்ணினான். எண்ணி அந்நீரினை எடுத்து இறைவன் அருட்குறி மேற் சொரிந்து, தன் பேரன்பிற்கு அறிகுறியான கண்ணீரும் வார்ந்தொழுகிப் பேரின்ப வெள்ளத்தில் படிந்திருந் தான் என்பது. 20. ஒரு பொன் மீன் பேரன்பினனான அவ் இளைய மன்னன் நம் தமிழ்நாட்டுக்கு அயலதான மேல்நாட்டில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தவன் ஆவன். அவனை யொப்ப இறைவன் பாற் பேரன்பு பூண்டு ஒழுகினோர் இத்தமிழ் நாட்டகத்தும் பலர் பழங்காலத்திருந்தனர். அவருள் ஒருவர் செய்த செயற்கருஞ் செயலை ஈண்டு எடுத்துக்காட்டுவாம். சோழ வேந்தர்களின் தலைநகரங்களில் ஒன்றான நாகபட்டினம் என்பது கடற்கரையை அடுத்துள்ளது. அந்நகரத்தின் கடற் கரையோரத்தின்கண் உளதாகிய செம்படவர் குப்பத்தில், இன்றைக்கு ஓராயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் செம்படவர் தலைவனான ஒருவர் எல்லாம் வல்ல இறைவன் பால் அளவிறந்த அன்புடையராய் உயிர்வாழ்ந்து வந்தனர். அவர் தம் ஏவல்வழி நிற்கும் செம்படவர்களை எல்லாம் கடல் மேல் கட்டுமரங்களில் செலுத்திக் கொண்டு சென்று, வலைவீசுவித்துப் பிடிப்பிக்கும் மீன்குவைகளை விற்றுப், பெற்ற பொருளைத் தம்மவரும் தாமுமாகப் பங்கிட்டுச் செல்வம் உடையராயிருந்தனர். இவர் மீன் பிடிக்கும் வாழ்க்கையில் இருந்தனராயினும், எல்லாம் வல்ல இறைவன் நிலையினை உணர்ந்து, அவன் திருவடிக்கண் அழுந்தின அன்பு வாய்ந்தவர். ஆகவே, தம் மவர் பிடித்துக் கொணரும் மீன் தொகுதியுள் ஒரு தலை மீனையெடுத்து அஃது இறைவனுக்குரியதென நினைத்து, அதனைக் கடல்நீரில் மீண்டும் செல்கவென விட்டுவருதலை நாடோறும் மாறாமல் செய்து வந்தார். இங்ஙனம் செய்து வருகையில், ஏது காரணத்தாலோ மீன்கள் மிகுதியாய் அகப்படாமல் செம்படவர் தமது வலைவளம் சுருங்கிப் பட்டினியும், பசியுமாகக் கிடந்து துன் புறலாயினர். அங்ஙனம் தம்மவர் துன்புறுங்காலத்தும், அவர்தம் தலைவரான அன்பர் முதல் வலையில் ஒரு மீனே அகப்பட்டாலும், அஃது இறைவற்கே உரியதென அன்பொடு நினைந்து, அதனைக் கடலின்கண் உயிரொடு விடுத்து வந்தார். நாளேற நாளேற இவரது செல்வமும் சுருங்கிவிட, இவர் உடல் தளர்ந்து வருந்தினாலும், மனம் சிறிதும் தளராராய் மகிழ்ந்து, முதலில் அகப்படும் ஒரு மீனையும் ஒவ்வொரு நாளும் கடலின்கண் உய்த்தலில் சிறிதும் வழுவாது ஒழுகலாயினர். கடைமுறையாக வீசுவித்த பல வலைகளுள் ஒரு வலையிற்பட்ட ஒரு மீனைத் தவிர, வேறொரு சிறு மீன் தானும் வேறு வலைகளுள் அகப்பட்டிலது. எனினும், ஒரு வலையில் அகப்பட்ட அவ்வொரு மீனையும் அவர் மிக்கதொரு களிப்புடன் எடுத்துப் பார்க்க, அஃது ஒரு பெரிய தேயத்தையே விலைகொளத்தக்க சுடர்விரி பசும்பொன் வடிவினதாய்த் திகழ்ந்தது. அப்பொன்மீன் அகப்பட்ட நேரம் எத்தகைய மனவுறுதியுடையார் மன நிலையினையும் கலைக்கும் வலிமை வாய்ந்தது. செம்படவர் தலைவனான அவ் அன்பரோ மிகவும் மிடிபட்டுத் தம் குடும்பத்தவரோடு பல நாட்கள் பட்டினியும், பசியுமாய்க் கிடந்து இடருழந்து வருகின்றார். தம்முடைய துன்பத்தை ஒரு பொருட்டாகக் கருதாது, தமது ஆளுகைக் கீழுள்ள செம்படவர் படும் துயரத்தைக் கருதும் அருள் மாட்சியுடையராகலான் அவர் பொருட்டாகவாவது அப்பொன்மீனை விலை செய்து, அவர் அச்செமபடவரது மிடிவாழ்க்கையை மாற்றப் பாலார். மற்று, அச்செம்படவர்களோ தாங்குதற்கரிய தமது வறிய நிலையினைக் கருதித் தம் தலைவன் இப்போதாயினும் இவ்வொரு மீனை விற்றுத் தம்மைப் பாதுகாப்பரோ, அன்றி என்றும்போல இதனையும் கடற்கண் விடுத்திடுவரோ என்னும் ஐயத்தால் ஏங்கிய நிலை யினராய், அவர் இனிச் செய்யப் போவதனை எதிர்பார்த்துக் கண் இமையாது நிற்கின்றனர். அப்பொன் மீனைக் கையிலெடுத்த சில்லிமைப் போழ்தில் எத்தனையோ பல எண்ணங்கள் மின்னொளியினும் கடுகி அவர்தம் தலைவன் உள்ளத்தை ஊடுருவிச் சென்றன. என் கீழ்க்குடிகளான இச்செம்படவர் எத்தனையோ பல நாட்களாக வலைவளந் தப்பிப் பட்டினியும், பசியுமாய்க் கிடந்து வருகின்றார்கள்! என்கொள்கை தவறாமல், நாடோறும் அகப்படும் ஒரு மீனையும் இறைவற்கென்று கடலின்கண் யான் விடுத்து வருதலைக் கண்டும் என்னை வெறுத்திலர்! இவ்வொரு மீன் விலையால் இவர்கள் எல்லாரின் மிடியும் அற்றுப்போவது திண்ணமே. ஆனாலும், இஃது இறைவற்கு உரியதன்றோ? இதனை விற்றற்கும், இவர்களைப் பாதுகாத்தற்கும் யான் யார்? யான் பிறக்கும் முன்னும் யான் இறந்த பிறகும் இவர்களைப் பாதுகாத்தவர், பாதுகாப்பவர் கடவுளா? யானா? என் மனைவி மக்கள் பெற்றார் உற்றாரெல்லாம் என்கீழ்க் குடிகளைப் போல் அல்லர்; முற்றும் என்னைச் சார்ந்து பிழைப்பவர். இவர்கள் பொருட்டு இதனை விற்றல் இறைவன் திருவுளத்திற்கு இசையுமா? கண்ணெதிரே என் உதவியைப் பெரிது வேண்டி நிற்கும் இவர்கட்கென்று இதனைப் பயன்படுத்தாமல் கட்புலனாகாக் கடவுட்கென்று இதனைக் கடலின்கண் விடுத்தல் பயன் தருமா? இத்தனை நாளாக மிடிப்பட்டு வருந்தும் இவர்கள் அனைவரின் நிலையையும் ஓராமலே இறைவற்கென்று அரிது அகப்பட்ட ஒரு மீனையும் விடுத்து வந்த யான் இன்றைக்கு மட்டும் இப்பொன்மீனைக் கண்டு பேரவாக் கொண்டு இறைவனை மறந்து இவர்களை நினைதல் பிழையன்றோ? இவர்கள் துயர் ஒருபுறம் இருக்க, எனக்கு அரிதிற் கிடைத்த இம்மக்கள் யாக்கை இறைவன் தந்ததன்றோ? இதனைப் பாதுகாவாது, யான் ஏதோ விடாப்பிடியாக் கொண்ட ஒரு கொள்கைக்காக மிடியால் இதனை அழித்து விடுதல் ஐயன் அருளுளத்திற்கு அடுக்குமா? எனக்கும் என்னைச் சேர்ந்தார்க்கும் என்கீழ்க்குடிகட்கும் பிறர்க்குமெல்லாம் வந்த இத்தீரா வறுமையினை இவ்வொரு பொன் மீன் தீர்த்து எல்லாரையும் இன்பவாழ்வில் வைக்குமென்றால், இதனைக் கடலின்கட் போக்குதல் தக்கதாமா? நல்லது, இவ்வெல்லார் வறுமையையும் தீர்த்து, அவர்கள் எல்லாரையும் பாதுகாத்தல் வேண்டி, என்கொள்கைக்கு மாறாக இப்பொன்மீனை விற்கத் துணிவேனாயின், இதனை விற்கப் போம்போதோ, விற்றுப் பொருளொடு திரும்பும் போதோ, திரும்பி எல்லார் வறுமையும் தீர்க்கும்போதோ, அது தீர்ந்து எல்லாரும் களித்திருக்கும் போதோ ஒரு கடும் புயற்காற்றும் விடாப் பெருமழையும் கதுமெனத் தோன்றி, எமது மணற்குப்பத்தை வாரிக் கரைத்துக் கொண்டு போய்க் கடலின்கண் எம்மை அடங்க அமிழ்த்தி அழித்தால், அவரும் யானும் என் செய்யக் கூடும்! அல்லது இக்கடல் நீரே காற்றாலும், மழையாலும் வரை கடந்து பொங்கி எழுந்து போந்து எம்மையெல்லாம் ஒருங்கே அழித்துச் சென்றால், யான் என்னைக் காப்பதும் எம் உறவினர் சுற்றத்தாரைக் காப்பதும் எங்ஙனம் கைகூடும்! எல்லா மக்களையும், மக்களினும் தாழ்ந்த எல்லா உயிர்களையும் எவன் படைத் தானோ, அவனே அவர்களையும் அவைகளையும் காத்தற்கும் அழித்தற்கும் உரியவன். எல்லா உயிர்களையும் காத்தற்கு ஏற்ற பேராற்றல் எம் ஆண்டவன் ஒருவனுக்கு இருக்கப் பிற உயிர்களின் உதவியும் துணையும் இன்றிப், பிறபொருள்களின் சேர்க்கையும் பயனுமின்றி என்னையே காத்துக்கொள்ள மாட்டாத யான், என்னவரைக் காக்கும் கடமையுடையேன் எனப் பிழைபட எண்ணி, எல்லாம் வல்ல எம்பெருமானுக்கு இத்தனை காலமாகச் செய்துவந்த செயலினின்று இப்போது மாறப் பெறுவேனோ! எனத் தொடர்பாக நினைந்தொரு முடிவுக்கு வந்தவுடனே, என்றும் போல இன்றும் இப்பொன்மீன் எல்லாம் வல்ல பெருமான் திருவடிக்கே உரித்தாகற்பாலது! என நெஞ்சம் குழைய மொழிந்து, அதனைக் கடலின்கண் விடுத்திட்டார். 21. நீண்டகாலக் கடன் நூலாசிரியர் ஒருவரை ஒருநாள் ஓர் இரவலன் எதிர்ப்பட்டனன். உடனே அவன் தனக்குக் கால்ரூபா உதவி செய்யும்படி அவரை விடாப்பிடியாய்க் கெஞ்சிக் கேட்டு நெருக்கினான். அவர் தமது சட்டைப் பையினுட் கையை நுழைத்துத் தடவ, அதன்கட் சில்லறையில்லாமல் ஒரு முழு அரை ரூபா மட்டும் இருக்கக் கண்டார். அவர் அதனை எடுத்து அவ்விரவலனுக்குக் கொடுத்து நீ எனக்கு மிச்சங்கால் ரூபா கடன் கொடுக்கவேண்டியிருப்பதை மறவாதே. என்று கூறிப் புன்னகை புரிந்தார். அதற்கு அவன் அப்படியே, பெருமானே, யான் அக்கடனைத் தங்கட்குத் திருப்பிக் கொடுக்கும் வரையில் உயிரோடிருப்பீர்களாக! என்று மறுமொழி நுவன்று சென்றான். 22. ஞாயிறும் திங்களும் ஒருகால் நண்பர் இருவர் ஞாயிறு (சூரியன்), திங்கள் (சந்திரன்) என்னும் இரண்டில் எது பயன்மிகவுடையது என வழக்கிடலாயினர். முடிவாக அவ்விருவரில் ஒருவர், ஓ! எனக்கு அது தெரியும். திங்களானது ஞாயிற்றினும் இரு மடங்கு பயன் உடையது; ஏனென்றால், அது தனது விளக்கத்தை எல்லாரும் வேண்டும் இராக்காலத்தே ஒளிவீசுகின்றது; மற்று, ஞாயிறோ தன்னை எவரும் வேண்டாத பகற்காலத்தில் ஒளிர்கின்ற தன்றோ! என்றான். 23. உதவிச்சம்பளங் கேட்டல் தன் அரசனுக்காக உற்ற நேரத்தில் போர்புரிந்து வெற்றி பெற்ற அஞ்சா ஆண்மையனான படைஞன் ஒருவன், தனக்கு உதவிச் சம்பளம் அளிக்கும்படி கேட்கத் தன் அரசன்பால் போந்தனன். போந்து அரசற்குத் தன் வேண்டுகோளைத் தெரிவிக்க, அரசன் நல்லது பார்ப்போம் என்றான். உடனே அம்மறவன், அதற்காகத் தேவரீர் காக்கவேண்டுவதில்லை, தாங்கள் இப்போதே பார்க்கலாம் என்று சொல்லி, உடனே தன் உடம்பின்மேல் அணிந்திருந்த சட்டையைக் கழற்றிவிட்டுப், போர்த்தழும்புகள் நிறைந்த தன் மார்பினைக் காட்டினான். அதனை அரசன் கண்டதும் இனிப் பார்க்கலாம் என்று சொல்ல மாட்டானாய், உடனே அவற்கு உதவிச் சம்பளம் கொடுக்குமாறு கட்டளையிட்டான். 24. ஒரு மீகாமனது கனவு கனவு காண் காலத்தும் பிறர்க்குதவிசெய்வதே அழகிது, நல்லது என்றார் மேனாட்டு நாடக நூலாசிரியர் ஒருவர். ஒருகால் ஒரு சிறந்த மீகாமன் தனது கப்பலில் தன் அறையி னுள்ளே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனது மரக்கலம் அப்போது சென்று கொண்டிருந்த நடுநிலக்கடல் அமைதியாகவே இருந்தது; வானத்திலும் மப்பு இல்லை. ஆனால் உறங்கிக் கொண்டிருந்த அக்கப்பல் தலைவனோ தனது கப்பல் கடலுள் அமிழ்வதாகக் கனவு கண்டு, அக்கனவு நிலையிலேயே அறையைவிட்டு வெளியே நடந்து வந்து, சுக்கான் திருப்புவோன் வேலையைக் கைக்கொண்டு தன் கப்பலாட்களை யெல்லாம் விழிப்பாய் இருக்கும்படி கூவினான்; தூக்கத்திலிருந்த வாறே தம் தலைவன் செய்யும் செயல்களைக் கண்டு இறும் பூதுற்ற அவ்ஆட்களெல்லாரும் நகையாடினர்; அவர்தம் நகையொலியைக் கேட்டு விழித்துக் கொண்ட அம்மீகாமன் மீண்டும் தன் அறைக்குட் சென்று மனக் கலக்கத்துடனேயே தூங்கலாயினன். அங்ஙனம் தூங்கிய சிறிதுநேரத்தின் பின் திரும்பவும் அவன் விழித்தெழுந்து பார்க்கப், புயற்காற்று அறிவிக்கும் கருவி, வரப்போகும் சூறாவளியினை அறிவித்தது. உடனே அவன் மேல் தட்டின் மேலோடித் தன் ஆட்களை கூவியழைத்தனன்.சுக்கான் திருப்பிக் கொண்டிருந்த ஆடவன் ஐய, மறுபடியும் கனவோ? என வினவினான். என்றாலும், அவன்றன் ஆட்கள் அவன் சொற்படியே சென்று அக்கப்பலின் பாய்களை உடனே சுருக்கிக் கட்டினர். சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு பெருஞ்சூறைக் காற்று வந்து வீசியது. ஆயினும், பாய்கள் மடக்கிக் கட்டப் பெற்றமையால் இக்கப்பல் ஏதோர் இடருமின்றிச் சென்றது; முன்னதாகவே பாய் மடக்கிக் கட்டப்பெறாத மற்றக் கப்பல்களோ, அப்பெருங்காற்றினால் அலைக்கப்பட்டுக் கடலுள் அமிழ்ந்து போயின. கனவிலும் தன் கடமையைச் செலுத்திய தம் தலைவனுக்கு அக்கப்பலாட்கள் எல்லாரும் நன்றி செலுத்தினர். 25. ஒரு கடல் மனிதன் 1725-ம் ஆண்டு ஒரு கப்பல் மேல்கடலில் நூற்றெண்பதடி ஆழமுள்ள ஒரு பகுதியில் ஓடிக் கொண்டிருக்கையில் காலை பத்துமணிக்கு மக்கள் வடிவம் வாய்ந்த ஒருவன் அக்கடல் நீரினின்றும் மேலெழுந்து அக்கப்பலின் இடப்பக்கத்தே காணப்பட்டனன். அவனைக் கண்ட அக்கப்பல் தலைவன் உடனே அவனை மேலே தூக்கிக் கப்பலிற் சேர்த்தற் பொருட்டு ஒரு கொளுக்கியை எடுத்தான். அது கண்ட அக்கப்பல் மீகாமன், அத்தலைவனைத் தடுத்து அவன் உண்மையான மனிதன் அல்லன். கடல்நீரில் உயிர்வாழும் மனிதனாவான்; அவனை நீங்கள் மேலிழுக்க முயன்றால், அவன் உங்களைக் கீழ் இழுத்து விடுவன் என்றான். அதுகேட்ட தலைவன், அக்கடல் மனிதனின் வடிவம் முழுமையும் பார்க்க வேண்டி ஒரு சிறுகோலை எடுத்து அவனது முதுகின்மேல் எறிந்தான். எறிந்தகோல் தன்மேல்படவே அவன் சினங் கொண்டான் போல் தன் இருகைகளையும் மடித்துக் கொண்டு தன் முகத்தைக் காட்டினான். அதன்பிறகு அவன் அக்கப்பலைச் சுற்றிச் சென்று அதன் பின்னணியத்திலுள்ள சுக்கானைத் தன் இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டான். அதுகண்ட அக்கப்பல் ஆட்கள், அவன் அச்சுக்கானைப் பழுது படுத்தி விடுவன் என்று அஞ்சி அதனை இறுக்கி வைக்க வேண்டியவர்களானார்கள். பின்னர் அக்கடல் மகன் அங் கிருந்து, மக்கள் நீந்துதல் போலவே நீந்திக்கொண்டு கப்பலின் முன்பக்கத்திற் போய், அதன் முன்னணியத்தில் நிறுத்தப் பட்டிருந்த ஓர் அழகிய பெண்ணுருவைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பால் அவன் அப் பெண்ணுருவைப் பற்றிக் கொள்ள விழைந்தான்போற் கடல்நீரினின்றும் மேல் கிளம்பினான். இவ்வளவும் அக்கப்பலில் இருந்தார் எல்லார் கண்ணுக்கும் எதிரே நிகழ்ந்தன. திரும்பவும் அந்நீர்மகன் அக்கப்பலின் இடப்பக்கமாய்ப் போந்தனன். கப்பல் மேலிருந்தவர் ஒரு கயிற்றில் ஒரு கடல் மீனைக் கட்டி அதனை அவன் முன்னே தொங்க விட்டனர். அவன் அதனைப் பிடித்துப் பார்த்தனனேயன்றி வேறொன்னும் செய்திலன். பின்னர் அவன் அதனைவிட்டு நீந்திப் போய் அம்மரக்கலத்தின் பின்னணியத்திற்கு வந்தான்; வந்து மறுபடியும் சுக்கானைப் பற்றிக் கொண்டனன். அதுகண்ட மீகாமன் ஓர் இருப்பு வல்லயத்தை எடுத்து அதனை அவன் மீதெறிந்து அவனைக் கொல்லுதற்கு முனைந்தான். ஆனால், அவ்வல்லயமோ அக்கப்பல் கயிறுகளிடையே சிக்கிக் கொண்டமையால், அக்கடல் மகனது முதுகில் பட்டதேயன்றி அஃது அவனை ஊறுபடுத்தவில்லை; தன் முதுகிற்பட்டதும் அவன் திரும்பி முன்போலவே தனது முகத்தைக் காட்டினான். அதன்பிறகு, அவன் மறித்தும் முன்னணியத்திற்குப் போந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பெண்பாவையை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். அதன்மேல் மீகாமனின் துணைவன் அவன் மேலெறிவதற்கு அவ்வல்லயத்தை எடுத்து வருகவென்று கூவினான். ஆனால், முன்னொருகால் அதே கடல் வழியில் அதே மரக்கலத்தில் மேலேறிப் போந்து தன்னைத் தானாகவே மடித்துக் கடலில் எறியப்பட்ட புதுமையான ஓர் உயிராய் அவன் இருக்கலாமோ என ஐயுற்று அஞ்சி, அத்துணைவன் அவ்வல்லயத்தால் அவனைக் கொல்லாமல், அதனால் மெல்ல அவனை முதுகிற் குத்தித் தள்ளினான். அங்ஙனம் குத்தவே, அக்கடல்மகன் முன்போலவே தன் முகத்தைச் சினந்து காட்டி, அக்கப்பலின் மேல் தட்டு வரையில் ஏறிவந்தான். வந்தவன் கப்பலாட்களில் இருவர் பிடித்திருந்த கயிறு ஒன்றைத் தானும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். அவ்விருவரும் அக்கயிற்றை அவன் கையினின்றும் வலிந்து இழுக்கவே, அந்நீர்மகனும் அக்கயிற்றொடு கூடவே கப்பலின் மேல் தட்டிற்கு இழுக்கப்பட்டனன். ஆனால், மேல்தட்டிற்கு வந்தவுடனே அவன் உடனே கடலில் குதித்துத் தொலைவில் நீந்திப் போயினன். மீண்டும் சிறிது நேரத்தில் அக்கடல்மகன் நீந்திக் கொண்டு கப்பலருகில் வந்தான். இப்போது அவன் தண்ணீருக்குமேல் கொப்பூழ் வரையில் உயர எழுந்தமையால், அம்மரக் கலத்திலிருந்தவர்கள் அவனது உடம்பின் மேற்பகுதியை நன்கு பார்க்கக் கூடியவர் களானார்கள். அவனது மார்பு சிறந்த ஒரு பெண்மகளின் மார்புபோற் பெரிதாய் அழகிய தாய் இருந்தது. ஆனால் அவன் முதுகைத் திருப்பிய போது ஆண்மகனாகவே காணப்பட்டான். அதன் பின்னர் அவன் அக்கப்பலைச் சுற்றி நீந்தி மறைந்து போய்விட்டான். அதற்குப் பிறகு அக்கப்பலி லுள்ளவர்கள் அவனைப் பார்க்கவில்லை. காலை பத்து மணியிலிருந்து பன்னிரண்டு மணி வரையில் அக்கடல்மகன் அம்மரக்கலத்துடனேயே வந்தனன். அம்மரக்கலத்திருந்தவர்கள் அவனைக் கண்டு அச்சமுறா திருந்தால், அவனைக் கப்பலின் மேல்தட்டுமேற் பலகாலும் ஏற்றியிருக்கலாம். அவனதுடம்பின் நீளம் ஏறக்குறைய எட்டடி; தோலின் நிறம் பழுப்பு; அத்தோலின் மேற்செதிள் ஏதும் இல்லை; அவனுடைய நடையெல்லாம் மக்கள் நடைகளையே ஒத் திருந்தன; கண்கள் இருக்கவேண்டிய அளவுப்படியே அமைந்திருந்தன; வாய் சிறு அளவினது; மூக்குப் பெரிதாயும் தட்டையாயும் இருந்தது; பற்கள் மிகவும் வெண்மையாய்த் தோன்றின; மயிர் கறுப்பு; மோவாயிற் பாசிபடர்ந்தாற்போல் மயிர்கள் இருந்தன; மூக்கின் கீழ் ஒருவகையான மீசை; காதுகள் மக்களின் காதுகளைப் போலவே காணப்பட்டன; ஆனால், அவனுடைய கைவிரல் கால்விரல்களுக்கு இடையில் மட்டும் தாராப் பறவைகளுக்குள்ளது போல் செலு இருந்தது. சுருங்கச் சொல்லுங்கால் அவன் திருத்தமான அமைப்பு வாய்ந்த ஓர் ஆண்மகனாகவே காணப்பட்டான். இங்ஙனங் காணப்பட்ட அக்கடல் மகனைப் பற்றிய செய்தி முற்றும் உண்மையென்று அக்கப்பல் தலைவனும் மீகாமனும் அதில் வேலைசெய்த முப்பத்திரண்டு ஆட்களும் உறுதிமொழி புகன்றார்கள். 26. உற்றுநோக்கி ஆராய்தல் உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் சிறியவாய் இருப்பினும் பெரியவாய் இருப்பினும், அவைதம்மை உற்றுநோக்கி ஆராய்ந்தவர்களே அறிவில் பெரியராகிப், பல அரும்பெரும் புதுமைகளைக் கண்டறிந்து, நம்மனோர்க்கெல்லாம் அளப்பிலா நன்மைகளைச் செய்திருக்கின்றார்கள். எதனையும் உற்றுநோக்கி ஆராய்தலின்றி, ஆடு மாடுகளைப் போல் பொதுநோக்காய்ச் சென்றவர்கள் தாமும் அறிவு விளங்கப் பெற்றதில்லை; பிறர்க்கும் நன்மையாவன செய்ததில்லை. சோற்றுக்குக் கேடும், மண்ணுக்குப் பொறையுமாய் இருந்து அவர்கள் தம் வாழ்நாளை உண்டு உடுத்து உறங்கிக் கழித்தவர்களேயாவர். இலந்தை மரத்திலிருந்து நன்றாய்ப் பழுத்த பழங்கள் உதிர்ந்து கீழ் விழுவதனை எத்தனைகோடி மக்கள் முற்காலத்தும், பிற்காலத்தும் பார்த்திருக்கின்றார்கள்! அவர்களுள் எத்தனை பேர் அவைகள் ஏன் அங்ஙனம் கீழ் விழுகின்றன என்று ஆராய்ந்து பார்த்தவர்கள்? நியூட்டன் என்னும் ஒருவரைத் தவிர ஏனைக் கோடியான மக்கள் எவரும் அதன் உண்மையை அறியவில்லையே! ஏன்? உற்றுநோக்கி ஆய்ந்துபார்க்கும் அறிவும் முயற்சியும் அவரைத் தவிர மற்றையோர்க்கு இல்லாது போனமையாலன்றோ? மற்று, நியூட்டன் என்னும் பேராசிரியரோ இவ்உலகியற் பொருண்மைகளை எந்நேரமும் உற்று நோக்கியபடியாகவும், உற்றுநோக்கி ஆராய்ந்தபடியாக வுமே தமது அரிய வாழ்நாளை எந்நேரமும் பயன்படுத்தி வந்தார். ஒருகால் அவர் ஓர் இலந்தை மரத்தினடியில் அமர்ந் திருக்கையில், அதில் நன்றாய்ப் பழுத்திருந்த ஒரு பழம் காம்பு கழன்று அவரது காலண்டையின் கீழ் விழுந்தது. அதனைக் கண்ட அவர், உடனே, அஃதேன் அங்ஙனம் கீழ் விழலாயிற்று என ஆராயப் புகுந்தார். அந்நிகழ்ச்சியினைப் புல்லியதென்று விலக்கிவிடாமல், அல்லும்பகலும் அவர் அதனைப் பலவாற்றான் ஆராய்ந்து பார்க்க, மேலுள்ள பருப்பொருள்களைக் கீழே தன்கண் இழுத்துக்கொள்ளும் ஓர் ஆற்றல் இந்நிலவுல கத்திற்கு உண்டென்னும் அரும்பேருண்மையினை அவர் கண்டு கொண்டார். இந்நிலவுலக மாகிய பருப்பொருளுக்கு உள்ள இவ் இழுக்கு மாற்றலை அவர் கண்டறிந்த பிறகுதான், வான் வெளியிற் பந்துகள் போல் சுழலா நிற்கும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலான ஏழு உலகங்களும், அவற்றோடொத்த அளவிடப்படாத எண்ணிறந்த வான்மீன் மண்டிலங்களும் தத்தம் பருமனுக்குத் தக்க தொலைவில் நின்று ஒன்றையொன்று இழுத்தபடியாய் ஒன்றையொன்று சுற்றிச் செல்லும் வியப்பான உண்மை நிகழ்ச்சியினையும் இன்னும் இதுபோன்ற வேறு பல புதுமைகளையும் கண்டு வெளியிட்டார். இப்பேராசிரியரது அறிவு வரலாற்றை எண்ணிப் பார்க்குங்கால் பகுத்தறிவொடு கூடாத கட்பார்வை பயன் இலதாதலை உணர்கின்றனம் அல்லமோ? மக்களெல்லாரும் கண்ணினாற் பொருள்களையும் பொருள் நிகழ்ச்சிகளையும் பார்த்துண்டாகிய ஓரளவான பகுத்தறிவு கொண்டே வாழ்க்கை செலுத்தி வருகின்றனரென்பது உண்மையே. என் றாலும், ஒருபொருள் தன்மை மற்றொன்றின் வேறாதலும், அன்றி ஒன்று மற்றொன்றை ஒத்திருத்தலும், அவ்வாறெல்லாம் அமைந்த அமைப்புகளின் கீழ் அவை தம்மை அமைத்த முதற்பேரறிவு ஒன்று மிளிரும் பான்மையும் எல்லாம் கருத்து ஒருங்கி ஆராய்ந்து பார்ப்பவர் அம்மக்களுள் எத்தனை பேர் உளர்? ஒரோவொரு காலங்களில் ஒரோவொருவரே மிக அரியராய் ஆங்காங்குக் காணப்படுகின்றனர். ஒரு கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் ஓர் எடைக்கல் அங்கும் இங்குமாய் ஊசலாடுவதை எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னும் பின்னும் பார்த்திருக்க வேண்டும்! அதிலிருந்து நாழிகை அறிவிக்கும் கடிகாரக் கருவியினை அமைக்கும் நுண்ணறிவு கலிலீயோ என்னும் வான்நூலாசிரியர்க்கன்றி வேறெவர்க்கேனும் தோன்றியது உண்டா? இல்லையே! பின்னும் ஒரு கால் அவ்வான்நூலாசிரியர் தொலைவு நோக்கி என்னும் ஒரு வியத்தகு கண்ணாடியினை அமைக்கும் முறை கண்டறிந்ததும் மிகவும் வியக்கற்பாலதாயிருக்கின்றது. மூக்குக் கண்ணாடி செய்யும் ஒருவர், தொலைவிலுள்ள பொருள்களைக் கட்புலனுக்கு அருகே காட்டும் ஓர் அரிய கருவியினை அமைத்து அதனை ஒரு செல்வர்க்கு வழங்கிய செய்தியைக், கலிலீயோ என்னும் அப்பேரறிஞர் ஒரு நாள் தற்செயலாகக் கேள்வியுற்றார். கேட்ட அந்நாள் முதல் அவர் அங்ஙனம் தொலைவில் உள்ளவைகளை அருகில் காட்டும் கருவியின் அமைப்பைத் தொடர்பாக ஆராய்ந்து செய்து செய்து பார்த்துக் கடைசியாகத் தொலைநோக்கி (Telescope) என்னும் புதுமையான கருவியை அமைத்து முடித்தார். அக்கருவியானது அமைக்கப்பட்ட பிறகுதான், எத்தனையோ கோடி மைல் களுக்கு அப்பால் உள்ள ஞாயிறு, திங்கள் முதலான உலகங்களின் இயல்புகளையும், அவை தமக்கும் எட்டாத் தொலைவிலுள்ள ஏனை வான்மீன் மண்டிலங்களின் இயல்பு களையும் எல்லாம் அவரும் அவர் வழி வந்த மற்றை வான் நூலாசிரியர்களும் நன்கறிந்து கண்டு நம்போல்வார்க்கெல்லாம் அவ்வுண்மைகளை நன்குவிளக்கி வருகின்றனர். கலிலீயோ என்னும் அவ்வறிஞர் பெருமானுக்கு அத்துணை விழிப்பான கருத்தும் ஓயாத ஆராய்ச்சியறிவும் ஆராய்ந்தவைகளைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியும் இல்லாதிருந்தால், நாம் அம்மேலுலகங்களின் உண்மைகளை உணர்ந்து கொள்ளல் இயலுமோ? அவ்வுண்மைகளை அறியாமல் அவ்வுலகங் களைப் பற்றிய வெறுங் குருட்டு நம்பிக்கைகளிலும் பொய்க் கதைகளிலுமன்றோ நம் வாழ்நாளை நாம் விலங்கினங்களைப் போல் கழிக்க வேண்டும்? இன்னும் பாருங்கள்! கூவல் ஆமை, குரை கடல் ஆமையைப் பார்த்துப் பழித்தது போலத் தாம் இருக்கும் நாட்டையும் தம் நாட்டிலுள்ள மக்களையும் தவிர வேற்று நாடுகளையும் அந்நாடுகளில் உள்ள மக்களையும் பற்றிச் சிறிதுமே உண்மை தெரியாமல் அந்நாடுகளையும் அம் மக்களையும் இழித்துப் பேசுவோர் நம்மில் மிகச் சிலராகவே காணப்படுகின்றனர். தாமிருக்கும் ஊரில் தாம் உயிர் வாழ்வதற்கு வேண்டும் கருவிகள் கிடைக்கப் பெறாமல் வறுமைப்பட்டுத் துன்புறுவோரே அயல்நாடுகள் சென்று குடியேறக் காண்கின்றோம். இவ்வாறாக நம்மனோர் பெரும்பாலும் தாமிருக்கும் இடத்தைவிட்டுப் பெயராத சோம்பர்களாயும், உலகத்தின் பல பகுதிகளையும் கண்டு அறிவை அகலமாக்கும் விரிந்த நோக்கம் இல்லாதவர்களாயும் இருத்தலறிந்தே நம் பண்டை ஆசிரியர்கள் இந்திய இலங்கை நாடுகள் எங்கும் கடவுளை வணங்குவதற்கென்று மாபெருங் கோயில்கள் அமைத்து, அம்முகத்தால் ஓர் ஊரவர் வேறு ஓர் ஊர்சென்று அன்பிலும், அறிவிலும் விரிந்த நோக்கத்திலும் மேன்மேற் பெருகுதற்கு, வழிசெய்து வைத்தனர். வைத்தும், கடற்கப்பால் உள்ள நாடுகளுக்குக் கப்பலேறிச் சென்று ஆங்காங்குக் குடியேறக் கருதும் மனத்திட்பம் உடையார் நம்மில் இன்னும் மிகச் சிலராகவே இருக்கின்றனர். கப்பலேறிச் சென்றால் கடலுக்கு இரையாவோம் என்னும் அச்சம் அவர்கள் உள்ளத்திற் குடிகொண்டிருக்கின்றது! அதுவேயுமன்றிக், கப்பலேறிச் செல்வாரைத் தமது சாதிக்குட் சேர்க்கலாகாது என்னும் கட்டுப்பாடும் சில வகுப்பில் கடுமையாய் இருக்கின்றது! இதனாலேயே, நிலவளம், நீர்வளம், பொருள் வளம் நிரம்பிய பெரிய நாடுகளில் சென்று குடியேறி இனிது உயிர்வாழும் பெரும்பேற்றையும் உரிமையையும் இழந்து, நம் இந்து மக்களில் பெரும்பாலார் சிறிய சிறிய வெற்றூர்களிலிருந்து மிடிப்பட்ட குறுவாழ்க்கை செலுத்து கின்றனர்! ஆனால், மேல்நாட்டவரான வெள்ளைக்கார நன்மக்களோ தாம் பிறந்த ஊர்களில் இருக்குமளவில் மன அமைதி பெறாத பெருநோக்கமும் பேரறிவும் பெருமுயற்சியும் பேரூக்கமும் அஞ்சா ஆண்மையும் வாய்ந்தவர்களாய் இந்நிலவுலக மெங்கும் உள்ள பெருநிலப் பரப்புகளை எல்லாம் கடல் தாண்டிக் கண்டு கைக்கொண்டு அவைதம்மையெல்லாம் தமக்கு நீங்கா உரிமைகளாக்கி இன்பவாழ்க்கை செலுத்தி வருகின்றனர். இவர்கள் இவ்வாறு இந்நில உலகமெங்கும் பரவி இனிது வாழ்வதற்கு, இவர்கள் முன்னோரிற் சிலர் அறிவும் ஆராய்ச்சியும் எதனையும் உற்று நோக்கி எண்ணுதலும் அஞ்சா மன உறுதியும் விடாமுயற்சியும் வாய்ந்திருந்தமையே காரண மாகும். தாமிருக்கும் ஊரையும் அதற்கு அருகிலுள்ள வேறு சில ஊர்களையும் அன்றிச் சேய்மையிலுள்ளவைகளைச் சிறிதும் அறியாதவர்களாய் நம் இந்துமக்கள் மிடிப்பட்ட வாழ்க்கையில் இருக்க, மேல்நாட்டவரின் முன்னோர்களில் ஒருவரான கொலம்பசு என்பவரோ தாமிருந்த பெயின் தேயத்தை யடுத்த பெரும்புறக் கடலுக்கும் அப்பால் ஒரு பெருந்தேயம் உளதென்றறிந்து, மூவாயிரத்தைந்நூறு மைலுக்கு மேல் அதனைக் கடந்து சென்று, கி.பி. 1492-ம் ஆண்டில் அமெரிக்க தேயத்தைக் கண்டுபிடித்தார். அப்பெரும்புறக் கடலுக்கும் அப்பால் ஒரு பெருந்தேயம் உண்டென்பதைக் கண்ட அவரது ஆராய்ச்சி அறிவின் தெய்வத்தன்மையை என்னென்றுரைப்போம்! அதன் உண்மையை ஆராய்ந்து கண்ட அளவில் இராமல், தம் நாட்டு அரசற்கும் அரசிக்கும் அதனை மெய்ப்படுத்திக் காட்டி, மூன்று மரக்கலன்களும் நூற்றிருபஃது ஆட்களும் தாம் அக்கடல் கடந்து செல்லுதற்கு உதவியாகத் தம் அரசர்பாற் பெற்றுக்கொண்டு, முன் எவருமே சென்றறியாத அப்பேராழியில் வழிகண்டு சென்ற அவர்தம் அறிவாற்றலையும் அஞ்சா ஆண்மையினையும் எண்ணுந்தோறும் எம் நெஞ்சம் அளவிலடங்கா இறும்பூதும் திகைப்பும் அடைகின்றது! இங்ஙனம் அப்பெரும்பௌவங் கடந்து சென்ற கொலம்பசுப் பெரியாரின் பேரறிவின் திறம், அவர்தாம் மேற்கொண்டு சென்ற அவ்வருஞ்செயலை எவ்வாறு பயன் பெறச் செய்ததென்பதும் நினைவுகூரற்பாற்று. பிறர்க்கு வழிதிசை தெரியாப் பெருவெள்ளக் காடான அப்பேராழியினூடே அவர் எவ்வாறு வழிதெரிந்து சென்றார் என்பதை நினைத்தால் எவர்க்குத்தான் வியப்பெழாது! எவர்க்குத்தான் நெஞ்சம் திகில் கொளாது! இவ்வளவு தெரிந்து சென்றதே ஒரு தெய்வத்தன்மை! இதனினும் சிறந்த ஒரு தெய்வ அறிவும் இவரை அந்நடுக்கடலில் காப்பாற்றியது. இவர் ஐந்து கிழமை களாக அல்லது முப்பத்தைந்து நாட்களாக அப்பெருநீரில் அம்மூன்று கப்பலையும் கொண்டு செல்கின்றார். வழிதுறை ஒன்றும் தெரியவில்லை! நாற்புறமும் சூழ ஒரே வெள்ளக்காடு! தேடிச் செல்லும் தேயம் சிறிதும் தென்படவில்லை! அம்மூன்று மரக்கலங்களிலும் அவருக்கு உதவியாய்ச் சென்ற ஆட்க ளெல்லாரும் இனி நிலத்தைக் காண்போமா என்று ஏங்கி நம்பிக்கை இழந்தார்கள். தம்மை அப்பெருநீருக்கு இரை யாக்கவே அவர் கொணர்ந்தாரென எண்ணி, எல்லாரும் அவரைத் துன்புறுத்தத் தொடங்கிவிட்டனர்! அந்நேரத்தில், எல்லை சிறிதும் தெரியாத அப்பெருநீர்ப் பரப்பில், தமக்கு உதவியாய் வந்த துணைவர்களே நம்பிக்கையற்று மனம் கலங்கித் தம்மைத் துன்புறுத்துவராயின் அப் போது எத்தகைய நெஞ்சழுத்தம் உடையாரும் தம்நெஞ்சம் தடுமாறாதிருத்தல் ஏலுமோ? ஏலாதே; ஆனாலும், கொலம்பசுப் பெரியார் அந்நேரத்திலும் உளம் சிறிதும் தடுமாறிற்றிலர்! தமது கப்பலுக்கருகே கடற்பாசிகள் மிதந்து செல்வதை அவர் உன்னிப்பாய்ப் பார்த்து, இதோ! நாம் தேடிச் செல்லும் தேயம் அண்மையில் வந்துவிட்டது. அஞ்சாதீர்கள்! என்று அவர்கள் எல்லார்க்கும் ஆறுதல் மொழிந்தார். அவர் மொழிந்த வண்ணமே சில நாட்களில் அமெரிக்க தேயக்கரை அம்மரக்கலங்களிற் சென்றார் எல்லார் கண்களுக்கும் புலப்படலாயிற்று! அப்பெருநீர்ப் பரவையில் ஆழாது தப்பிய அவரெல்லாம் உவகைக் கடலுள் ஆழ்ந்தனர்! அமெரிக்கக் கரையோரங்களில் உள்ள மலைப் பாறைகளில் ஒட்டி வளர்ந்த கடற்பாசி மிதந்து வருதலைக்கண்டு, அத்தேயத்தின் அருகே தாம் வந்துவிட்டதைக் கொலம்பசுப் பெரியார் அறிந்த அறிவு, அவருடன் சென்ற ஏனைமக்கட்கு இல்லாது போயிற்றே! இதனால் எத்துணைச் சிறிய, எளிய, புல்லிய பொருளையும் புறக்கணித்து விடாமல், அதனையும் அதனதன் தொடர்பையும் உற்றுநோக்கி ஆராயும் அறிவுடையாரே எல்லா வகையிலும் சிறந்தவராவர் என்றறிதல் வேண்டும். அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். (குறள் 430) 27. ஓநாயும் கொக்கும் ஓர் ஓநாயானது தன் தொண்டைக்குக் குறுக்கே மாட்டிக் கொண்ட ஒரு எலும்பை எடுத்து விடும்படி, அங்கும் இங்குமாய் மிகவும் துன்புற்று ஓடித் தான் எதிர்ப்பட்ட ஒவ்வொரு விலங்கையும் கெஞ்சிக் கேட்டது. அங்ஙனம் கெஞ்சிக் கேட்கும்போது எல்லாம் தனக்கு அவ்வுதவியைச் செய்யும் உயிர்க்குத் தான் தன்னாலான கைம்மாறு ஒன்றும் செய்வதாகக் குறிப்பித்தது. கடைசியாக ஒரு கொக்கு அதன் துன்பத்தையும், வேண்டுகோளையும் சொல்லுறுதியையும் கண்டு மனம் இரங்கித், தனது நீண்ட கழுத்தோடு கூடிய அலகை அவ் ஓநாயின் தொண்டைக்குள் துணிவாக நுழைத்து, அங்கே மாட்டிக் கொண்டிருந்த எலும்பை வெளியே இழுத்துவிட்டது. அவ்வாறு செய்த பிறகு அது தனக்கு ஓநாய் கைம்மாறாகத் தருதற்கு இசைந்ததனைத் தரும்படி அடக்க மாய்க் கேட்டது. உடனே அவ் ஓநாய் பல்லை இளித்துக் கொண்டு, நன்றிகெட்ட உயிரே! ஓர் ஓநாயின் வாய்க்குள்ளே நுழைந்த உனது கழுத்துத் துண்டாக்கப்படாமல் நல்லபடியாய் வெளியே வந்ததே போதாதோ! இதனிலும் சிறந்த கைம்மா றொன்றும் உனக்கு வேண்டுமோ! என்று சினத்துடன் கூறியது. தீயவர்கட்கு உதவி செய்பவர்கள், அவ்வுதவிக்குக் கைம்மாறாக அவராற் பழிக்கப்படுவரே அன்றி வேறு எதிருதவி ஒன்றும் பெறார். 28. ஒரு பருந்தும் சில புறாக்களும் சில புறாக்கள் நெடுநாளாக ஒரு பருந்துக்கு அஞ்சியபடியாய்க் காலங்கழித்து வந்தன. அவை தாம் உறையும் கூட்டை விட்டுத் தொலைவில் செல்லாமல் அங்கு அருகிலேயே மேய்ந்து கொண்டு விழிப்பாய் இருந்தமையால், அவை அப்பருந்தின் பிடியுள் அகப்படாமல் உயிர்தப்பி வாழ்ந்தன. அப்பருந்தோ தனது விருப்பம் நிறைவேறாமை கண்டு, அவற்றைத் தனக்கு இரையாக்கிக் கொள்ள ஒரு சூழ்ச்சி செய்து அப்புறாக்களை நோக்கி, நீங்கள் ஏன் இவ்வாறு எந்நேரமும் கவலையிலும் கலக்கத்திலும் நாட்கழித்து வருகின்றீர்கள்? நீங்கள் என்னை உங்களுக்கு அரசனாக ஏற்படுத்திக் கொண்டால், எத்தகைய இடையூறும் உங்களுக்கு வராமல் உங்களைப் பாதுகாப்பேன், என மொழிந்தது. அப்பருந்தின் சொற்களை நம்பிய அப்புறாக்கள், அதனைத் தமக்கு அவ்வாறே அரசனாக்கிக் கொண்டன. அங்ஙனம் அரசனான பிறகு அப்பருந்து ஒருமிக்க அவைகளை இரையாக்கிக் கொள்ளாமல், நாடோறும் ஒவ்வொரு புறாவாகப் பிடித்துத் தின்று வந்தது. நாளடைவில் எல்லாப் புறாக்களும் இங்ஙனம் அதற்கு இரையாகிப் போகக் கடைப்படியாக எஞ்சிநின்ற புறவு அதற்கு இரையாகிப் போகும் தருவாயில், ஆ! நாங்கள் செய்த ஏற்பாட்டுக்குத் தக்கது எங்கட்குக் கிடைத்தது! என்று சொல்லி உயிர் துறந்தது. ஆகவே, கொடியோன் ஒருவனைத் தாமாகவே தெரிந்தெடுத்து அவற்குப் பெருவல்லமையைத் தந்து வைப்பவர்கள், பிறகு அவனால் துன்புறுத்தப்பட்டால், அதற்காக அவர்கள் வியப்படைதல் எதற்கு? 29. இரண்டு பண்டப் பைகள் ஒவ்வோர் ஆடவனும் தனக்கு முன்னே ஒரு பையும் தனக்குப் பின்னே ஒரு பையும் தொங்கவிட்டுக் கொண்டு செல்கின்றான்; அவ்விரண்டு பைகளிலும் குற்றங்களாகிய பண்டங்களே நிறைந்திருக்கின்றன. அவ்விரண்டில் அவன் மார்பின் முன்னே தொங்கும் பையில் பிறருடைய குற்றங்களே நிரம்பியுள்ளன. அவற்குப் பின்னே அவன் முதுகில் தொங்கும் பையிலே, அவனுடைய குற்றங்களே நிறைந்திருக் கின்றன. ஆகவே, ஒவ்வொருவரும் பிறருடைய குற்றங்களை நோக்கும் கண்பார்வை உடையராயும், தம்முடைய குற்றங் களைப் பாராக் கண்ணில் குருடராயும் இருக்கின்றனர். 30. குடியானவனும் பாம்பும் மழைக்காலத்தொருநாள் ஒரு குடியானவன் தன் வீட்டுக்குத் திரும்பி வருகையில் வேலியருகே ஒரு பாம்பு குளிரால் விறைத்துக் குற்றுயிருங் கொலையுயிருமாய்க் கிடத் தலைக் கண்டான். கண்டவன் அதன்பால் இரக்கம் உடையோனாய், அதனையெடுத்துத் தன் மார்பில் அணைத்தபடியாய்த் தன் வீட்டுக்குக் கொணர்ந்து, அடுப்பருகில் வைத்து அதற்குச் சூடேற்றினான். உடம்பில் சூடேறியவுடன் அது சுறுசுறுப்பு வாய்ந்ததாகி,அக்குடிசை வீட்டிலிருந்த அவன் பிள்ளைகள் மேல் சீறிச் செல்லலாயிற்று. அதுகண்ட அக் குடியானவன் அந்நச்சுயிருக்குத் தான் இரங்கியது தப்பாதல் உணர்ந்து, உடனே ஒரு தடியால் அதனை அடித்துக் கொன்றான். புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின்மேல் இட்ட கலம். 31. உறை நீர்க்கட்டிமேல் உடல் பருத்த மாது உருசியா தேயத்தின் வடபகுதிகளில் பனியின் கடுமை மிகுதியாய் உண்டு. அதனால் அந்நாட்டின் நிலமும் ஏரியுமெல்லாம் பனி நிறைந்து இறுகி இருக்கும். பனிக்கட்டி நிறைந்த நிலமும் ஏரியும் கெட்டியாய் வழுவழுப்பாக இருத்தலால், அவற்றின்மேல் அந்நாட்டு மாந்தர்கள் சறுக்கி நடக்கும் விளையாட்டு விளையாடுதல் வழக்கம். ஒருகால் உடல்பருத்த மாது ஒருத்தி ஓர் ஏரியின் தண்ணீர் உறைந்து கெட்டியாகி அதன் மேற்பரப்பு வழுவழுப்பாய் இருக்கப் பார்த்து, அதன்மேற் சறுக்கி விளையாடச் சென்றாள். அங்ஙனம் அவள் விளையாடத் தொடங்கிய சிறிது நேரத்திலெல்லாம் கால்வழுக்கி அதன்மேற் பொதீரென வீழ்ந்தாள். வீழ்ந்தவள் தன் உடலின் சுமையால் எழுந்து நிற்கமாட்டாமல், அப்பனிப்பரப்பின் மீதே துயரத்தோடு உட்கார்ந்திருந்தனள். அப்போது அவள் பக்கமாய் அங்கே சறுக்கி விளையாடிக் கொண்டு வந்த ஒருவன் அவளைக் கண்டு இறங்கி, அவள் எழுந்திருக்குமாறு தூக்கி உதவி செய்து, அம்மே, இதுதான் முதன்முதலாக நீங்கள் சறுக்கி விளை யாடியது போலும்! எனக் கூறினான். அதற்கு அம்மாது, இல்லை, இது முதன்முறை அன்று; இதுதான் எனக்குக் கடைசிமுறை! என்று மொழிந்து அவருக்கு நன்றி செலுத்திப் போனாள். 32. பன்றி எண்ணிக்கை இருபது பன்றிகள் வைத்து வளர்த்து வந்த ஓர் ஒட்டன் ஒருநாள் தன்கீழ் வேலைபார்க்கும் ஒருவனையழைத்துப், பன்றிக் குடிசையில் பன்றிகள் இருபதும் இருக்கின்றனவா, என்று பார்த்துவரும்படி ஏவினான். அவ்ஏவலன் அங்ஙனமே சென்று, திரும்பி முகத்திலே திகைப்புக்குறி தோன்றத் தன் தலைவனிடம் வந்தான். வந்தவனைத் தலைவன், நல்லது, பன்றிகள் எல்லாம் தவறாமல் இருக்கின்றனவா? என வினவினான். ஆ! ஐயா, பத்தொன்பது பன்றிகளைப் பிசகாமல் எண்ணினேன்; ஆனால், ஓர் இளம்பன்றி மிக விரைந்து ஓடினமையால், அதனை யான் எண்ணக் கூடவில்லை என்றான். அச்சொற் கேட்ட தலைவன் அவ் ஏவலனது மடமையைப் பார்த்து நகை புரிந்தான். 33. திறமையுள்ள நாய் ஒருகால் ஒரு செல்வர் தாம் வளர்க்கும் நாயைத் தமது பக்கத்தில் வைத்துக்கொண்டு தமது குதிரை வண்டியில் ஒரு கடைக்குச் சென்றார். கடையருகே சென்றதும், வண்டியை நிறுத்தி, நாயை வண்டியிலேயே இருக்கும்படி செய்துவிட்டு அவர் அக்கடையினுள்ளே நுழைந்தார். அப்போது குதிரை தெருவில் எதனையோ கண்டு மிரண்டு, வண்டியை இழுத்துக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் ஓடலாயிற்று. அதன் கடிவாள வார் தெருநெடுகக் கூடவே இழுப்புண்டது. வண்டிக் குள்ளிருந்த நாயோ தன் வண்டிக்குதிரை தலைகால் தெரியாமல் ஓடுதலைக் கண்டதும் திடுமெனக் கீழே குதித்து, நிலத்தே இழுபட்டுச் செல்லும் கடிவாள வாரைத் தனது வாயினாற் கௌவிப் பிடித்துக் கொண்டது. குதிரை சிறிது வழி அந்நாயையும் இழுத்துச் சென்றதாயினும், நாய் தான் கௌவிய கடிவாள வாரை விடாப்பிடியாய்ப் பிடித்து இழுத்தமையால் குதிரை கடைசியாக நிற்க வேண்டுவதாயிற்று. இங்ஙனம், அந்நாய் செய்யாதிருந்தால், அக்குதிரை தான் வெருண்டோடும் ஓட்டத்தால் தான் இழுத்துச் செல்லும் வண்டியை எங்காயினும் மோதிச் சுக்கல்சுக்கலாய் உடைத்திருக்கும்; தானும் எங்காயினும் தடுமாறி விழுந்து கால் முறிந்திருக்கும். இடர்ப்பட்ட நேரத்தில் தன் நாய் செய்த இப்பேருதவியை நினைந்து நினைந்து வியந்து அதன் தலைவன் அதனைப் பெரிதும் பாராட்டினான். 34. பழக்கத்தின் வலிவு இவ் இந்திய நாட்டின் ஒரு கடற்கரைப் பக்கத்து மேட்டுக் குப்பத்தில் உயிர்வாழும் கரையாளப்பெண்கள் சிலர் தாம் கொண்டுபோன மீன்களை ஓர் அங்காடியில் விற்பனை செய்து விட்டுத், தமது இல்லம் நோக்கி மாலைப்பொழுதில் திரும்பி வருகையில், இடியும் காற்றும் மழையும் வந்துவிட்டன. நடு வழியில் இவ்வாறு நேரவே, அவர்கள் அவ்வழியின் ஓரமாய் இருந்த ஒரு பூந்தோட்டத்தினுள் நுழைந்தார்கள். அத்தோட்டக்காரன் அப்பெண்கள் மழையிலும் காற்றிலும் அகப்பட்டு வருந்துதல் கண்டு கொஞ்சம் இரங்கித், தனது ஓலை வீட்டினுள்ளே நறுமணம் கமழும் மலர்கள் குவிக்கப்பட்டுள்ள ஓர் அறையின் ஒரு பக்கத்தே அவர்கள் தங்கியிருக்கும்படி உதவி செய்தான். சுமைசுமந்து நடந்தமையால் அலுப்புற்ற அச்செம்படவ மாதர்கள் உறங்குவதற்காகக் கீழே படுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு அருகில் குவிக்கப்பட்டிருந்த மலர்க் குவியலிலிருந்து எழுந்த மணம் அவர்களது மூக்குக்குப் பிடிக்காமையால் அவர்கள் தூங்கக் கூடவில்லை. சிறிது நேரம் வரையில் பார்த்துவிட்டுப், பிறகு அப்பெண்கள் முடைநாற்றம் நாறும் தம்முடைய மீன் கூடை களைக் கொணர்ந்து தமது மூக்கருகே வைத்துக் கொண்டு நன்றாய்க் குறட்டை விட்டுத் தூங்கலாயினர். பழக்கம் கொடிய தென்பது இதனால் நன்கு புலப்படுகின்றதன்றோ? 35. அருளுடை ஊழியம் ஏழைப் பெற்றோர்களுக்குப் பிள்ளையாய் பிறந்த பாரி என்னும் பிரஞ்சுக்கார இளைஞர், பாரிசு மாநகரத்திலுள்ள மருத்துவக்கழகத்தில் கலைபயின்று தேர்ந்தபின் ஓர் ஏனாதி மருத்துவரின் கீழ் மருத்துவ ஊழியம் செய்ய அமர்ந்தனர். அமர்ந்து சிறிது காலம் சென்ற பின், தனது நாட்டுப் படைஞர்களுக்குப் புண் மருத்துவம் பார்க்கும் தொழிலில் அவர் அமர்த்தப்பட்டார். அக்காலத்தில், அதாவது அவர் உயிர்வாழ்ந்த பதினாறாம் நூற்றாண்டில், வெடிகுண்டுபட்ட படைஞரின் புண்களுக்குக் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சிய எண்ணெயைவிட்டு, அவற்றை ஆற்றுவது வழக்கமாய் நடந்து வந்தது. முன்னமே வெடிகுண்டுகளால் துளைக்கப்பட்டு ஆற்றொணாத் துயர் உழக்கும் படைஞரின் காயங் களுக்குக் கொதிக்கக் காய்ச்சிய எண்ணெயைச் சுடச்சுடச் சொரிந்தால், அது பின்னும் அவர்கட்கு எவ்வளவு கொடிய துன்பத்தைத் தந்திருக்கும்! இத்தகைய அருள் இல்லாக் கொடிய மருத்துவத்தைத் தமது கண்ணெதிரே கண்ட பாரி என்னும் அவ்விளைஞர்க்கு நெஞ்சம் நீராய் உருகியது! இக்கொடிய முறையை அறவே ஒழித்துவிட்டுப், படைஞர்க்குத் துன்பம் பயவாமல் செய்யும் மருந்து முறை எதுவென்று ஆராய்வதில் அவரது உள்ளம் இரவும் பகலும் ஈடுபட்டது. இரக்க நெஞ்சம் வாய்ந்தாரது எண்ணம் நிறை வேறுதற்கு இறைவனே துணை நிற்பன். ஒருநாள் வழக்கம்போலப் படைஞரின் புண்களுக்கு இடும்பொருட்டு எடுத்துக் காய்ச்சிய எண்ணெய் எல்லார்க்கும் போதாமல் ஒரு சிலர்க்கே போதுமாய் இருந்தது. அதனால் மற்றைப் பலரின் காயங்கள் எண்ணெய் இடாமலே விடப் பட்டன. அங்ஙனம் எண்ணெய் இன்றி விடப்பட்டவர் களைப் பாரி மருத்துவர் அடுத்த நாட்சென்று உற்று நோக்குகையில் எண்ணெய் இடப்பட்டவர்களை விட அஃது இடப்படாதவர் களே நல்ல நிலையில் இருக்கக் கண்டார். அது முதல் கொதிக்கும் எண்ணெயை இட்டுக் கட்டும் அக்கொடிய முறையை ஒழித்து, வேறு இனிய வகைகளால் ஆற்றும் முறைகளைக் கையாண்டு, அவர் படைஞரின் புண்களை விரைவில் இனிதாக ஆற்றியதுடன், தாம் கையாண்ட இனிய புதுமுறைகளை விளக்கியும் அவர் அரியதொரு நூல் இயற்றினார். இன்னும் அக்காலத்தில் கைகால் முறிந்துபோன படைஞர்க்கு, முறிந்த உறுப்புகளைத் தறித்தபின், மிச்சமாய் நிற்கும் உறுப்பின் முனைகளில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை வைத்து, அவற்றைத் தீய்க்கும் அறக்கொடிய மருத்துவமும் வழக்கமாய் நடந்து வந்தது! உயிரைப் பெருந்துன்பத்தில் படுப்பிக்கும் இக்கொடிய முறையைக் கேட்பினும் எம் குலை நடுங்குகின்றது! அதனை நேரிருந்து கண்ட மெல்லிய உள்ளத் தினரான பாரி மருத்துவர்க்கு அக்கொடுமை எவ்வளவு துடிதுடிப்பினைத் தந்திருக்கும்! இக்கொடிய முறையினையும் அவர் உடனே நிறுத்தித், தறிபட்டு எச்சமாய் நிற்கும் உறுப்புகளின் இரத்த நரம்புகளிலிருந்து இரத்தம் வெளியே பெருகி விழாதபடி அவைகளைப் பட்டுக்கயிறு கொண்டு கட்டி மருந்திட்டு இனிதாக விரைவில் ஆற்றினார். இன்னும் ஒரு கால் ஒரு மறவர் தமது உடம்பிற் பத்து இடங்களில் கத்தி வெட்டுப் பட்டு உணர்விழந்து கிடந்தார். அவரைக் கண்ட பிறர் அவர் இறந்து போனாரெனவே கருதி, அவரைப் புதைத்து விடுவதற்கு வேண்டும் ஏற்பாடுகளெல்லாம் செய்யலாயினர். ஆனால், அம்மறவரைச் சென்று உற்றுநோக்கிய பாரி மருத்துவரோ, அவர்க்கு உயிர் போக வில்லை என உறுதிமொழி புகன்று, சிறிது நேரத்தில் எல்லாம் அவரை உயிர்ப்பித்து, அவருடைய வெட்டுக் காயங்களையும் சில நாட்களில் ஆற்றினார். இங்ஙனம் எல்லாம் பாரி மருத்துவர் தமக்குச் செய்து வந்த அருள் மருத்துவ முறைகளுக்காக நன்றி செலுத்த விழைந்த அப்படைஞர்கள் தாந் தாமும் மனம் உவந்து கொடுத்த பொருளைத் திரட்டித், திரட்டிய பெரும் பொருளை அவர்க்குக் காணிக்கையாகச் செலுத்தினர். 36. கோட்டையைக் காத்த கோதை கனடா நாட்டின் பிரஞ்சுக்காரர்க்கு உரிய வேர்ச்சேரி என்னும் கோட்டையை 1690-ஆம் ஆண்டில் இருக்கோய வகுப்பினர் சிலர் வந்து தாக்கலாயினர். தாக்கவந்த அவர்கள் ஏதோர் அரவமும் செய்யாமல் மதின்மேல் ஏறி எளிதிலே உட்குதித்து விடுதற்கு ஏற்பாடு செய்துகொண்டு, அதன்படியே மதில்மேல் ஏறினர். ஏறியதும், உள்ளிருந்து போந்த துப்பாக்கிக் குண்டுகளைக் கண்டு, அவர்கள் வியப்புற்று, மதிலைக் கடக்கமாட்டாதவர்களாய்ப் பின்னடைந்தனர். திரும்பவும் அவர்கள் அம்மதின்மேற் செல்லத், திரும்பவும் போந்த துப்பாக்கிக் குண்டுகளின் முன் நிற்கமாட்டாதவர்களாய்த், திரும்பவும் பின்முதுகு காட்டினர். அக்கோட்டையின் அகத்தே எவ்விடத்துங் காணப்பட்ட மாது ஒருத்தியைத் தவிர வேறுபடைஞர் ஒருவரும் அதனுட் காணப்படாமையும், அங்ஙனமிருந்தும் பலமுகமாகத் துப்பாக்கிக் குண்டுகள் வந்து வீழ்ந்தமையும் நினைந்து அவர்கள் பெரிதும் இறும்பூதுற்றனர். பெண்பாலரைத் தவிர வேறு எவராலும் அக்கோட்டை காக்கப்படவில்லை என்னும் செய்தியே, அவ் இருக்கோய வகுப்பினர் அடுத்தடுத்துப் படைமேற் கொண்டு வந்து அக்கோட்டையைத் தாக்கும்படி செய்தது. தாக்கியும் என்! தாக்கிய ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியடைந்தனரே அன்றிச் சிறிதும் வெற்றி பெற்றிலர். கடைசியாக அவர்கள் இரண்டு நாள் வரையில் அக்கோட்டையை முற்றுகையிட்டும், அதனைப் பிடித்துக் கொள்ள மாட்டாதவர்களாய்ப் பின் வாங்கியே போயினர். இவ்வாறு மறித்து மறித்தும் வந்து அக்கோட்டையைத் தாக்கிய அவர்களை உட்புகவிடாமல் உள்நின்று எதிர்த்து முதுகுகாட்டி ஓடச் செய்தவள் கோதை ஒருத்தியே ஆவாள். இந்த அம்மை, ஒரு முழுப்படையின் துணை கொண்டவள் போல் அஞ்சா ஆண்மையுடனும் மனத்திட்பத்துடனும் தான் ஒருத்தியே அக்கோட்டையின் பல விடங்களிலும் தோன்றித்தோன்றி நின்று பகைவரை மிகவும் அச்சுறுத்தினள். மறுபடியும் இரண்டாண்டுகள் கழித்து அவ் இருக்கோய மக்கள் அக்கோட்டையைத் தகர்க்க வந்தபோது, அக்கோட்டைத் தலைவரின் மகளான பதினான்கு ஆண் டுடைய சிறுமி ஒருத்தியே, அவர்கள் உள்நுழைய ஓர் அடி எடுத்து வைக்கும் நேரத்திற்குள் ஓடிச் சென்று அதன் வாயிற்கதவைச் சாத்திச் செவ்வையாக அடைத்து வைத்தவள் ஆவாள். இந்தச் சிறுமியும் ஒரு மறவரும் அல்லாமல் பிறர் எவரும் அதனை அப்போது காத்தற்கு அங்கிலர். அங்ஙனமிருந்தும், அச்சிறுமி வேளைக்கு வேளை தன் உடையை மாற்றி, அக் கோட்டையினுள் பல முகத்தும் சுற்றிச் சுற்றிச் சென்று, பகைவர்கள் மேல் துப்பாக்கிக் குண்டுகளை நேரமும் குறியும் தவறாமல் ஏவி வந்தமையால், உள்ளே ஒரு பெரும்படை யிருந்து தம்மை எதிர்ப்பதாகவே கருதி, அப்பகைவர்கள் நெஞ்சம் தளர்ந்து வெற்றி பெறாமல் மறித்துத் திரும்பிப் போயினர். இங்ஙனமாக அச்சிறுமி செய்த செயற்கருஞ் செயலன்றோ, அவ்அரணத்தைக் காப்பாற்றியது! 37. மறைபொருட் காட்சி 1725-ஆம் ஆண்டில் போர்த்துக்கேசிய மாது ஒருத்தியைப் பற்றிய செய்தியானது, இயற்கைப் பொருள் அறிஞர்க்குப் பெருந்திகைப்பையும் பெருங்குழப்பத்தையும் உண்டு பண்ணியது. அம்மாதுக்கு மறைந்துள்ள பொருள்களைக் கண்டறிந்து உரைக்கும் ஆற்றல் நிரம்ப உள்ளதென்னும் செய்தி எங்கும் பரவியது. அந்த அம்மை வேறோர் உதவியும் நாடாது தன் கண்களால் நிலத்தை உற்றுநோக்கிய அளவில், அந் நிலத்தின் கீழ் உள்ள மண்ணடுக்குகளையும், அவை ஒன்றுக் கொன்று எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதையும் சிறிதும் பிழைபடாமற் சொல்லிவிடுவள். அது மட்டுமே அன்றி, அவள் ஒருவரது உடம்பை உற்றுப் பார்ப்பாளாயின், அவ் வுடம்புக்குள் ஓடும் இரத்தத்தையும், இரத்த நரம்புகளையும், எலும்புகளையும், உள்ளே அங்கங்கு நோய்ப்பட்டிருக்கும் இடங்களையும் தெளிவாய்க் கண்டு, அவைகளைப் பிறர்க்கு நன்கெடுத்துரைப்பள். கருக்கொண்டிருக்கும் மங்கையர் அவள்பால் சென்று, தமக்குப் பிறக்கும் பிள்ளை ஆணோ பெண்ணோ என்பதைத் திட்டமாய்த் தெரிந்துகொள்வர்; பிறந்த பிள்ளையும், அவள் முன் அறிந்து சொன்னபடியேதான் இருக்கும். அஞ்ஞான்றிருந்த போர்த்துக்கல் தேய அரசர் தாம் புதிதாகக் கட்டுவித்த அரண்மனைக்கு வேண்டிய அளவு நல்ல தண்ணீர் பெறுதற்பொருட்டுப் பல இடங்களை அகழ்ந்து பார்த்தும் தண்ணீர் கிடைத்திலது. அதனால் அவர் உள்ளங் கலங்கி வருந்துகையில், அறிந்தார் சிலர் சொல்லக் கேட்டு, மேற்குறிப்பிட்ட மாதைத் தம்பால் வருவித்துத், தமதரண் மனைக்கு வேண்டுமான செழும் புனல் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுக என வேண்ட, அவளும் மிகுந்த தீம்புனல் ஊறும் ஒரு நீர்ஊற்று நிலத்தின் கீழ் இருக்கும் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினாள். அவ்விடத்தை உடனே அவ்வரசர் அகழ்விக்க, மிகுதியான இனியநீர் கீழிருந்து சுரந்து மேலே பெருகியது. அதுகண்ட அரசர் பெருங்களிப்புற்று அவ்வம்மைக்குப் பெருஞ்சிறப்புகள் செய்து சமயப் பட்டம் அளித்து உதவிச் சம்பளமும் வழங்கினார். அவளது வியத்தகும் ஆற்றலை நேரே கண்டறிந்த அஞ்ஞான்றை இயற்கைப் பொருள் நூலார் பெரிதும் திகைத்து, அவ்வாற்றலின் உண்மையைத் தெரிதல் வேண்டி, முன்னுள்ளோர் நூல்களை எல்லாம் ஆராயத் துவங்கினர். ஆராய்ந்து கடைசியாக இயற்கைப் பொருள் ஆராய்ச்சியில் பல பெரு நுட்பங்களைக் கண்டறிந்து உலகத்திற்குப் பேருதவி செய்தவராகிய ஊசினர் (Huygens) என்பார் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தைத் தெரிந்தெடுத்தனர். போரிலிருந்து சிறையாகப் பிடித்துக் கொணர்ந்து அந்துவர்ப்பு (Antwerp) நகரின் சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த ஒருவர், எவ்வளவு தடிப்பான மட்டிப் பொருள்களையும் உற்றுநோக்கி, அவை செந்நிறம் வாய்ந்திலவாயின், அவற்றால் மறைக்கப்பட்ட பண்டங் களைத் தெளிவாகக் கண்டறிந்துரைக்கும் அறிவாற்றல் உடையராயிருந்தனர் என்னும் வியக்கத்தக்க வரலாறு அக்கலைஞர் வரைந்த அக்கடிதத்திற் குறிக்கப்பட்டிருந்தது. அதனைத் தெரிந்த பிறகுதான் அவ்வியற் பொருளறிஞர் உள்ளம் அமைதியுற்றது. மேற்சொன்ன போர்த்துகேசிய மாது தமக்குள்ள அவ்வறிவாற்றலைப் பயன்படுத்த நேரும் காலங்களில் எல்லாம் ஏதோர் உணவும் உட்கொள்ளாமல் கடும் பட்டினி கிடப்பர்; ஏனென்றால் தமது வயிற்றில் செரியாக்குணம் சிறிதிருப்பினும் தமக்குள்ள அவ்வியத்தகும் ஆற்றல் மங்கிப் போதலை அவர் நன்குணர்ந்து இருந்தனர். எனவே, நுண்ணறிவை வளர்க்க வேண்டும் சிறார்கள் கண்ட கண்ட உணவுப் பண்டங்களை எல்லாம் வேளையும் நேரமும் அறியாமல் உட்கொள்வது எவ்வளவு பிசகானது என்பது இனிது புலப்படுகின்றதன்றோ? ஆதலால், சிறாரும் அவர்தம் பெற்றோரும் உணவுப் பண்டங்களை மிகுதியாக அருந்தாமல் விழிப்பாய் இருத்தலுடன், இடையிடையே பட்டினி கிடக்கவும் பழகுதலைக் கடைப்பிடித்தல் வேண்டுமென்று உணர்ந்து கொள்க. 38. மதிப்பரிய மணிக்கலன் அவன்சுவர்க்கர் (Abensberg) என்னும் தேயத்துச் செல்வர் ஒருவர் முப்பத்திரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவர்கள் எல்லாரையும் மிக அருமையாக வளர்த்து வந்தனர். ஒருகால் செர்மன் தேய அரசன் தம்முடைய நாடு நகரங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகையில், ஆங்காங்குள்ள சிற்றரசர்களும் அரசியல் தொழிலில் அமர்ந் திருப்பவர்களும் செல்வர்களும் பிறரும் மணிகள் பதித்த பொன்னணிகள் பொற்கலன்கள் பொற்பட்டாடைகள் முதலான விலையுயர்ந்த பொருள்களைத் தத்தம் காணிக்கை களாக் கொணர்ந்து வைத்து அரசனை வணங்கி வாழ்த்தினர். ஆனால், அவன்சுவர்க்கரோ அரசன் தம் ஊர்க்கு அணித்தாக வருகையில், தாம் பெற்ற முப்பத்திரண்டு பிள்ளை களையும் அழைத்துக் கொண்டு சென்று, அரசனை வரவேற்று, அரசர்க்கும், தமது நாட்டிற்கும் தாம் செலுத்துதற்குத் தக்க காணிக்கைகள் தம் முப்பத்திரண்டு பிள்ளை களாகிய மதிப்பரிய மணிக்கலன்களே என மொழிந்து, அப்பிள்ளைகள் எல்லாருடனும் அரசனை வணங்கி வாழ்த்தினர். அதுகண்ட அரசன் அவரது உள்ளத்தின் உண்மை யையும் அவர் செலுத்திய காணிக்கைகளின் மதிப்பரிய தன்மையையும் நன்குணர்ந்து வியந்து, அவர்க்கும் அவர் தம் புதல்வர், புதல்வியர்க்கும் பல் பெருஞ்சிறப்புகள் செய்து மகிழ்ந்தான். இங்ஙனமே நிகழ்ந்த மற்றொன்று வருமாறு: கருநீலியாள் (Cornelia) என்னும் ஒரு பெருமாட்டியாரைக் காண வந்த மற்றொரு பெருமாட்டி தனக்குள்ள செல்வப் பெருக்கையும் தான் அணிந்திருந்த நகைகளின் விலையுயர்ந்த தன்மையையும் தானாகவே புகழ்ந்து பேசி முடித்த பின்னர், கருநீலியாளை நோக்கி, அம்மே, உங்களுக்கு எவ்வளவு செல்வம் உளது? உங்களுக்கு எத்தனை விலையுயர்ந்த நகைகள் உள்ளன? என்று வினவினாள். அது கேட்ட கருநீலியாள் தமது இல்லத்தின் பின்கட்டினுள்ளே சென்று தம் பிள்ளைகள் இருவரையும் கொண்டுவந்து அந்த அம்மைக்குக் காட்டி, இவர்கள் இருவருமே எனக்கு இரு பெருஞ் செல்வத்திரள்கள்! இவ்விருவருமே எனக்கு மதிப்பரிய மணிக்கலன்கள்! என மொழிந்தனள். இச்சொற்கேட்ட அந்த அம்மை தனது செல்வத்தின் போலித் தன்மையையும் கருநீலியாளுக்குள்ள செல்வத்தின் உண்மையையும் உணர்ந்து வெட்கிச் செருக்கழிந்து தனது பிழையைப் பொறுக்கும்படி கருநீலியாளை வேண்டினள். 39. ஓர் அரசியல் தலைவரின் அரிய இயற்கை மிகவும் ஏழ்மையான நிலைமையிலிருந்து தையல் வேலை செய்து பிழைத்து வந்தவரான அந்துரு சான்சன் (Andrew Johnson) என்னும் ஆண்மகனார் தமது அறிவாற்றலாலும் தமது நல்லியற்கையின் விழுப்பத்தாலும் படிப்படியே தமது வாழ்க்கை நிலை உயரப் பெற்று கடைசியாக வட அமெரிக்காவின் கண்ணதான இணைக்கப்பட்ட நாட்டரசுக்குத் தலைவராம் சாலப் பெரிய நிலையை அடைந்தனர். ஒருகால் ஓர் ஊரின்கண் ஒரு பெருங்கூட்டத்தின் இடையே அவர் ஒரு பேரூரை நிகழ்த்துங்கால், தாம் அரசியல் துறைகளில் எவ்வெவ்வாறு ஊழியம் செய்து எவ்வெவ்வகையில் மேலுயர்ந்து வந்தனரோ அவ்வரலாறுகளையெல்லாம் முறையே சொல்லிக் கொண்டு வந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்து ஒரு குறும்பன் தையற்காரனாயிருந்து மேல் வந்தோ! எனக் கூவினான். அதுகேட்ட அத்தலைவர் அவ்விகழுரைக்குச் சிறிதும் வருந்தாராய், அதனைச் சிறந்த பொருள் உடையதாகத் திருப்புவான் புகுந்து எவரோ ஒரு துரைமகனார் யான் தையற்காரனாயிருந்ததைக் குறிப்பிடு கின்றார். அவரது சொல் என்னைச் சிறிதும் வருத்தாது; ஏனென்றால், யான் தையற்காரனாயிருந்த ஞான்று அத் தொழிலில் மிக்க திறமையுடையேன் என்று புகழ் படைத் துள்ளேன்; யான் தைத்துக் கொடுத்த உடுப்புகள் திருத்தமாய்ப் பொருத்தமாய் நறுவியவாய் இருந்தன; எனக்குத் தையல்வேலை கொடுத்தவர்கட்கெல்லாம் யான் சொன்ன சொற்படியே செய்து குறிப்பிட்ட நாளில் தவறாமல் கொடுத்து வந்தேன் என எடுத்துரைத்தனர். இவரது பொறுமையுரையைக் கேட்டு அதன் அருமையை உணர்ந்த அப்பெரும் கூட்டத்தவர் எல்லாரும் அவரை மேலும் மிகுதியாய் கொண்டாடினரேயன்றி, அவரை அது பற்றிச் சிறிதும் குறைவாக நினைத்திலர். 40. உழைப்பினால் உயர்ந்த ஒரு கதை நூலாசிரியர் உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் மிகச் சிறந்த நிலையை அடைந்தார் சிலரில் திசிரேலியர் (Disraeli) என்பவரின் வரலாறு மிகவும் வியக்கத்தக்கது. இவர் தமது இளமைக்காலந்தொட்டே கல்விகற்பதிலும் தாம் கற்றறிந்தவைகளை நூல்களாக எழுதி வெளியிடுவதிலும் கருத்து அழுந்தி நின்றனர். இவர் முதன்முதல் எழுதி வெளிப்படுத்திய கதைநூல் ஒன்றைப் பார்த்தாரிற் பலர் இவரை ஏளனஞ் செய்து நகையாடியதுமன்றி, இவரை வெறிபிடித்தவர் எனவும் ஏசிப் பேசினர். ஆயினும், அவர்களின் இகழுரை ஏச்சுரைகளைக் கேட்டு இவர் சிறிதும் மனங்கலங்காதவராய்த், தாம் மேற் கொண்ட நூல் இயற்றும் முயற்சியை விடாப்பிடியாய்ச் செய்தே வந்தனர். கடைசியாக இவர் இயற்றி வெளியிட்ட கானிங்குசுபி (Coningsbuy), சிபில் (Sybil), தான்கிரேடு (Tancred) என்னும் கதை நூல்கள் மூன்றும் முதிர்ந்த கதைச் சுவையானும் சொற்சுவையானும் பயில்வார் உள்ளத்தைக் கவர்ந்து அவரைப் பெரிதும் இன்புறுத்தி ஆக்கியோனுக்கும் அழியாப் பெரும்புகழை நிலைபெறுத்தலாயின. பின்னர், இவர் இலண்டன் மாநகரில் குடிமக்கள் மன்றத்தில் விரிவுரை நிகழ்த்துதற்கு முதன்முதல் தோன்றி நின்றபோது, அங்கிருந்தவரில் பெரும்பாலோர் இவரைக் கண்டு நகையாடிக் கூவிப் பேரிரைச்சல் இட்டதுமன்றி, இவர் பேசிய விரிவுரையின் ஒவ்வோர் அழகிய சொற்றொடரையும் பகடி செய்து கொண்டும் இருந்தனர். ஆனால், இவரோ அத்துணை இழிவுகளையும் மனவமைதியோடு பொறுத்துக் கொண்டு முடிவில் யான் பலவற்றைப் பலகால் துவங்கியிருக்கின்றேன்; இறுதியில் அவைகளை நன்கு முடித்து நன்மை அடைந் திருக்கின்றேன். இப்பொழுது என் பேச்சை நிறுத்தி அமர்ந்து விடுகிறேன்; ஆனால், நீங்கள் எனது விரிவுரையை ஆவலோடு கேட்கும் காலம் வரும் எனக் கூறித் தமது இருக்கையில் அமர்ந்தனர். இவர் கூறியவண்ணமே அக்காலமும் வந்தது. உலகத்தில் மிகச் சிறந்த அறிஞர்கள் ஒருகால் ஒருங்கு குழுமியிருந்த போது அம்மன்றத்தில் இவர் நிகழ்த்திய அரும்பெருஞ் சொற் பொழிவானது அவரெல்லாருள்ளத்தையும் ஒருமிக்கக் கவர்ந்து விட்டது. எல்லாரும் இவருடைய சொல்லாற்றல் பொருளாற்றலை மிக வியந்து பேசிப் புகழ்ந்தனர். அதிலிருந்து இவரது புகழ் நாளுக்குநாள் ஓங்கி வளர்ந்து ஒளிர்வதாயிற்று. பின்னர் இவர் பாராளுமன்றத்தில் சிறந்த ஒரு விரிவுரை யாளராய் எல்லாராலும் மேலும்மேலும் கொண்டாடப்பட்டுத் திகழ்ந்தனர். இத்துணை மேலான நிலையைத் திசிரேலியர் எய்துதற்கு ஏதுவாய் நின்றவை யாவை? இவர்தம் முயற்சியும் மனத்திட்பமும் அல்லவோ? இளைஞரில் பெரும்பாலார் தாம் துவங்கிய ஒரு நன்முயற்சியில் ஒருகால் தவறிவிட்டனராயின் அதனால் மனம் உடைந்து ஒரு மூலையில் போயிருந்து வருந்தி அவிந்து போகின்றனர். மற்றுத் திசிரேலியரோ அத்தகைய இளை ஞரைப்போல் ஒருகாலும் மனம் மடிந்து இருந்தவர் அல்லர். தாம் எடுத்த முயற்சியில் தாம் தவறியது எதனால் என்று ஆராய்ந்து அதற்குக் காரணம் இன்னது என்று கண்டதும், அதனைக் களைந்து தம்மைச் சீர்திருத்திக் கொண்டு வந்ததுடன், தமது சொற்பொழிவைக் கேட்பாரின் அகநிலை புறநிலை களையும் நன்காராய்ந்து தம்மைச் சீர்திருத்திக் கொண்டு வந்ததுடன், அந்நிலைகளுக்குத்தகத் தம்மையும் இசைவித்துக் கொண்டு வந்தனர். ஒரு நோய் கொண்டவர் அந்நோயின் மூலத்தை நன்காராய்ந்து பார்த்து அதனைக் களைந்தால் அல்லாமல், எவ்வளவுதான் மருந்துகளை உட்கொண்டு வந்தா ராயினும் அந்நோய் நீங்குமோ? அதுபோலவே, ஓர் அரும்பெரு முயற்சியை மேற்கொண்டவர் அதில் தாம் நன்மையடையாமல் பிழைபடுதற்குரிய காரணத்தைத் தெரிந்து அதனை விலக்கி னாலன்றி, அவர் அதனைக் கடைபோக முடித்துப் பயன் பெறார். இந்நுட்பத்தை நன்குணர்ந்து அதற்கேற்ப ஒழுகி னமையே திசிரேலியரின் உயர்நிலைக்கு உறுபெருங் கருவியா யிருந்தது. இதனை இளைஞர்கள் தமதுள்ளத்தில் பதித்து நடத்தல் வேண்டும். 41. ஒரு வணிகனும் குறளியும் வணிகம் செய்து பெரும்பொருள் தொகுத்த ஒரு வணிகன், தான் தொகுத்த அப்பெரும்பொருளளவில் அவா அடங்கப்பெறானாய், மேலும்மேலும் இன்னும் பொருள் திரட்டுதற்கு வழி யாது? என்று அல்லும்பகலும் எண்ணிக் குறிசொல்வாரையும் மந்திரக்காரரையும் வினவி வந்தனன். தான் பெரும்பொருள் திரட்டிக் கொள்வதற்கு வழிகாட்டுபவனாகத் தன்னால் கருதப்பட்ட எந்தக் குறிகாரனைக் கண்டாலும், எந்த மந்திரக்காரனைக் கண்டாலும் செம்பைப் பொன்னாக்கும் எந்த இரசவாதியைக் கண்டாலும் அவர்கட்கெல்லாம் தனது பொருளை வாரிவாரிக் கொடுத்து வந்தான். அங்ஙனம் தன் பொருளையெல்லாம் அவர்கட்காகச் செலவழித்து வந்தனனே அல்லாமலே, அவர்களால் ஓர் இம்மி அளவு பொன்னாவது இயற்கைக்கு மாறாகப் பெறும் வழி ஏதும் தெரிந்தானில்லை. தொடர்பாகத் தன் பொரு ளெல்லாம் இங்ஙன் தொலைந்து போவதை இவன் தன் கண்ணெதிரே கண்டு வைத்தும் தக்கதல்லா வழியில் பொன் பெறுதற்குத் தான்கொண்ட பேரவாவை இவன் சிறிதும் விட்டானில்லை. கடைசியாக இவனிடம் வந்த ஒரு மந்திரக்காரன் குறளியை அழைத்து ஏவல்கொள்ளும் மந்திரமுறை தனக்குத் தெரியுமென்றும், அதனை வசப்படுத்திக் கொண்டால் அதன் உதவியால் திரள்திரளாகப் பொன் பெறலாமென்றும் கூறித் தான் கூறியதை மெய்ப்படுத்தப் பலவகைப் பழங்களும், உணவுப் பண்டங்களும் இடைவெளியினின்றும் வருவித்துக் காட்டி, அவ்வணிகனுக்கு மிக்கதோர் இறும்பூதினை உண்டாக்கினான். தான் பாடுபட்டுத் தேடிய பெரும் பொருளையெல்லாம் நாளடைவில் இவ்வழியே தொலைத்து விட்ட அவ்வணிகன், இனித்தான் தனக்கு நல்லகாலம் வரப்போகின்றது எனக் கருதி, மிச்சமிருந்த பொருளையும் அம்மந்திரக்காரனுக்குக் கொடுத்துக் குறளியை அழைக்கும் மந்திரத்தை அவனிடமிருந்து கற்றுக் கொண்டான். அவன் அதனைக் கற்று உருவேற்றவே குறளிப்பேய் அவனிடம் போந்து, இறைச்சியும் இரத்தகாவும் தான் வேண்டும் போதெல்லாம் தனக்குக் கொடுத்தால் அவன் ஏவியது செய்யலாம் என்றது. அங்ஙனம் அவன் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளின் ஊனும் குருதியும் மிகுவிலைகொடுத்து வாங்கி அக்குறளிக்குச் சிலநாட்கள் வரையில் காவுகொடுத்து வந்தான். அவன் தனக்கு வேண்டிய பண்டங்களைக் கொணர்ந்து தரும்படி அப்பேயைக் கேட்ட காலங்களிலெல்லாம், அஃது அப்பண்டங்களின் விலையைக் கொடுத்தால் அல்லாமல் அவைகளைக் கொண்டுவருதல் தன்னால் இயலாதென்றது. அதன்மேல் அவன் அப்பண்டங்களின் விலையைச் சிலமுறை கொடுக்க அஃது அவ்விலைப் பொருளை அப்பண்டங்கட்கு உரியவன்பால் சேர்ப்பித்து, அப்பண்டங்களை ஒரு நொடிப் பொழுதில் எலாங்கொணர்ந்து இவனிடம் சேர்ப்பித்தது. இதனைக்கண்ட அவ்வணிகன், ஒரு வேலைக்காரன் செய்யும் வேலையை விரைந்து அஃது ஒரு புதுமையான வகையில் செய்யும் அவ்வளவேயன்றி, அதனால் வேறு ஏதொரு பயனும் உண்டாகாமையும், ஒரு வேலைக்காரனுக்குக் கொடுக்கும் சம்பளத்திலும் பதின்மடங்கு மிகுதியான பொருள் அக் குறளிக்கு அடுத்தடுத்து வேண்டும் ஊனுக்கும் குருதிக்கும் கள்ளுக்கும் செலவாகுதலையும் கண்டு மிகவும் கவலை கொள்வானானான். பலநாள் இங்ஙனம் வருந்திப் பின்னர் ஒருநாள் அக்குறளிக்கு வேண்டும் உணவு கொடுத்துத், தனக்குப் பெரும்பொருள் கொணர்ந்து தரும்படி அதனை வேண்டினான். அதற்கு அக்குறளி, பிறர்க்குரிய பொருளைக் கவர்ந்து கொடுத்தல் ஆவியுலகில் உலவும் எந்த உயிர்க்கும் இயலா தென்றும், ஆனாலும் இம்மண்ணுலகில் உயிரோடிருந்த காலத்தில் தான் தேடிக் குவித்த பெரும்பொருளை நிலத்தின்கீழ் புதைத்து வைத்து மாண்டுபோன ஒருவனது ஆவி அப் புதையலை எவரும் எடாதபடி காத்து நிற்கின்றதாகலின் அதனை வேண்டினால் அஃது அப்பொருளைத் தரக்கூடு மென்றும் நுவன்று அவ்ஆவியையும் அவன்பால் அழைத்து வந்துவிட்டது. பொருள் அவாவினால் பிடியுண்ட அவ்வாவி பெருங்கவலையும், பெருந்துன்பமும் உடையதாய்ப் பார்ப்ப தற்குப் பேரச்சத்தை விளைவிக்கும் இருண்ட கொடிய உருவுடன் அவன் முன்னே நள்ளிரவில் தோன்றி அலறலாயிற்று. அதனைக் கண்டதும் பெருந்திகில் கொண்ட அவ்வணிகன் தன் இருகண் களையும் மூடிக்கொண்டு அசைவற்ற மரம்போல் இருந்தனன். அதுகண்ட குறளி யான் அழைத்து வந்த அவ்ஆவிக்கு நின் கருத்தை அறிவித்து அது வேண்டியது செய்யாவிட்டால் நினக்கு அது தீது செய்யும் என்று உரைக்க, அவன் ஒருவாறு மனந்தேறி, நீ வைத்திருக்கும் புதையலை எனக்குத் தருவையோ? என வினவினான். அச்சொற் கேட்டதும் அது மிகவும் சினம் கொண்டு அலறி, கருக்கொண்ட ஓர் அழகிய மங்கையை யான் புதையல் வைத்திருக்கும் இடத்தில் கொணர்ந்து வெட்டிக் காவு கொடுத்தால், அதனை நீ எடுத்துக் கொள்ள விடுவேன் என்று சொல்லி மறைந்து போயிற்று. அச்சொற் கேட்ட பொருட்பேயனான அவ்வணிகன் தனக்குப் பெரும்புதையல் கிடைக்கப் போவதை எண்ணிப் பெருமகிழ்ச்சியும், ஆனால் அதற்காகக் காவு கொடுக்கும் பொருட்டுக் கருக்கொண்ட அழகிய ஒரு மங்கையை எங்ஙனம் தேடிப்பிடிப்பது என்பதை நினைத்துப் பெரும் கவலையும் கொண்டவனாய் அதைப் பற்றிப் பேசும் பொருட்டு, உறங்கிக் கிடக்கும் தன் அழகிய மனையாளை எழுப்பினான். அவள் திடுமென அச்சத்துடன் எழுந்து யாது செய்தி? என வினவச், சிறிது நேரத்திற்கு முன் நிகழ்ந்த அந்நிகழ்ச்சியைச் சொல்லிக், கருக்கொண்ட அழகிய பெண் ஒருத்தியை எங்கே எப்படிப் பெறலாம் என அவளைக் கேட்டான். அந்நிகழ்ச்சியைக் கேட்ட அம்மாது பெருந்திகில் கொண்டவளாய்த், தன் கணவன் தான் பாடுபட்டுத் தேடிய பெரும்பொருளை எல்லாம் தனக்குள்ள பேரவாவினால் தொலைத்துவிட்டு வறுமைப்படுதலையும், மீண்டும் பொருள் பெறும் பொருட்டுத் தகாத வழியில் அவன் முயலுதலையும், தான் அழகில் மிக்கவளாய் சூல்கொண்ட வயிற்றினளாய் இருத்தலையும் நினைத்துக், கருக்கொண்ட வேறு ஓர் அழகிய மாது கிடைத்திலளாயின் தன் கணவன் தன்னையே வெட்டிக் காவு கொடுக்கப் பின் வாங்கானென நடுங்கினாள். அந்நடுக்கத்தை உணர்ந்த அவன் அவளுக்கு அது நீங்குமாறு ஆறுதல் சொல்லி, எங்காயினும் ஓர் ஏழைப் பெண்ணைத் தேடிப் பிடித்து அவளால் தான் கொண்ட கருத்தை முடித்துக் கொள்வதாக உறுதிமொழி புகன்றான். ஆனால், உண்மையில் அவன் மனையாள் எண்ணியபடி அவளையே அப்பேய் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் வெட்டிக் காவு கொடுத்து அப்புதையலை எடுத்துக் கொள்ளவே தனக்குள் தீர்மானம் செய்தான். பிறகு சிலநாட் சென்றன. சென்றபின் ஒருநாளிரவு தன் மனையாளை அழைத்துச் சூல்கொண்ட அழகிய ஓர் ஏழைப் பறைப் பெண் தனக்குக் கிடைத்திருக்கின்றனள் என்றும், அவளை இந்நள்ளிரவில் கொண்டுபோய்க் குறிப்பிட்ட இடத்திற் காவு கொடுத்தவுடனே கிடைக்கும் பொற்றிரளைப் பிறர் அறியாமல் வீட்டிற் கொணர்ந்து சேர்ப்பித்தற்கு நீயும் என்னுடன் வந்து உதவிசெய்ய வேண்டு மென்றும் அவளைக் கெஞ்சிக் கேட்டுத் தன்னுடன் வரும்படி வேண்டினான். பறைப்பெண் கிடைத்தனள் என்பது பொய் மொழியே என்றும், தன்னையே தன் கணவன் அங்ஙனம் காவு கொடுக்கப் போகின்றனன் என்றும் அவன் மனையாள் உள்ளுணர்ந்து கலங்கினளாயினும், அவன் சொல்லுக்கு மாறுசொல்ல வகையறியாளாய்த், தெய்வம் விட்டபடி ஆகுக என்று மனந்துணிந்து, அந்நள்ளிரவில் அவனுடன் அவன் குறிப்பிட்ட இடத்திற்குப் போயினாள். அவ்விருவரும் போய்ச் சேர்ந்த இடம் இடிந்து பாழாய்க் கிடக்கும் ஒருபெரு வீடு ஆகும். அஃது அவர் இருக்கும் ஊருக்கும் ஒரு கல் தொலைவில் நாகதாளிப் புதர்களுக் கிடையே இருந்தது. அதற்கு அருகில் சுற்றி இருப்பை மரத்தோப்பு ஒன்று இருந்தது. அவர்கள் புறப்பட்ட அந்நாள் முன் நிலாக் காலமாதலால், அவர்கள் வீட்டைவிட்டுச் செல்கையிற் சிறிது நிலவொளி காணப்பட்டது. அவர்கள் அவ்இடிந்த வீட்டருகே வந்ததும் நிலவொளி மறைந்து போயது. அப்பாழிடத்தில் இருள் மிகுந்திருந்தமையால் அவ்வணிகன் தன் கையில் கொண்டு சென்ற ஒரு சிறு கண்ணாடி விளக்கை ஏற்றினான். அச்சம் தரும் அவ்விடத்தைச் சுற்றி எத்தகைய மக்களும் இயங்காமல் ஓவென்றிருத்தலையும், தன் கணவனது எண்ணத்தையும் கண்டுணர்ந்த அப்பெண்ணின் துணையற்ற உள்ளநிலை அந்நேரத்தில் எத்தகையதாய் இருக்கும் என்பதை நாம் சொல்வதைவிட இதனைப் பயில்வோரே உணர்ந்து பார்த் தல் வேண்டும்! அவள் ஏறக்குறைய உயிரற்ற மரப்பாவையே ஆனாள். தன் கணவனைத் திகிலோடு நோக்கி, நீங்கள் சொல்லிய பறைப்பெண் எங்கே? என நாக்குழறிக் கேட்டாள். அதற்கவன், இதோ சிறிது நேரத்தில் வருவாள்! என்று சொல்லியபடியாய், தான் கொணர்ந்த ஒரு பெட்டகத்தைத் திறந்து, அப்பேய்க்குப் படைத்தற்காகக் கொண்டுவந்த கள்ளும் கருவாடும் புகையிலையும் தென்னம்பாளைப் பூவும் எல்லாம் எடுத்துவைக்கக், கடைசியாகப் பளபளவென மின்னும் கருக்கான ஒரு வெட்டரிவாளையும் எடுத்து வைத்தான். அவன் மனையாளாகிய அவ்வேழைப் பேதை பின்னதைக் கண்டதும் முக்கால்வாசி உயிர் நீங்கிய உடலத்தினளாய் நிலத்திலே அயர்ந்து விழுந்தாள். இந்நேரத்தில் எவரோ ஒருவர் வரும் அரவம் தென்பட்டது. அஃதுணர்ந்த அவ்வணிகன் தன் நோக்கத்திற்கு இடையூறாக வருவார் எவரென அச்சத்துடன் சுற்றிப் பார்த்தான். அருளொளி ததும்பும் திருமுகமும் நீண்ட சடை முடியும் நீறு துலங்கும் நெற்றியும் உடையராய்க் காவியாடை பூண்ட ஒரு துறவி தன்பால் விரைந்து வரக்கண்டான். கண்ட ஒரு நொடிப் பொழுதில் அவர் அவனை அணுகி அடா பேதாய்! கருக்கொண்ட அழகிய நின் அருமை மனையாளைப் பாழும் பொருளுக்காக வெட்டிப் பலிகொடுக்கத் துணிந் தனையே! உன்னைப் போல் அறிவில்லாத் தீய கொடிய பொருட்பேய் வேறுண்டோ! நீ நின் மனையாளைப் பலிகொடுத்தவுடனே உன்னை இரண்டு துண்டாய் வெட்டி வீழ்த்தி, நீயெடுத்த புதையலைக் கொண்டு போகக் கொடிய கள்வர் சிலர் இதோ வந்து கொண்டிருக்கின்றனர்! இதோ தோன்றும் இருப்பை மரத்திற்போய் ஏறிக்கொள்! தாழாதே! நின் மனையாளை யான் வேறு ஓரிடத்திற் கொண்டு போய் மறைத்துவைத்து, அக்கள்வர் திரும்பிச் சென்றதும் அவளை மீண்டும் நின்பாற் சேர்ப்பிக்கின்றேன் எனவிரைந்து அருளோடு மொழிந்தார். அப்பெரியாரின் அமுதவுரை செவியிற் பட்டதும் போன உயிர் மீளப் பெற்ற அவ்வணிகனின் மனைவி திடுமென எழ அவர் அவளை அழைத்துக் கொண்டு சடுதியில் மறைந்துபோயினார். அவ்வணிகனும் திகில் கொண்ட வனாய் அவ்விடிந்த இல்லத்திற்குச் சிறிது எட்டியிருந்த இலை அடர்ந்த ஓர் இருப்பை மரத்தருகில் விரைந்தோடி அதன் மேல் ஏறிக்கொண்டான். அவன் அங்ஙனம் ஏறிக் கொண்ட சில நொடிப்பொழுதிலெல்லாம் நாலைந்து கொடிய கள்வர்கள் கண்டவர் கலங்கத்தக்க கரிய திண்ணிய வடிவினராயும், கூரிய கொடுவாள் பிடித்த கையினராயும் விரைந்துபோந்து, அவ்விடிந்த பாழ்வீட்டிலே அவ்வணிகன் விளக்கும் மற்றைப் பொருள்களும் வைத்துப் போன இடத்தில் புகுந்துநின்றனர். அவ்விடத்திற்குச் சிறிது தொலைவிலே இருப்பை மரத்தின் மேல் ஏறியிருந்த அவ்வணிகன், தான் அங்கு வைத்த விளக்கு வெளிச்சத்தின் உதவியால் அக்கள்வர்களையும் அவர்களது இயக்கத்தையும் அதன் அருகில் கண்டு வெருக்கொண்டு, ஐயோ! அருளுடைய அத்துறவியார் சில நொடிப்பொழுது முன் வராதிருந்தால் என் அருமை மனைவியையும் தீவினையேன் கொன்றிருப்பேன்! அவளைக் கொன்ற சிறிது நேரத்திலெல்லாம் யானும் இக்கொடிய கள்வர்களால் கொல்லப்பட்டிருப்பேன்! என் மனைவியும் யானும் மடிந்த பின் பொருளோ பொருள் என்று அலைந்த எனது தீய அவா எப்படியாம்? பொருள் அவாத் தொலைத்த அத்தூய பெரியவ ராலன்றோ என் மனைவியும் யானும் உயிர் பிழைத்தோம்! யான் தீவினைக்குத் தப்பினேன்! அப்பெரியாரை இந்நேரத்தில் விடுத்த சிவமே நீதான் எமக்குப் பெருஞ்செல்வம்! என்று நெஞ்சம் நீராய் உருகிக் கண்ணீர் உகுத்தான். அவ்விடத்திற் போந்து நின்ற கள்வர்கள் அன்றிரவு விடியுமட்டும் அங்கிருந்து, அவ்வணிகனையும் அவன் மனைவியையும் காணாமல் அவன் அங்கே கொணர்ந்து வைத்த பொருள்களை மட்டும் கண்டு வியப்புற்றுக் காக்கை கரையக் கேட்டு, அங்கிருந்த விளக்கு, அரிவாள், பெட்டகம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு போய் ஒழிந்தனர். கதிரவன் புறத்தே பரவிய இருளைப் பருகி எங்கும் பேரொளி விரியக் கீழ்பால் தளதளவெனத் தோன்றினான். அத்துறவியரும் அவ்வணிகனின் அருமை மனைவியை அழைத்துக் கொண்டு அவனது அகத்தே பரவிய அறியாமை அவா இருளையொழித்து அறிவொளி பரப்புவாராய் அவன் ஏறி இருந்த இருப்பை மரத்தருகே வந்தார். அவரது அருமைத் திருவுருவைக் காண்டலும் அவன் அம்மரத்திலிருந்து கீழிறங்கிப் போந்து அவர் திருவடிகளில் வீழ்ந்து தேம்பித் தேம்பி அழுது, தீவினையேனைக் காக்கப் போந்த தெய்வப் பெருமானே! தேவரீர் செய்யாமல் செய்த அருளுதவிக்குப் பாவியேன் எங்ஙனம் நன்றி செலுத்த வல்லேன்! எவ்வாறு தேவரீரை வாழ்த்துவேன் வணங்குவேன்! யானும் என் மனைவியும் என் மக்களும் என் வழியுமெல்லாம் தேவரீர் திருவடிக்கே அடிமை! என்று கண்ணீர் ஆறாய்ப் பெருக அழுதழுது உரைத்தான். அதுகண்ட அப்பெரியார் மகனே! நீ உள்ளம் திருந்தியதற்கு மகிழ்ந்தேன்! உயிர்மீண்ட நின் அருமை மனைவியைத் தழுவிக்கொள்! இந்நல்லாளினும் இவள் வயிற்றில் பிறக்கும் மக்களினும் சிறந்த செல்வம் உனக்கு வேறுளதோ? இவளையும் இவள் மக்களையும் நின்னையும் ஏழை எளியவர்களையும் கற்றாரையும் துறந்தாரையும் ஓம்புதற்கே செல்வம் வேண்டுமல்லாமல், இவர்களை இழத்தற்கா அது வேண்டும்? நல்லெண்ணமும் நன்முயற்சியும் இருந்தால் உனது வாழ்க்கைக்கு வேண்டுமளவு செல்வமும் சிவத்தினருளால் உனக்குத் தானே திண்ணமாய் வரும்! இனிப் பொருளில் அவா வையாதே! நீ இப்போதிருக்கும் இல்லத்தில் மீண்டும் அக்கள்வர்கள் புகுந்து நின்னைத் துன்புறுத்தக் கூடுமாதலால், நீ அதனைவிட்டு, வேறோர் ஊரில் வேறோர் இல்லிற் குடிபுகுந்து, நின் வாழ்க்கையை அன்புக்கும் அறத்திற்கும் இடமாக நன்கு நடத்து! எனச் சொல்லிச் சடுதியில் அவனை விட்டு மறைந் தேகினர். அவ்வணிகனும் தன்மனையாளுடன் அவர் கற்பித்த வண்ணமே வேறொர் ஊரில் சென்று வைகி நன்கு வாழ்ந்தனன். 42. ஓர் அரசிளம் செல்வியின் வைரமணிகள் சுவீடன் தேயத்து அரசரின் தங்கையான ஊசினி என்னும் நங்கையார் ஏழை எளியவர்கட்கு ஒரு மருத்துவ விடுதி அமைக்கும் பொருட்டுத், தாம் பூண்டிருந்த வைர மணிகளை விலை செய்வித்துத் தாம் விரும்பியவாறே அதனை மிகவும் சீரியதாக அமைப்பித்து வைத்தனர். அங்ஙனம் அதனை அமைப்பித்து அதன்கண் வந்து சேரும் நோயாளிகளுக்கு வேண்டுவனவெல்லாம் செவ்வனே செய்யும்படி ஒழுங்குபடுத்திய பின் ஒருநாள் அவ்வரசிளஞ் செல்வியார் அங்குள்ள நோயாளிகளைப் பார்க்கச் சென்றார். சென்று ஒரு நோயாளியின் படுக்கை அருகே அவர் நின்று கொண்டிருக்கையில் அதன்கணிருந்த அவன் அந்நங்கையர் செய்த செயற்கரிய அருட்செயலை எடுத்து மொழிந்து அவரை வணங்கி வாழ்த்தி நெஞ்சம் கரைந்து தன் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் சிந்தினான். அந்நீர்த் துளிகளைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த அச்செல்வியார் ஆ! இப்போது மறுபடியும் என்னுடைய வைரமணிகளை நான் காண்கின்றேன் என்று வியந்துரைத்தார். 43. ஏழைக்குடிகளும் அரசனும் இவ்விந்திய நாட்டின் வடக்கே இமயமலைக் கண்ணதான காசுமீர தேயத்தில் காரகோரம் என்னும் பனிமலைப் பகுதிகளில் உறையும் ஏழைமக்கள் அங்குள்ள கடுங் குளிரினாலும் பனிக்கட்டிகளின் வீழ்ச்சியினாலும் பெரிதும் துன்புற்று வந்தனர். அந்நாட்டுக்கு அரசனான இராமசிங்கு என்பவன் அவர்களது துன்பத்தை நீக்குவதற்கு ஏதோர் ஏற்பாடும் செய்தான் அல்லன். அவர்கள் குளிருக்குத் தப்பிக் கதகதப்பாய் இருக்கத் தக்க விடுதிகளாவது, உடுத்துக் கொள்ளத்தக்க உடைகளாவது, உண்ணுதற்குச் சிறிது இசைந்த வெய்ய உணவாவது கிடைக்கப் பெறாமையால் பாழடைந்த இடங்களில் இருந்து தொடர்பாகத் துன்ப வாழ்க்கையே நடத்தி வந்தார்கள். அதனால் அவர்கள் தங்கிய இடங்கள் பார்ப்பதற்கு அச்சமும் அருவருப்பும் தருவனவாய்த் தோன்றின. எப்படியோ ஒருகால் அவ்விராமசிங்கு மன்னன் அவ்ஏழைக்குடிகள் இருக்கும் அவ்விடத்திற்குப் போகலானான். அவன் போன நேரம் பட்டப் பகலாயிருந்தும், அங்குள்ள அவ்வெளிய மக்கள் கையில் கண்ணாடி விளக்கு கள் பிடித்துக்கொண்டு, கிழிந்த கந்தைத்துணி உடுத்துக் குளிரால் நடுங்கும் உடம்பினராய் அவன் முன்னே வந்தனர். அந்நிலையில் அவர்களைக் கண்ட அம்மன்னன் அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் இந்நண்பகல் வேளையில் விளக்கு வெளிச்சத்துடன் வந்தீர்கள்? என வினவினான். அதற்கு அவர்களில் ஒருவன், மன்னர் பெருமானே; எங்களுடைய பெருந்துன்பமாகிய இருள் நிறைந்த இவ்விடத்திற்குத் தாங்கள் வந்திருத்தலால் எங்களுடைய அத்துயரநிலையைத் தாங்கள் கண்ணாற் கண்டு அதனைப் போக்குதற்காகவே இவ்விளக்கு வெளிச்சம் கொணர்ந்தோம் என்றனன். கண்ணிருந்தும் பிறர்துயர் காணாதவர்க்கு அதனைக் காண விளக்கு வெளிச்சமும் வேண்டுமன்றோ? 44. சேவலும் கழுகும் சினங் கொண்டு போர் புரியும் இரண்டு ஆடவரைப் போல், இரண்டு சேவல்கள் பெருஞ்சீற்றத்துடன் நெடுநேரம் சண்டையிட்டன. கடைசியாகத் தோல்வியடைந்த சேவல் ஒரு கோழிக் கூட்டின் மூலையில் போய் ஒளிந்து கொண்டது. வெற்றியடைந்த சேவலோ, ஒரு வீட்டின் கூரைமேற் பறந்து சென்று வைகித், தான் பெற்ற வெற்றிக்கு அறிகுறியாகத் தன் செப்பட்டைகளை அடித்துக் கொண்டு, பெருங் கிளர்ச்சியுடன் கொக்கரித்தது. அந்நேரத்தில் அப்பக்கமாய்ப் பறந்துவந்த ஒரு கழுகு தன் காலின் நகங்களால் அச்சேவலை அறைந்து இறாஞ்சிக் கொண்டு போயிற்று. ஒளிந்திருந்த மற்றைச் சேவலானது அதன்பின் அச்சமின்றி வெளியே போந்து, தான் போராடிய இரையை மகிழ்வுடன் பொறுக்கித் தின்றது. 45. நாட்டு எலியும் நகரத்து எலியும் நாட்டிலே உயிர்வாழ்ந்த ஓர் எலியானது தனக்கு நேயமாய் உள்ள ஒரு நகரத்து எலியைத் தான் இருக்கும் ஒரு குடிசைக்கு வரவழைத்தது. நாட்டெலியானது கள்ளம் அற்றதாயும் நாகரிகம் குறைந்ததாயும் செட்டாகவே வாழ்க்கை செலுத்துவதாயும் இருந்தாலும், விருந்து வந்த தன் பழைய நண்பனிடத்தில் எவ்வளவு சிறப்பாக நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வளவும் நடந்து, தன்னிடம் உள்ள உணவுப் பண்டங்களை எல்லாம் ஒளியாமல் அதன் முன்னே கொணர்ந்து வைத்தது. தன் நண்பனான நகரத்தெலி நகரத்திலுள்ள உயர்ந்த இனிய உணவுப் பொருள்களைத் தின்று சுவை கண்டதாத லால், அதன் நாவுக்குத் தான் படைக்கும் நாட்டுப்புறத்துப் பொருள்கள் இனிமை தாரா என அஞ்சிச் சுவையிற் குறைந்த அவைகளை அளவில் மிகுத்துப் படைத்தால் அது மனம் மகிழும் எனக் கருதி, அப்பண்டங்களை மிகுதி மிகுதியாகக் கொணர்ந்து அதன் முன் வைத்தது. நகரத்து எலியோ தனக்கு அவை பிடியா வாயினும் தன் நண்பன் பொருட்டு வேண்டா விருப்பாய் அதில் சிறிதும் இதில் சிறிதுமாக அப்பண்டங்கள் ஒவ்வொன்றையும் கடித்துக் கொறித்தது; நாட்டெலியோ தன் நண்பன் எதிரே இருந்து வாற்கோதுமை வைக்கோலை மட்டும் கொறித்தது. அதனைக் கண்ட நகரத்தெலி, நண்பனே, நாகரிகமும் கிளர்ச்சியும் இல்லா இவ்வாழ்க்கையை நீ எங்ஙனம் பொறுத்துக் கொண்டிருக்கின்றாய்? இண்டு இடுக்குகளில் உறையும் தேரையைப் போல் தனித்த இம் மலைப்பாறைகளிலும் காடுகளிலும் நீ இருக்கின்றனையே! வண்டிகளும் மக்களும் குழுமிய நகரத்தின் தெருக்களுக்கு இம் மலைகளும் காடுகளும் ஒப்பாகுமா? நீ வீணே இங்கிருந்து நின்வாழ் நாளைத் துன்பத்தில் கழிக்கின்றாய். உயிரோடு இருக்கையிலேயே நாம் எவ்வளவு இன்பத்தை நுகர வேண்டுமோ அவ்வளவும் நுகர்ந்துவிடல் வேண்டும். நம் எலியினமானது நீண்டநாள் உயிர்வாழ்வ தில்லையே! ஆதலால், நீ என்னுடன் வந்தால் வாழ்க்கையின் நலத்தையும் நகர வாழ்க்கையின் சிறப்பையும் நினக்குக் காட்டுவேன் என நவின்றது. அவ் இனியசொற்களினாலும் சுயமான அதன் தன்மையினாலும் உள்ளம் கவரப்பெற்ற அந்நாட்டெலி அதனுடன் செல்லுதற்கு இசையவே, இரண்டும் ஒன்றுசேர்ந்து நகரத்தை நோக்கிச் சென்றன. அவை மறைவாக நகரத்தினுள் நுழைந்த நேரம் மாலைப் பொழுதாகும். அந்நகரத்தெலி தான் இருக்கும் வீட்டினுள்ளே அதனை அழைத்துப் போதற்கு நள்ளிரவாயிற்று. அவ்வீடோ செல்வர் ஒருவர்க்கு உரியதாதலால், அதன் உள்ளகன்ற சிறந்ததோர் உணவுச்சாலையில் பஞ்சுவைத்துப் பல்நிற மென்பட்டுத் தைத்த நாற்காலிகளும் கட்டில்களும் கம்பளி விரித்த மேசைகளும் இடப்பட்டிருந்தன; வெள்ளிய யானைக் கொம்புகளை ஈர்ந்து செய்த கலங்களும், இன்னும் இவை போலச் செல்வத் தின் செழுமையைக் காட்டும் ஏனைப் பண்டங்களும் ஆங்காங்கு அழகுற வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த மேசைகளின் மேல் மிகச் சிறந்த உணவுப் பொருள்கள் ஓர் உண்டாட்டின் பொருட்டுப் பல கடைகளிலிருந்தும் திரட்டிக் கொணர்ந்து வெள்ளித் தட்டுகளிலும் வெள்ளிப் பாண்டங்களிலும் வரிசை வரிசையாக வைக்கப்பட்டுத் துலங்கின. இப்போது நாகரிகமுள்ள அந்நகரத்தெலி தன் நண்பனுக்கு விருந்து செய்யத் துவங்கி, அதனைப் பட்டுமெத்தைமேல் அமரச் செய்து, தான் அங்கு இங்குமாய் ஓடி, ஒவ்வொரு தட்டிலும் கலத்திலும் உள்ள கொழுமையான உணவுப் பண்டங்களை எல்லாம் முதலில் தான் ஒவ்வொன்றாய்ச் சுவை பார்த்து, மணமும் இனிமையும் மிகுந்தவைகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வந்து அதன் முன்னே வைத்து, அவைகளைத் தின்னும்படி வற்புறுத்தியது. நாட்டெலியோ தன் இல்லத்தினுள் இருப்பது போல் காட்டிக் கொண்டு தனக்குச் சடுதியில் வந்த இந்நல்வாழ்வை எண்ணித் தனக்குள்ளே மகிழ்வதாயிற்று. தான் தனது நாட்டுப்புற வாழ்க்கையில் தின்றுவந்த எளிய உணவுகளை இகழ்வாய் நினைத்து, இப்போது தனக்குக் கிடைத்த கொழுவிய பண்டங்களைத் தின்று இன்புற்றபடியாய் இருந்தது. இங்ஙனம் அவ்விரண்டும் இருக்கையில் திடீரென அவ்வுணவுச் சாலையின் கதவுகள் திறந்தன. உடனே உண்டாட்டுக் கூட்டம் ஒன்று உள்ளே புகுந்தது. அங்ஙனம் புகுந்த அக்கூட்டத்தவரைக் கண்டு வெருக்கொண்ட அவ்விரண்டு எலி நண்பர்களும் பெருந்திகிலுடன் கீழே குதித்தோடி அண்டையிற் கிடைத்த ஒருமூலையில் பதுங்கின! பின்னர் அவை அச்சாலையின் வெளியே போய் விடுவதற்கு நகர்ந்துசெல்லப், புறத்தே இருந்த நாய்கள் குரைக்கும் ஓசை கேட்டு, அவைமேலும் பேரச்சங்கொண்டு திரும்பவும் உள்ளே செல்லலாயின. கடைசியாக அங்கு நடைபெற்ற உண்டாட்டு முடிந்து அரவம் அடங்கினபின், அந்நாட்டெலி தான் ஒளிந்திருந்த இடத்தைவிட்டுப் புறத்தேவந்து, ஓ, என் அன்புள்ள நண்பனே, இந்த நாகரிக வாழ்க்கை அதனை விரும்புவார்க்கே தக்கது. அச்சமும் கவலையும் சூழக் கொழுவிய உணவுகளை உட்கொள்ளுதலினும், அச்சமின்றி அமைதியாய் அரிசிச் சோறு உண்பதே மேலானது என்று சொல்லிவிட்டுத் தனது நாட்டுப்புற வீட்டிற்குச் சென்றது. 46. கவித்தலை மலைக்கோட்டை இவ்விந்திய நாட்டுக்கு மேற்கே நெடுந்தொலைவு கடல் தாண்டிச் சென்றால் இத்தாலி தேயத்தின் தலைநகராயுள்ள உரோம் பட்டினத்தை அடையலாம். இது தைபர் என்னும் ஆற்றங்கரையில் மிகவும் அழகியதாக அமைந்திருக்கின்றது. இதனைச் சூழவுள்ள மேல்நாடுகளிலும் இதன்கண்ணும் வாழும் மக்கள் பெரும்பாலும் நம் ஆங்கில மக்களைப் போல் வெண்மைநிறம் மிக்கு நீண்டுயர்ந்த திண்ணியயாக்கை வாய்ந்தவர்களாய் நாகரிகத்திற் சிறந்து விளங்குதலால், இவர்களை நம் பண்டைத் தமிழ் மக்கள் தேவர்கள் என வழங்கி வந்தனர். பண்டிருந்த நம் பாண்டிய மன்னன் ஒருவன், அந்நாளில் உரோம் நகரின்கண் அரசு வீற்றிருந்த அகத்திய (Augustus) வேந்தனுக்குத் தூதுவிடுத்த செய்தியைக் குறிக்கும் ஒரு கல்வெட்டானது, பாண்டியன் தேவர்கள் பால் தூது விடுத்தனன் என்றே நவில்கின்றது. ஆகவே, மேல்நாட்டவர்கள், இங்கிருந்த நம் முன்னோர்களால் தேவர்களாகவே கருதப்பட்டமை தெற்றென விளங்குகின்றதன்றோ? இங்ஙனம் தேவருலகாகக் கருதப்பட்ட அம்மேனாட்டின் தலைநகரான உரோம் பட்டினத்தில் இற்றைக்கு இரண்டாயிரத்து முந்நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அரியபெரிய ஒரு நிகழ்ச்சியை இங்கெடுத்துக் கூறுவோம். உரோம் நகரமானது முதன்முதல் உண்டாகியபோது அதிலிருந்த மக்கள் செல்வம் உடையவர்கள் அல்லர். ஒவ்வொருவர்க்கும் இரண்டு மூன்று காணி நிலங்கட்கு மேல் வேறில்லை. அந்நிலங்களை அவர்களே தாமும் தம் குடும்பத்தவருமாகத் திருத்திப் பயிரிட்டு, அவற்றின் விளைவைக் கொண்டு வாழ்க்கை செலுத்தி வந்தனர். அந்நகரத்தைச் சூழவுள்ள வயல் நிலங்களும், ஆடுமாடுகள் மேயும் மேய்ச்சல் நிலங்களும் நாற்புறமும் சுற்றியிருக்கும் மலைகளுக்கு இடையே பச்சைப்பசேலெனக் கொழுமையாய் விளங்கும் காட்சியானது பொற்றகட்டின் நடுவே பதிக்கப்பட்ட முழுப்பச்சை மணியைப் போல் சேய்மையிலிருந்து காண்பார்க்குத் தோன்றா நிற்கும். இவ்வாறு உரோமர்கள் தமது விடாமுயற்சியினாலும் உழைப்பினாலும் நாளடைவில் பெருஞ் செல்வத்தை அடையலாயினர். அதனால், அந்நகரமானது மிக அழகிய ஏழடுக்கு மாளிகைகளால் வரவரப் பெருகலாயிற்று. இங்ஙனம் நாளுக்குநாள் செல்வத்திலோங்கி வந்த இந்நகரத்தின்கண்ணே கவித்தலை (Capitol) என்னும் ஒரு பாறைமலை உளது. அம்மலையின் உச்சியிலே மிகவும் வலிவான ஒரு கோட்டையும் அக்கோட்டையின் நடுவே சிவத்த (Jupiter)¡ கடவுளுக்கும் அவர்தம் தேவியாரான சிவனை (Juno) அம்மைக்கும் எடுப்பித்த சிறந்த திருக்கோயிலும் அமைக்கப் பட்டுத் திகழ்ந்தன. இம்மலைக் கோட்டையே உரோம் நகரத்திற்குப் பெரியதோர் அரணாய் வயங்கிற்று. அப்பழையநாளில் உரோமர்களுக்குத் தனி அரசன் இல்லை. அவர்கள் தம்மால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப் பட்ட சிலரைத் தலைவராக நிறுத்தி, அவர்களைக் கொண்டு செங்கோல் செலுத்தி வந்தார்கள். ஆகவே, அவர்களது அரசு குடியரசு என்றே சொல்லல் வேண்டும். உரோமர்கள் தம் அரசியல் தலைவர்களைத் தெரிந்தெடுக்கும் இடம், அந்நகரத்து மக்கள் ஒருங்கு திரளும் அங்காடி (சந்தை)ப் பக்கமே ஆகும். அங்ஙனம் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் நாட்களில் மட்டும், அவர்கள் தாம் உழவுத் தொழில் செய்யுங்கால் மேற் கொண்டிருந்த பரும்படியான உடைகளைக் களைந்தெறிந்து, விளிம்புகளில் ஊதாக் கரையுள்ள வெண்மையான வேறு ஆடை பூண்டு தொகுதி தொகுதியாகச் செல்வார்கள். இவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருவரும், யானைமருப்பிற் செய்த அரியணை மீது அமர்ந்து அரசு செலுத்துவர். கோடரிகோத்த கோல்களைச் சேர்த்துப் பிணைத்த கட்டுகள் ஏந்திய கையினராய் மெய்க் காப்பாளர் சிலர் இத்தலைவர்களுடன் அருகுசெல்வர், அருகுநிற்பர். இவ்வுரோம் நகரத்தையடுத்துச் சூழ வேறுசில சிறுசிறு குடியரசு நாடுகளும் இருந்தன. அந்நாடுகளிலிருந்த மக்களும் ஏறக்குறைய உரோம் நகரத்து மக்களை ஒத்த பழக்க வழக்கங்கள் வாய்ந்தவர்களே, என்றாலும், வயல்நிலங்கள் நன்கு விளைந்து, அறுப்பு அறுத்து விளைபொருள்களைத் தொகுத்துக் கொள்ளும் காலங்களில், உரோமர்க்கும், அச்சிறு குடியரசுகளுக்கும் போர் மூள்வதுண்டு. அப்போது அரசியல் தலைவர்கள் தீர்மானம் செய்தபடி, மேற்சொல்லிய கவித்தலை மலைக் கோட்டையில் உரோமர்கள் தம் பெண்டிர் பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் பாதுகாத்து வைத்துத் தம் பகைமேற் செல்வர். அங்ஙனம் பகைமேற் செல்லும் காலங்களிலெல்லாம் உரோமர்கள் வெற்றி யடைபவர் அல்லர். ஆனாலும், தோல்வியடைந்ததனால் மனவெழுச்சி அவிந்து போகாமல் அவர்கள் மேலும் மேலும் பகைவரை விடாமல் தாக்கிக் கடைப்படியாக வாகைமாலை சூடுவர். இங்ஙனம் பண்டை உரோமர்கள் தமது நகரத்தின் பால் அளவிறந்த பற்றுவைத்துத் தமக்குள்ள ஒற்றுமையும் அன்பும் மிக்கு அஞ்சா ஆண்மையினராய் எதிர் நின்று கடும்போர் புரிந்து வந்தமையால், அவர்கள் சிலகாலத்தில் தமக்குப் பகைவராயிருந்தார். அனைவரையும் ஒருங்கே வென்று, தமது அரசாட்சியினை இத்தலி தேயத்தின் நடுப்பகுதி எங்கும் வீசிவிளங்கச் செய்தனர். இவ்வாறாக ஒருநானூறு ஆண்டுகள் வரையில் உரோமர்களின் அரசு தனக்கு ஒப்பதும் மிக்கதுமின்றித் தனிச்சிறப்பு வாய்ந்து துலங்கிற்று. இத்துணைப் பேராற்றல் படைத்த இவ்வரசுக்கும் பின்னர் ஒருபெருங் கொடும்பகை தோன்றிற்று. காலவர் (Gauls) என்னும் மலைநாட்டவர் கூட்டம் ஒன்று நாளுக்குநாள் ஐரோப்பாப் பெருநிலப் பிரிவின் நடுப் பகுதியில் பெருகி வந்தது. இவர்கள் நீளமான கைகால்களும் செம்பட்டை மயிர்களும் உடையவர்கள்; நீண்டுயர்ந்த வலிய யாக்கை வாய்ந்தவர்கள்; அஞ்சா நெஞ்சினர்கள்; ஆலூப்பு (Alps) மலைகளையே தமக்கு உறைவிடமாய்க் கொண்டவர்கள். இத்தலிதேயத்தின் வடக்கிலுள்ள வயல்நிலங்கள் நன்கு விளைந்து பயன் தரும்காலங்களில் இக்காலவர்கள் அங்கே புகுந்து கொழுவிய விளைபொருள்களைக் கொள்ளை கொண்டுபோகத் தொடங்கிய தல்லாமலும், தாம் புகுந்த அந்நாடுகளில் உள்ள ஊர்களைக் கொளுத்தியும், அவ்வூர் களிலிருந்த மக்களைப் படுகொலைசெய்தும், அங்குள்ள ஆடு மாடுகளைக் கவர்ந்தும் பெருங்கேடு செய்து வந்தார்கள். அங்ஙனம் தாம் பாழ்செய்த ஊர்களில் தாம் குடியேறியும் வந்தனர். இங்ஙனம் இத்தலிக்கு வடக்கே பெருந்தீது இழைத்து வந்தவர்களாகிய காலவர்களும், அதற்குத்தெற்கே ஆற்றலிலும் உழைப்பிலும் நாகரிகத்திலும் மேன்மேல் ஓங்கித் தனியரசு புரிந்த உரோமர்களும் கடைசியாக ஒருவரையொருவர் எதிர்க்கும் காலம் அண்மிற்று. பழைய உரோமர்களைத் தேவர்களாகக் கொண்ட வடமொழிப் புராண நூலார், இவ்வுரோமர்கள் மேற்படை திரண்டு வந்து அவர்கட்குப் பெருந்தீது செய்த காலவர்களையே காலகேயர் என்னும் அரக்கர் கூட்டமாகக் கருதிக் கதையெழுதி வைத்தனர். அது நிற்க. மேற்சொன்ன கொடிய காலவர் கூட்டத்திற்குப் பிரான் எனப் பெயரிய ஒருவன் தலைவனாய் நின்றனன். இவன் பிறர் எவரிடத்தும் காணப்படாத ஒரு தனித்திறமை வாய்ந்தவன். இவன் தன் கூட்டத்தில் ஒரு பெரும்பகுதியினரைப் படைஞ ராகத் திரட்டிக்கொண்டுவந்து, இத்தலியின் வடக்கில் இருந்து குளூசியம் என்னும் பட்டினத்தைத் தாக்கினான். அப்பட்டினத்தில் உள்ளவர்கள் அக்கொடிய பெருங்கூட்டத் தவர்களைத் தனியே எதிர்க்கமாட்டாதவர்களாய், உரோம் நகரிலுள்ள அரசியல் தலைவர்கள் தமக்குத் துணைப்படையொன்று விடுத்து உதவி செய்யுமாறு கேட்டு அவர்கட்கு ஒரு வேண்டுகோள் விடுத்தனர். அதற்கிசைந்து அத்தலைவர்களும் அரச குடும்பத்திற்சேர்ந்த மூவரை முதலில் அவர்கள்பால் தூதாகப் போக்கினர். தூதுபோன மூவரும் அக்காலவர் தலைவனான பிரானிடம் சென்று, தம்மட்டில் அமைதியாக வாழ்க்கை செலுத்திவரும் குளூசிய நகரத்தார்மேல் நீங்கள் ஏன் வலிந்து வந்து போர் தொடுக்கின்றீர்கள்? அவர்கள் தங்கட்கு யாது தீங்கு செய்தனர்? என வினவினர். அதற்கு அப்பிரான் தலைவன், குளூசியர்கள் கொழுமையான நிலங்கள் வைத்திருக் கின்றனர். அந்நிலங்கள் காலவர்களாகிய எங்கட்கு வேண்டும். அவற்றை எங்கட்குக் கொடாமல் அவர்கள் தாமே வைத் திருப்பதே எமக்குத் தீங்கு செய்வதாகும். உரோமர்களாகிய நீங்களும் இங்ஙனமே அயலவர் நிலங்களைக் கைப்பற்றினீர்கள் அல்லிரோ? ஆதலால், யாம் அங்ஙனம் செய்வது கொடுமையும் அன்று. முறைதவறியதும் அன்று. எவர் வலியரோ அவர் தமக்கு வேண்டுவதைப் பிறர்பாலிருந்து கைக்கொள்வதே பழைய முறையுமாகும். எமக்கு வேண்டுவதைக் கொடாமல் வைத்துக் கொள்ள வல்லர்கள் அங்ஙனமே அதனை வைத்துக் கொள்ளட்டும், பார்க்கலாம், என்று விடை கூறினான். அவன் கூறிய அம்மறுமொழியைக் கேட்டுச் சினம் கொண்ட அத்தூதுவர் மூவரும் குளூசியரிடம் சேர்ந்து கொண்டு காலவர்களுடன் போர்புரியத் தொடங்கினர். அம்மூவரில் ஒருவர் அக்காலவர் தலைவனைச் சேர்ந்த வலிய ஒருவனோடு தனிச் சண்டையிட்டு அவனைக் கொல்லுதலும் செய்தனர். தூதுவர்களாய்ச் செல்பவர்கள் தமக்குரிய கடமையை மீறி அங்ஙனம் ஒரு பக்கத்தவருடன் சேர்ந்து மறு பக்கத்தவரைத் தாக்குதல் ஆகாது. முறைகடந்த இச்செயலைக் கொடிய காலவர்களும் செய்தவர். அல்லர். ஆகவே, அவர் தலைவனான பிரான் தன் தூதுவர்களை உரோம் நகர்த் தலைவரிடம் போக்கித்... தூதுநெறி பிழைத்த அம்மூவரையும் தான் ஒறுத்தற்காக அம்மூவரையும் அவனிடம் ஒப்புவித்து ஒறுத்தல் தக்கதே - எனக் குருமார்களும் சூழ்ச்சித் துணைவர் களும் இசைந்துரைத்தனராயினும், அத்தூதுவரின் தந்தையார் அவர்களை அங்ஙனம் செய்தல் ஆகாதெனத் தடுத்து, இனி மூளும் போருக்கு அம்மூவருமே தலைவராய்நின்று படை செலுத்த வேண்டுமென வற்புறுத்தித் தம் புதல்வர் செய்த குற்றத்திற்கு உரோம் மக்கள் அனைவருமே உடன்படுமாறு சொல்லிவிட்டனர். இதனால் உரோமர்கள் எல்லார்க்குமே ஓர் அலைப்பு வந்தது. முறைசெய்யத் தவறிய உரோமர்கள்மேற் காலவர்கள் கடுஞ்சினமும் சீற்றமும் கொண்டனர்; அதனால் தாம் புகுந்த வடக்கிடங்களில் கொள்ளையிடுதலை விட்டு, உரோமர் களைத் தவிர வழியிலுள்ள ஏனைக் குடியரசுக்கெல்லாம் தாம் நண்பரே எனப்புகன்று, நேரே உரோமரைத்தாக்குதற்கு மிக விரைந்து போந்தனர். உரோமர்கள் தாம் முறைபிசகி நடந்ததை உன்னி வருந்தினராய்க், கடுகெனத் தம்முடைய படைகளைத் திரட்டலாயினர். தாம் போர்க்குச் செல்லுமுன் கடவுளர்க்கு வழிபாடு செய்யும் வழக்கத்தினராயிருந்தும் தாம்தம் குருமார் சொல்லைக் கேளாமல் நடந்தமையால், உரோமர்கள் இப்போது கடவுள் வழிபாடு செய்யாமலே போருக்கு எழுந்தனர். குற்றம் செய்த நெஞ்சம் குறுகுறு என்னும் பழமொழிப்படி, போர்செய்யும் முன்னம் அவர்கள் நெஞ்சமே வலியழித்ததாயின், அவர்கள் காலவ ருடன் செய்த போரில் தோல்வி அடைந்தனரெனவும் வேண்டுமோ? உரோம் நகருக்குப் பதினோருகல் எட்டியுள்ள அலியா ஆற்றங்கரையில் காலவர்களால் முறிவுண்ட உரோமர்கள் சின்னபின்னமாய்ச் சிதைந்து பின்முதுகு காட்டித் தம்நகர் நோக்கி ஓடிவருகையில் பெரும்பாலார் தைபர் ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டு அமிழ்ந்து இறந்தனர். எஞ்சிய மிகச்சிலரே தம் நகரில் வந்து சேர்ந்தனர். அங்ஙனம் முறிந்தோடிய உரோமர்களைக் காவலர்கள் உடனே பின் தொடர்ந்திருந்தனராயின், உரோமரென்ற பெயரும் உரோமரினமும் அவர்தம் கத்திக்கு இரையாகி அடியோடு அழிந்தும் போயிருக்கும். ஆனால், அக்கால வர்கள் அவர்களைப் பின் தொடராராய் அவர்களிடமிருந்து கொள்ளை கொண்ட பொருள்களைத் தாம் பங்கிட்டுக் கொள்வதிலும் விருந்தாட்டு அயர்வதிலும் மூன்றுநாள் கழித்தனர். அதனால், உயிர் தப்பிய உரோமர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சிகளை அம்மூன்று நாட்களிற் செய்து கொண்டனர். உரோமரின் படையாட்கள் கலைந்து போய் விட்டமையால் நகரத்தைப் பாதுகாக்கும் கருத்து எவர்க்குமே இல்லையாயிற்று. எஞ்சி நின்றவர்களில் மனத்திட்பம் உடையவர்கள் தாம் எடுத்துக் கொள்ளக் கூடிய பண்டங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கவித்தலை மலைக்கோட்டையில் போய்ச் சேர்ந்தனர். அங்ஙனம் அதனுட் சேர்ந்த உரோமர்கள், அதனைப் பகைவர்கள் வந்து தாக்குவரேல் அதனை முடிவு வரையில் தாம் காத்து நிற்ப தென்றே உறுதி செய்தனர். கலைந்துபோன தம் படைஞர்கள் இதற்கிடையில் மீண்டும் ஒருங்கு கூடிவந்து தமக்கு உதவி ஆற்றுதல் கூடுமெனவும், அல்லது காலவர்களே தமது வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டபின் உரோம் நகரைவிட்டு அகலுவர் எனவும் அவர்கள் எண்ணினர். சண்டைசெய்ய வலியில்லாதவர்கள் உரோம் நகருக்குப் புறம்பே வெளியிலுள்ள ஓர் ஊரில் போய் அடைந்தனர். அவ்வாறு சென்றவர்களில் வெள்ளாடையுடுத்த கன்னிப் பெண்களும் பலர். இவர்கள் என்றும் அவியாது ஒளிவிடும் நெருப்புள்ள தடவுகள் (தூபக்கால்கள்) ஏந்திய கையினராய் நெடுவழி நடந்து செல்கையில் இவர்களுடைய அடிகள் புண்பட்டதும் அல்லாமல், இவர்கள் தாம் சுமந்து சென்ற கோயில் தட்டு முட்டுகளாலும் மிகவும் களைத்துப் போனார்கள். இவர்களுக்குச் சிறிது முன்னே தன் குடும்பத்தவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்ற அலுவினியன் என்பான், இப்புனித மாதரார் அங்ஙனம் களைத்துத் தள்ளாடி வருதலைக் கண்டு நெஞ்சம் இரங்கித் தன் குடும்பத்தவரைக் கீழ் இறக்கி விட்டு, இக்கன்னி மகளிரைத் தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றனன். ஒவ்வொருவரும் தம் உயிர் பிழைக்க ஓடும் அந்நேரத்தில் தன் நலத்தையும் குடும்பத்தினர் நலத்தையும் ஒரு சிறிதும் பாராது, இக்கன்னிமாரைத் தனது வண்டியிலேற்றிக் கொண்டு சென்ற அவ் ஆண் மகனது அரிய இரக்கச் செயலைக் கேட்டவரெல்லாம் அவனைப் பெரிதும் வியந்து கொண்டாடினர். அவ்வாறு உரோம் நகரை விட்டுச் செல்லாதிருந்தவர்கள் பழைய அரசியல் சூழ்ச்சித் துணைவர்கள் எண்பதின்மரும் குருமார் சிலருமேயாவர். ஓடவலியற்ற சிலர் தாம் கவித்தலை மலைக் கோட்டையினுள் சென்று சேர்ந்தால், அங்கே போர் செய்ய வல்லவர்களாய் உள்ளார்க்குப் பயன்படும் அரிய உணவுப் பொருள்களில் தாமும் பங்குபெற நேரும் என உன்னித் தாம் அங்குச் செல்ல மனம் ஒருப்படாமல் பகைவரின் கத்திக்குத் தம்மை இரையாக்கித் தூது நெறி பிழைத்தாரால் தமது நாட்டுக்கு வந்த ஏதத்தை அவ்வாற்றால் நீக்கிவிடத் துணிந்தனர்! ஈதன்றோ தனக்கென வாழாத் தாளாளர் செயல்! மூன்றுநாட் சென்றபின் காலவர்கள் முன்னேறிவந்து உரோம் நகரிற் புகுந்தனர். மதில்வாயில் பெருங்கதவுகள் திறந்தபடியாய் நின்றன; தெருக்களில் அரவம் ஏதுமே இல்லை; தெருக்களிலுள்ள இல்லங்களின் வாயிற் கதவுகளும் திறந்திருந்தன; ஆனால், அவ்வில்லங்களினுள் எவருமே காணப் படவில்லை. அதனால், அக்காலவர்கள் வெறும் தெருவு களினூடே விரைந்து நடந்து, அரசியல் மண்டபத்தில் போய்ச் சேர்ந்தனர். அம்மண்டபத்தில் உயர எழுப்பிய ஒரு பலகைமேல் ஒரு வரிசையாக இடப்பட்டிருந்த யானை மருப்பில் செய்த நாற்காலிகள் ஒவ்வொன்றிலும், நரைத்த தலை மயிரும் நரைத்த தாடிமயிரும் உடையவராய்த் திறப்பாக விடப்பட்ட கைகால் களுடன் ஊதாச் சரிகைக் கரைகோத்த விளிம்புகள் வாய்ந்த வெள்ளைக் குப்பாயம் பூண்டு, கையில் வெள்ளிய செங்கோல் பிடித்த உருவங்கள் ஆடாத அசையாத முகத்துடன் பெருந் தன்மையோடு அமர்ந்திருத்தலை அக்காலவர்கள் கண்டார்கள். கண்ட அவ்வுருவங்களின் கண்களைத் தவிர மற்ற உறுப்புக்களினால் அவை உயிருள்ளவென்று நம்புதற்கு இடம் இல்லாமலேயிருந்தது. அதனால், அக்காலவர்கள் அவை உயிர் உள்ளவைகளா இல்லாதவைகளா எனத் தம்முள் ஐயுற்று, அவ்விழுமிய காட்சியைக் கண்டு திகைப்புற்று அவற்றின் முன்னே வாய்வாளாது நின்றனர். அவ்வுருவங்கள் தெய்வ வடிவங்களா அல்லது அவ் உரோம் நகரத்தில் அரசு செலுத்தும் தலைவர்களின் குழுவா என்று இறும்பூதுற்று எண்ணினர். கடைசியாக அவர்களில் முரடனான ஒருவன் அவ்வடிவங் களின் உண்மையைத் தெரிதல் வேண்டி, அவற்றுள் ஒன்றன் தாடி மயிரைப் போய்த் தடவினான். நாகரிகமற்ற ஒரு காலவன் அங்ஙனம் தம்மைத் தொடுதற்கும் பழித்தற்கும் உரோமரது உள்ளம் பொறுக்குமோ! உடனே, தொடப்பட்ட அவ்வுருவம் தன் கையில் பிடித்திருந்த வெள்ளைக் கோலால் தன்னைத் தொட்டவன் தலையைப் புடைக்கவே, காலவர் கொண்ட ஐயம் ஒழிந்தது. அங்கு அமர்ந்திருந்த அவ்வுருவங்கள் உரோம் நகரின் அரசியல் தலைவர்களே எனத் தெளிந்தனர். தெளிந்ததும், அத்தலைவரின் மாட்சி வடிவம் கண்டு அக்காலவர்கட்குண்டான வணக்க ஒடுக்கமெல்லாம் பறந்து போயின. உடனே அக்கொடியவர்கள் பெருஞ்சீற்றத்துடன் அவர்கள்மேல் பாய்ந்து, ஒவ்வொருவரையும் நாற்காலியிலிருந்தவாறே வைத்துக் கத்தியால் குத்திக் கொன்றார்கள்! அதன்பின் அவர்கள் அந்நகரமெங்கும் பரவி வீடுகளில் புகுந்து கொள்ளை யிட்டும், அவைகளைத் தீக்கொளுவியும் அழித்தனர். ஆனாலும், அவர்கள் கவித்தலை மலைக்கோட்டையைக் கைப்பற்றுவது தம்மாலியலாதென்று கண்டார்கள். கண்டு அதனுள் இருந்தவர்களைப் பட்டினி கிடத்தி அழிக்க முனைந்தனர். அதற்கிடையில் அந்நகரத்தின் புறமதில்களையும், நெருப்புக்குத் தப்பின வீடுகள் கோயில்களையும் அழிக்கும் கொடு முயற்சியில் தலையிட்டனர். கவித்தலை மலைக்கோட்டையின் உயரத்திலிருந்து உரோமர்கள், கீழே தமது நகர்முழுதும் கரிந்து பாழாதலையும் கொடிய காலவர்கள் ஆங்காங்கு வெறிகொண்ட வேங்கைப் புலிகள் போல் அலைதலையும் கண்டு உள்ளம் வெதும்பினர். இப்பொல்லாத நேரத்திலும் அவர்கள் தாம் இறைவன்பால் வைத்த உறுதியான அன்பில் சிறிதும் நெகிழ்ந்திலர். இத்தனை தீங்கும் தூதுநெறி பிழைத்தார்க்கு உதவியாயிருந்தமையால் வந்த முறையான திருவருளொறுப்பே என நினைந்து, அதன் ஆணைக்கு அடங்கி ஒழுகவே தீர்மானித்தனர். தாம் உடன்கொண்டுவந்த உணவுப் பண்டங்களின் தொகை நாளுக்கு நாள் சுருங்கித் தாம் பட்டினி கிடக்க வேண்டிய நாள் அருகியும் தாம் சிவனையம்மைக்கு நேர்ந்து கொண்டு ஆங்குள்ள அவளது திருக்கோயிலில் விட்டு வைத்த தாராப் பறவைகளை உரோமர்கள் சிறிதும் தொடவேயில்லை. இடுக்கட்பட்ட இவ்வேளையில் அவர்களில் ஒருவ னான பேவியன்றார்சன் என்பான் செய்த செயற்கருஞ்செயல் பெரிதும் நினைவு கூரற்பால தொன்றாய் நிலவுகின்றது. தான் வழிபடும் குலதெய்வத்திற்கு ஆண்டிற்கு ஒருகால் எடுக்கும் திருவிழாநாள் வந்தது; அஃது அந்நகரத்திலுள்ள ஒரு சிறிய குன்றின்மேல் செய்யப்படுவதாதலால், அவன் வெள்ளை உடை பூண்டு கையில் வழிபடு பொருள்களும் அத்தெய்வத்தின் வடிவமும் ஏந்திக் கவித்தலை மலைக் கோட்டையிலிருந்து புறம்போந்து கீழ்இறங்கி அங்கே குழாங்கொண்டிருந்த கொடும்பகைவர் கூட்டத்தூடே அஞ்சாது வழிநடந்து சென்று, அச்சிறியகுன்றின்மேல் அவ்வழிபாட்டினைச் செய்து முடித்து, மீண்டும் செவ்வனே கவித்தலை மலைக்கோட்டை யினுள் போய்ச் சேர்ந்தான். அங்ஙனம் தெய்வவணக்கத்தின் பொருட்டு அவன் வருதலையும் போதலையும் கண்டு, அக்காலவர்கள் அவனுக்கு ஏதும் தீது செய்திலர் பாருங்கள்! தெய்வ வழிபாட்டில் உறைத்துத் தன்னுயிரையும் ஒரு பொருட்டாய் எண்ணாத அவ்வுரோமனைக் கண்டு, அத்தீயவர்களும் அடங்கி, அவனுக்கு ஏதுமே ஊறு செய்திலர் என்றால் தெய்வத்தின் அருளொளியிலேயே முழுதும் தோய்ந்து நின்ற நினைவுடையார்க்கு எவராலும் எதனாலும் எத்தகைய இடரும் நேராதென்பதனை நாம் விண்டு சொல்லுதலும் வேண்டுமோ அறிக! இனிக், கவித்தலை மலைக்கோட்டையினுள்ளிருந்து பசித்து வருந்தும் உரோமர்கள் எவ்வாறாயினர்? அவர்கட்குக் கோட்டையின் வெளியேயிருந்து எவ்வாறு உதவி வந்தது? என்று கூறுவாம். அவ்வுரோம் நகரிற் போராண்மையில் சிறந்த காமிலியன் என்பான் ஒருவன் இருந்தனன். அவன் அத்தலைநகரைச் சூழ இருந்த பட்டினங்களில், உரோமர்க்குப் பகைவராயிருந்தார். அனைவரையும் வென்று அடக்கினவன் ஆவான் என்றாலும் தற்பெருமையும் செருக்கும் அவன்பால் மிக்கிருந்தமையால், அவனை எல்லாரும் வெறுத்து அவன்மேல் இல்லாத குற்றம் சுமத்தி, அவன்பாலிருந்த பெருந்தொகைப் பொருளையெல்லாம் பிடுங்கப் பார்த்தனர். அதனால் அவன், அயலிலுள்ள ஆரதியம் என்னும் ஊரில் போய்க் குடியேறி வாழ்ந்து வந்தனன். ஈதிங்ஙனமிருக்கக் காலவர் தலைவனான பிரானது படையில் பாதி மேற்சொன்ன ஆரதிய ஊரைத் தாக்க வரும் செய்தி அதன்கண் உள்ளார்க்கு எட்டியது. அதுகேட்ட காமிலியன் உடனே அவ்வூர்த் துரைத்தனத்தாரிடம் சென்று, தான் அவ்வூரைக் காப்பதற்கு முன் நிற்பதை அறிவிக்க, அவர்களும் அதற்கு மகிழ்வுடன் இசைந்து, அவ்வூர்ப் படையை அவன்பால் ஒப்புவிக்க, அவனும் படைக்கலம் பிடிக்கத்தக்க பொருநரையெல்லாம் ஒரு மிக்கத் திரட்டிக் கொண்டு போய், எதிரேறி வந்த காலவர்படையை நள்ளிரவில் தாக்கி அதனைச் சின்னபின்னமாகச் சிதற வடித்துச் சவட்டித், தனதூரைக் காத்தான். இவன் செய்த போராண்மைச் செயல், சிதைவுண்டு சிதறிய உரோமர்களின் செவிக்கு எட்ட அவர்கள் அதனால் மனக் கிளர்ச்சி மிகப் பெற்றுத் தமக்குக் காமிலியன் படைத்தலைவனாக நிற்க ஒருப்பட்டால், தாம் கவித்தலை மலைக்கோட்டையில் உள்ள தம்மவர்க்கு உதவிசெய்து, திரும்பவும் உரோம் நகரின் பெரும்புகழை மீட்டு நிலைபெறுத்துதல் கூடுமென நினைந்து, காமிலியனுக்குத் தம்முடைய கருத்தையும் வேண்டுகோளையும் தெரிவித்துத் தூதுவிடுத்தனர். காமிலியன் வணங்காமுடியனும் இறுமாப் புடையனுமாதலால், தான் தனது நகரினின்றும் துரத்தப் பட்டவனாதலால், உரோம் அரசியல் தலைவரின் உடன்பாடும் கட்டளையும் இன்றித் தான் அவர்க்குத் தலைவனாய் நின்று படை நடத்துதல் இயலாதென மறுமொழி போக்கினான். உரோம் அரசியல் தலைவர்களோ இப்போது கவித்தலை மலைக் கோட்டையினுள் அடைபட்டிருக்கின்றனர். அவர் கட்கு வெளியேயுள்ள உரோமர்கள் செய்தி விடுத்து அவர்களைத் தமது கருத்துக்கு ஒருப்படுவிக்குமாறு யாங்ஙனம்? கொடிய காலவர்களோ அக்கோட்டையைச் சூழப் படைவீடு கொண்டிருக்கின்றனர்! என் செய்வதென்று எல்லாரும் பெரிதும் தயங்கினர். இந்நிலையில் கோமினியன் என்னும் ஓர் இளைஞன் தம்மவர்க்காகக் கவித்தலை மலைக்கோட்டையிலுள்ளார் பால் தூது செல்லுதலை மேற்கொண்டான். தான் தைபர் ஆற்றின் பாலத்தைக் கடந்து செல்லக் கூடாவாறு காலவரின் காவலாள் அதனைக் காத்துநின்றால், தான் ஆழம் மிகுந்து அகன்ற அவ்வியாற்றை நீந்திச் செல்லவேண்டுமே என எண்ணி, ஒரு குடியானவனுக்குரிய உடை உடுத்தித் தான் நீரில் அமிழ்ந்தி விடாமல் மிதத்தற்கு உதவியாகப் பெரியபெரிய நெட்டித் துண்டுகளை அவ்வுடையின்கீழ் இணைத்துக்கொண்டு, நாள் முழுதும் கால்நடையாகவே நடந்து, இராப்பொழுதில் அவ்வியாற்றின் அருகுற்றான். தான் முன் எண்ணியவாறே காலவரின் காவலாள் அதன் பாலத்தைக் காத்து நிற்றல் கண்டு, அதனை விலகிப் போய்த் தனதுடம்பின் மேற்புறத்தில் நெட்டியோடு பிணைத்த துணியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அவ்வியாற்றில் இறங்கி நீந்தியபடியாய்க் கவித்தலை மலையடி வாரத்தினருகே சேர்ந்து கரையேறினான். அவ்வடிவாரத்தில் விளக்கு வெளிச்சம் காணப்பட்ட இடங்களையும், மக்கள் பேசும் ஒலிகேட்கும் இடங்களையும் விழிப்பாக விட்டகன்று, பகைவர் இல்லாத இடமாகத் தோன்றிய அம்மலையின் செங்குத்தான ஒரு பக்கத்தைத் தெரிந்தடைந்தான். அப்பக்கம் மிகவும் செங்குத்தாய் இருந்தமையால் அதனூடு எவருமே ஏறி அம்மலைமேல் செல்லல் முடியாதென்று கருதிக் காலவர் படைஞர் எவரும் அங்கே காவலாக வைக்கப்படவில்லை. மெய்யாகவே அச்செங்குத்தானபக்கம் மேலேற விரும்புவார் எவர்க்கும் பேரச்சத்தை விளைப்பதொன்றாகவே தோன்றியது. ஆனால் தன்னுயிரையும் ஒரு துரும்பாய் எண்ணித் தான் முடிக்கக் கருதிய அருவினையிலேயே கண்ணும்கருத்தும் உடைய அவ்வாண் மகனுக்கோ அஃதொரு தடையாய்க் காணப்படவில்லை. அவன் இருள் சூழ்ந்த அவ்விரவில் அம்மலைப் பக்கத்திற் படர்ந்திருந்த வேர்களைக் கைகளாற்பற்றிக் கொண்டும், பைம்புற் பொழிகளின் அடியில் காலடிகளை உதைந்துகொண்டும் தொற்றித்தொற்றி இவர்ந்து, அம்மலையுச்சியில் போய் அக்கோட்டைக் கொத்தளத்தின் மேல் நின்றான். நின்ற வனைப் பகைவனென்றோ நண்பனென்றோ அறியாமையால் அங்கிருந்த காவலாளர் விரைந்து போந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். அங்ஙனம் சூழ்ந்தார்க்கு அவன் தன் பெயரை எடுத்துச் சொல்லி இலத்தீன் மொழியில் பேசவே, ஆறு திங்களாகத் தம்மவரின் ஒரு புதியமுகத்தையும் காணப் பெறாமல் பட்டினியும் பசியுமாய் அதனுட் கிடந்து மாழ்கிய உரோமர்கள் அவன் முகத்தைக் கண்டும் அவன் தமது தாய்மொழியில் பேசிய சொற்களைக் கேட்டும், போன உயிர் மீண்டவர்களாய் அளவிலாக் களிப்பெய்தினர். அங்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த அரசியல் தலைவர்களும் கடிதில் எழுப்பப்பட்டு அவன்பால் வந்து குழுமினர். ஆரதியத்தைக் காலவர் வந்து தாக்கினமையும், காமிலியன் உடனே தம்மூராரைப் படைதிரட்டிக் கொண்டு சென்று, அவரை எதிர்தாக்கி மாய்த்தமையும், இப்போது அரசியல் தலைவர்கள் ஒருங்கிசைந்து அக்காமிலியனைப் படைத்தலைவனாக ஏற்படுத்திக் கட்டளை தந்தால் சிதர்ந்து போன உரோமர்கள் அத்தனை பேரும் அவன்கீழ் ஒருங்குதிரண்டு வந்து பகைவரை அழித்துக் கவித்தலை மலைக் கோட்டையை மீட்க முனைந்து நிற்றலையும் அவன் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் அவர்கட்கு எடுத்துரைத்தான். உடனே அரசியல் தலைவர் அனைவரும் மறுமாற்றம் இன்றி ஒத்து ஒருமுகமாய் காமிலியனையே நம்மவர் எல்லார்க்கும் ஒப்புயர்வில்லாப் படைத்தலைவனாகத் தந்தோம் என்று உறுதிமொழி பகர்ந்தனர். அம்மகிழ்வான செய்தியைப் பெற்றுக் கொண்ட கோமினியன் சிறிதும் தாழாது அவ்விரவே அம் மலையை விட்டுப் பெரியதோர் இடர்ப்பாட்டுடன் கீழிறங்கித் தம்மவர்பால் சென்று அதனை எல்லார்க்கும் பெருங்கிளர்ச்சி உண்டாகத் தெரிவித்தனன். மறுநாட்காலையில், அம்மலையைச் சூழ்ந்திருந்த காலவர்கள் முன்நாள் இரவு செங்குத்தாய் நின்ற அதன் பக்கத்தில் எவரோ ஏறிச் சென்ற அடையாளங்களைக் கண்டார்கள். ஏனென்றால், அங்கங்கே அப்பக்கத்தில் வளர்ந்திருந்த சிறு தூறுகளும் படர்கொடிகளும் அலைக்கப்பட்டு இடையிடையே முறிந்து காணப்பட்டன; கற்பாறைகளில் பிடித்திருந்த பாசிகள் கைகால் உரைசித் தேய்வுண்டிருந்தன; புதிய உருண்டைக் கற்களும் மண்ணும் மேலிருந்து கீழ் உதிர்ந்து சிதறிக் கிடந்தன. இவ்வடையாளங்களைக் கண்டதும் காலவர்கட்குச் சினம் மூண்டது. நகரவாழ்க்கையிலிருந்து மென்மையாய் வளர்ந்த ஓர் உரோமன் இருள்செறிந்த அவ்விரவில் செங்குத்தான அம்மலைப் பக்கத்தே ஏறிச் சென்றனனென்றால் பனிக்கட்டி நிறைந்த மலைக் குவடுகளிலும் இருண்டு ஆழ்ந்த மலைப் பிளவுகளிலும் ஆலங்கட்டிகள் குவிந்த ஆலூப்பு மலைகளிலும் வாழ்க்கை செலுத்தும் முரடராய் வளர்ந்த காலவர்கள் அம்மலை மேல் ஏறுதற்குப் பின்வாங்கலாமோ எனப் பிரான் தலைவன் எண்ணினான். பிறகு, தம் மலை வாணரில் மிகவும் திண்ணியரா யுள்ளாரைத் தெரிந்தெடுத்து, நள்ளிராப் பொழுதில் சிறிதும் அரவம் இன்றி அவர்கள் ஒருவர்பின் ஒருவராய் அம்மலை மீதேறி, உரோமரைத் திடுமெனத் தாக்கி, அவர்கட்கு வை என்னும் ஊரிலிருந்து உதவிப்படை வருமுன் அவர்கள் அனைவரையும் வெட்டிக் குவித்து வெற்றிகொள்க என அவன் அவரை ஏவினான். அவன் ஏவியபடியே திண்ணிய காலவர்கள் ஒரு சிறிதும் ஓசையுண்டாகாமல் ஏறியதனால், அக்கோட்டையில் காவலாய் நின்ற நாய்களும் அவரது வருகையினை அறிந்தில. மதின்மேற் காவலாய் நின்ற படைஞனோ பசிக்களைப்பில் உண்டான கடும் தூக்கத்தில் தன்னைமறந்து கிடந்தான். என்றாலும், கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்னும் மூதறிஞர் உரைப்படி, கோட்டையின் உள்ளிருந்த உரோமர்க்கு அங்கிருந்த சிவனையம்மை கோயிலிலிருந்து ஒரு முன்னறிவிப்பு எழுந்தது. அவ்வம்மைக்கு நேர்ந்து கொண்டு அக்கோயிலில் விட்டு வைத்திருந்த தாராப் பறவைகள் எங்ஙனமோ அவ்வேற்று ஆட்களின் வருகையை அறிந்து தம் இறக்கைகளை அடித்துக் கொண்டு கத்திக் கெக்கெலி செய்து பேரொலியை உண்டாக்கின. தாம் கடும்பசியால் வாடிவதங்கும் காலத்தும் உரோமர்கள் அப்பறவைகள் அம்மைக்காக விடப்பட்டன வென்று அன்புடன் கருதி அவற்றைத் தாம் உணவுக்காகக் கொல்லாது விட்டு வைத்தமையாலன்றோ அவர்கள் இப்போது அப்பறவையினங்களால் காக்கப்படு வராயினர்? அவை செய்த பேரிரைச்சலைக் கேட்டு அங்கே உறங்கிக் கிடந்த உரோமர்கள் உடனே விழித்துக் கொண்டனர். விழித்துக்கொண்டவர்களில் மானிலியன் என்பவனே உற்ற நேரத்தில் முதன்முதல் விரைந்து போந்து, அக்கோட்டையின் புறமதிலில் அப்போதுதான் ஏறி வந்து கால் வைத்த காலவர்களைத் தாக்கினான். அவன் முன்னதாக வந்து நின்ற காலவன் ஒருவன் வெட்டுதற்குத் தனது மழுப்படையை ஓங்கிய காலையில், அம்மானிலியன் தன் கைவாளால் அவனது கையைத் துணித்துப், பின்னர் அவனையும் அச்செங்குத்தான மலைப்பக்கமாய்க் கீழே தள்ளிவிட்டான். வீழ்ந்தவன் பின்னே ஏறிவரும் காலவனையும் அங்ஙனமே தொலைத்தற்கு முனைந்து மானிலியன் அம்மதின்மேல் தனிநின்றான். இதற்குள்ளாகக் கோட்டையின் உள்ளிருந்த படைஞர்கள் அத்தனை பேரும் காலவரை எதிர்தாக்குதற்கு மதிலண்டை வந்து சேர்ந்தார்கள். ஏறிவந்த காவலரெல் லாரும் உடனே கீழ் வீழ்த்தப் பட்டனர். மதின்மேல் தன் காவலில் கருத்தின்றி உறங்கிய படைஞனையும் உரோமர்கள் உருட்டிக் கீழே தள்ளிவிட்டனர். தனிநின்று காலவரை மதின்மேல் எதிர்த்துத் தொலைத்த மானிலியன்பால் படைஞரெல்லாரும் நன்றி மிக்கவராய்த் தாம் மிகுத்து வைத்திருந்த அரிய சிறிது உணவினையும் பருகு நீரினையும் கொணர்ந்து தந்தனர். இந்நேரத்தில் கவித்தலை மலைக்கோட்டையிலுள்ளார் நிலை கவலைக்கு இடமாகவேயிருந்தது. கீழூர்களிலிருக்கும் தம்மவர் பாலிருந்து தூதுவந்த கோமினியன் இருண்ட அவ்விரவில் பகைவர்களுக்குத் தப்பித் திரும்பிச் செவ்வனே அவர்களிடம் போய்ச் சேர்ந்திருக்கக் கூடுமா என்று அவரெல்லாரும் ஐயுற்றுக் கலங்கினர். அவன் அச்செங்குத்தான பக்கத்தே ஏறி மேல்வந்த அடையாளத்தைக் கண்டன்றோ காவலரும் அவ்வழியே ஏறித் தம்மைத் தாக்க வந்தனரென்று உரோமர்கள் நினைத்தனர்; அதனால் அவன் அவர்களால் பிடிபட்டிருப்பனெனவே அவர்கள் கருதலாயினர். இங்ஙனம் எல்லாம் கலங்கிக்கொண்டிருக்கையில் அவர்களுள் ஒருவற்கு ஒரு கனவு தோன்றிற்று. அம்மலைத் தலைக்கோயிலில் உள்ள சிவத்தர் என்னும் கடவுளின் திருவுருவம் அவன் முன்னே தோன்றியது. தோன்றிய அஃது அவனை நோக்கி, நீங்கள் எல்லீர்க்கும் உணவாக மிச்சமிருக்கும் கோதுமைமா அவ்வளவும் எடுத்து அப்பமாகச் சுட்டுக் கீழே சூழ்ந்துகொண்டிருக்கும் தங்கள் பகைவர்களின் நடுவே அவ்வப்பங்கள் எல்லாவற்றையும் எறிந்து விடுங்கள்! என்று கட்டளையிட்டு மறைந்து போயது. சிறிதிருக்கும் உணவையும் இங்ஙனம் எறிந்துவிடின் எவ்வாறு உயிர் பிழைப்பதென அங்கிருந்த உரோமர் அனைவரும் எண்ணினரேனும், அச்சிவத்தப் பெருமான் இட்ட கட்டளையை மீற எவரும் உள்ளம் துணிந்திலர். உயிர் ஒழிந்தாலும் இறைவன் கற்பித்தபடி செய்வதே தக்கதென அவரெல்லாரும் ஒருங்கியைந்து, தம்மிடம் மிச்சமாயிருந்த மாவையெல்லாம் எடுத்துப்பிசைந்து அப்பமாகச் சுட்டுச், சுட்ட அப்பங்களை எல்லாம் கீழுள்ள பகைவரது குழுவில் வீசினர். மேலிருந்து கீழ்விழுந்த அவ்வப்பங்களைப் பசியால் வாடிவதங்கித் தத்தளிக்கும் தமது பசிவருத்தம் கண்டு இரங்கிப் பகைமை பாராது உணவு தந்த அவ்வுரோமர்கள் பால் நன்றியும் அன்பும் இயற்கையாகவே தம்முள்ளத்தே கொள்ளப் பெற்றனர். அதுவேயுமன்றி அக்காலவர் தலைவனான பிரானும் தம்மவர் அத்தனை பேர்க்கும் அத்தனை மிகுதியான உணவு தந்த உரோமர்கள் இன்னும் எவ்வளவு மிகுதியான உணவுப் பண்டங்கள் வைத்திருக்க வேண்டும்! அவ்வளவு மிகுந்த உணவு வைத்துக் கொண்டு மலைமேல் கோட்டையில் வலியரா யிருக்கும் அவர்களைக் கீழே உணவின்றிப் பசித்து வருந்தும் தம்மவர் தொடர்ந்து முற்றுகை செய்திருத்தல் பயன்தராவென எண்ணினான். எண்ணி அவர்களுடன் ஒத்துப் போகும் கருத்துடையனாய், அவர்களின் தலைவர்பால் ஒரு தூதுவனை விடுத்தான். அதற்கிசைந்து அவர்கள் சொல் விடுப்பவே, பிரான் அம்மலைமேற்போந்து அத்தலைவரில் ஒருவருடன் அமைதி பேசி, அவர்கள் தனக்கு முந்நூற்று முப்பத்துமூன்று வீசை எடையுள்ள பொன்னை நிறுத்துத் தந்தால், தான் தம்மவருடன் உரோமருடைய நகரத்தையும் நாட்டையும் விட்டுப் போய்விடுவதாக உறுதிமொழி புகன்றான். அதற்கு அவ்வுரோம் தலைவர் இணங்கவே, காலவர் தம்மிடம் இருந்த வீசைக் குண்டுகளைக் கொண்டுவந்தனர். உரோமர்கள் தம்மவர் பாலிருந்து திரட்டிக் கொணர்ந்து தொகுத்த பொற்பணிகள் காவலர் கொணர்ந்த எடையினும் மிகுதியாக இருந்தன. அப்பொற்குவியலைக் கண்ட பிரான் அவ்வளவையும் தான் கவர்ந்துகொள்ள அவாக்கொண்டு, தூக்குத்தட்டில் எடை குண்டொடுகூட நிறைமிகுந்த தனது கொடுவாளையும் இட்டான். அதுகண்ட உரோமர்கள் கேட்ட அளவுக்குமேல் பொன் கொடுக்க இசையோமென மறுக்கக் காலவர்களும் உரோமர் களும் பெரும் சீற்றத்துடன் வழக்குப் பேசலாயினர். இவர்கள் இவ்வாறு வழக்காடிக் கொண்டிருக்கையில், கீழிருந்த காலவர் குழாத்திலிருந்து ஒரு பெருங்கூக்குரல் மேலெழுந்தது. அதனையடுத்துக் காமிலியனைத் தலைவ னாய்க் கொண்டு உரோமரது பெரும்படையொன்று மலைமேல் பாட்டையில் ஏறிவந்தது. அதைக் கண்டதும் அக்கவித்தலை மலைக்கோட்டையிலிருந்த உரோமர் அனை வரும் பெருங்களிப்பும் பெருங்கிளர்ச்சியும் உடையராகி, அங்கே தாம் கொணர்ந்து குவித்த பொற்றிரளையெல்லாம் மீண்டும் தமது களஞ்சியத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்கும்படி, தம்மவர்க்குப் பணித்தனர். அவர்களின் தலைவரும் பிரானை நோக்கி, உரோமர்கள் தமது நாட்டை இருப்பினாற் காப்பவரேயல்லால் பொன்னினாற் காப்பவரல்லர் என்று ஆண்மையுடன் கூறினர். அதுகேட்ட பிரான், செய்து கொண்ட உடன்படிக்கையில் வழுவிக் கொடுக்க இசைந்த பொன்னைக் கொடாது மறுத்தல் நம்பிக்கைக்கு மாறு அன்றோ? என வினவினான். உரோமரைப் படை திரட்டி வந்த காமிலியன், யான் இல்லாத வேளையில் செய்த உடன்படிக்கை செல்லாது; எவரும் அது செய்தற்குரியரல்லர் என வற்புறுத்திக் கூவினான். அதனால், காலவர்க்கும் உரோமர்க்கும் போர் மூண்டது. உரோமரது படைஞர் நாற்பதினாயிரம் பேர் மேலுக்கு மேல் வந்தமையால், பசியாலும், நோயாலும் மெலிந்த தன் படைஞர் அத்துணைப் பெரிய படையை எதிர்த்தல் இயலாதென்று கண்ட பிரான், தன் காலவர் கூட்டத்தை அழைத்துக் கொண்டு மறுநாள் விடியற்காலையிலே காமிலியன் நகரைவிட்டுப் பின்னிடைந்து ஏகினான். ஆனால், காமிலியன் அவனையும் அவன் படைஞரையும் விடாது பின்தொடர்ந்து தாக்கி, உரோமிலிருந்து எட்டுக்கல் வரையில் காலவர்களைக் கொன்று குவித்துப் பெருவென்றி எய்தினான். கொடியரான காலவரது படையெடுப்பினால் ஒளியிழந்த உரோம் நகரும், நாடும், அப்பேரிருள் ஒழிந்தபின் முன்போல் பேரொளிமிகுந்து துலங்கலாயிற்று. அப்பேரிடுக் கண் நேர்ந்த காலத்தில் செயற்கருஞ்செயல் செய்த அலுவினியன், பேவியன்றார்சன், கோமினியன், மானிலியன், காமிலியன் என்னும் அருந்திறலாளர்க்கெல்லாம் உரோமர் கள் பெருஞ்சிறப்புகள் செய்து அவர்களைப் பெரிது கொண்டாடினர் என்க. ஆயிரத்துத் தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் காலத்திருந்த மேல்நாட்டாசிரியர் செனீகரின் அறிவுமொழிகள்: பலகாலும் காற்றினால் அலைக்கப்படாத எத்தகைய மரமும் வலுவாய் உறுதியாய் நிலைப்பதில்லை; ஆனால் அடுத்தடுத்துக் காற்றினால் அசைக்கப்படும் மரமோ உரம் ஏறப்பெற்று நிலத்திலே அழுத்தமாக வேர் ஊன்றுகின்றது. நாற்புறமும் அடைப்பாக உள்ள பள்ளத்தாக்குகளில் வளரும் மரங்கள் எளிதிலே முறிந்துவிடும் இயல்பின. ஆகவே, அச்சத்துக்கு ஏதுவாக நிகழ்ச்சிகளின் நடுவே உயிர்வாழப் பெறுவதே நல்லோன் ஒருவனுக்கு நன்மையை அளிக்கின்றது; ஏனென்றால் அவற்றின் நடுவிலிருந்து பழகப் பழக அவன் அஞ்சா நெஞ்சினன் ஆகின்றான். மேலும், எந்தத் துன்பத்தையும் துன்பமாகக் கருதாமையால் எத்தகைய இடர்வரினும் அதனைப் பொறுக்கவும் கற்றுக்கொள்கின்றான். இறப்பில்லாக் கடவுள் நமதுள்ளத்தைத் தாற்றுக் கோல் இட்டு எழுப்புவது போல், வருவிக்கும் இடர்களைக் கண்டு வெருக் கொளாதேயுங்கள்! ஏனென்றால், தீதுவரும் காலத்திலேதான் ஒருவனது உள்ளத்தின் நன்மை புலனாகின்றது. நிறைந்த ஐம்பொறியின்பத்தில் சிக்கி அறிவுமயங்கியிருப்பவர்களை நல்லவினையற்றவர்களென்றே சொல்லல் வேண்டும். ஏனெனில், அவர்கள் அவ்வின்ப வயப்பட்டு அறிவின் சுருசுருப்பிழந்து அதன்கண் ஆழ்ந்து விடுகின் றனரல்லரோ? அத்தன்மையினர்க்கு ஏதேனும் இடர்வரின் அவர் அதனைத் தாங்கார். மெல்லிய கழுத்துடையது நுகத்தடியைத் தாங்குமோ? கடவுள் தாம் அன்பு பாராட்டும் அடியர்க்காகப் பலவகை அல்லல்களில் படுப்பிக்குமாற்றால், அவர்களைப் பழக்கி உரமேற்றி உறுதிப்படுத்துகின்றார். சிறுவர்க்கான செந்தமிழ் - முற்றும் - பொருளடக்கம் பக்கம் 1. திங்களைத் தொழுதல் 141 2. சந்தனமரம் 148 3. காலதியன் கிரிசெலாள் கதை 153 4. மக்கள் வாழ்க்கையின் நிலையாமை 172 5. பழம்பிறவி நினைவு 182 6. மாமரம் 193 7. அறிவு உழைப்பும் விடா முயற்சியும் 199 8. அறஞ் செய்கை 211 9. கானத்தோகை தேவமணி கதை 226 10. தென்னமரம் 235 11. மக்கள் வாழ்க்கை 245 1. திங்களைத் தொழுதல் திங்களைப் போற்றதும் திங்களைப் போற்றுதுங் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகளித்த லான் - சிலப்பதிகாரம் திங்களை வடநூலார் சந்திரன் என்னும் பெயரால் வழங்குவர்; தமிழ்மக்கள் அதனை நிலவு, அம்புலி, பிறை, திங்கள், தண்கதிர், கலையோன், இரவோன், அலவன், அல்லோன், மதி, களங்கன், குரங்கி, முயற்கூடு முதலான பலபெயர்களால் வழங்காநிற்பர். குளிர்ந்த ஒளியினை நிலவு எனத் தமிழ்நூலார் கூறக் காண்டலாற், குளிர்ந்த ஒளியினைத் தருந் திங்களும் நிலவு எனப் பெயர் பெறுவதாயிற்று. அம்புலி என்னுஞ்சொற் சிறுமகாரால் இடப்பட்டதாகும். பிறை என்பது மறைநிலா நாளின்பிற் பிறந்த சிறுதிங்களுக்குப் பெயராக வழங்குகின்றது; புதிது பிறத்தலிற் பிறையெனப்பட்டது. உயிர்கள் உடம்புகளில் நிலைபெற்று வளர்தற்குரிய அமிழ்து நிலவொளியிலிருந்து வருதலாலும், அவ்வமிழ்து தமிழிற் கள் எனப் பெயர் பெறுதலாலும், இனிமையெனப் பொருள்தரும் தீம் என்னுஞ்சொற்குறுகித் திம் என நின்று கள் என்னுஞ் சொல்லொடுகூடித் திங்கள் என அதற்குப் பெயராயிற்று. தண்கதிர் என்பது அது குளிர்ந்த ஒளியினைத் தருதலால் வந்த பெயராகும். கலையோன் என்பதிற் கலை யென்பது நிலவொளியின் ஒருபகுதியைக் குறிக்கும்; நாளுக்கொரு கலையாக வளர்தலுந் தேய்தலுமாகிய தோற்றந் திங்களிற் காணப்படுதலால் அதற்குக் கலையோன் எனும் பெயர் போந்தது. இராப்பொழுதில் விளங்குதல்பற்றி அஃது இரவோன், அலவன், அல்லோன் எனும் பெயர்களைப் பெற்றது; அலவன், அல்லோன் என்பவற்றின் முதல் நின்ற அல் என்னுஞ்சொல் இராக்காலத்துக்குப் பெயராகும். இனி, அது பதினைந்துநாள் வளர்ந்தும் பதினைந்து நாள் தேய்ந்தும் முப்பதுநாள் கொண்ட ஒரு காலத்தை வரையறுத்தலால் மதியெனப் பெயர் பெறலாயிற்று; மதித்தல் என்பது வரையறுத்தல். இங்ஙனந் திங்களால் வரையறுக்கப் படுதல் பற்றி முப்பதுநாள் கொண்ட ஒருகாலவளவுந்திங்களெனச் சொல்லப்படும். திங்களை வடநூலார் மாசம் என்பர். இன்னும் அஃது இடையிடையே கறையுடையது போற் காணப்படுதலாற் களங்கன் என வழங்கப்படுகின்றது. குரங்கு எனுஞ் சொல்வளைவு எனப் பொருடருதலால், வளைந்து தோன்றும் பிறை குரங்கி எனப் பெயர்பெற்றது. இனித் திங்களிற் காணப்படுங் கறை சிறுமகார் கண்களுக்கு முயல் வடிவாகத் தோன்றுதலிலிருந்து அவர் அதனை முயல் உரையுங்கூடாக வழங்க, அதனால் முயற்கூடு என்னும் பெயரும்அதற்கு உளதாயிற்று என்க. இங்ஙனம் பலவகைப் பெயர்களாலும் வழங்கப்பட்டுத் திகழும் நிலாமண்டலமானது, வெம்மை மிகுந்த இத் தமிழ்நாட்டிலுள்ளார்க்கு இராக்காலத்தே குளிர்ந்த மெல்லிய ஒளியினைத் தருதலால், அவர்கள், பகற்காலத்தே வெப்பத்தையும் அயர்வையும்நீக்கித் தமக்கு அங்ஙனந் தண்ணொளிதருந் திங்களையே மிகமகிழ்ந்து கொண்டாடா நிற்கின்றனர். மேலும், நிலவொளி இல்லா இராக்காலத்தே இருள் திணிந்திருக்க. அவ்விருளிற் பாம்பு, தேள், நட்டு வாய்க்காலி, பூரான், செய்யான் முதலான நச்சுயிர்களும்; புலி, கரடி, அரிமா, ஓநாய், நரி முதலான மறவிலங்குகளும்; கள்வர், திருடர், கொலைஞர் முதலான கொடிய மக்களும் இயங்கி, மாந்தருக்கும், மாந்தருக்குப் பலவகையிற் பயன்படும் ஆடு, மாடு, குதிரை முதலான அற விலங்குகட்கும் பெருந்தீங்கையும் பெருந்துன்பத்தையும் பொருட்கேடு உயிர்க்கேடுகளையும் விளைவித்தலால், இருள் நிறைந்த இராப்பொழுதைக் காண்டலும் அமைதியான வாழ்க்கை செலுத்தும் மக்கள் அனைவரும் நெஞ்சந் துணுக்குறுகின்றனர். அங்ஙனம் நெஞ்சந் துணுக்குறாமல் துணிவாய் நள்ளிருளில் விளக்குமின்றி வழிநடந்து செல்லும் நாட்டுப்புறத்தாரில் எத்தனைபேர் அரவுதீண்டியும் புலிகோட்பட்டும் ஐயோ! வீணே சாகின்றனர்! இன்னும் எத்தனைபேர் தேள், நண்டுத்தெறுக்கால் கொட்டியும், பூரான், செய்யான் கடித்தும் ஆற்றொணாப் பெருந்துன்பம் உழக்கின்றனர்! இவ்வளவு கேட்டுக்குந் துன்பத்திற்கும் ஏதுவான இருள்செறிந்த இராப்பொழுதினைக் கண்டவுடனே மெல்லிய நெஞ்சமுடையார் எல்லாரும் அஞ்சிக் கலங்குதல் ஏற்பதேயாகும். உயிரினருமையும் உடம்பினருமையும் இன்பவாழ்க்கையினருமையும் அறியா விலங்குகளை யொத்த மாக்கள், கரிய இருள்சூழ்ந்த இரவைக் கண்டு கலங்காராயினும், அவ்வருமைகளையும், அவைகளை அருள்கூர்ந்து வழங்கிய ஆண்டவன் நோக்கத்தையுஞ் சிறிதாயினும் உணர்ந்து பார்க்கத்தக்காரெவரும் இருளிரவைக் கண்டுமருளாதிரார். சிறிதுணர்வுடையாரே அவ்வாறாயிற், பெரிதுணர்வுடைய பாவலர், நாவலர், நல்லிசைப் புலவர், சான்றோர், ஆன்றோர் முதலாயினாரெல்லாரும் பொங்கிருள் செறிந்த கங்குற்காலத்தில் எங்ஙனம் உளம் அழுங்குவாராதல் வேண்டும்! நுண்ணுணர்வும் மென்மைத் தன்மையும் வாய்ந்த அவரல்லரோ இராப்பொழுதில் எழிலொளி கிளர்ந்து முழுமதி விளங்குதல் கண்டு வரம்பிலா மகிழ்ச்சி நிரம்பி நிற்றற்குரியார்! நிலவொளியின் அழகை மிகுதியாய் உணர்ந்து இன்புறாத நாட்டாட்களுங் காட்டாட்களுங்கூட, நாட்டிலுங் காட்டிலுந் தாம் வழிதெரிந்து செல்லுதற்குந், தீய உயிர்களால் ஊறுசெய்யப்படாமல் அவைகளை விலகிச் செல்லுதற்கும் நிலாவெளிச்சம் உதவி செய்தல்பற்றி அதனை மிகவும் விரும்பா நிற்கின்றனர். மற்ற, அதன் வனப்பையும் பயனையும் அறிந்து இன்புறுகின்ற உணர்வுடையாரோ நிலவு எப்போது வரும்! நிலவு எப்போது வரும்! என்று அதன் வருகையை எதிர்பார்த்த வண்ணமாய் இருக்கின்றார்கள், முழுவிருள் கழிந்த மூன்றாம் நாள் மாலையில் மேல்பாற் செக்கர் வானத்தின்கண்ணே வளைந்த வெள்ளிக் கம்பிபோற் காணப்படும் பிறைக் கொழுந் தினை அவர்கள் எத்துணை ஆவலுடன் உற்று நோக்கிக் கண்டு தொழுகின்றனர். இருளில் ஏங்கிக் கிடந்த அறிஞரின் கண் களுக்கல்லவோ அச்சிறு பிறையின் வெளிச்சமும் பெரிதாய்க் காணப்படுகின்றது. புறத்தேயுள்ள இருளைத் துரக்கும் பிறையின்றோற்றம் அகத்தேயுள்ள மலவிருளைத் துரக்கும் இறைவன்றன் அருளொளித் தோற்றத்திற்கு அடையாளமாய் வயங்குகின்றதன்றோ? மாலைப்போதில் மேல்பாற் சிவந் தொளிரும் ஞாயிற்றினை இறைவன் திருமுகமாகவும், அஞ்ஞாயிற்றின் உச்சியிற் கிளர்ந்து வானிற் பரந்து பாய்ந்து விளங்குஞ் செக்கர் ஒளியினை இறைவன் றிருமுடிமேலுள்ள சடைப்பரப்பாகவும், அச்செக்கர் வானிற்றோன்றும் பிறையினை அச்சடைப் பரப்பிற்றங்கும் பிறையாகவுங் கருதி அதனை வழிபட்டு வருந் தமிழ்நாட்டு மேன்மக்களின் உயர்ந்த கருத்துங் கடவுள் கொள்கையும் பெரிதும் வியக்கத்தக்க விழுப்பம் வாய்ந்தனவாய்க் காணப்படுகின்றன வல்லவோ? அழகும் அறிவுங் கெழுமத் தோன்றிய இத் தமிழ்ப்பெருங்கொள்கை வேறெந்த நாட்டவரிலுங் காணப் படுகின்றிலது. தமிழ்நாட்டு மாதர்கள், மணம் ஆகாத தம் பெண்மக்கட்கு விரைவில் மணங்கூடும்பொருட்டு அவர்கள் மூன்றாம் பிறையைத் தொழும்படி செய்யும் வழக்கம் முன் னிருந்தமை, திருவாதவூரடிகள் அருளிச் செய்த, மைவார் கருங்கண்ணி செங்கரங் கூப்பு மறந்துமற்றப் பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன், உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன் சடை மேல தொத்துச் செவ்வா னடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே என்னுந் திருச்சிற்றம்பலக் கோவையார் திருப்பாட்டினால் நன்கு விளங்குகின்றது. இவ்வாறு இருளிரவுகழிந்த மூன்றாம்நாட் டோன்றுஞ் சிறுபிறையின் வடிவே, பின்வரும் நிலாநாள் இரவுகளை முன்னறிவித்து, இயற்கை யொளித் தோற்றத்தில் இறைவனது விளக்கம் முனைந்துநிற்றலை நினைவில் எழச் செய்து எல்லாரையும் இன்புறுத்துமானால், அடுத்துவரும், நாட்களில் அப்பிறை வரவரவளர்ந்து குளிர்ந்த பேரொளி வீசி இராப்பொழுதை இராப்பொழுதாக்குங்கால், அது நம்மனோர்க்கு இன்னும் எத்துணை மிகுந்த மகிழ்ச்சி யினைப் பயப்பதாகல் வேண்டும்! மூன்றாம் பிறைக்குப் பின் நாலைந்துநாட் சென்றபின் நீலவானிற் றிகழும் பாதிமதியினைக் கண்டு மகிழ்ந்து, அதன் அழகிய காட்சியினைப் புனைந்து பாடிய நல்லிசைப் புலவரிற் சிலர், அதனை வானக் கடலிற் செல்லும் ஓர் ஓடமாகச் சொல்லியிருக்கின்றனர்; பின்னுஞ் சிலர் இருள் என்னும் அரக்கனைத் துணித்தற்கு இந்நிலமங்கை உயர ஏந்திய ஒரு கொடுவாளாகவும் அதனைக் கூறினர். பின்னர்ப் போந்த முழுநிலாக் காலத்தே அதன் முழு வட்டப் பேரொளியை நோக்கிக் களிகூர்ந்த பாவாணர் சிலர் அதனை வானெனும் வாவியில் மலர்ந்த ஒரு தூவெண்டாமரை மலரேயெனச் சொற்றனர்; பாற்கடல் கடைந்தஞான் றெழுந்த வெண்பொற் பாற்குடமே அம்முழுமதி யெனவும், அக்குடத் தினின்று தெறித்துச் சிதறிய பாற்றுளிகளே அதனைச் சூழமிளிரும் விண்மீன்களெனவும் விளம்பினர்; மற்றுஞ்சிலர் அதனை வான் எனும் நீலப் பட்டாடையின்கீழ் நாலத் தூக்கிய பளிங்கு விளக்கேயெனப் பகர்ந்தனர். இவ்வாறாகப் பாவலரும் நாவலரும் புலவரும் அறிஞரும் நிலவின் அழகிய காட்சியை நோக்கி வியந்து மகிழ்ந்து அதனைப் புனைந்துரைத்த அணிந்துரைகள் அளவிலாதனவாய் விரிந்து கிடக்கின்றன. இங்ஙனமெல்லாம் பண்டைச் செந்தமிழ்ப் புலவர் திங்களின் அழகிய காட்சியினை வியந்து பாடியதுமன்றி, அதன்தோற்ற ஒடுக்கங்களால் நிலையில்லா வாழ்க்கையினை யுடைய மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய நிலையான உண்மைகளையும் எடுத்துக்காட்டி அறிவுதெருட்டியிருக்கின்றனர். திங்களானது கலைநிரம்பிய பதினைந்து நாட் களுக்குப்பிற் சிறிதுசிறிதாகத் தனது விளக்கங்குன்றிக் கடைசியாகத் தானென்றொருமுதல் இல்லாததுபோல் மறைந்து போகின்றது. அதுபோலவே, மக்களில் எத்துணைச் சிறந்த நிலையில் இருந்த அரசருஞ் செல்வரும் பிறருந் தமது செல்வவாழ்க்கையும் உடம்பின் உரமும் வரவரக்குன்றி இறுதியாகத் தாமென்றொருமுதல் இல்லாதவாறாகவே இறந் தொழிந்து போகின்றனர். இனி, நள்ளிருள் கழிந்த மூன்றாம் நாள் திடுமெனச் சிறுகீற்று வடிவாய்த் தோன்றும் பிறை உருவும் ஒளியும் வரவரப் பெருகிப் பதினைந்தாம்நாட் பெருவிளக்ககத்ததாகி அந்நாளில் வானும் நிலனுந் தனது எழிலொளிப் பெருக்கில் முழுகி விளக்கத்தான் நிகரின்றி நிலவுதல்போலத், தமது முன்னைநிலை இன்னதென்றே தாமும் அறியாமற் பிறரும் அறியாமற் சடுதியில் மக்களுக்கு மகவாய்ப்போந்து பிறந்து உடலிலும் உணர்விலுஞ் செல்வத்திலும் வாழ்விலும் மிக மிகச் சிறந்து சிலர் பலர் சிலகாலந் தலைமை செலுத்துகின்றனரல்லரோ? இவ்வாறு திங்களின்தேய்தல் வளர்தல்களிலிருந்து அறியற்பாலனவாகிய மக்கள் வாழ்க்கையின் இயல்புகளை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் பழைய நல்லிசைப் புலவர், எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி! தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து வல்லா ராயினும் வல்லுந ராயினும் வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை யாகுமதி, அருள்இலர் கொடாமை வல்லர் ஆகுக! கெடாத துப்பின் நின்பகை யெதிர்ந்தோரே (புறநானூறு, 27) என்னுஞ் செய்யுளிற் சோழன் நலங்கிள்ளி, என்னும் வேந்தனுக்கு எடுத்தறிவுறுத்தி அதனைப் பாடியிருக்கின்றனர். நிலையாச் செல்வவாழ்க் கையை நிலையென மருண்டு தம்மை மறந்து இறுமாந்தொழுகுஞ் செல்வரெதிரே உண்மை பேசுதற்கஞ்சி அவரது முகத்தெதிரே இனிக்கப் பேசி, அவர் வீசியெறியுங் காசைப் பெற்று மகிழும் பிற்றைஞான்றைப் பொய்ப்புலவர் போலாது, முதுகண்ணன் சாத்தனார் எத்துணைத் திட்பமான நெஞ்சமுடன், மாவேந்தனான சோழன் நலங்கிள்ளிக்கு, நிலையில்லா மக்கள் வாழ்க்கையின் தன்மையினையும், அதுகொண்டு நிலையுள்ள அறஞ்செய்யும் வண்மையினையுந் திங்களின் இயக்கத்தில் வைத்து நன்கு அறிவுறுத்தி மேலைத் தனிச்செந்தமிழ்ப்பாவினை அருளிச் செய்திருக்கின்றார் பார்மின்! மேற்காட்டியவாறு திங்கண்மண்டிலமானது இராக்காலத்தே புறத்துப்பரவிய இருளை இரித்துக் கண்ணறிவை விளங்கச்செய்து நமக்கு அழகிய காட்சியையும் அதனாற் பெருகிய மகிழ்ச்சியையும் அளித்தல் போலவே, தேய்ந்து வளருந் தனது இயக்கத்தால் அது மக்கள் வாழ்க்கையின் நிலையாமையினை யறிவித்து அகத்தே பரவிய ஆணவ விருளை நீக்கி, என்றும் நிலையுதலுடைய இறைவன்றன் பேரின்பப் பெருவாழ்வைப் பெறுதலில் நமக்குக் கருத்து விளங்கி ஈடுபட்டு மேலெழுமாறுஞ் செய்கின்றதன்றோ? ஆதலால், முழுவெண்டிங்களை இறைவனது அருளொளி முனைத்து விளங்கும் இடமாகக் கொண்டு, அதனைப் புறத்தே வான் வெளியிலும், நமதகத்தே புருவத் திடைவெளியிலும் புறக்கண் அகக்கண்களால் விளங்கக் கண்டு தொழுதல் இன்றியமை யாததொரு கடவுள் வழிபாடாமென்க. இது பற்றியே நம் பண்டையாசிரியரான பாரதம் பாடிய பெருந்தேவனார், பிறைநுதல் வண்ண மாகின்று, அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; எல்லா உயிர்க்கும் ஏம மாகிய நீரறவு அறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே என்று புறநானூற்று முகப்பிற் பிறைமதியை இறைவன் திருமுடிமேல் வைத்துத் தொழுதல் செய்வாராயினர். அப்பண்டையாசிரியர் வழிவந்த நாமும் அந்நன்னெறி கடைப் பிடித்துத் திங்களைப் போற்றுவாமாக! 2. சந்தன மரம் சந்தனமரமானது பழைய செந்தமிழ் நூல்களிற் சந்து, சாந்தம், ஆரம், மலயம் முதலான பல பெயர்களால் வழங்கப்படுகின்றது. இந்நான்கிலுஞ் சாந்தம் என்னுஞ் சொல்லே ஆண்டுமிகுதியாய் வழங்கா நிற்கின்றது. சாந்தம் என்னுஞ் சொல்லே சாந்து, சந்து எனக் கடைக் குறைந்தும் அதனொடு முதற்குறுகியும் வழங்குகின்றது. சந்து என்பதே பிற்காலத்திற் சிலவெழுத்து மேலுங் கூடிச் சந்தனம் என மிகுதியாய் வழங்குதலைக் காண்கிறோம், மலயம் என்னுஞ் சொல் தமிழ்நாட்டின் தெற்கே உளதாகிய பொதியமலைக்கே சிறப்புப் பெயராக வழங்கி வருதலால், அம்மலைக்கண் நிரம்பிவளருஞ் சந்தனமரமும் மலையம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இம்மலையம் என்னும் பண்டைத் தமிழ்ச்சொல்லே சந்தன மரத்திற்குப் பெயராக வடமொழி அமரநிகண்டு கூறுதலை உற்றுநோக்குங்காற், சந்தனமரம் தமிழ்நாட்டிற்கே உரித்தாவ தென்பதும், அதனாற் சந்தனம் என்னுஞ் சொல்லும் அதற்குப் பெயர்களாக மேலெடுத்துக்காட்டிய ஏனைப் பழஞ்சொற்கள் நான்குந் தனிச்செந்தமிழ்ச் சொற்களே யாமென்பதும் நன்குபெறப்படா நிற்கும். இனிச், சந்தனமரமானது தெற்கேயுள்ள பொதியமலையில் மிகுதியாய் வளர்வதாயிருந்தாலும், மற்றையிடங்களிலுள்ள மற்றைமலைகளிலும் மலைநாடுகளிலும் அது சிறுகவாயினும் வளர்கின்றது. இது மிக உயரமாக வளர்வ தன்று, நாரத்தை மரத்தினளவே உயர்வது. இதனுடைய இலைகள் வேற்படையின் முனைத்தகட்டைப் போன்ற வடிவமைந்துள்ளன. இதன்மரம் முற்றிக் காழ்ப்புக் கொள்ளு மானாற், காழ்ப்புக் கொண்ட நடுக்கட்டை மிகுந்தமணம் வீசுகின்றது. சந்தனப்பூவும் மிகு மணம் வாய்ந்தது. சந்தன மரத்தின் கட்டைகள் மஞ்சள் நிறம் உடையனவும், வெண்மை நிறம் உடையனவும், சிவந்த நிறம் உடையனவும் என மூன்று திறமாயிருக்கின்றன. சந்தனக்கட்டைகளை அரைத்து, அரைத்தெடுத்த தேய்வையைத் தனியாகவும், பனிநீர் இலவங்கம் ஏலம் கருப்பூரம் சாதிக்காய் தக்கோலம் முதலான மணப்பொருள்கள் கூட்டிய கலவையாகவும் எடுத்துக், கட்டியாகவோ கரைத்த குழம்பாகவோ இறைவன் திருவுருவத் திற்குச் சாத்துகின்றார்கள், சந்தனத் தூளையுஞ் சந்தனச் சீவுகளையும், அகில் அகரு பச்சிலை சிச்சிலிக்கிழங்கு கிளியூரற்பட்டை மட்டிப்பால் பாற்சாம்பிராணி முதலான மணப்பொருள்களுடன் கலந்து இடித்து, இடித்த தூளைத் திருக்கோயில்களில் இறைவனெதிரே நெருப்பிலிட்டுப் புகைக்கின்றார்கள். இப்புகையானது நறுமணம் பரப்பித் தொழவருவார்க்கு மகிழ்ச்சியளித்து, மனத்தை அமைதிப்படுத்தி, அவரது நினைவையும் ஒருமுகப்படுத்தி அதனை இறைவன் திருவுருவத்திற் பதித்து, அவரது நெஞ்சம் அன்பிற்றதும்பி நிற்குமாறுஞ் செய்கின்றது. அதுவேயுமன்றி, மக்கள் நெருக்கடியாலும், அவரதுடம்பினின்று வெளியாகும் வியர்வை நச்சுக்காற்றுக்களாலும், நோய் கொண்டாரிடமிருந்து பன்னூறாயிரக் கணக்காய்ப் புறத்தே வரும் நச்சுப்புழுக்களாலுங் கோயில்களின்உள்ளுள்ள காற்று நஞ்சாகுதலால் அங்கே புகைக்கப்படுஞ் சந்தனம் முதலான நறுமணப்பண்டங்களின் புகை, அந்நச்சுப்பூச்சிகளையும் நச்சுக்காற்றையும் அப்புறப்படுத்திக், கோயிலையுங் கோயிலினுள் வணங்க வருவாரையுந் தூய்மைசெய்து, அவ் விடத்தை நறுமணங் கமழச் செய்கின்றது. திருக்கோயில்களின் மட்டுமேயன்றிச், சிறப்புநாட் கொண்டாடுங் கழகங்களிலுந், திருமணம் நடத்தும் இல்லங்களிலும், மக்கள் நறுவிய மலர்களும் மலர்மாலைகளும் நிறைத்தலுடன், சந்தனமும் பனிநீருந் தெளித்து அவ்விடங்களை நன்மணங்கமழச் செய்தலால், அங்குக் குழுமுவார்க்கு மனக்களிப்புண்டாதலே யல்லாமல், மனநலம் உடல்நலங் களும் உண்டாகா நிற்கின்றன. மன்றலுக்கு (கல்யாணத்திற்கு)த் தமிழில், திருமணம் என்னும் பெயர் அமைந்தது, அஃது அயருங்காலத்து எங்குமுள்ள மணப்பண்டங்கள் எல்லாம் அஃதயருமிடத்து ஒருங்குவந்து தொகுதல்பற்றியேயாம். இங்ஙனமெல்லாம் உடம்பும் உள்ளமும் ஒருங்கே குளிர்ந்து தூயவாய்த் திகழ்தற்குப் பேருதவிசெய்யும் மணப் பண்டங்களுட் சிறந்ததாகிய சந்தனம் இல்லாத ஒரு கொண்டாட்டமுந் திருநாளுந் தமிழ்நாட்டில் எங்குமே இல்லை. இத்துணைச் சிறந்ததாகிய இச்சந்தனம் இயற்கையில் இத்தமிழ்நாட்டுக்குக் கிடைத்தாற்போல வேறுநாடுகளுக்குக் கிடையாமையும் நினைவிற் பதிக்கற்பாற்று. சந்தனக்கட்டைகளினின்று வடித்தெடுக்கப்படும் நெய் மிகுமணங் கமழ்வது. மகிழ், முல்லை, மருக்கொழுந்து, மலைப்பச்சை, வெட்டுவேர் முதலியவைகளினின்று இறக்கப் படும் மணநெய்யெல்லாஞ் சந்தனநெய்யிற் கலந்தே செய்யப்படுகின்றன. தன்னிற் கலக்கப்படும் இம்மணநெய்களின் மணம் இல்லையாய்ப் போன பின்னுஞ், சந்தனநெய் தன் மணங் குறையாதாய்க் கமழுந்தன்மை யொன்றுமட்டும் உடையதன்று. ஆண் பெண் பாலார்க்குக் குறிகளைப் பற்றி வருங் கொடுநோய்களையுந் தீர்க்குந் திறம் வாய்ந்தது. உப்புப், புளி, காரம், நல்லெண்ணெய், கடுகு, பாகற்காய், காப்பிவிதை, தேயிலை, கோக்கோ முதலானவைகளை உணவாகவுங் குடிநீராகவும் அருந்தாமல், இச்சசந்தன நெய்யை நாற்பது நாட் சிறிது சிறிது பருகிச் சிறந்த உணவுப்பண்டங்களையே யருந்திவரிற் குறிவழிவந்த நோய் கொண்டார் அந்நோய் வேரோடு அறப்பெற்றுத், தமதுடம்பு பசும்பொன்னென மிளிரப்பெறுவர். இல்லத்தினுள்ளே முடைநாற்றந்தரும் அழுக்குக்களை அகற்றி, இச் சந்தனநெய்யைச் சில துளிகளாக நெருப்பிலிட்டுப் புகைத்தாலும், வெந்நீரிற்கலந்து தெளித்தாலும், அது வீட்டிலுள்ள நச்சுப்பூச்சி நச்சுக்காற்றுக்களை அகற்றி உடம்புக்கு நலந்தருவதல்லாமலுந், தனது நறுமணத்தால் உள்ளத்திற்கு மகிழ்ச்சி தந்து அதற்குப் பெரியதோர் ஆறுதலையும் பயக்கும். இத்துணைச் சிறந்த சந்தனமரங்களைப் பண்டைத் தமிழரசர்கள் செல்வர்கள் தம்முடைய மலைகளில் நிரம்ப வைத்து வளர்த்து, அவற்றின் குழம்பைத் தம்முடைய உடம்பில் மிகுதியாய்ப் பூசி வந்தனரென்பதும், அவர் தம் மகளிர்கள் தமது மார்பின்மேற் சந்தனக்குழம்பாற் கோலம் வரைந்து கொள்வதென்பதும், அங்ஙனம் வரையுங்கோலந் தொய்யில் எனப் பெயர் பெறுமென்பதும் பழைய செய்யுட் களால் இனிது புலனாகின்றன. ஈகையிற்சிறந்த வேள்பாரி என்னும் மன்னனுக்குரிய ‘பறம்பு’ என்னும் மலையிடமெங்குஞ் சந்தனக் காடுகளே செறிந் திருந்தனவென்றும்., அம்மலைமேல் உறையும் குறத்திப் பெண்கள் அங்குள்ள சந்தனமரக்கட்டைகளையே விறகாக மாட்டி அடுப்பெரித்தனரென்றும் நல்விசைப் புலவரான கபிலர் அம்மன்னன்மேற் பாடிய, குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி ஆர மாதலின் அம்புகை அயலது சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு பாரியும் பரிசிலர் இரப்பின் வாரேன் என்னான் அவர்வரையன்னே என்னும் அருந்தமிழ்ச் செய்யுள் ( புறநானூறு, 108) அறிவித்தல் காண்க. பழைய தமிழ்நூல்களில் எருமையூர் என்றும், இஞ்ஞான்று மைசூர் என்றும் வழங்கப்படுவதாகிய நடுநாட்டின் மலைகளில் ஏராளமாகப் பயிராகுஞ் சந்தனமரங்களின் கட்டைகள் நனிமணங் கமழ்வனவாயும், அழுத்தம் வாய்ந்தனவாயும் இருக்கின்றன. இக்கட்டைகளில் மிக அழகிய தெய்வவுருக்கள் விலங்குகளின் வடிவுகள் பூங் கொடிகள் செடிகள் மரங்கள் முதலியவற்றின் காட்சிகள் பெரிதும் வியக்கத்தக்கவாறாய்க் கம்மர்களாற் செதுக்கியமைக்கப்படுகின்றன. சந்தனக்கட்டைகளிற் கொத்திய இவ்வுருக்களில் திறமானவைகளைச் சென்னையிலுள்ள கண்காட்சி நிலையதிற்குச் செல்வாரெல்லாருங் கண்டு மிகவும் இறும்பூது எய்துகின்றனர். இனி, வேனிற்காலத்தில் வெங்கதிர் வெப்பம் முதிர்ந்து அழற்றும்போது இத்தென்றமிழ்நாட்டவர், சந்தனத்தை அரைத்து, அவ்வரைப்பைத் தனியாகத் தண்ணீரிற் கலக்கியேனும், மணக்கூட்டுகளுடன் சேர்த்துப் பனிநீரிற் குழப்பி யேனும் உடம்பின்மேற் பூசிக்கொள்ளுகின்றார்கள், அவ்வாறு செய்யவே. அழற்சியால் உடம்பெங்கும் நிறைந்த வேர்க்குரு என்னுஞ் சிறுபருக்கள் உதிர்ந்து போகின்றன. இங்ஙனமெல்லாஞ் சந்தன மரமானது மக்களுக்கு உடல்நல மனநலங்களைத் தருஞ் சிறப்பினதாயிருத்தல் கண்டே, மேல்நாட்டில் உள்ள அரசர்களுஞ் செல்வர்களும் பண்டைக் காலத்திருந்தே இதன் கட்டைகளை இங்கிருந்து தம்முடைய மரக்கலங்களில் வருவித்து, அவற்றைப் பயன்படுத்தி வந்தார்கள். இற்றைக்கு மூவாயிர ஆண்டுகளுக்கு முன் மேனாட்டிற் செங்கோல் ஓச்சிய சாலமன் என்னும் வேந்தன், தன்னுடைய கப்பல்களை அடுத்தடுத்து இத்தமிழ்நாட்டிற்கு விடுத்து, இங்கிருந்து ஏற்றுவித்து வருவித்த அருஞ்சரக்குகளிற் சந்தனக் கட்டை அகிற்கட்டைகளுஞ் சொல்லப்பட்டிருத்தலை நினைவுகூர்தல் வேண்டுமென்பது. 3. காலதியன் கிரிசெலாள் கதை மேற்கே இத்தாலியா தேயத்திற் புகழோங்கிய குறுநில மன்னர்களில் மிகச் சிறந்தவனாகிய காலதியன் என்பான் ஒருவன் இருந்தனன். அவன் இளைய அகவையினனேனும், மனைவிமக்கள் இல்லாமையினாலும், மணஞ் செய்து கொண்டு மக்களைப் பெற்று இன்புறல்வேண்டும் என்னும் எண்ணம் இல்லாமையினாலுந், தனது காலத்தை வேட்டமாடுவதிலும், வல்லூறு என்னும் பறவையைக் கொண்டு பிற புட்களைப் பிடிப்பதிலுமே கழித்துவந்தான். இவன் மணஞ்செய்துகொள்ளாதிருத்தலை அறிவுடைமையாகச் சிலர் புகழ்ந்துபேசினாலும், அவனது செங்கோல் நீழற்கீழ் வாழுங் குடிமக்கள் அவன் அவ்வாறிருத்தலை விரும்பாராய், அவன் தனக்குத்தக்காள்ளா ஒருத்தியை மணங்கூடல் வேண்டுமென்றுந், தன்னரசுக்கு உரிமையாக ஒருமகன் இல்லாது அவன் இறத்தல் ஆகாதென்றும், நல்ல பெற்றோர்க்கு மகளாய்ப் பிறந்த ஒரு நங்கையைத் தாமே தேடியாராய்ந்து அவற்கு மணம் பொருத்தினால் தமது ஆவல் நிறைவேறுவதுடன் அவற்கும் மிகுந்த மனவமைதி யுண்டாகுமென்றும் வற்புறுத்தித் , தமது கருத்துக்கு இணங்குமாறு அவனை வேண்டிக்கேட்டனர். அவரது வேண்டுகோளைச் செவிமடுத்த அம்மன்னன்: அருமை நேயர்காள், யான் தலையிடுதற்கு விரும்பாத ஒரு நிகழ்ச்சியில் என்னைத் தலையிடுமாறு நெருக்குகின்றீர்கள். ஆனால், ஓராண்மகனோடு அவனிருக்கும் நிலைமைகட்கெல்லாம் இசைந்து அவனோடு ஒத்து வாழ்க்கை செலுத்தத் தக்க ஒரு பெண்மகள் கிடைத்தல் அரிதரிது. கணவனொடு மாறுகொண்டு நடக்கும் மனைவிமாரையே எங்குந்தொகை தொகையாய்க் காண்கின்றாம்! உலகத்திலுள்ள எல்லாத் துன்பங்களிலுங் கொடியது, தனக்கு இசையாத ஒரு மனைவியுடன் கூடியிருக்கப் பெறுதலேயாம். மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் (குறள் 51) இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை (குறள் 52) தாய்தந்தையாரின் நலத்தைக் கண்டு நல்ல ஒருமாதைத் தேடித் தருவேம் என நீங்கள் பகர்வதும் பொருத்தமாயில்லை; ஏனென்றால், நீங்களாவது யானாவது பெற்றோர்களின் மறைந்த மனவியற்கையைக் காண்டல் இயலாது. அல்லாதவர்களின் அவ்வியற்கையை நாம் அளந்தறிதல் கூடுமென்றே வைத்துக் கொண்டாலும், புதல்வியர் தம் தாய் தந்தையரின் இயற்கை தங்கட் பதியப்பெறாதிருத்தலையும், அவர் தத்தம் இயற்கைப்படியே யொழுகுதலையும், ஆங்காங்கே ஒவ்வொருநாளுங் காணப்பெறுகின்றனம் அல்லமோ? என்றாலும், மணவாழ்க்கை என்னுஞ் சங்கிலியால் யான் பிணிக்கப் பெறுதல் வேண்டுமென நீங்கள் பெரிது விரும்பு தலால், யான் தங்களது வேண்டுகோளுக்கு இணங்குதல் செய்கின்றேன். ஆயினும், இந்நிகழ்ச்சியில் நாம் எதிர் பார்த்தவண்ணம் நேராதாயின், அதுபற்றிக் குறை சொல்லப்படவேண்டியவர் என்னைத்தவிரப் பிறர் உணராகாமைப்பொருட்டு, யான் என்னுடைய கண்களைக் கொண்டே ஒரு மணமகளைத் தேடிப்பெறல்வேண்டுமன்றிப், பிறருடைய கண்களைக் கொண்டு அவளைத்தேடியடைதல் கூடாது. ஈதெனது உறுதி. நல்லது, யான்தேடிப் பெற்ற மனையாளை நீங்கள் பெருமைப்படுத்தி நன்கு மதித்தல்வேண்டும். அங்ஙனஞ்செய்திலீராயின், அது நுங்களுக்கொரு பெருங் குறைபாடாவதுமன்றி, எண்ணம் இல்லாதிருந்தும் நுங்கள் வேண்டுகோட்படி ஒரு மங்கையை மணந்துகொண்ட எனக்கும் ஒரு பெருவருத்தத்தினை விளைத்தீராவீர்! என அவர்கட்கு விடைமொழி கூறினன். அச்சொற்கேட்ட அக்குடிமக்கள், எங்ஙனமேனுந் தம் மன்னன் மணஞ்செய்தகொண்டால், அதுவே தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகும் என்றனர். பின்னர்ச் சிலநாட்கள் சென்றன. சென்றபின், அம்மன்னனது மாளிகைக்கு நெடுந்தொலைவில்லாததான ஒரு சிற்றூரின்கண் உயிர்வாழ்ந்த ஓர்ஏழைக்குடியானவன் தன்மகள் புறத்தே அழகிலும் அகத்தே மனநலங்களிலும் மிகச் சிறந்தவளாக அம்மன்னனுக்குக் காணப்பட்டாள். அவளுடன் தான் இனிதுவாழக்கூடுமென்பது அவனுக்குத் தோன்றியது. ஆகவே, அம்மன்னன் மேலும் ஆராய்தலையொழித்து, அவளை மணஞ்செய்து கொள்ளும் ஒரே தீர்மானத்துடன், அவள் தந்தையுடன் சூழ்ந்து, அவனை அதற்கு உடன்படுத்திக் கொண்டனன். அதன்பின், அவன்தான் அரசுசெலுத்தும் நாட்டின்கண்உள்ள குடிமக்களையுஞ் செல்வர்களையும் தனது அரண்மனைக்கு ஒருங்கு வருவித்து, மணஞ்செய்தற்குத் தக்கதொரு நாளையும் அதற்குரிய எல்லாச் சிறப்புகளையுஞ் செய்துவைத்து, மணமகளைக்கொணர்தற்கு வந்தவர்கள் எல்லாருடனுங் குதிரையூர்ந்து அவளிருக்குஞ் சிற்றூர்க்குச் சென்றான். சென்று அவள் இருக்குங் குடிலில் அவள் தந்தையைக் காண்டற்குத் தான் ஊர்ந்துபோந்த புரவியி னின்றும் அவன் இழிந்தபொழுது, அம்மங்கைதான் தண்ணீர் முகக்கச் சென்ற கிணற்றினின்றுந் தண்ணீர்க்குடங்கொண்டு மற்றைப் பெண்களுடன் திரும்பி அக்குடிலுக்கு விரைந்து வருதலைக் கண்டான். கண்டதும் அவன் அவளை நோக்கிக் கிரிசெலா, நின்தந்தை எங்குளார்? என வினவினன். அதற்கு அவள் நாணத்துடனும் பணிவுடனும், அருள்மிக்க அரசர் பெருமானே, அவர் வீட்டிலேதான் இருக்கின்றார் என விடை பகர்ந்தனள். அதுகேட்டு அம்மன்னன் தன்னுடன் போந்தவர்களை அக்குடில்வாயிலில் நிறுத்தித், தான்மட்டும் அதனுட் சென்று, அங்கிருந்த அவடன்றந்தையை நோக்கி, ஐய, நுங்கள் முன்னிலையிலும் என்னுடன் போந்தார் முன்னிலையிலும் நுங்கள் புதல்வியை யான் சிலகேட்டுத் தெளிய வேண்டும் எனப் புகன்று, அவனை அக்குடில்வாயிற் புறத்தே கொணர்ந்து நிறுத்தி, அங்கு நாணமும் அச்சமும் மிக ஒரு பக்கத் தொதுங்கி நின்ற அம்மடந்தையைப் பார்த்து, அழகிய கிரிசெலா, யான் நின்னை என் மனைவியாகச் செய்துகொண்டால், யான் சொல்வன செய்வனவாகிய எல்லாவற்றிலும் நீ நின்னாற் கூடியமட்டும் யான் உவக்கும்படி நடந்துகொள்வையா? இன்னும், நீ அமைதியாகவும், பணிவாகவும், பொறுமை யாகவும் ஒழுகுவையா? என்று கேட்டான். அதற்கவள், பெருமானே, இறைவனது அருளுதவியால், யான் தங்கள் கருத்தின்படியே நடப்பேன் என மறுமொழி நுவன்றனள். அதன்பின் அம்மன்னன் அவளது கையை மெல்லெனத் தன் கையாற்பற்றி அவளை அக்குடிலினுட் செலுத்தி, அவள் அணிந்திருந்த இழிந்த ஆடைகளைக் களைவித்துத், தான் கொணர்ந்த உயர்ந்த பொற்சரிகைமிடைந்த பன்னிறப் பட்டாடைகளையும் மதிப்பரிய மணிக்கலன்களையும் அணிவித்து, அவளது கரிய செழுங்கூந்தலைப் பின்னிப் பிடர்ப்புறத்திடுவித்து, அவளது சென்னிமிசைப் பன்மணி குயிற்றிய பொன்முடியொன்றைத் தானே தன் கைகளாற் கவித்தனன். அதன்பின் அவன் அவளை அக்குடில்வாயிற் புறத்தே கொணர்ந்து நிறுத்தித், தன்னுடன் போந்தார் அனைவரும் வியந்து மலைக்க, அவளை நோக்கிக், கிரிசெலா, நீ என்னை நின் கணவனாக ஏற்றுக் கொள்வையா? என வினவினான். அவள் உடனே நாணத்துடன் தலைகவிழ்ந்த வளாய், ஆம் எம்பெருமானே, மிகவும் ஏழையேனான என்னைத் தாங்கள் தங்கள் மனையாளாக ஏற்றுக் கொள்வீர்களானால் என்று விடைபகர்ந்தனள். அதுகேட்டு அம்மன்னன், நல்லது, கிரிசெலா, யான் வைக்கும் இத்தூய முத்தத்தால் நின்னை என் மனைவியாக உறுதிப்படுத்து கின்றேன், என நுவன்றுகொண்டே அவளுடைய சிவந்த கொவ்வை இதழ்களின்மேல் முத்தம் இட்டனன். அதன்பின் அவளை அவன் பால்போலுந் தூவெண்ணிறத்ததாகிய ஒரு மட்டக் குதிரைமேல் ஏற்றி, அங்கிருந்து சிறப்பாகத் தனது அரண்மனைக்குக் கொண்டு வந்தனன். பின்னர் அவன் அவளை மணந்துகொண்ட திருமண விழாவானது, அவளை அவன் ஓர் அரசன்மகளாக நினைத்துச் செய்த முறையாகவே மிக்க சிறப்புடன் நிறைவேறியது. அதற்குத் தக்கபடி அப்பெண்மணியும் ஓர் அரிய பிறவியேயாவள்; உடம்பு நலத்தாலுங் குண நலத்தாலும் அவள் ஏதொரு குறைபாடு மின்றித் திகழ்ந்தனள்; அழகிலோ அவள் நிகரற்றவள்; குணத்திலோ மனத்துக்கினியவள், அருளுடையவள், நயம் மிகுந்தவள். இருந்தவாற்றால், அவளை ஒருநாட்டுப்புறத்து இடையன் மகளாகக் கூறுவது கூடாதாய்ச், சிறந்த ஒரு செல்வரின் புதல்வியாகக் கூறுவதே பொருத்தமாகத் தோன்றியது. அவளை முன்னறிந்தவர்கள்கூட இப்போதவள் அடைந்த நிலைமையினைக் கண்டு இறும்பூதுற்றனர், இன்னும், அவள் தன் கணவனுக்கு மிகவுங் கீழ்ப்படிந்து ஒழுகுபவ ளாயுந், தனக்குரிய எல்லாக் கடமைகளையுஞ் செய்வதில் ஆர்வம் மிக்கவளாயும், எவர்க்கும் எவ்வாற்றானுஞ் சினத்தை யுண்டாக்காமற் பொறுமையுடன் நடப்பவளாயும் இருந்தமையால், அவள் கணவன் மனநிறைவு மிக்கவனாய் இம்மண்ணுலகத்திற்றானொருவனே நல்வினையிற் சிறந்த வனென எண்ணினான். அதற்கேற்பவே, கிரிசெலாளுந் தன் கணவனது அரசின் கீழ்வாழுங் குடிமக்களிடத்தில் அளியும் அருளுங்காட்டி நடந்தனள். அவளைப் பார்த்துப் பழகினவர்கள் எல்லாரும், அவள்மேற் பேரன்பு பாராட்டி வந்ததுமன்றி, மனமார அவளைப் பெரிது பெருமைப்படுத்தியும், அவளுடைய நலத்தையும் பெருந்தன்மையையும் நீண்ட செல்வ வாழ்க்கையையும் வேண்டி இறைவனைத்தொழுதும் வந்தனர். மேலும், அவடன் கணவனான காலதிய மன்னனைப்பற்றிஅக்குடிமக்கள் தாம் முன்னே கொண்டிருந்த எண்ணத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டியவராயினர். அவன் தனக்கியைந்த மனையாளைத் தேடித் தெரிந்தெடுத்த நுட்ப அறிவின் பான்மையினையும், அவனையன்றி இவ்வுலகத்தில் வேறெவரும் அங்ஙனம் அதுகாறுஞ் செய்யமாட்டாமையினையும், ஓர் ஏழை நாட்டுப்புறக் குடிசை வீட்டினுட்பிறந்து வளர்ந்தமையால் உண்டான பரும்படியான வழக்க வொழுக்கங்களின்கீழ் மறைபட்டிருந்த அவடன் மதிப்பற்ற கற்பொழுக்க மாண்பினையும் பிறநலங்களையும் ஏனையோர் தெரிந்து அளத்தல் இயலாமையினையும் அவர்கள் எடுத்தெடுத்துப் பேசி வியந்து மகிழ்ந்தனர். சிறிது காலத்திலெல்லாம் அந்நாட்டவரே யன்றி அக்கம்பக்கத்துள்ள ஊரவர்களும், அம் மாதரசியின் அரிய வாழ்க்கை நலத்தையுந் தெய்வநேயத்தையும் அறநெஞ்சத்தையும் மற்றை நற்செய்கை களையுமேயன்றி வேறெதனையும் பேசாராயினார். இதனால், இந்நங்கையை மணம் புரிதற்குமுன் அம்மன்னன் மேற் கொண்டிருந்த பொருந்தா நடைகளைப்பற்றிய பேச்சும் மறைந்துபோயது. இங்ஙனம் மணவாழ்க்கையிற்புகுந்த அவ்வரசிக்கும் அரசற்கும் முதலில் ஒரு பெண்மகவு பிறந்தது. அதன்பின் நாலைந்து ஆண்டுகள் கழித்து அவ்வரசி கருக்கொண்டு தன்கொழுநன் பெரிது உவக்கும்படி ஓர் ஆண்மகவினையும் ஈன்றனள். அந்நிகழ்ச்சிக்குப்பின் அவ்வரசனுள்ளத்திற் புதுமை யான ஓரெண்ணந் தோன்றலாயிற்று. அதாவது: தன்னழகிய மனையாளின் மனப்பொறுமையினை, ஒரு நீண்டகாலப் பயிற்சியினாலுந் தாங்கமுடியாச் சில நடைகளாலும் ஆராய்ந்து கண்டறியவேண்டுமென்பதேயாம். முதன்முதற், கொடுஞ் சொற்களால் அவட்கு வருத்தத்தை விளைவிக்க முயன்றும், அதன்பின் கடும்பார்வையாலுஞ் சுளித்த முகத்தாலும் அதனை மிகுதிப்படுத்தியும் அவ்வளவில் அமைதிபெறாமல், தான் இழிபிறப்பும் இழிந்த பழக்கமும் உடைய ஒருத்தியை மணந்துகொண்டு அவளால் இரவலரையொத்த மக்களைப் பெறப்போவது பற்றியும் முன்னமே பிறந்துள்ள தன் மகளைப்பற்றியும் தன் குடிமக்கள் முறுமுறுத்துத் தன்மேல் அருவருப்புறுகின்றார்களெனவுங் கூறினான். அச்சொற்கேட்ட கிரிசெலாள், சிறிதுந் தன்முகம் வேறுபடாமலுந் தன் தோற்றத்தில் ஏதுங் குணமாற்றங் காணப்படாமலுந் தன் தலைவனை நோக்கி, மாட்சிமை தங்கிய என் அருட்பெருமானே, தங்களுடைய மேன்மைக்கும் மனநலத்திற்குந்தகத், தாங்கள் என்னை எவ்வாறு செய்யவேண்டினாலும் அவ்வாறு செய்யலாம்; ஏனென்றால், யான் தங்கள் குடிமகளிற் கடைப்பட்டாரினுங் கடைப்பட்டவள் ஆவேன் என்பதுந், தாங்கள் என்னை உயர்த்த விரும்பிய உயர்நிலைக்கு யான் தகுதியில்லாதவள் என்பதும் யான் நன்கறிவேன் என மொழிந்தனள். இவ்விடைமொழியானது அம்மன்னன் கொண்ட நோக்கத்திற்கு ஏற்றதாயிருந்தது. ஏனென்றால், அவன் தான் அவளை உயர்த்திவைத்த உயர்நிலையானது, இறுமாப்பினை யேனும் பிறரை இழிவாகக் கருதுங்குணத்தையேனும் பெருமையாற் பேசாதிருக்கும் இயல்பையேனும் அவள்பால் வருவிக்கவில்லை யென்பதை அதனால் அவன் நன்குணர்ந்து கொண்டான். அவள் வயிற்றிற் பெண் பிறந்ததுகண்டு தம் குடிமக்கள் மனத்தாங்கவில்லையென்று அவன் அங்ஙனம் அவளுக்குத் தெளிவாகவுந் திறப்பாகவுஞ் சொல்லிய சிறிது காலத்திலெல்லாம், அவன் தன் ஏவலாள் ஒருவனை அவள் பால் விடுத்தனன். அவ்வேவலன் மனக்கலக்கமுந் துன்பமுந் துயரமும் உள்ளவனாய் அம்மாதரசிபாற்போந்து, பெருமாட்டி, யான் என்னுயிரை இழவாதிருக்கவேண்டுமானால், எம்பெருமான் கடுமையாய் இட்ட கட்டளைப்படி யான் தங்கள் இளம்புதல்வியை எடுத்துச் சென்று- எனப் புகன்று, அவ்வளவில் தன் பேச்சை நிறுத்திக் கொண்டான். அப் பெருமாட்டி அச்சொற்களைக் கேட்டதும், அவனது சுளித்த முகப்பார்வையினையுந், தன் கணவன் தனக்கு முன்னே சொன்னதையும் நோக்கிநினைந்து, அவன் தன் பெண் மகவினை எடுத்துச் சென்று கொலைபுரியும்படி தன்வேலைக்காரனை ஏவினனெனவே எண்ணினாள். எண்ணித், தொட்டிலிற் கிடந்த மகவினை உடனே யெடுத்து முத்தமிட்டு அதற்கு இறைவன் அருள் உண்டாகுக வென்று வாழ்த்தித், தாய்க்கு இயல்பாக உள்ள அன்பினால் அவளது நெஞ்சந் துடித்ததாயினுந் தன் முகத்திலே ஏதொரு வேறுபாடுங் காட்டாதவளாய், அதனை அவ்வேவலன் கையில் மெல் லெனவைத்து, இதோ, நண்பனே, இம்மகவினை எடுத்துச்செல்! நின்மன்னன் நினக்குக் கற்பித்தபடி இதனைச் செய்! ஆனாலும், மன்னன் விரும்பினாலன்றிக் கொடிய விலங்கு களும் பறவைகளும் இதனைத் தின்னும்படி காட்டுப் பாங்கான இடத்தில் இதனைக் கிடத்திவிடாதே! எனப் புகன்றனள். பின்னர், அப்பிள்ளையொடு சென்ற அப்பணியாளன் தன் மன்னன்பாற் சென்று, அரசிமொழிந்ததை விளம்ப, அவன் அவளது ஒப்பற்ற மனத்திட்பத்தையறிந்து மிகவும் வியப்படைந் தான், அப்பால், அவ்வரசன் அம்மகவினைப் பொலோனா என்னும் ஊரில் தனக்கு உறவினளாயுள்ள ஒரு சிறந்த பெருமாட்டிபால் விடுத்து, அஃது இன்னார்க்கு உரிய பிள்ளையென்பதைத் தெரிவியாமல், அதனை உயர்ந்த முறையிற் கருத்தாய் வளர்த்துக் கல்வி பயிற்றிவருமாறு மட்டும் அவளை வேண்டிக்கொண்டான். பிறகு சிறிதுகாலஞ் சென்றபின், அவ்வரசி பின்னுங் கருக்கொண்டு ஓர் ஆண்மகவினை ஈன்றாள், அவ்வழகிய மகனைக் கண்டு அரசன் இதற்குமுன் அடையாத ஒரு பெருங் களிப்பினை உள்ளுக்குள் அடைந்தனனாயினும், இதுவரையில் தான் அவளது பொறுமையினை அறியச் செய்ததில் அமைதிபெறானாய், முன்னையிலுங் கொடிய சொற்களாலுங் கடிய பார்வையாலுங் காரமான தன் கருத்தை அறிவிப்பான் புகுந்து, கிரிசெலா, இவ்வழகிய ஆண்பிள்ளையை ஈன்றமையால் நீ என்னைச் சாலவும் உவப்பித்தனையாயினும், என் குடிமக்கள் இப்பிள்ளை பிறந்ததையறிந்து மனம் உவவாதவர்களாய், எனது சிறந்த அரச மரபில் வராமல் ஓர் ஏழைக் குடியானவன் மரபில்வந்த ஒருவன், யான் காலமானபின், தமக்கு அரசனாயுந் தலைவனாயும் வரப்போவதைப் பற்றி மன எரிவுடன் எங்கும் பழி தூற்றா நிற்கின்றனர். அதனால் அவர்கள் என்னை இவ்வரசியலி னின்றுந் துரத்திவிடுவார்களோவென நினைந்தும் அச்சமுறுகின்றேன். அங்ஙனம் அவர்கள் செய்யாமைப் பொருட்டு, இந்தப் பிள்ளையையும் நான் ஒழித்துவிடல் வேண்டும்! நின்னையும் இங்கிருந்து அகற்றிவிட்டு, என் குடிமக்களின் உள்ளத்திற்கிசைந்த வேறொரு மனையாளையும் யான் மணந்துகொள்ளல் வேண்டும் என்று நெஞ்சிற் சிறிதும் ஈரமின்றிக் கூறினான். இவ் வன்சொற்களைச் செவியேற்ற கிரிசெலாள் நைந்து வருந்தும் உள்ளத்தினளாயினும் பொறுமையின் மாறாதவளாய், மாட்சிமை நிறைந்த அருட்பெருமானே, தங்களது அரசவுள்ளத்திற்கு எஃது உகந்ததோ அதனையேசெய்து மனவமைதி பெறுங்கள்! என்னைப் பெருமைப்படுத்தவேண்டுமென்று ஒருகாலும் நினையாதேயுங்கள்! தங்க ளுள்ளத்திற்கு இசைந்தது தவிர, வேறெதுவும் யான் விரும்பத்தக்கதும் அன்று உயர்ந்ததும் அன்று! என விளம்பினள். அதன்பின் சிலநாட் சென்றபிறகு அம்மன்னர் பிரான் முன்னே தன் பெண்மகவுக்குச் செய்தபடியே, இப்போது தன் ஆண்மகவுக்கும் அதே ஏவலாளனை விடுத்து, அதனைக் கொலை செய்வித்தற்பொருட்டுப் போக்கினான்போல் வெளிக்குக்காட்டி, அதனைப் பொலோனா நகருக்கு விடுத்து அங்கே அது தன் அழகிய அக்காளுடன் வளருமாறு திட்டம்பண்ணினான். அப்பெருமாட்டியோ முன்னே தன் முதற்பிள்ளையைக் கொடுத்தபோது எங்ஙனம் ஏதொரு மனக்குறையுங் காட்டாதிருந்தனளோ அங்ஙனமே இப்போதும் இருத்தல் கண்டு, அவள் கணவற்குண்டான வியப்பு இவ்வளவென msÉl‰ghyj‹W; அவன், அவளைப்போன்ற மற்றொருத்தி இவ்வுலகில் எங்குமிருத்தல் இயலாதென்று எண்ணினான். தனது சூதான சூழ்ச்சியைச் செய்யாதிருந்தால், தன் மனையாள் தன் பிள்ளைகள்பால் எவ்வளவு அன்புபூண்டு அவைகளைத் தன் இன்னுயிரெனக் கருதி எவ்வளவு கருத்தாயோம்பி வளர்த்திருப்பள் என்பதை அவன் அவளது நெஞ்சத்தியற்கையை உற்றுநோக்கி யாராயும் முகத்தாற் கண்டு கொண்டான். மற்று, அங்ஙனம் ஆராய்ந்து கண்டிலே னால், அவள் உலகியன் முறைக்கு அன்புடையவள் போல் நடப்பவளேயன்றி உள்ளபடியே தன் மக்கள் மாட்டு அன்புடையவள் அல்லளென்றும், எத்தனை பிள்ளைகள் தனக்குப் பிறந்தாலும் அத்தனை பிள்ளைகளையுந், தான் வேண்டியபடி, அவள் தன்னினின்றும் அங்ஙனம் எளிதாக அகற்றிவிடத் தக்கவளே யென்றும் அவன் அவளைப் பிழையாக எண்ணியிருக்கக்கூடும்; ஆனால், அவளைத் தான் ஆராய்ந்து பார்த்த மட்டில், அவள் அன்பிற் கனிந்த தாயின் இயற்கை யுடையவளே யென்றும், எத்துணைக் கடுமையான இடிப்புகளையும் பொறுக்கவல்லவளே யென்றும் அவன் நன்குணர்ந்துகொண்டான். இனி, அம்மன்னன்றன் குடிமக்களோ, அவன் தன் பிள்ளைகளைக் கொன்று விடும்படி செய்தனனெனவே நம்பி, அவனை மிகவுங்கொடியனாக நினைந்து அவன்மேற் பெரும்பழிகூறினர்; ஆனால், அவன்றன் மனையாண்மேலோ பெரிதும் இரங்கினர். தன் பிள்ளைகள் இறந்துபோனதற்காகத் தன்னைக் கண்டு புலம்பவந்த பெண்மணிகட்கெல்லாம், அப்பெருமாட்டி, தன்பிள்ளைகளைப் பெற்ற தந்தைக்குத் தன் மக்கள் உகந்தவர்களாதலைவிடத் தனக்கு மிக உகந்தவர்கள் அல்லரே! எனப் பகர்ந்து அவர்களை ஆறுதல்பேறச் செய்தனள். இனி, இப்பிள்ளைகள் பிறந்த சில ஆண்டுகட்குப் பிறகு, அம்மன்னன் தன் மனைவி கிரிசெலாளின் மனப் பொறுமையினைக் கடைசியாக ஆராய்ந்துபார்த்து விடுதற்குத் தன் னுள்ளே தீர்மானஞ்செய்து, தன் பக்கத்தே யிருந்தவர்களை நோக்கி, இனிமேல் தான் கிரிசெலாளைத் தன் மனைவியாக வைத்துக்கொள்ளுதல் இயலாதென்றும், அவளைத் தான் மணந்துகொண்ட காலத்தில் தான் மயங்கிய மூளையுள்ள இளைஞனாயிருந்தபடியால் அங்ஙனந் தான் செய்தது மடமைச் செயலாய் முடிந்ததென்றுந் திறந்து சொன்னான். அதன் பின், தன் குருவுக்குத் தெரிவித்துக், கிரிசெலாளை நீக்கிவிட்டு, வேறோரு மனையாளை மணந்துகொள்ள அவரது விடையைப் பெறுதற்குத் தான் முனைவதாகவுங் கூறினான். அதனைக்கேட்ட அவர்கள் அவ்வாறு செய்தல் அடாதெனத் தடுத்தும், அவன் அங்ஙனஞ் செய்துதான் ஆகவேண்டுமென அழுத்திக் கூறினான். அச்செய்தியைக் கேட்டுத், தான் மறுபடியுந் தன் ஏழைத் தந்தையின் குடிலுக்குங் காணியாட்சிக்குந் திரும்பிச் செல்லவேண்டி யிருத்தலையும், அங்கே தன்னிளமைக் காலத்திற்போலத் தான் மீண்டும் பழைய ஆடுமேய்க்குந் தொழிலை மேற்கொள்ள வேண்டியிருத்தலையும், அதனோடு தான் காதலித்துப் பேணிய கணவனோடு வேறோருத்தி மணங்கூடி இன்பம் நுகரப் போவதையும் உணர்ந்து, அருமைப் பெண்மணிகாள்! அம்மாதரசியின் மனப் பொறுமையானது எவ்வளவு கொடுமையான ஆராய்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை நன்கு நினைத்துப் பாருங்கள்! அவ்வாறிருந்தும், அவள் இதற்கு முன்னே தனக்கு நேர்ந்த இடுக்கண்களையெல்லாந், தோலாத மெய்யொழுக்க மனத்திட்பத்தால் மிதித்து மேல்நின்றது போலவே, இப்போதும் இதனைக் கலங்கா முகத்துடனும் நடையுடனுந் தாங்கிக் கொள்ளத் தனதுள்ளத்தை அசையாமல் நிலைநிறுத்திக் கொண்டாள். இனி, அரசன் தான்கொண்ட கருத்தை நிறைவேற்றிக் கொள்ளுதற்கென்று குறிப்பிட்ட ஒருநாளில், அவன்றன் குருவினிடமிருந்து வந்தாற்போற் போலிக் கடிதங்கள் வந்தன. அவைகளை அவன் தன் குடிமக்களின் முன்னிலையிற் படிக்கும் படி செய்வித்துத், தன் குரு கிரிசெலாளைத் தான் நீக்கிவிட்டு வேறோரு நங்கையை மணந்துகொள்ள ஒருப்பட்டு விடை கொடுத்ததனை அவர்களெல்லார்க்கும் அறிவித்தனன். அதன் பின் உடனே அவன் கிரிசெலாளைத் தன் குடிமக்களின் எதிரே வருவித்து வைத்து அவளை நோக்கிக் கூறுவான்; பெண்ணே, என் குருவினிடமிருந்து வந்த விடையானது, நின்னை விலக்கி விட்டு, யான் வேறோரு பெண்ணை மணந்துகொள்ளும்படி கற்பிக்கின்றது. என் முன்னோர்களெல்லாரும் உயர்குடிப் பிறப்பினராயும் இந்நாட்டுக்குத் தலைவர்களாயும் இருந்தமை யாலும், நீ ஓர் ஏழைக்குடிமகளாய் இருப்பதனாலும், யான் நின்னை மணந்துகொண்டதனால் என் முன்னோர் பிறப்பும் என் பிறப்பும் இழிபடைதலாலும், இனி யான் நின்னை என் மனைவியாக வைத்திருக்க விரும்பவில்லை; ஆதலால், நீ கொணர்ந்த பரிசத்தொடு நின்னைத் திரும்ப நின் தகப்பன் வீட்டுக்குப் போக்கிவிட்டு, என் உயர்குடிப் பிறப்புக்கு ஏற்றவளாயும், அதனால் என் குடிமக்கள் உள்ளத்திற்கு இசைந்தவளாயுங் காணப்படும் மற்றொரு மாதை யான் மனையாளாக மணந்துகொள்ள ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றேன். இச்சொற்களைக் கேட்ட கிரிசெலாள், தன் கண்களிற் றதும்பிய நீரைப்பெருவருத்தத்தோடு தடைசெய்து கோண்டு, மற்றைப் பெண்மக்களின் இயற்கைக்கு வேறான வளாய்,மாட்சிமிக்க அரசே, யான் அத்துணைப் பகுத்தறிவு வாயாதவள் அல்லேன்; எனது தாழ்ந்த இழிந்த குடிப்பிறப்பின் நிலைமையானது தங்களது உயர்ந்த சிறந்த குடிப்பிறப்பின் நிலைமைக்கு எவ்வாற்றானும் ஒவ்வாததென்பதை யான் என்றும் ஒப்புக்கொண்டவளே. யான் தங்களோடு கூடியிருக்கும்பேறு இறைவனது பேரருளாலுந் தங்களது தண்ணளியாலும் எனக்குக் கிடைத்ததேயல்லாமல், என்பாலுள்ள எந்த நலத்தினாலாவது கிடைத்தது அன்று என்பதையும் யான் என்றும் ஒப்புக் கொண்டவளே. ஆதலால், தங்களால் வந்த இப்பேற்றைத் தாங்கள் திரும்ப வாங்கிக்கொள்ளுதற்குத் தங்கள் திருவுளம் இப்போது எண்ணுதலால், அதனை யானுந் தங்கட்கு மகிழ்வுடன் திருப்பிவிட வேண்டியவளாகவே இருக்கின்றேன். என்னை மணந்துகொள்ளுகையில் தாங்கள் என் விரலில் இட்ட இக்கணையாழியை இதோ தாழ்மையாகத் தங்கட்குச் சேர்ப்பிக்கின்றேன். இன்னும், யான் கொணர்ந்த மணப்பரிசத்தை யான் திரும்ப எடுத்துச் செல்லும்படி தாங்கள் எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள். ஆனால், அவ்வாறு எனக்குத் திருப்பிக்கொடுக்க வேண்டுவதொன்றுமில்லையே. ஏனென்றால், என்னைத் தாங்கள் கொண்டுவந்தபோது யான் அணிந்திருந்த என்னுடைய எளிய ஆடைகளை முற்றுங் களைவித்தன்றோ என்னைக் கொண்டுவந்தீர்கள்? தங்களுக்கு இரண்டு மகவுகளை ஈன்ற இவ்வுடலம் அவ்வெளிய ஆடைகளையே அணிந்து செல்லல் வேண்டுமெனத் தாங்கள் எண்ணினால், இங்கிருந்து அங்ஙனமே செல்வேன். குற்றமில்லாக் கன்னிமையொடு வந்த எனக்குத் திருமணக் காலத்தில் அணிவித்திருந்த ஆடைகளுள் ஒன்றை எனது மானத்தை மறைக்குமளவுக்குத் தாங்கள் உளம் இரங்கிக் கொடுத்தால் அதனையே எனது திருமணப் பரிசாகக் கருதிக்கொண்டு இவ்விடத்தைவிட்டுச் செல்வேன் என மொழிந்தனள். அம்மன்னனோ, தன் மனையாள் விளம்பிய இம்மொழிகளைச் செவிமடுத்துத், தன் நெஞ்சம் நீராய் உருகத் தன் கண்களும் அந்நீரை உகுக்கும் நிலையினவாகத் தன்னுளம் நெகிழ்ந்தும், அந்நெகிழ்ச்சியினைக் காட்டானாய்ச், சீற்றறமுஞ் சினமும் கொண்டான்போல் எழுந்து நின்று, இவட்கொரு சிற்றாடைகொடுத்து, அவளைப்போகவிடுமின்கள்! எனக் கரைந்தான். அப்போதங்கிருந்த வரெல்லாரும், பதின் மூன்றாண்டுகள் ஓர் அரசற்கு மனையாளாயிருந்த ஓர் அரசி ஓரேழைச் சிற்றாடையணிந்து வெளிச்சென்றாள் என ஒரு சிறுசொற் பரவாமைப்பொருட்டு நல்லதொரு பேராடை கொடுங்கள் என அவனை மிக இரந்து வேண்டியும் அவன் அதற்கு இசைந்திலன். மற்று, அவ்வரசியோ, அடிக்குத் தொடுதோல் இல்லாமலுந், தலைக்கு முடியில்லாமலுந், தன் மேலே ஒரு மாராப்புக்கூட இல்லாமலுந், தன் அரையுடம்பு தெரியச் சிற்றாடை யுடுத்தவளாய்த் தன்னைக் கண்டவ ரெல்லாம் ஆற்றாது புலம்பி அழ, வழிநடந்து சென்று தன் தந்தையின் இல்லிற் சேர்ந்தாள். அவடந்தையாகிய அந்நல்ல குடியானவனோ, தன் புதல்வியை அவ்வரசன் நீண்டகாலந் தன் மனையாளாக வைத்திரானென்றும், இப்போது நிகழ்ந்தபடி அவள் தன் பாற் றிரும்பிவந்து சேர்தலே நேருமென்றும், ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்தவனாதலால், அரசன் அவளை மணந்து கொள்ளுதற்கென்று ஒழுங்கு செய்த அந்நாளில் அவளுடம்பி னின்றுங் களைவித்தெறிந்த எளிய ஆடைகளைக் கருத்தாய்ப் பாதுகாத்து வைத்திருந்தான். ஆகவே, அவன் இப்போது அவைகளை யெடுத்துத் தன்மகள் கையிற் கொடுத்தான்; கிரிசெலாளும் அவைகளை வாங்கி யுடுத்துக் கொண்டு, பழமைபோல் தன் தந்தையின் இல்லப்பணிகளைச் செய்தல் மேற்கொண்டு, ஊழ்வினையானது தனக்கு விளைத்த அல்லல் களையெல்லாம் பெரியதொரு மனத்திட்பத்தோடு பொறுத்துக் கொண்டு தன் வாணாளைக் கழிப்பாளாயினள். இங்ஙனஞ் சில வைகல் கழிய, அவ்வரசனோ தனக் கிசைந்ததாகத் தோன்றிய ஒருநாளில், தான் ஓர் அரசன் மகளை மணஞ்செய்து கொள்ளப் போவதாகத் தன் குடிமக்கட்கு அறிவித்து, அத்திருமணவிழாவை மிகவுஞ் சிறப்பாக நடைபெறுவித்தற்கு வேண்டுவனவெல்லாஞ் செய்யும் படி கட்டளையிட்டான். அதன்பிற், கிரிசெலாளையும் அவடன் தந்தையின் இல்லத்தினின்றும் வருவித்து, அவளை நோக்கி, மாதே, யான் இப்போது மணந்துகொள்ளுதற்கென்று தெரிந்தெடுத்திருக்கும் நங்கை இன்னுஞ் சில நாளில் இங்கே வந்துசேர்வள். அவள் முதன் முதல் வரும்போதே அவளைச் சிறப்பாக வரவேற்றுக் கொண்டாட விழைகின்றேன். அவ்வரண்மனைக்கண் உள்ள மாடங்கள் மண்டபங்கள் மாளிகைகள் கூடங்கள் அறைகள் முதலானவைகளை யெல்லாம் ஏற்றபடி ஒப்பனை செய்து அத்துணைச் சிறந்த கொண்டாட்டுக்கு ஒத்த வகையாக வேண்டும் பண்டங்களைத் தொகுத்து அவையிற்றை அழகாக அமைத்து வைக்கவல்ல ஒரு பெண்பால் இல்லையென்பதை நீ நன்கறிவாய். ஏனை யெல்லாரையும்விட நீ இவ்வரண்மனைக்கணுள்ள எல்லாப் பகுதிகளையும் நுகர்பொருள்களையும் பண்டம் பாடி களையுஞ் செவ்வையாகத் தெரிவையாதலால் நின்னையிங்கு அழைப்பித்தேன். நினக்குத் தோன்றுமாறு இங்குள்ளவைகளை யெல்லாம் ஒழுங்குற அமைப்பாயாக! நினக்கு வேண்டிய நங்கை மார்களையுஞ் செல்வப் பெருமாட்டிகளையும் வருவித்து, நீயே இவ்வரண்மனைக்குத் தலைவியாக இருக்கும் முறையிலிருந்து அவர்களை விருந்தோம்புவாயாக! திருமணம் முடிந்தவுடனே நீ நின் தந்தையினிடந் திரும்பி ஏகலாம். என்றனன். இச் சொற்கள், ஏழைமையில் மேதகவுவாய்ந்து பொறுமைமிக்க கிரிசெலாளின் நெஞ்சத்திற் கூரிய வேலை நுழைத்தாற்போற் பாய்ந்தனவேனுந், தான் முன்னிருந்த செல்வ வாழ்க்கையின் உயர்வு அவடன் நினைவைவிட்டு எளிதாக நழுவிப்போயதேனும், அவள் தான் அவ்வரசன் மேல் வைத்திருந்த இணையற்ற காதலன்பை மறக்கமாட்டாளாய், என் அருட்பெருமானே, தங்கட்கு வேண்டிய தோர் ஊழியத்தை அடியேன் என் முழுமனத்துடன் விரைந்து செய்யக் காத்திருக்கிறேன். எனப் பகர்ந்தனள். அவள் ஒரு சிற்றாடையுடன் அவ்வரண்மனையிலிருந்து புறம்போக்கப் பட்டாளாயினும், இப்போது தான் தன் தந்தையின் வீட்டிலிருந்து அணிந்துவந்த எளிய உடையிலிருந்தவாறே, அவ்வரண்மனையின் மண்டபங்கள் கூடங்கள் அறைகள் முதலியவற்றையெல்லாந் துப்புரவு செய்யப் புகுந்தாள்; அவ்விடங்களிலுள்ள நாற்காலிகள், பட்டுமெத்தை தைத்த சார்மணைக் கட்டில்கள், சலவைக்கற் பதித்த மேசைகள், பளிங்கு விளக்குகள், அழகிய ஓவியங்கள், பொன்வெள்ளிக் கலன்கள் முதலியவைகளை யெல்லாந் துடைத்துத் தூய்மை செய்தாள்; எவ்வெவை எவ்வெவ்விடங்களில் இருந்தாற் கண்கவர் வனப்பினவாய்த் தோன்றுமோ அவ்வவற்றை அவ்வவ்விடங்களில் அழகுற அமைத்துவைத்தாள்; அதன்பின் அடுக்களையிற் புகுந்து, அவ்வரண்மனையில் அவளே எல்லா வேலைகளையுஞ் செய்யுந் தொழுத்தைபோற் சிறிதும் ஓய்வின்றிச் சமையற்பண்டங்கள் பாண்டங்கள் முதலானவை களை யெல்லாம் மிகவும் நேர்த்தியாகத் திருத்திவைத்தாள். இவையெல்லாஞ் செய்தானபின், அரசன் அச்சிறந்த திருமண விழாவுக்கு அவ்வூரிலுள்ள நங்கைமார்களையெல்லாம் வருவித்தான். திருமணம் அயரும் அந்நாளிற், கிரிசெலாள் நிறம் மங்கிய தனது நாட்டுத் துணியையணிந்த படியே அந்நங்கைமாரையெல்லாம் முகமலர்ச்சியுடன் வரவேற்று அவர்கட்குச் சிறப்புச் செய்தாள். இனி, அம்மன்னன், வேறோர் ஊரில் ஒரு குறுநில மன்னனை மணந்துகொண்ட தன் உறவினளாகிய ஒரு சிற்றரசிடந் தன் புதல்வியையும் புதல்வனையும் ஒப்படைத்து, அவர்களைச் சிறந்த முறையில் வளர்த்து வருமாறு ஏற்பாடு செய்து வைத்தமை முன்னமே குறிப்பிக்கப்பட்டதன்றோ? அங்ஙனம் வைக்கப்பட்ட அவன்றன் புதல்வி இப்போது பதின்மூன்றாண்டுக்கு மேற்பட்ட அகவையினளானாள்; அவன் புதல்வனும் ஆறேழு ஆண்டுக்கு மேற்பட்டவனானான். ஆகவே, அரசன் தனக்கு இனிய நண்பரான ஒரு செல்வரை அச்சிற்றரசி யின்பால் விடுத்துத், தன் மகளையும் மகனையும் பரிவாரஞ் சூழப் பல்பெருஞ் சிறப்புடன் அவ்வம்மையார் தன்பால் தன் நகருக்கு அழைத்துவரல் வேண்டுமென்றும், அவர் கட்குந் தனக்குமன்றி வேறெவர்க்குந் தெரியாத அக்கன்னிப் பெண்ணை அரசனாகிய தான் மணஞ்செய்துகொள்ளப் போவதாக வழிநெடுக விளம்பரப்படுத்திவருதல் வேண்டு மென்றும் அறிவித்தான். அவ்வறிவிப்பினைக் கொண்டுசென்ற அச்செல்வருந் தம்மை நம்பி விடுத்த அச்செய்தியினை அச்சிற்றரசிக்குத் தெரிவித்து , அவளுந் தாமுமாக உறவினர் புடை சூழ அரும்பெருஞ்சிறப்புடன் அரசன் மகளையும் மகனையும் அழைத்துக்கொண்டு குறிப்பிட்ட நாளில் நண்பகல் வேளையில் அவ்வரசனது அரண்மனைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது அக்கம் பக்கத்தூரிலுள்ளார் பலருந், தம்மரசனுக்குப் புதுமனைவியாக வந்திருக்கும் அப்பெண்ணைப் பார்ப்பதற்காக அவ்வரண்மனைக்கண் வந்து குழுமினர். செல்வர்களுஞ் செல்வப்பெருமாட்டிகளுங் களிப்புமிக்க அப்பெண்ணை வரவேற்று ஓம்பினர். அத்திருநாட் கொண்டாட்டத்திற்கென்று ஒப்பனை செய்யப்பட்ட அழகியதொரு பெரு மண்டபத்தின்கண்ணே கிரிசெலாள் தன் எளிய ஆடையி லிருந்தபடியே அப்பெண்ணை வரவேற்று, எம் மனனர்பெருமானுக் கென்று புது மனைவியாக வந்த நுங்கள் வரவு திருவருளால் நல்வரவாகுக, என்று பணிவோடு மொழிந்தாள். அங்கே வந்திருந்த செல்வமகளிரெல்லாரும் அரசனை நோக்கிக், கிரிசெலாளைத் தனியே ஓர் அறையினுள்ளாவது வைத்துவிடுங்கள்! அல்லது அந்நங்கையார் முன் அணிந் திருந்த சிறந்த ஆடை யணிகலன்களை அணிந்துகொண்டு வந்தாவது இக்கொண்டாட்டத்தை நடத்தும்படி செய்யுங்கள்! ஏனென்றால் புதிது வந்தவர்கள் முன்னிலையில் அவ்வம்மையார் அத்துணை எழைமையான தோற்றத்துடன் வந்துநின்று பணிசெய்வது நல்லதன்று! என்று எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும், அவன் அவர்களது சொல்லுக்குச் சிறிதும் இணங்கிற்றிலன். எல்லாரும் நாற்காலிகளில் அமர்ந்து வட்டமேசையைச் சூழ்ந்திருக்கக், கிரிசெலாள் தன் எளிய உடையொடு நின்றவண்ணமே அவர்கட்கு வேண்டும் பணியெல்லாஞ் செய்து கொண்டிருந்தாள். புதிதுவந்த மணப்பெண்ணைப் பார்த்தவர்களெல்லாருந் தம்மரசன்செய்த மனைவிமாற்றத்தை வியந்து பேசினர். மற்று, அவர்களெல்லாரையும்விடக் கிரிசெலாளே அதனை மிகவுங் கொண்டாடிப் பேசினள்! அப்பெண்ணுடன் வந்த அவடன்தம்பி, ஆண்டிற் சிறியனாயினும் அறிவிற்பெரியனாய், அவளைத் தன் தமக்கையென்று அறியாமலே, அவள் அரசற்கு ஏற்ற மனையாளே எனப்புகழ்ந்துரைத்தனன்! இப்போது அம்மன்னன், தன் மனையாள் கிரிசெலாளின் பொறுமையைப்பற்றித் தான் தெரியவேண்டுமளவெல்லாம் ஆராய்ந்து தெரிந்துகொண்டமையால், நெஞ்சை இரண்டாய்ப் பிளக்கத்தக்க இத்தனை ஆராய்ச்சிகட்கு உள்ளாகியும் முகஞ் சிறிதுஞ் சுளியாத அவள், அறிவில் மிகச் சிறந்தவளாதலால் தன் அறிவில்லா மட்டித்தனத்தால் இங்ஙனமெல்லாம் இத்துன்பங்களைப் பொருள் செயாது நடந்தாள் என்று கருதுதற்கும் மாட்டானாய், இனி இவளை இப்பல்பெருந் துன்பங்களினின்றும் விடுவித்து, இவள் தன்பாற் பெறுதற்குரிய உறுதி மொழியினைத் தான் புலப்படுத்துதலே செயற்பாலதெனத் தீர்மானித்தான். தீர்மானித்து, அங்குள்ளார் எல்லார் எதிரிலும் அவன் அவளைத் தன்முன்னேவந்து நிற்குமாறு கற்பித்து, அவளை நோக்கிப் புன்னகை புரிந்து, கிரிசெலா, இப்போது யாம் புதிது தெரிந்தெடுத்திருக்கும் இம் மணப்பெண்ணைப்பற்றி நீ யாது நினைக்கின்றாய்? என வினவினான். அதற்கவள், எம்பெருமானே, இப்பெண் மணியை யான் பெரிதும் விரும்புகிறேன்; இந்நங்கை அழகின் மிக்கவராய் இருத்தல்போலவே அறிவிலும் மிக்க வராய் இருப்பாரென்று நம்புகின்றேன். இம்மங்கையொடு தாங்கள் ஒருங்குகூடி, இந்நிலவுலகில் நீங்கள் ஒருவரே பெறற்கரும்பேறு பெற்றவராக வாழ்வீர்களென்பதில் யான் சிறிதும் ஐயுறு கின்றிலேன். என்றாலும், யான் தங்களை ஒன்று வேண்டிக்கொள்கின்றேன். என் சொல்லைத் தங்களுள்ளத்தில் ஏற்பிக்கும் வலிவு எனக்கிருந்தால், தாங்கள் தங்கள் முதல் மனைவியைச் சுடுசொற்களால் வெட்டிப் பேசியதுபோ லில்லாமல் தாங்கள் இவ்விளமாதை மிக்க அன்போடு நடத்துதல் வேண்டும். ஏனென்றால், அச்சுடுசொற்களைப் பொறுத்திருக்குந் தன்மையை இவ்விளமங்கைபால் யான் எங்ஙனம் எதிர்பார்க்கக்கூடும்? இப்பெண்மணி ஆண்டில் மிக இளைஞராயிருப்பதுடன், கல்விப் பயிற்சியில் மிக மென்மையாக வளர்க்கப் பட்டவராகவுமிருக்கின்றார். மற்றுத், தங்கள் முதன் மனைவியோ உழைப்பிலுங் கடுமுயற்சியிலுந் தொடர்பாக வளர்க்கப்பட்டவள். இங்ஙனம் கிரிசெலாள், தன் மகளை மகளென்றறியாமல் தன் கணவற்கு இரண்டாம் மனைவியெனவே நம்பி, அரசன் வினாயதற்குக் கள்ளமின்றி உண்மையாக அடக்கத் துடன் விடை பகர்ந்ததைக் கண்டு காலதியன் என்னும் அம்மன்னன் அவளை அழைத்துத் தன்னருகே யிருக்கும் படி கற்பித்துக், கிரிசெலா, நீடு வியக்கத்தக்க நினது பொறுமையிற் பழுத்த கனியை நீ நுகர்தற்கு ஏற்றகாலம் இப்போதுதான் அண்மியது; என்னை இரக்கமில்லா வன்னெஞ்ச முரடனெனக் கருதியவர்களெல்லாரும், யான் இழிந்ததேதும் மதிகெட்டுச் செய்திலேனென்பதை இப்போது கடைசியாக அறிந்துகொள்வர். இங்ஙனம் ஏதுக்காகச் செய்தேனென்றால், மணந்துகொண்ட ஒரு மனையாளின் நிலை எவ்வாறிருக்க வேண்டுமென்பதை நினக்கு அறிவுறுத்தவும், ஒருவன் ஒரு மனையாளை எங்ஙனந் தெரிந்தெடுத்து எங்ஙனம் வைத்திருக்கவேண்டுமென்பதை எவர் எத்தகையராயினும் அவரெல்லார்க்கும் நன்கு உளத்திற் பதிய வைக்கவுமே அங்ஙனம் முன்னமே கருதிச் செய்தேன். இங்ஙனம் ஆராய்ந்து தெளிந்தமையால் இனி நின்னோடு யான் ஒருநாள் ஒருங்கு வாழப்பெறினும் அஃது எனக்கு என்றும் அழியாக் களிப்பினையும் இன்பத்தினையும் பயப்பதே யாகும் .இத்தகைய இன்பத்தினை எய்தும் பேறு எனக்கு வாயாது போய்விடுமோ எனவும், அத்தகைய மணவாழ்க்கை எனக்கு நேராது நழுவிவிடுமோ எனவும் யான் முன்னே மிகவும் அஞ்சியதுண்டு. முதன்முறை ஆராய்ச்சியாக, யான் நின்னைப் பல வகையாலும் வைதுரைத்த கொடிய இன்னாமொழிகளை நீ அறியாதாய் அல்லை. என்றாலும், அம்மொழிகள் நின் பார்வையிலாதல், சொற்களிலாதல், நடக்கையிலாதல் ஏதொரு மனக்குறையினையுங் காட்டாமைகண்டு, யான் விரும்பியபடி எனதுள்ளம் அடைந்த ஆறுதலுக்கோர் அளவில்லை. அங்ஙனமே, அதனையடுத்து நிகழ்ந்த ஆராய்ச்சிகளிலும் மனவமைதியுற்றேன். எனது சூறைக்காற்றையொத்த நடக்கையினால் யான் நின்னைவிட்டு அகலுமாறு செய்த அவ்வாறுதலை, நீ முன்னே பட்ட கொடுந்துன்பங்களுக்கெல்லாம் ஈடாக இப்போது ஒரு நொடியில் நினக்கு இனிதாக வருவிப்பேன். என் அழகிய காதற்கிரிசெலா, எனக்குப் புதுமணப்பெண்ணாக நீ கருதிய நங்கையை உளங்களித்து உவகைபொங்க நின் புதல்வியாகத் தழுவிக் கொள்! இச்சிறுவனையும் அவள் தம்பியாகத் தழுவிக் கொள்! இவ்விருவரும் நினைக்கும் எனக்கும் பிறந்த மக்களாவர்! இவ்விருவரையும் யான் கொலை செய்வித்து விட்டதாகக் கீழ்மக்க ளெல்லாரும் பிழையாக நினைந்தனர்! யான் நினக்குரிய காதற்கணவனே! நின்னை உலகத்திலுள்ள ஏனை மாதரார் எல்லாரிலும் மேலாகப் பாராட்டி, வேறு எந்த ஆடவனுக்குங் கிடைத்தற்கரிய மனையாளாக எனக்கு வாய்த்த நினக்கு உரிய பெரும் புகழினை நினக்கே தக்கதாக உரிமை யாக்கும் நின் காதற் றலைவனும் யானே! என்று தன்னுள்ளம் பலவாற்றாற் கரைந்துருக உரைத்தனன். என்றிவ்வாறுரைத்து, அவன் அவளைத் தன் கைகளாற் றழிஇ அணைத்து முத்தமிட்டு, இதற்கு முன் எத்தகைய இடை யூற்றானும் வருவிக்கப்படாத கண்ணீர் இப்போது புதிது மடைதிறந்த யாறுபோற் றன் னழகிய முகத்தின் கீழ்ப் பெருகி யோடப்பெற்ற கிரிசெலாளை அழைத்துக் கொணர்ந்து தன் புதல்வியின் பக்கத்தே அமரவைத்தான். அப்புதல்வியும் அரியதான அத்திரிபு நிகழ்ச்சியைக் கண்டு அடைந்த இறும் பூதுஞ் சிறியதன்று. கிரிசெலாளுந் தன் மக்களிருவரையும் நிரம்பித் துளும்பிய அன்பினாற் றழுவி முத்தமிட்டாள். அங்கே குழுமியிருந்த செல்வருஞ் செல்வ மகளிரும் பிறருமெல்லாந் தாம் முன்னே கொண்டிருந்த ஐயமெல்லாம் ஒருங்கே தீரப்பெற்றுப், பேருவகை கிளரக், கிரிசெலாளுக்கு விலை யுயர்ந்த பொற்பட்டாடைகளும் மணிக்கலன்களும் அணிவித்து வைத்துப் பார்த்து மகழ்ந்தனரென்பது. 4. மக்கள் வாழ்க்கையின் நிலையாமை மக்கள் வாழ்க்கையின் நிலையாமையினை ஆசிரியர் திருவள்ளுவ நாயனார், நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு (குறள் 336) என்னுந் திருக்குறளால் நம்முள்ளத்தே நன்றாய் உறைக்கு மாறு எடுத்தருளிச் செய்திருக்கின்றார். ஐயோ! நேற்றிருந்தான், இன்றைக்கு இல்லையே! என்று கற்றார் முதற் கல்லாதார் ஈறான எத்திறத்தாரும் பேசிக்கொள்ளுதலையும் நாம் உலக வழக்கில் இடையிடையே கேட்கின்றோம். இங்ஙனம் உலகவழக்கில் காணப்படும் ஒரு பெரிய உண்மை யினையே திருவள்ளுவர் தாமும் எடுத்துரைத்தது நமக்கு அதனை நினைவிற் பதியவைக்கும் பொருட்டேயாம். எல்லா உண்மைகளும் உலக வழக்கிற் காணப்படுமாயினும், நந்நெஞ்சம் உடனுக்குடன் இன்பந்தரும் பொருள்களின் வயப்பட்டு அவை தம்மையே பெரும்பாலும் நினைந்து கொண்டிருந்தால், நிலையான நீண்ட இன்பத்தைப் பயக்கும் பொருள்களைப் பற்றிய நினைவு அங்கே புகுந்திருத்தற்கு இடமில்லாமற்போகின்றது . ஆதலால், அந்நெஞ்சத்தில் நான்முகமாய் வந்து குவியுங் குப்பை கூளங்களை அகற்றிப், பேரின்பப்பொருளைப் பற்றிய நினைவு அதன்கட்டோன்றிச் சுடர்ந்தொளிருமாறு செய்வதே நல்லிசைப் புலமை மலிந்த பேராசியர்க்குரிய கடமையாகும். ஆகவே, திருவள்ளுவர் அறிவுறுத்திய இவ்வுண்மை, உலகில் இறந்து படுவாரைக் காண்வுழியெல்லாம் மக்கள் தமக்குள்ளே நெஞ்சம் நெக்குடைந்து பேசிக்கொள்ளுதலிலிருந்து புலப்படுகின்ற தேனும், மற்றை நேரங்களில் அஃது அவருள்ளத்திற் றோன்றாமல் மறைந்து போதலின். அஃது அப்பேராசிரியர் அருளிய வாய்மொழியிலிருந்து நமக்கு எஞ்ஞான்றும் மறவாமல் நினைவூட்டப்படா நிற்கின்றது என்க. நன்று, மக்கள் வாழ்க்கையானது ஒரோவொருவர் பால் என்றோ ஒரோவொருகாற் சடுதியில் மடிந்து மறைந்து போகக் காண்கின்றனமேயன்றி, எல்லா மக்களிடத்தும் அஃது ஒரே காலத்தில் இல்லையாய்ப்போகக் காண்கின்றோம் இல்லையே; அங்ஙனமிருக்கச், சிறுபான்மையாய் நிகழுஞ் சில நிகழ்ச்சி களைக்கொண்டு, மக்கள் வாழ்க்கையானது சடுதியில் மாய்வ தென்று பெரும்பான்மைபடக் கூறுவது பொருந்துமோ வெனிற்; பொருந்தும்; நில அதிர்ச்சியினாற் பெரிய பெரிய நகரங்கள் அழிந்துபடுங்கால் அவற்றின் கணிருந்து உயர்ந்த மாடமாளிகைகள் இடிந்தழிய, அவற்றின்கண் உயிர்வாழ்ந்த நூறாயிரக்கணக்கான மக்களும் ஒரு நொடியில் மாண்டு போனமை கேட்டதில்லையா? 1908 ஆம் ஆண்டு நேர்ந்த நில அதிர்ச்சியினால் நீரும் நெருப்பும் பொங்கி மெசீனாப் பட்டினத்தை அழிக்க, அதிலிருந்த எழுபத்தேழயிரமக்கள் ஒருசிறு பொழுதில் மாண்டுபோனார்கள்! அமெரிக்கா தேயத்திலுள்ள சான் பிரான்சிஸ்கோ என்னும் பெரு நகரானது பதினெட்டு அடுக்குகள் வாய்ந்த பெரும்பெரு மாடங்கள் உள்ள பெருஞ் செல்வநகராகும்; அஃது 1906 ஆம் ஆண்டு, ஏப்பிரல், 22 ஆம் நாட் சடுதியிற் றோன்றிய நில அதிர்ச்சியினால் அதன் கணிருந்த அக் கட்டிடங்கள் பல முகமாய்ப் பிளந்துவிழ, அவற்றின்கணிருந்த மக்களுங் கோடிக் கணக்கான பொருள்களும் அழிந்தன! சின்னாட்களுக்கு முன் நம் இந்திய நாட்டின் வடபகுதிக்கண் நில அசைவினால் உண்டான உயிரழிவு பொருளழிவுகளின் மிகுதியை அறிந்து வருந்தாதார் யார்? இங்ஙனம் அடுத்தடுத்து இந்நிலவுலகின்கண் ஆங்காங்கு நேரும் நில அசைவினாலும், நீர்ப்பெருக்கினாலும், எரிமலை நெருப்பினாலுந் திடுமெனச் சிறிது நேரத்தில் இதுகாறும் அழிந்துபட்ட உயிர்களையும் பொருள்களையுங் கணக்கெடுத்தல் எவராலேனும் ஏலுமோ? அதுகிடக்க. நமது இந்தியநாட்டிலும் பிறநாடுகளிலுங் கொள்ளை நோய் (plague) கொள்ளைக் கழிச்சல் ( cholera) அம்மை, நச்சுக்காய்ச்சல் முதலான நோய்களால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திங்களும், ஒவ்வோராண்டும் மடிந்தார் மடிவார் தொகையை நினைத்துப் பார்க்குங்கால் நெஞ்சந் திகீரென்கின்றது! இவ்விந்திய நாட்டில் 1896 ஆம் ஆண்டிலிருந்து 1903 ஆம் ஆண்டு வரையிற் கொள்ளை நோயால் மடிந்தார் தொகை இருபத்தொரு லட்சத்து ஐயாயிரத்து ஐந்நூற்று நாற்பத்தெட்டு என்றும், 1891 இலிருந்து 1900 வரையிற் கொள்ளைக் கழிச்சலில் மாண்டார் தொகை நாலுலட்சத்து ஐம்பதினாயிரத்து ஐந்நூற்றிரண்டு என்றும், அம்மையிற் செத்தார் தொகை எண்பத்தீராயிரத்து ஐந்நூற்றெண்பத்தெட்டு என்றும், நச்சுக் காய்ச்சலில் இறந்தார் தொகை நாற்பத்துமூன்று லட்சத்து அறுபத்து மூவாயிரத்து ஐம்பத் தைந்து என்றுங் கணக்கெடுத்திருக்கின்றார்கள். இன்னும் பல காரணங்களால் அழிந்தொழிவார் தொகையுஞ் சாலப்பெரிது. ஆதலால், மக்கள் ஒருங்கே ஒருகாலத்தோரிடத்து மாயக் கண்டிலமென்றுரைப்பது உண்மை நிகழ்ச்சிக்கு மாறா மென்றுணர்ந்து கொள்ளல்வேண்டும். எனவே, மக்கள் வாழ்க்கையானது பொதுவாகவே நிலை யில்லாததென்பது தெளியப்படும். அஃது உண்மையேயானாலும், மக்கள் ஒவ்வொருவருந் திடீரென இறந்துபடுவரென்பது ஏற்றுக்கொள்ளற் பாலதோவெனின்; எவ்வளவு கருத்தாய்த் தமதுயிரைப் பாதுகாத்த வரும், அவரும் எவரும் எதிர்பாராமலே சடுதியிற் சாதலைப் பார்த்ததில்லையா? பார்வைக்குக் கருங்கல் வடிவம்போல் அழுத்தந் திருத்தம் வாய்ந்த உடம்புடையவர்களாயிருந் தவரும் நெஞ்சடைப்பினால் ஒரு நொடியில் உயிர்துறந்ததைப் பார்த்துங் கேட்டும் இருக்கின்றேம். பெருஞ்சினங் கொண்டு அதனால் ஓரிமைப்பொழுதில் மாண்டவர் எத்தனையோ பேர்! தமக்குயிர்போல் அன்பராயிருந்தார் சாவக்கேட்டு, ஆற்றாமை யால் உடனே உயிர் நீங்கினார் எத்தனையோ பேர்! கல்தடுக்கி வீழ்ந்து, வீழ்ந்த அந்நொடியே உயிர்மாய்ந்தார் எத்தனையோ பேர்! உறக்கத்திற் பாம்பு தீண்டப்பட்டுக் கண்விழியாமலே இறந்து கிடந்தார் எத்தனையோ பேர்! இஞ்ஞான்று நம் கண்ணெதிரே இங்ஙனம் எதிர்பாராமலே சடுதியில் இறப்பார் போலப், பழைய நாளிலும் எதிர்பாராப் புல்லிய காரணங் களால் இறந்தார் பலரை ஆங்கில ஆசிரியரொருவர் எடுத்துக் காட்டி இருக்கின்றார்: இசிக்கிலர் என்னுங் கிரேக்க நாடகாசிரியர் வழி நடந்து செல்கையில், வானத்தின்கண்ணே பறந்து சென்ற ஒரு கழுகின் நகங்களிலே இடுக்கப்பட்டிருந்த ஓர் ஆமையானது அங்கிருந்து நழுவி அவர் தலையில் விழ, அவர் உடனே கீழ்விழுந்து உயிர்துறந்தார். சிசிலிதேயத்திற் கொடுங்கோன் மன்னனாயிருந்த அதோகிலன்என்பான் தனது 95 ஆம் ஆண்டில் ஒரு பல்லுக்குத்தியினாற் றனது பல்லைக் குத்திக்கொண் டிருக்கையில், அதன் முனையிற் பூசப்பட்டிருந்த நஞ்சினாற் சிறிது நேரத்திற் கொல்லப்பட்டான். அனக்கிரீயன், என்னுங் கிரேக்க நல்லிசைப் புலவர் ஒருநாட் கொடிமுந்திரிப்பழங்கள் தின்றுகொண்டிருக்கை யில், ஒரு பழத்தின் ஒரு சிறுவிதை நெஞ்சில் அடைக்க உடனே இறந்துபட்டார். பாசர் என்பார் தமது இடதுகைப் பெருவிரலில் ஒரு கூரிய ஊசியின் முனை தைக்க, அதனால் உடனே மாண்டுபோனார். சாலகன் என்னுங் குறிகாரன், தான் இறந்துபடு நாள் இன்னதென்று முன்னே குறிப்பிக்கப்பட்டபடி அந்நாளிற் சாவாமற் பின்னுந் தான் பிழைத்திருந்ததனை நினைந்து, ஒரு நாள் அளவுக்குமிஞ்சிச் சிரிக்க, அதனால் உடனே உயிர் நீங்கப்பெற்றான். எட்டாஞ் சார்லசு என்னும் அரசன் தன் மனையாளைப் பந்து விளையாடும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கையில், தன் அரண்மனைவாயிலின் மேற்படி தலையில் இடிக்க, அதனால் அந்நொடியே இறந்து வீழ்ந்தான். பேபியர் என்னும் உரோமநடுவர் ஒருநாள் தாம் பால் பருகிக்கொண்டிருக்கையில் அதிற்கிடந்த வெள்ளாட்டு மயிர் ஒன்று தமது மிடற்றிற் சிக்கிக்கொள்ள அதனால் மாய்ந்து போனார். பிரடரிக்குலூயிசு என்னும் உவேல்சு இளவரசர் தாம் பந்தாடிக்கொண்டிருக்கையிற், பந்து மேலேபட்டு இறந்துபோனார். இதடாக்கு என்பவர் வயலில் அறுப்பு அறுக்கையில் மிகவும் நாவறட்சிகொண்டுந், தன்குரு இட்ட கட்டளைப் படி ஒரு துளி தண்ணீரும் பருகாதிருந்தமையால் அங்கேயே உயிர்நீங்கப்பெற்றார். ஆறாம் லூயிசு என்னும் மன்னன் தன் குதிரைமேல் ஏறிச்செல்லுங்காற் குறுக்கே ஒருபன்றி அக்குதிரையின் கீழ் ஓட, அதனால் அக்குதிரை தடுக்கிவிழ ,அம்மன்னனுங் கீழ்விழுந் துடனே மாண்டுபோனான். ஆதவர் என்னும் புலவர் வறுமையால் உணவின்றிப் பட்டினியாயிருத்தல் கண்டு ஒருவர் அவர்க்கு ஒரு பொற்காசு கொடுத்தனர். அவர் அக்காசைமாற்றி ஓர் அப்பம்வாங்கி, அதனைப்பிட்டுப், பிட்ட துண்டைவாயிலிட்டு மென்று விழுங்குகையில் உயிர் நீங்கினார். பிலோமினர் என்பார் தாம் உண்ணுதற்கென்று வைத்த அத்திப்பழங்களை ஒரு கழுதை வந்து தின்ன, அது கண்டு அவர் மிகுதியாய்ச் சிரித்தமையால் உயிர் பிரியப் பெற்றார். குயினிலாடன் என்னும் ஒரு மருத்துவன் பிறன் ஒருவன் கையிற் றைத்த ஒரு சிராயைப் பிடுங்கி எடுக்கையிற் றன்கையிற் சிறிது காயம்பட்டு இறந்துபோனான். கியூகர் என்னும் ஓவியர் தாம்வரைந்த ஒரு குறிகாரக் கிழவியின் உருவைக் கண்டு தாமே மிகுதியாய்ச் சிரிக்க, அதனால் உயிர்துறக்கலானார். இவ்வாறு முன்னாளிலும் பின்னாளிலும் மிகச்சிறிய காரணங்களாற் சடுதியில் மாண்டுபோயினார் தொகையைக் கணக்கெடுக்கப் புகுந்தால், அது கணக்கிலடங்காது. ஆகையால், மக்கள் தனித்தனியே திடீரென மாளுதல் நாடோறும் ஆங்காங்கு நிகழும் உண்மை நிகழ்ச்சியேயல்லாமற் பொய்யாகாது. ஆகவே, பெருந்தொகையினரான மக்கள் ஒரு நொடிப்பொழுதில் மாய்தலும், அவருள் ஒவ்வொருவர் ஒவ்வொருகாற் றிடுமென மாய்தலும் ஆங்காங்கு அடுத்தடுத்து நிகழ்தல் விரிந்த ஆராய்ச்சியுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக்கிடத்தலின், மக்கள் வாழ்க்கையானது எந்தவகையிற் பார்த்தாலும் நிலையில்லாததேயாமென்பது நன்கு பெறப்படுமென்க. நன்று, அங்ஙனம் மக்கள் வாழ்க்கையானது நிலையில்லாததாய் ஒழிதல் உண்மையேயாயினும், அதைப்பற்றி நாம் அடுத்தடுத்து நினைதலாற் பயன் என்னை? நாம் நிலை யில்லாமல் எந்தநேரத்தில் மாய்வமோ என ஒருவர் அடிக்கடி எண்ணிப்பார்ப்பராயின், அவர் அதனால் ஏதொரு முயற்சியுஞ் செய்வதில் மனவெழுச்சி பெறாது, அறிவுகுன்றிச் செயலற்றுத் துயரங்குடிகொள்ளப்பெற்ற நெஞ்சினராய்ச், சாநாள் வருமுன்னரே அதனை எதிர்பார்த்திருந்து, தமக்கும் பிறருக்கும் பயன்படுதலின்றிக் கழிவரல்லரோ? மேலும், மக்களெல்லாரும் நாம் நிலையாயிருப்போம்; நிலையாயிருந்து பல்வேறு இன்பங்களை நுகர்வோம்; அங்ஙனம் நிலையாயிருந்து இன்பம் நுகருதற்குரிய நாம் இன்பம் தரும் பொருள்களையும் மக்களையுந் தேடித் தெரிந்து நம்முடனே வைத்துக்கொள்ளக் கடவோம் என எண்ணுதலாலன்றோ, அவர் தமது வாழ்க்கையைச் செவ்வனே நடைபெறுவித்தற்காம் அறிவும் அதனொடு பெருமுயற்சியும் உடையராய் ஒழுகுகின்றனர்? இத்தகைய ஒழுகலாற்றால் அவர் தமக்குந் தம்மைச் சார்ந்தார்க்கும் பயன்படுதலொடு தம்மவரல்லாத ஏனைப் பொதுமக்கட்கும் பயன்பட்டு வருகின்றனர். இவ்வாறு தம்மை நிலையாகவெண்ணி வாழ்தலாலன்றோ மக்கள் வாழ்க்கையானது பல்லாயிர ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழாநிற்கின்றது? இனி, இவ்வாறன்றி, மக்கள் ஒவ்வொரு வருந் தமது வாழ்க்கை நிலையின்றி மாயுமியல்பினையே எண்ணியெண்ணி நெஞ்சம் நோவராயின், ஒரு சில ஆண்டுகளில் மக்கள் வாழ்க்கையே இம்மாநிலத்தின்கண் இல்லையாய் ஒழியுமன்றோ? ஆகையால், நிலையாமையை எண்ணிப் பார்ப்பதும் அதனை எண்ணிப் பார்க்கும்படி கற்பிப்பதும் நலந் தருமோவெனிற் கூறுதும். நிலையாமையை எப்போது நாம் எண்ணிப்பார்த்தல் வேண்டும், எப்போது நாம் அதனை எண்ணிப்பார்க்கலாகாது என்று ஒவ்வொருவரும் பகுத்துணர்ந்து ஒழுகல் வேண்டும். நிலையாமையை எப்போதுமே எண்ணிப்பாராதவர்கள், செங்குத்தான உயர்ந்ததொரு மலையுச்சியின் ஓரத்தில் நிற்கும் கண்ணில்லாக் குருடனொருவனையே ஒப்பராதலால், அவர் தமது வாழ்க்கையின் இடையிடையே வரும் அல்லல்களுக்கு ஈடுகட்ட மாட்டாதவர்களாய் அறிவும் அன்பும் அறமும் இன்பமும் இன்றிப், புகழும் புண்ணியமுங் கடவுள் நேயமும் இன்றிச் சடுதியில் மாண்டுபோவர்; அங்ஙனஞ் சடுதியின் மாளாமல் நீண்டநாளிருப்பினும் அவரது இருப்புப் பயனற்ற முண்மரத்தின் இருப்புகே ஒப்பாகும் . ஆசிரியர் திருவள்ளுவ நாயனார். அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று (குறள் 78) என்றருளிச் செய்தது உண்மையன்றோ? இனி, நிலையாமையினையே எந்நேரமும் எண்ணிப் பார்ப்பவர்கள், செங்குத்தான அவ்வுயர்ந்த மலைமுகட்டின்மேலிருந்து கீழுள்ள பெரும்பள்ளத்தாக்கை நோக்கி உள்ளந் திகில்கொண்டு அதனைவிட்டு அப்புறம் அகலாமல் அதன்கீழ்த் தன்வயமின்றியே விழுந்தொழியப்போகுங் கண்ணுடையா னொருவனையே ஒப்பராதலால் அவரும் அறிவும் அன்பும் இல்லாமல், அறமும் புண்ணியமுஞ் செய்யாமற் புகழுங்கடவுள் நேயமும் வாயாமற் சடுதியிலே மாய்ந்துபோவர்; அன்றி அங்ஙனம் மாயாது நெடுநாள் இருப்பினும், அவரது இருப்பு, ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய் (குறள் 848) என்று தெய்வத் திருக்குறள் கூறுமாறு இம்மா நிலத்துளதாம் ஒரு நோயினிருப்புக்கே ஒப்பாகும். ஆகவே, நிலையாமையை எண்ணிப் பாராதிருத்தலும் ஆகாது, எந்நேரமும் எண்ணிப் பார்த்திருத்தலும் ஆகாது. அற்றேல், அதனை எண்ணிப் பார்க்க வேண்டுவதெப் போதெனின்; அறிவுங் கல்வியுஞ் செல்வமும் வாய்த்தவர்கள் தாம் பெற்ற அவ்வரிய பேறுகளைப் பயன்படுத்துதலிற் சிறிதுங் காலந்தாழாமைப் பொருட்டு, வாழ்க்கை நிலையாமையினை இடையிடையே தமது நினைவுக்குக் கொணர்தல் வண்டும். ஒருவன் மிகச்சிறந்த அறிவுங் கல்வியுஞ் செல்வமும் பெற்றது எதற்காக? தன்னிலும் அறிவிற் குறைந்தார்க்குங், கல்லார்க்கும், பொருளின்றி வறுமைப்பட்டார்க்கும் அவற்றைக்கொண்டு உதவிசெய்தற்காகவன்றோ? ஒருவன் தான்பெற்ற அறிவைப் பிறர்க்குப் பயன்படுத்தாக்கால் அது அவன்றனக்கும் பயன்படாமலே போகின்றது. பிறர்க்குப் பயன்படுத்துகின்ற காலங்களில் மேன்மேல் விளக்கமுடையதாகிப் பல நுண்ணிய அரும்பொருள்களை அறிந்து பெருகும் அறிவு, அங்ஙனம் பயன்படுத்தப்படாத காலங்களில் தன்னுடைய விளக்கமும் வலியும் இழந்து போகின்றது. அங்ஙனமே ஒருவன் தான்கற்ற கல்வியும் பிறர்க்குப் பயன்படுத்துந்தோறும் ஆழ்ந்துவிரிந்த பெரும் பரப்புடைய தாகும். இனிச் செல்வமுந் தீயவல்லாவழிகளில் அளவறிந்து செலவு செய்யப்படுமாயின், அது முதலிற் குறைவதுபோற் றோன்றினும், பின்னர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாய்ப் பெருகாநிற்கும்; எங்ஙனமென்றாற், பலர்க்கும் பயன்படும் நல்வழிகளில் அளவறிந்து அறிவாய்ப் பொருட்செலவு செய்கின்றவனையும், பிறர் துயர்பொறாமல் உளம் இரங்கி அற்றார்க்கும் அலந்தார்க்கும் அறஞ்செய்கின்றவனையுங், கல்விக்குங் கற்றார்க்கும் ஏராளமாகப் பொருளுதவிபுரிந்து கலையொளி எங்கும் பரவுமாறு செய்கின்றவனையும் நச்சி வந்து எல்லாரும் அவன் வெண்டுமா றெல்லாம் இசைந்து நடப்பராதலால், அவன் முதலிற் செய்யுஞ் செலவு பின்னர் அவற்குப் பெரும் பொருட்டிரளை நல்குவது திண்ணமே யாம். ஆகவே, அறிவுங் கல்வியுஞ் செல்வமும் பிறர்க்குப் பயன்படுதலால் மட்டுமே தம்மையுடையானுக்கும் பெரிது பயன்பட்டு என்றும் அழியாது நிலையாய் விளங்கும்; அவை பிறர்க்குப் பயன்படுதல் இல்லாக்கால் தம்மையுடையானுக்கும் பயன் படுதல் இலவாய் நிலையின்றி அழியும். எத்தனையோ பெரிய அறிவாளிகளுங் கல்வியில் மிக்கா ருஞ் செல்வத்திற் சிறந்தாரும் பண்டைக் காலந் துவங்கி இன்றுகாறுங் கணக்கின்றி வந்தபடியாய்த்தான் இருக்கின்றனர். ஆனால், அவருள் தம் அறிவையுங் கல்வியையுஞ் செல்வத்தையும் பிறர்க்குப் பயன்படுமாறு செய்து வாழ்ந்தவர்களின் பெயரும் புகழுமே ஆங்காங்குக் குன்றின் மேலிட்ட விளக்குப்போல் எங்கும் மங்காமற் றுலங்குகின்றன. மற்றுப் பயன்படாமல் அவற்றைத் தம்மொடு தாம் வைத்து மாய்ந்த எண்ணிறந்தாரையோ வெறும் பெயரளவாய்க் கூட எவருமேயறியார். ஆகவே, பிறர்க்குப் பயன்படாத அறிவு கல்வி செல்வங்கள் நிலையில்லனவாய் மாய்ந்து போதலையும், அவற்றையுடையவரும் அவை தம்மாற்றாமும் நலம் பெறாமல் நீர்மேற் குமிழிபோல் நிலையின்றி மறைந்து போதலையும் இடையிடையே நினைந்து பார்த்துப் பயன்பட ஒழுகுதற்கும் அறஞ்செய்தற்கும் முன்நிற்றல் வேண்டும். இவ்வாறு நிலையாமையினை எண்ணிப்பார்ப்பது அறஞ் செய்தற் பொருட்டாகவே யல்லாமல் வேறு எதற்கும் அன்றென்பது நன்கு தெளியப்படும். இது குறித்தன்றோ நாலடியாரிற், புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை- இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்றன் கேள் அலறச் சென்றான் எனப்படுத லான் என்னும் அறவுரையும் எழுந்தது! இனி, அறிவுங் கல்வியுஞ் செல்வமும் பெறுதலினும், பெற்ற அவைதம்மைப் பிறர்க்குப் பயன்படுத்துதலிலும் முனைந்து நிற்பவர்கள், நிலையாமையினைச் சிறிதுமே எண்ணிப்பார்த்த லாகாது. நாளைக்கு நாம் இறந்தொழிந்தால் நாம் பெறுதற்கு முயலும் அறிவு கல்வி செல்வங்கள் என்னாம்! நமது முயற்சிதான் என்னாம்! நம்மாற் பயன் பெறுவார்தாம் நிலையாக இருப்பவரோ! அவர்பெறும் பயனும் நிலைப்பதோ! எல்லாம் நிலை இல! எல்லாம் பயனில! எல்லாம் மின்னலொளி! எல்லாங்கடலலை! எல்லாம் வெளிமினுக்கு! எல்லாம் வீண்முயற்சி! எல்லாம் வெறும் புரட்டு! என்று அடுத்தடுத்து நினைப்பார்க்கு உள்ளக்கிளர்ச்சி குன்றிவிடும்; தாளாண்மை மாய்ந்து விடும்; உலகமும் உயிரும் பிறவுமெல்லாம் வெறும் பாழய்த்தோன்றும்; அவர் அறிவுங் கல்வியுஞ் செல்வமும் பெறார்; பிறர் துயர் கண்டும் அவர் மனமிரங்கார்; பிறர்க்கோருதவியும் புரியார் அவர். ஆதலால், அறிவுங் கல்வியுஞ் செல்வமும் பெற்றுப் பிறர்க்குப் பயன்பட்டு, அதனாற்றாமும் மேன்மேலுயர்ந்துபேரின்பப் பெருக்கிற்படிதற்கான நோக்கத்துடன் மக்களெல்லாரும் இறைவனால் இப்பிறவியில் வரு விக்கப்பட்டிருப்பதனை நன்காழ்ந்துபார்த்து, அவ்வருட்பெரு நோக்கத்திற்கிசைந்து நடத்தலில் அனைவருங் கருத்தூன்றற்பாலரே யன்றி, எந்நேரமும் நிலையாமையினை நினைந்து மடிந்து வறிதே மண்ணாகற்பாலரல்லரென்க இவ்வரும்பேருண்மை, பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி (குறள் 618) என்னுந் திருக்குறளானும், நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லை- தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி ஆள்வினை என்றிவற்றான் ஆகுங் குலம் என்னும் நாலடியாரானும் நன்கெடுத்துக் காட்டப்பட்டமை காண்க. 5. பழம்பிறவி நினைவு கடார (பர்மா) தேயத்துப் பௌத்தமத மக்களுடன் நெருங்கிப்பழகி, அவர்தங் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் நன்காராய்ந்து அறிந்து ஒரு சிறந்த நூல் வரைந்த ஓர் ஆங்கில ஆசிரியர், 1ஒரு பௌத்த முனிவர் தமது முற்பிறவியினை நினைவுகூர்ந்து நடந்த உண்மை நிகழ்ச்சியினையும், அதுபோன்ற வேறு சில உண்மை நிகழ்ச்சி களையுந் தாம் எழுதிய அந்நூலின்கண் எடுத்துக் காட்டியிருக்கின்றார். அந்நிகழ்ச்சிகளை அவர் கூறுமாறே இங்கு மொழிபெயர்த்துரைக்கின்றாம்: என் நண்பர் ஒருவர், ஒரு சிறிய பட்டிக்காட்டுக்கு நெடுந்தொலைவில் ஒரு கானகத்தின்கண் உளதான ஒரு பௌத்தமடத்தில் ஓர் இராப்பொழுதிற்குத் தங்கவேண்டியவ ரானார். அவர், தமக்குக் காவலாகக் குதிரைமேல் வந்த பாடிகாவலருடன் தங்கவேண்டியிருந்தமையால், அம்மடத்தைத் தவிரத் துயில்கொள்வதற்கு வேறிடங்கிடைக்க வில்லை. அம்மடத்திற் குரியவரான பௌத்த முனிவர், அவர்களை நல்விருந்தாக ஏற்றுத், தம்மிடம் இருந்த உணாப்பொருள்களை அவர்களெதிரே வைத்து, வெறிதாயிருந்த ஓர் அறையினையும் அவர்கட்கென்று ஒழித்துக்கொடுத்தார். அதனால் அவருடன் வந்தவர்களும் அன்றிரவு அங்கே தங்கியிருக்கலாயினர். இராச்சாப்பாடு முடிந்ததுங், குளிர்காய்வதற்கு ஒரு கணப்புச்சட்டி கொணர்ந்து நிலத்தே வைத்துத் தீ மூட்டப்பட்டது. உடனே அந்நண்பர் அதனருகே சென்று அமர்ந்து, அவ்வூர்த் தலைமைக்காரனிடத்தும் அம்முனிவரிடத்தும் உரையாடத் துவங்கினர். முதலில் அவர்கள், கருத்தைக் கவருஞ்செய்திகளான கொள்ளைக்காரர் செயல் களையும் பயிர் விளைச்சல்களையும் பற்றிப் பேசினர். அதன்பிற் படிப்படியே ஒன்றன்பின்னொன்றாய் வேறு பலவற்றைப் பேசிக்கொண்டே சென்றனர். முடிவில் அவ் வாங்கிலமகன், அம்மடத்தின் அமைப்பைக் குறிப்பாய்ப் பார்த்து, அஃது, அத்தனிமையான சிற்றூரை நோக்க, மிகப் பெரிய தொன்றாயும், அழகியதாயும் அமைக்கப்பட்டிருத்தலை வியந்து பேசினர். அம்மடமானது, மிகச்சிறந்த, வளைவில்லாமல் நிமிர்ந்த தேக்கமரங்களாற் கட்டப்பட்டிருத்தலால், அதனைக் கட்டி முடிப்பதற்கு நீண்டகாலமும் மிகுந்த உழைப்பும் பிடித்திருக்குமென்றும் அவர் எண்ணினார். ஏனென்றால், அத்தகைய தேக்கமரங்கள் அவ்விடத்திற்கு அருகே எங்குமில்லை. அதனால், அவை மிக எட்டி யுள்ள இடங்களிலிருந்து கொணர்ந்து சேர்ப்பிக்கப் பட்டனவா யிருக்கவேண்டுமென அவர் புகன்றனர். அது கேட்ட அவ்விருவரில் தலைமைக்காரன் அம்மடத்தின் வரலாற்றை எடுத்துரைக்கலானான். பழைய நாட்களிற் காடு சூழ்ந்த குறிச்சிகளில் அமைக்கப்பட்ட மடங்கள் மூங்கில்களாற் கட்டப்பட்டு மேலே விழல்வேய்ந்து செய்யப்பட்டனவாகும். முன்னொரு கால் அத்தன்மையதாகவே இவ்விடத்தில் இயற்றப்பட்டிருந்த மடம் மிகச்சிறிய தொன்றாயுந், தாம் வைத்து நடத்தும் பள்ளிக்கூடத்திற்கு ஏற்ற வசதி வாயாததாயும் இருந்தமைகண்டு, அந்நாளில் அதன்கண் இருந்த ஒரு துறவி மனம்புழுங்கி, வலியதாக ஒரு பெரிய மடங்கட்டி முடித்தலைக் கருதி, அதற்காக ஒரு மழைக் காலத்தில் தேக்க நாற்றுக்களை வருவித்து அவற்றை அம்மடத்தைச் சூழ நடுவித்தார். பிறகு அவை தமக்குத் தண்ணீர் பாய்ச்சி, அவைகளைக் கருத்தாய் வளர்த்துவரும் நாட்களில், இவை பெரியனவாய் வளர்ந்த பிறகு, தகுதியான ஒரு புதிய கட்டிடம் வகுப்பதற்கு இவை பெரிய தேக்க மரங்களாய்ப் பயன்படும். யானே மறுபிறப்பிற் பிறந்து வந்து, அமமரங்களைக்கொண்டு இதனைவிடத் தகுதி வாய்ந்ததொரு திருமடத்தினை இங்கு அமைப்பிப்பேன் என்று அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பது வழக்கம். தேக்கமரங்கள் பேரளவினவாய் வளர்ந்து முற்றுதற்கு நூறாண்டுகள் செல்கின்றன. மற்று, அத்துறவியோ, தாம் நடுவித்த தேக்க நாற்றுகள் இளங்கன்றுகளாயிருக்கும்போதே, இறந்து போயினர். மற்றொரு பௌத்ததுறவி அம்மடத்திற்குத் தலைவராய் வந்தமர்ந்து, அதன்கண் நடைபெற்ற கலைபயில் கழகத்தை நடத்தி வரலானார். இவ்வாறாகக் காலம் போய்க் கொண்டிருந்தது; ஆண்டுகள் செல்லச் செல்லப் புதிய புதிய மடங்கள் மூங்கில்களினாலேயே திரும்பத்திரும்ப அமைக்கப் பட்டு வந்தன; அங்கே நடப்பட்ட தேக்கமரங்களும் வரவரப் பெருத்து வளர்ந்தன. ஆனால், அச்சிற்றூரோ பின்னும் பின்னுஞ் சிறிதாய்க் குறுகியது; ஏனென்றாற், காலஞ் செல்லச்செல்லத் தொல்லையும் மிகுதிப்பட்டது; அவ்வூருங் காட்டினுள்ளே எட்டியிருந்தது. கடைப்படியாக அவ்வூருக்கே ஒரு துறவி இல்லாமற் போயினர். இறுதியாக இருந்த துறவியும் இறந்த பிறகு, வேறொருவரும் அவ்விடத்திற்கு வந்து சேரவில்லை. ஓர் ஊருக்கு ஒரு துறவி கூட இல்லாதொழிவது பெரியதொரு குறைபாடாகும். அங்குள்ள இளஞ்சிறார் எழுதப் படிக்கக் கணக்குச் செய்யக் கற்பிப்பார் எவரும் இல்லை. ஐயம் இட்டு அதனாற் பெறும்பேற்றை எய்துதற்கும் அங்கு ஐயம் ஏற்பார் எவரும் இல்லை. உயிர்க்குறுதியான புனித உரைகளை எடுத்து அறிவுறுத்துதற்கும் பெரியாரெவரும் அங்கில்லை யாயினர்! ஆகவே, அவ்வூரின் நிலைமை பழுதான தொன்றாய்த் திரிபுற்றது. பிறகு சிறிதுகாலங் கழித்து ஒருநாட் சாய்ங்காலத்தில், அவ்வூர்ச் சிறுமிகள் அங்குள்ளதொரு கிணற்றில் நீர் முகந்து கொண்டிருக்கையில், அவ்வடவியினுள்ளிருந்து ஒரு துறவி நெடுவழி வந்தமையால் அடிகள் புண்பட்டுக் களைத்துப் பசியுடன் அங்கு வந்த சேர்ந்தனர். உடனே அவ்வூரவர் அவரை மிகுகளிப்புடன் வரவேற்றனராயினும், அவர் அவ்வழியே வேறோர் ஊர்க்குச் செல்பவராயிருக்கலாமென மனம் வெதும்பி, அவர் அன்றிரவு தங்கித் துயில்கொள்ளுதற் பொருட்டு அப்பழைய மடத்தைப் பரபரப்புடன் துடைத்துத் துப்புரவு செய்தனர். ஆனாற், புதுமை என்னென்றால், வந்த அத்துறவி அவ்விடமெல்லாம் அறிந்து பழக்கப்பட்டவர் போற் காணப்பட்டார். அவர் அம்மடத்தையும் அதற்குச் செல்லும் வழியையும், அடுத்துள்ள ஊர்க்குச் செல்லும் பாதைகளையும், அங்குள்ள குன்றுகள், ஆண்டு ஓடும் நீரோட்டங்களின் பெயர்களையும் நன்கறிந்தவராயிருந்தனர். அதனால், அவர் முன்னோரு கால் அவ்வூரில் உறைந்தவராயிருக்க வேண்டு மென்பது அவ்வூரினர் எல்லார் உள்ளத்திலும் பட்டது. என்றாலும், அங்குள்ளாரெவரும் அவரை அறிந்தவராயும் இல்லை. அவரது முகம் அறியப்பட்ட தொன்றாயுமில்லை. அவர் ஆண்டில் இளைஞராயும், அவ்வூரிற் சிலர் எழுபதாண்டு உயிர்வாழ்ந்தவராயும் இருந்தனர். மறுநாட் காலையில், அத்துறவி அவ்விடத்தைவிட்டு வழிச்செல்பவராயில்லாமல், ஐயம் ஏற்குங் கடிஞை ஏந்தி, அவ்வூர்க்குட்புகுந்து, பௌத்த துறவிகள் ஐயம் ஏற்கும் முறைப்படியே, தெருக்கடோறுஞ் சுற்றிவந்து, அன்றைக்கு வேண்டும் உணவைத் தொகுத்துக்கொண்டார். அன்றை மாலைப்பொழுதில், அவ்வூரினரெல்லாரும் அவரை அம்மடத்திற் காணவந்தபோது, அவர் தாம் அங்கேயே பதிவா யிருக்கப்போவதைச் சொல்லிப் பிறகு, அம்மடத்தைச்சூழ அத்தேக்கமரங்களை அங்கே நடுவித்த துறவியைப் பற்றியும், அம்மரங்கள் வளர்ந்து முற்றிய பின் அத்துறவி திரும்பி வருவதாகக் கூறிய அறுதி யுரையைப்பற்றியும் அவர்கட்கு நினைவுறுத்தினர். அதன்பின் அவ்விளந்துறவியார் அவர்களை நோக்கி, யானே இம்மரங்களை இங்கு நடுவித்தவன். இதோ! இவை வளர்ந்துவிட்டன; யானுந் திரும்பி வந்துவிட்டேன்; யான் முன் மொழிந்தது போலவே, இப்போது ஒரு திருமடத்தைக் கட்டுவாமாக! என விளம்பினர். அவ்வூரவர் அவர் கூறியதில் ஐயுற்றுப் பற்பல கேள்விகளைக் கேட்டனர்; ஆண்டில் முதிர்ந்தோர் நெடுங்காலத்திற்கு முன் வழங்கிய செய்திகளைப்பற்றி அவர்பால் உரையாடினர்; அவைகளையெல்லாம் அவர் அறிந்தவர்போல் அவர்கட்கு விடைகொடுத்தனர். இன்னுந், தாம் தெற்கே நெடுந்தொலைவிற் பிறந்து கல்வி பயிற்றப்பட்டதையுந், தாம் இன்னாரென்றே அறியாமல் வளர்ந்ததையும், பிறகு தாம் ஒரு திருமடத்திற்சேர்ந்து பொங்கி2 ஆனதையும், பிறகு ஒருநாள் தாம் கனவு காண்கையில், தாம் தேக்க மரங்கள் நடுவித்ததும் அக்கானகத்திற் சேயதாயுள்ள அச் சிற்றூருக்குத் திரும்பி வருவதாகக் கூறிய உறுதிமொழியுந்தம் நினைவுக்கு வந்ததையும் எடுத்துரைத்தார். அங்ஙனங் கனவுகண்ட மறுநாளே தாம் இருந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப் பல நாட்களும் பல கிழமைகளுமாகத் தாம் அவ்வூர்க்கு அவர்கள் கண்ணெதிரே வந்து சேர்ந்ததுந் தெரிவித்தார். வியக்கத்தக்க அவ் வரலாற்றைக் கேட்ட அவ்வூரினர் அவர் கூறிய அதில் நம்பிக்கையுற்று, அப்பருத்த தேக்கமரங்களை வெட்டி வீழ்த்தி, இப்போது காணப்படும் அப்பெரிய திருமடத்தைக் கட்டி முடித்தனரென்பது. இன்னும், இளஞ்சிறார் பலர் தம் முற்பிறவி நிகழ்ச்சி களை நினைவு கூர்ந்துரைக்கின்றனரெனவும், அவர்கள் வளர வளர அந்நினைவு மறைந்துபோதலின் அவர்களவற்றையும் மறந்துபோகின்றனரெனவும், ஆனால், அவர்கள் சிறுவரா யிருக்கும் வரையில் அந்நினைவு அவர்கள் பாற்றெளிவாகவே விளங்குகின்றதெனவும் பர்மியர் கூறுகின்றனர். யானே அத்தகைய நினைவு வாய்ந்த பிள்ளைகளைப் பார்த்திருக் கின்றேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒக்ஷித்கான் என்னும் ஒரு சிற்றூரில், ஓர் ஆண்மகவும் ஒரு பெண்மகவும், பக்கத்துப் பக்கத்து வீட்டில் ஒரே நாளிற்பிறந்தன. அவையொன்றாய் வளர்ந்து, ஒன்றாய் விளையாடி, ஒன்றையொன்று காதலித்தன. பிறகு பருவ முதிர்ந்து இளைஞரானபின், அவ்விளைஞனும் இளைய மாதும் மணஞ்செய்துகொண்டு, அவ்வூரையடுத்துள்ள வறண்ட பாழ்நிலங்களைத் திருத்திப் பயிர்செய்து, அவற்றிற் கிடைத்த விளைவால் தமது இல்லற வாழ்க்கையை இனிது நடாத்திவரலாயினர். அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து உயிர்வாழ மாட்டாத அத்துணைப் பெருங் காதற்கிழமை யுடையராயிருந்தன ரென்பதும், அதனால் வாழ்நாள் முடிந்து உயிர்துறந்த காலத்தும் ஒன்றாகவே உயிர்துறந்தனரென்பதும் அங்குள்ளாரெல்லாரும் நன்கறிந்தனவாகும். அவர்களிருவரும் ஒரே நாளில் இறந்தமையால், ஊர்க்குப் புறத்தே யுள்ள இடுகாட்டில் அவர்களைப் புதைத்து விட்டார்கள். அவர்களைப் பற்றிய நினைவுங் காலஞ் செல்லச் செல்ல அவ்வூரார்க்கு இல்லாமல் மறைந்துபோயிற்று. ஏனென்றாற், காலத்தின் வல்லமை பெரிதன்றோ? இனி, யான் கூறப்போகும் நிகழ்ச்சியானது, ஆங்கிலரது படை மாந்தலை நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டதற்குப்பின் அடுத்த ஆண்டில் நிகழ்ந்ததாகும். அப்போது கடாரதேயமுழுதும் பெருஞ் சீற்றத்துடன் கலகம் விளைத்து நின்றது. அந்நாட்டவர்களெல்லாரும் படைக் கலந்தாங்கி நின்றனர்; பாட்டைகளிற் செல்வது அச்சத்திற் கிடமாயிருந்தது; இராக்காலமோ ஊர்கள் நெருப்புப் பற்றியெரியுந் திகிலான வெளிச்ச முடையதாய்த் தோன்றியது. அமைதியாய்க் காலங்கழிப்பவர்க்கு அது பொல்லாத காலமாய் மாறியது. அமைதியாய் உயிர்வாழ்ந்த மாந்தர் பலர் பட்டிக்காடுகளில் இருப்பதைவிட்டு, அரசியல் நடைபெறும் நகரங்களையடுத்த பெரிய ஊர்களிற்போய் அடைக்கலம் புகுந்தனர். இவ்வாறு துன்புற்ற நாடுகளின் இடையே ஒக்ஷித்கான் என்னும் ஊரும் இருந்தது. அதனால், அதன்கட் குடியிருந்த மக்கள் பலரும் அவ்விடத்தைவிட்டு ஓடிப்போயினர். அவர்களுள் ஒருவனாகிய மாங்கான் என்பவன் தன் மனைவியுடன் கப்யு என்னும் ஒரு சிற்றூரிற் சென்று அங்கே தங்கினன். அந்த மாங்கா ளின் மனைவி அவற்கு இரண்டு ஆண் குழந்தைகளை இரட்டைப்பிள்ளைகளாய்ப் பெற்றனள். அப்பிள்ளைகள் ஒன்றாக வளர்ந்து விரைவில் தமது மொழியிற் பேசக் கற்றுக்கொண்டார்கள். அங்ஙனம் அவர்கள் பேசக் கற்றுக்கொண்டபின் விளையாடும் நேரங்களில், அச்சிறார், தம்முள் ஒருவரையொருவர் அழைக்கும் போதெல்லாந், தம்பெற்றோர் தமக்கிட்ட பெயர்களால் தம்மை அழைத்துக்கொள்ளாமற், மாங்சன் நயீன் எனவும் மாகைவின் எனவுந் தம்மை அழைத்துக் கொள்ளுதல் கேட்டு, அவர் தம் பெற்றோர் பெரிதும் இறும்பூதுற்றனர். ஏனென்றால், இரண்டாவது பெயர் ஒரு பெண்மகளின் பெயராகும். மேலும், முதற்பெயரும் இரண்டாவது பெயரும் பூண்டிருந்த அவ்வாடவனும் மனைவியும் ஒக்ஷித்கான் ஊரிற் காதலன்பிற் சிறந்தவராய் வாழ்ந்து இறந்தபின்னர்த்தான், இம் மகார் இருவரும் இவர் தமக்குப் பிள்ளைகளாகப் பிறந்தன. ஆகவே, இதனை ஆராய்ந்து பார்க்கும்பொருட்டு இப்பெற்றோர் இப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஒக்ஷித்கான் ஊர்க்கே போயினர். அங்கே சென்றபின் அச்சிறுவரிருவரும், அவ்வூரிலுள்ள வழிகளையும், வீடுகளையும், அவ்வீட்டிலுள்ளாரையும், அவ்விருவருந் தமது முற்பிறவியில் வழக்கமாய் அணிந்திருந்த ஆடைகளையும் தெரிந்து கொண்டனர். அதைப் பற்றிச் சிறிதும் ஐயமேயில்லை. அவ்விளைஞர் இருவரில் இளவலாயிருந்தவன், தான் முற்பிறவியிற் பெண்மகளாயிருந்ததுந், தான் தன் கணவனுக்குத் தெரியாமல் மாதெட் என்னும் ஒரு மாதினிடம் ஒருகால் இரண்டுரூபா கடன் வாங்கியிருந்ததும், அக்கடனைச் செலுத்தாமலே தான் அப்போது இறந்து போயதும் எல்லாம் நன்கு நினைவு கூர்ந்துரைத்தான். ‘khbj£! என்னும் அம்மாதர் இன்னும் உயிரோடிருந்தமையாற், பெற்றோர்கள் அக்கடனைப்பற்றி அவளை வினாவினர்; அவளும் அதனை நினைவு கூர்ந்து நீண்ட நாளுக்கு முன் தான் அங்ஙனங் கடன் கொடுத்தது உண்மையே யென ஒப்புக்கொண்டாள். சிறிது காலத்திற்குப் பின்னர் யான் இச்சிறுவர் இருவரையும் பார்த்தேன். இப்போது இவர்கட்கு அகவை ஆறாண்டுக்குமேற் சிறிதுகூட இருக்கும். மூத்தபையன் குள்ளமாய்த் தடித்துக் கொழுமையாய் இருந்தனன்; இளைய பையனோஇன்னுங் குள்ளமாய்ச் சிறிது இடுகிய கண்ணினனாய் ஒரு பெண்பிள்ளையைப்போல் இருந்தனன். அவரிருவருந் தங்கள் பழம் பிறவிகளின் நிகழ்ச்சிகளை எனக்கு மிகுதியாய் எடுத்துரைத்தனர். தாம் முன்னே இறந்தபிறகு தமக்கோர் உடம்பேயில்லாமற் சிறிதுகாலம் இடைவெளியில் அலைந்து கொண்டிருந்ததாகவும் மரங்களில் ஒளிந்துகொண்டிருந்த தாகவும் எனக்குச் சொன்னார்கள். இவ்வாறு அலையலானது அவர் தாஞ்செய்த தீவினைப்பயனாகும். பின்னர்ச் சிலதிங்கள் கடந்து, மறுபடியும் அவர்கள் இரட்டைப் பிள்ளைகளாய்ப் பிறந்தார்கள். முன்னே என் நினைவு மிகத் தெளிவாகயிருந் தமையால் யான் ஒவ்வொன்றையும் நினைவுகூரக் கூடியவனா யிருந்தேன்; முன்போல இபோது யான் அவைகளை நினைவு கூரக் கூடவில்லை என்று அம் மூத்தபையன் என்னிடம் மொழிந்தனன். இன்னும், என்னுடன் அலுவல் பார்க்கும் ஒரு துரைமகனார்க்கு ஒரு பர்மிய பாடிகாவலன் ஏவலனாய் இருக்கின்றனன். இவன் இருபஃதாண்டுள்ள ஓர் இளைஞன். இரண்டாண்டுகளுக்கு முன் அத் துரைமகனார் அவ்வட்டத்திற்கு வந்ததுமுதல் அவன் அவரிடம் வேலை பார்த்துவருகிறான். என் நண்பர் தம் ஏவலன் தனது முற்பிறவி நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்திருத்தலை முன்னொரு நாள் தற்செயலாய்க் கண்டுபிடித்தார். ஆனாலும், அவன் அதைப்பற்றிப் பேசுவதில் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்தான். இப்போது தானிருக்கும் இடத்திற்கு இருபது கல் தொலைவிலுள்ள ஓர் ஊரில் அவன் முற்பிறவியில் ஒரு பெண்மகளாய்ப் பிறந்திருந்தனன். அவன் அப்பிறவியில் நன்னடக்கை யுடையனாயிருந்தமையின், இப்பிறவியில் ஓர் ஆண்மகனாய்ப் பிறந்தனன், ஏனென்றால் ஆண் பிறவியெடுப்பது கீழ்நிலையிலிருந்த ஓர் உயிர் மேல்நிலைக்கு ஏறுவதாகும்; என்றாலும் , அவன் அதைப்பற்றிப் பேசவில்லை. அவன் தான் சிறுபிள்ளையாயிருந்த ஞான்று தனது முற்பிறவியின் நிகழ்ச்சிகளைத் தான் நன்கு நினைவுகூர்ந்திருந்தாலும், இப்போதவைகளைத் தான் பெரும்பாலும் மறந்துவிடுவதாகவே எமக்குக் கூறினன். இன்னுஞ், சிறிதுகாலத்திற்கு முன், ஏழாண்டு அகவையினளான ஒரு சிறு பெண்ணைப் பார்த்தேன். அவள் தன் முற்பிறவியில் தான் ஓர் ஆண் மகனாய்ப் பிறந்திருந்த வரலாறுகளை யெல்லாம் எடுத்துரைத்தாள். அப்போதிவள் தான் பூண்டிருந்த பெயர் மாங்மன் என்றும், ஊர் ஊராய்ச் செல்லும் பாவைக் கூத்திற் சேர்ந்து தான் பாவைகளை ஆட்டிவருவதுண்டென்றுங் கூறினள். இவன் பெற்றோர்கள், இவள் சிறு குழந்தையாயிருக்கையிலேயே இவளுக்குப் பாவைகளிடத்திலும் அவைகளை ஆட்டுவதிலும் மிகுந்த விருப்பம் இருத்தல் கண்டு, இவள் முற்பிறவியிலேயே இத்தகைய தொரு தொழிலை மேற்கொண்டவளாகத்தான் இருக்க வேண்டுமெனத் தாம் எண்ணியதாக எனக்கு எடுத்துரைத்தனர். இவள் பால் பருகும் மகவாயிருக்கும்போதே பாவைகளைக் கயிறு பூட்டி ஆட்டத் தெரிந்தவளாயிருந்தாள். இவள் நான்காண்டு வளர்ந்த பிறகுதான் இவடன் முற்பிறவி நிகழ்ச்சி இவட்குத் திட்டமாய்த் தெரியலாயிற்று. ஒரு பரண்பாவைக் கடையினையும் அதன்கணிருந்த பாவைகளையும் இவள்தான் பார்த்தபோது. அவை முற்பிறவியில் தனக்குரியவாய் இருந்த தனைத் தெரிந்து கொண்டாள். இவள் அப்பாவை ஒவ்வொன்றன் பெயரையும், அவையிற்றை ஆட்டுங்கால் தான் பேசுஞ் சொற்கள் சிலவற்றையுங்கூடச் செவ்வனே நினைவு கூர்ந்தாள். மேலும் அவள் எனக்குச்சொன்னவை இவை: யான் முற்பிறவியில் நான்கு முறை மணஞ் செய்துகொண்டேன். என் மனைவிமார் நால்வருள் இருவர் இறந்துபோயினர். மூன்றாம் மனைவியை விலக்கி விட்டேன். நான்காம் மனைவி யான் இறக்குங்கால் உயிரோடிருந்தனள்; இப்போதும் உயிரோடிருக் கின்றனள்; இவளை யான் மிகவுங் காதலித்தேன். யான் விலக்கிவிட்ட மூன்றாம் மனைவியோ மிகவுங் கொடியவள்; இதோ பாருங்கள் (என்று தன் தோளின்மீதிருந்த ஒரு தழும்பைக் காட்டி) எங்கட்குள் நேர்ந்த சண்டையில் அவள் எனக்குத் தந்தது இது! அவள் ஒரு கத்தியை யெடுத்து இவ்வாறு எனக்குக் காயத்தை உண்டாக்கினாள்; அதன் பிறகுதான் யான் அவளை விலக்கிவிட்டேன். அவள் மிகக்கொடிய குணம் உள்ளவள் இங்ஙனமாக இச்சிறுமி உரையாடியது எனக்குப் பெரிதும் புதுமையாய்த் தோன்றியது. இவள் காட்டிய இத்தழும்பு பிறவியிலேயே அமைந்த அடையாளமாகும். என்றாலும், அச்சண்டையில் அவன் மனையாள் உண்டாக்கின காயம் பட்ட அதே இடத்திலேயே இச்சிறுமி காட்டிய வடு அமைந்த உண்மை எனக்கு அங்குள்ளாரால் உறுதிப் படுத்தப்பட்டது. நீக்கப்பட்ட மனைவியுங், காதலிக்கப்பட்ட மனைவியும் இன்னும் உயிரோடிருக்கின்றனர்; அவர்கள் ஆண்டில் இன்னும் முதிரவில்லை. காதலிக்கப்பட்ட நான்காம் மனைவியானவள், இச்சிறு பெண்ணைத் தன்னுடன் வந்திருக்கும்படி விரும்பினள். ஆனால், அவள்அதற்கிசைந்து அவள்பாற் செல்லவில்லை. அதன்மேல் யான் அச்சிறுமியை நோக்கி நீ அந்த அம்மையை நிரம்பவுங் காதலித்தாயென்பது உனக்கே தெரியும். அந்த அம்மையும் உனக்கு நல்ல மனையாளாய் இருந்தவர். அவ்வாறாயின், நீ அவருடன் இருந்து வாழ விரும்ப வேண்டுமே என வினவினேன். அதற்கு அச்சிறுமி அவை எல்லாம் முற்பிறவியில் நடந்தவை என்றனள். இப்போது அச்சிறுமி தன் பெற்றோரிடத்திலேயே அன்பு மிக்கவளாயிருக்கின்றாள். சென்ற பிறவியின் நினைவு அவட்கொரு கனவாய்த் தோன்றியது அதுவுந் தொடர்பு பட்டுத் தோன்றாமல், துண்டு துண்டாய் இன்னுந் தோன்றுவதாயிற்று. ஆனால், முற்பிறவியிற் காணப்பட்ட பகைமையும் அன்பும் மனக்கொதிப்பும் உழப்பு மெல்லாம் அடியோடு அவிந்துபோயின. இன்னும் ஒரு சிறு பையன் தனக்குத் தன் முற்பிறவி நிகழ்ச்சி நினைவுக்கு வந்தவரலாற்றினைப் பின்வருமாறு எனக்கெடுத்துக் கூறினன். பௌத்த மடங்களில் திருவிழக் கொண்டாடுங் காலங்களில், ஒரு துறவியிருக்கும் இடத்திற்கும் மற்றொரு துறவி யிருக்கும் இடத்திற்கும் இடையிடையே திரைகளிடுவது வழக்கம். அங்ஙனம் இடப்படுந் திரைகளிற் சில, இப்பையன் முற்பிறவியில் அணிந்திருந்த பட்டுத் துணிகளைக் கொண்டு தைக்கப்பட்டிருந்தன. இனி, ஒரு செல்வன்றன் மகனான ஒரு சிறுவன் பௌத்த மதத்தின் துறவியாகச் செய்யப்படுந் திருநாள் ஒன்று ஒரு திருமடத்திற் கொண்டாடப் பட்டது. மேற் கூறிய பையன்றன் பெற்றோர்கள் தம் பையன் மூன்றாண்டுள்ள சிறுவனாயிருந்தபோது, அவனை அழைத்துக் கொண்டு அத்திருநாளுக்குச் சென்றனர். அவன் அது நடைபெறுந் திருமடத்திற்குச் சென்றதும், அங்கே தொங்கவிடப்பட்டிருக்குந் திரைகள் சில தான் முற்பிறவியில் அணிந்திருந்த பட்டுத்துணிகளைக்கொண்டு செய்யப் பட்டிருத்தலைக் கண்டனன்; கண்டவுடனே. அவனுக்குத் தனது முற்பிறவியின் நிகழ்ச்சி நினைவுக்கு வந்துவிட்டது. அவனும் அதனைக் குறிப்பிட்டுக் காட்டினன். இச்சிறுவன் தான் முன்னே இறந்துபட்டதும், மூன்று திங்கள்வரையில் மற்றொரு பிறவிக்கு வராமல் தான் துன்புற்றதும் எனக்கு எடுத்துரைத்தான். இஃது எதனால் நேர்ந்ததென்றால், அவன் தற்செயலாக இரு கோழியைக் கொன்றதனால் நேர்ந்ததாகும். அவன் வேண்டுமென்றே அதனைக் கொன்றிருந்தனனாயின், இன்னுங் கடுமையாக அவன் ஒறுக்கப்பட்டிருப்பனாம், இந்த மூன்று திங்களிற் பெரும்பாலும் அவன் ஒரு தேங்காய்ச் சிரட்டைக் குடைவிலேயே யிருந்தமையாலும், அச்சிரட்டை மாட்டுக்காரப் பயல்கள் மாடு ஓட்டிச்செல்லும் ஒரு வழியண்டையிற் கிடந்ததனால் அப்பயல்கள் விடியற் காலையில் மாடுகளை யோட்டிச் செல்லுங்கால் தமது கையிலுள்ள கோலால் அச்சிரட்டையை அடித்துக்கொண்டே சேன்றமையாலும் அதனுள்ளிருந்த தனக்குப் பெருந்துன்ப முண்டாயிற்றென்று அதனை எனக்கு விளக்கிச் சொன்னான் என்பது. அடிக்குறிப்புகள் 1. H. Fielding Hall; see his book “The soul of a people,” pp.291-307 2. பௌத்தமதத்திற் சேர்ந்து துறவிகளானவர் பொங்கி என்று கடாரதேயத்தில் வழங்கப்படுகின்றனர். 6. மாமரம் மா என்னும் சிறந்த மரம், சூடுமிகுந்த இத்தமிழ் நாட்டிலும் இதனையடுத்துள்ள சில நாடுகளிலும், இதற்குக் கிழக்கேயுள்ள கடாரம், மலேயா, சாவகம் முதலான வெவ்விய தேயங்களிலும் மிகுதியாய் வளர்கின்றன. குளிர் மிகுந்த நீலமலை முதலிய விலங்கல்கள் மேலும், பனிப்பெய்யும் ஐரோப்பிய மேல்நாடுகளிலும் இவை பயிராவ தில்லை. மாந்தி, கோக்கு , மாழை, நாளினி, எகினம், முதலிய சொற்கள் மாமரத்தைக் குறிப்பனவான பழைய தமிழ்ச்சொற்களாகும். இவற்றுள், நாளினி, மாழை, எகினம் என்பன புளிமாவினைச் சுட்டுமென்று பிங்கலந்தை நிகண்டு கூறுகின்றது. சூதம், ஆமிரம், சிஞ்சம், முதலியன மாமரத்தினை யுணர்த்தும் வடசொற்களாகும். பழைய காலந்தொட்டு வளர்ந்தோங்கி நிற்கும் மாமரங்களில் ஒருசாரன தேமாவென்றும், மற்றொரு சாரன புளிமாவென்றும் பகுத்து வழங்கப்பட்டு வருகின்றன. ஏனென்றாற், காய்முற்றிப் பழுத்த பின் இனிய சுவைதரும் ஒருவகை தேமா வெனப்படுகின்றது; பழுத்த பின்னும் புளிப்பாயிருத்தல்பற்றி மற்றொருவகை புளிமாவெனப்படுகின்றது. பழைய மாங்கனிகளில் நார் இல்லாதவைகளைக் காண்டல் அரிது. ஆனால், இந்நாளிலோ, பழைய மாமரத்தின் சிறுகிளைகளில் வேறு மரஞ் செடிகளின் கிளைகளைக் கொணர்ந்து சீவிப் பிணைத்துக்கட்டி எடுத்த ஒட்டுமாஞ் செடிகளை எங்கும் மிகுதியாய்ப் பயிராக்குகின்றார்கள். இவை மூன்று நான்கு ஆண்டுகளிலெல்லாங் காய்த்து நாரில்லாத இனிய பழங்களைத் தருகின்றன. கொட்டை மாங்கனிகளைவிட ஒட்டுமாங்கனிகள் அளவிற் பெரியனவாய்த் தீஞ்சுவையில் மிகுந்தனவாய் இருக்கின்றன. கொட்டை மாங்கனிகள் பெரும்பாலனவற்றில் நாரும் புளிப்பும் இருத்தலால் அவற்றைச் சிறுக உண்டாலும் அவை உடம்பின் நலத்தைப் பழுதுபடுத்துகின்றன. ஒட்டுமாங்கனிகளிலோ நாரும் புளிப்பும் இல்லாமல் உள்ளுள்ள தசை சுளை சுளையாக இருத்தலாலுந், தித்திப்பான சாறு நிரம்பியிருத்தலாலும் அவையிற்றைச் சிறிது மிகுதியாக உட்கொண்டாலும் உடம்பின் நலம் பழுதுறாது; அளவாயுண்டால் உடம்பின்நலம் பெருகும். என்றாலும், ஒட்டுமாங்கனிகளிற் சில புளிப்பாயிருத்தல் ஏன் என்றாற், கடைக்காரர்கள் மரங்களில் நன்றாய் முற்றுதற்கு முன்னமே அவை தம்மைப் பறித்து விற்பனை செய்யக் கொணர் கின்றனர். அதனால் அவை யங்ஙனம் புளிப்பா யிருக்கின்றன. மரங்களில் நன்றாக முற்றும்மட்டும் விட்டுவைத்துப், பின்னர்ப் பறித்துப் பழுக்கவைத்த ஒட்டுமாம்பழங்கள் ஆராத் தீஞ்சுவை பயப்பனவா யிருத்தலை எமது தோட்டத்திலுள்ள ஒட்டு மாமரங்களில் வைத்தே நன்கறிந்திருக்கின்றேம். ஆனால் மரங்களில் அவை செவ்வனே முற்றும்முட்டும் அவை யிற்றை விட்டு வைப்பதற்குச் சில இடையூறுகள் இருக்கின்றன. பகற் காலத்தில் அணிற்பிள்ளைகளும், இராக்காலத்திற் பழந் தின்னி வௌவால்களும் பகலிராக்காலங்களிற் சிறுவர்கள் கள்வர்களும் புகுந்து அவையிற்றைக் கடித்துத் தின்றுங் கவர்ந்து கொண்டும் போய்விடுதலால், அவை முதிர்ந்து செங்காய் ஆகுதற்கு முன்னமே தோட்டக்காரர்கள் அவையிற்றைப் பறித்துவிடுகின்றார்கள். ஒட்டுமாமரங்களில் நடுச்சாலை என்னும் வகை மிகுந்த மணமும் நிறைந்த சுவையும் உடையன. மல்கோவா என்னும் வகை அத்துணை மணம் இல்லாவிடினும், இன்சுவையில் மிக்கனவாய், அளவிலும் ஒரு தேங்காய்ப் பருமன் பெருக்கின்றன. கிளிமூக்கு என்னும் வகையில் மணம் மிகக் குறைவு; சுவையில் மூன்றாந்திறமே. நீலம் என்னும் வகையிற் சேர்ந்த ஒட்டு மாம்பழங்கள் நன்றாய் முற்றியபின்னும் பச்சென்ற தோலுடைய வாய்க் காணப்படுகின்றன; ஆனாலும், உள்ளுள்ள தசை சிவந்த மஞ்சள் நிறம் வாய்ந்து தேனூறித் தித்திக்கின்றன. இந்நான்கு வகைகளைத் தவிர, இன்னும் எத்தனையோ வகையான ஒட்டுமாமரங்கள் உண்டு. இங்ஙனமே கொட்டை மாமரங் களிலும் பற்பல வகைகள் உண்டு. இனி, இஞ்ஞான்று இத்தென்னாட்டிற் பலவிடங்களிற் பருத்தடர்ந்து காணப்படும் மாந்தோப்புகளில் உள்ள பெரியபெரிய மரங்களெல்லாங் கொட்டைகளிலிருந்து உண் டானவைகளே யாகும். இக்கொட்டைமாமரங்களில் ஐந்நூறாண்டு ஆயிர ஆண்டுகளுக்குமேல் உயிருடன் நிற்கும் மரங்களும் உண்டு. இம்மரங்களின் அடிகண் மேலுள்ள பட்டைகள் பொரிந்த வடிவுடையனவாய் இருத்தலால் இவை தம்மைப் பொரியரைமா என்று பழைய தமிழ்நூற் செய்யுட்கள் அடுத்தடுத்து வழங்காநிற்கும் . இம்மாமரங்கள் பெரும் பாலும் பட்டிக்காடுகளுக்குப் பக்கத்தே ஒரு தொகுப்பாக வைத்துப் பழைய நாட்களிலேயே பயிராக்கப்பட்டுள்ளன. இங்ஙனம் ஒரு தொகுப்பாக வைக்கப்பட்ட மரச்செறிவே தோப்பு என வழங்கப் படலாயிற்று. தொகுப்பு என்னுஞ் சொல்லே தோப்பு எனத் திரிபுற்றது. இப்பழைய கொட்டை மாமரங்கள் பருத்துயர்ந்து, பரியபரிய கோடுகளையுங் கொம்புகளையும் வளார்களையும் அவற்றில் இலைகளையும் நாற்புறங்களிலும் பரப்பி அடர்ந்து வானளாவி நிற்குந் தோப்புகளின் காட்சியானது காண்பார் கண்களுக்கும் உள்ளத்திற்கும் மகிழ்ச்சியையும் ஆறுதலையுந் தருகின்றனவன்றோ? வெப்பம் மிகுந்த வேனிற் காலத்தில் ஊர்ப்புறத்தே சென்று, இத்தோப்புகளின் ஊடுநுழைந்து வெயிலேபடாத அம்மர நீழல்களில் வைகி இளைப்பாறுவதினும் மிக்கதோரின்பம் பிறிதுண்டோ? வேனிற்காலத்திற்கு முன்னுஞ் சில இடங்களில் வேனிற்காலத்துவக்கத்தும் மாமரங்கள் பூவெடுத்தலால், அப்போது அப்பூக்ளின் நறுமணத்தில் அளைந்து வந்து சில்லென்று வீசும் மெல்லிய தென்றற்காற்று நம்முடம்பின்மேற் படுங்கால் ஆ! அது நமக்கு எவ்வளவு இன்பத்தைத் தருகின்றது! மற்றைப்பறவைகளைப்போல் எளிதிற் காணப்படுவதில்லாத குயிற்பறவைகள் வேனிற்காலத்தில் மாமரங்களில் அமர்ந்து கூவும் ஓசை கேட்கக்கேட்க இனியதா யிருக்கும். பெரும்பாலும் மக்கள் வழங்காத ஊர்ப்புறத் தோப்புகளிலிருந்தே குயில்கள் கூவுதலால், தனித்த அவ்விடங்களிற் சென்று அவை கூவும் அவ் வின்னோசையைக் கேட்பது பின்னும் அவ்வினிமையை மிகுதிப்படுத்துகின்றது. ஆனாலுந், தங் காதலரைப் பிரிந்து, அவரது பிரிவை ஆற்றாது வருந்தும் மகளிர்க்கு குயில்கூவும் ஓசை அவரது வருத்தத்தைப் பெருகுவிக்குமென்று நல்விசைப் புலவர்கள் பாடியிருக்கின்றனர். அரசனும் புலவனுமான ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்பான் தான் பாடிய செய்யுள் ஒன்றில், மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில் பருநா விளியா னடுநின்று அல்கலும் உரைப்ப போல ஊழ்கொள்பு கூவ, இனச்சிதர் உகுத்த இலவத் தாங்கட் சினைப்பூங் கோங்கின் நுண்டாது பகர்நர் பவளச் செப்பிற் பொன்சொரிந் தன்ன இகழுநர் இகழா இளநாள் அமையஞ் செய்தோர் மன்ற குறியென நீ நின் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப வாரா மையிற் புலந்த நெஞ்சமொடு நோவல் குறுமகள் (அகநானூறு 25) எனத், தன் கொழுநனைப் பிரிந்தவேனிற்காலத்திற் குயிலிசைகேட்டு வருந்தும் ஒரு நங்கைக்கு அவடன்றோழி ஆறுதன் மொழி பகர்தலை எடுத்துக் காட்டி யிருக்கின்றார். இனி, ஐப்பசித் திங்களிற் பூவெடுக்கும் ஒட்டுமா மரங்கள் பிஞ்சுபிடித்துக் காய்த்துச் சித்திரைத் திங்களிலே யிருந்து பழங்களைத் தருகின்றன. கார்த்திகைத் திங்களிற் பூத்துக் காய்க்கும் மரங்களோ வைகாசி அல்லது ஆனி முதற் பழுத்து நறுஞ்சுவைக் கனிகளைத் தருகின்றன. இவ்வொட்டு மாமரங்கட் பூத்திருக்குங்கால் அவற்றிலிருந்து சிலநாட்கள் வரையில் வருங் குளிர்ந்த மணமானது உளத்திற்கு அமைதியான இன்பத்தை ஊட்டுகின்றது. ஒட்டுமாமரங்களின் தீஞ்சுவையினை அறிந்தவர்கள், வாழை, பலா, நாரத்தை, மாதுளை, விளா முதலான ஏனை எல்லா மரங்களின் கனிகளைவிட இவற்றையே மிகவும் விழைந்து பாராட்டுகின்றார்கள். உண்மையாகவே ஒட்டு மாங்கனிகளின் சுவை வேறெவ்வகைக் கனிகளுக்கும் இல்லை. ஆதலினாற்றான், குளிர் மிகுந்த ஐரோப்பா தேயத்திலுள்ள வெள்ளைக்காரர்கள் மிகுந்த விலைகொடுத்து ஒட்டுமாங்கனி களைத் தம்மூர்களுக்கு வருவிக்கின்றனர். சில காலங்களில் ஓர் ஒட்டுமாங்கனிக்குப் பதினைந்து ரூபாவரையில் விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று கல்வியிற் சிறந்த ஒரு துரைமகன் எழுதியிருக்கின்றார். இவ்விந்தய நாட்டுக்கு மிகவுஞ் சேயவான தேயங்களுக்கு இவ்வொட்டு மாம்பழங்களைக் கொண்டு செல்ல வேண்டுப வர்கள், சாடிகளில் தேனை நிரப்பி அத்தேனில் அப்பழங் களை அமிழ்த்தி வைத்துக்கொண்டு போகின்றார்கள். இவ்விந்திய நாட்டிலுள்ள பெருஞ்செல்வர் களிற் சிலரும் ஒட்டுமாங்கனிகளிற்றமக்கு ஆராவேட்கை இருத்தலால், அவை கிடைப்பதில்லா மற்றைப் பருவகாலங் களிலும் அவற்றை யுண்டு இன்புறுதற்பொருட்டு, அங்ஙனமே அவற்றைத் தேன் நிறைத்த சாடிகளில் இட்டுவைத்துத், தாம் வேண்டுங்காலங்களில் எடுத்து அருந்துகின்றார்கள். முறைப் படி யெடுத்துவைத்த தூய தேனில் எத்தகைய பச்சைப் பண்டங்களை இட்டுவைத்தாலும் அவை நெடுநாள் வரையிற் கெடாமல், இட்டக்கால் இருந்த பதப்படியே யிருக்குமென்று அங்ஙனஞ் செய்து பார்த்தவர்கள் சொல்லக் கேட்டிருக் கின்றேம். இனி, ஒட்டுமாம்பழங்களை விரும்பி அடுத்தடுத்து உண்பவர்கள் உடல்நலங் கெடாமைப்பொருட்டு, அவற்றை உண்டபின் காய்ச்சிய ஆவின்பாலைப் பருகுதல் வேண்டும். ஆனாலும், இவைதம்மைச் செரிக்கும் அளவறிந்து உட்கொள்பவர்கள் செழுமையான இரத்தம் ஊறப்பெற்று உடல்நல மனநலங்கள் வாய்ந்து திகழ்வர். அளவுக்குமேல் அவாவை அடக்காமல் அவையிற்றை உண்பவர்கள் வயிற்று நோய் வயிற்றுக்கழிச்சலால் வருந்துவர். அமிழ்தமேயானாலும் அளவறிந்துண் அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம் என்னும் பழமொழிகள் நமதுடம்பின் நலத்திற்கு வேண்டுவ வறிந்துரைக்கும் உண்மைப் பொன் மொழி களாகவே விளங்குகின்றன. இனிக், கொட்டை மமரங்கள் நார் உள்ளவைகளாயிருப்பினும் அவற்றிலுந் தீஞ்சுவைக்கனிகள் உண்டு. எனினும், ஒட்டுமாங்கனிகள் மிகுதியாய்க் கிடைக்கக்கூடிய காலம் வளர வளர, ஏழை யெளியவர்களைத் தவிர ஏனையோரெல்லாரும் ஒட்டுக் கனிகளையே மிகுதியும் வாங்கி அயில்கின்றனர். மேலும் ஒட்டு மாமரங்கள் வரவர நாடெங்கும் மிகுதியாய்ப் பயிர்செய்யப்பட்டுப் பெருகுதலால், இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் அவை மிகுந்த விலைக்கு விற்றதுபோலில்லாமல், இப்போதவை நயமான விலைக்குக் கிடைக்கின்றன. அதனாற், கொட்டை மாம்பழங்கள் இந்நாளில் மிகுதியாய் விற்கக் காணோம். என்றாலும், ஊறுகாய் செய்வதற்குப் பெரும்பாலுங் கொட்டைமாங்காய்களையே எல்லாரும் பயன்படுத்துகின்றனர். மாங்கொட்டைகளையும் இராக்காலக் குழம்புகளுக்குச் சைவர்கள் பயன்படுத்து கின்றார்கள். மாம்பருப்புகள் வயிற்றுளைச்சலைப்போக்குதற்குச் சிறந்த மருந்தாக எளிய மக்களாற் பயன்படுத்தப்படுகின்றன. இனி, யாங்கள் ஒட்டுமாம்பழங்களைப் பழங்களாகவே பயன்படுத்தியதுடன், அவற்றின் காய்களையும் பருப்புக் குழம்பு, வெல்லப்பாகு, தயிர்ப்பச்சடி முதலியவற்றிற் சேர்த்து அருந்திப் பார்த்ததில், அவை இவ்வகையிலுங் குழைவுஞ் சுவையும் மிக்கனவாய் இருத்தல்கண்டு உவப்புற்றோம். ஊறுகாய் இட்டாலும் ஒட்டுமாங்காய்கள் களிப்பாய் நாவுக்கு நன்சுவை விளைக்கின்றன. இங்ஙனம் பல வகையாலும் பயன்பட்டு நம்நாட்டவரை இன்புறுத்தும் . மாமரங்களை நம்மனோர்க்கு வழங்கிய இறைவன் றிருவருளுக்கு நம்முடைய நன்றியையும் வணக்கத்தையுஞ் செலுத்துவாமாக! 7. அறிவும் உழைப்பும் விடாமுயற்சியும் உழைப்பும் விடாமுயற்சியும் உடைய அறிவாளிகள் சிலர் ஆங்காங்குத் தோன்றுவதனாலேயே மக்கள் வாழ்க்கையானது மேன்மேல் அறிவும் இன்பமுந் தருந்தகைத்தாய் நடை பெறுகின்றது. அத்தன்மையரான அறிஞர் தோன்றாத மிகப்பழைய காலங்களில் நம்முன்னோர்கள் எங்ஙனம் உயிர் வாழ்ந்தனரென்பதைப் பழைய மக்கள்வரலாறு நுவலும் நூல்களில் (anthropology) நாம் படித்துப் பார்ப்பமாயின், நந் நெஞ்சங் கலங்காதிராது. நாடோறும் உண்ணுதற்குச் செவ்வை யான உணவும் உடுக்கக் கூறையும் இன்றி அவர்கள் பட்டபாடு நினைக்க நினைக்கப் பெருந் திகிலை உண்டுபண்ணுகின்றது. வயிற்றுக்கு உணவுதேடித் தந்து தமது உடலை ஓம்புவதே அவர்கட்கு அந்நாளில் ஓயாப் பெருமுயற்சியா யிருந்தது. இப்போதுள்ள யானைகளைவிடப் பன்மடங்கு பெரியவான மாமதம் (mammoth) என்னும் பெரிய யானைகள் அந்நாளில் மந்தை மந்தையாக இருந்தன. அவ்வானைகளை யொப்பவே பெரியவான கல்யானைகளுங், கொடும்புலிகளும், அரிமாக் களும், மலைப்பாம்புகளும், பெருமுதலைகளும், பெருங்கழுகுகளுங், கொடும்பெருங் குரங்குகளுங், கடல் நீரின்மட்டுமன்றி நிலத்தின்மேலும் வந்துலவும் பெரிய பெரிய கடல்விலங்குகளும் இம்மாநிலத்தே திரிந்தன. அவற்றிடையேயிருந்து உயிர்பிழைத்த பண்டைநாள் மக்கள் இருக்க இல்லம் அமைக்கத் தெரியாதவர்கள்; மலைக் குகைகளையும் மரப்பொந்துகளையும் மர உச்சிகளையுமே இருப்பிடமாய்க் கொண்டவர்கள். நெடுங்காலம் வரையில் தமதுடம்பைக் குளிரும் வெப்பமுந் தாக்காமல், தழைகளாலேனும் மரப்பட்டை களாலேனும் விலங்கின் தோல்களாலேனும் மறைத்துக் கொள்ளும்வகை தெரியாதிருந்தவர்கள். இத்துணை இடர்ப்பாட்டிற் சிறுசிறு கூட்டத்தினரா யிருந்த அப்பண்டை மக்கள், தமக்குந் தம்மைச்சேர்ந்தார்க்கும் உணவு தேடும் பொருட்டுக் காடுகளிலும், மலைகளிலுங், கடலோரம் யாற்றோரங்களிலுஞ் சென்றக்கால், அக்கொடிய பெருவிலங்கு களால் அவர்கள் எவ்வளவு துன்புறுத்தப் பட்டிருக்கவேண்டும்! அவற்றோடு போராடியதில் எத்தனைபேர் மடிந்திருக்க வேண்டும்! அவர்கள் எல்லாருமே அக்கொடுவிலங்குகளின் போராட்டத்தில் மாண்டு மடிந்துபோயிருந்தால், நாமெல்லாம் இங்கே தலைக்காட்டிப் பிறந்திருத்தல் கூடுமோ! அப்பழைய போராட்டத்தில் அவ்விலங்கினங்களுக்குத் தப்பிப் பிழைக்கும் வகை கண்டறியும் பொருட்டுத் தம் அறிவையும் விடாமுயற்சியையும் பயன்படுத்தி அவற்றைத் தப்பி யுயிர் வாழ்ந்த சிலராயினும் வழிவழித் தோன்றினமையாலன்றோ நாம் இஞ்ஞான்று நாகரிகத்திற் சிறந்து இன்ப வாழ்க்கையில் வாழ்கின்றோம். அப்பண்டைமக்கட் சிறுகூட்டத்தில் ஒரு சிலர் ஏனை யோரிலுஞ் சிறிது அறிவுவிளக்கம் உடையராகித், தம்மொடு ஓயாப் போர் மலைந்த அக்கொடுவிலங்குகளைக் கொல்லு தற்கு வலிய தீக்கற்களிலிருந்து கத்திகளும் மழுப்படைகளும் அம்புகளுஞ்செய்யக் கற்றுக்கொண்ட காலந்தொட்டும்; அதன்பின் அப்படைகளைக்கொண்டு அவ் விலங்குகளைக் கொன்று அவைதம் இனங்கள் பின்னர் அச்சத்தால் தம்மை யணுகாமல் அகன்றோடிவிடத் தாங்காடுகளிலும் மலைகளிலும் அச்சமின்றி யுலவி ஆங்காங்குள்ள காய்களையுங் கனிகளையுங் கிழங்குகளையும் வித்துக்களையும் இலைகளையும் மிகுதியாய்ப் பெற்றுண்டும், மரக்கோடுகள் பொந்துகளிற் கிடைத்த தேனையும் மலைச்சுனைகள் மலையருவிகள் கான்யாறுகள் மடுக்களிற் பெற்ற நீரையும் பருகியும் நாளுக்குநாள் உடல்நல மனநலங்களிற் சிறந்து அவரது கால்வழி பெருகத்துவங்கிய காலந்தொட்டும்; அதன்பிற் றம்மை யெதிர்த்துத் தம்மாற்கொல்லப் பட்ட விலங்கின் தசைகள் மலைப்பாறைகண்மேற் கிடந்து வெயில் வெப்பத்தால் வெதுப்பப்பட்டுத் தின்னுதற் கேற்ற மணமுஞ் சுவையும் வாய்ந்தனவாதலைக் கண்டுகொண்ட அம்மக்களில் வேறு சிலர், வெயிலைப்போல் வெய்யவாய்ச் சுடும்நெருப்பு ஒன்று உண்டென்பதைத் தாந் தீக்கல்லிலிருந்து கத்தி மழு முதலான கருவிகள் அமைத்தக்காற் பறந்த தீப்பொறிகளால் அறிந்து, அக்கற்களை ஒன்றோடொன்று மோதி யுண்டாக்கிய தீயிற் பிறகு அவ்விலங்கின் தசைகளை வதக்கிச் சுட்டுத் தின்னத் தெரிந்த காலந்தொட்டும் ; பறவையினங்கள் தாங் குஞ்சு பொரிக்கும் பருவம் அண்முதலும், நார்களாலும் மரக்குச்சி களாலும் மரப்பஞ்சுகளாலுங் கூடுகள் கட்டி அவற்றி னுள்ளிருந்து முட்டையிட்டுக் குஞ்சுபொரித்து இனிது வாழ்தலை உற்று நோக்கிய அப்பழைய மக்களிற் பின்னுஞ்சிலர் தாமும் அப்பறவைகளைப்போல் மரக்கொம்புகள் வளார்கள் நார்கள் இவைகளாற் சிறுசிறு குடில்கள் அமைத்து அவற்றுட் டாமுந் தம்மக்களும், வெயில் மழை பனி பனிக்காற்று முதலியவைகளால் அலக்கணுறாமல் இனிது வாழத்தெரிந்த காலந்தொட்டும்; மழையில் நனையாமலுங் குளிரில் நடுங்காமலும் பறவைகள் விலங்குகள் உடம்பெங்கும் மயிர்ப் போர்வையால் நன்கு மூடப்பட்டிருத்தலைக் கருதிப் பார்த்த அப்பண்டை மாந்தரிற் பின்னுஞ்சிலர் தாமுந் தாங்கொன்ற விலங்குகளின்தோலை உரித்தெடுத்து அவற்றின்மேலுள்ள மயிரைச் சீவாமற் றம்மேல் அவை தம்மைப் போர்த்துக் கெள்ளத் தெரிந்த காலந்தொட்டும்; அப்பறவைகளும் அவ்விலங்குகளுந் தம்மெண்ணங்களைத் தமக்குட் சிற்சில ஒலிகளால் அறிவித்துக்கொள்ளுதலைப் பலகாலும் உற்று நோக்கி வியந்த அம்மாந்தரில் மேலுஞ் சிலர் தாமும் அவைபோற் சிற்சில ஒலிகளை எழுப்பித் தங்கருத்தைத் தம்மனோர்க் கறிவிக்கத் துவங்கிய காலந்தொட்டும் நம் முதுமக்களின் வாழ்க்கையானது வரவர நாகரிகத்தில் வளர்ந்தோங்கி வரலாயிற்றென்பதை நாங் கருத்திற் பதித்தல்வேண்டும். அங்ஙனம் நம் பண்டைமக்கள் தமதறிவை மேலுக்கு மேற்பயன்படுத்தி உழைப்பும் விடாமுயற்சியும் உடையராய் நடந்திராவிட்டால், மக்கட் பூண்டென்பதேயொன்று சுவடில்லாமல் மாய்ந்து மறைந்துபோயிருக்குமென்பதை நாஞ்சொல்லுதலும் வேண்டுமோ? அவ்வாறு அவர்கள் இந்நிலவுலகிற் றோன்றிய காலம்முதற் சிறிதும் மடிந்திராமல் அறிவும் முயற்சியும் உடையராய் ஒழுகி வாழ்க்கை செலுத்திவந்த இறந்தகால நிகழ்ச்சியினை நாம் ஆராய்ந்து பார்க்கப் பார்க்க, நாம் உயிரோடிருக்கும் இந்நிகழ்காலத்தும், நமக்குப் பின் நம்மரபில் வருவார் உயிர்வாழும் எதிர்காலத்தும் எல்லாரும் நாளுக்கு நாள் எவ்வளவு அறிவும் எவ்வளவு முயற்சியுமுடையராய் ஒழுகுதல் வேண்டுமென்பது விளங் காமற் போகுமோ? இனி, அறிவும் உழைப்பும் முயற்சியும் என்னும் மூன்றனுள் அறிவை மேன்மேற் பெருக்கினாலல்லாமல், உழைப்பும் முயற்சியும் மிக்க பயனைத்தரா. நாடோறுங் காலையில் எழுந்து மாலை வரையில் உழுதொழிலைச் செய்வோனுஞ், சரக்குவண்டியிழுப்போனும், யாற்றிற் படகு செலுத்து வோனுங், காட்டில் விறகுவெட்டி விற்போனுந் தாம் வழக்கமாய் மேற்கொண்ட அவ்வுழைப்புக்கு மேற்றமதறிவைப் பெருகச் செய்வதில் அவாவில்லாதவர்களாய் நாட்கழிப்பராயின், அவரது செயல், நெற்குத்தும் பொறி, மாவரைக்கும் பொறி, நீர்இறைக்கும்பொறி, வண்டியீர்க்கும் பொறி முதலியவற்றின் அறிவில்லாச் செயல்களையே ஒப்பதாய்விடும். ஆகவே, கடுமையானதோர் உழைப்பிற் புகுந்திருக்கும்போதும் அதனை மேன்மேல் அறிவுடன் செய்து பயன்படுத்துவதோடு, அது செய்த நேரம் போக மிச்சமான நேரத்தை உயர்ந்த அறிவுடை யோர் செய்த நூல்களைப் பயில்வதிலும் பயன்படுத்தல் வேண்டும். ஏனெனில், அறிவை மேன்மேற் பெருக்குவதற்கு ஏற்ற வழி, அறிவின் மிக்கார் இயற்றிய நூல்களை இடையறாது பயில்வதே யாகும். மணற்கேணியினைத் தோண்டத் தோண்ட நீர் ஊறுதல்போல ஆன்றோர் நூல்களைக் கற்கக் கற்க அறிவு எல்லையின்றி வளராநிற்கும். தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு (குறள் 396) என்றார் திருவள்ளுவரும். அங்ஙனமே, வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய செல்வப்பொருளை ஈட்டுதற்குப் பலதுறைகளிற் புகுந்து பல்வகை முயற்சிகள் செய்வோரும், அம் முயற்சியளவில் தமதறிவைக் கரைகோலி மட்டுப்படுத்திவிடாமல், அம்முயற்சி யவிந்த நேரங்களில் விழுமிய அறிவு நூல்களைத் தொடர்பாகக் கற்று அறிவை விரிவுசெய்தல் வேண்டும். அங்ஙனஞ் செய்யாக்கால், தமக்கு இரைவேண்டுங் காலத்துங் குஞ்சு பொரிக்குங்காலத்தும் மிகச் சுருசுருப்புடன் முயன்று, பின்னர் முயற்சியற்று வாளா இருந்து கழியும் பறவைகள் முதலான சிற்றுயிர்களுக்கும் மக்கட்கும் வேற்றுமை இல்லையாய் விடும். இரைதேடித் தின்றபிற், சிற்சில காலங்களில் ஆணும் பெண்ணுமாய் மருவிச் சிறிது இன்புறும் அத்துணையேயன்றி, அதனின் மிக்க இன்பத்தைத் தொடர்பாக நுகர்தற்கேனும், அந்நுகர்ச்சியினைப் பயத்தற்கேற்ற அறிவினை மேன்மேற் றோற்றுவித்தற்கேனும் அச்சிற்றுயிர்கள் வல்லன அல்ல. மக்களோ தமக்கு அரிதின் வாய்த்த பகுத்தறிவின் மாட்சி கொண்டு தமது வாழ்க்கையில் வருந்துன்பங்களை வரவரக் குறைத்து, நாளுக்கு நாள் தாந் தொடர்பாக இன்பந் துய்த்தற் கேற்ற வழி துறைகளைத் தம்மறிவு முயற்சியாற் கண்டடைந்து வருகின்றனர். இவ்வாறு அறிவும் இன்பமும் நாளுக்கு நாட்பெருகப்பெறும் மக்கள் வாழ்க்கைதான் நாகரிக வாழ்க்கை யென்றும், மற்று அவையிரண்டும் பெருகுதல் இல்லாத மாக்களின் உயிர்வாழ்க்கையோ நாகரிகமில்லா வெற்றுயிர் வாழ்க்கையென்றும் வழங்கப்படும். தமக்குள்ள பகத்தறிவினைப் பயன்படுத்துகின்றவர்களே மக்கள்; மற்று, அதனைப் பயன் படுத்தாதவர்களோ மாக்கள். இந்த உண்மைமுறையில் வைத்து நம் நாட்டவர் வாழ்க்கை நிலையினையும் மேல்நாட்டவர் வாழ்க்கை நிலையினையும் ஒப்பிட்டுப் பார்க்குங்கால், மேல் நாட்டவர் நிலையே மிகவும் பாராட்டற்பாலதான விழுப்ப முடைத்தாய் விளங்கா நிற்கின்றது. நீராவிப்பொறி, அச்சுப் பொறி, காவல்விளக்கு (safety lamp) மின் செய்தி (electric telegraph), கம்பியில் செய்தி (wirless message) முதலான பல வியப்பு களை யெல்லாம் அரும்பாடுபட்டுத் தாங் கண்டறிந்த தல்லாமலுந், தாங்கண்ட அவ்வியப்புகளைக் கோடிகோடி யாகப் பொருட்செலவு செய்து இம்மாநிலமெங்கும் பரப்பி, எல்லா மக்கள் இனமும் அவற்றின் பயனை யெய்தி, முன்னே தமக்கிருந்த பல்பெருந் துன்பங்களெல்லாம் நீங்கி இன்புற்று வாழுமாறு பேருதவி புரிந்துவரும் மேனாட்டறிஞரின் அறிவு முயற்சி, எல்லா மாந்தரின் நன்றியறிவுக்கும் இடனாய்த் திகழ்கின்றதன்றோ? அங்ஙனம் மேனாட்டறிஞர் கண்டறிந்து பரப்பிய பல்பெரும் பொறிகளில், நூல்நூற்கும் பொறியும் மிக்க தொரு பயனைஉலகிற்குவிளைத்த வியத்தகு சிறப்புவாய்ந்ததாகும். இதனை ஓவாது அறியமுயன்று கண்டுபிடித்த மேலோர் ஆர்க்குரையர் (arkwright) என்னும் பெயரினராவர். இவர்க்கு முப்பதாண்டுகளுக்கு முன்னேயிருந்த வேறு இருவர் நூற்கும் பொறிகளை வருந்தியமைத்தன ராயினும், அவை முற்றும் திருத்தமாக அமைக்கப்படாமையால் அவை தொழிற் படுத்தப்பட்டக்காற் செவ்வனே இயங்காமல் வீணாய்ப் போயின. மற்று, ஆர்க்குரையரோ தமக்கு முனனேயிருந்தார் கண்டுபிடித்தவைகளில் இருந்த குறைபாடுகளையெல்லாம் நீக்கி, மிகவுந் திருத்தமானதொரு முறையிற் றாமே புதுவதாக ஒரு நூற்பொறி யினைச் செய்துமுடித்தார். ஆர்க்குரையர், பெரும்பாலும் ஏனைப் பெரியாரைப் போற், றாழ்ந்தகுடியிற்றோன்றியவர். இவர் கி. பி. 1732-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் கண்ணதான பிரத்தன் (ஞசநளவடி) என்னுந் துறைமுகப்பட்டினத்திற் பிறந்தார். இவர் தம் பெற்றோர்களோ மிகவும் ஏழ்மையான நிலையிலிருந்தார்கள். அவர்கட்குப் பிறந்த பதின்மூன்று பிள்ளைகளுள் இவர் கடைசிப்பிள்ளையாவர். இவர் பள்ளிக்கூடத்திற்சென்று கல்வி பயின்றதேயில்லை; இவர் கற்றுக் கொண்டதெல்லாம் இவர் தாமாகவே முயன்று கற்றதொரு சிறு கல்வியாகும்; தமது முடிவு காலம்வரையில் மிகவுந் தொல்லைப்பட்டே இவர் ஏதும் எழுதக்கூடியவராய் இருந்தனர். இவர் சிறுபிள்ளையாயிருந்தஞான்று, ஓர் அம்பட்டனிடத்தில் தொழில் கற்றுக்கொள்ளுமாறு விடப்பட்டார். அதனை நன்கு கற்றறிந்தபின், பொலுத்தான் என்னும் ஊரில் தாம் அத்தொழிலை நடத்துதற்குச் சென்று, நிலத்தின் கீழ் உள்ளதோர் அறையைக் குடிக்கூலிக்கெடுத்து, அதன்மேல் நிலத்தின் கீழ் அம்பட்டனிடம் வாருங்கள், அவன் ஒரு பணத்திற்குச் சிரைக்கின்றான் எனப் பலகையும் எழுதிக் கட்டிவிட்டார். அதனால், மற்றை அம்பட்டர்க்கு வருவாய் சுருங்கவே, அவர்களுந் தமது சிரைப்புக்கூலியை அந்த அளவுக்கே குறைக்கவேண்டியவரானார்கள். அதுகண்ட ஆர்க்குரையர் தமது தொழில் நன்கு நடைபெறல் வேண்டி, அரைப் பணத்திற்கு இங்கே திருத்தமான சிரைப்பு எனப் பலகை எழுதிக் கட்டினார். இவ்வாறு சில ஆண்டுகள் கழித்த பின், அவர் அந்நிலவறையை விட்டுத், தெருத் தெருவாய்த் திரிந்து மயிர் விற்பனைசெய்யுந் தொழிலை மேற்கொண்டார். அந்நாளில் மேல் நாட்டவர் தந் தலைக்குப் பொய்ம்மயிர் வைத்துப் புனைந்துகொள்வது வழக்கம். அதனால், அஞ்ஞான்றை மயிர் வினைஞர் அத்தகைய பொய்ம்மயிர் முடிகள் செய்து விற்குந் தொழிலை மிகுதியாய் மேற்கொண்டிருந்தனர். ஆகவே, ஆர்க்குரையரும் அம்முடிகளின் பொருட்டுத் தலைமயிர் வாங்கி விற்றுவந்தார். இலங்கா ஊரிற் கூடுஞ் சந்தைகளில், தங் கூந்தலை நீளப்பின்னி விடுதற்காகத் தலைமயிர் வாங்கவரும் மகளிர்க்கு இவர் மயிர் விற்பனை செய்ததில் நல்ல ஊதியத்தை அடைந்தார். அதுவல்லாமலும், இவர் ஒரு சிறந்த மயிர்ச்சாயஞ் செய்து திறமையாக விற்றதிலிருந்தும் மிக்க ஊதியத்தைப் பெற்றார். இங்ஙனமெல்லாம் இத்துறையில் இவர் சுருசுருப்பாக முயன்றும், இவரது வாழ்நாட் செலவுக்குமேல் மிகுதியாய் வேறேதுங் கிடைத்திலது. பின்னர்ச் சில ஆண்டுகளிலெல்லாம், பொய்ம்மயிர் புனையும் நடையும் மாறிவிடலாயிற்று. அதனாற், பொய்ம்மயிர் வினைஞ ரெல்லாரும் பெரிதும் இடருழக்கலானார்கள். ஆயினும், ஆர்க்குரையர் தமது முயற்சியை அத்துறையினின்றுந் திருப்பித், தமக்கு இயற்கையாய் வாய்ந்த பொறியமைக்கும் வழியிற் செலுத்தத் துவங்கினார். அஞ்ஞான்று, நூல்நூற்கும் பொறியொன்று அமைப்பதற்குப் பலர் பலவாறு முயன்று கொண்டிருந்தனர். அது கண்ட ஆர்க்குரையர் தாமும் அத் துறையில் இறங்கினார். தாமாகவே கலையறிவிற் றேர்ச்சி பெற்ற மற்றைப் பெரியாரைப்போல், இவரும் முன்னமே தமக்குக் கிடைத்த ஒழிவு நேரங்களில் எப்போழுதும் இயங்க வல்லதான ஒரு பொறியைப் புதிது செய்வதிற் றமது கருத்தைச் செலுத்திவந்தனர்; அம்முயற்சியிலிருந்து நூற்கும் பொறி யினை ஆக்குவது அவர்க்கு எளிதில் வந்து கைகூடிற்று. அங்ஙனம் அதனை ஆக்கும் ஆராய்ச்சியிலேயேஇவர் தமது கருத்தை முழுவதும் ஈடுபடுத்தியிருந்தமையால், தமக்கு வழக்கமாயுள்ள தொழிலையும் பாராமுகஞ்செய்தனர். அதனாற், சிறிது மிச்சம்பிடித்து வைத்திருந்த பணத்தையுந் தொலைத்துவிட்டனர்; கொடிய வறுமையும் இவரை வந்து பற்றி நலிவதாயிற்று. இத்தறுவாயில் இவர்க்கு மணமாகி யிருந்தது. இவர் தம் மனைவி, இவர் தம்முடைய காலத்தையுங் காசையும் வேண்டுமென்றே பாழாக்குவதாகக் கருதி மனம் பொறாதவளாய், ஒருநாள் தனக்குத் திடுமெனத் தோன்றிய மிக்க சினத்தால், தனது குடும்பத்திற்கு வந்த வறுமையின் காரணத்தைப் போக்குவாள் போல், இவர் உருவாக்கி வைத்திருந்த மூலப்பொறிகளையெல்லாம் வலிந்தெடுத்து உடைத்தெறிந்தாள். ஆர்க்குரையரோ தாம் மேற்கொண்ட தோர் அருமுயற்சியில் விடாப்பிடியும் மனக்கிளர்ச்சியும் வாய்ந்தவர்; ஆகவே இவர் தம் மனைவி செய்த இவ்வடாச் செயலைக் கண்டு அளவுக்குமிஞ்சிய மனநோக்காடுடைய ராய், உடனே அவளைவிட்டுப் பிரிந்துபோயினர். பிறகு, அயலூர்களில் இவர் செல்கையில், வாரிங்கதன் (றுயசசபேவடி) என்னும் ஊரில் நாழிகைவட்டில் (கடிகாரம்) செய்வாரான கே எனப் பெயரிய ஒருவரோடு இவர் பழக்க மானார். அவர், இவர் ஆக்கிய ஓவா இயக்கப் பொறி யின் சில பகுதிகளைச் செய்வதற்கு உதவி புரிந்தார். ஆர்க்குரையர் சிகழிகை விற்குந் தொழிலை அறவே கை விட்டுத், தாஞ் சமைத்தற்குப் புகுந்த நூற்பொறியை முற்றுந் திருத்தமாகச் செய்து முடித்தலிலேயே கருத்தொருப்பட்டு நின்றார். அதனை முடித்த பின், அதன் முதற்படியினை இவர் சொல்லிக் காட்டிய வண்ணமே கே என்பவர் செவ்வனே செய்தமைத்தார். அங்ஙனம் அமைத்த அப்பொறியைப் , பிரத்தன்மா நகரின் கண்ணதான இலக்கண அறச்சாலையின் கூடத்திற் கொண்டு போய் வைத்தார். இவர் தமக்குள்ள வறுமையாற் கந்தையாய்ப் போன உடைகளை உடுத்திருத்தல் கண்ட அவ்வூரவர் சிலர் தாம் ஒருங்குசேர்ந்துதவிய பொருளாற் புதிய உடை செய்து அவரை உடுப்பித்தனர். அதன்பிறகே இவர் தமது பொறியினைக் காட்டுங் கூடத்திற்குச் சென்றனர். ஆனாற், கையால் நூல் நூற்றுப் பிழைக்குந் தொழிலாளிகள் நிறைந்த அந் நகரத்தில் இவர் தமது நூற்பொறியைக் கொணர்ந்து காட்டுவது இடர் விளைப்பதொன்றாய்த் தோன்றியது. அவ்வறப்பள்ளிக் கூடத்துக்கு வெளியிலே அத்தொழிலாளிகள் இடை யிடையே உறுமும் ஒலி கேட்டது. இதற்குமுன் ஒரு நூனாழிப் பொறி அமைத்த கே என்பவரும், இராட்டினம் ஒன்றமைத்த எளிய ஆர்கிரிவரும் தாம் ஆக்கிய அப் பொறிகளைப் பலர்க்குங் காட்டப் போன ஊர்களில் அவ்வூர்க் கலகக்காரரால், அவருடைய பொறிகள் உடைத்தெறியப் பட்டன. அந்நிகழச்சி களை நினைவு கூர்ந்த ஆர்க்குரையர் இனி இவ்வூரிற் றங்குவது தொல்லைக் கிடமாகுமென அஞ்சித், தமது பொறியை யெடுத்துக்கொண்டு அத்தகைய துன்பத்திற்கு அஞ்ச வேண்டுவதில்லாத நாட்டிங்காம் என்னும் நகருக்குப் போயினர். அங்கே சில நாள் வைகித், தமக்குப் பொருளுதவி செய்து, தமது நூற்பொறியைப் பயன்படுத்தத் தக்காரை இவர் நாடுகையில், அந்நகரில் மிக்க புகழ்உடைய ஒரு தொழில் நிலையத்தின் தலைவரும் பொறிகள் அமைப்பதிற்றிறமை வாய்ந்தவரும் ஆன இசுருதர் (strutt) என்பார் தமக்கு நண்பராகப்பெற்றார். இசுருதர் இவர் ஆக்கிய நூற்பொறியின் அமைப்பினைக் கண்டு மிகவும் வியந்து, தம்மொடு கூட்டாகச் சேர்ந்து நூற்குந்தொழில் நடாத்தும்படி இவரோடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். அதுமுதல் இவர்க்கு நல்லகாலம் பிறந்தது. 1769 ஆம் ஆண்டில் ஆர்க்குரையர் பெயரினாலேயே அந்நூற்பொறிக் குரிமை வாங்கப்பட்டது . அதே ஆண்டில் ஜெம்ஸ்வாட் என்பவர் புதிதுகண்டமைத்த நீராவிப்பொறிக்கு உரிமை வாங்கப்பட்ட நிகழ்ச்சியும் ஒத்துக்கொண்டமை பெரிதும் இறும்பூது பயப்பதாயிருக்கின்றது. அதன்பின், அந் நாட்டிங்காம் ஊரிலேதான் முதன்முதல் ஒரு பஞ்சாலை நிறுவப்பட்டது. இவ்வளவிலே ஆர்க்குரையரின் பாடு முடிந்ததென்று சொல்லுதற்கிடமில்லை. தாம் இயற்றிய நூற்பொறி இயங்குங்கால் அதில் இவர் இன்னும் பல சீர்திருத்தங்கள் செய்யவேண்டியவரானார். ஓயாமல் அதிற் பல மாறுதல்களுந் திருத்தங்களுந் செய்தபடியாகவே யிருந்தார். அங்ஙனமெல்லாம் இவர் அதனைச் செப்பஞ்செய்து கொண்டு வந்த பின்னர்த்தான் அது செவ்வனேயியங்கிப் பயன் தருவதாயிற்று. இவ்வாறு அது செவ்வனே நடைபெறலான பின்னுஞ், சில ஆண்டுகள் வரையில் தன்னால் வருவாய்க் கிடமின்றி மனவயர்ச்சியினை உண்டாக்கியதன்றியும், அது தன் செலவுக்காக ஏராளமான பொருளையும் விழுங்கி வரலாயிற்று. இவ்வாறு சில ஆண்டுகள் கடந்தபின், நன்மையுண்டாகி வருந்தறுவாயில், இலங்காமாகாணத்துக் கைந்நெசவுகாரர்கள், ஆர்க்குரையரது உரிமை நூற்பொறியை வலிந்து கைப்பற்றி உடைத்தெறிந்தனர். ஆர்க்குரையர் தொழிலாளிகட்குப் பகைஞர் என்றும் ஆங்காங்கு ஏசப்பட்டார். சோர்லி என்னும் ஊருக்கு அருகாமையில் இவர் அமைப்பித்த பஞ்சாலை யினையும் அவ்வூர்க் கலகக்காரர்கள் இடித்தழித்தனர்; ஊர்காவற்காரர்களும் படைஞரும் அதனைத் தடுக்க எவ்வளவோ முயன்றும் பயன்படவில்லை. ஆர்க்குரையரின் பஞ்சாலையிற் செய்யப்பட்டு வெளிவந்த சரக்குகள், ஏனையோர் கொணர்ந்து விற்ற சரக்குள் எல்லாவற்றினும் மிகச் சிறந்தனவாயிருந்தும், இலங்கா ஊரார் அவைதம்மை வாங்காமல் மறுத்துவிட்டனர். அதன்மேலும், இவருடைய பொறிகளுக்கு உரிமை கொடுப்பதனையும் அவ்வூரவர் மறுத்து விட்டதுடன் இவரை அறமன்றத்திற்கு இழுத்து நசுக்கி விடவுந் துணிந்தனர். செம்மையுள்ளம் வாய்ந்தாரனைவரும் அருவருக்குமாறு இவரது உரிமையினையும் அவர்கள் கவிழ்த்துவிட்டனர். வழக்குமுடிந்து இவர் தம் எதிரிகள் தங்கியிருந்த உணவுவிடுதி யோரமாய்ச் செல்கையில், அவர்களுள் ஒருவன் இவரது செவியிற்கேட்கும்படி கடைசியாக நாம் பழைய அம்பட்டனைத் தொலைத்துவிட்டோம் என உரக்கச் சொல்லினன்; அதற்கிவர் பொறுமையாய், அதைப்பற்றிக் கவலையில்லை; இன்னும் என்னிடஞ் சிரைக்குங்கத்தி மிச்சமாய் இருக்கின்றது; அது கொண்டு நுங்களெல்லாரை யுஞ் சிரைத்துவிடுவேன் என மறுமொழி தந்தனர். பின்னர்ச் சிறிது காலத்தில் இவர் இலங்காவூர் முதற் பல இடங்களிற் புதிய பஞ்சாலைகள் அமைத்தனர். இசுருதருடன்கொண்ட கூட்டுத் தீர்ந்தபின் இருவருஞ் சேர்ந்து நடத்திய பஞ்சாலைகளும் இவருடைய கைக்குவந்தன. இவருடைய பஞ்சாலைகளிலிருந்து போந்த சரக்குகள் தொகையிலுந் தன்மையிலும் விழுமியவாயிருந்தமையாற், சிறிதுகாலத்திலெல்லாம் நூல்வாணிகம் முழுதும் இவரது ஆட்சிக்கே உட்படலாயிற்று. ஏனை நூல் வணிகர் தொழில் முற்றும் இவரது ஆட்சிக்கீழ் வந்தமையால், இவரே சரக்கு களின் விலையை ஒருநிலையில் வைத்து உறுதிப்படுத்தினர். இவ்வாறாக ஆர்க்குரையர் தமக்கு நேர்ந்த பல அல்லல் களின் இடையிலுஞ் சிறிதும் உளங்கலங்காதவராய்த், தாம் மேற்கொண்டதொரு சிறந்த முயற்சியிலேயே உறைத்து நின்றமையால், இவர் அவ்விடர்களை யெல்லாம் புறங்கண்டு, தமதரிய முயற்சியின் பயனை நன்கு பெறலானார். முதன் முதற்றாம் ஆக்கிய நூற்பொறிக்குப்பின் பதினெட் டாண்டுகள் கழித்துத், தெரிபி மாகாணத்திலுள்ளாரால் இவர் பெரிதும் நன்கு மதிக்கப்பட்டு, இவர் அவ்வூர்க்கு நாட்டாண்மைக் காரராகவும் ஏற்படுத்தப்பட்டனர். அதற்குப் பிற் சிலநாளில் மூன்றாஞ் சியார்ச்சு மன்னர் இவர்க்கு நைட் என்னுஞ் சிறந்த பட்டமும் வழங்கி இவர்க்குப் பெருஞ்சிறப்புச் செய்தனரென்பது. உலகத்திற்குப் பெரும்பயன்றரும் ஒருசிறந்த முயற்சியினைத் துவங்கி அதனை முடித்துப் பயன்படுத்துவ திற்றலை யிட்ட மேலோர்கள், தாம் பிறந்த குடி எவ்வளவு இழிந்ததும் ஏழ்மையுடையதுமாயிருப்பினுந், தம்முடைய பிறப்பின் இழிபும் எளிமையும் நோக்கிக் கல்லாக் கசடர்களுங் கற்றும் மெய்யறிவு பெறாதவர்களும் அவரை எவ்வளவுதான் இழித்துரைப்பினுந் தாம் எடுத்த நன் முயற்சி நன்கு முடியாவாறு அக்கயவர்கள் அவர்க்கு எவ்வளவுதான் தீங்கிழைப்பினும் அவர் தாமெடுத்த முயற்சியைச் சிறிதுஞ் சோர்ந்துவிடாராய் அதனை எங்ஙன மாயினும் நன்கு முடித்துத், தமக்கு இன்னாசெய்தாரும் அதனால் இனிதுபெற்று மகிழ்ந்திடப்புரிகுவர், என்னும் இவ்வுண்மையினை ஆர்க்குரையரின் வாழ்க்கை வரலாறு நன்கு விளக்குதல் காண்க. செயற்கரிய செய்வரே பெரியர், அது செயமாட்டாதவரே சிறியர் என்பது, செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் (குறள் 26) என்னுந் திருக்குறளுரையாலும் நன்கு விளங்குகின்றதன்றோ? கல்வியுந் தவமும் நன்முயற்சியும் வாயாத கீழ் மக்கள் தம்மை உயர்குலத்தவராகவும், அம்மூன்றும் வாய்ந்த மேன்மக்களை இழிகுலத்தவராகவும், பிழைபடக் கருதியுஞ் செருக்கிக் கூறியுந், தாம் உள்ளீடில்லாப் பதராதலைக் காட்டுதலுடன், மேன்மக்கள் செய்யும் நன்முயற்சிகளைப் பயனிலவாக்குதற்கும் மடிகட்டி நிற்கின்றனர். அன்னவரை நோக்கியன்றோ நாலடியார், நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை என்றிவற்றான் ஆகுங் குலம் என்று நுவலுவதாயிற்று? ஆர்க்குரையரை அவர் பிறந்த குலம்பற்றியும், அவர் முதலிற் செய்து போந்த சிரைத்தற்றொழில்பற்றியும் இழித்துப் பேசியவர்களே, அவர் அரிதின் ஆக்கிய நூற்பொறியாற் சீருஞ் செல்வமும் பெற்றபின், அவரையே தமதூருக்கு நாட்டாண்மைக்கார ராக்கி உயர்த்தி வைத்தனர்கள். நன்முயற்சி யுடைய உண்மையாளர் பக்கமே இறைவன் நிற்றலால், அவர்க்குப் பகைவராய் நிற்பார் செய்யுந் தீங்குகள் அவரை அணுகாமலே விலகி ஒழிகின்றன. ஆதலால், அறிவும் உழைப்பும் விடாமுயற்சியும் உடையராய்த் தமக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்தலே மக்கட்பிறவி யெடுத்தாரெல்லார்க்கும் உரிய இன்றியமையா ஒழுகலாறாமென்று தெளிந்துகொள்க. 8. அறஞ் செய்கை அறம் என்பது தமிழ்ச்சொல். இதனை வடநூலாற் தர்மம் என்பர். அறம் என்னுஞ் சொல் அறு என்னும் முதலிலிருந்து உண்டாயது; ஆகவே, ஒருவனுடைய நினைவு சொற் செயல்களின் தீமையை அறுப்பதே அறம் என்னுஞ் சொல்லுக்குப் பொருளாதல் பெறப்படும். ஒருவன் சொல்வனவுஞ் செய்வனவும் எல்லாம் அவன் எண்ணும் எண்ணத்தின் வழியாகவன்றி வேறுவகையில் நடைபெறுதல் இயலாது. தச்சன் ஒரு மரப்பாவை செய்யும் போதும், ஓவியன் ஓர் ஒரு ஓவியம் வரையும்போதும், ஒரு சிறுவன் ஒரு நூல் ஓதும்போதும், ஒரு பாவலன் ஒரு செய்யுள் இயற்றும் போதும் அவர்கள் ஒவ்வொருவருந் தாந்தாஞ்செய்யுஞ் செயல்களில் தமது நினைவைப் பதியவைத்தாலன்றி, அவர்கள் அவை களைச் செய்து முடிக்கமாட்டாதவர் ஆவர். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்லத் துவங்குதற்கு முன்னும், ஒன்றைச் செய்யத் துவங்குவதற்கு முன்னும் அவைகளை முதலில் மனத்தின் கண் எண்ணியே சொல்லவுஞ் செய்யவுந் தொடங்குகின்றோம் என்பதனை நினைவு கூர்தல் வேண்டும். ஒருவன் சொல்லுஞ்சொல் தீயதாகக் காணப்படுமானால் அதனை எண்ணிச் சொன்ன அவனது எண்ணமும் தீயதாகவே யிருத்தல்வேண்டும்; ஒருவன் செய்யுஞ் செயல் தீயதாக இருக்குமாயின் அதனை எண்ணிச் செய்த அவனது எண்ணமும் தீயதாகவே யிருத்தல் வேண்டும். அங்ஙனமாயின், தந்தை சொல்லுக்கு அடங்கி நல்வழியில் நடவாத பிள்ளையை அத் தந்தையானவன் திட்டியும் அடித்தும் ஒறுப்பது தீயதாகக் காணப்படுதலால் அவ்வாறு செய்யும் அவனது எண்ணமும் தீயதெனக் கொள்ளல் வேண்டுமன்றோ? மற்று, அவன் அவ்வாறு செய்வது தன்மகனை நல்வழியில் நடப்பித்தற் பொருட்டு நல்லெண்ணங்கொண்டு செய்வதேயாகலின், சொல்லுஞ் செயலுந் தீயவாய்க் காணப்படுதல் பற்றி, அவனது எண்ணமுந் தீயதேயாகுமெனக் கோடல் பொருந்துமோவெனிற்; கூறுதும், தன் பிள்ளையைத் திருத்துதற்பொருட்டு முதன்முதல் உண்டாய எண்ணம் நல்லதேயாகும்; ஆனாற், பின்னர் அதன் பொருட்டு அவனைத் திட்டுதற்கும் அடித்தற்கும் எண்ணிய எண்ணமோ தீயதேயாகும்; பின் உண்டான அவ்வெண்ணந் தீயதல்லாவிட்டால் அவன் தன் புதல்வனைத் திட்டுதலும் அடித்தலுஞ் செய்யமாட்டாதவனாவன். ஆதலாற், றீய சொற்செயல் நிகழும்போதெல்லாம் அவை தமக்கு முதலான தீய எண்ணமும் ஒருவன் உள்ளத்தே ஒருங்கு நிகழ்ந்தே தீரல் வேண்டுமென உணர்ந்துகொள்க. அவ்வாறு கொள்ளின், தன் மகாரை ஒறுக்குந் தந்தையின் செயல் நல்லெண்ணம் பற்றியே நிகழ்ந்ததெனக் கோடல் யாங்ஙனம் எனின்; ஒரு நேரத்தில் ஒருவன் செய்யுஞ்செயல் தீயதாகவோ நல்லதாகவோ காணப்படுதல் பற்றி அவனை முழுதுந் தீயனென்றோ நல்லனென்றோ முடித்துவிடுதல் பொருந்தாது. மற்று, அவன் அதனைச் செய்யும் நேரத்திற்கு முற்பட்ட காலங்களிற் கொண்ட எண்ணமும், அதனைச் செய்ததற்குப் பிற்பட்ட காலங்களிற் கொள்ளும் எண்ணமும் எத்தகைய வென்று அவ்விரண்டனையும் இணைத்துப் பார்த்துப், பின்னர் அவனை நல்லனென்றோ தீயனென்றோ முடிவு கட்டுதலே வாய்வதாகும். ÔJ brŒíª j‹ kfid xW¡F« xU jªijahdt‹, mtid xW¡F« mªneu¤âš k£Lª Ôa v©z« cilatndašyhš mj‰F K‹D« ã‹Dª j‹ kfD¡F¤ ÔJ Ãid¤jt‹ mšy‹; mj‰F K‹ mtid¢ Ó®âU¤J« ešby©znk j‹Ds¤J¡ Fobfhs¥ bg‰wtdht‹; mtid bahW¤j ã‹Dª j‹ beŠr§fáªJ, ‘v‹ mUik¥ òjštid ah‹ mo¡fyhndnd! என்று கண்ணீர் சிந்திக் கலுழ்வதுஞ் செய்வன். இனி, ஓர் ஆட்டுவாணிகனோ தான் வளர்க்கும் ஆடுகளுக்குக் கொழுமையான தீனிகொடுத்து அவைகளை எவ்வளவோ கண்ணுங்கருத்துமாய்ப் பாதுகாத்து வரு கின்றான். அங்ஙனம் அவ்வாடுகளை அவன் அன்புடன் பாதுகாத்து வளர்த்துவரும் நற்செயலைக் கண்டு அவனை முழுதும் நல்லெண்ணம் உடையவன் என்று கருதிவிடுதல் கூடுமோ? கூடாதே, ஏனெனின், அவன் அவைகளை நன்றாய்க் கொழுக்க வளர்த்தபின், அவைகளை ஆடறுக்குங் கொட்டிலிற் கொண்டுபோய்விடுத்து, அவற்றின் கழுத்தை அவை துடிதுடிக்க வெட்டி, அவற்றின் இறைச்சியை விலை செய்யக் காண்கின்றோமாகலின் அவன் தன் ஆடுகளைக் கொழுமை யாக வளர்க்கும் அக்காலத்தில்மட்டும் நல்லெண்ணம் உடையனாயிருந்தாலும், அவற்றை வளர்க்கத் தொடங்கும் முன்னும் அவற்றை வளர்த்த பின்னும் அவை தம்மைக் கொலை செய்து அவற்றின் ஊனை விற்றுக் காசு பெறுந் தீயவெண்ணமே தன் மனத்திற் குடிகொளப்பெற்றவனா யிருத்தலின், அவன் முழுதும் நல்லெண்ணம் வாய்ந்தவன் அல்லனென்பது எவர்க்கும் விளங்கற்பாலதேயாம். ஆகவே ஒருகாலத்து ஒருவன் பாற் காணப்படும் நல்லசொல் நல்ல செயல்பற்றி அவனை முழுதும் நல்லனென்றலும், தீய சொல் தீயசெயல்பற்றி அவனை முழுதுந் தீயனென்பதும் ஆகா. ஆனாலும், எவர்பால் எக்காலத்து எவ்விடத்து ஒரு நற்சொல் ஒரு செயல் காணப்படுகின்றதோ, அவர்பால் அக்காலத்து அவ்விடத்து அவருளத்து அவ்விரண்டற்கும் அடிப்படை யாய்த் தோன்றியது நல்லெண்ணமேயாகுமென்பதும், அங்ஙனமே ஒரு தீச்சொல் ஒரு தீச்செயல் நிகழ்ந்தக்கால் அவை தமக்கு முதலாய் நின்றது தீயதோர் எண்ணமே யாகுமென்பதும் மறுக்கலாகா உண்மையாமென்று தெளிந்து கொள்க. அவ்வாறு தெளியவே, மக்களின் சொல்லுக்குஞ் செயலுக்கும் முதலாய் அவரது உள்ளத்தின் கட் டோன்றுவது அவரது எண்ணமே யாகுமென்பதும் அதன் வழியே தெளிந்து கொள்ளப்படும் என்க. எனவே, அறம் எனப்படுவது, ஒருவனுடைய சொற்செயல்களின் உள்ளே சினைத்துக்கிளம்பிய பொல்லாங்கினை அறுத்து அகற்றுதற்கு முன், அவற்றிற்கு முதலான நினைவின்கட் சினைக்கொண்ட தீயவெண்ணத்தை அறுத்துக் களைவதாகும் என்னும் உண்மை நன்கு புலனாகின்றதன்றோ? இவ்வுண்மை கண்டன்றோ நந் தெய்வத் திரு வள்ளுவர், மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற (குறள் 34) என்று அருளிச்செய்தார். எல்லா எண்ணங்களுந் தோன்றுதற்கு நிலைக்களனான ஒருவனது மனங் குற்றமின்றித் தூயதாக இருக்குமாறு ஒருவன் செய்து கொள்வதே அவனுக்கு அறமாகும்; மற்று மனத்தூய்மையின்றி அவன் தன் சொல்லாலுஞ் செயலாலுஞ் அறம்போற் செய்வனவெல்லாம் வெற்றாரவாரமே யாகுமல்லால் அவை அறமாதல் சிறிது மில்லை யென்பதே நாயனார் கருத்தாதல் தெற்றென விளங்கா நிற்கின்றது. இனி, அறங்களுட் சிறந்ததுந் தலையாயதும் இறைவனைத் தூயநெஞ்சத்தால் நெக்குருகி உண்மையான் வழிபடுதலேயாகும். தூயநெஞ்சமும் உண்மையன்புமின்றிப் பொய்ம்மை யாகச் செய்யும் வழிபாட்டைக் கண்டு இறைவன் நகைசெய்து அருவருப்பன் என்னும் உண்மையைத் திருநாவுக்கரசு நாயனாரும், நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியே என்று நன்கு விளக்கியருளுதல் நினைவிற் பதிக்கற் பாலதாகும். இங்ஙனமே திருமூலரும், என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழைவார்க் கன்றி என்பொன் மணியினை எய்தவொண் ணாதே என்று மிக வலியுறுத்திக் கூறுதல் காண்க. இதனால் தன் எலும்பையே விறகாக அடுக்கித் தன் னுடம்பின் தசையையே பலியாக அறுத்து வேள்வித்தீயி லிட்டு ஆரிய மறையிற் கூறிய புருஷமேதத்தை ஒருவன் செய்தாலும், அன்பினால் உருகி நெஞ்சம் இளகுவார்க்கன்றி, அங்ஙனம் வேள்வி செய்வானுக்கும் இறைவனை அடைதல் இயலாதென்பது நன்கு பெறப்படுகின்றதன்றோ? ஆகவே, மனம் மாசு அறுதற்கு அன்பினால் மனங்கரைதல் இன்றியமையாததாதல் பெறப் படுகின்றது. செம்பில் ஏறிய களிம்பை ஒருவன் நீக்கவேண்டு மானால் அவன் அதனைப் புளியிட்டு விளக்கித் தூய்தாக்குதல் காண்டு மன்றே? அதுபோலவே, மக்களின் மனத்தகத் தேறிய அழுக்கை அவர் அகற்றல் வேண்டுமாயின், அதனை அகற்ற வல்ல அன்புகொண்டே அதனைத் துடைத்துத் தூய்மை செய்தல் இன்றியமையாததாகும். மனமாசு நீக்குதல் இன்றியமையாததாகும். மனமாசு நீக்குதல் வேண்டுமென்று மட்டுஞ் சொல்லி, அதனை நீக்குதற்கேற்ற கருவியினை ஆசிரியர் அறிவுறுத்தாது போயினராயின், அவரது அறிவுரையினைக் கேட்டார்க்கு அவ்வுரை பயன்படாதே போய்விடும். அது கண்டே அவர், அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (குறள் 45) என்று அருளிச்செய்தார். எனவே, மனம் மாசறத் தூய்மை செய்தற்கு அன்பும் அறனும் ஒருதலையான் வேண்டப்படும் என்பது ஆசிரியரால் வற்புறுத் துரைக்கப்பட்டமை நினைவிற் பதிக்கற்பாற்று. தம்மொடு தொடர்புடையார் மாட்டு உண்டாகும் உள்ளக்கசிவாகிய அன்புந், தமக்குத் தொடர் பிலார் மாட்டும் உள்ளம் நெகிழும் அன்பின் முதிர்ச்சியான அருளால் நிகழும் அறமும் ஒருவர் பாற்றோன்று மாயின் அவர் தம் மனம் மாசுதீர்ந்து சுடர்விரி பசும்பொன்னெனத் திகழ்தல் திண்ணம். இனி, மனத்திற்கு அழுக்காவன இவையென்று தெளிவாய்த் தெரிந்தாலன்றி, மனத்தினின்றும் விலக்கற்பாலதனை விலக்குதல் இயலாது. ஆதலால், அதற்கு அழுக்காவன இவையென்று தெளிவிப்பார், அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் (குறள் 35) என்று ஆசிரியர் அவையிற்றைக் கிளந்தெடுத்துக் கூறினார். இதனாற், பிறர்க்குள்ள கல்வி செல்வம் புகழ் புண்ணியங்கள் கண்டு பொறாமைப்படுதலும், விரும்பத் தகாதவைகள்மேல் அளவிறந்த விருப்பம் வைத்தலுங், காரணம் இல்வழியும் பாராட்டத்தகாத புல்லிய காரணம் உள்வழியும் வெகுளலும், பிறர்க்குத் தீங்கு பயக்குஞ் சொற்களைச் சொல்லுதலும் ஒருவரது உள்ளத்திற்கு மாசாதல் நன்கு விளங்கா நிற்கின்றது. மனத்தை மாசுபடுத்தும் இத்தீய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தவழி எத்தகையோரும் நல்லறிவு மங்கித் துன்பத்திற்கே ஆளா கின்றனர். இத்தீய நிகழ்ச்சிகள் தம்மிடத்தே தோன்ற வழி செய்தார்க்குப் பிறர் ஏதொரு தீங்குந் துன்பமும் விளைக்க வேண்டுவதில்லை; அவர் தாமே தமக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைத்துக் கொள்பவர் ஆவர். இந்நிலையும், அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியுங் கேடீன் பது (குறள் 165) என்னுந் திருக்குறளால் ஆசிரியர் நன்கெடுத்துக் காட்டினார். ஆகவே, தன்னுயிர்க்குத் துன்பத்தை வருவித்துக் கொள்ளாமைப் பொருட்டாவது ஒருவர் இத்தீய நிகழ்ச்சிகள் தம்மகத்தே நிகழாமல் தம்மைப் பாதுகாக்கக் கடமைப்பட்டிருக் கின்றாரென்க. அது கடமையே யாயினுந், தாம் அறியாமலே தம் மனம் பிறரது செழுமை கண்டு பொறாமைப்படுதல் முதலான தீய செயல்களைச் செய்வதாயிருத்தலின், அஃது அங்ஙனஞ் செய்யாதிருத்தற்கு எளியதொரு வகையுண்டோ வெனின், உண்டு. தீய எண்ணங்களை நீக்க முயல்வோர் அத்தீய எண்ணங்களையே நினைத்துக்கொண்டிருந்தால், அவை அவரது நினைவை விட்டு நீங்கா. மற்றுத், தீயவைகளுக்கு மாறான நல்லவைகளை நினைவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே தீய வெண்ணங்கள் நெஞ்சைவிட்டு அகலும். அங்ஙன மாயினும், நல்லெண்ணங்கள் என்பன, மற்றை எண்ணங்களைப் போலவே, கட்புலன் ஆகாதனவாதலாற், கட்புலனாகாத அவற்றை நினைவிற்குக் கொண்டுவருதல் யாங்ஙனம்? எனின்; எண்ணங்கள் எல்லாம் ஒருவர் மற்றவர்களுடன் தொடர் புற்று நின்று செய்யுஞ் செயல்களை நினைப்பதனாலேயே நெஞ்சத்தில் எழுகின்றனவன்றி, வேறு வகையில் எழுதலை யாண்டும் எக்காலத்துங் காண்கிலேம். உண்ணச் சோறும் உடுக்கக் கூறையுமின்றி வருந்தும் ஒருவனைக் கண்டு மனம் இரங்கிய மற்றொருவன் அவனுக்குச் சோறுங் கூறையுங் கொடுக்குங்கால், வறுமை இன்னதென்றும் அதனைத் தீர்க்கும் ஈகை இன்னதென்றும் நாம் உணரப்பெறுதலால், அதுமுதற் கொண்டே பின்னர் வறுமை ஈகையைப்பற்றிய எண்ணங்கள் நம் நினைவில் எழப்பெறுகின்றோம். இனி, வறுமைப்பட்டு வருந்தும் ஒருவனுக்கு அங்ஙனம் ஈதலைச்செய்யாமல், அவனை அடித்து வெருட்டும் மற்றொருவனுடைய செயல்களைக் காணும்போது, வறுமையால் உண்டாந் துன்பங்களும்; மன இரக்கம் இல்லா ஈயாச்செயலின் கொடுமையும் நாம் நன்கு உணர்தலாற், பின்னர் அவற்றைப் பற்றிய எண்ணங்கள் நம் நினைவில் உருத்து எழுகின்றன. இங்ஙனமே இன்னும் பலதிறப்பட்ட நன்மை தீமைகளைப் பற்றிய எண்ணங்கள் பலவும் நம் உளத்துத் தோன்றுதற்கு, அவையிரண்டுக்கும் முதலான செயல்கள் மாந்தர்கள்பாற் காணப்படுதலே காரணமாயிருக்கின்றது. இதற்கொரு சிறு கதையினை இங்கு எடுத்துக் காட்டுவாம். ஓர் அரசன் தான் ஈன்ற ஒரு சிறுவனை ஓர் ஆசிரியன் பால் விடுத்து அவனுக்குக் கலைகள் பலவுங் கற்பிக்கும்படி ஏற்பாடு செய்தனன். அவ்வாசிரியன் அவ்வரசன் மகனை அன்புடன் ஏற்றுவைத்து, இனிய முகத்துடனும் இனிய சொற் செயல் களுடனும் அவனது அரச வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டப்படுங் கலைகளையும் பிற கலைகளையும் அவனுக்கு நன்கு புகட்டி வந்தனன். அவன் அக்கலைகளை யெல்லாந் திறமாகக் கற்றுத் தேறியபின், ஆசிரியன் அவனை அழைத்துக் கொண்டுபோய், அரசன் தன் அமைச்சர் முதலாயினார் புடைசூழ வீற்றிருக்கும்போது, அவன் முன்னே நிறுத்தி, மன்னர்பிரான், தங்கள் அருமைப் புதல்வனை அவனுக்கு வேண்டிய எல்லாக் கலைகளிலும் நன்கு பயிற்றி இதோ தங்கள் முன்னிலையிற் கொணர்ந்திருக்கின்றேன். அவனது கலையறி வினைத் தாங்கள் செவ்வனே ஆராய்ந்து காணலாம் என்று தெரிவித்துக்கொண்டனன். அதுகேட்ட அரசன் மிகமகிழ்ந்து, தன் அவைக் களத்தில் வந்திருந்த கலைவல்ல புலவர் சிலரை நோக்கிக், கல்வியிற் சிறந்த சான்றோர்களே, என் புதல்வனுக் குள்ள கலைப்பயிற்சியினை ஆராய்ந்து காண்மின்கள்! எனக் கட்டளையிட்டனன். அங்ஙனமே, அப்புலவர்கள் ஒருவர்பின் ஒருவராய்த், தாந்தாம் வல்ல துறையில் அவ்வரசிளைஞனை விடைதருமாறு வினவ, அவனும் அவர் வினாவிய பொருள்கட் கெல்லாம் பெரும்பாலும் பிழைபடாமல் ஏற்ற விடை சொல்லிவந்தான். இவ்வாறாக, அவரெல்லாம் அவனை ஆராய்ந்து பார்த்தபின், அவனது நுண்ணிய கலைப் புலமை யினையும், அதனை அவற்குப் புகட்டிய ஆசிரியனது திறத்தினையும் அவ்வரசவையிலுள்ளார் அனைவரும் மிக வியந்து பேசி மகிழ்ந்தனர். இவ்வாறாக, அவ்வரசிளைஞனின் கலைப் புலமையினை அனைவரும் அறியக்காட்டிய பின், ஆசிரியன் தன் கையிற் பிடித்திருந்த பிரப்பங்கோலுடன் அவ்விளைஞனை அணுகி, அவன் துடிதுடிக்க அதனால் அவனை நையப்புடைத்தனன். அரசன் தன் மகனைத் திடீரென ஆசிரியன் அங்ஙனம் புடைத்தமை கண்டு நெஞ்சம் உளைந்து அடங்காச் சினங் கொண்டவனாய்த் தன் அமைச்சனை நோக்க, அமைச்சன் அரசனது சினக்குறிப்பைக் கண்டு, மன்னர் பிரானே, சிறிது மனம் பொறுத்தல்வேண்டும். ஆசிரியர் இவ்வாறு செய்ததற்குத் தக்கதொரு காரணம் இருத்தல் வேண்டும் எனப் புகன்றனன். உடனே, ஆசிரியன் அரசனை நோக்கி வணங்கி, அண்ணலே, தங்கள் அருமைப் புதல்வனை இவ்வரசவையில் தங்கள் கண்ணெதிரே யான் அடித்து வருத்தின செயலைப் பொறுத் தருளல்வேண்டும். இப்புதல்வனைத் தாங்கள் என்னிடம் ஒப்புவித்த காலத்திருந்து கண்ணை இமைகள் காப்பதுபோல் அத்துணைக் கருத்தாய் இவனைக் காத்து இவனுக்குக் கலைகளைப் புகட்டிவந்தேன், அதனால் இவனுக்குத் துன்பம் இன்னதென்றே தெரியாது. துன்பந்தெரியாத நிலையில் இவன் அரசுக்கு வந்தாற், குற்றவாளிகள் செய்யுங் குற்றங்களின் சிறுமை பெருமைக்குத்தக அவர்களை ஒறாமற், சிறிய குற்றஞ் செய்பவர்க்குப் பெரியதோர் ஒறுத்தலைச்செய்ய ஏவி விடுவன். ஆதலால் தன்னால் முறைசெய்து ஒறுக்கப்படுவார்க்கு உளதாந் துன்பத்தின் கொடுமையினைத் தான் நன்குணர்ந்து கொள்ளும் பொருட்டாகவே இவனை இங்ஙனம் இக்கோலாற் புடைத்து வருத்தினேன். எல்லாங் கற்பித்தும் இதனை யான் கற்பியா விட்டால், இவனாற் குடிமக்கட்கு அளவிறந்த துன்பம் விளையுமன்றோ? இப்போது இவனுக்குத் துன்பத்தின் கொடுமையினையும், அரசவையிற் பலர் முன்னிலையில் தான் அடிபட்டதனால் தனக்குண்டான மானக்கேட்டின் துன்பத் தினையுங் கற்பித்துவிட்டேன். யான் செய்தது பிழையாயின் அடியேனை மன்னித்தல் வேண்டும் என நுவன்றனன். அது கேட்ட அரசன் சினந்தணிந்து மகிழ்ச்சி மிக்கவனாய் ஆசிரியனுக்குப் பொற்றூசும் , பொற்காசும் வழங்கிச் சிறப்புச் செய்தனனென்பது. இச்சிறு கதையினாற் றெளியப்படுவது யாது? துன்பம் இன்னதென்றே உணராத ஒருவனுக்கு, அதனை வெறுஞ் சொல்லால் எவ்வளவுதான் விரித்து விளக்கினாலும் அவன் அதன் றன்மையினை உணராதொழிய, மற்று அத்துன்பத்தினை அவனே எய்தித் துடிதுடிக்குமாறு செய்தவடனே அதனை அவன் நன்குணர்ந்து, பிறர்க்கு அத் தகையதொரு நோவினை விளைக்க மனம் இசையான் என்பதேயன்றோ? ஒருபிடி சோறுங் கிடையாமற் சிலநாட் பசித்து வருந்திப், பின்னர் அருளிரக்கம் உடைய ஒருவனால் இன்சுவையடிசில் ஊட்டப்பட்டு, அக்கொடிய இடும்பையினின்றும், நீங்கிய ஓர் எளியவனே பசித்துன்பம் இனையதென்றும், அதனை நீக்குவான்றன் ஈரநெஞ்சின் நீர்மை இத்துணையதென்றும், பசித்துப் பெற்ற உணவாற் போதரும் இன்பம் இத்தன்மையதென்றுந் தெற்றென வுணர்ந்து, பிறர் பசித்திருத்தலைக் காணமாட்டாதவனாய் அதனை அவரினின்றும் நீக்குவோன் ஆவன். ஆகவே அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்னும் நான்கு தீய நிகழ்ச்சிகளுந் தம்மிடத்தே நிகழாமல் நீக்கவேண்டுவோர், அவற்றைப் பிறர் தம்மிடத்துக் காட்டியக்கால் தமக்குண்டாம் மனவுளைவினை நினைந்து பார்த்தும், அவற்றின் கொடுமைக்கு அஞ்சி, அவற்றிற்கு மாறான நல்ல செயல்களைப் பிறர் தமக்குப் புரிந்தக்கால் தமக்குண்டாம் பெருமகிழ்ச்சியினைப் பலகாலும் உணர்ந்து பார்த்தும், அந் நற்குண நற்செயல்களில் தம் மன மொழிமெய்கள் முனைந்து நிற்குமாறு பழகிவருதல் வேண்டும். எனவே, ஒருவர், கல்வி செல்வம் புகழ் புண்ணியங்களிற் சிறந்தவராய் வாழ்தலைக் கண்டால், அவர் மேலும் அவற்றிற் பெருகி யோங்கித் தமக்கும் பிறர்ககும் பயன்பட்டு வாழ்கவென்று மனத்தால் நினைத்து வாயால் வாழ்த்துதல் வேண்டும். இவ்வாறு செய்தலிற் பழகிவரவே, பிறர்க்குள்ள கல்வி செல்வம் முதலியவைகளைக் கண்டு உளதாம் மனப்புழுக்கம் அறவே நீங்கும். அங்ஙனமே, ஒருவர்க்குள்ள செல்வத்தையும், ஒருவர்க்குள்ள அழகையும் கண்டு பேராவல் கொண்டு அவரது பொருளைக் கவரவோ அழிக்கவோ கருதாமல், அழ குடையவரைத் தான் கூடிக் களிக்க விழையாமல், தமக்குள்ள பொருளை நல்வழியிற் பெருக்கவும், தமதுடம்பின் அமைப்பை நன்முறையில் அழகுபடுத்தித் தமக்குரியா ருடைய உடல்நல மனநலங்களையும் அவ்வாறே தக்க முறையில் அழகுறச்செய்து தம்மவருடன் கூடி இனிது வாழவும் ஒவ்வொருவரும் முயற்சி செய்தல் வேண்டும். இவ்வாறு செய்துவரவே பிறருடைய செல்வப்பெருக்கு வனப்பின் மிகுதி கண்டு அவற்றின்மேற் செல்லும் அவா தம்முள்ளத்தில் தலைகாட்டாதொழியும். இனிப், பிறர்பாற் காணப்படும் குற்றங் காண்புழி உண்டாம் வெகுளியினை நீக்கிக்கொள்ளுதலும் வருத்தமான செயலன்று. மக்கள் எல்லாருங் கல்வியறிவு ஒழுக்கங் களில் எத்துணைச் சிறந்தவராயிருந்தாலும் நொடிக்கு நொடி மறந்துவிடும் மறதிக்குணமும், அதுகாரணமாக வரும் அறியாமையும் இயல்பாகவே உடையராதலால், அவரெல் லாருஞ் சிற்றறிவுடைய சிற்றுயிர்களே யல்லாமல், முற்றறிவுடைய கடவுள் அல்லர். அற்றாயின், மக்களுட் சிலரைப் பேரறிவினர் என்றல் ஏன் எனின், தம்மினுங் குறைந்த அறிவினரை நோக்க அவர் பேரறிவினரென உயர்த்துப் பேசப்பட்டனரே யன்றி, அவரும் முற்றறிவினர் அல்லர். அவரினும் அறிவின்மிக்கார் வரின் அவரெதிரே அப்பேரறி வினருஞ் சிற்றறிவினராய்விடுதல் திண்ணம். இன்னுஞ், சிற்சில நேரங்களில் சிற்றறிவினர் கட்டும் நுண்ணறிவுக்கு முன் பேரறிவினருஞ் சிற்றறிவினராகித், தலைகுனிதலைக் காண்கின்றாம் அல்லமோ? ஆகவே, மக்களெல்லாரும் ஏற்றத் தாழ்வான அறிவுடைய சிற்றுயிர்களே யென்பதும், எல்லாரும் பிணிமூப்புகளின் வாய்ப்பட்டு இறந்தொழிபவர்களே யல்லால் நிலையாக இருப்பவர் எவரும் இல்லை யென்பதும், எல்லாருந் தம் வாழ்நாள் எல்லைக்குட் செய்யுங் குற்றங்கள் கணக்கிலவாமென்பதும் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த உண்மைகளேயாதல் எல்லாரும் நினைவிற் பதித்தல் வேண்டும். இங்ஙனம் இவ்வுண்மைகளை நினைவிற் பதிப்பவர்கள், தம்மொடு தொடர்புடையார் அறியாமையாலுஞ் சிற்றறி வாலும் மறதியாலுஞ் செய்யுங் குற்றங் குறைகளைக் கண்டு வெகுளார். குற்றங்குறைகளைக் கண்டு வெகுளலும் மக்களின் மனவியற் கையாயிருத்தலின், அதனை மாற்றுதல் இயலுமோ வெனின்; இயலும். தம்மின் மெலியார் செய்யும் பிழைகளைப் பொறாமல் தாஞ்சினங்கொளல் போலவே, தாஞ் செய்யுந் தவறுகளைக் கண்டு தம்மின் வலியார் தம்மேற் சீற்றங் கொள்வரல்லரோ? அப்போது எம்மனம் எத்துணை நடுக்கம் உறுகின்றது! அதுபோல், எமது வெகுட்சியினைக் கண்டு எமக்கு அடங்கிய இவர் எத்துணை நடுங்குவர்? ஆதலால், இவர்மீது யாஞ்சீற்றம் கொள்ளுதல் நன்றன்று என ஒவ்வொருவருஞ் சிறிது கருதிப்பார்ப்பராயின், அவருள்ளத்திற் சினமுஞ் செற்றமும் வேரூன்றாமல் மறைந்துவிடும். இவ்வெளிய வழியினையே தெயவத் திருவள்ளுவரும், வலியார்முற் றம்மை நினைக்க தாந் தம்மின் மெலியார்மேற் செல்லு மிடத்து (குறள் 250) என நம்மனோர்க்கு நன்கெடுத்து அறிவுறுத்தருளினார். இனி, இன்னாத சொற்கள் தம் வாயினின்றும் பிறவாமல் தம் நாவினைக் காத்து ஒழுகுதலும் எளிதிற் பழகக் கூடியதேயாம். ஏனென்றால், அன்புநிறைந்த நெஞ்சம் உடையான் ஒருவன் வாயில் இன்சொற்களே யல்லாமல் வன்சொற்கள் எட்டுணையுந் தோன்றா. அன்பு என்னும் இளஞாயிறு ஒருவன் நெஞ்சத்துள் எழுங்கால், அதற்கு முன் அவனது நெஞ்சம் பனிப்பாறைபோல் வல்லென்றிருந்தாலும், அதன் கதிரொளி தோய்ந்த அளவானே, அது நெகிழ்ந்து நீராய் உருகுகின்றது; அவனது முகம் அதற்குமுற் கூம்பி அழகின்றி அருவருக்கத் தக்கதாயிருந்தாலும், இப்போது வீசும் அதனொளியினால் அழகிதாக மலர்ந்து செழுந்தாமரைப் போதெனத் திகழ்ந்து எவரும் விரும்பத்தக்கதாகின்றது; இதற்குமுற் கொடுஞ்சொல்லென்னும் முடைநாற்றக் கைப்புநீர் ஒழுகிய அவனது வாய் இப்போது இதழ்விரிந்த செந்தாமரை மலரினின்று சொட்டும் நறுந்தேன் என நினைத்தொறுந் தித்திக்குஞ் செஞ்சொற்களைப் பொழிகின்றது. இங்ஙனமாக எல்லாரிடத்தும் அன்பு பூண்டு நடப்பானுக்கு ஏதோருழைப்பு மின்றியே இன்சொற்கள் தாமாகவே வருதலின், தன்பால் இன்னாச்சொற்கள் காணப்படாதொழிய வேண்டுவோன், தான் அனைவரிடத்தும் உண்மையன்பு காட்டி யொழுகுதலே எளியதொரு வழியாய் இருக்கக் காண்பன். அஃதொக்கும், நன்மையுந் தீமையும் விரவிய பலதிறக் குணனும் பலதிறச் செய்கையும் வாய்ந்த பலதிறத்தவரான மாந்தர்களுடன் எல்லாம் நாம் உண்மையன்பு காட்டி நடத்தல் யாங்ஙனங் கைகூடுமெனின்; எல்லாரும் இறைவனொருவனாற் படைக்கப்பட்டவரே யாகையால், அவரெல்லாரும் ஒரே தந்தைக்குப் பிறந்த புதல்வர்களே யாவரல்லாற் பிறிதில்லையென்பதும் , எல்லாரும் இவ்வுலகிற் சிறிதுகாலம் உண்டு உடுத்து உறங்கிப் பின் இதனைவிட்டுச் சடுதியில் நீங்கிப் போபவர்களாகவே காணப்படுதலால் இந்நிலவுலகும் இதன் அகத்துள்ள அரும்பண்டங்களும் எவர்க்கும் நிலையாக உரியவைகள் அல்லவென்பதும் எத்துணை அறிவிற் சிறியவர்களும் நன்குணர்ந்திருக்கின்றனர்; அதனால், நிலையில்லா வாழ்வினராகிய மக்கள் இவ்வுலகியற் பொருள்களின் பொருட்டும் இவைகொண்டு நுகருஞ் சிற்றின்பத்தின் பொருட்டுந் தம்முட் பகைபாராட்டி, இச்சிறிய வாழ்க்கையிலும் நெடுக அல்லல் உழப்பது எத்துணைப் பேதைமை! என்று நினைந்து பார்க்கப் பார்க்க எல்லாரையுந் தம்முடன் பிறந்தவராகக் கருதி, எல்லார் மாட்டுங் கனிந்த உள்ளத்தினராய் இன்சொற்பேசி யொழுகும் பழக்கம் எளிதிலே எவர்க்குங் கைகூடுமென்க. என்று மேற்காட்டிய வகையாலெல்லாம் அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்னும் நான்கு பெருந் தீங்குகளும் ஒருவன் தன்கண் நிகழாமைக் காத்தற் பொருட்டு, அவற்றிற்கு எதிரிடையான நினைவு சொற்செயல்களைத் தன்மாட்டு இடையறாது தோற்றுவிக்கவே, அவனது உள்ளந் தன்னைப் பொதிந்த மாசு நீங்கித் தூய செம்பொன்னென ஒளி துளும்பி விளங்காநிற்கும். இதனின் மிக்க அறம் வேறொன்று இல்லாமையின், இதனை ஆசிரியர் திருவள்ளுவர் வலியுறுத்தி விளக்கினாற்போலவே, சைவங், கிறித்துவம், பௌத்தம், சமணம், வைணவம் முதலான எல்லாச் சமய ஆசிரியர்களும் இதனையே வலியுறுத்திக் கூறாநிற்பர்; அவர்தம் அருமருந்தன்ன அறவுரைகளைப் பின்னர் ஒரு கட்டுரையினில் எடுத்துக் காட்டுதும். அற்றேல், மனம் மாசற்றிருத்தல் ஒன்றுமே ஒருவர்க்குப் போதாதோ? அவர் பிறர்க்கு வேறு அறஞ்செய்தலும் வேண்டுமெனப் பகர்வதன் கருத் தென்னை யெனின், அதனையும் ஒரு சிறிது விளக்குதும்: தமது மனம் மாசற்று இன்ப வாழ்க்கையிலிருப்போர் , நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனத் தெய்வத்திருமூலர் வேண்டினாற்போலப், பிறருந் தம்மைப்போல் இன்புற்றிருக்க வேண்டுமென்றே எண்ணுவர், அதனையே சொல்லுவர், அதற் காவனவே செய்குவர். பிறர், மேற் சொன்ன அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்னும் நான்கு குற்றங்களும் உடையராய், அவற்றாற் பெரிதும் அலைக்கழியும்போது, அதனைக் கண்டு வாளாதிருக்க மாசற்றார் மனம் ஒருசிறிதும் ஒருப்படாது. அந்நான்கு குற்றங்களாலும் மக்களிற் பெரும்பாலார் துன்புறுதற்குக் காரணம், இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் இல்லாமையும், பொருள் கடைக்கூட்டுதற்கேற்ற அறிவும் முயற்சியும் வாயாமையும், எல்லா உயிர்களின் வாழ்க்கை நிலைகளையும் உணர்ந்து பாராமையுமேயாகும். மாந்தரின் துன்பங்களுக்கு ஏதுவான இம்மூன்றனையும் அவர்பால் நின்றும் அகற்றிவிடவே, அவரெல்லாம் மாசற்ற மனமுடையராய் அறத்தின்கண் நிலைபெறுதல் திண்ணம். பொருள் இன்றி வறியவராய்க் கிடந்து துன்புறுவோர், பெரும்பாலும் பிறர் சிலரின் செல்வ வளங் கண்டு பொறாமைப் படுதல் இயற்கையாய் இருக்கின்றது. தாமே பொருள் வழங்கியாவது, தமக்கு அஃது இசையாவிட்டாற் செல்வர்களை ஊக்கி அவர் அவர்கட்குப் பொருளுதவி புரியும்படி தூண்டியாவது மனமாசற்ற சான்றோர் அறஞ் செயாநிற்பர்; அஃதவர்க்குரிய அறக்கடமையேயாம். தமதுள்ளத்தைத் தூய்தாக்கி இன்சொற் பேசுதலொடு மட்டும் நின்றுவிடுதல் முழு அறம் ஆகாது; அஃதறத்தின் ஒரு பகுதியேயாம்; அவ்வொரு பகுதியின் மட்டும் அமைந்து வாளாதிருக்க அறவோருளம் ஒரு சிறிதும் ஒருப்படாது. ஏழையெளியவர் தொகையே மிகுந்துள்ள பொதுமக்களைப் பலதுறைகளிலும் எதிர்வந்து நலியும் வறுமையை நீக்குதற்குப் பொருளுங் கல்வியுமே கட்டாயமாக வேண்டப் படுவன. அதனை நன்குணர்ந்த சான்றோர், செல்வர்களைத் தூண்டி எளியோர்க்குப் பொருளுதவியுங் கல்விப் பயிற்சியுந் தருதல் மிகவும் வருத்தமுடைத்தாதல் கண்டு, தாமே அறத்தாற்றாற் பொருள் ஈட்டித் தம்மால் இயன்றவளவு வறியார்க்குப் பொருளுதவி புரிந்தும், அதனினும் சிறந்த கல்வியறிவினைப் புகட்டியும் அறஞ்செயாநிற்பர். இவ்வாறு அறஞ்செய்தற்பொருட்டு மனமாசற்ற சான்றோர் பொருள் திரட்டும் மெய்ம்மையினை ஆய்ந்துணராதார், எல்லாந் துறந்த இவர்க்குப் பொருள் ஏன்? என எளிதாய்க் கூறி நகையாடா நிற்பர். பொருளுங் கல்வியும் மனமாசு தீர்ந்த அற்வோர்க்கு உளவாயின், அவை பொதுமக்களின் நன்மைக்குப் பலவகையிற் பயன்படும். அவையிரண்டும் அறநெஞ்சம் இல்லார்க்கு வாய்ப்பின், அவை ஏழை மக்கட்குப் பயன்றராமையேயன்றி, அவர்க்குப் பல்பெருந் தீமைகளையும் பயவாநிற்கும். பொருள்படைத்த செல்வர்களில் எத்தனைபேர் கட்குடித்தும், வேசிகளை மருவியும், ஏழை மகளிரைக் கற்பழித்தும், நல்லோர்க்குத் தீமை செய்துந், தந் தீய செயல்கட் கிசையாதவரைக் கொலை புரிந்தும், அழிவழக்காடி எளியோர் உரிமைகளைக் கவர்ந்தும், இக்கொடுஞ் செயல்கட்குக் கருவியாக அரசியலில் உயர் நிலைகளை வலிந்து பெற்றுந், தமது பொருனைப் பாழாக்குகிறார்கள்! அங்ஙனமே கல்வியறிவைப் பெற்றவர்களில் எத்தனைபேர் தாம் அரிதிற் பெற்ற அவ்விழுப்பொருளை மேலுமேலும் பெருக்காமல், அல்லும் பகலும் அரும்பெரும் பொருள்களை ஆராயாமல், அருமையாய் ஆராயினும் ஆராய்ந்தவைகளைப் பிறர்க்கு அறிவுறுத்தாமல், தாங்கற்ற சிறிதைப் பெரிதாகத் தாமே இறுமாந்து மதித்துத், தம்மினும் மிகக்கற்று அடங்கித் தாம் அறிந்த மெய்ப்பொருள்களைச் சொல்லாலும் நூலாலும் உலகிற்குப் பயன்படுத்துஞ் சான்றோரைக் கண்டு வாழ்த் தாமல் வயிறெரிந்து அவரது அறச்செயலுக்கு மறச்செயல் செய்து தீராப்பழியினையுந் தீவினையினையும் பெருக்கு கின்றனர்! இன்னுங், கற்றவர்களில் வேறு எத்தனைபேர் பாராட்டத் தகாத செல்வர்களைப் பாராட்டியும், அவர் இட்ட குற்றேவல் செய்தும், அவர்தங் காமக்கிழத்தியர்க்குத் தூது போகியும், அவர் வீசுங் காசுக்குந் தூசுக்குங் காத்து நிற்கின்றனர்! உண்மையான் நோக்குங்காற் செல்வமுங் கல்வியும் அறநெஞ்சம் உடைய துறவோர்க்குத் தாம் இன்றியமையாது வேண்டற்பாலனவேயல்லால் அவரல்லாத பிறர்க்கு வேண்டற்பாலனவாகா. அறநெஞ்சம் இல்லார் கைப்படின் அவையிரண்டும் உலகிற்குத் தீமையை விளைப்பக் காண்டும்; மற்று, அற்நெஞ்சம் உடையார் கைப்படிலோ அவை, அவையிரண்டிலும் வறியார்க்குப் பல்லாற்றானும் நிலையான பெரும்பயனைப் பயப்பக் காண்டும். ஆகவே, அறநெஞ்சம் வாய்ந்த துறவோர்க்குக் கல்வியொடு செல்வமும் வாய்ப்பின், அஃது உலகத்தவர்க்குப் பலவகையாற் பயன்பட்டு அவரை நல்லவாய் அறிவிற் சிறந்தாராய் மிடியின்றி வாழச்செய்யும் என்க. 9. கானத்தோகை தேவமணி கதை கானத்தோகை என்னும் மங்கை நுண்ணறிவும் பேரழகும் வாய்ந்தவள். ஆனால், அவளுக்கு வாய்த்த தந்தையோ தன் உழைப்பினால் ஏராளமான பொருளைத் தொகுத்து, அப்பொருளையே தெய்வமாக நினைந்து களிப்பவன். தேவமணி என்னும் இளைஞன், கல்வியிலுஞ் சிறந்த நடையிலும் புகழ்பெற்ற தொன்றாயினும் பொருள் இழந்து நொந்துபோன ஒரு குடும்பத்திற் பிறந்தவன்; கல்வியிலும் நல்லொழுக்கத்திலும் பெருந்தன்மையிலும், மிக்கவன். இவ்விளைஞனுக்கு இருபதாம் ஆண்டு நடக்கையில் இவன் கானத்தோகை யென்னும் மங்கையைக் கண்டு அவளோடு பழக்கங்கொள்ளலானான்; அப்போது கானத் தோகைக்கு அகவை பதினைந்து. இம்மாதின் தந்தையின் வீட்டிற்குச் சிறிது தொலைவிலேயே இவனது இல்லம் அமைந்திருந்தமையால், இவன் அடுத்தடுத்து அம்மடந் தையைக் காணுதற்கு அமயம் வாய்ந்தது. இவன் அழகிய உருவம் உடையனாயிருந்ததுடன் இனிதாக உரையாடும் இயல்பினனாயும் இருந்தமையால், எக்காலத்துங் கலைக்க முடியாததான தன்னைப் பற்றியதோர் அழுத்தமான எண்ணத்தை அவள் நெஞ்சத்திற் பதித்து விடலானான். இவனும் அவளது வனப்பினாற் கவரப்பட்டது சிறிதன்று. இவர் இருவரும் நெடுநாட் பழகப் பழக இன்னும் இன்னும் உயர்ந்த அழகிய இயல்புகளை ஒருவர் ஒருவரிற் கண்டு இன்புறலாயினர்; இதிலிருந்து படிப்படியே இவர் ஒருவர் மீதொருவர் கொண்ட காதலானது, இவர் தம் வாழ்நாள் எல்லையளவும் இவரைத் தொடர்புபடுத்தி நிற்கவல்லதாயிருந்தது. அஃது அவ்வாறு நிகழ்கையிற் கானத்தோகையின் தந்தைக்குந் தேவமணியின் தகப்பனுக்கும் இடையே கலகம் விளையலாயிற்று. ஒருவன் தனக்குள்ள செல்வவளத்தால் தன்னைத்தானே மிகுதியாய் உயர்த்துப்பேசலாயினன்; மற்றவன் தனக்குள்ள பிறப்பின் மேன்மையால் தன்னைத்தானே பெரிதும் பாராட்டி மொழியலாயினன். கானத்தோகையின் அப்பனோ, தேவமணியின் றந்தைமேற் பருஞ்சினங்கொண்டு, அது காரணமாக அவன் புதல்வனான தேவமணிமேல் வெறுப்புக் கொள்ளலானான். அதிலிருந்து அவன் தனது இல்லத்திற்கு வரலாகாதென்று தடை செய்ததோடு, அவனைத் தன் மகள் இனிக் காணலாகாதென்றுங் கட்டுப்படுத்தினான். இன்னும், இக்காதலர் இருவருந் தாம் ஒன்றுசேருங் காலத்தை நோக்கி நிற்பதறிந்து, அவர்க்குள் இனி ஏதொரு தொடர்பும் உண்டாகாமல் தடுத்து விடுதற்காகச் செல்வமுந் தகுதியான தோற்றமும் வாய்ந்த ஏனையோர் இளைய ஆடவனைத் தெரிந் தெடுத்து, அவனையே தன் மகளுக்கு மணமகனாக்கக் கானத் தோகையின் றந்தை உறுதி செய்தான். அதன்பின் அவன் தன் புதல்விக்குத் தனது கருத்தினைத் தெரிவித்துத், திருமண மானது இன்னதொரு நாளில் நடத்தப்படல் வேண்டு மென்றுங் குறிப்பிட்டான். தன் றகப்பனின் தலைமைச் செருக்கைக் கண்டு வெருக்கொண்ட கானத்தொகை, அவனாற் பொருத்தமுள்ளதாகக் கருதப்பட்ட ஒரு மணவினைக்குத் தான் குறுக்குச் சொல்வதிற் பயனில்லை யென்று கண்டு வாய் பேசாதிருந்தனள். அவள் அங்ஙனம் வாய் பேசாதிருந்த தனையே அவளது உடன் பாடாகப் பிழைத்துணர்ந்த அவடன் றந்தை, அத்தகையதொரு சிறந்த ஏற்பாட்டில் தன் றந்தையின் கருத்துக்கு இசைந்து நடக்க ஒருப்பட்டதே ஒரு கன்னிப் பெண்ணுக்குத் தக்க ஒழுகலாறாகு மென்று அவளைப் புகழ்ந்து பேசினான். பிறகு, இங்ஙனம் அவன் நடத்தக் குறித்த மணவினைச் செய்தி தேவமணியின் செவிக்கு எட்டியது. காதலாற் கட்டுண்டார்க்கு இயற்கையே உண்டாகும் பலவகையான இன்னா எண்ணங்களால் தேவமணியின் நெஞ்சங் குழம்பியது; அதனால், அவன் கீழ்க்கண்ட கடிதம் ஒன்றனை வரைந்து அதனைக் கானத் தோகைக்குப் போக்கினான். என்னருமைக் கானத்தேகையைப்பற்றி யான்கொண்ட நினைவு ஒன்றே எனக்குச் சில ஆண்டுகளாக இன்பம் பயப்பதாய் இருந்தது, ஆனால், இப்போதோ அஃது என்னால் தாங்க வியலாத மனநோயினைத் தருவதாய் மாறிவிட்டது. நீ பிறன் ஒருவனுக்கு உரியளாய் இருத்தலை இனி யான் உயிரோடிருந்து பார்க்கவேண்டுமா? நாம் ஒருங்குகூடிப் பேசியிருந்த நீரோடை மருங்கும், விளைபுலங்களும், பசும்புல் நிலங்களும் இப்போ தெனக்கு ஆற்றொணாத் துயரத்தைத் தருகின்றன. நீ உலகத்தில் நீடு இனிது வாழ்க! ஆனாற், கீழ்க்குறிப்பிட்ட ஓர் ஆடவன் என்றோ இந்நிலவுலகில் இருந்தானென்பதை மறந்துவிடு! தேவமணி. இக்கடிதம், எழுதிய அன்றை மாலையே கானத்தோகையின் கையில் அது செலுத்தப்பட்டது; அதனை நோக் கியதும் அவள் உணர்வற்று வீழ்ந்தாள். மறுநாட் காலையில் உணர்வுகூடி எழுந்ததும், அவள் ஏக்கங்கொள்ளத்தக்க செய்தியொன்று வந்தது; தேவமணி யென்பான் சென்ற நள்ளிரவில் தன் படுக்கை யறையைவிட்டு வெளிக்கிளம்பினவன் எங்குச் சென்றானென்பது தெரியவில்லை; அவனைப்பற்றி ஏதேனுந் தெரியுமா எனக் கேட்டறியும் பொருட்டு ஒருவர்பின் னொருவராய் இரண்டு மூன்று ஒற்றர்கள் தன் றந்தையின் இல்லத்திற்கு வந்து சென்றார்களென்பதே அச்செய்தியாகும். சின்னாட்களுக்கு முன் அவனது உள்ளத்தைக் கவிந்த பெருந் துயரானது, அவனதுயிரைக் கொள்ளைகொண்டதோ வெனக் கருதி அவர்கள் அஞ்சலாயினர். தனது திருமணத்தைப்பற்றிய செய்தியல்லாமல் வேறு ஏதும் அவனைக் கடைப்படியான அம்முடிவுக்குச் செலுத்தியிராதெனக் கருதிக் கானத்தோகை ஆற்றாத்துயரில் அழுந்தினள். அதனால், அவள் தன்றந்தை வேறொரு மணமகனைக் குறிப்பிட்டுப் பேசிய பேச்சிற்குத் தான் படிந்து செவிசாய்த்ததே ஒரு பெருங்குற்றமென்று தன்னைத் தானே நொந்துகொண்டதுடன், புதிதாகக் குறிப்பிடப் பட்டவனே தன் தேவமணியைக் கொலை புரிந்தவனா யினனென்றும் எண்ணி ஏங்கினாள். தன் றந்தை குறித்துச் சொல்லிய திருமணங் குற்றத்திற்கும் அச்சத்திற்கும் ஏதுவாய் முடிந்தமையால், அத்தகைய தொன்றிற்குத் தான் இணங்கு வதைவிடத், தன் றந்தையின் மனத்தாங்கலுக்கும் அதனால் விளையுந் தீங்குகளுக்குந் தான் உள்ளாவதே சாலச்சிறந்த தெனத் தீர்மானஞ் செய்தாள். அதன்பின், தன் றந்தை கூறிய திருமண ஏற்பாட்டிற்குத் தான் ஒரு சிறிதும் இணங்கல் முடியாதென்றும் ஒரே பிடியாய் மறுத்துக் கூறிவிட்டாள். கானத்தோகையின் றந்தையோ தேவமணி ஒழிந்து போனதைப்பற்றி மகிழ்ச்சியுற்றவனாயுந், தனது குடும்பப் பொருளில் ஒரு பெருந்தொகையான பரிசப்பணந் தனக்கு மிச்சமானதைப்பற்றி உவகைக்கடலில் அமிழ்ந்தினவனாயும் மாறுதல் எய்தினமையால், தன் மகள் தான் குறித்த மணத்திற்கு உடம்படாது முற்றும் மறுத்துக் கூறியதற்காகச் சிறிதுங் கவலைப்பட்டிலன். தான் குறித்த மருமகனும் இம்மணம் ஒரு வசதிக்காக நிகழ்வதேயன்றிக் காதலால் நிகழ்வதன்றெனக் கண்டு கொண்டமையால், அவனுக்கு அவன் அம்மணம் நடவாது போனமைக்காக மன்னிப்புச் சொல்லிவிடுவதும் எளிதாகவேயிருந்தது. கானத்தோகையோ இப்போது கடவுளையே எந்நேரமும் நினைத்து அவன் றிருவடிக்குத் தொண்டு ஆற்றுவதிலன்றி வேறொரு வகையில் தன்னை அத்துணை வருத்திய அம்மனத்துயர் தீர்தற்கு வழிகண்டிலள். சில்லாண்டுகளுக்குப் பின் தனது மனத்துயரின் கொடுமை தணிந்து, தன் எண்ணங்கள் ஓர் அமைதியுற்றபின், அவள் தனது எஞ்சிய வாழ் நாளைத் துறவோர் திருமடம் ஒன்றிற்சென்று கழிக்க உறுதி செய்தாள். அவள் தந்தையும் அவள் கொண்ட எண்ணத்திற்காகச் சிறிதும் வருந்தவில்லை. ஏனென்றால், அஃது அவனது குடும்பச் செலவினை மிச்சப்படுத்துதற்கு ஓர் வாயிலாகு மன்றோ? ஆகவே, அவன் தன் புதல்வியின் கோரிக்கைக்கு உடனே இசையலானான். இசைந்து அவளது இருபத்தைந்தாம் ஆண்டில் - அவடன் பேரெழில் மிகுந்து முகிழ்த்துத் தோன்றும் அக்கட்டிளமைப் பருவத்தில், அடுத்துள்ளதொரு நகருக்கு அவளை அழைத்துச்சென்று, அவளை வைத்தற்குத் தக்க துறவு மாதர் வாழும் ஒரு திருமடத்தை அவட்குக் காட்டினான். காட்டக், கானத்தோகை அதன்கண் இருந்துவிடுதற்கு மனம் உவந்தமை கண்டு அங்கே அவள் இருத்தற்கு வேண்டும் ஏற்பாடு களெல்லாஞ் செய்துவைத்துப் போயினான். இனி, இத்திருமடத்திற்குத் தலைவராய் அமர்ந்த முனிவர் கடவுள் நேயத்திலும் நன்னடையிலுஞ் சிறந்து புகழோங்கப்பெற்றவர் ஆவர். கானத்தோகை சேர்ந்த இத்திருமடம் உரோமமுனிவர்க் குரிய தொன்றாகையால், இதில் சேர்ந்தவரில் ஆற்றாமனநோய் கொண்டாரும் மனக் கவலை அடைந்தாரும், இதன் தலைவரான குரு முனிவரிடஞ் சென்று, தம் உள்ளத்தே அடைத்து வைத்த துயரையுங் கவலையையும் வாய்திறந்து வெளியிட்டுச் சொல்லி, அவர் பாலிருந்து மன்னிப்பும் ஆறுதலும் பெறுவது வழக்கம். ஆகவே, அழகியாளான நம் கானத்தோகை புகழ்பெற்ற இம் முனிவர்பாற் சென்று தன்னுள்ளத் துற்றதை மொழிந்து தானும் அவர்பாலிருந்து மன்னிப்பும் ஆறுதலும் பெறக் கருதினாள். ஈதிங்ஙனம் இருக்க, இப்போது நாம் தேவமணி எவ்வாறா யினான் என்பதனை எடுத்துக் கூறுதற்குத் திரும்புவோம். மேற்சொல்லியவாறு தேவமணி தனது இல்லத்தை விட்டுப் புறப்பட்டதும் , அன்றை விடியற்காலையிலேயே, இப்போது கானத்தோகை தங்கியிருக்கும் நகருக்குப் போந்து, அதன்கண் உள்ளதொரு துறவோர் திருமடத்தில் தானுஞ் சேர்ந்துவிடலானான். அம்மடத்திற் சேர்வோர், சில தனிப்பட்ட காலங்களில் தம்மை யின்னாரென்றெவருந் தெரிந்துகொள்ளாத வகையில் மறைமுகமாயிருப்பது வழக்கமாகையால், தானும் அங்ஙனமே அவருள் ஒருவனா யிருந்துவிடத் தேவமணி விழைந்தான். கானத்தோகையைக் குறித்துத் தான் ஏதும் உசாவுதல் ஆகாதென்றுந் தனக்குள் அவன் ஓர் உறுதியுஞ் செய்துகொண்டான். அவள் தன் றந்தையால் ஏற்படுத்தப்பட்ட நாளில், தனக்கு எதிரியான ஒருவனொடு மணம் பொருத்தப்பட்டிருப்பள் எனவே அவன் எண்ணிவிட்டான். தனது இளமைப்பருவத்தில் அவன் கல்வியில் தேர்ச்சியுற்றதெல்லாந், தான் முழுதுஞ் சமயத் தொண்டு ஆற்றுதற் பொருட்டே யாகலான், அவன் இப்போது துறவோர் குழாத்திற் சேர்ந்து தான் கருதிய அத்தொண் டினையே செய்துகொண்டிருக்கலானான். சில்லாண்டுகள் செல்ல அவன் தன் தூய துறவொழுக்கத்திற் பெயர்பெற்ற துடன், தன்பால் உரையாடுவார்க்கெல்லாம் இறைவனிடத்து அன்பு மீதூரச் செய்தும் வந்தனன். இத்தன்மையனான இத் துறவிபாற்போந்தே கானத்தோகை தன்னுள்ளக்கிடக்கையை வாய்விட்டுச் சொல்லி ஆறுதல் பெறுதற்கு முனைந்தாள்; ஆனால், இவளுக்காவது அத்திருமடத்தின் றலவைரை யுள்ளிட்ட ஏனை எவர்க்காவது இத்துறவியின் பெயரேனுங் குடும்பச் செய்தியேனுஞ் சிறிதுந் தெரியா. அன்புக்கினிய மகிழ்ந்த உள்ளத்தவனான தேவமணி இப்போது அப்பன் பிராஞ்சு என்னும் பெயர் பூண்டிருந் தமையானும், நீண்ட தாடியும் மழிந்த தலையுந் துற வாடையும் உடையனாயிருந்தமையானும், முன்னே உலகியல் நடையிலிருந்த அவனே இப்போது துறவு நடையிலிருக் கின்றானெனத் தெரிந்து கொள்வது இயலாததாயிற்று. இவன் ஒருநாட் காலையிற் பாவ அறிவிப்புக் கேட்கும் இருக்கைமேல் ஒரு தனியிடத்தில் அமர்ந்திருந்த நேரத்திற், கானத்தோகை அவனெதிரே முழந்தாளிட்ட நிலையிலிருந்து தன்னுள்ளத்தைத் திறந்து சொல்வாளானாள். கள்ளம் இல்லாத் தன் வாழ்க்கை வரலாற்றினை அவள் சொல்லிக்கொண்டு வந்து, பிறகு அவனது தொடர்பு ஏற்பட்ட தனது கதையின் அப்பகுதியைக் கண்ணீர் வடித்த படியாய்க் கூறத் துவங்கினாள். எனது நடக்கையானது, என்னை அளவுக்கு மிஞ்சிக் காதலித்த ஒரு சிறுபிழையைத் தவிரவேறு பிழை செய்தறியாத ஒரு சிறந்த ஆண்மகனது சாவுக்குக் காரணமாயிருந்தது. அவர் உயிரோடிருந்த நாட்களில் யான் அவரை எவ்வளவு காதலித்தேனென்பதை இறைவன் அறிவான். அவர் இறந்துபோனபின்னும் அவரை நினைந்து யான் எவ்வளவு துன்பப்படுகின்றேனென்பதையும் அவனே நன்கறிவான் என்று இச்சொற்களைச் சொல்லுகையில், அவள் ஆறாய்ப் பெருகுங் கண்ணீருடன் தன் கண்களை ஏறிட்டு அம் முனிவரின் முகத்தை நோக்கினாள். இச்சொற்களைக் கேட்டதும் ,நெட்டுயிர்ப்பும் பொருமுதலும் வாய்ந்த தமது குரலை அவர் ஒருவாறு அமைதிப்படுத்திக்கொண்டு, மேலும் அவள் கூறவேண்டுவதைக் கூறும்படி கட்டளையிட்டார். அங்ஙனமே, கானத்தோகை தன்னுள்ளத்துள்ள செய்திகள் அவ்வளவுங் கண்ணீர் ஒழுகியபடியே திறந்து சொல்லினள். அம்முனிவர் அவைகளைக் கேட்டதும் வாய்திறந்து அழாமல் இருக்க முடியாதவரானார். அவர் அழுதவகையில் அவர் இருந்த இருக்கையும் அசைந்துவிட்டது. அவரது துயரத்தைக் கண்ட கானத்தோகை, நற்குணத்திற் சிறந்த அம்முனிவர் தன்பாலெழுந்த இரக்கமிகுதியாலுந், தன் குற்றத்தின் கொடுமையை நினைந்ததாலுமே அங்ஙனம் பெருந்துயர் கூரலானார் எனக்கருதித், தான்செய்த தீவினைகளுக்குக் கழுவாயாக இனித் தான் கன்னிப்பெண்ணாக இருந்துவிட உறுதி செய்திருப்பதே தான் தெவமணியை நினைந்து நோற்கும் நோன்பாகுமென அவர்க்கு எடுத்து மொழிந்தாள். இதற்குள், தமது மனத்துயரை ஒருவாறு அடக்கி அமைதிப் படுத்திக்கொண்ட அம்முனிவர், தாம் வழங்காது விட்ட தமது பெயரை இப்போது அம்மங்கை கூறக் கேட்டதிலிருந்தும், பிறனொருவனுக்கு உரியவள் ஆனாள் என்றே தாங் கருதிவிட்ட அவ்விளம்பெண் அங்ஙனம் ஆதற்கு ஒரு சிறிதும் உள்ளம் இசையாளாய்த் தான் காதலித்த காதலனிடத்திலேயே கட்டுப்பட்ட மன உறுதி வாய்ந்த வளாயிருத்தலை அறிந்ததிலிருந்தும் நெஞ்சம் நெக்குருகி மீண்டுங் கண்ணீர் வடிப்பாரானார். இங்ஙனம் அம்முனிவர் தாம் துயர்கூர்ந்து கண்ணீர் சிந்திக் கலுழ்தற்கிடையே, அம்மாது ஆற்றொணாத் துயர்மிக்கு அழுதலைக் கண்டு, அதனைத் தடுக்குமளவுக்குத் தம்மை அவர் தேற்றிக் கொண்டு, அம்மங்கை தானுந் தன்னைத் தேற்றிக்கொள்ளுதல் வேண்டு மென்றும், அவள் செய்த பாவம் மன்னிக்கப்பட்டதென்றும் அவள் அஞ்சிக் கலங்கியவாறு அவள் செய்த குற்றம் அத்துணைப் பெரியதன்றென்றும், அளவுக்கு மிஞ்சி அவள் உளம் வெந்து துன்புறுதற்கு இடந்தரல் ஆகாதென்றும் அடுத்தடுத்து ஆறுதல் பகர்ந்தார். அதன் பிறகு அவர் முழுதும் ஆறுதல் எய்தினவராய் அம்மாதுக்குப் பாவவிடுவிப்பு மொழிந்து மறுநாள் அவள் தம்மிடம் வந்தால், அவள் அப்போது மேற்கொண்ட கடவுள் ஊழியத்தில் நிலைப்படுதற்கு வேண்டுவன கூறி அவளைத் தாம் அதில் ஊக்கி, அதில் அவள் ஒழுக வேண்டு முறைகளைக் கற்பிப்பதாகவுஞ் சொல்லி விடுத்தார். அங்ஙனமே கானத்தோகை மறுநாட் காலையிலும் அம்முனிவர்பாற் போந்து தான் துறவுநிலையை மேற்கொள்ள விரும்புவது தெரிவித்தாள். அம்முனிவர் தம துள்ளத்தைச் சிறந்த எண்ணங்களாலும் நினைவுகளாலும் அரண் செய்து கொண்டு, அம்மங்கை தான் மேற்கொள்ள விழைந்த துறவொழுக்கத்தில் அவளை நிலைப்பித்தற்குத் தம்மால் எவ்வளவு சொல்லக்கூடுமோ அவ்வளவுஞ் சொல்லி, அவளதுள்ளத்திற் காரணமின்றியே உண்டான அச்சங்களையுங் கலக்கத்தையும் ஒழித்திட்டார். அவள் துறவுநிலையை மேற்கொண்டபின் அவட்குந் தாங் கூற வேண்டும் அறிவுரைகளை அவ்வப்போது கூறி வருவதாகவும் உறுதிமொழி புகன்றார். கடைப்படியாக அவர் அவளை நோக்கிக் கூறியதாவது, நங்காய்! நாம் கைக்கொண்ட இத்துறவு நடையின் முறைப்படி, யான் நின்னை அடிக்கடி பார்த்துப் பேசுதல் ஆகாது. ஆனாலும், யான் இறைவனை வழுத்தும் நேரங்களில் நினக்கும் அவன் தனதருளை வழங்குமாறு வேண்டுவேனென்றும், நீ நடந்து கொள்ளவேண்டு முறைகளை அடுத்தடுத்துக் கடிதவாயிலாக உனக்கு அறிவித்து வருவேனென்றும் நீ திண்ணமாய் நம்பியிரு. நீ மேற்கொள்ளத் தீர்மானித்த விழுத்தகு நிலையைக் களிப்புடன் கடைப்பிடித்திரு; நீ உலகத்தில் வேறெந்த வகையிலும் அடையமுடியாத ஒரு மனவமைதியையும் மன நிறைவையும் நீ அதனால் விரைவில் அடை வாய்! அங்ஙனம் அப்பன் பிராஞ்சு எடுத்துரைத்த அருண்மொழிகள், கானத்தோகையின் உள்ளத்தைக் கிளர்ச்சி பெறச்செய்தன; ஆகவே, அவள் மற்றைநாட் காலையிலேயே துறவு நிலையை மேற்கொண்டாள். அவள் அந்நிலையை அடைதற்குச் செய்த தவவினைகள் நடந்தேறிய பின், அவள் அக் கன்னிமாடத்தில் தனக்கென வகுக்கப்பட்ட ஒரு தனி யறையுட் சென்று தனியிருந்து நோற்கலானாள். புதிது துறவு புகுந்த இம்மாதர்க்கும் அப்பன் பிராஞ்சுக்கும் இடையே நிகழ்ந்த செய்தி முற்றும் அக்கன்னி மாடத்தின் தலைவியாரான துறவம்மையார்க்கு அறிவிக்கப் பட்டது. அடுத்த நாளில்அத்தலைவியார் அப்பன் பிராஞ்சு எழுதிய கடிதம் ஒன்றைக் கானத்தோகையின் கையிற் கொடுத்தனர். அதனை அவள் பிரித்துப்பார்க்க, அதிற் பின்வருமாறு வரையப்பட்டிருந்தது. நங்காய், நீ இப்போது புகுந்திருக்குந் துறவு நிலையில் நீ அடைய இருக்கும் மகிழ்ச்சிக்கும் ஆறுதலுக்கும் முதற்பயனாக யான் உனக்கு அறிவித்துக்கொள்வது யாதென்றால், இறந்துபோனானென்று நீ நினைந்து மிகவுந் துயர்கூருந் தேவமணி யென்பான் அங்ஙனம் இறந்து போகாமல் இன்னும் உயிரோடிருக்கின்றான் என்பதேயாம். நீ நின்மனத்திலுள்ளதை எந்த முனிவர்க்குத் திறந்து சொல்லினையோ, அவரே நீ நினைந்தழும் அந்தத் தேவமணியாக முன்னொருகால் இருந்தனர். நாம் ஒருவரையொருவர் காதலித்த காதலானது, காதற்கூட்டங் கைகூடியிருந்தாற் பயக்கும் மகிழ்ச்சியைவிட, அதுகைகூடாமற் போனதனாற் சாலச்சிறந்த மகிழ்ச்சிகளைப் பயவாநிற்கின்றது. நாம் விழைந்தவாறே நிகழாதொழியினும், இறைவன்றிருவருளானது நமது நன்மைக்காகவே நம்மை இந்நிலையில் நிற்பித்தது. நின் காதலன் தேவமணி இறந்துபோனதாகவே நீ இப்போதும் எண்ணிக்கொள். ஆயினும், நின் பொருட்டு இறைவனை வேண்டுதலில் வழுவாத அப்பன்பிராஞ்சு என்பான் ஒருவன் உளன் என்பதில் உறுதியாய் இரு. பிராஞ்சு இக்கடிதத்தின் கையெழுத்தும் அதில் அடங்கிய செய்தியும் ஒத்திருத்தலைக் கானத்தோகை கண்டுகொண்டாள். தான் தன்னுள்ளத் துள்ளதைத் திறந்துசொல்லி யக்கால், அம்முனிவர் ஆறுதலுரை பகர்ந்த குரல் ஒலியும், அவர் அப்போதடைந்த பெருந்துயரும், அவருடைய மற்றை நடைகளும் அவர்தாம் தான் காதலித்த தேவமணி யென்பதனை அவட்கு நன்கறிவித்தன. அதனால், அவள் இன்பக்கண்ணீர் வடித்தழுதபின், என் தேவமணி இன்னும் உயிரோடிருக்கிறார் என்பதே எனக்குப்போதும். இனி, நான் மனவமைதியுடனும் உவகையுடனும் என் காலத்தைக் கழிப்பேன் எனத் தனக்குள் தீர்மானஞ் செய்துகொண் டாள். 10. தென்னமரம் தென்னமரமானது நீர்வளம் நிலவளங் கெழுமிய மருதநிலத்தின் கண்ணேதான் மிகுதியாய் வளர்ந்து பல பயன்களை அளிக்கின்றது. சிறுபான்மை கடலோரமாக மணல் அடர்ந்த நெய்தல் நிலத்திலும் இதனை வைத்துப் பயிராக்குகின்றார்கள். இனி, மலையடுத்த நிலங்களிலும் இப்போதிது பயிர்செய்யப்படுகின்றது ; என்றாலும், இது மருதநிலத்தின்கட் கொழுமையாக வளர்ந்து நீண்ட நாள் உயிரோடிருந்து பெரும்பயன் றருவதுபோல் மற்றை நிலங்களில் இஃது அத்துணைக் கொழுமையாக வளர்ந்து நீண்டகாலமிருந்து பயன்றருவதில்லை. இன்னுஞ், சூடுங் குளிர்ச்சியும் ஒத்த நிலைமையிலுள்ள இத்தென்னிந்திய நாட்டில் இஃதோங்கி வளர்ந்து பெரிதும் பயன்றருமாறு போற், பனிமிகுந்த இமயமலைமேலும், இமயமலைச்சாரலிலுள்ள வடநாடுகளிலும், நம் ஆங்கில அரசினர் வாழும் பிரித்தானிய தேயத்திலும், அதனை யடுத்துள்ள ஐரோப்பிய நிலப்பகுதி களிலும் இது பயிராவதேயில்லை. ஆனாலும்; ஆங்கில மக்கள் தம்மூர்க்குப் புதுமையான இத்தென்ன மரத்தைத் தம்மவர்க்குக் காட்டல்வேண்டிக், கண்ணாடி வீடுகள் அமைத்து அவற்றி னுள்ளே இதனை வளர்த்துக் கண்காட்சிக்காக வைத்திருக் கின்றார்கள். அவ்வாறவர்கள் பேருழைப்பெடுத்துப் பெருஞ் செலவு செய்து இதனைப் பயிராக்கியும், இஃது அக்கண்ணாடி வீட்டுட் குறுகி வளர்ந்து, வெறுங்காட்சிக்குப் புதுமையாய்க் காணப்படும் அவ்வளவயல்லாமற், பூத்துக்காய்த்துப் பயன் அளிப்பதேயில்லை. இனி, இத்தென்னாட்டிற் பயிர் செய்யப்படும் இடங்களிலும், இஃது ஆங்காங்குள்ள நிலத்தின்றன்மை நீரின்றன்மைகளுக் கேற்பச் சுவை வேறுபட்ட காய்களையுடையதா யிருக்கின்றது. மருதநிலத்தென்னைகள் தருந் தேங்காய்களின் நீரும் பருப்பும் நடுத்தரமான இன்சுவையும் மணமும் வாய்ந்திருக்கின்றன; நீர்வள நிலவளங்களிற் சிறந்த சோழ நாட்டுத் தேங்காய்கள் இத்தன்மைகள் உடையனவே யாகும். மலையாளநாட்டுத் தேங்காய்கள் இனிப்புடையனவாய்க் காணப்படினும், அவற்றினின்றெடுக்கப்படும்பால் மொச்சை நாற்றம் வீசி வயிற்றைக் குமட்டுகின்றது. நெய்தல் நில மணல் வெளிகளிற் பயிராகுந் தென்னைகளின் தேங்காய் நீரும் பருப்பும் உப்புக்கரிக்குந் தன்மையவாய் இருக்கின்றன. யாம் இருக்கும் இப் பல்லவபுரம் மலைசூழ்ந்துள்ளதோர் இடமாகலின், இதன் கண் அமைத்துள்ள எமது தோட்டத் திற் பயிராகியிருக்குந் தென்னைகளின் காய்கள் தித்திப்புச்சுவை மிகுந்தனவாயிருக்கின்றன; மணமும் இசைவானதாகவே யிருக்கின்றன. ஆயினும், இவை மிகுதியாய்க் காய்ப்பதில்லை; எருப்பெய்து பலகாலும் நீர்பாய்ச்சிச் சிரைகழித்துச் செய்யுஞ் செய் நேர்த்தியினளவுக்குத் தக்கபடி தானும் இவை பெரும்பயன் அளிப்பதில்லை, சிறு பயனையே தருகின்றன. மணற்பாங்கான இடங்களிற் பயிராகும் தென்னைகளோ குலைகுலையாய்க் காய்க்கின்றன; ஆனால், அவற்றின் இளநீரும் அதன்கண் வழுக்கையும் முற்றின நெற்றின் பருப்பும் அத்துணை இன்சுவை வாய்ந்தனவாய் இல்லை. அது நிற்க. இனி, இத் தென்னாட்டின் தெற்கே உலவும் இந்தியமாக் கடலின் கண்ணவான இலங்கை, நக்கவாரம், சுமத்திரா, சாவகம் முதலான தீவுகளில் தென்னமரங்கள் பெரும் பெருந் தோப்புகளாக வைத்துப் பயிராக்கப்படுகின்றன. தென்னைகள் 10 அடி முதல் 100 அடி யுயரம் வரையில் வளரும். இவற்றின் அடிமரத்திற் கிளைகளேனுங் கொப்புகளேனும் உண்டாவதில்லை; இஃது ஒரே நீளமாகவே வளர்ந்தோங்குகின்றது. இதன் உச்சியிற் பண்னிரண்டு முதற் பதினைந்து வரையிற் பச்சோலை மட்டைகள் கிளைத்து நாற்புறமுங் கவிந்து விளங்குங் காட்சி, அது தன்றலை மேலுள்ள பசிய நெடுங் கூந்தலை அவிழ்த்துவிட்டு மெல்லிளந் தென்றலில் அதனை ஈரம் புலர்த்துவதுபோற்றோன்றுகின்றது. இதன்கண் ஒட்டியிருக்கும் பச்சை மட்டைகள் ஒவ்வொன்றும் பசுமை மாறிப் பழுத்துப் பற்றுவிட்டுக் கீழ் விழுதற்கு ஆறு திங்கள் செல்கின்றன வென்று பயிர் நூல்வல்லார் கணக்கெடுத் திருக்கின்றார்கள். அதன்படி ஒரு கணுச்சுற்றில் ஒட்டியிருக்கும் இவ்விரண்டு மட்டைகள் ஆறு திங்களிற் கீழ்விழப், பிறகு வெறுமையாய் காணப்படும் கணுச்சுற்றுகளை எண்ணிக் கணக்கெடுத்து ஒவ்வொரு தென்னமரத்தின் வாழ்நாளையும் உறுதிப்படுத்தல் கூடுமென்று சொல்லுகிறார்கள். இக்கணுச் சுற்றுகளின் உதவி கொண்டுதான் கள்ளிறக்குஞ்சான்றாருந், தேங்காய் பறிக்குங் குடியானவர்களுந் தென்னமரங்களின்மேல் ஏறுகிறார்கள். இவையில்லையேல், நீளமான ஏணிகளின் உதவி கொண்டன்றி வழுவழுப்பான இம் மரத்தின்மேல் ஏறுதல் இயலாது. இனித், தென்னைகள் பூக்குங்காலம் வருங்கால் மற்றை மரங்களைப்போற் பூவெடுப்பதில்லை. முதலிற், பச்சைப் பசேல் என்ற நிறத்துடன் திரண்டு நீண்ட பாளைகளே மேல் உள்ள மட்டைகளின் அடியிலிருந்து கிளைத்தெழுகின்றன. தாமரைக் குளங்களின் கரைமேல் நிற்குந் தென்னைகளின் நிழல் அக் குளநீரிற் றோன்றுங்கால், அவற்றின் உச்சியில் உள்ள முழுப்பாளைகளின் நிழல் அந் நீரின்கண் உலவும் பெரிய வரால்மீன்களையே ஒத்திருக்கின்றனவென்று தமிழ்ப்பாவலர் ஒருவர் பாடியிருக்கின்றார். பிறகு, சிலநாட் சென்றபின் இப் பாளைகள் வெடிக்க, இவற்றின் உள் உள்ள பூக்கள் தூவெண்ணிறத்தினவாய் வெள்ளிய கவரிபோல் அலர்ந்து விளங்குகின்றன; பூ நரம்புகளின் நெடுக வெள்ளிய முத்துப் போன்ற இளம்பிஞ்சுகள் தோன்றிச் சிலநாட் சென்றபின் பச்சிளங் குரும்பைகளாக மாறுகின்றன; மரத்தின் ஊட்டத் திற்கும் வலிவுக்குந் தக்கபடி குரும்பைகள் உதிராமற் பெருக் கின்றன; மரம் அவையிரண்டிலுங் குறைவு படுமாயிற் குரும்பைகள் பெரும்பாலும் உதிர்ந்துபோக, எஞ்சிய மிகச் சில குரும்பைகளே பெருத்து இளநீராகவும், பின்னுஞ் சில திங்கள் கழித்துத் தேங்காய்களாகவும், மற்றுஞ் சில திங்கள் கழித்து மட்டைகள் காய்ந்துபோன நெற்றுகளாகவும் முடிவு பெறுகின்றன. தேங்காய்களாகவும் நெற்றுக்களாகவும், முதிர்ந்தவைகள் தாமே கீழ் விழுகின்றன. ஆதலாற், பழுத்த மட்டைகளும் முற்றின நெற்றுக்களும் உடைய தென்ன மரங்களின்கீழ் ஆடவரும் பெண்டிரும் சிறாரும் அமர்தலும் இயங்குதலும் ஆகா. தென்னந் தோப்புகளின் பக்கத்தே கமுகஞ் சோலைகளும் வாழைததோட்டங்களும் அவற்றை யடுத்து வயல் நிலங்களும் அமைந்திருத்தல் செழுமை மிக்க சோழ நாட்டிலே இன்றுங் காணலாம். இந்நிலையில், தென்னைகளில் முற்றிப்போன தேங்காய்களும் நெற்றுகளும் கீழ் உதிர்தலால், அவை அடுத்துள்ள பாக்கு மரங்களிற் றாக்கி அவற்றின் பாளைகளை முறித்து விடுதலும் வாழை மரங்களில் மோதி அவற்றின் தாறுகளைக் கிழித்து விடுதலுமாகிய நிகழ்ச்சிகள் அங்குப் பலகாலுங் காணப்படுகின்றன. இற்றைக்கு ஆயிரத்தெழு நூறாண்டுகட்கு முன்னிருந்த மாணிக்கவாசகப் பெருமான் தாம் அருளிச்செய்த திருச்சிற்றம்பலக் கோவையாரிற் போந்த, தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக் கொங்கம் பழனத் தொளிர்குளிர் நாட்டினை நீஉமைகூர் பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச் சிங்கந் திரிதரு சீறூர்ச் சிறுமிஎந் தேமொழியே. என்னுந் திருப்பாட்டில் இத்தகைய இயற்கை நிகழ்ச்சி சோழ நாட்டிற் பலகாலும் நிகழ்தலைத் தாம் கண்டுகூறுதல் கொண்டு, இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னமே சோழமா நாடானது தென்னந் தோப்புகளும் கமுகஞ் சோலைகளும் வாழைத்தோட்டங்களும் இடையிடையே குழுமிய வயல் நிலங்கள் வாய்ந்திருந்தமை தெற்றெனப் புலனாகின்றது. இனி, நிலவளம் நீர்வளம் இன்மையினாலும் வேண்டுமளவு எரு முதலான ஊட்டந் தரப்படாமையினாலுஞ் சில பல தென்னைகள் அருமையாய்க் காய்க்குங் காய்களுஞ் சூம்பிப் போதலுடன் உள்ளீடில்லாச் சொத்தைகளாகவும் பயன்படா தொழிகின்றன. இங்ஙனஞ் சொத்தையாய்ப் போகுந் தேங்காய் களைத் தேரை மோந்தவையென்று குடியானவர்கள் கூறுகின்றார்கள். தேரையென்பது தேங்காய்க்கு வருஞ் சொத்தை நோய் என்பது தெரியாத கீழ் மக்கள், தேரை என்னும் ஒருவகைத் தவளை மோந்து தேங்காய் சொத்தை யாகின்றதெனப் பிழையாகப் பேசுகின்றார்கள். ஆனால், இற்றைக்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்த நச்சினார்க் கினியர் என்னும் உரையாசிரியரோ விளாங்காய்க்கு வரும் நோயை பேழம் என்னுந் தேங்காய்க்கு வரும் நோயைத் தேரை என்றும் உண்மையையுள்ள வாறறிந்து ஓதிய நுட்பம் அனைவரும் கருத்திற் பதிக்கற்பாலதாகும். இங்ஙனம், நிலத்தின் கொழுமையும் நீரின் கரப்பும் இல்லாத பகுதிகளில் தென்னமரங்களைப் பயிர் செய்வது பெரும்பயன் றராமையால், அவையிரண்டும் உள்ள இடங்களைத்தெரிந்தெடுத்துப் பயிர் செய்வதில் அனைவருங் கருத்துடையவர்களாய் இருத்தல் வேண்டும். இனித், தென்னமரங்களால் மாந்தர் அடையும் பயன்கள் சிலவற்றை இங்கெடுத்துக் கூறல் வேண்டும். முதலிற் பயன்படுவன தென்னமட்டைகளேயாகும். இம் மட்டை களைப் பிளந்து இருபக்கத்து முள்ள ஓலைகளை முடைந்து ஆக்கிய கீற்றுகள் வீடுகளுக்குங் குடில்களுக்கும் மேற்கூரைகளாக இணைத்துக் கட்டப்படுகின்றன. சோழ நாட்டிலுள்ள சிற்றூர்களில் உயிர்வாழுங் குடியானவர் பெரும்பாலாரின் வீடுகள் தென்னங்கீற்றுகளாற் சமைத்த மேற்கூரைகள் வாய்ந்தனவாகவே யிருக்கின்றன. மற்றுத், தொண்டைநாடு, பாண்டி நாடுகளிலுள்ள குடியானவர்களும் எளியவர்களுமோ பனையோலைகளினாலேயே தாமிருக்கும் இல்லங்களுக்குங் குடில்களுக்கும் மேற்கூரை வேய்கின்றார்கள். அஃதேன் என்றாற், சோழநாட்டில் தென்னைகள் மிகுதியாயிருக்கின்றன. அவற்றின் கீற்றுகள் குறைந்த விலையிலும் விலையின்றியும் அங்குள்ளார்க்குக் கிடைப்பதுபோல, ஏனையிரு நாட்டார்க்குங் கிடைப்பதில்லை; ஏனைத் தொண்டைநாடு பாண்டி நாடுகளிலோ பனந்தோப்புகளே அளவின்றி அடர்ந்திருக்கின்றன. அதனால் இந் நாடுகளில் உள்ளார்க்குப் பனையோலை களே நிரம்பவும் பயன்படுகின்றன. இனி, ஈழ நாட்டில் உள்ளாரோ தென்னையையும் பனையையும் ஏறக்குறைய ஒத்த நிலையில் வைத்துப் பயிர்செய்து வருதலால், அவர்கள் தென்னங் கீற்றுகளையும் பனையோலைகளையும் பொதுவாகப் பயன்படுத்தி வருகின்றனர். இனித், தென்னமட்டைகளின் ஓலைகள் கீற்றாக முடையப்படாவிட்டால், அவற்றின் இலைகள் கழிக்கப்பட்டு, அவற்றினின்றும் ஈர்க்குகள் ஈர்ந்தெடுக்கப்பட்டு விளக்குமாறுகளாகக் கட்டப்படுகின்றன. இவ்விளக்குமாறுகளைத் தொண்டைநாட்டார் தென்னந் துடைப்பம் என்று சொல்லுகிறார்கள். ஒருவகைப் புல்லிலிருந்தெடுக்கப் படும் பூந்துடைப்பம் மிகப் பொடியான புழுதிகளையுந்துடைத்து நிலத்தைத் துப்புரவு செய்யவல்லது. மற்றுத் தென்னந் துடைப்பமோ பரும்படியான மண்ணையுஞ் சிறு கற்களையுந் துடைத்து அகற்றுதற்கு உதவி செய்வது. கீற்றுகள் பின்னவும், ஈர்க்குகள் கிழிக்கவும் வெட்டப்பட்ட பகுதிகள் போக எஞ்சிய அடிமட்டைகள் வெயிலிற் காயவைத்து அடுப்பு எரிக்கப் பயன்படுகின்றன. இனித், தென்னம்பாளைகளைக் கள் இறக்காமல் விட்டால், அவை மடல் விரிந்து, விசிறிபோல் வெண்மையான பூக்களைத் தோற்றுவிக்கின்றன. நீண்ட அப் பூக்களின் நெடுகப் பிடிக்கும் பிஞ்சுகளிற் சில பல உதிர்ந்து போகச் சில பல சிறிது பெருக்கத் துவங்குகின்றன. சில நாட்களிற் பெருக்குந் தென்னம் பிஞ்சுகள் குரும்பைகள் ஆகின்றன. இக் குரும்பைகளும் வளர்ந்து பெருத்தால் அவை இளநீர்கள் என்று வழங்கப்படுகின்றன. வெப்பம் மிகுந்த வேனிற் காலத்தில் நாவறட்சியும் இளைப்புங் களைப்பும் மிகப் பெற்ற வழிப்போக்கர்கள் தென்னந் தோப்புகளைக் கண்டால் வானுலகத்தையே கண்டாற் போலவும், அங்கே விற்கப்படும் இளநீரை வாங்கி அதன் இனிய நீரையும் வழுக்கையையும் அருந்தினால் அவ்வானுலகத்து அமிழ்தத்தினையே அருந் தினாற்போலவும் உள்ளங்களித்து அயர்வு நீங்கப் பெறு கின்றனர். யாம் செந்தமிழ் கற்பித்த மாபெருங் கிறித்துவக் கல்லூரியில் வரலாற்று நூலாசிரியாய் இருந்த ஒரு துரை மகனார் ஒருகால் ஒரு வேனிற்காலத்திடையில் தம் மனைவி மக்களுடன் மாட்டு வண்டியிலேறி ஓர் ஊரிலிருந்துமற்றோர் ஊர்க்கு ஏகினார். இங்ஙனம் இவர் புறப்பட்டது காலை வேளை. இவர் சென்ற வழிநெடுக ஊர் ஏதும் இல்லை. இடையிடையே சிற்சில ஏழைக்குடில்கள் மட்டும் இருந்தன. நடுப்பகலில் இவர்க்கும் இவர்தங் குடும்பத்தார்க்கும் அடங்கா நாவறட்சியும் கடும்பசியுங் களைப்பும் மிகுந்தன. கையிற் சில தின்பண்டங்கள் வைத்திருந்தனரேனும் அவை நெகிழ்ந்த பதமாயில்லாமையால் அவற்றில் அவர்கட்கு வேட்கை சென்றிலது. வழியில் அவர்கட்கு இசைந்த உணவுப்பண்டமுங் கிடைத்திலது. அதனால் அவர்கள் மிக்க அயர்வுடன் செல்கையில், அவர்களது வண்டி ஒரு தென்னந்தோப்பின் அருகே வந்தது. இவர்கள் படுந் துன்பத்தைக் கண்ட வண்டிக்காரன் அத் தோப்பின் அண்டையில் வண்டியை நிறுத்தி, அத் துரைமகனாரையும் அவர் தங் குடும்பத்தாரையும் கீழிறங்கி மரநிழலில் அமரும்படி வேண்டினான். அடர்ந்துயர்ந்த அத் தென்னந்தோப்பின் நிழல் வெந்துபோன உடலையும் உயிரையுந் தளிர்க்கச் செய்யுந் தட்பம் வாய்ந்ததாய் இருந்தது. அதைக் கண்டு மகிழ்ந்த அத் துரைமக்கள் வண்டியைவிட்டுடனே கீழிறங்கி அம் மரங்களின் குளிர்ந்த நீழலில் வைகினர். தாம் இருந்த இடத்தின் ஓரமாய்ச் சென்ற ஒரு சிறிய வாய்க்காலின் தெளிநீரில் தம் முகங்களைக் கழுவித் தங்கால்களையும் அதிற் றோய்த்துக்கொண்டு சிறிது களைப்புத் தீர்ந்திருந்தனர். இதற்குள் இவர்களின் வண்டிக் காரன் வேண்டியதற்கு இணங்கி, அத் தென்னந் தோட்டக் காரன் சில மரங்களின் மேலேறி இளநீர்க் குலைகள் சிலவற்றை வெட்டிக் கொணர்ந்து, இளநீர்க் கண்களைத் திறந்து, அவற்றின் நீரை அத்துரைமகனாரின் சிறு பிள்ளைகளும், மனைவியாரும், அவரும் பருகக் கொடுத்தனன். அவர்கள் அதனை வேண்டுமட்டும் அவாவுடன் பருகிய பின்னர், அவ்விளநீர்க் காய்களை நடுவே பிளந்து, உள்ளுள்ள வழுக்கை களைப் பெயர்த்தெடுத்து, அவற்றை அவர்கள் அருந்தத் தந்தனன். அவற்றை அவர்கள் சுவைத்து உண்ணுங்கால் அவற்றின் மென்மையினையும் இனிமையினையும் வியந்து, இவை இறைவனால் அருள்கூர்ந்து அளிக்கப்பட்ட தெவிட்டா அமிழ்தமே யாமெனக் கருதினர். தமக்கு வந்த களைப்பும் பசியும் நாவறட்சியும் ஒருங்கே நீங்கி அடங்கா மகிழ்ச்சியடைந்த அத்துரைமக்கள், அத் தோட்டக்காரனுக்கு ஓர் ஐந்து ரூபா தமது நன்றிக்கறிகுறியாய் வழங்கினர். அதனைப் பெற முதலில் அவன் மறுத்தனனா யினும் அவர்கள் அவனைக் கட்டாயப் படுத்தியதன்மேல் அவன் அதனை உவகையுடன் பெற்றுக் கொண்டான். சிலநாட் சென்றபின் அத் துரைமகனார் கல்லூரிக்குப் போந்து மாணாக்கர்க்கு நூல் கற்பிக்கையில், தாம் தங் குடும்பத்துடன் வழிச்செல்லுங்கால் நண்பகலில் நாவறட்சி யாலும் பசியாலும் பட்ட பொறுத்தற்கரிய துன்பத்தை எடுத்துரைத்து, தெங்கிளநீரால் அத்துன்பம் நீங்கி உயிர் பிழைத்த வரலாற்றையும் நன்றியுடன் நுவன்று இத்தகைய தென்னமரங்களே கற்பக மரங்களாகும்; இம் மரங்களை யுடைய இத் தென்னாடே விண்ணாடாகும் என உண்மையை யுருக்கத்தொடு மொழிந்தனர். இனி, இளநீர் மட்டை காயாமலே முதிர்ந்தபோது தேங்காய் ஆகின்றன. அது தெரிந்து தோப்புக்காரர் அவற்றைப் பறித்து மட்டைகளை உரித்தெடுத்துத் தேங்காயை விற்பனை செய்கின்றனர். தேங்காயை இரு கூறாக உடைத்து ஒவ்வொரு மூடியினுள்ளும் உள்ள வெண்மையான பருப்பை எடுத்தரைத்து கத்தரிக்காய் வாழைக்காய் உருளைக்கிழங்கு முதலியவற்றுடன் சேர்த்து கறி சமைக்கிறார்கள். அல்லது தேங்காய் மூடியைத் திருகுபலகைகொண்டு திருகியெடுத்த தேங்காய்ப் பூவைப் பிழிந்து, அதில் வரும் பாலைக் கலந்து மேற்சொன்ன காய் கிழங்குகளையும் இட்டுவைக்குங் குழம்பு நறுஞ்சுவை மிக்கதாய் இருக்கின்றது. தேங்காய்ப் பருப்பை எந்த வகையிற் சேர்த்துச் செய்தாலுங், கறி குழம்புகள் இன்சுவையும் நறுமணமும் உடையவாதலுடன், உடம்பினைச் செழுமையாக வளரச் செய்தற்கு இன்றியமை யாது வேண்டப்படும் உய்வனவுகளும் (Vitamins) பொருந்தப் பெற்றனவாயிருக்கின்றன. ஆனாலும், அவ்வவர் உடம்பின் வலிவுக்கும், அவ்வவரின் தீனிப்பை ஏற்றுச் செரிக்கச் செய்யும் அளவுக்கும் உணர்ந்து பார்த்துத் தேங்காயைச் சிறிது பெரிதாக உட்கொள்ளல் வேண்டும். தேங்காயை மிகுதியாய்ப் பயன்படுத்துகிறவர்க்கு மயக்க நீர் மிகுமாதலால், அவர் அதனைத் தணிப்பதற்கு எலுமிச்சம்பழச்சாற்றைக் கறி குழம்பு மிளகுநீர் மோர் முதலியவற்றிற் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும். இனித், தேங்காயின் மட்டை முற்றுங் காய்ந்து நெற்று ஆனபின், அதனுள்ளிருக்கும் பருப்பின் பால் வற்றி நெய்யாக மாறுகின்றது. அந் நிலையில் ஓட்டினின்றும் எளிதிற் பெயர்த்தெடுக்கப்படும் பருப்புக் கொப்பறை எனப் பெயர் பெறுகின்றது. அக்கொப்பறையை வெயிலிற் பரப்பி உலர்த்தியெடுத்து செக்கிலிட்டு அரைத்து நெய் எடுக் கின்றார்கள். இத் தேங்காய் நெய்யினின்றும் எத்தனையோ வகையான பண்டங்கள் செய்யப்படுகின்றன. மெழுகு திரியானது தேங்காய் நெய்யினின்றுஞ் செய்யப்படும் பல்வேறு பண்டங்களுள் முதன்மை பெற்றதாகும். மலையாளத்திலுள்ள மக்கள் தேங்காய்ப் பாலையும், நெய்யையும் மிகுதியாய்ப் பயன்படுத்துகிறார்கள்; தலைக்கும் உடம்புக்கும் அவர்கள் தேய்த்துக்கொள்வது தேங்காய் நெய்யேயாகும்; அவர்கள் அருகே வருங்கால் ஒருவகை மொச்சை நாற்றம் வீசுதற்குக் காரணம் இதுவேயாம். எள் நெய் தேய்த்து முழுகுஞ் சோழ நாட்டார் பாண்டி நாட்டாரிடமிருந்து இத்தகைய நாற்றம் வீசுவதில்லை. தேங்காய் நெய்க்கு மயிர் கருமையாய் நீண்டு வளருமாதலால், மலையாளத்து மாதரின் கூந்தல் கருகியடர்ந்து நீண்டிருப்பதற்குக் காரணம் இதுவே. கூந்தலை வளர்க்கும் மணநெய்களிற் பெரும்பாலான தேங்காய் நெய்யினின்றுஞ், சிறுபாலன எள் நெய்யினின்றும் ஆக்கப் படுகின்றன. எள்ளினின்றும் எடுக்கப்படும் நெய் எண்ணெய் எனப் பெயர்பெறலாயிற்று. எண்ணெயை மிகுதியாய்ப் பயன்படுத்துஞ் சோழ நாட்டார் தாங் குறைவாய்ப் பயன் படுத்தும் மற்றை நெய்களையும் எண்ணெய் என்னுஞ் சொல்லொடு சேர்த்தே வழங்குகின்றனர்; இங்ஙனம் வழங்குங்கால் எண்ணெய் எனுஞ்சொல் எண்ணை எனத் திரிக்கப்பட்டு தேங்காயெண்ணை விளக்கெண்ணை இலுப்பையெண்ணை என இயைத்து வழங்கப்படுகின்றது. இனித், தேங்காய் நெற்றினின்றும் உரித்தெடுக்கும் மட்டைகளை நறுக்கித் தேங்காய்ப்பஞ்சு எடுத்து, அப் பஞ்சினாற் பல பருமனும் பல நீளமுமுள்ள கயிறுகளைத் திரிக்கின்றார்கள். கிணறுகளினின்றும் நமது நாட்புழக்கத்திற்கு முகக்குந் தண்ணீரும், வயல்கள் தோட்டங்கள் பூங்காக்கள் முதலியவற்றிற்குப் பாய்ச்சுந் தண்ணீரும் இத் தென்னங் கயிறுகளின் உதவியினாலேயே எடுக்கப்படுகின்றன. இன்னும், படகுகள் செய்தற்கும், அப் படகுகளிலும் மரக்கலங்களிலும் கட்டும் பாய்கள் புனைதற்குந், திருக்கோயிற் றிருவிழாக் காலங்களில் இறைவன் றிருவுருவங்களைத் தேர்மேல் எழுந்தருளச் செய்து அத்தேரை இழுக்கும் நீண்டு பருத்த வடங்கள் திரித்தற்குந் தென்னம் பஞ்சுகளே பெரிதும் பயன்படுகின்றன. இனிப், பருப்பெடுத்தபின் விடப்படும் ஓடுகள் சிரட்டைகள் எனச் சொல்லப்படுகின்றன. இச் சிரட்டைகளை ஏழை எளிய மக்கள் தம் உணவுப் பண்டங்களை வைப்பதற்கும், நீர் பருகுதற்குங் கையாளுகின்றனர்; அவைகளிற் பழுதாய்ப் போனவைகளை அடுப்பிலிட்டும் எரிக்கின்றனர். சில தென்னைமரங்களின் காய்கள் ஒரு சிறு குடத்தினளவு பெரியனவாய் இருத்தலால் அவைகளின் சிரட்டைகளை இரவலர்களுந் துறவிகளும் உணவுக்கலங்க ளாகப் புழங்குகின்றார்கள். இதனாலேயே துறவிகள் கையேந்திவரும் உணவுக்கலம் திருவோடு எனச் சொல்லப்படுகின்றது. இனித், தென்னைகள் மூத்துப் பட்டுப்போகும் காலம் அணுகுதலைக் கண்டவுடன் உரியவர்கள் அவற்றை வாளால் அறுத்துக் கைத்துண்டுகளாகவும் உத்திரங்களாகவும் வீடு களின் மேற்கூரை வேய்வதற்கும், நீர் இறைக்கும் ஏற்ற மரங்கள் அமைப்பதற்கும், நீர் ஓடுங் கால்வாய்களுக்குப் பாலங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்துகின்றார்கள். நாட்பட்டுக் காழ்ப் பேறிய தென்னங்கட்டைகள் மிக்க வலிவு வாய்ந்தனவாய் உளுத்துப் போகாமல் நீண்டகாலம் பெருஞ் சுமைகளையுந் தாங்கி நிற்கும். இவ்வாறாகத் தென்னைமரத்தின் ஒவ்வோர் உறுப்பும் மக்கட்கு நிரம்பவும் பயன்பட்டு வருதல் கண்டே கற்றோர்கள் இதனையும், இதனோடொப்பப் பயன்படும் வாழை பனை முதலிய மரங்களையுங் கற்பகதருவென உயர்த்துப் பேசி வருகின்றனர். 11. மக்கள் வாழ்க்கை ஓரறிவுடைய புற்பூண்டுகள் முதல் ஆறறிவுடைய மக்கள் ஈறான பலகோடி உயிர்களில் மக்கட் பிறவியே சிறந்ததென்பது எல்லார்க்குந் தெரிந்த உண்மையன்றோ? ஏனெனில், ஆறாவதான பகுத்தறிவு மக்கட் பிறவியெடுத்த உயிர்கட்குப் பேரளவினதாய் அமைந்தாற்போல, ஏனைச் சிற்றுயிர்கட்கு அஃது அங்ஙனம் அமையவில்லை; இவைகட்கு அவ்வறிவு ஏறியுங் குறைந்தும் பலதிறத்ததாய்க் காணப்படுகின்றது. மக்களுள்ளும் மற்றைச் சிற்றுயிர்களைப்போற் பகுத்தறிவு மிகக் குறைந்த நிலையிலுள்ளார் மிகப் பலர் உண்டு. அவரெல்லாம் விலங்கினங்களைப் போல் ஐம்பொறிவழிச் செல்லும் ஐந்து புலனறிவே உடையராதல் உற்று நோக்குவார்க்குத் தெற்றென விளங்கும். அது கண்டே முதலாசிரியர் தொல்காப்பியனார், மாவும் மாக்களும் ஐயறி வினவே என்றருளிச் செய்தார். இதனால், மக்களில், குறைந்த அறிவினராய் மக்களைப்போல் வடிவுமட்டு முடையராய் இருப்பாரை மாக்கள் என்றது பெரிதும் பொருத்த முடைத்தாதலால் காண்க. முதன்முதற்றோன்றிய மாக்கள் வேட்டுவ வாழ்க்கையில் இருந்தோர் ஆவர். அவர்க்குப் பின் பன்னெடுங் காலங்கழித்துத் தோன்றியவர் ஆடுமாடு மேய்க்கும் மேய்ப்பர்கள் ஆயினர். அவர்க்குப் பின்னர் பல்லாயிர ஆண்டுகள் கழித்துத் தோன்றியவர் உழுதொழில் வாழ்க்கையை மேற்கொண்ட உழவர் ஆயினர். வேட்டுவ வாழ்க்கையில் உள்ள மாக்களை இஞ்ஞான்றுங் காணலாம். நீலமலையில் உள்ள மக்கள் மிகக் குறைந்த அறிவுடையவராகவே யிருக்கின்றனர். இவர் களினுங் குறைந்த அறிவினராய் இருந்தவர் மேல் நாடுகளில் உள்ள மலைக்குகைகளில் உறைந்து காலங் கழித்தனர். மரஞ் செடி கொடிகளில் உண்டான காய் கனி கிழங்கு இலை பூ முதலியனவே அவர்கட்கு உணவுப் பொருள்களாய் இருந் தன. உழுது பயிர் செய்து அவ்வாற்றால் உணவுக்கேற்ற வித்துக்களைப் பெறும் வழி அவர்கட்குத்தெரியாது. மேற்கூறிய தின்பண்டங்கள் கிடையாதபோது, ஆடுமாடு கடம்பை முதலான நில விலங்குகளையும், ஏரியாறு கடல் முதலான நீர்நிலைகளின் ஓரங்களில் இருந்தோர் அஞ்ஞான்றிருந்த பெரிய பெரிய மீன்களையும் பிடித்து அயின்று அவற்றின் தோலையே ஆடையாகவும் உடுத்துக்கொண்டனர். அப்பண்டை நாளில் யானையினும் பதின்மடங்கு பெரிய மாமத்து என்னும் பேரியானையும், பனை தென்னை முதலான நீண்ட மரங்களின் உயரத்தளவும் வளர்ந்து அவற்றின் உச்சி யிலுள்ள இலை பூ காய் கனிகளைக் கறிக்கும் பரிய பெரிய விலங்குகளும் இருந்தமையால், அஞ்ஞான்றிருந்த மாந்தர் அவ் விலங்குகளுடன் ஓவாமற் போராட வேண்டுவதாயிற்று. அப் போராட்டத்தில் தப்பிப் பிழைத்தவர் சிலரேனும் ஆங்காங்கு இல்லாதொழிந்திருந்தால் மக்கட்பூண்டே காணப்படாமல் அடியோடழிந்து போயிருக்கும். என்றாலும், அங்ஙனம் அழிந்தொழியாமல் இன்றுகாறும் அவர்களைப் பிழைத் திருக்கச் செய்தது எது? அஃது ஆராய்ச்சி யறிவேயாம். மேற்கூறிய விலங்குகளுக்கு அஞ்சிக் கீழே இருக்க இடம் பெறாதபோது, பண்டை மக்கள் மிக நீண்டுயர்ந்த மரங்களின்மேற் பருத்த கிளைகளிற் குடிசைகள் கட்டி அவற்றின்கண் இருந்து உயிர் வாழ்ந்தனர். அவர்கள் அக் குடிசைகளிலிருந்து கீழ் இறங்கவுந் திரும்ப மேலேறவும் நூலேணி அமைத்துக்கொள்ளத் தெரிந்திருந்தனர். இத்தகைய வாழ்க்கை யிலிருந்த ஒருவனைக் குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் சேணோன் என நுவல்கின்றனர். மிக உயரமாய் வளர்ந்த தேக்குமரங்கள், ஆலமரங்கள், அரசமரங்கள் முதலியவைகளை இன்றைக்கும் மேற்கு மலைத்தொடர்களிலும், இடையிடையேயுள்ள அடர்ந்த காடுகளிலும் காணலாம். இக் காடுகளின் மரப்பொந்துகளிலுங்கூடக் கானவர்களுந் துறவிகளும் ஒடுங்கியிருந்து உயிர் வாழ்கின்றனர். இலங்கையிலுள்ள திருக்கேதீச்சரம் என்னுஞ் சிவபிரான் றிருக்கோயிலை யாம் வணங்கச் சென்றக்கால் வழியிலிருந்த காடு ஒன்றில் துறவி ஒருவரைக் கண்டு தொழுதேம். அவர் எம்மை அன்பாக வரவேற்றுச் சிறிதுநேரம் எம்மோடு உரையாடினர். அப்போது யான் அவரை நோக்கி, அடிகாள்! கடுங்காற்றுக்கும் பெருமழைக்குந் தாங்கள் தங்குவது எங்கே? என்று வினவினேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு சென்று சிறிது தொலைவில் வான் அளாவியிருந்த ஒரு பெரிய மரத்தையும், அதன் அடியிலிருந்த ஒரு பொந்தையும் எனக்குக் காட்டினர். அப்பொந்தில் ஒருவர் இருத்தற்கு வேண்டிய அளவு இடம் இருந்தது. இனி, மரப் பொந்துகளேயன்றி மலைகளுள்ள இடங்களில் மலைக்குகைகளும் ஆங்காங் கமைந்திருக்கின்றன. அவைகள் பண்டைக்கால மக்களுக்கு உறையுளாயிருந்து பயன்பட்டன. இஞ்ஞான்றும் அத்தகைய குகைகளில் உறைவார் உளர். முன் ஒருகால் அன்பு மிக்க இளைஞர் சிலருடன் யாம் திருக்குற்றாலஞ் சென்றபோது, அங்குள்ள மலைமீதிருந்து கீழ் இழியும் அருவியில் நீராடச் சென்றேம். சென்று, அவ்வருவி அம் மலையின் மேற்பகுதியில் ஓடி வரும் இடத்திற்போய் முழுகுதற்கு விழைந்து, சண்பகாடவி எனப் பெயர் வாய்ந்த இடத்திற்குச் சென்றேன். அங்கே அருவிநீர் மேல் உச்சியிலிருந்து வழியும் மலைப் பகுதிக்குப் பக்கத்தே யுள்ள குகையொன்றில் துறவி யொருவர் இருந்தார். அவர்க்கு முப்பதாண்டு இருக்கும்; காவியாடை பூண்ட அழகிய தோற்றத்தினர். அவர் எம்மைக் கண்டதும் நகைமுகங் காட்டி வரவேற்றுத், தாம் இருந்த அக் குகைக்குள் அழைத்தனர். அக் குகை வாயில் மரக்கதவு இட்டுச் சமைக்கப்பட்டிருந்தது. அக் கதவிற் சிறு தொளைகள் அமைக்கப்பட்டிருந்தன. இரவில் அக் கதவைச் சாத்திக்கொண்டு அதன் தொளைகளின் ஊடே வெளியே நிகழும் விலங்குகளின் பூசலைத் தாம் பார்ப்ப துண்டென்று கூறினார். அக் குகையில் ஒருவர் செவ்வனே அமரவும் படுக்கவும் வேண்டிய அளவுக்கு இடம் இருந்தது. இத்தகைய குகைகளும் மரப்பொந்துகளும் இந் நிலவுலகம் எங்கணும் இயற்கையாகவே அமைந்திருத்தலாற் பண்டைக் கால மக்கள், அஞ்ஞான்றிருந்த பெரிய கொடிய வேங்கைப் புலிகட்கும், பேரியானைகட்கும், வலிய மலைப்பாம்புகட்கும் வன்பெரு முதலைகட்குந் தப்பிப் பிழைத்தனர். அவைகளுக்கஞ்சித் தம்மைக் காத்துக்கொள்ள வழி தேடும் முயற்சியினாற்றான் ஆராய்ச்சியறிவு விளங்க, ஐயறிவுடைய மாக்களாய் முதலில் விலிங்கினங்களை யொத்திருந்த மாந்தர் பின் நாளேற நாளேற ஆராய்ச்சி யறிவு மிகுந்து, அதனால் ஆறறிவுடைய மக்களாயினர். இதனாலன்றோ தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார், ஆராய்ச்சி யறிவையே அறிவெனக் கருதி, அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (குறள் 430) என்று அருளிச் செய்தார். அஃதொக்கும்; பண்டைமக்கள் மரங்களின் மேலேறிப் பரண் அமைத்து வாழ்ந்தபோதும், குகைகளுள் நுழைந்து ஆண்டுவந்தபோதும், மரம்மீது ஏறக்கூடிய பாம்புகட்குங் கரடி, மந்தி முதலான விலங்குகட்கும் எங்ஙனந் தப்பிப் பிழைத்தனர்? எனின்; தாமிருந்த அவ்வுறையுளைச் சுற்றி மூங்கில் முட்களால் வேலிகள் அமைத்தும், அக் குகைவாயில்களைக் கருங்கற் பாறைகளால் அடைத்தும் அம் மறவிலங்குகளும் மலைப்பாம்பு களும் தம்மை அணுகாமற் காத்துக்கொண்டனர். இவ்வள வோடு அப் பண்டை மக்களின் தொல்லை ஒழிந்த பாடில்லை. தமக்குந் தம்மைச் சார்ந்த தாய்தந்தையர் உடன் பிறந்தார் மனைவி மக்கள் முதலாயினார்க்கும் அடுத்தடுத்து நிகழும் பசியினையும் நாவறட்சியினையும் ஒழித்தற்கு அவர்கள் அங்ஙனந் தாம் மரம் மீதிருந்த பரண்களையும், மலைப்பிளவுகளின் ஊடிருந்த குகைகளையும் பகற்காலங்களில் விட்டு வெளியே வரவேண்டியவரானார்கள். இங்ஙனமாகப் பண்டை மக்கள் பெரிதும் அல்லற்பட்டு வாழ்ந்த காலம் பல்லாயிர ஆண்டுகளாகும். அக் காலங்களில் அவர்கள் நெருப்பை உண்டாக்கவோ, உணவுப் பண்டங்களை நெருப்பிலிட்டு வேவு வித்துக் கொள்ளவோ வழி தெரியாதிருந்தார்கள். பின்னர் நாட் செல்லச் செல்ல மூங்கிற் புதர்களில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசித் தீப்பற்றி எரிதலையும், அத் தீயில் வெந்த மூங்கில் அரிசி, முன்னே தாம் பச்சையாய்த் தின்ற அவ்வரிசியைவிடச் சுவை மிகுதியும் உடையதாய் இருத்தலையுங் கண்டு கொண்டார்கள். அதிலிருந்து, மரக்கட்டை களை ஒன்றொடொன்று தேய்த்துக் கடைந்து தீயை யுண்டாக்கவுங் கற்றறிந்தார்கள். தீயை யுண்டாக்கத் தெரிந்த பின்னர்த்தான் மக்கள் வாழ்க்கை பலவகையில் நலம்பல பெறுவதாயிற்று. அவ்வாறு தீயை யுண்டாக்குதற்குப் பயன்படுத்தப்பட்ட கோல் தீக் கடைகோல் எனவும் பெயர் பெறலாயிற்று. அப் பண்டை நாளில் இருந்த விலங்குகள் யானையினும் பன்மடங்கு பெரியனவாய்ப், பனைமரத்தினும் உயரம் உடையனவாய் இருந்தமையால், முற்கால மக்கள், மிக உயரமான மரங்களின் உச்சியிலும், பருத்த விலங்குகள் நுழைதற்கு இயலாத குறுகிய வாயிலமைந்த குகைகளிலும் பெருந் திகிலோடு ஒடுங்கிக் கிடந்தனர்; அவர்கள் தாமிருந்த அவ் விருக்கைகளை விட்டுக் கீழ் இறங்கியும் வெளியே இயங்கியும் உணவுப் பொருள்களைத் தேடிப் பெற இயலாமற் பட்டினியும் பசியுமாய் இருந்த நாட்களும் பல. மிகப் பெரிய இடையூறுகளாற் சூழப்பட்டிருந்தமையால், அவ் விடையூறுகளைக் கடந்து தமது வாழ்க்கையை நடத்துதற்கு எவ்வளவோ சூழ்ச்சி செய்யலானார்கள். அவ்விலங்குகளை அணுகிப் போராடிக் கொல்லுதல் ஆகாமையால், தொலைவிலிருந்தபடியே அவற்றைக் கல்லால் அடித்துத் துரத்துதற்கும் மாய்த்தற்குங் கவண் என்னுங் கருவியைக் கண்டு கையாண்டனர். அதனாலும் அவைகளை மாய்த்தல் இயலாமை காணக் காண மூங்கிலை வளைத்து அதன் முனைகளில் நாண் பூட்டிக், கூரிய முனையுள்ள கோல்களை இணைத்து எய்து அவற்றைத் துரத்தியும் மாய்த்தும் வந்தார்கள். அவர்கள் அவ்வாறு பயன்படுத்தி வந்த வளைந்த மூங்கிலுங் கோலுமே பின்னர் வில்லுங்கணையும் ஆயின. இங்ஙனமாகத் துரத்தப்பட்டும், மாய்க்கப்பட்டும் அக் கொடுங் கொலை விலங்குகள் தொலைந்த பிறகுதான், மரமேற் பரண்களிலும் வாய் குறுகிய குகைகளிலும் வருந்திக் கிடந்த பண்டை மக்கள் அச்சந் தீர்ந்து, மலைமீதும் மலைக்கீழ்க் கானகங்களிலும் மனந் துணிந்து இயங்கத் தலைப்பட்டனர். காய்கனி கிழங்குகளே யன்றித், தினை சோளம் கம்பு கேழ்வரகு முதலான பலவகைக் கூலங்களையும் விளைக்கப் படிப்படியே தெரிந்து கொண் டார்கள். இங்ஙனமாக மலைமீதுறைந்த குறிஞ்சித்திணை வாழ்க்கையிலிருந்தவரையில் மக்கள் நாகரிகம் அற்றவர் களாகவே இருக்கலாயினர். நெடுங்காலத்தின் பின்னர் மலைக்கீழ் இறங்கி, அடி நிலத்திலுள்ள கானக வாழ்க்கையைக் கைப்பற்றியபோது, அறிவு சிறிது சிறிதாய்ப் பெருகக், கான்யாறுகளின் கரை மருங்கே குடியேறி, உணவுக்கு முன்போல் வறுமைப்படாமல், நெல்லு, புல்லரிசி, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி, எள்ளு, கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை முதலான கூலப்பயிர்களை விளைத்து, அவற்றின் பயன்களை அருந்தி உணவுக்குப் பட்ட சிறுமை நீங்கப்பெற்றனர். இதனாலும், ஆடு மாடு முதலான சிறந்த உயிர்களை மேய்த்து, அவற்றாற்றாம் அடைந்த பால் தயிர் வெண்ணெய் முதலான கொழும் பொருள்களை அருந்து தலாலும் உடம்பு செழுமையாய் வளர வளர, அதனால் உயிரும் அறிவுந் தெளிவுபெற்று, எதனையும் ஆய்ந்தோய்ந்து பார்த்து மேலும் மேலுந் தமது வாழ்க்கையைத் திருத்தமாய் நடத்துதலிற் கருத்தூன்றி வந்தனர். இவ்வளவிய குடும்ப வாழ்க்கையிற் புதல்வர் புதல்வியர் மிகுதியாய்ப் பிறக்கப் பிறக்க மக்களின் தொகையும் மிகுதியாய்ப் பெருகி வரலாயிற்று. உணவுக்கு மிடிப்படாமற் செழுமையாய் வாழுங் குடும்பங் களிற் பிள்ளைகளின் பிறப்பும் பெருகி வருதலை ஆராய்ச்சி வல்ல மேனாட்டாசிரியர்1 கணக்குப் பண்ணி நூலெழுதி யிருக்கின்றனர். ஆகவே, கானக வாழ்க்கையை மேற்கொண்ட பழங்கால மாந்தர் நாளேற நாளேறத் தொகையிற் பெருகி, அங்ஙனம் பெருகியபின் உணவுக்கும் உறையுளுக்குங் கானகம் ஏற்றதாகாமை கண்டு, கானகத்தின் பல பெரும் பகுதிகளை அழித்து உறையுளுக்குக் குடியிருப்புகளும், நெற்பயிர் விளைத்தற்கு நன்செய்களும் வரகு சோளம் துவரை முதலான கூலப் பயிர்களை விளைத்தற்குப் புன்செய்களும் பண்படுத்தினர். இவ்வாறு காட்டை யழித்து நாடாக்கும் உழைப்புப் பழங் காலத்தே மிகுதியாய் ஆங்காங்கு நடைபெற்று வந்தமை, காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி என்னும் பட்டினப்பாலை அடிகளாலுந் தெற்றென விளங்குதல் காண்க. இங்ஙனமாக நெற்பயிரும், ஏனைப் புன்செய்ப் பயிர்களும் எங்கும் நிறைய விளைக்கலான, மருதநில வாழ்க்கை ஓங்க ஓங்க மக்களுக்குச், செல்வம் பெருகலாயிற்று. அதனாற், சிறிய பெரிய திருக்கோயில்களுந், தாம் இருந்து நன்கு உயிர் வாழச்சிறிய பெரிய இல்லங்களும் அவர்கள் ஆங்காங்கு அமைத்துக்கொண்டனர். இவ்வாறு வாழ்க்கை வளம்பெற்றபின், தாம் விளைத்த உணவுப்பண்டங்கள், தாமுந் தங் கிளைஞரும் ஆரத்துய்த்த பின்னுங் குறையாமல் நிறைந்து கிடந்தமையால், அவற்றை இன்றியமையாது வேண்டிய பிறநாட்டிலுள்ளார்க்கு விலை செய்து, அப் பிற நாட்டார் கொணர்ந்த பண்டங்களைத் தாம் விலைகொடுத்துப் பெற்றுத் தம் நாட்டவர்க்கு மிகுதிப்பட விற்று ஊதியம் பெற்று வந்தனர். வாழ்க்கை வளம் பெற்று மனவமைதியோடிருக்கலான பின், இயற்கையே அறிவு விளங்கப்பெற்ற சிலர் தாம் வழங்கும் மொழியை எழுத்திலிட்டு எழுதி அண்மையிலிருப்பவர் களுக்குத் தம் கருத்துக்களை எளிதில் அறிவிப்பதுபோற், சேய்மையிலிருப்பார்க்கும் அறி7விக்க வழிகண்டனர். அது முதல் தங் கருத்துக்களை ஒரு கோவைப்படுத்திப் பனையோலை களிலும் மரப்பட்டைகளிலும் எழுதிவைக்கத் தலைப்பட்டனர். இன்றுங்கூடக் காகிதங் கிடைப்பதில்லாத பட்டிக் காட்டிலிருப்பவர்கள் கணக்கெழுதவும், திருமணம் முதலான சடங்குகளைத் தஞ் சுற்றத்தார்க்குத் தெரிவிக்கவும், பள்ளிக்கூடச் சிறார்க்குக் கல்வி கற்பிக்கவும், மற்றும் பல முயற்சிகள் செய்தற்கும் பனையோலைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இஞ்ஞான்று நமக்குக் கிடைக்கும் பழங்காலத்து நூல்களெல்லாம் ஓலைச்சுவடிகளாகவேயிருத்தலைக் கண் காட்சிச் சாலைகளில் நேரே சென்று இன்றுங் காணலாம். இவ்வாறாக மக்கள் வாழ்க்கை தொடர்ந்து நடைபெற்று வரல் காண்க. அடிக்குறிப்பு 1. Malthus இளைஞர்க்கான இன்றமிழ் - முற்றும் - பின்னிணைப்பு பொதிகை - தமிழ்ப்பேரவை, சென்னைக் கிறித்துவக் கல்லூரி தமிழ் மிகப்பழைய மொழியா மென்பது பரந்துகிடக்கும் இந்நிலவுலகத்தின் கண்ணே பண்டைக் காலந் தொட்டு இலக்கண விலக்கிய வரம்புடைமையாற் சீர்திருந்தி வழக்கமுற்று வாராநின்ற மொழிகள் தமிழ், வடமொழி, இலத்தீன், கிரேக்கு, இப்புரு முதலியனவாம். உலகத்தின்கட் பேசப்படுவனவாகுந் தொள்ளாயிர மொழி களுள் இவ்வைந்தும் வேறு சிலவும் அங்ஙனத் தொன் மொழிகளென் றுயர்த்துக் கூறப்படுதற்கு இடம் பெறுவதல்லது ஏனைய அவ்வாறு சொல்லப்படா வென்றுணர்க. இவற்றுள் தமிழ் மொழியை ஒழித்து ஒழிந்த வடசொல், இலத்தீன் முதலியவற்றையெல்லாம் ஐரோப்பியப் புலவர்கள் நன்காராய்ச்சி செய்து அவற்றைப் பண்டைக் காலத்து மொழிகளெனப் பெரிதும் பாராட்டிப் போற்றுகின்றார்கள். இனித் தமிழையோ வெனின் அங்ஙனம், உண்மையாராய்ச்சி செய்யமாட்டாது நெகிழ விட்டு, அதனைப்பற்றி உரை யுரைக்கும் வழியெல்லாந் தாந்தாம் மனம் போனவாறு சொல்லி உண்மைப் பொருள் காணாது ஒழிகின்றார். இதற்கென்னையோ காரணமெனின் வடமொழி முதலான சொற்குரிமை பூண்டு அவற்றை வழங்குவாரான நன்மக்கள் பற்று மிகவுடையராய் அவற்றை வளர்க்கும்படி செய்தலோடு பிறருந் தமக்கநுகூலமாய் நின்றதனை அவ்வாறு வளர்க்கும்படி செய்யுமாறு தூண்டுதலுஞ் செய்து போதரு கின்றார். இனித் தென்றமிழ் நாட்டில் தமிழ் வழங்கு மக்களோ அங்ஙனம் நன்கு பற்றுக் கொளவறியாமல் உண்டிப் பொருட்டுப் பொருள் தொகுத்தலின் கண்ணே நிலைபேறு மிகவுடையராய் மொழியாராச்சியிற் சோம்பலுற்று உறங்கிக் கழிக்கின்றார். இனி இங்ஙனம் ஒழிவாரொழியத் தமிழ்ப்பற்று மிக்குடைய தமிழ்ப் புலவர் ஒரு சிலரும். ஆங்கிலமுந் தமிழும் வல்லார் ஒருசிலரும் மனவெழுச்சியான் முன்வந்து நின்று உண்மை யாராய்ச்சி செய்து போதருகின்றமையின், அந்நல்லார் வழி நின்று யாமும் எம்மாராய்ச்சியிற் கண்டவற்றை விளங்கக் காட்டத் துணிந்து இன்றிதனை விரித்துரைப்பப் புகுந்தாம். இது நிற்க. இனி மேலே காட்டிய பண்டை மொழிகளான தமிழ் முதலான சொற்களுள் இன்று காறும் பரவைவழக்கமாய் வருவது தமிழ் ஒன்றேயாம். அற்றன்று, இலத்தீன் முதலான சொற்களும் ஆண்டாண்டுப் பயிற்சி செய்யப்படுதலும், கற்றறிவுடையோராற் பேசப்படுதலுமுடையனவாய் வருதலின் அவை வழக்கு வீழ்ந்தனவாகா வெனின்; நன்று சொன்னாய், ஒரு சொற் பரவை வழக்குடையதோ அன்றோவெனத் துணிவு காண்டல் அவ்வாறன்று. மற்று அது கற்றறிவிலாச் சிறுமகா ரானும் பெண்டிரானும் ஆடவரானும் இல்லந்தோறும் உரை வழக்குற்றுப் பெருகி நடைபெறுதலொன்றானே அவ்வாறாதல் இனிது துணியப்படுமென்பது. இனி இலத்தீன் முதலிய சொற்கள் அங்ஙன மில்லந்தோறுஞ் சிறுமகாரானும் பிறரானும் வழங்கப்படுதல் காணாமையானும் தமிழோ அவ் வாறின்றி யாண்டும் பெருகிய வழக்காய்த் தென்றமிழ் நாட்டகத்தே நடைபெறுதலானும் அவ்விலத்தீன் முதலான சொற்கள் உலக வழக்கு வீழ்ந்தனவா மென்பதூஉம் தமிழொன்றே உலக வழக்குடையதா மென்பதூஉந் தேற்றமாம். எனவே, தமிழ்மொழிப் பயிற்சி செய்தல் அவ்விலத்தீன் முதலான ஏனைமொழிப் பயிற்சியினும் பயப்பாடு பெரிதுடையதா மென்பது இனிது விளங்கலின் இப்பெற்றி யறியாத சென்னைப் பல்கலைக் கழகத்தார் தமிழ்ப் பயிற்சி செய்தலை அறவே களைந்துவிடல் வேண்டுமென்றுரைத்த வுரை பெரியதோர் இழுக்குமாம் ஏதமுமாம். இது கிடக்க. இனி அத்தமிழ்மொழி, வடமொழி, இலத்தீன் முதலான மற்றவ்வெல்லாச் சொற்களினும் முற்பட்டுத் தோன்றிய பழைமையுடைத் தென்பது ஒரு சிறிதுரைப்பாம். தமிழ்மொழி யிலே யுள்ள சொற்களெல்லாம் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்னும் பன்னீருயிரெழுத்துக்களையும், இவ்வுயிர் களோடு கூடிய க், ச், த், ந், ப், ம், வ், ய், ங், ஞ் என்னும் பத்து மெய்யெழுத்துக்களையும் முதற்கொண்டு தொடங்குகின்றன; ட், ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் எட்டு மெய்யெழுத்துக்களைக் கொண்டு அவ்வாறு தொடங்குகின்றில. ஆரியம், இலத்தீன் முதலிய மொழிகளோ இவ்வெழுத்துக்களையும் முதலிட்டுத் தொடங்குஞ் சொற்களுடையனவாய்க் காணப்படுகின்றன. ஆரிய மொழியிற் காணப்படும் டம்பம் ரத்நம், லவணம் முதலிய சொற்களை அம்மொழியிற் கிடந்தவாறே கூறாது, இடம்பம், அரத்நம், இலவணம் முதலியவனாகத் திரித்துத் தமிழ் மக்கள் வழங்குகின்றார். நன்னூல் முதலான இலக்கண நூல்களும் அவ்வாறே வழங்குமாறு விதிக்கின்றன. அச்சொற்களை அம்மொழியிற் கிடந்தபடியே கூறாது அங்ஙனந் திரித்துக் கூறல் வேண்டுவதென்னை யெனவும், தமிழ்ச் சொற்கள் ட், ண் முதலான அவ்வெட்டு மெய்யெழுத் துக்களை முதல் நிறுத்துத் தொடங்காமை என்னை யெனவும் நுணுகியாராம்வழியுத் தமிழ்மொழி மற்று எவ்வெல்லா மொழிகளினும் பழைமைதா மென்னும் உரைப்பொருள் தெற்றென விளங்காநிற்கும். அவ்வாறாதல் காட்டுதல். இனி, ஒரு மொழியின் தோற்ற முறையினை நோக்கவல்ல நுண்ணறிவாளர்க்கு, விலங்கினங்களைப்போல் அநாகரிக நிலையிலிருந்து சொற்சொல்லுமா றறியாது குறிப்பாலு ணர்த்திப் பின்னும் விளங்காமையான் இயற்கையினிகழும் ஒலிவகைபற்றிக் கூற்று நிகழ்த்திச் சிறிது சிறிதாய்ச் சொற் சொல்லுமாறு அறிந்து அறிவு கூடப் பெற்று வரும் மக்கட் டன்மையும், தாய் தந்தையர் கூட்டுறவானே சொற்சொல்லு மாறு அறிந்து அறிவு கூடி வருஞ் சிறுமகா ரியல்புந் தம்முளொத்த பெற்றிமை யுடையவாமாறு இனிது விளங்கும். எனவே ஒருமொழியின் தோற்றமுறை நன்காராய்ந் தளந்தறி தற்கு இன்றியமையாப் பெருங்கருவியாய் முன்னிற்பது சிறுமகார் வளர்ச்சி முறையை உற்றுநோக்கி யுணர்தலேயாம். உயிரெழுத்துக்களொழிய மெய்யெழுத்துக்களுட் சிறுமகா ரான் முதன் முதல் மொழியப்படும் ஒலி யெழுத்து இதழிரண்டனையுஞ் சிறிது மெல்லென்று கூட்டுதலானே பிறக்கும் ம என்பதேயாம். அங்ஙனம் இதழ் கூட்டித் தந்தாயைக் கூவும் வழி அடுத்தடுத்து மா மா என்று சொல்லுதலானே அம்மா என்னுஞ் சொல் தோன்றுவதாயிற்று. இனி அவர் அம்மா எனும் அச்சொற் கற்ற துணையானே, தம்மிதழை மேலுஞ் சிறிது வலிந்து இயக்கு மாறறிந்து தந்தையைக் காண்டொறும் பா பா என்றழைத் தலானே அப்பா எனுஞ் சொல் வெளிப்படலாயிற்று. இங்ஙனம் மெல்லென் றொலிக்கும் ஒலி நுட்பம் பற்றி மகரத்தையும் அதனோ டோரினப்பட்ட எழுத்துக்களையுந் தமிழ் நூலார் மெல்லெழுத்தென் றவ்வாறோ துவாராயினார்; வல்லென் றொலிக்கும் வகை பற்றிப் பகரத்தையும் அதனோடோரினப் பட்ட எழுத்துக் களையும் வல்லெழுத் தென்று அவ்வாறோதி னார். இங்ஙனஞ் சிறுமகாரான் முதன் முதன் மொழியப்படும் மெய் ஒலி யெழுத்துக்கள் மகரமும் பகரமுமாதல் பற்றியே, உலகத்தின்கட் பரந்த வேறு வேறு வழங்கப்படும் மொழிக ளெல்லாம் தாய் தந்தையரை யழைக்குஞ் சொற்கள் அம்மா, அப்பா எனுமிரண்டேயாயின. உலகவியற்கைத் திறம் பற்றி மொழியப் படும் அம்மா அப்பா வென்னுஞ் சொற்பெற்றி தேற மாட்டாத வடநூல் வல்லார் சிலர் அவையிரண்டும் மாதா பிதா வென்னும் வடமொழிகளின் சிதைவாய்த் திரிந்து தமிழில் வழக்கமுறு கின்றனவென்றுரைத்து ஏதம்படுகின்றார். இது கிடக்க. இனி மேலே காட்டிய ட், ண் முதலிய எட்டு மெய்யெழுத்துக்களும் நா மேலண்ணத்தைத் தொடுதலானே பிறக்கும் நா வெழுத்துக்களாம். அங்ஙனம் மேலண்ணந் தொட்டு உச்சரித்தற் பொருட்டு வேண்டப்படு முயற்சி உறுப்புக்கள் வலிவேறி வேண்டியவா றியக்கப்படுங் காலத்தே வருவதொன்றாம். இதழ் நாப் பல்லணத் தொழில்கள் வருந்தி நிகழாக் குழவிப் பருவத்தே யரிது முயலமாட்டா தெளிது செல்லும் முயற்சியே தோன்றா நிற்கும். அங்ஙனம் முயற்சி யெல்லாம் எளிது செல்லா நிற்குங் குழவிப்பருவத்தே நாவினாற் பிறக்குஞ் சொற்றோற்றங் காண்டலரிதினும் அரிதாம். யாமொருநாள் மூன்று அகவை செல்லாநின்ற ஒரு பிள்ளை ஏனைச் சிறுமகார் சிலரோ டொருங்கு விளையாடிக் கொண்டிருத்தலை உற்றுநோக்கி யிருந்தோம்; அப்போது அப்பிள்ளை ராமன் என்னும் பெயருடைய சிறுவனை ஆம ஆம என்றழையா நின்றது. அதனைக் கேட்டலும் எம்முணர் வெல்லாம் ஒருவழி யொருங்கி அதன்கண் உருவி நுழைந் தாராய்வான் புகுந்தன. அங்ஙனம் ஆராய்ச்சி நிகழ்ந்த காலத்திலேதான் சிறுமகார்பால் நாவினாற் பிறக்குஞ் சொற் காண்டல் அரிதென்பதெமக்கினிது விளங்கிற்று. இனி நாவினாற் பிறக்கும் ஒலிகொண்டு தமிழ்ச் சொற்கள் தொடங் காமை என்னை யென்னும் ஐயப்பாட்டினை ஈண்டாராய லுறின், தமிழ்மொழி தோற்றமுற்ற பண்டைக் காலத்தே அதனை வழங்கிய மக்கள் உறுப்புக்கள் உரமேறியரிது முயற்சி செல்லாத இளம்பருவத்தே சொற்சொல்லுந் திறமை யறிதலுறுவா ராயினாரென்பதூஉம் அப்பருவத்தே முற்பட்டுத் தேற்றமுற்ற மொழி தமிழே யாமென்பதூ உம் நன்றுணரக் கிடக்கின்றன. இனி, வடமொழி, இலத்தீன், கிரேக்கு, இப்புரு முதலான மொழிகளிலே நாவினாற் பிறக்கு மொலியெழுத் துக்கள் முதற்கொண்டெழுந்த சொற்கள் காணக்கிடத்தலின், அம்மொழிகளெல்லாந் தம்மை வழங்கிய மக்கள் உறுப்புரம் பெற்று வேண்டியவாறு இயக்கும் பிற்பருவத்தே தோற்ற முற்றெழுந்த இயல்பினவாதல் வெள்ளிடைமலைபோல் விளக்கமுடைய தாகின்றது. எனவே, வடமொழி முதலான நாற்பெரும் மொழிகளும் தோற்றமுற்றெழுதன் முன்னரே, தமிழ்ச் செஞ்சொல் தோற்றமுற்றெழுந்த தொன்மை மாட்சி இனிது விளங்கலின் தமிழ் ஏனை எல்லா மொழிகளிலும் பழைமை தாமென நிறுவுதற்கு யாமெடுத்துக்கொண்ட மேற்கோள் வாய்ப்புடைய தாமாறு காண்க. அற்றேலஃதாக, ட்,ண் முதலான அவ்வெட்டு மெய் யெழுத்துக்கள் தமிழ்மொழியிற் காணப்படுதலும் அதன் றொன்மை மாட்சிக்கு ஓரிழுக்காமா லெனின்:- அறியாது கடாயினாய்; தமிழ் வழங்கு மக்கள் உறுப்புரமேறிய பிற்காலத்தே தோற்றமுற்றெழுந்த அவ்வெழுத்துக்களை மொழியிடைப் படுத்து வழங்கக் காண்டலின் அஃதிழுக்காது. அல்லதூஉம், மொழிமுதலே நாவெழுத்துக்கள் தொடங்கி யுரைத்தற்கு வேண்டப்படும் அத்துணை முயற்சி, அவற்றை மொழியிடைப் படுத்துரைக்கும்வழி வேண்டப்படாதென்பது ராமன் இராமன் என்னும் இரண்டனையுந் தெரிந்துரைத்துக் காண்க. இங்ஙனம் மொழியிடைப் படுத்தற்கண் முயற்சி சிறுகுதலின் அச்சிறு முயற்சியாற் பிற்காலத்தே தோற்றமுற்று நடைபெறலுற்ற அந்நாவெழுத்துக்கள் பற்றித் தமிழின் றொன்மை மாட்சிக்கு வரக்கடவதோர் குற்றமில்லை யென்று விடுக்க. இது நிற்க. இன்னுமிவ்வாறே தமிழின் கட் காணப்படும் பல நுட்ப வேதுக்களால் தமிழ்மொழி மற்றெல்லாச் சொற்களினும் பழைமைதாமாறு சமயம் நேர்ந்துழி யெல்லாம் விரித்து விளக்கு வாம். நமக்கு உற்ற நண்பர்களாயுள்ள புலவர் மாமணிகளுந் தாந்தாம் ஆராய்ந்திட்ட தமிழ்த்தொன்மை மாட்சி விரித்து எழுதும்படி அவர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். (அடிகளார் 1902ம் ஆண்டில் தமது அறிவுக்கடல் என்னும் திங்களிதழில் எழுதியது.) அறிவின் ஏற்றத் தாழ்வு கண்டு, உயிரினங்களை ஆறுவகையில் அடுக்கிக் காட்டிய மிகப் பழைய நூல் தமிழ் மொழியிலுள்ள தொல்காப்பியத்தைத் தவிர வேறெந்தப் பழைய நூலிலும் இல்லாமை கருத்திற் பதிக்கற்பாலது - மறைமலையடிகளார் மறைமலையடிகளார் திருத்தங்கள் (திருக்குறள் பீடம் குருகுலம் அழகரடிகள்) 1876-ல் நாகையில் தோன்றிச் சென்னையில் கிறித்துவக் கல்லூரிப் பேராசிரியராய்த் திகழ்ந்து, 1911-ல் பல்லாவரத்தில் நிலையாய்க் குடிபுகுந்து, பொதுநிலைக் கழகம் மணிமொழி நூல் நிலையம் அம்பலவாணர் அம்மை திருக்கோயில் பொது நெறித் திருமடம் முதலியன நிறுவித், தமிழ் நாடெங்கும் இலங்கையிலும் தமிழும் சிவநெறியும் பரவச் செய்து, தமிழில் அழகிய அரிய ஆராய்ச்சிகளுக்கும் கலை களுக்கும் அருளுக்கும் உரிய நூல்களை இயற்றி, எல்லார்க்கும் இனியராய் ஒழுகி, 1950-ல் தமது 75-ம் ஆண்டில் மறைந்த தமிழ்ப் பெரியார், குரவர் மறைமலையடிகளார் ஆவர். இஞ்ஞான்று மிளிரும் சென்னைப் பழம் பெருஞ் சபை யாகிய சைவ சித்தாந்த மா சமாச மும் 1905-ல் அடிகளார் தோற்றியதே. அவர்கள் தோன்றிய காலத்தில், நாட்டில் ஆராய்ச்சி நிலை போதாது; வரலாறு, கலை முதலியவற்றில், மெய்ப் பொருள் தேறாத முடிவுகள், பல. பல மொழிகளும் கலந்த கலப்புத் தமிழ் மிகுந்திருந்தது. சமக்கிருதத்திலிருந்து தமிழ் தோன்றியது என்றே பெரும் பாலோர் எண்ணி வந்தனர். சமக்கிருத வேதங்களே பழமை யானவை அவற்றின்படியே தமிழ் நூல்கள் பலவும் அமைந்தன என்றும், சமக்கிருதத்தின் மொழி பெயர்ப்புகளாகத் திருக்குறள் திருமந்திரம், சிவஞான போதம் பெரிய புராணம், முதலிய பெரு நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டன என்றும், அறிஞரிற் பலர் நினைவு கொண்டிருந்தனர். தமிழ்ப் புலவர்களின் நிலை இரங்கத்தக்கதாய் இருந்தது; அவர்கள் எழுதும் நூல்களுக்கும் செய்யும் விரிவுரைகளுக்கும் போதிய பொருள் கிடைப்பதில்லை. விரிவுரை மேடைகள் பெரும்பாலும் புராணப் பிரசங்க மேடைகளாய், இசைக் கதை மேடைகளாய் இருந்தன. அவர்களுக்கு வரலாற்றுக் கண் குறைவு. தமிழ் நூல்களுக்கும் சமக்கிருத நூல்களுக்கும் கால ஆராய்ச்சியும் போதாது கல்வெட்டு ஆராய்ச்சியும் போதா. தமிழ் நடை பொது மக்களுக்குப் புரியாத நிலையிலும் அழகு கெழுமாத நிலையிலும் இருந்தது. புலவர்கள் தத்தம் சிறப்பைக் காட்டும் பொருட்டு இலக்கணக் குறிப்புக்களையே மிகுதியாகத் தழுவினர். கருத்துக்கள் பொதுமக்கள் பின்பற்றத் தக்கனவாக அமையவில்லை. கற்பனை என்பது பொய்ப் புனைவு என்னும் பொருளில் இயங்கி வந்தது. முன்பின் முரண் வேறு; பொருள் நலங்களை மிகுக்காமல், வெறும் சொல் நலங்களை வெற்றுக் கோலங்களாய் எழுதுவதே புலமைச் சிறப்பென்று பலருங் கருதினர். மகளிர் நிலை அடிமைப்பாடாய் இருந்தது. கல்வி குறைவு; புற உலக நிலைகள் பெரும்பாலும் அவர்களுக்கு வாய்ப்ப தில்லை. சிறுபருவத் திருமணங்கள் கிளைத்து வந்தன; இளம்பருவக் கைம்பெண்கள் கலங்கி நின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்தனர். சாதி பேதம் மிக்கிருந்தது; தேவார திருவாசகங்கள் அறிவுரைகள் கூறியும், கீழ்மைகள் தாண்டவமாடின. ஆசிரியர் மறைமலையடிகளார் இந்நிலைமைகளை யெல்லாம் தம் வாழ்நாளில் திருத்தி யுதவினார். பொய்ம்மையும் குருட்டுப் பிடியுமாகத் தோன்றியவை அனைத்திலும் நாட்டுக்கு விடுதலை தேடினார்; விஞ்ஞான மனப்பான்மை விரிந்தது, நூல்களாலும் விரிவுரைகளாலும் அறிவுரைகளாலும் மட்டு மன்று, தம் வாழ்க்கையினாலும், கண்கூடாக வாழ்ந்து காட்டி னார்; மெய்ஞ்ஞானத் திறத்திலும் மிளிர்ந்து விளங்கினார்; செயலில் வந்தமையால் மக்கள் கட்டுண்டனர்; அஞ்சாமலும் மனச் சான்றின்படியும் பணியாற்றினார். தமிழ்மொழி தனித்து இயங்கவல்லது என்பதை ஓர் இயக்கமாக அடிகள் நடத்திக் காட்டினர். வாழக்கையின் முற்பகுதியில், அயல் மொழிக் கலப்பில் எழுதியவற்றை 1916-ம் ஆண்டுக்குப்பின் தனித் தமிழிலேயே திருத்தி வெளியிட்டார். அதன் பின் எழுதிய எல்லா நூல்களும் தனித் தமிழிலேயே எழுதப்பட்டு வெளிவந்தன. எழுத்து நடையிலும் பேச்சு நடையிலும் எல்லாம் தனித் தமிழே; வீட்டுப் பேச்சுகள்கூடத் தனித் தமிழாகவே இருந்தன. மாணவர்கள் தமிழுணர்ச்சியை அங்கங்கும் பரவச் செய்தனர். தனித்தமிழ் இயக்கம் எங்கும் மலரலாயிற்று. நாடு முழுதும் அடிகளாரின் அழகிய தமிழ் நடையையும், அதில் அவர்கள் பெற்ற வெற்றிச் சிறப்பையும் எல்லாரும் கண்டு தாமும் அவ்வாறே தனித்தமிழில் எழுதத் தொடங்கினர். பேசத் தொடங்கினர். தெருப் பெயர், இல்லப் பெயர், மக்கட் பெயர்கள், உணர்ச்சியோடும் துடிப்போடும் தமிழாயின. அடிகளார் செய்த இந்த இயக்கத்தால், தமிழ் இலக்கியங் களே ஒரு தனிநிலை எய்தின; மக்களும் உணர்ச்சி மிகுந்தனர்; உலகத் தமிழ் மாநாடுகள் நிகழ்ந்து, `உலக நாடுகள் கூட ஒற்றுமை யுற்றன. சிவ சமய நெறி, தமிழ் நெறியென்றே உலக முழுதும் உணரப்பட்டது. உலக மொழிகளில் தமிழே மிகப் பழமையான தென்பதும், கலைகளும், நாகரிகமும், மெய்ம்மை இனிமை களும், வாழ்க்கை யியலும், இயற்கை மாட்சியும், நலங்கள் பலவும், மொழி யுயர்வில் விளங்குவன என்பதும், தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழி என்பதும், முற்காலத்தில் இந்தியாவும் சூழல் தீவுகளுமாகிய நாவலந் தீவு முழுதும், தமிழ் மொழியும் தமிழ் நெறியாகிய சிவசமயமும் திகழ்ந்தன என்பதும், தெளிவாகவும் உறுதியாகவும் முடிவாகிக் கடைப்பிடிக்கப் பட்டன. சன்மார்க்கப் பொது நெறி, சிவ நெறிக்குரியதே என்பதும், சிவ சமயம் குருமாரால் பரப்பப்பட்டதே யன்றித் தோற்று விக்கப்பட்டதன்று என்பதும் நன்கு விளங்கின. எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைத் தொழுவதே எல்லாவற்றிற்கும் நன்று என்னும் கொள்கை சைவர்க்குள் நிலைபெற்றது; சிறு தேவதைகளுக்குச் சிற்றுயிர்களைப் பலியிடுதலும் நீங்கியது. சிறு தேவதை வழிபாடுகளும் குறைந்து, ஒரு தெய்வ வணக்கமே ஓங்கியது; சைவர்களுக்குள் சாதிபேதம் பாராட்டாமை, தீண்டாமைத் தடுப்பு, தாழ்த்தப்பட்டவர்களை மேல் உயர்த்தல் முதலிய திருத்தங்களெல்லாம் பெருகின. ஆசிரியர் மறைமலையடிகளாரால் தமிழ் நாகரிகமும் தமிழ்மொழியும் சிவ நெறிப் பொதுமையும், சிறப்பும், எத்தனையோ வகைகளில் எவ்வளவோ மேம்பட்டன என்று சொல்லலாம். புதிய கருத்துக்களும், ஆராய்ச்சிகளும், முறைமை களும், நுட்பங்களும், வரையறைகளும் நடைமுறைகளும் பொலிவுற்றன. அடிகளார் நெறியை நாடு எவ்வளவுக்கெவ்வளவு பின்பற்றுகிறதோ அவ்வளவும் அது உலகப் புகழ் எய்தி மேம்படும் என்பதில் ஐயமில்லை! அடிகளார் திருத்தங்கள் வாழ்க! வெல்க! இறைவன் படைப்பில் இறையுங் குறையாங் கறையே திவன்செயலல் லால். - மறைமலையடிகளார். தமிழ்த் ஆதூய்மை தமிழ் முன்னோர் தமது தாய்மொழியைப் பிற மொழிக் கலப்பின்றித் தூயதாய் எல்லா வளனும் நிரம்ப வளர்த்து வழங்கி வந்தவாறு போல, இஞ்ஞான்றைத் தமிழருந் தமிழ் மொழியைத் தூயதாய் வளனுறு வளர்த்து வருதல் வேண்டும். தன்னைப் பெற்ற தாயைக் கொல்லுந் தறுகணன் போலத் தன்னை அறிவுபெற வளர்த்துப்பெருமைப்படுத்திய தமிழைச் சீர் குலைக்கும் போலித் தமிழ்ப் புலவரைப் பின்பற்றி நடவாமல் தமிழையுள்ளன்புடன் ஓம்பித் தூயதாய் வழங்கும் உண்மைத் தமிழாசிரியர்களைப் பின்பற்றி நடத்தலிற் றமிழ் நன் மாணவர் அனைவருங் கருத்தாயிருத்தல் வேண்டும். - மறைமலையடிகளார் மறைமலை அடிகளார் நெறி நின்றுய்வோம்! செந்தமிழ்த்தாய் ஈன்றெடுத்த திருப்புதல்வர்! இணையின்றிச் சிறந்து யர்ந்த நந்தலிலாப் பெரும்புலவர்! நாவலவர்! தமிழரெலாம் நயந்து போற்ற முந்துறுநற் பெருந்தலைவர்! மூதறிவும் இளம்வீறும் முதிர்ந்த தோன்றல்! அந்தமிலாப் பெரும்புலமை அமைந்தமறை மலையடிகள் போல்வார், யாரே? (1) ஆங்கிலமும் தீந்தமிழும் ஆரியமும் ஆய்ந்துணர்ந்த அறிஞர் ஏறு! பாங்குமிகப் பல்கலைகள் பயின்றுணர்ந்தோர்! சிறந்துயர்ந்த பண்பின் மிக்கோர்! தேங்குபெருங் கடல்கடந்த சேணாட்டும் புகழ்பொறித்த ஞானச் செல்வர்! ஈங்கெவர்தாம் மறைமலையாம் எம்அடிகள் சிறப்பை எல்லாம் இயம்ப வல்லார்? (2) நற்பேரும் புகழுமிகு மறைமலையார் தம்முடைய நலமே சான்ற சொற்போரின் பேராற்றல், துணிவுமிகு பேராண்மை, தூய நல்ல முற்போக்குப் பெருங்கொள்கை, முறைதிறம்பா ஆராய்ச்சி, எல்லாம் முன்னின், மற்றவர்க்கு நிகரான மாபுலவர் எவருமிலர்! வாய்மை ஈதே! (3) உரனாற்றும் பெரும்புலவர்! உரைத்திட்பம், மொழிபெயர்க்கும் ஒப்பில் ஆற்றல், வரலாற்றின் பேருணர்வு, மறுப்பெழுதும் நன்மாட்சி, மற்றும் எல்லாம் தரலாற்றும் மறைமலையார் தனித்தமிழ்நற் பெருநூல்கள் தகவின் என்றால், நிரலாற்றின் மறைமலையார் நிகரில்பெருஞ் சிறப்பெல்லாம் நிகழ்த்தற் காமோ? (4) தனித் தமிழ்நற் பெருவழக்காம் தமிழ்வளரத் தக்கவழி, தகவே கண்டு முனைத்துவந்த பலஎதிர்ப்பும் முன்னாது, முயன்றுமிக வெற்றி யுற்றார்! அனைத்தறிஞர் இளைஞரெல்லாம் மறைமலையார் ஆராய்ச்சி அருமை, இன்று நினைத்துணர்ந்து போற்றுகின்றார்! நிகழ்த்தினர்இப் பெரும்புரட்சி! நெடிது வாழி! (5) பழமைமிகு தமிழ்நெறியைப் பகுத்தறிவும், அறிவியலும் பரந்து யர்ந்த விழுமியநற் பெரும்போக்கும், விரிந்தமனப் பான்மையுமே மேவு வித்துச் செழுமியநல் அடிப்படையில் சிறந்தநல்ல அமைப்போடும் செழிக்கச் செய்தார்! தொழுதகைய பெரும்புலவர், தூயதமிழ் மறைமலையார்! சொல்வ தென்னே! (6) மறைத்திருவர், தமிழ்ச்சான்றோர், மறைமலைநல் அடிகளார், மாட்சி வாய்ந்த கிறித்தவநற் கல்லூரித் தமிழ்ப்பேரா சிரியர்எனக் கீர்த்தி ஓங்க, நெறித் தகுசீர்ப் பணிபுரிந்தார்! நிகரில் முல்லை, பட்டினநீள் பா லைநூல்கள் குறித்தரிய ஆராய்ச்சி உரைநூல்கள் வெளியிட்டார்! கூறல் என்னே! (7) (வேறு) தனித்தமிழ் இயக்கத் தந்தை! சைவசித் தாந்தச் சான்றோர்! முனைத்தநற் கொள்கை வீரர்! மும்மொழிப் புலமை வேந்தர்! மனித்தருள் தெய்வம் போன்ற மறைமலை அடிகளார்தம் எனைப்பல சிறப்பும் போற்றி இனிதவர் நெறிநின் றுய்வாம்! (8) - திரு. ந. ரா. முருகவேள் ஆசிரியர் திருக்கோயில் மறைமலை அடிகளாரின் புலமையும் தொண்டும் பரிதிமால் கலைஞர் நம் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது தமிழாசிரியர் பணிக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்விற்கு மறைமலை அடிகளார் வந்திருந்தார். பரிதிமால் கலைஞர் அடிகளாரின் இலக்கண அறிவின் ஆழத்தைக் காண்பதற்காக முற்றியலுகரத்திற்கும் குற்றியலு கரத்திற்கும் எடுத்துக் காட்டுகள் தரும்படி வினவினார். அடிகளார் தயக்கமின்றி அது தெரியாது என்று பதிலிறுத்தார். பரிதிமால் கலைஞர் அடிகளாரின் அறிவு நுட்பத்தைப் பாராட்டித் தமிழாசிரியர் பணிக்குத் தகுதியானவர் என்று அவரைத் தேர்ந்தார். அது என்பது முற்றியலுகரம்; தெரியாது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம். அது தெரியாது என்ற விடையிலேயே முற்றியலுகரத்திற்கும் குற்றியலுகரத்திற்கும் எடுத்துக்காட்டுகள் தந்த அடிகளாரின் புலமை போற்றத் தக்கதாகும். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிப் புலமை பெற்ற மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி இன்று 60 ஆண்டுகள் ஆகின்றன. அடிகளார் தாம் எழுதிய பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் முகவுரையில் தனித்தமிழில் தாம் எழுதவேண்டி நேர்ந்ததைப் பின்வருமாறு உணர்த்தியுள்ளார். இப்பதிப்பின்கண் மற்றொரு முதன்மையான மாறுதல் செய்திருக்கின்றேம். பெரும்பாலும் வடமொழி புகுதாமல் தனித்தமிழ் நடையில் நூல்கள் எழுதுவதே எமக்கு இயற்கை என்றாலும், வடசொற்களை அறக்களைய வேண்டுமென்னும் கடைப்பிடி எமதுள்ளத்தில் முன்னிருந்ததில்லை. ஆனால் இஞ்ஞான்று பலவகைப்பட்ட நூல்கள் எழுதுவாரும் நூல்கட்கு உரை வகுப்பாரும் வடசொற்களையும் பிறசொற்களையும் தாமெழுதும் தமிழில் ஒரு வரை துறையின்றிப் புகுத்தித் தமிழின் தீஞ்சுவையையும் அஃகா வளத்தையும் கலங்காத் தூய்மை யையும் பழுதுபடுத்தி அதனை அழித்து வருதல் கண்டும்; பொருள்களைத் தெரிந்தற்கு வேண்டிய அளவு சொற்கள் இல்லாமல் பலவகைக் குறைபாடுகள் உடையதாயிருக்கும் ஆங்கில மொழியைப் பிறமொழிக் கலப்பில்லாமல் வழங்குவது பெரிதும் வருத்தமே என்றாலும் அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் இயன்றமட்டும் அதனைத் தூய்மையாகவே வழங்க வேண்டுமென்று கட்டுரைத்து வருதல் கண்டும், மற்றை மொழியின் உதவியை வேண்டாது தனித்து இயங்கவல்ல சொல்வளமும் பொருட் செழுமையும் உடைய நம் செந்தமிழ் மொழியை அதற்கே உரிய சொற்களால் வழங்காமல் அயன் மொழிச் சொற்களை அதன் இடையே நுழைத்து அதன் அழகையும் வலிமையையும் சிதைத்தல் பெரியதொரு குற்றமாமென உணரலானேம். இதிலிருந்து 1906-ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வந்த பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை என்னும் நூலில் வடசொற்கள் கலந்து எழுதினார் என்றும் 1919-ஆம் ஆண்டில் வந்த அந்நூலின் இரண்டாம் பதிப்பில் அவ்வட சொற்களை யெல்லாம் மாற்றிவிட்டதாகவும் அறிகின்றோம். இவ்வாறே முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை என்ற நூலின் பின் வந்த பதிப்புகளில் வடசொற்களை மாற்றித் தனித்தமிழ் ஆக்கம் செய்தார். இலக்கணக் கொத்துரை என்ற நூலை எழுதிய சுவாமிநாத தேசிகர் வடமொழி எழுத்துக்களையும் தமிழ் எழுத்துக் களையும் ஒப்பிட்டு வடமொழிக்கும், தமிழுக்கும் உயிர் எழுத்துக்களுள் பொதுவானவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்றும் தமிழுக்கே சிறப்பானவை எ, ஒ என்ற இரண்டும் என்று கணக்கிட்டு மெய் எழுத்துக்களுள் க, ச, ட, த, ப, ங, ஞ, , ந, ம; ய, ர, ல, வ, ள என்பவை பொதுவானவை என்றும் ற, ன, ழ என்ற மூன்று எழுத்துகளும் சிறப்பானவை என்றும் கணித்து வடமொழியில் இல்லாத இவ்வைந் தெழுத்துகள் இருப்பதால் மட்டும் தமிழ் ஒருமொழி என்று பெருமை கொள்ள முடியுமா என்று ஒரு நூற்பா இயற்றி நையாண்டி செய்தார். அன்றியும், தமிழ்நூற்கு அளவிலை அவற்றுள் ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ அன்றியும் ஐந்தெழுத் தால்ஒரு பாடை என்று அறையவே நாணுவர் அறிவுடை யோரே ஆகையால் யானும் அதுவே அறிக. (இலக்கணக் கொத்துரை பாயிரம் 7) இவ்வாறு சுவாமிநாத தேசிகர் வடமொழி தமிழ் ஆகிய இரண்டற்கும் பொதுவான எழுத்துகள் இவை என்று கணக்கிட்டு அவை எல்லாம் வடமொழிக்கே சொந்தமானவை என்று தவறாக முடிவு செய்து ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவே நாணுவர் அறிவுடை யோரே என்றும், அவற்றுள் ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ என்று சொல்லி நகையாடியது அவர்தம் தவறான மனப்பாங்கைக் காட்டுவதாகும். தனித்தமிழ் உண்டோ என்று அவர் வினவியது மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டது எனலாம். - பெ.கு. உலகநாதன் எம்.ஏ.எம்.லிட். துணைப்பேராசிரியர், தமிழ்த் துறை சென்னைக் கிறித்தவக் கல்லூரி அமைதியாக உள்ள காற்று வெள்ளம் மிகவும் அழகுடையதாயிருத்தல் போல, அமைதியாக இருப்பவர் அறிவானது மிகவும் ஆழ்ந்து செல்லுந் திறத்ததாய் தெளிவாய் இருக்கும். மறைமலையடிகளார். அடிகள் பயின்ற சிலம்பு ஆங்கிலம், தமிழ், சமக்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் கற்றுத் துறைபோய் விளங்கியவர் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புலவர்களில் ஈடிணையற்றவரான மறைத்திரு. மறைமலையடிகளார். தமிழறிஞர்களில் அறிவியல், இலக்கியம், வரலாறு, சமயம், தத்துவம், மறை பொருளியல், சமூக இயல் போன்ற பல்துறை நூல்களைப் படித்ததும்படைத்ததும் அடிகளாரைப் போன்றவர் யாரும் கிடையாது. தமிழாசிரியர் ஒருவர் இத்தனை துறைநூல்களையும் படித்தார் என்பதே வியப்புக்குரியதாம்; அதற்கு மேலாக அவை அனைத்தையும் தமக்கே சொந்தமாகப் பொருள் கொடுத்து வாங்கித் தமக்கெனத் தனி நூலகம் அமைத்துக் கொண்டாரென்றால் அது பெரு வியப்புக்குரியதுதானே. ஏறத்தாழ 4,500 நூல்களை (அக் காலத்திலேயே ஓர் இலட்ச ரூபாய் மதிப்புடையவை) அடிகளார் தொகுத்து வைத்திருந்தார். அவை அனைத்தும் இன்று சென்னையில் அவர்கள் பெயரிலேயே இயங்கும் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. அடிகளார் தாம் விலைகொடுத்து வாங்கிய நூல்களைப் பொன்னேபோல் பாதுகாத்தார். நூல்களைப் பேணுவதிலும் படிப்பதிலும் அவர்களுக்கு இணை அவர்களே. தாம் வாங்கிய நூல்கள் அனைத்திற்கும் அவரே தம் கைப்பட மேலுறை யிடுவார். (பகல் உணவு உண்டபின் அடிகள் நாள்தோறும் செய்த வேலை நூல்களுக்கு மேலுறை இடுவது). ஒவ்வொரு நூலிலும் தம்முடைய திருப்பெயரை அடிகளார் தம் திருக்கரத்தால், முத்துப்போன்ற அழகிய எழுத்துக்களால் பொறித்து வைப்பார். (அவற்றில் தாம் எத்தனை வகை Pandit R.S. Vedachalam, Swami Vedachalam, Maraimalai Adigal). ஆங்கில நூல்களில் ஆங்கிலத்திலும் தமிழ் நூல்களில் தமிழிலும் அவர் பெயர் பொறிப்பார். அதையொட்டி அந்நூல் வாங்கப்பெற்ற நாள் குறிக்கப்பெற்றிருக்கும். அடிகளார் நூல் பயிலும் முறையே தனிச் சிறப்புடையதாகும். தமக்கு விருப்பமான பகுதிகளைப் பக்கக் கோடிட்டுக் காட்டுவார். வரிகளை அடிக் கோடிடுவார். பக்கத்தில் அடிகளுடைய குறிப்பு அழகிய எழுத்துக்களில் மிளிரும் சிறந்த பகுதிகளுக்கு Note என்று எழுதுவார். தமக்கு ஒத்த கருத்துள்ள பகுதிகளை yes என்றும் true என்றும் தவறான கருத்துக்களை wrong என்றும் false என்றும் குறிப்பிடுவார். ஐயப்படும் இடங்களில் ஐயக் குறிகளும் வியப்பைக் குறிக்க வியப்புக் குறியும் இடப்பெற்றிருக்கும். வேறு நூல்களுடன் ஒத்த கருத்துள்ள பகுதிகளைக் குறித்து அதனருகில் ct என்று குறித்து எந்த நூலை அல்லது கருத்தை ஒத்திருக்கிறது என்றும் குறிப்பிடுவார். டாக்டர் உ.வே. சாமிநாதையர் சிலப்பதிகாரத்தை முதன் முதல் 1892-ஆம் ஆண்டில் பதிப்பித்தார். அதனை அடிகளார் தொடக்க முதல் இறுதிகாறும் பக்கம் பக்கமாக, வரி வரியாக முறையாகப் படித்துப் பக்கந்தோறும் பல இடங்களில் பல்வேறு குறிப்புகளைக் குறித்துள்ளார். அடிகளார் எல்லா நூல்களையும் இம்முறையில்தான் பயின்றுள்ளார் என்று பார்த்தால் அவர் நூல்களைப் பயிலும் முறையை நன்கறிந்து கொள்ளலாம். நூலில் அரிய சொற்கள் பயின்று வரும் இடங்களிளெல்லாம் அவற்றிற்குப் பொருள் எழுதியுள்ளார். சாலினி-தேவர்க்காடுபவள்: பாகுடம்-அரசிறை. சில சொற்களுக்கு விரிவான விளக்கமும் கொடுத்துள்ளார். சல்லியகரணி - கருவிப் பட்ட காயம்; ஆற்று மருந்து; சந்தான கரணி - முறிந்த உறுப்புக்களை யிணைக்கும் மருந்து; சமனிய கரணி - எழில் கழிந்த உறுப்புக்களை எழில் கெழுவிப்பது; மிருத சஞ்சீவினி - இறந்த உயிரை மீளக் கொடுவந்து உடலிற் பொருத்துவிப்பது. ஆங்காங்கு இலக்கணக் குறிப்புகளை எழுதியுள்ளார். திங்கண் மாலை என்ற பாடலுக்கு திங்கள் முதலிய மூன்று மிடைமடக்கி வந்தன என்று குறிப்புத் தந்துள்ளார். கௌசிகன் என்ற பெயர் கோசிகன் என்று மாறுவதற்கு அடிகள் தந்துள்ள இலக்கணக் குறிப்பு வருமாறு: ஒற்றெழுத்துக்களோடு தொடரப் பெறாத ஔகாரத்தை முதலாகவுடைய சில வடமொழிப் பதங்கள் தமிழில் வருங்கால் அவ்வௌகாரம் ஓகாரமாகத் திரியும். மூலப்பாடத்தை விட வேறு பாடம் சிறப்பாயிருப்பின் அவற்றை எடுத்துக் கொள்கிறார். மனையறம் படுத்த காதையில் (வரி 81) பேரியற் கிழத்தி என்ற தொடருக்குப் பேரிற் கிழத்தி என்ற அரும்பதவுரைகாரர் பாடத்தைச் சிறப்பாகக் கொள்கிறார். பெருங்கதைப் பாடல் ஒன்று மேற்கோளாகக் காட்டப்படும் இடத்தில் பகைத்தீயெறிப்ப என்று தரப்பட்டுள்ளது. அடிகள் எரிப்ப என்று திருத்தம் செய்துள்ளார். ஆனால், உ.வே.சா.வின் பெருங்கதை பதிப்பிலும் எறிப்ப என்றே கொடுக்கப் பட்டுள்ளது. தீ எரிக்கத்தானே செய்யும். எறிப்ப என்பது பொருந்தாதுதானே. இளங்கோவடிகள் ஒரே வரியை மீண்டும் மீண்டும் சிலம்பில் பயன்படுத்தும் இடங்களை அடிகள் சுட்டிக் காட்டுகிறார். கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள் என்ற வரி கடலாடு காதை (வரி 130)யிலும் இந்திர விழவூரெடுத்த காதை (வரி 18) யிலும் வருவதை அக்காதையின் இங்ஙனமே கூறினார் என்று குறிக்கிறார். புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் என்ற வரிகள் இந்திரவிழவூரெடுத்த காதை (68-69) யிலும் வேட்டுவ வரி (37-38) யிலும் பயின்று வந்துள்ளதைச் சுட்டுகிறார். உரைப்பகுதியில் தமக்குப்பிடித்த பகுதிகளைச் சிறந்தது என்றும் பிடிக்காத இடங்களைச் சிறந்ததன்று என்றும் பொருத்தமற்ற இடங்களைப் போலியுரை என்றும் குறிப்பிடுகிறார். கானல்வரி (வரி17)யில் அடியார்க்கு நல்லார் முலைகளோ பாரமாக உள்ளன. ஆதலால் கொல்லுதலைத் தவிர்த்து அப்பாரத்தை என் தோளிலேற்றி இடையைப் பாதுகாப்பாயாக என்று எழுதியுள்ள உரையை இவ்வுரை சிறந்தது என்று அடிகள் பாராட்டுகிறார். தேம்பழம் என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் தேனொழுகும் பலாப்பழம் என்று உரை யெழுதிய பின் தெங்கம்பழம் எனினும் அமையும் என்கிறார். இப்பொருள் சிறந்ததன்று என அடிகள் இரண்டாவது பொருளை மறுக்கிறார். கோழிச் சேவற் கொடியோன் கோட்டம் (ஊர்காண், 10) என்ற அடிக்குக் குறிப்பு எழுதும் அடிகளார் முருகக் கோயிலையுங் கோட்ட மென்றுரைத்த பின் குணவாயிற் கோட்டம் என்புழிக் கோட்ட மென்பது அருகன் கோயிலாமென்றிவ் வுரையாசிரியர் பொருளுரைத்தது போலியாமென்றொழிக என்று கண்டிக்கிறார். மேற்கோள் சுட்டப்பெறாத இடங்களில் அடிகளே இடஞ் சுட்டிக் காட்டுகிறார். ஊர் காண் காதை (70-75) வரிகளுக்கு உள்ள உரையில் நாணும் மடனும் பெண்மையவாதலின் என்ற தொடர் உள்ளது. உ.வே.சா. இதற்கு மேற்கோள் காட்டவில்லை. அடிகள் இவ்வரியை மேற்கோள் அடைப்புக்குள் அடக்கி தொல் பொருள், களவியல், காமத்திணையிற் கண்ணின்று வரூஉம்எனச் சூத்திரம் என்று அடிக்குறிப்புக் கொடுத்துள்ளார். அச் சூத்திரத்தில் இவ்வரி வந்துள்ளது. ஒப்புமைப் பகுதிகள் கொடுக்கப் பெறாத பல விடங்களுக்கு அடிகள் பல்வேறு நூல்களிலிருந்து பொருத்தமான பகுதிகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார். ஊர்காண் காதை (வரி 72)யில் உள்ள வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை என்ற வரிக்கு ஒப்புமைப் பகுதி எதுவும் பதிப்பில் இடம் பெறவில்லை. அடிகள் அடிக் குறிப்பிட்டு திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை என்றார் கலித்தொகை யினும் என்று எழுதியுள்ளார். கொடுக்கப்பெற்றுள்ள அடிக்குறிப்பு தவறாக இருப்பின் அடிகள் தயங்காது சுட்டிக் காட்டுகிறார். கட்டுரை காதையில் (வரி 55) பெருஞ்சோறு பயந்த திருந்து வேற்றடக்கை என்ற வரிக்கு உ.வே.சா. பாண்டவரும் துரியோதனாதியரும் போர் புரிந்த காலத்தில் அவர் சேனைக்குச் சோழனொருவன் சோறிட்டானாதலின் பெருஞ்சோறு பயந்த திருந்து வேற்றடக்கை என்றார்; இதனைப் புறப்பாட்டாலுணர்க! என்று அடிக் குறிப்புத் தந்துள்ளார். இதனைக் கண்ணுற்ற அடிகளார் இப்பகுதியை மையால் குறுக்குக் கோடிட்டு அடித்து விட்டு புறநானூற்றிலிங்ஙனஞ் சோறு பயந்தான் உதியஞ் சேரலாதன் என்று கூறப்பட்டது என்று பக்கக் குறிப்பு எழுதியுள்ளார். பெருஞ்சோறு பயந்தவன் சேரன் என்பதற்கு மாறாகச் சோழன் என்று முதற் பதிப்பில் கொடுத்துவிட்ட உ.வே.சா. இரண்டாம் பதிப்பில் இதனைத் திருத்திவிட்டார். ஊர்காண் காதை (வரி 7)யில் நுதல் விழி நாட்டத் திறையோன் கோயிலும் என்ற வரிக்கு அடிகளார் எழுதியுள்ள அடிக்குறிப்பு இளங்கோவடிகளின் சமயத்தைப் பற்றி அவர் என்ன கருதினார் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்து கின்றது. பிறப் பிறப்பில்லாப் பெரியோன் என இந்திர விழவூரெடுத்த காதையிற் கூறுதலானும், பிறாண்டும் சிவ பெருமானையே முதற்கட் கூறுதலானும் ஆசிரியர் இளங்கோ வடிகள் சைவரே யாமென்பது பெற்றாம். அடிகளின் இக்கருத்து உ.வே.சா.அவர்கட்கும் வி.ஆ. இராமச்சந்திர தீட்சிதர் அவர்களுக்கும் உடன்பாடாம் எனினும் இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று இன்று பெரும்பாலோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மறைமலையடிகளார் சிலப்பதிகாரத்தைச் செம்மையாகப் படித்துப் பல பயனுள்ள குறிப்புகளை ஆங்காங்கே கொடுத்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆய்வு செய்வோர்க்கு அடிகள் பயன்படுத்திய இந்நூல் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. - இரா. முத்துக்குமாரசாமி எம்.ஏ.பி.லிப் நூலகர், மறைமலையடிகள் நூலகம், சென்னை அகரவொலியும் ஆகாரவொலியும் சிறிது தோன்றியும் தோன்றாமலும் உள்ள இறை வனியல்பை அகரவொலி காட்டாநிற்ப. உலகுயிர்களை இயக்கி அவ் வியக்கத்தால் தன்னிலையைப் புலப்படுத்தி ஐந்தொழி லியற்றும் முதல்வனியல்பை ஆகாரவொலி குறிப்பிடா நிற்குமென்க. - மறைமலையடிகள் மறைமலையடிகளார் ஒரு மறையாத மலை (வண்கை ஒத்தாழிசைக் கலிப்பா) (தரவு) மறையாத மலையொன்று மறைமலை என்று துறைமேவு தூயதமிழ் துலங்கிட நின்று பொறைதாங்கி மற்றுமொரு பொதியமே யாகிக் கறையற்ற தமிழ்தந்த காட்சியே காட்சி! (தாழிசை மூன்று) மன்னிய கலைகளிலே மகிழ்பல துறைமேவும் சென்னைக் கிறித்தவக்கல் லூரியில் சிறப்புடனே முன்னர் பணிசெய்த முனிவரைப் போற்றுகின்றோம்! மறைமலை யடிகளென்றால் மக்களின் மனத்திலுள்ள கறைமலை கரைந்துபோகும் கன்றிய தமிழ்ப்பகையின் சிறகறுத் தெறிந்ததாலே! செந்தமிழ் வாழ்ந்ததாலே! நாடக நூல்களென்ன! நயந்தநல் கட்டுரைகள் ஏடகம் கொண்டபல நூல்களின் ஏற்றமென்ன! தோடக மாலையிட்டுத் தோத்திரம் சொல்லுகின்றோம்! (அராகம்) இமயமலை எழிலார்ந்த பொதியமலை எங்கணும் குளிர்சேர்ந்த நீலமலை சமயமலை வரிசைகளில் தணிகைமலை சாயாத சாமிமலை அழகர்மலை இமயமலை விந்தமலை சென்னிமலை செஞ்சிமலை பறங்கிமலை எந்தமலையும் கமலநிகர் மறைமலைக்கே ஈடென்று காட்டுகிற கவினெங்கே காட்டுவீரே! (இரண்டாம் போதரங்கம்) பேசினால் செந்தமிழ் பேசியே தீரவேண்டும் கூசினால் - குறையெனத் தள்ளியே எள்ளவேண்டும் என்றொரு துணிவுடன் இயங்கிய புலவரேறு இன்றுநாம் தலைநிமிர்ந் திருந்திட வைத்தமேரு! (அம்போதரங்கம் நாற்சீர் ஈரடி இரண்டு) காளி தாசனின் கவினார்ந்த பெண்மணியைக் கன்னித் தமிழிலோர் கண்மணியாய்ப படைத்தளித்தாய்! சங்கத் தமிழிருந்த செந்தமிழ்சேர் நூல்களுக்குத் தங்கத் தமிழுரைகள் தந்ததிலே விஞ்சிநின்றாய்! (முச்சீரோரடி நான்கு) முற்றாகக் கற்றவன்நீ சைவத்தின் நெற்றாக இருந்தவன்நீ தமிழைநல்ல பற்றாகப் பிடித்தவன்நீ உன்எழுத்தை விற்றாலும் உலகையெலாம் வாங்கலாமே! (இருசீரோரடி எட்டு) துறவுநீ செந்தமிழர் உறவுநீ தத்துவத்தின் கடல்நீ தமிழ்ச்சமய உடல்நீ நடந்தநூல் நிலையம்நீ அருளிழுத்த வலையன்நீ மருளறுத்த மறவன்நீ குறள்பிடித்த அறவன்நீ அருந்தமிழ்நீ! (தனிச்சொல்) அதனால் (சுரிதகம்) மாணவர் எடுத்திடு முத்தமிழ் விழாவினை மறைமலை யடிகளார் மாண்பினை நினைக்கும் வித்தக விழாவென விழைந்தனம் செய்தனம் வாழ்க நின்புகழ் வாழ்க இன்றமிழ் வாழ்ந்திட இந்தியா வாழுமே! - பொன்னு ஆ. சத்தியசாட்சி தமிழ்த் துணைப் பேராசிரியர் சென்னைக் கிறித்துவக் கல்லூரி மறைமலையடிகளின் தமிழ்த் தொண்டு இவ் யாண்டை மறைமலையடிகளாரின் நூற்றாண்டாகத் தமிழ் நாடெங்கிலும் கொண்டாடுகின்றனர். இவ் வேளையில் அவர் தம் நூல்களைப் பற்றி ஓரளவு ஆராய்வோம். அறிவியல் மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை, பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் அறிதுயில், மனித வசியம், மரணத்தின் பின் மனிதர்நிலை ஆகிய அறிவியல் நூல்களை அழகு தமிழில் எழுதியுள்ளார். அறிதுயில் என்னும் நூலில் மன ஒருமையின் ஆற்றலைக்கொண்டு நோய், தீய பழக்கம் இவைகளை ஒழித்து நல்வழி யடையும் வழிவகைகளைக் கூறி யுள்ளார். மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு (குறள் 945) என்னும் இக் குறட்பாவிற்கு அரியதோர் இலக்கணம் அடிகளாரின் பொருந்தும் உணவும் என்னும் நூலாகும். விரும்பும் குழந்தைகளைப் பெற்று மகிழ்வது இவ்விருபதாம் நூற்றாண்டு அறிவியலால் முடியாது. ஆனால் அடிகளாரின் மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்னும் நூலில் ஆண் குழந்தையை விரும்பினால் ஆண் குழவியையும் பெண் குழந்தையை விரும்பினால் பெண் குழவியையும் பெற்றுக் கொள்ளும் வழி வகைகள் திருமூலர் திருமந்திரத்தின் மூலம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. இந்நூலில் நெடுநாள் நோயற்று வாழவும் வழி கூறப்பட்டுள்ளது. மரணத்தின் பின் மனிதர் நிலை நூலைப் படித்தவர்களுக்கு இறப்பைப் பற்றிய அச்சம் ஏற்படாது. ஆராய்ச்சி நூல்கள் மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும், தமிழர் மதம், வேளாளர் நாகரிகம், பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும் போன்ற ஆராய்ச்சி நூல்கள் அடிகளால் எழுதப் பெற்றன. மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூல் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பெறத்தக்கதோர் ஆராய்ச்சிக் கருவூலமாகும். இந்நாளில் தொல்காப்பியத்தின் காலமும் தமிழ்ச் சங்கங்களின் வரலாறும் ஆழ்வார்களது காலமும் இன்ன பிறவும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளன. தமிழர் மதம் என்னும் நூலில் அம்மையப்பர், தமிழர்களுடைய மணவாழ்க்கை, சைவம், வைணவம், தமிழ்த் திருமணம் நடத்தும் முறைகள், சீர்திருத்தக் குறிப்புக்கள் முதலியன வேண்டிய அளவு, மிகாமல் விவரிக்கப் பட்டுள்ளன. தொல்காப் பியத்தின் பழமையையும் தமிழினது மேன்மைகளையும் பல தமிழ்ச் சொற்கள் வடமொழியில் புகுந்தமையையும் விளக்கமாக அடிகளாரின் டைக்காலறு தமிழரும் ஆரியரும் என்னும் நூலில் காணலாம். சமய நூல்கள் அடிகளார் தமிழையும் சைவத்தையும் இருகண்களாகப் போற்றியவர். புராணக் கதைகளை அடியோடு வெறுத்து ஒதுக்குவார். பழந்தமிழரது கொள்கையே சைவம் என்பது அன்னாரது கருத்து. ஆரிய மறையை அவர் தமிழ் மறையென ஒப்புக்கொள்ள மாட்டார். சைவ நூல்களில் குறிக்கப்படும் மறை, தமிழ்மறை நூல்களைத்தான் குறிக்கும் என்பது அடிகளின் முடிந்த முடிபு. இக் கொள்கைகளையெல்லாம் அடிகளாரின் பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், பழந்தமிழ்க் கொள்கைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா. சைவ சித்தாந்த ஞானபோதம், சிவஞான போத ஆராய்ச்சி என்னும் நூல்களில் ஒளிர்வதைக் காணலாம். சமய நூல்களுக்கெல்லாம் முடிமணியாத் திகழ்வன சிவஞான போத ஆராய்ச்சி நூல்களாகும். பல் வகை பள்ளிச் சிறுவர் சிறுமியர்களுக்காகச் சிறுவர்க்கான செந்தமிழ் இளைஞர்களுக்காக இளைஞர்க்கான இன்றமிழ் மற்றும் அறிவுரைக் கொத்து முதலான கட்டுரை நூல்களை எழுதியுள்ளார். ïuhrhá, m‹W ïªâia¡ f£lha¥ ghlkh¡»a nghJ ‘ïªâ bghJbkhÊah? என்னும் நுண்மாண் நுழைபுலம் மிக்கதொரு கட்டுரையை மாற்றாரும் மறுக்க இயலாதவாறு எழுதியுள்ளார். அம்பிகாபதி அமராவதி என்னும் நாடக நூலும் கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் கதையும் படிக்கப் படிக்கத் தித்திப்பவை. முல்லைப் பாட்டாராய்ச்சி பட்டினப்பாலை ஆராய்ச்சி முதலிய நூல்கள் அடிகளாரின் இலக்கியத் திறன் ஆய்வுக்குத் தக்க சான்றுகள். இறுவாய் மறைமலையடிகளின் நூல்களில் பலவற்றைச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகமும் சிலவற்றைப் பாரி நிலையமும் வெளியிட்டிருக்கின்றன. அடிகளாரின் அனைத்து நூல்களும் ஒவ்வொரு வீட்டிலும் இன்றியமையாது இருத்தல் வேண்டும். திருமணப் பரிசாக மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கையை அளிக்கலாம். நண்பர்களுக்கு அறிவியல் மற்றும் சமய நூல்களை அன்பளிப்பாகத் தரல் வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்கும் கட்டுரை, பேச்சு, நாடகம் முதலான போட்டிகளில் வென்றவர்களுக்கு அறிவியல், ஆராய்ச்சி, இளைஞர்க்கான இன்றமிழ் முதலான நூல்களைப் பரிசாகத் தருதல் வேண்டும். இப்படிப் பல்வேறு வகைகளில் அடிகளின் நூல்களை பரவச் செய்வது நமது கடமையாகும். இச் செய்கையே அடிகளாரின் கைம்மாறு கருதாத் தொண்டுகளுக்கு நாம் செய்யும் நன்றியுணர்வைக் காட்டும். நம் அடிகளின் தனித் தமிழ்த் தொண்டு ஓங்குக. திருச்சிற்றம்பலம். - இரா. தாமோதரன் மறைமலையடிகள் தமிழ்நெறி மன்றம், (தலைமை நிலையம்) வெளியீடு! தூத்துக்குடி. அடிகளின் சிறப்பியல்புகள் பற்றித் தமிழ்ப் பேரறிஞர்களின் கருத்துக்கள் மறைமலையடிகள் தமிழ்நாடு செய்த பெரும் தவத்தின் தவவுருவினர் ஆவர். செந்தமிழினையும் சிவநெறியினையும் அவற்றின் பகைவரால் நலிவுறாவண்ணம் பாதுகாத்து அவற்றிற்குப் பேரறிவின் அடிப்படையிட்டவராதலின், தமிழ்ச் சைவ உலகத்தாரால் தமது தலைமணியாக போற்றற் பாலர். தனித்தமிழிலேயே தேனும் பாலுங் கலந்தனைய தீஞ் சொற்சுவை மிக்க இழுமெனும் இனிய உயரிய உரைநடை எழுதுவதிலும், சொன்மாரி பொழிவதிலும் இவருக்கு ஒப்பாவர் எவருமிலர். இவரது சொல்லினிமைக்கு ஏற்பக் குயிலோசை போன்ற குரலினிமையும் இவருக்கு இயற்கையில் அமைந்துள்ளது பெருமகிழ்ச்சி தரத்தக்கது. தொல்காப்பியர் காலத்துக்கு முன் இருந்த பண்டைத் தமிழ் நாகரீக நிலையினுக்குப் புத்துயிரளித்து அதனை இன்றும் என்றும் நிலவச் செய்வதற்குரிய பெருமுயற்சி யினை இவர் தமது தலையாய கடமையாகக் கொண்டவர். - பேரறிஞர் கா. R¥ãukÂa¥ ãŸis, v«.V.,v«.vš. மறைமலை ஒரு பெரும் அறிவுச்சுடர்; தமிழ் நிலவு; சைவவான், அவர்தம் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள். - திரு.வி.க. இனி எக்காலும் தமிழ் இறவாதிருக்க வேண்டுமானால் மறைமலையடிகள் திருவடிகளைத் தமிழர் மறவாதிருக்க வேண்டும். - டாக்டர் இரா. பி.சே. அவர்களைப் (அடிகள்) போன்ற பேராசிரியர்கள் இனித் தமிழ் நாட்டில் தோன்றுவது மிக மிக அருமை என்றே சொல்லலாம். - எ. வையாபுரிப் பிள்ளை தமிழ்த் தலைவர் மறைமலையடிகள் தமிழ்மெல்ல மணிப்பிரவாள மொழியாக மாற இருந்த தறுவாயில், தன் செம்மையும், சிறப்பும் சிதைவுற நேர்ந்த நெருக்கடியான நிலையில் அதற்குறுதுணையாய் முன்னின்று தனித் தமிழியக்கந் தோற்றுவித்து வளர்த்த பெருந்தொண்டு அவர் ஆற்றியதாகும். இனித் தமிழ்மொழி தலைநிமிர்ந்து வாழுமென்று நம்பக்கூடிய நிலையில் தமிழை வாழவைத்த பெருமை அவரைச் சார்ந்ததாகும். - டாக்டர் மு.வ. தனித்தமிழ் நடையின் தந்தை. - டாக்டர் அ.சி. ஆழ்ந்து பரந்தபடிப்பு, கூரிய அறிவு, ஆராய்ச்சித் திறமை, கடவுளன்பு, அஞ்சா நெஞ்சம் இவற்றை உடையவர் அடிகள். - கலைமகளாசிரியர் கி.வா.ச. அடிகளின் சொல்வன்மையும், குரலினிமையும், பொருளாழமும் மற்றவர்களின் உரைகளில் காணக் கூடுவதில்லை. - பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. இந்நாளில், தமிழ் நூலாராய்ச்சி முறைக்கும், திருந்திய செந்தமிழ் உரைக்கும் அடிகள் சிறந்த வழிகாட்டியாய் இலங்குகின்றார்கள். - ச. சச்சிதானந்தம் பிள்ளை தமிழுக்காகவே பிறந்து, தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழுக்காகவே உயிர் நீத்தவர் அடிகள் ஒருவரேயாவர். - முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. 1. அடிகளின் தமிழ்நெறிக் கொள்கைகளிற் றலைசிறந்தன மெய்யுணர்வுக் கருத்துக்கள் 1. கடவுளன்பு (வழிபடுதல்) 2. உயிர்களிடத்தன்பு ( அன்பு செய்தல்) 3. மக்களிடத்தன்பு (தொண்டு செய்தல்) 4. சிவநெறிப் பற்று (சைவ சமயப் பற்று) 5. திருமால் நெறி முதலிய இந்து சமயங்களில் பற்றும், மதிப்பும் 6. இந்து சமயப் பொதுநெறி காத்தல் 7. பொதுநிலை நெறி (சமரச சன்மார்க்கம்) என்று அடிகள் போற்றிய வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளின் சமரச சன்மார்க்க நெறியைப் போற்றல். 8. சிவநெறித் தலைவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரைச் சிறப்பு முறையில் போற்றுதல். 9. அவர்கள் அருளிய தேவாரத் திருவாசகத் திருமுறைகளை மறை எனப் போற்றல். 10. இவ்வாறே ஆழ்வார்கள் அருளிய பாடல்களையும், திருமால் நெறியினர் மறை எனப் போற்றல் தக்கதே. 11. சிவநெறி, திருமால் நெறிகள் தமிழ்ச் சான்றோர் கண்டவையே. 12. அவற்றைப் போற்றல் தமிழர் கடன். 13. இரு நெறிகளின் திருக்கோவில்களையும் வழிபட்டுய்தல் வேண்டும். 14. தமிழர் நெறியாகிய சைவ, வைணவ நெறிகளில் புகுந்து விட்ட பகுத்தறிவுக் கொவ்வா - கடவுள் நெறிக்கேலா - காலத்திற்குப் பொருந்தாக் கதைகளைக் கருத்துக்களை ஒதுக்கி விடுதல். 15. புனைந்துரைப் புராணங்களாயினும் நிகழ்ந்த புராணங் களாயினும், அவற்றால் பெறப்படும் நற் கருத்துக்களையும், உண்மைகளையும் (தத்துவம்) போற்றிக் கொள்ளுதல். 16. மெய்கண்டாரால் வகுக்கப்பட்ட சிவநெறிக் கொள்கை களைப் போற்றிக் கடைப்பிடித்தல். 17. அக் கொள்கைகட்குப் புறம்பாகப் புகுந்துவிட்ட கருத்துக்களைக் கைவிடல். 18. தமிழ்ச் சான்றோர்களான தொல்காப்பியர், திருவள்ளுவர், திருமூலர், சிவநெறி நாயன்மார்கள், திருமால் நெறி ஆழ்வார்கள், பட்டினத்தார், தாயுமானவர். இராமலிங்க அடிகள் முதலியோர் அருளிய தமிழ் மறைக்கு மாறுபடாத ஒத்த கருத்துக்களான வடமொழியிலுள்ள வேத, ஆகம, உபநிடதப் பகுதிகளை ஏற்றுக் கோடல் தவறாகாது. 19. திருக்கோயில் சடங்குகளையும், வாழ்க்கைச் சடங்கு களையும் வடமொழி கொண்டு செய்தல் கூடாது. தமிழ் மறைகள் கொண்டு செய்தல் வேண்டும். 20. புலால் உணவை அறவே விலக்குதல் வேண்டும். 21. திருவள்ளுவர் கூறும் நற்பண்புகள் யாவற்றையும் கடைப் பிடித்தல் வேண்டும். (1. அடிகளின் இக்கொள்கைகள் அவர்தம் நூல்களிற் காணப்படுவையாகும்.) மன்பதைக் கருத்துக்கள் 1. சாதி, குல, குடி, வேறுபாடுகள் பாராமை. 2. சமய, மொழி, இன, நிற, நாடு வேற்றுமை பாராமை. 3. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமூலர்) என்ற கருத்தை நடைமுறையிற் கடைப்பிடித்தல். 4. இக்கருத்திற்கு முரணில்லாமல் தமிழின, நாடு, மொழி, பண்பாடு, கலை, நாகரிகங்களைப் போற்றுதல் சிறப்பு முறையாகும். 5. பாரதநாடு, இன, சமய ஒருமைகளைக் கடைப்பிடித்தல் பொது முறையாகும். 6. கலப்பு மணம் 7. மாதர் மறுமணம் 8. காதல் மணம் 9. கைமை மணம் 10. குடும்பக் கட்டுப்பாடும் 11. இச்சீர்திருத்தங்களால் சமய ஒழுக்கங்களும் ஊனுண்ணாமை முதலிய உண்மை அறவொழுக்கங்களும் அணுவளவும் கைவிடப்படலாகாது. இவைகளைத் தூய முறையில் கைக்கோடல். மொழிக் கருத்துக்கள் 1. தனித்தமிழ் போற்றுதல் 2. தமிழ் வாயிலாகவே தமிழர் அனைத்துக் கலைகளையும் கற்றல். 3. தமிழர்தம் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழையே பயன்படுத்துதல். 4. நினைவு, பேச்சு, எழுத்துக்களில் தனித்தமிழையே பேணல். 5. தமிழ் நாட்டின் அரசு, அறமன்றங்கள், கல்வி நிலையங்கள் யாவும் தமிழிலேயே - தனித் தமிழிலேயே நடைபெறல் வேண்டும். 6. இத்துறைகளில் ஆங்கிலமோ இந்தியோ கூடாது. 7. ஒரு சிலர் தாய்மொழியன்றிப் பிற மொழிப் பயிற்சிகளை ஆராய்ச்சிக்காக மேற்கொள்ளலாம். அரசியற் கருத்துக்கள் 1. ஏழை எளியவர்கள் என்றில்லாமல் மக்கள் அனைவரும் எல்லா வாழ்க்கை நலங்களையும் வளமாகத் துய்த்தற்கான நல்லரசு அமைதல்வேண்டும் (பொதுவுடைமை போன்றது) 2. அரசியற் கொள்கைகளால் தமிழ் மக்கள் தம்முள் கருத்து வேறுபாடு கொள்ளல் கூடும். ஆயினும், மேற்கூறிய தமிழர்தம் கடவுட்கொள்கை, மன்பதைக் கொள்கை, மொழிக் கொள்கை களில் மாறுபாடு கூடாது.