kiwkiya«-- 15 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) கடிதம்  முன்பனிக்கால உபந்நியாசம் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+288 = 320 விலை : 400/- மறைமலையம் - 15 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. . யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) தமிழைத் தமிழாக வாழ்விக்க உறுதிபூண்டவர் தமிழ் மொழியில் படிந்த எல்லைமீறிய பிறமொழி மாசினை களைந்து தமிழின் தூய்மையினைப் பேணி, தமிழைத் தமிழாகவும், தமிழனைத் தமிழனாகவும் வாழவைத்த பெருமை மறைமலையடி களாருக்கே உண்டு. தனியொரு மானிடனாக நின்று தன்னை எதிர்த்த எதிர்ப்புக் களையெல்லாம் துகளாக்கி வெற்றிக்கண்டவர் மறைமலையடிகளார். தனியொரு மானிடரால் இவ் வெற்றியை ஈட்டமுடியுமெனில் தமிழினம் ஒருங் கிணைந்து தன்னிலை உணர்ந்து தமிழைத் தமிழாக வாழ்விக்க உறுதிபூணில் எவரும் அதனை தடுக்க முடியாது. - ஈழத்து அறிஞர் ஈழவேந்தன் தமிழக மறுமலர்ச்சியின் தந்தை மறைமலையடிகள் மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்க மிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்ப்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார். சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம் நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணிய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத் திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தை யும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக் காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழ வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித் தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தி யோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திர வேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் தனிப்பெருந் தமிழ் மீட்பர் மறைமலையடிகள் கல்விக் கடல்; தமிழ் ஆங்கிலம் சமற்கிருதம் ஆகிய மும்மொழி வல்லுநர்; மருத்துவம், கருநூல் (Embryology), தொலைவுணர்வு (Telepathy), மனவசியம் (Mesmerism), அறிதுயில் (Hypnotism) முதலிய பல்கலை யறிஞர்; நூலாசிரியர், நுவலாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், பதிப்பாசிரியர், ஆய்வாசிரியர் ஆகிய பல்வகை யாசிரியர்; அடக்க மும் அஞ்சாமையும் உண்மை யொப்புக்கொள்வும் குலமத வேற்றுமை யின்மையும் கொள்கைக் கடைப்பிடிப்பும் கொண்ட பண்பாட் டாளர்; நாட்டிற்கும் மொழிக்குமன்றித் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; மாபெருந் தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பேராசிரியரும் தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு தெரியாது, நூற்றிற் கெண்பது விழுக்காடு வடசொற் கலந்து தமிழைப் பேசியும் எழுதியும் பாடியும் வந்த காலத்தில், தமிழ்ப்பயிர் அயற்சொற்களால் நெருக்குண்டு அடி யோடழிந்து போகவிருந்த நிலையில், 1916ஆம் ஆண்டிலிருந்து வடசொற் களை அறவே களைந்து, தூய தீந்தமிழில், உரைநடையும் செய்யுளுமாகிய இருவகை வடிவிலும், அறிவியல், சமயம், வரலாறு, ஆராய்ச்சி, திருமுகம், உரை, மொழிபெயர்ப்பு முதலிய பல துறையிலும், ஐம்பான் அருநூல்களை வெளியிட்டு, தமிழில் எந்நூலையும் இயற்றவும் மொழிபெயர்க்கவும் இயலும் என்பதைக் காட்டி, தமிழ் வரலாற்றின் மூன்றாங் காலமாகிய மறுமலர்ச்சித் தனித்தமிழ் ஊழியைத் தொடங்கி வைத்தவர்; முதன் முதல் தனித்தமிழ்த் திருமணஞ் செய்து வைத்தவர்; Can Hindi be the Lingua Franca of India? (இந்தி இந்தியப் பொதுமொழியாயிருக்க இயலுமா?) என்னும் ஆங்கிலச் சிறுநூலில், அறிவியன் முறையிலும் ஏரண முறையிலும் கட்டாய இந்திக் கல்வியை வன்மையாகக் கண்டித்தவர்; இறுதிவரை எழுத்தாலும் சொற்பொழிவாலும் அருந்தமிழ்த் தொண்டாற்றியவர்; இன்றும் இனி என்றும் ஈடிணை யற்றவர்; பல்லவபுரம் பொதுநிலைக் கழகத் தலைவர் மறைமலை யடிகள். மறைமலை யென்னும் மறையா மலையின் நிறைநிலை வாரத்தே நிற்க - இறையும் தமிழன் வடமொழித்தீத் தாழ்வின்றி வாழ இமிழுங் கடல்சூழ் இகம். பாவணர் தமிழ்க் களஞ்சியம் பக். 145- 146 நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி` புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா முன்பனிக்கால உபந்நியாசம் 1906 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... 1905இல் தமிழகத்தின் பல ஊர்களில் சைவ சித்தாந்தம் தொடர்பாக மறைமலையடிகள் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து `முன்பனிக்கால உபந்நியாசம் என்ற தலைப்பில் 1906இல் மறைமலை யடிகளே நூலாக வெளியிட்டுள்ளார். 110 ஆண்டு களுக்குப் பிறகு மீள்பதிப்பாக இந்நூல் வெளி வருகின்றது. மூன்று சொற்பொழிவுகளை உள்ளடக் கியதே இந்நூல் - கோ. இளவழகன் பொருளடக்கம் முதலாம் உபந்நியாசம் பக்கம் சைவ உபய தீபங்கள் 5 இரண்டாம் உபந்நியாசம் சிவஞானபோதம் 25 மூன்றாம் உபந்நியாசம் 1. மெய்கண்ட தேவர் 46 2. அத்துவித சொரூபம் 62 3. தமிழ் நான்மறையின் தெய்வீக உண்மை 75 4. சிவராஜயோகம் 95 5. ஹடயோக பிரணாயாமம் 127 6. பக்தியோகம் 148 7. பிரணவ இரகசியம் 165 8. இந்துசமய உண்மைகள் 174 9. அறிவு 181 10. ஆன்மா 184 11. கன்மம் 188 12. முற்பிறவி பிற்பிறவி 189 13. பரமான்மா 193 14. மாணிக்க வாசகர் காலம் 200 15. மானத சாதிரம் மனோசக்தி 223 16. ஆகாரம் - 1 229 17. ஆகாரம் - 2 237 18. சாதிவித்தியாசமும் போலிச்சைவரும் 241 19. மாதா உலகசக்தி 264 உ திருச்சிற்றம்பலம் முதல் உபந்நியாசம் சைவ உபய தீபங்கள் சைவமென்பது யாது? அச்சைவத்தினைப் பிரகாசப் படுத்திய உபயதீபங்கள் அல்லது இரண்டு விளக்கங்கள் யாவை? என்று விசாரணை செய்யப் பிரவேசிக்கின்றமை யால் இன்று உபந்நியசிக்க எடுத்துக்கொண்ட அரும்பெரும் விஷயத் திற்குச் சைவ உபய தீபங்கள் என்னும் பெயர் புனைந்து கொள்ளப் பட்டது. இந்த நிலவுலகத்திலே பிறந்து இருந்து இறந்து போகின்ற சீவர்களுக்குள்ளே சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து உணர்ச்சிகள் மாத்திரம் வாய்க்கப் பெற்று, இவ்வைந்துணர்வு களினும் மேம்பட்டு இவை தம்மை யெல்லாம் நல்லது தீயது என்று பகுத்தறியும் விவேகம் பொருந்தப்பெறாத மிருகராசி களை யொழித்து மிக அரிதிலே கிடைக்கப்பட்ட மக்கட் பிறவியினையுடைய சீவர்களுக் கெல்லாம் இவ்விவேகவுணர்வால் இந்தவுலகத்திற் பெறப் படாத ஓரரும்பெருந்தனம் கைவசத்திலே இருக்கக் காண்கின்றேம். இந்த அசேதன வுலகத்தில் அசேதன முயற்சியால் தொகுத்துக் கொள்ளப்படுகின்ற பெருங் குவியலான பெரும் பொரு ளெல்லாம் எம்முடைய இவ்வசேதன சரீரம் இவ்வசேதன வுலகத்தில் நடைபெறுங் காறும் ஒரு சிலர்க்கு மாத்திரம் ஒவ்வொரு வகையாற் பயன்பட்டு அழிவெய்தி மறுமையிற் செல்லும் சைதன்னிய ரூபியான எமக்குச் சிறிதும் பயன்படுவ தில்லை. இது தெய்வச் சிதம்பரத்தேவா வுன்சித்தந் திரும்பிவிட்டாற் பொய்வைத்த சொப்பனமா மன்னர் வாழ்வும் புவியுமெங்கே மெய்வைத்த செல்வமெங்கே மண்டலீகர்தம் மேடையெங்கே கைவைத்த நாடகசாலை யெங்கே யிதுகண்மயக்கே. என்று அற்புத வைராக்கிய சுத்தசிவஞான சிரேட்டராகிய பட்டினத்தடிகள் திருவாய் மலர்ந்தருளிய திருவாக்கான் இனிது விளங்கும். இத்தன் மையதான அசேதன செல்வம் போலாது, ஆன்மாவின் ஞான மென்னுங் களஞ்சிய அறை யிலே வைத்துப் பாதுகாக்கப்படுவதாய், அழியுந் தன்மைத் தான சரீரத்தை மாத்திரம் போஷிப்பதற்கு அனுகூலமான அசேதன திரவியம் போலாது ஆன்மாவின் சிற்சக்தியான சரீரத்தைப் போஷிப்பதற்கு மிக இயைந்த திரவியமான சமய உணர்ச்சியானது அநாகரிக சாதியார் முதல் நாகரிக விருத்தியுடையார் ஈறாக எல்லார்க்கும் பொதுமையாய் நிகழக் காண்கின்றோம். இனி இந்தச் சமயம் என்னுஞ் சொல்லால் பொழுது, அல்லது காலம், அல்லது அவசரம் என்னும் பொருள் பெறப் படுகின்றது. பஞ்சேந்திரிய உணர்வுகளும் ஒருகாலத்து ஒருங்கு சேர்ந்து ஐந்து விடயங்களையும் ஒன்றாய் அனுபவியா மையால், அவ்விந்திரியங்கள் ஒவ்வொன்றன் வழியாயும் தனித்தனியே பிரவேசித்து அவ்வவற்றை விடயிக்கின்ற ஆன்மாவானது அவ்வவற்றை அங்ஙனம் தனித் தனியே விடயிக்கும் அவசரம் உண்டாகின்றது. இவ்வாறு காலத்தினால் வரையறுக்கப்படுதல் ஏகதேச வியாபகமுடைய சீவான் மாவுக் கன்றிச் சருவ வியாபகமுடைய பரமான்மாவுக்கு இல்லையாம். சலன முடைய பொருள்களுக்கே காலமும், இடமும் உண்டாம். ஏகதேசப் பட்ட வியாபகமுடைய சாத்தான் என்பான் கங்கைக் கரையிலிருந்தான் என்றவழி இறந்தகாலமும். காவிரிக்கரையி லிருக்கின்றான் என்னும் வழி நிகழ்காலமும், கன்னித் துறை யிலிருப்பான் என்புழி எதிர்காலமும் கங்கை, காவிரி, கன்னி என்னும் இடங்களும் பெறப்படுகின்றன. இங்ஙனங் காலவேறு பாடுகளும் இடவேறுபாடுகளும் ஏகதேசவியாபகமும் சலன முடைய சீவான்மாக்களுக்கே உள்ளனவாதல் தெற்றென விளங்கும். இனி அச் சாத்தன் என்பான் அவ்வாறு ஏகதேசப் படுதலும் சலித்தலும் இல்லாது எங்கும் உள்ள அறிவுப் பொருள் என்று சிந்திக்கக் கூடுமாயின், கங்கை, காவிரி, கன்னி முதலான எல்லா இடங்களிலும் சலனமின்றி ஏககாலத் துள்ள அவனுக்கு அங்ஙனங் காலவேறுபாடும் இடவேறு பாடும் ஒருவாற்றா னும் சொல்லல் ஏலாதென்க. நேற்றும் இன்றும் நாளையும் கங்கை, காவிரி, கன்னி என்னுஞ் சருவதானங் களினும் ஒருங்கு வசிப்பானை நோக்கி இவன் கங்கைக் கரையிலிருந்தான், காவிரிக் கரையிலிருக்கின்றான், கன்னித் துறையிலிருப்பான் என்று வழங்குவேமாயின் அஃது உண்மைக்கு மாறாய் எல்லாரானும் நகையாடற் பாலதாய் முடியும். எவ்வாறெனின், சருவ வியாபகமாயுள்ள ஆகாயத்தை நோக்கி இது கங்கைக் கரையிலிருந்தது எனவும், இது காவிரிக்கரை யிலிருக்கின்ற தெனவும், இது கன்னித்துறையி லிருக்குமெனவுங் கூறுவார் உலகில் இல்லையன்றே! அதுபோலச் சருவவியாபியாய் எங்கும் நிறைந்திருக்கின்ற எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குக் காலமும் இடமும் இல்லை; அவன் காலத்திற்கும் இடத்திற்கும் அதீதமாவன்; அவன் அவற்றின் உள்ளே மாத்திரம் இருப்பான் அல்லன்; அவற்றின் உள்ளும் புறம்பும் அவற்றின் மேலும் வியாபிப்பன் என்றறிக. இது பற்றியன்றே சிவஞானச் செல்வ ரான ஸ்ரீதாயுமான சுவாமிகள் அங்கிங் கேனாதபடி யெங்கும் ப்ரகாசமாய் என்று திருவாய் மலர்ந்தருளியதூஉ மென்க. சகலாகம பண்டித மெய் கண்ட சந்தான துவிதீய ஆசாரிய சுவாமி களான அருணந்தி யடிகளும், உலகினை யிறந்து நின்றதரனுரு வென்பதோரார் உலகவ னுருவிற்றோன்றி யொடுங்கிடு மென்றுமோரார் உலகினுக் குயிருமாகி யுலகுமாய் நின்றதோரார் உலகினுள் ஒருவனென்ப ருருவினையுணரா ரெல்லாம் என்று கட்டளையிட்டருளியது. ஈசாவாசியோபநிடதச் சுருதியும் அசைவில்லதாய் ஏகமாய் மனோவேகத்தினும் மிக்குச் செல்வதாகிய பிரமான்மா அநாதிதொட்டே இந்திரியங்களின் உட்பொருளா யிருத்தலால் அதனை யிந்திரியங்கள் அணைந் தறியமாட்டா, மற்றை அந்தக் கரணங்களுள்ளும் அஃதுள் ளுறையாயிருத்தலால் அவையும் அதனை அணுக மாட்டா, ஆகலின் அப்பரம் பொருட் சொரூபத்தினின்று தோன்றும் பரிசுத்த வாயுவே ஏனை எல்லாவற்றினையுஞ் சேட்டைப் படுத்துகின்றது என்று என்னும் வாக்கியத்தாற் கூறுகின்றது. ஆகவே ஏகதேச இலக்கணந் தீண்டப்பெறாத பரமான்மாவை யொழித்து அவ்விலக்கணந் தீண்டப் பெறுகின்ற சீவான்மா ஒன்றே காலபேதம் அவசரபேதம் உடையதென்று துணியப் படும். இனி ஏகான்ம வாதஞ் சாதிப்பார் மதம்பற்றிக் கடங்க டோறும் உள்ள, சலத்தின் கண்ணே தோன்றுஞ் சந்திர விம்பம் சலத்தின் அசைவாற்றானும் அசைவது போற் றோன்றினும் உண்மையாக நோக்குமிடத்து அச்சலனம் அதற்கு இல்லாமை போலச் சரீரங்கடோறும் பிரதிபலிக் கின்ற சிற்பிரமத்தின் விம்பமாகிய ஆன்மாப் பஞ்சேந்திரியங் களாற் சலனமுறுவது போற்றோன்றினும் அஃதியற் கையில் அங்ஙனம் சலிப்புறு வதில்லை யென்று உரையாமோ வெனின்;--அது பொருந்தாது. எம்முடைய சரீரத்திலுள்ள சோத்திரம் தொக்கு சட்சுசிங்குவை ஆக்கிராணம் என்னும் அப்பஞ்சேந்திரியங்களும் பிறிதொன்றன் உதவியை வேண்டாது தாமே இயங்குவனவாயின் அவை எப்போதுஞ் சலித்துக் கொண்டே யிருத்தல் வேண்டும்; சாக்கிரத் திலன்றிச் சொப்பணம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னுங் கேவலாவத்தை நான்கினும் அவை யியக்கமின்றிக் கிடத்த லானும், இனிச் சாக்கிரத்திலேயும் அவை இயங்குங் காலத்து ஐந்தும் ஒருகாலத்து ஒருபொருளை விடயிக்க மாட்டா என்பது அழகிய வோர் பொருளை உற்றுக் காணு மிடத்துச் செவியொன்றைக் கேளாமையினும் இனிய ஓர் சங்கீத ஓசையைக் கேட்டு அறிவு அதன் வசப்பட்டு நின்றுழிக் கண் ஒன்றைக் காணாமையினும் வைத்து அறியக் கிடத்த லானும், இனி யிப்பஞ்சேந்திரியங்கள் ஐந்தினும் பற்றறப் பிரிந்து மனம் ஒன்றை நாடும் வழி அவை இயங்காது கிடத்த லானும் அவ்வைந்துந் தாமே இயங்கப் பிரம பிரதிபலன் சீவான் மாச் சலனமின்றி யிருக்குமென்று உரைத்தல் ஏலாதென்க. சீவான்மா மனத்தைப் பற்ற மனம் இந்திரியங்களைப் பற்ற இந்திரியங்கள் நடை பெறுகின்றன என்பதே உண்மையாம். இஃது அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் அறிவதைம்பொறியே யென்னின் உறக்கத்தினறியாவாகும் அறிவது மொன்றொன்றாக வொன்றொன்றாயறிவதென்னின் அறிவுகள் ஒன்றை யொன்றங்கறிந்திடா வைந்தையுங்கொண் டறிவ தொன்றுண்ட தான்மா வைம்பொறி யறிந்திடாவே என்றருருளிச்செய்த சிவஞான சித்தித்திருவாக்கான் நன்கறியப் படும். மேற்கூறியவாற்றால், ஆன்மாப் பஞ்சேந்திரியங்களை விடயிக்குங் காலத்துச் சத்தத்தை யறியுஞ் சமயமும், பரிசத்தை யறியுஞ் சமயமும், ரூபத்தை யறியுஞ் சமயமும், இரசத்தை யறியுஞ்சமயமும், கந்தத்தை யறியுஞ் சமயமும் தனித்தனியே நிகழா நிற்கின்றன. இனி இப்பஞ்சேந்திரிய உணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கு உள்வழியும் ஆன்மாக்கள் ஒரு சிலர்க்கு ஏனை இந்திரிய உணர்வுகளினுங் கந்த உணர்விற் பிரியம் மிகுதி யுண்டாய்ப் பலவகைப்பட்ட நறிய வாசனைகளை அனுபவித்தலிலே இன்பஞ் செல்லும்; அவர் அக்கந்த உணர்வினையே மிகுதியும் பாராட்டிப் பேசுவர். வேறு சிலர்க்கு இரசவுணர்விற் பிரியமிகுதி யுண்டாய்த் தித்திப்புப் புளிப்புக் கார்ப்புக் காழ்ப்புக்கைப்பு உவர்ப்பு என்னும் அறுவகைப் பட்ட உணவுகளைப் பலதிறத்தாற் பாகஞ் செய்து சுவைத்தலிலே இன்பம் செல்லும்; அவர் சுவை யுணர்வினையே மிகுதியும் பாராட்டிப் பேசுவர். இவ்வாறே சிலர்க்கு ரூப வுணர்விலும் சிலர்க்குப் பரிசவுணர் விலும் சிலர்க்குச் சத்த வுணர்விலும் மிகுதியும் பிரியமுண்டாய் மற்றை யுணர்வுகளை யிழித்துப் பேசுவர். இங்ஙனம் அவரவர் தத்தமக்கியைந்தவற்றை மிகவும் பாராட்டி அவ்வவற்றையே உயர்த்துப் பேசுவது அவசரபேதம் அல்லது சமயபேதம் என்று தெளியப்படும். இனி எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற திருவாக்கின்படி இப்பஞ் சேந்திரிய வுணர்வுகளுள்ளும் இயற்கையிலே மிகச் சிறந்ததியாது? என்று நியாய நெறியால் விசாரணை செய்யப் புகுவானுக்குச் சத்த வுணர்வே சிறந்த தென்பது இனிது விளங்கும். சீவான்மாவின் ஏகதேவ ஞானத்தை விரிவுசெய்து விளக்குதற்கு இன்றி யமையாது வேண்டப்படும் ஞானநூற் கேள்வி களெல்லாம் செவிக்கருவி யினையே துணையாய்க் கொண்டு நடைபெறு கின்றனவாகலின் அச்செவிக் கருவியினுள்ளமைந்த சத்த வுணர்வே மற்றை யிந்திரிய வுணர்வுகளினெல்லாம் சிறந்த தென்று துணியப்படும். இது பற்றியே தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனாரும் செவிக்குண வில்லாத போது சிறிது வயிற்றுக்கு மீயப்படும் (குறள் 412) என்று திருவாய் மலர்ந்தருளினார். அற்றேல், இப்பஞ்சேந்திரிய வுணர்வின் வழிப்பட்ட ஆன்மாவின் அவசர பேதங்களை யெல்லாம் சமயங்கள், மதங்கள் என்று வழங்காமை என்னையோவெனின்;-- வளத்திடைமுற்றத் தோர்மாநிலமுற்றுங் குளத்தின் மண்கொண்டு குயவன்வனைந்தான் குடமுடைந்தாலவை யோடென்று வைப்பர் உடலுடைந்தா லிறைப்போதும் வையாரே எனவும் எரியெனக் கென்னும் புழுவோ வெனக் கென்னு மிந்த மண்ணுஞ் சரியெனக் கென்னும் பருந்தோ வெனக் கென்னுந் தான்புசித்த சரியெனக் கென்னும் புன் னாயெனக் கென்னு மிந்நாறுடலைப் பிரியமுடன் வளர்த்தே னிதனாலென்ன பேறெனக்கே எனவும் முடிசார்ந்த மன்னரு மற்றுமுள்ளோரு முடிவிலொரு பிடிசாம்பராய் வெந்து எனவும் எழுந்த திருவாக்குகளின்படியே இன்னகணத்தில் மாய்வ தென்றறியப்படாத வண்ணம் சடுதியிலே மாய்ந் தொழியும் இம்மனித சரீரத்தோடு, அப் பஞ்சேந்திரிய இன்பானுபவங் களும் இறந்தொழியக் காண்கின்றமை யாலும், இங்ஙனம் இடையிடையே யழிந்தொழியும் அவ்வின்பானுபவங் கள் சீவான்மாவினைக் கடைத்தேற்று தற்கு ஒரு சிறிதும் பயன்படா மையானும் அவற்றை யெல்லாம் வெறுத்துப் பகிர் முகமாகச் செல்லும் நம் ஆன்ம அறிவினை அந்தர் முகமாக உள்ளிழுத்து நானா ரென்னுள்ளமார் ஞானங்களா ரென்னை யாரறி வார் என்ற அருமைத் திருவாக்கின்படி ஆ! நான் யார்? விவித பேதங் களோடு அதிவிசித்திரமாய் அமைந்திருக்கும் இப்பிரபஞ் சங்கள் யாவை? இவற்றிடையில் யான் வந்து பிறந்ததேன்? பிறந்துபல வகைத் துன்பங் களை அனுபவித்து மிக வருந்தும் போதும் அவற்றை யிடை யிடையே மறந்து நான் எப்போதும் இவ் வுலகத்திற் சாசுவதமாய் இருப்பது போல் நினைப்பதேன்? என்மனைவி, மக்கள், சுற்றத்தார், பிறர் என்னுமிவர்க்கும் எனக்குமுள்ள சம்பந்தம் என்னை? மற்றை யோரிடத்திலெல்லாம் யான் அன்புடையனாய் ஒழுகாது என் மனைவி, மக்களிடத்தே மாத்திரம் யான் அளவிறந்த அன்பு பூண்டு ஒழுகுவது என்ன அறியாமை? யான் இறக்குங் காலத்து அவர் அவ்விறப்பினை நீக்குவரா? யான் பிறக்குங்காலத்து அவர் அப்பிறப்பினை நீக்குவரா? யான் துன்புறுங்காலத்து அவர் அத்துன்பத்தை நீக்குவரா? இவர்களெல்லாம் அந்தோ! எம்மைப்போலவே துன்புறுகின்றார்கள், பிறக்கின்றார்கள், இறக்கின்றார்கள்; சாவார்க்குச் சாவாரும், துன்புறுவார்க்குத் துன்புறுவாரும் துணையாவதி யாங்ஙனம்? ஐயோ! இப்பிறப்பினுந் துன்பத்தினும் எவ்வாறு நீங்குவேன்! இறக்க வேண்டுமே என்பதனை நினைக்குங் காலத்து என்னெஞ்சம் பகீரென்று துணுக்குறு கின்றதே! யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன் என்ற மேலோர் திருவாக்கு இடையறாது என்னுள்ளத்திற் றோன்றி என்னை வருத்துகின்றதே! என்று இப்படி யெல்லாம் ஆன்மவறிவானது உள்மடங்கிப் பஞ்சேந்திரிய சேட்டை யெல்லாம் ஒடுக்கிக் கொண்டு சிந்தனை செய்யும் அவசரந்தான் ஆன்மாக்களுக்கு என்றும் மாறாது நிகழும் சமயமாதலின் இம்மானசிக அவசரமே சமயம் அல்லது மதம் என்று ஆன்றோரான் வழங்கப்பட்டது. என் அருமைச் சகோதரர்களே! திராவிடமேன் மக்களே! முன்னே காட்டியபடி எப்படியானால் நமது ஆன்ம ஞானமானது பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டு நடைபெறுங் காலத்து அதுவதுவாய் நின்று விஷயங்களைப் புசித்துத்தான் மிக விரும்பிய தொன்றனை அபிமானத்தால் உயர்த்துப் பேசுதல் போல, நமது மானசிக தர்மத்தால் பரிசீலனஞ் செய்யப் படுகின்ற தத்துவ விசாரணைகளும் பல திறப்படுகின்றன. அறிவு நிரம்ப வில்லாது தாழ்ந்த பக்குவத்தின் கண்ணராய் நிற்கின்ற ஆன்மாக்கள் தத்துவங் களைப் பிரித்துப் பிரித்து ஆயும்போது அவர்கள் அறிவு மேற்பட்ட தத்துவங்களிற் பிரவேசியாமை யால் தமக்குத் துணையாவன பிருதிவி அப்புத்தேயு வாயுக்களே யாமென்றும், இந்நாற்பூதக் கூட்டத்தினாற் றோன்றிய அண்டாமாகிய இப்பிரபஞசமும் பிண்டமாகிய இச்சரீரமுமே மெய்யென்றும் நிச்சயித்தலி னால் உலகாயத மதம் தோன்றுவ தாயிற்று. இவ்வாறே இவர்க்கு மேற்பட்ட பக்குவத்தினை யுடையாரால் இந்திரியான்ம வாதமும் இவர்க்கு மேற்பட்ட பக்குவத்தினை யுடையாரால் அந்தக் கரணான்மவாதமும், இவர்க்கும் மேற் பட்டாராற் பிராணான்ம வாதமும், இவர்க்கும் மேற் பட்டாரால் விஞ்ஞானான்ம வாதமும் இவர்க்கும் மேற் பட்டாராற் சீவப்பிரமவாதமு மெனப் பலப்பலவான மதங்களும், பலப் பலவான தத்துவ விசாரணைகளும் பலதிறப்பட்டுத் தோன்றின. இவற்றுள் ஒன்றே மெய்ந் நிலையாய்ப் பெறப்படுமாயினும் ஏனைய வெல்லாம் பொய்யென்று கழிக்கப்படாமல் அம்மெய்ந் நிலையினைப் பயப்பதற்குரிய சோபான நிலைகளாய் நிலை பெறுவனவாம். முன்னே காட்டிய வண்ணம் எப்படியானால் சத்தப் பரிசரூபரச கந்தம் என்னும் பஞ்சேந்திரிய வுணர்வுகளுள் சத்தவுணர்வே ஏனை எல்லாவற்றினும் மிகச் சிறந்ததாயினும் அவை யொவ் வொன்றும் ஏனையதன் வளர்ச்சிக்குக் காரணமாய்ப் பயன்படுதல் போலவும், மனிதப் பிறவியினுள் குழவிப்பருவம் பாலப்பருவம் மனிதப்பருவம் விருத்தப் பருவம் என்பன வற்றுள் விருத்தப்பருவமே அறிவு மிகச் சிறந்ததாயினும் அதனை எய்துதற்கு ஏனைமூன்று பருவங்களும் ஒன்றற் கொன்றுபகாரமாய் இன்றியமையாது வேண்டப் படுதல் போலவும், மெய்ந்நிலைச் சித்தாந்தமாய் முடிக்கப்படும் ஒரு மெய்ச் சமயத்தினைச் சென்றடைதற் குரிய பேரறிவினைப் பெறுதற் பொருட்டு மிகத் தாழ்ந்த பக்குவத்திலே தோன்றிய சிற்றறிவுச்சமய முதலிய எல்லாம் ஒன்றற்கொன் றுபகாரமாய் மிகுதியும் பயன்படுதலுடையன வாம். ஈசுரனும் ஆன்மாவும் இல்லையென்று சொல்லுகிற நாத்திகமத முதற்கொண்டு பரம வேதாந்த சித்தாந்த முடிநிலைச் சமரசானுபவ நிலையாயுள்ள மெய்ச்சமயங் காறுமுள்ள சருவ ஆன்மாக்கட்கும் ஈசுரனது அனுக்கிரகப் பேறு உண்டென்பது துணிபொருளாம். இது திராவிட சுருதியுள், விரிவிலா வறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாமே என்று பெறப்பட்டமையாலும், திராவிட ஆகம சித்தாந் தத்துள், அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொரு ளாய் என்று வலியுறுத்தப்பட்டமையானும் இனிது விளங்கும். இனி இப்பெற்றிப்பட்டதத்துவ விசாரணையின் அவசர பேதங்களை யெல்லாம் கடந்து மேல் நிலைக் கண்ணே சென் றானுக்குக் கீழ் நிலைக் கண்ணுள்ளன வெல்லாம் பொருளல்லன வாய்த் தோன்றுமாகலின் அதுபற்றி அவன் அவமதிக்கப் படுவானல்லன். அந்த மேனிலைக் கண்ணே நின்று பேரின் பானுபவத்தை நுகர்ந்து கொண்டு, சோம்பரிருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பது சுத்த வொளியிலே சோம்பருணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பர் கண்டாரச் சுருதிகட் டூக்கமே என்றபடி எவ்வகைச் செயலுமில்லாத சுத்த சோம்பராய், பூதமுங் கரணம் பொறிகளைம் புலனும் பொருந்திய குணங்களோர் மூன்றும் நாதமுங் கடந்த வெளியிலே நீயு நானுமாய் நிற்குநாள் உளதோ வாதமுஞ் சமயபேதமும் கடந்த மனோலயவின் பசாகரனே ஏதுமொன்றில் லேன்யாது நின்செயலே யிறைவனே ஏகநாயகனே என்ற வண்ணம் எல்லாம் இறைவன் செயலே தஞ் செயலாய்க் கொண்டாராய் உள்ள பிரமஞானிகளுக்கு ஏனைய வெல்லாம் வெறும் போலிகளாய் ஒழிதல் பொருத்தமேயாம். அங்ஙனம் அவர்க்குத் தோன்றுதல் பற்றி அவர் மற்றைச் சமயங்களை இகழ்ந்தார் எனத் திரித்துணர்ந்து அவரைப் புறம் பழித்தல் பொருந்தாதாம். அது நிற்க. இனி இங்ஙனம் ஆன்மஞான அவசர பேதங்களாய்த் தோன்றிப் பல்வகைச் சமயங்களுட் பிரதமத்தில் விசாரணை செய்தற் பொருட்டெடுத்துக் கொண்ட சைவம் என்பது அதிதீவிர பக்குவத்தினையுடைய ஓரான்மாவானது தன் ஏகதேச வியாபக சீவலக்கணத்தை விட்டுப் பெருவியாபகத்த தாய் நின்று சிவம் என்னும் முழுமுதற் பரம் பொருளைத் தலைப்பட்டு நின்ற அவசரமாம். இது தெய்வஞ் சிவனே சிவனருள் சமயஞ் சைவஞ் சிவத்தொடு சம்பந்தமென்றான் சைவம் வளர்க்குஞ் சம்பந்த மூர்த்தி என்ற திருவாக்கான் அறியற்பாலதாம். இங்கே சிவம் என்று பிரதிபாதிக்கப்பட்ட பொருள் அசுத்தமாயையிற் றோன்றிய சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக்குண வயப்பட்ட மும்மூர்த்திகளுள் ஒருவன் அல்லன் அது, என்றும் என்றும் போந்த பஞ்ச பிராமண சுருதியானும், தேவர் கோவறியாத தேவதேவன் என்னுந் திருவாசகச் சுருதி யானும் அறியற்பாலதாம். இன்னுமிது. சிவனொடொக்குந் தெய்வம் தேடினு மில்லை என்னுந் திருமந்திரத் தானும் உணரப்படும். சிவம், பிரமம், கந்தழி யென்பன ஒரு பொருட்கிளவிகள். இவற்றுட் கந்தழி என்பது ஆசிரியர் தொல்காப்பியனாராற் சிவம் என்பதற்குப் பிரதி பதமாக வைத்துக் கொடிநிலை கந்தழி வள்ளியென்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (தொல் - பொருள் - 88) என்று திருவாய் மலர்ந்தருளப்பட்டது. இதற்குரை கண்ட பேரறிவாளரும், பச்சை மாலனைய மேகம் பௌவ நீர்பருகிக்கான்ற எச்சினாற்றிசையு முண்ணுமமிழ் தெனவெழுநா வெச்சில் மெய்ச்சி நாணாளும் விண்ணோர் மிசைகுவர் வேதபோதன் நச்சினார்க் கினிய னெச்சில் நறுந்தமிழ் நுகர்வர் நல்லோர் என்றும், எவனாலவாயிடைவந் தமுதவாயுடைய னெனவியம்பப்பெற்றோன் எவன் பண்டைப் பனுவல் பல விறவாது நிலவவுரை யெழுதி யீந்தோன் எவன் பரமவுபகாரி எவன் நச்சினார்க்கினியனெனும் பேராளன் அவன் பாதவிருபோது மெப்போலு மலர்கவெனதகத்துமன்னோ என்றும் ஆன்றோராற் சிறப்பிக்கப்பட்டவருமான ஆசிரியர் நச்சினார்க்கினியர் கந்தழி என்பது ஒருபற்றுமன்று அருவாய்த் தானேயாய்த் தத்துவங்கடந்த பொருள் என வுரை கூறி, இதனியல்பை ஸ்ரீமந் மாணிக்கவாசக சுவாமிகள் உய்த்துணர வைத்து உற்றவாக்கையி லுறுபொருள் நறுமலரெழுதரு நாற்றம்போற் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே பெற்றவாபெற்ற பயனது நுகர்த்திடும் பித்தர்சொற் றெளியாமே அத்தனாண்டுதன் னடியரிற் கூட்டிய அதிசங்கண்டாமே என்று திருவாய்மலர்ந்தருளிய அருமைத் திருவாக்கினை எடுத்துக் காட்டி என்று அதனை உண்மையான் உணர்ந்தோர் கூறியவாற்றானுணர்க என்று அதற்கு உதாரணமுங் காட்டி னார். எமக்கரிய நண்பர்களே! ஆ! பாருங்கள்! உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினிய ரென்னும் புலவர் பெருமானே ஸ்ரீமந் மாணிக்க வாசக சுவாமிகளை அதனை உண்மையான் உணர்ந்தோர் என விசேடித்து ரைத்தமையால் கந்தழியி னியல்பை அத் திருவாக்கே இனிது விளக்குவதென்பது பெற்றாம். தத்துவங்களாவன பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களும், சோத்திரம் தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணம் என்னும் பஞ்சஞானேந் திரியங்களும், சத்தப்பரிச ரூபரச கந்தம் என்னும் பஞ்சதன் மாத்திரைகளும், வாக்கு பாதம் பாணி பாயுருபதம் என்னும் பஞ்ச கன்மேந்திரியங்களும், மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான் கந்தக் கரணங்களும், காலம் நியதிகலை வித்தை அராகம் புருடன் மாயை என்னும் சத்த வித்தியா தத்துவங்களும், சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் என்னும் பஞ்ச சிவதத்துவங்களுமான முப்பத் தாறு தத்துவங்களுங் கடந்த பரம்பொருள் யாது அது கந்தழி யென்பார் தத்துவங்கடந்த பொருள் என்றும், உருவுடைப் பொருளெல்லாம் அனித்தமாகலின் சிருட்டிக் கப்படும் உருவு டைப் பொருளன்று அக்கந்தழி யென்பார் அருவாய் என்றும், இம்முப்பத்தாறு தத்துவங்களும் அப்பரம் பொருளையின்றி யியங்க மாட்டாவாகலின் அவற்றுள் நின்று அவற்றைச் சேட்டித்தும் தான் தாக்கற்று நிற்குமென்பார் ஒரு பற்றுமற்று என்றும் புலவர் பெருமான் நச்சினார்க்கினியர் இனிது விளக்கி யருளினார். இவரு தாரண மெடுத்துக் காட்டிய திருவாசகத் திருவாக்கு இக் கந்தழியாம் பரம் பொருளியல்பை விளக்குமாறு யாங்ஙன மெனில்;- உற்ற வாக்கையில் உறுபொருள் என்பது இறைவன் தத்துவங்களுள் அருவாய் நிற்றற்கும், நறு மலரெழு தரு நாற்றம் என்பது அவன் சீவான்மாவினுள் அருவுருவாய் நிற்றற்கும் உவமை களாய் எழுந்தன. சரீரத்தி னுள்ளிருக்கும் உயிர் தனக்கென ஓர் உருவின்றித் தான் சார்ந்த சரீரமே தனக் குருவாய்க் கொண்டு நிற்கின்றது. அங்ஙனம் நிற்குமிடத்துத் தான் வேறு உயிர் வேறு என்னும் பேதந் தோன்றாவாறு சாத்தா, கொற்றா என்னும் உடம்புக்கிட்ட பெயரால் அழைத்தவழித் தான் ஏன் என்கின்றது. அங்ஙனம் நிற்பினும் உடம்பு உடம்பே, உயிர் உயிரே, உடம்பு உயிராகாது, உயிர் உடம்புமாய் அதனின் வேறுமாய் நிற்கும். உடம்பு தானே இயங்காது உயிர் இயக்கி னால் இயங்கும், உயிர்தானே யியங்கும் உடம்பினையும் இயக்கும். இதுபோல இறைவன் பிரபஞ்சங்களுட் கலந்து நிற்கும்வழித் தான் வேறு உலகம் வேறு என்னும் பேதந் தோன்றாவாறு அபேதமாய் நிற்கும். இவ்வாறு அபேதமாய் நிற்றல் பற்றியே விசுவம் பிரம்மா என்னும் வாக்கியமும், உலகேழெனத் திசை பத்தெனத் தா னொருவனுமே, பலவாகி நின்றவாதோ ணோக்கமாடாமோ என்னுந் திரவிடோப நிடதத் திருவாக்கும் எழுந்தன. இங்ஙனம் அபேதமாய் நிற்பினும் இறைவன் இறைவனே, உலகம் உலகமே; உலகமிறைவனாகாது, இறைவன் உலகமுமாய் அவற்றின் வேறுமாய் நிற்பன். உலகம்தானே இயங்காது இறைவன் இயக்கினால் இயங்கும்; இறைவன் தானேயும் இயங்குவன் பிறவற்றையும் இயக்குவன். இங்ஙன மெல்லாம் அபேதவொற்றுமை பூண்டு நிற்பினும் இதனாற் சிறிதும் விகாரமுறுத்தப் படுவானல்லன். அது நறுமலரெழுதரு நாற்றம்போல் என்னும் உவமையால் விளக்கப்படுகின்றது. மலர் முகையாய் இருந்துழி அதனுள் அருவாய் இருந்தமணம் அது பருவ முதிர்ந்து மலர்ந்த விடத்து அதனுள்ளும் புறம்புமாய்ப் புலப்பட்டு வியாபித்துத் தான் மலரைப் பற்றிக்கொண்டு நிற்பினும் தான் அம்மலரால் பற்றப்படாது அதனையுங் கடந்து வியாபித்துத் தன் வியாபகத்தினுள்ளே அம்மலரையும் ஏகதேசமாய் அடக்கிக் கொண்டு பேதமும் அபேதமுமாகிய பேதாபேத விலக்கணத் தோடு அதிற் சிறிதும் தாக்கின்றி நிற்றல்போல, இறைவன் ஆணவமலவயப்பட்டுக் குவிந்து நின்ற ஆன்மாவினுள்ளே அருவாய் இருந்து பின் அம்மலத்தடை நீங்கி அது விரிந்த வழி அப்பரமான்மசைதன்னியம் அதன் உள்ளும் புறம்பு மாய்ப் புலப்பட்டு விளங்கித்தான் அம்முத்தான் மாவைப் பற்றி நிற்பினும் தான் அதனாற் சிறிதும் பற்றப்படாது அதனையுங் கடந்து வியாபித்துத் தனது சிதாகாச வியாபகத் திலே அவ்வான் மாவினையும் ஏகதேசமாய் அடக்கிக் கொண்டு பேதமுமாய் அபேதமுமாய்ப் பேதாபேத வியைபுற்று அதிற் சிறிதும் தாக்கின்றி நிற்குமென்க. இங்ஙனம் அசேதனம் சேதனம் என்னும் இருவகைப் பிரபஞ்சத்தினும் பேதாபேத மாகவும் அருவுருவமாகவும் தன்னியல்பிற் சிறிதும் திரிவின்றித் தானேயாய் நிற்கும் இறைவனியல்பை இவ்வுண்மைத் திருவாக்கு உற்றவாக் கையிலுறு பொருள் நறுமல ரெழுதரு நாற்றம்போற் பற்றலா வதோர் நிலையிலாப் பரம்பொருள் என்று இனிது விளக்கினமையும் இவ்வுண்மை யினை ஆசிரியர் நச்சினார்க் கினியர் காட்டினமையும் பெரிதும் நினைவுகூரற் பாலன வாம். இவ்வுண்மை, பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம்போல வுணர்ந்தறிவாளர்க்கு நாவியணைந்த நடுத்தறியாமே என்ற திருவாக்கானும் விளக்கப் பட்டமைகாண்க. அன்பர்களே! இங்ஙனம் கந்தழி, பிரமம் என்னும் பதங்களாற் பிரதிபாதிக்கப்பட்ட சிவம் என்னும் தத்துவங் கடந்த பரம் பொருளை விசாரித்த அவசரமே சைவ சமயம் என்று உணரற்பாற்று. அற்றேல் அப்பரம்பொருளை யாதானு மொரு பெயரால் வழங்கியிடாமற் சிவம் என்னும் சிறப்புப் பெயரால் வழங்குவித்தல் என்னையெனின்;--வேதாகம உபநிடத ஷடதரிசன புராணேதிகாசமாகிய சருவமும் சிவ என்னும் இரண்டெழுத்திலே அடங்குகின்றன. யாங்ஙன மெனின், இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் வேதம் நான்கில் அதர்வணம் என்பது முதன் மூன்றின் மந்திரத் தொகுப்பே யாதலால் அஃதவற்றில் அந்தர்ப்பாவமுறும். ஆகலினாற் றான் அமரநிகண்டுடையார் அம்மூன்றனையுஞ் சுட்டி வேதங்கள் த்ரயீ என வழங்கப் படுமென்றனர். அம்மூன்று வேதங்களுள் நடுநின்ற எசுர் என்றமையால், ஏனை யிரண்டிற்கும் சிரத்தானமாய் நிற்குஞ் சிறப்பு வாய்ந்ததாம். இது மாந்திர மெனவும் பிராமணம் எனவும் இருவேறு பகுதியின தாய் விளங்கா நிற்கின்றது. இவற்றுள் மாந்திரப் பகுதி மறித்தும் ஏழுகண்டங்களாகப் பகுக்கப் பட்டுச் சம்மிதா காண்டம் என்னும் பெயருடைத் தாய்ச் சிறந்து விளங்கு வதாம். இனி யிச்சம்மிதாகாண்டம் ஏழினுள்ளும் நடுக் காண்டமே பெரிதுஞ் சிறப்புடைத்து. இனி யிந்நடுக் காண்டமும் ஏழு சங்கிதைகளாக வகுக்கப் பட்டுள்ளது. இவற்றுள்ளும் நடுநின்ற சங்கிதையுள் திருவுருத் திரத்தின் கண்ணே சதருத்ரீயம் விளங்காநிற்ப, அச்சத ருத்ரீயத்தின் இடையிலே விளங்கும் நமசிவாய என்னும் பஞ்சாக்கர மத்தியிற் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சிவ என்னும் பதத்தால் வேதமும் வேதத்தைச் சார்ந்த கலைகளும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இச் சிவனென்னும் பதம் பிரமமென்னும் பதத்தாற் குறிக்கப்படும் பரம் பொருட்குச் சிறப்புப் பெயராம் என்று தெளியப்படும். இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமாதலால் இத் துணையின் அமைந்து, எடுத்த விஷயத்தின் மேற்றொடர்ந்து செல்வாம். இவ்வாறு சைவம் என்னும் தத்துவ விசார அவசரம் தத்துவாதீதமான பரம்பொருட் சிவ சொரூபத்திலே தலைப்பட்டு நிற்குங் கழிபெருஞ் சிறப்புணர்ந்தன்றே ஸ்ரீ தாயுமானசுவாமிகள். சைவசமயமே சமயம் என்று கட்டளை யிட்டருளி னார். பிற சான்றோரும் சைவத்தின் மேற் சமயம் வேறிலை என்று கூறினார். மற்றைச் சமயங்களெல்லாம் சைவத்திற் குரிய சோபான மார்க்கங்களாய் உபகாரப்பட்டு நம்மாற் கௌரவிக்கப் படுந் தன்மையவாய் நிற்றலின் அவை சைவ சமயிகளான நம்மாற் புறம்பழிக்கற் பாலனவல்லவாம். வேதமென்னும் விருட்சத்தில் இலையும், தளிரும், அரும்பும், மலரும், பிஞ்சும், காயுமாய் மற்றைச் சமயங்களெல்லாம் நிற்ப வேதாந்தம் என்பது அதன் முடிபிற் பழமாய்ப் பழுத்துக் கேவலாத்து விதமாய் நிற்ப அதனைப் பிழிந்து எடுத்த சுத்தாத்துவித சாரமே சைவசித்தாந்த மென்பதனை ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நீயே வேதமென்னும் பாதவம் வளர்த்தனை என்றருளிச் செய்வாராயினர். எம்மரிய ஆப்த சிகாமணிகளே! எமக்கினிய சிவநேயச் செல்வர்களே! இங்ஙனம் சைவ சமயத்தினால் உபதேசிக்கப் படும் சிவ பரம்பொருள் எல்லாத் தத்துவங்களுங் கடந்ததாய்ச், சச்சிதானந்த சொரூபியாய்ச், சருவசத்தியு முடையதாய்ச் சருவத்தையு மறிவதாய்ப், பிறப்பிறப்புக்களிற் படாத திவ்விய அருட்சரீர முடையதாய்ச் சுத்த சைதன்னிய சொரூபியாய் விளங்குவதென்று அறிமின்கள்! இவ்விலக்க ணங்களெல் லாம் ஒருங்குடைய அப்பரம் பொருளைச் சிவம் என்றழைக்க உங்கட்கு விருப்பமில்லையாயின் நாராயணன் என்றழை மின்கள்! பிரமனென்றழைமின்கள்! புத்தனென் றழைமின்கள்! அருகனென்ற ழைமின்கள்! எப்பெயரிட்டு எவ்வெவ்வாறு அழைப்பினும் அப்பெயரெல்லாம் அவர்க்குப் பொருந்தும். வெறும் பெயரிலே நுங்கட்குப்போர் நிகழ வேண்டாம். எங்கும்உள்ள கடவுள் ஒருவனே, சருவ யோகஞான சித்த சிரேட்டரான திருமூலரும் பட்டினத்தடிகளும் ஒன்றே குலமும் ஒருவனே தேவனு நன்றே நினைமினமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந்துய்ம்மினே என்றும் ஒன்றென் றிருதெய்வ முண்டென் றிருவுயர் செல்வமெல்லாம் அன்றென் றிருபசித் தோர்முகம் பார்நல் லறமுநட்பும் நன்றென் றிருநடு நீங்காம லேநமக் கிட்டபடி என்றென் றிருமனமே யுனக்கோருபதேசமிதே என்றும் அருளிச் செய்த உண்மை வாக்கியங்களைக் கடைப்பிடித்து ஒழுகுமின்கள்! நம்முடைய தேசம் மத ஒற்றுமை யில்லா மையால் நாளுக்கு நாள் க்ஷீணதசையை அடைகின்றது. சைவத்தின் முடிபுகள் எல்லாச் சமயங்களுக்கும் பொருத்த மாவனவாம். இதனை நீங்கள் செவ்விதின் மனம் பொருத்தி எல்லாரும் ஒற்றுமையாய் வாழ்மின்கள்! இத்தன்மையவான மத ஒற்றுமையும் சீவகாருணியமும் சைவத்தின் சிறப்பான உண்மைகள் என்பதனையே சைவ சமயாசாரிய மூர்த்திகளுள் முதல்வரான ஸ்ரீமந் ஞான சம்பந்தப் பெருமானும், சைவ சந்தானாசாரியருள் முதல்வ ரான ஸ்ரீமந் மெய்கண்ட தேவரும் உபதேசித்தனர். இச்சைவ உபய தீபங்களான இவ்வாசிரியன்மார் இருவருள் ஞானசம்பந்தப் பெருமான் இற்றைக்கு ஆயிரத்து இரு நூற்றைம்பது வருடங்களின் முன்னே சீர்காழி என்னுந் திவ்விய தலத்திலே அவதரித்தும், மெய்கண்டதேவர் இற்றைக்கு 650 வருடங்களின் முன்னே மகாகவியான கம்பரை வைத்து ஆதரித்து இராம வதாரம் பாடுவித்த வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பபிள்ளை மகளார் மணி வயிற்றிற்றோன்றித் திருவெண்காட்டில் அவதரித்தும் சைவத்தின் அரிய பெரிய உண்மைகளைச் சருவ ஆன்மாக்களும் உய்யும்படி காட்டி நந்தாமணி விளக்கங் களாய்ப் பிரகாசித்தனர். சூரிய சந்திர அக்கினி என்னும் மூன்று விளக்கங்களும் உலகத்திலே பரவிய பூதவிருளை விலக்கி எம்முடைய ஊனவிழிகளை மாத்திரம் விளக்குகின்றன. இந்நந்தா மணி விளக்கங்களான ஆசிரியன்மார் இருவரும் எம் அகத்தே பரவிய ஆணவவல்லிருளை ஒட்டி எம் ஞானக் கண்களைத் திறப்பித்துச் சிவபெருமான் திருவருட் பேற்றைப் பெறுவிக்கின்றனர். அன்பர்களே! ஞானசம்பந்தப் பெருமானும் மூன்று வயதிலே சிவனருள் நிரம்பப் பெற்றார். மெய்கண்ட தேவரும் மூன்று வயதிலே சிவனருள் நிரம்பப் பெற்றார். ஞானசம்பந்தர் தம் மூன்றாம் ஆண்டிலேயே தோத்திர ரூபமான திருப்பதிகங்கள் கட்டளையிட்டு வைதிக வழியை விளக்கி யருளினார், மெய்கண்ட தேவர் தாமும் மூன்றாம் ஆண்டிலே சாத்திர ரூபமான சிவஞானபோதங் கட்டளையிட்டு ஆகமவழியை விளக்கி யருளினார். வேதம் சூத்திரம் போலப் பொருட் சுருக்கமுடைத்தாய்ப் பொதுவுற நிற்பது, ஆகமம். அச்சூத் திரத்திற்குரைபோலப் பொருட் பெருக்க முடைத்தாய்ச் சிறந்து நிற்பது . இது, வேதமொ டாகமம் என்னுந் திருமந்திரத்தானும் உணரப் படும். அவை யவ்வாறிரண்டா யிருப்பினும் பொருள் முடிபால் ஒன்றே யாமென்பது சைவ பாஷியகாரரான ஸ்ரீ நீலகண்டர் என்றுரைத்தமையால் விளங்கும். இது போல, ஞானசம்பந்தர் திருவாக்கான வேதமும் மெய்கண்டதேவர் திருவாக்கான சிவஞான போதமும் போதித்த முறையால் இரு திறப்படினும் பொருள் முறையால் ஒன்றென்பது பெறப் படுமென்க. அது நிற்க. அவ்விருவருங் குழந்தையாயிருந்த பருவத்திலே திரவிட வேதமும் திரவிட ஆகமமும் தோன்றி முறைமை அதி ரகசியார்த்தங்களை உள்ளடக்கி நிற்கின்றது. காம, வெகுளி, மயக்க மென்னும் திரிமல வலியுஞ், சிறிதுந் தோன்றப்பெறாத பருவங் குழந்தைப் பருவமேயாம். அப்பருவ மொன்றே அத பரிசுத்தமான திரவிட வேத சிவாகமங்கள் தோன்றுதற்குரிய தாகலின் அப்பருவத்திலே அவர்க்கு அவை தோன்றுவவாயின. இன்னும் அவர்க்கு மூன்றாம் ஆண்டிலே அவை தோன்றின என்பதனால் பதி,பசு,பாசம் என்னும் மூன்றிற் பசுபாச நிலைகழன்று பதிநிலையில் நின்றபொழுது அப்பதி வாக்கியங்கள் தோன்றின வென்றும், அவர் அப்போது சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக் குணங்களிற் றாமத இராசதங்களைக் கடந்து சுத்த சத்துவத்திலே நின்றனரென்றும், சுத்தம், அசுத்தம், சுத்தா சுத்தம் என்னும் மும்மாயையுட் பின்னிரண் டனையுங் கழித்துச் சுத்தமாயையிலே நின்றன ரென்றும் அறியப்படும். இன்னும் ஞானசம்பந்தப் பிள்ளை யார்க்குப் பரமேசுவரர் பார்வதி சமேதராய் எதிர்தோன்றிப் பிள்ளையார்க்கு அழுகைதீர்ப்ப அம்மையார் அருளைத் திருமுலைப்பாலைப் பிள்ளையார்க்கு ஊட்டினார் என்பத னால், சத்திசிவத்தைத் தியானிக்கும் உறைப்பினாலே பாம்பு மண்டலித்தாற் போலச் சுரித்துக் கொண்டிருக்கின்ற சுத்தமாயை யென்னுங் குண்டலி சத்தியானது சிவாக்கினியாற் கண்விழித்து நாததத்துவத்தின் மேற்கண்ணதான அமிழ்த தாரையைச் சென்றுபற்ற அப்போது ஒழுகும் அவ்வமிழ்தத் தாரையினைப் பருகிச் சுத்த சிவானந்தத்திலே நிருவிகற்ப சமாதிகூடி நிற்கு மாறு உணர்த்தப்பட்டபடியாம். எதிர்தோன்றிய உமா மகேசுரரே தியானிக்கப்படும் சத்தி சிவமாம். அத்தி யானவுறைப்பின்கட் டோன்றும் சிவாக்கினியே பொற் பிரகாசமாம்; பொன் அக்கினியின் கூறென்பது தருக்க சாத்திரியாராகிய அன்னம் பட்டர்க்கும் உடன்பாடு. அப்பொற் பிரகாசத்தோடு கூடிய கிண்ணத்தின் வட்டவாய் வடிவே மண்டலித்திருக்கும் குண்டலி சத்தியாம். அக் கிண்ணத்திற் கறந்தூட்டப்பட்ட திருமுலைப் பாலே நாததத்துவத்தின் மேற்கண்ணதான சந்திர மண்டலத் தினின்றுருகி ஒழுகும் சிவானந்தஅமிழ்தத் தாரையாம். அவ் வமிழ்த தாரையைப் பருகித் தசநாடியினும் பூரிப்பவே தச நாதங்களுங் கேட்குமாகலின் அத்தசநாத சொரூபமே ஞானசம்பந்தப் பிள்ளையார் அருமைத் திருவாய் மலர்ந் தருளிய திருப்பதிகங்களாம். அசுத்தமாயையிற் றோன்றும் அசுத்த வர்ண ரூபமான மற்றையோர் வாக்குப் போலாது, ஞானசம்பந்தப் பிள்ளையார் திருவாக்குகள் பரவயிந்து வத்தின் கண்ணே தோன்றிய பிரணவ விகாசமாகும். இதனை அறிவித்தற் பொருட்டே பிள்ளையார் தம்முடைய முதற் பதிகத்திலே தோடு டைய செவியன் என்று கட்டளை யிட்டு முதற்கண்ணே பிரண வத்தை நிறுத்தி யருளினார். இவ்வாறே மெய்கண்டதேவர் தம் சிவஞானபோதத் திருவாக்குஞ் சுத்தவயிந்தவத்திற் றோன்றிய பரநாத வொலிகளாம். இன்னும் இவற்றின் நுட்பங்களெல்லாம் ஞானக்குரவனை யடைந்து அவனறிவுறுக்கும் உபதேச வாயிலான் அறியற்பாலன வாகலின் அவற்றை யினி இங்கு விரியாது விடுக்கின்றார். .இதுகாறும் உபந்நியசித்தமையால் முதலிற் சைவ மென்பது யாது என்று விசாரிக்கப் புகுந்து சமயஞானம் என்பது அழிந்து போகும் திரவியம் போலாது அழியாத் திரவியமாய் எல்லாச் சீவர்களுக்கும் தொன்று தொட்டே உள்ளத்திற் பதிந்திருக்கின்ற தென்பதும், சமயம் என்பது பொழுது, காலம், அவசரம் என்று பொருள் படுவதாகலின் இக்காலத்தினாலும் இடத்தினாலும் வரையறுக்கப்படுதல் ஏகதேசவியாபகமுடைய சீவான்மாவுக்கன்றிப் பரமான்மா வுக்கு இல்லையென்பதும், சீவான்மா பரமான்மாவென இரண்டில்லை பரமான்மாவே பஞ்சேந்திரிய சலனத்தாற் சீவான்மாப்போலத் தோன்றுகின்ற தென்று கூறும் ஏகான்ம வாதவுரை சீவ ஆன்மாவின் அறிவின் சையோகமின்றி இந்திரியங்கள் இயங்க மாட்டா என்று காட்டப்படுவதனால் மறுக்கப்படுதலின் அது பொருந்தா தென்பதும், இங்ஙனஞ் சீவான்மா பஞ்சேந்திரியங்கள் வாயிலாய் விடயிக்குங்காலங் களெல்லாம் அதற்குத் தனித் தனியே ஒவ்வோர் அவசரங் களாமென்பதும், அங்ஙனம் விடயிக்கும் வழியும் சீவான் மாவிற்கு யாதானுமோர் இந்திரியத்தின் வழிவரும் இன்பத்தி லேயே பிரியம் மிக்குப் படுமென்பதும், அங்ஙனமெல்லாம் மிக்குச் செல்லுகின்ற ஆன்மாவின் அவசர பேதங்களைச் சமயங்கள் என்று வழங்காமை அவை சரீரத்தோடு அழிதலி னாலேயாமென்பதும், அந்தர் முகமாகச் செல்லும் மானசிக விசாரணையே சமயமாவதற்குரியதா மென்பதும், அவ்வாறு செய்யப்படும் அந்தர் முக மானசிக விசாரணையும் பலதிறப் படுகின்றன வென்பதும், அவையே உலகாயதம் முதலிய பெயர்களான் வழங்கப்பட்டன வென்பதும்; அவை யொவ் வொன்றும் உபகாரமுடையனவே யல்லது பயனற்றனவாகா வென்பதும், இதுவே முடிநிலை யிலுள்ள சைவத்தின் சமரச உண்மையாமென்பதும், இனி அம் முடிநிலைக்கண் உள்ளார்க்குக் கீழ் நிலைகளினுள்ளன போலியாகத் தோன்றுதல் குற்றமாகா தென்பதும், இனிச் சைவமென்பது சிவசம்பந்த முடைய தென்பதும் சிவமென்பது தொல் காப்பியர் நச்சினார்க் கினியர் ஸ்ரீமந் மணிவாசகப் பெருமான் முதலிய பேரறி வாளரால் விளக்கப்பட்ட தத்துவங் கடந்த அருவப் பொருளா மென்பதும், இத்தகைய பரப்பிரமப் பொருளை விசாரித்த அவசரமே சைவசமயமா மென்பதும், அப்பரப் பிரமப் பொருளைச் சிவம் என்று வழங்குதலே வேதாகம முதலிய தொன்னூற் கருத்தா மென்பதும், இப்பெற்றியதான அப் பரப்பிரம சொரூபத்தை ஒரோவொரு கால் வேறுவேறு பெயரிட்டு வழங்கினும் அது சைவத்திற்கு இழுக்காவதில்லை யென்பதும், இங்ஙனஞ் சமரச வுண்மையும் சீவகாருணியமும் விளக்க வந்த இரண்டு சைவதீபங்கள் ஸ்ரீஞான சம்பந்தப் பெருமானும் ஸ்ரீமெய் கண்ட தேவருமாவ ரென்பதும், இவர் இருவரும் அற்புத அருள் மூர்த்திகள் என்பதற்கு அவர் சரித்திரங்களிலுள்ள அந்தரங்க அர்த்தங்களே சான்றா மென்பதும் இதன் கண்ணே தொகுக்கப்பட்ட பொருள் களாம். ஓம்சிவாயநம, ஓம்சிவாயநம, ஓம்சிவாயநம. இரண்டாம் உபந்நியாசம் சிவஞானபோதம் வேதம் பசுவதன்பால் மெய்யா கமநால்வர் ஓதுந் தமிழதனி னுள்ளுறுநெய்-- போதமிகு நெய்யி னுறுசுவையா நீள்வெண்ணெய் மெய்கண்டான் செய்த நூலின் றிறம் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் வேதங்கள் நான்கும் இங்கே பசுவாக உருவகஞ் செய்யப்பட்டன. பசு வினுடைய தேகத்தில் என்பு, தோல், நரம்பு, இரத்தம், சுக்கிலம், மூளை, மச்சை என்னுஞ் சத்த தாதுக்களே பெரும்பகுதியாய் நிற்ப, இவற்றின் சாரமாகிய பாலமிழ்தம் மிகவுஞ் சொற்ப மாயிருப்பதாகும். வேதத்துள்ளும் முப்பத் தாறு தத்துவங் களுட் பட்டுச் சத்துவம் இராசதம் தாமததம் என்னும் மாய குணவயப் பட்டவரான காரியமூர்த்திகளின் உபாசனைகளே பெரும்பான்மையுஞ் சொல்லப் பட்டுக் காரணமூர்த்தியும் தத்துவங்களைக் கடந்த பரப் பிரமமு மான சிவோபாசனை சிறுபான்மையே குறிக்கப் பட்டிருக் கும். இனிப்பசுவின் சரீரத்தின் கண்ணவான அச்சத்த தாதுக் களும் நமக்குப் பயன்படுதலின்றி அவற்றின் சாரமாகிய அமிழ்தமே நமக்குப் பயன்படுதலுடைத் தாம். வேதத்தின் கண்ணவான காரிய மூர்த்திகளுபாசனையும் நமக்குச் சிவானந்தப் பேரின்ப மூர்த்தியினைத் தருதற்குப் பயன்படுத லின்றி, அவ்வேதத்தின் சிரத்தானமாய் விளங்குஞ் சிவோ பாசனையே அப்பேரின்ப மூர்த்தியினை நமக்குப் பயப்பிக்கும் ஆற்றலுடைத்தாம். அற்றாயினும், பசுவின் சரீரத்தின் கண்ணவான அச்சத்த தாதுக்களும் அவ்வமிழ்தத் தினைச் சுரப்பித்து ஒழுகு வித்தற்கு இன்றியமையாது வேண்டப்படுஞ் சாதனங்களாதல்போல, வேதத்தின் கண்ணவான அக்காரிய மூர்த்திகளுபாசனையும் மந்தம், மந்ததரம், தீவிரம் என்னுந் தாழ்ந்த பக்குவத்தின் கண்ணராய்ப் பரஞானப் பேறின்றிப் பாசஞான பசுஞானங்களாம் அபரஞானம் மாத்திரம் வாய்க்கப் பெற்றுடையார்க்குப் பயன் தருவன வாய் அந்நெறியே அவர் அறிவினை முதிர்வித்துப் பரஞானம் பெறுதற்குரிய மேல்நிலைக் கண்ணே செலுத்துமாகலான் அவையும் அம்மந்த பக்குவமுடையார்க்கு வேண்டற் பாலனவேயாம். வேதத்துள் அன்னமே பிரமம் தேகமே பிரமம் இந்திரியங்களே பிரமம் அந்தக் கரணங்களே பிரமம் பிராணனே பிரமம் விஞ்ஞானமே பிரமம் சீவான்மாவே பிரமம் என்றுள்ள வாக்கியங்க ளெல்லாம் இக்கருத்துப் பற்றியே எழுந்தனவாம். இங்ஙனங் கீழ்ஒன்று சொல்லி மேல் ஒன்றுசொல்லி முறை முறையே உயர்ந்த கதிபற்றிச் செல்லுங்காலத்துக் கீழ்க்கீழ் நின்ற வாக்கியங்க ளெல்லாம் மேல்மேற் செல்லும் வாக்கியங்களான் மறுக்கப்பட்டுப் பூருவபக்கமாய் ஒழியுமாதலால் மேல்நிலைக் கண் முடிவாய் நின்றவாக்கியம் ஒன்றுமே சித்தாந்தமாக நிலைபெறுவதாம். தேகமே பிரமமென்ற கீழ்நின்ற வாக்கியம் அதன்மேற் செல்லும் இந்திரியமே பிரமமென்ற வாக்கியத் தான் மறுக்கப் படுதலும், அஃது அதன் மேற்செல்லும் பிராணனே பிரம மென்னும் வாக்கியத்தான் மறுக்கப் படுதலும், விஞ்ஞானமே பிரமமென்ப தனால் மறுக்கப் படுதலும், அஃது அதன் மேற் செல்லும் சிவான்மாவே பிரமமென்பதனான் மறுக்கப் படுதலும் உய்த்துணரவல்ல நடுநிலையுடையார்க்கு, இவை யெல்லா வற்றையும் ஒருங்கே சேர்த்து என்னும் அதர்வசி கோபநிடத மந்திரமானது இவை யனைத்தும் பிறக்கின்றன. இப்பிரமன் விண்டு உருத்திரன் இந்திரனென்னும் அவரெல் லாம் பிறக்கின்றனர், பூதங்களோடு இந்திரியங்களெல்லாம் பிறக்கின்றன. காரணங்களைத் தோற்று விப்பானும் தியாதாவுமான காரணன்றான் பிறப்பானல்லன், காரணப்பொருளும் ஐசுவரிய மனைத்தையுமுடையானும் அனைத்திற்கும் ஈசுரனுமான சம்பு ஆகாய நடுவிற் றியானிக்கப் படும் என்று அக்காரியப் பிரமோபாசனைகளையெல்லாம் மறுத்துத் தான் ஒன்றாற் காரியப் படுவானல்லனாய்த் தான் எல்லா வற்றையுங் காரியப் படுத்துவானாய்த் தனக்கு மேற்காரண மொன்றின்றித் தானே யனைத்திற்குங்காரணனாய் எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாய்த் தத்துவங்கடந்ததாய் உள்ள சிவபரம்பொருளே சிதாகாயமத்தியிற் றியானிக்கப்படுவ தென்று நிச்சயப்படுத்திய தன் உண்மை இனிது விளங்கும். அல்லதூஉம், வேதங்கள் ஒவ்வொன்றும் கருமகாண்டம், உபாசனாகாண்டம், ஞான காண்டம் என்னும் முப்பகுதி யாய்ப் பிரிக்கப்பட்டு விளங்கும். இவற்றுட் கருமகாண்ட உபாசனா காண்டப்பகுதிகளே நிரம்பவும் மிகுதியாய் விரிந்து கிடப்பதல்லாமல் ஞான காண்டப்பகுதி மிகவுஞ் சொற்பமாய் சுருங்கிக்கிடக்கும். ஞான காண்டத்திற் குரியராக ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தி விடுக்கும் அம்மாத்திரையேயன்றித் தம்மிற் றாமே பிரயோசனந் தருவ தில்லாத கருமகாண்டப் பகுதிகளும் உபாசனா காண்டப் பகுதிகளும் மிகுதியாயிருத் தலினாலும், அவ்வேதங்கள் தம் மிற்றாம் பயன் றருவதின்றிப் பாலைச்சுரப்பிக்கும் அம் மாத்திரையே பயன்படுதலுடைய சத்ததாதுக்களாற் கட்டப்பட்ட பசுவினோடு உவமிக்கப் படுவனவாயின. அற்றாயினும் அக்கீழ்நிலையிலேயுள்ள அக்காரியப் பிரமோபாசனைகள் ஒன்றினொன்றேற்ற முடையனவாய் மேனிலைக் கண்ணதான காரணப் பிரமோபாசனைக்குச் சோபானங்களாய் நிலை பெறுவனவா மாதலால் அவையெல்லாம் நம்மாற் பெரிதுங் கௌரவிக்கற் பாலனவேயாம். ஒரு பருவதத்தின் முகட்டிற் செல்ல வேண்டு வானுக்கு அடிவாரத்திலிருந்து வெட்டப் பட்டிருக்கும் படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் அவன் மேலேறி போவதற்கு இன்றியமையாது வேண்டப் படுதல்போல அவையொவ் வொன்றும் ஆன்மாக்களின் அறிவுவளர்ச்சிக்கு அவசியமாவன வேயாம். அற்றாயினும் ஒருசிலர் ஓரிரண்டு படிகளின் மேற் சென்ற மாத்திரையானே சலிப்புற்று மேலேறிச் செல்லுதற் குரிய ஆற்றலில்லாமையினாலே அப்படிக்கட்டுகளின் பக்கத் திலுள்ள மலைப் பாறையின் அமைதிகளைப் பார்த்து வியந்துகொண்டு அதுவே சிறந்த தென நின்றுவிடுதல்போல, ஒவ்வோர் பக்குவமுடைய சீவான்மாக்கள் தத்தமக்கறிவு எட்டிய வரையில் உபாசிப்பதற்கு ஏற்றகாரியப் பிரமங் களையே காரணப் பிரமமென விபரீதமாயுணர்ந்து அம் மாத்திரை யின் நின்று விடுகின்றனர். இங்ஙனம் அம்மலையின் இடை யிடையே தங்கி யொழிவார் பெரும்பாலராக, அதன் முகட்டில் ஏறி அங்கே, சுவர்ணமயமாய்க் கட்டப்பட்டிருக் குங் களஞ்சிய அறைகளைத் திறந்து அங்குள்ள அரிய பெரிய நவரத்தின பொக்கிஷங்களை அனுபவிப்பார் மிகச் சிலரே யாதல்போல அவ்வேதங்களின் கீழ்ப்பாகங்களில் சொல்லப் பட்ட காரியப் பிரம வழிபாட்டின் கண்ணே நின்றொழிவார் பலராக, அவற்றையெல்லாந் தாண்டிப்போய் வேதசிரசாய் விளங்கும் சிவபரம் பொருளைத் தலைக்கூடுவார். அதிதீவிர பக்குவமுடைய ஆன்மாக்கள் மிகச்சிலரே யாவர். இவ்வாறு சாத்தியமான சிவப்பிரமத்தை யடைதற்குரிய சாதனங்களாங் காரியப் பிரமோபாதியையே சாத்தியமாய்த் துணிந்து பலர் மயங்குதல் பற்றியன்றே ஸ்ரீமத் குமரகுருபரசுவாமிகள். நீயே, வேதமென்னும் பாதவம் வளர்த்தனை பாதவமதனிற் படுபயன் பலவே, அவற்றுள் இலைகொண் டுவந்தனர்பலரே யிலையொரீஇத் தளிர்கொண் டுவந்தனர்பலரே தளிரொரீஇ யரும்பொடு மலர்பிஞ் சருங்கா யென்றிவை விரும்பினர்கொண்டுகொண் டுவந்தனர்பலரே அவ்வா றுறுப்பு மிவ்வாறு பயப்ப ஓரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த ஆராவின்ப வருங்கனி பிழிந்து சாரங்கொண்ட சைவசித்தாந்தத் தேனமுதருந்தினர் சிலரே என்று அருளிச்செய்வாராயினர். ஆகையினால், அதிதீவிர பக்குவமுடைய ஆன்மாக்கள் ஒரு சிலரையன்றி ஏனை யோரை யெல்லாம் பொருளிது வென்று புலப்படக் காட்டாமல் மயக்கிக் கொண்டிருத்தல் பற்றியே அவ்வேதங் களை மயக்க நூல் என்றும், பலவகைப்பட்ட சிவபேதங்களையே ஆண்டாண்டுப் பிரமம் என்றும் பதிப்பொருள் என்றும் கூறுதல்பற்றியே அவற்றைப் பசுநூல் என்றும் அறிவுடையோர் வழங்குவாராயினர். துவிதீய சமயாசாரிய சுவாமிகளான திருநாவுக்கரையரும், வேதமோதிலென்சாத்திரங் கேட்கிலென் நீதிநூல் பலநித்தல் பயிற்றிலென் ஓதியங்கமொராறு முணரிலென் ஈசனை யுள்குவார்க்கன்றி யில்லையே என்று திருவாய் மலர்ந்தருளியதூஉம், அற்புத வைராக்கிய சுத்த சிவஞான சிரோட்டரான பட்டினத்துப் பிள்ளையார். நீற்றைப்புனைந்தென்ன நீராடப்போயென்ன நீமனமே மாற்றிப்பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல் ஏற்றிக்கிடக்கும் எழுகோடி மந்திர மென்னகண்டாய் ஆற்றிற்கிடந்துந் துறையறியாம லலைகின்றையே என்றருளிச் செய்ததூஉமென்க. இங்ஙனம் அதிதீவிர பக்குவ முடையார்க்கன்றி ஏனையோர்க்கவை பயன் படாமை மேலெடுத்துக் காட்டிய பசுவுவமையானும் இனிது பெறப் படுவதாகும். யாங்ஙனமெனில், பசுவின் உடம்பிற் சாரமாய் வியாபித்திருக்கும் அமிழ்த சத்துக்கள் அப்பசு தானீன்ற கன்றைக் கண்டான் மாத்திரம் புலப்பட்டுப் பாலாய்ச் சுரந்தொழுகு வதல்லது, வெறொரு வாற்றானும் வெளிப்படுத லில்லை. அதுபோல் அதிதீவிர பக்குவமுடைய ஆன்மா வென்னுங் கன்றைக் கண்டான் மாத்திரம் வேதம் என்னும் பசு தன்கண் அதிசூக்குமமாய் வியாபித்திருக்கின்ற சிவம் என்னும் அமிழ்தத் தைப் புலப்படக் காட்டி ஊட்டு மல்லது பிறஅபக்கு வரைக்கண்டால் ஒரு சிறிதாயினும் அதனைக்காட்ட மாட்டா தாகலின் அவ்வேதத்தினை அறிவுடையார் மயக்க நூலென் றும் வஞ்சனை நூலென்றுங் கூறியது இழுக்கன்றென்க. வேத நூலாற் சிவம் எளிதினறியப் படாதது பற்றியே மறையினா னயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றுங் குறையிலா வறிவினாலுங் கூறொணா தாகிநின்ற இறையனார் கமலபாத மின்றியா னியம்புமாசை நிறையினார் குணத்தோர்க்கெல்லாம் நகையினை நிறுத்துமன்றே என்னுந்திருவாக்கு மெழுந்தது. பூதங்களல்ல பொறியல்ல வேறு புலனல்ல வுள்ளமதியின் பேதங்களல்ல விவையன்றி நின்ற பிறிதல்லவென்றுபெருநூல் வேதங்கிடந்து தடுமாறு வஞ்சவெளியென்பகூடன் மறுகிற் பாதங்கணோவ வளையிந்தனாதி பகர்வாரை யாயுமவரே என்னும் ஆன்றோர் திருவாக்கும் இக்கருத்தினையே போதிப்ப தொன்றாம். இனி இங்ஙனம் வஞ்சனையாற் சிவத்தை அதியிரகசி யமாய் வைத்து அதிதீவிர பக்குவமுடைய அதிகாரிகட்கு மாத்திரம் மின் மினி விளக்கம்போற் காட்டுவதாகிய வேதம் என்னும் பசுவிற் கறந்தெடுக்கப்படுகின்ற பாலே ஆகமங்கள் என்று மேலைத் திருவாக்கினால் நன்குணர்த்தப்பட்டது. ஆகமங்கள் இருபத் தெட்டாம். அவை காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகந்திரம், அஞ்சுமான் சுப்பிரபேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், அனலம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திர ஞானம், விம்பம், புயோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தான சருவோத்தமம், பாரமேச்சுரம், கீரணம், பேதம், வாதுளம் என்பனவாம். வேதங்கள் நான்கினும் மிகவுஞ் சுருக்கமாய் வைத்துக் குறிக்கப்பட்ட சிவம் ஒன்றனையே இவ்விருபத் தெட்டா கமங்களும் மிகவிரித்து விளக்குவதன்றி வேறொன் றனையுங் குறியாமையால் அவை முழுவதூஉம் பாலாக உருவகஞ்செய்யப்பட்டது நிரம்பவும் பொருத்தமேயாம். அற்றேல், வேதத்தின் பிராணனாய்வைத்துச் சுருக்கிச் சொல்லப் பட்ட அச்சிவ பரம்பொருளை இங்ஙனம் இருபத்தெட் டாகமங்களால் விரிக்க வேண்டிற்றென்னை யெனின்; - இந்த அண்டத்திலுள்ளனவும் இப்பிண்டத் திலுள்ளன வுமான சருவ பதார்த்தங்களும் ஒருவரம் பினுட்பட்டனவாகலான் அவை யெல்லாம் ஆன்ம வறிவினால் அளந்துரைக்கப்படுவன வேயாம். சிவம் என்னும் பரம்பொருள் அண்டபிண்டங் களிரண்டினு மொன்றன்றாய்ச் சீவவறிவுக்குச் சிறிதும் புலப்படாத அகோசரப் பொருளாகலின், அதுதன்னை ஆராய்ந் துரைக்கப்புகுந்த அச்சிவாகமங்களும் அங்ஙனம் வரம்பின்றி விரிந்தன. இச்சிவாகமங்கள் இருபத்தெட்டேயன்றி இவற்றிற்குக் கிளையாவனவும் அவற்றின் பேதங்களும் பலப்பலவாய் விரிந்திருக்கின்றன. இவ்வாற்றால் வேதங் களுட் சிவோபாசனை சுருக்கப்பட்ட பாகங்கள் சூத்திரம் போலப் பொருட்செறிவுஞ் சுருங்கிய சொற்கோப்பு முடையன வென்றும், சிவாகமங்கள் அச்சூத்திரப்பொருளை விளக்க வெழுந்த விருத்தியுரை போல்வன வென்றும் இனிதறியப்படும். சொற்சுருக்க முடைமையினாற் பொருள் பலதிறப்படப் போதிக்கும் அவ் வேதங்கள் பொது வென்றும், அதனை அவ்வாறாக வொட்டாது அம்மெய்ப் பொருளைக் கரதலா மலகம்போற் காட்டும் உரைகளான அச்சிவாகமங்கள் சிறப் பென்றும் ஆன்றோரான் வழங்கப்பட்டன. இதற்கிவ்வாறன்றி வேதங்கள் மந்தம் மந்ததரம் தீவிரம் தீவிரதரம் என்னும் எல்லாவதிகாரிகட்கும் பொதுப் பட எல்லாம் போதிக்குமாறு பற்றிப் பொதுவெனவும், சிவாகமங்கள் அதிதீவிர பக்குவ முடையார்க்குமாத்திரம் சிறப்புடையவாய் ஒரே பொருளை வலியுறுத்திப் போதிக் கின்றமையின் சிறப்பெனவும் வழங்கப் பட்டன வென்று அவ்வாறு கோடலுமொன்று. இது சிவராஜ யோக கைவல்லிய சிவானந்தானுபவ சருவைசுவரிய சம்பன்ன சிரேட்ட சிவஞானகுருமணியாரான திருமூலர், வேதமொ டாகமமெய்யா மிறைவனூல் ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக நாதனுரையிவை நாடிலிரண்டந்தம் பேதமதென்னிற் பெரியோர்க் கபேதமே என்றருளிச் செய்தமையானும், வேதாந்த சூத்திர சைவ பாடிய காரரான நீலகண்டர், என்று கூறினமையானும் நன்கு பெறப்படும். ஆகவே, பசுவைக்காட்டினும் அப்பசுவினின்று பெறப்படும் சுத்தவமிழ்தமாகிய பாலே சிறப்புடைத்தாதல் போல, அவ்வேதத்தைக் காட்டினும் அவ்வேதத்தின் சாரமாகிய சிவாகமங்களே சிறப்புடையவாகும். சித்தாந்தம் வேதசாரத் வாத் என்ற வாக்கியமும் இதனை வலியுறுத்து வதாகும். இனிப், பசுவினின்றும் கறந்து கொள்ளப்படும் பால் திரவ ரூபமாய் நெகிழ்ந்திருத்தலால் அதனைக்காய்ச்சி யதன்கண் உள்ள நீரைப் போக்கிக்கடைந்த வழி அதன்கண் உள்ள சாரமெல்லாம் ஒருங்கு திரண்டு நெய்யாய் எழுதல் போல, வேதசாரமாய் விளங்கும் அச்சிவாகமங்களும் சரியாகாண்டம், கிரியாகாண்டம், யோககாண்டம், ஞான காண்டம் என நால்வகையாய்ப் பகுக்கப்பட்டு ஆராய்ந் தறிதற்கு அருமை யுடையனவாய் மிகவிரிந்து கிடத்தலின் அவையும் நெகிழ்ந்த பக்குவமுள்ளனவா மாகவே அவற்றின் கண் உள்ள சரியை கிரியை என்றற் றொடக்கத்து ஏனை மூன்றுகாண்டப் பொருளையும் விடுத்து ஞானகாண்டப் பொருள் விசேடமாய் விளங்கும் துரியாதீதப்பொருளான சிவத்தைமாத்திரங் குழைந்துருகப்பாடித் திருஞான சம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசுகளும், சுந்தரமூர்த்திகளும், மாணிக்கவாசகப் பெருமானும் திருவாய் மலர்ந் தருளிய தேவார திருவாசகச் செந்தமிழ் நான்மறைகள் அச்சிவாகம சாரமாய்த்தோன்றி அவற்றினும் சிறப்புடையன வாம் என்க. தத்துவங்களுட்பட்ட எந்த மூர்த்திகளையும் பாடிற் றிலராய்ச் சிவமொன்றையே சைவசமயாசிரியன்மார் நால்வரும் துதித்த இரகசியவுண்மை சைவசமயிகளாற் பெரிதும் போற்றப்பால தாம். இது நிற்க. இனி அப்பாலின்கட் சாரமாய்த் திரட்டி எடுத்த நெய்யினுட் சுவை இல்வழி அது பயன்படாமையால் நெய்யினும் அதன் இன் சுவையே சிறப்புடைத்தாம். சிவாகம ஞான காண்டப் பொருட்கு ஞேயப் பொருளான சிவம்தன்னை யறியும் ஞான மில்வழி யான்மாக்கட்குப் பயன்படமாட்டா தாகலின் அச் சிவத்தினும் அதனையறியும் ஞானமே வசிட்ட முடைத்தாம். ஆகவே அச்சிவத்தை யுணர்த்தும் தேவார திருவாசகச் செந்தமிழ் நான்மறையினும், சிவஞானத் தைப் போதிக்குஞ் சிவஞான போதமே கழிபெருஞ் சிறப்புடைத் தாம். அற்றாயினும், பசுவி னின்று வேறு பிரித்தெடுக்கப்படும் பால்போல வேதத்தினின்றும் தாம்வேறாய்த் தனித்து நடைபெறுஞ் சிவாகமங்கள். அச்சிவாக மங்களேபோல இச்செந்தமிழ்ச் சிவஞான போதமும் தான் வேறாய்த் தேவார திருவாசகச் செந்தமிழ் நான்மறைகளை விட்டு நடைபெறுமோ வெனின்; அங்ஙனம் நடைபெறாது; எங்ஙனம் சிவமும் அச்சிவத்தை யறியும் ஞானமும் ஒன்றைவிட்டொன்று பிரியமாட்டாவோ அங்ஙனமே சிவத்தை யுணர்த்தும் தமிழ் நான் மறைகளும் சிவஞானத்தை யுணர்த்துஞ் சிவஞான போதமும் ஒன்றை விட்டொன்று பிரியமாட்டா; இரண்டும் அபேதமாகவே விளங்கும். இது மேற்காட்டிய உபமானத் தானும் பெறற் பாலதேயாம். நெய்யாகிய குணிப்பொருளும் அதன்கட் சுவையாகிய குணமும் ஒன்றைவிட்டொன்று பிரியாமற் றாதான்மிய சம்பந்தமுற்று அபேதமாக நிற்றல் போலத் தேவார திருவாசகங்களாகிய குணியும் அவற்றின் குணம்போல விளங்குகின்ற சிவஞானபோதமும் அபேத சம்பந்தமுற்றுப் பொலிவனவாம். வடமொழியில் வேதத்தைத் தழுவா மாற்றாமே நடைபெறுந் தன்மையவாய் விளங்கும் சிவாகமங்கள்; இதுபற்றியே வாயுசங்கிதையில், இருபத்தெட்டாகமந் தழுவா, தழிவிலாத சித்தாந் தத்தின் பகுதியா யமரும் என்னும் வாக்கியம் எழுந்தது. இது பற்றியே சிவாகமங்களை அச்ரௌதம் என்று அறிவுடை யோர் வழங்குவர். அச்ரௌதம் என்றால் சுருதி சம்பந்த மில்லாதது என்றர்த்தமாம். இப்பொருள் காணமாட்டாதார் ஆகமம் சுருதிவிரோத மென்பர். அது பொருந்தாமை முற்காட்டிய திருமூலர் திருவாக்கான் இனிது பெறப்படும். இனித் தெய்வச் செந்தமிழ்ப் பாஷையிலேயுள்ள வேதங்களான தேவார திருவாசகங்களும், ஆகமங்களான திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் சிவஞான போதமென்றற் றொடக்கத்தனவும் தம்முள் ஒன்றையொன்று விட்டு நீங்காவாய் நடைபெறுந் தன்மையவாம். வடமொழிக் கண்ணுள்ள வேதங் கள் கன்ம பாகங்களை மிக விரித்துக் கூறி அவலம்படுகின்ற மையால் அவை சுத்தஞானமயமாயுள்ள சிவாகமங்களை முற்றுந்தழுவி நடைபெறுகின்றில. இனித் தமிழ் நான்மறை களோவெனின் சுத்தஞானவிசேட ஞேயப் பொருளாம் சிவத்தையே விடயமாய்க் கொண்டிருத்தலால், அவையும் சுத்தஞானத்தை விடயமாகவுடைய சிவஞான போதமும் தம்மிற் பெரிதொத்துப் பிரகாசிப்பவா யினவென்க. தமிழ்ப்பாஷையில் இயற்றப்பட்ட செந்தமிழ் நூல் களெல்லாம் சொற் சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையனவாம். இலக்கண நூலாசிரிய ரெல்லாரும் நூல் அமைதிகளைப் பற்றிச் சொல்லுமிடத்து முதலிற் சுருங்கச் சொல்லல் என்பதனையே சிறப்பாக வைத்து ஓதினார். அங்ஙனஞ் சுருங்கிய சொற்களால் தொடுக்கப்படினும் அவற்றின் பொருள் தெற்றென விளங்காநிற்கும். உதாரண மாகத் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறள் நூலைப் பாருங்கள்! அவ்வாசிரியர் தாம் விளக்குதற்கு எடுத்துக் கொண்ட பொருளை மிகவுஞ் சுருக்கமாகத் தெரித்தற் பொருட்டு எவ்வளவு சிறிய குறட்பாவினை எடுத்துக் கொண்டார்! அக்குறட்பாக்களெல் லாம் ஒன்றே முக்கால் அடிகளால் அமைக்கப்பட்டிருக் கின்றன. அப்பாவில் ஒவ்வொரு சொல்லும் பொருட் பயன் நிரம்பி விளங்குகின்றது. அப்பாவில் ஒரு சொல்லை எடுத்து விடினும் அது முழுவதூஉம் பொருள் பயவாது அழியும். வாயில் மேனிலை வளைத்துக் கட்டப்பட்ட ஒரு மாளிகை அம்மேனிலை மூலைக் கல்லினையே நிலைக் களனாய்க் கொண்டு நிற்கின்றது; அம்மூலைக் கல்லைப் பெயர்த்து விடின் அக்கட்டிடம் எல்லாம் கீழ் விழுந்து நுறுங்கி அழிதல் திண்ணமேயாகும். அதுபோல, நாயனார் திருவாக்கான அச்செய்யுளில் ஒவ்வொரு சொல்லும் ஏனைய வற்றைத் தாங்கும் மூலைக்கற்போலப் பொருட்சார முற்றுப் பொருந்தி யிருக்கின்றது. அங்ஙனஞ்சொற் சுருக்கமுற்று நிற்றலால் பொருள் புலப்படாமல் புதைந்து கிடக்கின்ற தோவெனின், ஒரு சிறிதுமில்லை. ஒள்ளிய பளிங்குபோல் தெள்ளத் தெளிந்து நீர் ததும்பும் ஒரு தடாகம் மிக மிக அழகுடையதாயிருப்பினும் அதன் அடிப்படையெல்லாம் காண்பார் கண்ணுக்கு இனிது விளங்கித் தோன்றல் போலவும், கண்ணாடி ஒன்று தான்டருவத்தான் மிகச் சிறிதேயாயினும் அது தன்பக்கத்தே வானளாவித் தோன்றும் மாடமாளிகை முதலிய பேருருவத்தை யெல்லாம் தன்னுட் செறித்துத் தெளிவாய்க் காட்டுதல் போலவும் திருக்குறட் பாவின் பொருள் நன்கு புலப்பட்டுக் கிடக்கின்றது. இதுபற்றி யன்றே கபிலர், தினையளவு போதாச் சிறு புன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாடா! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி என்று உரைப்பாராயினார். அரிசிற் கிழாரும் பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறுஞ் சேர - சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல்லால் என்று ஓதியதும் இதனை வற்புறுத்துதல் காண்க. இங்ஙனந் திருக்குறட் பாட்டுகள் சொற் சுருங்க அமைக்கப்படினும் பொருள் தெளிவாய்க் காட்டுதல், இவை தம்மை நாலடியார் செய்யுட்களோடு ஒப்பவைத்து நோக்கினால் நன்கு புலப்படும். உதாரணமாக ஒன்று காட்டுவாம். நாலடியாரில், தினையனைத்தே யாயினுஞ் செய்த நன்றுண்டாற் பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் - பனையனைத்து என்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட நன்றில நன்றறியார் மாட்டு எனப்போந்த செய்யுட் பொருள் முழுவதும், தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் றெரிவார் என்னும் அருமைத் திருக்குறட் பாட்டில் அடங்குதல் காண்க. அவ்வாறு அடங்குதலே யன்றியும் அப்பொருள் இதன் கண் இனிது விளங்குதல் கற்றறிவில்லார்க்கும் புலனாம். தினை யனைத்தே யாயினுஞ் செய்த நன்றுண்டால் என்னும் நாலடி யார் செய்யுள் அடி தினைத்துணை நன்றி செயினும் எனுந் திருக்குற ளடியிலும், பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் என்பது பனைத்துணையாக் கொள்வர் பயன் றெரிவார் என்பதினும் அடங்குதல் காண்க. நாலடியாரின் மற்றிரண்டடி களும் திருக்குறளில் அடங்கவில்லையா லெனின்; - பயன் தெரிவார் பனைத்துணையாக் கொள்வர் என்ற மாத்திரை யினாலே பயன்தெரியார் பனைத்துணை செய்த நன்றி யினையும் தினைத்துணையேனுங் கருத மாட்டார் என்பது அத்திருக்குறட் பாவினால் இனிது பெறப்படுதலின் அது வேண்டா கூறுதலேயாம். தானேயும் விளங்காத பொருளையே கூற வேண்டுமல்லது, எளிது புலப்படுவ தனைக் கூறுதல் வேண்டா கூறலேயாம். உலகத்தின்கண் விரிந்து கிடக்கும் எல்லா நூல்களும் வேண்டா கூறுதலாகிய இக்குற்றம் பொருந்தப் பெற்றன வேயல்லாமல் பிறிதில்லை; மற்றுத் திருக்குறளும் சிவஞான போதமும் எனும் இரண்டு மோ அக்குற்றம் சிறிதும் இல்லாதனவாம். அற்றேல், நாலடியார், சிலப்பதிகாரம் போன்ற வேறு உயர்ந்த நூல்களெல்லாம் பயன்படாவா யொழியுமோ வெனின்; - ஒழியா; உலகத்திலுள்ள நூல்களெல்லாம் இயற்கை நெறி, செயற்கை நெறி என்னும் இரு பகுதிகளிலே அடங்கும். இயற்கை நெறி என்பது தான் கருதிய உண்மைப் பொருளை உள்ளவாறே சொல்லுதற்கு இன்றியமையாது வேண்டப்படுஞ் சொற்களால் நடை பெறுவது; செயற்கை நெறி என்பது தான் கருதியதோர் உண்மைப்பொருளை உணர்த்துகின்றவர் கேட்போர் அறிவு அதிற் பற்றுந் திறத்தால் அவர்க்கு இசைய அப்பொருளோடு இணங்கிய வேறு சிலவற்றையுஞ் சேர்த்துப் பலசொல்லால் விரித்துக்கூற வருவது. இயற்கை நெறி பற்றி எழுதப்படும் நூல்கள் நுண்ணறிவுடைய அதிதீவிர பக்குவ முடையார் பொருட்டும், செயற்கை நெறி பற்றி எழுதப்படும் நூல்கள் மழுங்கிய அறிவுடைய மந்த பக்குவமுடையார் பொருட்டும் எழுந்தன வாகும். இனி உலகத்தில் மந்த பக்குவ முடையார் பலரும், அதிதீவிர பக்குவமுடையார் சிலருமாகலான் அவரவர் பொருட்டு எழுந்த செயற்கைநெறி நூல்கள் பலவும், இயற்கை நெறி நூல்கள் சிலவுமாயின. கசக்கும் மருந்துண்ணாத மகவுக்கு அதனை ஊட்டலுறுவாள் அது தன்னைப் பனைவட்டுத் துண்டிற் பொதிந்து ஊட்டியவழி அம்மகவு இன்சுவைத்தாகிய அதனை உண்டு நோய் தீர்ந்தவாறு போலவும், அறியாதான் ஒருவன் சேறு குழம்பிய தண்ணீரை உண்ணப்போதலைக் கண்டு இரங்கிய அறிவுடை யான் தூரத்திற் றோன்றும் பேய்த்தேரைக் காட்டி அந்த நல்ல நீரைப் பருகு என்று வஞ்சித்துக் கொண்டுபோய் ஒரு தடாகத்தில் நீர் ஊட்ட அவணுண்டு நீர் வேட்கை ஒழிந்த வாறு போலவும், உண்மை நுண்பொருளை உள்ளவாறே உணர்த்தினால் அறியமாட்டாத மந்த மதியுடையார்க்கு அதில் அறிவு செல்லும் வண்ணம் அப் பொருளைப் பலவகையால் அலங்கரித்துச் சான்றோர் பலநூல்கள் செய்வாராயினர். இயற்கையிலேயும் அழகு டையளாய் விளங்கும் ஒரு மங்கையைப் பல்வகை ஆடை அணிகலங் களாற் புனைந்து சிறப்பித்த வழி அவள் அச் செயற்கை நலத்தால் ஆடவரைக் காமுறுத்தல்போல, அலங்கார நெறிபற்றி வரும் நூல்கள் மந்த பக்குவமுடையாரைப் பெரிதும் வசீகரிக்கு மென்க. மிகச் சிறந்த பழந்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தினுள் உணர்த்தப்படும் உண்மை நுண் பொருள்கள் சிலவேயாம்; இவ்வுண்மைகளை உலகத்தார்க்கு உணர்த்தி அறிவு கொளுத்தல் வேண்டி அவற்றைப் பலவாற்றால் அலங்கரித்து ஒரு பெருங்காப்பியம் இயற்றுவேமென அதன் ஆசிரியர் இளங்கோவடிகள், அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை யுருத்துவந்தூட்டு மென்பதூஉஞ் சூழ்வினைச் சிலம்பு காரணமாக நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்று பாயிரவுரை கூறியதனை உய்த்துணருங்கால் செங் கோன் முறை திறம்பினாரை அறக்கடவுள் கொல்லுதலும், கணவன் மாட்டு உண்மை யன்புடைய கற்புடை மகளிரைச் சான்றோரும் வழிபடுதலும், ஊழ்வினைப்பயன் உடை யானை விடாது பற்றி வந்து பந்த முறுத்தலும் ஆகிய மூன்றுமே சிலப்பதிகாரம் முழுவதூஉம் விளக்கப்பட்ட நுண்பொருள் களாம்; இவை மூன்றும், வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்த மொல்லைக் கெடும் (குறள் 563) பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு (குறள் 58) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் (குறள் 380) என்ற தெய்வத் திருக்குறட்பாக்கள் மூன்றினும் அடங்குதல் காண்க. உலகத்திலுள்ள எல்லா அறிவு நூற்பொருள்களும் திருக்குறளிலே காணக் கிடக்கும், திருக்குறளிலேயுள்ள பொருள்கள் எல்லாம் ஏனை நூல்களிற் காணப்படா; ஒரு சிலவே காணப்படும். திருக்குறள் ஏனை எல்லா நூற்பொருள் களும் தன் கண் ஏகதேசமாய் அடங்கத் தான் அவற்றுள் அடங்காது விரிந்த வியாபக இலக்கணமுடைத்தாம். இஃதுணர்ந்தே, எல்லாப் பொருளு மிதன்பால் உளஇதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லாற் பரந்த பாவாலென் பயன் வள்ளுவனார் சுரந்தபா வையத் துணை என்ற மதுரைத் தமிழ்நாயகனார் அதனை அங்ஙனஞ் சிறந் தெடுத்துக் கூறினார். இத்தகைப் பெருஞ் சிறப்பினதாகிய திருக்குறள் நூலைக் காட்டினும் மிகச் சுருக்கமான நூல் ஒன்று தமிழ்ப் பாஷையிலே உளதாயின் தமிழின் தெய்வச் சிறப்பு இத் துணைத் தென்று வரையறுத்தல் ஏலாததொன்றாம். அத் துணைச் சுருக்கமான நூல் யாதோவெனின், அதுவே சிவஞானபோதம் என்னும் அரிய பெரிய தெய்வச் செந்தமிழ் ஞானநூலாகும். இது பன்னிரண்டு சூத்திரங் களுடையது; இப்பன்னிரண்டு சூத்திரங்களும் நாற்பத்தோர் அடிகளு டையன; இந்நாற்பத்தோரடிகளும் இருநூற்றுப் பதினாறு சொற்களுடையன; இவ்விருநூற்றுப் பதினாறு சொற்களும் அறுநூற்று இருபத்து நான்கு எழுத்துக்கள் உடையனவாம். தமிழ்ப் பாஷையிலே தெள்ளத் தெளிய வடித்து இறக்கிய ஞான சாத்திரங்களுக்கெல்லாம், பன்னிரண்டு சூத்திர வடிவினதாய் விளங்கும் இச்சிவஞான போதமே முதல்நூல் அல்லது பிரதம கிரந்தமெனப் படுவதாகும். இந்நூற் பன்னிரண்டு சூத்திரங்களும் தடத்தம், சொரூபம் என இருபகுதியாய்ப் பகுக்கப்பட்டுள்ளன. தடத் தலக்கணம் முதல் ஆறு சூத்திரங் களானும், சொரூபலக்கணம் பின் ஆறு சூத்திரங்களானும் வகுத்து உணர்த்தப்பட்டன. தடத்தலக் கணங் கூறும் பகுதி பிரமாண இயல், இலக்கண இயல் என மறித்தும் இருவகையாய்ப் பகுக்கப்பட்டு ஒவ்வோர் இயலும் மும்மூன்று சூத்திரங்களுடையனவாய் விளங்கும்; சொரூப லக்கணப் பகுதியும் சாதன இயல், பயனியல் என மேலிரு வகையாய்ப் பகுக்கப்பட்டு ஒவ்வொன்றும் மும்மூன்று சூத்திரங் களுடையனவாய் விளங்கும். எனவே, இப் பன்னிரண்டு சூத்திரங்களும் இருபகுதிகளாகவும் நான்கு இயல்களாகவும் பாகுபடுத்தப்பட்டிருக்கின்றன. இங்ஙனம் பாகுபடுத்தப்பட்ட இச்செந்தமிழ் ஞான நூலிலே, உலகத்தில் வரம்பின்றி விரிந்து கிடக்கும் எல்லா நூன் முடிபுகளும் எல்லா ஞான முடிபுகளும் எல்லா அனுபவ முடிபுகளும் ஒருங்கமைந்து கிடந்தனவாயின், இவ்வரிய பெரிய நூற்பெருமையும் இதனை அருளிச் செய்த முதல் ஞானாசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் பெருமையும் புழுத்தலை நாயினுங் கடையேமாகிய எம்முடைய சிற்றறி வினால் ஒரு சிறிதும் அளக்கப்படமாட்டா. ஆயினும், எம் அரிய நண்பர்களே! இன்றெடுத்துக் கொண்ட விஷயம் ஒருவாறாயினும் புலப்படுதற் பொருட்டு அச்சூத்திரங்கள் பன்னிரண்டானும் அறிவுறுத்தப்படும் நுண்பொருள்கள் இவையென்று மாத்திரம் ஒரு சிறிது ஈண்டுக் காட்டுவாம். அவனவளதுவெனும் அவை என்னும் முதற் சூத்திரம் சாருவாகர், பௌத்தர், சமணர், சாங்கியர் முதலாயினார் கடவுள் இல்லையெனக் கூறும் நிரீசுரவாதத்தை மறுத்துக் காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுள் உண்டென் பதனை வலியுறுத்துகின்றது. அக் கடவுளும் இரணிய கருப்ப வாதி பாஞ்சராத்திரவாதி முதலியோராற் கொள்ளப்படும் கடவுளரில் ஒன்றாகாதென்றும், அநேக சுரவாதி கூறுமாறு போற் பலவாகாதென்றும், இவற்றிற்கெல்லாம் மேலாய்ச் சங்கார கிருத்தியத்தை நடத்துவதே அப்பரம் பொருளாய் நிலைபெறுவதென்றும் நன்கு விளக்கா நிற்கின்றது. அவையேதானேயாய் என்னும் இரண்டாம் சூத்திரம் சங்கார காரணனான முழுமுதற் கடவுளாற் சங்கரிக்கப் பட்ட உலகம் மீளவுந் தோன்றுதலை உணர்த்துகின்றது. இதன்கண் அத்துவிதம் என்னுஞ் சொல்லிற்குக் கேவலாத்துவிதிகள், விசிம்மாத்துவிதிகள், துவைதிக ளென்னும் மூவரும் தம்மிலே திறம்பிக் கூறிய பொருள்க ளெல்லாம் பொருந்தாமையும், சுத்தாத்துவிதப் பொருள் இலக்கண நெறி, தருக்கநெறி, சாத்திரநெறி முதலான எந்நெறி யானும் பொருத்த முடைத் தாதலும் நன்கு உணர்த்தப் படுகின்றன. இனிப் பரிணாம வாதிகள் கன்மமில்லையெனக் கூறுதலும், கிரீடாப் பிரமவாதிகள் இறந்தவுயிர் மீளப் பிறப்பதில்லை யெனலும் ஈண்டே மறுக்கப் படுகின்றன. பொருளுக்கு அதன்சத்தி வேறென்னும் மீமாஞ் சகர் மதமும், பொருளுஞ் சத்தியும் ஒன்றே யென்னும் நையாயிகர் மதமும் பொருந்தாமை ஈண்டே காட்டப்படுகின்றன. உளதில தென்றலின் என்னும் மூன்றாம் சூத்திரம் காணப்படுகின்ற அசேதன சரீரத்தின் வேறாய் அதனை இயக்கும் சேதனப் பொருளாகிய ஆன்மா உண்டென்று நாட்டுகின்றது. இல்பொருளே ஆன்மா என்னும் சூனியான்ம வாதியும், உடம்பே ஆன்மா என்னும் தேகான்ம வாதியும், ஐம்பொறிகளே ஆன்மா வென்னும் இந்திரியான்மீக வாதியும், கனவுடம்பே ஆன்மா வென்னும் சூக்குமதேகான்ம வாதியும், பிராணனே ஆன்மா வென்னும் பிராணான்ம வாதியும், பிரமமே ஆன்மாவென்னும் விஞ்ஞானான்ம வாதியும், எல்லாக் கருவிகளும் ஒன்றுகூடிய கூட்டமே ஆன்மா வென்னும் சௌத்திராந்திகர் வைபாடிகர் முதலிய சமூகான்ம வாதிகளும் ஈண்டு மறுக்கப்படுகின்றனர். அந்தக்கரணம் என்னும் நான்காஞ் சூத்திரமும் ஆன்மா உண்டென்பதனையே வலியுறுத்துகின்றது. மேலை மூன்றாம் சூத்திரத்திற் கூறாது எஞ்சிநின்ற அந்தக்கரணான்ம வாதிகள் மதம் ஈண்டு ஆராய்ந்து மறுக்கப்படுகின்றது. ஆன்மா ஆணவமல முடைத்தாய் அறிவிழந்தமையும், மாயை அவ்வறிவைச் சிறிது விளக்குதற்குபகார முடைத் தாதலும் ஈண்டே உணர்த்தப்படுகின்றன. சாக்கிர முதலான ஐந்தவத்தை களியல்பும் ஈண்டே காட்டப்படுகின்றன. விளம்பிய வுள்ளத்து மெய் வாய் கண் மூக்கு என்னும் ஐந்தாம் சூத்திரம் ஆன்மாவும் அவ்வான்மாவுக்கு அறிவு விளக்கும் பிரகிருதியின் காரியமான ஐம்பொறி முதலான கருவிகளுமே அமையும், இவற்றின் வேறாகக் கடவுள் ஒன்று வேண்டாம் எனச் சாங்கியர் கூறுதலை மறுத்து அவற்றை அதனோடு இயைவித்து உபகரிக்கின்ற முழுமுதற்கடவுள் இன்றியமையாது வேண்டப்படும் என வலி யுறுக்கின்றது. ஈண்டே ஈசுர வவிகாரவாதி மதமும் மறுக்கப்படுகின்றது. உணருருவசத்தெனின் என்னும் ஆறாஞ் சூத்திரம் ஆன்ம அறிவால் அறியப்பட்டு நிலையின்றி அழிவது அசத்து என்பதூஉம், முழுமுதற்கடவுள் அங்ஙனம் ஆன்ம வறிவால் அறியப் படுவதன் றாகலின் அஃதழிவில்லாச் சத்தா மென்பதூஉம் வரையறுத்துப் பரம்பொருளியல்பு முற்ற அறிவுறுத்துகின்றது. முதல்வன், பிரபஞ்சத்தைப்போல் தருக்கவறிவா லறியப்படுவதேயாமென்னும் நையாயிகர் மதமும், அப்பரம்பொருள் அநிருவசனம் என்னும் மாயா வாதி மதமும், அதுதியானபாவனைக்கட் கோசரமாம் என்னும் யோகநூலார் மதமும், உயிர் மலநீங்கியவழி முத்தியிற் சிவனோ டொப்ப எண்குண முதலியன உடையவாம் என்னுஞ் சிவசமவாதி மதமும், முத்தியிற் சிவத் தோடு ஒன்றாய்ப் போவதே உயிரென்னுஞ் சிவாத்துவித சைவர் சுத்தசைவர் முதலியோர் மதமும் ஈண்டெடுத்து மறுக்கப்படுகின்றன. யாவையும் சூனியம் என்னும் ஏழாஞ்சூத்திரம், மேலைச் சூத்திரத்தால் சத்தாவது சிவம் அசத்தாவது பிரபஞ்சமென் றுணர்த்தியவழி உயிர் சத்து அசத்து என்னும் இரண்டில் எதன்கட்படுமென எழும் ஆசங்கை போக்குதற் பொருட்டு உயிர் சத்தும் அசத்து மன்றாய்ச் சதசத்தா மியல்புடைத்தென அறிவுறுக்கின்றது. சத்தாகிய சிவத்தின் முன் அசத்தாகிய பிரபஞ்சம் பிரகாசியா தென்னும் உண்மை இனிது விளக்கப் படுகின்றது. இதன்கட் சிவமே எல்லாமாம் என்னும் சிவாத்துவித சைவர் மதமும், அசத்தாகிய காரணங்கள் முத்தி நிலையிற் சிவகரணமாய்ச் சிவத்தை அறிதல் செய்யுமென்னுஞ் சிவ சங்கிராந்தவாதி மதமும் மறுக்கப்படுதல் காண்க. ஐம்புலவேடரின் என்னும் எட்டாஞ் சூத்திரம் சிவமே குருவாய் முன்வந்து ஆன்மாவின் உண்மைத் தன்மை யுணர்த்தி அதற்கு அறிவுகொளுத்துமாறும், அங்ஙனம் உணர்த்தப்பட்ட ஆன்மா சிவன் திருவடியைத் தலைக் கூடுமாறும் வகுத்துரைக் கின்றது. வேதத்துட் கூறிய வேள்வி வேட்டலானே தத்துவ ஞானந் தலைப்படுமாகலின், ஆன்மாவிற்குச் சரியை முதலான தவங்கள் வேண்டப்படா வெனக் கூறும் பாட்டாசாரியன் மதமும், சிவமே குருவாய் வரல்வேண்டுமென வேண்டா ஞானத்தை உணர்த்துவானும் நம்மனோரில் ஒருவனாதலே யமையு மென்னுஞ் சாங்கியர் நையாயிகர் மதமும், விடய ஞானத்தை விளக்கும் ஐம்பொறிகளே தத்துவ ஞானத்தையும் பயப்பிக்கும் என்னுஞ் சிவசங்கிராந்தவாதசைவர் மதமும், ஆன்மாத் தன்னைப் பொய்ப்புலன்களின் வேறாகக் காண்டலே அமையும், அது முதல்வன் பாதத்தை அணையு மென்றல் பொருந்தா தென்னும் பேதவாத சைவர் மதமும், முதல்வன் திருவடியை எய்திய ஆன்மா மீண்டு மதனை விடுத்து வருதலும் உண்டென்னுஞ் சிவாத்துவித சைவர் மதமும் ஈண்டெடுத்து மறுக்கப்படுதல் காண்க. ஊனக்கண்பாச முணரா என்னும் ஒன்பதாஞ் சூத்திரம் மேலைச் சூத்திரத்து ஓதப்பட்டவாறு குருவா னுணர்த்தப்பட்ட ஆன்மா அவ்வுபதேசத்தை இடையறாது சிந்தனை செய்து தன்னைத் தூய்மை செய்து கொள்ளு மாற்றை விரித்துரைக் கின்றது. பரமான்மா ஆன்மவறிவால் அறியப்படுவதே யாமென்னுஞ் சிவசமவாத சைவர்மதம் ஈண்டு மறுக்கப் படுகின்றது. அவனேதானே என்னும் பத்தாஞ் சூத்திரம் மேலைச் சூத்திரத்தோதிய வாறே தன்னைச் சுத்தி செய்த ஆன்மாப் பாசங்களினின்றுங் கழலப் பெறுமாறு கூறு கின்றது. ஞானத்தைப்பெற்று முதல்வனை யறிதலே போதுமென்னுஞ் சிவசமவாத சைவர் மதமும், உடம்பு உளதாங்காறும் அதன் வழிவரும் வினை நுகர்ச்சியினைக் கடத்தல் முடியாதாகலின் இறைபணியி னேகனாகி நிற்றல் கூடாதென்னுஞ் சுத்தசைவர் மதமும் ஈண்டெடுத்து மறுக்கப்படுகின்றன. காணுங் கண்ணுக்கு என்னும் பதினோராஞ் சூத்திரம் தன்னோடு அத்துவிதமாய் நின்று தனக்கறிவை விளக்கிவரும் அரன்பாற் பேரன்பு செய்து அவ்வத்துவித நிலையை அயராது கடைப்பிடிக்குமாயின் ஆன்மா அம் முதல்வன் திருவடிச் சிவானந்தானு பூதியைத் தலைப்படும் என்கின்றது. இதன்கண், உயிருக்குக் குணம்போல அநாதி யாயுள்ள சகசமலம் முத்தியில் அவ்வுயிரின் வேறாய்ப் பிரிக்கற் பாலதன்றென்னும் பாடாண வாத சைவர் மதம் மறுக்கப்படுகின்றது. செம்மலர் நோன்றாள் என்னும் பன்னிரண்டாஞ் சூத்திரம் சீவன் முத்தர்க்கு இறைவன் றிருவடிக்கட் பதிந்த அறிவிச்சைச் செயல்கள் ஒரோவழிப் புறத்தே செல்லுமாயின் அவை செல்லுமிடம் உணர்த்து முகத்தாற் சிந்தித்தாற் கரியனான முதல்வனைச் சிந்தித்தற் கெளியனாகத் தெளியக் கண்டு வழிபடுமாறுணர்த்துகின்றது. எம்மரிய சகோதரர்காள்! இச்சூத்திரங்கள் பன்னிரண் டிற் பொதிந்த இவ்வரும் பொருளெல்லாம் எத்துணை நுண்ணியவாயிருக்கின்றன. இப்பொருள்களுள் ஒருசில வாயினும் வேறு பெரு நூல்களிற் காணப்படுதல் உண்டோ? சொல்லுமின்! அன்றி, இவ்வளவு பொருள்களையும் இப் பன்னிரண்டு சூத்திரங்களிற் செறித்துக்கூறிய சிவஞான போதம் போல் முழுநூல் வேறு எங்காயினுமுண்டா? ஆ! இதன் அருமை பெருமையை நினைக்க நினைக்க இதன் சிறப்பை எங்ஙனங் கூறுவதென்று உளந்தடுமாறுகின்றது! இத்துணைச் சிறந்த ஞானநூலை எளிதிற் பெற்ற தமிழ் நன்மக்காளகிய நுங்கள் புண்ணியமே புண்ணியம்! யானுந் தமிழனாகப் பிறத்தற்கு மேற்செய்த நல்வினையை எண்ணி எண்ணி இறுமாப் பெய்து கின்றேன். உலகத்திற் பலவாக விரிந்த நூல்களெல்லாஞ் சில வாழ்நாளும் பல்பிணியுமுடைய எமக்கு யாது பயன் உடையவாம்? உண்மை முடிபை யுணர்த்தும் ஒரு மொழியே எமக்கு உறுதி பயப்பதாகும். இப்பெற்றி யுணர்ந்தன்றே பட்டினத்துப் பிள்ளையார். மண்ணுமுருகு மரமுருகு மாயையுருகு மாலுருகும் பெண்ணுமுருகு மாணுருகும் பேதாபேத வகையுருகும் அண்ணலுருகு மிடத்தமர்ந்த ஆத்தாளுருகு மரவணையான் எண்ணியுருகுங் குருநாத னென்பாலுரைத்தவோர் மொழியே என்றருளிச் செய்வாராயினர். இவ்வாறே தாயுமான சுவாமிகளும் சிவஞான சித்தியின் விழுப்பந்தேற்றிப் பாதிவிருத்தத்தாலிப்பார் விருத்தமாகவுண்மை சாதித்தார்பொன்னடியைத் தான்பணிவதெந்நாளோ என்றதூஉம், பிறசான்றோரும், பார்விரித்தநூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே ஓர்விருத்தப்பாதிபோதும் என்றதூஉம் உற்றுணரற் பாலவாமென்க. இங்ஙனம் மிகச் சுருங்கிய ஞான முழுமுதற் பெருநூலான சிவஞான போதத்தின் றெய்வமாட்சி உள்ளவாறே புலப்படுத்தற் கென்றே வேதம் பசுவதன்பான் மெய்யாகம நால்வ ரோதுந் தமிழதனி னுள்ளுறுநெய் - போதமிகு நெய்யி னுறுசுவையா நீள்வெண்ணெய் மெய்கண்டான் செய்த தமிழ் நூலின் றிறம் என்னுஞ் சான்றோர் திருவாக்கெழுந்தது. என்றிதுகாறுங் கூறிய வாற்றால் வேதம் பசுவின் சரீரம் போலப் பயன்படுதலுடைய பாகஞ் சிறிதுந் தம்மிற்றாம் பயன்படுத லில்லாத பாகம் பெரிதுமுடைத்தா மென்பதூஉம், பசுவின்கட் சத்த தாதுக்களும் பாலைச் சுரப்பித்தற்கு இன்றியமையாது வேண்டப்படுதல் போல வேதத்திற் கூறிய காரியமூர்த்திக ளுபாசனை அனைத்தும் காரணப் பிரமத்தை அடைவித்தற் குரிய முறையாற் பயன்படுதலுடையவா மென்பதூஉம், அக்காரியமூர்த்திக ளுபாசனையெல்லாம் பலதிறப்பட்ட பக்குவமுடையாரை நோக்கியே எழுந்தன வாகலின் அவை யொவ்வொன்றும் ஆண்டாண்டுச் சிறப்பித்துக் கூறப்படு மென்பதூஉம், இவ்வாறு அவ்வக் காரிய மூர்த்தியினையும் ஆண்டாண்டு உபசார வழக்காற் பிரமம் பிரமமென ஓதுதலின் வேதம்தனைக் கற்பார்க்கு மயக்கத்தை விளைவிப்பதா மென்பதூஉம் இங்ஙனமெல்லாம் மயக்கத்தை விளைவியாது தத்துவங்கடந்த பரப்பிரமப் பொருட் சொரூபத்தை இனிது விளங்கக் காட்டும் சிவாகமங்கள் பசுவிற் கறந்து கொள்ளப்படும் பால்போல வேதத்தினுஞ் சிறப்புடைய வாமென்பதூஉம், பாலினும் அப்பாலிற் றிரண்ட நெய்யே விசேடமுடைத் தாதல்போலச் சிவாகமங்களினும் அவற்றின் முடிபொருளான சுத்தஞான காண்டப் பொருள் விஷயமான சிவத்தையே வழுத்து முரிமையுடைய நால்வர் திருவாக்குக் கழிபெருஞ் சிறப்புடைத் தாமென்பதூஉம், நெய்யினும் நெய்யின்கட் சுவை மிக்க விழுப்பமுடைத்தாதல்போலச் சிவத்தை யுணர்த்தும் தமிழ்நான் மறையினுஞ் சிவஞானத்தை யுணர்த்தும் சிவஞானபோதநூல் வரையறுக்கலாகாப் பெருமாட்சி யுடைத்தாமென்பதூஉம், வேதமுஞ்சிவாக மமும் ஒன்றை யொன்று அவாவாது தனித்து நடைபெறல் போலத் தமிழ் நான்மறையும் சிவஞானபோதவாகமமும் தனித்தனியே நடவாது தம்முட்பொருந்தி நடப்பதா மென்பதூஉம், தமிழ்ப்பாஷை யொன்றே சொற் சுருக்கமும் பொருட் பெருக்கமுமுடைய ஞான நூல்களை யுடையதாகு மென்பது காட்டு முகத்தாற் றெய்வத் திருக்குறள் நூலொன்றே சுருங்கத் தெளிக்கு முறையை நன்கு நிலைபெறுத்துமென்பதூஉம், அதிதீவிர பக்குவமுடையார் பொருட்டு இயற்கைநெறி நூல்களும் மந்த பக்குவ முடையார் பொருட்டுச் செயற்கை நெறி நூல்களும் ஆன்றோரான் வகுத் தெழுதப்பட்டன வென்பதூஉம், செயற்கை நெறி நூல் களினுள்ளவெல்லாம் இயற்கை நெறி நூல்களுட் காணக் கிடக்கும். இயற்கை நெறி நூலிலுள்ளன செயற்கை நெறி நூலுட்காணப்படா வென்பதற்குத் திருக்குறள் ஒன்றே சான்றாமென்பதூஉம், இத்தகைய திருக்குறள் நூலினும் சிவஞானபோதம் மிகச் சுருங்கிய ஞான முழுமுதல் நூலாமென்பதூஉம், இஞ்ஞான நூலிலே ஒவ்வொரு சூத்திரமும் இன்னின்ன பொருள்களை உணர்த்து மென்பதூஉம், இத்துணைச் சுருக்கமாக முடிபொருளை உணர்த்துதலே சான்றோர்க் கெல்லா மொப்ப முடிந்ததா மென்பதூஉம் ஒருவாறு விளக்கப் பட்டன. ஓம்சிவாய நம! ஓம்சிவாய நம! ஓம்சிவாய நம!. மூன்றாம் உபந்நியாசம் 1. மெய்கண்ட தேவர் உலகத்திலுள்ள மக்கள் தமக்குள்ள அறியாமை தேயப் பெற்று அறிவு மிகுதியுமுடையராய் விளக்கமுற்று வரும் போது, தம்மறிவாற் பலவும் நுணுகி யறியப் புகுந்து அவ் வறிவுக்கு முழுமுதற் கடவுள் நிலையும் தம்முடைய நிலையும் புலப்படாமையினால் அவை இல் பொருள்களே யாமென்று உறுதிகட்டுவர். கடவுள் நிலைமக்கள் அறிவுக்குப் புலப்படுவ தன்று. மக்களுக்குப் பொருளுண்மை அறிவிப்பது அறிவு மாத்திரமே யென்று நினைதல் வழுவாம். உயிருடையன வெல்லாம் பொருளுண்மை அறிவதற்கு இருவகை நிலைகள் இருக்கின்றன; அவை அறிவுநிலை உணர்வுநிலை என்பனவாம். அறிவுநிலையும் பொறி வழிப்படுவதூஉம், பாவனை வழிப்படுவதூஉமென இருதிறப் படும். மெய், வாய், கண், மூக்குச், செவி என்னும் பஞ்சேந்திரிய வழிவரும் அறிவு பொறி வழிப்படுவதாகும். இப்பஞ்சேந் திரிய வழிவந்த அறிவு அனுபவங்கொண்டு பஞ்சேந்திரியங் களுக்கும் அனுபவம் ஆகாததனை அறியும் அறிவு பாவனை வழிப் படுவதாகும். சத்தப் பரிசரூபரசகந்தங்கள் ஐந்தும் பொறி வழியே விளங்கும் அறிவுநிலை என்றும், ஒருவனுக்கு அறிவு உண்டு விருப்ப முண்டு என்றற் றொடக்கத்தான் வரும் அனுபவ அறிவு பாவனை வழியே விளங்கும் அறிவுநிலை என்றும் யாம் இனிது உணர்கின்றேம். இனி ஒரோவொரு காலத்து எம் அகத்தே ஓர் இன்பந் தோன்றப் பெற்றக்கால் அவ்வின்பம் பொறிவழிவரும் அறி வானும், பாவனை வழிவரும் அறிவானும் அறியப்படாத இயல்பினதாய் நிகழ்வதை இனிது உணர்கின்றேம். அவ்வின்பம் நிகழும்பொழுது முன் அறிந்த அவ்விருவகை அறிவு நிலைகளும் ஒரு சிறிதாயினும் நிலைபெற மாட்டாவாய் ஒழிகின்றன. அவ்வின்பம் எமக்குப் புலனாயதைப் பிறர்க்குக் கூறும்வழி அதனை உணர்ந்தேம் என்கின்றேம். பொறி களானும் பாவனையானும் அறிந்ததைப் பிறர்க்குக் கூறுங்கால் யாம் அதனை அறிந்தேம் என்கின்றேம். ஆகவே ஆன்ம அனுபவ மெல்லாம் அறிவும், உணர்வும் என இருவகையாய் அடங்கும். பின்னும் ஒருகால் நுணுகி யறியப்படுமாயின், அறிவுநிலை உணர்வு நிலையுள் அடங்கப் பெறுவதென்பதும், உணர்வுநிலை அறிவுநிலையில் அடங்கப் பெறாதென்பதும் நன்கு பெறப்படும். அது கிடக்க. இனி எமதறிவால் அறியப்படுவனவெல்லாம் பிருதிவி, அப்புத், தேயு, வாய், ஆகாயம் என்னும் பஞ்சேந்திரியங் களும் அப்பஞ்சபூத மயக்கமான இப்பிரபஞ்சமும் இவற்றின் கட் பட்ட உயிர் வருக்கங்களுமே யல்லது பிறிதில்லை. முழுமுதற் கடவுளும் உம் அறிவால் அறியப்படுவதாயின் அதுவும் இப்பிரபஞ்சத்துட் பொருள் போல ஏகதேச இலக்க முடையதாக வேண்டுமாகலின், அஃதெம் அறிவு அனுபவத் திற்குப் புலப்படும் பொரு ளென்றல் ஒருவாற்றா னும் ஏலாது. இனி, எமதுணர்வோ இப்பிரபஞ்சத்துட்பொருளொன் றனையும் பற்றுவதன்றாய், அதன்மேற் கடந்து விளங்கு வதாகலின் இவற்றிற்கெல்லாம் அதீத வதுவாய் விளங்கும் பரம் பொருளை அதுவே அனுபவித் துணர்தற் குரிமை உடைய தாகும். எம் அகத்து ஒரோவழித்தோன்றும் பேரின்பானு பவமே சிவானுபவமென்றறியற்பாற்று. சிவம் என்னும் முழுமுதற் பொருள் பேரின்ப நிலையாயுள்ள தென்பது பற்றியே, அன்புஞ் சிவமு மிரண்டென்ப ரறிவிலார் அன்பே சிவமாவ தியாரு மறிகிலார் அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந் திருந்தாரே என்னுந் திருவாக்கும் எழுந்தது. இங்ஙனம் உணர்வுநிலையான் மாத்திரம் அனுபவித் துணரற் பாலதாகிய சிவ பரம்பொருள், அதனினுங் கீழ்த் தரமான அறிவு நிலையாற் குறிக்கப்படுதல் எவ்வாற்றானும் இல்லை. ஆகவே, சிற்றறிவினரான மக்கள் தம் நூலறிவானும் இயற்கை நுண்ணறிவானும் அப்பரம்பொருளை அறிவே மெனப் புகுந்து அதனைக் கண்டறியாமையின் இடர்ப்பட்டு மயங்கி அஃதில் பொருளென ஆரவாரவுரைவிரித்தல் ஒரு சிறிதும் பொருந்தாது. அவர் தம்மறிவையே மேம்படுத்துக் கொண்டு அவ்வறிவினும் மேற்பட்ட நிலைக்கண் விளங்கு வதான தமது உணர்வு நிலையின் அருமை பெருமையைச் சிறிதாயினும் உணர்ந்தாரில்லை. இவ்வாறு அவர் அறிவு நிலைக்கண் மாத்திரம் எய்தி அதன் மேலுச்சிக்கண்ணதான உணர்வு நிலையிற் சேரமாட்டாது வருந்தி இடர்ப்படுங் காலத்து, அவர்க்கு அது கைகூடுமாறு செய்து காட்டவல்ல சான்றோர் இந்நில வுலகத்தில் அவதரிப்பர். அறிவுநிலையி லுள்ளாரை எடுத்து அன்பு நிலையிற் கூட்டுதற்குரியார், அறிவு மாத்திரம் மிக உடைய நம்மனோர்போலாது அவ்வறிவே யன்றி உணர்வுநிலை முற்றும் அனுபவித்தாராகற் பாலார். அறிவு நிலையினுள்ள நம்மனோர் குழந்தைகள் போலப் பருவ முதிர முதிரச் சிறிது சிறிதாய் அறிவு கூடப்பெறாது, குழவிப் பருவந்தொட்டே அறிவுநிலை முழுமும் கரைகண்டு அதன்மேல் உணர்வு நிலையிற் சென்று வைகுவர். நம்மனோர் குழந்தைகளிடத்துப் போலப் பிள்ளைச் செய்கைகள் அவர்களிடத்துக் காணப்படமாட்டா. அவர்களிடத்துக் காணப்படுங் குறிகுணங்களெல்லாம் நம்ம னோர் அறிவனு பவத்திற்கு முற்றும் மாறாயிருக்கும். கழிகாமுக ராயினார் தங்காதற்கிழத்திமாரிடத்துச் செய்யும் இலீலா வினோதங் களெல்லாம், அஃதில்லார்க்கு மிகப்புதுமையா யிருத்தல் போல, உணர்வு நிலையில் வைகி ஆண்டு வரம்பின்றி விரிந்த பேரின்ப வெள்ளத்துட்டிளைத்து இறுமாந்திருப்பார் குணச் செயல் களெல்லாம் நம்மனோர் குணச்செயல்களுக்கு முற்றும் ஒவ்வாதனவாகவே காணப்படும். எம்மினிய நண்பர்காள்! அறிவு மிகுதியி முடையராய் விளங்கிய நஞ்செந்தமிழ் முதுமக்களை அவ்வறிவின் மேற்பட்ட அன்புநிலைக்கண் உயர்த்திக்கொண்டுபோய் இரட்சித்து அவரைச் சிவானந்தவமிழ்து நுகர்வித்த தெய்வப் பெரியார் யார் என்று வினவுதிராயின் அவர்தாம் மெய்கண்ட தேவர் என்றறிமின்கள்! இற்றைக்கு அறுநூற்றைம்பது வருடங்களுக்கு முன் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப பிள்ளையார் அருமைப் புதல்வியைத் திருவெண் காட்டிலிருந்த அச்சுதன் என்பார் மணந்து இல்லற நெறி வழாது இருவரும் நேசவுரிமையிற் சிறந்து வாழ்ந்து வந்தனர். சடையப்ப பிள்ளையாரது சைவ வேளாள குடும்பம் தமிழ் நாடெங்கும் மிகப் பிரசத்தி பெற்ற தொன்றாம். சடையப்ப பிள்ளையார் கணக்கிடப்படாத செழுஞ் செல்வமுடையா ரென்றும், இவர் தங் காலத்திருந்த சோழ மன்னனுக்குப் பெருவிருந்தியற்றி னாரென்றும், அவனோடு மைத்துனக் கிழமை பூண்டு அவனாற் பெரிதும் பாராட்டப்பட்டன ரென்றும், தமிழ்ப் புலவர் பலர்க்கும் பொருட்டிரள் நல்கி அவராற் றமிழ்ப் பாஷையை மிக வளம்படுத்து வந்தன ரென்றும், இளம் பருவத்தே மிக வறுமைப்பட்டுத் தம்பால் எய்திய கம்பர்க்கு ஊண்கொடுத்து உடைகொடுத்துக் கல்வியறிவு கொடுத்துப் பாதுகாத்தன ரென்றும் பலவாகத் தமிழ் நாடெல்லாம் அவர் பெரும் புகழை மீக் கூறுகின்றது. இங்ஙனஞ் சடையப்ப வள்ளலார் குடும்பம் ஞானநிலை கூடுதற்குக் கருவியான தமிழ் மொழியைப் பல்கச் செய்தன் மாத்திரையில் அமைதி பெறாது, அந்த ஞான நிலையினையும் விளக்குதற்கு விரும்பின குறிப்பைப் புலப் படுத்தவே அச்சடையப்ப வள்ளலாரின் அருமைப் புதல்வியார் மணிவயிற்றில் மெய்கண்டதேவர் திருவவ தாரஞ் செய்தருளு வாராயினர். இவர் திருவவதாரஞ் செய் தருளிய வரலாறு சிறிது கூறுதும். சடையப்ப பிள்ளையார் அருமைப் புதல்வியாரும் அவர் காதற் கொழுநன் அச்சுதன் என்பாரும் திருப் பெண்ணா கடத்தில் மிக ஒருமித்து வாழ்ந்து வருநாளில் தமக்கு நீண்ட நாளாகப் புதல்வர்ப்பேறு வாயாமைகண்டு மனம் வருந்தி, மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன், நன்கல நன்மக்கட்பேறு என்ற திருவாக்கை (குறள் 60) சிந்தித்துப் புதல்வர்ப் பெறேமாயின் நம் இல் வாழ்க்கை வறிதாமன்றே! என் செய்வேம்! ஈசா! என எண்ணி எண்ணி வாடுவர். இங்ஙனம் வாடுவார்க்கு ஒருநாட் சடுதியில் ஒரு கருத்துத் தோன்ற அவர் திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருமுறையை எடுத்துப் பூசித்துப் புதல்வர்பேற்றை விரும்பி கயிறு சாத்திப் பார்க்க அவர்க்குப் பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ளநினை வாயினவேவரம்பெறுவ ரையுறவேண்டாவொன்றும் வேயனதோளுமைபங்கன் வெண்காட்டுமுக்குளநீர் தோய்வினையாரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே என்னுந் திருவாக்குத் தோன்றுவதாயிற்று. அதுகண்டு அவர் பேருவகை யடைந்து திருவெண்காட்டிற் றிருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பெருமானையும் பெருமாட்டி யாரையும், ஆண்டுள்ள முக்குளநீர் என்னுந் தீர்த்தத்திற் படிந்தெழுந்து நாடோறும் பூசித்து வழிபாடு இயற்றி வருவா ராயினர். இவ்வாறு வழிபாடு இயற்றிவரச் சின்னாளில் அச்சுதனார் அருமை மனைக்கிழத்தியார் கருக்கொண்டார். கொள்ள, அப்பரிசுத்தமான கரு நாளும் பிறைமதி போல் வளர்ந்து பத்துத் திங்களும் முற்றி ஆண்மகவுக்குரிய கர சரணாதி அவயவங்கள் வடுவறத் திருந்திப் பேரழகு கனிந்து பச்சிள ஞாயிறு தோன்றினாற்போற் றிருவவதாரஞ் செய்தது. இங்கொன்று கவனிக்கற்பாற்று. உலகை நல்வழிப் படுத்தற்குப் பிறக்கும் பிள்ளைகளெல்லாம் தாய் தந்தையர் மணஞ்செய்து நெடுநாட் கழிந்தபின் அவர் வருந்தி வருந்தி இறைவனை வேண்டிக்குறையிரக்கப் பின் பிறக்கின்றனர். இஃது உலகிற் பெரும்பான்மை வழக்கமாய்க் காணக் கிடக்கின்றது. தாய் தந்தையர் வருந்தி வேண்டாப் பருவத்தே பிறக்கும் பிள்ளைகள் தாய் தந்தையர்க்குரிய குணங் குறிகளாதல் அவர்க்கு முற்பட்ட மூதாதையர்க்குரிய குணங் குறிகளாதல் மாத்திரம் வாய்ப்பப் பெறுகின்றனரல்லது வேறு விசேட முடைய ராக இருக்கக் காண்கின்றிலேம். வேண்டாப் பருவத்தே அவர் வெறுங் காமவயப்பட்டு ஒழுகுகின்றா ராகலின், அக்காம நினைவுதலை நின்ற அக்காலத்துத் தோன்றும் பிள்ளைகள் சாமானிய மக்களிலக்கண முடைய ராயிருக்கின்றனர். தாய் தந்தையரது நினைவின் றோற்றங்கள் அக்காலத் துற்பத்தியாங் கருவிற் பதிந்து நிலைபெறுகின்றன. புணர்ச்சிக் காலத்து விந்துவும் நாதமுங் கூடிக் கருவுற்பத்தி யாம்போது தாய் தந்தையர் மாட்டு யாதொன்று பாவிக்கப் பட்டது. அஃது அக்கருவின் அறிவும் வடிவுமாமெனப் பிண்டோற்பத்தி நூல்களால் நன்கு வலியுறுத்தப்பட்டது. புணர்ச்சிக் காலத்துக் கொழுநனும் மனைவியும் பரிசுத்த சிந்தை யுடையராய் நறுமணம் அளைந்து குழலோசை யாழோசை கேட்டு நன்கு சித்திரிக்கப் பட்ட வுருக்கள் கண்டு இங்ஙன மெல்லாம் மனமகிழ்ந்து அளவளாவுதல் வேண்டு மென இன்ப நூல்களும் இனிது காட்டின. நல்ல தாய் தந்தையர் மாட்டு உலகு திருத்தும் புத்திரரைத் தோற்று வித்தற்குச் சங்கற்பித்த இறைவன் றிருவருளானது, அவர்க்கு முற் பருவத்தே மிக்குத்தோன்றும் வெறுங்காம வின்ப மெல்லாம் நுகர்வித்து ஒழித்து அவரைச் சுத்தி செய்தற் பொருட்டு அவரது அம் முற்பருவத்தே அப்புத்திரரைத் தோற்றுவியாதாகும். மணஞ் செய்த சில வருடங்களெல்லாம் ஆராக்காம வின்பந் துய்த்து ஒழித்துப் பருவ முதிர முதிர அவ்வெறுங்காமநினைவு கீழ்ப்படப் புத்திரர்ப் பெறவேண்டும் சுத்த அன்புணர்வு தலைப்படு மாகலின் அவரதுபிற்பருவமே சற்புத்திரப் பேற்றிற்குத் தகவுடைத்தாகும். இன்னும் அப்புத்திரப் பேற்றை வேண்டும் போதெல்லாம் தெய்வ வுணர்வும் உடன் நிகழு மாகலின் அப்பிற்பருவம் மிகவும் பரிசுத்த முடைத்தாய்த் திகழும். இவ்வாறு காமம் முதலிய தாமதகுணங்கள் வலியொழிந்து நிற்பச் சுத்த அன்புணர்வும் அதனோடு ஒற்றுமையுடைய தெய்வவுணர்வும் தலை யெடுத்துத் திகழும் அப்பிற் பருவத்திலே முன் சங்கற்பித்த முதல்வன் றிருவரு ளானது பிரேரேபிக்க உலகு வழிப்படுத்தும் நற்புதல்வர் திருவவதாரஞ் செய்திடுவ ரென்க. இவ்வுண்மை கடைப்பிடித் தன்றே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும் (குறள் 114) என்று அருளிச் செய்வாராயிற்று. பெற்றார் பரிசுத்த முடையரா யிருந்தகாலத் துற்பத்தியான புதல்வராயின் அப்புதல்வர் தக்காராய் மேம்பாடுற்று விளங்குவர்; அவர் பரிசுத்த மில்லாதஞான் றுற்பத்தியாயினராயின் அவர் தகவிலராய் உலகத்தாராற் பழிக்கப்படுவர் என்பது தேற்றமாம். ஆகவே, அச்சுதனாரும் அவர் காதற் கிழத்தியாரும் மணங்கூடியபின் நெடுநாட் பிள்ளைப்பேறின்றி யிருந்தது அவர்பால் மிகப் பரிசுத்தமான ஒரு சிவஞானக் குழந்தையை உற்பவித்தற்பொருட்டுச் சங்கற்பித்த சிவபெருமான் திருவரு ளானது அவர் தம்மைச் சுத்தஞ் செய்ததற்காகவே செய் வித்தா மென்பதும், பின்னர் அவர் மகப்பேறு வேண்டிக் குறை யிரந்து தீர்த்தமாடிச் சிவாலயவழிபாடியற்றிச் சுத்த அன்புணர்வும் தெய்வவுணர்வும் தலைப்பட்டு நின்றுழி அவர்க்கு அம்மகவைத் தந்துதவியது அவ்விறைவன் அருட் குறிப்பா மென்பதும் இனிது பெறற்பாலனவாம். இனி இங்ஙனம் திருவவதாரஞ் செய்த புதல்வர் திருவருட் பிரேரகத்தாற் றோன்றியவராதல்பற்றி, அவர்க்குத் திருவெண் காட்டிறைவர் பெயர் சூட்டிச் சுவேதவனப் பெருமாள் என்று பெற்றோரும் மற்றோரும் அழைப்பா ராயினர். வரம்பின்றி விரிந்த செல்வ வளத்தாற் பொலிந்த அவ்வச்சுதனார் மனையில் நந்தாமணி விளக்கமாய்ச் சுவேதவனப் பெருமாள் என்னும் அப்பிள்ளையார் சிறந்து வளர்வாராயினர். அப்பிள்ளையார் வடிவழகையும், நோக்கழகையும், திருமுக விலாசத்தையும், ஆம்பற்செவ்வாய் நகையழகையுங் கண்டு களித்த அப்பெற் றோரும் மற்றோரும் பெற்ற கண்களோ கண்கள்; அவர் செய்த புண்ணியமே புண்ணியம். அப்பிள்ளையார் உருத்தோற்றச் சிறப்பினை நினையுந் தோறுங் கல்லினும் வல்லென்ற எம்மனமுங் கசிந்துருகுமாயின், அவரோடு உடனிருந்து அவரை ஆரக் கண்டு அனுபவித்த அன்னார் புண்ணியச் சிறப்பை என்னென்று கூறுவேம்! இனி, அச்சுதனார்க்கு மைத்துனரும் சடையப்ப வள்ளலார் புதல்வரு மாய்த் திருவெண்ணெய் நல்லூரி லிருந்தவர்க்குப் பிள்ளைப் பேறில்லாமை யால், அவர் தந் தங்கையார் மணி வயிற்றிற் றிருவவதாரஞ்செய்த சுவேதவனப் பெருமானைச் சுவீகாரஞ் செய்துகொள்ள நிச்சயித்துத் தங்கருத்தைத் தம் மைத்துனர்க்குந் தங்கைக்குந் தெரிவித்தார். அவரிருவரும் அதனை மறுக்கமாட்டாராய் இசைந்து, பின்தம் அருமைப் புதல்வரைப் பிரிந்திருக்க ஒரு கணமுந்தரி யாமையால் தாமும் திருவெண்ணெய் நல்லூர்க்குச்சென்று சடையப்ப வள்ளலார் அருமைத் திருமாளிகையிலேயே வசிப்பாராயினார். இது முதல் சுவேதவனப் பிள்ளையார்க்கு நிலையான இருப்பிடம் திருவெண் ணெய் நல்லூராகவே விளங்கிற்று. பிள்ளையார்க்கு நன் மாமனும் பெற்றோரும் பிள்ளையார் திருமேனிப் பாதுகாப்பிற் பெரிதுங் குறிப்பு டையராயினார். இவ்வாறு பெருந்தவமாற்றிய நன்மாமற்கும் பெற்றார்க் கும் மற்றார்க்கும் பெருங்களிப்புச் சிறக்க நல்கியவாறே சுவேதவனப் பெருமான் கண்ணிமைபோற் போற்றப் பெற்றுவளர்ந்துவர, அவர்க்கு மூன்றாம் ஆண்டு நிரம்பிற்று. இவர் ஏனைச்சிறுமகா ரோடுகூடித் திருவிளையாட்டுச் செய்யுங் காலத்தும் அவர் மற்றவர்போல் ஒரு குறிப்புமின்றித் தோன்றியவாறெல்லாம் விளையாடாது, ஒரு புறத்தே அமைதியோடு மிருந்து ஆழ்ந்த சிந்தனை யுடையரா யிருத்தலும், அதுவிட்டால் மணலைக் குவித்து அதன்மேல் இலையைக் கிள்ளி யிடுதலுஞ் செய்திடுவர். இங்ஙனம் இவர் விளையாடா நிற்ப ஒருநாள் தெரு வழியே சென்ற பரஞ்சோதி முனிவர் என்னும் ஆன்றமைந்ததுறவி ஒருவர் இப் பிள்ளையை நோக்க அவருள்ளம் இப் பிள்ளை வயப்பட்டு ஒருங்கி நின்றது. நின்றதாக அவர் சிந்திப்பார் என்னை! இப்பிள்ளை யைக் காண்டலும் என்னுள்ளம் வேறு செல்லாது இதனிடத்தே நிலை பெறுகின்றது; இப்பிள்ளையின் றோற்ற மோ சிவபெருமான் றிருவருட் டோற்றம்போ லிருக்கின்றது; இஃதிக் குழந்தைப் பருவத்திலேயே அமைதியும் ஆழ்ந்த சிந்தனையுமுடையதா யிருக்கின்றது, மணலைக்குவித்து அதன்மேற் பச்சிலையைக் கிள்ளியிடும் இதன் செயலை நோக்கினால் இது சிவலிங்க பூசை செய்யுங் குறிப்புடைய தாய்த் தோன்றுகின்றது; இஃது ஏனை மகார்போற் சாமானியமாக லின்றித் தெய்வீக விசேடமுடைத் தாய்க் காணப்படுகின்றது என்று அதனருகிற்போய் அருட் கடைக்கண்ணோக்கஞ் சாத்தி அதன் சிரத்தின்மேற் றன் கரத்தைச் சேர்த்தி அனுக்கிரகித்தார்; அனுக்கிரகித்தலும் முன்காணப்படாது மறைந்து நின்ற தீச்சுடர் சூரியனைக் காண்டலும் சூரியகாந்தத்தில் விளங்கித் தோன்றினாற் போல, அப்பிள்ளையார்மாட்டு அந்தரங்கமாய் நின்ற சிவஞான மனைத்தும் ஒருங்கெழுச்சி பெற்று விளங்குவ தாயிற்று. விளங்கவே, சுவேதவனப் பெருமான் பரஞ்சோதி முனிவர் என்னுஞ் சிவஞானியார் அருமை பெருமை யுணர்ந்து வந்தனவழி பாடியற்ற, அம்முனிவர்பெருமான், முன்னே இறைவன் திருப் பெருந்துறையிற் குருந்தமர நிழலிற் குரு வடிவங்கொண் டெழுந்தருளி மாணிக்கவாசகருக்குப் பன்னிரண்டுகூறாய் உபதேசித்தருளிய சிவஞானபோதம் என்னும் ஞான சாத்திரத்தை இப்போதிவர்க்கு உபதேசித்து அன்பனே! இப் பன்னிரண்டு விஷயங்களையும் பன்னி ரண்டு சூத்திரங்களாகச் செய்து இவ்வுலகமெங்கும் ஞானத் துறை விளக்கி ஆன்மாக்களை உய்வித்திடுக என்று கட்டளை யிட்டுப் போயினார். ஞானாசிரியன் கட்டளையிட்ட வண்ணமே சுவேத வனப் பெருமான் என்னும் அப்பிள்ளையார் அப்பன்னி ரண்டு விஷயங்களையும் பன்னிரண்டு செந்தமிழ்ச் சூத்திரங் களாகச் செய்து, அச்சூத்திரங்கள் ஒவ்வொன்றற்கும் அதி கரணங்கள் வகுத்துக் கருத்துரையும் வாத்திகப் பொழிப்பு ரையும் உதாரணப்பாட்டுக்களும் இயற்றி அச்சிவஞான போத நூற்பொருள் யார்க்குந் தெற்றென விளங்குமாறு விரித்து உரை நிகழ்த்துவாராயினார். தேமழலை மொழி ததும்புந் திருவாயால் மூன்றுவயதுக் குழந்தையாயிருக்கும் சுவேதவனப் பெருமான் அரிய பெரிய ஞான நுண் பொருள்களைத் தெள்ளத்தெளிய விளக்குதலைக் கண்ட அவர் பெற்றோரும் தாய் மாமனும் பிறரும் வரம்புகடந்த வியப்பும் உவப்பும் எய்தினார். மிகச்சிறு பிள்ளையான நம்பெருமான் உரை முடிபுக் கெட்டாத அறிவுநூற் பொருள்களை விரித் துபந்நியசிக்கின்றார் என்பது கேட்டலும், தமிழ் நாட்டி லுள்ள சான்றோரும், கற்றாரும், துறவோரும், பிறரும் பெரிதும் வியப்படைந்து பிள்ளையார் ஞானோ பந்நியாசங் கேட்டற்பொருட்டுப் பல திசைகளி னின்றும் வந்து குழுமினார். பிள்ளையார் எழுந்தருளிய திருவெண்ணெய் நல்லூர் ஞானமகள் நடமிடும் ஞான அரங்காயிற்று; சடையப்ப வள்ளலார் திவ்விய மாளிகை ஞானக்களஞ்சியமாய் விளங் கிற்று. சுவேதவனப்பெருமா னாகிய பிள்ளையாரோ உபந்நி யாசங் கேட்கவரும் சான்றோர்க்கெல்லாம் பொருள்மயக்கந் தீர்த்து உண்மைப் பொருளை உள்ளவாறே விளங்கக்காட்டி எல்லாம் வல்ல ஞானாசிரியராய் அமர்ந்திருந்தனர். இங்ஙனம் இருக்கும் நாள்களில் திருத்துறையூரிலே வேதோப நிடத ஷடதரிசனப் பொருள் முழுதும் உணர்ந்து, அவற்றின்கட்பட்ட மயக்கப் பொருளெல்லாம் விலக்கித் துணிபுப்பொருள் ஒருப்படுவித்தற்குரிய பெருஞ்சாதனமான இருபத்தெட்டுச் சிவாகமங்களும் துறைபோகக் கற்றுத் தமக்கு நிகர்வார் யாருமின்றிப் பெருந்தத்துவ ஞானியராய் விளங்கிச் சகலாகமபண்டிதர் என்னுஞ்சிறப்புத் திருநாமம் பெற்ற அருணந்தி சிவாசாரியர் என்னுஞ் சிவவேதியர் ஒருவர் இருந்தார், இவர்பால் ஞானநூல் விசாரஞ்செய்யும் சீடர் அளவின்றியிருந்தனர். அச்சீடர்களிற் பெரும்பாலார், திருவெண்ணெய் நல்லூரில் ஞானோபந்நியாசஞ் செய்து போதரும் சுவேதவனப் பிள்ளையார் அருமை பெருமை யைக் கேள்வியுற்று அவ்வூர்க்குச் சென்று பிள்ளையார் அருளிச் செய்யும் ஞானோபதேசப் பொருள் கேட்டு ஈதொப்பதோர் புதுமை யாண்டுங்கண்டிலேம் என்று பெரிதும் வியப்புற்றுப் பிள்ளையார் பக்கலிலே யிருந்து, முன் அருணந்தி சிவாசாரியார் பால் தமக்குத் தெளியப் பெறாத இரகசிய ஞான நுண்பொரு ளெல்லாம் ஈண்டுப் பிள்ளை யார்பாலுசாவி உசாவி ஐயம் முற்றும் நீங்கப் பெற்றாராய்ப் பேருவகை எய்தித் தம்மை மறந்து மேவினார். அருணந்தி சிவாசாரியாரோ தம்பக்கலிருந்த சீடர் பலரைக் காணாராய் ஏனைச் சிலரைநோக்கி மற்றையோர் எங்குச் சென்றா ரென்று வினாவ, அவரெல்லாம் திருவெண்ணெய் நல்லூரில் சிறுபிள்ளையான சுவேதவனப் பெருமான் செய்யும் சிவஞானபோத உபந்நியாசங் கேட்கப்போயினார், என்று கூறினார். அது கேட்டலும் பேசத் தெரியாத சிறு பிள்ளை ஞானோபந்நியாசஞ் செய்வதாவது, அதனைக் கேட்க நம் சீடர் சென்றதாவது, ஈதென்னை என்று இகழ்ந்து கூறி, உண்மை தெரிதற்பொருட்டுத் தாமே திருவெண்ணெய் நல்லூர்க்குச் சென்றார். சென்று சடையப்பபிள்ளையார் மாளிகையில் நோக்கத் திரள் திரளான அறிவுடையோர் சுவேதவனப்பெருமான் என்னுஞ் சிறு பிள்ளையார்பா லிருந்து அவர் செய்யும் ஞானோ பதேசங் கேட்டலும், தம்முடைய சீடர்களும் ஆங்கவர்போ லடக்க வொடுக்கமாயிருந்து உண்மைப்பொரு டெளிதலுங் கண்டு பொறாராய் மனம்புழுங்கினார். தம்முன்னாசிரியரான சகலாகமபண்டிதர் வரக்கண்ட சீடரெல்லாரும் எழுந்திவர்க்கு உபசாரஞ் செய்தனர். உடனே, அருணந்தி சிவாசாரியார் செருக்கால் வெகுண்டு நீவிர் இப்போது யாது உசாவு கின்றீர்கள்? என்று கேட்ப, அவர்கள் ஆணவமல விசாரஞ் செய்கின்றேம் என்றார்கள். சிவாசாரியார் நம் சுவேதவனப் பிள்ளையாரை வினாக்கள் கேட்டு வெற்றிகொளல் வேண்டு மெனக் கருதிப் பிள்ளை யாரை நோக்கி ஆணவமலத்தின் சொரூப இலக்கணம் யாது? என்று வினாவினார். அதுகேட்ட பிள்ளையார் சிவாசாரி யாரது அதி தீவிர பக்குவத்தினையும், அவரிப்போது அழுக்காற்றால் செருக்குற்று வினாவுதலையுங் கண்டு இரங்கி, அவரை அனுக்கிரகித்து ஆட்கொளத் திருவுளங் கொண்டு தம தருட்கடைக்கண் நோக்கால் அவர்க்குள்ள ஆணவவலியை அடக்கி ஆணவமல சொரூபமாவது இப்போது நீர் கேள்வி கேட்டு நிற்குநிலையே தான் என்னுங்குறிப்புத் தோன்ற அவர் முடிமுதல் அடிகாறும் ஒருமுறை நோக்கிப் பின்வாளா விருந்தனர். சகலாகம பண்டிதராகிய அருணந்தி சிவாசாரியார் எல்லா ஞான நூற்பொருளும் முற்றுணர்ந்து அறியாமை தேயப்பெற்று அதி தீவிர பக்குவமுடையராயிருத்தலில், பிள்ளையார் சாத்திய அருட் கடைக்கண் ணோக்கமானது தீப் பஞ்சுத் துய்யிற் படுமாறுபோல் மிக இலேசில் அவரறிவிற் றோய்ந்து அவரைப் பரிசுத்தஞ் செய்ததாகச் சிவாசாரியாரும் பிள்ளையார் எல்லாம் வல்ல தெய்வீகஞானாசிரியராம் உண்மை உணர்ந்து, தாங் கேட்ட வினாவே ஆணவ சொரூப மாதல் குறிக்கப்பட்ட நுணுக்கத்தை நினைந்து நினைந்துருகி அடியற்ற பனைபோல் பிள்ளையார் திருவடித் தாமரைகளில் விழுந்து எங்கள் சிவஞானச் செல்வமே! புழுத்தலைநாயிற் கடைப்பட்ட என்னையுமாட் கொள்ள வெழுந்த என் அருட்குருமணியே, அடியேன் செய்த பிழையைப் பொறுத் தருளல் வேண்டும். என்னையும் ஆட் கொண்டருளி உய்வித் தருளல்வேண்டும். என நாத் தழுதழுப்ப மெய்ந் நடுங்கக் கண்ணீர் ஒழுக மொழிந்து கிடந்தார். பிள்ளையார் அன்பரே! அஞ்சற்க என உரை கூறி அவரிருகரங்களையும் பற்றி யெடுத்து அவர்க்குச் சிவஞானபோதநூல் நுண் பொருள் முழுதும் புலங்கொள அறிவுறுத்தருளினார். இனி, அச்சிவஞானபோதப் பன்னிரண்டு சூத்திரப் பொருட் சுருக்கமாகச் சூரணைக் கொத்தொன்றும் கற்பார்க் கெளிதாகப் பிள்ளையாரால் அருளிச் செய்யப்பட்டது. அச் சிவஞான போத நூலை ஓதுவாரும் உசாவுவாருமே எங்கு மாயினர். ஆண்டில் முதியராயும் சகலாகம பண்டிதரென எங்கும் புகழ்பரக்கப் பெற்றவராயுமுள்ள அருணந்தி சிவாசாரியாரே பிள்ளையாரைத் தமக்கு ஞானகுரவராய்க் கொண்டாரென்ற சொற்பரவப் பரவத்தமிழ் நாடெல்லாம் ஒருங்குதிரண்டு திருவெண்ணெய் நல்லூர்க்குச் சென்று பிள்ளை யாரைத் தரிசித்து அவர் திருவாயினின்று போதரும் மணிமுத்துக்களாம் பரநாதவொலிகளைக் கேட்டுச் சிவானந்த மெய்தப்பெற்றாராய் உய்ந்தனர். இனி வேதாந்த சூத்திரத்திற் குரைகண்ட சங்கரா சாரியர், இராமாநுசாசாரியர், மாத்துவாசாரியர் முதலிய பிரபல உரை காரராலும் மெய்ப்பொரு டுணியப்படாது கிடந்த அத்துவித இலக்கணம் சொற்பொருள் வகையால் இனிது விரித்துச் சுவேதவனப் பிள்ளையார் சிவஞான போத வார்த்திகப் பொரிப்புரைக் கண் மெய்ப்பொருள் தெருட்டி னாராகலின், தமிழ்நாடு முற்றும் அவ்வருமை பெருமை கண்டு நம்பெருமான் சுவேதவனப் பிள்ளையாரை அத்து வித மெய்கண்டான் என்று சிறப்புப் பெயரிட்டழைப்ப தாயிற்று. இச்சிறப்புப் பெயர் உலகவழக்கில் மெய் கண்டதேவரென வழங்கப் பெறுவதாயிற்று. இது தாயுமான சுவாமிகள், பொய்கண்டார்காணாப் புனிதமெனு மத்துவித மெய்கண்டநாதனருள் மேவுநாளெந்நாளோ என்று கூறியவாற்றானும் அறியப்படும். இனி மெய்கண்டதேவர் திருவாய்மலர்ந்தருளிய இச் சிவஞானபோத பன்னிரண்டு சூத்திரங்களும் வடமொழியில் இரௌரவாகமத்திலே பாசவிமோசனப் படலத்திலுள்ளன வென்றும், அவற்றையே இவர் தமிழில் மொழிபெயர்த்துச் செய்தனரென்றும் ஒருசாரார் உரைப்ப. முன்னோரொருவர் ஒன்று எழுதி வைத்தனராயின் அது பொருந்துமா பொருந் தாதா என்று ஆராய்வதின்றி அவர் எழுதியதனை அங்ஙனமே கூறிப் போவதே நம்மனோர்க்கு வழக்கமாயிருக்கின்றது. மற்றுநம் பெருமான் சுவேதவனப் பிள்ளையார் அருளிச் செய்த சிவஞானபோத சூத்திரங்கள் பன்னிரண்டும் வடமொழிச் சிவஞானபோதத்தின் மொழிபெயர்ப்புத்தாமாவென்று ஆராயப்புகுந்த வழி அவையிரண்டற்கும் பேதங்கள் பல காணப்பட்டமையால் அஃது அதன் மொழி பெயர்ப்பன் றென்பது துணிபாயிற்று. இனிவடமொழிச் சூத்திரங்கள் பன்னிரண்டாயினும் இரௌரவாகமத்திற் பாசவிமோசனப் படலத்துளவாவென்று அவ்வாகமம் வல்லாரை உசாவிய வழி, அவை ஆண்டிருத்தற்கு ஓரியைபுமில்லையென்றும், அப் படலத்தில் அப்பெற்றி யவாஞ் சூத்திரங்கள் சிறிதுங் காணப்பட வில்லையென்றும் அவர் கூறுகின்றார். இன்னும் மெய்கண்ட தேவர் அருளிச்செய்த சிவஞானபோதம் மொழி பெயர்ப்பு நூலாயின், அதற்குச் சிறப்புப் பாயிரம் உரைத் தருளிய சகலாகம பண்டிதரும் மெய்கண்ட தேவர்க்குப் பிரதம சீடருமான அருணந்தி சிவாசாரியார் அச்சிறப்புப் பாயிரச் செய்யுட்கண் அதுமொழி பெயர்ப்பு நூலென்று கூறிடுவார்; மற்று அவர் அதனை அவ்வாறு கூறாது, மயர்வறநந்தி முனிகணத்தளித்த உயர்சிவஞானபோத முரைத்தோன் பெண்ணைப்புனல்சூழ் வெண்ணெய்ச்சுவேதவனன் பொய்கண்டகன்ற மெய்கண்டதேவன் என்று அதனை முதனூலாகவே யியற்றியருளினாரென்று கூறுதலாலும், சிவஞான சித்தியார் பாயிரத்தும், போதமிகுத்தோர் தொகுத்த பேதைமைக்கே பொருந்தினோரிவர்க்கன்றிக்கதிப்பாற் செல்ல ஏதுநெறியெனுமவர்கட்கறியமுன்னாள் இறைவனருணந்தி தனக்கியம்பநந்தி கோதிலருட்சனற்குமாரர்க்குக் கூறக் குவலயத் தினவ்வழியெங் குருநாதன் கொண்டு தீ தகலவெமக்களித்த ஞான நூலைத் தேர்ந்துரைப்பன் சிவஞானசித்தியென்றே என்று அவ்வாறே கூறுதலாலும், சிவஞானபோதஞ் சிவஞான சித்தியென்னும் முதனூல் வழிநூல்கட்குச் சார்பு நூலியற்றிய உமாபதி சிவாசாரிய சுவாமிகளும் சிவப்பிரகாசப் பாயிரத்தில் தேவர்பிரான் வளர் கயிலைக்காவல்பூண்ட திருநந் தியவர்கணத்தோர் செல்வர்பாரிற் பரவியசத்திய ஞானதரிசனிகளடிசேர் பரஞ்சோதிமாமுனிகள் பதியாய்வெண்ணெய் மேவியசீர் மெய்கண்ட திறலார்மாறா விரவுபுகழருணந்தி விறலார்செல்வத் தாவிலருண்மறைஞான சம்பந்தரிவரிச் சந்தானத் தெமையாளுந் தன்மையோரே எனவும் தெரித்தகுருமுதல்வருயர் சிவஞானபோதஞ் செப்பினர்பின்பவர் புதல்வர் சிவஞானசித்தி விரித்தனர் மற்றவர்க டிருவடிகள்போற்றி விளம்பியநூலவை யிரண்டும்விரும்பிநோக்கிச் கருத்திலுரை திருவருளு மிறைவனூலுங் கலந்துபொதுவுண்மை யெனக்கருதியானு மருத்திமிக வுரைப்பன்வளர் விருத்தநூறு மாசில்சிவப்பிரகாச மாகுமன்றே எனவும் தமது மெய்கண்ட சந்தானமரபும், அச்சந்தான நூல் வந்த வரலாறும் நன்கெடுத்துக் கூறுதலாலும், சந்தானா சாரியா ராதல் அவர்க்குப்பின் அம்மரபில்வந்த சீகாழிச் சிற்றம்பல நாடிகள் தாயுமானசுவாமிகள் முதலியோராதல் அது மொழி பெயர்ப்பு நூலென்று யாண்டு முரைப்பக் காணாமையானும், தமிழிற் காணப்படும் அரியபெரிய நூல்களையெல்லாம் வட மொழியிலிருந்து வந்தனவென நாட்டுதற்கு வடமொழி மாட்டுத் துரபிமானம்வைத்தார் சிலர் தமக்குத் தோன்றியவாறு நம் பெருமான் மெய்கண்ட தேவரருளிய முழுமுதனூலையும் மொழி பெயர்ப்பு நூலென்று கூறியவுரை போலியுரையா மென்று கடைப் பிடிக்க. தலபுராணங்களெழுதுவோரெல்லாம் தாமெழு துமவை வியாசர் இயற்றிய இப்புராணத்துள்ளன, அப் புராணத் துள்ளன வென்றுகட்டிச் சொல்லுதல்போல, யாரோ வொருவர் தமிழில் நம்பெருமானாருளிய சிவஞான போத சூத்திரச் சிறப்பைக் கண்டு அவற்றை ஒரோவிடத்துப் பிறழமொழி பெயர்த்து அங்ஙனமியற்றிய போலி மொழி பெயர்ப்பை இரௌரவாகமத்திலுள்ளதென்று கட்டி விட்டார். இவ்வுண்மை யுணராத பின்னோர் அதனை மெய்யுரை யெனவே நம்பி இழுக்கினாரென்க. இனி நம்பெருமானருளிச் செய்த சிவஞானபோத நூல் வேதாக மங்களிற்பரந்த பொருட்சாரமாயியற்றப் பட்ட தல்லது அவற்றுள் ஓரோவிடத்து ஏகதேசமாய் அடங்குவ தன்று. வேதாகம முதலிய எல்லா நூற்பொருளும் இதன்கண் அடங்கும்; இஃது அவ்வேனையவற்றின் அடங்காது. அப்பெற்றியுணர்ந்தே ஆன்றோரும் வேதம்பசுவதன்பான் மெய்யாகமநால்வர் ஓதுந்தமிழதனினுள்ளுறுநெய்--போதமிகு நெய்யினுறுசுவையா நீள்வெண்ணெய் மெய்கண்டான் செய்ததமிழ் நூலின் றிறம் என்றிதன்பெருமை தேற்றுவாராயிற்று. சமயாசாரிய சுவாமி களான மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் அருட்குரு வடிவங் கொண்டு குருந்தமரநீழலில் உபதேசித் தருளியதும் இச் சிவஞானபோதமே. கயிலாயத்திலெம் பெருமான் திருநந்தி தேவர்க்குபதேசித்ததும், அவர் சனற்குமாரர்க்குப தேசித்ததும் அவர் சத்தியஞான தரிசனி கட்குபதேசித்ததும், அவர் பரஞ்சோதி முனிவர்க்குப தேசித்ததும், அவர் மெய்கண்ட தேவர்க் குபதேசித்ததும் இச்சிவஞான போதமேயாம். சிவபெரு மான்முதுற் பரஞ் சோதி முனிவரீ றாக அவர்மாட்டெல்லாம் பன்னிரண்டு பதேச விஷயவுருவாக மாத்திரமிருந்த அச்சிவஞான போதம், மெய்கண்ட வள்ளலாரிடத்துத் தமிழ்ச் சூத்திர வடிவம் பெற்றுக் கருத்துரை, வார்த்திகவுரை உதாரணச் செய்யுள். அதிகரணப் பகுப்பு, சூரணைக் கொத்து முதலிய அலங்கார விசேட முடைத்தாய் நடைபெறலாயிற்றென்க. பின்னர் மெய்கண்டதேவர் தாமியற்றியருளிய சிவ ஞான போதப்பொருள் விளக்கவிரிவுரைபோல ஒரு நூலியற்று கவென்று தம்பிர தமசீடர் அருணந்திசிவாசாரிய சுவாமிகட்குக் கட்டளையிட்டாராகலின் அவரவ்வாறே சிவஞானசித்திப் பெயரியவழிநூல் அமைத்தருளினார் என்க. பின்னர் அருணந்திசிவனார் சிவஞானபோதம், சிவஞான சித்தி இரண்டனையும் தம்பிரதமசீடர், திருக் கடந்தை மறை ஞானசம்பந்தர்க்குப தேசித்தருளினார். பின்னர் மறைஞான சம்பந்தர் அவ்விரண்டனையும் திருக் கொற்றங்குடி உமாபதிசிவ னார்க்கறிவுறுத்தருள உமாபதி சிவனார் அவையிரண்டன் பொருளைவிரித்துச் சிவப்பிரகாச முதலிய எட்டு ஞான நூல்களருளிச் செய்தனர். இங்ஙனம் வராநின்றது மெய்கண்ட பரம்பரை என்க. திருச்சிற்றம்பலம் அத்துவித சொரூபம் அத்துவிதம் என்னுஞ் சொல் கேவலாத்துவிதம், சுத்தாத்துவிதம், விசிட்டாத்துவிதம் என்னுஞ் சொற்றொடர் களிலே சேர்த்துச் செய்யுள் வழக்கினும் உலகவழக்கினும் வழங்கப்பட்டு வருகின்றது. இச்சொல்லைச் சொல்லாராயும் நெறியானும் பொருளாராயும் நெறியானும் பரிசோதனை செய்து உணர்ந்து கொள்ளல் வேண்டும். இனி இச்சொல்லைப் பகுக்குமிடத்து ந த்விதீயம் என்று நிற்கும். இவற்றுள் முதல் நின்ற எழுத்து அன்மை இன்மை மறுதலை என்னும் பொருள்களைப் பயப்பதோர் உபசர்க்கமாம் பின் நின்ற சொல் இரண்டு என்னும் பொரு ளைத் தருவதோர் எண்ணுச் சொல்லாம். இவையிரண்டும் புணருங்கால் ந என்னும் அவ்வுபசர்க்கத்தில் ந் என்னும் மெய்யெழுத்துப்போக அம்மெய்யின்மேல் ஏறி நின்ற அ வென்னும் உயிரெழுத்து மாத்திரம் நின்று அத்விதீயம் என்றாகும். இவ்வத்விதீயம் என்னுஞ் சொல் செந்தமிழ் வழக்கில் அத்துவிதம் என்று திரிபெய்திவரும். இனி அவ்வுப சர்க்கமெய்யில் ஏறி நின்ற அகரவுயிர்நிற்ப ந் எனும் மெய் கெடுதல் பாணினி முனிவர் தமதட்டாத் தியாயி இலக்கணத் தில் இரண்டாம் பாதத்து. ஆறாவது சூத்திரத்தின் கண் ஓதியவாற்றால் இனிதறியப்படும். இனி இவ்வுபசர்க்கம் அன்மைப்பொருளையுணர்த்துதல் அப் பிராமணன் அசைவன் அநேகர் அஞ்ஞானி என்றற் றொடக்கத்துச் சொற்களால் அறியப்படும்; இவை முறையே பிராமணன் அல்லாதவன் சைவனல்லாதவன் ஏகன் அல்லாதவர் ஞானியல்லாதவன் எனப்பொருளுர்த்தும். இஃது இங்ஙனம் அன்மைப் பொருளையுணர்த்துதல் உயர்திணை, அஃறிணைப் பொருட்பெயர்களோடு சேர்ந்துநின்ற வழியே யாம். இனி யிஃது இன்மைப்பொருளை யுணர்த்துதல், அஃறிணைப் பண்புச்சொற்களோடு இணங்குகின்ற வழியே யாம். இஃது அமலம் அகளங்கம் அயோக்கியம் அசலம் என்றற் றொடக்கத்தனவற்றால் அறியப்படும்; இவை முறையே மலம் இன்மை களங்கம் இன்மை யோக்கியம் இன்மை சலனம் இன்மை என்னும் பொருள்களையுணர்த்தா நிற்கும். அஃறிணைப் பொருளுள்ளும் இவை குணத்தை யுணர்த்திப் பின் உயர் திணைப் பொருளுக்கு அமலன் அகளங்கன் அயோக்கியன் அசலன் என்று பெயராங்கால் அக் குணங்களை யில்லாதவன் என்றே பொருள் குறிக்கும். ஆகவே, இவை அஃறிணையுள்ளும் உடைமைப்பொருளான குணமின்மை யைக் குறிக்கவேவருவன வாமாதலால், அவ்வுபசர்க்கம் இன்மைப் பொருளுணர்த்தும் வழியெல்லாம் பண்புச்சொற்களோடு மாத்திரம் இணைந்து வருமென்றல் துணிபொருளாம். இனிமேலே குறிக்கப்பட்ட வாறு இது பிராமணன் முதலான பொருட்பெயரை யறிவிக்குமிடத் தெல்லாம் அண்மைப் பொருளை யுணர்த்து தென்பதூஉம் இதனோடு இயைவித்து அறியற்பாற்று. இனிக் குணப் பெயருள்ளுங் குணிப்பெயருள்ளும் ஒன்றனோ டொன்று மறுதலைப்பட்டு இரட்டைமொழிகளாய் நிற்பன வற்றுள் ஒன்றனைச் சுட்டு மிடத்து இந்நகர வுபசர்க்கம் மறுதலைப் பொருள் பயப்பதாய் நிற்கும். இது அசத்தியம் அஞ்ஞானம் அசாதரணம் அசேதனம் என்றற் றொடக் கத்தன வற்றால் தெற்றெனத் தெளியப்படும். இவை முறையே சத்தியத்தோடு மறுதலைப் பட்ட அசத்தியத் தினையும், ஞானத்தோடு மறுதலைப்பட்ட அஞ்ஞானத் தினையும், சாதாரணத்தோடு மறுதலைப்பட்ட அசாதார ணத் தினையும், சேதனத்தோடு மறுதலைப்பட்ட அசேதனத் தினையும் நன்குணர்த் துவனவாம். இச்சொற்கள் மக்களி ரட்டை மர மிரட்டை காயிரட்டை போல் ஒன்றற் கொன்றி னமாய் இரண்டே யாய் நிற்றலால் இவற்றுள் ஒன்றனை யொரு சொல்லுணர்த்தவே, ஏனையதனை அச் சொல் லோடிணைந்த உபசர்க்கும் உணர்த்தி இவ்வாறு மறுதலைப் பொருட்கண்ணே வருவதாகும். இனி உண்மை யான் நோக்கும் வழி இம்மறுதலைப்பொருளும் மேலே காட்டிய அண்மைப் பொருட்கண்ணே அடங்கு வதன்றிப் பிறிதில்லை. நன்று சொன்னீர், இம்மறுதலைப் பொருளை யுணர்த்தும் உபசர்க்க அவசரமும் அன்மைப் பொருட் கண்ணே அடங்குவதென்று மாத்திரம் கூறுவ தென்னை? அஃது இன்மைப் பொருட்கண் அடங்குவதென் றுரைத்தல் ஆகா தோ வெனின், - நன்றுவினாயினாய், அன்மை யென்பது ஒரு பொருளை மறுத்து வேறோர்பொருளை நாட்டுவதாம், இன்மை யென்பது அப்பொருளின் இருப்பை மறுத்து அதன் அபாவத்தை நாட்டுவதாம். ‘ït‹ rh¤jdh? என்று வினாயினானுக்கு அவன்சாத்தன் அல்லன் கொற்றன் என்றெழுந்த மறுமொழி வினாவப்பட்ட அவ்வுயர்திணைப் பொருள் சாத்தனல்லன் என்றுமறுத்துக் கொற்றன் என்பானை அறிவுறுத்தியது. ïÅ ‘m§nf rh¤j‹ csdh? என்று வினாயினானுக்கு அங்கே சாத்தன்இலன் என்றெழுந்த விடை சாத்தன் என்னும் உயர் திணைப் பொருள் அங்கில்லாமையை உணர்த்தி அதன் அபாவத்தையே அறிவுறுத்திய தாம். ‘ït‹ rh¤jdh? என்று முன்னெழுந்த வினாவினால் வினாவப் பட்ட பொருள் ஒன்றிருப்ப அப்பொருளின் உண்மை மாத்திரம் அறியப்படாது நின்றது; அதற்கெழுந்த சாத்தனல்லன் கொற்றன் என்னும் விடை அப் பொருளினிருப்பை யுடன்பட்டு அப்பொருள் கொற்றனாம் என அதன் உண்மையை மாத்திரம் அறிவுறுத்தி நிற்பதாயிற்று. இதனால், அண்மைப் பொருள் ஒரு திரவியத்தின் இருப்பை யுடன்பட்டு அதன் சொரூபவுண்மை யினை மாத்திரம் அறிவிப்ப தாம் என்று இனிது பெறப்படு மென்க. ïÅ ‘m§nf rh¤j‹ csdh? என்று பின்னெழுந்த வினாவில் சாத்தன் என்னும் உயர்திணைப் பொருட்சொரூபஞ் சிறிதும் வினாவப் படுதலின்றி அப்பொருளின் இருப்பே அறிய வேண்டுவதாய் நின்றது; அதற்கு விடையாய் எழுந்த அங்கே சாத்தன் இலன் என்பது வினவப்பட்ட அவ்வுயர் திணைப் பொருள் அங்கில்லையென மறுத்து அதன் அபாவத்தை நாட்டுவதாயிற்று. இதனால் இன்மைப் பொருள் ஒரு திரவியத்தின் இருப்பை யுடன்படாது அதனை மறுத்து அதன் அபாவத்தை நாட்டுதற்கண்ணேமாத்திரம் வருவதா மென்று துணியப்படும் என்க. இதனால் வினாவும் பொருளி னிருப்பறியப்பட்டு அதன் சொரூபம் அறியப்படாமையின் கண் வருவதூஉம், பொருட் சொரூபம் அறியப்பட்டு அதன் இருப்பு அறியப் படாமை யின்கண் வருவதூஉம் என வினா இரு திறப்பட்டு நிற்றல்காண்க. இதனாலன்றே தொல்காப்பியத் திற்குரை கண்ட ஆசிரியர் சேனாவரையரும் நச்சினார்க் கினியரும் பொருட்பிழம்பு மாத்திரமுணர்ந்து அதன் உண்மை யறியப்படாமையினும், உண்மை மாத்திரமுணர்ந்து பிழம் பறியப் படாமை யினும் வினா நிகழும் என்று அங்ஙனம் உரை கூறுவாரா யினதூஉமென்க. இதுநிற்க. இனி அவ்வசத்தியம் அஞ்ஞானம் என்பவற்றின்கண் நின்று மறுதலைப் பொருளுணர்த்திய ந எனும் உபசர்க்கம் அண்மைப் பொருட்கண் அடங்குமாறு யாங்ஙனமெனிற் காட்டுதும். ஞானத்தோடு மறுதலைப்பட்டபொருள் அந்த ஞானத்தின் அபாவமாயினன்றே ஆண்டு இன்மைப்பொருள் கூறல் பொருந்தும்? ஞானம் இன்மையே அஞ்ஞானம் என்றும் பிரகாச மின்மையே அந்தகாரம் என்றுங் கூறுதல் ஒரு வாற்றானும் பொருந்தாதாம். அபாவப்பொருளாயின் அதற்குக் குணமுந் தொழிலும் இல்லையாம். இது தருக்கசங்கிரக வுரையிலே தருக்கசாத்திரியாரான அன்னம் பட்டர் உரை கூறுமாற்றானும் இனிதுபெறப்படும். இனி அஞ்ஞானம் என்னுந் திரவியத்திற்கு அறியாமைக் குமும் சீவான்மாக்கள் அறிவை விளங்க வொட்டாது தடைசெய்து நிற்குங் கிரியையும், அந்தகாரத்திற்குக் கருமைக்குமும் கண்ணை மறைத்து அதனறிவியக்கத்தைத் தடைசெய்து நிற்குங்கிரியையும் பிரத்தியக்கமாக அறியக் கிடத்தலால் அவையில் பொருளாகாது உள்பொருள்களேயாம். அற்றேல் தருக்கசாத்திரியாரான அன்னம்பட்டர் அந்தகாரத் தினைத் திரவியம் என்றுரையாது அஃது ஆலோகத்தின் அபாவம் போன்ற ஓர் இல்பொருள் என்றுரை கூறிய தென்னை யெனின்; - அவர் அவ்வாறு கூறியது ஒருவாற்றானும் பொருந்தாதாம்; என்னை? இக் காலத்துப் பௌதிக சாத்திரிக ளெல்லாரும் தம் மதிநுட்பத்தால் இயற்றிய பல நுண்ணிய இயந்திர சகாயங் கொண்டு பிரகாசிக்கின்ற கிரணங்களிலெல்லாம் அதிசூக்குமமான அந்தகார அணுக்கள். இயங்குதலைப் பிரத்தியக்கமாகக் கண்டு போதருகின்றன ராகலின், ஒளியைப்போல இருளும் உள்பொருளாமென்றே துணியப் படும். இந்த நுண்பொருள் வடநூல் தென்னூல் முடிபு முழுதும் ஒருங்குணர்ந் துரைஎழுதிய ஆசிரியர் சிவாக்கிர யோகிகள் சிவஞான சித்தியாருரையுள் அந்தகாரம் உள் பொரு ளென்றே நாட்டிய முடிபும் இக்காலத்துப் பௌதிக சாத்திர முடிபோடு பெரிதும் இணங்குகின்றது. இங்ஙன மாகலின், இதனுண்மை யறியாது கூறிய அன்னம் பட்டருரை ஈண்டைக்குச் சிறிதும் பொருந்தாதென்று துணியப் படும். இதுநிற்க. அவ்வாறு மேற்காட்டிய முறையால் சத்தியம், ஞானம் என்பவற்றோடு மறுதலைப்பட்ட அசத்தியம் அஞ்ஞானம் என்பனவெல்லாம் உள்பொருள் களையே குறிப்பனவா மாகலின் அவையெல்லாம் இன்மைப்பொருட்கண் அடங்குமாறில்லை யென்பதும், அவை யன்மைப் பொருட் கண் அடக்கமுறுதலே பொருத்தமா மென்பதும், அதனான் kWjiy.ப்bghUŸ அன்மைக்கண் அடங்க ந வென்னும் உபசர்க்கம் உணர்த்தும் பொருள் அன்மை யின்மை யென்னும் இரண்டேயாமென்பதும் பெறப்படுவன வாம் என்க. இனி இந்நகரத்தா லுணர்த்தப்பட்ட அன்மை இன்மை யென்னும் இருபொருள்களுள் ஈண்டெடுத்துக் கொண்ட அத்துவிதம் என்னுஞ் சொல்லின் கண் நகரம் எப் பொருளை உணர்த்துமெனின், அஃது அன்மைப்பொருளை யுணர்த்து வதாமென்க. துவிதம் என்பது இரண்டு என்னும்பொருளை உணர்த்துவது. இரண்டு என்னும் பொருட்பெயர் இருமை என்னும் பண்பைத்தானுடையதாக இருத்தலின், இவ்வெண்ணுப் பொருட்பெயர்மேல் வரும் நகரம் அன்மைப் பொருளை யல்லது, வேறு பொருளை உணர்த்தாது, என்னை? பண்பை யுணர்த்துங் குணப் பெயர்மேல் வரும் நகர மாத்திரம் இன்மைப் பொருளைக் காட்டுமென்று மேலே யுரைத்து விளக்கினா மாகலின் என்க. இன்னும் இவ் வெண்ணுப் பொருட்பெயர்மேல் வரும் நகரம் யாண்டும் அன்மைப்பொருளையே விளக்கு மென்பதற்கு அனேகம் என்னுஞ்சொல் ஒன்றில்லையென்னும் இன்மைப் பொருளைச் சுட்டாது ஒன்றல்லாத பலவென்ப தனைக் காட்டுதலே சான்றாமாகலானும், ஆசிரியர் சிவஞான யோகிகளும் சிவஞானபோத வுரையின்கண் எண்ணுப் பெயர்மேல் வந்த நகரம் அன்மைப் பொருண் மாத்திரையே யுணர்த்திப் பொதுமையினிற்பதன்றி ஏனைச் சொற் களின் மேல் வந்த நகரம் போல இன்மை மறுதலைப் பொருள்களை யுணர்த்துதல் வழக்கின் கண் இன்மையின் என்று ஆராய்ந்து நிறுவினமையானும் அத்துவிதம் எனுஞ்சொல் இரண்டு அன்மை என்றே பொருளுணர்த்து மென்றல் கரதலா மலகம்போற் பெறப்படுவதாம். இனி இதற்கு இப்பொருள் காணமாட்டாதார் அத்து விதம் என்னும் பொருட்பெயர்மேல் வந்த நகரத்திற்கு இரண்டின்மை எனப் பொருள்கொண்டு இரண்டு என்பதன் இருப்பை மறுத்து அதற்கு ஒன்று என்றே பொருளுரைத்தார். இனி ஒன்று என்பதனை உணர்த்து தற்குச் சமகிருத பாஷையில் ஏகம் என்னுஞ் சொல் உண்டாகலின் அதனையே அத்துவிதம் என்னுஞ் சொல்லும் உணர்த்து மென்றல் மிகைப்படக் கூறுதல் என்னுங் குற்றமா யொழியும் உலகத்தில் பரந்துபட்டுக் கிடக்கும் எல்லாப் பாஷைகளினும் ஒரு பொருளை யுணர்த்துதற்கு ஒரு சொல்லேயன்றி இருசொற்கள் கிடையா. அற்றேல், தமிழில் மலை என்பதனையுணர்த்த வரை விலங்கல், அடுக்கல் முதலிய பல சொற்கள் காணப்படுதலும், இவ்வாறே நிகண்டு முதலியவற்றில் ஒரேபொருளை யுணர்த்தும் பலசொற் காணப் படுதலும் என்னையெனின்;--மேலேகாட்டிய அச்சொற்க ளெல்லாம் ஒரேமலையினை உணர்த்தாது பல்வகைத் தோற்ற மும் அமைதியும் உற்று விளங்கும் பலவற்றை உணர்த்துவன வாம். வரை என்பது மூங்கிற்காடு அடர்ந்திருக்கும் மலை யினையும், விலங்கல் என்பது நீளச் சென்று குறுக்கிட்டுக் கிடக்கும் மலையினையும், அடுக்கல் என்பது பாறைகள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கடுக்கா யிருக்கும் மலையினைப் பிற பாஷைகளினும் ஒரேபொருட்குப் பெயர்கள் போலத் தோன்றும் பல சொற்களும் அப்பொருட் பேதங்கள் பலவற்றையும் அறிவித்தற்குச் சிறப்பாயிட்ட வேறுவேறு பெயர்களாம். இங்ஙனம் ஒருபொருட் பல்பெயராய் வழங்குவனவற்றின் பேதம் அறியமாட்டாராய்ப் பிற் காலத்துப் புலவரெல்லாம் தமக்குத் தோன்றியவாறே அச்சொற்களைப் பிரயோகம் பண்ணுவாராயினர். பண்டைக் காலத்துச் செந்தமிழ்ச் சங்க விலக்கியங்களில் அச்சொற்க ளெல்லாம் பொருட்பேதந் தோன்ற மிக நுட்பமாய்ப் பிரயோகிக்கப் பட்டிருக்கும் அருமைபெருமைகள் அச்சங்க விலக்கியங்கள் பெரும் பாலனவற்றிற்கு விழுமிய உரைகண்ட ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஆண்டாண்டு அச்சொற் பொருணயங் களை நன்கெடுத்து வகுத்து உரையுரைக்கு, மாற்றால் இனி தறியற்பாலனவாம். ஆகவே, ஒன்று என்னும் பொருளைக் குறிப்பதற்கு வடமொழியில் ஏகம் என்னுஞ் சொல் உண்மை யினால் அப்பொருளையே யுணர்த்துதற்கு அத்துவிதம் என்னுஞ் சொல்லும் எழுந்ததென்றலும், ஏகம் அத்துவிதம் என்னும் அவ்விருசொற்களும் தமக்குட் பேதஞ்சிறிதுமின்றி ஒரு பொருளையே யுணர்த்திக் கொண்டு நிற்குமென்றலும் என்னும் வாக்கியத்துள் நின்ற அவ்விரு சொற்களுக்கும் ஒரு பிரயோசனமு மின்றி ஒரே பொருளைக் கற்பித்தலும் மிகைபடக் கூறுதல் நின்றுவற்றுதல் என்னுங் குற்றங் களுக்கிடனாய் ஒழியும் என்க. இனி அதுவேயுமன்றித் தமிழ் வடமொழி முதலான பாஷைகளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்றற் றொடக்கத்து எண்ணுப் பொருள்களைக் குறிக்க ஒன்று, இரண்டு முதலான ஒவ்வோர் சொற்களே காணப் படுகின்றன வன்றி வேறுபிற காணப்படுகின்றில. ஒன்று என்பதற்கு ஏகம் என்னும் ஒரேசொல்லும் இரண்டு என்பதற்குத் துவிதம் என்னும் ஒரேசொல்லும், மூன்று என்பதற்குத் திரிதம் என்னும் ஒரே சொல்லும், நான்கு என்பதற்குச் சதுர்த்தம் என்னும் ஒரேசொல்லும், ஐந்தென்பதற்குப் பஞ்ச என்னும் ஒரே சொல்லுங் காணப்படுதலல்லாமல், வேறு சொற்கள் காணப்படாமையால், பிறவற்றிற்கின்றி இவ்வேகம் என்னும் ஒரு பொருட்கு மாத்திரம் அத்துவிதம் என மற்றொரு பெயருமுண்டென்றல் பாஷாதத்துவம் இனையதென்றறி யாதார் கூறுங்கூற்றாயொழியும். அது கிடக்க. இனிப் பொருளாராயும் நெறியால் வைத்துப் பார்க்கு மிடத்தும் அவ்வத்துவிதம் என்னுஞ்சொல் ஒன்றெனப் பொருள்படுமாறில்லையாம். சுருதியுட்போந்த என்றற் றொடக்கத்து வசனங்கள் உருத்திரன் ஒருவனே உளன் இரண்டாவ தில்லை எனவும், பிரமம் ஏகமாயும் அத்துவித மாயு முளதெனவும், அத்துவிதமாயும் சாந்தமாயும் நான்காவ தாயு முள்ள சிவத்தின் வேறாவதொன்றில்லை எனவும் பரம்பொருட்டுணிவு பெறுவிக்குங்கால், அதனை ஏகம் அத்துவிதம் என்ன இரண்டு சொற்களால் விளக்குத லானேயே அஃது அவ்விரு சொல்லானும் அதன் இருவகை இலக்கணத்தை உரைக்கப் புகுந்ததென்பது பெறப்பட வில்லையா? தத்துவங் கடந்த பரம் பொருளியல்பு உணர்த்தும் வழியெல்லாம் சுருதி ஏகம் என்றே ஒழியாது, அத்துவிதம் எனவும் மேலும் ஒருசொற் கூட்டிக் கூறுதல் அச்சொல்லால் வேறுமொரு நுட்பந் தெரிக்குங் கருத்துப் பற்றியேயன்றோ? அற்றன்று, பிரமம் ஒன்றேயுள தென்று மேலு மேலும் வற்புறுத்துதற் பொருட்டாகவே சுருதி அங்ஙனங்கூறிற்றன்றி அத்துவிதம் என்னுஞ்சொல்லால் வேறு மொரு நுட்பந் தெரித்தற் பொருட் டன்றெனின்;-- ஒன்றனையே மேலு மேலும் வற்புறுத்த வேண்டினார். அப்பொருட்குரிய அச் சொல்லையேமறித்து மறித்துங் கூறுவர்; இவ்வியல்பு தமிழ்வடமொழி முதலான எல்லாப் பாஷையிலக்கணங்களுக்கும் ஒப்ப முடிந்ததொன்றே யாம்; அவனே அவனே சாத்தன், கொற்றன் அதனை உண்ணவே உண்ணவே செய்வான் என்னும் உதாரணங் களானும் இது தெளியப்படும். கடவுள் ஒன்றென்றே தெளிவிக்க வேண்டுவாரும் ஒன்றே ஒன்றே கடவுள் என்றே கூறுப. இதுபோலச் சுருதியும் கடவுள் ஒன்றென்று மாத்திரம் உறுதியுரை நிகழ்த்தவந்ததாயின் ஏகம் ஏகம் பிரமம் என்றே கூறிடல் வேண்டும். அங்ஙனமன்றிச் சுருதி பிரமம் ஒன்றென்று வற்புறுத்து தலோடு அதன்வேறுமொர் இலக்கணத்தையுங் குறித்தற் பொருட்டே ஏகமே வாத்விதீயம் எனக்கிளந் தோதுவ தாயிற்று. அற்றேல், பிரமம் ஒன்றேஉளதென நிறுத்தக் கருதிய அதன் பொருள் ஆற்றல், அத்துவிதம் என்னுஞ் சொல்லுக்கு வேறுபொருள் கற்பித்த லாற் குறையுமெனின்;- நன்று சொன்னாய், தேற்றப் பொருள் படுந்தமிழ் ஏகாரத்தோடு ஒப்பதான எவ எனும் இடைச் சொல் ஏகம் என்பதனோடு இயைந்துநின்று பிரமம் ஒன்றே எனப் பொருளுணர்த்திய தாகலின், அப் பொருளாற்றல் ஆண்டுக்குறையுமாறு சிறிது மில்லை என்க. அற்றன்று, அவனே அவனேசாத்தன் என்புழித் தேற்றேகாரம் அவன் என்பதனோடு சேர்ந்து நின்றவிடத்தும், மேலும் வலியுண்டாதற்பொருட்டு அவனே என்பது இரட்டித்து வந்தவாறுபோல ஏகமேவ என்றவிடத்தும் மேலும் அப் பொருளாற்றல் தோன்றுதற்பொருட்டு அத்துவிதம் எனுஞ் சொல் வந்ததெனின்;--அவ்வாறு வரல்வேண்டினும், மேலை உதாரண வாக்கியத்தில் அவனே என்பதே பின்னும் இரட்டித்து வந்தவாறுபோல ஏகமேவ என்பதே பின்னு மிரட்டி ஏகமேவ ஏகமேவ பிரமம் எனவரற்பாலதல்லது, ஏகமேவாத் விதீயம்ப்ரம்மா என வரற்பாற்றன்று என மறுக்க. அல்லதூஉம், அவன் என்பது இரட்டியவழி ஏ காரம் இரண்டிடத்தும் புணர்ந்து அவனே அவனே என நிற்றல்போல ஏவ என்பதும் இரண்டிடத்தும் புணர்ந்து ஏக மேவாத்விதீயமே வப்பிரம்மா என நிற்றல் வேண்டும்; மற்று அவ் ஏவ எனும் இடைச்சொல் மேலைச்சுருதி வாக்கியங்களில் ஏகம் என்பதனோடு மாத்திரம் புணர்ந்து நிற்பக் கண்டாமன்றி, அத்துவிதம் என்னுஞ் சொல்லோடு புணர்ந்து நிற்பக் காணாமையாலும், அங்ஙனம் பொருள், செய்தல் அவ்வாக்கியக் கருத்துக்கு முற்றும் முரணா மென்பது கடைப்பிடிக்க. இனிச், சுருதி வேறு எப்பொருள் கூறக்கருதி அத்துவிதம் எனுஞ் சொல்லை ஆண்டுப்பிரயோகிப்ப தாயிற்றெனின்;--அப்பிரமம் என்னும் முழுமுதற்பொருள் ஏனை உலக உயிர்களோடு ஒற்றுமையுற்றுப் பிரிப்பின்றி நிற்றலை உணர்த்துதற் பொருட்டாகவே அஃதச் சொற் பிரயோகஞ் செய்ததென்க. அற்றேல், அவ்வுலகுயிர்களோடு பிரிப்பின்றி நிற்கும் அவ்விறைவனும் அவையுஞ் சமமாவான் செல்லுமே யெனின்;--அங்ஙனம் பிரிப்பின்றி நிற்பினும் இறைவன் அளவிறந்த ஆற்றலும் முற்றறிவும் முழுமுதன்மை யுமுடைய னாகலானும், ஏனை ஆன்மாக்கள் சிறிய சத்தியும் சிற்றறிவும் உடையவாய் முதன்மை யில்லாவாயிருத்தலானும் மற்றை உலகங்கள் அறிவில்லாத சடப் பொருள்களா தலானும் அவனும் அவையும் அவ்வாறு சமமாவான் செல்லுதலில்லை யென்க. இது தெரித்தற்கன்றே அத்விதீயம் ப்ரம்மா என்னாது, ஏகமேவாத்விதீயம் ப்ரம்மா எனச் சுருதி ஏகம் என்னுஞ் சொற்கூட்டிக் கூறுவதாயிற்று. பிரமம் ஏகமேவ என்றமையானே இரண்டு பிரமங்கள் இல்லை, பிரமம் ஒன்றேயுள்ளது என்பது துணியப் படுவதாயிற்று. தேர் முதலாயின பலராற் செய்யப்படுதல்போல, அதிவிசித்திர மான இப்பிரபஞ்சமும் கடவுளர் பலராற் செய்யப்படுவ தென்னும் அநேகேசுர வாதத்தை மறுத்துக் கடவுள் ஒன்றே உள்ளதென நிறுவுதற்பொருட்டுச் சுருதி ஏகமேவ எனுஞ் சொற் பிரயோகஞ் செய்வதாயிற்றெனும் உண்மையைச் சைவசித்தாந்த பரமாசாரிய மூர்த்திகளான மெய்கண்ட தேவர், ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதிபசுவாம் ஒன்றென்றநீபாசத் தோடுளைகாண்--ஒன்றின்றால் அக்கரங்களின்றா மகரவுயிரின்றேல் இக்கிரமத் தென்னு மிருக்கு என இனிது தெருட்டியருளினமை காண்க. ஏகமேவ என்ற அச்சொற்களால் பரப்பிரமத்தோடு சமம் பெறுவதில்லை யெனவும், அப்பிரமம் ஒன்றேயாய் உள்ளதெனவும் மிக நுண்ணிய பொருள் நிலைபெறுத்தப்பட்டவாறு காண்க. இனி அப்பிரமம் தான் ஒன்றேயாய் நிற்பினும், ஏனை உலகுயிர்களை அசைவித்தற்பொருட்டும் அறிவித்தற் பொருட் டும் அநாதி தொட்டு அவற்றோடு வேறறக்கலந்து நின்று பகரித்தலின், அங்ஙனங் கலந்துநிற்கும் உண்மை யினைத் தெருட்டவே பொருட்டன்மையால் ஒன்றாய் நிற்கும் அப்பிரமத்தைச்சுட்டிச் சுருதி அத்விதீயம் எனவும் மொழிந் திடுவதாயிற்று. பொருட்டன் மையால் தான் ஒன்றே யான பிரமம் ஏனை உலகுயிர்களோடு சம்பந்தமுறாது தனித்து நிற்ப தாயின் அத்விதீயம் என்னுஞ் சொற்பிரயோகம் வேண்டாமல் ஏக மேவ ப்ரம்மா என்று மாத்திரமே கூறஅமையும். அங்ஙனந் தான் வேறு உலகுயிர்கள் வேறெனத் தனித்தனியே நிற்றலின்றி, இறைவன் அவற்றோடு உடன் உடனாய்க் கலந்து கொண்டிருத்தலின் ஏகமாகிய அப் பிரமத்தைச் சுட்டி அத்விதீயம் எனுஞ் சொற்பிரயோகம் எழுந்ததென்க. பாலும் நீருந் தனித்தனியே நிற்குமாயின் பால் ஒன்று நீர் ஒன்று என்றும் அவை தனித்தனியே இருபொருள்கள் என்றுங் கூறல் பொருந்தும்; அங்ஙனமின்றிப் பாலும் நீரும் ஒன்று கூடியவழி அக்கலப்பினை ஒன்றெனவாவது இரண்டென வாவது கூறல் சிறிதும் பொருந்தாதாம்; அக்கலப்பினை இரண்டல்லதெனக் கூறுதலே பொருத்த மாம். இதுபோலப் பிரமம் தான் வேறு உலகுயிர்கள் வேறெனத் தனித்தனியே நிற்பின் அவை தம்மை வேறுவேறு இருபொருள்களெனக் கொண்டு துவிதம் என வழங்கல் பொருந்தும்; மற்று அப்பிரமம் அவ்வாறின்றி அநாதி தொட்டு உலகுயிர்களோடு உடனாய்க் கலப்புற்று நிற்றலின் அவை தம்மை ஒன்றென வாவது இரண்டெனவாவது கூறுதல் பொருந்தாமையின், அவை கலப்பால் இரண்டல்ல வாய் நிற்குமியல்பு தெரித்து அத்விதீயம் எனச் சுருதி கூறுவதா யிற்றென்க. இனி அன்மைப் பொருள் ஒன்றனைமறுத்து வேறொன் றனை நாட்டு வதாகலின், பிரமமும் உலகுயிர்களும் வேறு வேறு நிற்குமெனத் துவிதவாதிகள் கூறும் தனிநிலையினை மறுத்து, அவையிரண்டும் ஒன்றோடொன்று அளாவிநிற்கும் கலப்பு நிலையினை இவ்வத்துவிதம் எனுஞ் சொல் ஈண்டுணர்த்துவ தாயிற்று. இவ்வத்துவிதமென்னுஞ் சொல் அன்மைப் பொருளையன்றி வேறு பொருளுணர்த்தா தென்பது முன்னரே இனிது விளக்கப்பட்டது காண்க. இனி இவ்வத்துவித இரகசியார்த்தத்தை உணர்த்தவே தக்கணா மூர்த்தி வடிவாய் எழுந்தருளிய இறைவனருட் கோலம் சின்முத்திரை பிடித்துக் காட்டியதென்க. அச்சின் முத்திரையிற் பெருவிரலோடு சுட்டுவிரல் சேர்த்து ஒரு சக்கிரவடிவு தோன்றுகின்றது. பெருவிரலுஞ் சுட்டு விரலுந்தனித்தனியே நிற்பிற் பெருவிரல் ஒன்று சுட்டு விரல் ஒன்று எனவும், அவை தனித்தனி இரு பொருள்கள் எனவுங் கூறுதற்குப் பொருந்தும்; அங்ஙனமின்றி அவ்விர லிரண்டும் ஒன்று கூடி ஒரு சக்கிரவடிவாய் நின்ற வழி அக்கூட்டுறவை ஒன்றெனவாவது இரண்டெனவாவது கூறுதல் ஏலாது. அங்ஙனங்கூறல் ஏலாமையால் அவ்வொன்றுக்கும் இரண்டிற்கும் நடுநின்ற இயைபைச் சுட்ட ஒன்றனையும் இரண்டனையும் உணர்த்தாத அத்துவித மெனுஞ்சொல் ஆன்றோரால் அமைக்கப்பட்ட தென்க. இனி இவ்விரற் கூட்டத்திற் பெருவிரலேபிரமமாம், சுட்டுவிரலே ஆன்மா வாம்; இவை இரண்டன் கூட்டுறவே முத்தியாம்; அம்முத்திக் கூட்டுறவே அத்துவிதமுத்தியெனப் பெயர் பெறுவதாம். இங்ஙனம் இச்சின் முத்திரைக்கண் அத்துவித முத்தித்தன்மை சொல்லானன்றி வெறுங்கை காட்டால் அறிவுறுக்கப் பட்டமையினாலன்றோ அக்குருவைச் சுட்டி எல்லா மாயல்லதுமாயிருந்ததனை யிருந்தபடியிருந்து காட்டிச், சொல்லாமற் சொன்னவரை என்று ஆன்றோர் கூறுவாரா யினாரென்க. இச்சின்முத்திரையின் பொருள் இதுவாதல் உணரமாட்டாதார் இதற்குத் தோன்றிய வாறெல்லாம் வேறுவேறு பொருள்கூறி இழுக்குறுவர். அது கிடக்க. இனி அத்துவிதம் எனும் அச்சொல்லுக்கு இன்மைப் பொருள் கூறுதலடா தாயினும், உலகுயிர்களெல்லாம் வெறும் பொய்ப்பொருள்களென்று கோடுமாகலின், பிரமம் ஒன்றே சத்தியமாய் உள்ளது; ஏனைய இல்லை எனப்படுதற்கு ஏற்ப அத்துவிதம் என்னுஞ் சொல்லுக்கு இவ்விடத்து மாத்திரம் இரண்டின்மை எனப்பொருள் கொள்வேமென ஏகான்ம வாதிகள் கூறுவராலெனின்;-அவர் கூறுவது ஒருவாற்றானும் பொருந்தாமை சிறுமகார்க்கும்விளங்கற் பாலதேயாம். உள் பொருள்களாய் உண்மை அனுபவப் பொருள்களாய்த் தோன்றும் உலகுயிர்களை இல்பொருள் களென்றற்குப் பிரமாணமின்மையானும், சுவேதாசுவதரோபநிடதம் என்றும்என்றும் கூறுமாற்றால் ஈசன் அநீசனான ஆன்மா இருவரும் பிறவாதவர் என்பதும், பரமான்மா சீவான் மா என ஒரே பெயரான் வழங்கப்படும் இருபறவைகள் மாயை என்னும் ஒரே மரத்திலுள்ளன என்பதும் இனிது பெறப் படுதலானும், சுருதி யோடு முரணாமற் கூறவேண்டு மென்னும் அவருரையே அவர்க்கு இழுக்காய் முடிதலானும் அவருரை பொருந்தா தென்க. என்று இதுகாறுங்கூறியவாற்றால் மெய்கண்டதேவர் இற்றைக்கு அறுநூற்றைம்பது வருடங்கள் முன் வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப பிள்ளையார் அருமை மகளார் மணி வயிற்றிற் றிருவவதாரஞ் செய்து மூன்று வயதிலேயே அருள் ஞானமூர்த்தியாய்ச் சிவஞானபோதச் செம்பொருண் ஞானநூல் அருளிச் செய்து உலகை வழிப்படுத்துவாராயின ரென்பதூஉம், அவர் அருளிச்செய்த அவ்வரிய பெரிய சிவஞான போதநூல் சுத்தச் செந்தமிழ் நூலாகுமே யல்லது பிறர் கூறுமாறுபோல் மொழிபெயர்ப்பு நூலாகாதென்ப தூஉம், அவர் மெய்ப்பொருள்கண்ட அத்துவிதம் என்னுஞ் சொல் அன்மை, இன்மை, மறுதலை என்னும் மூன்று பொருள்களும் அன்மைப் பொருளையே உணர்த்துமல்லது வேறுபொரு ளுணர்த்தாதென்பதூஉம், அதனைப் பொருள் வகையால் ஆய்ந்து பார்க்கும் வழியும் சுருதி பிரமத்தை ஏகமென்றே கூறியொழியாது அத்துவிதம் என்றுங் கூறின மையால் அச் சொல்லால் அதன் வேறுமொர் இலக்கணத்தை உணர்த்தல் வேண்டியே அச்சொற் பிரயோகஞ் செய்வ தாயிற்றென்பதூஉம் பிறவும் ஈண்டு விளங்கப்பட்டன. ஓம் சிவாயாநம! ஓம் சிவாய நம! ஓம் சிவாயநம! திருச்சிற்றம்பலம் தமிழ் நான்மறையின் தெய்விக உண்மை வடமொழிக்கண்ணுள்ள நான்மறைபோலத் தமிழ்ப் பாஷையின் கண்ணுள்ள நான்மறைகளின் தெய்விக வரலாற்றினை இன்றெடுத் துபந்நியசிக்கப் புகுகின்றமையின் இங்ஙனம் இன்று விஷயத்திற்குப் பெயர்தரப்பட்டது. நான்மறை நற்பொருள்கள் எந்தப் பாஷையிலே வழங்கப் பெறுமாயினும், தம்மைக் கேட்பார்க்கும் உணர்வார்க்கும் அவர் நெஞ்சினை உருகச்செய்து அவர் அறிவினைக் கரைத்துச் சிவானந்தப் பேற்றினைப் பெறுவிக்கும் நலம் உடையனவாம். அற்றாயினும், அவை தாம் தாம் வழங்கப் பெறும் பாஷையின் இயற்கை யமைதியழகானும் ஒருசிறப்பு எய்தப்பெற்றுத் தம்மைப் பயில்வார் அறிவோடு ஒற்றுமைப் பட்டு எளிதிலே அனுபவிக்கப் படுந்தன்மைய வாய்ப் பொலிவடையும். உலகத்திலே பரந்து பட்டுக் கிடக்குந் தொள்ளாயிரம் பாஷைகளுள் ஒரு பகுப்பு நாரிகேள பாகத்தினும், ஒருபகுப்புத் திராட்சபாகத்தினும் பொருந்து வனவாய் இருக்கும். வேனிற்காலத்து வழிச் செல்வான் ஒருவன் இடையே பசியானுந் தாகத்தானும் மிக வருந்தி ஆண்டு ஒருசார் உயர்ந்துள்ள ஒரு தென்ன மரத்தின்மேற் பிரயாசையுற் றேறி அதன்றலையிற் காய்த்துத் தொங்குங் குலையுட் பருங்காய் ஒன்றைப் பறித்துக் கொண்டு கீழ்இறங்கி அக்காயின்மேல் மட்டைகளை யெல்லாம் உரித்தெடுத்துப் பின் ஓட்டையும் உடைத்துக்களைந்து உள்ளிருக்குந் தண்ணீரை யருந்திப் பருப்பை யுண்டு, பசிதாகம் தீர்வது கண்டாமன்றே! அதுபோல்வதோர் அமைதியுடைய பாஷை நாரிகளே பாகம்பற்றி வந்ததொன்றாம். தென்னமரம் தன்மாட்டுள்ள தேங்காயினை எளிதிலே பறித்துக் கொள்ள ஏலாவாறு மிகஉயர்ந்து நிற்றல்போலத் தன் கண்ணுள்ள அரியபெரிய நூற்பொருள்களைத் தன்னைப் பயில்வார் எளிதிலே அறிதற்கு ஏலாவாறு எழுத்தமைதி சொல்ல மைதிகள் மிகவுங் கடினமாயிருத்தலும், அவ்வெழுத்தமைதி சொல் லமைதி களைத் துறை போகக் கற்றவிடத்தும் பறித்துக் கொள்ளப் பட்ட தேங்காயின் மேன்மட்டைகளை உரிக்க வேண்டுவது போலப் பொருள் பல திறப்படத்தோன்றும் வாக்கியங்களிற் பொருளிது வென்று நிச்சயித்தற் பொருட் டாக மற்றைப் பொய்ப்பொருடருஞ் சொல்லடுக்குகளை யெல்லாம் விலக்கிக் கொண்டு அவ்வாக்கிய உண்மையமைதி கண்ட பின்னும் உரித்ததேங்காயின் ஓட்டைக் களைய வேண்டுவது போல அவ்வாக்கியத்தின் பொருட்சாரத்தை யுணர வேண்டுதலும் உடைத்தாய் அதன்பிறகு தன் உண்மைப் பொருளைக் காட்டும் பாஷை நாரிகேளபாக அமைதியினை யுடைய தென்று தெளியப்படும். இனி இங்ஙனமெல்லாம் வருந்த வேண்டாது தன்றலைக்கு மேற் றொங்கும் கொடி முந்திரிப் பழக்குலை யினைப் பறித்து அதன் கண்ணுள்ள மிகவுந் தித்திப்பான பழங்களைத் தான் வேண்டுமட்டும் புசித்து ஒருவன் பசியுந் தாகமுந் தீர்ந்தாற் போல, மிக இலேசிலே கற்றற்குரிய எழுத்தமைதி சொல்லமைதி வாக்கியவமைதி பொருளமைதி களை யுடைத்தாய்த் தன்னை கற்பானுக்குத் தன்கண்உள்ள உண்மை நூற் பொருளை மிகவும் இரசிக்க ஊட்டும் பாஷை திராட்சபாக அமைதியினையுடைய தென்று துணியப்படும். இப்பரதகண்டத்தின் வடக்கே வழங்கும் சமகிருத பாஷையும் இதன்றெற்கே வழங்கும் செந்தமிழ்ப்பாஷையும் தம்மைப்பயில்வார்க்குத் தங்கண்உள்ள சாத்திர வுண்மைப் பொருளை அறிவுறுத்துச் சிவானந்தப் பேற்றை எய்துவிக்குஞ் சிறப்புடையவாயினும், இவற்றுள்ஒன்று நாரிகேளபாக அமைதியும் மற்றொன்று திராட்சபாக அமைதியும் பெற்றுப் பிரகாசிக்கின்றன. சமகிருத பாஷைக்கு மூலமொழியான ஆரியபாஷை ஒன்றே பல்லாயிர வருஷங்களுக்கு முன் ஆடவரானும் மகளிரானும் பிள்ளைகளானும் வீடுகடோறுந் தெருக்கடோறும் நகரங்கடோறும் வழங்கப்பட்டு வந்தது. இனி அவ்வாரியபாஷையினை வழங்கும் ஆரியமக்கள் இப் பரதமா கண்டத்திற்கு வடமேற்கே தாம் வசித்த பிரதேசங்களை விடுத்து இப்பரதகண்டத்துட் புகுந்த காலத்துத் தமக்கெதிரிலே மிகவும் நாகரிகவழக்கடைந்து பிரகாசிக்கும் தமிழ்ப்பாஷை யினைக் கண்டு அதிலுள்ள இலக்கணஇலக்கிய அமைதிகளை யெல்லாம் பார்த்துத் தமது ஆரியபாஷையினை நூல் வழக்கிற்கு ஏற்றவிதமாகத் திருத்தி அங்ஙனம் எல்லா நலங்களும் பொருந்தத் திருத்தப்பட்ட தென்னுங்காரணம் இனிதுதோன்ற சமகிருதம் என்னும் பெயருஞ் சூட்டினார். இங்ஙனந் திருத்திச் செய்யப்பட்ட சமகிருத பாஷை நிரம்பவும் பிரபலமாய் வழங்கவே, இதற்கு மூல மொழியான ஆரிய பாஷை இறந்து பட்டது. நூல்வழக்கி னுள்ளே நிரம்பவும் பிரபலப்பட்டு வந்த சமகிருத பாஷையின் எழுத்தின்சப்த பேதங்கள் அவற்றைத் திருத்த மாய்க் கற்றோரானன்றி, மற்றை ஆண்மக்களானும் பெண் மக்களானும் பிள்ளைகளானும் உச்சரிக்கவாராமையால் சமகிருதபாஷை எஞ்ஞான்றும் உலகவழக்கிற் பயின்று வந்ததேயில்லை. அதுகற்றோர்க்குரிய நூல்வழக்கின் மாத்தி ரம் பயின்று வருவதாயிற்று. இவ்வாறு மூலமொழியான ஆரியம் இறந்துபட்டமையானும், அதனின்றுந் தோன்றிய சமகிருதம் உலகவழக்கிலின்றி நூல்வழக்காய் மாத்திரம் இருந்தமையானும் சமகிருத பாஷையினைக் கற்போர் மிகவும் இடர்ப்படுவா ராயினார். உயிரெழுத்துக் களிலே ரு லு வென்னும் உயிர்மெய் யெழுத்துக்களைப் பிறழவைத்தும், க் ச் ட் த் ப் என்னும் வல்லொற்றுக்களை மனிதர்க்கு இயற்கையேதோன்றும் உச்சாரண இலேசாற் கூறாது அவை யொவ்வொன்றனையும் எடுத்தும்,படுத்தும், நலிந்தும் உச்சரித்துச் செயற்கையான் வேறு வேறு மூன்றெழுத்தாக்கியும், கீழ்வாய்ப்பல்நுனியை நாவின் நுனி இயற்கையே பொருந்தத் தோன்றும் என்னும் ஒலியைச் செயற்கைப்படுத்து அந்நாவின் நுனியைக் கீழ்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்தவைத்துச் சரித்து எனும் எழுத்தாக்கியும், அந்நா நுனியை மேல்வாய் அண்ணத்தைப் பொருந்த இலேசாக வையாது அடர்த்தி அழுத்திவைத்துச் சரித்து ஷ் எனும் எழுத்தாக்கியும், இவ் ஷ் க் என்னும் இரண்டெழுத் தையுங் கூட்டி க்ஷ் எனும் ஓர் எழுத்தாக்கியும் இங்ஙனம் எழுத் திலக்கணம் எல்லாம் இயற்கையாய் ஓதற்கும் உணர்தற்கும் பொருத்தமின்றிச் சமகிருதபாஷையிலே அமைக்கப் பட்டிருக்கின்றன. இனிச் சொல்லிணக்கமோ வெனில் ஒவ்வொரு பெயரும் வினை யும் ஒருமைபன்மை என்பன வற்றை இயற்கையே உணர்த்தும் தமிழ் முதலான பாஷைகளிற் போலாது, ஒருமை, இருமை, பன்மை என்ப வற்றை உணர்த்தும் விகுதிகள் பல உடையனவாய்த், தமிழ் முதலான இயற்கைப் பாஷைகளில் உயர் திணையில் ஆண் பெண் பலர் எனும் பாற்பகுப்பும் அஃறிணையில் ஒன்று பல என்னும் பாற்பகுப்பும் அமைந்தவாறு போலாது சமகிருத மொழிகள் ஒவ்வொன்றும் உயர் திணையில் ஆண் பெண் பாற்பகுப்பை உணர்த்துவதன் மேலும் அலிப்பால் ஒன்று ணர்த்தியும், அஃறிணையில் ஒருநியதியுமின்றி அறிவில்லாத கல், மண், பழம், பூ, மேகம், சடல் முதலியவற்றிற்கும் ஆண் பெண் அலி என்னும் பாற்பகுப்பு ஒரு பிரயோசன முமின்றி யுணர்த்தியும் இவ்வாறு அவற்றையெல்லாம் உணர்த்தும் அளவிறந்த விகுதிகளையுடையதாயிருக்கின்றது. இனி வாக்கிய அமைதி களோ வென்றாற் குணம், தீர்க்கம், விருத்தி முதற் பல திறப்பட்ட சந்திகளுடையனவாயும் பலபொருட்கு இடந் தருவனவாயும் பொருள் மயக்கம் மிகுதியுமுடையன வாயும் இவ்வாக்கியப் பொருளை நிச்சயித்தற்கு மீமாஞ்சை முதலான சாத்திரக் கருவியினை இன்றியமையாது வேண்டி நிற்பன வாயும் இருக்கின்றன. இனி இவ்விடர்ப்பாடெல்லாம் மிகமுயன்று நீக்கிக்கொண்டு போய்ச் சுலோகங்கள் விருத்தங்கள் முதலான பாவகைகளை ஓதும் வழியும் மெல்லென்ற ஓசையின்பந் தோன்றாது க் ச் ட் த் ப் என்னும் சுதாத்த, அநுதாத்த, சுவரிதம் என்னும் வல்லோசை வேறு பாடுகள் மிக விரவியும் ஷ் ஹ் க்ஷ் முதலான அனுகரண ஒலிகள் மிக விரவியும் அவை ஓதுவார்க்கும் உணர்வார்க்கும் சித்தவிருத்தியினை ஒடுக்கி அவர்ஆன்ம அறிவினை நெகிழச் செய்து அவ்வறிவின்கண் ஊறிச்சுரந் தொழுகும் இன்பத் தினைப் பயக்கமாட்டாவாய், அச்சித்த விருத்தியினை மிகுதிப்படுத்திக் குரோதங் கோபம் உக்கிர முதலான தாமத குணங்களை எழுப்பி விடுகின்றன. இங்ஙனஞ் சமகிருத பாஷை உலக வழக்கின்கண் உச்சரித்து வழங்குதற்கு ஏலாமை யினாலே நூல்வழக்கின் மாத்திரம் பயிலப்படுவ தொன்றாகை யால் அதில் உள்ள ஒவ்வொரு சொற்களும் புதிதுபுதிதாக கற்கற்பாலவா யிருத்தலாலும், கற்குமிடத்தும் எழுத்துசொல், சொற்றொடர், பா என்னும் வகைகளாற் பெரிதும் இடர்ப் பாடுடைய நாரிகேளபாக அமைதி யுடையதாய் இருத்த லாலும் அவ்வடமொழிக்கண் உள்ள நான்மறைகள் சில்வாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவுடையார்க்குச் சிறிதும் பயன்படுவனவல்லாம். இதுபற்றியன்றே, கல்வி, கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீர்பிரித்துப் பாலுண் குருகிற் றெரிந்து என்று அறநூலும் விதிப்பதாயிற்று. இனித் தமிழ்ப்பாஷையோவெனின் எல்லா மனிதர்க்கும் இயற்கையில் எழும் பன்னீருயிரெழுத்துக்களும் பதினெண் மெய்யெழுத்துக்களும் இலேசாக அமைந்த எழுத்திலக் கணமும், இரு திணையைம்பான் மூவிடங்களை யுணர்த்துஞ் சொல்லிலக் கணமும் இவற்றாற் றொடுக்கப் பட்டுப் பொருள் எளிதிலே புலப்படுக்குஞ் சொற் றொடரிலக்க ணமும், நீர்மடையிற் தெளிந்தநீர் நிரம்பி மொழு மொழு வென் றொழுகினாற்போன்ற செய்யுள் ஓசையின்ப முடைத் தாய் இப்பரதகண்டத்துள் ஆரியம் வருதற்கு முன்னும் இமய முதற்குமரியீறாக நடைபெற்றதாய், அது வந்தபின்னுஞ் சமகிருத முண்டாவதற்குச் சகாயம் பலபுரிந்து அதனோடு உடன் அளவளாவி அவை யிரண்டும் வழக்குவீழ்ந்தபின்னும் நடைபெற்று இன்றுகாறும் வழங்குவதாய் விளங்கா நிற்கின்றது. இது நன்றுவிளக்கும் பொருட்டே தத்துவ சாத்திர பண்டித ரான சுந்தரம்பிள்ளை பல்லுலகும் பலவுயிரும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருண் முன்னிருந்தபடியிருப்பதுபோற் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையாளமுந் துளுவும் உன்னுதரத்துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாநின் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே என்று வைத்துக்கூறினார். இங்ஙனந் தமிழ் உலக வழக்குடைய தாய் நடைபெறுகின்றமையின் அப்பாஷையின் சொற்கள் பெரும்பாலன நம்மால் வருத்தமின்றி அறியப்பட்டன வாகின்றன. உலகவழக்கில்லாத வடமொழியை நாடொறும் வழுவாமல் முறையாய்க்கற்று அப்பாஷையிற் புலமையடைய வேண்டும். நல்லறிவாளன் ஒருவனுக்குக் குறைந்தது பத்து வருஷங்கள் செல்லும்; இப்படியே நம்முடைய சாதியார்க்குள் வழங்குதலில்லாத ஆங்கில பாஷையினைக் கற்றுப் புலமை யடைதற்குக் குறைந்தது பத்துவருஷஞ் செல்வது எல்லாரும் பிரத்தியக்கமாக அறிந்த உண்மை யேயாம். இனி உலக வழக்கிலுள்ள நமதுசெந் தமிழ்ப் பாஷையைக் கற்றற்கோ மந்த புத்தியுடையானுக்கு ஐந்து வருடமும் தீவிர புத்தியுடை யானுக்கு மூன்று வருடமுமாத்திரம் போதுமானவை யாம். இன்னும் எழுத்துச் சொல்லி லக்கணங்கள் வரையறை யின்றி ஒரு நியதிக்கு அகப்படாது விரிந்த சமகிருத முதலிய இலக்க ணங்கள் போலாது, தமிழில் தொல்காப்பியம் முதலான அரிய பெரிய இலக்கணங்கள் ஓர்வரம்பு கடைப் பிடித்துப் போதிக்கும் பெருமை நிரம்பினவாம். இது கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத்தெரிந் தாய்ந்தவிப்பசுந்தமிழேனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும்படுமோ என்றும், மறைமுதற் கிளந்தவாயான் மதிமுகிழ் முடித்தவேணி இறைவர்தம் பெயரைநாட்டி யிலக்கணஞ் செய்யப்பெற்றே அறைகடல் வரைப்பிற்பாடை யனைத்தும் வென்றாரியத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம் என்றும் ஆன்றோர் கூறுவாராயினர். இனி இதன்கண்ணுள்ள ஓசை யின்பம் மற்றை எந்தப் பாஷையினும் இல்லையென்றதனை வலியுறுத்துவாம். க் ச் த் ப் ட் என்பனவற்றை எடுத்தல், படுத்தல், நலிதலாகிய சுதாத்த அனுதாத்த சுவரிதவகைபற்றி உச்சரிக்கும் வல்லோ சையும், மெல்லோசையினைக் கெடுத்துத் தோன்றும் ஸ, ய, ஷ, ஹ, க்ஷ என்னும் அனுகரணக் குறிப்போசையும் தமிழ்ப் பாஷையின்கண் இல்லாமையின் இப்பாஷை முழுவதூஉம் ஓசையின்ப முடைத் தென்பது துணியப்படும். அதுவேயுமன்றித் தனி மெய்யெழுத்துக் களை முதலிற் கொண்டு க்ரமம் ந்யாசம் ப்ரபலம் என்றற் றொடக்கத் தான் வருந்தி யுச்சரிக்கும் முயற்சியின்றி இச் சொற்களை உச்சரிக்க வேண்டி வந்துழியும் அவற்றோடு உயிர் எழுத்துச் சேர்த்துக் கிரமம் நியாசம் பிரபலம் என்பனவாக இலேசாக்கிச் சொல்லும் நெறியு முடைத்தாகலின் தமிழ் ஓசையின்பந் தனக்கே உரித்தாக வுள்ளதென்பது தெற்றென விளங்கும். தமிழ்ப்பாஷை முழுவதூஉம் இங்ஙனம் ஓசையின்ப முடைத்தாய் நடைபெறு மாயினும், இதன்கட் செய்யுட்கள் இயற்றும் நல்லிசைப்புலவர் இப்பாஷையின் கண்ணும் உள்ள வல்லோசையினைப் பெரும் பான்மையான் விலக்கி மெல்லோசை நிரம்பத் தோன்றவே சொற்பொறுக்கி யமைத்துப் பல திறப்பாக்கள் இயற்றுவாரா யினர். ங் ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள் ற் என்னும் பதின்மூன் றெழுத்துக்கள் மிகப் பயின்றுவருஞ் சொற்களே தமிழ்ப் பாட்டுக்களிலெல்லாம் பெரும்பான்மையாற் காணப்படுவன வாம். இஃது, அம்மையேயப்பா வொப்பிலா மணியே யன்பினில் விளைந்தவாரமுதே. பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன்றனக்குஞ், செம்மையேயாய சிவபுரமளித்தசெல்வமே சிவபெருமானே, இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே என்னுந் திருவாசகத் திருவாக்கினும், தனித்தனி முக்கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் சருக்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே, தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தெங்கின் றனிப்பாலுஞ் சேர்த் தொரு தீம்பருப் பிடியும் விரவி, இனித்தநறு நெய்யளைந் தேயிளஞ் சூட்டினி றக்கியெடுத்தசுவைக் கட்டியினு மினித் திடுந் தெள்ள முதே, யனித்தமறத்திருப்பொதுவில் விளங்குநடத்தர சேயடி மலர்க்கென் சொல்லணி யாமலங் கலணிந்தருளே என்னும் இராமலிங்க சுவாமிகள் அருளிச் செய்த பாடலினுங் கண்டு கொள்ளப்படும். தமிழ்ப் பாஷையில் இங்ஙனம் நிகழும் மெல்லோசையினுள்ளும் இன்னுஞ் சார மாய்ச் சொற்சுவை பழுத்தொழுக வருவதோர் ஓசையுண்டென்றும், அஃதொரு காப்பியம் முழுவதூஉம் பயின்றுவருமாயின் அது தோல் என்னும் வனப்பாமென்றும் தெய்வப் புலமைத் தொல்காப்பியனார். இழுமென் மொழியான்விழுமியது நுவலினும் பரந்தமொழியானடி நிமிர்ந்தொழுகினுந் தோலெனமொழிப தொன்மொழிப் புலவர் என்று அருளிச் செய்வாராயினர். தமிழ்மொழியின் வரம்பு கண்டு சங்கவிலக்கியங்கட்கும் தொல்காப்பியத்திற்கும் உரை கண்ட ஆசிரியர் நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணி யுரையிலே இக் காவியம் முழுவதூஉம் அங்ஙனம் வந்த தோல் என்னும் வனப்புடையதாமென்க என்றுரை கூறினார். இஃதொரு கால் அச்சீவகசிந்தாமணியினை நோக்கும் நுண்ணறிவாளர்க்கும் இனிது விளங்கற் பாலதே யாம். இத்தோல் என்னும் வனப்புப் பெரும்பான்மையும் ழகர வொலி பற்றி வருவதாமென்பது ஆசிரியர் தாங்கூறும் அவ்விலக்கணத் திற்கு இலக்கியமாக அச்சூத்திரத்திலேயே அதனைப் பொருத்திக் காட்டிய வாற்றா னும் அறிந்து கொள்ளப்படும். இனி இந்த ழகர வொலி பற்றி வருவதா மென்பது ஆசிரியர் தாங்கூறும் அவ்விலக் கணத்திற்கு இலக்கியமாக அச்சூத்திரத் திலேயே அதனைப் பொருத்திக் காட்டியவாற்றானும் அறிந்து கொள்ளப்படும். இனி இந்த ழகரவொலியோடு ஒப்புமை யுடைய ள, ல, ர, ற, ன, ,ண், ந், முதலியவும் ஒன்றினமுடித்தல் தன்னினமுடித்தலென்னு முத்தியாற் கொள்ளப் படுவனவாம். இத்தோல் என்னும் வனப்பு இங்ஙனங் கனிந்து நிற்றல், கற்பாலுமிழ்ந்த மணியுங் கழுவாது விட்டால் நற்பாலழியு நகைவெண்மதி போனிறைந்த சொற்பாலுமிழ்ந்த மறுவுமதியாற் கழூஉவிப் பொற்பாவி ழைத்துக் கொளற்பாலார் புலமைமிக்கார் காய்மாண்டதெங்கின் பழம்வீழக்க முகினெற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடை கீறிவருக்கை போழ்ந்து தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும் ஏமாங்கதமென்றிசையாற்றிசைபோயதுண்டே எனவருஞ் சிந்தாமணிப்பாட்டுக்களிற் காணப்படும். இவ்வாறு ஓசை யின்பம் பெரிதுடைத்தாய்த்தோன்றும் சிந்தாமணிக்கு எதிர் நிற்கவல்லதான பெருங் காப்பியநூல் தமிழில் பெரியபுராணத்தை யன்றிப் பிறிது காணப் படுவதில்லை. இது, ஞானத்தின் றிருவுருவை நான்மறையின்றனித் துணையை வானத்தின் மிசையன்றி மண்ணின் வளர்மதிக்கொழுந்தைத் தேனக்கமலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங் கானத்தினெழு பிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள் கடையுகத்திலாழியின்மேன் மிதந்த திருக்கழு மலத் தினிருந்த செங்கண், விடையுகைத்தார் திருவருளால் வெற் பரையன்பாவை திருமுலைப் பாலோடும், அடைய நிறை சிவம் பெருகி வளர் ஞானங்குழைத் தூட்டவமுது செய்த, உடைய மறைப் பிள்ளையார் திருவார்த்தை யடியார் களுரைப்பக் கேட்டு எனவரும் பெரியபுராணத் திருவாக்கான் நன்கறியக் கிடக்கும். இனி அன்பே உருவாய் அழுதழுது குழைந்துருகிய மாணிக்க வாசகப்பெருமான் றிருவாய் மலர்ந் தருளிய திருவாக்கு களிலெல்லாம் இந்த மெல்லோசையின்பம் நிரம்பித் துளும்புகின்றது. அது, தெளிவளர்வான் சிலை செங்கனிவெண் முத்தந் திங்களின்வாய்ந் தளிவளர் வல்லியன்னாய் முன்னியாடு பின்யானளவா ஒளிவளர்தில்லை யொருவன் கயிலையுகு பெருந்தேன் றுளிவளர் சாரற் கரந்துங்ஙனேவந்து தோன்றுவெனே யாழுமெழுதியெழின் முத்தெழுதியிருளின் மென்பூச் சூழுமெழுதியோர் தொண்டையுந்தீட்டி யென்றொல்பிறவி ஏழுமெழு தாவகை சிதைத்தோன்றில்லையூரிளமாம் போழுமெழு திற்றொர்கொம்பருண்டேற் கொண்டுபோதுகவே விழியாற்பிணையாம் விளங்கியலான் மயிலாம் மிழற்றும் மொழியாற் கிளியாம் முதுவானவர்தம் முடித்தொகைகள் கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலை முத்தம்மலைத்தேன் கொழியாத் திகழும்பொழிற்கெழிலாமெங்குல தெய்வமே என்னுந் திருச்சிற்றம்பலக்கோவைத் திருவாக்குகளுட் காண்க. மாணிக்க வாசகப்பெருமான் றிருவாய்மலர்ந்தருளிய திருவாக்குகளின் இவ் வுண்மையை யுணர்ந்தன்றே இராம லிங்கசுவாமிகள், சேமமிகுந்திருவாதவூர்த்தேவென்றுலகுபுகழ் மாமணியே நீயுரைத்த வாசகத்தையெண்ணு தொறுங் காமமிகு காதலன்றன் கலவிதனைக்கருதுகின்ற ஏமமுறுகற் புடையாளின் பினுமின் பெய்துவதே வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்தென் ஊன் கலந்தென்னுயிர் கலந்திங்கு வட்டமாலினிப்பதுவே வருமொழி செய்மாணிக்கவாசகரின் வாசகத்தி லொருமொழியே யென்னையுமென் னுடையனையுமொன்று வித்துத் தருமொழியா மென்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பியயல் கூடுவதேன் கூறுதியே பெண்சுமந்த பாகப் பெருமானொருமாமே லெண்சுமந்த சேவகன் போலெய்தியதும் வைகைநதி மண்சுமந்து நின்றது மோர்மாறன் பிரம்படியாற் புண்சுமந்துகொண்டதுநின் பொருட்டன்றோ புண்ணியனே வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக் கேட்ட பொழுதங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளுமெய்ஞ்ஞான நாட்டமுறு மென்னிலது நானடை தல்வியப்பன்றே என்று இங்ஙனமெல்லாம் அதன் பெருமை விரித்துரைப் பாராயினர். இனி இப்பெற்றித்தான மெல்லோசையின்பமே இத் தமிழ்ப்பாஷையின் தெய்வீகவுண்மையினை விளக்குவதென்று காட்டுவாம். உலகத்திலுள்ள சப்தபேதங்களை யெல்லாம் வகுத்துப் பார்த்தால் அவை வல்லோசை மெல்லோசை குறிப்போசை யெனமூன்றாயடங்கும். ஒருவன் மிகவுங் கோபங் கொண்டு பேசுவனாயின் அவன் அப்போது மிக உரத்துக் கூவுதலைக் காண்கின்றோம்; ஒருவன் ஓர் ஆற்றாமை யால் வருந்தும்போது ஹா உ என்று ஆவி போக்குதலைக் காண்கின்றோம்; ஒருவன் இங்ஙனமின்றி அமைந்து ஆழ்ந்த சிந்தனையுடையனா யிருக்கும் போது மிக இனிய சொற்களி னாலே சாந்தமாய்ப் பேசக் காண்கின்றோம்; இவ்வாறு காண்டலினாலே சத்துவகுணம் மிகுந்தவிடத்து மெல்லோசை தோன்று மென்பதும், இராசதகுணம் மிகுந்தவிடத்துக் குறிப் போசை தோன்றுமென்பதும், தாமதகுணம் மிகுந்த விடத்து வல்லோசை தோன்று மென்பதும் இனிது பெறப்படும். தாமத இராசத குணங்களை ஒடுக்கிச் சத்துவ குணத்தை நிலை பெறுவித்தலே இறைவனுடைய பேரின்பானுபவத்தை எய்தற் குரிய சாதனமாகும். இன்னும் உலகத்தின்கட் சமாதான வாழ்க்கையை விரும்பிச் சீவகாருணிய ஒழுக்கம் பூண்டு நடப்பானுக்குச் சத்துவ குணமும் அதன் வழித் தோன்றும் மெல் லோசையுமே இன்றியமையாது வேண்டற் பாலனவாம். தெய்வப்புலமைத் திருவள்ளுவரும் இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன் கொலோ வன்சொல் வழங்கு வது (குறள் 99) இனிய யுளவாக இன்னாத கூறல் கனி யிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள் 100) என்று திருவாய் மலர்ந்தருளினார். சாந்த குணமாய் இனிய சொற் பேசுவானைக் கண்டால் எத்துணைத் தீய குணமுடையாரும் தாமுஞ் சாந்தப்பட்டு அமைந்தொழுகக் காண்கின்றேம். கடுகடுத்து உக்கிரமாய்ப் பேசு வானைக் கண்டால் எத்துணைப் பொறுமை யுடையாரும் தாமும் கோபித்துப் பேசுகின்றார். துன்பங்களால் ஆற்றாது வருந்துவாரைக் கண்டால் யாரும் துன்புறுகின்றார். ஆகவே, சத்துவ முதலிய குணங்களுள்ளும் அவற்றின் காரியமான ஓசைகளுள்ளும் ஒருவரிடத்து எது தோன்றுமோ அதுவே பிறரிடத்துந் தோன்றுவதாகும். இது கண்டே பட்டினத்தடிகள் நல்லாரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே யல்லாது வேறு நிலையுளதோ வகமும் பொருளும் இல்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக்கே யிறைவா கச்சியேகம்பனே என்று அருளிச்செய்தார் ஆகையால், தமிழ்ப்பாஷை யொன்றே சத்துவ குணத்தோடு ஒற்றுமைப்பட்ட மெல் லோசை யின்ப முடைத்தென்று காணப்படுதலால், அப்பாஷையின் பயிற்சி யொன்றே விரிந்து செல்கின்ற நமது சித்தவிருத்தியினை ஒடுக்கு முகத்தால் தாமத இராசத குணங்களைக் கீழ் அடக்கிச் சத்துவ குணத்தை மிகுவித்து நிலைபெறச் செய்து சிவானந்தப் பெரும்பேற்றை எய்துவிக்கும். வடமொழிக்கண் உள்ள நான்மறைகள் அரிய பெரிய இரகசியார்த்தங்கள் பல அடக்கி வைத்திருப்பினும் அவை களை யுடைய சமகிருத பாஷையின் நாரிகேளபாக அமைதி யினாற் பெறுதற்கு மிகவும் அருமை யுடைய தாவதன் மேலும், அப்பாஷையின்கண் மிகுதியாயுள்ள வல்லோசை குறிப்போசை களானவை அவற்றைப் பயில் வார்க்குத் தாமதகுண இராசதகுண சொரூபமாயுள்ள சித்த விருத்தி யினை மிகுவித்தலால் சத்துவகுண காரியமான அன்பு தோன்ற மாட்டாதாகும். அன்பு தோன்றாதாகவே அன்புஞ்சிவமு மிரண்டென்ப ரறிவிலார் அன்பேசிவமாவ தியாரு மறிகிலார் அன்பேசிவமாவ தியாரு மறிந்தபின் அன்பேசிவமா யமர்ந்திருந்தாரே என்ற அருமைத்திரு வாக்கின்படி அவ்வன்போடு அபேத சம்பந்தமாயுள்ள சிவமுந்தோன்றப் பெறாதாகும். அது கண்டே விளங்கிழை பகர்ந்த மெய்யுடை முக்கட் காரண னுரையெனு மாரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூ ரண்ணல் மலர்வார்ய்ப் பிறந்த வாசகத் தேனோ யாதோசிறந்த தென்குவிராயின் வேத மோதின் விழிநீர் பெருக்கி நெஞ்ச நெக்குருகி நிற்பவர்க் காண்கிலேந் திருவாசக மிங்கொருகா லோதிற் கருகன் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்து நீர்பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி யன்ப ராகுகநரன்றி மன்பதை யுலகின் மற்றைய ரிலரே என்று சிவப்பிரகாச சுவாமிகளும் அருளிச் செய்வாராயிற்று. இனி, இம்மெல்லோசை யின்பத்தோடு, அன்பு மயமாய் நிற்றலின் இத்தெய்வச் செந்தமிழ்ப்பாஷை பிரணவ சொரூ பமாயிருக்குமென்பதூஉங் காட்டுவாம். ஆகாயத்தின் இயற்கைச் சத்தமாய் எல்லாச் சத்தபேதங்களுந் தோன்று தற்கு முன் விளங்காநின்ற சூக்கும ஓசையாய் இருப்பது ஓ என்னும் பிரணவ நாதமேயாம். இது செயற்கையாயெழுஞ் சத்த பேதங்களை யெல்லாந்தடுத்துச் சங்கைக் காதில் வைத்துக் கேட்பின் இனிது புலப்பட்டு விளங்கும். இப்பிரணவ நாதத்தின்கட் குறிப்போசை வல்லோசைகள் சிறிதுமின்றி மெல்லோசையே தோன்றுதல் அனுபவத்தால் இனிதுணரப் படுவதேயாம். இங்ஙனம் மெல் லோசை மாத்திரையே சொரூப மாகவுடைய பிரணவத்தின் தூல காரிய சப்த சமூக மே தமிழ்ப் பாஷையாமென்பது அத்தமிழ்ப் பாஷையின் கண்ணுள்ள மெல்லோசை யின்பத்தால் இனிது துணியப்படும். தமிழும் மெல்லோசையே சொரூபமாகவுடையது; பிரண வமும் மெல்லோசையே சொரூபமாகவுடையது; ஒன்று தூலகாரிய மாம் ஒன்று சூக்கும காரணமாம். இங்ஙனந் தமிழும் பிரணவமும் தூலசூக்கும பேதத்தால் இரண்டாயும், பொதுமை யான மெல்லோசை வகையால் ஒன்றாயும் நிற்கு மென்றறியப் படும். இங்ஙனம் பிரணவம் தமிழ்ப் பாஷைக்கே இயற்கை யுரிமையுடைத் தென்பது சமகிருத முதலிய எல்லாப் பாஷை களினும் அஃது ஓ என்னுந் தமிழ் எழுத்தால் எழுதப் பட்டு வழங்குதலே சான்றாம். இன்னுஞ் சப்தத்தைக் குறிக்கும் ஓசை ஒலி என்னுஞ் சுத்தச்செந்ததமிழ்ச்சொற்கள் ஓ என்னும் அப்பிரணவ எழுத்தினையே முதற்கொண்டு நிற்கு மாற்றானும், சப்தம் நாதம் முதலான சமகிருதச் சொற்கள் அவ்வெழுத்தின்றி நிற்கு மாற்றானும் பிரணவம் தமிழுக்கே உரித்தென்பது நாட்டப்படும். இவ்வுண்மைகளால் மெல்லோசையும் அன்பும் பிரணவ சொரூபமும் சிவமும் ஒன்றேயாதல் இனிது பெறப்படுதலின் இவற்றோடு அபேத சம்பந்தமுடைய தமிழ்ப்பாஷை தெய்வத் தன்மையுடைய தென்பது நாட்டப்படும். இங்ஙனம் இப்பாஷை தெய்வமாட்சி யுடைத் தாய்ப் பிரணவ சொரூபமாய் நிற்றலினா லன்றே திருஞான சம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசுகளும் சுந்தரமூர்த்திகளும் மாணிக்கவாசகப் பெருமானும் என்னும் நால்வர் சமயாசாரியரும் தம் அருமைத் திருவாக்குகளை இதன் கண்ணே திருவாய் மலர்ந்தருளி, அவ்வாற்றாற் சிவானுக் கிரகத்தினை ஆகருஷணஞ் செய்து அற்புதங்கள் பல வியற்றிச் சைவத்தை நிலைநாட்டி உலகை உய்வித்தருளினார். இத்தகைய பெருமை வடமொழி முதலான மற்றைப் பாஷைகளுக்கின் றென்பது, தொண்டர்நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை யுண்டபாலனை யழைத்ததும் எலும்பு பெண்ணுருவாக் கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோசாற்றீர் என்னுந் திருவாக்கா னறியப்படும். இராமலிங்க சுவாமிகளும், முன்புறுநிலையும் பின்புறுநிலையும் முன்னிநின் றுளமயக்குறுங்கா, லன்புறுநிலையாற் றிருநெறித்தமிழ் கொண் டையநீத்தருளிய வரசே, யென்பு பெண்ணுருவோ டின்னுயி ரதுகொண்டழுந்திடப் புரிந்துலகெல்லா, மின்புறப் புரிந்த மறைத்தனிக்கொழுந்தே யென்னுயிர்க் குயிரெனுங் குருவே இலைக்குள நீரழைத் தனி லிடங்கருற வழைத்த ன்வாய் தலைக்குதலை மதலையுயிர் தழைப் பவழைப் தருளியநின் கலைக்கும் வடகலையின்முதற் கலைக்குமுறு கணக்குயர்பொன் மலைக்குமணு நிலைக்கு முறா வன்றொண்டப் பெருந்தகையே என்றத் தமிழ் வேதமாட்சி நன்கெடுத்து விளக்கினார். இன்னும் இவ்வுண்மைகள் எல்லாம் தமிழ் என்னும் அப்பாஷையின் பெயரினுள்ளேயே அமைந்து கிடக்கின்றன. த் அ ம் இ ழ் என்னும் ஐந்தெழுத்துக்களால் அமைந்தது அச்சொல். இவற்றுள் அ, இ என்பன உயிரெழுத்துக்கள், த் ம் ழ் என்பன மெய்யெழுத்துக்கள். தமிழிலுள்ள உயிரெழுத்துக் களும் அ இ என்னும் இரண்டில் அடங்கும், பதினெட்டு மெய்யெழுத் தோசைகளும் த் ம் ழ் என்னும் இம்மூன்றில் அடங்கும். எல்லாப் பாஷையின் எழுத்துக்களுக்கும் அகரமே முதல் எழுத்தாகும். அது தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றேயுலகு என்றருளிச் செய்தமையானும், ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதிபசுவாம் ஒன்றென்ற நீபாசத் தோடுளைகாண் - ஒன்றின்றால் அக்கரங்களின்றாம் அகரவுயிரின் றேல் இக்கிரமத் தென்னு மிருக்கு என்னுஞ் சிவஞானபோதத் திருவாக்கும், ஒன்றெனமறைகளெல்லா முரைத்திட வுயிர்களொன்றி நின்றனனென்றுபன்மை நிகழ்த்துவதென்னை யென்னில் அன்றவைபதிதா னொன்றென்றறையு மக்கரங்கடோறும் சென்றிடும் அகரம்போல நின்றனன் சிவனுஞ்சேர்ந்தே என்னுஞ் சிவஞான சித்தித் திருவாக்குங் கூறினமை யானுங் காண்க. அஃதியற்கையே அண்ணத்தையேனும் இதழ்களை யேனுந் திறத்தலால் புலப்பட்டும் புலப்படாமலும் தோன்று கின்றமையால் அதனையே எல்லா எழுத்துக்களுக்கும் முன்னிறுத்தினார். இ என்பது அவ்வகரம் உற்பத்தியான பின் நாவின்றொழிலால் அடுத்துத்தோன்றுகின்றமையின் அவ் வகரத்தின் பின் இகரம் நின்றதென்க. அற்றேல், ஓ மென்னும் பிரணவம் அ உ ம் என்னும் எழுத்தோசை கூடியதொன் றாகலின் தமிழ் என்றதன் கண் உயிரும் அ உ என நிற்றலே பிரணவமரபாமெனின்; - அற்றன்று, அ,இ என்னும் இரண்டக் கரங்கள் தோன்றிய பின்னரே உகரம் பிறப்பதாகும்; ஆகையால், அவ்வோ காரத்தின்கண் இகரம் அந்தர்ப்பாவமா யிருக்கு மென்றுணரப்படும். அற்றேல் உகரமாயினும் தமிழ் என்றதன் கண் இருத்தல்வேண்டுமே யெனின்; - தமிழ் என்பதில் இகரம் ஒரோவழி உகரமாகவும் உச்சரிக்கப்பட்டுத் திரிதலால் இகரமுள்வழி அதன்கண் உகரமுண்டென்றும், உகரமுள் வழியதன்கண் இகரமுண் டென்றுந் துணியப்படும். தமிழ் என்பது எல்லா ரானும் உச்சரிக்கப்படும்வழித் தமிழ் என உலக வழக்கின்கண் வருதலும் இதனை வலியுறுக்கும். அற்றேல், தமிழ் என்றே வழங்காது நூல் வழக்கில் தமிழ் என்று போந்தவா றென்னை யெனின், - பஞ்சாக்கர மந்திர நடுமொழியான சிவ என்பதில் இ அ என நிற்பதற் கிணங்கத் தமிழ் என்பதினும் அவ் வாறுயிர்கள் நின்றன. அற்றேல், இ அ என்ற முறையே நில்லாது மாறி அ இ எனத் தமிழில் நிற்றல் என்னையெனின் தூலபஞ்சாக்கரம் சூக்கும பஞ்சாக்கரம் காரணபஞ்சாக்கரம் மகாகாரணபஞ்சாக்கரம் முத்திபஞ்சாக் கரம் என்னும் அம்மந்திர வழக்குமுறை ஐந்தனுள் மகாகாரண பஞ்சாக்கரம் வசி என நிற்குமாகலின் அதற்கேற்பத் தமிழ் என்பதில் அ இ நிறுத்தப்பட்டது. அல்லதூஉம் உலக வழக்கின்கண் இறுதி நின்ற மெய்யில் உகரச்சாரியை ஏறித் தமிழு என்றும் நிற்ப துளதாகலின், உகரம் இம்மொழிக்கண் உண்டென்றே துணியப்படும். இங்ஙனமாகலின் தமிழ் என்பதன் கண்நின்ற அ இ என்னும் உயிர்கள் பிரணவ வியட்டி எழுத்துக்களா மென்று துணிக. இனி த் ம் ழ் என்னும் மெய்யெழுத்துக்களுள் த் என்பது வல்லோசை யினையும் ம் என்பது மெல்லோசையினையும் ழ் என்பது இடையோசை யினையும் குறித்து நின்றன. இனி வல்லெழுத்துக்கள் ஆறனுள் ஏனையைந்தினையும் ஒழித்து த் என்பதனை எடுத்தவாறென்னையெனின்; - தமிழ்ப்பாஷை மெல்லோசையினையே தனக்குரித்தாக உடையதென்பதனை விளக்குதற்பொருட்டு த் என்பதனைக் காட்டிலும் வல்லென்று ஒலிக்கும் அவ்வைந்தெழுத்தினையும் விட்டு வல்லெழுத்தாற னுள்ளும் மெல்லோசைப்பட நிற்கும் த் என்னும் எழுத்தை நிறுத்தினார். இனி ம் என்னும் எழுத்து மெல்லோசையினைக் குறிப்பதாம். மெல்லெழுத்துக்கள் ஆறனுள் இதனை மாத்திரம் எடுத்ததென்னை யெனின்; - ம் என்பது குழந்தைப் பருவத்து இயற்கையாய் முதலிற் றோன்றும் மெய்எழுத்தாக லானும், அது பிரணவத்தின் ஈற்றில்நிற்றலானும் அதுவே அங்ஙனம் நிறுத்தப்படுதற்கு இயைந்ததாகும். இனி ழ் என்னும் எழுத்து இடையோசையினைக் குறிப்ப தொன்றாம். இடையெழுத்துக்கள் ஆறனுள் ழ் என்பதனை மாத்திரம் எடுத்ததென்னை யெனின்; - ஏனை ஐந்திடை யெழுத்தோசைகள் எல்லாப் பாஷைகளுக்கும் பொதுவாய் நிற்ப இவ் ழ் ஒன்றுமே தமிழுக்குச் சிறப்பெழுத் தாய் நிற்றலானும், தமிழின்கண் மெல்லோசை யின்பத்திற்கு இஃது இன்றியமை யாதாய் முன்னிற்றலானும் இதனை யெடுத்தா ரென்க. இனித் தமிழ்ப்பாஷையின்கண் ஸ ய ஷ ஹ முதலான குறிப்போசை யின்றாகலின் மெல்லோசையினையேயிரு வகைப்படுத்து ஒன்றை மெல் லோசை எனவும், அம்மெல் லோசையினும் இன்னும் மெல்லென்று சுருங்கி இசைக்கும் ஒலியை இடையோசையென்றும் நிறுத்தி வல்லோசை ஒன்றுங்கூட்டி மெய்யோசை மூன்றென்பாரா யினார். தமிழின் கண் இராசத குணத்திற்குரிய குறிப்போசை யில்லாமை யான் அதனை யொழித்துச் சுத்தசத்துவ குணத்தினையே ஏற்றக் குறைச்சல்பற்றி இருவகைப்படுத்து இடையோசை யினைக் குறிக்கும் ழகரத்தைச் சுத்தசத்துவ குணத்திற்கும், மெல்லோசை யினைக் குறிக்கும் மகரத்தை அதனிற் சிறிது குறைந்த சத்துவ குணத்திற்கும் தகரத்தைத் தாமதகுணக்கலப்புச் சிறிதுடைய சத்துவ குணத்திற்கும் அடையாளங்களாக நிறுத்தினார். தமிழ் முழுவதூஉஞ் சத்துவ குணத்தையுடைய பாஷை யாகலின் ழகரம் சத்துவத்திற் சத்துவமா மென்றும், மகரம் சத்துவத்தில் இராசதமா மென்றும், தகரம் சத்துவத்தில் தாமதமா மென்றும் அறியற் பாற்று. இன்னும் இத்தமிழ் என்னும்மொழியில் ழகரம் சுத்தசத்துவ குணத்திற் கடையாளமாகலின் அதனையு யிரெழுத் தோடு சேராது தனியேயிறுதிக்கண் நிறுத்தி யருளினார். த் ம் என்னும் ஏனையிரண்டும் இராசததாமதக் கலப்புடையன வாகலின் அக்குணங்களின் ஆற்றலை மெலிவித்தல் வேண்டி அ, இ என்னுஞ் சுத்தவயிந்தவமான பிரணவ எழுத்துக்கள் கலந்து நின்றனவென்க. உயிர் எழுத்துக்கலவா முன் மெய் யெழுத்துக்கள் தாங் கொண்டிருந்த அரைமாத்திரை யினையும், அவை கலந்த மாத்திரையானேயிழந்து அவ் வுயிரெழுத்துக்களின் சொரூப மாய்நிற்கும் என்னுந் தமிழிலக்கண நுட்பத்தை உற்று நோக்குமிடத்து த ம் என்னுந் தாமத இராசகுணக்கலப்புடைய சத்துவ எழுத்துக் கள் அ, இ என்னும் பிரணவ உயிரெழுத்துக் களைக் கலக்கப் பெற்றமை யானே தமக்குள்ள அவ்வசுத்த குணக் கலப்பு நீங்கிச்சுத்தசத்துவ வெழுத்துக்களாய்நிற்கும் என்பதூஉம், அவையங்ஙனம் நிற்கவே தமிழ்ப்பாஷை முழுவதூஉஞ் சுத்தசத்துவ குண சொரூபத்தையுடையதா மென்பதூஉம் நன்று தெளியப்படும். அற்றேல், த் என்ற வல்லோசையினை முதலில் வைத்துக் கூறிய தென்னையெனின்; ஓர் ஒலிதோன்றும் போது தோன்று மிடத்தே வல்லென்றெழுந்து வரவரச் சுருங்கித் தூரத்திலுள் ளார்க்கு மெல்லென்றிசைக்குமாகலின் அம்முறையே வல்லென் றிசைக்குந் தகரத்தை முன்னும், அதனிற்சுருங்கி மெல்லென் றிசைக்கும் மகரத்தை அதன் பின்னும், அதனினுஞ் சுருங்கி மெல்லென்றிசைக்கும் ழகரத்தை யிறுதிக்கண்ணு மாகவைத் தோதினார். இலௌகிக முறையிலே தாமத குணவயப்பட்டுச் செல்லும் நமது சித்தவிருத்தியினைச் சிறிது சிறிதாக ஒடுக்கிக் கொண்டு போய்ச் சுத்தசத்துவத்திலே நிறுத்துவது தமிழ் மொழியாமென்பதனையும் அம்முறை தெரிப்பதாயிற்று. இங்ஙனந் தமிழ்பாஷையின் நுட்பங்கள் பலவும் அதன் பெயர்க்கண்ணே தொகுத்தடக்கிச் செய்தமையின், தமிழ் தெய்விகத்தன்மை பெரிதுடைய பிரணவமொழியா மென்பது தெற்றெனத் தெளியப்படும். இவ்வுண்மை யுணர்த்துதற்கன்றே திருஞானசம்பந்தப் பிள்ளையார் தாம் அருளிச் செய்த முதற்பதிகத்தின் முதன் மொழியாய் நின்ற தோடு என்பதன் கட் பிரணவ எழுத்தான ஓகாரத்தை த் என்னும் தமிழ்ப்பெயர் முன்னின்ற எழுத்தின்கட் சேர்த்துச் சரித்து அப்பிரணவம் தமிழுக்கே சிறப்பாக உரித்தென்பது காட்டியருளினார். இனி இத்துணைப்பெருமையுந் தமிழுடைத்தாதல் பற்றியே இராமலிங்கசுவாமிகள் இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போது போக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசைசெல்லவொட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகலேசு டையதாய்ப்பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை யுடையதாய்ச் சாகாக் கல்வியை லேசிலறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென் மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளினீர் என்றருளிச் செய்வாராயினர். இங்ஙனந் தெய்விகத்தன்மையுடைய செந்தமிழ்ப் பாஷை யிலேயுள்ள தேவார திருவாசகங்களாம் நான் மறைகள் பொற் கலத்திற் பெய்து நிரப்பிய இனிய பாலமிழ்தம்போல் பெரிதும் பயனுடைத்தாம், வடமொழிக் கண்ணுள்ள நான்மறைகள் மட்கலத்திற்பெய்துநிரப்பிய பால்போல் எல்லார்க்கும் பயன்படுதலுடைத்தன்றாம். அதுநிற்க. இனி வடமொழி நான்மறைகள் கன்மகாண்டம் உபாசனா காண்டம் ஞானகாண்டம் என முத்திறப்பட்டு பசுமேதம் பரிமேதம் முதலியகன்மபாகங்களையே மிக விரிப்பனவும், முப்பத்தாறுதத் துவங்களுட்பட்ட ப்ருதிவ் யோபவ ஆபசர்வ அக்நேருத்ர வாயுர்ப்பீம என்றற் றொடக்கத் தனவாக இந்திரன் பிரமன் முதலிய காரிய மூர்த்தி களை மிகவும் உபாசிப்பன வுமாய்க்கொண்டு, தத்துவங்கடந்த பிரமவிசாரணையைச் சிறுபான்மையே சொல்வதாம். இனித் தமிழ் நான்மறை களோவெனின் முப்பத்தாறு தத்துவங்களின் மேற்பட்டு விளங்கும் சிவம் என்னும் முழுமுதற்பொருளையே உபாசிக்கும் ஞான காண்டப் பொருளொன்றேயுடையனவாம். இந்தஞான காண்டமும் ஆகமவழியால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நாற்றிறப்பட்டு நிற்கும். இது தாயுமான சுவாமிகள் விரும்புஞ்சரியை முதல் மெய்ஞ்ஞானநான்கும் அரும்புமலர்காய்கனிபோலன்றோபராபரமே என்றருளிச்செய்தமையானும் இனிது விளங்கும். ஆகவே, ஞானத்திற் சரியையைக் காட்டும் தாசமார்க்கத்தை யுணர்த்துதற் பொருட்டுத் திருநாவுக்கரசு சுவாமிகளும், ஞானத்திற் கிரியையை யுணர்த்தும் புத்திரமார்க்கத்தை விளக்குதற் பொருட்டுத் திருஞானசம்பந்த சுவாமிகளும், ஞானத்தில் யோகத்தை யுணர்த்தும் சகமார்க்த்தை விளக்குதற்பொருட்டுச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், ஞானத்தில் ஞானத்தை யுணர்த்துஞ் சன் மார்க்கத்தை விளக்குதற்பொருட்டு மாணிக்க வாசக சுவாமிகளும் அவதரித்தருளினார் என்க. என்றிதுகாறும் விளக்கியவாற்றான் தமிழ்ப்பாஷை யொன்றே சத்துவகுண ஓசை புலப்படுத்திப் பிரணவாகார மாயிருத்தலால் இப்பாஷை தெய்விகத்தன்மை யுடைய தென்பதும், இப்பாஷையின்கண் சமயாசாரியர் திருவாய் மலர்ந்தருளிய தேவார திருவாசக அருந்தமிழ் மாமறைகள் இதில் அமைதரப்பெற்றமையானே ஒருபெருஞ் சிறப்புப் பெறுவ வாயினவென்பதும், வடமொழிநான்மறைகள் சத்துவ வோசை யின்மையோடு பலதிறப்பட்ட காரியப் பிரமோ பாசனை வலியுறுத்தி நிற்றலின் அவை பரப் பிரமசுத்தகாரண சிவபரம் பொருளை மாத்திரம் வலிபெறக் காட்டும் தமிழ்நான் மறைகளோடு ஒப்புப்பெறாவென்பதும், எனவே தமிழ்நான் மறைகளாம் தேவார திருவாசக மாட்சி அளப்பரிதா மென்பதும் இனிது பெறப்படும் என்க. ஓம் சிவாயநம: ஓம் சிவாயநம: ஓம் சிவாய நம: சிவராஜயோகம் யோகம் என்பது பொருந்துதல் என்னும் பொருளைத் தரும் ஓர் வடசொல்லாம். பொருந்துதல் என்ற மாத்திரை யினாலே பொருந்துகின்ற பொருளும், பொருந்தப்படும் பொருளும், பின் பொருந்துதற்குக் காரணமும், முன் பொருந்தா திருந்தமைக்குக் காரணமும், ஒன்றை மற்றொன்ற னோடு பொருத்துகின்ற உபகாரசத்தியும், பொருந்தியபின் விளையும் பயனும் ஆகிய இவையெல்லாம் பெறப்படுதல் வேண்டும். ஆகவே பொருந்துகின்ற பொருள் சீவான்மாவும், பொருந்தப் படும் பொருள் பரமான்மாவும், பின்பொருந்து தற்குக் காரணம் பிரமானந்த வேட்கையும், முன்பொருந்தா திருந்தமைக்குக் காரணம் ஆணவமல மறைப்பும், பொருத்து கின்ற பொருள் இறைவனோடு தாதான்மிய சம்பந்தப்பட்டு நிற்கும் அனுக்கிரக சத்தியும், பொருந்திய பின் விளைவது சிவானந்தப் பெருக்கு மாகு மென்பது முடிக்கப்படும். இதனை ஓர் உதாரண முகத்தான் விளக்குமிடத்து, ஒருவனுக்கும் ஒருத்திக்கும் சையோகம் நிகழ்ந்தது என்றக்கால் கூடுகின்ற புருஷனும் கூட்டப் படுகின்ற திரீயும், அவன் அவளைக் கூடுதற்குக் காரண மாகிய காமவேட்கையும், முன் அவளைக் கூடாதிருந்த மைக்குக் காரணமாகிய அவளை அறியாமையும், அவளை அவனோடுகூட்டுவித்து உபசரிக்கின்ற தோழியும், கூடியபின் அவர் இருவரும் அனுபவிக்கின்ற காமநுகர்ச்சி யின்பமு மாகிய இவையெல்லாம் அச்சையோகம் என்னுஞ் சொல்லாற் பெறப்படும் அன்றே? இதுபோலவே சீவான்மா பரமான் மாவோடு சம்பந்தப்பட்டு ஐக்கியமாய் நிற்கும் நிலை அறியற் பாலதாம். இனிச் சீவான்மா பரமான்ம ஐக்கிய நிலையால் உண்டாம் பிரயோசனம் நிரதிசய இன்பமே யாகலின், யோகாப்பியாசஞ் செய்தலின் கருத்துச் சிவானந் தத்தைப் பெறுதல் ஒன்றேயாம். இனி ஆனந்தம் என்பது அறிவுடைய பொருள்களின் சேர்க்கையால் உண்டாவதே யல்லது அறிவில்லாத சடப் பொருள்களின் சேர்க்கையால் நிகழ்வ தன்று. அறிவில்லாத பொருள்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நின்று இன்பானுபவ மெய்தக்கண்டார் யாரு மில்லை. மாங்கனியும் பலாப்பழமும் ஒன்று சேர்ந்து ஆனந்திப்ப தில்லை, மகிழம்பூவும் மல்லிகையும் ஒன்றோ டொன்று இயைந்து இன்பமெய்வ தில்லை, புல்லாங் குழலும் யாழும் தம்மில் இணங்கி ஆனந்தமடைவதில்லை. இனி அறிவில்லாத பொருளாயினும் அஃது அறிவுடைய பொருளைச் சேருமாயின் அப்பொருளியல்பை யறிந்து இன்பதுன்பம் எய்துவது அறிவுடைய பொருட்கண்ணேயா மென்பது எட்டிப் பழத் தையும் பின் வாழைக்கனியையும் நுகர்ந்தானுக்கு அவ் வக்கணங்களிலுண்டாகும் இன்பதுன்ப வேறுபாட்டினால் நன்கு அறியப்படும். எனவே, ஆனந்த முகிழ்ப்பு அறிவுப் பொருளின்கண்ணே தோற்றமாம் என்பதூஉம், அங்ஙனந் தோற்றமாவதும் இருபொருட் சையோகத்தான் மாத்திரமே யாமென்பதூஉம் இனிதறியற் பாலனவாம். ஓர் அறிவுப் பொருளும் பிறிதோர் அறிவில் பொருளும் சேர்ந்தக்காலும் அவ்வறிவுப்பொருளில் ஆனந்தம் சனிக்கக்காண்கின்றோ மாகலின், ஆனந்தப் பேற்றிற்கு இரண்டும் அறிவுடைப் பொருளாக நிற்றல் வேண்டாம்; இன்பங்கொடுத்தறை யித்தை விளைவித்தல் மலம் என்பதனால் முத்தியில் ஆணவ மலமே ஆன்மாவிற்கு இன்பத்தைத் தருமென்று சைவ சித்தாந்திகளும் கூறுதலால் ஆணவமும் அவ்வாணவத்தோடு சம்பந்தப்பட்டு அநாதியே ஒற்றுமையுடைத்தாயிருக்கும் ஆன்மாவும் என்னும் அவ்விரண்டில் ஆணவமே, ஆன்மாவின் ஆனந்தப் பேற்றிற்குக் காரணமாம், இதனைத்தருதற்குப் பரமான்மா வென மற்றொரு பொருள் வேண்டாம் என்றால் என்னை எனின்- வாழை, மா, பலா என்னுங் கனிவகை களையும், மகிழம்பூ, மல்லிகைப்பூ என்னும் பூவகைகளையும், குழல் யாழ் என்னும் ஓசை வகைகளையும் சுவைத்தறிந்த கணத்தும், முகந் தறிந்த கணத்தும், கேட்டறிந்த கணத்துமன்றி மற்றைக் கணங்களிலே அவற்றாற் பெறப்படும் இன்பம் நிலைபேறு டையதாய்த் தோன்றாமையானும், சோத்திரம் தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணம் என்னும் பஞ்சேந்திரியங் களால் அனுபவிக்கப் படும் அவ்வின்பங்க ளெல்லாம் ஏகதேச விளக்க முடையன வாயிருத்தலால் மறித்து மறித்தும் தொடர்ச்சியாய் அனுபவிக்கு மிடத்து அவை வெறுக்கப் படுதலானும், சடப் பொருட் சையோகத்தால் நேருமின்பம் நிலையில்லாதனவா மென்பது நன்கு தெளியப்படும். ஆணவம் என்பதும் வாழை, மா, பலா என்றற்றொடக்கத்துச் சடப்பொருள் போல்வ தோர் அசேதனப்பொருளே யல்லது வேறல்லாமையால் அதனாற் றரப் படும் ஆனந்தம் ஏகதேச மாத்திரையாய்ச் சிலகாலம் நிலைபெற்று நின்று, பின் ஆன்மாக்களுக்குத் துன்பத்தையே பயக்குமென்றல் தேற்றமாம். இன்னும், இவ்வசேதனப் பொருளால் ஆன்மாவிற்கு நிகழும் ஆனந்தத்தைக்காட்டினும் பன் மடங்கு பெரிதாய்ப் பிறிதோர் ஆன்மாவினோடுண்டாம் சையோகம் தோன்று மென்பதற்கு ஒருவன் தன் காமக் கிழத்தியோடு நுகரு மின்பமே சான்றாமென்க. ஆகையால், ஆணவமே ஆன்மா விற்கு இன்பத்தைத்தர வல்லதென்று அவ்வாறு ஆசங்கித்தல் ஒருசிறிதும் பொருந்தாது. சத்த முதலைந்துந் தன்வழித்தான் சாரிற், சித்துக்குச் சித்தன்றிச் சேர் விடம் வேறுண்டோ என்ற திருவாக்கும் ஈண்டு அறியற்பாலதாம். அற்றேல், இன்பங் கொடுத்தலிறையித்தை விளைவித்தல் மலம் என்னும் திருவாக்கின் கருத்து என்னை யோவெனின், காமக்கிழவனுங் கிழத்தியும் இன்ப நுகருங் காலத்துப் பஞ்சேந் திரிய அனுபவமான பழம் பூ முதலாயின வெல்லாம், அவர் காம வின்பத்தினை மிகுதிப் படுத்துதற்கு அனுகூலமான உபகரணங் களாதல் போலப் பரமான்வின் கண்ணுள்ள பேரின்பக் கிழத்தியோடு சீவான்ம சிற்சத்தி இரண்டறக் கலந்து நிரதி சயானந்தம் எய்துங்கால் ஆணவ மலம் உடன்நின்று உபகரணமாய் அவ்வின்பத்தினை மிகுதிப் படுத்துமென்பதே அத்திரு வாக்கின் உண்மைக் கருத்தாம் என்க. இதுபற்றியே, பெற்றசிற்றின்பமே பேரின்ப மாயங்கே முற்ற வரும்பரி சுந்தீபற முளையாது மாயையென் றுந்தீபற பேரின்ப மான பிரமக் கிழத்தியோ டோரின்பத் துள்ளானென் றுந்தீபற உன்னையே யாண்டானென் றுந்தீபற எனுந்திருவாக்குகளெழுந்தன. இனி ஏகான்மவாதம், சத்தப் பிரமவாதம், கிரீடாப் பிரமவாதம் பாற்கரியவாத மென்னும் கேவலாத்துவிதவகை பற்றிப் பரமான்மாவாகிய பிரமம் ஒன்றேயுள்ளதென்றும், அதுவே சரீரங்கடோறும் வேறு வேறு ஆன்மாக்கள்போல அவினயித்தலல்லது சீவான்மா என வேறோர் அறிவுப் பொருளில்லையென்றும், சீவான்மாப் பொய்யான மாயையின் வயத்தால் உண்டாகும் பிராந்திஞானத்தைக் கழித்துத் தன் உண்மைச் சொரூபத்தைப் பிரமமென்றே நிச்சயப்படுத்திக் கொள்ளுமிடத்து அப்பிரமத்தின் சுதந்திரகுணமாக ஆனந்த மயமாயே விளங்குமென்றும், இப்படிக் காண்டலே யோக மல்லது அதற்குச் சீவான்ம பரமான்ம ஐக்கிய நிலை என்று பொருளுரைப்பது பொருந்தாதென்றும் கூறினாலோவெனின்; யோகம் என்னுஞ் சொற்பொருளுக்கு இக் கேவலாத்துவிதக் கொள்கை ஒரு வாற்றானும் பொருந் தாமையானும், சருவ வியாபகப் பரம்பொருளாயுள்ள பிரமம் ஏகதேச சுபாவலக்ஷண முடைய சீவான்மா வாகுமென்றல் அனுபவ, விரோதமாயிருத்த லானும், அல்லதவ் வாறாகு மென்று கொள்ளுதற்கு ஓர் காரணம் இல்லாமை யானும், மாயையே பிரமத்தை அவ்வாறு ஏகதேசப் படுத்து மெனின் சருவசத்தியு முடைய பிரமத்தைக் காட்டிலும் வெறுஞ் சூனியப் பொருளான மாயை பேராற்ற லுடைத்தாம் என்று பெறப்பட்டு முன்பின் முரணாய் முடிதலானும், முன்னே சத்தி குவிந்து மாயையின் வயப்பட்டு நின்ற பிரமம் திரும்பவும் ஒரு காலத்து அதனைச் செயித்துத் தன் சுதந்திரவுரிமையைக் கைக்கொள்ளுமெனின் அத்தகைய ஆற்றலுடைய அப்பிரமம் முன்னமே அவ்வாறு அதனைச் செயித்துச் சீவத்தன்மை எய்தாது நிற்றல் அமையுமாகலானும், அவ்வாறு கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாதென்று மறுக்கப்படும். மேற்கூறியவாற்றால் ஆனந்த விளைவிற்கு ஏதுவான சைதன்னிய ஆன்ம ஒருமைப்பாடே யோகம் என்பது ஆன்றோர்துணிபாம். இதற்குப் பிரமாணம், இந்தியவிடயந்தன்னொடு சிவணல்யோக மென்பார் சிலர்சிலர் தாஞ் சிந்தனையுயிரோட டைதல் நல்யோக மென்பரீ தன்றியுஞ் சிலர்தாம் முந்திய பிராணனபான னோடடைதலென் பரிம்மொழிந் தவையனைத்தும், அந்தமில் யோகமல்ல நற்சீவன்பரத்துடனடை வதேயோகம் மாயநட்டோரையுமாயா மலமெனு மாதரையும் வீயவிட்டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாந் தாயுடன் சென்று பின்றாதையைக்கூடிப் பின்றாயைமறந் தேயுமதேநிட்டையென்றானெழிற்கச்சியேகம்பனே இனிப் பொருந்துகின்ற பொருள் சீவான்மாவும் பொருந்தப் படும் பொருள் பரமான்மாவும் என இருவேறு ஆன்மாக் களிருப்புக் காணப்படினன்றி யோகமென்ப தில்லை யென்று நாட்டப்பட்டமையின் அவை யிரண்டும் அநாதி நித்திய சைதன்னிய வதுக்களாகுமென்பது துணியற் பாலதாம். இதற்குப் பிரமாணம் சிவராசயோக கைவல்லிய சிவானந்தானுபவ சருவைசுவரிய சம்பன்ன சிரேட்ட சிவஞான வள்ளலாரான திருமூலர் அருளிச்செய்த திருமந்திரத் திருமுறையுள், பதிபசுபாசமெனப் பகர் மூன்றிற் பதியினைப் போற் பசுபாசமநாதி பதியினைச்சென்றணு காபசுபாசம் பதியணுகிற்பசுபாசம்நில்லாவே. எனவருமாற்றால் நன்கறியப்படும். ஸ்ரீ தாயுமான சுவாமிகளும் இவ்வாறே, ஒருவனவன்யானை கெடக்குடத்துட் செங்கை யோட்டுதல்போல் யான் பேதையுப் போடப்பை மருவவிட்டும்கர்ப்பூர மதனிற்றீ பம்வயங்கவிட்டும் ஐக்கிய முன்னி வருந்தி நிற்பேன் அருளுடைய பரமென்றோ அன்றுதானே யானுள னென்றும் எனக்கே யாணவாதி பெருகுவினைக்கட்டென்றும் என்னாற் கட்டிப்பேசிய தன்றேயருணூல்பேசிற்றன்றே. என்று அருளிச்செய்தமையுங் காண்க. வடமொழியிற் சுவேதா சுவதரோப நிடதத்து நான்காம் அத்தியாயத்து ஆறாம் மந்திரமான என்பது எப்போதும் ஒரேபெயரான் வழங்கப்படும் இரண்டு பக்ஷிகள் அந்த ஒரேமரத்தில் வசிக்கின்றன; அவற்றுள் ஒன்று அவ்வத்திமரத்தின் இனிய பழத்தை நுகருகின்றது, மற்றொன்று சாட்சி மாத்திரை யாய்ச் சுற்றிலும் நோக்கிக் கொண்டிருக் கின்றது என்னும் அந்தரங்க வாக்கிய நெறியினால் மாயை என்னும் விருக்கத்திற் சீவான்மா பரமான்மாவென்னும் இரண்டும் ஏககாலத் துள்ளனவாக அவற்றுட் சீவான்மா மாயையினால் அனுபவத்திற்கு வரும் இருவினைப் போகங் களான கனிகளை நுகர்ந்து கொண்டிருப்ப பரமான்மா அவ்விரு வினையால் அதுபோல் துடக்குறாது தான்சாட்சி மாத்திரை யாய் இருக்கின்ற தென்றதூஉம், முதல் அத்தி யாயத்து 8-ஆம் மந்திரமான என்பதும் ஒன்பதாம் மந்திரமான பிரிப்பின்றி நிற்குங்கால் விளங்கியும் விளங்காமலும் அழிந்தும் அழியாமலும் இருக்கும் இவ்விசுவத்தை ஈசன் தாங்கு கின்றான்; அநீசனான ஆத்மா வானவன் போக்தாவாய் அனுபவிக்கின்ற நெறியினாலே பந்திக்கப் படுகின்றான்; முதல்வனையுணரும் ஞானத்தாலே அதுசருவ பாசங்களி னின்றும் விடுபடுகின்றது. அவற்றுள் ஒன்று ஞான சொரூபி யாய் உள்ளது மற்றையது அஞ்ஞான வுருவா யுள்ளது; ஈசன் அநீசன் இருவரும் பிறவாதவர். அங்ஙன மாயினும் ஒன்று சருவசக்தியுமுடையது மற்றையது அவ்வாறாகாதது; பிரகிருதியோ போக்தாவோடும் போகத் தோடுங் கூடிநின்று அதுவும் பிறப்பின்றியே உள்ளது; அனந்த மான ஆத்மாக்கள் விசுவரூபமுடைமையினால் அகர்த்தா வாயிருக்கின்றன; இங்ஙனம் பிரமம் திரிவித சம்பந்தமுள்ளதா யிருப்பதனை யுணர்வோன் பாபங்களினின்றும் விடுவிக்கப் படுகின்றான். என்றதூஉம் பதி பசு பாசங்கள் மூன்றும் அநாதி நித்தியப் பொருள்களாமென்றலை வலியுறுத்தற்கே எழுந்தன. இங்ஙனம் பரமான்மா சீவான்மா இரண்டும் ஏக காலத்தே ஆதியந்தமில்லாத் தனித்தனிப்பொருள்களாய் நிற்பினும், ஒன்று ஞானப் பிரகாசமாயுள்ளது ஒன்று அஞ்ஞான அப்பிரகாசமாயுள்ளது; ஒன்று அருட்டிரு மேனியுடையது ஒன்று மருட்டி ருட் சரீரமுடையது; ஒன்று சருவசக்தியு முள்ளது ஒன்று அற்பசக்தியே யுடையது; ஒன்று சருவவியாபக சருவவஞ்ஞத்துவ முள்ளது ஒன்று ஏகதேச வியாபக ஏக தேசஞத்துவ முடையது; ஒன்று இயற்கையே பாசரகித மாயுள்ளது ஒன்று இயற்கையே பாசசகித மாயுள்ளது; ஒன்றுபேரானந்தப் பிழம்பாயுள்ளது ஒன்று பெருந்துன்பக் களஞ்சியமாயுள்ளது. இங்ஙனம் சிவன் சீவன் என்னும் அவ்விரண்டும் தம்முள் எவ்வாற்றானும் மாறுபட்ட சுபாவ முடையனவாய் இருத்தல் பற்றியன்றே சிவ யோகானு பூதிச்செல்வரான தாயுமானவர் அருளுடைய பரமென்றோ அன்றுதானே யான் உளனென்றும் எனப் பரம்பொருட்கு அருளுடைய என்னும் விசேடணந்தந்தும் எனக்கே யாணவாதி பெருகுவினைக் கட்டென்றும் என்னாற்கட்டிப் பேசியதன்றே யருணூல் பேசிற்றன்றே எனச் சீவனுக்கு ஆணவாதி பெருகுவினைக் கட்டு என்னும் விசேடணந் தந்தும் அவற்றின் வேறுபாடு தெரித்து இனிதோ துவாரா யிற்று. இன்னும் இச்சீவான்ம பரமான்மவேறுபாடு இனிது உணர்த்துதற்கன்றே தேவசிவாகமமுடிநிலைச் சுத்தாத்து வித வைதிக சைவ சித்தாந்த தாபன பரமாசாரிய சுவாமிகளான ஸ்ரீமந் மெய்கண்ட தேவநாயனார் தாமருளிச் செய்த சிவஞானபோதம் ஒன்பதாஞ் சூத்திரம் இரண்டாம் அதிகரணத்து, நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியானந்தனாய்த் தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் - அற்புதம்போல் ஆனா வறிவா யளவிறந்து தோன்றானோ வானேமுதல்களையின் வந்து எனவும் சுட்டி யுணர்வதனைச் சுட்டி யசத்தென்னச் சட்ட வினியுளது சத்தேகாண் - சுட்டி உணர்ந்தநீ சத்தல்லை யுண்மையைத் தைவம் புணர்ந்ததனாற் பொய்விட்டுப் போம் எனவும் அருளிச்செய்த தூஉம் என்க. இன்னும் இந் நுண்மையை எம்போன்ற மந்தவதிகாரி கட்கும் உணர்த்தி அறிவுகொளுத்தும் பொருட்டுக் காமிகம், யோகசம் முதலிய இருபத்தெட்டுச் சிவாகமங்களையும் புலங்கொள அறிந்த ஸ்ரீமது அருணந்தி சிவாசாரியசுவாமிகள் சீவனுமிச்சா ஞானக்கிரியை யாற் சிவனையொப்ப னாவனென்றிடின நாதிமலமிவற்றினை மறைக்குங் காவலனிவன் செய்கன் மத்தளவினிற் கொடுப்பக் காண்பன் பாவியாபம்புத்தி முத்திப் பயன் கொளும்பண்பிற்றாகும் சிவன் சீவனென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னிற் சிவனருட்சித் திவனருளைச் சேருஞ்சித் திவன்றான் பவங்கெடுபுத்தி முத்தி பண்ணுஞ் சித்திவற்றிற் படியுஞ்சித்தறிவிக்கப்படுஞ்சித் துமிவன்றான் அவன்றானேயறியுஞ்சித் தாதலினாலிரண்டு மணைந்தாலு மொன்றாகாத நனியமாயிருக்கு மிவன்றானும் புத்தியுஞ் சித்திவனாமோ புத்தி யிதுவசித்தென்றி டிலவனுக்கிவனும சித்தாமே எனவும் விளக்கியருளினார் என்க. ஆகவே, இங்ஙனம் பெறப்பட்ட சீவான்மா பரமான்மா இரண்டில் பொருந்து வது சீவான்மாவும் பொருந்தப்படுவது பரமான்மாவு மாகலின் அவை ஒரே யிலக்கணமுடைய ஒருபொருளாகாது வேறுபட்ட விலக்கணமுடைய வேறுவேறு பொருள்களா மென்றே துணியப்படும். இதற்குப் பிரமாணம். அப்பினிற் கூர்மை யாதித்தன் வெம்மையா லுப்பெனப் பேர்பெற் றுருச்செய்த தவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற் செப்பினிற் சீவன் சிவத்து ளடங்குமே எனுந் திருமந்திரத்துட் காண்க. இனிச் சீவன் சிவத்தோடு பொருந்தல் வேண்டுவது என்னை என்று விசாரிக்குமிடத்துச் சிவானந்தப்பேற்றின் பொருட்டாகவே யல்லது வேறில்லை என்பது முன்னே விளக்கப்பட்டது. எங்கெங்கு இருவர்க்குள்ளே கூட்டுறவு உண் டாகுமோ அங்கெல்லாம் ஆனந்த விளைவுண்டா மென்றும், எங்கெங்கே ஆனந்த விளைவில்லையோ அங்கெல்லாம் அவ்விருவர் தமக்குள்ளும் பிரிவினையே நிகழுமென்றும் அறிதல் வேண்டும். நேசகுணம் என்பது இருவரையும் ஒருவராக ஒட்டுவித்து ஆனந்தத்தை விளைவிப்பதன்றி வேறென்னை? விரோத குணம் என்பது அவ்விருவர் தமக்குள்ளும் அவ்வானந்தம் நிகழ வொட்டாது தடைசெய்து அவர் தம்மை வேறுவேறாகப் பிரிவிப்பதன்றி வேறென்னை? பேரறிவினாற் சிறந்த ஒரு பெரியாரைக் கண்டவிடத்து அவர்பாற் சென்று அவர் கூறும் அரிய பெரிய விஷயங்களை உணர்ந்து அவரோடு அளவளாவி இன்புறுதற்கு எம்மனம் மிக விழைகின்றது. அறிவில்லாரைக் கண்டவிடத்து அவர்பாற் செல்லுதலால் யாது துன்பம் உண்டாமோ என்றஞ்சி அவரை விட்டுப் பிரிந்துபோவதற்கு மிகவும் விரும்புகின்றோம். இதனால் நேசகுணம் உண்டாவதற்கு ஒருவரிடத்துள்ள அறிவுவிளக்க மாகிய ஞானமே இன்றியமையாது வேண்டற்பாலதா மென்பதூஉம், விரோத குண முண்டாவதற்கு ஒருவரிடத்துள்ள அஞ் ஞானமே காரணமா மென்பதூஉம் இனிதுவிளங்கும். அறியாமை வயப்பட்டுப் பிறப்பு இறப்புக்களென்னும் பெருந் துக்க சாகரத்திலே கிடந்து அலையும் எம்போல்வார்க்குப் பேரறி வாளரைக் கண்டால் அவரோடு அளவளாவுதற்கு மனவெழுச்சி யுண்டாதல்போல, எல்லா ஞானத்திற்கும் ஓர் நிலைக்களனாய் உள்ள சருவேசுவரன் ஒருவன் உண்டாகலின் அவனைத் தலைக்கூடி எமக்குள்ள அறியாமை யினையும் பிறப்பிறப்புத் துன்பங்களையும் தொலைத்துக் கொள்ளல் வேண்டும் என்னும் ஓர் அவாவும் இடையறாது நிகழ் கின்றது. ஞானமுடையார் இவரென்ற றிந்தால் அன்றி ஞான முடையாரை யணைந்து அவரால் அறிவு கொளுத்தப் படுத லில்லாமை போலச் சருவேசுரனுக் குள்ள வியாபக ஞானம் ஒருசிறிதாயினும் விளங்க அறியப்பட்டா லல்லது அதனைப் பெறுதற்கு மனவெழுச்சி செல்லமாட்டாது. இனித் தாயின் மிகச் சிறிதாகிய கருப்பையினுள்ளே புகுந்த நாட்டொடங் கிக் கரசரணாதி அவயவங்களெல்லாம் இனிது பொருத்தப் பட்டுப் பத்துமாதங்கழிந்து பிறக்குஞ் சிசுவினுற்பத்தியைக் காணும் போதும், பிறந்த அச்சிசுக்களுள் ஒருபாலன ஆண்டன்மையும், ஒருபாலன பெண்டன்மையுமாய் வகுக்கப்பட்ட பேத அமைப்பினைக் காணும்போதும், சூரிய மண்டிலம் சந்திர மண்டிலம் செவ்வாய் மண்டிலம் புதன் மண்டிலம் பிருகபதி மண்டிலம் சுக்கிர மண்டிலம் சனி மண்டிலம் பூமண்டிலம் முதலான கோளகைகளும் யாற்றின் மணலை அளவிடினும் அளவிடப்படாத கணக் கிறந்த நட்சத்திர மண்டிலங்களும் பூதாகாயவியாபக அந்தரத் திலே அம்மனைகள் சுழன்றாற் போலச் சுழன்றுகொண்டு தத்தங் கதிவழுவாமல் தத்தமக்குள்ள ஆகருஷணசக்தியால் இழுக்கப் பட்டுச் சஞ்சரித் தலைக் காணும்போதும், இவற்றின் இயக்கத் தால் வேனிற் காலத்து வெப்பமிகுந்து தாவரப்பொருள் களெல்லாம் தளிர்த்து அரும்புதலும், கார்காலத்து மழை பொழிதலும் குளிர் காலத்துக் குளிர் மிகுதலும் பனிக் காலத்துப் பனிப்பெய்து மரஞ்செடி கொடிகளெல்லாம் இலையுதிரப்பெற்று வெறியவாய் நிற்றலுந் தவறாமல் முன்வருடத்தில் நிகழ்ந்தது போலவே இவ் வருடத்தில் நிகழ்தலும், இவ்வருடத்தில் நிகழ்வது போலவே யினிவரும் வருடத்து நிகழ்வதூஉங் காணும் போதும், இவற்றின் கதிகளினாலே சரீரங்கடோறும் வசிக்கும் ஆன் மாக்க ளெல்லாம் உண்பன உண்டும் தின்பன தின்றும் நக்கு வன நக்கியும் பருகுவன பருகியும் விழுங்குவன விழுங்கியும் உடுப்பன உடுத்தும் முடிப்பன முடித்தும் கட்டுவன கட்டியும் கவிப்பன கவித்தும் பூசுவன பூசியும் போகம்பலப்பல பலப்பலவாறு நுகர்ந்தும் இன்புற்றுந் துன்புற்றும் இறந்தும் பிறந்தும் வருவதனை எல்லாங் காணும்போதும் இங்ஙனஞ் சருவத்தையும் அமைத்த சருவ சக்தியுமுள்ள சருவஞ்ஞனான ஈசுரனுடைய பேரற்புதஞானம் யாங்காணுமிடத்துங் கேட்கு மிடத்தும் உண்ணுமிடத்தும் உணருமிடத்துமாகிய எல்லா விடங்களினும் புலப்பட்டுத் தோன்றுதலை இனிது விளங்கக் காண்கின்றேம் அல்லேமோ! இங்ஙனம் இறைவனுடைய ஞானசக்தி அண்டபிண்ட சராசரங்கள் எல்லாவற்றினுள்ளும் புலப்பட்டு விளங்குதல் பற்றி யன்றே திராவிட சுருதியுள்ளும், இருநிலனாய் தீயாகி நீருமாகி யியமானனாயெறி யுங்காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகியாகாசமாய ட்டமூர்த்தியாகிப் பெருநிலையுங் குற்றமும் பெண்ணுமாணும் பிறருருவுந்தம் முருவுந்தா மேயாகி நெருநலையாயின்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே என்றும் நிலனீர்நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாயமைந்தனோடெண் வகையாய்ப் புணர்ந்துநின்றான் உலகேழெனத் திசைபத்தெனத்தா னொருவனுமே பலவாகி நின்றவாதோணோக்கமாடாமோ என்றும் திருவாக்குகள் எழுந்தன. இனிக்கீர்வாண சுருதி யுள்ளும் என்று பெறப்பட்ட வாக்கியத்தினால் இவ்வுண்மை வலியுறுத் தப்பட்டது. இங்ஙனம் ஞானாகரனான ஈசுரன்றன்மை அறிவு குறைந்தார் முதல் அறிவுமிகுந்தார் ஈறான எல்லா மக்களானும் நன்கறியக் கிடத்தலின், அவனுடைய ஞானப் பிரகாசத்தினைத் தாமும் பெற்று இன்புறல்வேண்டி எல்லாரும் விழைவுடைய ராய் இருக்கக் காண்கின்றோம். இதனால் ஞானம் காரணம் ஞானத்தின்காரியம் இன்பம் அல்லது ஆனந்தம் என்றறியற் பாற்று. இது பாராதிபூத நீயல்லை யுன்னிப்பாரிந் திரியங் கரணநீயல்லை யாராயுணர்வுநீயென்றான் ஐயனன் பாயுரைத்த சொல்லானந்தந் தோழி என்றெழுந்த திருவாக்கினாலும் நன்குணர்த்தப் பட்டது. இன்னும் அறிவுடையோராற் குறிக்கப்பட்ட நூற் பொருள் களை அறியுமிடத்தும், யான் தேகமுமல்லேன் பஞ்சேந் திரியங்களு மல்லேன் அவற்றை யியக்கும் மனம் சித்தம்புத்தி அகங்கார மென்னும் அந்தக் கரணங்களு மல்லேன் இவற்றின் வேறான பிராணனும் அல்லேன் இவற்றின் வேறாய்ச் சச்சிதானந்த சொரூபியாய் விளங்கும் பிரமமே நான் என்று அறியுமிடத்தும் முறையே தோன்று கின்ற பாசஞான பசுஞானங்களானும் ஆனந்தம் விளையு மாயினும், அவ்வானந்தங்களெல்லாம் ஏகதேச ஞானங்களாற் றோன்றிய ஏகதேச ஆனந்தங்களே யாமல்லது, பதி ஞானத்தான் மாத்திரம் பெறப்படுவதாய்த் தனக்கோர்வரம் பின்றி விரிந்த வியாபகத்ததான சிவானந்தத் தோடு அவை ஒப்புப் பெறா வாகலானும், அவையும் ஒரு சிலகணங்கள் மாத்திரமே நிலை பெற்றழிவனவாமாத லானும் அவை யெல்லாம் கழிக்கப்ப டுவனவேயா மென்பதூஉம், சிவானந்த விளைவிற்கோ ரொப் பற்ற காரணமான பதிஞானமே யாவரானும் விரும்பற் பால தொன்றாமென்பதூஉம், பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரியபரம்பரனைப்பதி ஞானத்தாலே நேசமொடு முள்ளத்தே நாடிப்பாத நீழற்கீழ் நில்லாதே நீங்கிப்போதி னாசைதரு முலகமெலாமலகைத் தேராமென் றறிந்த கலவந்நிலையே யாகும்பின்னும் ஓசைதரு மஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்க வுள்ளத்தே புகுந்தளிப்ப னூனமெலாமோட வேதசாத்திரமிருதி புராண கலைஞானம் விரும்ப சபைவை கரியாதித் திறங்கண் மேலா நாதமுடிவான வெல்லாம் பாசஞான நணுகியான் மாவிவைகீழ் நாடலாலே காதலினானான் பிரமமென்னுஞானங் கருதுபசுஞான மிவனுடலிற்கட்டுண் டோதியுணர்ந்தொன்றொன் றாவுணர்ந்திடலாற்பசுவா மொன்றாகச் சிவனியல்பினுணர்ந்திடுவன் காணே என்னும் சிவஞானசித்தித் திருவாக்கான் உணரப்படும். இங்ஙனம் சிவானந்தப் பேற்றை விரும்புதல் எல்லா ஆன்மாக் களிடத்தும் முறைமுறையே நிகழக்காண்டலால் இஃதொன் றே சிவயோகந் தலைப்படுதற்குரிய காரணமாம் என்க. உலகத்தின் கண் எல்லாச்சௌகரியங்களும் பெறுதற்குக் காரணமான திரவியோபகரணத்தால் மனிதனுக்கு வேண்டப் படும் எல்லா நலங்களுஞ் சிறிதுங்குறைவின்றி வாய்க்கப் பெற் றிருப்பினும், மனிதனுடைய அறிவு விளக்கத்திற்கு இன்றி யமையாச் சிறப்பின வான பலநூல் நுண்ணறிவுகளெல்லாம் ஒருங்கே வாய்க்கப் பெற்றிருப்பினும் எம் வாழ்நாள்களின் இடையிடையே அவற்றை யெல்லாம் ஒருபொருளாக நினையாது வெறுத்து அவற்றின் மேற்பட்டுத் தன்னையுந் தன்றலைவனையும் அறியும் பதிஞானம் மிக்கெழுந்து தோன்றுகின்றது. இது, வேத மோதிலென் சாத்திரங் கேட்கிலென் நீதிநூல்பல நித்தல்பயிற்றிலென் ஓதியங்கமோ ராறுமுணரிலென் ஈசனையுள்கு வார்க்கன்றியில்லையே நீற்றைப்புனைந்தென்ன நீராடப்போயென்ன நீ மனமே மாற்றிப்பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல் ஏற்றிக்கிடக்கு மெழுகோடி மந்திரமென்ன கண்டாய் ஆற்றிற்கிடந்துந்துறை யறியா மலலைகின்றையே என்னும் உண்மைத் திருவாக்குகளானும் அறியப்படும். தெய்வச்சிதம்பரத் தேவாவுன் சித்தந் திரும்பி விட்டாற் பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியுமெங்கே மெய்வைத்த செல்வமெங்கே மண்டலீகர்தம் மேடையெங்கே கைவைத்த நாடகசாலையெங்கே யிதுகண்மயக்கே என்பதும் அது இவ்வாறு பாசஞான பசுஞானங்களாற் றோன்றும் இன்பத்தும், பஞ்சேந்திரிய விஷயானுபவங்களிற் றோன்றும் இன்பத்தும், உவர்ப்புப் பிறந்து அவற்றை வெறுக்குஞ் சமயத்தில் நானாரென்னுள்ளமார்ஞானங்களாரென்னையாரறிவார் வானோர் பிரானென்னை யாண்டிலனேன் மதிமயங்கி ஊனாருடை தலையிலுண் பலிதேரம்பலவன் தேனார்மலர்க்கழற்கே சென்றூதாய்கோத்தும்பீ என்ற வண்ணம், இவ்வித விசித்திரபேதங்களோடு தோன்றும் இவ்வுலகம் யாவை? இதன்கண் ஒரு சரீரத்தைப் பெற்றுச் சிலநாள் இங்கிருந்துண்டு லாவிப் பின் இதனை விட்டொழியும் நான் யார்? என்னறிவை விளக்குதற் குபகரணங்களான மனஞ் சித்தம்புத்தி யகங்காரம் என்பன யாவை? இவற்றையெல்லாம் வகுத்த தலைவன் யார்? என்றற் றொடக்கத்தாற் பதிஞானம் நிகழா நிற்கின்றது. இப்பெற்றித் தான பதிஞானமொன்றே ஏனை எல்லாவற்றினும் மிக்குச் சென்று சீவான்மாவைப் பரமான் வாவோடு அத்துவிதப் படுத்தி நிற்பதென்றுணர்க. இனி இப்பதிஞான வழித்தோன்றும் பிரமானந்த வேட்கை சீவான்மாக்களிடத் தியற்கையே யுள்ளதாகவும், அஃதெஞ் ஞான்றும் ஒரே தன்மையாக விளங்காது இடை யிடையே மாத்திரம் மின்மினி யொளிபோல் தோன்றுவ தென்னை யெனின்; தூலரூபமாய் விளங்கும் கண்ணின் கண் உள்ள பிரகாசம் சூரியப் பிரகாசத்தோடு அத்து விதப்பட்டு நின்று விளங்க வொட்டாது தடைசெய்து அவற்றிடையே தோன்றி அக் கண்ணொளியை மறைத்துக்கொண்டு அக்கண்ணின் வேறன்றாய் நிற்கும் படலம் என்னும் நோய்போலச், சூக்கும சித்துரூபமாய் விளங்கும் சீவான்மாவின்கண் உள்ள ஞானசத்தி அதிசூக்குமசித்தான பரமான்மாவின் பரஞான சத்தியோடு அத்துவிதமாய் நின்று பிரகாசிக்கவொட்டாது தடைசெய்து அவற்றிடையே தோன்றி அவ்வான்ம சிற்சத்தியினை மறைத்துக் கொண்டு அவ்வான்மாவின் வேறன்றாய் அதனோடு அநா திசையோக முற்றுத் தோன்றுவது அறியாமையினைச் செய்யும் ஆணவமலமாம். இது சிவ ஞானசித்தியாரில் ஆன்ம விலக்கணங் கூறும் வழி எழுந்த அசித்தருவியாபகம் போல்வியாபக மருவமன்றாய் வசித்திட வரும்வியாபியெனும் வழக்குடையனாகி நசித்திடா ஞானச் செய்தியநாதியே மறைத்துநிற்கும் பசுத்துவ முடையனாகிப்பசுவென நிற்குமான்மா என்னுந் திருவாக்கானும், ஆணவத்தோடத்துவிதமான படி மெய்ஞ்ஞானத் தாணுவினோடத்துவிதஞ் சாருநாளெந்நாளோ என்பதனானும் அறியற்பாலதாம். கேவல சகல சுத்தம் என்னும் மூன்றவத்தையுள் எல்லாக் கருவிகளோடுங்கூடி அறிவுவிளங்கப் பெறுகின்ற இச்சாக்கிராவத்தையிலேயே மறதி முதலிய அறியாமைக்குணங்கள் எல்லார்க்கும் உண்டாதல் துணியப் படுதலானும், இக்கருவிகளின் இயக்கம் முறை முறையே குறைந்து ஒடுங்குகின்ற சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் என்னும் அவத்தைகளில் அவ் வறியாமைக் குணம் முறைமுறையே மிகுந்துபோய் இறுதிக் கண்ணின்ற துரியா தீத அவத்தையில் ஆன்மாக் கேவலம் அறியாமை வயப்பட்டுப் பாம்பு தீண்டவரினும் வாளறுக்க நேரினும் ஒன்றுந் தோன்றாமற் பிணம் போற் கிடத்தல் ஒருவனயர்ந் துறங்கும் உறக்கத்தே காணப்படுத லானும் அறியாமைக் குணத்தைச் செய்யும் இவ்வாணவம் ஆன்மாக்களெல்லாரி டத்தும் உண்டென்பது பிரத்தியக்கமாக அறியப்படுவதாம். இனி ஐக்கவாதசைவர் மதம் பற்றிப் பிரகாசத்தின் சூனியமே அப்பிரகாசத்தைச்செய்யும் அந்தகாரமாயினாற் போல ஆன்மாவின் ஞானசூனியமே அறியாமையினைச் செய்யும் ஆணவமாமெனின்;- அபாவமான சூனியப் பொருளுக்குக் குணமுந்தொழிலு மில்லையாம் எனத் தருக்க சாத்திரியாரான அன்னம்பட்டரும் உரைகூறினாராகலின் சூனியப்பொருளாயின் அந்தகாரத்திற்குக் கருமைக்குணமுங் கண்ணை மறைக்குந் தொழிலும் இலவாதல் வேண்டும். அவையிரண்டும் அவற்றிற்குண்மை பிரத்தியக்கமாகத் துணியப் படுதலால் அவர் கூறிய அந்தகார உவமை ஒரு சிறிதும் பொருந் தாமையானும், முன் ஒரு சூனியமாய்க் கிடந்த ஆன்ம ஞானசத்தி பின் ஒருகாற்றோன்றுமென்றல் சற்காரிய வாதங்கூறுஞ் சாங்கிய பௌதிகசாத்திர விரோதமா மாக லானும், ஆணவத்திற்கு அறியாமைக் குணமும் அறிவை மறைக்குந் தொழிலுங் காணப் படுதலால் அது ஞான சூனிய மான அபாவப் பொருளா மென்றற்கு ஒருசிறிதும் ஏலாமை யானும் அவர் கூறும் அவ்வுரை பொருந்தாதென்பது நன்கு பெறப்படும். இனிப்பாடாணவாத சைவர்மதம்பற்றி ஆணவம் அறியாமைக்குணத் தினையுடைய ஓர் தனித்திரவிய மாத லின்றி, ஆன்மாவின்கணுள்ள ஞானத்தைப்போல் அஃது அதற்கு மற்றொரு குணமாமெனின்;- குணத்தை யுடைய ஒரு திரவியத் திற்கும் அவ்வாறே குணத்தையுடைய மற்றொரு திரவியத்திற்கும் இடையே நிகழும் சம்பந்தம் சையோக சம்பந்தமெனவும், ஒருகுணத்திற்கும் அக்குணத்தையுடைய பொருளுக்கும் பிரிவின்றியுள்ள சம்பந்தம் தாதான்மிய சம்பந்தமெனவும் வழங்கப்படும். திரவியத்திற்கும் திரவியத் திற்கும் இடைநிகழும் சையோகசம்பந்தம் ஒருகாலத்துப் பிரிதலுமுண்டென்பது கடல்நீரைக் காய்ச்சியவிடத்து நீரும் உப்பும் வேறு வேறாகப் பிரிந்து கிடத்தலினாற் காணப் படுதலானும், ஒரு திரவியத்திற்கும் அதன்குணத்திற்குமுள்ள தாதான்மிய சம்பந்தம் அவ்வாறு பிரிக்கப் படுவதன்றென்பது உப்பும் அதன்குணமான உவர்ப்புச் சுவையும் வேறுவேறு தனித்து நில்லாமையின்கண் வைத்துக் கண்டு கொள்ளப் படுதலானும், ஆணவம் ஆன்மாவிற்கு ஒருகுண மாயின் அஃது அதனினின்றும் எஞ்ஞான்றும் பிரிக்கப்படா தாகல் வேண்டும். இனி, அறியாமைக்குணம் சிறிது சிறிதாகத் தேய்ந்துபோதல் மனிதப்பருவ மொவ்வொன்றினுங் காணப்படுதலால், அஃது ஆன்மாவோடு தாதான்மிய சம்பந்த முடைத் தென்று கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாதாம். ஆகவே, ஆணவம் ஒரு திரவியமாய் ஆன்மாவோடு அநாதிசையோகம் உற்றுநிற்கு மென்பது பெறப்படும். இனி இவை யிரண்டின் சையோகம் ஒருகாலத்து நிகழ்ந்ததெனின் அதற்கு முன் அறிவுமயமாய் நின்ற ஆன்மாவினை அஃதொரு காலத்து வந்து பற்றுதற்குக் காரணம் பெறப்படாமை யானும், அங்ஙனம் பற்றுதற்கும் அஃதறிவில்லாத அசேதனப் பொருளாகலின் அது முடியாமை யானும், ஆன்மாவே யதனைப்பற்றியதெனின் ஆனந்தமயமாய் விளங்கும் சிவத்தைப் பற்றாது அஃதவ்வாணவ வல்லிருளைப் பற்றுதற்குப் பிறிதோர் காரண மின்மையானும், அங்ஙனம் அதனைப் பற்றுதலே ஆன்மாவினியற்கை யெனின் பின் எக்காலத்தும் அது சிவத்தைப் பற்றாதொழிய வேண்டுமாக லானும், சிவமே அவையிரண்டனையும் அங்ஙனம் பொருத்திய தெனின் அறியாமையினை யான்மாவின் கட் பொருத்துதல் சிவத்திற்குக் கருணையின் றென்பதுபட்டு அஃதவன் இறை மைக்கு இழுக்காமாதலானும் பாரிசேட வளவையான் அவை யிரண்டும் அநாதிசையோக முடைத் தென்பது துணியப்படும். இது, நெல்லிற்குமியும் நிகழ்செம்பினிற் களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன் மமன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அலர்சோகஞ் செய்க மலத்தாம். ஒன்றதாய நேகசத்தியுடைய தாயுடனாயாதி யன்றதாயான்மாவின் றன்னறிவொடு தொழிலையார்த்து நின்றுபோத்திருத்துவத்தை நிகழ்த்திச் செம்பினிற் களிம்பேய்ந் தென்றுமஞ்ஞானங் காட்டுமாணவமியைந்து நின்றே என்னுந் திருவாக்குகளானு மறியப்படும். இங்ஙனம் ஆன்மா வோடு அநாதிசையோகமுற்று நிற்கும் ஆணவ மறைப்பே ஆன்மாச்சிவத்தோடு பொருந்தா திருந்தமைக்குக் காரண மாம். இனி, ஆன்மாவின் அறிவை ஏகதேசப்படுத்தி அணுத் தன்மைப் படுத்திவந்த ஆணவமலத்தின் வலியை இறைவனு டைய அனுக்கிரக சத்தியானது பிறவிகடோறும் ஒடுக்கிக் கொண்டு அவ்வான்மசிற் சத்தியினை முறைமுறையே விளங்கச் செய்து உபகரித்து வருகின்றது. இந்த மனிதப் பிறவியில் மாத்திரம் பிறசென்மங்களுக் கில்லாத பகுத்தறிவு காணப் படுதலால், இப்பகுத்தறிவின் முயற்சியால் ஒருவன் அவ் வனுக்கிரக சத்தியின் பெருந்துணையை நிலை பெறுவித்துக் கொண்டு ஆணவத்தைச் செயித்துச் சிவானந்தத்திற்றோயு மாற்றைக் காட்டுவதே சிவராஜயோக மாம். கரு நெல்லிப்பழம் தன்னை யுண்டானுக்கு நரைதிரை மூப்புப் பிணி சாக்காடு களை நீக்குமாயினும் அதன் பெருமையை யறியாது அது பழுத்துத் தொங்கும் மரத்தின் பக்கத்தே நாடோறும் வசிப்பானொருவன் அதனான் மிக்க பயன் பெறாதது போலவும், கண்ணுள்ளானுக்கு அவன் கண்ணையும் விளக்கி உலகத்துப் பொருள்களையும் விளக்கித் தோன்றும் சூரியனொளியிற் கண்ணில்லா னொருவன் நாடோறும் வசிப்பினும் அவன் அதனாற் பயன் பெறாமை போலவும் இறைவனுடைய அனுக்கிரகசத்தியும் அநாதி தொட்டுச் சீவான்மாவோடு ஒற்றித்து நிற்பினும் அச்சீவான்மா ஆணவத் தான் மறைக்கப்பட்டு அறிவின்றிக் கிடத்தலான் அஃது அவ்வனுக் கிரக சக்தியின் பெருமையை யறிந்து பயன்பெறா தாயிற்று. மனிதப்பிறவியை ஒழித்து ஒழிந்த ஓரறிவுயிர்முதல் ஐயறிவுயிர் காறுமுள்ள சருவ செந்துக்களும் அவ்வனுக்கிரக சத்தியினை அறிய மாட்டா வாகலின், அவை யிழிந்த சென் மங்களென்று வகுக்கப்பட்டன. இனி மனிதப்பிறவி ஒன்று மாத்திரமே ஒருவன் அவ்வனுக்கிரக சத்தியின் பெருமை யுணர்ந்து அதன்வழி நின்று ஆணவத்தைச் செயித்துக் கொள்ளுதற்குச் சாதன மாவ தாகலின், இவ்வரிய பிறவியின் கண் உள்ளா ரெல்லா ரானும் இலேசாக வருத்த மின்றிச் செய்யப்படுவது பற்றி இது ராஜயோகமென்று வழங்கப் படுவதாயிற்று. எனவே சீவான்மாவின் கணுள்ள அறியாமை யினைச் சிறிது சிறிதாக அகற்றி அதன் அறிவை விளக்கி யிறைவனுடைய ஞான சத்தியிற் றோய்விக்கும் முயற்சியே இராஜ யோக மென்று பெறப்படும். இனி ஆன்மாக்களுக்கு அறிவை விளங்கச் செய்யும் சரீரங்கள் ஐந்தாம். அவை தூலசரீரம், சூக்குமசரீரம், குணசரீரம், கஞ்சுகசரீரம், காரணசரீரம் என்பனவாம். இவற்றிற்குப் பிரமாணம், மாயையின் வயிற்றுண் மன்னிவருஞ் செயன்ஞானமிச்சை ஏயுமக்கலாதி மூன்றாலேகதேசத்தி னேய்ந்திங் காயுமுக்குணங்களந் தக் கரணங்களாதியெல்லாங் காயபெத்தங்களாகிக்கலந்துடனிற்குமான்மா சூக்கும தேகியாகித் தூலரூபத்தின்மன்னிச் சாக்கிர முதலாயுள்ளவவத்தை யுட்டங்கியெங்கும் போக்கொடு வரவுமெல்லாம் புரிந்து புண்ணியங்கள் பாவ மாக்கியும்பலன் களெல்லாமருந்தியு நிற்குமான்மா என்னுந் திருவாக்குகளாம். இவ்வைந்து சரீரங்களு மறித்தும் ஓர்வகையால் அன்னமயகோசம் பிராணமயகோசம் மனோ மயகோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமயகோசம் என ஐவகைப்பெயரானும் வழங்கப்பெறும். இவை முறையே பால் நுரைபோலவும் பாம்புரிபோலவும் நுண்ணிய ஆடை போலவும் தெளிந்த பளிங்குபோலவும் தெளிவில்லாக் கற் போலவும் அதி சூக்கும சூக்குமதர சூக்கும தூல தூலதரமாய் ஒன்றினொன்று நுண்ணியதாயிருக்கும். இதற்குப் பிரமாணம், மருவானந்தம் விஞ்ஞான மனோபிராணன் மைய முருவாந் தன்மையுண்டாய் முனொன்றுக்கொன்று சூக்குமமாய் வருமாமன்ன மயம்பற்றி மாயை முதற்காரணமாகும் அருவாயான் மாவைங்கோசத்தார்ப்புண்டவற்றின கம்புறமாம். முதலில் ஒரு கற்சுவரானும், அதன்பின் தெளிவான ஒருபளிங்குச் சுவரானும், அதன்பின் மிக மெல்லியது ஓர் ஆடை யானும், அதன்பின் பாம்புரிபோல்வதோர் பொரு ளானும், அதன்பின் பால்நுரை போல்வதோர் பொருளானும், வளைக் கப்பட்ட ஒரு வீட்டின் நடுவில் ஒருவன் இருந்தாற் போலக், கற்சுவர் போன்ற தூலதேக உறையும் பளிங்குச்சுவர் போன்ற சூக்குமதேக வுறையும், மெல்லாடை போன்ற குணசரீர வுறையும், பாம்புரி போன்ற கஞ்சுகசரீ ரவுறையும், பால்நுரை போன்ற காரண சரீரவுறையுமாகிய ஐவகையுறை யினையுங் கவித்துக் கொண்டு சீவான்மா வசிக்கின்றது. இங்ஙனம் வகுக்கப்பட்ட அன்னமயகோசமென்கிற தூல சரீரத்தின் கண்ணின்று ஆன்மாவின் அறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் சாக்கிரம் என்றும், பிராணமய கோச மென்கிற சூக்குமசரீரத்தில் அதனறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் சொப்பன மென்றும், மனோமய கோசமென்கின்ற குண சரீரத்தில் அதனறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் சுழுத்தி என்றும், விஞ்ஞான மயகோச மென்கிற கஞ்சுக சரீரத்தில் அதனறிவு விளங்கப்பெறுகின்ற அவசரம் துரியம் என்றும், ஆனந்தமய கோசமென்கின்ற காரண சரீரத்தில் அதனறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் துரியாதீத மென்றுஞ் சொல்லப் படும். சீவான்மா ஆணவமல வயப்பட்டுத் தன்சூக்கும அறிவுத் தன்மையிழந்து தூலரூபமாய் நிற்றலால் அதன் அறிவை மெல்ல மெல்ல எழுப்புதற்குச் சாதனமான சோத்திரம், தொக்கு, சட்சு, சிங்குவை, ஆக்கிராணம் என்னும் பஞ்ச ஞானேந்திரியங் களும், சத்தம் பரிசம்ரூபம் ரசம் கந்தம் என்னும் பஞ்சதன் மாத்திரைகளும், வாக்கு பாதம் பாணி பாயு உபத்தம் என்னும் பஞ்ச தன் மாத்திரைகளும், வாக்கு பாதம் பாணி பாயு உபத்தம் என்னும் பஞ்சகன் மேந்திரியங்களும், மனம் சித்தம் புத்தி அகங்காரம் என்னும் நான்கந்தக் கரணங்களும், பிராணன் அபானன் உதானன் வியானன் சமானன் நாகன் கூர்மன் கிரிகரன் தேவதத்தன் தனஞ்சயன் என்னும் பத்து வாயுக்களும், வசனம், கமனம், தானம் விசர்க்கம் ஆனந்தம் என்னும் ஐந்து கன்மங்களும், புருடனும் ஆகிய முப்பத் தைந்து கருவிகளும் இனிது பொருந்தப்பெற்ற தூல தேகத்தின்கண் நின்று தூலமாய் அறிவு விளங்கப் பெறும். இங்ஙனம் தூல அறிவு விளங்கு தலையே சாக்கிரம் என்றது. ஆன்மாவின் தூலரூபமான அறிவை விளக்குதற்குரிய கருவிகள் சூக்கும சரீரத்தில் இரண்டும், காரணசரீரத்தில் ஒன்றுமாக முறையே ஒடுங்கு தலின் அவ்வச்சரீரங்களில் நின்று சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் என்னும் அவத்தைகளை எய்தும்போது ஆன்மாவின் அத்தூலவறிவும் முறைமுறையே விளங்குத லொழிந்து சுத்த ஆணவ சொரூபமான அஞ்ஞானமயமாய்க் கிடக்கும். இவ்வாறு சீவான்மாவின் தூலவறிவும் முறைமுறையே ஒடுங்கிச் சுத்த அஞ்ஞானமயமாய் நிற்கும் அவசரத்தினையே கீழாலவத்தை என்பர். இனி இறைவனுடைய அருட்சத்தியானது சுத்த சொயம்பிரகாசமாய் ஆன்மாவினையும் அவ்வான் மாவினைப் பொதிந்த ஆணவத்தினையும் அவ்வான்மாவிற்கு ஐந்து சட்டைகளான பஞ்சகோசத்தினையும் வியாபித்துக் கொண்டு பேரொளிப் பிழம்பாய் நிற்பினும் கற்சுவரினும், பளிங்குச் சுவரினும், மெல்லாடையினும், நுண்ணிய பாம்புரி யினும், பால் நுரையினும் வியாபிக்குஞ் சூரியனொளிபோல் அவ்வப் பொருட்டன்மையாற் றூலசூக்கும பேதப்பட்டுத் தோன்றும். இங்ஙனம் ஜடரூபமான மாயையினுஞ் சித்து ரூபமான ஆன்மாவினும் அடிப்படையாய்ச் சருவ வியாபி யாய் நிற்கும் இவ்வருட்சத்தியினாலேயே இவை யெல்லாப் பொருளும் பக்குவப்பட்டு மேன்மேல் அபிவிருத்தி எய்தி வருகின்றன. இங்ஙனம் உடன்நின்று உபகரித்து வரும் அருட்சத்தியின் சொயம்பிரகாசசொரூபம் தூலதேகத்தை யொழிந்த மற்றைச் சரீரங்களில் முறை முறையே விளங்கித் தோன்றி வியாபகமாய் நிற்றலை யறியாத மானுடர் அந்தோ! பிறப்பு இறப்புத் துன்பசாகரத்தினின்றும் மீண்டு எவ்வாறு பிழைப்பர்! இவ்வருட் சத்தியானது ஆன்மாவைக் கவித்துக் கொண்டிருக்கும் ஆணவத்தை விலக்கி அதன் அறிவை எழுப்புதற்பொருட்டுச் சுத்தமாயையைக் கலக்கி அது தன்னால் அவ்வான்மா ஆணவத்தில் வீணே உறங்கிக் கிடக்க வொட்டாது அதற்கு முயற்சியைத் தோற்றுவியா நிற்கின்றது. இத் திருவருட் சத்தியின் வியாபாரம் புறத்தே அண்டமாகிய சரீரத்திலும், அகத்தே பிண்டமாகிய இத்தேகத்தினுள்ளுங் காணப்படும். மிகவுஞ் சூக்குமமான சுத்தமாயை ஓர் இயக்கமின்றிக் கிடப்ப அதனை அவ்வருட் சக்தி வியாபரித்துக் கலக்கியவழி அம்மாயையில் பாம்பு மண்டலித் தாற்போலச் சுழல் சுழலாய் ஓரியக்க முண்டா யிற்று. அவ்வியக்கத் தினால் பரமாணுக்களுண்டாய் அவ் வணுக்கள் ஒன்றோடொன்று ஒட்டி இம்முறையே கட்புலனாய் விளங்கும் இப்பிரபஞ்ச பேதங்கள் எல்லாந் தோன்றின. ஐரோப்பாக் கண்டத்திற் பிரபல பௌதிக சாத்திர பண்டிதராய் விளங்கும் குரூக் என்பவர் அதி நுண்ணிய இயந்திர சகாயங்களால் இப்பிரபஞ்ச வுற்பத்தி யினை ஆராய்ந்தபோது பூதாகாயத்திற் பாம்புமண்டலித் தாற் போன்ற இவ்வியக்கங் காணப்படுகின்றதென்றும் இவ் வியக்கமே இப்பிரபஞ்ச உற்பத்திக்குக் காரணமா மென்றும் முடிவுரை கூறினார். இங்ஙனம் இச் சுத்தமாயையிற் றோன்றும் சுழிந்த இயக்கம் இப்பிரபஞ்ச உற்பத்திக்கு ஆதாரமாய் நிற்றலை விளக்குதற் பொருட்டே இவ் வுலகத்தை ஆதிசேடன் என்னும் பாம்பு தாங்குகின்றதென ஆன்றோர் உரைப்பாராயினர். ஆதிசேடன் என்றது சுத்த மாயையின் பரமா காயத்திற் றோன்றிய மண்டலித்த இயக்க மேயா மென்பதும், அவ்வாதி சேடன் மேல் இப்பிரபஞ்சந் தங்கு மென்றது அந்த மண்டல இயக்கத்தினை ஓராதாரமாகக் கொண்டு எழுந்து இப் பிரபஞ்சம் நிலை பெறுதலையே யாமென்பதும் அறியற்பாலன. இனி அகத்தே பிண்டமாகிய இத்தேகத்தினுள்ளும் இத்திருவருட்சத்தி வியாபரிக்குமாறு காட்டுதும். இப்பிண்ட மாகிய சரீரத்தில் எழுபத்தீராயிரம் நாடிகள் இருக்கின்றன. அவற்றுள்ளும் ஆயிரத்தெட்டே சிறந்தன. அவற்றுள்ளும் நூற்றெட்டுச் சிறந்தன. அவற்றுள்ளும் இடை பிங்கலை சுழுமுனை காந்தாரி அத்தி சிகுவை அலம்புடை புருடன் குகு சங்கினி என்னும் பத்து நாடிகளே சிறந்தன. அவற்றுள்ளும் இடை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்றுமே சிறந்தன. இம்மூன்றனுள்ளும் சுழுமுனை நாடியே சிறந்ததாகும். இது மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அனாகதம் விசுத்தி ஆஞ்ஞை என்னும் ஆறாதார சக்கரங்களையும் ஊடுருவிக் கொண்டு பிரமரந்திரம் வரையில் பரமாகாய சொரூபமாயும் சுத்ததேசோமயமாயும் விளங்கா நிற்கும். இது சரீரத்திற்குப் பிராண நிலயமாய் விளங்குவதென்றும், இந்நாடியில் ஓர் ஊசி நுனை படுமாயினும் இச் சரீரம் நிலைபெறாதழியு மென்றும், அத்தனை நுண்ணியதா யிருத்தலினாலேயே இதனைத் தேகமத் தியத்தில் வைத்துச் சுற்றிலும் பலவகையான காவலரண்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன வென்றும் ஆங்கிலத்தில் தேக தத்துவ சாத்திரிகளும் கூறாநிற்பர். இப்பெற்றியதான அச்சுழுமுனா நாடியில் வியாபிக்கும் பரமாகாயத்தினையே தகராகாய மென்றும், இதன்கட் புண்டரீக வீட்டில் அங் குட்ட மாத்திரை யாய்ப் பேர் ஒளிப்பிழம்பாய் விளங்கும் பரமபுருடனை உபாசித் தலையே தகரோபாசனை யென்றும் இங்ஙனந் தகர வித்தையி னியல்பை விரித்துச் சாந்தோக்கிய உபநிடதமுங் கூறாநிற்கும். இனி யிப்பரமாகா சத்தினி டையில் எழுந்தருளி யிருக்கும் பரமபுருஷனான நடராச மூர்த்தியின் தாண்டவ நடனமே அப்பரமாகாயத்தைக் கலக்கும் திருவருட் சத்தியின் வியாபா ரமாம். அப்போ தப்பரமாகாயத்திற் றோன்றிய சத்தியின் வியாபாரமாம். அப்போ தப்பரமாகாயத்திற் றோன்றிய மண்டலித்த இயக்கமே மூலாதாரத்திற் பாம்பு மண்டலித்தாற் போலச் சுழன்று கிடக்கும் குண்டலி சத்தியாம். அவ்வாறு அந்த மண்டல இயக்கந் தோன்றுங் காலத்து உடன் றோன்றும் வாயுவே அம்மூலாதாரத்தின்கட் டோன்றும் பிராண வாயுவாம், அப்பிராண வாயு வேக இயக்கத்திற் றோன்றும் அக்கினியே அம்மூலாதாரத்தின் கட்டோன்றும் அக்கினி யாம். இவ்வக்கினியே இத்தேகம் நிலைபெறுதற்கு இன்றி யமை யாததொன்றாய் விளங்குகின்றது. இங்ஙனமான இப் பிண்ட சரீரத்திற்கு அக்கினி ஒரு காரணமாய், அவ் வக்கினிக்குப் பிராணவாயு ஒரு காரணமாய், அப்பிராண வாயுவுக்கு அக் குண்டலி சத்தி ஓர் காரணமாய், அக் குண்டலி சத்திக்கு நடராச தாண்டவ நடனம் என்கின்ற அருட்சத்தி வியாபாரம் இறுதிக் கண்ணின்ற தாரக காரணமாய் அமையுமென்க. இவ்வாறு இவ்வண்டத்தும் பிண்டத்தும் வியாபரிக்கும் திருவருட் சத்தியின் வியாபாரம் ஒப்ப ஒரு பெற்றித்தாய் விளங்குதலாலன்றே, இடைபிங்கலை யிமவானோ டிலங்கை நடுநின்றமேரு நடுவாஞ் சுழுமுனை கடவுந் திலைவனங் கைகண்ட மூலம் படர்வொன்றி யென்னும் பரமாம் பரமமே நாடரு நடுவினாடி நலங்கிளர் தில்லை நேர்போய்க் கூடுமங் கதனின் மூலக் குறியுள ததற்குத் தென்னர் மாடுறு மறைகள் காணா மன்னுமம்பலமொன் றுண்டங் காடுது மென்று மென்றா னென்னையா ளுடையவவையன் இடம்படு முடம்பின்மூலத் தெழுந்தநற் சுழுனைநாடி யுடன்கிள ரொளியேயாகி யொளியிலஞ் செழுத்து மொன்றாய் நெடுங்குழ லோசையாகி நிலவுமவ் வோசை போயங் கடங்கிய விடமே யென்று மாடுமம்பலமதாகும் என்னும் உண்மைத் திருவாக்குகள் எழுந்தன. இன்னும் இப்பிண்டத்தின்கண் நடைபெறுகின்ற இவ் வருட் சத்தி வியாபாரமெல்லாம் நுண்ணறிவினரான ஆங்கில நன்மக்களாற் செய்யப்பட்ட கைக்கடிகார யந்திர அமைதி யோடு ஒத்து நிற்றல் பெரிதும் வியக்கற் பால தொன்றாம். கைக்கடிகார யந்திரத்துள் சாவியினால் முறுக்கப்படும் சுழல்வில்லே குண்டலி சத்தியாம்; அச்சுழல் வில்லின் விரிவால் திருப்பப்படு கின்ற ஆறு சக்கரங்களுமே குண்டலி சத்தியின் இயக்கத்தால் இயங்குகின்ற மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறாதார சக்கரங்களுமாம்; இவ் வாறு சக்கரங் களையும் மேற்கவித்துக் கொண்டு மணி குறிக்கப் பட்டிருக்கும் வட்டச் சிறு தட்டமே மூலாதார முதலாறு சக்கரங்களையும் மேற்கவித்துக் கொண்டிருக்கும் பிரமந்திரமாம்; அவ்வட்டச் சிறு தட்டத்தின் நடுவிலுள்ள முள்ளா ணியே அப்பிரமந்திர நடுவிற் செல்லும் சுழுமுனா நாடியாம்; அம்முள்ளாணிமேல் இடையறாது சுழன்று கொண்டிருக்கும் நிமிஷமுள்ளும் மணிமுள்ளுமே அச்சுழுமுனையைச் சார்ந் துள்ள இடை, பிங்கலையில் ஓவாது இயங்கும் உசுவாச நிசு வாசங்களாம்; பன்னிரண்டு மணிக்கு அவ்விரண்டு முள்ளும் ஒன்று சேர்ந்து நிற்றலே அவ்விரண்டு நாடியினுஞ் செல்லும் அவ்வாயு சுழுமுனையிற் சென்று ஒன்றுபட்டு நிற்பதாம். இன்னும் அக்கடிகார முட்கள் நடைபெறுதற்குக் காரண மாய் நிற்றல்போல, இப்பிண்ட சரீரத்தின்கட் குண்டலி சத்தியின் சுருக்க விரிவுகளே சுவாசம் நடைபெறுதற்குக் காரணமாம். இவ்வாறே அண்டத்தினும் வைத்துணரற் பாற்று. இது நிற்க. இனி இங்ஙனமெல்லாம் இறைவன் றிருவருட்சத்தி ஆன்மா ஆணவத்தில் மயங்கிக் கிடக்க வொட்டாது எழுப்பி அறிவு கொளுத்தற் பொருட்டு அவற்கு மிக ஒற்றுமையுடைய ஒருபிண்ட சரீரமும் அப்பிண்ட சரீரம் உலாவுதற்கோர் அண்ட சரீரமும், தோற்றுவித்து அனுக்கிரகஞ் செய்வ தாயிற்று. இவ்வாறு அனுக்கிரகிக்கப்பெற்ற சீவர்கள் தமக்கு அச் சத்தியின் கருணைப் பிரேரகத்தால் எழுப்புவிக்கப்பட்ட அறிவு முயற்சி யினைத் தூலதேகத்தின் கட்சாக்கிரா வத்தையிலே மாத்திரம் வைத்துக் கழித்து விடுகின்றார். இத்தூலதேகம் ஒருகாலத்து ஓரிடத்து நிற்கும் ஏகதேச பரிமாண முடையதாகலின் இத்தூல தேகத்தின் வழிவைத்த அறிவு முயற்சிகளெல் லாம் ஒரு வரம்புக்குட்பட்ட ஏகதேச சுபாவமுடையனவாய் அழிந்து ஒழியும். இத்தூல சரீரத்தும் இத்தூல வுலகத்தும் சுத்த அறிவு மயமாய் மறைந்து விளங்கும் அவ்வருட் சத்தியின் பிரவாகத்திற் படிந்து பேரின்பம் நுகர்ந்து கிடத்தலும் இவர்க்கு இல்லையாய்ப் போம். மண்ணுக்கும் பெண்ணுக்கும் பொன்னுக்குமாய் அழியும் இவ்வறிவு முயற்சியால் இத்தூல சரீரம் அழிந்து திரும்பத் திரும்பப் பிறவித் துன்பங்கள் கிளையா நிற்கும். இது பற்றியே ஆன்றோர், யானே தும்பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கென் கடவேன் வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன் தேனேயுமலர்க்கொன்றைச் சிவனேயெம்பெருமானெம் மானேயுன்னருள் பெறுநாளென்றென்றே வருந்துவனே காடுங்கரையு மனக்கு குரங்கு கால்விட்டோடவதன் பிறகே ஓடுந்தொழிலாற் பயனுளதோ ஒன்றாய்ப் பலவாயுயிர்க்குயிராய் ஆடுங்கருணைப்பரஞ்சோதி யருளைப் பெறுதற்கு அன்புநிலை தேடும்பருவமிதுகண்டீர் சேரவாரும்செகத்தீரே என்று அருளிச் செய்ததூஉமென்க. இனி இத்தூல தேகத்தின் கட்டோன்றும் அறிவு முயற்சிகளைப் பரக்கவிட்டால் அறிவு முதிர்ச்சியுண்டா காது. அம் முயற்சிகளைக் குவித்து ஒருவழியாக்குவித்தால் அறிவுமுதிர்ச்சி யுண்டாகின்றது. ஒருயாற்றிற் பெருகிவரும் பெருவெள்ளத்தை இடையிலே மறித்துக் கரைஎழுப்பினால் அது தன்பேராற்றலால் அக்கரையினை யுடைத்துக் கொண்டு அப்புறம்போம். அவ் யாற்றின் இருபக்கத்தும் பலவாய்க்கால் நெடுகவெட்டுவித்து அத்தண்ணீர்ப் பெருக்கை அவற்றிற் போக்குவித்தால் அத்தண்ணீர் வேகமும் ஆற்றலும் அடங்கி அழிந்துபோகின்றன. அதுபோல, ஆன்மாவின் அறிவு முயற்சிகள் பஞ்சேந்திரியங் களாங் கால்வாய்களின் வழிச் சென்று வீணே அழிந்து போகின்றன. அம்முயற்சிகளை அவ்வாறன்றி ஒருவழிப் படுத்துவேமாயின் அவையெல்லாம் ஒருங்குதிரண்டு நம் அறிவை மிகுதிப் படுத்துமென்பதில் ஐயமென்னை? இனி இச்சரீரத்தின்கண் இயங்கும் பிராணவாயுவே இவ்வறிவு முயற்சிகட்கெல்லாங் காரணமாயிருத்தலால் அதனை வெளிவிடுதல், உள்ளிழுத்தல், உள்நிறுத்தல் என்னுங் கிரியை யினையுடைய இரேசக பூரககும்பகங்களாம் பிராணா யாமத்தால் அதனைத் தன்வயப்படுத்தும் ஹட யோகாப்பியாசம் குருமுகமாகவன்றிச் செயற்பாலதன்றா கலானும், அங்ஙனஞ் செயும்வழியும் அதுபெரியதோர் வருத்தத்தினை விளைவிப்ப தல்லது நுண்ணறிவு முதிர்ச்சி யினைப் பயவாதாகலானும் அம் முறை கொள்ளற் பாலதன்றாம். பிராணவாயுவாகிய காரணத்தை தூலமுறை யாகலானும், அதுதானும் அனுபவத்திலின்றாக லானும் அதனை யொழித்துச், சூக்குமமுறையால் சித்த விருத்தியினை யொடுக்கி அவ்வழியே பிராணவாயு முதலிய வற்றை ஒடுக்கும் ராஜயோகாப்பியாசமே யாவரானுஞ் செயற் பாலதாம் நன்முறையும் அனுபவமுமாமென்க. ஒருவன் ஒரு பொருளை யாழ்ந்துசிந்திக்குங்கால் அவனையறியாமலே பிராணவாயு அவனிடத்தே ஒடுக்க முறுகின்றது. இவ்வாறு நாடோறும் அனுபவத்திற்காணப்படுவதாய் இலேசான இராஜயோக வழி நிகழும் பிராணாயாமமே செயற்பாற் றென்பது, ஆரியனல்லன் குதிரையிரண்டுள வீசிப்பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவினருள் பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந்தானே வளியினை வாங்கி வயத்திலடக்கிற் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந் தெளியக்குருவின் றிருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனுமாமே ஏற்றியிறக்கியிருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை காற்றைப்பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக் கூற்றையுதைக்குங்குறியதுவாமே என்றதனை உண்மையான் உணர்ந்தோர் அருளிச் செய்தமை யால் இனிது விளங்கும். இவ்வாறு இத்தூலதேகத்தின் கட்டோன்றும் அறிவை ஒருவழி நிறுத்தவே அதற்குக் காரண மான பிராணவாயுவும் ஒருவழி நிற்குமாகலின் அருட் சத்தியின் வியாபாரத்தாற்றோன்றும் அம்முயற்சிகளால் ஆன்மாவுக்கு அறிவுமிகத்தோன்றி ஆணவத்தைச் செயித்துக் கொள்ளு மென்க. அங்ஙனஞ் செயித்தவழி ஆன்மாவின் ஞானப் பிரகாசத் தினுக்குத் தூலதேக முதலியவற்றி லமைந்த கருவிகளின் சகாயம் ஒரு சிறிதும் வேண்டப்படாவாம். அது சருவ வியாபியாய் விளங்கும் அருட்சத்தியின் பரஞானப் பிரகாசத் தினைப் பெற்றுத் தானுஞ்சருவ வியாபியாய் விளங்கும் என்க. இனித் தூல சரீரத்தில் அறிவு முயற்சிகள் பல திறப்பட்டுச் செல்கின்றனவாகலின் அவை தம்மை யெல்லாம் ஒடுக்கிப் பரிசுத்தமான ஒரு பொருளிலே லட்சியம் வைத்தல் வேண்டும். இங்ஙனம் பலவகை யவயவங் களினும் பல திறப்பட்டு நிகழும் முயற்சிகளை யெல்லாம் ஒரு பரிசுத்த உருவில் நிறுத்துங் குறிப்பினையே திருவங்க மாலையில் அப்பர் சுவாமிகள் திருவாய்மலர்ந் தருளினார். இவை தாம் யோகத்திற்சரியை யோகத்திற் கிரியை யெனப் பெயர் பெறும். இவ்வப்பியாசம் வழுவாமல் mD£o.க்f¥ படுமாயின் தூலதேகத்தின்கட் பகிர்முகப்பட்டுப் புறத்தே செல்கின்ற அறிவு அகத்தே அந்தர் முகப்பட்டுக் குவிந்து விளங்கும்; அங்ஙனம் விளங்குமாயின் மறதி முதலான ஆணவ காரியங்கள் அகலுகின்றன. எந்தெந்தப் பொருளில் மனம் அழுந்தி நிற்கவில்லையோ அந்தந்தப் பொருட் சொரூபம் அறியப்படாமையின் அவை மறக்கப் படுகின்றன. எங்கெங்கு மனம் அழுந்துகின்றதோ அங்கெல்லாம் அப்பொருட் சொரூபம் இனிது விளங்கல் அனுபவத்தில் அறியப்படு கின்றமையின், அகத்தும் ஒரு திவ்விய வதுவில் லட்சியம் வைக்க வைக்க அப்பொருள் இனிது புலப்படும் என்க. இனி இவ்வாறு தூல சரீர வழிவைத்த அறிவு முயற்சிகள் குவிந்து ஒருவழிநின்ற மாத்திரையினாலே, இதுகாறுஞ் சொப்பனாவைத்தையிற் சூக்கும சரீரத்தின்கண் நின்று அனுபவித்த அனுபவங்கள் மறக்கப்பட்டது போலா காமல் நன்கு விளங்கித் தோன்றும்; கற்சுவர் போன்ற தூல தேகத்தில் விளங்கித் தோன்றாது மறைவாய் நின்ற அனுக்கிரக சத்தியானது தெளிவான பளிங்குச் சுவர் போன்ற சூக்கும சரீரத்தில் புலப்பட்டுத் தோன்றா நிற்கும்; இது காறுந் தூல சரீரத்தின் கண்ணவான ஏகதேச கரணங்களின் உதவியை வேண்டி நின்ற ஆன்மாவானது அவற்றான் விளங்கிய தூலவறிவை அகற்றிச் சூக்கும அறிவு எய்துகின்றமையின் அச்சூக்கும அறிவின்கட் பிரதிபலன மாதற்குரிய அத் திருவருட் சத்தியின் பிரகாசத்தால் அச்சூக்கும சரீரத்தின் நின்றவாறே பலதேசத்தின்கண் நிகழ்வனவும் பிறவும் அறிகுவன். இச்சூக்கும சரீரம் பௌதிகா காயத்தில் இயங்க வல்லதாகலின் அவன் வேண்டுமிடமெல்லாம் அது கணத்திலே இயங்கும். இச் சூக்கும சரீரத்தில் தன்னுணர்வு மிகப் பெற்றோனுக்கு, இத் தூல சரீரம் பழுதாய்ப்போன பின் கழிக்கப்படும் ஒரு கஞ்சுகம்போல் வருத்தமின்றிக் கழிக்கப் படுவதேயாம், 4ம். இச்சிதாகாய மானது பூதாகாய பரமா காய பரமாம்பர சுத்தமாயாம்பரங்க ளாகிய அனைத்தையும் தன் வியாபகத்துள்ளடக்கி, அவற்றைப்போல் அசோதனப் பொருளாகாமல் சுத்த ஞானமயமாய் விளங்கு தலின் இதன்கட் படிந்தோன் எய்தும் அறிவும் இன்பமும் இத்துணையென உரைக்கப்படாவென்க. இதனியல்பை உண்மையான் உணர்ந்த பட்டினத்துப் பிள்ளையார். அட்டாங்க யோகமுமாதார மாறுமவத்தை யைந்தும் விட்டேறிப் போன வெளி தனிலேவியப்பொன்று கண்டேன் வட்டாகிச் செம்மதிப்பாலூறலுண்டு மகிழ்ந்திருக்க எட்டாத பேரின்பமென்னை விழுங்கியிருக்கின்றதே என்றும் பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம்புலன்களற்றுப் பேதங்குணமற்றுப் பேராசைதானற்றுப்பின் முனற்றுக் காதங்கரணங்களுமற்றவானந் தக்காட்சியிலே ஏதங்களைத் திருப்பேனிறைவாகச் சியேகம்பனே என்றும் பூதமுங்கரணம் பொறிகளைப்புலனும் பொருந்திய குணங்களோர் மூன்றும் நாதமுங் கடந்த வெளியிலே நீயு நானுமாய் நிற்கு நாளுளதோ வாதமுஞ்சமயபேதமுங் கடந்த மனோலயவின் பசாகரனே ஏதுமொன்றறியேன் யாதுநின் செயலேயிறைவனே யேகநாயகனே என்றும், அருளிச்செய்தமையானும் உய்த்துணரப்படும். இன்னும் இதுவாய் உள்ளதாய் விளங்குமொரு பெருவெளி மேலுள்ள தாய்முற்றுமுள்ள நள்ளதாய் என தாய்நான தாய்த்தனதாய் நவிற்றருந்தான தாயின்ன விள்ளொணாவப் பாலப்படிக்கப்பால் வெறுவெளி சிவவனுபவமென் றுள்ளுறவளித்தஞான சம்பந்தவுத்தமசுத்தசற்குருவே என்று ஸ்ரீமது, இராமலிங்கசுவாமிகள் கூறியவாற்றானும் விளங்கும். இங்ஙனம் அன்னமயகோசம் பிராணமயகோசம் மனோ மயகோசம் விஞ்ஞான மயகோசம் ஆனந்தமய கோசம் முதலியவற்றிற் கேவல சாக்கிரம் கேவல சொப்பனம் கேவலசுழுத்தி கேவலதுரியம் கேவல துரியா தீதம் எனும் பஞ்சாவத்தைகளை யெய்தி முறை முறையே அறிவு சுருங்கி ஆன்மா அஞ்ஞான மயமாய் நிற்குங் கீழாலவத்தை போலாது, அவ்வச்சரீரங்களில் பிரகாசிக்கும் திருவருட்சத்திவழி நின்று மேன்மேல் அறிவு முறுகப்பெறும் அவசரங்கள் நின்மலசாக் கிரம் நின்மல சொப்பனம் நின்மல சுழுத்தி நின்மல துரியம் நின்மல துரியாதீதம் எனப்பெயர் பெறா நிற்கும். இங்ஙனம் அருள்வயப்பட்டு நின்று காண்டலே சிவராஜ யோகாப்பி யாசம் எனப் பெயர் பெறும். இவ்வுண்மை தாயுமானச் செல்வனார் கண்ணாடிபோல வெல்லாங்காட்டுந் திருவருளை யுண்ணாடியை யாவுருகவைத்த லாகாதோ எனவும்; கைவிளக்கின் பின்னே போய்க் காண்பார்போன் மெய்ஞ்ஞான மெய்விளக்கின் பின்னே போய்மெய் காண்பதெந்நாளோ எனவும்; அருளாலெவையும் பாரென்றானத்தை யறியாதே சுட்டியென் னறிவாலே பார்த்தேன் இருளானபொருள் கண்டதல்லாற்கண்ட வென்னையுங்கண் டிலனென்னேடி தோழி எனவும் அருளிச்செய்த திருவாக்குகளானும் அறியப்படும். இவ்வருளில் முழுகிக் கிடப்பார்க்குத்தோன்றும் அற்புத ஆனந்தக்காட்சி ஒருவாற்றானும் உரைக்க வாராமை யானன்றோ ஆணிப்பொன்னம்பலத்தேகண்ட காட்சிகள் அற்புதக்காட்சியடி என்ற திருவாக்கும் எழுந்தது. ஹடயோகாப்பியாசத்தில் மூர்ச்சையுற்று ஒரு சிறிது விளங்கும் இத்திருவருள் உணர்ச்சியினையே ஆங்கிலத்தில் மனோதத்துவ சாத்திரியாரான மையர் என்பவர் அடிப்படை யுணர்வு என்பர். என்று மேற்கூறியவாற்றால் பொருந்துதல் என்னும் பொருளைத்தரும் யோகம் என்பதனாற் பெறப்படுவது ஆனந்தமேயாமென்பதும், அவ்வானந்த வெழுச்சிக்கு இரண் டான்ம சையோகம் இன்றியமையாது வேண்டப்படுமா மென்பதும், அறிவில்லாத அசேதனப் பொருட் சையோகத் தானும் ஆன்மாவின்கண் ஆனந்தம் நிகழக்காண்டலின் ஆணவமே ஆன்மாக்களுக்கு அதனை விளைவிக்குமென்றல் சடப்பொருட்சையோகத்தான் உண்டாம் ஏகதேச வின்பம் விரைவில் அழியுந் தன்மைத்தாம் என்னும் முறையால் வைத்து மறுக்கப் படுமென்பதும், அசேதனப் பொருட் சையோகத் தாற் றோன்றுமின்பமெல்லாம் சேதனப் பொருட் சையோகத்தின் கண் நிகழும் இன்பத்திற்கு நிகராகாமையின் அவற்றினும் இதுவே எல்லாரானும் சிறந்தெடுத்து நாடோறும் பாராட்டப் படுகின்ற தென்பதும், இன்பங் கொடுத்தலிறை யித்தை விளைவித்தன்மலம் என்னும் திருவாக்குப் பேரின்பானுபவத்தைப் பயப்பதற்கு ஆணவம் ஓர் உபகரண மாய் நிற்குமம் மாத்திரையே யுணர்த்த வெழுந்த தென்பதும், யோகம் என்பதற்கு இங்ஙனம் பொருள்கொள்ளாமல் பிரமமே பிராந்தி ஞானத்தாற் சரீரங்கடோறும் பிரதிபலிக்கும் சீவஉபாதி யினைக் கழித்துத் தன்னைப் பிரமமாகக் காண்டலே அதன் பொருளாம் என்று கேவலாத்துவித வகைபற்றிக் கூறுவது சருவஞ்ஞத்துவ சருவகர்த்திருத்துவ குணங்களுடைய பிரமத்திற்குக் குற்றமாய் முடிதலின் அது பொருந்தா தென்பதும், இங்ஙன மாகலின் யோகம் என்னும் அச் சொல்லிற்குச் சீவான்ம பரமான்ம ஒருமைப் பாடென்றே முடிக்கப்படு மென்பதும், இங்ஙனம் பெறப்பட்ட சீவான் மாவும் பரமான்மாவும் தனித்தனி அறிவுப் பொருள் களாயினும் ஒன்று அநாதியே பாசவயப்பட்டு அறிவு மயங்கிக் கிடப்ப மற்றைப் பரமான்மா இயற்கையே பேர் அறிவுப் பிழம்பாய் விளங்குவ தென்பதும், பரமான்ம சைதன்னியம் தனக்கொரு சலனமுமின்றி இருந்தாங் கிருப்பச் சீவான்மாவே பலவகைச் சலனமுற்று ஆணவத்தை உதறி அதனைப் பொருந்து மென்பதும், இங்ஙனம் இஃது அதனைப் பொருந்துவது சிவானந்தப் பேற்றின் பொருட்டே யாமென்பதும், ஆனந்தம் ஞான முதிர்ச்சியிற் றோன்றும் நேசகுணமாகத் துக்கமெனப்படுவது அஞ்ஞான முதிர்ச்சி யிற் றோன்றும் விரோகுணமாமென்பதும், ஆனந்தம் ஞான முதிர்ச்சியிற் றோன்றுவதால் அவ்வானந்தத்தோடு ஒருமைப் பாடுடைய ஈசுரனது சருவஞ்ஞத்துவம் யாண்டும் விளங்குதலை அறியு மாற்றால் புலப்படுதல் பற்றித் தெளியப் படு மென்பதும், ஈசுரனை யறியும் பதி ஞானத்தை யொழித்து ஒழிந்த பாச ஞான பசுஞானங்களாற் றோன்று மின்பம் இன்பமாக மாட்டா தென்பமும், இப் பதிஞானந்தானும் ஆன்மாக் களுக்கு இயற்கையாகவே எழுகின்ற தென்பதும், இப்பதி ஞானமும் இதன் வழித் தோன்றும் பிரமானந்த வேட்கையும் ஒரே தன்மையாக விளங்க, வொட்டாது ஆன்மாக்களுக்கு இயற்கையேயுள்ள ஆணவமலம் இடை யிடையே மறிக்கின்ற தென்பதும், இவ்வாணவம் எல்லார்க்கு முண்டாதல் சாக்கிரத்தில் நிகழும் அறியாமை மயக்கம் மறதி முதலிய அதன் காரியங்களாற் காணப்படுமென்பதும், இவ்வாணவம் ஜக்கவாத சைவர் கூறுமாறு ஞான சூனியமும் பாடாண வாதசைவர் கூறுமாறு குணப்பொருளுமாக மாட்டா தென்பதும், அதன் சையோகம் வேறொரு வாற்றாற் பெறப் படாமையின் அஃதான் மாவின் கண் அநாதியேயுள்ள ஓர்குணிப் பொருளாமென்பதும், இவ் வாணவ குணத்தின் வலியை அடக்கிச் சீவனைச் சிவத்தோடு ஒற்றுமைப் படுத்துவதாகிய யோகாப்பியாசமே சிவராஜ யோக மென் பதும், சீவனைப் பக்குவப்படுத்தி ஆணவத்தை நீக்கி வருகின்ற இறைவனருட் சத்தியே அறிவும் ஆனந்தமுமாய் நின்று ஆன்மாவுக்குப் பஞ்சகஞ்சுகவாயிலாய் அவற்றைச் சிறிது சிறிதாய் நுகர்வித்துப் பின் அக்கஞ்சுக மெல்லாம் முழுதும் உருவி அதனைத் தன் வயப்படுத்திக் கொள்ளு மென்பதும், அங்ஙனம் உபகரித்து வருகின்ற திருவருட்சத்தியி னியல்பை அறிந்து அதனுட் படிந்து பேரின் பானுபவ மெய்துதலே சிவராஜயோகப் பயனா மென்பதும் இனிது விளக்கப்பட்டன. ஓம்சிவாயநம: ஓம்சிவாய நம: ஓம் சிவாயநம: உ திருச்சிற்றம்பலம் ஹடயோக பிரணாயாமம் ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங் காற்றைப்பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே. பிராணாயாமம் என்னுஞ் சொல் பிராண ஆயாமம் என்று பிரிக்கப்பட்டு நின்று பிராணனைத் தடுத்தல் என்று பொருள் உணர்த்தும். பிராணன் என்பது சத்து, சாரம், வலிமை என்னும் பொருள்களைத் தருவதொன்றாம். வலிவில்லாத வனை நோக்கி உலகத்தார் இவன் பிராணன் இல்லாதவன் என்று கூறக் காண்டலால் அச்சொல்லுக்கு அப்பொருள் உண்டென்பது துணியப்படும். உயிர்கள் நடை பெறுவதற்குப் பிராண சக்தி இன்றியமையாது வேண்டப் படுதலால், இப் பிராணனையும் உயிரையும் ஒற்றுமைப்படுத்தி வழங்குதலும் இவன் பிராணன் போயிற்று இவனுக்குப் பிராணன் வந்தது என்றற் றொடக்கத்து வாக்கியங்களில் இனிது காணக் கிடக்கின்றது. இன்னும் உலகத்தில் உண்டாம் எல்லா அசைவுகளுக்கும் எல்லா இயக்கங்களுக்கும் இப்பிராண சத்தியின் உபகாரம் மிகவும் அவசிய முடைத்தாய் நிற்றலாலும், இத்தன்மையவான இயக்கங்கள் பெரும்பாலனவற்றிற்குக் காற்று ஒரு சக காரியா யிருத்தலாலும் இப்பிராண சக்தி காற்றோடு சேர்த்துப் பிராணவாயு வென்றும் வழங்கப்படும். ஆகவே, அறிவுள்ள சேதனப் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் அறிவில்லாத அசேதனப் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் இப்பிராண சக்தி ஒற்றுமையாய் உடன் நின்று உபகரிக்கும் தன்மை இனிது பெறப்படும் என்க. இனிச் சேதனா சேதனப் பிரபஞ்ச காரணமாய் விளங்கும் இப்பிராண சக்தியானது இப்பிரபஞ்ச நிமித்த காரணனான முழுமுதற் கடவுள் என்னுந் திரவியத்தை நிலயமாய்க் கொண்டு நிற்பதாகும். சக்தி என்பது திரவியம் வேறு தான் வேறு எனத் தனித்து நிற்பதன்றி அத்திரவியத் தோடு ஒன்றாய் நிற்பதாம். இதற்குப் பொன்னிறங் கட்டியினும் பூணினும் நின்றாற்போல் அந்நிற மண்ணலு மம்பிகையும் - செந்நிறத்தள் எந்நிறந்த ளாயிருப்ப ளெங்கள் சிவபதியும் அந்நிறத்த னாயிருப்ப னாங்கு என்ற திருக்களிற்றுப் படியார் திருவாக்குப் பிரமாண மாம். காணவுங் கருதவும் உரைக்கவும் படாத முதல்வனு டைய நிலை அம்முதல்வன் பால் நின்றும் புலப்பட்டுத் தோன்றி இப்பிரபஞ்ச மெல்லாம் ஒழிவின்றி இயங்குமாறு செய்யும் இப்பிராண சக்தி வாயிலாகவே அறியப்படுவ தாகும். சக்தி அறியப்படவே அச்சக்தியின் வேறன்றாய் நிற்கும் முழுமுதற் கடவுளும் அறியப்பட்டதென்றே துணிபு. இனி இப்பிராண சக்தியானது ஒன்றோடொன்றைத் திரட்டிக் கூட்டுதலாகிய சிருஷ்டியும், அங்ஙனங் கூட்டிய தனை நிலைப்பித்தலாகிய திதியும், பின் நிலைப்பித்தவனை வேறு வேறு பிரித்து விடுதலாகிய சங்காரமும் என்னும் முத்தொழிலை நடைபெறுவிக்கு மிடத்தெல்லாம் சுழல் சுழலான ஓரற்புத அசைவினை உண்டு பண்ணுகின்றதென இக்காலத்து அதியற்புத ஆராய்ச்சி செய்யும் பௌதிசாத்திர பண்டிதர் இனிது விளக்கிப் போதருகின்றார். இனி இச்சுழல் சுழலான இயக்கத்தினைத் தோற்று விப்பதே குண்டலி சத்தியென்று நம்முடைய சைவசித்தாந்த நூல்களிற் கூறப்பட்டுக் கிடத்தலால் இப்பிராண சக்தி குண்டலி சக்தி என்னும் வேறு வேறு பெயர்கள் எல்லாம் வல்ல இறைவன் அருட்சத்திக்கே பெயராமென்பது இனிது பெறப் படுகின்றது. இத்தன்மைத்தாகிய இப்பிராண சக்தியானது அண்ட பிண்டங்களைச் சேட்டிக்கு முகத்தால் சருவ ஆன்மாக் களுக்கும் அறிவை விளக்கி மிகுதியாய் நிகழச் செய்து அவ்வழியே அவ்வான்மாக்களை மேன்மேல் எழச்செய்து தத்துவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு விளங்கும் சிவானந்தப் பெருந்திப்பிய சாகரத்திற்படிந்து அவ் வானந்தசத்தி மயமாயே நிலைபெற்று நிற்கும்படி செய்து போதருகின்றது. இங்ஙனம் ஆன்மாக்கள் உயிர்க் குயிராய் நின்று உபகரித்துவரும் பிராணசக்தியின் உபகாரத்தை நன்கறிந்து அவ்வுபகாரம் தம்மால் வீணே செலவு செய்யப்படாமல் அதனைத்தடுத்து ஆன்மாக்கள் தமக்கே உரிமையாக்கிக் கொள்ளும் முறையே பிராணா யாமம் என்று சொல்லப்படுவதாம். ஆன்மாக்கள் முழுமுதற் கடவுளைச் சென்றணுகி அதனின் வேறற நிற்றலே யோகமா மென்பது. இந்தியவிடயந் தன்னொடு சிவணல் யோகமென் பார் சிலர் சிலர் தாஞ், சிந்தனை சிவத்தோ டடைதல்நல் யோக மென்பரீ தன்றியுஞ் சிலர் தாம், முந்திய பிராண னபானனோ டடைத லென்பரிம் மொழிந்தவை யனைத்தும், அந்த மில்யோகமல்ல நற்சீவன் பரத்துடனடைவதே யாகம். என்னுந் திருவாக்கால் துணியப்படும். எனவே, இப்பெற்றித் தாகிய யோகத்திற்குப் பிராணாயாமம் என்பது இன்றியமை யாத அங்கமாம். இனி ஒருவன் தன்னிடத்தமைந்த பிராண சத்தியை மனம் வாக்குக் காயம் என்னுந் திரிகரணங்களாலும் தான் வேண்டிய வாறெல்லாஞ் சென்று பல திறத்தாற் செலவு செய்து அப்பிராண சக்தியினாற் பெறும் அரும் பெரும் பயனை இழந்து போகாமல், அத்திரி கரண செயல்களையும் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எண்வகைப்பட்ட முறையால் தடுத்துத் தனக்கே சுதந்தரமாக்கி வலிவுறு மாகலின் இவ்யோகாங்கங்கள் எட்டும் பிராணாயாமம் என்று ஒரு சொல்லால் வழங்கல் இழுக்கா தென்க. ஆயினும், அவை எட்டும் ஒன்றினொன்று வேறான கிரியைகள் பல உடையன வாயிருத்தலால் அவை ஒவ்வொன் றும் ஒவ்வொரு பெயரான் வழங்கப்பட்டன. இவ்வெண்வகை யோகாங் கங்களுள் பிராணாயாமத்தை மாத்திரம் பிராணாயாமம் என்று சிறப்பித்துக் கூறியவாறென்னையெனின் - உலகத்தில் ஆன்மாக்கள் சரீரத்தில் இயங்குவதை அறிதற்குச் சுவாச ஓட்டம் ஓர் இன்றியமையாத குறியா யிருத்தலானும், இச்சுவாசவாயு விடத்தே பிராண சக்தியின் செயல் புலப்பட்டு எல்லார்க்கும் எளிதில் விளங்கிக் கிடத்தலானும் அது பற்றியே கற்றாரும் மற்றாரும் அதனைப் பிராண வாயுவென்று வழங்கக் காண்டலானும், யோகத்தினுள்ளும் இப்பிராண வாயுவைத் தடுக்கும் முயற்சியே இன்றிமையாத ஓர் அங்கமாயிருத்த லானும் பிராணாயாமம் அங்ஙனம் விசேடித்து வழங்கப்படுவ தாயிற்றென்க. இனி இவ்வெண்வகை யோகாங்கங்களும் ஆன்மாக் களின் திரிகரணச் செயல்களை ஒடுக்குமாறு யாங்ஙன மெனில் ஆன்மாக்களெல்லாம் ஒன்றை விரும்புதலாகிய இச்சையும் ஒன்றை அறிதலாகிய ஞானமும் ஒன்றைச் செய்தலாகிய கிரியையும் என்னும் மூன்று சக்தியும் இயற்கையிலே உடையனவாகும். இது சீவனுமிச்சாஞானக்கிரியை யாற்சிவனை யொப்பன் ஆவனென்றிடில நாதி மலமிவற்றினை மறைக்குங் காவலன் இவன்செய்கன் மத்தளவினிற் கொடுப்பக் காண்பன் பாவியாம்புத்தி முத்திப்பயன் கொளும் பண்பிற்றாகும் என்னுஞ் சிவஞான சித்தித் திருவாக்கான் அறியப்படும். இவ் விச்சாஞானக் கிரியைகள் ஆன்மாக்கள் மாட்டு அநாதி தொட்டே உள்ளனவாயினும், கண் தானொன்றைப் பார்க்கும் ஆற்றலுடையதாய் நிற்பினும் தன் ஆற்றலை நிகழச் செய்விக் கின்ற சூரியனொளியை அஃது அவசியம் வேண்டி நிற்றல்போல அவை அவ்விச்சாஞானக் கிரியைகளைத் தம் மாட்டு விளங்கச் செய்விக்கின்ற பிராண சக்தியை இன்றி யமையாது வேண்டி நிற்கு மென்பதூஉம் இத்திருவாக்கான் வலியுறுத் தப்பட்டது. ஆகவே, தம் இச்சாஞானக் கிரியை களுடன் ஒருமைப்பட்டு நின்று எல்லாம் வல்ல பிராண சக்தியானது அவற்றை எழுப்புவிக் குங்கால், அவை மனம், வாக்குக், காயம் என்னும் திரிகரணங் களின் வழியே செல்கின்றன. இவ்வண்ணம் இயங்காநின்ற மனம் வாக்குக் காயங்களையும் அவை வாயிலாய் நடைபெறும் இச்சா ஞானக் கிரியைகளையும் ஒருவன் இடைவிடாது வீணே செலவு செய்குவனாயின் இவை தம்மை நடைபெறுவித்து உபகரிக்கின்ற பிராண சக்தியின் உபகாரச் செயல் இவனுக்குச் சுதந்தரமன்றாய் ஒழியும். இவன் அதனைச் சுதந்தரப்படுத்திக் கொள்ளுங்காறும் இடையறாது வரும் பிறப்பிறப்புத் துன்பங் களிற் கிடந்து உழலுவன். ஆகவே, மனம் வாக்குக் காயம் என்னும் மூவகைக் கருவிகளின் வழியே நடைபெறுகின்ற ஆன்ம இச் சாஞானக் கிரியைகளை அடக்கும் யோகாங்க முறையே இயமம், நியமம் என்று வகுக்கப்பட்டன. பிற உயிர்களைக் கொல்லுதலும், நடவாததொன்றைப் பிறர்க்குத் தீமை பயப்பச் சொல்லுதலும், பிறர் பொருளை அபகரித் தலும் அபகரிக்க எண்ணுதலும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளானும் வரைதுறையின்றி விரும்பப் பட்ட பொருள் களைப் பெற இச்சித்தலும் தெய்வத் தன்மை பொருந்திய பிராண சக்தியின் உபகாரத்தை வீணாக் குதலாய் முடியுமாகலின் அவை தம்மை அங்ஙனம் நடக்க வொட்டாமல் தடுக்கும் கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, வெஃகாமை, ஐம்பொறி யடக்கல் என்னும் ஐந்து அறங்களும் இயமம் என்று வகுக்கப்பட்டன. தவம், தூய்மை, தத்துவ நூலூணர்ச்சி, மனம் உவந்திருத்தல், தெய்வ வழிபாடு என்னும் ஐந்தும் நியமம் என்று வகுக்கப் பட்டன. இனிச்சரீரத்தின் வழிச் செல்லுகின்ற நடத்தல், இருத்தல், கிடத்தல், எழுதல், வளைதல் என்னும் ஐவகைக் கிரியைகளும் தாம்வேண்டியவாறே நிகழச்செய்வராயின் ஆன்மாக்கள் பிராண சக்தியின் உபகாரத்தை வறிதாக்கினார் ஆவர். ஆகவே, தாம் மேற்கொண்ட நல்லொழுக்கமுறைக் கேற்பத் தேகச் செய்கையைத் திருத்திக் கொள்ளும் உபாயம் ஆசனம் என்னும் யோகாங்கத்தின்பாற்படும். மற்றுத்தாம் மேற் கொண்ட பெருஞ் செயல் மன அமைதியேயாகலின், அம்மன அமைதிக்கு இயைந்ததாகப் பலவகையால் அமர்ந்திருக்கும் ஆசனம் என்னும் தேகக்கிரியை மாத்திரம் தழுவிக்கொண்டு மற்றைத் தேகக் கிரியைகளை யோகநூலார் விலக்கினார். ஆயினும், ஒன்றின முடித்தல் தன்னினம் முடித்தல் என்னும் நியாயத்தால் மற்றைத் தேகக் கிரியைகளைத் தடைசெய்து திருத்திக் கொள்ளுதலும் இவ்வாசனம் என்னும் யோகாங் கத்தின் கண்ணே அடங்கப் பெறுவதாகும். இனிப் பிராணாயாமம் என்பது பிராண வாயுவைத் தடைசெய்து நிறுத்திச் சரீரத்தைச் சுகமாக வைத்துத் தாம் வேண்டுங்காலமளவும் ஆயுளை நீட்டிப் பித்தலும், பயன் பெறுதற்குச் சாதனமான தேகத்தை இங்ஙனம் வலிபெறச் செய்யும் வாயிலாய் மன ஒருமை எய்துவித்தலுமாகும். ஆன்மாக்களின் அறிவு விருத்திக்கு இத்தேகம் இன்றி யமையாச் சாதனமாவதாம். படலத்தான் மறைக்கப்பட்ட கண்ணுக்குக் கண்ணாடி சகாயமாய் நின்று கண்ணறிவை விளக்குதல்போல, ஆணவம் என்கின்ற குற்றத்தான் மறைக் கப்பட்டு அறிவு மழுங்கிய ஆன்மாக்களுக்கு அவ்வறிவை விளக்குவது மாயாகாரியமான இவ்வுடம்பேயாம். இது, மாயாதனு விளக்கா மற்றுள்ளங்காணேதேல் ஆயாதா மொன்றையதுவதுவாய் - வீயாது வன்னிதனைத் தன்னுண் மறைத்தொன்றாங் காட்டம்போல் தன்னை மலமன்றணை தறான். எழுமுடல் கரணமா தியிவைமலம் மலம்மலத்தாற் கழுவுவனென்று சொன்ன காரணமென்னை யென்னிற் செழுநவையறுவைசாணி உவர் செறிவித்தழுக்கை முழுவதுங் கழிப்பன்மாயை கொடுமல மொழிப்பன்முன்னோன் நித்தமாய ருவாயேக நிலையதாயகி லத்துக்கோர் வித்துமாய சித்தாயெங்கும் வியாபியாய் விமலனுக்கோர் சத்தியாய்ப் புவனபோகந்தனுகரணமு முயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயைமயக்கமுஞ் செய்யுமன்றே என்றற்றொடக்கத்துத் திருவாக்கான் நன்கு தெளியப்படும். இனி இத்துணைச் சிறந்த சாதனமான இவ்வுடம்பின் நிகழ்ச்சியெல்லாம் புறத்தே காணப்படும் இப்பிரபஞ்ச நிகழ்ச்சி களோடு சம்பந்தப்பட்டே நடைபெறுவனவாகும். இங்ஙனம் இப்பிரபஞ்சமும் இதனோடொற்றுமைப்பட்டு நடைபெறும் சரீரமும் ஒன்றோடொன்று மிக்க சம்பந்த முற்று நிற்றலால் இப்பிரபஞ்சம் அண்ட சரீரம் என்றும் இவ்வுடம்பு பிண்ட சரீரமென்றும் ஒற்றுமைப் பெயரான் வைத்து வழங்கப் படுகின்றன. இன்னும் இவ்வண்ட சரீரத்தி னுள்ள அவ்வளவு அமைதிகளும் இப்பிண்ட சரீரத்திற்கும் ஒக்கும். அகத்தே இப்பிண்ட சரீரம் நிலைபெறுதற்குப் பிராணவாயு ஓர் இன்றி யமையாத காரணமாய் நிற்றல் போல் புறத்தே இவ்வண்ட சரீரம் நடைபெறுதற்கும் வாயு வினியக்கம் இன்றியமையாத தாகின்றது. சூரியனிடத்துள்ள பிரகாசசத்தும் சந்திர னிடத்துள்ள அமிழ்த சத்தும் இவ்வுலக நிகழ்ச்சிக்கு அவசிய மான சாதனங்களாயினும், அவ்விரண்டு சத்துக்களையும் தன்னிடத்தே சுமந்து கொண்டு போய் எங்கும் வியாபிக்கும் வாயுவில்லையானால் அவை பயன்படமாட்டாவென்பது துணிபொருளேயாம். சூரியனது பிரகாச சத்தேறிய வாயுவைப் பகற்காலத்துள் ளிழுத்தும், சந்திரனது அமிழ்த சத்தேறிய வாயுவை இராக்காலத் துள்ளிழுத்தும் சருவ பிராணிகளும் பிராண வலிவேறி உயிர் வாழ்க்கை செலுத்தி வருகின்றன. இவ்வாறு அண்டத்திற் காணும் நிகழ்ச்சிக்கு ஒப்பவே, இப்பிண்டத் தினிடத்தும் பிராண வாயுவானது இயங்கா நின்கின்றது நம்முடைய பிண்ட சரீரத்தில் எழுபத்தீராயிரம் நாடிகளிருக் கின்றன. அவற்றுள், இடை, பிங்கலை, சுழு முனை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புடை, புருடன், குகு, சங்கினி என்னும் பத்துநாடிகளே சிறந்தன: அவற்றுள் ளும் இடை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்றுமே சிறந்தன. இவை தம்முள் பிங்கலநாடி என்பது இடதுகாற் பெருவிரலிலிருந்து வலது நாசியிற் செல்லுகின்றது; இடாநாடி வலதுகாற்பெரு விரலிலிருந்து இடது நாசியிற் செல்லுகின்றது; சுழுமுனா நாடி குதத்திற்கும் குய்யத்திற்கும் நடுவிலுள்ள மூலாதார முதல் சிரோமத்தியமான பிரமரந்திரம் வரையில் ஆறாதாரங் களையும் ஊடுருவிச் செல்கின்றது. இவற்றுட் பிங்கலை சூரிய நாடி என்றும், இடை சந்திரநாடி யென்றும், சுழுமுனை அக்கினிநாடி என்றும் வழங்கப்படும். இனிப் பிராணவாயு பிங்கலை நாடியிற் செல்லும் வழிச் சூரியகலை யென்றும், இடாநாடியிற்செல்லும் வழிச் சந்திர கலையென்றும், சுழுமுனா நாடியிற் செல்லும் வழி அக்கினி கலை என்றும் சொல்லப்படும். பிராணவாயு சூரியநாடியில் ஓடும்போது தேகத்தைப் போஷிக்கும் உடன்பாட்டு மின் சத்தும் சந்திரநாடியிலோடும் போது எதிர்மறை மின்சத்தும் கொண்டு செல்லுகின்றதென இக்காலத்துப் பௌதிக சாத்திரிகள் மிக நுட்பமாக ஆராய்ந்துரைகூறி வருகின்றார். இவர்கள் இதுகண்டு சொல்லுதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்னரே நம் இந்திய தேசத்துச் சிவராஜயோகிகள் இதனைக் கண்டு கூறியிருத்தலால் நம் முதுமக்கள் யோகானுபவ அறிவு தன்னிகரில்லாத் தன்மைத்தென்பது சொல்லவும் வேண்டுமோ? சூரியநாடி சந்திர நாடி யிரண்டினும் ஓரே தன்மையான மின்சாரம் ஓடுமாயின் இத்தேகத்தின் உள்ளமைந்த கருவிகள் ஒன்றும்நிலைபெற மாட்டா வாய் ஒழியும். அங்ஙனம் அன்றிப் பிராணசக்தி என்னும் எம் அம்மையின் அனுக்கிரக இயக்கத் திறத்தினாலே, சூரிய நாடியிற் செல்லுஞ் சத்தி உடன்பாட்டு வகையாலும் சந்திரநாடியிற் செல்லுஞ் சக்தி எதிர்மறை வகையாலும் நடை பெற்று வருகின்றன. இவ்வாறு மாறிமாறி வரும் சுவாச ஓட்டத்தின் இயல்பைத் தெளிவாய் அறிந்து புறத்தே அண்டத்திலிருந்து அகத்தே பிண்டத்தினுட் செல்கின்ற பிராணவாயுவை முறை தவறாமல் நடத்தித் தேகத்தைப் பாதுகாத்தலே பிராணாயாமத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நோக்கத்தை அறிந்து அனுட்டியாமையி னாலன்றோ உலகத்தில் வருடந்தோறும் கணக்கிறந்த மக்கள் நோய் வாய்ப்பட்டுத் தம் அரிய சரீரத்தை இழந்து போகின்றனர். இப் பிண்ட சரீரத்தை வகுத்த இறைவனது திருவருட் குறிப்பானது இதனை நெடுநாள் நிலை குலையாமல் வைத்து பகரிக்க வேண்டு மென்பதேயாம். அவன் இதில் ஒழியாது இயங்கும் வண்ணம் அமைத்த பிராணசக்தியின் தோற்றமே அவனது திருவருட் குறிப்பை நன்கு புலப்படுத்து கின்றது. இத்தேகத்தில் எவ்வகைப் பட்ட நோயும் அணுகாமல் வைக்கத் தகுந்த பிராணவாயு இயக்கமும், மற்ற உலக நிகழ்ச்சிகளும் இடையறாது நிகழாநிற்ப, இச்சரீர மாத்திரம் அவ்வாறு இடையில் அழிந்தொழியக் காரணமில்லை யன்றோ? ஆ! மக்கள் இவ்வமைதிகளைச் சிறிதாயினும் உணராமையினா லன்றோ தம் அருமைத் திருமேனியைத் தம்நோக்கம் ஈடேறுமுன் துறக்கின்றனர்! நோய் என்பது யாது? அஃது ஒரு தனிப்பொருளா? இல்லை, இல்லை. பிருதிவி, அப்புத், தேயு, வாயு, ஆகாய முதலான தத்துவங்களின் தூல சூக்கும காரியங்களான அகக் கருவி புறக் கருவிகளில் இயைபுகுன்றி நிலைகுலைதலே நோய் எனப்படுவ தல்லது அஃதொரு தனித் திரவியம் அன்று. அக்கருவிகள் நிலைகுலையாமல் பாதுகாத்துவரின் நோய் வருதற்கு வழி சிறிதும் இல்லை. அன்றி நிலை குலைந்தாலும், அதனைச் செப்பஞ் செய்தற்குரிய அதியற்புத பிராண சக்தியானது இதன்கண் இடையறாது இயங்குதலால் அவ்வியக்கத்தை அறிந்து செம்மை செய்து கொள்வானுக்கு நரை,திரை மூப்பு,பிணி, சாக்காடு முதலான குற்றங்கள் தேகத்தி லணுகா வென்பது காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக், கூற்றை யுதைக்குங் குறியதுவாமே என்னும் மேலைத் திருவாக்கினால் இனிது வலியுறுத்தப் பட்டமை காண்க. எல்லா வியாதிகளையும் இலேசிலே நீக்கத்தக்க பரம ஓஷதியாகிய பிராண சக்தியானது இங்ஙனம் அமைந்து கிடப்ப, இதனை விடுத்து அந்தோ! மனிதர் மருந்து மருந்தென்றும் மருத்துவன் மருத்துவனென்றும் அலைதல் என்னை! என்னை! இயற்கையாய் அமைந்த மருந்தை உண்ணல் ஒழிந்து, சிற்றறிவுடைய மக்களால் செயற்கை யாய்ச் செய்யப்படும். மருந்தை நுகர்தலாலன்றோ இஞ் ஞான்று நோய்கள் அளவின்றிப் பெருகி வருகின்றன! ஓ மக்கள் இச்செயற்கை மருந்தை அறவே ஒழித்து இயற்கை மருந்தைக் கடைப்பிடிக்கு நாள் எந்நாளோ! இனிப் பிண்டத்திலுள்ள பிராணவாயு வியக்கத்தை அண்டத்திலுள்ள நிகழ்ச்சிகளோடு ஒப்பவைத்து அப்பியசித் தல் எல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம். சூரியனிடத் துள்ள பிரகாச சத்தானது அதனிடத் தியற்கையிலுண்டாய் எல்லாப் பிராணிகளுக்கும் வலிமை தருகின்ற உடன்பாட்டு மின்சத்து டையதாம். சந்திரனிடத்துள்ள பிரகாசமானது அது தனக்கு இயற்கையிலுண்டாவதன்றாய்ச் சூரியனிடத் தினின்றும் பெற்றுக் கொளப் பட்டதாகும். இஃது இக்காலத்து நவீன வான சாத்திரிகளுக்கும் உடன்பாடான கொள்கையே யாம். ஆகவே, சந்திரனிடத்துள்ள பிரகாசம் சூரியனிடத் தினின்றும் வந்த பிரதிபலனமாகலின் அஃது ஆற்றல் குறைந்து அமிழ்த மயமாய்க் குளிர்ந்து காட்டுகின்றது. இச்சந்திர அமிழ்த சத்திலிருப்பது எதிர்மறை மின் சத்தாகும். ஆகவே, சூரியசத்து வியாபிக்கும் பகற்காலத்தும், சந்திரசத்து வியாபிக்கும் இராக்காலத்தும் அனுட்டிக்கற் பாலனவாகிய சுவாச முறைகள் பெரிதுங் கவனிக்கப்படுதல் வேண்டும். ஏனெனில், புறத்தே அண்டத்திற் காணப்படும் சீதோஷ்ணங்கள் அகத்தே பிண்டத்திற் சென்று தாக்கு மாகலின், அகத்தே சீதோஷ்ணங்களைச் சமம்பெற வைத்தற் பொருட்டுப் புறத்தே நிகழும் சிதோஷ்ண நிலைகளைக் கவனித்துச் சுவாச ஓட்டத்தைச் செம்மை செய்வித்தல் வேண்டும். சரீரத்தில் உஷ்ணம் மிகுதிப்பட்டால் இரத்தக் கொதிப்பு மிகுதியாய் இரத்தக் குழாய்கள் இரத்த சயங்களிற் செல்லும் இரத்தம் பொங்கியும் சுவறியும் நிலைகுலைந்து இசைவுகெட்டு அழியும். சீதம் மிகுதிப் பட்டால் இரத்த ஓட்டங் குறைந்து போதலோடு அவ்விரத்தம் ஆங்காங்குக் கட்டிகட்டியாய் உறைந்து இறுகி அங்ஙனமே இசைவு கெட்டுப்போம். அவ்விரத்தத்தோடு கலந்து செல்லும் வாயு மிகுதிப்பட்டால் இரத்தக் குழாய்கள் அளவுக்குமேல் பருத்துக் கருவிகள் ஒன்றோடொன்று தாக்கி அங்ஙனமே நிலைகெட்டு அழியும். ஆகலின், இரத்தத்தை எப்போதுஞ் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுதலே தேகம் நிலைபெறுதற் குரிய வழியாம். அவ்விரத்தம் சுத்திகரிக்கப் படுதற்கு அதனோடு கலந்து செல்கின்ற பிராணவாயுவே முக்கியக் காரணமாம். அப்பிராணவாயு செவ்விதின் தடைபெறுதற்கு அதிலேறுகின்ற சீதோஷ்ண சத்துக்களே காரணமாம். இச்சீதோஷ் ணங்களைச் சமம்பெற நிறுத்திக் கொள்ளுதற் பொருட்டே தேரையர் என்னும் வைத்திய சாத்திரியார் இரண்டடக் கோம் ஒன்றை விடோம் இடது கையிற் படுப் போம் என்று இரவுக் காலத்து இடது கைப் பக்கமாய்ப் படுத்தலைச் சிறந் தெடுத்துக் கூறினார். இடது கைப் பக்கமாய்ப் படுத்தலினால் வரும்பயன் என்னை எனின்;- இடதுகைப் பக்கமாய்ப் படுத்திருக்குந் துணையும் பிராணவாயு சூரியநாடியி லியங்கிக் கொண்டிருக்கும். சூரியனில்லாத இரவுக் காலத்தே அண்ட சரீரத்தில் உஷ்ண சத்துக் குறைந்திருத்தலினால், அதனோடு சம்பந்தமுள்ள இப்பிண்ட சரீரத்தும் அவ்வாறே உஷ்ணங் குறைந்து சீதம் மிகுதிப்படும். ஒன்று குறைந்து ஒன்று மிகுதிப்படுதலே சரீர நிலைகெட்டு நோய் உற்பத்தி யாதற்குக் காரணமென்பது மிகினுங் குறையினும் நோய் செய்யும் நூலோர், வளி முதலா வெண்ணிய மூன்று என்று ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாருங் கூறிய வாற்றானும் பெறப்படுதலின், அங்ஙனம் உஷ்ணங் குறைந்து சீதம் மிகாமைப் பொருட்டுப் பிராணவாயுவைப் பிங்கல நாடியிலியங்குமாறு செய்வித்தல் வேண்டும். இரவுக்கால முழுவதும் இவ்வாறு பிராணவாயு பிங்கலையில் நடக்கு மாயின் சரீரசுகம் குன்றுதலில் லாது சமமாய் ஒத்து நடை பெறும். இனி விடியற்காலத்தே சூரியனுதயமாம் போது பிங்கல நாடியிற் சென்ற பிராணவாயுவைத் திருப்பி இடாநாடியி லியங்கு மாறு செய்வித்தல் வேண்டும். சூரியனுதய மாங்காலத்தே மறைந்து கிடந்த உஷ்ணசத்துப் புலப்பட்டுத் தோன்றுதலின், அது சரீரத்திற்றாக்கி நிலைகுலையச் செய்யா வண்ணம் குளிர்ந்த அமிழ்தத்தை வீசும் சந்திரநாடியில் பிராணவாயு இயங்கற் பாலதாம். பிங்கல நாடியிற் சென்ற பிராணவாயுவை வலதுகைப் பக்கமாய்ப் படுத்தலால் திருப்பி இடாநாடியிற் செலுத்தலாம். இனிப் பகற்பாலத்தே மக்கள் இயங்கிக் கொண்டிருந்த லின் பிராணவாயுவைச் சீதோஷ்ண இயல்பறிந்து மாறி மாறி இயக்குவித்தல் அவர் தமக்கு முடியாத தொன்றாம். ஆகவே, பகற்காலத்துச் சூரியகதியால் மாறி மாறித் தோன்றும் சீதோஷ்ண ஏற்றக்குறைச்சல் சரீரத்தைத் தாக்கி வருத்தா மைப் பொருட்டு ஒரு நாளிற் காலை, நண்பகல், மாலை என்னும் முக்காலத்தும் மும்முறை பிராணவாயுவை இடை பிங்கலை நாடிகளில் மாறிமாறி விடுத்துப் பிராணாயாமம் அப்பியசித்தல் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம். சந்திர நாடியினாற் பிராணவாயுவை உள்ளிழுத்து நிறுத்திச் சூரிய நாடியினால் வெளிவிடுத்துப் பின் சூரிய நாடியினால் அங்ஙனமே உள்ளிழுத்து நிறுத்திச் சந்திரநாடியினால் வெளிவிடுதல் ஒரு பிராணாயாமம் என்று வழங்கப்படும். பிராணவாயுவை உள்ளிழுத்தல் பூரகம் என்றும், அதனை உள்நிறுத்தல் கும்பகம் என்றும், அதனை வெளி விடுதல் இரேகம் என்றும் சொல்லப்படும். இவ்வியல் பினவான இரேசகபூரக கும்பகங்கள் இவ்விரண்டு கூடினதே ஒரு பிராணாயாம மென்பதற்கு மேலைத் திருவாக்கில் எற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்கும் எனக் கூறியதே சான்றாம் என்க. இனி இப்பெற்றித்தாகிய பிராணாயாமஞ் செய்யத் தொடங்குங்கால் இடது நாசியில் தொடங்கல் வேண்டும். இவ்வுண்மை யறியாத மேற்றிசை விஞ்ஞானிகள் சிலர் வலது நாசியில் தொடங்கல்வேண்டுமெனப் பிறழக் கூறுகின்றார். மகதைசுவரிய சிவராஜ யோகிகளான திருமூலர் ஏறுதல் பூரக மீரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில் ஊறுதல் முப்பத்தி ரண்டதி ரேசகம் மாறுத லொன்றின்கண் வஞ்சகமாமே என்றும் வாமத்தி லீரெட்டு மாத்திரை பூரித்தே ஏமுற்ற முப்பத்திரண்டு மிரேசித்துக் காமுற்ற பிங்கலைக் கண்ணாக விவ்விரண் டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க வுண்மையே என்றும் திருவாய்மலர்ந்தருளினமையால் வாம பாகத்தி லுள்ள சந்திரநாடி யிலேதான் பிராணாயாமம் தொடங்கற் பாலதாம். பிறசான்றோரும் மதியிலிருநான்கிரேசித்து வகுத்தவீரெட்டினிதேற்றி விதியின்வழுவாதெண்ணான் குகும்பித்திலகுவெய்யோனிற் பதினாறளவைவிடல்விலத்து மிவ்வாறியற்றிப்பகர்முறையின் கதிர்கான்மதியின்விடுதலொரு பிராணாயாமங்கருதுகவே என்று கூறியதூஉங் காண்க. இனி அங்ஙனம் தொடங்கும் வழி எட்டு மாத்திரையளவு இடது நாசி யினால் வாயுவைக் கழித்துப் பதினாறு மாத்திரை உள்ளிழுத்து முப்பத்திரண்டு மாத்திரை உள் நிறுத்திப் பதினாறு மாத்திரை வலது நாசியினால் வாயுவைக் கழிக்க வேண்டும். பின் வலது நாசியினால் அங்ஙனமே பதினாறு மாத்திரை பூரித்து முப்பத்திரண்டு மாத்திரை கும்பித்து இடது நாசியினாற் பதினாறு மாத்திரை இரேசித்தல் வேண்டும். இடது நாசியில் வாயுவை இரேசிக் கும்போது சூரியனைத் தியானித்தலும், வலது நாசியில் வாயுவை இரேசிக்கும் போது சந்திரனைத் தியானித் தலும் அவசியம் செயற்பாலனவாம். என்னையெனின், இடது நாசியிற்செல்லுஞ் சுவாசம் சீதம் மிகுந்திருத்தலால் அதனோடு உடன் செய்யும் சூரிய தியானம் அதனை அளவின்மிக வொட் டாது அடக்கிச் சமப்படுத்தும்; வலது நாசியிற் செல்லுஞ் சுவாசம் உஷ்ணமிகுந் திருத்தலால் ஆண்டுச் செய்யும் சந்திரதியானம் அவ்வுஷ்ணத்தை அளவின் மிகாதடக்கிச் சமம்பெறச் செய்யும் ஆகலின் என்க. இனி இங்ஙனம் பிராணாயாமஞ் செய்யுமிடத்து மாத்திரை கணிக்குமுறை யாங்ஙனமெனின்;-மனிதர்க்கு இயற்கையிலே கண்ணிமைகள் ஒருகாற் பொருந்தும் நேரமே மாத்திரை எனப்படுவதாம், இம்மாத்திரைகளை ஒன்றிரண்டு மூன்று என்று எண்ணிக் கொண்டு பிராணாயாமஞ் செய்தல் கூடாதாகலின், அதனை இலேசாக்குதற் பொருட்டே மந்திரோச் சாரணமும் உடன் செயற்பாற்றென அறிவு நூல்கள் விதிப்பன வாயின. ஓ நமசிவாய என்னும் மந்திரம் எட்டு மாத்திரை களோடு கூடியதொன்றாம். ஓ என்னும் நெடில் இரண்டு மாத்திரையும், ந ம சி என்னும் ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு மாத்திரையாக மூன்று மாத்திரையும் வா என்னும் நெடில் இரண்டு மாத்திரையும், ய என்பது ஒரு மாத்திரையுமாக எட்டு மாத்திரையளவாய் ஒலிக்கக் காண்டலின், இம்மந்திரத்தை இருகால் உச்சரித்துப் பூரித்தலும், நாற்கால் உச்சரித்துக் கும்பித்தலும், மறித்தும் இருகாலுச்சரித்து இரேசித்தலும் மிக இலேசான முறையாம். அல்லதூஉம், மந்திரங்கள் அதிசூக்கும நாத காரிய ஒலிகளே யல்லது வேறில்லை. ஒருவன் ஒரு நாண் முழுதும் பல திறப்பட்ட எண்ணில்லாத சொற்களைப் பேசுதலால் பலதிறப்பட்ட விகாரமடைந்து இளைப்புறு கின்றான். ஆகவே, நாத தத்துவத்தில் அமைந்த பிராண சக்தியானது பல திறப்பட்ட சொற்கள் வழியாய்ச் சென்று செலவழியுமாயின், அப்பிராண சக்தியால் நிலைபெறும் இச்சரீரம் மிக விரைவிலே அழிந்தொழியும். அதுபற்றித் தான் ஔவையார் மிகைப்படக் கூறேல் என்று திருவாய் மலர்ந்தருளினார். யாரும் தாங் கருதிய பொருளைச் சுருக்கமாகச் சில சொல்லிற் கூறல் வேண்டுமே யல்லது விரிந்த சொற்களாற் கூறுதல் அவரது பிராணசக்தியை அழிப்ப தொன்றாய் முடியும். சொற் சுருங்கச் சுருங்க நாத தத்துவத்திலமைந்த பிராண சக்தியானது மிகுதிப்பட்டு இச் சரீரத்தை வலிபெறச் செய்து ஆன்ம ஞானத்தைச் சாலவும் மிகச் செய்யும். இது மூவகையணுக்களுக்கும் முறைமையால் விந்துஞானம் மேவினதில்லையாகில் விளங்கிய ஞானமின்றாம் ஓவிடவிந்து ஞானம் உதிப்பதோர் ஞானமுண்டேற் சேவுயிர் கொடியினான் றன்சேவடி சேரலாமே என்னுஞ் சிவஞானசித்தித் திருவாக்கான் இனிதுணரப் படும். இன்னும் எந்தநூல் சிலசொல்லிற் பலபொருள் அறிவுறுக் கின்றதோ அந்த நூல் தன்னைப்பயிலும் ஆன்மா வின் பிராண சக்தியினை மிகச் செய்யும். இது, மிகச் சுருங்கிய நூலைப் பயில்வோனுக்கு ஆழ்ந்த சிந்தனையும் இன்பமும் உண்டாதலும், மிகவிரிந்த நூலைப் பயில்வோனுக்குச் சிந்தனை யில்லாமல் இளைப்புண்டாதலும் பிரத்தியக்க மாகக் காண்டலின் சுருக்க மான நூலுக்கு விரிந்தநூல் சிறிதும் இணையாகமாட்டா தென்க. இதனாலன்றே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் திருவாய் மலர்ந்தருளிய தெய்வத் திருக்குறள் நூலைப் பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ என்று சிறந் தெடுத்து ஏனை எந்த நூலும் இதற்கு இணையாக மாட்டா தென்று தெளிவுபெற எடுத்தோதினார் என்க. ஆகவே, தம்கண்ணுள்ள பிராணசக்தியை மிகுவித்தற் பொருட்டுப் பிராணாயாமஞ் செய்யும் அறிஞர் பல சொற்கள் பலப்பலவாய்ப்பேசச் சிறிதும் இடந்தராமல் மௌனஞ் சாதித்தலும், யோகாப்பியாசஞ் செய்யுங் காலங் களிலெல்லாம் ஒரே சொல்லிற் றம்சிந்தனையை நிறுத்திப் பலகால் உச்சரித்துப் பிராணசக்தியை மிகுவித் தலுஞ் செய்து போதரு கின்றார். மேலும், ஒரேசொல்லிற் சிந்தனையை நிறுத்த நிறுத்த, ஒருவரை துறையின்றி ஓடிப் பலவிகாரப் பட்ட மனமானது அவ்விகாரத்தின் நீங்கிச் சாந்தமுற்று நிற்கும். அஃது அங்ஙனம் நிற்பவே ஆன்மாவின் கண்ணுள்ள பிராண சக்தியானது மனத்தின் வழியே பலமுகமாய் ஓடிச் செலவாகாமல் தடைப்பட்டு நின்று பெரும் பிரகாச முடைத்தாய்த் திகழும். மேலும், ஒரு சொல்லை நினைந்த வழி அதன்பொருளும், ஒரு பொருளை நினைந்தவழி அதன் சொல்லும் ஒன்றோடொன்று ஒன்றுமைப்பட்டுத் தோன்றக் காண்டலின், சிவ என்னும் பரம்பொருட்பெயரை இடை விடாதுச்சரிக்க உச்சரிக்க ஆன்ம அறிவு முழுதும் அதனிற் றோய்ந்து அதன்வயமாய்ப் பிரகாசிக்குமாகலின் பஞ்சாக்கர முதலிய மந்திரோச் சாரணம் யோகாப்பியாசஞ் செய்வார்க்கு இன்றியமையாது வேண்டப் படுவதாகும். இங்ஙனம் இடை விடாத மந்திரோச் சாரணத்தில் நிற்பவர் தூலரூபமான ஏனைமாயா காரியங்களின் வயப்பட்டு அறிவுமயங்காமல், சுத்த சூக்கும மான நாததத்துவத்தில் நிலைபெற்று நின்று எல்லா ஞானமும் ஒருங்கு விளங்கப் பெற்றாராய் வைகுவர். இஃது, ஓடிச்சென் றங்கே யொருபொருள் கண்டவர் நாடியி னுள்ளாக நாத மெழுப்புவர் தேடிச் சென் றங்கே தேனை முகந்துண்டு பாடியு ணின்ற பகைவரைக் கட்டுமே . என்னும் திருமந்திரத் திருவாக்கான் நன்கு தெளியப்படும். இனி இவ்வாறு மந்திரோச் சாரணத்தோடு கூடிய பிராணாயாமத்தை ஒருவன் இடைவிடாது பயிலப்பயில இடையில் விதியாலி ரேசித்துப் பூரித்தியல் பிற்கும்பித்து வடிவில் மதியந்தனை யெண்ணி வலத்தால் விடுகவலப்பாலின் அடையினியல் பாலிரேசித்துப் பூரித்த தனிற்கும்பித்துச் சுடரோடற்கருதி மதியின் விடிற்றூய் தாநாடி மும்மதியில் என்று கூறியவண்ணம் சரீரத்திலுள்ள எல்லா நரம்புக் குழாய்களும் இரத்தாசயங்களும் மூன்று மாதத்தில் மிகவுஞ் சுத்திகரிக்கப்படும். அங்ஙனஞ் சுத்திகரிக்கப்படவே தேக மானது விஷ திரவியங்களோடு கலவாமல் இலேசாய் நோயின்றி வயங்கும். பெருஞ்சாதனமான இத்தேகம் இங்ஙனம் சுத்தமாய் வயங்கவே இதனை ஒருபெருங் கருவியாகக் கொண்டு போதரும் ஆன்மாவானது அறிவுவிளக்கம் பெறும். அறிவு விளங்க விளங்க மூலாதாரத்திலுள்ள குண்டலிசக்தி எனப்படுகின்ற பிராண சக்தியானது மிக்கெழுந்து, ஆறாதாரங் களையும் ஊடுருவிக் கொண்டு தேக மத்தியத்தில் சுத்த அதிழ்தசத்தே நிரம்பி விளங்கும் சுழுமுனாநாடியினுள் நுழைந்து மேலேறிச் சென்று அந்நாடியினுச்சியில் வயங்கா நின்ற சந்திர மண்டில மெனப்படும். நாததத்துவத்தோடு ஒற்றுமைப்படும். இங்ஙனம் விந்துவும் நாதமும் ஒற்றுமை யுறுமாயின் ஆன்மா எல்லாக் கருவி கரணங்களும் சுழலப்பெற்ற சுத்தப் பேரானந்த நிலையிலே வைகிடும். இது விந்துவும் நாதமும் மேருவி லோங்கிடில் சந்தியிலான சமாதியிற் கூடிடும் அந்த மிலாத அறிவி னரும்பொருள் சுந்தரச் சோதியுந் தோன்றிடுந்தானே என்ற திருமந்திரத் திருவாக்கான் உணரப்படும். மேலும், அங்ஙனம் அக்கினி மயமாய் விளங்கும் விந்து தத்துவமானது அமிழ்தமயமான நாததத்துவத்தைச் சென்று பற்றுதலும், அஃது உருகித் தேகத்திலுள்ள சருவநாடிகளிலும் அமிழ்தம் சென்று பாயும். அவ்வமிழ்தத்தான் நிரப்பப்பட்ட சிவ யோகியின் சரீரத்தினுள், மணிக்கடல் யானை வார்குழல் மேகம் மணிவண்டு தும்பி வளைபேரிகை யாழ் தணிந்தெழு நாதங்க டாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லாற் பார்க்க வொண்ணாதே என்ற எல்லா அற்புத நாதங்களும் கேட்குமாகலின், அவர்சரீரம் சுத்த ஞானமயமாயே விளங்குமல்லது நம்ம னோர்க் குள்ள பிராகிருதசரீரம் போல்வதன்றாம். அவர் சரீரம் அவர் நினைந்த வாறெல்லாம் பூதாகாய பரமா காயங்களில் வரைவின்றி இயங்கும். இதுகண்டே சான்றோர், பசுகரணங்க ளெல்லாம் பதிகரணங்களாக வசிபெறு மடியார்க்காயின் மன்னிய ஒருமை தன்னால் இசையு மற்றவரி னான்றோர்க் கென்னுரை ஓம்புகென்னக் கசிவறு மனத்தினேனுங் கட்டுரைப்பது மாண்பன்றே என்று கூறினார். இனி அகத்தே இப்பிண்டத்தினுள் நடக்கும்பிராணா யாம யோகாப்பியாச முறையினையே எல்லாரும் இனிதறிந்து கொள்ளுதற்பொருட்டுப் புறத்தே இவ்வண்டத்தினுள்ளும் வைத்து ஆன்றோர் விளக்கி இருக்கின்றார். இவ்வண்டத்தில் மூலாதார தானமே திருவாரூராகும். இது, திருவள ராரூர் மூலந் திருவானைக் காவே நாபி மருவளர் பொழில்சூழ் அண்ணா மலைமணி பூர நீவிர் இருவருங் கண்ட மன்றம் இதயமாந் திருக்காளத்தி பொருவருங் கண்ட மாகும் புருவமத் தியமே காசி என்னுந் திருவாக்கால் தெளியப்படும். அத்திருவாரூரில் சோமாகந்த மூர்த்தமே சத்துச் சித்தானந்த உருவாய் விளங்கும் பரம்பொருளைக் குறிப்பதாகும். அச்சோமா கந்த மூர்த்தியின் பாதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாம்பின் உருவே, அச்சிவபரம் பொருளால் இயக்கப்படும் குண்டலி சத்தியாம். அக்குண்டலி என்னும் பிராண சக்தியினால் இயங்கிக் கூடமெடுத்துக் குடிபுக்க மங்கையர் ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம் நீடுவர் எண்விரற் கண்டிப்பர் நால்விரல் கூடிக் கொளிற்கோல அஞ்செழுத்தாமே என்ற வண்ணம் புறத்தே பன்னிரண்டங்குலம் பாய்ந்து அகத்தே எட்டங்குலம் ஓடிப் பிராணவாயு நடைபெறு கின்றது. சோமா கந்த திருநடனமும் பன்னிரண்டடி முன்னேறிப் போய் எட்டு அடி பின்னுக்கு வாங்கி நடைபெறுதலால், இத்திரு நடனம் அப் பிராணவாயு இயக்கத்தினையே குறிப்பிக்கின்றது. அச்சோமா கந்த மூர்த்தியினைத் தாங்கும் இருபக்கத்துத் தண்டுகளும் அப்பிராணவாயு வியங்கும் இடை பிங்கலை என்னும் இருநாடிகளைக் குறிக்கின்றன. மூலாதார தானத்தி லுள்ள திருவாரூரில் நடைபெறும் சோமாகந்ததிருநடனமே இயை புடைத்தாய்த் தோன்றுதலின், ஏனைத் தலங்களில் நடை பெறுவது அதனை Ãid¥ó.ட்Lj‰ பொருட்டுப் பயன் படுதலல்லது வேறு விசேடண முடைத்தன்றாம். இப் பெற்றித் தான பிராணாயாம வமைதி சோமாகந்த தரிசனஞ் செய்யுங் காலங்களிலும், பிறசமயங்களிலும் இடையறாது நினைவில் நிகழல்வேண்டும் என்க. இனி இதுகாறுங் கூறிய இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் என்னும் நால்வகை யோகாங்களும் ஹடயோக வித்தையின்பாற் படுவனவாகும். இந்நால்வகை யங்கங்களோடு கூடிய ஹடயோகத்தின் முடிபும், பிரத்தி யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் ஏனை நால் வகை யங்கங்களோடு கூடிய இராஜயோக முடிபும் தம்மில் ஒன்றேயாம். ஆயினும், இராஜயோகத்தின் முன்னதாகச் செயற்பாலது ஹடயோகாப்பி யாசமேயாம். ஒருசாரார் ஹடயோகாப்பியாசத்தை மிகவுங் கடினபதமாகவைத்து அப்பியசிக்கின்றனராகலின், அதுகண்ட பிறர் அதற்கஞ்சி அதனை அப்பியசியாமல் நெகிழவிடுகின்றார். ஹயோகாப்பி யாசம் அவரவர்சரீரவன்மை மென்மைகட்கு ஏற்பச்செயற் பாலதே யல்லது, ஒருவர் செய்வது போலவே மற்றொரு வருஞ் செயவேண்டுமென்பது நியதியன்றாம். இங்கே நம்மால் விளக்கப்பட்ட ஹடயோகாப்பியாச முறை யாவருஞ் சுலபமாகச் செயக்கூடியதாகலின், சரீரசுகம் பாதுகாத்து ஆன்ம ஞானத்தை விரிவுசெய்ய வேண்டுவார் எல்லாரும் இதனை அவசியம் செய்தல் வேண்டும். இனி ஹடயோகத்தின் பாற்படும் நால்வகை யங்கத் தினும் செல்லும் பிராணாயாமத் தூலமுறையுள்ளதாய் நிற்பப் பிரத்தியாகாரம் முதலான ஏனை இராஜயோக நால்வகையங் கத்தினுஞ் செல்லும் பிராணாயாமம் சூக்கும முறைஉள்ள தாம். ஹடயோகத்தின் பாலதாம் பிராணா யாமம் தூலமான பிராணவாயுவைத் தடுத்து அதிலுள்ள பிராணசக்தியினை உரிஞ்சி உடலுயிரில் ஏற்றுவதாகும். இராஜயோகத்தின் பாலதாம் பிராணாயாமம் சூக்குமமான மனத்தைத்தடுத்து அதிலுள்ள பிராணசக்தியினை உரிஞ்சி உடல் உயிர்களில் ஏற்றுவதாம். இனி இவற்றுள் பிரத்தியாகாரம் என்பது சுழுமுனா நாடியைப் பற்றிக் கொண்டிருக்கும் மூலாதாரம், சுவாதிட் டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்று சொல்லப் படுகின்ற ஆறிடங்களில் அறிவைப் பதித்தலாம். இவற்றுள் மூலாதாரம் என்பது குதத்திற்கும் குய்யத்திற்கும் இடையிலுள்ள தாகும். இது மூன்றுகோண வடிவுடைத்தாய் விளங்கும் இவ்விடத்திலுள்ள பிராணசக்தி பாம்பு மண்டலித் தாற்போலச் சுழல் சுழலாயிருக்கும் நரம்பைப் பற்றிக் கொண்டிருக்கின்றது. இதனையே குண்டலி என வழங்குவர். இக் குண்டலியே விந்து தத்துவமென்றும் இதுவே பிரணவ வுருவாமென்றும் அறிவு நூல்கள் கூறாநிற்கும். தமிழில் எழுதப்படுகின்ற ஓ என்னும் பிரணவவடிவு வட்டப் புள்ளியும் ஒருகோடும் உள்ளதாகும். இதனைப் பிள்ளையார் சுழியென்றுங் கூறுவர். இதுபோன்ற உருவுடைய பிராணி யானையே யாகலின், அவ்வியானை வடிவாக ஆண்டுக் கடவுளைத் தியானித்தல் வேண்டு மென்பது எல்லாச் சாத்திரங்களுக்கும் ஒப்பமுடிந்த தொன்றாம். இந்த விடத்திலே அறிவை நிறுத்தப் பெறுகின்ற வர்க்கு இறைவன் அருள்ஒளி வெளிப்பட்டுத் தோன்றி அவரோடு ஒற்றுமை யுற்று ஓருருவாய் நிற்குமென எருவிடும் வாசலிருவிரன் மேலே கருவிடும் வாச லிருவிரற் கீழே உருவிடு சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடு சோதி கலந்துநின் றானே என்னுந் திருமந்திரத் திருவாக்குக் கூறாநிற்கின்றது. இனிச் சுவாதிட்டானமென்பது இலிங்கமூலத்தின் கண்ண தாயுள்ளது. இனி மணிபூரகமென்பது நாபித்தானத்தின் கண்ணுள்ளது. இனி அனாகதம் என்பது இதயத்தானத்தின் கண்ணுள் ளது. இவ்விடத்தே கீழ்நோக்கிய வடிவாய்த் தொங்கும் தாமரை யொன்றுளது. அத்தாமரை முகுளத்தினுள்ளே அதிசூக்குமமான பரமாகாயமொன் றுள்ளது. அவ்வாகாயத் தினிடையிலே அங்குட்ட மாத்திரையனாகப் பரம சைதன்னியப் பிழம்பானது சோதிவடிவாய்த் துலங்குகின்றது. அப்பர மாகாயம் சுத்த ஞான வுருவினதாம். அப் பரமாகாயத்தினிடை விளங்கும் சைதன்னிய அசைவே அச்சைதன்னியத் தின் ஆனந்த தாண்டவமாம். இங்ஙனம் அகத்தே பிண்டத்தினுட் காணுமாறே புறத்தே அண்டத் தினுஞ் சிதம்பரத்திற் காணப் படும். சிதம்பரமென்பது ஞானாகாயமாம். அந்த ஞானா காயத்திற் பிரமவொளியின் அசைவே நடராஜமூர்த்தியின் திருநடனமாம். இத்திரு நடனத்தை அகத்தும் புறத்தும் ஒருங்கு காணப்பெறுவார்க்கு எல்லாத் துன்பங்களும் நீங்கப் பெறுதலோடு சிவானந்தப் பெரும்பே றெய்தல் நிச்சயமாம். நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம்வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்துந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே என்னுந் திருமந்திரத்துட் காண்க. இந்தத் தியானமே சாந்தோக்கிய உபநிடதத்தில் தகரோபாசனை என்று சிறந் தெடுத்துக் கூறப்பட்டது. இனி விசுத்தி என்பது கண்டத்தானத் துள்ளதாகும். இனி ஆஞ்ஞை என்பது புருவமத்தியத்திலுள்ளதாகும். இடர், பிங்கலா என்னும் இருநாடிகளுங் கூடுமிடத்தே இஃதுள்ள தென்றும், இவ்விடத்தே கண்போன்றதோர் உறுப்பு வுள்ள தென்றும், அவ்வுறுப்புத்திறக்கப்படின் அதன்கண் உலக நிகழ்ச்சிகளெல்லாம் ஒருங்கே விளங்கப் பெறும் என்றும் சாத்திரங்கள் விதிக்கின்றன. இனித்தாரணை என்பது பிருதிவிதத்துவத்தை இதயத் தினும், ஜலதத்துவத்தைக் கண்டத்தினும், அக்கினி தத்துவத்தை உண்ணாக்கினும், வாயு தத்துவத்தைப் புருவ மத்தியத்தினும், ஆகாயதத்துவத்தை பிரமரந்திரத்தினும் நிறுத்தி உண்ணோக்கு தலாம். இனித் தியானமென்பது கண், நாக்கு, மூக்கு என்னும் மூன்றிடத்தும் இடைவிடாது சிந்தையை நிறுத்துதலாம். இது கண்ணாக்குமூக்குச் செவிஞானக் கூட்டத்துப் பண்ணாக்கி நின்ற பழம்பொரு ளொன்றுண்டு அண்ணாக்கினுள்ளே யகண்டவொளிகாட்டிப் புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே என்பதனால் அறியற்பாலதாம். இனிச் சமாதி என்பது பிரமரந்திரத்தின் கண்ணதான நாத தத்துவத்திலே விந்து தத்துவமானது சென்று பொருந்த ஆன்மாச் சிவத்தோடு அத்துவிதவியைபுற்றுநின்று ஆனந்த மெய்துதலாம். இது விந்துவு நாதமு மேருவி லோங்கிடிற் சந்தியி லான சமாதியிற் கூடிடும் அந்தமில்லாத அறிவி னரும்பொருள் சுந்தரச்சோதியுந் தோன்றிடுந்தானே என்பதனானும், அட்டாங்கயோகமுமா தா ரமாறும் அவத்தையைந்தும் விட்டேறிப் போனவெளி தனிலேவியப்பொன்று கண்டேன் வட்டாகிச் செம்மதிப்பாலூற லுண்டுமகிழ்ந்திருக்க எட்டாத பேரின்பமென்னை விழுங்கியிருக்கின்றதே. என்பதனாலும் தெளியற்பாலதாம். ஓம் திருச்சிற்றம்பலம் பக்தியோகம் அன்புஞ் சிவமு மிரண்டென்ப ரறிவிலார் அன்பே சிவமாவ தியாரு மறிகிலார் அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே அன்பென்பது ஆன்மாவுக்கு அனுபவ மாத்திரை யாயுள்ள உள்ள நெகிழ்ச்சி, காந்தக் கல்லிற் காணப்படாது மறைந்து கிடந்த ஆகருஷண சத்தியானது இருப்பூசியைக் கண்ட துணை யானே புலப்பட்டுத் தோன்றுதல் போலவும், பசுவின் சரீரத்தே வியாபகமாய் மறைந்து நின்ற அமுத சத்துக்கள் கன்றைக் காண்டலும் ஒருங்கு திரண்டு பாலாய்ச் சுரந்து ஒழுகுதல் போலவும், யாண்டும் விரிந்து விளங்குகின்ற சூரியோஷ்ணம் சூரிய காந்தக் கல்லிலே கட்புலனாய் வெளிப் பட்டுத் தோன்றுதல் போலவும் ஆன்மாவின் உண்மைக் குணமாய்க் கரந்துநின்ற அன்பானது தான் வெளிப்படுதற் குரிய சாதனம் வாய்த்த வளவானே தானும் வெளிப்பட்டு நின்று பிரகாசிப்பதாகும். இனி இவ்வன்பைத் தோற்றுவிப்பதி யாதோவெனின்;- அன்பே அன்பைத் தோற்றுவிப்பதாகும். பச்சை விறகைத் தீயிலிட்டால் அவ்விறகின் கண்ணுள்ள ஈரமும் தீயும் தம்மில் மாறுபட்ட சுபாவமுடையனவாகையால் அவை யொன்றோ டொன்று பொருந்த மாட்டா. மடமானையுங் கொடும் புலியையும் ஓரிடத்துக் கூட்டினால் அவை தம்மில் மாறுபட்ட தன்மை யுடையனவாகையால் அவையும் ஒன்றோ டொன்று பொருந்த மாட்டா. மற்றுக் காய்ந்த விறகையும் தீயையும் ஒன்று சேர்த்த வழி அவையிரண்டும் ஒற்றுமைப்படுத்தல் போலவும், மானும் மானும் ஒன்று சேர்க்கப்பட்ட வழி அவையிரண்டும் ஒன்றுபடுதல் போலவும் அன்பும் அன்புமே ஒன்றுபடுமாகலின் அன்பே அன்பைத் தோற்றுவிக்கும் எனப்படுமாயிற்று. எம்மிடத்து உண்மை யன்புடைய எம் நேசரைக் கண்டவிடத்து எமக்கும் அன்பு நிகழப் பெற்றதன்றோ? எம்மிடத் தன்பில்லா தெம்மை வெறுப்பாரைக் கண்டவிடத்து எமக்கும் வெறுப்பு நிகழப்பெற்றதன்றோ? இங்ஙனம் அன்புடையராதற்கு அன்புடையார் கூட்டுறவும் அஃதில்லாராதற்கு அஃதில்லாரது கூட்டுறவும் அனுகூலமாய் நிற்றலினாலன்றோ தெய்வப் புலமை திருவள்ளுவனார். நிலத்தியல் பானீர் திரிந்தற் றாகுமாந்தர்க் கினத்தியல் பதாகு மறிவு (குறள் 452) என்றும் மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலமே மாப் புடைத்து (குறள் 458) என்றும் திருவாய் மலர்ந்தருளினார். அன்பே பழுத் தொழுகும் நல்லாரது இணக்கம் நம்மை அன்பிலே நிலைபெறச் செய்வதொன்றாகையால் அஃதொன்றே நம்மால் வேண்டற் பாலதாம். இஃது அற்புத வைராக்கிய சுத்த சிவஞான சிரேட்ட வள்ளலாரான பட்டினத்துப் பிள்ளையார். நல்லாரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே யல்லாதுவேறு நிலையுளதோ வகமும் பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே என்று அருளிச் செய்தமையானும் நன்கு விளங்கும். எனவே, அன்பினைத் தோற்றுவிப்பதற்கு அவ்வன்பினை யுடையாரது நேசம் இன்றியமையாது வேண்டப்படுவதொன்றாம். இனி அன்பென்பதொரு குணம். குணம் யாண்டுந் தனித்து நில்லாதாகலின் அஃதறிவுடைய ஆன்மாக்களி டத்தே இயற்கையே யமைந்து கிடப்பதாம். ஆகவே அறிவுள்ள விடத்தெல்லாம் அன்பு முடனிகழுமென்பதூஉம் பெறப் படும். அறிவில்லாவிடத்து அன்பு நிகழமாட்டா தென்பதற்கு வெகுண்டோன் மாட்டுங் கள்ளுண்டு களித்து மயங்கினோன் மாட்டும் அன்பு நிகழப்பெறாமையே உறுஞ் சான்றாம். அற்றேல், அறிவில்லாத பசு தன்கன்றைக் காண்டலும் பேரன்புடைத்தாய் அதனை நாவால் வருடுத லென்னை யெனின் :- அதற்கு அறிவில்லை யென்று சொல்லு தலடாது, மக்களிடத்து மிக முதிர்ச்சியுற்றுத் தோன்றும் பகுத்தறிவே விலங்குகளிடத்துக் குறைந்த நிலையில் நிற்கு மாகலானும், அவ்வாறில்லையாயின் அது தன் கன்றையும் தன் எசமானனையும் அறியமாட்டாதாகலானும் அதற்கும் பகுத்தறிவுண் டென்பது தேற்றமேயாம். அற்றாயின், மிருகங்களிடத்துத் தோன்றும் அன்பிற்கும் மக்களிடத்துத் தோன்றும் அன்பிற்கும் பேதமென்னையெனின்; மிருகங் களிடத்து அறிவு நிகழுங்காலஞ் சிறிதும் அறியாமை நிகழுங் காலம் பெரிதுமாகலின் அச்சிற்றறிவைப் பற்றிக்கொண்டு தோன்றும் அன்பு அற்ப நேரமே நின்று பின் அழியும்; மற்று மக்களிடத்து அறிவு நிகழுங் காலம் பெரிதும் அறியாமை நிகழுங் காலஞ் சிறிது மாயிருத்தலின் அப்பேரறிவைப் பற்றிக்கொண்டு தோன்றும் அன்பும் பெருங்காலம் நிலை பெறுவதாம். அற்றேல், அறிவு அறியாமை என்னும் இரண்டும் தம்மில் மாறுபட்ட இருகுணங்களாகலின் இவை யிரண்டும் ஓரான்மாவிலே யிருத்தல் யாங்ஙனம் பொருந்து மெனின்; - அற்றன்று, அறிவுதான் ஆன்மாவின் குணமாகு மன்றி ஏனை அறியாமை அதன் குணமாதல் சிறிதுமில்லை. அவ்வறியாமைக் குணத்தைச் செய்யும் ஆணவம் என்னும் மலம் அநாதி தொட்டு ஆன்ம அறிவைப் பொதிந்து கொண்டிருத்தலின் அதற்கு அஃதுண்டா யிற்றே யல்லது, அஃது ஆன்மாவிற்கு இயற்கைக் குணமன்றென்பது கடைப்பிடித்தல் வேண்டும். இங்கு மக்களாய்ப் பிறந்தோ ரெல்லாரும் ஒருதிறப்பட்ட அறிவறி யாமையுடையராகாது பல திறப்பட்ட அறிவறியாமை யுடையரா யிருப்பக் காண்கின் றாம். ஒருகலாசாலையில் ஒருவகுப்பிற் படிக்கும் பிள்ளைகள் ஒரேதன்மையான அறிவுடையராகாது ஏற்றத்தாழ்வான அறிவுடையராயிருப்பது நிதரிசனமாய்க் காணப்பட்ட தொன்றாம். இவ்வாறு ஒருவர் மிக்க அறிவும் ஒருவர் குறைந்த அறிவும் உடையராக ஒருவர் அதுதானும் இல்லாராய் நிற்றற்குக் காரணம் என்னை யென்று நுணுகி நோக்கும்வழி ஆன்மாக்களுக் கியற்கைக் குணமான அறிவு விளங்க வொட்டாவாறு தடைசெய்தும் சிறிது விளங்கு மாறு அத்தடை நீங்கியும் உடனின்று ஆவரித்து வருகின்ற ஆணவமலம் ஒன்று உண்டென்று இனிது பெறப்படும். இனி இவ்வாணவமலம் ஆன்மாவிற்கு ஒருகுணமாய் நிற்குமெனின் அஃதான்மாவை எக்காலத்தும் விட்டு நீங்காதாகலின் அதற்கு அறிவுண்டாகாமை வேண்டும், மற்று அதன்கண் அறிவு சிறிதுசிறிதே தோன்றக்காண்டலின் ஆணவம் ஆன்மகுணமாக மாட்டா தென்பதூஉம், அஃதொரு காலத் தான்மாவை வந்துபற்றிற்றெனின் சடப் பொருளாகிய வது அறிவுப்பொருளாகிய ஆன்மாவை வந்து பற்றுதல் பொருந்தாமையானும், ஆன்மாவே அதனைப் பற்றிய தெனின் இன்பக்கடலான சிவபரம் பொருளைப் பற்றுத லொழிந்து துன்பக்கடலான ஆணவத்தை அறிவுடைய ஆன்மாப் பற்றியதென்றல் ஒரு சிறிதும் ஏலாமை யானும், இறைவனே அவ்விரண்டனையும் ஒருங்கு பொருந்த வைத்தானெனின் அஃதவன் இறைமைக்கும் நடுவு நிலைமைக்கும் இழுக்காமாத லானும் பாரிசேடத்தால் அஃதான்மாவின்கண் இயற்கையே பொருந்திக் கிடக்கு மென்பதூஉம் நன்கு துணியப்படும். இது சித்தாந்த பரமா சாரியரான மெய்கண்டதேவர், நெல்லிற் குமியும் நிகழ் செம்பினிற் களிம்புஞ் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்ம மன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அவர்சோகஞ் செய்கமலத்தாம் என்றருளிச்செய்த வாற்றானும் தெளியப்படும். எனவே, அறியாமையைச் செய்யும் ஆணவம் ஆன்மாவில் உடனிற்பது பற்றியே நம்மனோர்பால் அறியாமை நிகழப் பெறுகின்றதே யல்லது அஃதான்மாவின் குணமாதல் செல்லாமையின் அவ்வறியாமை அறிவு என்னு மிரண்டும் இரு வேறு பொருட் குணங்களாதல் பெறப்பட்டது; ஆகவே அவை யிரண்டும் ஆன்மாவிற்கே உரியவென்று வினாவுதல் போலியா மென்றொழிக. அது கிடக்க. இனி இவ்வறியாமை யென்னும் அழுக்கு ஆன்மாவை விட்டு ஒழியுமாறி யாங்ஙனமெனின்;- களிம்பு ஏறிய பாத்திரத்தைச் சாம்பலும் புளியுமிட்டுத் துலக்கத் துலக்க அதன்கண் உள்ள அக்களிம்பெல்லாம் நீங்கி அது பெரும் பிரகாசமாய் விளங்குதல்போல ஆணவக்களிம்பேறிய ஆன்மாவை மாயை கன்மமென்னும் வேறிருமலங்களோடும் சேர்த்துத் தேய்க்கத் தேய்க்க அதன்கண் உள்ள அவ்வாணவ மலமுங் கழிந்து ஆன்மாச் சுத்தசொயம்பிரகாசமாய் விளங்கப் பெறும். மாயையின் காரியமான இவ்வுடம்பே ஆன்மாவின் இயற்கையறிவை எழுப்பி ஆணவகாரியமான அறியாமையைப் போக்குகின்றது. ஆணவம் ஆன்ம அறிவை மறைப்பது; மாயை அதன் அறிவை எழுப்புவது; ஆணவம் கண்ணை மறைக்கும் இருள் போல்வது; மாயை அக்கண்ணை விளக்கும் விளக்கம்போல்வது, இது சித்தாந்த குரவர் மாயா தனுவிளக்கா மற்றுள்ளங் காணாதேல் ஆயாதா மொன்றை யதுவதுவா -- வீயாது வன்னிதனைத் தன்னுண் மறைத்தொன்றாங் காட்டம்போல் தன்னைமல மன்றணைத றான் என்றருளிச் செய்தவாற்றாலறியப்படும். இனி ஆணவவழுக்கைப்போக்குவதற்கு மாயை என்னும் பிறிதோரழுக்கு வேண்டிற் றென்னையெனின்;- அழுக்கே அழுக்கைப் போக்குவதென்னு முண்மை பிரத்தி யக்கமாகக் காணப்படுவதாம். அழுக்கேறிய ஆடையிலுள்ள கறை போக்குதற் பொருட்டு வண்ணான் உழமண் முதலியன சேர்த்து ஆடையொலித்துப் பரிசுத்தஞ் செய்தல் கண்டா மாகலின் ஆணவக்கறையை விடுவிப்பதற்குமாயை யின்றுணை இன்றி யமையாது வேண்டப்படும். இது பற்றியன்றே, எழுமுடல் கரணமாதி யிவைமல மலமலத்தாற் கழுவுவனென்று சொன்ன காரணமென்னை யென்னிற் செழுநவை யறுவைசாணி யுவர்செறிவுத் தழுக்கை முழுவதுங் கழிப்பன்மாயை கொடுமல மொழிப்பன் முன்னோன் என்னுந் திருவாக்கு மெழுந்தது. இனி இங்ஙனம் ஆணவக்கறையை நீக்கிக் கொள்வதற்கு ஒரு பெருஞ் சாதனமாக இறைவனாற்றரப்பட்ட இச்சரீரம் இல்லையாயின் ஆன்மாக்கள் ஒருவர் ஒருவரைக்கூடி அறிவுடையராய் அதனான் அன்பு நிகழப்பெற்று இன்ப மெய்துதல் செல்லாது. ஆன்மாக்களுக்குச் சரீரங்கள் தரப்பட்டமையாலன்றோ ஒருவர் ஏனை யொருவரோடு கூடி அளவளாவப் பெறுகின்றனர். இருளைக் கண்டால் விளங்கப் பெறாதகண் ஒளியைக் கண்டதுணையானே விளங்குதல் போல ஆணவத்தால் அறிவு விளங்காத ஆன்மா இவ்வுடம்பு வாயிலாக ஏனையோ ரறிவுடையாரைக் கண்ட மாத்திரை யானே அறிவு விளங்கப் பெறுகின்றது. இவ்வாறு அவ்வறிவு முதிர முதிர அம் முதிர்ச்சியிலே அன்பு சுரக்கின்றது. இப்படி யெல்லாஞ் சரீரம் பந்தத்தால் அறிவுமுதிர்ச்சியும் அன்பு விளைவும் நிகழல் பற்றியே பரிமேலழகியாருந் திருக்குற ளுரையிலே அன்பெனப்படுவது இயைபுடையார் மாட்டுத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி என்றுரை கூறினார். இனி இயைபுடையார் மாட்டுத் தோன்றுஞ் சம்பந்தம் வாயிலாக அன்பு முறைமுறையே நிகழப் பெறுமாற்றை விளக்குவாம். யாம் பச்சைப் பசுங்குழவியா யிருந்த பருவத்திலே எம்மைக் கருணை ததும்பவெடுத்துப் பாலூட்டிய எம் அம்மையை யறிந்தறிந்து அவளிடத்து அன்புடைய மாயினேம். அதன்பின் பிள்ளையாய் வளர்ந்த பருவத்திலே எமக்கு வேண்டும் ஆடையணிகலங் களெல்லாம் அணிவித்துக் கல்வி பயிற்றுதற்கு வேண்டுஞ் சாதனங்க ளெல்லாம் செய்வித்து உபகாரம் ஆற்றிவந்த தந்தையின் கருணைத் திறத்தை யறிந்தறிந்து அவன்பால் அன்பு நிகழப் பெறுவேமாயினேம். அதன்பின் கலாசாலையிலே வாலிபப் பருவத்தில் அறிவுநூல் பலவும் விளங்கப் போதித்துவரும் ஆசிரியரது பெருங்கருணைத் திறத்தை அறிந்து வியந்து அவர்மாட்டு அன்புடையமாயினேம்; பின்னும் அப் பவருத்திலே பயன்சிறிதுங் குறியாது எம்மோடு தோழமை கொண்டநண்பர் தம் அன்பின் திறத்தை உணர்ந் துணர்ந்து அவர்மாட்டு அன்பு நிகழப்பெற்றேம்; பின்னும் அப் பருவத்திலே ஒரு நன்மடந்தையை மணஞ்செய்துகொண்டு அவள் எம்பால் இடையறாது வைத்தொழுகுங் காதற் கிழமையினை நினைந்து நினைந்து அவள்பால் அன்புடைய மாயினேம்; பின் இவற்றின்மேல் எம்தளர்நடைப்புதல்வர் மழலைச் சொற்கேட்டும் அவர் பொன்மேனி தீண்டியும் அவர் ஆம்பற் செவ்வாய் முத்தங்கொண்டும் ஆராவன்பு டைய மாயினேம், ஏனையோர் மாட்டுச் செல்லும் அன்பைக் காட்டினும் புதல்வர்பாற் செல்லும் அன்பே நிரம்பவும் பரிசுத்த முடைத்தாம். மற்றையோரிடத்து ஒவ்வோர் பயன்பெறுதலால் அவர்பால் அன்பு நிகழப்பெறுவதாகப் புதல்வர்பால் மாத்திரம் பயன் சிறிதுங் குறையாத சுத்த வன்பு தோன்றுகின்றமையின் அதுவே ஏனை எல்லாவற்றினுஞ் சிறப்புடையதாகின்றது. மேலும் சிறுமகார் காமவெகுளி மயக்கம் தோன்றாப் பருவத்தினராகலின் அவர் சுத்த சிவசொரூபமுடையராவர். அவர்பால் நிகழ்த்து மன்பு சிவன்பால் நிகழ்த்து மன்பே யாதல் ஒருதலை, ஈதுணர்ந்த ஆன்றோரும், படைப்புப்ல படைத்துப் பலரோடுண்ணும் உடைப்பெருஞ் செல்வராயினு மிடைப்படக் குறுகுறு நடந்துசிறுகைநீட்டி இட்டுந்தொட்டுங் கௌவி யுந்துழந்தும் நெய்யுடையடி சில்மெய்படத் திமிர்ந்தும் மயக்குறு மக்களையில்லோர்க்குப் பயக்குறையில்லைத் தாம் வாழுநாளே எனவும் பொன்னுடையரேனும் புகழுடையரேனுமற் றென்னுடையரேனு முடையரோ--இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய் மக்களை யிங்கில்லாதவர் சொன்னகலையின் றுறையனைத்துந் தோய்ந்தாலு மென்ன பயனுடைத்தா மின்முகத்து--முன்னங் குறுகுதலைக் கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வாய்ச் சிறுகுதலைக் கேளாச் செவி எனவும் பெறுமவற்றுள் யாமறிவதில்லை யறிவறிந்த மக்கட் பேறல்ல பிற எனவும் அருளிச் செய்வாராயினர். இங்ஙனம் புதல்வர்மேற் செல்லுமன்பு மிகச் சிறந்தமையாலன்றோ உலகத்தா ரெல்லார்க்கும் அன்பு விளைவிப்பான் வேண்டி நம் பெருமான் ஞானசம்பந்தன் மூன்று வயதுக் குழந்தையாய் வந்து சைவ சித்தாந்தம் விளக்கி யருளினான். இவ்வாறு இயைபுடையார் மாட்டுத் தோன்றும் அன்பு முறையே முதிருந்தோறும், அறிவும் மேலு மேலும்மிக்க விளங்கு மாகலின் அவ்வறிவால் முன்பு அன்பு செயப்பட்டா ரெல்லாரும் நிலையின்றி யழிந்துபோஞ் சரீரத்திற் றோன்றியும் மறைந்துபோகுஞ் சிற்றறிவுஞ் சிறிதொழிலுமு டைய சாமானிய ஆன்மாக்களென்று கழித்து, இவ்வான் மாக்களை எல்லாம் அறிவித்துப், பேருபகாரம் புரிந்து வருகின்றவனான முழு முதற்சிவ பரம்பொருளொருவனே நம்மால் அன்பு செயப் படுதற் குரியானென்று கண்டு அவன் மாட்டே அன்பு நிகழ்த்துவார். ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற பேருஞ்சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளுஞ் சீருஞ்சதமல்ல செல்வஞ்சதமல்ல தேசத்திலே யாருஞ்சதமல்ல நின்றாள்சதங் கச்சியேகம்பனே என்றதிருவாக்கு மிதற்குச் சான்றாம். எல்லாம்வல்ல இறைவன் மாட்டு அன்பு நிகழ்த்தவே, முன்பு தன்னோ டியைபுடையா ரிடத்து மாத்திரம் அன்புசெய்து மற்றை யோரிடத்து அன்பின்றியொழுகிய ஒழுக்கம் மாறி எல்லா ஆன்மாக்களையும் அவ்விறைவன் உருவாகக்கண்டு அவ்வெல் லாரிடத்துங் கரைகடந்த அன்புடையராயிருப்பர். ஏனை யோர் மாட்டு அன்புசிறிதே நிகழல்போலாகாது, காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதருகனியாய் அன்பேயுருவாய்க் கொண்டு விளங்கும் சிவபிரான் மாட்டு அன்பு நிகழப்பெறின் அவ்வன்பு அவனால் வியாபிக்கப் பட்ட எல்லாப் பொருளி னுஞ் செல்லுமென்ப துணர்ந்தே அன்பே யுருவான மாணிக்க வாசகப் பெருமான் தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ என்று திருவாய் மலர்ந்தருளுவாராயினார். தினைத்தனையேயுள்ள மலரிற் சுரக்குந்தேன் அத்தினை யளவிலுஞ் சிறிதாயிருப்பதாகலின் அதனை நாவிலிட்டுச் சுவைத்தால் அது மிகுந்த இனிமைதராது. பனைத்துணை யாகப் பருத்த கருப்பங்கட்டியை உடைத்துடைத்துண்டால் அதுபேரினிமை பயக்கும். உலகத்திலுள்ள சருவ ஆன்மாக்க ளிடத்தும் தனித்தனியே விளங்கும் அன்பு மிகச் சிறிதாகலின் அவரோடு மாத்திரம் சம்பந்தப்படுவார்க்கு வரும் அன்புஞ் சிறிதாகவே யிருக்கும். ஒரு பொன் வள்ளத்தில் நிறைத்த அமிழ்தம் அவ்வள்ளத்தின் அளவேயிருக்குமல்லது அதன் மேற்படாது; ஒரு பெரும் பொற் கடாரத்திலே நிறைத்த அமிழ்தம் அப்பொற் கடாரத்தினளவாய்ப் பெரிதாகவே யிருக்கும். இது போல, ஏகதேச அறிவும் ஏகதேச வியாபகமு முடைய ஆன்மாக்களிடத்து நிரம்பிய அன்பு சிறிதாகவும், வியாபக அறிவும் வியாபக இருப்புமுடைய சருவேசுரன்பால் நிறைந்த அன்பு வரையறை யின்றிப் பெரிதாகவும் இருப்பன வாம். ஆகவே, சிற்றறிவால்வருஞ் சிற்றின்பத்தை வெறுத்துப் பேரறிவால் வரும் பேரின்பத்தை விரும்பி அப்பேரின் பத்தைத்தர வல்லனான சிவபிரான் மாட்டு இடையறாத நேசமுடையராய் ஒழுகுதலே உயிர்களுக்கு இன்றி யமையாப் பெருங்கடமையாம். இவ்வுண்மையினையே தினைத்தனை என்னும் மேலைத் திருவாக்கு வற்புறுத்துவதாயிற்று. இத்தனையுங் கூறிய வாற்றால் ஆன்மாக்களிடத்துள்ள அன்பின் நிலையுஞ் சருவேசுரனி டத்துள்ள அன்பினிலையும் விளக்கப்பட்டன. இனி அளவால் வேறுபடினுந் தன்மையால் ஒன்றே யாகலின் ஆன்மாவின் அன்பினிலைக்குஞ் சருவேசுர னன்பினிலைக்கும் பேதமென்னையெனின், - இறைவன்கண் ணுள்ள அன்பு என்றுந் தானே பிரகாசிப்பதாம் பிறிதொன்ற னையும் பிரகாசிக்கச் செய்வதாம். ஆன்மாவின்கண்ணுள்ள அன்பு தானே பிரகாசிக்க மாட்டாதாம், பிறிதொன்று பிரகாசிப்பித்தாற் பிரகாசிக்கு மியல்பினை யுடைத்தாம். கண் தன்னியற்கையிலே ஒளியுடையதாயினும் இருளிற் பொருள் களைக் காணமாட்டாது, பின் அவ்விருள் நீங்கிக் கதிரொளி தோன்றியக்கால் அக்கதிரொளியாற் றன்னொளி விளங்கப் பெற்றுப் பொருள்களையும் அக்கதி ரொளியினையும் ஒருங்கு காணும் மற்றுக் கதிரொளியோ தானே விளங்கு தலன்றியும் கண்ணொளியையும் விளக்குவதாம். இது போல் இறைவ னொளியான அன்பும் தானேயும் விளங்கிப் பிறிதொன்ற னையும் விளக்காநிற்ப ஆன்ம வொளியான அன்பு தானே விளங்கமாட்டாதாய் அவ்விறைவனொளி விளக்க விளங்கும் இயல்பிற்றாம். அருளுண்டா மீசற் கதுசத்தி யன்றே அருளுமவனன்றி யில்லை--அருளின் றவனன்றே யில்லை யருட் கண்ணார் கண்ணுக் கிரவிபோ னிற்குமர னேய்ந்து என்னுந் திருவாக்கு மிதற்குச் சான்றாம். ஆகவே, கண்ணொளிபோன்ற ஆன்ம அன்பும் கதிரொளி போன்ற ஈசுரனன்புந் தம்முட் டன்மையினாலும் பேதமுடைத் தாதல் தெற்றெனத் துணியப்படும். இனிச் சூரியன் தன்னைநோக்கியவழிக் கதிரோனெ னவும் தன் ஒளியை நோக்கியவழிக் கதிரெனவும் இருவேறு வகையான் வழங்கப் படுமாயினும் அவை யிரண்டுங் குணகுணிக ளாகலின் ஒன்றேயாதல் போல, இறைவன் தன்னை நோக்கிய வழிச் சிவமெனவும் தன்னன்பை நோக்கிய வழிச் சத்தி யெனவும் இருவேறு வகையான் வழங்கப் படுமாயினும் சிவமுஞ் சத்தியும் குணகுணிக ளாதலின் ஒன்றேயாய் நிலைபெறும். இதனைப் பொன்னிறங் கட்டியினும் பூணினு நின்றாற்போ லந்நிற மண்ணலு மம்பிகையுஞ்-- செந்நிறத்த ளெந்நிறத்த ளாயிருப்ப ளெங்கள் சிவபதியு மந்நிறத்த னாயிருப்பனாங்கு எனவும் சத்தியுஞ் சிவமுமாய் தன்மையிவ் வுலக மெல்லாம் ஒத்தொவ்வா வாணும் பெண்ணு முயர்குண குணியுமாக வைத்தன னவளால் வந்த வாக்கமிவ் வாழ்க்கையெல்லாம் இத்தையு மறியார் பீடலிங்கத்தி னியல்பு மோரார் எனவும் சித்தாந்தச்செல்வர் தெருட்டின ரென்க. இவ்வுண்மை தேறாதார் சத்தி வேறு சிவம் வேறெனத் தாம்வேண்டிய வாறெல்லாங் கொண்டு இடர்ப்படுவராகலின் அவர்க்கு அறிவுகொளுத்தல் வேண்டிப் பிரதமத்திலெடுத்துக் கொண்ட அன்புஞ் சிவமு மிரண்டென்ப ரறிவிலா ரன்பே சிவமாவ தியாரு மறிகிலார் என்னுந் திருவாக்கு அக்குணகுணி பாவ ஒருமையினை நன்கு வலியுறுத்துவ தாயிற்று என்க. இனிச் சிவமுஞ் சிவசத்தியான அன்பும் ஒன்றேயாத லன்றியும் ஆன்மசத்தியும் அச்சிவசத்தியும் ஒன்றேயா மென்பதூஉம் அன்பே சிவமாவதியாரு மறிகலார் என்னும் அம்மேலைத் திருவாக்கினாலறி வுறுத்தப்படுகின்றது. யாங்ஙன மெனிற் கூறுதும். கதிரொளியை யின்றிக் கண்ணொளி விளங்கமாட்டாமைபோலச் சிவசத்தியை யின்றி ஆன்மசத்தி விளங்கமாட்டா தென்பது மேலே பெறப்பட்டமையின் அவ்வான்ம சத்தியினோடு ஒருங்கி யைந்து நின்று விளக்குஞ் சிவசத்தியும் அதனான் விளக்க மெய்தும் ஆன்மசத்தியும் இயைபினா லொன்றேயாதல் பற்றி அன்பே சிவமாவது என்று திருவாய் மலர்ந்தருளினார். கண்ணுங் கதிரும் பொருட்டன்மையால் வேறேயாயினும், கண்ணொன்றைக் காணும்வழிக் கதிரொளி உடனின்று காட்டுதலின் அவை யிரண்டும் ஒருமையுற்று நிற்கின்றன. அங்ஙனமாயினுங் கண் கண்ணே கதிர்கதிரேயாம்; கண் கதிராகாது கதிர் கண்ணா காது; ஆயினும் கதிர் கண்ணாயும் அதனின் வேறாயும் நிற்கும். அதுபோலச் சிவனுஞ் சீவனும் பொருட்டன்மையால் வேறேயாயினும், சீவன் ஒன்றை விடயிக்கும்வழிச் சிவசத்தி சிவசத்தியை யுடனின்று விளக்கு தலின் அவை யிரண்டும் ஒருமையுற்று நிற்கின்றன; அங்ஙனம் நிற்பினுஞ் சிவன் சிவனே சீவன் சீவனே; சிவன் சீவனாகான், சீவன் சிவனா கான்; ஆயினுஞ் சிவன் சீவனாயும் அவனின் வேறுமாயும் நிற்கும் பெற்றியா னென்க. இங்ஙனம் சிவசத்தி ஆன்ம சத்தியோடு பேத மாதலுமின்றி அபேதமாதலுமின்றித் துவிதமாதலு மின்றி ஏகமாதலுமின்றி இரண்டற நிற்றல் பற்றியே என்னும் உபநிடத வாக்கியங்க ளெழுந்தன. சிவஞான சித்தியும் உலகெலா மாகி வேறா யுடனுமா யொளியா யோங்கி அலகிலா வுயிர்கள் கன்மத் தாணையி னமர்ந்துசெல்லத் தலைவனா யிவற்றின் றன்மை தனக்கெய்த லின்றித் தானே நிலவுசீ ரமலனாகி நின்றன னீங்காதெங்கும் என்றிவ் வியல்பை நன்கெடுத்து விளக்கியது. இவ்வுண்மை யுணராத ஏகான்ம வாதிகள் அத்துவித மென்பதற்கு ஒன்றென்று பொருள் கொண்டு பிரமம் ஒன்றேயுள்ள தெனவும் இரண்டாவதொரு பொருளில்லையெனவுந் தமக்குத் தோன்றியவா றெல்லா முரைப்பர். ஒன்றென்னும் பொருளை யுணர்த்துதற்கு ஏகம் என்னுஞ் சொல்லுண்டாக லின் மீட்டும தனை உணர்த்துதற்கு அத்துவிதமென மேலு மொருசொல் வேண்டல் மிகைப்படக் கூறுதல் என்னுங் குற்றமாம்; மற்று அத்துவித மென்னுஞ் சொல்லின் உண்மைப் பொருளியா தென்பார்க்கு ஒன்றை உணர்த்துதற்கு ஏகமெனுஞ் சொல்லும் இரண்டை உணர்த்துவதற்குத் துவிதமெனுஞ் சொல்லுங் காணக் கிடத்தலால் அத்து விதம் என்பது இவையிரண்டின் வேறான பொருளுடைத் தாதல் நன்கு விளங்கும். சிவம் உயிர்வேறு தான்வேறெனத் துவிதமாய் நில்லாமலும், சிவம் வேறு பொருளின்றித் தான் ஒன்றேயாய் நில்லாமலும் என்றும் உலகுயிர்களோடு ஒன்றும் இரண்டு மாகாத ஓர் அற்புத இயைபுற்று நிற்றலின் அவ்வற்புத இயைபைக் குறிக்கவே அத்துவிதம் என்னுஞ் சொற்பிரயோகங் காணப் படுவதாயிற்று. எனவே அத்து விதம் என்னுஞ் சொற்பொருள் ஒன்றும் இரண்டுமாகாத இரண்டன்மை என்பதேயாகும். ஆகவே, பொருட்டன் மையால் வேறே யாயினுங் கலப்பால் ஒன்றேயாய் நிற்கும் அத்துவித இயைபு பற்றிச் சிவசத்தியும் அதனான் வியாபிக்கப்பட்ட ஆன்மசத்தியும் ஒன்றென அன்பே சிவமாவதியாரு மறிகிலார் என்பதனான் வற்புறுத் தருளினார் என்க. இனி ஆன்மா ஆணவமலவயப்பட்டு அறிவிழந்து கிடக்கின்ற பெத்தக் காலத்தும் சிவசிற்சத்தி உடனின் றுபகரித்து வருமாயின் அதனை அது தெரிந்து கொள்ளாமை என்னையெனின்;- சூரியனெதிரிலே நின்றாலுங் குருட்டுக் கண் அச்சூரியனையும் ஏனைப் பொருள்களையுங் காண மாட்டாதவாறு போல், ஆணவமலத்தாற் கவிக்கப்பட்ட ஆன்மாவும் தன்னோடுடனின் றுபகரித்துவருகின்ற சிவ சத்தியைக் காணமாட்டாதாகும். கண்ணிற் காண்டற்குரிய ஆற்றலிருப்பினும் அது மேகபடலத்தாற் கவரப்பட்டிருத் தலின் கதிரொளியினாற் பயனெய்தா தாகின்றது. மற்று அப்படல நோய் பழுத்து முதிர்ந்தவுடன் பரிகாரி கருவி கொண்டு அப்படலத்தை உரித்தெடுக்கப் பின் அக் கண்ணொளி கதிரொளியைப்பற்றிக் கொண்டு விரிந்து விளங்குதல் போல இறைவனும் மாயையென்னுங் கருவி கொண்டு ஆணவமலத்தின் முதிர்ந்த பக்குவங் கண்டு அதனைச் சேதித்த துணையானே ஆன்மாவில் முன் உடனின்ற சிவசத்தியின் பிரேரகத்தைப் பெறாதுகிடந்த ஆன்மசத்தி தலைப்பட்டெழுந்து அதனைப் பெற்றுக்கொள்ளும். இது அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க் கிருட்கண்ணே பாசத்தார்க் கீசன் -- அருட்கண்ணாற் பாசத்தை நீக்கும் பகலலர்த்துந் தாமரைபோல் நேசத்திற் றன்னுணர்ந்தார் நேர் என்னுஞ் சிவஞான போதத் திருவாக்கான் நன்கு விளக்கப்பட்டமை காண்க. இனி அவ்வாணவத்தின் வேறாய்ப்பிரிந்த ஆன்மசத்தி சிவசத்தியோ டொருமித்து நின்றவழி அவையிரண்டும் ஒன்றாய்ப் போகுமென்றுரையாமோவெனின்; உரையாம். பெத்தத்தில் நின்றவாறே முத்தியினும் ஆன்மாச் சிவத்தோடு அத்துவித இயைபுற்று நிற்குமே யல்லது தன்முதலிழந்து போமாறு சிறிதுமில்லை என்க. இஃது ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதஞ் சாருநா ளெந்நாளோ என்ற தாயுமான சுவாமிகள் திருவாக்கானுந் துணியப்படும். அற்றேல், பெத்த நிலைக்கும் முத்தி நிலைக்கும் வேறுபாடு என்னையெனின்; பெத்தத்தில் ஆன்மாவின் அறிவுசெயல் களெல்லாம் ஆணவ வயப்பட்டுத் தோன்றும்; முத்தியில் அவையெல்லாம் சிவசத்தி வயப்பட்டு விளங்கும், அதுபற்றி ஆன்மா ஒருமுதலன்றா யொழித லில்லையாம். இரவின்கண் விளங்கித் தோன்றுகின்ற நட்சத்திர கணங்கள் சூரியன் றோன்றுதலும் தம் ஒளிமழுங்கி விளங்காவாயினும் அவை பகற்காலத்து முண்டென்பது நிச்சயிக்கப் படுதல்போலப், பெத்தக் காலத்து விளங்கிய ஆன்ம அறிவுசெயல்கள் முத்தியில் இறைவ னொளியான் விழுங்கப் பட்டு விளங்கா வாயினும் ஆண்டும் அவையுண்டென்பது துணிபேயாம். வெய்யோ னொளியி லொடுங்கி விளங்காது வெய்யோனை யாகாத மீன்போல -- மெய்யவனிற் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனுங் கண்டுடனாய் மன்னுதலைக் காண் என்ற சிவஞானபோதத் திருவாக்கிதனையே புலப்படுத்து வதாகும். ஆகவே, பெத்தநிலை முத்தி நிலை யிரண்டினும் ஆன்மா வொருதனி முதலாய் உண்டென்பது பெறப் படுமென்க. இனி அன்பே சிவமாவதி யாருமறிந்தபின் என்றத னால் அன்பே சுத்தசிவ சொரூபமாகு மென்பதூஉம், ஏனை யான்மாக்க ளெல்லாரிடத்தும் விளங்கப் பெறும்அன்பும் அவற்றோடு உடனின்றுபகரித்து விளக்கி வருகின்ற சுத்த சிவசத்தியே யாகுமென்பதூஉம் கடைப்பிடித்தல் வேண்டு மென வற்புறுத்தவாறாயிற்று. இவ்வுண்மையை அறிவார்க்கன்றி ஏனையோர்க்குச் சிவமாய் அமர்ந்திருக்கும் முத்தி நிலைவாய்ப்பது கூடாதா கலின் அறிந்தபின் என்று விசேடித்துக்கூறினார். எனவே, ஞானத்தாலன்றிப்பக்தி உண்டாதல் இல்லை யென்பதூஉம் இதனாற் பெறப்படுவதாகும். வேனிற்காலத்து வெப்பத்தால் வருந்தி விடாய்த்துச் செல்கின்றான் ஒருவன் பழக்குலை மிகுதியுமுடைய கொடி முந்திரிப் பந்தரின் கீழ் இருப்பினும், அப்பழம் உண்ணப்படுவதெனவும் அதன் இனிய இரசம் நீர்வேட்கையைத் தணித்துத் தேகாரோக்கியத்தைத் தருவதெனவும் அறியாதவனாயின் அதனாற் பயன்பெறாது வருந்திக்கிடப்பன். அதுபோலத் தன் மாட்டுள்ள அன்பென் னுங் குணம் சிவசத்தியோடு இயைந்து நிற்றலினாலே சுத்த சிவ சொரூபமாகும் என்றுணர்ந்து ஞான விசாரணை யினா லறிந்தாலல்லது அவனுக்குப் பத்தியோகானுபவம் சிறிதும் உண்டாகாது. அன்பு சிவசொரூப மாதலை ஞானவிசாரணை யினால் உணராத ஆன்மாக்கள் எத்தனை கோடி கோடியாகச் சுத்த உலகப் பெருஞ் சேற்றில் விழுந்து புரண்டு மக்கள் யாக்கையாற் பெறும்பயனை இழந்து போகின்றனர்! நாடோறும் பொருள் தொகுப்பதற்கென்றே அவர்கள் படும் பாட்டையும் அவர்கள் மிருகங்கள் போலஉண்டு உறங்கிக் கழிதலையுங் கண்டு அவர்க்கிரங்கி ஞானோபதேசம் செய்ய முந்தும் பெரியார் பேருரைகளையும் அவர் கடைப்பிடியாது வறிதாக்குகின்றனர்! அந்தோ! இனிப் பக்தி நிகழ்தற்கு ஞானம் ஏதுவாதலை உணராதார் சிலர் ஞானமேமுத்தி என்பார். ஞானம் என்பது ஒன்றனை அறியும் ஆராய்ச்சி அறிவாம். பக்தி என்பது அங்ஙனம் அறிந்ததனை அனுபவித்துநிற்கும் நிலையாம். திராட்சப்பழம் நிரம்பச் சுவை உள்ளதெனவும் அதனை உண்டாற் களை தீருமெனவும் அறிந்த அறிவுஒன்று; அங்ஙனம் அறிந்தபின் அப்பழத்தைப் பறித்துச் சுவைத்து இன்புற்றிருந்த நிலை பிறிதொன்று, திராட்சப்பழத்தை அறிந்த அறிவே, அதனை உண்டால் விளையும் இனிமையைப் பயவாது. அது போல, அன்பு சிவசொரூபம் என்றறிந்த ஞான உணர்ச்சி பின் பக்தியைப் பயப்பதற்கு ஓர் ஏதுவாகு மேயல்லது அவ்வுணர்ச்சியே பக்திநிலையாதல் ஒருவாற் றானும் பெறப்படுவதில்லை என்க. ஆதலால் ஞானமே முத்தியாமென்பார் கூற்றுப் பொருந் தாதென மறுக்க. அற்றேல், ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர் என்றும் ஞானத்தால் வீடென்ற நான்மறைகள் புராணம் நல்லவாகமஞ் சொல்ல என்றும் போந்த திருவாக்கின் கருத்தென்னை யெனின்; சிவனடியைச் சேர்தல் பக்தியும் அதனைப் பயப்பதற்கு ஏதுவாவது ஞானமும் ஆகும்; என்பது தெற்றெனப் புலப்படுத்தற் பொருட்டே ஞானமே சிவனடி என்று உரையாமல் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர் என்று கூறினார். ஞானத்தால் வீடு என்புழியும் வீட்டினை அடைதற்கு ஞானம் ஏதுவாமென்பதே பொருள். இனி ஏனை ஒருசாரார் ஞானமின்றியும் பக்தி நிகழு மென்று உரைப்பார். மேலே காட்டிய திராட்சப்பழ வுவமையில் வைத்து அது பொருந்தாமை தெளியப்பட்ட தாகலின் அவர் உரை வழுவுரையா மென்க. அற்றேல், கண்ணப்பநாயனார் முதலியோர் பால் ஞானமின்றியும் பக்தி நிகழக்கண்ட தென்னையெனின்; அவர்க்கு முன் உண்டான பிறவி யிலெல்லாம் ஞானத்துறையிற்படிந்து அதன்கண் எல்லை கண்ட அவரது தூய ஆன்மசக்தியானது அந்த ஞானத்தின் பெரும்பயனாய்ப்பழுத்த மெய்ப்பக்தி நிலை வசப்பட்டு அவ்வண்ணமாய் நின்றதாகலின் அவ்வாறு அப்பக்தி மாத்திரமே அவர்பால் நிகழ்வதாயிற்றென்க. இனி அன்பேசிவமா யமர்ந்திருந்தாரே என்றது அப்பத்தி நிலையிலுண்டாம் அனுபவத்தைத் தெரித்தது. உயிர் தன்னை அன்பென்னுஞ்சிவசத்தியுருவாய்க்கண்டவழி. அவ்வுயிர்தான் இதுகாறும் ஆன்மா, சீவன் எனப் பெயர் பெற்று நின்ற நிலைகழன்று அப்பெயர் பெறுதற்கு உரியதன்றாய்ச் சிவம் என்னும் பெயர்பெற்று அச் சிவமேயாய் நிற்பதாயிற்று. அற்றேல், உயிர் என்று ஒருதனி முதல் ஆண்டு இல்லை போலுமெனின்;-- அற்றன்று, உள்ளதொரு பொருள் இல்லாத சூனியப் பொருளாதல் யாண்டும் இல்லை யென்னுஞ் சற்காரியவாதம் கடைப் பிடித்துரைக்குஞ் சைவ சித்தாந்தத் திற்கு அஃது அடாதென் றொழிக. உயிர் ஆண்டு உளதாயினும் அது சிவசத்தியான் விழுங்கப்பட்டுச் சுத்த சிவவுருவாய் நிற்குமாகலின் ஆண்டதனை வேறுள்ளதுபோலவும், சீவத்துவ முடையது போலவும் வைத்து ஆன்மாவெனக் கூறுதல் இழுக்காமென்க. இது பற்றியன்றே ஆசிரியர் திருமூலர், உரையற் தொன்றை உரைசெயுமூமர்காள் கரையற்றதொன்றைக் கரைகாணலாகுமோ திரையற்றநீர்போற் சிந்தை தெளிவார்க்குப் புரையற்றிருந்தான் புரிசடையோனே என்று திருவாய்மலர்ந்தருளினார். இம்மெய்ப்பக்தி நிலையி லுண்டாம் சிவானுபவ வுண்மை அவ்வனுபவத்தின் கண் ஒன்றுபட்டு நின்ற மாணிக்க வாசக சுவாமிகள், வான்கெட்டுமாருதமாய்ந் தழனீர்மண் கெடினுந் தான் கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக் கூன்கெட்டுயிர் கெட்டுணர்வு கெட்டென்னுள்ளமும்போய் நான்கெட்டவாபாடித் தெள்ளேணங்கொட்டாமோ அவமாயதே வரவகதி யிலழுந்தாமே பவமாயங்காத்தென்னை யாண்டு கொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாமொழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ முத்திநெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறியறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலமறுவித்துச் சிவமாக்கியெனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவாரச் சோவே என்று திருவாய்மலர்ந்தருளிய அருமைத் திருவாக்குகளால் அறிவுறுத்தப் பட்டமை காண்க. - ஓம் - உ திருச்சிற்றம்பலம் பிரணவ இரகசியம் பிரணவம் என்பது எல்லாச் சத்தங்களுக்கும் மூலமாய்த் தோன்றும் இயற்கை நாதமாம். இதழ் நா பல் அன்னங்களின் செயற்கையாற் பலதிறப் பட்டுத் தோன்றும் மற்றை எழுத்தோசைகள் போலாது, உலகத்தியற்கையாய் எழுந்து அவ்வோசைகள் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாய் முன் நிற்பதாகலின் பிரணவ ஓசை கழிபெருஞ் சிறப்புடைய தாயிற்றென்க. காதில் வைத்தறியக் கிடந்த வழிப் பிறந்த சங்கோசையும், கரை மருங்கு நின்றவழி அறியக் கிடந்த கடலோசையும் ஓ வென ஓலமிட்டிரைதல் காணப்படுத லால் இஃதொன்றுமே உலகத்தியற்கையாய்ப் பிறக்கும் இயற்கை நாதமென்பது பெறப்படும். இனி உலகத்துச் செயற்கையாற் றோன்றும் உயிரு மெய்யுமாகிய விகார ஒலிகளெல்லாம் புறத்தே தோன்றும் அறிவில்லாத உலக இயற் பொருள்களையும் அகத்தே ஆன்மாவின்கண் உண்டாம் உணர்வுவேறுபாடு களையும் தெரிவிப்பனவாம். ஆகையால், அவ்விகார ஒலி வழிப்பட்டு நடைபெறும் ஆன்ம அறிவானது அவ்விகார ஒலிகளோடு ஒற்றுமைப்பட்டு அறிவுக்குக் கோசரமாகும் பல திறப்பட்ட சேதனா சேதனப் பொருள் வயப்பட்டு நின்று தானும் பலமுகமாய் விரிந்து விகாரப்படுகின்றது. இதனால், ஆன்ம அறிவுக்குப் புலனாய்த் தோன்றுவன் வெறுஞ் சத்தரூபமாய் விளங்குஞ் சத்தப் பிரவஞ்சமும், குணங்கள் திரண்ட வெறும் பொருள்மாத்திரையாய் விளங்கும் அர்த்தப் பிரவஞ்சமும் என இரண்டாமென்பதூஉம் இவை யிரண்டனுள் அர்த்தப் பிரவஞ்சத்தை அறிவுபற்றியவழி அதனோடு இயைபுற்றிருக் குஞ் சத்தப் பிரபஞ்சமும், சத்தப் பிரபஞ்சத்தை அறிவு பற்றியவழி அதனோடு ஓர் இயைபுற்றிருக்கும் அர்த்தப் பிரபஞ்சமும் உடன்றோன்று மென்பதூஉம் இனிது பெறப் படுனவாம். இது தெங்கு, மா, பலா, பனை என்றற் றொடக்கத்துப் பொருள்களை நினைந்தவழி அவற்றை அறிவிக்கும் சொற்களும், அச்சொற்களை நினைந்தவழி அவற்றால் அறிவிக்கப்படும் அப்பொருள்களும் உடன் றோன்றுதலில் வைத்துக் கண்கூடாய் அறியப்படும். ஆரியவேதோபநிடத நூலாராய்ச்சியினும் மேனாட்டுத் தத்துவநூ லாராய்ச்சியினும் மிக வல்லவராய் விளங்கிய மாக் மூலபண்டிதரும் இவ்வுண்மையை இனி தறிந்து ஒரு சொல்லை நினையுங்கால் அதன் பொருளும் ஒரு பொருளை நினையுங்கால் அதன் சொல்லும் பிரிவின்றி ஒருங்கே உள்ளத்தில் தோன்றுமென்று நன்கு விளக்கி ஒருநூல் எழுதினார். ஆகவே, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பஞ்சேந்திரிய வழிச்சென்று பொருள்களைப் பற்றும் மனமானது அங்ஙனம் பற்றுதலால் ஆன்ம அறிவைப் பலவாறு விகாரப்படுத்தி அவ்வறிவை விரிந்து விளங்க ஒட்டாது அதன் ஆற்றலை இழப்பித்தலால், அம்மன ஓட்டத்தை ஒடுக்கவேண்டுவானுக்கு அவ்வர்த்தப் பிரபஞ் சத்தை ஓவாது நினைப்பிக்குஞ் சத்தப் பிரபஞ்சத்துட் பட்ட பலதிறப்பட்ட விகார ஒலி வழியே அறிவு செல்லா வாறு மறித்துச் சுத்தநாத மயமாய் விளங்கும் பிரணவ ஒலியிலே அதனை நிறுத்துதலே செயற்பாலதாம். தாயு மானச் செல்வரும், காடுங்கரையு மனக்குரங்கு கால்விட்டோட என்று இவ்வுண்மைமைய இனிது விளக்கி யருளினார். இனி இப்பிரணவ ஒலி சமட்டியும் வியட்டியுமாம் ஈரியல்பு முடைத்து. இதுதன்னை நோக்கியவழித் தான் இயற்கையின் எழும் ஓரொலியாய் நிற்றலிற் சமட்டி ரூபமும், பலவேறு வகைப் பட்ட மற்றை எல்லா ஒலிகளும் தோன்று தற்குத் தான் இடந்தந்து தானும் அவற்றுள் வியாபித்துப் பலவாய் நிற்றலின் வியட்டி ரூபமும் கொண்டு விளங்கா நிற்கின்றது. இதனை, ஓமெனு மோங்காரத் துள்ளே யொருமொழி ஓமெனு மோங்காரத் துள்ளே யுருவரும் ஓமெனு மோங்காரத் துள்ளே பலபேதம் ஓமெனு மோங்கார மொண்முத்தி சித்தியே என்று திருமூல மகா யோகிகளும் இனிதெடுத்தருளிச் செய்தனர். இனி இவ்வோங்காரமாகிய பிரணவ வுருவே சிவந்தன க்குரிய உருவாகலின் அவ்வுருவம் ஒன்றுமாய்ப் பலவுமாய் நிற்றற்கு ஏற்ப அச்சிவமும் ஒன்றுமாய்ப் பலவுமாய் நிற்கு மென்க. இதனையே தாயுமானவர் மேற்காட்டிய திருவாக்கில் ஒன்றாய்ப் பலவாய் உயிர்க்குயிராய் ஆடுங் கருணைப் பரஞ்சோதி என்று வைத்து விளக்கினார். நடராசப் பெருமானின் சகளமங்கள அருட்கோல இயல் பினை உற்றறியும் வழி இவ்வுண்மை நன்கறியக் கிடக்கும். நடராசப் பெருமானைச் சூழ்ந்து விளங்குந் திருவாசியே ஓங்காரமான பிரணவ உருவாகும்; அத்திருவாசியி னிடையே பஞ்ச கிருத்திய ஆனந்த நடனம் புரியும் நடராசப் பெருமானே அப்பிரணவ அருமைத் திருமேனியின்கண் உருத்துத் தோன்றும் இறைவனாவன்; இது ஓங்காரமே நற்றிருவாசி யுற்றதனின் நீங்கா வெழுத்தே நிறைசுடராம்-- ஆங்காரம் அற்றாரறிவ ரரனம்பலத்தா னாடலிது பெற்றார் பிறப்பற்றார் பின் என்னுந் திருவாக்கானும் அறியப்படும். நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் என்ற திருவாசகச் சுருதியின் படி ஒன்றுமாய்ப் பலவுமாய் நிற்கும் சிவமும், அச்சிவத்தோடு ஒற்றுமையுற்று அவ்வாறே ஒன்றுமாய்ப் பலவுமாய் நிற்கும் பிரணவமுந் தம்முள் அங்காங்கி பாவமாய் ஒன்றுபட்டு விளங்கலால், அச் சிவத்தால் இயக்கப்படுகின்ற பிரணவம் தான் எல்லா ஓசைகளையும் தன்கண் அடக்கிக்கொண்டு நிற்பதென்பது அதன் வியட்டி ரூபத்தை உற்றாராய வல்லார்க்கெல்லாம் நன்கு விளங்கும். ஓம் என்னும் இப்பிரணவ ஓசையானது அ, உ, ம் என்னும் மூன்றோசைகளைத் தன்னுள் அடக்கி நிற்ப தாகும். ஒருவன் மூடியிருந்த வாயைத் திறந்த மாத்திரை யினாலே அகர வோசை பிறவா நிற்கின்றது; அங்ஙனம் பிறந்த அவ்வோசை யானது இரண்டிதழையுங் குவிக்கு முயற்சியாற் சிறிது விகார முறுத்தப்படுதலின் உகரந் தோன்றுகின்றது; அங்ஙனஞ் சிறிது விகார முறுத்தப்பட்டு நின்ற அவ்வோசை பின்னும் வாயை மூடும் வழி ஒட்டும் இதழ் முயற்சியால் மகரம் தோன்றுகின்றது. இனி இவ்வாறு அகரம் பிறந்து உகரம் தோன்றுதற்கு இடையே நாவின் றொழிலால் இகரம் பிறப்பதாகலின் அ, உ, ம் என்னும் இவ்வோசைகட்கு இடையே இகரம் மறைவாய் உண்டென்பது அமுங்கி அமுங்கி தமிழ் தமிழ் என இகரம் உகரமாய் உச்சரிக்கப்படுமாற்றால் இனிது பெறப்படும். இனி இவ்வகரத்தின் நீட்டமே ஆகாரமும் இகரத்தின் நீட்டமே ஈகாரமும் உகரத்தின் நீட்டமே ஊகாரமுமாம். இனி இவ்வகரமும் இகரமும் புணர்தலால் எகரமும், இதன் நீட்டம் ஏகாரமும், அகரமும் உகரமும் புணர்தலால் ஒகரமும் இதன் நீட்டம் ஓகாரமும், அகர இகர யகரங்கள் புணர்தலால் ஐகாரமும், அ உ வகரங்கள் புணர்தலால் ஔகாரமுமாக எல்லா உயிரெழுத்துக்களும் பிறந்தன. இனி அரை மாத்திரை யளவாய் ஒலிக்கும் மகர ஒற்றொலி குழந்தைப் பருவத் தெல்லார்க்கும் இயற்கையிற் றோன்றுவதாகலின் அஃது ஏனை எல்லா மெய்யெழுத்துக் களுந் தோன்றுதற்குக் காரணமாம். இனி இப்பிரணவத்தின்கண் விரவி ஒலிக்கும் அ, உ, ம் எனும் அம்மூன்றோசைகளும் சிருட்டி திதிசங்காரம் என்னும் மூன்று கிருத்தியங்களையும் அறிவிப்பனவாம். அகரம் முதன்முதற் றோன்று கின்ற ஒலியாகலின் அது சிருட்டி யினை உணர்த்துவதாகும்; உகரம் அங்ஙனந்தோன்றிய ஓசை சிறிது விகாரமுற்று நிலைபெறுவதாகலின் அது திதியினை உணர்த்துவதாகும். மகரம் முன்றோன்றிய அவ்வோசை ஒடுங்குவதாகலின் அது சங்காரத்தை உணர்த்துவதாகும்; ஆகவே, சிருட்டித் தொழிற்குரிய பிரமாவும் திதிக்குரிய திருமாலும் சங்காரத்திற்குரிய உருத்திரனும் எனும் மூவேறு சத்திகளுடைய மூன்று சத்தர்களும், இனி அம்மூன்றக் கரங்களுந் தோன்றுதற்கு நிலைக்களனான விந்துநாதம் என்னும் இரண்டு தத்துவங்களுக்கும் உரியரான மகேசுர சதாசிவரும் ஆகிய பஞ்சமூர்த்திகளும் இப்பிரணவ மந்திர உறையுளில் வதிதருவரென்க. எண்ணில வோங்காரத் தீசர் சதாசிவமாம் நண்ணிய விந்துவொடு நாதத்துக்--கண்ணிற் பகரயன்மா லோடு பரமனதி தெய்வம் அகர வுகரம் மகரத்தாம் என்பதிதற்குப் பிரமாணம். இனி விந்துவும் நாதமும் என்னும் இரண்டும் அம்மற்றை மூன்றக்கரங்களுக்கும் நிலைக்களனாவது யாங்ஙனமெனின்;-- விந்து என்பது அசேதனப் பிரபஞ்சங் கள் அனைத்திற்குங் காரணமாகிய சுத்த மாயையாம். இஃது அருவாய்த் தன் கீழுள்ள எல்லாத் தத்துவ புவனங்களையும் வியாபித்துக் கொண்டு புள்ளி வடிவினதாய் விளங்கும். இச் சுத்தமாயையினை உள்ளிருந்து இயக்கும் இறைவனருட்சத்தி யினால், இதன்கண் ஓர் இயக்கம் உண்டாம். இப்புள்ளி இயங்கும் போது உண்டாவது ஓர் ஓசையாகலின் அவ் வோசையே நாத தத்துவமாகும். அப்புள்ளி இயங்குங் காலத்து நீள உண்டாம் வடிவு வரி வடிவாகலின் அந்நாத தத்துவத்திற்குரிய வடிவு வரிவடிவேயாம். ஆங்கிலத்திற் பீசகணித சாத்திரம் வல்லாரும் புள்ளியென்பது அறிவாற் குறிக்கப்படுவதே யல்லது தான் ஒரு பரிமாண மில்லாத தென்றும், வரியென்பது அப்புள்ளியின் இயக்கமே யல்லது அகலங்கனம் முதலிய பரிமாண மில்லாத தென்றுங் கூறினார். ஆகையால், அருவாய் அறிவால் மாத்திரங் குறிக்கப் படுகின்ற தன்மை யுடையதாகலின் சுத்தமாயை புள்ளி வடிவினதென்றும், அதன் இயக்கமாகிய நாதம் வரிவடிவின தென்றும் சித்தாந்த நூல்கள் கூறினமை பெரிதும் பொருத்தமே யாம் என்க. இனி இவ்வியட்டிப் பிரணவத்தின் கண்ணவான அ, உ, ம் என்னும் மூன்றக் கரங்களில் அகரமே விந்து வடிவாகிய புள்ளியாகும், உகரமே அவ்விந்துவின் இயக்கமான நாதத்தின் வரிவடி வாகும்; அவ்வரிவடிவின் கடைப் புள்ளியே மகரமாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ச் சிலாசாதனங்களில் அகரம் புள்ளி வடிவாகவும் உகரம் வரிவடிவாகவும் மகரம் பகரத்தினுட் புள்ளிவடிவாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. மகரம் பகரத்தினுட் புள்ளிவடிவாய் நிற்கு மென்பதை ஆசிரியர் நச்சினார்க் கினியருந் தொல்காப்பிய எழுத்ததிகார வுரையிலே இனிது விளக்கினார். இனித்தனிமெய் யெழுத்துக்க ளெல்லாம் தலையிற் புள்ளிபெற்று நிற்கு மென்றும், அவை அகர வுயிரோடு புணர்ந்தவழி அப்புள்ளி அவற்றுள் மறையு மென்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் புள்ளி விட்டவ் வொடு முன்னுரு வாகியும், ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தும் என விளக்கியருளினமையானும் அகரம் புள்ளி வடிவினதென்பதும், அப்புள்ளி தனி ஒற்றெழுத்துக் களினின்றும் வேறு பிரிந்து தனியே நிற்கும் வழியே அம் மெய்யெழுத்துக்கள் தனி ஒற்றுக்களென்று வழங்கப்படு மென்பதும், அப்புள்ளியோடு சேர்ந்து நின்ற வழி அவை உயிர் மெய்யென வழங்கப்படு மென்பதும் நன்கு தெளியப்படும். ஆகையால், புள்ளிவடிவாகிய விந்து தத்துவமும் வரி வடிவாகிய நாத தத்துவமும் அம்மூன்றக் கரங்களுக்கும் நிலைக்களமா மென்க. இங்ஙனம் இதன் வியட்டி ரூபத்தைக் காணுமிடத்து இப்பிரணவமொழி எல்லா ஓசைகளும் பிறத்தற் கிடனாய்ச் சத்தப் பிரபஞ்ச மனைத்திற்குங் காரணமாய் நிற்றல் இனிதறியப்படுகின்றது. இனி இப்பிரணவம் அர்த்தப் பிரபஞ்சத்திற்குங் காரணமாம். விந்து தத்துவ மெனப்படும் வட்டமான சுத்த மாயையை அதனுட் கலந்துநின்ற திருவருட் சத்தியானது கலக்கிய மாத்திரையினாலே அதன்கண் ஒரு சுழன்ற இயக்கமுண்டாம். இச்சுத்தமாயை இங்ஙனஞ் சுழன்ற இயக்க முடைத்தாய் நிற்கும் அவசரத்தினையே குண்டலி யென்று வழங்குவர். இவ்வாறதன்கண் உண்டாம் அச்சுழன்ற இயக்கத்தால் அம்மாயையின் அணுக்கள் அலையலையாய் எழுந்து ஒன்றை ஒன்று தாக்குதலின் ஒரு நாதமுண்டாம். தயிரை மத்திட்டுச் சுழற்றிக் கடைந்தவழி அதனிற் றிரண்டெழுந்த மதுரமான வெண்ணெய்போல அச்சுத்த மாயையின் கீழ் உள்ள அதோ மாயை அந்நாதத்தாற் கடையப்பட்டுத் தன்கண்உள்ள அணுக்களெல்லாம் ஒன்றோ டொன்று ஒட்டிப் பிரகிருதி மாயையையும் அதன்கண் இவ்வித அண்ட பேதங்களையும் உற்பத்தியாக்கின. ஒரு தட்டிலே மிக நுண்ணிய பொடிகளைப் பரப்பு அற்புதமாக இயற்றின இயந்திர சகாயத்தால் ஒரு குழல்வழியை ஓர் ஒலியைப் போக்கினால் அவ்வொலி அத்தட்டின்கண் உள்ள பொடியிற்படிந்து அதனைப் பலவேறுருவுடையதாக்கும் உண்மையினை ஆங்கில தத்துவ சாத்திரிகளும் கண்டறிந் துரைக்கின்றனர். எனவே, விந்து வென்னுஞ் சுத்த மாயையில் உண்டாம் நாதமே இப்பிரபஞ்ச சிருட்டிக்கு ஏதுவாவதாம். இனி இச்சத்தத்தி னோடு ஒருமித்து உடன் நிகழும் அக்கினியே இப்பிரபஞ்சங் களைத் திரும்பவும் தத்தங் காரணங்களுள் ஒடுக்கிச் சங்கார கிருத்தியத்தை இயற்று வதாகும். இம்முறையினை நடராசப் பெருமான் திருவுருவ அமைதிகளே நன்கு விளக்கும். நடராசப் பெருமான் திருக்கரத் தமர்ந்திருக்கும் வட்டமான தமருகவாயே சுத்தமாயையாம். அத்தமருகத்திற்றாக்கும் பெருமான் திருக்கர விரல்களே சுத்தமாயையைக் கலக்கும் திருவருட் சத்தியாம். அங்ஙனந் தாக்கிய வழி அத்தமருகத்திற்றோன்றிய நாதமே பிரபஞ்ச சிருட்டிக்கு ஏதுவாவதாம். அங்ஙனஞ் சிருட்டிக்கப் பட்ட பிரபஞ்சஞ் சிலகால் நிலைபெறும் வண்ணஞ் செய்வதே அமைத்த திருகரத்தின் கிரியையாம்; இனிப் பெருமான் மற்றொரு கரத்தில் அமைத்த அக்கினியே அந்நாத தத்துவத் தோடு ஒன்றுபட்டுத் தோன்றிப் பிரபஞ்சங்களைச் சங்கரிக்கும் அக்கினி தத்துவமாம். பௌதிக சாத்திர பண்டிதர்களும் அக்கினி பொருள்களின் அணு ஆகருஷண சத்தியைக் குறைத்து அவற்றை அழிக்கு மென்பர். இவ்வுண்மைகளெல்லாம், பூமலிகற்பகப்புத் தேள் வைப்பும் நாமநீர் வரைப்பின் நானிலவளாகமும் ஏனையபுவனும் எண்ணீங் குயிருந் தானே வகுத்ததுன் தமருக்கரமே தனித்தனி வகுத்த சராசரப்பகுதி யனைத்தையுங்காப்பதுன்னமைத் தகைத்தலமே தோற்றுபுநின்றவத்தொல்லுலகடங்கலும் மாற்றுவதாரழலமைத்ததோர் கரமே ஈட்டிய வினைப்பயனெவற்றையு மறைத்து நின் றூட்டுவதாகு நின்னூன்றிய பதமே அடுத்தவின்னுயிர்கட்கு அளவில் பேரின்பங் கொடுப்பது முதல்வநின் குஞ்சிதபதமே என்று குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்தவாற்றால் நன்கு விளங்கும். இங்ஙனம் நாதபிந்து வடிவமாகிய பிரணவம் அர்த்தப் பிரபஞ்சத்துள் இவ்வண்ட சரீரத்தின் சிருட்டி திதிசங் காரங்களுக்குக் காரணமா யிருத்தல் போலவே, இப்பிண்ட சரீரத்திற்குங் காரணமாய் நிற்பதாகும். இந்தப் பிண்ட சரீரத்தில் மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அனாகதம் விசுத்தி ஆஞ்ஞை என்னும் ஆதார சக்கரங்கள் ஆறும் இவற்றின் மேற்பட்ட பிரமந்திரமென்னும் சக்கர மொன்றும் இருக் கின்றன. இவ்வாறாதார சக்கரங்களையும் ஊடுருவி வியாபித்துக் கொண்டு சுத்ததேசோமயமாயும் நாதவுருவாயும் இருக்கும் சுழுமுனா நாடியானது பிரமரந்திர மளவுஞ் செல்லுகின்றது. இந்தச் சுழுமுனா நாடியின் அடியில் மூலாதாரத்திலே சுழன்ற இயக்கத்தினையுடைய குண்டலி சத்தி யிருக்கின்றது. இதற்குப் பிரமாணம் மூலத் திருவிரல் மேலுக்கு முன்னின்ற பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற கோலித்த குண்டலியுள்ளே செழுஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழே என்பது திருமந்திரம். பாம்பு மண்டலித்தாற்போ லிருக்கும் இக்குண்டலி நாடியின் சுருக்க விரிவுகளாற் பிராண வாயுவும், அப்பிராண வாயுவினால் அக்கினியுமுண்டாய் இத்தேகத்தை நடை பெறுவிக்கின்றன. இக்குண்டலி நாடியாகிய சுத்த மாயையே பிரணவ ஓங்காரத்தின் கீழ்நின்ற அகரமாகிய புள்ளி வடிவாம்; அக்குண்டலி நாடிமுதற் கொண்டு பிரமரந்திர மளவுஞ் செல்லும் சுழுமுனா நாடியே அப் புள்ளியின்மேற், செல்லும் உகரமாகிய வரிவடிவ மாகும்; அச் சுழுமுனையின் மேற் கவிந்திருக்கும் பிரமாந்திர வட்டமே அவ்வரிவடிவின் மேற்றோன்றும் மகரமாகிய புள்ளி வடிவாம். இங்ஙனம் புறத்தே வரிவடிவிற் காணப்படும் ஓகாரவடிவு அகத்தே இச்சரீரத்தினும் குண்டலியினும் சுழுமுனையினும் பிரமரந்திரத் தினும் வைத்துக் காணப்படும். இவ்வாறு இப்பிண்ட சரீரத்தின் கண் அமைந்த பிரணவத்தை ஆன்மாவானது அகமுகமாய் நின்று தரிசித்தற் பொருட்டு அதற்கு நினைவினை எழுப்பவே சிவாலயங்களிற் சிவலிங்க உருவந் தாபிக்கப்ட்டவாறாம். சிவலிங்கத்தில் வட்டமாயிருக்கும் வடிவே விந்து தத்துவ மாகும்; அவ்வட்டத்தின் நடுவில் நீண்டு நிற்குங் குறியே வரிவடிவினதாம் நாததத்து வமாகும்; அக்குறியின் மேன்முனையே பிரமரந்திர மாம். இவ்விரகசியார்த்தங்கள் இனிது பொருந்தப் பெற்ற பிரணவ வுருவாம் சிவலிங்கப் பெருமானைப் புறத்தே தரிசித்த மாத்திரையில் இதனுண்மை யுணர்ந்தார்க்கு அகத்தே யுணர்வு மடங்கிச் சென்று அப்பிரணவம் அகத்தே அமைந்த முறையைக் குண்டலியினின்றும் தியானித்தவாறே முறை முறையே எழும்பிச் சுழுமுனாநாடி வழிச்சென்று பிர மரந்திரத்திற் சென்றடங்கும். இதற்குப் பிரமாணம், மேலைநிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தியை ஏலவெழுப்பி யிவளுடன் சந்திக்கப் பாலனு மாவான் பரநந்தி யாணையே என்பது திருமந்திரம், இவ்வாறு பிரமரந்திரமாம் பிரணவ முடிபிற் சென்றடங்கும் அனுபவ நிலையினையே பட்டினத்துப் பிள்ளையார் வெட்டாதசக்கரம் பேசாதமந்திரம் வேறொருவர்க் கெட்டாதபுட்ப மிறையாத தீர்த்த மினிமுடிந்து கட்டாதலிங்கங் கருதாதநெஞ்சங் கருத்தினுள்ளே முட்டாதபூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே என்றருளிச் செய்வாராயினர். இவ்வாறு இப்பிண்ட சரீரத்தினும் பிராணாதாரமாய் இப்பிரணவம் விளங்கா நிற்கின்றது. எனவே, சத்தப் பிரபஞ்சத் திற்கும் அச்சத்தப் பிரபஞ்சத்தினோடு இயைபு டைய அர்த்தப் பிரபஞ்சத்துள் இவ்வண்டபிண்ட சரீரங்கள் எல்லாவற்றிற்கும் இப்பிரணவ ஒலி மூலகாரணமாய் விளங்கா நிற்கின்றது. இந்துசமய உண்மைகள் இப்பரதமாகண்டத்தில் தொன்றுதொட்டு நடைபெறு கின்ற சாருவாகம், பௌத்தம், சமணம், மாயாவாதம், வைஷ்ணவம், சைவம் என்றற்றொடக்கத்துச் சமயங்க ளெல்லாம் இந்து சமயங்களென்று பெயர் பெறுகின்றன. இவை தம்மை ஒழிய வேறு இந்து சமயம் எனத் தனியே வழங்குவது ஒன்றுஉண்டோ என விசாரணைசெய்வாருள் ஒருசாரார் அத்தன்மையது ஒன்றில்லை என முடிவுரை யுரைக்கின்றார்கள். தாமரை, முல்லை, நீலோற்பலம், சண்பகம் முதலியவற்றின் வேறாகப் பூவென்பது ஒரு பொருள் இல்லாமைபோலவும், குயில், மயில், புறா, அன்னம், கோழி முதலியவற்றின் வேறாகப் பறவை என்பதொன்றில் லாமைபோலவும், மான், மரை, ஆ, ஆடு, எருமை, குதிரை முதலியவற்றின் வேறாக விலங்கென்ப தொன்றில்லாமை போலவும் முற்குறிக்கப்பட்ட சாருவாகம் முதலிய சமயங்களை ஒழிய வேறு இந்துசமயம் எனப்படுவதில்லை யென்பதே அவர் கருத்தாம். இனி அவருரைக்கும் அவ்வுரை பொருந்துமோ வென்று உண்மையான் ஆழ்ந்து ஆராயுமிடத்து அது பொருந்தா தென்று எமக்குத் தோன்றுகின்றது. தாமரை, முல்லை முதலியவற்றின் வேறாகப் பூவென்பதோர் பொருளும், குயில் மயில் முதலியவற்றின் வேறாகப் பறவை என்பதோர் பொருளும், மான்மரை முதலியவற்றின் வேறாக மிருகம் என்பதோர் பொருளும் இல்லாமை உண்மையாயின் அவை தம்மைப் பூ, பறவை, மிருகம் என வேறு பொதுப் பெயரான் வழங்குதல் என்னை? தாமரை, முல்லை என்னுஞ் சிறப்புப் பெயரே அமைவதாகவும் அவற்றைத் தாமரைப்பூ முல்லைப்பூ எனப் பொதுப்பெயருஞ் சேர்த்துக்கூறுதல் என்னை? தாமரை முதலான பொருள் உலகத்தில்லாமலே அழிந்துபோயினும், பூ வென்னும்பொருள் எல்லாரானும் இனிதறியக்கிடக்குமன்றே? அல்லது வேறுசில புதுப்பூக்கள் தோன்றுமாயினும் அவையும் பூ வெனப் பெயர் பெறுதல் திண்ணமேயன்றோ? இதனாற் பொருள்களின் அருவநிலை உருவநிலை என்னும் இரண்டும் இனிது பெறப்படுவனவாம். தாமரை முல்லை முதலான சிறப்புப் பொருளெல்லாம் கட்புலனுக்கு விளங்கித்தோன்றும் உருவுடைப் பொருளா யிருக்கின்றன. பூ வென்னும் பொதுப் பொருளோ அங்ஙனங் கட்புலனுக்கு விளங்குவதன்றாய் மக்கள் மனவறிவாற் பாவித்துணரப்படுவ தாயிருக்கின்றது. பல திறப்பட்ட பூக்களையும் பறவைகளையும் விலங்கினங் களையும் மனத்தால் தொகுத்துப்பார்த்து ஆயுமிடத்து அப்பூக்களெல் லாவற்றிற்கும் பொதுவான சிலகுணங்களும் அப்பறவை களெல்லா வற்றிற்கும் பொதுவான சிலகுணங்களும் அவ்விலங்கினங்க ளெல்லா வற்றிற்கும் பொதுவான சில குணங்களும் இனிதறியப் படுகின்றனவாகலின், அக்குணங் களாற்றிரண்ட அருவப் பொதுப்பொருளே உருவுடைய அச்சிறப்புப் பொருளுக் கெல்லாம் நிலைக்களனாமென்பது தெளியப் படும். சுண்ணமும் மஞ்சளுங்கூடிய வழிச் செவ்வண்ணம் உண்டாதல்போலப் பூ வென்னும் பொதுக் குணப் பொருளில் வேறு சில சேர்ந்து தாமரை முதலான சிறப்புப் பொருள்கள் தோன்றுகின்றன. சிறப்புப் பொருளை யெல்லாம் பகுத்தால் அவை தனித்தனிப் பொதுப் பொரு ளாய் நிலைபெறும், சிறப்புப் பொருளெல்லாம் அழிவெய் தும்; பொதுப் பொருள் அழிவெய்தமாட்டா. அன்னம் பட்டர் முதலான தருக்க சாத்திரிகளும் சாதிப் பொதுத் தன்மை என்றும் நித்தியமா மென்பர். இக்காலத்து இரசாயனசாத்திரி களும் பொருள்களைப் பகுத்துக் கலப்புச் சிறப்புப் பொருளெல்லாம் அழியுமென்றும், கலவாத தனிப்பொருளெல்லாம் நித்திய மாமென்றுங் கூறுவர். எனவே, சாருவாகம் பௌத்தம் முதலியவற்றின் வேறாய் இவற்றிற் கெல்லாம் பொதுவான வியாபக இலக்கண முடைத்தாய் விளங்கும் இந்துசமயம் என்பதொன்று தனியே உண் டென்பதூஉம், அங்ஙனம் பொதுவான அதன் கோட்பாடுகள் சில மிகுந்துங்குறைந்தும் வேறுசில உடன் சேர்ந்தும் சாருவாகம் முதலிய மற்று அச்சமயங்களெல்லாம் உற்பத்தியாய் நடைபெறுகின்றன வென்பதூஉம் நன்கு பெறப்படும். ஆகையால், இந்துசமயம் என்பது பிராசீன காலந்தொட்டு நடைபெறுகின்ற உண்மைச் சமயமே யல்லது பிறர் கூறுமாறுபோல் இல்லாத தொன்றன்று. இவ்விந்து சமயத்தின் பிரிவுகளான சாருவாகம் பௌத்தம் சமணம் மாயாவாதம் வைஷ்ணவம் சைவம் முதலிய சிறப்புச் சமயங்களெல்லாம் அழிந்தொழியினும், அன்றி வேறுசில சமயங்கள் புதிதேமுளைப்பினும் இவற்றிற் கெல்லாம் பொது வியாபகமாய் விரிந்து இவை தம்மை யெல்லாம் தன்கண் அடக்கிக் கொண்டிருக்கும் இயல்பு டையதான இந்துசமயம் என்றும் நித்தியமாய் விளங்கும். இனி இப்பெற்றித்தாகிய இந்துசமயத்தின் கோட் பாடுகள் யாவையோவெனின்; காணப்பட்ட இவ்வுலகி னுக்குக் காணப்படாத முழுமுதற்கடவுள் முதலாய் உள்ள தென்பதும், அஃது அருவமாயும் உருவமாயும் இவை யல்லவாயும் இருக்குமென்பதும், அஃது என்றும் நித்தியமாய் அறிவாய் இன்பமாய் இருப்பதாகலின் சச்சிதாநந்தம் எனப்படும் என்பதும், அஃது அருவமாய்த் தியானிக்கப் படுதலே யன்றியும் எல்லார்க்கும் வணங்குதற்கு இலேசான உருவத்திரு மேனியுடன் விக்கிரகத்தின் கண்ணும் ஆராதிக்கப் படுமென்பதும், அதனை அறிந்து வழிபடுதற்குரிய ஆன்மாக்கள் அறிவுடைய நித்தியப் பொருள்களாய் எண்ணிறந்தனவாய் இருக்குமென்பதும், இவ்வான்மாக்கள் தொன்றுதொட்டே அறியாமை வயப் பட்டிருக்கின்றன வாகலின் இவைகள் அவ்விறைவனை வழிபடுமாற்றாற் பரிசுத்தமெய்தி அவனோடு ஒற்றுமைப் பட்டு இன்பநுகரு மென்பதும், இவைகள் அறிவு முதிர முதிர ஒருபிறப்பை விட்டு மற்றொரு பிறவியிற் செல்லுமென்பதும், இங்ஙனம் இவற்றிற்குரிய பிறவிகள் எண்ணிறந்தன வாகு மென்பதும், இவ்வான்மாக்கள் முற்பிறவியிற் செய்த வினை பிற்பிறவியில் வந்து புசிக்கப் படுமென்பதும், இவ்வான்மாக்களுக்கு உடம்பாயும் கருவி களாயும் இடங்களாயும் போகமாயுமிருந் துபயோகப் படுகின்ற அறிவில்லாத ஜடப் பொருள் என்றும் நித்தியமாயுள்ள தென்பதும் இதற்கு உரிய கோட்பாடுகளாம். இக்கோட்பாடுகளனைத்தும் இவ்விந்திய தேச மெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. இவ்விந்திய தேசம் எங்கணு முள்ள மக்கள் பெரும்பாலார் கடவுள் உண்டடென்பதில் சுபாவத்திலே நம்பிக்கை யுடையரா யிருக்கின்றனர். அதனை உருவத்திருமேனியில் வைத்து உபாசிக்கும் விக்கிரவழிபாடும் இமயமலைச் சிகர முதல் குமரிமுனை வரையிலும் பரந்து காணப்படுகின்றது. அவரவர் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு அவரவரே உரியர் பிறர் உரியராகார் என்று நாடோறும் வழங்குஞ் சொற்களைக் கேட்டலால், ஆன்மாக்கள் பலர் என்னும் உணர்ச்சியும் இவ்விந்திய தேசமெங்கும் பரவிக்கிடக் கின்றது. யான் துன்பப்படுதற்கு என்னுடைய அறியாமையே காரணம் என்று இங்குள்ளார் எல்லாரும் கூறுதலால், ஆன்மாக்களுக்கு அறியாமை இயற்கையே உள்ளதென்பதும் இவ்விந்தியாவிற்கே உரிய கொள்கையாம். இப்பிறப்பில் யான் அறஞ்செய்தால் மறுமையில் நற்பிறவியடைவேன், இப்பிறப்பில் யான் மறஞ்செய்தால் மறுமையில் யான் தீப்பிறவி யடைவேன் என்று பலருங் கூறுதலால் அடுத் தடுத்துப் பிறவிகள் வருமென்பதும் இங்குள்ளார்க்கு உடன்பாடாகின்றது. ஒருவன் துன்புறுங் காலத்து இஃது யான் முன்செய்த வினைப்பயன் என்று அடுத்தடுத்து வழங்கக் காண்டலால் கர்மம் உண்டென்பதும் மற்றிவர்க்கு உடன் பாடாகின்றது. உள்ளதுபோகாது இல்லதுவாராது என்னும் பழமொழி நாடோறுங் கேட்கப்படுதலால் இப் பிரபஞ்சம் மாயையிற் றோன்றிய தென்பதும், அம்மாயை சடமாய் என்றும் உள்ள நித்தியப் பொருளா மென்பதும் இந்தியர்க்குக் கருத்தாகின்றன. யான் என் அறியாமை விலகிக்கடவுளுடைய அருளுக்குப் பாத்திரமாவேனோ என்று ஆங்காங்குப் பலருங் கூறுதலால் முத்தி என்பது அறியாமை நீங்கப்பெற்று முதல்வன் அருளோடு ஒற்றுமைப் படுதலே யாமென்பது இவர் கொள்கையாகின்றது. நண்பர்காள்! இங்ஙனம் இக் கொள்கைகள் இவ்விந்திய தேசமெங்கும் பரவிவழங்குதல் நம்மனுபவத்திற் காணப் படுதலால் இவை தாம் இந்துசமயம் எனப்படுவதற்குப் பொருந்துகின்றன. இனி இந்துசமயப் பிரிவான மேற்கூறிய சமயங்களி லெல்லாம் இக்கொள்கைகள் சில குறைந்தும் வேறுசில கூடியும் வேறுவேறு பெயர் பெற்று நிற்றலைக் காட்டுவாம். காணப்படுவதாய் அறிவில்லாத சடப் பொருளான இப்பிரபஞ்சம் உள்பொருளேயாம் என்னும் அதன்கொள்கையை மாத்திரம் வற்புறுத்திக் கடவுளும் ஆன்மாவும் கன்மமும் இல்லை என்று கூறுவதே சாருவாகமதமாம். இது பூதமதினொன்று பிரியப் புலனிறக்கு நீதியினினிற்பன நடப்பனவு முற்போல் ஓதும்வகையாகி யுறுகாரிய முலந்தால் ஆதியவையாமிதனை யறிவதறிவாமே என்றும் இப்படியன்றிக் கன்ம முயிரிறை வேறுண்டென்று செப்பிடு மவர்க்குமண்ணோர் செய்திடுங் குற்றமென்னோ ஒப்பிலா மலடிபெற்ற மகனொரு முயற்கொம்பேறித் தப்பிலாகாயப்பூவைப் பறித்தமை சாற்றினாரே என்றும் அவர் கூறுமாற்றால் அறியப்படும். அறிவென்பது நான்குபூதக் கூட்டத் தின் காரியமாய் உண்டாவதென்னுஞ் சாருவாகர் போலாது, சடப்பொருளின் வேறாக அறிவாகிய புத்தி வேறுண்டென்று மாத்திரங்கூறிக் கடவுளும் ஆன்மாவு மில்லையென்பதே பௌத்தமதமாம். இதில் அறிவும் அறிவில்லாத சடமும் வேறென்னும் இந்துசமயக் கொள்கை வலியுறுக்கப் படுதல் காண்க. இனிச் சடப்பொருளும் அதனின் வேறாகிய அறிவும் அவ்வறி வினையுடைய சீவனும், அச்சீவனோடியைந்துவரும் இருவினைகளும் உள்ளனவென்று மாத்திரம் வற்புறுத்திக் கடவுள் இல்லையெனக் கூறுவதே சமணமதமாம். இனிப்பிரபஞ்சமும் இருவினையும் ஆன்மாவும் வியவகாரத்திலுள்ளன, பரமார்த்திகத்திற் பரப் பிரமம் ஒன்றேயுள்ளது ஏனையவெல்லாம் பொய்ப்பொருளாம் எனக் கூறுவதே மாயாவாதமாம். இதன்கட் கடவுள் அருவமென்றே வற்புறுத்தப்படுகின்றது. இது இருளிற் பழுதை யரவெனவே யிசையு மிரவி யிருங்கதிர்க ளருளப்பழுதை மெய்யாகி யாவும் பொய்யா மதுபோல மருளிற்சகமுஞ் சத்தாகி மருவித்தோன்று மாசில்லாத் தெருளிற்சித்தே சத்தாகும் பித்தாஞ் செகத்தின் செயலெல்லாம் என்றும் அறிவா யகில காரணமா யனந்தானந்த மாயருவாய்ச் செறிவாயெங்கு நித்தமாய்த் திகழ்ந்த சத்தாய்ச்சுத்தமாய்க் குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும்வேதந் தனக்களவாய்ப் பிறியாதனுபூதிகந் தனக்காய் நின்றதந்தப் பிரமந்தான் என்றும் அவர்கூறுதலால் அறியப்படும். இனிப்பிரபஞ்சமும் ஆன்மாவும் வியவகாரத்திற் போலப் பாரமார்த்திகத் திலும் உள்பொருள்களேயாம் என்றும், ஆனால் இவை வாசுதேவன் வடிவே யாய் விளங்கு மென்றும் அவ்வாசுதேவன் உருவமாகவே யிருப்பானல்லது அருவமாக இருப்பானல்லன் என்றுங் கூறுவதே வைணவ மாம். இது மாயையா யுயிராய் மாயா காரிய மாகி மன்னி மாயையாற் பந்தஞ் செய்து வாங்கிடு மவனாலன்றி மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப்பின்னை மாயைபோம் போனான்மாயன் வைகுண்டம் வைப்பனன்றே என்றவர் கூறுமாற்றால் விளங்கும். இங்ஙனம் இம்மதங்களினெல்லாம் இந்துசமயம் கொள்கைகள் சிலபலகுறைந்தும் மிகுந்தும் வேறுபட்டும் நிற்றல் இனிதறியப்படும். இனி உலகம் உள்பொருளாதல் சாரு வாகத்தானும், அறிவுஞ் சடமும் வேறுவேறாதல் பௌத்தத் தானும், சீவனும் இருவினையும் உளவாதல் சமணத்தானும், கடவுள் அருவசொரூபியாய் நிற்றல் மாயா வாதத்தானும், கடவுள் உருவத்திருமேனியு முடையனாதல் வைணவத் தானும் பெறப்படுகின்றன வாகலின் இவை யனைத்தும் இந்துசமயப் பிரிவுகளாதற்கு இயைந்தன வேயாம். மற்று, இக்கொள்கை களெல்லாம் தன்கண் முழுதும் அடங்கக் கொண்டு விளங்கும் இந்துசமயம் தான் சிறிதாயினும் ஏகதேசப்படுதலின்றித் தன்கட் பிரிந்த சமயங்களுமாய் அவற்றின் வேறுமாய் மேற்பட்டுத் தோன்றல் பெரிதுங் கவனிக்கற்பால தொன்றாம். தன்னிற் பிரிவான மதங்களில் உள்ள குறைகளையெல்லாம் நிரப்பித் தான் எல்லா நிறையுமுடைய தாய்ப் பொலிகின்றது. இனி இவ்விந்துசமய வியாபகப்பொருளைச் சிறிது சிறிதே விசாரித்துப் போய்ப்பின் அவ்விந்து சமயமாவதிது வென்பது காட்டுவாம். அறிவு சாருவாகர் மதம் பற்றிப் பிருதிவி, அப்பு, தேயு, வாயு எனப்படுஞ் சடப்பொருள் ஒன்று சேர்ந்த வழியே அறிவு தோன்றும் என்பதற்கு இச்சரீரத்தின் கண் உட்கருவி புறக்கருவி என்னும் அவயவங்களெல்லாம் ஒன்று சேர்ந்தவழி அறிவு தோன்றுதலும், அவ்வவயவங்கள் வேறு வேறு பிரிந்த வழி அஃது அழிதலுமே சான்றாகலின் சித்து எனவுஞ் சடம் எனவும் பொருள்களைப் பகுத்தல் கூடாது. சடமே சித்தாம் என்று கூறுது மெனின்; அவ்வவயவங்க ளெல்லாம் ஒன்று கூடிய இவ்வுடம்பு பிணமாய்க் கிடந்தவழி அதன்கண் அவ்வறிவு நிகழக் காணாமையின் அது பொருந்தாது. அற்றன்று, பிணவுடம்பில் அவயவ ஒருமை நோயாற் பிறழ்ந்து போதலின் அதன்கண் அவ்வறிவு நிகழாதாயிற் றெனின்;-- தாமே ஒன்றுகூடி அறிவைத் தோற்றுவித்த அவயங்கள் பின் நோய்வாய்ப்பட்டு அவ்வறிவை யிழந்த தென்றல் யாங்ஙனம் பொருந்தும்? அதுவேயுமன்றிச் சடப் பொருள்களான அவை தாமே ஒன்றுசேருமாறு யாங்ஙனம்? காந்தம் இரும்பைத் தன் மாட்டு வலித்துக் கொள்ளுதல் போல நான்கு பூதங்களும் ஒன்றை யொன்று வலித்துக் கொண்டு ஒருங்குகூடின வெனின்;- காந்தம் இரும்பை வலித்துக்கொண்டால் பின்தானே அதனை விடமாட்டாது; அது போல நான்கு பூதங்களும் ஒன்றையொன்று பற்றிக் கொண்டால் பின் அவை தாமே பிரியமாட்டா; அங்ஙனம் பிரியாவாகவே அக்கூட்டுறவிற் றோன்றும் அறிவும் அழியாதாய் என்றும் விளங்கிக் கொண்டிருத்தல் வேண்டும். சிறிய காந்தக் கல்லால் வலித்துக் கொள்ளப்பட்ட இருப்பூசி பின் ஒரு பெரிய காந்தக் கல்லை எதிர்ப்படின் அதனால் இழுக்கப்பட்டு அச்சிறிய கல்லை விடுதல் போல, நாற்பூதக் கூட்டுறவும் வேறொன்றாற் கலைக்கப்பட்டு முன்றோன்றிய அறிவு அழியுமெனின்; -- அந்நான்கு பூதத்தினைத் தவிரப் பிறிதொன்று உண்டென்பது சாருவாகருக்கு உடம்பா டல்லாமையால் அந்நான்கு பூதக் கூட்டத்தினையுங் கலைக்க வல்லதான பிறிதொன்றுண் டென்றல் அவர்க்குப் பொருந்தா தாகும். அற்றன்று, அந்நான்கு பூதங்களுள் ஒன்று ஒரு காலத்து மிகவலியுடைத்தா யெழுந்து ஏனையவற்றின் கூட்டுறவை அழிக்குமென்று கோடுமாகலின் பிறிதொன்று வேண்டே மெனின்;-- முன் அம்மூன்று பூதங்களோடும் ஒன்று சேருங் காலத்து மற்றை அந்நான்காம் பூதத்திற்கு அவ்வலிமை எங்கே போயிற்று? முன்வலிசுருங்கிய பொருளே பின் வலி மிகுதியு முடைத்தாமெனின்; -- அவ்வாறு முன் சுருங்குதற்கும் பின் அது பெருகுதற்குங் காரணம் என்னை; அஃது அதற்கு இயற்கையெனின்;- அங்ஙன முரைப்பின் ஒன்றே இயற்கையாக வேண்டுமல்லது தம்மில் மாறுபட்ட இரு குணங்கள் ஒருபொருட்கட் டோன்றுமெனல் சாருவாகர் மதத்திற்கே இழுக்காய் முடியும்; என்னை? இன்று ஒரு சிறிய ஊசியை மாத்திரம் இழுக்குங் காந்தக்கல் நாளை ஒருபெரிய இருப்புச் சிலையை இழுக்குமெனல் வேண்டும்; இன்று பதினைந்து பாரஞ் சுமக்கும் ஒருகோல் நாளைப் பதினாயிரம் பாரஞ் சுமக்கு மெனக் கூறல் வேண்டும்; இன்று பத்தரை மாற்றுரைகண்ட ஒருபொற்கட்டி நாளை இருபது மாற்றுரைகாணுமெனக் கூறல்வேண்டும். அங்ஙனங்கூறின் சாருவாகர் கூறும் இயற்கை மதம் முற்றும் போலியாய் முடியுமாதலின், அவயவங்கள் தாமே ஒன்று கூடி அறிவைத் தோற்றுவிக்கு மென்றலும் பின்னொருகாற் பிரிந்து அதனை அழிக்கு மென்றலும் எவ்வாவற்றானும் பொருந்தா. இனிச் சடத்தினியல்பையுஞ் சித்தினியல்பையும் சிறிதா ராய்ந்து பார்ப்பார்க்கும் அஃதொன்றினொன்று தோன்று மெனல் பொருந்தாமை நன்கு விளங்கும். சடப்பொரு ளெல்லாம் ஒன்றோ டொன்று ஒட்டும், பின் தாமே பிரிய மாட்டா, பிறிதொன்று இயக்கினால் இயங்குந் தாமே இயங்கமாட்டா. கருவேலம் பிசினுங் கருங்கற் பொடியும் ஒருங்கு ஒட்டும் பின்பிரியா, காந்தம் இருப்பூசியைத் தானே இழுத்துத் தன்னோ டொட்டுவிக்கும். பின் இதனை விடுதல் செய்யாது, பந்தை எறிந்தால் ஓடும் தானே ஓடமாட்டாது. மற்று அறிவுப் பொருள்களோ தாமேயும் இயங்கும் பிறிதொன் றனையும் இயக்கும், தாமேயும் அறியும் பிறிதொன்றனையும் அறிவிக்கும். சிற்றெறும்பு தானேயும் இயங்குகின்றது. தானே இயங்காப் பனைவட்டுச் சிறுதுண்டினையும் இழுத்துச் செல்கின்றது, புறாக்கள் தாமேயும் பறக்கின்றன. தங்குஞ்சுகள் பறக்கும் படியும் கற்பிக்கின்றன. இவ்வாற்றால் அறிவில்லாச் சடத்தினியல்பும் அறிவுடைய சித்தினியல்பும் தம்முள் முற்றும் மாறுபட்டுக் கிடத்தலால் அது நாற்பூதக்கூட்டுவிற் றோன்று மென்றல் ஒருவாற்றானும் பொருந்தாது. ஆகவே அறிவுஞ் சடமும் வேறுவேறென்னும் இந்து சமயக் கொள்கையே பொருத்த முடைத்தாதல் இனிது பெறப்பட்டது; இப்பெற்றி நன்கு ணர்ந்த சீமத், அருணந்தி சிவாசாரிய சுவாமிகள், அறிவு பூதம தென்னின் வேறுபுறத்தறிந்தமை கண்டிலஞ் செறிவுதானுடலத் தெனிற் சவமானபோதுடறேருமோ குறிகொளாதுடல் வாயுவானது கூடிடாமையி னென்னினீ பிறிதராதுயிர் நிற்கஞானமுறக்க மென்பிறவாததே அறிவுடற் குணமென்னிலானைய தாதியந்த மெறும்பதா, முறு முடற் பெரிதானவற்றி னுதித்திடும் பெரிதாகவே சிறுவுடற் செறி ஞானமுஞ் சிறிதாயிடும் பரிணாமமும், பெறுமுடற்சிறிதாவா தென் பெரிதாவ தென்சில பேசிடே என்று, அவற்றின் வேறுபாடு நன்குதெரித்தோதினார். ஆன்மா இனிப்பௌத்தர் மதம் பற்றி இவ்வுடம்பும் இவ்வுடம்பின் வேறாய் எல்லாவற்றையும் அறிவதாகிய அறிவும் உண்டு எனக் கொள்வதல்லது, இவ்வறிவின் வேறாகிய ஆன்மா, வொன்றுண்டெனக் கூறல் பொருந்தா தெனின்;- அற்றன்று, அறிவென்பது பஞ்சேந்திரியங்கட்கும் புலப்படுவதன்றாய்ச் சுத்த அனுபவ மாத்திரையாய் உள்ள தொன்றாம். யானிதனைக் கண்டறிந்தேன். அதனைக் கேட்டறிந்தேன். இதனைச் சுவைத்தறிந்தேன். அதனை முகந் தறிந்தேன் அதனைத் தொட்டறிந்தேன் மற்றிதனை எண்ணி யறிந்தேன் என்றவழி யெல்லாம் அறியப்பட்ட பொருளும் அதனை அறிந்த அறிவு நிகழ்ச்சியும் எவ்வகைச் சம்பந்த முடையன? பொருட் சம்பந்தமா? குண சம்பந்தமா? பொருட் சம்பந்தமாயின் இந்நிலவுலகத்தில் நிற்கும் எனக்கும் இதற்கு நெடுந் தூரத்திலுள்ள செக்கர் வானத் திற்கும் எங்கே சம்பந்தமுளது? மற்றுக் குணசம்பந்தம் என்று ரைப்பின் அதுபொருந்தும். சூரியன் அந்தரத்தில் ஓரிடத் திருப்ப அதன் பிரகாசம் யாண்டும் விரிதலானும் ஒரு கற்றார் ஓரிடத் திருப்ப அவரது புகழ் யாண்டும் வியாபித்தலானும் குணத்தை யுடைய பொருள் ஓரிடத்தே யிருந்ததாயினும் அதன்குணம் அவ்விடமாத்திரை யின் வரையறைப்படாது மேலுமேலும் விரிந்து செல்லும் இயல்பினதாம். செக்கர் வான் அந்தரத்தே நெடுந்தூரத்திற் காணப்படுவ தொன்றா யினும் அதன் குணமான சிவப்புநிறம் தன்னைச்சூழ்ந்து வியாபிக்கும் ஆகாயத்தின்சூக்கும அணுக்களை அசைவித்து அம்முறையே கண்மேற்பரப்பிற் சென்று தாக்க, அங்கே வியாபித்திருக்கும் அறிவானது அதனைப் பற்றுகின்றது. இனம் இனத்தையே பற்றும் என்னும் நியாயத்தால் குண ரூபமான சிவப்பு நிறத்தை யறிகின்ற அறிவும் குண ரூபமாகவே யிருக்க வேண்டு மென்பது துணியப்படும். இங்ஙனந் துணியப்படவே சிவப்பு நிறஞ் செக்கர் வானத்தை விட்டு வேறுதனித்து நில்லாமை போலக் குண ரூபமான அறிவும் தான்றனித்து நில்லாதாய்ப் பிறிதொரு பொருளைப் பற்றியே நிற்கும். அப்பொருள் யாதோவெனின் அதுவே ஆன்மா அல்லது உயிர் என்று பெறப்படும் என்க. இன்னும் இவ்வறிவு ஆன்மாவுக்கு ஒரு குணமாமென்பது நான் அறிந்தேன் என் அறிவு என்னும் வழக்கில் நான் என்பதொரு பொருளும் அதனோ டொற்றுமைப் பட்ட அறிதற்குணமும் பெறப்படு மாற்றால் இனிது துணியப்படும். அறிவு குணமன்றிப் பொருளாயின் அவ்வாறதனை வழங்கு தற்கு வேறொருவாற்றானும் ஒரு காரணம் பெறப்படுவதில்லை என்க. ஆகவே, பௌத்தர் கூறுமாறு அறிவு ஒருகுணிப் பொருளாக மாட்டா தென்பதும், அதனையுடைய ஆன்மா வேறுதனியே யுளதென்பதும் இனிது பெறப்படுகின்றன. உருவாதி கந்தங்க ளைந்துங் கூடி யொருவன் வேறொ ருவனிலை யென்றுரைக்கும் புத்தா. உருவாதி யைந்தினையு முணர்பவர்யா ரென்ன வுணரும் விஞ்ஞான மென்றாய் ஞான முணர்ந்தவரார் உருவாதி பொருள்காட்டித் தனைக்காட்டுஞ் சுடர்போலுணர்வு பிறிதினை யுணர்த்தித் தனையுணர்த்து மென்னின் உருவாதி பொருளினையுஞ் சுடரினையுங் காணுமுலோ சனம்போ லுணர்வு பொருளுணர்பவன் வேறுண்டே என்ற சிவஞான சித்தித் திருவாக்கும் இதனை வலியுறுத்தும். இனி ஏகான்மவாதிகள் மதம்பற்றி அறிவுடைய ஆன்மா ஒன்றே சரீரங்கடோறும் வேறுவேறாய்க் காணப் படுகின்ற தென்றும், கடங்கடோறும் வேறுவேறாய்த் தோன்றும் சந்திரவிம்பம் அக்கடங்களுடைந்தவழி யில்லை யாய்ச் சந்திரன் ஒன்றே நிலைபெறுதல் போல இச்சரீரங்க ளெல்லாம் போய விடத்து ஆன்மா ஒன்றாகவே யிருக்கு மென்றுங் கூறுவதே பொருந்து மெனின்; -- அற்றன்று, சந்திரனிடத்துக் காணப்படும் ஒளிவடிவும் வட்டவடிவம் அதன் விம்பங்களெல்லாவற்றிலுங் காணப்படுதல் போலே ஓரான் மாவினிடத்துக் காணப்படும் அறிவுஞ் செயலும் ஏனை யான் மாக்களிடத்துங் காணப்படுதல் வேண்டும். அங்ஙனமின்றி அவை ஒவ்வொருவரிடத் தொவ்வொரு வாறாய்ப் பலதிறப்பட்டு நிகழக் காண்டலால் ஆன்மா ஒன்றென்னுமுரை ஒருசிறிதும் பொருந்தாது. அற்றன்று, சலத்தின் அசைவாற் சந்திர விம்பமும் அசைவதுபோற் றோன்றினும் சந்திரனுக்கு அவ்வசைவு வராமை போலச், சரீரத்தின் வினைகளாற் சரீரத்தி னுள்ளிருக்கும் ஆன்மாத் துடக்குறுதல் போற் றோன்றினும் ஏகனாகிய அவ்வான்மா வுக்கு இயற்கையில் அவ்வினைத் துடக்கு இல்லையா மெனின்;-- ஈண்டு இவ்வுவமை பொருந்தாது. ஆன்மாவின் சையோக மின்றி உடம்பு ஒருவினை செய்ய அவ்வினை ஆன்மாவின்கட் பற்றுவதாயினன்றே சலத்தின சைவையும் அது பற்றுஞ்சந்திர விம்பத்தையும் அவ்வா றுவமை கூறலாம்? ஆன்மசையோக மில்லாவுடம்பு சிறிதாயினும் வினையின்றிக் கிடத்தல் பிணவுடம்பின் கண் வைத்து இனிதறியப் படுதலால், உடம்பினால் ஆன்மாத் துடக்குறுமென்றல் யாங்ஙனம் பொருந்தும்? இஃதுண்மை யானுணர்ந்த சைவ சித்தாந்த முதலாசிரியர், அவ்வுடலினின் றுயிர்ப்ப வைம்பொறி கடாங்கிடப்பச் செவ்விதினவ்வுடலிற் சென்றடங்கி--அவ்வுடலின் வேறொன்று கொண்டு விளையாடி மீண்டதனை மாறலுடனீயல்லை மற்று கண்டறியு மிவ்வுடலே காட் டொடுங்கக்காணாதே உண்டிவினை யின்றி யுயிர்த்தலாற்-- கண்டறியு முள்ளம்வேறுண்டா யொடுங்கா துடனண்ணி லுள்ளதா முண்டிவினை யூண் என்றருளிச் செய்தார். நாலடியாரிலும். நார்த் தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தெடுக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டக்கால் என்றிவ்வுண்மை தெருட்டப்பட்டது காண்க. ஆகவே, உடம்பினைத் தொழிற் படுத்துவ துயிரேயல்லது உயிரினைத் தொழிற்படுத்துவது உடம்பன்றாம் அன்றாக, உயிர்கள் பலவாயும், பலதிறப்பட்ட வினைப்போகங்களுடையவாயும் இருக்குமென்பது கரதலாமலகம்போற் பெறப்படுவதாம். ஆதலால், அவர் கூறும் ஏகான்மவாதம் ஒரு சிறிதும் பொருந்தாது. கன்மம் அற்றேலஃதாக, இனி உயிர்கட்குக் கன்மமுண் டென்பது எவ்வாறு துணியப்படுமெனின்;-- தாய் வயிற்றிற் கருக் கொண்டு பிறக்கும் மகவு எவ்வகைக்குற்றமு முடையதன்றாகவும், ஒன்று தான் பிறந்த குடும்பத்தால் மிகவறுமைப் பட்டுப் பெருந்துன்ப மெய்துதலும் ஒன்று தான் பிறந்த குடும்பத்தால் மிக்க செல்வவளம் பொருந்தி இடையறாது இன்பந்துய்த்தலும், ஒன்று நல்லறிவுடைய தாய்ப் பலராற் பாராட்டப்படுதலும் ஒன்று தீயவறிவுடைய தாய்ப் பலரால் இகழப் படுதலும், ஒன்று கலையறிவு நிரம்பிப் பெரிய வித்துவானென மதிக்கப்படுதலும் ஒன்று அஃதின்றிச் சுத்த மூடனென அவமதிக்கப் படுதலும், என்னையென்று சிறிது ஆராயப்படுமாயின், இவ்வகையான பலபேதங்களுக் கெல்லாம் இன்றியமையாத காரணம் ஒன்றிருத்தல் வேண்டு மன்றே? அக்காரணந்தான் யாதோவெனின், ஆன்மாக் களுக்குப் பண்டுதொட்டே அமைந்து கிடந்த கர்மமே யல்லது பிறிதில்லையென்க. இவ்வுண்மை யுணர்ந்தே பெரியாரும், பேறிழ வின்பமோடு பிணிமூப்புச் சாக்காடென்னும் ஆறுமுன் கருவுட்பட்ட தவ்விதி யனுபவத்தா லேறிடு முன்புசெய்த கன்மமிங் கிதனுக்கேது தேறுநீ யினிச்செய்கன்ம மேலுடற் சேருமன்றே என்று அருளிச் செய்தனர். முற்பிறவி பிற்பிறவி இனி இப்பிறவியில் நிகழும் நிகழ்ச்சிகொண்டே ஆன்மாக்கட்கு முற்பிறவியும் பிற்பிறவியு முண்டென்பது துணியப்படும். இன்று இவ்வு பந்நியாச சபை கூட்டப்பட்ட நிகழ்ச்சி யெல்லாம் இதற்கு முற்பட்டநாளில் யாம்செய்த செயல்களின் பயனாம் அல்லவோ? இன்றுசெய்யும் இவ்வுபந் நியாச முயற்சிகளெல்லாம் இனிவரும் நாள்களில் இச் சைவசித்தாந்த மகாசமாஜம் மிகவுந் தழைத்தோங்கவும் அதனால் நாம் ஞானவின்பானுபவ மெய்தவும் பயன்படும் அல்லவோ? இதற்கு முன்நாட்களில் தன்றேகத்தின் கூறுபாடறிந்து அதற்கியைய உண்ணும். உணவின் வரை கடந்து வேறுபல புதிய உணாக்களைத் தான் வேண்டுமட்டும் புசித்தான். ஒருவன் அப்போது அதன்பயன் அறியாது பின் பத்துநாட் கழித்து இன்று வயிற்று நோயால் வருந்தும் போது இது முன் வரம்புகடந் துண்ட வுணவால் வந்த தென்றறியாது இஃது எனக்கு எங்ஙனம் வந்தது? எங்ஙனம் வந்தது? என்றெண்ணி எண்ணித் துயர் உறுகின்றான். பின் மருத்துவனை வருவித்து மருந்து ஊட்டப் பெறுங்கால் அவ்வூட்டப் பெற்ற அக்கணத்தே யாயினும் அன்றி அந்நாளே யாயினுஞ் சுகம்பிறவா விடினும் அஃதுண்டபிற் கணத்தேனும் பின்னா ளேனும். நோய்தீர்ந்து சுகமெய்தல் கண்டாமன்றே? இங்ஙனமே யாம் இப்பிறவியில் இன்ப துன்பம் நுகருங்கால் இப் பயன்களைத் தந்த வினைகள் முற் பிறவியில் அமைந்து கிடந்தன வென்பதனை மறந்தோமாயினும், அவை உளவாதல் ஒருதலையேயாம். இனிமுற்பிறவியிற் செய்த தீவினைகளால் இப்பிறப்பில் எய்துந் துன்பங்களை ஞானவொழுக்கத்தாலும் பக்தி யொழுக்கத்தானுந் துடைத்துக் கொண்டால் இனிவரும் பிறவியில் இன்புறுதல் ஒருதலை யாமன்றோ? அற்றேலஃதாக, முற்பிறவியிற் செய்தவினை இப்போ தொருசிறிதாயினும் நினைவுசெயக் கூடவில்லையேயெனின்; நன்று சொன்னாய், நேற்றிரவு கறித்த கறியுங்குழம்பும் நுங்கள் வீட்டில் யாவை? என்று உசாவினால் அவற்றை மறந்து விடைபகரத் தெரியாமல் விழிப்பார் நம்முள் எத்தனைபேர் உளர்! நேற்று நீங்கள் காலை முதல் மாலை வரையிற் செய்தன வெல்லாம் சொல்லுக வென்றால் அது சொல்லத் தெரியாது விழிப்பார் எத்தனைபேர் உளர்! அஃதிருக்க, முற்றும் நினையப்படா விடினும் முன்நாளிற் செய்த சிலவற்றையேனும் பின்நாளில் நினைகின்றாமே யெனின்;-- நீவிர் குழவிப்பருவத்துச் செய்தன ஒருசிலவேனும் இம்மனிதப் பருவத்து நினைக்க மாட்டாமல் முழுதும் மறக்கின்றமையால் யான் குழவியாயி ருந்திலேன் எனக்கூற அமையுமோ? காலம் நீள நீள மறதியும் நீளும்; காலத்தினாற் றோன்றும் மறதி கணக்கிறந்தன. இன்றைக் கிருந்த ஒருபொருள் நாளை அவ்வாறே காணப் படுவதில்லை; நாளையிருப்பவை முற்றைநாட் காணப் படுவதில்லை. ஆ! காலத்தினாற் சிறிது வேறு படும் புதுமைகள் என்னே! என்னே! ஒருவனைக் குறித்த பருவத்தில் வைத்துப் பிடித்த படமும், மனிதப் பருவத்தில் வைத்துப் பிடித்த படமும், முதுமைப் பருவத்தில் பிடித்த படமும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், அம்மூன்று உருவும் மூன்று வேறு மனித வுருக்களாய்த் தோன்றுமே யல்லது ஒன்றாய்த் தோன்றா. ஆ ஒவ்வொரு கணமும் மனத்தினுங் குறிக்கப்படாத அதிவேகத் துடன் எத்தனை எத்தனை மாறுதல்கள் நிகழ்கின்றன! அன்பர்காள்! எம்மருமைச் சகோதரர்காள்! இப்பூகோள மானது ஒரு நொடியில் பதினெட்டரைமைல் விழுக்காடு ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து நூற்றுப்பத்துமயில் தூரம் சுழன்று செல்வதைப் பாருங்கள்! இவ்வளவு வேகமாய்ச் சென்றும் இதன் இயக்கமும் மாறுதலும் நமக்குப் புலப்படுகின்றனவா? இல்லையே. இங்ஙனம் ஒவ்வொருகணமும் மனத்தினும் மிக்குச் செல்லும் பெருவேகத்துடன் நடைபெறும் மாறுதல் களின் இயல் புணர்ந்தே பௌத்தரிற் கணபங்கவாதிகளென ஒரு சாரார் தோன்றினர். சூறைக்காற்றினிடையிலகப் பட்ட இலவம் பஞ்சுபோல், இவ்வதிவேக மாறுதல்களின் இடைக் கிடந் துழலும் நம் உயிர்கள் அவற்றை முறை முறையே மறந்துவிடுதல் இயற்கையேயாம். இங்ஙனம் மறக்கப்படுவது பற்றி ஒரு பொருளினிருப்பு இல்லையென்று மறுக்கப்படுதல் சிறிதும் பொருந்தாதாகலின், இப்பிறப்பிற்கேதுவான முற்பிறவியும் அவற்றிற்செய்த கன்மங்களும் உண்டென்பது தேற்றமேயாம். இனி இப் பிறவியிற் செய்யப் படும் வினைகள் அளவிறந்தனவாகலின் பத்துநாட் பயனைத் துய்த்தொழித் தற்கு மேலும் மேலும் போது இடையறாது தோன்றுமென்க. வினைகள் உளவாங்கென்ற உடம்பு ஒழியாது; இதுபற்றியே முற்றத்துறந்தனம் வனத்தடிகளும், வினைப்போகமேயொரு தேகங்கண்டாய் வினைதானொழிந்தால் தினைப்போதளவு நில்லாது கண்டாய் சிவன்பாதம்நினை நினைப்போரைமேவு நினையாரை நீங்கிந் நெறியினின்றா லுனைப்போ லொருவருண்டோமனமே யெனக்குற்றவரே எனவும், அன்னையெத்தனை யெத்தனை யன்னையோவப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ பின்னையெத்தனை யெத்தனை பெண்டிரோ பிள்ளையெத்தனை யெத்தனை பிள்ளையோ முன்னையெத்தனை யெத்தனை சென்மமோ மூடனாயடி யேனு மறிந்திலேன் இன்னு மெத்தனை யெத்தனை சென்மமோ வென் செய்வேன் கச்சியேகம்பநாதனே என்று திருவாய்மலர்ந்தருளினார்கள். இனி இவையெல்லாம் பொருந்துமாயினும், முற்பிறவி உண்டென்பதற்கு மாத்திரம் அனுபவத்திற் பிரத்தியக்கமாகச் சிலகுறிப்புகள் காட்டல் வேண்டுமெனின்;--அதுவுஞ் சிறிது காட்டுவாம். தாய்வயிற்றை யகன்று பிறந்தமகவினை எடுத்துத் தன்னியபானஞ் செய்விக்கப் புகுங்கால் உலகானு பவஞ் சிறிதுமறியா அம்மகவு வாய்கூட்டித் தன்னியத்தை இழுத்துப் பால் உண்ணல் கண்டாமன்றே? அஃதங்ஙன முண்ண எவ்வாறுகற்றது? என்றாராயின் அது முற் பிறவியில் அங்ஙனம் வாய்கூட்டியுண்ட பழக்கத்தால்வந்த தேயாம் என்பது நன்கு புலப்படும். இதுவொன்றோ, இன்னும் அம்மகவு மக்கள் முகத்தைப் பார்த்து நகையாடத் தெரியாப் பொழுதே உறங்குங்காலத்துப் பாலொழுகும் வாய் விரித்து நகைப்பதுங் கண்டாமன்றே? அஃது அங்ஙனம் யாரைக் கண்டு நகைக்கின்றது? கனவில் நகைக்குமென்னின்;- நாமெல் லாம் நனவிற்றோன்றியதைக் கனவிற் காண்கின்றோம். நனவிற் காணப்படாதன. கனவிற்றோன்றுமாயின் அவை முற் பிறவியின் றோற்றமாமன்றோ? நனவனுபவம் சிறிது மில்லாத அம்மகவுக்கு நனவுங் கனவு மொன்றே யன்றோ? ஆனால், நனவில் வெளியுலாவுகின்ற அதனறிவு கனவில் உள் உலவாநிற்ப, அவ்வாறுலவுங்கால் முற்பிறவியிற்கூடிய அனுபவங்கள் சில அதற்கு நினைவிற்றோன்ற அங்ஙனம் நகையாடுகின்றது. ஆகலின், குழவிப்பருவத் துயிர்கள் மாட்டுக் காணப்படும் நிகழ்ச்சிகொண்டே முற்பிறவியுண் டென்பது நாட்டப்படுவது காண்க. பரமான்மா இனிக்கன்மமே தன்னைச் செய்தோன் அறிவிற்பதிந்து கிடந்து பின்னை அவன் நுகர்ந்து ஒழித்தற்பொருட்டுச் சரீரத்தைத் தோற்றுவிக்கும், இதற்குவேறொரு கடவுள் வேண்டாமெனக்கூறும் சமணர்மதம் பற்றிக் கடவுள் ஒன்றில்லையெனக் கூறினால் வரும் இழுக்கென்னை யெனின்;- கன்மம் என்பது வினை அல்லது தொழிலாகும். வினை தன்னைச் செய்தானைவிட்டுப் பிரிந்திராததுண்மை யாயினும், அவ்வினையே இச்சரீரத்தைத் தோற்றுவிக்கு மெனல் பொருந்தாது; என்னை? அஃதோர் அறிவில்லாத சடப் பொருளாகலினென்க. அற்றன்று, வினைதானே சரீரத்தைப் படைப்பதன்று தன்னையுடைய ஆன்மாவின் துணை கொண்டு படைக்குமெனின்;-அறிவின்றி வினைவயப் பட்டுக் கிடக்கின்ற ஒருயிர்தானே தன்வினையை நுகர்ந் தொழித்தற் பொருட்டு ஒருடம்பைப் படைக்குமென்றல் யாங்ஙனம்? அங்ஙனம் படைக்கவல்லதாயின் முன் எடுத்த வுடம்பையே விடாதிருக்க அமையுமன்றோ? இறப்பு வருங் காலத்து அவ்வுடம்பைவிட வேண்டுமேயென நினைந்து நினைந்து அஃது இரங்குதல் என்னை? ஆகையால், வினைசடமாகையாற்றானே ஒருடம்பைத் தோற்று வியாதாக லானும், வினைசெய்த உயிர் அறிவின்றி வலியிழந்து கிடத்தலால் அதுதானும் அதனைப் படைத்துக் கொள்ள மாட்டாமையானும், இவையிரண்டின் வேறாகச் சரீரத்தைப் படைக்க வல்லது பிறிதின்மையின் பாரிசேட வளவையாற் கடவுளே அதனைச் சிருட்டிப்பதென்பதும், அதுதானும் இவ்வுலகுயிர்க்கு முதலாயுள்ள தென்பதும் பெறப்படும்; இஃதுணர்ந்த பெரியாரும், அநாதியே லமைவின்றெனின் மலமாயை கன்ம மணுச்சிவன், அநாதிகன்ம மணுக்கள் செய்யவறிந்து கன்மமுடற்செயா, அநாதிகாரியமா முடற்களசேதனம் மணையாவறிந், தநாதியாதி யமைக்க வேண்டு மமைப்பி னோடு மநாதியே என்றருளிச் செய்தனர். இனி மாயாவாதிமதம் பற்றிப் பரப்பிரமம் ஒன்றே அருவாயுளதென்றும், ஏனையுருவுடைப் பிரபஞ்ச முதலிய னவும் ஆன்மாவும் அதன்கட்பொய்யாய்த் தோன்றுகின்றன வெனவும், உண்மையான் உணர்ந்தவழிப் பரப்பிரமம் ஒன்று மாத்திரம் பெறப்படுமெனவும் உரையாமோ வெனின்;-- தோன்றுவதோர் தோற்றம் மெய்யே யாயினும் பொய்யே யாயினும் தோன்றப் பெறுவதனால் அஃதோர் உருவமுடைத் தாதல் வேண்டுமன்றோ? பரப்பிரமம் அருவப் பொருளா மென முன்கூறிப் பின் அதன்கண் உருவுடைப் பொருளெல் லாம் பொய்யாய்த் தோன்றுமென்றன் முன்னொடுபின் மலைவா மன்றோ? காணப்படுகின்ற இவ்வுலகுயிர்களைக் கொண்டே காணப்படாத கடவுளையறிய வேண்டி யிருத்த லின், காணப்படுமிவற்றை யெல்லாம் வெறும் பொய்ப் பொருளென் றொழித்தால் பின் காணப்படாத பிரமத்தை மாத்திரம் மெய்ப்பொருளென்று துணிந்து ரைத்தற்கு வேறொரு வாற்றானும் ஒருகாரணம் பெறப்படாமை யானும், உலகத்துப் பொருள் அழியாது என்றும் நித்தியமாம் என்னும் பௌதிக சாத்திரக் கொள்கையோடது முரணுத லானும் அங்ஙனங் கூறுதல் பொருந்தாதென்க. இன்னும் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள் அருவமாக மாத்திர மிருக்குமென் றொரு வரையறை கட்டிச் சொன் னால் அஃதுருவமாகின்ற சக்தி யில்லாததென்று பெறப்படு மாகலானும், அருவமாகிய ஆகாயம் ஆன்மா முதலிய வற்றோ டொப்ப ஒன்றெனக் கொள்ளப்படுமல்லது வேறு விசேட முடையதாகா தாகலானும் அதுவும் பொருந்தாது. இவ்வுண்மை உலகினிற் பதார்த்தமெல்லா முருவமோ டருவமாகி நிலவிடு மொன்றொன்றாகா நின்றவந் நிலையேபோல அலகிலா வறிவன்றானு மருவமே யென்னிலாய்ந்து குலவிய பதார்த்தத்தொன்றாய்க் கூடுவன் குறித்திடாயே என்னுந் திருவாக்கால் இனிது விளங்கும். மக்கன் ஆன்மநிலை அறிவும் உணர்வும் என இருதிறப் படும். அறிவைப் பார்க்கிலும் உணர்வே சிறந்ததாம் அறிவு உருவத்தைப் பற்றி நிகழும் உணர்வு அஃதின்றியும் நிகழும். ஆன்ம அறிவாற் பற்றப்படாத அருவவியலுடைய முழுமுதற் கடவுள் அன்பு என்னும் உணர்வு நிலையாற் பற்றுதற் கெளியனாய் ஓர் உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளி வந்தனுக்கிரகிப்ப னாகலின் இறைவற்கு அருவத்திருமேனி மாத்திர முண்டென்றல் இழுக்காம். இது, விறகிற்றீயினன் பாலிற் படுநெய்போன் மறையநின்றுளன் மாமணிச்சொதியான் உறவுகோல்நட்டு உணர்வு கயிற்றினான் முறுகவாங்கிக் கடையமுன் னிற்குமே என்றதிரா விட சுருதியானும், என்னும் உபநிடத சுருதியானும் இனிதுபெறப்படும். அற்றேல் கடவுள் உண்டென்று இங்ஙனம் விசாரணை செய்யும் அறிவாலஃதறியப் படுவதில்லை யாயின், இவ் விசாரணைகளெல்லாம் வெறும் போலியாய் முடியும் போலுமெனின்;--அற்றன்று, அறிவால் விசாரணை செய்த லெல்லாம் கடவுள் உண்டென்பதனை நிச்சயப் படுத்துதுற் கேயன்றி அதன் சொரூப முணர்தற் கன்று. அழகிற் சிறந்த மடந்தையின் அங்க இலக்கணங்களை அறிந்து மகிழ்வது அறிவு நிலையாய்ப் பின் அவளோடு இணங்கி இன்ப நுகர்ந்த வசமழிதல் உணர்வு நிலையாதல்போல இறைவனுண்டென்று மாத்திரம் விசாரித்தறிதல் அறிவின் பயனென்றும், பின் அவனோடொருமித்துப் பேரின்பத் தழுந்தல் உணர்வின்பய னென்றும் தேறப்படும். ஆகையால் அறிவுக்குக் கோசர மாகாத இறைவன் அன்பாற் கரைந்து ருகித் தேம்பும் அன்பர் உணர்வுக்குக் கோசரமாய் அனுக் கிரகிப்பனாகலின் அவற்கு உருவமுண்டென்ப தொருதலையாம். இது இல்லாமுலைப்பாலுங் கண்ணீரு மேந்திழை பால் நல்லாய் உளவாமா னீர்நிழல்போல்--இல்லா அருவாகி நின்றானை யாரறிவார்தானே யுருவாகித்தோன்றானேலுற்று என்னுஞ்சிவஞான போதத்திரு வாக்கானும், என்னும் நரசிம்மதாபினியுபநிடதத்தானும், என்னும் மந்திரம் இறைவற்குப் பொன்வண்ணம் பொற்றேள் முதலியன கூறுதலானும், மண்டலபிராமணமும் இவ்வாறே என்று கூறுதலானும், கைவல்யோப நிடதம் இதய புண்டரீகத்தில் அங்குட்ட மாத்திரையனாய்த் தோஜோ மயனாய் வசிக்கும் பரமாத்மாவை உபாசிக்குமாறு கூறுதற் கெழுந்து என்று நிட்களோபாசனை சகளோசபானை யென்னும் அருவவழிபாடும் உருவ வழிபாடும் உடன் வகுத்துக் கூறுதலானும் தெளிவாய்ப் பெறப்படும். இதனால் இறைவற்கு உருவவழிபாடு சொல்லிய பாகஞ் சிறிதும் உபநிடதங்களுட் காணப்படா தென்னும் பிரம சமாஜத்தார் கூறுவதூஉம் போலியாதல் காண்க. இனி வைணவர் கூறுமாறு இறைவனுக்கு உருவ மாத்திர முண்டென்று கூறாமோ வெனின்; கூறாம்; என்னை? அங்ஙனம் வரை யறுத்துக் கூறின் அஃது அருவ மாதற் குரிய சத்தி உடைய தன்றெனவும், உருவுடைப் பொருள்களான பிருதிவி அப்புத் தேயு வாயுக்களில் ஒன்றாய் ஒழியுமெனவும் பெறப்படு மாகலினென்க. என்றிங்ஙனங் கூறியவாற்றால் இந்துசமயம் எனப் படுவது இமயமுதற் குமரியீறாக யாண்டும் பொது வாய்ப் பரவி வழங்கும் பொதுக் கொள்கைகளாதலும், இக் கொள்கைகளுட் சிலசில வெடுத்து வற்புறுத்து அவை தம்மை மாத்திரம் அனுசரித்து வரும் காருவாகம் பொளத்தம் முதலிய சமயங்கள் இந்துசமயப் பிரிவாய் ஏகதேசமாய் அதன் கண் அடங்குதலும், இந்துசமயப் பொதுக் கொள்கைகள் வியாபக இலக்கண முடையவாய் இவற்றையெல்லாம் தமதகத்தே யடக்கி வியாபித்தலும், இக் கொள்கைகள் எல்லாவாற்றா னும் பொருத்த முடையவாய் விளங்கலும் அறிவுறுத்தப் பட்டன. இனி இவ் விந்துசமயம் எனப்படுவ தியாதென்று உண்மை யான் விசாரித்தவழி அதுவே சைவ சித்தாந்தம் என்னும் வேறு பெயரான் வழங்கப் படுகின்ற தென்பதினிது புலப்படா நின்றது. ஜடமாகிய பிரபஞ்சமும் சித்தாகிய அறிவும் வேறு வேறா மென்பதும் அறிவுடைப் பொருள் ஆன்மாவா மென்பதும் சித்தாந்தத்தின் கொள்கையாம்; இதற்குப் பிரமாணம். அசத்தறியாய் கேணீ யறிவறிந்த வெல்லாம் அசத்தாகு மெய்கண்டானாயின்--அசத்தலாய் நீரிலெழுத்தும் நிகழ் கனவும் பேய்த்தேரும் ஓரிலவையின்றாமா றொப்பு இவ்வான்மா இருவினைகளுட் பட்டுப் பிறப்பிறப்பு களிற் சுழன்று கொண்டு இயற்கையே அறியாமையுடைத்தாய் மாயையால் அறிவு விளங்கப் பெற்று வரும் சித்துப் பொருளாமென்பது, அசித்தருவியாபகம்போல் வியாபகமருவ மன்றாய் வசித்திட வரும் வியாபி யெனும் வழக்குடையனாகி நசித்திடா ஞானச்செய்தி யநாதியேமறைத்து நிற்கும் பசுத்துவ முடையனாகிப் பசுவென நிற்குமான்மா மாயையின்வயிற்றுண் மன்னிவருஞ் செயன்ஞானமிச்சை யேயுமிக்கலாதிமூன்றா லேகதேசத்தி னேய்ந்திங் காயுமுக்குணங்களந்தக்கரணங்களாதி யெல்லாங் காயபந்தங்களாகக் கலந்துடனிற்குமான்மா சூக்குமதேகியாகித்தூல ரூபத்தின் மன்னிச் சாக்கிரமுதலாயுள்ளவவத்தையுட்டங்கி யெங்கும் போக்கொடுவரவுமெல்லாம் புரிந்து புண்ணியங்கள் பாவ மாக்கியும் பலன்களெல்லா மருந்தியுநிற்குமான்மா என்னுஞ் சிவஞான சித்தித் திருவாக்குகளான் நன்கு துணியப் படும். இதன் கண்ணே கன்மமும் முற்பிறவி பிற்பிறவிகளு முண்டென்பது இனிது பெறப்படுதல் காண்க. இனிப்பரமான்மா, சீவான்மாவின் வேறாய் எல்லா அறிவும் எல்லா முதன்மையும் எல்லா ஆற்றலும் எல்லா இன்பமும் ஒருங்குடையதா மென்பதும், அஃது அருவாய் உருவாய் அருஉருவாய் இவையும் அல்லவாய் இருக்கு மென்பதும், அஃது உலகுயிர்களுமாய் அவற்றின் வேறுமாய் அவற்றினுள்ளுமாய் இரண்டறநிற்கும் என்பதும். குறித்த தொன்றாக மாட்டாக் குறைவிலனாதலானும் நெறிப்பட நிறைந்த ஞானத்தொழிலுடை நிலைமையானும் வெறுப்பொடு விருப்புத்தன்பான் மேவுதலிலாமையானும் நிறுத்திடு நினைந்த மேனிநின் மலனருளினாலே அருவமோ ரூபாரூப மானதோ அன்றிநின்ற உருவமோ உரைக்குங் கர்த்தாவடிவெனக் குணர்திங்கென்னில் அருவமும் ரூபாரூப மானது மன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக்குள்ளதாமே உலகெலா மாகிவேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி அலகிலாவுயிர்கள் கன்மத்தாணையின் அமர்ந்து செல்லத் தலைவனாய் இவ்வற்றின்றன்மை தனக்கெய் தலின்றித்தானே நிலவு சீரமலனாகி நின்றனன் நீங்கா தெங்கும் என்னுஞ் சிவஞான சித்தித் திருவாக்குகளான் உணர்க. இதுகாறும் கூறியவாற்றாற் சைவ சித்தாந்தந் தவிரப் பிறிது எந்தச் சமயமும் இந்துசமயம் என்னும் பெயர்க்கு உரியதா காமை காண்க. ஓம் சிவாயநம: மாணிக்க வாசகர் காலம் நமது ஞானசாகரப் பத்திரிகையின் முதற்பதுமத்தில் சைவ சமயாசிரியரான ஸ்ரீமந் மாணிக்கவாசக சுவாமிகள் காலம் இற்றைக்கு ஆயிரத்தைந்நூறு வருடங்களுக்கு முற் பட்டதா மென்பதும், அவர் திருஞான சம்பந்த மூர்த்திகள், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் என்னும் ஏனைச் சைவ குரவன் மார் எல்லார்க்கும் முறபட்டவ ராவரென்பதும் இஞ்ஞான்றைச் சரித்திர ஆராய்ச்சி முறைவழுவாது ஆய்ந்துதெற்றென விளக்கினாம். ஞான சாகரத்தில் இங்ஙனம் நிலைபெற நாட்டிய காலநிலையைப் பின்னும் ஆங்கில முணர்ந்தாரும் தெரிந்து கொள்ளல் வேண்டி, அதனை ஆங்கில மொழியினும் எழுதி எமது கலாசாலைப் போதகாசிரியரால் நடாத்தப்படும் சென்னை கிறிதுவ கலாசாலைப் பத்திரிகையினும் பிரகடனஞ் செய்வித்தேம். அதன் பிற் சில வருடங்கழித்து ஸ்ரீது. அ. கோபிநாதராவ் என்பவர் தாமும் மாணிக்கவாசகர் காலத்தை நிலைபெறுத்துவான்புகுந்து ஆங்கிலத்தில் ஒன்றெழுதி, அதனையும் எங்கள் சென்னைக் கிறிதுவ கலாசாலைப் பத்திரிகையில் வெளியிடுவித்தார். ராவ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய அதனையே, தஞ்சையிற் பிரசுரமான தமிழகம் என்னும் பத்திரிகையில் அதன் பத்திரிக்காசிரியர் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடு வித்தார். அது நிற்க. இனிக் கோபி நாதராவ் அவர்கள், மாணிக்கவாசகர் காலம் நாட்டுதற்குக் காட்டிய காரணங்கள் சரித்திர முறைக்கும், தருக்க முறைக்கும் இணங்காதன வாய்ப் பிழைபடுதலின், அவற்றின் பிழைபாடுகளை நெறியே வகுத்துக் காட்டி, அப்பெருமான் காலம் யாம் நிறுவிய வாறே நிலை பெறுவதா மென்பதனை ஈண்டு வலியுறுத்துதற்குப் புகுகின்றேம். இனி மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் முதலான ஏனை ஆசிரியன் மார் மூவர்க்கும் பிற்பட்டவர் என்று நாட்டுதலே ராவ் அவர்களது கொள்கை யாம். அஃதே னெனில், மாணிக்கவாசகர் அம்மூவர்க்கும் முற்பட்டவ ராயின், பின்னையோ ரான அம்மூவரும் தாமருளிச் செய்த தேவாரத்திருப்பதி கங்களில் முன்னையோரான மாணிக்க வாசகரைக் குறிப்பிட்டு ஏதேனும் மொழிந்திடுவ ராகலி னென்க. அற்றேல், நரியைக் குதிரைசெய்வானும் நரகரைத் தேவுசெய்வானும் என்று திருநாவுக்கரையர் திருவாக்கிற் போந்த குறிப்பே, மாணிக்கவாசக ரைப்பற்றி அவர் கூறினமைக்குப் போதிய சான்றாம் என்பாரை மறுத்தற் பொருட்டு ராவ் அவர்கள் நரியைக்குதிரை யாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகரைப்பற்றிய தாகாதென்று ஆசங்கிக்கின்றார். அத்திருவிளையாடல் அவர்மேற்றாக வைத்துக் கூறிய வாதவூரர் புராண உரையும் திருவிளை யாடற் புராண வுரையுங் கொள்ளற் பாலன வல்ல வென்றும், அதனைத் தம் பொருட்டாகவே சிவபெருமான் நிகழ்த்தினா ரென மாணிக்கவாசகர் தாமே தமது திருவாக்கிற் கூறிற்றில ரென்றும், நரியைக் குதிரை செய்வானும் என்னுந் தேவாரத்தில் முதலதுமாத்திரம் மாணிக்கவாசகர் பால தாயின் நரகரைத் தேவுசெய்வானும் விரதங்கொண்டாட வல்லானும் என்றற் றொடக்கத்தனவாகப் பின்வருவன வெல்லாம் வேறெவர் பொருட்டாக நிகழ்த்தப்பட்டன வென்றும் மேலு மேலும் வற்புறுத்து மொழிந்தார். இனித் திருவாசகத்தை ஒருமுறை உற்றுநோக்கு வார்க்கும் நரிபரியான திருவிளையாடல் தம்பொருட் டாகவே சிவபெருமான் நிகழ்த்தினாரென மாணிக்கவாசகர் பலவிடத்துங் கூறுதல் வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடப்பவும், ராவ் அவர்கள் அதனை அறியமாட்டாது ஆசங்கித்தல் பெரிதும் வியப்புடைத்தாம். “xU§Fâiu cyîril cilahnd eÇfbsšyh«, bgU§Fâiu ah¡»a thw‹nw c‹nguUns”1 v‹gJ ‘át bgU khnd, Ú vd¡F¢ brŒj nguU£owkhdJ eÇfis bašyh« bgÇa Fâiufshf¤ âÇò brŒj âUÉis ah£lhnd És§»¡ »lªjj‹nwh? என மாணிக்க வாசக சுவாமிகள் கூறினதை இனியேனும் உணர்வாராக. இதன் கண் என் பொருட்டுஎன்னுஞ் சொற் பிரயோகம் வந்ததில்லை யாலோ வெனின்:-செய்யுட் பொருள் போகு முறையால் என் பொருட்டு என்பது எளிதிற் பெறக் கிடத்த லால் அங்ஙனம் உசாவுதல் பொருந்தாதென்க. சிவபெருமான் நிகழ்த்திய ஏனைத் திருவிளையாடல்களைப்பற்றிப் பேசு மிடத்தெல்லாம், இறைவனை முன்னிலைப்படுத்து விதந்து கூறாத மாணிக்கவாசகப்பெருமான் ஈண்டு உன்பேர் அருள் என முன்னிலைப்படுத்து நரிகளெல்லாம் பெருங் குதிரை யாக்கியவாறன்றே என்று கிளந்தெடுத்துக் கூறிய வாற்றானே, எனக்குச்செய்த உன்பேரருள் நரிகளை யெல்லாங் குதிரைகளாக்கிய வகையான் அன்றே விளங் கியது என்பதே அதற்கு மெய்ப்பொருள் எனல் செய்யுட் பொருள்கோண் முறை அறிவார்க்கெல்லாம் தெற்றென விளங்கிக் கிடந்தது. இதற்கிதுவே மெய்ப்பொருளாவது, மாணிக்கவாசகசுவாமிகள் பிறாண்டுங்கூறிய தெரிவர நின்றுருக்கிப் பரிமேற்கொண்ட சேவகனார், ஒருவரை யன்றி யுருவறியாதென்றனுள்ளமதே பாய்பரிமேல் கொண் டென் உள்ளங்கவர்வரால் பரிமேற்கொண்டு நமை யாண்டான் என்றற்றொடக்கத்து உபப்பிருங்கண வாக்கி யங்களானும் இனிது துணியப்படும். நரியைக் குதிரையாகச் செய்து அக் குதிரைமே லிவர்ந்து போந்த பெருமானது சகளமங்கள அருட்கோலத்தினையே என்மனம் நினைவ தன்றிப் பிறிதோருருவத்தினை நினைய மாட்டா தென்று சுவாமிகள் வலிபெறுத்திக் கூறிய வாற்றானே அத்திருவிளை யாடல் அவர் தம்பொருட்டே நிகழ்த்தப்பட்ட தென்பது இனிது புலப்படவில்லையா? அற்றேலஃதாக, மேலைத் திருவாக்குகளில் பரிமேல்வந்தார் எனக்கூறிய தன்றி நரியையே குதிரையாகக் கொண்டு வந்தா ரென்பது சொலப் பட்ட தில்லையா லேவெனின்;-- நன்று கடாயினாய், நரியைக்குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப், பெரியதென்னன் மதுரை யெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையான் என்றும், அரியொடு பிரமற்களவறி யொண்ணான், நரியைக் குதிரையாக்கிய நன்மையும், ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி, பாண்டியன் றனக்குப் பரிமாவிற்று, ஈண்டு கனகமிசையப் பெறாஅது, ஆண்டானெங்கோ னருள்வழியிருப்பத், தூண்டுசோதி தோற்றிய தொன்மையும் என்றும் சுவாமிகள் பிறாண்டும் ஓதிய ஏனை உபப்பிருங்கணவாக்கியங்களால், இறைவன் மதுரையிற் கொண்டுவந்த பரிசுகள் எல்லாம் நரிகளா லாக்கினவேயாமாவது நன்கு தெளியப்படுமென்க; அல்லதூஉம், அங்ஙனம் நரிகளையெல்லாம் பரிகளாக்கிக் கொணர்ந்தவர் பெருந்துறையிற் குருந்தமரநீழலிற் குருவடிவாய் எழுந்தருளித் தமக்கு அனுக்கிரகித்த இறைவனே என்பது பொள்ளெனப் புலப்பட மாணிக்கவாசகர் பெருந் துறையான் எனவுங் கிளந்தெடுத்துக் கூறினாராகலின், நரிபரியான திருவிளை யாடல் மாணிக்கவாசக சுவாமிகள் பொருட்டே நிகழ்த்தப் பட்ட தென்னும் உண்மை மலை யரண்போல் நிலைபெற நிற்றல் காண்க. இத்துணை நுட்பமும் ஒருங்குணர்ந்து அத் திருவிளையாடல் மாணிக்க வாசகர் பாலதாக வைத்துக்கூறிய ஆன்றோர் தொல் வழக்குரைப் பொருளோடு, பெரிதும் மாறுகோளுற்றுக் கூறியதன்மேலும் அமையாது, அவர் தம்மைத் தாம் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று பிடிவாதமாய்ச் சாதிப்பார் என்று இகழ்ந்து கூறிய ராவ் அவர்கள் அறியாமையை என்னென்பேம்! இனி நரியைக் குதிரைசெய்வானும் என்னும் அப்பர் திருவாக்கில் வேறுகூட்டிச் சொல்லப்பட்ட நரகரைத் தேவு செய்வானும் விரதங்கொண்டாட வல்லானும் விச்சின்றி நாறுசெய்வானும் என்றற் றொடக்கத்துப் பிறலீலைகள் எவர்பொருட்டுச் செய்யப்பட்டன? என்று ராவ் அவர்கள் வினாவுகின்றார். பிறவகையிற் பிறர்பொருட்டுச் செய்யப் பட்ட ஏனை லீலைகளைக் குறித்து இங்ஙனம் வினா நிகழ்த்தல் எடுத்த பொருளுக்குச் சிறிதும் இயைபுடைத் தாகாமை அவர் உணராததென்னை? மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்த நரிபரித்திருவிளையாடலை அப்பர் கூறியதனானே, அதனோடு உடன் தொகுத்துக் கூறப்பட்ட ஏனையவும் மாணிக்கவாசகர் பாலனவாகக் கூறவேண்டு மென்பது ராவ் அவர்கள் கருத்துப் போலும்! இத்தருக்கமுறை அழகிது! அழகிது!! அன்பர்கள் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளை யாடல் மாட்சியினைத் தொகுக்கப் புகுந்த திருநாவுக்கரசு சுவாமிகள், மாணிக்கவாசகர் பொருட்டும் பிறர்பொருட்டும் நிகழ்ந்தன கலந்தெடுத்துக் கூறினாரன்றி, அன்பர் ஒருவர்க்கே நிகழ்த்திய லீலையெல்லாம் கூறுவேனெனக் கருதிக் கூறப்புகுந்தாரல்லர். இது தானும் பிரித்துணரவல்ல தமிழ்மொழிப்பயிற்சி பெறாது, அரும் பெருந் தமிழ் நூல்களை ஆய்ந்து கால வளவை வரையறுப்பே மெனப் புகுவார் திறம் அறிவுடையார் கண்டு நகையாடுதற்கே ஏதுவாமென் றொழிக. எனவே, அப்பர் சுவாமிகள் தமது திருவாக்கிற் குறித்துரைகாட்டிய நரியைக்குதிரை செய் வானும் என்னுந் திருவிளையாடல் மாணிக்கவாசக சுவாமிகள் பொருட்டு நிகழ்ந்ததனையே காட்டுவதாகு மன்றிப் பிறிதாகமாட்டா தென்பது நிறுவப் பட்டது. இனி அவர் கூறிய ஏனைக் காரணங்களையும் முறையே ஆய்ந்து செல்வாம். இனி ராவ் அவர்கள் சிலாசாதன ஆராய்ச்சி வகை யிலும் மாணிக்கவாசகர் ஏனைமூவர்க்கும் பிந்தியவ ராய்க் காணப்படுகின்றார் எனக் காட்டப்புகுந்து, இத் தேயத்தின் கட் பலவிடங்களினுங் காணப்படுங் கல் வெட்டுகளில் இவரது பெயர் காணப்படாமையானும், சிறுத்தொண்டர் சீராள தேவர் முதலாயினாரையெல்லாம் குறிப்புச் செய்த இராசராச சோழன் இவரை அங்ஙனங் குறிப்புச் செய்யாமை யானும் சுவாமிகள் காலம் பிற்பட்டதாதல் ஒருதலை என்கின்றார். இனி இவருரைக்கூற்றுப் பொருத்தமின் றென்பது காட்டுவாம். அரசாங்கத்தார் சென்ற சில வருடங்களாகவே ஆங்காங்குள்ள கல்வெட்டுகளைப் பிரதிசெய்து போதரு கின்றாரென்பதும், இன்னும் இத்தென்னிந்திய நாட்டிற் பிரதி செய்யப்படாது கிடக்கின்ற கல்வெட்டுக்கள் பல்லாயிரக் கணக்காக இருக்கின்றன வென்பதும் எல்லாரும் அறிந்தன வேயாம். இத்தென்னிற்தியாவிலுள்ள கல்வெட்டுக் கள் அனைத்தும் பிரதி செய்து வெளியிடப்பட்டிருப் பினன்றே அவை தம்மிற் சிலவற்றிலேனும் மாணிக்கவாசகர் பெயர் காணப்படவில்லையே என்று வினவலாம். வெளிவராத வற்றில் அவர் பெயர் இருப்பினும் இருக்கலாம். ஆகையால், கல்வெட்டாராய்ச்சி அரை குறையாயிருக்கும் இந்நாளில் அங்ஙனந்துணிபுரை நாட்டுதல் போலியா மென்க. அல்லதூஉம், கும்பகோணத்துக்கு அருகாமையிலுள்ள திருவலஞ்சுழிக் கல்வெட்டொன்றில் மாணிக்கவாசகர் பெயர் காணப்படுகின்ற தென்றுரைத்த ராவ் அவர்கள், அக் கல் வெட்டின் காலவளவையும் அதன் வரலாறும் கூறாது விட்டது என்னையோ? திருவலஞ்சுழிக் கல்வெட்டு மிகப் பழையதாதல் பற்றி அதனை விவரித்துரைப்பிற் றமது கொள்கை புரைபடுமெனக் கருதி விட்டார்போலுமென எமக்கு ஐயம் நிகழாநிற்கின்றது. அது நிற்க. அல்லதூஉம், சோழன் உருவப் பஃறேர் நெடுஞ்சேட் சென்னி, சேரலாதன், ஆலங்கானத்திற் போர்வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் என்றற் றொடக்கத்துப் பழைய தமிழ் மன்னர் பெயரும், நக்கீரர், கபிலர், பரணர், மாங்குடிமருதனார் என்றற் றொடக்கத்துத் தமிழ் நல்லிசைப் புலவர் பெயரும் பொறித்த கல்வெட்டுகள் காணப்படாமைபற்றி அவரெல்லாம் பிற்காலத்திருந்தன ரென ராவ் அவர்கள் கூறப்பெறுவரோ? பண்டைக்காலத்துத் தண்டமிழ் வளஞ் சிறக்க இலக்கண இலக்கிய நூல்கள் பரக்கக்கற்றும் பலப்பல புதிதுபுதிதா இயற்றியும் வந்தமை யானே, அந்நூல்களால் அம்மன்னர் புலவர் முதலாயினார் பெயர் பதிக்கப்பட்டு இன்று காறும் வழங்கிவரலாயின. இலக்கண இலக்கிய நூல்வழக்கின்றி நாகரிகக் குறைவுள்ள காலத்தின் மாத்திரமே மன்னர்கள், தம்பெயரும் தம்கொடைத் திறமும் மறையாதிருத்தற் பொருட்டுக் கல்வெட்டுகள் தோற்றுவிப்பர். யாங்கூறுவதே உண்மைப் பொருளென்றற்குத் தமிழ்வளம் மிக்க பண்டை நாட்டமிழ் மன்னர் கல்வெட்டுக்கள் இதுகாறும் வெளிவராமையே உறுஞ் சான்றாம். மற்று இவ்வாறன்றி, இராசராச சோழன் முதலிய பிற்காலமன்னர் காலத்தே தமிழ்க்கல்வி வளஞ் சுருங்கிப்போக, மிலேச்சவரசர் பலர் அலைமேலலை புகுந்தாற் போல இடையிடையே படையெடுத்து வந்து இந்திய மக்களை நலிந்து குழப்ப முண்டாக்கி வந்த காரணத்தானே, பிற்காலத்துத் தமிழ்வேந்தர் தங்கொடைத்திறம் முதலியன தமக்குப் பின்னும் அழியாது புலப்படுதல் வேண்டிக் கற்களிற் பொறித்து நிலைபெறுவித்தார். பண்டைநாட்டமிழ் மன்னர் காலத்து வேற்றரசர் தமிழ்நாடு புகுதாமையானும், தங்கொடைத் திறத்தை வியந்தியற்றி தமிழ் நூல்கள் அழியாவென் றவர் கருதினமையானும் அவர் பிற்காலத்தார் போலக் கல்வெட்டுகள் தோற்றுவித்திலரென்க. இங்ஙன மாகலின் மாணிக்கவாசகர் பெயர் கல்வெட்டுக்களிற் காணப்படாமை கொண்டே அவர் ஏனைமூவர்க்கும் முற் பட்ட காலத் திருந்தாரென்பது பெறப்படும். அவர் பிற்காலத் திருந்தனராயின் கல்வெட்டுக்கள் மிகுதியுமுண்டான அப்போது அவர்பெயர் பெரிதும் அவற்றிற் காணப்பட்டுக் கிடக்கு மென்க. அற்றேலஃதாக, இராச ராச சோழன் தனக்கு முன்னிருந்த சிறுத்தொண்டர் சீரான தேவரைக் குறிப்பித்த வாறுபோல, அங்ஙனமே தனக்கு முற்பட்ட மாணிக்க வாசகரைக் குறிப்பிடாத தென்னை யெனின்;- அஃதவ்வரசன் கருத்தறி வதற்குக் கருவி வாய்ப்பி னன்றி முடிவுகட்டல் ஏலாததொன்றாம். ஒவ்வொருவர்க்கு ஒவ்வொருகாரணம் பற்றி ஒவ்வொருவர் மாட்டு அன்பு நிகழும். தம் ஒரே புதல்வனை அறுத்துக் கறிசெய்து அடியார்க்கு அமுதூட்டிய அருமைத் திறத்தை மிகவியந்து அவ்வரசன் உலகத்தார்க்கு அவரன் பின்றிறத்தை நன்மாதிரி யாய் நிறுத்தல் வேண்டி அங்ஙனம் அவரைக் குறித்திருக்க லாம். இதுவேயன்றிப் பிறகாரணமும் இருக்கலாம். அல்லதூ உம், தனக்குச் சிறுகாலம் முற்பட்டிருந்த சிறுத்தொண்டரை நினைவு கூர்தற்குக் காரணம் வாய்த்தாற் போலத், தனக்குப் பெருங் காலம் முற்பட்டிருந்த மாணிக்க வாசகரை நினை வற்றுப் பிரதிட்டை செய்தற்குக் காரணம் அம்மன்னற்கு வாயாது மிருக்கலாம். ஆகலின், அதனை ஒரு காரணமாய்க் கொண்டு, மாணிக்க வாசகர் காலம் பிறபட்டதென நிறுவப் புகுதல் பெரிதும் பிழைபடுவ தொன்றாம் என்க. மேலும், 11-வது நூற்றாண்டிற்கு முன்னர் மாணிக்கவாசகர் உருவம் எந்தக் கோவிலினும் பிரதிட்டிக்கப் படவில்லை என்கின்றார். இங்ஙனம் கூறும் இவர் சுவாமிகள் உருவம் அவ்வாறு எங்கும் பிரதிட்டிக்கப்படவில்லை என்பதனைக் காரணங்காட்டி நிச்சயித்தனரா? சிறிதும் இல்லை. பிரபல காரணங்கள் எடுத்துக் காட்டாது எனக்குத் தோற்றிய வரையில் என்று நெகிழ்ந்து உரை கூறிப்போதல் சரித்திர முறைக்குச் சிறிதும் இணங்காத தொன்றாமென்க. இவர் தமக்குத் தோன்றிய இவ்வற்புத தோற்றத்தைத் தம்மளவே வைத்துப் பார்த்துப் பார்த்து மகிழ்க. இனி மாணிக்கவாசகர் மற்றைச் சமயாசிரியன் மார்க்கு முந்தியயவராயின், அவராற் பாடப்பெற்ற திருப்பெருந் துறை, திருவுத்தரகோசமங்கை என்னுஞ் சிறந்த சிவதலங்கள் தேவாரத்துள் யாண்டுங் குறிக்கப்படாமை என்னை? என்று வினாவி, அவ்விரண்டும் ஏனைமூவர்க்கும் பிற்காலத்தே புதிதே முளைத்தெழுந்தனவாகலின் அவை தம்மைப் பாடிய மாணிக்கவாசகர் அம்மூவர்க்கும் பிற்காலத்தினர் என்று ராவ் அவர்கள் தருக்கிக்கின்றனர். இத்தருக்கவுரை அத்தலங்களின் உண்மைநிலை தெரியாமையால் எழுந்ததாகும் என்பதனை இங்கே ஒரு சிறிது விளக்குவாம். முதலில் திருப்பெருந் துறையைப் பற்றி விவரிப்பாம். திருப்பெருந்துறை என்பது தெற்கே பாண்டிய நாட்டின் கண் தலைமை பெற்றிருந்ததொரு கடற்றுறைப் பட்டினமாம். முற்காலத்துப் பாண்டிமா நாட்டுக்குச் சிறந்த கடற்றுறைப்பட்டினங்களாயிருந்த கொற்கை, உவரி, பெருந் துறை என்பனவற்றைப் பற்றிய குறிப்புகள் பழைய சங்க இலக்கியங்களிற் காணப்படுகின்றன. சிலப்பதிகாலம், இந்திர விழவூரெடுத்தகாதையினால் இவ்விந்திய தேசத்துக்கு அப்பால் மேற்கேயுள்ள பலதேயச் சாதியாரும் தமிழ் நாட்டில் வந்து வாணிகஞ் செய்தாரென்பது அறியக் கிடந்த தாகலின், பெருந்துறை என்னுங் கடற்றுறைப் பட்டினத் திலும் அவ்வாறே பல்தேயத்துச் சாதியாரும் வாணிகஞ் செய்தற் பொருட்டு வந்தனரென்பது பெறப்படும். பாண்டியன் பொருட்டாகக் குதிரைவாங்கப் புறப்பட்ட மாணிக்கவாசகரும் பிறதேயத்தார் குதிரைகொண்டு வந்திறக்கும் இடமாதல் பற்றியே பெருந்துறை நாடிச் சென்றார். மாணிக்கவாசகர் சென்ற காலத்துப் பெருந் துறை சிவாலயமுடையதாக இருந்ததில்லை. அவ்விடத்தில் மிகுதி யாயிருந்தன தென்னஞ் சோலைகளும் பூம்பொழில் களுமே யென்று தமது அருமைத்திருவாக்கால் 2தெங்கு சோலைகள் சூழ்பெருந்துறை எனவும், 3தெங்குதிரள் சோலைத் தென்னன் பெருந்துறையான் எனவும், 4செந்தார்ப் பொழில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான் எனவும் சுவாமிகள் அருளிச் செய்தமையானே இனிது துணியப்படும். இவ்வுண்மை, சுவாமிகள் சரித்திரவுண்மை வழுவாது கூறிய திருவாதவூரர் புராணத்திலும் ஐயமறத் தெளித்துச் சொல்லப்பட்டது. அது, ஈனமில் பெருந்துறை யெனும் பதியின் ஞாங்கர் கானமிகு புன்னைவளர் கந்தமுள சந்தம் வானமுயர் சண்பக மரந்திகழ் நரந்தம் தேனின முரன்றெழு செருந்திகள் பொருந்தி. வீழ்ந்த நறவத்துளி விழிப்புனலதாகச் சூழ்ந்து முரல் வண்டினிசை தோத்திரம தாகத் தாழ்ந்து மலரேந்தி யிறை தன்றிரு முனின்றே வாழ்ந்துருகு மன்பரெனமன்னு மொரு பூங்கா என்னும் அப்புராணச் செய்யுட்களிற் காண்க. மேலும், மாணிக்கவாசகப் பெருமானை ஆட்கொண்டருளல் வேண்டி அச்சோலையிற் குருந்த மரநீழலின் கண்ணே எழுந்தருளிய குருநாதன் பின்னர் அவர்க்கு உபதேசித்தற் பொருட்டு வேண்டுவன வெல்லாஞ் சித்தஞ் செய்ம்மின்கள் என்று தன்மருங்கிருந்த சீடர் குழாத்துக்குக் கட்டளையிட்ட அளவிலே, அவர்கள் எல்லாஞ் சித்தஞ்செய்கின்றுழி மலர்மாலையினாலும், பொற்சரிகையின் நடுவே அழுத்தின முத்துக்களுள்ள பட்டாடையினாலும் அப்பூங்காவின் ஊடு ஒருகோயில் செய்தனர் என்னும் பொருள்பட முன்னவன் புகன்றவாறு முயல்குவமென்றேயந்த மன்னறு தவத்தின் மிக்கார் வகைமலர்த் தெரியலாலும் பொன்னிடையழுத்தி முத்தம் புனைந்தபல் பட்டினாலும் அந்நெடுங் காவினூடங் கான பூங்கோயில் செய்தே என்று திருவாதவூரர் புராணத்தின்கட் சொல்லப்பட்ட தனால், திருப்பெருந்துறையின் கண் சிவாலயம் அப்போதிருந் திலது என்றல் பசுமரத்தாணி போல் நாட்டப் பட்டமை அறிக. அன்றி அங்கே சிவாலயம் இருந்ததாயின் அச் சோலையின் கண் அவ்வாறு பட்டாடையினால் ஒருகோயில் இயற்றல் வேண்டாமையானும், சிவாலய மிருந்ததாக அப் புராணத்தின் கண் யாண்டும் ஓதப்படாமை யானும் மாணிக்கவாசகர் காலத்துச் சிவாலயம் அங்கில்லை யென்பது தெளிபொருளே யாமென்க. அற்றேல், பரஞ்சோதி முனிவர் திருவிளையாட லினும், வேப்பத்தூரார் திருவிளை யாடலினும் அங்கே கோயிலுள்ளதாகச் சொல்லப் பட்டிருத்தல் என்னையெனின்; பின்னையோரான அவ்விரு வரும் சரித்திர மாறுபாடாகத் தாமே சிருட்டித்துக் கொண்டு ஓதுவன பல உளவாகலின், அவர் கூறுவன ஈண்டைக்குப் பிரமாணமாகாவென்க. திருவாதவூரர் புராணம் ஒன்றுமே சுவாமிகள் சரித்திரத்தைப் பிழைபடாமல் உள்ளவாறே யுரைப்பதாம்; இம்மெய்ப்புராண வுரையோடு திறம்பிக் கூறும். அப்புராணவுரைகட்கு ஆதாரம் திருவாசகத்தும் பிறாண்டும் பெறப்படாமையின் அவை கொள்ளற்பாலன வல்லவென்று மறுக்க. இனி, மாணிக்கவாசகர் வருமிடம் நோக்கி அவரை ஆட்கொண்டருளல் வேண்டிக் குருநாதன் அப்பூங்காவிலே எழுந்தருளினான். மாணிக்கவாசகர் தாங் குதிரைகொள்ளப் போன அப்பெருந்துறையிலே அக்குருநாதனைக் கண்டு மெய்ஞ்ஞானப் பேறுடையராய் விளங்கினார். இங்ஙன மல்லது மாணிக்கவாசகர் பெருந்துறையிலே சிவாயல மிருப்பதாக உணர்ந்து அங்குச் சென்றாரல்லர். ஆகலின், இவர் அவ்விடஞ் சென்றதுகொண்டே அங்குச் சிவாலய மிருந்ததென நாட்டுவாருரையும் பொருந்தாதென்றுணர்க. இனி, மாணிக்கவாசகர் தாம் மெய்ஞ்ஞானப் பேறு பெற்று இறைவனுக்கு ஆட்பட்ட பெருந்துறையில் உடனே கோயில் கட்டுவித்தாரென்றேனும், உபதேசம் பெற்றுப் பாண்டியனிடம் போய்ப் பின்னும் பெருந்துறை நண்ணி அவ்விடத்தைக் கடைசியாகவிட்டு மீண்ட பின்னர்த் திரும்பவும் அவ்விடத்திற்குச் சென்றாரென்றேனும் திருவாசகமாவது திருவாதவூரர் புராணமாவது கூறுகின்றில. மாணிக்கவாசகர் பின்தாம் பெருந்துறையை நினைவுகூர்ந்த போதெல்லாம் அங்கே குருந்தமரநீழலிலே எழுந்தருளித் தம்மை யாட்கொண்ட குருநாதன் கோலத்தையே நினைந்து ருகினதாகத் திருவாசகத் தினாற் பெறப்படுகிறதே யல்லாமல் அங்கே சிவாலயமிருந்த தாக நினைவுற்றுருகினரென்பது சிறிதும் புலப்படவில்லை. அற்றேலஃதாக, மாணிக்கவாசகர் தாங்குதிரை வாங்குதற் கென்று கொண்டு சென்ற பொருட்டிரளை யெல்லாம் எங்ஙனம் செலவிட்டா ரெனின்; -- கூறுதும். மாணிக்க வாசகர் தங்குருநாதனுக்கு உடல் பொருளாவி மூன்றனையும் உரிமைப்படுத்துங்கால் தாங் கொண்டு வந்த பொருட்டிரள் முழுவதூஉம் குருநாதன் றிருவடியிலே உய்த்தார். அப்பொருட் டிரளைக் குருநாதன் தன்சீடர் குழாத்தின்பால் உய்த்துத் திருந்திய பொருளி தெல்லாம் திருப்பணிக்களியும் மேலாம், அருந்தவர்க்குதவும் இல்லாதலந்தவர்க்கருளு மென்றார் என்று கூறியதாக திருவாதவூரர் புராணத்தின் கட் சொல்லப் படுதலின், அங்கிருந்த அவ்வடியவர்கள் எல்லாரும் அப்பொருட்குவையைச் சிவாலயத் திருப்பணி கட்கும், அரியதவசிகட்கும், வறியவர்கட்கும் கொடுத்துச் செல விட்டன ரென்பது பெறப்படும். நன்று சொன்னீர், திருப் பணிக்கு அளியும் என்றதனானே. பெருந்துறையிற் புதிதாக ஒருகோயில் கட்டுவித்தார் எனல் பெறப்படுமன்றோ வெனின்;-- அறியாது கூறினீர், திருப்பணி என வாளா கூறினமையானே தமிழ் நாட்டின்கண் முன்னமே யுள்ள சிவாலயங்கள் புதுப்பிக்குஞ் செலவுக்குக் கொடுத்தா ரென்பது பெறப்படுவதல்லாமல், அதுகொண்டு புதுவதாக ஒரு கோவில் கட்டுவித்தா ரென்பது பெறப்படாது. அன்றி அவ்வாறு ஒன்று கட்டுதற்கென்றே கொடுத்தாரெனக் கொள்வேமெனினும், அச்செய்யுளைத் தொடர்ந்துவரும் பிற் செய்யுட்களிற் கோயில் கட்டுவித்த விஷயம் ஒருசிறிதும் குறிக்கப்படாமையின் அவ்வாறு கோடல் போலியுரையா மென விடுக்க. எனவே, மாணிக்கவாசகர் காலத்தில் திருப் பெருந்துறை சிவாலய முடையதாயில்லை யென்பது நிறுவப்பட்டமை காண்க. இனித் திரவுத்தர கோசமங்கையி னியல்பை ஒரு சிறிது ஆராய்வாம். மாணிக்கவாசகப் பெருமானைப் பெருந் துறையிலே விட்டுக் குருநாதன் நீங்கும்போது, தன்னைப் பிரிந்திருக்க மாட்டாமையால் தாயைப்பிரிந்து வருந்தும் கன்றுபோற் கரைந்து கரைந்து உருகியழும் தம் அன்பரை நோக்கிப் பூங்காவினிடை நின்ற ஒரு மடுவைச் சுட்டிக் காட்டி இம்மடுவின் நடுவிலே சோதிமயமான ஒரு தழற் பிழம்பு தோன்றும் அப்போது நம் அடியரெல்லாஞ்சென்று அதன்கண் வீழ்ந்து நம்பாற் சேர்குவர்; நீயும் அவ்வாறு அவரோடு உடன்சென்று விழாமல் உத்தர கோசமங்கை யென்னும் நம் ஊரிற் சென்று, சித்தியங்கு எவையும் எய்தி அதன்பின் நஞ் சிவலிங்க வடிவு வைத்த சிவதலங்கடோறுஞ் சென்று வருகுவையாயின் அங்கங்கும் இத் தழற்பிழம்பு வடிவே காண்பாய், இறுதியாகச் சிதம்பரம் போந்து அங்கே புத்தரை வாதில் வென்றபின் சிவ பெரும்பதம் பெறுகுவை என்று அக்குருமூர்த்தி அருளிச் செய்ததாகத் திருவாதவூரர் புராணங் கூறுகின்றது. இங்கே உத்தரகோசமங்கையைச் சிவலிங்கம் வைத்த தலமாகக் கூறாமல், மற்றைத் தலங்களையே அது வைத்ததாகக் கூறினமையே கவனிக்கற் பாலதாம். மாணிக்க வாசகர் தம் சிவநிட்டை கைகூடுதற் காகவே அந்நிட்டை மெய்ப்பொருள் தேற்றிய குருநாதன், திருப்பெருந்துறைப் பூங்காவோ டொப்பப் பொழில்கள் நிறைந்து நிட்டை புரிதற்குப் பெரிதும் அனுகூலமுடைத்தாய் விளங்கும் திருவுத்தர கோச மங்கை யூர்க்கு ஏகுகவென்று ஏவினா ரென்பது மேலதனால் தெளியற்பாலதாம். அதனால், திருவுத்தரகோச மங்கையில் அந்நாளில் சிவாலய மிருந்ததின் றென்பதூஉம் பெறப்படுவ தேயாகும். மெய்ப்பொருள் வழாதுகூறும் இத்திருவாதவூரர் புராணவுரைக்கு ஏற்பவே மாணிக்கவாசகப் பெருமானும் தன்னருமைத் திருவாக்கால். அளிதேர்விளரி, ஒலிநின்றபூம் பொழில் உத்தரகோசமங்கை அணிபொழில் உத்தரகோசமங்கை என நீத்தல் விண்ணப்பத்தினும், தெங்குலவு சோலைத் திருவுத்தரகோச மங்கை எனத் திருப்பொன்னூசலினும் கிளந்தெடுத்தருளிய வாறுங் காண்க. திருவுத்தர கோச மங்கைக்கரசே என விளித்துக் கூறுவதெல்லாம் ஆங்குத் தழலுருவாய்த் தோன்றிய சிவ பெருமானை யல்லது வேறில்லை யென்க. ஆகவே, உத்தரகோசமங்கை ஊரிலும் மாணிக்கவாசகர் காலத்திற் சிவாலய மிருந்ததில்லை யென்பது இனிது துணியப் படுவதாம். ராவ் அவர்களும் இவ்விரண்டு கோவில்களும் பழைய காலத்தன அல்ல என்கின்றார். அது நிற்க. இனி மாணிக்கவாசகர் காலத்தும் அவர்க்குச் சில நூற்றாண்டு பிற்றோன்றிய அப்பமூர்த்திகள் முதலான ஏனைச் சமயாசிரியன்மார் மூவர்காலத்தும் திருப்பெருந் துறையும் திருவுத்தரகோச மங்கையும் சிவாலயங்கள் உடையவா யில்லாமையால், சிவாலயமுள்ள தலங்களுக்கே சென்று திருப்பதிகங் கட்டளையிடும் கடப்பாடு உடையரான சமயாசிரியர் மூவரும் அவ்வூர்களைத்தம் திருவாக்கிற் குறியாது விட்டனர். ஆகையால் அவர்கள் குறியாது விட்ட காரணம் இன்னதென்று பகுத்துண ராமலும், மாணிக்க வாசகர் காலத்து அக்கோவில்கள் கட்டப்படவில்லை என்பதுணராமலும், தேவாரத்தில் அத்தலப்பெயர்கள் வராதது ஒன்றேபற்றி மாணிக்கவாசகர் அம்மூவர்க்கும் பிற்பட்டவ ரென்று கூறிய ராவ் அவர்கள் உரைப்பொருள் பொருத்தமின்றா மெனவிடுக்க. அற்றேல், திருப்பெருந்துறை, திருவுத்தரகோசமங்கை என்னும் அத்தலங்கள் உற்பத்தியாய வாறுதான் என்னை யெனிற் கூறுதும். மாணிக்கவாசகர்க்கும் ஏனைச் சமயாசிரி யர்க்கும் பிற்காலத்தே திருவாசகம் மிகுதியும் ஓதப்படுவ தாயிற்று. அங்ஙனம் ஓதப்படுகின்றுழி அவ்விரண்டிடங் களும் பெருமானால் சிறந்தெடுத்துச் சொல்லப்படுத லாலும், ஒன்றிற் பிறவியறுக்கும் மெய்பொருளுப தேசமும் மற்றொன்றில் நிட்டைகூடிப் பெற்ற மெய்யனுபவ சித்தியும் அப்பெரு மானுக்கு விளைந்தமையாலும், இவை யெல்லாம் பிறர் நினைவு கூர்ந்து உய்தற்பொருட்டுப் பிற்காலத்தரசர்கள் அவ் விரண்டிடத்தும் சிவாலயங்கள் விரிவு படக் கட்டி வைப்பாராயினர். பிற்காலத்தினரான விஜய நகரத்தரசர் சிலாசாசனங்களும் பாண்டிய அரசர் சாசனங்களும் திருப்பெருந்துறையிலும் திருவுத்தர கோசமங்கையிலுங் காணப்படுகின்றன வென்று ராவ் அவர்கள் எடுத்துக் காட்டிய பிரமாணங்கள் அவர் கொள்கையையே வேரற அறுத்து எமது கொள்கையை வச்சிரத் தம்பம்போல் நாட்டுவவாயின. இன்னும் பிற்காலத்தின்கண் இருந்த விஜயநகரத்து நாயக்க மன்னர் கட்டிய அமைப்புக்களே பெரும்பாலுங் காணப்படுதலால் திருப்பெருந்துறைச் சிவாலயத்தின் கர்ப்பகிருகம் ஒன்று தவிர ஏனைய வெல்லாம் அவர்களே அமைத்தன வென்று ராவ் அவர்கள் கூறுவதனால் எமது கொள்கை பெரிதும் வலிபெறல் காண்க. என்னை? நால்வர் காலத்திற்கும் பின் யாரோ சிறிதாகக் கர்ப்பகிருகம் ஒன்றுமே கட்டி வைத்தனராக அதனைச் சூழப்பின்னர் வந்த விஜயநகர மன்னர் கட்டிடங்களைப் பெருக்கினாரென்பது பெறப் படுதலின் என்க. இனி மாணிக்கவாசகர் திருவாசகம் முழுவதூஉம் தொண்டர்களையும் அடியார்களையும் பன்முறை நினைந்து நினைந்து உருகிக் கூறக் காண்டலாலும், அவ்வாக்கியங்களை உணரும் போது அப்பரையும், ஞானசம்பந்தரையும், சுந்தரரையுமே குறிக்கின்றாரென்பது புலப்படுதலாலும், மாணிக்கவாசகர் அம்மூவர்க்கும் பின்னையோர் என ராவ் அவர்கள் மொழிகின்றனர். இத்தருக்கம் என்நுட்ப முடையது! புராணங்களானும், திருவாசகத் திருவாக்கானும், ஏனை ஆன்றோர் பரம்பரை உரையானும் நரிபரியானது மாணிக்கவாசகர் பொருட்டே எனக் கூறப்பட்டிருப்ப, அதனைப் பொருந்தா தென்று மறுத்த ராவ் அவர்கள் அடியார் என்று பொதுப்படக் கூறும் சுவாமிகள் திருவாக்குக்கு ஏனைமூவர் என்று பொருள் கொண்டது பெரியதோர் தலைதடுமாற்றவுரையன்றிப் பிறிதென்னை? கழுமலமதனிற் காட்சி தந்தருளியதையும் திருவாரூரில் ஞானந்தன்னை நல்கிய நன்மையையும் ஞான சம்பந்தரையும் சுந்தரரையுங் குறித்தனவாக ராவ் அவர்கள் பொருள் படுத்தற்குக் கொண்டஆதார மென்னையோ? அவ்வாதாரம் ராவ் அவர்கள் சுவாமிகள் காலத்தைப் பிற்படுத்த வேண்டுமென்று கொண்டு முதிர்வித்த கனவு நிலையில் உளது போலும்! ஞானசம்பந்தரைத் தவிர வேறடியார்க்குக் கழுமலத்திற் காட்சி கொடுத்திலன் நம்பெருமா னென்பதற்கும், திருவாரூரில் ஞானம் நல்கப் பட்டவர் சுந்தரமூர்த்திகளைத் தவிர வேறடியார் இலர் என்பதற்கும் பிரமாணங் காட்டினாலன்றி ராவ் அவர்கள் உரை புரை படுதல் திண்ணம் என்க. அற்றேல், மாணிக்கவாசகர் தமது திருவாக்கில் அடியார் அடியார் எனப் பலகாலும் உரைப்பதுயார் தம்மை எனிற் கூறுவாம். திருப்பெருந்துறையில் எழுந்தருளிய குருநாதனைப் புடை சூழ்ந்திருந்த அடியார்கள், அக் குருநாதன் பிரியும் போது மிகவும் வருந்தா நிற்பப்பின் அக்குருநாதன் அவர் தம்மை நோக்கி இம்மடுவினிடையே சோதிமயமான தழற்பிழம்பு ஒன்று தோன்றும். அதில் நீவிர், போய்ப் படிந்து சிவபதம் பெறுகுவிர் என்று கட்டளை யிட்டனன் இட்டவாறே அவர்களும் மாணிக்கவாசகரை விடுத்துப் போய் அத்தழற் பிழம்பிற் படிந்து மறைந்து போயினார். தாம் அவ்வடியார் குழாத்தோடு அளவளாவி வரம்பிகந்த மகிழ்ச்சியுற்றிருந்த தனையே சுவாமிகள் கலந்து நின்னடி யாரோடு அன்றுவாளா களித்திருந்தேன், புலர்ந்து போன காலங்கள் என நினைந்து அருளிச் செய்ததும், பின் அவ்வடியார் தம்மைப் பிரிந்து சோதியில் மறைந்ததனையே புகுந்து நின்றது இடர் பின்னாள், உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர் காண்பான், அலந்து போனேன் அருள் செய்யாய் ஆர்வங்கூர அடியேற்கே என்றுருகி அருளிச்செய்தது மாம். இன்னுந் தம்மோடு அங்ஙனம் அளவளாவி யிருந்த அடியார்கள் சிவபதவி பெற யான் அதனைப் பெறாமற் புறமும் போனேனே என உள்ளங்கசிந்து சுவாமிகள் சிவமாநகர் குறுகப்போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே என்றும், பண்டைப் பரிசே பழ அடியார்க் கீந்தருளும் என்றும் போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் என்றும் பழைய அடியார்க்குன் அணியார் பாதங் கொடுத்தி என்றும், நின்கழற் புணைகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர்வான் யான் இடர்க்கடல் வாய்ச் சுழி சென்று என்றும், அருளிச் செய்தனர்கள், பின்னர்ச் சுவாமிகள் சிவநிட்டை கூடி அருள்வயமாய் நின்ற காலத்து அங்ஙனம் முன்னர்ப் பிரிந்து போன அவ்வடியரையெல்லாம் மறித்தும் அவ்வருள் வெளியிற்கண்டு ஆனந்தமெய்தி, அப்பனான சிவபெருமான் தம்மைத் திரும்பவும் அவரோடு கூட்டிய பேரருட்டிறனை வியந்து அப்பன் ஆண்டு தன்னடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே என்று அதிசயப் பத்து முழுவதும் அருளிச் செய்தனர்கள். இங்ஙன மெல்லாம் சுவாமிகள் திருவாக்கிற் குறித்திடப் பட்ட அடியவர்கள் திருப்பெருந்துறையிற் குருநாதன் பக்கல் மேவியிருந்த அடியார் குழாமன்றி ஞான சம்பந்தர் முதலா யினா ரல்லரென்பது இந்நுட்பம் ஆய்ந்துணர வல்லார்க் கெல்லாம் வெள்ளிடைமலைபோல் விளங்கிக் கிடந்தது. இஃது இப்பெற்றியதாக இதன் வரலாறு சிறிதுமே ராது சுவாமிகள் இங்கு அடியார் என்றது ஞானசம்பந்தர் முதலாயினாரையே யாமென்று கூறி, அதனால் சுவாமிகள் ஏனை மூவர்க்கும் பிற்காலத்தினரெனக் கூறிய ராவ் அவர்கள் திரிபுணர்ச்சி பெரிதும் இரங்கற் பாலதொன்றாம் என்க. இனி, மாணிக்க வாசக சுவாமிகள் பலவேறு திருவிளை யாடல்களைக் குறித்துப பாடா நிற்ப, ஏனைமூவரும் அவற்றிற் சிலவே கூறுதலாலும், அங்ஙனம் அவை பலவாய்ப் பெருகிய காலம் பிற்காலத்தின் கண்ணதாக வேண்டு தலாலும் அத்திருவிளையாடல்கள் பலவற்றையும் எழுதின வேப்பத் தூரார் திருவிளையாடற் புராணத்திற்கும் பரஞ் சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்திற்கும் சிறிது முன்ன ராயினும் பின்னராயினும் மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தை வரையறுக்க வேண்டுமென ராவ் அவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் கூறியது பெரிதும் பிழைபடுவதொன்றாம். மாணிக்கவாசக சுவாமிகள் தமது அருமைத் திருவாக்கில் எடுத்துக் கூறின வெல்லாம் மிகப் பழமையான திருவிளை யாடல்களே யாம். ஞானசம்பந்த சுவாமிகளுக்குப் பின்னே மாணிக்கவாசக சுவாமிகள் இருந்தனராயின், மூன்று வயதிலே உமைதிருமுலைப் பாலுண்டு பேரற்புத ஞான மூர்த்தியாய்ச் சைவம் எங்கணும் விளக்கிச் சமணரை வாதில் வென்ற ஞானசம்பந்தப் பெருமானைப் பற்றிய திருவிளை யாடலைக் கூறாது விடுவரோ? இஃதொன்றானே மாணிக்க வாசகர் ஞானசம்பந்தர்க்கு முன்னிருந்தா ரென்பது சிறு மகார்க்கும் இனிது விளங்கிக் கிடப்பதாக, இது தானு முணராது ராவ் அவர்கள் காலவரையறை செய்யப் புகுந்தது நகையாடற் பாலதொன்றாம். மேலும், அப்பர் திருஞான சம்பந்தர் திருவாக்குகளில் திருவிளையாடல்கள் பலவந்திருக் கின்றனவே யல்லாமல் ராவ் அவர்கள் கூறியபடி சிலவே வந்தில. இவ்வுண்மை தெரிய வேண்டுபவர் ஸ்ரீமத் வே சாமிநாதையர வர்கள் தமிழுல கத்தைக் கடமைப் படுத்தி வெளியிட்ட வேப்பத்தூரார் திருவிளையாடல் முகப்பிலே மாணிக்க வாசகர் திருவாக்கினும் மூவர் திருவாக்கினும் போந்த திருவிளையாடல் களையெல்லாம் மிக்க பிரயாசை யோடு தொகுத் தெடுத்துப் பிரசுரித் திருக்கின்றார்களாதலின் ஆண்டுக் கண்டு கொள்க. அங்ஙனம் காணவல்லவர் ராவ் அவர்கள் கூறியது முழுப் பொய்யுரையேயாமென்று தேர்வர், மாணிக்க வாசக சுவாமிகள் தங்காலத்தும் தங்காலத்திற்கு முன்னும் நடந்த திருவிளையாடல்கள் பலவற்றை விதந் தெடுத்துக் கூறுதல் போலவே, ஏனைச் சமயகுரவன் மாரும் தங்காலத்துந் தமக்கு முன்னும் நடந்த பலவற்றை எடுத்துக் கூறுகின்றனர். அது கிடக்க. இனிக் கி.பி. 904 ஆம் வருஷம் அரசாண்ட பராந்தகச் சோழன் தில்லைச் சிற்றம்பல முகட்டைப் பொற்றகடு வேய்ந்து சிறப்பித்த பின்னரே அவ் வம்பலத்திற்குப் பொன்னம்பலம் என்று பெயர் வந்ததென்றும், மாணிக்க வாசக சுவாமிகள் கீர்த்தித் திருவக வலில் அம்பொற் பொலிதரு புலியூர்ப் பொது வினில் நடம் நவில்எனவும், திருக்கோவை யாரில் சேணிற் பொலிசெம் பொன் மாளிகைத் தில்லைச் சிற்றம் பலத்து எனவும் கூறுதலோடு கோயின் மூத்த திருப்பதிகம் முழுவதூஉம் இப்பெயரேவரப் பாடுதலாலும் அச் சுவாமிகள் பராந்தகச் சோழன் காலத்திற்கும் பின்னரே தான் இருந்திருக்க வேண்டுமென்று கூறிய ராவ் அவர்கள் அப் பராந்தகனுக்கு முன்னிருந்த அப்பர் சுவாமிகளும் செம்பொனம்பலம் எனக்கூறி யிருத்தலை உணர்ந்துகுன்று முட்டிய குரீஇப் போலப் பெரிதும் இடர்ப்பட்டு அதனை விலக்கி விடுவார் போல அப்பர் திருவாக்கில் வந்த பொன்னம்பலத் திற்குப் பொன்னனைய அம்பலம் என்பது பொருள் போலத் தோன்று கின்றதென நெகிழ்ந் துரையாடிப்போனார். ராவ் அவர்களுக்கு இங்ஙனம் நடுநிலை வழீஇ ஓரம் பேசி இழுக்குறும் திரிவுபாடு வந்ததென்னை யெனின்;-- தமிழ்த்தேயத்துப் பெரியாருள் யாரும் பழைய காலத் திருந்திலர் என்று நாட்டவும், தம்மை யொத்த ஆரியப் பெரியாரே பழைய காலந் தொட்டு நாகரிக முடைய ராயிருந்தனரென்று காட்டவுமே புக்காராகலின் அங்ஙனந் தன்னைப் பற்றுதல் என்னுங் குற்றத்திற்பட்டுப் பொருள் உண்மை தேராது ராவ் வழுக்கினார் என்க. அது கிடக்க. அப்பர் சுவாமிகள் திருவாக்குக்குப் பொன் போன்ற அம்பலம் என்று பொருள் பண்ண வந்த ராவ் அவ்வாறே மாணிக்கவாசக சுவாமிகள் திருவாக்குக்கும் பொன்னனைய அம்பலம் என்று பொருள் செய்யாது விட்டதென்னை? ஒரே வகையான ஒரு சொற்றொடர்க்கு ஒருகால் ஒரு வாறும் பிறிதொருகாற் பிறிதொருவாறும் பொருள் பண்ணுதற்கு இவர் கொண்ட காரணம் யாது? காரண மின்றித் தமக்கியைந்த வாறெல்லாம் பொருள் செய்தால் இவர்போற் றிரிபடையாத நல்லறிவுடையார் இவருரைக்கு இணங்குவரா? மேலும் அப்பர்சுவாமிகள் பொன் போன்ற அம்பலம் என்று பொருள் செய்தற்கு இடந்தராமல் உரையாணி மாற்றுள்ள செம்பொன்னாற் செய்த அம்பலம் என்றும் கதிர்விரியும் செம்பொன் அம்பலம் என்றும், பரிசுத்த மான செம் பொற்றகடு எழுதி மேல்மூடிய சிற்றம்பலம் என்றும், பொன்னாற் செய்யப்பட்ட அம்பலம் என்றும் இனிது பொருள் விளங்குமாறு ஆணியைச்செம் பொனம்பலம் சுடர் செம்பொனம்பலம் தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம் என்று திருக்குறுந்தொகையிலும் பொன்னாகிய தில்லைச்சிற்றம்பலவன் என்று திருவிருத்தத் தினும் அருளிச் செய்திருப்ப இவற்றையறிந்து பொருள் கொள்ளுமா றறியாத ராவ் அவர்கள் தமிழ் நூலாராய்ச்சியிற் புகுந்தது என்னாம்! அற்றேல், பராந்தகச் சோழன் பொன்வேய்ந்த பிறகு செம்பொன்னம்பலம் என்று பெயர் வந்ததென்னுங் கூற்று எவ்வாறாமெனின்:- அஃது அறிவில் கூற்றாமென்றே மறுக்க. பராந்தகன்பிற ஆலயங்களுக்குச் செம்பொன் முகடுவேயாது இத்தில்லைச் சிற்றம்பலத்திற்கு மாத்திரம் அங்ஙனம் பொன்முகடுவேய்ந்த காரணம் என்னை யென்று நுணுகி யாராய வல்லார்க்கு, அவ்வம்பல முகடு பண்டைக்காலந் தொட்டு அங்ஙனம் பொன் வேயப்பட்டு வந்த காரணத்தானே பராந்தகவேந்தனும் தன்காலத்து அதனைப்புதுப்பித்து அங்ஙனம் பசும் பொற்ற கடுவேய்வா னாயிற் றென்பது தெற்றென விளங்கா நிற்கும். பராந்தகனுக்கு முன்னரிருந்த பெருந்தமிழ் வேந்தர் பொன் வேயாது விட்டிருந்தனர் என்பதனை ராவ் எந்தச் சிலா சாதனத்திற் கண்டாரோ அறியேம். ஆரிய அபிமானத் தாற் கட்டி இறுகிய தம் மனோபாவகச் சிலையிற் கண்டார் போலும்! அப்பர் சுவாமிகள் திருவாக்கால் பராந்தகனுக்கு முன்னும் தில்லைச் சிற்றம்பல முகடு பொன்வேயப் பட்டிருந்ததென்னும் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போலினிது பெறப் படுதலின், மாணிக்கவாசக சுவாமிகள் பொன்னம்பலம் என்று தந்திருவாக்கிற் கூறியது கொண்டே அவர் பராந்தகனுக்குப் பின்னிருந்தாரெனும் ராவ் அவர்கள் உரை பொருளொடு புணராப் போலியுரையாமென்க. இனித் தக்ஷிணாமூர்த்தியுபாசனை மாணிக்கவாசக சுவாமிகளுக்குப் பின்னர்த்தான் தோன்றியதென ராவ் அவர்கள் ஊகம் செய்கின்றனர். அவ்வூகம் காரணமின்றி அவரது வெறும் பாவனைக்கட் டோன்றுதலின் அதனை அறிவுடையோர் கொள்ளா ரென்பது. தக்ஷிணா மூர்த்தம் ஜனகர் முதலான முனிவர் நால்வர்க்கு அத்துவித உண்மை உணர்த்துதற் பொருட்டுக் கொண்ட பழமை அருட்கோல மென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாகலின், அதனைப் பிறிதாகக் கூறுதல் பொருந்தாதென மறுக்க. இன்னும் முதலாம் குலோத்துங்க சோழன் தக்ஷிணாமூர்த்திக்கு மானியம் விட்டான் என்று கூறிய திருக்கண்டேசுர ஆலய சாதனத்தைக் கொண்டு அப்போது தான் அம்மூர்த்தி உபாசனை தொடங்கிய தென்றல் பெரியதோர் குழறு படையாம். அது மானியம் விட்டமை கூறியதேயன்றி அப்போதுதான் அவ்வுபாசனை தோன்றிய தெனக் கூறிற்றி லது. அவ்வாறாக ஒருநியதியுமின்றித் தம் மனம்போன வாறு அதற்குப் பொருள் செய்தலில் நம் ராவ் அவர்களே யன்றி வேறு எவர் வல்லார்! இனிப் புத்தரோடு சுவாமிகள் தில்லைச் சிற்றம் பலத்தில் வாது புரிவதைப் பார்க்கப் பாண்டியனும் ஈழ மன்னன் ஒருவனும் வந்து அப்போதங்குவந்த சோழனை வணங்கித் திறைதந்தன ரென்பது திருவாதவூரர் புராணத்திற் குறிக்கப் பட்டிருக்கிற தென்றும், அங்ஙனம் பாண்டியர் சோழ மன்னர்க்குக் கீழ்ப்பட்ட காலம் 10-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூறாண்டிறுதி வரையுமாம் என்றும், அதனால் மாணிக்க வாசகர் காலமும் அவ்விடைப்பட்ட காலத்திலே தான் வைக்கற் பாற்றென்றும் ராவ் அவர்கள் கூறுகிறார்கள். தில்லைச் சிற்றம் பலத்திற் சோழனுக்குப் பாண்டியன் திறை கொணர்ந்து செலுத்தினான் என்றது முழுப் பொய்யுரையாம். அத் திருவாதவூரர் புராணத்தையாம் பன்முறையும் படித்துப் பார்த்தோம். அதன்கண் ஈழமன்னன் ஒருவன் திறை கொணர்ந்து வைத்துச் சோழவேந்தனை வணங்கினதாக மாத்திரம் சொல்லப்பட்டிருக்கின்றது; அது, ஈழவள நாடனு மெழுந்தடிபணிந்து திறையிட்ட குறைநல்கி என்னும் அப்புராணச் செய்யுளால் அறியப்படும். இவ் விலங்கை மன்னனைத் தவிர வேறு மன்னர்கள் அங்குவந்த தாகவேனும், பாண்டியன் வந்து சோழனைப் பணிந்ததாக வேனும் அப்புராணம் எங்கும் தேடித்தேடிப் பார்த்துங் கண்டிலேம். இவ்வாறாக இல்லாத தொன்றனை இருப்பதாக வைத்துப் பொய்யுரை கூறித் தருக்கம்நிகழ்த்த முன்வருதலில் ராவ் அவர்கள் முன்னதாக நிற்கின்றார். இஃதவர்க்கு நேர்மைதானோவென்பதை அறிவுடையோரே கூறக்கடவர். இனி வரகுணபாண்டிய னொருவனை மாணிக்க வாசகர் தம் திருவாக்கிற் குறிப்பிடக் காண்டலானும், அவ்வரகுணன் காலம் 9-ஆம் நூற்றாண்டென்று துணியப் படுதலானும், சுவாமிகள் காலம் அவ்வொன்பதாம் நூற் றாண்டிற்குப் பின்னரேதான் பெறப்படுதல் வேண்டும் என்கின்றார் ராவ். இன்னும் சேஷகிரிசாத்திரியார் காட்டிய பாண்டிய வமிசா வளிப்பட்டியில் ஒரே வரகுணன் காணப் படுதலால் அவனையே தான் சுவாமிகள் குறிப்பிடிருக்க வேண்டு மென்றும் ராவ் ஊகஞ் செய்கின்றார். இப்போது சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படும் சிலா சாதனங்களும் வமிசாவளிகளும் கி.பி. எட்டாம் நூற்றாண் டிற்குப் பிற்பட்ட பாண்டிய சோழ அரசர்களையே எடுத்துப் புகலுகின்றன. கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய பாண்டிய சோழசேர மன்னர்கள் பலப் பலர் உளராகப் பழைய செந்தமிழ் நூல்களால் அறியப்படவும், அவ்வரசர்களைப் பற்றிய சிலாசாதன செப்புப்பட்டயங் களுள் ஒன்றேனும் இப்போது அகப்படக்காண்கிலேம். சிவாலயங்கள் எண்ணிறந்தன கட்டுவித்த சோழன் கோச் செங்கண்ணானைப் பற்றிய சாதனமே அகப்பட்டிலதாயின் மற்றை அரசர்களைப் பற்றிக் கேட்பானேன்? இங்ஙனஞ் சிலாசாதனங்கள் எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே தோன்றியதற்கும் அதற்குமுன் தோன்றாமைக்குங் காரணம் முன்னரே கூறிப் போந்தாம். ஆகவே, பிற்காலத்திய சிலாசாதன ஆராய்ச்சி பண்டை நாட்டமிழ் மன்னர் காலந் தேர்தற்குச் சிறிதும் பயன் படாததொன்றாமென விடுக்க. எனவே, பிற் காலத்து அரசர் பரம்பரையினைக் கூறும் சேஷகிரி சாத்திரியார் வமிசாவளிப் பட்டி ஈண்டைக்குச் சிறிதும் பயன்படா தென்றுணர்க. குலோத்துங்க சோழன், கரிகாற் சோழன் முதலான பெயர்கள் மன்னர்கள் பலர்க் கிருந்த வாறுபோல வரகுணபாண்டியன் எனும் பெயரும் மன்னர்கள் பலர்க்கிருந்திருக்க வேண்டும். இது காறுங் குறித்துவருங் காரணங்களானும், பின்னே காட்டப்படும் காரணத்தானும் பின்னிருந்த வரகுண பாண்டியனுக்கு மூன்று நூற்றாண்டு முற்பட்டிருந்த அப்பர்சுவாமிகளுக்கும் முற்பட்டவ ராக மாணிக்கவாசக சுவாமிகளிருத் தலால் அவர்களாற் குறிக்கப் பட்ட வரகுணபாண்டியன் வேறென்பதே துணிபொருளாம். இனி மாணிக்க வாசக சுவாமிகள் புத்தகாலத்தினரா மென்று கூறுவாருரையை மறுத்துச் சைனமதம் புத்தர் காலத்திற்குப் பிந்தியதன் றென்றும், புத்தகாலம் 9-ம் நூற்றாண்டிற்குப் பின்னரும் நீண்டதென்பதற்கு கி.பி. 984 முதல் 1012 வரையில் செங்கோலோச்சிய இராசராசன் காலத்தில் நாகபட்டினத்தின்கண் ஒரு பௌத்தப் பள்ளியிருந்தமையே சான்றாமென்றும் ராவ் அவர்கள் கூறுகின்றனர். புத்தசமய மிருந்த காலத்தே சமணமதமும் உடனிருந்த தாயினும் அது மிகவும் செழிப்புற்று ஓங்கியது ஐந்தாம் நூற்றாண்டின் பின்னரேயாம். ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னெல்லாம் புத்தமதமே மேலோங்கியிருந்தது. இதற்குச் சான்று மணிமேகலையும் சீவகசிந்தாமணியுமேயாம். மணிமேகலை பௌத்தம் மேலோங்கிய முதல் நூற்றாண்டி லும், சீவகசிந்தாமணி சமணம் மேலோங்கிய ஏழாம் நூற்றாண்டிலும் எழுதப்பட்ட நூல்களாம். ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னும் ஓரோவிடத்துப் பௌத்தமதம் இருந்ததென்றதனால் ஈண்டைக்கு ஆவதோர் இழுக்கில்லை. என்னை? அது பிற்காலத்துத் தன்பெருமை சுருங்கி ஒளி மழுங்கிக் கிடந்ததாகலின், இனி மாணிக்கவாசக சுவாமி களிருந்த காலத்துப் பௌத்தமதம் மிகவும் விரிந்து வலி பெற்றிருந்ததென அறியப்படுதலால் அக்காலமும் மாணிக்க வாசகர் காலமும் ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவா மென்பது ஒருதலை. ஆகவே இவ்வுண்மையொடு முரணிராவ் அவர்கள் கூறியது பொருத்தமில் போலியுரையாமென மறுக்க. இவ்வாறு இதுகாறும்கூறிய மறுப்புரைகளால் ஸ்ரீ து.அ. கோபிநாதராவ் அவர்கள், எம்.ஏ., மாணிக்கவாசக சுவாமிகள் காலம் கி.பி. பதினோராவது நூற்றாண்டின் துவக்கம் அதாவது இற்றைக்கு எண்ணூற்றெட்டு வருடங் களுக்கு முன் என்று நிலையிடுதற் பொருட்டுக் காட்டிய ஆதாரங்கள் அவ்வளவும் உள்ளீடில்லா வெறும் பதடியா மென்பதனைப் பகுத்துப் பகுத்துக்காட்டி விளக்கினேம். இனியாம் 1902ஆம் வருஷ ஞானசாகர முதற்பதுமத்திற் பிரபல காரணங்கள் பலவற்றால் மாணிக்கவாசக சுவாமிகள் கி.பி. மூன்றாவது நூற்றாண்டு அதாவது இற்றைக்கு ஆயிரத்து அறுநூற்றெட்டு வருஷங்களுக்கு முன் இருந்தார் களென்று நாட்டியதே பொருத்தமுறுவதாம். அதனை இங்கு மற்றுமோர் ஆதாரங்காட்டி முடிப்பாம். மாணிக்க வாசக சுவாமிகள் அப்பர் சுவாமிகளுக்கு முன்னிருந்தா ரென்பதனை நிலைபெறுத்தலே அவர்காலம் இதற்குமுன் னென்பது நாட்டப்பட்டவாறாகும். அப்பர் சுவாமிகள் நரியைக் குதிரை செய்வானும் என்றது மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்த திருவிளையாடலைக் குறித்த தென்பதனை முன்னரே காட்டினேம். திருப்பூவணத் திருப்பதிகத்திலும் அப்பர் சுவாமிகள் மணியார் வைகைத் திருக்கோட்டி னின்றதோர் திறமுந்தோன்றும் என்று அருளிச் செய்து மாணிக்கவாசகர் பொருட்டாகவும் பிட்டுவாணிச்சி பொருட்டாகவும் சிவபெருமான் வைகை யடைக்க மண் சுமந்து அதன்கரையில் நின்ற திறத்தை விளக்கி அருளினார். மேலும், அப்பர்சுவாமிகள் தமது அருமைத் தனித் திருத்தாண்டகச் செய்யுளொன்றில் குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார் என்று சுவாமிகளின் பெயராகிய வாசகன் என்னுஞ் சொல்லையும் வெளிப் படையாக எடுத்துக் கூறியருளினார். இம்மூன்று அரிய குறிப்புக்களானும் மாணிக்கவாசகர் அப்பர்சுவாமிகள் காலத்திற்கும் முற்பட்ட வராதல் தெற்றென விளங்குகின்றது. இனி மாணிக்கவாசகப் பெருமானிருந்த கால வரம்புதான் யாதோ வெனின்; அஃது இற்றைக்கு ஆயிரத்து அறு நூற்றெட்டு வருடங்களுக்கு முற்பட்ட மூன்றாம் நூற்றாண்டிலாமென ஞானசாகர முதற்பதுமத்தின் கண் இனிது விளக்கினாம்; ஆண்டுக் கண்டு கொள்க. *குறிப்பு :- பெருந்துறை எண்ணுந்தலம் அப்பர் சுவாமிகள் முதலானாராற் குறிக்கப்படவில்லை யென்பதூ உம் பொருந்தாதாம். அப்பர் சுவாமிகள் தாம் அருளிச்செய்த க்ஷேத்திரக் கோவைத் திருத் தாண்டகத்தில் பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பிலி பிடவூர் பேணும் என்று அத்தலத்தை எடுத்தருளிச் செய்தனர்கள். அற்றேல், அதற்குத் தனிப்பதிகங் காணபடாதவா றென்னை யெனின்;-- யாம் முன்னரே காட்டிய வாற்றால் அது மாணிக்க வாசகசுவாமிகள் குருநாதனைக் கண்டு உபதேசம் பெற்ற மாட்சிமையானே சிறப்பெய்திய தன்றி, அதன்கட் சிவாலயம் முன்னில்லாமையால் அதற்குத் தனித் திருப்பதிகம் இல்லாதாயிற் றென்க. அடிக்குறிப்புகள் 1. திருவேசரவு, திருவாசகம் 2. சென்னிப்பத்து 3. திரு வும்மானை 4. திரு வும்மானை மானத சாதிரம் மனோசக்தி உலகிற் பெரியது மனிதனேயாகும் மனிதனிற் பெரியது மனமேயாகும் மனோசக்தி ஆவது என்ன? அதன்பொருள் அளிப்பதே இவ்வியாசத்தின் கருத்து. இம்மனோ சக்தியாவது, இப்பதம் பொருள் படுமாறே ஓர்சக்தி அல்லது ஆற்றல், இச் சக்தியானது மற்றைய எல்லாச் சக்திகளையும் தன்னுள்ள டக்கியதாயும் வெளிப்புலன்களுக்குத் தோன்றாத அதிசூட்சும மானதும் அளவுகடந்தது மான தத்துவத்தை யுடையது. இச்சக்தியின் வல்லபத்தையும் இதின் குணாதிசயங்களையும் நம்முடைய வாழ்நாளை ஆள்வதாயுள்ள இதின் தத்துவத் தையும் மற்றைய இவ்வுலகத்திலுள்ள எல்லாக் காரியங்களையும் வதுக் களையும் ஆட்டுவிப்பதாயுமுள்ள இச் சக்தியை விவரித்துச் சொல்லப்புகின் காலம்போதாது, ஏடு இடம் கொள்ளாது, ஓர் மனிதனுடைய ஜீவகாலமும் போதாது. இச்சக்தியே எல்லா அறிவுக்கும் ஆதாரம்; ஐம்புலன் களுக்கும் அரசனாய் வீற்றிருக்கிற இம்மனத்தின் காரணத் தால் இவ் வுலகத்தில் கற்றாரும் கல்லாரும் ஆச்சரிய மடைந்து புத்தியானது தம்பிக்கும் படியான நிலையை உண்டாக்கத்தக்க மகாவினோதமான கருவிகளும் இயந்திரங் களும் செய்யப் பட்டிருப்பதற்கு இம்மனோ சக்தியைத் தவிர வேறு ஆதராம் ஏது? எல்லா ஞானத்திற்கும் காரணம் அல்லது அதிவாரம் இதுவே. தண்கடலால் சூழப்பட்டுச் சூரியசந்திர நட்சத்தி ரங்கள் ஜ்வலிப்பால் விளங்கப் பெற்றதுமான இவ் வுலகத்திலுள்ள ஜீவராசிகளுள் தலைமைவகித்த மணிதரின் சுபா சுபங்களுக்கும், சௌக்கியா சௌக்கியங்களுக்கும் ஜெயாப ஜெயங்களுக்கும் காரணமானதும், இனி இறந்து எடுக்கும் ஜன்மங்களிலும் தன்னுடைய அரசாட்சியை நிலை நிறுத்தா நின்றதுமானது இச்சக்தி. மனோசக்தியும், இச்சக்தியின் தத்துவங்களும் மனிதன் உண்டாக்கப்படும்போதே உண்டாக்கப்ட்டதான தொல் சிறப்பையுடையதாய் இருக்கின்றது. பற்பலயுகங்களில் மனிதன் தன்னுடைய அறிவுக்கு எட்டின மட்டும் இச் சக்தியின் தத்துவங்களை அனுபவத்தில் கண்டிருந்த போதிலும் இந்த யுகத்தில் தான் அத்தத்துவங்களின் உண்மைகளை ஏறக்குறைய முழுவதுமே தன் அனுபத்திற் கொண்டு வரப் பார்க்கின்றான். ஆனாலும், இவன் சிற்சில சமயங்களில் இச்சக்தியின் மகத்துவத்தின் ஏதோ ஒரு கூற்றைத் தெரிந்து கொண்டு அதுவே இச்சக்தியின் முழுதத்துவமென நினைத்துப் பற்பலவிதமாய் ஆங்கிலேய பாஷையில் பெர்ஸனல் மாக்னடிஸம் அல்லது ஆத்தும வசீகரணம் என்றும், இப்னாடிஸம் அல்லது யோகநித்திரை என்றும் கிளெர்வாயன் அல்லது ஆத்துமக் காட்சி என்றும் இன்னும் வெவ்வேறு விதங்களான பெயர்களால் பிரதாபித் திருக்கின்றனன். ஆனால் இந்திய மாதா வினிடத்தில் பிறந்த செல்வப் புத்திரர்களோ எத்துணையோ (சுமார் 2000) வருடங்கட்கு முன்னமேயே இச்சக்தியின் தத்துவங்களை அநேகமாய் முழுவதுமே அறிந்து அதன் காரணமாக மகோன்னதமான பதவிகளை அடைந்திருக் கின்றனர். மகான்களும், மேதாவிகளும், பண்டிதர்களும், சிற்பிகளும், லளிதவித்தைகளிற் சிறந்தோர்களும் ஏனை யோரும், இத் தத்துவங்களையறிந்து கைஆண்டு தத்தம் பதவிகளை அடைந்தனர். யுகாந்தர வேறுபாடுகளினால் அத்தியாவசியமாய் நேரிடுகின்ற மாறுதல்களில் உன்னத பதவியை அடைந் திருந்த இராஜாங்கங்களோ, ஜனங்களோ, மனிதன் புத்திக்கு எட்டாத காரணங்களால் க்ஷணதசை அடைவதும், அதிதுர்கூபலமான தசையிலிருந்த மனிதர்களும் இராஜாங் கங்களும் மகோன்னத பதவியை அடைவதும், ஞானத்திற் சிறந்து ஞான உலகத்திற்கு ரவிகளாய் விளங்கின. ஆன்றோர் களின் புத்திர பௌத்திரர்கள் காலக்கிரமத்தில் அற்பர்களும் புத்தியீனருமாய் நேரிடுவதும், கள்ளிவயிற்றின் அகில் பிறக்குமாறு மகாதோஷிகளின் புத்திரர்கள் உத்தமராய் விளங்குவதும் சகஜம் என்பது சொல்லாமலே விளங்கும். இனி, முற்சொல்லப்பட்ட வித்தியாசங்களுக்கேற்ப இம்மனோ சக்தியின் உண்மைகளை அறிந்து அனுபவத்திற் கொண்டு வந்து ஞான ஒளியிலேயே வாழ்நாளைக்கழித்த மகரிஷிகளின் புத்திரர் பௌத்திரர்களாகிய நாம் காலக் கொடுமையால் நம்முடைய சுயார்ச்சிதத்தை இழந்து அந்நியர்களுக்கு அடிமைகளாகி அவர்களுக்கெல்லாம் அற்பத்தொண்டு செய்து நம் வாழ்நாளைக் கழிக்க வேண்டு வதாய் இருப்பதை யோசிக்க யார் மனந்தான் புண்ணாகாது! இது நிற்க. முற்கூறப்பட்ட ஆங்கிலேயரால் யோக நித்திரை (இப்னாடிஸம்) ஆத்மவஸீகரணம் (பெர்ஸனல் மாக்னடிசம்), ஆத் மக்காட்சி (கிளெர்வாயன்) என்று கூறப்பட்ட இம்மனோதர்மத்தின் பாகங்களிலெல்லாம் செறிந்து ஒரே காரணமாய் நிற்பது இம் மனோசக்தியே ஆனபோதிலும், முற் சொல்லப்பட்ட இம்மனோ சக்தியின் சாதிரத்தின் பற்பல பாகங்களை ஜனங்கள் ஆண்டு கொண்டுவர அவை மனதின் ராஜ்ஜியத்தை முழுவதுமே கைக் கொள்வதற்குச் சாதனங்களாய் இருந்தன. இப்பொழுது ஒருவன் ஒருபாஷையைக் கற்கவேண்டின் முதலில் அக்ஷராப்பியாசம் செய்யவும் பிறகு எழுத்துக்களைக்கூட்டி வார்த்தைகளாய்ப் படிக்கவும் அதை அறிந்த பின் மட்டுமே தானே மற்ற ஆழ்ந்த கருத்துக்களை அப்பாஷையில் அறியவுங் கூடுமன்றோ? மனிதனும் பிரபஞ்சத்தின் உண்மைகளையும் தத்துவங்களையும் அப்படியே ஒரே காலத்தில் அறியக் கூடியவனல்லன். ஆகையால் மனிதர் தாங்கள் ஞான மடைவதில் கொஞ்சங் கொஞ்சமாய் மேல் நோக்கிச் சென்று உச்சியை அடைய வேண்டியிருக்கின்றது. எல்லா வதுக்களும் இருக்கின்றன. ஆனால் மனிதன் தன் புத்தியின் விசாலத்திற் கேற்றவாறு அதை அடை வதற்குப் பாத்திரனாகின்றான். ஒருவனுக்கு உண்மையாய்த் தோன்றுவது மற்றொருவனுக்குச் சுத்தப்பிசகாய்த் தோன்றும். இதனாலேயே ஒரு விஷயத்தைக் குறித்து ஓர் இருவர் சம்மதப்படுவதில்லை. நாம் நம்முடைய சிவஞான போதத்தில் ஆத்துமா சிவனுள் ஐக்கியமடையக் கூடுமென்றும் ஆத்துமாவில் சிவன் செறிந்திருப்பனென்றும், பதியின்குணாதிசயங்களைப் பசு அடையக் கூடுமென்றும், இவ்வாறே ஞானிகள் அடைந்தா ரென்பதின் கருத்தை உண்மையாய் அறியவும் அறிந்த பின் தாமும் அப்படியே செய்யக்கூடுமென்ற தைரியமும் உண்மை யும் இக்கலியுக ஜனங்களுக்கு இப்பொழுது தான் புலப்படுகின்றன. மாயையைப்பற்றியும் மனோதத்துவங்களைப்பற்றியும் இவ்விரண்டிற் குள்ள சம்பந்தத்தைப்பற்றியும் மனிதன் அறிந்து கொண்டே போக மனிதனின் சக்தி அபாரசக்தி யெனவும், விந்தையான தெனவும், மகா ஆகருஷமானது எனவும் உணர்ந்த உண்மை மனிதர் மனதில் கதிரவன் கிரணங்கள் போல் உதித்துக் கொண்டு இருக்கிறது. இவ்விளக்கத்தின் பயனாய் மனிதன் தான் பஞ்சபூதத்தின் சக்தியையும் பிரபஞ்சத்திலிருக்கின்ற மற்றைய சக்திகளையும் ஆளத் தக்கவன் என்ற உண்மை மனிதர் மனதில் ஊன்றி நிற்கின்றது. மன அமைப்பின் மகா பராக்கிரமமான மூன்று தத்துவங்கள் ஒன்றோடொன்று இணை பிரியாமல் கோவையாய் வருவதின் விளைவே மனோசக்தி. இதில் முதலாவதாவது எண்ணம் அல்லது நினைவு, இரண்டாவது ஆகாச ஆற்றல் (Etheric Energy), மூன்றாவது திடசித்தம். ஒவ்வொரு எண்ணமும் சூக்கும ஆகாயத்தில் ஒருவித அசைவு அல்லது அதிர்ச்சி உண்டாக்குகின்றது. இப்படி அதிர்ச்சி உண்டான போது மற்றைய மனிதர்களின் மூளையில் தாக்குகின்றது. இப்படி இருவருடைய எண்ணங்களால் உண்டாக்கப்படும் அதிர்ச்சியானது ஒன்றுபட்டிருக்குமாகில் இவ்விருவருடைய எண்ணங்களும் ஒன்று சேர்ந்து ஒருவருக்குத் தோன்றியபடியே மற்றவருக்குந் தோன்றி ஒரேவித உணர்ச்சியை உண்டாக்குகின்றது. இப்படியே இவ்வுலகில் எத்துணையோ மனிதர் ஒரேமாதிரியான எண்ணங்கள் நினைப்பதால் ஒரேவித ஆகாச அதிர்ச்சி உண்டாகின்றது. இவர்களெல்லாரும் இப்படி ஒருவருக்கொருவர் இணக்கமான எண்ணங்களையே யோசித்துக் கொண்டிருப்பதால், மற்றொரு மனிதன் மேற் சொன்ன கூட்டத்தாருடைய எண்ணத்தின் ஆகாச அதிர்ச்சிக்கேற்பத் தானும் எண்ணுவானாகில் அவனும் அவர்களின் மானச ஆகாசத்தில் கலந்தவனாய் அக்கூட்டத் தாரின் எண்ணங்களே தன்னுடைய வாய் ஐக்கியப்பட்டுப் போகின்றனன். ஆகாசத்தில் பரவிச் செல்கிற மன அதிர்ச்சியானது ஒருவன் எண்ணத்தின் அதிர்ச்சிக்கேற்ப விருக்க, அவன் மூளையைத் தாக்கிச் சில எண்ணங்களை உதிப்பிக்கின்றது. இவைதாம் சாமானிய ஜனங்கள் தங்கள் தங்களின் எண்ண மென்று எண்ணுகின்றனர். நினைவென்பதும் இதுவே. ஆகாச ஆற்றல் (Etheric Energy) என்பது நினைப்பதால் மூளையில் ஜனிக்கின்ற ஓர்சக்தி. இச்சக்தியின் காரணமாய்த் தான் எண்ணங்களானவை ஒரு மூளையின் அணுக்களி லிருந்து தங்களுக்கு விதித்த இடத்தில் செல்லுகின்றன. திடசித்தமானது நினைவுகளை உண்டாக்கிச் செலுத்திக் காத்துத் தத்தமிடத்திற்கு வழிகாட்டா நிற்கின்றது. இவ்விதமாக நினைவு திடசித்தத்தினால் ஆளப்பட்டும் காக்கப்பட்டும், ஆகாச ஆற்றலின்மேல் செலுத்தப்படுவதினால் அபார சக்தியை யடைந்து இடத்தையும் காலத்தையும் மீறி எவ்விடத்திற்கே நினைக்கப் பட்டதோ அவ்விடத்தைத் தடைபடாமல் அடைகின்றது. நினைவு சக்தியையும், சக்தி ஓர் அவா அல்லது ஆற்றலையும் உண்டாக்க, அவாவானது ஒரு காரியத்தை முடிக்கின்றது. நினைவுதான் உண்டாக்கும் அசைவினால் ஒருவன் தேகத்தைச் சுற்றியிருக்கும் வாயு அணுக்களைக் கலைக்க ஆகாசத்தில் ஓர்வித அதிர்ச்சியையும், இதன் காரணமாய் ஓர்வித அலையையும் உண்டாக்குகின்றது. மந்த மாருதமானது ஒரு செடியின் இலைகளை எப்படி அதிமெதுவாய் அசைக்குமோ அதேவிதமாய் ஓர் ஆற்றலற்ற நினைவு ஆகாசத்தில் ஓர் சுவல்பமான அதிர்ச்சியை உண்டாக்குகின்றது. ஆற்றலுள்ள எண்ணமோ ஆகாச அணுக்களை வெகுவேக மாய்க் கலைத்துப் பேரலைகள் உண்டாக்குகின்றது. கம்பி யில்லாத தந்தியைக் (Wireless Telegraphy) கண்டு பிடித்த மார்கோனி என்பவர் பின்வருமாறு உரைக் கின்றனர். ஒரு வார்த்தையோ அல்லது அதற்கு ஈடானதோ, அசைவற்று நிற்கின்ற தெளிந்த தண்ணீரையுடைய தடாகத்தில் ஒரு கல்லையெறிந்த மாத்திரத்தில் ஒரு சுழியை உண்டாக்க அச்சுழியானது வரவரப் பெரிதாய் எப்படிச் செல்கின்றதோ, அதே மாதிரியாய்த் தந்தியியந்திரத்தில் உண்டான அதிர்ச்சி யானது மின்னல் வேகம் போன்று விரைவிற் சென்று தனக்கொத்த அசைவு அல்லது தன் கூறுபாட்டுக்கிசைந்த கூறுபாட்டையடைய மற்றைய இயந்திரங்கள் எத்துணைகாத தூரமிருந்தபோதிலும், அவைகளினிடத்திற் சென்று அவைகளைத் தாக்கித் தன் செய்தியை அறிவிக்கின்றது. இதே மாதிரியாய்த் தான் ஒருமனத்திலிருந்து புறப் பட்ட நினைவு எல்லா தூல கட்டுப்பாடுகளையும் கடந்து இம்மனத்திற் கொத்த மனதிலெல்லாம் உதிக்கின்றது. (இன்னும் வரும்) - சந்தான கிருஷ்ணபிள்ளை. உ ஆகாரம் - 1 அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும்--உறுங்கவலொன் றுற்றுழியும் கைகொடுக்குங் கல்வியி னுங்கில்லை சிற்றுயிர்க் குற்றதுணை என்று குமரகுருபர சுவாமிகள் கூறியவாறு எல்லாவற்றையும் அறிதற்குக் காரணமாயும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய சதுர்வித புருஷார்த்தங் களையும் பயப்பதாயும் உள்ளன. கல்வியும், அக்கல்வியாலாய அறிவும், ஞானமுமே. ஞானமார்க்கத்தை அனுசரித்து வீடுபெறுவதே இவ்வுலகவாழ்க்கையின் முடிவாம். குழவிப்பருவ முதற் கொண்டு ஒவ்வொருவரும் கற்பதும் கேட்பதும் கற்றவாறும் கேட்டவாறும் நடந்து திரிபுருஷார்த்தங் களையும் சரிவர நிறைவேற்றி, வீடுபெறுதற்கு முயல்வதே இவ்வுலக வாழ்க்கை யின் கருத்து. தன்னைத்தான் அறிவதும் உலகம் இன்னதென் றறிவதுமே சான்றோர்க்குத் தொழில். அத்தொழிலைக் குறையறச் செய்வதற்குக் கல்வி கேள்வி களினால் வரும் அறிவும் ஞானமும் இன்றியமையாதன. ஞானமும், அறிவும் பெறுதற்குக் காரணமாயுள்ள மனம் பிணியுறா திருத்தல் அவசியம். மனம் நோயுறா திருத்தற்கு, உடலும், வண்ணங் களுமே காரணங் களாம். உடல் பிணியுறுமாயின், மனம் அசௌக்கியமடைந்து அறிவு குழறி யாது செய்வதென்று தோன்றாமற் போகிறது. தசை, எலும்பு, நரம்பு, இரத்தம் முதலியவற்றாலாகிய இவ் வெண்சாண் உடம்பிற்குஞ் சிரசே பிரதானம். உடலின் உயிருக்கு ஆதாரமாயும், மனம் நிலைபெற்றிருப்பதாயும் எண்ணங்கள் ஜனிக்குமிடமாயும் அறிவுக்கு மூலமாயும் இருப்பது சிரசிலுள்ள மூளையாம். மூளையின் சௌக்கியா சௌக்கியத்திற்குக் காரண மாயிருப்பது நம்முடலுமெண்ணங் களுமே. ஆதலின் உடலைன்கவனித்து அது சௌக்கிய நிலையில் சதாகாலமும் இருக்குமாறு காப்பது நம் கடமை. பொருள்தனைப் போற்றிவாழ் என்றவாறு பிறக்கும் போது கொடுவந்தது இத்திவ்ய சரீரமே தான். இதன் உதவி யினாலேயே யாதும் செய்ய வேண்டியிருக்கின்றது. பெரியோர் வீடு பெறுதற்கும் நாம் வீடு பெறுதற்கும் உபகரண மானது இவ்வுடலே ஆதலால் நங் கருத்துக்கள் நிறைவேறுமாறு, நம் வாழ்நாட்களை நீட்டிக்க வேண்டுமென்பதை வற்புறுத்துவதே இவ்வியாசத்தின் கருத்து. அவ்வாறு உயிரை நீடிக்குமாறு செய்வதற்கு முன்னர் இவ்வுடலின் அமைப்பையும் இதன் தத்துவங்களையும் நன்கு அறிந்திருத்தல் அவசியம். இவ்வுடல் முதலில் எவ்வாறு உண்டாக்கப்பட்ட தென்றும் இதனுள் என்னென்ன அடங்கியிருக்கின்றன வென்றும் இது எவைகளாற் செய்யப்பட்டன வென்றும் இதன் சௌக்கியத்திற்காக இன்றியமையாதன யாவை யென்றும் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் மிகவும் அவசியம். இவ் வுடலின் பிராணாதாரத்துக்கு வேண்டியவை ஜலம், வாயு, ஆகாரம் என்பனவே. தேகம் ஒப்பற்ற சௌக்கிய நிலையில் இருப்பதற்கும், க்ஷீணதசையை அடைவதற்கும் காரணமா யுள்ளன அநேகமுள. அவற்றுள் முதன்மை யானதும் சரீர போஷணைக்கு ஆதாரமானதும் உணவு. அதுவே சரீர அழிவுக்குங் காரணம் என்று சொல்லின் நம்பத்தக்கதன்று. தகுதியான உணவு ஜீரணாவயவங்கட்கு மிக்க தொழிலைக் கொடாது, அவைகள் இளைப்படைந்து பலவீனப்படுமாறு செய்யாது, அவைகள் மேன்மேற் பலமுறுவதற்கும் அதனால் மற்றைய பாகங்கள் வேண்டிய உணவை அடைந்து சௌக்கிய நிலையில் இருப்பதற்கும் காரணமாயிருக்கின்றது. அன்னபசி யில்லா திருக்கையில் உண்ணுதலினாலும் அளவுக்கு மிஞ்சிப் புசித்தலாலும் உண்டாகிற தீமைகளை அநேகர் அநுபவிப் பதை யாவரும் கண்டிருக்கலாம். ஒரு மனிதனுடைய கு குணங்களுக்கும் சுபாசுபங் களுக்கும் அவன் உண்ணும் உணவே காரணமாம். வயிறு நிரம்பச் சாப்பிடுவோர் கூர்மையான புத்தியுடையவர் களாயும் சுறுசுறுப்புடையவர்களாயும் இருத்தல் அரிது. ஒருபொழுது உண்பான் யோகி இருபொழுது உண்பான் போகி முப்பொழுது உண்பான் ரோகி என்பதால் இது நன்கு போதரும். ஆகையால் உணவே சரீரத்திற்கு நன்மையும் தீமையும் பயக்கின்றதென்றும், ஒருவனுடைய குணாதிசயங்களும் அவன் உண்ணும் உணவின் காரணத்தாலேயே என்றும் அறிந்தோம். உதாரணமாகப் பாரி நகரத்தில் ஓர் தேஹதத்துவ சாதிரி இரண்டு நாய்களைக் குட்டி முதல் வளர்த்தனராம். அவற்றுள் ஒன்றுக்கு மாம்ச உணவும் மற்றொன்றுக்குக் காய்கறி உணவும் கொடுத்தனராம். இவ்விரண்டு நாய்களும் பெரியனவாகுங் காலத்தில் காய்கறி யுண்ட நாய் மிகச் சாதுவாயும் கம்பீரமாயும் இருந்ததாம். ஆனால் மாமிசம் உண்ட நாயோ யாரும் நெருங்க ஒட்டாது கொடூரமாயி ருந்ததாம். நரமாமிசத்தைப் புசிக்கும் சிங்கம் புலி முதலான மிருக ஜாதிகள் குணத்திற்கும், புல் முதலியவற்றைப் புசிக்கும் பெருந் தன்மையுள்ள யானை முதலிய மிருக ஜாதிகள் குணத்திற்கும் உள்ள பேதாபேதம் மேற்கூறிய வற்றையே வலியுறுத்துகின்றது. ஆதலால் இப்போது மானிட உடலைப் போஷிப்பதற்குத் தக்க உணவு எது என்று நன்கு அறிதல் அவசியம். - சீனிவாச நாயுடு மனதிலுதிக்கின்ற எண்ணங்களானவை அலைகள் போன்று வட்டவட்டமாய் அசைந்து ஆகாசத்திற் பரவி அதிவேகமாய்ச் செல்கின்றன என்பதூஉம், இவை இவ்விதமாய்ச் சுழிந்தது வட்டமாய்ச் செல்வதினால், இறுதி யாய் இவை எம்மனத்திலிருந்து வெளிப்பட்டனவோ அம்மனத்தையே வந்தடைகின்றனவென்பதூஉம் மானத சாறு திரிகளின் கோட்பாடு. இவ்வுண்மையை வெகு சுவாரசியமாய் புராணங்களிலும் இதிகாசங்களிலும், ஏனைய நூல்களிலும் வெளிப்படுத்தி யிருக்கின்றனர் நம் பெரியோர். இவை பின்வரும் அத்தியாயங்களில் உணர்த்தப்படும். ஆகையினால், முற்கூறியபடி ஒரு தீய எண்ணம் அல்லது நல் லெண்ணம், திடசித்தத்தினால், மனிதன் மூளையினின்று செலுத்தப் பட்டுவிட்டது, அஃது ஓர் உயிர் உண்டான சக்தியாய்ச், சதா உலகிலுள்ள மற்றைய கோஷ்டங்களை யெல்லாம் மீறி எவ்வதுவின் அல்லது எம்மனிதனின் அழிவிற்கோ, பிழைப்பிற்கோ, பாதகத்திற்கோ, சாதகத்திற் கோ எண்ணப்பட்டதோ, அவ்வதுவை அல்லது அம் மனிதனைச் சென்றணுகித் தன் காரியத்தை முடித்து விடுகின்றது. மானத சாதிரத்தின் தத்துவங்களை அறியார், தம் எண்ணங்களின் ஆற்றலையு மறியார்; அவை பரந்து எங்கேகி என்ன விளைக்கின்றதோ அவையும் அறியார். இவ் வெண்ணங் களால் தாக்கப்பட்ட மனிதனும் அதனால் தன்னிடத்திலுதித்த எண்ணம் யாது காரணத்தினாலுண்டான தென்பதையும் அறியான். அறியாமலிருப்பினும் அவ்வெண்ணங்களால் தனக்குத் தீமையோ நன்மையோ, உண்டாவது மாத்திரம் திண்ணம். ஏறக்குறைய ஒவ்வொரு மனிதனும் தனக்குச் சிற்சில சமயங்களில் யாது காரணமுமின்றித் திடீரென்று தன் மனதானது சஞ்சலப்படுவதையும், அல்லது ஏதோ ஒரு பயங்கரமான அல்லது அபாயகரமான அல்லது தனக்கு ஏதோ ஒரு கெடுதி விளைவிக்கும்படியான காரியம் சம்பவிக்கப் போவதாய்த் தோன்றுவதையும், மற்றைய சமயங்களில் தன் காரியங்களுக்குப் பிரதிகூலமான காரணங்களநேகம் பலத்திருந்த போதிலும் ஓர் விந்தையான தைரியமும் நம்பத்தகாத மனக்கிளர்ச்சியும் உண்டாவதையும் தன் அனுபவத்தில் கண்டிருப்பான். இன்னுமனேகர் ஒருவன் தம்மிடமிருந்து அநேக காத தூரம் பிரிந்திருப்பதை யறிந்தும், அவன் எண்ணமானது தம்மெண்ணங்களை ஆள்வதாயும், தம் காரியங்களின் போக்கை மாற்றித் திருத்தி வைப்பதாயும், அவன் சூக்கும சரீரமானது தம்மை இடைவிடாது தொடர்ந்து செல்வதாயும் நம்பியே நடப்பர். ஒருவன் தன் சிநேகிதனைக்காண உடுத்தி வெளிப்புறப் படப்பாதி தூரத்திலேயோ அல்லது தன் இல்லத்தின் வாயிற்படியிலேயோ அவனைக்கண்டு கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது என்று குலாவுவது வெகு சகஜம். இனிச் சிலர் ஒருவனைக்காண எண்ணிக் கொண்டிருக்கும் போதே மற்றவன் தன்னிடத்திற்குத் திடீரென்று வர, நான் இப்பொழுது தான் உம்மைக் காண நினைத்துக் கொண்டி ருந்தேன். நீரும் வந்துவிட்டீர் என்று சொல்வதையும் காண்கின்றோம். சிற்சில சமயங்களில், ஒருவன் ஏகாக்கிர சித்தனாய்த் தன் வேலையைச் செய்வதிலேயே பரவச மடைந்தவனாய்த்தன் மனதிலாடிப் பாடிக்கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவரின் உருவம் தன் முன்னோ பின்னோ தோன்றத் தன்னை யறிந்தோர் யாரோ வந்திருக்கின்றனர் என்று அவ்வுருவத்தைத் தீண்டவும் அதனோடு பேசவும் முயன்று, உருவம் உடனே மறைந்து விட்டதைக் கண்டு அதிசயித்தும் வெட்கியும் போகின்றான். இனி இங்குத் தோன்றிய உருவம் யாது? தோன்றற்குக் காரணமென்னை? பின்பு இவ்வுருவம் மறைந்து விட்டதின் பொருளென்னை? இன்னுமிவ்வித சங்கைகளும் கேள்விகளும் ஒவ்வொருவர் மனதிலும் உதிக்கும்; உதித்தல் வேண்டும். ஆனால், அவற்றிற்குப் பின்வரும் அத்தியாயங்களிற்றான் விடைகள் மட்டுமேயன்றி, அவ்வித அனுபவங்களை ஒவ்வொருவரும் அடைதற்குச் சாதிர யுக்தமானவையும், எம்முதுகுரவர் எமக்குக் கருணை வெள்ளப் பெருக்கால் அருளியனவும், இக்கலியுக நூதன வாழ்க்கைக்கு ஏற்றவையுமான சாதனங் களும் அப்பியாசங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. இன்னுஞ் சிலர் ஏதோ ஒரு நற்கருமத்தை நாடி அதை மனதிலெண்ணி மிக ஊக்கமாய் அவ்வேலையே கவலையாய் அல்லும் பகலும் சதா அதையே மரித்துக்கொண்டு தங்கள் எண்ணம் ஈடேறுமோ, ஈடேறாதோ என்று மனம் பதைத்துக் கனிந்து உளந்தடுமாறி, மெய் சோர்ந்து, வாய்பிதற்றி, ஈசா எம் காரியம் ஜெயமாமோ என்ற அதே நிமிஷத்தில் அசரீரியாய், அஞ்சன்மின் ஜெயமாய் வருவீர் என்று திவ்வியமங்கள வாக்குகள் பிறந்து சிரவண மனனா நந்தத்தை உண்டு பண்ணி யிருப்பதையும், அனுபவத்தி லறிந்திருப்பர். ஞானிகள் விவகாரம் யாது? பரோபகாரமே, பரோபகாரசிந்தையே தொழிலா யுள்ள ஞானிகளின் திவ்விய எண்ணங்களானவை மிக்க ஆற்றலோடு செலுத்தப்படுவன வாதலால், அவை எவரிடத்தி லனுப்பப்பட்டனவோ அவரி டமணுகி வார்த்தை ரூபத்தை யடைந்து அவ்வார்த்தைக் கேற்ப ஆகாச அதிர்ச்சியை யுண்டாக்க, கிராமபோன் (Gramaphone) முதலிய இசைக் கருவிகளில் வார்த்தை ஒலி உண்டாவது போல, அவ்வதிர்ச்சியின் காரணமாய் ஓரொலி உண்டாகின்றது. மேற் கூறப்பட்ட அபய வாக்குகள் அப்படிப்பட்ட அரிய பெரியோர்களின் அநுக்கிரக எண்ணங்களின் வார்த்தை ஒலிப்பன்றோ? இன்னும் இங்கு விவிலிய நூலிலும், நம் சாதிரங் களிலும் ஆகாசவாணி அசரீரி கூறிற்று. தேவதூதரிடமிருந்து வாக்குகள் ஜனித்தன என்பனவற்றிற்கு முழு உண்மைப் பொருள் இப்போதேயுள்ள ஞான விளக்கத்தின் பயனால் எளிதில் புலப்படுமன்றோ. இன்னும் பிரபல வித்வசிகாமணிகள் தங்கள் காவியங் களில் கதாநாயகன் நாயகிகளை வருணிக்கும்போது நாயகனும் நாயகியும் ஒருவரொருவரைக் கண்டு, களித்துக் கரைந்து பின்பு பிரிந்து, கரும்பு வில்லோன் ஐங்கணைகளின் வருஷங்களால் உடல் துளைக்கப் பெற்று. உன்மத்தரொப்பக் கனவிலும் நினைவிலும் பிதற்றி, ஒருவரொருவரை மரித்துக் கொண்டிருப்பதினால், ஒருவருருவம் மற்றவர் மனதிற் பதிந்து தாகவிடாய் மேற்கொண்ட காட்டுத் தனிவழிப் போக்கனுக்குக் கானல் தோன்றுமாறு, காம விடாய் மேற்கொண்ட இவர் காதுக்கு வேட்கை மிகுதி செய்யும் காட்சியாகிய ஒருவருக் கெதிரில் மற்றவர் தம் சூட்சும சரீரத்தோடு தோன்றுதல், பேசுதல், களித்தல், முதலியன நடப்பதாய் விவரிக்கின்றனர். எவ்வளவு உண்மை! மனோ சக்தியின் பிரபாவத்தை என்ன விதமாய் விளக்கு கின்றனர்! மனோ சக்தியானது, வதுக் களைத் திரட்டி உருட்டி ஓருருவாய்ப் படைத்து மாயை தனக்கு ஏவல் செய்யுமாறு செய்தலுமன்றி எண்ணங்களையும் உருவப்படுத்தி ஒலிப்பித்து பரிசம் ரசம், கந்த முதலிய வற்றையும் மனதினாலேயே சிருஷ்டித்து உண்டு களித்துப் பரவச மடையும்படியும் செய்யா நிற்கின்றதே! இனி இங்குக் கூறப்படும் மனோசக்தியின் பிரபாவத்தை விளக்கும் உதாரணங்கள் யாவும் நன்மை பயப்பனவாகவே யிருப்பக் கெடுதி பயப்பன இல்லையோ வெனின், உண்டு. ஆனால் மானத தத்துவ ஞானம் அடைதற்குப் பயன் உலகிற்கு நன்மையே செய்தல் என்பதாலும், நன்மையே பேசுதலும், கேட்பதும் நன்றாதலாலும், ஒன்றைக் கூறின் மற்றொன்றும் தொனித்து நிற்றல் காரணத்தினாலும் பிற்பட்டவற்றைச் சொல்லா தொழித்தோ மென்க. இவ்வித ஆச்சரியமான காரியங்கள், அதாவது எண்ணங்கள் மற்றவர்களிடத்திற் சென்று தம்மினமான எண்ணங்களை உதிப்பிப்பதும், அவ்வெண்ணங்களே உருவுபெற்று மற்றவருக்கு ஞானமளிப்பதும், காப்பதும், பற்பலவிதக் களிப்புத் தோன்றுமாறு செய்வதுமான காரியங்களைக் கண்கூடாக் கண்டோர் பலருளர். இதைப் படிக்கும் அன்பிற் சிறந்த எம் நண்பர்களும் தத்தம் அனுபவத்தில் மேற் கூறிய மனோகாரியத்திற்கு அத்தாட்சி யாகக் கணக்கற்ற சங்கதிகள் கண்டும் கேட்டு மிருப்பர். ஆதலின் விவரித்த லொழித்தோம். முற்கூறியவைகளும், இன்னு மிவ்வித மற்றைய அனுபவங்களும், ஒருவன் எண்ணங்கள் மற்றவர் எண்ணங் களால், அவன் நன்மைக்கோ தீமைக்கோ, எவ்வளவு மாற்றப்படக்கூடு மென்பதைக் கணித்துச் சொல்ல ஏதுவா யிருக்கின்றன. இவ்விதமாய் ஒருவன் அடைகின்ற ஞானத்தை அவன் ஞான திருஷ்டியினாலடைந்தானெனச் சாதாரண ஜனங்கள் விளம்புகின்றனர். அதாவது இவ்வழியடைந்த ஞானம் பஞ்சேந்திரியங் களின் காரணமாய்த் தோன்றியன அல்லவென்பதே. ஆனால் எவ்வதுவை இந்திரியங்களால் அறியக்கூடுமோ அவ் வது பிரபஞ்சத்திலிருந்தே தீரவேண்டு மென்பதும், அப்படி யில்லாத ஒருவதுவை யூகித்துத் தெரிந்து கொள்ள வாவது, பரிசிக்கவாவது கூடாது என்ற உண்மை கற்றோர் யாவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட விஷயமே. ஆகை யினால் முற்கூறப் பட்ட மனிதரின் அனுபவங்கள் மனோசக்தி என்பது ஓர் உண்மைப்பொருள் என்பதை தாபிப்பதோடு அச்சக்தியை நாம் உணர நமக்கு அந்தக் கரணங்களுண்டு என்பதையும் நிரூபித்து நிற்கின்றன. மனிதனுக்கு இக்கரண முளதாகலின் அவன், தன் நலம் பிறர் நலம் இவ்விரு நலத்தையும் கருதி இக்கரணம் நன்கு விகசித்து விளங்குமாறு இதை மானச உணவால் போஷித்துப் பியோ ஜனப்படுத்திப் பரிபாலிக்கின்ற கடமையை வகித்தவனா கின்றான். - சந்தான கிருஷ்ணபிள்ளை. ஆகாரம் - 2 ஊனைத்தின்றூனைப் பெருக்காமை முன்னினிதே என்ற உண்மையால் மானிடர்க்குவரும் அநேக நோய் கட்கும், சாந்தமற்ற தன்மைக்கும் காரணமாய் உள்ளது பெரும்பாலும் மாம்ஸ பதார்த்த முண்ணுதலே. ஆதலின் மாம்ச பட்சணத்தைக் கண்டித்துக் கழித்துக் காய்கறி பதார்த்தமே உண்ணுதல்உத்தமம் என்று விளம்பல் வேண்டும். ஆதலால், முற்கூறியவாறு உணவு தக்கன வென்று தெரிந்தெடுத்து பின்னர் அவற்றை நாவுக்கு இனியபடி சமைத்து உண்பதே கடமை. இவ்வாறு நாம் உண்ணும் உணவை ஜீரணிக்கும் அவயவங்களின் நிலையை அறிந்து உண்ணுதல் உத்தமம். ஒருநாளுணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளைக் கேலென்றா லேலாய்--ஒருநாளும் என்நோ அறியாய் இடும்பைக்கூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. என்பது அளவுடன் உண்டு சரீரத்தைப் போஷிப்பதை எடுத்துரைக்கின்றது. தேஹத்திற்கு வேண்டு மவ்வளவும் கொடுத்தல் அவசியம். அவ்வாறு கொடாவிடின் நாளுக்குநாள் பலம் குன்றி க்ஷீணதசையை அடைந்து நோய்களுக்கு இடமாகி விடும். தற்காலத்து அநேக நோய்கள் வறுமையால் உண்டா கின்றன வென்று தேக தத்துவ சாதிரிகள் கூறுகின்றனர். அவற்றுள் எலும்புருக்கிநோய் (consumption) என்பது வேரூன்று முன்னர்த்தகுதியான உணவினால் தீர்க்கக்கூடு மென்றும் உரைக்கின்றனர். உணவில் சேர்க்கப்பட்டு வருவதாகியும் நாம் ஒரு நிமிஷமும் கூட அஃதில்லாமல் ஜீவித்திருக்க முடியாத அத்தியாவசியமானதும், வாயு என்பதே. வாயுவைச் சரியாய் உட்கொள்ளாது அநேகர் பிணியுறுகின்றனர். நோயற்ற வாழ்வு செல்வத்துக்கோர் செல்வமாம். தேக சௌக்கியத்தை விடப் பெருஞ் செல்வம் வேறிலது. ஒருநாள் ஒருவன் பிணியுறின் தன் கைக்கு வருஞ் செல்வத்தையும் கையிலிருக்குஞ் செல்வத்தையும் அந்நாட் செய்யும் தொழிலாகிய பெருஞ் செல்வத்தையும் இழந்து காலத்தையும் இழப்பது சகஜம். சாதாரணமாய் ஜனங்கள் அன்னமே உடலுக்கு ஆகாரமென்று நம்புகின்றனர். இவற்றுள் கொஞ்சம் தெளிவுடையோர் அன்னமும் ஜலமுமே பிராணாதாரமாகக் கருதுகின்றனர். தேகதத்துவத்தைச் சிறிதறிந்த சிலரும் அன்னம், ஜலம், வாயு இவை மூன்றுமே மனித இயந்திரம் நடைபெறுவதற்குப் போதுமென்று நம்புகின்றனர். ஆனால், இவ்வரிய மானிடதேகத்தில் பொருந்தியுள்ள அதிவிசித்திர அவயவங்களும் அவற்றின் தத்துவங்களும், எத்துணையோயு பாந்தமா யடைந்த ஞான விளக்கத்தில் வாழும் பிரபல தத்துவ சாதிரிகளாலும் கூட முழுதுமே அறியக் கூடாமல் அதீதமாயிருக்கும்; நம் கருணை வள்ளற் பெருமானால் ஆன்மாக்கள் உய்யுமாறுபடைத்த பஞ்சபூதங்களால் ஆய ஆக்கையைப் பூரண சௌக்கிய நிலையில் வைத்துக் காப்பதற்குக் காரணமாயுள்ளவை, ஜலம், வாயு, ஆகாரம் மட்டுமே யன்றிச் சூரியவெளிச்சமும், வெப்பமும், நித்திரையும், மனக்கிளர்ச்சியும், இன்றியமையாதன. நோயுண்டாக்கும் காரணம் யாதெனின், இவ்விந்தை யான இயந்திரத்தை அதி சௌக்கிய நிலையில் வைத்திருப்ப தற்குக் காரணமாயுள்ளவைகள் பொருந்தி யிராமையே. செம்பிற் களிம்பை நீக்கி மாற்றறியாத செழும்பசும் பொன் னாக்குவதற்குரிய குளிகை போன்று, பிணியுற்ற சரீரத்தைத் திவ்விய சரீரமாக்குதற்கு ஏக காரணமாயுள்ளது யாதெனின், தான் ஆத்துமா வென்றும், ஈசன் புத்திர னென்றும், தம் வாழ்க்கையின் பயன் பதியை அடைவதே என்றும் அறிந்தபின், அதை அடைவதற்குச் சாதனமா யுள்ளது இச்சரீரமே என்ற உண்மையைத் திண்ணமாய் அறிதலேயாம். அறிந்த பின்பதியை அடையும் அவாவானது தேகத்தை ஒப்பற்ற நிலையில் வைப்பதற்குக் காரணமா யுள்ளவற்றை வெளிப்படுத்துவது மன்றி அக்காரியம் தடையற முடிவு பெறுதற்கு மன ஊக்கத்தையும் கொடா நிற்கின்றது. ஆனால் இவ்வரிய காரியத்தைச் சாதிப்பதற்குச் சாதனங் களை முதலில் தெளிதல் வேண்டும். நோய்க் கிடங்கொடார் செய்கை யாவை என்று அறிதல் வேண்டும். தேக சௌக்கியத்திற்கோர் அத்தாட்சியாய் நிற்கும் காரணம் ஒன்று யாதெனின் ஜடராக்கிநியின் வேகமே. இஃது எவ்வளவேனும் குறைந்திருப்பின் தேக சௌக்கியக் குறைவை வெளிப்படுத்துகின்றது. இப்படி அறிந்தபின் லங்கனம் பரமஔஷதம் என்னுமாறு தீவிரபசி மறுபடியும் உண்டாகுமளவும் கடின உணவாகிய அன்னம் முதலிய உண்ணா திருந்தும், உடம்பிலுள்ள அசுத்தங்களை எளிதில் வெளிப்படுத்துவதும் இரத்த சுத்தி செய்வதுமான வாயுவும், ஜலமும் ஏராளமாய் ஏற்றுக் கொண்டும், மணிமந்த்ர ஔஷதம் பிரயோஜனப்படுத்தியும், ஊக்கத்தையும் தூக்கத் தையும் கொடுக்கும் தேகப் பயிற்சியைச் செய்தும், மனம் சாந்தத்தையும் சந்தோஷத்தையும் அடையுமாறு, நண்பர் களின் இனிய வார்த்தைகள், யாழ், ஓசை, கீதம் முதலிய மனதிற்கு ரம்மியமானவைகளைக் கேட்டும், இருப்பின் பிணி அறத்தொலையும். தொலைந்தபின், இனிப் பிணிவராததற்கு நோய்க் கிடங் கொடேல் என்றவாறு தேகத்தைச் சுத்தியாய் வைக்கும்படி சனி புதன் தனில் எண்ணெய் வெந்நீரில் மூழ்கிச் சாரும் இளம் வெயில் விரும்பாமல், தம் வயதின் மேலான மங்கைதனை மணவாமல் சதா காலம் வழி நடவாமல், பனியிலும், காற்றிலும் மெய் வருந்தாமல், பழங் கறி அருந்தாமல், இரண்டடக்காமல், ஒன்று பலகாலமும் விட்டிடாமல் கிழங்குகளை மிகப் புசியாமல், பசிகலந்தன்றி உணவு செய்யாமல், அறப்பசித்தபின் மிகினுங் குறையினும் நோய் செய்யுமாதலின், தக்க உணவு அளவறிந்து உண்டு மறுபடி துவரப்பசிக்கு மளவும் ஜலம், வாயு முதலியவற்றை யன்றிக் கடின உணவு உண்ணாமல் இருத்தல் வேண்டும். கற்றவை கற்றபின் நிற்கவதற்குத் தக என்று தெய்வப்புலமை வாய்ந்தவரும், பொய்யா மொழிப் புலவருமாகிய திருவள்ளுவ நாயனார் திருவாய் மலர்ந்தருளிய மந்திரந்திற் கேற்ப, இவ்வுடல் முதலில் எவ்வாறு உண்டாக்கப்பட்ட தென்றும், இதனுள் என்னென்ன அடங்கி யிருக்கின்றன வென்றும், இஃது எவற்றால் செய்யப்பட்டன வென்றும் இதன் சௌக்கியத்திற்காக இன்றியமையாதன யாவை என்றும், ஒவ்வொருவரும் அறிந்து, அறிந்தபடி நடந்து, வாழ்நாளை நீட்டிக்க வேண்டுமென்பது எம் கோரிக்கை. பிறகு கற்றதினாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅரெனின் என்று வாயுறை வாழ்த்தின் கர்த்தாவாகிய பொதுமறைத் தேவர் கூறிய சாத்வீக காலத்து இன்பமாரியாகிய ஞானமொழிக் கேற்பக் கற்பவை கற்றுக் கற்றபின் கற்றபடி நின்று, இதன் பயனாய்த் தூய நற்றாளைத்தொழுது, அத்தாளை ஒவ்வொருவரும் அடைய வேண்டுமென்பது எம் எளிய பிரார்த்தனை. இப் பிரார்த்தனைக்கு நம் திருவள்ளற் பெருமான் திருச்செவிசாத்தி அருள்புரி வாராக. - சீனிவாச நாயுடு. உ திருச்சிற்றம்பலம் சாதிவித்தியாசமும் போலிச்சைவரும் சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள் கோத்திரமுங் குலமுங் கொண்டென் செய்வீர், பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல் மாத்திரைக்குள் ளருளும் மாற்பேறரே. - திருநாவுக்கரசு சுவாமிகள். சைவசமயமானது சீவகாருணிய ஒழுக்கத்தையும் சிவபத்தி அடியார் பத்தியினையும் போதிப்பதென்று உணரும் புண்ணியம் இல்லாத போலிச்சைவர் சிலர் சாதி வித்தியாசமே தாம் சைவ சமயத்தாற் பெறும் தத்துவஞானம் என்று மயங்கி உணர்ந்து, அம்மயக்க வுணர்ச்சியைத் தம்மிடத்தும் தம்மோடொத்தவரிடத்தும் வைத்து மகிழ்வ தோடு திருத்தி பெறாமல், அதனைத் தமக்கு இசைந்த பத்திரிகைகளினும் எழுதி வெளியிடுவித்துச், சைவ வுண்மைகளை உள்ளவாறே எடுத்துப் போதித்து வரும் தவ வொழுக்கமுடைய பெரியாரையும் தமக்குள்ள பொறாமையாலும் வஞ்ச இழிகுணத்தாலும் தமக்குத் தோன்றிவாறெல்லாம் இகழ்ந்து பேசுகின்றார். ஒருவருடைய உயர்வுந் தாழ்வும் அறிவான் மிக்க சான்றோர் மதிக்க வேண்டுமே யல்லாமல், அறிவில்லாக் குறும்பர் மதிக்கற் பாலரல்லர்; ஆகவே, அறிவில்லார் கூறும் இகழுரைகளையும் பொய்ப் பிரசங்கங்களையும் அறிவு டையார் ஒரு பொருட்டாக எண்ணா ராகலின் அவர் கூறும் பழிச்சொற்களை விடுத்து, அவர் கூறும் மற்றப் பகுதிகளில் உள்ள குற்றங்களை மாத்திரம் ஒரு சிறிது எடுத்துக் காட்டுவாம். அவர் உரைத்தவற்றில் உள்ள குற்றங்கள் அனைத்தும் அறிவு டையார் தாமே உணர்வ ராகலின், ஏனைச் சாமானியர் அவர் கூறியவற்றைக் கண்டு மயங்காமைப் பொருட்டு இங்கு இதனை எழுதுவே மாயினேம். சாதி வித்தியாசம் பழையகாலந் தொட்டே வேதம் முதலான நூல்களிற் காணப்படுகின்றதாகலின், அந்நூல் களைப் பிரமாணமாகக் கொண்டவர்கள் அவ்வித்தி யாசத்தை அனுசரித் தொழுகுதலே செயற்பால தென் கின்றார். சாதி வித்தியாசம் பழமையாக உள்ளது பற்றியே அதனைத் தழுவியொழுகல் வேண்டு மென்பது பகுத்தறி வில்லார் கூற்றாம். பழையன வெல்லாம் நல்லனவாதலும் இல்லை, புதியன வெல்லாம் தீயன வாதலும் இல்லை; பழையனவற்றில் தீயனவும் உண்டு புதியனவற்றில் நல்லனவும் உண்டு. இவ்வுண்மையைச் சைவ சித்தாந்த ஆசிரியருள் ஒருவரான உமாபதி சிவாசாரிய சுவாமிகள் தொன்மைய வாம் எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றிய வாம் எனும் எவையும் தீதாகா. என்று உபதேசித்தருளியதுங் காண்க. மனிதருடைய நாகரிக வளர்ச்சிக்கும் அறிவின் மேன்மைக்கும் ஏற்பக் காலந்தோறும் பழைய ஏற்பாடுகள் அழிந்து போதலும் புதிய ஏற்பாடுகள் புகுந்து பொருந்து தலும் இயற்கையாம். இவற்றை உலகத்தார் தழுவி நடந்து வரும் வகைகளை யெல்லாம் சொல்லப் புகுந்தால் இது மிக விரியும். இது பற்றியன்றோ பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையினானே என்னும் விதியும் எழுந்தது. ஆகவே, சாதி வித்தியாசம் பழையகாலந் தொட்டு இருத்தல் பற்றியே அதனை விடாது கைப்பற்றி யொழுகல் வேண்டுமென்பது சிறிதும் பொருத்தமில்லாத போலி யுரையாம். இனிச் சாதி வித்தியாசம் பழமை தொட்டே உள்ள தென்பதும் அறிவில்லாக் கூற்றாம். மிகப் பழைய நூலாகிய இருக்கு வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்களினும் சாதி வித்தியாசத்தைப் பற்றிய குறிப்பு ஒன்றுமே காணப்பட வில்லை. ஈசகேனகடம் முதலான பழைய உபநிடதங்கள் தோன்றிய காலத்தும் நால்வகைச் சாதி வகுப்புக் காணப்படாமல், பிராமணர் ராஜந்யர் என்னும் இரண்டு பிரிவு மாத்திரமே காணப்படுகின்றது. இவ்விரண்டு பிரிவும் அவ்வவர் தொழில் பற்றி வந்தனவே யல்லாமல், அவர் தமக்குள் வேறு எவ்வகையான வித்தியாசமும் இருந்ததாகத் தெரியவில்லை. வேள்வி வேட்டலும் நூல் ஓதுதலுமாகிய தொழிலைச் செய்பவர் பிராமணர் என்றும், போர் புரிதலும் நாடு காத்தலுமாகிய தொழிலைச் செய்பவர் ராஜந்யர் அல்லது க்ஷத்திரியர் என்றும் வகுக்கப்பட்டனர். இங்ஙனம் வகுக்கப்பட்டாலும் அவர்கள் அவ்வத் தொழில்களையே செய்ய வேண்டுமென்னும் கட்டுப்பாடு சிறிதும் இருந்த தில்லை. துரோணரும் அவர் ஆசிரியர் அக்கினிவேசரும் அவர் புதல்வர் அசுவத்தாமரும் அவர் மைத்துனர் கிருபரும் போன்ற பிராமணர் போர்த்தொழில் பயின்றமையும், பிரியமேதர் சினி கார்க்கியர் திரையாருணி முதலான க்ஷத்திரியர் நூல்கள் ஓதிப் பிராமணரானமையும் மேற் கூறியதனை நாட்டுவதற்குப் போதுமான சான்றாம். இவை மாத்திரம் அல்ல. இவ்விரு வகுப்பாரும் ஏதும் வேறுபாடின்றி ஒன்று சேர்ந்து உணவருந்தியும், பெண் கொண்டு கொடுத்தும் ஒருமையாய் வாழ்ந்து வந்தார்கள். விதர்ப்பன் என்னும் க்ஷத்திரியன் புதல்வியை அகத்தியர் மணந்து கொண்டார்; உலோமபாதன் புதல்வியை இருசிய சிருங்கள் மணந்து கொண்டார்; இங்ஙனமே ராஜந்யர் புதல்விகளைப் பிராமணர் மணந்து கொண்ட வரலாறுகள் எண்ணிறந்தன இருக்கின்றன. இனிப் பிராமணர் புதல்விகளை மற்றை வகுப்பாரான ராஜந்யர் மணந்து கொண்ட வரலாறுகளும் பல இருக்கின்றன. சுக்கிராசாரியர் என்னும் பிராமணர் தமது புதல்வியை யயாதி என்னும் அரசனுக்குக் கொடுத்தார்; மற்றொரு பெண்ணை அனூகனுக்குக் கொடுத்தார். இங்ஙனமே ஞானோபதேசங் களும் வித்தியாசமின்றிச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ஜனகராஜன் பிராமண முனிவர் பலர்க்கு ஞானோபதேசஞ் செய்தனன்; பாலாகி என்னும் பிராமண ருஷி அஜாத சத்துரு என்னும் அரசனால் ஞானோபதேசஞ் செய்யப்பட்ட வரலாறு பழைய உபநிடதங்களிற் காணப்படுகின்றது. இவ்வுண்மை களால் இருக்கு வேதத்திற்குப் பின் உபநிடதங் கள் எழுந்த காலத்தில் பிராமணர் க்ஷத்திரியர் என்னும் இரண்டு வகுப்பே இருந்தன வென்பதும், அவ்விரண்டு வகுப்பும் தொழில் பற்றி உண்டாயினவே யல்லாமல் பிற்காலத்திற் போலப் பிறப்பு மாத்திரத்தால் உண்டாயின வல்லவென்பதும், அவ்விரண்டு வகுப்பாரும் தமக்குள் ஏதும் வித்தியாசமின்றி உண்ணல் கலத்தல்களால் ஒருமித்து வாழ்ந்தனர் என்பதும் இனிது விளங்கும். இனிப் புராணங்கள் இதிகாசங்கள் தோன்றிய காலத் திலே தான் பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரா என்னும் நான்கு வகுப்புகள் பிரிந்தன. இந்நால்வகைச் சாதியாரும் ஒரே தந்தைக்குப் பிள்ளைகளாய்ப் பிறந்து நால்வேறு தொழிலால் நால்வகைப்பட்டார்களே யல்லாமல் அவர்களுள்ளும் உண்ணல் கலத்தல்களில் ஏதும் வித்தியாசம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சிரார்த்த காலங்களிற் பிராமணன் வீட்டில் சூத்திரன் சமையல் செய்து அன்னம் பரிமாறியமுறை பழைய கற்பசூத்திரங்களிற் சொல்லப் பட்டிருக்கின்றது. இதற் கிணங்கவே வாயு புராணத்தும் பின் வருமாறு சொல்லப் பட்டிருக்கின்றது; கிருத யுகத்தின் கண் சாதிகள் ஏதுமே இல்லை; அதன்பின்னர் பிரமதேவர் அவ்வவர் தொழில்களுக்கு ஏற்ப மனிதருள் நான்கு வகுப்பு கள் ஏற்படுத்தினார். பிறரை ஆளுவதற்கேற்ற வீரச்செய்கை யுடையவர்களைப் பிறரைக் காக்கும் பொருட்டு க்ஷத்திரிய ரென்று நியமித்தார். தந்நலம் பாராட்டாமல் பிறர்நலங் கருதி உண்மையே பேசி வேதத்தைச் செவ்வையாக ஓதினவரைப் பிராமணர் என வைத்தார். முன்னே வலியற்றவர்களாய் நிலத்தை உழுவதிலும் கைத்தொழில் புரிவதிலும் தலையிட்டு உழவினால் உயிர் வாழ்க்கைக்கு வேண்டுவன வற்றை எடுத்துத் தந்தவர்களை வைசியர் என வைத்தார். சுத்தஞ் செய்பவர் களாய் ஏவிய தொழில் மாத்திரஞ் செய்யும் வலியற்றவர் களைச் சூத்திரர் என்று வைத்தார், இவ்வாயு புராண வாக்கியங்களுள் சாதியானது தொழில் பற்றி வந்ததென்று சொல்லப் பட்டிருக்கிறதே யல்லாமல், பிறப்பினால் வந்ததென்று சிறிதும் சொல்லப்படவில்லை. இனி இந்நால்வகைச் சாதியாருள்ளும் எவர் உயர்ந்தோர் எவர் தாழ்ந்தோர் என்று வினாவுங்கால், ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்த சாதியா ரெனவும், ஒழுக்க மில்லாதவரே தாழ்ந்த சாதியாரெனவும் மகா பாரதம் சாந்தி பருவத்தின் கண் நிச்சயித்துரைக்கப் பட்டிருக்கின்றது. அப்பகுதி வருமாறு: பரத்துவாச முனிவர் பிருகு முனிவரை வினாவு கின்றார். நால்வகைச் சாதி வித்தியாசத்திற்கும் நிறந்தான் காரணமென்று சொன்னால் எல்லாச் சாதியுள்ளும் நிறங்கள் பலதிறப்பட்டுத் தோன்று கின்றன. அவாவுங் கோபமும் அச்சமும் பேராசையும் சஞ்சலமும் கவலையும் பசியும் களைப்பும் நம்மெல் லாரிடத்தும் மிகுந்து தோன்றுகின்றன; இங்ஙனமாயின் சாதிப் பகுப்பு எவ்வாறு பொருந்தும்? அசையும் பொருளும் அசையாப் பொருளுமாகிய வகைகளும் எண்ணிறந்தனவாயிருக்கின்றன; இப்பகுப்புகள் பலவற்றுள்ளும் சாதி நிர்ணயம் செய்தல் எங்ஙனம்? இவற்றிற்குப் பிருகு மறுமொழி கூறுகின்றார். சாதி வித்தியாசம் என்பது ஒன்றில்லை. உலகமுழுதும் பிரமாவாற் சிருட்டிக்கப்பட்டமையால் ஆதியில் எங்கும் பிராமணர் மாத்திரமே இருந்தார்கள். தொழில்களினாலேயே சாதிகள் உண்டாயின. ஆசைப்பட்ட பொருள்களை அனுபவிப்பதிற் பிரிய முள்ளவர்களும், கொடுமையும் இச்சையும் உள்ளவர்களும், இச்சிக்கப்பட்ட பொருள்களைப் பெறுவதில் ஊக்கம் வாய்ந்த வர்களும் தாங்கள் செய்தற்குரிய கடமைகளை விட்டவர் களும், செந்நிறம் வாய்ந்தவர்களும் ஆனது விஜராகிய பிராமணர் க்ஷத்திரியருடைய நிலைமையை அடைந்தார்கள். ஆடு, மாடு மேய்க்குந் தொழிலை மேற்கொண்டவர் களும், மஞ்சள் நிறம் வாய்ந்தவர்களும், உழவுத் தொழிலாற் சீவிப்பவர்களும், தம்முடைய கடமைகளில் நில்லாத வர்களும் ஆன துவிஜராகிய பிராமணர் வைசியருடைய நிலையை அடைந்தார்கள். கொலை செய்வதிலும் பொய் கூறுவதிலும் பிரியமுள்ளவர்களும், பேராசை பிடித்தவர்களும், எல்லா வகையான தொழில்களையும் செய்து அவற்றால் சீவிப்பவர் களும், கரிய நிறம் வாய்ந்தவர்களும், சுத்தம் சுசி இல்லாத வர்களும் ஆன துவிஜராகிய பிராமணர் சூத்திரருடைய நிலைமையை அடைந்தார்கள். இத்தகைய தொழில்களால் பிரிக்கப்பட்டுத் துவிஜர் கள் சாதிகளாக வகுக்கப்பட்டனர் ஐந்தாம் வேதமாகிய பாரதத்திலே பரத்துவாச பிருகு சம்வாதமாக ஏற்பட்ட இந்தப் பகுதியினால் சாதி வகுப்பு ஒழுக்கத்தினால் வகுக்கப்பட்டதே யல்லாமல் பிறப்பினால் அன்றென்பது இனிது விளக்கப்பட்டிருக்கவும். அதனைச் சிறிதும் அறியாமல் பிறப்பினாலேயே நாம் உயர்ந்து விட்டோம் என்று தருக்கினாற் புலம்பிச் சாமானியரை வஞ்சிக்கும் போலிச் சைவர் என்கடவரென்க. மேற்கூறிய வடமொழி வேதவுரைகள் ஒழுக்கத்தினால் மாத்திரமே உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்பன வகுக்கப்படும் என்று கூறியதுபோலவே தமிழ் வேதமாகிய திருக்குறளும் பிறப் பொக்கும் எல்லா வுயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால். (குறள் 972) என்றும், ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும், (குறள் 133) என்றும், மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர், கீழிருந்துங் கீழல்லார் கீழல்லவர். என்றும், ஓதினமை காண்க. இவைதாம் தெரிதற்குரிய பெருங்கல்வி போலிச் சைவர் மாட்டில்லை யாயினும், பள்ளிக்கூடச் சிறுவர் நாடோறும் ஓதிவரும், சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையின்-- மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கிலுள்ளபடி. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்தபதராகும்மே. என்னும் அரிய நீதிநூல் வாக்கியங்களையேனும் அவர் தெரியப் பெறாதது பெரிதும் விசனிக்கத்தக்கதொன்றாம். இவைதாம் தெரியப் பெறாரேனும் உலகவழக்கை யாவது தெரிந்து இவர் நலம் அடையலாகாதா? அந்தோ! போலிச் சைவர் அறியாமை இருந்தவாறென்னை! போலிச் சைவர் ஒருவர் வஞ்சமும் பொறாமையும் மன அழுக்கும் உடைய வராகிப் பொய்பேசியும் பிறரை இகழ்ந்து உரை யாடியும் பிறர் பொருளைக் கவர்ந்தும் வர, அவரைக்கண்டு ஏ! இழிகுலத்தாய் ஏன் இங்ஙனமெல்லாம் தீது செய்கின் றாய்?என்று வினவினால், அதற்கு அப்போலிச் சைவர் நானா இழி குலத்தேன்? நான் என் தகப்பனாருக்கே யன்றோ பிறந்தேன். நான் தேவாரம் ஓதவில்லையா? நான் தகப்பன்பெயர் தெரியாதவர்களிற் சேர்ந்தவனா? நான் திருவாவடுதுறை தருமபுர ஆதினங்களில் எல்லாரோடு மிருந்து வயிறுநிறைய நன்றாய்ச் சோறுதின்று கறுத்துத் தடித்துப் பருத்திருக்க வில்லையா? பாருங்கள் என்று தமதுடம்மைபத் திருப்பித் திருப்பிக் காட்டினால் அவர் சொற்களை உலகத்தார் அங்கீகரிப் பார்களா? அடே பேதாய் இவற்றையார் உன்னைக் கேட்டார்கள்? நீ உன் தகப்பனுகே பிறந்தாய் என்பது உனக்கு எப்படித்தெரியும்? பெண்களு டைய சாமர்த்தியமும் தந்திரமும் உனக்கென்ன தெரியும்? மகாஞானியான பட்டினத்துப் பிள்ளையார் கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன் கையையெடுத், தப்புறந் தன்னில் அசையாமல் முன் வைத்தயல்வளவில், ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை, எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சி யேகம்பனே. என்று அருளிச் செய்ததை அறியாயோ? பெண்களு டைய பேச்சை நம்பி நான் என் தகப்பனுக்கே பிறந்தேன் என்றும், பிறர் தகப்பன்பெயர் தெரியாதவர் என்றும் இகழ்ந்து பேசாதே. இரகசியத்தில் பிறனுக்குக் கருத்தரித்த பிள்ளைகளைத் தங்கணவன் பெயரால் வளர்த்துவிடும் சம்பவங்கள் எண்ணிறந்தன. அதி ரகசியத்தில் நடந்த அவைகளைத் தெரிந்த சிலர் அவைகளைச் சிலகாரணங்கள் பற்றி வெளிவிடாமையால் அவை இரகசியமாகவே நின்று விடுகின்றன. உன் இழிகுணச் செய்கைகளைப் பார்த்தால் நீ உண்மையான சைவனுக்குப் பிறந்தவன் அல்லை என்று எமக்குத் தோன்றுகின்றது. நீ யாருக்குப் பிறந்தால் எமக்கென்ன. நீ தேவாரம் ஓதி என்செய? திருவாசகம் படித்து என்செய? உன் மனஅழுக்கு உன்னைவிட்டு நீங்கிற்றில்லையே. ஆதீனங்களில் உடனிருந்து சோறு தின்னுவதை ஒரு பெருமையாகப் பேசிக்கொள்ளு கின்றாய். நாங்கள் கேள்விப்பட்டமட்டில் இப்போது சைவமடாதீனங் கள் பலவற்றில் உள்ளவர்கள் துறவிகள் என்று பெயர் மாத்திரம் உடையவர்களாக இருக்கிறார்களே அல்லாமல், அவர்கள் இலௌகீகத்தில் ஒழுக்கங்கெட்டவர்களினும் மிக இழிந்தவர்களாக இருக்கிறார்கள் என்றும், அளவிறந்த தருமச் சொத்துகளை வைத்துக் கொண்டு அவற்றை நல்வழியில் உபயோகியாமல் தீயவழிகளில் அவற்றை வாரிவாரி இறைக்கிறார்கள் என்றும் தெரிகிறோம். அப்படியிருந்தால் அவர்களோடு உடனிருந்து சோறு தின்னுவதில் உனக் கென்ன பெருமை வந்துவிட்டது? அவ்வா தீனங்களுக்கு உண்மையறிவுடையோர்கள் செல்வதில்லை யென்று கேள்விப்படுகிறோம். சோற்றையும் பணத்தையும் விரும்பின வர்கள் அங்கே சென்று அவர்களுக்கு இச்சகம் பேசிக் காலங்கழிக்கிறார்களாம். பிறரைச்சேராமல் தாமே கூடியிருந்து சோறு தின்பவரைப் பற்றிப் பெருமை பேசிக்கொள்ளுகிறாய். அப்படியானால் பிறவற்றைக்கிட்டே சிறிதும் அணுகவிடாமல் தாமாகவே தீனி தின்னும் சிலமிருகங்கள் அவர்களை விடச் சிறந்தன என்றன்றோ சொல்லவேண்டும்? உன் அறிவு ஆ! எவ்வளவு உயர்ந்தது! அது நிற்கட்டும், நீ உனக்குள்ள தீயகுணச் செயல்களி னின்றும் விலகி நல்வழியில் நடவாவிட்டால் நீ இழி பிறப்பினன் ஆதல் நிச்சயம். என்று உலகத்தார் கூறுவார் களன்றோ? அதனைக் கேட்டும் அறிவுவிளங்காமல், வேளாளர், தொண்டைமண்டில முதலிமார், கார்கார்த்தார், சோழியர், ஓதுவார், குருக்கள் முதலாயினரல் லரோ உயர்ந்த சாதியார்? அவர்கள் மாத்திரம் அன்றோ ஒன்று கூடியிருந்து சோறு தின்னல் வேண்டும்? இழிந்த சாதியாரான இடையர், கள்வர், மறவர் அகம்படியர், கைக்கோளர், நாட்டுக் கோட்டைச் செட்டிகள் முதலாயினோர் வேளாளருடனி ருந்து உண்ணுவது கூடாதன்றோ? இழிந்தசாதியார் மேற் கூறிய உயர்ந்த சாதியாரோடு சேர்ந்து உண்ணாமையால், சைவ குலத்திற் பிறந்தவனாகிய நான் என்ன கெட்ட ஒழுக்க முடையவனா யிருந்தாலும் நான் உயர்ந்தவனே. என்று அப்போலிச்சைவர் கூறினால் அதனைக் கேட்ட உலகத்தார். சோழியர், கார்காத்தார் முதலான வேளாளர் உள்ளபடியே சீவகாருணியமும், கல்வியும் நல்லொழுக் கமும், சிவபத்தி அடியார் பத்தியும் உடையவர்களாயி ருந்தால் அவர்களை உயர்ந்தோர் என்று சொல்வதில் தடையில்லை; அப்படிப்பட்ட உண்மைவேளாளர் மற்றைச் சாதியாரை இழிவாக நினையாமல் எல்லாரிடத்தும் இரக்கமும் அன்பும் உடையவர்களாகி, மற்றைச் சாதியாரில் பிராணிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை உண்பவர் களைக் கண்டால் நீங்கள் கொலையாலும் புலால் உண்ணுத லாலுமே இழிவடைந்தீர்கள். இவற்றை அறவே ஒழித்து எல்லா உயிர் களிடத்தும் அன்பும் அருளும் பாராட்டுவீர் களானால் நீங்கள் சிவபெருமான் திருவருளைப் பெறுதல் திண்ணம். நீங்களும் நம்முடனே கலந்து உறவாடலாம். என்று பலகாலும் எடுத்துச்சொல்லி அவர்களைத் திருத்தி, அங்ஙனம் திருந்தின வர்களைத் தம்மோடு உடன்வைத்து உண்டு அளவளாவி வாழ்வார்கள்; சீவகாருணிய உபதேசமும் சிவஞானோப தேசமும் செய்யும் கலைஞரையும் தவப் பெரியாரையும் கண்டால் அவரிடத்து அன்பினால் அகங்குழையப் பெற்றவராகி அவர்க்கு அடித்தொண்டு செய்குவர். இத்தகைய உண்மைச் சைவர்களாலே நாடெங் கும் சீவகாருணியமும் சிவபத்தியும் மிகும்; உயர்ந்த வொழுக்கமுடைய உயர்ந்த சாதியாரோடு ஒன்றுசேர்ந்து அளவளாவலாம் என்ற எண்ணத்தால், கொலைத் தொழிலையும் புலாலுணவையும் பிறர் எல்லாரும் அறவே ஒழித்து மேம்படுவார்கள். இங்ஙனம் செய்வதை விடுத்து ஏபேதாய், பிறர் எவ்வளவு தான் நல்லொழுக்கமுள்ளவர்களாய்த் திருந்தி னாலும், நான் எவ்வளவு தான் கெட்ட ஒழுக்கமுள்ளவ னானாலும், நான் சைவகுலத்திற் பிறந்தவனாகையால் அவர்களோடிருந்து சோறுண்ணமாட்டேன் என்கின் றாய். இழிகுணச்செய்கையால் இழிந்த பிறப்படைந்த உன்னு டனிருந்து சோறுண்டல் நல்லொழுக்கத்தில் திருந்திய அவர்களுக்கும் இழிவேயாகு மல்லது உயர்வு ஏது? ஆகையால், சோறோசோறென்று சோற்றையே கட்டிக் கொண்டு அழும் போலிச்சைவனான உன்னைச், சீவ காருணியத்திற் சிறந்த உண்மைச் சைவர்கள் தம்முடன் சேர்க்க மிகக்கூசுவர் அல்லரோ? சிலகாலத்துள் அழிந்து போவதாகிய உடம்பையும் அவ்வுடம்புக்கு இடும் சோற்றை யுமே பெரிதாக எண்ணி அறியாமையால் மிகவும் இறுமாப்ப டைந்து பிதற்றும் நீயும் உன்னையொத்த சிலரும் கூறும் பொருந்தாச் சொற்கள் நாம் சிறிதுங்கவனிக்கத்தக்கனவல்ல என்று சொல்லாமற் போவார்களோ? இங்ஙனம் உலகத்தார் கூறும் உலகவாழ்க்கையும் போலிச்சைவர்கள் உணராமல் தம்மை யுயர்த்தியும் பிறரைத் தாழ்த்தியும் அகங்கரித் துரைக்கின்றார்கள்! இவர் பிறப்பினா லேயே தம்மை உயர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வா ரானால், அவ்வாறு சொல்வதனால் இவருக்கு இழிவே உண்டாகுமல்லது உயர்வுண்டாவதற்குச் சிறிதும் இடம் இல்லை. ஏனென்றால், பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத்தவிர மற்ற எல்லாரையும் சூத்திரர் என்றே அழைக் கிறார்கள். மாமிசம் உண்பவனும் உண்ணாதவனும் ஆகிய எல்லாரையும் அவர்கள் ஒரேமாதிரியாகத் தான் நடத்துகிறார்கள் மாமிசம் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினனாய்ச் சென்றால் அவனுக்குப் பிராமணர் தாம் உண்டு மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இடுகிறார்கள்; மாமிசம் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இடுகிறார்கள். போலிச்சைவர் பிறப்பினால் உயர்ந்த வராயிருந்தால் அவர்போற் பிறப்பினாலுயர்ந்த பிராமணருட னிருத்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் சாதி யென்று சொல்லும் போலிச்சைவர் தம்மைச் சூத்திரர் என்றுதான் ஒப்புக் கொள்ள வேண்டி வருமேயல்லால் வேறுதப்ப வகை யில்லை; அங்ஙனஞ் சூத்திர ரான இவர் மனுமுதலிய மிருதி நூல்களின்படி பிராமணர் கடைவாயிலில் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியைத் தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரனாய்க் காலங்கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறு பூசிக்கொண்டு பகட்டான காசித்துப்பட்டா பொன்கட்டின உருத்திராக்கமாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பினால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் சமமாய் நின்று தேவாரம் படிப்பதும், சாத்திரங்கள் ஓதுவதும் பிறவுஞ் செய்தல் பெரிதும் இகழத்தக்க விரோதச் செய்கைகளாய் முடியும் அல்லவோ? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்ல முன்வந்த போலிச் சைவர் தம் புன்மொழியால் சீவகாருணிய வொழுக்கத்தினும் சிவபக்தி அடியார் பத்தியினுஞ் சிறந்து விளங்கும் உண்மைச் சைவ வேளாள ரையும் பிறரையும் இழிந்த சூத்திரராக்கி விட்டாரே! அந்தோ! உண்மைச் சைவர்களாகிய அன்பர்களே. பிறப்பினாலேதான் சாதியென்று உரைக்கும் போலிச் சைவர் புன்மொழிகளைக் கேட்டு மயங்கி விடாதீர்கள்! பிறப்பி னாலே தான் சாதி யென்னும் அவர் சொற்களைக் கேட்டு நம்பி விடுவீர்களானால், நீங்கள் எல்லீரும் இழிந்த சூத்திர ராகக் கொள்ளப்படுவீர்கள்; மாமிசம் புசிக்கின்றவர் களுக்கும் மாமிசம் புசியாமல் சீவகாருணிய வொழுக்கத்தில் நிற்கின்ற உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமற் போய்விடும். யாம் வடமொழி வேதம் தமிழ் வேதம் முதலியவற்றையும் உலக வழக்கையும் பிரமாணமாகக் கொண்டு சீவகாருணிய ஒழுக்கத் தினாலே தான் சாதி உயர்வுண்டு என்று சொல்லுவனவற்றை நம்புவீர்களானால், நீங்கள் மிக உயர்ந்த சாதியாராக அறிவுடையோர் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுதல் திண்ணம், அறிவுடையார் மதிப்பையே மதிப்பாகக் கொள்ளுங்கள்; அறிவில்லார் மதிப்பை ஒரு பொருட்டாக பண்ணாதீர்கள்; அறிவில்லார் ஆயிரவர் மதித்தலினும் அறிவுடையார் ஒருவர் மதித்தலே உயர்ந்ததாகுமென்று உணர்மின்கள்! அங்ஙனமாயின் இழியாக்குலத்திற் பிறந்தோம் குலம் பொல்லேன் என்று சமயாசாரிய சுவாமிகள் குலத்தின் உயர்வையும் தாழ்வையும் எடுத்துக் கூறியது என்னையெனின்; சீவகாருணிய ஒழுக்கத்தில் மிகுந்து சிவபக்தி அடியார் பத்திகளிற் சிறந்த குலத்திற் பிறந்தோம் என்றும், அவ்வொழுக்கங்கள் இல்லாத குலத்திற் பிறந்தோம் என்றும் பொருள் கூறுதலே ஆசாரியசுவாமிகள் கருத் தென்று துணிக. இவ்வுண்மையுணராது பிறப்பினாலேயே குலப்பெருமை சொல்லுவார் அறியாமையைச் சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள், கோத்திரமுங் குலமுங் கொண் டென்செய்வீர் என்று ஆசாரிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருவாக் கால் உற்றுணர்ந்து தெளிக. பிறப்பினாற் சைவரென்று தம்மை உயர்த்துச் சொல்லிக் கொள்வோரிற் சிலர் சீவகாருணியமும் சிவபத்தி அடியார் பத்திகளும் இல்லாதாய், அகங்கார மிகுந்து பொய்யும் புனைவும் வஞ்சமும் பொறாமையும் நிரம்பிப் பிறரைக் கொல்லாமற் கொல்லுவதில் கருத்தூன்றி அலை கிறார்கள்; இத்தன்மையோரை உயர்ந்தகுலம் என்றுகூற அறிவுடை யோர்க்கு நா எழுமா? உலகத்தாரும் அறிவுடை யாரும் ஒருவன் பிறப்பை நோக்காது அவன் நற்குணம் உள்ளவனா? நல்லொழுக்கம் வாய்ந்தவனா? என்றன்றோ வினாவுகின் றார்கள். ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனா ரும் தாம் குடிமை என்னும் அதிகாரத் தில் உயர்குலம் இழி குலம் என்றன ஒழுக்கத்தாற் சிறந்த குலம் ஒழுக்கத்தாற் றாழ்ந்தகுலம் என்று வெள்ளிடைமலைபோல் விளங்க உரைத்தாராகவும், ஆசிரியர் கருத்தறிந்த பரிமேலழகி யாரும் நான்கு வருணத்திலும் உயர் குலமும் தாழ்குலமும் உண்டென்பதை விளக்கினாராகவும் அவற்றை அறியும் அறிவு சிறிதுமில்லாத போலிச்சைவர் குலம் பிறப்பினாலே தான் என்று நாயனாருஞ் சொன்னாரெனத் தமக்குத் தோன்றிய வாறெல்லாம் பிதற்றுவர். அவர் பிதற்றுரையின் பொய்ம் மையை யாம் மேலே எடுத்துக் காட்டிய ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் (குறள் 133) என்னும் நாயனார் அருமைத்திருவாக்கால் தெளிந் துணர்க. தாய் தந்தையரும் அவருக்கு நெருங்கிய உறவினரும் நற்குண நற்செய்கையிற் சிறந்து விளங்குபவராயின், அவர் கூட்டத்தை நற்குடி என்றும், அந்நற் குடியிற் பிறந்த பிள்ளையினிடத்து அந்நற்குண நற்செய்கைகள் அமையப் பெறும் என்றுங் கூறுதலே நாயனார்க்குக் கருத்தாதல் தக்கார் தகவிலரென்ப தவரவர், எச்சத்தாற் காணப்படும் (குறள் 114) என்னும் அவர் திருவாக்கால் நன்கு துணியப்படும். ஒழுக்கத் தினாலே தான் குலத்தினு யர்வு பெறப்படும் என்று தமது நூல் முழுதும் வற்புறுத்திச் சொல்லும் திருவள்ளுவ நாயனா ரையும் தமது புல்லறிவுக்குத் துணையாகச் சேர்க்கப் பார்க்கும் போலிச்சைவர் தம்கருத்து நிறைவேற வேறு எதுதான் செய்ய மாட்டார்! அது நிற்க. அங்ஙனம் ஒழுக்கத்தினாலேயே உயர்வு பெறப்பட வேண்டுமானால், திருநாளைப் போவாரென்னும் நந்தனார் சிவபக்தியில் தாம் மிக முதிர்ச்சியுடையராயிருந்தும் தமது குலத்தின் இழிவு நோக்கித் தில்லைக் கோயிலுட் புகாமல் புறத்தே ஒதுங்கி நின்றதும், சிவபெருமான் அவரை உட்புகுவித்தல் வேண்டித் தில்லைவாழ் அந்தணரைக் கொண்டு தீ வளர்ப்பித்து அதன்கண் நந்தனாரை முழுகு வித்துத் தேவவடிவாக எழச் செய்து பின்னர் உள்ளே ஏற்றுக் கொண்டதும் என்னை யென்றால்;--பறைச்சாதி மற்றைச் சாதிகளைப்போல்வதன்று; மிகப் பரிசுத்தமுடையதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப்பெற்றதாய்ச் சிவபெருமானுக்குப் பஞ்ச கௌவியங்களைக் கொடுப்பதாய் உள்ள ஆவினைக் கொன்று அவற்றின் இறைச்சியை யுண்ணும் புலைத்தொழிலிற் பழகியதாகும்; இங்ஙனம் மிகக்கொடிதான புலையொழுக்கத்திற் பயின்றது பற்றியே பறைச்சாதி ஏனை எல்லாச் சாதிகளிலும் இழிவடைய லாயிற்று; இங்ஙனம் இது தாழ்வடையலானதும் ஒழுக்கத் தாழ்வினாலேதான். மற்றச் சாதியாரெல்லாம் ஒன்றுகூடி வசிக்கும் நாடு நகரங்களுக்குப் புறத்தே விலக்கமாகப் பறைச்சேரி அமைக்கப்பட்டிருத்தலும் இந்தக்காரணம் பற்றியே தான். இத் தன்மையதான அறிவில் லாப் புலைச் சாதியில் நந்தனார் பிறந்தமையினாலே இவரது பெருமையைப் பிறர் அறியார் என்றெண்ணி அதனை அறிவிக்கும் பொருட்டே சிவபெருமான் அங்ஙனஞ் செய்தன ரென் றுணர்க. அல்லதூஉம், சிவபக்தியின் மேன்மையை அறிவித்தற் கும், சிவபக்தி உண்டானால் புலையுடம்பும் புண்ணிய யுடம்பாம் என்பதனை உலகத்திலுள்ள எல்லார்க்கும் தெளிவித்தற்குமே சிவபெருமான் நந்தனாரை நெருப்பில் முழுகுவித்து எழச்செய்தார் என்க. அவ்வாறானால், மாமிசம் உண்ணும் மற்றைச் சாதியாரும் மாமிசத்தை விட்டுச் சிவபக்தியில் மேம்படுவாராயின் அவரைச் சைவர்கள் அங்கீகரிக்குமுன் சிவபெருமான் அவர் பெருமை யை அங்ஙனமே ஓர் அற்புதத்தால் அறிவிக்க வேண்டு மெனின்;--சிவபத்தியிற் சிறந்த அடியார்க்குப் புலையுடம்பு புண்ணிய வுடம்பாம் என்பதனை ஒரு காலத்து ஓரிடத்து ஓர் அற்புதத்தால் தெளியச் செய்தால், அதனைப் பிற்காலத்து வருவோர் அங்கீகரித்துப் பின்னர் அடியார் பணிசெய்து நடக்க வேண்டுமே யல்லாமல் ஒவ்வொரு முறையும் அற்புதஞ் செய்து காட்டினால்தான் இவரை அடியார் என்று அங்கீகரிப்போம் என்றல் அறிவில்லா விழலர்கூற்றாய் முடியும்; திருஞான சம்பந்தப் பெருமான் சைவ சமயமே, மெய்ச் சமயம் என்பதனைச் சுரநோய் விலக்கியும் அனலில் ஏடெழுதியிட்டும் புனலில் ஏடெழுதிவிட்டும் அற்புதத்தால் விளக்கியருளினார்; அதுபோலவே, இப்போது சைவ சமயமே மெய்ச்சமயம் என்று தாபிக்க வருகிறவர்களும் அற்புதங் காட்டினால்தான் ஏற்றுக் கொள்வோம் என்று கூறுவாருண்டோ? இல்லையே. அங்ஙனமே, சிவபத்தி யுடையார்க்குப் புலையுடம்பும் புண்ணிய வுடம்பா மென்பதை நந்தனாரைக் கொண்டு அற்புதத்தால் சிவ பெருமான் ஒருமுறை விளக்கிக் காட்டினால் அவ்வாறே பலமுறையும் விளக்க வேண்டுமென்று அறிவுடையோர் கூறார். அகத்தேயுள்ள சிவபக்தி என்கின்ற சிவாக்கினியினால் சிவனடியாருடம்பு பரிசுத்தமுடைய ஞானசரீரமாகும் என்பதனையே நந்தனார் புறத்தே நெருப்பிற் குளித்த அற்புதம் விளக்குவதாகும். சிவபக்தியுடையார்க்குக் கருவி காரணங்க ளெல்லாம் சிவமயமாய் விளங்குமாகலின் அவரைப் பிறப்பு நோக்காது சிவமாகவே கொண்டு வழிபடல் வேண்டு மென்னும் உண்மையை உணர்த்துதற் கன்றோ, திருநாவுக்கரசு சுவாமிகள், சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து தரணியொடு வானாளத்தருவரேனும், மங்குவாரவர் செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க் கேகாந்தரல்லராகில், அங்கமெலாங் குறைந்தழுகு தொழு நோயராய் ஆவுரித்துத்தின்றுழலும் புலையரேனுங், கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்ப ராகில் அவர் கண்டீர் யாம் வணங்குங் கடவுளாரே. என்று அருளிச் செய்தனர். இங்ஙனமே, யச்சண்டாள சிவ இதிவாசம் என்னும் முண்ட கோபநிடத வசனமானது எவன் ஒருவன் சிவ என்னும் மொழியைச் சொல்லுகின் றானோ அவன் சண்டாள வமிசத்திற் பிறந்தவனா யிருந்தாலும் அவனோடு பேசுக, அவனோடு வசிக்க, அவனோடு அருகிருந்து உண்ணுக என்று கூறுகின்றது. இங்ஙனமே, ‘புலையரே யெனினும்ஈசன் பொலன்கழ லடியிற்புந்தி நிலையரே லவர்க்குப்பூசை நிகழ்த்துதல் நெறியேயென்றுந் தலையரே யெனினும்ஈசன் றாமரைத்தாளின் நேசம் இலரெனில் இயற்றும்பூசைப் பலந்தருவாரே யாரே? என்று சிவதருமோத்தரமும், எள்ளற் படுகீழ் மக்களெனும் இழிந்தகுலத்தோரானாலும் வள்ளற் பரமன் றிருநீறு மணியுமணிந்த மாண்பினரை யுள்ளத்துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டு சிவனெனவே கொள்ளத்தகைய அறிவினரே பிறவிக்கடலிற் குளியாதார். என்று பிரமோத்தர காண்டத்தும் சொல்லப்பட்டிருத்தல் காண்க. இவைபோலுந் திருவாக்குகளுக் கெல்லாம் வழி சொல்லத் தெரியாத போலிச்சைவர் பத்தியினாற் செய்வன வற்றிற்கு விதி விலக்கு இல்லை, மற்றை உலவழக்கத்தில் சாதி வித்தியாசம் பாராட்டியே வரல் வேண்டும் என்கின்றார். உலக வழக்கிலும் ஒருவனை அவன் பிறப்பு நோக்காது அவன் கல்வியறிவினையும் நற்குண நற்செய்கைகளையும் பாராட் டியே அவனைப் பலவகையாலும் பெருமைப்படுத்தி உயர்ந்த உத்தியோக பதவிகளும் அளிக்கின்றார்கள் என்பதனை மேலே விளக்கிக் காட்டினோம். ஆதலால் பத்தி மார்க்கத்திற்குதான் சாதி வித்தியாசம் இல்லை, உலக மார்க்கத்திற்குச் சாதி வித்தியாசம் உண்டு என்னும் போலிச் சைவர் கூற்றுப் பொய்க்கூற்றேயாம் என்க. அங்ஙனமன்று பிறப்பினாற் றாழ்ந்தவனைக் கல்வியுங் குணச் செய்கைகளும் பற்றி அவனுக்கு உயர்ந்த உத்தியோக பதவிகள் அளித்தும் அறிவுடையோர் கூடிய சபைகளில் முன் அமரச் செய்தும் பெருமை பாராட்டினாலும், உயர்ந்த சாதியார் அவனோடு அருகிருந்து உண்பதில்லை யெனின்;--போலிச்சைவர் தாம் அப்பெரியவனோடு அருகிருந்து உண்ணோம் என்று தமது அறியாமையால் அகங்கரித்துப் பேசுவார்களே யல்லாமல், உண்மைச்சைவர் அக்குண வானோடு அளவளாவி யிருந்துண்டு புண்ணியமும் மகிழ்ச்சியும் எய்துவர்; ஞான மயமாய் விளங்கும் கற்றோர் சபைகளில் தலைமை யோடிருந்து ஞானோபதேசஞ் செய்யுங்கால் அப்பெரி யோன் காற்கீழிருந்து உபதேசங் கேட்டும் அவன் உத்தியோக பதவியில் அமர்ந்திருங்குங்கால் அவனெதிரே கைகட்டி வாய்புதைந்து நின்று அவன் ஏவியபணி செய்தும் தமது தாழ்மையைக் காட்டி வந்த போலிச்சைவர் சிலர் சோறுதின்னும் போது மாத்திரம் தாம் அவனோடிருந்து உண்பதில்லை என வெறுஞ் சோற்றுப் பேச்சைப் பேசித் தம்மைத்தாமே உயர்த்திக் கொள்ளும் பதரானபேதைமைச் செய்கையைக் கண்டு அறிவுடையோர் நகையாடாமல் இரார். சாப்பாட்டு ராமசாமிகளான போலிச்சைவருக்குச் சோற்றைத் தவிர வேறென்ன தெரியப்போகிறது! ஒருவரிடத் துள்ள ஞானத்தின் அருமையும் குணவொழுக்கங்களின் பெருமையும் சோற்றாட் களுக்கு எங்ஙகனந் தெரியும்? அவர்களுக்குச் சோறுதான் தெய்வம்; ஊனும் உதிரமுஞ் சீழும் சளியும் நீரும் மலமும் வழியும் புழுப்பாண்டமான தமது உடம்பின் பிறப்புத்தான் அவர்களுக்குத் தேவப்பிறப்பு! பத்தியிற் சிறந்தவர்களுக்கும் ஞானிகளுக்குந் தாம் சாதி வித்தியாசம் இல்லையென்று போலிச்சைவர் மொழிந்தால் தெய்வமில்லையென்னும் நாதிகர்களுக்கும் அஞ்ஞானிகளுக்குந் தாம் சாதி வித்தியாசம் வேண்டு மென்பது பெறப்படும். போலிச் சைவர் சாதிவித்தியாசத்தைப் பாராட்டிக் கொண்டு அஞ்ஞானச் சேற்றிலும் நாதிகப்படு குழியி லுமே கிடக்க வேண்டுமென்று விரும்பினாரானால், அவர் அப்படியே கிடக்கட்டும். தமது புல்லறிவை உண்மைச் சைவர்களிடம் காட்டி அவர்களையும் தாங் கிடக்கும் படுகுழியில் வீழ்த்த முயல்வராயின், அவரது புல்லிய செய்கையைக்கண்டு அறிவுடையார் வருந்தாதிருப்பரோ? எமக்குப் பத்தியும் வேண்டாம் ஞானமும் வேண்டாம் நற்குண நற்செய்கைகளும் வேண்டாம், அவற்றிற்சிறந்த நல்லோரிணக்கமும் வேண்டாம், எமக்குச் சோறு ஒன்று தான் பிரதானம். அது மாத்திரந்தான் எமக்கு வேண்டியது என்று போலிச்சைவர் சொல்வாரானால், அவ்வளவு அறியாமையிலும் ஆணவத்திலும் அமிழ்ந்திக் கிடக்கும் அவர் இன்னும் பலகோடி பிறவிகள் எடுத்தாலன்றித் திருந்த மாட்டார். ஆகையால், அத்தன்மையோரைத் தம்மோடு உடன் வைத்து அளவளாவுதல் உண்மைச் சைவர்க்குப் பெரும்பாவமாய் முடியு மாதலால் அவர்களை இவர்கள் சேராமல் ஒழுகுதலே செயற்பாலதாம். இன்னும், பிறப்பினாலே தான் சாதியுயர்வு பெறப் படுமென்று போலிச்சைவர் கூறுவாரானால், சைவ வேளாளர் தம்மைப் பிறப்பினால் உயர்ந்தோர் என்று கூறிக்கொள்வது போலவே மற்றைச் சாதியாரும் தம்மைத் தாம் உயர்ந்தோர் என்று சொல்லிக் கொள்கின்றார்கள். ராஜபுத்திரர் என்னுஞ் சாதியார் தாம் மாமிசம் புசிப்பவரா யிருந்தாலும் பிராமணர் முதலான எந்தச்சாதியார் வீட்டிலும் நாம் சாப்பிடுவ தில்லாமையால் தாமே எல்லாச் சாதியாரினும் உயர்ந்தோர் என்று சொல்லிக்கொள்கின்றார். கம்மாளர் தாமே பிராமணர் என்று பிரமாணங்கள் பலகாட்டித் தம்மை உயர்த்திக் கொள் கின்றார். வன்னியர் தாமே க்ஷத்திரியர் என்று பிரமாணங் களோடு நூல்கள் எழுதித் தம்மை உயர்த்திக் கொள்வதோடு, வேளாளர் முதலான மற்றவரை எல்லாம் தாழ்ந்த சூத்திரவகுப்பினர் எனவுஞ் சொல்லிவருகின்றார். சான்றார் தாமே க்ஷத்திரியர் என்று பத்திரிகைகளினும் புத்தகங்களினும் எழுதி வருகின் றார். இடையர் தம்மைக் கோவைசியர் எனவும், கோமுட்டிகள் வாணிகர் முதலா யினார் தம்மைத் தனவைசியர் எனவுஞ் சொல்லிவருகின்றனர். வேளாளரில் ஒருவரும் தமது சாதியாரை வைசியர் என எழுதியிருக்கின்றார். நாட்டுக் கோட்டைச்செட்டிமாரும் தம்மைத் தன வைசியரென்று எழுதிவருகின்றார். பறையர் வகுப்பிற் கல்வியிற்றேர்ந்தவர்கள் தம்மைப் பிராமணரினும் மேலானவர் என்று சொல்வ தோடு, பார்ப்பானுக்கு மூத்தான் பறையன் கேட்பாரில் லாமற் கீழ்ச்சாதியானான். எனப் பிரமாணங்களுங் காட்டு கின்றார்கள்; இப்பறையரிற் கல்வியினுஞ் செல்வத்தினும் உயர்ந்த பிரபுக்கள் கடைவாயிலிற் காத்திருந்து அவர் இடுவனவற்றைப் பெற்று மகிழ்ந்துவரும் வேளாள வித்துவான்கள் எத்தனைபெயர்! போலிச்சைவர் எத்தனைபெயர்! அவர்கள் மேற்பாட்டுகள் பாடினவர்களும், பாடுகிறவர்களும் எத்தனை பெயர்! இவ்வாறெல்லாம் அவர்கள் வீசி எறிவனவற்றைக் குனிந்து பொறுக்கியுண்டு வயிறு கழுவி வரும் போலிச்சைவர் முதலாயினார் புறத்தேவந்து நன்றிமறந்து அப்பிரபுக்களைப் பறையரென இகழ்ந்துரைப்பது எவ்வளவு பேதைமை! சைவ சமயத்திற் சேர்ந்த பறையரையும் சான்றாரையும் கோயிற் கோபுர வாயில் களினும் நெருங்க விடாத போலிச்சைவர் முதலாயினார், அன்னிய சமயத்தினராய் எல்லாவகையான மாமிசமும் உண்ணும் கிறிதுவ மகமதிய அதிகாரிகள் வந்தால் அவர்கள் முன் பல்லை இளித்துக்காட்டி அவர்களைக் கோயிலுனுள்ளே அழைத்துச் செல்வது என்னை! இங்ஙனமே இன்னும் போலிச்சைவர் முதலா யினார் மற்றை யோரிடத்து வஞ்சமாய் நடக்கும் படிற் றொழுக்கத்தை விரிக்கப்புகுந்தால் இது மிகவிரியும். அது நிற்க. இனிச் சிவபெருமான் பிறப்பினால் உயர்ந்தவர்களுக்குத் தனது அருளை வழங்கியது யாண்டும் இல்லை. அன்பினாற் சிறந்தவர்கள் எப்பிறப்பினராகப் பிறராற் கருதப்படினும் அதனைத் தான் சிறிதும் பாராதே அவர்களுக்கே தனது பேர் அருளை வழங்கிவருகின்றான். இதற்குப் பெரிய புராணத் தின்கண் பல்வகைப் பிறப்பினரான அடியார்கள் எல்லாரும் அவனது திருவருளைப் பெற்றமையே பெருஞ்சான்றாம். மேலும், பிறப்பினால் தம்மை உயர்ந்தோராகக் கருதி அகங் கரிப்போர் அகங்காரத்தை வேரோடும் அறுத்து அவரை மாய்க்க வேண்டுமென்பதே எல்லாம் வல்ல அவ்வாண்டவன் திருவுள்ளக் குறிப்பா மென்பது சரித்திரங்கள் பலவற்றாலும் நன்கு தெளிவுறுத்தப்hhggfடடிருக்கின்றது. திருவம்பர் மாகாளத் தில் சோமாசிமாறநாயனார் தாம் செய்த வேள்வியிலே இடும் அவிசைச் சிவபெருமான் நேரேவந்து ஏற்றுக் கொண்டருளல் வேண்டுமென்று தவங்கிடந்து இரந்த போது, அவ்வேள்விக் குண்டத்தைச் சூழத் தம்மைப் பிறப்பினால் உயர்ந்தோராகக் கருதி அகங்கரித் திருந்த பார்ப்பனர் அத்தனை பேர்க்கும் தனது அருளை வழங்க இசையானாய் நம்பெருமான் சண்டாளப்பறையன் உருத் தாங்கி அவ்வேள்விக்குண்டத்திற்கு எழுந்தருளினான்; அது கண்ட ஏனைப்பார்ப்பனர் எல்லாம் பரிசுத்தமான யாக சாலைக்குப் பறையன் வந்தான் என்று சொல்லி ஓடிப் போக, அன்பினாற் பெரிய சோமாசிமாறராகிய உண்மைப் பிராமணர் அங்கிருந்து நம்பெருமானுக்கு அவிசைத் தந்து பெரும்பேறு பெற்றனர். இவ்வாறே நிகழ்ந்த வரலாறுகள் அளவிறந்தன. அவற்றைப் பெரியபுராணம் முதலான உண்மை நூல்களுட் கண்டு தெளிக. இனிச் சிவபெருமானாகிய தம் ஆண்டவன் திருவுள்ளக் குறிப்பை இனிது உணர்ந்த அவன் அடியார்களும் அன்பர்களின் பிறப்பை ஒரு சிறிதும் நோக்காது அவர்களின் அன்புக்கே மகிழ்ந்து அவர்களுடன் ஏதும் வித்தியாச மின்றி அளவளாவி இன்புற்றார்கள். நான்காம் ஆசாரிய சுவாமிகளும் ஆதிசைவப் பிராமணருமான சுந்தரமூர்த்திகள் திருத் தொண்டத் தொகையின் கண் பிறப்பை நோக்காமல் அடியார்கள் எல்லாரையும் வணங்கினார். இரண்டாம் ஆசாரிய சுவாமிகளும் வேளாளருமான திருநாவுக்கரசுகள் அப்பூதி அடிகள் என்னும் பிராமணரோடு ஏதும் வேற்றுமை யின்றி அளவளாவினர். பிரதமசைவாசாரிய சுவாமிகளும் பிராமணருமான திருஞானசம்பந்த மூர்த்திகள் பாணச் சாதியிற் பிறந்த திருநீலகண்ட யாழ்ப் பாணரையும் அவர் மனைவியாரையும் எப்போதும் தம்முடனேயே வைத்திருந்த தோடு பிராமணரான திருநீலநக்கரென்னும் வேறோர் சிவனடியார் திருமாளிகைக்கு எழுந்தருளியபோது அவரோடு ஒருங்கிருந்து திருவமுது கொண்டு இரவில் திருநீலநக்கரது அதி பரிசுத்தமான யாகவேதிகையிலே யாழ்ப்பாணருக்கும் அவர் மனைவியார்க்கும் இருக்கை அமைத்தனர்கள். அவ்விருவரும் அவ்வேதிகையிற் சென்ற வுடனே அங்கே யாககுண்டத்தில் இடஞ்சுழித்து எரிந்த சிவாக்கினி யானது இவர்களின் வரவால் மிகமகிழ்ந்து வலஞ்சுழித்தெழுந்து எரிந்ததெனச் சேக்கிழார் சுவாமிகள் அருளிச் செய்திருக் கின்றார்கள். பாணரென்பவர் பறைச் சாதியிற் சிறிது மேலான வரென்று எண்ணப்பட்டவர்; இவ்வியல்பினரான பாணரை நம்ஞான சம்பந்தப் பெருமானும் நீலநக்கரும் தம்மோடு உடன்வைத்து அளவளாவினதும், அவ்வருமையை அக்கினி வடிவா யிருந்த நம் ஆண்டவன் அங்கீகரித்து மகிழ்ந்ததும் போலிச்சைவர் உணரார் கொல்லோ! இனி அடியார்கள் சிவவேடங்கண்டு பிறரை வணங்கி னாலும் சிவவேடமுடையார் தாமே வந்து சொல்லுகிற படியெல்லாம் அவர் நடவார் என்று போலிச்சைவர் பொய்யுரை புகல்கின்றார். மெய்ப்பொருள் நாயனார் தம்முடைய பகைவன் சிவவேடர் தரித்து வந்தவுடன் அவனை வணங்கியதும், அப்பகைவன் தம்மைக் கத்தியாற் குத்திய அரவங்கேட்டுத் தத்தன் என்னும் காவலாளன் அவனைப் பிடித்துக் கொள்ள ஓடிவந்தபோது நிறைத்த செங் குருதிசோர வீழ்கின்றார் நீண்டகையால், தறைப் படுமளவில் தத்தாநமர் எனத் தடுத்து அவனைப் பிறர் கொல்லாமற் கொண்டு போய்விடு என்று கூறியதும் போலிச்சைவர் அறியார் கொல்லோ! ஏனாதி நாத நாயனார் தம் பகைவனைப் போரிற் பலகால் தோல்வி பெறச் செய்தமையால், அவன் இவரை வேறுவகையால் வெல்ல ஏலா தென்று எண்ணித் தன் நெற்றியில் திருநீறிட்டு அதனைத் தெரியாமல் மறைத்துவந்து இவரைப் போருக்கு அழைக்க, இவரும் அவனுடன் சென்று போர்புரிந்து அவனை வெட்டப் புகுந்த பொழுதில், அவன் தன் முகமறைப்பை விலக்கித் திருநீறிட்ட நெற்றியைக் காட்ட, உடனே அவர் அவனைச் சிவனடியாராகப் பாவித்து வெட்டாமல் விட்டுத் தம்மை அவன் வெட்டும்படி நின்றார் என்பதையும் இன்னும் இவை போன்ற பலவற்றையும் போலிச்சைவர் அறியார் கொல்லோ! இவ்வுண்மைகளை இனிது விளக்கிய, மண்ணாளும் மன்னவன்றன் மகன் குணந்தீங் கிரண்டும் வையகத் தார் பாராதே வணங்கிடுவரஞ்சி, எண்ணாளும் இறையமலன் திருவேடந் திருநீறிட்டார்கள் குணங்குணக்கே டெனு மிரண்டும் எண்ணார், விண்ணாளத் தீவினையை வீட்டியிட விழைந்தார் விரும்பி அவர் அடிபணிவர் விமலனுரை விலங்கல், ஒண்ணாதே யெனக் கருதி ஒருப்பட்டே அமலன் ஒப்பரிய புரிவாழ்வு மற்றையருக் குண்டோ எனவும், தேடிய மாடுநீடு செல்வமுந்தில்லை மன்றுள் ஆடியபெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்தபோது கூடியமகிழ்ச்சிபொங்கக் குறைவறக் கொடுத்துவந்தார் எனவும், வெண்ணீறும் வேடமும் பூசையும் மெய்யென்றான் பொய் யென்றான், மாடையும் வாழ்க்கை மனையுமே எனவும், எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டாலுள்கி, உவராதே அவரவரைக் கண்ட போதே யுகந்தடி மைத்திறம் நினைந்தங் குவந்து நோக்கி, இவர்தேவர் அவர்தேவரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே எனவும் போந்த திருவாக்குகளையும் போலிச் சைவர் உணரார் கொல்லோ! இங்ஙனம் வேடத்தைக் கண்டமாத்திரையாலே வேறு வித்தியாசம் பாராது அவர்களோடு அளவளாவுதல் வேண்டு மென வித்திக்கப்படுமானால், அவ்வேடத்தோடு கல்வியும் நற்குணமும் நல்லொழுக்கமும், ஞானமும், சிவபக்தியும் உடையாரை எவ்வளவு மதித்து அவரோடு அளவளாவி அன்பு பாராட்டல் வேண்டும்! இவற்றையெல்லாம் ஒரு சிறிதும் நோக்காது வெறுஞ்சோற்றுக்கே அழுது பாவத்தை ஈட்டும் போலிச்சைவர் வேறு என்கடவர் என்க. இனிப்போலிச்சைவருட் பின்னும் ஒருசாரார் தாம் தீட்சையின் இயல்பை உணர்ந்தார்போலச் சிலர் தீட்சை வேண்டாமெனக் கூறுகின்றனர் எனப் பொய்யுரை கூறினர். தீட்சைவேண்டாமெனக் கூறுவார் யாண்டும் இலர். தீட்சை என்னுஞ்சொல் திக் என்னும் தாதுவிற் பிறந்து, சீடனுடைய வினைகளை எரிக்கும் சமகாரம் என்னும் பொருளைத் தரும். ஞானமெய்க்குரு எழுந்தருளி வந்து அனுக்கிரகிக்கும் போது தனது பரிசத்தானும், நோக்கானும் நினைவானும் சீடனுடைய வினைகளைச் சுட்டு அவனைப்பரிசுத்தப்படுத்தி ஞான நிட்டையை அனுக்கிரகிப்பன். இத்தகைய தீட்சை யினைப் பெற வேண்டுமென்னும் அவா பக்குவமுடைய சீடனுக்குத் தானே எழும். ஏனையோர் தம்தரத்திற்கு ஏற்ற ஞானநூல்களை யோதிப் பக்குவரானபின் அவர்க்கு அவ் அவா எழும். அவா எழுந்த பின்னரும் மெய்க்குருவின்பாற் றீக்கை பெற வேண்டுமேயல்லாமல், வருவாயின் பொருட்டுக் கர்மதீக்கை பண்ணுதலையே தொழிலாகக் கொண்டுள்ளார் பால் அதனைப் பெற்றுக்கொள்ளுதலும், உள்ளம் ஒருவழிப்படாமல் தீயசிந்தனைகளைச் சிந்தித்துக் கொண்டிருக்க அனுட்டானம் பண்ணுகிறேன் என்று சொல்லிக் கையையும் மெய்யையும் ஆட்டுதலும் பயன் இல்லாதனவாகலின் இப்படிப்பட்ட தீக்கையினையே அறிவான் மிக்க பெரியார் வேண்டாம் என்றனர்; பட்டினத்துப் பிள்ளையாரும் நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணஞ் சந்தி செபமந்த்ர யோகநிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே சாமங்கடோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே. என்றருளிச் செய்ததும் இப்படி வெறுங்கர்மங்களான தீட்சா சமகாரங்கள் பயனிலவென்பது அறிவித்தற்கே. இங்ஙனமெல்லாம் எழுதப்பட்ட உண்மைப் பொருள் களை உறுதியென உணர்ந்து, போலிச்சைவர் புன்மொழி களில் மயங்காமல் சீவகாருணிய ஒழுக்கமும் சிவபத்தி அடியார் பத்தியும் பூண்டு நம்சைவசமயசாரியார் சந்தான சாரியர் காட்டியவழியே நடந்து உண்மைச் சைவர்கள் உய்வார்களாக. குலமும் ஒன்றே குடியும் ஒன்றே இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே வழிபடு தெய்வமும் ஒன்றே யாதலால் முன்னோ ருரைத்த மொழி தவறாமல் எந்நா ளாயினும் இரப்பவர்க் கிட்டுப் புலையுங் கொலையுங் களவுந் தவிர்ந்து நிலைபெற அறத்தின் நிற்பதை யறிந்து ஆணும் பெண்ணு மல்லதை யுணர்ந்து பேணி யுரைப்பது பிழையெனப் படாது சிறப்புஞ் சீலமு மல்லது பிறப்பு நலந்தருமோ பேதையீரே. - கபிலர் அகவல் மாதா உலகசக்தி1 இன்று தாய்மாராயிருப்பவர்களே நாளை உலகோ ரெண்ணங்களை உருப்படுத்தி அச்சில் வார்ப்பவர்கள். மகவை எதிர்பார்க்கும் தாய் தன்னுடைய நினைப்பு உலகிலுதிக்கவரும் சிசுவுக்கு என்ன பலனைத் தருமென்று எண்ணுவதைப் பார்க்கிலும் அவளுக்கு முக்கியமான காரியம் வேறொன்றும் கிடையாது. இக்காரியத்தில் நன்மை விளைவிக்கக் கூடிய அவளுக்குள்ள சக்தியை மீறத்தக்கது வேறொன்றுமில்லை யெனலாம். இவ்விஷயத்தைக் குறித்து எழுத வாரம்பித்ததின் நோக்கம் என்னவென்றால், ஒரு தாய் தன் கையிலுள்ள களிமண்ணை நேர்ந்தபடி உருப்படுத்தக் கூடியதுபோல் தன்னிலிருந்து உண்டாம் சிசுவை எவ்வாறு உருப்படுத்தி அதற்கு எவ்வளவு நன்மை செய்யக் கூடு மென்பதைக் காட்டுவதே யாம். பயம், பகை, பொறாமை முதலியவற்றிற்கு உள்ளாகாமல் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு, சாந்தம், அன்பு, ஈசுவரபக்தி, இவைகளால் நிறைந்து கோரத்தகாத விஷயங்களைத் தன்மனத்தில் பதியா வண்ணம் செய்து கொள்ளும் தாய் எவளோ அவளே நல்ல ஆரோக்கியமும் திடகாத்திரமும் சற்குணமும் வாய்ந்த சிசுவைப்பெறத் தக்கவளாவாள். நான் எழுதப் புகுந்த இந்த விஷயத்தில் தேகா ரோக்கியத்தைப் பற்றிப் பேசுவது என் உத்தேசமன்று. ஆனால் இனிப்பிறக்கும் சிசுவுக்கு அஃது எம்மட்டம் சம்பந்தப்படுமோ அதுவரையுமே அதைப்பற்றிச் சொல்லு கின்றேன். ஒரு மல்லன் தனதுவிர்த்தியின் தன் மாற்றானோடு பொருங்கால், தனக்கு வேண்டிய தாங்கும் சக்தியைப் பயிற்சிசெய்துகொள்ளும் விஷயத்தில் எவ்வளவு கவலை கொண்டிருப்பானோ, அதிலும் பன்மடங்கு தாயானவள் தனது தேகாரோக்கியத்தைப் பற்றியும் மனோசவுக்கியத் தைப் பற்றியும் மிகுந்த கவனமுள்ளவளாய் இருக்க வேண்டும். பிரசவ சமயம் தன் வாழ்நாளில் திவ்விய தேஜசுடைய தென்று அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பவளாகக் கர்ப்பதிரீ தன்னை எண்ண வேண்டும். இடை, மார்பு முதலிய அங்கங்களை அடாதவிதமாய் இறுக்கக் கட்டிப்பழகி அறியாதவளாயும், தங்கு தடையின்றி வாங்கவேண்டிய அளவுக்கு வாங்கி, விடவேண்டிய அளவுக்கு விட்டுச் சுவாசத்தால் அடையக்கூடிய நன்மை முழுமையும் அடைந்தவளாயும் நல்லகாற்றின் பிரயோஜனம், வெயில், மின்தாதுள்ள ஒளி ஆகிய இவைகளைக் குறைவறத் தெரிந்து அநுபவித்தவளாயுமுள்ள கர்ப்பிணி பிரசவ சமயத்தில் உலகின் கபாடங்களைத் தட்டித் திறந்து கொண்டு வெளிவரும் தனது சிசுவாகிய அதிதியை முகமலர்ச்சியுடன் அனாயாசமாய் நல்வரவு கூறி ஏற்பவளாவாள். இலட்சணங்களைக் குறைவறப் பெற்ற தாய்க்கு இருக்கவேண்டிய அமிசங்களில் முதலாவது நேர்மையான எண்ணம்; பிரசவ கால சமீபத்தில் இச்சம்பவம் நேராதிராதா என்கிற அடாத எண்ணம் தாய் மனத்தில் சிறிதுமிரா திருப்பது சிசுவுக்கு நிரம்ப நலந்தரும். அவளது மனநிலை ஆனந்த முடைய தாயிருக்க வேண்டும். ஈசனது களஞ்சியத் தினின்று அடையக்கூடிய பேறுகளில் சிறந்ததாகிய ஒன்றைத் தான் அடையப் போகிறதாக அகமகிழ்ச்சி கொண்டிருக்க வேண்டும். இச்சிசு ஏன் வருகிறதோ என்ற தடுக்கும் குணத்தைக் கொண்ட தாயின் நினைப்பைப்போல் சிசுவின் ஜீவாதாரத்தைக் குறைத்து அதைப் பலவீனப்படுத்துவது வேறொன்றுமில்லை. தாயினுடைய மனநிலைமை சிசுவில் எவ்வளவுக்குப் பதிகிறதென்பதைப் பற்றி இவ்வளவு அவ்வளவென்று நம்மால் சொல்ல முடியாது. தாய், தாயின் முன்னோர்கள் ஆகிய இவர்களின் நினைப்பின் தொகுதி சிசுவின் வளர்ச்சி, அமைப்பு, ஆகியவற்றில் பங்கு பெறுகிறது. சிசு பிறப்பதற்கு முந்திய வருஷம் மிகச் சிறந்தது. அக்காலத்தில் தான் தாயானவள் எவ்வளவு உயர்வான எண்ணங்களைத் தான் கொள்ளக் கூடுமோ அவ்வளவும் ஏற்பது தனது பரிசுத்தமான கடமை யென்று நினைக்கவேண்டும். முழுப்பிரயோசனத் தையும் பெற வேண்டுமானால்,* விசுவ மனத்துக்கும் தேஜஸ மனத்துக்கும் உள்ள சம்பந்தத்தையும் அதன் மேல் அத்தகைய மனத்துக்கும் நரம்பு மண்டலத்துக்கு முள்ள சம்பந்தத்தையும் பற்றிய ஞானம் சிறிதளவாகினும் தாய்க்கு இருக்க வேண்டும். உள்ளத்தில் பதிந்துள்ள உணர்ச்சிகள் எல்லாவற்றையும் பற்றி ஆராயுங்கால் விவகார வேளையில் விழிப்புற்றிருக்கும் விசுவனில் பதிந்த சிந்தனைகள் யாவும் அழியாமலிருப்பதற் கேற்ற ஏற்பாடுகள் கடவுள் செய்திருக்கிறா ரென்பதைத்தாய் உற்றறிய வேண்டியது அவசியம். பதிந்த சிந்தனைகள் யாவும் தேஜசனென்னும் மறைந்த மனத்தின் பாகத்தில் சேமிக்கப் படுகின்றன. இங்கே கூடிய சிந்தனைகள் ஒரு சக்தியாய் அமைகின்றன. இந்த உண்மையைத் தெரிந்து கொண்ட தாய்க்கு அஃது ஒரு சிறந்த பக்க பலமாகின்றது. பதியும் சிந்தனைகளில் சில நல்லவை, சில விரோதமானவை; சிறந்த மாதும் சில சமயங்களில் தீங்கிழைக்கும் சிந்தனைகளைக் கொள்ளக் கூடும், இக்காரணத்தினாற்றான் தாய்மார்கள் பலர் தங்கள் பேரைக்கெடுக்கும் பிள்ளைகளைப் பெறு கிறார்கள். அநேக வருஷங்களாகத் தகாத சிந்தனைகள் பதிந்து வந்திருக்கலாம். கர்ப்பங் கொண்டிருக்கும்போதும் தகாத சிந்தனைகள் புகலாம், புகுந்தவை சிசுவைத் தாக்கி, அதைத் தமக்குப் பலியாக்கிக் கொள்ளுகின்றன; ஆயினும் புத்தி பூர்வமாகப் பிரயாசைப் படுபவளானால் தாயானவள் இவ்வித தகாத எண்ணங்களை அடியோடு தொலைக்கக் கூடுமென்று நம்பலாம். சீர்கெட்ட மனப்பதிவுகளை வெளியேற்றி நல்லவை களை ஒழுங்காய் அமைக்கும்படியான செய்கைக்குத் தேஜசனை ஏவலாம். தகாத எண்ணங்களைத் தன் மனத்தி லிருந்து எடுபடும்படி செய்து கொள்வதினால் ஓயாக் கவலையை யகற்றித் துக்கத்தையும் போக்கிக் கொள்ளலா மென்பதை விவேகியான தாய் அறிவாள். சிசுவுக்கு அதனால் எவ்வளவோ நன்மை விளையுமென் பதையும் அறியலாம். நன்னீரில்லாக் கேணியிலிருந்து சுத்த ஜலத்தைப் பெறுவது அசாத்தியம். அசுத்த எண்ணம் நிறைந்த நிலையிலிருந்து ஆரோக்கியம் நிறைந்த சிசுவைப் பெற ஒருவரும் எதிர் பார்க்கலாகாது. தன்னுள்ளத்திலிருந்து தகாத மனப்பதிவுகளை நீக்கிக்கொள்வது தனக்குற்ற விலகாக் கடமையெனத் தாய் கொள்ளவேண்டும். இச்செய்கை மிக இலேசானது, தோட்டத்தில் களை பறிப்பது போலாம்; களைகளைப் பறித்தகற்றும்போது மலர்களைச் செவ்வனே ஒழுங்காய் அமைக்கின்றோ மல்லவா? இவ்வேலையைத் தேஜசனில் செய்யக்கூடும். தற்போதனை யென்னும் இலேசான வழியால் முடிக்கலாம். அந்தச் சுலபமான முறையாதென்பதைப் பற்றிப் பேசத் தொடங்கு முன் தேஜசனுக்கும் விசுவனுக்குமுள்ள சம்பந்தத்தை இங்குரைப் போம். ஒவ்வொரு சிந்தையும் முதலில் பதிவது விசுவனில் தான். மனத்திற்கு ஏக காலத்தில் பல நினைப்புகளை ஏற்கும் சக்தியில்லை. ஒன்றன்பின் ஒன்றாய் ஏற்பதே அதற்கு இயல்பு; புதிய சிந்தனைகள் பதிய வரப்பழையவை வரும் கிரமப்படி தேஜசனில் யாதொரு வரன் முறையுமின்றி அமைகின்றன. தன் தேஜனை மறுபடியும் சிட்சைபெறும்படி செய்யும். திறமைகொண்ட எந்தமாதும், தனக்கு வேண்டும்போது தனது அநுபவத்தை ஞாபகத்துக்குக் கொண்டுவரக்கூடும். தன்னுளம் கொண்ட யாவற்றையும் மறுபடியும் அழைக்க லாம். இச்சக்தி ஆண்களிலுள்ளதைப் பார்க்கிலும் பெண் களில் உள்ளமையைப் பலமுறை பார்க்கலாம். இம்மனோ சக்தியை யூகமாய்க் கையாளப்பெற்ற எவளுக்கும் அது பெரும் பாக்கியமாகிறது. தனது ஜீவகதையில் தான் அடைந்த அனுபோகங்களை யெல்லாம் முழுமையும் ஆண்டு அனுபவிக்கிறவளாகிறாள். நமது ஜீவதசையில் அடைந்த அனுபோகங்களைச் சுதந்தரமாகக் கொண்டாடும் விதம் அதிகசுலபமானது. இவ்வழியை அறியாதார்க்கு அனுபவங்களால் அடையத் தகுந்த பிரயோஜனம் பத்திலொரு பங்கும் கிட்டாது. அனுபோகமாகிய இச்சுதந்தரத்தைத் தனது சிசுவின் நன்மையின் பொருட்டுப் பிரயோஜனப்படுத்த விரும்பும் தாயானவள் யுத்தகளத்தில் திரண்ட சேனைகளுக்கு அணி அணியாய் நிற்கும்படி ஏவும் சேனைத்தலைவனைப்போல் தேஜசனுடைய களத்தில் திரண்ட. அனுபவங்களாகிய சேனையை ஒற்றுமையாயும் ஒழுங்காயும் அமையும்படி கட்டளையிடும் தளகர்த்தனாகத் தனது விசவனைப் பாவிப்பாளாக. இதுவரை யாதொரு ஒழுங்குபாடின்றித்திரண்டதாகிய மனப் பதிவுகள் யாவும் தம்முள் ஒழுங்குபடும்படியாயும் நல்லவை தீயவை தம்முள் பிரிவுபடும்படியாயும் தானிடும் கட்டளைகள் நிறைவேறுவதில் தாமதப்பட்டாலும் படுமே யன்றி நிறைவேறாவென்பது மாத்திரம் கிடையாது. இட்ட கட்டளைகளில் ஒவ்வொன்றும் கடைசிவரை பலித்தேதீரும். தேஜசனில் பதிவுண்ட தகாத எண்ணங்கள் யாவும் வெளியேறும்படி விசுவன் கட்டளையிடலாம். தேஜசனில் ஒருகெட்ட எண்ணமாவது தங்கும்படி விட்டுவிட்டால் முடிவில் மனமுழுமையும் களங்கமுறும். தளகர்த்தனாகிய விசுவன் தேஜசனாகிய களத்தில் தங்கிய மனப்பதிவுகளுக்கு ஒழுங்குபாட்டை அனுசரித்து இடும் கட்டளைகளைத் தற்போதனை யென்போம். தற்போதனையின் முழுப்பலத்தைப் பிரத்தியக்ஷப் படுத்திக் கொள்வது எப்படியென்றும் தற்போதனை மனப்பதிவுகளை எவ்வாறு பாதிக்கின்றதென்று ஆலோசிப்பது இரண்டாம் படியாகும். எங்கெங்கு பரிசவுணர்ச்சி யுண்டோ அங்கெல்லாம் தேஜசனுடைய செய்கையுமுண்டு. இதனால் தேஜசனுடைய வியாபகம் எவ்வளவு விதீரணமுள்ள தென்பதைத் தெரிந்து கொள்ளலாம். தேஜசனுக்கு வேண்டிய உணவை ஓயாதளிப் பவன் விசுவன். விசுவனுக்கு வருவாய்கள் ஞானேந்தி ரியங்கள். இவற்றிலொன்றாகிய கண்ணில் எதிர்ப் படும்படி தாயின் கால்மாட்டில் ஓர் அழகிய படத்தைப் பொருத்தி வைத்தால் அவள் படுக்கப் போம்போதும், பள்ளியினின் றெழும்போதும் அதைப் பார்த்தவண்ண மிருப்பாள். அதனால் பெரும்பயனுண்டு. படத்திலுள்ள உருவத்தின் அழகைத் தாயானவள் உணருந் தோறும் தன்னுள் சிசுவுக்கென்றெழும் அழகைப்பற்றிய உணர்ச்சி தன்னுளின் னும் உருப்பெறாப்பிண்டத்தின் கணங்களை (Cells) அசைப் பித்து அவற்றின்கண் ஓர் சக்தியை யுண்டாக்க ஏவலாம். அச்சக்தியினால் பிண்டத்தின் உறுப்புகள் சீராய் அமைந்து அழகோடு கூடிய வடிவம் தாங்கும். சிசுவினது உருவமும் முகத்தின் வனப்பும் தாயினுடைய தோற்றத்தைச் சார்ந்திருப்பதில்லை. உருவம், அழகு இவைகளைப் பற்றித் தன்னிலுண்டாம் உணர்ச்சிகள் தனது சிசுவின் நன்மைக்காகுகவென்று ஏவுதல் அவசியம். நல்ல பாவனா சக்தியைக்கொண்ட எந்தத் தாயும் இதை எளிதில் செய்யலாம். இந்தச் சக்திகுன்றியவர்களோ, பொறுமையாகக் கற்று அவ்வாறு செய்யலாம். சங்கீதம் வாயுவை அசைப்பிக்கிறது. இந்த அசைவால் ஆகாயத்திலுள்ள பரமாணுக்கள் அலைகளாயெழும்பு வதினாலுண்டாம் நாத அசைவுகள் தாயின் மனத்தைத் தாக்கும்போது இவள் இனிய ஓசை லயம் ஆகியவற்றை தேஜசனில் உணர்கிறாள். இந்த உணர்ச்சியைக் கொண்டு சிசுவை இராகாதி இனிய ஓசைக்குப்பண்படும்படி செய்வித்துச் சங்கீதத்துறைக்குற்ற தகுதி சிசுவுக்கு அமையும்படி செய்யலாம். சிசுவின் மனத்தை உருப்படுத்துவதில் தாயானவள் பாரமார்த்திக விஷயத்தின் பெருமையைக் கவனத்தில் கொண்டவளாயிருப்பது அவசிய மென்று கருதப்படுகிறது. சன்மார்க்கத்துக்கிசைந்த மனோதத்துவங்களை யடையும்படி உதவிபுரியும் ஏதுக்கள் எவை யென்றால் ஒழுங்குக்கு மாறுபடாத சிந்தனை, ஈசனோடு ஐக்கியம் பெறும் அப்பியாசம், பிரபஞ்சலயப் பிரமாணத்திற்கு முற்றும் ஒத்தவனே யன்றி வேறல்லேன் என்ற எண்ணம், கூடுமானவரை பெருந்துறை உயர்நோக்கு இவைகளிலேயே சிந்தை செல்லும்படியாய் நற்பாட்டையே கேட்பதில் விருப்புற்ற அறிவைப்பெறமுயற்சிப்பது; ஆகிய இவைகளே, தாயான வள் தற்போதனையின் ஆற்றலும் அதைப்பற்றித் தேறத் தெளிந்த அறிவுமுடையவளாயின் தன் குமாரன் பிறப்பதற்கு முந்தியே அவன் இனிச் செய்யவேண்டிய தொழிலையும் அவனுக்கு நிர்ணயிக்கலாம். முதலாவது செய்யவேண்டிய தற்போதனை சிசுவின் தேகாரோக்கியம், நேர்மனம் ஆகிய இவைகளைப் பற்றிய தாகும். இவ்விரண்டின் விஷயமாய் இன்னின்ன விதமாய் இவைகளிருக்கவேண்டுமென்று தாயானவள் எவ்வளவுக்கு வற்புறுத்துகிறாளோ அவ்வளவுக்கு நலமுண்டாம். தான் செய்யும் தற்போதனை ஒவ்வொன்றும் தப்பாமல் தன் குழந்தைக்குப் பலிக்குமென்கிற ஐயந்தீர்ந்த திண்ண முடன் இவள் தன் வேலையைத் தொடங்கவேண்டும். தான் தீர்மானித்த நிறமுடைய கண்கள், முகச்சாயல் இவைகளோடு குறைவறச் சீராய் அமைந்ததான ஓர் சிசுவைத் தன் மனத்தில் பாவனை செய்து கொள்வாளாக. அச்சிசுவின் தோள்கள், கைகள் வலுத்த உடல் கடைசியாகக் கால்கள் முதலிய அங்கங்கள் யாவும், சாங்கோபாங்கமாய் அமைந்திருக்கப் பாவனை செய்யக் கடவள். இவையாவும் தான் கருதியவாறு அமைவ தோ பலிப்பதோ எதைப் பொறுத்திருக்கிறதென்றால் தற்போதனை செய்யுங்கால் என்ன மனோநிலையி லுள்ளாளோ அதையும் அவள் அடுத்தடுத்துச் செய்யும் விதத் தையும் பொறுத்திருக்கிறது. தன் சிசுவுக்குத் தொழிலைத் தெரிந்தெடுப்பதில் தனக்கெந்தத் தொழிற் சாலையில் இயற்கையாய்த் தன் நாட்டம் செல்கிறதோ அதைத்தேடுவாளாக. ஒவ்வொரு மனத்துக்கும் ஒவ்வொரு துறையில் அதிகப் பற்றுண்டு. பற்றுள்ளதாகிய வொன்றைத் தான் ஐயமறத் தெரிந்து கொள்ளும்வரை அதை ஆராய்வாளாக. ஆசாரியத்துவம், ஆயுள்வேத பாண்டித்தியம், இஞ்சிநீரிங் என்ற சிற்பம், நியாய சாதிரம், வியவசாயம், இலாவாதேவி, வித்துவாம்சம், சித்திரம் இவைபோன்ற எண்ணிறந்த துறைகளில் யாதா மொன்றைத் தன் குமாரனுக்கு ஆய்ந்தெடுத்த பிறகும், இவ்வாறே பெண்களுக்கென்றேற்பட்ட நற்குடியமைப்புப் போதித்தல், சித்திரம், காவியம் முதலிய பல துறைகளில் ஏதேனு மொன்றைத் தன் பெண்ணுக்கும் தெரிந்தெடுத்தபின் தான் ஆய்ந்தெடுத்தது சரியோ அல்லவோ வென்று தெரிந்து கொள்ளத் தன் சுயபுத்திக்கு அதாவது தன் தேஜசனுக்குச் சாவகாசம் கொடுத்துத் தனக்குச் சொல்லும்படி செய்ய வேண்டும். படுக்கப்போகுமுன் தாயானவள்தன்னைக் கேட்டுக் கொள்ளவேண்டும். தன் குமாரனுக்குத் தான் தெரிந் தெடுத்த தொழில் இலாவாதேவியென்று வைத்துக் கொள்வோம். வேறெதுவாகவாவது இருக்கட்டும். அதைப் பற்றித் தான் செய்தது சரியா இதற்குப்பதில் ஒருவாரத் திற்குள் நான்பெற வேண்டும் என்று கோருவதாய்ச் சொல்லிக் கொள்ள வேண்டும். கிடைத்த பதில் சரியல்ல வென்று வந்தால் வரும் சிசுவுக்குச் சரியானது ஏதாகும் என்று வேண்டிக் கொள்ளக் கடவள். இங்கே நடக்கிறது என்ன? தேஜசனுடன் விசுவன் ஆலோசிக்கிறான். தேஜசனோ பேரறிவோடு பொருத்தம் கொண்டிருப்பதினால் வரும் உத்தரவு கடவுளிடத்திருந்து நேராய் தாய் பெறுவதாகும். இவ்விதமாய் இலாவாதேவித் தொழிலைத் தன் புத்திரன் பற்ற வேண்டியதென்று தீர்மானித்தால் இத் துறையைப் பற்றிய நூல்களைத் தாயானவள் வாசிக்க வேண்டும். இத் துறையில் கைகண்ட பலன் பெற்ற இலாவா தேவிக் காரர் களைச் சந்தித்து, அவ்வேலையில் திறமைபெற்ற ஒருவருடன் விசேஷ நட்புப் பாராட்டித் தன் கருத்திற்கிசைவான ஆதரவுகளையும், யோசனைகளையும் அவரிடத்திலிருந்து பெறவேண்டும். இவ்வாறு நூல்களி னுதவியையும் பயின்றோர் சகவாசத் தையும் தனக்குப் பக்கபலமாகக் கொண்ட பிறகு இனித் தன்னிலிருந்து உதிக்கும் இலாவாதேவிக்காரனுடன் பேசுவதைப் போன்ற தற்போதனை செய்து கொள்ள வேண்டும் தற்போதனை பின்வருமாறு. இலாவாதேவி விஷயமாய் உனக்கு ஆசையுண்டாம். இந்த இலாவாதேவி விஷயத்தில் நீ ஜெயசாலியாய் ஊரில் தலைமைப் பணக்காரனாவாய். நாணயமுடையவ னாவாய். புத்தியிலும் ஆத்தும ஞானத்திலும் அதிக விருப்பமுள்ள வனாயிருப்பாய். உலகில் அநேகர் தம்மனத்திற்குப் பொருத்தமில்லா வேலைகளில் தற்செயலாய்ச் சிக்கிக் கொண்டு துயருறு கிறார்கள் இவ்விதம் நேர இடமில்லாமற் போவதற்குத் தகுந்தவழி இதுவே. தன் குழந்தைக்கு இன்னவிதத் தொழிலில் உருசி யுண்டாயிருக்கவேண்டுமென்று தான் முன்னமே சிந்தித்துத் தீர்மானித்து அதற்கிணங்கின முக்கியாம் சங்களிலும், கூடும் துறைகளிலும் இவளது கவனத்தை ஒருவழிப்படுத்திச் சிந்தை செய்து வந்தால் சிசுவுக்கு அக்குணங்கள் பதிவாகும். ஒரு கட்டிடத்தை நிர்மாணிக்கும் சிற்பி கட்டிடத்தில் நடக்க வேண்டிய தொழில்களுக்கு ஏற்றவண்ணம் தீர்ந்ததான மனோபாவங்களைச் செய்து எவ்வாறு அமைப்பானோ அவ்வாறு தாயானவள் தன் பிள்ளை இனி நடத்தவேண்டு மென்று தான் கருதும் தொழிலைப்பற்றிய தீர்ந்த எண்ணங்களைத் தன் மனத்தில் கொள்வது அவசியம். நூதனமாக ஏற்படுத்தும் ஓர் யந்திரத்தைப் பற்றி ஆக்குவோன் எவ்வண்ணம் அதனது அமைப்பைப் பற்றிச் செவ்வனே சிந்தித்த பின் அதை வெளிப்படுத்துவானோ அவ்வண்ணமே தாய்மார் தாம் பெறும் புதல்வர் புத்திரிகள் விஷயத்திலும், இவ்வித சிறப்பு வாய்ந்தவர்களாயிருக்க வேண்டுமென்று தம்மனத்தின்கண் அமைத்து அவர்களை யுருப்படுத்துவார் களாயின், இப்போது திக்கும் சிசுக்களை விட நற்சிசுக்கள் உண்டாவார்கள். மனப்பூர்வமாய் ஓர் ஒழுங்கைப் பற்றினவளாய் அதற்கிசைந்து தன் சிசுவை உருப்பெறும்படி செய்யாத தாய்க்குண்டாம் குழந்தை எது போன்றதாகுமென்றால் நந்தவனத்தில் ஏதோர் ஒழுங்குமின்றி நடப்பட்ட வித்து களினின்று உண்டாம் செடிகள் முளைத்துப் புல் பூண்டு களாகிய கிளைகளுடன் வளர்வது போலாம். தாய்மார்களின் பூஜாபலனைப் பெறாத பிள்ளை களுக்குத் தம் லவுகீக விவகாரங்களில் நேரும் தங்கு தடங்க லாகிய விக்கினங்கள் தம் தாய்களின் நல்ல பூஜாபலனைப் பெற்ற பிள்ளைகளுக்கு நேரா. தம் தாய் மதப்பற்றுள்ளவளா யிருந்த காரணத்தைப் பற்றி அவளுக்குப் பிறந்த நால்வரும் ஆசாரியதானங்களை வகிக்கும் படியான ஓர் குடும்பமுண்டு, பிள்ளைகள் பிறப்பதற்கு முந்தித் தாய் கொண்ட மனச்சார்பின் பலனாக ஒருத்தி குமாரன் வைத்திய முறையை யடைந்த வனானான். மற்றொருத்தி கொண்டிருந்த விருப்பத்திற்குத் தக்கபடி நீதி பரிபாலன துறைக்கடுத்த சட்டங்களை ஓதப்பிரியங்கொண்ட குமாரனைப் பெற்றாள். இவ்விதமாகச் சாட்சி பகரும் குடும்பங்கள் பலவுள. தாய்கொண்ட சிறிது மனச்சார்புக்கே இவ்வளவு பிரயோசனமானால் தனது குமாரனின் உலக விவகாரங்களில் இன்னின்னமுறை வகிக்க வேண்டுமென்று மனங்கொண்டு செய்யும் தவப்பயனுக்கு எவ்வளவு நன்மை யுண்டாம். தாய்கொண்ட மனோ பாவனைகள் அல்லது இலட்சியங்கள் பிறந்தவர்கள் மூலமாய் நிதர்சனமாய் வெளி யாகின்றன. உதாரணமாகத் தாம எடிஸன் என்போர் கற்பனாசக்தியே உருவெடுத்து வந்தவரென் றெண்ணப் படுகிறார். மூடி யென்பவர் தர்மமே அவதார மென்றும், (Hadly, Harper) ஆட்டிலி, ஆர்ப்பர் என்னும் இரு அக்கிராசனாதிபதிகளும் பண்டித திறமைக்கு இலக்கண மென்றும் கருதப்படுகிறார்கள். கடந்த வருஷங்களில் தாயானவள் நன்மை பரிசுத்தம் ஆகிய இவைகளுக்கு இலட்சிய மாக நிற்கும் புண்ணிய சீலரான ஆசாரியரைச் சந்தித்திருக்கலாம். அதுகாரணமாய்ப் புத்திரன் வாய்ந்தி ருக்கலாகும். நமது நாட்டில் பெருமை பெற்று விளங்கிய சங்கரர், இராமானுஜர், நந்தனார் முதலியோரைப் பெற்ற தாய்மார்களும், அவரவர் காலத்தில் வேதாந்த விசாரணை யிலும், பக்தியிலும் சிறந்தவர்களாகிய மகான் களைக் கண்ணுற்றுத் தமக்கு மிப்படிப்பட்ட புத்திரப்பேறு வாயாதா வென்று அல்லும் பகலும் திண்ணமாய் எண்ணி யிருக்கக் கூடும். ஆண்சிசுவை அபேட்சித்தபோது ஆண்மையில் விளங்கினவர் களாய்த் தம்மைப் பின்பற்றும்படி நடந்து கொண்டவர்களைப் பற்றிய நினைவு தாய் மனத்தில் குடிகொண்டிருக்கவேண்டும். அவ்வாறே பெண் விஷயத் திலும், பெண்மையில் சிறந்த வழிகாட்டிகளா யுள்ளவர்களைப் பற்றிய நினைப்பு தாயின் நினைப்பைக் கவர்ந்திருக்க வேண்டும். இனியுண்டாம் சிசுவுக்குத் தான் தெரிந்தெடுத்துக் கொண்ட விர்த்தியில் பேர்போன முக்கியதர்களைப் பற்றித் தாயானவள் நினைவு கூர்ந்து கொண்டே யிருக்க வேண்டும். சிசுவின் நலத்தைப்பற்றித் தான்செய்து கொள்ள வேண்டிய தற்போதனைக்காலம், படுக்கைக்குப்போகுஞ் சமயமே ஐந்து முதல் பத்து நிமிஷம் வரை தன் தேஜசனுடன் பேசுவதே போதுமானது. அக்காலத்தில் தன் அங்கங்கள் யாவையும் தளர்வுறும்படி செய்து கொண்டும் ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டும் மனத்தில் கிஞ்சித்தும் பயம் கவலை ஏதொன்றுமில்லாமல் செய்து கொள்ளவேண்டும். தற்போதனை செய்யத் தொடங்குமுன் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் பலவற்றில் ஒன்றாவது அன்று சென்ற நாளைப் பின்னோக்காய்ப் பார்த்து, மட்டுக்கடங்கா உழைப்பில் அழுந்தி, பயம், கவலை, கோபம், பொறாமை, பகை முதலிய குற்றங்களிலும் தவறல்களிலும் இருந்த துண்டாவென்று கவனித்து இருந்ததுண்டாயின் அவை களுக்கு மறுபடி தான் உள்ளாகா வண்ணம் வற்புறுத்திக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்துகொள்ளும் போது மேற்சொன்ன தீங்குகளுக்குப் பதிலாக நன்மைகள் உண்டாகுமென்று சொல்லல் வேண்டும். கோபம், பொறாமை, பகை இவைகளுக்குப் பதிலாய் திவ்ய அன்பு, துடிப்புக்குப் பதிலாய் அமைதிசாந்தம், தவறுதலுக்குப் பதில் வெற்றி, பயம் கவலைக்குப் பதில் தன்னுடன் தனது அகண்ட ஐசுவரியங்களை அநுபவிக்கும்படி நம்மைப்படைத்த கடவுளிடத்தில் ஐயந் தீர்ந்த முழு நம்பிக்கையாகிய இவைகள் உண்டாக வேண்டுமென்று உறுதி கூறிக்கொள்ள வேண்டும். தூக்கம் பிடியாமல் தவிப்பாளானால் பூரண ஆசோதையும் களையப்போக்கி புது ஊக்கந்தரும் நித்திரை யுண்டாகவேண்டுமென்று தனக்குத்தானே போதித்துக் கொள்ளக்கடவள். பதைப்பு துடிப்புக் கொண்டதாயின் செய்கை சிசுவைப் பாதிக்கிறதவ்வளவு மற்றெதுவும் அதற்குக் கெடுதிசெய்யாது. இந்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு மகவையெதிர் பார்க்கும் ஒவ்வொரு கர்ப்பிணியும் பின்வருமாறு தற்போதனை செய்துகொள்ளுவாளாக. நரம்பு மண்டலம் முழுமையும் தளர்ந்து ஆசோதியடையும் வண்ணம் ஏவவேண்டும். நான் துடிப்பற்றுப் பதைப்பற்றுச் சாந்தமாயிருக்கிறேன். இன்றிரவு சும்மாவுறங்கிக் குறைந்த பலத்தை மீண்டும் பெறுவேனாக. நாளை என்காரியம் எவற்றிலும் பொறுமையாய் ஆர அமரச்செய்வேன். செய்யும் ஒவ்வொரு காரியமும் நலந் தரும்படி பார்ப்பேன். வரும் ஒவ்வொரு மணி நேரத்திலும் என் திறமைக்கு ஏற்ற வண்ணம் வஞ்சனை யின்றிக் காரியத்தை முடிக்கிறேனென்ற திருப்தி யைக் கொண்ட வளாக வாழ்வேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும். பயங்காளியாகிய எவளும் தனக்குற்ற பயம் பற்றற ஒழியும்வரை தினந்தோறும் தற்போதனை செய்து கொண்டு வந்தால் அது ஒழிந்துபோகும். போகா தென்பதற்கு யாதொரு நியாயமும் காணோம். மற்றவர்களைப் பார்க்கிலும் அதிக நுட்பவுணர்ச்சிக் குள்ளானோருக்குக் கூச்சம் நலஞ்செய்யும். ஏனெனில் இவ்வுணர்ச்சி சன்மார்க்க நெறிக்கு அநுகூலமானது. இவர் களுடைய தேஜசன் அதிகமாகப் பக்குவப்பட்ட தன்மை யிலுள்ளது; ஞானசம்பத்துக்குரியது. இக்குணம் தங்களுக்கு இயற்கையாய் அமைந்ததினால், கூச்சத்திற் குள்ளாக வேண்டி யிருக்கிறதே என்று இலேசாய் எண்ணி விடாமல் தங்களுக்கு நல்வரப்பிரசாதமாய் அமைந்த தென்றெண்ணி நற்கதி பெறும் விஷயங்களுக்குப் பயன் படும்படி செய்து கொள்ள வேண்டும். தன்னிலுள்ள பயம் சிசுவின் சரியானவளர்ச்சிக்கு இன்னொரு தடையாகும். ஆகையால் எவ்விதப்பயத்திற்கும் தானுள்ளாகாமலிருக்கும்படி தன்னைப் பலப்படுத்திக் கொள்ளக்கடவள். விசேஷமாகத் தனக்கினிநேரப்போகும் பிரசவத்தைப் பற்றிய பயத்தை முற்றும் அகற்றவேண்டும். இதை எவ்வளவு சீக்கிரம் தொலைக்கிறாளோ அவ்வளவுக்கு நல்லது. தான் பெறப்போகும் சிசுவை அரைமனதுடன் வரவேற்பது அல்லது அச்சிசு ஏன்வருகிறதோ வென்கிற வெறுப்புடன் பெறுவதைவிடப் பெறாமலிருப்பதே மேலாகும். சிசுவின் பிரசவத்தால் தனக்கொரு கெடுதி நேரிடாதென்கிற தன்னம்பிக்கையின் பொருட்டுத் தற்போதனை செய்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்வதினால் அச்சம் நீங்கும். நாளை நான் எதைப்பற்றியும் அச்சங்கொள்ளேன். இனி வரப்போவதைப் பற்றி வீண்கவலை கொள்வதில் காலங் கழியேன். உலகத்திற்குத் தூதனொருவனைக் கொடுப் பதில் யாதொரு துன்பத்தையும் கடவுள் உண்டாக்கார். சுவாசம் விடுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாயும் துன்பமில்லாமலும் சிசுபிறக்கும். என்பதான தற்போதனை செய்துகொள்ளவேண்டும். இக்கடைசி தற்போதனை சிசு பிறப்பதற்குக் குறைந்தது இரண்டு மாதத்திற்கு முந்தியே ஆரம்பமாகவேண்டும். தாய் அச்சங் கொண்டிருந்ததினாலாவது மனவெறுப்புட னிருந்ததினாலாவது பிறந்த சிசுக்கள் அதிக கூச்சமுடைய வாயும் நாலுபேருடன் மருவியிருப்பதற்கு விருப்பமில்லா மலிருந்தன வாகவும் செப்பும் சரித்திரங்கள் பலவுண்டு. இக்கூச்சத்தைக் கடக்கிறது குழந்தைக்கு வெகு கடினம். கடவாமற்போனால் பார்த்தோர் குறிப்பிடும்படியான விபரீத குணமாய் வளர்ந்துவிடுகிறது. எல்லாப் பயத்தையும் ஓட்டிவிடுவாயாக. பயத்தைக் கொள்வதினால் தேகத்தின் கட்டுகலைந்து போகிறது. அப்படிச் செய்துகொள்வதற்குப் பதிலாய் இச்சிசு எனது வாழ்க்கையில் எவ்வளவு பேரிடத்தைக் கொள்கிறது என்ற வெண்ணத்தில் காலம் கழிப்பாயாக. அன்பின் துறையில் மாத்திரம் எண்ணமிறங்குமானால் எண்ணச்சக்தி முழுமை யும் தாய்க்கும் சிசுவுக்கும் நன்மைபயக்கும் விஷயத்தில் செல்லக் கூடும். பயத்தை விளைக்கும்படி இதுவரை செலுத்திவந்த சக்தியை அன்பின் உணர்ச்சியை உதிப்பிக்கும் படி செலுத்து. அன்பு பயத்தை அடியோடு அகற்றிவிடும். சிசுவின் உடம்பிலுண்டான அநேக மச்சங்கள் தாய் கொண்ட அச்சத்தின் நேர்பயனால் விளைந்தன வென்று கருதப்படுகின்றன. பயத்திற்குக் காரணமாயிருந்த வடிவங் களின் உருவமே சிலவேளை மச்சங்களில் வெளி யாகின்றன. பெரு மனவெழுச்சிகொண்ட காலத்தில் மனத்தில் பதிந்தது தான் சிசுவுக்குப் பாதகத்தை விளைக்குமென்று தாய் உணர் வாளானால் அப்பாதகம் சிசுவுக்கு நேரா வண்ணம் எதிர் மறையான தற்போதனை செய்யவேண்டும். எது போலென்றால் இச்சம்பவம் குழந்தையை எவ்வளவும் பாதியாது. இச்சம்பவத்தைப்பற்றிய நினைப்பை எம் மனத்தினின்று அடியோடு துடைத்துவிடுவோம். இதினால் விளையும் பயனை எமது நன்மையின் பொருட்டே கொள்வோம். இதில் நின்று நன்மையல்லாது தீங்கொன்றும் விளையாது. என்றிவ்வாறு தற்போதனை செய்து கொள்ளக் கடவள். உண்டான அச்சம் விசேஷக்கெடுதியுள்ளதானால் தற்போதனைக் கேற்ற காலத்தில் விசேஷித்ததான தற்போத னையை அன்றுமாலை மறுபடி செய்து கொள்ளவேண்டும். ஆடவர்களை விட மகளிர்க்குச் சுயவறிவு (Intuition) அதிகமென்று சொல்லப்படுகிறது. அவ்வறிவு நாம் நடந்து கொள்வதற்கு நல்வழிகாட்டி யென்றும் எண்ணப் படுகின்றது. அச்சுயவறிவில் சிறிது தேவாம்சம் உண்டு. தாயானவள் இதை யூகமாய் உபயோகப்படுத்தினால் தாயும் திடம் பெறலாம்; வரும் சிசுவும் நலம் பெறலாம். இராஜாதி ராஜனான சர்வேசன் தன்னை உலகிற்கு நல்ல நூதனை நல்கும்படி விசேஷவிதியாய் நியமித்தா ரென்றுணர்ந்து, அச்சிசு வெளிவர உலக கபாடங்களைத் தட்டுகையில் தான் பேர் உவகையெய்தினவளாய் இருக்க வேண்டும். தாய் கொள்ளும் சந்தோஷம் எதுபோன்றிருக்க வேண்டுமென்றால், என்னிடத்திற்கு வரும்படி சிறுவர் சிறுமிகளை விடுங்கள். அவர்களுக்கு யாதொரு தடையுஞ் செய்யாதீர்கள். அவர்களது போன்றதே தெய்வ அரசு என்று திருவாய் மலர்ந்தருளிய பெரியோர் கொண்ட உலகை ஒத்திருக்க வேண்டும், தாய்கொள்ளும் உலகம். எம்.ஏ. ஜெயராம் பிள்ளை முன்பனிக்கால உபந்நியாசம் - முற்றும் -