kiwkiya«-- 9 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) சங்க இலக்கிய ஆய்வு – 1  முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை  பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை  குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+288 = 320 விலை : 400/- மறைமலையம் - 9 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 320 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மாண்புகழ் ஒளிவீசி நிற்கும் தமிழ் மொழிக்கும் சிவநெறிக்கும் அடிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அரும்பணியாற்றி யுள்ளார்கள். தமிழ் மொழியைப் போலவே, அடிகள் ஆங்கிலத்தையும் வடமொழியையும் நன்கு கற்றவர்கள். சாந்துணையும் கற்க வேண்டும் என்ற சாதனை படைத்தவர்கள் அடிகள். ஆகவே, தாம் தேடிய பொருளையெல்லாம் ஒரு பெரிய நூல் நிலையமாகத் திகழும்படி செய்து வைத்தார்கள். அடிகளின் தமிழ் உரை நடை நூல்கள் தமிழின் தனித்தூய்மை நிலைக்குச் சான்றாக மிளிர்கின்றன. எண்ணற்ற சொன்மாரிகள் பொழிந்து மக்களுக்கு உணர்ச்சியை ஊட்டிவந்த அடிகள் மறைந்து விட்டனர். தமிழ் உள்ளளவும் மறைமலையடிகளின் மாண்புகழும் மங்காது ஒளிவீசி நிற்கும். - டாக்டர் எ.ஜி. மணவாளராமாநுசம் துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம். (பக். 40) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமை யூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோஜா முத்தையா நூலகம் புலவர் கா. இளமுருகன் (மறைமலையடிகள் மன்றம், புன்சை புளியம்பட்டி) மறை. தாயுமானவர் (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: புலவர். கா. ஆறுமுகம் மணிமொழி கருப்பையா நாக. சொக்கலிங்கம் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி வி. சித்ரா, திருமதி செல்வி, திருமதி மலர், திருமதி ஹேமலதா, திரு. ஆசம், பிராசசு இந்தியா (Process India), திருமதி கலைவாணி, திருமதி புகழ்ச்செல்வி நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்ரா மேலட்டை வடிவடைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், திராவிடன், வே. தனசேகரன், மருது தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை, எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, பிராசசு இந்தியா மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்கு பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை 1962இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... இயற்கைப் பொருள்களைக் கண்டறிவதிலும், கண்டவாறே சொல்வதிலும் நப்பூதனார் கொண்டுள்ள திறன், இன்பம் பயக்கும் வகையில் விழுப்பமுற விளங்கும் பொருட்கோவை ஆகிய வற்றை அடிகளார் பாராட்டுகிறார். பொருள்களுக்கு ஏற்ப அடிகள் மெதுவாகவும் விரைவாகவும் இடையிடையே தெற்றுப்பட்டும் சென்று, ஓசையின்பம் மாறி மாறிப் பயக்கும் வகையில் அமைந்துள்ளதைப் பாராட்டும் அடிகளார், ஏனைய ஒன்பது பாட்டுகளைப் போல முல்லைப்பாட்டு மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினைப் பெறாது குறைபடுதலையும் குறிப்பிட்டுள்ளார். முல்லைப்பாட்டில் பொருள் இடையறல் படுகிற இடங்கள், பொருள் பொருந்துமிடங்கள், பொருள் முற்றியும் முற்றாமல் விரிதலடைகிற இடங்கள், பொருள் முதிர்ச்சியுடன் முடிதலுறுமிடங்கள் ஆகியவற்றை `முல்லைப்பாட்டில் நீளச்சென்று பொருந்தும் சொற்றொடர் முடிவு என்ற தலைப்பில் அடிகளார் தம் ஆய்வுத்திறம் வெளிப்படும் வகையில் விளக்கியுள்ளார். பண்டைக்காலத் தமிழரின் வழக்கவொழுக்க வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்ந்து நிமித்தம் பார்த்தல், காட்டில் பாடிவீடு, மகளிரோடு பாடி வீட்டில் தங்கல், யானைகள் வடமொழியில் பயிற்சி பெறல், அயலவர்கள் அரசர்களது பள்ளிறைக் காவலராயிருந்தமை. கம்ம வேலை செய்தல், ஏழடுக்கு மாளிகைகள், பல்வகை இன்ப அரும் பண்டங்கள், தமிழக மன்னர் நாற்படை வளம் ஆகிய உண்மைகளைத் தம் ஆராய்ச்சிக் குறிப்பில் அமைத்துள்ளார். முல்லைப்பாட்டாராய்ச்சி முதன் முதலில் எழுந்த செந்தமிழ்ச் செய்யுள் உண்மையாராய்ச்சி விளக்கமாகும் - நா. செயப்பிரகாசு மறைமலை அடிகளாரின் இலக்கிய படைப்புகள் பக். 5,6 Preface to the first edition “Poetry is simply the most beautiful impressive and widely effective mode of saying things and hence its importance – Matthew Arnold. To a mind brooding on the silent beauty exhibited in the varied phenomena of nature, to an interest diving deep into the mysteries that lie in the inmost coners of life, to a soul soaring high into ethereal regions of religion and philosophy, to a spirit seeking serene rest in moral sanctity and Divine grace, nothing appears so permanently beautiful, so certainly impressive and effective as the study of a fine piece of poetry. Not only does a fine poem delight us by presenting a faithful picture of nature’s charms and beauties but it also impresses us with the immediate presence of a benign principle that manifests itself in all that is bright and beautiful. While it thus kindles in man the thought about a supreme being of unlimited love and kindness, it calls forth also from him love and sympathy for all animate beings which like every one of us pursue certain lines of development and fulfill certain purposes in life each in its way. It is this love, this sympathy that marks him out as superior to lower animal kingdom; it is this special quality that refine and ennobles his entire being. Further, the soothing power of poetry is great and its influence on our mind is mild and sweet. To hearts eaten away by sorrow and worldly cares the reading of poetry comes as a healing balm; to hearts chilled by the icy hand of cruelty it appears like the warning rays of the morning Sun; and to hearts stained with the blackest crime and the basest vice it comes as the washing water of a crystal rill. Ah:! How lovely are the changes wrought by poetry in the mind of man; and how profound and permanent are the moral effects it brings into his inward nature:! To me the study of poetry has been a welling fountain of delight and ever will it continue to be so to the very end of my life on this Earthly plane. For years together I have been devoting my time to a close, careful and diligent study of the ancient classical poems of the Tamil language and have been drinking deep the ineffable sweetness that was there strode in. The pure simplicity of thought, the close and minute observation of nature, the vivid and sublime portraits presented of the social, moral religious and intellectual conditions of the hoary Tamilian life, the energy and artistic beauty beaming through with a sterling freshness and last, but not least the great historic value which it possesses – all combine to invest Tamil Poetry with a peculiar charm and splendour that can hardly be surpassed by the poetry of any great language in the world. These characteristics of Tamil Poetry accord to Tamil quite a unique place in the history of cultivated languages in the civilized world. But sad to relate that the Tamil poems prescribed as text books for the B.A and F.A examination in the university of Madras/ have attracted little or no attention of the students and that a study of them has even been looked upon as useless and tiresome by some who had been led to revel in stories of religious and mythological character and who had thereby lost all seriousness and all appreciation of natures charms. This has been due partly to the teaching of the Pandits and their bulky volumes of notes which mainly consist in giving word for word meanings and turgid and trivial grammatical notes and partly to some prescribed Tamil texts in prose and poetry which/ for the most part contain silly and crude religious myths translated from Sanscrit Puranas and which by no means represent the true character of original Tamil classics. I do not mean, however, to deny the fact that one or two classical poems are occasionally prescribed as text – books by the scrupulous members of the Tamil Board, But I only intent to say that even these brilliant grms get buried deep in the heap of filthy poems forthcoming as text – books by their side. The sparkling glitter of the farmer is swallowed up in the intense darkness of the latter;; and the study of Tamil Poetry therefore appears to our gaze as though it were surrounded by an impenetrable gloom. In spite of this disadvantage I had had an earnest desire to direct the attention of students to a sound critical study of at least the few prescribed texts of classical poems and see what effect would be produced on them when they are taught in the light of modern poetry – criticism in general. Although I felt incompetent for the task, yet I ventured to make the attempt which as I afterwards found to my great satisfaction, proved highly successful not only among the students of my college but also among those who stand outside the pale of university learning and study Tamil in private out of pure love. The benefits that had accrued to students from a critical and comparative study of poetry became patent and ever since the time that I attempted my critical methods of teaching poetry my scheme was put into practice only orally. But an occasion presented itself to come for bringing my critical methods of teaching into writing also. While I was engaged in teaching Mullaippattu to my students of the senior B.A. class, they requested me to write a critical commentary on this beautiful idyll on the new lines and subscribed in advance to defray the cost of printing. In compliance with their request I undertook the task with pleasure and finished it. I take this opportunity to express my thanks to my students of the senior B.A. class for this and many other acts of courtesy and kindness they had extended to me. Mullaippattu is an ancient classical Tamil idyll of 103 lines sung in honour of the pandian king Nedunchelian by his court bard Napputhanar. How Nedunchelian, one having gone on a expedition to meet the combined forces of seven powerful kings in the field at Talayalanganam and routed them all in the fierce battle that ensued, returns with feat splendour and magnificence and with trophies of victory to kiss his loveliest wife and how this beautiful maiden that had been left alone in a country villa with a deep sorrow at the separation of her beloved husband, is lying down on her couch her chaste bosom heaving up with a sigh of consolation at his shortly expected return, are all related most vividly and very picturesquely in the poem. The poem is remarkable alike for simplicity of thought, beauty of expression and noble sentiments. The imaginative hold which it has on the mind of the reader is strong and elevating. The interest of the plot is sustained thought out but the poet with great delicacy and subtlety that characterize a master mind. The rhythm and harmony of style vary every now and then and adhere closely to the dignified march of the sense, while the diction, though rugged at times, is one the whole, chaste and elegant replete with genuine elements of Tamil. The Sanscrit words have mingled in it at the rare of two per cent and hence the date of its composition falls about the first century after Christian era. In commenting on this excellent poem I have followed the main lines of literary criticism inculcated by the able and profound critic professor William minto;; for his critical methods are authentic and help much towards a true and clear under standing of the work taken to be scrutinized. From this critical point of view, I have given a historical account of the age that gave birth to such a splendid poem as Mullaippattu and of the indluence which that age had exerted on this poem. It must be remembered that the true nature of a work of art cannot be comprehended unless the nature and conditions of the times in which it had sprung are distinctly understood. I have also availed myself of the grand views expressed on poetry by such great masters as Milton and Ruskin and have even translated freely into Tamil one or two passage from their writings. In my analysis of the poem I have adhered closely to the original idea conceived and expressed by the poet, rather than follow the mangled and distorted meanings given by the old commentator Nachinarkkiniar. The old commentator, discarding the simple and natural order and setting in which the subject matter or the idyll is disposed, has torn the excellently woven fabric of the poet to pieces and glues them again together with his own vapid thought is such a fantastic manner s to make the poem seem most unnatural and its structure highly ridiculous. And in elucidating the text I have, therefore, inserted, wherever necessary, short critical notes which would make the inaptitude of the commentators meaning at one intelligible to all reflective minds. Pandit V. Swamintha Aiyar of the Government College at Kumbakonam and pandit C. Tiruchitrambalam Pillai of coimbatore having been treaty misled by the commentary of Nachinarkkiniar, have in their editions, added notes which, without following the sense of the poem, simply mar the flow and natural setting of its poetic thoughts. But of the two I wish to recommend to students Mr. Tiruchitrambalam’s edition, since his comments and critical introduction seem to me more valuable for a clear understanding of the old commentary, though not of the poem that that of Mr. Swaminatha Aiyar. In the course of my criticism I need hardly say that I have differed as widely from the old commentator as from the two Pandits, But I have fully stated my reasons and authority for doing so. I conclude these few prefatory remarks with a fervent hope that these Tamil students who take a deep interest in the study of this poem, will find in the following critical commentary a better means of getting at a true and appreciative knowledge of this only genuine relic of a great and old Tamil poet Napputhanar and will interest themselves by further devoting a few of their leisure hours to the study of Tamil classics and extend their knowledge of Tamil wider than it is at present. Madras Christian college 28th September 1903 Vedachalam நான்காம் பதிப்பின் முகவுரை இற்றைக்கு இருபத்தெட்டாண்டுகளுக்கு முன் யாம் இம் முல்லைப் பாட்டாராய்ச்சி யுரையை எழுதிய காலத்துப் பழைய சங்கத் தமிழிலக்கியங்களாகிய அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலாயின அச்சிட்டு வெளிப்படுத்தப்படவில்லை. அதனால் யாம் பயின்ற தொல்காப்பிய வுரையிலிருந்தே இவ்வாராய்ச்சியுரைக்கு வேண்டிய மேற்கோட் செய்யுட்களை எடுத்துக்காட்டலாயினேம். அப்போது அம் மேற்கோள் உள்ள நூல்களைக் குறிப்பிடுதல் இயலாதிருந்தது. மற்று, இந் நாளிலோ எட்டுத்தொகை நூல்கள் அவ்வளவும் வெளிவரும் பேறு கிடைத்திருத்தலின், யாம் இப்பதிப்பின்கண் ஒவ்வொரு மேற் கோளுக்கும் அவை வந்துள்ள நூல்களின் பெயர்களைக் குறித்திருக்கின்றேம். அதுவேயுமன்றி, முற்பதிப்புகளில் இல்லாத சில பகுதிகளும் விளக்க வுரைக் குறிப்புகளும் இப்பதிப்பின்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இன்னும், இந்நூலின் உரைநடைச் சுவையை முன்னையிலும் மிகுதிப் படுத்தல் வேண்டிப், பலப்பல சொற்றிருத்தங்களும் சொற்றொடர்த் திருத்தங்களும் ஆங்காங்குச் செய்திருக்கின்றேம். இவையல்லாமலும், முற்பதிப்புக்களில் இடையிடையே விரவியிருந்த சிற்சில வடசொற்களையுங் களைந்தெடுத்து, இவ்வுரைநடையைச் சாலவுந் தூய தனித் தமிழாக்கியிருக்கின்றேம். இங்ஙனமாக உரைநடை வகையிலும் உரைக் குறிப்பு வகையிலுஞ் செய்யப்பட்ட சில பல மாறுதல்களைத் தவிரப் பொருள் வகையில் ஏதொரு மாறுதலும் இதன்கட் செய்யப்படவில்லை. ஆகவே, முற்பதிப்புக்களைப் பயின்றவர்கள் இப் பதிப்பின்கண் திகைப்புறத்தக்க பொருள் மாறுதல் ஏதுஞ் செய்யப்படவில்லை யென்பதும், இந்நூலின் தமிழ்ச் சுவையினை மேலும் மிகுதி செய்தற்கு வேண்டிய அளவே சில பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன வென்பதும் அறிஞர்கள் அறிவார்களாக! இந் நூலின் முற்பதிப்பினைப் பயின்று மகிழ்ந்தவர்களுக்கு இப் பதிப்பு அம் மகிழ்ச்சியினை மிகுதி செய்யுமென்னும் நம்பிக்கையுமுடையேம். பல்லாவரம் பொதுநிலைக் கழகம் இங்ஙனம் திருவள்ளுவர் யாண்டு, 1961 மறைமலையடிகள் மூன்றாம் பதிப்பின் முகவுரை முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து என்னும் பழைய பாட்டின்கட் கண்ட திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் ஈறான அருந்தமிழ்ப் பாட்டுகள் பத்தினுள் ஐந்தாவதாய் நிற்பது முல்லைப்பாட்டாகும். தன் ஆருயிர்க்கணவனைப் பிரிந்து வருந்தியிருந்த தலைவியின் நிலைமையும், பகையரசர் மேற்போர்புரியச் சென்ற அவள் கொழுநன் கார்காலத் துவக்கத்தே அப் போர்வினையை முடித்துத் தன் மனைவிபாற் றிரும்பிவரும் வகைமையும் இச் செய்யுளின் கண் மிகவும் அழகாக எடுத்துச் சொல்லப்படுகின்றன. இச் செய்யுள் இயற்றப்பட்டுச் சிறிதேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதனை இயற்றிய ஆசிரியர்; காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் என்று சொல்லப்படுவர். இப் பாட்டைத்தவிர இவ்வாசிரியரால் இயற்றப்பட்டனவாக வேறு எவையும் இதுவரையும் வெளிப்பட வில்லை. கற்போருணர்வைக் கவருந் திறத்ததாய், அழகிய இயற்கைப் பொருள் நிலைகளை இருந்தவாறே எடுத்து மொழிவதாய், நூற்று மூன்றடிகளிற் சுருங்கிய பாவாய் இருப்பினுந் தமிழ்மொழியின் நலங்களை விளக்கமாகத் தேற்றுவதாய் உள்ள இம் முல்லைப் பாட்டு கி.பி. 1903 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பாடமாக வந்தது. சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் அப்போது யாம் தமிழாசிரியராய் இருந்து மாணாக்கர்க்குத் தமிழ்நூல் அறிவுறுத்தி வந்தமையால், இம் முல்லைப் பாட்டிற்கும் உரைவிரித்து உரைக்கலானேம். இச்செய்யுட்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையையுங் கூடவே விளக்கி வருகையிற், செய்யுளியற்றிய ஆசிரியர் கொண்ட பொருண்முறை ஒரு பக்கமாகவும், உரைகாரர் கொண்ட பொருண்முறை மற்றொரு பக்கமாகவும் ஒன்றோடொன்று இணங்காதாய் மாறுபட்டு நிற்றல் கண்டு மாணாக்கர் பெரிதும் இடர்ப்படுவாராயினர். அதுவேயுமன்றி, ஆக்கியோன் அமைத்த சொற்றொடர் நெறியைச் சிதைத்துச் சொற்களையும் அடைமொழி களையும் ஒரு முறையுமின்றிப் பிரித்துக்கூட்டிப் பொருளுரைக்கும் நச்சினார்க்கினியருரை சிறிதும் ஏலாவுரையேயாமென்றும் அவர் கருதுவாராயினர். முன்னரே ஆக்கியோன் கருத்தையொட்டி வேறோர் உரைசெய்து வைத்திருந்த யாம் அதனையெடுத்து அவர்க்கு விளக்கிக்காட்டினேமாக, அது கண்டு அவரெல்லாந் தமதுரை ஆக்கியோன் கருதிய பொருளை நேர்நின்று விளக்குவதொடு, பண்டைக்காலத்துத் தண்டமிழ்ச் சிறப்புகளைப் பின்றைக் காலத்துக்கேற்றபடி தெற்றென நன்கு தெரிப்பதாயும் இருத்தலின் தமது விரிந்த இவ் வாராய்ச்சியுரையினையே பதிப்பிட்டு எமக்குத் தந்தருளல் வேண்டும் எனக் கேட்டு அது பதிப்பிடுதற்காஞ் செலவும் ஒருங்கு சேர்ந்து முன் உதவினர். அங்ஙனம் உதவிய அம் மாணாக்கர்க்கு யாம் என்றும் நன்றிசெலுத்தக் கடமைப் பட்டிருக்கின்றேம். உடனே யாம் எழுதிய முல்லைப்பாட்டாராய்ச்சியுரை அச்சிற் பதிப்பிக்கப்பட்டமையின், அதன் அச்சுப் புத்தகங்கள் அவ்வாண்டின் மாணாக்கர்க்கும் பிறர்க்கும் வழங்கப்பட்டன. அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும், ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பெரிதும் வியந்து பாராட்டி, அம்முறையினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதிற் கிளர்ச்சி பெறலானார். இப்புது முறையுரை தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சியினை விளைத்தமை கண்டு, இனி இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டுமென எமதுள்ளம் பெரிதும் விழைந்தது. கி.பி. 1906 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பத்துப்பாட்டுக்களில் ஒன்றான பட்டினப் பாலை என்னும் அருந்தமிழ்ச் செய்யுள் பாடமாய் வந்தது. யாம் முல்லைப்பாட்டிற் கெழுதிய ஆராய்ச்சியுரை யினைப்பற்றிக் கேள்வியுற்ற அவ்வாண்டின் மாணாக்கர்களுந் தமக்குப் பாடமாய் வந்த பட்டினப்பாலைக்கும் அதனைப் போலவே ஒர் ஆராய்ச்சியுரை எழுதித்தரும்படி வேண்டி, அதனைப் பதிப்பிடுதற்காஞ் செலவின் பொருட்டுத் தாமும் ஒருங்குசேர்ந்து பொருளுதவி செய்தனர். அம் மாணாக்கர் செய்த வுதவிக்கும் யாம் பெரிதுங் கடமைப்பட்டிருக் கின்றேம். திரும்பவுங் கி.பி.1910 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்கும் முல்லைப்பாட்டுப் பாடமாக வந்தது. இதற்கிடையில் முதற் பதிப்பிட்ட எமது முல்லைப் பாட்டாராய்ச்சியுரைப் புத்தகங்கள் எல்லாஞ் செலவழிந்து போனமையின், அவ்வாண்டின் மாணாக்கர் களுஞ் செய்த வேண்டு கோட் கிணங்கி அவர் தாமும் ஒருங்குசேர்ந்து முன்னர்த் தந்த பொருள்கொண்டு அஃதிரண்டாம் முறையும் பதிப்பிடப்பட்டது. இரண்டாம் பதிப்புப் புத்தகங்களுஞ் செலவாய் விட்டமையால், இப்போதிதனை மீண்டும் பதிக்கலாயினேம். இப்பதிப்பின்கட் பல திருத்தங்களும் பல மாறுதல்களுஞ் செய்யப்பட்டிருக்கின்றன. எமதிடமுள்ள ஓர் ஏட்டுச் சுவடியையும் அச்சுப் புத்தகத்தையும்ஒப்பிட்டுப் பார்த்து முல்லைப்பாட்டுச் செய்யுளின் கண்ணுஞ் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. முல்லைப் பாட்டுப் பயில்வோர் பிறநூல் உதவி பெரிதும் வேண்டாமல் எளிதில் அதனைக் கற்றறிதற் பொருட்டு முன்னிரண்டு பதிப்புக்களிலும் இல்லாத பல விளக்க உரைக் குறிப்புகள் இப்போதிதன்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதுவேயுமன்றி, உலக வழக்கத்திலுள்ள சொற்களைத் தவிர்த்து முல்லைப்பாட்டில் வந்த ஏனை எல்லாச் சொற்களையும் அகர வரிசைப்படுத்தி அவற்றிற்கெல்லாம் பொருள்கள் எழுதியிருக் கின்றேம். இவ் வருஞ்சொற்பொருள் வரிசையின் உதவி கொண்டு இச்செய்யுட்பொருள் உணர்ந்து கொள்வது எவர்க்கும் எளிதேயாம். இனி, இவ்வருஞ் சொற்கட்குப் பொருள் வரையுங்கால் இம் முல்லைப்பாட்டு வழங்கிய காலத்தில் அதன்கண் வந்த சொற்கட்கு வழங்கிய பொருள்களையும், அக்காலத்தை அடுத்துத் தோன்றிய சான்றோர் நூல்களில் அவற்றிற்கு வழங்கிய பொருள்களையும் எடுத்துக்காட்டியிருக்கின்றேம். ஒரு செய்யுள் வழங்கிய காலத்தும் அதனை யடுத்துவந்த காலத்தும் அச் செய்யுட் சொற்கட்குப் பொருடெளிவது அச்செய்யுள் ஆக்கியோன் கருத்தை நன்கறிந்து கோடற்குக் கருவியாமாதலின், இங்ஙனஞ் சொற் பொரு டுணிவிக்கும் முறையைத் தமிழாராய் வோர் அனைவருங் கைப்பற்றி ஒழுகுவராயின் நமதருமைச் செந்தமிழ்மொழி சாலவும் விளக்கம் உடையதாகித் திகழும். இனி, இவ்வாராய்ச்சியுரையின்கண் மற்றொரு முதன்மை யான சீர்திருத்தமுஞ் செய்திருக்கின்றேம். தொன்று தொட்ட சிறப்பும், இலக்கண இலக்கிய வரம்புந், தனக்கெனப் பன்னூறாயிரஞ் சொற்களும் வாய்ந்து, இன்றுகாறும் வழக்கு வீழாது உயிரோடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொரு வர்க்கும் இன்றியமையாத கடமையாம். சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழிகளையும், உலக வழக்கிற்குச் சிறிதும் பயன்படாமல் இறந்துபட்ட மொழிகளையும் அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார்போற் றம்மை எண்ணிக்கொள்வாரும் அவற்றைத் தூயவாய் வழங்கவும் அவற்றை உயிர்ப்பிக்கவும் ஓவாது முயன்றுவர, எல்லா நலங்களும் ஒருங்குடைய நமதருமைச் செந்தமிழ் மொழியை நம்மனோர் பயிலாதும் பாதுகாவாதுங் கைவிட்டிருத்தல் நிரம்பவும் இரங்கற்பாலதொன்றாம். இனியேனும் அவர் அங்ஙனம் மடிந்திராமைப் பொருட்டு, நம்மனோரிற் கற்றவராயிருப்போர் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமற் றனித்தமிழிற் பேசவும் எழுதவுங் கடைப்பிடியாய்ப் பழகிவரல் வேண்டும். இதனை முன்நடந்து காட்டும் பொருட்டு, இதற்குமுன் யாம் எழுதிய நூல்களிற் புகுந்த சிற்சில அயன்மொழிச் சொற்களையும் அந்நூல்களைத் திரும்பப் பதிப்பிட்டுவரும் இப்போது முழுதுங் களைந்து விட்டு, அவை நின்ற இடத்திற் றூய தமிழ்ச் சொற்களையே நிரப்பி வருகின்றேம். இம் முல்லைப்பாட்டாராய்ச்சி யுரையின் கண்ணும் முற்பதிப்புகளிலிருந்த அயன்மொழிச் சொற்களை நீக்கி அவற்றிற்கீடான செந்தமிழ்ச் சொற்களையே இப்பதிப்பின்கட் பெய்து வைத்திருக்கின்றேம். என்றாலுங், காலநிலைக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் இசையச் சில அயன்மொழிச் சொற்களையுஞ் சில சொற்றொடர்களையுங் குறியீடுகளையும் ஒரோவிடங்களில் மிகச் சிறுக எடுத்தாளுதல் வழுவன் றென்பதூஉம் அறிஞர்க்கு உடன்பாடாமென்க. இத் தன்மையவான ஆராய்ச்சியுரைகள் எழுதுவதற்கு நல்வழி காட்டின ஆங்கிலமொழி நல்லிசைப் புலவர்க்கு யாம் எழுமையும் நன்றி பாராட்டுங் கடமை உடையேம். பல்லாவரம் பொதுநிலைக் கழகம் இங்ஙனம் சாலி, 1841 ஆவணி மீ மறைமலையடிகள் பொருளடக்கம் பக்கம் 1. பாட்டினியல்பு 17 2. பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு 23 3. முல்லைப்பாட்டின் இயற்கையும் அதன் பாட்டியற்றிறனும் 38 4. முல்லைப்பாட்டில் நீளச் சென்று பொருந்தும் சொற்றொடர் முடிபு மாட்டு 42 5. முல்லைப்பாட்டின்மேல் நச்சினார்க்கினியருரை 43 6. பாட்டின் வரலாறு 46 7. முல்லைப்பாட்டு 51 8. பொருட்பாகுபாடு 55 9. பாட்டின் பொருள்நலம் வியத்தல் 60 10. பாவும் பாட்டின் நடையும் 63 11. விளக்க உரைக் குறிப்புகள் 67 12. வினை முடிவு 80 அருஞ்சொற்பொருள் 81 பின்னிணைப்பு 90 1. பாட்டினியல்பு முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தன்மையது? என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். பின்றைக் காலத்துத் தமிழ்ப்புலவர் பாட்டென்பது இன்னதென்றே அறியாராய்ப் புதுப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட்கள் பலப் பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற்காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர் பாட்டினியல்பு அறியாது மயங்குவராகலிற், பாட்டு என்பது இன்னதென்பதனை ஒரு சிறிது விளக்குவாம். உலகஇயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகையெல்லாந் தன்னகத்தே நெருங்கப் பொதிந்துவைத்துப், பின் அவற்றை நம் அறிவினிடத்தே புலப்படும்வண்ணந் தோற்றுவித்துப், பொருள் நிகழ்ச்சியொடு மாறுபாடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்று அறிதல் வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம்வயப்படுத்துகின்ற பேரழகும் பேரொளியும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும். இதனை விளக்கிக் காட்டுமிடத்துப், பேரழகாற் சிறந்த ஒர் அரசி தான் மேற்போர்த்திருந்த நீலப் பட்டு ஆடையினைச் சிறிது சிறிதாக நீக்கிப், பின் அதனைச் சுருட்டிக் கீழே எறிந்து விட்டுத் துயில் ஒழிந்து, ஒளிவிளங்கு தன் நளிமுகங்காட்டி எழுந்ததை யொப்ப, இருட்கூட்டஞ் சுருண்டு மடங்கி அலைகடலிற் சென்று அடங்கிவிடுமாறு இளைய ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற் றிரளைபோலத் தளதளவெனத் கீழ்த் திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து திகழவும், பசுமை பொன்மை நீலம் சிவப்பு வெண்மை முதலான நிறவேறுபாடுள்ள பொன் வெள்ளிகள் உருகி ஓடுகின்ற நிலம் போல வான் இடமெல்லாம் பல வண்ணமாய் விரிந்து விளங்கவும், கரியமுகில்க ளெல்லாஞ் செவ்வரக்கு வழித்த அகன்ற திரைச்சீலைகள் போலவும் வெளியே முகில்களெல்லாம் பொற்பட்டுத் துகில் போலவும் ஆங்காங்குச் சொல்லுதற் கரிய பேரொளியொடு திகழவும் உலகமங்கை நகைத்தாற்போலப் புதுமையுற்றுத் தோன்றும் விடியற்கால அழகெல்லாம் பாட்டென்றே அறிதல் வேண்டும். ஆ! இங்ஙனந் தோன்றும் அவ்விடியற்கால அழகினைக் கண்டு வியந்த வண்ணமாய் மீன்வலையொடு கடற்கரையில் நிற்குஞ் செம்படவனைக் காட்டினுஞ் சிறந்த புலவன் யார்? அவ் விடியற்காலையிலே முல்லை நிலத்து மேய்ப்பர்கள் ஆன்கன்று களைத் தொழுவத்திலே தாம்பினாற் கட்டிவைத்து ஆன்நிரைகளை அடுத்துள்ள மலைச்சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புல் மேயவிட்டுத், தாம் மரநிழலிற் சாய்ந்திருந்து கொண்டு, தமக்கெதிரே பச்சிலைப் போர்வை மேற்கொண்டு கரிய முகில்கள் நெற்றி தழுவிக் கிடப்பப் பெருந்தன்மையொடு வான் அளாவித் தோன்றும் மலையினை அண்ணாந்து பார்த்தவராய் அவர்கள் அச்சமும் மகிழ்ச்சியும் அடையும்போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும். காதலினாற் கட்டுண்ட இளைஞரும் மகளிரும் நெகிழாத காதலன்பின் மிகுதியால் தோளொடு தோள்பிணையத் தழுவிக்கொண்டு, மலையடி வாரத்தில் உள்ள பூஞ்சோலைகளிற் களிப்பாய் உலவுந்தோறுந், தூங்கணங் குருவிகள் மரக்கிளைகளில் வியப்பான கூடு கட்டுதலையும்; மரப் பொந்துகளிலிருந்து மணிப்புறாக்கள் கூவுதலையும்; ஆண்மயில்கள் தம் அழகிய தோகையினை விரித்துப் பெடைமயில் கண்டுகளிப்ப ஒருபுறம் ஆடுதலையும்; மலையிலிருந் தொழுகும் அருவிநீர் கூழாங்கற் படையின் மேற் சிலுசிலுவென்று ஓடிவந்து அச் சோலையின் ஒரு பக்கத்துள்ள ஆழ்ந்த குட்டத்தில் நிரம்பித் துளும்ப, அதன்கண் உள்ள செந்தாமரை முகிழ்கள் அகன்ற இலைகளின் மேல் இதழ்களை விரித்து மிகச் சிவப்பாய் அலர்தலையும் விரும்பிக் கண்டு, நறுமணங் கமழும் பூக்களை மரங்களினின்றுந் தாவிப் பறித்துக் கரிய கூந்தலில் மாறி மாறி அணிந்துஞ், சிவக்கப் பழுத்த கொவ்வைக்கனி போன்ற தம் இதழ்கள் அழுந்த முத்தம் வைத்துக் கொண்டுந், தேன் ஒழுகினாலென இனிய நேயமொழிகள் பேசிக் கொண்டும் அவர்கள் செல்லுமிடத்து அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும். சுருங்கச் சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுணர்வைக் கவர்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப்படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப்படும். ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனால் இயற்றப்படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப் படுவதில்லையேயெனின்; நன்கு வினாயினாய், ஒரு நூலின் கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் றோன்றக் காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ் சொல்லின் தொகுதியான பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அழகோடு ஒருங்கொத்து நின்று, கண் முதலான புலன்வழிப் புகுந்து நமக்கு உவப்புணர்வு மிகுதியினை வருவிக்கும் பாட்டு, வடிவம் இல்லாத நுண்பொருளாகும். இங்ஙனமாகலின் உலக இயற்கையிலெல்லாம் பாட்டு உண்டென்பது துணிபேயா மென்க. அல்லாமலும், உயிர் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் நம்முடைய நினைவுகளெல்லாம் உணவு தேடுதலிலும், பொருள் தொகுப்பதிலும், மனைவிமக்கட்கு வேண்டுவன திரட்டிக் கொடுத்தலிலும், பிறர் இட்ட ஊழியஞ் செய்தலிலுமாகப் பலவாறு சிதறி அருமை பெருமையின்றிக் கொன்னே கழிந்து போகின்றன. இவ்வாறு கழிந்து போகும் மக்களுடைய நினைவு களுஞ் சொற்களுஞ் செயல்களும் நமக்கு இன்பந்தராவாகலின் அவற்றை அறிய வேண்டுமென விரும்புவாரும் உலகில் யாரும் இலர். இனி, இவ்வாறு கழியும் நாட்களில் ஒரோவொருகால் அவர் அறிவு வறிய நினைவுகளின் வேறாகப் பிரிந்து, உலக இயற்கையழகிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவுற்று விளங்கும்போது, அவ்வறிவிற் சுரந்து பெருகும் அரிய பெரிய கருத்துக்களையே நாம் அறிதற்கு மிகவிழைகின்றோம். இங்ஙனந் தோன்றும் அரிய பெரிய கருத்துக்களின் கோவை ஒழுங்கினையே பாட்டென்றும் அறிதல் வேண்டும். இன்னும், மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வருநினைவு களான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும்போது, உலக இயற்கையென்னும் மலைக் குகைகளிலே அரித்து எடுத்துவந்த அருங்கருத்துக்களான பொற்றுகள் இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப்புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற்சிதர்களையெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே பாட்டு என்றும் அறிதல் வேண்டும். இன்னும், மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களொடுங் கலப்புற்றுத் தூயதன்றாய்ப் போக, நல்லிசைப்புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெளிய வடித்து அதன் இன்சுவையினை மிகுதிப் படுத்தி, நாமெல்லாம் அதனைப் பருகிப் பெரியதோர் ஆறுதலடையக் கொடுப்பன்; அங்ஙனங் கொடுக்கப்படுந் தூய இனிய அறிவின் விளக்கமும் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மிலிட்டன் என்னும் ஆங்கிலமொழி வல்ல நல்லிசைப் புலவரும், பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தம் ஆம்1 என்று உரை கூறினார். இது நிற்க. இனி, இங்ஙனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன்னும் இதனை நுணுகி நோக்குமிடத்துப் பாட்டுப் பாடுதலில் வல்லவனான நல்லிசைப் புலவனுக்கும் உலக இயற்கையினைப் பலவகை வண்ணங்களாற் குழைத்து வரைந்து காட்டுகின்ற ஓவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ஆயினும், ஓவியக்காரன் வரைகின்ற ஓவியங் கட்புலனுக்கு மட்டுமே தோன்றுவதாகும்; நல்லிசைப் புலவன் அமைக்கின்ற பாட்டோ கண் முதலான புலன்களின் அகத்தே விளங்கும் உள்ளத்திலே சென்று தோன்று வதாகும். ஓவியக்காரன் தான் எழுத எடுத்துக்கொண்ட பொருட்டோற்றத்தைப் பன்முறையும் நுண்ணிதாக அளந்தளந்து பார்த்துப் பின் அதனைத் திறம்பட வரைந்தால் மட்டும் அங்ஙனம் வரைந்த ஓவியத்தைக் கண்டு வியக்கின்றோம்; தான் விரித்து விளக்கமாய் எழுதவேண்டும் பகுதிகளில் அவன் ஒரு சிறிது வழுவி விட்டானாயினும் அவ்வோவியத்தின்கண் நமக்கு வியப்புத் தோன்றா தொழியும். நல்லிசைப்புலவனோ அங்ஙனம் அவனைப்போல் ஒவ்வொன்றனையும் விரிவாக விளக்கிக் காட்ட வேண்டும் வருத்தம் உடையான் அல்லன். ஓவியக்காரன் புலன் அறிவைப் பற்றி நிற்பவன்; புலவனோ மன அறிவைப் பற்றி நிற்பவன். புலனறிவோ பருப்பொருள்களை விரித்தறியும் இயல்பி லுள்ளது; மனவறிவோ அப்புலனறிவின் அகத்தே நின்று நுண்ணிதாம் பொருளையுந் தானே ஒரு நொடியில் விரித்தறியும் ஆற்றல் வாய்ந்தது! அம்மம்ம! மனவறிவின் ஆற்றலை யாம் என்னென்று எடுத்துரைப்பேம்! அணுவை ஒரு நொடியில் மலைபோற் பெருகச் செய்யும், மலையை மறுநொடியில் ஒர் அணுவினுங் குறுகச்செய்யும். இங்ஙனம் வியப்பான இயல்புடைய மனவறிவினை நல்லிசைப் புலவன் என்னும் மந்திரக்காரன் தன் மதிநுட்பமாகிய மாத்திரைக் கோலால் தொட்ட அளவானே அது திடுக்கென்றெழுந்து அவன் விரும்பிய வண்ணமெல்லாஞ் சுழன்று சுழன்றாடும். இன்னும் இதனைச் சிறிது விளக்குவாம். ஓவியக்காரன் அச்சுறுத்தும் அகன்றதொரு கரிய பெரிய காட்டினை எழுதல் வேண்டுமாயிற் பல நாளும் பலகாலும் அதன் இயற்கையினை அறிந்தறிந்து பார்த்துப், பரிய மரங்கள் அடர்ந்து ஓங்கி ஒன்றோடொன்று பிணைந்து வெளிச்சம் புகாமல் தடை செய்து நிற்றலையும், அக்காட்டின் வெளித்தோற்ற அமைப்பினையும், மரங்களின் இடையிலுள்ள இடுக்கு வெளிகளில் நமது பார்வை நுழையுங்கால் அவை தோன்றுந் தன்மையினையும், உள்ளே இருள் திணிந்து பரவியிருத்தலையும் அங்குள்ளவாறே சிறந்த பல வண்ணங்களைக் குழைத்து இரட்டுத் துணியின்மேல் மிக வருந்தி முயன்று எழுதிக்காட்டல் வேண்டும்; இஃது அவனுக்குப் பல நாள் வினையாக முடியும். நல்லிசைப் புலவனோ, பரிய மரங்கள் அடர்ந்தோங்கிப் பிணைந்து நிற்கும் இருண்ட காடு என்று சில சொற்களைத் திறம்படச் சேர்த்துக் கூறுதல் ஒன்றினாலேயே ஒரு நொடிப்பொழுதில் அவ்வோவியக்காரனாலுங் காட்ட முடியாத ஒருபெருவியப் புணர்வினை நம் மனத்தகத்தே விளைவிக்கும் ஆற்ற லுடையனாவன். இஃது இவனுக்கு மிக எளிதிலே முடிவதொன்றாம். இங்ஙனம் மனவுணர்வினை எழுப்புதல் மிக எளிதிலே செய்யக் கூடியதொன்றாயினும், அம்மனவியல்பின் நுட்பம் உணர்ந்து அவ்வாறு செய்ய வல்லரான நற்பெரும் புலவர் உலகிற் சிலரேயாவர். புலவனுடைய திறமையெல்லாஞ் சில்வகையெழுத்திற் பல்வகைப் பொருளைக் காட்டுகின்ற அரும்பெருஞ் செய்கையினாலேதான் அறியப்படும். இங்ஙனம் பாட்டுவழக்கின் நுட்ப முணர்ந்து பிற மொழிகளிற் புகழ்பெற்று விளங்கிய நல்லிசைப் புலவர்கள் ஓமர்2, தாந்தே3, செகப்பிரியர்4, மிலிட்டனார்5, கீதே6, காளிதாசர் முதலியோரும், நஞ்செந் தமிழில் திருவள்ளுவர், நக்கீரனார், இளங்கோவடிகள், கூலவாணிகன் சாத்தனார், மாங்குடிமருதனார், கபிலர், சேக்கிழார் முதலானோரும் பண்டைக்காலத்து ஏனை நல்லிசைப் புலவருமேயாவர். இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமென்றஞ்சி இத்துணையின் நிறுத்துகின்றோம். அடிக்குறிப்புகள் 1. Areopagitica 2. Homer 3. Dante 4. Shakespeare 5. Milton 6. Goethe 2. பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு இனி, பண்டைக் காலத்துச் செந்தமிழ்ப் புலவரெல்லாரும் உலக இயற்கைத்திறம் பிறழாமல், அதனை நுணுகி ஆராய்ந்து பாட்டுப்பாடும் மனவுறுதி மிகுதியுமுடையராயிருந்தனர். உலக இயற்கையிற் காணப்படும் ஒளிவிளக்கத்தையும் எழிலையும் மிக வியந்தனர். தம் மனனுணர்விற்கு இசைந்த வண்ணமெல்லாம் உலக இயற்கையினைத் திரித்துக் கூறாமல், அவ்வுலக இயற்கையின் அழகின் வழியே தமதறிவினைப் பொருந்த வைத்துத் தம் நினைவினை விரிவுசெய்து விளக்கி மகிழ்ந்தனர். இம் முறைமை நற்பெரும் புலவர்க்கு இன்றியமையாச் சிறப்பினதாம் என்னுங் கருத்துப் பற்றியே இரசிகர்1 என்னும் ஆங்கில மொழி உரைவல்ல ஆசிரியர், காட்டு என்ற புலவரைப் பற்றிச் சொல்லவந்த விடத்து அவர் தமதுணர்வின் வழியே உலக இயற்கையினை நிறுத்திக் கொள்ளாமல், அவ்வுலக இயற்கையின் வழியே தமதுணர் வினை நிறுத்தி நின்றார் என்று புகழ்ந்தெடுத்துக் கூறினார். ஆகவே, உலக இயற்கையின் வழி நின்று பாட்டுப் பாடுதலே அருமையாமென்பதும், அதுவே நல்லிசைப் புலவர்க்கு அடை யாளமாம் என்பதும் இதனால் நன்கு பெறப்படும். பழந்தமிழ்ப் புலவர்களெல்லாரும் இந் நுணுக்கம் இனிதறிந்து விளங்கினார் களென்பதற்குப் பழைய தமிழ்ப் பாட்டுக்களே சான்றாகும். எனினும், இதனை ஒரு பழைய செய்யுள் முகத்தானும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. என்பது குறுந்தொகை2 என்னும் பழைய தமிழ்நூலில் உள்ள ஒரு பாட்டு. தன் மகள் தன் காதற்கணவன் வீட்டில் எப்படியிருக்கின்றாள் என்பதைக் கண்டறியும் பொருட்டுச் சென்ற செவிலித்தாய், அவ்விருவரும் மிக்க நேயமுடையராய் வாழ்வது கண்டு, தன்னுள்ளே மகிழ்ந்து சொல்லியதாக இது பாடப்பட்டிருக் கின்றது. என் மகள் வற்றக்காய்ச்சின கட்டித் தயிரைப் பிசைந்த காந்தள் மலர்முகிழ்போற் சிவந்த மெல்லிய விரல்களால், நன்கு கழுவி வெண்மையான உயர்ந்த ஆடை சமையல் செய்யும் விரைவினால் இடுப்பினின்றும் அவிழ்ந்து கழல அதனைக் கைகழுவாமலே உடுத்துக்கொண்டு, குவளைப் பூப்போன்ற மை தீட்டிய தன் கண்களிலே தாளிப்புச் செய்யும் புகை பட்டு மணக்கவும் அதனையும் பாராது, தான் துடுப்பினால் துழாவி மிக்க அன்பொடு சமைத்த சுவை மிகுந்த புளிப்பாகினைத் தன் கணவன் மிகவும் இனிதாயிருக்கின்ற தென்று சொல்லிக் கொண்டே உண்ணுதலைப் பார்த்து ஒளிமிகுந்த நெற்றியினை யுடைய என் மகளின் முகம் உள்ளுக்குள்ளே நுட்பமாய் மகிழ்ச்சி அடைந்தது என்பது தான் இப்பாட்டின் பொருள். பாருங்கள்! இச்செய்யுளின் இயற்கையழகும், இதன்கட் காட்டப்பட்டிருக்கும் மனவுணர்வின் இயல்பும் எவ்வளவு அருமையாக இருக்கின்றன! காதற்கணவனும் மனைவியுங் கெழுமி இருந்து இல்லறம் நிகழ்த்தும் ஒழுக்கம் முல்லை எனப்படுமாகலின், இவ்வொழுக்கம் நடைபெறுகின்ற முல்லை நிலத்திற்கு ஏற்ப முளிதயிர் பிசைந்த என்றார்; என்னை? தயிர் பால் முதலியன ஆனிரைமிக்க முல்லை நிலத்திற்கே உரியவாகலின். தன் கணவன் மேலுள்ள காதல் மிகுதியினால் ஏவலரும் பிறருஞ் சமையல் செய்வதற்கு ஒருப்படாது தானே தன் மெல்லிய சிவந்த விரல்களால் தயிரைப் பிசைதலும், கணவன் பசித்திருப்பானே என்னும் நினைவால் விரைந்து சமையல் செய்யும்போது இடுப்பிற்கட்டிய உயர்ந்த ஆடை கழலவும் பிசைந்த கையினைக் கழுவிவிட்டு உடுப்பதற்குட் காலம் நீண்டு அப்புளிப்பாகின் பதங்கெடுமென உணர்ந்து அக்கையுடனேயே அவ்வுயர்ந்த ஆடையினைக் கட்டிக்கொள்ளுதலும், அங்ஙனம் பிசைந்து திருத்திய புளிப்பாகினைத் தாளிக்கும்போது மேல் எழும் புகை தன் குவளைப்பூவன்ன கண்ணிற்படவும் அப்புறந் திரும்பினால் அது பதங்கெடுமே என்று முகந்திரும்பாமல் அதனை விரைந்து துழாவலும், அங்ஙன மெல்லாந் தன் வருத்தத்தினையும் பாராது சமைத்த சுவைமிக்க அப்புளிப்பாகினைக் கணவன் மகிழ்ந்துண்ணல் கண்டு தன் மகிழ்ச்சி வெளியே தெரியாமல் அவள் முகம் மலர்ந்து காட்டுதலும், இயற்கையே தனக்குள்ள நாணத்தால் அவள் முகஞ் சிறிது கவிழ்ந்து நிற்க அவளது ஒளிமிக்க நெற்றியே அம் மகிழ்ச்சிக் குறிப்புப் புலனாக முன் விளங்கித் தோன்றுதலுஞ் சில சொல்லில் மிக விளங்கக்கூறிய நுண்மை பெரிதும் வியக்கற்பாலதொன்றாம். உள்ளமுவக்கும் முல்லை நிலத்திற் கணவனும் மனைவியும் நேயமாய் மருவிவாழும் இயற்கை இப்பாட்டின்கண் ஓவியம் எழுதிக் காட்டினாற்போல் எவ்வளவு உண்மையாகவும் இனிதாகவுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது! இப்பொருளருமையோடு இச் செய்யுளில் உள்ள சொற்கள் எல்லாம் நீர்மடையில் தெளிநீர் மொழுமொழுவென்று ஓடுவதுபோல் ஓசையின்பம் உடையவாய் ஒழுகுதலும், ஒரு சொல்லாயினும் பொருளின்றி வேண்டா கூறலாகாமல் முன்னும் பின்னுமுள்ள பொருட்டொடர்புக்கு ஏற்ப இடையே முழுமுழுச் சொற்களாய் அமைந்து நிற்றலும் மிகவும் பாராட்டற் பாலனவாகும் என்பது. இன்னும் பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவர் உலக இயற்கைப் பொருள்களை ஆங்காங்குத் திரிந்து கண்டு பெருங் களிப்பும் பெருகிய மனவெழுச்சியும் உடையராய், வருத்தமின்றி இனிதாகப் பாட்டுகள் பாடினார் என்பது அவர் தாம் விரித்துச் சொல்லும் பொருள்களுக்கு எடுத்துக் காட்டும் உவமைகளால் நன்கு புலனாம். ஓரிடத்தில் மான் கொம்பைப் பற்றிச் சொல்லவந்துழி, இரும்பை முறுக்கினாற் போலுங் கரிய பெரிய கொம்பு என்னும் பொருள்பட இரும்பு திரித்தன்னமாயிரு மருப்பு (அகநானூறு, 4) என்றும், ஓரிடத்தில் இருவர் நேய ஒற்றுமையினைச் சொல்ல வந்தபோது கத்தியுறை செய்யுஞ் சிறிய தொழிலாளன் அரக்கொடு சேர்த்த கல்லைப் போலப் பிரியோம் என்னும் பொருள்படச் சிறுகாரோடன்3 பயினொடு சேர்த்திய கற்போற் பிரியலம் (அகநானூறு,1) என்றும், ஓரிடத்திற் புறந்துருத்திய நண்டின் கண்களுக்கு வேப்பம்பூ முகையினை உவமையாக எடுத்து வேப்புநனையன்ன நெடுங்கட்கள்வன் (ஐங்குறுநூறு, 30) என்றும், ஓரிடத்தில் வயல் நெல் புதிது ஈன்ற பசிய கதிருக்குச் செல்வர்கள் தமது குதிரையின் உச்சியில் தூக்கிக் கட்டிய தையல் மூட்டுள்ள கவரிமயிரை உவமையாக எடுத்து முரசுடைச்செல்வர் புரவிச்சூட்டும், மூட்டுறு கவரி தூக்கியன்ன, செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் (அகநானூறு, 156) என்றும் ஓரிடத்தில் மழையில்லாத வானம் பூத்தது போல இலை நெருங்கிய முசுண்டைச் செடிகள் வெள்ளிய மலர்களைப் பூக்க என்னும் பொருள் போதர மழையில் வானம் மீன் அணிந்தன்ன, குழையமல் முசுண்டை வாலிய மலர (அகநானூறு, 264) என்றும், ஓரிடத்தில் பஞ்சின் றொடர் நுனிபோலுந் தலையினையுடைய புதர்களின் மேல் ஏறிப்படரும் இண்டைக் கொடிகளின் நீரில் நனைந்த தளிர்கள் நெய்யில் தோய்த்தனபோல விளங்கி இரண்டாக இருளைக் கூறுபடுத்தினாற்போல் ஒவ்வொரு தளிரும் இரண்டு கூறுபட்டனவாய்க் கரியநிறத்துடன் அசைய என்னும் பொருள்படத் துய்த்தலைப்பூவின் புதலிவர் ஈங்கை, நெய்தோய்த்தன்ன நீர்நனை அந்தளிர், இருவகிரி இருளின் ஈரிய துயல்வர (அகநானூறு, 294) என்றும், ஓரிடத்திற் பச்சை மஞ்சளின் பசிய முதுகைப் போல் சுற்றிலும் பொருத்துடம்பு உடையனவாய்க் கழியிற் கிடக்கும் இறா மீன் என்பது விளங்க முற்றா மஞ்சட் பசும்புறங் கடுப்பச், சுற்றிய பிணர சூழ்கழி யிறவு (நற்றிணை, 101) என்றும், ஓரிடத்தில் மயிலின் அடிபோல் மூன்று பிளவாய் இருக்கும் இலை களையுடைய பெரிய கதிருள்ள நொச்சி என்பது தோன்ற மயிலடி இலையமாக்குரல் நொச்சி என்றும், ஓரிடத்திற் கதிர் அரிந்துவிட்ட தினைப்பயிரின் தாள்போன்ற சிறிய பசுங்காலை யுடையவாய் ஓடும்நீரில் ஆரல்மீனைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாரை என்பது புலப்படத் தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால, ஒழுகுநீர் ஆரல் பார்க்குங் குருகு (குறுந்தொகை, 25) என்றும் போந்த தன்மை நவிற்சியணிச் சொற்றொடர்களானே பழைய தமிழ்ப் புலவரின் விழுமிய உலகியற் பொருள் அறிவினை இனிது அறிந்து கொள்ளலாம். இன்னும் இவைபோன்ற எடுத்துக்காட்டுகள் நூறுநூறாகப் பெருக்கலாமேனும், இங்கு அதற்கு இடம் பெறுதல் கூடாமையின் இதனை இவ்வளவில் நிறுத்துகின்றோம். இத்துணை நுட்பமான உலகியற் பொருள் அறிவு பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல் போல, மற்றைமொழிகளில் வல்லராய் விளங்கிய ஏனைப் பழம்புலவரிடத்துங் காணப்படுதல் அரிது. இன்னும் இவ்வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற்பொருட்காட்சிகளைப் புனைந்துரைத்த முறையும், அவ்வுலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ள பொருத்தம் பற்றி அவர் வெளியிட்ட அரிய கருத்துக்களின் விழுப்பமும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிற் பரக்கக் காணலாம். ஆண்டுக் கண்டு கொள்க. தி.மு. நானூறு ஆண்டு முதல் தி.பி. நூறாண்டு வரையில் தொடர்புற்று விளங்கிய செந்தமிழ் இலக்கிய காலத்தில் இயற்றப்பட்ட நூல்களின் இயற்கையும், அந்நூல்களுக்கும் முல்லைப்பாட்டிற்கும் உள்ள இயைபும், அக்கால வரலாறும். இனி, திருவள்ளுவர் பிறப்பதற்கு முற்சென்ற நூற்றாண்டு களிலே மிகவும் புகழ்பெற்று விளங்கிய புலவர் காலமும், அவர் பிறந்த பின்நூற்றாண்டிலே அவ்வாறு விளங்கிய புலவர் காலமுஞ் செந்தமிழ்மொழி மிக உயர்ந்த நிலையிலே இருந்து திகழ்ந்த காலமாகுமென்று அறிதல் வேண்டும். திருவள்ளுவர் பிறப்பதற்குமுன் ஒரு நானூறு ஆண்டும், அவர் பிறந்தபின் ஒரு நூறு ஆண்டும் சேர்ந்து முடிந்த ஓர் ஐந்நூறாண்டுந் தமிழ்மொழி மறுவற்ற மதிபோற் கலைநிரம்பி விளங்கிய காலமாகும். இக்காலத்திலே சிறந்த புலவர் பலர்தோன்றிப் பலவகையான அரிய பெரிய செந்தமிழ் நூல்கள் இயற்றினார். இப் புலவர்களைப் போற்றித் தமிழை வளம்படுத்தற்கு ஆவல்மிக்க அரசர் பலரும் வள்ளல் பலரும் ஆங்காங்கு மிக்கிருந்தனர். தமிழ் அரசர்கள் பலர் கல்வி வளத்தாலுஞ் செல்வவளத்தாலும் மேம்பட்டும், போர் வல்லமையிலும் பெருமையடைந்து, தமிழ்மொழியினைப் பலவிடங்களிலும் பெருகச் செய்வதிற் கருத்தூன்றினராய் இருந்தார். இக்காலத்திலேதான், தனக்கு ஒப்பும் உயர்வும் இன்றிவிளங் காநிற்குந் திருக்குறள் என்னும் அரும்பெருநூல் எழுதப்பட்டது; சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான சிறந்த தமிழ்க் காப்பியங்களும், பழமொழி, நான்மணிக்கடிகை முதலான அறநூல்களுந் தோற்றமுற்று எழுந்தன இவ்வைந்நூறாண்டுகளுக்கு முன்னும்பின்னுமிருந்த தமிழ்ப்புலவர்களாற் பாடப்பட்டுச் சிதறிக்கிடந்த அருந்தமிழ்ப் பாட்டுக்களெல்லாம் ஒருங்கு தொகுக்கப் பட்டு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை முதலிய வகைவகைத் தொகை நூல்களாக இக்காலத்திலேதான் ஒழுங்கு படுத்தப்பட்டன. பண்டைக் காலத்திலே செய்யப்பட்ட தொல்காப்பியம் என்னும் அரியபெரிய தமிழிலக்கணத்தில் மிகச் சிறந்த பகுதியான அகப்பொருளின் விரிவையெல்லாஞ் சுருக்கி அதனை வடித்த பிழிவாக இயற்றப்பட்ட இறையனாரகப் பொருள் என்னும் மனவியற்கைநூல் பன்னெடுங் காலமாக மறைந்துகிடந்து பின்னர் இக்காலத்திலேதான் வெளிவந்து லாவலாயிற்று. இன்னும் இக்காலத்திலே இன்றியமையாது அறியற்பாலதாஞ் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இதற்கு முன்னெல்லாந் தமிழ் பெரும்பாலுஞ் செய்யுள் வழக்கிலேயே பெருகிவந்தது; மற்று இக்காலத்திலோ அதனோடு உரை வழக்கும் விரவிப் பரவத் தொடங்கிற்று; சொல் விழுப்பமும் பொருள் விழுப்பமும் பொதிந்த மிக இனியதோர் உரை மிக நுணுக்கமான அறிவினையுடைய நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவரால் இறையனாரகப் பொருள் என்னும் நூலுக்கு வரைந்து தரப்பட்டது. இவ்வுரை சூத்திரப்பொருளை இனிது விளக்கும் பொருட்டே எழுதப்பட்டதாயினும், மற்றை உரைகள்போற் சுருங்காது மிக விரிந்து இன்றியமையாது உணரற்பாலனவாம். அரும் பெருந்தமிழ் நுட்பங்களெல்லாம் ஒருங்கு நிரம்பிப் பொலிகின்றது. ஆகவே, இக்காலத்தில் மிகச் சிறந்த உரையாசிரியராய்த் தோன்றித், தமிழ் மொழியிற் பல வகையான நல்ல சீர்திருத்தங்களெல்லாஞ் செய்து, தமிழ்ப் பயிற்சியைப் பெருகச் செய்துவந்த நற்பெரும் புலவர் ஆசிரியர் நக்கீரனார் தாமென்று அறியற்பாற்று. இதற்குப் பிற்காலத்தே வடமொழிக் கலப்பாற்புதிது தோன்றிய விருத்தப்பா என்பது, இவ்வைந்நூறாண்டுகளும் விரிந்து பெருகி வழங்கிய தமிழ் நூல்களில் எட்டுணையுங் காணப்படாமை பெரிதும் நினைவுகூரற்பாற்று. பௌத்தசமயத் தோற்றமும் பெருக்கமும் இனி, இங்ஙனந் தமிழ் பெருக்கமுற்று விளங்குதற்கு ஒரு பெருந் துணைக்காரணமாய் இருந்தது யாது? என்று ஆராயப் புகுவார்க்குப் பௌத்த சமயம் ஆங்காங்கு விளக்க முற்றுப் பரவி வந்தமையேயா மென்பது புலப்படும். பண்டைக் காலத்தே ஆசியாக் கண்டத்தின் வடதிசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங் களை விட்டு, இந்திய நாட்டிற் குடிபுகுதற்குமுன், இவ் விந்தியநாடு முழுதும் பரவியிருந்த மக்கள் தமிழரே யாவர்.4 தமிழர் இருந்த இவ்விந்திய நாடு பெரும்பாலும் வெப்பம் மிகுந்த நாடாதலால் இதிலிருந்த அவரெல்லாங் குளிர் மிகுந்த ஆசியாக் கண்டத்தின் வடக்கேயுள்ள ஆரிய மக்களைப் போல் அத்துணை உடல் வலிமை யுடையராக இருந்திலர். உடம்பில் உரங்குன்றியிருந் தமையால் தமிழர் தமக்குள்ளே கலாம் விளைத்து ஒற்றுமை குலைதற்கு இடம்பெறுதலின்றிப் பெரும்பாலும் ஒருமைப்பாடு உடையராய் நாட் கழித்தனர். உடல்வலிவின் குறைவால் அவர் மன அடக்கம் பெற்று எதனையும் ஆழ்ந்தறியும் இயல்புடைய ராயிருந்தனர். உலக இயற்கை யிலுள்ள அழகினைக் கண்டு வியந்து அவ்வளவில் அமைந்து விடாமல், அவ்வியற்கையின் உள்ளே நுழைந்து அங்கெல்லாம், பிறழாத ஓர் ஒருமைப்பாடும் அதனை அங்கே நிலைபெறுத்தி மறைந்து கிடக்கும் ஓர் உயிர்ப் பொருளினிருப்புங் கண்டறிந்து களிப்படைந்தனர். அங்ஙனம் இவ்வுலக இயற்கையில் மறைந்து ஊடுருவிக் கிடக்கும் அவ்வுயிர்ப்பொருளினையே கடவுள் என்று துணிந்து, அதனை மனத்தால் நினைந்து வாயால் வாழ்த்தி மெய்யால் வணங்கி வழிபட்டு வாழ்ந்தனர். அவர் தமது உடல்வலிவின் குறை பாட்டாற் பலப்பல வகையான சடங்குகள் இயற்றி வழிபடுதற்கு ஒருப்படாராய்த் தனியே ஓர் இடத்தில் மன அமைதியோடு இருந்து அக்கடவுட்பொருளை மனத்தாற் பலகால் உறைத்து நினைந்து, அதனால் அறிவாழ முடையராய்த் துலங்கு வாராயினர். இவர் இவ்வாறு இருப்ப, ஆசியாவின் வடபகுதிகளில் இருந்த ஆரியரோ குளிரால் உடம்பு இறுகி மிக்க வலிவுஞ் சுருசுருப்பும் உடையராயிருந்தனர்; உடம்பு வலிவு மிகுதியும் உடைமையாலுங், குளிரும் பனியும் மிகுந்த அவ்வடபகுதிகளில் உணவுப் பண்டங்கள் வேண்டும் அளவு கிடைத்திலாமையாலும் அவர்கள் ஒரிடத்தில் அமைதியாய் இருக்கப்பெறாமல், தொகுதி தொகுதியாகப் பல திசைகளிற் பிரிந்துபோய் அங்கங்குள்ளா ரொடு போர் புரிந்தும் அல்லாதவர்க்குக் கீழடங்கியும் ஆங்காங்குக் குடியேறி வாழ்ந்துவரலாயினர். அவர் மற்றையோருடன் போர் இயற்றப்போன காலங்களிலெல்லாந் தாமே வெற்றி பெறும் பொருட்டு அதனைப் பெறுவிக்கும் உயிர்த்துணையை நாடத் தலைப்பட்டனர். அதனால், தம் முன்னோரில் இறந்துபட்ட வர்களான இந்திரன் வருணன் மித்திரன் முதலியவரின் ஆவிகளையே தெய்வங்களெனத் துணிந்து வழிபடலானார்; வழிபடும் காலங்களிலெல்லாந் தாம் உணவாக அயின்றுவந்த பலவகையான விலங்குகளைக் கொன்று, அவற்றின் இறைச்சிகளைத் தேவர்க்கு ஊணென ஊட்டி வேள்விசெய்தும், வேள்விச் சடங்குகளைப் பலவேறு வகையவாய்ப் பெருக்கி இயற்றியும் வந்தனர். (இருக்கு வேதத்தின் முதன் மண்டிலத்தில் உள்ள, 33) இந்திரனே, எல்லாம்வல்லவனே, மிகுந்தபொருட் களஞ்சியங்களை ஒருங்கு சேர்த்துக்கொண்டு எம்முடன் வாணிகஞ் செய்யாதே! (3) செல்வத்தின் மிக்க தயுவை நீ தனியாகவே நின் குலிசப் படையாற் கொன்று, இந்திரனே, நீ நின் துணைவருடன் ஏகுகின்றாய்! தொன்றுதொட்டே சடங்குகள் செய்யாரான அவர்கள், வான்வெளிக்குச் சேயராய்ப், பலமுகமாய்த் தப்பியோடி அழிந்தனர். (4) (51) ஆரியரையுந் தயுக்களையும் நன்றாய் வேறுபிரித்தறிந்து கொள்க! சடங்குகள் இயற்றாத அவர்களைத் தருப்பைப்புற் பரப்புவோன்பால் ஒப்புவித்திடுக! (8) (53) இரிஜிவான் கீழ்ப்படியானாய் அவர்களை முற்றுகை செய்த அந்நாளில், வங்கிரிதனுடைய நூறு கோட்டை களையும் நீ அழித்தனையன்றோ! (8) துணைவரில்லாத சுசுரவர்களுடன் போர்புரியும் பொருட்டு, அறுபதினா யிரத்துத் தொண்ணுற்றொன்பது காலாட்களுடன் படையெடுத்து வந்த மக்களுள் அரசரான இருபதின்மரையும், ஓ இந்திரனே, பரந்த புகழுடையாய், நீ எல்லாவற்றையும் மேற்கடந்த தேர் உருளைகளால் அழித்துளையன்றோ! (9) (103) இந்திரனே, தயுவைத்தெரிந்து அவன்மேல் நின்கணையை ஏவுக! ஆரியனுடைய ஆற்றலையுஞ் சிறப்பையும் மிகுதிப் படுத்துக! (3) (163) தெய்வத்தை நோக்கி நினைத்த மனத்தினதாய் வலிய குதிரை வெட்டப்படுதற்கு முன்வந்து நிற்கின்றது. அதற்கு உறவினதாக வெள்ளாடும் அதற்குமுன் ஓட்டப் பட்டு வந்திருக்கின்றது; இருடியரும் பாடகரும் அதன்பின் வருகின்றனர். (12) அக்குதிரை மிகச்சிறந்த கொட்டிலுக்கு வந்திருக்கின்றது, தன் தாய் தன் தந்தையின்பால் வந்திருக்கின்றது. நன்கு வரவேற்கப்பட்டு இன்று அது தேவர்கள்பாற் செல்லும்; அதனைப் பலியாகக் கொடுப்பவனுக்கு அது பல நன்கொடை யினைத் தரும் (13) என்னும் இவைபோன்ற பாட்டுக்களால் அவர் அவ்வியல்பு உடையராதல் துணியப்படும். இவ்வியல்புள்ள ஆரியர் இந்தியாவினுட் புகுந்தபோது அங்கே தமக்கு முன்னிருந்த தமிழரிற் சிறிது கருந்தோற்றம் உடையராய் இருந்தவர் தமக்கெல்லாந் தயுக்கள், தாசர்கள் என்னும் பெயர்கள் இட்டு வழங்குவாராயினர். கிரேக்கர் மற்றை நாட்டவரைப் பார்பேரியர் என்றும், தமிழர் ஏனையோரை மிலேச்சர் என்றும் அழைத்தல் போல ஆரியருந் தமிழரிற் சிலரை அவ்வாறு பெயரிட்டழைத்தனர். தமிழர் முன்னாளில் ஆரியரையெல்லாம் மிலேச்சரென்று அழைத்தமை மிலேச்சர் ஆரியர் என்னுந் திவாகர பிங்கலந்தைச் சூத்திரத்தால் நன்கறியப்படும். உடல் வலிமை மிகவும் உடைய ஆரியர் இந்தியாவினுட் புகுதலுந் தமிழரிற் சிலர் அவரொடு போர் புரிந்து தோல்வியடைந்தனர்; சிலர் அமைதியின் பொருட்டு மலைகளிலுங் காடுகளிலும் போய் இருந்தனர். சிலர் கடும் போர் மலைந்து ஆரியரை வென்றனர்; சிலர் தாந்தாம் இருந்த இடம்விட்டுப் பெயராமல் ஆரியரை விருந்தாக ஏற்று அவருடன் உறவாடி அவர் வழக்க ஒழுக்கங்களிற் சிலவற்றைத் தாந் தழுவியுந் தம் வழக்க ஒழுக்கங்களை அவர் தழுவுமாறு செய்வித்தும் அவரோடு ஒருமையுற்று வாழத் தொடங்கினர். இவ்விருவகை இனத்தாரும் ஒருவரோடு ஒருவர் மருவி வாழும் நாட்களில் அவரவர் தத்தமக்கே உரிய வழக்கவொழுக்கங்களை முழுவதுந் திரித்துப் பிறழ்த்தி விடாமல், அவைதம்மிற் பெரும்பான்மைய வற்றை முன்னிருந்தபடியே வைத்துக்கொண்டு கடைப்பிடித்து ஒழுகினர். இக்காலத்தில் ஆரியருட் குருக்கள்மார் பலர் தோன்றிப் பலவகையான வேள்விகள் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தி அவற்றைத் தமிழ அரசர் உதவியாற் செய்து வந்தனர்; அப்போதுதான் அவ் வேள்விச் சடங்குகள் செய்ய வேண்டும் முறைகளை மிக விரித்தெழுதிப் பிராமணங்கள் இயற்றப்பட்டன. எல்லை இல்லாத ஏழை விலங்கினங்களைக் கொலை செய்து இயற்றப்படும் வேள்விகளும் வேள்விச் சடங்குகளும் ஆரியக் குருக்கள்மார்களின் பிறழ்ச்சி அறிவால் எங்கும் மிகுந்த வரவே, உயிர்க்கொலைக்கு இயற்கையிலே உடம்படாத தமிழரில் அறிவான்மிக்க சான்றோர்கள் ‘இங்ஙனந் தீதற்ற உயிர்களின் உடம்பைச் சிதைத்து வேள்விகள் செய்தலாற் போதரும் பயன் என்னை? என்று தம் ஆரிய நண்பருடன் நயமாய்க் கலந்து வழக்கிட்டு அவரிற் சிலரைத் தம்வழிப்படுத்திக் கொண்டனர். இங்ஙனத் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமுந் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலேதான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்துபோந்த உயிர்க்கொலையினை நிறுத்துதற் பொருட்டாகத் தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பட்டனவாமென்பதற்கு அவ் வுபநிடந்தங் களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பல விருக்கின்றன5 இங்ஙனம் உடநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதுங் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமையானும், ஆரியக் குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருத்தினமையானும் ஆரியர்க்குந் தமிழர்க்கும் இதன்பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும் நேர, அவ்வமயத்தில் வட நாட்டிலிருந்த தமிழ அரசகுலத்திற் கௌதமசாக்கியர் என்பார் தோன்றிப் பழைய தமிழ்மக்கள் ஆராய்ந்து வந்த அரிய நல்லொழுக்க முறைகளை எடுத்து விரித்துச் சொல்லப் புகுந்தார். கல்லாத மக்கள் மனமுங் கரைந்து உருகும்படி மிக்க இரக்கத்துடன் நல்லொழுக்கங்களின் விழுப்பத்தை எடுத்து விரித்து, இந் நல்லொழுக்கங்களை ஒருவன் வழுவாமற் றழுவி நடப்பனாயின் அவனுக்கு எல்லாத் துன்பங்களினின்றும் விடுபடும் நிருவாணம் என்னுந் தூயநிலை தானே வருமென்றும், அறிவில்லாத ஏழை உயிர்களை ஆயிரமாயிரமாகக் கொன்று வேள்வி வேட்டலால் மேலுமேலுந் தீவினையே விளையுமல்லது நல்வினை எய்தாதென்றுங் கௌதமர் அருள்கனிந்து அறிவுறுப்பாராயினர். மக்கள் உள்ளத்தை எளிதிலே கவர்ந்து உருக்கும்படியான கௌதமர் கொள்கைகள் சில நாளிலே எங்கும் பரவலாயின. மக்களெல்லாரும் ஆரியக் குருக்கள்மார் சொற்களில் ஐயுறவு கொண்டு தம் அறிவால் நல்லன பலவும் ஆராயப்புகுந்தனர். எங்கும் அவரவர் தத்தங்கருத்துக்களிற் றோன்றும் நுட்பங்களைத் தாராளமாய் வெளியிடத் துணிந்தனர். பிராஞ்சு தேயத்திற்6 றோன்றியதை யொத்த ஒரு பெரிய மாறுதல் எங்கும் உண்டாவ தாயிற்று. இங்ஙனம் ஒரு பெரிய மாறுதல் இந்திய நாடு முழுவதுஞ் சுழன்றுவரும்போது, தென்னாட்டிலுள்ள தமிழருந் தாம் தமதுள்ளத்தே ஆராய்ந்து வைத்த அரிய பெரிய நுண்பொருள்களை வெளியிட்டுத் தமது பண்டைத் தமிழ்மொழியினைப் பண்டைநாளிற் போலவே பெரிதும் வளம்படுத்தும் அரியமுயற்சியில் தலை நின்றார். இங்ஙனந் திருவள்ளுவர் பிறப்பதற்குமுன் ஒரு நானூறு ஆண்டும் பின் ஒரு நூறாண்டும் மிக விரிந்து பெருகிய சமய விளக்கமே அக்காலத்திற் றமிழ்மொழியின்கண் அரும்பெருஞ் செந்தமிழ் நூல்கள் பல தோன்றுதற்கு ஒரு பெருங்காரணமாயிற்று என்று தெளிவுற அறிதல் வேண்டும். ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் இயற்றிய அரியபெரிய திருக்குறள் என்னும் நூலிற் கொல்லாமை புலாலுண்ணாமை, ஒழுக்கமுடைமை என்னுந் தமிழர்க் குரிய அறிவாழ நுட்பப் பொருள்கள் பலகாலும் பலவிடத்தும் எடுத்து வற்புறுத்தப்படுதல் காண்க. இனி, இப் பொருள்களெல்லாம் பௌத்த சமய நூல்களி லிருந் தெடுத்துச் சொல்லப்பட்டன என்பாருந், திருவள்ளுவ நாயனார் பௌத்தரே என்பாரும் உளர். இயற்கையிலே தமிழர்க்குரிய ஒழுக்கங்களின் விழுப்பத்தையே கௌதமர் என்னுந் தமிழ்ப்பெரியார் விளக்க வந்தமையால் அவ்வொழுக்க வரிசைகள் அவர் சொன்னபின் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது பொருந்தாது. திருவள்ளுவனார் முதலிய சான்றோர், தமக்குந் தம்மினத்தார்க்கும் இயற்கையிலே தோன்றிய அரும்பெருங் கருத்துக் களையே பௌத்த சமயம் யாண்டும் விரிந்து பரந்த காலத்தில் தடையின்றிச் சொல்லுதற்கு இடம்பெற்றாராகலின், அக்கருத்துகள் திருவள்ளுவனார்க்குங் கௌதமசாக்கியர்க்கும் பொதுவாவனவேயாம் என்று துணிக. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள். 259) என்னுந் திருக்குறளில் ஆசிரியர் ஆரியமக்கள் செய்து போந்த வேள்வி வினையை மறுத்துக் கொல்லாமையின் சிறப்பை வலியுறுத்திக் கூறியதுங் காண்க. இன்னும் இவ்வாறே ஆசிரியர் ஆங்காங்கு ஆரியமக்கள் செய்து போந்த மற்றை வினைச்சடங்குகளையும் மறுத்துக் கூறுதல் கண்டு கொள்க. ஈண்டு அவையெல்லாம் எடுத்துரைப்பிற் பெருகும். இனி, இவ்வாறு ஒரு காலத்தில் நடைபெறும் ஒழுக்கங்களுக்கும் அக் காலத்திற் றோன்றும் நூல்களுக்கும் பெரியதோர் இயைபு உண்டென்பதனை விளக்குதற் பொருட்டே இவ்வோர் ஐந்நூற்றாண்டின்கண் நடைபெற்ற நிகழ்ச்சியினை ஒரு சிறிது விரித்துக் கூறினேம். ஒரு நூலின் இயல்பை உள்ளவாறு உணர்தற்கு அந்நூல் எழுதப்பட்ட காலத்தின் இயற்கை இன்றியமையாது அறியற்பாலதாகும். இதுபற்றியே ஆங்கிலமொழியில் நுட்பவாராய்ச்சிகள் பல எழுதிய உவிலியம் மிண்டோ7 என்னும் ஆராய்ச்சி உரைகாரர், காலப்போக்கு என்பது இன்னதென்று தொட்டு அறியப்படாத ஓர் இயற்கை வாய்ந்தது; அஃது அக்காலத்து மக்கள் இயற்றும் நூல்களிலுங், கொத்து வேலைகளிலும், உடைகளிலும், அவர்கள் நடாத்தும் வாணிக வாழ்க்கையிலும், அவர்கள் அமைக்குந் தொழிற் களங்களிலும் எல்லாந் தன் அடையாளத்தைப் பதிய இடுகின்றது. ***ஒரு புலவனும் ஒரு கால இயற்கையின் வழிநின்றே நூல் எழுதுபவனாவன்; அக்கால இயற்கை அல்லது அம் மக்கள் ஒப்புரவு அவன் எழுதுவனவற்றை எல்லாந் தன் உருவாக்கி அவற்றிற்குத் தன் நிறத்தை ஊட்டுகின்றது. இதனை நம் கண்டறிவதற்கு அக் காலத்தின் பொது இயற்கையும், அதன்கண் அவன் குறிப்பிட்ட மக்கள் நடையினியற்கையும், அவன் இருக்கும் இடத்தின் இயற்கையும் இன்றியமை யாது ஆராயற்பாலன வாகும்8 என்று மிக நுட்பமாக எடுத்து மொழிந்திட்டார். அது கிடக்க. இனி, இவ்வோர் ஐந்நூறாண்டிற் றோன்றிய நூல்களெல்லாம் பெரும்பாலும் அக்கால இயற்கை தங்கண் எதிர்தோன்றி விளங்கப் பெறும் ஒரு தன்மையுடையவாகுமென்று தெரிதல் வேண்டும். அறிவு ஆழமின்றி ஆரிய மக்கள் செய்துபோந்த வீணான வெறுஞ்சடங்குகளிற் கட்டுப்படாமல் தனியே பிரிந்துநின்ற தமிழ் மக்கள், தம் பண்டையாசிரியர்கள் சென்ற முறையே உலக இயற்கையினையும், மக்களியற்கையினையும் உள்ளுருவி நுழைந்து ஆராய்ந்து தாங்கண்ட அரிய பொருள் நுட்பங்களை அமைத்து நூல்கள் இயற்றினார். ஆகவே, உலக இயற்கையினையும், மக்கள் இயற்கையினையும் ஆராயும் ஆராய்ச்சி இக்காலத்துத் தோன்றிய நூல்கட்கெல்லாம் பொதுத்n தன்மையாகு மென்றுணர்ந்து கொள்க. இனி, இவ்வுலக இயற்கையினை ஆராயும் நூல்கள் எல்லாம் புறப்பொருள்n எனவும், மக்களியற்கையினை ஆராய்வனவெல்லாம் அகப்பொருள் எனவுந் தொல்லாசிரியரால் வகுக்கப் பட்டன. இவற்றுள் அகப்பொருள் என்பது ஆண் பெண் என்னும் இருபாலாரையுஞ் செறியப் பொருத்துவதாய், மற்றெல்லா உணர்வுகளையும் நினைவுகளையுந் தனக்குக் கீழாக நிறுத்தித் தான் அவற்றின்மேல் அமர்ந்து தனக்கு நிகரின்றிப் பெருமையுடன் தோன்றுவதாய், இன்பமுந் துன்பமுமெல்லாந் தோன்று தற்குத் தான் நிலைக்களனாய், எல்லா உலகங்களும் எல்லாப் பொருள்களுந் தன்னைச் சுற்றிச் சுழன்று செல்லத் தான் அவற்றின் இடையே சிறிதுந் திரிபின்றி நிலைபெற்று விளங்குவதாய் உள்ள அன்பு அல்லது காதல்9 என்பதனை அடிப்படையாகக் கொண்டு மக்களியற்கை முழுவதூஉம் ஒருங்கே ஆராய்வதாகும். இனிப், புறப்பொருள் என்பது மக்கள் உலக இயற்கையுடன் பொருந்தித் தமக்கு இன்றியமையாதனவான பல்வகை முயற்சிகளையும் முற்றுப் பெறுவித்தற் பொருட்டுச் செய்யுந் தொழில் வேறுபாடுகளும் பிறவுந் தெள்ளிதின் ஆராய்வதாம். இனிப் பொதுவாக எல்லா மாந்தர்க்கும் உரிய இயற்கை யினைப் பகுத்துரைப்பதாகலின், அகப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களிற் சிறப்பாக ஒர் ஆண்மகனையும் ஒரு பெண் மகளையும் எடுத்து வைத்து, அன்னவர் தமக்குரிய பெயர்சொல்லி அவை தாம் எழுதப் படுதல் இல்லை. எல்லா மக்கட்கும் பொதுவாய் வருகின்ற அன்பினால் நிகழும் ஐந்திணை ஒழுக்கத்தை ஒருவர் இருவர்க்கு வரையறுத்துக் கூறுதல், அவ்வன்பின் ஐந்திணையொழுக்கம் ஏனையோர்க்கு இல்லையாம் போலும் என மலைவு தோற்றுவித்து வழுவாய் முடிந்திடுமாகலின், அப்பாட்டுக்கள் எல்லாங் குறித்து ஒருவர் பெயர் சொல்லாமலே வரையப்படும் என்பது தெளிந்து கொள்க. இது கடைப்பிடியாய் உணர்த்துதற்கே ஆசிரியர் தொல்காப்பியனார், மக்கள் நுதலிய அகன்ஐந் திணையுஞ் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறா அர்?10 என்று கிளந்து கூறினார். இனி, இதுபோற் பொதுவாகவன்றி, மக்களுள் ஒவ்வொருவருந் தத்தம் முயற்சி வேறுபாடுகளுக்கு ஏற்பப் பல்வகைப்பட்ட உணர்வும் பல்வகைப்பட்ட செயலும் உடையராய் உலகநடையறிந்து ஒழுகுவராகலின், இங்ஙனமான அவர்தம் புறப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களில் அவ்வவர்க்கே உரிய பெயர் பண்பு செயல் முதலியன எல்லாங் கிளந்தெடுத்துக் கூறி மற்று அவை எழுதப்படும் என்க. ஒருவர் பண்புஞ் செயலும் ஏனையொருவர் பண்புஞ் செயலும் போலன்றி உலகநடையிற் பெரும்பான்மையும் வேறுபட்டு வெளியே தோன்றிக் கிடத்தலால், அங்ஙனம் வெளிப்பட்டுத் தோன்றும் பண்பு செயல்களைக் கூறும் புறத்திணைப் பாட்டுக்களில் அவ்வப்பண்பு செயல்கட்கு உரியார் பெயர் கூறல் வேண்டுவது இன்றியமையாததேயாம் என்க. இந்நெறி அறிவுறுத்துதற் பொருட்டே ஆசிரியர் தொல்காப்பி யனார், புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது அகத்திணை மருங்கின் அளவுத லிலவே11 என்று கூறினார் இனி, அகம் புறம் என்னும் இவ்விருவகை ஒழுக்கமுங்கலந்து வரும் பாட்டுக்களில் அகவொழுக்கமே பெரும்பாலும் முன்னும் பின்னுந் தொடர்புற்றுச்செல்ல, அதன் இடையே ஒரு புறவொழுக்கஞ் சிறுகிவரு மாயின், அவற்றுள்ளும் ஒருவர் பெயர் குறித்துச் சொல்லப்படுவதில்லை. அவ்வாறன்றி, அவற்றுள் முன்னும் பின்னும் ஒரு புறவொழுக்கமே தொடர்புற்றுச் செல்ல இடையே ஒர் அகவொழுக்கங் குறுகி வருமாயின் அவற்றுள் அவ்வொழுக்கம் உடையார் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும். இவ்வாறன்றி அகப்புறவொழுக்கங்கள் இரண்டும் இணைந்து ஒப்ப வருமாயின் அங்கும் அம்மக்கள் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும் என்பது அறிக. இங்குச் சொல்லப்பட்ட இவ்விலக்கணங்கள் இவ்வைந்நூறாண்டிற் பிறந்த நூல்களிலெல்லாம் இனிது காணப்படும். அடிக்குறிப்புகள் 1. Ruskin : Modern painters, Vol. III P. 284 2. குறுந்தொகை 167. 3 காரோடர் உரைகாரர் - திவாகரம், மக்கட் பெயர்த் தொகுதி 4. There can be little doubt that Dravidian Languages were actually floursishing in the western regions of Northen India at the period when languages of the Indo - European type were introduced by the Aryan invasions from the north west. Dravidian characteristics have been traced alike in Vedic and Classical Sanscrit. in the Prakrits or early popular dialects and in the modern vernaculars derived from them ”. pp.41,42 Ch. ii, “The Cambridge History of Ancient India.” 5. வேளாளர் நாகரிகம் என்னும் எமது நூலில் இதற்குச் சான்றுகள் காண்க. 6. The French Revolution 7. Professor William Minto 8. The Literature of the Georgion Era, pp. 42- 43 9. Love 10. தொல்காப்பியம், பொருள், 54. 11. தொல்காப்பியம் பொருள், 55. 3. முல்லைப்பாட்டின் இயற்கையும் அதன் பாட்டியற்றிறனும் இனி, இங்கு ஆராய்தற்பொருட்டு எடுத்துக் கொண்ட முல்லைப்பாட்டில் தன் மனையாளைப் பிரிந்து பகைவேந்தரொடு போர் செய்ய போவானொரு தலைவன் தான் பிரிவதனை அவளுக்கு நயமாக உணர்த்திக் கார்காலத் தொடக்கத்தில் வருவேன், அதுகாறும் நீ ஆற்றியிரு என்று சொல்லிப் பிரிய, அச் சொல்வழியே ஆற்றியிருந்தவள், அவன் சொன்ன கார்காலம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் பெரிதும் ஆற்றாளாயினள்; பின்னர்ப் பெருமுது பெண்டிர் பலவகையால் ஆற்றுவிக்கவும் ஆற்றாதவள் இங்ஙனம் ஆற்றாது வருந்துதல் கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியுமாதலால், அவர் வருங்காறும் ஆற்றதலே செயற்பாலது என்று உட்கொண்டு பொறுமையுடன் இருந்த தலைவியிடத்துச், சென்ற தலைவன் மீண்டுவந்தமை ஆகிய அகப்பொருள் இருப்புச் சொல்லப்பட்ட மையால், இப் பாட்டின்கட்டலைமகன் தலைமகள் சிறப்புப் பெயர் இன்னவென்று எடுத்துச் சொல்லப்படவில்லை. இங்ஙனத் தலைமகன் தலைமகளைப் பிரியும்போது ஆற்றுவித்துப் போதலும், போனபின் அவன் வினை முடித்து வருந்துணையும் அவள் ஆற்றியிருத்தலும் இங்குச் சொல்லப்பட்ட தலைமக்களுக்கே யன்றி எல்லார்க்கும் உரியனவாகையால் ஆசிரியர் நப்பூதனார் அவர் பெயர் இங்கெடுத்துச் சொல்லாமை பற்றி வரக் கடவதோர் இழுக்கு ஒன்றுமில்லை யென்றுணர்க. இனி, முல்லை என்னும் அக வொழுக்கத்தோடு இயைபுடைய புறவொழுக்கம் வஞ்சி என்பதாம். வஞ்சி தானே முல்லையது புறனே1 என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார், வஞ்சி என்பது ஒர் அரசன் வேற்றோர் அரசன் நாடு கைப்பற்றுதற் பொருட்டுப் படையெடுத்துச் செல்வது. வஞ்சித்திணை முல்லைத் திணைக்குப் புறனானவாறு யாங்ஙனமெனின்; மனைவி தன் காதலனைப் பிரிந்து மனையின்கண் இருப்பது போல, அவள் கணவனும் அவளைப் பிரிந்து பாடி,வீட்டின்கண் இருப்பன் ஆகலானும், தலைமகள் வீடு காட்டின்கண் இருப்பது போலப் பாடி, வீடும் பகைவர் நகர்க்கு அரணான காட்டின்கண் அமைக்கப்படும் ஆகலானும் முல்லையும் வஞ்சியுந் தம்முள் இயைபு உடைய ஆயின என்க. இனி, நப்பூதனார் என்னும் நல்லிசைப் புலவர் முல்லை என்னும் அகவொழுக்கத்தினை விரித்துச் செய்யுள் இயற்றுகின்றார் ஆகலின், அதனோடு இயைபுடைய வஞ்சியொழுக்கத்தை அரசன் பகைமேற் சென்று பாசறையிலிருக்கும் இருப்புக் கூறுமுகத்தால் இதன்கண் அமைத்துக் கூறுகின்றார். இவ்வாறு தாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கு மாறுபடாமல் இவ்வாசிரியர் வேறுபொருளை இதன்கட் பொருத்தி உரைக்கும் நுணுக்கம் மிகவும் வியக்கற்பாலதொன்றாம். இன்னுந் தாங் கூறல்வேண்டும் முதன்மையான ஒரு பொருளைப் பொறுக்கான சொற்றொகுதியினால் எடுத்துக் கோவையாகத் திரித்து நூற்றுக்கொண்டு செல்லும்போது, அப்பொருளில் இடையே அதனோடு இயைபுடைய வேறொரு பொருளை இயைத்துச் சொல்லல் வேண்டுவது நேருமாயின் அப் பொருளின்பங் கெடாமல் இடன் அறிந்து அதனைப் பிணைப்பது நல்லிசைப் புலவரிடத்துக் காணப்படும் அரிய வினைத்திறனா மென்பது அறியற்பாற்று. இவ்வரிய வினைத்திறன் நப்பூதனார் இயற்றிய இச்செய்யுளின்கண் ஆழ்ந்தமைந்து விளங்கிக் கிடக்கின்றது. முல்லை என்னும் அக வொழுக்கத்தினை விதந்து சொல்ல வந்த ஆசிரியர் அதனை முற்றுங்கூறி முடித்தபின், அதனோடு இயைபுடைய அரசன் போர்மேற் செல்வதான வஞ்சியைக் கூறுவராயிற், கற்பவர்க்குப், பின் ஒட்டிச் சொல்லப்படும் வஞ்சி ஒழுக்கத்தினைக் கேட்டலிற் கருத்து ஊன்றாமையேm யன்றி, இரு வேறு ஒழுக்கங்கள் தனித் தனியே சொல்லப்பட்டும் ஒன்றற்கே உரிய முல்லை என்னும் பெயர் மட்டுமே சூட்டிய குற்றமும் உண்டாம். அவ்வாறன்றி முல்லைப் பொருளுக்கு நடுவே எங்கேனும் ஓரிடத்திற் பொருத்தமின்றி அவ் வஞ்சிப் பொருளை மாட்டிவிடினுங் கற்போர் உணர்வு இளைப்படையுமாகலின் அதுவுங் குற்றமேயாகும். இனி, இக்குற்றமெல்லாம் அணுகாமல், இணங்கப் பொருத்துமிடந்தான் யாதோவெனிற் கூறுதும்: எடுத்துச் சொல்லப்படும் முதன்மைப் பொருள் முற்றும் முடிவுபெறாமற் காற்பங்கோ அல்லது அரைப்பங்கோ சிறிது கருக்கொண்டு ஓரிடத்திற் கூடிநின்று, கற்பார்க்கு இனி இஃது எங்ஙனம் முடியும்! எங்ஙனம் முடியும்! என்று முடிவு அறியும் விருப்பத்தினை எழுப்புவித்து, அவர் அதனை முழுதுங்கற்றுத் துறைபோகும் வண்ணம் அப்பொருள் இடையறுந்து நிற்கும் இடமே, பிறபொருளை இணைப்பதற்கு இசைவான இடுக்கு வெளியாம் என்க. இவ்வாறு இப் பாட்டின்கண் முல்லைப்பொருள் இடையறுந்து நிற்கும் இடுக்குவெளி யாதோவெனிற் கூறுதும்: தலைமகன் கூறிய கார்காலம் வருதலை உணர்ந்து ஆற்றாமல் அழுது வருந்தும் நங்கைக்கு நற்சொற்கேட்டு வந்த பெருமுது பெண்டிர், நாங்களும் படைத்தலைவருங் கேட்ட நற் சொல்லால் நின் காதலன் தான் எடுத்துப் போன போர் வினையை விரைவில் முடித்துத் திரும்பி நின்னுடன் வந்து சேர்வன்;அவன் வரும் வரையில் நீ ஆற்றிக்கொண்டு இருத்தல் வேண்டும் என்று பலகாலுஞ் சொல்லி வற்புறுத்தவும், அவள் அவர் சொற்களைக் கேளாளாய், மை தீட்டிய பூப்போன்ற கண்ணினின்றும் நீர் முத்துப்போல் துளித்துளியாய் விழக் கலுழ்ந்து வருந்தினாள் என 23 ஆவது வரியில் முல்லைப்பொருள் முற்றும் முடிவுபெறாமல் இடையறுந்து நிற்பது காண்க. இப் பாட்டினைக் கற்போர் இவ்வளவில் தாங் கற்பதை நிறுத்திவிடாமல், இங்ஙனம் வருந்திய அப் பெண்மணி பின் எவ்வாறு ஆயினாள் எனப் பின்னும் அறிவதற்கு மிக விழைகுவர்; இங்ஙனம் அவர் முடிவறியும் விழைவால் மேலுங் கற்பதற்கு மனவெழுச்சி மிகுந்து நிற்கும் பொழுது பிறபொருள் இடையே இணைத்துச் சொல்லப்படு மாயினும் அதனால் அவர் தாம் சிறிதும் இளைப்படையாது, அவ் விடைப்பட்ட பொருளையுங் கற்று மேற்சென்று பொருள் முடிவு காண்பரென்பது தெற்றென விளங்கும். ஆகவே, இங்ஙனம் முல்லைப்பொருள் இடையறுந்து நிற்கும் இடங்கண்டு அங்கே முல்லைப் பொருளைமறித்து, அதனோடு இயைபுடைய வஞ்சிப் பொருளைக் கொணர்ந்து நுழைத்துப், பின் மறிக்கப்பட்ட முல்லைப் பொருளை 80 ஆவது வரியிலே இன் துயில் வதியுநற்காணாள் துயர் உழந்து என்பதுடன் கொண்டுபோய் இணங்கக் கொளுத்தி, ஆசிரியர் இச் செய்யுளைத் திறம்பட நடாத்தும் நுட்பவினையின் அருமைப் பாட்டை உய்த்துணர்ந்து மகிழ்ந்து கொள்க. இன்னும் இவ் வகப்பொருள் முல்லையொழுக்கத்தினை இவ்வாறு நடாத்திக்கொண்டு சென்று, 88 ஆவது வரியில் இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள் என்பதுடன் முடிக்குமிடத்தும் வினைவயிற்பிரிந்த தலைமகன் மீண்டு வந்தமை சொல்ல வேண்டுதலின், அங்ஙனஞ் சொல்லப்படும் பொருளையுங் கற்போர் உற்றுநோக்கும் பொருட்டு இவ்வாறு கிடந்தோளுடைய அழகிய செவிநிறைய ஆரவாரித்தன என்று மேல் ஓட்டப்படுஞ் சொற்றொடரின் பயனிலையான ஆரவாரித்தன என்பதை, முடிக்கப்படும் அகப்பொருளின் இறுதி மொழியான கிடந்தோள் என்பதுடன் சேர்த்தி, அதன் எழுவாயான வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே என்பதைக் கடையிலே நிறுத்தி, அவ்விரண்டற்கும் இடையில் அவன் மீண்டு வந்தமை விளங்கக்கூறி அமைத்தார். முடிக்கின்ற இடத்திற் கிடந்தோள் செவி நிறைய ஆலின என்று உரைப்பின், எவை ஆலின? என்னும் ஆராய்ச்சி தோன்றி மேல்வரும் பொருள் அறிய வேட்கை மிகும் ஆதலால், இவ்வாறு பயனிலையை முன்னும் எழுவாயைப் பின்னுமாக வைத்துப் பிறழக்கூறினார் என்க. இங்ஙனம் பிறழக் கூறுதல் பொருள் வலிவு தோன்றுதற் பொருட்டுங், கற்பார்க்கு மேலுமேலும் விழைவுள்ளந் தோற்று வித்தற் பொருட்டுமேயாம் என்பது ஆங்கில மொழியிற்2 பெயின் என்பவர் எழுதிய அரியதோர் அணியிலக்கண நூலிலுங் கண்டுகொள்க. இந் நுணுக்கமெல்லாம் நன்கறிந்து செய்யுளி யற்றிய நப்பூதனார் பேரறிவும் பேராற்றாலும் பெரிதும் வியக்கற்பாலனவாம் என்க. அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியம், பொருள் 61. 2. Alexander Bains English Composition and Rhetoric, Part I Rules 10 – 14 4. முல்லைப்பாட்டில் நீளச் சென்று பொருந்தும் சொற்றொடர் முடிபு: மாட்டு இனி, மேற்கூறியவாறு முல்லைப்பொருள் ஒழுக்கம் 23 ஆவது வரியிலே இடையறுந்து நிற்ப, நடுவே வஞ்சிப்பொருள் புகுத்தப்பட்டுத் திரும்பவும் 80 ஆவது வரியிலே தன்பொருள் பொருந்தி, 88 ஆவது வரியில் அது முற்றுபெருந் தறுவாயிற் பின்னும் முடிவு பெறாததுபோல் நின்று இடையே வேறு பொருள் தழுவி 103 ஆவது வரியிலே பொருள் முதிர்ச்சிபெற்று முடிந்தது உற்றுணரற் பாலதாம் என்க. இங்ஙனம் ஒரு பாட்டின் முதன்மைப் பொருள் இடையிடையே அறுந்து அகன்றுபோய்ப் பொருந்தி முடிதல் இம் முல்லைப்பாட்டிற்கும் இதனொடு சேர்ந்து ஏனை ஒன்பது பாட்டுக்களுக்கும் பொதுவியற்கையாகும். இவ்வாறு அகன்று கிடக்கும் பொருளை அணுகப் பொருத்திக் காட்டுதலையே ஆசிரியர் தொல்காப்பியனார் மாட்டு என்பர். அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும், இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் என்பது சூத்திரம் (தொல்காப்பியம், செய்யுளியல், 211) பெருங்காப்பியங்களும் இத்தகைய பெரும் பாட்டுக் களும் இயற்றுகின்ற பெரும்புலவர் இவ்வாறு அகன்று பொருள் முடிய வைத்தல் உயர்ச்சியடைந்த எல்லா மொழிகளிலுங் காணப்படும். ஆங்கில மொழியில் நல்லிசைப் புலவரான மில்டன் (Milton) என்பவரும் இவ்வாறே தம்முடைய செய்யுட்களில் அகன்று பொருள் முடியவைத்தல் கண்டுகொள்க. 5. முல்லைப்பாட்டின்மேல் நச்சினார்க்கினியருரை இனி, இதுவே மாட்டு என்னுஞ் செய்யுளுறுப்பின் பயனாமென்பது நுண்ணறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக்கிடப்பவும், இதன் கருத்துப் பொருள் இதுவாதல் அறியமாட்டாத நச்சினார்க்கினியர், செய்யுளில் இடையற்று ஒழுகும் பொருள் ஒழுக்கம் அறிந்து உரை எழுதாராய், ஓர் அடியில் ஒரு சொல்லையுந் தொலைவிற் கிடக்கும் வேறோர் அடியில் வேறொரு சொல்லையுந் தமக்குத் தோன்றியவா றெல்லாம் எடுத்து இணைத்துத் தாமோர் உரை உரைக்கின்றார். நச்சினார்க்கினியர்க்கு முன்னேயிருந்த நக்கீரர், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், பரிமேலழகியார், அடியார்க்கு நல்லார் முதலான உரையாசிரியன்மாராதல், பின்னேயிருந்த சிவஞானயோகிகள் முதலியோராதல் இவ்வாறு செய்யுட் களைக் கண்டவாறெல்லாம் அலைத்து உரை எழுதக் கண்டிலம். மேலும். நச்சினார்க்கினியர் இங்ஙனஞ் செய்யுட்களை அலைத்து நலிந்து பொருள் சொல்லு முறையை ஆசிரியர் சிவஞான யோகிகள் தாம் இயற்றிய தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் ஆங்காங்கு மறுத்தருளியவாறுங் காண்க. அகன்று கிடக்குஞ் செய்யுட் பொருளை அணுக வைத்துப் பொருத்திச் சொல்வதே தொல்காப்பியனார் கூறிய மாட்டு என்னும் உறுப்பாவதன்றிச் செய்யுள் ஒரு பக்கமும் உரை ஒரு பக்கமுமாக வைத்து உரைப்பது அஃது அன்றாம் என்பது கடைப்பிடிக்க. அற்றன்று; நச்சினார்க்கினியர் உரைக்கும் உரைப்பொருள் சிறந்ததாகலின், அவர் அவ்வாறு செய்யுட்களை அலைத்துப் பொருள் கூறுதல் குற்றமாகாதெனின்; நன்று சொன்னாய், அவர் எவ்வளவுதான் சிறந்த உரை உரைப்பினும் அது செய்யுட் பொருளைக் கௌவிக் கொண்டு செல்லாமல் வேறுபடுமாயின், அது கொள்ளற் பாலதன்று என மறுக்க. செய்யுளுக்கு இசைய உரையெழுதுதல் வேண்டுமேயன்றி, உரைக்கு ஏற்பச் செய்யுளை அலைத்து மாற்றல் வேண்டுமென்றல் முடிக்குத் தக்க தலைசெய்து கொள்வேம் என்பார் சொற்போல் நகையாடுதற்கே ஏதுவாமென்றொழிக. அற்றன்று. செய்யுளியற்றிய புலவரே ஓர் ஒழுங்கு மின்றி அவ்வாறு சொற்களையும் பொருள்களையும் சிதறவைத்துப் பாடினாராகலின் அக் கருத்தறிந்து நச்சினார்க் கினியர் அங்ஙனம் பொருளுரைத்துக் கொண்டார் என்னாமோ வெனின்; அறியாது கடாயினாய், உலகவியற்கையும் மக்களியற்கையும் அறிந்து, வரிசை வரிசையாக அரும்பொருள் விளங்கித் தோன்றப் பாடும் நல்லிசைப் புலவர் அவ்வாறு ஓரொழுங்குமின்றிப் பாடினாரென்றல் உலகில் எங்குங் காணப்படாமை யானும், அது நல்லிசைப் புலமை ஆகாமையானும் அங்ஙனஞ் சொல்லுதல் பெரியதோர் இழுக்காய் முடியும் என்றுணர்க. அற்றாயின், மிக்க செந்தமிழ்நூற் புலமையும் நுணுகிய அறிவுமுடைய நச்சினார்க்கினியர் அவ்வாறு இணங்காவுரை எழுதியதுதான் என்னையோவெனின்; வடமொழியில் இங்ஙனமே செய்யுட்களை அலைத்துப் பாட்டு ஒரு பக்கமும் உரை ஒரு பக்கமுமாக இணங்காவுரை எழுதிய சங்கராசிரியர் காலத்திற்குப் பின்னேயிருந்த நச்சினார்க்கினியர், வட மொழியில் அவர் எழுதிய உரைகளைப் பன்முறை பார்த்து அவைபோற் றமிழிலும் உரை வகுக்கப் புகுந்து தமிழ்ச் செய்யுள் வழக்கின் வரம்பழித்து விட்டாரென்றுணர்க. வேதாந்த சூத்திரத்திற்குச் சங்கராசிரியர் இயற்றிய பாடியவுரை அச் சூத்திரத்திற்குச் சிறிதும் ஏலாவுரை என்பது, ஆசிரியர் இராமாநுசர் பாடிய உரையானும் தீபா (Thibaut) பண்டிதர் திருத்திய ஆங்கில மொழிபெயர்ப்பானும் உணர்க. இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை பொருந்து மிடங்களிலெலாம் ஏற்றுக்கோடற்பாலதேயாம் என்பதும், அரிய பெரிய பழந்தமிழ் நூல்கள் விளங்குமாறு விளக்கவுரை விரித்த நச்சினார்க்கினியர் இவ்வாறு ஒரோவிடங்களில் நலிந்துரை எழுதுதல் பற்றி இகழப்படுவாரல்ல ரென்பதும் ஈண்டு வற்புறுத்துகின்றாம். இனி இம் முல்லைப்பாட்டினுரை நச்சினார்க்கினியராற் பெரிதுஞ் செய்யுளை அலைத்து வரையப்பட்டதாகலின், அவருரையின் உதவிகொண்டே இப்பாட்டுக்குச் செவ்வையான வேறொரு புத்துரை பின்னர் எழுதுகின்றாம்; அங்கு அதனைக் கண்டுகொள்க. 6. பாட்டின் வரலாறு இனித் திருமுருகாற்றுப்படை முதலான பாட்டுக்கள் ஒன்பதும் உள்ளோன் ஒரு தலைவனையே குறிப்பிட்டுப் பாடவந்தமையால், இம் முல்லைப்பாட்டிற்குத் தலைவன் பெயர் எழுதப்பட வில்லையாயினும், இதற்கும் உள்ளோன் ஒரு தலைவன் உண்டென்பது துணியப்படும். இம்முல்லைப்பாட்டை அடுத்திருக்கின்ற மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு விளங்கலால், அவற்றை அடுத்திருக்கின்ற இதுவும் அவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கலாமென்பது கருதப்படும். பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தன்னைப் பகைத்து எதிர்ந்த சேரன் சோழன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொருநன் என்னும் அரசர் எழுவரொடும் போர்புரிதற் பொருட்டுச் சென்றபோது, அவன்றன் மனைவி கொழுநன் பிரிந்த துயரத்தை ஆற்றிக்கொண்டிருந்த அருமையும், அவன் அவ்வரசரையெல்லாம் வென்று தான் சொன்னவண்ணங் கார்காலத் துவக்கத்தில் மீண்டுவந்தமையுங்கண்டு நப்பூதனார் இதனைப் பாடினா ரென்பது புலப்படும். இவ்வாறே நெடுநல்வாடையிலும் ஆசிரியர் நக்கீரனார், நெடுஞ்செழியன் மனைவி அவனைப் பிரிந்து வருந்திய துன்பத்தினை விரித்துச், செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி இன்னே வருகுவர் இன்துணை யோரென முகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பணி செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவை என்று கூறுதலொடு நப்பூதனார் கூறுவதையும் ஒப்பிட்டு உணர்ந்துகொள்க. வாடைக்காலத்தும் வேனிற்காலத்தும் அரசர்கள் போர்மேற்சென்று பாசறைக்கண் இருப்பது பண்டைக் காலந் தமிழ்நாட்டு வழக்காம் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலின்1 வேனிற் காலத்துப் போர்மேற் சென்ற தலைவன் திரும்பி மனையாள்பால் வந்து சேர்தற்குரிய கார்காலத் துவக்கத்திலே பிரிவாற்றியிருந்த தலைவியின் முல்லை யொழுக்கத்தைப் பொருளாக வைத்து நப்பூதனார் இம் முல்லைப்பாட் டியற்றினார். திரும்பவுங் கூதிர்காலத் துவக்கத்திலே நெடுஞ்செழியன் தன் மனையாளைப் பிரிந்து போர்மேற் செல்லத் தலைமகள் பிரிவாற்றாது வருந்திய பாலையென்னும் அகப்பொருள் ஒழுக்கத்தைப் பொருளாக வைத்து நக்கீரனார் நெடுநல்வாடை இயற்றினாரென்று பகுத்தறிந்து கொள்க. வேனிற் காலத்திற் பெரும்போர் துவங்கி நடைபெறுகையில் வேனில் கழிந்து கார்காலந் தோன்றியதாக இருபடை மக்களும் அக்காலங் கழியுந் துணையும் போர் விட்டிருந்து, மறித்துங் கூதிர்காலத் தொடக்கத்திலே போர் துவங்குவராகலின், அக்காலத்திலே அரசர் தம் மனைக்கு மீண்டுவந்து தங்கிப் பின்னருங் கூதிர்காலத்திலே போரை நச்சிப்போவது வழக்கமாகும் என்க. இனி, நெடுஞ்செழியன் தமிழில் வல்லவன், சிறந்த கொடையாளி, அஞ்சாத போராண்மை வாய்ந்தவன் என்பது புறநானூற்றில் அவன் பாடிய `நகுதக்கனரே என்னுஞ் செய்யுளால் இனிது விளங்கலானும், தமிழ்ப் புலவர் பலரைச் சேர்த்துவைத்துத் தமிழை வளப்படுத்து வந்தான் என்பது மதுரைக்காஞ்சி முதலிய வற்றால் தெரிதலானும் இவனையும் இவன் கற்புடை மனைவியையுஞ் சிறப்பித்துப் புலவர் பலர் பாடினாரென்பது துணிபு. அற்றேல், இதில் அவ்வரசன் பெயர் சொல்லப்படாமை என்னையெனின்; அகப்பொருளொழுக்கம் பயின்று வருகின்ற இதன்கண் அவ்வாறு ஒரு தலைமகன் பெயர் சூட்டிச் சொல்லப்படமாட்டாதென்பதை முன்னரே காட்டினாம். இங்ஙனமே நெடுநல்வாடை யுள்ளுந் தலைவன் பெயர் குறித்துச் சொல்லப்படாமை காண்க. இனி, இச் செய்யுள் இல்லோன் றலைவனாக வைத்துப் புனைந்து கட்டி இயற்றப்பட்டதென உரை கூறினாருமுளர். பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலிய அரும்பெருந் தமிழ் நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லது புனைந்து கூறுங் கட்டுவழக்குத் தமிழில் இல்லை என்றற்கு அக்காலத்து இயற்றப்பட்ட நூல்களே சான்றாமாகலின், அவர் கூறியது பொருந்தா வுரை என்க. அற்றாயின், இறையனார் களவிய லுரையில் இல்லோன் தலைவனாக வரும் புனைந்துரை வழக்குச் சொல்லப்பட்ட தென்னையெனின்; அங்ஙனம் அருகி வருவதுஞ் செய்யுள் வழக்கேயாம் பொய்யென்று களையப்படாது என்று அறிவுறுத்தற் பொருட்டுச் சொல்லப்பட்டதேயல்லாமல் அக்காலத்து அங்ஙனம் நூல்செய்தல் உண்டென்பதூஉம் அதனாற் பெறப்பட்ட தில்லை யென்றொழிக. செய்யுட் பொருள் நிகழும் இடம் 89 ஆவது அடியிற் காண்க. இனி, பாட்டுடைத்தலைவி யிருக்கும் இடம் பல்லான் மலிந்த முல்லைநிலக் காட்டில் மிகவும் அழகியதாகக் கட்டப்பட்ட எழுநிலை மாடமாகும். பரிய மரங்கள் நெருங்கி அடர்ந்து தண்நிழல் பயப்பவுங், காட்டுக் கோழிகள் பேட்டுடனுங் குஞ்சுடனும் முல்லைக்கொடிகள் பிணைந்து படர்ந்த பந்தரின் கீழ்ச் செல்லவும், புள்ளினங்கள் செய்யும் ஓசையன்றி வேற்றொலி விரவாது தனித்து மிக்க எழிலுடன் விளங்கும் முல்லைக்காடு காதல் இன்பம் நுகருந் தலைமக்கட்குக் கழிபெருஞ்சுவை மிகுக்குஞ் சிறப்புடைமையாற் பழைய நாளிற் பெருஞ் செல்வவளம் வாய்ந்தோர் அங்கு மாளிகை அமைத்து அதில் வாழ்தல் வழக்கம். (24 - 79) அடிகாறுங் காண்க இனி, தலைமகளைப் பிரிந்து வினைமுடிக்கப் போன தலைமகன் இருக்கும் இடம்; பகைவர் நகரத்தைச் சூழ்ந்து அரணாயிருக்கும் முல்லைக் காட்டிற் பாடிவீடாகும். முற்கால இயற்கைப்படி அரசர் தம் நகரத்திற்குக் காவலாக மதில், அகழி, பாலைவெளி முதலியவற்றை அரணாக அமைத்தலேயன்றி, அவற்றிற்கும் புறத்தே அடர்ந்த காடுகளையுங் காவலரணாக வைப்பர். இவ்வாறு சமைக்கப்பட்ட பகைவரது காட்டிற் சென்று பாட்டுடைத் தலைவன் பாசறையிலிருக்கும் இருப்புச் சொல்லப்படுகின்றது. செய்யுட்பொருள் நிகழுங்காலம் (5-6) அடிகளைக் காண்க. இனி, தலைமகள் முல்லைநிலத்து மாளிகையில் இருக்குங்காலங் கார்காலத்தில் மாலைப்பொழுதாகும். கார்காலத்து மழைபொழிந்த முல்லைக் கானம் மரஞ்செடி கொடிகளில் இலைகள் நீரைத் துளிப்பப், பறவைகள் ஆணும் பெண்ணுமாய் இன்பம் நுகர்ந்து கூடுகளில் ஒடுங்கிக் கிடப்ப, வானத்திற் கரியமுகில்கள் பரவி எங்கும் மப்பும் மாசியுமாய் இருப்ப, அதனொடு மங்கல் மாலையுஞ் சேர்ந்து மழை காலத்தின் இருண்ட இயல்பை மிகுதிப் படுத்தித் தோன்றும் போது, தனியளாய் இருக்குந் தலைவிக்கு ஆற்றாமை மிகுதலுங் கணவன் கற்பித்த சொற்றவறாமல் அவள் அதனைப் பொறுத்து இருத்தலும், அங்ஙனம் இருப்போளுக்குக் கழிபேர் உவகை தோன்றத் தலைவன் மீண்டு வருதலும் போல்வன எல்லாம் இசைவாய் நடைபெறுதற்கு இக்காலம் பெரிதும் ஏற்புடைத் தாதல் காண்க. 50 ஆவது அடியைக் காண்க இனி, தலைமகன் பாசறைவீட்டில் இருக்குங்காலம் வேனிற் காலத்து இறுதி நாளில் இடையாமம் என்க. வேனிற்காலத்துப் பகைவயிற் பிரிந்த தலைமகன் வெஞ்சுடர் வெப்பந் தீர நால்வகைப் படையும் நீரும் நிழலும் பெறும்பொருட்டுக் கான்யாறு ஓடும் (24 ஆவது அடி) காட்டில் தங்கிப் பகைவரொடு போர் இயற்றுங் காலமும் அதுவேயாம் என்க. இப்பாட்டில் அவன் பெரும் பான்மையும் போர்வினை முடித்து அவ்வேனிற்காலத்தின் கடை நாள் இரவிற் பாசறையில் இருக்கும் இருப்பும், மற்றை நாள் தொடங்குங் கார்காலத்தில் அவ்வினையினை முற்றும் முடித்து இரவுகழிய வருநாள் மாலைப் பொழுதில் மீண்டுந் தன் தலைவிபாற் சென்றமையுஞ் சொல்லப்படுகின்றன. இப்பொருள் அறியமாட்டாத நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் தலைவன் பாசறையிருப்புக்குங் கார்காலம் உரித்தென்று உரை கூறினார்; ஆசிரியர் தொல்காப்பியனார், கூதிர்வேனில் என்றிரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும்1 என்பதனாற் குளிர் காலத்துப் பாசறையும் வேனிற்காலத்துப் பாசறையும் என இரண்டே உடம்படுதலானுந், தலைமகட்குக் கார்காலங் குறித்துவந்த தலைமகன் அது கண்ட வளவானே தான் எடுத்துக்கொண்ட வினை முடித்து மீளுவான் என்பது அவர்க்கும் உடம் பாடாகலானும், இச்செய்யுள் செய்கின்ற நப்பூதனார்க்கும் அதுவே கருத்தாக லானும், போர்வினைக்கு மிகவும் இடையூறு பயப்பதான கார்காலத்தில் இருபடை மக்களும் போர் விட்டிருத்தலே உலகவியற்கை யாகலானும் அவர் பாசறை யிருப்பிற்குக் கார் காலமும் உரித்தென்றது பொருந்தாதென மறுக்க. எடுத்த வினை முடியாதாயின் அதனை இடைப்பட்ட கார்காலத்தில் விட்டிருந்து, திரும்பவுங் கூதிர்காலத்தே அதனைத் துவங்கி நிகழ்த்துவர் என்றறிக. அடிக்குறிப்பு 1. கூதிர் வேனில் என்றிரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் - புறத்திணையியல், 21. 7. முல்லைப்பாட்டு நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடிமிழ் பனிக்கடல் பருகிவல னேர்பு 5. கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை, யருங்கடி மூதூர் மருங்கிற் போகி யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை 10. யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச், சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி னுறுதுய ரலமர னோக்கி யாய்மக ணடுங்குசுவ லசைத்த கையள் கைய 15 கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர வின்னே வருகுவர் தாய ரென்போ ணன்னர் நன்மொழி கேட்டன மதனா னல்ல நல்லோர் வாய்ப்புட், டெவ்வர் முனைகவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து 20 வருத றலையர் வாய்வது, நீநின் பருவர லெவ்வங் களைமா யோயெனக் காட்டவுங் காட்டவுங் காணாள், கலுழ்சிறந்து பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக்; கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் 25 சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட விடுமுட் புரிசை யேமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி, யுவலைக் கூரை யொழுகிய தெருவிற் 30 கவலை முற்றங் காவ னின்ற தேம்படு கவுள சிறுகண் யானை யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத் தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக் 35 கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா விளைஞர் கவளங் கைப்பக், கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ ரோடா வல்லிற் றூணி நாற்றிக், 40 கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து வாங்குவில் லரண மரண மாக, வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர் நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு, 45 குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத் திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள் விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர் நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக் கையமை விளக்க நந்துதொறு மாட்ட 50 நெடுநா வெண்மணி1 நிழத்திய2 நடுநா, ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர் சிதர்வர லசைவளிக் கசைவந் தாங்குத் துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப் பெருமூ தாள ரேமஞ் சூழப், 55 பொழுதளந் தறியும் பொய்யா மாக்க டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி, யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின் குறுநீர்க் கன்ன லினைத் தென் றிசைப்ப, மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை 60 மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற் றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞா ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியு, 65 ளுடம்பி னுரைக்கு முறையா நாவிற் படம்புகு மிலேச்ச ருழைய ராக, மண்டமர் நசையொடு கண்படை பெறாஅ, தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப் 70 பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந், தோறுமிபு வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த் துண்ணா துயங்கு மாசிந் தித்து 75 மொருகை பள்ளி யொற்றி யொருகை முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை, 80 யின்றுயில் வதியுநற் காணா டுயருழ்ந்து, நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து 85 பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ, ளஞ்செவி நிறைய வாலின, வென்றுபிறர் 90 வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருந் தானையொடு விசயம் வெல்கொடி யுயரி, வலனேர்பு வயிரும் வளையு மார்ப்ப, வயிர செறியிலைக் காயா வஞ்சன மலர முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக், 95 கோடற் குவிமுகை யங்கை யவிழத், தோடார் தோன்றி குருதி பூப்பக், கான நந்திய செந்நிலப் பெருவழி வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற் றிரிமருப் பிரலையொடு மடமா னுகள, 100 வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத் துனைபரி துரக்குஞ் செலவினர் வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. அடிக்குறிப்புகள் 1. ஒண்மணி என்பதும் பாடம். 2. நிழற்றிய எனவும் பாடம் உண்டு; ஆனால் அது பொருந்தாது; ஓசையடங்குதல் எனப் பொருள்படும். ஈண்டைக்கு நிழத்திய என்பதே பொருத்தமாம். நிழற்றல் ஒளிவிடுதலெனப் பொருள்படும் வேறு ஒரு சொல்லாம். 8. பொருட்பாகுபாடு (1-6) கார்காலம் மாலைப்பொழுது கார்காலம் இப்போது தான் தொடங்கியதாகலின் கரிய முகில் மிகவும் நீரைப் பொழிந்தது. பெரும் பெயல் என்பது கார்காலத் தொடக்கத்திற் பெய்யும் முதற்பெயல், இதனைத் தலைப்பெயல் என்றுஞ் சொல்லுவர். இங்ஙனம் முதற்பெயல் பொழிந்துவிட்ட நாளின் மாலைக்காலம் முதலிய சொல்லப்பட்டது. தலைவன் குறித்துப்போன கார்காலம் வந்தது என்பதனை அறிந்த தலைவி அவன் வருகையை நினைந்து மயங்கி இருத்தலும், அவ்வாறு இருப்போள் மயக்கந்தீர அவன் மீண்டு வருதலும் இப்பாட்டின்கட் சொல்லப்படுதலின், அவற்றிற்கு இசைந்த கார்கால மாலைப் பொழுதை முதலிற் கூறினார் என்றறிக. (7-24) தலைமகள் தனிமையும் அவளது பிரிவாற்றாமையும் வேனிற்காலத் தொடக்கத்திலே பகைவயிற் பிரிந்த தன் காதலன் சொன்ன கார்காலம் வந்தும் அவன் வந்திலாமையின் தலைமகள் பெரிதும் ஆற்றாளாகின்றாள். அது கண்டு ஆண்டின் முதிர்ந்த பெண்டிர் அவளை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தம் ஊர்ப்பக்கத்தேயுள்ள மாயோன் கோயிலிற் போய் நெல்லும் மணங்கமழும் முல்லைப்பூவுந் தூவி வணங்கி நற்சொற் கேட்பநின்றார்; நிற்ப, அங்கே அருகாமையிலிருந்த மாட்டுக்கொட்டிலில் நின்ற ஒர் இடைப்பெண், புல்மேயப்போன தாய் இன்னும் வராமையால் சுழன்று சுழன்று வருந்துகின்ற ஆன்கன்றுகளைப் பார்த்து நீங்கள் வருந்தாதீர்கள், நுங்கள் தாய்மார் கோவலரால் ஓட்டப்பட்டு இப்பொழுதே வந்துவிடுவர் என்று சொல்லிய நற்சொல்லை அம்முதுபெண்டிர் கேட்டு வந்து, அன்னாய்! யாங்கள் கேட்டுவந்த இந் நற்சொல்லானும், நின் காதலன் போகுந் தறுவாயில்அவன் படை மறவர் பாக்கத்திலே கேட்டுவந்த நற்சொல்லானும் நின் தலைவன் தான் எடுத்துச் சென்ற போர்வினையைக் கடுக முடித்து இப்போதே வந்துவிடுவன் என்று துணிகின்றோம்; ஆதலால் மாயோய்! நீ வருந்தாதே என்று அம் முது பெண்டிர் பலகாலும் வற்புறுத்தி ஆற்றுவிக்கவும் ஆற்றாமல் தன் கண்களில் நீர் முத்துப்போல் இடையறுந்து துளிப்பத் தலைமகள் மிகவும் வருந்துகின்றாள். (24- 78) பாட்டின் பொருட்காட்சி தலைமகள் பாசறையிலிருக்கும் இருப்புக்கு மாறுகின்றது; (24- 28) பாசறையின் அமைப்பு இனி, வேனிற்காலத் துவக்கத்திற் பகைமேற் சென்ற தலைவன், பகைவர் தம் நகரத்திற்குக் காவலாக அமைத்த அகன்ற பெரிய காட்டிலுள்ள பிடவஞ் செடிகளையும் பசிய தூறுகளையும் வெட்டி, வேட்டுவர் அரண்களையும் அழித்து, முட்களை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமான பாடிவீடு அமைத்தமை சொல்லப்படுகின்றது. (25- 79) பாடிவீட்டினுள் அமைதிகளுந், தலைமகனுடைய உடம்புநிலை உள்ள நிலைகளும் மிக நுணுக்கமாக எடுத்துச் சொல்லப்படுகின்றன. இனி, இங்ஙனம் அமைக்கப்பட்ட பாடிவீட்டினுள்ளே தழைகள் மேல்வேய்ந்த கூரைகள் ஒழுங்காக இருக்குந் தெருவில் நாற்சந்தி கூடும் முற்றத்திலே காவலாக நின்ற யானை கரும்பொடு நெருங்கக் கட்டிய நெற்கதிர்களையும் அதிமதுரத் தழைகளையும் உண்ணாமல், அவற்றினால் நெற்றியைத் துடைத்துக்கொண்டுங், கொம்பிலே தொங்கவிட்ட தும்பிக்கையில் அவற்றைப் பற்றிக்கொண்டும் நிற்றலால் அவ் யானைப்பாகர் தோட்டியாற் குத்தியும் வடசொற்களால் அதட்டியுங் கவளம் ஊட்டுகின்றார்கள். இனி, அப் பாடிவீட்டினுட் பல்வகைப் படைகளும் இருப்பதற்கு அமைக்கப் பட்ட அரண்களையும் அவ் வரண்களுக்கு இடையில் தலைமகனுக்கு ஒரு தனிவீடு சமைக்கப் பட்டமையுங் கூறுகின்றார். வலியவில்லை நிலத்திற் சுற்றிலும் ஊன்றி, அம்புப்புட்டிலை அதில் தொங்க விட்டுப், பின் அவ்விற்களை யெல்லாங் கயிற்றால் தொடுத்துக்கட்டி வளைத்துச் செய்த இருக்கையில், நீண்ட குந்தங்கோல்களை ஊன்றி, அவற்றொடு படல்களை நிரைத்து வளைத்துச் செய்த வில்லரணங்களே சுற்றுக் காவலாக, அவற்றின்கண் உள்ள பலவேறு படைகளின் நடுவிலே, தலைவனுக்கென்று பலநிறமுடைய மதில் திரையை வளைத்துச் செய்த வீட்டின் அமைப்புக் கூறினார். அதன்பின் அங்ஙனம் வகுக்கப்பட்ட தலைமகனிருக்கையில் அழகிய மங்கைப் பருவத்திளைய பெண்கள் கச்சிலே கட்டப்பட்ட திண்ணிய வாளினை உடையராய் நெய்யைக் கக்குகின்ற திரிக் குழாயினாலே பாவையின் கையில் அமைந்த விளக்கின்சுடர் குறையுந்தோறுந் திரியைக் கொளுத்தி எரிக்கின்றார்கள்; குதிரை முதலியன உறங்குதலின் அவற்றின் கழுத்திலே கட்டப்பட்ட மணியின் ஓசையும் அடங்கிப்போன நடுயாமத்தில் மெய்க்காப்பாளர் தூக்க மயக்கத்தால் அசைந்து காவலாகச் சுற்றித் திரிகின்றார்கள்; இங்ஙனம் நடுயாமம் ஆதலும், பொழுது அளந்தறிவோர் தலைவன் எதிரே வந்துநின்று வணங்கி வாழ்த்திக் கடாரத்து நீரிலேயிட்ட நாழிகைவட்டிலாற் பொழுது இவ்வளவாயிற்றென்று அறிவிக் கின்றார்கள்; அதனைக் கேட்டவுடன் அரசன் எழுந்து, யவனர்களாலே புலிச்சங்கிலிவிட்டு அழகிதாக அமைக்கப்பட்ட இல்லின் உள்ளே விளக்கங்காட்டப்படச் சென்று, வலிய கயிற்றால் இடையிலே திரையை மறித்து வளையக்கட்டி முன் ஒன்றும் பின் ஒன்றுமாய் இரண்டாக வகுக்கப்பட்ட பள்ளி அறையிற் போய்ப் படுக்கையில் அமர்ந்திருக்கின்றான்; அங்ஙனந் தலைவன் பள்ளி கொள்ளும் உள்ளறையின் முன்திரைக்குப் புறத்தேயுள்ள வெளியறையிலே சட்டையிட்ட மிலேச்சரில் ஊமைகள் தலைவன் பள்ளியறையைச் சூழ்ந்து இருக்கின்றார்கள்; அரசனோ நாளைக்குச் செய்ய வேண்டும் போரினை மிகவிரும்பி அதனாற் படுக்கையில் உறக்கங் கொள்ளானாய் முன் நாட்களில் நடந்த போரிற் புண்பட்ட யானைகளை நினைந்தும், யானையை வெட்டியுந் தமக்கு வெற்றியினை யுண்டாக்கியும் இறந்துபோன போர்மறவரை நினைந்தும், அம்பு அழுந்திய வருத்தத்தால் தீனிகொள்ளாமல் காதைச் சாய்த்துக் கொண்டு கலங்குங் குதிரைகளை நினைந்தும் மிகுந்த இரக்கம் உடையோனாய் ஒரு கையை அமளி மேல்வைத்து ஒரு கையினால் முடியைத் தாங்கி இவ்வாறு நீள நினைந்து இருக்கின்றான். (72 - 80) தலைவனது வெற்றியும், அவன் பாசறையில் இனிது உறங்குதலும் இனி, இவ்வாறு முன்னாளிரவு உறக்கமின்றிக் கவலையோடிருந்த தலைமகன் பின்னாளிற் பகைவரை யெல்லாம் வெற்றி கண்டு, தன் வலிய விரலாலே நல்ல வாகை மாலையினைச் சூடிக்கொண்டு, நாளை மாலையில் தலைவியைக் காண்போம் என்னும் மகிழ்ச்சியினால் ஒரு கவலையுமின்றிப் பகையரசர் கேட்டு நடுங்குதற்குக் கருவியான வெற்றி முரசு முழங்குந் தன் பாசறை வீட்டில் இனிது துயில்கொண்டிருக்கின்றான். (80 - 88) பாட்டின் பொருட்காட்சி துயரமுந் தேறுதலுங் கலந்த நிலையிற் படுத்துக் கிடக்குந் தலைமகளின் முல்லைக்காட்டு மாளிகைக்குத் திரும்பவும் மாறுகின்றது. இனி, இங்ஙனம் பாசறையில் இனிய உறக்கத்திலே கிடக்கின்ற தலைமகனைத் தன் பக்கத்திலே காணாத தலை மகள் அவனிடத்தே தன் நெஞ்சினைப் போக்கி மிக வருந்தும் வருத்தத்தால், முதுபெண்டிர் நற்சொற் கேட்டு வந்து ஆற்றுவிக்குஞ் சொற்களையுங் கேளாமற் வருந்துகின்றவள், இங்ஙனம் ஆற்றாமே வருந்தினால் அது நம் பெருமான் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியுங் கொலோ என்று நெடுக நினைந்து பார்த்துத் தன்னைத் தேற்றிக்கொண்டுங், கழன்று விழுகின்ற வளையைக் கழலாமற் செறித்தும், ஆற்றாமை யுணர்வும் அதனைத் தேற்றுகின்ற உணர்வும் ஒன்று சேர்தலால் அறிவு மயங்கியும், அவ்வறிவு மயக்கத்தாற் பெருமூச்செறிந்து நடுங்கியும், அந்நடுக்கத்தால் உடம்பிற் செறிந்த அணிகலங்கள் சிறிது கழலப் பெற்றும், ஏழடுக்குமாளிகையிற் பாவை விளக்கு எரியக் கூடல்வாயிலிலே மழைசொரியும் ஓசை காதில் விழ இம்மாலைக்காலத்திற் படுக்கையிற் கிடக்கின்றாள். (89 - முதல் கடைசிவரையில்) தலைவன் மீண்டு வருதலும், நாட்டின் மழைக்காலச் சிறப்பும் இனித் தலைமகன் தன் மாற்றாரையெல்லாம் வென்று பகைப் புலத்தைக் கவர்ந்துகொண்ட பெரும் படையொடு வெற்றிக்கொடியை உயரத்தூக்கி ஊது கொம்புஞ் சங்கும் முழங்கவும், காசாஞ்செடிகள் நீல மலர்களைப் பூக்கவுங், கொன்றைமரங்கள் பொன்போல் மலரவுங், காந்தள் அழகிய கைபோல் விரியவுங், தோன்றிப்பூச் சிவப்பாக அலரவும், வரகங்கொல்லையில் இளமான்கள் தாவியோடவுங், கார்காலத்து முற்றுங் காயினையுடைய வள்ளிக்காடு பின் போகவும் முல்லை நிலத்திலே மீண்டு வரும்போது, அவனது தேரிற் கட்டிய குதிரை கனைக்கும் ஓசையானது ஆற்றிக் கொண்டு அங்ஙனங்கிடக்குந் தலைமகள் செவியிலே நிறைந்து ஆரவாரித்தது என்க. 9. பாட்டின் பொருள்நலம் வியத்தல் கடலில் முகந்த நீரைப் பொழிந்து கொண்டே எழுந்து உயர்ந்த கரியமுகிலிற்கு, மாவலி வார்த்த நீர் ஒழுகுங் கையுடனே ஓங்கி வளர்ந்த கரிய திருமாலை ஒப்புமை கூறியது மனனுணர்விற்கு இசைந்த உவமையாகப் பொருந்தி நிற்கின்றது. நிலத்தில் ஊன்றிய வில்லிலே அம்பறாத் தூணியைத் தொங்கவிட்டிருப்பதற்குப், பார்ப்பனத் துறவி காவிக்கல்லில் தோய்த்த உடையைத் தனது முக்கோலிற் றொங்க விட்டிருப்பதை உவமை கூறியது மிகவும் பொருத்தமாகவிருக்கின்றது. இதனால் இவ்வாசிரியர் துறவி களிடத்துப் பழக்கமுடையர் என்பதுந், துறவொழுக்கத்தில் வேட்கை யுடையரென்பதுங் குறிப்பாக அறியப்படும். மெய்க்காப்பாளர் பாடிவீட்டில் இடையாமத்திலே தூக்க மயக்கத்தோடும் அசைந்து திரிதல், பூத்த புனலிக் கொடி படர்ந்த தூறு வாடைக்காற்றில் அசைவது போல் இருக்கின்றது என்பதனாலுங், காயாமலர் கறுப்பாகவுங், கொன்றை பொன்னிறமாகவுந், தோன்றி சிவப்பாகவும் இருக்கும் என்பதனாலும், வரகங் கொல்லையில் மான்கள் தாவிக் குதிக்கின்றன, கார்காலத்தில் வள்ளிக்கிழங்கு முற்றிவிடுகின்றன என்பதனாலும், இவர் இயற்கைப் பொருள்களைக் கண்டறிவதிலும், அவற்றைத் தாங்கண்டவாறே சொல்வதிலுந் திறமைமிக்குடையரென்பது இனிது விளங்கும். இன்னும், முதுபெண்டிர் நற்சொற் கேட்கும் பொருட்டு ஊர்ப்பக்கத்தே திருமால் கோயிலிற் போய் நாழி நெல்லும் முல்லையுந் தூவி வணங்குதலுங், குளிர் மிகுதியால் தோளிற் கட்டிய கையுடன் நிற்கும் ஓர் இடைப் பெண் ஆன்கன்றுகட்குத் தேறுதல் சொல்லுதலுங், காட்டிலே பாடி வீடு அமைத்தலும், அப்பாடி வீட்டினுள் நாற்சந்தி கூடும் முற்றத்திலே யானைப்பாகர் யானையைக் குத்திக் கவளம் ஊட்டுதலும், வில்லினால் வளைவாக அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு இடையிலே அரசனுக்கென்று வண்ணத்திரையினால் வேறொரு வீடு வகுக்கப்பட்டிருத்தலும், அவ் வீட்டின் உள்ளே பெண்கள் பலர் கையில் விளக்கு ஏந்தி நிற்றலுங், குதிரை முதலியவற்றின் கழுத்திற் கட்டிய மணியோசை இரவில் அடங்கிவிட்டதும், மெய்க்காப்பாளர் அரசனிருக்கையைச் சுற்றிக் காவலாகத் திரிதலும், பொழுதறிவோர் கொப்பரை நீரில் இட்ட நாழிகை வட்டிலைப் பார்த்து வந்து அரசன் எதிரிலே இடையாமம் ஆயிற்று என்றலும், யவனர்களாற் புலிச் சங்கிலி விட்டு மிக அழகிதாக வகுக்கப்பட்ட பள்ளியறையுள் அவர்கள் விளக்குக் காட்டச் சென்று அரசன் பள்ளி கொண்டிருத்தலும், அப்போது ஊமை மிலேச்சர் பள்ளியறையைச் சுற்றிக் காவலாக இருத்தலும், படுக்கைமேல் உள்ள அரசன் மறுநாட் போரை விரும்பும் உள்ளத்தோடு உறக்கம் பெறானாய், முன்னாட் போரிற் புண்பட்ட யானை குதிரைகளையுஞ் செஞ்சோற்றுக் கடன் கழித்து இறந்தொழிந்த அரிய போர்மறவரையும் நினைந்து வருந்தி ஒரு கையை மெத்தையின்மேலும் மற்று ஒரு கையைத் தலையின் கீழும் வைத்துப் படுத்திருத்தலும், தலைமகள் ஏழடுக்கு மாளிகையில் தன் கணவன் வருகையை நினைந்து பிரிவின் துன்பத்தை ஆற்றிக்கொண்டு பாவையின் கையிலுள்ள விளக்கானது எரிய மாளிகையின் கூடல்வாயிலிலே வந்துவிழும் நீர்த்திரள் ஒலிப்ப மயில்போற் படுத்திருத்தலும், அப்போது தலைவன் தன் றேரினை விரைவாகச் செலுத்திக் கொண்டு காட்டிலே வருதலும் நாம் நேரே காண்கின்றது போலவும், ஓவியம் எழுதி நங்கண்ணெதிரே காட்டுகின்றது போலவும் மிக்க அழகுடன் சொல்லப் படுதல் காண்க. இனி, இவ்வாசிரியர் தாம் புனைந்துரைக்கும் பொருள்களின் உள்ளே நுழைந்து அவற்றை விரிவாகப் புனைந்துரைக்கின்றா ரென்பதும் ஈண்டு அறியற்பாற்று; இவ்வியற்கை பத்துப்பாட்டுக்கள் இயற்றிய புலவர் எல்லாரிடத்தும் பொதுவாகக் காணப்படுவதொன்றாகும். ஆயினும், இவரை யொழிந்த ஏனைப்புலவரெல்லாரும் நம் உள்ளத்தின் கற்பனை யுணர்வு தளர்வடையா வண்ணம் விரித்துப் புனைந்து சொல்லுதற்கு இசைந்த நன்பொருள்களையே விரித்துரைக் கின்றனர்; மற்று இவரோ புனைந்துரை விரிப்பதாற் சுவைப்படாத ஒரோவொன்றனையுஞ் சிறிது அகலவிரித்துக் கூறுகின்றார்; பாடிவீடு அமைக்கப்பட்ட தன்மையினை இவர் இன்னுஞ் சிறிது சுருக்கிக் கூறியிருந்தால் இப் பாட்டு இன்னும் பொருட்சுவை முதிர்ந்து விளங்கும். திருமுருகாற்றுப்படை முதலான ஏனைச் சில பாட்டுக்களுக்கு இம் முல்லைப்பாட்டு இவ்வாற்றால் ஒரு சிறிது தாழ்ந்தது போலுமென அவை தம்மை ஒப்பு நோக்கிக் கற்பார்க்கு ஒருகாற் றோன்றினுந் தோன்றும். என்றாலும் இப் பாட்டின்கட் கண்ட பொருட் கோவை நினைக்குந்தோறும் இன்பம் பயக்கும் விழுப்பம் வாய்ந்து மிளிர்கின்றமை காண்மின்! 10. பாவும் பாட்டின் நடையும் இனி, இச் செய்யுள் நேரிசை அகவற்பாவாற் செய்யப்பட்ட தொன்றாம். இதில் ஒவ்வோர் அடியும் நான்கு சீர்களான் வகுக்கப்படுவன; ஒவ்வொரு சீரும் இரண்டு அசைக்குக் குறையாமலும் மூன்றசைக்கு மேற்படாமலும் வரும்; புலவன் தான் கருதிய அரும்பொருள்களையெல்லாம் வருத்தமின்றி எளிதாக வெளியிடுதற்கு இவ் வகவற் பாவினும் இசைவானது பிறிதில்லை. எதுகையின்பமும் மோனையின்பமுந் தோன்ற இயைந்து நிற்குஞ் சொற்கள் மற்றை மொழிகளிற் போலாது தமிழில் மிகப் பெருகியிருந்தாலும், அவ் வெதுகைநயம் மோனைநயங்களையே பெரிதும் நோக்காது பழைய தமிழ்ப் புலவர்களெல்லாரும் பொருள் சென்றவழியே சொற்கள் தொடர்ந்து நிரம்பச் செய்யுட்கள் பலவும் இயற்றுவாராயினர். பொருளொழுங்கு முதிரத் தங் கருத்துக்களை இணக்கி வைத்துச் செல்லும்போது ஆங்காங்கு இடர்ப்பாடின்றி எளியவாய்த் தோன்றும் எதுகை மோனைகளையே அமைப்பர்; எதுகை மோனைகளுக்கு ஏற்பப் பொருள் பொருத்துவாரல்லர். பிற்காலத்தில் அகவற்பா பாடின புலவர் பெரும்பாலும் ஒவ்வோரடியிலும் முதற்சீரும் மூன்றாஞ் சீரும் எதுகை பொருந்தத் தொடுத்தார்கள்; சிலர் இவ்விரண்டு அடிகள் முதற்சீர் எதுகை இணையக்கொளுவினர். அவர் செய்த அப் பாட்டுக்கள் எல்லாம் முதலிலிருந்து இறுதி வரையில் ஒரே ஒசையாய் நடந்து கேட்பார்க்கு வெறுப்புணர்வினைத் தோற்றுவியா நிற்கின்றன. மற்றுப், பண்டைக்காலத்துப் புலவரின் அகவற் பாட்டுக்களோ பொருள் இயைபுக்கு இணங்க ஓசை மாறி மாறி நடந்து கேட்பார்க்குத் கழிபேர் உவப்புணர்வினைப் பயந்து நிற்கின்றன. இவ்வாசிரியர் நப்பூதனார், சில அடிகளில் முதற்சீரும் மூன்றாஞ்சீரும் எதுகை பொருந்த வைத்தும், வேறு சிலவற்றில் முதலும் நான்கும் எதுகை பொருந்தச் செய்தும், மற்றுஞ் சில அடிகள் இரண்டிரண்டாய் முதற்சீரில் அவ்வாறு எதுகை பொருந்தக் கொளுவியும், பின்னுஞ் சிலவற்றில் அதுதானு மில்லாமல் யாத்தும் இப்பாட்டினைப் பலவகையால் ஓசையின்பம் மாறி மாறி வரத் தொடுத்தார். இன்னும் ஆங்காங்கு அமைக்கப்படும் பொருள்களுக்கு இணங்க அடிகள் மெதுவாகவும், விரைவாகவும் இடையிடையே தெற்றுப்பட்டுஞ் செல்கின்றன. பாடிவீடு இயற்றும் இடத்தில் ஓசை தெற்றுப்பட்டுச் செல்கின்றது; அரசன் பாசறையினுள் இருக்கும் நிலையைச் சொல்லுமிடத்து ஓசை மெதுவாக நடக்கின்றது; அவன் மீண்டு விரைந்து வருமிடத்து விரைந்து போகின்றது. இவையெல்லாம் அறிவு ஒருங்கி ஆராய்ந்து உணர்ந்து கொள்க. இனி, இப் பாட்டினுள் இடைச்சொற்களையும் வேற்றுமை யுருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக்குறைய ஐந்நூறு சொற்களாகும்; இவற்றுள் முன்வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ் வைந்நூறு (500) சொற்களுள் நேமி கோவலர் படிவம் கண்டம் படம் கணம் சிந்தித்து விசயம் அஞ்சனம் என்னும் ஒன்பதும் (9) வடசொற்கள்; யவனர் மிலேச்சர் இரண்டும் (2) திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்டபிறமொழிச் சொற்கள் (11) பதினொன்றேதாம். எனவே இப் பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு (2%) பிறசொற்கள் புகுந்தன என்றறிக; ஏனைய வெல்லாந் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும். இனி, இம் முல்லைப்பாட்டை ஏனை ஒன்பது பாட்டுக்களோடும் ஒப்பவைத்து நோக்குங்கால், இஃது ஏனையவற்றைப்போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்படவில்லையென்பது தோன்றுகின்றது. பொருநராற்றுப்படையில் வந்த, துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின் பராரை வேவை பருகெனத் தண்டிக் காழிற் சுட்ட கோமூன் கொழுங்குறை என்னும் அடிகளின் தேனொழுகும் அரியநடை போலாவது, மதுரைக்காஞ்சியிற் போந்த, மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்க ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர எழுந்த கடற்றின் நன்பொன் கொழிப்ப என்னும் அடிகளின் தேனொழுகும் அரியநடை போலாவது இழுமென் ஓசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியையாவது இம் முல்லைப்பாட்டிற் காண்டல் அரிது; இஃது ஏனையவற்றை நோக்கப் பெரும்பாலும் எங்கும் வல்லென்ற ஓசையுடையதாயிருக்கின்றது. ஏனைப்பாட்டுக்களிற் போலச் சொல்லின் கொழுமை இதன்கண் மிக முதிர்ந்து தோன்றாமையின், இது தன்னைக் கற்பார்க்கு ஏனையபோல் மிக்க சொல்லின்பம் பயவாதென்று கருதுகின்றாம். இப் பாட்டின் நடையினால் இதனையியற்றிய ஆசிரியர் நப்பூதனார் துறவொழுக்கமும், வல்லென்ற இயல்பும், அறிவாழமும், மிக்க மனவமைதியும் உடையரென்பது குறிப்பாக அறியப்படும்; காட்டிடத்தையும், மழை காலத்தையுந், தலைவி தனிமையையும் பொருளாகக் கொண்டு இச்செய்யுள் யாத்தமையானுந், துறவோர் கருவிகளை உவமை எடுத்துக் காட்டுதலானும் அவையே இவர் தன்மையாமென்பது தெளியப்படும். இப் பாட்டின்கட் காணப்பட்ட பண்டைக்காலத் தமிழரின் வழக்கவொழுக்க வரலாற்றுக் குறிப்புகள் இனி, இப்பாட்டினாற் பண்டைக்காலத் தமிழரின் வழக்க ஒழுக்கங்கள் சில அறியப்படுகின்றன. இனி நிகழும் நிகழ்ச்சிகளை நிமித்தங்கேட்டு அறியலாம் என்று நம்பினர். பகைவர் மேற் சென்ற அரசர் காட்டிற் பாடிவீடு அமைப்பது வழக்கம். யானைப்பாகர் யானைகளை வடநாட்டுச் சொற்களாற் பழக்கி வந்தனர். அரசன் போர்மேற் செல்லும் போது பெண்களும் வாள்விரிந்த கச்சுடனே கூடச்சென்று பாடிவீட்டில் அவனை ஓம்பினர். பெண்மக்கள் இங்ஙனம் அரசரோடு உடன் சென்று அவனுக்குப் பணிபுரிதல் முற்காலத் துண்டென்பது வடமொழியிற் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகத்தானும் அறியப்படும். கடாரத்து நீரிலே இட்ட நாழிகைவட்டிலாற் பொழுது அறிந்து வந்தனர். கிரீசு முதலான அயல் நாடுகளிலுள்ள யவனர் என்னுங் கம்மர்களை வரவழைத்து அருமைமிக்க பல கம்மவேலைகள் செய்து வந்தனர். இவ்வாறே சீவக சிந்தாமணியிலுந் தம்புலன் களால் யவனர் தாட்படுத்த பொறியே என்று இவர்கள் குறிப்பிடப்பட்டமை காண்க மிலேச்ச தேயத்திலுள்ள ஊமைகளை வருவித்துத், தமிழ அரசர் தம் பள்ளியறைக்கு அவர்களைக் காவலாக இருத்தினர்; ஊமைகள் அல்லாரை அங்கு வைப்பின் அரசன் பள்ளியறைக் கண்ணவான மறைபொருள் நிகழ்ச்சிகளை அவர்கள் வெளியிடுவரெனவும், ஒருவரோ டொருவர் சிற்சில பொழுது கூடி முணுமுணுவென்று பேசுதலுஞ் செய்வராதலால் அதனால் அரசன் துயில் கெடுமெனவுங் கருதிப்போலும் ஊமைகள் அங்ஙனம் பள்ளியறைக் காவலராக இருத்தப்படுவாராயினர்! இன்னும் ஏழடுக்கு மாளிகை முதலான உயர்ந்த கட்டிங்களும், இன்பம் நுகர்தற்குரிய பலவகையான அரும் பண்டங்களும், யானை தேர் குதிரை காலாள் முதலான நால்வகைப் படைகளும் பிற வளங்களும் பழந்தமிழ்நாட்டு மன்னர் உடையராய் இருந்தனரென்பதும் பிறவும் இப் பாட்டினால் இனிது விளங்குகின்றன. 11. விளக்க உரைக் குறிப்புகள் இம் முல்லைப்பாட்டிற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் இப்பாட்டுச் சென்றவழியே உரை உரையாமல், தம் உரைக்கிணங்கப் பாட்டை இணக்குவான் புகுந்து தமக்கு வேண்டியவாறெல்லாஞ் சொற்களை அலைத்தெடுத்து ஓர் உரை எழுதுகின்றார். இங்ஙனம் எடுத்து உரை எழுதுவனவெல்லாம் மாட்டு என்னும் இலக்கணமாமென அதனியல்பைப் பிறழ உணர்ந்து வழுவினாரென்பதனை முன்னரே காட்டினாம்; ஆண்டுக் கண்டு கொள்க. இனி இங்கு அவர் உரையினை ஆங்காங்கு மறுத்துச் செய்யுட் பொருள் நெறிப்பட்டொழுகும் இயற்கை நன்முறை கடைப்பிடித்து, வேறொரு புத்துரை விளங்கும் வண்ணஞ் சில உரைக்குறிப்புக்கள் தருகின்றாம். (1- 6 அடிகள்) பெரிய கையிலே நீர் ஒழுக நிமிர்ந்த திருமாலைப்போல, உலகத்தை வளைத்துக் கடல்நீரைப் பருகி வலமாக எழுந்து மலைமுகடுகளில் தங்கி எழுந்த முகில் முதற்பெயலைப் பொழிந்த மாலைக் காலம் என்க. கரிய நிறம் பற்றியும், உலகமெல்லாம் வளைந்த தொழில் பற்றியும், நீர் ஒழுகா நிற்ப நிமிர்ந்தமை பற்றியுந் திருமாலை முகிலிற்கு உவமை கூறினார். மாவலி வார்த்தநீர் கைகளினின்று ஒழுகத் திருமால் நிமிர்ந்ததுபோல, நீரைச் சொரிந்து கொண்டே உயர்ந்த முகில் என்று உரைக்க. நனந்தலை - அகன்ற இடம். நேமி - சக்கிரம். வலம் புரி பொறித்த - வலம்புரிச் சங்கை வைத்த; வலம்புரி பொறித்த வண்கை மதவலி என்றார் சீவகசிந்தாமணியிலும். மாதாங்கு என்பதனை மால் என்பதனொடு கூட்டித் திருமகளை மார்பில் தாங்கும் மால் என்று பொருளுரைக்க. தடக்கை - பெரிய கை; தடவுங் கயவும் நளியும் பெருமை தொல் - உரியியல், 24. பாடு இமிழ் பனிக்கடல் - ஒலி முழங்குங் குளிர்ந்த கடல். கொடுஞ் செலவு - விரைந்து போதல். சிறுபுன்மாலை - பிரிந்தார்க்குத் துன்பம் விளைக்குஞ் சிறு பொழுதான மாலை. (7 - 11) ஊர்ப்பக்கத்தே போய் நெல்லும் மலருந் தூவிக் கையாற்றொழுது பெரிதுமுதிர்ந்த மகளிர் நற்சொற் கேட்டுநிற்ப என்க. அருங்கடி மூதூர் - பகைவர் அணுகுதற்கரிய காவல் அமைந்த பழைய ஊர். யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப - யாழின் நரம்பொலிபோல் ஒலிக்கும் ஓரினமான வண்டுகள் ஆரவாரிக்க ; இவை தூவும் முல்லை மலரிற்றேனை நச்சிவந்தன. நாழிகொண்ட - நாழி என்னும் முகந்தளக்குங் கருவியின் உட்பெய்த. நறுவீ - நன்மணங் கமழும் மலர். முல்லை - முல்லைக்கொடி. அரும்பு அவிழ் அலரி - அரும்பு விரிந்த மலர். நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்குஞ் செம்முது பெண்டிர் என்றார் புறத்திலும், 280. (12 -1 7) அங்ஙனம் அவர் நிற்கின்றவளவிற் பசியகன்றின் வருத்தம் மிக்க சுழலுதலை நோக்கிய ஓர் இடைப் பெண் ; கோவலர் பின்னே நின்று செலுத்த உம்முடைய தாய்மார் இப்போதே வருகுவர் என்று சொல்வோளுடைய நற்சொல்லைக் கேட்டனம் என்க. புதிது ஈன்ற கன்று ஆதலாற் பசலைக்கன்று என்றார்; பசலை பசுமை என்னும் பண்படியிற் பிறந்து குழவித்தன்மையை யுணர்த்திற்று, மிக இளைய கன்று என்றபடி, பசலைநிலவின் என்றார் புறத்திலும் (392); நச்சினார்க்கினியர் வருத்தத்தை யுடைத்தாகிய கன்று என்றது கூறியது கூறலாகும். உறு துயர் - பாலுண்ணாமையால் உற்ற துன்பம். நடுங்கு சுவல் அசைத்த கையள் - குளிரால் நடுங்குந் தோள்களின்மேற் கட்டின கையளாய். கைய - கையிற் பிடித்த. கொடுங்கோல் - வருத்துகின்ற தாற்றுக் கோல். நன்னர் நன்மொழி - நன்றாகிய நல்ல மொழி, நன்மைப் பொருளை யுணர்த்தும் நன்னர் நல் என்னுஞ் சொற்கள் ஒருங்கு வந்தமை ஒரு பொரு ளிருசொற் பிரிவிலவரையார் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவற்றா னமைக்கப்படும் (சொல், எச்சவியல், 64). (18) அதனாலும், நின் தலைவன், படைத் தலைவர் தாஞ் செல்லுமுன்னே நற்சொற் கேட்போர் கேட்டுவந்த நிமித்தச் சொற்களும் நன்றாயிருந்தன வாதலாலும் என்க. நல்லோர் - படையுள் நற்சொற்கேட்டற் குரியோர். வாய்ப்புள் - வாயிற்பிறந்த நிமித்தச் சொல். பெருமுது பெண்டிர் தாங்கேட்டுவந்த நற்சொற் கூறித் தலைமகளை ஆற்றுவிக்குமிடத்துத், தலைமகன் சென்றக்கால் நிகழ்ந்த நன்னிமித்தத் தினையும் உடன் எடுத்துக்காட்டி வற்புறுத்துகின்றார் என்பது இவ்வடியினால் இனிது பெறப்படுகின்றது. பகைவரது மண் கொள்ளச் செல்கின்ற வேந்தன் படைத்தலைவர் இங்ஙனம் ஒரு பாக்கத்திலே விட்டிருந்து விரிச்சி கேட்பரென்பது ஆசிரியர் தொல்காப்பியனாராற் சொல்லப்பட்டது. இப்பொருள் இவ் வடியினால் இனிது பெறப்படுவதாகவும், இதனை உணராத நச்சினார்க்கினியர் 18 ஆவது அடியிலுள்ள நல்லோர் என்பதனை 7 ஆவது அடியிலுள்ள போகி என்னும் வினையொடு கூட்டி இடர்ப் பட்டும் இப்பொருளே கூறினார்; அங்ஙனம் இடர்ப்பட்டுக் கூட்டிப் பொருளுரைக்கும் வழிப், பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டபொருள் அவரால் உரையின்றி விடப்பட்டது. தலைமகன் குறித்துப்போன கார்ப்பருவ வரவினைக் கண்டு ஆற்றாளான தலைமகளை ஆற்றுவித்தற் பொருட்டுப் பெருமுது பெண்டிரும் விரிச்சி கேட்டுவந்து ஆற்றுவிக்கின்றார் என்பது நப்பூதனார் கருத்தாகலானும், மேலெடுத்துச் செல்லும் வேந்தன் படைத்தலைவர் மட்டுமே விரிச்சி கேட்டற்கு உரியோர் ஏனையோர் உரியரல்லர் என்பது தொல்காப்பியனார்க்குக் கருத்தன்றாகலானும், யாங்கூறும் பொருளாற் பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டலும் படைத்தலைவர் வாய்ப்புகளும் இனிது பெறப்படுவதாக அவர் உரையாற் படைத்தலைவர் கேட்ட நன்னிமித்தம் ஒன்றுமே வலிந்து கொள்ளப் படுதலானும் நச்சினார்க்கினியருரை போலியுரையாமென்று மறுக்க. (19- 23) நின்றலைவன், பகைவர் இடமெல்லாந் திறைப்பொருளாகக் கவர்ந்து கொண்டு, இங்ஙனந் தான் எடுத்த போர்வினையை இனிது முடித்து விரைவில் வருதல் உண்மையேயாம்; மாயோய்! நீ நின்துயரத்தை விலக்கு என்று அவர் வற்புறுப்பவும் வற்புறுப்பவுந் தலைமகள் ஆற்றாளாய்க் கலுழ்ச்சிமிக்குக் குவளைப்பூவின் இதழை ஒத்த கண்ணிலே முத்துமுத்தாய் நீர் துளிப்ப வருந்தி என்க. இனி, இங்கு இவ்வாறு உரை கூறுதலை நச்சினார்க்கினியர் மறுக்கின்றார். அவர் கூறிய மறுப்பின் பொருள் வருமாறு : - முல்லை என்பது காதலனைப் பிரிந்த காதலி அவன் வருந்துணையும் ஆற்றியிருக்கும் ஒழுக்கமாகும். நப்பூதனார் இதற்கு முல்லைப்பாட்டு என்று பெயரமைத்தமையால் இதன்கண் அவ்வொழுக்கமே கூறப்படுதல் வேண்டும்; இதற்கு வேறாகத் தலைவி ஆற்றாமல் வருந்தினாள் என்றல் நெய்தல் என்னும் இரங்கல் ஒழுக்கமாம் ஆகலின், இவ் விரங்கல் ஒழுக்கம் போதரப் பொருளுரைத்தல் நூலாசிரியர் கருத்தொடு முரணுமாகலின் இப்பாட்டுக்கு நேரே பொருள் கூறுதலாகாது என்று சொல்லிப் பொற்சரிகை பின்னிய நற்பட்டாடையினைத் துண்டு துண்டாகக் கிழித்துச் சேர்த்துத் தைத்து அவம்படுவார் போலச், செய்யுட் சொற்றொடர்களை ஒரு முறையுமின்றித் துணித்துத் துணித்துத் தாம் வேண்டியவாறு சேர்த்துப் பின்னி உரை வரைகின்றார். இனி, அவர் நிகழ்த்திய தடையினைப் போக்கி யுரைக் கின்றாம். வேனிற்காலத் தொடக்கத்தில் தலைவன் தான் பிரியும்போது யான் கார்காலந் துவங்குதலும் மீண்டு வந்து நின்னுடன் இருப்பேன்; என் ஆருயிர்ப் பாவாய்! நீ அதுகாறும் நம் பிரிவாற்றாமையால் நிகழுந் துயரைப் பொறுத்திருத்தல் வேண்டும் என்று கற்பித்தவண்ணமே, ஆற்றியிருந்த தலைமகள் அவன் குறித்த கார்ப்பருவம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் பெரிதும் ஆற்றாளாயினாள்; இஃதுலக இயற்கை. இங்ஙனம் ஆற்றாளாகின்றமை கண்ட பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டு வந்து வற்புறுப்பவும் ஆற்றாது வருந்துந் தலைவி பின் நாம் இங்ஙனம் ஆற்றாமை வருந்துகின்றது கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியும் என்று நெடுக நினைந்து பார்த்து அவர் வருந்துணையும் நாம் ஆற்றுதலே செயற்பாலது என்று தன்னைத் தேற்றிக் கொண்டு கிடந்தாள் என்பது 82 ஆவது அடிமுதல் நன்கெடுத்துக் கூறப்படுதலின், இப் பாட்டின்கண் முல்லையொழுக்கமே விளக்கமாகச் சொல்லப்பட்ட தென்பது அறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக் கிடந்தது. அற்றன்று, முல்லையொழுக்கமே பயின்று வரும் இப்பாட்டின்கட் பூப்போல் உண்கன் புலம்பு முத்துறைப்ப என்னும் இரங்கற்குரிய அழுகையினைக் கூறுதல் பொருந்தாதாம் பிறவெனின்; நன்று கடாயினாய், முன்னும் பின்னுமெல்லாம் முல்லையொழுக்கமே தொடர்ந்து வரும் இச் செய்யுளின் அகத்து, இடையே தோன்றிய அவ் விரங்கற் பொருள் பற்றி ஈண்டைக்கு வரக்கடவதாம் இழுக்கு ஒன்றுமில்லை; முழுவதூஉந் தொடர்ந்து அவ்விரங்கற் பொருள் வருமாயினன்றே அது குற்றமாம். அல்லதூஉங், குறிஞ்சி, பாலை, மருதம், முல்லை முதலான ஒழுக்கங்கள் நடைபெறுங் காலொம் இடை இடையே தலைவி மாட்டு ஆற்றாமை தோன்றும் என்பதூஉம், அங்ஙனம் தோன்றும் அவ்வாற்றாமை எல்லாம் நெய்தல் ஒழுக்கமாதல் இல்லை என்பதூஉம் அகநானூறு கலித்தொகை முதலிய பண்டை நூல்களிலெல்லாங் காணக்கிடத்தலின், இம் முல்லைப்பாட்டி னிடையே வந்த அவ்வடி பற்றி ஈண்டைக் காவதொரு குற்றமுமில்லையென விடுக்க. ஆற்றுவிப்பார் யாருமின்றித் தனியளாயிருந்து கடலை நோக்கியுங் கானலை நோக்கியுந் தலைவி இருங்குதலும், பிறர் உள்வழி அவரோடு இரங்கிக் கூறுதலும் நெய்தலொழுக்கமாம் என்பது தொல்லாசிரியர் நூல்களிற் காண்க.1 ஆற்றுவிப்பார் உள்வழி யெல்லாம் நிகழும் ஆற்றாமை நெய்தல் ஆவதில்லை யாகலின், இப்பாட்டின் கண்ணுங் கணவன் கூறிய சொல்லும் பெருமுது பெண்டிரும் ஆற்றுவித்தற் காரணமாய் நிற்பத் தலைவிமாட்டுத் தோன்றிய ஆற்றாமை இடையே வைத்து மொழியப்பட்டதாகலின், இது நெய்தற்றிணையாதல் ஒரு சிறிதும் பொருந்தாமையின் நச்சினார்க்கினியர் நிகழ்த்திய மறுப்புப் போலியாமென்று ஒழிக. பருவரல் - துன்பம், துயரம்; எவ்வம் - வருத்தம். மாயோள் - வெளிறித் தளுக்காக மிளிருங் கரியநிறம் உடையவள்; மாயோள் முன்கை யாய்தொடி என்னும் பொருநராற்றுப் படை யடியுரையிலும் இப்பொருளே காண்க. கலுழ்ச்சி - அழுகை. புலம்பு - தனிமை; அது தனித்தனியே இடையற்று விழுங் கண்ணீர்த் துளிமேல் நின்றது; இச்சொல் இப்பொருட் டாதல் புலம்பே தனிமை என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் அறிக. (24 - 28) மேல் எடுத்துச் சென்ற வேந்தன் படைத்தலைவர் பகைப் புலத்திற்கு அரணாய் அமைந்த முல்லைக் காட்டிலே பிடவஞ்செடிகளையும் பசிய தூறுகளையும் அழித்து, அங்குள்ள வேடரின் காவற் கோட்டைகளையும் அழித்து, முள்ளாலே மதில் வளைத்து அகலமாய்ச் சமைத்த பாசறை என்க. இங்கே பகையரசன் பாடிவீட்டில் இருக்கும் இருப்பும், எடுத்துச்சென்ற வேந்தன் பாடிவீட்டில் இருக்கும் இருப்புமாக இரண்டு பாசறை யமைப்பு இதன்கட் சொல்லப்பட்ட தெனக்கொண்டு சில எழுதினாரும் உளர். நச்சினார்க்கினியர் உரையிலாதல் நப்பூதனார் பாட்டிலாதல் அங்ஙனம் இருவகைப் பாசறையிருப்புச் சொல்லப்பட்ட தில்லாமையால் அவர் கூறியது பொருந்தா வுரையாம் என்க. கான்யாறு தழீஇய அகல் நெடும்புறவு - காட்டியவாறு சூழ்ந்த அகன்று நீண்ட முல்லைக்காடு. சேண்நாறு - நீள மணங்கமழும்; இவ் அடைமொழியைப் பைம்புதல் என்பதனொடு கூட்டியுமுரைத்தல் ஆம். எருக்கி - அழித்து, புழை அருப்பம் - வாயில் அமைந்த கோட்டை. இடு முட்புரிசை முள் இடு புரிசை என மாற்றுக; காட்ட - காட்டின் கண் உள்ள, இது முள்ளுக்கு அடை; புரிசை - மதில் ஏமம்உறு இடைக்குறைந்து ஏமுறு எனவாயின; ஏமம் - காவல். படுநீர்ப்புணரி - ஒலிக்கின்ற நீரையுடைய கடல். (29 - 36) இப்பாசறையின் உள்ளுள்ள தெருக்களின் நாற்சந்தி கூடும் முற்றத்திற் காவலாக நின்ற மதயானை, கரும்பொடு கதிரும் நெருங்கக் கட்டிய அதிமதுரத் தழையினை உண்ணாமல், அவற்றால் தனது நெற்றியைத் துடைத்துக் கொம்பிலே தொங்கவிட்ட தன் புழைக்கையிலே கொண்டு நின்றதாகப் பாகர் பரிக்கோலினாற் குத்தி வடசொற் பல்காற் கூறிக் கவளம் ஊட்ட என்க. உவலைக் கூரை - தழைகள் வேய்ந்த கூரை; பாடி வீட்டில் மறவர் இருத்தற்காக அறை அறையாக வகுத்து மேலே தழைகள் வேய்ந்திடப்பட்ட கூரைகள் இவை, ஒழுகிய தெரு - இங்ஙனம் வகுக்கப்பட்ட கூரைகள் ஒருங்காக இருக்கும் தெருக்கள், கவலை - நாற்சந்தி கூடும் இடம். பாடியினுட் புகுவார் இவ்விடத்திலுள்ள முற்றத்தின்கண் வந்தே பாசறையிலுள்ள தெருக்களுக்குப் போகல் வேண்டுதலின், இங்கே யானை காவலாக நிறுத்தப்பட்டது, தேம்படுகவுள - மதநீர் ஒழுகுங் கன்னத்தினையுடைய. ஓங்கு நிலைக் கரும்பு - உயர்ந்து வளர்ந்து நிற்றலையுடைய கரும்பு. கதிர் மிடைந்து யாத்த - நெற்கதிர்களை நெருங்கப் பொதிந்து கட்டிய. வயல் விளை - வயலில் விளைந்த. இன்குளகு - அதிமதுரத் தழை. அயில்நுனை - கூரிய முனை, கவைமுள் கருவி - கவர்ந்த அல்லது பிளப்பான முள்ளுள்ள பரிக்கோல். கல்லா இளைஞர் - யானை பழக்குஞ் சொற்களையன்றி வேறு வடசொற்களைக் கல்லாத இளையர், கைப்ப - ஊட்ட. (37 - 44 ) துறவோன் தனது முக்கோலை நாட்டி அதன்கட் காவியுடையைத் தொங்கவிட்டு வைத்தாற்போலப் போரிற் பின்னிடாமைக்கு ஏதுவான வலிய வில்லில் தூணியைத் தொங்கவிட்டுப், பின் அவ்விற்களையெல்லாம் படங்குக்காக ஊன்றிப், பின்னர் அவை தம்மையெல்லாங் கயிற்றால் வளைத்துக் கட்டிச் செய்த இருக்கையிற் குந்தக் கோல்களை நட்டு, அவற்றொடு படல்களை வரிசையாகப் பிணைத்து, இவ்வாறு இயற்றிய வளைந்த வில்லாலான அரணமே தமக்குக் காவலிடமாக அமைந்த வேறுவேறான பல்பெரும் படைகளின் நடுவில், நீண்ட குத்துக் கோல்களொடு சேர்த்துச் செய்த பலநிறம் வாய்ந்த மதிட்டிரையை வளைத்து வேறோர் உள்வீடு அரசனுக்கு என்று எல்லாரும் உடன்பட்டுச் செய்து என்க. கல் - காவிக்கல், கல்தோய்த்து உடுத்த - துகிலைக் காவிக்கற் சாயத்தில் தோய்த்து உடுத்த. படிவம் - தவவேடம்; பல்புகழ் நிறுத்த படிமையோனே என்னும் பனம்பாரனார் பாயிரச் செய்யுளிலும் இச்சொல் இப் பொருட்டாதல் காண்க. அசைநிலை - தங்க வைத்த தன்மை; என்றது காவியுடைய, கடுப்ப - ஒப்ப; இச்சொல் மெய்உவமத்தின் கண் வருமென்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். தூணிநாற்றி - அம்பறாப் புட்டிலைத் தொங்கவிட்டு. கூடம், கூடாரம், படங்கு என்பன ஒருபொருட் கிளவிகள். பூந்தலைக் குந்தம் - பூச்செதுக்கின தலையையுடைய கை வேல். கிடுகு - படல். நிரைத்து - வரிசையாக வைத்து. நாப்பண் - நடு. காழ்கம்பு - கோல். கண்டம் - கூறு. கூறுபட்ட பல நிறத்தினையுடைய திரையை உணர்த்தியது ஆகுபெயரால்; நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த என்றார் சிலப்பதிகாரத்திலும்.2 (45 - 49) வாளினைத் தமது கச்சிலே சேரக் கட்டின மங்கையர் பாவையின் கையிலுள்ள விளக்குகள் கெடுந்தோறுந் திரிக் குழாயினால் திரியைக் கொளுத்தி அவற்றைக் கொளுத்த என்க. இதற்கு இவ்வாறன்றி மங்கையர் கையிலுள்ள விளக்கினைத் திரிக்குழாயையுடைய சிற்றாட்கள் கொளுத்த என்றுரைப்பின், மங்கையர் என்னுஞ் சொல் தழுவும் வினையின்றி நின்று வற்றுமாகலின் அப்பொருள் பொருந்தாதென்க. தொடி - கைவளை; இப்பொருட்டாதல் கங்கணங் கைவளை யொருபலந் தொடியே என்னும் பிங்கலந்தையிற் காண்க. புறம் - முதுகு. கூந்தல் அம் சிறுபுறத்து - கூந்தல் கிடக்கும் அழகிய சிறிய முதுகினையுடைய என்று மங்கையர்க்கு அடையாக்குக. இரவைப் பகலாக்கும் வலிய பிடியமைந்த ஒளியுடைய வாள். விரவு - கலந்த, சேர்ந்த; விரவ எனத் திரிக்க. வரிக்கச்சு - வரிந்து கட்டப்பட்ட இரவிக்கை; வரி நிறம் எனினுமாம், நிறத்தினையுடைய கச்சு என்க. குறுந்தொடியணிந்த முன்கையினையுங் கூந்தலசைந்து கிடக்குஞ் சிறு புறத்தினையுமுடைய மங்கையர், வாள் விரவ வரிந்து கட்டின கச்சையணிந்த மங்கையர், என அடைமொழிகளை இருகாற் பிரித்துக் கூட்டுக. நெய் உமிழ் சுரை - நெய்யை ஒழுகவிடுந் திரிக்குழாய். நந்து தொறும் - கெடுந்தோறும். (50 - 54) மணியினோசையும் அடங்கிய நள்ளிரவில், அசையும் மோசி மல்லிகைக்கொடியேறிய சிறு தூறுகள் துவலையொடு வந்து அசையுங் காற்றினால் அசைந்தாற் போலத், தூக்க மயக்கத்தால் அசைதலையுடைய மெய்க்காப்பாளர் காவலாகச் சுற்றித் திரியவென்க. நெடுநா வெண்மணி - நீண்ட நாக்கினையுடைய வெள்ளி மணி. நிழத்திய - நுணுகிய; அஃதாவது முன்னுள்ள ஓசை அடங்கிய; இச்சொல் நுணுக்கப் பொருளையுணர்த்துதல் ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சா அய், ஆவயின் நான்கும் நுணுக்கப் பொருள என்னுந் தொல்காப்பிய உரியியற் சூத்திரத்திற் காண்க; இனி நிழற்றல் எனப் பாடமோதுவாருமுளர்; நிழற்றல் ஒளிவிடுதலெனப் பொருடரும் பிறிதொரு சொல்லாதலின் அஃதீண்டைக்குப் பொருந்தாது; அற்றேல், திவாகரத்தில் நிழற்றல் நுணுக்கமும் நிழற்செயலுமாகும் என்று அஃது இரு பொருளும் உடைத்தாக ஓதப்பட்டவாறென்னை யெனின்; அது காப்பியத்தொடு முரணுவதாகலிற் கொள்ளற்பாலதன்றென மறுக்க. என்றது குதிரை யானை என்றற் றொடக்கத்தனவும் உறங்குதலின், அவற்றின் கழுத்திற் கட்டிய மணியினோசையும் அடங்கினமை கூறிற்று; இனிப் பாடிவீட்டின்கண் எல்லாருந் தொழிலவிதற்குத் தெரிகுறியாக அடித்துவிட்ட மணியென்றுரைப்பினும் அமையும். பூத்த ஆடு அதிரற்கொடி எனச் சொற்களை மாறிக் கூட்டுக. படார் - சிறுதூறு. சிதர் - திவலை. துகில்முடித்துப் போர்த்த - கூறையால் மயிரை முடித்து உடம்பையும் போர்த்துக் கொண்ட; இச் சொற்றொடர் மெய்காப்பாளர்க்கு அடையாய் நின்றது; மீப்பால் வெண்டுகில் போர்க்குநர் பூப்பால், வெண்டுகில் சூழ்ப்பக் குழன் முறுக்குநர் என்னும் பரிபாடற் பத்தாஞ் செய்யுளடிகள் ஈண்டு ஒப்பிடற்பாலன. ஓங்குநடைப் பெருமூதாளர் - உயர்ந்த நல்லொழுக்கத்தினையுடைய மெய்க்காப்பாளர்; தம் அரசர்க்குப் பகையாவார் செய்யுங் கீழறுத்தல்களுக்கு இடங் கொடாது தம் அரசர் மாட்டு மெய்யொழுக்க முடையராதல் பற்றி ஓங்குநடை யுடையரெனச் சிறந்தெடுத்துக் கூறினார்; பெருமூதாளர் என்பது பெரிது முதிர்ந்த காவலாளர் எனப் பொருடருதலின், ஏனைக் காவற்றொழிலிலெல்லாங் கடமை வழாது மெய்ப்பட ஒழுகி முதிர்ந்தார் தம்மையே பின்னர் மெய்க்காப்பாளராக வைப்பரென்பதூஉம் பெற்றாம். (55-58) பொழுதினை இத்துணையென்று வரம்பறுத்து உணரும் பொழுதறி மாக்கள், அரசனைத் தொழுது கொண்டே காணுங் கையினராய், விளங்க வாழ்த்தி நிலவுலகத்தை வென்று கைப்பற்றுதற்குச் செல்வோனே! நினது கடாரத்திலே இட்ட சிறிய நீருள்ள நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இவ்வளவு என்று சொல்ல வென்க. தம் அரசர்க்குப் பகைவரானோர் செய்யுங் கீழறுத்தலுக்கு வயமாகிப் பொழுதினைப் பொய்த்துக் கூறுவார் போலாது, என்றுந் தம் அரசர்பால் நெகிழா மெய்யன்பு பூண்டு பொழுதினைப் பொய்த்தலின்றி அறிவிப்பார் இவர் என்பது புலப்படப் பொய்யா மாக்கள் என்றும், பொழுதளந்தறியுந் தொழிலன்றிப் பிறிது அறியாமையின் இவரை மக்கள் என்னாது மாக்கள் என்றுங் கூறினார். இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் பொழுதறியும் வினையாளர் என்று நேரே பொருள்படும் இச்சொற்றொடரை மாக்கள் பொழுதளந்தறியும் பொய்யாக் காண்கையர் எனப் பிறழ்த்தியிதன் மேலும் ஈண்டைக்கோர் இயைபின்றியும் உரைத்தார். எறிநீர் வையகம் - வீசுகின்ற கடல் நீராற் சூழப்பட்ட நிலவுலகம். குறுநீர் - சிறிய நீர்; இது நாழிகை வட்டிலினுட் கசிந்த நீர். குறுநீர் - என்பதற்கு நாழிகை வட்டில் என்று குறிப்பு எழுதினாருமுளர்; அப்பொருள் நச்சினார்க் கினியருரையிலாதல் மற்றை நூல்களிலாதல் பெறப்படாமையால் அது பொருந்தாதென விடுக்க. கன்னல் - நாழிகைவட்டில்; இஃதிப் பொருட்டாதல் கன்னுலுங் கிண்ணமும் நாழிகை வட்டில் என்னும் பிங்கலந்தைச் சூத்திரத்திற் காண்க. குறுநீர்க் கன்னலின், யாமங் கொள்பவர் என்றார் மணிமேகலையிலும் (7, 64 - 65) ஒரு கடாரத்திலே நீரை நிரப்பி, அடியிற் சிறு தொளை யுள்ள ஒரு வட்டிலை இட்டாற் கடாரத்து நீர் அப்புழைவழியே வட்டிலினுள் ஊறும்; அங்ஙனம் ஊறும் நீரினளவுக்குத் தக நாழிகை கணக்கிடுவர். பொழுது இனைத்து என்று பொழுது அவாய் நிலையான் வந்தது. (59-66) உடையினையும் மெய்ப்பையினையுந் தோற்றத்தினையும் யாக்கையினையுமுடைய யவனர், புலிச்சங்கிலி விட்டுக் கைசெய்த இல்லில் அழகிய மணிவிளக்கினை ஒளிரவைத்து வலிய கயிற்றிற் கருக்கிய திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளொன்றுமாக இரண்டறை வகுத்த பள்ளியறையுட் புறவறையின்கண்ணே சட்டையிட்ட ஊமை மிலேச்சர் அருகே காவலிருப்பரென்க. மத்திகை - சவுக்கு, குதிரைச் சம்மட்டி. மத்திகை வளைஇய உடை - குதிரைச்சம்மட்டி சூழப்பட்ட உடை; மறிந்து வீங்கு செறிவுஉடை - மடங்கிப் புடைக்க நெருங்குதலுறக் கட்டின உடை. மெய்ப்பை - சட்டை. வெருவருந் தோற்றம் - காண்பதற்கு அச்சம் வருவதற்கேதுவான தோற்றம். வலி புணர்யாக்கை - வலிமைகூடிய உடம்பு. யவனர் - கிரேக்கர், சோனகர் (lonians). மணிவிளக்கம் - பளிங்கு விளக்கு; மணிபோறலிற் பளிங்கும் மணி எனப்பட்டது; மணியிற் றிகழ்தரு என்பதற்குப் பரிமேலழகி யாரும் பளிங்கு மணி என்று பொருளுரைத்தார், திருக்குறள் 1273. எழினி - திரை. உடம்பின் உரைக்கும் நாவினுரையா என மாறி உடம்பாற் குறிகாட்டித் தெரிவித்தலன்றி நாவால் உரைக்க மாட்டாத என்க. மிலேச்சர் - ஆரியர், பெலுச்சிதானத் தினின்று வந்த துருக்கர்; பெலுச்சி என்பது மிலேச்சர் எனத் திரிந்தது; பெலுச்சிதானத்தின் வழியாகப் பரதநாட்டினுட் புகுந்தமை பற்றியே பண்டைக் காலத்தில் ஆரியர், தமிழரால் மிலேச்சரென அழைக்கப்பட்டனர். திவாகரத்திலும் மிலேச்சர் ஆரியர் எனப் போந்தமை காண்க. (67 - 79) பள்ளியறையின் அகத்தே சென்ற அரசன் நாளைக்குச் செய்யும் மிக்க போரினை விரும்புதலாலே உறக்கங் கொள்ளானாய், முன்னாட்களிற் பகைவர் வீசிய வேல் நுழைந்தமையாற் புண்மிக்குப் பெட்டை யானைகளையும் மறந்த களிற்றியானைகளையும், யானைகளின் பரிய தும்பிக்கை அற்றுவிழத் தாம் அணிந்த வஞ்சிமாலைக்கு நல்வெற்றியினைச் செவ்விதாக்கிச் செஞ்சோற்றுக் கடன் தப்பாமற் கழித்து இறந்த மறவரையும் நினைந்துங், காவலாயிட்ட தோற்பரிசையினையும் அறுத்துக்கொண்டு அம்புகள் அழுந்தினமையாற் செவியைச் சாய்த்துக் கொண்டு தீனி எடாமல் வருந்துங் குதிரைகளை நினைந்தும் ஒரு கையினைப் படுக்கையின்மேல் வைத்து மற்றொரு கையால் முடியைத் தாங்கியும் நீளச் சிந்தித்து இரங்கி இங்ஙனமெல்லாம் அவ்விரவைக் கழித்துப் பின்னாளிற் பகைவரைக் குறித்துப் படைக்கலங்கள் எடுத்த தன் வலிய விரலாலே அவர் தம்மையெல்லாம் வென்றமையின் தான் அணிந்த வஞ்சிமாலைக்கும் நல்வெற்றியினை நிலை நிறுத்திப், பின்னாளில் தன் மனைவியைக் காணும் மகிழ்ச்சியாற் பாசறையில் இனிய துயில் கொள்கின்றான் என்க. மண்டு என்பதனை அமர் என்பதனோடாதல் நசை யென்பதனோடாதல் கூட்டி மிக்குச் செல்லும் போர், மிக்குச் செல்லும் நசை என்க. பாம்பு பதைப்பு அன்ன - அடியுண்ட பாம்பின் துடிப்பை யொத்த; இது வெட்டுண்டு விழுந்து துடிக்கும் யானைத் தும்பிக்கைக்கு உவமம். தேம்பாய் கண்ணி - தேன் ஒழுகும் வஞ்சிமாலை. சோறு வாய்த்தல் - செஞ்சோற்றுக்கடன் தப்பாமற் கழித்தல்; இதனைச் சிறந்த திதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப என்னும் புறப்பொருள் வெண்பா மாலை யுரையிலுங் காண்க. கடகம் - கங்கணம், தொடி, வளை; இவ் அணிகலன் ஆண் மக்களும் அணிதலுண்டென்பது கண்ணெரிதவழ வண்கை மணிநகு கடகம் எற்றா என்னுஞ் சீவக சிந்தாமணிச் செய்யுளிலுங் காண்க. கையைத் தலைக்கு அணையாக வைத்தலிற் கையில் அணிந்த கடகத்தை முடியிற் சேர்த்தி என்றார். நகைதாழ் கண்ணி - ஒளி தங்கு மாலை, என்றது தனக்குண்டாம் ஒளி தங்குதற்கு அடையாளமாய் இட்ட வஞ்சி மாலையை. அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை - பகையரசு இருந்து நடுங்குதற்குக் காரணமான வெற்றி முரசு முழங்கும் பாசறை என்க. பனிக்கும் - நடுங்கும். (80-103) பொழிப்புரை பொருட்பாகுபாட்டில் விளக்கமாக எழுதப்பட்டிருக் கின்றது, ஆண்டுக்காண்க. நிறைதபு புலம்பு - நிறை கெடுதற்கு ஏதுவான தனிமை. நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை என்றார் கலியிலும். ஏ உறுமஞ்ஞை - அம்பு தைத்த மயில், இது மயிலின் சாயலினையுடைய தலைமகள் நடுக்கத்திற்கு உவமையாயிற்று. இடம் சிறந்து உயரிய - இடம் அகன்று சிறந்து உயர்ந்த. பாவை - வெண்கலத்தாற் செய்த பிரதிமை; இதன் கையில் விளக்கெரிய விடுவது அரசர்க்கு வழக்கம். முடங்கு இறை - கூடல்வாய்; கூரையின் இரு பகுதிகள் ஒன்று பொருந்தும் மூட்டுவாய். மாத்திரள் அருவி - வெரிது திரண்டு விழும் அருவிநீர். இன்பல் இமிழ் இசை - இனியவாய்ப் பலவகையாய் ஒலிக்கின்ற ஓசை. ஓர்ப்பனள் கிடந்தோள் - செவியிற் கேட்பவளாய்க் கிடந்த தலைவியின். அம்செவி நிறைய ஆலின - உட்செவி நிரம்ப ஒலித்தன. பிறர் வேண்டுபுலம் - பகைவர் விரும்பிய நிலங்கள். வயிர் - ஊதுகொம்பு. வலன் நேர்பு ஆர்ப்ப - எய்திய வெற்றிக்கு ஒத்து ஒலிப்ப. அயிர - நுண்மணலிடத்த; மணன்மேல் வளர்தலின் அயிரகாயா என்றார். அஞ்சனம் - மை; மைந்நிறமுடைய பூவுக்கு ஆகுபெயர். பொன் கால - பொன் நிறமான பூவைத் தர. முறிஇணர் - தளிருங் கொத்தும் தோடு ஆர் - இதழ் நிறைந்த; தொகுதி நிறைந்த என உரைப்பினுமாம். கானம் நந்திய செந்நிலப் பெருவழி - காடு செழித்த செவ்விய முல்லைநிலத்தின் வழியிலே. வானம் வாய்த்த - வேண்டும் பருவத்து மழை பெய்யப்பெற்ற. வாங்கு கதிர்வரகு - வளைந்த கதிரினையுடைய வரகு. திரிமருப்பு இரலை - முறுக்குண்ட கொம்பினை யுடைய புல்வாய்க் கலைகள். எதிர்சொல் வெண்மழை பொழியுந் திங்கள் - இனிமேற் பெய்தற்காகச் செல்லும் வெண்புயல் மழையைப் பொழிதற்குரிய கார்காலந் தொடங்கும் ஆவணித்திங்கள் முதலில்; இதற்கு நச்சினார்க்கினியர் முன் பனிக்காலம் என்று பொருள் கொண்டு இப்பாட்டின் பொருளுக்குச் சிறிதும் இணங்காவாறு உரை கூறினார். பிறக்கு - பின். துனைபரி துரக்கும் - விரைந்து செல்லுங் குதிரையை மேலுந் தூண்டிச் செலுத்தும். வினை விளங்கு - போர்வினைக்கண் தமதுதிறம் மிக்கு விளங்கும், என்றது தலைமகனது தேரிற்பூட்டிய குதிரைகளை. அடிக்குறிப்புகள் 1. திருச்சிற்றம்பலக் கோவையாரில், ஆரம்பரந்து திரை பொரும் என்னுஞ் செய்யுள்முதல் முவறழீஇய அருண்முதலோன் என்னுஞ் செய்யுள் ஈறாகத் தலைமகள் யாரும் இல் ஒரு சிறைத் தனியளாயிருந்து கடலை நோக்கியும் அன்னம் முதலியவற்றை நோக்கியும் வருந்திக் கூறிய பாட்டுப் பத்தும் இரங்கலே கூறுதலால் திணைநெய்தல் என்று பேராசிரியர் முவறழீஇய என்னுஞ் செய்யுளுரையிற் கூறியதூஉம் உற்று நோக்கற்பாலது. 2. நீர்ப்படைக்காதை, 151 ஆம் அடி 12. வினை முடிவு எழிலி பெரும்பெயல் பொழிந்த மாலைக்காலத்திலே பெருமுது பெண்டிர், யாம் ஊர் மருங்கிற் போகிநெல்லோடு முல்லையுந் தூஉய்த் தொழுதுநிற்ப, ஆய்மகள் கன்றின் அலமரல் நோக்கி நுந்தாயர் கோவலர் உய்த்தர இன்னே வருகுவர் என்போள் நன்மொழி கேட்டனம் அதனாலும், நின் தலைவர் திறையராய் வினைமுடித்து வருவது வாய்வது, மாயோய்! நீ நின் எவ்வங் களை எனக் காட்டவுங் கலுழ்ந்து கண்முத்து உறைப்ப ஆற்றாது வருந்துந் தலைமகள், பாசறையில் இன்றுயில் வதியுந் தலைவனைத் தன் மருங்கிற் காணாளாய் மேலும் வருந்திப், பின் தன் நெஞ்சை அவனிடத்தே ஆற்றுப் படுத்தித், தான் தனியளாய் இருக்கும் நிலைமையினை நீளநினைந்து பார்த்து, நாம் நங்காதலன் சொல்வழி ஆற்றியிருத்தலே முறை எனத் தேற்றியும், ஓடுவளை திருத்தியும், மையல்கொண்டும், உயிர்த்தும் நடுங்கி, நெகிழ்ந்து, விளக்கிற்சுடர் அழல, மாடத்து முடங்கிறைச் சொரிதரும் அருவி ஓர்ப்பனள் கிடந்தோள் செவிநிறைய ஆலின, பரிதுரக்குஞ் செலவினர் நெடுந்தேர் பூண்டமா என்று வினை முடிவு செய்க. அருஞ்சொற்பொருள் அகரவரிசை அகம் - உள்வீடு, பிங்கலந்தை. அங்கை - அழகியகை; அகம் கை - உள்ளங்கை, தொல்காப் பியம், எழுத்தியல் அசை நிலை - தங்கவைத்த தன்மை, அசைத லாடலுந் தங்கலு முரித்தே திவாகரம். அசைத்த - கட்டிய, பின். அஞ்சனம் (வடசொல்) மை: மைபோன்ற நீலமலர். அஞ்செவி - அகம் செவி - உட்செவி. அதிரல் - மோசி மல்லிகை, சிலப்பதிகார உரை, `புனலி என்பர் நச்சினார்க்கினியர். அமர் - போர். அயிர் - நுண்மணல், திவாகரம். அயில் - கூர்மை, திவாகரம். அரசு - அரசன். அரணம் - காவலான இடம், காவல், 4ஆம் பரிபாடலுரை. அருங்கடி - அரிய காவல் அருப்பம் - அரண், வியலருப்பம் என்புழியும் இப்பொருட்டா யிற்று, புறநா.17 அலமரல் - சுழலல், தொல்காப்பியம் உரியியல். அலரி - பூ. அவிழ் - மலர்ந்த. அழல - எரிய அன்ன - ஒத்த ஆய்மகள் - இடைப் பெண். ஆர் - நிறைந்த, திவாகரம். ஆர்ப்ப - பேரொலி செய்ய, `ஆர்ப்பு ஒன்றலாப் பேரொலி என்பர் திவாகரர். ஆலின - ஒலித்தன, திவாகரம்; புறநானூற்றுரை. ஆற்றுப்படுத்த - வழிச் செலுத்திய. இசை - ஒலி இசைப்ப - சொல்ல. இணர் - கொத்து, திவாகரம். இமிழ் - முழங்கும், `ஏறுமாறி மிழ்ப்ப என்பதனுரையைக் காண்க, பரிபாடல் 22. இரலை - ஆண் மான், புல்வாய், தொல்.மரபியல் இருக்கை - இருப்பிடம் இல் - வீடு, பாடிவீடு இழை - அணிகலன், திவாகரம். இன்குளகு - இனிய அதிமதுரத் தழை. இன்னே - இப்பொழுதே. இனம் - கூட்டம், சுறவினத் தன்ன வாளோர் புறநா. 13. இனைத்து - இவ்வளவு ஈண்டு - திரண்ட, புறநா. 17. உகள - தாவ, புறநானூற்றுரை உண்கண் - மையுண்ட கண், புறம். வெண். உரை, பொது, திருக் குறள் பரிமேலழகருரை. உய்த்தர - செலுத்துதலைச் செய்ய `உய் முதனிலைவினைப் பெயர். உயங்கும் - வருந்தும், திவாகரம். உயரி - உயர்த்து, புறநா. புறப்பொருள் வெண்பாமாலை 8. உயிர்த்தும் - பெருமூச்சு விட்டும், நெட்டுயிர்ப் பெறிந்தும் உவலை - தழை, பதிற்றுப்பத்து. உழந்து - வருந்தி, பரிபாடலுரை. உழையர் - அருகிலுள்ளவர்கள், உழை யிருந்தான் என் புழியும் இப்பொருட்டாதல் காண்க, திருக்குறள். உள்ளியும் - நினைத்தும், திருக் குறளுரை. உறுதுயர் - மிக்க வருத்தம், உறுகின்ற துயர் என உரைப் பினுமாம், உறுதல் - அடைதல் உறைப்ப - துளிப்ப, உறை - நீர்த் துளி, திவாகரம். எஃகம் - வேல், திவாகரம். எருக்கி - அழுத்தி, பதிற்றுப்பத்து, கொல்லுதல் , திவாகரம். எவ்வம் - வருத்தம், எவ்வம் மானம் என்பர் புறப் பொருள். வெண்பாமாலை உரைகாரர், கைக்கிளை. எழிலி - மேகம். எழினி - திரை, சிலப் - 3. எறிநீர் - வீசும்நீர்; கடல், எறிதல் - வீசுதல், பிங்கலந்தை ஏ - அம்பு, 84; `எத்தொழில் - அம்பின்றொழில் பரிபாடல் 18. ஏமம் - காவல், திவாகரம். ஏமுற - `ஏமம் உற என்பன ஏமுற என்றாயின, ஏமம் - காவல், புறநானூறு 3. ஒய்யென - விரைய, ஞானாமிர்தப் பாயிரவுரை, புறநா. 98. ஒழிந்தோர் - இறந்தோர், ஈரைம் பதின்மரும்பொருது களத் தொழிய என்றார் புறத்திலும். ஒழுகிய - ஒழுங்குபட்ட ஒள் - விளங்கிய புறநா. 11. ஒற்றி - சேர்த்தி, சீவக சிந்தாமணி யுரை ஓங்கு - உயர்ந்த, புறநா. 3. ஓர்ப்பனள் - செவியிற் கேட்பவ ளாய், புறநானூறு, `கருதின வளாய் என்றுரைப் பினுமாம். கச்சு - முலைக்கச்சு; இரவிக்கை, பிங்கலந்தை. கடகம் - கங்கணம், தொடி, வளை, திவாகரம். கடுப்ப - ஒப்ப, மெய் உவமத்தின் கண் வருவது இச்சொல், தொல்காப்பியம், உவமை. கண்டம் (வடசொல்) -கூறு பாடு, கூறுபட்ட பல நிறத் தினையுடைய மதிட்டிரை, சீவக சிந்தாமணி. கண்ணி - மாலை: வஞ்சிமாலை, திவாகரம். கண்படை - உறக்கம், திருக்குறள், பிங்கலந்தை. கணம் - திரள், பிங்கலந்தை. கருவி - பரிக்கோல்: குத்துக்கோல், தாறு, படைக்கலம், திவாகரம். கலுழ் - அழுதல், திவா. கலக்கம் எனினுமாம், 6ஆம் பரிபாட லுரையையுங் காண்க. கவர்ந்த - கைக்கொண்ட கொள்ளை கொண்ட, புறப்பொருள், வெண்பா. உரை. கவலை - நாற்சந்தி கூடும் இடம், சந்தி, திவாகரம்; கவர்த்த வழி, புறநானூற்றுரை. கவளம் - உணவு, சோறு, திவாகரம். கவுள - கன்னத்தை உடைய. கவுள் - கதுப்பு: கன்னம், திவாகரம். கவை முட்கருவி - கவர்த்த முள் உள்ள பரிக்கோல் மணிமே. கவை - கவர், பிங்கலந்தை. களை - விலக்கு, பிங்கலந்தை. கன்று - ஆன்கன்று. கன்னல் - நாழிகைவட்டில், திவாகரம். காட்ட - காட்டில் உள்ள காயா - காசாஞ்செடி, திவாகரம். கால - கக்க: சொரிய: மலர, திவாகரம். காழ் - கோல், திவாகரம். கான்யாறு - காட்டியாறு. கானம் - காடு கிடுகு - படல். குந்தம் - கைவேல், திவாகரம், புறப் பொருள் வெண்பாமாலை, சிறுசவளம் பெருஞ்சவளம் என்பர் பிங்கலந்தையார். குருதி - உதிரம், திவாகரம். குளகு - தழை, `இலைநுகர் விலங்கின் உணவு என்பர் திவாகரர்; மறிகுளகு உண்டன்ன நாலடியார். குறுநீர் - சிறிய நீர். கூடம் - படங்கு: கூடாரம், பிங்கலந்தை. கூர்ந்து - மிக்கு, தொல்காப்பியம், உரியியல். கூரை - இல்லின் மேற்பகுதி. கைப்ப - ஊட்ட, தீற்ற, மதுரைக் காஞ்சி. கைய - கையிலுள்ள. கொடுஞ்கோல் - வருத்துந் தாற்றுக் கோல். கொடுஞ்செலவு - விரைந்து செல்லல். கொண்டென - கொண்டனவாக. கொளீஇ - கொளுத்தி. கோடல் - காந்தள், புறப்பொருள் வெண்பாமாலை. கோடு - மலைமுகடு, மலையுச்சி, பிங்கலந்தை. கோலி - வளைத்து, திவாகரம். கோவலர்- இடையர். சிதர் - துவலை, மழைத்திவலை; பிங்கலந்தை. சிந்தித்தும் (வடசொல்) - நிணனைந்தும். சுட்டிய - குறித்த புறநானூறு. சுடர் - கனலி: தீக்கொழுந்து, திவாகரம். சுரை - திரிக்குழாய், பதிற்றுப்பத்து, 47ஆம் பாடலுரை. சுவல் - தோள், திவாகரம். செந்நிலம் - செவ்விய நிலம். செறி - நெருங்கின. செறிவு - நெருங்குதல், பிங்கலந்தை. சேண் - தொலைவு, நீளம், திவாகரம். ஞாண் - நான்: கயிறு, பதிற்றுப்பத் துரை 60. தட - பெரிய, தடவுங் கயவும் நளியும் பெருமை தொல். உரி. 24. தபு - கெடு, அக: திவாகரம். தழீஇய - சூழ்ந்த. தாம்பு - தாமணி, திவா. கயிறு, பிங்கலந்தை. தாழ் - தங்கும், தாழ்தல் - தாங்குதல் அடியார்க்கு நல்லாருரை, சிலப்பதிகாரம். தானை - சேனை, புறநானூற்றுரை, காலாட்படை, திவாகரம். திங்கள் - மாதம்: ஆவணி மாதம். திண் - வலிய, திவாகரம். திரி - முறுக்குண்ட. திரு - அழகு, பரிமேலழகருரை, திருக்குறள், ஞானாமிர்த உரை, பேராசிரியருரை, திருச் சிற்றம்பலக் கோவை யார். திருத்தி - செவ்விதாக்கி, புறநானூற்றுரை. திறை - கப்பம், அரசிறை, திவாகரம். துகில் - பெரும்பாலும் வெள்ளிய ஆடையினை உணர்த்தும், பரிபாடல் ஆஞ் செய்யுளி லுங் காண்க: `துகில் வெண்மை செம்மை இரண் டற்கும் பொது என்பர் நச்சினார்க்கினியர், சீவக சிந்தாமணி 34. துமிபு - அறுத்து, திவாகரம். துமிய - அற்றுவிழ, துணிபட, பிங்கலந்தை; புறநா. துயர் - துன்பம், திவாகரம். துயில் - உறக்கம். துரக்கும் - செலுத்தும், புறநானூறு 8. துனை - விரைவு, தொல் உரியியல் 17. தூங்கல் - தூக்கமயக்கம். தூஉய் - தூவி. தூணி - அம்புபெய் கூடு, திவாகரம். தெவ்வர் - பகைவர், `தெவ்வுப் பகைவர், `தெவ்வுப் பகை யாகும் தொல். உரி. 50. தேம் - மதநீர், தித்திப்பு, பிங். தேன், 71;தொல்காப்பியம், புள்ளி மயங்கியல். தொடர் - சங்கிலி, புறநா. 74. தொடி - கைவளை, பிங். தொடுத்த - கட்டப்பட்ட, தொடு கழன் மன்னன் என்ப துனுரை யையுங் காண்க. புறப். வெண். பாடாண்.9 தொழுது - கும்பிட்டு, பிங்கலந்தை. தொடு- தொகுதி, பூவின் இதழ், திவாகரம்; புறநானூறு தோய்த்து - நனைத்து. ஊறவைத்து. தோல் - கேடகம், பரிசை, புற நானூறு, தோற்பலகை, திவாகரம். தோன்ற - விளங்க. தோன்றி - செங்காந்தள், திவாகரம். நகை - ஒளி, பிங்கலந்தை. நசை - விருப்பம். நடை - ஒழுக்கம், பிங்க. நந்துதல் - கெடுதல், தழைத்தல், நந்தல் கேடும் ஆக்கமு மாகும் என்பது திவாகரம். நறு - நல்லமணம். நன்னர் - நன்மை, திவாகரம். நனந்தலை - அகன்ற இடம், தொல், உரி. 78 நாப்பண் - நடு, பிங்கலந்தை. நாற்றி - தொங்கவிட்டு. நாழி - அளக்குநாழி; படி, பிங்கலந்தை. நாறும் - மணக்கும், இப்பொருட் டாதல் நாற்ற நாட்டத்து என்புழியுங் காண்க, புற நானூறு 70. நிமிர்ந்த - உயர்ந்த. நிரைத்து - வரிசையாக வைத்து, பட்டினப்பாலை 78. நிலை - தன்மை, திவாகரம், நிற்குந் தன்மை எனினுமாம். நிழத்திய - நுணுகிய; ஓசை அடங் கிய தொல்காப்பியம், உரி யியல் 34. நிறை - `மறைந்தது ஒரு காரியம் பிறர் அறியாமல் ஒழுகுதல் என்பர் நச்சினார்க்கினியர், நெய்தற்கலி உரை. 16. நுதல் - நெற்றி. நுனை -முனை, புறநானூறு 42. நெகிழ்ந்து - கழன்று, திருக்குறள் 1236. நெடிது - நீள, நெடுங்காலம், திருக்குறள், பரிமேல ழகருரை 562. நெமி (வடசொல்) - சக்கரம். நேர்பு - உடன்பட்டு. நோன் - வலிய. பகழி - அம்பு, திவாகரம். பசலை - பசிய நிறம், மிக்க இளமைத் தன்மைக் குரியது. நெருஞ்சிப் பசலை வான்பூ என்புழியுங் காண்க. புறநா. 155. படம் - சட்டை: குப்பாயம், குப்பாய மிலேச்சனை என்றார் சீவகசிந்தாமணி யிலும் 431. படார் - சிறுதூறு. படிவம் - தவவேடம், விரதம் எனினுமாம், `படிவம் வேடம் புறப்பொருள் வெண்பா மாலை உரை, விரதம், பதிற்றுப்பத்து, பரிபாடல் 5. படநீர் - ஒலிக்கும் நீர், படுமணி - ஒலிக்கும் மணி, புறப்பொருள் வெண்பாமாலை, வெட்சி 6. படை - படைக்கலம்: வாள், பிங்கலந்தை. பதைப்பு - பதைத்தல், மெலிவுதல், பரிபாடலுரை 10. பயிற்றி - பலகாற் கூறி, புறநானூற் றுரை 34. பரந்த - அகன்ற, பரவிய பரி - குதிரை, திவாகரம். பருகி - குடித்து. பருவரல் - துன்பம், திவாகரம். துயரம், புறப்பொருள் வெண்பாமாலை உரை, கைக்கிளை 7. பரூஉ - பரிய. பள்ளி - படுக்கை, பிங்கலந்தை. பனிக்கடல் - குளிர்ந்த கடல். பனிக்கும் - நடுங்கும், புறநானூறு 5. பாசறை - பாடிவீடு, புறநானூறு 31. பாடி - பாசறை, படைவீடு, திவாகரம். பாடு - ஒலி, திவாகரம். பாவை - பிரதிமை, பிடவம் - நறுமணங் கமழும் வெள்ளிய பூக்களை யுடைய ஒரு காட்டுச்செடி, மணி மேகலை, பதிற்றுப்பத்து, ஐங்குறு. குறிஞ்சிப்பாட்டு 78. பிடி - பெண்யானை, திவாகரம். பிறக்கும் - பின், புறநானூற்றுரை, பிறக்கடி ஒதுங்கா என்றார் பதிற்றுப்பத்து. புக்க - புகுந்த, இட்ட. புணர் - கூடின. புணரி - கடல், திவாகரம். புதல் - சிறுதூறு. புரிசை - மதில், புறநானூறு 17. புலம் - இடம், திருக்குறளுரை 43. புலம்பு - தனிமை, தொல். உரி. 35. புலித்தொடர் - புலிச்சங்கிலி. புழை - சிறுவாயில், திவாகரம். புறம் - முதுகு, திவாகரம். புறவு - முல்லைநிலக் காடு, பிங்கலந்தை. புன் - துன்பம், இப்பொருளில் `புன்கண் என்னுஞ் சொல் `புன் என நின்றது. புனை - கைசெய்த, அழகு - செய்த, புறநானூறு பெருமுது பெண்டிர் - பெரிது முதிர்ந்த மகளிர். பெருமூதாளர் - காவற்றொழிலிற் பெரிது முதிர்ந்தோர், பெரிய முதுமையுடையோர், புறநானூறு. பொறித்த - வைத்த. மஞ்ஞை - மயில், திவாகரம். மடம் - மென்மை, புறநானூற்றுரை. மண்டு - மிக்குச் செல்லும், புற நானூற்றுரை, `மேற் கொண்டு புறப்பொருள் வெண்பா மாலையுரை. மணி - ஓசைமணி: கண்டைமணி; பிங்கலந்தை; பளிக்கு மணி, திருக்குறளுரை. மத்திகை - குதிரைச் சம்மட்டி, திவாகரம். மருங்கு - பக்கம். மருப்பு - கொம்பு மறிந்து - மடங்கி, `கீழ் மேலாய் என்பர் புறப்பொருள் வெண்பா மாலை யுரைகாரர், நச்சினார்க்கினியர் `வடிம்பு தாழ்ந்து என்பர். மா - திருமகள், பெரிய, திவா. குதிரை, பிங்கலந்தை. மாட்ட - கொளுத்த, புறநானூறு. மாட்டி - அழித்து, புறப்பொருள் வெண்பாமாலை உரைகாரர் `மாளப்பண்ணி என்பர். மாடம் - அழகிய வீடு, `மாடு என்னும் முதனிலையிற் பிறந்த சொல். மாண் - மாட்சிமைப்பட்ட. மாயோள் - கரிய நிறத்தை உடை யோள், மாந்தளிரின் நிறத் தை உடையோளெனினுமாம், `மாமை நிறத்தை யுணர்த்து மென்பர் திகவாரரும், புறப் பொருள் வெண்பாமாலை யுரைகாரரும். மால் - மாயோன், கரிய நிறத்தினன் என்பது சொற்பொருள், திவாகரம். மிடைந்து - நெருங்க. முடங்கிறை - முடங்கு இறை: மூட்டப்பட்டு வளைவாய் இருக்கும் வீட்டின் இறப்பு: முடங்கு - மடங்கிய, இறை - வீட்டிறப்பு, என்றது நீர் விழுங் கூடல்வாயை, 87, திவாகரம்; உழவினார் கைம்மடங்கின் என்னுந் திருக்குறளில் மடங்குதல் இப்பொருட்டாதல் காண்க. முற்றம் - முன்இடம், புறநானூறு 170. முல்லை - காட்டு மல்லிகைக் கொடி; திவாகரம். முறி - தளிர், திவாகரம் முனை - பகைவரிடம், `வேற்றுப் புலம் புறப். வெண். உரை, வெட்சி. மூதூர் - பழைய ஊர். மூழ்கல் - அழுந்தல், பரிபாடலுரை. மெய்ப்பை - சட்டை, திவாகரம். மையல் - மயக்கம், பிங்கலந்தை. யவனர் - சோனகர், திவாகரம். (Iaones or Greeks.) யாக்கை - உடம்பு யாத்த - கட்டிய யாழ் - ஓர் இசைக்கருவி. வதியுநன் - தங்குகின்றவன், திவாகரம். வயிர் - ஊது கொம்பு, திவாகரம். வரி - வரிந்துகட்டு; நிறம் எனினு மாம். வலம் - வெற்றி; வென்றி, திவாகரம். வலம்புரி - ஓர் உயர்ந்த சங்கு, ஆயிரஞ் சங்குசூழத் திரிவது வலம்புரிச் சங்கு என்பர்; சீவக சிந்தாமணி வரி வளை சூழும் வலம்புரி என்பதன் உரையைக் காண்க. 2103. வலன் ஏர்பு - வலமாக எழுந்து, வலன்நேர்பு - வெற்றிக்கு ஒத்து, நேர்பு - ஒத்து, பரிபாடலுரை. வள்ளி - கிழங்கு தருகொடி, பிங்கலந்தை. வளி - காற்று. வளை - சங்கு, திவாகரம். வளைஇ - வளைத்து. வளைஇய - சூழப்பட்ட, புற நானூறு. வன்கண் - கொடுமை, தறுகண்மை, புறநா, அருளின்மை, அசை வின்மை, திண்மை, திருக் குறள் பரிமேலழகருரை, வாங்கு - வளைத்த, வளைந்த, பிங்கலந்தை: வாங்கிய - வளைத்து. வாய்த்த - தப்பாமற் பெற்ற, புறப். வெண்பாமாலை வாய்த்து - தப்பாமற் கழித்து, புறப் பொருள் வெண்பா மாலை, வாகை 30. வாய்ப்புள் - நற்சொல், விரிச்சி, புறப். வெண்பாமாலை பொது. 11. வாய்வது - உண்மை. வானம் - மழை, திருக்குறள் 19. விசயம் (வடசொல்) - வெற்றி, பிங்கலந்தை. விரவு - கலந்த - சேர்ந்த, புறநானூறு 152. விரிச்சி - நற்சொல், இப்பொருட் டாதல் ஆடமைத்தோளி விரிச்சியுஞ் சொகினமும் என்பதனுரையிலுங் காண்க. புறப் வெண்பாமாலை பொது 11. விளக்கம் - விளங்கு, குடி யென்னுங் குன்றா விளக்கம் திருக்குறள். வி - மலர். வீங்கு - புடைக்கும் வெருவரும் - அச்சம் வரும், திவாகரம். வெலீஇய - வெல்லுதற்கு. வேட்டு - வேடு, வேட்டுவச் சாதி, சிந்தாமணி. வேழம் - யானை; களிற்றியானை, திவாகரம். வை - கூர்மை, வையே கூர்மை தொல்காப்பியம், உரியியல். வையகம் - நிலவுலகம், `வையக மும் வானகமு மாற்றலரிது என்றார் திருக்குறளிலும். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை - முற்றும் - பின்னிணைப்பு முல்லைப்பாட்டு ஓர் அறிமுகம் - இரா. இளங்குமரனார் முல்லைப்பாட்டு - குறிப்பு வரைக. பத்துப்பாட்டுள் ஐந்தாவதாக அமைந்தது முல்லைப்பாட்டு. பாட்டு என்று தொகை செய்ய அமைந்தவற்றுள் இதுவும் ஒன்று. பத்துப்பாட்டு அடிகளில் குறைந்த பாட்டும் முல்லைப் பாட்டே. அதன் அடிகள் 103. முல்லைப்பாட்டின் ஆசிரியர் யார்? அவரைப் பற்றி அறிவ தென்ன? முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனார் என்பார். பழநாளில் பூதன், பேயன், சாத்தன் ஆகிய பெயர்கள் பெரு வழக்காம். மற்றைப்பூதன் என்பாரில் இருந்து பிரித்து அறியும் வகையில் ந பூதனார் எனப்பட்டார். நக்கண்ணை, நற்றத்தன், நக்கீரன் என்னும் பெயர்களைப் போல, இவர் பெயர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார் எனப்படுதலால், இவர் ஊர் காவிரிப் பூம்பட்டினம் என்றும், இவர் தந்தையார் பொன் வணிகம் செய்ததால் பொன் வணிகனார் மகனார் என்றும் இவர் பெயர் நப்பூதனார் என்றும் அறியப்படுகிறார். முல்லைப்பாட்டு என்பதன் பெயர்க்காரணம் கூறுக. முல்லை என்பது நறுமணமிக்க மலர் ஒன்றையும், அம்மலர் சிறந்து விளங்கும் முல்லை நிலத்தையும் (காடும், காடு சார்ந்த இடமும்), அம்முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கத்தையும் ஒரு சேரச் சுட்டுவதாய் அமைந்தது. முல்லை ஒழுக்கம் என்பது யாது? அன்பின் ஐந்திணை ஒழுக்கங்களில் ஒன்று முல்லை ஒழுக்கம். திணை =திண்மையானது; கட்டமை ஒழுக்கமுடையது. பணி அல்லது வேலைக்காகப் பகலில் பிரிந்து சென்ற தலைவன் வீடு திரும்பி வரும் பொழுதாகிய மாலைப் பொழுதில், அவன் வரவை எண்ணிக் கொண்டு மனைவி எதிர்பார்த்துக் காத்திருத்தல் முல்லைத் திணையாகும். மாலைப்பொழுது இருத்தலுக்குச் சிறந்ததாவது எப்படி? மாலைப்பொழுதே பணி முடித்து மீளும்பொழுது, ஆதலாலும், கூடுவிட்டுச் சென்றபறவையும், வீடு விட்டுச் சென்ற ஆணும் திரும்பும் பொழுது மாலை ஆதலாலும், அப்பொழுது சிறந்தது ஆயிற்றாம். மாலையுள் சிறப்புடைய மாலை எது? சிறப்புடையது அது என்பது ஏன்? மாலையுள் சிறப்புடையது கார் காலத்து மாலைப் பொழுதாகும். கதிர் மறைதலும், இருள் படிதலும், வெளியே சென்ற உயிரிகள் மீளலும் அப்பொழுது ஆகலான், சிறந்ததாயிற்றாம். அம் மாலையும் கார் காலத்து மாலையாகும். கார் காலத்தில் மாலை, முன்னமே இருண்டுவிடும்; மழையும் பெய்யும்; இருளாலும் மழையாலும் வழி மறையும்; குளிரும் மிகும். ஆதலால், கணவன் வரவை எதிர்நோக்கல், வீட்டில் தனித்திருக்கும் மனைவிக்கு இயற்கையாகும். காரும் மாலையும் முல்லை என்பது தொல்காப்பியம். காரும் மாலையும் முல்லை என்பதை விளக்குக. கார் = கார் காலம்; மழை காலம்; ஆவணி புரட்டாசி என்னும் மாதங்கள் அவை. மாலை என்பது நண்பகல் கழிந்து பொழுது சாய்ந்து முகில் திரண்டு கதிரை மறைத்து இருளச் செய்யும் பொழுதாகும். இவை முல்லை ஒழுக்கத்திற்குரிய பெரும் பொழுதும், சிறு பொழுதும் ஆம். முல்லை என்னும் பெயர் பற்றி விளக்குக. முல்லை என்பது மாலையில் மலரும் பூ; கற்பு என்ப தற்குச் சான்றாக அமைந்த பூ; அப்பூக்கள் அமைந்த கொடி இருக்கும் இடத்திற்கு ஆகி, அவ்விடத்து ஒழுக்கத்திற்கு ஆகியது. இப்படியே ஆக வொழுக்கத் திணைகள் ஐந்தற்கும் நிலம் காலம் வகுத்தமைத்த நம்முன்னோர் வாழ்வியல் நோக்கும் அமைப்பு முறையும் சிறப்புடையதாம். அகப்பொருள் ஒழுக்கம் என்பது என்ன? மாந்தரின் இயல்பான உணர்வு வெளிப்பாடாகக் கிளரும் காதல் வாழ்வும் (களவும்), அதன் தேர்வு மாறாமல் மணங்கொண்டு வாழும் குடும்ப வாழ்வாம் கற்பு வாழ்வும் பற்றியது அப்பொருளாம். கணவன் மனைவியர் தம் அகத்தே கிளர்ந்து, அகத்தே அமைந்து, அகத்தே (மனையகத்தே) வாழும் வாழ்வு, அகவாழ்வு எனப்பட்டதாம். அகவாழ்வுக்கு அமைந்த தனிச்சிறப்பு என்ன? அக வாழ்வின் தனிச் சிறப்பு அகவாழ்வுடையவர் தலைவன் தலைவி கிழவன் கிழத்தி, ஒருவன் ஒருத்தி எனப்படுவரே அல்லாமல் இன்ன பெயருடையவர் என்று குறித்துக் கூறப்படுதல் ஆகாது என்பது தனிச்சிறப்பு ஆகும். முல்லைப்பாட்டின் தொடக்கச் சிறப்பு என்ன? முல்லைப் பாட்டின் தொடக்கமே அப் பொருளின் முதற் பொருளாம். காலமும் (கார் காலமும், மாலைப் பொழுதும்) முல்லை இடமும் குறிக்கப்படுதல் எடுத்துக்கொண்ட பொருளைத் தொட்டவுடன் துலங்க வைக்கும் சிறப்பாகும். முல்லை நிலக் கருப்பொருளாகக் கூறப்படும் மாயோனைப் பற்றியும் அத் தொடக்கத்திலேயே சொல்வது மேலும் சிறப்பாம். மாலைப் பொழுதை நப்பூதனார் எப்படிக் கூறுகிறார்? உலகை யெல்லாம் வளைத்துக் கொண்டு சங்கு சக்கரத் தொடு தோன்றும் மாயோனைப் போல், நீரை ஒழுக விட்ட கருமுகில் மேலே எழுந்தது என்பது அத் தொடக்கம் ஆம். பிற் காலத்தில் இவ் வறிவியல் நுட்பத்தை மாற்றிப் புனைவு ஆக்கிவிட்டனர். பினைப் புனைவு என்ன? மாவலி என்பான் ஒரு வேந்தன்; சேர நாட்டை ஆட்சி புரிந்தவன்; அவனிடம் திருமால் ஆகிய நெடுமால் குறுவடிவொடும், வாமனன் என்னும் பெயரொடும், வந்தான். வந்தவன் வேதிய வடிவனாக இருந்தான். அவன் யான் வேள்வி செய்வதற்கு என் காலடியால் மூன்றடி அளவு உள்ள இடம் தானமாகத் தர வேண்டும் என்றான். இல்லை என்று சொல்லி யறியாத வள்ளல் மாவலி, தந்தேன் என்றான். அவன் அமைச்சனும் நுண்ணிய அறிவினனுமாகிய சுக்கிரன் என்பான். இவன் நெடுமால்; உன்னை ஏமாற்றி நிலத்தையெல்லாம் பறிக்க வந்துள்ளான்; தாராதே என்று தடுத்தான். மாவலி, தடுத்து பாவம் புரியாதே! கொடுத்தது கொடுத்ததுதான் என்று சொன்னான் மாவலி. கொடுத்த சான்றாய் நீர் வார்த்துத்தா என்றான் குறளன், ஆகிய வாமனன். நீர்க்கலம் எடுத்துக் கொடுக்காதே என்றும் தடுத்தான் சுக்கிரன். ஆயினும் மாவலி நீர் வார்த்தான். வானளாவ வார்த்தான்; ஒரு காலடியால் மண்ணையும், ஒரு காலடியால் விண்ணையும் அளந்தான். மூன்றாம் அடிக்கு இடமில்லாமை யால் கொடுத்த வள்ளலின் தலைமேல் தன் காலடியை வைத்து மிதித்து மண்ணுள் அழுத்தினான் என்பது புனைவுக் கதையாயிற்று. இதன் அறிவியல் நுண்மை என்ன? உலகெல்லாம் வளைத்து, கடல் நீர் பருகிய முகில் - கருமுகில் - மேலே படர்ந்து நீரை மழையாகப் பொழிந்து அதன்பின் மேலே சென்றது என்பது அறிவியல் நுண்மையாம். மாஅல் போல என்பது கருமுகில் (காளமேகம்) போல என்பதாம். உயர்ந்து செல்லும் மழை முகில் இயலை மாஅல்என்னும் அளபெடையாலும், மால் என்னும் பெயராலும் (மா, மால், மாயோன், மாயோள்) சுட்டினார். செய்தி கொன்றாற்கு உய்தி இல்லென்பது தமிழக அறம் என்பதைப் புறநானூற்றுப் பாட்டு காட்டுகின்றது. கொடுத்தவன் தலையில் மிதித்துக் கெடுத்தான் என்பது பெரும் பாவச் செயலும் பழிச் செயலும் அல்லவோ! இறைமைக்கு தகுவதா அது? இதனால் என்ன ஆனது? தமிழர் அறிவியல், கண் மூடித் தனமாக மாற்றப்பட்ட காட்சியேயாம். ஆயினும், எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல் மிதக்கும் என்னும் பழமொழி உண்மையை வெளிப்படுத்தி விடுகின்றது. முல்லைப்பாட்டின் மூலச்சுருக்கம் என்ன? முல்லையின் உரிப்பொருளாகிய இல்லிருததலை விளக்குதலும், அதன் சூழல்களைச் சுவைபடக் கூறுதலும் முல்லைப் பாட்டின் மூலச் சுருக்கமாம் அது. பகைமேற் சென்ற தலைவன் வருமளவும் தலைவி பொறுத்திருக்கு மிடத்து அவன் வரவினைக் கண்ட தோழி முதலியோர் தம்முள் மகிழ்ந்து தலைவிக்குக் கூறியதாக அமைவது இப்பாடற் சுருக்கமாம். அவன் மீள் பொழுது கார்கால மாலைப் பொழுதாம். விரிச்சி என்பது என்ன? இயற்கையில் நிகழும் நிகழ்சசி, பறவை முதலியவற்றின் குரல், உருவிலியாகக் கேட்கும் (அசரீரி) சொல் முதலியவற்றைக் கொண்டு நிகழ இருப்பதை, அக் குறிப்பை அறிந்து கூற வல்லவர் கூறுவது விரிச்சியாம். தலைவியின் பிரிவுத்துயர் அகலும் என்பதை விரிச்சி கூறுவார் எவ்வாறு கூறுகின்றனர்? பெருமுது பெண்டிர் நெல், முல்லை, அலரி முதலியவற்றைத் தூவி இறையை வணங்கி நிற்கின்றனர். அப்பொழுது சிறிய கயிற்றால் கட்டப்பட்டுள்ள ஆன் கன்று பகலில் புல்மேயச் சென்ற ஆவை எதிர்பார்த்து வருந்தி நிற்கிறது. கன்றை, ஆயர் இளமகளிர் ஆயர் ஆன்களை ஓட்டிக் கொண்டு இப்பொழுதே வந்துவிடுவர். உன் கவலையை விடு என்று கூறிக் கன்றின் முதுகை வருடுதலை அறிந்த பெருமுது மகள் தலைவன் உறுதியாக வரும்பொழுது இது என்பதை இச்சொல் காட்டுகிறது; ஆதலால், தலைவன் தான் மேற்கொண்ட போர் வினையை முடித்து வெற்றியோடு வருவான்; ஆதலால் உன் கவலையை விடு என்றனர். இது முல்லைப்பாட்டு கூறும் விரிச்சிச் செய்தியாம். விரிச்சி கூறுவார் கூற்றை நம்பித் தலைவி கவலைவிடாமை ஏன்? விரிச்சி கூறுவார் கூறும் ஆறுதல் மொழி இது என்றும், வருவான் எனக் கூறுதல் அவன் வந்தமை ஆகாது; வந்ததைத் தன் கண்ணால் கண்டால் தான் உண்மையாம் என்றும் கொள்வது உளவியல் நுட்பமாம். அதனால், வருதல் தலைவர் வாய்வது; நீநின் பருவரல் எவ்வம் களைமா யோய் எனக் காட்டவும் காட்டவும் காணாள் கலுழ்சிறந்து பூப்போல் உண்கண் புலம்புமுத் துறைப்ப என்றார். (20-23) தலைவி நிலையைக் கூறிய நப்பூதனார் தலைவன் நிலையைக் கூற எவ்வாறு தொடங்குகிறார். ஒரு காட்டாற்றின் பக்கமாக அகன்ற பகுதி உண்டு. பிடவு முதலிய புதர்ச் செடிகள் இருந்தன. அவற்றை அழித்து அங்கிருந்த வேட்டுவக் குடிகளை அகற்றி முள்வேலி அமைத்தான். கடல்போல் விரிந்த படைவீடுகள் உண்டாக்கினான். தெருக்களை அமைத்தான். தான் தங்குதற்கென உள்ளறையும் ஏற்படுத்தினான். பாசறையில் இருந்த யானையின் நிலையை வரைக. யானை மதநீர் வழிய நின்றது. சிறந்த கரும்பு, நெற்கதிர், யானை விரும்பித் தின்னும் அதிமதுரத் தழை முதலியவற்றை வைத்தாலும் அவற்றை உண்ணாமல் கையால் எடுத்து, தலையையும் நெற்றியையும் அவற்றால் தடவிக் கொண்டிருந்தது. சுவைமுள்ளால் குத்தி அதன் பாகன் கூறும் வடமொழிக் கட்டளைச் சொற்களைக் கூறவும் அது வைக்கப்பட்ட கவளத்தையும் தின்னாமல் மதர்த்து நின்றது. பாசறை அமைவைப் பற்றிப் பூதனார் மேலும் என்ன கூறுகிறார்? குந்தத்தை ஊன்றிக் கேடயம் தூக்கினர். வில்லையும் தூணியையும் வைத்திருந்தனர்; அவை பாதுகாப்புப் போல் அமைந்திருந்தன. இவற்றின் இடையே குறிய வளையல் அணிந்த கையினரும், பிடர் மறைக்கும் கூந்தலரும் ஆகிய மகளிர் ஒளிமிக்க வாளைக் கச்சுடன் கொண்டிருந்தனர். எண்ணெய்ப் பந்தம் ஏற்றி அதில் எண்ணெய் குறையாவாறும் திரியணையாவாறும் பாதுகாத்து இருந்தனர். மெய் காப்பாளர்கள் காவலாகச் சூழ்ந்திருந்தனர். பொழுது இவ்வளவு என்று அளவிட்டுச் சொல்லும் நாழிகைக் கணக்கர் அவ்வப்போது பொழுதைக் கூறிக் கொண்டிருந்தனர். அரசன் இருந்த நிலையை எவ்வாறு கூறுகிறார்? சட்டை இட்டவரும் கண்டார் அஞ்சும் தோற்றத்தரும் வலிமையமைந்த உடலினரும் ஆகிய யவனர் புலிச் சங்கிலியால் புக அரிதாகச் செய்யப்பட்ட அழகுமிக்க உள்ளறைக் கண், ஒளிவிளக்கேற்றித் திரையிட்டுத் தடுக்கப்பட்ட இரண்டறை களையுடைய படுக்கைப் பகுதியில் தலைவன் படுத்திருந்தான்; வாயினால் சொல்லாமல் மெய்காட்டும் குறிகளால் கருத்தை வெளிப்படுத்தும் யவனர் பக்கம் நின்றனர். முதல்நாள் நடந்த போரையும் அதனால் ஏற்பட்ட விளைவையும், கண்ணுறக்கம் கொள்ளாமல் எண்ணி ஒரு கையை அணை மேலும் ஒரு கையைத் தலை மேலும் வைத்துக்கொண்டு கிடந்தான். வேந்தன் கண்ணுறங்காமல் சிந்தித்தவையாகப் பூதனார் என்ன கூறுகிறார்? வேல் பாய்தலால் புண் கொண்டு பிடியை மறந்த யானையையும், அதன் கை துணிபட்டுப் பாம்பு புரள்வது போலப் புரண்ட துயரையும், அஞ்சாது நின்று பகைவர் அலறத் தாக்கி இறந்துபட்டோர் அவலத்தையும், கூரிய அம்பு தைத்தலால் புண்ணுற்ற குதிரைகளின் துன்பத்தையும் எண்ணி அச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் தலைவன் என்கிறார். பாசறையில் உள்ள தலைவனின் நிலையை எண்ணிய தலைவியின் நிலையாகப் பாவலர் கூறுவதென்ன? தலைவன் பாசறையில் இவ்வாறு கண் துயிலின்றித் துயருற் றிருக்கத் தலைவி, தலைவன் திரும்பி வாராத் துயரால் மனம் கலங்கியவனாய் நெடிது நினைத்தாள்; நெட்டுயிர்ப்புக் கொண்டாள்; கழன்று போன வளையலை ஒழுங்கு செய்தாள்; அம்பு தைக்கப்பட்ட மயிலைப் போல் நடுங்கினாள்; அணிகலங்கள் எல்லாம் கழன்றோட ஓங்கிய மாடத்தில் மழைநீர் அருவியாகப் பொழியும் ஒலியைக் கேட்டுக் கொண்டு கண்ணயர்வின்றிக் கிடந்தாள். தலைவி இவ்வாறு வருந்திக் கிடக்கும் நிலையில் நேர்ந்த தென்ன? பிறர் பகையை ஒழித்து நாட்டை கவர்ந்து பெரும் படையொடு வெற்றிக் கொடி விளங்க, ஊது கொம்பும் வளை கொம்பாம் வாங்காலும் ஒலிக்கலாயின. காயா அஞ்சனமென மலரவும், கொன்றைபொன்னெனப் பூக்கவும், காந்தள் பூ கையைப் போல் மலரவும், தோன்றிப் பூ குருதிபோல் விளங்கவும் காடு மலர்ந்து விளங்கியது. மழை பொழிதலால் வரகின் விளை விடத்தே ஆண் மானும் பெண் மானும் திரியவும், மழை பொழிதலால் காடு தண்ணென்று வளம் கொழிக்கவும் அவற்றைக் கடந்து விரைந்து செலுத்துவார் கருத்துக்கு ஏற்பத் தாவி வரும் தேர் பூண்ட குதிரை வீட்டின் முற்றத்தே வந்து சேர்ந்தது. பிரிந்தவர் கூடினால் பேசவும் உண்டோ என்பார் போல் பூதனார் நூலின் இறுதியை, வள்ளியங் காடு பிறக் கொழிய துனைபரி துரக்கும் செலவினர் வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே என நிறைவு செய்தார். துனை = விரைவு. இப்பாட்டால் அறியப்படும் பழவழக்குகள் எவை? விரிச்சி என்பது பார்த்து நிகழ்வைத் தீர்மானிக்கும் வழக்கம் உண்டு என்பதும், அதனைப் பெருமுது பெண்டிர் மேற் கொண்டனர் என்பதும் பழவழக்கமாகத் தெரிகின்றது. போர்க் காலங்களில் பகலில் போ ரிடலும் இரவில் போரை நிறுத்தி அப்பகுதியில் அமைக்கப்பட்ட பாடி வீடுகளில் தங்குதலும் வழக்கம் என்பதை அறியலாம். பாடி என்பது கண்படை கொள்ளும் இடம் என்பதாம். யானை பழக்குவார் வட மொழியராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் உணர்வுச் சொல் தம் தாய்மொழி வழியே வெளிப்படல் இயற்கை. அரசனுக்கு மெய்காப்பாளராக இருப்பார் வேற்று மொழியராகவும், மூங்கையராகவும் கொண்டிருத்தல் அரசன் அமைச்சர் முதலோர் எண்ணம் சொல் வெளிப்படாதிருக்கத் தேர்ந்த வழியாகவும், தம் தொழிலே குறிப்பாக இருப்பார் என்னும் தெளிவாலாயதாகவும் கொள்ளலாம். காட்டையழித்தல் காட்டு விலங்கை அழித்தல் காடுவாழ் மக்களை அழித்தல் அல்லது ஓட்டல், நிலப்பறி செய்தல் என்பவை உலகு தழுவிய வன் செயலாக நிகழ்ந்து கொண்டிருத்தல் இன்றும் கண் கூடாகக் காண்பதே ஆகும். அது வன்முறையரை உருவாக்கம் செய்யும் களம் போலும்! பாசறைக்குப் பெண்ணோடும் போகார் என்பதற்கு மாறானது மகளிரும் பாசறையில் திரிந்தது எனின், அந்நாள் அகவாழ்விலும் இருந்தமை எண்ணின் விளக்கமாம். நப்பூதனார் சொல்லாட்சி திறத்தைச் சான்றுடன் விளக்குக. மொழியை (சொல்லை) நன்னார் நன்மொழி என்கிறார். (17) முல்லைத் தலைவியை மாயோய் என்பது மிக நுண்ணியதாம் (21) புள் வழியாகக் குறியறிதலை வாய்ச் சொல் வழியாக அறிதலால், வாய்ப்புள் என்பது அருமைமிக்கதாம் (18) அதிமதுரம் என்பது இன்குளகு எனப்படுதல் இனிய தமிழ்க் காப்பாம். (33) பெருமுது பெண்டிர் என்பதுபோல், (11) பெருமூதாளர் என்பது (54) ஒப்பு நோக்கு உயர்வாம். யவனரைக் காவலாக வைத்திருந்த நோக்கம் வெளிப்பட, மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரும் தேர்ற்றத்து வலிபுணர் யாக்கை வண்கண் யவனர் என்கிறார். (59-61) பெருஞ்சோறுண்ட கடனைத் தீர்ப்பார் போல் போர்க்களத்து அமர் மேம்பட்டு இறந்தாரை, சோறு வாய்த்து ஒழிந்தோர் என்றது நன்றிக்கடன் விளக்கமாம் (72).தலைவன் பாசறையில் உறங்காமையைக் கூறியதை அடுத்தே, தலைவி பிரிவுத் துயரால் உறங்காமையைச் சுட்டுதல் ஒப்பரிய இயைபாம், (79, 80)தலைவன் வருகையை அறிவிப்பது போல் இன்பல் இமிழிசை அருவியை, வீட்டுளே காட்டல் மேதகு நயமாம் (88) தலைவன் தலைவியை நினைந்து விரைந்து வருவதற்கு, வானம் வாய்த்த வாங்குகதிர் வரகில் திரிமருப் பிரலையொடு மடமான் உகளலைக் காட்டுதல் உள்ளகத் தூண்டல் உரிப் பொருள் விளக்கமாம். முல்லைக் கருப் பொருளாக நப்பூதனார் காட்டுவன எவை? முதற் பொருள் வழியே கருக் கொண்டது கருப் பொருளாம். அவை தெய்வம், உணவு, விலங்கு, மரம், இசை, தொழில் முதலிய பலவுமாம். மாஅல் போல என முல்லை நிலத் தெய்வத்தைச் சுட்டுகிறார். முல்லை வாணராம் ஆயரையும் ஆன் வளர்ப்பையும் கூறுகிறார். பிடவம், முல்லை, அலரி, காயா, கொன்றை, கோடல், தோன்றி முதலியவற்றை விளக்குகிறார். மயில், மான், இரலை முதலியவற்றைச் சொல்கிறார். - இவையும் பிறவும் முல்லைக் கருப் பொருள்களாம். நப்பூதர் தொடருவமை காட்ட வல்லார் என்பதைச் சுட்டுக. செறியிலைக் காயா அஞ்சன மலர முறியிணர்க் கொன்றைநன்பொன் கால கோடற் குவிமுகை அங்கை அவிழ தோடார் தோன்றி குருதி பூப்ப (93-96) என்னும் பகுதியால் அவர்தம் தொடருவமை வைப்பு விளக்கமாம். பூதம் என்பது அச்சப் பொருள் தருகிறதாகக் கொள்கிறோமே! இப்பெயர் அப்பொருள் தருவதா? அப்பொருள் தந்தால், பூதத்தார் என ஆழ்வார் ஒருவர் பெயர் கொண்டிருக்க மாட்டார். பூத பாண்டியன் என ஒரு பழம் பாண்டியன் பெயர் கொண்டிருக்க மாட்டான். பூத வழியாகப் பூதி, அப்பூதி எனப் பெயர்கள் கொண்டிரார். பூதி பூழ்தியாகியதிருநீறுமாம். பூ - அரும்பு, முகை என்பவை விரிவானவை. அவ்வாறேவெளி, வளி, ஒளி, நீர், நிலம் என ஐம்பூத விரிவே உலகமாம். ஐம்பூதக் கலப்பே உலகப் பொருள்கள் எல்லாமுமாம். ஆதலால் பூதம் அச்சப் பொருள் தருதல் பிற்காலப் பொய்மைப் புனைவு என்க. பின்னிணைப்பு - முற்றும் - மலையின் மாட்சி இந்தியா மலைகள் நிறைந்த நாடு. அலைகள் பாயும் கடல்கள் சூழ்ந்த நாடு. மலையும் கடலுமே இந்தியப் பெருநாட்டின் காப்பரண்கள். கடல்கள் பரப்பிற்கும் ஆழத்திற்கும் உவமையாகின்றன. மலைகள், மலைகளின் மாண்புகள் சொல்லிமுடியாது. அளக்கமுடியா அளவு: துளக்கமில்லா உறுதி; அசைதல் இல்லாத்திண்மை; கண்டுணர முடியாத காட்சிகள்; மனத்தால் மதிக்கமுடியாத பெருமைகள் கொண்டவை மலைகள். தமிழ்நாட்டிற்கு ஒரு மாமலை - அதுதான் மறைமலை. கொள்கையில் மலையனைய உறுதியும், கல்வியில் கடலனைய பரப்பும், புலமையில் வான்தொடும் உயரமும், அறிவாற்றலில் நிலத்தினும் விரிந்த நீர்மையும் இவை அனைத்தின் கூட்டுச்சேர்க்கையான ஆளுமையும் அமைந்த மலையே மறைமலை. அவரே ஒரு பேரியக்கம். அவர் கண்ட இயக்கங்கள் பல. தாய்மையும் தலைமையும் உடையது தனித்தமிழ் இயக்கம். சைவ சமாஜம் கண்டதும், சைவ மறுமலர்ச்சிக்குரிய இயக்கங்களைக் கண்டதும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கவை. புலமையால் தலைமையும், சாதனைகளால் பெருமையும் பெற்றவர் அடிகளார். இந்த அண்ணாமலையின் ஒளி ஒரு நூற்றாண்டுக்காலம் தமிழியக்கத்தை வழிநடத்திச் செல்கிறது. இந்த மலையில் இருந்து தோன்றிய அருவிகள் பல. அவை நாடெல்லாம் பாய்ந்து நல்ல தமிழை வளர்த்தன. இந்தப் பெருஞ்சுடரில் இயற்றிய சுடர்கள் எண்ணற்றவை. அவை நல்கும் ஒளி தரும் வெளிச்சம் தமிழர் அக இருட்டையும் புற இருட்டையும் ஒருங்கே போக்கின. அவர் அமைத்த ஒளிப்பாதை நீண்டது; நெடியது; நீள் பயன் அளிப்பது. மறைமலை அடிகள் பன்முக நலங்கள் பெற்றிருந்தாலும் தலைமைக் கூறுகள் நான்கினை மட்டும் எடுத்துச் சுருக்கமாக விளக்குவது பதிப்பாசிரியராகிய என் கடமையாகிறது. 1. சிந்தனையாளர் 2. ஆராய்ச்சியாளர் 3. பேரறிஞர் 4. பொழிஞர் சிந்தனையாளர் தமிழகத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியவர்களில் முதல் வரிசையர். தமிழ் மொழி, தமிழர் வாழ்வு, தமிழர் வழிபாடு, தமிழர் நாகரிகம் முதலியவை பற்றி நிரம்பச் சிந்தித்த அறிஞர். தெளிவாக அறிந்திடுதலும், தெளிவாக மொழிந்திடுதலும் இவர் சிந்தனை ஆற்றலின் வெளிப்பாடு. யோக நெறியில் வல்லவர்; தவச்செல்வர்; தமிழ் மாமுனிவர். ஆதலால் ஒன்றிய உள்ளத்தராய் இவர் கண்டறிந்த உண்மைகள் தமிழ்ச் சிந்தனையை வளப்படுத்திய தோடு தமிழர் வாழ்விலும் மறுமலர்ச்சி கண்டது. ஆராய்ச்சியாளர் அடிகளாரின் கல்விப்பரப்பு இவர் ஆராய்ச்சிக்குப் பெரும் துணை செய்தது. இவர்களின் நுண்மாண்நுழைபுலம் தமிழ் ஆய்வுக்குப் புதுத்தடம் வகுத்தது. மரபுவழிப் புலமையும், தமிழ் வடமொழி ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமையும், தேடலில் இடையறா முயற்சியும், உண்மை காண்பதில் அடிகள் ஆற்றிய வேள்விகளின் பயனுமே மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் பெருநூல். பெருநூல் படைத்தல் எல்லார்க்கும் இயலும் எளிய செயலன்று. அதுவும் மாபெரும் ஆய்வு நூல் உருவாக்குதல் பாமலையாம் மறைமலைக்கே சாலும். அவர்தம் ஆராய்ச்சிப் பொறிகள் ஒளி நல்குவன. அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் வீரியம் மிக்க விதைகள். பேறிஞர் அண்ணாவை அறிஞர் என்னும் வழக்கு 40களில் முகிழ்ந்தது. ராஜகோபாலச்சாரியாரை `மூதறிஞர் என அழைத்தனர். இந்நாளில் வ.சு.ப. மாணிக்கனாரை `மூதறிஞர் எனப்போற்றி மகிழ்கின்றனர். அரவிந்தர்போல மறைமலை அடிகள் `அறிஞருக்கறிஞர். அவர் கல்விக்கு வரம்பில்லை; புலமைக்கு எல்லைஇல்லை. அறிவுக்கடல் என்னும் இதழ் நடத்தியவர் இந்தப் பேரறிஞர். பேரறிவும் பேராற்றலும் பெற்ற அடிகளார் நிகழ்த்திய பெருஞ்சாதனைகள் பல. இந்தி எதிர்ப்புப் போரிலும், தனித்தமிழ் இயக்கம், தமிழ்மீட்சி, சைவசமய மறுமலர்ச்சி ஆகிய பல தளங்களிலும் வெற்றி கண்ட மாவீரர் மறைமலை அடிகள். பேரறிஞர் கண்ட சிந்தனைக் களங்களும் கருத்துப் போர்க்களங்களும் தமிழ்த் திறனாய்வு வரலாற்றில், இலக்கிய வரலாற்றில் கால வெள்ளம் கரைத்திட முடியாத சுவடுகள். இத்தகைய பேரறிஞர் நூல்களைப் பெருமையுடன் வெளியிடுகிறோம். ஆசிரியராய் வாழ்வைத் தொடங்கிய அடிகளார் தமிழகத்து ஞானாசிரியராய் விளங்கினார்கள். அடிகளிடம் கிறித்துவக் கல்லூரியில் நேரடியாகப் பயின்றவர்கள். 1. ச. சோமசுந்தர பாரதியார் 2. டி.கே. சிதம்பரநாத முதலியார் 3. எ. வையாபுரிப் பிள்ளை 4. வ.சு. செங்கல்வராய பிள்ளை முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அடிகளிடம் அடியுறைந்து கற்றவர்களுள் சிலர்: 1. இளவழகனார் 2. முருகவேள் 3. பாசுமணி அடிகளாரின் கொள்கைகளைக் கற்று, தனித்தமிழ் இயக்கம் வீறுபெற உழைத்த வீறுகள்: 1. பாவாணர் 2. பெருஞ்சித்திரனார் 3. இளங்குமரன் 4. திருமுருகன் 5. மாமல்லன் இன்னும் பலர், பொழிஞர் இந்த நூற்றாண்டின் தமிழ் மேடை பெற்ற சொற்பொழிவாளர் களில் மறைமலை அடிகளாருக்குத் தனிச்சிறப்புண்டு. இவர் பொழிவு, கருத்துச் செறிவு மிக்க பொழிவு. பொருள் பொதிந்த புதுமைப் பொழிவுச் சிந்தனையாளராய் - ஆராய்ச்சியாளராய் - பேரறிஞராய் - நூலாசிரியராய் இவர் திகழ்ந்ததால் இவர்தம் பொழிவுகள் தமிழ்மணக்கும் கற்பக மலர்கள்; அறிவு நலம் சான்ற செவிநுகர் கனிகள். இவர் வழியில் தனித்தமிழில், தூய தமிழில், நல்ல தமிழில் பொழிஞர் அணி ஒன்று பூத்துக் குலுங்குகிறது. அடிகள் பேச்சு வெறும் பேச்சன்று; அடிகள் உரை வெற்றுரையன்று பொழுது போக்குப் பொழிவன்று. பொழுதைப் பொன்னாக்கும் புலமைப் பொழிவு. அந்தக் கருத்துப் பொழிவால் நிரம்பிய தடாகங்கள் எண்ணற்றவை. இளங்கோவடிகள், பட்டினத்தடிகள், இராமலிங்க அடிகள்,ஞானியாரடிகள், மறைமலை அடிகள், குன்றக்குடி அடிகள், ஊரன் அடிகள், அமுதன் அடிகள் என வாழையடி வாழையென `அடிகள் வரிசை வளர்கிறது; தொடர்கிறது. தமிழ்மீட்சி, தமிழ்க் காப்பு, தமிழ் வளர்ச்சி, தமிழ் பரப்புதல் முதலிய பல்துறைகளில் அடிகள் ஆற்றிய அளப்பெரும் பணிகளை சிந்தனையாளர் இளங்குமரன் அவர்களும் அறிஞர் அரவிந்தன் அவர்களும் தங்கள் ஆய்வுரைகளில் திட்பநுட்பம் செறிந்த சூத்திரம் போல் விளக்கி உள்ளனர். அடிகள் நூல்களை நாட்டுடைமை ஆக்கிய நல்லரசுக்கு எங்கள் நன்றி. தமிழர் தலைவராம் கலைஞருக்கும் தமிழ்நெறி அமைச்சர் தமிழ்க்குடி மகனார்க்கும் தமிழ்கூறு நல்லுலகம் எழுமையும் நன்றிக் கடன்பட்டுள்ளது. பதிப்புச் செம்மல் தமிழவேள் ச. மெய்யப்பன் மறைமலை அடிகள் சமயமெனக் கடவுளெனப் பேர்கள் சொல்லி தழைத்துவரும் போலிகளைக் கடியும் கூர்வாள்! தமிழரிடைப் படர்ந்துவரும் சாதித் தீமைச் சழக்குகளை வேரோடு சுட்டெரிக்கும் செந்தீ! இமயமலை தந்தபொது மொழியீ தென்றே இந்திவரின் தடுத்தொழிக்குங் கேட யங்காண்! நமதினத்தை விழிப்புறுத்தும் வெற்றிச் சங்கம், நாளெல்லாம் அவனெழுதித் தந்த நூல்கள்! - கவிஞர் முடியரசனார் தமிழ் மாமலை மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல்; மற்ற மறைநூல் பின்வந்த குறைநூல், முறையாய் இவைகட்குச் சான்று காட்டி, முழக்கஞ் செய்த முத்தமிழ் அறிஞனை வாழ்த்தாத நாளில்லை - வையகம் மறைமலையடிகள் மறவாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை1 இந்த இசைப்பாடலின் சொல்லோட்டம் பாவேந்தர் பாரதிதாசனார் பாட்டு என்று காட்டுகின்றது. பாவேந்தர் தாம் வாழ்ந்த நாளை எண்ணியும் நாம் வாழும் எதிர்கால நாள்களையும் எண்ணியுமே வாழ்த்தாத நாள் இல்லை என்று பாடினார். ஆனால், மறைமலையடிகளை வாழ்த்தும் நாள்கள் சிலவாயின. இன்றைய நாளை மறைமலையடிகள் மறவாத் திருப்பெயர் வாழ்த்தும் நாளாகச் செய்த பெருமக்களைப் பொலிக; வாழ்க - என்று பாராட்டி வாழ்த்தி நன்றி கூறுகின்றேன். மலையின் முகடுகள் மூன்று முடியுமா பேச, வேற்று மொழிக்கலப் பின்றி? வாழ்வு விடியுமா தமிழால்? - என்று வினவிய ஆணவந் தான் ஒடியுமா றுதைத்து, நாவில் ஒரு தனித் தமிழே, கற்பில் அடையுமா றுழைத்த எங்கள் அடிகளார் புகழே வாழ்க!2 இவ்வரிகள் கவித் திருமதி சௌந்தரா கைலாசம் அவர்கள் அமைதியை ஆற்றொழுக்கில் வைத்துப் பாடியுள்ளது. அவரே, ஆணவந்தான் ஒடியுமாறு உதைத்து என்று வெடித்திடும் குரலில் பாடினார். குரலை வெடிக்க வைத்தது அடிகளாரின் தனித்தமிழ் உணர்வு மூட்டிய நெருப்புப் பொறி எனலாம். இவ்வெடிப்பில் முழங்குவது அடிகளாரின் தமிழ் முத்திரை; ஆம்; தமிழ் முத்திரை! மேலும் பேராசிரியர்க்கெல்லாம் பேராசிரியராய்த் திகழ்ந்த முன்னவர் மு. வரதராசனார் குரல், வாழ்த்துடன் இனிக்கிறது: சாதிப் பேயைச் சாடிய வீரன்; சைவ சமயம் சாதியைக் கடந்ததென் றையந் தீர அறிவுறுத் திட்டோன் மறைமலை யடிகள் மாண்புகழ் துறைதொறும் தமிழ்போல் துலங்குக பெரிதே!3 என்று எழுந்த அகவல், சாதிப்பேய் குமுகாயத்தில் புகுந்ததைப் போல் சைவத்திலும் புகுந்ததை அடிகளார் சாடிய சாடலை ஒலிக்கிறது. இது அடிகளாரின் சைவப் பகுத்தறிவு முழக்கம். பாவேந்தர் பாட்டின் தமிழின ஊற்றம் கவித்திருமதியின் தமிழ் முத்திரை முனைவரின் சைவப் பகுத்தறிவு முழக்கம் ஆகிய மூன்றும் இணைந்து பிணைந்த திருவுருவமே நிறை தமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் எனலாம். அடிகளார் தமிழோடு வடமொழி, ஆங்கிலம் புலமை வாய்ந்தவர். மொழிபெயர்ப்பு நூல்களையும் உருவாக்கியவர். தமிழ்த் துறையில் விளங்கிச் சில காலத்திற்குப் பிறகே அவருக்குத் தனித்தமிழ் உணர்வு ஊறிற்று, `வேதாசலம் என்ற பிள்ளைப் பெயரோடு தமிழ்ப் பணியைத் தொடங்கிய அவர் `மறைமலை என்று தமிழாக்கிக் கொண்டார். சுவாமி வேதாசலம் எனப்பட்டதால் மறைமலையடிகளானார். அவரது கருத்துகள் சில புரட்சியை ஒலிப்பவை. வடமொழி நான்மறை. உபநிடதம் இவற்றையெல்லாம் பயின்ற அவர் இவற்றின் படைப்புகளில் தமிழர்க்குப் பங்குண்டு என்று புதுமையாக எழுதினார். இருக்கு மறைக்கும் உபநிடதங்கட்குமுள்ள முரண்பாட்டைக் கண்டு தன் இனத்தாரின் தகவுகளை இனமான உணர்வுடன் விளக்கி எழுதினார். கல்லாலின் கீழிருந்து நால்வர்க்கு அறமுரைத்தவைதாம் நான்கு மறைகள்; அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்கள்தாம் அந் நான்கறம். பாணினிக்கு முன்னர் தொல்காப்பியர் வடமொழி இலக்கணமாம் பாணினியின் அட்டாத் தியாயி என்னும் நூலின் காலத்தையும் தொல்காப்பியர் காலத்தையும் ஆராய்ந்து வரையறுத்த அடிகளார், பாணினிமுனிவர்க்கு நானூறு ஆண்டுகளின் முன்னே ஆசிரியர் தொல்காப்பியனார் இருந்தனர்4 என்று காட்டினார். மறைமலையடிகளார் தம் கைத் திறத்தால், அறிவுத் திறனால், தமிழ் ஊற்றத்தால், சைவ உயர்வால் 64 நூல்களை உருவாக்கியுள்ளார். இவ்வறுபத்து நான்கு நூல்களையும் நூலுருவாக்க நிலையில் வைத்துப் பார்த்தால், 1. சொற்பொழிவு நூலுரு 2. கட்டுரை - தொகுப்பு நூலுரு 3. நூலாக்க நூலுரு 4. மொழிபெயர்ப்பு நூலுரு என்று நான்காகக் கொள்ளலாம். இவ்வொவ்வொன்றிலும் உள்ள நூல்களைக் கருத்தளவில் இயல்களாக வகை செய்தால் பின்வரும் 16 இயல்களாகும். இயல் நூல்கள் 1. கோட்பாட்டியல் 4 2. உரையியல் 6 3. பாடலியல் 2 4.அளவையியல் 3 5.சமயவியல் 9 6. ஆய்வியல் 6 7. நாடகவியல் 2 8. உளவியல் 4 9. குமுகாயவியல் 9 10. புதினவியல் 2 11. வாழ்வியல் 2 12. மொழியியல் 3 13. அரசியல் 2 14. வரலாற்றியல் 3 15. பொதுவியல் 6 16. வரைவியல் 2 65 16 இயல்களையும் வரிசைப்படுத்தியிருப்பதும் ஒரு கருத்தைக் கொண்டது. அடிகளாரின் நூல்கள் பதிப்பான ஆண்டுவாரியில் இவ்வியல்களின் நூல்கள் உருவானமையைக் காட்டவே பதிப்புக் காலவரிசையில் இவ்வியல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதுகொண்டு அடிகளார் எவ்வெக்காலத்து நூலாக்கத்தில் எவ்வெவ்வகை உணர்விருந்தார் என்பதை உணரலாம். அச்சு வரலாறு தம்மால் முடிவதனைத் தாமாற்றி செய்கல்லார் பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல் செந்நீர் அருவி மலைநாட, பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ5 எனும் பழமொழிப் பாடல் அறிவிப்பது போன்று அடிகளார் தம்மால் முடிவதனை ஆராய்ந்து தாமே செய்தார். தம் இல்லத்தில் தமக்கு வேண்டிய திருமுருகன் அச்சகத்தை நிறுவினார். நூல்களை எழுதிய அவர் தாமே அச்சுக் கோர்க்கும் பணியிலும் பங்குகொண்டார். மெய்ப்புத் திருத்தினார்; அச்சில் மெய்ப்புத் திருத்தம் செய்தார். அச்சுப் பொறியில் பல நேரங்களில் அச்சேற்றினார்; நூல்கட்டு செய்தார். வெளியூருக்கு நூல் அனுப்பக் கட்டுக் கட்டினார். இவ்வாறு பதிப்பில் தம்மால் முடிவதனைத் தாமாற்றினார். பதிப்பு வரலாற்றில் அடிகளார் பங்கு ஓர் உழைப்பு முத்திரை. என் தமிழ்நடை கடினமானது என்பர். யான் எளிதாக எழுதவேண்டு மென்றும் முனைகின்றேன். வம்மின், வருக என்பவற்றையெல்லாம் வாருங்கள் என்று எழுதப் பழகிக் கொண்டு வருகிறேன். என்ற அவர்தம் கருத்திலிருந்து, உலகியல்பை ஒட்டிச் செல்ல வேண்டுமென்ற அவரது உணர்வு வெளிப்படுகிறது. யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள் என்று அடிகளாரின் தன்னம்பிக்கை அறிவிப்பின்படி நாவாலும் கையாலும் ஒவ்வொருவரும் மலையாகலாம்; இயலாது போனால் குன்றாக ஆகலாம். - கவிஞர்கோ கோவை. இளஞ்சேரனார் அடிக்குறிப்புகள் 1. பாரதிதாசன் தேனருவி பாடல் 57. 2. சௌந்தரா கைலாசம், நாகைத் தமிழ்ச் சங்க மறைமலையடிகளார் நினைவு மலர். ப. 71. 3. மு. வரதராசன், மேலது, ப. 61. 4. அடிகளார், பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், பக். 22. 5. முன்றுறையரையனார், பழமொழி, பாடல் 160. மறைமலையடிகளார் மாண்பு தனித் தமிழ்க் கொள்கையின் தந்தையார் மறைமலையடிகளார் அக்கொள்கையூற்றம் அவர்க்கு இளமைப் பருவத்திலேயே அரும்பி மலர்ந்தது. அவ்வுணர்வு தோன்றியதற்குப் பின்னர்ச் சிறிதேனும் அசைவின்றிக் கடைப் பிடியாகக் கொண்டு காலமெல்லாம் கடமையாற்றியவர் அவர். சங்கத் தமிழ் நூல்களுள் பலவற்றையும் அவற்றின் உரை களையும், தொல்காப்பியம் திருக்குறள் ஆகிய நூல்களையும் அவற்றின் உரைகளையும், சைவசித்தாந்த நூல்களையும் அவற்றின் உரைகளையும் களஞ்சியத்தும் கருவூலத்தும் வைத்துக் காப்பார்போல மனத்தகத்துத் தம் பதினைந்தாம் அகவை தொட்டு இருபத்தொன்றாம் அகவைக்குள்ளேயே (1891 - 1897) பதித்துக் கொண்டார். அதனால், அவரை இருபதாம் அகவையில் (1896) கண்டு நுண்ணிதின் நோக்கிய பேராசிரியர் பெ. சுந்தரனார். மேலை நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதவும் ஆராயவும் வல்லுநர் ஆவார் என்பது என்னுடைய சிறந்த எண்ணம். என்று, சான்று வழங்கினார். பாட்டும் உரையும் ஈட்டும் தேனெனக் கூட்டில் சேர்த்துக் கொண்ட கொங்குதேர் வாழ்வும், இயற்கை உந்துதலும், கூர்த்த மூளையுமே அவர்க்குத் தனித் தமிழ் இயக்கத் தந்தை என்னும் பேற்றை நல்கினவாம். அடிகளாரின் வீறுசால் நோக்கும், தடைவிடைத் திறனால் தம் கொள்கை நிறுவிக் கொள்ளும் கொற்றமும் கண்டு கண்டு துய்த்த துய்ப்பே, தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்களின் வழியாக, அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்றும், வேதாசலனார் தமிழ், செந்தமிழ் - சங்கத்தமிழ் - என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையைத் தமிழ் நாட்டுக்கு ஊட்டிய பெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன். என்றும், தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரழும் முழங்கும். என்றும், அடிகள் பேச்சு, பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து, பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியன்மாரை அளித்தது; அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது என்றும் போற்றுகிறார் (வாக்கைக் குறிப்புகள்) âU.É.f., அடிகளாரைப் பற்றி எழுதியுள்ள இக்கருத்துகளை ஆழ்ந்து எண்ணிப் பார்ப்பின், அடிகளார்க்குத் தமிழுலகம் பட்டுள்ள கடப்பாடு மலைமேல் விளக்கென விளங்கும் அடிகளார் பிறப்பும் தொண்டும் ஆய்வும் வீறும் எத்தகு பெருமைக் குரியன என்பதைத் தமிழுள்ளங்கள் தளிர்ப்புறப் பாராட்டத் தவறா அல்லவோ! தமிழுக்கு அடிகளார் செய்த செவ்விய பணி, அல்லது அடிகளாரால் தமிழ்மொழி பெற்ற நயப்பாடு எளிதா? அவற்றை யெல்லாம் விரிய விரிய ஆராய்ந்த மொழிஞாயிறு பாவாணர், மறைமலையடிகள் பல்துறையாற்றற் பதிகம் பாடினார். அப்பதிகத்தில் ஒரு பாட்டு; ஒரோ ஒரு பாட்டு: மூவா யிரமாண்டு மோது வடமொழியால் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மலைமலை யார் என்பது. அப்பர் என்றது தனித் தமிழ்த் தந்தை என்பதைக் குறிப்பது. அமரர் என்பதற்குப் போர் மறவர் என்பது பாவாணர் குறிப்பு. அடிகளார் தொண்டின் பயன்பாட்டை நன்கனம் ஆய்ந்தார் மூதறிஞர் செம்மல் வ.சு.ப மாணிக்கனார். அதனால், மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம், தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறைபோகாதும் காத்தது; தமிழின் வயிற்றில் இருந்து முன்பு பல திராவிட மொழிகள் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியது போல மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது. இன்று பாடநூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒரு சார் இளைஞர் கூட்டம், எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூய நீராகக் காத்தல்போலத் தமிழைத் தூயதாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதி யிருந்தாலும் பல செய்தித் தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. வாழ்த்துக்கள் வரவேற்புகள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந்நன் மாற்றங்களையெல்லாம், மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த்தாய் பெற்றாள். அத்தவமகன் அடிச்சுவட்டை அன்புச் சுவடாகப் போற்றிப் பாலின் தூய்மை போலத் தமிழின் தூய்மையைக் கடைப்பிடித்து வாழும் இளைய மறைமலையடிகள் இன்று பல்கி வருப ஆதலின் தமிழ் தனித்தடத்திற் செல்லும் புகைவண்டிபோலப் பழைய புதிய தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி முன்னேறும் என்று உறுதி கொள்வோம் என்றார். (தனித்தமிழ்த் தொண்டும் எழுத்தாளர் கடமையும் - கட்டுரை) பழைய புதிய தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி (த் தமிழ்) முன்னேறும் என்பது உறுதி யாயிற்றா என வினாவின், அடிகளாராலேயே மெய்ப்பிக்கப் பட்டமையை, தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற் களால் உரைநடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர் மாநிலத்தில் மக்கள் உள்ள வரை மறையாப் புகழ்பெற்ற மறைமலையடிகளே என்கிறார் பாவாணர் (வடமொழி வரலாறு: முன்னுரை) தகவார்ந்த தமிழ் எழுதுவதற்குத் தம்மை மேற்கோளாகக் கொள்ளல் சாலும் என்பதை, “யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள்” என்று கடிதத்தில் பொறித்தமை விளக்கிக்காட்டும்.(மறைமலையடிகளார் கடிதங்கள் - 1) அடிகளார் நூல்களைக் கற்றால் தமிழின் முழுதுறு பரப்பைக் கற்ற பயன் செய்யும் என்பது அவர் தம்மைத் தாமே மதிப்பிட்ட மதிப்பீடாம். அதனை. அவர் தம் திருமகனார் மறை. திருநாவுக்கரசு அவர்கள் யான் ஐம்பது ஆண்டுகட்கு மேலாக ஏராளமான நூல்களை ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறிய முடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்குந் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை. அது முடியவும் முடியாது. தேவையும் இல்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை யெல்லாம் பிழிசாறாக யான் வடித்துள்ளேன். என் நூல்களைப் படித்தால் போதும். அதனால் தமிழ் முழுதுங்கற்ற பயனை அடையலாம் என்பர். என்கிறார் (மறைமலையடிகள் வரலாறு - 827) எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு என்பது நினைவும் சொல்லும் செயலும் ஒருப்பட்டு நிற்கும் ஒரு தன்மையாம். அத் தன்மைக்குத் தம்மைத் தாமே சான்றாக்கிக் கொண்டு நிலைப்படுத்திய சான்றோர் மறைமலையடிகளார் என்பது இதுவரை கண்டவற்றால் விளங்கும். தனித்தமிழ் ஊற்றம் ஏற்படு முன்னரே, தமிழ்ச் சொல் பிறசொல் என்னும் ஆய்வு மேற்கொண்டிருந்தார் அடிகளார். 1902 இல் ஞானசாகரம் என்னும் மாதிகையை அடிகளார் தொடங்கினார். ‘தமிழ் - வடமொழியினின்றும் பிறந்ததா? என்றும் தமிழ் - மிகப் பழையதொரு மொழி என்றும் கட்டுரைகள் அந்நாளிலேயே எழுதினார். 1903 இல் கலைநூற் புலமைப் பாடநூல்களுள் ஒன்றாக முல்லைப்பாட்டு இருந்தது. அதற்கு அரியதோர் ஆய்வுரை கண்டார் அடிகள். இப்பாட்டினுள் இடைச் சொற்களையும் வேற்றுமை உருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக் குறைய ஐந்நூறு சொற்களாகும். இவற்றுள் முன் வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ்வைந்நூறு சொற்களுள் நேமி, கோவலர், படிவம், கண்டம், படம், கணம், சிந்தித்து, விசயம், அஞ்சனம் என்னும் ஒன்பதும் வடசொற்கள். யவனர் மிலேச்சர் இரண்டும் திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்ட பிறமொழிச் சொற்கள் பதினொன்றேயாம். எனவே இப்பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிற சொற்கள் புகுந்தன என்றறிக; ஏனையவெல்லாம் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும்” என்று ஆய்ந்து எழுதுகிறார்.(பக் 56) 1906 இல் பட்டினப்பாலை கலைநூற்புலமைக்குப் பாடமாக இருந்தது. அதற்கும் ஆய்வுரை கண்டார் அடிகளார். இப்பாட்டின்கண் சிறிதேறக் குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத்தொன்பது (1369) சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம், சமம் என்பனவாம், ஞமலி என்னும் ஒரு சொல் பூழிநாட்டுக்குரிய திசைச் சொல்லாகும். ஆகவே இப்பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிற நாட்டுச் சொற்கள் கலந்தன என்பது அறியற்பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாய் வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க என்கிறார். (பக் 77) தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் எண்ணிக் காட்டிய அடிகளார் எழுதிக் காட்டிய அளவில் நின்றாரா? இல்லை! மறுபதிப்புகளில் தம் எழுத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்த பிறமொழிச் சொற்களைக் களைந்தார். அவ்வாறு களைந்ததையும் நூல் முகப்பில் குறிப்பிட்டார். பிறபிற நூல்களிலும் அம்முறையே செம்முறையெனக் கைக்கொண்டார். 1902 ஆம் ஆண்டில் அடிகளார் தோற்றுவித்த மாதிகை ஞானசாகரம் என்பது. 1911 இல் தோற்றுவித்தது சமரச சன்மார்க்க சங்கம் தனித் தமிழ் வாழ்வாகிய அடிகளார் சுவாமி வேதாசல மாக இருந்த தம் பெயரை, மறைமலையடிகள் ஆக்கினார். ஞான சாகர த்தை அறிவுக் கடலா க்கினார். சமரச சன்மார்க்க சங்கத்தைப் பொது நிலைக் கழக மாக்கினார். தம் கொள்கைக்குத் தாமே சான்றானார். சான்றோரைச் சார்ந்த சான்றோர் எவ்வாறாவர்? அவரும் சான்றாவர் தாமே! பால சுந்தர மாகப் பயில வந்தவர். இளவழகனார் ஆனார்! அழகரடி களும் ஆனார்! அடிகளார் மகளார் திரிபுர சுந்தரி யார் முந்நகரழகி யானார்; மருகர் குஞ்சிதபாதம் தூக்கிய திருவடி யானார்! பின்னர்ப் பிறமொழிப் பெயருடையார் தனித் தமிழ்ப் பெயர்களைத் தேடித் தேடிப் பெருமிதமாக மாற்றிப் பேணும் நிலைமை தமிழ் மண்ணுக்கும், கடல் கடந்தும் நிலங்கடந்தும் வாழும் தமிழ் கூறு நல்லுக மண்ணுக்கும் இயல்நெறி யாயிற்று! அடிகளார் கொள்கையில் வீறிய மொழிஞாயிறு பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் உலகத் தமிழ்க் கழகம் கண்டு சிற்றூர் பேரூரெல்லாம் பேரால மரமெனக் கால்கொள்ள வைத்து வளர்த்தனர். இவ்வியக்கச் செயலால் மாறேம் என்பாரும் மாறி வருதல் கண்கூடாகக் கண்டறிய வாய்க்கின்றது. மாறி நின்றோரும் மாறி நிற்கும் நிலைமையும் இல்லாமல் இல்லை! ஒட்டு மொத்தப் பார்வையாகப் பார்த்தால் ஒருநிலைப் பாடான மொழியாக்கச் செயற்பாடு, வாழும் மக்கள் முயற்சியளவில் நின்றுவிடாது! ஆளும் அரசுக்கே பெரும்பங்கு உண்டு. ஆளும் அரசு, வாழும் அறிஞர் பெருமக்களை அவர்கள் வாழுங் காலத்திலேயே பயன்படுத்தி மொழியாக்கச் செயல்களை நிறைவேற்றுதல் வேண்டும். எந்த மண் எமக்கு ஆளுரிமை தந்ததோ அம்மண்ணின் மொழிக்கு வாழுரிமைச் செயல்களை யெல்லாம் செய்தே ஆவேம் என்னும் திண்ணிய நோக்கும், ஆக்கச் செயல்களும் தொடர்ந்து கிளர்ந்து நடைப்பட்டிருக்கு மானால் அடிகளார் இயக்கம் தோன்றி எண்பான் ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் ஆட்சி மொழிச் சிக்கலோ, பயிற்று மொழிச் சிக்கலோ, வழிபாடு - வழக்கு - இசை - அறிவியல் என்பவற்றின் நிலைமொழிச் சிக்கலோ இருக்க வாய்ப்பில்லையாம். அவ்வாய்ப்புகள் உண்டாதலே அடிகளார் மாண்பையும் கடைப்பிடிகளையும் உலகறியச் செய்யும் உயர்வினதாம்! இங்குக் குறிக்கப்பட்ட மாண்பு, மொழி பற்றியதே! அடிகளாரின் பல்துறையறிவும், சமயச் சீர்திருத்த நோக்கும், பிறவும் தனித்தனி மாண்பினவாம். - இரா. இளங்குமரன் தமிழ் இலக்கிய வானில் ஒரு வானவில் இயற்கையின் எழிலில் இறைவனைக் கண்டு, அழகின் சிரிப்பில் மூழ்கி, கவிதை முத்துகளை எடுத்துத் தந்தவர், ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட் ஓர்த் (William Wordsworth), அவர், வேறு எந்தக் கவிஞரும் இயற்கை எழிலில் ஈடுபடாத அளவுக்கு ஈடுபட்டு அமுதக் கவிதைகளை இயற்றியதால் அவரை இயற்கைக் கவிஞர் என்று புலமை உலகம் போற்றி வருகின்றது. அந்தக் கவிஞரின் உள்ளத்தை, கார் காலத்து வானில் தோன்றும் வானவில் பெரிதும் கவர்ந்துள்ளது. இயற்கையின் அற்புதப் படைப்பாக - மண்ணுலகையும் விண்ணுலகையும் இணைக்கின்ற வண்ண வளைவுப் பாலமாக - பலவகை வண்ண மலர்களை நேர்வரிசையில் நிரல்பட அமைத்துக் கலையழகுடன் தொடுத்து வானில் தொங்கவிட்ட கதம்ப மாலையாக இன்பக் காட்சி வழங்கும் வானவில் இயற்கைக் கவிஞரைக் கவர்ந்ததில் வியப்பு ஒன்றுமில்லை! சின்னஞ்சிறிய வயதில் வானவில்லைக் கண்ட போதெல்லாம் கவிஞர் உள்ளம் துள்ளி விளையாடியது. வானவில் தந்த பேரின்பத்தைக் கவிஞர் “My heart leaps up, when I behold a Rainbow in the sky!” என்று வியந்து பாடியுள்ளார். வாழ்நாள் முழுதும் அந்த இனிய நினைவே ஏற்பட வேண்டும் என்று விரும்பினார். மேலே உள்ள கவிதை வரியில் உள்ள ஒவ்வொரு சொல்லிலும் கவிஞரின் உள்ளத்தில் வானவில் தந்த இன்பம் பொங்கி வழிகிறது. தமிழில் அந்த வரியைக் கீழே உள்ளவாறு மொழி பெயர்க்கலாம். என் உள்ளம் துள்ளிக் குதிக்கிறது, வானத்தில் ஒரு வானவில்லை நான் காணும் போதெல்லாம்! இந்தச் சொற்களைக் கொண்டு, வானவில்லால் ஏற்படும் இன்பம் எத்தகையது என்பதை உணரலாம். தமிழ் இலக்கிய வானத்தில் ஒரு வானவில் தோன்றி வண்ணம் குலையாமல் - வடிவம் மாறாமல் - எளிதில் மறையாமல் நின்று நிலவி, தமிழ் மக்களை மகிழ்வித்து வருகின்றது. அத்தகைய வானவில் எது? மறைமலை அடிகள் என்ற இனிய பெயரை உடைய தமிழறிஞரே, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வானில் வானவில்லாய்த் தோன்றி அன்றும் இன்றும் மகிழ்வூட்டி வருகின்றார். இனியும் மகிழ்ச்சி தருவார். அடிகளாரை வானவில்லுடன் ஒப்புமைப் படுத்துவது எங்ஙனம் பொருந்தும்? இந்த வினாவிற்கு உரிய விடையைச் சற்று விரிவாகவே கூறவேண்டியுள்ளது. 1. வானவில்லில் உள்ள வண்ணங்கள் ஏழு. அடிகளாரிடம் உள்ள திறன்கள் ஏழு. 2. மழைக்காலத்தில் நீர் கொண்ட முகிலை ஊடகமாக்கொண்டு நுழைகின்ற கதிரின் ஒளிக்கீற்று ஏழு வண்ணங்களாகப் பிரிந்து, அரை வட்டமாக அடிவானத்தில் வானவில்லாய்த் தோன்றுகிறது. இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வானத்தில் புலமை முகிலின் ஊடே பாய்ந்து வெளிப்பட அடிகளின் அறிவுஒளி, ஏழு வகையான திறன்களுடன் வெளிப்பட்டுள்ளது. 3. கார்காலத்தில் கருமேகங்கள் ஒன்று சேர்ந்து மோதி, இடிமின்னலுடன் பெருமழை பெய்து ஓய்ந்த பின்னர், அமைதி நிலவும் வானத்தில் மிதக்கின்ற சற்று வெளுத்த நீலமுகிலின் ஊடேபாயும் வெப்பம் குறைந்த கதிர் ஒளியின் வீச்சு, வானவில் தோன்றக் காரணமாய் உள்ளது. அதேபோல, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் வானில் திரண்டு எழுந்த புலமை முகில்கள் ஒன்றோடு ஒன்று மோதி மறுப்பு என்னும் இடியுடனும், ஆய்வின் தெளிவான முடிவு என்னும் மின்னொளியுடனும் தமிழ் மழை பெய்து ஓய்ந்த நிலையில், அமைதியான இலக்கிய வானில் வானவில்லாய்த் தோன்றினார் அடிகளார். எனவே, அடிகளாரை வானவில்லுடன் ஒப்பிட்டுக் காண்பது முற்றிலும் பொருத்தமானதாகும். இனி, அடிகளாரிடம் அமைந்துள்ள ஏழு வகைத் திறன்கள் யாவை? என்ற வினாவிற்கு விடை காண வேண்டும். அவரது ஏழுவகைத் திறன்களைக் கொண்டு அவரை ஏழுவகையாக அறிமுகப்படுத்தலாம். 1. தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்துத் தலைவராய் விளங்கி வீறுகொண்டு நடந்து சென்ற பெருந்தமிழர் 2. சைவ சமயம் வீறுகொண்டு எழவும், விரைந்து வளரவும் ஓயாது உழைத்த சைவ சமயக் காவலர். 3. தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய முப்பெரும் மொழிகளையும் கற்றுத் தேர்ந்த மும்மொழிப் புலமைச் செல்வர். 4. பழந்தமிழ் நூல்களுக்குப் புது விளக்கம் கண்ட உரையாசிரியர். 5. மும்மொழிப் புலமைத் திறனால் அரிய திறனாய்வுகளைச் செய்த ஆராய்ச்சி அறிஞர். 6. வடமொழியிலும் ஆங்கிலத்திலும் உள்ள சிறந்த நூல்களைத் தமிழாக்கம் செய்து புகழ்பெற்ற மொழி பெயர்ப்பாளர். 7. தமிழில் உரைநடையின் வீறும் செழுமையும் முதிர்ச்சியும் குறையாமல் உரைநடை படைத்துக் கொண்டு புதிய அடிச்சுவடு பதித்த உரைநடை வல்லாளர். இந்த ஏழு திறன்களையும் ஒருங்கே கொண்ட மறைமலைஅடிகளை, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வானில் அழகுடன் விளங்கும் வானவில் என்று கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். அடிகளாரின் திறன்கள் இவை மட்டும் தானா? விரிப்பின் பெருகும்! தொகுப்பின் எஞ்சும்! விரித்துப் பெருக்காமலும், தொகுத்து எஞ்ச விடாமலும் அடிகளாரின் திறன்களை, வானத்தில் பறக்கும் பருந்தின் பார்வை கொண்டு நோக்கி உணரவேண்டும் என்ற ஆர்வம் மிகுகின்றது. அடிகளார், சிறந்த இதழாசிரியர்; இந்தி எதிர்ப்பின் முன்னணி வீரர்; உயர் சைவத்திற்கு மாறான கொள்கைகளை ஏற்காத பகுத்தறிவாளர்; சிறு தெய்வ வழிபாட்டைப் புறக்கணித்த சமயப் புரட்சியாளர்; வேளாளர் நாகரித்தை வெளிப்படுத்திய இனஎழுச்சியாளர்; சங்க இலக்கிய மாண்பை உணர்த்திப் பிற்கால இலக்கியத்தின் தாழ்வை இனம் காட்டிய மேதை; புலமைப் போர்களில் அஞ்சாது ஈடுபட்டு மறுப்புரையும் கண்டனமும் பெற்று, மறுப்புக்கு மறுப்பும் கண்டனத்திற்குக் கண்டனமும் எழுதி சட்ட வல்லுநர் போல் திகழ்ந்தவர்; மிகச்சிறந்த தமிழப் பேராசிரியர்; புலவர்கள் போற்ற வாழ்ந்த புலவர் ஏறு; ஆய்வரங்குகளின் ஒப்பற்ற தலைவர்; இலக்கியம், இலக்கணம், சமயம் ஆகிய துறைகள் மட்டுமே அல்லாமல், உணவு, உடல்நலம், மனவளம், வாழும் நெறி முதலியவற்றை ஆய்ந்து தெளிந்த அறிஞர்; கால ஆராய்ச்சியில் கால்வைத்துப் புதிய பாதை போட முயன்றவர்; ஆங்கிலத்தில் எழுதும் திறன் பெற்றவர்; புதியன படைக்க முயன்று, கடிதத்தின் வாயிலாகக் கதை நூலை உருவாக்கியவர்; தமக்கென்று தனித் தன்மை வாய்ந்த இல்லம் அமைத்துக் கொண்ட கட்டிடக் கலைஞர்; முத்து முத்தாய் எழுதும் எழுத்துக் கலைஞர்; நாள்தோறும் நாட்குறிப்பு எழுதிய மாமனிதர்; பெரிய நூலகத்தை உருவாக்கித் தந்தவர்; அறிஞர்களும் அரசியல் மேதைகளும் கவிஞர்களும் போற்றி மதிக்க வாழ்ந்தவர்; நடமாடும் பல்கலைக் கழகம் என்று அறிஞர்களால் பாராட்டப் பெற்றவர். வாழும் காலத்திலேயே பேரும் புகழும் பொருளும் வளமும் பெற்று இனிது வாழ்ந்தவர். வெளிநாட்டில் வாழ்ந்த தமிழர்களும் விரும்பிய மாமேதை; தமக்குப் பின் தமது பணிகளைத் தொடர்ந்து செய்யும் மனவலிமை கொண்ட தமிழ் மறவர்களை உருவாக்கியவர். இத்தனை திறன்களும் உடைய அடிகளாரின் நூல்கள் 1950 முதல் 1970 வரை புகழ் பெற்றுப் பரவ முடியாத நிலை ஏற்பட்டது. 1. அடிகளாரின் நூல் வெளியீட்டு உரிமை பற்றி எழுந்த பூசல். 2. பகுத்தறிவு இயக்கம் சமயங்களை எதிர்த்ததால் ஏற்பட்ட தேக்கம். 3. அடிகளார் இந்தியை எதிர்த்ததால் காங்கிரசுக் கட்சி ஆட்சி புறக்கணித்த நிலை. இந்தக் காரணங்களின் விளைவுகள் தவிர்க்க முடியாதவை. காலத்தின் போக்கால் தோன்றியவை. இவற்றை உணர்ந்து, வருங்காலத் தமிழகம் செயலாற்றினால் பெரும் பயன் விளையும். அடிகளாரின் திறன்களில் ஒவ்வொன்று பற்றியும் தனி ஆய்வு செய்து பெருநூல் எழுதலாம். தொடங்கட்டும் அடிகளாரைப் பற்றிய ஆய்வுப் பணிகள்! தொடரட்டும் அடிகளார் தொடங்கி வைத்த நற்பணிகள்! வளரட்டும் அடிகளார் தோற்றுவித்த தமிழ் நிலையங்கள்! வாழட்டும் அடிகளார் வளர்த்த இனமான உணர்வு! பரவட்டும் உலகெங்கும் அடிகளார் புகழ்! - பேராசிரியர் மு.வை. அரவிந்தன் உரைப்பாயிரம் கொழுஞ்சுவை கெழுமிய செழுந்தமிழ் வழக்கில் உரையும் பாட்டுமென இருதிறனுளவே, அவற்றுள் உரையெனப் படுவது வரையறை யின்மையின் சொற்பல வாகி நற்பொருள் விளக்கி அறிவுநனி துலக்குங் குறியது வுடைத்தே; வாட்டமில் சிறப்பிற் பாட்டெனப் படுவது கரும்புகண் ணுடைத்த விரும்புபிழி யிறுக மூழையிற் றுழைஇத் தாழா தட்டோன் எரியகைந் தன்ன எழிற்பொற் பாண்டில் விளிம்புற நிறைத்தாங்கு முதுவாய்ப் புலவோன் பாவிடைச் சுருங்கிய பயங்கெழு சொல்லிற் கருதுதொறு மாழ்ந்த காழ்த்தபொருள் பொதிப்ப என்புநெக் குருகும் இசையுடன் றழீஇ இயற்கையின் வழாம லறிவொருங் குறுத்தி இன்புணர் வெடுப்பி யன்பே யுருவாம் முழுமுதற் பொருளொடுங் கெழுவிடப் பயக்கும் ஆனாத் தலைமைப் பான்மைய துடைத்தே; இத்தகு சிறப்பின் நற்றமிழ்ப் பாக்கள் பின்றைநாட் காண்டல் பெரிதரி தாயினும் பண்டைக் காலத்துப் பழுத்தறிவு மாண்ட நல்லிசைப் புலவோர் நயமுறக் கிளந்த முதிர்கட லெக்கர் மணலினும் பலவே; அவற்றுள், ஒம்பா தொழிந்தன போக நாம்பெற இற்றைநாட் போந்த முற்றுதமிழ்ப் பாவுள் முருகுமுத னிறுத்த அரியன பத்தும் வரம்பிட லாகாப் பெருஞ்சிறப் பினவே; அவற்றுட் பட்டினப் பாலையின் முட்டறு மாட்சி உரைவிளங்க விரித்தற் கறிவிலெ னாயினு முருத்திரங் கண்ணனெனுங் காட்சிசால் புலவன் திருத்தகு சீரடி உள்ளக மலர்தலின் அதன்வயிற் றுளும்பிய அறிவுநறை பிலிற்றி விளங்கிய வுணர்வான் ஒருப்பட்டு வளங்கெழு மற்றதன் மாட்சி தெரிக்குவெனே. 1. பாட்டினியல்பு வேந்தர் பெருமானான சோழன் கரிகாற் பெருவளத்தான் செங்கோ லோச்சிய தலைநகரான காவிரிப்பூம் பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறுமுகத் தால், குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் என்னும் அகனைந்திணை யொழுக்கத்தில் இடைநின்ற பாலை யொழுக்கத்தை உணர்த்துதற்குப் புகுந்த நல்லிசைப் புலவரான உருத்திரங் கண்ணனார் இப்பாட்டிற்குப் பட்டினப் பாலை யெனப் பெயர் குறித்தருளினார். இனி, இதனாசிரியர் புறத்தே கட்புலனுக்கு உருவாய்த் தோன்றும் பட்டினத்தையும், அகத்தே உயிரினுணர்வுக்குப் புலனாய் அருவாய்த் தோன்றும் பாலை யொழுக்கத்தினையும் பாடுதற்குப் புகுந்த நுணுக்கத்தை உணருங்கால் இப் பாட்டின் உயர்ச்சி தெற்றென விளங்கா நிற்கும். அருவாய் அறிவாய் இன்பமாய் யாண்டும் பரந்து நிற்கும் முழுமுதற் பெரும்பொருளைக் கறை கெழுமிய அறிவும் முறைதழுவாச் செயலுமுடைய உயிர்கள் அறிந்தடைதற்கு இருதிறப்பட்ட நிலைகளிருக்கின்றன. அவை அறிவுநிலை, உணர்வுநிலை என்பனவாம். இவற்றுள், அறிவுநிலை என்பது காணப்பட்ட வுருவான இவ்வுலகியற் பொருள்களின் வியத்தகு அமைதிகளைக் கண்டு, இவை, தம்மை இங்ஙனம் அமைத்தவனான, பேரறிவும் பேராற்றலுமுடைய முதற்பொருள் ஒன்றுண்டென்று அதன் இருப்பு மாத்திரம் அறிவிப்பதாம். மற்று அம் முதற்பொருளின் உண்மைத் தன்மையோ அவ் வறிவுக்கு ஒரு சிறிதாயினும் புலப்படமாட்டாதாம். உயிர்களின் அறிவு, உலகியற் பொருள்களை ஒன்றுமைப்பட்டு நின்று அறிதற்குக் கருவிகளான மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக்கருவிகளைந்தானும், மனஞ் சித்தம் புத்தி யகங்காரம் என்னும் அகக்கருவிகள் நான்கானும் நடைபெறுவதொன்றாம். அகம் புறம் என்னும் இக் கருவிகளின் றுணைகொண் டன்றி அவ்வறிவு வேறு தனித்து நடைபெறக் காணாமையானும், அங்ஙனம் நடைபெறுமிடத்தும் அவ் வறிவாற் பற்றப்படுவன மண் புனல் அனல் கால் விசும்பு என்றற் றொடக்கத்து ஐம்பூதங்களும் அவ்வைம் பூதங்களின் சேர்க்கையாற் பிறந்த பொருட்டன்மைகளுமே யன்றிப் பிறிதின்மையானும், முழுமுதற் பெரும்பொருளான கடவுள் இவ்வாறு அறியப்பட்ட பொருள்களுள் ஒன்றன்றாய் இவற்றிற் கெல்லாம் அப்பாற்பட்டதாய் விளங்குவ தொன்றாகலானும் அவ்வறிவுக்கு அம்முதற் பொருள் ஒரு சிறிதாயினும் புலப்படற் பாலதன்றாய் நிற்றல் பெரிதும் பொருத்தமாவதேயாம். இது பற்றியே அறிவுநூல்களெல்லாம் இறைவனை இவ்வுலகத்துப் பொருள்களுள் ஒன்றாய் வைத்து உடம்பாட்டால் ஓத ஏலாமை தெளியக் கண்டு, இவற்றுள் இதுவுமன்றாய் அதுவுமன்றாய் மற்றெதுவுமன்றாய் அப்பாற்பட்டதென்று எதிர்மறை முகத்தான் வைத்து விளக்குதற்கு மாத்திரம் ஒருப்பட்டு, விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனுந் திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில், என்றும், பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லான் அந்தமு மாதி யில்லான் அளப்பில னாத லாலே எந்தைதா னின்ன னென்று மின்னதா மின்ன தாகி, வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே. என்றும், அல்லையீ தல்லையீதென மறைகளு மன்மைச் சொல்லினாற் றுதித்திளைக்கு மிச்சுந்தரன். என்றும், பூதங்க ளல்ல பொறியல்ல வேறு புலனல்ல வுள்ளமதியின் பேதங்க ளல்ல இவையன்றி நின்ற பிறிதல்ல வென்று பெருநூல், வேதங் கிடந்து தடுமாறு வஞ்ச வெளியென்ப கூடன் மறுகிற், பாதங்க ணோவ வளையிந்த னாதி பகர்வாரை யாயு மவரே. என்றும் கூறுவவாயின. இனி, இப்பெற்றித்தான அறிவுக்குப் புலப்படாமையால் இறைவன் உண்டென்று மாத்திரங் கூறுதலாற் போந்தபயன் என்னையெனின், அறிவு நிலைக்கு அவன் புலப்படானாயினும் அதற்கு மேற்பட்ட உணர்வுநிலையில் அடையப்படு பொருளாய் விளங்கித் தோன்றுமாகலின் அது கடா வன்றென மறுக்க. அற்றேல், உணர்வு நிலை நம்மனோர்பா லுண்டென்பது எற்றாற் பெறுது மெனின்; காதற்கிழமையிற் சிறந்தாரிருவர் அவ்வுரிமையினைத் தாங் கருதும் போதெல்லாம் அவரகத்தே ஒரின்பந் தோன்றுதல் அனுபவ மாத்திரையாய் விளங்கக் கிடந்ததொன்றாம், அவ்வின்பம் அது தோன்றப் பெற்றார் தமக்கே புலனாயினல்லது அஃதிவ்வாறிருந்ததெனப் பிறர்க்கு அறிவிக்கவும் உரைக்கவும் படாத இயல்பிற்றாம். காணவுங் கருதவு முரைக்கவும் படாத முதல்வனோ டொற்றித்து நின்று அவனை யனுபவித்தல், அவன்போற் காணவுங் கருதவும் உரைக்கவும் படாத உணர்வுநிலை யொன்றற்கு மாத்திரமே வாய்ப்பதாம். என்னை? அகத்தே தோன்றும் அன்பும் அவ்வன்பே தனக்குண்மையுருவாய்க் கொண்ட முதற்பொருளும் வேறல்லாமையால், அவ்வன்பு வரம்பின்றி இளகி விரிந்த உணர்வு நிலையில் அஃதின்பப் பொருளாய் முறுகித்தோன்றல் இன்றியமையாததாகலின்; இவ்வுண்மை யுணர்ந்தே திருமூலரும், அன்புஞ் சிவமு மிரண்டென்ப ரறிவிலார் அன்பே சிவமாவ தியாரு மறிகிலார் அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே. என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆகவே, முழுமுதற்கடவு ளுண்டென்பதனை விளங்க அறிவித்தற்குரிய அறிவு நிலையும், பின் அதனோடு வேறறக் கலந்துநின் றின்புறுதற்குரிய உணர்வுநிலையு மென்னும் இருதிற நிலையினையும் உயிர்களுக்கு முறுகுவித்துப் பின் அவ்வறிவு நிலையினையுங் கழலச் செய்து தூய அன்புருவாய் விளங்கும் உணர்வுநிலையை நிலைபேறாக்குவித்து உயிர்களுக்கு அளந்தறியப்படாத பெரும் பயனைத் தருதற்கு இன்றியமையாக் கருவியாவதுதான் பாட்டென்பது. அற்றேல், உரையுஞ் செய்யுளு மென்னும் இரண்டனுள் உரையும் அவ்விருதிற நிலையும் முறுகுவித்துப் பயன்றரு மாகலின் செய்யுள் மாத்திரமே அதனைப் பயக்குமென்றுரை கூறிய தென்னையெனின்; பால் கறந்த மாத்திரையே யுண்பார்க்குச் சுவை பயக்குமாயினும், அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின்னுண்பார்க்குக் கழி பெருஞ்சுவை தருதல் போலவும், முற்றின கருப்பங் கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃதினிமை விளைக்குமாயினும் மேலும் அதனைப் பாகுதிரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும், உரையும் நலம் பயப்பதொன்றேயாயினும் அதனைக் காட்டினுஞ் செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம். கறந்த பால் நீராளமாய் நெகிழ்ந்திருத்தலின் அதன் கண்ணுள்ள சுவை மிகுந்து தோன்றாது குறைந்தே காணப்படு கின்றது அதுபோல உரையும் ஒரு வரம்பின் கட்படாது சொற் பெருக்கமுற்று நடைபெறுதலால் அதன்கட் புதைந்த பொருளும் ஆழமாகவின்றி அச்சொற்களோடு ஒத்து ஒழுகி மெல்லிதாய் விடுகின்றது. மற்றுக் காய்ச்சித் திரட்டிய பாற்கட்டியுஞ் சருக்கரைக்கட்டியும் இறுகித் திண்ணென்ற உருவுடையவா யிருத்தலின் அவற்றின்கட் சுவை மிக முதிர்ந்து தோன்றா நிற்கின்றது. அதுபோலச், செய்யுளும் எழுத்து அசை சீர் தளை அடி தொடைகளா னமைந்த பாவாய் ஒரு வரம்புட்பட்டுச் சொற் சுருக்க முடைத்தாய் நடத்தலின் அதன்கட் புதைந்த பொருளும் அவற்றோடு ஒப்ப ஒழுகித் திட்பமும் ஆழமும் உடையதாகின்றது. பாட்டெல்லாம் அறிவு நிலையைப் பற்றிக்கொண்டு போய் உயிர்களின் உணர்வுநிலையை எழுப்பி விடுவதாகும். உரையெல்லாம் அறிவுநிலையைப் பற்றியே நிகழுமல்லது அதன்மேற் சென்று உணர்வு நிலையைத் தொட மாட்டாதாகும். பெரியதோர் மலைமுழைஞ்சினுட் பொன்னும் மணியுஞ் சிதறிக் கிடத்தல் ஒரு வியப்பன்று; ஒரு சிறு கற்பிளவிலே அரிய பெரிய முழு மணிகள் அடுக்கடுக்காய்க் கிடந்து எடுக்குந்தோறும் குறைபடாதிருத்தலே பெரிதும் வியக்கற் பாலதாகும். சிறிய வான்மீன்கள் அகன்ற அவ்வானத்திற் காணப்படுதல் ஒரு வியப்பன்று; அவ் வகன்ற வானும் வேறு மாடமாளிகை கூடகோபுரங்களும் ஒரு சிறிய கண்ணாடியினுட் காணப்படுதலே மிகவும் வியக்கற்பாலதாம். இது போலப் பெரிய ஒர் உரையிலே சிலபொருளேனும் பல பொருளேனுங் காணப்படுதல் வியப்பினை விளைவியாது. மற்றுச் சிறியதொரு பாட்டிலே பல திறப்பட்ட ஆழ்ந்த பொருளெல்லாம் காணப்படுதலே வியக்கற் பாலதாகும். உரையில் ஒரு வரையறை யின்மையினாலே பொருட்கு வேண்டுவனவும் வேண்டாதனவுமான பல சொற்கள் நிரம்பி நின்று வியப்பினைத் தாராவாய்த் தாமெடுத்த பொருளை மாத்திரம் எம்மறிவுக்குப் புலங்கொள விளக்கி யொழிகின்றன. மற்றுச் செய்யுளிலோ பொருட்சாரமான சொற்கள் மாத்திரம் ஆய்ந்தமைக்கப் படுகின்றனவாகலின், அச் சொற்கள் கொண்ட பொருட்கருவை அறியப் புகுவானொருவன், தன் அறிவால் அதனைக் கூர்த்தறிய வேண்டுதலின் தன்னறிவு மிக நுணுகப் பெறுதலோடு அச் சிறிய சொல்லிற் பெரிய பொருளடங்கி நிற்றலை அறிந்த மாத்திரையினாலே தன்னை யறியாதொரு வியப்புமுடனெய்தி, அதன்கண் ஒர் இன்பந்தோன்ற அதன் வயப்பட்டுச் சிறக்கின்றான். ஆகவே, பாட்டு ஒன்றுமே உயிர்கட்கு அறிவை விளக்கி அதற்கும் மேற்பட்ட உணர்வை எழச்செய்து இன்பம் பயப்பதொன்றாய் நிலைபெறுகின்றது. உரைப் பயிற்சியில் அறிவு மாத்திரம் விளக்க மெய்துமேயல்லது உணர்வின் வழித்தான இன்பந்தோன்றுதல் இல்லை யென்க. அல்லதூஉம், உரையெல்லாம் இயற்கையிலேயே இசைதழுவாது நடப்பனவாமாகலின் அவை உணர்வை எழுப்புமாறு எவ்வாற்றானு மில்லையென்க. பாட்டுகளோ இயற்கையாகவே இடங்கட்கு ஏற்ற பெற்றி யெல்லாம் பல திறப்பட்ட இசைதழுவி நடக்குமாகலின் அவை உயிருணர்வை எழுப்புதற்கட் பின்னுஞ் சிறப்புடையவாம். என்னை? இசையைக் கேட்டு உருகாத பொருள் உலகத்தில்லையன்றே? உலகியல் சிறிதுமறியாத மகவை அன்னை தொட்டிலிற் கிடத்தித் தாலாட்ட அஃதவ்விசையா லின்புற்று உறங்கல் கண்டாமன்றே? கொடிய விலங்கினங்களும் நச்சுயிர்களும் புல்லாங் குழலோசை கேட்டவளவானே தந்தொழில் மறந்து இன்புற்றுத் தன்வயமழிதல் தெளியப்பட்ட தொன்றன்றோ? இதன்மாட்சி இனிது அறிவுறுத் தற்கன்றே மாணிக்கவாசகப் பெருமான் திருச்சிற்றம்பலக் கோவையாரில், சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் றுறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே. என்று திருவாய்மலர்ந் தருளினார். இப் பெற்றித்தான இசை, தானேயும் இன்புறுத்துகின்ற பாட்டோடுஞ் சேருமாயின் அவையிரண்டின் கலப்பாற் றோன்றும் இன்பம் இவ்வியல்பிற்றென்று குறித்துரைக்கல் ஏலுமோ? எனவே இசையோடு பிணைந்தியங்கும் பாட்டிற்கும் அஃதின்றி யியங்கும் உரைக்கும் உள்ள வேறுபாடும், இவ்விரண்டில் முன்னையது பயன் பெரிதுடைத்தாதலும் பின்னையது பயன் சிறிதே யுடைத்தாதலும் தெற்றென விளங்காநிற்கும். அற்றன்று, உரைநூல்களும் ஒரோவழி வியப்புணர்வு தரக்காண்டுமாகலின் அதனைச் செய்யுளுக்கே வரைந்து கூறியது பொருந்தாதாம் பிறவெனின்; நன்று கடாயினாய், ஒரோவோருரை நூல்களின் இடையிடையே பாட்டிற்குரிய சொல்நயம் பொருள் நயங்கள் காணப்படுதலால் அங்ஙனம் அவ்வியப்புணர்வு தோன்றிற் றாகலின் அதுபற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை யென்பது, இப் பெற்றிப்பட்ட உரைப்பகுதிகள் சில ஆசிரியர் நக்கீரனார் களவியலுரையினிடையிடையே காணப்படும்; அவை கொண்டு இவ்வுண்மை அறியற்பாற்றாம். இனிப் பாட்டுச் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமு முற்று இசைதழுவி நடப்பதனான் இன்புறுத்துமென்ற அவ்வியல்பை ஓருதாரண முகத்தான் விளக்கவே அஃதினிது விளங்குமாகலின் மாணிக்கவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக் கோவையா ரென்னுங் களஞ்சியத்துள்ள ஒரு முழுமணியை ஈண்டெடுத்துக் காட்டுவாம்; ஆவா இருவர் அறியா அடிதில்லை யம்பலத்துள் மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னித் தீவா யுழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித் தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றொ ராண்டகையே. என்பது, தன்னுடைய தலைமகள் எவ்வாற்றானுஞ் சிறந்த ஓராண்மகனோடுங் காதல் கொண்டு நேயமானமை சில குறிப்பாலறிந்த தோழி, பின்னும் அவரிருவர் மாட்டும் நிகழ்ந்த அந் நேய வுரிமையினைத் தெளிந்து கொள்ளும் பொருட்டுத் தன்றலைமகளை நோக்கி அவள் நடுங்குதற் கேதுவாவன சில சொல்லி அதனான் அவ்வுண்மை துணிகின்ற நடுங்கநாட்டம் என்னுந் துறைபற்றிவந்தது இத் திருப்பாட்டு. இதன்கண் முன்னிரண்டடிகளும் கன்னெஞ்சினையும் இளக்கும் அன்பின் சுவை நிரம்பி முழுமுதற் பொருளான சிவத்தின் பெருமை தெரிவியா நின்றன; பின்னிரண்டடிகளும் தோழி தன்தலைமகளை நோக்கி நடுங்கக் கூறியதைக் காட்டுகின்றன. தலைமகள் எட்டியுஞ் சுட்டியுங் காட்டப்படாத வடுவில்லாச் சிறந்த குலத்திற் பிறந்து நல்லொழுக்கமே அணிகலனாய்க் கொண்டு போதருகின்றாளாகலின் அவளை நோக்கி நீ சிறந்த அவ்வாண்மகனோடு காதல் கொண்டமை யான் அறிவேன் என்று கூறுதற்கு மிக அஞ்சியும், அவ்வாறு கூறல் தன் நிலைக்குக் தகாதென நினைந்தும், தலைமகடன் வாயானே அதனை யுரைப்பக் கேட்டலே முறையாமென உறுதிசெய்தும் இச் செய்யுளில் மிகவுந் திறம்பட அதனை ஆராய்ந்தமை பெரிதும் வியக்கற் பாலதாம். அப்பின்னிரண்டடியின் பொருள் வருமாறு; கண்மணி யனையாய்! இன்று யான் இம் மலைச்சாரலின் வழியே வருவேனாயினேன்; அங்ஙனம் வருவேனுக்குச் சிறிது சேய்மைக் கண்ணே சினத்தாற் றீயையுமிழும் ஒரு பருத்த வேங்கைப் புலி அந்தோ கிழித்தது! ஆ! அதனை ஒரு நொடிப்பொழுதிலே தப்பிப்போய் எவ்வாற்றானுஞ் சிறந்தவனான ஓர் ஆண்டகை தன் வேற்படையைச் சுழற்றிய திறத்தை என்னென்று கூறுவேன்! என்று தோழி தலைமகளை நோக்கிக் கூறியதாம். இங்ஙனங் கூறியதனைக் கேட்டலுந் தலைமகள் முதலிற் பொறுத்தற்கரிய நடுக்க மெய்திப் பின் சிறிதே அது தணிந்து எண்ணுவாள்: என்னை! இம் மலைச்சாரலில் எளியேன் பொருட்டு வந்து இயங்குவான் என் ஆருயிர்க் காதல னொருவனன்றே! அவனை யன்றி ஆடவர் பிறர் இங்கு வரப்பெறாரன்றே! அவன் ஒரு பெரிய வேங்கைப் புலியால் இழுக்க மெய்தினனோ! என்றிங்ஙனமெல்லாம் ஆராய்ந்து வருந்து நிலைமையில் ஈண்டுத் தோழி தன் சொற்களை அவள் ஐயுறுமாறு கூறிய விரகு நனி வியக்கப்படுந்தன்மைத்து. தன்றலைவி கற்பிற்கு அரசியாகலானும் மிக நுண்ணிய உணர்வுடை யளாகலானும் தன் காதற் கொழுநன் புலிக்கோட் பட்டான் என்பது கேட்டனளாயின் அது கேட்ட அந்நொடியே உயிர் துறப்பாள் என மிக அஞ்சித்தான் கூறுஞ் சொற்களில் துணிவு பிறவாது ஐயமே நிகழுமாறு கூறினாள். தீவாய் உழுவை கிழித்தது என்னுஞ் சொற்றொடர் தீவாயையுடைய புலி மற்றை யொருவிலங்கை நகத்தாற் கிழித்தது எனவும், அவ்வாண்மகனை அல்லது ஒலிவிலங்கைக் கௌவுதற் பொருட்டு அப் புலி தன் தீவாயை அகலத் திறந்தது எனவும், வேங்கை, தன் வாயாற் கிழித்ததென்றே சொல்லற்கியைந்த அந் நேரத்தே எனவும் பலபொருடந்து அங்ஙனம் அவ் வேங்கை நிற்கும் அப்பொழுதே அவ் விலங்கை அது கிழிப்பதனினின்றும் தவறச்செய்து, அல்லது அது தன்வாயை அகலத் திறந்ததற்குத் தப்பி, அல்லது தன்னைப் பற்றுதற்கு அது வந்ததாக அதனைத் தப்பி அவ்வாண்மகன் தன் வேற்படையை விடுத்து அதனைக் கொன்றவாறு பெரியதொரு வியப்பாயிருந்தது என்னும் பின்றொடரோடு இயைகின்றதாகலின், இச் சொற்றொடரைக் கேட்ட தலைமகள், தன் காதலன் இறந்துபட்டான் என்னும் பொருட்டுணிவு அதனாற் பெறப்படாமையின் தானும் இறந்துபடாளாய்க் கலக்க மாத்திரம் மிகக்கொண்டு அச் சொற்றொடர்ப் பொருடெளியும் நிலையிலிருந்தாள். இங்ஙனம் கலக்கங் கொண்ட அந் நிலையில் தான் அவ்வாண்டகைமேற் கொண்ட காதலை மறைக்கும் நினைவை மறந்து அக் காதலைத் தன்றோழிக்கு முற்றும் புலப்படுத்தினா ளாகலின், அச் சொற்பொருடெளிந்த பின்னேரத்தே தன் காதல் தோழிக்குப் புலனாயினமை கண்டு பின் அதனை அவட்கு மறையாளாய் உரைப்பாளாவது. இவ்வாறு தன்றலைவியின் நிலை அவடானே புலப்படுத்தற் கென்று தோழிசெய்த சூழ்ச்சியாக மாணிக்கவாசகப் பெருமான் வைத்துக் கூறிய வியத்தகும் ஆற்றலை நினையுங்கால் மக்கள் உள்ளத்தின் இயல்புமுற்றும் அவரறிந்தாரென்பது இனிது விளங்கவில்லையா? இற்றை ஞான்று ஆங்கில நன்மக்கள் செய்துபோதரும் உளநூல் ஆராய்ச்சிகளெல்லாம்1 இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முற்பட்ட நம்பெருமான் திருப்பாட்டிலமைந்து கிடத்தல் பற்றி நம்முள்ளம் இறுமாப் பெய்துகின்றது. ஆவா விருவரறியா என்னுமிச் செய்யுள் சில்சொல்லிற் பல்பொருடேற்றி அறிவை நுணுகச் செய்து அவ்வாற்றால் உணர்வெழுச்சி பெறச்செய்தல் நன்கு தெளியக் கிடந்தது. இதனோடு இச்செய்யுள் இன்னோசை நலந்தழுவி வாய்ப்புறச் சென்று கேட்டாரை யெல்லாம் இன்புறுத்துமாறும் குறிக்கொளற்பாற்று. இவ்வாறே திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள ஒவ்வொரு செய்யுட்களும் சொல்வளம் பொருள்வளந் துறுமி மிளிர்கின்றன; இவ் வருமைத் திருக்கோவையாரை யொக்கும் நூல்கள் தொல்காப்பியம் திருக்குறள் என்னுமிரண்டுமே யன்றிப் பிற எந்நூலும் எக்காப்பியமும் இதற்கொப்பாகா. இம் மூன்று நூல்களும் ஒப்புயர்வில்லா உவரா அமிழ்தங்களாம். இத் திருக்கோவையாரின் சிறப்புணர்ந்தே ஆன்றோர், ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலிதென்பர் ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. என்று அருளிச் செய்தார். என்றிங் கெடுத்து விளக்கியவாற்றாற் செய்யுளென்பது சொற்சுருக்க பொருட்பெருக்கமுற்று இசைதழீஇ நடந்து உயிர்களறிவை விளக்கிப் பின்னதன் மேற்பட்ட உணர்வை எழச்செயும் பான்மையுடைத்தாதல் இனிது பெறப்பட்டது. இனி, இப் பட்டினப்பாலை என்னும் அரிய பெரிய பாட்டை அருளிச் செய்த உருத்திரங்கண்ணனார் வசையில் புகழ் வயங்கு வெண்மீன் என்னும் முதலடி தொடங்கி முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் என்னும் இரு நூற்றுப் பதினெட்டாம் அடிகாறும் காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறுமுகத்தாற் பயில்வோர் அறிவை ஓர் ஒழுங்குறச் செய்து விளக்கிக் கொண்டுபோய்ப், பின் அவ்வறிவின் மேற்பட்ட அகவுணர்வை வாரிருங்கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே என்னும் இருநூற்றுப் பத்தொன்ப திருநூற்றிருபதாம் அடிகளில் எழச்செய்து, அவ்வாறு இடையிற் கருக்கொண்ட அவ்வகப்பொருளை வேலினும் வெய்ய கானமவன், கோலினுந் தண்ணிய தடமென்றோளே என்னும் இப்பாட்டின் இறுதி யடிகளோ டிணைத்து முடித்திட்டார். பாட்டியற்றும் நல்லிசைப் புலவர் நம்மறிவை ஒருமைப் படுத்து விளக்குமாறுபோற் பிறர் அங்ஙனஞ் செய்யமாட்டுவா ரல்லர். நம்மறிவெல்லாம் ஐம்பொறி வழிச்சென்று உலகியற் பொருள்களைப் பற்றிக் கொண்டே நிகழ்கின்றன. அப் பொருள்களை அங்ஙனம் பற்றிக் கொண்டு நிகழ்வுழியும் அப் பொருட்டன்மைகளை நுணுகி யறியமாட்டாவா யொழிகின்றன; இங்ஙனம் ஒரு நேரத் தொருபொருளைப் பற்றியும் பிறிதொரு நேரத்துப் பிறிதொரு பொருளைப் பற்றியும் ஓரிடத்தும் நிலைபெறலின்றிக் குரங்குபோல் ஒடுதலாலன்றோ நம்மறிவு விளக்கமடைதலின்றி மழுங்கியே கிடக்கின்றது. அறிவு விளங்காது மழுங்கிக் கிடக்குமாயின் அதன் மேற்பட்ட உணர்வு எழப்பெறுதல் ஒருவாற்றானு மில்லையாம். ஆகவே, கறங்கோலைபோல் ஒருவழி நில்லாது சுழன்று திரிதரும் நம்மறிவை ஒர் ஒழுங்கு படுத்து ஒருமுகப்படுத்திக்கொண்டு சென்று உணர்வை எழச் செய்தலே நல்லிசைப் புலவோர்க்கு இன்றியமையாத கடமையாம். இனி, அறிவு அங்ஙனம் நிலையின்றித் திரிதலை மறித்து அடக்குமாறு யாங்ஙனமெனின்; எங்கே உண்மைத் தன்மை விளங்கித் தோன்றுமோ அங்கே நம்மறிவு ஊன்றி நிற்றல் கண்கூடா யறியப்பட்ட தொன்றாம். மானைப்போல் வெண்மைச் சலவைக்கல்லில் ஒர் உருச் செதுக்கலுறுவான் ஒரு கம்மியன் அம் மானின் உறுப்பமைதிகள் தோன்றுமாறு நுணுகியறிந்து அவற்றைச் சிறிதும் பிறழாமல் உண்மையாகச் சமைத்திடுவனாயின் அவ்வுருவைக் காண்பார் அறிவு அதன்கண் ஒருப்பட்டு நின்று வியத்தல் கண்டாமன்றோ? ஓவியமெழுதுதலில் மிகவல்லவராய் விளங்கும் இரவிவன்மர் எழுதிய ஓவியங்கள் எத்துணை நுட்பமாய் உருவவுண்மையியல் வழாமல் விளங்குகின்றன! பார்மின்! கானகத்தே சகுந்தலை துஷியந்த அரசன் மேற்கொண்ட காதல்வெப்பம் பொறாளாய்ப் பிரியம்வதை, அனசூயை என்னுந் தன்றோழிமா ரிருவருந் தன்னிருமருங்குமிருப்ப மலர்ப்பாயலிற் படுத்தவண்ணமே தன் காதலை அறிவித்துத் தாமரையிலையில் ஒரு செய்யுள் எழுதுதற்குக் கையில் எழுதுகோல் ஏந்தியபடியே ஒரு புருவம் மேல் நெறியக் கவியை நினைத்தலும், அவள் பக்கலிற் பசுத்து அடர்ந்திருக்கும் புன்மேற் பூக்கள் இறைந்துகிடத்தலும், பின்னே ஒரு மான் இவர்களைத் திரும்பிப் பார்த்தவண்ணமாய் நிற்றலும், பருத்துயர்ந்த மரங்கள் மிகநெருங்கித் தண்ணிழல் பயந்து நிற்றலும், வலப்பக்கத்திருக்கும் தோழி பக்கத்தே தண்ணீர்க்குடம் ஒன்று நிற்கப் பிறிதொன்று சாய்ந்து கிடத்தலும், அத் தோழிமார் எடுத்துவந்த பூங்கூடைகளில் உருகெழு மருமலர் நிரம்பி யிருத்தலும் பிறவும் இயற்கை மாறுபடாமல் எவ்வளவு உண்மையாய் எழுதப்பட்டிருக்கின்றன! இவ்வாறுண்மைவழுவா தெழுதப்பட்ட அவ்வோவியத்தை நோக்குந்தோறும் நம்மறிவு அதன் வயப்பட்டு நின்று, இன்பம் பயத்தல் காண்டுமன்றே? இதுபோல நல்லிசைப் புலவரும், ஒருநிலையின்றி யோடும் நமதறிவை ஒர் ஒழுங்கு படுத்தற் பொருட்டு அவ்வறிவு பற்றிச் செல்கின்ற உலகியற் பொருள்களில் அழகு மலிந்து விளங்குவனவற்றை அவை விளங்குமாறே விரித்துக் கூறி அவ்விரிந்த அறிவைச் சிறிது சிறிதே சுருக்கிக் கொண்டு போய் அகமுகப்படுத்தி உணர்வெழச் செய்து இன்பத்தின்கண் இருத்துவர். இங்கே ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் புறப்பொருளில் வரையறை யின்றிச் செல்லும் நம்மறிவை மடக்கி நிறுத்துதற் பொருட்டு அப் புறப் பொருள்களுள் மிக்க அழகும் வளனும் நிரம்பித் தோன்றும் காவிரிப் பூம்பட்டினத்தை முதலிருநூற்றுப் பதினெட்டு அடிகள் காறும் உண்மை வழாது விரித்து அழகுபெறச் கூறுதல் பெரிதும் பாராட்டற் பாலதொன்றாம். பாகன் வயப்படாது கலினத்தை அறுத்துக்கொண்டு மிக விரைந்துபோம் புரவியை அப்பொழுதே பிடித்து நிறுத்த முயல்வான் அது கூடாமையின் தானிடர்ப்படுமேயல்லது வேறின்றாம்; பின் அதுசெல்லுமாறெல்லாம் விடுத்து அது வலிகுன்றி அயர்ந்த துணையானே அஃது எளிதிலே பாகன் வயப்படுமாகலின், அப் பிற்பொழுதே அதனை யாளுதற்குரிய காலமாம். அதுபோல் உலகியற் பொருள்களில் வரம்பின்றியே சென்று சென்று பழக்கம் முதிர்ந்த நம்மறிவானது, அவற்றுட் சிறந்தன சிலவற்றைப் பற்றுமாறு செயப்பட்ட மாத்திரையானே அஃது அப் பழக்கந் தவிர்ந்து அகமுகப்பட்டு ஒருங்குங்கால் அதற்கு ஆற்றல் சிறிதேயாகலின் அதனா லப்போது பற்றப்படும் அகப்பொரு ளொழுக்கத்தை வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே என இரண்டடியான் மாத்திரம் மிகச் சுருக்கிக் கூறிய இவ்வாசிரியர் நுட்ப வறிவின் வன்மைமையை என்னென்பேம்! இப் பட்டினப்பாலை முழுவதூஉம் முந்நூற்றோரடிகளா னமைக்கப் பட்டிருக்கின்றது. இவற்றுள் இரு நூற்றுத் தொண்ணுற் றேழடிகளிற் புறப்பொருள் விரிவும் ஏனை நான்கடிகளில் மாத்திரம் அகப்பொருட் சுருக்கமும் சொல்ல ப்பட்டிருக்கின்றன. இவ்வாறே திருமுருகாற்றுப்படை முதலிய செய்யுட்களினும் புறப்பொருட் சிறப்பே பெரும்பான்மையாற் கூறிவைத்து ஏனை அகவுணர்வின் றிறனெல்லாம் மிகச் சுருங்கவே சொல்லப்பட்டன. புறத்தே விரிந்த அறிவெல்லாம் முறை முறையே சுருக்கப்பட்டு அகத்தே செல்வுழி அஃதொன்றின் மாத்திரமே உறைந்து நிற்றலிற் புறப்பொருள்வழி வைத்து விளக்கப்படும் அகப்பொருளெல்லாம் மிகச் சுருக்கிக் கூறுதலே மனவியற்கைக்கு இயைந்ததாம். இந் நுட்பஞ் செவ்விதி னறிந்த உருத்திரங்கண்ணனாரது அறிவின் மாட்சி அளவிடற் பாற்றன்று. இனிக், கரிகாற் பெருவளத்தான் பகைவர்மேலோச்சிய வேலைக் காட்டினும் யான் செல்ல விரும்பிய கானம் மிகவுங் கொடுமையாய் இராநிற்ப, இவள் அகன்ற மென்றோளோ அவன் செங்கோலினுங் குளிர்ந்திருக்கின்றன வாகலின், ஏ நெஞ்சமே! என் காதலி இங்கே தனியளாயிருப்ப யான் காவிரிப்பூம் பட்டினத்தையே பரிசிலாகப் பெறுவேனாயினும் இவளைப் பிரிந்துவருவதற்கு ஒருப்படேன். என்று தன் காதலியைப் பிரிந்து போதற் கெழுந்த தலைமகன் பின் அவளைப் பிரியமாட்டானாய்த் தன் நெஞ்சை நோக்கிக் கூறியதாக இச்செய்யுள் உருத்திரங் கண்ணனாரா லியற்றப்பட்டது. இதில் திருமாவளவன் றெவ்வர்க் கோக்கிய, வேலினும் வெய்ய கானமவன், கோலினுந் தண்ணிய தடமென் றோளே என்பதே இப்பாட்டின் முதற்கண் வரற்பாலதா லெனின்; புறப்பொருளை முற்கூறி அவ்வாற்றால் அறிவை இழுத்துச் சென்றே அகப்பொருட்கட் பதிய வைத்தல் வேண்டுமாகலானும், பட்டினப்பாலை என்னுமிதன் பெயர்க்கேற்ப முதலிற் பட்டினத்தின் சிறப்பைக் கூறிவைத்து அதன்பின்னே பாலை யொழுக்கங் கூறல் வேண்டுமாகாலானும் முதலிரு நூற்றுப் பதினெட்டு அடிகள் காறும் காவிரிப்பூம்பட்டினச் சிறப்பையே கூறுவாராயினர். அற்றேல், இடையிற்கூறிய வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே என்னு மிவ்வகப் பொருளடிக ளிரண்டையும் இறுதியில் நின்ற வேலினம் வெய்ய கானம் என்பதனோடு சேர்த்துக் கூறுதலே அமையும்; என்னை? முதல் இருநூற்றுத் தொண்ணுற்றேழ் அடிகளும் புறப்பொருளே இடையறாது கூறி மற்றை அகப்பொருளெல்லாம் ஏனை நான்கடியாற் கூறி முடிப்பது பொருந்துமாகலின் எனின்; அற்றன்று; முழுவதூஉம் புறப்பொருளே கூறிச்செல்லிற் பயில்வோருணர்வு சலிப்படையுமாகலானும், இவ்வுடம்பு உளதாங்காறும் புறப்பொருள் வழிச்சென்று மடங்கி அகத்தே குவிந்த அறிவு அவ்வகமுகமாயே யொழியாது திரும்பவும் புறம்படக்காண்டு மாகலானும், புறப்பொருளெல்லாஞ் சொல்லிக் கொண்டுபோய் இறுதியில் மாத்திரம் அகப்பொருட்டுறை யுரைப்பின் புறத்தே சென்று மடங்கி அகத்தே போய்க் குவிந்த அறிவு மறித்தும் புறம்படாதுபோலு மெனப்பட்டு இயற்கை யொடு முரணுமாதலானும், காவிரிப்பூம்பட்டினச் சிறப்புக் கூறியபின் அவ்வகப்பொருளைப் பிளவு செய்து முன்னிரண்டடியை இடையே வைத்தும் பின்னிரண்டடியை இறுதியில் வைத்தும் இவற்றின் நடுவே கரிகாற் பெருவளத்தான் வெற்றித்திறம் விளம்பியும் சென்றால் முதற்கட் புறத்துரு வழிச்சென்று அகத்தடங்கிய அறிவு பின்னும் புறம்பட்டுப்போய்ப் பெயர்த்தும் அகத்தடங்கி இங்ஙனம் இயங்கப்பெறு மியல்பினதென்னும் மக்கள் மனவுண்மை நன்கறியக் கிடக்குமாகலானும், அகப்பொருளடி நான்கனையும் ஒரு சேர இறுதியில் நிறுத்திக் கூற ஒருப்பட்டிலராய் இடையிலிரண்டும் இறுதி யிலிரண்டுமாக வைத்தருளினாரென்க. அற்றேல், வேலினும் வெய்ய என்னும் இறுதியிரண்டடியினையும் இடையில் வையாது வாரிருங்கூந்தல் என்பவற்றை மாத்திரம் இடையில் வைக்க வேண்டிற்றென்னையெனின்; தன் மருங்கிருந்து காதற்கொழுநன் பிரிவனோ என ஐயுற்று ஆற்றாளாம் தன் மனையாள் ஐயந்தீர்த்து அவளைத் தேற்றுத லுறுவான் வேலினும் வெய்யகானம் என்பதனை முதலிற் சொல்வனாயின் என் காதலன் என்னை இங்கே விடுத்து இப்பெற்றித்தாங் கானத்திலே போயின் எவ்விடர் நேருமோ என மேலுமேலும் ஆற்றாமைமிக்கு வருந்துவளாகலின் அதனை முதற்கட் கூறப்பெறான்; மற்று இவளைப் பிரிந்து வாரேன் என்பதனை முதற்கணுரைப்பின் அது கேட்ட துணையானே இவள் ஆற்றாமை நீங்கி இன்புறுவளாகலின் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே என்பதனையே ஆண்டிடைக்கட்படுத்துக் கூறினார் ஆசிரியர் என்க. அல்லதூஉம் காவிரிப்பூம்பட்டினம் என்னும் புறஇடத்தைக் கூறியவுடனே அகவிடத்தைக் கூறுதலே பொருத்தமுடைத்தாகலானும் அவ்வாறதனை முன்வைத்தாரென்க. இனிக் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய ஆசிரியர் அதன்கட் செங்கோலோச்சும் அரசன் கரிகாற் பெருவளத்தானையுங் கூறல்வேண்டுவது மரபாகலின் இடையில் நிறுத்திய அகப்பொருட்டுறைக்கும் அத்துறை முடிவாய் இறுதியில்நின்ற அடிகட்கும் இடையே யுள்ள சந்துவா யறிந்து அதன்கண் அவ் வரசன் வலத்தைச் சிறந்தெடுத்துக்கூறி இறுதியில்நின்ற அகப்பொருளோடு இயைபுபடுத்துவாராயினர். இங்ஙனமெல்லாம் செய்யுளியற்றும் நுட்பம் முற்றுமுணர்ந் திதனை அமைத்த இவ்வாசிரியர் உருத்திரங்கண்ணனார் நுட்பவினைத்திறன் முல்லைப்பாட்டு இயற்றிய ஆசிரியர் நப்பூதனார் நுட்பவினைத்திறத்தோடு ஒப்புமைபெற்று விளங்கித் தோன்றுதல் காண்க. அடிக்குறிப்பு 1. Psychological researches. 2. பட்டினப்பாலை வசையில்புகழ் வயங்குவெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினுந் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி 5. வான்பொய்ப்பினுந் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி புனல்பரந்து பொன்கொழிக்கும் விளைவறா வியன்கழனிக் கார்க்கரும்பின் கமழாலைத் 10. 1தீத்தெறுவிற் கவின்வாடி நீர்ச்செறுவி னீணெய்தற் பூச்சாம்பும் புலத்தாங்கட் காய்ச்செந்நெற் கதிரருந்தி மோட்டெருமை முழுக்குழவி 15. கூட்டுநிழற் றுயில்வதியுங் கோட்டெங்கிற் குலைவாழைக் காய்க்கமுகிற் கமழ்மஞ்ச ளினமாவி னிணர்ப்பெண்ணை முதற்சேம்பின் முளையிஞ்சி 20. யகனகர் வியன்முற்றத்துச் சுடர்நுதன் மடநோக்கி னேரிழை மகளி ருணங்குணாக் கவருங் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு 25. முக்காற் சிறுதேர் முன்வழி விலங்கும்2 விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக் கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக் குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி 30. நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி பணைநிலைப் புரவியி னணைமுதற் பிணிக்குங் கழிசூழ்படப்பைக் கலியாணர்ப் பொழிற்புறவிற் பூந்தண்டலை மழைநீங்கிய மாவிசும்பின் 35. மதிசேர்ந்த மகவெண்மீ னுருகெழுதிற லுயர்கோட்டத்து முருகமர்பூ முரண்கிடக்கை வரியணிசுடர் வான்பொய்கை யிருகாமத் திணையேரிப் 40. புலிப்பொறிப் போர்க்கதவிற் றிருத்துஞ்சுந் திண்காப்பிற் புகழ்நிலைஇய மொழிவளர வறநிலைஇய வகனட்டிற் சோறுவாக்கிய கொழுஞ்கஞ்சி 45. யாறுபோலப் பரந்தொழுகி யேறுபொரச் சேறாகித் தேரோடத் துகள்கெழுமி நீறாடிய களிறுபோல வேறுபட்ட வினையோ வத்து 50. வெண்கோயின் மாசூட்டுந் தண்கேணித் தகைமுற்றத்துப் பகட்டெருத்தின் பல்சாலைத் தவப்பள்ளித் தாழ்காவி னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு 55. மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம் மாயிரும் பெடையோ டிரியல் போகிப் பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த் தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு முதுமரத்த முரண்களரி 60. வரிமண லகன்றிட்டை மிருங்கிளை யினனொக்கற் 3கருந்தொழிற் கலிமாக்கள் கடலிறவின் சூடுதின்றும் வயலாமைப் புழுக்குண்டும் 65. 4வறளடம்பின் மலர்மலைந்தும் புனலாம்பற் பூச்சூடியு நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு நாண்மீன் விராய கோண்மீன் போல மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக் 70. கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ5 திருஞ்செருவி னிகன் மொய்ம்பினோர் கல்லெறியுங் கவண்வெரீஇப் புள்ளிரியும் புகர்ப்போந்தைப் 75. பறழ்ப்பன்றிப் பல்கோழி யுறைக்கிணற்றுப் புறச்சேரி மேழகத் தகரொடு சிவல்விளை யாடக் கிடுகுநிரைத் தெஃகூன்றி நடுகல்லி னரண்போல 80. நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய குறுங்கூரைக் குடிநாப்ப ணிலவடைந்த விருள்போல வலையுணங்கு மணன்முன்றில் வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த 85. வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினான் மடற்றாழை மலர்மலைந்தும் பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்6 90 புன்றலை யிரும்பரதவர் பைந்தழைமா மகளிரொடு பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா துவவுமடிந் துண்டாடியும் புலவுமணற் பூங்கானன் 95. மாமலை யணைந்த கொண்மூப் போலவுந் தாய்முலை தழுவிய குழவி போலவுந் தேறுநீர்ப் புணரியொ டியாறுதலை மணக்கு மலியோதத் தொலிகூடற் றீதுநீங்கக் கடலாடியு 100 மாசுபோகப் புனல் படிந்து மலவ னாட்டியு முரவுத்திரை யுழக்கியும் பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு மகலாக் காதலொடு பகல்விளை யாடிப் பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும் 105. பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்து மட்டுநீக்கி மதுமகிழ்ந்து மைந்தர் கண்ணி மகளிர் சூடவு 110. மகளிர் கோதை மைந்தர் மலையவு நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக் கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும் பாட லோர்த்து நாடக நயந்தும் வெண்ணிலவின் பயன்றுய்த்துங் 115. கண்ணடைஇய கடைக்குங்குலான் மாஅகாவிரி மணங்கூட்டுந் தூஉவெக்கர்த் துயின்மடிந்து வாலிணர் மடற்றாழை வேலாழி வியன்றெருவி 120. னல்லிறைவன் பொருள்காக்குந் தொல்லிசைத் தொழின்மாக்கள் 7காய்சினத்த கதிர்ச்செல்வன் றேர்பூண்ட மாஅபோல வைகறொறு மசைவின்றி 125. யுல்குசெயக் குறைபடாது வான்முகந்தநீர் மலைப்பொழியவு மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு மாரிபெய்யும் பருவம்போல நீரினின்று நிலத்தேற்றவு 130. நிலத்தினின்று நீர்ப்பரப்பவு மளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி யருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன் 135 புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போரேறி மழையாடு சிமய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போலக் 140. கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை யேழகத் தகரோ டுகளு முன்றிற் குறுந்தொடை நெடும்படிக்காற் கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற் புழைவாயிற் போகிடைகழி8 145 மழைதோயு முயர்மாடத்துச் சேவடிச் செறிகுறங்கிற் பாசிழைப் பகட்டல்குற் றூசுடைத் துகிர்மேனி மயிலியன் மானோக்கிற் 150. கிளிமழலை மென்சாயலோர் வளிநுழையும் வாய்பொருந்தி யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங் காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள் 155. வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்து மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய 160. மலரணி வாயிற் பலர்தொழு கொடியும் வருபுன றந்த வெண்மணற் கான்யாற் றுருகெழு கரும்பி னொண்பூப் போலக் கூழுடைக் கொழுமஞ்சிகைத்9 தாழுடைத் தண்பணியத்து10 165. வாலரிசிப் பலிசிதறிப் பாகுகுத்த பசுமெழுக்கிற் காழூன்றிய கவிகிடுகின் மேலூன்றிய துகிற்கொடியும் பல்கேள்வித் துறைபோகிய 170. தொல்லாணை நல்லாசிரிய ருறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும் வெளிலிளக்குங் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன் றுரைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை 175. மிசைக்கூம்பி னசைக்கொடியு மீன்றடிந்து விடக்கறுத் தூன்பொரிக்கு மொலிமுன்றின் மணற்குவைஇ மலர்சிதறிப் பலர்புகுமனைப் பலிப்புதவி 180. னறவு நொடைக் கொடியோடு பிறபிறவு நனிவிரைஇப் பல்வே றுருவிற் பதாகை நீழற் செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற் செல்லா நல்லிசை யமரர் காப்பி 185. னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமமைப் பிறந்த மணியும் பொன்னுங் குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் தென்கடன் முத்துங் குணகுடற் றுகிருங் 190. கங்கை வாரியுங் காவிரிப் பயனு மீழத் துணவுங் காழகத் தாக்கமு மரியவும் பெரியவு நெளிய வீண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின் நீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு 195. மேமாப்ப வினிதுதுஞ்சிக் கிளைகலித்துப் பகைபேணாது வலைஞர்முன்றின் மீன்பிறழவும் விலைஞர்குரம்பை மாவீண்டவுங் கொலைகடிந்துங் களவுநீக்கியு 200. மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு நல்லானொடு பகடோம்பியு நான்மறையோர் புகழ்பரப்பியும் பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும் புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் 205. கொடுமேழி நசையுழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப நாடிக் 210. கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைபடாது பல்பண்டம் பகர்ந்து வீசுந் தொல்கொண்டித் துவன்றிருக்கைப் பல்லாயமொடு பதிபழகி வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற் 215. சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையு முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய 220. வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர்பிணி யகத்திருந்து பீடுகாழ் முற்றி யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிப்புக் காங்கு 225. நுண்ணிதி னுணர நாடி நண்ணார் செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித் துருகெழு தாய மூழி னெய்திப் பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின் 230. முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா ளுகிருடை யடிய வோங்கெழில் யானை வடிமணிப் புரவியொடு வயவர் வீழப் பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு 235. வேறுபல் பூளையோ டுழிஞை சூடிப் பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச மாக்க ணகலறை யதிர்வன முழங்க முனைகெடச் சென்று முன்சம முருக்கித் தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி 240. வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக் கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக் கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச் செறுவும் வாவியு மயங்கி நீரற் 245. றறுகோட்டி டிரலையொடு மான்பிணை யுகளவுங் கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி யந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ வம்பலர் சேக்குங் கலந்துடைப் பொதியிற் 250. பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப் பெருநல் யானையொடு பிடிபுணர்ந்த துறையவு மருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின் முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த திரிபுர நரம்பின் றீந்தொடை யோர்க்கும் 255. பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச் சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவு மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங் கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப் 260. பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங் கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த் 265. தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக் கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து வளைவாய்க் கூகை நண்பகற் குழறவு மருங்கடி வரைப்பி னூர்கவி னழியப் 270. பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் தான்முன்னிய துறைபோகலிற் பல்லொளியர் பணிபொடுங்கத் 275. தொல்லருவாளர் தொழில்கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர் மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண் மாத்தானை மறமொய்ம்பிற் 280. செங்கண்ணாற் செயிர்த்து நோக்கிப் புன்பொதுவர் வழிபொன்ற விருங்கோவேண் மருங்குசாயக் காடுகொன்று நாடாக்கிக் குளங்தொட்டு வளம்பெருக்கிப் 285. பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் கோயிலொடு குடிநிறீஇ வாயிலொடு புழையமைத்து ஞாயிறொறும் புதைநிறீஇப் பொருவேமெனப் பெயர்கொடுத் 290. தொருவேமெனப் புறக்கொடாது திருநிலைஇய பெருமன்னெயின் மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி விசிபிணி முழவின் வேந்தர் சூடிய பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற் 295. பொற்றொடிப் புதல்வ ரோடி யாடவு முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவுஞ் செஞ்சாந்து சிதைந்த மார்பி னொண்பூ ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற் றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய 300. வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் றோளே. அடிக்குறிப்புகள் 1. தீத்தெறுதலின். 2. விலக்கும். 3. `கருந்தொழுதி. 4. வறளடும்பின் 5. பிறக்கொடாஅது 6. மகிழ்ந்தும் 7. காய்சினக் கதிர்ச்செல்வன் 8. பேரிடைகழி 9. மிஞ்சிகை 10. தண்பண்ணியத்து 3. பொருட்பாகுபாடு (1-8) காவிரியாற்றின் சிறப்பு குடகமலையினிடத்தே தோன்றி என்றும் நீர் அறாது ஒழுகும் இயல்பினதாய்ச் சோழநாட்டை வளம்படுத்து வருகின்ற காவிரியாற்றின் சிறப்பு முதற்கட் சொல்லப்படுகின்றது. மழை வறக்குங் காலத்தில் சுக்கிரன் எனப்படும் வான்மீன் கீழ்த்திசை யினின்று மேற்றிசையிற் செல்லாமல் தென்றிசைப் பக்கமாய்ச் செல்லுமென்பதும், மழைத்துளியைப் பருகி உயிர்வாழ்கின்ற வானம்பாடிப்புள் அது பெறாமையின் அப்போது மிக வாடுமென்பதும், இத்தன்மையாக மழைபெய்யாது மாறிப்போன அவ் வற்கட காலத்திலும் காவிரியாறு நீர்வற்றாது ஒழுகிப்போய் வயல் நிலங்களை நிறைத்து அங்கே பொற்றுகளையும் திரட்டித் தொகுக்கு மென்பதும் சொல்லப்படுகின்றன. (9-19) சோழநாட்டு மருதநிலவளம் வயல்கள் என்றும் மாறாமல் விளைந்து கொண்டிருக்கின்றன. அங்கே கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுகின்ற கொட்டில்கள் பல இருக்கின்றன. அவற்றில் அதனைக் காய்ச்சும்போது உண்டாகும் தீப்புகைபட்டுப் பக்கத்தே வயல்களில் மலர்ந்த நெய்தற்பூக்கள் அழகுகெட்டு வாடுகின்றன. காய்த்த செந்நெற்கதிரை நிரம்ப உண்டு வயிறு பருத்த முற்றின எருமைக்கன்றுகள் ஆங்காங்குள்ள நெற்கூடுகளின் நீழலிலே உறங்கிக் கொண்டிருக்கின்றன. குலை நெருங்கின தென்னை குலைவாழை பாக்குக்காயை யுடைய கமுகு மா பனை முதலிய மரங்களும் மஞ்சள் சேம்பு இஞ்சி முதலிய செடிகளும் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன; என்பது சொல்லப் பட்டது. இது காறுங் காவிரிபாயுஞ் சோழ நாட்டின் வளம் பொதுவகையாற் கூறி இனிப் பாக்கம் கழி முதலியவற்றின் சிறப்பை விரித்துக் கூறப்புகுகின்றார். (20-27) பாக்கம் பாக்கங்களிலே அகன்ற வீடுகள் கட்டப் பட்டிருக்கின்றன. அவ் வீட்டு முற்றங்களிலே உலரவைத்திருக்கும் நெல்லுக்குக் காவலாய் இருக்குஞ் சிறு பெண்கள் ஒளி விளங்கு நெற்றியும் கள்ளம் அறியாத பார்வையும் திருந்திய அணிகலன் களும் உடையர்; இவர்கள் அந் நெல்லைத் தின்னவருங் கோழிகளை வெருட்டும் பொருட்டு எறிந்த கறவுக் குழைகள்1 அம் முற்றத்திற் சிதறிக்கிடந்து, அங்கே சிறு பையன்கள் மூன்று உருள் உடைய சிறிய தேரைக் குதிரையின்றி இழுத்துக் கொண்டு வருகையில், அதன் உருள்களை இடறி அச்சிறுதேர் போகாமல் வழிமுன்பை விலக்குகின்றன.2 தாம் மனங்கலங்குதற்குக் காரணமான பகை தமக்குச் சிறிதுமில்லாமையால் மனக்கொழுமையினையுடைய பல குடிகள் நிறையப் பெற்றிருக்கின்றன அப்பாக்கங்களெல்லாம். (28 - 39) படப்பை முதலியன இனி ஒன்றற்கொன்று அருகிலுள்ள பல ஊர்களையுடைய நீண்ட சோழனாட்டில் எங்குஞ்சென்று வெள்ளிய உப்பை விலைசெய்து நெல்லை ஏற்றிக் கொண்டுவந்த வலிய படகுகள் பந்தியிலே நிற்குங் குதிரைகளைப்போலத் தறிக டோறுங் கட்டப்பெற்றிருக்கும் உப்பங்கழிகள் சூழ்ந்த நெய்தல் நிலத்துத் தோட்டங்களும், மனவெழுச்சி தருதற் கேதுவான புதுவருவாயினையுடைய தோப்புகளும், அத்தோப்புகளுக்குப் புறம்பேயுள்ள பூஞ்சோலைகளும், முகிற்கறை சிறிதுமில்லாது தெளிந்த வானத்தில் திங்களைச் சூழ்ந்து மகம் என்னும் வான்மீன் விளங்கினாற் போன்ற கரையினை அல்லது கோயிலையுடைத்தாய் மணங்கமழும் பல வண்ணப் பூக்கள் நிரம்பியிருத்தலாற் பலநிறமுடைத்தாய்த் தோன்றும் பொய்கைகளும், இம்மையிலும் மறுமையிலும் காமவின்ப நுகர்ச்சியினைப் பயக்கும் இணைந்த ஏரிகளும், அக் காவிரிப்பூம் பட்டினம் எங்கும் இருக்கின்றன. (40-50) சோறிடும் அட்டிற் சாலைகள் கதவுகளெல்லாம் புலியுருக்கள் செதுக்கப்பட்டனவாய்த் தம்வாய் பொருந்தப் பெற்றிருப்பத், திருமகளை எழுதிய திண்ணிய மதில்கள் அமைந்து இம்மையிற் புகழ் பரம்புதற்குக் காரணமான நற்சொல் வளரவும் மறுமையினைத் தருதற்குரிய அறவொழுக்கம் நிலைபெறவுஞ் சிறந்த அடுக்களைகளில் மிகுதியாகச் சமைத்த சோற்றை வடித்தலால் ஒழுகுங் கொழுங் கஞ்சியானது யாற்றில் வெள்ளம் வந்தாற்போல எங்கும் பரவி ஓடுவதாயிற்று; அக் கஞ்சியைக் கண்டு பருகுதற்குச் சென்ற எருத்துமாடுகள் ஒன்றோடொன்று சண்டையிடுதலால் அது மண்ணொடு கலந்து சேறாய்ப் பின் தேர்கள் ஒடுதலாற் புழுதியாய் மேலெழுந்து பல வேறுவகையான சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்த வெள்ளிய அரண்மனையின்மேற் படிந்து வெண்ணீற்றிற் புரண்ட களிற்றியானைபோல் அழுக்கேறப் பண்ணுவதாயிற்று. (51 - 53) பௌத்த, சமணப் பள்ளிகள் இன்னும், குளிர்ந்த கிணறுகள் பொருந்தப் பெற்றன வாய்ப் பெரிய எருத்து மாடுகள் நிற்கும் பலசாலைகளும், தவ ஒழுக்கம் நடைபெறும் அமணர் பௌத்தருடைய பள்ளிகளும் ஆங்காங்குள்ளன. (53 - 58) காளிகோட்டம் தாம் தங்கும் இளமரக்காவிலே விளங்கிய சடைமுடியுடைய ரான முனிவர் நெருப்பிலிட்டு வேட்கும் நெய்ப் புகையைக் கண்டு புயலென அஞ்சிய குயிற்சேவல்கள் அச் சோலையிலிருத்தலை வெறுத்துத் தம்பெடைகளோடும் அவ் விடத்தை விட்டுப்போய்ப் பூதங்கள் காவலாயிருத்தலாற் புகுதற்கு அரிய காளிகோட்டத்திற் சென்று தூதுணம் புறாக்களோடும் ஓர் ஒதுக்கிடத்தே தங்கியிருக்கும். (59 - 74) செம்படவர் குப்பம் நெடுநாட்பட்ட மரங்களை யுடையவாய்ச் சண்டை யிடுதற்குச் சமைத்த இடங்களும் நீர் அரித்த கரிய மணலும் உள்ள அகன்ற மேட்டுக் குப்பங்களில் குடியிருக்கும் பெரிய கற்றத் தினையும் இனமான உறவினையுமுடைய வலிய தொழிலாள ரான செம்படவர் கடல் இறாமீனின் சுட்ட தசையைத் தின்றும், வயல் ஆமையைப் புழுக்கின இறைச்சியை உண்டும், வயலிற் படர்ந்த அடப்பம்பூவைத் தலையிற் கட்டியும், நீரில் நின்ற ஆம்பல்மலரைப் பறித்துக் சூடியும், நீலநிறத் தினையுடைய வானத்தில் வலம்புறமாய் எழுந்து சுழன்று திரியும் நட்சத்திரங் களோடு கூடிய கிரகங்களைப் போலச் சண்டையிடாநின்ற அவ் வகன்ற மன்றத்திற் பலரும் ஒருங்கு திரண்டு கையொடு கைபிணைந்தும் படைக்கலங்களோடு படைக்கலந் தாக்கியும் உடம்போடு உடம்புபட உரைசியும் மிக்க சினத்தோடும் ஒருவர் ஒருவர்க்குப் பின்னிடையாது பெருஞ்சண்டை செய்த அதனானும் வலியடங்காராய் ஒருவரோடொருவர் மாறுபட்டுக் கல்லை வீசுகின்றனர். அங்ஙனம் அவர் எறியுங் கவண்கல்லிற்கு மிக அஞ்சிப் பச்சென்ற பனைமரத்தின்மேலிருந்த பறவைகள் பறந்து போகின்றன. (75 -77) புறச்சேரியின் தன்மை குட்டிகளையுடைய பன்றியும் பல கோழிகளும் உறை வைத்த சிறிய கிணறுகளும் இருக்கின்ற அச் செம்படவர் புறச்சேரியிலே செம்மறி ஆட்டுக் கிடாய்களோடு கௌதாரிப் பறவைகள் விளையாடா நிற்கும். (78 - 105) காவிரித்துறைச் சிறப்பு நட்டகல்லிற் றெய்வமாய் நின்றவனுக்குக் கேடகத்தைவரிசையாவைத்து வேலை நிறுத்தியவாறுபோல நீண்ட தூண்டியற்கோலைச் சார்த்தி வைத்திருக்கும் குறுகின கூரையையுடைய குடியிருப்புகளின் நடுவில், நிலவின் இடையிலே சேர்ந்த இருளைப்போல மீன்வலை யுலரும் வெள்ளிய மணல்பரந்த முற்றத்தின்கண், விழுதையுடைய தாழஞ்செடியின் கீழ் வளர்ந்த வெண்கூதாள மலராற் செய்த மாலையை யணிந்தவராய்ச் சினை கொண்ட சுறாமீன் கொம்பை நட்டு அதனையே இருக்குமிடமாக ஏற்றிய வலிய கடற்றெய்வத்தின் பொருட்டாக மடலையுடைய தாழைமலரைக் சூடியும், பொரிந்த மரத்தினையுடைய பனையின் கள்ளைக் குடித்தும், புல்லிய தலையினையுடைய செம்படவர் பசிய தழையினை யுடுத்த தம்பெண்டி ரோடும் பரந்த பனிக்கடலில் மீன் பிடிக்கவுஞ் செல்லாது அத்தொழிலைவிட்டு முழுமதி விளங்கும் உவாநாளிலே தாம் வேண்டுவன உண்டு விளையாடியும், பின் புலால்நாற்றம் வீசுகின்ற மணலையுடைய பூங்கானற்சோலையில் கரியமலையைப் பெருந்திக்கிடந்த செக்கர்மேகம் போலவும் தாயின் கொங்கையைத் தழுவிக் கிடந்த மகவைப் போலவும் தெளிந்த நீரையுடைய கடலொடு காவிரியாறு சென்று கலக்கும் மிகக் குளிர்ந்து முழங்கா நின்ற புகார் முகத்தில் தீவினைபோகக் கடல் முழுக்காடியும், பின் அவ்வுப்புநீங்க வேறுநீரிலே குளித்தும், நண்டுகளைப் பிடித்து ஆட்டியும், உலவுகின்ற அலையிற்போய் அதனை உழக்கியும், பாவை செய்தும், ஐம்பொறிகளானும் நுகரப்படுவன வெல்லாம் நுகர்ந்து மயங்கியும், அவர்கள் ஒருவரை யொருவர் நீங்காத காதற்கிழமை யுடையராய், இவ்வாறு பகற்பொழுதெல்லாம் போக்குதற்குக் காரணமாவதாய்ப் பெறுதற்கரிய பழஞ் சிறப்புகளையுடைய சுவர்க்க நாட்டை ஒப்பதாய் என்றும் பொய்யாமல் நீர் வருதலையுடையதாய்ப் பூக்கள் நிறைந்த காவிரித்துறை விளங்குமென்க. (106 - 115) கடையாமச் சிறப்பு தங்கொழுநரைப் புணர்ந்த அழகிய மங்கையர் பட்டாடைகளைக் களைந்தெறிந்து வெண்டுகில் உடுத்தவராய்த் தேனுண் டலை விடுத்துக் காமவின்பச் சுவைத்தேனை நிறைய உண்ணா நின்று தங்காதலர் சூடிய மாலையைத் தமதென்றெடுத்துச் சூடிக்கொள்ளவும், தங் காதலிமார் மலைந்த கோதையைத் தமதென்று அவர் காதலர் அணிந்து கொள்ளவுமாக அவர் காமவின்பச் சுவை நுகர்கின்ற உயர்ந்த மாடங்களில் எரியும் விளக்கங்களைப் பார்த்து முன்வளைந்த கட்டுமரத்தைக் கடலிடத்தே கொண்டு சென்ற பரதவர் அவற்றை எண்ணா நிற்பவும், அந் நகரத்திலுள்ளார் இரவில் முன் யாமத்துப் பாட்டுக் கேட்டும் நாடகம் பார்த்தும் வெண்ணிலவிற் பெறும் பயன்களைத் துய்த்தும் கண்ணுறக்கம் பெற்ற கடையாம மென்க. (116 - 125) சுங்கங்கொள்வோர் நிலை அவ் வியாமத்திலே, பெரிய காவிரியாறு பலவயினிருந்த பூக்களின் மணமெல்லாம் திரட்டிக்கொண்டு வந்து சேர்க்கும் தூய எக்கர் மணலில் அயர்ந்து உறங்கிய வண்ணமாய், வெள்ளிய பூங்கொத்தும் மடலும் உள்ள தாழையினையும் கரையினையுமுடைய அகன்ற பண்டசாலைத் தெருவில் நல்ல அரசனது பொருளைப் பிறர் கவராமற் காக்கும் அடிப்பட்ட புகழினை யுடைய காவற் றொழிலாளர் காயுஞ் சினத்தையுடைய வெங்கதிர்ச் செல்வனான பகலவனது தேரிற் கட்டிய புரவி ஒரு நொடிப்பொழுதாயினும் மடிந்திராது இயங்குதல் போல நாடோறும் இளைப்புறாது சுங்கங்கொள்ளும் படியாக இருப்பரென்க. (126 - 141) பண்டசாலை முற்றம் குறைவின்றி முகந்த நீரை முகில் மலையிலே பொழியவும், மலையிற் பொழிந்த நீர் கடலிற் சென்று பரவவும் மாரிக்காலத்தே பெய்தல்போலப் பிறநாடுகளிலிருந்து கடன்மேல் வந்தன கரையி லேறவும், தமிழ் நாடுகளிலிருந்து வந்து கரையிற் கிடப்பன பிற நாடுகளுக்குப் போகல்வேண்டி நீர்மேல் மரக்கலங்களிற் சேரவுமாக, அறிவான் அளந்தறிதற் கரியவாகவுள்ள பல பண்டங்களும் வரம்பறியப்படாவாறு வந்து தொக, அரிய காவலமைந்த பெரிய சுங்கச்சாவடியிலே காவற்காரன் சோழ மன்னர் அடையாள முத்திரையான புலியை இலச்சினையாக இட்டுப் பின் அவற்றை வெளியே போக்கினமையால், மதித்தறியப்பட்ட அப் பல பண்டங்களும் பொதிந்து வைக்கப்பட்ட மூட்டைப் போர்மேல் ஏறி முகில் உலாவப் பெறுங் குவட்டினையுடைய பெரிய மலைப் பக்கங்களிலே விளையாடும் வருடை மான்களின் றோற்றம் போலக் கூரிய நகங்களையுடைய ஆண் நாய்கள் ஆட்டுக் கிடாய்களோடு குதிக்கும் பண்டசாலை முற்றமென்க. (142-158) அங்காடித் தெரு அணுக அணுகப் படிகள் தொடுக்கப்பட்டு அமைந்த நீண்ட ஏணிகள் சார்த்தியிருக்கும் சுற்றுத் திண்ணைகளும், பல கட்டுகளும், சிறுவாயில் பெருவாயில்களும், பெரிய இடை கழிகளும்3 பொருந்தச் சமைக்கப் பெற்றனவாய், நீர் முகில்கள் உராயும் உயர்ந்த மாடத்தில் சிவந்த அடியினையும் நெருங்கிய தொடைகளையும் பசிய அணிகலங்களையும் பெரிய அரையினையும் நுண்ணிய ஆடையினையும் பவளம் போல் நிறத்தினையும் மயில்போற் றோற்றத்தினையும் மான் போல் நோக்கினையும் கிளிபோலும் மழலைமொழியினையும் மெல்லென்ற சாயலினையும் உடையபெண்கள் தென்றற் காற்று நுழையும் சாளரத்தைப் பொருந்தி நின்று, உயர்ந்த மலைப்பக்கத்தில் நுண்ணிய மகரந்தப்பொடியைச் சொரியும் காந்தட்செடியின் கணுக்களிலிருந்து கிளைக்கும் கவிந்த முகைக் குலையைப் போலும் தமது தொடி நெருங்கிய கையை மேலெடுத்துத் தொழா நிற்ப, முருகப் பிரானுக்கு வெறியாட்டு எடுக்கும் மகளிர்க்குப் பொருந்தப் பரம்பி வேய்ங்குழல் இசைக்கவும் யாழ் ஒலிக்கவும் முழா முழக்கஞ் செய்யவும் முரசம் ஒலிப்பவும் திருவிழா இடையறாது நடைபெறும் அங்காடித் தெருவென்க. (159 - 183) நகரிற் கொடிச் சிறப்பு குற்றமற்ற சிறப்பினையுடைய தெய்வத்தை ஏற்றுவித்த மலர்களணிந்த கோயில் வாயிலிலே பலருந் தொழுது செல்லுங் கோழிக்கொடியும், உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்குங் கொழுவிய பேழையினைத் தாழிடுவித்துப் போற்றிய குளிர்ந்த பலபண்டங்களின்மேல் வெள்ளிய அரிசியைப் பலியாகச் சிதறிப் பாகாகக் காய்ச்சி வார்த்த பசிய மெழுக்கைப் பூசிய கோல்களை நாட்டி அவற்றின் மேற் கவித்திட்ட சட்டத்தின்மேல், வருகின்ற நீராற் றிரட்டிச் சேர்க்கப்பட்ட வெண்மணல் நிரம்பிய காட்டியாற்றின் கரை மருங்கில் நின்ற அழகிய கரும்பின் ஒண்பூப்போலத் தோன்றும்படியாக நட்ட துகிற்கொடியும், பலவாகிய நூற் கேள்விகளில் துறைபோகக் கற்றமையானே தொன்று தொட்டுப் பிறரை ஏவுவதற்கு உரிமைவாய்ந்த நல் ஆசிரியராயுள்ளார் வழக்கிட்டுப் பிறர்க்கு மெய்ப்பொருள் தெருட்டுதற் பொருட்டு நாட்டிய அச்சந்தருங் கொடிகளும், கட்டுத் தறியை அசைக்குங் களிறுபோலக் காண்பார்கட்கினிய காவிரிப்பூம்பட்டினக் கடற்றுரை முகத்தில் நெருங்கி நின்று அசையும் மரக்கலங்களின்மேற் கட்டிய கொடிகளும், மீனையும் இறைச்சியையும் அறுத்து அவற்றின் ஊனை நெய்யிற் பொரிக்கின்றமையால் ஆரவாரம் நிறைந்த முற்றத்திலே மணலைக் குவித்து மலரைச் சிதறிக் கள்ளுண்பார் பலரும் நுழைதற்குக் காரணமான கள்ளுக் கடையின் பலிதரப்பெற்ற வாயிலிலே கள்ளுவிற்றலை யறிவித்தற்கு அறிகுறியாகக் கட்டிய கொடியும், ஆகிய இவற்றோடு இன்னும் வேறு வேறு கொடிகளும் மிக்க கலவாநிற்பப் பல்வேறு உருவாற் சிறந்த பெருங்கொடிகளும் நிறைந்தமையால் அவற்றின் நீழலிலே ஞாயிற்றின் கிரணங்களும் நுழையக் கூடாதனவான வளம் பொருந்திய நகர் என்க. (183 - 193) தெருக்களிலுள்ள பொருள்வளம் இப்பெற்றித்தான நகரத்தின் எல்லையில் கெடாத நற்புகழையுடைய தேவர்கள் காவலாய் நிற்கின்றமையால் இடையூறு சிறிதுமின்றிப் பிறநாட்டிலிருந்து கடல் வழியே நாவாயிற் கொண்டுவந்த நிமிர்ந்து விரைவாய்ச் செல்லுங் குதிரைகளும், வட்டையிலே கொண்டுவந்த கரிய மிளகுப் பொதிகளும், வடக்கே இமயம் மேரு முதலிய மலைகளினின்றுங் கொண்டு வந்த பலதிறப்பட்ட மணிகளும் பொன்னுருக்குக் கட்டிகளும், குடகுமலையினின்றும் வந்த சந்தனக்கட்டை அகிற்கட்டைகளும், தென்கடலிற்குளித்து எடுத்து வந்த முழுமுத்துகளும், கீழ்கடலிற் றுருவிக் கொண்டு வந்த செம்பவளங்களும், கங்கையாற்றிற் பிறந்த பொருள்களும், காவிரியாற்றின் பொருள்களும், இலங்கைத் தீவினின்றும் போந்த உணாப் பொருள்களும், கடாரத்தினின்று கொணர்ந்த நுகர்ச்சிப் பொருள்களும், இவையேயன்றி யின்னும் பல அரிய பெரிய பண்டங்களும் நிலந் தாங்கமாட்டாமல் நெளியும்படி ஒருங்கு தொக்கமையினாலே பலவகைப்பட்ட பொருள்வளங்களும் ஒன்றோடொன்று அளாய அகன்ற தெருக்களென்க. (193 - 212) வேளாளர் குடிச்சிறப்பு இத் தன்மைத்தாகிய தெருவினும், துறைமுகத்து நடுவினும், கடற்கரை மருங்கினும் மகிழ்ந்து இனிது உறங்கிச் சுற்றம் தழைத்துத் தமக்குப் பகையாவார் இவரென்று எண்ணாது வலைஞர் முன்றிலிலே மீன் பாயவும் ஊன்விற்பார் குடிசையிலே ஆடு முதலான விலங்குகள் திரண்டு நிற்கவும் ஆக இவ்வாறு கொலைபுரிவாரை அதனினின்று நீக்கியும், களவு காண்பாரை அதனினின்று நீக்கியும், தேவரைப் போற்றியும், ஆரியர் உவக்கும்படி அவர் வேண்டும் வேள்விகளை வேட்டு அவரை நுகர்வித்தும், நல்ல ஆக்களோடு எருதுகளைப் பாதுகாத்தும், நான்மறை வல்லோர்க்கும் உண்டாம் புகழை நிலைபெறச் செய்தும், வரும் விருந்தினர்க்கு நுகர்தற்குரிய பல பண்டங்கள் கொடுத்தும் பசிய சோறு கொடுத்தும் அறவொழுக்கம் பிறழாது யார்க்கும் குளிர்ப்பக்கூறி அன்பு சுரக்கும் வாழ்க்கையின்கண் நிலைபெற்ற வளைந்த கலப்பையின் உழவு தொழிலையே நச்சுகின்ற வேளாளர் தமது நீண்ட நுகத்திற் றைத்த பகலாணி போல் நடுநிலை திறம்பாது நின்ற நல்ல நெஞ்சினையுடையராய்த் தமக்குந் தங்குடிக்கும் வடுவாமென்றுணர்ந்து பொய்யை யொழித்து மெய்ம்மையே கூறித் தம்முடைய பண்டங்களையும் பிறருடைய பண்டங்களையும் ஒரு பெற்றியாகக்கண்டு, தாம் பிறரிடத்து அப் பண்டங்களை விலைகொள்ளும்போது மிகுதியாகக் கொள்ளாமலும், தம் பண்டங்களைப் பிறர்க்கு விலையிடுங்காற் குறையக் கொடாமலும் ஊதியத்தை வெளிப்படையாகச் சொல்லி விற்று இந் நெறியே தொன்றுதொட்டு வரம்பின்றிப் பொருள் தொகுத்து அவர் நெருங்கியிருக்குங் குடியிருப்பு என்க. (213-218) காவிரிப்பூம்பட்டினச் சிறப்பு முடிபு வேறுவேறாகச் சிறந்த அறிவு வாய்த்த சுற்றத்தினையுடைய நன்மக்கள் திருவிழாக்கொண்டாடும் பழைய ஊரிலே சென்று கூடினாற்போலப், பல்வேறு வகைப்பட்ட மொழிகள் வழங்குவோராய்க் குற்றமற்ற பலநாடுகளினின்றும் வந்த மக்கள் எல்லாரும் சென்று தன்கண் உள்ள நன்மக்கள் கூட்டம் பலவோடும் பழகிக்கலந்து உறையும் வழுவாத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டின மென்க. (218- 220) பாட்டிற் கருக்கொண்ட பொருள் இவ்வியல்பினதாய்ச் சிறந்த காவிரிப்பூம்பட்டினத்தையே எனக்கு உரிமைப்பொருளாகப் பெறுவேனாயினும் ஏ நெஞ்சமே! நீண்ட கருங் கூந்தலினையும் விளங்கும் பூணினையுமுடைய என் காதலி ஈண்டுத் தனியளாயிருப்ப இவடன்னைப் பிரிந்து வருதற்கு ஒருப்படமாட்டேன் கண்டாய் என்க. (220 - 239) கரிகாற் பெருவளத்தான், தன்னைச் சிறைசெய்த (பகைவரைத் தப்பிப்போய் அவரை வென்றமை.) கூரிய நகத்தினையுடைய புலிக்குட்டியானது கூட்டில் அடைபட்டு வளர்ந்தாற்போலப் பிறரிட்ட சிறைக் காவலிற் றங்கியிருந்து அதனாற் றன் பெருமைக்குணம் வயிரமேறி முற்றுதலானே, குழியில் வீழ்ந்த களிற்றியானை அதன் கரையைக் கொம்பாற் குத்தித் தூர்த்துத் தன் பிடியினிடத்தே சென்று சேர்ந்தாற்போலத் தன்னுணர்வாற் கூர்த்தறிந்து பார்த்துப் பகைவரது காவலமைந்த சிறைக்களத்து வலிய மதிலைத் தாண்டிப் புறத்தே நின்ற வாட்படை வீரரையெல்லாம் ஒட்டிப்போய்ப் பகைவர்க்கு அச்சத்தை விளைக்குந் தன்னரச வுரிமையை முறையே பெற்றும், அங்ஙனம் பெற்ற அவ்வளவில் உள்ளம் மகிழ்தல் பெறானாய்ப் பின்னும் மண்கொளல் வேண்டு மென்றெழுந்த நசையால், பகைவருடைய காவலமைந்த அரண்களை அழித்துக் கதவைக் குத்தி யேந்தின மருப்பின தாய்ப் பகைவரது முடிசூடிய பெருந்தலையை உருட்டும் முன்றாளில் நகங்கள் பொருந்தப் பெற்ற அடிகளையுடைய யானையோடும் தடித்தமணிகள் கட்டிய குதிரையோடும் படையெடுத்துச் சென்று மாற்றார்தம் படைமறவர் போர்க் களத்து விழவும், பெரிய வானத்தின்கட் பருந்துகள் உலாவவும், தூறு படர்ந்த கருங்கற் பாறைபோற் போர்வேண்டி யெழுந்தமைக்கு அடையாளமாகப் பூளைப்பூவும் உழிஞைப்பூவுஞ் சூடிப் பேயின்கண்ணைப் போன்ற முழங்கும் போர்முரசம் அகன்ற பாசறையிலே அதிர்ந்து முழங்காநிற்பச் சென்று பகைவர் இடங்கள் பாழாகும்படி அவரை முதற்போரிலே தோல்வி பெறச்செய்து, அவ்வளவிற் சினம் மாறாது மேலும் போய் அவர் அரண்களை அழித்து நடந்து குளிர்ந்த மருத நிலத்துக் குடிகளைத் துரத்தி என்க. (240 - 245) மருதநிலம் பாழ்பட்டமை அங்ஙனமெல்லாம் அப் பகைவரூரைப் பாழ்படுத்தினமையால் முன்னே வெள்ளியபூவினையுடைய கரும்பும் செந்நெல்லும் நீண்டு கரிய இதழ்க்குவளையொடு நெய்தற்பூவுங் கலந்து முதலைகள் செருக்கித்திரிந்த இடம் அகன்ற செழும் பொய்கைகளெல்லாம், இப்போது கொழுந்தண்டுகளை யுடைய அறுகும் கோரைப்புற்களும் அடர்ந்து நீர் அற, இவ்வாறே வயலும் வாவியும் வேறுபாடின்றித் தந்தன்மை திரிந்திட, அறுப்புள்ள கொம்புகளையுடைய புல்வாய்க்கலைகளொடு மான் பிணைகள் ஆண்டுத் துள்ளிவிளையாடும் பாழ் இடமாயின. (246 - 251) அம்பலங்கள் பாழ்பட்டமை தாம் தம் பகைவர் மகளிரைச் சிறையாகக் கொண்டு வந்தமையின், அம் மகளிர் நீருண்ணும் துறையிலே முழுகி வந்து மாலைப்பொழுதிலே கொளுத்திய விளக்கினை யுடையதாய் மலர் அணியப்பட்ட மெழுகின இடத்திலே ஏறிச்சென்று உள்ளூரார் பலர் தொழுது செல்லவும், வெளியூரினின்று புதியராய் வந்தார் தொழுதுதங்கவும் அமைக்கப்பட்ட அருட்குறி நிறுத்திய அம்பலங்களெல்லாம் தங்கண் நின்ற பருத்த தூண்கள் சாயும்படியாக உராய்ந்து களிற்றி யானையொடு பிடியானையுங் கூடியிருக்கும் இடமாயின என்க. (252 - 260) மன்றம் பாழ்பட்டமை மிக்க விலையினையுடைய நறியமலர்களைத் தூவித் தெருவில் நின்று அறிவுவாய்த்தலையுடைய கூத்தர் முழவுக்கு இசைய முறுக்கின நரம்பையுடைய யாழிசை கேட்கும் பெரிய திருவிழாக்கள் இல்லை யாய்ப்போன அச்சம் மிகுந்த மன்றங்கள் சிறிய பூக்களையுடைய நெருஞ்சிற் பூண்டும் அறுகம்புல்லும் பம்ப அழன்ற வாயினையுடைய நரிகள் ஊளை யிடவும், அழுங்குர லாய்க் கூப்பிடும் கூகைகளொடு கோட்டான்களுமிருந்து எதிர் கூவவும், தொகுதி கொண்ட ஆண்பேய்களொடு மயிரை அவிழ்த்துக் தொங்க விட்டு இருந்து பிணத்தைத் தின்னும் பெண்பேய்கள் கூடவும் ஆயின என்க. (261 - 268) நகர் பாழ்பட்டமை வளைந்த கால்களாய்க் கட்டப்பெற்ற நீண்ட மாடத்தின் றலைக்கடையிற் சென்று நெருங்கி விருந்தினர் இடையறா துண்டும் குறையாத பெருஞ்சோற்று வளம்நிரம்பிய அடுக்களை வாய்ந்து ஒளிபொருந்திய சுவர்களமைந்தவான நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணைகளின் மேலிருந்து பைங்கிளி இன்சொல் மிழற்றுதற்குக் காரணமான பால் நிறைந்த செழுவிய நகரம், செருப்பிட்ட அடியினையுடையராய்த் துடியொலிப்பத் திரண்டசென்று வளைந்த வில்லையுடைய வேடர் கொள்ளைகொண்டு உண்டு விட்டமையினாலே உணாவின்றி வறிதாய்ப்போன நெற்கூடுகளின் உள்ளிருந்து வளைந்த வாயினையுடைய கூகைகள் நண்பகற் காலத்துங் குழறும்படி யாயிற்று. (269 - 299) கரிகாற் பெருவளத்தான் வெற்றித்திரு இங்ஙனமெல்லாம் புகுதற்கு அரிய காவலமைந்த மதில்சூழ்ந்த பகைவர் ஊர்களையெல்லாம் பெரும்பாழ் செய்தும் அதனாலும் அவர்மேற்கொண்ட செற்றம் தணியப் பெறானாய்த் தெய்வத்தன்மை பொருந்தியவனாதலின் இவன் மலைகளை யெல்லாம் கல்லுவன், கடலைத் தூர்ப்பன், வானை விழச்செய்வன், காற்றை இயங்காமல் விலக்குவன் என்று இவ்வாறெல்லாம் உலகத்தாரெல்லாரும் மீக்கூறும்படி தான் நினைத்தவற்றை அந் நினைத்தவாறே துறைபோக முடித்தல் வல்லவனாகலின், ஒளிநாட்டார் பலரும் வந்து தாழ்ந்து ஒடுங்கவும், பழைய அருவாள நாட்டினரசர் அவன் ஏவிய தொழிலைச் செய்தற்கு அவன்சொற் கேட்பவும், வட நாட்டிலுள்ள ஆரிய அரசர் வாடவும், குட நாட்டிலுள்ளார் மனவெழுச்சி குன்றவும், பாண்டியன் வலிகுறையவுஞ் சீறி, மன்னர்தம் நிலைபெற்ற மதிலைக் கைப்பற்றும் மதமுடைத்தாய் வலிய தாளினையுடைய யானைப்படையும் மறத்தாற் சிறந்த வலிமையும் வாய்ந்தவனாய்ச் சினத்தாற் சிவந்த கண்களால் வெகுண்டு பார்த்துப், புல்லிய இடைய அரசரது கால் அழிந்துபடவும், இருங்கோவேள் சுற்றத்தார் கெடவும், காட்டையெல்லாம் அழித்து நாடாக்கிக் குளங்கள் அகழ்வித்துப் பலவளங்களும் பெருகச் செய்து, விளங்கும் மாடத்தினையுடைய உறையூரை விடுத்து, ஆண்டுக் கோயில்களையுங் குடிகளையும் நிலைபெறச் செய்து சிறுவாயிலும் பெருவாயிலும் அமைத்து, மதில்களில் அம்பெய்யும் குருவித்தலைகடோறும் அம்புக் கட்டுகளைப் பொருந்த வைத்துப், பகைவர் யாவராயினும் அவரொடு பொருதற்கு நேர்ந்துள்ளேமென வஞ்சினங் கூறிப், பின் அதனினின்றும் பிறழமாட்டேமென்னும் உறுதியுடைமை யினாலே முதுகுகாட்டிப் போகாது வீரத்திருமகள் என்றும் நிலைபெற்ற பெரிய மதிள், மின்போல் ஒளிவீசுதலால், இவனைப் பணிதற்கு வந்த வாரிறுக்கின முழவினையுடைய மற்றை அரசர் தம் ஒளிமழுங்கப் பெற்றாராய்ப், பின் இவன் அருணோக்கத் திற்குத் தக்காராகல்வேண்டி இவனைப் பணிதலால் அவர் முடிகளிற்குயிற்றிய மணிகள் உரிஞ்சிய மிக்க வலியினையுடைய வீரக்கழல் கட்டின காலினையும், பொற்றொடி யணிந்த தன்புதல்வர் ஓடி விளையாடவும் தொழில் முற்றுப் பெற்ற அணிகலன்கள் அணிந்த தன் மனைவிமாரின் முகிழ்ந்த கொங்கைகள் தழுவவும் செஞ்சந்தனக் குழம்பு கலைந்த மார்பினையும், ஒள்ளிய பூண்களையும் உடையனாய்ச் சிங்கவேற்றை யொத்துப் பகைவர்க்கு வருத்தத்தை விளைக்கும் வலியினனாக, கரிகாற் பெருவளத்தான் என்க. (299 - 300) முன் கருக்கொண்ட (இப் பாட்டின் பொருள் முடிவு) இப்பெற்றியனான அவ் வேந்தன் பகைவர்மேல் ஓச்சிய வேலைக் காட்டினுங் கொடியதாயிருந்தது யாம் போதற்கு எழுந்த கானகம்; இவள் அகன்ற மெல்லிய தோள்களோ அவன் செங்கோலினுங் குளிர்ந்த வாயிருக்கின்றன என்க. அடிக்குறிப்புகள் 1. இக்காலத்தில் இதனைச் `சிமிக்கி என வழங்குவர். 2. பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம் நற்சிறா ரூர்தலி னங்கைமார் விரீஇ உற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை மற்றத்தே ருருள்கோடா வளமை சான்றவே. என்றார் சிந்தாமணியினும், 3. இக்காலத்திதனை ரேழி என்று வழங்குவர். 4. பாலை பாலையென்பது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உணர்த்தும் அகஒழுக்கமாம். தன் மனக்கினிய காதலியை மணந்து கொண்டு தலைமகன் இல்லிருந்து இல்லறம் நடாத்துங்கால், வேற்றுநாட்டிற் சென்று பொருடேடலைக் கருதித் தன் மனைக்கிழத்தியைப் பிரிந்து போதற்குக் குறித்தவழி, அக் குறிப்பினை அறிந்த அவன் காதலி அவனைப் பிரிதற்கு ஆற்றாளாய் மிக வருந்தாநின்றனள். அவ் வருத்தத்தைக் கண்டு அவளைப் பிரியப் பெறானாய்த் தன்நெஞ்சை நோக்கி, முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும், வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே என்று கூறித் தான் செல்லுதல் தவிர்ந்தான். இங்ஙனஞ் செலவு தவிர்ந்தது, இப்போது ஆற்றாளான இவளைப் பலதிறத்தானும் அறிவுறுத்தி ஆற்றிப் பின் பிரிதற் பொருட்டேயாம். ஆகவே, இப்போது தான் பிரிதலை யொழிந்தது பின் பிரிந்து போதற்குக் காரணமாகையால் இப்பாட்டுப் பிரிதல் நிமித்தத் தின்கண் வந்த பாலையொழுக்கத்தை விளக்குவதாயிற்றென்க. இதனை ஆசிரியர் தொல்காப்பியனார், செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே1 வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும். என்று கூறியவாற்றானுங் காண்க. அடிக்குறிப்பு 1. பொருளதிகாரம், கற்பியல், 44. 5. வாகை பாலை என்னும் மக்கள் அக ஒழுக்கத்தைக் கூறுகின்ற இப்பாட்டின்கண் அவரது புறஒழுக்கமுங் கூறல் வேண்டின் அப்பாலையென்னும் அகவொழுக்கத்தோடு இயைபுடைய வாகை என்னும் புறவொழுக்கமே கூறற்பாற்றாம். என்னை? வாகை தானே பாலையது புறனே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாராகலின் என்க. அவை இரண்டும் அங்ஙனம் இயைபுடையவா றென்னையெனின்; வாகை என்பது ஒருவர் தம் திறத்தினை ஏனையோரின் மிக்குத் தோன்ற விளக்குதலாம்; எனவே, இஃது ஒருவர்க்கு உளதாம் வெற்றி என்னும் புறவொழுக்கத்தை உணர்த்துவதென்பது இனிது பெறப்படும். பாலை என்பதுங் காதற் கிழமையிற் சிறந்த தன் காதலிபாற் சென்ற அன்பின் வழியே ஒழுகி அவளிடத்தே தங்கியிராது, இல்லற வாழ்க்கையினை இனிது நடப்பித்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் நன்பொருள் திரட்டுதற்பொருட்டு அவள்மேற் சென்ற அன்பினை அடக்கி வெற்றிகண்டு தலைமகன் பிரிந்து போதலை உணர்த்துவதாம். ஆகவே, அகத்தே நிகழும் அன்பை வெற்றிகாணும் பாலையும், புறத்தே நிகழும் பகைவர் மறத்தை வெற்றிகாணும் வாகையுந் தம்முள் ஒப்புமை யுடையவாதல் தெற்றெனப் புலப்படும். இனித் தன்காதலிமாட்டுச் சென்ற காதலை அடக்கிப் பிரிதற்கு எழுந்த தலைவன் அவள் மிக வருந்துதல் கண்டு இரங்கி அவளை ஆற்றுதற்குத் தங்கி பாலை ஒழுக்கத்தைக் கூறும் இப்பாட்டின்கண் வாகை என்னும் புறஒழுக்கம் யாண்டுக் கூறப்பட்டதெனிற் காட்டுதும்; கரிகாற்சோழன் தன் இளம் பருவத்தே பகைவர் இட்ட சிறைக்களத்தில் இருந்தபோது, அவரை வெல்லும் வகையெல்லாம் நினைந்து பார்த்துப் பின் அச்சிறைக்களத்தினின்றும் அஞ்சாது தப்பிப்போய்த் தன் அரசவுரிமையினைக் கைப்பற்றிக் கொண்டு அப் பகைவர்மேற் சென்று அவரை யெல்லாம் வென்று அவர் நாடு நகரங்களை அழித்து வெற்றி வேந்தனாய்ச் செங்கோல் ஓச்சினமை இருநூற்றிருபத் தோராம் அடிமுதற்கொண்டு இருநூற்றுத் தொண்ணுற் றொன்பதாம் அடிகாறும் இனிது விரித்துக் காட்டினராகலின் பாலையோடு இயைபுடைய வாகை என்னும் புறத்திணையும் உருத்திரங்கண்ணனார் என்னும் நல்லிசைப் புலவரால் ஈண்டுச் சொல்லப்பட்ட தென்க. 6. பாட்டின் வரலாறு இனி, இப் பாட்டின் வரலாற்றைப் பின்வருமாறு உய்த்துணர்ந்துகாட்டல் இழுக்காது. இதனை யியற்றிய நல்லிசைப் புலவரான உருத்திரங்கண்ணனார் தம் ஆருயிர்க் காதலியொடு மருவியிருந்து இல்லறம் நடாத்துகின்றுழி அவர் தமக்குள்ள பொருள்வளஞ் சுருங்க வறுமை வந்து நலிவதாயிற்று. அவ் வறுமை நோயினைக் களைந்து விருந்தோம்பி வாழ்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள் பெறற் பொருட்டுக் கரிகாற்சோழனிடத்துப் போதற்குக் கருதினார். அக் கருத்தறிந்த அவர் அருமை மனைவியார் அவரைப் பிரிதற்குச் சிறிதும் பொருந்தாராய் வருந்தினார். அவ் வருத்தங்கண்டு பிரிதலைத் தவிர்ந்த அவ்வாசிரியர் தாம் கரிகாற்சோழன்பாற் போதற்குக் கருதினமையும், அது தெரிந்து தன் மனைவி வருந்தினமையும், அவள் ஆற்றாமையினைத் தணித்துப் பின் ஒருகாற் பிரிதற்பொருட்டுப் போகாது தவிர்ந்தமையும் இனிது விளங்க நலமுறவுரைத்துத், தாம் சோழ வேந்தனிடத்துப் பரிசில் பெறவேண்டினமையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் எனக் குறிப்பால் அறிவித்து, அக்கரிகாற்சோழ மன்னற்குரிய அரிய பெரிய வெற்றித் திறங்களெல்லாம் நடந்தவாறே மொழிந்து இவ்வருமைத் திருப்பாட்டை அருளிச் செய்தனர். இங்ஙனம் இயற்றிய இவ்வருந்தமிழ்ச் செய்யுளைப் பின்னொருகால் இவர் அச் சோழ வேந்தன்பாற் சென்று காட்ட அவன் இவர் செய்யுளின் சொற்சுவை பொருட்சுவைகளை மிக வியந்து இவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலாக வழங்கிச் சிறப்புச் செய்தான்; இது தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொடாறு நூறாயிரம் பெறப், பண்டு பட்டினப் பாலைகொண்டதும் என்னுங் கலிங்கத்துப்பரணிச் செய்யுளால் அறியப்படும். 7. ஆக்கியோன் வரலாறு இனி இவ்வருமைத் திருப்பாட்டை அருளிச் செய்த நல்லிசைப் புலவரான உருத்திரங்கண்ணனார் கடியலூரிற் பிறந்தவரென்பது இவர் பெயர் அவ்வூர்ப் பெயரொடு புணர்த்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்று வழங்குமாற்றால் அறியப்படும். இவர் பண்டைக்காலந் தமிழ்மக்களில் அந்தணர் குடிக்கு உரியாரென்பது, தொல்காப்பியம் மரபியலிற் பேராசிரியர் ஊரும் பெயருமுடைத் தொழிற் கருவியும், யாழுஞ் சார்த்தி யவையவை பெறுமே என்னுஞ் சூத்திரவுரையில் உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியன என்று உரை கூறியவற்றால் தெளியப்படும். இனி, இவர் இன்ன சமயத்தைக் கைக்கொண்டு ஒழுகினா ரென்பது செவ்வனே பெறப்படவில்லை. இவ்வாசிரியர் தாம் இயற்றிய பெரும்பாணாற்றுப்படையில் காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப், பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண் என்று கூறினாராகலின் இவர் வைணவ சமயத்தைப் பின்பற்றி ஒழுகினா ரென்னாமோ எனின்; காஞ்சி நகரத்திற் செங்கோல் ஒச்சிய தொண்டைமான் இளந்திரையன் என்னும் வேந்தன்பாற் சென்று பரிசில் பெறும்படி பாணரை ஏவிப் பாடுமிடத்து, அவன் அரசு வீற்றிருந்த அக் கச்சி நகரத்தில் திருக்கோயில் கொண்ட திருமாலையும் வழிபட்டுச் சென்மின் என்று அப்பாணரை நோக்கிக் கூறியதன்றி, இவர் திருமாலை வழிபட்டு வந்தன ரென்பது அதனாற் சிறிதும் பெறப்படாமையின் அங்ஙனங் கூறுதல் பொருந்தா வுரையாமென்க. அக் கக்சி நகரத்திற் சிவபிரான் கோயிலும் இருப்ப அதனை விடுத்துத் திருமால் கோயிலையே இவர் மிக்கெடுத்துக் கூறியவாறென்னை யெனின்; தொண்டைமான் இளந்திரையன் என்னும் அச் சோழ மன்னன் திருமால் குடியிற்றோன்றினோனென இருநிலங் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் புறங்கடை யந்நீர்த், திரைதரு மரபினுரவோ னும்பல் எனும் பெரும்பாணாற்றுப்படை யடிகளிற் கூறினாராகலின், அவ் வேந்தன்பாற் போம் பாணர்க்கு அவன் தன் குடித் தெய்வமாய் வழிபடுந் திருமாலைத் தொழுது செல்கவென அறிவுறுத்தருளினாராகலின் அது கடாவன்றென மறுக்க. இங்ஙனமன்றித் திருமாலைக் கூறினமையானே இவர் வைணவரா மெனின், கருவி லோச்சிய கண்ணகன் எறுழ்த்தோட், கடம்பமர் நெடுவேள் என்று முருகக் கடவுளையுங் கூறினாராகலின் இவர் சைவ சமயத்திற்குரியராம் போலுமென எதிர்மறுத்துரைப் பார்க்கு இறுக்கலாகாமையின் அங்ஙனங் கூறுதல் வழுவுரையா மென்க. இவ்வாற்றால் இவர் இன்ன சமயத்தவர் எனத் துணிபுரை விரித்தற்கு வலிய சான்றின்மை காட்டப்பட்டதாகலின், இவர் சமயம் இதுவென்பது துணியப்படாது போலுமென்க. அற்றாயினும், இவரது பெயரின் றன்மையை உற்று நோக்குமிடத்து இவர் சைவசமயத்திற்குரியார் என்பது புலப்படு கின்றது. உருத்திரங்கண்ணனார் என்னுஞ் சொற்றொடர் உருத்திரனுக்குக் கண்போற் சிறந்த இளைய பிள்ளையாரான முருகக் கடவுளைக் குறிப்பதொன்றாம். சைவசமயந் தழீஇ யொழுகுங் குடியிலுள்ளாரே அப்பெயரிட்டு வழங்குதல் மரபாய்ப் போதரக் காண்டலின், இவ்வாசிரியர் சைவசமயத்திற் குரியராம் போலுமெனக் கூறல் இழுக்காது. 8. பாட்டுடைத் தலைவன் இனி இப்பாட்டுடைத் தலைவனான சோழன் கரிகாற் பெருவளவன் இற்றைக்கு ஆயிரத்துத்தொளாயிர ஆண்டுகளுக்கு முன் சோழநாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்திற் செங்கோலோச்சினான். இவன் கிறித்து பிறந்த முதல் நூற்றாண்டின்கண் அரசுரிமை பெறலாயினானென்பதும், மதுரை மாநகரிற் கடைச்சங்கமும் இவன் காலத்தேதான் நிரம்பப் பொலிவு பெற்றிருந்த தென்பதும் யாம் எழுதிய மாணிக்கவாசகர் காலம் என்னும் நூலில் இனிது விளங்க விரித்துக் காட்டப் பட்டன. அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது வரம்பின்றி விரியுமாகலின் ஆண்டுக் கண்டுகொள்க. கடைச் சங்கத்தாராற் றொகுக்கப்பட்ட பத்துப்பாட்டுகளில் இரண்டு பாட்டுகள் இயற்றிய ஆசிரியர் உருத்திரங்கண்ணனாரும் ஆயிரத்துத் தொளாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட வரென்பதும் இதனால் விளங்கற் பாலதே யாம். இனி, இச் சோழமன்னன் தான் இளைஞனா யிருந்த காலத்துப் பகைவராற் பற்றப்பட்டுச் சிறைக்களத்தேயிடப்பட்டானென்பதூஉம், பின் அச் சிறைக்களத்தினின்றுந் தப்பிப்போய்த் தன் அரசுரிமையினை எய்திப் பின்பு அப்பகைவர்மேற் படையெடுத்துச் சென்று அவரை யெல்லாம் வென்றா னென்பதூஉம் இப் பட்டினப் பாலையின் இறுதிப் பகுதியால் நன்கு புலப்படுகின்றன. இன்னும் இவன் இளைஞனாயிருந்தபோது ஒருகால் இவன் பகைவர் இவனைக் கொல்லும்பொருட்டு இவனிருந்த இல்லத்தைத் தீக்கொளுவ, இவன் அதற்கு அஞ்சாது அத்தீயினடுவே போய் அப்பாற்பட்டு உயிர் பிழைத்தானென்பதும், அங்ஙனம் அத் தீயைக் கடந்து செல்லுங்கால் இவன் கால் கரிந்துபோயினமை பற்றியே இவன் கரிகாற் சோழனென்னும் பெயர் பெறுவானாயின னென்பதும், இவன் தன் அரசுரிமையினை எய்துங்கால் இவன்றன் அம்மானான இரும்பிடர்த்தலையார் என்னும் நல்லிசைப் புலவர் இவற்குப் பெருந்துணையாயிருந்தன ரென்பதும், இவன் சேரமான் பெருஞ்சேரலாதனொடு வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்தே போர்செய்து வெற்றிகொண்டா னென்பதும், அங்ஙனம் போரியற்றுங்கால் அச் சேரலாதனுக்குத் துணையாய்வந்த பாண்டியன் ஓருவனையுந் தோல்வி பெறச் செய்தானென்பதும், பின்னொருகால் இமயமலை வரையிற் சென்று ஆரியவரசரை யெல்லாம் வென்று அம்மலைக் குவட்டின்மேல் தன் புலிக்கொடியை நாட்டினா னென்பதும், இருங்கோ வேளின் வழிவந்த சுற்றத்தார்க்கு இவன் பெரும் பகைவனென்பதும், இவன் தமிழ்ப்புலவர்களை மிகவும் பாதுகாத்து வந்தமையால் அவர்களாற் பெரிதும் நன்கு மதிக்கப்பட்டு வந்தானென்பதும் பழமொழி, பொருநராற்றுப் படை, புறநானூறு முதலிய நூல்களால் இனிதுவிளங்குகின்றன. 9. பாட்டின் நலம் வியத்தல் இனி, இப்பாட்டின்கண் உள்ள பொருளமைதியின் நலத்தைச் சிறிது ஆராய்வாம். ஒருபாட்டின்கண் அமைந்த பொருளுக்கும் அதனைவிட்டுத் தனியே கிடந்த பொருளுக்கும் வேறுபாடு பெரிதாம். தனியே கிடந்த பொருள் அறிவுக்குப் புலப்படும் அவ்வளவேயன்றி வேறு இன்பம் பயப்பதன்றாம். பாட்டின்கண் அமைந்த பொருளோ அறிவிற்குப் புலப்படுவதுடன் நம் மனநினைவின் உணர்ச்சியை எழுவித்து இன்பம் பயப்பதொன்றாம். திங்கள் வானில் விளங்குகின்றதென்று ஒருவன் உரைத்தால் அவ்வுரை நம் அறிவுக்கு ஓருண்மையை அறிவிக்கும் அவ்வளவேயன்றி அதன்மேற் றருவது சிறிதுமில்லை யன்றோ? அவ்வாறன்றிக், கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில், எழுந்தார் மதிக்கமலம் எழில்தந்தென. என்னுந் திருச்சிற்றம்பலக் கோவையார் திருப்பாட்டை ஒருவர் உரைப்பக் கேட்டால், விரிந்த நீலவானம் என்னும் நீர்மடுவில் முகிற்குழாமாகிய பச்சிலை பரவியிருப்ப இடையிடையே வான்மீன்களாகிய வெண்டாமரை முகைகள் நிறைந்து விளங்க அவற்றின் நடுவில் முழு வெண்டிங்களாகிய ஒரு வெண்டாமரை அலர்ந்து அழகுடைத்தாய்த் தோன்றுகின்றது என்னும் அச்செய்யுட்பொருள் நம் அறிவுக்குப் புலனாதலொடு நம் மனநினைவின் உணர்வினையும் எழுவித்து இன்பந்தருதல் கண்டாமன்றோ? மற்று இங்ஙனம் இன்பம் பயத்தால் அச்செய்யுட்பொருளுக்கு மட்டும் எவ்வாறு பொருந்து வதாயிற்று என்று நுணுகிப்பார்க்குமிடத்து, இராக்காலத்தே முழுநிலவுடன் காணப்பட்ட அவ் வானின் தோற்றத்தை நிலத்தின்கண்ணுள்ள ஒரு மடுவின் றோற்றத்தோடு ஒப்பதாகவைத்துக் காட்டினமையால் அதற்கு அவ்வின்பம் விளைக்கும் ஆற்றல் பொருந்தலாயிற்றென்பது நன்கு புலனாம். ஆகவே, பாட்டின்கட் சொல்லப்படும் பொருளுக்கு இசைந்த வேறொரு தோற்றத்தினை எழுப்புதல் செய்யுளியற்றும் நல்லிசைப்புலவர்க்கு மட்டும் வாய்ந்ததொரு திறமாம். இங்ஙனம் அவர் செய்யும் செய்கைத்திறத்தினையே இலக்கண நூலார், உவமை, உருவகம் என வேறுபெயரிட்டு வழங்குவர். பொருள்களைக் கிடந்தவாறே சொல்லிக் கொண்டுபோம் நெறி தன்மைநவிற்சி எனவும், அங்ஙனஞ் சொல்லிப் போதற்கு இடையிடையே உணர்வு சலியாமைப் பொருட்டுச் சுவை வேறுபடுத்தி அப்பொருளோடு இயைந்த பிறபொருட் டோற்றத்தை எழுப்புநெறி உவமை, உருவகம் எனவும் பெயர்பெறா நிற்கும். இன்னும் இவ்வுவமை உருவகம் முதலியவற்றின் வேறாகப் பிறர் ஆயிரம் புனைந்துரைகள் கூறினாராயினும் அவையெல்லாம் இவ்வுவமை உருவகம் என்னும் இரண்டிலே யடங்கும். தம்மாற் கூறப்படும் பொருள்களின் வழியே அறிவு செல்லுங்காற், புலவர்க்கு இயற்கையாய்த் தோன்றும் ஒப்புமைகள் உவமை உருவகம் என்னும் இவ்விரண்டே யாகலின், இவ்வியற்கை நெறி திறம்பி மிகவும் இடர்ப்பட்டுப் பலப்பலவான புனைந்துரைக ளெல்லாம் அமைத்துப் பொருளுண்மை திரித்துக் கற்பார்தம் மன உணர்வைச் சிதைக்கும் பிறரெல்லாம் புலவரெனப் படுதற்குச் சிறிதும் உரியர் ஆகார் என்பதூஉம், அவரான் அமைக்கப்படும் அவ்வணிகளெல்லாம் வெற்றாரவார வெறும் போலிகளேயா மென்பதூஉம் உண்மை யறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கற்பாலனவேயாம். இவ்வுண்மை கடைப்பிடித்தன்றே ஒப்புயர் வில்லாச் செந்நாவன்மைச் செவ்வறிவுத் தெய்வப் பெற்றியாளரான ஆசிரியர் தொல்காப்பியனார் பொருளதி காரத்துள் உவமவியல் என ஒன்றே வகுத்து உவமம் ஒன்றையே அணிந்துரையாக வைத்து விளக்கினார். இத் தெய்வ ஆசிரியரொடு திறம்பிப் பிறர் தமக்கு வேண்டியவாறெல்லாம் அணிகளைப் பெருக்கி எழுதினாராயினும் அவையெல்லாந் தொல்காப்பியத்தின் முன் தலைதூக்கமாட்டாவா யொழிதல் காண்க. இனிப் பட்டினப்பாலை யென்னும் இவ்வருமருந்தன்ன நூலை எழுதிய உருத்திரங்கண்ணனார் என்னும் நல்லிசைப் புலவர் இதன்கண் இருபது உவமைகள் காட்டியிருகின்றார். இவ்வுவமைகளை ஓரிடத்து ஒருசேரக் கூறாது பொருள்களைக் கிடந்தவாறே சொல்லிக் கொண்டு போம்வழி இடையிடையே சுவை வேறுபடுத்திக் கற்பார்க்கு உணர்வெழுச்சி உண்டாமாறு அவை தம்மை ஊடே ஊடே இனிதமைத்திடுகின்றார். உருத்திரங் கண்ணனாரும் பொருள்களைக் கிடந்தவாறே கூறினராயின், அதனான் மன உணர்வினைக் கவர்தல் ஏலாதாலெனின்; அற்றன்று; உலகியற் பொருள்களில் இயற்கையழகுள்ளனவும் அஃதில்லனவுமென இரு பாலன உள. ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் இச்செய்யுட்கண் உலகியற் பொருள்களில் அழகாற் சிறந்து மக்கள் மனஉணர்வை எளிதிலே கவர்தற் பயத்தவான அரிய பெரிய பொருள்களைக் கூறும் வழியெல்லாந் தன்மை நவிற்சியும், அவற்றிடையே இயற்கையழகுப் பொருளின் வேறாவன சில வந்தால், அவற்றை அழகுபெறக் கூறல் வேண்டி உவமையும் வைத்துரைக்கும் நுட்பம் மிகவும் பாராட்டற் பாலதொன்றாம். இனிக், காவிரிப்பூம் பட்டினத்து உப்பங்கழியில் நெல்லேற்றிக் கொண்டுவந்த படகுகள் தறிகடோறும் கட்டப்பட்டிருத்தற்கு இலாயத்திலே வரிசையாகக் கட்டப் பட்டிருக்கும் குதிரை வரிசையையும், சுற்றிக் கரை எழுப்பி விளங்கும் மலர்ப் பொய்கைகளுக்கு மக(ம்)மீனாற் சூழப்பட்ட மதியினையும், அங்குள்ள சோறாக்குஞ் சாலைகளிலிருந்து பெருகியோடுங் கஞ்சிக்கு யாற்றின் வெள்ளத்தையும் அக்கஞ்சி உலர்ந்து புழுதியாய் மேற்படிந்த அரண்மனை வீடுகளுக்கு வெண்ணீற்றிற் புரண்டெழுந்த களிற்றி யானைகளையும், கடற்கரையின் மேட்டுக் குப்பத்திலே உள்ள வலிய செம்படவர் கரடிக்கூடத்தில் ஒருவரோடொருவர் பிணைந்து மற்போர் புரிதலுக்கு நீலவானில் வலப்புறமாய்ச் சுழன்று வான்மீன்களொடு கலந்து செல்லுங் கோள்களையும், அச் செம்படவர் தம்முடைய குடிசை வீடுகளில் தூண்டிற் கோலையும் மீன் இடும் புட்டிலையுஞ் சார்த்தி வைத்திருத்தற்குப் போர்க்களத்திலிறந்த மறவனுக்கு நிறுத்திய கல்லின் எதிரிலே ஊன்றிய வேலையுங் கேடகத்தையும், அவர்தம் குடிசை வீட்டு முற்றத்தில் வெண்மணலிலே வலையை உலர வைத்திருத்தற்கு நிலவின் இடையிலே சேர்ந்த இருளையும் செக்கச் சிவந்த நீரையுடைய காவிரியாறு கடலொடு கலத்தற்குக் கரியமலையைச் சேர்ந்த செக்கர் வானையும் தாயின் கொங்கையைத் தழுவிக் கிடந்த மகவையும், சுங்கச் சாவடியிலுள்ள காவலாளர் இரவும் பகலும் ஒழியாது தங்கடமை செய்திருத்தற்குக் கதிரவன் றேரிற் பூட்டப்பட்டு இடையறாது செல்லும் குதிரையையும், மரக்கலத்தில் வந்த சரக்கைக் கடலினின்று கரையிலேற்று தற்கும் கரையிற் கிடந்தவற்றைக் கடன்மேற் கப்பலிலேற்றுதற்கும் முகில் கடலில் முகந்த நிரை மலையிற் பொழிதலையும் அங்ஙனம் மலையிற் பொழிந்த நீர் பின் கடலிற் சேறலையும், கடற்கரையிற் பண்டசாலை முற்றங்களிலே அடுக்கிக் கிடக்கும் மூட்டைகளின்மேல் ஆண்நாய்களும் ஆட்டுக் கிடாய்களும் ஏறிக் குதித்து விளையாடுதற்கு மலைப் பக்கங்களிலே ஏறிக் குதிக்கும் வருடை மான்களையும், மாதர்கள் முருகவேளைத் தொழுதற் பொருட்டாகத் தலைமேற் குவித்த தொடிக்கைகளுக்குக் காந்தட் செடியின் கணுக்களிற் கிளைத்த கவிந்த முகைக்குலைகளையும், தெருக்களின் இருபுறத்தும் நாட்டப்பட்ட துகிற் கொடிகளுக்கு யாற்றின் இருகரையிலுமுள்ள கரும்பின் பூவையும், காவிரிப்பூம்பட்டினக் கடற்றுறை முகத்தில் அசைந்து கொண்டிருக்கும் மரக்கலங்களுக்குக் கட்டுத் தறியை அசைக்குங் களிற்றியானைகளையும், வேளாளரது நடுவு நிலைமைக்கு நுகத்தடியிற் றைத்த பகலாணி யினையும், கரிகாற்சோழன் இளைஞனாயிருந்தபோது பகைவரது சிறைக்களத்தில் அடைக்கப்பட் டிருந்தமைக்குக் கூட்டிலடைக்கப் பட்ட புலிக்குட்டியினையும், பின் அவ்வரசிளைஞன் அச்சிறைக் களத்திற் காவலரை யெல்லாங் கடந்து போய்த் தன் அரசுரிமை யினைக் கைப்பற்றியதற்குத் குழியில் வீழ்ந்த ஆண்யானை அக் குழியினைத் தூர்ந்து மேலேறிப்போய்த் தன் பெட்டையானையைச் சேர்ந்ததனையும், போர்க்கடையாளமான பூளைப்பூவும் உழிஞைப்பூவுஞ் சூடிவந்த படைக்குக் குற்றுச்செடி பம்பிய கருங்கற் பாறையினையும், போர் முரசின் வாய்க்குப் பிதுங்கின பேயின் கண்ணையும் ஆசிரியர் உருத்திரங்கண்ணார் ஆண்டாண்டு உவமைகூறி இப்பாட்டை மிகவுந் திறம்பட அமைத்தது காண்க. இன்னும் இவர் உலகியற் பொருள்களைக் கிடந்தவாறே வைத்து உரைக்குமிடத்தும், குடகமலையிற் றோன்றிய காவிரியாறு சோழனாட்டின்கண் என்றும் நீர் அறாது நிரம்பிப் பொன் கொழித்து ஒழுகுதலும், கழனிகளெல்லாம் எப்போதும் விளைந்து கொண்டிருப்பக் கரும்பாலைகளிற் கரும்பை நறுக்கிப் பிழிந்து பாகு காய்ச்சுதலும், எருமைக் கன்றுகள் நெற்கூடுகளின் நிழலிலே ஆங்காங்கு உறங்கிக் கிடத்தலும், தென்னை வாழை கமுகு மா பனை மஞ்சள் இஞ்சி சேம்பு முதலியன மிகவுங் கொழுமையாய் நெடுக வளர்ந்து அடர்ந்திருத்தலும், சிறு பெண்கள் வீட்டு முற்றத்தில் நெல்லுலர வைத்துக் காவலா யிருப்பச் சிறார் சிறுதேர் செலுத்தி விளையாடுதலும், கடற்கரை உப்பங்கழிகளிலே படகுகள் வரிசையாக நிற்றலும், கடற்கரையிற் கானற்சோலை வளஞ் சிறந்து தோன்றுதலும், மலர்வாவிகள் ஏரிகள் அடிசிற்சாலைகள் அரண்மனைகள் மாட்டுக் கொட்டில்கள் பௌத்தர் சைனர் மடங்கள் காளிகோயில்கள் முதலியன ஆங்காங்கிருத்தலும், செம்படவர் தம் குப்பங்களிலே இறாமீன் சுட்டுத் தின்றும் வயலாமையைப் புழுக்கி உண்டும் அடம்பு ஆம்பல் முதலியவற்றின் பூக்கள் சூடியும் ஒருவரோ டொருவர் செருக்குற்றுக் கவண்கல் வீச அவற்றிற்கு அஞ்சிப் பனைமரங் களிலுள்ள புட்கள் பறந்துபோதலும், அச் செம்படவரது புறச்சேரியில் பன்றிகளுங் கோழிகளும் உலாவ ஆட்டுக்கிடாய் களும் கௌதாரிப்பறவைகளும் விளையாட உறைக்கிணறுகள் பல இருத்தலும், சிறு குடிசை வீடுகளினுள்ளே தூண்டிற்கோலும் மீனிடும் புட்டிலுஞ் சார்த்திவைக்கப்பட்டிருத்தலும், அவ்வீட்டு முற்றங்களின் மணலிலே வலைகள் உலர்தலும், அங்குள்ள பரதவரும் பரத்தியரும் முழுநிலவு நாளிலே சுறாமீன் கொம்பை நட்டுக் கடற்றெய்வத்திற்குத் திருவிழாக் கொண்டாடுதலும், நகரத்துள்ள மாந்தர் மேன்மாடங்களிலே யாமத்திற் பலவகையான இன்பந்துய்த்து உறங்கினமையால் அவியாதுவிட்ட விளக்கங்களைக் கட்டுமரத்தில் மீன்பிடிக்கப்போய் வைகறையில் வந்த பரதவர் எண்ணிப் பார்த்தலும், கடை யாமத்தில் அப் பரதவர் கடற்கரை எக்கர் மணலிலே உறங்கிக் கிடத்தலும், சுங்கச்சாவடியிற் சுங்கங் கொள்ளுங் காவலர் அளவிறந்த பண்டங்களை யெல்லாம் தம் அறிவால் அளந்து பார்த்துச் சோழனுக்குரிய புலி முத்திரை யிட்டுப் போக்கித் தங்கடமை வழாது செய்தலும், பண்டசாலை முற்றங்களிலே மலைபோல் அடுக்கப்பட்ட மூட்டைகளின்மேல் நாயும் ஆட்டுக்கிடாயும் ஏறி விளையாடுதலும், நகரத்திலுள்ள மகளிர் முருகவேள் திருவிழாவைக் கண்டு தொழுதற் பொருட்டு மேல் மாடங்களிற் சாளரவாயிலைப் பொருந்தி நின்று கை கூப்புதலும், அந் நகரமெல்லாம் பலதிறப்பட்ட கொடிகள் நாட்டப்பட்டு விளங்குதலும், பருமாவிலிருந்து வந்த குதிரைகள் மலையமாநாட்டிலிருந்து வந்த மிளகு பொதிகள் இமயமலையி லிருந்து வந்த பலவகை மணிகள் பொதியமலையிலிருந்து வந்த சந்தன அகிற்கட்டைகள் இலங்கைக் கடலில் எடுத்த முத்துகள் கீழ்கடலினின்றுங் கொணர்ந்த பவளங்கள் கங்கை காவிரி ஈழம் முதலிய விடங்களிலிருந்து வந்த உணவுப் பொருள்கள் முதலியனவெல்லாம் கடைத்தெருவுகடோறுந் தொகுக்கப் பட்டிருத்தலும், புலான் மறுத்துப் பொய்யாவொழுக்க மேற்கொண்டுவாழும் வேளாளர் பலதிறப்பட்டார்க்கும் உதவி புரிதலும், பலதேயத்தினின்றும் வந்த மக்கள் ஒருவரோடொருவர் அளவளாவியுறைதலும், கரிகாற் சோழன் பகைவரிட்ட சிறைக்களத்தினின்றுந் தப்பிப்போய்ப் பின் அப் பகைவர்மேற் படை திரட்டி வந்து வந்து அவர் நாடு நகரங்களைப் பாழ்படுத்தினமையால் அவருடைய பொய்கைகள் மன்றங்கள் அரண்மனைகள் நகரங்கள் முதலியனவெல்லம் வெறும் பாழாய்க் கிடத்தலும், அங்ஙனம் வெற்றியிற் சிறந்து போந்து தன் நகரத்தில் அத்தாணி மண்டபத்தே அவன் அரசு வீற்றிருக்குங்காற் பலதேய மன்னரும் போந்து அவன் மருங்கிருந்து அவனேவிய தொழில் கேட்டு நிற்றலும், பகைவர்க்கு இன்னனாயினும் தன்னோடொருமையுடையாரிடத்து அவன் மிக்க அன்புடையனா யொழுகுதலும் பிறவும் நம் மனக் கண்ணெதிரே அரும்பெறல் ஓவியமெழுதிக் காட்டினாற்போல் அழகு கனிய விளக்கிக் காட்டியவாறுங் காண்க. இங்ஙனம் உலகவியற்கைப் பொருள் களுள்ளும் அழகான் மிகச் சிறந்தவற்றையே தெரிந்தெடுத்து அவை தம்மைத் தமது நுண்ணறிவால் பொருந்தக் குழைத்துத் தம் அருமைத் திருமொழிகளால் நம் நெஞ்சப்படாத்தில் அமைதி பெற வரைந்து பட்டினப்பாலை இயற்றிய ஆசிரியர் உருத்திரங் கண்ணனாரது நல்லிசைப் புலமை செந்தமிழ்ப் புகழ்மைக்கு ஒரு நந்தா மணிவிளக்காமென்க. இனி, இவ்வாசிரியர் உலக வியற்கைப்பொருட் டோற்றங்களை இடையறாது திரிந்து கண்டு வியந்து கழிபெருமகிழ்ச் சியெய்தி வந்தனரென்பது இப் பாட்டின் கட்டெற்றெனப் புலப்படுகின்றது. வானம்பாடிப் பறவை மழைத்துளியை உண்டு உயிர்வாழுமென்பதும், குயிற்பறவையுந் தூதுணம் புறாவும் தனித்துள்ள காளிகோட்டத்தில் ஒதுங்கியிருக்கு மென்பதும், செம்படவர் சேரியிற் கோழி கௌதாரி முதலிய புட்களிருக்கு மென்பதும், பாழ்பட்ட இடங்களிலே கூகை கோட்டான்கள் உறையுமென்பதும் இவரால் மிகவும் நன்றாகச் சொல்லப்பட்டிருக் கின்றன. இன்னும் எருமைக்கன்றுகள் மருதநிலத்திற் கிடத்தலும், களிற்றியானைகள் வெண்ணீற்றிற் புரளலும், மாடுகள் கொட்டில்களில் தொகுதி தொகுதியாக நிற்றலும், இறாமீன்கள் ஆமையிறைச்சிகள் செம்படவரால் தின்னப்படுதலும், பன்றியுங்குட்டிகளும் அவர் சேரியில் மிகுதியாயிருத்தலும், சுறாமீன் கொம்புகளை அவர் வழிபடுதலும், நண்டைப் பிடித்து ஆட்டுதலும், மலைப்பக்கங்களில் வருடை என்னும் ஒருவகை மான்கள் துள்ளிக் குதித்தலும், ஆட்டுக்கிடாய்கள் பண்டசாலை முற்றங்களிற் றிரிதலும், கட்டுத்தறியிற் பிணிக்கப்பட்டு நின்ற களிற்றியானைகள் அவற்றை யசைத்தலும், பரதவர்தங் குடிசைவீடுகளில் மீன்கறியும் ஆட்டிறைச்சியும் பொரித்தலும், குழியில் வீழ்ந்த யானை அக் குழியைத் தூர்த்தலும், பொய்கைகளில் முதலைகள் கிடந்துலாவுதலும், நீர்வற்றிய வாவிகளில் அறல்பட்ட கொம்புகளுடைய மான்கள் துள்ளுதலும் அங்ஙனமே சொல்லப்பட்டிருக்கின்றன; மற்றும் நெய்தல் அடம்பு ஆம்பல் தாழை வெண்கூதாளம் காந்தள் கரும்பு பூளை உழிஞை குவளை முதலிய பூக்களும், தெங்கு வாழை கமுகு மா பனை முதலிய மரங்களும், மஞ்சள் சேம்பு இஞ்சி புதவம் செருந்தி முதலிய செடிகளும் இவராற் புனைந்து கூறப்பட்டிருக்கின்றன. இவை தம்மால் இவ்வாசிரியர் உலகவியற்கையினை வழாது திரிந்துகண்டு வியக்குமியல் புடையா ரென்பது தெற்றெனப் புலப்படுகின்றதன்றோ? இனி, இவர் இயற்றமிழ்வல்ல நல்லிசைப் புலவராதலொடு வான நூலினும்1 வல்லவராகக் காணப்படுகின்றார். இவர், தாம் இயற்கைப் பொருள்களை மொழிந்து செல்லுங்கால் அவை தமக்கு வான்மீன் றோற்றங்களை உவமையாக எடுத்துக்காட்டுகின்றார்; மழை பெய்யாது வறத்தற்கு வெள்ளி என்னுங் கோள் தன்னிலை திரிந்து தென்றிசைப் பக்கமாய்ச் செல்லுதலே காரணமென்கின்றார்; திங்களைச் சூழ்ந்த மகமீனை நீர் நிரம்பிய வாவிக்கும் அதன் கரைக்கும் உவமையாகக் கூறுகின்றார்; வான்மீன்களும் கோள்களும் ஒன்றோடொன்று விரவுதலை ஒருவரோ டொருவர் பிணைந்து மற்போர் இயற்றும் செம்படவர்க்கு உவமையாக எடுக்கின்றார். அற்றேல், அக்காலத்து வான் நூலாராய்ச்சி உண்டோவெனின்; இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னிருந்து ஆரியபட்டராற் செய்யப்பட்ட வான் நூலிற் பிற்றைஞான்றை வான்நூலாராற் சொல்லப்படுகின்ற இந் நிலமண்டிலம் தன்னைத்தானே சுற்றுதலும், ஞாயிற்றின் மேலும் திங்களின் மேலும் படும் நிழல்கள் நிலமண்டிலத்தின் சாயலாதலும் முதலான அரிய பெரிய உண்மைகள் இனிது விளக்கப்பட்டிருத்தலானும், அவரை அடுத்துத் தோன்றிய வராக மிகிரரால் மேற்கோளாகக் கொள்ளப்பட்ட சூரிய சித்தாந்தம் என்னும் வான் நூல் மிகப்பழைய தொன்றாதல் அறிவுடையாரால் நன்கு துணியப்படுதலானும்2 பண்டைநாளில் வான் நூலாராய்ச்சி மிகுதியாயிருந்ததென்பது தேற்றமா மென்க. பண்டைக் காலத் திருந்த தமிழ்ப்புலவர் இலக்கண இலக்கியம் வல்லாராத லோடு ஏனை உண்மைநூற்புலமையும் உடன் வாய்ப்பப் பெற்றிருந்தார். ஒருசாரார் இசைத்தமிழும், பிறிதொருசாரார் நாடகத்தமிழும், மற்றொருசாரார் ஓவிய நூலும், வேறொரு சாரார் மருத்து நூலும், பின்னொருசாரார் வான்நூலும், மற்றை ஒருசாரார் சமயநூலுமாகப் பலப்பல பயின்று விளங்கினார்; அவரவர்க்குச் சிறப்புப் பெயர்களாய் அவரவரியற் பெயர்களோடு கூட்டி வழங்கப்படும் மருத்துவன் றாமோதரனார், மதுரைக் கணக்காயனார் என்றற்றொடக்கத்தனவே இதற்குச் சான்றா மென்க. இன்னும் இவை விரிக்கிற் பெருகும். இனி, இவ்வாசிரியர் இப் பாட்டை இயற்றுமிடத்துப் பயில்வோருணர்வு சலிப்படையாவாறு எவ்விடத்தில் எப் பொருளை எவ்வளவு கூறுதல் வேண்டுமோ அவ்வளவே கூறிப்போதலானும், அங்ஙனம் அப்பொருளை அழகுபெறக் கூறுமிடத்தும் பயில்வோர் இஃதெங்ஙனம் முடியும் இஃதெங்ஙனம் முடியும் என்று மேன்மேல் அவாய்ச்சொல்ல அவர்க்கு முடிவு தெரி வேட்கையினை எழுவித்துக் கொண்டு போய் இப் பாட்டை முடிக்குமாறு முதலிலேயே இனிது விளக்கப்பட்டமையானும் இவர் நுட்பவறிவும் இவர் தம் உள்ளத்தின் உணர்ச்சிவலியும் அளக்கற்பாலன வல்லவென்க. அடிக்குறிப்புகள் 1. Astronomy 2. Dr. Kern 10. இப்பாட்டின்கட் டோன்றிய பழையநாள் வழக்க வொழுக்க வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலுட் பௌத்த சமண்குருக்கள் உறையும் மடங்கள் குறிக்கப்பட்டிருத்தலால், இஃது எழுதப்பட்ட காலத்துப் பௌத்தசமண்மதங்கள் நிரம்பவும் பரவியிருந்தனவென்பது இனிதறியப்படும். இந் நூல் எழுதப் படுதற்கு இரு நூறு ஆண்டுகளுக்கு முன் செங்கோல் ஒச்சிய அசோகன் என்னும் பௌத்தவேந்தன் பௌத்த ஆசிரியர் பலரைப் பலதிசைகளுக்கும் பலதேயங்களுக்குஞ் செலவிடுத்து ஆங்காங்குப் பௌத்தசமய அறவுண்மைகளை மிகவிரித்து விளக்கி அவைதம்மை நிலை பெறுவித்து வந்தானென்பதும், சேரசோழபாண்டியமன்னர் அரசு புரிந்த தமிழ்நாட்டிலும் அங்ஙனமே அச்சமயம் நிலை நாட்டப்பட்டதென்பதும் அவ்வசோகமன்னன் செதுக்கிய கல்வெட்டுக்களால்1 நன்கு புலப்படுதலானும், இந் நூலெழுதப்பட்டபின் நானூற்றைம்பது ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த பாகியான் என்னுஞ் சீன ஆசிரியர் காலத்திலெல்லாம் பௌத்த சமயம் மிகவுஞ் செழிப்புற்றிருந்ததென்பது அவ்வாசிரியர் வரைந்து வைத்த வழிநடைக் குறிப்புகளால் இனிது துணியப்படுதலானும் அசோகன் காலத்திற்குச் சில நூற்றாண்டு பிற்றோன்றிய இந் நூலின்கண் அப் பௌத்த மடங்கள் குறிப்பிக்கப்பட்டமை மிகவும் பொருத்தமுடைத்தேயாமென்க. அற்றேல், சமண்மதமும் அப்போதிருந்த தெனக் கூறிய தென்னையெனின்; பௌத்தசமயம் நிலவிய காலத்து அதனொடு சமண்மதமும் உடன் நிலாவிற்றென்பதற்கு மிகப்பழையவான சைன சூத்திரங்களும்2 மணிமேகலைக் காப்பியமும், பௌத்தர் அறிவுரைகளுமே சான்றாமாகலின் அதுவும் முன்னிருந்தமை துணிபொருளேயாம். இனி, ஆரியமுனிவர் பலர் பிராமணங்களிற் சொல்லப் பட்ட வேள்விகள் பல வேட்டுவந்தன ரென்பதும் இதன்கட் குறிக்கப் பட்டிருக்கின்றது. போர்க்களத்தில் அஞ்சாது எதிர்நின்று போர்மலைந்து பகைவன் வாளாற் போழப்பட்டு இறந்த அரிய மறவனை நினைவுகூர்தற் பொருட்டு அவனைப் போல் உருத்திரட்டிய கருங்கல்லை நட்டு அதற்கெதிரிலே அவனுடைய வேற்படையினை ஊன்றிப் பரிசையைத் தொங்கவிடுதல் வழக்கமாயிருந்தது; ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் என்னைமுன் நில்லன்மின் றெவ்விர் பலரென்னை, முன்னின்று கன்னின் றவர் என்று இவ்வழக்கத்தைக் குறித்திருக்கின்றார்; சிலப்பதிகாரத்திலுஞ் செங்குட்டுவன் என்னுஞ் சேரமன்னன் கண்ணகிக்குக் கல்நிறுத்தினமை விரித்துரைக்கப்பட்டிருக்கின்றது. இனி, இற்றைஞான்றிற் போலவே, காவிரிப்பூம்பட்டினக் கடற்றுறை முகத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பண்டங்களை யெல்லாம் பாதுகாத்து அவற்றிற்குக் கடமை இவ்வளவென்று வரம்பறுத்துச் சோழவேந்தன் அடையாளமான புலிமுத்திரை யிட்டுச் சுங்கங்கொள்வோர் தந்தொழில் மாறாது செய்து வந்தனர். இதனால் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே தமிழரசர் செலுத்திய செங்கோலரசு முறைகள் மிகவுந் திருத்தமாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று வந்தமை நன்கு புலனாகின்றது. இனி, அக்காலத்து வீடுகள் படிகள்வைத்துக் கட்டப்பட்ட உயர்ந்த திண்ணைகளும் பலகட்டுக்களுஞ் சிறுவாயில் பெருவாயில் இடைகழி முதலியனவும் அமைந்தனவாயும் மேல்மாடங்கள் பல உள்ளனவாயும் இருந்தன. மேன்மாடங்களிற் செல்வமகளிர் இருந்தமை விளங்குகின்றது. இனிக் காவிரிப்பூம்பட்டினம் முதலான நகரங்களிலும் நாடுகளிலும் முருகக்கடவுளை வழிபடுதலும் அவர்க்குத் திருவிழாக் கொண்டாடுதலுமே பெரும்பான்மையா யிருந்தன. இதற்குத் திருமுருகாற்றுப்படை முதலான பழைய நுல்களுஞ் சான்றாம். எனவே, முருகக்கடவுள் வழிபாடு மிகவுந் தொன்றுதொட்டு நடைபெறுவதென்பது பெறப்படுகின்றது. இனி, அக்காலைக் காவிரிப்பூம்பட்டினத்தில் வாணிகம் பெருகுங் கடைத்தெருவுகள் பலவிருந்தன. அவற்றில் அரிசிப் புரைகள், சரக்கு அறைகள், பாக்கு வெற்றிலைக் கடைகள், மெழுக்குப்பொதிந்த பேழைகள், கள்ளுக் கடைகள், மலையநாட்டு மிளகுபொதிகள், மேரு இயம் முதலான வடமலைகளினின்றுங் கொணர்ந்த மணிகள் பொற்கட்டிகள் விற்குங் கடைகள், குடகுமலையிலிருந்து வந்த சந்தனக்கட்டை அகிற்கட்டை குவித்த மளிகைக் கடைகள், இலங்கைக்கடல் முத்து வங்காளக்கடற் பவளம் கங்கையாற்றுப் பொருள்கள் கடார தேயத்து உணாப்பொருள்கள் சீனத்துப் பட்டுகள் என இவையெல்லாம் நிறைந்த பெருங்கடைகள் ஆகிய பலவும் நிரம்பி நெருங்கி இருந்தன. இன்னும் பர்மாதேயத்திலிருந்து வந்த குதிரைகள் பந்தியிற் கட்டப்பட்டு விலைசெய்யப்பட்டன. இன்னும் அந் நகரத்தில், பல நூல்களுந் துறைபோகக் கற்ற அரும்பெறல் ஆசிரியர் பலர் ஒருங்கு சேர்ந்து வழக்காடிப் பொருளாராய்ந்து இன்புறுங் கலைக்கழகங்களும்3 இருந்தன. இனிக் காவிரிப்பூம்பட்டினத்திற், கொலைத்தொழில் நிகழாவாறு செய்து புலான்மறுத்து வாய்மைபேசுதலையே ஒழுகலாறாய்க் கொண்டு தேவர்க்கு வழிபாடு இயற்றியும், ஆரியர்க்குப் பொருளுதவி பல புரிந்து அவர் வேட்கும் வேள்விகளை நடப்பித்தும், நான்மறையோதுவாரை அது திறம்பாது செய்யுமாறு நிலைநிறுத்தியும், உலகு நிலைபெறுதற்கான தம் உழவுத் தொழிலைச் சிறக்க நடைபெறுவித்தும், கொள்வதும் மிகைபடாமற் கொடுப்பதுங் குறைபடாமல் வாணிகம் நடாத்தியும் புகழ்மேம்பட்ட பழைய வேளாளர் குடியிருப்புகளும் இருந்தன. இதனால், பண்டைநாளில் வேளாளர் பெருஞ் சிறப்புற்றிருந் தார்களென்பதும், ஏனைக் குடிமக்களெல்லாரும் இவர்களுடைய பேருதவியால் உயிர் வாழ்ந்திருந்தன ரென்பதும் நன்கறியப்படுகின்றன. இனித் துருக்கிதேசத்துச் சோனகர் சீனர் யவனர் முதலான பல தேயமக்களும் தமக்குரிய பல மொழிகளும் வழங்கிக்கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் வந்து வாணிகம் நடாத்தி வாழ்ந்தனர். இவரெல்லாம் இங்ஙனம் இந்நாட்டிற் குடியேறி வாழ்ந்தபோது தமக்குள் மாறின்றி ஒருமையுற்றிருந்தன ரென்பதும் இதனாற் றெரிகின்றது. இனி, முன்னாளில் ஓர் அரசன் பிறனோர் அரசனொடு பொருது அவனை வென்றால் அவன் நாட்டிலுள்ள மகளிரைச் சிறைபிடித்து வருத லுண்டென்பதும், அங்ஙனம் பிடித்தவரினும் அவரைக் கற்பழித்து மானஞ் சிதைத்து வருத்தாமல் பாதுகாத்துக் கோயில்களிற் கடவுளைத் தொழுது கொண்டு அங்கு கடவுட்டிருப்பணி செய்யும்படி இருத்துவர் என்பதும் அறியப்படுகின்றன. இதனாற் பண்டை நாட் டமிழரசரின் செங்கோன்மை யரசும் உள்ளப் பெருமையும் இனிது விளங்கற் பாலன. இனி, முன்னாளில் கடவுளைத் தொழுதல் வேண்டிச் சமைக்கப்பட்ட கோயில்கள் அம்பலங்கள் என்னும் பெயருடையவாயிருந்தன. அவற்றின்கட் கடவுளை வழிபடுதற்குத் தொழுகுறியாக நிறுத்தப்பட்ட உரு கந்து எனப் பெயர்பெற்றது. அவ்வுருவினையே இக் காலத்திற் சிவலிங்கம் என வழங்கி வருகின்றனர். இந் நாளிற்போல அந்நாளில் மக்களுருவை யொப்பச் செய்த திருவுருவங்கள் பெரும்பாலுங் கிடையா. சிவலிங்கம் எனப்படுகின்ற கந்து உருவையே வழிபட்டுவந்தனர். இச் சிவலிங்க உருத்தான் மிகப் பழையநாட் டொட்டு எல்லாச் சாதியாரானும் எல்லாத் தேயத்தாரானும் வணங்கப்பட்டு வந்ததென வரலாற்று நூலாராய்ச்சி வல்ல புலவோர்கள் உரைநிறுவுகின்றனர். இதனாலன்றே சிவபிரான் றிருக்கோயில் கடோறும் முதன்மையான கரு இல்லில் இச் சிவலிங்க அருட்குறியும், முதன்மை யில்லா ஏனை இடங்களில் ஏனை உருவங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நச்சினார்க்கினியருங் கந்து என்பதற்குத் தெய்வமுறையுந் தறி என்றுரை கூறினாராகலின் ஈண்டு அது சிவலிங்கமேயாதல் தெற்றெனத் துணியப்படும். திருமுருகாற்றுப்படையிலும் நக்கீரனார் கந்துடை நிலையினும் என்று அருளிச் செய்தமை காண்க. அற்றேல், நாகரிகம் நிரம்பிய பண்டைநாளில் மக்களுருப்போல் திருவுருவங்கள் சமைத்து வழிபடாமை என்னையெனின்; காணவுங் கருதவும் படாத முதல்வனுக்குத் தாந்தாம் நினைந்தவாறு உருவங்கள் சமைத்து வணங்கல் பொருந்தாதாகலின், அம் முதற்பொருளை ஒரு பிழம்பாகக் கொண்டு வழிபடுதற்கு ஓர் அறிகுறியாகப் பிழம்பு வடிவான கந்துரு நிறுத்தினாரென்க. பிழம்புருவின் வழிபாடுபோல் ஏனை உருவின் வழிபாடுகள் சிறவாமை உண்மை நூல்களுட் கண்டுதெளிக. இனி, முன்னாளில் வேளாளர் அரசராயிருந்து செங்கோல் செலுத்தினாராதலும், அவர் அரசுபுரிந்த நாடு ஒளி நாடு ஆதலும் இதன்கண் விளங்குகின்றன. நச்சினார்க்கினியரும் ஒளியராவார் மற்றை மண்டலத்திற்கு அரசராதற்குரிய வேளாளர் என்றுரை விரித்தார். இன்னும், முல்லை நில மக்களான இடைச் சாதியார்க்குள்ளும் பலர் அரசராயிருந்தன ரென்பதூஉம் இதன்கட் புலப்படுகின்றது. இங்ஙனம் பதிற்றுப்பத்தில் ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமயங்க என்று போந்த பகுதியினால் கழுவுள் என்னும் ஓர் அரசன் இடைச் சாதியானென்பது பெறப்படுகின்றது. இவ் விருவகைச் சாதியாரோடு அருவாளநாட்டின் அரசரும் வட நாட்டிலுள்ள அரசரும் குடகுநாட்டினரசரும் தன்னிடத்து வந்து பணிந்துகிடப்பப் கரிகாற் சோழன் வீற்றிருந்தான். பாண்டிய அரசன் ஒருவனை இவன் வென்றமையும், இருங்கோவேள் என்னும் அரசனின் வழிச் சுற்றமாவாரை அழித்தமையும் இக் கரிகாலனுக்குப் பெருவென்றியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இஃதொழிய, இவ் வேந்தன் பல நாடுகளை யெல்லாம் அழித்து நகரங்கள் புதுக்கிக் குளங்கள் அகழ்வித்து இளமரக்காக்கள் விளைவித்து நாகரிகம் பெருக்கினானென்பதும், இவனுக்கு முதலில் அரசிருக்கையாயிருந்தது உறையூர் ஆகுமென்பதும், பின் அதனை விடுத்துப்போனாலும் அது பாழ்படாமல் பல நற்குடிகளை ஆங்கு இருத்தி மாடங்கள் மாளிகைகள் முதலான புதுக் கட்டிடங்கள் அமைப்பித்தா னென்பதும் இப் பாட்டின்கண் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அடிக்குறிப்புகள் 1. Asoka’s edict V, XIII 2. Prof. Jacobi’s introduction to jaina Sutras. Asoka’s edict, VIII, XI. 3. Debating Halls 11. பாவும் பாட்டின் நடையும் தமிழ்மொழியிலுள்ள செய்யுளின் ஓசை அமைதியே பா என்று பெயர்பெறுவதாம். ஒருவன். தொலைவிடத்திலிருந்து ஒரு பாட்டுப் பாட அப் பாட்டின் சொற்பொருள் இவையென்று புலப்படாவாயினும், அவ்வோசை வருமாற்றை உய்த்துணர்ந்து காண்பானுக்கு அவன் பாடுஞ் செய்யுள் இன்ன பாவென்று அறியக் கிடக்கும். இங்ஙனம் நுண்ணிய விசும்பின்கண் அலைஅலையாய் எழும்பி ஓர் ஒழுங்காக வரும் ஒசையே பாவாகுமெனத் தொல்காப்பியர் செய்யுளிய லுரையிலே பேராசிரியரும் நன்கு விளக்கினார். இவ்வாறு தோன்றிப் பரம்புஞ் செய்யுளின் ஒசை முறையைத் தமிழாசிரியர் வெண்பா அகவற்பா கலிப்பா வஞ்சிப்பா என நால்வகைப்படுத்தினார். பின்னும் இந் நால்வகைப் பாவின் ஒசை நெறியை நோக்குமிடத்து வெண்பாவிற் கலிப்பாவும் அகவற்பாவில் வஞ்சிப்பாவும் அடங்குவனவாம். இஃது ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை, வெண்பா நடைத்தே கலியென மொழிப1 என்றும், பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின், ஆசிரியப்பா வெண்பா வென்றாங் காயிரு பாவினு ளடங்கு மென்ப2 என்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுமாற்றான் நன்கு விளங்கும். இவை தம்முள் ஆசிரியப் பாவிற்குரிய அகவலோசை என்பது ஒருவன் தான் கருதியனவெல்லாம் வரம்புபடாது சொல்லிக்கொண்ட போம்வழி இயற்கையே தொன்றுந் தொடர்பு ஒலியாகும்; வெண்பாவிற்குரிய செப்பலோசை என்பது ஒருவன் கேட்பப் பிறனொருவன் அதற்கு மாறுசொல்ல நடைபெறுஞ் சொன்முறையில் இயற்கையே தோன்றி இடையிடையே நிற்றல்பெற்றுச் செல்லுவதாம். மற்றும் இவற்றில் அடங்கும் வஞ்சிப்பாவிற்குரிய தூங்கலோசை என்பது ஒவ் ஒர் அடிதொறும் தொடர்புற்று நிறைந்து செல்லும் ஏனை ஒசைகள் போலாது ஒவ்வொரு சீர்தொறு நிறைந்து தெற்றுப்பட்டு நின்று செல்வதாகும்; கலிப்பாவிற்குரிய துள்ளலோசை என்பது இசை வேறுபாடு தோற்றி ஒசைகனிந்து துள்ளித்துள்ளிச் செல்வதாம். இனிப் பட்டினப்பாலை என்னுமிப்பாட்டு அகவலோசை தழுவி வந்த ஆசிரியப்பாவினால் அமைக்கப் பட்டிருக்கின்றது. இச் செய்யுளின்கன் ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் தாம் உரைப்பக் கருதியனவெல்லாம் ஒரு தொடர்பாக வைத்து முந்நூற்றோரடிகாறு முரைத்தாராகலின் இப் பாவின்கண் இயற்கையாய் எழுவது அகவலோசையே யாயிற்று. அற்றேல், வசையில் புகழ் வயங்கு வெண்மீன், திசை திரிந்து தெற்கே கினும் என்பவை போன்ற வஞ்சிப்பா அடிகள் இடையிடையே கலக்கத் தூங்கலோசை மயங்கிவந்தவா றென்னையெனின்; இப்பாட்டின் முதற்றொட்டு முடிவுகாறும் அகவலோசையே வந்ததாயின் இடையிடையே ஒசை வேறுபடாமல் ஒரோசையாய் நடந்து கேட்பார்க்கு வெறுப்புத் தோற்றுவிக்குமாகலின், அங்ஙனம் ஆகாமைப்பொருட்டு வஞ்சிக்குரிய தூங்கலோசையினை ஆங்காங்கு வேறுபடு மாற்றால் நயமுற இசைவித்துப் பாடுவாராயினர். நாளும் பாலமிழ்தினையே உண்பானுக்கு அதன் சுவை உவர்ப்பாகத் தோன்றுமாகலின் அங்ஙனம் அஃது ஆகாமைப் பொருட்டு இடையிடையே புளிங்கறியுஞ் சுவையாற் பலதிறப்பட்ட மா பலா வாழை முதலிய பழங்களும் உண்டு, அப் பாற்சுவை இனிது நிகழுமாறு செய்வித்துக் கோடல்போல, இப் பாவின் அகவலோசையும் இன்பங் குறையாமைப் பொருட்டு ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் தூங்கலோசையினையும் ஆங்காங்குச் செறிவித்தும் பாடுவாராயினர். இனி, இவ்வகவற்பாவின் அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களாற் கட்டப்பெறுவனாம். இந் நாற்சீரடியை ஆசிரியர் தொல்காப்பியனார் அளவடி என வழங்குவர். இனி, பாட்டின் இடையே மயங்கிய வஞ்சிப்பாட்டின் அடிகள் ஒவ்வொன்றும் இரண்டு சீர்களாற் கட்டப்படுவனவாம். இவ்விரு சீரடியை அவர் குறளடி என வழங்குவர். இப் பட்டினப்பாலையின் முதலினின்று இருபத்தோரடி காறும், இருபத்தேழு முதல் இருபத்தெட்டு காறும், முப்பத்திரண்டு முதல் ஐம்பத்து மூன்றுகாறும், ஐம்பத்தொன்பது முதல் அறுபத்தாறுகாறும், எழுபத்தொன்று முதல் எழுபத்தாறுகாறும், எழுபத்தெட்டு முதல் எண்பத்து நான்கு காறும், எண்பத்தாறு முதல் தொண்ணுற்றொன்று காறும், தொண்ணுற்று மூன்று முதல் தொண்ணுற்று நான்குகாறும், தொண்ணுற்றெட்டுமுதல் நூறுகாறும், நூற்றாறுமுதல் நூற்றெட்டுகாறும், நூற்றுப்பதினான்கு முதல் நூற்றிருபத்தேழுகாறும், நூற்றிருபத்தொன்பது முதல் நூற்று முப்பத்தேழுகாறும், நூற்றுநாற்பத்திரண்டு முதல் நூற்றைம்பத் தொன்றுகாறும், நூற்றைம்பத்தாறு முதல் நூற்றைம்பத் தெட்டுகாறும், நூற்றறுபத்துமூன்று முதல் நூற்றெழுபதுகாறும், நூற்றெழுபத்திரண்டு முதல் நூற்றெண்பத்தொன்றுகாறும், நூற்றுத்தொண்ணுற்றைந்து முதல் நூற்றுத் தொண்ணுற் றொன்பதுகாறும், இருநூற்றொன்று முதல் இரு நூற்றிரண்டு காறும், இரு நூற்றைந்து முதல் இருநூற்றெட்டு காறும், இரு நூற்றுப் பதினொன்றுமுதல் இருநூற்றுப் பதின்மூன்றுகாறும், இருநூற்றெழுபத்து மூன்று முதல் இருநூற்றெழுபத்தைந்து காறும், இரு நூற்றெழுபத் தொன்பது முதல் இருநூற்றெண்பத்து நான்குகாறும், இருநூற்றெண்பத்தாறு முதல் இருநுற்றுத் தொண்ணுற் றொன்றுகாறுந் தூங்கலோசை தழீஇ வந்த வஞ்சியடிகள் வந்தன. ஏனை நூற்றுமுப்பத்தெட்டு அடிகளும் அகவலோசை தழீஇ வந்த ஆசிரியப்பாவாமென்க. எனவே, நூற்றறுபத்து மூன்றடிகள் வஞ்சிப்பாவிற்குரிய வாயினும் அவை தமக்குரிய தூங்கலோசை ஆசிரியப்பாவிற்குரிய அகவலோசையின் இடையிடையே சீர்தொறுந் தெற்றுப்பட்டுச் செல்ல வருவதே யல்லது அதனின் வேறல்லாமையால் அவ்வோசையான் நடக்கும் அவ் வஞ்சியடிகள் இவ்வாசிரியப்பாட்டின்கண் வருதற்குப் பெரிதும் இயைபுடையவாம் என்க. இங்ஙனம் அகவலோசையுந் தூங்கலோசையும் பாலுந்தேனுங் கலந்தாற்போலக் கலந்து செல்லுமாறு இப் பாட்டினை இயற்றிப் பயில்வார்க்குத் தோன்றும் ஒசையின்பம் இடையறாது செல்ல நடாத்திய ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் இசையறிவு மாட்சி மிகவும் விளக்கற்பாலதொன்றாம். இனி, வஞ்சி அடிகள் அகவலடிகளை ஆண்டாண்டு ஒருசேரக் கூறுமிடத்தும் அவை ஒரோசையாய்ச் செல்ல வொட்டாமல் எதுகை மோனை முதலிய எழுத்தமைதி களானுஞ் சிறிது சிறிது ஓசை வேறுபடுத்துப் போகின்றார். பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவி னிகன் மொய்ம்பினோர் என்புழிப்போலச் சிலவிடத்து இவ்விரண்டடிகள் முதற்சீர் எதுகை ஒன்றப் பொருத்து கின்றார். வேறு சிலவிடங்களில் சோறுவாக்கிய கொழுங்கஞ்சி, யாறுபோலப் பரந்தொழுகி, யேறுபொரச் சேறாகித் தேரோடத் துகள் கெழுமி, நீறாடிய களிறுபோல, வேறுபட்ட வினையோவத்து என்புழிப்போல இரண்டடிகளின் மேலும் முதற்சீர் எதுகைபொருந்த அமைத் திடுகின்றார். பின்னுஞ்சிலவிடத்து வான்பொய்ப்பினுந் தான் பொய்யா, கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து, நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, பணைநிலைப் புரவியினணைமுதற் பிணிக்கும் என்றாற்போல ஓரடி யினுள்ளேயே முதற்சீரும் இரண்டாஞ்சீரும், முதற்சீரும் மூன்றாஞ்சீரும் எதுகை பொருந்தப் பாடுகின்றார். ஒரோவிடத்து அகவலடியில் வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர், நுண்ணிதி னுணர நாடி நண்ணார் பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் என்றாற் போல முதற்சீரும் நான்காஞ்சீரும் எதுகை பொருந்த அமைத்திடு கின்றார். மற்றும் ஒரோவிடத்து மாத்தானை மறமொய்ம்பிற், செங்கண்ணாற் செயிர்த்து நோக்கி என்புழிப்போல எதுகையின்றி முதற்சீர் இரண்டாஞ்சீர் மோனை ஒன்றவும், விசிபிணிமுழவின் வேந்தர் சூடிய என்புழிப்போல முதற்சீரும் மூன்றாஞ்சீரும் மோனை ஒன்றவும் இயைத்திடுகின்றார். இனி ஆசிரியர் தம்மாற் பாடப்படும் பொருள்வழியே தம் அறிவை வைத்து மொழிந்து போகுங்கால் இடர்ப்படாது தோன்றும் எதுகை மோனைகளையே அமைத்திடுகின்றார். பொருளுரைக்கேற்ற எதுகை மோனை எளிதிற் றோன்றா விடத்து எதுகைபோல ஓசை பொருந்துஞ் சொற்களைப் பதித்திடுகின்றார்; இதற்குக் கார்க்கரும்பின் கமழாலைத் தீத்தெறுவிற் கவின்வாடி, இனமாவி னிணர்ப் பெண்ணை, முதற்சேம்பின் முளையிஞ்சி, முனைகெடச் சென்று முன்சம முருக்கித், தலைதவச் சென்று தண்பணையெடுப்பி என்றற் றொடக்கத்து அடிகள் எடுத்துக் காட்டாம்; இவற்றுள், கார்க் கரும்பு; தீத்தெறுவு, இனமாவின்; முதற்சேம்பின், முனைகெட: தலைதவ என்பன உண்மை எதுகை யல்லாவிடினும் அதுபோல் ஒசை ஒன்றியிருத்தல் காண்க. இன்னும் ஒரோவிடத்து இவ்வோசைப் பொருத்தமுடைய சொற்கடானும் எடுத்த பொருளுக்கு அடுத்துநில்லாவிடின் எதுகைமோனை சிறிதுமின்றி யுஞ்சொற்களை யமைத்துச் செல்கின்றார்; இஃது, உணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து, வளைவாய்க் கூகை நண்பகற் குழறவும் தேர்பூண்டமாஅ போல, வைகறோறு மசைவின்றி, உலகுசெயக் குறைபடாது என்பவற்றிற் காணப்படும். இங்ஙனம் பொருளுக்கு இசையச் சொற் பொருத்தும் முறை இவ்வாசிரியரோடொரு காலத்தினரும் இவர்க்கு முன்னோருமான பண்டைச் செந்தமிழ்த் தண்டா நல்லிசைப் புலவர் தமக்கெல்லாம் பொதுவிலக்கணமாம். பிற்றை ஞான்றைத் தமிழ்ப்போலிப் புலவரோ பொருட்சிறப்புச் சிறிதுமின்றி வெறுஞ் சொல்லாரவார அமைப்பிலேயே தம் அறிவைக் கழித்துத் தெளிதமிழுக்குந் தமக்கும் இழுக்கந் தேடுவாராயினர்; அங்ஙனம் அவர் செய்தல் உயிரகத் தில்லாப் பிணவுடம்பைப் பலவகையால் ஒப்பித்துக் கண்டு மகிழ்தலோ டொக்குமாகலின், அவர் இசையாப்புலமை அறிவுடையார்க் கெல்லா வசையாய்த் துயரந்தரும் நீர்மைத் தாமென்றொழிக. இனி, இப் பாட்டின் நடையழகு மிகவும் போற்றற்பால தொன்றாம். இனிய தெளிதமிழ்ச்சுவை யூறிய முழுமுழுச் சொற்களால் இப் பாட்டு முற்றும் அமைந்திருக்கின்றது. அவற்றின்கட் டொடர்புபட்டு எழூஉம் இன்னோசை குழல் யாழ் முதலிய கருவிகளினின்று போதரும் ஒலிபோல் மிகவுந்தி குதியாநின்றது. இவற்றைப் பயிலுங்காலத்து நம் அறிவு அம் மெல்லோசை வழிச்சென்று உருகி மிகவுந் தூயதான மேலுலகத்தில் உயரப்போகின்றது. நீர் மடையிலே தெள்ளத்தெளிந்த அருவிநீர் திரண்டு ஒழுகுதல்போல் இச் செய்யுளோசையும் மெல்லென்று மொழுமொழுவெனச் செல்கின்றது. மதி நிறைந்த மலிபண்டம், பொதிமூடைப் போரேறி, மயிலியன் மானோக்கிற், கிளிமழலை மென்சாயலோர், வளிநுழையும் வாய் பொருந்தி, குழலகவ யாழ்முரல, முழவதிர முரசியம்ப, விழவறா வியலாவணத்து மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக், கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக், கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச், செறுவும் வாவியு மயங்கி நீரற், றறுகோட்டிரலையொடு மான்பிணை யுகளவுங், கொண்டி மகளிருண்டுறை மூழ்கி, யந்தி மாட்டிய நந்தா விளக்கின், மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ, வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில் என்றற் றொடக்கத்துச் சில அடிகளை நோக்கினும் இச் செய்யுளின் மெல்லென்ற ஓசையினிமை நன்குவிளங்கும். மாம்பழச்சாறு பெய்த குடுவையின் எப்பக்கத்தே பொத்திட்டு நாவைநீட்டினும் அதன்வழியே யொழுகும் அச் சாறு தித்தித்தல்போல, இவ்வரிய செய்யுளின் எவ்விடத்தே அறிவு தோயினும் ஆண்டு இனிமையே விளையாநிற்கின்றது. ஆதலால், எடுத்துக் காட்டிய இவ்வடிகள் மட்டுமே சுவைகனிந் திருப்பன வென்று நினைதல் இழுக்காமென்க. இதன்கண்ணுள்ள ஒவ்வொரு சொல்லும் பொருட்கரு நிரம்பிக் கொழுந்தீயிற்றெறித்த பொறிபோல் நம்மறிவைக் கொளுத்திப் பலபொருட் டோற்றங் காட்டி விளங்குகின்றன. பயன்படாது நிற்குஞ் சொல் ஒன்றாயினும் இதன்கட் காணப் படுவதில்லை. விலைவரம்பறியாப் பட்டாடையின் கண் ஒவ்வோர் இழையும் பிணைந்துநின்று அவ்வாடை யினை ஆக்குதல்போல, இதன்கண் ஒவ்வொரு சொல்லும் ஒன்றையொன்று கௌவிக் கொண்டு இச்செய்யுளை ஆக்குகின்றது. பெயர்வினைச் சொற்களை அடுத்துநிற்கும் அடைமொழித் தொடர்களெல்லாம் உடம்பொடுகூடிய உறுப்புப்போல் இசைவு பெற்றிருக்கின்றன. இன்னும் இப்பாட்டின் சொன்னயம் பொருணயங்கள் விரிப்பிற் பெருகும். இனி, இப்பாட்டின்கட் சிறிதேறக்குறைய ஆயிரத்து முந்நூற்றுபத் தொன்பது (1319) சொற்களிருக்கின்றன. இவற்றுட் பதினொருசொற்கள் (11) வடசொற்களாம்: அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம், சமம் என்பனவாம், ஞமலி என்னும் ஒரு சொல் பூழி நாட்டிற்குரிய திகைச்சொல்லாகும். ஆகவே இப் பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு (1%) பிறநாட்டுச் சொற்கள் கலந்தன வென்பது அறியற்பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்திற் றமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க. அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியம், செய்யுளியல் 108 2. தொல்காப்பியம், செய்யுளியல் 107 12. விளக்க உரைக்குறிப்புகள் இப் பட்டினப்பாலையின் உரைக்குறிப்புகள் சில ஈண்டெழுதுதற்குமுன், இதன் பொருள்கோள் முறையினைச் சிறிது விளக்குதல் இன்றியமையாது வேண்டப்படுவதாகலின் அதனை இங்கு ஒருசிறிது தெளித்துரைக்கின்றாம். மாட்டு : பத்துப்பாட்டுக்களில் ஒன்றாகிய இப்பட்டினப்பாலை யும் இதனொடு சேர்ந்த ஏனை ஒன்பது பாட்டுக்களும் பொருட்டொடர்புற்று மிகநீண்டு அமைந்தனவாயிருக்கின்றன. ஒரு சங்கிலியிற் பலகண்கள் இருத்தல்போல் இப் பாட்டுக்களிடத்தும் அகன்று நின்று பொருள் பொருந்துகின்ற இடங்கள் பல உளவாம். ஒருபொருள் ஓரிடத்துச் சென்று ஒருவாற்றான் முடிந்தும் முடியாமலும் நிற்பப், பிறிதொரு பொருள் அவ்விடத்தினின்றுந்தோன்றி நடந்துபோய்ப் பிறிதோரிடத்து முடிந்தும் முடியாமலும் நிற்ப, இங்ஙனமே இடையில் வருவனவெல்லாம் அமைய, கடைசிப் படியாக அப்பாட்டின் பொருள் முற்றுப் பெறுவதாகும். இவ்வாறு இடையிடையே முடிந்தும் முடியாமலும் நிற்கும் பொருள்கள் கடைசியாக அப் பாட்டின் கட் கருக்கொண்ட முதற்பொருளைச் சார்ந்து முடியுமாகலின் சார்பு பொருள்கள் என்று பெயர்பெறுவன வாகும். இச் சார்பு பொருள்களோடு கூடிச் சிறந்துவிளங்கும் பொருள் முதற்பொருள் எனப்படும். முடியணி வேந்தனொருவன் அருமணி குயிற்றிய செங்கோல் கைப்பற்றி அரியணை வீற்றிருப்ப, அவனைச் சார்ந்துநின்று அவன் றன் அரசியற் சுற்றமெல்லாம் விளங்கினாற்போல, ஒரு பாட்டின்கட் கருக்கொண்ட முதற்பொருள் அதற்கு ஓருயிராய்ச் சிறந்து நிற்ப ஏனைச் சார்புபொருள் களெல்லாம் அதனைச் சூழ்ந்துகொண்டு அதனைச் சிறப்பித்து அவ்வாற்றால் தாமும் விளங்காநிற்கும். சில்லொளி வீசும் வான்மீன்கள் சூழ இருந்தாலல்லது பல்லொளிவீசும் பான்மதிவிளக்கம் சிறவாதாகலின், சார்பு பொருட் சேர்க்கையின்றி முதற்பொருள் சிறப்புடைத்தாய்ச் செல்லாதென்க. எனவே, ஒரு பாட்டின் முதற்பொருளைச் சிறப்பித்துக் கொண்டு அமைந்து கிடக்குஞ் சார்புபொருள்கள் இன்னோரன்ன பெரும்பாட்டுகளில் அகன்று நிற்குமாகலின், உரை கூறலுறும் ஆசிரியன் அவை தம்மையெல்லாம் அணுகிய நிலையில் வைத்துப் பொருளுரைக்கும் நெறியினையே தொல்லாசிரியர் மாட்டு என வழங்கினார், ஆங்கிலத்திலும் மிலிட்டன் என்னும் நல்லிசைப் புலவர் துறக்க இழப்பு என்னும் தமது அரும்பெருங்காப்பியத்திற் பாட்டுகளை அகன்று பொருள்கிடப்பவைத் தெழுதினார். அதற்குரை கண்டாரும் பிறரும்1 அந் நுணுக்கமறிந்து அவைதம்மையெல்லாம் அணுகிய நிலையில் வைத்து உரையுரைத்தார். இங்ஙனமே இன்னோரன்ன பாட்டுகளுக்கு உரை உரைக்கவேண்டுமென்பது ஆசிரியர் தொல்காப்பியனார் அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும், இயன்று பொருண்முடியத் தந்தனருணர்த்தல், மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் என்று ஆணைதந்தருளிய வாற்றானும், அதற்குரைகண்ட பேராசிரியர் உரைத்த உரை விளக்கத்தானும் தெற்றெனத் துணியப்படும். இனி, மாட்டு என்னும் பொருள் கோள்முறை இதுவேயாதல் அறியமாட்டாத நச்சினார்க்கினியர், இப்பத்துப்பாட்டுகட்கும் ஒருமுறையு மின்றி ஓரிடத்து நின்ற ஒரு சொல்லையும் பிறிதோரிடத்து நின்ற பிறிதொரு சொல்லையும் எடுத்து இணைத்து உரை உரைக்கின்றார். அங்ஙன முறைகூறுதல் நூலாசிரியன் கருத்துக்கு முற்றும் முரணாதலானும், இவர்க்கு முன்னிருந்த நக்கீரனாரை யுள்ளிட்ட தொல்லாசிரியரெவரும் இவ்வாறு உரை உரைப்பக் காணாமையானும் நச்சினார்க்கினியர் உரைமுறை கொள்ளற்பாலதன்றென மறுக்க. நச்சினார்க்கினியருரை கூறாவிடின் இப் பத்துப்பாட்டுக் களின் பொருள் விளங்குத லரிதேயாதல் பற்றியும், இவர் தொல்காப்பியம், கலித்தொகை முதலிய பண்டைச் செந்தமிழ் நூல்கட்கு அரியபெரிய தண்டமிழுரை வகுத்தது பற்றியும் இவரை நெஞ்சாரவழுத்தி இவர்க்குத் தொண்டு பூண்டொழுகுங் கடப்பாடுமிகவுடையே மாயினும், இவர் வழுவியவிடங்களிலும் இவரைப்பின் பற்றி உலகை ஏமாற்றுதல் நடுவுநிலையாகாதாகலின் இவர் தம் வழூ உக்களைக் களைந்து திருத்திப் பின் இவரைச் செந்தமிழ்மாமுகில் வள்ளலாய்க் கொண்டு வழிபடுவாமென்க. இனி, இப் பாட்டினப்பாலையின்கட் போந்த பொருள் இசைவுபெறுகின்ற பொருத்துவாய்கள் இருபத்தேழு உள்ளன. அவை தம்மையெல்லாம் இறுதியில் வினைமுடித்துத் தொகுத்துக் காட்டுமிடத்துக் காண்க. இதன்கட் கருக்கொண்ட முதற்பொருள், 299 வது வரிமுதலாக முடிந்த திருமாவளவன் தெவ்வர்க்கோக்கிய, வேலினும் வெய்ய கானமவன், கோலினுந் தண்ணிய தடமென்றோளே என்பது 218 முதல் 220 ஆவது வரிகாறுமுள்ள முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும், வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே என்பதனொடு பொருந்திநின்று முடிவதாகும். ஏனைய வெல்லாம் சார்புபொருள்களாய் இம் முதற்பொருளை அணிந்துரைத்தற் பொருட்டு வந்தனவென்க. குறிப்பு : இங்கே குறியாது விடப்பட்டவற்றிற் கெல்லாம் உரை பொருட்பாகுபாட்டிலும், பின்னேயுள்ள அருஞ்சொற்பொருள் வரிசையிலுங் காண்க. (1-8) வரிசையில்......... வியன் கழனி வசையில் புகழ் என்பது வெள்ளிக்கு அடை; சேய்த்தாய் நிற்குங் காவிரிக்கு அடையாகாது. மழை யுண்மையின்மைகளை அறிவித்தலிற் குற்றமில்லாத புகழினை யுடையதாயிற்று. தற்பாடிபுள் - வானம்பாடிப் பறவை; தன் - மழை. இப் பறவை மழைத்துளியை உண்டு உயிர் வாழ்வதாகலின் இது மழைவருகையை நோக்கிப் பாடுமென்றார். தளி - நீர்த்துளி. தேம்ப - வாட. (9-19) கார்க்கரும்பின் .......... முனையிஞ்சி கார்க்கரும்பு - பச்சைக்கரும்பு. ஆலை - பாகுகாய்ச்சுங் கொட்டில். தெறுவு - சுடுதல். கவின் - அழகு. செறு - வயல். மோடு - பருத்தவயிறு. கூடு - நெல் வைக்குங்கூடு, இணர்ப்பெண்ணை - குலைகளையுடைய பனை : அன்றிப் பூங்கொத்துகளையுடைய கூந்தற்பனை எனினுமாம். முதற் சேம்பு - அடியிலே கிழங்குள்ள சேம்பு என்னுஞ்செடி. (20 - 27) யாகனகர் .............brG«gh¡f¤J அகல்நகர் - அகன்றவீடு. வியல் - அகலம். மடம் என்பது பிறரறிவித்த வற்றை உட்கொண்டு அவற்றைப் பிறர் தெரியக்காட்டாது அகத்தே வைக்கும் மகளிர்க்குரிய ஓர் இயற்கைக்குணம். இதனை ஆசிரியர் நக்கீரனார் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்பர். ஈண்டு மடம் கள்ளம் அறியாமை என்னும் பொருட்டு, vன்னை?ஈண்L¡ கூறப்பட்டார் சிறுமியரேயாகலின், கொடுங்காற் கனங்குழை - வளைந்த சுற்றுள்ளதாகச் செய்யப்பட்ட கனத்த குண்டலம். பொன் - பொன்னாற் செய்த அணிகலம். இன்று என்பது இன்றி எனப் பொருள்பட்டது. முன் வழிவிலக்கும் விலங்குபகையல்லது கலங்குபகையறியாக் கொழும்பல்குடி - புதல்வர் விளையாடுங் காலத்து அவர் உருட்டுஞ் சிறு தேரினைச் சிறு மகளிர் எறிந்த குண்டலந் தடுக்கி நிற்கச் செய்யும் இதுபோன்ற சிறுதடை களான பகை நேர்வதல்லது வேறு தம் மனங் கலங்குதற்குக் காரணமான பகையில்லாத செல்வ நிறைந்த பலகுடிகள் என்க; பாட்டுச் சென்றவாறே எளிதிலே பொருள்கொள்ளக் கிடக்கும் இவ்வடிகட்கு இப் பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் இவற்றை ஓர் இயைபு மின்றிக் கையினுங் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப் பெருஞ் சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செறுவின் என்னும் எழுபது எழுபத் திரண்டு எழுபத்துமூன்றாம் அடி களொடு சேர்த்துப் பொருளுரைத்துப் பின்பவற்றைக் கொண்டு வந்து கொழும் பல்குடிச் செழும்பாக்கம் என்பதனொடு கூட்டி முடித்திடர்ப்படுகின்றார்; இங்ஙனம் பொருளுரைத்தல் பாட்டின் வரன்முறை சிதைத்தலாமன்றிப் பிறிதென்னை? இங்கே பாக்கம் என்றது காவிரியாற்றின் கரையிலுள்ள ஊர். முதுமரத்த முரண்களரி என்னும் 59 - ஆம் அடிமுதற் கொண்டு, 74- ஆவது வரி வரையில் கடற்கரையிலுள்ள செம்படவர் குப்ப இயற்கை சொல்லப்படுகின்றது. இவ்வாறாகப், பாக்கத்திற் சொல்லப் பட்டதனைக் குப்பத்திற்கும் குப்பத்தில் நடைபெறுதலைப் பாக்கத்திற்கும் ஏற்றி அவர் பொருளுரைத்தது போலியுரையா மென்க. (28 - 39) குறும்பல்லூர்... திணையேரி கொள்ளை - விலை. சாற்றி - சொல்லி விற்று. பணை - குதிரை இலாயம். புறவு - புறம்பு. உரு கெழுதிறலுயர் கோட்டத்து என்பதற்கு நச்சினார்க்கினியருரைத்த பல பொருளுங் காண்க. கோட்டம் கரையுமாம். கோயிலுமாம். (40 - 50) புலிபொறிப்... மாசூட்டும் போர்க்கதவு - வாய்பொருந்தின கதவுகள்; போரமை புணர்ப்பின் என்றார் நெடுநல்வாடையிலும். ஓவம் - சித்திரம்; ஓவத் தன்ன இடனுடை வரைப்பின் என்றார் புறத்தினும். (51- 53) தண்கேணித்..... பல்சாலை கேணித் தகைமுற்றம் - கேணிகளை உள் அடக்கின முற்றம்; தகைதல் - உள்ளடக்குதல். சாலை - மாட்டுக் கொட்டில். (53-58) தவப்பள்ளித்.... சேக்கு முனிவர் வேட்கும் புகையை வெறுத்தலாற் குயில்கள் சோலையைவிட்டுக் காளிகோட்டத்திற்போய்த் தூதுணம் புறாக்களோடும் ஒருபுறத்தே தங்கும் என நேரே பொருள் படுதலை விடுத்து நச்சினார்க்கினியர் காளிகோட்டத்தைப் புறாக்களுக்கு அடைமொழியாக்கிப் பின் அப் புறாக்களோடுங் குயில்கள் காவிலே சென்றிருக்குமெனக் காவுடனே சேர்த்துப் பொருளுரைக்கின்றார். அங்ஙனம் பொருளுரைப்பின் முனிவர் வேள்வி வேட்குமிடம் இதுவென்பது பெறப்படாமையானும், குயில்கள் எவ்விடத்தைவிட்டு எங்கே போயிருந்தனவென்று வினாவுவார்க்கு இறுக்கலாகாமையானும் அஃதுரை யன்றென மறுக்க. இளமரக்காவிலே முனிவர் வேட்கின்றாரென்றும், அங்கெழும் புகையை வெறுத்து அச் சோலையை நீங்கிப்போய்க் குயில்கள் காளிகோட்டத்திற் றங்குகின்றன வென்றும் பொருள் கூறுதலே பொருத்த முடைத்தாதல் காண்க. காளிகோட்டம் நகர்ப்புறத்தே உள்ளது; முனிவர் வைகுங் கா அதற்குஞ் சேய்த்தாய் உள்ளதென்க. அக்நி, ஆகுதி என்னும் வடசொற்கள் அங்கி ஆவுதி எனத் திரிந்தன. கடிநகர் - அச்சந்தருங் காளிகோட்டம். தூது - சிறுகல். (59 -74)முதுமரத்த.....புகர்ப்போந்தை கருந்தொழில் - கொலைத்தொழில். கொலைத் தொழிலிலும், இரும்பு முதலான வலிய உலோகங்கள் அடித்துத் திரட்டுந் தொழிலினும் பழகிய கையைக் கருங்கை என்பர்; கொன்று வாழ் தொழிலினும் வன்பணித் தொழிலினுங், கன்றிய தொழிற்கை கருங்கை எனப் படுமே (திவாகரம், 16) என்பதூஉங் என்பதனொடு சேர்த்துத் திரும்பவும் 70 இல் உள்ள தீண்டி முதலிய வினைகளொடு சேர்த்துப், பிறகு அதனை 27 இல் உள்ள பாக்கத்தோடு இயைத்துப் பெரிய தோர் இடர்விளைத்துப் பாட்டின் பொருணயஞ் சிதைத்தார். இவர்போல் இங்ஙனம் உரைக்குழப்பஞ் செய்வார் பிறரை வேறு யாண்டுங் கண்டிலம். சிறார் விளையாட்டையும், வலிய பெருமக்கள் போர் விளையாட்டையுந் தனித்தனியே கூற வேண்டுமெனக் கருதிய தங்கருத்தை, அக் கருத்துக்குச் சிறிதும் இடந்தராத ஆக்கியோன் திருப்பாட்டில் இயைப்பான்வேண்டி அதனை அங்ஙனமெல்லாம் அலைத்து வரம்பின்றி யுரைகூறத் துணிந்தது அவர்க்குப் பெரிதும் ஏதமாம் என்க. இனிக் கருந்தொழின் மாக்கள் என்பதற்கு மீன்பிடிக்குங் கொலைத் தொழிலிற் பழகிய வலிய செம்படவர் என வைத்து நேரே பொருளுரைத்துச் சென்றால் இப் பகுதி ஆற்றொழுக்காய்ப் பொருள் பயந்து செவ்விதின் முடியுமாற்றைப் பொருட் பாகுபாட்டில் வரைந்த பொழிப்புரைக்கட் காண்க. கலிமாக்கள் என்பதற்குச் சிறார் என்று பொருளுரைத்தற்குப் பாட்டின் பொருளியைபு இடந்தராமையோடு அச்சொற்றொடரும் இடந்தருவதின் றாம்; என்னை? சிறு மகார்க்குக் கருந்தொழில், வலிய, செருக்கிய முதலான அடைமொழிகள் ஏலாமையானும், மாக்கள் என்னுஞ்சொல் அப்பொருடராமையானு மென்பது. மற்றுக் கிடந்தவாறே வைத்துக் கலிமாக்கள் செம்படவர் எனப்பொருளுரைப்பின், இகன்மொய்ம்பினோர் என்பதும் அவரையே குறித்துநின்று கூறியது கூறலாமெனின்; அற்றன்று, செம்படவர் மேற்சொன்னவாறு கையினுங் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப் போர் இயற்றியும் அதனானும் தம் வலி யடங்காமையின் மாறுபட்ட திறலுடையராய்க் கவண்கல் வீசுவாராயினரென்று உரை கூறக் கிடத்தலால் அது கூறியது கூற லாகாதென்க. வறள் அடம்பு - வறண்டமணலிற் படர்ந்த அடப்பங் கொடி ; இக்கொடி கடற்கரை மணலிற் படருமென்பது நெய்தற்கலி (10) யுள்ளும், பதிற்றுப் பத்தினுள்ளுங் (30 ,51) கூறப்படுதலின் இது வறள் என்னும் அடையடுத்துவந்தது. நாள் மீன் - நட்சத்திரம்; கோள்மீன் - கிரகம். (75-77) பறழ்ப்பன்றிப்.... விளையாட உறை என்பது மண்ணாற் சுவர்போற் சூழ வனைந்து ஓரடிக்குமேல் உயரமாக்கிச் சுள்ளையில் வைத்துச் சுட்டெடுப்பது. இவ்வாறு சமைத்த உறைகளை நிலைத்தை அகழ்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச்செய்வது உறைக்கிணறு என்று சொல்லப்படும். மேழகத்தகர் - துருவாட்டின் ஆண்; இதனை ஏழகம் என்றும் வழங்குப; இவ்விரு சொல்லுந் துருவாட்டின் ஏற்றுக்குப் பெயராதல் திவாகரத்துங் காண்க. சிவல் - கௌதாரிப்பறவை. புறச் சேரி - இழி தொழிலாளரான செம்படவர் நகர்க்குப் புறத்தேயிருக்கும் ஊர்; இது குப்பத்தை அடுத்துள்ளதாகும். (78 -105)கிடுகுநிரைத்......பெருந்துறை கிடுகுநிரைத்து எஃகு ஊன்றி - கேடகத்தை வரிசை பின்மையானும், ஆசிரியர் கருத்துக்கு மாறாய் உவமமின்றிப் பிறழ்தலானும் அவருரை பொருந்தாதென மறுக்க. நெடுத்தூண்டிலிற்காழ் என்றமையான் அதனோடு இனமான மீன்இடும் புட்டிலும் ஈண்டுக் கொள்ளப்படும். கேடகம் மீனிடும் புட்டிலுக்கும், வேல் தூண்டிற்கோலுக்கும் உவமைகளாம். சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங் கினால் - கருக்கொண்ட சுறாமீன் கொம்பை நட்டு அதனையே தான் இருக்குமிடமாகச் சேர்த்த வலிய கடற் றெய்வத்தின் பொருட்டு. மனை - இருக்குமிடம்; இச்சொல் இப்பொருள் படுமாகவும், நச்சினார்க்கினியர் இதனைக் கொன்னே வேறுபிரித்துப் போய் 83 - வது வரியிலுள்ள மணன்முன்றில் என்பதனொடு கூட்டினார். நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளந் தப்பின் அம் மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கோடு நாட்டிப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும் என்பது தொல்காப்பியப் பொருளதி காரத்தில் நச்சினார்க்கினிய ருரைத்தவுரை. மடிதல் - தந்தொழில் செய்யாது சோம்புதல். காவிரித் துறைக்கு உவமையாய் நேரே சென்றியைவதாகிய பெறற் கருந் தொல்சீர்த் துறக்கம் என்னும் அடியை 111 - வது அடியிலுள்ள நெடுங்கால்மாடம் என்பதனோடு இயைத்து இடர்ப்படு கின்றார் நச்சினார்க்கினியர். கவலையின்றிப் பல பயன் நுகர்ந்து பரதவர் தம் மகளிரோடும் இனிது விளையாட்டயர்கின்ற காவிரித் துறையைத், தேவர் அரம்பை மாதரோடும் விளையாடு கின்ற துறக்கத்திற்கு உவமை கூறுதலே நிரம்பவும் பொருத்த முடைமையின், அதுவே ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் கருத்தாதல் காண்க. (106 - . துணைப்புணர்ந்த.......கங்குலான் துணை - கணவன். மது - காமத்தேன். கொடுந்திமில் - முன்வளைந்த கட்டுமரம், அல்லது மீன்படகு, தோணி எனவும் ஆம். குரூஉச்சுடர் - நிறஞ்சிறந்த விளக்கு. கண்அடையஇய - கண் அடைந்த, அஃதாவது கண்டுயின்ற. (116 - 125) மாஅகாவிரி......குறையடாது எக்கர் - காவிரியாற்றுநீர் கொண்டுவந்த திரட்டிய இடுமணல். இவ் வெக்கர்மணலிலே கடையாமத்தில் துயில் கொண்டு கிடப்பார் சுங்கங் கொள்ளுங் காவலாளர் என்பது நேரே பொருள்படுவதாகவும், இதனைவிட்டு நச்சினார்க்கினியர் அதனைப் பரதவர்மே லேற்றி அவர் அம் மணன் மேற் கண்டுயின்று கிடப்பரென வுரைகூறி, மற்றை நாளில் அப் பரதவர் ‘வெறியாடு மகளிரொடு’ கூடி விழாவெடுப்பரென 155 - வது வரியொடு கொண்டு போய்க் கூட்டி முடித்திடுகின்றார். இப் பாட்டுச் செல்லுநெறியை ஒரு சிறிது நோக்குவார்க்கும் இவருரை பொருந்தாமை நன்கு தெளிப்படும். சுங்கங்கொள்வோர் தங்கடமை வழாது இரவிலுஞ் சாவடியிலிருந்தவாறே காவலாய் எக்கர்மணலிற் றுயில் கொள்வரெனக் கிடந்தவாறு வைத்துரைத்தலே பொருட் சிறப்புடைத் தாவதன்றிப், பரதவர் உறங்கினாரென வாளாது கூறுல் சிறவாதென்க. வேலாழி - கடல், ஈண்டு ஆகுபெயராய் கடற்கரை. இனி வேலா ஆழி எனப் பிரித்துக் கரையுங் கடலுமென உரைத்தலு மொன்று; இவ்வாறு கொள்ளின் ‘தாழை வேலாழி வியன்றெருவில்’ என்பதற்குத் ‘தாழைவளர்ந்த கரையினையும் கடலருகே நின்ற அகன்ற தெருவினையுமுடைய’ என்று பொருளுரைக்க; வேலா ஆழி என்பவற்றில் ஆழி என்பதன் முதல் தொக, வேலாழி என்று அவை புணர்ந்தன. உல்கு - சுங்கம்; “உறுபொருளும் உல்கு பொருளும்” (குறள். 756) என்னுந் திருக்குறளிலும் இஃது இப்பொருட்டாதல் காண்க. (125 - 141) வான்முகந்த .............முன்றில் “நிலத்து ஏற்றவும்” என்பதூஉம் பாடம்; அதற்கு ‘நிலத்தின் கண் ஏற்றப்படவும்’ என்று பொருளுரைக்க. ‘பரப்பவும்’ என்பது தன் வினைப் பொருட்டு, வலியுடை வல் அணங்கினோன் - உடல்வலியொடு மனவலிமையும் ஒருங்கு உடைமையாற் பிறர்க்கு அச்சத்தை விளைக்குங் காவலன் எனப், புலியடையாள இலச்சினையைப் பொறிக்குந் தொழிலாளன் மேற்றாக உரைக்க; மனவலியாவது தான் ஏன்றுக் கொண்ட கடமையிற் பிறழாத மனத்திட்பம். சுங்கங்கொடாமற் பண்டங்களைக் களவில் ஏற்றவும் இறக்கவுங் கருதுவார்க்கு அவன் அச்சத்தை விளைத்தலின் ‘அணங்கினோன்’ என்றார். இனி, ‘அணங்கின் நோன்’ எனப்பிரித்து அவற்றைப் புலிக்கு அடையாக்கி, வலியுடைமையால் வலிதே வருத்தும் இயல்பினதான வலிய புலியினடையாளம் எனப் பொருளுரைத்தல் சிறந்ததன்று. ‘புலி’ உவமவாகுபெயர். பண்டம் பொதிமூடை - பண்டங்கள் பொதிந்த மூட்டை. ‘கொடு’ வளைவுப் பொருளுணர்த்தும் ஒர் உரிச்சொல். வருடை - ஒருவகைமான். ஏழகம், மேழகம் என்பன ஆட்டுக்கிடாய் என்னும் ஒரு பொருளையே உணர்த்துவனவாகும். (142 - 158) குறுந்தொடை - லாவணத்து குறுந்தொடை - அணுகினபடிகள். ‘குறுமை’ ஈண்டு அணிமையினை யுணர்த்திற்று. படிக்கால் - ஏணி, பல்தகைப்பு - வீட்டின் பலபகுதிகள்; கட்டுகள். வளி நுழையும் வாய் - தென்றற்காற்றுப் புகும் சாளரம். நுண்தாது உறைக்கும் - நுண்ணிய மகரந்தப் பொடியைச் சொரியும்; “புன்னை நுண்டா துறைத்தரு நெய்தல்” என்னும் ஐங்குறுநூற்றிற்போல. துடுப்பு - கணு. ஆவணம் - கடைத்தெரு. (159 - 183) மையறுசிறப்பிற்............வரைப்பில் மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய மலர் அணிவாயிற் பலர்தொழு கொடி - குற்றமற்ற சிறப்பினையுடைய தெய்வத்தை ஏற்றுவித்து மலர்களணிந்த கோயில் வாயிலிலே பலருந் தொழுதுசெல்லுங் கோழிக்கொடி என்க. நின்றவாறே சென்று இயைந்து இங்ஙனம் பொருடருவ தாகி ‘மையறு சிறப்பிற் றெய்வம்’ என்னுஞ் சொற்றொடரைப் பிரித்தெடுத்துப்போய், முருகனுக்கும் ஏனைத் தெய்வங்களுக்கும் எடுத்த விழா அறாத ஆவணம் என்று கூட்டி நச்சினார்க்கினியர் இடர்ப்படுகின்றார். 159 - ஆவது வரிமுதல் கொடிச் சிறப்புக் கூறப்புகுந்த ஆசிரியர் மற்றைக் கொடிகளைக் கூறுதற்குமுன் தெய்வத்தன்மையுடைய கோழிக்கொடியை முதலிற் கூறக் கருதி முருகப்பிரான்றன் திருக்கோயில் வாயிலிலே கட்டப்பட்டிருக்குமதனைக் கூறிய நுணுக்கமறியாது நச்சினார்க்கினியர் தாம் ஒருபொருள் கூறுவான் புகுந்து இழுக்கினார். கூழ் - உணவுப்பொருள். மஞ்சிகை - பேழை. பண்ணியம் - பலபண்டம். பாகு உகுத்த பசு மெழுக்கிற்காழ் - பாகாகக்காய்ச்சி வார்த்த பசிய மெழுக்கைப் பூசிய கோல். கிடுகு - சட்டம்; இச்சொல் முன் ஒருகால் கேடகம் என்னும் பொருளில் வந்தவாறு காண்க. ‘பாகு உகுத்த’ என்பதற்கு இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் இதனை ‘மஞ்சிகை’ என்பதனொடு சேர்த்துப் ‘பாக்கு வெற்றிலை சொரிந்த மஞ்சிகை’ என்று பொருள் கூறினார். அவ்வாறியைத்தற்குச் செய்யுளிடந்தராமையின் யாங் கூறியதே பொருளென வறிக; சிறார் ஏறாமைப்பொருட்டுக் கோல்களில் மெழுக்குத் தடவி நாட்டுதல் உண்டு. இனி ‘மெழுக்கு’ என்பதற்குச் ‘சாணத்தால் மெழுகுதல்’ என்றுரை கூறினாருமுளர்; அது பொருந்தாமை ஈண்டுக் கூறியவாற்றாற் காண்க. ‘கரும்பின் ஒண்பூப்போல மேலூன்றிய துகிற்கொடியும்’ என, அகன்று நின்ற உவமையை அணுகிய நிலையில் இயைக்க. தொன்று தொட்டுப் பிறரை ஏவிக்கொள்ளும் உரிமை கல்வியறிவின் மேம்பட்டார் பாலதாய் நிற்றலின் ‘தொல்லாணை நல்லாசிரியர்’ என்றார். நிரம்பிய கல்வியில்லார் அவர்முன் வாய்திறக்கவும் அஞ்சுவராகலிற், கல்வியிற்சான்ற அவரெடுத்த கொடி அவர்க்கு அச்சந்தருமெனப்பட்டது. ‘துவன்று இருக்கைத் தூங்குநாவாய்’ என மாற்றிக்கூட்டி ‘நிறைந்த இருப்பினையுடைய அசையும் மரக்கலன்கள்’ என்க. ‘மிசைக் கூம்பின்’ என்னுஞ் சொற்றொடரைக் கூம்பின்மிசை என மாறுக. சேய நாடுகளிற் சென்று பண்டங்கள் இறக்கியும் ஏற்றியும் மீண்ட தத்தம் மரக்கலங்களைக் கண்டு அவ்வவற்றிற்குரியார் மகிழ்தற்கு அவற்றின்மேற் கட்டிய கொடிகள் அடையாளமாய் நின்றுதவுதலின் அவை விரும்பத்தக்கன என்றார்; நசை - விருப்பம். நறவுநொடை - கள்விற்றல். பதாகை (வடசொல்) - பெருங்கொடி (183 - 193) செல்லாநல்லிசை ..........மறுகி காலின் வந்த கருங்கறிமூடை - வண்டியிற் கொண்டு வந்த கரிய மிளகுபொதி. கால் - உருள்; அஃது இங்கே உருளையுடைய வண்டியை உணர்த்திற்று; இச் சொல் இப் பொருட்டாதல் “கால்பார் கோத்து” என்னும் புறப்பாட்டிற் காண்க. “ஒருங்கு தொக்கன்ன வுடைப்பெரும் பண்டங்கலத்தினுங் காலினுந் தருவன ரீட்ட”2 என் புழி அடியார்க்கு நல்லார் உரை கூறியவாறே ‘வழியிற் கொண்டு வந்த’ என்றுரைப்பினுமாம். இப்பொருள் கூறவறியாத நச்சினார்க்கினியர் ‘நீரிற் காலில்வந்த’ என இரண்டிடத்துக் கூட்டிக் ‘கடலிலே காற்றான்வந்த’ வெனப் பொருந்தாவுரை வரைந்தார். குடமலை - குடகுமலை; அல்லது மேற்கணவாய்மலை; காவிரிப்பூம்பட்டினத்திற்கு மேற்கிலுள்ள ததுவாகலின், ஈண்டதனைக் கூறுதலே பொருத்தமாம்; பொதியம் தெற்கேயுள்ளதாகலின் நச்சினார்க்கினியர் அதனைக் கூறுதல் பொருந்தாது. ஈழம் - இலங்கை. (193 - 212) நீர்நாப்பண்ணு - துவன்றிருக்கை துறைமுகத்து நீரில் உலாவும் மீனும் கரையிற் றிரியும் யாடு முதலான விலங்குகளும் நீரிலும் நிலத்திலும் இடரின்றி உறங்கிச் செம்படவர் குடிசை முற்றத்திலும் ஊன்விற்றற்றொழிலை யுடையார் குடிசையிலும் தாவிப் பாய்ந்துத் திரண்டும் நிற்கும் என்க. இங்ஙனம் நெறிப்படப் பொருளுரையாது நச்சினார்க் கினியர் ‘புரவி மூடை மணிபொன் முதலியன நீரினும் நிலத்தினும் இனிது தங்கி வளம் மயங்கிய மறுகு’ என்றிடர்ப்பட் டியைக்கின்றார், ‘துஞ்சி’ என்னுஞ் சொல்லுக்கு ‘உறங்கி’ என்னுஞ் செம்பொருளும் அதற்கேற்ற மீன், மா முதலிய உயிருடைப் பொருள்களும் உளவாகவும், அவற்றைவிடுத்து அச்சொல்லுக்குத் தங்கி என ஆக்கப் பொருள்கொண்டு அவ்வாறு இயைத்தது தீம்பாலுண விருப்ப அதனை உவர்த்தொதுக்கி அறிவுமயக்குங் கள்ளுண்பார் திறனோடொப்ப தாயிற்றென்க. மேலும், 217 - வது வரியிற் பலவேறு மொழி வழங்கும் பலதேய மாக்களுங் காவிரிப்பூம்பட்டினத்தில் வந்துறைவரெனக் கூறிய பகுதியை ஆண்டு நின்றும் பிரித்தெடுத்து வந்து அவர் உறையும் மறுகு என ஈண்டிதனொடு வரன்முறையின்றி முடிக்கின்றார் நச்சினார்க்கினியர். கிளைகலித்து - கொல்வாரின்மையின் தம் சுற்றம் பல்கி. பண்ணியம் - தின்பண்டம். பசும்பதம் - புதிது வந்த அரிசியால் ஆக்கிய சோறு. நுகம் - குறுக்குக் கட்டை. பகல் - அதன் நடுவில் தைத்த ஆணி, கொண்டி - மிகுந்த பொருள். (213 - 218) பல்லாயமொடு............பெறினும் ‘புலம்பெயர் மாக்கள் பல்லாயமொடு பதிபழகிக் கலந்தினி துறையும்’ என் கூட்டுக. பல் ஆயமொடு பதி பழகி - பல தொகுதியாகக் காவிரிப்பூம்பட்டினத்திலுறையும் நன் மக்களோடும் ஒருமித்துப் பழகி. வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல் - வேறு வேறாகச் சிறந்த அறிவுவாய்த்த சுற்றத் தாரையுடைய நன்மக்கள். வேறு வேறாக அறிவு சிறத்தலாவது பலதிறப்பட்ட நூல்களிற் பயின்று முதிர்ந்த அறிவு வாய்த்தல். பலதிறப்பட்ட அறிவுடைய நன்மக்களெல்லாரும் திருவிழா நடைபெறும் ஒரிடத்திற்சென்று கூடுதல்போலப் பலதிறப் பட்ட மொழிகள் வழங்கும் பல தேயத்தாரும் இந் நகரத்திற் குழுமுவர் என்க. ‘வேறுவேறுயர்ந்த’ என்னும் அடைமொழித் தொடரை நச்சினார்க்கினியர் புலம்பெயர் மாக்களொடு கூட்டுகின்றார்; அங்ஙனமுரையுரைத்தல் வேண்டாகூறலேயா மென்க. (220 - 239) வாரிருங்கூந்தல்.........தண்பணையெடுப்பி பிணிஅகம் - சிறைக்களம். பீடுகாழ் முற்றி - தன் பெருமைத்தன்மை வைரம் ஏறி முதிர்தலால். காப்புஏறி - மதிலைஏறி. வாள்கழித்து - மதிற்புறத்திருந்த வாட்படை வீரரை ஓட்டி; அல்லது தனது வாளை உறையினின்றுங் கழித்து எனுலுமாம். ஓங்கு எழில் யானை - உயர்ந்த அழகினையுடைய யானை. தூறு இவர் துறுகல் - குறுஞ்செடி படர்ந்த நெருங்கிய பொறைக்கல். அல்லது சிறுகுன்று; “வேங்கை மாத்தகட் டொள்வீ தாய துறுகல்” என்றார் புறத்திலும். ‘உமிஞை’ சிறுபூளை எனப்படுமென்று திவாகரத்துட் சொல்லப்படுதலின், அதனோ டினமான பெரும்பூளையுஞ் சூடினானென்று ஆசிரியர் கூறிய கருத்தறியாது, நச்சினார்க்கினியர் இச் சொல்லை 241 ஆம் அடியிலுள்ள ‘மயங்கி’ என்பதனொடு கூட்டி யுரை கூறுகின்றார். மாக்கண் அகல் அறை - பெரிய இடத்தான் அகன்ற பாசறை. பணை - மருதநிலம், அங்குள்ள குடிகளுக்கு ஆயிற்று. ‘பொய்கை செருந்தி நீரற்று’ நீடி எனக் கூட்டுக. (240 - 245) வெண்பூக்..........யுகளவும் அறுகோட்டு இரலை - அறுப்பறுப்பான கொம்புள்ள கலைமான், மான்பிணை - பெட்டை மான். (246 - 251) கொண்டிமகளி...........துறையவும் கொண்டி மகளிர் - சிறையாகப் பிடித்துக் கொள்ளப் பட்ட மகளிர். ‘கொண்டி’ முன்னே ‘மிகுபொருள்’ என்னும் பொருளில் வந்தது காண்க. கந்து - தெய்வம் உறையுந்தறி ; சிவலிங்கம், பொதியில், அம்பலம் என்பன கோயிலென்று பொருளுணர்த்தும். (252 - 260) மருவிலை நறும்பூத்..........டுவன்றவும் ‘அறுகை’ என்பதில் ஐ : சாரியை ; அறுகம்புல், “அறுகையு நெருஞ்சியு மடர்ந்து” என்றார் மணிமேகலையினும். அழல்வாய் ஒரி அஞ்சுவரக் கதிர்ப்பவும் - அழன்ற வாயினையுடைய முதுநரிகள் பிறர்க்கு அஞ்சுதல் உண்டாக ஒங்கி ஊளையிடவும் என்க. கூகையில் ஓர் இனம் ஆந்தை எனவும் பிறிதோர் இனம் கோட்டான் எனவும் வழங்கப்படும் என்பர்; இங்கே கூகை என்பது ஆந்தை. இது கூவும் ஒசை அழுகுரலை யொத்தலின் “அழுகுரற் கூகை” என்றார். ஆண்டலை - கோட்டான் போல்வதொரு பறவை; இதன் றலை ஆண்மக்கள் தலைபோ லிருத்தலின் இப்பெயர் பெறுவதாயிற் றென்க. “புலவூண் பொருந்திய குராலின் குரலும், ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும்” என்றார் மணிமேகலையினும். (261 - 268) கொடுங்கான்........குழறவு கொடுங்கால் மாடம் - கால்கள் வளைத்து அழகாகக் கட்டப்பட்ட மாடம். ‘கொடுங்கால’ என்னும் இவ்வடை மொழியை நச்சினார்க்கினியர் பேய் மகள் என்பதனொடு வறிதே இயைக்கின்றார். ‘விருந்து ஆனாது உண்டு’ என மாற்றுக; ‘உண்டும்’ என்பதில் உம்மை தொகுத்தல். வறுங்கூடு - வறிதாய்ப்போன நெற்கூடு. சாவிற்கு முற்குறியாகக் கூகை நடுப்பகலிற் குழறு தலைப் “பேணாரகநாட்டு, நன்பகலுங் கூகைநகும்” என்னும் புறப்பொருள் வெண்பாமாலையானும் உணர்க, (வஞ்சிப்படலம்.4) (269 - 299) மருங்கடி...றோளே ஞாயில் - அம்பெய்வதற்கு மதின்மேற் சமைத்த ஒரு மதிலுறுப்பு; இதனை அடியார்க்கு நல்லார் ‘குருவித்தலை’ என்பர்.3 விசிபிணிமுழவு - இறுகக்கட்டின வார்க்கட்டையுடைய முரசு, பரு ஏர் எறுழ் கால் - பெரிய அழகினையும் வலியினையும் உடைய கால். இனி, இங்ஙனம் வகுத்துக் கொண்டு உரை கூறிய பொருத்துவாய்களையெல்லாம் ஒரு முடிபாக்கி இப்பாட்டின் வினைமுடிவு காட்டுகின்றாம். இதன்கட்போந்த இருபத்தேழு பொருத்துவாய்களையும் பொருட்பாகுபாட்டிற் காண்க. இங்கு முடிபுமட்டுமே வரைகின்றாம். நண்ணார் காப்பு ஏறி வாள்கழித்துத் தாயம் எய்தி அங்ஙனம் எய்தியமையானும் மனமகிழானாய்ப் போர் வேட்டுச் சமம்முருக்கித் தண்பணைகளை அழித்துச் செறுவும் வாவியும் மயங்கவும் பொதியிலில் யானை உறையவும் மன்றத்து ஓரி கதிர்ப்பவும் ஆண்டலை விளிப்பவும் பேய் மகள் துவன்றவும் செழுநகர் வறுங்கூட்டுள்ளிருந்த கூகை குழறவும் ஊர்கவின் அழியப் பெரும்பாழ்செய்தும் அமைதி பெறானாய்த் தான் முன்னிய துறை போகலிற் பல்லொளியர் ஒடுங்க அருவாளர் தொழில்கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் திறல்கெடச் சீறிக் கண்ணாற்செயிர்த்து நோக்கிப் பொதுவர் வழிபோன்ற இருங்கோவேள் மருங்கு சாயக் காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி உறந்தை போக்கிக் குடிநிறீஇப் புகழை அமைத்துப் புதைநிறீஇப் பெயர்கொடுத்துப் புறக்கொடாது வேந்தர் சூடிய கழற்காலினையும் புதல்வுரும் மகளிரும் திளைக்கும் மார்பினையும் பெருவலிமையினையும் உடைய திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் யாம் போதற்கு எழுந்த கானங் கொடியதா யிராநின்றது;அவன் செங்கோலினும் என்காதலியின் மென்றோள்கள் குளிர்ந்தனவாயிருக்கின்றன. ஆகலின், காவிரி பொன்கொழிக்கும் கழினி யினையும், பாக்கத்தினையும் பூந்தண்டலையினையும், ஏரியினையும், அரண் மணை அட்டிலினையும், சாலையினையும், காளிகோட்டத்தினையும், மன்றம் புறச்சேரி முதலியவற்றையுடையனவாய்த் துறக்கம் ஏய்க்கும் பெருந்துறை யினையும், உலகு செய்வார் மடியாதிருக்கும் பண்டசாலை முன்றிலினையும், விழவறாத ஆவணத்தினையும், செழுநகர் வரைப்பினையும், நனந்தலை மறுகினையும், வேளாளர் துவன்று இருக்கையினையும் உடையதாய்ப் பலமொழி வழங்கும் பலதேயத்தாரும் போந்து உறையப் பெற்றதாய் உள்ள காவிரிப் பூம்பட்டினத்தையே அவ் வேந்தர்பெருமான் பரிசிலாகத் தரப்பெறுவேனாயினும் கூந்தல் இழை முதலியவற்றையுடைய என் ஆருயிர்க் காதலியைப் பிரிந்து வருதற்கு ஒருப்படமாட்டேன் கண்டாய் நெஞ்சமே! என வினைமுடிவு செய்க. அருஞ்சொற்பொருள் அகரவரிசை அகவ - இசைக்க அகழ்க்குவன் - கல்லுவன் அங்கி (வடசொல்) - தீ. அசை - கட்டிய அசைஇ - இருந்து அசைவு - இளைப்பு. அஞ்சுவர - அச்சம் உண்டாக. அட்டி - கொடுத்து, விட்டு (பரிபாடல்); இட்டு (திருமுரு காற்றுப்படை); மிகவிட்டு(பெரும்பாணாற்றுப்படை) அட்டில் - அடுக்களை அடம்பு - அடப்பங்கொடி, பாலிகை (பிங்கலந்தை) அணங்கு - தெய்வம், வருத்துந் தன்மை, வருத்தம். அணை - தறி அதிர - முழங்க. அந்தி - மாலைப்பொழுது. அமரர் (வடசொல்) - தேவர் அயர் - செய்யும், கொண்டாடும் அரண் - காவலிடம், காவலிடமாய்க் கொண்டு நின்ற வீரனை உணர்த்தியது ஆகுபெயர். அரிமா - சிங்கம் அருங்கடி - அரியகாவல். அருங்கடிவரைப்பு - அரிய காவல்அமைந்த மதில். அருத்தி - நுகர்வித்து. அருவாளர் - அருவாள நாட்டின் அரசர் அலவன் - நண்டு. அவிர் - விளங்கு அறம் - நல்வினை, பிங்கலந்தை அறுகை - அறுகம்புல்; ஈற்றில் நின்ற ஐ சாரியை. அறு கோட்டு இரலை - அறுப்பறுப்பான கொம்புள்ள கலை மான். அறை - பாசறை ஆக்கம் - நுகர்ச்சிப் பொருள்கள். ஆங்கண் - அவ்விடம், அங்கண் என்பது நீண்டது. ஆண்டலை - கூகை கோட்டான் இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை; இதன்றலை ஆண் மக்கள் தலை போறலின் இப் பெயர் பெற்றது; இதனைக் கோழிஎன்பர் பிங்கலந்தையுள். ஆயம் - கூட்டம், திவாகரம் ஆரம் - சந்தனக் கட்டை. ஆலை - கொட்டில், கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும் இடம். ஆவணம் - அங்காடித் தெரு. ஆவுதி (வடசொல்) - வேள்வி. ஆன் - பசுமாடு. ஆனா - இடையறாது ஆனாது என்னும் வினையெச்சத் தீறு தொகுத்தல். இகல் - மாறுபாடு. இகுத்து - தொங்கவிட்டு, தாழவிட்டு. இடைகழி - ரேழி, “இடைகழி நின்றவென்னை” என்றார் சீவக சிந்தாமணியினும். இணர் - குலை, பூங்கொத்து. இயம்ப - ஒலிக்க இயல் - தன்மை. இரலை - ஆண்மான், புல்வாய், “இரலையுங் கலையும் புல்வாய்க்குரிய” தொல். மரபியல். இரியல் - விட்டுப்போதல், `நீங்கல்’ சிலப்பதிகாரம், அந்தி மாலைச் சிறப்புச் செய்காதை. இரு - பெரிய இருக்கை - இருப்பு. இருங்கோவேள் - துவரை நகரில் அரசாண்ட வேளிர் மன்னரில் ஒருவன், புறநானூறு. இளக்கும் - அசைக்கும். இவர் - ஏறிப் படர்ந்த, திவாகரம். இறவு - இறாமீன். இறைவன் - அரசன். ஈண்டி - திரண்டு, தொக்கு. ஈழம் - சிங்களம், இலங்கை. உகளல் - குதித்தல், தாண்டல், பிங்கலந்தை, பாய்தல், திவாகரம். உகிர் - நகம். உகுத்தல் - வார்த்தல், சிந்துதல், திவாகரம் உணங்கு - உலருகின்ற. உரவுத்திரை - உலவும் அலை, இப்பொருட்டாதல், புறப்பொருள் வெண்பா மாலை பாடாண்படலம் “சூடிய வான் பிறை” என்னுஞ் செய்யுளுரையிற் காண்க. உரு - வடிவு, அழகு. உல்கு - சுங்கம். உலாய் - உலாவி. உவவு - முழுமதி விளங்கும் நாள். உழிஞை - சிவபூளை, திவாகரம், பிங்கலந்தை; இதனைக் `கொற்றான்’ என்பர் புற நானூற்றுரைகாரர். உறந்தை - உறையூர். உறழ் - வாது, மாறுபாடு. உறை - மண்ணால் வட்டமாய் வனைந்து கிணற்றினுள் அமைக்கப்படுவன. உறைக்கும் - துளிக்கும், சொரியும், உறை, துளி, திவாகரம். ஊட்டும் - ஏறப்பண்ணும். ஊழ் - முறை ஊன் - தசை. எஃகு - வேல் எக்கர் - இடுமணல். எடுப்பி - துரத்தி, ஓட்டி எய்தி - பெற்று. எயில் - மதில் எயினர் - வேடர். எழில் - அழகு எறிப்ப - ஒளிவீச, “எறித்தரு கதிர் தாங்கி” கலித்தொகை. எறுழ் - வலிமை. ஏகினும் - சென்றாலும். ஏமாப்ப - மகிழ, “காமர் நெஞ்ச மேமாந்துவப்ப” என்றார் புறநானூற்றினும். ஏய்க்கும் - ஒக்கும். ஏழகம் - ஆட்டுக் கிடாய்; இச்சொல் `மேழகம்’ எனவும் வரும், பிங்கலந்தை. ஏறு - எருது. ஏற்றை - ஆண்நாய், ஒக்கல் - சுற்றம். ஒருவேம் - நீங்கேம், பிறழ மாட்டேம், திவாகரம். ஒல்க - சாய. ஒள்எரி - ஒளிபொருந்திய நெருப்பு வெளிச்சம். ஒளியர் - ஒளிநாட்டார். ஓக்கிய - ஓச்சிய; செலுத்திய, எடுக்கப்பட்ட, புறநானூறு, புறப்படவிட்ட, சிந்தாமணி. ஓதம் - ஈரம், பிங்கலந்தை, அலை, புறப்பொருள் வெண்பா மாலை “ஓத நீர்வேலி” ஓம்பி - பாதுகாத்து. ஓர்க்கும் - செவிதாழ்த்துக் கேட்கும், புறநானூறு. ஓர்த்தும் - கேட்டும். ஓரி - முதுநரி, திவாகரம், பிங்கலந்தை. ஓவம் - சித்திரம். கடி - அச்சம், காவல். கடிந்து - நீக்கியும். கடியரண் - காவலமைந்த அரண். கடை - தலைக்கடை, தலைவாசல். கடைக்கங்குல் - கடை யாமம். கண் - இடம். கண் அடைஇய - கண் அடைத்த, கண் துயின்ற. கண்ணி - ஆடவர் முடிமேற் சூடும் மாலை. கணம் (வடசொல்) - தொகுதி. கதிர்ச்செல்வன் - பகலவன். கதிர்ப்ப - ஊளையிட. `கதிப்ப’ எனப் பாடங் கொள்ளுதலுமாம், என்னை? காரைக் காலம்மையார் மூத்த திருப்பதிகரத்தில் “ஊமைக் கூகையும் ஓரியும் உறழுறழ் கதிக்கும்” என்றாராகலின். கதுப்பு - மயிர். கதுவும் - கைப்பற்றும், கவரும், புறநானூறு. கந்து - அருட்குறி; சிவலிங்கம், `தெய்வம் உறையுந் தறி’ என்பர் நச்சினார்க்கினியர். கமழ் - மணக்கும். கமுகு - பாக்குமரம். கராம் - முதலை. கருந்தலை - பெரியதலை. கருந்தொழில் - வலிய தொழில். கலம் - படைக்கலம். கலி - மனஎழுச்சி; மனச்செருக்கு. கலித்த - செருக்கிய, செருக்கித் திரிந்த. கலித்த - தழைத்து, “தூவற் கலித்த” புறநானூறு. கவான் - மலைப் பக்கம், பக்க மலை. கவி - கவிந்த; வளைந்த, மூடிய. கவிய - `இடிய’ நச்சினார்க்கினியர் பொருள். கவின் - அழகு. கழல் - காலின் அணி, திவாகரம். கழனி - வயல். கழி - உப்பங்கழி. களரி - சண்டை யிடுதற்குச் சமைந்த இடம், திவாகரம்ட, பிங்கலந்தை. கறி - மிளகு. கா - சோலை. காதல் - தலைவனுந் தலைவியும் ஒருவரையொருவர் இன்றியமையாராய்த் தமக்குட் பாராட்டும் பேரன்பு, “காமத்துச் சிறந்தது காதலையுடைய காமம்; அஃதாவது மெய்யுற்றறியாதாரிருவர் அன்பொத்துப்பான்மை வகையால் தாமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி” என்பர் பரிமே லழகி யார், பரிபாடல், 9ஆம் பாடலுரை. காந்தள் - கார்த்திகைப்பூ. காப்பு - மதில், சுங்கச் சாவடி, காவல், புறநானூறு. காய் - எறிக்கும், சீவக சிந்தாமணி. கார் - நீர்; பச்சை. கால் - கால்கள், தூண்கள், உருளை, உருளையுடைய வண்டியை உணர்த்திற்று, `கால்’ உருளை என்னும் பொருட்டாதல், “கால்பார் கோத்து” என்னும் புறப்பாட்டுரையுள்ளுங் காண்க. இனிக் `கால்’ வழியென்று மாம்; தண்டு. காழ் - கோல், வயிரம், திவாகரம். காழகம் - கடாரம் என்னும் ஊர், (பர்மா? க்ஷரசஅய?). கான்யாறு - காட்டியாறு. கானம் - காடு. கானல் - கடற்கரைச் சோலை, திவாகரம், பிங்கலந்தை. கிடக்கை - பரப்பு. கிடுகு - கேடகம், “வார் மயிர்க் கிடுகு” என்பதற்கு நச்சினார்க் கினியருரைத்த பொருள் காண்க, சீவக சிந்தாமணி; சட்டம். கிளை - சுற்றம். குடமலை - குடகுமலை. குடவர் - குடநாட்டார்; மேனாட்டார். குணகடல் - கிழக்குக்கடல். குரம்பை - குடிசை, பிங்கலந்தை. குருளை - குட்டி, இச்சொல் புலி பன்றி முயல் நாய் நரி யென்னும் விலங்கின் பிள்ளைக்குப் பெயராய் வரும். குரூஉச்சுடர் - நிறம்மிக்க விளக்கம். குவைஇ - குவித்து. குழல் - புல்லாங்குழல். குழவி - கன்று, பிள்ளை, குழறல் - கூப்பிடல். குழிகொன்று - குழியைத் தூர்த்து. குழீஇ - திரண்டு. குழை - மகரக்குழை. குறங்கு - தொடை. கூடல் - யாறுகடலொடு கலக்கு மிடம்; கழிமுகம். கூடு - நெற்குதிர். கூதாதளம் - `வெண்டாளி’ என்பர் நச்சினார்க்கினியர், வெண்டாளி ஒருசெடி; பிங்கலந்தையிலுந் திவாகரத்திலும் இது கொடி வகையிற் சேர்க்கப்பட்டிருக்கின்றது. கூப்பி - குவித்து. கூம் - குன்ற, `ஒடுங்க’ பிங்கலந்தை. கூம்பு - பாய்மரம். கூழ் - பல்வகை உணவு, திவாகரம். கூளி - பேய்க்குப் பொதுப்பெயரான இச்சொல் இங்கே ஆண் பேயை உணர்த்துகின்றது. கெழு - பொருந்தின. கெழுமி - பொருந்தி. கேணி - கிணறு, திவாகரம். கேள்வி - நூற்கல்வி, திவாகரம். கொடுங்கால் - வளைந்த சுற்று, வளைந்தகால்கள் (ஹசஉhநள) தலைவளைந்த தூண்கள். கொடுந்தாள் - வளைந்த கால், கொடுந்திண்ணை - சுற்றுத் திண்ணை. கொடுந்திமில் - முன்வளைந்த கட்டுமரம், `திமில்’ தோணி என்பர் திவாகரத்தில். கொடுமேழி - வளைந்த கலப்பை. கொடுவரி - வளைந்த வரிகளை யுடைய புலி. கொண்டி - கொள்ளப்பட்ட மிகு பொருள், கொண்டி மகளிர் - சிறையாகக் கொண்ட வந்த பெண்கள். கொண்மூ - மேகம். கொழிக்கும் - தெள்ளித் தொகுக்கும், திவாகரம். கொள்ளை - விலை. கோட்டம் - கரை, கோயில். கோடியர் - கூத்தர், திவாகரம். கோடு - கொம்பு. கோதை - மகளிர் அணியும் மாலை, 6 -ஆம் பரிபாடல் பரிமேலழகியா ருரையிலுங் காண்க. கோதையர் - மாலை யணிந்த மகளிர். கோள் - குலை, “செழுங் கோள்வாழை” புறநானூறு. கோள்மீன் - கிரகம். சமம் - போர், போர்க்களம், இனியது நாற்பது. சாம்பும் - வாடும், “கின்னரர் சாம்பினாரே” சீவக சிந்தாமணி. சாய - குறைய. சாயல் - மென்மை, தொல்காப்பியம், உரிச்சொல்லியல். சாற்றி - சொல்லி. சாறு - திருவிழா. சிமையம் - மலையுச்சி; குவடு. சிவல் - கௌதாரி, பகண்டையு மாம்; திவாகரம். சினத்த - கோபத்தினை யுடைய, சீறி - மிகச்சினந்து, திவாகரம். சுடர் - ஒளி. சுறவு - சுறாமீன். சூடு - சுடப்பட்ட தசை, “குறுமுயற் கொழுஞ்சூடு” என்புழியும் இப்பொருட்டாதல் காண்க, புறநானூறு, செயிர்த்து - சினந்து, `குற்றத்தை எண்ணிப் பார்த்து’ என்றுரைப் பினுமாம்; இச்சொற்குஇரு பொருளு முண்மை, “செயிரே குற்றமுஞ் சினவலுமாகும்” என்னுந் திவாகரசூத்திரத் தாலுணர்க. செரு - சண்டை; போர். செருந்தி - கோரைப்புல், வாட்கோரையுமாம், திவாகரம், பிங்கலந்தை. செல்லா - கெடாத. செவ்வேள் - முருகப் பிரான், செற்றோர் - பகைவர், பிங்கலந்தை. செறி - நெருங்கின. செறு - வயல். சே - சிவந்த. சேக்கும் - தங்கும். ஞமலி - நாய். ஞாயில் - அம்பெய்தற்கு மறைவாய் மதில்மேல் அமைக்கப்படுவது, இதனை “மீன் பூத்தன்ன வுருவஞாயில்” என்பர் ஐயூர் மூலங்கிழார், புறநானூறு,“ஏவறை” என்பர் புறப்பொருள் வெண்பா மாலையுரைகாரர், உழிஞை, “குருவித்தலை” என்பர் அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை, ஆம் வரி. தகர் - யாட்டுக்கடா. தகை - உள்ளடக்கின. `கட்டப்பட்ட’ என்று உரைப்பினுமாம், “ஓங்குநிலை வாயிற்றூங் குபுதகைத்த” என்பதனுரை யிற் காண்க, பரிபாடல், 22 தட - பெரிய, “தடவுங் கயவும் நளியும் பெருமை” தொல் காப்பியம்” உரியியல். தடிந்து - அறுத்து, பிங்கலந்தை. தண் - குளிர்ந்த. தண்டலை - பூஞ்சோலை. தலை - இடம். தலைமணக்கும் - ஒன்று கலக்கும். தலைமயங்கிய - ஒருங்கு கலந்த. தவ - மிக, தொல்காப்பியம், உரியியல். தளி - நீர்த்துளி, `தளி’ தலைப் பெய்மழைத் துளியென்பர் பிங்கலந்தையில். தாது - பூந்தாது; மகரந்தம். தாஅய் - பரந்து. தாயம் - உரிமை. தாழ் - தங்கும், தாழக்கோல். தாழ்ந்த - வளர்ந்து நின்ற. தாழை - தாழஞ்செடி. தாள் - அடி, கீழ், முயற்சி எனினுமாம். தானை - படை. திட்டை - மேடு, மேட்டுக்குப்பம். திணை - `திண்ணை’ என்பது நடுவே தொக்கது. திரிதரு - திரியும். திரிபுரிநரம்பு - முறுக்குதல் செய்த நரம்பு, “திரித்து முறுக்கின நரம்பு’ என்று உரைப்பினு மாம்; மணிமேகலையினும் `திரிபுரி வார்சடை’ என்றார், திரு - திருமகள். திருநிலைஇய - வீரத் திரு நிலை பெற்ற. திரை - அலை. திளைப்ப - தகூ; புணர; “இள அனங்கன்னி நாரையைத் திளைத்தலின்” என்புழியும் இப்பொருட்டாதல் காண்க சீவக சிந்தாமணி, நாமகளில பகம். திறல் - வலிமை. தீந்bதோடை - இனியயாழ் இசை, தொடை - யாழ் நரம்பு, புறநானூறு, இங்கே நரப்பிசையை உணர்த்திற்று. தீம்புகார் - காட்சிக் கினிய காவிரிப் பூம்பட்டினம். துகள் - நுண்பொடி. துகிர் - பவளம். துகில் - வெள்ளாடை, `வெண்பட்டு’ என்பர் சீவக சிந்தாமணி உரையில். துகிற்கொடி - வெள்ளிய துணியாற் செய்த கொடி, `துகிற்கொடி’ வெண்மை செம்மை இரண் டற்கும் பொது வென்பர் சீவகசிந்தாமணியுரையில். துச்சில் - ஒதுக்கிடம், “துச்சிலிருந்து துயர்கூரா” என்பது இனிது நாற்பது. துஞ்சி - உறங்கி. துஞ்சும் - தங்கும் , “அறந்துஞ்சுஞ் செங்கோலையே” புறநானூறு. துடி - உடுக்கை, பாலைப்பாறை. துடுப்பு - கணு. துணை - கணவன். துப்பு - வலிமை. துய்த்தும் - நுகர்ந்தும். துயில் - உறக்கம். துவன்று - நிறைந்த, நெருங்கிய,“துவன்று நிறைவாகும்” தொல்காப்பியம், உரிச்சொல்லியல். துறக்கம் - வானுலகு. துறுகல் - பொறைக்கல், சிறுகுன்று, “புலவுசேர் துறுகல்” என்றார் ஐங்குறு நூற்றில். துறைபோகிய - முற்றக் கற்ற. துறைபோகலின் - முற்ற முடித்தலின். தூ - தூய. தூஉய் - தூவி, “மலைவான் கொள்கென உயர் பலி தூஉய்” புறநானூறு. தூங்கு - அசையும். தூசு - கூறை. தூதுணம்புறவு - தூதுஉண் அம்புறவு -எனப்பிரித்துச் `சிறுகல்லைத் தின்னும் அழகிய புறா’ எனப் பொருளுரைக்க; “தூதுணம்புறவெனத் துதைந்தநின் னெழினலம்” என்றார் கலியினும். தூறு - சிறுசெடி. தெவ்வர் - பகைவர், “தெவ்வுப் பகையாகும்” தொல். உரி. தெறுவு - சுடுதல், “தெறுகதிர்க் கனலி” என்பது புறநானூறு. தென்னவன் - பாண்டியன். தேஎம் - நாடு, தேயம். தேம்ப - வாட. தேறுநீர் - தெளிந்தநீர். தொக்காங்கு - கூடினாற்போல. தொட்டு - அகழ்ந்து தோண்டி. தொடி - கடகம். தொடுதோல் - செருப்பு. தொடை - படி, கட்டு, ஆகு பெயரால் யாழை உணர்த்திற்று. தொல்சீர் - பழைய சிறப்பு. தொல்லிசை - தொல் இசை, அடிப்பட்டபுகழ். தொலைத்த - அழித்த. நகர் - வீடு, `மாளிகை’ என்பர் புறப்பொருள் வெண்பா மாலை உரைகாரர், பொதுவியற் படலம், கோட்டம்; கோயில், “முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே” என்றார் புறநானூற்றினும். நசை - விருப்பம். நடுகல் - இறந்துபட்ட மறவனை நினைவு கூர்தற்கு நட்ட கல், இங்ஙனங் கன்னடுதலைப் “பரலுடை மருங்கின்” என்னும் புறப்பாட்டிற் காண்க . நடுவு - நடுநிலைமை. நண்ணார் - பகைவர். நந்தா - அவியாத. நயந்தும் - விரும்பியும். நறவு - கள். நறு - நல்ல. நன்பகல் - உச்சிப்பகல், புறப்பொருள் வெண்பாமாலை உரை, வஞ்சிப்படலம். நனந்தலை - அகன்ற இடம், தொல்காப்பியம், உரியியல். நனி - மிகுதி, தொல்காப்பியம், உரியியல். நாடி - ஆராய்ந்து. நாண்மீன் - நட்சத்திரம். நாப்பண் - நடு. நாவாய் - மரக்கலம். நிரைத்து - வரிசையாக வைத்து. நிலைஇய - நிலைபெறற்குக் காரணமான. நிறீஇ - நிலைபெறச் செய்து. நுகம் - வண்டிமாட்டுகளின் பிடரிற் றங்குங் குறுக்குக் கட்டை. இதனை `நுகத்தடி’ என வழங்குப. நுதல் - நெற்றி. நெய்தல் - குவளைப்பூ. நெருஞ்சி - ஒரு முட் பூண்டு. நேரிழை - ஏற்ற அணிகலம், பரிபாடலுரை. நொடை - விலை. நோன் - வலிய. பஃறகைப்பு - `பல் தகைப்பு’ பல பகுதிகள்; பலகட்டுகள். பஃறி - படகு, `தோணி’ என்பர் திவாகரர். பகடு - பெருமை, `பகட்டெருத்து’ பெரிய எருது, பேரெருது. பகர்ந்து - வெளியாகச் சொல்லி. பகல் - நுகத்தின் நடுவிற் றைத்த ஆணி. பசும்பதம் - பசிய சோறு. படப்பை - தோட்டம், பிங்கலந்தை. படிக்கால் - ஏணி, “வானுலக மேறுதற்குச் செம்பொன், இருளில் படிக்கால்” என்றார் சீவகசிந்தாமணியிலும். பண்ணியம் - பண்டம், “குரங் கருந்து பண்ணியம்” என்னும் பரிபாடலுரையிற் பரிமேலழகர் இப் பொருளே கூறுதல் காண்க. பணிபு - தாழ்ந்து. பணியம் - பண்டம், `பண்ணியம்’ பணியம் என நடுவே தொக்கது. பணை - குதிரைப்பந்தி, இலாயம், மருதநிலம். பதம் - சோறு, உணவு. பதாகை (வடசொல்) - பெருங் கொடி. பம்பி - அடர்ந்தெழுந்து, `கதித்தல் பம்மல் கஞறல் கன்றல், எழுச்சியின் மிகுதிக் கெய்தும் பெயரே” என்றார் திவாகரரும். பரதவர் - செம்படவர், நுளையர், “கடலோடுழந்த பனித் துறைப் பரதவ” என்றார் பதிற்றுப்பத்தினும். பரி - செலவு, செல்லுதல், “நிமிர் பரியமா” என்புழியும் இப் பொருள் காண்க. புற நானூற்றுரை. பருவம் - பொழுது. பரேர் - `பருஏர்’ பெரிய அழகு. பலி - தேவருணவு, வடசொல். பள்ளி - தவத்தோர் இருப்பிடம், இப் பொருட்டாதல் புறப் பொருள் வெண்பாமாலை யுரை யிலுங் காண்க. வஞ்சிப் படலம். பறழ் - பன்றிக்குடடி, “குட்டியும் பறழுங்கூற்றவண் வரையார்” என்னுந் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தால் பன்னிக் குட்டியும் பறழ் எனப்படுதற்குரித்தாதல் காண்க. பாகு - குழம்பு. பாசிழை - `பசுமை யிழை’ பசிய அணிகலன். பிடி - பெண்யானை. பிணர் - பொரிந்த வடிவு சருச்சரை. பிணி - கட்டு, வார்க்கட்டு. பிணிக்கும் - கட்டும். பிணியகம் - சிறைக்களம். பிணை - மானினத்திற் பெண், தொல். மரபியல். பிழி - கள். பிளிறு - முழங்கும். பிறங்கு - விளங்கும், உயர்ந்த, “பிறங்குநிலை மாடத் துறந்தையோனே”, புறநானூறு. பீடு - பெருமைத் தன்மை. புகர் - நிறம்; பச்சென்ற நிறம், திவாகரம். புணரி - கடல். புதவம் - அறுகு, ஒருவகைப்புல் என்பர் பிங்கலந்தையுள். புதவு - வாயில், “பூரித்துப் புதவந் தோறும்” என்றார் சீவக சிந்தாமணியினும். புதை - அம்புக்கட்டு. புயல் - மழை. புரவி - குதிரை. புலம் - நிலம். புலம்பெயர் - தம் நிலத்தைக் கை விட்டுவந்த. புலவு - பூலால், புலால் நாற்றம். புலிப் பொறித்து - புலியினுருவை இலச்சினையாக இட்டு. புழுக்கு - புழுக்கின இறைச்சி, “யாமைப் புழுக்கின்” என்றார் புறநானூற்றினும். புழை - சிறுவாயில், திவாகரம். புறக்கொடாது - முதுகு காட்டாது, அஃதாவது பின்னிடை யாது. புறம்போக்கி - வெளியே போகவிட்டு. புறவு - புறம்பு. புன்றலை - சிவந்த மயிரினை யுடைய தலை, புல் - புற் கென்ற நிறம், பழுப்பு நிறம், “தில்லையன்ன புல்லெரன் சடையோன்” என்னும் புறநானூற்றுரையிலும், “சிறு புன்மாலை தலைவரின்” என்னும் புறப்பொருள் வெண்பாமாலை, கைக் கிளைப்படலம், ஆஞ் செய்யுளுரையிலும் இப் பொருட்டாதல் காண்க; `புற்கு’ பொன்னிறம் புகர் நிறம் இரண்டிற்கும் பெயரா மென்பர் திவாகரர். புனல் - நீர். பூதம் (வடசொல்) - குறள். பூளை - மெல்லியபஞ்சினைத் தரும் ஒருசெடி,இது பெரும்பூளை சிறுபூளை என இருவகைத்து, இங்கிது `பெரும்பூளை’ யினைக் குறிக்கின்றது. பெண்ணை - பனை. பேணாது - எண்ணாது, கருதாது, திவாகரம். பேணி - போற்றி, வழிபட்டு. பேம் - அச்சம், தொல்காப்பியம், உரியியல். பொதிமூடை - பொதிந்து வைக்கப் பட்ட மூட்டை. பொதியில் - அம்பலம், திவாகரம் பிங்கலந்தை. பொதுவர் - இடையர். பொர - சண்டையிட. பொருத - உரிஞ்சிய, “கறுழ்பொருத செவ்வாயான்” என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. புறநானூறு. பொழில் - தோப்பு, சோலை. பொறி - அடையாளம், மெய் வாய் கண் மூக்குச செவி என்னும் ஐம்பெ hறி. பொறித்து - அடையாளமாக அல்லது இலச்சினையாக இட்டு. பொன்ற - அழிய, மாய, திவாகரம். போகுஇடைகழி - பெரிய இடை கழி, “போகிதழ்” என்பதற்கு `நீண்ட இமை’ எனப் பொருள் உரைப்பர் புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரர், கைக்கிளைப் படலம். போந்தை - பனை. போர்க்கதவு - வாய் பொருந்தின கதவுகள். மகிழ்ந்தும் - உண்டும், இஃதிப் பொருட்டாதல் “வாங்கமைப் பழுநிய தேறன் மகிழ்ந்து” என்னும் புறநானூற்றுரை யிற் காண்க. `மகிழ்’ தேறலெ ரன்றும் பொருள்படுமாக லின், இப்பெயரிற் பிறந்த `மகிழ்ந்து’ என்னும் வினை `தேறல் உண்டு’ என்னும் பொருளில் வரும். `மகிழ்’ தேறலை உணர்த்துதல் “மழையென மருளும் மகிழ் செய்மாடத்து” என்னும் பொருநராற்றுப்படையடி யினுங் காண்க. மஞ்சிகை - பேழை, திவாகரம். மட்டு - கள். மடம் - அறியாமை, கள்ளம் அறியாமை. மடிந்து - தொழில் செய்யாது சோம்புதல். மணி - செம்மணி, “மண்ணார் மணி’ எனப்பரிபாடலிற் (10) கூறப்படுதலின், கழுவுதல் எனப் பொருடரும் `மண்’ என்னும் முதனிலையிற் றோன்றிய திச்bசோல். மதன் - யானைமதம். மதி - திங்கள், மதித்தறிதல். மது - தேன், காமத் தேன், வடசொல். மரபு - முறைமை, “ஈண்டு செலன் மரபின்” என்னும் புறநானூற் றுரை காண்க. மருங்கு - பக்கம், கிளைஞர். மருப்பு - கொம்பு. மலர்தலை - அகன்ற இடம். மலி - மிகுந்த. மலைந்தும் - சூடியும். மலையவும் - சூடிக் கொள்ளவும். மறம் - வீரம். மறுகு - தெரு. மன் - நிலைபேறு. மன்றம் - பொது இடம். மா - கருமை, விலங்கு, யாடு, குதிரை, பெருமை. மாசு - அழுக்கு, உப்பு. மாட்டிய - கொளுத்திய, “இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டியஞ் என்றார் புறத்தினும். மாந்தி - குடித்து. மாயிதழ் - கரிய இதழ். மாரி - மாரிக்காலம், மழை யெனினும் ஆம். மால் - பெருமை, மால்வரை - பெரியமலை. மான்பிணை - பெண்மான். மிசை - மேல். மிழற்றும் - நிரம்பாமென் சொற் சொல்லும், “தானொன்று மிழற்றும்”, எனவும் “வருத்தம் மிழற்றி” எனவும், சீவக சிந்தாமணியிற் போந்தமை காண்க: “நிழற்றலுமிழற்றலு நிரம்பா மென் சொல்” என்றா திவாகரத் துள்ளும். முக்கால் - மூன்று உருள்கள். முகிழ் - முகைத்த, முகிழ்த்த, தாமரை முகை எனினும் ஆம். முட்டா - இடையூறு படாத, பிறழாத, “நல்லறம், முட்டுடைத்தாக இடை தவிர்ந்து வீழ்தலின்” என்றார் பழமொழியினும், குறையாத, இப்பொருட் டாதல் முட்டின் றொருவர் உடைய பொழுதின் கண்’ என்புழியுங் காண்க, பழமொழி. முதல் - அடி, கிழங்கு. முதுவாய் - அறிவு வாய்த்தல். முரசு - பறைப்பொது, திவாகரம். முரண் - மாறுபட்ட, “கடுமுரண் முதலைய’ என்னும் புற நானூற்றுரையினும் இப் பொருள் காண்க. முரண்களரி - சண்டையிடும் இடம். முரல - ஒலிக்க, “முழவு பணை முரல” என்னும் பரிபாட லுரையையுங் காண்க. முருக்கி - கெடுத்து, தோல்வி பெறச் செய்து, “தோள்வலி முருக்கி” என்னும் புறநானூற் றுரையையுங் காண்க. முருகு - மணம். முழவு - தண்ணுமை, மத்தளம். முற்றிழை - தொழில் முற்றுப் பெற்ற அணிகலம். முன்றில் - முற்றம். முன்னிய - நினைத்த. முனை - பகைவரிடம், `வேற்றுப் புலம்’ புறப்பொருள் வெண்பா மாலையுரை, வெட்சிப் படலம். முனைஇ - வெறுத்து, “அளையக முனைஇ’ புறநானூறு, “முனைவு முனிவாகும்” தொல்காப்பியம், உரியியல். மூடை - பொதி, மூட்டை, மூட்டையை மூடையென்பது பாண்டி நாட்டு வழக்கு. மூதூர் - பழைய ஊர். மெழுக்கு - மெழுகு. மேழகம் - யாடு, திவாகரம். மேனி - நிறம், திவாகரம். மை - குற்றம், திவாகரம். மைந்தர் - ஆண்மக்கள் (திவாகரம், இளைஞர். பிங்கலந்தை). மொய்ம்பு - வலிமை. மோடு - வயிறு, பிங்கலந்தை. யாணர் - புதுவருவாய், தொல் காப்பியம், உயிரியல். யாழ் - ஓர் இசைக் கருவி, இது பேரியாழ், சகோடயாழ், மருத யாழ், செங்கோட்டி யாழ் என நால்வகைப்படும், திவாகரம். வசை - குற்றம், 1; திவாகரம். வடமலை - வடக்கேயுள்ள மலை, இமயம் மேரு முதலியன. வடவர் - வடநாட்டிலுள்ளவர், ஆரியவரசர். வடிமணி - வடித்தமணி, `தெளிந்த மணி’ என்பர் புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரர், பொதுவியற் படலம். வடு - குற்றம், பிங்கலந்தை; தவ, பரிபாடலுரை. வதியும் - தங்கும், திவாகரம். வம்பலர் - புதிது வந்தோர், `வம்பு’ புதுமைப் பொருட்டாதல் திவாகரத்துட் காண்க. வயங்கு - விளங்கும். வயவர் - வீரர். வரி - நிறம், பிங்கலந்தை; வரிமணல் - கரிய நிறத்தினையுடைய மணல், அஃதாவது: கடல் நீர் அரித்த கரியமணல். வருடை - வருடைமான், குறுந்தொகையுள் “செவ்வரைச் செச்சை வருடைமான் மறி” என வருதல் காண்க, திவாகரர் “வருடைசரபம் வரையாடாகும்’ என்பர். வரை - மூஞ்கில், மலை, வரைப்பு - எல்லை, புறநானூற்றுரை, மதில், திவாகரம். வலனேர்பு - `வலன்ஏர்பு’ வலமாக எழுந்து. வழி - வழிவந்தார், மரபினர், கால், பிங்கலந்தை. வளவன் - சோழன், கரிகாற் சோழன். வளி - காற்று, தென்றற்காற்று. வறள் - வறண்ட, நீரற்ற. வறள் அடம்பு - வவறண்ட மணலிலே படர்ந்த அடப்பங் கொடி. வறுங்கூடு - வறிதாய்ப் போன குதிர். வாக்கிய - வடித்து ஒழுக்கிய, “வாக்கவுக்க தேக்கட் டேறல்’ புறநானூறு. வாய் - இடம், சாளரம், மெய்ம்மை, திவாகரம். வாரி - வருவாய், விளைபொருள், பிங்கலந்தை. வாரிருங் கூந்தல் - வார் இருங் கூந்தல்; நீண்ட கரிய கூந்தல், தொல்காப்பியம், உயிரியல். வால் - வெண்மை. வாவி - குளம். வாள்கழித்து - வாட்படை வீரரை ஒட்டி. விசிபிணி - வலித்துக் காட்டிய, “மாசறவிசித்த வார்புறு வள்பின்” என்னும் புறநானூற் றுரையை யுங் காண்க. விசும்பு - வானம். விடக்கு - இறைச்சி, திவாகரம். வியல் - அகலம், தொல்காப்பியம், உரியியல். வியன் - அகலம், `விபயல்’ திரிந்தது; தொல் உரியியல். விராய - கலந்த, கூடிய. விரைஇ - கலந்து, கலவாநிற்ப. விலக்கும் - தடைசெய்யும். விலங்கு - எதிர்இருந்து தடுக்கும், இப்பொருட்டாதல் “விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்”, காண்க, புறநானூறு. விழவு - திருநாள். விழா - திருவிழா. விளிப்ப - கூவ, அழைக்க, திவாகரம். வீழ் - விழுது, “சிதலை தினப்பட்ட வாலமரத்தை, மதலையாய் மற்றதன் வீழூன்றியாங்கு” நாலடியார், தாளாண்மை. வெண்மீன் - வெள்ளி, சுக்கிரன். வெரீஇ - அஞ்சி. வெளில் - யானைக்கட்டுந்தறி, “களிறிலவாகிய புல்லரை நெடுவெயில்” என்பதனுரை யிலுங் காண்க. புறநானூறு, பிங்கலந்தை. வெறி - வெறியாட்டு, வேலன் ஆடல், அணங்கு ஆட்டு, திவாகரம், பிங்கலந்தை. `வெறி’வள்ளிக் கூத்தென்பர் புறப்பொருள் வெண்பா மாலையுரைகாரர், பாடாண் படலம். வேலன் - முருகபூசை பண்ணு மவன், வெறியாட்டாளன். வேட்கும் - ஓமஞ்செய்யும் வேள்வி செய்யும். வேட்டு - விரும்பி. வேட்டம் - மீன்பிடித்தல். வேலாழி - ஆகுபெயராற் கடற் கரையை உணர்த்திற்று, `வேலாழி’ கடலை உணர்த் துதல் “வில்லார் விழவினும் வேலாழி சூழுலகின்’ என்னுந் திணைமாலை நூற் றைம்பது, 62 - ஆம் செய்யு ளுரையிற் காண்க. வடமொழி யுள் `வேலா’ என்னுஞ் சொற் கடற் கரையை உணர்த்தும்; இனி இதனை வேலா’ என்னுஞ் சொற் கடற் கரையை உணர்த்தும்; இனி இதனை வேலா ஆழி எனப் பிரித்துக் கரையுங் கடலுமென உரை வைகல் - நாள். பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை - முற்றும் - பின்னிணைப்பு பட்டினப்பாலை ஓர் அறிமுகம் - இரா. இளங்குமரனார் பட்டினப்பாலை என்பதன் பொருள் என்ன? பட்டினம் = காவிரிப் பூம்பட்டினம். பாலை = பாலை ஒழுக்கம் எனப்படும் பிரிவு. காவிரிப் பூம்பட்டினத்தையும் பிரிவு ஒழுக்கத்தையும் கூறும் நூல் பட்டினப்பாலை எனப்பட்டது. பட்டினம், பட்டணம் என்பவற்றின் வேறுபாடு என்ன? கடற்கரை சார்ந்த பேரூர் பட்டினமாகும். உள்நாட்டில் அமைந்த பேரூர் பட்டணமாகும். முன்னதிலும் பின்னதிலும் ‘பட்டு’ உண்டு. அணம், இனம் என்பன, வேறுபடுகின்றன. இனம் என்பது தொகுதி தொகுதி யாக அமைந்தது; அணம் என்பது (அண் + அம்) செறிந்து அமைந்தது. பட்டி பட்டு என்பன ஊர்ப் பெயர்களாக இருப்பன. எ-டு : மேட்டுப்பட்டி, கோயில்பட்டி செங்கழு நீர்ப்பட்டு (செங்கல்பட்டு), சேற்றுப்பட்டு. பட்டினப்பாலையின் வேறு பெயர் என்ன? பட்டினப்பாலையின் வேறு பெயர் வஞ்சி நெடும்பாட்டு என்பது. அகவலால் ஆய அப்பாட்டு அகவலடிகள் நூற்றுமுப்பத்தெட்டு வஞ்சி அடிகள் நூற்று அறுபத்து மூன்று. ஆக முந்நூற்று ஓர் அடிகளைக் கொண்டுள்ளமையால், வஞ்சியடிகளின் மிகுதி கருதி வஞ்சி நெடும்பாட்டு எனப்பட்டதாம். பட்டினப்பாலையைப் பாடியவரும் பாடப்பட்டவரும் எவர்? பட்டினப்பாலையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்பார். பாடப்பட்ட வேந்தன் திருமாவளவன் என்பான். கரிகாலன் என்பானும் அவன். கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையைப் பாடியவரும் ஆவர் என்பதை முன்னரே அறிந்துள்ளோம். பெயர் விளக்கமும் அங்கே சொல்லப்பட்டதே. கரிகாற் பெருவளத்தான் இப்பத்துப்பாட்டில் எவரால் எப்பாட்டுப் பாடப் பெற்றான்? கரிகாற் பெருவளத்தான் முடத்தாமக் கண்ணியாரால், பொருநராற்றுப்படையில் பாடப்பட்டுள்ளான். பத்துப் பாட்டில் இரண்டு பாடல் பெற்றவன் கரிகாலன்; இரண்டு பாடல் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். கரிகாலன் பெயர் விளக்கம் பொருநராற்றுப்படையில் கூறப்பட்டதாம். காவிரிப் பூம்பட்டினத்தைப் பாடுபவர் காவிரியை விரித்துப் பாடுவது ஏன்? காவிரி புகும் இடத்தில் அமைந்தது தானே காவிரிப்பூம் பட்டினம். அதன் வளம்தானே சோழர்களை வளவர் ஆக்கியது. ஆதலால் அதனை விரித்துப் பாடல் மிகத் தக்கதாம். காவிரி வளத்தைக் கண்ணனார் எப்படித் தொடங்குகிறார்? சுக்கிரன் என்னும் வெள்ளி கிழக்கில் இருந்து மேற்காகச் சென்றால் மழை பெய்யும்; அந்நிலை மாறித் தெற்காகச் சென்றால் மழை பெய்யாது என்பர். வானம்பாடி என்னும் பறவை வான் துளியுண்டு வாழ்வது, அது மழைநீர் இன்றி வருந்தும் நிலையில் மழை பெய்யாது என்பர். இத்தகு நிலைகளிலும் காவிரிப் பெருக்கு அற்றுப் போகாமல் மேல் மலையில் இருந்து கீழ்கடல் வரை பெருகி ஓடும் என்று தொடங்குகிறார். “வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி” (5-6) காவிரியின் புனல் பெருக்கால் பொன் கொழிக்கும் என்பதன் விளக்கம் என்ன? பொன் கொழித்தலால் தானே காவிரிக்கு ‘பொன்னி’ என்று பெயரும் உண்டாயது. நெல் நிறம், பொன் தானே! நெல்லும் கரும்பும் வாழையும் பெருக விளைந்தால் பொன் தராவா? காவிரி வழங்கும் செல்வ வளம் குறித்தே பொன் வழங்கும் (கொழிக்கும்) என்றார். காவிரியின் வளப் பெருக்கை எவ்வாறு கூறுகிறார் ஆசிரியர்? காவிரி நீர்ப் பெருக்கால் விளைவு இடையறாது பெருகும். கரும்பாலையின் புகையால் நெய்தல் பூ வாடும் காய்ந்த நெல்லின் கதிரைத் தின்று பெரிய எருமையின் கன்று நெற் கூடுகளின் நிழலில் தங்கும்; உறங்கவும் செய்யும். குலைகளையுடைய தென்னை போல் வாழை உயர்ந்திருக்கும்; மஞ்சள் பயிர், கமுகினைப் போல் காட்சி தரும்; மாமரம், பனை, சேம்பு, இஞ்சி முதலியவை செறிந்திருக்கும் என்கிறார். பாக்கங்களின் சிறப்பாக ஆசிரியர் கூறுவதென்ன? வீட்டு முற்றத்தில் மகளிர் நெல்லை அவித்துக் காயப் போட்டுள்ளனர். அந்நெல்லைத் தின்ன வரும் கோழிகளைக் காதில் அணிந்த குழை என்னும் அணிகலத்தைக் கழற்றி எறிந்து ஓட்டுகின்றனர். அதனால் அக்குழைகள் தெருவில் சிதறிக் கிடக்கின்றன. இளஞ் செல்வச் சிறுவர்கள் நடை வண்டி ஓட்டு கின்றனர். அவ்வண்டி தடங்கல் படுமாறு குழைகள் செய்கின்றன. இப்படிப்பட்ட இடர் அன்றி வேறு இடர் அறியாதது பாக்கம் என்று பாக்கச் சிறப்பைக் கூறுகிறார் ஆசிரியர். உப்பு வணிகம் பற்றி அறிவது என்ன? கடல் விளை உப்பை எடுத்துப் பல ஊர்களுக்கும் கொண்டு சென்று வாணிகம் செய்தலால் பண்ட மாற்றாகப் பெறப்பட்ட நெல்லை ஏற்றிய படகுகள், வரிசையாகக் கட்டப்பட்ட குதிரைகளைப் போலக் காட்சி தரும் அங்குள்ள கழிமுகங்கள். காவிரிப் பூம்பட்டினச் சூழல் எத்தகையது? பொழில்கள், சோலைகள், பொய்கைகள், ஏரிகள் ஆகியவை அமைந்த சூழலை உடையது காவிரிப்பூம்பட்டினம். காவிரிப் பூம்பட்டினக் குடியிருப்புகளை ஆசிரியர் எவ்வாறு கூறுகிறார்? கதவுகளில் புலியுருவம் பொறிக்கப்பட்டிருக்கும்; செல்வ வளம் மிக்கதாக வீடுகள்இருக்கும்; அறம் சிறந்தவர்களாக மக்கள் இருப்பர். அவர்கள் சமைத்து வடித்த வடிகஞ்சி ஆறுபோலச் செல்லும்; அங்கு மாடுகள் சென்று மிதித்தலால் சேறாகிவிடும்; அச்சேற்றின் மேல் தேர் ஓடுதலால் புழுதியாகப் படரும்; அப்புழுதி வனப்புற வரையப்பட்ட சுவர் ஓவியங்களில் படியும்; அதனால் வெண்ணீற்றில் புரண்ட யானை போல் அவை காட்சி தரும். வீட்டு முற்றத்தில் கேணிகளும், தவச் சாலைகளும், வேள்விச் சாலைகளும் விளங்கும். வேள்விப் புகையால் வெறுப்புற்ற புறாக்களும் குயில்களும் பெட்டைகளுடன் அகன்று போகும் என்று கூறுகிறார். பரதவர் இயல்புகளாகக் கூறுவன எவை? பரதவர் இறா மீனைச் சுட்ட தசையை உண்பர்; ஆமைப் புழுக்கு உண்பர். அடப்பம் பூவைச் சூடுவர்; ஆம்பல் பூவைப் பறித்து அணிவர்; நீலவானில் வலமாகச் சுழலும் கதிரோனைச் சுற்றி கோள் மீன்கள் வட்டமிடுவது போல நின்று போரிடுவர்; சீற்றங்கொண்டு தாக்குவர்; கவண் கல்லாலும் எறிவர்; அதற்கு அஞ்சிப் பனை மரத்தில் இருந்த பறவை பறந்து போகும். புறச்சேரி பற்றி ஆசிரியர் கூறுவன எவை? புறச்சேரிக் குடியிருப்பில் பன்றிகள், குட்டிகளோடு திரியும். கோழிகள் காணப்படும்; உறைக் கிணறுகள் உண்டு; ஆட்டுக் கடாக்களோடு சிவல் பறவை விளையாடும். காவிரித் துறைச் சிறப்புகளாக அறிவன எவை? நடுக்கல்லில் வழிபடு தெய்வமாக நின்றவனுக்குக் கேடயத்தை யும் வேலையும் வரிசையாக வைத்ததுபோல நெடிய தூண்டில் கம்பைச் சுவரில் சார்த்தியிருப்பர்; நிலவின் ஊடுதோன்றும் இருள் போல மணல் முற்றத்தில் வலை உலரும்; சுறா மீனின் கொம்பை நட்டு அதனைக் கடல் தெய்வமாகக் கொண்டு வழிபடுவர். கள் பருகிக் களிப்பர்; தழையுடை அணிந்த தம் மனைவியரொடு முழு நிலவுப் பொழுதில் விரும்புவன உண்டு விளையாடுவர்; மலையைத் தழுவும் முகில் போலவும் தாயைத் தழுவும் மகவு போலவும் கடலோடு காவிரி கலக்கும் புகார்த் துறையில் நீராடுவர்; நண்டுகளைப் பிடித்தும் பாவை செய்தும் பகற்பொழுதெல்லாம் போக்குவர்; இவ்வாறு காவிரித்துறை விளங்கும் என்கிறார் கண்ணனார். கடைசி யாமச் செயல்களாகப் பட்டினப்பாலை கூறுவ தென்ன? கணவனோடு தழுவிய மகளிர் பட்டாடையை விடுத்து மென் துகில் அணிவர்; தேனுண்ணல் நீங்கி இன்பத் தேனில் திளைப்பர்; கணவன் சூடிய மாலையை மனைவியும், மனைவி சூடிய மாலையைக் கணவனும் மாற்றி மயங்கிச் சூடுவர். கடலிற் கட்டுமரத்திற் சென்ற பரதவர் மாளிகைகளில் ஏற்றப்பட்ட விளக்குகளை எண்ணுவர்; நகரத்துள்ளார் முன் யாமத்தில் பாட்டு கேட்டும் நாடகம் கண்டும் உறங்காமல் பொழுது போக்கியவர் கடைசியாமத்தில் கண்ணுறக்கம் கொள்வர். இவை கடைசியாமச் செயல்களாகப் பட்டினப்பாலை கூறுவதாம். அரசன் பொருளைக் காப்பவர் எப்படி காக்கின்றனர்? அரசன் பொருளைக் காப்பவர் அயர்வில்லாராய்க் காக் கின்றனர். இடைவிடாமல் சுழலும் கதிர்போல் சுற்றிச் சுழன்று காக்கின்றனர். வாங்க வேண்டிய ‘உல்கு’ என்னும் சுங்க வரியைத் தவறாமல் வாங்கிச் சேர்க்கின்றனர். கலவணிகம் பற்றி கூறும் செய்திகள் எவை? கடலில் இருந்து முகந்த நீரை முகில் மலையில் பொழிவது போலவும், மலையில் பொழிந்த முகில் நீர் கடலைச் சேர்வது போலவும் பொருள்கள் அளவில்லாமல் நீரில் இருந்து நிலத் திலும், நிலத்தில் இருந்து நீரிலும் ஏற்றவும் இறக்கவும் படுகின்றன. எப்பொருளும் களவு போகாமல் காக்கப்படுகின்றன. அனுப்பப்படும் பண்டங்கள் அனைத்தும் புலி முத்திரை இட்டு விடுக்கப்படுகின்றன. கடற்கரையில் குவிந்து கிடக்கும் பண்டக் குவியல்களின் மேல் மலை மேல் ஏறி விளையாடும் வரையாடுபோல் நாய்கள், ஆடுகள் ஏறி விளையாடுகின்றன என்று கலவணிகம் பற்றிப் பட்டினப்பாலை கூறுகின்றது. புகார் நகரில் அங்காடித் தெரு எவ்வாறு விளங்குகின்றது? ஏணிகள், திண்ணைகள், சிறிய வாயில்களும் பெரிய வாயில்களும் உடையனவாய் மாளிகைகள் ஆகியவை பெருகி யவாய் அங்காடித் தெரு விளங்கும். ஆங்குள்ள மாடங்களில் அழகிய மகளிர்கள் பவழம் போல் நிறமும் மயில்போல் தோற்றமும் மான்போல் பார்வையும் கிளிபோல் மழலையும் உடையவர்கள், அவர்கள் காற்று வரும் சாளரத்தினை நெருங்கி நின்று தொழுது நிற்பர்; குழல் இசைக்கவும் யாழ் ஒலிக்கவும் முழவு முழங்கவும் முரசம் அறையவும் இடையீடு இல்லாமல் விழாக்கள் அங்காடித் தெருவில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். நகரில் விளங்கும் கொடி வகைகள் எவை? கோயில் வாயில்களில் பலரும் வணங்குமாறு சேவற் கொடியும், விற்கப்படும் பண்டங்களின் விளக்கமாக ஆற்று மணல் மேல் பூத்த கரும்பின் பூப்போல் விளங்கும் கொடியும், அறிவு மேம்பட்டார் வாதிட்டு மெய்ப்பொருள் உணர்த்துவ தற்காக எடுக்கப்பட்ட கொடியும், துறைமுகங்களில் கப்பல் மேல் கட்டப்பட்ட கொடியும், கள்ளுக் கடைகளில் ஏற்றப்பட்ட கொடியும், பிறபிற அறிவிப்புக் கொடிகளும் நிரம்பியிருத்தலால் கதிரின் வெயிலும் புகாவாறு நிழல் கொண்டிருக்கும். தெருக்களில் விளங்கும் பொருள் வகைகள் எவை? அயல்நாடுகளில் இருந்து கப்பலில் வந்த குதிரைகளும், வண்டிகளிலே கொண்டு வரப்பட்ட மிளகுப் பொதிகளும், வடமலையில் இருந்துகொண்டு வந்த மணியும் பொன்னும், மேல் மலையில் இருந்துகொண்டு வந்த சந்தனம் அகில் கட்டைகளும், தென்கடலில் இருந்து எடுத்து வரப்பட்ட முத்துக்களும், கீழ்கடலில் இருந்து எடுத்து வந்த பவழங்களும், கங்கைப் பொருள்களும், காவிரிப் பொருள்களும், ஈழத்தில் இருந்து வந்த உணவுப் பொருள்களும், காழகம் என்னும் கடாரத்தில் இருந்து வந்த அரிய பல பொருள்களும் நிலப் பரப்பெல்லாம் தோன்றாமல் பரவிக் கிடக்கும். அச்சமில்லாத வாழ்வு மக்கள் கொள்வதை ஆசிரியர் எவ்வாறு கூறுகிறார்? பரதவர் முற்றங்களில் மீன்கள் உலாவித் திரிகின்றன. ஊன் விற்பவர் முற்றங்களில் ஆடு முதலாம் விலங்குகள் நடமாடித் திரிகின்றன. என்பதால் கொலைஞரும் கொடுமை புரியாமையைக் காட்டி நாட்டில் அச்சமில்லாமையை விளக்குகிறார். மற்றைச் சிறப்புகளாக ஆசிரியர் கூறுவன எவை? வேள்விகள் சிறப்ப நடைபெறுகின்றன. விருந்தினராக வருவாரை மிகப் பேணுகின்றனர்; அறவொழுக்கமும் அன்பு நெறியும் உடையவராய் உழவர்கள் வாழ்கின்றனர். பொய் கூறாமல் மெய் கூறி, தாம் கொள்ளும் பொரு ளுக்குத் தக்க பொருளைத் தந்தும், தாம் கொடுக்கும் பொரு ளுக்கு மிகாமல் பொருளைப் பெற்றும் நுகக் கோலின் நடுவில் உள்ள ஆணியைப் போல் நடுவுநிலை உடையவராய் வாணிகம் செய்வார் விளங்குகின்றனர் என்று காவிரிப் பூம்பட்டினத்தின் மற்றைச் சிறப்புகளாக ஆசிரியர் கூறுகிறார். மேலும் பல நாட்டுப் பல மொழி பேசும் மக்களும் தமிழ் பேசும் மக்களொடு கலந்து உறவாடி மகிழ்ந்து வாழ்கின்றனர் என்பதை, “மொழி பல பெருகிய பழிதீர் தேயத்துப் புலம் பெயர் மக்கள் கலந்தினி துறையும்” என்கிறார். பட்டினச் சிறப்பை விரித்துரைத்த கண்ணனார் பாலையைப் பற்றி எவ்வாறு நயமாகச் சுருக்கிக் கூறுகிறார்? “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே” என்று தலைவன் தலைவியைப் பிரிய மாட்டாதவனாய்த் தன் நெஞ்சிற்குக் கூறுவதாகக் கூறுகிறார். சுருக்கிக் கூறிய இத்தொடரில் அமைந்துள்ள நயம் யாது? முட்டருஞ் சிறப்பு - முட்டுப்பாடு என்பது எ துவும் நெருங்காத சிறப்பு. ஊணா, உடையா, உறைவா, வேண்டும் பிறபிறவா, அற நெறியா, அன்பு வாழ்வா எல்லாம் எல்லாம் குறைவற எவர்க்கும் எங்கும் வாய்க்கும் சிறப்பு முட்டாச் சிறப்பாம். இம்முட்டாச் சிறப்பால் ஓங்கியது காவிரிப்பும்பட்டினம். அப்பட்டினத்தில் உறையும் பேறே பெரிது; அதில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து விரும்பியவனை மணந்து இல்லறம் பூண்டு, நிறை வீடு பேறாகச் சிறப்பது தனிப்பேறு. அவ்வாறாகவும் அப்பட்டினத்தையே வேந்தன் கரிகாலன் பரிசாகத் தந்தான் எனினும் அவ்வின்பம் உன்னைப் பிரிந்து போய் வாழ நேருங் கால் - பிரிதலை எண்ணுங்கால் எண்ணும் நெஞ்சம் வேம்! உடலம் வேம்! உயிரும் வெம்பிச்சாம். அப்படி செய்வன எவை? உன்னைக் கண்டு ஒப்ப நோக்கி ஒன்றுபட்டபோதின் முதல் உடன்பாட்டு மெய்ப்பாடாக உன் கூழை விரித்தாயே, காதொன்று களைந்தாயே அவற்றை மறக்கமுடியுமா? கூழைதானே கூந்தல் எனப் பெயர் கொண்டது; நீண்டு தழைத்தது; கரு முகிலாய்ப் பரந்து படிந்தது! அக்காதணிதானே தலையணி முதல் காலணி ஈறாகப் பல்லணிகள் பூண்டு கொள்ளை கொள்ளும் நிலை ஆயது! ஆதலால், பொருள் தேடப் போமாறு வலிந்து இழுக்கும் நெஞ்சமே யான், நீ என்னபாடு என்னைப்படுத்தினாலும், வரமாட்டேன்! நீ பிரிவுக் கொடுமைக்குத் தூண்டினாலும் அத்தூண்டுதல் தானே நேயப் பெருக்காய் வெள்ளமாய்ச் சிறக்கச் செய்கின்றது. அதனால் எக்குறையும் இல்லாமல் என்றும் இனிது வாழ்வாயாக! என்பவை ஓரளவால் அறியும் நயமாம்! பட்டினத்தைக் காவிரி முதல் கூறிய ஆசிரியர், பாலையைக் கூறிய அவர் பின்னும் விரிப்பானேன்? பாட்டுடைத் தலைவனாம் திருமாவளவனைப் பற்றிக் கூறினார் அல்லரே! அவன் வீறும் வெற்றியும் பேறும் பெற்றியும் கூறித்தானே ஆக வேண்டும். இல்லையானால் பெயர் சுட்டப் படா எவரோ ஒரு வேந்தரை எண்ணிக் கொள்ளத்தானே வைக்கும். ‘பிரியேன்’ என்றவன் பிரியாமல் இருக்க மாணத் தடையாம் ஒன்றைச் சுட்டாமல் விட்டானாகவும் ஆகுமே; ஆதலால் மேலும் தொடுத்தார். மேலும் எண்பத்தோர் அடிகள் தொடுத்தார். முன்னை நெறி மாறாமல் பின்னை நெறியைப் பாடினார். 79 அடிகள் புறப்பொருளும், இரண்டே இரண்டு அடிகள் அகப்பொருள் சிறக்கவும் பாடினார். கரிகாலன் பெருமிதத்தைக் கடியலூரார் எவ்வாறு கூறுகிறார்? கரிகாலன் தாய் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவன். உறவுப் பகையால் இளமையிலேயே சிறைப்படுத்தப் பட்டவன். படுகுழிப்பட்ட யானை கரையைக் குத்திச் சரித்து மேடேறித் தன் பிடியொடு சேர்ந்தது போலப் பகைச் சிறை வென்று அரிமாப் போல அரசு கட்டில் ஏறியவன் என்கிறார். “கூருகிர்க், கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர், பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழி கொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு நுண்ணிதின் உணர நாடி நண்ணார் செறிவுடைத் திண்காப் பேறி வான்கழித் துருகெழு தாயம் ஊழின் எயதி”னான் என்கிறார்; செறிவுடைத் திண்காப் பேறி என்றமையால் காவல் மிக்க மதிலுள் அடைக்கப்பட்டிருந்தான் என்பது புலப்படும். குறிக்கப்பட்ட பாடல் அடிகளால் அறியப்படும் செய்திகள் எவை? கூருகிர்க் கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு என்பதால் கூரிய நகங்களையும் வளைந்த வரிகளையும் உடைய புலிக்குட்டி கூட்டுள் வளர்ந்தது போல வளர்ந்தான் என்பதும், பெரிய வலிய குழியின் கரையைக் கொம்பால் குத்தி யானை வெளிப்பட்டுத் தன் பெண் யானையொடு கூடியது போல அரசு எய்தினான் என்பதை, “அருங்கரை கவியக் குத்திக் குழி கொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு” என்று கூறினார். வலிய மதினுள் சிறை வைத்தார் என்றும், அவர் பகை யாயினார் என்றும், அம்மதிலைத் தன் வாள் வலியால் தடுத்தோரை அழித்து மேலேறிக் கடந்தான் என்றும், முறையாக ஆள வேண்டிய ஆட்சி உரிமையன் அவன் என்றும் அவன் இளந்தை வரலாற்றை எடுத்துரைத்தார் என்க. நண்ணார் = பகைவர்; ஊழ் = முறைமை. அரசுரிமை பெற்ற திருமாவளவன் மேலே என்ன செய்ததாகக் கூறுகிறார்? அரசுரிமை பெற்றது போதும் என மகிழ்வோடு அமைந் தான் அல்லன். பகைவர் அரண்களை அழித்தான். அவர்கள் யானை, குதிரை, காலாள்களை ஒரு சேர அழித்தான் வயல் களையும் நீர் நிலைகளையும் பாழ்படுத்தினான். காடுகளை அழித்தான்; காட்டு யானைகள் ஊர் மன்றில் உலாவின; கிளிகள் பேசி மகிழ்ந்த வீடுகளில் கோட்டான்கள் கூடி ஒலித்தன; இவ்வாறு பகைகளைப் பழி வாங்கினான். பகைவர் கொண்ட அச்சத்தை ஆசிரியர் எவ்வாறு கூறுகிறார்? “இவன் மதிலை இடித்துப் பொடியாக்குவான்; கடலை மண்ணாலும் கல்லாலும் மூடி மேடாக்குவான்; வானத்தையும் இடித்து முட்டுவான்; காற்றின் திசையையும் மாற்றி வீச வைப்பான்” எனப் பகைவர் அஞ்சுவர் என்பதை குறிக்கிறார். திருமாவளவன் எவ்வெவரை வென்றான் என்கிறார் கடியலூரார்? ஒளி நாட்டவர் பணிந்து ஒடுங்கவும், பழமைமிக்க அருவாள நாட்டவர் ஏவல் கேட்டு நிற்கவும், வடநாட்டவர் என்ன நேருமோ என வாட்ட முறவும், குடநாட்டவர் உள்ளம் கூம்பி வாடவும், தென்னவனாம் பாண்டியன் தன் வலிமை குன்றவும் முல்லை நாட்டவர் வழியற்றுப் போகவும், இருங்கோவேளின் இனத்தவர் அழிந்துபடவும், வெற்றி கொண்டான் என்கிறார் ஆசிரியர். அழித்த நாடுகளில் கரிகாலன் என்ன செய்தான்? தான் அழித்த நாடுகளில், காடுகளை அழித்து நாடாக் கினான். குளங்களை ஆழமாகத் தோண்டி வளம் பெறச் செய்தான். உறையூரை விடுத்து கோயில்களையும் மாடங் களையும் உண்டாக்கி மக்களைக் குடியேற்றினான். கோட்டை களையும் பெருவாயில் சிறுவாயில்களையும் அமைத்தான். மதில்களில் அம்பு எய்யும் ஏப்புழைகளை உண்டாக்கினான். பகைவர் எவராயினும் வருக; யான் அழித் தொழிப்பேன் என வஞ்சினம் கூறினான். அவன் வலிமைக்கு அஞ்சிய வேந்தர் அவன் அருளுதலுக்குக் காத்துக் கிடந்து வழிபட்டனர் என்று கூறுகிறார். கரிகாலன் அகவாழ்வு பற்றி ஆசிரியர் என்ன இயம்புகிறார்? மக்கள் ஓடி ஆடி மகிழ்கின்றனர்; மனைவியர் தழுவி மகிழ்கின்றனர்; பகைக்கு மாறான அவன், குடும்ப வாழ்வில் குழைவுடையவனாக விளங்குகிறான் எனச் சுருங்க உரைக்கிறார். எடுத்துக் கொண்ட பாலையை கணவன் பிரிதலை விடுத்த பாவலர் தொடுத்து எப்படி முடிக்கிறார்? “அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய வேலினும் வெய்ய கானமவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே” எனத் தலைவன் வினைமேற் செலவு விடுத்ததாகப் பாடலை நிறைவு செய்கிறார். நிறைவு அடிகளின் சிறப்புகள் எவை? அரச யானைகளைத் தன் முழக்கத்தாலும் வலிமையாலும் வருந்தச் செய்யும் அரிமாவைப் போன்றவன் திருமாவளவன் என்று அவன் வரலாற்றைப் பிழிசாறாகத் தருகிறார் பாவலர். பகைவர் திருவனைத்தையும் கொள்ள வல்ல வளமிக்கான் என்பதைத் ‘திருமாவளவன்’ என்னும் பெயர் கூறும் வகையால் தெரிவிக்கிறார். அவன் வேல் பகையை அழிக்கும் கொடுமையைப் பாலை நிலத்தின் வெம்மைக்கு ஒப்பிடுகிறார். அவ்வாறே அவனை அடைந்து அருள் வேண்டினார்க்கும் தன் குடியினர்க்கும் செங்கோலனாகத் திகழும் தன்மையைக் குறிப்பிடுகிறார். தலைவன் வாக்காகத் திருமாவளவன், “வேலின் வெம்மையும் கோலின் தண்மையும்” விளக்கம் பெற வைக்கிறார். தலைவியைப் பிரிதல் வகையால் உண்டாகும் உள வெப்பை அடையமாட்டேன்; அவன் கோலின் தண்மை போன்ற தலைவியின் கூடுதலை இழக்கமாட்டேன் என்று சொல்கிறான். வாழ்வியல் நிலை இவ்வாறானால் சிறக்குமா? “வினையே ஆடவர்க்கு உயிரே” என்பது தொன்முறை வாழ்வியல். ஆதலால் வினைமேல் செல்லாமல் தடையுறல் ஆகாது. அதனால் செல்லேன் எனச் சொல்லி அவளை அமைதிப் படுத்தி, வினை செயல் இன்றியமையாமை, பொருளின் இன்றியமையாமை என்பவற்றைத் தக்கவகையில் எடுத் துரைத்துப் பிரிதற்குரிய உளவியல் உத்தி இத்தகு படைப்பாகும். “செல்லேன் என்னல் சொல்லாமைக்கு அன்று; செலவு உடன் படற்குச் செய்யும் முன்முயற்சியாம்” என்பது வாழ்வியல் இலக்கணமாக வகுத்த தமிழ் அறவோர் காட்டிய முறைமை இஃதாம். பாலைப் பகுதியை இணைத்துக் காட்டுக. “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன்” “திருமாவளவன் தெவ்வர்க் கோக்கிய வேலினும் வெய்ய கானமவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே” இச்சுருங்கிய அகத்தை விரிக்க இவ்விரிந்த ‘புறம்’ வேண்டுமா? வேண்டும்; வேண்டுவ துணர்ந்தே பாடினார். புணர்தலாம் கூடியிருத்தலுக்குக், “குறிஞ்சி கூதிர் யாமம்” என்றார் தொல்காப்பியர். நாளில் யாமம் என்பது எவ்வளவு பொழுது? மற்றைப் பொழுது எவ்வளவு? முல்லை, இருத்தல் தானே! மருதம், ஊடல் தானே! நெய்தல், இரங்கல் தானே! பாலை, பிரிதல் தானே! உலகம் உய்வுற வகுத்த செம்முறை, இம்முறை என்பதைத் தெளிவாக எண்ணின் உண்மை புலப்படும்! அதற்கு மாறாம் படைப்பு - காட்சி - ஆயவை வாழ்வியல் கேடாம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும். பின்னிணைப்பு - முற்றும் – குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை 1971இல் பாரி நிலையம் வெளியிட்ட நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் வெளிவருகிறது. பொருளடக்கம் பக்கம் குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி 243 பின்னிணைப்பு 268 குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி பாட்டு* அன்னாய் வாழிவேண் டன்னை ஒண்ணுதல் ஒலிமென் கூந்தல்என் தோழி மேனி விறல்இழை நெகிழ்ந்த வீவருங் கடுநோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் 5. பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும் வேறுபல் லுருவிற் கடவுட் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும் 10. புட்பிறர் அறியவும் புலம்புவந் தலைப்பவும் உட்கரந் துறையும் உய்யா அரும்படர் செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின் முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வருங் குரைய கலங்கெடிற் புணரும் 15. சால்பும் வியப்பும் இயல்புங் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொன்மருங் கறிஞர் மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப 20. நெடுந்தோர் எந்தை அருங்கடி நீவி இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென நாமறி வுறாலிற் பழியும் உண்டோ ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென 21. மானமர் நோக்கங் கலங்கிக் கையற்று ஆனாச் சிறுமையள் இவளுந் தேம்பும் இகன்மீக் கடவு மிருபெரு வேந்தர் வினையிடை நின்ற சான்றோர் போல இருபே ரச்சமோ டியானும் ஆற்றலேன் 30. கொடுப்பினன் குடைமையுங் குடிநிரல் உடைமையும் வண்ணமுந் துணையும் பொரீஇ எண்ணாது எமியேந் துணிந்த ஏமஞ்சால் அருவினை நிகழ்ந்த வண்ணம் நீநனி உணரச் செப்ப லான்றிசிற் சினவா தீமோ 35. நெற்கொள் நெடுவெதிர்க் கணந்த யானை முத்தார் மருப்பின் இறங்குகை கடுப்பத் துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல் நற்கோட் சிறுதினைப் படுபுள் ஓப்பி ஏற்பட வருதியர் எனநீ விடுத்தலிற் 40. கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த புலியஞ் சிதணம் ஏறி அவண சாரற் சூரல் தகைபெற வலந்த தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும் கிளிகடி மரபின ஊழுழ் வாங்கி 45. உரவுக்கதிர் தெறூஉம் உருப்பவிர் அமயத்து விசும்பாடு பறவை வீழ்பதிப் படர நிறையிரும் பௌவங் குறைபட முகந்துகொண்டு அகலிரு வானத்து வீசுவளி கலாவலின் முரசதிர்ந் தன்ன இன்குரல் ஏற்றொடு 50. நிரைசெலல் நிவப்பிற் கொண்மூ மயங்கி இன்னிசை முரசிற் சுடர்பூட் சேஎய் ஒன்னார்க் கேந்திய இலங்கிலை எஃகின் மின்மயங் கருவிய கன்மிசைப் பொழிந்தென அண்ணல் நெடுங்கோட் டிழிதரு தெண்ணீர் 55. அவிர்துகில் புரையும் அவ்வெள் ளருவித் தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப் பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி நளிபடு சிலம்பிற் பாயம் பாடிப் பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம் 60. பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவரி உள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளிதழ் ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம் தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி செங்கொடு வேரி தேமா மணிச்சிகை 65. உரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிளம் எரிபுரை எறுழம் சுள்ளி கூவிரம் வடவனம் வாகை வான்பூங் குடசம் எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை பயினி வானி பல்லிணர்க் குரவம் 70. பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா விரிமலர் ஆவிரை வேரல் சூரல் குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி குருகிலை மருதம் விரிபூங் கோங்கம் போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி 75. செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம் கரந்தை குளவி கடிகமழ் கலிமாத் தில்லை பாலை கல்லிவர் முல்லை குல்லை பிடவஞ் சிறுமா ரோடம் வாழை வள்ளி நீணறு நெய்தல் 80. தாழை தளவம் முட்டாட் டாமரை ஞாழல் மௌவல் நறுந்தண் கொகுடி சேடல் செம்மல் சிறுசெங் குரலி கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் 85. பாங்கர் மராஅம் பல்பூந் தணக்கம் ஈங்கை இலவம் தூங்கிணர்க் கொன்றை அடும்பமர் ஆத்தி நெடுங்கொடி அவரை பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி வஞ்சி பித்திகம் சிந்து வாரம் 90. தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி நந்தி நறவம் நறும்புன் னாகம் பாரம் பீரம் பைங்குருக் கத்தி ஆரம் காழ்வை கடியிரும் புன்னை நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி 95. மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவும் அரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன் மாலங் குடைய மலிவன மறுகி வான்கண் கழீஇய அகலறைக் குவைஇப் புள்ளார் இயக்க விலங்குமலைச் சிலம்பின் 100. வள்ளுயிர்த் தெள்விளி இடையீடைப் பயிற்றிக் கிள்ளை ஓப்பியும் கிளையிதழ் பறியாப் பைவிரி அல்குற் கொய்தழை தைஇப் பல்வே றுருவின் வனப்பமை கோதையெம் மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி 105. எரியவிர் உருவின் அங்குழைச் செயலைத் தாதுபடு தண்ணிழல் இருந்தன மாக எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த் தண்ணறுந் தகரங் கமழ மண்ணி ஈரம் புலர விரலுளர்ப் பவிழாக் 110. காழகில் அம்புகை கொளீஇ யாழிசை அணிமிகு வரிமிஞி றார்ப்பத் தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின் மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும் வண்ணவண் ணத்த மலராய்பு விரைஇய 115. தண்ணறுந் தொடையல்.............................. பாட்டினியல்பு *................. காணப்படுதல் இல்லையாயிற்று. வானசாத்திரம் தசபுத்திரம், பௌதிக சாத்திரம் முதலான அரும் பெருங் கலைகளும் தம்மைப் பயில்வானுக்கு அறிவு விளைப்பக் கண்டாமல்லது, அஃதவனுக்கு உரிமையன்பினை எழுப்பக் கண்டிலமன்றோ? அவ்வாறன்றி, நளன்கதை, இராமன் கதை முதலியவற்றைக் கூறுங் காப்பியங்களைக் கேட்பார்க்கும் உள்ளம் இளகிக் கரைந்து அன்பெழக் காண்டல் எஞ்ஞான்றும் உண்மை யனுபவமாய் நிகழ்வ தொன்றன்றோ? அதுவே யன்றியும், மக்கள் உயிர் உணர்வைப் பதப்படுத்தி மென்மைபெறச் செய்வதும் வன்மைபெறச் செய்வதும் ஆறுதல் பயப்பதும் தேறுதல் விளைப்பதும் ‘பாட்டு’ ஒன்றின்கண் மட்டுமே பொருந்திக் கிடக்கின்றன. கல்லினும் வல்லென்ற கடுநெஞ்சமுடை யாரும், கணவன் வருகையை எதிர்நோக்கிப் பெருங்கவலை கொண்டு நின்ற கண்ணகி நிலையும் அவள் கணவன் கொலையுண்டான் என்று கூறுதற்கும் பொறாது ஆயர் மகள் அதனைத் தெரிக்கமாட்டாமல் நின்ற நிலையும் அந்நிலை கண்டு ஐயுற்றுக் கண்ணகி படுந்துன்பமும் பகுத்துக் கூறிய சிலப்பதி காரப்பாட்டை ஒருமுறை படிப்பாராயின் அவர் தம்மை மறந்து கண்ணீர் சிந்தி ஆற்றாதழுதல் திண்ணமேயன்றோ? வீமன் கதையெடுத்துப் போர் புரியுமாற்றை வகுத்துரைக்கும் பாரதப் பகுதியைப் படிப்போர் தாமும் அவனாய்த் தம்மை மறந்து கைபிசைந் தெழுதல் மெய்ம்மையேயன்றே? தன்னாற் காதலிக்கப் பட்ட உதயகுமரன் ஒரு விஞ்சையனால் வெட்டுண்டு தன் எதிரே விழ, அதுகண்டு பெரிதும் ஆற்றளாய்ப் பொறுத்தற்கரிய துயர் எய்திய மணிமேகலையைக் கந்திற்பாவை ஆற்றுவித்த அறவுரைப் பகுதியை நோக்கு வார்க்கும் ஆறுதல் தோன்றுவது ஆற்றவும் வியப்புடைத் தன்றோ? முழுதுந் துன்பமே நுகர்ந்து இழிவெய்தினோரும் தந்தன்மை திரியப் பெறராயின், அவர் அரிச்சந்திரன் கதையை விரிக்குங் காவியப்பொருளை நன்குணர்ந்து தேறுதல் எய்தல் தேற்றமேயன்றே? ஆ! பாட்டால் விளையாத நற்பயன் பிறிதொன்று உண்டுகொலோ! அற்றன்று; மேற்கூறிய காப்பியங்கள் தங்கண் நடைபெற்றுச் செல்லுங் கதைப்பாங் கினால் அங்ஙனம் உளம் நெகிழ்த்த வல்லனவாகுமன்றி, அவைதாமே அது செயமாட்டாதாலென ஒருசிலர் மறுப்பர்; அவர் அறியார், ஒருவன் சொல்லும் ஒருகதை கேட்பார்க்குச் சுவை பயவாது வெறுப்பை விளைவித்தலும், பிறனொருவன் சொல்லும் அக்கதையே மிகச் சுவைக்கும் நிரதாய்க் கேட்பாரை இன்புறுத்துதலும் உலகவழக்கினுங் காணக் கிடந்த தன்றே; அது போலக் காப்பியத்தின்கண் வருங் கதையினைச் சுவைக்கச்செய்யுந் திறம் செய்யுளியற்றும் புலவன் பாலதாய் நின்று அச்செய்யுட்கண் விளங்கித் தோன்றுமென்க. அல்லதூஉம், ஒருகதை தழுவி வாராது தனித்தனியே அகப்பொருட் டுறைகளைக் கூறும் பாட்டுக் களினும் உளம் நெகிழ்த்துந்தன்மை உண்டென்பது, ‘மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ் போதுற்ற பூம்பொழில் காள்கழி காள்எழிற் புள்ளினங்காள் ஏதுற் றழிதியென் னீர்மன்னு மீர்ந்துறை வர்க்கிவளோ தீதுற்ற தென்னுக்கென் னீர்இது வோநன்மை செப்புமினே’. என்னுந் திருச்சிற்றம்பலக்கோவையார் திருவாக்கால் இனிது பெறப்படும்; தன் கணவனைப் பிரிந்தமையால் அவனைக் காணப்பெறாது, அவனை எப்போது காண்பேன் காண்பேன் என்று வேட்கை மிகவுற்றுத் தலைவி வருந்திக் கூறிய இச்செய்யுளை நோக்கும் ஏவர்தாம் மனம் நெகிழப் பெறாதார்? “மாதுபொருந்திய திருமேனியை யுடையவரும் இமயவரையை வில்லாக உடையவருமான சிவபெருமான் எழுந்தருளிய தில்லை நகரைச் சூழ்ந்து விளங்கும் மலர்கள் நிறைந்த அழகிய பொழில்காள்! அப்பொழிலைச் சூழ்ந்த கழிகாள்! அக்கழிகளிற் பயிலும் அழகு மிக்க பறவைக் கூட்டங்காள்! ‘நீ ஏது காரணம்பற்றி மனம் அழிகின்றாய்’ என்றும் என்னைக் கேட்கின்றிலீர்கள்; ‘நிலைபெறும் குளிர்ந்த கடற்றுறையினையுடைய தன் கணவன் பொருட்டு இவள் துன்பமுற்றது எதற்காக’ என்றும் கேட்கின்றிலீர்கள்; இதுதானே நீங்கள் எனக்குச் செய்யும் நன்மை? சொல்லுமின்” என்னும் இச்செய்யுட்பொருளை உணருந்தோறும் எம்மனம் இளகுகின்றதே! ஆ! நல்லிசைப் புலவர் மெல்லிசைப் பாவால் மனம் உருகாதார் உலகத் துளராயின் அவரைக் கல்லென்றுரைப்பேமோ, மரமென்றுரைப்பேமோ அறியேம். இன்னுங் கதை தழீஇ வாராத தேவாரம் திருவாசகம் போன்ற அருமைச் செந்தமிழ்ப் பாட்டுக்களை ஓதும்வழிக் கண்ணீர் துளும்ப உரைகுழறி மனம் நெக்குநெக்குருகி நிற்பாரைக் காண்டுமன்றே? இதன் உண்மை, “உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய் மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண் டெழுகேன் எம்மானே”. என்னுத் திருவாசகச்செம்பொருள் வாக்கால் நிலை பெறுத்தப்படுதல் காண்க. இவ்வாற்றற் கதையின் உதவி வேண்டாது பாட்டுத்தானே உளம் உருக்கும் பெற்றித் தாதல் தெளியப்பட்டதாகலானும், பாட்டினுதவி கொண்டே கதை சுவை பெற நடக்கு மல்லது கதை தானே சுவை விளையாதா கலானும் கதையே பாட்டினைச் சுவைக்கச் செய்யுமென் பாருரை போலியாமென மறுக்க:- அற்றேலஃதாக, மனம் நெகிழ்த்துந்தகைமை பிற கலைகளுக்கு வாயாது, ‘பாட்டு’ ஒன்றற்கு மட்டுமே வாய்ப்ப தென்னையோவெனின்; பாட்டியற்றும் நல்லிசைப் புலவன் தன் மனம் நெகிழ்ந்து பதப்பட்டு நின்ற நிலையிற் பாடுவதே பாட்டாகலின், அப்பாட்டின்கண் அவன் மன நிலை பிரதிபலனமாய்த் தோன்றி அதனைப் பயில்வார் எல்லார்க்கும் அதே மனநிலையினைத் தோற்றுவிக்கும் என்க. அஃதாயின் வானநூல் முதலிய பிறகலைகளை ஆயும் வழியும் ஒரோவொரு கால் அதுபோன்ற உள நெகிழ்ச்சி தோன்றுதலுண்டா லெனின்:- நன்று கடாயினாய், வானநூல் ஆய்வானெருவன் வானிற் கோள்களின் நிலையை உற்றுணர்ந்து அவற்றின் அமைதியை வியந்து மகிழுங் காலத்துத் தன்னுளம் மென்பதப்பட்டு உருகிமேலெழுந்து வழிய வழிந்த அந்நற்சொற்களை அவன் ஆண்டெழுது மாகலின் நூல்களின்கண் ஒரோவொரு பகுதி அங்ஙனம் பயில்வார்க்கு மனம் மென்மை பயப்பதாயிற்றென்க. யாண்டு யாண்டு மனம் மென்பதம் எய்தக்காண்டுமோ ஆண்டெல்லாம் பாட்டுண்டென்றே துணியப்படும். ‘பாட்டு’ என்பது செய்யுள் ஒன்றின் மட்டுமே நிகழப்பெறுவதன்று. அஃது உரையினும் உலகத்தோற்றங் களிலும் உலக நிகழ்ச்சியினு மெல்லாம் காணக்கிடப்ப தொன்றாம். ஆசிரியர் நக்கீரனார், இறையனார் அகப்பொருளுக் குரைத்த உரையை நோக்கு மின்கள்! ஆண்டுப் பாட்டினியல்பு விளங்கிக் கிடத்தல் காண்குவிர்! ஊர்ப்புறத்தில் தனிமையிலமைந்த தேமாம் பொழிலகத்தே இளவேனிலிற் புகுந்து ஆண்டுக் குயில் கூவும் ஓசை கேண்மின்கள்! ஆண்டும் பாட்டுண்டென்பதறிகுவிர்! வானோங்கி விளங்கும் மலைப்புறத்தே சென்று அதன் அடிவாரங்களிற் புன்மேயும் ஆன்மந்தைகளின் கழுத்திற் கட்டிய மணியோசை கேண்மின்கள்! ஆண்டும் பாட்டுண் டென்பதறிகுவிர்! கெழுதகைமைமிக்கு அன்பான் அளவளாய் நும் ஆருயிர் நண்பரோடு வாளாதிருமின்கள்! ஆண்டும் பாட்டுண்டென்பதறிகுவிர்! இருந்தவாற்றால், மனம் நெகிழ்த்தும் பதம் உள்வழியெல்லாம் பாட்டுமுண்டாதல் ஒருதலையென்க. இனிப் பிறிதொருசாரார், அறிவுதரும் வானநூல் முதலான கலைகளைக் கற்றலே பயனுடைத்தாமன்றி, மனம் நெகிழப்பண்ணும் பாட்டுக்களைக் கற்றல் வறிதா மென்பர்; அவரும் அறியார், என்னை? அவர் மக்கள் மன நிலையினைப் பகுத்தறியாது கூறினாராகலின் மக்களுயிர் அறிவு நிகழ்தற்கும் அன்பு நிகழ்தற்கும் இடனாயுள்ளது. அறிவை முதிரச்செய்வ தெல்லாம் அவ்வறிவு முதிர்ச்சியிற் றோன்றும் அன்பின் வயமாய் நிற்றற்பொருட்டேயாம். இன்ப உணர்ச்சி யின்னதெனவே அனுபவியாத ஓர் உயிரை எவரேனுங் காட்டவல்லரா? எமக்கு இன்பம் வேண்டாம் அறிவே வேண்டுமெனக் கூறுமவரும் அது கூறிய பிற்கணத்தே இன்பத்தை நாடிச் செல்லுதல் கண் கூடா யறியப்படுமன்றே? அவர் கூறுமாறு அன்பென்னும் இன்ப நிலையின்றி அறிவு மட்டுமுடையதோர் ஆன்மா உளதாயின் “அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று”. (குறள் 78) என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் கூறியாங்கு அது வெறும்பாழாய் ஒழிதல் திண்ணமேயாம். உள்ளம் மென்பதப்படுவ தில்லாதார் எத்துணைப் பெரிய அறிவுடைராயினும் அவர் பிறர்மாட்டு உள்ளன்பு பாராட்ட மாட்டார்; அவர் உலகத்துள்ள உயிர்வருக்கங் ளெல்லா வற்றையும் வெறுத்தொழுகிப் புண்பட்டுநிற்பர். அவர் உயிர்வாழ்க்கையிற் பயன் ஒன்றுங் காணார். பிறரோடியை பின்றி நீ;குந் துறவறத்தினும் மக்கள் மனைவியோ டியைபுற்று நின்று வாழ்க்கைசெலுத்தும் இல்லறமே நன்றென்று கடைப்பிடித்து அதனையே முதலில் வைத்துரைத் ததூஉம், அவ்வா றுரைத்தாங்கே தாமும் இல்லறத்தினின்று ஒழுகியதூஉம் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் எக்கருத்துப்பற்றி இல்லறத்தினின்று கன்றினார்க்கு உயிர்மென்பதப்பட்டு நிற்குமாதலின், அம்பதிறைவன் அருளிற் றோய்ந்து அவ்வய மாய் நிற்றல் இலேசில் எய்துமென்னும் நுட்பம் இனி துணர்ந்தேயாம் இல்லறத்தினும் மகப் பேறுடையார்க் கன்றி ஏனையோர்க்கு அதனாற் பெறும் பயனில்லை யென்பது தோன்ற, “மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கல நன்மக்கட் பேறு,” (குறள் 60) “பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற,” (குறள் 61) “அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்”, (குறள் 64) “குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர்.” (குறள் 66) என்றற்றெடக்கத்தான் வற்புறுத்துக் கூறியதூஉம், மனைவி மாட்டு நிகழும் அன்பு காமவயப்பட்டே பெரும் பாலும் நிகழுமாகலின் அதனால் இறைவனருளுருவாய் உள்ளூன்றிய அன்புதோன்றி உயிர்களை மென்பதப் படுத்தமாட்டாதாக, மகப்பெற்றதுணையானே சந்திர னெதிரே கிடந்த நிலாமணி நீர் அரும்புதல் போலத் தன்னுள்ளத்துக் கரந்துகிடந்த அத்தூய அன்பு அங்குரித்துத் தன்னுள்ளத்தைப் பதப்படுத்தும் நீர்மை பற்றியே யாமென்க. இஃதுணர்ந்தே பிற்காலத்துச் சான்றோரும், “பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனு முடையரோ - வின்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாம் மக்களையிங் கில்லா தவர்”. என்று இதனை விதந்தெடுத்துக் கூறுவாராயினாரென்க. அது கிடக்க. இனி, அறிவை மட்டும் விளக்கி அன்பினைக் காட்டாத ஏனைக் கலை களெல்லாவற்றினும், அறிவையும் மிகச்செய்து அன்பாம் இன்பநிலையும் உடன்பயப்பிக்கும் பாட்டு ஒன்றே விழுப்ப முடைத்தாம். காமவெகுளி மயக் கமென்னுங் குற்றம் அணையாதவாறு ஆன்ம மன நிலையைப் பிரித்துக் கொண்டு போய்த் தூய அமிழ்தமயமான இன்ப அன்புருவில் நிறுத்தவல்ல பாட்டே ஏனை எல்லாப் பாட்டுக்களினுஞ் சிறப்புடைத்தாய் நிற்கும். இவ்வகையால் நோக்குழித் ‘திருவள்ளுவர் திருக்குறள்’, ‘தேவாரம் திருவாசகங்கள்’ முதலான நூல்களினும் மிக்கது இல்லையாதல் தெற்றென விளங்கா நிற்கும். உலகியற்பொருள்களைக் கூறும் வழி அவற்றில் இழிபுற்றன வெல்லாம் விலக்கிச் சிறந்தன கூறுதலும், மக்கள் அகவியற் பொருள்களைக் கூறும்வழி அவற்றின் கண் ஒருப்பட்டுத் தோன்றும் காமவெகுளி மயக்கங்களைக் களைந்து அவற்றின்கட் சிறந்த அகவொழுக்கத்தைக் கூறுதலும் பாட்டிற்கு இன்றியமை யாத கடமையாம். எனவே, பாட்டு என்பது தூய்மைப்படுத்துதலே குறியாகக் கொண்டு நடப்பதென அறிதல் வேண்டும். இத்தூய்மைப் படுத்து முறை தழுவாத செய்யுட்கள் எத்துணை அழகு வாய்ப்பச் செயப்படினும், அவை பொருட்பேறுடைய வென்று புலனழுக்கற்ற அறிவாளரால் நன்குமதிக்கப்படா. பிற்றை ஞான்றைப் புலவரிற் பெரும்பாலார் பண்டைக் காலத்துத் தண்டமிழ்மாட்சி சிறந்த பாட்டினியல்பு தேறாராய், வெறுஞ் சொல்லாரவாரமும் எதுகைமோனை யமகம் திரிபு அந்தாதி சிலேடை முதலான புல் அலங்கார ஆரவாரமுமே பொருந்தப் பொருட்பேறிலவாம் பாட்டுக் களைக் கணக்கின்றிப் பாடி வீணே தமிழ்மொழி வளங்குறைத்துப் போதரு கின்றார். அது கிடக்க.* பொருட்பாகுபாடு 1 - 8: அன்னாய் ............................. வருந்துதி தோழி செவிலித்தாய் நிலை கூறி அறத்தொடு நிற்றற்குத் தொடங்குகின்றான். தாயே வாழக் கடவாய்! யான் கூறுவனவற்றை விரும்பிக் கேட்பாயாக. அன்னாய்! ஒளிபொருந்திய நெற்றியினையும் தழைத்த மெல்லிய மயிரினையுமுடைய என் தோழியின் உடம்பு நிறத்தினையும், உடம்பிற் செறியப் பொருத்தின அணிகலன் களையும் நெகிழச்செய்து மருந்துகளால் நீக்குதற்கரிதாகிய கொடிய நோயானது வந்த காரணம் யாதென்று நீ ஊரில் குறிவைத்து அறிய வல்லாரிடம் கேட்டும், அந்நோய் தெய்வத்தான் வந்த தென்று அவர் கூறுதலில் பலவேறு வகையான உருவத்தையுடைய தெய்வங்களை வாழ்த்தியும் வணங்கியும் கலந்த பூக்களைத் தூவியும் தூபம் இட்டும் வாசனைப் பொடிகளை வீசியும் இங்ஙனம் எல்லாம் அவைதம்மை வழிபட்டும் அதனானும் அந்நோய் தீராமையின் துன்பமுற்று அந்நோயை அறியாத மயக்கத்தினை யுடையையாய் நீயும் வருந்துகின்றாய் என்க. 9 - 12: நற்கவின் ................... கடவலின் தலைமகள் காதல் நோய்கண்டு தோழி தான் எய்திய நிலை கூறுகின்றாள். தலைமகளின் நல்ல அழகானது கெடவும் நல்மணங் கமழும் தோள்கள் மெலியவும், அதனாற் கையிலிட்ட வளை கழலுதலைப் பிறர் அறியா நிற்பவும், தான் தனிமையாயிருக்குந் துயர் மேன்மேல் வந்து வருத்தவும், அவள் தன் உள்ளத் தினளவே மறைத்து வைத்திருத்தலினால் தான் உயிர் வாழாமைக் கேதுவாகிய காதல் நினைவு இஃதென்று யான் சொல்லுதற்கு எளிதாகவன்றி வலிதாயிருத் தலினாலே யானும் அதனை வெளிவிடாது உள்ளடக்கி நடத்து வேனாயினேன் என்க. 13 - 26: முத்தினும் ...................... தேம்பும் தலைமகள் தானே தன் காதல் நினைவைத் தாய்க்கு அறிவிக்க விரும்பினாள் என்கின்றாள். முத்தினாலும் இரத்தினத்தினாலும் பொன்னினாலும் அவ்வளவு பொருத்த முறச் சமைத்த அணிகலங் கெட்டொழிந்தால் பின்னும் வந்து கூடினுங் கூடும்; தத்தங் குடிக்குரிய குண நிறைவும் மேம்பாடும் இயற்கை ஒழுக்கமுந் தம் பழந்தகைமை குறைந்தால் அக்குறைவால் உண்டாகும் இழுக்கைப் போம்படி கழுவி முன்போல் விளங்கு புகழுடைய வாக நிலைபெறச் செய்யும். அத்தன்மை தொல்லை மலம் அறத் தெளிந்த முனிவர்களுக்கும் எளிய காரியமாகாதென்று அடிப்பட்ட சான்றோர் கூறுவர். தாய் தந்தையர் இன்னார்க்குக் கொடுப்ப மென்றிருந்த விருப்பமும் அவரது அறியாமையும் ஒருங்கே ஒழிய நீண்ட தேரினையுடைய தலைவன் தந்தையால் நிறுத்தப்பட்ட அரிய காவலையுங் கடந்து நாங்கள் இருவேமுமாய் இதுவே நன்றென ஆராய்ந்து தழுவிய காந்தருவமணம் இத்தன்மைத்தாயிருந்ததென்று நாம் தாய்க்கு அறிவுறுத் தலினால் வரக்கடவதொரு குற்றமும் உண்டோ? இங்ஙனம் நாம் உண்மைகூறி நின்ற விடத்து நம் தலைவனுக்கே என்னைக் கொடுக்கும் அறநெறியில் அவர் இசைந்து வாராராயினும், நம் உயிர் போந் துணையும் இத்துயரை ஆற்றிக் கொண்டிருப்ப மாயின் இனி வரக்கடவ தாகிய மறுமையுலகத்தேனும் நமக்கு நந்தலைவனைக் கூடுதலுண்டாமென்று மான்போன்ற தன் கண்கள் கலங்குதல் அடையச் செயலற்று ஒழியாத் துன்பே நுகர்வாளாய் என் தலைவி மெலிகின்றாள் என்க. 27- 34: இகன்மீக் .................... தீமோ தோழி தன் தலைமகள் தனக்கியைந்த காதலனைக் கூடினாள் என்று அறிவிக்கின்றாள்; ஒருவர் ஒருவர்மேல் மாறுபாடுற்று அதனையே மிகுதியும் நடத்துகின்ற இரண்டு பெரிய வேந்தர்க்கு நடுவே அவரைப் பொருத்துவிக்குந் தொழிலில் நின்ற அறிவாளரைப்போல அவளது நோய்க்கும் நினது சினத்திற்கும் அஞ்சும் இரண்டு பெரிய அச்சங்களுடையே னாய் யானும் ஆற்றலாகாத துன்பமுறுகின்றேன்; கொடுத்த பின்பு எவ்வாற்றானும் நன்றே விளையுமென்பதும், இரண்டு குடியும் ஒக்குமென்பதும், குடியின் குணமும், சுற்றத்தார் உதவியும் இசைவித்துப் பார்த்துப் பின்னரும் பலருடனே சூழ்ந்து செய்யாது யாங்களே தனியாய்த் துணிபுற்றுச் செய்த தொன்றாயினும் என் தலைவியுயிர்க்குப் பாதுகாவலாய் அமைந்த பெறுதற்கரிய இவ் யாழோர் மணம் நேர்ந்தவகையை நீ நன்குணரற்பொருட்டுச் சொல்லுதற்கு அமைந்தேன், அது பற்றி நீ சினவா திருத்தல் வேண்டும். 35 - 39: நெற்கொள் .................... விடுத்தலில் செவிலித்தாய் தம்மைத் தினைப்புனங்காக்க விடுத்தமை கூறுகின்றாள்: நெல்லையுடைய நீண்ட மூங்கிலில் அந் நெல்லைப் பறித்துத் தின்றற்குத் தனது புழைக்கையை மேற்றூக்கி நின்று வருந்தின யானையானது அங்ஙனம் மேலெடுத்த தன்கை வருத்தந்தீர முத்துக்கள் நிறைந்த தன் கொம்பிலே தொங்கி விட்ட அதன் கையைப்போலத் துய்யுள்ள தலை வளைந்து ஈன்றணிமை தீர்ந்த பெருங்கதிர்களாலான நல்ல கொத்துக்களையுடைய சிறிய தினைப்பயிர்களில் வந்துவிழும் பறவைகளை வெருட்டி இங்ஙனந் தினைப்புன காவல் செய்து கதிரவன் மறையும் அந்திப்போதில் இல்லறத்திற்கு வருவீராகவென அன்னாய் நீ எம்மை விடுத்தாய் என்க. 40 - 106 : கலிகெழு ................ இருந்தனமாக அங்ஙனம் விடுக்கப்பட்ட தாம் தினைப்புனங்காத்துப் பின் விளையாடி யிருந்தமை தெரிவிக்கின்றாள். யாங்களும் அவ்வாறே போய், மனவெழுச்சி மிகுதற்குக் காரணமாக மரத்தின் மேலுச்சியிலே குறவன் இயற்றியதும் புலி கண்டு அஞ்சுவதுமான பரண்மேலேறி அவ்விடத் துள்ளனவாகிய மலைப்பக்கத்துப் பிரப்பங்கொடி யாலே அழகுபெறக் கட்டிய தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுமாகக் கிளியோட்டுமியல்புடைய கருவிகளை முறை முறையே கையிலெடுத்துக் கொண்டு அவற்றை ஓட்டிப் பின் ஞாயிற்றின் வெய்ய கதிர்கள் சுடுதலால் வெம்மை விளங்கும் நண்பகற் பொழுதிலே அவ்வெம்மை தாங்க மாட்டாமல் வானத்திற் பறக்கும் புட்களெல்லம் தம்மால் விரும்பப்படுகின்ற இருப்பிடங்களுக்குச் செல்கையினலே, அப்போது யாமுந் தினைப்புனங்காவலை விட்டேம். நீர்நிறைந்த பெரிய கடலுங் குறையும்படி அதன் நீரை மொண்டு கொண்டு அகன்ற கரிய வானிலே வீசுகின்ற குளிர்காற்றுத் தம்மேற் கலந்து படுதலினால் முரசு முழங் கினாற் போலும் இனிய குரலினையுடைய இடியேற்றுடனே கூடி வரிசையாய்ச் செல்லும் உயரத்தினவான முகில் களானவை ஆவியாய் நின்ற தந்தன்மை நீராய்த் திரிவுபட்டு, இனிய ஓசையினைத் தரும் முரசத்தினையும் கதிர் விளங்கும் அணிகலன்களையும் உடைய முருகக் கடவுள் பகைவராகிய அரக்கரைக் கொல்லற் பொருட்டுக் கையிலெடுத்ததும் விளங்கும் இலைவடிவினது மான வேற்படை பிறழ்ந்தாற் போலும் மின்னல் கலந்த தொகுதியினை யுடையவாய், அப்போது மலைமேல் நீரைப் பொழிந்தன. அங்ஙனம் அம்முகில்கள் நீரைப் பொழிந்த அளவிலே, எந் தலைமகனுக் குரித்தாகிய நீண்ட மலைமுகட்டினின்றும் கீழ் இறங்கிவருந் தெளிந்த நீரினை உடைத்தாய், விளங்கும் வெள்ளிய ஆடையினை ஒக்கும் அழகிய வெள்ளிய அருவியில் நீங்குதலில்லாத விருப்பத்தினை யுடையேமாய் ஒழியாமல் விளையாடியும் பின் பளிங்ககைக் கரைத்துச் சொரிந்தாற் போல்வதானே அகன்ற சுனையில் முழுகி விளையாடு மிடத்துக் குளிர்மிகுகின்ற மலைப்பக்கத்தில் எமக்கு விருப்பமான பாட்டைப் பாடியும் பொற்றகட்டிலே அழுத்தின நீலமணிபோலச் சிறிய முதுகில் தாழ்ந்துகிடந்த எமது பின்னிய கருங்கூந்தலை நீர்போகப் பிழிந்து ஈரம் அறத் துவர்த்தி உள்ளிடம் எல்லாம் சிவப்படைந்த விழிகளுடையே மாய் ஒள்ளிய செங்காந்தட்பூமுதல் வேங்கைப்பூ இறுதியாக வுள்ள மலர்களையும் பிற மலர்களையும் சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற புனமுறுங்கைப்பூவோடு ஒருங்கு சேர்த்து, அப்பூக்களின் மணத்தால் அங்கு மயக்கமுடையே மாய் அவற்றைப் பறித்தலில் வேட்கைப் பெருக்குற்றுத் திரிந்து பறித்து முகிலால் தன்னிடங் கழுவப்பட்ட அகன்ற கற்பாறையிலே அவை தம்மையெல்லாங் குவித்தும் நிறைந்த புள்ளொலிகளான வாச்சியங்களையுடைய குறுக்கிட்டுக் கிடக்கும் எதிரொலி மலையினிடத்தும் இசைவளப்பத் தோடு சொல்லப்படும் தெளிந்த பாட்டை நடுநடுவே பாடிப் பழகியுங் கிளிகளை ஓட்டியும், அம்மலர்களிலுள்ள புறவிதழைக் கிள்ளியெறிந்தும், பாம்பின் படம் போல் விரிந்த நிதம்பத்திலே கொய்து சமம் பெறத் தொடுத்த தழையை உடுத்தும் பலவேறு நிறத்தினையுடைய அழகமைந்த மாலைகளை எமது மெல்லிய கரிய முடியிலே எழில் பெறக் கட்டியும் தீப்போல் விளங்கும் செந்நிறத்தினையுடைய அழகான தளிர்கள் நிரம்பிய அசோகமரத்தினது பூந்துகள் சிந்தும் குளிர்ந்த நீழலிலே இருந்தேம்:- 107 - 115: எண்ணெய் ............. வெண்போழ்க்கண்ணி அசோக நீழலிலிருந்த தம்மெதிரே அழகும் ஆண்மை யுஞ்சிறந்த ஓரிளைஞன் வந்தனானகத் தோழி கூறுகின்றாள்: பலகாலும் எண்ணெய் பூசுதலாலே கடை குழன்று வளர்தலை உடையதாக இருக்க, நன்மணங் கமழுஞ் சந்தனக் கட்டையை அரைத்தெடுத்த குளிர்ந்து நறியதான மயிர்ச் சந்தனத்தை மணக்கப்பூச்சி, அதனாலுண்டான ஈரம் புலரும்படி விரலை உள்ளே செலுத்திக் கோதி அவிழ்த்து வைரமேறின அகிற்சட்டை புகைத்த அழகிய புகையை ஊட்டி, யாழினிசை போலும் அழகுமிகும் பாட்டைப் பாடுவதாகிய ஞிமிறு வண்டு ஒலிசெய்ய அகில் நெய்யையும் உடன் கலந்து தடவி அதனால் நீலமணியின் நிறத்தைக் கொண்டதான தனது கரிய பெரிய தலை மயிரிலே மலையிலுள்ளனவும் நிலத்திலுள்ளனவும் கொம்புகளிற் பூத்தனவும் சுனைகளின் மலர்ந்தனவுமாகிய பலநிறப்பட்ட பல திறப்பட்ட மலர்களை ஆய்ந்து கலந்து தொடுத்த......... ....* இனிப், புறத்தே தோன்றும் புறப்பொருளும் மக்கள் மனத்தே தோன்றும் அகப்பொருளும் விராய்க்கூறும் பாட்டுக்களில் ஒரு பாலன புறப்பொருளே மிகுதியுங் கூறி அகப்பொருளைச் சுருக்கிக் கூறும்; பிறிதொருபாலன அகப் பொருளே பெரிதுங் கூறிப் புறப்பொருளைச் சுருக்கிக் காட்டும்; வேறொருபாலன புறப்பொருள் அகப்பொரு ளிரண்டும் சமனொக்க வைத்துக்காட்டும். பட்டினப்பாலை போல்வன புறப்பொருளே மிகுதியுங்கொண்டு அகப்பொருளைச் சிறிதே குறிப்பனவாம்; இக்குறிஞ்சிப்பாட்டை யொப்பன அகப்பொருளே மிகவுஞ்சொல்லிப் புறப்பொருளைக் குறையவே கூறுவனனவாம்; முல்லைப் பாட்டுப் போல்வன அவையிரண்டுஞ் சமம்பெறக் கொண்டு வருவனவாம் என்க. இனி, இக்குறிஞ்சிப்பாட்டினை ஆசிரியர் கபிலர் ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழின் அருமை பெருமை புலப்படுத்தல் வேண்டி இயற்றினாராகலின், இதன்கட் கூறப்பட்ட பொருட்டொகுப்பும் நுட்பமும் வளப்பமும் எல்லாம் ஆரியம் வல்லார் ஒருசிறிதும் அறியாதனவா மென்பதூஉம் அவை செந்தமிழ் மொழிக்குச் சிறந் தனவா மென்பதூஉம் அறியற்பாலன. புறத்தே ஐம்பொறிக்குப் புலனாம் உலகத்தை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்டிணையென எழுகூறாகப் பகுத்தும், அகத்தே உயிருணர்வுக்குமாத்திரம் புலனாம் அகவுலகத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணையென வேறு எழுகூறாகப் பகுத்தும் ஆராய்ந்து அறிவுறுத்தும் முறை தொன்று தொட்டுத் தமிழ் மக்கள் நன்னாகரிகத்தின் மாத்திரமே காணப்படு வதாயிற்று. ஏனை ஆரியர் இத்துணை நுண்ணிய பொருளாராய்ச்சியைச் சிறிதும் உணர்ந்திலர். இப்பெற்றிப் பட்ட தமிழ்ப் பொருணுக்கம் பிரகத்தனுக்கு அறிவுறுக்கப்புகுந்த ஆசிரியர், மக்கள் அறிவும் இன்பமும் புறவுலகத்தோடு ஒருமையுற்று நிற்குமாற்றல் பரிசுத்தம் பெற்று மென்பதம் உறுதலை இப்பாட்டின்கண் வந்துழி வந்துழிக் கூறி, அவையிரண்டும் அதனினுஞ் சிறந்த அகவுலகின் இயல்பறியுமாற்றல் பரிசுத்தம் பெரிதடைந்து திகழ்ந்திடும் வகையினையே இப்பாட்டிற்கு உரிய பொருளாய் வைத்துரைத்திருக்கின்றார். இப்பாட்டின் கட் கூறுதற்கு முதன்மையாய் எடுத்த அகப்பொருட்டுறை இடையிடையே பதினான்கிடத்து நின்று நின்று போய் முடிவு பெறுகின்றது; இங்ஙனம் இடையிடையே நின்றுபோ மிடங்களே பாட்டின் முதன்மைப் பொருளோடு இயைத்துச் சொல்லுதற்கிசைந்த பிறபொருள்களைக் கொண்டுவந்து பொருத்து மிடமாம். இப் ‘பொருத்து வாய்’ இயல்பினை முல்லைப் பாட்டாராய்ச்சி, பட்டினப்பாலை யாராய்ச்சியில் விரித்துரை கூறினாம். ஆண்டுக் காண்க. இனி, ஆசிரியர் இப்பதினான்கு பொருத்துவாய் களினும் தாம் கூறும் அகப் பொருளோடு ஒருப்படுத்துச் சொல்லுதற்குரிய பொருளைக்கொண்டுவந் திணைக்குமாறு பெரிதும் வியக்கற்பாலதாம். இப்பதினான்கு பொருத்து வாய்ப்பகுப்பும் முன்னே பொருட் பாகுபாட்டின்கட் டெளித்துரை கூறப்படும். இனி, அப்பொருத்துவாய் பதினான்கினும் முறை முறையே கருக்கொண்டு செல்லும் இப்பாட்டின் முதன்மைப் பொருள் யாதோ வெனிற் கூறுதும். குறிஞ்சி என்னும் மலைநாட்டிற்கு உரிய காவலனான ஒரு கட்டிளைஞன் தான் வேட்டமாடுதல் குறித்துப் பல் வேலிளைஞரை யொப்பப் பல வேட்டை நாய்கள் தன்னைப் புடைசூழ்ந்துவரப் பிறிதொரு மலைப்பாங்கரிலே வந்தான். அம்மலைப்பாங்கருக் குரியான் மகளான ஓரழகியமங்கையும் அவடன் தோழியும் தஞ்செவிலித்தாயாரால் ஏவப்பட்டு ஆங்குள்ள தினைப்புனத்தைக் காவல் செய்தபின்னர், அவரிருவரும் ஆங்குள்ள சுனைநீரிலே விளையாடிப் பல பூக்களைத் திரட்டிக்குவித்து ஒரு சோகமரநீழலிலே வந்து அமர்ந்திருந்தார். இவரிங்ஙனமிருப்ப முன் வேட்ட மாடுதற்பொருட்டு இம்மலைப்பாங்கரில்வந்த அக்கட் டிளைஞன் தான் வேட்டங்கொண்டு துரத்திய சில விளங் கினங்களைப் பின்பற்றியோ டிவராநிற்ப, அவை எவ்வாறோ இவனைத்தப்பிப் போய்விட்டன. பின்னர் அவன் அவற்றைத் தேடிக்கொண்டு அங்கு வந்து அவற்றைக் காணானாய் அசோகமரநீழலில் அவ்வழகிய மங்கையும் அவள் தோழியுமிருப்பக் கண்டான். *கண்டு அவர் தம்மிடத்தே அணுகி, ‘இங்கு யான் சில விலங்குகளை வேட்டமாடி இழந்தேன்; மெல்லியலீர்! அவைதாம் இங்கு வரக் கண்டீரேற் சொல்லுமின்! என்று வினாவினான். அவர்கள் அதற்கு விடைபுகலாது வாளா திருப்பக் கண்டு “நங்கைமீர், நீவிர் அது சொல்லீராயினும் என்னோடு சில சொற்பேசுதலும் நுமக்கு இழுக்காமோ?” என்று கூறி அவர் விடைகூறுங் காலம் பார்த்துநின்றான். இங்ஙனம் இவர்கள் இருக்க, ஆண்டுள்ள தினைப்புனத்துப் பயிர்களை யழிக்கும் ஒரு பேரியானை வேட்டுவர் அடித்துத் துரத்த அஃது இவர்களிருக்குமிடத்தே பிளிறியோடி வந்தது. அது கண்டு அம்மகளிர் பெரிதும் நடுக்கமெய்தி வேறு செல்ல மாட்டாராய்த் தம்மிடத்தே வந்து வினாவிய அக்கட்டிளைஞனை அணுகி அஞ்சிநிற்ப, அவனும் தான் பிடித்த வில்லிலே கணையைப் பூட்டி எய்து அதனை விரைந்தோடிப் போகச்செய்தான். அதன்பின் அஞ்சிய அம்மளிர்க்கு ஆறுதல் கூறி அவரைத் தேற்றியபின் தலைமகளான அவ்வழகிய மங்கையின் சுடர்நுதலில் அச்சத்தாற்றோன்றிய வியர்வை துடைத்து, ‘யான் நின்னை மணம்புரிந்தின்பம் நுகர்வேன்’ என்று கூறினான். அது கேட்டு நாணும் அச்சமுமுற்று அவள் அவனை விட்டு அப்பாற் போகவும் அவன் அவளை விடானய் மார்புறத்தழுவி, ‘நின்னை மணம்புரிந்து பலர்க்கும், உபகரித்தலோடு கூடிய இல்லறத்தை நடாத்துவேன்; என் சொல்லை உண்மை என்று தெளிவாயாக’ என மலைமேல் உறையும் முருகக்கடவுளைச் சுட்டிச் சூளுரைப்ப, அவளும் அதற்கு நெஞ்சு அமர இருவரும் அன்றைப்பகலெல்லாம் ஆண்டுள்ள சோலையிற் கழித்துப், பின் அவரிருவரையும் அவர் ஊரின் வாயிற் புறத்துள்ள நீராடுதுறையிலே நிறுத்திப் போயினான். பிறகு, ஒவ்வொரு நாளிரவும் ஆங்குவந்து தன்றலைவியைப் புல்லிப் போவன்; சில நாளில் காவலரானும், நிலவுவெளிப்படுத லானும் நாய்குரைத்தலானும், அவள் தாய் உறங்காதிருத்த லானும் அவளை முயங்குதல் வாயாதாயினும் அதுபற்றி மனஞ்சிறிதும் வருந்தாது போவன்; இங்ஙனம் இவன் பலரும் அஞ்சுதற் கேதுவான தன்னூரில் இராப்பொழுதின்கண் வந்து போதல் நினைந்தும், அவன் வரும் மலைவழி மிக்க இடருடைத்தாதலை நினைந்தும் என் தலைமகனுக்கு என்னாமோ என எண்ணி எண்ணி ஆற்றப்பெறாது வருந்தித் தலைமகள் மெலிவாளாயினள். அந்நிலையை அவள் நற்றாய் செவிலித்தாய் கண்டு ‘என்மகட்டு இவ்வேறுபாடு எற்றினா னாயிற்று?’ என்று கட்டுவித்தியையும் வேலனையும் வினாவ அவர் ‘இது தெய்வத்தான் வந்தது’ என்று கூறினர். அது கேட்டுத் தெய்வத்தைப் பலவகையாற் பரசியும் அந்நோய் தீர்ந்திலதாகப் பின் தலைமகள் தோழி தன் றலைமகட்கு நேர்ந்த நோயின் வரலாற்றை முன்னடந்தபடியே வைத்து முழுதும் விடாமற் கூறினளாக இச்செய்யுள் ஆசிரியர் கபிலரால் இயற்றப் படுவதாயிற்று என்க. இங்ஙனம் நிகழ்ந்த காதற்கிழமையின் வரலாற்றை நடந்தவாறே எடுத்துத் தோழி தாய்க்கு அறிவுறுத்து தலைப் பழைய தமிழாசிரியர் ‘அறத்தொடுநிற்றல்’ என்பர். தலைமகன் தலை மகளுக்கு இடைநிகழ்ந்த இக்காதற் களவொழுக்கம் அறவொழுக்கமாயவாறு யாங்ஙன மெனின்; அவ்வொழுக்கம் தாயறிவினோடும், தலைமகள் பெருமை யோடும் தலைமகள் கற்பினோடும் தோழி தனது காவலோடும், தலைமகள் நாணினோடும், உலகவொழுக்கத் தோடும் மாறுகொள்ளாது தெய்வத்தான் நிகழ்ந்த தாகலின் என்க. அஃதெங்ஙன மெனின்; தாய் தானே ‘தினைப் புனங்காத்து வருக’ என்று இவரை ஏவினமையின் தாயறி வோடு மாறுகொள்ளாதாயிற்று; தம்மைக் கொல்ல வந்த யானையை ஓட்டி இவரைக் காத்த தன்றலைமகன் நன்றியை நினைத்து அவனோடு ஒருப்பட்டமையின் அது தலைமகள் பெருமையோடு மாறுகொள்ளாதாயிற்று: தன்றலைமகன் வரும் வழி ஏதங்கள் பலவுமுடைத்தாகலின் அவனுக்கு ஏதாமோ என நினைந்து மெலிந்தமையின் அஃதவள் கற்பொழுக்கத்தோடு மாறுபடாதாயிற்று; தோழியும் உடனிருந்தகாலத்தே இங்ஙனம் இது நிகழ்ந்த தாகலின் இஃதவள் காவலொடு மாறுகொள்ளாதாயிற்று; யானைகண்ட அச்சத்தால் தலைமகள் தன் நாண்மறந்து தலைமகனைச் சேர்ந்து நின்றமையின் அஃது அவள் நாணினொடு மாறுகொள்ளா தாயிற்று; தம்மைப் பாதுகாத்தார்க்கே மகளிர் உரியர் என்பது தோன்ற ‘உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர், கொண்டாற்குரியார் கொடுத்தார்’ என்பவாகலின் அஃதுலக வியலோடு மாறுகொள்ளா தாயிற்று. இங்ஙனம் ஒருவாற்றானும் ஒருவர் மேலும் வழுக்கின்றி நடந்த அக்காதற்கிழமை, “வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வானுகத்தின் றுளைவழி நேர்கழீ கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக் கிளைவயி னீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த விளைவையல் லால்விய வேன்நய வேன்றெய்வ மிக்கனவே”. என்று சொலப்பட்டவாறு தெய்வம் இடைநின்று பொருத்த நேர்ந்ததொன்ற மாகலின் அதனை அறவொழுக்கமென்றும், அவ்வொழுக்கம் நடந்த முறையை அறிவித்தல் அறத்தோடு நிற்றலென்றும் ஆசிரியர் தொல்காப்பியனாரை யுள்ளிட்ட சான்றேரால் அது வகுக்கப்பட்டதென்க. இனி, இத்தலைமகன் றலைமகள் புணர்ந்த புணர்ச்சிக்கு ஏதுவாய் நின்றது, ஒரு களிற்றியானையாதல் பற்றி இதனைக் ‘களிறுதரு புணர்ச்சி’ என்று வழங்குப. இன்னும் இவ்வாறே ‘பூத்தரு புணர்ச்சி’, ‘புனறரு புணர்ச்சி’ என்பனவும் உள. அவற்றின் விரிவெல்லாம் தொல்காப்பியம், இறையனார் களவியல் நக்கீரனாருரை, திருச்சிற்றம்பலக் கோவையாருரை முதலியவற்றிற் காண்க. முற்கூறியவெல்லாம் ஒக்குமன்னாயினும், ‘பாட்டு’ என்பது மக்களுயிர்க்குரிய முக்குற்றமான காமவெகுளி மயக்கங்களைக் களைவதென மேலெல்லாங் கூறி வைத்து, ஈண்டு இப்பாட்டுக் காமவொழுக்கத்தின் மேற்றாய் வந்த தென்றுரைத்தல் முன்னோடு பின் மலைவாய் முடியுமாலோ வெனின்:-முடியாது. காமம், காதல் என்னுஞ் சொற்பொருள் வேறுபாடு சிறிதாயினும் அறியப்படின் அது குற்றமாத லில்லையென்பது இனிது விளங்கும். அது காட்டுதும்; காமம் என்பது உயிரோடொருமித்து நிற்கும் மலவயத்தாற் றோன்றுவது; காதல் என்பது உயிரின் உள்ளொளியாய் வயங்கும் அன்பின் வயத்தாற் றோன்றுவதாகும். மலவயத்தாற் றோன்றும் காமம் பிறிதோருடம் போடு இயைந்து இன்பம் நுகர்தற்பயத்ததாம் விழைவினை விரைவிற்றோற்றி விரைந்து அழிவெய்தும்; அன்பு வயத் தாற் றோன்றும் காதல் பிறிதோருயிரின்கண் உள்ளொளியாய் அசையும் அன்பினோடியைந்து நிற்றற்பயத்ததாம் பெரு வேட்கையினைத் தோற்றி “ஊழிபெயரினும் தான் பெயராது பேரின்ப வுருவாய் நிலைபெறும்”. ஒருத்திமேற் காமுற்றா னொருவனும் ஒருத்திமேற் காதலுற்றான் ஒருவனும் எப்பெற்றியராயிருப்பரெனத் தெளியவறியின் இதனுண்மை இனிது புலப்படும். ஒருத்திமேற் காமங்கொண்டான் ஒருவன் அவளைப் புணர்ந்து இன்பநுகர்ந் தொழிதலையே குறிப்பாய்க் கொண்டொழுகுவான். அவ்வின்பம் நுகர்தற்பொருட்டு வேண்டப்படும் வினைகளெல்லாம் விரைவிற் செய்து அவளைக் கூடியபின் அவ்வளவோடு அவள்மேற் பற்றறுந்து, பிறளொருத்தியையும் அங்ஙனமே விழைந்து ஒரு வரை துறையின்றிப் போவன். இனி ஒருத்திமேற் காதல்கொண்ட ஆண்மகனோ அவள் உயிர் உள்ளொளி யான அன்பு தன் உள்ளொளியுணர்வோடு இயைபுற்றலையே பெரிதும் விழைந்து உடம் போடுண்டாம் புணர்ச்சியை ஏனையோன்போல் விழையானாய், அவளே தானாய் உருகி அவளைக் காணினுங் காணவிடினும் அவள் தேமொழியைக் கேட்பினுங் கேளா விடினும் அவளைப் புணரினும் புணரா விடினும் என்றும் ஒருபெற்றிப் பட்ட வேட்கையுடை யோனாய் அவளுணர் வெல்லாந் தன்னுணர்வாய் அவளுயிரெல்லாந் தன்னுயிராய்க் கொண்டுநிற்கும். அவள் தன் எதிரே யிருப்பின், காமங் கொண்டோன் போல் மேல்விழுந்துபற்றி விரைவிற் புணர்தலைச் செய்யாது தான் மிக மன அமைதியுற்று இருந்து அவளை விழியால் விழுங்கி மனத்தாற் பிணித்து அவளுயிரைத் தன்னுயிராக ஒன்றுறுத்திப் பேரின்ப நிலையில் வைகுவான். இங்ஙனம் இவர் தமக்குள் நிகழுங் காதலின் உண்மை நிலையை மாணக்கர் இனிதுணர்ந்து கோடற் பொருட்டே நற்றமிழ்த் தெய்வமான இறையனார், ‘தானே யவளே தமியர் காணக், காமல் புணர்ச்சி இருவயினொத்தல்’, என்றருளிச் செய்ததூஉம், ஆசிரியர் நக்கீரனார் இவர்தம்மை, “ஓராவிற் கிருகோடு தோன்றினாற்போல,” என்றுவமையில் வைத்துக் கூறியதூஉம், மாணிக்கவாசக அடிகள், “காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம் ஏகத் தொருவ னிரும்மொழி லம்பல வன்மலையில் தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்ப துன்பங்களே” என்றருளிச் செய்ததூஉம் என்க. இப்பெற்றித்தாகிய காதலொழுக்கம் இறைவனரு ளொளியோ டொன்றுபட்டு வரைவின்றி நுகரும் பேரின் பத்தோடொப்பதாகலின், இதனை மிகப் பாராட்டி அறிவுடையோர் கூறுவாராயினர். இனி, இம்மக்கட்பிறவியின்கண் நுகரப்படுமின்பங் கட்கெல்லாம் அப்பாற் பட்டுக்கடவுட்பேரின்பவெல்லைக் கண் நிற்பதாகலின், ஆசிரியர் கபிலர், அதனை இக்குறிஞ்சிப் பாட்டின்கட் கூறுவாராயினர். இப்பாட்டின்கட் கூறப்பட்டது வெறுங்காமப்பொருளென்று கொள்ளற்க. அஃதெற்றாற் பெறுதுமெனின்:- இப் பாட்டின்கட் கூறப்பட்ட தலைமகன் உள்ளச்சிறப்பைத் தோழி கூறுகின்றுழி, “...........................அதற்கொண் டன்றை அன்ன விருப்போ டென்றும், இரவரன் மாலைய னேவரு தோறுங் காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினும் நீதுயி லொழியினும் நிலவுவெளிப் படினும் வேய்புரை மென்றே ளின்றுயி லென்றும் பெறாஅன் பெயரினும் முனிய லுறாஅன் இளமையி னிகந்தன்று மிலனே வளமையிற் றன்னிலை தீர்ந்தன்று மிலனே” (வரிகள் 237 - 245) என்று வைத்து அவன் காதலுள்ள மாட்சி வகுத்துக் கூறிய வாற்றனே நன்கு பெறப்படு மென்பது. இனிக் காமங் கொண்டோர் அக்காமவிழைவை நிரப்புதற் பொருட்டுத் தீது பலவும் புரிந்து தமக்கும் பிறர்க்கும் பயனின்றி வாளா கழிந்து ஒழிவர். இனிக், காதல் கொண்டாரோ தம்மாற் காதலிக்கப் பட்டாரோடு ஒருப்பட்டு நின்று தமக்கும் உலகுக்கும் நன்றே இயற்றுவர். அஃது இப்பாட்டின்கட் டலைமகன் தலைமகளைத் தேற்றும், “சாறயர்ந் தன்ன மிடாஅச் சொன்றி வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப மலரத் திறந்த வாயில் பலருணப் பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில் வசையில் வான்றுணைப் புரையோர் கடும்பொடு விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங் கறம்புணை யாகத் தேற்றி” (வரிகள் 201 - 208) என்னும் பகுதியால் இனிதுணரப்படும். இனிக், காமம் தன்னையுடையானுள்ளத்துத் தீய நினைவுகள் பலவும் விளைத்து அவனொழுக்கத்தைத் திரிபடையச் செய்யும். காதலோ அவனுள்ளத்து முன் சிறிதாயினு மிருந்த காம வெகுளிமயக்கங்களை வேரோடு அகழ்ந்து போக்கி நல்லறிவு நற்குணங்களை ஆழஊன்றும். அது தலைமகள் தன்காதலனிடத்துத் தான் உரிமை கொண்டொழுகியவாற்றை நாம் அறிவிக்கக் கடவேம் என்றதும், அது குற்றமாகாது நன்றேயாமென எண்ணியதும், அங்ஙனம் அறிவித்தபின்னரும் நந்தாய் தந்தையர் நமதொழுக்கத்துக்கு உடம்பட்டு நந்தலைவனுக்கு நம்மைக் கொடுக்க நேர்ந்திலராயின் நாம் உயிர் துறந்தபின்னாவது நந்தலைவனை மறுமையுலகிற் கூடிவைகுவே மென்றதும் அவடனக்குக் காமவெகுளி மயக்க வியைபு அறுந்து போனமை நன்கு தெரிக்கலுறும். அது, “முகத்தினும் மணியினும் பொன்னினு மத்துணை நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ் சால்பும் வியப்பு மியல்புங் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி யையர்க்கு மந்நிலை எளிய வென்னார் தொன்மருங் கறிஞர் மாதரு மடனு மோராங்குத் தணப்ப நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி இருவே மாய்ந்த மன்ற லிதுவென நாமறி வுறாலிற் பழியு முண்டோ ஆற்றின் வாரா ராயினு மாற்ற ஏனை யுலகத்து மியைவதா னமக்கென” (வரிகள் 13 - 24) என்னும் இப்பாட்டின் பகுதியாற் பெறப்பட்டது. அற்றேல், காமம் காதல்போலப் பேரின்பம் பயவாதா யினும் அது சிறிதா யினும் இன்பம் நல்குதலென்னை, அவ் வாற்றல் அது காதலோடொப்பச் செல்லு மாம் பிற வெனின்:- அறியாது கடாயினாய், உயிர் சிவத்துள் நின்றுழிப்போல மலத்துள் நின்றுழியும் இன்பமெய்தும்; அஃதொருவன் கேவலதுரியா தீதத்தில் மலவயப்பட்டுக் கிடந்து அயர்ந்துறங்கி விழித்தெழுந்த பின் யான் நன்றாய்த் தூங்கினேனெனக் கூறுதலால் பெறப்படும். இனி, ஒருவர் திருவாசகத்தைப் படிக்கும்பொழுது தன்னுணர்வற்று அறிவுகரைந்து அருளிற் நோய்ந்து கண்ணீரொழுகப் பெரியதோ ரின்பெய்தி நின் மலதுரியா தீதமுற்று அதனைப் பிரிந்து வந்தபின் ஆ இதன் நிலை என்னென்பேன்! எம்பெருமான் திருவருளொளி யிலிங்ஙனமே என்றும் யான் நின்பேனோ என்றுரைக்குங்hற் சிவத்துள் நின்றவழி இன்பம் எழுதலும் பெறப்படும். இங்ஙனம் இருவகை நிலையினும் இன்பமெழுதல் பற்றி மலநிலையுஞ் சிவநிலையும் ஒன்றெனக் கொள்ளப்படுமோ? அவ்வாறது கொள்ளப்படுமாயின் மின்மினியும் ஞாயிற்று னொளியும் ஒன்றெனக் கூறுதலும் வாய்வதா மன்றோ? மேலும் மலத்துள் உறங்கி இன்புறுவதெல்லாம் பின்னாளில் விழித்தெழுந்து உலகப் பெருங்கவலைச் சேற்றிற் புரண்டு வரம்புகடந்த துன்ப மெய்துதற்கேயாம். சிவத்துள் உறங்கி இன்புறுவதெல்லாம் பின்னிவ்வுல கிடைப்பட்டு அதனோ டுண்டாம் பற்றைத் துவரக்கழித்து அச்சிவத்தின்பாலே என்றும் நிலைபெறலை ஊக்குதற் பொருட்டாம். ஆதலால் இத்திறத்துள் வைத்து நன்றெனத் தழுவப்படும் காதலின்பத் தோடு காம இன்பம் சமமென வைத்துக் கூறுதல் பெரியதோரிழுக்காமென மறுக்க. இங்ஙனம் நன்றின்பா லுய்ப்பதாம் விழுமிய காதற் குறிஞ்சியொழுக்கத் தினைப் பாட்டினுட்பம் முதிரச் சுவைக்கு மாறு வைத்துப் பிரகத்தனுக்கு ஆசிரியர் அறிவுறுத்த வண்மை ஈண்டு ஒருசிறிது விளக்கப்படலாயிற்று என்க. அடிக்குறிப்புகள் 1. குறிஞ்சிப் பாட்டிற்கு அடிகளார் எழுதிய ஆராய்ச்சியுரையுள் 115 அடிகட்குரிய உரைகளே கிடைத்துள. எஞ்சியவை கிடைத்தில. எனவே அந்த 115 மூல அடிகள் மட்டுமே ஈண்டுத் தரப்பட்டுள்ளன. 2. இதன் முன் தொடர்பான பகுதி கிடைக்கப்பெறவில்லை. 3. இதற்கு மேலுள்ள பகுதியும் கிடைக்கவில்லை. 4. “கருங்கண் ணனையறி யாமைநின் றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய் வருங்கண் ணனையவன் டாடும் வளரிள வல்லியன்னீர்! இருங்கண் ணனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தில் மருங்கண் ணனையதுண் டோவந்த தீங்கொரு வான்கலையே” 5. “இரத முடைய நடமாட் டுடையவ ரெம்முடையார் வரத முடைய வணிதில்லை யன்னவ ரிப்புனத்தார் விரத முடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேற் சரத முடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே” பின்னிணைப்பு குறிஞ்சிப்பாட்டு ஓர் அறிமுகம் - இரா. இளங்குமரனார் குறிஞ்சிப்பாட்டு - குறிப்பு வரைக. குறிஞ்சி என்னும் அகத்திணை பற்றிப் பாடிய பாடல் குறிஞ்சிப்பாட்டு எனப்பட்டது. இது பத்துப்பாட்டு வரிசையில் எட்டாவது பாட்டாகும். இதனைப் பாடியவர் கபிலர் என்னும் சங்கச் சான்றோர் ஆவர். இப்பாடல் அகவலால் அமைந்தது; இருநூற்று அறுபத்தோர் அடிகளையுடையது. இப்பாடல் பாட்டுடைத் தலைவன் யார்? இப்பாடல் அகப் பொருளே பொருளாகப் பாடப் பட்டதால் பாட்டுடைத் தலைவன் இல்லாமல் அகப்பொருள் தலைவனாகச் சுட்டப்படும் களவித் தலைவனையே தலைவனாகக் கொண்டு எழுந்ததாகும். கிளவித் தலைவன் என்பான் பெயர் சுட்டப்படாதவன். தலைவியும் அவ்வாறே ஆவர். பிறரும் தாய் செவிலி தோழி முதலாகச் சுட்டப்படுதல் அல்லாமல், பெயர் சுட்டப்படாராம். குறிஞ்சி அகப்பொருள் பற்றி விளக்கம் வரைக. குறிஞ்சி என்பது அகத்திணை ஒழுக்கத்தில் முற்பட்டு நிற்பதாம். மலையும் மலைச்சார்ந்த இடமும், கூதிர் யாமப் பொழுதும் முதற்பொருளாகக் கொண்டு அமைவது. அதன் கருப்பொருள், தெய்வம் உணவு முதலியவை பற்றியiவாயம். குறிஞ்சித் தெய்வம் மலைகிழ வோன் எனப்படும் சேயோனாம். உணவு தினை தேன் முதலியவையாம். அதன் பண்ணும் யாழும் பறையும் குறிஞ்சிப்பண், குறிஞ்சி யாழ் குறிஞ்சிப்பறை என்பனவுமாம். குறிஞ்சியின் உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் சூழ்நிலைகளுமாம். இதனைப் பாடிய புலவர் யார்? சிறுவிளக்கம் தருக. இதனைப் பாடியவர் குறிஞ்சி பாடுதற்கே பிறந்த பிறவி யென நிலைநாட்டிய குறிஞ்சிக் கபிலராம்; பறம்பு மலைக் கோமான் பாரியின் பேரன்பில் ஈடுபட்டு வாழ்ந்து, அவன் வாழ்ந்த காலத்தில் உடனாகி இருந்தும், அவன் பெரும் பெயர் நிலை உற்றக் காலத்தில் அவன் மகளிர்க்குச் செய்யும் கடன் களையும் மேம்படச் செய்து, அவனைப் பிரிந்து வாழ இயலாராய் அவனொடும் சேரக் கனல்புகுந்து கல்லாகிய பெரியருமாம். ‘கபில பரணர்’ எனச் சான்றோரால் புகழப்பட்ட இரட்டை யருள் ஒருவர் அவர். மதுரை சார்ந்த திருவாதவூர், அவர் பிறந்தவூர் என்று பின்னூல்களில் சுட்டப்படுகின்றது. கபிலர் பாடிய பாடல்களாக அறியப்படுவன எவை? சங்கச் சான்றோர் தமிழ்க் கொடையுள் முற்பட்டு நிற்பவர் கபிலரே ஆவர். அவர் பாடியனவாக அறியப்படுவன வருமாறு; பத்துப் பாட்டுள் குறிஞ்சிப்பாட்டு அவர் பாடியது. நற்றிணை (20), குறுந்தொகை (29), ஐங்குறுநூறு (100), பதிற்றுப்பத்து (10), கலித்தொகை (29), அகநானூறு (17), புறநானூறு (30), என்பவற்றுள் அவர் பாடியனவாக 235 பாடல்கள் கிடைத்துள. தொகை நூல்களுள் பரிபாடல் ஒன்று நீங்கிய ஏழிலும் அவர் பாடல்கள் இடம் பெற்றுள. தனிப்பாடல்கள் சிலவும் அவர் பெயரால் உண்டு. இன்னா நாற்பதும் பிறவும் பாடியவர் பிறிதொரு கபிலர் ஆகலாம். கபிலர் குறிஞ்சிப் பாட்டைப் பாடக் காரணமாக இருந்தவன் யாவன்? அவனுக்காக இப்பாட்டை ஏன் பாடினார். கபிலர் ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்கு பாடியது இப்பாட்டு. ஆதலால், அவனுக்காகப் பாடினார் என்பதை அறியலாம். அவன் தமிழ் நாட்டவர் வாழ்வியலை அறிவதற்கு விரும்பினான். அதனால், தமிழர் வாழ்வியலாம் அகவாழ்வில் மேம்பட்ட காதற் கற்பு நெறியைப் பாடுதல் வழியாகத் தமிழ் அறிவித்தலே செவ்விய முறை எனத் தேர்ந்து தெளிந்து பாடினார். ஏன் காதற் கற்பை விளக்கும் பாடலைப் பாடினார்? அவன் தமிழ் அறிய விரும்பினான் ஆதலாலும், தமிழ் என்பது தமிழ்மொழி என்னும் அளவில் நில்லாமல் தமிழர் வாழ்வியலையும் சுட்டும் என்பதை உணர்த்தவும், அவ்வாழ்வியலுள் நனி சிறந்ததாகவும், கற்பு வழி மணமே மணம் என்பதைக் கொண்ட ஆரிய வழியினனாக அவன் இருந்தாலும், அந் நெறியினும் உயர் நெறி காதல் வழியாக ஏற்படும் கற்பு நெறியே ‘இயற்கை வாழ்வியல் நெறி’ என்பதை முழுதுற விளக்க வல்லது ஆதலாலும், அவனுக்கு அதன் சிறப்பைக் காட்டுதலே தமிழறிவுறுத்தலாக அமையும் எனக் கொண்டு பாடினார். குறிஞ்சித் திணையுள் இப்பாடல் எத்துறை சார்ந்தது? விளக்குக. குறிஞ்சித் திணையுள் இப்பாடல், ‘தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல்’ என்னும் துறை சார்ந்ததாம். தலைவி கொண்ட மனமாசில்லாக் காதலை அறிந்த தோழி, அக்காதலற மாண்பைத் தன் தாயாகிய செவிலித் தாய்க்கு உரைப்பதாக அமைந்ததாகும். பின்னர்ச் செவிலித் தாய், தலைவியைப் பெற்றவளாம் நற்றாய்க்கு உரைத்துக் கற்பறத்தில் நிலைப் படுத்துவதாக அமைவதாம். தோழி எப்படி அறத்தொடு நிற்கிறாள்? அன்னையே நீ நெடிது வாழ்வாயாக! யான் கூறப்போகும் செய்தியைக் கேட்டு நலம் செய்வாயாக! என் தோழியாம் தலைவி தன்னால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு பெருந்துயரை அடக்கி வைத்துக் கொண்டுள்ளாள். அத்துயரால் மெலிவடைந்து அணிந்த அணிகலன்கள் அமையும் நிலையில் இல்லாமல் கழல்வதாயின. அவள் கொண்டுள்ள நோய்க்கு அந்நோயை எதனால் அடைந்தாளோ அம்மருந்து அன்றி வேறு மருந்து இல்லை. அதனை வெளிப்படுத்தும் துணிவு அவளுக்கு இல்லாமையால் யான் என்னுள் மறைத்தும் முடியாமல் உரைக்க லானேன் எனத் தொடங்கினாள். தோழி தாய்க்கு உரைத்ததென்ன? தலைவியின் இயற்கையான அழகு குறைந்தது; அவள் தோள்கள் மெலிவுற்றன; வளையல்கள் கழன்றன; அவள் அந்நிலையை அடைதலைக் கண்டும் அந்நிலை அவள் அடைய என்ன காரணம் என்பதை நீ அறிந்து கொள்ளவில்லை. நீ உண்மைக் காரணம் அறியாமல் பூக்கட்டிப்போட்டுப் பார்த்தாய்; கழங்குக் காயை எண்ணி அறியப் பார்த்தாய்; குறி சொல்பவரை நெருங்கி அவரிடம் காரணம் வினாவினாய்; உண்மை அறியாத பிறரும் இது தெய்வக் குறையால் நேர்ந்ததாகச் சொல்ல பல தெய்வங்களுக்கும் படையலிட்டு வழிபட்டாய். அதனால் அந் நோய் தணியாமையால் தலைவி நிலை கண்டு மேலும் வருத்தமே கொண்டாய்” என்றாள். இருவர் வருத்தமும் அறிந்த தோழி என்ன செய்ததாகக் கூறினாள்? உங்கள் வருத்தத்தை அறிந்த யான் தலைவியினிடம் உண்மையைக் கூறுமாறு வேண்டினேன். அவள், “முத்து மணி பொன் முதலியவற்றால் செய்த அணிகலம் தொலைந்து போனாலும் மீளவும் அடைதற்கு இயலும், ஆனால் அவ்வணிகலங்களினும் மேம்பட்டதாம் ஒழுக்கம் கெட்டால் அக்கேட்டை விலக்கி மீட்டும் பெற்றுப் புகழ் பெறல் எத்தகைய அறிவர்க்கும் துறவர்க்கும் எனினும் முடியாதது ஆகிவிடும் என நூலறிவு மிக்கோர் தெளிவாகக் கூறுவர். ஆதலால் யானும் என்னை விரும்பும் தலைவனும் ஒருமனப்பட்டு ஈருடல் ஓருயிர் ஆயினோம் என்பதைத் தாய்க்குத் தெரிவித்தால் நமக்குக் குறைவு வாராது; நெஞ்சார ஏற்றுக் கொள்வர்” என்றாள்! தலைவி கூறியதைக் கேட்ட தோழி உறுதியின்றி நோக்கத் தலைவி என்ன கூறினாள்? “நம் நெஞ்சக் கலப்பை எடுத்துக் கூற அவர்கள் நம் தலைவர்க்குத் தர இசையார் எனின் அதனாலும் ஒன்றுமில்லை. வாழும் நாளெல்லாம் நாம் பொறுத்திருந்து இறப்போமாயின் இப்பிறப்பு ஒழிந்து மறு பிறப்பிலாயினும் நம் தலைவனை அடையும் பேற்றைப் பெறுவோம் என்று உறுதியாகக் கூறினாள்” என்றாள். தோழி தாயினிடம் தன் நிலையாகக் கூறியதென்ன? “மான் போன்ற பார்வையுடைய தலைவி மயங்கியவளாய் இருப்பதையும், அவள் நிலையை நோக்கி நீயும் அவலப்படுவதையும் எண்ணி யான் செயல் இழந்து தவிக்கிறேன். பகை கொண்டு நிற்கும் வேந்தர் இருவரை அமைதிப் படுத்திப் போர் ஒழியுமாறு செய்ய வல்ல சான்றோர் போல உங்கள் இருவர் துயரையும் அமைதிப்படுத்தி நலம் செய்ய ஆற்றாதவளாய் யானும் வருந்துகிறேன்” என்று கூறினாள். தோழி தாயினிடம் மேலும் கூறியதென்ன? “அன்னையே, நம் முந்தையர் தேர்ந்து கூறிய முறைப்படி நம் குடிக்குத் தக்க குடிமைச் சிறப்பும் பண்புச் சிறப்பும் சுற்றத்தார் நலச் சிறப்பும் ஒத்திருக்கக் கண்டே இம்முடிவுக்கு நாங்கள் வந்தோம்” என்றாள். காதல் நிகழ்ந்த வகையைத் தாய்க்குத் தோழி எவ்வாறு கூறுகிறாள்? அன்னையே இக்காதல் நிகழ்ந்த வகையைக் கூறுகிறேன். சினங்கொள்ளாமல் கேட்டருள்வாயாக என்று தொடங்கினாள். தோழி கூறியதென்ன? “தினைக் கதிரைத் தின்னவரும் கிளிகளை ஓட்டி பகற் பொழுது போகு முன்னர் நீங்கள் வீட்டுக்கு வருவீராக” என்று எங்களை நீ விடுத்தனை. நாங்களும் அவ்வாறே தினைப்புனம் சென்றோம். ஆங்கு மரத்தின்மேல் கட்டப்பட்ட பரணில் ஏறி, கவணும் தட்டைப் பறையும் குளிர் என்னும் பறையும் எடுத்து ‘ஆ’ ‘ஓ’ எனக் குரலெடுத்துக் கூறிக் கிளியை ஓட்டினோம். கதிர் மேலே ஏறுதலால் வெயிலும் மிகப் பறவைகள் தத்தம் கூட்டை அடைந்தன. கடல்நீர் முகந்த கருமுகில் மின்னி இடித்து மலைமேல் மழை பொழிந்தது. அதனால் பெருகிய நீர் அருவியாகி வீழ்ந்தது. அவ்வருவியில் மிக விருப்புடை யோமாய் நீராடினோம்; சுனையில் சுழன்றும் ஆடினோம், பொன்னில் பதித்த மணி போன்ற கூந்தல் முதுகிலே படிய அதனைப் பற்றிப் பிழிந்து உலர்த்தினோம். நீரில் நீடிய பொழுது ஆடுதலால் கண் சிவப் புற்றது என்றாள். தோழி அதன்மேல் நிகழ்ந்தனவாக என்ன கூறுகிறாள்? பின்னர்க் கண்கவரக் காட்சி வழங்கிய பூக்களைப் பறிக்கும் ஆவலோடு செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, சிவந்த கொடுவேரி, தேமா, மணிச்சிகை, மூங்கில்; எறுழ், மராமரம், கூவிரம், வடவனம், வாகை, குடசம், எருவை, செருவிளை, கருவிளை, பயினி; வானி, குரவம், வகுளம், காயா, ஆவிரை, வேரல், சூரல், பூளை, குன்றி, முருக்கிலை, மருது, கோங்கு, மஞ்சாடி, பாதிரி, செருந்தி, புனலி, கரந்தை, காட்டுமல்லிகை, மா, திலை; பாலை, முல்லை, கஞ்சா, பிடவம், செங்கருங்காலி, வாழை, வள்ளி, நெய்தல், தெங்கம் பாளை; செந்தாமரை; ஞாழல், மௌவல், கொகுடி, செம்மல்லிகை, சிறுசெங்குரலி, கோடல், தாழை, நறுவழை, காஞ்சி; மணிக்குவை நெய்தல், மராஅம், தணக்கு, ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, அவரை, பகன்றை; பலாசம், பிண்டி, வஞ்சி, பித்திகை, சிந்துவாரம், தும்பை, துளசி, தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி, ஆரம், அகில், நரந்தம், நாகம், நள்ளிருள், நாறி, குருந்தம்; வேங்கை பரேரம், புழகு முதலாய பூக்களைப் பறித்து மழையால் கழுவித் தூய்மை செய்யப்பட்ட பாறையில் குவித்தோம்; தழைகளைப் பறித்துத் தழையுடை பூண்டோம்; நறுமென் பூக்களைக் கூந்தலில் சூடினோம் என்று நிறுத்தினாள் தோழி. அவளை நோக்கிய தாய்க்கு மேலே நிகழ்ந்ததாக என்ன கூறுகிறாள்? நாங்கள் செந்தளிரமைந்ததும் பூம்பொடி உதிர்வதுமாம் செயலையின் நிழகலில் இருந்தோம். அப்பொழுதில் அங்கே ஓர் தோன்றல் எய்தினான். அவன் கரிந்து சுரிந்து நறுமணம் கமழும் குடுமியை உடையவன்; பல்வகை மலர்களைப் பாங்குறத் தொடுத்து அணிந்த மாலையினன்; சந்தனம் கமழும் மார்பில் அணிகள் பல பூண்டவன்; அவன் தலையில் சுற்றிய பித்திகை மாலையும் காதில் செருகிய செயலைத் தளிரும் தனி அழகாகப் பொலிந்தன. அவன் அழகுற உடுத்த உடைமேல் பொலிவான கச்சுக் கட்டியிருந்தான். கையில் வில்லும் கணையும் கொண்டிருந்தான். காலில் கழல் இலங்கியது; எதிரிட்ட வீரரை எல்லாம் வென்று எதிரிட வருவார் உளரா என்னும் வீறுடையான்; வெள்ளிய பற்களையுடைய அவன் நாய்கள் எங்களை வளையவர நாங்கள் நடுங்கினோம். அந்நிலையில் எங்களை அணுகி மெல்லியதும் இனியதும் கேட்கும் தோறும் விரும்பத் தக்கதுமாம் சொற்களைச் சொல்லி, தண்ணிய கண்களையுடைய இளைவர்களே அஞ்சாதீர் என்று தேற்றி, எம்மை தப்பி வந்ததோர் விலங்கு, இவணுற்றது நீவிர் கண்டிரோ? என்றான். யாங்கள் அதற்கு யாதொரு மறுமொழியும் சொல்லோமாய் நின்றோம். எங்களை விரும்பி நோக்கிக் கண்டதைக் கூறிர் எனினும் எம் வினவலுக்கு மறுமொழி கூறலும் பழியாமோ என்று வினவினான். சூழ்வந்து குரைத்த நாய்களை அடக்கி எங்கள் சொல்லை எதிர்பார்த்து எங்களை நோக்கி நின்றான், என்றாள். மேலும் நிகழ்ந்தது கூறலை எதிர்பார்த்த தாய்க்கு என்ன கூறினாள் தோழி? கூரைக் குடிசையில் வாழ்ந்த குன்றவன் தன் மனைவி வடித்துத் தந்த கள்ளை அருந்தி மயங்கிப் போய்த் தினைக் காவலைச் செய்யா தொழிந்தான். அதனால் புனத்துள் புகுந்த யானை தினையைத் தின்றும் மிதித்தும் அழிவு செய்தது; அழிவுக்கு வருந்திய அவன் தன் வில்லை வளைத்து அம்பை ஏவி யானையை வெருட்டலானான்; தட்டைப்பறை அறைந்தான்; சீழ்க்கை ஒலித்தான்; சினம் கொண்ட யானை மரங்களை முரித்தது; இடியென முழக்கமிட்டது; கொல்ல வரும் கூற்றே போல எங்களை நோக்கி வந்தது. நாங்கள் நடுக்கமுற்று உயிர் தப்புவதற்கு எண்ணி, இயல்பான நாணத்தை விடுத்து அத் தோன்றலை அணுகி நின்றோம். அவன் எங்கள் நடுக்கம் போம் வகையில் அம்பை ஏவி அவ் யானையின் மத்தகத்தைத் தாக்கினான்; குருதி பெருக்கெடுக்க அவ்விடத்தை விட்டுத் தப்புவதற்கு யானை ஓடிற்று” என்றாள். மேலும் தாயினிடம் தோழி என்ன கூறினாள்? “எங்கள் நடுக்கமும் அச்சமும் தீரவே ஆங்கிருந்த கடம்ப மரத்தின் அடியைச் சுற்றி யாங்கள் கைகோர்த்து ஆடினோம். ஆற்று நீரில் வீழ்ந்து விளையாடினோம். அப்பொழுது பெருகிய வெள்ளம் எங்களை ஈர்த்துச் சென்றது. அதனைக் கண்ட அத்தோன்றல் விரைந்து வந்து எங்களை எடுத்துக் காத்தான், தலைவியை நோக்கி நின் எழில்மிக்க நலத்தை நுகர்வேன்; இனி என்றும் உன்னைவிட்டு நீங்கேன்; அஞ்சாதே என்று சொல்லி அவள் நெற்றியை வருடினான்; என்னை நோக்கி நகைத்து என் உதவியை நாடுவான் போல் நின்றான். தலைவிக்கு இயல்பான நாணமும் அச்சமும் மேலிட அவன் நெருக்கத்தில் இருந்து விலக முயன்றாள். விலக விடாதவனாய்த் தன் மார்புற தழுவினான்” என்றாள். தலைவன் நிலையாகத் தோழி என்ன கூறினாள்? குறிஞ்சி நிலத் தலைவனாம் அவன் பாறைகளில் மிளகுப் பழம் கிடக்கும். மாம்பழமும், பலாப்பழமும் கனிந்து வீழ்ந்து கிடக்கும். இவற்றின் தெளிவை உண்ட மயில்கள் மதுவுண்டார் போன்ற மயக்கத்தில் ஆடித் திளைக்கும்; விழாக்களின் போது கழையில் கட்டிய கயிற்றில் ஏறி ஆடும் மகளிர் போன்றதாகத் தோன்றும். இத்தகைய வளமார்ந்த மலைநிலத் தலைவன் தலைவியை மணந்துகொண்டு இல்லறம் நடாத்தப் பெரிதும் விரும்புகிறான். வருவார் அனைவரும் உண்ணுதற்குத்தக எப்பொழுதும் திறந்த வாயிலாய் இருக்கும் அகன்ற மனைக் கண் சுற்றமும் பிறரும் உண்டு எஞ்சிய உணவை நீ படைக்க யானுண்ணல் பெரும் பேறாம் என்று தலைவியிடம் கூறினான் தலைவன் என்றாள் தோழி. தலைவன் செய்த சூழாகவும் பிறவாகவும் தோழி சொல்வ தென்ன? மலைநிலக்கிழவனாம் முருகனை வணங்கி, இனிய அருவி நீரைப் பருகி உன்னைப் பிரியேன்; மணங்கொண்டு அறவாழ்வு நடத்துவேன் எனச் சூள் மொழிந்தான். களிற்றால் கூடிய கூட்டத்தை விட்டுப் பிரியானாய் அற்றைப் பகலெல்லாம் அங்கே தங்கினான். மாலை ஞாயிறு தன் கதிர் சுருக்கி மேற்கு மலையில் ஏறி மறைந்தது. மாலையை அறிந்த மான்கள் உறைவிடம் உற்றன. கன்றை நினைத்துக் காலிகள் சென்றன. அன்றில் பறவை தன் பெட்டையை அழைத்தது; பாம்பும் இரை தேடியது; ஆயர்கள் தம் ஆம்பலங் குழலை எடுத்து இசைத்தனர். அந்தணர் அந்திப்பொழுதுக் கடமைகளைச் செய்தனர். வளமனை களில் மகளிர் குடும்ப வழிபாடாம் இல்லுறை தெய்வ வழிபாட்டைச் செய்யும் வகையில் விளக்கேற்றினர். காட்டில் வாழ்வார் பரணி லிருந்து தீக்கடை கோலால் நெருப்பை உண்டாக்கி ஒளி பெற்றனர். காட்டு விலங்குகள் குரலெழுப்பிக் கூடிச் சேர்ந்தன. இவ் வகையாக மாலைப் பொழுது எய்தியது,” என்றாள். தலைவன் கூறிய உறுதிமொழியாகத் தோழி கூறியதென்ன? “ஒளிமிக்க அணிகளை அணிந்தவளே, உன் பெற்றோர் உற்றார் உறவினர் உன்கையைப் பற்றி என் கையில் ஒப்படைக்கும் திருமணம் பின்னே நிகழும். அஃது ஊரவர் அறிய நடைபெறுவதாகும். அதுவரை நம் மனம் ஒருமித்த காதல் தொடர்வது பற்றிக் கவலைப்படாதே,” என்று தலைவி நெஞ்சம் நிறைவுறும் சொற்களைத் தலைவன் உறுதியாகச் சொன்னான். அவ்வளவில் நில்லானாய்ப் பசுவைத் தொடுத்து வரும் கன்று போல உடன் வந்து நம்மூர் முகப்பிலுள்ள நீர்துறையில் விடுத்துப் பிரியமாட்டாமல் பிரிந்து சென்றான்” என்றாள். பின்னும் நிகழ்ந்தனவாகத் தோழி கூறியதென்ன? முதல்நாள் தோன்றிய காதலொடு தொடர்ந்து இரவுப் பொழுது இவண் வந்தான். அவ்வாறு வரும்போது அவனுக்கு உண்டாகும் இடையூறுகள் பல. காவலர் கருத்தோடு கண் காணிப்பர்; இரவு வரும் புதியனைக் கண்டு நாய்கள் குரைக்கும்; நீ உறக்கம் நீங்கி விழிப்போடு இருப்பாய்; நிலவு பளிச்சிட்டுப் பலரும் அறியச் செய்துவிடும்; எனினும் அவற்றைக் கருதாமல் தலைவன் வருவான். தலைவியைக் காண முடியா நிலையில் திரும்பினாலும் வருதலைத் தவிர்ந்தான் அல்லன். குறிப்பிட்ட இடம் அடையாளம் ஆகியவை தவறிக் காணாமல் சென்றாலும் வருதலைத் தவிர்ந்தான் அல்லன் என்றாள். தலைவன் தகுதிகளாகத் தோழி கூறியதென்ன? தலைவன் தகவமைந்த அகவையன்; நற்குணங்கள் எதுவும் குறையாதவன்; குடிப்பெருமை போற்றுபவன்; சொல்மாறாதவன்; இவ்வாறு தொடர்ந்து களவொழுக்கம் கொள்ளல் பெருமை யாகாது; விரைந்து வரைந்து கொண்டு இல்லறம் நடத்துதலே இருபாலும் நலம் என்று தலைவி கூறுவதை ஒப்புக் கொண் டுள்ளான். அவன் இரவில் வரும் வழியின் இருள், விலங்கு, பாம்பு முதலை முதலியன திரிதல் இவற்றை எண்ணி வலையகப்பட்ட மயிலெனத் தலைவி வருந்திக் கலக்கம் கொண்டுள்ளாள். அவள் கொண்டுள்ள மாசில்லா மனத்துக் களவு நிலை இதுவே என்று தோழி தாய்க்கு அறத்தொடு நின்றாள்” எனக் குறிஞ்சிக் கபிலர் தம்பாடலை நிறைவு செய்கிறார். திருமணம் முடிந்த வகையைக் கூறாமல் முடித்ததேன்? தமிழர் அறம் களவுக் காதல், கற்பறம் ஆகாமல் போகாது என்பது தெளிவான உண்மை ஆகலின் திருமணம் முடித்து இல்லறம் நடத்தினார் என்பதே முடிபொருளாம். கபிலர் பல்வகை மலர்களைப் பறித்தனர் என்று கூறி அமை யாமல் ஒன்று குறை நூறு பூக்களின் பெயர்களை அடுக்கிக் கூறுவானேன்? அவ்வாறு அவர் அடுக்கிக் கூறுதல் தம் பெரும் புலமை காட்டுதற்காக அன்று. தமிழர் இயற்கையொடும் இரண்டறக் கலந்து வாழ்ந்து ஒவ்வொரு மரம் செடி கொடிக்கும் பெயரீடு செய்த சிறப்பை ஆரிய அரசன் பிரகத்தன் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கேயாம். நாமே நம் இயற்கைச் செல்வங்களையும் அவற்றின் பெயர்களையும் பயன்பாட்டையும் எப்படி இழந் துள்ளோம் என்பது நம் மனத்தைக் குடையவில்லையா? திருவள்ளுவர் கூறும் அறத்தின் இலக்கணத்திற்கும் இவ் வறத்தொடு நிற்றலுக்கும் தொடர்பு உண்டா? தொடர்பு உண்டு. மிகவே உண்டு; திருவள்ளுவர் கூறும் இலக்கணம் தொல்காப்பியர் கூறும் அறத்தொடு நிற்றல் என்னும் இலக்கண வழி வந்ததேயாம். மனத்துக்கண் மாசில்லாமையே காதல் தொடக்க இலக்கணமாம், மனமாசமைந்த காதல் கேடு உயிரையே காவு வாங்குவது. கண்கூடு, இதனைப் பொதுமக்களும் உணர்ந்தால் தான், “கரணம் தப்பினால் மரணம்” என்றனர். கரணமாவது திருமணம். காதலித்த ஒருவனோ ஒருத்தியோ தங்கள் காதல் உறுதிப்பாட்டில் தவறினால் இறப்பே நேர்தல் காணலாம். வாழ்ந்தாலும் இறந்தாலொத்த வாழ்வாகவே இருக்கும். ஆதலால் காதல், காதல் வாழ்வுக்கும், கற்பு வாழ்வுக்கும், உலகில் பொது வாழ்வுக்கும் மனத்தில் மாசில்லா அறம் போற்றப் படுதல் வேண்டும் என்பதற்கே, அறத்துப்பால் முதற்றொடக்கம் அறன் வலியுறுத்தல் வைத்து, “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்” என்றார். மற்றவையெல்லாம் ஆக்கக்கேடாம் என்பதற்கே “பிற ஆகுல நீர” என்றார். ஆகு + உலம் = ஆகுலம் = ஆக்கக்கேடு. சங்க அகப்பாடல் முழுமையும் இவ்வறம் போற்றியே படைக்கப்பட்டன என்க. பின்னிணைப்பு - முற்றும் -