kiwkiya«-- 6 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) இலக்கியம் -1  சாகுந்தல நாடகம் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 30+290 = 320 விலை : 410/- மறைமலையம் - 6 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 320 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா  அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) ஒப்புயர்வற்ற தொண்டு! மறைமலை அடிகளைத் தெரியாத தமிழர்கள் இல்லை யென்றே சொல்லலாம். அடிகள் தமிழுக்காகச் செய்துள்ள தொண்டு ஒப்புயர்வற்றதாகும். அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் அன்னாரின் பெருமையைத் தமிழுள்ளளவும் எடுத்துக் காட்டும் என்பது உறுதி. சைவசமய வளர்ச்சிக்காக அடிகள் அல்லும் பகலும் அயராது உழைத்து வந்துள்ளார். தமக்கு நேர்மாறான கொள்கையுடையவர்களுடனும் தோளோடு தோள்நின்று இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் அடிகள் ஈடுபட்டது அன்னாருக்குத் தமிழ்மொழியின் மீதுள்ள அளவுகடந்த பற்றுதலை நன்கு விளக்குகிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்ச்சியுள்ள பேராசிரியர் மறைமலையடிகளாரது பிரிவு தமிழ் நாட்டுக்கு ஈடுகட்ட முடியாத ஒரு பெரும் நட்டமாகும் என்பதில் ஐயமில்லை. அடிகளின் ஆத்ம சாந்திக்காக நாம் இறைவனைப் பிரார்த்திப்போமாக. -கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை (பக். 40) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீ காரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமிகள் வலி யுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித் தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்பு கள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமை யூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: âUkâ வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு.மருது,இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். சாகுந்தல நாடகம் 2003 இல் பூம்புகார் பதிப்பகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகிறது. இந்நூலைப்பற்றியகுறிப்புரை... முதல் நூலின் சுவை சிறிதும் குறையாமல் சிலவிடங்களில் முதல் நூலினும் சுவை மிகுதிப்படும் வகையில் அடிகளாரால் ஆக்கப்பட்ட நூலாகும். இது அடிகளார் காளிதாசரின் சாகுந்தலத்திற்குச் சிறந்த உண்மையான மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். அதற்கு ஈடானது இதுவரை எங்கும் எழுந்ததில்லை சாகுந்தலம் சொற்பொருள் இன்பங்களோடு அறிவுப்பயன்களையும் அளிப்பதால்அதன்அருமைபெருமைகளைத்தமிழ்மக்களும்அறிந்துணரம் வகையில் அடிகளார் அதனைத் தமிழாக்கஞ்சய்துள்ளார். புரவலர் பலரும் போற்றிப் பாராட்டும் வகையில் அழகிய இனிய நலன்மிக்க தாக அடிகளாரின் செந்தமிழ்ச் சகுந்தலம் விளங்குகிறது. - நா. செயப்பிரகாசு மறைமலை அடிகளாரின் இலக்கியப் படைப்புகள் - பக்கம் : 8 முகவுரை இற்றைக்கு 1480-ஆண்டுகளுக்கு முன் வடநாட்டில் உச்சயினி மாநகரின்கண் வடமொழி நல்லிசைப் புலவர் மாமணியாய் விளங்கிய ஆசிரியர் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகம் சொற்சுவை பொருட்சுவை நிரம்பித், தன்னைப் பயில்வார்க்கு நுண்ணறிவு பயந்து, கழிபெரு மகிழ்ச்சி விளைக்கும் பெற்றித்தாய் நிற்றலின், அதன் அருமை பெருமையைத் தமிழ்மக்களும் நன்குணர்ந்து களிக்கும் பொருட்டு, இற்றைக்கு 24-ஆண்டுகளுக்கு முன் அதனைத் தெளிவான செந்தமிழில் மொழிபெயர்த் திட்டேம். இது செய்யுட்களும் இடை இடையே விரவிய உரைநடையில் ஆக்கப்பட்டிருக்கின்றது. எழில் முதிர்ந்து உலகியற் பொருட் டோற்றங் களையும், மக்கள் வடிவங்களையும், அவர் தம் மன அசைவுகளையும் நுவலும் இடங்கள் உள்ளத்தைப் பெரிதும் இன்புறுத்துவனவாதலால், அவை தம்மை மிழற்றுதற்கு ஏற்பன இசை தழீஇ நடக்குஞ் செய்யுட்களேயாம். அத்துணை அழகு பயவாது பொதுவியல் ஒழுக்காய்ச் செல்லும் உரையாட்டுகளும் பிறவும் விழுமிய பாநடைக்கு ஒவ்வாமையான் அவை யெல்லாம் உரை நடையின்பாற் படுத்தற்கே இசைந்தனவாகுமென்று பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இங்ஙனம் உரையும் பாட்டும் விரவிய இம் மொழி பெயர்ப்பு வடமொழியிலுள்ள முதல்நூலைச் சிறிதும் பிறழாமற் பின்பற்றிச் செல்வதாகும். இவ் விரண்டாம் பதிப்பு வடமொழியிலுள்ள பல முதல்நூல்களுடன் வைத்து ஒப்பிட்டு நோக்கிப் பலப்பல திருத்தங்கள் செய்யப் பட்டிருக்கின்றது. இன்னும், இம் மொழிபெயர்ப்பின் உரையிலுள்ள அருஞ்சொற்களுக்கும், இடையிடையே விரவிய செய்யுட்களுக்குந் தெளிபொருள் விளக்கங்களும் புராணக் குறிப்புகளும் பின்னே விரிவாக எழுதிச் சேர்க்கப் பட்டிருக்கின்றன. தமிழுக்கு ஆக்கமாக எழுதப்படும் நூல்களில் வடசொற்களைக் கலந்தெழுதுதல், ஒரு பெருங்குறை பாடாகக் காணப்படுதலின், முதற்பதிப்பில் ஆங்காங்கு விரவிய சிற்சில வடசொற்களையுங் களைந்து அவற்றிற்கு ஒத்த தூய தமிழ்ச் சொற்களையே பெய்து இதனை அமைத்திருக்கின்றோம். இனி, இந் நாடகக் காப்பிய நுண்ணமைப்புகளும் நாடக மாந்தர் இயற்கை களுங், காளிதாசர் வரலாறும், அவரிருந்த காலமும் பிறவும் சாகுந்தல நாடக ஆராயச்சியில் விரித்து விளக்கப்பட்டிருக்கின்றன. பல்லாவரம் பொதுநிலைக்கழகம் திருவள்ளுவர் ஆண்டு 1963 மறைமலையடிகள் மூன்றாம் பதிப்பு இம் மூன்றாம் பதிப்பின்கட் சிற்சில சீர் திருத்தங்களே செய்யப் பட்டிருக்கின்றன. வேறு பெரிய மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை. இந் நூலை அண்ணமலைப் பல்கலைக் கழகத்தாரும், சென்னைப் பல்கலைக் கழகத்தாரும், இலங்கைப் பல்கலைக் கழகத்தாரும் பி.ஏ. வகுப்பிற் பயிலுந் தத்தம் மாணவர்க்குப் பாடமாக வைத்து அவர்க்குத் தனித்தமிழ்ப் பயிற்சியின் நலத்தைக் காட்டினமைக்காக நன்றி செலுத்துகின்றேம். பல்லாவரம் பொதுநிலைக்கழகம் திருவள்ளுவர் ஆண்டு, 1970 புரட்டாசி, 26 மறைமலையடிகள் நாடக உறுப்பினர் ஆண் : சூத்திரதாரன் : நாடகத்தை நடத்தும்முதல்வன் துஷியந்தன் : அத்தினாபுர மன்னன்; நாடகத் தலைவன் கண்ணுவர் : துறவோர் தலைவர் காசியபர் : சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை; மரீசியின் புதல்வர் ; மாரீசர் என்றும் சொல்லப்படுவர் விதூஷகன் : துஷியந்தன் உடனுறைவோன் கரபகன் : துஷியந்தன் அன்னை அளித்த செய்தி கொண்டு வந்தவன் சாரங்கரவன், சாரத்துவதன்: கண்ணுவர் மாணாக்கர் மாதலி : தேவேந்திரன் அனுப்பிய தூதன் சிறுவன் : துஷியந்தன் புதல்வன், பரதன் காலவன் : மாரீசர் ஏவலாளன் கஞ்சுகி : ஏவலாளன் தேர்ப்பாகன், வாயில் காவலன், படைத் தலைவன், ஏவலர், துறவிகள், மாணாக்கன், முனிவர் புதல்வர் இருவர், வைதாளிகர் இருவர், புரோகிதர், செம்படவன் முதலியோர். பெண் : நடி : சூத்திரதாரனுக்குத் துணையாய் இருப்பவள் சகுந்தலை : நாடகத் தலைவி அனசூயை, பிரியம்வதை: சகுந்தலையின் தோழிகள் கௌதமி : சகுந்தலையின் வளர்ப்புத் தாய் பிரதீகாரி, சானுமதி, சதுரிகை: அத்தினபுரத்துப் பெண்கள் அதிதி : காசியபர் மனைவி முனிவர் மனைவியர் மூவர், பணிப் பெண்கள், யவனப் பெண் முதலியோர். கதை நிகழுமிடம் வகுப்பு : களம் 1-4 : இமயமலை அடிவாரத்திலுள்ள கண்ணுவ முனிவரது தவவுறையுள் 5-6: துஷியந்த மன்னன் தலைநகரான அத்தினாபுரம் 7 : ஏமகூட மலைக்கண்ணதான மாரீச முனிவரது தவப்பள்ளி. முன்னுரை சூத்திரதாரன் வாழ்த்து உரைக்கின்றான் நான்முகனது முதற்படைப்பான நீரும், விதிப்படி தரப்படுகின்ற அவிப்பலியைத் தாங்குவதான தீயும், அவியைத் தருகின்றவனான இயமானனும், காலத்தை வரையறுக்கின்ற ஞாயிறு திங்களும், செவிப்புலனாகின்ற ஓசைக்கு நிலைக் களனாய் எங்கும் ஊடுருவி நிற்கும் விசும்பும், எல்லா வித்துப் பொருள்களையுந் தன்கண் தோற்றுவிக்கின்ற நிலனும், எல்லா உயிர்களும் மூச்சுவிடுதற்கு ஏதுவான காற்றும் என்கின்ற எண்வகை வடிவங்களுடன் விளங்கும் முதல்வனான சிவபெருமான் உங்களைக் காக்கக்கடவன் (வாழ்த்துரை முடிந்தவுடன்) சூத்திரதாரன் : (கோலச் சாலையை நோக்கி) வேண்டும் ஒப்பனைகள் செய்து முடிந்தனவாயின், நங்காய் அன்பு கூர்ந்து வெளியே வருக. நடி : (வெளியேவந்து) ஐய, இதோ வந்தேன். செய்ய வேண்டுவது இன்னதென்று கட்டளை இடுங்கள். சூத்திரதாரன் : நங்காய், இவ் அரங்கம் பெரும்பாலுங் கல்வி கேள்விகளில் வல்ல புலவரால் நிரம்பியிருக்கின்றது; காளிதாசராற் புதுவதாகத் தொடுக்கப்பட்ட சாகுந்தலம் எனப் பெயரிய நாடகத்தை இவர் கண்முன் நன்கு நடப்பித்துக் காட்டல் வேண்டும். ஆதலால், நடிகர் ஒவ்வொரு வருந் தத்தமக்குரிய நடிப்புகளிற் கருத்தாயிருத்தல் வேண்டும். நடி : தாங்கள் மிகவுந் திருத்தமாய் வகுத்து அமைத்த இதன் கண் யாதுங் குறைபாடிராது. சூத்திரதாரன் : மாதராய், நான் உண்மையைச் சொல்லி விடுகின்றேன். இங்குள்ள அறிவுடையோர் நமது நடிப்பின் திறமையைக் கண்டு மகிழும் அளவும், நம்முடைய திறமை யினைச் சிறந்ததென நான் மதியேன். நன்கு தேர்ச்சியடைந்த அறிவுடையோர் உள்ளமுந் தன்னளவில் நம்பிக்கை இல்லாததாய் இருக்கின்றது. நடி : நல்லது, ஐய, இனி, அடுத்து யாது செய்தல் வேண்டுமெனக் கட்டளையிடுகின்றீர்கள்? சூத்திரதாரன் : ஓர் இசைபாடி இங்குள்ளோர் செவி கட்கு விருந்து செய்தலைவிட வேறு என்செய்தல் வேண்டும்? நடி : அப்படியாயின், எந்தக்காலத்தைப் பற்றி யான் பாடலாம்? சூத்திரதாரன் : இன்பந் துய்த்தற்கு ஏற்றதாய் இப்போது தான் தோன்றியிருக்கும் இவ் வேனிற் காலத்தைப் பற்றியே பாடு. ஏனென்றால், வெயில்நாளின் பகற்பொழுது தண்ணீரில் தலைமுழுகுவதற்கு இனிதாயிருக் கின்றது; *பாதிரிமலர் முகிழ்களில் அளைந்து அவற்றின் நறுமணத்தைக் கொள்ளை கொண்டு கானகக் காற்று மெல்லென வீசுதலால், இந்தப் பொழுது அடர்ந்த மரநிழல்களில் அயர்ந்த துயிலை எளிதில் வருவிக்கின்றது; மாலைக்காலமோ மிகவும் இனிதா யிருக்கின்றது. நடி : அவ்வாறே (பாடுகின்றாள்) விரியு மணமவிழ்க்கும் மலர்முகிழ்மே லெல்லாங் கரிய வரிவண்டு முத்தமிடல் காணாய்! எரியுந் தளிர்ப் பிண்டி யிணர்கிள்ளி யோடுங் கரியவிழி மாதர் காதிடலுங் காணாய்! சூத்திரதாரன் : ஆ! என் அன்பே, மிக இனிதாய்ப் பாடினாய். இக் குழுவிலுள்ளார் அனைவரும் ஓவியத்தில் எழுதிய உருவம்போல் நின் இசைப்பாட்டிற் கட்டுண்டு ஆ! எல்லாப் பக்கங்களிலும் எப்படித் தோன்று கின்றார்கள்! இனி, இப்பொழுது இவர்களை எந்த நாடகத்தினால் மகிழச் செய்யலாம்? நடி : ஓ! சாகுந்தலம் என்னும் புதிய நாடகத்தை நடப்பித்துக் காட்டல் வேண்டுமெனத் தாங்கள் சற்று முன்னரே கட்டளையிட் டிருக்கின்றீர் களன்றோ? சூத்திரதாரன் : ஆ! என் அன்பே, நன்கு நினைப்பூட்டப் பட்டேன்; இவ்விடத்தே துஷியந்த அரசன் துள்ளியோடும் புள்ளிமான் பின்னே செல்வதுபோல, யானும் இன்புறுத்தும் நின் இசைப்பாட்டின் இன்னிசையால் வலிந்து இழுக்கப்பட்டுச் சென்று அதனை முற்றும் மறந்தேன் கண்டாய்! (இருவரும் போகின்றார்கள்) முன்னுரை முற்றும் முதல் வகுப்பு களம் - காடு அரசன் பாகனுடன் தேரில் அமர்ந்து கையில் வில்லுங் கணையும் ஏந்திப் புள்ளிமான் ஒன்றைப் பின் தொடர்கின்றான் தேர்ப்பாகன் : (புள்ளிமானையும் அரசனையும் நோக்கி)வேந்தே நீடுவாழ்க! நான் அக் கரிய புள்ளிமானையும் பார்த்துப் பின் நாண் ஏற்றிய வில்லேந்து நிலையி தங்களையும் நோக்குகையிற், பினாகமென்னும் வில் ஏந்திக் கட்புலனாம் வடிவுடன் மானைத் தொடர்ந்து செல்லுஞ் சிவபெரு மானையே காண்கின்றேன். அரசன் : ஓ பாக! இம் மானினால் நாம் நெடுந்தொலைவில் இழுக்கப்பட்டு வந்துவிட்டோமே. இன்னும் இப்பொழுது இடையிடையே தன் கழுத்தை அழகாக வளைத்துத் திருப்பித் திருப்பிப் பின்றொடரும் நமது தேரினைப் பின்நோக்குகின்றது; அம்பு மேல்வந்துவிழுமோ என்னும் அச்சத்தால் தன் முன்கழுத்தைச் சுருங்க உள்ளிழுத்துக் கொண்டு, நெகிழுந் தன்மையுள்ள தன் பின் தொடைகளைப் பரப்புகின்றது; களைப்பினால் திறந்த தன் வாயினின்றுந் தான் பாதி கறித்த புல்லை வழியெங்குஞ் சிந்திக்கொண்டு செல்கின்றது. உயரத் துள்ளுகின்றதனால், நிலத்திலன்றி இடைவெளியிலேயே அது மிகுதியும் பறந்தோடுவதைப் பார்! (வியப்புடன்) நான் அதனை நெருங்கிப் பின்றொடர்ந்து வந்தும், அஃது என் பார்வைக்குக்கூட எட்டவில்லையே? தேர்ப்பாகன் : நீடுவாழ்க! நிலங் கரடுமுருடாய் இருக்கின்றமையாற், கடிவாளத்தை இழுத்துப்பிடித்துத் தேரின் கடுஞ் செலவினைக் குறைத் திருக்கின்றேன்; அதனாலேதான் மான் அவ்வளவு தொலைவிற் போய் விட்டது. இப்போது நிலம் மட்டமாயிருத்தலால் அதனைப் பிடிப்பது உங்களுக்கு இனி வருத்தமாய் இராது. அரசன் : அங்ஙனமாயின் கடிவாளத்தைத் தளர்த்திவிடு. தேர்ப்பாகன் : நீடு வாழ்வீர் கட்டளைப்படியே (தேரினை மிகமுடுகி) நீடு வாழ்வீர் பாரும்! பாரும்! கடிவாளந் தளர்த்தப்பட்டமையாற் குதிரைகள் மானின் விரைந்த செலவைக் கண்டு பொறாதனபோல், தம் உடம்பின் முற்பாகத்தை முழுதும் நீட்டி, நெற்றிச் சூட்டிய கவரி அசையாமற் காதுகளை நேர்பட நிறுத்திக்கொண்டு, தங்குளம்பினால் எழுப்பிய புழுதிப்படலமுந் தம்மேற் படாமற் பாய்ந்து ஓடுகின்றன. அரசன் : நங் குதிரைகள் உண்மையாகவே கதிரவன் இந்திரன் என்னும் இருவருடைய குதிரைகளையும் விரைவினால் வென்றுவிட்டன; ஏனெனின், தேரின் விரைந்த ஓட்டத்தினால் முன்னே சிறுத்துத்தோன்றிய பொருள்கள் சடுதியிற் பெருத்துத் தோன்றுகின்றன; இடையே இரண்டு பிளவாய் இருப்பனவெல்லாம் ஒருங்கு பொருந்தி ஒன்றாய்த் தோன்று கின்றன; இயற்கையிற் கோணலாய் இருப்பனவுங் கூட என் கண்களுக்கு நேராகத் தோன்றுகின்றன; எதுவும் எனக்குத் தொலைவில் இருப்பதாகவுந் தோன்றவில்லை; எதுவும் ஒரு நொடியிலேனும் அருகாமையில் இருப்ப தாகவுந் தோன்றவில்லை; பாகனே! இதோ அது கொல்லப் படுதலைப் பார்! (கணையைக் குறிவைத்துத் தொடுகின்றான்) திரைக்குப் பின்னே : ஓ அரசனே! அந்த மான் இவ்வாசிரமத்திற்கு உரியது, அது கொல்லப்படுதல் ஆகாது, கொல்லப்படுதலாகாது! தேர்ப்பாகன் : (உற்றுக் கேட்டு - நோக்கி) நீடுவாழ்வீர்! உம்முடைய கணைக்கு அந்த மான் இலக்காய் அகப்படும் பொழுதில் நுமக்கும் அதற்கும் இடையே துறவிகள் சிலர் வருகின்றனர். அரசன் : (விரைந்து) உடனே கடிவாளத்தை இழுத்துப் பிடி பிடி. தேர்ப்பாகன் : அப்படியே (தேரை நிறுத்துகின்றான்.) ஒரு துறவி தம் இரண்டு மாணவருடன் புகுகின்றார். துறவி : (தம் கையை உயர எடுத்து) ஓ அரசனே! அரசனே! இந்த மான் இத் துறவாசிரமத்திற்கு உரியது; அது கொலை யுண்ணலாகாது. ஆகாது! மலர்க் குவியலிற்படும் நெருப்புப் பொறிபோல் இம் மானின் மிக மெல்லிய உடம்பின்மேல் மெய்யாகவே அக்கணை அழுந்தும்படி செய்யாதே, செய்யாதே. ஊடுருவி அழுந்துதலில் இடியைப் போல் வலியுடைய நின் கணைகளெங்கே! அம் மடமானின் மிக மெல்லிய உயிரெங்கே! நன்றாகக் குறிவைத்த அக் கணையைத் தொடுத்த இடத்தினின்றும் வாங்கிவை; நின்கணை வருந்தி னோரைக் காக்கும் பொருட்டல்லது குற்றமில்லாதோரை அழிக்கும்பொருட்டு ஏற்பட்டதன்று. அரசன் : இதோ அதனைத் தொடுத்த இடத்தினின்றும் வாங்கிவைத்து விட்டேன். (அவ்வாறே செய்கின்றான்.) துறவி : புருவின் குலத்திற்கு விளக்குப்போல்வாய், இது நினைக்குத் தகுவதேயாம். புருவின் குடியிற் பிறந்தோனே இது நினக்கு மிகவுந் தக்கதேயாம். இவ்வாறே எல்லா நல்லியல்பு களானுஞ் சிறந்த ஒரு புதல்வனை உலக வேந்தனாய்ப் பெறக் கடவாய். மாணவர் : (இரு கைகளையுந் தூக்கி) மன்னர் மன்னனாம் ஒரு புதல்வனை நீ எப்படியும் பெறுவாய். அரசன் : (வணங்கி) அந்தணர் வாய்மொழி ஏற்கற்பாற்று. துறவி : ஓ அரசனே, வேள்விச் சடங்கிற்கு விறகு திரட்டிக் கொணரும் பொருட்டு நாங்கள் இப்போது புறப்பட்டுச் செல்கின்றோம். அதோ! மாலினி யாற்றங்கரைப் பக்கமாய்த் துறவோர் தலைவரான கண்ணுவ முனிவரது ஆசிரமங் காணப்படுகின்றது. உம்முடைய கடமைகளுக்கு இடைஞ்சல் இல்லையாயின், அங்கே நுழைந்து ஆண்டு விருந்தேற்கப் பெறுவீராக. எல்லா இடர்களினின்றும் விடுவிக்கப் பட்டவர் களாய் நோன்பியற்றும் மாதவர்தம் நல்லவேள்விச் சடங்கு களை நுங்கண்ணாரக் கண்டு, வில்நாண்டழும்பேறிய நுங்கை கள் எவ்வளவுக்கு அவர்களைப் பாதுகாத்து வருகின்றன வென்பதனையுந் தெரிந்து கொள்வீர். அரசன் : அவ்வாசிரமத் தலைவர் இப்போது அங்கு இருக்கின்றனரா? துறவி : வரும் விருந்தினர்க்குரிய வரிசைகள் செய்யுங் கடமையினைத் தம் மகள் சகுந்தலைக்கு ஒப்பித்துவிட்டுத், தாம் இனிநேரிடவிருக்கும் ஊழ்வினையின் தீமையைத் தணிக்கும் பொருட்டுச் சோமதீர்த்தத்திற்குப் போயிருக்கின்றார். அரசன் : நல்லது, அப் பெண்ணை நான் போய்க் காண்பேன்; அம் முனிவர்க்கு நான் இயற்றும் வழிபாடுகளை அப் பெண் அவர்க்கு மொழிந்திடும். துறவி : இப்போது நாங்கள் விடைபெற்றுக் கொள்ளு கின்றோம். (மாணவருடன் போகின்றார்) அரசன் : பாகனே, குதிரைகளை நடத்து, தூயதான ஆசிரமத்தைக் கண்டு நமக்குள்ள கறையினைக் கழுவிக் கொள்வோம். தேர்ப்பாகன் : நீடுவாழ்வீர், கட்டளையிடும் வண்ணமே (திரும்பவுந் தேரை முடுக்குகின்றான்.) அரசன் : (நாற்புறமும் பார்த்து) பாக, யாருஞ் சொல்லாமலே, தவம் இயற்றுங் கானகத்தைச் சூழ்ந்த இடங்கள் இவை என்பதுதெற்றென விளங்கற் பாலதேயாம். தேர்ப்பாகன் : அஃதெப்படி? அரசன் : ஏன் நீ பார்க்கவில்லையா? பேட்டிளங்கிளிகள் உள்உறைகின்ற மரப்பொந்துகளின் வாய்களிலிருந்து விழுந்து மரங்களின் கீழ்க் காட்டுத் தானியங்கள் இறைந்து கிடக் கின்றன; வேறு சில இடங்களில் இங்குதியின் பழங்களை நசுக்கினவை என்பது தோன்ற, நெய்ப்பற்றுள்ள கற்கள் சிதர்ந்து மினுமினு வென்று மிளிர்கின்றன; இளமான் கன்றுகள் அச்சம் இல்லாப் பழக்கத்தினால் நமது தேரின் ஓசை கேட்டும் ஓடாமல் மேய்கின்றன; நீர்நிலைகளுக்குச் செல்லும் வழிகள் மரவுரியாடையின் ஓரத்தினின்றுஞ் சொட்டின நீர்த்துளிகளினால் வரிவரியாய்க் குறிப்புக் காட்டுகின்றன; இன்னுந், தென்றற்காற்றாற் சிற்றலை தோன்றுங் கால்வாய் நீரில் மரங்களின் வேர்க்கற்றைகள் முழுகி அலசப்படுகின்றன; அதோ திகழும் இளமென் றுளிர்களின் நிறமானது தூய் தாக்கிய வெண்ணெயைச் சொரிந்து வேட்கும் புகையினாற் பல்வேறு நிறமாக மாறுகின்றன; அருகே உள்ள தோப்பின் நடுவிலே தருப்பைப் புல்லின் கொழுந்து அறுக்கப்பட்டுவிட்ட நிலத்திற் பெட்டைப் புல்வாய்க்கலைகள் அச்சமின்றிப் புற்கறித்து மெல்ல உலவுகின்றன. தேர்ப்பாகன் : இவையெல்லாம் மிகவும் உண்மையே. அரசன் : (சிறிது எட்டிப்போய்) பாகனே! தவவொழுக்கம் நிகழும் இத் தோப்பின்கண் உள்ளார்க்கு எவ்வகை இடைஞ்சலும் உண்டாதல் கூடாது; இந்த இடத்திலேயே தேரை நிறுத்திவிடு, நான் இறங்குகின்றேன். தேர்ப்பாகன்: நான் கடிவாளத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டேன்; நீடு வாழ்வீர் இறங்கலாம். அரசன்: (இறங்கி) பாகனே! தவவொழுக்கம் நடைபெறும் ஆசிரமங்கள் தாழ்மையான உடையுடன்றான் நுழையற் பாலனவென்பது நன்கு தெரிந்ததுதானே. இவைகளை வைத்துக்கொள். (அணிகளைக் கழற்றி வில்லை எடுத்து அவற்றைப் பாகன் கையிற் கொடுக்கின்றான்.) பாக, இவ்வாசிரமத்தின் உள்உறைவோரைப் போய்க்கண்டு நான் திரும்பி வருவதற்குள் குதிரைகள் முதுகு கழுவப்பட்டிருக் கட்டும். தேர்ப்பாகன்: அப்படியே (போய்விடுகின்றான்.) அரசன் : (சுற்றிலும் போய்ப் பார்த்து) இவ்வாசிரமத்திற்கு வழி இதோ இருக்கின்றது; இதற்குட் புகுகின்றேன். (புகுதலும் நிமித்தந் தோன்றுகிறது) இது துறவோர்க்கு உரிய அமைதி யான இடமாயிருந்தும், என் வலது தோள் துடிக்கின்றது; அதன்பயன் இங்கு எங்ஙனம் பெறக்கூடுமோ? ஆயினும் என், இனி நிகழவேண்டுவனவாயுள்ள நிகழ்ச்சிகளுக்கு எவ் விடத்துங் கதவுகள் இருக்கின்றன. திரைக்குப் பின்னே இவ் வழியே வாருங்கள், இவ் வழியே வாருங்கள் தோழிமாரே. அரசன் : (உற்றுக் கேட்டு) ஓ! இம் மரவரிசைகளுக்குத் தென் அண்டையில் எவரோ உரையாடும் ஒலி கேட்கின்றது; யான் உடனே அங்குச் செல்வேன் (சுற்றிப் போய்ப் பார்த்து) ஆ! துறவோர் குடிக்கு உரிய பெண்கள் தங்கள் தங்கள் வலுவிற்கு இசைந்த தண்ணீர்க்குடங்கள் எடுத்துக் கொண்டு இளஞ் செடிகளுக்குத் தண்ணீர்விட இவ் வழியாக வருகின்றனர். (உற்றுப் பார்த்து) ஓ! இப் பெண்கள் பார்வைக்கு எவ்வளவு அழகாய் இருக்கின்றார்கள்! முல்லைக் காட்டுத் துறவோர் குடியில் உறைகின்ற மகளிர்க்குள்ள பேரழகு அரண்மனை உவளகத்திலேயுங் காணப்படுவதில்லா அத்துணை அருமைத்தாயின், இளங்காவின் மலர்க்கொடிகள் குணத்தாற் சிறந்த காட்டுப் பூங்கொடிகட்குப் பின்னிடைதல் வாய்வதே யாம். யான் இம் மரநிழலில் ஒதுங்கியிருந்து இவர்களுக்காகக் காத்திருப்பேன். (நின்று பார்க்கின்றான்.) (முன் சொன்னபடியே தண்ணீர்விடுதற்குச் சகுந்தலை தன் தோழிமார் இருவருடன் வருகின்றாள்.) சகுந்தலை : இவ்வழியே வாருங்கள், இவ்வழியே வாருங்கள் தோழிமாரே. அனசூயை : அன்புள்ள சகுந்தலா, நின் தந்தை கண்ணுவர் உன்னைக் காட்டிலும் இவ்வாசிரமத்திலுள்ள இளஞ் செடிகளிடத்தில் மிகுந்த அன்பு வைத்திருக்கின்றாரெனக் கருதுகின்றேன்; ஏனென்றாற், புதிது அவிழ்ந்த மல்லிகை மலர்போல் நீ மெல்லியையாயிருந்தும் அச் செடியைச் சுற்றிலும் அகழ்ந்த சிறு வாய்க்கால்களில் நீர் நிரப்பும் படி அவர் உன்னை ஏவியிருக் கின்றனரல்லரோ ! சகுந்தலை : அஃது என் தந்தை ஏவியது மட்டும் அன்று, நானும் அவைகளிடத்து, உடன்பிறந்தாரிடத்துப் போல் அன்பு பாராட்டுகின்றேன். (செடிகளுக்குத் தண்ணீர் விடுகின்றாள்) அரசன் : என்னை ! இவள் கண்ணுவமுனிவர் மகளா? மாட்சிமை தங்கிய காசியபர் ஆராய்ந்து பாராதவரா யிருக்கின்றார்! ஆதலினாற்றான், ஆசிரமத்திற்குரிய கடமை களை இவள் செய்யும்படி ஏவியிருக்கின்றார். செயற்கை யாலன்றி இயற்கையா லழகுநலங் கனிந்த இப் பெண்ணின் உடம்பைக் கொடிய தவத்தொழில்கள் புரியும்படி இசைவித்த அம்முனிவர், விறகுக்காக வளர்ந்த செடியினைக் குவளை மலரின் மெல்லிய இதழ் விளிம்பால் அறுக்கத் துணிந்த வராகவே இருக்கின்றார். நல்லது, நான் இம் மரங்களின் பின்னே மறைந்துகொண்டு யாதுந்தடையின்றி அவளைக் கண்ணாரக் காண்பேன். (அவ்வாறே மறைகின்றான்.) சகுந்தலை : அன்புள்ள அனசூயே, பிரியம்வதை இம்மர வுரியினை என் பருங் கொங்கைகண்மேல் வருந்தும்படி மிக இறுக்கிக் கட்டிவிட்டாள். அன்புகூர்ந்து இதனை நெகிழ்த்து விடு. அனசூயை : அப்படியே (அதனை நெகிழ்த்துகின்றாள்.) பிரியம்வதை : (சிரித்துக் கொண்டு) நின் கொங்கைகள் திரண்டு மிகப் பருத்துப் புடைக்கும்படி செய்த நின் இளம் பருவத்தைக் கடிந்துகொள். அரசன் : (தனக்குள்) இப் பெண் நன்கு சொன்னாள். மரநாரின் இழைகளால் நெய்த அம்மரவுரியாடைசிறு முடிச்சுக்களால் தோள்மேற் கட்டப்பட்டு, இவள் தன் பரிய இரு கொங்கைகளைப் பொதிந்து கொண்டமையால், வெளிறிய புறவிதழ் இலையாற் புனைந்த மூடியினுட் பொதித்திட்ட மலர் முகிழ்போல் இவள் இளைய மேனியின் எழில் நலங்கள் கண்ணுக்குப் புலப்படவில்லை. இவளது ஆண்டிற்கு மரவுரியாடை பொருந்தாதது உண்மையே; என்றாலும், அணிகலங்கள் அழகு செய்தல்போல் அஃது அழகு செய்யாமலுமில்லை; ஏனென்றால், தாமரை சடைப்பாசியினாற் சூழப்பட்டிருந்தாலும் அழகு மிகுந்தே தோன்றுகின்றது; வெண்டிங்களிலுள்ள களங்கங் கரியதா யிருந்தாலும் அஃததனழகை மிகுதிப்படவே செய்கின்றது. அங்ஙனமே இம் மெல்லியலும் மரவுரியாடையிலுங்கூடக் கவர்ச்சிமிக்கே தோன்றுகின்றாள். இயற்கையிலேயே அழகினாற் கனிந்து விளங்கும் உருவத்திற்கு எதுதான் அணிகலமாய் இராது? சகுந்தலை : (எதிரே பார்த்து) இவ்விளந் தேமா மரமானது தென்றற் காற்றில் அசையுந் துளிர்களென்கின்ற விரல்களால் என்னை அருகில் விரைந்தழைப்பதுபோல் தோன்றுகின்றது. யான் அதன் பாற் செல்கின்றேன். (அப்படியே செல்கின்றாள்.) பிரியம்வதை: அன்புள்ள சகுந்தலா, அங்கேயே சிறிது நேரம் நில். சகுந்தலை : ஏன்? பிரியம்வதை : நீ அதன் பக்கத்தில் நிற்கையில், அத் தேமாமரம் ஓர் இளங்கொடியொடு பிணைந்திருப்பது போல் தோன்றுகின்றது. சகுந்தலை : இதனாலே தான் நீ பிரியம்வதை (இனிமையாய்ப் பேசுபவள்) என்று அழைக்கப்படுகின்றாய். அரசன் : பிரியம்வதை பேசுவது இனிமையாக இருந்தாலும், அஃது உண்மையாகவேயிருக்கின்றது. என்னை? இவளது கீழ்இதழ் இளந் தளிரைப் போற் சிவப்பா யிருக்கின்றது, இவள் தோள்கள் மென் கொம்புபோல் மெல்லியவாயிருக்கின்றன, இவளது கட்டிளமையானது மலர்போல் இவளுடம்பினுறுப்பெங்கும் முகிழ்த்துத் தோன்றுகின்றது. அனசூயை : அன்புள்ள சகுந்தலா, வானதோசினி அல்லது கான்மதியம் என்று நீ பெயரிட்ட இப் புதிய மல்லிகைக்கொடி இத் தேமாவிற்குத் தானே தெரிந்தெடுத்த மணமகளாயிருக்கின்றது பார்; நீ அதனை மறந்துவிட்டாயே. சகுந்தலை : அப்படியாயின் யான் என்னையே மறந்தேன் ஆவேன்; (அக் கொடியண்டைபோய்ப் பார்த்து, தோழி, மகிழ்ச்சியைத் தருகின்ற இப் பருவத்தில் மரமுங் கொடியுமாம் இவ்விரண்டின் மணமும் நிகழ்ந்திருக் கின்றது. இம் மல்லிகைக் கொடி புதிய மலர்கள் அலர இளம் பருவத்தை அடைந்திருத்தலாலுந், தேமாமரம் புத்தப் புதியதழைகள் உடைமையாலும், இவை இன்பம் நுகர்தற்கு ஏற்றனவாய்த் திகழ்கின்றன. (பார்த்துக்கொண்டே நிற்கின்றாள்.) பிரியம்வதை : அனசூயே, ஏன் சகுந்தலை அம்மல்லிகைக் கொடியை உற்றுப்பார்த்துக்கொண்டு நிற்கின்றாள் தெரியுமா? அனசூயை : உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை, சொல். பிரியம்வதை : அம் மல்லிகைக்கொடி தனக்கிசைந்த தேமாவினை மணந்துகொண்டமைபோல, நானுந் தகுந்த ஒரு கணவனை மணக்கலாகுமா? என்று கருதுகின்றாள். சகுந்தலை : இதுதான் உன் உள்ளத்தில் உள்ள உண்மை யான எண்ணம். (தண்ணீர்க் குடத்தைச் சாய்க்கின்றாள்) அரசன் : இத் துறவாசிரமத் தலைவர்க்குரிய குலத்தினள் அல்லாத ஒரு மனைவி வயிற்றில் இப் பெண் பிறந்திருக்கமாட்டாளா. அல்லது, நான் ஏன் ஐயப்பட வேண்டும். என் சிறந்த உள்ளமும் இவள்மேற் காதலுற்று விழைந்தமையால், ஐயமின்றி இவள் அரச குடியினருடன் மணங்கூடத் தக்கவளே யாவள். ஏனெனில், ஐயப்படுதற்கு ஏதுவான நிகழ்ச்சிகளில் நல்லோர் தம் உள்ளம் எந்தப் பக்கத்திற் சாய்கின்றதோ அதுதான் மேற் கொள்ளற்பாலது; என்றாலும், இவளைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்கின்றேன். சகுந்தலை : (மனக் கலக்கத்தோடு) ஐயோ எனக்கு உதவி செய்யுங்கள்! நான் தண்ணீர் சொரிந்தமையாற் கலைக்கப் பட்ட ஒரு கருவண்டு அப்புது மல்லிகைக்கொடியை விட்டு என் முகத்தண்டை பறந்துவருகின்றதே! (அவ் வண்டு வருத்துவதைக் காட்டுகின்றாள்.) அரசன் : (ஆவலுடன் நோக்கி) ஓ வண்டே ! நீ பெரிதும் நல்வினை உடையை. இவள் பிறப்பின் உண்மையைத் தெரிதல்வேண்டி யாம் கவலைகொண்டிருக்கையில், நீயோ அழகாய்ப் பிறழுங் கடையினையுடைய இவளின் துடிக்கும் விழிகளைச் சென்று சென்று தொடுகின்றாய்; இவளது செவியின் கிட்டப் பறந்து சென்று காதல் நிரம்பிய ஒரு மறை பொருளைத் தாழ்ந்த குரலில் ஓதுதல்போல் மெல்லென ஒலிக்கின்றாய்; இவள் தன் அழகிய கையை வீசி வெருட்டுகின்ற காலையுங், காதல் இன்பம் பொதிந்த முழுக் கருவூலம் போலும் இவளது கீழ் இதழ் அமிழ்தத்தைச் சுவைக்கின்றாய். சகுந்தலை : இப் பொல்லாத வண்டு போகவில்லையே! நான் அப்புறம் போகின்றேன். (ஓர் அடி பின் தாங்கி நின்று பார்த்து) என்ன, இன்னும் அஃது இங்கே வருகின்றதே! தோழிகாள், இப்பொல்லாத வண்டினால் துன்புறுத்தப் படும் என்னைக் காமின்கள்! இருவரும் : (புன்சிரிப்புடன்) நின்னைக் காப்பதற்கு நாங்கள் யார்? தவத்தோர்தங் கானகங்களைக் காப்பார் அரசரே யாகையால், துஷியந்தனைக் கூப்பிடு. அரசன் : என்னைத் தெரிவித்துக் கொள்வதற்கு இதுதான் ஏற்றநேரம். அஞ்சாதே, அஞ்சாதே - (இவ்வாறு தனக்குட் பாதி சொல்லிக்கொண்டு), என் அரசத் தன்மை புலப்பட்டுவிடும். நல்லது, நான் இப்போது இங்ஙனஞ் சொல்வேன். சகுந்தலை : (ஓர் அடி அப்புறம் விலகி நின்று பார்த்து) என்ன? இவ் விடத்திலும் அஃது என்னைப் பின் தொடர்ந்து வருகின்றதே ! அரசன் : (விரைந்து எதிரேபோய்) பௌரவ மன்னன் தீயோரை ஒறுத்து இந்நிலவுலகத்திற் செங்கோலோச்சுகையில், துறவாசிரமத்திற்கு உரிய அறியாத மகளிரை அங்கே யாரேடா வருத்துகின்றவன்? (பெண்களெல்லாரும் அரசனைப் பார்த்துத் திடுக்கிடுகின்றனர்.) அனசூயை : ஐய, அப்படிப்பட்ட இடர் இங்கொன்றும் நேரவில்லை. எங்கள் அன்பிற்கினிய இத் தோழி ஒருவண்டு வெருட்டினமையால் மருண்டாள் (சகுந்தலையைக் காட்டுகின்றாள்.) அரசன் : (சகுந்தலையைத் திரும்பிப் பார்த்து) நுங்கள் தவவொழுக்கம் நன்கு நடைபெறுகின்றதா? (சகுந்தலை நாணத்தாலோ கலக்கத்தாலோ பேசாமல் நிற்கின்றாள்.) அனசூயை : இப்போது சிறந்த விருந்தினர் ஒருவர் வரப்பெற்றோம். அன்புள்ள சகுந்தலா, நங் குடிலுக்குப் போய் விருந்தேற்கும் பொருள்களுஞ் சில பழங்களுங் கொண்டுவா; இங்குள்ள நீர் இவர் அடிகளைக் கழுவ உதவும். அரசன் : நுங்கள் வழிபாட்டுரைகளாலேயே நீங்கள் என்னை ஏற்றுச் சிறப்புச் செய்தீர்கள் ஆயினீர். பிரியம்வதை : அடர்ந்த நிழலாற் குளிர்ந்திருக்கும் இவ் எழிலைப்பாலை மரத்தின்கீழ் எக்கர்மணல்மேற் சிறிது நேரம் அமர்ந்து தாங்கள் இளைப்பாறுவீர்களாகவென்று வேண்டிக் கொள்கின்றேன். அரசன் : நீங்களும் அவ் வேலையினால் இளைப்படைந் திருக்கவேண்டு மாகையால், இங்குச் சிறிதுநேரம் இருங்கள். அனசூயை : அன்புள்ள சகுந்தலா, நம் விருந்தினர் வேண்டியவாறு செய்தலே நமக்குத் தக்கது; ஆதலால் நாம் இங்கு அமர்வோம் (எல்லாரும் அவ்வாறே அமர்கின்றார்கள்.) சகுந்தலை : (தனக்குள்) இவரைப் பார்த்தவுடன் இத்துறவாசிரமத்திற்குப் பொருந்தாத ஓர் உணர்ச்சி யான் கொள்ளப்பெறுதல் என்னை ! அரசன் : (அப் பெண்களெல்லாரையும் பார்த்து) ஒத்த உருவமும் ஒத்த ஆண்டும் உடைய உங்களது நட்புரிமை எவ்வளவு இனியதாயிருக்கின்றது ! பிரியம்வதை : (அப்புறந் திரும்பி) அனசூயே, இவர் யாரா யிருக்கலாம்? பெருந்தன்மையொடு பணிவாய் விளங்குந் தோற்றத்தையும், இசைவாகவும் இனிமையாகவும் பேசும் நலத்தையும் ஆராயுங்கால் இவர் மிக உயர்ந்ததொரு மாட்சி யுடையராய் இருக்கவேண்டும். அனசூயை : தோழி, எனக்கும் இவர் யார் என்றறிய ஆவலிருக்கின்றது. நான் அவரைக் கேட்கின்றேன். (உரக்க) தாங்கள் மொழிந்த இன்சொற்களினால் மனந்துணிந்து தங்களுடன் பேச விழைவுகொள்ளப் பெற்றேன். எந்த அரச முனிவரது குடும்பந் தங்களால் அழகுறுத்தப்படுகின்றது? எந்த நாடு தங்களைப் பிரிந்தமையால் தன்னிடத் துள்ளாரோடும் ஏக்கம் அடைந்திருக்கின்றது? எந்த நோக்கத்தினால் தங்கள் மெல்லிய அருமைத் திருமேனி தவமியற்றப்படும் இக் காட்டினை வந்து காணும் வருத்தத்திற்கு உள்ளாகி யிருக்கின்றது? சகுந்தலை : (தனக்குள்) ஓ நெஞ்சமே! நீ என் பதைக் கின்றனை? நீ நினைந்ததைப்பற்றியே இதோ அனசூயை பேசுகின்றாள். அரசன் : (தனக்குள்) இப்போது நான் எவ்வாறு என்னைத் தெரிவித்துக் கொள்வேன்? அல்லது, என்னை எவ்வாறு மறைத்து மொழிவேன்? நல்லது, இப்போது இவளுக்கு இவ்வாறு சொல்வேன். (உரக்க) நல்லாய்! தவச் சடங்குகள் நன்கு நடைபெறுதலை மேற்பார்த்தற் பொருட்டுப் பௌரவ வேந்தனால் ஏற்படுத்தப்பட்டுள்ளேன்; துறவா சிரமங்களில் இருப்போர் இழைக்குந் தவவொழுக்கங்கள் இடையூறின்றி நிகழ்கின்றனவா என்பது காண அறத்தினுருவான இக் கானகத்திற்கு வந்திருக்கின்றேன். அனசூயை : தவச் சடங்குகள் இயற்றுவோர்க்கு இப்போது ஒரு காவலர் உளர். (சகுந்தலை காதலினால் தோன்றிய நாணம் புலனாக நிற்கின்றாள்.) தோழிகள் : (சகுந்தலை, துஷியந்தன் என்னும் இவ் இருவர் குறிப்பையுங் கண்டு) அன்புள்ள சகுந்தலா, இன்று உன் தந்தை இங்கு இருந்தால் : - சகுந்தலை : (கோபத்தோடு) என்ன நேரிடும்? தோழிகள் : தம் வாணாள் முழுமைக்கும் மிக விலையுயர்ந்த களஞ்சிய மாய் உள்ளதைக் கொடுத்து, இச் சிறந்த விருந்தினரை மகிழ்வித்திருப்பர். சகுந்தலை : ஏடிமாரே, அப்புறம் போங்கள் ! உங்கள் உள்ளத்தில் எதனையோ எண்ணிக்கொண்டு பேசுகின்றீர்கள். உங்கள் சொற்களுக்குச் செவிகொடுக்கமாட்டேன். அரசன் : நீங்கள் இசைந்தால், நாமும் உங்கள் தோழியைப்பற்றிச் சில வினாவுகின்றோம். தோழிகள் : மாட்சி நிறைந்த தலைவ, தாங்கள் இங்ஙனம் வினாவியதே எங்களுக்குத் தலையளி செய்ததாயிற்று. அரசன் : பெரியரான காசியப முனிவர் என்றும் பிரமசரிய வாழ்க்கை யிலிருப்பவராயிற்றே; இங்கிருக்கும் உங்கள் தோழியோ அவருக்குப் புதல்வியென்று சொல்லப்படுகின்றனர்; இஃது எப்படி? அனசூயை : ஐய, கேளுங்கள்! கௌசிய குலத்திற் பிறந்து, எல்லாவல்லமையும் பொருந்திய ஓர் அரச முனிவர் இருக்கின்றார். அரசன் : ஆம் இருக்கின்றார், நாம் கேட்டிருக்கின்றோம். அனசூயை : அவர்தாம் எங்கள் அன்பிற்கினிய தோழிக்குத் தந்தையென்று அறியுங்கள். தன்னந்தனியே விடப்பட்ட இவளை எடுத்துவந்து வளர்த்தமையாற் காசியபர் இவளுக்குத் தந்தையாயினர். அரசன் : தன்னந்தனியே விட்டு என்றனையே அஃதென்ன? முதலிலிருந்து கேட்க விரும்புகின்றேன். அனசூயை : அவ்வாறே தாங்கள் கேட்கலாம். ஒரு காலத்தில் அவ்வரச முனிவர் கௌதமி யாற்றங்கரையிற் கொடுந்தவம் இயற்றல் கண்டு எப்படியோ அச்சமுற்ற தேவர்கள், மேனகை என்று சொல்லப்படும் அரம்பை மாதினை அவரது தவத்திற்கு இடையூறு இழைக்கும்படி ஏவினர். அரசன் : ஆம், தேவர்கள் பிறர் இயற்றுந் தவவொழுக் கங்களைக் கண்டு அங்ஙனம் அஞ்சுவது உண்மைதான்; நல்லது அப்புறம் என்னை? mdNia : ãwF ïsntʼn gUtª njh‹W« m¥bghGJ m« KÅt® ka¡F« ïašã‰wh»a mtsJ fŪj mH»‹ ey¤ij¡ f©L........(miuthá சொல்லி நாணத்தினாற் பேச்சை நிறுத்தி விடுகின்றனள்.) அரசன் : பின்நிகழ்ந்தனவெல்லாம் எளிதின் அறியற் பாலனவேயாம்; அப்படியானால் இவள் அவ் வரம்பை மாதின் மகளாயினள். அனசூயை : ஆம், அப்படியேதான். அரசன் : அதுதான் நல்லமுறை, மக்கட்பிறவியில் வந்த மகளிரில் இவ்வளவு சிறந்த வனப்பு எப்படி உண்டாகக் கூடும்! மிளிருகின்ற மின்னற்கொடி நிலவரைப்பிலா தோன்று கின்றது? (சகுந்தலை முகங்கவிழ்ந்து நிற்கின்றாள்.) அரசன்: (தனக்குள்) என் காதல் இப்போது இடங் கண்டது. ஆயினும், இவள்தோழி பகடிக்காகச் சொன்ன வண்ணம், தனக்கு இயைந்த கணவனை இவள் மணக்க விரும்புகின்றாள் என்பதை யான் கேட்டதனால் என் மனம் ஐயுற்றுக் கலங்குகின்றது. பிரியம்வதை : (புன்சிரிப்போடு சகுந்தலையைப் பார்த்துப் பின் அரசன் முகமாய்த் திரும்பி) தாங்கள் இன்னுஞ் சில சொல்ல விரும்புவதாகத் தோன்றுகின்றது. (சகுந்தலை தன்தோழிக்கு விரற்குறி காட்டித் தடுக்கின்றாள்.) அரசன் : நீ செவ்வையாகவே கருதினை. நல்லோர் தம் நடக்கைகளைப் பற்றிக் கேட்க வேட்கை மீதூர்ந்து, மற்றுஞ் சிலவுங் கேட்டறிய விரும்புகின்றனம். பிரியம்வதை : தாழாதீர்கள். துறவிகளாயிருப்பவரை என்னென்ன வினவவேண்டுமாயினுந் தடையின்றி வினவலாம். அரசன் : நின் தோழியைப்பற்றி இன்னுஞ் சில அறிய விரும்புகின்றேன். இவள் மணம்புரியும் வரையிற், காமவேள் விளைக்குங் காமவேட்கையினை நீக்குதற் பொருட்டு நோற்கப் படும் வைகாநஸ நோன்பினை இவள் கைக்கொள்ளப் போகின்றனளோ? அல்லது, இவள் தன் கண்களையொத்த பேட்டிளமான்களுடன் கூடித் தன் வாழ் நாள் எல்லையளவுங் காலங்கழிக்கப் போகின்றனளோ? பிரியம்வதை : நல்லோய்! தவச்சடங்குகளைச் செய்வதிலுங்கூட இவள் தானே ஏதுஞ்செய்தற்கு உரிமை யின்றிப் பிறரைச் சார்ந்திருக்கின்றனள்; அப்படியாயினும், இவள் தந்தை இவளுக்கு இசைவான ஒரு மணவாளனைத் தேடி அவனுக்கு இவளை மணம்புரிவிக்கக் கருதி யிருக்கின்றனர். அரசன் : (தனக்குள்) இங்கே நாம் விரும்பியது நிறை வேறுதல் அரிதன்று, ஏ நெஞ்சமே! நீ கொண்ட ஐயமெல்லாம் இப்போது விலகிவிட்டமையால், இனி இவள் மேல் நீ காதல்கொள்ளலாம். நீ இங்கே நெருப்பென்று அஞ்சிய இஃது இப்போது தொடுதற்கு இனிய முழுமணியாய் இருக்கின்றது. சகுந்தலை : (சினங் கொண்டதுபோல்) அனசூயே, நான் போகின்றேன். அனசூயை : ஏன்? சகுந்தலை : ஐயையாகிய கௌதமியிடம் போய் இந்தப் பிரியம்வதை வாய்க்கு வந்தவாறு இடக்கர் பேசுகின்றாள் என்று முறையிடுகின்றேன். அனசூயை : என் அன்பே, இவ்வளவு சிறந்த ஒரு விருந்தினரைப் புறக்கணித்துவிட்டு, நின் விருப்பம்போல் விலகிப் போதல் துறவாசிரமத்தில் இருப்போர்க்குத் தக்க தன்று மேலும், அவர்க்குச் செய்யவேண்டும் வழிபாடுகளுள் ஒன்றுஞ் செய்தபாடில்லை. (சகுந்தலை ஒன்றுஞ் சொல்லாமற் புறப்படுகின்றாள்.) அரசன் : (தனக்குள்) ஆ! இவள் ஏன் போக முயல் கின்றாள்? (அவளைப் பிடித்திழுக்க விரும்பியுந் தன்னைத் தடுத்து) ஓ! காதலுற்றோர் மனவியற்கையும் அவர்கள் செய்கை யுந் தம்மில் எவ்வளவு ஒத்திருக்கின்றன ! இம் முனிவர் மகளைப் பின்றொடர்ந்து பற்றிக்கொள்ளல் வேண்டுமெனக் கருதியும், அது முறையன்மையால் உடனே அதனைத் தடுத்துவிட்டேன். இருந்தவாற்றால், நான் என் இருக்கையைவிட்டு எழுந்திரா விடினும் பின்சென்று மீண்டவனாயினேன். பிரியம்வதை : (சகுந்தலையைத் தடுத்து) தோழி, நீ செல்வது தகுதியன்று. சகுந்தலை : (புருவத்தை நெறித்து) ஏன்? பிரியம்வதை : நீ எனக்காக இரண்டுமுறை மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டியவளாய் இருக்கின்றாய். அதனால் வந்து என் கடனைத் தீர்த்துவிட்டு வேண்டுமாயின் நீ அப்புறம் போகலாம். (அவளைத் திரும்பும்படி வலுக் கட்டாயம் பண்ணுகின்றாள்.) அரசன்: நல்லாய்! இப் பெண் மரங்களுக்குத் தண்ணீர் விட்டமை யாலேதான் களைத்துப்போ யிருக்கின்றா ளென்று நம்புகின்றேன். ஏனென்றால், தண்ணீர்க்குடந் தூக்கினமையால் இவள் இரண்டு தோள்களுஞ் சோர்ந்திருக்கின்றன இரண்டு உள்ளங்கைகளுஞ் செக்கச் செவேலெனச் சிவந்திருக்கின்றன; இன்னுங்கூட நெட்டுயிர்ப் பெறிதலால் இவள் பருங் கொங்கைகள் உயர்ந்துயர்ந்து தாழ்கின்றன. இவள் காதிற் செருகியிருக்கும் பிண்டி மலர்கள் அசையாதபடி தடுத்து வியர்வை நுண்டுளிகள் இவள் முகமெங்கும் அரும்பி யிருக்கின்றன; இவடன் கருங்குழல் முடிப்புக் கட்டவிழ்ந்தமை யால் அலைந்து தொங்காநின்ற கூந்தல் ஒரு கையிற் பிடிக்கப்பட் டிருக்கின்றது. ஆகையால், நானே அவள் கடனைத் தீர்த்துவிடுகின்றேன். (தன் கணையாழியைக் கொடுக்க விரும்பு கின்றான்.) (இருவரும் அக் கணையாழியின்மேற் செதுக்கி யிருக்கும் எழுத்துக்களைக் கண்டு ஒருவரையொருவர் வெறித்துப் பார்க்கின்றார்கள்.) அரசன் : நம்மைப்பற்றி நீங்கள் வேறாக நினைத்தல் வேண்டாம். இஃதரசனாற் பரிசிலாகக் கொடுக்கப்பட்டதாகும். பிரியம்வதை: அப்படியாயின் இஃது உண்மையாகவே தங்கள் விரலினின்றுங் கழன்று பிரியப்படாது. தாங்கள் மொழிந்த அருமை மொழியினாலேயே அக் கடன் தீர்ந்து விட்டது. (சிறிது அப்புறந்திரும்பி) ஏடீ, சகுந்தலே நின்மேல் இரக்கமுற்ற இப்பெருமான் அல்லது மன்னனால் நீ விடுவிக்கப்பட்டனை. நீ இப்போது போகலாம். சகுந்தலை: (தனக்குள்) ஆம், நானே என் விருப்பப்படி நடக்கக் கூடுமாயின், (உரக்க) என்னைப் போகச் சொல்லவும் நிறுத்தவும் நீ யார்? அரசன் : (சகுந்தலையைப் பார்த்துத் தனக்குள்) நான் இவள்மேற் காதலுற்று இருப்பதுபோல் இவளும் என்மேற் காதலுற்றிருப்பாளா? நான் காதல் உறுவதற்கு இடம் இருக்கின்றது. ஏனெனில், இவள் என்னுடன் கலந்து உரையாடாவிட்டாலும், நான் பேசும்போது காது கொடுத்து உற்றுக்கேட்கின்றனள்; இவள் என் முகத்தை ஏறிட்டுப் பாராமல் நிற்பது உண்மையே; ஆயினும், இவள் தன் கடைக்கண் நோக்கம் மிகுதியும் என்னையன்றி, வேறொன் றனையும் பார்க்கின்றிலது. (திரைக்குப்பின்னே) ஓ துறவிகளே! துறவாசிரமத்திலுள்ள விலங்கினங்களைக் காக்கும் பொருட்டு நீங்கள் இங்கேயே இருங்கள் துஷியந்த மன்னன் வேட்டமாடிக் கொண்டு கிட்ட வருகின்றாரென்று செய்தி எட்டுகின்றது; அங்ஙனம் வருதலிற், குதிரைக் குளப்படிகளாற் கிளப்பப்பட்ட புழுதி, சாய்ங்கால வெயில் வெளிச்சத்திற் றோய்ந்து, ஆசிரமத்து மரக்கிளைகளில் உலரத் தொங்கவிட்டிருக்கும் ஈர மரவுரியாடைகளிற் படிவது விட்டிற்கிளிகள் தொகுதி தொகுதியாய் வந்து விழுவதுபோல் தோன்றுகின்றது. மேலுந், தேரின் வருகையைக் கண்டு மருண்ட ஓர் யானை, நம்முடைய தவத்திற்கு இடையூறு செய்வ தொன்றே ஓர் உருவெடுத்து வருவது போல் தோன்றி, மான் மந்தைகளைக் கலைத்துக்கொண்டும், ஒரு மரக் கிளையில் தன் மருப்பு அழுந்தித் தைக்க அதனை முறித்து எடுத்துக்கொண்டும், தன் முன்மார்பால் இழுப்புண்ட படர்கொடிச் சுருள்கள் தன் உடம்பைச் சுற்றி வலை போற் பின்னிக்கொள்ள ஆசிரமத் திற்குள் ஓடிவருகின்றது. (எல்லாரும் இதனைக் கேட்டுக் கலக்கமடைகின்றனர்.) அரசன் : (தனக்குள்) சீ! சீ! நம்மைத் தேடிக்கொண்டு வரும் நகரத்தவர் துறவாசிரமத்திற்குத் துன்பத்தை உண்டுபண்ணு கின்றனர் போலும்! நிற்க (அதுகிடக்க) நாம் இப்போதைக்குத் திரும்பிப் போகலாம். அனசூயை : நல்லோய்! காட்டு யானை வெருண்டு வருதலைக் கேட்டு நாங்கள் மிக அஞ்சுகின்றோம். நாங்கள் எங்கள் குடிலுக்குச் செல்லும்படி விடைகொடுங்கள். அரசன் : (விரைந்து) நீங்கள் போகலாம்; நாமும் இத் துறவாசிரமத்திற்கு ஏதும் இடைஞ்சல் உண்டாகாவண்ணம் இயல்பாக இருப்போம். (எல்லாரும் எழுந்திருக்கின்றனர்.) இரண்டு தோழிமாரும் : விழுமியோய்! விருந்தினர்க்குச் செய்யப்படும் வழிபாடுகளுள் ஒன்றும் உங்கட்குச் செய்யப்படாமையால், நீங்கள் மறுபடியும் ஒருமுறை இங்குவருதல் வேண்டுமெனக் கேட்க எங்கட்கு வெட்கமா யிருக்கின்றது. அரசன் : அப்படிச் சொல்லல் வேண்டாம், வேண்டாம். உங்களைப் பார்த்தமையினாலேயே நான் எல்லாச் சிறப்பும் பெற்றவன் ஆயினேன். அனசூயை : அன்புள்ள சகுந்தலே! நம் அன்னை உன்னைப்பற்றி மிகவுங் கவலையாய் இருப்பள். விரைவாக நாம் எல்லாஞ் செவ்வையாய் வீடுபோய்ச் சேர்வம். சகுந்தலை : (மெதுவாக நடந்து) ஐயோ! என்னால் நடக்க முடிய வில்லையே ; இருந்தாற்போலிருந்து என் பக்கத்தில் ஏதோ நோவுகின்றதே. ஆ! அனசூயே, என் அடியில் இந்தத் தருப்பைப் புல்லின் கூரியநுனை குத்திக் காயமாக்கி விட்டதுபார்; இதோ இந்த முட்செடியின்மேல் என் மரவுரியாடை அகப்பட்டுக்கொண்டது; என்னைப் பிடித்துக் கொண்டு ஆடையை அதனின்றும் எடுத்துவிடு. (சகுந்தலை இங்ஙனஞ் சூழலாய்த் தோழிமாரை நிறுத்தி நிறுத்தி அரசனைப் பார்த்துக்கொண்டே அவர்களுடன் போய்விடுகின்றாள்.) அரசன் : நகரத்திற்குப் போகவேண்டுமென்னும் என்விருப்பந் தணிந்து விட்டது; இதற்கிடையில், என்னோடு வந்தவர்களுடன்போய்ச் சேர்ந்து, இத் துறவாசிரமத்திற்கு மிக எட்டியிராத இடத்திலேயே அவர்கள் கூடாரமடிக்கும் படி செய்விப்பேன். சகுந்தலையைப் பற்றி எண்ணுவதை விடுத்து வேறோரு முகமாய் என் அறிவைத் திருப்ப என்னாற் கூட வில்லையே; என்னை? என் உடம்பு முன் செல்லா நிற்பவும் என் உள்ளம் அதனோடு இணங்கிப் போகாமல், காற்றோட்டத் திற்கு எதிரே பிடித்த கொடிமரத்தின் பட்டாடைபோல் பின் திரும்பிப் பறக்கின்றதே. (எல்லாரும் போய் விடுகின்றனர்.) முதல் வகுப்பு முடிந்தது. இரண்டாம் வகுப்பு களம் : துறவாசிரமத்து ஓரத்திற் கூடாரம் அமைக்கப் பட்ட மணல்வெளி. (அலந்துபோன விதூஷகன் வருகின்றான்.) விதூஷகன் : (பெருமூச்செறிந்து) ஐயோ! வேட்ட மாடுவதிலேயே மனம்பற்றி யிருக்கின்ற இவ் வரசனோடு சேர்ந்து நான் அலந்து போகின்றேனே. அங்கே ஒரு மான், அதோ ஒரு பன்றி, இதோ ஒரு புலி, என்கின்ற கூச்சலுடன், மரநிழலும் அரிதாய்ப் போன இந்தக் கோடை காலத்தில் இக் காட்டுத் தோப்புகளிலே புகுந்து உச்சிப் பகலிலும் ஒரு கானகத்திலிருந்து மற்றொரு கானகமாக அலைந்து கொண்டிருக்கின்றோமே! உதிர்ந்து அழுகிய சருகுகளால் நிரம்பிக், கசப்பாயும் வெதுவெதுப்பாயும் இருக்கும் மலையருவிகளின் நீரை அருந்தி வருகின்றோமே! இருப்புக் கம்பியிற் கோத்துக் காய்ச்சிய இறைச்சியையே பெரும்பாலும் வேளை தப்பிய வேளையில் உண்டு வருகின்றோமே! அவன் பின்னே குதிரைமேற் போவதால் என் மூட்டுக்களெல்லாம் உராய்ந்து, இரவிலுங்கூட நான் நன்றாய் அயர்ந்து தூங்கக் கூடாதவனாய்விட்டேன். மறுபடியும் விடியற்காலையிலேயே வேட்டையாடும் அவ் வேசி மக்கள் காட்டைக் கலைக்க இடுங் கூச்சலால் விழித்து விடுகின்றேன். இவ் வெல்லாவற் றோடுமாவது இன்னுந் துன்பம் ஒழிந்தபாடில்லை. பின்னுங் கட்டிமேற் சிலந்தி யெழுந்தாற் போல, நேற்று எம்மைவிட்டு அகன்றபின் அரசன் ஒரு மானைத் துரத்திக் கொண்டுபோய்த் துறவாசிரமத்தில் நுழைந்த நேரத்தில் என் கெட்டகாலம் அவனுக்குச் சகுந்தலை என்ற துறவிமகள் ஒருத்தியைக் காட்டிவிட்டது. இப்போது அவன், தன் நகரத்திற்குத் திரும்பவேண்டுமென்ற பேச்சைக்கூட எடுக்கிறதில்லை. இன்றுங்கூட அவன் அப்பெண்ணைப் பற்றிய நினைவில் ஆழ்ந்திருக்கும்போது அவன் கண்கள் பொழுதுவிடியக் கண்டன. யான் யாது செய்யக்கூடும்? இப்போது அவன் தன் காலைக்கடன்களை முடித்திருப்பனாதலால், அவனைப் போய்க் காண்கின்றேன். (சுற்றிப்போய்ப் பார்க்கின்றான்) கையில் வில் ஏந்தினராய்க் காட்டு மலர்களால் தொடுத்த மாலை அணிந்த தன் யவனப் பணிப்பெண்கள் சூழ என் இனிய நண்பன் இதோ வந்து கொண்டிருக்கின்றான். நல்லது, என் உடம்பின் உறுப்புகள் மூட்டுவிட்டுப் போனதனால் நொண்டியானதுபோல் நிற்கின்றேன். இந்தச் சூழ்ச்சி யினாலாவது நான் இந்தத் தொல்லையினின்றும் விடுபட மாட்டேனோ. (ஒரு கோலைப் பற்றிக் கொண்டு நிற்கின்றான்.) (பிறகு அரசன் மேலே சொன்னபடி தன் ஏவற் பெண்களுடன் வருகின்றான்.) அரசன் : காதலன்பிற்கேற்ற அப் பெண்மணி எளிதிற் கிடைப்பவள் அல்லள்; ஆயினும், என் மனமோ அவள் கருத்தினை உற்றுணர்ந்ததனால் ஆறுதலுடையதாகின்றது. காதலிக்கப்பட்ட பொருள் பெறப்படா விடினும், இருவரிடத்தும் நிகழும் அக் காதலனது இன்பத்தை விளைக்கின்றது. (புன் முறுவல் கொண்டு) இங்ஙனமே, தான் விழைந்த பெண்ணும் தன்னைப்போலவே காதல் கொண்டிருப்பளெனத் தன்மனம் போனபடி யெண்ணி வருந்துவது காதலனுக்கு இயற்கையாய் இருக்கின்றது. தான் வேறொரு முகமாய்ப் பார்ப்பவள் போலிருந்தாலும் அவள் காமுற்று மெல்லென விழித்தமையுங், கடிதடப் பொறை யினால் மெல்ல நடக்கையில் விளையாடிச் சென்றமையும், ஏடீ போகாதே என்று தன் தோழியினால் மறிக்கப் பட்ட விடத்து அவளைக் கடிந்து பேசினமையும் எல்லாம் என்னைக் குறித்தே செய்தனள்போலும் ! ஆ! காதலர் இவை போல்வன வெல்லாந் தம்மைக் குறித்தே நிகழ்ந்தன வென்று கருதுகின்றனர் ! விதூஷகன் : (முன்போலவே நின்றுகொண்டு) ஓ நண்பரே! என் கையுங் காலும் நீட்டக் கூடவில்லை. ஆகவே, உமக்கு வெற்றியுண்டாகக் கடவதென்று வெறுஞ்சொற்களால் மட்டும் வாழ்த்துகின்றேன். அரசன் : (முறுவலித்து) உன் உடம்புக்கு எங்கேயிருந்து இந்தத் திமிர்ப்பிடிப்பு வந்துவிட்டது? விதூஷகன் : நீரே என் கண்ணைக் குத்திவிட்டுக் கண்ணில் ஏன் நீர் வருகின்றதென்று கேட்கின்றீரே ? அரசன் : நீ சொல்லுகின்றது எனக்கு உண்மையாய் விளங்கவில்லை. விதூஷகன் : ஓ நண்பரே! நாணல் ஒரு கூனன்போல் வளைவது தனக்குள்ள ஆற்றலினாலா அல்லது நீரோட்டத்தின் விரைவினாலா? அரசன் : அதற்குக் காரணம் நீரோட்டத்தின் விரைவுதான். விதூஷகன் : அப்படியே எனது நோய்க்கும் நீர்தாங்காரணம். அரசன் : எவ்வாறு? விதூஷகன் : நீர் நுமக்குரிய அரசியற் கடமைகளை விடுத்து, இவ் விருண்ட காட்டுள் வேட்டுவனைப்போல் திரிந்து கொண்டிருக்கின்றீரே! உமக்கு உண்மையைச் சொல்லு கின்றேன், காட்டு விலங்குகளைப் பின்றொடர்ந்து நாடோறும் ஓடுதலால், என்னுறுப்புக்களின் பொருத்துக்கள் உராய்ந்து மூட்டுவிட்டுப் போய்விட்டன; என் உறுப்புக்கள் என் வசப்படவில்லை ஆகையால், ஒரு நாளைக்கேனும் நான் இளைப்பாறியிருக்க விடை தரும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகின்றேன். அரசன் : (தனக்குள்) இவனும் இவ்வாறு சொல்லினான். காசியபருடைய மகளை நினைந்து என் மனமும் வேட்டமாடுவதில் இளைப்படைந்தது. புள்ளி விளங்கு பொன்மான் உடன்பயின்ற வள்ளைச் செவியாளென் மாதர்க் கொடிதனக்குத் தெள்ளு மடநோக்கந் தெருட்டியதால் மற்றதனை உள்ளிக் கணைதொடுத்தும் உய்த்திடநான் மாட்டேனால். விதூஷகன் : (அரசன் முகத்தைப் பார்த்து) நீர் எதைப் பற்றியோ உள்ளுக்குள்ளேயே நினைந்து சொல்லிக் கொள்ளுவதுபோல் தோன்று கின்றது; நான் கானகத்தில் அழுதவனாய் விட்டேன். அரசன் : (புன்முறுவல்செய்து) வேறென்ன? நண்பனுடைய சொல்லைக் கடக்கக் கூடாதென்று எண்ணிக் கொண்டு வாளா நின்றேன். விதூஷகன் : நீடு வாழ்வீராக! (போக முயல்கின்றான்.) அரசன் : சிறிது பொறு, இன்னுஞ் சிறிது யான் சொல்லவேண்டி யிருக்கின்றது. விதூஷகன் : அப்படியே தாங்கள் கட்டளையிடலாம். அரசன் :- இளைப்பாறிய பின், வருத்தம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் எனக்கு நீ துணைவனாக இருக்கவேண்டும். விதூஷகன் : அதென்ன கொழுக்கட்டை தின்பதிலா? அரசன் : எதில் என்பதைச் சொல்கின்றேன். விதூஷகன் : நான் என் சொல்லைப் பிணையாக வைத்திருக்கின்றேன். அரசன் : யார் அங்கே? (வாயில்காவலன் புகுகின்றான்.) வாயில்காவலன் : (வணங்கி) மன்னர் பெருமான் கட்டளை. அரசன் : ஏ இரைவதகா! படைத்தலைவனை அழைத்து வா. வாயில்காவலன் : அப்படியே. (புறம்போய்ப் படைத் தலைவனை அழைத்துக்கொண்டு புகுகின்றான்.) இந்த முகமாய்ப் பார்த்தபடியே மன்னர்பெருமான் தங்களுக்குக் கட்டளையிட ஆவலுற்றிருக்கிறார்; தாங்கள் அருகே போங்கள். படைத்தலைவன் : (அரசனை நோக்கி) வேட்டமாடுதல் தீதுபயப்ப தென்பது தெரிந்திருந்தாலும் அஃது இவர்க்கு நன்மையை விளைவித்திருக்கின்றது; மலைகளினிடையே திரியுங் களிற்றுயானைபோல், வலிமையினின்று வடித்தெடுத்த உடம்பினையுடையரா யிருக்கின்றார். இவ் வுடம்பின் முன்புறம் வில்நாணை இடையறாது இழுத்தலால் இறுகி உரமா யிருக்கின்றது; ஞாயிற்றின் கதிர் வெம்மையையும் பொறுக்க வல்லதாய் இருக்கின்றது; வியர்வை நுண்டுளிகள் ஊடுருவு தற்கும் இடந் தராததாயிருக் கின்றது; இது மெலிந்திருப்பினுந் திரண்டுருண்டு வளர்ந்திருத்தலால் அது தோன்றவில்லை - (கிட்டப்போய்) மாட்சிமை யுடை யீர்க்கு வெற்றித்திறஞ் சிறக்க! காட்டிலே விலங்குகள் வளைத்துக் கொள்ளப்பட்டன. ஏன் இன்னும் எம்பெருமான் காலந் தாழ்க்கின்றனர்? அரசன் : படைத்தலைவ, மாதவியன் வேட்டமாடுவதைப் பற்றிப் பழித்துப் பேசுகின்றமையால், யான் மனவெழுச்சி குன்றிவிட்டேன். படைத்தலைவன் : (அப்புறமாய்) நண்பனே, நின் சொற்களில் உறுதியாய் இரு; இடையே நான் அரசன் மனப் போக்கின்படியே பேசுகின்றேன். (உரக்க) இம் மடையன் குழறிக் கொட்டட்டும். தாங்களே இதற்குச் சான்றாய் இருக்கின்றீர்கள். மிகுந்த கொழுப்புக் குறைந்து அடி வயிறு சிறுத்து மெலிதாயும், உடம்பு நொய்தாயும் இருத்தலால் அஃது இயங்குதற்குச் சுளுவாய் இசைந்திருக்கின்றது; விலங்குகளின் துடுக்கும் அச்சத்தாலுஞ் சினத்தாலும் மாறுபட்டுக் காணப்படுகின்றது; அசைந்துசெல்லும் அவற்றை இலக்கு வைத்து எய்யும் அம்பு குறி பிழையாவாயின், அஃதன்றோ வில்லாளிகட்குப் பெரும் புகழ்; இத்தகைய வேட்டமாடுதலைத் தீதென்று சிலர் சொல்வது பொய்யே யாகும். இதைப்போல் வேறெந்த விளையாட்டு எங்கே கிடைக்கும்? விதூஷகன் : (சினந்து) கிளர்ச்சியைத் தூண்டிவிடும் நீர் அப்பாற் போம். வேந்தர் பெருமான் தமது இயற்கை நிலைக்குத் திரும்பி யிருக்கின்றார். இதற்கிடையில் நீர் வேண்டுமானால் காட்டுக்குக் காடு திரிந்து ஓர் ஆடவன் மூக்கு இறைச்சியைத் தின்ன விரும்பும் முதிய ஒரு கரடி வாயிற்பட்டு ஒழியும். அரசன் : நல்ல படைத் தலைவ! யாம் துறவாசிரமத்திற்கு அருகாமையிற் படை விட்டிருக்கின்றோம். ஆதலால் நின்சொற் களுக்கு யான் உடன்படேன். இன்றுமுதற் காட்டெருமைகள் நீர் நிலைகளிற் புகுந்து தம் மருப்புகளால் நீரை யடித்தடித்துக் குழப்பிக்கொண்டு கிடக்கட்டும்; மான்மந்தைகள் மரநீழல்களிற் குழாங்கொண்டு, அசை போட்டுக் கொண்டிருக்கட்டும்; பரிய காட்டுப்பன்றிக் கூட்டங்கள் குட்டை யோரங்களிற் கோரைக் கிழங்குகளை அச்சமின்றிக் கெண்டி யுண்ணட்டும்; நாண் முடிச்சு இடப் பட்ட எம்முடைய வில்லும் நாண் தளர்த்தப் பட்டு இளைப்பாறட்டும். படைத்தலைவன் : எம்பெருமான் வேண்டுமாறே. அரசன் : அப்படியாயின், காட்டைக் கலைப்பதற்காக முன்னேறிச் சென்றோரை எல்லாந் திரும்ப வரவழைத்து விடு; தவவொழுக்கம் நிகழும் இக் கானகத்திற்கு எத்தகைய இடைஞ்சலும் உண்டாக்காவண்ணம் நம் போர்க்களமர் அச்சுறுத்தப் படுவாராக; தவச் செல்வத்தை உரிமையாக வுடைய துறவிகள் மாட்டுப் பொறுமைத் தன்மை மிகச் சிறந்து விளங்கினாலும், எரித்துவிடுந் தன்மையுள்ள ஒரு தீ அவரிடத்துக் கரந்திருத்தலும் நினைவுறக் கடவாய் ; முன்னே தொடுதற்கு இனிதாயிருந்த சூரிய காந்தக்கல் வெங்கதிர் வெப்பம் பட்ட அளவானே தீக்காலுதல்போல அவரும் அதனை வெளிப்படுத்தா நிற்பர். படைத்தலைவன் : எம்பெருமான் கட்டளையிடுமாறே. விதூஷகன் : ஏடா வேசிமகனே, இப்போது ஓடிப்போ. நீ அரசனைத் தூண்டுதற்குச் சொன்ன புளுகெல்லாம் வாய்க்கவில்லையே. (படைத்தலைவன் போய்விடுகின்றான்) அரசன் : (தன் ஏவலரைப் பார்த்து) நீங்கள் போய் வேட்டையுடைகளைக் களைந்து விடுங்கள். ஏ இரைவதகா, நீயும் உன் தொழிலைப் பார். ஏவலர் : தங்கள் கட்டளைப்படியே. (போய்விடு கின்றார்கள்) விதூஷகன் : ஓர் ஈ கூட இல்லாமல் துரத்திவிட்டீர். இம் மர நீழலில் நெருங்கி இடைமிடைந்த இப் படர்கொடிப் படங்கின்கீழ் உள்ள இருக்கையில் இப்போது அமரும்; நானும் ஆறுதலாய் இருக்கின்றேன். அரசன் : வழிகாட்டிக்கொண்டு செல். விதூஷகன் : இவ்வழியாய் வாருங்கள். (இருவருஞ் சுற்றிப்போய் அமர்கின்றனர்.) அரசன் : மாதவிய! கட்கினிய தொரு நன்பொருளை நீ கண்டிலாமையின், நின் கண்களாற் பெறப்படும் பயனை நீ பெற்றிலை. விதூஷகன் : ஏற்கனவே, நீர்தாம் என் கண்ணெதிரே இருக்கின்றீரே. அரசன் : ஒவ்வொருவருந் தத்தமக்குரிய தொன்றனையே அழகிதெனக் கருதுகின்றனர். ஆயினும், அத்துறவாசிரமத் திற்கு ஓர் அணிகலம்போற் சிறந்து திகழுஞ் சகுந்தலையைக் குறித்தே நான் பேசுகின்றேன். விதூஷகன் : (தனக்குள்) நல்லது, இவன் நினைப்பதற்கு இடமில்லாமற் செய்துவிடுகின்றேன். (உரக்க) ஓ நண்பரே! அவள் ஒரு துறவி மகளாயின் அவளைப் பார்ப்பதிற் பயன் யாது? சொல்லும். அரசன் : சீ! நீ அறியாய்! மக்கள் எத்தன்மையான எண்ணத்துடன் முகத்தை மேலேறிட்டுக்கொண்டு கண்கள் இமையாமல் முழுமதியின் புத்தொளியை நோக்குகின்றனர்? பாங்கனே! புருவின்குடியிற் பிறந்தாரது மனம் விலக்கப் பட்டதொரு பொருளை நாடாது. அம் முனிவர் மகள் வானநாட்டில் உறையும் ஓர் அரம்பை மாதின் மகளென்றும், அம் மாதினால் தனியே விடப்பட்ட காலையிற் புது மல்லிகைப்பூக் காம்பு சுழன்று எருக்கம் புதன்மேல் விழுந்தாற் போல், அவராற் கண்டெடுக்கப்பட்டா ளென்றுஞ் சொல்லப் படுகின்றனள். விதூஷகன் : (சிரித்து) பேரீச்சம்பழத்தைத் தின்ற ஒருவன் அதனை ஒழித்துப் புளியம்பழத்தை உண்ண விரும்புதல் போல, உமது உவளகத்திலுள்ள அழகிய மகளிரைவிட்டு நீர் இங்ஙனம் விழைவு கொண்டீர். அரசன் : *காணிற் கழறலை கண்டிலை மென்றோட் கரும்பினையே. (*திருச்சிற்றம்பலக்கோவையார்: 23) விதூஷகன் : உம்மிடத்தும் இத்தகைய தொரு வியப்பினை விளைவித்த அது பெரிதுங் கவர்ச்சி யுடையதாகத் தான் இருக்கவேண்டும். அரசன் : நண்பா! என்ன மிகுதியாகச் சொல்வது? ஓவிய மாக எழுதிய பின்னை யொருமுதல்வன் ஆவி புகுத்தி விடுத்தன னோவன் றழகையெல்லாந் தாவி மனத்தாற் றிரட்டின னோவவன் றன்வலிவும் பூவை யுருவும் நினையிற்பொன் னாளோர் புதுமையன்றே? இருந்தவாற்றால் அவள் மகளிர்க்கெல்லாம் வேறாய் அவர்க்கு ஓர் அணிகலம்போல் எனக்குச் சிறந்து காணப் படுகின்றாள். விதூஷகன் : அப்படியாயின், மற்றை அழகிய பெண் களெல்லாரும் பின்புறந் தள்ளப்பட்டாராயினர். அரசன் : இன்னும் எனக்கு இவ்வாறு தோன்றுகின்றது. மோவா மலரோ நகங்களை யாத முழுமுறியோ ஆவா கருவி துருவாது பெற்ற அருமணியோ நாவாற் சுவையப் புதுநற வோசெய்த நற்றவங்கள் தாவா தொருங்கு திரண்டுவந் தாலன்ன தையலரே. இத்தகையதோர் அரிய பொருளை நுகருதற்கு, நல்வினை யானது எவரை இங்கே அணுகுவிக்குமோ தெரியவில்லையே. விதூஷகன் : அப்படியா? அப்படியாயின் நீர் அவளை உடனே மீட்கக் கடவீர்! இங்குதி நெய் தடவி நெய்ப்பான சென்னியையுடைய ஒரு தவசி கையில் அவள் அகப்பட்டுக் கொள்ளும்படி விட்டுவிடாதீர். அரசன் : அப் பெண்மணி தன் கருத்தின்படி நடக்கக் கூடாதவளா யிருக்கின்றாள்; அவள் தந்தையும் இப்போது இங்கில்லை. விதூஷகன் : நல்லது, உம்மைப்பற்றி அம் மாதின் உள்ளக் குறிப்பு அவள் கண்களில் எப்படித் தோன்றிற்று? அரசன் : துறவோர் குடிக்குரிய பெண்கள் இயற்கை யிலேயே நாணமுடையராய் இருக்கின்றனர். ஆயினும், யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால், தான்நோக்கி மெல்ல நகும். (குறள். 1094) இன்னுந், தான் முறுவலிக்கும்போது பிறிது ஏதோ பற்றி முறுவலித்தாள்போற் செய்வள்; இங்ஙனம் காதல் நாணத்தினால் தடை செய்யப்படுதலின், அஃது அவளால் மறைக்கப்படவும் வெளிப்படவும் மாட்டா தாயிற்று. விதூஷகன் : உம்மைக் கண்டவுடனே அவள் உம்முடைய மடிமீது வந்திருக்கவேண்டுமென்று கருதுகின்றீரோ? அரசன் : திரும்பவும் அவள் தன் தோழிமாரோடு போம்பொழுது நாணத் தினால் மிகவுந் தடைப்படினும், என்மேற் சென்ற தன் காதற் குறிப்பை நன்கு வெளியிடு வித்தாள்; என்னை? அம் மெல்லியலாள் சில அடிகளே எடுத்துவைத்ததுந் தன் அடியில் தருப்பைப் புல்லின் முனைகுத்திற்றென்று சடுதியிலே நின்றுவிட்டாள்; அங்ஙனம் நிற்கையில், முட்செடிகளின் கிளைகளாற் பற்றப்படா திருக்கவுந் தன் மரவுரி யாடையை அதனினின்றும் விடுவிப்பாள் போல் என்னைத் திரும்பி நோக்கினாள். விதூஷகன் : அப்படியாயின் வழிப்பயணம் போவதற்கு வேண்டும் பொருள்களுடன் முயற்சியாயிரும். தவவொழுக்கம் நிகழும் இக் கானகத்தை இன்பம் நுகர்தற்கேற்ற இளஞ் சோலை யாக்கிவிட்டீர். அரசன் : நண்பனே! என்னை இன்னானென்று தவசிகள் சிலர் அறிவர்; எந்த ஏதுவை முன்னிட்டு நாம் திரும்பவுந் துறவாசிரமத்திற் செல்லலா மென்பதைக் கண்டு சொல். விதூஷகன் : வேறென்ன சாக்கு வேண்டும்? நீர் தாம் அரசனாயிற்றே. அரசன் : அதனால் என்னை? விதூஷகன் : காட்டுத் தானியத்தில் ஆறிலொரு கூறு துறவிகள் செலுத்த வேண்டுமெனப் போய்ச் சொல்லுமே. அரசன் : ஓ மடவோய்! முழுமணிக் குவியல்களைக் காட்டினும் உயர்த்துப் பேசப்படும் மற்றொருவகைக் கடமை அவர்களைக் காப்பதனால் நமக்கு வருகின்றதே. பல வேறு வகுப்பினரிடமிருந்து பெறப்படுகின்ற அரசிறைப் பொருள் அழிந்துபோவதுந், துறவோர்கள் தாமியற்றுந் தவப் பயனில் ஆறிலொரு கூறாய்க் கொடுக்கும் பொருள் என்றும் அழியாதிருப்பதும் ஆராய்ந்துபார். (திரைக்குப் பின்னே) நன்று! நன்று! நங்கருத்து நிறைவேறியது. அரசன் : (உற்றுக்கேட்டு) ஆழ்ந்த தமைந்த இக்குரல் ஒலி யினால் வருகின்றவர்கள் துறவிகள் என்பது புலப்படுகின்றது. (வாயில்காப்போன் புகுகின்றான்.) வாயில்காப்போன் : எம்பெருமானுக்கு வெற்றி சிறக்க! வாயிலில் துறவோர் புதல்வர் இருவர் வந்திருக்கின்றனர். அரசன் : அற்றேல், அவர்களைக் காலந் தாழாமற் கொண்டு வருக. வாயில்காப்போன் : இதோ கொண்டு வருகிறேன். (வெளியே போய்த் திரும்ப அவ்விருவருடனும் புகுகின்றான்,) அடிகாள்! இவ்வழியே வாருங்கள், இவ்வழியே வாருங்கள். (இருவரும் அரசனைப் பார்க்கின்றனர்) ஒருவர் : அச்சோ! இவர் மேனி சுடர் ஒளியால் துலங்குகின்றதாயினும், இவரிடத்தில் நமக்கு அச்சந்தோன்ற வில்லை. ஒரு முனிவர்க்கும் இவர்க்கும் வேறுபாடு மிகுதியாய் இல்லாமையால் இஃது இவர்பால் இயற்கையே யாகும். (துறவிகள் தம்மிடத்து விருந்து வருவோரை ஒம்புதற் பொருட்டு எல்லாரும் அணுகி இன்புறுதற் கேதுவாயுள்ள ஆசிரம வாழ்க்கை யுடையரா யிருத்தல் போல) இவரும் எல்லார்க்கும் பற்றுக்கோடான இவ்வாழ்க்கையினை மேற்கொண் டிருக்கின்றார். (துறவிகள் தவவொழுக்கத்தின் வலியால் உலகத்தைப் பாதுகாத்துப் பெரும் புண்ணியத்தை ஈட்டிக் கொள்ளுதல் போல) இவரும் உலகத்தைப் பாதுகாத்தலாற் பெரும் புண்ணியத்தை நாளுந் தொகுத்துக் கொள்ளுகின்றார். (எப்படியானால் துறவோர்க்கு உரிய ருஷி என்னுஞ் சிறப்புப் பெயர் எல்லா விடங்களிலும் எல்லாரானும் புகழ்ந்து பாடப்படுகின்றதோ) அப்படியே இவரும் அவா அறுத்தமையாற் பெற்ற ருஷி என்னுந் தூயசிறப்புப் பெயரும் ராஜ என்னும் அடைமொழியொடு கூட உபய சாரணர்களாற் பாடப்பட்டு விண்ணுலகினை அடுத்து அடுத்து எய்துகின்றது. இரண்டாமவர் : ஏ கௌதமா! இந்திரன் நேசரான அந்தத் துஷியந்தன் என்பார் இவர்தாமோ? முதல்வர் : ஆம். இரண்டாமவர் : தாம் ஒருவராகவே யிருந்துங் கணைய மரம்போற் பருத்து நீண்ட தம் தோள்களால் நாற்புறமுங் கரியகடலை எல்லையாக உடைய நில முழுவதையும் இவர் ஆண்டு வருதல்உண்மையிலேயே ஒரு வியப்பு அன்று. ஏனென்றால், அரக்கரொடு பகைகொண்டிருக்குந் தேவர் கூட்டங்களெல்லாம், இவரது நாண் ஏறிட்ட வில்லையும் இந்திரனது வச்சிரப் படையையும் நம்பியன்றோ வெற்றியடைவோமென்று எண்ணி யிருக்கின்றன! இருவரும் : (அருகே வந்து) ஓ அரசரே! நுமக்கு வெற்றி உண்டாகுக! அரசன் : (தன் இருக்கையினின்றும் எழுந்து) நுங்களைப் போற்றுகின்றேன். இருவரும் : உமக்கு நலம் உண்டாகுக! (பழங்களைக் கையுறையாகக் கொடுக்கின்றனர்.) அரசன் : (அவற்றை வணக்கமாய் ஏற்றுத்) தங்கள் கட்டளைக்கு எதிர்நோக்கி யிருக்கின்றேன். இருவரும் : ஆசிரமத்திலுள்ள முனிவர் நீர் இங்கிருப்பதை அறிவர்; ஆகையால் நும்மை இங்ஙனம் வேண்டுகின்றார்கள் - அரசன் : அவர்கள் கட்டளை யாது? இருவரும் : மாமுனிவரான கண்ணுவர் இங்கு இல்லாமையினாலே அரக்கர்கள் நாங்கள் செய்யும் வேள்வி கட்கு இடையூறு இழைக்கின்றார்கள். ஆகையால் நீர் நுமது தேர்ப்பாகனோடும் இவ்வாசிரமத்தில் வந்து சில இரவு தங்கியிருந்து பாதுகாக்க வென்று அவர்கள் வேண்டிக் கொள்கின்றார்கள். அரசன் : அவர்கள் அருளியபடியே இருக்கின்றேன். விதூஷகன் : (மறைவாய் அரசனிடத்தில்) இப்போது இவ் வேண்டுகோள் நுமக்கு நயமானதா யிருக்கின்றது. அரசன் : இரைவதகா! நான் சொன்னனேன்று தேர்ப் பாகனிடஞ் சொல்லி வில்லுங் கணையும் எடுத்துக் கொண்டு தேரைச் செலுத்திவரச் செய். வாயில்காப்போன் : எம்பெருமான் கட்டளைப்படியே. (போகின்றான்.) இருவரும் : (மகிழ்ச்சியோடு) நும்முடைய முன்னோரைப் போல் நுமது கடமையைச் செய்வது நுமக்கு நிரம்பவுந் தகுதியே; இடர் உற்றவர்களுக்கு அதனை நீக்கி உதவி செய்தலிலேயே புருவின் குடியிற் பிறந்தோர் தம்மைத் தீக்கை செய்துகொண்டிருக்கின்றார்கள். அரசன் : அடிகாள்! நீங்கள் முன்னே செல்லலாம். நானும் இதோ உங்கள் பின்னே வருகின்றேன். இருவரும் : நுமக்கு வெற்றி சிறக்க! (போய்விடு கின்றார்கள்.) அரசன் : மாதவிய! உனக்குச் சகுந்தலையைப் பார்க்க ஆவலுண்டா? விதூஷகன் : முன்னே கேட்டபோது பார்க்கவேண்டு மென்னும் அவர் கரைகடந்து ஒழுகியது; அரக்கர்களைப் பற்றிக் கேட்ட உடன் இப்போது அஃது ஒரு துளிகூட இல்லாமற் போயிற்று. அரசன் : ஏடா! ஒன்றுக்கும் அஞ்சாதே; நீ என் அருகிலேயே இருப்பா யன்றோ? விதூஷகன் : அப்படியானால் நான் இங்கே அரக்கர்களுக்குத் தப்பிப் பிழைத்தேனே? (வாயில்காப்போன் வருகின்றான்) வாயில்காப்போன் : தாங்கள் எழுந்தருளுதலை எதிர் பார்த்துக்கொண்டு தேரானது காத்திருக்கிறது. இன்னும் இதோ பட்டினத்திலிருந்து தங்கள் அன்னைப் பெருமாட்டி யாரால் விடுக்கப்பட்ட கரபகன் ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறான். அரசன் : (வணக்கத்தோடு) என்ன? என் அன்னை யிடமிருந்தா விடுக்கப்பட்டது? வாயிலோன் : ஆம். அரசன் : அப்படியா, அவனை உள்ளே வரவிடுக. வாயிலோன் : அப்படியே. (போயிக் கரபகனோடு திரும்பி வருகின்றான்.) மன்னர் பெருமான் இதோ இருக்கிறார் கிட்டப்போம். கரபகன் : (கிட்டப்போய் ) வேந்தர் பெருமானுக்கு வெற்றி சிறக்க! இன்றுமுதல் நாலாம் நாட் செய்யப்படுங் கிரியையோடு என் நோன்பு முடிவு பெறும். நீடு வாழ்வாயாக நீ அன்று தவறாமல் என்னுடன் வந்திருக்க வேண்டும் என்பது தங்கள் அன்னைப் பெருமாட்டியார் விடுத்த செய்தியாகும். அரசன் : இப்போது, ஒரு பக்கத்தில் துறவிகளின் அலுவலைப் பார்க்கவேண்டிய கடமையிருக்கின்றது; மற்றொரு பக்கத்தில் அன்னையார் கட்டளைப்படி நடக்க வேண்டியிருக்கின்றது; இரண்டிலும் வழுவுதலாகாது; இதற்கு யான் என் செய்வேன்? விதூஷகன் : திரிசங்குபோல் இடை வெளியிலே தொங்கிக் கொண்டிருமே. அரசன் : நான் உண்மையாகவே திகைப்படைந்திருக் கின்றேன். அவ் விரண்டு கடமைகளும் இரண்டு வேறு இடங்களிற் செய்யவேண்டி யிருத்தலால், தான் செல்லும் வழியின் எதிரே கற்பாறையால் தகைக்கப்பட்ட யாற்றின் நீர் ஓட்டம்போல் என் மனம் இரண்டு பிளவாய்விட்டது. (எண்ணிப்பார்த்து) ஏ நண்பா! என் அன்னையாரால் நீ ஒரு பிள்ளைபோற் கருதப்படுகின்றாய்; ஆகையால், நீ இங்கிருந்து திரும்பிப்போய்த் துறவிகளின் அலுவலில் என் உள்ளம் ஈடுபட்டிருக்கின்றதென அவர்கட்கு அறிவித்து, நீயே அவர்கட்காகப் புதல்வன் கடமைகளைச் செய்து முடிக்கக் கடவாய். விதூஷகன் : நான் அரக்கர்களுக்கு அஞ்சுகிறேன் என்று எண்ணுகிறீரோ என்ன? அரசன் : (புன்னகை செய்து) ஓ! பார்ப்பனப் பெரியோய்! இஃது உன்னிடத்தும் நினைக்கற்பாலதா? விதூஷகன் : அப்படியானால் நல்லது; அரசன் தம்பியைப்போல் நான் போவேன். அரசன் : இத் துறவாசிரமத்திற்கு எவ்வகையான தொல்லையும் நேராதபடி செய்ய வேண்டுமாதலாற் படைஞர் களெல்லாரையும் உன்னுடனேயே போக்கி விடுகின்றேன். விதூஷகன் : (செருக்கோடு) அப்படியானால் நான் இப்போது இளவரசாயினேன்! அரசன் : (தனக்குள்) இந்தப் பயல் பேதைமதியுடையனா யிருக்கின்றான். யான் சகுந்தலைமேல் விழைவு கொண்டிருத்தலை இவன் ஒருகால் உவளகத்தில் உள்ள மகளிர்க்குச் சொல்லினுஞ் சொல்லுவான். நல்லது இவனுக்கு இங்ஙனஞ் சொல்வேன். (விதூஷகன் கையைப் பிடித்து) நண்பனே! முனிவர்பால் வைத்த வணக்க அன்பின் பொருட் டாகவே யான் ஆசிரமத்திற்குச் செல்கின்றேன்; உண்மையில் எனக்கு அத் துறவி மகளிடத்தில் எவ்வகையான விருப்பமு மில்லை. பார்! நம்முடைய நிலைமை எங்கே ! மான் கன்று களினிடையே வளர்க்கப்பட்டுக் காதல் இன்னதென்றே அறியாத அப் பெண்ணின் நிலைமை எங்கே! நேசனே! நான் பகடியாய்ச் சொன்ன சொற்களை உண்மையாக நினையாதே. விதூஷகன் : நல்லதப்படியே (எல்லாரும் போய் விடுகின்றனர்.) இரண்டாம் வகுப்பு முற்றியது. மூன்றாம் வகுப்பு களம் : இளமரக்காவின்கண் உள்ள ஒரு துறவாசிரமம். (கண்ணுவ முனிவர்க்கு வேள்வி செய்யும் மாணாக்கன் ஒருவன் வருகின்றான்.) மாணாக்கன் : (குசைப்புல் அறுத்துக் கொண்டு) ஆ! துஷியந்த மன்னன் எவ்வளவு வல்லவனாயிருக்கின்றான்! மாட்சிமை தங்கிய அம் மன்னன் இவ் வாசிரமத்திற் புகுந்த வுடனே, நம்முடைய வேள்விச் சடங்குகள் இடையூறுகள் நீங்கப்பெற்றன. வில் தன் உங்கார ஓசையால் வெருட்டி விடுதலையொப்ப, நாணைத் தெறிக்கும் ஓசை யளவினாலேயே சேய்மைக்கண் வருந் தடைகளை எல்லாம் ஓட்டி விடுகின்றா னென்றாற், கணைதொடுத்தலைப் பற்றிப் பேசுதல் எற்றுக்கு? நல்லது, இக் குசைப்புல்லை எடுத்துக் கொண்டுபோய் வேள்வி மேடைமேற் பரப்பும் பொருட்டு வேட்கு மாசிரியரிடம் (இருத்துவிக்குகளிடம்) கொடுக்கின்றேன். (சுற்றிப் போய் நிமிர்ந்து பார்த்து) பிரியம்வதே! கிள்ளப்படாத தண்டோடு இத் தாமரை இலைகளையும் நரந்தம்புல்லின் நெய்யினையும் யாருக்காகக் கொண்டு போகிறாய்? (உற்றுக்கேட்டு) யாது சொல்லுகின்றாய்? வெயிலிற் சென்றதால் உண்டான வெப்பம் பொறுக்கமாட்டாமற் சகுந்தலை மிக வருந்துகின்றன ளென்றும், அதனால் அவள் உடம்பைக் குளிரச் செய்வதற்காக இவற்றை எடுத்துப் போகின்றேன் என்றுஞ் சொல்லு கின்றாயோ? அப்படியானாற் கருத்தாய்ப்பார்; அவள் கண்ணுவமாமுனிவர்பிரானுக்கு உயிராய் இருக்கின்றாள், நானும் அதனைத் தணித்தற்கு வேள்விச் சாலையின் தூய தீம்புனலைக் கௌதமி அம்மையார் கையிற் கொடுத்து விடுகின்றேன். (போகின்றான்.) தனியுரை முடிந்தது. (காமநோய் கொண்டோன் நிலையில் அரசன் வருகின்றான்.) அரசன் : (நெட்டுயிர்ப்பெறிந்து) தவத்தின் பெருமை இன்னதென்பதும் நான் அறிவேன்; அப் பெண் தன் விருப்பப்படி நடக்கக்கூடாதவளென்பதும் நான் அறிவேன். அங்ஙனமிருந்தும், என் நினைவை அவளினின்று என்னால் திருப்பமுடியவில்லையே! (காமவருத்தந் தாங்காமல்) களிவளர் கடவுளாங் காம தேவனே! எளியன்மேற் சிறிதுநீ இரங்கல் இல்லையால்; ஒளிவளர் மலர்க்கணை உறப்பொ ருந்துநீ அளியிலை கொடியைஎன் றாய தென்கொலோ! (நினைத்துப் பார்த்து) ஆ! நன்றாய் அறிந்தேன். விரிகட லடியிற் புதைந்தவெந் தழல்போல் வெகுண்டசிவன் எரிவிழிகான்ற கொழுந்தீ நினது அகத்து எரிகின்றதால்; பொரிபடவெந்து சாம்பர் ஆயினை யெனிற் பொறாதஇடர் புரிவாய்! எமைவெதுப் பல்எவ்வா றுனக்குப் பொருந்தியதே? பூங்கணை வாய்ந்த புத்தேள்! நீயும் புதுமதியும் ஈங்குள மக்கட் கின்பந் தருவீர் எனஎண்ணி ஏங்கிய காதலர் எல்லாம் ஏமாந் தனரானார்; தாங்காக் காதல் என்போன் மாந்தர் தளர்வாரே. மலரைக் கணையாய் உடையாய் எனநீ வருகுதலும் அலர்தண் கதிரோன் அவனென் றறையும் அவ்வுரையும் இலவாம் பொய்யே; எம்போல் வார்க்கவ் வெழின்மதியம் உலர்வெந் தீயே பொழியும் உறுதண் ஒளியாலே நீயோ மலர்வெங் கணையை இடிபோல் நிறைக்கின்றாய்! ஆவா மருட்டும் அலர்கண் மடவாள் பொருட்டாக ஓவாது எனைநீ புடைக்கின் றமையால் உயர்மீனப் பூவார் கொடியாய்! என்னாற் புகழப் படுவாயே. (மனத்தளர்ச்சியோடு சுற்றி நடந்து போகின்றான்.) இன்றைக்குரிய வேள்விச் சடங்குகள் நிறைவேறினமையால் வேட்கும் ஆசிரியர் போகும்படி எனக்கு விடையளித்திருக் கின்றனர்; பேர் உழைப்பினால் இளைப் படைந்திருக்கின்ற யான் எங்கே சென்று பொழுது போக்குவேன்? (நெட்டுயிர்ப் பெறிந்து) என் காதலியைக் காண்பதைவிட எனக்கு வேறு என்ன ஆறுதல்இருக்கின்றது? நல்லது, அவள் இருக்கு மிடத்தை நாடிப்போவேன். (கதிரவனைப் பார்த்து) வெம்மை மிகுந்த இந் நண்பகற் காலத்தைச் சகுந்தலை தன் தோழிமாரொடு, பச்சிளங்கொடிப் பந்தரால் மூடப்பெற்ற மாலினி யாற்றங் கரையிலேதான் கழிப்பாள். உடனே நான் அங்குச் செல்வேன். (சுற்றிப்போகின்றான் - தென்றற்காற்று மேலே படுதலாற் பிறந்த இன்பத்தைத் தெரிவிக்கின்றான்.) ஆ! புதுத் தென்றல் எப்போதும் உலாவப் பெறுகின்ற இவ்விடம் எவ்வளவு இனிதாயிருக்கின்றது ! முகைஅவிழ்க்குந் தாமரையின் முதிர்மணத்தின் அளைந்து மிகைபடுநீர் மாலினியின் விரிதிரை நுண் டுளிவீசுந் தகையினிய இளந்தென்றல் தனிக்காம எரிவெதுப்புந் தொகையுடம்பிற் றழுவுதற்குத் தொலையாத வளமுடைத்தே. (சுற்றிப்போய்ப் பார்க்கின்றான்.) பிரப்பங்கொடியால் வளைக்கப்பட்ட இப் பச்சிளங்கொடிப் பந்தரிலேதான் சகுந்தலை பெரும்பாலும் இருக்கவேண்டும்; ஏனெனில், இதன்வாயில் முற்றத்தே பரப்பப்பட்டிருக்கும் வெண் மணலில் அவள் தன் இடுப்பின்கீழ்ப் பொறையாற் பின்புறம் ஆழ்ந்தும் முன்புறம் உயர்ந்தும் இப்போதுதான் பதிந்திருக்கின்ற அடிச் சுவடுகள் ஒரு வரிசையாய்க் காணப்படுகின்றன. நல்லது, இக் கிளைகளின் பின்னே யிருந்து பார்க்கின்றேன். (சுற்றிப்போய் அவ்வாறே பார்த்துக் களிப்போடு) விழிகளாற் பெறூஉம் அழிவில்பே ரின்பம் ஆஅ ! பெரி தெய்தினென் மாதோ, தூஉய ஒண்மலர் தாஅய வெண்ணிறக் கன்மிசைத் தோழியர் மருங்கிற்சா அய என் இன்னுயிர்ச் செல்வியைக் கண்ணுற லானே. நல்லதிருக்கட்டும். அவர்கள் ஏதுந்தடையின்றிப் பேசுவனவற்றைக் கேட்கின்றேன். (பார்த்துக்கொண்டே நிற்கின்றான்.) (முன்சொன்னவாறே சகுந்தலையும் அவள் தோழிமாரும் இருந்துகொண்டு பேசுகின்றனர்) தோழிமார் : (மெல்ல அவளுக்கு விசிறிக்கொண்டே) தோழி சகுந்தலே! இந்தத் தாமரை இலைகளிலிருந்து வருங் காற்று உனக்கு நலந் தருகின்றதா? சகுந்தலை : என் தோழிமார் எனக்கு ஏன் விசிறுகின்றனர்? (தோழிமார் மனக் கலக்கத்தோடு ஒருவரை யொருவர் பார்க்கின்றனர்.) அரசன் : உண்மையாகவே இந் நங்கை உடம்பு நலமின்றி இருப்பதாகவே காணப்படுகின்றனள். (உணர்ந்து பார்த்து) இது கதிரவன் வெப்பத்தால் உண்டாயதோ அல்லது என் உள்ளத்திலுள்ளதுபோற் காமவெப்பத்தால் வந்ததோ ! (விழைவுடன் உற்றுநோக்கி) ஆ ! ஐயம் ஒழிந்தது ! நறுமண நரந்தம் நகிலமேற் றிமிர்ந்துந் தாமரை நாளங் காமரு கையிற் பவளக் கடகமெனத் துவள வளைத்தும் என், ஆருயிர்க் காதலி ஓரயர் வுறினும் எழில்மிகு செவ்வியள் மாதோ, கழிபெருங் காதல் பயந்த ஏதமுறு நோயுஞ் சுடுகதிர்க் கனலி அடும்பெரு வருத்தமும் ஒன்றென மொழிவ ராயினும் என்றூழ் பொழிகதிர் வருத்த மிதுபோல் மழவிள மகளிர்க்கு அழகுபயந் தின்றே. பிரியம்வதை : (அப்புறமாய்) ஏடி அனசூயே! சகுந்தலை அந்த ராஜருஷியைக் கண்ட நாள்முதல் மனக்கவலை கொண்டதுபோல் இருக்கின்றாளே. இவளுக்கு உண்டான இவ்வருத்தம் அவரை முன்னிட்டு வந்ததாய் இருக்கலாமோ? அனசூயை : தோழி! என் உள்ளமும் அப்படித்தான் ஐயம் உறுகின்றது. நல்லது, நான் அவளைக் கேட்கின்றேன். (உரக்க) தோழி! நான் உன்னை ஒன்றுகேட்க விரும்புகின்றேன். நீ படுகிற துன்பமோ உண்மையிற் பெரியதா யிருக்கின்றதே! சகுந்தலை : (மலர்ப் பாயலினின்றுஞ் சிறிதே தலையைத் தூக்கி) தோழி! நீ யாதுசொல்ல விரும்புகின்றாய்? அனசூயை : அன்பிற்குரிய சகுந்தலா! காதலைப் பற்றிய தொன்றும் நமக்குப் பழக்கமாய்த் தெரியாது; ஆனால் இதிகாசங்களிலே காதல் வயப்பட்டவர்கள் அடையுந் துன்பத்தைப்பற்றி நாம் கேட்டறிந்ததெல்லாம் இப்போது உன் நிலைமையோடு ஒத்திருக்கின்றது. எனக்குச் சொல்; எதிலிருந்து உன் துன்பம் வந்தது? ஏனென்றால், நோய் வந்ததற்கு உண்மையான மூலந்தெரியாமல், அதற்கு மருந்து கொடுக்க முடியாதே. அரசன் : நான் கருதிய வண்ணமே அனசூயையுங் கருதுகின்றனள். சகுந்தலை : (தனக்குள்) எனக்குள்ள காதலோ மிகவும் வலியுடைதாயிருக்கின்றது; அதைப்பற்றி என் தோழிமாருக்கும் நான் உடனே சொல்லக்கூடவில்லையே. பிரியம்வதை : தோழி! அவள் சொல்லுகிறது நல்லது தானே. உன்னுடைய நோயை நீ ஏன் பாராமுகஞ் செய்கின் றனை? நாளுக்குநாள் உன்னுடைய உறுப்புகள் மெலிந்து போகின்றன; உனது அழகிய நிறம் மட்டும் உன்னை விட்டு நீங்கவில்லை. அரசன் : பிரியம்வதை உண்மையே சொல்லுகின்றாள். வண்மலர்க் கன்னமும் வறண்டு வற்றின திண்ணிய கொங்கையுந் திறந் திரிந்தன நுண்ணிய நடுவுமேல் நுணுகிப் போயின வண்ணமும் வெளிறின தோளும் வாடின; உருக்கிளர் இளந்தளிர் உலரத் தீய்த்திடு பொருக்கெனுந் தீவளி பொருந்த வாடிய மருக்கமழ் மல்லிகை போன்ற மாதர்பால் இரக்கமும் இன்பமும் ஒருங் கெழுந்தவே. சகுந்தலை : நல்லது, வேறு யாருக்குத்தான் யான் சொல்லப் போகின்றேன்! இப்போது உங்களுக்குத் தொல்லையை உண்டுபண்ணுகின்றவ ளாகின்றேன். இருவரும் : அதனாலேதான் எங்களது இவ்வளவு வலுக்கட்டாயமும். அன்புடையவர்களுக்குத் தெரிவித்தால் தான் துயரமானது தாங்கக் கூடியதாகின்றது. அரசன் : இன்ப துன்பங்களில் தன்னோடு ஒன்றுபட்டு இருப்பவரால் உசாவப்படுதலின், இம் மாது தன் நெஞ்சத்தில் ஒளித்துவைத்த இந்த நோயின் மூலத்தைத் தெரிவியாது இராள். யான் இவளால் அடுத்தடுத்து விழைவுடன் நோக்கப் பட்டமையால், இவள் தன் நெஞ்சத் துள்ளதைத் திறந்து காட்டினளாயினும், இந்த நேரத்தில் இவள் யாது சொல்வளோவெனக் கேட்கக் கலங்குகின்றேன். சகுந்தலை : தோழி! இத் தவ அடவியைப் பாதுகாப்பவ ரான அந்த அரசமுனிவர் என் கண்ணிற் பட்டதுமுதல் (நாணத்தால் மேற்சொல்லமாட்டாம லிருந்துவிடுகின்றாள்.) இருவரும் : நம் அன்புமிக்க தோழி மேலுஞ் சொல்ல வேண்டுவதைச் சொல்லட்டும். சகுந்தலை : அந்நாள்முதல் அவர்மேற் சென்ற காதலால், யான் இங்ஙனம் மெலிவுறலானேன். அரசன் : (மகிழ்ச்சியோடு) யான் எதனைக் கேட்க வேண்டுமென விழைந்தேனோ அதனையே கேட்டேன். வேனில் கழிந்த வுடனே விரிகடல்நீர் வானம் பருகி வருகார்நாள் மன்னுயிருக் கானா மகிழ்வு தரல்போல் அடுங்காதல் ஏனை எனக்கும் இன்பம் பயந்ததுவால். சகுந்தலை : நல்லது, நான் சொல்லியது உங்களுக்குப் பொருத்தமா யிருந்தால் அவ் அரசமுனிவரின் அருளுக்கு யான் தக்கவளாகும்படி எதுசெய்ய வேண்டுமோ அதனைச் செய்யுங்கள்; இல்லையேல், எனக்கு எள்ளுந் தண்ணீரும் இறைத்து விடுங்கள். அரசன் : இச் சொற்கள் என் ஐயமெல்லாம் போக்கின. பிரியம்வதை : (அப்புறமாய்) அனசூயே! இவளது காதல்நோய் அளவுடந்து பெருகிவிட்டமையால் இவள் காலந்தாழ்ப்பதைப் பொறுக்கக்கூடாதவளா யிருக்கின்றாள். இவள் யார்மேல் தன் மனத்தைப் பதிய வைத்திருக் கின்றாளோ அவர் புருவின் குடிக்கு ஓர் அணிகலம்போற் சிறந்து விளங்குகின்றார்; ஆகையால், இவள்கொண்ட காதல் நம்மால் ஏற்றுக் கொள்ளப்படுவது முறையேயாம். அனசூயை : (அப்புறமாய்) ஏடி! நீ சொல்லுகிறபடியே யாகட்டும். (உரக்க) தோழி! நல்வினை வயத்தால் நீ தகுந்த ஓர் இடத்திற் காதல் வைத்தாய். ஒரு பேரியாறு கடலில் அல்லாமல் வேறு எங்கே போய்விழும்? பிரியம்வதை : குழைமலிந்த மாதவிக் கொடியைத் தேமாமரம் அன்றி வேறு எது தாங்கவல்லது? அரசன் : விசாகமீன் மூன்றாம் பிறையைப் பின்பற்றிச் சென்றால் அதுவும் ஒரு வியப்பாகுமா? அனசூயை : நம் தோழியின் எண்ணத்தை விரைவாகவும் மறைவாகவும் நிறைவேற்றுதற்கு யாது வழி? பிரியம்வதை : மறைவிடந்தான் ஆராயற்பாலது; விரை வாகச் செய்தல் எளிது. அனசூயை : எப்படி? எப்படி? பிரியம்வதை : அன்போடு கூடிய பார்வையினால் இவள் மேல் தமக்குள்ள காதலை வெளிப்படுத்தும் அவ் அரசமுனிவர் சிலநாட்களாக உறக்கம் இன்றி மெலிந்திருப்பது உண்மை யன்றோ? அரசன் : உண்மையாகவே நான் அப்படித்தான் ஆய்விட்டேன்; கைமேற் றலைவைத் திரவிற் கிடக்கக் கடைக்கணின்று பெய்ந்நீர் அழற்ற நிறந்திரி வான பெருமணிகள் மொய்பொற் கடகம்வில் நாண்டழும் புற்ற முனைநழுவிச் செய்யில் உரிஞ்சப் பலகால் எடுத்துச் செறிக்கின்றெனே. பிரியம்வதை : (நினைந்துபார்த்து) ஏடி! இவள் தன் காதலைத் தெரிவித்து ஒரு முடங்கல் எழுதட்டும்; அதனை மலர்களின் இடையே மறைத்துக் கொண்டுபோய்க் கடவுளுக்குப் படைத்தது என்று அவர் கையிற் கொடுத்து விடுகிறேன். அனசூயை : இந் நேர்த்தியான ஏற்பாட்டை நான் ஒத்துக் கொள்கின்றேன்; ஆனாற் சகுந்தலை யாது சொல்லு கின்றாளோ? சகுந்தலை : நீங்கள் சொல்வதை நான் ஐயுற்று வினவுவதும் உண்டோ? பிரியம்வதை : அப்படியானால் நல்லது, நீ உன் காதலைக் காட்டி அழகிய சொற்களால் ஒரு பாட்டு எழுதுவதற்குக் கருது. சகுந்தலை : அப்படியே செய்கிறேன்; ஆனால் அவர் என்மேற் பற்றின்றித் தவிர்த்து விடுவரோ என எண்ணி என் நெஞ்சம் நடுங்குகின்றது. அரசன் : உன்மேற் பற்றின்றி உவர்ப்பான் எவனென உன்னினையோ அன்னான்நின் கூட்டம் விழைந்திங்குளான் அஞ்சும் ஆரணங்கே பொன்னாள் தனைநயப் போனை மறுப்பினும் போவதற்கம் மின்னாள் விரும்பப் படுவோன் அவளை வெறுத்தலின்றே. தோழிமார் : தன்னுடைய நலங்களைத் தானே இகழ்ந்து பேசுகிற ஓ தோழீ! உடம்பைக் குளிரச் செய்கின்ற வேனிற் கால முழுமதி நிலவை யார் தாம் தம் ஆடை முன்றானையால் மறைப்பர்? சகுந்தலை : (புன்சிரிப்போடு) நல்லது; இப்போது நான் செய்யுள் இயற்றத் தொடங்குகின்றேன். (இருந்து எண்ணு கின்றாள்.) அரசன் : நொடிசிமிழா விழியால்என் காதலியை நோக்குங்கால் வடிதீஞ்சொற் றொடர்தொடுக்கும் வண்மையில் அன்னாள்முகத்துக் கொடிபோல் ஒருபுருவம் மேல்நெறிந்து குலவியிடப் பொடியுங் கதுப்பென்மேற் காதல் புல னாக்குமால். சகுந்தலை : தோழிகாள்! ஒரு செய்யுளை எண்ணி இயற்றி விட்டேன்; ஆனால், எழுது கருவிகள் அருகே இல்லையே. பிரியம்வதை : கிளிப்பிள்ளையின் மார்புபோல் மெதுவா யிருக்கின்ற இத் தாமரை இலையின்மேல் உன் நகங்களால் அப் பாட்டுப் பொறிக்கப்படட்டுமே. சகுந்தலை : (அப்படியே செய்து) தோழிகள்! இப்போது இதன் பொருள் பொருத்தமா யிருக்கின்றதா? கேளுங்கள். இருவரும் : அப்படியே உன்னிப்பா யிருக்கின்றோம். சகுந்தலை : (படிக்கின்றாள்) இரக்கமிலா அரசே! நான் என்செய்வேன்! இரவுபகல் எரிக்கின்றா னென்உடம்பை எழிற்காமன் நின்மேலே பெருக்கின்ற தென்காதல் பேதையேன் நின்நெஞ்சம் இருக்குமா றுணர்ந்திலேன் எனக்கதனை இயம்புதியோ. அரசன் : (உடனே அவளிடம் போய்) மெல்லியலாய்! நின்னையவன் மென்மேலும் எரிக்கின்றான், சொல்லவொணா வகையாக என்னையோ சுடுகின்றான்; அல்லொழிந்த விடிநாளில் அழிமதியை வாட்டுதல்போல் எல்லவன்மற் றதன்மனை அல்லியை வாட்ட லில்லையே. தோழிமார் : (அரசனைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு எழுந்து) காலந் தாழாது எம் விருப்பப்படி வந்த அரசர்க்கு நல்வரவாகுக! (சகுந்தலையும் தன் மலர்ப் பாயலினின்று எழ லிரும்புகின்றாள்.) அரசன் : வேண்டாம், வேண்டாம். வருத்தப்பட்டு எழுந்திருத்தல் வேண்டாம். நங்காய்! மிகுந்த வெப்பத்தால் வருந்துகின்ற நின் உறுப்புகள் பட்டு இம் மலர்ப் பாயல் தீய்ந்து போயிருக்கின்றது; மேலும் அவற்றின் கீழ்ச் சிதறிக் கிடந்து விரைந்து வதங்குகின்ற தாமரை இதழ்களால் அவை மணம் ஊட்டப்பட்டிருக்கின்றன; இத்தன்மையாக இருக்கும் அவை என்னை வரவேற்றற் பொருட்டு மேலும் வருத்தப்படுவது தகாது. அனசூயை : எங்கள் தோழர் எங்கள்மீது அருள் கூர்ந்து இந்தக் கற்பலகைமேல் ஒருபுறம் இருப்பாராக. (அரசன் அவ்வாறே இருக்கச் சகுந்தலை நாணத்தோடும் எழுந்து நின்றகின்றாள்.) பிரியம்வதை : உங்களிருவர்க்கும் உள்ள நேச உரிமையானது தெற்றென விளங்குகின்றது; ஆயினும் என் தோழிமேல் உள்ள அன்பானது என்னை அதனையே திரும்பவும் பேசும்படி செய்கின்றது. அரசன் : நன் மாதராய்! அஃது அடக்கிவைக்கப் படுதலாகாது; பேசவேண்டுவது பேசப்படாவிட்டாற் பின் அது நினையும்போது வருத்தத்தை விளைக்கும். பிரியம்வதை : தன் செங்கோல் நீழலின்கீழ் வாழ்வார்க்குத் துன்பம் நேர்ந்தால் அதனைத் துடைக்க வேண்டுவது அரசற்கு உரிய பெருங் கடமையாமே. அரசன் : அதைவிட வேறென் இருக்கின்றது? பிரியம்வதை : அப்படியாயின், இதோ எங்கள் அன்பிற் சிறந்த தோழி உங்கள் பொருட்டுத் தெய்வக் காமனால் இங்ஙனம் வேறுபட்ட நிலையடையலானாள்; ஆகையால், அவள்மேல் தலையளி புரிந்து அவளுயிரைக் காப்பாற்றி யருளும். அரசன் : நல்லாய்! இவ் வேண்டுகோள் நம் இருவர்க்கும் பொதுவே யாகும்; ஆயினும், பலவகையாலும் நான் உங்கட்குக் கடமைப்பட் டிருக்கின்றேன். சகுந்தலை : (பிரியம்வதையைப் பார்த்து) தமது உவளகத்திலுள்ள மகளிரைப் பிரிந்தமையால் வருந்தி இருக்கின்ற இவ் அரசரை வருத்தப்படுத்த வேண்டாம், விடு. அரசன் : ஒருபொழுதும் என்உளத்திற் பிரியாதாய்! உனைக்காண்பார் மருளமனம் பேதுறுக்கும் மதர்விழியாய்! நினையன்றிப் பெரியபொருள் பிறிதறியா என்நெஞ்சைப் பிறிதறிந்தால் எரிவேடன் கணைகொல்ல இனைகின்றேன் பிழைப்பெனோ அனசூயை : நண்பரே! அரசர்க்குக் காதற் கிழத்திமார் பலர் இருப்பரெனக் கேள்வியுற் றிருக்கின்றோம். எங்கள் அன்புள்ள தோழியைப்பற்றி அவள் உறவினர் துயரம் அடையாதவாறாய் நீர் நடந்துகொள்ளும்படி வேண்டுகின்றோம். அரசன் : நல்லாய்! மிகுதியாய்ச் சொல்லவேண்டுவ தென்? எனக்குக் காதற்கிழத்திமார் பலர் உளரேனும் என்குலத்திற்கு நிலைபெறச் சிறத்தற்கு உரியார் இருவரே யாவர்; இக் கடலை அரைப்பட்டிகை (மேகலயாக) உடைய நிலமகள் ஒருத்தி, உங்கள் தோழி ஒருத்தி. இருவரும் : நாங்கள் நல்வினை யுடைய மாயினோம். பிரியம்வதை : (கண்ணாற் குறிசெய்து) ஏடி அனசூயே! இதோ அந்த இளமான்கன்று தன்தாயைத் தேடி குறியிடத்து உய்தல் இங்கும் அங்கும் மருள விழிக்கின்றது பார்! நாம் போய் அதனைத் தாயிடம் சேர்ப்பிப்போம் வா! (இருவரும் புறப்படுகின்றார்கள்.) சகுந்தலை : ஏடி தோழிகாள்! நான் துணையின்றி யிருக்கின்றேனே; உங்களில் ஒருவர் என்கிட்ட வாருங்கள். இருவரும் : இந்த நிலவுலகத்திற்குத் துணையான காவலர் தாம் உன் அருகில் இருக்கின்றாரே! (போய் விட்டார்கள்.) சகுந்தலை : எப்படி, அவர்கள் உண்மையாகவே போய் விட்டார்களே! அரசன் : கண்மணி யனையாய்! நின்மனங் கவலேல்; நீ வேண்டுவன புரிய ஈண்டுநான் உளெனால்; பெருகயர் பொழிக்கும் மரையிலை யாக்கிய நளிவிசிறி கொண்டு குளிர்வளி தருகோ; குமரி வாழையின் அமைவுறு குறங்கை என் மடிமிசைச் சேர்த்திச் செந்தா மரைபுரை அடிக ளிரண்டும் மெல்லென வருடுகோ; அழகிய தோகாய்! பழுதற உரையே! சகுந்தலை : நானே ஏவல்செய்ய வேண்டியவர்கள் எனக்கு ஏவல்புரியமாறு செய்து யான் குற்றவாளி ஆகேன் கண்டீர்! (எழுந்துபோக எண்ணுகின்றாள்.) அரசன் : ஏடி கட்டழகி! பகல்வெப்பமோ இன்னுந் தணிந்திலது; மலர்ப்பாயலின்கண்ணே கொங்கைமேற் கட்டப்பெற்ற தாமரை இலைகளை யுடைய இந்த நிலையில், மிக எளிதிலே ஊறுபடுதற் கேதுவான மிக மெல்லிய இவ்வுறுப்புகளுடன் இந்த வெயிலில் எங்ஙனம் போவாய்! (அவளைப் பிடித்திழுத்துத் திருப்புகின்றான்.) சகுந்தலை : புருவின் குடியிற் பிறந்தவரே! ஒழுகுமுறை யினளவு கடந்து போகவேண்டாம். யான் காமவயப் பட்டு வருந்துகின்றே னாயினும், யானே எதுவும் என் விருப்பப்படி செய்யக்கூடிய நிலையில் இல்லை. அரசன் : அஞ்சுகின்ற மாதே! நீ நின் பெரியோர் பொருட்டு அஞ்ச வேண்டுவதற்குச் சிறிதும் ஏதுவில்லை. முனிவர்க் கரசான கண்ணுவர் அறஒழுக்க முறைகள் முழுதும் உணர்ந்தவராகையால் அவர் இதனை அறிந்தாற் சிறிதுங் குற்றங் காண்பாரல்லர். பார்! அரச முனிவரின் புதல்விமார் பலர் யாழோர் மணஞ் செய்துகொண்டா ரென்பதும், அஃது அவர் பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தென்பதும் எவரும் அறிந்தன அல்லவோ? சகுந்தலை : சிறிதுநேரம் என்னை விட்டுவிடும். திரும்பவும் என் தோழிமாரிடம்போய் இதனை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டு வருகின்றேன். அரசன் : ஓம், அப்படியே உன்னை விடுகின்றேன். சகுந்தலை : எப்போது? அரசன் : கதுவப் படாம லிளைதா முளைத்துக் கயங்கெழுமிப் புதிதே விரிந்த மலரிற் றுளும்பிப் பொழிநறவைக் கொதிகாதல் வண்டுணல் போலச் சுவையாக் குழையும் இதழ் மெதுவே சுவைத்தமிழ் துண்டணங்கேபின் விடுக்குவெனே. (அவளது முகத்தை உயர்த்த முயல அவனைச் சகுந்தலை தடுக்கின்றாள்.) (திரைக்குப் பின்னே) ஓ பெடைச் பெண்பறவை சக்கிரவாகமே! இராப் பொழுது வந்து விட்டமையால், நின்கொழுநனிடம் விடை பெற்றுக்கொள். சகுந்தலை : (உற்றுக்கேட்டு விரைவாய்) பௌரவரே! ஐயை வணக்குத்துக்குரிய கௌதமியார் எனதுடம்பின் நலத்தைத் தெரிந்துகொள்ளும் பொருட்டுத் தாமே இதோ வருகின்றார்; ஆகையால், இந்த மரக்கிளைகளின் பின்னே மறைந்து கொள்ளும். அரசன் : நல்லது (அபப்டியே தன்னை மறைத்து நிற்கின்றான்.) (பிறகு கௌதமி தன்கையிற் கலம்ஒன்று எடுத்துக் கொண்டு தோழிகளோடும் வருகின்றாள்) தோழிமார் : அம்மே கௌதமீ! இவ் வழியே வாருங்கள், இவ் வழியே வாருங்கள். கௌதமி : (சகுந்தலை கிட்டப்போய்) குழந்தாய்! நின் உடம்பின் உறுப்புகள் வருத்தந் தணிந்தனவா? சகுந்தலை : சிறிது சிறிதாய் நலமுண்டாய் வருகின்றது. கௌதமி : இத் தருப்பைப்புல்லிற் றெளிக்குந் தண்ணீரால் உம் உடம்பு முற்றிலும் நோய்தீர்ந்து நலப்படும். (சகுந்தலையின் உச்சிமேற் றண்ணீரைத் தெளித்து) குழந்தாய்! மாலைப்பொழுது வந்துவிட்டது, நாம் உடனே ஆசிரமத் திற்குப் போவோம் வா. சகுந்தலை : (தனக்குள்) ஏ நெஞ்சமே! நின்னால் வேண்டப்பட்ட பொருள் நினக்கு எளிதிலே கிடைத்த பொழுது நின் நாணத்தை விடுத்தாயில்லை. இப்போது நீ அதனைப் பிரிந்து துயர மெய்திப் பரிவடைதல் என்? (ஓர் அடி முன்போய் உரக்க) ஓ என் துன்பத்தைப் போக்கிய கொடிப்பந்தலே! மீண்டும் உன்னிடம் இன்பந் துய்த்தற்கு, இப்போது உன்னிடத்தில் விடைபெற்றுக் கொள்கின்றேன். (சகுந்தலை மிக்க துயரத்தோடு எல்லாருடனும் போய் விடுகின்றாள்.) அரசன் : (தான் முன்னிருந்த இடத்திற்குப் போய்ப் பெருமூச் செறிந்து) விழைபொருள் பெறுதற் கிடையூறு பலவே, கருமயி ரிறைசேர் பெருவிழி யுகளும் வியர்த்தவொண் முகத்தையான் உயர்த்துதொறும் பிணங்கி வெறித்தேன் சுவைக்கும் மறுத்துரை மொழிந்து தவளமுகிழ் விரலாற் பவளவிதழ் பொத்தித் தோட்புறங் கோட்டின ளதனால் வாய்ப்புற இதழ்த்தேன் பருகிலன் அந்தோ! அதற்பின் யாண்டுச் செல்கேன்? காண்டகு காதலி (சுற்றிலும் நோக்கி) முந்தின் புற்றவிப் பந்தர்வயின் அமர்கோ; மெல்லுருப் பட்டுப் பல்வயிற் சிதறிய மென்மலர்ப் பாயலக் கன்மே லுளதால்; கிளிநகம் பொறித்த அளிநசை முடங்கன் மரையிலை வாடியிவ் வுழையே யுறுமால்; நாளக் கடகமவள் தோளிற் சுழன்று விழுந்து ஆங்கே கிடந்தன; ஈங்கிவை நோக்க வெளிதே யாயினுஞ் சிறிதொரு போதிற் சூரற் பந்தரைப் பிரிந்து வாரற் கென்மனம் வலியில தன்றே. (திரைக்குப் பின்னே) ஓ அரசனே! மாலைக்காலத்திற் செயற்பாலன வாகிய வேள்விக் கடன்கள் தொடங்கி விட்டன; சாயங்காலத்திற் செக்கர் வானம்போன்ற அரக்கர் நிழல் எங்குந் தோன்றிப் பலவகையாலும் அச்சத்தை விளைவித்துத் தீ மூட்டப் பெற்று எரிகின்ற வேள்வி மேடையைச் சுற்றிலுஞ் சிதறிச் சுழன்று கொண்டிருக்கின்றன. அரசன் : இதோ வருகின்றேன் (போய்விடுகின்றான்.) மூன்றாம் வகுப்பு முற்றியது நான்காம் வகுப்பு களம் - ஆசிரமத்திற்கு எதிரே ஒரு புல்நிலம். (தோழிமார் பூப்பறித்துக் கொண்டு வருகின்றனர்.) அனசூயை : அன்புள்ள பிரியம்வதே! காந்தர்வ மண முறையால் சகுந்தலை தனக்கு இசைந்த காதலனை மணந்து கொண்டது பற்றி என்மனம் இன்புற்றாலும், பின்னும் இது கவலைக்கு இடஞ்செய்கின்றது. பிரியம்வதை : எப்படி, எப்படி? அனசூயை : இங்குள்ள வேள்விக் கடன்களை முடித்துக் கொண்டமை யால் துறவிகளால் போவதற்கு விடைதரப் பெற்றுத் தன் நகரஞ் சென்று தன் உவளகத்து மகளிரோடு கூடியிருக்கின்ற அவ் அரசமுனிவர் இங்கு நடந்ததனை இப்போது நினைவு கூர்வரோ! பிரியம்வதை : நம்பிக்கையாயிரு. அவரைப்போல் உயர்வொழுக்க முடையோர் ஒருக்காலும் அறத்தின்முறை தவறார். இப்போது அப்பா கண்ணுவர் இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டால் யாது செய்வரோ அறிகிலேன். அனசூயை : யான் ஆராய்ந்து காணக்கூடும் அளவில் அவர் அதனை ஏற்பரெனக் கருதுகின்றேன். பிரிம்வதை : எப்படி? அனசூயை : தம் மகளைத் தக்க ஒரு மணமகனுக்குக் கொடுக்கவேண்டு மென்பதுதான் முதன்மையான விருப்பம்; நல்வினையானது அதனைத் தானாகவே கூட்டி வைக்கு மாயின், பெரியவர்கள் தமக்கு ஏதும் உழைப்பின்றித் தமது கருத்து நிறைவேறப் பெறுவரன்றோ? பிரியம்வதை : (பூங்கூடையைப் பார்த்து) தோழி! வழிபாட்டுக்கு வேண்டுமான பூக்கள் பறிக்கப்பட்டாயின வென்று நினைக்கின்றேன். அனசூயை : சகுந்தலையின காவற்றெய்வத்தை வழி பட வேண்டுவதும் உனக்குத்தான் தெரியுமே. பிரியம்வதை : உண்மைதான். (இருவருந் திரும்பவும் பூப்பறிக்கின்றனர்.) (திரைக்குப் பின்னே) ஓ நான் இங்கு வந்திருக்கின்றேன்! அனசூயை : (உற்றுக்கேட்டு) தோழி! விருந்தினர் யாரோ தமது வரவைத் தெரிவிப்பதுபோல் தோன்றுகின்றது. பிரியம்வதை : சகுந்தலை குடிலில் இருக்கின்றாளே; இருக்கின்றாளல்லவா? அனசூயை : ஆனால், அவள் மனநிலையைப் பற்றி எண்ணினால், அவள் இன்று இங்கில்லை. அத்தனை பூக்கள் போதும். (இருவரும் புறப்படுகின்றனர்.) ஆ! விருந்தினை ஒம்பாது பராமுகஞ் செய்தோய்! தவச் செல்வத்தை யுடைய யான் இங்கு வந்திருப்பதும் அறியாமல் நின்மனம் எவன் வயப்பட்டு எவனையே நினைந்து கொண்டிருக்கின்றதோ அவன் கள்ளுண்டு மயங்கினோன் முன் பேசியதை நினையாமைபோல நினைவூட்டப் பட்டாலும் நின்னை நினையாதொழிக! பிரியம்வதை : ஐயையோ! முன்பேசியபடியே நேர்ந்து விட்டதே! சகுந்தலை தன்மனம் இங்கில்லாமையால் வழிபடத் தகுந்த யாரோ ஒருவர்க்குப் பிழைசெய்து விட்டனளே! அனசூயை : (முன் நிமிர்ந்துபார்த்து) மெய்யாகவே அவர் பொதுமக்களுள் ஒருவரல்லர். மிக எளிதிலே சீற்றங்கொள்ளுந் துருவாசமாமுனிவ ரல்லரோ! அவ்வாறு வைதுவிட்டு எவராலுந் தடுக்கவொண்ணாத கடுநடையொடு திரும்பிப் போகின்றார். பிரியம்வதை : கொளுத்துந் தன்மை நெருப்பைத் தவிர வேறு எதற்குண்டு? நீ விரைந்துபோய் அவர் அடியில் விழுந்து அவரைத் திரும்பிவரும்படி செய்; இதற்குள்ளாக நானும் அவர் திருவடி கழுவுதற்குத் தண்ணீர் ஒழுங்கு செய்கின்றேன். அனசூயை : அப்படியே (போய்விடுகின்றாள்.) பிரியம்வதை : (ஓரடி யெடுத்துவைக்கையி லிடறிவிழுந்து) ஐயோ! விரைந்து சென்றதனால் யான் தடுக்கி விழ, என்கையிலிருந்த பூங்கூடைவழுவி விழுந்துவிட்டதே. (பூக்களை ஒன்றுசேர்த் தெடுக்கின்றாள்.) (அனசூயை வருகின்றாள்) அனசூயை : அவர் இயற்கையிலே கோணலான தன்மை யுடையராதலால் யாருடைய வேண்டுகோளுக்குத் தான் செவிகொடுப்பார்? ஆயினும், சிறிது இரக்கங் காட்டும் படி செய்யப்பட் டிருக்கின்றார். பிரியம்வதை : அவர் மட்டில் இவ்வளவே மிகுதி! எப்படிச் செய்தாய் சொல். அனசூயை : அவர் திரும்பிவர மனமில்லாமை கண்டு இவ்வாறு அவரை மன்றாடிக்கொண்டேன். தெய்வத் தன்மையுள்ள ஐயரே! தவத்தின் ஆற்றல் இன்னதென்றறியாத நும் புதல்விசெய்த இவ்வொரு பிழையை முதன் முதற் செய்ததென்று கருதி, பெருமானே! அதனைப் பொறுத்தருளல் வேண்டும் என்பதே. பிரியம்வதை : ஆம், அதன்பிறகு என்ன? அனசூயை : அதன்பிறகு என் சொல் பிழையாது; ஆயினும், நினைவுகூர்தற்கு அடையாளமான ஓர் அணிகலத்தைக் காண்டலும் அவ் வசவு நீங்கும் என்று சொல்லிக் கொண்டே சடுதியில் மறைந்துபோயினார். பிரியம்வதை : அப்படியானால் நாம் சிறிது நம்பியிருக்க இடமுண்டு. நம் வேந்தர் பெருமான் புறப்படுங் காலத்து நினைவுகூர்தற்கு அடையாளமாகத் தம்பெயர் பொறிக்கப் பெற்ற கணையாழியைச் சகுந்தலையின் விரலில் தாமே பொருத்திவிட்டுப் போனார்; அதனாற் சகுந்தலை அவ் வசை தீர்க்கும் மருந்தைத் தன்னிடத்தே வைத்திருக்கின்றாள். அனசூயை : இதற்கிடையில் அவளுக்காகக் காவற் றெய்வத்தை வழிபடுதற்குப் போவம், வா. (இருவருஞ் சுற்றிப் போகின்றனர்) பிரியம்வதை : (பார்த்து) ஏடி அனசூயே! இதோ பார்! தன் இடதுகையில் முகத்தை வைத்தவண்ணமாயிருக்கும் நம் அன்பிற்கினிய தோழி ஓவியத்தில் எழுதிய உருவம்போற் காணப்படுகின்றாள். தன் கணவனை நினைந்திருக்கும் ஆழ்ந்த நினைவில் தன்னையே மறந்திருக்குமிவள், ஒரு விருந்தினரை மறக்கக் கேட்பானேன்? அனசூயை : பிரியம்வதை! இங்கே நிகழ்ந்த இது நம் இருவர்வாய் மட்டிலிருக்கட்டும்; நம் காதற்றோழி இயற்கையிலே மிக மெல்லியளாதலால், இதனைக் கேட்டுத் திடுக் கிடாமற் பாதுகாத்தல் வேண்டும். பிரியம்வதை : புதுமல்லிகைக் கொடிமேல் யார்தாம் வெந்நீரைத் தெளிப்பர்? (இருவரும் போய்விடுகின்றனர்.) இடையுரை முடிந்தது. (உறக்கம்நீங்கி எழுந்த மாணாக்கன் ஒருவன் வருகின்றான்.) மாணாக்கன் : ஊருலிருந்து திரும்பி வந்திருக்கும் மாட்சிமை தங்கிய காசியபர் நாழிகை இவ்வளவென்று பார்த்து வரும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றனர். இப்போது நான் வெளியே சென்று இன்னும் இராப் பொழுது கழிய எத்தனை நேரஞ் செல்லுமென்று காண்பேன். (சுற்றிப்போய்ப் பார்க்கின்றான்.) ஓ! விடியற்கால மாயிற்றே ! ஏனெனில், இலைகிளர் பூண்டுக்குத் தலைவ னாகிய சுடரொளி மதியங் குடபால் வரையின் ஒருபுறஞ் செல்லா நிற்ப, ஒருபுறம் வைகறை யென்னுங் கைவல் பாகனை முன்செல விடுத்துப் பொன்போன் ஞாயிறு கீழ்பா யெல்லையிற் கிளரு மன்றே, ஒருகா லீரிடத் தீரொளிப் பிண்டந் தோன்றலும் மறைதலும் ஆன்றறி யுங்கால் மண்ணோர் வாழ்க்கையி லின்னலு மின்பமும் மாறி மாறி வீறுதல் பெறுமே, செழுமதி யென்னுங் கொழுநனை யிழந்து முதிரெழில் போன ஆம்பல் எதிர்விழிக்கு இன்பம் பயவா இயல்புணர் விடத்து ஈங்கு ஆருயிர்க் காதலர்ப் பிரிந்த வாரிருங் கூந்தன் மடவார் எய்துஞ் சாந்துயர் பொறுத்தற் கரிதெனப் படுமே. (திரையைச் சடுதியில் விலக்கிக்கொண்டு அனசூயை வருகின்றாள்.) அனசூயை : சிற்றின்ப நுகர்ச்சியில் நமக்குப் பழக்க மில்லாவிட்டாலும், அரசன் தன் தலைமைத்தன்மைக்கு அடாதவாறாய்ச் சகுந்தலையினிடத்து நடந்துகொண்டா னென்பது முன்னமே நம்மால் அஞ்சப்படவில்லையா? மாணாக்கன் : காலைவேள்வி செய்யவேண்டுங் காலம் வந்துவிட்டதென்ற யான் இப்போது குருவினிடஞ் சென்று தெரிவிக்கின்றேன். அனசூயை : உறக்கம் நீங்கி எழுந்தும் நான் என் செய்வேன்? நான் எப்போதுஞ் செய்யவேண்டிய கடன்களைச் செய்தற்கும் என் கைகால்கள் முன்செல்ல வில்லை. இரண்டகஞ் செய்த கயவனான ஒருவனுக்குப் பேதையளான எங்கள் தோழி தன்னைக் கொடுத்துவிடும்படி செய்த காமவேள் இப்போதாவது மனம் நிறைந்திருக்கட்டும். அல்லது துருவாசருடைய சீற்றந்தான் இத் தன்மையதான தீங்கினை விளைவித்து வருகின்றதோ! அப்படியில்லாவிட்டால் அத்தகைய உறுதி மொழிகள் புகன்ற அவ் அரசமுனிவர் பின் இத்தனை காலமாக ஒரு திருமுகமாயினும் எழுதாமல் இருப்பரா? ஆகையால், நினைவுகூர்தற்கு அடையாளமான இக்கணை யாழியையே அவர்க்கு நாம் அனுப்பலாம்; ஆனால், வருத்தமான தவ வொழுக்கத்தில் வாழுந் துறவோரில் யாரை இது செய்யும்படி வேண்டிக் கொள்ளலாம்? நம் தோழியி னிடத்திலேதான் குற்றமிருக்கின்றது; ஆனதனாலே தான் ஊரிலிருந்து வந்த தந்தை காசியபருக்குச் சகுந்தலை துஷியந்த அரசனை யாழோர் மணஞ் செய்துகொண்டா ளென்றும், இப்போது கருக்கொண்டிருக்கின்றா ளென்றுஞ் சொல்வதற்கு என்மனம் ஒருப்பட்டாலும் என் நாவானது எழவில்லை. இவ்வாறாயின், வேறு நாம் யாது செய்யலாம்? (பிரியம்வதை வருகின்றாள்.) பிரியம்வதை : (மகிழ்ச்சியோடு) தோழி! சுருக்க வா! சுருக்க வா! சகுந்தலையைக் கணவனிடம் அனுப்புதற்கு மங்களக் கடன்கள் செய்யவேண்டும். அனசூயை : தோழி! இஃதெப்படி நிகழ்ந்தது? பிரியம்வதை : கேள். நன்றாய் உறங்கினளா வென்று கேட்கச் சகுந்தலையினிடம் இப்போதுதான் சென்றேன். அனசூயை : அப்புறம் யாது? பிரியம்வதை : அப்போது தான் சகுந்தலை நாணத்தினாற் றலைகவிழ்ந்து கொண்டிருப்ப, அவளை அப்பா காசியபர் தழுவிக் கொண்டு பின்வருமாறு வாழ்த்துரை கூறுவாராயினர்; வேள்வி வேட்குமவன் கண்கள் புகையால் மறைக்கப்படினும், அவனிடும் பலியானது நல்வினை வயத்தால் நெருப்பில் நேரே விழுந்தது; என்னருமைக் குழந்தாய்! தகுதியுள்ள மாணக்கனுக்குக் கற்றுக்கொடுத்த கல்வி போல நீயும் எனக்குக் கவலை தராதவளானாய்; இன்றைக்கே துறவிகளைத் துணையாகக் கூட்டி நின்னை நின் கணவனிடம் போக விடுகின்றேன். அனசூயை : அப்பா காசியபருக்கு இச் செய்தி யாரால் தெரிவிக்கப்பட்டது? பிரியம்வதை : அவர் வேள்விச் சாலையிற் புகுந்த பொழுது செய்யுள் உருவாய் வானில் உண்டான ஓர் ஒலியால். அனசூயை : (வியப்படைந்து) அதனைச் சொல். பிரியம்வதை : (பிராகிருதத்திலன்றித் திருத்தமான சமஸ்கிருதத்தில்) முன்னுக தவமுதிர் முனிவ! நின்மகள் வன்னிமா மரந்தனுள் வளர்தி வைத்தல்போல் இந்நிலம் நலம்பெறத் துடியந் தன்னிட்ட பொன்னுயிர் அகட்டினிற் பொலியக் கொண்டனள். அனசூயை : (பிரியம்வதையைத் தழுவிக்கொண்டு) தோழி! நான் மிக மகிழ்ந்தேன்! ஆனால், இன்றைக்கே சகுந்தலை போகின்றான் என்பதை நினைக்கையில், அம் மகிழ்ச்சியொடு துயரமு முண்டாகின்றதே! பிரியம்வதை : தோழி! நம்முடைய துயரத்தை எப்படியாவது நீக்கிக் கொள்வோம்; பேதையான அவள் எப்படியாவது இன்ப மெய்தட்டும். அனசூயை : நல்லது, இதனை எண்ணித்தான் சில நாளாயினும் வாடாமற் பச்சென் றிருக்கத்தக்க மகிழ மாலையை, அதோ மாமரக்கிளையில் தொங்க விட்டிருக்குந் தென்னோலையால் முடைந்த கூடையில் வைத்திருக் கின்றேன். நீ அதனை எடுத்துவா ; இதற்கிடையில் நானுங் கோராசனை, தீர்த்தமண், மெல்லறுகம்புல் முதலிய மங்கள மணக்கூட்டுத் திரட்டுகின்றேன். பிரியம்வதை : நல்லது, அப்படியே செய். (அனசூயை போய் விடுகின்றாள், பிரியம்வதை பூங்கூடையை எடுத்து வருகின்றாள்.) (திரைக்குப் பின்னே) கௌதமீ! சார்ங்கரவன் முதலியோரைச் சகுந்தலையின் உடன்போகச் சொல். பிரியம்வதை : (உற்றுக்கேட்டு) அனசூயே! சுருக்குப் படுத்து, சுருக்குப் படுத்து அத்தினாபுரத்திற்குச் செல்ல வேண்டுந் துறவிகள் அதோ அழைக்கப்படுகின்றார்கள். (அனசூயை மங்களமான மணக்கூட்டைக் கையி லெடுத்துக்கொண்டு வருகின்றாள்.) அனசூயை : தோழி! வா நாம் போவோம். (இருவருஞ் சுற்றிப் போகின்றார்கள்.) பிரியம்வதை : (உற்றுப்பார்த்து) அதோ பார் சகுந்தலை விடியற் காலத்திலே தலைமுழுகி, முனிவரின் மனைவியர் கையில் காட்டுத்தானிய மஞ்சளரிசி யேந்தி வாழ்த்துரைப்ப அமர்ந்திருக்கின்றாள்! நாமும் அவளிடம் போவோம். (முன் போகின்றனர்.) (மேற்சொல்லியபடி சகுந்தலை மணையிலிருந்த வண்ணமாய்த் தோன்றுகின்றாள்.) முனிவர் மனைவியருள் ஒருவர் : (சகுந்தலையை நோக்கி) குழந்தாய்! நீ நின் கணவனால் நன்கு மதிக்கப்பட்டுப் பட்டத்தரசி என்னுஞ் சிறப்புப் பெறுவாயாக! மற்றொருவர் : குழந்தாய்! நீ ஆண்மையிற் சிறந்த மைந்தனைப் பெறுவாயாக! மூன்றாம் ஒருவர் : குழந்தாய்! நின் கணவனிடத்து மிக்க நன்கு மதிப்பை அடைவையாக! (இங்ஙனம் வாழ்த்துக் கூறிக் கௌதமியைத் தவிரத் துறவோர் மனைவிமார் எல்லாரும் போய்விடுகின்றனர்) தோழிமார் : (அருகேவந்து) தோழி! நீ நல்ல மங்கள முழுக்கு முழுகினாய், என்று நினைக்கின்றோம். சகுந்தலை : என் தோழிமார்க்கு நல்வரவாருக ! இங்கே இருங்கள். இருவரும் : (மங்களப்பண்டம் வைத்த கலத்தை எடுத்துக்கொண்டு வந்து இருந்து) அன்புள்ள சகுந்தலை! செவ்வையாயிரு, இம் மங்களமான மணக்கூட்டை நாங்கள் பூசுகின்றோம். சகுந்தலை : இஃது என்னாற் பெரிதும் பாராட்டற் பாலதாகும். என் றோழிமார் கைகளாற் செய்யப்படும் இவ் வொப்பனை இனி எனக்குக் கிட்டுதல் அரிது. (கண்ணீர் உதிர்க் கின்றாள்.) இருவரும் : தோழி! மங்களமான இந் நேரத்தில் நீ அழுவது தக்கதன்று (கண்ணீரைத் துடைத்து அவளுக்கு ஒப்பனை செய்கின்றனர்.) பிரியம்வதை : மணிக் கலன்களால் அணியத் தகுந்த உன் அழகிய வடிவத்திற்கு ஆசிரமத்தில் உள்ளவைகளால் ஒப்பனைசெய்வது அவ் வழகைக் குறைக்கின்றது. (கையில் வரிசையொடு முனிவர் புதல்வ ரிருவர் வருகின்றனர்.) முனிவர் புதல்வர் : இதோ அணிகலன்களிருக்கின்றன; இவற்றைப் பெருமாட்டியார் அணிந்துகொள்ளட்டும். (அவற்றைப் பார்த்ததும் எல்லோரும் வியப்படைகின்றனர்.) கௌதமி : குழந்தாய் நாரதா! இவை எங்கிருந்து கிடைத்தன ? ஒருவர் : தந்தை காசியபருடைய வல்லமையால்தான். கௌதமி : இவற்றைத் தம் மனத்தாற் படைத்தனரோ? மற்றவர் : இல்லை, இல்லை, கேளுங்கள்; மாட்சிமை பொருந்திய முனிவர் எங்களை நோக்கிச் சகுந்தலைக்காக மரங்களிளின்று மலர் பறித்து வாருங்கள், என்று கட்டளை யிட்டார். அப்போது அங்கே! மங்களக் கடன்களுக்கு ஏற்றனவாய் வெண்மதிபோன்ற பட்டாடைகளை ஏதோ ஒரு மரங் கான்றது; மற்றொன்று அடிகளுக்கு ஊட்டுஞ் செம்பஞ்சிக் குழம்பை ஒழுகவிட்டது; முற்றுஞ் சிலவற்றி லிருந்து காட்டணங்குகள் அம் மரங்களில் துளிர்த்த இளந் தளிர்களைப்போல் மணிக்கட்டு வரையில் நீட்டிய கைகளால் இம் மணிக்கலன்கள் நல்கப்பட்டன. பிரியம்வதை : (சகுந்தலையைப் பார்த்து) இத்தகைய அருட்பேற்றால் நீ நின் கணவன் மாளிகையில் அரசச் செல்வத்தை நுகரப் போகின்றாய் என்பது முன் தெரிவிக்கப்படுகின்றது. (சகுந்தலை நாணம் எய்துகின்றாள்.) முனிவர் புதல்வர் ஒருவர் : ஏ கௌதமா! வா, வா; மரங்கள் செய்த இவ் வுதவியை நீராடப் போயிருக்குங் காசியபருக்குத் தெரிவிப்போம். மற்றொருவர் : அப்படியே. (இருவரும் போய்விடுகின்றனர்.) அனசூயை : நாங்கள் என்றும் அணிகலன்கள் அணிந்த தில்லை; ஆயினும், நாங்கள் ஓவியங்களிற் கண்டறிந்தபடி உனக்கு இவற்றை அணிந்திடுகின்றோம். சகுந்தலை : உங்கள் திறமையை யான் நன்கறிவேன். (இருவரும் அவளை ஒப்பனை செய்கின்றனர்.) (நீராடித் திரும்பிய காசியபர் வருகின்றார்.) காசியபர் : இன்று சகுந்தலை போகின் றாளென் றெண்ணுதொறுங் கன்றுவ தொன்றுங் கவலை யி னாலென் காழ்மனனே துன்றிய கண்ணீர் சோரா தம்மத் தொடர்புற்று நின்றென் மிடறோ கம்முவ தென்னென் னிலைதானே. காட்டில் துறவற வாழ்க்கை நடாத்தும் எனக்கே அன்பினால் இத்தகைய மனத் துயரம் நிகழுமாயின், இல்லற வாழ்க்கை யுடையார் தம் புதல்விமாரை முதன் முதற் பிரியுமிடத்து எத்துணை மிகுதியான துன்பத்தை எய்துவாராகல் வேண்டும்! (சுற்றி வருகின்றார்.) தோழிமார் : அன்புள்ள சகுந்தலே! உனக்கு ஒப்பனை பண்ணியாயிற்று; இப்போது இப் பட்டாடைகள் இரண்டனையும் உடுத்துக்கொள். (சகுந்தலை எழுந்து அவ்வாடைகளை உடுக்கின்றாள்.) கௌதமி : குழந்தாய்! நின்றந்தை பேரின்பம் பெருகுங் கண்களால் நின்னைத் தழுவினாற்போற் பார்த்துக் கொண்டு இதோ வருகின்றார்! அவரைப் பணிவாயாக! சகுந்தலை : (நாணத்தோடு) அப்பா! வணங்குகின்றேன். காசியபர் : குழந்தாய்! யயாதி வேந்தனாற் சர்மிஷ்டை எங்ஙனம் நன்குமதிக்கப்பட்டனளோ அங்ஙனமே நீயும் நின் கணவனால் மிகவும் நன்கு மதிக்கப்படுவாயாக! அவள் பூருவினைப் பெற்றெடுத்தவாறு போல நீயும் இவ் வுலகெல்லாஞ் செங்கோலோச்சும் மைந்தனைப் பெறக்கடவாய்! கௌதமி : அடிகேள்! இது வரமே யல்லது வாழ்த்துரை அன்றே. காசியபர் : குழந்தாய்! இப்போதுதான் வேட்கப் பட்ட இவ் வேள்வித் தீயை வலம் வருக. (எல்லாருஞ் சுற்றி வருகின்றனர்.) காசியபர் : (இருக்கு வேதசந்தசில் ஒரு செய்யுளைக் கூறி அவளை வாழ்த்துகின்றார்.) தூய விறகுகள் இடப்பட்டுந், தருப்பைப்புல் பரப்பி வேள்வி மேடையைச் சுற்றிலும் அமைத்த குழிகளில் வளர்க்கப்பட்டும் வேள்விப் பண்டங்களின் மணத்தாற் றீவினையைப் போக்கும் இவ்வேள்வித் தீக்கள் நின்னைத் தூய்மை செய்வனவாக! இப்போது புறப்படுக. (சுற்றிப் பார்த்து) சார்ங்கரவனும் மற்றையோரும் எங்கே? (ஒரு மாணாக்கன் வருகின்றான்.) மாணாக்கன் : அடிகேள்! நாங்கள் இதோ இருக் கின்றோம். காசியபர் : சார்ங்கரவா! நின் தங்கைக்கு வழிகாட்டிச் செல். சார்ங்கரவன் : அம்மா! இவ் வழியே இவ் வழியே வா. (எல்லாருஞ் சுற்றி நடக்கின்றார்கள்.) காசியபர் : கானக அணங்குகட்கு உறைவிடமான துறவாசிரம மரங்காள்! முதலில் நுங்கட்குத் தண்ணீர் விடாவிட்டால் தானும் நீர் அருந்த விரும்பாதிருந்தவளும், அணிந்து கொள்வதில் அவா இருந்தபோதிலும் நுங்களிடத் துள்ள அன்பினால் நுங்கள் இளந் தளிரைக் கிள்ளாதிருந் தவளும், நீங்கள் முதன்முதற் பூக்கின்றபோது விழாக் கொண்டாடினவளுமான சகுந்தலை இதோ தன் கணவன் மனைக்குச் செல்கின்றாள்! நீங்களெல்லீரும் அவளுக்குப் போய்வருகவென விடைகொடுமின்கள்! (ஒரு குயில் கூவும் இசைகேட்டு) குயிலின் இன்னிசை கூவக் கேட்டமையால் சகுந்தலையின் காட்டு வாழ்க்கைக்குத் துணையாயிருந்த மரங்கள் விடைகொடுத்து விட்டன. (வானத்தில்) வழியி லிடையிடையே கொழுந்தாமரை பொதுளி வளஞ்சால் தடங்கள் வயங்கிடுக, அழிவெங் கதிர்வருத்தம் அடர்ந்த நிழன்மரங்கள் அகற்றி மகிழ்ச்சி அளித்திடுக, கழிய மலர்த்துகள்போற் கழுமு புழுதியடி கலங்கா தினிதாய்க் கலந்திடுக, செழிய மலயவளி திகழ வுலவிடுக திருவே யனையாள் செலுநெறியே. (எல்லாரும் வியப்போடு கேட்கின்றனர்.) கௌதமி : துறவாசிரமத்திலிருக்கும் அணங்குகள் உறவினரைப்போல் அன்புடையனவாய் நீ போவதற்கு விடைதருகின்றன. நீ அத் தெய்வங்களை வணங்கிடுக. சகுந்தலை : (அங்ஙனமே வணங்கி நடந்து மறைவாய்) அன்புள்ள பிரியம்வதே! என் கணவனைக் காணுதற்கு மிகுந்த ஆவலிருந்தாலும், இத் துறவாசிரமத்தை விட்டுப் பிரிகையில் என் அடிகள் மிக்க இடர்ப்பாட்டோடும் முன் செல்லுகின்றன. பிரியம்வதை : இந்தத் துறவாசிரமத்தைவிட்டுப் பிரிதற்கு நீ மட்டுமே துன்புறவில்லை; உன்னைப் பிரியவேண்டுங் காலம் அடுத்ததுபற்றி இத் துறவாசிரமும் அடையும் நிலைமையைப் பார்! மான்கள் தம் வாய் நிறையக் கௌவிய தருப்பைப்புல்லை வாயிலிருந்து நழுவ விடுகின்றன; மயில்கள் ஆடுதல் ஒழிகின்றன; பழுத்த இலைகளை உதிர்க்கின்ற கொடிகள் கண்ணீர் சிந்தி அழுதலைப் போலிருக்கின்றன. சகுந்தலை : (நினைவுற்று) அப்பா! நான் என் உடன் பிறப்பைப்போற் கருதிய வனசோதினி என்னும் மல்லிகைக் கொடியினிடத்து முதலில் விடைபெற்று வருகின்றேன். காசியபர் : நீ அதனிடத்து உடன்பிறப்பன்பு பாராட்டி வருதலை நான் அறிவேன். இதோ அது தென் புறத்தே யிருக்கின்றது. சகுந்தலை : (அக்கொடியின் கிட்டப்போய்) வன சோதினீ! நீ தேமாமரத்தைத் தழுவிக்கொண்டிருப்பினும், இப் பக்கமாய்ப் பரவியிருக்கும் நின் கிளைகளாகிய கைகளால் என்னைத் தழுவிக்கொள்; இன்று முதல் நான் உன்னைவிட்டுப் பிரிந்து நெடுந்தொலைவிற்போய் இருக்க வேண்டியவ ளாகின்றேன். காசியபர் : நீ நின் நல்வினை வயத்தால், நினைக்கென்றே நான் முன்னமே குறித்துவைத்த நினக் கிசைந்த கணவனொடு நீ கூட்டப்பட் டிருக்கின்றாய்; இப் புது மல்லிகைக் கொடியுந் தானாகவே இத் தேமாவினைச் சேர்ந்தது; ஆகவே, இதனையும் நின்னையும் பற்றியிருந்த கவலை இப்போது ஒழிந்தேன். இங்கிருந்து இனி நின் வழியிற் செல். சகுந்தலை : (தன் தோழிமாரை நோக்கி) தோழிகாள்! இந் நவமல்லி கையை உங்களிருவர் கையிலும் ஒப்படைக்கின்றேன். தோழிமார் : எங்களை யார் கையில் ஒப்படைக் கின்றாய்? (கண்ணீர் சிந்துகின்றனர்.) காசியபர் : அனசூயே! அழாதே, நீங்களல்லவோ சகுந்தலையை ஆற்றுதல் வேண்டும். (எல்லாரும் போகின்றனர்.) சகுந்தலை : அப்பா! கருக்கொண்டிருத்தலால் மெதுவாக அக் குடிலுக்குப் பக்கத்தே மேய்ந்து கொண்டிருக்கும் பெட்டைமான் செம்மையாய்க் கன்று ஈன்றவுடனே அம்மகிழ்வான செய்தியைத் தெரிவித்தற்கு என்னிடத்தில் எவரையாயினும் வரச் செய்யுங்கள். காசியபர் : நல்லது, நாம் இதனை மறவோம். சகுந்தலை : (ஓரடி தடுக்கப்பட்டு நின்று) திரும்பத்திரும்ப என் ஆடையை யாது இழுக்கின்றதென யான் வியப்படைகின்றேன். (திரும்புகின்றாள்.) காசியபர் : குழந்தாய்! இதோ, நீ நின் கை நிரம்பச் சியாமாக நெல்லை ஊட்டி நின் மகனைப்போல் வளர்த்து வந்ததும், தருப்பைப் புல்லின்முனை குத்திப் புண்ணான வாயில் இங்குதி நெய்யைத் தடவி அப் புண்ணை நீ ஆற்றி வந்ததுமான இவ் விளமான் உன்னை வழி விடாமற் பின் பற்றுகின்றது. சகுந்தலை : குழந்தாய்! நின்னைவிட்டுப் போகின்ற என்னை ஏன் பிற்றொடர்கின்றாய்? நின்னையீன்ற சிறிது நேரத்திலெல்லாம் நின்தாய் இறந்தாலும், நீ செவ்வை யாகவே வளர்க்கப்பட்டு வந்தாய்; இப்போது நானில்லா விட்டாலும் அப்பா உன்னைப் பாதுகாப்பர்; ஆகையால் திரும்பிப்போ. (அழுதுகொண்டு நடக்கின்றாள்.) காசியபர் : நீ கண்ணீர் விடுதலால் நீண்ட இறையினை யுடைய நின்கண்கள் இமையாதபடி அது பார்வையைத் தடை செய்கின்றது; ஆகையால் மனத்தைத் தேற்றிக் கண்ணீரொழு காதபடி செய்; ஏனெனில், இவ் வழியில் மேடுபள்ளங் கண்டு வையாமையால் நின் அடிகள் தவறுகின்றன. சார்ங்கரவன் : பெருமானே! தமக்கு இனியாரைப் பயணப்படுத்தி வழி விடுக்கின்றவர்கள் தண்ணீர்க்கரை வரையில்தான் வரல்வேண்டுமென்பது வரையறுக்கப் பட்டிருக்கின்றது. இதோ இங்கு ஏரிக்கரை வந்துவிட்டது. இனிச் சொல்லவேண்டிய செய்தியைச் சொல்லிவிட்டுத் திரும்புங்கள்! காசியபர் : அப்படியாயின், இவ்வாலமா நீழலிற்றங்கு வோம். (எல்லாருஞ் சென்று நிற்கின்றார்கள்.) காசியபர் : (தனக்குள்) மாட்சிமை தங்கிய துஷியந்த வேந்தனுக்குத் தக்கதாக யாது செய்தி சொல்லி விடுத்திடலாம்? (எண்ணுகின்றார்.) சகுந்தலை : (மறைவாய்) தோழி பார்! தாமரை யிலைப்பினே தங்கு சேவலைக் காமரு மகன்றிறான் காண லாமையாற் பூமரு வாயினாற் புலம்பிக் கூவிட வேமென துளமிது விழிகள் காணவே. அனசூயை : என் அன்பே! அங்ஙனஞ் சொல்லாதே. இவ்வன்றிற் பெடையுந் தன் றுணையைப் பிரிந்த துயரத்தால் மிக நெடிதாகத் தோன்றும் இரவையுங் கழித்துக் கொண்டுதானிருக்கின்றது; பிரிவால் நேர்ந்த துன்பம் பொறுத்தற் கரிதாயினுந், திரும்பவுந் தன் றுணையைச் சேரலாமென்னும் நம்பிக்கைக் கட்டானது பிரிவின் துயரத்தைப் பொறுக்கக் கூடியதாகவே செய்கின்றது. காசியபர் : சார்ங்கரவா! சகுந்தலையை அரசனெதிரிற் கொண்டுபோய் விட்டு நான் சொன்னதாக அவற்கு இதனைச் சொல்லுதல் வேண்டும். சார்ங்கரவன் : பெருமானே! கட்டளையிடுங்கள்! காசியபர் : நாங்கள் பொறிகளை யடக்குந் தவச் செல்வமுடையோ மென்பதையும், உமது குடி மிக்க மேம் பாடுள்ளதென்பதையும், உறவினர் வாயிலாகவன்றிச் சகுந்தலை உம்மிடத்து மிக்க அன்பு பூண்டொழுகினா ளென்பதையும் நிர் இனிது நினைவுகூர்ந்து நும் மனைவி மாருள் இவளை ஒத்த நன்கு மதிப்பொடு வைத்து நடத்தி வரல்வேண்டும். இதற்குமேல் நடக்க வேண்டுவன அவளது நல்வினைப்படி நடக்கட்டும்; இதற்குமேற் பெண்ணைச் சேர்ந்தவர்கள் சொல்லுதலாகாது சார்ங்கரவன் : செய்தி இன்னதென்று தெரிந்து கொண்டோம். காசியபர் : என் மகளே! நீ இப்போது சிறிது அறிவு புகட்டப் படவேண்டிய வளாய் இருக்கின்றனை; நாங்கள் கானக வாழ்க்கையுடையோ மாயினும் உலக வியல்பும் அறிவோம். சார்ங்கரவன் : அறிவுடையோர்க்குத் தெரியாதன வில்லை. காசியபர் : இங்கிருந்து நீ நின்கணவன் இல்லத்திற்குச் சென்றபின், நின் மூத்தோர்க்குப் பணிசெய்து ஒழுகு; நின் கணவற்குள்ள மற்றை மனைவிமாரோடு மிக்க அன்புள்ள நேசியைப்போல் நடந்துகொள்; நின்கணவன் நின்னொடு வெகுண்ட காலத்து நீயும் அவனொடு வெகுண்டு மாறாடாதே; நின் ஏவலாளர்பால் மிகவும் நயமாக நடந்து கொள்; நின் செல்வ வளங்களைக் கண்டு செருக்கடையாதே; இவ்வாறு ஒழுகுகின்றவர்களே இல்லக்கிழத்தி எனுஞ் சிறப்புப் பெயர் பெறுவர்; இதற்கு மாறாய் நடப்பவர்கள் குடிக்கொடியாள் எனப்படுவர். கௌதமி எப்படி நினைக்கின்றனளோ? கௌதமி : மணமகளுக்குச் சொல்லவேண்டும் அறிவுரைகள் இவ்வளவே; குழந்தாய்! இவற்றையெல்லாம் நன்கு நினைவிற் பதி. காசியபர் : குழந்தாய்! என்னையும் நின் தோழி மாரையுந் தழுவிக்கொள். சகுந்தலை : அப்பா! என் தோழிமார் பிரியம்வதை அனசூயை இருவரும் இங்கிருந்து திரும்பிவிடல் வேண்டுமோ? காசியபர் : குழந்தாய்! அவர்களும் மணஞ்செய்து கொடுக்கப்படல் வேண்டும். ஆகையால், அவர்கள் உன்னுடன் அங்கு வருதல் தக்கதன்று, கௌதமி உன்னுடன் வருவள். சகுந்தலை : (தந்தையைத் தழுவிக்கொண்டு) மலைய மாமலைப் பக்கத்தினின்றும் பிடுங்கப்பட்ட இளஞ் சந்தனச் செடியைப்போல் இப்போது என் அப்பா மடியை விட்டுப் பிரிந்துபோய் வேறிடத்தில் நான் எங்ஙனம் உயிர் வாழ்வேன்? காசியபர் : குழந்தாய்! நீ ஏன் இங்ஙனம் அச்சப் படுகின்றாய்? உயர்குடிப் பிறந்த மணவாளனுக்கு மனையாட்டி யாய் விரும்பத்தக்க நிலையை யடைந்து, அவனது பெருந் தன்மைக்கு இசையச் சிறந்தனவாகிய அவன்றன் அரசியற் றுறைகளில் ஒவ்வொரு நொடியும் நின் நினைவு இழுப்புண்டு, கீழ்த்திசை இளஞாயிற்றைத் தோற்று விக்குமாறுபோல் நீயுந் தூயனான ஒரு மகனைப்பெற்று இன்புறுங்கால், நீ என்னைப் பிரிந்ததனால் உண்டான துயரத்தை நினைக்கவே மாட்டாய். (சகுந்தலை தந்தையின் அடிகளில் விழுந்து பணிகின்றாள்.) காசியபர் : நீ யடையவேண்டுமென யான் விரும்பு வனவெல்லாம் எய்தக் கடவாய்! சகுந்தலை : (தன் தோழிமார் கிட்டப்போய்) தோழிகாள்! இருவீரும் என்னை ஒன்றாய்த் தழுவிக்கொள்ளுங்கள். தோழிமார் : (அவ்வாறே செய்து) தோழி! ஒருகால் அரசன் உன்னைத் தெரிந்துகொள்ளக் காலந் தாழ்த்தால், அவரது பெயர் பெறிக்கப்பட்ட இக் கணையாழியை அவருக்குக் காட்டு. (கணையாழியைக் கொடுக்கின்றனர்.) சகுந்தலை : இங்ஙனம் நீங்கள் ஐயுறுவதைக் கண்டு யான் நடுக்க முறுகின்றேன். தோழிமார் : அஞ்சாதே! அன்பின் மிகுதியினால் ஏதேனுந் தீங்குண்டா குமோ என அஞ்சுதல் வழக்கம். சார்ங்கரவன் : பகலவன் வானத்தின் மேற்பாகத்தில் இவர்ந்துவிட்டான். அம்மையார் அவர்கள் விரைதல் வேண்டும். சகுந்தலை : (துறவாசிரமத்தைப் பார்த்த வண்ணமாய் நின்றுகொண்டு) அப்பா! இத் துறவாசிரமத்தை யான் மறுபடியும் எப்போது வந்து காண்பேன்? காசியபர் : குழந்தாய் கேள்! நான்கு எல்லைகளிலும் விரிந்த நில மகளுடன் நீயும் மனைவியாய் நெடுநாள் வாழ்ந்து, நிகரற்ற போர்மறவனான ஒரு மைந்தனையுந் துஷியந்தனுக்குப் பெற்றுக்கொடுத்து, அவன் அப் புதல்வன் மேல் அரசியலை இறக்கி வைத்தபின் நீ நின் கணவனொடு மறுபடியும் இத் துறவாசிரமத்திற்கு வருவாய். கௌதமி : குழந்தாய்! புறப்பட வேண்டிய வேளை கடந்து போகின்றது. உன் அப்பாவைத் திரும்பிப்போகவிடு. (காசியபரை நோக்கி) இப்படியே இவள் பொழுதெல்லாந் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டே யிருப்பான்; ஆகையால், தாங்கள் தாம் திரும்பிப் போக அருள் கூர்தல்வேண்டும். காசியபர் : குழந்தாய்! என் தவமுயற்சிக்குத் தடை உண்டாகின்றது. சகுந்தலை : (மறுபடியுந் தந்தையைத் தழுவிக் கொண்டு) தவ முயற்சியினால் அப்பாவின் உடம்பு இளைத்துப் போயிருக்கின்றது; ஆகையால் என் பொருட்டு மிகுந்த கவலை யடையாதேயுங்கள். காசியபர் : (பெருமூச்செறிந்து) என் குழந்தாய்! நீ முன்னே பலியாக வாரி இறைத்த செந்தினைகள் இப்போது குடில் வாயிலிலே முளைத்திருப்பதைப் பார்க்கையில் என் மனத்துயரம் எவ்வாறு தணிவுபடும்? வழி நெடுக உனக்குச் சிவம் பெருகட்டும்! போய் வா. (சகுந்தலையுந் துணைவரும் போகின்றனர்.) தோழிமார் : (சகுந்தலையை நெடுகப் பார்த்து) ஐயையோ! சகுந்தலை இக் கானக மரச் செறிவினாற் பார்வைக்கு மறைந்துபோய் விட்டனளே! காசியபர் : (பெருமூச்செறிந்து) அனசூயே! உங்கள் தோழி போய்விட்டான். உங்கள் மனத்துயரத்தை ஆற்றிக் கொண்டு என் பின்னே வாருங்கள்; யான் திரும்பிப் போகின்றேன். இருவரும் : அப்பா! சகுந்தலையைப் பிரிந்து வெறிதா யிருக்குந் துறவாசிரமத்தினுள் எங்ஙனம் புகுவோம்? காசியபர் : அன்பின் மிகுதியினால் இப்படித் தான் தோன்றும். (ஆழ்ந்த நினைவொடு நடந்துகொண்டு) சகுந்தலையைத் தன் கணவன் வீட்டுக்குச் செலுத்தி விட்டமை யால் எனக்கு இப்போது ஆறுதல் உண்டாய் மகிழ்ச்சி யடைகின்றேன்! ஏனெனில், உண்மையைச் சொல்லு மிடத்துப் பெண்கள் பிறர்க்குரிய பொருளே யாகின்றனர்; இன்றைக்கே அவளைத் தன் கணவனிடம் போக்கினமையால், தன்னிடத்து வைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைத் திரும்பவும் உடையானுக்குச் சேர்த்து விட்டது போல என் உள்ளம் இப்போது மிகவும் ஆறுதல் அடைகின்றது. (எல்லாரும் போய்விடுகின்றனர்.) நான்காம் வகுப்பு முற்றியது. ஐந்தாம் வகுப்பு களம் : அரண்மனை (விதூஷகனும், இருக்கையில் இருந்த வண்ணமாய் அரசனுந் தோன்றுகின்றனர்.) விதூஷகன் : (உற்றுக்கேட்டு) ஓ நண்பரே! இசைக் கழகத்துள் நடப்பதை உற்றுக் கேளும். தெளிவாகத் தெரியா விட்டாலும் மிக இனிமையாயும் பொருத்தமாயும் உள்ள ஒலிகளொடு கூடிய இசை எனக்குக் கேட்கின்றது. நங்கை அமிசபதிகை பண்கள் பாடப் பழகுவதாக அறிகின்றேன். அரசன் : பேசாதிரு நான் சிறிது கேட்கின்றேன். (இடைவெளியிற் பாட்டுக் கேட்கின்றது.) விழுநறவு வேண்டிவிரி மாவிணரிற் பருகிச் செழுமுளரி யிடைவறிது சேருமிள வண்டே! செழுமுளரி யிடையிருந்து திகழ்மாவை நீயோர் பொழுதுமறந் துறைகுவது பொருந்துமோ உரையாய்? அரசன் : இன்னிசையோடு கலந்து ஒழுகும் இப்பாட்டு ஆ எவ்வளவு சுவையா யிருக்கின்றது! விதூஷகன் : இப் பாட்டின் சொற்பொருளை நீர் அறிந்து கொண்டீரா? அரசன் : (புன்முறுவல் செய்து) இவள் ஒருகால் என்னால் நேசிக்கப் பட்டாள்; ஆகையால், அரசி வசுமதியைக் குறிப்பிட்டு எனக்கு இப் பழிப்புரை இவளிடமிருந்து வந்ததென்று அறிகின்றேன். நண்ப மாதவிய! அமிச பதிகை யிடத்துச் சென்று யான் அவளால் ஒரு திறமையாகப் பழிக்கப்பட்டேனென்று நான் சொன்னதாகச் சொல். விதூஷகன் : தங்கள் கட்டளைப்படியே. (எழுந்து) ஓ நண்பரே! அரம்பை மாதராற் பற்றப்பட்ட முனிவரைப்போற், பிறர் கையைக்கெண்டே இவளால் என் குடுமி பிடிக்கப் பட்டிருத்தலால், எனக்கு அதனினின்றும் விடுதலை இல்லை. அரசன் : நாகரிகம் உள்ளவனாக முறையாய்ப்போய் இதனை அவளுக்குத் தெரிவி. விதூஷகன் : வேறுவழி ஏது! (போய்விடுகின்றான்.) அரசன் : (தனக்குள்) இத் தன்மையான பொருளைத் தரும் இப் பாட்டைக் கேட்டவுடனே, காதலொருவரைப் பிரியா திருக்கையிலும், எனக்கு என் இத்தகைய பெருங் கலக்கம் உண்டாகின்றது? ஒருகால் இப்படியிருக்கலாம்; அழகிய பொருள்களைப் பார்க்கும்போதும் இனிய இசைகளைக் கேட்கும்போதும் இன்பத்தை நுகர்பவனுங் கூடத் தான் அறியாமலே தன் மற்றை உணர்வுகளில் நிலைபேறுற்று நிற்கும் முற்பிறவியின் சார்பு, அந் நேரத்தில் நினைவிலே திண்ணமாய்த் தோன்றப் பெறுகின்றான்; ஆதலினாற்றான் அங்ஙனந் துயரம் எய்துகின்றான். (மனக்கலக்கத்தோடு நிற்கின்றான்.) (பிறகு கஞ்சுகி என்னும் ஏவலாளன் வருகின்றான்.) கஞ்சுகி : ஆ! யான் இவ்வளவு மெலிந்த நிலைமையனாய் விட்டது வியப்பா யிருக்கின்றது! அரசனது உவளகத்திற் காவற் றொழிலுக்கு அடையாளமாக நான் தாங்கி வந்த இந்த வெறுங் கோலே, இத்தனைகாலங் கழிந்தபின்பு, நடக்கத் தள்ளாத எனக்கு ஊன்றுகோலாய் வந்து வாய்த்தது. செய்ய வேண்டும் அறத்தின் கடமையானது அரசனால் தள்ளி வைக்கப்படுவ தன்றென்பது உண்மையே; என்றாலும், அவர் இப்போதுதான் அறங்கூறும் இருக்கையை விட்டுச் சென்றாராகலின், கண்ணுவ முனிவர்தம் மாணாக்கரின் வரவை அறிவித்து இன்னும் அவரை நிறுத்தி வைப்பதற்கு மனமில்லாதேனாயிருக் கின்றேன். ஆயினும் என்! குடிகளை ஆளுந்தொழிலுக்கு ஓய்வுகிடையாது. ஏனென்றாற், பகலவன் ஒரேதடவையிற் பூட்டிய குதிரைகளோடுஞ் சென்று கொண்டேயிருக்கின்றான்; காற்று இரவும் பகலும் இயங்கிக்கொண்டே யிருக்கின்றது; சேடன் எப்போதும் நிலப்பொறையைச் சுமந்துகொண்டே யிருக்கின்றான். ஆறிலொரு கூறுபெறும் அரசன் கடமையும் அப்படியே யிருக்கின்றது. ஆகையால், யான் எனது கடமையைச் செய்வேன். (நடந்துபோய்ப் பார்த்து) தன் மக்களைப் போலக் குடிகளுடைய அலுவல்களை யெல்லாம் பார்த்து விட்டு, நண்பகல் வெப்பத்தால் வெதும்பி அரசியானை யானது சுற்றிலுந் தன் யானை மந்தையைப் புல் மேயவிடுத்துத் தான் தனியே ஒரு குளிர்ந்த நீழலில் இளைப்பாறுதல் போல, அரசனும் இளைப்புற்ற மனத்தொடு தனியே இவ்விடத்தில் இறைப்பாறிக் கொண்டிருக்கின்றார். (கிட்டப் போய்) வேந்தற்கு வெற்றி சிறக்க! இமயமலைச் சாரலிலுள்ள துறவாசிரமத்தில் இருக்கும் முனிவர்கள் மாதர் இருவரோடுங் காசியப முனிவரிட மிருந்து செய்தி கொண்டு வந்திங்கே இருக்கின்றார்கள். இதன்மேல் தங்கள் கட்டளை. அரசன் : (வணக்கத்தொடு) காசியபரிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களா? கஞ்சுகி : வேறென்ன? அரசன் : சுருதியிற் சொல்லப்பட்டவண்ணந் துறவா சிரமத்தில் இருப்பாரை வரவேற்பதற்குரிய வரிசைகள் செய்து அவர்களை உள்ளே அழைத்துவரும்படி புரோகிதர் சோம நாதருக்கு நான் சொன்னதாகத் தெரிவி. நானுந் துறவிகளைக் காண்பதற்குத் தகுதியான இடத்திற் போய் எதிர்பார்த்துக் கொண் டிருக்கின்றேன். கஞ்சுகி : தாங்கள் கட்டளையிடும் வண்ணமே. (போய் விடுகின்றான்.) அரசன் : (எழுந்து) ஏடீ வேத்திரவதி! வேள்விக்களத்திற்குப் போகும் வழிகாட்டிச்செல். பிரதிகாரீ : இவ்வழியே வாருங்கள், இவ்வழியே வாருங்கள் பெருமானே! (வழிகாட்டிச் செல்கின்றாள்.) அரசன் : (அரசாளுதலில் உண்டாகுந் துன்பத்தைச் சொல்லிக்கொண்டே நடந்து) தன்னால் வேண்டப்பட்ட பொருளைப் பெற்றுக்கொண்டவுடன் ஒவ்வோர் உயிரும் இன்புறுகின்றது; ஆனால் அரசனோ, தான்வேண்டிய பொருளைப் பெற்றதும் அதனை யடுத்துத் துன்பத்தையே எய்துகின்றான். ஏனென்றால், விழைந்ததைப் பெறுவதால் அவா அடங்குகின்றது; பெற்றதனைக் காப்பாற்றுதற்கு உண்டாம் முயற்சியோ துன்பத்தையே தருகின்றது. ஒருவன் கையிற்பிடித்த காம்பினையுடைய குடையைப் போல் அரசாட்சியானது களைப்பினை யுண்டாக்குவதள்றி அதனை நீக்குதற்கு உதவுவதில்லை. (திரைக்குப் பின்னே.) வைதாளிகர் : வேந்தற்கு வெற்றி சிறக்க! முதல் வைதாளிகன் : வெங்கதிரின் வெப்பம் விரிதலையிற் றாங்சித் தங்குவோர்க் குக்கீழ் தண்ணிழல்செய் மரம்போல் இங்குநின் னின்பங் குறியாது குடிகட்குப் பொங்குதுயர் கொளுநின் பொலிவாழ்க்கை யிதுவே. இரண்டாம் வைதாளிகன் : ஒறுக்கும் வலி யுடைமையா லுண்மைநெறி திறம்புநரை மறுக்கின்றாய் புரக்கின்றாய் மாறுபடு வோர்வழக்கை அறுக்கின்றா யருஞ்செல்வ முறுவழிச்சேர் கேள்போலா தறக்கிழமை குடிகண்மே லருள்கின்றா யண்ணலே. அரசன் : உளந் தளர்ந்திருக்கும் யாம் இவற்றால் திரும்பவும் உளங் குளிரப்பெற்றோம். (நடந்துபோகின்றான்.) வாயில்காவலன் : இதோ, இனிது விளக்கப்பட்டமை யால் மிக அழகான தோற்றமுடைத்தாயும், வேள்விக்குரிய ஆவுடன் கூடியதாயும் உள்ள வேள்விக்களத்தின் உயரமான தாழ்வாரம் இருக்கின்றது; தாங்கள் இவ் வாயிற்படியின்மேல் ஏறுங்கள். அரசன் : (மேல் ஏறி மெய்காப்பாளன் தோள்மேற் சாய்ந்துகொண்டு நிற்கின்றான்.) ஏடி வேத்திரவதி! இம் முனிவர்கள் மாட்சிமை தங்கிய கண்ணுவரால் என்னிடத்தில் எதற்காக அனுப்பப்பட்டிருக்கலாம்? தவ வொழுக்கங்களை மேற்கொண்டு நடத்துகின்ற முனிவரரின் தவமுயற்சி யானது இடையூறுகளால் அலைக்கப்பட் டிருக்கலாமோ? அன்றித் தவவொழுக்கம் நிகழுங் கானங்களில் உள்ள விலங்குகளுக்குத் தாம் எவரேனுந் தீங்கு செய்திருக்கலாமோ? அன்றி என்னுடைய தகாத செயல்களாற்றாங் கொடிகள் மலராதிருக்கலாமோ என்று இவ்வாறு பலதிறமாகத் தோன்றும் ஐயங்களால் இதுதான் என்று துணிய மாட்டாமல் என் நெஞ்சங் கலங்குகின்றது. வாயில்காவலன் : தம்முடைய தவமுயற்சிகள் இடையூறின்றி நடைபெறுதலால் மனம் உவந்து, தங்களைக் கொண்டாடுதற் பொருட்டாகவே முனிவரர் வந்திருக்கின்றனரென நம்புகின்றேன். (கௌதமியுடன் சகுந்தலையை முன் நடத்திக்கொண்டு முனிவரருங் கஞ்சுகி புரோகிதரும் வருகின்றனர்.) கஞ்சுகி : அடிகாள்! இவ் வழியே, இவ் வழியே வாருங்கள். சார்ங்கரவன் : ஏ சாரத்துவகா! மாட்சிமை தங்கிய இவ் வரசன் என்றும் நெறிபிறழாதவராகவே, மிக இழிந்த சாதியாரேனும் ஒருவராவது தீநெறிக்கட் செல்கின்றாரல்லர். இவ்வாறிருந்துந், தனி இடத்திலேயே யிருந்த மனம் பழக்கப் பட்டிருத்தலால், மக்கள் நிறைந்த இவ்விடமானது தீயினாற் சூழப்பட்ட வீடுபோல் எனக்குத் தோன்றுகின்றது. சாரத்துவதன் : இந் நகரத்தினுட் புகுந்தவுடனே உனக்கு இவ்வாறு தோன்றுவது முறையேயாம்; தலை முழுகினோன் ஒருவன் எண்ணெய் தேய்த்திருக்கும் ஏனையொருவனைப் பார்த்தல்போலவும், தூயோன் ஒருவன் தூயனல்லாத ஒருவனைக் காண்டல்போலவும், விழித்தெழுந்த ஒருவன் உறங்குவோன் ஒருவனை நோக்குதல் போலவும், வேண்டிய வாறு இயங்குவோன் ஒருவன் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் ஒருவனைக் கண்ணுறல் போலவுஞ் சிற்றின்பத்தில் அழுந்திக் கிடக்கும் இவர்களைக் கண்டு நானும் உவர்ப்படைகின்றேன். சகுந்தலை : (ஒரு கெட்ட குறியைக் கண்டு) ஐயோ! என் வலக்கண் என் துடிக்கின்றது? கௌதமி : குழந்தாய்! தீமை விலகக்கடவது! நின் கணவன் குடிக்குரிய தெய்வங்கள் நினக்கு நன்மை தருவனவாக! (நடக்கின்றாள்.) புரோகிதர் : (அரசனைச் சுட்டிக்காட்டி) ஓ துறவிகாள்! தன் அறங் கூறிருக்கையினை விட்டெழுந்தும், எக்குலத் தாரையும் எந்நிலையாரையுங் காப்பாற்றிவரும் மாட்சிமை தங்கிய வேந்தன் தங்கள் வருகையினை எதிர்நோக்கிக் கொண்டு அதோ இருக்கின்றார்! பார்மின்! சார்ங்கரவன் : ஓ அந்தணர் தலைவ! அஃதுண்மை யாகவே புகழற்பாலது. ஆயினும், நாங்கள் அதனை ஒரு பெரிதாக எண்ணவில்லை. பழங்கள் பெருக்கப்பெருக்க மரங்கள் தலைகுனிகின்றன; புதுப்புனல் நிறைவினால் முகிற்கூட்டங்கள் கீழே மிகத்தாழ்ந்து மிதக்கின்றன; நல்லோர் செல்வப் பெருக்காற் செருக்கடைவதில்லை; பிறர்க்குதவி புரிவோர் இங்ஙனம் இருப்பது இயற்கையேயாம். வாயில்காவலன் : பெருமானே! அவர்கள் முகத்தில் அமைதியான ஒரொளி காணப்படுகின்றது; ஆகையால் அவர்கள் தாம் மேற்கொண்டதொரு தொழிற்றுறையில் உறுதியுடையவர் களாயிருக்கின்றார்களென நம்புகின்றேன். அரசன் : (சகுந்தலையைப் பார்த்து) வதங்கின இலைகளின் நடுவே ஓர் இளந்தளிர் தோன்றுதல் போல நன்கு கட்புலனாகாத அழகிய உடம்பினளாய் இம் முனிவர்களின் நடுவில் முக்காடிட்டு வரும் இப் பெண் யாராயிருக் கலாம்? வாயில்காவலன் : ஐயனே! என் எண்ணமானது இப்புதுமையினை ஆராய்ந்து பார்த்துங் குறியின்னதென்று பிடிபடவில்லை. ஆனாலும் இவள் உருவமோ மிகவும் அழகாகத்தான் இருக்கின்றது. அரசன் : அப்படித்தான் இருக்கட்டும்: பிறன் மனைவியை உற்று நோக்குதல் ஆகாது. சகுந்தலை : (மார்பின்மேற் கையை வைத்துத் தனக்குள்) ஓ நெஞ்சமே! ஏன் இங்ஙனம் நடுங்குன்றாய்? என் தலைவனது காதல் மிகுதியை நினைவுகூர்ந்து பொறுமை யாயிரு. புரோகிதர் : (முன்னே போய்) ஐயனே! முறைப்படி ஏற்று வணங்கப்பட்ட துறவிகள் இதோ வந்திருக்கின்றனர். பிறன் மனை நோக்காத பேராண்மை அறனன்றோ ஆன்ற ஒழுக்கு. இவர்கள் தங்கள் குருவினிடமிருந்து ஏதோ செய்தி கொண்டு வந்திருக்கின்றார்கள். தாங்கள் அன்புகூர்ந்து அதனைக் கேட்டல் வேண்டும். அரசன் : அப்படியே கேட்க உன்னிப்பாயிருக்கின்றேன். துறவிகள் : (கையை உயரத்தூக்கி) ஓ அரசனே! உமக்கு வெற்றியுண்டாவதாக! அரசன்: உங்கள் எல்லார்க்கும் வணக்கஞ் செய்கின்றேன். துறவிகள் : நீர் கோரிய பொருளைப் பெறுவீராக! அரசன் : முனிவருடைய தவவொழுக்கங்கள் இடையூறின்றி நடைபெறுகின்றனவா? துறவிகள் : நல்லோரைப் பாதுகாப்பதற்கு நீர் இருக்கும் போது, தவவொழுக்கங்களுக்கு இடையூறு எவ்வாறுண்டாகும்? ஞாயிறு சுடர்விரிந்து விளங்குகையில் இருள் எவ்வாறு தோன்றும்? அரசன் : இப்போதுதான், அரசன் என்னும் என் பட்டப் பெயர் பொருளுடை மொழியாயிற்று. உலகினை நலப்படுத்து தற்கு மாட்சிமை தங்கிய காசியபர் நன்றாயிருக்கின்றனரா? துறவிகள் : மந்திர ஆற்றலுடைய முனிவரர் நலத்தைத் தம் வயத் திலேயே வைத்திருக்கின்றார்கள். அவர் உமது நலத்தை முதலிற் கேட்கச்சொல்லி, அதன்பின் இதனைத் தெரிவிக்கும் படி சொன்னார். அரசன் : முனிவரர் கட்டளை யாது? சார்ங்கரவன் : நீங்கள் இருவீரும் ஒருவரோடொருவர் இசைந்தமையின், என்மகளை நீர் மணம் புரிந்து கொண்ட தனை நான் உங்கள் மேல் வைத்த அன்பினால் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். நீரோ நன்கு மதிக்கப் படுதற்குரியார்; எல்லாருள்ளும் மிகச் சிறந்தவராக எம்மால் அறியப்பட்டிருக் கின்றீர்; சகுந்தலையோ நல்லொழுக்கமே ஓர் உருவெடுத்து வந்தது போல் விளங்குகின்றாள்; நான்முகக் கடவுளோ ஒத்தநலங்கள் வாய்ந்த மணமகனையும் மணமகளையும் ஒன்று கூட்டி அவ்வாற்றால் நெடுங்காலந் தனக்கிருந்த பழிச் சொல்லையும் நீக்கிக் கொண்டான். ஆகையால், இல்லற வாழ்க்கையை ஒருங்குசேர்ந்து நடப்பித்தற்குரிய துணையாகக் கருவுற்றிருக்கும் இவளை இப்போது ஏற்றுக்கொள்வீராக. கௌதமி : மேதகவுடையீர்! நான் சில சொல்ல விரும்பு கின்றேன்; எனக்கு இதிற் பேச இடமில்லை; ஏனென்றால், நீரும் இவளும் முதியோரைக் கேட்டாவது உறவினரைக் கலந்தாவது இதனைச் செய்தீர்களில்லை. உங்களிருவர்க்குள்ளேயே நடந்துபோன இதன்றிறத்து நீங்கள் ஒருவர்க்கொருவர் நடந்து கொள்ளவேண்டிய முறையைப் பற்றி நான் யாது சொல்லக்கூடும்? சகுந்தலை : (தனக்குள்) எம் பெருமான் இப்போது யாது சொல்வரோ தெரியவில்லையே? அரசன் : என் முன் வந்த ஈது என்னை! சகுந்தலை : (தனக்குள்) இச்சொற்கள் நெருப்பாயிருக் கின்றனவே! சார்ங்கரவன் : ஈதென்ன இதுவா? நீர் தாம் உலகியல் முற்றும் அறிந்தவராயிற்றே! மணமான பெண் ஒருத்தி மிகுந்த நல்லொழுக்கமுடையளாயினும், தன் உறவினர் குடும்பத் திலேயே இருப்பளாயின் அவள்மேல் வேறு வகையாய் உலகத்தார் ஐயுறுகின்றார்கள் ஆதலாற்றான் பெண்ணைச் சேர்ந்தவர்கள் தம்முடைய பெண் தன் கணவனால் வெறுக்கப்படினும், அவனுடனேயே அவளிருக்க வேண்டுமென விரும்புகின்றார்கள். அரசன் : என்ன, இம் மாதரார் என்னால் முன் மணம் புரியப் பட்டவரா? சகுந்தலை : (தனக்குள் பெருந்திகிலோடு) ஓ நெஞ்சமே நீ அஞ்சியது அப்படியேயாயிற்று சார்ங்கரவன் : தான் செய்த ஒரு செய்கையிலுள்ள வெறுப்பால் தன் கடமையினின்றும் வழுவுதல் அரசனுக்குத் தகுதியாமா? அரசன் : பொய்யாகக் கற்பித்துக்கொண்ட இக் கேள்வி எதற்காக? சார்ங்கரவன் : செல்வத்தாற் செருக்குற்று மயங்கினவர் களுக்கு இவைபோன்ற தீய இயல்புகள் பொதுவாய் உண்டாகின்றன. அரசன் : யான் மிகவும் இழித்துப் பேசப்பட்டேன். கௌதமி : குழந்தாய்! சிறிது நேரம் வெட்கப் படாமலிரு, உன் முக்காட்டை எடுத்து விடுகின்றேன் அதன்பின் உன் கணவர் உன்னைத் தெரிந்துகொள்வர். (சொல்லியபடியே செய்கிறார்.) அரசன் : (சகுந்தலையைப் பார்த்துத் தனக்குள்) வடுவறு பேரெழில் வயங்கவிவ் வயின்வருங் கொடிபுரை யுருவினாள் தன்னைக் கூடிநான் கடிமணம் அயர்ந்ததாக் கருத லாமையால் விடியலிற் பனியகத் துள்ளமென் மல்லிகை படிதரா துழிதரும் பைஞ்சிறை வண்டெனத் தொடுதலும் விடுதலுந் துணிய கில்லேனே. (எண்ணிக் கொண்டிருக்கின்றான்.) வாயில்காவலன் : இம் மன்னன் அறநெறியில் வைத்திருக் குங் குறி எவ்வளவு உயர்ந்ததாயிருக்கின்றது! அழகிற் சிறந்த இவ்வுரு எளிதிலே கிட்ட வருவதைக் கண்டும் வேறு யார் இங்ஙனந் தாழ்ப்பார்கள்? சார்ங்கரவன் : ஓ அரசனே! நீர் ஏன் இங்ஙனம் வாளா இருக்கின்றீர்! அரசன் : ஓ துறவிகாள்! நான் எவ்வளவு தான் நினைத்துப் பார்த்தாலும் இந்த அம்மையை நான் மணம் புரிந்ததாக நினைவு வரவில்லையே அவ்வாறிருக்கக், கருக்கொண்ட குறிகள் நன்றாய்த் தோன்றும் இம் மாதர்க்கு, நானே கணவன் என்று ஐயுற்று இவரை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்ளலாம்? சகுந்தலை : (அப்புறமாய்) மணம்புரிந்து கொண்டதைப் பற்றியே இப்போது ஐயம் நிகழ்ந்துவிட்டது; இனி என் ஆவல் எங்ஙனம் நிறைவேறப் போகின்றது! சார்ங்கரவன் : அன்புகூர்ந்து அங்ஙனஞ் சொல்லாதீர். உம்மாற் புணரப்பட்ட தம் மகளை ஏற்றுக் கொண்டதற்காக அம் முனிவரை நீர் இழிவுபடுத்தியது பொருத்தமேதான்! திருடப்பட்ட பொருளைத் திருடினவனுக்கே திருப்பிக் கொடுத்தலால் அம்முனிவர் உம்மைத் திருடனைப்போலவே செய்துவிட்டார். சாரத்துவதன் : சார்ங்கரவா! இனி நீ பேசுவதை நிறுத்து. சகுந்தலே! நாங்கள் சொல்ல வேண்டுவதைச் சொல்லினோம். அரசனோ இவ்வாறு சொல்லுகிறார். அவரை மெய்ப்பிக்கத் தகுந்ததான ஒரு விடைசொல். சகுந்தலை : (தனக்குள்) அத்தகைய காதற்கிழமையே இந்த மாறுதல் நிலைமைக்கு வந்துவிட்டபோது, இனி நினைப்பூட்டுதலாற் பயன் என்ன? நான் துன்பத்திற்கு ஆளாக வேண்டுமென்பது இங்கே தீர்க்கப்பட்டிருக்கின்றது. (புறத்தே) எம்பெருமானே! (இதுபாதிசொல்லி) மணம் புரிந்ததே ஐயமா யிருக்கையில், இங்ஙனம் அழைத்தல் கூடாது, ஓ பௌரவரே! துறவாசிரமத்தில் அவ்வாறெல்லாம் உடம்படுமொழிகள் சொல்லிக் கள்ளம் அறியாத என்னை ஏமாற்றிவிட்டு, இப்போது இச் சொற்களைச் சொல்லித் தள்ளிவிடுவது உமக்குத் தகுதியாமா? அரசன் : (காதின்மேற் கைகளை வைத்து) தீவினை விலகக்கடவது! கரை புரண்டு செல்கின்ற யாறானது தனது தெளிவான நீரைக் கலங்கச்செய்து கரைமேலுள்ள மரங்களையும் வேரோடும் விழப்பண்ணுதல்போல, என்னையும் இழிவாக்கி என் குலத்திற்கும் வடுவுண்டு பண்ண ஏன் முயல்கின்றனை? சகுந்தலை : நல்லது, என்னைப் பிறனொருவன் மனைவியாக ஐயுற்று நீர் இப்படிச் செய்தால், தெரிதற்குரிய இவ்வடையாளத்தால் உமது ஐயப்பாட்டை ஒழிக்கின்றேன். அரசன் : இது நல்ல ஏற்பாடே. சகுந்தலை : (மோதிரமிருந்த இடத்தைத் தடவி) ஆ! ஐயோ! என் விரலில் மோதிரத்தைக் காணோமே! (கௌதமியை நடுக்கத்தோடு பார்க்கின்றாள்.) கௌதமி : சக்கராவதாரத்திலுள்ள சசிதீர்த்தத்தை நீ குனிந்து வணங்குகையில் அம் மோதிரம் நழுவி விழுந்து விட்டது போலும்! அரசன் : (புன்சிரிப்பொடு) (மகளிரது இயற்கையில் நேரத்திற்குத் தக்க சூழ்ச்சி தோன்றுமென்பது இதுதான்) சகுந்தலை : இங்கு ஊழ் தன் வலிமையைப் புலப் படுத்திற்று. நான் இன்னுமொரு நிகழ்ச்சியைச் சொல்லு கின்றேன். அரசன் : இப்போது கேட்க வேண்டியதொன்று வந்து விட்டது! சகுந்தலை : நீர் ஒருநாட் புதுமல்லிகைப் பந்தரின்கீழ் உமது கையில் தாமரை இலையாற் செய்த கலத்திலே தண்ணீர் முகந்து வைத்துக் கொண்டிருக்கவில்லையா? அரசன் : நல்லது; உன்னிப்பாய்க் கேட்கின்றோம். சகுந்தலை : அந்நேரத்தில், என் எடுப்புப் பிள்ளையான தீர்க்காபாங்கன் என்னும் மான் கன்றானது வந்தது. நீர் அது முதலிற் குடிக்கட்டுமென்று சொல்லித் தண்ணீரைக் காட்டி அதனை அருகிழுக்க முயன்றீர். அஃது உம்மிடத்திற் பழகாததனால் உமது கையருகில் வரவில்லை. அப்போது ஒவ்வொருவருந் தம் இனத்தாரிடத்திலேயே நம்பிக்கை யுடையராயிருக் கின்றனர்; இவ்வகையில் இருவீருங் காட்டுத் தன்மை யுடையீர் என்று சொல்லி நீர் நகையாடி னீரல்லிரோ? அரசன் : பொய்ந் நிறைந்தனவான இவைபோன்ற தேன்மொழிகளால் தங்கருத்தை முடித்துக் கொள்ளும் பெண்களாற் காமிகளே மயக்குறுகின்றனர். கௌதமி : பெரியீர்! அங்ஙனஞ் சொல்லாதீர். துறவாசிரமத்தில் வளர்க்கப்பட்ட இப்பெண் கள்ளமே அறியாள். அரசன் : துறவொழுக்கத்தினின்று ஆண்டு முதிர்ந்த அம்மா! கற்றுக் கொடாமலே பெண்பாலுக்கு உரிய இத்தகைய திறமை, தாழ்ந்த விலங்குகளிற் பெண் இனத்திலுங்காணப் படுவதாயிற் பகுத்தறிவுடைய மக்களிடத்தில் அஃதெவ்வளவு இன்னும் மிகுதியாய்க் காணப்படுதல் வேண்டும்! தங் குஞ்சுகள் வானின்கட் பறக்கும்வரையிற் குயிற்பெடைகள் அவை தம்மை வேறு பறவைகளைக் கொண்டு வளர்த்துவரல் உண்மை யன்றோ? சகுந்தலை : (கோபத்தொடு) கீழ்மகனே! உன்மன நிலைக்கு இணங்கப் பிறரையும் கருதுகின்றாய். அறக்கடமை என்னுஞ் சட்டையைப் போர்த்துக்கொண்டு, மேலே புற்களால் மூடப்பெற்றுக் கீழே மறைந்திருக்குங் கிணற்றை யொத்த உன்னைப்போல் வேறு யார்தாம் நடப்பார்? அரசன் : (தனக்குள்) இவளது சினம் கரவடம் இல்லாத தாய்த் தோன்றுதலால், இஃது என் மனத்தில் ஐயத்தை உண்டு பண்ணுகின்றது. மறைவிற் செறிந்த காதற் பெருங்கிழமை மனக்கொளாது குறையும் நினைவாற் கொடுமனம் வல்லென்ற எனைக்குறித்துப் பிறைபோற் புருவம் முரியப் பெருவிழிகள் சிவக்கச்சினம் முறையே மிகுதல் மதன்வில் லிரண்டாய் முறித்திட்டதே. (உரக்க) நன்மாதராய்! துஷியந்தனுடைய செய்கை யாண்டும் அறியப்பட்டுள்ளது; இன்னும் இதனை யான் நினைவுகூரக்கூடவில்லையே. சகுந்தலை : புருவமிசந்திற் பிறந்தவரென்கின்ற நம்பிக்கையால் யான் நாவில் தேனும் அகத்தில் நஞ்சும் வைத்திருக்கின்ற இவர் கைக்கு எளிதாக அகப்பட்டதுபற்றி யான் வேசியாக்கப்பட்டது தக்கதேதான்! (முன்றானை ஓரத்தால் முகத்தை மூடிக்கொண்டு அழுகின்றாள்.) சார்ங்கரவன் : தானாகவே பதைத்துச் செய்த ஒரு செய்கையானது இப்படித்தான் துயரத்தைத் தரும்; ஆதலால், மறைந்த சேர்க்கையானது நன்கு ஆராய்ந்தறிந்த பின்னரேதான் செயற்பாலது. மனவியற்கை நன்கு தேறப் படாதாரொடு கொண்ட நட்புப் பகையாய் முடிகின்றது. அரசன் : ஐய! இம் மாதரிடத்தில் வைத்த நம்பிகைக் யினாலேயே குற்றமுள்ள சொற்களைச் சொல்லி எம்மை நீர் ஏன் புண்படுத்துகின்றீர்? சார்ங்கரவன் : (ஏளனமாய்) ஒன்றுக்கொன்று கீழது மேலதான செய்தியைக் கேட்டுவிட்டீர். பிறந்தது முதல் கள்ளமின்னதென்றே கற்பிக்கப்படாத ஒருவருடைய சொல் பொய்தான்: பகைவரை ஏமாற்று தலையே ஒரு கல்வியாகக் கற்கின்றவர்கள் உண்மை பேசுதற்குத் தகுதியானவர்கள் தாம்! அரசன் : உண்மை பேசுகின்ற ஐயா! அது நம்மால் ஒப்புக் கொண்டதாகவே யிருக்கட்டும். ஆனால், இந்த அம்மையை ஏமாற்றுதலால் நமக்கு வரும் ஊதியம் என்னை? சார்ங்கரவன் : நிரயத்தில் விழுவதுதான். அரசன் : புருவமிசத்திற் பிறந்தோர் நிரயத்தில் விழ விரும்புகின்றன ரென்பது நம்பத் தகாததொன்றாம். சாரத்துவதன் : சார்ங்கரவா! மேன்மேற் பேசுவதிற் பயன் என்ன? குருவின் கட்டளைப்படி செய்துவிட்டோம். இனி நாம் திரும்பிப் போவோம். (அரசனை நோக்கி) இதோநும் மனைவி யிருக்கின்றார்; நீர் அவரை ஏற்றுக் கொள்ளினுங் கொள்ளுக, தள்ளிவிடினும் விடுக. தன் மனைவியினிடத்து எவ்வகையான தலைமை செலுத்தினும் அது பொருந்துவதே யாம். அம்மே கொளதமீ! புறப்படுங்கள். (அவர்கள் புறப்படுகின்றனர்.) சகுந்தலை : எப்படி? இக் கொடியவன்றான் என்னை ஏமாற்றிவிட்டான்; நீங்களுமா என்னை விட்டுப் போகின்றீர்கள்? (அவர்களுக்குப் பின்னே புறப்படுகின்றாள்.) கௌதமி : குழந்தாய் சார்ங்கரவா! இதோ சகுந்தலை பரிவுறும்படி அழுதுகொண்டு நமக்குப் பின்னே வருகின்றாளே! தன் கணவனே தன்னைத் தள்ளிவிட்டுப் பெருங்கொடுமை செய்தால் என் மகள் என்ன செய்வாள்? சார்ங்கரவன் : (சினத்துடன் திரும்பி) தூர்த்தே! தன்னெடுத்தமூப்பா யிருக்கப் பார்க்கின்றையோ? (சகுந்தலை அஞ்சி நடுங்குகின்றாள்.) சார்ங்கரவன் : சகுந்தலை! அரசன் சொல்லுகிறபடியே நீ இருந்தாயானால், நின் தந்தையார் தமது குடியினின்றும் வழுவிய உனக்கு யாதுதான் செய்யக்கூடும்? அவ்வாறின்றி நின் ஒழுக்கந் தூயதென்றே நீ அறிந்தாயானால், நின் கணவன் வீட்டில் அடிமையாகவாயினும் இருத்தலே உனக்குத் தக்கதாகும். நில், நாங்கள் போகிறோம் அரசன் : ஓ முனிவரே! நீர் ஏன் இந்த அம்மையை ஏமாற்றுகின்றீர்? வெண்டிங்கள் அல்லிப் பூவினையே அலரச் செய்கின்றது; செஞ்ஞாயிறே தாமரைப் பூவினையே மலரச் செய்கின்றது; ஐம்பொறிகளையுந் தம் வயப்படுத்தி யிருப்பவர் களின் மனமானது பிறன் மனையாளைத் தழுவுதற்கு ஒருப்படமாட்டாது. சார்ங்கரவன் : மற்றை நிகழ்ச்சிகளில் அழுந்தியிருத்த லால் முன் நடந்ததை மறந்து போயிருக்கும் நீர் எவ்வாறு பழிக்கு அஞ்சுவீர்? அரசன் : இவ்விரண்டில் இங்கே எஃதுயர்ந்தது? எது தாழ்ந்தது? என்று தங்களைத்தான் கேட்டுக் கொள்ளு கிறேன். நான் மறந்திருந்தாலுமிருக்கலாம், அல்லது இம்மாதரே பொய்கூறி யிருந்தாலு மிருக்கலாம். இவ்வையப் பாட்டில், மனையாளாயின் அவளை நீக்குவது நன்றோ, அல்லது பிறன்மனையாளாயின் அவளைச் சேர்ந்து குற்றம் அடைதல் நன்றோ? புரோகிதர் : (ஆழநினைந்து) அப்படியானால், தாங்கள் இவ்வாறு செய்யுங்கள். அரசன் : நல்லது; தெரிவியுங்கள். புரோகிதர் : பிள்ளைப்பேறு வரையில் இந்த அம்மையார் என் வீட்டில் இருக்கட்டும்; நான் இதனை ஏன் சொல்லுகிறேன் என்று கேட்பீர்களானால், மன்னர் மன்னனாயிருக்கும் ஒரு புதல்வனை முதன்முதல் தாங்கள் பெறுவீர்களென்று முன்னொருகால் முனிவர்களால் வாழ்த்தப்பட்டிருக் கின்றீர்கள். இம் முனிவர் மகளார் வயிற்றிற் பிறக்கும் அம் மகன் அத்தகைய அரசடையாளங்கள் உடையனாயிருந்தால், இம் மங்கையாரைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு உவளகத்தில் வைக்கலாம். அப்படி நேராவிட்டால், தம் தந்தை வீட்டுக்குப் போய்விடுதலே அவர் பின்பற்றற் பாலதொரு முறையாகும். அரசன் : குரவர் விரும்புகிறபடியே செய்க. புரோகிதர் : மகளே! என் பின்னே வா. சகுந்தலை : ஓ பெருமை தங்கிய பூதேவி! நீ வெடித்து என்னை ஏற்றுக்கொள். (அழுதுகொண்டு புரோகிதரொடு போகின்றாள்.) (துறவிகளும் போய்விட்டார்கள்.) (அரசனுந் தன் நினைவு சாபத்தால் மறைவுண்டு சகுந்தலையைப் பற்றி ஆழ்ந்தெண்ணிக் கொண்டிருக்கின்றான்.) (திரைக்குப் பின்னே) புதுமை! புதுமை! அரசன் : (உற்றுக்கேட்டு) அங்கே என்ன நடந்திருக்கலாம்? (புரோகிதர் வருகின்றார்.) புரோகிதர் : (வியப்போடு) பெருமான்! மிகவும் வியக்கத் தக்கதான ஒரு நிகழ்ச்சி உண்டாயிற்று. அரசன் : எப்படி என்ன? புரோகிதர் : கண்ணுவ முனிவரின் மாணாக்கர்கள் திரும்பிச் செல்கையில் அப் பெண் தன் கைகளை உயர எறிந்து ஓலமிடப் புகுந்தாள். அரசன் : அப்புறம் என்னை? புரோகிதர் : உடனே அப்ஸரஸ் தீர்த்தத்திற்கு அருகாமையில் பெண் வடிவுடைய ஓர் ஒளியுருத் தோன்றி அவளைத் தூக்கிக்கொண்டு சென்றது. (எல்லாரும் இறும்பூதடைகின்றார்கள்.) அரசன் : சுவாமி! அப் பொருளைத்தான் நாம் முன்னரே வெளிப்படையாய் விலக்கி விட்டோமே; இன்னும் அதனை வீணாய் எண்ணிப் பார்ப்பானேன்? புரோகிதர் : (அரசனை நோக்கி) உமக்கு வெற்றி சிறக்க! (போய்விட்டார்.) அரசன் : வேத்திரவதி! நான் மனக்கலக்க முற்றிருக் கின்றேன். படுக்கை யறைக்குப் போகும் வழியைக் காட்டு. வாயில் காவலன் : பெருமானே! இவ்வழியே வாருங்கள். (வழிகாட்டிச் செல்கின்றாள்) அரசன் : என் மனைவியல்லள் என்று என்னால் நீக்கப்பட்ட அம் முனிவர்மகளை நான் நினைவுகூரக் கூடாதது உண்மையே; ஆயினும், என் நெஞ்சம் மிக வருந்துவதை உற்று நோக்கினால், அஃது (அவளை நான் மணஞ்செய்த துண்டென்று) ஒருசான்று காட்டுவதாகவே தோன்றுகின்றது. (எல்லாரும் போய்விடுகின்றனர்.) ஐந்தாம் வகுப்பு முற்றியது. ஆறாம் வகுப்பு களம் : ஒரு தெரு. (அரசன் மைத்துனனான கொத்தவாலும், பின்னே கை இறுகக் கட்டப்பட்ட ஓர் ஆடவனை நடத்திக் கொண்டு இரண்டு காவலாளரும் வருகின்றனர்.) காவலாளர் : (ஓர் ஆளை அடித்துக்கொண்டு) அடே கள்வா! அரசன் பெயர் செதுக்கப்பட்ட மணி பதித்திருக்கும் இந்தக் கணையாழி உனக்கு எங்கே அகப்பட்டது? சொல். ஆடவன் : (நடுக்கத்தொடு) நான் அப்படிப்பட்ட செய்கை செய்யிற வனல்லங்க. நீங்க அருள் பண்ணுங்க! முதற் காவலன் : என்ன! உன்னைத் தகுதியுள்ள பார்ப்பானென்று நினைச்சு அரசனே உனக்கு இதைப் பரிசாக் கொடுத்தாரோ! ஆடவன் : இப்போ நான் சொல்றதைக் கேளுங்க. நான் சக்ராவதாரக் கரையிலிருக்கிற செம்படவன். இரண்டாங் காவலன் : அடே திருடா! உன்சாதியை யாங்கள் கேட்டோமா? கொத்தவால் : ஏ சூசகா! அவன் சொல்லவேண்டுவ தெல்லாம் ஒழுங்காகச் சொல்லட்டும்; அவனை இடையிலே தடுக்க வேண்டாம். காவலாளர் இருவரும் : தாங்கள் இடுங் கட்டளைப் படியே, மேலே சொல், மேலே சொல். ஆடவன் : மீன்பிடிக்கிற தூண்டிமுள்ளு, வலை, இதுகளைக் கொண்டு நான் என் குடும்பத்தைக் காப்பாத்தி வருகிறேன் சாமி. கொத்தவால் : (நகைத்து) உன் தொழில் புனிதமானது தான்? ஆடவன் : சாமீ, தலைமுறை தலைமுறையா வருகிற தொழிலு இளிவாயிருந்தாலும் அதை விட்டுடக் கூடாதுங்க. ஒரு படிச்ச பாப்பான் தான் எரக்கமுள்ள வனாயிருந்தாலும், வேள்வி செய்யிறப்பக் கொடுமையான கொலெசெய்யி றானல்லலோ. கொத்தவால் : நல்லது, பிறகு என்ன? ஆடவன் : ஒருநாள் ஒரு செவப்புமீனெப் பிடிச்சு அரிஞ்சேன். அப்போ அது வயித்துக்குள்ளே இந்த மணியாளி மின்னிச்சு; அதைக் கண்டு எடுத்துக்கிட்டு வந்துவிக்கக் காட்டினேன்; அப்போ நீங்க பிடிச்சுக்கிட்டிங்க நீங்க என்னைக் கொண்ணாலுஞ்சரி, விட்டாலுஞ்சரி; இதுதான் என் கைக்கிது வந்த கை. கொத்தவால் : ஏ சானுகா! இவன்மேல் பச்சைமீன் நாற்றம் வீசுகிறபடியால், இவன் ஐயமில்லாமல் முதலை தின்கிற செம்படவன்றான். ஆகையால், இவன் கையில் இக் கணையாழி வந்தது ஆராயத்தகுந்ததுதான். நாம் அரண் மனைக்கே போகலாம். காவலாளர் : நல்லது, அடே முடிச்சவிக்கிப் பயலே! முன்னே நட. (எல்லாரும் போகின்றார்கள்) கொத்தவால் : ஏ சூசகா! இக் கணையாழி அக்கபட்ட வகையைப்பற்றி அரசனுக்குத் தெரிவித்து, அவரது கட்டளை பெற்று நான் திரும்பிவரும் வரையில், இவனை இந்த வாயிலிலேயே கருத்தாய்ப் பார்த்துக்கொள். இருவரும் : அப்படியே. தாங்கள் அரசனுடைய அருளைப் பெறப்போங்க. (கொத்தவால் போகிறான்.) முதற் காவலன் : அடே சானுகா! எசமான் போய் ரொம்ப நாளியாயிட்டே. இரண்டாங் காவலன் : ஆமா, சமயம் பார்த்தல்லோ ராசாகிட்டப் போகணும். முதற் காவலன் : அடே சானுகா! இந்தப்பயலெ கொலை பண்ணுறதுக்கு எப்போ இவன்மேலே பூமாலை கட்டுவே னென்னு என்கை துடிக்குது. (செம்படவனைக் குறித்துக் காட்டுகிறான்.) ஆடவன் : காரணமில்லாமே கொலைபண்ணுறது உங்களுக்கு ஞாயமல்லங்களே சாமி. இரண்டாங் காவலன் : (பார்த்து) நம்ம எசமான், ராசா கிட்டே கட்டளெ பெத்துக்கிட்டுக் கையிலே ஒரு ஏடுவைச் சுக்கிட்டு இந்த வளியா வருராங்க. அடே! நீ களுகுக்கு இரையாப் போவே, அல்லாட்டி நாய்வாயைப் பாப்பே. (கொத்தவால் வருகிறான்.) கொத்தவால் : ஏ சூசகா! இந்த வலைஞனை விட்டுவிடு; இந்தக் கணையாழி இவனாற் கைக்கொள்ளப்பட்ட வகை முற்றும் மெய்தான். சூசகன் : தாங்கள் சொல்லுறபடியே. இரண்டாங் காவலன் : இவன் எமப்பட்டணம் போயித் திரும்பி வந்திருக்கிறான். (செம்படவனைக் கட்டவிழ்த்து விடுகின்றான்.) வலைஞன் : (கொத்தவாலை வணங்கி) சாமீ! என் உயிரு உங்களதுதான். கொத்தவால் : இதோ அரசன், கணையாழிக்குள்ள விலையை உனக்குப் பரிசாகக் கொடுக்கும்படி கட்டளை செய்திருக்கின்றார். (அவனுக்கு விலையுயர்ந்த பரிசில் கொடுக்கின்றான்.) வலைஞன் : (பணிந்து ஏற்று) சாமீ! எனக்கு ரொம்ப உதவி பண்ணினிங்க. சூசகன் : களுவிலே யிருந்து எறக்கி யானெ முதுகிலே வைச்சா உதவிதான். சானுகன் : எசமான்! இந்தப் பரிசெப் பாத்தா ராசவுக்கு இந்தக் கணையாளியிலே பிடிப்பு இருக்கிறாப் போலே தோணுதே. கொத்தவால் : அதிற் பதிப்பட்டிருக்கும் விலையுயர்ந்த செழுமணியின் பொருட்டாக அஃதவரால் விரும்பப் பட்ட தென்று யான் நினைக்கவில்லை. அதனைக் கண்டவுடனே அரசன் தனக்கு மிக இனிய யாரோ ஒருவரை நினைத்துக் கொண்டார்; இயற்கையிலே அவர் அமைதியுடையரா யிருந்தாலுஞ், சிறிதுநேரம் அவர் கண்களில் நீர் ததும்பப் பெற்றார். சூசகன் : தாங்க ராசாவுக்கு நல்ல உதவி செய்திங்க. சானுகன் : ஏன், இந்த மீங்கொல்லிப் பயலுக்கு ஒத்தாசை பண்ணினிங்க என்று சொல்லேன். (வலைஞனைப் பொறாமையுற்றுப் பார்க்கின்றான்.) வலைஞன் : சாமீ! இதிலே பாதி உங்க பூச்செலவுக்கு வைச்சுக்கிங்கோ. சானுகன் : அவ்வளவு சரிதான். கொத்தவால் : ஏ வலையா! நீ இப்போது எனக்கு மிகச் சிறந்த நெருங்கிய நேசனாய் விட்டாய். முதலில் உண்டாகும் நேசமானது கள்ளுக்கு எதிரில் ஆகவேண்டுமென்பது நமது வழக்கம். ஆகையால், நாம் கள்ளுக்கடைக்கு நேரே போவாம் வா. (எல்லோரும் போய்விட்டார்கள்.) இடையுரை முற்றியது. (சானுமதி என்னும் ஓர் அரம்பை மாதுவான ஊர்தியொன்றில் வருகின்றாள்.) சானுமதி : முனிவர்கள் நீராடும் இந்நேரம் வரும் வரையில், என் முறைப்படி செய்ய வேண்டுவதை அப்ஸரஸ் தீர்த்தக் கரையிற் போயிருந்து செய்துவிட்டேன். இனி நானே நேரிற்போய் இவ் அரசமுனிவரின் நிலையைக் காண்கிறேன். மேனகையின் தொடர்பினாற் சகுந்தலை எனக்கு என் உயிர்போல் இருக்கின்றாள். தன் புதல்வியின் பொருட்டாகவே என்னை அவள் தானே வரவிடுத்திருக் கின்றாள். (சுற்றிப் பார்த்து) விழாக்கொண்டாடுதற்கு உரிய இந்தப் பருவத்திலே யுங்கூட, இவ் வேந்தன் அரண்மனையில் ஏதொரு விழாக் கொண்டாட்டமும் காணப்படாம லிருப்பது ஏனோ! எண்ணி ய அளவில் எல்லாவற்றையும் அறியக் கூடிய ஆற்றல் யான் உடையேன். ஆனாலும், என்னைப் பெருமைப்படுத்தி என் தோழி சொல்லியதற்கு நான் மதிப்புக் கொடுத்தல்வேண்டும். நல்லது, திரஸ்கரிணி என்னும் மறைப்பு வித்தையால் இந்தத் தோட்டக் காரிகளுக்குப் பக்கத்திலேயே இவர்கள் காணக் கூடாமல் மறைந்து நின்று கொண்டு எல்லவாற்றையும் தெரிந்து கொள்ளுகின்றேன். (வானவூர்தியை விட்டிறங்கி நிற்கின்றாள்.) (மாமரத்தின் மலர்முகையைப் பார்த்துக்கொண்டு ஒரு பாங்கியும் அவட்குப் பின்னே மற்றொருத்தியும் வருகின்றனர்.) முதற் பாங்கி : விழுத்தக்க வேனிலுயிர் மிகுதரவே கொண்டு முழுச்செம்மை பசுமையுடன் வெண்மையெனு மூன்றுங் குழைத்திட்டா லெனவயங்கு கொழுமாவின் முகையே! தழைப்பருவ நற்குறியாத் தயங்குநையென் றறிந்தேன். இரண்டாம் பாங்கி : ஏடி பரபிருதிகே! என்ன இங்கே தனியே பேசிக் கொண்டிருக்கின்றாயே? முதற் பாங்கி : மதுகரிகே மாமுகையைக் கண்ட அளவானே பரபிருகை (அஃதாவது குயில்) களிமயக்க மடைவதுண்டன்றே. இரண்டாம் பாங்கி : (களிப்புடன் விரைந்து வந்து) எப்படி, வேனிற்காலம் வந்துவிட்டதா? முதற் பாங்கி : ஓ மதுகரிகே! (அஃதாவது ஓ வண்டே!) களிமயக்கத்தோடு பாடிக்கொண்டு திரியுங்காலம் உனக்கு வந்துவிட்டது. இரண்டாம் பாங்கி : தோழி! நான் கால் நுனிவிரலை ஊன்றிக்கொண்டு எக்கி மாமுகையைப் பறிக்கும்போது என்னைத் தாங்கிக்கொள்; பிறகு நான் காமதேவனை வழிபடுகிறேன். முதற் பாங்கி : அந்த வழிபாட்டினால் வருகிற பயனிற் பாதி எனக்குக் கொடுப்பாயானால்தான் அப்படிச் செய்வேன். இரண்டாம் பாங்கி : நம் உயிர் ஒன்றாயும் உடம்பு மட்டும் இரண்டாயும் தோன்றுவதனால், நீ அது சொல்லா விட்டாலும் அப்படியே தான் நடக்கும். (தன் தோழியால் தாங்கப்பட்டபடியே நின்றுகொண்டு மாமுகையைப் பறிக்கின்றாள்.) ஆ! இந்த மாமுகைகள் முழுதும் இதழ் விரியாதிருந்தாலுங், காம்பிலிருந்து பறிக்கப்பட்டவுடனே என்ன மணம் வீசுகின்றன! (இரண்டு அகங்கைகளையுஞ் சேர்த்து) ஏ மாமுகையே! புறஞ்சென்ற காதலரைப் பிரிந்திருக்கும் பூவையரை மறஞ்செய்து மதனெடுத்து வளைவில்லில் தொடுத்தல்பெறுந் திறஞ்செய்த ஐங்கணையுட் சிறப்பெய்தி மற்றவர்தம் நிறஞ்சென்று பாய்வையென நின்னையவற் கிட்டனெனால். (சடுதியில் திரையை விலக்கிக்கொண்டு கஞ்சுகி என்னுங் காவலாளன் சீற்றத்தொடு வருகின்றான்.) கஞ்சுகி : அடி அறிவிலாய்! நிறுத்து! வேனில் விழாக் கொண்டாடப் படாதென்று மன்னனால் தடைசெய்யப் பட்டிருக்கையில், நீ ஏன் இந்த மாமுகையைப் பறிக்கின்றாய்? இரண்டு பாங்கிமாரும் : (அஞ்சி) தாங்கள் பொறுக்க வேண்டும்; அவ்வாறு கட்டளை பிறந்திருப்பதை யாங்கள் அறியேம். கஞ்சுகி : ஆ! தழைந்த மரங்களும் அவற்றிற் குடி கொண்டிருக்கின்ற பறவைகளும் அரசன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கையில், நீங்கள் இருவீரும் அதனைக் கேட்கவில்லையா? எப்படி? செழுமா மரங்கள் கொழுமுகை அரும்பியும் பொன்றுகள் பெறாமை கண்டிலிர் கொல்லோ; குரவமுகிழ் நிரம்பி நெடுநா ளாகியும் விரியா திருத்தல் தெரியிலிர் கொல்லோ; பனிநாட் கழிந்து நனிநா ளாகியுஞ் சேவலங் குயில்கள் வாய்திற வாவே; காம வேளும் புட்டிலி லெடுத்த நாம வெங்கணை புகுத்தி அச்சமிக் கனனென அறிகுவென் மாதே. சானுமதி : இனி ஐயமேயில்லை; தவவொழுக்கத்தொடு கூடிய அரசனானவர் மிகுந்த ஆற்றலுடையவர்தாம். முதற் பாங்கி : ஐய! மன்னன் மைத்துனரான மித்திராவசு என்பவர், அரசனுக்கு அடித்தொழும்பு செய்து கொண்டிருந்த எங்களை அங்கிருந்து இங்கு வரவிடுத்து, இவ் இளமரக் காவினை ஒழுங்காக வைத்துப் பாதுகாக்குங் கடமையை எங்கட்குத் தந்து சில நாட்கள் ஆயின. அப்படி வந்து விட்டமையினாலேதான் இச் செய்தி முன்னமே எங்களாற் கேட்கப்படா தாயிற்று. கஞ்சுகி : ஆனால் நல்லது, திரும்பவும் நீங்கள் இவ்வாறு செய்யப்படாது. பாங்கிமார் இருவரும் : ஐய! வேனில்விழா நடக்க வொட்டாமல் அரசன் நிறுத்திவிட்டது ஏதுகாரணத்தா லென்று தெரிந்துகொள்ள ஆவலுடையேமா யிருக்கின்றேம். அதனை நாங்கள் கேட்டறிவதிற் குற்றமில்லையென்றால் தாங்கள் அதனை எங்கட்குச் சொல்ல வேண்டுகிறோம். சானுமதி : ஆடவர்கள் விழாக்கொண்டாடுவதில் உண்மையிலே விருப்பமுள்ளவர்கள்; ஆகையால், தக்க காரணம் இருக்கவேண்டுந்தான். கஞ்சுகி : இது பலருக்குந் தெரிந்ததுதான் ; உங்களுக்கு ஏன் அது சொல்லப்படாது? சகுந்தலையை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளிவிட்ட பழிச்சொல் உங்கள் காதுக்கு எட்டவில்லையா? இருவரும் : கணையாழி அகப்பட்டவரையில் அரசன் மைத்துனர் வாயினாற் சொல்லக் கேட்டேம். கஞ்சுகி : அப்படியானாற் சொல்லவேண்டியது இன்னுஞ் சிறிதுதான் உள்ளது. தனது கணையாழியைக் கண்டவுடனே தான் சகுந்தலையை முன் மெய்யாகவே மணம்புரிந்ததை நினைந்துகொண்டு, பின் மிக்க மறதியினால் அவளை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளிவிட்டதைப் பற்றி மன்னன் நிரம்பவும் மனம் நைந்திருக்கின்றார். அதனாலே, இன்பநுகர் பொருளெல்லாம் வெறுத்து விட்டார் இனியநூல் அமைச்சரையுங் கலவார் முன்போற் கண்ணுறக்கம் இரவெல்லாம் பெறமாட் டாராய்க் கட்டில்மிசை யிங்குமங்கும் புரளு கின்றார் தன்பெரிய மனைநல்லார் பேசும் போது தண்மையினாற் சிலசொல்லுஞ் சொல்லி னுள்ளும் பெண்ணரசி சகுந்தலையைப் பிழைத்துச் சொல்லிப் பெரிதுவரும் நாணத்தாற் கலங்கு கின்றார். சானுமதி : எனக்கு இது நல்ல செய்தியே! கஞ்சுகி : மன்னற்குள்ள இந்தத் துயரத்தினாலேதான் விழாக் கொண்டாட்டந் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. இருவரும் : அது முறைதான். (திரைக்குப் பின்னே) தாங்கள் முன்னே செல்லுங்கள். கஞ்சுகி : (உற்றுக்கேட்டு) ஓ! மன்னன் இவ்வழியே தான் வருகின்றார். நீங்கள் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருங்கள். இருவரும் : அப்படியே. (போய்விட்டார்கள்.) (கழிந்ததற்கு இரங்குங் கோலத்திற்கு இசைவான உடையொடு அரசனும், விதூஷகன் பிரதீகாரிகளும் வருகின்றனர்.) கஞ்சுகி : ஆ! எந்த வகையான நிலைமையிலும் அழகிய வடிவமானது எவ்வளவு அழகாக விளங்குகின்றது! அவ்வளவு கவலையொடு கூடியிருந்தாலும் அரசன் கண்ணைக் கவரத்தக்க தோற்றமுடையராகவே யிருக்கின்றார்! ஏனெனில், சிறப்பணி கலன்கள் வெறுப்புடன் நீக்கி இடதுகை முன்பொற் கடகம் பிணைந்தும் நெட்டுயிர்ப் பெறிதலிற் றுப்பிதழ் விளர்த்துந் துயிலா திருத்தலிற் பயில்விழி யிடுகியும் உடல்மிக மெலிவுற லாயினுஞ் சுடர்மணி தேய்த்தொறுந் தேய்த்தொறும் வாய்த்துருக் குறைந்து நிறமிக வுறுதல் போல இறைவன் மேனியும் ஒளியா னதே. சானுமதி : (அரசனைப் பார்த்து) சகுந்தலை இவரால் தள்ளப்பட்டு வருந்தினாலும், அவள் இவரை நினைந்து உருகுதல் தகுதிதான். அரசன் : (ஆழ்ந்த நினைவொடு மெல்லநடந்து) மான் பிணைபோன்ற விழிகளையுடைய என் காதலி எழுப்பிய அப்போதெல்லாம் எழுந்திராது உறங்கிக் கிடந்த இப் பாழும் நெஞ்சமானது, பரிவால் துன்பமுறுதற்கே இப்போது விழித்துக்கொண்டது! சானுமதி : ஆ! அவ்வறியாத பெண்ணின் வினை அப்படியா இருக்கிறது? விதூஷகன் : திரும்பவும் இவர் சகுந்தலை நோயாற் பிடிபட்டிருக்கின்றார். இவர்க்கு எப்படி மருந்தூட்டி இதனைத் தீர்க்கிறதென்பது எனக்குத் தெரியவில்லை. கஞ்சுகி : (கிட்டவந்து) வேந்தற்கு வெற்றி சிறக்க! எம்பெருமான்! இளமரக்காவிற் பலவிடங்களும் ஆராய்ந்து பார்க்கப்பட்டன. இன்பம் நுகர்தற்குரிய எந்தவிடத்திலுந் தங்கள் விருப்பம்போல் இருக்கலாம். அரசன் : ஏடி வேத்திரவதி! பிசுனரென்னும் அமைச்சரிடத்தில் நான் சொன்னதாக இவ்வாறு சொல் : இரவில் நெடுநேரங் கண்விழித்திருந்தமை யால் இன்று அறங்கூறும் அவையத்திற்கு வருதல் நமக்குக் கூடாமையா யிருக்கின்றது. தங்களால் ஆராய்ந்து தெளியப்பட்ட குடி மக்களின் வழக்குகள் ஏட்டில் எழுதி நம்மிடம் விடுக்கப் படட்டும். பிரதீகாரி : பெருமான் கட்டளைப்படியே. (போய் விடுகிறாள்.) அரசன் : ஏடா வாதாயனா! நீயும் உன் கடமையைப் பார்க்கப்போ. கஞ்சுகி : மன்னன் கட்டளைப்படியே. (போய்விடுகிறான்.) விதூஷகன் : ஓர் ஈயும் இல்லாமல் ஒட்டிவிட்டீரே. (பகற் கால) வெப்பத்தை நீக்குதலாற் குளிர்ச்சியாயும் இனிதாயும் இருக்கின்ற இவ்விளங்காவின் இந்த விடத்தில் இனி நீர் பொழுது போக்கலாம். அரசன் : தோழா! பட்டவிடத்தே படும், கெட்ட குடியே கெடும் என்னும் பழமொழி முற்றும் உண்மையே யாகும். துறவிமகள் மேல்வைத்த தொல்காதல் மறைத்த மறதியெனும் இருள்நெஞ்சை மற்றகன்ற பின்னே உறவருந்து மெனைக்குறியிட் டுலைப்பதற்கு மதனன் நிறமாவின் முகையைவில்லில் நிறுத்துகின்றான் என்னே! விதூஷகன் : சிறிது பொறும்; இந்தத்தடியால் மதனனுடைய அம்பை அடித்து அழிக்கின்றேன். (தடியைத் தூக்கி மாம்பூவை அடிக்கப் போகின்றான்.) அரசன் : (புன்சிரிப்பொடு) அஃதிருக்கட்டும், பார்ப்பானது வலிமை தெரிந்ததுதான். தோழனே! எந்த இடத்திலிருந்துகொண்டு என் காதலியைச் சிறிது ஒத்திருக்கும் பூங்கொடிகளைப் பார்த்து இன்புறலாம்? விதூஷகன் : மல்லிகைப் பந்தரின்கீழ்ப் பொழுது போக்குவீர் என்றும், நும்மால் நுமது கையினாலேயே ஓவியப்பலகையில் எழுதப்பட்ட பெருமாட்டி சகுந்தலையின் ஓவியத்தை அவள் அங்கே கொண்டுவர வேண்டுமென்றும் நீர் முன்னமே தான் சதுரிகை என்னும் நும் ஏவற்காரிக்குச் சொல்லி யிருக்கின்றீரே. அரசன் : நெஞ்சத்தை உவப்பிக்கிறதற்கு அது நேர்த்தி யான இடந்தான். அதற்குப் போகும் வழியைக் காட்டு. விதூஷகன் : வேந்தே! இவ்வழியே இவ்வழியே வருக. (இருவரும் நடந்து போகின்றார்கள்; சானுமதியும் பின் போகின்றாள்.) விதூஷகன் : இதோ! சலவைக்கல் லிருக்கை உடையதாய், மலர்களால் ஒப்பனைசெய்யப்பட்டு அழகாய்த் தோன்றும் இந்த மல்லிகைப் பந்தர் நம்மை உண்மையிலேயே மகிழ்ந்து வரவேற்பது போலத் தோன்றுகின்றது! இனி நீர் இதனுள்ளே புகுந்து அமரலாம். (இருவரும் புகுந்து இருக்கின்றனர்.) சானுமதி : இந்தக் கொடியின் பக்கத்தே நின்று கொண்டு என் தோழியின் ஓவிய உருவத்தைக் காண்பேன். அதன்பின், அவள்மேற் பலவேறு வகையில் வெளியிட்ட அவடன் கணவன் காதலை அவட்கு விரித்துரைப்பேன். (அவ்வாறே கொடியின் பக்கத்தே நிற்கின்றாள்.) அரசன் : நண்பா! சகுந்தலையைப் பற்றிய முன் நிகழ்ச்சிகளையெல்லாம் இப்போது நினைந்து கொண்டேன்; உனக்கும் அவற்றைச் சொன்னேனே! யான் அவளை விலக்கி விட்டபோதும் நீ என் பக்கத்திலில்லை; அல்லது அதற்கு முற்பட்டாயினும் நீ அவள் பெயரைச் சொன்னாயில்லை. என்னைப் போலவே நீயும் மறந்துவிட்டனையோ? விதூஷகன் : நான் மறக்கவில்லை. ஆயினும், நீர் எல்லாஞ் சொல்லிய பின் முடிவிலே இஃது உண்மையன்று, வெறும் பகடிப்பேச்சு என்றீரே, நானோ களிமண் மூளையுள்ள வனாதலால், நீர் சொல்லியதை அப்படித்தான் என்று எடுத்துக் கொண்டேன். ஆனாலும், ஊழ் எல்லாம் வல்லது. சானுமதி : உண்மையிலே அஃது அப்படித்தான்! அரசன் : (நினைத்துப் பார்த்து) ஓ நண்பா! என்னைக் காப்பாற்று! விதூஷகன் : ஐய, இஃதென்ன? இது நுமக்குத் தக்கதன்று; அறிவுடையோர் தாம் கவலைப்பட்டுத் துயருறுதற்கு ஒருபோதும் இடங் கொடுப்பதில்லை. பெரும்புயற் காற்றிலும் மலைகள் அசையாமல் இருக்க வில்லையா? அரசன் : நீக்குண்ட துன்பத்தால் என் காதலி அடைந்த நிலையை யான் நினைவுகூரும் பொழுது என்னால் அத் துயரம் தாங்க முடியவில்லை. கொடியேனால் நீக்குண்டு கூடுமுற வினரோடும் படர்வதற்கென் காதலிதான் பரிவுறுங்காற் பெருந்தந்தைக் கடியாராஞ் சீடரவர் போற்பெரியர் ஆர்த்திந்த இடமேநில் லெனவொழுகும் நீர்விழியாள் ஏங்கினளே. அங்ஙனம் ஏக்கமுற்ற நிலையோடு அவள் நீர்ஒழுகுதலால் மங்கிய பார்வையுடன் திரும்பவும் என்னை உறுத்துப்பார்த்த தானது, நான் கொடியனாயிருந்தும், நஞ்சு ஊட்டிய அம்பின் றுண்டைப்போல் என்னைத் துன்புறுத்து கின்றதே! சானுமதி : ஓ தான் கருதிய தொன்றிற் பற்றுவைப்பது இப்படித்தான்! (ஏனெனில்) இவர் துன்புறுவது கண்டு எனக்குக் களிப்புண்டாகின்றது. விதூஷகன் : ஓ நண்பரே! வானத்தில் இயங்கும் யாரோ ஒருவனால் அவ்வம்மை கொண்டுபோகப்பட்டாரென்று கருதுகின்றேன். அரசன் : தன் கொழுநனையே தெய்வமாகக் கொண் டொழுகுவாளை வேறு எவன் தொடுதற்குத் துணிவான்? நின்றோழியின் பிறப்பிற் கிடமா யுள்ளவள் மேனகை என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்; அவள் தோழிமாரால் நின்றோழி கொண்டுபோகப் பட்டாளென்று என் நெஞ்சம் ஐயுறுகின்றது. சானுமதி : இவ்வுணர்ச்சியெல்லாம் மறந்துவிட்டது தான் வியக்கத் தகுவது! நினைவுகூர்வது வியக்கத் தகுவதன்று. விதூஷகன் : அப்படியானால், நாளடைவில் நீர் அவ்வம்மையைக் கூடுவீர். அரசன் : எங்ஙனம்? விதூஷகன் : தன் கணவனைப் பிரிந்து தம் மகள் துன்புறுதலை நீளப் பார்க்கப் பெற்றோர் தாங்க மாட்டார்கள். அரசன் : தோழனே! காரிகை தன்னையான் கலந்தி ருந்தமை ஓரில்பொய்த் தோற்றமோ உளத்தின் மாற்றமோ சேரிய பிறவியில் திரண்ட நல்வினை சீரிய பயன்பயந் தொழிந்த செய்கையோ. இனி அஃது என்றுந் திரும்பா வகையாய் மறைந்து விட்டதே! மனத்திற்கொண்ட ஆவல் தலைகீழாக விழுந்தொழி கின்றதே! விதூஷகன் : அப்படிச் சொல்லாதீர். ஏன், முன் நினை யாத ஒரு சேர்க்கை யானது, கட்டாயம் நடக்க வேண்டி யிருந்தால் நடந்தே விடுகின்றதென்பதற்கு இந்தக் கணை யாழியே ஒரு சான்றாக இருக்கின்றது. அரசன் : (கணையாழியைப் பார்த்து) ஓ! எளிதிலே கிடைத்தற்கில்லாத இடத்தினின்றும் விழுந்து விட்டமையால் துயருறத் தக்கதான அக் கடைகெட்ட பொருள் இதோ இருக்கின்றது. ஆ ஆழியே! கெண்டையங் கண்ணினாள் கிளிநக விரலிடங் கொண்டுநீ சிறிதுநாள் கூடிப் பின்னதை விண்டமை தெரிந்திடில் வினைவளஞ் சிறிதுறப் பெண்டிரைப் பிரிந்தவென் பெற்றி ஒத்தியால். சானுமதி : வேறொர் அயலான் கையில் அகப்பட்டிருந் தால், இஃது உண்மையிலேயே மிகவும் இரங்கத் தக்கதாகத் தான் இருக்கும். விதூஷகன் : நண்பரே! உமது பெயர் பொறிக்கப் பட்ட இம்மோதிரம் அவ்வம்மை கையிலிடப்பட்டது எந்த நிகழ்ச்சியினால்? சானுமதி : தெரிந்து கொள்ளுதற்கு எனக்கு உண்டான ஆவலினாலேயே இவனுந் தூண்டப்படுகின்றான். அரசன் : சொல்லுகின்றேன் கேள். யான் எனது நகரத்திற்குப் புறப்படும் பொழுது, என்காதலி கண்களில் நீர் ததும்ப நின்று பெருமான்! எத்தனைநாட் சென்றபின் எனக்குச் செய்தி விடுப்பீர், என்று கேட்டாள். விதூஷகன் : அதன் பிறகு? அரசன் : அப்போது, என் பெயர் செதுக்கப்பட்ட இக் கணையாழியை அவள் விரலிலிட்டு, ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வோர் எழுத்தாக இக் கணையாழி யிலுள்ள என் பெயரை எண்ணிக் கொண்டுவா; கடை எழுத்திற்கு நீ எண்ணவரும் நாளில் என் கண்மணி! நின்னை என் உவளகத்திற்கு அழைத்து வரும் பொருட்டு ஒரு தூதுவன் நின்பால் வந்து நிற்பன் என்று அவளுக்கு விடைகூறினேன். பின், கல்நெஞ்சுடையனான நான் மறதியினால் அவ்வாறு செய்யத் தவறிவிட்டேன். சானுமதி : ஐயோ! இவ்வளவு இனிதாக ஏற்படுத்தப் பட்ட கால வரையும் ஊழ்வலியால் தவறிப் போயிற்றே! விதூஷகன் : செம்படவனால் அறுத்துத் திறக்கப் பட்ட அச் சிவப்புமீனின் வயிற்றுள் அஃது எப்படி வந்தது? அரசன் : சசிதீர்த்தத்தை நின் தோழி குனிந்து வணங் குகையில், அஃது அவள் கையினின்றுங் கழன்று கங்கை வெள்ளத்தில் விழுந்து போயிற்று. விதூஷகன் : அஃது உண்மைதான். சானுமதி : இதனாலன்றோ இவ்வரசமுனிவர்தாம் சகுந்தலையை மணஞ்செய்து கொண்டதனைத் தீவினைக்கு அஞ்சி ஐயமுறுவாராயினர். அஃதிருக்கட்டும், அவ்வளவு மிகுந்த காதலும் ஓர் அறிகுறியினை வேண்டிய தென்னை? அரசன் : நான் இந்தக் கணையாழியைத்தான் குற்றஞ் சொல்லவேண்டும். விதூஷகன் : (தனக்குள்) இவர் வெறிகொண்டவர்கள் வழியிற் செல்கின்றார். அரசன் : மெல்லிதா யழகிதாய் விளங்குநீள் விரலுடை அல்லிமென் கையைவிட் டாழ்ந்ததென் நீருளே புல்லிய அறிவிலாப் பொருளவள் நலம்பெற வல்லதன் றேழையேன் மயங்கிற் றென்னையோ. நானே என் கண்மணியை நீக்கிவிட்டது ஏன்? விதூஷகன் : (தனக்குள்) எப்படி! பசியானது என்னை விழுங்கிவிடுவது போலிருக்கின்றதே! அரசன் : என் அன்பே! ஏதொரு காரணமுமின்றி நின்னை நீக்கிவிட்டமை நினைந்து கழிவிரக்கத்தாற் றுன் புறுத்தப்படும் நெஞ்சினனான இவனுக்கு மீண்டும் நின் உருவைக்காட்டி அருள்புரியாயோ? (சதுரிகை சடுதியில் திரையை விலக்கிக்கொண்டு கையில் ஓவியப்பலகை ஏந்தி வருகின்றாள்.) சதுரிகை : ஓவியத்தில் எழுதப்பட்ட இளவரசி இதோ! (ஓவியத்தைக் காட்டுகின்றாள்.) விதூஷகன் : நன்று! நன்று! ஓ நண்பரே! மயக்கத் தக்க வகையாய்ப் பொருள்களின் நிலையை வைத்து வரைந்த இவ்வழகிய ஓவியம் பார்க்கத் தகுந்ததே. எழுதப்பட்ட பொருள்களின் மேடு பள்ள அமைதிகளைக் காண்கையில் என் பார்வையானது அவற்றில் தடுக்கி விழுவது போலிருக்கின்றது. சானுமதி : துகிலிகை பிடிப்பதில் இவ்வரச முனிவரின் திறமை எவ்வளவு சிறந்ததாக இருக்கின்றது! என் தோழி எனக்கு எதிரில் இருக்கிறதாகவே நம்புகின்றேன். அரசன் : எவ்வெவை நன்றாயில்லையோ அவ்வற்றை ஓவியத்திற் சீர்திருத்திச் சிறப்பாய் எழுதுவதுண்டு; ஆனால் இவளது உருவ அழகோ மிகச் சிறிதாகவே இவ்வோவியத்தில் வரைந்து காட்டப்பட்டிருக்கின்றது. சானுமதி : கழிவிரக்கத்தினாலே மிகுதிப் படுகின்ற அன்பும் செருக்கற்ற நடையும் உள்ளவிடத்து இங்ஙனஞ் சொல்வது இயற்கையே யாம். விதூஷகன் : நண்பரே! இங்கே பெருமையிற் சிறந்த மூன்று மகளிர் தோன்றுகின்றார்கள். இவர்கள் எல்லாரும் அழகாகவே இருக்கின்றனர்; இவருட் சகுந்தலை யார்? சானுமதி : பயனில்லாப் பார்வை வாய்ந்த இவன் என் தோழியின் பேரெழிலைப் பகுத்தறியக் கூடாதது வாய்வதேயாம். அரசன் : நல்லது, நீ யாரைக் கருதுகின்றாய்? விதூஷகன் : இதோ இம்மாதரார் தாம் என்று கருதுகின்றேன்; நீர் பாய்ச்சப்பட்டதனால் நிறையத் தழைத்துப் பசுத்துத் தோன்றுங் கொழுவிய மாமரத்தின் அருகே, கட்டவிழ்த்து விட்டமையால் மலர்கள் உதிரப் பெறுகின்ற கரிய கூந்தலோடும், வியர்வைத் துளிகள் அரும்பிய முகத்தோடும் மிகத் துவண்ட பச்சிளந் தோள்களோடுஞ் சிறிது களைப்படைந்த வகையாய் எழுதப்பட்டிருக்கும் இவ்வுருவே சகுந்தலையாகும்; ஏனையோர் அவர்தம் தோழிகள். அரசன் : நீ திறமையுள்ளவன்றான். இதோ என் காதல் மிகுதியைக் காட்டும் அடையாளம்! வியர்க்கும் என் விரல்களின் பதிவு இதன் விளிம்பில் அழுக்கடைந்து தோன்றுகின்றது! இதோ அவள் கன்னத்தின் மேல் விழுந்த என் கண்ணீரினை ஓவியத்தின் சாயஎழுச்சி புலனாக்கு கின்றது! ஏ சதுரிகே! பொழுதுபோக்காக எழுதின இவ் ஓவியம் இன்னும் முற்றுப்பெறவில்லை. நீ போய்த் துகிலிகையை எடுத்துவா. சதுரிகை : ஐயா மாதவியரே ! யான் திரும்புமளவும் இவ் ஓவியப் பலகையைத் தாங்கிக்கொள்ளும். அரசன் : நானே அதனைப் பிடித்துக்கொள்கின்றேன். (அப்படியே செய்கின்றான்; சேடி போய்விட்டாள்.) அரசன் : (பெருமூச்செறிந்து) ஆ நண்பா! தானே வலிவிலென் பால்வந்த தையலைத் தள்ளிவிட்டு நானே படத்தி லெழுதுமிந் நங்கைக்கு நன்றுசெயல் மீனே பிறழப் பெருகுமொ ராற்றை விடுத்துவெய்ய கானே படர்கின்ற பேய்த்தேரை வேட்டல் கடுக்குமன்றே. விதூஷகன் : (தனக்குள்) இங்கே மன்னன் உண்மை யாகவே யாற்றைக் கடந்து கானல்நீரைச் சேர்ந்தவராகவே யிருக்கின்றார். (உரக்க) நண்பரே! இன்னும் வேறு யாது இங்கே எழுதப்படல்வேண்டும்? சானுமதி : என் றோழியால் விரும்பப்பட்ட அவ் இடங்கள் பலவற்றையும் அவர் எழுத நினைந்திருக்க வேண்டும். அரசன் : உற்றுக்கேள். துணை புண ரன்னம் மணற்பாங் கிருப்பத் தண்ணென் றொழுகும் நீர்மா லினியும், அதன் இருகரை மருங்குங் கௌரியை யீன்ற இமயம் வைகும் எழிலுடை மான்கள் அமைதரு தூய பனிதூங் கடுக்கலும், மரவுரி ஞான்ற விரிகிளை மரநிழல் தடக்கலைக் கோட்டில் இடக்கண் டேய்க்கும் விழைவுறு பேடை மானும் வரைதல் வேண்டினேன் மற்றிது தெரிமோ. விதூஷகன் : (தனக்குள்) நீண்ட தாடியுள்ள துறவிகளின் கூட்டத்தை இந்த ஓவியப் பலகையில் நிரப்பிவிடப் போகிறார் என்று தெரிகின்றேன். அரசன் : நண்பா! மேலுஞ், சகுந்தலைக்குச் செய்ய நினைத்த ஓர் ஒப்பனையை எழுத மறந்துவிட்டோமே! விதூஷகன் : அஃதென்ன? சானுமதி : அது, கானக வாழ்க்கைக்கும் அவளது மெல்லிய வடிவத் திற்கும் இசைந்ததாகத் தானிருக்கலாம். அரசன் : தோழா! காம்புகாது செருகிக் கன்னமேற் றொங்கும் நரம்புடைச் சிரீடம் நான்வரைந் திலெனால்; மழைநாள் மதியின் தழைகதிர் புரையுந் தாமரை மென்னூல் காமரு கொங்கைகள் நடுவே வயங்க வடிவெழு திலெனே. விதூஷகன் : தோழரே! செவ்வல்லி மலரின் இதழ் போன்ற அழகிய கையினால் தமது முகத்தை மூடிக்கொண்டு இந்த அம்மையார் ஏதோ நடுக்கம் அடைந்தாற்போல் நிற்பது ஏன்? (உற்றுநோக்கி) ஆ! இதோ இந்த வேசிமகனும், பூக்களிலுள்ள தேனைக் கொள்ளையிடுவோனுமான இந்த வண்டல்லவோ அம்மையார் தம் முகத்தாமரையின் மேல் வந்து விழுகின்றான். அரசன் : மெய்யே! அக் குறும்பனை ஓட்டிவிடு. விதூஷகன் : துடுக்கரை ஒறுக்கும் நீர்தாம் அதனை ஓட்டக்கூடும். அரசன் : நல்லதப்படியே, ஏ! பூங்கொடிகளுக்கு அன்பான விருந்தினனே! நீ ஏன் இங்கேவந்து பறக்கும் வருத்தத்தினை எய்துகின்றாய்? மணமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைகிநீ அணவுவது கருதித்தேன் பருகாமை அறியாய். சானுமதி : அஃது இப்போது ஒருமுறை நயமாக வெருட்டப்பட்டிருக்கின்றது! விதூஷகன் : வெருட்டப்பட்டபோதிலும் இந்தச் சாதி முரட்டுத்தனம் உடையதாகவே யிருக்கின்றது. அரசன் : இங்ஙனஞ் சொல்லியும் நீ எனது கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றா யில்லை; ஓ வண்டே! இப்போது இதனைக் கேள்: காம வின்பம் நுகருங்காற் கனிந்து நான்மெல் லெனச்சுவைத்த தோமில் மரத்திற் கிள்ளாத தூமென் றுளிரோ மிகப்பழுத்த காமர் கொவ்வைப் பழமோஎன் கண்ணே யனையாள் கனிந்தவிதழ் நீமேற் றொட்டால் முண்டகமா முகையுட் சிறையாய் நினையிடுவேன். விதூஷகன் : இவ்வளவு கடுமையாக ஒறுத்தபிறகும் அஃது உமக்கு அஞ்சாமலிருக்குமா? (நகைத்துக்கொண்டு தனக்குள்) இவர் உண்மையிலே வெறிபிடித்தவராய் விட்டார். இவருடைய கூட்டுறவால் நானும் அப்படித்தான் ஆய்விட்டேன். (உரக்க) தோழரே ! இஃது ஓர் ஓவியமன்றோ? அரசன் : என்ன, இஃது ஓவியமா? சானுமதி : யானும் இப்போதுதான் இதனைத் தெரிய லானேன். தன்னா லெழுதப்பட்ட உருவத்தையே நெஞ்சழுந்தி நினைந்து கொண்டிருக்கும் இவருக்கு வேறு எப்படித் தெரியும்? அரசன் : நண்பா! நீ என்ன இதில் இப்படித் தலையிட்டுக் கெடுத்தனையே? முழுதும் அவள்வயப் பட்ட நெஞ்சத்தொடு, அவளை என் எதிரிற் கண்டாற்போல் நோக்கி அக்காட்சி இன்பத்தில் யான் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் நீ எனக்கு இதனை நினைவூட்டி. என் காதலியை ஓவியத் தினளவாய் ஆக்கிவிட்டனையே. (கண்ணீர் உதிர்க்கின்றான்.) சானுமதி : முன்னுக்குப்பின் முரணாயிருக்கின்ற ஒழுக்கத்தொடு கூடின இத்தகைய பிரிவானது புதுமை யுடையதாயிருக்கின்றது. அரசன் : ஆ தோழா! ஈதென்னை, ஒழிவில்லாத துயரத்திற் படிந்திருக்கின்றேனே? விழிதுயி லாமையால் விரைக னாவினும் எழிலி னாள்தனை ஏயப் பெற்றிலேன் ஒழுகுகண் ணீரினால் ஓவி யத்தினும் பழியறு பாவையைப் பார்க்க கில்லேனே. சானுமதி : நீர் தள்ளிவிட்டதனால் சகுந்தலை அம்மை யார்க்கு உண்டான துயரத்தை நீர் இப்போது முற்றும் நீக்கிவிட்டீர். (சதுரிகை வருகின்றாள்.) சதுரிகை : வேந்தற்கு வெற்றிசிறக்க! துகிலிகை வைத்த பெட்டகத்தை எடுத்துக்கொண்டு இவ்வழியாய் வந்து கொண்டிருந்தேன். அரசன் : அப்புறம் என்னை? சதுரிகை : அப்போது அவ்வழியே தரளிகையுடன் வந்த வசுமதி அரசியார் நானே இதனை என் பெருமானிடத்திற் சேர்ப்பிக்கின்றேன் என்று அதனை வலிந்து பிடுங்கிக் கொண்டார். விதூஷகன் : நல்ல காலமாய் நீ தப்பி வந்து விட்டாயே! சதுரிகை : அருகிருந்த கிளையில் அரசியாரது மேலாடை மாட்டிக்கொள்ள அதனைத் தரளிகை விடுவித்தெடுத்துக் கொண்டிருக்கையில் நான் மறைவாய் வந்து விட்டேன். அரசன் : தோழா! அரசி வருகின்றாள்; மனக் கொதிப்பினால் அவள் செருக்கடைந்திருக்கின்றாள். இந்த ஓவியத்தைக் காவலாய் வைத்திரு. விதூஷகன் : நீ காவலாயிரு என்று சொல்லும். (ஓவியப் பலகையை எடுத்துக்கொண்டு எழுகின்றான்.) உவளகத்து மகளிரின் பிணக்குகளினின்றும் நீர் தப்பிவந்த பின் மேகபிரதிச்சந்தம் என்னும் அரண்மனையிலிருக்கும் என்னைக் கூப்பிடும். (விரைவாய் நடந்துபோய்விட்டான்.) சானுமதி : தம்நெஞ்சத்தை வேறொருவர்க்கு இடமாய்க் கொடுத்தும், தம் முதன்மனையாளிடம் இவர் நன்கு மதிப்புடையராய் ஒழுகுகின்றார். எனினும், இவர் இவளிடத்து வேண்டா விருப்புடையராகவே யிருக்கின்றார். (பிரதீகாரி கையில் ஒருகடிதத்தொடு வருகின்றாள்.) பிரதீகாரி : வேந்தற்கு வெற்றி சிறக்க! அரசன் : வேத்திரவதி! நீ வழியில் அரசியைப் பார்க்க வில்லையா? பிரதீகாரி : ஆம் பார்த்தேன். கையில் நான் கடிதத்தொடு வருதலைக் கண்டு அவர்கள் திரும்பிப் போய் விட்டார்கள். அரசன் : கடமை யின்னதென அறிந்திருத்தலால், அரசியின் முறைகளில் எனக்கு இடைஞ்சல் உண்டாகுதலை அவள் விலக்குகின்றாள். பிரதீகாரி : எம்பெருமான், அமைச்சர் பின் வருமாறு வேண்டுகின்றார்: பல துறையாக வரும் வரிவருவாய்க் கணக்குகள் நிரம்பவும் மிகுதியாய் இருத்தல்பற்றி, ஒரே ஒரு வழக்குத்தான் என்னால் ஆராய்ச்சி செய்யப் பட்டிருக்கின்றது; அஃது இக் கடிதத்திற் காட்டப்பட்டிருத்தலைக் கண்ணுறு வீர்கள். அரசன் : அக் கடிதத்தை இங்கே காட்டு. (பிரதீகாரி அதனைக் கையிற் கொடுக்கின்றாள்.) அரசன் : (அதனைப் படித்துப் பார்த்து) என்ன? கடலிற் சென்று வாணிகம் நடாத்துந் தனமித்திரன் என்னுஞ் சிறந்த வணிகர் கப்பல் உடைந்து இறந்து போயினாரென்றும், இரக்கப்படத்தக்க அச் செட்டியார்க்குப் பிள்ளையில்லை யென்றும், அதனால் அவரது களஞ்சியத்தில் உள்ள பொருள் முழுதும் அரசனுக்குச் செல்லல் வேண்டுமென்றும் அமைச்சர் எழுதுகின்றார். பிள்ளை யில்லாதிருத்தல் உண்மையிலே பரிவுறத் தக்க தொன்றேயாம்! ஏ வேத்திரவதி! பெருமையிற் சிறந்த அச் செட்டியார் பெருஞ் செல்லராதலால் அவர்க்கு மனைவிமார் பலர் இருத்தல் வேண்டும். அம் மனைவிமாருள் யாரேனுங் கருவுற்றிருக்கின்றனரா என்று உசாவுதல் வேண்டும் எனச்சொல். பிரதீகாரி : எம்பெருமான்! சாகேத நாட்டு வணிகர் ஒருவரின் மகளான அவர் மனைவி ஒருத்திக்கு இப்போது தான் சீமந்தச் சடங்கு நடத்தப்பட்டதாகக் கேள்வி. அரசன் : நல்லது, கருப்பையிலுள்ள அப்பிள்ளைதான் தந்தை செல்வத்தைப் பெறுதற்கு உரிமையுடையது. நீ போய் இதனை அமைச்சர்க்கு அறிவி. பிரதீகாரி : பெருமான் கட்டளையிடும் வண்ணமே, (போகின்றாள்.) அரசன் : ஏடி! இங்கே வா. பிரதீகாரி : இதோ வந்தேன். அரசன் : ஒருவருக்குப் பிள்ளையுண்டா இல்லையா என்றுதான் ஆய்வானேன்? குடிமக்கள் தம் அன்புள்ள உறவினரில் எவரை இழந்தாலும், பழியில்லாவழித், துஷியந்தன் அவரவர்க்கு அவ்வவ்வாறே உறவினரா யிருப்பா னென்று முரசறையச் சொல். பிரதீகாரி : அப்படியே முரசறையச் சொல்லுகிறேன். (போய்த் திரும்பிவந்து) உரியகாலத்திற் பெய்த மழைபோல், தங்கள் அறிவிப்பு மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசன் : (மிகவும் வெய்துயிர்ப்பெறிந்து) ஐயகோ! முதல்வன் இறந்ததும் பிள்ளை யின்மையினாலே சார்பு இல்லாததான குடும்பங்களின் பொருளானது ஏதிலான் ஒருவன்பாற் போய்ச் சேர்கின்றது. எனது முடிவு காலத்திலும் புருவமிசத்தின் செல்வநிலையும் இங்ஙனந்தான் ஆகப் போகின்றது! பிரதீகாரி : தீமை விலகக் கடவது! அரசன் : தானேவந்த சீரை இழித்துவிட்ட என் மேல் வசையுண்டாகுக! சானுமதி : ஐயமின்றி இவர் என் தோழியை நினைந்தே தம்மை நொந்து கொள்ளுகின்றார். அரசன் : ஏனெனில், தக்க காலத்தில் விதைக்கப் பட்டுப் பெருவிளைச் சலைத் தருவதா யிருக்கின்ற நிலத்தைக் கைவிடுதல் போல, அவளிடத்து எனது ஒளி நாட்டப் பட்டிருந்தும் என் குடும்பத்திற்கு என்றும் நிலைபேறாயுள்ள என் அறக்கிழத்தியை நான் விலக்கி விட்டேனே! சானுமதி : இப்போது உமது கால்வழி இடையறாது தொடர்ச்சியாய் இருக்கப் போகின்றது. சதுரிகை : (பிரதீகாரியை நோக்கி) வணிகச் செட்டி யாரைப்பற்றிய இச் செய்தியால் வேந்தன் மிகுந்த துயரம் அடைந்திருக்கின்றார். ஆகையால், இவருக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு நீ போய் மேகப்பிரதிச்சந்த அரண் மனையிலிருக்கும் மாட்சிமை தங்கிய மாதவியரை அழைத்து வா. பிரதீகாரி : நல்லது சொன்னாய். (அழைக்கப் போயினாள்.) அரசன் : ஐயோ! பிள்ளையில்லாக் கொடியேனாற் பெயப்பட்ட எண்ணீரைப் பிதிரர் கண்டு தள்ளாத முறைப்படியே யிவன்பின்னே தகுநீரு மெள்ளுங் கூட்டிக் கொள்ளுமினோ பலியெனவே கொடுப்பாரா ரெனக்கூறி யுகுங்கண் ணீரோ டள்ளியே யுண்பாராற் பலிபெறுவோர் ஐயமுற லாயிற் றந்தோ! (மெய்ம் மறந்திருக்கின்றான்.) சதுரிகை : (கதுமென அரசனைத் தாங்கி) பெருமானே! மனந்தளராதீர்கள்! மனந்தளராதீர்கள்! சானுமதி : ஆ! ஆ! விளக்கிருந்துந் திரை மறைத்தலினால் இருளிலே கிடந்து இவர் வருந்துகின்றார்! இப்போது இவரை நான் மகிழ்விக்கின்றேன். அல்லது அப்படித்தான் செய்வானேன்? பெரிய இந்திரன் அன்னையார், சகுந்தலையை ஆற்றுவிக்கும் பொழுது வேள்விப்பலியைப் பெறவிரும்பித் தேவர்கள் தாமே, தான் முறைப்படியே மணந்துகொண்ட மனையாளைக் கணவன் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் படி செய்விப்பார்கள் என்று சொல்லியதைக் கேட்டிருக்கின்றேன். அதுகாறுங் காத்திருத்தலே தக்கது. இதற்கு இடையில் நான்போய் இங்கு நடந்ததைச் சொல்லி என்தோழியை ஆற்றுகின்றேன். (வானில் உயர எழுந்து போய்விட்டாள்.) (திரைக்குப் பின்னே) ஓ பார்ப்பானைக் காப்பாற்று! ஓ பார்ப்பானைக் காப்பாற்று! அரசன் : (உணர்வுற்றெழுந்து, உற்றுக்கேட்டு) ஓ! இந்த ஒலக்குரல் மாதவிய னுடையதுபோல் தோன்றுகின்றதே! யார் அங்கே? (பிரதீகாரி வந்து) பிரதீகாரி : (விரைவாய்) அண்ணலே! இடரில் அகப் பட்டுக்கொண்ட தங்கள் நண்பரைக் காப்பாற்றுங்கள்! அரசன் : அச் சிறுவனை வருத்துகின்றவன் யாரடா? பிரதீகாரி : கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு தீய பேயானது அவரைப்பிடித்து மேகப்பிரதிச்சந்த அரண் மனையின் உச்சித்தளத்தின்மேற் கொண்டுபோய் வைக்கின்றது. அரசன் : இவ்வாறு நடக்கவிடப்படாது. என் இருப்பிடத்திலுந் தீயபேய்கள் இயங்குகின்றனவா! இங்ஙனந்தான் சொல்வானேன்? ஒருவன் நாடோறுங் கருத்தின்மையால் தான் செய்கின்ற குற்றங்களைத் தானே தெரிந்து கொள்ளுதல் கூடாதபோது, என் குடிமக்களில் யார் எவ்வழியிற் செல்கின்றார்கள் என்று முற்றுந் தெரிந்து கொள்ளுதல் கூடுமோ? (திரைக்குப் பின்னே) ஓ நண்பரே! உதவிசெய்யும்! உதவிசெய்யும்! அரசன் : (விரைந்து சென்று) நண்பா! அஞ்சாதே! அஞ்சாதே! (திரைக்குப் பின்னே) (முன் சொன்னதையே திரும்பச் சொல்லி) நான் எப்படி அஞ்சாதிருப்பேன்? இங்கே யாரோ ஒருவன் என் கழுத்தைப் பின்னே வளைத்துக் கருப்பங் கழியைப்போல் என்னை மூன்று துண்டாய் முறிக்கின்றானே. அரசன் : (சுற்றிப் பார்த்து) வில்லை எடுத்துவா! (ஒரு யவனப்பெண் கையில் வில்லெடுத்துக் கொண்டு) வருகின்றாள்.) யவனப்பெண் : இதோ, எம்பெருமான்! கையுறை யொடு வில். (அரசன் அம்புடன் வில்லை வாங்கு கின்றான்.) (திரைக்குப் பின்னே) இதோ, உன் கழுத்திலுள்ள புது இரத்தத்தைப் பருக விடாய்கொண்டு ஒருபுலி ஒருவிலங்கைக் கொல்லுமாறு போல், நான் உன்னைப் பதைக்கக் கொல்லுகின்றேன். துன்புறுவோர் தம் அச்சத்தைப் போக்கும்பொருட்டு வில்லைக் கையிலேந்துகின்ற துஷியந்தன் இப்போது நின்னைக் காக்கட்டும்! அரசன் : (சினத்தொடு) என்ன, இவன் என்னைச் சுட்டிப் பேசுகின்றான்! அடே பிணந் தின்கின்றவனே! நில், நில், இனி நீ உயிர்பிழைத்திராய்! (வில்லை நாண் ஏற்றி) வேத்திரவதி! மேல்மாளிகைக்கு வழிகாட்டு. பிரதீகாரி : எம்பெருமான்! இவ்வழியே, இவ்வழியே வாருங்கள். (எல்லாரும் விரைந்து போகின்றனர்.) அரசன் : (சுற்றிப் பார்த்து) இங்கே யாரையுங் காணோமே! (திரைக்குப் பின்னே) ஐயோ! ஐயோ! நான் உம்மைப் பார்க்கின்றேனே! நானிருப்பதை நீர் பார்க்கவில்லையே! பூனையாற் பிடியுண்ட சுண்டெலிபோல் என் உயிரில் யான் நம்பிக்கையற்றவன் ஆகின்றேனே. அரசன் : ஏ திரஸ்காணி வித்தையாற் றன்னை மறைத்து இறுமாந்திருப்ப வனே! எனது கணை நின்னைக் கண்டுபிடிக்கப் போகின்றது. கொல்லப்படுதற்கு உரிய நின்னைக் கொல்லும் பொருட்டுங், காக்கப் படுதற்குரிய பார்ப்பனனைக் காக்கும் பொருட்டும் இதோ யான் அந்தக் கணையினைத் தொடுக் கின்றேன். ஏனெனில் அன்னப் பறவையானது பாலையுண்டு அதனொடு கலந்த நீரை ஒழிக்கின்றது கண்டையா! (அம்பைக் குறியிடுகின்றான்.) (பிறகு விதூஷகனை விட்டுவிட்டு மாதலி யும் பின்னே விதூஷகனும் வருகின்றார்கள்.) மாதலி : அசுரர்கள் உம்முடைய அம்புகளுக்கு இலக்காகும் படி இந்திரனாற் செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகையால், அவர்களை நோக்கி இவ் வில் வளைக்கப் படுவதாக! நண்பர்கள் மீதே சான்றோருடைய அருள் நோக்கம் படுதல் வேண்டுமே யல்லது, அச்சந் தரும் அம்புகள் சென்று படலாகாதே. அரசன் : (அம்பை வில்லினின்றும் எடுத்து) ஓ! அவர் மாதலி யல்லரோ! இந்திரன் தேர்ப்பாகரின் வருகை நன்றாகுக. விதூஷகன் : வேள்விக்களத்து மாட்டைக் கொல்லுதல் போல் என்னைக் கொல்லவந்த அவனை இவர் நல்வரவாக ஏற்கின்றாரே! மாதலி : (புன்சிரிப்பொடு) நெடுநாள் வாழக்கடவீர்! தேவேந்திரனால் யான் உம்மிடத்தில் ஏன் விடுக்கப் பட்டுள்ளே னென்பதைக் கேளும். அரசன் : அவ்வாறே காத்திருக்கின்றேன். மாதலி : காலநேமி என்பவன் வழியில்வந்த துர்ச்சயர் என்னும் ஓர் அரக்கர் குலம் இருக்கின்றது. அரசன் : முன் ஒருகால் நாரதர்பால் இதைப்பற்றிக் கேட்டிருக்கின்றேன். மாதலி : நல்லது, அவ்வரக்கர் கூட்டம் உமக்கு நண்பரான தேவேந்திரனாலும் வெல்லப்படாததா யிருத்தலின், நீர் தாம் போரில் தலைமையாகச் சென்று அவர்களை அழிக்க வல்லீரென்று முடிவு செய்யப்பட்டிருக்கின்றீர். பகலவனும் அழிக்கக்கூடாத இராக்காலத் திருளைத் தண் கதிரவனல்லனோ துரத்துகின்றான். ஆதலால், நீர் முன்னமே படைக்கலனேந்தி நிற்றலால், இவ்விந்திரன் தேரில் ஏறிக்கொண்டு வெற்றி கொள்ள இப்போதே புறப்படும். அரசன் : மகவான் இவ்வளவு என்னைப் பெருமைப் படுத்தியதற்காக நான் கடமைப்பட் டிருக்கின்றேன். இனி மாதவியனை நீங்கள் அங்ஙனம் நடத்திய தென்னை? மாதலி : அதனையுஞ் சொல்லுகின்றேன். நீடுவாழ் விரான நீர் ஏதோ ஓர் ஏதுவான் மனக்குழப்பங் கொண்டு கவலையாயிருப்பது கண்டேன். உமக்குச் சினம் மூட்டுவதற்கே நான் அங்ஙனஞ் செய்தேன். ஏனெனில் விறகை நெரித்தாலன்றோ அனல் கொழுந்துவிட் டெரிகின்றது. துன்புறுத்தினாலன்றோ பாம்பு படத்தை விரிக்கின்றது. பொதுவாய் எந்த உயிருந் தூண்டப்பட்ட போதுதான் தன் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. அரசன் : (அப்புறமாய்) நண்பா! வானுலகத்திற் கிறைவனான தேவேந்திரன் இட்ட கட்டளை மீறப்படாதது. ஆகையால், இச்செய்தியைத் தெரிவித்துப் பிசுனரென்னும் அமைச்சருக்கு இதனைச் சொல்; சிலநாள், தங்கள் அறிவினாற்றல் ஒன்றுமே குடிகளைப் பாதுகாத்துவரல் வேண்டும்; நாணேற்றிய இவ்வில்லானது வேறு கடமையைச் செய்யப் புகுந்திருக் கின்றது. விதூஷகன்: தாங்கள் கட்டளையிடும் வண்ணமே.(போய்விடுகின்றான்.) மாதலி : நீடு வாழ்வீர்! இவ்வழியே வருக. (அரசன் தேரின்மேலேறுகின்றான்.)(எல்லாரு«போய்விட்டார்கள்)ஆறா«வகுப்òமுற்றியது. ஏழாம் வகுப்பு களம் : விண்வழி (தேரிலமர்ந்து வண்ணமாய்த் துஷியந்தனும் மாதலியும் வான்வழியில் வருகின்றனர்.) அரசன் : ஐய மாதலி! தேவேந்திரன் இட்ட கட்டளையை யான் நிறைவேற்றினே னாயினும், அவர் எனக்கென்றே செய்த அரும்பெருமைக்கு eன்mவர்க்குVதும்cதவிbசய்ததாகÃனைக்கின்றிலேன்.khjÈ : (புன்சிரிப்போடு) நீடுவாழ்வீர்! நீங்கள் இருவீரும் மனநிறைவு அடைந்தீர்களில்லை. ஏனெனில், அவர் உமக்குச் செய்த பெருமையை நினைந்து நீர் அவர்க்குச் செய்த உதவியை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அவரும் உமது பேராண்மையினை வியந்து உமக்கென்றே செய்த விருந்தினைப் போதுமென்று கருதவில்லை. அரசன் : அப்படிச் சொல்லாதீர்கள். எனக்கு அவர் விடைதரும்போது செய்த பெருமைப்பாடுகள் யான் எதிர் பாராதனவாகும். ஏனென்றால் தேவர்கட்கு எதிரில், அவர் தாமிருந்த அரியணையிற் பாதியில் என்னை அமரச் செய்ததும் அல்லாமல், தம் அருகுநின்ற தம்மகன் சயந்தன் தனக்கு இத்தகைய சிறப்பு எய்துமா என்று தனக்குள் ஆவல் கொண்டிருத்தலைப் பார்த்து நகைத்துக் கொண்டே, தம் மார்பில் உரிஞ்சிய பரிமளசந்தனந் தோய்ந்த மந்தரா மாலையை என் கழுத்திலணிந்தனரே! மாதலி : தேவர்கட்கு இறைவனாகிய தேவேந்திரன் கையிலிருந்து நீர் பெறத்தகாதது உண்மையில் யாது உளது? இந்திரன் இன்பம் நுகர்ந்தாங்கிருக்க, முன்பு நரசிங்கத் தினுடைய வளைந்த நகங்களும், இப்போது கணுக்கள் இழைப்புண்ட உம்முடைய அம்புகளும் அல்லவோ வானுலகத்தில் அரக்கரென்னும் முட்களைக் களைந்தெறிந்தன. அரசன் : இதில் இந்திரனது பெருமையே உண்மையிற் புகழற்பாலது; ஏவலாளர் அங்ஙனம் பெரிய முயற்சிகளிற் புகுந்து வெற்றி பெறுவதெல்லாந் தம் தலைவனது நன்கு மதிப்பின் விளைவென்றே அறிமின்! ஆயிரங் கதிர்களொடு கூடிவிளங்கும் பகலவன் தனது தேர் நுகத்தின் முன்னே வையானாயின் அருணன் தானே இருளை அழிக்க வல்லனாவனா? மாதலி : இது நுமக்குத் தக்கதே தான்! (சிறிது வழி கடந்துசென்று) நீடுவாழ்வீர்! இதோ இத் துறக்க நாட்டின் கண் உமது புகழ் விளங்குதலைப் பார்மின்! இங்கே தேவர்கள் உம்முடை வெற்றித் திறங்களைப், பாடுதற்கு இசைவான பொருள் நிறைந்த பாட்டாகப் பாடித், தேவமாதர் அணிந்து மிஞ்சிய குங்குமம் முதலியவற்றைக் கொண்டு கற்பகமரத்தால் தரப்பட்ட படாத்திலே எழுதிக் கொண்டிருக்கின்றனர். அரசன் : ஐய மாதலி! நேற்றுநான் அரக்கரொடு போர் புரியச் சென்ற கிளர்ச்சியில் வானின்கண் எழும்போது இத்துறக்கநாட்டின் இடங்களை வழியில் நோக்கிற்றிலேன். இப்போது வளிமண்டிலத்தின் எவ்விடத்தே வந்திருக் கின்றோம்? மாதலி : மூன்று பிரிவாய்ச் செல்லும் வான் கங்கையை யுடையதும், கதிர்களைப் பிரித்துவிட்டு வான்மீன்களை இயக்குவதும், திருமாலின் இரண்டாமடி பட்டமையால் எல்லாக் குற்றங்களும் நீங்கப் பெற்றதுமான இது பரிவகம் என்னும் வளிமண்டில மென்று சொல்லப்படும். அரசன் : ஐய மாதலி! ஆதலினாற்றான் அகக்கருவி புறக்கருவிகளொடு, கூடிய என் உயிரானது அமைதி உறுகின்றது. (தேர் உருள்களைப் பார்த்து) நாம் இப்போது புயல் மண்டிலத்தில் இறங்கிவிட்டோம் என்று நம்புகின்றேன். மாதலி : அஃதெப்படித் தெரிகின்றது? அரசன் : இவ்வுமது தேர், தன்னுடைய உருள்களின் விளிம்புகள் மழைத்துளிகளால் நனைந்திருத்தலாலுஞ், சாதகப்புட்கள் ஆர்க்கால்களினிடையே நுழைந்து செல்கின்ற மையாலுங், குதிரைகள் மின்னற் கொடியினொளியில் மினுமினுவென்று விளங்குதலாலுஞ், சூல்கொண்ட புயல் மண்டில வழியாய்ச் செல்கின்ற தென்பது புலனாகின்றது. மாதலி : இன்னும் ஒருநொடியில் நீர் நுமது ஆளுகையின் கீழுள்ள நிலவுலகத்திற்குச் செல்வீர். அரசன் : (கீழேபார்த்து) தேர் விரைவாய் இறங்குதலால் மக்களுலகமானது வியக்கத்தக்க தோற்றமுடைத்தாய்த் தோன்றுகின்றது. ஓங்குவரை மேலிருந்த தாங்கிழி வதுபோல் ஆன்றநில வுலகந் தோன்றுவது காண்மோ! உயர்பெரு மரங்கள் வியன்கிளை தோற்றிச் செழுந்தழை மறைப்பினின் றொழிவதூஉங் காண்மோ! நன்குபுல னாகா இன்புன லியாறுகள் அகன்றுநனி கிடத்தலிற் றுலங்குதற் காண்மோ! இவ்வியல் பதனால் எழில்கெழுஉ மிவ்வுல கியாரோ வொருவன் எழச்செய் தீங்கென் பக்கல் இயைப்பது போன்மே. மாதலி : நன்கு மொழிந்தீர்! (வியப்பொடு பார்த்து) ஆ! நிலவுலகம் எவ்வளவு சிறந்த அழகினதாய்த் தோன்றுகின்றது! அரசன் : ஐய மாதலி! மாலைக் காலத்து மங்கொளி மருங்கிற் புயலரண் போலப் பொருந்தித் தெளிபொன் உருகவிட் டாலென மருவித் தோன்றிக் குணகடல் குடகடல் கழூஉவக் கிடக்கும் வளஞ்சா லிம்மலை யாதோ வுரைமோ. மாதலி : நீடு வாழ்வீர்! தவம் இயற்றுவோர் தவப் பயன் பெறுதற்கு இடமா யுள்ளதும், கிம்புருடர் தம் உறையுளாய் இருப்பதுமான இம்மலை ஏமகூடம் என்னும் பெயருடையது. நான்முகக் கடவுளின் புதல்வரான மரீசிக்குப் பிறந்து தேவரையும் அசுரரையுந் தோற்றுவித்தவரான காசியபர் தம் மனைவியாரோடும் இதோ தவம் இயற்றுதலைப் பார்மின்! அரசன் : அவ்வாறாயின், தூயோர் பரவப்படாமற் செல்லலாகாது. அத் துறவோரை வலம்வந்து போக விரும்புகின்றேன். மாதலி : நல்ல எண்ணந்தான், (கீழ் இறங்குதல் காட்டி) இதோ கீழ் இறங்கிவிட்டோம். அரசன் : (வியப்போடு) உருள் விளிம்புகள் ஓசை யுண்டாக்கவில்லை; புழுதியும் மேல் எழும்புவதாகத் தோன்ற வில்லை; குலுங்குதலில்லாத உமது தேர் கீழ் இறங்கின போதிலும், நிலத்தைத் தொடாது நிற்றலால் அவ்வாறு இறக்கினதாகவே தோன்றவில்லை. மாதலி : நீடு வாழ்வீர்! உமக்குந் தேவேந்திரனுக்கும் உள்ள வேறுபாடு இவ்வளவுதான். அரசன் : ஐய மாதலி! மாரீசரது தவப்பள்ளி யாங்கு உளது? மாதலி : (கையாற் சுட்டிக்காட்டி) கரையான் புற்றிற் பாதி மறைந்த வடிவத்தோடும், பாம்புரிகள் ஒட்டிக் கொண்டுள்ள மார்போடும், பழங்கொடி களின் இளவிழுதுகள் வளையமாய் இறுகச் சுற்றிக்கொண்டிருக்குங் கழுத்தோடுந், தோள் வரையில் தொங்கிக் கொண்டிருப்பதும் பறவைக் கூடுகள் நிரம்பப் பெற்றதுமான சடைமுடியோடுங் கதிரவன் ஒளிவட்டத்தின் எதிர் முகமாய் நின்றபடியே அடிமரம் போல் அசைவின்றி அதோ தவம்புரியும் அம்முனிவருள்ள இடம் அதுதான்! அரசன் : கடுந்தவம் புரியும் அவர்க்கு வணக்கம்! மாதலி : (குதிரைக் கலினங்களை இழுத்துப் பிடித்து) வேந்தர் பெருமானே! அதிதியால் வளர்க்கப்பட்ட மந்தார மரங்கள் நிறைந்த காசியபரின் தவப்பள்ளியினுள்ளே இப்போது புகுந்துவிட்டோம். அரசன் : துறக்க நாட்டினும் இஃது இனியதாயிருக் கின்றதே! இப்போது நான் தேவாமிழ்தம் நிரம்பிய வாவியில் முழுகினவன் போலாயினேன். மாதலி : (தேரை நிறுத்தி) நீடுவாழ்வீர்! இறங்கலாம். அரசன் : (கீழ் இறங்கி) நீர் யாது செய்யப்போகின்றீர்? மாதலி : தேரை நிலையாய் நிற்கும்படி செய்து விட்டேன். நானுங் கீழ் இறங்குகின்றேன். (அவ்வாறே செய்து) நீடுவாழ்வீர்! இவ்வழியே இவ்வழியே வருக. (நடந்து சென்று) மாட்சி நிறைந்த முனிவருக்குந் தவப் பள்ளிகளை நீர் காணலாம். அரசன் : உண்மையிலே நான் வியப்பொடுதான் பார்த்து வருகின்றேன். வேட்பன தரூஉங் கற்பகம் பொதுளிய அடவியி லிருந்தும் மற்றிவர் ஆர்வது நடைபெறுந் தூய வளியே; முடவிதழ்ப் பொற்றா மரையின் நற்றா துகுதலிற் பழுப்புருத் தோற்றும் விழுத்தட நீரே பொழுதுமா றாதிவர் முழுகுதீம் புனலே; வீழ்ந்தொரு குறியில் ஆழ்ந்திவ ரிருப்பதும் விளக்கம் வாய்ந்த மணிக்கன் மிசையே; அரம்பை மாதரார் மருங்குறப் பெற்றும் ஐம்பொறி யடக்குமிவர் மொய்ம்புமிகப் பெரிதே; இந்நற் றவர்பால் மன்னுமிப் பொருள்கள் ஏனை முனிவரும் விழைவுற் றானது நோற்கும் அருமைசான் றனவே. மாதலி : பெரியோரின் அவாவானது மேன்மேல் உயர்ந்த பொருளை நாடிச் செல்கின்றது. (நடந்துபோய் வானை நோக்கி) ஓ முதுமை மிக்க சாகலியரே! மாட்சிமை நிறைந்த மாரீசர் யாது செய்து கொண்டிருக்கின்றார்? யாது சொல்கின்றீர்? இல்லறக் கிழத்தியின் கடமைகளைப்பற்றித் தாட்சாயணி கேட்ட வினாக்களுக்கு, அவ்வம்மையார்க்கும் மற்றை மாமுனிவரின் மனைவிமார்க்கும் விளக்கி விடை சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்றா சொல்கின்றீர்? அரசன் : (உற்றுக்கேட்டு) ஓ! இப்பொருளைப்பற்றி விளக்கிச்சொல்லும் இந்நேரத்தின் இடை செல்லலாகாது. மாதலி : (அரசனைப் பார்த்து) நான் தேவேந்திரன் தந்தையாரிடத்து நேரம்பார்த்து நும் வரவை அறிவிக்கும் வரையில் நீர் சிறிது நேரம் இவ்வசோக மரத்தடியின்கீழ் இருக்கலாம். அரசன் : தங்கள் விருப்பப்படியே. (இருக்கின்றான்.) (மாதலி போய்விட்டார்.) அரசன் : (ஒரு நற்குறியைக் கண்டு) ஏ தோளே! நீ ஏன் துடிக்கின்றாய்? என் விருப்பம் நிறைவேறுமென்று நான் எதிர்பார்க்கவில்லையே! ஏனெனில், ஒருமுறை விலக்கப் பட்ட ஓர் இன்பமானது பின்பு திரும்பிவருதல் மிக அரிது. (திரைக்குப் பின்னே) அப்படித் துடுக்குத்தனம் செய்யாதே, செய்யாதே, என்ன, தன் இயற்கையின்படி இப்போதே நடக்கத் தொடங்கி விட்டானே! அரசன் : (உற்றுக்கேட்டு) இது துடுக்குத்தனஞ் செய்தற்குரிய இடம் அன்றே. இங்கே யார் இவ்வகையாகக் கடிந்து கொள்ளப் படுகின்றனர்? (குரல்ஒலி வரும்வழியே வியப்பொடு பார்த்து) ஆ! தாயின் முலைக்காம்பைப் பற்றிப் பாதி குடித்த அரிமான்குட்டியை விரிந்து கிடக்கும் அதன் பிடரிமயிர் கலையும்படி முரட்டுத்தனமாய்ப் பிடித்து, விளையாடுவதற்காக அதன் தாயினின்றும் அதனை வலிந்து இழுக்கின்றவனும், பிள்ளைகட்கில்லாத வலிமையுடைய வனும், முனிவர் மகளிராற் பின்றொடரப்பட்டு வருபவனுமான இச்சிறுவன் யார்? (மேற்சொன்ன வண்ணமாய் முனிவர் மகளிரோடும் ஒரு குட்டியை இழுத்துக்கொண்டு ஒரு சிறான் வருகின்றனன்.) சிறுவன் : ஏ அரிமான்குட்டியே! வாயைத் திற, நான் உன் பற்களை எண்ணுகிறேன். முதல் மாதர் : அடே பட்டிப்பையா! எங்கள் பிள்ளையின் வேறாகக் கருதாமல் நாங்கள் வளர்த்துவரும் இந்த விலங்கை நீ ஏன் வருத்துகின்றாய்? வரவர உனது பட்டித்தனம் மிகுதிப் படுகின்றதே! உனக்குச் சர்வதமனன் (எல்லாவற்றையும் அடக்கி யாள்பவன்) என்று துறவிகள் பெயர் கொடுத்தது பொருத்தமாகத்தா னிருக்கின்றது. அரசன் : என் மகனைப்போல் இச்சிறுவனை ஏன் என் மனம் விழைவுறுகின்றது? உண்மையாகவே எனக்குப் பிள்ளைப்பேறு இல்லாமையே இவ்வாறு அன்பினை விளைக்கின்றது! இரண்டாம் மாதர் : அதன் குட்டியை நீ விடாவிட்டால் இதன் தாய் திண்ணமாய் உன்மேற் பாயும். சிறுவன் : ஓ! அம்மா! நான் நிரம்பத்தான் அஞ்சுகின்றேன்! (கீழ் உதட்டைப் பிதுக்குகின்றான்.) அரசன் : (கொழுந்து விட்டெரிகிறதற்கு) விறகை நாடும் நெருப்பானது ஒருசிறு தீப்பொறியின்நிலையி லிருத்தல் போல், இப் பையனும் ஏதோ ஓர் உரமான சுடரின் வித்துப்போற் காணப்படுகின்றான். முதல் மாதர் : குழந்தாய்! இந்த அரிமான் குட்டியை விட்டுவிடு. உனக்கு வேறொரு விளையாட்டுக்கருவி கொண்டு வந்து தருகின்றேன். சிறுவன் : அஃதெங்கே யிருக்கின்றது? அதைக் கொடு. (கையை நீட்டுகின்றான்.) அரசன் : என்ன! இவனும் மன்னர்மன்னற் குரிய அடையாளந் தாங்கப் பெற்றிருக்கின்றான். ஏனெனில், இவன் தான் வேண்டிய பொருளைக் கேட்டுக் கையை நீட்டு கையிற், சிவந்து விளங்கும் விடியற்காலத்தில் அலர்ந்த ஒரு தனித்தாமரை மலரின் செவ்விதழ்களின் நடுவே இடைவெளி தோன்றாமைபோல இவன் கைவிரல்கள் நெருங்கி வலைபோற் பின்னலுற்றுப் பொலிகின்றன. இரண்டாம் மாதர் : சுவரதே! வெறுஞ் சொல்லால் இவனைத் தடுக்கமுடியாது. நீ போய், முனிவர் மகனான மார்க்கண்டேயனுடையதும் பலநிறந் தீட்டப்பட்டதுமான களிமண் மயில் என் குடிலில் இருக்கின்றது; அதனை இவனுக்காக எடுத்துவா. முதல் மாதர் : அப்படியே! (போய்விட்டாள்.) சிறுவன் : அதுவரையில் இதனொடுதானே யான் விளையாடிக்கொண் டிருக்கின்றேன். (துறவி மகளைப் பார்த்து நகைக்கின்றான்) அரசன் : துடுக்குத்தனமுள்ள இந்தச் சிறுவனிடத்தில் மெய்யாகவே எனக்கு மிக்க அவா உண்டாகின்றது. (பெருமூச்செறிந்து) காரணமின்றி நகைக்கும்பொழுது சிறிதே தோன்றும் அரும்புபோலும் பற்களோடும், பேச முயல்கின்ற இனிய மழலைச் சொற்களோடும் மடிமீதிருக்க வருகின்ற தம் புதல்வர் மேலுள்ள புழுதி தம்மேற் படிந்து அழுக்காக்கப் பெறுகின்றவர்களே நல்வினையாளர்கள்! இரண்டாம் மாதர் : இவன் நான் சொல்லுகின்றதைக் கேட்கின்றா னில்லையே. (தன்பக்கமாய்ப் பார்த்து) அங்கே முனிவர்மகாரில் யார் இருக்கிறது? (அரசனைப் பார்த்து) ஐயா! அன்புகூர்ந்து இங்கே வந்து, பிடுங்கக் கூடாதபடி பிடித்து இந்த அரிமான் குட்டியைக் கசக்கி விளையாடும் இவன் கையினின்றும் இதனை விடுவியுங்கள். அரசன் : (புன்சிரிப்பொடு அருகிற்சென்று) ஓ மா முனிவர் மகனே! பிறவியின் துவக்கத்திலிந்தே இத் துற வாசிரமத்திற்குப் பொருந்தாதவண்ணம் நடந்து, விலங்கு களுக்கு நிழலைத் தருதற்கு இனிதான சந்தன மரத்தைக் கரும்பாம்புக் குட்டியானது பயன்பட வொட்டாமல் கெடுத்தல்போல் நற்குணப் பழக்கத்திற்கு இசைந்ததான பொறுமை ஒழுக்கத்தை ஏன் கெடுத்து விடுகின்றனை? இரண்டாம் மாதர் : ஐய! இவன் உண்மையில் முனிவர் மகன் அல்லன். அரசன் : இவன்றன் உருவத்திற்குத் தக்க இவனது செய்கையே அதனைப் புலப்படுத்துகின்றது. ஆனாலும் இவனிருக்குமிடத்தினால் நாம் அவ்வாறு நினைக்கும் படியாயிற்று. (அம் மாதர் வேண்டியபடியே அரிமான் குட்டியை விடுவிக்கும்போது அச் சிறுவனுடம்பு தன்மேற்பட இன்புற்றுத் தனக்குள்) இன்னனென்று தெரியாத எவனோ ஒருவன்றன் குடும்பத்திற் பிறந்த இப் பிள்ளையின் உறுப்புகள் என்மேற் படுதன் மட்டால் எனக்கு இவ்வளவு இன்பம் விளைவதாயின், எவனுடம்பினின்று இவன் தோன்றினானோ அந்த நல்வினையாளன் உள்ளத்திற்கு இவன் எவ்வளவு இன்பத்தைத் தருவானாகல் வேண்டும்! இரண்டாம் மாதர் : (இருவரையும் பார்த்து) புதுமை! புதுமை! அரசன் : அஃதென்னம்மா? இரண்டாம் மாதர் : உமதுருவம் இச் சிறுவனுருவத் தோடு ஒத்திருப்பதை யும், நீர் இவனை முன் அறியாதிருந்தும் உம்மிடம் பழகினவன்போல் இவன் இருத்தலையுங் கண்டு எனக்கு வியப்புண்டாயிற்று. அரசன் : (அச் சிறுவனைத் தடவிக்கொடுத்து) அம்மா! இவன் முனிவர் மகன் அல்லனாயின், பின் இவன் குலத்தின் பெயர் யாது? இரண்டாம் மாதர் : புரு குலமே. அரசன் : (தனக்குள்) என்ன! என்னைப்போல இவனும் அதே குடிக்கு உரியவனா? இதனாலேதான் இவ்வம்மையார் இவன் என்னை ஒத்திருக்கின்றானென்று நினைத்தார். (உரக்க) புருகுலத்திற் பிறந்தவர்கள் இதனைத் தமது குடும்ப நோன் பாகக் கைக்கொண்டு வருகின்றார்கள். இந் நிலவுலகத்தைப் பாதுகாத்தற் பொருட்டுச் சுண்ணந் தீற்றி வெள்ளியவாய் விளங்கும் அரண்மனைகளை முதலில் உறைவிடமாய்த் தெரிந்து கொண்டோர்க்குப், பின் தம் அன்பிற் சிறந்த மனைவிமார் மட்டும் பின்றொடர்ந்து வந்து பணிஆற்ற மரத்தின் கீழ் நிலங்கள் உறைவிடமாக உதவுகின்றன. ஆயினும் இது மக்கள் தமது ஆற்றலினாலேயே வரக்கூடிய இடம் அன்றே. இரண்டாம் மாதர் : தாங்கள் சொல்லுகிறபடியே தான் இந்தச் சிறுவனுக்குத் தாயார் ஓர் அரம்பை மாதரின் உறவால் தேவர்க்குத் தந்தையான காசியபரின் தவஉறையுளான இதன்கண் இவனை ஈன்றனள். அரசன் : (தனக்குள்) ஆ! நான் மறுபடியும் நம்பிக்கை கொள்வதற்கு மற்றும் ஒருவழி ஏற்படுகின்றது! (உரக்க) எந்தப் பெயர் கொண்ட அரச முனிவரின் மனைவியார் அந்த அம்மை? இரண்டாம் மாதர் : தன் அறக்கிழத்தியான மனையாளை நீக்கிவிட்ட அக் கொடியவன் பெயரை யார்தாம் சொல்ல நினைப்பார்? அரசன் : (தனக்குள்) உண்மையில் இக் கதை என்னையே சுட்டுவதா யிருக்கின்றதே! இப் பிள்ளையின் தாய் பெயர் யாதென்று கேட்கட்டுமா? அன்றி அங்ஙனந்தான் பிறன் மனையாளைப் பற்றி உசாவுவது நேர்மையன்றே. (களிமண்மயிலைக் கையிலெடுத்துக்கொண்டு முதல் துறவி மகள் வருகின்றாள்.) முதல் மாதர் : சர்வதமனா! இச் சகுந்த லாவண்யத்தைப் பார் (இப்பறவையின் அழகைப்பார்.) சிறுவன் : (சுற்றிப்பார்த்து) என் அம்மா எங்கே? இருவரும் : தன் அன்னைமேல் உள்ள ஆவலாற், சொல் ஒற்றுமையுள்ள இப் பெயரைக் கேட்டு ஏமாந்து போனான். இரண்டாம் மாதர் : குழந்தாய்! இந்தக் களிமண் மயிலின் அழகைப் பார் என்றல்லவோ உனக்குச் சொன்னோம். அரசன் : (அப்புறமாய்) இவன் அன்னையின் பெயர் சகுந்தலையா? ஆனால் ஒன்றையொன்று ஒத்த பலபெயர்களும் வழங்குகின்றன. வெறும் பெயரைக் குறித்தது கானல்நீரைப் போற் கடைசியில் எனக்கு ஏமாற்றத்தைத் தருமோ? சிறுவன் : அம்மா! இந்த அழகான மயில் எனக்குப் பிடித்திருக்கிறது. (அவ்விளையாட்டுக் கருவியை எடுத்துக் கொள்ளுகின்றான்.) முதல் மாதர் : (மனக் குழப்பத்தொடு பார்த்து) ஓ! இவனது மணிக்கட்டிற் காப்பாகக் கட்டியிருந்த கரண்டகத்தைக் காணோமே! அரசன் : அஞ்சவேண்டாம். இதோ அவன் அரிமான் குட்டியைப் பிடித்து அதனொடு மல்லாடுகையில் அது நழுவி விழுந்துவிட்டது. (அதனை யெடுக்க முயல்கின்றான்.) இருவரும் : அதனை எடுக்கவேண்டாம், எடுக்க வேண்டாம். என்ன! இவர் அதனை எடுத்துவிட்டாரே! (தங்கையைத் தம் மார்பின்மேல் வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வியப்பொடு பார்க்கின்றனர்.) அரசன் : யாம் ஏன் தடுக்கப்பட்டோம்? முதல் மாதர் : வேந்தனே! கேளுங்கள்! இஃது அபராஜிதை எனப் பெயர்பெற்ற ஒரு பூண்டு. இவனுக்குப் பிறவிச் சடங்கு நிகழ்ந்தபோது தேவனான மாரீச முனிவரால் இஃது இவனுக்கு நல்கப்பட்டது. இது கீழே விழுந்து விட்டால் இவனும் இவன் பெற்றோர்களுமன்றிப் பிறர் இதனை எடுக்கப் பெறார். அரசன் : அன்றி ஒருவர் எடுத்தால்? முதல் மாதர் : உடனே அது பாம்புருவாகிக் கடிக்கும். அரசன் : அஃது உருமாறியதைத் தாங்கள் எப்போ தாயினும் பார்த்திருக்கின்றீர்களா? இருவரும் : பலமுறை அரசன் : (தனக்குள் களிப்பொடு) என் பேராவல் இப்போது நிறைவேறி யிருக்கையில் அதனை நான் ஏன் களிப்புடன் வரவேற்ற லாகாது? (குழந்தையைத் தழுவிக் கொள்கின்றான்.) இரண்டாம் மாதர் : சுவரதே! நோன்பு நோற்றுக் கொண்டிருக்கின்ற சகுந்தலைக்கு இச் செய்தியைப் போய் அறிவிப்போம், வா. (இருவரும் போகின்றனர்.) சிறுவன் : என்னைவிடும்; நான் அம்மாவிடம் போக வேண்டும். அரசன் : என் அருமைக் குழந்தாய்! என்னொடு கூட இருந்து உன் அன்னையைக் களிப்போடு எதிர் கொள்வாய்! சிறுவன் : என் தந்தை துஷியந்தன்! நீ அல்லன். அரசன் : (புன்சிரிப்பொடு) இந்த எதிர்மறுப்பே என்னைத் தெளிவிக்கின்றது. (ஒரேமுறை பின்னப்பட்ட சடையொடு சகுந்தலை வருகின்றாள்.) சகுந்தலை : சர்வதமனனது பூண்டானது தான் மாற வேண்டிய காலத்திலும் மாறாமல் தன்னியற்கையின்படியே யிருந்ததென்பதைக் கேட்டும் என் நல்வினையில் எனக்கு நம்பிக்கை யில்லை. அல்லது இனி சானுமதியாற் சொல்லப் பட்ட வண்ணமும் இருக்கலாம். அரசன் : (சகுந்தலையைப் பார்த்து) ஆ! இதோ என் அருமைச் சகுந்தலை அழுக்கேறிய ஆடை உடுத்துங், கடுகநோற்கும் நோன்பினால் முகம் வற்றியும், ஒரேமுறை பின்னிய சடையுடன் இருப்பதனால், மிகவும் இரக்க மில்லாதேனாகிய என்னைப் பிரிந்தது முதல் தூய வொழுக்கத் தோடும் நெடுநாள் இந் நோன்பினை மேற்கொண்டு செய்திருக்கின்றன ளென்பது புலனாகின்றது. சகுந்தலை : (கழிவிரக்கத்தினால் வெளுத்துத் தோன்றும் அரசனைப் பார்த்து) இவர் உண்மையில் என் கணவனாகத் தோன்றவில்லை. அங்ஙனமாயின், மங்கலமான ஒரு காவற் பூண்டை அணிந்திருக்கும் என் மகனைத் தன் உடம்பு தீண்டித் தீட்டுப்படுத்தும் இவர் யார்? சிறுவன் : (தன் அன்னையிடம் போய்) அம்மா! இதோ யாரோ ஒருவர் என்னை ஓ மகனே என்றழைத்து அணைக்கின்றார். அரசன் : என் அன்பே! நீ என் நிலைமையைத் தெரிந்து கொண்டதனை நான் இப்போது காண்கின்றமையால், நான் உன்னிடத்துக் காட்டிய பெருங் கொடுமையும் நன்மை யாகவே முடிந்தது. சகுந்தலை : (தனக்குள்) ஓ நெஞ்சமே! ஆறுதலெய்து ஆறுதலெய்து! உன்மேற்கொண்ட பகைமையை ஒழித்த தெய்வத்தால் நான் இரக்கத்துடன் நடத்தப்படுகின்றேன். இவர் தாம் என் காதலர். அரசன் : ஏந்தெழில் முகத்தாய் ! கிரகணம் விட்டவுடன் உரோகிணி என்னும் மீன் முழுமதியைச் சேர்ந்தவாறு போல என் மறதி என்னும் இருள் நினைவினால் துரத்தப் பட்ட பின்பு நீ என் எதிரே வந்து நிற்பது என் நல்வினையே! சகுந்தலை : எம் பெருமானுக்கு வெற்றி சிறக்க! (இது பாதிசொல்லி நிறுத்தி மிடறு அடைப்பட்டுக் கண்ணீர் சொரிகின்றாள்.) அரசன் : அழகியாய்! வெற்றி என்னுஞ் சொல் கண்ணீரினால் தடைப்பட்டு நின்றாலும், இங்குலிகம் ஊட்டப் படாமையால் வெண்மை கலந்து சிவப்பாய் விளங்கும் இதழ்களொடு கூடிய உன் முகத்தை நான் பார்க்கின்றமையால் வெற்றி அடைந்தவ னாயினேன். சிறுவன் : அம்மா! இவர் யார்? சகுந்தலை : குழந்தாய்! உன் நல்வினையைக் கேள். அரசன் : (சகுந்தலையின் அடிகளில் வீழ்ந்து) உருவழகி! நான் உன்னை நீக்கினமையினால் உண்டான துயர நினைவு நின் நெஞ்சினின்றும் ஒழிவதாக! அந்நேரத்தில் என் மனம் ஏதோ அறியப்படாத காரணத்தால் வலியதொரு மாயத்தில் மயங்கி நின்றது; இருள்வடிவான மலகுணவலி மிகுந்துள்ளவர்களின் நிலை மங்கலப் பொருள்களிடத்திலும் பெரும்பான்மையும் இத்தன்மையதாகவே இருக்கின்றது; குருடன் தன் தலையிற் சூட்டப்பட்ட மலர் மாலையையும் பாம்பென்றஞ்சி எறிந்து விடுகின்றான்! சகுந்தலை : எம்பெருமான் எழுந்திருக்க! திண்ணமாகவே முற்பிறவியில் தூய அறவினைகளைத் தடைசெய்த என் தீவினையானது அந் நாட்களில் தன் பயனை விளைவித்தது; அதனாலேதான், இயற்கையில் இரக்கமுடையரா யிருந்தும் என் காதலர் அவ்வாறு என்னிடம் நடந்தனர். (அரசன் எழுந்திருக்கின்றான்.) சகுந்தலை : தீவினையாட்டியான இவனை எம் பெருமான் எவ்வாறு நினைவு கூரலாயினர்? அரசன் : (என்னெஞ்சத்திற் றைத்த) துயர மென்னுங் கணையைப் பிடுங்கிவிட்டபின், அதனைச் சொல்லுகின்றேன். பேதைமை தன்னான் மாதைநான் நீக்கக் கண்ணின் நுண்டுளி கீழிதழ் வீழ்ந்து பெருந்துய ருறுத்திய தன்றே, இன்றே மற்றது சிறிதே வளைமயி ரிறையில் உற்ற தாகலிற் பொற்கொடி அதனை அளியேன் பெருந்துயர் நீங்க எளியேன் முந்துறத் துடைக்குவென் மயிலே (சொல்லியவாறே துடைக்கின்றான்.) சகுந்தலை : (கணையாழியைப் பார்த்து) எம் பெருமானே! இஃதன்றோ அந்த மோதிரம்? அரசன் : அதுவே தான்; இம்மோதிரந் திரும்பக் கிடைத்தமை யினாலேதான், நான் உண்மையாக நினைவுவரப் பெற்றேன். சகுந்தலை : எம் பெருமானை அடையாளங் கொண்டு மெய்ப்பிக்கப் புகுந்த காலத்திற்றான் இது காணாதுபோய் இத்தனை துன்பமும் விளைவித்தது. அரசன் : ஆகவே இக் கொடியானது நான் இவ்வேளிற் பருவத்தொடு கூடியதற்கு அடையாளமாக இம்மலரை அணிந்து கொள்ளட்டும்! சகுந்தலை : நான் அதனை நம்பவில்லை, எம்பெருமானே இதனை அணிந்து கொள்ளட்டும்! (பிறகு மாதலி வருகின்றார்.) மாதலி : நீடுவாழ்வீர்! நல்வினைவயத்தால் நீர் நும்உரிமை மனையா ளொடு கூட்டப் பட்டதனாலும் நும் புதல்வன் திருமுகத்தைக் கண்டதனாலும் இனிது வாழ்க! அரசன் : என் விருப்பம் இனிய பழத்தைப் பெறுவதாயிற்று; ஐய மாதலி! இச் செய்திகள் இந்திரனுக்குத் தெரியாதிருக்கலாமே! மாதலி : (புன்சிரிப்பொடு) தேவர்கள் பார்வைக்கு எட்டாதது யாதுளது? நீடு வாழ்வீர், வாரும்! தெய்வத் தன்மையுள்ள மாரீசர் தம்மைப் பார்க்கும்படி உமக்கு விடை தந்தருளினார். அரசன் : சகுந்தலை! புதல்வனை எடுத்துக்கொள். உன்னை முன்னிட்டுக் கொண்டுபோய் அவரைக் காண விரும்புகின்றேன். சகுந்தலை : எம்பெருமானொடு கூடச் சென்று குரவரை அணுக நாணுகின்றேன். அரசன் : என் காதலி! மங்கலமான நேரங்களில் அப்படிச் செய்யலாம். வா, வா. (எல்லாரும் போகின்றார்கள்.) (மாரீசர் அதிதியோடு இருக்கையிலிருந்த வண்ணமாய்த் தோன்றுகின்றார்.) மாரீசர் : (அரசனைப் பார்த்து) தாட்சாயணீ! உன் மகன் இந்திரனது போரில் முதன்மை பெற்றுச் செல்பவரும், உலகத்தைப் பாதுகாக்கின்றவருமான இவர்தாந் துஷியந்த மன்னன். இவர்தம் வில்லினாற், கூரிய விளிம்புகளுள்ள வச்சிரப்படையின் றொழில் செய்து முடிக்கப்படுதலால், அப் படை இந்திரனுக்கு ஓர் அணிகலமாய் விட்டது. அதிதி : இவருடம்பின் றோற்றத்தி லிருந்தே இவரது பேராற்றலை அறியக்கூடும். மாதலி : நீடுவாழ்வீர்! இதோ தேவர்களைப் பெற்றோரான இவர்கள் தம் பிள்ளை மேலுள்ள காதற் குறிப்புத் தோன்ற உம்மைப் பார்க்கின்றார்கள். அவர்கள் கிட்டப்போம். அரசன் : ஓ ஐய மாதலி! தக்கன் மரீசி என்னும் இருவர்க்கும் பிறந்தமையால் நான்முகனுக்கு ஒரு தலைமுறை பிற்பட்டவரும் பன்னிரு வடிவான துவாத சாதித்தியருக்கும் பிறப்பிடமானவரென்று முனிவர்களாற் சொல்லப்பட்ட வரும், மூன்றுலகத்திற்கும் இறைமகனும் வேள்விப்பலியை முதலிற்பெற்று நுகர்ந்து இன்புறுகின்றவனுமான இந்திரனை ஈன்றவரும், தானே யுண்டாவதான பரம் பொருளுக்கும் மேலான புருடனுந் தான் றோன்றுதற்குப் பிறப்பிடமாகக் கொள்ளப்பட்டவருமான அவ்விருவரும் இவர்கள் தாமோ! மாதலி : வேறு யார்? அரசன் : (அருகிற் சென்று) இந்திரனுக்கு ஊழியக் காரனான துஷியந்தன் உங்களிருவரையும் வணங்குகின்றான். மாரீசர் : குழந்தாய்! நீ இந்நில வுலகத்தை நெடுங் காலங் காவல் புரிவாயாக! அதிதி : குழந்தாய்! நீ நிகரற்ற போர்வீரனா யிருப்பாயாக! சகுந்தலை : என் புதல்வனோடும் உங்கள் திருவடிகளை வணங்குகின்றேன். மாரீசர் : குழந்தாய்! உன் கணவன் இந்திரனைப் போன்றும், உன்மகன் சயந்தனைப்போன்றும் இருக்கின்றனர்; ஆதலால், வேறுவகையான வாழ்த்துரை தக்கதன்று. நீ இந்திராணியைப்போல் இருப்பாயாக! அதிதி : குழந்தாய்! நீ நின் கணவனால் மிகவும் நன்கு மதிக்கப்படுவாயாக! நீடு வாழ்வானான நின்புதல்வன் இரு குடிக்கும் மகிழ்ச்சி தருவானாக! எல்லாரும் இருங்கள். (எல்லாரும் பிரஜாபதியின் இருமருங்கும் இருக்கின்றனர்.) மாரீசர் : (ஒவ்வொருவரையுங் குறித்துக் காட்டி) நல்வினைப் பயனாற் கற்பிற் சிறந்த சகுந்தலையும் உயர்குணத்திற் சிறந்த இப் புதல்வனும், நீயும், மனத்திட்பமும் நல்வினையும் விதிமுறையும் என்னும் மூன்றும் ஒருங்கு சேர்ந்தது போற் கூடியிருக்கின்றீர்கள். அரசன் : தெய்வப் பெருமானே! முதற்கண் விழைந்தது கைகூடியது; பிறகு தங்களைக் காணக் கிடைத்தது; அதனால் தங்கள் அருள் உண்மையில் ஒப்பில்லாததாயிருக்கின்றது. என்னை? முதலில் மலர் தோன்றுகின்றது, அதன்பிற் கனி உண்டாகின்றது; முதலிற் கார் எழுகின்றது, அதன்பின் மழை மொழிகின்றது. இதுதான் காரண காரியமுறை, மற்று இங்கோ தங்கள் அருளைப் பெறுதற்கு முன்னரே நல்வாழ்வு வரலாயிற்று. மாதலி : ஊழ்கூட்டுவோர் இவ்வாறுதான் தமது அருளைக் காட்டுகின்றனர். அரசன் : தெய்வப் பெருமானே! தங்கள் ஊழியக் காரியான இம் மடந்தையை யான் காந்தருவ மணமுறைப் படி மணந்து கொண்டும், அதன்பிற் சிலநாட் கழித்து இவள் தன் உறவினரால் என்னிடங் கொண்டுவரப்பட்ட பொழுது யான் என் நினைவிழப்பால் இவளை விலக்குதல் செய்து, தங்கள் உறவினரான மாட்சிமை தங்கிய கண்ணுவருக்குத் தவறிழைத்தேனாயினேன். பிறகு, கணையாழியைப் பார்த்ததும் அவர் மகளை நான் முன் மணந்த துண்மையென அறிந்தேன். இஃதெனக்குப் பெரிதும் புதுமையாயிருக்கின்றது. கண்ணெதிரே கடந்துபோம் உருவத்தைக் கண்டும் அஃது யானை யன்றுபோலும் என ஐயமுற்றுப், பின் அதன் அடிச்சுவடு களைப் பார்த்துத் துணிபு எழுந்தவாறுபோல், எனது மனமயக்கமும் அப்பெற்றிந்தா யிருந்ததே. மாரீசர் : குழந்தாய்! நீ தவறி நடந்ததாகக் கொண்ட ஐயத்தை ஒழித்துவிடு. அந்த நினைவிழப்பும் உன்னிடத்து நிகழ்ந்தது முறையே தான். சொல்வதைக் கேள்! அரசன் : கருத்தாயிருக்கின்றேன். மாரீசர் : அப்ஸரஸ்தீர்த்தத் துறையிலிருந்து மிகத் துயருற்ற சகுந்தலை யோடும் மேனகை தாட்சாயணியிடம் வந்த அப்பொழுதே, துருவாச முனிவரின் தீமொழியால் நின் இல்லறக் கிழத்தியான இந்தப் பேதை நின்னால் விலக்கப் பட்டாளல்லது வேறு காரணத்தா லன்றென எனது தவக்காட்சியால் தெரிந்துகொண்டேன். இதோ அத்தீமொழி கணையாழியைக் காண்டலும் ஒழிந்து போயிற்று அரசன் : (ஆறுதலோடு) இப்போது அப் பழியினின்றும் விடுதலை பெற்றேன்! சகுந்தலை : (தனக்குள்) நல்வினை வயத்தால் என் ஆருயிர்க்கணவர் காரணமில்லாமல் என்னைத் தள்ளிவிட வில்லை. உண்மையில் திட்டுண்ணப் பட்டதாக யான் நினைவு கூற வில்லையே! அல்லது வருவிக்கப்பட்ட அத் தீமொழி, (எம்பெருமானைப்) பிரிந்தமையால் நினைவு வறிதாய்ப் போன என் நெஞ்சத்தால் அறியப்படாத தாயிற்றுப் போலும் அதனாலன்றோ, என் கணவனுக்கு அந்த மோதிரங் காட்டப்படுதல் வேண்டுமென என் றோழிமார் களால் அத்தனை ஆவலொடு கற்பிக்கப்பட்டேன். மாரீசர் : குழந்தாய்! இப்போது நீ உண்மை அறிந்தனை. நின் காதலன்மேல் நீ வெறுப்புக் கொள்ளலாகாது. பார்! அத் தீமொழியாலன்றோ நீ நீக்கப்பட்டாய். நினைவு மறைப்பினால் நின்பாற் கொடுமை செய்த நின் கணவன் பால் மறதியென்னும் இருள் இப்போது ஒழிந்தமையால், மட்டுமே இப்போது அவற்குக் காதன்மனைவியாயினை. மேலே அழுக்குப் படிந்த தனால் ஒளிமங்கிய கண்ணாடியில் உருநிழல் தெளிவாகத் தோன்றாவிடினும் அது துடைக்கப் பட்ட வழி அந் நிழல் நன்கு விளங்கித் தோன்றுகின்ற தன்றோ? அரசன் : பெருமான் சொல்லுமாறேதான். மாரீசர் : குழந்தாய்! நம்மாற் பிறப்புச் சடங்குகளெல்லாம் முறையே செய்யப்பெற்ற சகுந்தலையின் மகனை இதோ களிப்பொடு ஏற்றுக் கொண்டாயென்று நம்புகின்றேன். அரசன் : பெருமானே! என் குடி நிலைபெறுவது இவனிடத்திலேதான் அமைந்திருக்கின்றது. மாரீசர் : அங்ஙனமே, இனி இவனே மன்னர் மன்னனா வானென்று அறிவாயாக! பார்! இவன் இடையே தெற்றுப்பட்டுக் குலுங்காமற் செல்வதாகிய தேர் மேலமர்ந்து மாகடலைக் கடந்து, தனக்கு நிகரில்லாமல், ஏழு தீவகங்களோடுங் கூடிய இந் நிலவுலகத்தை வெற்றி கொள்வான். இங்கே விலங்குகளை யெல்லாம் வலிந்து அடக்கியது பற்றிச் சாவதமன னென்று பெயர்பெற்ற இவன், மறுபடியும் உலகைத் தாங்கப்போவது பற்றிப் பரதன் என்றும் பெயர் பெறுவான். அரசன் : அடிகளால் எல்லாப் புனிதச் சடங்குகளும் செய்யப்பெற்ற இவனிடமிருந்து நாங்கள் எல்லாம் எய்த எதிர்பார்க்கின்றோம். அதிதி : பெருமானே! தம் புதல்வியின் விருப்பமெல்லாம் நிறைவேறப் பெற்ற வகைகள் கண்ணுவமா முனிவர்க்கும் அறிவிக்கப்படல் வேண்டும். தன் மகளிடத்து மிக்க காதலுடைய மேனகையோ எனக்கு இவ்விடத்தில் தானே ஏவற்றொழில் செய்து கொண்டிருக்கின்றாள். சகுந்தலை : (தனக்குள்) அம்மா அவர்களே நான் விரும்பியதைச் சொல்லிவிட்டார்கள். மாரீசர் : தவ வலிமையால் இவையெல்லாங் கண்ணுவ மாமுனிவர் கண்ணெதிரே தோன்றிவிட்டன. அரசன் : இதனாலன்றோ மாமுனிவர் என்னைச் சினவாதிருந்தனர். மாரீசர் : அப்படியானாலும், நம்முடைய வாழ்த்துரை களை அவருக்கு விடுத்தல்வேண்டும்; யார் அப்பா அங்கே ? (ஒரு மாணவன் வந்து) மாணவன் : பெருமானே! இதோ அடியேன் இருக்கின்றேன். மாரீசர் : ஏ காவலா! வான்வழியாய் உடனே சென்று தீமொழிப்பயன் ஒழிந்தமையால் நினைவுகூர்ந்த துஷியந்தனாற் சகுந்தலை தன் மகனொடு திரும்ப ஏற்றுக் கொள்ளப் பட்டன ளென்னும் நற்செய்தியை எனது கட்டளைப்படி கண்ணுவமா முனிவர்க்குத் தெரிவிக்கக் கடவாய். மாணவன் : அடிகள் கட்டளைப்படியே. (போய் விட்டான்.) மாரீசர் : மகனே! நீயும் நின் புதல்வனும் மனையாளும் உடன்வர நின் நண்பன் தேவேந்திரனது தேரில் ஏறிக் கொண்டு நின் நகரத்திற்குப் புறப்படு. அரசன் : பெருமான் கட்டளைப்படியே. மாரீசர் : இன்னும், இந்திரன் நின்குடிகட்கு ஏராளமான மழையைப் பெய்விக்கட்டும்! நீயும், வேள்விகள் வேட்டுத் துறக்க நாட்டினரை முற்றும் உவப்பிப்பாயாக! இங்ஙனம் இவ்விருவகை உலகங்களுக்கும் விளையும் பயன்கள் பற்றிப் புகழற்பாலனவாம் நற்செயல்களை ஒருவருக்கொருவர் செய்துகொண்டு சுழன்றுவரும் பன்னூறூழி காலம் நீங்களிருவீரும் வாழ்வீர்களாக! அரசன் : என்னால் இயன்றமட்டும் அத்தகைய நற் செயல்களைச் செய்ய முயல்வேன். மாரீசர் : குழந்தாய் ! இன்னும் நினக்கு நான்வேறு என்ன உதவி செய்தல்வேண்டும்? அரசன் : இதைப் பார்க்கிலும் வேண்டத்தக்கது பிறிதுண்டோ? பெருமான் இன்னும் இதன்திறத்து அருள்புரிய விரும்பினால் பரதன்றன் இம்மொழி நிறைவேறச் செய்திடுக! சிறந்த மன்னவன் தன்குடிச் செல்வமே தெரிக! விறந்த கல்விசால் புலவர்சொல் வியந்திடப் படுக! நிறந்து வாழுமை கூறராம் நீலலோ கிதர்யான் பிறந்தி டாவகை யருளிமேற் பேறுநல் குகவே. ஏழாம் வகுப்பு முற்றியது. வடமொழியிற் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகத் தமிழ் மொழிபெயர்ப்பு முற்றியது. சாகுந்தல நாடக விளக்க உரைக் குறிப்புகள் (பக்கம் 1) எந்நூல் உரைப்பினும் அந் நூன்முகத்தில் வாழ்த்து, வணக்கம், வருபொருளுரைத்தல் என்னும் மூன்றும் உரைத்து அதனைத் தொடங்குதல் வேண்டு மென்பதே ஆன்றோர் கொள்கையாதலின், சாகுந்தலம் என்னும் நாடகக் காப்பியத்தை இயற்றப்புகுந்த காளிதாசர் என்னும் வடமொழி நல்லிசைப்புலவர், முதற்கண் வாழ்த்தும் வணக்கமுங் கூறுவான்றொடங்கி அவைதம்மைச் சூத்திரதாரன் வாயிலாகக் கூறினார். அட்டமூர்த்தம் என்னும் எட்டு வடிவாய் விளங்குஞ் சிவபெருமானை ஆசிரியர் வணங்கும் முகத்தால் வாழ்த்துரை கிளக்கின்றார். முதல் முதல் நீரே படைக்கப்பட்டதென்பது ஆரிய வேதநூல் வழக்கு. அந்த முதற்பொருள் நீரேயாம்; அது மூச்சு இலதாய்த் தன்னியற்கையினாலேயே மூச்சுவிடுவ தாயிற்று. என இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தின் கண்ணதான 129-ஆம் பதிகம் பகருதல் காண்க. அந் நீரிலிருந்தே தீயும், அந் தீயிலிருந்தே ஞாயிறும் உண்டாதலும் ஆண்டே நுவலப் படுகின்றது. இவ்வாற்றாற் காளிதாசர் தழுவிய உலகப் படைப்புமுறை பண்டை இருக்குவேத வழித்தாதல் காண்க. வேதகாலத்திற்குப் பிற்பட்டதான தைத்திரீய உபநிடதத்தில், விசும்பிலிருந்து காற்றுங், காற்றிலிருந்து தீயுந், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலனும் உண்டாயின என நுவலப்படுங் கொள்கை அவர்க்கு உடம்பாடன்று. நான்முகன் - படைப்புக் கடவுள். அவி - தேவருணவு. அதனைத் தீக்கடவுள் ஏற்றுத் தேவர் கட்குச் சேர்ப்பிப்பனென்பது பண்டையோர் கொள்கை. இயமானன் - யஜமானன் என்னும் வடசொற்றிரிபு; வேள்வி வேட்கும் ஆசிரியன். இறைவன் எல்லா உயிர்கட்கும் உயிராய் இருப்பானாயினும், அவ் வுயிர்களுட் சிறந்த வேள்வி யாசிரியன்பால் முனைந்து நிற்றல்பற்றி இயமானனை ஈண்டு விதந்து கூறினார். கட்புலனாகாத காலம் இன்னதென்பது கட்புலனாய் இயங்குகின்ற பகலவனும் வெண்மதியமும் என்னும் இரண்டின் இயக்கத்தாலன்றி அறியப்படாமையிற் காலத்தை வரையறுக் கின்ற ஞாயிறு திங்கள் என்றார். பகலிரவுகளையும், பன்னிரண்டு திங்களையும், அறுபது ஆண்டுகளையும் பகுத்துணர்தற்கு இவ்விரண்டின் இயக்கம் இன்றியமையா தாதலை வான் நூலிற் காண்க. விசும்பு - வான்: இடைவெளி ; ஓசை உலவுதற்கு இடங் கொடுத்து நிற்பது. உயிருள் பொருள் உயிரில் பொருள் களாகிய எல்லாம் நிலனும் நீருந் தீயுங் காற்றும் வானும் ஞாயிறுந் திங்களும் உயிரும் என்னும் எட்டில் அடங்குதலின், எல்லாம்வல்ல இறைவன் இவற்றை இயக்குதற்பொருட்டும் அறிவித்தற் பொருட்டும் இவற்றின் கண் நிறைந்து நிற்பனென்றார். வேதங்கள் தொகுக்கப்பட்டுப் பிராமணங்களும் பழைய பன்னிரண்டு உபநிடதங்களும் வரையப்பட்ட பண்டைக் காலத்தே சிவபெருமான் ஒருவனே முழுமுதற் கடவுளாக வணங்கப் பட்டனன். இவ் வுண்மை மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது நூலிற் கண்டுகொள்க. காளிதாசர் பிற்காலத்தெழுந்த புராண முறையைத் தழுவாது, முற்காலத்ததாகிய வேத முறையைத் தழுவுதலிற் சிவபெருமான் ஒருவனையே முழுமுதற்கடவுளாக வைத்து வாழ்த்துரை கூறுவாராயினர். இங்ஙனமே இவர்தான் இயற்றிய விக்கிரமோர் வசீயம் என்னும் நாடகத்தின் முகத்தும், மாளவிகாக்நிமித்திரம் என்னும் நாடகத்தின் முகத்துஞ், சிவபெருமான் ஒருவனையே முழுமுதற் கடவுளாக வைத்து வாழ்த்துரைத்தல் காண்க. கோலச்சாலை என்பது நாடகம் ஆடுவோர் தாந்தாம் பூணுதற்குரிய கோலங்களைப் பூணும்பொருட்டு நாடக அரங்கின் உட்பக்கத்தே வகுக்கப்பட்ட ஓர் இடம். ஒப்பனை - அலங்காரம். நங்கை - பெண்களிற் சிறந்தாள். நடி என்பவன் சூத்திரதாரனுக்கு உதவியாய் நாடக அரங்கில் நின்று பாடி நாடக நிகழ்ச்சிக்குத் தோற்றுவாய் செய்பவன். இச் சாகுந்தல நாடகத்தில் மட்டும் இம் முன்னுரையில் இங்ஙனம் ஒரு மாது தோன்றுகின்றாள். காளிதாசர் இயற்றிய ஏனை இரண்டு நாடகங்களிலும் ஓர் ஆடவன் உதவியாளனாய்த் தோன்றதல் காண்க. அரங்கம் - நாடகமேடை. (பக். 3) நடிப்பு - கூத்து, மாதராய் - பெண்ணே. இசை - பாட்டிசை. துய்த்தல் - அனுபவித்தல். ஏற்றது - இசைந்தது. வேனிற்காலம் - வெயிற்காலம். முகிழ் - அரும்பு. அளைந்து- குடைந்து. நறுமணம் - நல்லவாசனை. கானகம் - காடு. அடர்ந்த - நெருங்கிய. (பக். 3) அயர்ந்த துயில் - தன்னை மறந்த தூக்கம், மாலைக் காலம் - சாய்ங்காலம். (பாட்டு) விரியுமண ......................................... காணாய் இதன் பொருள் : விரியும் மணம் அவிழ்க்கும் – எங்கள் பரவா நின்றமணத்தஅவிழச்செய்யும்;மலர்முகிழ்மேல்எல்லாம்பூவரும்புகளின்மேலிடங்களஎல்லாம்,கரியவரிவண்டுகரியநிறமும்இறக்கைகளில்வரியும்உடையவண்டுகள்,முத்தம்இடல்காணாய் முத்தம் இடுதல ஒப்பவாயால் தொடுதலைப் பார்ப்பாயாக, எரியும் தளிர்ப்பிண்டி இணர்கிள்ளி- தீ எரிவதனைb யாப்பச்சிவந்துnதான்றுந்தளிர்களையுடையஅசோகமரத்தின் பூங்கொத்துகளைக்கிள்ளி,ஓடும்கரியவிழிமhதர் கhதளவும் ஓடநின்ற நீண்ட கரிய கண்களை யுடைய மடந்தையர், காது, செருமலும் காணய்-தம்முடைய காதுகளிற் செருகுதலையும் பார்ப்பாயாக. பனிக்காலத்தே இலையுதிர்ந்த மரஞ்செடி கொடிகள் வெயிற் காலத்தே புதிது தளிர்த்து அரும்பு கட்டுதலும், அவ் வரும்புகளில் உள்ள தேனைப் பருகுதற் பொருட்டு வந்த வண்டுகள் அவற்றைக் குடைதலும், அதனால் முறுக்கு அவிழ்ந்த அவ் வரும்புகளிலிருந்து நறுமணம் புறந்தோளில் வீசுதலும், அப்போது அழகிய மாதர்கள் அசோகமரச் சோலைகளிற் புகுந்து அதன் பூங்கொத்துகளைப் பறித்துக் காதுகளிற் செருகித் தம்மை ஒப்பனை செய்துகொண்டு விளையாட்டயர்தலும் இயற்கையாய் நிகழ்தலின் அவ் வேனிற்கால அழகினை நடி என்பாள் இங்ஙனம் புனைந்து பாடுவாளானாள். அடுத்துவருங் கதைநிகழ்ச்சியினையும் நடி இப் பாட்டின் கட் குறிப்பிட்டுக் காட்டுதலுங் கருத்திற் பதிக்கற்பாற்று. அரும்புகள் தேனையுடையவாய் முகிழ்த்துத் தோன்றத், தொலைவிலுள்ள வண்டுகள் அவற்றின் பதம் அறிந்துவந்து, அவற்றின் கட்டை நெகிழ்த்துத் தேன்பருகும் முயற்சியினைத் தொடங்குதல் போலக், கானகத்திலுள்ள சகுந்தலை யென்னும் மங்கை தன் அழகு நலம் நிரம்பிக் காதலின்ப நுகர்ச்சிக்குரிய பதம் வாய்ந்தனளாய் இருப்பத், தொலைவில் நகரவாழ்க்கை யிலுள்ள துஷியந்தன் என்னும் மன்னன் ஊழ்வினை கூட்ட அக் கானகத்திற் புகுந்து அவடன் காதலின் பத்தினை நுகர்ந்து செல்வனென்பது குறிக்கப்பட்டமை காண்க. அசோகந்தளிர்கள் பூங்கொத்துகளை மாதர் காதிற் செருகியாடும் வழக்கம் வடநாட்டிலே மட்டுமன்றிந் தமிழ்நாட்டிலும் உண்டென்பது, வண்காது நிறைந்த பிண்டியொண்டளிர், நுண்பூணுகந் திளைப்ப என்று திருழருகாற்றுப்படை (வரி31,32) யினுங்கூறப்பட்டமை கொண்டுணரப் படும். குழு - கூட்டம். ஓவியம் - சித்திரம். சூத்திரதாரன் என்பான் ஒரு கதை தழுவிவருங் கூத்தினை நாடக அரங்கிற் கூத்தர் பலரைக் கொண்டு நடத்திக் காட்டும் முதல்வன் ஆவன். பண்டைநாளில் தோற்பாவை மரப்பாவை களைக் கயிற்றிற்கோத்து ஆட்டுவது வழக்கமாதலின், அங்ஙனம் அவற்றை ஆட்டுவோன் சூத்திரதாரன் எனப் பெயர் பெற்றான். சூத்திரம் - கயிறு. தாரன் - தாங்குவோன். பின்னர்க் கூத்தர்களைத் தன் அறிவு என்னுங் கயிற்றாற் கட்டி ஆட்டுந்தலைவனும் அப் பெயர் பெற்றான் என்க. முதல் வகுப்பு (பக். 4) இந்நாடகக்கதை ஏழு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவற்றுள் இம் முதல்வகுப்புத் துஷியந்தன் என்னும் அரசன் வேட்டம் ஆடும்பொருட்டுத் தேர்மீதிவர்ந்து புள்ளிமான் ஒன்றைப் பின்றொடர்ந்து ஒரு கானகத்திற் புகுதலும், அஃது அருந்தவத்தோர் உறையுளா யிருத்தல் கண்டு, மானை விடுத்துத் தேரினின்றுங் கீழிறங்கி உட்சென்றவன், சகுந்தலையும் அவடன் தோழிமாரிருவரரும் பூஞ்செடிகட்குத் தண்ணீர் விட்டுக் கொண்டு வருதலைப் பார்த்து, மரச்செறிவின் மறைவிலிருந்து அவர்களை உற்றுநோக்கிச், சகுந்தலையின் பேரழகை வியந்து அவள்மேல் அளவிறந்த காதல் கொண்டவனாய், வண்டோச்சும் முகத்தால் அவர்பாற்சென்று அவரோடு உரையாடுகையில், அக் கானகத்தைக் கலக்கி ஓடிவரும் ஒரு யானையை எய்யும்பொருட்டு, அம்மாதர் மூவரையுந் தமது இருப்பிடத்திற்குச் செல்ல விடுத்து, அவரை அன்றைக்குப் பிரிந்துசென்று தன் கூடாரத்தின்கண் ஆற்றனாய் வருந்தியிருக்கும் வரையிற் கதையின் துவக்கப்பகுதி யினை நடத்திக் காட்டுகின்றது. களம் - நாடகக் கதை நிகழ்ச்சிக்குரிய இடம். துஷியந்தன் நாண் ஏற்றிய வில்லைக் கையில் ஏந்தி ஒரு மானைப் பின்றொடரும் நிலைக்குச், சிவபிரான் வில்லேந்திக் கொண்டு வேள்வியாகிய மானைத் தொடர்ந்து சென்றமை யினைத் தேர்ப்பாகன் உவமையாகச் சொல்லுகின்றான். மாபாரதம், சௌப்திக பர்வத்தில், 784-இலிருந்து 808-வரையிற் கூறப்படும் இறைவன் தக்கன் வேள்வியழித்த கதையில் இவ்வாறு நுவலப்படுகின்றது. தக்கன் ஆற்றிய வேள்வி சிவபிரானால் அழிப்புண்டு ஒரு மான் வடிவுகொண்டு ஓடாநிற்கச், சிவபிரான் பினாக மென்னும் வில்லையேந்தி அதனை வானின்கட் டொடர்ந்து சென்றார் என்பது. கட்புலனாதல் - கண்ணுக்குத் தெரிதல். கறித்தல் - கடித்தல். (பக் - 5) கடுஞ் செலவு - விரைந்த ஓட்டம். மட்டம் - சமம். கவரி - சாமரை. படவம் - படல், மூடி, (பக் - 6) இலக்கு - குறி. துறவிகள் - முனிவர்கள். மாணவர் - சீடர், மலர் - பூ. ஊடுருவல் - நடுநுழைதல். புரு என்பவன் மதி (சந்திர) குலத்திற்குத் தலைவன்; அத்திரி முனிவரின் புதல்வனான சந்திரன் என்பான் இக்குலத்தைத் தோற்றுவித்தமையின் இஃது அவன் பெயரால் வழங்குவதாயிற்று. சந்திரன் அல்லது சோமன் கால்வழியில் வந்தோர்: புதன், புரூரவன், ஆயு, நகுஷன், யயாதி என்போராவர்; இவருட் புருவின் கால்வழியில் வந்தோர்: தம்சு, அநிலன், துஷியந்தன், பரதன் என்போராவர். இங்ஙனமே, பகலவன் அல்லது வைவஸ்வத குலத்திற்குத் தலைவன் இக்குவாகு என்பவனே யாவன்; அவன் வழியில் வந்தோர்; ககுத்தன், திலீபன்,ரகு முதலியோராவர். (பக். 7) அந்தணர் - அருளொழுக்கம் வாய்ந்த துறவோர்; அந்தணர் என்போர் அறவோர்மறறெவ்வுயிர்க்குஞ், செந்தண்மை பூண்டொழுக லான் என்றார் தெய்வப் புலமைத் திருவள்ளுவரும். ஏற்கற்பாற்று - ஒப்புக் கொள்ளுதற்கு உரியது. கொணர்தல்-கொண்டுவருதல். மாலினி என்பது அத்தினாபுரத்திற்கு அருகிற் கங்கையாற்றில் வந்து கலக்கும் ஒரு கிளையாறு; இது மந்தாகினி எனவும் பெயர்பெறா நிற்கும். இடர் - துன்பம். நோன்பு - தவம். மாதவர் - பெருந்தவத் தோர். தழும்பு - வடு. வரிசை - முறைமை. சோமதீர்த்தம் என்பது கத்தியவாரில் உள்ள சோமநாதம் என்னும் சிவபிரான் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளதொரு திருக்குளம், தக்கன் கூறிய தீமொழியாற் கயநோய் கொண்ட சந்திரன் என்பான் இத் திருக்குளத்தில் முழுகிச் சிவபிரானை வணங்கி அநநோய்தீரப் பெற்றமையால், அஃது அப்பெயர்த்தாயிற்று. இனித், துருவாசர் கூறுந் தீமொழியாற் சகுந்தலைக்கு நேர இருக்குந் தீமையினை ஒழித்தற் பொருட்டாகவே, அதனை முன்னுணர்ந்து கண்ணுவமுனிவர் சோம நாதத்தற்குச் சென்றனர். இதனால் இவர் திரும்பி வருதற்குச் சில திங்களாவது கழியுமாதலாற், சகுந்தலையுந் துஷியந்தனுங் காதலின்பத்திற் றிளைத்திருத்தற்கு வேண்டிய அளவு அமைதியான காலம் அங்குள தென்பதனைக் காளிதாசர் இங்கே குறிப்பித்தாரென்பதுணரற்பாற்று. இயற்றும் - செய்யும், வழிபாடுகள் - வணக்க முறைகள். மொழிதல் - சொல்லல். தூயது - பரிசுத்தமானது. கறை - குற்றம். (பக். 8) முடுகுதல் - ஒட்டுதல். தெற்றென - தெளிவாக, பேட்டு இளங்கிளிகள் - இளைய பெண்கிளிகள். உறைகின்ற - வசிக்கின்ற. இங்குதி ஒருவகை மரம். நெய்ப்பற்று - நெய்ப்பசை, சிதர்ந்து - சிந்தி. மிளிர்தல்-ஒளிசெய்தல். சொட்டுதல் - துளித்தல். சிற்றலை - சிறிய அலை. கற்றை-தொகுதி. அலைசல்-அலைதல், திகழும் விளங்கும். வேட்கும் - வேள்வி செய்யும் புல்வாய்க்கலை - ஒருவகை மான், புற்கறித்து-புல்லைக்கடித்து. (பக். 9) உடை - உடைமை, அணிகள் - ஆபரணங்கள். நிமித்தம் - குறி, ஓர் ஆண்மகனுக்கு வலது தோள் துடிப்பது அவன் ஓர் அழகிய பெண்ணைக் கூடப் போவதனை முன்னறிவிக்குங் குறி என்பர். ஊழ்வினை வயத்தால் இனி நடக்கப் போவன கூற்றைத் தடைசெய்வன எவையும் இல்லை என்ற கருத்தைத் துஷியந்தன் இனி நிகழ வேண்டுவன வாயுள்ள நிகழ்ச்சிகளுக்கு எவ்விடத்துங் கதவுகள் இருக்கின்றன என்னுஞ் சொற்றொடராற் கருதுகின்றான். அண்டை - அயல், உரையாடும் - பேசும். (பக்.10) முல்லை - மணங் கமழும் பூக்களையுடைய ஒரு கொடி.உ வளகம் - அந்தப்புரம், அரசர் முதலிய செல்வக் குடியினரின் மகளிர்மட்டும் இருக்கும் மனை. இளங்கா - இளமரச் சோலை, பின் இடைதல்-பின்வாங்குதல், அஃதாவது தோற்றல். வாய்வது - பொருந்துவது, நாகரிகம் வாய்ந்த செல்வரின் அரண்மனைகளில் உள்ள மாதர்கள் அங்கே தமக்குச் செய்யப்படும் இனிய மென்முறைகளால் அழகு மிக்குத் தோன்றுதற்கு, ஏவலாட்களாற் பேணி வளர்க்கப் படும் இளங்காவின் பூங்கொடிகளையும்; கானகத்திலுள்ள ஏழை மகளிர் அங்ஙனம் பேணி வளர்க்கப்படாதிருந்தும் அவர்கள் இயற்கையழகிற் சிறந்து தோன்றுதற்கு, மக்கள் எவரானும் போற்றப்படாமலே இயற்கையிற் செழுமையாக வளர்ந்து நறுமணங் கமழுங் காட்டுப் பூங்கொடிகளையும் அரசன் உவமையாகக் கருதினான் என்க. கருதுகின்றேன் - எண்ணுகின்றேன். புதிது அவிழ்ந்த - புதிதாக அவிர்ந்த. அகழ்ந்த -தோண்டிய, ஏவுதல் -வேலையிடுதல். என்னை வியப்பினைக் காட்டுஞ்சொல், மாட்சிமை - தவப் பெருமை செயற்கை - செய்ம்முறைகள். (பக்.11) கனிந்த - முதிர்ந்த, இசைவித்த - பொருத்திய குவளைமலர் - மென்மையான ஒருவகை நீலப்பூ. இதழ் விளிம்பு - பூ இதழின் ஓரம். விறகுக்காக வளர்ந்த செடி மிகவும் வன்மையடையதாயிருத்தற்கும், நீலப்பூவின் இதழ் மிகவும் மென்மையுடையதாயிருத்தற்கும் உவமை. விறகுக்குப் பயன்படும் வன் செடியினை வலிய இருப்புக் கத்திகொண்டு வெட்டல் வேண்டுமேயன்றி மெல்லிய குவளைப்பூவின் இதழ் கொண்டு அறுக்கத் துணிதல் பேதைமையாம். அதுபோற், கொடிய தவத்தொழில்களைப் புரிதற்கு வல்லென்ற யாக்கை வாய்ந்தவர்களே தக்கவரல்லால், மெல்லிய எழிலுடம்பு வாய்ந்த சகுந்தலை தக்கவள் அல்லள் என்றான். மரவுரியாடை - மரத்தினின்றும் உரித்தெடுத்த நாரினால் நெய்த ஆடை. கொங்கை - முலை. நெகிழ்த்தல் - தளர்த்தல் புடைத்தல் - வீக்குதல். கடிந்துகொள் - சினந்துகொள். இழை - மெல்லிய நூல்; சரடு. பரிய -பருமையான, பொதிந்து - மறைத்து, வெளிறிய-வெளுத்த, புற இதழ் - பூவின் வெளிப்புறத்தே ஒட்டியுள்ள பசிய இதழ். புனைந்த - அழகாய்ச் செய்த. மூடி - மேல் மூடுங் கருவி. முகிழ் - முகை. எழில் - மிகுந்த அழகு. புலப்படுதல் - விளங்குதல், ஆண்டு - வயது. அணிகலன்கள் - நகைகள். சடைப்பாசி-மயிர்க்கத்தையை யொத்த நீர்ப்பாசி. வெண் திங்கள் -வெண்மையான சந்திரன். களங்கம் - கறை. மெல் இயல் - மென்றன்மை வாய்ந்த பெண். (பக் . 12) கவர்ச்சி - மனத்தைத் தன்வயப்படுத்துந் தன்மை. தாமரைமலர் விரியாமற் கொழுமுகையாய் இருக்கும் பதத்திற் குவிந்த அதன் அக இதழ்களின் அழகு வெளியே தெரியாதபடி அதனை யொட்டிப் பசிய புறஇதழ்கள் மறைத்திருத்தல் போலச், சகுந்தலை தன் பருங் கொங்கைகளின் எழில் கட்புலனாகாதபடி அவற்றின் மேற் கட்டப் பட்டிருக்கும் மரவுரியாடை அவற்றை மறைக்கும் என்றான். இன்னும், பாசிபடர்ந்த குளத்தின் இடையிடையே காணப் படினுந் தாமரை மலர்கள் அதனால் தம் அழகு குன்றாமல். மிகுந்து விளங்குதல் போலவும், வெள்ளிய சந்திரன் தன்னகத்தே களங்கமுடையதா யிருப்பினும் அதனாற் றன் அழகொளி குன்றாமல் மிகுந்து திகழ்தல் போலவும், அழகற்ற மரவுரியாடை சூழ்ந்திருப்பினுஞ் சகுந்தலையின் மேனியழகு மிகுந்தே தோன்றுமென்றான். தேமா - இன்சுவை மிக்க பழங்களைத் தரும் மாமரம், தென்றல் - தெற்கேயிருந்து வீசும் மெல்லிய காற்று; இது வேனிற் காலத்தேதான் வீசும், மாந்துளிர்கள் மகளிர் விரல்களை யொப்பச் சிவந்திருத்தலால், அவற்றின் அசைவு தன்னை அழைப்பதுபோல் தோன்றுகின்றதென்றாள் சகுந்தலை. பால் - இடம். பிணைந்திருப்பது - இணைந்திருப்பது. சகுந்தலையும் அவடன் தோழிமாரும் இவ்வாறு பேசிக் கொண்டு உலவுதலை மரச்செறிவில் மறைந்திருந்து நோக்குந் துஷியந்தன் சகுந்தலையின் அழகைத் தனக்குள் வியந்து சொல்கின்றான். கட்டு இளமை - உடம்பின் முறுக்கு நெகிழாத இளமைப் பதம். இவ் விளமைப்பதம் சகுந்தலையின் ஒவ்வோர் உறுப்பிலும் (அவயவத்திலும்) அரும்பித் தோன்றுகின்ற தென்றான். வனஜ்யோத்ஸ்நா என்னும் வடசொற்றொடர் பாகதத்தில் வனதோசினி எனத் திரிந்தது! அது கானகத் திற்கு நிலவொளி எனப் பொருள்படும்; ஆதலால், அது கான்மதியம் எனத் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டது; கான் - காடு, மதியம் - நிலா, மல்லிகைக் கொடியின் மலர்கள் மிக வெள்ளியவாய் இருத்தலால், அக் கொடி முழுதும் அலர்ந்த பூக்களுடன் தோன்றுகையில், அது நிலவொளியை யொத்துக் காணப்படுதல் பொருத்தமே யாம். தேமாவின் அண்டையில் நிற்கும் மல்லிகைக் கொடியை அத் தேமாவிற்கு மணமகளாகக் கூறினான். இதனைப் பின்னே நான்காம் வகுப்பிலும், இரகுவம்சத்திலும் (8, 14) அடுத்தடுத்துக் கூறுவதலாற், காளிதாசர்க்கு இவ் வியற்கைத் தோற்றத்தில் மிகுந்த விருப்பு உண்டென்பது அறியப்படும். (பக். 13) புத்தம்புதிய - மிகப்புதிய. தழைகள் - தழைத்த இலைகள். ஐயம் - சந்தேகம். காதல் - பேரன்பு; ஒருவரையொருவர் உயிராய்க் கருதியுருகும் அன்பின் பெருக்கு. விழைதல் - விரும்புதல். (பக். 14) கலைக்கப்பட்ட - ஓட்டப்பட்ட. கடை - கடைசி. விழி - கண். செவி - காது. மறைபொருள் - இரகசியச் செய்தி. ஓதுதல் - சொல்லுதல். வெருட்டுதல் - ஓட்டுதல். கருவூலம் - பொக்கிஷம். கீழ் இதழ் - கீழ் உதடு. காமின்கள் - காப்பாற்றுங்கள். கானகம் - காடு. ஏற்ற - தக்க. மரச்செறிவில் மறைந்துநிற்கும் அரசன், தனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத இளைய மகளிர்பாற் செல்லுதல் உயர்ந்தோரொழுக்கமாகாமையின், தான் அவர்கள்பாற் செல்லுதற்கு ஏற்றதொரு நேரத்தை எதிர்பார்த்துநிற்க, ஒரு வண்டானது அவர்களைத் துன்புறுத்தி, அவர்களே ஓர் ஆண்மகனுதவியை அவாவிக் கூவுமாறுசெய்து, அவன் அவர்களைச் சென்று குறுகுதற்கு ஒரு காரணங் கற்பித்தவாறு காண்க. இங்ஙனந் தலைமகன் தலைமகளைச் சென்று சேர்தலை வண்டோச்சி மருங்கணைதல் என்று தமிழ் நூலார் கூறுப. துஷியந்தன் வேட்டமாடப் புகுந்ததிலிருந்து, அவன் தனக்கு ஏற்ற சகுந் தலையைச் சென்று சேருங்காறும், ஊழ்வினை அவனுக்குப் பல வாயில்களை ஒரு தொடர்பாக இசைவித்து வருதல் காண்க. (பக் 15) ஒறுத்து - வருத்தி, தண்டித்து. செங்கோல் - செவ்விய அல்லது நடுவுநிலை கோணாத கோல், அக் கோல் அரசனது முறையரசுக்கு அடையாள மாயிற்று. ஒச்சுதல் - செலுத்துதல். ஏடா தோழன் முன்னிலைப்பெயர்; இச் சொல் இக் காலத்தில் ஒருவன் தன்னிற் கீழ்ப்பட்டான் ஒருவனையாதல், தன்னிற் குறைந்த சிறுபருவத்தான் ஒருவனையாதல் தன்முகப்படுத்துதற் கண் வழங்குகின்றது. இடர் - துன்பம். குடில் - சிற்றில். வழிபாடு - வணக்கம் உரை - சொல். (பக். 16) அடர்ந்த - நெருங்கிய. ஏழிலைப்பாலை: மகளிரான் மலரும் ஒருவகை மரம். எக்கர்மணல் - கடல் அல்லது யாற்று நீரால் ஒதுக்கி உயர்த்தப்பட்ட மேட்டு மணல். அமர்ந்து - இருந்து. வேலை - தொழில். ஆண்டு - வயது. நட்பு - நேசம். பணிவு - தாழ்வு. இசைவு - பொருத்தம். மாட்சி - பெருந்தன்மை. ஆவல் - பெருவிருப்பு. மொழிந்த - சொல்லிய. விழைவு - பெருகிய அவா. துஷியந்த மன்னன் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அனசூயை கேட்ட வினாக்களுக்கு அவ் வரசன் உண்மையைத் தெரிவியாமல், தன்னை மறைத்து மொழியும் நுட்பம் உற்றுநோக்கற்பாலது. ஒருவனுடைய வரலாறுகள் தெரியாமலே அவனைக் கண்ட அளவில் அவன்மேல் ஆராக்காதல் கொள்ளும் ஒரு மங்கையே அவன்மேல் என்றும் நெகிழாத அன்புடையளாய்க் கற்பொழுக்கத்திற் சிறந்து திகழ்வள். ஒருவன்றன் செல்வத்தையும் அதிகாரத்தையுந் (தலைமையையும்) புகழையுங் குடியுயர்வையும் பாராட்டி அவன்மேல் அன்பு கொள்ளும் ஒரு மாது அவன்பால் என்றும் பிறழாத காதலன்புடையளாய் ஒழுகுதல் அரிது. அது பற்றியே, அரசன் தனக்குள்ள புறச்சிறப்புகளைத் தெரிவியாது, தன்மேற் சகுந்தலையின் மனப்பதிவு எத்தன்மையதாக நிகழ்கின்றதென ஆராய்ந்து ஓர்கின்றான். என்றாலுந் தன் குடிக்கு முதல்வனான புருவின் பெயரால் தன் உண்மையையும் ஒருவாற்றாற் குறிக்கின்றான். (பக். 17) நடைபெறுதல் - நடத்தல். வேந்தன் - அரசன். ஏற்படுத்தல் - நிருமித்தல். இழைக்கும் - செய்யும். நிகழ்தல் - நடத்தல்: நிறைவேறுதல். அறத்தின் உரு - தருமத்தின் வடிவம். கானகம் - காடு. இயற்றுவோர் - செய்வோர். காவலர் - காவலாய் இருப்போர். களஞ்சியம் - பொக்கிஷம், இங்கே சகுந்தலை என்பது குறிப்பு. (பக். 18) ஏடமார் - தோழிமார். உள்ளம் - மனம். செவி கொடுத்தல் - கேட்டல். இசைந்தால் - இணங்கினால். வினாவுதல் - கேட்டல். தலையளி - சிறந்த அல்லது முதன்மையான அருள். பிரமசரியம் என்பது மணஞ்செய்யாது கல்வியிலுந் தவத்திலுந் தன் அறிவையும் முயற்சியையும் ஈடுபடுத்தி நிற்கும் நிலை. கண்ணுவமுனிவர் பிரமசரிய நிலையில் இன்றிக் கிருகத்தராய் (இல்லறத்தவராய்) இருப்பவரேனுஞ் சகுந்தலையின் பிறப்பைத் தெரியும் பொருட்டு மன்னன் அவரை அந் நிலையிலுள்ளவராகக் கருதி வினாவினான். கௌசிககுலம் என்பது மதிகுலத்தவனான குசன் அல்லது குசிகன் என்பவனைத் தலைவனாய்க் கொண்ட குலம் என்பது. அக் குலத்திற் பிறந்த அரசமுனிவர் என்றது விசுவாமிதிரரை. தன்னந்தனியே - மிகவுந்தனியே. (பக். 19) ஏவினர் - தூண்டினர். நூறு வேள்விகள் வேட்டொருங் கடுந்தவம் புரிந்தோரும் இந்திர வாழ்க்கையை மறுமையிற் பெறுவரென்பது புராணக் கூற்று. அங்ஙனம் இந்திர வாழ்க்கையைப் பெறுதற்கு வருவோர் முன், பழைய இந்திரன் தன் நிலையைத் துறந்து செல்லல் வேண்டுமாகலின், அவ்வாறு அவன் தன் வாழ்க்கை யினை இழவாமைப் பொருட்டு, வேள்வி செய்வார் முயற்சி களையுந் தவம் புரிவார் நிலைகளையுங் குலைப்பனென்று புராணங்கள் கூறும். அரம்பைமாது - தெய்வப்பெண். இளவேனிற்பருவம் என்பது சித்திரை வைகாசித் திங்களில் நடைபெறும் வெயிற்காலம். இயல்பிற்று - தன்மையினையுடையது. அரைவாசி - அரைப்பங்கு. மகளிர் - பெண்கள். வனப்பு - அழகு. மிளிர்தல் - ஒளிவிடுதல். நிலவரைப்பு - நிலஎல்லை. பேரொளி வீசும் மின்னற்கொடி நிலத்திலன்றி வானில் தோன்றுதல்போல, இந்நிலவுலகத்து மங்கையர்பாற் காணப்படாத அத்தனைப் பேரழகு வாய்ந்த சகுந்தலை ஒரு தேவமாதின் பாற்றான் தோன்றினாளாகல் வேண்டும் என்றான். சகுந்தலை அரசமுனிவராகிய விசுவாமித்திரர்க்கு மேனகை என்னும் அரம்பை மாதின்பாற் றோன்றினவ ளென்னும் உண்மை அறிந்த அளவில், அரசனாகிய தான் அவளை மணத்தல் தகும் எனக் கருதித் துஷியந்தன், என் காதல் இப்போது இடங்கண்டது என்று தனக்குட் கூறிக்கொண்டான். பகடி - பரிகாசம். (பக். 20) வேட்கை - ஆசை. மீதுஊர்தல் - மேற்படுதல். தாழாதீர் - தாமதியாதீர். காமவேள் - மன்மதன். வைகாநச விரதம் என்பது மணவாழ்க்கையினை விரும்பாது, துறவு வாழ்க்கையினை விரும்பினாராற் கைக்கொள்ளப்படுவது; இந் நோன்பினை வகுத்தவர் விகாநசர் என்னும் முனிவராதலால் அது வைகாநசம் எனப் பெயர் பெற்றது. ‘பேட்டிளமான்களுடன் கூடித் தன் வாழ்நாள் எல்லையளவுங் காலங் கழிக்கப்போகின்றனளோ? என்றரசன் வினாயது, சகுந்தலை முன்சொன்ன வைகாநச நோன்பினைக் கைக்கொள்ளாது விடினும், மணம்புரியாது பிரமசாரிணியா யிருக்கப் போகின்றனளோ என்பதனை ஐயுற்று வினாவிய தாகும். மணவாளன் என்பது மணம் ஆளன் எனப்பிரிந்து மணத்தை ஆள்பவன் அல்லது மணஞ்செய்து கொள்பவன் எனப் பொருடரும். புரிவித்தல் - செய்வித்தல். (பக். 21) ஐயை - தலைவி; ஐயன் என்பதற்குப் பெண்பால். இடக்கர் - சொல்லத் தகாதது. புறக்கணித்தல் - பராமுகஞ் செய்தல். பற்றிக்கொள்ளல் - பிடித்துக் கொள்ளல். முறை - ஒழுங்கு. இருந்தவாற்றால்-இங்ஙனம் உள்ளவகையால். இருக்கை - இருக்குமிடம்: ஆசனம். மீண்டவன் - திரும்பினவன். சகுந்தலை அரசனை விட்டுச் செல்கையில், அவனது மனமும் அவளுடனே சென்று அவளைப் போகாமல் தடைசெய்ய விரும்பியும், அஃது ஒழுங்கு அல்லாமையால் அவன் தன் மனத்தைத் தன்பால் வருவித்துக் கொண்டான் என்றபடி. புருவத்தை நெறித்து - புருவத்தை வளைத்து, ஊற்றல் - பெய்தல். (பக். 22) வலுக்கட்டாயம் - பலவந்தம். சோர்தல் - தளர்தல். செக்கச்சிவத்தல் - மிகச் சிவத்தல். நெட்டுயிர்ப்பு: நெடு உயிர்ப்பு எனப் பிரிந்து நீண்ட மூச்சு அல்லது பெருமூச்சு எனப் பொருள்படும். பிண்டிமலர் - அசோகம்பூ. நுண்டுளி - சிறுதுளி. கருங்குழல் - கரியகூந்தல். கணையாழி - திரண்ட வட்டம், அஃதாவது மோதிரம். வெறித்துப் பார்த்தல் புதுமை அச்சம் வியப்பு முதலான குறிப்புத் தோன்றப் பார்த்தல். பரிசில் - வெகுமதி. கழன்று - நெகிழ்ந்து. (பக் . 23) உறுவதற்கு - அடைவதற்கு. உரையாடுதல் - பேசுதல். உற்று-மனத்தை ஒருவழிப்படுத்தி. ஏறிட்டுப் பாராமல் - நிமிர்ந்துபாராமல். சகுந்தலை தன்மேற் காதல் கொண்டிருந்தலை அரசன் சில அடையாளங்களால் உய்த்தறியப் புகுந்து, தன் சொற்களை அவள் உற்றுக் கேட்டலுந் தன்னை அவள் கடைக்கண்ணால் நோக்கலுங் காதலைப் புலப்படுத்தும் அடையாளங்கள் என்றுணர்கின்றான். விலங்கினங்கள் - மிருகங்களின் கூட்டங்கள். வேட்டம் - வேட்டை. கிட்ட - அணுக. செய்தி -சமாசாரம். எட்டுகின்றது - அகப்படுகின்றது. அங்ஙனம் - அப்படி. உலர - ஈரம்புலர. கதிரவன் ஒளி சாய்கின்ற காலம் சாய்ங்காலம் வினைத் தொகை அவ் வழியாதலின் வருமொழிமுதல் வல்லொற்றுக்கு இனமான ஙகர ஒற்று மிகுந்து ஈரொற்றாய் நின்றது. குதிரைக்குளப்படிகளால் மேலெழுப்பப்பட்ட புழுதிகள் சாய்ங்கால வெயில் வெளிச்சம் பட்டுப் பசிய மஞ்சள் நிறமா யிருக்கு மாதலின் அவை மரக்கிளைகளிற் றொங்க விட்டிருக்கும் மரவுரி யாடைகளின்மேற் படுவது, பசிய வீட்டிற்கிளிகள் வந்துபடுவதை ஒத்துளது என்றார். தொகுதி - கூட்டம். மருப்பு - யானைக்கொம்பு, அது யானைக் கடைவாய்ப் புறத்து நீண்டு வளைந்திருப்பது. (பக். 24) படர்தல் - பரவுதல். விழுமியோய் - சிறந்தோய். அன்னை - தாய். (பக். 25) குழல் - ஆராய்ச்சி, கருத்து; இங்கே தந்திரம் என்னும் பொருட்டு. எட்டியிராத - தூரமாயில்லாத. கூடாரம் - துணியாற்செய்த வீடு. முகம் - இடம், புறம். காற்று வீசும் வழியில் எதிரே தூக்கிப் பிடித்த கொடிக்கொம்பின்துணி அக் காற்று வீசுமுகமாகவே பறத்தல் போலச், சகுந்தலை மேற் பெருங்காதல் கொண்டு அக் காதல் வழியே ஓடுந் தன் உள்ளத்தை அதனினின்றுந் திருப்புதல் தன்னால் இயலவில்லை யென்று அரசன் எண்ணுகின்றான். பஞ்சாடையைவிட மிக மெல்லியதாதலாற் பட்டாடை காற்றில் எளிதிற் பறக்கு மென்பது பற்றி, அதனையே கூறினார். இரண்டாம் வகுப்பு (பக். 26) இவ்விரண்டாம் வகுப்பில் வரும் நாடகக் கதை நிகழ்ச்சி இது: துஷியந்தமன்னன் தன் பாங்கனாகிய மாதவியன் என்னும் விதூஷ கனிடத்தில் தான் சகுந்தலை மேற் காதல்கொண்ட மையினை எடுத்துரைத்து அவனது உதவியைப் பெற முயல்கின்றான். இதற்கிடையே அவன் தன்னுடன் வேட்டமாட வந்த படைகள் தனது காதல் நிறைவேற்றத்திற்கு இடையூறாகுமெனக் கருதிப், படைத் தலைவனை வருவித்துப் படைகளைத் தன் நகரத்திற்கு அழைத்துச் செல்லும்படி கட்டளை தருகின்றான். அங்ஙனமே படைத் தலைவன் படைகளைக் கூட்டிச் சென்றபின், அரசன் தன் பாங்கனுடன் தனித்திருந்து சகுந்தலைமேற் றான்கொண்ட காதலை வெளியிடுகின்றான். அதுகேட்ட மாதவியன் அரசன் பொண்ட அக் காதல் தக்கதன்றென முதலில் மறுத்துச் சொல்கின்றான். அதன்மேல் அரசன் சகுந்தலையின் எழில் நலங்களை விரித்துரைப்ப அவன் அவைதம்மை வியந்து, அரசன் அவள்மேற் காதலுற்றது போல அவளும் அரசன்மேற் காதலுற்றனளா வென ஆராய்கின்றான். பின்னர், அரசன் தான் மீண்டுந் துறவாசிரமத்துட் சென்று சகுந்தலையைக் காண்டற்கு வழி யாது என்று சூழ்ந்து கொண்டிருக்கையில், முனிவர் புதல்வர் இருவர் அரசன்பாற் போந்து, முனிவர் வேட்கும் வேள்விக்கு அரக்கர்களால் தீது நேராமைப் பொருட்டு அவ் வேள்விக்களத்தைக் காத்துக்கொண்டு துறவாசிரமத்திற் சில இரவு தங்கல் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றனர், இதுகேட்ட மாதவியன் சகுந்தலையைக் காண்டற்கு வாயில் கிடைத்தமையினை அரசற்கு மறைவிலே குறிப்பிக்கின்றான். அரசனும் அவரது வேண்டுகோளுக்கு ஒருப்பட்டு, அவர் வேண்டியவாறே செய்ய முயல்கின்றான். அந் நேரத்தில் அரசன்றன் அன்னையிடமிருந்து அரசனை உடனே நகரத்திற்குத் திரும்பி வரும்படி ஒரு செய்தி வருகின்றது. தன் அன்னை நோற்ற நோன்பின் முடிவிற் செய்யப்படுங் கிரியை களைத்தான் உடனிருந்து நடப்பித்தல் இயலாதிருத்தலையுந், தனக்காக மாதவியனே அவற்றை உடனிருந்து நடத்துவான் என்பதனையுந் தெரிவித்து, அரசன் மாதவியனைத் தனது நகரத்திற்குப் போக்கி விடுகின்றான். என்று இதுவரையில் இக்கதை நிகழ்ச்சி இவ்விரண்டாம் வகுப்பில் முடிகின்றது. அலந்துபோன - நெடுவழி அலைந்தமையால் இளைப்புற்று வருந்தின. விதூஷகன் என்பான் அக்காலத்து அரசர்கள்பால் அணுக்கனாயிருந்து பகடி செய்து அரசனை மகிழ்விப்போன். இவன் அணிந்திருக்கும் ஆடையும் இவன்றன் கூன் உடம்பும், கோமாளிப் பேச்சும் இவனைப் பார்ப்பவர்க் கெல்லாம் பெருநகைப்பினையும் மகிழ்வினையுந் தரும். இவன் பெரும்பாலும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவன் ஆவன். தலைமகனுந் தலைமகளுங் காதலுற்று மருவுதற்கு இடையின்று உதவி செய்தலும் இவற்கு உரித்தாகும். இவன் இந் நாடகக் கதை நிகழ்ச்சியில் தொடர்புடையனாய் நின்று, அது நடந்து செல்லுதற்கு ஒரு கருவியாய் நிற்றல் காண்க. அந்நாளில் வடநாட்டின் மட்டுமேயன்றித் தமிழ் நாட்டகத்தும் அரசர்க்குப் பாங்கராயிருந்து, அவர்தங் காதலொழுக்கத்திற்குத் துணைபுரிந்தார் பார்ப்பன ரேயாதல், காமநிலை யுரைத்தலுந் தேர்நிலை யுரைத்தலுங் கிழவோன் குறிப்பினை யெடுத்தனர் மொழிதலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலுஞ் செலவுறு கிளவியுஞ் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய (கற்பியல், 36) என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்கு விளங்கும். உதோ என்பது எதிரிலிருப்பதைச் சுட்டுவது. வெதுவெதுப்பு - இளஞ்சூடு. அருந்தல் - உட்கொள்ளல். இருப்புக்கம்பியிற் கோத்துக் காய்ச்சிய இறைச் சியையே பெரும்பாலும் வேளைதப்பிய வேளையில் உண்டு வருகின்றறோம் என்று பார்ப்பனனாகிய மாதவியன் கூறுதலை ஆராயுங்கால், அஞ்ஞான்றிருந்த பார்ப்பனர் வழக்கமாய் ஊனுணவு கொண்டுவந்தமை புலனாம். தமிழ் நாட்டின்கண் அந்நாளில் இருந்த கபிலர் என்னும் அந்தணர்பெருமான் தாம் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை நோக்கிப் பாடிய செய்யுனிற், புலவு நாற்றத்த பைந்தடி பூ நாற்றத்த புகைகொளீஇ ஊன்துவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது பிறிதுதொழி லறியா வாகலின் நன்று மெல்லிய பெரும தாமே நல்லவர் ... செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. (புறநானூறு, 14) என்று தாம் ஊன்உண் வாழ்க்கையில் இருந்தமையினைக் குறிப் பிடுதல் காண்க. மூட்டு - பொருத்து. உராய்தல் - உரைதல்; தேய்தல். அயர்ந்து – தன்னை மறந்து. சிலந்தி - பரு. (பக். 27) இன்றுங்கூட அவன் இப் பெண்ணைப்பற்றிய நினைவில் ஆழ்ந்திருக்கும்போதே, அவன் கண்கள் பொழுது விடியக்கண்டன என்னுஞ் சொற்றொடர், அரசன் சகுந்தலையின் எழில் நலங்களிலேயே தன் உள்ளம் பதியப்பெற்றமையால், அவன் அன்றிரவு முழுதும் கண்ணுறங்கிற்றிலன் என்னும் பொருளைத் தருவதாகும். யவனப் பணிப்பெண்கள் - யவன நாட்டிலிருந்து வந்து ஏவல் வேலை செய்யும் மகளிர். யவனம் என்பது கிரேக்கநாட்டின் ஒரு பகுதி. ஐயோனியா என்னுங் கிரேக்கமொழிச் சொல் யவனம் எனத் திரிந்தது. இந்திய நாட்டு மன்னர்கள் தம்முடைய அம்பையும் அம்புக் கூட்டையும் வில்லையும் பாதுகாத்து வைத்துக்கொடுக்குந் தொழிலில் இவ் வயல்நாட்டு மாதர்களை அமைப்பது பழைய வழக்க மென்பது இதனாற் புலனாகின்றது. இவ் யவனர் தமது நாட்டிலிருந்து தேறல் எனப் பெயரிய இனிய பருகுநீரைக் கொணர்ந்து தமிழ் நாட்டில் அஞ்ஞான்று விலைசெய்தமை யவனர்நன்கலந்தந்த தண்கமழ் தேறல் (புறநானூறு, 56) என்னும் நக்கீரனார் செய்யுளாலும் அறியக் கிடக்கின்றது. சூழ்ச்சி - உபாயம். புன்முறுவல் -சிறுசிரிப்பு விழைந்த - விரும்பிய . காமுற்று - மோகித்து. கடிதடம் - சகனபக்கம் தொடையின் உட்பக்கம். பொறை - சுமை: பாரம். (பக். 28) கடிந்துபேசல் - கண்டித்துப்பேசல். முறுவலித்து - சிரித்து, இது முறுவல் என்னும் பெயரடியாகப் பிறந்தவினை. திமிர் - விறைப்பு. காணல் - நீர்நிலைகளின் ஓரத்தில் விளையும் ஒருவகைப் புல். விலங்கு - மிருகம்; மக்க ளுடம்பு போல் நெடுக நில்லாது மிருகங்களின் உடம்பு குறுக்காய் இருத்தலால் இங்ஙனம் பெயர் பெற்றது: விலங்கு - குறுக்கு. (பக். 29) உறுப்புகள் - அங்கங்கள். உராய்ந்து ஒன்றோடொன்று உரைசி. (பாட்டு)புள்ளி விளங்கு............................ மாட்டேனால் இதன் பொருள் : புள்ளிவிளங்கு - வெண்புள்ளி களுடைய தாய்த் திகழும், பொன்மான் - பொன்னிறமான மான் ஆனது, உடன்பயின்ற - தன்னுடன் பழகிய, வள்ளைச் செவியாள் - வள்ளைத் தண்டை யொத்த காதினை யுடைய ளாகிய, என்மாதர்க் கொடி தனக்கு - எனக்குக் காதலை விளைக்கும் பூங்கொடி போல்வாளான சகுந்தலைக்கு, தெள்ளுமட நோக்கம் - தெளிவுடையதாய்க் கள்ள மறியாத பார்வையினை, தெருட்டியதால் - கற்பித்தமையால், மற்ற அதனை - அத்தகைய மானை, உள்ளி - எய்வதற்கு எண்ணி, கணைதொடுத்தும் - அம்பை வில்நாணில் தொடுத்தும், உய்த்திட நான் மாட்டேன் - அதனைச் செலுத்துதற்கு நான் முடியாதவனா யிருக்கின்றேன்; ‘ஆல்’ அசை. “மாதர் காதல்” (தொல்காப்பியம் உரியியில், 22). ‘என்மாதர்க்கொடி’ என்பதற்கு எனக்கு உரியளாகிய இப் பெண்கொடிக்கு என்று பொருளுரைப்பினும் ஆம். சகுந்தலையின் அழகிய பார்வையும் மானின் இனிய பார்வையும் ஒன்றாயிருத்தலின், அவளை யொத்த மானை வேட்டம் ஆடுதலில் அரசனுக்கு உள்ளஞ் செல்லவில்லை யென்பது கருத்து. கானகத்தில் அழுதால், அவ் வழுகைக் குரலைத் தேர்ந்து வந்து ஆறுதல் சொல்வாரெவரும் அங்கு இல்லாமை போலத், தான் அரசன் முன்னிலையில் நின்று தன் குறையினைச் சொல்லியும் அதனை அவன் அங்கில்லான்போற் கருதிற்றிலன் என விதூஷகன் கூறினான். கானகத்தழுதலை வடநூலார் ‘அரண்யருதிதம்’ என்பர். வாளா - வறிதே; சும்மா. நிகழ்ச்சி - சம்பவம். (பக். 30) கொழுக்கட்டை மோதகம், என்பது ஒருவகைப் பணிகாரம். பிணை - ஈடு. வாயில்காவலன் - வாசற்காப்போன். புறம் - வெளியே. பயப்பது - உண்டாக்குவது. களிற்று யானை - ஆண்யானை வலிமையினின்று வடித்தெடுத்த உடம்பு என்னுஞ் சொற்றொடர் மிக்க வலிமை யினையுடைய உடம்பு எனப் பொருள்தரும்; வலிமையே ஒரு சாறாகவும், அச்சாற்றினின்று வடித்தெடுத்த தெளிவே அரசன்றன் உடம்பாகவும் உருவகஞ் செய்யப்பட்டன. இடையறாது - நடுவே விட்டுப்போகாது, இஃதாவது ஒழிவில்லாமல். உரம் - வலிமை. ஞாயிற்றின் கதிர் - சூரியனது கிரணம். ஊடுருவல் - உட்புகுதல். (பக். 31) தாழ்த்தால் - தாமதித்தல்: இப் பகுதியில் உடம்பின் பயிற்சியால் விளையும் நலங் கூறப்பட்டது. மனஎழுச்சி - மனக்கிளர்ச்சி: உற்சாகம். குன்றுதல் குறைதல். சான்றாய் - சாட்சியாய். நொய்து - மெல்லிது; மிருது. இயங்குதல் - நடத்தல். சுளுவு - இலேசு; எளிது. துடுக்கு - குறும்பு. தீக்குணம். இலக்கு - குறி, பிழையா - தவறா. சினந்து - கோபித்து. ஆடவன் - ஆண்மகன். முதிய - ஆண்டில் முதிர்ந்த: கிழட்டுத்தனமுள்ள. கரடிகள் மக்களின் மூக்கிறைச்சியைத் தின்பதில் மிக்க விருப்பம் உடையன வென்பது தசகுமார சரிதத்திலுங் கூறப்பட்டது. (பக். 32) மருப்பு - கொம்பு. குழாம் - கூட்டம். அசை போடுதல் - முதலில் அரைகுறையாய் உட்கொண்டு வயிற்றின் ஒரு பையில் அடக்கிவைத்த உணவை மீண்டும் வாயினுள் இழுத்து நன்றாக மென்று அரைத்துத் தீனிப்பைக்குட் செலுத்துதல்; இது பெரும்பாலும் இரட்டைக் குளம்புகள் வாய்ந்த ஆடு மாடு மான் முதலான சைவ விலங்குகளின்பாற் காணப்படும். பரிய - பருத்த குட்டை - சிறுநீர்நிலை. கெண்டி - கிளறி. போர்க்களமர் - சண்டையிடும் வீரர். அச்சுறுத்தல் - அஞ்சும் படி செய்தல். மாட்டு - இடத்து. காத்திருத்தல் - ஒளிந் திருத்தல். சூரியகாந்தக்கல் - பகலவன் வெப்பம் பட்டவுடன் தீயைத் தருவது. காலுதல் - நக்குதல்; வெளிப்படுத்தல். புளுகு - கட்டிச்சொல்லும் பெய். வாய்க்கவில்லை - பலிக்கவில்லை. உடைகள் - சீலைகள். களைந்து - நீக்கி. (பக். 33) இடைமிடைந்த - நடுவே நெருங்கிய. படங்கு - மேற்கட்டி. இருக்கை - தவிசு: ஆசனம் கட்கு இனிய - கண்ணுக்கு இனிய, நன்பொருள் - நல்ல பொருள். ஏற்கனவே - முன்னமே அணிகலம் - பூணாரம்: நகை: ஆபரணம். மேல்ஏறிட்டு - மேல் நிமிர்ந்து. முழுமதி - கலை நிரம்பிய நிலா, பூரணச்சந்திரன். புத்தொளி - புதிய ஒளி. (பக். 34) நாடாது - விரும்பாது. வானநாடு - துறக்க உலகம். உறையும் - வசிக்கும் அரம்பைமாது - தெய்வப்பெண் - எருக்கம் புதல் - எருக்கஞ்செடித் தொகுதி. உறுமணங் கமழும் புதிய மல்லிகைப்பூ மணம் இல்லாத எருக்கஞ் செடிமேல் விழுதலைப், பேரழகாற் றுலங்குஞ் சகுந்தலை அழகு மழுங்குதற் கேதுவான தவவாழ்க்கை யிலுள்ள துறவோர் குடியில் வந்துசேர்ந்தமைக்கு உவமை யாக மொழிந்திட்டாரென்க. காணிற் சுழறலை - அப் பெண்மணியை நீ காணின் இங்ஙனம் என்னை இடித்துப் பேசாய், மென்தோள் கரும்பினைக் கண்டிலை - ஆதலால் மெல்லிய தோள்களை யுடைய கரும்பையொத்து இனியாளை நீ கண்டாயல்லை யென்பது உணரப்படும். இங்கே காளிதாசர் வரைந்த சொற்றொடரொடு முழுதொத்திருந்தமையின், மாணிக்க வாசகப் பெருமான் அருளிச் செய்த திருச்சிற்றம்பலக் கோவை யாரிற் சேணிற்பொலி என்னுஞ் செய்யுளினின்றும் எடுத்து, இவ் அடி இங்கே சேர்க்கப்பட்டது. வியப்பு - அதிசயம் : இறும்பூது. கவர்ச்சி - மனத்தைத் தன் வயப்படுத்தும் ஆற்றல். (பாட்டு)ஓவியமாக...................... புதுமையன்றே? இதன் பொருள் : ஓவியம் ஆக - சித்திரத்திலுள்ள ஓரழகிய வடிவமாக, எழுதிய பின்னை - வரைந்தபிறகு, ஒரு முதல்வன் - ஒப்பற்ற தலைவனாகிய நான்முகக்கடவுள், ஆவிபுகுத்தி - அவ்வடிவத்தி னுன்னே உயிரை நுழைத்து, விடுத்தனனோ - அதன்பின் அவளை இந் நிலவுலகத்திற் பிறப்பித்தனனோ, அன்று - அன்றி, அழகை யெல்லாம் ஒவ்வோர் உறுப்புகளின் அழகுகளையெல்லாம், தாவி - மனத்தாற் பரந்து ஆராய்ந்து, திரட்டினனோ - ஒருங்கு சேர்த்துச் செய்தனனோ, அவன்தன் வலிவும் - நான் முகனது படைப்புத் தொழிலின் திறமும், பூவை உருவும் - கிளியை யொத்தாளின் உருவச்சிறப்பும், நினையின் - ஒப்பவைத்து நினைப்பின், பொன்னாள் - இலக்குமியைப் போன்ற சகுந்தலை, ஓர் புதுமையன்றே - இதுகாறும் எங்குங் காணப்படாத ஒரு வியத்தகு படைப்பன்றோ என்றவாறு. (பாட்டு) மோவா மலரோ ..........................தையலரே (பக். 35) இதன் பொருள் : செய்த நல்தவங்கள் - மேலைப் பிறவிகளிற் செய்த நல்ல தவத்தின் பயன்கள், தாவாது - அழியாமல், ஒருங்கு திரண்டு வந்தால் அன்ன - ஒன்று சேர்ந்து ஓர் உருவாய்த் திரண்டு வந்ததையொத்த, தையலர் - இம் மாதரார், மோவா மலரோ - மூக்கால் மோந்த பூ வாடிப் போதலால் இது காறும் ஆடவர் எவர் மூச்சும்படாத பூவோ, நகம் களையாத முழுமுறியோ - பிறர் எவரது நகமும் படாமையின் நகத்தாற் கிள்ளப் படாத முழுத்துளிரோ, ஆவா -ஆஆ: இது வியப்பினைக் காட்டும் இடைச்சொல், கருவி துருவாது பெற்ற அருமணியோ - ஊசியால் தொளைக்கப் படாமற் பெற்றுக்கொண்ட விலையிடுதற்கரிய ஒன்பது மணிகளுள் ஒன்றோ. நாவால் சுவையாப் புதுநறவோ - பிறரெவரது நாவினாலுஞ் சுவைக்கப்படாத புதிய தேனோ, இன்னதென்று கூறுகில்லேன் என்றவாறு. நுகர்தல் - அனுபவித்தல். நெய்ப்பு - நெய்ப்பரை. சென்னி - தலை. உள்ளக்குறிப்பு - மனக்கருத்து. (பாட்டு) யான்நோக் ........................நகும். (திருக்குறள் 1094) இதன் பொருள் : யான் நோக்கும்காலை - நான் தன்னைப் பார்க்கும் நேரத்தில், நிலன்நோக்கும் - தான் நிலத்தைப் பார்ப்பள், நோக்காக்கால் - யான் தன்னைப் பாராதபோது, தான் நோக்கி மெல்ல நகும் - தான் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரிப்பள் என்றவாறு. காளிதாசர் வடமொழியிற் கூறிய சொற்றொடர், இத் திருக்குறட் செய்யுட்பொருளை முழுதொத்திருத்தலால், இதனையே இங்கெடுத்து அமைத்தாம். முறுவலித்தல் - புன்னகை செய்தல். நாணாத்தினாற் பற்றப் பட்ட காதல் முற்றும் வெளிப்படுதற்காதல் முற்றும் மறைபடுதற் காதல் மாட்டாதாய் நடுநின்று தத்தளிக்கு மென்றனாயிற்று. (பக். 36) மெல்லியலாள் - மெல்லிய சாயலுடையாள் அல்லது இலக்கணமுடையவாள். சடுதியில் - திடீரென்று. பற்றப் படுதல் - பிடிக்கப்படுதல். கானகம் - காடு. ஏது - காரணம். bசல்லலாம்- nபாகலாம்.ru¡F - ஒரு நிகழ்ச்சிக்கு உண்மையல்லாமற் கட்டிச் சொல்லுங் காரணம்: சாட்டு. முழுமணிக் குவியல் - தொளைக்கப்படாத இரத்தினங்களின் தொகுதி. உயர்த்து - சிறப்பித்து. கடமை - குடியிறை. அரசிறை: அரசு இறை - அரசனுக்குச் bசலுத்தவேண்டுங்fடமை.(g¡. 37) புலப்படுகின்றது - விளங்குகின்றது. காவல் தாழாமல் - தாமதியாமல். அடிகாள் - சுவாமிகாள், விளிப்பெயர். அச்சோ: வியப்பிடைச் சொல். மேனி - உடம்பின் நிறம். சுடர் ஒளி - மினுமினுவென விளங்கும் ஒளி. துலங்குதல் - பிரகாசித்தல். அச்சம் - பயம். வேறுபாடு - வேற்றுமை. ஒம்புதல் - உபசரித்தல்; மனம் உவக்கப் பணிசெய்தல். பற்றுக்கோடு- பிடிகோல். துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் உதவி யாற்றுதல்பற்றி, எல்லார்க்கும் பற்றுக்கோடான இல்வாழ்க்கை என்றார். (திருக்குறள். 42) (பக்.38அ) தொகுத்தல் - ஒருங்குகூட்டல். அவா - ஆசை : நிலையில்லாப் பொருள்களையே நிலையெனக் கருதி அவற்றின்மேல் வைக்கும் பற்றுள்ளம். தூய - பரிசுத்தமான. அடைமொழி - ஒருசொல்லையடுத்து அதன் பொருளை விளக்கும் அல்லது சிறப்பிக்கும் வேறொரு சொல் அல்லது சொற்றொடர் : விசேடணச் சொல். உபயம் - இரண்டு. சாரணர் என்பார் தேவர்கள் புகழையும் நிலவுலகத்தில் அருஞ்செயல் ஆற்றிய விறலோர் புகழையும் எடுத்துப்பாடி வானுலகத்துள்ளாரை உவப்பிக்கும் பாடகர் - அவர் இருவராகலின் உபயசாரணர் எனப்பட்டார். விண்-வானம். அடுத்தடுத்து - அடிக்கடி. எய்துகின்றது - சேர்கின்றது. ஓம் : உடன்பாட்டினைத் தெரிக்கும் ஓர் இடைச்சொல்; இஃது ஆம் எனவுந் திரிந்து வழங்கும். கணையமரம் - யானைகட்டுடந்தூண், அல்லது கோட்டைவாயிற் கதவுகளைச் சாத்தி அணைக்குந்தண்டு. வியப்பு - புதுமை. ஏறிடுதல் - பூட்டுதல். வச்சிரப்படை - வைரத்தாற் சமைத்த போர்ப்படை அல்லது ஆயுதம், இஃது இந்திரன்கையில் உள்ளது. இருக்கை - பீடம்: ஆசனம்: தவிசு. போற்றுதல் - வணங்குதல். கையுறை - கையிலெடுத்துச் சென்று பிறர்க்குத் தரும் பண்டம். (பக். 39) கட்டளை - உத்தரவு. இழைத்தல் - செய்தல். வேண்டுகோள் - மன்றாடிக் கேட்டல்: பிரார்த்தனை. நயம் - இலாபம்: பலன். இடர் - துன்பம். உற்றவர் - அடைந்தவர். தீக்கை - விரத உறுதி. (பக். 40) செய்தி - சமாசாரம். (பக் . 41) கிரியை - விரதச் சடங்கு. நோன்பு - விரதம். அலுவல் - வேலை. வழுவுதல் - தவறுதல். திரிசங்கு என்பான் சூரியகுலத்தவனான அரிச்சந்திரன் என்னும் மன்னனுக்குத் தந்தையாவன். இவன் தன் உடம்பொடு துறக்கஞ் செல்லுதற்கு விழைந்து, அதனைத் தன் குலகுருவான வசிட்ட முனிவர்க்கு அறிவித்தான். அவர் அது தம்மால் இயலாதென்று மறுக்கப், பின்னும் அவன் அம் முனிவரின் நூறு புதல்வரிடமுஞ் சென்று தன் கருத்தை அறிவிக்க, அவரும் இஃதியலாதென்று மறுத்துவிட்டனர். அதன்மேல் அவன் வெகுண்டு அவர்களைக் கோழைகள் என்று வைய, அவர்கள் அவனைச் சண்டாளன் ஆகுக என்று சபித்தனர். பின்னர்இந் நிலையில் திரிந்து கொண்டிருந்தவன், விசுவாமித்திரரைத் தலைப்பட்டு அவர்க்கு நடந்த வரலாற்றைத் தெரிவித்துக் கொள்ள, அம்முனிவர் தாம் அவற்காக வேள்வியாற்றி அவனைத் துறக்கத்தின் கண் உய்த்தற்கு உளம் இசைந்தனர். இசைந்து அவற்காக வேள்வி வேட்டுத் தேவர்களை வருமாறு அழைப்ப, அவர் வரா தொழிந்தனர். அதனால் அம் முனிவர் பெருஞ்சினங் கொண்டு, தமது வன்மையினாலேயே அவ் வரசனை மேலுயர்த்தித் துறக்கத் தின்கண் உய்ப்ப, ஆண்டுள்ள இந்திரன் அவனை ஏற்றுக் கொள்ளாது தலைகீழாகக் கீழே தள்ளிவிட்டனன். அவ்வாறு அவன் தள்ளுண்டு கீழ்நோக்கி வருதலைக் கண்ட விசுவாமித்திரர் அவனைக் கீழ்விழாமல் தடுத்து, அவன் வானிலேயே தலைகீழாகத் தொங்கிக்கொண்டு நிற்குமாறு செய்தனர். அவன்றான் இப்போது தென் துருவத்தில் ஒரு வான்மீன் மண்டிலமாய்க் காணப் படுகின்றனனென வான்மீகி இராமாயணம் (1. 57-90) நுவலா நிற்கின்றது. தகைக்கப்பட்ட - தடுக்கப்பட்ட. ஈடுபடுதல் - பதிந்திருத்தல். (பக். 42) தொல்லை - தொந்தரவு. படைஞர் - சேனைவீரர். பயல் என்பது சிறுவன் என்னும் பொருட்டு, இங்கே அறிவிற் சிறியவன் என இழிவுப் பொருளில் வந்தது. பேதை - அறிவின்மை. மதி - புத்தி. மூன்றாம் வகுப்பு (பக். 43) இளமரக்கா - இளைய மரங்களையுடைய சோலை. குசைப்புல் - தருப்பைப்புல். மாட்சிமை - அறிவொழுக்கங்களால் உண்டாகும் பெருமை. உங்கார ஓசை - உம் என்று எழும் நாணின் ஒலி. வெருட்டுதல் - அச்சுறுத்தி ஓட்டுதல். வேய்மைக்கண் - தூரத்தில். எற்றுக்கு - எதுக்கு. இருத்துவிக்குகள் - வேள்வியை நடத்தும் ஆசிரியர்கள். நரந்தம்புல் - நறுமணங் கமழும் ஒருவகைப்புல்; இது பெரும்பாலும் மலைகளின்மேல் வளரும்; திருப்பரங் குன்றமலையில் மிகுதியாய் உளது. தூயதீம்புனல் - பரிசுத்தமான இனிய நீர். (பக். 44) “தவத்தின் பெருமை இன்னதென்பதும் நான் அறிவேன்; அப் பெண் தன் விருப்பப்படி நடக்கக் கூடாத வளென்பதும் நான் அறிவேன்” என்று அரசன் கூறியது? தன் விருப்பப்படி நடக்கக்கூடாத சகுந்தலையைத் தான் வலுக்கட்டாயஞ் செய்தால் தவத்திற் சிறந்த கண்ணுவமுனிவர் சாபத்தால் தான் அழிக்கப்படுதல் திண்ணமென்பதனை நினைந்து சொன்னதாகும். (பாட்டு) களிவளர்..................தென்கொலோ! இதன் பொருள் : களிவளர் - மகிழ்ச்சியினை மிகுதிப் படுத்துகின்ற அல்லது, மகிழ்ச்சி மிக்க அல்லது, காம மயக்கத்தை வளர்க்கின்ற அல்லது, செருக்குமிக்க, கடவுள்ஆம் - தெய்வமாகிய, காமதேவனே, எயின்மேல் - நின்வலிமைக்குச் சிறிதும் ஒவ்வாத ஏழையேன்மீது, சிறிதும் நீ இரங்கல் இல்லையால் - சிறிதாயினும் நீ நெஞ்சம் இரங்குகின்றிலை, ஒளிவளர் மலர்க்கணை - நிறம் மிகுந்த பூக்களாகிய அம்புகளை, உறப்பொருந்தும் நீ - நிரம்ப வைத்திருக்கும் நீ, அளிஇலை - அருள் இலாய் என்றும், கொடியை என்று - கொடுங்குணம் உடையை யென்றும், ஆயது - எம்மையொத்தார் சொல்லும்படி ஆனது, என்கொலோ - ஏதுகாரணமோ என்றபடி. காமதேவன் கையிற் பிடித்த மலர்க்கணைகள் : தாமரை, மாம்பூ, அசோகு, முல்லை, நீலம் என ஐந்து, மிகமெல்லிய மலர்களையுடைய ஒருவற்கு மென்றன்மையாகிய அருள் இல்லாமையொடு, கொடுந்தன்மை யுண்டாயது மிகவும் வியப்பினைத் தருகின்ற தென்றான் அரசன். (பாட்டு) விரிகடலடியிற்.............................பொருந்தியதே? இதன் பொருள் : விரிகடல் அடியில் புதைந்த வெம்தழல் போல் - அகன்ற கடலின் அடியிலே ஆழ்ந்து கிடக்கின்ற கொடிய தீயைப்போல், வெகுண்டசிவன் எரிவிழி கான்ற கொழும் தீ - சினங்கொண்ட சிவபிரானது நெற்றியிலுள்ள அழற்கண் கக்கிய மிக்க நெருப்பு, நினது அகத்து எரிகின்றதால் - நின்னை எரித்து விடாமல் நின்னுள்ளே எரிந்து கொண் டிருக்கின்றது போலும், பொரிபட வெந்து சாம்பர் ஆயினை எனில் - அவ்வாறின்றிப் பொரியாகத் தீய்த்து சாம்பலாய் விட்டனையாயின், பொறாத இடர் புரிவாய் - தாங்கல் முடியாத துன்பத்தைச் செய்பவனே, எமை வெதுப்பல் - எம்மை நினது கொடுந் தீயிலிட்டு வாட்டல், எவ்வாறு உனக்குப் பொருந்தியது - எங்ஙனம் உனக்குக் கூடியது, ஏ : அசைநிலை. கடலின்கீழ்க் கிடக்கும் வடவாமுகாக்கினியை யொப்பச், சிவபிரான் சினந்து தமது நெற்றிக் கண்ணினின்றும் வெளிப்படுத்திய கொடுந் தீயும் நின்னை எரிக்கமாட்டாமல் நின்னிடத்தே குடிகொண்டு எம்போன்றாரை வெதுப்பித் துன்புறுத்துதற்கு முனைந்ததுபோலும் : எனத் தன் காம நோய் தாங்கமாட்டாமையால் அதனை விளைக்குங் காமன், இறைவன் ஏவிய கொடுந்தழலில் வெந்திலன் போலும் என ஐயுற்று அரசன் கூறினானென்க. ‘வடவாமுகாக்கினி’ என்பதைப்பற்றிய புராணக்கதை வருமாறு: ஊர்வர் என்னும் முனிவர் தாமியற்றிய பெருந்தவத்தின் பயனாகப் பேராற்றலுடையராய் வயங்கினார். அதுகண்ட தேவர்கள், அவர் தமது கால்வழி பெருகும் பொருட்டுப் புதல்வர்களைப் பெறுகவென்று அவரைக் கட்டாயப்படுத்தினர். அவரும் அதற்கிசைந்து தமது தொடையினின்றும் பெருந்தீயொன்றையுண்டாக் கினர். அங்ஙனம் உண்டாகிய அத் தீயானது தனக்குத் தக்கதோர் உணவு கொடாவிடில், உலகம் எல்லாம் எரித்து விடுவே னென்று சொல்லிற்று. அது தெரிந்த நான்முகக்கடவுள் அதன்பாற் போந்து, கடலையே அதற்கு இருப்பிடமாகவுங் கடலலைகளையே உணவாகவுந் தந்தனர். அதுவும் அங்ஙனமே கடலினடியை உறைவிடமாக் கொள்வதாயிற்று. இக் கதையினை உண்மையான் ஆராயுமிடத்துக், கடலின் சில பகுதிகளின்கீழ் உள்ள எரிமலைகள் தீயைக் கக்க, அத் தீ கடல்நீரின் பரப்புக்குமேல் தோற்றுவிக்கும் அனற்கொழுந் தினையே முன்னோர் வடிவைத்தீ என்றனரென்பது புலனாகா நிற்கும். அங்ஙனம் மேலே காணப்படும் அனற் கொழுந்தின் வடிவு பெட்டைக்குதிரை முகம் போன்றிருந்தமையாற் போலும், அது ‘வடவாமுகம்’ எனப் பெயர் பெற்றது; வடவை - பெண்குதிரை. (பாட்டு) பூங்கணை ........................தளர்வாரே. இதன் பொருள் : பூங்கணை வாய்ந்த புத்தேன் - பூவாகிய அம்பினைப் பெற்ற காமதேவனே, நீயும் புதுமதியும் - நீயும் முதிராத நிலவும், ஈங்கு உளமக்கட்கு - இந்நிலவுலகத்துள்ள மக்களுக்கு, இன்பந் தருவீர் என எண்ணி - இன்பத்தினை விளைக்குந் தன்மை யுடையீரெனக் கருதி, ஏங்கிய காதலர் எல்லாம் - தாம் காதலித்தவரைப் பெறாமையால் ஏக்கமுற்ற காதலர் எல்லாரும், ஏமாந்தனர் ஆனார் - ஏமாற்றம் அடைந்தவராயினார்கள்; தாங்காக் காதல் - பொறுத்தற் கரிய காதலன்பின் வயப்பட்ட, என்போல் மாந்தர் - என்னையொத்த மக்களோ, தளர்வார் - தாம் பிழைக்கும் வழி காணமையின் உள்ளஞ் சோர்வா ரென்றபடி. (பாட்டு) மலரைக் கணையாய்.....................ஒளியாவே. இதன் பொருள் : மலரைக் கணையாய் உடையாய் என நீ வருகுதலும் - பூக்களைக் கணைகளாகப் பெற்றாய் என நீ வழங்கப் பட்டு வருதலும், அவர்தண் கதிரோன் அவன் என்று அறையும் அவ் உரையும் - விரிந்த குளிர்ச்சியான கதிர்களையுடையன் சந்திரனாகிய அவன் என்று எங்குஞ் சொல்லப்படும் அச்சொல்லும், இலஆம் பொய்யே - என்றும் இல்லாதன ஆன வெறும்பொய்யேயாகும், எம் போல்வார்க்கு - எம்மைப் போற் காமநோய் கொண்டார்க்கு, அவ் எழில் மதியம் - அவ் எழுச்சியினையுடைய திங்களானது, உலர் வெம் தீயே பொழியும் - யாம் காய்தற்கு ஏதுவான வெவ்விய நெருப்பையே சொரியும், உறு தண் ஒளியால் - மிகுந்த தண்ணிய ஒளியினால், என்றபடி. ஏ: அசை. (பாட்டு) நீயோ மலர்...................படுவாயே. இதன் பொருள் : நீயோ மலர் வெம்கணையை இடிபோல் நிறைக்கின்றாய் - நீயோ பூக்களாகிய கொடிய அம்புகளை இடியையொப்ப எம்மீது ஏவி நிரப்புகின்றாய், அ ஆ மருட்டும் அலர்கண் மடவான் பொருட்டாக - ஐயோ எம்மை மயக்கும் பரந்த விழிகளையுடைய அம் மங்கiயின் பொருட்டாக, ஓவாது எனை நீ புடைக்கின்றமையால் - ஒழியாது என்னை நீ நின் கணைகளால் அடிக்கின்றதனால், உயர் மீனம் பூ ஆர் கொடியாய் - உயர எடுத்ததும் மீன்வடிவு எழுதப்பட்டதும் பொலிவு நிறைந்ததுமான கொடியினை உடையாய், என்னால் புகழப்படுவாய் - என்னால் நீ புகழ்ந்து பேசப்படுவாய், என்றபடி; ஏ: அசை. காமவேளுக்கு மீனக்கொடி யுண்டென்று புராணங் கூறும்; மாதர்களின் கண்களே ஆடவர்க்கு முதலிற் காம வேட்கையினை மூட்டுதலின், அக் கண்களின் வடிவத்தை யொத்த மீன் எழுதிய கொடி அவற்கு உரித்தாயிற்றுப் போலும்; மாதரின் கயற்கண்களின் கவர்ச்சியால் ஆடவரை வென்று, அவ் வெற்றிக்கு அறிகுறியாக அவன் உயரப் பிடித்த கொடியென்க. இனிப், ‘பூ ஆர்கொடி’ என்பதற்குப் பூங்கொடி யெனப் பொருள்கொண்டு மலர்க்கொடிகளையே தனக்குக் கொடியாக உடையன் என்றதால், விழிகளாகிய மீனைச் சுமந்த பூங்கொடி போல்வாராகிய மகளிரையே தனக்குக் கொடியாக உடைய னென்றாதல் பொருளுரைத்தலும் ஆம். (5) காமநோய் மிகப்பெற்றார்க்குக் குளிர்ந்த பொருள்கள் வெய்யவாகவும் மென்பொருள்கள் வன்பொருள்களாகவுந் திரிந்து காணப்படுதல் இயல்பாதலாற், சகுந்தலைமேற் கொண்ட காதல் வெப்பத்தால் வருந்துந் துஷியந்தனும் இவ்வாறெல்லாங் காமவேளையுந் திங்களையும் பழித்துப் பேசினான் என்க. (பக். 45) விடை அளித்தல் - உத்தரவு கொடுத்தல். நாடி - தேடி. கதிரவன் - பகலவன் : சூரியன். நண்பகல் நடுப்பகல், ‘நள்’ நண் எனத் திரிந்தது. பச்சிளங்கொடி - பசுமையான இளையகொடி. ‘மாலினி’ கருஅ. ஆம் பக்கத்து உரைக் குறிப்பைப் பார்க்க. (பாட்டு) முகை அவிழ்க்குந்.............வளமுடைத்தே. இதன் பொருள்: முகை அவிழ்க்கும் தாமரையின் - அரும்பாயிருந்த பதத்தினின்று அலருந் தாமரை மலரின்கண் உள்ள, முதிர் மணத்தின் அளைந்து - மிக்க மணத்திலே தோய்ந்து, மிகை படுநீர் மாலினியின்-மிகுதியாய் ஓடும் நீரினையுடைய மாலினியாற்றின், விரிதிரை நுண்துளி வீசும் - அகலமான அலைகளினால் எறியப்படுஞ் சிறிய நீர்த் துளிகளை வாரிக் கொணர்ந்து வீசாநின்ற, தகை இனிய இளம் தென்றல் - மென்மைத் தன்மையால் இனிதாகிய முதிராத தென்றற் காற்றானது, தனிக்காம எரி வெதுப்பும் - ஒப்பற்ற காமமாகிய தீயினால் வாட்டப்படும், தொகை உடம்பில் - எழுவகை முதற்கொருள்களின் தொகுதியாகிய உடம்பினால், தழுவுதற்கு - அணைத்தற்கு, தொலையாத வளம் உடைத்து - கெடாத செழுமையினை யுடையதாகும் என்றவாறு. எ: அசை. முழுதும் அலர்ந்துவிட்ட மலரின் மணங் குறையு மாதலால், அலர்ந்து கொண்டுவருந் தாமரயின் முதிர் மணம் என்றான். முற்றம் - வாயிலுக்கு எதிரேயுள்ள பரப்பு, பொறை - சுமை. சுவடு - அடையாளம். (பாட்டு) விழிகளாற்...................கண்ணுறலானே. (பக். 46) இதன் பொருள்: விழிகளால் பெறூஉம் - கண்களைப் பெற்றதனால் அடையும், அழிவு இல் பேர் இன்பம் - கெடுதல் இல்லாத பேரின்பத்தினை, ‘ஆ’ வியப்பிடைச் சொல், பெரிது எய்தினென் - மிகவும் பெற்றேன், ‘மாது’ ‘ஓ’: அசை நிலை, தூஉய - பரிசுத்தமான, ஒள்மலர் - ஒளி பொருந்திய பூக்கள், தாஅய வெள்நிறம் கல்மிசை - பரவிய வெண்ணிறம் வாய்ந்த கல்லின்மேல், தோழியர் மருங்கில் சாஅய - தன் தோழி மாரின் பக்கத்தே சாய்ந்து கிடக்கும், என் இன் உயிர்ச்செல்லியைக் கண் உறலான் - எனது இனிய உயிர்க்குச் செல்வமாயிருப்பவளைக் காண்டலினால் என்க; எ: அசை. ‘என் இன்னுயிர்ச் செல்வியைக் கண்ணுறலான் விழிகளாற் பெறூஉம் அழிவில்பேரின்பம் ஆ அ பெரிதெய்தினென்’ என வினைமுடிவு செய்க. (பாட்டு) நறுமண நரந்தம்...................தின்றே. இதன் பொருள் : நறுமண நரந்தம் - நல்ல மணத்தை உடைய நரந்தம் புல்லின் அரைப்பை, நகிலம் மேல் திமிர்ந்தும் - கொங்கைகளின்மேற் பூசியும், தாமரை நாளம் - தாமரைத் தண்டை, காமரு கையில் - அழகிய அல்லது விரும்பத்தக்க கைகளில், காமர் என்பதன் ஈற்றில் உகரச் சாரியை வந்தது. பவளக் கடகம் எனத் துவள வளைத்தும் - பவளத்தாற் செய்த வளையலையொப்ப அது துவளுமாறு வளைத்தும், என் ஆர் உயிர்க் காதலி ஓர் அயர்வு உறினும் - எனது அரிய உயிரை அனையளான காதலி ஒரு தனித்தளர்வினை அடைந்தாலும், எழில் மிகு செவ்வியன் - அத் தளர்விலும் ஓர் அழகு மிகுகின்ற பதத்தினை யுடையன், ‘மாது’ ‘ஓ’ அசை, கழிபெருங்காதல் பயந்த - மிகப்பெரிய காதலன்பு தந்த, ஏதம் உறுநோயும் - துன்பத்தினையுடைய நோயும், சுடுகதிர்க் கனலி அடும்பெரு வருத்தமும் - தீய்க்கும் கதிர்களைச் சொரியும் பகலவன் வருத்தும் பெருந்துன்பமும், ஒன்று என மொழிவராயினும் - ஒரு தன்மையவே எனக் கூறுவாருளராயினும், என்றூழ் பொழி கதிர்வருத்தம் - பகலவன் சொரியுங் கதிர்களால் உண்டாந் துன்பம், இதுபோல் - இக் காதல் விளைத்த நோயைப் போல், மழ இள மகளிர்க்கு - மிக இளைய மாதர்க்கு, அழகு பயந்தது இன்று - அழகு தந்ததில்லை; ஏ; அசை; ‘பயந்தது இன்று’ என்னுஞ் சொற்கள் ‘பயந்தின்று’ என மருவின. (பக். 47) முன்னிட்டு - முதலாகக் கொண்டு: காரமாக. ஐயம் - சந்தேகம். பாயல் - படுக்கை. ‘இதிகாசம்’ என்பது ‘அஃது அவ்வாறு இருந்தது’ எனப் பொருள்பட்டுப் பண்டு நடந்த நிகழ்ச்சிகளை ஒரு கோவைப் படுத்துரைப்பது; ‘மாபாரதம்’ முதலான நூல்கள் அவ் வகையிற் சேர்ந்தனவாகும். காதல் - பேரன்பு, வயப்படுதல் - வழிப்படுதல்: ஒன்றனுக்குப் பிறிதொன்று அடங்கி நடத்தல். மூலம் - முதற்காரணம். “நோய்வந்ததற்கு உண்மையான மூலந் தெரியாமல் அதற்கு மருந்து கொடுக்க முடியாதே” என்ற கருத்தை, “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.” (திருக்குறள் 948) என்னுந் திருக்குறட் பொருளோடு ஒப்பிடுக. கருதிய வண்ணமே - எண்ணியபடியே. (பக். 48) பராமுகம் - அசட்டை, ‘பாராமுகம்’ என்பது முதற்குறுகிப் ‘பராமுகம்’ என்றாயிற்று. (பாட்டு) வண்மலர்க்...........வாடின. இதன் பொருள் : வன் மலர்க் கன்னமும் வறண்டு வற்றின - கொழுமையான மலர்களை யொத்த சகுந்தலையின் இரு கன்னங்களும் நீர்ப்பசையற்றுச் சுருங்கின, திண்ணிய கொங்கையும் திறம் திரிந்தன - இறுகிய கொங்கைகளுந் தமது இறுக்கம் மாறிவிட்டன, நுண்ணிய நடுவும் மேல் நுணுகிப் போயின - இயற்கையிலேயே இடுகிய இடையின் மேல் கீழ் நடு என்னும் மூன்று பகுதிகளும் இன்னும் மிகுதியாய் ஒடுங்கிப் போய்விட்டன, வண்ணமும் வெளிறின - உடம்பின் பல பகுதிகளிலுள்ள நிறங்களும் வெளுத்துவிட்டன, தோளும் வாடின - இரண்டு தோள்களுஞ் சோர்வுற்றன என்றவாறு. (பாட்டு) உருக்கிளர்............கெழுந்தவே. இதன் பொருள் : உருக்கிளர் இளம் தளிர் உலரத் தீய்த் திடும் - நிறம் விளங்கும் இளந்துளிர்களை ஈரம் இல்லையாகத் தீய்த்துவிடும், பொருக்கெனும் தீவளி பொருந்த வாடிய - விரைய வந்து வீசுந் தீக்காற்று மேலேபடுதலால் வாடிப் போன, மருக்கமழ் மல்லிகை போன்ற - மணங்கமழும் மல்லிகைப் பூவையொத்த, மாதர்பால் - மங்கையாகிய சகுந்தலை யினிடத்து, இரக்கமும் இன்பமும் ஒருங்கு எழுந்த - அவளது அழகிய மேனியின் வாட்டத்தைக் காண்டலால் அவள்பால் இரக்கமும் அவ் வாட்டம் என்பால் வைத்த காதன் மிகுதியால் உண்டாயிருக்கலாமென்று எண்ணுதலால் இன்பமும் ஒரே காலத்தில் என்னுள்ளத்தில் உண்டாயின என்றவாறு. ஏ: அசை. துயரம் - விசனம். உசாவல் - யோசனை கேட்டல். விழைவு - ஆசைப்பெருக்கம். (பக். 49) அடவி - நாடு : கானகம். (பாட்டு) வேனில்கழிந்த.......................பயந்ததுவால். இதன் பொருள் : வேனில் கழிந்த உடனே - கோடை காலங் கடந்தவுடனே, விரி கடல் நீர் - அகன்ற கடலினது நீரை, வானம் பருகி - மேகமானது குடித்து, வரு கார்நாள் - வருகின்ற கார்காலத்தில், மழையை நோக்கும், மன் உயிருக்கு - நிலைபெற்ற உயிர்களுக்கு, ஆனாமகிழ்வு - அடங்காத மகிழ்ச்சியினை, தரல்போல் - தருவதுபோல, அடும் காதல் - வருத்துகின்ற காமப் பேரன்பானது, ஏனை எனக்கும் - இதுகாறுங் காதலின்னதென்றே யறியாமையின் அதற்கு வேறான எனக்கும், இன்பம் பயந்தது - இன்பத்தை உண்டாக்கியது; ஆல்: அசை. ‘எள்ளுர்தண்ணீரும் இறைத்தல்’ இறந்தோர்க்குச் செய்யும் கடன். (பக். 50) குழைமலிந்த - தழை நிறைந்த. மாதவி - வேனிற் கால மல்லிகைக் கொடி : குருக்கத்திக் கொடி யெனலும் ஆம். ஆராயற்பாலது - ஆராய்தற்குரியது. (பாட்டு) கைமேற் றலைவைத்......................செறிக்கின்றெனே. இதன் பொருள் : கைமேல்தலை வைத்து இரவில் கிடக்க - கைமேல் தலையை வைத்துக்கொண்டு இராப்பொழுதிற் படுத்துக் கிடக்கையில், கடைக்கண் நின்று பெய்நீர்-என் கண்ணின் கடைகளிலிருந்து சொரியும் நீரின் வெப்பமானது, அழற்ற - சுடுதலால், நிறம் திரிவான பெருமணிகள் மொய் பொன் கடகம் - தம் நிறம் மாறின பெரிய இரத்தினங்கள் நெருங்க அழுத்திய பொன்னாற் செய்த எனது தோள்வளை யானது, வில் நாண்தழும்பு உற்ற முனை நழுவி - வில்லின் நாண்கயிறு பட்டு வடுவாகிய இடத்தினின்றுங் கழன்று, செய்யில் உரிஞ்ச - எனது முன் கையில் வீழ்ந்து உராய்தலால், பலகால் எடுத்துச் செறிக்கின்றென் - அதனைப் பலமுறையும் மேல் உயர்த்தி அஃதிருந்த இடத்திற் சேர்ப்பிக்கின்றேன் என்றவாறு. எ : அசை. முழங்கை மணிக்கட்டுக்கு மேலுள்ள கையின் பகுதியே தோள் எனப்படும்; அதன்கண் மகளிரேயன்றி ஆடவரும் பண்டை நாளிற் கடகம் அணிதல் வழக்கம்; விற்பிடிக்கும் கை இடது கையே யாதலால் வில்லின் நாண் உரைசித் துஷியந் தனுக்குத் தழும்பு உண்டான இடம் இடது தோளின்கண் உளதென்பது பெற்றாம். அவ்விடத்தில் அணிந்திருந்த கடகம் அவனது உடம்பின் மெலிவால் அவ் விடத்தைவிட்டு நழுவி முன்கையில் வந்து விழுதலும் பெறப்படும். அவன் தன் கையைத் தொங்கவிட்டு உலாவு கையில் மேலுள்ள கடகங் கீழ் நழுவிமென்பது உணரற் பாற்று. அவனது கையிலுள்ள அக் கடகத்திற் குயிற்றிய மணிகள் இப்போது நிறம் மாறி யிருத்தற்குக் காரணம், அவன் இரவிற்றுயில் கொள்ளானாய்ப் படுக்கையிற் கிடந்து சகுந்தலையை நினைந்து ஆற்றனாந் தோறும் அவன் கண்களினின்று பொழியும் நீரின் வெம்மை படுதலேயாம்; என்று அவன் இரவின்கட் பட்ட துயரத்தினையும் அறிவித் தற்கு ஒரு குறியாக அதனைக் கூறினாரே யல்லது, அவன் படுத்துக் கிடக்கையிற் றோளிலுள்ள கடகங் கழன்று கீழிறங்கியதென்று கூறப்புகுந்தா ரல்வர்; என்னை? படுத்துக் கிடக்கையிற் கைகள் தொங்குதல் இல்லாமையாற் றோளில் அணிந்த கடகங் கழன்று முன்கையில் இறங்குதல் ஏலாதாகலின் என்பது. தொழில்களைச் செய்தலாற் கை ‘செய்’ எனப்பட்டது. (பக். 51) முடங்கல் - கடிதம். ‘எழுதட்டும்’ என்பது உலக வழக்கில் வரும் வியங்கோள், எழுதுக என்பது பொருள். படைத்தது - நிவேதித்தது. நேர்த்தியான - சிறப்பான. ஒத்துக்கொள்ளல் - உடன்படல். பற்று - அன்பின் பிடிப்பு, தவிர்த்தல் - விலக்கிவிடுதல். (பாட்டு) உன்மேற்...........................வெறுத்தலின்றே. இதன் பொருள் : உன் மேல் பற்று இன்றி உவர்ப்பான் எவன் என உன்னினையோ - உன்மேல் அன்பு இல்லாமல் வெறுப்பவன் எவன் என்று நீ நினைத்தனையோ, அன்னான் - அத் தன்மையினான், நின் கூட்டம் விழைந்து இங்கு உளான் - நினது சேர்க்கையினை மிக அவாவி இவ்விடத்திலேயே இருக்கின்றான்; ஆதலால், அஞ்சும் ஆர் அணங்கே - நின்னை விலக்கி விடுவானென வீணே எண்ணி அஞ்சா நின்ற பெறுதற்கு அரிய தேவமாதரை ஒத்தவளே, பொன்னான் தனை நயப்போனை மறுப்பினும் - திருமகள் தன்னை விரும்புவானிடத்தே செல்வதற்கு இசையாவிடினும், போவதற்கு அம் மின்னாள் விரும்பப்படுவோன் - தானே செல்வதற்கு அத்திருமகளால் விரும்பப்படுவான் ஒருவன், அவளை வெறுத்தல் இன்று - அத் திருமகளை வெறுத்தல் இல்லை என்றவாறு. எ: அசை. முழுமதி - பூரணசந்திரன், உவாத்திங்கள். ஆடை - துணி, ‘முன்தானை’ என்பது ‘தானைமுன்’ என்பதன் சொல் நிலைமாறல்; ஆடையின்முனை என்பது பொருள். இயற்ற - ஆக்க. (பாட்டு) நொடிசிமிழா....................பிலனாக்குமால். (பக் 52) இதன் பொருள் : நொடி சிமிழா விழியால் ஒரு நொடிப் பொழுதும் இமையாத கண்களோடு, என் காதலியை நோக்குங்கால் - என் காதலியை யான் உற்றுப் பார்க்குமிடத்து, வடிதீம்சொல் தொடர் தொடுக்கும் வண்மையில் - வடித்தெடுத்தால் ஒத்த தெளிவினையுடைய இனிய சொற்களாற் செய்யுளைத் தொடர்ந்தமைக்கும் வகையில், அன்னாள் முகத்து - அத்தகைய நிலை யிலுள்ளவளான சகுந்தலையின் முகத்தில், கொடிபோல் ஒரு புருவம் மேல்நெறிந்து குலவியிட - கொடியை யொத்த ஒரு புருவமானதுமேலே வளைந்து பொருந்தாநிற்க, பொடியும் கதுப்பு - சிலிர்க்குங் கன்னங்களானவை, என்மேல் காதல் - என் மேல்அவட்குள்ள காதலன்பினை, புலன் ஆக்கும் - தெரியச் செய்யும் என்றபடி. ஆல்; அசை. மயிர் அடர்ந்து தடிப்பாய் நீண்டிருக்கும் புருவத்திற்கு, இலைகள் அடர்ந்து நீண்டிருக்கும் இளங்கொடி உவமையாயிற்று. மிகுந்த களிப்புடையார்க்கு உடம்பெங்கும் மயிர்சிலிர்த்தல் இயல்பு; கன்னஞ்சிலிர்த்தல் அதனினுங் கழிபெருங்களிப்பு நிரம்பினார்க்கேயாம். ‘எழுது கருவிகள்’: எழுத்தாணி, துகிலிகை மை முதலியன பொறித்தல் - எழுதுதல். உன்னிப்பு - கவனிப்பு. முதற்பாட்டின் பொருள் வருமாறு : (பாட்டு) இரக்கமிலா...................இயம்புதியோ. இதன் பொருள் : இரக்கம் இலா அரசே - நின்பால் வைத்த காதலால் துன்புறும் என்னைக் கண்டும் என்பால் இரங்குதல் இல்லாத மன்னா!, நான் என்செய்வேன் - ஏழையேன் யாதுசெய்வேன், எழில் காமன் என் உடம்பை இரவு பகல் எரிக்கின்றான் - கனவெழுச்சியுடைய காமதேவன் எனது உடம்பை இரவும் பகலுந்தீயில் வெதுப்புகின்றான், நின்மேலே என் காதல் பெருக்கின்றது - நின்மேற் கொண்ட என் பேரன்பானது வரவரப் பெரிதாகின்றது, பேதையேன் நின் நெஞ்சம் இருக்கும் ஆறு உணர்ந்திலேன் - அறிவதறியாச் சிறியேனான யான் நினது நெஞ்சத்தின் றன்மை இருக்கும் வகையினை உணர்ந்தேனில்லை, ஆதலால், எனக்கு அதனை இயம்புதியோ - எனக்கு நின் உள்ளத்தில் உள்ளதைத் தெரியக் கூறுவாயோ என்றவாறு. காதல் வயப்பட்டாரை வருத்துதலில் உள்ளக்கிளர்ச்சி யுடையனகலின் ‘எழிற்காமன்’ என்றாள். ‘பெரு’ என்னும் பண்புப் பெயரின் அடி இங்கே வினைத்தன்மைப்பட்டு இடநிலையும் ஈறும் பெற்றது; இங்ஙனமே ‘சிறு,’ ‘கரு’, ‘பசு,’ ‘வெள்,’ ‘வல்’ முதலான பண்புப்பெய ரடிகளுஞ் சிறுக்கின்றது, கருக்கின்றது பசுக்கின்றது,வெளுக்கின்றது, வலுக்கின்றது என வினைப்படுதல் காண்க. ஈண்டுப் ‘பேதைமை’ யென்றது மக்கள் மனவியற்கைகளிற் பழகியறியாத இளமைப்பருவத்தி னியல்பை யுணர்ந்துகின்றது. (பாட்டு) மெல்லியலாய்................லில்லையே. இதன் பொருள் : மெல்லியலாய் நின்னை அவன் மேல் மேலும் எரிக்கின்றான் - மெல்லிய இயல்பினையுடையாய் உன்னை அக் காமன் மேலும் மேலும் அழற்றுகின்றான், என்னையோ சொல்ல ஒண்ணாவகையாகச் சுடுகின்றான் - என்னையோ அவன் நாவினாற் சொல்லக் கூடாதபடியாகக் கொளுத்துகின்றான், எல்லவன் அல் ஒழிந்த விடிநாளில் அழிமதியை வாட்டுதல்போல் - பகலவன் இருள் நீங்கிய விடியற்காலையில் ஒளிமழுங்கிய திங்களை மெலியச் செய்தல்போல, மற்று அதன்மனை அல்லியை வாட்டல் இல்லையே - வேறு அதன் மனையாளான அல்லிமலரை மெலிவித்தல் இல்லையன்றே என்றவாறு. இச்செய்யுளில் அரசன் தன்னைத் திங்களோடுஞ் சகுந்தலையை அல்லி மலரோடும் ஒப்பித்துக்கொள்கின்றான்; இவ்வாற்றான் அரசன் சகுந்தலைக்குத் தன்னைக் கணவனாகக் கருதிவிட்டதை அறியப்படும். ‘ஒன்றா’ என்பது ‘ஒண்ணா’ எனத் திரிந்தது. தாழாது - தாமதியாது. (பக். 53) பாயல் - படுக்கை. தீய்தல் - நெருப்பில் வேதல் வதங்குதல் - வாடுதல். தெற்றென - தெளிவாக. (பக். 54) தலையளி - சிறந்த அருள். உவளகம் - மகளிர் இருக்கும் உள்ளிடம் : அந்தப்புரம். சகுந்தலை தான் அரசன்மேல் ஒருமுகமாய்க் காதலுற்று நின்றாற்போல, அரசனுந் தன் முகமாகவே காதலுற்று நில்லாமல் மகளிர் பலரைக் காதலித்திருத்தல் கூடுமென ஐயுற்றுத், “தமது உவளகத்தில் உள்ள மகளிரைப் பிரிந்தமை யால் வருந்தியிருக்கின்ற இவ் வரசரை வருத்தப்படுத்த வேண்டாம்” என்று புலந்து கூறினாள். (பாட்டு) ஒருபொழுதும்.....................பிழைப்பெனோ‘ இதன் பொருள் : ஒரு பொழுதும் என் உளத்தில் பிரியாதாய் - ஒரு நொடிநேரமும் என் நெஞ்சைவிட்டு அகலாதவளே, உனைக் காண்பார் மருள மனம் பேதுறுக்கும் மதர்விழியாய் - நின்னைக் காண்பவர்கள் மயங்குமாறு அவர்கள் உள்ளத்தைக் கலங்கச் செய்யுங் களித்த விழிகளை யுடையவளே, நினை அன்றிப் பெரிய பொருள் பிறிது அறியா என் நெஞ்சை - நின்னையல்லாமற் பெரிதாகக் கருதத்தக்க பொருள் வேறேதும் அறியாத எனது நெஞ்சத்தை, பிறிது அறிந்தால் - வேறாக நீ அறிந்தால், எரிவேடன் கணை கொல்ல இனைகின்றேன் பிழைப்பெனோ - மன்மதனின் சுடுகின்ற அம்புகள் வருத்த வருந்துகின்ற யான் உயிரோடிருத்தல் கூடுமோ என்றவாறு. ‘எரி’ என்னும் அடைமொழியைக் ‘கணை’ என்பதனொடு கூட்டுக. ‘வேள்தன்’ என்னுங் சொற்கள் ‘வேடன்’ எனப் புணர்ந்தன. வேள் - மன்மதன். ‘வேடன்’ சிலேடையாகவும் நின்றது. ‘காதற்கிழத்திமார்’ என்போர் அரசன் தான் வேண்டுங் காலங்களிற் காதலின்பந் துய்த்தற் பொருட்டு அவனுக்கே உரியராக வளர்க்கப்பட்ட மகளிர்; அரசர்க்குஞ் சிற்றரசர்க்குஞ் செல்வர்க்குங் காதற்கிழத்தியராக மகளிர் பலர்வளர்க்கப் படும் வழக்கம் பண்டைக்காலத்தே தமிழ் நாட்டிலும் இருந்தமை, இறையனாரகப் பொருள் “காதற் பரத்தை எல்லார்க்கும் உரித்தே” என்னுஞ் சூத்திரத்திற்கு ஆசிரியர் நக்கீரனார் “குரவர்களான் இவனுரிமை யென்றே வளர்க்கப்பட்ட ராகலான் தலைமகளை எய்துவதன்முன் உளரென்பது” என்று தொடங்கி யுரைக்கும் உரையான் அறியப்படும். மணஞ்செய்து கொள்ளப்பட்டவள் ‘தலைமகள்’ என்றும், மணஞ் செய்யப்படாமற் காதலின்ப நுகர்ச்சி யொன்றற்கு மட்டுமே வளர்க்கப்பட்டவள் ‘பரத்தை’ என்றும் நுவலப் பட்டார் ஆயினும், ஒருவற்கு உரிமையாக வளர்க்கப்பட்ட பரத்தைப் பெண்டிர் ஆடவர் பிறரைக் கண்ணெடுத்து நோக்குதற்கும் இடம்பெறார். பலர்தோள் மருவும் பொருட் பெண்டிர் ‘பொதுமாதர்,’ ‘விலைமாதர்’ எனப் பெயர் பெறுவர். அவர் வேறு, பரத்தையர் வேறென்று உணர்ந்து கொள்க. தனக்குக் காதற்கிழத்திமார் பலர் உண்டென்பதை அரசன் ஒளியாமற் சொல்வது பாராட்டற்பாலது. அரைப்பட்டிகை மாதர் இடுப்பைச் சூழக்கட்டும் ஓர் அணி. நிலத்தைச் சூழ்ந்த கடலை நிலமகளின் இடையைச் சூழ்ந்த ஒட்டியாணத்திற்கு உவமையாகக் கூறினான். குறி - சைகை. சகுந்தலை துஷியந்தனொடு கூடியிருக்கு மாறு செய்தற் பொருட்டுப், பிரியம்வதை தன்றோழியை வேறொரிடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டி இங்கே செய்யுஞ் சூழ்ச்சியை உற்று நோக்குக. (பக். 55) காவலர் - அரசர்; காப்பவர் என்பது சொற்பொருள். (பாட்டு) கண்மணி.................உரையே! இதன் பொருள் : கண்மணி அனையாய் - என் கண்ணின் மணியை ஒப்பவளே, நின்மனம் கவலேல் - நினது மனத்தின்கட் கவலைப்படாதே, நீ வேண்டுவன புரிய - நீ விரும்புகின்றவை களைச் செய்ய, ஈண்டு நான் உளன் - இங்கே நான் இருக்கின்றேன், ‘ஆல்’ அசை, பெருகு அயர்வு ஒழிக்கும் - மிகுகின்ற தளர்வினை நீக்கும், மரை இலை ஆக்கிய - தாமரையிலையாற் செய்த, நளி விசிறிகொண்டு குளிர்ந்த விசிறியினால், குளிர்வளி தருகோ - குளிர்ங் காற்றைத் தருவேனோ, குமரிவாழையின் - இளவாழை மரத்தைப் போல், அமைவுறு குறங்கை - வழுவழுப்பாகச் சமைந்த நின்தொடைகளை, என் மடிமிசைச் சேர்த்தி - என் மடியின்மேற் சேரவைத்து, செந்தாமரையுரை - சிவந்த தாமரைப் பூவையொக்கும், அடிகள் இரண்டும் மெல்லென வருடுகோ - நின் அடிகள் இரண்டனையும் மெதுவாகத் தடவுவேனோ, அழகிய தோகாய் - அழகிய மயிற்றோகையின் சாயலை யுடையாளே. பழுது அற உரையே - நினக்குற்ற சிதைவு நீங்கச் சொல்வாயாக என்றவாறு. பொருள்களைக் கண்டு அறிவும் இன்பமும் பெறுதற்குக் கண்மணி இன்றியமையாதது போலத், தன்னறிவு மயக்கம் நீங்கி இன்புறுதற்குஞ் சகுந்தலை தனக்கு இன்றியமையாளா யிருத்தல் பற்றிக் ‘கண்மணி யனைவாய்’ என்றான் அரசன். தாமரை என்பது முதற்குறைந்து ‘மரை’ என நின்றது. ஏவல் - பணிவிடை. கட்டழகு -பேரழகு. பாயல் - படுக்கை. ஊறுபடுதல் - பழுது படுதல். (பக். 56) புருவின்குடி - புரு என்னும் அரசனை முதலாகக்கொண்டு வந்த வழியினர். ஒழுகுமுறை - மேலோர் நடக்கும் வகை. ‘அற ஒழுக்க முறைகள்’ என்பது தர்மமார்க்க நீதிகள் என்னும் வடசொற்றொடரின் மொழிபெயர்ப்பு. ‘யாழோர் மணம்’ என்பது “கந்தருவரென்பார் ஈண்டுச் செய்த நல்வினைப் பயத்தால் ஒருவர் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி இருவரும் ஒருபொழிலகத்து எதிர்ப் பட்டுப் புணர்வது; அது கந்தருவமணம்” என்று ஆசிரியர் நக்கீரனார் ‘இறையனாரகப் பொருளுரை’யிற் கூறியது கொண்டு அறிந்துகொள்க. (பாட்டு) கதுவப்.................விடுக்குவெனே. இதன் பொருள் : கயம் - ஓர் ஆழ்ந்த குளத்தினின்றும், கதுவப்படாமல் - எவராலும் பற்றப்படாமல், இளைது ஆக - இளையதாக, கெழுமி முறைத்து - பொருந்தித் தோன்றி, புதிதே விரிந்த மலரில் துளும்பிப் பொழிநறவை - புதிதாக மலர்ந்த பூவின்கண் நிறைந்து தளும்பிச் சொரிகின்ற தேனை, கொதிகாதல் வண்டு உணல்போல - பருகுதற்குக் கொதிக்கின்ற அவாவினையுடையதொரு வண்டு குடித்தல்போல, சுவையாக் குழையும் இதழ் சுவைத்து அஃதாவது சுவைமிகுந்து நெகிழ்ந்திருக்கும் நினது இதழினை, மெதுவே சுவைத்து -யான் மெல்லச் சுவைத்து, அமிழ்து உண்டு - அதன்கண் ஊறாநின்ற புனல் அமிழ்தத்தை உட்கொண்டு, அணங்கே - தேவமாது போன்றாய், பின் - அதன்பிறகு, விடுக்குவென் - நின்னைப் போகவிடுவேன்; எ: அசைநிலை. சகுந்தலை இதற்குமுன் ஆடவர் எவரானுந் தீண்டப் படாத தூயள் என்பது தெரிப்பான். எவரானுந் தொடப் படாமற் புதிதாகத் தோன்றியதொரு மலரினை அவட்கு உவமையாக எடுத்துரைத்தான். அம் மலரின் கட்டுளும்பி வழியாநின்ற தேன் அவள்பாற் பெருகாநின்ற காமவின்பத் திற்கு உவமையாயிற்று. அக் காமவின்பத்தின் வயத்தளாய் நின்றமையின் அவளது கொல்லையிதழ் கனிவுமிகுந்து சுவைமிகுதியு முடையதாயிற் றென்றான். ‘சுiவாய’ என்பது செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், சுவைத்து எனப் பொருள் தந்தது. (பக். 57) ‘சக்கிரவாகம்’ என்பது ஆணும் பெண்ணுமாய் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமற் பறக்கும் ஒருவகைப் பறவை; இவற்றின் ஆண்பெண் இரவில்மட்டுந் தனித்தனியே பிரிந் திருக்குமென்றும், பகலில் இணைபிரியாதிருக்கு மென்றுங் கூறுவர். ஏதோ குற்றஞ் செய்தமைபற்றி ஒரு முனிவரிட்ட சாபத்தால், இவை இரவில் ஒன்றை விட்டொன்று பிரிந்து, ஓர் யாற்றங்கரையின் ஒருபுறத்தில் ஒன்றும் மற்றதன் எதிர்ப்புறத்தில் மற்றொன்றுமாக இருந்து வருந்திக்கூவு மென்று புராணகதை கூறும்; மேக தூதத்திலும் (2, 23) இது நுவலப்படுதல் காண்க. அச் சக்கிரவாகப் புட்போற் காதலிற் பிரியாத சகுந்தலையுந் துஷியந்தனும் இனி நேருந் துருவாச முனிவர் சாபத்தால் ஒருவரை விட்டொருவர் பிரிந்து வருந்தப் போகும் நிகழ்ச்சி யினை, நூலாசிரியன் இச் சொல்லால் முன்னரே குறிப்பி னுணர்த்துதல் பாராட்டற் பாலதாகும். கொழுநன் - கணவன். ஐயை - தலைவி ; கௌதமி அம்மை யார் தவவொழுக்க முடையராகலின் அங்ஙனம் ஐயையென்று சிறப்பித்து ஓதப்பட்டார்; ‘ஐயன்’: ஆண்பாற்சொல், ‘ஐயை’: பெண்பாற் சொல். பௌரவர் - புருவின் குடியிற் பிறந்தவர். கலம் - வடமொழியிற் பாத்திரம். பரிவு - துன்பம். (பக். 58) துயரம் - வடமொழியில் துக்கம். துய்த்தற்கு - நுகர்தற்கு. கொடிப்பந்தலை நோக்கிக் கூறுவாள்போற் சகுந்தலை அதனுள் மறைந்திருக்கும் அரசனிடம் விடைபெற்றுக் கொள்கின்றாள். (பாட்டு) விழைபொருள்.................வலியிலதன்றே. இதன் பொருள் : விழைபொருள் பெறுதற்கு - விரும்பப் பட்ட பொருளையடைதற்கு, இடையூறு பல - தடைகள் பல உள, கருமயிர் இறைசேர் பெருவிழிகளும் கரிய மயிரை யுடைய இறைப்பையின்கட் பொருந்திய பெரிய விழிகள் பாயாநின்ற, வியர்த்த ஒள் முகத்தை - வியர்வு அரும்பிய ஒளிபொருந்திய முகத்தை, யான் உயர்த்துதொறும் - யான் மேல் நிமிர்த்துந்தோறும், பிணங்கி - மாறுபட்டு, வெறித்தேன் சுவைக்கும் மறுத்த உரை மொழிந்து - மணங்கமழுந் தேனைப் போல் இனிக்கும் மறுத்த மொழிகளைச் சொல்லி, தவளமுகிழ் விரலால் பவள இதழ் பொத்தி - வெள்ளிய பூ அரும்புகளை யொத்த தன் விரல்களாற் பவளம்போன்ற தன் வாய் இதழ்களை மூடி, தோள்புறம் நோட்டினள் - தோளின் பக்கமாய் தன்முகத்தை வளைத்தனள், அதனால் வாய்ப்புற இதழ்த்தேன் பருகிலன் அந்தோ - அதனாலே வளம்பெற அவளிதழின் தேனைக் குடித்திலேன் ஐயோ!, அதன்பின் - என் காதலியைப் பிரிந்த அதற்குப்பின், யாண்டுச் செல்கேன் - எந்த இடத்திற்குப்போவேன், காண்தகு காதலிமுந்து இன்புற்ற இப் பந்தர்வயின் அமர்கோ காட்சிக்குத் தக்காளான என் காதலி முன்னே மகிழ்ந்திருந்த இப் பந்தலினிடத்தே அமர்வேனா, மெல் உருப்பட்டுப் பல்வயின் சிதறிய - அவளது மெல்லிய உடம்புபட்டுப் புரளலாற் பலவிடங்களிலுஞ் சிதறுண்ட, மெல் மலர்ப் பாயல் அக் கல்மேல் உளது - மெல்லிய பூக்களை யுடைய அல்லது பூக்களால் ஆகிய படுக்கை அச் சலவைக் கல்லின் மேற் கிடக்கின்றது, ஆல்: அசைநிலை, கிளிநகம் பொறித்த - கிளிமூக்கை யொத்த தன் நகங்களால் வரைந்த, அளிநசை முடங்கல் மரையிலை - மிக்க அன்பினால் ஆன விருப்பத்தைப் புலப்படுத்துந் திருமுகமாகிய தாமரையிலை, வாடி இவ் உழையே உறும் - வாடிப்போய் இப் பக்கத்திலேயே கிடக்கின்றது, நாளக் கடகம் - தாமரைத் தண்டினாற் செய்யப் பட்ட தோள்வளை, அவள் தோளில் கழன்றுவிழந்து ஆங்கே கிடந்தன - அவளுடைய தோள்களினின்றுங் கழன்ற கீழ் விழுந்து அவ்விடத்தே கிடந்தன. ஈங்கு இவைநோக்க - இங்கே இவைகளைப் பார்க்கையில், வெறிதே யாயினும் - அவள் இல்லாமையால் வெறுமையாகக் காணப்படினுஞ், சிறிதொரு போதில் - சிறிதொரு பொழுதிலுஞ், சூரல் பந்தரைப் பிரிந்து - பிரப்பங் கொடியினால் ஆகிய இப் பந்தரைப் பிரிந்து, வாரற்கு என்மனம் வலியிலது - வருதற்கு என்உள்ளம் வலிமையுடைய தாயில்லை, அன்று, ஏ : அசைநிலை. ‘இறை’ என்பது வீட்டின் இறப்பையுணர்த்துவது: அது போற் கண்கள் மேல் மூடியாயிருந்து அவற்றைக் காக்கும் இறைப்பைகளை ஈண்டு உணர்த்தியதுஉவமையாகுபெயர். ‘வியர்த்த’ வியர் என்னும் பெயரடியாகப் பிறந்தவினை. ‘மறுத்த’ என்பதன் ஈற்றகரந் தொக்கு ‘மறுத்துரை’ எனப் புணர்ந்தது; “புகழ் புரிந்தில் இல்லோர்க்கு” என்னுந் திருக்குறளிற் போல. கோட்டுதல் கழுத்தின் வினையாயினும் அதனொடு தொடர்புடைய முகத்தின் மேலாயிற்று. ‘செல்கு’, ‘அமர்கு’ என்பன தன்மை யொருமை வினைமுற்றுகள்; “மடுக்கோ கடலின் மறிதிமிலன்றி” என்னுந் திருச்சிற்றம்பலக் கோவை யாரிற்போல. ‘மரை’ தாமரை என்பதன் முதற்குறை. ‘போதில்’ என்பதன்கண் உம்மை தொக்கது. குரல் -பிரம்பு. வரல் ‘வாரல்’ எனச் செய்யுள் நோக்கி முதல் நீண்டது. (பக். 59) செக்கர் வானம் - சிவந்த வானம், மாலைக் காலத்திற் காணப்படுவது. அரக்கர்கள் சிவந்தநிற முடைய ராகச் சொல்லப் படுகின்றார்கள். நான்காம் வகுப்பு (பக். 60) மேல்வகுப்பிற் காட்டியபடி துஷியந்த மன்னன் யாழோர் மன்றல் (கந்தருவமண) முறையாற் சகுந்தலையை மணந்த பின் தன்நகரத்திற்குச் சென்றுவிட்டான். சகுந்தலையின் தோழிமார் இருவரில் அனசூயை என்பவள், நகர்சென்ற அரசன் தன் உவளகத்தில் உள்ள மகளிரொடு களியாட்டயர் தலாற், சகுந்தலையை மறந்து விடுவனோவெனக் கவலையுறப், பிரியம்வதை அவளை ஆற்றுவிக்கின்றாள். அதன்பின் தந்தையின் உடம்பாடின்றி நடந்த இம்மணத்தைப் பற்றித், தந்தையாரது மனநிலை எப்படியாமோ வெனப் பேசிக் கொண்டே இருவரும் பூப்பறிக்கின்றனர். இலைக்குடிலில் தனியேயிருந்த சகுந்தலைதன் காதலன்பாற் சென்ற மனத்தினளாய்ப், புறத்தே நடப்ப தின்னதென் றறியாதிருந்த நிலையில், திடீரெனத் துருவாசமுனிவர் அக் குடிலுக்கு வர, அவரது வருகையையும் அறியாதிருந்த சாகுந்தலைமேல் அவர் வெகுண்டு “நின் காதலன் நின்னை நினையாதொழிக!” என்று தீமொழி கூறி வைது, அவ்விடத்தை விட்டுச் செல்கின்றார். இதனைத் தெரிந்து வெருக்கொண்ட தோழிமாரில் அனசூயை அம்முனிவர்பாற் சென்று, அத் தீமொழியை அகற்றும்படி வணங்கி வேண்ட, அவர் “ஓர் அணிகலத்தைக் காண்டலும் அவ் வசவு நீங்கும்” என்று விடுதி மொழிந்து போய்விட்டார். வெளியிடஞ் சென்றிருந்த காசியபர் தமது இத் தவப்பள்ளிக்குத் திரும்பிவந்து சகுந்தலை துஷியந்தனால் மணஞ்செய்யப் பெற்றுக் கருக்கொண்டிருக்கும் வரலாறு களெல்லாந் தெரிந்து, அதனை ஏற்றுக்கொண்டு அவளை வாழ்த்திக், கணவன்பால் அவளை அனுப்புதற்கு வேண்டும் ஏற்பாடுகள் எல்லாஞ் செய்கின்றனர். அவளை வழிகூட்டி விடுக்கையில், தோழிமார் அரசன் றந்த கணையாழியை அவள் கையிற் றந்து “அரசன் நினைவு கூர்தற்கு அடையாளமாக இதனைக் காட்டு” என்று சொல்லி விடுக்கின்றனர். காசியபர் மாணவர் இருவர் சகுந்தலையை அழைத்துக் கொண்டு கானகத்தூடே செல்கின்றனர். சகுந்தலையை விட்டுப் பிரியுங்கால் அவள் தோழியருங் காசியபரும் அடையும் ஆற்றாமையினைக் காளிதாசர் புலப்படுத்திக் காட்டும் முறை இதனைப் பயில்வா ருள்ளத்தை நீராய் உருகச் செய்தல் காண்க. இந் நான்காம் வகுப்பின்கண் இந் நாடகக் கதை நிகழ்ச்சி இத் துணையின் முடிகின்றது. உவளகம் - அந்தப்புரம். அறத்தின் முறை - தருமத்தின் ஒழுங்கு. (பக் - 61) வழிபாடு - பூஜை. ‘காவற்றெய்வம்’ என்பது மணங் கூடினார்க்கு நலம் பயப்பது, இது கௌரி அல்லது பார்வதியேயாகும். இதனைக் காளிதாசர் சௌபாக்ய தேவதா’ என்கின்றனர். ஒம்பாது - உபசரியாது. (பக். 62) சீற்றம் - மிகுசினம். ’துருவாசர்’ என்பவர் அத்திரிக்கும் அனசூயைக்கும் புதல்வராவர்; இம் முனிவர் எளிதிற் சீற்றங் கொள்பவர் என்றுங் கொடுஞ்சாபம் இடுவதில் முன் நிற்பவரென்றும் புராணங்கள் கூறுகின்றன. ஒண்ணாத - கூடாத, ‘ஒன்றாத’ என்னுஞ் சொல் திரிந்தது. வழுவி - தவறி. மன்றாடி - இரந்து கேட்டு. (பக். 63) பிழையாது - தவறாது. அணிகலம் - நகைவரவு - சாபம், ‘சாபம்’ வடசொல். பொறிக்கப் பெற்ற - பதிக்கப் பெற்ற. கணையாழி - திரட்டிச் செய்த மோதிரம், கணை - திரட்சி, வசை - தீயசொல், சாபம் - ஓவியம் - சித்திரம். இச் சாகுந்தல நாடகக் கதை மாபாரதத்தினின்றும் எடுக்கப்பட்ட தொன்றாகும். சகுந்தலையைத் துருவாசர் வைததாகச் சொல்லுங் கதை மாபாரதத்தின்கட் காணப்பட வில்லை. மேல் நடைபெற வேண்டிய நாடக நிகழ்ச்சிக்கு ஒரு காரணங் காட்டல் வேண்டியே காளிதாசர் தாமாகவே இதனைப் படைத்து இங்குச் சேர்த்தார். மேலுந், துருவாசர் வைத வசவு சகுந்தலை யறியாளாய் இருந்தால் மட்டுமே இனி நடக்கும் நாடக நிகழ்ச்சி சுவைப்படுமாதலால், அதனை அவள் அறியாவாறு தோழிகள் மறைத்து வைத்தனரென அவர் படைத்து மொழிந்த திறனும் வியக்கற்பாலதாகும். (பாட்டு) இலைகிளர்.................படுமே. (பக். 64) இதன் பொருள் : இலைகிளர் பூண்டுக்குத் தலைவன் ஆகிய சுடர் ஒளிமதியம் - இலைகள் விளங்கும் மருத்துச் செடிகளுக்குத் தலைவனாகிய மிகுந்த ஒளியினைத் தரும் முழுநிலா வானவன், குடபால் வரையின் ஒருபுறம் செல்லாநிற்ப - மேற்கின்கண் உள்ளதாகிய அத் தகிரியிலே ஒருபக்கஞ் சென்று சேராநிற்க, ஒருபுறம் - மற்றொரு பக்கத்தே, வைகறை என்னும் கைவல் பாகனை, விடியற் காலம் என்று சொல்லப்படுங் கைதேர்ந்த தேர்ப்பாகனை - முன்செல விடுத்து - முன்னே போகவிட்டு, பொன் போல் ஞாயிறு கீழ் பால் எல்லையில் கிளரும் - பொற்றிரளையை யொத்த பகலவன் கிழக்குத் திசையின் மருங்கே விளங்கா நிற்கின்றது, ஒருகால் ஈர் இடத்து ஈர்ஒளிப்பிண்டம் தோன்றலும் மறைதலும் ஆன்று அறியுங்கால் - ஒரே காலத்தில் இரண்டிடங்களில் இருவகை ஒளிப்பிழம்புகளில் ஒன்று தோன்றுதலையும் மற்றொன்று மறைதலையும் அமைதியாக ஆராய்ந்தறியுமிடத்து, மண்ணோர் வாழ்க்கையில் இன்னலும் இன்பமும் மாறிமாறி வீறுதல் பெறும் - இம் மண்ணுலகத்தவர் வாழ்வில் துன்பமும் இன்பமும் மாறிமாறி மிக்குத் தோன்றுதல் விளங்கப்பெறும், செழுமதி என்னும் கொழுநனை இழந்து - அழகிய திங்கள் என்னுங் கணவனை இழந்து, முதிர்எழில் போன ஆம்பல் - அதனாற் றனது சிறந்த அழகுகெட்ட அல்லிப் பூவின் தோற்றமானது, எதிர் விழிக்கு - அதனை நேர்நின்று நோக்குங் கண்களுக்கு, இன்பம் பயவா - இன்பந்தராத, இயல்பு உணர்விடத்து - தன்மையினை உணர்ந்து பார்க்குமிடத்து, ஈங்கு - இவ்வுலகத்திலே, ஆர்உயிர்க் காதலர்ப் பிரிந்த - தம் அரிய உயிர் போற் கணவரைப் பிரிந்த, வார் இருங் கூந்தல் மடவார் - நீண்ட கரிய கூந்தலையுடைய மங்கையர், எய்தும் சாம்துயர் - தாம் அடையுஞ் சாக்காடு அன்னதுன்பம், பொறுத்தற்கு அரிது எனப்படும் - தாங்குதற்காகாதது என்று சொல்லப்படும்; ‘அன்று ஏ’ அசைநிலைகள். மருத்துப் பூடுகள் நிலவொளியிற் செழுமையாக வளருமென்பது புராணக்கூற்று: அதுபற்றியே மதியோன் மருத்துப் பூடுகளுக்குத் தலைவன் எனப்பட்டான்; நோய் சாக்காடுகளை நீக்கு வனவான மருந்துகளை வளர்ப்பவனே இறந்து படுகின்றனனென்றால், ஏனை மக்களின் நிலை என்னாம் என்பது இங்கே குறிப்பால் உணர்த்தப்பட்ட நுட்பம் அறிக. பகலவன் எழுச்சிக்கு முந்துவது பற்றி விடியற் காலம் பகலவன் தேர்ப்பாகனாகச் சொல்லப்பட்டது; இவ் வைகறைப் பொழுதை ‘அருணன்’ என்னுந் தேர்ப்பாகனாக உருவகப் படுத்துச் சொல்வது வடநூல் வழக்கு. முழுநிலா நாளின் வைகறைப் பொழுதைக் காண்பார்க்கு, ஒரே நேரத்தில் மேற்கே முழுமதி மறைதலுங் கிழக்கே பகலவன் தோன்றுதலும் ஆகிய காட்சியின் வியத்தகுநிலை நன்கு விளங்கும்; இக் காட்சியின் பெற்றியினை ஆழ்ந்துணர்வார்க்கு, இந் நிலவுலகின் கண் வாழ்க்கையிற் சிறந்து விளங்கினான் ஒருவன் தனது விளக்கங் குன்றி மாயும் நிலையினை எய்துதலும், மிடிப்பட்டு மிகத் துன்புற்ற ஏனையொருவன் அத் துன்பம் நீங்கி வளவிய வாழ்க்கையில் வயங்கு நிலையினை எய்துதலும் நன்கு புலனாம். இச் செய்யுளின் இவ் வரிய கருத்துக் காளிதாசருக்கு முற்பட்ட காலத்ததாகும், வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப ஒடுங்கா வுள்ளத் தோம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேர லாதனை யாங்ஙனம் ஒத்தியோ வீங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் பகல் விளங்கலையாற் பல்கதிர் விரித்தே. என்னும் புறநானூற்றுச் செய்யுட் கருத்தோடு ஒருபுடை யொத் திருத்தல் காண்க; இப் புறநானூற்றுச் செய்யுளின் ஈற்றிற்” பகல் விளங்குதி யால்” எனவும் பாடங்கொண்டு அதனை ஞாயிற்றின் மேலும் ஏற்றுக. மாணாக்கனது உரையாய் எழுந்த இச் செய்யுளில், ஆக்கியோன், காதலரைப் பிரிந்த மடவார் எய்துந் துன்பத்தின் மிகுதியினைப் பொது நோக்காகக் கூறுவதுபோற் காட்டித், தன் காதலன் துஷியந்தனைப் பிரிந்து சகுந்தலை படும் பெருந்துயரினை உயத்துணர வைத்தமை காண்க. நிலவின் வருகையால் இராக்காலத்தே மலருந் தன்மையது அல்லி மலராகலின், மதியோனை அதற்குக் கணவனாகக் கூறுவது செய்யுள் வழக்கு; விடியற் காலத்தே கூம்பி அழகின்றி வாடிய அல்லிமலர் காதலனைப் பிரிந்து வாடியிருக்குஞ் சகுந்தலையின் தோற்றத்திற்கு உவமையாயிற்று. “வீறுதல் பெறும்” என்பதற்கு அவாய் நிலையால் ‘விளங்க’ என்னும் ஒரு சொல் வருவித் துரைக்கப்பட்டது. (பக். 65) இரண்டகம் - நம்பினவர்க்குச் செய்யுந் தீது. கயவன் - கீழ்மகன். காமவேள் - மன்மதன். சீற்றம் - பெருஞ் சினம். புகன்ற - சொல்லிய. திருமுகம் - கடிதம். ஒருப்படுதல் - உடன்படுதல். சுருக்க - விரைய. காசியபரது மனம் எந்நேரமும் வேள்வி வேட்டலிலேயே பதிந்திருத்தலிற், சகுந்தலையின் உள்ளந் துஷியந்த மன்னனைச் சார்ந்தமைக்கு, வேள்வி வேட்பவன் கண்களாற் பாராமலே இட்ட பலியானது தவறாமல் வேள்வித் தீயில் விழுந்ததனை உவமையாக எடுத்துக் கூறினார்; வேள்வி வேட்பவன் சகுந்தலைக்கும், அவன்றன் கண்களை மறைத்த புகை சகுந்தலையின் அறிவை மறைத்த காதலுக்கும், பாராமல் இட்ட பலி தவறாமல் வேள்வித் தீயில் விழுந்தமை சகுந்தலை காதல் வயத்தளாய்ச் செலுத்திய உள்ளந் துஷியந்தன் பாற் பட்டமைக்கும் உவமைகளாதல் காண்க. (பக். 66) தகுதிவாய்ந்த மாணாக்கனுக்கு ஆசிரியன் புகட்டிய கல்வியானது அவற்கும் பிறர்க்கும் பெரும்பயன் தந்து, ஆசிரியனுக்கும் மிக்க புகழை விளைத்தல் போலச், சகுந்தலை தனக்கேற்ற துஷியந்த மன்னனை மணந்து கொண்டமையால் தனக்குந் தன்னை மணந்தாற்கும் பெருநலன் றந்து, தன் உடம்பையும் உணர்வையும் வளர்த்த காசியபர்க்கும் மிக்க புகழை விளைத்தாலென உவமையையும் பொருளையும் பொருத்துக. ‘பிராகிருதம்’ என்பன வடமொழிச் சிதைவாய் அஞ்ஞான் றிருந்த மக்களாற் பேசப்பட்ட பாலி, அர்த்தமாகதி, மகா ராட்டிரம் முதலான மொழிகள்; இவை தமிழ்மொழிக் கலப்பு மிகுதியும் உடையனவென்று மொழிநூல்வல்லார் கூறுவர். (பாட்டு) முன்னுக....................கொண்டனள். இதன் பொருள் : தவம் முதிர் முனிவ - தவவொழுக்கத்திற் சிறந்த முனிவனே, முன்னுக - நினைந்திடுக, வன்னிமாமரம் தன்னுள்வளர் தி வைத்தல்போல் - வன்னியென்னும் பெயருடைய பெரியமரம் தன்னுள்ளே வளரத்தக்க தீயினை வைத்திருத்தல் போல, இந்நிலம் நலம்பெற - இந் நிலவுலகத்துள்ள உயிர்கள் வாழ்க்கை நலத்தையடைய, துஷியந்தன் இட்ட பொன் உயிர் - துஷியந்தன் இட்டதாகிய பொலியுள்ள உயிரை, அகட்டினில் பொலியக் கொண்டனள் - தன்வயிற்றினுள்ளே நிறையக் கொண்டாள் என்க. வன்னிமரத்தின் கோல்களை ஒருங்கு சேர்த்துக் கடைந்தால், அவற்றிலிருந்து எளிதிலே தீப்பொறி தோன்றக் காண்டலின், அது வன்னிமரம் எனப் பெயர் பெற்றது; வன்னி - நெருப்பு - வன்னி மரத்திலிருந்து எடுக்கப்படுகின்ற தீயானது தூயவேள்வித் தீயினை யுண்டாக்குதற்குப் பயன்படுதல் போலச், சகுந்தலை வயிற்றிலிருந்து பிறக்கும் மகனுந் தூயவேந்தனாய்த் துறவோர் ஆற்றும் வேள்விச் சடங்கும், அதனால் உலகிய லொழுக்கமுந் தூயவாய் நடைபெறுதற்குக் கருவியாவன் என்பது குறிப்பித்தார். (பக். 67) ‘கோரோசனை’ மாட்டிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை மருந்து; சில ஏடுகளில் ‘மிருகரோசனை’ என்று பாடங்காணப்படுகின்றது; இது மானிலிருந்து எடுக்கப்படும் மருந்து; அதனால் இதனைத் தமிழ் நூலார் ‘மான்மதம்’ என்பர். தீர்த்த மண் - தூய நீர்நிலையின் ஓரங்களிலிருந்து எடுக்கப்படும் மண் ‘அருகம்புல்’ ஓசையுருவில் விளங்கும் இறைவற்கு ஏற்றது. இம்மூன்றும் மங்கலச் சடங்கிற் குரியார் அணிந்துகொள்வனவாகும். மணக்கூட்டு - மணப் பண்டங்களின் கலவை. ‘அத்தினபுரம்’ என்பது இப்போதுள்ள டில்லி நகருக்கு வடகிழக்கே 54-கல்லில் உள்ளது; பரதவேந்தன் வழிவந் தோனான ‘அத்தினன்’ என்பவனால் உண்டாக்கப்பட்டது; கங்கையாற்றில் வந்து கலக்கும் ஒரு கிளையாற்றங்கரை மருங்கே உள்ளது. துஷியந்த வேந்தன் மகனான பரதன் காலத்திற்குப் பின்னர் உண்டாகிய இந் நகரைத், துஷியந்தன் காலத்தில் அவற்குரிய தலைநகராகக் காளிதாசர் கூறியது காலமுரண் ஆகும். (பக். 68) மஞ்சளரிசியை வடநூலார் ‘அக்கதை’ என்பர். மணை - இருக்கை. (பக். 69) ஒப்பனை - அலங்காரம். மணிக்கலன்கள் இரத்தினாபரணங்கள். வரிசை - பரிசு. அணிகலன்கள் நகைகள். சான்றது - கக்கியது. பஞ்சி - பஞ்சு. அணங்கு - தெய்வப்பெண். (பக். 70) அருட்பேறு - அருளால் வந்த செல்வம். நுகர - அனுபவிக்க. (பாட்டு) இன்று...................னிலேதானே. இதன் பொருள் : இன்று சகுந்தலை போகின்றாள் என்று எண்ணுதொறும் - இன்றைக்குச் சகுந்தலை என்னைப் பிரிந்து போகின்றாளே என்று நினைக்குந்தோறும், என் காழ்மனன் ஒன்றுங் கவலையினால் கன்றுவது எனது வயிரம் ஏறிய உள்ளமும் பொருந்திய கவலையினால் நைகின்றது, துன்றிய கண்நீர் சோராது அம்ம - என் கண்களில் வந்து நிறைந்த கண்ணீரானது வடியாது யான் அடைக்கவே, தொடர்பு உற்று நின்று என் மிடறு ஓ கம்முவது - அதனொடு தொடர்பு கொண்டு நின்று எனது தொண்டையோ கம்மிக் கொள்கின்றது, என் நிலைதான் என் - எனது நிலைமை யிருந்தவாறு என்னே! என்றவாறு. ‘மனன்’ என்பதன் ஈற்றில் உயர்வு சிறப்பு உம்மை விரிக்க அம்முதல் - அடைத்தல். (பக். 71) ‘யயாதி’ என்னும் அரசன் திங்கள்மரபில் வந்தோன். ‘சர்மிஷ்டை’ என்பான் பிசாசர் மன்னனாகிய விருஷபர்வன் மகளாவன். சுக்கிராசாரியார் மகளான தேவயாநியை யயாதிவேந்தன் முதலில் மணந்துகொண்ட போது, அம் மணமகளுக்குத் தோழியாகச் சர்மிஷ்டை வந்தனள். இவள் அழகிலும் அறிவாற்றலிலும் நிகரற்றவளாய் இருந்தமையின், யயாதி இவள்மேற் பெருங்காதல் கொண்டான்; அங்ஙனமே சர்மிஷ்டையும் அவன்மேற் பெருங்காதல் கொண்டாள்; பின்னர் இருவருந் தம் பெற்றோர் உடன்பாடு பெறாமல் தாமாகவே மணஞ்செய்து கொண்டனர். சகுந்தலையுந் துஷியந்தனுந் தம்பெற்றோரின் உடன்பாடு பெறாமலே தம்முன் எழுந்த பெருங்காதலால் தாமாகவே மணஞ்செய்து கொண்டவராகலின், அவரது காதற் கிழமைக்கு ஏற்ப அவர்போற் காதன்மணம் புரிந்த யயாதி சர்மிஷ்டை இன்பவாழ்க்கையை எடுத்துச் சொல்லிக் காசியபமுனிவர் வாழ்த்துரை கூறிய நுட்பம் வியக்கற்பாலது. ‘அடிகேள்’ என்பது அடிகள் என்னுஞ் சொல்லின் வழி தவவொழுக்க முடையாரை ‘அடிகள்’ என்றழைப்பது தமிழ் வழக்கு; ‘சுவாமிகள்’ என்றழைப்பது வடமொழி வழக்கு. இருக்குவேதத்திலுள்ள பாவுக்குச் ‘சந்தசு’ என்பது பெயர்; அது நான்கடியாய், ஒவ்வோரடியும் பதினோரசைகள் உடையவாய்த் தொடுக்கப்படுவது. (பக். 72) கானக அணங்கு - காட்டில் உறையுந் தெய்வம். உறைவிடம் - வாழும்இடம். அருந்தல் உட்கொள்ளல் விழா- திருநாள். (பாட்டு) வழியி..................செலுநெறியே. இதன் பொருள் : வழியில் இடையிடையே - வழியின் நடு நடுவே, கொழுந்தாமரை பொதுளி வளம்சால் தடங்கள் வயங்கிடுக - கொழுவிய தாமரைமலர்கள் நிறைந்து வளம் மிக்க அகன்ற குளங்கள் விளங்குவனவாக, அழி வெம் கதிர் வருத்தம் அடர்ந்த நிழல் மரங்கள் அகற்றி மகிழ்ச்சி அளித்திடுக - மிக்க வெப்பத்தினைத் தரும் பகலவனால் உண்டாகும் வருத்தத் தினை நெருங்கிய இலைகளையுடைமையால் இடைவெளி யில்லாத நிழலையுடைய மரங்கள் நீக்கி மகிழ்ச்சியினைத் தந்திடுக, கழிய மலர்த்துகள் போல் கழுமு புழுதிஅடி கலங்காது இனிதாய்க் கலந்திடுக - மிகுந்த மகரந்தப்பொடி போல் நிறைந்த மட்புழுதியானது அடிகள் துன்புறாபடி இனிதாக வழியிற் பொருந்துக, திருவே அனையாள் செலும் நெறி செழிய மலயவளி திகழ உலவிடுக - இலக்குமியை ஒத்த வளாகிய சகுந்தலை செல்லும் வழியில் வளவிய பொதிய மலையினின்று வீசுந் தென்றற் காற்றனாது தோன்ற உலவுக என்றவாறு; ஏ: அசை. (பக். 73) உறவினர் - சுற்றத்தார். இடர்ப்பாடு - துன்பம். ‘வனசோதினி’ என்பதற்கு 161 - ஆம் பக்கத்திலுள்ள குறிப்பைக் காண்க. உடன்பிறப்பு அன்பு உடன் பிறந்தாரிடத்துத் தோன்றும் அன்பு. (பக். 74) நவ - புது. கரு - குல். ‘சியாமாகம்’ என்பது ஒருவகைக் காட்டுநெல். (பாட்டு) தாமரை...................காணவே. (பக். 76) இதன் பொருள் : தாமரை இலைப்பினே தங்கு சேவலை - தாமரையிலைகளுக்குப் பின்னே மறைந்து தங்கியிருக்கின்ற ஆண் அன்றிலை, காமரு மகன்றில்தான் காணலாமையால் - காமவிருப்பு மிகுதியும் உடைய பெண் அன்றிற் பறவையானது காணமையால், பூமரு வாயினால் புலம்பிக் கூவிட - பூவைக் கோதுத்தன் வாயினால் வருந்திக் கூவாநிற்க, இது விழிகள் காணவே இதனை என் கண்கள் காணவே, எனது உளம் வேம் - என் உள்ள மானது வேகா நிற்கும் என்றவாறு. ஆண் அன்றில் சிறிது மறைந்திருக்கும் அவ்வளவுக்கே ஆற்றாது பெண் அன்றில் வருந்திக் கூவுமாயின், என் காதலரைக் காணாமல் முற்றும் பிரிந்திருத்தலை யான் எங்ஙனம் ஆற்றமாட்டுவேன் என்று சகுந்தலை கூறினாள்; இனித் தன் கணவனால் விலக்கப்பட்டுத் தான் தனியளாய் இருக்கப்போவது, இவளது தூயவுள்ளத்திற்கு முன்னமே தோன்றலாயிற்றென்பது இதனாற் குறிப்பிக்கப்படுகின்றது. ‘சேவல்’ என்பது பறவையில் ஆண்; ‘பெடை’ என்பது அதிற் பெண்; ‘மகன்றில்’ என்பது அன்றிற் பறவையிற் பெண் என்பதும், அது தன் ஆணைவிட்டுப் பிரியாதென்பதும், பிரியிற் பெரிதும் ஆற்றாதென்பதும் “அடியோர் மைந்தர் அகலத்தகலா, அலர்ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி” என்னும் 8- ஆம் பரிபாடல் அடிகளாலும், “இறைவனுக்கு இரங்கியேங்கிச், சோர்துகில் திருத்தல் தேற்றாள் துணைபிரி மகன்றில் ஒத்தான்” என்னுஞ் சீவக சிந்தாமணிச் செய்யுள் (302) அடிகளாலும் நன்கு விளங்குகின்றன. பெண்அன்றில் காமவேட்கை மிகுதியும் உடைய தாகலிற் “காமருமகன்றில்” எனப்பட்டது. பூமரு - பூவைமருவும், அஃதாவது கோதும். “புலம்பே தனிமை” என்பது தொல்காப்பியம் உரியியல்; தன் ஆணைப் பிரிந்து தனித்திருந்து வருந்துவதற்காயிற்று. ‘வேகும்’ என்பது வேம் என இடைக்குறைந்தது. நம்பிக்கைக் கட்டு - நம்பிக்கையால் உண்டாகிய பிணிப்பு. பொறிகள் - மெய் வாய் கண் மூக்குச்செவி என்னும் புறக் கருவிகள் ஐந்தும், இங்கே அக் கருவிகளின் வாயிலாக எழும் ஐந்து அவாக்களை உணர்த்தின. ஒத்த நன்குமதிப்பு - மற்றவர்களைப் பாராட்டுவ தோடு ஒப்பப் பாராட்டுகை. (பக். 77) பணி - தொண்டு. ஒழுகு - நட. ‘நேசி’ நேசன் என்பதற்குப் பெண்பால். வெகுண்ட - கோபித்த. மாறாடாதே - எதிர்பேசாதே. எவலாளர் - ஏவிய வேலை செய்வோர். நயமாக - இனிதாக. செருக்கு - இறுமாப்பு. இல்லக்கிழத்தி - வீட்டிற் குரியவள், அஃதாவது தலைவி. அறிவுரைகள் - (வடமொழியிற்) புத்திமதிகள், அறிவு மொழிகள்.) (பக். 78) மலையமாமலை - பொதியமலை. சந்தனச் செடி கள் வளர்வதற்கு ஏற்ற இடம் பொதியமாமலைப் பக்கமே யாதலால், அவ் விடத்தினின்றும் பெயர்த்தெடுத்து வேறிடத்திற் கொண்டுபோய் நட்ட அச் செடிகள் பிழைத்து வளர்தல் அரிது; அதுபோற் சகுந்தலையின் இயற்கைக்கு இசைந்த இடந் துறவோர் இருக்கையேயாக, இப்போத தனைப் பிரிந்து பொய்யும் புரட்டும் மலிந்த அரசர் அரண்மனையிற் சென்று தான் உயிர்வாழ்தல் இயலாதென்று, தன்னை யறியாமலே தனக்கு இனி நேரும் நிகழ்ச்சியினைச் சகுந்தலை முன்னறிவித்து விட்டாள் என்க. துஷியந்தன் பெருந்தன்மை யுடையனாகலின் அதற்கு ஏற்ப அவன் நடத்தும் அரசியற் பகுதிகளுஞ் சிறந்தனவா யிருக்கு மென்றும், அப் பகுதிகளில் இடர்ப்பாடு உண்டாங் கால் அதனை ஆராய்ந்து நீக்கத்தக்க அறிவாற்றல் சகுந்தலைக்கு உண்டென்றுங் காசியர் கூறுதல் கொண்டு, அஞ்ஞான்றிருந்த இந்திய மாதர்கள் அரசியற் றுரைகளையும் ஏற்று நடத்தத்தக்க அறிவாற்றல் வாய்ந்தவராய் இருந்தமை தெளியப்படும். கீழ்த்திசையிற் றோன்றும் இளஞாயிறு இராக்காலத்து இருளைப் போக்கி ஒளியைத்தந்து எல்லா வுயிர்கட்கும் அறிவையும் இன்பத்தையுந் தருதல்போலச், சகுந்தலையின் பாற் றோன்றும் மகனும் மாற்றரசராற் சூழ்ந்த இடரை நீக்கித் தன்கீழ் வாழ்வார்க்கெல்லாம் அறிவையும் இன்பத்தையும் தருவன் என்றார். தாழ்த்தால் - தாமதித்தால் (வடசொல்), நீட்டித்தால். பொறிக்கப்பட்ட - அடையாளமாகச் செதுக்கி வைக்கப் பட்ட. (பக். 79) இவர்தல் - ஏறுதல். போர்மறவன் - போர் வீரன். குடில் - சிறுவீடு. (பக். 80) சிவம் - நலம், இன்பம். உலகத்திற்கும் உயிர் களுக்குந் தலைவனாய் விளங்கா நின்ற முழுமுதற் கடவுள் நன்மையே இன்பமே உருவாய்க்கொண்டு விளங்கலின், அவன் இவ் விந்தியநாட்டின்கண் இருந்த பண்டைச் சான்றோராற் ‘சிவன்’ என்னுஞ் சிறப்புப் பெயரால் அழைத்து வழுத்தப்படு வானாயினன்; காமம் வெகுளி மயக்கம் என்னும் முக் குற்றங்களின் வயமாகிப் பிறவிப் பெருந் துன்பத்திற் கிடந் துழலும் மக்கள் அத்துன்பத்தின் நீங்கி, மாறாப் பேரின்பத்தையே பெற விழைகுவராதலாலும், அப் பேரின்பமானது வெறெங்கும் பெறப்படாதாய் இறைவனிடத் திருந்தே பெறக்கடவதா யிருத்தாலாலும், அவ்விறைவனும் இன்ப வடிவினனாயே விளங்குகின்றனனென்று அவனியல்பை நன்குணர்ந்த ஆன்றோர்களும் அவர் அருளிச்செய்த மெய்ந்நூல்களும் நுவலுதலாலும், இன்பத்தைப் பெறுதலிலேயே அவியாப் பெருவேட்கை யுடைய மக்கள் அவ் வின்பப் பெயரால் அவ் விறைவனை அழைப்பின் அவரது நினைவு இன்பத்தின் கண்ணதாயே நிற்குமாதலாலும், இறைவனைக் ‘கடவுள்’ என்று பொதுப்பெயரான் அழையாமற் ‘சிவன்’ என்று சிறப்புப் பெயரான் அழைத்தலே பண்டைச் சான்றோர்க் கெல்லாம் ஒத்த முடிபாய் இருந்தது; அவ் வழி பிழையாது வந்த காசியபரும் இறைவனருளால் வரும் இன்பஞ் சகுந்தலைக்குப் பெருகல் வேண்டுமென்னுங் கருத்துப் பற்றியே, வேறு பெயரால் வாழ்த்தாமற் “சிவா°தே” அல்லது ‘சிவம் பெருகட்டும்’ என்னுஞ் சிறப்புப் பெயரால் வாழ்த்தினர். மரச்செறிவு - மரநெருக்கம். வெறிதாய் - வெறுமையாய். ஐந்தாம் வகுப்பு (பக். 81) இப்போது துஷியந்த மன்னன் தன் அரண் மனையின் உவளகத்தில் ‘அமிசபதிகை ’ என்னும் நங்கையார் பாடிய ஓர் இசைப்பாட்டைக் கேட்டு, அதன் கருத்துத் ‘தன்னாற் காதலிக்கப்பட்டார் ஒருவரை ஒரு நொடிப்பொழு தேனும் மறந்துறையலாமோ” என்பதாக இருத்தலை ஆராய்ந்து மனக்கலக்க முற்றவனாய் இருக்கின்றான். இதனால் துருவாசர் இட்ட சாபமானது அரசனது நினைவை மறைத்துவிட்ட தெனப், பின் நிகழும் நிகழ்ச்சிக்கு முன் ஒரு காரணம் நாடக ஆசிரியர் குறிப்பிக்கின்றார். அரசன் இவ்வாறிருக்கையிற் காசிபர் மாணவருங் கௌதமி அம்மையாருஞ் சகுந்தலையை உடன்கொண்டு அரசன் முன்னிலையில் வந்து சேர்கின்றனர். அரசன் அவர்களைப் பணிவுடன் வரவேற்றுச் சகுந்தலையை ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் கூறியது கேட்டு வியப்படை கின்றான். சகுந்தலையைத் தான் கானகத்தில் மணந்த நிகழ்ச்சியை அரசன் முற்றும் மறந்து, அவளைப் பிறன் ஒருவன் மனையாளாகவே நினைந்து அவளை ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கின்றான். உடனே சகுந்தலை அரசன் கூறிய சொற்களைக் கேட்டு மனம் பொறாளாய், அவன் தன்னை மணந்துகொண்ட ஞான்று தன் கை விரலில் இட்ட கணையாழியைக் காட்டுதற்கு அதனைத் தடவிப் பார்க்க, அதனைக் காணாமையால் உளம் நடுங்கி, அவன் நினைவு கூர்தற்குத் தக்க வேறு சில முன் நிகழ்ச்சிகளை எடுத்து மொழிகின்றாள். அரசன் அவற்றாலும் நினைவுகூர மாட்டானாய்ச் சகுந்தலையை இகழ்ந்து பேச, அவள் கடுஞ்சினங் கொண்டு அவனை வைதுவிட்டு அழுகின்றாள். அவளுடன் வந்தவர் அவளை அரசன் எதிரிலேயே விடுத்து விட்டுத் தாம் காசியபர் உறையுளுக்குத் திரும்பி விட்டனர். சகுந்தலையின் ஆற்றாப் பெருந்துயர் நிலையினை அரசன்றன் புரோகிதர் கண்டு உளம் நைந்து, மகப்பேறு வரையில் அவளைத் தமது இல்லத்தில் வைத்துப் பாதுகாக்க முன்வந்து தமது கருத்தை அரசனுக்குத் தெரிவிக்க, அரசனும் அதற்கு ஒருப்படுகின்றனன். அதன்பிற் புரோகிதர் சகுந்தலையைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில், திடீரென வெறு வெளியில் ஒரு பெண் உருத் தோன்றிச் சகுந்தலையைக் கொண்டுபோய் விட்டது. இதனைப் புரோகிதர் அறிவிக்க அறிந்து அரசன் ஐயமும் மனக்கலக்கமும் மிக்கோனாய்த் தன் பள்ளியறையுட் சென்று, படுக்கையிற் கிடந்து வருந்திக் கொண்டிருக்கின்றான் என்னும் அளவும் இவ் வைந்தாம் வகுப்பினுள் நடைபெறுகின்றது. ‘விதூஷன்’ - 169 -ஆம் பக்கத்தில் எழுதியிருக்கும் உரைக்குறிப்பைக் காண்க. இசைக்கழகம் - சங்கீதம் நடக்கும் மன்றம். பண் - இசைப்பாட்டு. (பாட்டு) விழுநறவு...............உரையாய்? இதன் பொருள் : விழுநறவு வேண்டி - சிறந்த தேனைப் பெற விரும்பி, விரி மா இணரில் பருகி - விரிந்த மாமரத்தின் பூங்கொத்திலிருந்து அதனைக் குடித்து, செழுமுளரி யிடை வறிது சேரும் இளவண்டே - செழுமையான தாமரை யினிடத்து வீணே சென்று அடையும் இளைய வண்டே, செழுமுளரி யிடையிருந்து செழுவிய தாமரையின்பாற் சேர்ந்திருந்து கொண்டு, திகழ்மாவை நீ ஓர்பொழுதும் மறந்து உறைகுவது - விளங்கா நின்ற மாமலரினை நீ ஒரு நொடிப் பொழுதேனும் மறந்துவிட்டு இருத்தல், பொருந்துமோ உரையாய் - நினக்கு இசைவதாகுமோ சொல்லாய் என்றவாறு. முளரி - முட்களே சாளரத்திலே உடையது, அஃதாவது தாமரை, முள் அரி எனப் பிரிக்க, அரி - உட்டுளைப்பொருள். வண்டின்மேல் வைத்துப் பாடிய இச் செய்யுட் பொருள், சகுந்தலையின்பாற் காதலின்பத்தை நுகர்ந்து, பின்னர் அவளை அறவே மறந்து தன் அரண்மனையில் வறிதே யிருக்குந் துஷியந்த மன்னனைக் குறிப்பால் உணர்த்திற்று: மாமலர் சகுந்தலைக்கும், வண்டு அரசனுக்கும், முளரி அவன் வறிதிருக்கும் அரண்மனைக்குங் குறிப்புவமைகளாய் நின்றன. புன்முறுவல் - சிறுநகை. ‘வசுமதி’ துஷியந்தனுக்கு முதன் மனைவி; இவளுக்கு இந் நாடக நிகழ்ச்சியில் ஏதொரு தொடர்பும் இல்லாமையின், இவள் இங்கே தற்செயலாய்க் குறிப்பிடப்பட்டான் என்க. ‘அமிசபதிகை’ என்பான் பாடியும் ஆடியும் அரசனை உவப்பிக்குங் ‘காதற் பரத்தைய’ருள் ஒருத்தி; இங்ஙனம் ஒருவற்கு உரிமையாகக் காதற்பரத்தையர் சிலர் பலர் அவன்றன் இளமைக் காலந்தொட்டே இருமுது குரவரால் வளர்க்கப்பட்டு வைக்கும் வழக்கம் பண்டைக் காலத் திருந்தமை “காதற்பரத்தை எல்லார்க்கும் உரித்தே” என்னும் இறையனாரகப்பொருள் சூத்திரத்திற்கு ஆசிரியர் நக்கீரனர் உரைத்த உரையுட் காண்க. (பக். 82) அரம்பை -தேவப்பெண். பற்றப்பட்ட - பிடிக்கப்பட்ட. இம்மையில் இன்பத்தை நுகர்பவனுங் கூட, இடை யிடையே மனங்கலங்கித் துன்புறுவது என் என்றால், முற் பிறவியில் நிகழ்ந்த துன்பத்தைப் பற்றிய நினைவு தன்னுள்ளத்திற் பதியப்பெற் றிருத்தலினாலேதான் என்று அரசன் எண்ணு கின்றான். துர்வாசர் இட்ட சாபத்தால் அரசன் சகுந்தலையை முற்றும் மறந்துவிட்டானாயினும், அவள்மேல் தான்கொண்ட காதலுணர்வு மட்டும், பழம் பிறவி நிகழ்ச்சி போல், தன் ஏனை நினைவுகளின் ஊடே ஊடே புகுந்து தன்னுள்ளத்தைக் கலக்குதலை அறியப் பெற்று இங்ஙனங் கருதுவானாயினன். நிலைபேறு - அழியாது நிலைத்து நிற்றல். சார்பு - பற்று. திண்ணம் - மெய்ம்மை. துயரம் - (வடசொல்) கிலேசம். ‘கஞ்சுகி’ என்போன் அரசன் மகளிர் உறையும் உவளகத்திற் காவலனா யிருப்பவன். ஆண்டின் முதிர்ந்தாரே அங்கு வைக்கப் படுதலின், இவனும் இங்கே தள்ளாத கிழவனாகச் சொல்லப்படுகின்றான். உண்மை பேசுதலும், எந்த அலுவலையுந் திறமையாக முடிக்கும் ஆற்றலும் இவனுக்குரிய இயல்புகள். ‘கஞ்சுகம்’ என்பது நீண்ட மெல்லிய சட்டை; இவன் அஃது அணிந்திருத்தல் பற்றிக் கஞ்சுகி’ எனப் பெயர்பெற்றான். வியப்பு - (வடசொல்) அதிசயம். அறம் கூறும் இருக்கை - அரசன் முறை செய்யுங்கால் அமர்ந்திருக்குந் தவிசு, வடநூலார் இதனைத் ‘தருமாசனம்’ என்பர். (பக். 83) ‘சேடன்’ என்பது ஆயிரந் தலையுள்ள தொரு பாம்பென்றும், அது தன் ஒரு தலையில் இந் நிலவுலகைத் தாங்குகின்ற தென்றும் புராணங் கூறும். உண்மையால் நோக்குங்கால், இந் நிலவுலகையும் இதனைப் போல் எண்ணிறந்தனவாயுள்ள உலகங்களையுந் தோற்றுவித்து நடத்துஞ் சுழன்ற இயக்கமாதிய ‘குண்டலிசத்தி’யே இங்ஙனம் ‘ஆதிசேஷன்’ என்னும் பாம்பாக உருவகப் படுத்தப்பட்டதென்பது புலனாகாநிற்கும். பொறை- சுமை. கடமை - வரி. அஞ்ஞான்றை விளை பொருள் வருவாயில் ஆறில் ஒரு கூறு வரியாகப் பெறுவது அரசரது வழக்கம்; அஃது இஞ்ஞான்றை வரியினுஞ் சால மிகுந்ததேயாகும். அலுவல் - வேலை. நண்பகல் - நடுப்பகல்: நன் என்பது நண் எனத் திரிந்தது. சுருதி - செவியாற் கேட்குப்படுவது; பண்டைநாளில் வடநாட்டினர் தமது வடமொழியை எழுத்திலிட்டு எழுதும் வகை தெரியாதவராகவின், தம் முன்னோர் நூல்களைத் தம் ஆசிரியர் நெட்டுருச்செய்து வாயாற்சொல்ல, அவற்றைத் தாம் காதாற் கேட்டுத் தாமும் அவர்போல் நெட்டுருச் செய்தல் நீண்டகால வழக்கமாய்ப் போந்தது. அதனால் அவர் அறிவுநூல்கள் ‘சுருதி’ என் றழைக்கப்படன. வரிசைகள் - ஒழுங்குகள், சிறப்புகள். (பக். 84) வேத்திரவதி - பிரப்பங்கோலந் தாங்கியவன், காவலராயிருப்பவர் பிரப்பங்கோரைத் தாங்குதல் மரபு துஷியந்தன் அரண்மனையில் ஆண்பாலாரே யன்றிப் பெண் பாலாருங் காவலராய் இருந்தனரென்பது இதனால் அறியப் படுகின்றது; வேத்திரம் (வடசொல்) - பிரம்பு; ‘பிரதீகாரி’ என்பதும் இவட்குப் பெயர். விழைந்தது- விரும்பியது. பழையகாலத்திருந்த குடைகள் நீண்ட காம்புகளை யுடையன வாகையால், அவவை தம்மைப் பிடிப்பவனுக்கு வருத்தத் தினைத் தரும்; அதுபற்றியே அரசன் தனது அரசியலின் வருத்தத்தைக் குறித்தற்கு அத்தகைய குடையை உவமை காட்டினான். ‘வைதாளிகன்’ என்போன் ஒருநாளின் பல கூறுகளையும் அவற்றில் அரசர் செய்தற்குரிய கடமைகளையும் அறிவித்து அரசனைப் புகழ்ந்து பாடுவோன்; அரசனைக் காலையிற் பாடித்துயில் எழுப்புதலும்இவற்குரிய கடமைகளில் ஒன்று. (பாட்டு) வெங்கதிரின்..........யிதுவே. இதன் பொருள் : வெம்கதிரின் வெப்பம் -வெவ்விய ஞாயிற்றின் வெப்பத்தை, விரிதலையில் தாங்கி - தமது விரிந்த தலையிலே தாங்கிக்கொண்டு, கீழ் தங்குவோர்க்குத் தண்நிழல் செய்மரம்போல் - தம் அடியில் வந்து தங்குவார்க்குக் குளிர்ந்த நிழலைத் தருகின்ற மரங்களைப் போல, இங்கு நின் இன்பம் குறியாது - இவ்வுலகத்தே நீ நுகர்தற்குரிய இன்பங்களை ஒரு பொருளாகக் கருதாமல், குடிகட்கு - நின் குடிமக்களின் பொருட்டாக, பொங்குதுயர் கொளும் - மிகுந்த துன்பத்தை யடையும், நின் பொலிவாழ்க்கை இது - நினது சிறப்புமிக்க அரசவாழ்க்கையின் தன்மை இப்படிப் பட்டதாயிருக்கின்றது: ஏ: அசை. (பாட்டு) ஒறுக்கும்வலி...................யண்ணவே. (பக். 85) இதன் பொருள் : ஒறுக்கும் வலி உடைமையால் - தண்டித்தற்குரிய ஆற்றல் இருத்தலால், உண்மைநெறி திறம்புநரை - மெய்வழியினின்றுந் தவறி நடப்போரை, மறுக்கின்றாய் - நீ அதனினின்றும் நீக்குகின்றாய், பிறக்கின்றாய் - வலியிலாரைப் பாதுகாக்கின்றாய். மாறுபடுவோர் வழக்கை - ஒருவர் ஒருவரொடு மாறுபாடுறுவாராய்க் கொண்டுவரும் வழக்கை, அறுக்கின்றாய் - அஃது அறத்தின்பாலது இஃது அல்லாதது என்று ஆராய்ந்து வரையறுக்கின்றாய், அரும் செல்வம் உறுவழிச் சேர் கேள் போலாது - ஒருவர்க்குப் பெறுதற்கரிய செல்வம் வந்தடைந்த காலத்து அவர்பால் வந்து சேரும் உறவினர் போலாமல், அறக்கிழமை குடிகள்மேல் அருள்கின்றாய் அண்ணலே - அறம் (தருமம்) ஆகிய உரிமை யினை நின் குடிமக்கட்கு அளித்து அருள் செய்கின்றாய் பெருமானே என்றவாறு. செல்வம் உள்வழி ஒருவர்பால் வந்து சேர்தலும், அஃது அற்றவழி அவரைவிட்டு நீங்குதலுஞ் செய்யும் உறவினர் அறம் உடைய ராகாமையின், அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்யும் அறம் உடையனான அரசற்கு அவர் உவமையாகாமை தெரித்தார், ‘கேள்’ என்பது சொல்லால் அஃறிணையும் பொருளால் உயர் திணையுமாம்; சில பெயர்ச் சொற்கள் இவ்வாறு வருதல் “குடிமையாண்மை” என்னுஞ் சூத்திரத்திற் காண்க (தொல்காப்பியம், சொல். 54.) வேள்விக்குரிய ஆ - (வடமொழி) யாகபசு. அலைக்கப் படுதல் - துள்புறுத்தப்படுதல். பலதிறம் - பலவகை. உவந்து - மகிழ்ந்து. (பக். 86) தனித்த கானக வாழ்க்கையி லிருந்தவர்களாத லால், மக்கள் நிறைந்த பட்டின வாழ்க்கையானது, தீ சூழ்ந்த இல்லம்போற் காசியபமுனிவரின் மாணவர்க்குத் தோன்ற லாயிற்று. எனை - மற்ற. இயங்குவோன் - நடப்போன். உவர்ப்பு - அருவருப்பு. மகளிர்க்கு வலக்கண் துடித்தால், அஃது அவர்க்குப் பின் வருந் தீங்கினை உணர்த்துங் குறியாம் என்பர். மாட்சிமை - பெருந்தன்மை. (பக். 87) அந்தணர் - அருள் உடைய முனிவர், புனல் - நீர். முகில் - (வடசொல்) மேகம். தொழில்துறை - தொழில் வகை. கட்புலனாகாத - கண்ணுக்குத் தெரியாத. குறி - அடையாளம். (பக். 88) உன்னிப்பு - (வடசொல்) கவனம். கோரிய - விரும்பிய: இச்சொல் ‘கோறிய’ என்று எழுதப்படுமானாற் கொன்ற என்று பொருள்படும். பொருள் உடைமொழி - ஒரு பொருளைக் குறிக்குஞ் சொல்; ஒரு பொருளைக் குறியாத சொற்கள் என்பன ‘மலடிமகன்,’ ‘முயற்கொம்பு,’ ‘யாமைமயிர்,’ போல்வனவாகும். ‘மந்திரம்’ என்பது தவத்தால் மிக்கவர் கூறும் ஆற்றலுடைய சொல்; ஆற்றல் -வல்லமை; “ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும், எண்ணிற் றவத்தான் வரும்” என்று ஆசிரியர் தெய்வத்திருவள்ளுவர் அருளிச் செய்தலின், பிறரை வாழ் வித்தலுந் தாழ்வித்தலும் முனிவரர் சொல்லிலே அமைந்து கிடப்பனவாகும்; ஆதலின் அவர்தாம் நலமுடையராயிருத்தல் சொல்லல் வேண்டாவென்பது. (பக். 89) இந் நிலவுலகில் நடக்கும் மணங்கள் பெரும் பாலனவற்றிற் சிறந்த ஓர் ஆண்மகனுக்குச் சிறந்த ஒரு பெண் மகளுஞ், சிறந்த ஒரு பெண்மகளுக்குச் சிறந்த ஓர் ஆண்மகனும் அமையாமல், மாறுபட்ட சேர்க்கையே அமையக் காண்டலின், அது பற்றி மக்களைப் படைத்த நான்முகக்கடவுள் உலகத்தவ ராற் பழிக்கப்படுவானாயினன்; ஆனாலுந், துஷியந்தனும் அவனுக்கு எல்லாவாற்றானும் ஒத்த சகுந்தலையும் ஒருங்கு புணர்க்கப்பட்டமையின் இப்போது அவனுக்கு அப் பழிப்பு நீங்கியதென்று காசியபர் சொல்லி விடுத்தனர். கரு - சூல். மேதகவு - மேம்பாடு. இதன்திறத்து - இதன் பக்கத்தில். (பக். 90) செருக்கு - களிப்பு. (பாட்டு) வடுவறு................கில்லேனே. இதன் பொருள் : வடுஅறு - குற்றம்அற்ற, பேர்எழில் வயங்க - மிகுந்த அழகு விளங்க, இவ்வயின் வரும் - இவ்விடத்தே வந்திருக்கும், கொடிபுரை உருவினாள் தன்னைக்கூடி - பூங்கொடி போல் துவளாநின்ற உருவத்தினையுடைய இப் பெண்ணைப் புணர்ந்து, நான் கடி மணம் அயர்ந்ததாக் கருதலாமையால் - யான் புதியதொரு மணத்தைச் செய்ததாக எண்ணக்கூடாமையால், விடியலில் பனிஅகத்துள்ள மெல்மல்லிகை படிதராது உழிதரும் பைம் சிறைவண்டு என - விடியற்காலத்தே பெய்யும் பனியினை உள்ளேயுடைய மெல்லிய மல்லிகை மலரின்கண்ணே சென்று அமர்தலைச் செய்யாது சுழன்று கொண்டிருக்கும் பசிய சிறையினை யுடைய ஒரு வண்டைப்போல, தொடுதலும் விடுதலும் துணிய கில்லேன் - இவளைத் தொடுதலையாவது விட்டு விடுதலை யாவது துணிந்து செய்யமாட்டேனாய் இருக்கின்றேன் என்றவாறு, எ : அசை. மலர்ந்த மல்லிகை மலரின்கட் டேனைப் பருகுதற்கு நச்சிச் சென்ற ஒருவண்டானது, அதன் தேனை மறைத்துக் கொண்டு இருக்கும் பனியைப் பார்த்து, அம் மலரின் கட்சென்று படியாதாய் அதனைச் சூழ்ந்து சூழ்ந்து பறக்குமே யன்றி அதனைவிட்டுச் செல்லாது; அதுபோல, அழகிற் சிறந் தாளாய்த் தோன்றுஞ் சகுந்தலையை மனையாளாக ஏற்றுக்கொள்ளலாம் என்று தான் விரும்பினாலும், அவள் கருக்கொண்டிருக்குங் குறிகள் காணப்படுதலால் அவளை ஏற்றுக்கொள்ளக் கூடாமலும், அழகிற் சிறந்தவளாயுங் கருக்கொண்டிருப்பவளாயும் உள்ள ஒரு மாதரை இந் நிலையில் அகற்றிவிடக் கூடாமலுந் தன் உள்ளம் வருந்துதலை அரசன் உணரலானான் என்க. சகுந்தலை கருக் கொண்டிரா விட்டால் அவளைக் கன்னிப்பெண்ணாக நினைந்தும், அவளுடன் வந்தார் சொல்லிய கதையினை நம்பியும் அவளைத் தன் மனையாளாக ஏற்கலாம்; மற்று அவளோ கருக்கொண் டிருத்தலால் அவள் பிறன்மனையாளாக இருக்கலாம்; அவ்வாறாயிற் பிறன் மனையாளை ஏற்பது தனக்கு ஆகாது என்றெண்ணிய துஷியந்தனது நேர்மை பாராட்டற்பால தொன்றாம் என்பது. (பக். 91) குறி - உறுதியான எண்ணம். தாழ்ப்பர் - (வடசொல்) தாமதிப்பர். வாளா-சும்மா. கருக்கொண்ட குறிகள் - சூல்கொண்டதற்குரிய அடையாளங்கள். சகுந்தலை தமது உடம்பாடு பெறாமலே துஷியந்தனை மணந்து கொண்டும்,அதனைக் குற்றமாக நினையாது அதனை யொப்புக் கொண்ட பெருந்தன்மையுடையரான காசியப முனிவரை, அரசன் சகுந்தலையை ஏற்றுக் கொள்ளாமையால் இழிவுபடுத்தினவனாயினன் என்று அவர் தம் மாணவர் வருந்திச் சொல்லித், தம் ஆசிரியரை இழிவுபடுத்திய அவ் வரசனைத் தாமும் இழிவுபடுத்தல் வேண்டி, அவனைத் திருடனாகக் கூறுகின்றார். காசியபர் இல்லாத காலத்தில் அவர்க்குரிய பொருளான சகுந்தலையைக் கவர்ந்தமையா அரசன் கள்வனாயினன்; அவன் கவர்ந்த பொருளை மீண்டும் அவற்கே ஒப்படைத் தலாற் காசியபர் கள்வற்கும் உதவி செய்தவராயினர்; ஆகவே, காசியபரின் உள்ள மேம்பாடும், அரசனின் உள்ளக் குறைவும் நன்கெடுத்துக் காட்டி அம் மாணவர் அவனை நன்கு இகழ்ந்தமை காண்க. (பக். 92) தீர்க்கப்படுதல் - முடிவு செய்யப்படுதல். உடம்படுமொழிகள் - ஒருவரைத் தம் கருத்துக்கு இசைவிக்கச் சொல்லுஞ் சொற்கள். வடு - நீங்காக் குற்றம். சக்கராவதாரம் - இந்திரனுக்கு உரித்தான ஓர் இறங்கு துறை; ‘அவதாரம்’ என்பது நீரில் இறங்குதல் எனப் பொருள் தருவது, இஃது அத்தினாபுரத்திற்கு அருகிலுள்ள ஓர் யாற்றின்கண் உள்ள படித்துறைப் பெயராகக் காணப் படுகின்றது. ‘சசிதீர்த்தம்’ என்பது சக்கராவதாரத்துக்கு அருகில் இந்திரன் மனையாளான சசிதேவிக்கு உரிய படித்துறை. சூழ்ச்சி - (வடசொல்) உபாயம். (பக். 93) எடுப்புப்பிள்ளை - (வடமொழி) சுவீகார புத்திரன். விலங்கு - (வடசொல்) மிருகம்; நெடுக்காயிருக்கும் மக்கள் வடிவு போலாது, குறுக்காயிருக்கும் வடிவுபற்றி விலங்கெனப் பெயர் பெற்றன்; விலங்கு என்பதன் முதனிலைப் பொருள் ‘குறுக்காயிருப்பது’ என்பதேயாகும். குயிற்பெடைகள் தாம் இடும் முட்டைகளை அடை காக்கத் தெரியாவாகலால், அவை தம் முட்டைகளைக் காக்கையின் கூடுகளில் இடக், காக்கைப் பெடைகள் அவற்றையுந் தம் முட்டையென்றே கருதி அடைகாத்துக் குஞ்சு பொரித்துப், பொரித்த குயிற்குஞ்சுகளுக்குத் தங் குஞ்சுகளோடு ஒக்கச் சேர்த்து இரைகொடுத்து வளர்த்தாரையும், வளர்த்தபின் அக் குயிற்பிள்ளைகள் காக்கையை விட்டுப் பறந்தோடிப் போதலையுந் தோப்புகளில் இன்றும் பார்க்கலாம். அரசன் எடுத்துக் காட்டிய இவ் வுவமையின் வாயிலாக, மேனகைக்குப் பிள்ளையாகப் பிறந்துஞ் சகுந்தலை அவனால் வளர்க்கப் படாமற் காசியபரால் வளர்க்கப்பட்டு வளர்ந்த குறிப்பும் ஈண்டு நாடக ஆசிரியர் உய்த்துணர வைத்தல் காண்க. (பக். 94) இணங்க - இசைய. அறக்கடமை -அறம் ஆகிய கடமை. தான்கீழ் இருப்பது தெரியாவாறு மேலே புற்களால் மூடப்பட்டிருக்கும் ஒரு பாழ்ங்கிணறு, தான் இருக்கும் வழியே வரும் விலங்குகளையும் மக்களையுந் தன்கட்படு வித்துக் கொல்லுதல் போல, மேலே அறஞ் செலுத்துவது போற் காட்டித் தன்னைத் தன் மாயத்திற் படுவித்தான் என்று சகுந்தலை அரசனைச் சினந்துரைத்தாள். கரவடம் - (வடசொல்) வஞ்சகம். (பாட்டு) மறைவிற்...........................முறித்திட்டதே. இதன் பொருள் : மறைவில் செறிந்த - பிறர் எவரும் அறியாமல்யான் இவளைக் கூடுதற்கு ஏதுவாயிருந்த, காதல்பெரும் கிழமை - பேரன்பாகிய பேர் உரிமையினை, மனக்கொளாது - என் மனதின்கட் பதியக் கொள்ளாதபடி, குறையும் நினைவால் - குறைந்துபோன நினைவால் அஃதாவது மறதியால், கொடுமனம்வல்ல என்று எனைக் குறித்து - நிலைகோணிய உள்ளங் கடுமையாய்ப் போன என்னை உறுத்து நோக்கி, பிறைபோல் புருவம் முரிய-பிறையைப் போற் புருவங்க ளானவை வளைய, பெரு விழிகள் சிவக்க - பெரிய கண்கள் சிவந்த நிறத்தினையுடைய, சினம் முறையே மிகுதல் - கோபமானது இவட்கு நீதியாகவே அல்லது மேலுக்குமேல் மிகுவது, மதன்வில் இரண்டாய் முறித்திட்டது - காமவேள் கையிற் பிடித்த கருப்புவில்லை இரண்டுபட ஒடித்து விட்டது என்றவாறு. எ : அசை. துஷியந்தன் தன்னை எவரும்அறியாதபடி யாழோர் மணம் (கந்தருவமணம்) செய்துகொண்டான் எனச் சகுந்தலை யும் அவளுடன் வந்தாருங் கூறிய கதை உண்மை யாயும் இருக்கலாம் என்று அரசன் ஐயுற்று நிற்றலின் “மறைவிற் செறிந்த காதற் பெருங்கிழமை” என்றான்; அதனை நினைவு கூரமாட்டாது மறந்த தன் மனங் கல்லினும் வல்லென்றிருப்ப தாகவும் எண்ணி வருந்துகின்றான். சகுந்தலையின்பாற் காணப்பட்ட சினமானது காமவேளின் கருப்புவில்லை இரண்டாக முறித்துவிட்டதென்றது, இனி எவரும் அறியாத படி காதலரை யாழோர் மன்றவிற் புகுத்துங் காமவேளின் தொழில் இனி நடைபெறாதொழிக வென்று அரசன் கோரினமை புலப்படுத்தியது. பலரும் அறிய மணஞ் செய்யப்பட்டிருந்தால் இங்ஙனந் தான் அவளை மறுத்தற்கு இடம் வாய்த்திராதென்பது உம் அரசன் இதனாற் குறிப்பித்தா னாயினன். செறிதல் - கூடுதல். ‘கொடுமை’ வளைவுப் பொருளையும் உண்ர்த்துமாதலால் ‘நிலைகோணிய’ என்று பொருள் உரைக்கப்பட்டது. முரிதல் வளைதல். சகுந்தலையின் இரண்டு புருவங்களும் பெருஞ் சினத்தால் மேல்வளைந்து நிற்குந் தோற்றமானது, காமவேளின் கருப்புவில் இரண்டாக முறிந்து கிடத்தலை யொத்திருந்தது என்றார்; இரண்டு புருவங்களுக்கும் இடையே இடுக் குண்டாகலின், அஃது அவனது வில் முறிந்த நடுவிடத்தைக் குறிப்பதாயிற்று என்க. யாண்டும் - எவ்விடத்தும். வேசி - தான் வேண்டியபடி நடக்கும் விலைமாது. முன்தானை - தானையின் முன் அஃதாவது ஆடையின்முனை : இது சொன்னிலைமாறல். தேறப்படுதல் - தெளியப்படுதல். நட்பு - நேசம். (பக். 95) சார்ங்கரவன் தன்னை இகழ்ந்து பேசிய சொற்களைக் கேட்ட அரசன் மீண்டுஞ் சகுந்தலையைக் கள்ள நெஞ்சம் உடையளாகவும், அவள் சொற்களில் நம்பிக்கை கொண்டு தன்னையிகழ்தல் சாலாததாகவுங் கூறச் சார்ங்கரவன் மறுபடியும் அரசனை ஏளனஞ் செய்வானாய்ப், பிறந்ததுமுதற் கள்ள மின்னதென்றே அறிவிக்கப்படாதவர் சொற் பொய்யும், பிறந்தது முதற்றம் பகைவரை அழித்தற்குப் பலவகையான கள்ளச் சூதுகளையும் ஒரு கல்வியாகக் கற்பிக்கப்படுகின்ற அரசர்களின் சொல்மெய்யும் ஆதல், ஆ! நன்று! நன்று! என்றானென்க. ஊதியம் - (வடசொல்) இலாபம். நிரயம் - நரகம். பரிவு - துயர். (பக். 96) தூர்த்தை - காமம் மிக்கவள்; முதியோர் கருத்தின்வழி நடவாது தானாகவே அரசனைக் கூடினமை பற்றிச், சார்ங்கரவர் இங்ஙனஞ் சகுந்தலையைச் சினந்து விளித்தனர். தன்னெடுத்துமூப்பு - தனது அகந்தையாற் செய்த தலைமை. வழுவிய தவறிய. தூயது - (வடசொல்) பரிசுத்தமானது. வெண்திங்கள் - வெண்மதி.செஞ்ஞாயிறு - சிவந்த கதிரவன். ஐம்பொறிகள் - மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாக நிகழும் ஐந்து அவாக்கள். ஒருப்படாது - உடன் படாது. (பக். 97) பிள்ளைப்பேறு - கருவுயிர்ப்பு. அரசடையாளம் - அரசனுக்குரிய அடையாளம்; அஃதாவது ஒருவனது வலக்கையில் உள்ள வட்ட (சக்கர) வடிவான ஒருவரி; அது காணப்படுமாயின் அவன் அரசுபுரிவான் என்று உள்ளங்கை வரி நூல் (யீடஅளைவசல) சாற்றும். குரவர் - ஆசிரியர்; குரு. பூதேவி (வடசொல்) - நிலமகள். (பக். 98) ஓலம் - அழும் ஒலி. ‘அப்ஸர°தீர்த்தம்’ என்பது துஷியந்தன் நகருக்கு அருகாமையில் உள்ளதொரு குளம்; அதன்கண் அரம்பைமாத நீராடுதல் பற்றி அப் பெயர் பெற்றது; சகுந்தலை அதன் பக்கமாய் அழுதுகொண்டு செல்கையில், அதன்கண் நீராடிக் கொண்டிருந்த மேனகை என்னும் அரம்பை மாது அங்ஙனம் அழுதுகொண்டு செல்பவள் தன் மகள் சகுந்தலையே யென உணர்ந்து அவளை எடுத்துச் சென்றாள் என்க. மேனகை தேவமாதானதால் ஒளிவடிவுடையள் எனப் பட்டாள். இறும்பூது - (வடசொல்) ஆச்சரியம். சான்று - (வடசொல்) சாட்சி. ஆறாம் வகுப்பு (பக். 99) அரசன் மைத்துனனான கொத்தவாலும் அவனுடன் இரண்டு காவலாளருமாக மூவரும் சேர்ந்து, ஒரு செம்படவனைப் பிடித்து, அவன் கைகளை இறுக்கிக்கட்டி நடத்திக் கொண்டு வருகின்றார்கள். அவ்வாறு அவன் பிடித்துக் கட்டப் பட்டு வருதற்குக் காரணம், அவன் அரசன் பெயர் செதுக்கிய ஒரு கணையாழியை விற்க வந்தமையாற் கள்வன் என்று கருதப் பட்டமையேயாம். செம்படவனோ தான் கள்வன் அல்லனென்றுந், தான் பிடித்த ஒரு மீன் வயிற்றைக் கீறுகையில், அதன்கணிருந்து அதனை எடுத்தன னென்றுங் கூறுகின்றான். அது கேட்டுக் கொத்தவால் அக் கணை யாழியை எடுத்துச்சென்று அரசன்பாற் காட்ட, அதனை அரசன் கண்டதுந் துருவாசர் இட்ட வசவு நீங்கப் பெற்று, அப்பொழுதே தான் சகுந்தலையை மணந்த வரலாறுகள் முற்றும் நினைவுகூர்ந்து, செம்படவன் கள்வன் அல்ல னாகையால் அவனுக்குப் பரிசு கொடுத்து விடுக்கும் படி கட்டளையிடக், கொத்தவாலும் அங்ஙனமே செய்கின்றான். மேனகைக்குத் தோழியான சானுமதி என்னும் அரம்பை மாது. மேனகையால் விடுக்கப்பட்டு, அரசன் உலவும் பூங்காவில் எவர் கண்ணுக்கும் புலனாகாதபடி வந்து நின்று, அரசன் சகுந்தலையைப் பிரிந்த பெருந்துயரத்தால் ஆற்றானாய் அங்கிருந்து, கிறுக்குக் கொண்டாற் போற், சகுந்தலையின் ஓவியத்தை வரைந்து புலம்புமாறெல்லாங் கண்டு, அவற்றை மேனகைக்குஞ் சகுந்தலைக்குந் தெரிவித்தற் பொருட்டுத் திரும்பி வானூடு செல்கின்றாள். அதன் பின், இந்திரன் தனக்கு அரக்கரால் நேருந் துன்பத்தை நீக்குதற்கு உதவியாக வருமாறு துஷியந்தன் மாட்டுத் தன் தேர்ப்பாகனான மாதலியைத் தூதுவனாக விடுக்க, அரசனும் அவனது விருப்பத்திற்கிணங்கி, அவனொடு வானூடு இந்திரன்பாற் செல்கின்றான் என்னும் அளவும் இவ் ஆறாம் வகுப்பின் கண் நடைபெறுகின்றது. பரிசு - வெகுமதி. புனிதம் - வடசொல்) பரிசுத்தம். (பக். 100) ‘முடிச்சு அவிழ்க்கி’ என்பது இழிந்தோர் வாயில் முடிச்சவிக்கி என வருதல் காண்க. இங்ஙனமே செம்படவன் வாயில்வருந் தமிழ்ச்சொற்களெல்லாஞ் சிதைந்த கொச்சைத் தமிழ்ச்சொற்களாதலுங் கண்டுகொள்க. (பக். 103) வானஊர்தி - வானத்திற் பறந்து செல்லும் ஒரு வகை வண்டி, அஃது இஞ்ஞான்றை (யநசடியீடயநே) போல்வதோ அன்றி வேறுவகையினதோ தெரியவில்லை; “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி எய்துபவென்ப” என்று புறநானூற்று 27 -ஆஞ் செய்யுளில் இது குறிப்பிடப்பட்டிருத்தலால் இது பண்டைக் காலத்தில் இவ் விந்திய நாட்டிக்கண் வழங்கினமை அறியப் படும்; சீவகசிந்தாமணியிலும் இத்தகையதொரு மயிற்பொறி சுட்டப்பட்டிருத்தல் காண்க. இங்கு ‘அரசமுனிவர்’ என்றது துஷியந்தனை. விழா - திருநாள். ‘திர°கரிணி’ என்பது ஒருவர் பிறர் கண்ணின் எதிரேயிருந்தும் அவர் கண்களுக்குப் புலனாகாதபடி செய்யும் ஒருவகை மாயமந்திர வித்தை. (பாட்டு) விழுத்தக்க..................றறிந்தேன். இதன் பொருள் : விழுத்தக்க - சிறப்புமிக்க, வேனில் உயிர் மிகுதரவே கொண்டு - வேனிற்காலத்திற்குரிய உயிர்ப்பினை மிகும் படியாய்க்கொண்டு, முழுச்செம்மை பசுமையுடன் வெண்மை எனும் மூன்றும் - மிக்க செம்மை பசுமை வெண்மை யென்னும் மூன்று வண்ணங்களையும், குழைத்திட்டால் என - ஒன்றுசேர்த்துக் கலந்து எழுதினாற்போல, வயங்கு கொழு மாவின் முகையே - விளங்காநின்ற கொழுவிய மாமரத்தின் அரும்புகாள், தழைப்பருவ நல்குறியாத் தயங்குநை என்று அறிந்தேன் - தழைக்கும் வேனிற்கால வருகை யினை முன் அறிவிக்கும் நல்ல அடையாளமாக நீ விளங்குகின்றனை என்று அறிந்துகொண்டேன் என்றவாறு. ‘விழுமம்’ என்னும் உரிச்சொல் ‘விழு’ என முதனிலை யளவாய் நின்றது; “விழுத்திணைப் பிறந்தது” என்புழியும் (புறம், 27) காண்க; விழுமம் சிறப்புப் பொருட்டாதல் “விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பும் ஆகும்” என்புழிக் காண்க (தொல் -உரியியல். 57). உயிர்ப்பு - கிளர்ச்சி. ‘மிகுதா’ ஒரு சொன்னீர்மைய. ‘தழைப்பருவம்’ எதுகை நோக்கி வினைத் தொகையினிடையே ஒற்று விரிந்தது; ‘தழை’ முதனிலைத் தொழிற்பெயராய்த் தழைத்தலையுடைய பருவம் எனப் பருவத்திற்கு அடைமொழியாய் நின்றதெனினும் ஆம்; அன்றித் தழைகளையுடைய பருவம் என அதைப் பெயர்ச் சொல்லாக வைத்துரைப்பினுமாம். (பக். 104) ‘பரபிருதிகை’ ‘மதுகரிகை’ என்னும் பெயர்கள் பரங்கிமார் இருவர்க்கும் உரிய இயற்பெயர்களே யாயினும், முன்னையது ‘குயில்’ எனவும், பின்னையது ‘வண்டு’ எனவும் வேறு பொருள் தந்து நிற்குமாறும் இங்கே பயன்படுத்தப் படுதல் காண்க. களி மயக்கம் - களிப்பினால் உண்டாகும் மயக்கம், தேன் உண்டதனால் உண்டாகும் மயக்கம் என முறையே பரங்கிக்கும் வண்டுக்கும் பொருந்துமாறு இரு பொருள்பட உரைக்க. எக்கி - எட்டி. அஞ்ஞான்றை மகளிர் காமதேவனை வழிபாடுசெய்து தாம் விரும்பிய காதலரைப் பெற்று மணஞ்செய்துகொள்வ துண்டென்பது சீவக சிந்தாமணி ‘சுரமஞ்சரியார் இலம்பகத்’ திலுங் காண்க. அகங்கை - உள்ளங்கை. (பாட்டு) புறஞ்சென்ற....................கிட்டனெனால். இதன் பொருள் : புறம்சென்ற காதலரைப் பிரிந்திருக்கும் பூவையரை - தம்மை விட்டு வெளியே சென்ற கணவரைப் பிரிந்து உறைவாரான மங்கையர்மேல், மறம்செய்து - கறுவு கொண்டு, மதன் எடுத்து வளைவில்லால் - காமவேள் கையிலெடுத்து வளைக்கும் வில்லிலே, தொடுத்தல் பெறும் - தொடுக்கப்படும், திறம்செய்த ஐங்கணையுள் - வலிமை செய்யும் ஐந்து மலர் அம்புகளுள், சிறப்பு எய்தி - தலைமைபெற்று, மற்று அவர்தம் - அங்ஙனம் பிரிந்துறை வாரான மங்கையருடைய, நிறம் சென்று பாய்வை என நின்னை அவற்கு இட்டனென்-மார்பிலே சென்று பாய்வாய் என வெண்ணி மாமுகையாகிய நின்னை அக் காமவேளுக்குந் தூவினேன் என்றவாறு, ஆல் : அசை. காமவேள் மலர்க்கணை ஐந்து, அவை : தாமரை, மாம்பூ, அசோகு; முல்லை, நீலம் என்பன; காமவயப்பட்டார்க்கு இவற்றால் உண்டாகும் நிகழ்ச்சிகள் இன்னவென்பதை, நினைக்கும் அரவிந்தம், நீள்பசலை மாம்பூ, அனைத்துணர்வும் நீக்கும் அசோகு,-வனத்திலுறு முல்லை கிடைகாட்டும், மாதே முழுநீலங் கொல்லும் மதன் அம்பின் குணம். என்னுஞ் செய்யுளால் உணர்க. (பக். 105) சீற்றம் - பெருஞ்சினம். ‘அடி’ என்பது ‘ஏடி’ என்னும் சொல்லின் திரிபு, ஏடி - தோழி. இங்ஙனமே ‘அடா’ என்பதும் ‘ஏடா’ என்னுஞ் சொல்லின் திரிபாகும்; ஏடன் - தோழன்; இச்சொற்கள் இக் காலத்தில் தம்மிற் றாழ்ந் தாரையுந், தமக்கு ஆண்டிற் சிறியாரையுந், தமக்கு அடங்கி யொழுகுவாரையும் முன்னிலைப் படுத்தற்கண் வருகின்றன. வேனில்விழா - வெயிற் காலத் துவக்கத்தே கொண்டாடப்படுந் திருநாள்; ‘வேனிற் காலம்’ என்பது சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி என்னும் நான்கு திங்களும் நடைபெறுங் காலம். (பாட்டு) செழுமா மரங்கள்.......................மாதே. இதன் பொருள் : செழு மாமரங்கள் - செழுவிய மாமரங்கள், கொழுமுகை அரும்பியும் - கொழுவிய மொட்டுகளை அரும்பியும், பொன் துகள் பெறாமை கண்டிலிர் கொல்லோ - இன்னும் பொன் நிறமான மகரந்தப் பொடிகள் உண்டாகப் பெறாததை நீங்கள் காணவில்லையா, குரவம் மகிழ்நிரம்பி நெடுநாளாகியும் - குராமரங்கள் அரும்புகள் நிறைந்து நீண்டகாலமாகியும், விரியாது இருத்தல் தெரியிலிர் கொல்லோ - அவை மலராக அலராதிருத்தலை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா, பனிநாள் கழிந்து நனிநாள் ஆகியும் - பனிக்காலங் கடந்து போய் மிகுந்த காலம் ஆகியும், சேவல் அம்குயில்கள் வாய்திறவாவே - ஆணாகிய அழகிய குயிற்பறவைகள் வாய்திறந்து கூவவில்லையே, காமவேளும் புட்டிலில் எடுத்த மன்மதனுந் தனது அம்புக் கூட்டினின்றும் எடுத்த, நாமவெம்கணைபுகுத்தி - அச்சத்தைத் தருங் கொடிய அம்புகளை மீண்டும் அதன் கண்ணே நுழைத்து, அச்சம் மிக்கனன் என அறைகுவென் - அச்சம் மிகுதியும் உடையனாய் இருந்தனன் என்று அறிவித்துச் சொல்கின்றேன் என்றவாறு. மாது, ஏ: அசைநிலைகள். அடித்தொழும்பு - அடித்தொண்டு. இளமரக்கா - இளைய மரங்களையுடைய சோலை; மிக முதிர்ந்த மரங்களையுடையது ‘தோப்பு’ என்று சொல்லப்படும். (பாட்டு) இன்பநுகர்......................கின்றார். (பக். 106) இதன் பொருள் : இன்பம் நுகர்பொருள் எல்லாம் வெறுத்துவிட்டார் - இன்பந் துய்த்தற்குரிய பொருள் களை யெல்லாம் உவர்த்து விட்டார், இனியநூல் அமைச்சரையும் கலவார் முன்போல் - சிறந்த அரசியல் நூலாராய்ச்சியில் வல்ல மந்திரிமாரையும் முன்போற் கலந்து சூழார், கண்உறக்கம் இரவெல்லாம் பெறமாட்டாராய் - கண் துயிலுதலை இராப்பொழுது முற்றும் பெறுதற்கு ஏலாத வராய், கட்டில்மிசை இங்கும் அங்கும் புரளுகின்றார் - கட்டிலின்மேல் இப்பக்கத்தும் அப்பக்கத்துமாகப் புரள்கின்றார், தன் பெரிய மனை நல்லார் பேசும்போது - தனது பெரிய அந்தப்புர அரண்மனைக்கண் வைகும் மாதர்கள் தன்னோடு உரையாடும்போது, தண்மையினால் சில சொல்லும் சொல்லின் உள்ளும் - அவர்பால் வைத்த அருள் காரணமாகப் பேசுஞ் சில சொற்களிலேயும், பெண் அரசி சகுந்தலையைப் பிழைத்துச் சொல்லி - மாதர்க்கு அரசியான சகுந்தலையின் பெயரைத் தன்னை மறந்து தவறுதலாகச் சொல்லிவிட்டு, பெரிதுவரும் நாணத்தால் கலங்குகின்றார் - அங்ஙனந் தவறிச் சொல்லிவிட்டதை உடனே அறிந்ததும் அதனால் மிகுந்த நாணத்தினாலே உள்ளங் கலங்குகின்றார் என்றவாறு. இச் செய்யுளில் அரசன் உயர்வுபற்றிப் பலர்பால் ஈற்றான் முடியினும், அவன் ஒருவனே யாதலால் ‘தன்’ என ஒருமைச் சொல்லாற் கூறினான். (பக். 107) கழிந்ததற்கு இரங்கல் - கடந்துபோன தவறான செயலுக்கு வருந்துதல். கோலம் - ஒப்பனை. (பாட்டு) சிறப்பணி.........................ஒளியா னாதே. இதன் பொருள் : சிறப்பு அணிகலங்கள் வெறுப்புடன் நீக்கி - சிறப்புடையவான நகைகளை வெறுப்பொடு களைந்து விட்டு, இடதுகை முன் பொன்கடகம் பிணைந்தும் - இடது முன்கையிற் பொன்னாற் செய்த கைவளையைக் கட்டியும், நெடு உயிர்ப்பு எறிதலின் துப்பு இதழ் விளர்த்தும் - பெருமூச்சு விடுதலாற் பவளம் போற் சிவந்த இதழ் வெளுப்படைந்தும், துயிலாது இருத்தலின் பயில்விழி இடுகியும் - உறங்காமல் இருத்தலால் எந்நேரமும் திறந்திருக்கின்ற கண்கள் ஒடுங்கியும், உடல் மிக மெலிவுறலாயினும் - உடம்பு மிகவும் மெலிவடைந்த தாயினும், சுடர்மணி தேய்த்தொறும் தேய்த்தொறும் - ஒளிவிடும் ஒரு மணியை (இரத்தினத்தை) த் தேய்க்குந்தோறுந் தேய்க்குந்தோறும், வாய்த்த உருக்குறைந்து நிறம் மிக உறுதல்போல - தனக்கு இயற்கையாகப் பொருந்திய வடிவின் அளவு குறைந்தாலும் அது தன் ஒளியின் நிறம் மிகப் பெறுதல்போல, இறைவன் மேனியும் ஒளி ஆனது - அரசனது உடம்பின் நிறமும் ஒளியிற் குறையாது என்றவாறு. ஏ : அசை. வலதுகையி லிடவேண்டிய கடகத்த அரசன் இடது கையிலிட்டது, பிறழ்ந்த அவனது மனநிலையைக் குறிக்கின்றது. (பக். 108) மான்பிணை - பெட்டைமான். பரிவு - கழிந்ததற்கு இரங்கல். அறங்கூறும் அவையம் - வழக்குகளை ஆராய்ந்து அறத்திற்கு ஒத்ததை அரசன் முடித்துச் சொல்லும் மன்று. அமைச்சரால் ஆராய்ந்து முடிவுகட்டப் பட்ட வழக்குகளையுந் தான் மீண்டும் ஆராய விரும்புந் துஷியந்த மன்னனின் செங்கோலாட்சியை ஈண்டு உற்றுநோக்குக. (பக். 109) ‘வாதாயணன்’ கஞ்சுகியின் பெயர். (பாட்டு) துறவிமகள்.................என்னே! இதன் பொருள் : துறவி மகள்மேல் வைத்த - முனிவர் மகளாகிய சகுந்தலைமேல் வைத்து, தொல்காதல் மறைத்த மறதி எனும் இருள் - பழைய காதலன்பை நினைவுகூர வொட்டாது மறைத்த மறதியாகிய இருள், நெஞ்சை மற்று அகன்ற பின்னே - என் நெஞ்சை அங்ஙனம் மறையாது விட்டு நீங்கியபின்னர், உறவருந்தும் எனைக் குறியிட்டு உலைப்பதற்கு - மிகத் துன்புறும் என்னைக் குறிவைத்து அலைப்பதற்காக, மதனன் நிறம் மாவின் முகையை வில்லில் நிறுத்துகின்றான் என்னே - காமவேள் நிறத்திற் சிறந்த மாவினது மொட்டாகிய அம்மைபத் தனது வில்லின்கண் நிறுத்து கின்றனனே இனி நான் உய்யுமாறு எங்ஙனம்; என்றவாறு. காதலை ஒளியாகவும் மறதியை இருளாகவும் உருவகப் படுத்தினான். ‘மற்று’ வினைமாற்றின் கண்வந்த இடைச்சொல். ‘என்னே’ என்னும் இடைச்சொல் இரங்கற்பொருளில் வந்தது. (பக். 110) ஓவியம் - சித்திரம். உவப்பித்தல் - மகிழ்வித்தல். நேர்த்தி - சிறப்பு. ஒப்பனை - (வடசொல்) அலங்காரம். அமர்தல் - இருத்தல். துஷியந்தன் வேட்டம் ஆடச் சென்று, காசியபர் உறையுளிற் சகுந்தலையைக் கண்டு காதல்கொண்டதும், அவளும் அங்ஙனமே அரசன்மேற் காதல்கொண்டதும், அப்போது தன்பக்கத்திருந்த விதூஷகன்பால் அரசன் தன் காதல் வரலாறுகளை விரித்துரைத்ததும், சகுந்தலையைக் கூடுதற்குமுன் நிகழ்ந்தனவாகும். திரும்பவும் அரசன் சகுந்தலையைக் கூடல் கருதிச் செல்லுங்கால், தன் அரண் மனைக்கண் உள்ள மகளிரிடத்து விதூஷகன் தன்காதல் வரலாறுகளைச் சொல்லிவிடுவான் என அஞ்சி, அவனை அவன் அத்தினாபுரத்திற்கு அனுப்பி விட்டமையும், அங்ஙனம் அனுப்பி விடுகையில் “உண்மையில் எனக்கு அத் துறவி மகளிடத்தில் எவ்வகையான விருப்பமும் இல்லை. * * * நான் பகடியாய்ச் சொன்ன சொற்களை உண்மையாக நினையாதே “ என்று அரசன் கூறினமையும் இரண்டாம் வகுப்பிலும் அதன் ஈற்றிலுங் காண்க. ஆகவே, பின்னர் அரசன் தன்பால் வந்த சகுந்தலையை மனைவியாக ஏற்றுக் கொள்ளாமல் விலக்கி விடுங்கால், விதூஷகன் அரசன் பக்கத்தில் இருந்திலனேனும், அதற்கு முன்னாயினுஞ் சகுந்தலையைப் பற்றி அவன் அரசற்கு நினைவு ஊட்டாதது, அரசனுக்கும் அவளுக்கும் இடையே யாழோர் மணம் நிகழ்ந்ததை அவன் அறியாமையினாலேயாம். ஆகவே, விதூஷகன் தன்மேல் அரசன் ஏற்றிய குற்றத்தை மறுத்துரைத்தது வாய்மையேயாகும் என்க. (பக். 111) பகடி - (வடசொல்) பரிகாசம். (பாட்டு) கொடியேனால்.....................ஏங்கினளே. இதன் பொருள் : கொடியேனால் - கொடுமைமிக்க என்னால், நீக்குண்டு - நீக்கப்பட்டு, கூடும் உறவினரோடும் படர்வதற்கு - தன்னொடு கூடிவந்த சுற்றத்தினரோடும் மீண்டு செல்வதற்கு, என் காதலிதான் பரிவுறுங்கால் - என் அன்புமிக்க மனையாளான சகுந்தலை துன்புற்றக்கால், பெருந்தந்தைக்கு அடியார் ஆம் சீடர் - தவப்பெருமை வாய்ந்த தன் தந்தை யாராகிய, காசியபருக்கு அடியவராம் மாணவர், அவர்போல் பெரியவர் - காசியபரைப் போலவே தவப்பெருமை வாய்ந்தவர், ஆர்த்து - உரத்துக்கூவி, இந்த இடமே நில் என - இந்த இடத்திலேயே தங்கக்கடவாய் என்றுகூற, ஒழுகும்நீர் விழியான் எங்கினன் - ஒழுகாநின்ற நீரினையுடைய கண்ணினன் ஏக்க முற்றுத் திகைத்தனன். ஏ : அசை. ‘நீக்கு உண்டு’ நீக்குதலை அடைந்து என முதனிலைப் பொருள் தந்து, பின்னர் ஒருசொல் நீர்மையாய் நீக்கப்பட்டு எனப் பொருள் பயந்தன; ‘நீக்கு’: முதனிலைத் தொழிற் பெயர், உண்: துணைவினை. ‘பரிவுறுங்கால்’ என்பது பரிவுற்றக்கால் என இறந்த காலப் பொருளில் மயங்கியது; இவ்வாறு வருதல், வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை என்னுஞ் சூத்திரத்தான் (தொல்காப்பியம், வினை. 48) அமையும். பற்று - அன்பு. இயங்கும் - உலவும். (பக், 112) கொழுநன் - காதற்கணவன். கற்புடை மகளிர் தங்கணவரைத் தெய்வமாகக் கருதி நடத்தல், தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. (குறள் 55) என்னுந் திருக்குறளிலுங் காண்க. வியக்கத்தகுவது - அதிசயிக்கத் தகுவது. ‘அதிசயம்’ வடசொல். நாள் அடைவு - நாள் ஓட்டம்: அடைவு - முறையே செல்லுதல். (பாட்டு) காரிகைதன்னை.......................செய்கையோ. இதன் பொருள் : காரிகை தன்னை யான் கலந்திருந்தமை - அழகியாளான சகுந்தலையை யான் கூடியிருந்த நிகழ்ச்சியை, ஓரில் - ஆராய்ந்து பார்ப்பின், அது, பொய்த் தோற்றமோ - கானல் நீர்போற் பொய்யான தோற்றமோ, உளத்தின் மாற்றமோ - என்மனத்தின் செயலால் உண்மைக்கு மாறாகக் காணப்படுங் கனவு தானோ, சேரிய பிறவியில் திரண்ட நல்வினை - முன்னே சேர்ந்து சென்ற பழம் பிறவிகளில் ஒருங்குதொக்க நல்வினை, சீரிய பயன் பயந்து ஒழிந்த செய்கையோ - இப்பிறவியில் வந்து எனக்குச் சிறந்த தொரு பயனைத் தந்து உடனே மறைந்த செயலாகுமோ, இன்னதென்றறிகிலேன் என அரசன் கவன்றான் என்பது. சான்ற - (வடசொல்) சாட்சி. “எளிதிலே கிடைத்தற்கு இல்லாத இடம்” என்று அரசன் குறிப்பிட்டது சகுந்தலையின் விலை; இக் கணையாழி அவளது விரலை அணுகப்பெற்றது எளிய தாகாது என்றான். (பக். 113) கடைகெட்ட - தாழ்ந்ததினுந் தாழ்ந்த. (பாட்டு) கெண்டையங்...................ஒத்தியால். இதன் பொருள் : கெண்டை அம் கண்ணினாள் - கெண்டை மீனைப் போல் வடிவுஞ் செயலும் வாய்ந்த அழகிய கண்களையுடைய சகுந்தலையின், கிளிநக விரலிடம் கொண்டு - கிளிமூக்குப்போற் சிவந்து விளங்காநின்ற நகத்தையுடை இரண்டாம் விரலை இருக்கும் இடமாகப் பற்றிக்கொண்டு, நீ சிறிதுநாள் கூடி - நீ சில நாட்கள் அதனொடு சேர்ந்திருந்து, பின் அதை விண்டமை தெரிந்திடில் - பிறகு அதனைவிட்டு நீங்கின தன்மையை ஆராய்ந்து பார்ப்பின், வினைவளம் சிறிதுஉற - பண்டை ஊழின் நலமானது சிறிது வரப்பெற்றமையால், அத்துணைச் சிறந்தாளை யான் காதன் மனைவியாகச் சிலநாட்பெற்று, பெண்டிரைப் பிரிந்த - பிறகு அப் பெண்ணைப் பிரிந்து விட்ட, என்பெற்றி ஒத்தி - எனது தன்மையை ஒத்திருக் கின்றாய், என்று அரசன் கணையாழியை நோக்கிக் கவன்று கூறினானென்க. ஆல் : அசை. (பாட்டு) மெல்லிதா..........................றென்னையோ. (பக். 114) இதன் பொருள் : மெல்லியதாய் - மென்றன்மை யுடையதாயும், அழகிதாய் - அழகினையுடையதாயும், விளங்கு நீள் விரல் உடை - விளங்காநின்ற நீண்ட ஒவ்வொரு விரலையும் உடைய, அல்லி மென்கையை விட்டு - அல்லிக்கொடி போன்ற சகுந்தலையின் மெல்லிய கையைப் பிரிந்து, நீர்உளே ஆழ்ந்தது என் - நீரின் உள்ளே அக் கணையாழி அமிழ்ந்திப் போயது என்!, புல்லிய அறிவு இலாப் பொருள் அவன் நலம் பெறவல்லது அன்று - இழிந்த அறிவில்லாத அப்பொருள் அவளது நலத்தினை அடைதற்கு ஆற்றல் உடையது அன்று, ஏழையேன் மயங்கிற்று என்னையோ சிறிதாயினும் அறிவுடைய யான் மயங்கிவிட்டது யாது காரணமோ! என்றவாறு. ‘மெல்லிதாய்’ ‘அழகிதாய்’ என்னும் ஒருமை வினைகள் ஒவ்வொரு விரலையுந் தனித்தனியே நோக்கி நின்றன. அரசன் சகுந்தலையைப் பிரிந்து ஆற்றானாய் வருந்தும் வருத்தத்தில் விதூஷகன் ஈடுபடாதவனாயிருத்தலின், அவன் தான் உணவெடுக்கும் வேளை தவறிப், பசித்து வருந்தும் வருத்தத்தையே உணர்வானாயினான். (பக். 115) தன் முன்னிலையில் இல்லாத சகுந்தலையைத் தன்முன் உள்ளாள்போல் எண்ணி “மீண்டும் நின் உருவைக் காட்டி அருள் புரியாயோ” என்று அரசன் புலம்பினான். ஓவியத்தைக் கண்ட விதூஷகன், அதன்கண் வரைந்து காட்டப்பட்ட நிலத்தின் தோற்றங்கள் உண்மையில் உள்ளன போற் றோன்றுகின்றன வென்று உரைக்குமதுகொண்டு, அஞ்ஞான்றை ஓவியக்காரரின் ஆற்றல் நன்கு தெளியப்படும். துகிலிகை - ஓவியம் எழுதுகோல். வாய்வது - உண்மை. (பக். 116) துவண்ட - ஒசிந்த. விளிம்பு - ஓரம். சாய எழுச்சி - வண்ணத்தின் கிளர்ந்த தோற்றம். சேடி - தோழி. (பாட்டு) தானே வலிவிலென்......................மன்றே. இதன் பொருள் : தானே வலிவில் என்பால்வந்த தையலைத் தள்ளிவிட்டு - தானாகவே வலிய என்னிடத்தே வந்த மாதினை விலக்கிவிட்டு, நானே படத்தில் எழுதும் இந் நங்கைக்கு நன்று செயல் - யானே வருந்தி ஓவியத்தில் வரையும் இம் மங்கைக்கு நல்லது செய்தலானது, மீனே பிறழப் பெருகும் ஓர் ஆற்றை விடுத்து மீன்கள் புரளும்படியாக நீர் பெருகிச்செல்லும் ஓர்யாற்றை விட்டு விலகி, வெய்ய கானே படர்கின்ற பேய்த்தேரை வேட்டல் கடுக்கும் அன்றே - வெம்மையுடைய காட்டகத்தே பரவித் தோன்றாநின்ற கானல்நீரை ஒருமான் விரும்பிச் சென்றதை ஒக்குமன்றோ என்றவாறு. (பாட்டு) துணைபுண..........................தெரிமோ. (பக். 117) இதன் பொருள் : துணை புணர் அன்னம் - தன் சோட்டொடு கூடிய அன்னப்புள், மணல்பாங்கு இருப்ப - மணற்பக்கத்தே அமர்ந்திருக்க, தண் என்று ஒழுகும் நீர் மாலினியும் - குளிர்ந்து ஓடாநின்ற நீரினையுடைய மாலினி யாற்றையும், அதன் இருகரை மருங்கும் - அவ்வியாற்றின் இரண்டுகரைப் பக்கங்களிலும், கௌரியை ஈன்ற இமயம் வைகும் - உமைப் பிராட்டியைப் பெற்ற இமயமலையின் கண்ணேயுள்ள, எழில்உடை மான்கள் அமைதரு தூய பனிதூங்கு அடுக்கலும் - அழகு வாய்ந்த மான்கள் பொருந் தினவுந் தூய்மையான பனிக்கட்டிகள் தங்குவனவும் ஆன மலைப் பக்கங்களையும், மரவுரிஞான்ற விரிகிளை மரநிழல் - மரநார்களினால் நெய்த ஆடைகள் தொங்கா நின்ற விரிந்த கிளைகளையுடைய மரங்களின் நீழலிலே, கலைத்தடக் கோட்டில் - ஆண்மானின் பெரிய கொம்பிலே, இடக்கண் தேய்க்கும் - தனது இடதுகட் கடையை உரைசும், விழைவுறு பேடை மானும் - புணர்ச்சி வேட்கையுடைய பெண்மானையும், வரைதல் வேண்டினேன் - எழுதற்கு விரும்பினேன், இது தெரிமோ - இது தெரிவாயாக என்றவாறு, மற்று : அசைநிலை , ‘தெரிமோ’ என்பதில் மோ: முன்னிலை யசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல், 21). (பாட்டு) காம்புகாது.....................திலெனே. இதன் பொருள் : காம்பு காது செருகிக் கன்னம்மேல் தொங்கும் நரம்புடைச் சிரீடம் நான் வரைந்திலென் - காம்பு காதிலே செருகப்பெற்றுக் கன்னங்களின்மேல் தொங்கா நின்ற நரம்புகளையுடைய வாகை மலரை நான் எழுத வில்லையே, மழைநாள் மதியின் தழைகதிர்புரையும் - மழை பெய்துவிட்ட நாளின்கட் டோன்றுந் திங்களின் ஒளிமிக்க கதிர்களை யொக்கும், தாமரை மெல்நூல்- தாமரைத் தண்டினின்றும் எடுத்த ஒரு மெல்லி நூலையேனும், காமரு கொங்கைகள் நடுவே வயங்க வடிவு எழுதிலெனே - விழை வினை யுண்டாக்கும் அவடன் கொங்கைகளின் நடுவிலே விளங்க அவளது வடிவத்தினை எழுதிற்றிலேனே! என்றவாறு. ஆல் அசை. இச்செய்யுளின்கண் அரசன் சகுந்தலையின் பேரழகில் தன்னால் வரைதல் இயலாத சிலவற்றை எடுத்துக் கூறினா னென்க. ‘சிரீஷம்’ என்பது தமிழிற் ‘சிரீடம்’ எனத் திரிந்தது; இது வடசொல் : வாகை மரத்தின் மலர்க்குப் பெயர். மழை நன்றாகப் பெய்துவிட்டபின் வானம் மாசு மறுவின்றித் தெறி நீலவடிவாய் வயங்க, அப்போது தன்கட் டோன்றும் மதியத்தின் நிலவொளி மிகுந்த விளக்கமுடைத்தாய்த் திகழ்தலின் “மழைநாள் மதியின் தழை கதிர்” என்றான். சகுந்தலையின் இரு கொங்கைகளும் மிகப் பருத்திருத்தலின், தாமரைத் தண்டின் ஒரு மெல்லிய நூலும் அதனிடையே வைத்து எழுதுதற்கில்லையென்றான். “ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்” என்னுந் திருவாசகச் சொற்றொடரும் (போற்றித் திருவகவல். 34) இக்கருத்தே பற்றி வந்தது. (பக். 118) துடுக்கர் - குறும்பர்.ஒறுக்கும் - (வடசொல்) தண்டிக்கும். (பாட்டு) மணமலரில்....................அறியாய். இதன் பொருள் : மணமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைகி - மணங் கமழாநின்ற பூவின் கண்ணே நின்னை மருவலாம் என்னும் அவாவுடன் மகிழ்ந்த பெண் வண்டானது தங்கி, நீ அணவுவது கருதித் தேன் பருகாமை அறியாய் - நீ கிட்ட வருவதனை எதிர்பார்த்துக் கொண்டு தேன் குடியா திருத்தலை அறியாதிருக்கின்றனை என்றவாறு. கட்டளை - (வடசொல்) உத்தரவு. (பாட்டு) காமவின்பம்......................நினையிடுவேன். இதன் பொருள் : காம இன்பம் நுகருங்கால் - காம இன்பத்தைத் துய்க்கையில் , கனிந்து நான் மெல்லெனச் சுவைத்த - கனிவு கொண்டு யான் மென்மையாகச் சுவைத்த, தோம்இல் மரத்தில் கிள்ளாத தூமெல் துளிரோ - குற்றம் இல்லாத ஒருமரத்தினின் றுங் கிள்ளப்படாத அதன் தூய மெல்லிய தளிர்தானோ, மிகப் பழுத்த காமர் கொவ்வைப் பழமோ - நிரம்பவும் பழுத்த விரும்பத் தக்க கொவ்வைக் கனிதானோ, என் கண்ணே அனையாள் கனிந்த இதழ் - என் இருகண்களை யொத்தவளாகிய சகுந்தலையின் கனிவு மிக்க இதழ், நீ மேல் தொட்டால் - நீ அவ்விதழைத் தொட்டால், முண்டகாமாமுகையள் சிறையாய் நினை இடுவேன் - தாமரையின் பெரிய மொட்டினுள்ளே நின்னைச் சிறைப்படுத்துவேன் என்றவாறு. ஓவியத்தில் எழுதப்பட்டிருக்கும் வண்டை நோக்கி அரசன் இவ்வாறு தன்னை மறந்து கூறுகின்றான். முன்னே முதல் வருப்பில் அரசன் இங்ஙனமே வண்டை நோக்கிக் கூறியிருத்தலுங் காண்க. (பக். 119) முரண் - மாறுபாடு. (பாட்டு) விழிதுயி....................கில்லேனே. இதன் பொருள் : விழிதுயிலாமையால் - கண் உறங்கப் பெறாமையால், விரை கனவினும் - விரைந்த நிகழ்ச்சிகளை யுடைய கனவிலாயினும், எழிலினாள்தனை - அழகியாளான சகுந்தலையை, எயப்பெற்றிலேன் - பொருந்தப்பெற்றே னில்லை, ஒழுகு கண்ணீரினால் - வடியா நின்ற கண்ணீரினாற் பார்வை மறைபடுதலின், ஓவியத்தினும் - படத்தின்கண்ணும், பழி அறு பாவையைப் பார்க்க கில்லேனே - குற்றம் அற்ற பாவைபோல்வாளைப் பார்க்க மாட்டாதேனாயினனே ! என்க. உறக்கத்தின்கண் உடன்நிகழுங் கனவிற் சகுந்தலையைக் காணலாமென்றால் உறக்கமோ வருவதில்லை; விழித் திருக்கையில் ஓவியத்திற் காணலாமென்றால் ஆற்றாமையால் என் கண்களில் நிரம்பியோடுங் கண்ணீரினாற் பார்வை மறைபட்டு அதுவுஞ் செய்தற்கு இயல்வதில்லை என அரசன் கவன்றுரைத்தான். விழிப்பு நிலையிற் பல்லாண்டுகளாக நிகழும் நிகழ்ச்சிகளெல்லாங், கனவு நிலையிற் சில நொடிப்பொழுதுகளில் நிகழக் காண்டலின் “விரைகனா” என அஃது அடைகொடுக்கப்பட்டது. (பக். 120) ‘தரளிகை’ என்பாள் அரசன் மனைவியான ‘வசுமி’க்குத் தோழியாவள். ‘மேகபிரதிசந்தம்’ என்பது மேகத்தின் நிறத்தினையும் வடிவினையும் ஒத்துத் தோன்று மாறு அமைக்கப்பட்ட ஓர் அரண்மனைக் கட்டிடத்தை உணர்த்துகின்றது. (பக். 121) ‘வேண்டா விருப்பு’ என்பது, உள்ளத்தில் வேண்டாதிருந்தே வெளிப்பார்வைக்கு விருப்பமுடையார் போல் ஒழுகுவாரிடத்து உளதாவது. கண்ணுறுவீர் - பார்ப்பீர். ‘வாணிகம்’ என்பது பணி என்னும் முதனிலையிற் றோன்றிய தமிழ்ச்சொல், பணி - தொழில்; பணிகம் என்பது வணிகம் எனவும், அது நீண்டு வாணிகம் எனவும் வரும்; ‘வியாபாரம்’ என்பது வடசொல். (பக். 122) பரிவுறல் - இரங்குதல். செல்வமுடையார்க்கு மனைவிமார் பலர் இருக்கும் பண்டை வழக்கம் இறையனாரகப் பொருள் உரையுள்ளுங் காண்க. உசாவுதல் - கேட்டு ஆராய்தல். ‘சீமந்தம்’ என்பது கருக்கொண்ட மகளிர்க்கு ஆறாந் திங்களிற் கூந்தலை வகிர்ந்து செய்யும் ஒரு சடங்கு; இதனை ‘முதுகு நீரிடுகை’ எனவுங் கூறுப. (பக். 123) வெய்துயிர்த்தல் - நெடுமூச்சுவிடல். சார்பு - அணைவு, ஒரு குடும்பத்தைத் தாங்குவார் மேற்றாயிற்று. ஏதிலான் அயலான், உறவினன் அல்லாதவன். சீர் - செல்வம், வாழ்வு. வசை - பழிச்சொல். நிலைபேறு - நிலையானது, உறுதி. அறக்கிழத்தி - நூலிற் சொன்ன அறநெறிப்படி ஒருவற்குரியளான மனைவி. கால்வழி - (வடசொல்) சந்ததி. இடையறாது - நடுவேவிட்டுப் போகாது. (பாட்டு) பிள்ளையில்லா...........றந்தோ! (பக். 124) இதன் பொருள் : பிள்ளையில்லாக் கொடியே னால் பெயப்பட்ட எள்நீரை - பிள்ளையில்லாக் கொடிய வனாகிய என்னால் வார்க்கப்பட்ட எள்ளொடு கலந்த நீரை, பிதிரர் கண்டு மறுமையுலகிற் சென்ற என் மூதாதையர் பார்த்து, தள்ளாத முறைப்படியே இவன் பின்னே தகுநீரும் எள்ளுங் கூட்டிக் கொள்ளுமினோ பலி, எனவே கொடுப்பார் ஆர் - தவறாத நூன் முறைப்படியே இவனுக்குப் பிறகு தகுதி வாய்ந்த நீரும் எள்ளுஞ் சேர்த்து இதனை யுணவாக ஏற்றுக் கொள்வீராக வென்று கொடுப் பவர் யாருளர்? எனக்கூறி உகும் கண்ணீரோடு அள்ளியே உண்பார் - என்று சொல்லிக் கொண்டே சொரியுங் கண்ணீரோடு அப் பலியினை வாரியுண் பார்கள், பலிபெறுவோர் ஐயம் உறல் ஆயிற்று அந்தோ - யாம் இடும் உணவினைப் பெறும் மூதாதையர் என்கால் வழி யற்றுப்போமோவென்று ஐயப்படுதற்கு! இடமாயிற்றே ஐயகோ ! என்றவாறு. ஆல் : அசை. ‘தள்ளாத’ என்பது தவறாத எனப் பொருடருதல் “கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை” என்னுந் திருக்குறளுக்குப் பரிமேலழகியார் உரைத்த உரையைக் காண்க. பலி - விண்ணோருணவு. விளக்கினொளி திரைமறைப்பினால் அறியப்படாதது போலத் தமக்கு மகன் ஒருவனிருந்தும் அவனை அறியாமை யால் அரசன் வருந்தா நின்றானெனச் சானுமதி நினைத்தான். ஒரு குடியை விளங்கச் செய்தல் பற்றிப் புதல்வன் விளக்காக உருவகஞ் செய்யப்பட்டான் என்க. அவன் இருப்பை அறியாமை திரையாக உருவகஞ் செய்யப்பட்டது. ஓலம் - முறையிட்டு அழைக்கும் ஒலி. (பக் 125) இடர் - (வடசொல்) ஆபத்து. தளம் - (வடசொல்) உப்பரிகை. இயங்குதல் - நடமாடுதல். தான் சகுந்தலையை விலக்கி விட்ட குற்றத்தினாலோ அல்லது மாதவியன் செய்த குற்றத்தினாலோ தீய பேய்கள் தன் அரண்மனையினுள் இயங்கலாயின வென்று அரசன் கருதினான். கருப்பங் கழி - நீள வளர்ந்த கரும்பாகிய கோல். தின்னுதற்குரிய கருப்பங்கோலைத் தான் துன்புறுங் காலத்துங் குறிப்பிடுதலால் மாதவியன் உணவில் மிகுவிருப்பினன் என்பது புலப்படுகின்றது. ‘கையுறை’ என்பது தான் தொடுக்கும் அம்பின் கூரிய ஓரங்கள் உரைசிக் கைவிரல்கள் புண்படாதபடி அவற்றிற்கு உறையாக இடப்படுவது (படடிஎந). (பக். 126) பருக - குடிக்க. விடாய் - (வடசொல்) தாகம். விலங்கு - மிருகம். (பக் 127) சான்றோர் -அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி என்னும் உயர்குணங்களான் மிக்கவர்கள். (பக். 128) தண் கதிரவன் - குளிர்ந்த கதிர்களையுடைய மதி. படைக்கலன் - (வடசொல்) ஆயுதம். மகவான் - இந்திரன்; மகம் - (தமிழ்) வேள்வி; நூறுகுதிரை வேள்விகளைச் செய்து முடித்தோற்கு இந்திரபதலி வருமென்பது புராணக்கூற்று. எது இயைபு, காரணம்; இத் தமிழ்ச்சொல் வடமொழியிற் சென்று ‘ஹேது’ எனத் திரிந்தது. சினம் - கோபம். ஆற்றல் - வல்லமை. ஏழாம் வகுப்பு (பக். 129) இந்திரனால் வருவிக்கப்பட்டு விண்ணுலகு சென்ற துஷியந்த மன்னன் அவற்குக் கொடும் பகைவரான அரக்கரைப் போர்முகத்திற் றொலைத்து, அவனால் மிகுந்த சிறப்புச் செய்யப்பெற்று, முன் ஏறிச்சென்று வானவூர்தி யிலேயே அமர்ந்தவனாய், மாதலி அதனைச் செலுத்தத், தனது நகர்நோக்கி வானிலிருந்து படிப்படியாய்க் கீழிறங்கி வருகின்றான். வரும்போது கீழ்க்கீழுள்ள மண்டிலங்களின் காட்சிகளைக் கண்டு, அவற்றின் அழகுகளை மாதலிக்குச் சொன்ன வண்ணமாய் இறங்கிக், கடைப் படியாய் நிலவுலகத்திற் சேர்ந்து, இந்திரனுக்குத் தந்தையாரான காசியப முனிவரும், அவர்தம் மனைவியாருந் தவமியற்றும் ஏமகூடம் என்னும் மலையானது வழியிற் கட்புலனாக, அங்குச் சென்று அவ் வருந்தவப் பெரியாரை வணங்கவேண்டுமென்னும் பெரு விருப்பால் உடனே அங்கு ஏகி அத் தவப்பள்ளியினுள் மாதலி யுடன் நுழைகின்றான். அரசனது வருகையை முனிவர்க்கு அறிவித்தல்வேண்டி, மாதலி அரசனை ஓர் அசோகமரத்தடியில் இருக்கச் சொல்லி, முனிவர்பாற் செல்கின்றார். மரநீழலிலிருந்த அரசன், அங்கே ஓர் அழகிய சிறுவன் அஞ்சா நெஞ்சினனாய் ஒரு சிங்கக் குட்டியை அதன் தாயினின்றும் பிடித்திழுத்துக் கசக்கி விளையாட, அங்குள்ள முனிவர் மகளிர் அதனை யவனி னின்றும் விடுவித்தற் பொருட்டு அரசனுதவியை வேண்ட, அவனும் அதற்கியைந்து அச் சிறுவன்பாற் சென்று உரையாடி னதிலிருந்து அவன் தன் மகனேயென்று உண்மை யறிகின்றான். இது கண்ட முனிவர் மகளிர் அங்கேயுள்ள சகுந்தலையின்பாற் சென்று அந்நிகழ்ச்சியை அறிவிக்கச், சகுந்தலை உடனே போந்து அரசனைத் தெரிந்துகொண்டு கண்ணீர் சொரிகின்றாள். அரசனும் நெஞ்சம் ஆற்றானாய் அவளடிகளில் வீழ்ந்து தான் செய்த பெரும்பிழையைப் பொறுக்கும்படி வேண்டு கின்றான். பின்னர் அரசன் தன் மனைவியோடும் மைந்தனோடும் மாதலியால் நடத்தப்பட்டுச் சென்று காசியபரையும் அதிதி அம்மையாரையும் வணங்கி, அவரால் வாழ்த்தப் பெற்றுத், தமது பிரிவுக்குக் காரணந் துருவாசர் வசவாதலையும் அவரால் உணர்ந்து, அவர்பால் விடைபெற்றுத், தேவேந்திரனது தேரிலேயே இவர்ந்து சகுந்தலை சர்வதமனனுடன் தன் நகரத்திற்குத் திரும்புகின்றான் என்னுமளவு இந் நாடக நிகழ்ச்சியை இவ் வேழாம் வகுப்பு முடித்துக்கூறுதல் காண்க. விண் - வான்வெளி. அரியணை - (வடசொல்) சிங்காசனம். உரிஞ்சிய - தேய்த்த. பரிமளம் - மிகுமணம். வானநாட்டில் மிகுமணம் வாய்ந்த ஐந்து மரங்கள் : அரிச்சந்தனம், மந்தாரம், சந்தானம், பாரிசாதம், கற்பகம் என்பனவாகும். நுகர்ந் தாங்கிருக்க - துய்த்தபடியாய் இருக்க. (பக். 130) ‘நரசிங்கம்’ என்பது உடல் மக்கள் வடிவுந்தலை சிங்கவடிவும் உடையவாகத் தோன்றிய விஷ்ணுவின் பிறவி யென்றும், இந்திரனது அரசைக் கவர்ந்த இரணியகசிபு என்னும் அரக்கனைக் கொன்று அவ்வரசை அவற்கு மீட்டும் உதவின தென்றும் புராணங் கூறும். எய்யப்பட்டார் உடம்பில் விரைந்து நுழைதல்வேண்டி, அம்புகளின் கணுக்கள் சுறசுறப்பின்றி வழுவழுப்பாக இழைக்கப் படும். இந்திரனுக்கு நரசிங்கஞ் செய்த வுதவியை ஏவற்காரரின் உதவியாகக் கூறுதல் அமையாமையின், தான் செய்ததனையே ஏவற்காரர் செயலாகக் குறிப்பிடுதல் வேண்டி அரசன் ‘இவற்றில்’ என்று பன்மை வாய்பாட்டான் ஓதாது ‘இதில்’ என்று ஒருமை வாய்பாட்டால் துவங்கி ‘இந்திரனது பெருமையே உண்மையிற் புகழற்பாலது; எவலாளர் அங்ஙனம் பெரிய முயற்சிகளிற் புகுந்து வெற்றிபெறுவதெல்லாந் தம் தலைவனது நன்குமதிப்பின் விளைவென்றே அறிமின்!’ என்று மொழிந்தான். ஏவலாளர் - வேலைக்காரர். நன்கு மதிப்பின் விளைவு - பாராட்டுதலால் உண்டாம் பயன். அறிமின் - அறியுங்கள்; ‘மின்’: முன்னிலைப் பன்மை எவல் ஈறு. துறக்கநாடு - சுவர்க்க உலகு. படாம் - சீலை. கேட்டார் கேட்டவைகளைத் தரவல்லது கற்பகமரம் என்று புராணங் கூறும். கிளர்ச்சி - எழுச்சி. நோக்கிற்றிலேன் - பார்த்திலேன். ‘வளிமண்டிலம்’ என்பது புராணவுரைப்படி இந் நிலவுகத்தி லிருந்து பகலவனுலுகு வரையிற் பரவியிருப்பது; இஃது எழு கூறுhகப் பிரிந்து நின்று முகில் மின்னல் களையும், பகலவனையும், மதியினையும், வான்மீன்களையுங், கோள் களையும், ஏழிருடிகளையுந், துருவமண்டிலத்தையும் இயக்கு மாற்றால் எழுபெயர்கள் பெறுமென்றும் புராணங் கூறும். கங்கiயாறானது மூன்று பிரிவுகளையுடைய தென்றும், அம்மூன்றில் ‘மந்தாகிநி’ எனப்படுவது மேலே வானுலகத்தில் ஓடுவதென்றும், ‘பாகிரதி’ என்பது இந் நிலவுலகத்தில் ஓடுவதென்றும், ‘போகவதி’ என்பது பாதலத்தில் ஓடுவதென்றும் புராணங்கூறும். கதிர்கள் - ஒளியோட்டங்கள். வான்மீன் - (வடசொல்) நட்சத்திரம். விஷ்ணுவின் வாமநாவதாரக் கதை வருமாறு: இரணியகசிபுவின் வழித்தோன்றலாகிய பலி என்னும் அரக்கர் வேந்தன் மூவுலகும் ஆட்சி செலுத்துவோனாய்த், தேவர் களாலும் வெல்லப் படாத பேராண்மையனாய்த் திகழ்ந்தனன். இவனைத் தொலைத்துத் தேவர்க்குத் தலைமை தரும் பொருட்டு, விண்டுவே அதிதிக்கு மகனாய்ப் பிறந்து சிறுகுறளாய் வளர்ந்து, பலிவேந்தன்பாற் சென்று மூன்றடி நிலம் வேண்டியிரந்தனன். ஆனாற், பலியோ இன்னும் மிகுதியான நிலத்தை வேண்டிக் கேட்டால் தருவோ மென்றுரைக்க, அவ் வாமனன் தனக்கு மூன்றடி நிலந்தான் வேண்டுமென மொழிந்தான். அதுகேட்டுப் பலி அங்ஙனமே தந்தேமெனக் கூறி, அவன் வேண்டுகோட்படி நீர்சொரிந்து கொடுக்க, மிகச் சிறு குறளாய்வந்த அவன் மிகப்பெரு வடிவினனாய் வளர்ந்து, தனது ஓரடியால் இந் நிலவுலகு முழுதும் அளந்து, பின்னும் ஓரடியால் வானுலகு முழுதும் அளந்து மூன்றாம் அடிக்கு இடம் எங்கேயென்றுகேட்ப, இங்ஙனங் குறளாய் வந்து பின்னர் அளவின்றி வளர்ந்த இவன் விண்டுவேயென உணர்ந்து, பலி தன் தலையைக் காட்ட, விண்டுவுந் தனது ஓர் அடியை அவனது முடிமேல் வைத்து அழுத்தி அவனைப் பாதலம் புகச்செய்தான் என்றும், அங்ஙனம் பாதலம் புக்க பலி தன்மாட்டு அளவிறந்த அன்பினனாய் இருத்தல் கண்ட விண்டு அவற்கு அப்பாதல வுலகின் ஆட்சியைத் தந்து அவனைப் பிரியமாட்டானாய் அவனது அரண்மனை வாயிற்காவல னாகவே இருந்துவிட்டன னென்றும் புராணங்கூறும். வளிமண்டிலத்தின் ஆறாவது அடுக்காய், ஏழ் இருடி மண்டிலங்களையும் வான் கங்கையினையுந் தாங்குவது ‘பரிவகம்’ என்று சொல்லப்படும். (பக். 131) இவ்வுயிர்க்குத் தொகைக் கருவியான உடம்பானது, மனம் உள்ளம் அறிவு முனைப்பு என்னும் நான்கு அகக்கருவிகளையும், மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐந்து அறிவுப்பொறிகளும், நாக்கு கை கால் எருவாய் கருவாய் என்னும் ஐந்து தொழிற்பொறிகளும் ஆகிய பத்துப் புறக்கருவிகளையும் உடையதாகும். உருள் - (வடமொழி) சக்கரம். விளிம்பு - ஓரம். சாதகப்புள் - (தமிழ்) வானம்பாடிப் பறவை; இது நிலத்தின்கண் உள்ள நீரைப் பருகாது, வானின்கண் உள்ள மழைத்துளியினையே பருகுமென்று புலவர் கூறுவர்; “தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி” என்று பழைய பட்டினப் பாலைச் செய்யுள் (ஙு ச) நுவலுதலுங் காண்க. ஆர் - தேர் உருளின் குடத்திலிருந்து அதன் வளையம் வரையில் தைக்கப் பட்டிருக்குங் கோல்கள். (பாட்டு) ஓங்குவரை.......................போன்மை. இதன் பொருள் : ஓங்குவரை மீதிருந் தாங்கு இழிவது போல் - உயர்ந்த மலையின்மே லிருந்தபடியே கீழ் இறங்குவது போல, ஆன்ற நிலஉலகம் தோன்றுவது காண்மோ - அகன்ற நிலவுலகமானது தோன்றுதலைக் காண்மின்!, உயர் பெருமரங்கள் வியன்கிளை தோற்றிச் செழுந்தழை மறைப் பினின்று ஒழிவதுங் காண்மோ - உயர்ந்த பெரிய மரங்கள் தம்முடைய பெரிய கிளைகளைத் தோன்றச் செய்து செழுமையான தழைகளின் மறைப்பிலிருந்து விடுபடுவதுங் காண்மின்!, நன்கு புலன்ஆகா இன்புனல் யாறுகள் அகன்று கனிகிடத்தலின் துலங்குதல் காண்மோ - முதலில் நன்றாகக் கண்களுக்குத் தெரியாத இனிய நீரினையுடைய ஆறுகள் வரவரப் பெரிதும் அகன்று கிடத்தலினால் விளங்கித் தோன்றுதல் காண்மின்!, இவ்வியல்பு அதனால் எழில் கொளும் இவ்உலகு - இவ்வாறு காணப்படுந் தன்மையினாலே எழுச்சி பொருந்தும் இந் நிலவுலகத்தினை, யாரோ ஒருவன் எழச்செய்து ஈங்கு என்பக்கல் இயைப்பது போன்ம் - எவனோ ஒருவன் கீழிலிருந்து மேலே எழும்பும்படி செய்து இங்கே என் பக்கத்திற் சேர்ப்பதுபோற் றோன்றுகின்றது என்றவாறு. எ : அசை. அகன்ற எனுஞ்சொல் ‘ஆன்ற’ எனத் திரிந்தது. ‘ஒழிவதூ உம்’: இன்னிசை யளபெடை. ‘கெழூஉம்’: இசைநிறை யளபெடை. போலும் என்னும் வினைமுற்றின் ஈற்றயல் உகரங் கெட்டுப் போல்ம் என்றாகி னகரவொற்று மகரத்தொடு மயங்காமையிற் ‘போன்ம்’ என் னகர வொற்றாகத் திரிந்தது. செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமே யன்றி, வினைமுற்றும் உகரக்கேடு பெறு மென்பது “அவற்றுட், செய்யும் என்னும் வினையெஞ்சு கிளவிக்கு, மெய்யொடுங் கெடுமே ஈற்றுமிசை யுகரம்” என்னுஞ் சூத்திரத்திற்குச் சேனாவரையர் செய்யும் என்னும் முற்றுச்சொற்கு ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெடும், மெய்யொழித்துங் கெடுமென்பதாம்; உ-ம்: ‘அம்ப லூரும் அவனொடு மொழிமே,’ ‘சாரல் நாடஎன் றோழியுங் கலுழ்மே’ எனவரும்” என்றுரைத்தவுரையுட் காண்க (தொல்காப்பியம், வினையியல், சக). தான் இவர்ந்து வருந் தேர்மிக விரைந்து கீழ் இறங்குதலால், இந்நிலவுலகே மேலெழுவதுபோல் அரசற்குத் தோன்றுவதாயிற்று; இஞ்ஞான்றும் விரைந்து செல்லும் புகைவண்டியி லிருப்பவர்கட்கு அதன் இருமருங்கும் உள்ள நிலமும் பொருள்களும் பின்னோடுவது போற் றோன்றுமே யல்லாமல் வண்டி முன்னோடுவது தோன்றாமை காண்க. (பாட்டு) மாலைக்காலத்து...................வுரைமோ. (பக். 132) இதன் பொருள் : மாலைக் காலத்து மங்கு ஒளி மருங்கில் - சாய்ங்கால வேளையில் மங்கலாகத் தோன்றா நின்ற ஒளியினிடத்தே, புயல் அரண்போலப் பொருந்தி - முகிலாகிய (மேகமாகிய) காவற்சுவர்போற் பொருந்தி, தெளிபொன் உருகவிட்டாலென மருவித் தோன்றி - தூய பொன்னை உருக்கியோட விட்டதை யொப்பக் கீழ்பால் மேல்பால் எல்லையைத் தான் பொருந்தித் தோன்றி, அங்ஙனம் இருபால் எல்லையையுந் தான் தொடுதலால், குணகடல் குடகடல் கழுவக் கிடக்கும் - கீழ் கடலும் மேல்கடலுந் தன் அடிகளைக் கழுவும்படி கிடக்கும், (பக்கம், 124) வளம் சால் இம்மலை யாதோ உரைமோ - வளம் மிகுந்த இந்த மலையாது சொல்லுவீராக என்றவாறு. துஷியந்தன் நிகழ்த்திய இவ்வினாவுக்கு விடையாய் நிற்கும் ‘எம கூடம்’ அல்லது தமிழிற் பொன்முகடு எனப்படு வதாகிய மலையானது இமயமலையின் வடபகுதிக்கட் கைலைமலைக்கு அருகேயுள்ளதாகக் கருதப்படுகின்றது. இம் மலை பொன்நிறமாக உச்சியினையுடையதாதலாற் சாய்ங் காலத்து மஞ்சள் வெயிலில் இன்னுமிது பொன்னொளி மிகுந்து திகழ்தல் பற்றிக் கீழ்பால் மேல்பால் எல்லைகளின் இருபுறத்தும் பொன்னுருகியோடுவதுபோற் காணப்படுகின்ற தென்றான். கிழக்கு மேற்கிலுள்ள இருகடல் வரையிலும் இமயமலை நீண்டு கிடத்தவின், அதன் அடிகளை அக்கடல் களின் நீர் கழுவுமென்றான். ‘கழூஉவ’: இன்னிசை யளபெடை. எமகூடம் இமயமலைக் கண்ணதாகலின், இமயத்தின் நீட்சியை எமகூடத்தின் மேலேற்றிக் கூறினான் என்க. ‘கிம்புருடர்’ என்பார் மக்களுடம்புங் குதிரை முகமும் உடையராய்க் குபேரனுக்கு ஏவல் வேலை செய்வோராவர். உறையுள் - இருப்பிடம். காசியபமுனிவர் மரீசிக்குப் பிள்ளை யாய்ப் பிறந்தமையின் ‘மாரீசர்’ என்றுஞ் சொல்லப்படுவர். இவர் அதிதி, திதி என்னும் மங்கையரையும் தக்கன்றன் மற்றைப் பதினொரு புதல்வியரைபும் மணந்து, அவர் வாயிலாகத் தேவரையும அசுரரையுந் தோற்றுவித்தன ரென்று மாபாரதம் நுவல்கின்றது. பரவல் - வணங்கல். (பக். 133) பாம்புரி - பாம்புகள் தாமாகவே கழற்றிவிட்ட தோல். விழுது - கிளைகளிலிருந்து கீழிறங்கும் வேர். வளையம் - வட்டம். அருந்தவம் புரிவோர் தம்மை மறந்து இறைவன் றிருவருளொளியிற் றமது கருத்து முழுதுந் தோயப் பெற்றவராய்ப் பல்லாண்டுகள் இருந்தாங் கிருத்தலிற், கரையான புற்று மூடவும், அப் புற்றில் உறையும் பாம்புகளின் சட்டைகள் தம்மேல் ஒட்டிக்கொள்ளவும், ஆல் அரசு முதலிய மரங்களின் விழுதுகள் தம் கழுத்தைச் சுற்றி வளரவும், பறவைகள் அவர் தம் முடிகளிற் கூடு கட்டவும் அவர் அவைகளை யுணராதவராயே யிருந்தனரென்றார். கதிரவ னொளியில் எல்லாம்வல்ல சிவத்தின் அருளொளி விளங்கித் தோன்றுதலின் அகத்தே அவ்வருளொளியை நோக்கி நிற்குந் தவத்தோர்க்குப் புறத்தேயும் அதனை நோக்கி நிற்றலே அகத்துக் கொண்ட நாட்டம் பிறழாதிருத்தற்குப் பேருதவி யாதலால் அவர் கதிரவனொளியை நோக்கித் தவம்புரிதல் இன்றியமையாத தாயிற்று. எனவே, அகத்து வைத்த நாட்டம் எத்துணைதான் உறைத்து நிற்பினும் புறத்து நாட்டம் அதற்கு மாறானதொன்றிற் படின் தான் கலைந்துபடு மென்பதும், அகமும் புறமும் ஒத்த ஒரு குறியே கருத்தினை ஒருவழி நிறுத்துதற்கப் பெருந்துணையா மென்பதும், இது பற்றியே ஆங்காங்குத் திருக்கோயில்களும் அவற்றினுள்ளே ஒளியின் அடையாளமான அருட் குறிகளும் ஆன்றோரால் அமைத்து வைக்கப்பட்டன வென்பதும் நன்குணரப்படும். கலினம் - கடிவாளம். தவப்பள்ளி - முனிவர் தவம்புரியும் உறையுள். வாவி - குளம். (பாட்டு) வேட்பன..................றனவே. (பக். 134) இதன் பொருள் : வேட்பன தரும் கற்பகம் பொதுளிய அடவியிலிருந்தும் - விரும்பிக் கேட்பவைகளை யெல்லாங் கொடுக்குங் கற்பகமரங்கள் நிறைந்த காட்டின் கண் இருந்தும், ‘மற்று’: அசைநிலை; அல்லது, அவைகளை ஏதும் விரும்பிக் கேளாதவராய் என்று வினைமாற்றுப் பொருள்பட உரைப்பினும் ஆம்; இவர் ஆர்வது நடைபெறும் தூயவளியே - இவர் அருந்துவதோ இயங்குகின்ற தூய்மை யான காற்றாய் இருக்கின்றது, முடவுஇதழ்ப் பொன்தாமரையின் நல்தாது உகுதலின் பழுப்பு உருத்தோற்றும் விழுத்தட நீரே - வளைந்த இதழ்களையுடைய செம்பொன் நிறமான தாமரை மலர்களின் நல்ல துகள் சொரிதலினாலே பழுப்பான நிறத்தைக் காட்டுஞ் சிறந்த குளங்களின் நீரே, பொழுது மாறாது இவர் முழுகு தீம்புனலே - சிறு பொழுதுகள் தோறும் மாறாமல் இவர் ஆடும் இன்சுவைத் தண்ணீரா யிருக்கின்றது, வீழ்ந்து ஒரு குறியில் ஆழ்ந்து இவர் இருப்பதும் - விரும்பி ஓர் அடையாளத்தின் கண்ணே நினைவுபதிந்து இவர் இருப்பதற்கு இடமாவதும்; விளக்கம் வாய்ந்த மணிக்கல் மிசையே - துலக்கம் பொருந்திய இரத்தினக் கற்களின் மேலாகவே இருக்கின்றது, அரம்பை மாதரார் மருங்கு உறப்பெற்றும் - அழகின் மிக்க அரம்பை மகளிர் தம் பக்கத்தே பொருந்தப் பெற்றும், ஐம்பொறி அடக்கும் இவர் மொய்ம்பு மிகப் பெரிதே - ஐம்பொறி வழிச் செல்லும் அவாவை அடக்கியிருக்கும் இவரது மனவலிமை மிகவும் பெரிதாயிருக்கின்றது, இந் நல்தவர் பால் மன்னும் இப் பொருள்கள் - இந்த நல்ல தவத்தினையுடைய முனிவரிடத்தே நிலைபெற்றிருக்கும் இவ் வரும்பொருள்கள், ஏனை முனிவரும் விழைவு உற்று ஆனது நோற்கும் அருமை சான்றன மற்றை முனிவர்களும் பெறுதற்கு அவாக் கொண்டு இடையறாது தவம்புரியத்தக்க அளவு அருமை மிக்கனவாய் இராநின்றன என்றவாறு முன் நான்கு ஏகாரங்கள் பிரிநிலைத் தேற்றம்; ஐந்தாவது ஆறாவது தேற்றம். ‘வீழ்தல்’ விரும்புதற் பொருட்டாதல், “தாம் வீழ்வார் மென்றோள்” என்புழியுங் காண்க (திருக்குறள், 1103). ‘குறி’ என்றது ஒளியும், ஒளிவடிவின் அடையாளமான சிவலிங்கமும். இருக்கு வேதத்தைச் சேர்ந்த ‘சாகல’ர்க்குரிய பழைய ஒரு பிராமணமானது ‘விருத்தசாகல்யம்’ எனப் பெயர் பெறும்; அதனை யோதி யுணர்ந்தவராகலிற் ‘சாகலியர்’ எனப் பெயர் பெற்றார். மாட்சிமை - பெருமை; இங்கே தவப் பெருமை குறித்து நின்றது. இல்லறக்கிழத்தி - இல்லத்திற்கு உரியவள், மனைவி, ‘தாட்சாயணி’ தட்சன் புதல்வியுங் காசியபரின் மனைவியுமாகிய அதிதியைக் குறித்தது. மாமுனிவர் - (வடசொல்) மஹருஷி. (பக். 135) நற்குறி - நல்ல சகுனம். கடிதல் - கோபித்தல், கண்டித்தல். முருட்டுத்தனம் - முரட்டுத்தன்மை. வலிந்து இழுத்தல் - வலாற்காரஞ் செய்திழுத்தல். சிறான் - சிறுவன். பட்டி - வம்பன், (வடசொல்) துட்டன். (பக். 136) விழைவுறுதல் - மிக விரும்புதல், திண்ணமாய் - கெட்டியாய். உரமான திட்பமான. விடியற்காலையே மலரும் செந்தாமரை முழுதும் விரியாது சிறிதே முனைக்கண் விரிந்திருக்கும் நிலையில், அதன் இதழ்களின் மேல்முனைகள் மட்டுந் தனித்தனியே காணப் பட்டு அடிப் பகுதியெல்லாம் இடைவெளியின்றி நெருங்கி நிற்றலான். அங்ஙனமே விரல் முனைகள் மட்டுந் தனித்தனியே காணப்பட்டு அடிவிரல்கள் நெருங்கி அகஞ் சிவந்திருக்குஞ் சர்வதமனன் கைகளுக்கு அஃது உவமையாயிற்று. (பக். 137) ‘சுவரதை’ என்பாள் காசியபர் உறையுளின் கண் உள்ள முனிவர் மகளிருள் ஒருத்தி, தீட்டுதல் - சாயம் ஏற்றுதல். குடில் - சிறிய இல். மகார் - பிள்ளைகள். (பக். 138) படுதல் மட்டால் - படுதல் அளவிலே. (பக். 139) நோன்பு - (வடசொல்) விரதம். கண்ணம் - வெள்ளிய நீறு. தீற்றல் - பூசுதல். பணிஆற்ற - ஏவியதுசெய்ய. பண்டைக்காலத் தரசர்கள் தம் வாழ்நாளிற் பாதியை அரசியலிற் கழித்தபின், தமதரசைத் தம் மக்கட்குக் கொடுத்துவிட்டுத் தாம் தம் மனைவிமாருடன் கானகத்திற் சென்று வைகித் தவம் புரிதல் மரபு. உசாவல் - கேட்டு ஆராய்தல். நேர்மை - தகுதி. (பக். 140) ‘சகுந்தலை’ என்பதற்குப் பறவை என்றும், ‘லாவண்யம்’ என்பதற்கு அழகு என்றும் பொருளுண்டா கலின், அச்சொற்கள் இரண்டையுஞ் சேர்த்துத் துறவிமகள் சொல்லுமாற்றாற், சகுந்தலையைக் கொணர்ந்து தொடர்பு படுத்துதற்கு இந்நாடக ஆசிரியர் ஈண்டுக் காட்டுஞ் சூழ்ச்சித் திறனைக் காண்க. காப்பு - (வடசொல்) ரட்சை. கரண்டகம் - செப்பு. (பக். 141) அபராஜிதை - வெல்லப்படாதது. பூண்டு - செடி. ‘பிறவிச்சடங்கு’ இதனை ‘ஜாதகர்மம்’ என்ப வடநூலார்; அது பிறந்த மகவுக்குத் தொப்புள் அறுக்கும் முன், தந்தையாயினான் ஒரு பொற்கரண்டியிற் சிறிது வெண்ணெயுந் தேனும் எடுத்து அம்மகவின் வாயிற் பெய்வதாகும் என்று மனுமிருதி (2,27) நுவல்கின்றது. நல்கல் - கொடுத்தல். (பக். 142) துஷியந்தனால் விலக்கப்பட்ட காலத்திற் பின்னிய சடையைச் சகுந்தலை அவிழ்த்துச் சீவித் திரும்பப் பின்னலிடாமையின் “ஒரே முறை பின்னப்பட்ட சடையோடு சகுந்தலை வருகின்றாள்” என்றார். கணவனைப் பிரிந்து கற்புடை மனைவியர் இவ்வாறு ஒப்பனையின்றி அழுக்கேறிய துயர வாழ்க்கையினராய் நோன்பு மேற்கொண்டிருத்தல் பண்டை வழக்கம். கழிவிரக்கம் - முன்னேசெய்த பிழையை நினைந்து வருந்துதல். (பக். 143) எந்து எழில் - மிக்க அழகு. ‘உரோகிணி’ என்பவள் தக்கன் புதல்வியர் இருபத்தெழுவரிற் சந்திரன் பால் மிக்க அன்புடையவள் என்றும், அவனுந் தன் மனைவிமாரான அவ்விருபத்தெழுவரில் உரோகிணியிடத்து மட்டுமே கழிபெருங் காதலுடையனாய் ஒழுகினன் என்றும், அதுகண்ட தக்கன் தன் புதல்விமா ரெல்லாரிடத்தும் ஒரு பெற்றித்தான அன்புவையாதது பற்றிச் சந்திரனை ஒளிமழுங்குகவெனச் சபித்தனனென்றும், அச் சாபம் ஏற்ற சந்திரன் சிவபிரானை வேண்டித் தவங்கிடந்து மீண்டுந் தன் ஒளி தேய்ந்து வளரப்பெற்றன னென்றும் புராணங்கூறும், இராகுவால் விழுங்கப்பட்ட சந்திரனைப் பிரிந்திருந்த உரோகிணி, அஃதவனைக் கக்கியபின் அவன்பாற் சென்று சேர்ந்தாற் போல, மறதியால் விழுங்கப்பட்டிருந்த துஷியந்தனை அது விட்டு நீங்கியபிற் சகுந்தலை அவனை வந்து அடைந்தனள் என்றார். மிடறு - தொண்டை. இங்குலிகம் - மிகச் சிவந்த நிறத்தின தாகிய சாதிலிங்கம். ஊட்டுதல் - தோய்வித்தல். கணவனொடு கூடிவாழும் மகளிர் தம் இதழ்களின் இயற்கைச் சிவப்பு நிறத்தை மிகுதிப்படுத்தல் வேண்டி அவற்றிற்கு இங்குலிகம் ஊட்டுதல்அஞ்ஞான்றை வழக்கம். சகுந்தலை தன் கணவனைப் பிரிந்திருந்தமையால் அவ்வாறு செய்தியற்றிலள். ‘மலகுணம்’ ஆணவமலத்தின் மறைக்குங் குணம். அறவினை - தர்மச்செயல். (பாட்டு) பேதைமை.....................மயிலே. (பக் 144) இதன் பொருள் : பேதைமைதன்னால் - அறியாமையினால், மாதை நான் நீக்க - மங்கையாகிய நின்னை யான் விலக்கிவிட, அதனை நினைந்தெழும் - ஆற்றாமையாற் பெருகுங், கண்ணின் நுண்துளிகீழ் இதழ் வீழ்ந்து பெரும் துயர் உறுத்தியது அன்றே - கண்களின் சிறு நீர்த்துளிகள் கீழ் உதட்டின் கண்ணே விழுந்து யான் நின்னை விலக்கிய அந்நாளில் நினக்குப் பெருந் துன்பத்தை யான் விளைத்ததற்கு அறிகுறியாயின வல்லவோ? இன்றே - யான் நின்னைத் தலைக்கூடிய இந்நாளிலும், அப்பிரிவினை நினைந்து பெருகும், அது சிறிதே வளைமயிர் இறையில் உற்றதாகலின் - அக் கண்ணீர் சிறுதுளிகளாக வளைந்த மயிர்களை யுடைய இறைப்பை விளிம்பிற் றங்கியிருக்கின்றனவாதலால், பொன்பொடி- பொன்னிறமான பூங்கொடி யனையாய், அதனை - அக் கண்ணீர்த் துளிகளை, அளியேன் பெரும் துயர் நீங்க - இரங்கத்தக்க எனது பெருந்துயரம் நீங்கும் படியாக, எளியேன் முந்துறத் துடைக்குவென் மயிலே - மயிலின் சாயலயுடையாய் ஏழையேன் முன்னதாகத் துடைப்பேன் என்றவாறு. ‘துளி’ என்பது பால்பாக அஃறிணைப் பெயராகலிற் பாட்டில் ஒருமை வினையும், உரையிற் பன்மை வினையும் ஏற்றது. இறையென்பது ஆகுபெயரால் ஈண்டு இறை விளிம்பை யுணர்த்திற்று. மெய்ப்பித்தல் - உண்மையென நாட்டுதல். கொடியைச் சகுந்தலையாகவும், வேனிற் பருவத்தைத் துஷியந்தன் தானாகவும், மலரைக் கணையாழியாகவும் உட்கொண்டு அவன் கூறுதல் காண்க. (பக். 145) தக்கன் புதல்வி அதிதி, மரீசியின் புதல்வர் காசியபர்; ஆக, அதிதி காசியபர் இருவரையுஞ் சுட்டுதலின் அவ்விருவர்க்குந் தந்தையரான தக்கனையும் மரீசியையுங் கூறினான். பகலவனாற் பன்னிரு திங்கள் வகுக்கப்படுதலின், அங்ஙனங் காலத்தைக் கூறுபடுக்கும் அவனும் பன்னிரு பகலவர் ஆயினன்; இப்பன்னிருவரும் அதிதிக்குங் காசிய பருக்கும் மக்களாவரென்று புராணங் கூறும். (பக். 146) இறைமகன் - தலைமகன். தேவர்க்கு அரசனாதல் பற்றி வேள்விக்கட் கொடுக்கும் பலியில் முதற்கூறு இந்திரனுக்குரிய தென்றான். “தானே யுண்டாவதான பரம் பொருள்” என்றது ஈண்டு நான்முகக் கடவுளை; அந் நான்முகக் கடவுட்கும் மேலான புருடன் என்றது விண்டுவை; அதிதி காசியபருக்கு மகனாய்ப் பிறந்த வாமநன் விண்டுவின் பிறவியாதல்பற்றி விண்டுவுக்கு அவ் விருவரும் பிறப்பிட மானவ ரென்றான். சயந்தன் - இந்திரன் மகன். (பக் 147) ‘பிரஜாபதி’ என்பது உயிர்கட்கு இறைவன் என்னும் பொருட்டு. இச்சொல் வேதங்களில் இந்திரன், சாவித்திரி, சோமன், இருணியகருப்பன் முதலாயினார்க்குப் பெயராக வழங்கப்படுகின்றது; மனுவில் இது நான் முகனுக்குப் பெயராக நுவலப்படுகின்றது; இன்னும் இது சுவாயம்புவமனுவுக்கும் பெயராக இருக்கின்றது; பின்னும் இது மரீசி, அத்திரி, அங்கிரசர், புலத்தியர், புலகர், கிரது, வசிட்டர், பிரசேதர், பிருகு, நாரதர்க்கும் பெயராக வழங்கு கின்றது; இங்கே இச்சொல் மாரீசர் மேற்று ‘வீசிமுறை’ என்பது உயிர்களின் ஊழ்வினைப் பயனை நுகர்விக்குந் தெய்வம். கார் - முகில், (வடமொழி) மேகம். மடந்தை - பெண், பதினான்கு முதற் பத்தொன்பதாண்டுள்ள பெண்ணை மடந்தையென்றால் தமிழ்வழக்கு. ‘கண்ணுவர்’ காசியப குலத்தைச் சேர்ந்தவரென்று மாபாரதங் கூறும். (பக். 148) தவறு இழைத்தல் - குற்றஞ் செய்தல், புதுமை - (வடமொழி); ஆச்சரியம். அடிச்சுவடு - அடியழுந்தின அடை யாளம். துணிவு - தெளிவு. அப்பெற்றித்து - அத் தன்மையது. பேதை - கள்ளம் அறியாதவள். ‘தவக்காட்சி’ இன்னதென்பதனைச், “...............................சமாதியான் மலங்கள் வாட்டிப் பொருந்திய தேசகால இயல்பு அகல் பொருள்கள் எல்லாம் இருந்து உணர்கின்ற ஞானம் யோகநற் காண்டல் ஆமே” என்னும் சிவஞானசித்தித் திருச்செய்யுளால் (அளவை, 7) உணர்ந்து கொள்க. வறிது - வெறுமை. (பக். 149) இடையே தெற்றுப்பட்டு - நடுவே தடுக்கப் பட்டு. இங்கே குறிக்கப்பட்ட தேராவது கடன்மேலும்மலை மேலும் படாமல் வானின்கட் செல்லும் வானவூர்தி. இந்நிலவுலக மானது, சம்புத்தீவு, பிலட்சத்தீவு, சான்மலித்தீவு, குசத்தீவு, கிரௌஞ்சத்தீவு, சாகத்தீவு, புஷ்கரத்தீவு என்னும் ஏழு தீவகங்களாகப் பிரிக்கப்பட்டுளதென்றும், இவற்றை முறையே உப்புக் கடலுங் கருப்பஞ்சாற்றுக் கடலுந் தேன் கடலும் நெய்க்கடலுந் தயிர்க்கடலும் பாற்கடலும் நல்ல தண்ணீர்க் கடலுஞ் சூழ்ந்திருக்குமென்றும் விண்டுபுராணங் கூறும். துஷியந்தன் மகன் பரதனே, குருநிலத்திற் பதினெட்டு நாட் கடும்போர் மலைந்த பாண்டவர் கௌரவர்க்கு மூதாதை யாவன். அடிகள் - (வடமொழி) சுவாமிகள். புனிதம் - (வடமொழி) பரிசுத்தம். எய்த - அடைய. மேனகை என்னிடத்திலேயே தொண்டு செய்து கொண்டிருப்பளாதலால் அவளுக்கு இச் செய்திகளை அறிவிக்க வேண்டுவதில்லையென அதிதியார் கூறினார். (பக். 150) சினவாது - கோபியாது. கட்டளை - (வடமொழி) உத்தரவு. (பக். 151) வேட்டல் - வேள்வி வளர்த்தல். துறக்க நாட்டினர் - வானுலகத்துள்ள தேவர்கள். உவப்பித்தல் - மகிழ்வித்தல். ஊழி - (வடமொழி) யுகம். இதன் திறத்து - இவ்வகையில். ஒரு நாடக முடிவின் கட் சொல்லப்படும் வாழ்த்துரை யானது ‘பரதவாக்கியம்’ என்று வடநூலின் கட் சொல்லப் படும்; ஏனென்றாற், பண்டைக்காலத்தில் முதன்முதல் இசைநாடகங்களைத் தோற்றுவித்த ஆசிரியன் ‘பரதன்’ என்ற பெயருடையனாதலால், அவனை நினைவு கூர்தற்கு அடையாளமாக, நாடகத் தலைவனாய் நின்றான் ஒருவன் நாடகமுடிவின்கட் சொல்லும் வாழ்த்துரை அவ்வாசிரியன் பெயரால் வழங்கப்படுவதாயிற் றென்க. (பாட்டு) சிறந்த மன்னவன்..................குகவே. இதன் பொருள் : சிறந்த மன்னவன் - அறிவு ஆண்மை நடுநிலைமையில் மிக்கோனான அரசன், தன்குடிச் செல்வமே தெரிக - தன் குடிமக்களின் வளவிய வாழ்க்கையினையே தனது வாழ்க்கையாகத் தெரிவானாக!, விறந்த கல்விசால் புலவர்சொல் வியந்திடப்படுக - செறிந்த கல்வி யறிவுமிக்க புலவரின் மொழிகள் எல்லாராலும் பாராட்டப் படுக!, நிறந்து வாழ் உமை கூறர் ஆம் நீலலோகிதர் - எல்லா உலகிலும் உயிரிலும் விளங்கித் தோன்றி வாழாநின்ற உமைப் பிராட்டி யாரைத் தமது இடப்பாகத்தே கொண்டவரான சிவபிரான், யான் பிறந்திடாவகை அருளி மேல் பேறு நல்குக - யான் மீண்டும் பிறவாதபடி அருள்செய்து அதன் மேல் தமது திருவடிப்பேற்றையும் எனக்குக் கொடுத்தருள் வாராக! என்றவாறு. ஏ: அசை; ‘பேறு’ என்பதில் உம்மை தொக்கது. ‘விறக்க’ செறிந்த எனப் பொருள்படுதலை “விறப்பும் உறப்பும் வெறுப்புஞ் செறிவே” என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்திற் காண்க (உரியியல், 51). செறிந்த கல்வியுடைய ராதலாவது பன்னூல்களையுந் துருவி யாராய்ந்தறிந்த அரும்பொருள்களைத் தம்முளத்தே நெருங்கப் பொதிந்து வைத்தவராய்த் திகழ்தல். அம்மை அருள் வடிவினளாய் எல்லாவிடங்களிலும் உயிர்களிலும் நிறைந்து நின்று அவற்றை ஆக்கியுங் காத்தும் வரும் ஓவா நிகழ்ச்சி உணர்ந்து நோக்குவார்க்கெல்லாம் புலனாய் நிற்றலின் ‘நிறந்துவாழ்’ என அடை கொடுக்கப்பட்டாள். ‘நீலலோகிதர்’ நீலநிறமுஞ் சிவப்பு நிறமுந் தன்கட் டோன்றுஞ் சிவபிரான்; லோகிதம் - சிவப்புநிறம். அம்மை நீரின் றன்மைய ளாகலின் நீலநிறமும், அப்பன் நெருப்பின் றன்மையனாகலிற் செந்நிறமும் உடையர். அம்மையும் அப்பனும் பிரிவின்றி ஒருங்கு விராய் நிற்றலின் அவர் நிறம் இரண்டுங் கலந்த ‘நீலலோகிதர்’ என்னும் பெயர் கடவுட்கு வழங்கலாயிற்று. இக் கடவுள் நிலையின் உண்மையின் விரிவு யாமியற்றிய சைவசித்தாந்த ஞானபோதம். சிவஞானபோத ஆராய்ச்சி, திருவாசக விரிவுரை, மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் பெருநூல்களிற் கண்டு கொள்க. (காளிதாசர் வடமொழியில் இயற்றிய சாகுந்தலத்திற்கு இத் தமிழ் மொழிபெயர்ப்பும் விளக்க உரைக்குறிப்புகளும் இயற்றினார் பல்லவபுரம், பொதுநிலைக்கழக ஆசிரியர் மறைமலையடிகள் ஆவர்.) சாகுந்தல நாடகம் - முற்றும் - செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை இரக்கமிலா அரசே! இலைகிளர் பூண்டுக்குத் இன்பநுகர் பொருளெல் இன்று சகுந்தலை உருக்கிளர் இளந்தளிர் உன்மேற் பற்றின்றி ஒருபொழுதும் என்உளத் ஒறுக்கும்வலி யுடைமையா ஓங்குவரை மேலிருந் ஓவியமாக எழுதிய கண்மணி யனையாய்! கதுவப் படாம களிவளர் கடவுளாங் காமவின்பம் நுகருங்காற் காம்புகாது செருகிக் காரிகை தன்னையான் கெண்டையங் கண்ணி கைமேற் றலைவைத் கொடியேனால் நீக்குண்டு சிறந்த மன்னவன் சிறப்பணி கலன்கள் செழுமா மரங்கள் தாமரை யிலைப்பினே தானே வலிவிலென் துணைபுண ரன்னம் துறவிமகள் மேல்வைத்த நறுமண நரந்தம் நீயோ மலர்வெங் நொடிசிமிழா விழியால் என் பிள்ளையில்லாக் கொடி புள்ளி விளங்கு புறஞ்சென்ற காதலரைப் பூங்கணை வாய்ந்த மணமலரில் வேட்கை மலரைக் கணையாய் மறைவிற் செறிந்த மாலைக் காலத்து முகை அவிழ்க்குந் தாமரை முன்னுக தவமுதிர் மெல்லிதா யழகிதாய் மெல்லியலாய்! நின்னை மேதைமை தன்னான் மோவா மலரோ வடுவறு பேரெழில் வண்மலர் கன்னமும் வழியி லிடையிடையே விரிகட லடியிற் விழிகளாற் பெறூஉம் விரியு மணமவிழ்க்கும் விழிதுயி லாமையால் விழுத்தக்க வேனிலுயிர் விழுநறவு வேண்டிவிரி விழைபொருள் பெறுதல் வெங்கதிரின் வெப்பம் வேட்பன தரூஉம் வேனில் கழிந்த வுடனே அடிகளாரின் இலக்கிய வரலாற்றுத் திறம் முன்னுரை அடிகளார் என மதிப்புடன் அழைக்கப்படும் சான்றோர் ஒரு சிலருள் ஒருவராகத் திகழ்பவரே மறைமலையடிகளார். அற்றைநாள் தொட்டு இற்றைநாள்வரை நம் தமிழ் மாநிலத்தைச் செங்கோல் ஓச்சிய அரசர்கள் வரலாறும், அவர் காலத்திருந்த புலவர்கள் வரலாறும், அவரியற்றிய நூல்களின் வரலாறும், மயக்கமறத் தெளிவாகக் கற்றுத் தெளிந்த வித்தகர் இவர் என்பதை `மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்’ கற்றவர் எவரும் அறுதியிட்டுக் கூறுவர். விழிகள் இன்றிக் காணல் இயலாதது போலவே, இலக்கிய வரலாற்றறிவின்றிக் கால ஆராய்ச்சி செய்வதும் இயலாது. மாணிக்கவாசகர் காலத்தை ஒன்பதாம் நூற்றாண்டெனக் கூறிய திரு. கோபிநாதராவ், `தமிழ் அராய்ச்சிகள்’ என்னும் நூலின் ஆசிரியர் திரு. எம். சீனிவாச ஐயங்கார், மற்றும் `தமிழ் வரலாறுஞ் எனும் நூலின் ஆசிரியர் இவர்களுக்கு மறுப்பாகவே அடிகளார் இந்நூலைச் செய்தார். அவருடைய இலக்கிய வரலாற்றுத் திறத்தை இந்நூல்வழி நின்று ஆராய்வோம். காலப் பாகுபாடு தமிழ் இலக்கிய வரலாற்றின் காலத்தைத் தனித் தமிழ்க்காலம், புத்தகாலம், சமண காலம், சைவ வைணவ காலம், பார்ப்பன காலம், ஆங்கிலக் காலம் என அறுவகையாகப் பிரித்து அவற்றை விளக்கும் திறம் பாராட்டுதற்குரியது. `பாரதப்போர் நிகழ்ந்தபோது உடனிருந்த முரஞ்சியூர் முடிநாகராயர் காலந்தொட்டுக் கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைத் தனித்தமிழக் காலமெனவும், கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சமணகால மேனவும், ஏழாம் நூற்றாண்டு முதற் பதினான்காம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சைவ வைணவ காலமெனவும், பதினான்காம் நூற்றாண்டு முதற் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைப் புத்த காலமெனவும், நான்காம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சமணகால மெனவும், ஏழாம் நூற்றாண்டு முதற் பதினான்காம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சைவ வைணவ காலமெனவும், பதினான்காம் நூற்றாண்டு முதற் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைப் பார்ப்பன காலமெனவும், பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இதுகாறுஞ் சென்ற காலத்தை ஆங்கில காலமெனவும் கூறுதல் இழுக்காமை, அவ்வறுவகைக் காலங்களில் தோன்றிய நூல்களை நன்கு ஆராயுமுகத்தால் தெளியலாம் (பக் 223) என அடிகளார் விளக்கியுள்ளமை, இலக்கிய வரலாற்றைத் தெளிவுபட அறிந்திருந்தமையை நன்கு உணர்த்துகிறது. நிலத்தினைத் துருவித்துருவி ஆயும் நிலநூலார் போல, தமிழ் நூல்களைத் துருவித்துருவி ஆய்ந்தவர் அவர். இதனை அவரே, `நிலநூலார் நிலத்தினைத் துருவி அதன் கீழுள்ள பற்பல படைகளையும், அவ்வப் படைகளிற் புதைந்து கிடக்கும் பற்பல பொருள்களையும் ஆராய்ந்து பார்த்து, அவ்வப்படைகள் உண்டான காலத்தையும், அவற்றில் உலவிய உயிர்கள், அவ்வுயிர்கள் வழங்கிய பண்டங்கள், அப் பண்டங்களிலிருந்த மரஞ்செடி கொடிகள் முதலியவற்றையுமெல்லாம் வழுவாமல் விளக்கிக் காட்டுதல் போலத் தமிழ் நூலாராய்ச்சி செய்வோரும், தனித்தமிழ் உண்டானது முதல் இதுவரையிற் போந்த காலத்தையும் துருவிப் பார்ப்பாராயின், அது பல படைகளாகப் பிரிந்திருக்கவும், அப் படைகளிற் புதைந்து கிடக்கும் தமிழ் நூல்கள் அவ்வக் காலாப் படையின் இயல்பையும், அஞ்ஞான்று உலவிய மக்களியல்பையும் தெற்றெனக் காட்டவுங் காண்பார்கள்’ (பக். 222-223) எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நிலத்தை ஆயும் நில இயலார் ஆய்வினைப்போல, நூலை நுணுகி ஆய்ந்த ஆய்வின் பயனாக, அனைவரும் ஒப்பும் வகையில், தமிழ் இலக்கிய வரலாற்றின் காலத்தை மேற்காட்டியபடி ஆறுவகையாய்ப் பிரித்துக் காட்டியுள்ளார். இலக்கிய வரலாற்றுக்குத் துணைசெய்யும் அவருடைய கல்வெட்டறிவு மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையாரில் வரகுண பாண்டியனைப் பற்றிய குறிப்பு உண்டு. “வரகுணனாந் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான்” (திருக்கோவை: 306) “சிற்றம்பலம் புகழும், மயலோங் கிருங்களி யானை வரகுணன்” (திருக்கோவை: 327) எனவும், மாணிக்கவாசகர் குறிப்பிடும் வரகுண பாண்டியனைப் பற்றிக் கல்வெட்டுக்களில் வரும் சான்றுகளைக் காட்டி, சிலர் மாணிக்கவாசகர் காலத்தை ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி எனவும் கூறுவர். அடிகளார் தம் கல்வெட்டுத் திறனைக் கொண்டே, மாணிக்க வாசகர் குறிப்பிட்ட வரகுண பாண்டியன் தமிழ்நாட்டிற் கல்வெட்டுக்கள் உண்டாவதற்கு முன், அஃதாவது கி.பி. 4 ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்தனன் என்பதைத் தெளிவு படுத்துகிறார். கல்வெட்டுக்களிற் கரிகாலன் பெயரால் மூவர் அறிய வந்தாலும், அப் பெயராலேயே சங்க காலத்தில் கரிகாலன் ஆண்டமையைச் சுட்டும் அடிகளார், அதுபோலவே வரகுணன் எனும் பெயரில் இருவர் கல்வெட்டில் குறிக்கப்பட்டாலும், மாணிக்கவாசகர் குறிப்பிட்ட வரகுணன், கல்வெட்டுத் தோன்றும் முன்பே வாழ்ந்தவன் என்று நிறுவுகிறார். பண்டைத் தமிழரசர்கள் காலத்தில் கல்வெட்டு இல்லாமல் இருந்தமைக்கும் இரண்டு காரணங்களைக் காட்டுகிறார். “முதலாவது: அஞ்ஞான்றிருந்த சேர, சோழ, பாண்டியர் என்னும் தமிழ் வேந்தர் மூவரும் தமக்குள் இடையிடையே போராடி நிற்பினும், பிற நாட்டரசர்க்கு இடங்கொடாத ஒற்றுமையும், அதனாற் பெருகிய பேராற்றலும் நெடுங்காலம் வாய்க்கப் பெற்றிருந்தனர் என்பதேயாம். தமது அரசு வேற்றரசரால் வெளவப்பட்டு நிலைகுலைந்தழியும் எனக் கனவினும் அவர் நினைந்திலர். அதனாற் பல மாறுதல் கட்கிடையிலும் நிலைத்து நிற்க வல்ல கற்பட்டயங்களை வெட்டுவித்திலர். இரண்டாவது, பண்டைக்காலந் தொட்டே தமிழ் வேந்தர் மூவரும் செந்தமிழ்ப் பயிற்சியைப் பெரிதும் வளரச் செய்து, இங்ஙனம் கொடை கொடுத்தலும் இயலுமோ வெனக் கேட்டார் ஐயுற்று வியக்குமாறு தமிழ் கற்றார்க்கு மிகப் பெரிய பொருளுதவி செய்து தமிழையுந் தமிழரையும் நிரம்பவும் செழிப்புறப் பெருக்கிக் குடிகள் உவக்குமாறு செங்கோல் செலுத்தி வந்தமையேயாம். இதனாற் கற்றார் தொகையும், அவரியற்றிய அளவிலா நூல்களும் பதிற்றுப்பத்து முதலியவற்றைப் போல் அவ் வேந்தர்தம் பெயரும் பீடும் உரைத்து அவற்றை மங்காமற் றுலங்க வைத்தமையாலும் அவர் கல்வெட்டுக்கள் ஆக்கிவைக்கும் கருத்தே இலராயினார்.” (பக். 240-241) இலக்கிய வரலாற்றுக்குத் துணைசெய்யும் ஆசிரியர்தம் யாப்பறிவு இனி மாணிக்கவாசகர் காலத்தைப் பிற்பட்டதெனக் கூறுவோர், அவருடைய திருவாசகம், திருக்கோவையாரில் காணப்படும் பாவைகளைப் பிற்பட்ட காலத்ததுவெனக் கூறுவர். பாவகைகளை ஆய்வு செய்து, அவ்வகையிலும் மாணிக்க வாசகர் காலம் முற்பட்ட தென்பதைத் தெளிவுபடுத்திக் காட்டுகிறார் ஆசிரியர். “கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட செந்தமிழ் நூல்கள் எல்லாம் பண்டைத் தமிழ்ப் பாக்களாலும் பாவினங்களாலுமே ஆக்கப்பட்டிருப்ப, கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் நூல்களெல்லாம் புதிது புகுந்த விருத்தப் பாக்களாலேயே ஆக்கப்பட்டிருப்பத், `திருவாசகமோ’ ஒன்றரைப் பங்கு பண்டைத் தமிழ்ப்பா பாவினங்களாலும் ஒருபங்கு புதிது தோன்றிய விருத்தப் பாக்களாலும் ஆக்கப்பட்டிருத்தலை நுனித்துக் காண வல்லார்க்குப் பண்டைத் தமிழ் வழக்குச் சிறிது சிறிது வீழ்ந்து, புதிய கலவை வழக்கு மெல்ல மெல்லத் தோன்றும் ஒரு காலத்தே திருவாசக நூல் இயற்றப்பட்டதாதல் நன்கு விளங்கும். இத் திருவாசகத்தைப்போற் பழைய வழக்கும் புதிய வழக்கும் ஒருங்கு விரவிய பிறிதொரு தமிழ் நூலைக் காண்டல் அரிது. அங்ஙனம் விரவிய வழக்கினுள்ளும் பழைய வழக்கையே அது பெரிதுஞ் சார்ந்து நிற்கக் காண்டலிற், புதிய வழக்குக்குத் தோற்றுவாய் காட்டும் சிலப்பதிகாரத்தின் காலத்தை நெருங்க அடுத்தே திருவாசகம், திருக்கோவையார் என்னும் நூல்கள் தோன்றியவாதல் தெளியப்படும். (பக். 214 - 215) பாவாராய்ச்சியால் காலத்தை அறுதியிட்ட ஆசிரியர், பா பயிலும் வடசொற் கலப்பின் துணைக்கொண்டும் காலத்தைக் கணித்தல் போற்றுதற்குரியது. பத்தாம் நூற்றாண்டளவில் நூற்றுக்கு முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது வரையில் வட சொற்கள் கலந்துவிட்டமையை எடுத்துக்காட்டி, திருவாசகத் திருக்கோவையாரில் அவை குறைந்த அளவில் இருப்பதைக் காட்டுகிறார். “திருவாசகம் முழுதும் உள்ள சொற்களை எண்ணிப் பார்க்க, முதன்மையாயுள்ளன இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பத்துச் சொற்களேயாம். இவற்றுள் முந்நூற்று எழுபத்து மூன்று வடசொற்கள். இவற்றை வகுத்துப் பார்த்தால் நூறு சொற்களில் தொண்ணூற்றிரண்டு அல்லது மூன்று தமிழ்ச்சொற்களும் மற்றைய எட்டு அல்லது ஏழு வடசொற்களுமாய் முடிகின்றன. முடியவே, திருவாசகத்தில் நூற்றுக்கு ஏழு அல்லது எட்டு விழுக்காடு வடசொற்கள் வந்து விரவலாயின வென்பது புலப்படும். மாணிக்க வாசகப் பெருமான் அருளிச் செய்த மற்றொரு நூலாகிய `திருச் சிற்றம்பலக் கோவையாரில்’ சமயப் பொருள் மிக விரவாமல், பெரும்பாலும் தமிழின் அகப்பொருளே விரவி நிற்றலால் அதன்கண் நூற்றுக்கு ஐந்து விழுக்காடே வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன.” (பக். 210-211) இவ்வாறு வடசொற்கள் விரவியிருக்கும் எண்ணிக்கை யாலும் கூட, மணிவாசகரின் நூல்கள் காலத்தால் முந்தியனவே என வரையறுக்கிறார் அடிகளார். இலக்கிய வரலாற்றுத் திறனுக்கு உதவும் ஆசிரியரின் மத வரலாற்று அறிவு இலங்கை புத்தகுரு ஒருவரை வாதம் செய்து வாதவூரர் வென்றமை அவர்தம் வரலாற்றால் அறிய இயலுகிறது. மணிவாசகர் வாக்கில் புத்த சமயம் அக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது கூறப்படுகிறதே தவிர, சமண சமயம் பற்றிய குறிப்பில்லை. புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயந் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்க (திருத்தோணோக்கம், 6) என வரும் குறிப்பில் அவர் சமண சமயத்தைக் கூறினாரில்லை. சமண சமயத்தை அவர் காட்டாமையால், தமிழகத்தில் சமண சமயம் செல்வாக்குப் பெறாத காலத்திற்கு முன்பே, அவர் வாழ்ந்திருந்தார் என விளக்குகிறார் அடிகள்: “அவர், புத்த சமயம் ஒடுங்கிச் சமண சமயம் மிக்கு ஓங்கிய பின் நூற்றாண்டுகளில் இருந்தனராயின், அங்ஙனமிருந்த திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் மூவருந்தாம் அருளிச் செய்த திருப்பதிகங்களுள் அச் சமண மதத்தவரையும் குறிப்பிட்டவாறு போல், தாமும் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறவர் தாம் அருளிச் செய்த `திருவாசகம்’, `திருச்சிற்றம்பலக் கோவையார்’ என்னும் நூல்களில் ஓரிடத்தாயினும் சமண மதத்தைக் குறிப்பிட்டுரையாமையாலும் அவர் குறிப்பிட்டுக் கூறிதெல்லாம் `புத்த சமயம்’ ஒன்றே யாகலானும், அவர் சமண சமயம் மேலோங்கி நிலவிய காலத்திருந்தவர் அல்ல ரென்பதூஉம், அதற்குமுற் புத்த சமயம் கிளர்ந்து நின்ற காலத்திருந்து அதனை ஒடுக்கியவராவர் என்பதூஉம் தெளியப்படும்.” (பக். 299) மாணிக்கவாசகர் வாக்கில், `மிண்டிய மாயாவாதம்’ என வருவதைப் பிற்காலச் சங்கரர் விளம்பிய மாயாவாதத்தோடு ஒப்பிட்டு, சங்கரருக்கும் பிற்பட்டவராக மாணிக்கவாசகரைக் கருதுவார் கூற்றை மறந்து, மாயாவாதம் என மணிவாசகர் குறித்தது புத்தமதத்தையே எனத் தெளிவு செய்கிறார் அடிகளார். “அடிகள் காலத்தில் `மாயாவாதம்’ என்னுஞ் சொல் `புத்த சமயத்தை’யே உணர்த்தியதென்பது `வாமன் சி. ராமம்” என்பவர் எழுதிய `வடமொழியகராதி’யிலும் குறிக்கப் பட்டிருக்கிறது. முதலிற் புத்த சமயத்திற்கும் பெயராய் வழங்கிய மாயாவதம் என்னுஞ்சொல், அப் புத்த சமயம் ஒடுங்கி, அதனோடொப்பதாகிய ஏகான்மவதாம் தலையெடுத்துப் பரவத் துவங்கிய பின் அதற்கும் பெயராய் வழங்கலாயிற்று. தமக்கு முற்றொட்டேயிருந்த இவ் `வேகான்மவாத மாயா வாதத்தை’ச் சைவத்துறவி வேடம் புனைந்து கொண்டு, சங்கராசாரியார் இவ்விந்திய நாடெங்கணும் பரப்பியபின், அச் சொல் முதலிற்றான் உணர்த்திய புத்தசமயப் பொருளை இழந்து, ஏகான்மவாதப் பொருளைப் பெறுதலாயிற்று. ஆகவே, இக்காலத்தில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டில் `மாயா வாதம்’ என்னுஞ்சொல் ஏகான்மவாதத்தின் மேற்றாய்க் குறிக்கப்பட்டிருத்தல் பற்றி ஈண்டைக் காவதோர் இழுக்கில்லை. அதனால் அடிகள் சங்கராசாரியாருக்குப் பிற்பட்டவராதலுஞ் செல்லாது. அடிகள் காலத்து வழங்கிய மாயாவாதமும், சங்கரர் காலத்து வழங்கிய மாயாவாதமும் வெவ்வேறாதல் கண்டு கொள்க” (பக். 299) எனத் தெளிவுறுத்தி, மாயாவாதம் என்னும் சொற்றொடர், ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்நூல்களில் எங்கும் காணப்படவில்லை என்பார் கூற்றினையும் மறுத்து, ஆறாம் நூற்றாண்டினதாகிய திருமந்திரத்தின்கண் `ஐயைந்து மாயாவாதிக்கே’ என வருவதை எடுத்துக் காட்டியிருக்கிறார். இலக்கிய வரலாற்றுத் திறனுக்கு உதவும் அடிகளாரின் அரசியல் வரலாற்று அறிவு: தமிழகத்தில் சீரும் சிறப்புமாய்ச் செங்கோல் ஓச்சியிருந்த பல்லவர் பற்றிய குறிப்பு, மணிவாசகர் பாடல்களில் இல்லாமையால், அவர் பல்லவர் காலத்திற்கு முற்பட்டவர் எனத் தெளிவு செய்கிறார் அடிகளார். “தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்கன் வரக் கூசவாய்” என்று சேர, சோழ, பாண்டியர் மூவரையே தமது திருவாசகத்திற் குறிப்பிட்டு அருளிச் செய்திருக்கிறார். அவர் பல்லவர் ஆட்சிக் காலத்திருந்தனராயின், அங்ஙனமிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் `பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும்’ என அவர்களைக் குறிப்பிட்டு அருளிச் செய்தவாறுபோற் றாமும் எங்காயினும் அருளிச் செய்திருப்பர். அவ்வாறன்றிச் சேர சோழ பாண்டியரென்னும் மூவரையே அவர் குறிப்பிட்டிருத்தலின், அவர் இத்தமிழ் நாட்டில் அம் மூவேந்தரது ஆட்சியைத் தவிரப் பிறிது ஏதுங் கலவாத காலத்து, அஃதாவது நான்காம் நூற்றாண்டிற்கு முன் இருந்தவரென்பது தெற்றென விளங்கா நிற்கும்”. (பக். 298) முடிவுரை தமிழ் இலக்கண இலக்கியப் பேரறிவும், சைவ சித்தாந்தக் கொள்கைத் தெளிவும், பௌத்த சமண மத வரலாற்று அறிவும் நிரம்பப் பெற்று, அனைத்துத் திறங்களையும் பயன்படுத்தி மாணிக்க வாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டென நிறுவியுள்ள அடிகளாரின், இலக்கிய வரலாற்றுத் திறன் ஈடு இணையற்றதாகும். ஆறாண்டுக் காலம் அயராது உழைத்து அடிகள் யாத்த இந்நூல், அவர்தம் சிறந்த இலக்கிய வரலாற்றுத் திறனை, உள்ளடங்கி, மாணிக்கவாசகரின் வரலாற்று உண்மையும், அவர் அருளிச் செய்த நூல்களின் உண்மையும், அவற்றின் வாயிலாக அறிய வேண்டி நிற்கும் முற்கால பிற்கால நூல்களின் உண்மையும், சைவம், வைணவம் பௌத்தம், சமணம் மாயாவாதம் முதலான சமயங்களின் உண்மையும், அவ்வச் சமயங்களிற் காலங்கடோறும் புகுந்த புராணக் கதைகளின் உண்மையும், அவ்வக் காலங்களில் நின்ற அரசியல்களின் உண்மையும், அவ்வக் காலங்களில் திரிபெய்தி வந்த ஒழுக்கங்களின் உண்மையும் தெளிவுறுத்தி நிற்கிறது. - மறைமலையடிகள் நூற்றாண்டு மலர் (பக். 38-43) மறைமலையடிகளாரின் மணி மொழிகள் 1. தனித் தமிழ் தமிழரனைவரும் பண்டுபோல் தமக்கும் தம் இல்லங் களுக்கும், தம் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் எல்லாம் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டுமன்றி வடமொழி முதலான வேற்றுமொழிச் சொற்களைப் பெயர்களாக அமைத்தல் ஆகாது. இசை-தமிழ்ச்சொல், இராகம்-வடசொல், இராகம் என்றால் தான் பெரும்பாலான மக்கட்குத் தெரிகிறது. ஆதலால், இராகம் என்று சொல்லித்தான் இசையைப்பற்றி விளக்க வேண்டிய மானக்கேடான நிலை தமிழர்களுக்கு உண்டாகியிருக்கிறது. தமிழிற் பயன்படும் நூல்கள் எழுதும் அறிஞர் எல்லாரும் அயன்மொழிச் சொற்களைத் தம்மால் இயன்ற மட்டும் விலக்கித் தூய தமிழிலே எழுதப்பழகுவராயின், அதனால் நம் செந்தமிழ் மொழி வளம்மிகப் பல்கித் துலங்குவதோடு அதனைத் துலக்கும் அவர்க்கும் அழியாப் புகழும் அறமும் உண்டாமென்க. தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்பு போல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள்! அடியேன் உங்களைப் பெரிதும் கெஞ்சுகின்றேன். ஆண்டவர்களே! தமிழைக் கெடுக்காதீர்கள்! தனித் தமிழுக்குப் பாடுபடுங்கள். தமிழ் மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும். தமிழ் முன்னோர் தமது மொழியைப் பிறமொழிக் கலப்பின்றித் தூய்தாய் எல்லாவளனும் நிரம்ப வளர்த்து வழங்கி வந்தவாறு போல, இஞ்ஞான்றைத் தமிழரும் தமிழ் மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும். தமிழ்மொழி கற்கும் தமிழ் இளைஞர் ஒவ்வொருவரும், அவர் தமக்குத் தமிழ் கற்பிக்குந் தமிழாசிரியர் ஒவ்வொருவரும் வடமொழி முதலான பிறமொழிச் சொற்களைத் தமிழின்கண் வந்து நுழையாதபடி அறவே விலக்கி, இப்போது வழங்காமற் பழைய தமிழில் வழங்கிய சொற்களையே மீண்டும் எடுத்து வழங்கித் தமிழை வளம்படுத்துப் பாதுகாக்கக் கடவராக. திருவள்ளுவர் காலம் வரையில் மிகவுந் தூயதாய்ச் சுடரொளி விரிந்து திகழ்ந்த தனித் தமிழ் ஞாயிறு அதற்குப் பின்னர்த்தாகிய இவ் விடைக் காலத்தில் உண்டான வடமொழிக் கலவையாகிய மூடுபனியால் தனது தூய பேரொளி சிறிது சிறிதே மங்கித் தோன்றியதாயினும், அப்பனியினைத் தமது பேரொளி வெப்பத்தால் உரிஞ்சித் தனதியற்கை யொளி குன்றாமலே விளங்கி இலங்கியது. பிற்காலத்தில் புதிய புதியவாகத் தமிழிற் புகும் கொள்கை களெல்லாம் தமிழுக்கு உரியனவுமல்ல. தமிழை வளர்க்க வந்தனவுமல்லை. அவைகளெல்லாம் தமிழை வளர்க்க வந்தனவல்ல வென்பதற்கு அக்கொள்கையினை உடையார் வடமொழி முதலான பிறமொழிச் சொற்களை அதனுள் வரைதுறையின்றிப் புகுத்தி, ஆயிரக் கணக்கான தமிழ்ச் சொற்களை வழங்க விடாமற் செய்த கொடுமையால் நன்றாக அறியலாம். நம் பண்டை ஆசிரியர் இயற்றியருளிய நூல்களிற் செல்லுக்கும் ஆடிப்பெருக்கிற்கும் இரையாய்ப்போன எண்ணிறந்த நூல்கள்ஒழிய எச்சகமாக இஞ்ஞான்று நாம் நம் கைகளில் ஏந்தி மகிழுந் தொல்காப்பியம், பரிபாடல், இறையனாரகப் பொருளுரை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, திருக்குறள் முதலான அருந்தமிழ் நூல்களைச் சிறிதாயினும் உற்று நோக்குவமாயின் நம் பழைய பேராசிரியர் நம் ஆருயிர்த் தமிழ் அன்னையை எவ்வளவு கருத்தாய் எவ்வளவு அன்பாய்ப் பாதுகாத்து நின்றனர் என்பது தெற்றென விளங்கா நிற்கும். இம் முன்னாசிரியர் நூல்களிற் நூற்றுக்கு ஒன்று இரண்டு விழுக்காடுகூட வடசொற்களைக் காண்டலரிது. தமிழானது மிகுந்த சொல்வள முடையது. தமிழையும், பிற மொழிகளையும் நடுவு நின்று நன்கு ஆராய்ந்த கால்டுவெல் முதலான மேனாட்டாசிரியர்கள், தமிழானது பிறமொழிகளின் உதவியைச் சிறிதும் வேண்டாமல் எல்லாத் துறைகளிலும் தனித்தியங்க வல்லது என்றும், ஆங்கிலம் முதலான மற்ற மொழிகளோ, பிற மொழிகளின் உதவியை வேண்டாமல் தனித்தியங்க மாட்டாதனவென்றும், தமிழானது பிறமொழிக் கலப்பின்றித் தூயதாக எழுதப்படும்போதும், பேசப்படும் போதும் மிக்க அழகுடையதாய்ப் பிறருள்ளத்தைக் கவருந் தன்மையதாய் விளங்குகின்ற தென்றும் வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் சொல்லிய அவ்வுண்மை எல்லாப் பொருள்களையும் தனித்தமிழில் எடுத்துரைக்குந் திருக்குறள் என்னும் ஒரு நூலைப் பார்த்தாலும் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதுவும் போதாதேல், திருக்குறளின் காலத்தும் அதற்கு முற்பட்ட காலத்தும், இயற்றப் பட்ட பழைய செந்தமிழ் நூல்களைப் பார்த்தால் தமிழின் சொல்வளம், பொருள்வளம் நன்கு விளங்கும். இவ்வளவு சிறந்த தமிழ் மொழியைப் பேசிய பழைய தமிழ் மக்கள் எவ்வளவு சிறந்த நாகரிகம் வாய்ந்தவர்களாயும், பிற மொழியாளர்களுக்கும், அவர்களுடைய சொற்களுக்கும் அடிமைப்படாத எவ்வளவு தனிப்பெருஞ் சிறப்பு உடையவர்களாயும் இருந்திருக்க வேண்டும். ஒருவர் உண்மையிலேயே தமிழை வளர்க்கும் எண்ணமுடை யவராயிருந்தால், மக்கட் கூட்டம், மக்களினம், மக்கள் தொகுதி முதலான தமிழ்ச் சொற்களிருப்ப அவற்றை யெல்லாம் விட்டு ‘மனித சமூகம்’ என்ற வடசொல்லை எழுதுவாரா? கடலூர்வாணர் என்னுந் தமிழ்ச் சொல்லிருக்கக் ‘கடலூர் வாசி’ என்று எழுதுகின்றனர். விடை யென்னுந் தமிழுக்குப் ‘பதில்’ என்னுந் துலுக்குச் சொல்லை வரைகின்றனர். அவா, ஆவல், விழுப்பம் என்னுந் தமிழ்ச் சொற்களிருப்ப அவற்றை விட்டு ‘ஆசை’ என்றும், சொல், கட்டாயம், ஒலி, ஓசை, மொழி, அறிவு நூல், கலை நூல், புலவர், அறிஞர், கற்றார், நேரம், உதவி, பொருள், திருநீறு, சிவமணி, எல்லாம், ஓவியம், முறை, ஒழுங்கு, சிறிது, நினைத்து, ஆழ்ந்து, ஆராய்ந்து, அன்பு, மகன், ஆண்மகன், ஆடவன், ஆள், முதன்மை, வலம்வருதல், வணக்கம் செலுத்துதல் என்னுந் தூய தமிழ்ச் சொற்களிருப்ப, இவற்றை யெல்லாம் விடுத்து, பதம், வாக்கு, வார்த்தை, அவசியம், சப்தம், பாஷை, விஞ்ஞானம், பண்டிதர், சமயம், உபவிஷயம், விபூதி, உருத்ராட்சம், சகலம், படம், நியாயம், கிரமம், கொஞ்சம், யோசித்து, தயவு, மனிதன், முக்கியம், திக்குவிஜயம், தண்டம், சமர்ப்பித்தல் முதலான வடசொற்களைக் கலந்து எழுதுகின்றனர். தமிழ்ச் சொற்களை வெட்டி வீழ்த்தி வடசொற்களைக் கொண்டு வந்து விதைப்பதுதானா தமிழை வளர்ப்பது? நன்றாக எண்ணிப் பார்த்தல் வேண்டும். எம் ஆசிரியர் (சோமசுந்தர நாயகரவர்கள்) ‘உன் தனித் தமிழைப் படிக்கப் படிக்க என் செவிகளுக்கு இன்பமா யிருக்கிறது. தனித் தமிழில் எழுதுவதை விடாதே. நீ தனித் தமிழிலே எழுதுவது எனக்கு விழிப்பையும் கிளர்ச்சியையும் உண்டு பண்ணுகிறது’ என்று கூறினார். மற்றை மொழியின் உதவியை வேண்டாது தனித்து இயங்க வல்ல சொல்வளமும் பொருட் செழுமையுமுடைய நம் செந்தமிழ் மொழியை அதற்கே உரிய சொற்களால் வழங்காமல் அயல்மொழிச் சொற்களை இடையிடையே நுழைத்து அதன் அழகையும் வலிமையையும் சிதைத்தல் பெரியதொரு குற்றமாமென உணரலானேம்; இன்றியமையாது வேண்டப் பட்டாலன்றித் தமிழில் பிற சொற்களைப் புகுத்தல் நிரம்பவும் பிழைபாடுடைத்து. 2. தமிழ் - தமிழர் தமிழர்க்குள்ள பெருமை யெல்லாம் அவர் தொன்று தொட்டுத் தூய்தாக வழங்கி வருந் தமிழ் மொழியினையே சார்ந்திருக்கின்றது. திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும், அவர் பிறந்த பின் ஒரு நூறு ஆண்டும் சேர்ந்து முடிந்த ஓர் ஐந் நூறாண்டும் தமிழ்மொழி மறுவற்ற மதிபோற் கலைநிரம்பி விளங்கிய காலமாகும். இக்காலத்திலே சிறந்த புலவர் பலர் தோன்றிப் பலவகையான அரிய பெரிய செந்தமிழ் நூல்கள் இயற்றினர். சொற்கள் எல்லாவற்றையும் பழந்தமிழ் நூல்களினின்றும் ஆய்ந்து பொறுக்கி எவ்வெவ்ச் சொல் எவ்வெவ்க் காலத்து நூலிற் றோன்றிற் றென்று கணிப்பின் தமிழ் மொழியின் காலம் இனிது நாட்டப்படும். ஒரு பொருளைச் சுட்டுதற்குப் பல சொற்கள் காணப்படும். அத்துணையே பற்றித் தமிழ் மிகப் பழைய மொழியா மென்று கூறுதல் குற்றம் ஆமாறில்லை என்க. தொல்காப்பியர் எல்லாவற்றையும் அறிந்தவர். ஆனால், அவரை அறியாதவர்கள் தமிழ் நாட்டிலே அதிகம். இது தமிழர் களுக்கு ஒரு மானக்கேடு. தம்மிடம் களஞ்சியம் இருக்க, கருவூலம் இருக்கப் பிறரிடம் பிச்சை கேட்கும் இரவலர்களாகத் தமிழர் இருப்பது பெரிதும் வருந்துதற்குரியது. தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல் கிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும், சொற் றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள். உலகம் உள்ளளவும் எமது தமிழ்த் தொண்டு நிலைபெற்றுப் பெரும் பயனும் பெரும் புகழும் விளைவிக்கும். தமிழ் இன்ன காலத்திலேதான் தோன்றிய தென்று கட்டுரைத்துச் சொல்லல் இயலாது; பழைய நாளில் இவ் வுலகமெங்கணும் பரவியிருந்த பெருந் தொகையினரான நாகரிக நன் மக்களால் வழங்கப்பட்டது. தமிழ் எந்தக் காலத்தும் அழியாது. தமிழை அழிப்பதற்கு உறுதி பூணுபவர்கள் தாமாகவே அழிந்து போவார்கள். தன்னைப் பெற்ற தாயைக் கொல்லுந் தறுகணன் போலத் தன்னை அறிவு பெற வளர்த்துப் பெருமைப்படுத்திய தமிழைச் சீர்குலைக்கும் போலித் தமிழ்ப் புலவரைப் பின்பற்றி நடவாமல், தமிழை உள்ளன்புடன் ஓம்பித் தூய்தாய் வழங்கும் உண்மைத் தமிழாசிரியர்களைப் பின்பற்றி நடத்தலிற் தமிழ் நன்மாணவர் அனைவருங் கருத்தாயிருத்தல் வேண்டும். தமிழ், கற்றவர்கட்கு எல்லாவகையிலும் பொருளுதவி செய்து அவர்களைச் சிறக்க வைத்தால்தான் இந்நாடு முன்னேற்றம் அடையும். இவர்களைச் சிறக்க வையாமல், வேறு துறைகளில் எவ்வளவு செலவு செய்தாலும் இந்நாடு முன்னேற்றம் அடையாது. இதனை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும். இனி, ஆராய்ச்சி அறிவில் செழித்து வளரும் இளைஞர்களால் மட்டுமே நம் நெறியும் தமிழும் தழைத்தோங்க வேண்டும். நமது இனிய செந்தமிழை மறப்பதும், பயிற்சி செய்யாமல் விட்டிருப்பதும் நமது உயிரையே நாம் அழிப்பதாய் முடியும். பழைய மொழிகளில் தமிழ் ஒன்றைத்தவிர மற்றைய வெல்லாம் இஞ்ஞான்றுள்ள எந்த மக்கட் குழுவினராலும் பேசப்படாமல் இறந்தே போய்விட்டன. பண்டை நம் ஆசிரியர் நிறுத்திய இலக்கண இலக்கிய வரம்பில் நில்லாது, இத் தமிழ் மக்கட் பிரிவினர் நம் தமிழ்ச் சொற்களைத் தாம் வேண்டியபடி யெல்லாந் திரித்துக் கொண்டு சென்றதல்லாமலும் வடமொழிச் சொற்களையும் வரைதுறை யின்றிச் சேர்த்து வழங்கி வந்தமையாலன்றோ, பண்டு தமிழா யிருந்த ஒரு மொழியே இப்போது மலையாளந் தெலுங்கு, கன்னடம் முதலியன பல மொழிகளாய்ப் பிரிந்து போக, அவற்றை வழங்கும் பழந்தமிழ் மக்களும் பல வகுப்பினராகப் பிளவுபட்டு, ஒருவர் மொழியினை மற்றவர் அறியாராய்க் குறுகிப் போயதனாலன்றோ, இவரெல்லார்க்குந் தாயகமான தமிழ்மொழிக்கண் உள்ள சீரிய தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், திருக்கோவையார் முதலிய அரும்பெறல் நூல்களையும் அவரெல்லாம் அறிய மாட்டாதவராயினர். தமிழ்நாட்டை யடுத்துள்ள மேல் நாடுகளில் இப்போது வழங்கும் மலையாள மொழி, இற்றைக்கு முந்நூறாண்டுகளுக்கு முன் முழுதுந் தமிழாகவே யிருந்தது. ஆனால், அத்தமிழ், இத்தமிழ் நாட்டில் வழங்குஞ் செந்தமிழ் மொழியின் சொற்கள் திரிந்த கொச்சைத் தமிழாகும். என்றாலும், அத்திரிபுகளை நீக்கிப் பார்த்தால் மலையாளம் முற்றுந் தமிழ் மொழியாகவே காணப்படுகிறது. பண்டு ஒரு மொழி பேசிய ஒரு மக்கட் பெருங் கூட்டமா யிருந்த தமிழரே, இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகம், கோடம், தோடம், கோண்டம், கொண்டம், ஓரம், இராசமாலம் முதலான பன்மொழி பேசும் பல்வகை மக்கட் பிரிவினர் ஆயினர். தமிழ் நெடுங்கணக்கிலுள்ள முப்பது எழுத்துக்களும் முப்பது ஒலிகளுமே மக்களுக்கு இயற்கையாகத் தோன்றக்கூடியவை யென்றும், முப்பது தமிழொலிகளைக் கொண்டே உலகத்தி லுள்ள எல்லா மொழிகளின் எல்லா ஒலிகளையும் எளிதில் தெரிவிக்கலா மென்றுங் காலஞ்சென்ற திரு.பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் மிகவும் நுட்பமாக ஆராய்ச்சி செய்து நன்கு விளக்கிக் காட்டி யிருக்கவும், அவைகளை யெல்லாம் ஆராய்ந்து பாராது தமிழ் நெடுங்கணக்கைக் குறுக்க வேண்டுமென்றும் பிறமொழிச் சொற்களையும் ஒலிகளையும் தமிழிற் சேர்க்க வேண்டு மென்றும் சொல்வது மிகவும் வருந்தத் தக்கது. குறைபாடில்லாத தமிழ்மொழியைச் சீர்திருத்த வேண்டு மென்று சொல்லும் அவர்கள் குறைபாடு நிரம்பிய ஆங்கிலம் முதலான மொழி களைச் சீர்திருத்த முன்வராததென்னையோ? இப்பொழுதுள்ள 999 மொழிகளிலே சிறந்ததாயும் உயிருடையதாயும் ஒரு நிலையில் இருப்பது தமிழே. ஆங்கிலத்தை 150 ஆண்டுகளாகச் சீர்திருத்தி வந்தார்கள். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கில மொழி சிறந்ததாயில்லை. க்ஷரவ என்றும் ஞரவ என்றும் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்கள். எழுதுகிற முறையும் சொல்லுகிற முறையும் இடத்துக்கு இடம் மாறுகிறது. ஊயடஅ என்பதில் ஒலி இல்லை. ஞளலஉhடிடடிபல என்ற சொல்லை ‘பிஸிகாலஜி’ என்று பிரஞ்சு மொழியில் வழங்குகிறார்கள். தமிழிலே அந்தக் குறை இல்லை. எழுதியதை எழுதியவாறே, சொல்லியதைச் சொல்லியவாறே தமிழில் உச்சரிக்கலாம். வடமொழியிலோ பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் பல குற்றங்கள் காணப்படும். தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களைக் குறைக்க வேண்டுமென்றும், அயல் மொழிகளிலுள்ள ஒலிகளைத் தமிழிற் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்றும், அப்போதுதான் தமிழ் வளர்ச்சியடையு மென்றும் கூறுவர் சிலர். நல்லது; தமிழ்ச் சொற்களிலுந் தமிழ் ஒலியினாலுந் தெரிவிக்கக் கூடாதவை இருப்பினன்றோ அயல்மொழிச் சொற்களையும் ஒலிகளையுஞ் சேர்த்தல் வேண்டும்? உலகத்தில் உள்ள எல்லாப் பொருள் களையும், எல்லா அறிவு இயல்களையும் தமிழ்ச் சொற்கள், தமிழ் ஒலிகள் கொண்டே செவ்வையாகத் தெரிவிக்கலாம் என்பது யாம் எல்லாத் துறைகளிலும் புகுந்து எழுதியிருக்கும் நூல்களைச் சிறிது பார்த்தாலுந் தெரிந்து கொள்ளலாம். இன்னுந் தமிழரெல்லாருந் தம்மைத் தமிழரென்றே வழங்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். தம்மை ஆரி ரென் றாவது, ஆரிய நூல்களில் வகுத்துச் சொல்லப்பட்ட ‘பிராமணர்’ ‘சத்திரியர்’ ‘வைசியர்’ ‘சூத்திரர்’ என்றாவது சொல்லிக் கொள்ளலாகாது. சைவ அவைகளும் தமிழ்க் கழகங்களும் வைத்து நடத்து வோர், தம்முடைய கழகக் கொண்டாட்டங்களுக்குச் சைவமும் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களையே வருவித்து அவற்றை நடத்துதல் வேண்டும். வெறும் பட்டங்கள் வாங்கினவர் களையும் ஆங்கிலம் மட்டும் உணர்ந்தாரையும் வருவித்து ஆரவாரம் செய்தல் பயன்படாது. தமிழ் அறிஞர்களை வருவிப்போர் அவர்கட்குத் தக்கபடி பொருளுதவி செய்தல் வேண்டும். இத்தமிழ் நாட்டு மக்களெல்லாரும் தமக்குரிய தாய்மொழி யிலேயே எளிதாகக் கல்வி கற்பிக்கப்படல் வேண்டும். சைவ மடத்தின் தலைவர்கள், அரசர்களுள் இயற்கைப் பொருள் நூல்களையும், உயிர் நூல்களையும் கடவுள் நூல் களையும் தமிழில் மிகுதியாக மொழி பெயர்த்து அவற்றைப் பயிலும் படிச் செய்தல் வேண்டும். சைவ சித்தாந்தமுந் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களோ தமது வாழ்க்கைக்கு வேண்டும் செலவுக்குத் தக்க வருவாய் இன்றிப் பெரிதுந் துன்புறுகின்றார்கள். இவ்வறிஞர்கள் மிக இடர்ப்பட்டு எழுதி வெளியிடும் நூல்களின் செலவுக்குக் கூடப் பொருளுதவி செய்வார் எவரும் இல்லாமையால் அவர்கள் படுந் துன்பங்களுக்கு ஓர் அளவே இல்லை. ஆதலாற் சைவ மடங்களின் பொருள்களை இத்தகைய அறிஞர்கட்கும் சைவ சித்தாந்தக் கல்லூரிகட்கும் மிகுதியாகக் கொடுத்துப் பயன்படுத்தல் வேண்டும். பொருள் வருவாயை நோக்கி எழுதப்படும் எதுவும் பெரும்பாலும் நிலையான பயனைத் தரத்தக்க தாகாது. இதனை நமது தமிழ்நாட்டுச் செல்வர்கள் உணர்ந்து பார்த்து, நூல் எழுதும் ஆற்றல் வாய்ந்த தமிழறிஞர்கள் வறுமை தீரப் பொருளுதவி செய்திருப்பார்களாயின், இதுகாறும் எத்தனையோ அருந்தமிழ் நூல்கள் பேரறிஞர்களால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும். ஆனால், அச் செல்வர்கள் தமது பெரும் பொருளைப் பயனற்ற தீவினையைப் பெருக்கத்தக்க ஆரவாரமான வழிகளிற் பாழாக்குகின்றனரே யன்றித் தமிழ்மொழியை வளப்படுத்தி வளர்க்குந் துறைகளிற் சிறிதும் பயன்படுத்து கின்றிலர்! தமிழ்நாட்டிற் செல்வர்களாயிருப்பவர்களும் பிறருந் தமிழ் மொழிப் பயிற்சிக்கும் தமிழ்க் கல்லூரிகள் அமைப்பதற்கும் பொருளுதவி செய்ய வேண்டுமே யல்லாமல், இவற்றை விடுத்து ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிப் பயிற்சிக்கும் அதற்குரிய கல்லூரிகட்குமே பொருளுதவி செய்தல் நன்றாகாது. இத்தமிழ்நாட்டு மக்களெல்லாரும் தமக்குரிய தாய்மொழி யிலேயே எளிதாகக் கல்வி கற்பிக்கப்படல் வேண்டும். அறிவிற் சிறந்த தமிழ் மக்காள்! பழிப்புரைக்குச் சிறிதும் அஞ்சன்மின்! எவர் யாது கூறினும் உண்மை சுரக்கப் படாது. நமக்கும் மற்றும் அறிவுடையார் எல்லார்க்கும் சிறந்த அளவை நூல்களாயுள்ள தொல்காப்பியம், திருக்குறள் முதலியனவே நமக்குச் சாலும் என்று மனம் திருந்துமின்கள்! பிறர் கூறும் பகட்டுரைக்கு அஞ்சி உண்மையைக் கைவிட்டுவிடாதீர்கள். 3. சமயம் மக்கள் எல்லாரும் ஏன் கடவுள் உணர்ச்சியுங் கடவுள் விளக்கமும் உடையரா யிருக்கின்றன ரென்றால், அவர்களனை வரும் இந்த உடம்பின் துணையும், இந்த உடம்பு உலவும் நிலத்தின் துணையும், இந்த உடம்புக்கு வேண்டும் பொருள்களின் துணையும் வேண்டியவர்களா யிருக்கின்றனர். வியப்பான இந்த உடம்பையும் இந்த உலகத்தையும் இந்த உலகத்துப் பொருள்களையும் மக்கள் தாமாகவே உண்டாக்கிக் கொள்ள வல்லவர்களாய் இல்லை. ஆகவே, இத்தனை வியப்பான பண்டங்களையுந் தமக்கு ஆக்கிக் கொடுக்கத் தக்க பெருவல்லமையும் பேரறிவும் பேரிரக்கமும் உள்ள ஒரு முழு முதற்கடவுள் கட்டாயம் இருக்க வேண்டுமென்னும் உணர்ச்சி, எல்லார் உள்ளங்களிலும் இயற்கையாகவே தோன்றா நிற்கின்றது. பழைய யூதர்களும் மகமதியர்களுந் தவிர மற்றைச் சமயத்தவர் களெல்லாரும் பிறந்திறக்கும் உயிர்களையே அவ்வவர்பாற் காணப்பட்ட சில ஆண்மைச் செயல்களாற் கடவுளாகப் பிறழ உணர்ந்து அவை தம்மையே கடவுள் நிலையில் வைத்து வணங்கி வருகின்றார்கள். ஆனால், இத்தமிழ் நாட்டின்கண் உள்ள சைவ சமயத்தவர்கள் மட்டுமே பண்டைக் காலந்தொட்டுப் பிறந்திறவாத் தன்மையனே முழு முதற் கடவுளாவன் எனத் தெளிய உணர்ந்து இன்று காறும் அக்கொள்கையிற் சிறிதும் வழுவாதவர்களாய் நிலைபெற்று வருகின்றனர். இறைவனின் எல்லாம் வல்லுதல், எங்கும் நிறைதல், எல்லாங் கடத்தல் முதலான கடவுளின் மற்ற இயல்புகள் உயிர்களாகிய நந்தம் அறிவுக்கும் நுகர்வுக்கும் சிறிதும் அணுகாதனவா யிருத்தலாலும், அவர் எல்லா இன்பமும் அன்பும் இன்பமும் அருளும் உடையவராய் இருத்தல் ஒன்றே நமக்கு நேர் நுகர்வா யிருத்தலாலும், பேரின்பத்தையே அவாவும் நமக்கு அப் பேரின்பத்தை அருளும் இன்பவுரு வினரான அவர் நமது ஆணவ மலத் துன்பத்தை முதலிற் றுடைத்தருளும் பேருதவிச் செய்கை யுடையரா யிருத்தலாலும் அவர்தம் விளக்கமான அவ்வரும் பெருந்தன்மைகளை வாழ்த்தியும் நினைந்தும் வழுத்தியும் பேறு பெறுதற்குரிய நாம் அவற்றை இடையறாது நம் நினைவில் எழுப்புவிக்கும் உருத்திரன் சிவன் என்னும் பெயர்களால் அவரை வழங்கக் கடவேம் என்றும், இங்ஙனம் வழங்கும் அரிய பெரிய உண்மை சைவ சமயத்திலன்றி வேறெதினுங் காணப்படாமையால் இதுவே ஏனை எல்லாச் சமயங்களிலும் மாட்சியுடைத்தென உணரப் பெற்றேம் என்றும் எல்லாரும் உறுதி கொண்டு அகமகிழல் வேண்டும். மக்களிற் சிறந்தாராயுள்ள சிலரைக் கண்டு வணங்குதலா லேயே, நம்மனோர்க்கு அத்தனை அன்பும் இன்பமும் உண்டாகு மானால், எல்லாச் சிறப்புக்குந் தலைவனாய் நிற்கும் இறைவனைக் கண்டு வணங்குதலால் நமக்கு இன்னும் எவ்வளவு மிகுதியான அன்பும் இன்பமும் உண்டாகல் வேண்டும்! ஆதலால், மக்களுக்குக் கடவுளுணர்ச்சியுங் கடவுளை வணங்குதலும் வேண்டாவெனக் கரையும் ஒரு சிலரது வெற்றுரை மக்களுக்குச் சிறிதும் பயன்படாதென்று உணர்ந்து கொள்க. கடவுளை அச்சத்தால் வணங்குவோர் நிலைக்கும், அன்பினால் வணங்குவோர் நிலைக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளங்காநிற்கும். “கடவுள் ஒப்புயர்வு அற்ற செல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் உடையர். அவரை வணங்காது ஒழியின் நமக்குந் தீங்குண்டாம்” என்னும் அளவே கருதி, அவரை அச்சத்தால் வணங்குவோர் தாழ்ந்த நிலையினராவர், “மேற் குறித்த வளங்களை யுடையனாத லுடன், எம்பெருமான் ஒன்றுக்கும் பற்றாத எளியேங்களிடத்து அளவிறந்த அன்பும் இரக்கமும் உடையன்” என்று கருதி அவனை அன்பினால் வணங்குவோர் உயர்ந்த நிலையினராவர். நாவலந் தீவின்கணுள்ள நன்மக்கள் இறைவன் திருவுருவத் திருமேனியிற் செய்து போதரும் வழிபாடு அருளுருவ வழிபாடா வதன்றி ‘விக்கிரகவாராதனையாதல்’ ஒரு சிறிதுஞ் செல்லாதா மென்பதூஉம், திருவுருவத்தின்கட் செய்யும் வழிபாடுபற்றி இறைவனது முழுமுதற் பரப்பாம் இறைமைத் தன்மைக்கு வரக்கடவதோரிழுக்கில்லை யென்பதூஉம், அருவமாக இறைவன் நினைக்க வல்லே மென்பாருரை மக்கள் மன வியற்கைக்குத் தினைத்துணையுமியைதல் செல்லாமையால் அது வெறுஞ் சொல்லளவாகவே முடிவதல்லது பொரு ணிறைந்த தாகா தென்பதூஉம், உலகத்திற்கண் நாகரிகமில்லாத மக்களுள்ளும் உருவ வழிபாடே காணக் கிடத்தலின் அவ் வியற்கைக்கு வேறாக மொழிதல் முரண்பாடாமென்பதூஉம், வடமொழி நூல்களினும் அருளுருவ வழிபாடே காணப் படுதலின் அதனொடு திறம்பி யுரைப்பாருரை வழுக்குரையா மென்பதூஉங் காட்டப்பட்டன வென்க. சிவபிரானும் திருமாலும் பண்டுதொட்டு தமிழ் முது மக்களால் வணங்கப்பட்டு வந்த தமிழ்த் தெய்வங்களாகும். எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளே தந்தை வடிவில் சிவபிரான் எனவும், தாய்வடிவில் திருமால் எனவும் வைத்து வணங்கப்பட்டது. நம் ஆசிரியர்கள் தமது காலத்திலிருந்த பொது மக்களின் மனச் சார்பை அறிந்து அவர்கள் பொருட்டுத் தழுவிப் பாடியிருக்கும் புராணக் கதைகளை யெல்லாம் நாம் அப்படியே தழுவ வேண்டு மென்பது கட்டாயமாகாது. ஏனென்றால் அப்பனை வணங்கும் நமது சைவ சமயமும், அம்மையை வணங்கும் வைணவ சமயமும் இக்கதைகளைச் சார்ந்து பிழைப்பன அல்ல. இக் கதைகளின் உதவி வேண்டாமலே இவ்விரு சமயங்களும், மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிய அரிய பெரிய மெய்ப்பொருள் களினாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், நம்முடைய சமயங்களின் உண்மைகளைச் ‘சிவஞான போதம்’ ‘சிவஞான சித்தியார்’ என்னும் உயர்ந்த அறிவு நூல்களில் விளக்கப்பட்டபடி இளம் பருவ முதற்கொண்டே நம்முடைய மக்களுக்குக் கற்பித்து வர ஏற்பாடு செய்தல் வேண்டும். இச்சமய உண்மைகளுள் எதனையுங் குருட்டுத்தனமாய் நம்பும் தீய பழக்கத்தை ஒழித்து எதனையும் தம்மறிவால் ஆராய்ந்து பார்க்கவும், தம் மறிவுக்கு விளங்காதவைகளை அறிந் தோர்பாற் கேட்டுத் தெளியவும் அவாவை உண்டாக்குதல் வேண்டும். மக்கள் உலகத்திலுள்ள எந்தப் பொருளைக் கடவுளாக நினைந்து வணங்கினாலும் அவ்வணக்கம் அப்பருப்பொருள் உருவத்தின்கட் செல்லாததாய், அதற்கு முதலான இறைவனது அருட்பொருள் உருவத்தின்கட் செல்லுமென்பதும், அங்ஙனஞ் செல்லவே அவர்க்கு அவ்விறைவனருள் கிடைக்குமென்பதும் உறுதியாம். கடவுள் அருளின்கண் எல்லா உருவங்களும் உண்டென்பதற்குக், “குறித்ததொன் றாகமாட்டாக் குறைவில னாதலானும் நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையானும் வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத லிலாமையானும் நிறுத்திடும் நினைந்த மேனி நின்மல னருளி னாலே” என்னும் சிவஞான சித்தியார்த் திருமொழியே சான்றாம். எந்த வடிவில் வழிபடுவார்க்கும் இறைவனருள் உண் டென்பதற்கு, “விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாமே” என்னும் திருநாவுக்கரசு நாயனார் திருமொழியே சான்றாகும். ‘சைவ சமயம்’ என்பது இவ்விந்திய நாடு எங்கும் உள்ள தமிழ் நன்மக்களால் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுக் கைக்கொள்ளப்பட்ட கடவுட் கொள்கையாகும். அஃது அவர்களை அறிவிலும் உருக்கத்திலும் ஒழுக்கத்திலும் மேலேறச் செய்து, மற்றை நாட்டவர்க்கு இல்லாத் தனிப் பெருஞ் சிறப்பினை அவர்கட்கே தந்து, மற்றைச் சமயங்களுக் கெல்லாம் மேலான தனி நிலையில் வைகி விளங்குவது. மாணிக்கவாசகர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலான நம் சமயாசிரியர்கள் பௌத்த சமண மதங்களில் இருந்து சைவ சமயம் தழுவ விரும்பினாரை அங்ஙனம் சைவ சமயத்திற் சேர்த்து அதனைப் பரவச் செய்திருக்கின்றார்களாதலால், நம் ஆசிரியர் காட்டிய அந் நன்முறையைக் கடைப்பிடித்து நாமும் அயற் சமயத்திலிருந்து வருவாரை நம்முடன் சேர்த்துக் கொண்டு எவ்வகை வேறுபாடுமின்றி அளவளாவுதல் வேண்டும். இந்து சமயத்தின் கோட்பாடுகள் யாவையோவெனில், காணப்பட்ட இவ்வுலகினுக்குக் காணப்படாத முழு முதற் கடவுள் முதலாய் உள்ளதென்பதும், அஃது அருவமாயும் உருவமாயும் இவையல்லவாயும் இருக்கு மென்பதும், அஃது என்றும் உளதாய் அறிவாய் இன்பமாய் இருப்பதாகலிற் ‘சச்சிதானந்தம்’ எனப்படும் என்பதும், அஃது அருவமாய் வழுத்தப் படுதலே யன்றியும் எல்லார்க்கும் வணங்குதற்கு எளிதான உருவத்திரு மேனியுடன் திருவுருவின்கண்ணும் வைத்து வழிபடப்படு மென்பதும், அதனை அறிந்து வழிபடுதற்குரிய உயிர்கள் அறிவுடன் என்றுமுள்ள பொருள் களாய் எண்ணிறந்தனவாய் இருக்கு மென்பதும், இவ்வுயிர்கள் தொன்று தொட்டே அறியாமை வயப்பட்டிருக்கின்றன வாகலின் இவைகள் அவ்விறைவனை வழிபடுமாற்றால் தூய்மை எய்தி அவனோடு ஒற்றுமைப்பட்டு இன்ப நுகரு மென்பதும், இவைகள் அறிவு முதிரமுதிர ஒரு பிறப்பைவிட்டு மற்றொரு பிறவியிற் செல்லு மென்பதும், இங்ஙனம் இவற்றிற்குரிய முற் பிறவியிற் செய்தவினை பிற்பிறவியில் வந்து அவைகளால் நுகரப்படுமென்பதும், இவ்வுயிர்களுக்கு உடம்பாயும் கருவிகளாயும் இடங்களாயும் நுகர்பொருளாயுமிருந்து பயன்படுகின்ற அறிவில்லாத சடப்பொருள் என்றும் உளதாமென்பதும், இதற்குரிய கோட்பாடுகளாம். இக் கோட்பாடுகளனைத்தும் இவ்விந்திய நாடெங்கும் தழுவப்பட்டு வருகின்றன. இப்போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்களிற் பெரும் பாலார் எல்லாம் வல்ல ஒரு தெய்வத்தை வணங்காமல், இறந்து போன மக்களின் ஆவிகளையும், பல பேய்களையும் இவை போன்ற வேறு சில சிறு தெய்வங்களையும், வணங்கி, அவற்றுக்காகப் பல கோடிக்கணக்கான கோழிகளையும் ஆடுகளையும் வெட்டிப் பலியிடுகின்றார்கள். இக்கொடிய செயலை அவர்கள் அறவே விடுமாறு செய்து, சிவம் அல்லது திருமால் என்னும் ஒரு தெய்வத்தையே வணங்கும்படிச் செய்தல் வேண்டும். பண்டைக் காலந் தொட்டே பரம்பொருளை அம்மை யப்பராகப் போற்றி வரும் வழக்கம் தமிழ்நாட்டின்கண் இருந்து வந்துளது. இவ்வழக்கம் எகிப்து, பாபிலோனியா, எருசலேம் முதலிய நாடுகளிலும் பண்டைக் காலத்திலிருந்தமை ஒப்பு நோக்கி மகிழ்தற்குரியதாம். கத்தோலிக்கர்களின் கருத்தும் இக்கருத்தை ஒத்திருப்பதும் நோக்கற்குரியதாகும். கடவுள் மகனைத் தன் வடிவிலேயே படைத்தார் என்பது விவிலிய நூற் கருத்து. கடவுளை ஆண் தத்துவத்தில் அப்பனாகவும் பெண் தத்துவத்தில் அம்மையாகவும் ‘பரம பிதா’ என்றும் ‘பரிசுத்த ஆவி’ என்றும் இன்றும் கிறித்தவர்கள் வணங்கி வருவது யாவருமறிந்ததே. இருக்கு வேதத்திலும் ஆண் வடிவமாகிய உருத்திரனுக்குப் பக்கத்தில் அம்மை வடிவமிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உலகமே ஆண் பெண் வடிவு கொண்ட தாகும். ஓரறிவு முதல் ஆறறிவீறாகவுள்ள எல்லா உயிர்களின் மாட்டும் காணப்படும் இவ்விருவகைத் தோற்றத்திற்கு மூலம் இறைவனதுள்ளமே. ஆகவே, இவ்விருமைப் பண்பு தோற்றும் குறியீடாகிய உடம்பை இம்மண்ணிடைத் தமக்களித்த பெற்றோர்களுக்கு நன்றி கூறுவான் கருதியே ஆசிரியர் ‘ஆதி பகவன்’ என்ற சொற்களை முதற்கண் அமைத்தார். நாவலந் தீவினராகிய நம்மனோர் செய்து போதருந் திருவுருவ வழிபாடு இறைவன் ஒரோவொரு காலத்து ஒரோரன்பர்க்கு அருள்புரிதற் பொருட்டு அருளையே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளி வந்த திருக்கோலக் குறிப்பு இனிது விளங்க அமைத்து நிறுத்திய வழிபாடாய், அவ் வழிபாடு வாயிலாகவே எமதுணர்வை இழுத்துச் சென்று இறைவன் மாட்டுப் பதிய வைக்குங் கருவியா மென்பதூஉம், இங்ஙனம் போந்த அருட்கோலத்தை அறிதற்குரிய நல்வினை முகிழ்ப்பு இல்லாத ஏனைநாட்டவர் தத்தமக் கறிவு சென்றவாறெல்லாங் கல்லானுஞ் செம்பானும் இயற்றி வைத்துக் கொண்டு வழிபடும் அவரது வழிபாடு அவ்வுருவத்தின்கண்மேற் கடந்து சென்று இறைவன் உண்மை அருட்கோலத்தின்கண் அவரறிவைப் பதிக்க மாட்டாமையின் அவர் செய்யும் அவ் வழிபாடு உருவ வழிபாடு யென்று வழங்கப்பட்டா மென்பதூஉம், இங்ஙனம் வேறுபாடு பெரிதுடைய திருவுருவ வழிபாட்டிற்கும் உருவ வழி பாட்டிற்கும் இலக்கண முணராது அவை யிரண்டனையும் ஒன்றெனக் கொண்டு அவ்வாற்றான் நம்மனோர் செய்து போதருந் திருவுருவ வழிபாட்டு நன் முறையை ஒரு சாரார் இகழுதல் பொருந்தாதா மென்பதூஉமேயாமென் றுணர்ந்து கொள்க. இறைவன் திருவருளாணை கடவாத மெய்யன்பரான நம் முது தமிழ்ச் சான்றோரின் வழித் தோன்றிய தமிழ் மக்காள்! விழித்தெழுமின்கள்! இதுகாறும் ஆரிய மாயத்திற் சிக்குண்டு அறிவு மயங்கித் தூங்கிய பெருந் தூக்கத்தினின்றும் விழித்தெழு மின்கள்! இனி ஆரிய மொழியையும் ஆரிய வேதங்களையும் நம் திருக்கோயில்கள் ஓதுதலை அறவே யொழித்துத் தேவார திருவாசக நாலாயிரப் பாடல்களையே ஓதி, அவற்றிலுள்ள மந்திரங்களாலேயே அம்மையப்பருக்கு எல்லா வழிபாடுகளும் ஆற்றி, இறைவன் திருஅருளால் இம்மை மறுமைப் பயன்களை ஒருங்கெய்துவீர்களாக! 4. திருக்கோயில்கள் முற்காலத்தில் தமிழர்கள் திருக்கோயிலில் உள்ள திருவுருவங்களைத் தாமே தொட்டு நீராட்டிப் பூவிட்டு அகில் புகைத்துச் சூடங் கொளுத்தி வழிபட்டு வந்தார்கள். இஞ் ஞான்றும் வடநாட்டிலுள்ளவர்கள் அங்குள்ள திருக்கோயில் களில் தாமே திருவுருவங்களைத் தொட்டு வழிபாடு ஆற்றுதலை நேரே பார்க்கலாம். ஒரு கற்றாவின்பாலைப் பெற வேண்டுவார், அதன் கன்றை அதன்பால் உய்த்து, அஃது உண்ண உண்ணப் பால் சுரந்து ஒழுகாநிற்புழி, அதனைப் பின்னர்த் தாம் கறந்து கைக்கொள்ளு மாப்போல், மெய்யடியார் சென்று வழிபட்ட திருக்கோயில் களில் உள்ள திருவுருவங்களிலே அவர் பொருட்டுத் தோன்றி நின்று பேரருள் செய்த இறைவன் திருவருளை அவ்வுருவங் களின் வழி நாம் பெறுதலே எளிதிற் கைகூடுவதாகும். ஆகவே, கல் மண் முதலான பருப்பொருள் அடையாளங்களில் இறைவனை விளங்கச் செய்தற் பொருட்டுச் செய்யும் ஏனை எல்லா முறை களையும்விட, அவன்றன் மெய்யடியார் அவ்வத் திருக் கோவிலின் மேற் பாடிய தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறைத் திருப்பதிகங்களை அன்பினால் எடுத்தோதி அகங்கரைதலே கழிபெருஞ் சிறப்புடைத்தா மென்க. சிவபிரான் திருக்கோயில்களில் நிறுத்தப்பட்டிருக்கும் சிவலிங்க வடிவானது ஒளிவடிவாய் விளங்கும் இறைவனது நிலையை உணர்த்துவதாகும். இவ்வடிவு எல்லாச் சமயத் தாராலும் வழுத்தி வழிபடுதற்குரிய பொதுவான அடையாள மாய் உலகம் எங்கும் உள்ளதாகும். எந்தச் சமயத்தாரேனும் எந்தச் சாதியாரேனும் இதனை வணங்குவதற்கு விரும்பிக் கோயிலுள் வருவார்களாயின், அவர்களைத் தடைசெய்யாமல், வந்து வணங்குதற்கு இடங் கொடுத்தல் வேண்டும். “என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத் தவர்களும் வந்து இறைஞ்சா நிற்பர்” என்னும் தாயுமான அடிகளின் திருமொழியை நம்மவர்கள் எப்போதும் நினைவில் வைத்தல் வேண்டும். ஆனாற் கோவிலுள் வருபவர்கள் எல்லாரும் குளித்து முழுகித் துப்புரவான ஆடை உடுத்து அடக்க வொடுக்கமாய் வாய் பேசாது உட்சென்று வணங்கும்படி செய்தல் வேண்டும். கோயில்களில் வழிபாடாற்றுங் குருக்கள்மார் தமிழ் மொழி யிற் பயிற்சி யுடையராயும், சைவ சித்தாந்தம் நன்குணர்ந்த வராயும், தேவார திருவாசகம் ஓதுபவராயும் இருக்கும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும். சில கோயில்களிற் றவிரப் பெரும்பான்மையான மற்றைக் கோயில்களில் வழிபாடு செய்யும் குருக்கள் மார்க்குத் தக்க வரும்படியும் தக்க சம்பளமும் இல்லை. ஆதலால், மிகுந்த வரும்படி உள்ள கோயில்களின் வருவாயிலிருந்து மற்றைக் கோயில்களின் ஏழைக் குருக்களுக்குத் தக்க சம்பளங்கள் கொடுப்பித்தல் வேண்டும். சில கோயில்களில் வரும் ஏராளமான வரும்படியிற் கோயிலின் இன்றியமையாச் செலவுகளுக்குப் பயன் படுத்தப் பட்டன போக, மிச்சத்தைத் தேவாரப் பாடசாலைக்கும், தனித் தமிழ்ப் பாடசாலைக்கும், சைவசித்தாந்த சபைகட்கும், தமிழ் சைவ சித்தாந்த முணர்ந்த ஆசிரியர்க்கும், தமிழ் நூல் எழுதுவார்க்கும், சைவ சித்தாந்த விரிவுரையாளர்க்கும், கோயிலைச் சார்ந்த சத்திரம் சாவடிகட்கும் பயன்படுத்தல் வேண்டும். நாம் இறைவனை வணங்குவது நமக்குப் பெரும் பயன் தருத லோடு, இறைவற்கும் மகிழ்ச்சி தருவதாகலின், அவற்குத் திருக்கோயில்களும் திருவிழாக்களும் அமைத்து வணங்குதலே சிறந்த முறையா மென்க. இஃது உணர்த்துதற்கே அப்பரும், “குறி களும்அடை யாளமுங் கோயிலும், நெறிக ளும்அவன் நின்றதோர் நேர்மையும், அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும், பொறியி லீர்மனம் என்கொல் புகாததே” என்று அருளிச் செய்தா ரென்பது. ஒவ்வொரு கோயிலின் சார்பாக நடத்தப்பட்டு வரும் திருவிழாக்கள் எப்போதும் போலவே எங்கும் நடைபெறும்படி செய்தல் வேண்டும். ஏனென்றால், நாடோறும் நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழப் பாடுபடும் ஏழை மக்களும், செல்வ மிகுதியாற் கடவுளை மறந்து சிற்றின்பத்திற் கிடந்துழலும் செல்வர்களும், இவ்விருவர் நிலையினும் சிறிது சிறிது ஒட்டி நிற்கும் மற்றைப் பொது மக்களும் இத்திருவிழாக் காலங்களிலேதாம் தத்தம் முயற்சிகளினின்றும் ஓய்வுபெற்று நீராடி நல்ல ஆடை அணிகலன்கள் அணிந்து, தம் மனைவி மக்கள் சுற்றத்தாருடன் மன மகிழ்ந்து கடவுள் நினைவும் வணக்கமும் உடையராய்ப் பல ஊர்க் காட்சிகளையும் பல மக்களின் தோற்றங்களையும் கண்டு இம்மை மறுமைப் பயன்களைப் பெற்று இன்புறுகின்றனர். இத் திருவிழாக்களும் திருக்கோயில்களும் இல்லையானால் இந்நாடும் ஏனை அயல் நாடுகளைப் போல் ஓயாத சண்டைக்கு இடமான போர்க்களமாகவே இருக்கும். ஆதலால், திருவிழாக் களை இன்னும் செவ்வையான முறையில் நடைபெறச் செய்வதோடு, அத்திருவிழாக்களின் உண்மையும் பயனும் எல்லார்க்கும் எடுத்துச் சொல்லும்படி கல்வியிற் றேர்ந்த அறிஞர்களுக்குத் தக்க பொருளுதவி செய்து, அவர்கள் அத்திருவிழாக் காலங்களில் ஆங்காங்கு விரிவுரை செய்யும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும். 5. வழிபாட்டு மொழி திருக்கோயில்களிற் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றும் காலங்களில், இச் செந்தமிழ் மந்திரங்களே கூறற்பாலனவாம். இவை கூறி வழிபாடு ஆற்றின், இவற்றை ஓதுவார்க்கும், அருகிலிருந்து கேட்பாருக்கும் சிவபிரான்மாட்டு மெய்யன்பு நிகழும். இவற்றை விடுத்து ஓதுவோர்க்கும் கேட்போர்க்கும் பெரும்பாலும் பொருள் தெரியாத பிறமொழிச் சொற்றொடர் களை மந்திரங்கள் ஆக்கிப் புகலுதல் கரும்பிருக்க அதனை விடுத்து வேம்பு நுகர்ந்து எய்த்தலோடு ஓக்கும். நந்தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் இறைவனுக்கு வழிபாடு ஆற்றுங் காலங்களில் ஓதுதற்குத் தேவார திருவாசகங்களும் நாலாயிரப் பிரபந்தங்களும் இருக்கின்றன. இவ்வருள் நூல்களால் நுவலப் படுந் திருக்கோயில்களுக்கே எல்லாச் சிறப்பும் தெய்வத் தன்மையும் உளவன்றி ஏனையவற்றிற்கு அவை இல்லாமை, நம் இந்துக்கள் இனிது உணர்ந்த ஒரு பேருண்மையாகும். கடவுளை நேரே கண்டு அவனருளால் பல செயற் கருந்தெய்வ வியத்தகு நிகழ்ச்சிகளைச் செய்து காட்டி இறைவனருளை நாம் எளிதிற் பெறுமாறு செய்த, அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலான தெய்வ அருளாசிரியர்களும், பொய்கையாழ்வார், பேயாழ்வார் முதலான உண்மை அடியார்களும் அருளிச் செய்த செந்தமிழ்ச் செழும் பாடல்களே நம் நெஞ்சை நெகிழ்வித்து நம்மை இறைவன்பால் உய்க்குமன்றி அருள்பெறாத ஏனோர் பிறமொழியில் ஆக்கிய உரைகள் நம்மை இறைவன்றன் பேரருளுக்கு உரியராக்க மாட்டா. ஆதலால் இனியேனும் நம் தமிழ் மக்கள் ஏமாந்து கிடவாமல், தேவார திருவாசகம் முதலான செந்தமிழ் மாமறைகளை எல்லாரும் அறிய நெஞ்சம் நெக்குருக ஓதி இறைவற்கு வழிபாடு ஆற்றுமாறு உடனே செய்தல் வேண்டும். தமிழ்மொழியிலேதான் இறைவனுக்குப் பெருவிருப்பு என்று எம் தமிழ்ப் பேராசிரியர் எழுதியதை ஏளனமாகப் பேசினர் சிலர். உலகத்தில் உள்ள எல்லாரும் நல்ல சொற்களையும் நல்ல சொற்பேசுவாரையுமே விரும்புகின்றன ரன்றித் தீய சொல்லையும், தீய சொற்பேசுவோரையும் விரும்புகின்றனரா? இல்லையே. ஒரு தந்தையானவன் தன் மக்கள் பலருள்ளும் நல்ல சொற்பேசும் நல்ல தன் புதல்வனையே விரும்புகின்றன ரன்றித், தீய சொற் பேசுந் தீய தன் புதல்வர்களை விரும்புகின்றனனா? இல்லையே. அதுபோல் எல்லாம் வல்ல இறைவனும் இனிய தமிழ் மொழியையும் அதனைப் பாதுகாத்து வழங்கிய இனிய தமிழ் மக்களையுமே பெரிதும் விரும்பினான் என்றால் அதில் குற்ற மென்னையோ? பண்டைக் காலந்தொட்டு இது வரையில் வழங்கும் மொழி தமிழைத் தவிர வேறொன்று உண்டென்று விரல்விட்டுக் காட்டமுடியுமா? எகிப்தியம், சாலடியம், அசீரியம், எபிரேயம், கிரேக்கம், இலத்தீன், ஆரியம், சென்டு, பாலி முதலான பழைய மொழிக ளெல்லாம் எங்கே? அவைகளெல்லாம் பேசப்படாமல் மாண்டு மறைந்து போகத் தமிழ் மட்டும் இன்னும் பலகோடி பொதுமக்களாற் பேசப்பட்டு வருவதைத் தாங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? இறைவனுக்குத் தமிழிற் பெருவிருப்பு உண்மையினா லான்றோ, திருஞான சம்பந்தர் அன்பினாற் குழைந்துருகிப் பாடிய தமிழ்ப் பதிகங்களை நெருப்பில் வேகவிடாதும், நீரில் இழுக்கப்படாமலும் வைத்து இறைவன் அதன் அருமையைப் புலப்படுத்தினான்? இன்னும் பாண்டியன் கொண்ட வெப்பு நோய் தீர்த்ததும், எலும்பைப் பெண்ணாக்கியதும், முதலை வாய்ப் பிள்ளையழைத்ததும் இன்னும் இவைபோன்ற பல அருள் நிகழ்ச்சிகளைக் காட்டியதுந் தமிழேயன்றிப் பிறமொழி அன்றே! அல்லது பிறமொழியில் இத்தகைய அருள் நிகழ்ச்சிகளைத் தக்க அகச் சான்று புறச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டல் இயலுமா? வெறுங் கதைகளாகப் பின்னோ ரெழுதி வைத்திருப்பவைகளைக் காட்டுவது பயன்படாது. 6. திருவள்ளுவர் செந்தமிழ் மொழிக்கொரு நந்தாமணி விளக்காய்த் தோன்றித் தன்கட் சுடர்ந்தொளிரும் அறிவுப் பேரொளியைத் தான் பிறந்த தமிழ் நாட்டவர்க்கு மட்டுமேயன்றி, இந்நிலவுலகின் பிற பகுதிகளிலுள்ள பிறநாட்டு மாந்தர்க்கும் வேற்றுமை யின்றி வீசி, எல்லாரையும் ஒரே முழு முதற் கடவுளாம் ஒப்பற்ற தந்தைக்கு உரிமை மகாராய் வைத்து, அவரறிய வேண்டும் அரும்பொருள் முற்றும் ஒருங்கே அறிவுறுத்துந் தெய்வத் திருக்குறள் என்னும் நூலை அருளிச் செய்த பெரியார். திருவள்ளுவர் காலமோ, இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்டதாகும். அக்காலத்திலிருந்த பலதிறப்பட்ட மதக் கொள்கைகள் ஆறு சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சமயந்தோறும் தத்தம் சமயமே பெரிதென்றும். தத்தஞ் சமயக் கொள்கைகளே தலைசிறந்தன வென்றும் வழக்கிட்ட தோடன்றிப் பிற சமயங்களை மனம் போனவாறு இழித்துங் கூறி வந்தார்கள். இவ்வாறாக மாறுபட்ட இவ்வறு சமயத்தோரும் தழுவிக் கொள்ளத் தக்க வகையில் வள்ளுவனார் முப்பாலை மொழிந்திட்டார். அன்றியும் பலவகைப்பட்ட சாதியாரும், நாட்டினரும், காலத்தினரும், பிறரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் அந்நூல் செய்யப்பட்டிருந்தவை யினாலேயே அதனை ‘எப்பாவலரும்’ தழுவிக் கொள்வாராயினர். கிறித்து பிறப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார். ஆண்டைத் தவிர அவர் பிறந்த நாளும் திங்களும் அதற்குச் சான்றுங் கிடைக்கவில்லை. 1977 ஆண்டுகளுக்கு முன் (இன்றைக்கு 2007) திருவள்ளுவர் பிறந்தார் என்பது மட்டும் உறுதி. தென்புலத்தில் மிக்க நாகரிகமுடையராயிருந்து காலஞ் சென்ற தம் மூதாதையர் அனைவரையும் ஒருங்கு சேர்த்து நினைந்து, அவர்க்கு மேன்மேல் நலம் அருள்கவென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நன்றிக் கடன் செலுத்துவதே, அம்மூதாதையர் வழிவந்த தமிழ் மக்களாகிய நமக்கு உரியதா மென்பதூஉம், அதனையே பண்டைத் தமிழ்ச் சான்றோராகிய நெட்டிம்மையாரும் அவர் வழி பிழையாது வந்த தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும் அருளிய செந்தமிழ்ப் பாட்டுகள் அறிவுறுத்துகின்றன வென்பதூஉம், நம் தமிழ் மக்கட் குரித்தல்லாத பிதுரர் வழிபாட்டைத் “தென்புலத்தார் தெய்வம்” என்னுந் திருக்குறளுக்கு ஏற்றிச் சொல்லிய பரிமேலழகியாருரை கொள்ளற்பால தன்றென்பதூஉம் இவ்வாராய்ச்சிக் கட்டுரை யில் எடுத்துக்காட்டி நம் மக்களை மெய்ந்நெறியில் உய்த்தல் இன்றியமையாதல் காண்க. திருவள்ளுவரியற்றிய திருக்குறளின் கொள்கைகளை நடுநின்று ஆராய்ந்து பார்க்கும் மெய்யறிவாளர்கள், அது சைவக் கோட்பாடுகளைத் தவிர வேறு மதக் கோட்பாடுகளை உள்ளடக்கியது அன்றென்பதை அறிவார்கள். அவர்கள் கடவுள் வழிபாட்டையும், அக்கடவுள் வழிபாடு செய்யும் உயிர்கள் உண்டென்பதையும் வற்புறுத்திச் சொல்லி யிருத்தலாற், கடவுளும் உயிரும் இல்லையென்னும் பௌத்த சமயத்தை அவர் தழுவியர் ஆகார். இந்நூலிலடங்காத பொருளில்லை. எல்லாப் பொருளும் இதன் கண் அடங்கும். அவ்வாறாக, சொல்லாற் பரந்த பாவாலென் பயன்? வள்ளுவனார் சுரந்த பாவே வையத்துணை யாம். அதிலும், ஓயாய் பிறவி பிறந்தெய்க்கும் இந்நிலையில் வாழ்க்கைக்குச் சொற் பரந்த பல நூல்களா லாவதென்னை? அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திய அருங்குறணூலே உறுதுணை. 7. சீர்திருத்தம் பலப்பல புராணக் கதைகளுள் கடவுளிலக்கணத்துக்குப் பொருந்துவனவும் அதற்குப் பொருந்தாதனவும் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்து பார்த்துப் பொருத்தமானவைகளை விளக்கி எழுதிப் பொருந்தாதவை களை விலக்கி விடுவதற்கு உரிய சீர்திருத்தம் முதன்மையாகச் செயற்பாலதாகும். பொருத்தமில்லாத வகையாய் மணம் பூட்டப்பட்டுப் பாம்பும் கீரியும் போல் ஒருவரை யொருவர் பகைத்துப் பேரல்லலிற் பட்டு உழலும் கணவனையும் மனைவியையும் அக்கூட்டுறவினின்றும் வேறு பிரித்து மறுபடியும் அவர்களை இயைபானவரோடு மணம் புணர்த்துதல் வேண்டும். முப்பதாண்டுகட்கு உட்பட்ட பெண்கள் கணவனை இழந்து விடுவார்களானால், அவர்களைத் திரும்ப மணஞ் செய்து கொடுத்தல் வேண்டும். ஆண்மக்களில் நாற்பதாண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம்பெண்களை மணஞ் செய்தல் ஆகாது. அப்படிச் செய்ய முந்துகின்றவர்களை எல்லாவகையானும் தடை செய்தல் வேண்டும். நாற்பதாண்டுக்கு மேற்பட்ட ஆண் பாலார் மணஞ்செய்து கொள்ள வேண்டுவார்களானால் தம் ஆண்டுக்கு ஏறக்குறைய ஒத்த கைம்பெண்களையே அவர்கள் மணஞ் செய்து கொள்ளும்படி தூண்டுதல் வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள மக்கள் ஊன் தின்பவரும் ஊன் தின்னாத சைவரும் என்னும் இரு பெரும் பிரிவில் நின்றாற் போதும். சைவரிலேயே பல வகுப்புகளும், அங்ஙனமே ஊன் தின்பவர்களிற் பலப் பல வகுப்புகளும் இருத்தல் பொருளற்ற வேற்றுமையாய் ஓயாத சாதிச் சண்டைகளை உண்டாக்கு வதாய் இருக்கின்றது. பொருளற்ற இவ்வேறுபாடுகளை முற்றும் ஒழிப்பதற்கு எல்லாரும் பெருமுயற்சி செய்தல் வேண்டும். 8. பொது கடவுள்பால் மெய்யன்புடையார்க்கே நல்லொழுக்கம் நிலைபெறுதல் திண்ணம். கொல்லா அறத்தின்கண் பிறழாது நின்று வாழ்க்கை செலுத்துவதே ஆறறிவுடைய சிறந்த மக்கட் பிறவியினர்க்கு இரக்கமும், அன்பும், அருளும் ஒருங்கு அளாவிய அறவாழ்க்கை யாகும். உள்ளத்தைத் தூயதாக வைத்து எந்நேரமும் நன்னினைவு களிலேயே அஃது ஊறி உரம் பெறுமாறு பழக்கவே, அதனால் உந்தப்படும் உடம்பும் தூயதாக உரமேறி நீண்டகாலம் உயிர்க்கு உறையுளாய் உலவும். தமிழ் மக்களிற் பெரும்பாலார் ஒருவர்பாலுள்ள குற்றங்களை மற்றவர் எடுத்துப் பேசுபவராய்ப் பகைமையையும் மனவருத்தத் தையும் பரவச் செய்து வருகின்றார்கள். இத்தீய பழக்கத்தை ஒழித்தால் அன்றித் தமிழ் மக்கள் முன்னேற்றமடைவது சிறிதும் முடியாது. ஒருவர்பாலுள்ள குற்றங்களை மறைத்து அவர் பாலுள்ள நலங்களை எடுத்துப் பேசுவதற்கே எல்லாரும் விடாப் பிடியாய்ப் பழகுதல் வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு மனமாரச் செய்து, அவர்களை மேன்மேல் உயர்த்திவிடுதல் வேண்டும். தாம் செய்யும் உதவிக்குக் கைம்மாறாவதொன்றை எதிர்பார்த்தல் ஆகாது. அப்போது தான் நம்முடைய மக்கள் உண்மையான முன்னேற்றத்தை அடைவார்கள். நால்வகை நிலத்தும் அவ்வந் நிலத்து மக்களின் தொழில் வேறுபாடு பற்றிப் பல் வகுப்பினராகப் பிரிக்கப் பட்டோருள், கொலையும் புலாலுணவும் மறுத்து ஓதல், வேட்டல், அரசு புரிதல், வாணிகஞ் செய்தல், உழவு நடாத்தல் என்னும் உயர்ந்த தொழிற்கண் நிலைபெற்று நின்றோர் ‘மேலோர்’ எனவும், அவர்தம் ஏவல் வழி நின்று, அக் கொலையும் புலையும் நீக்காமற் பெரும்பாலும் கைத்தொழில் செய்யும் அவ்வளவில் நின்ற ஏனை வகுப்பினர் ‘கீழோர்’ எனவும் இரு பெரும் பிரிவில் வகுக்கப்பட்டு, அவரவரும் அறிவாலும், ஒழுக்கத்தாலுந் தொழிலாலுந் தத்தமக்குள்ள உயர்வு தாழ்வுகளை நினைந்து, கீழோர் மேலோர்க்கு அடங்கி நடக்கவும் மேலோர் தங்கீழ் வாழுங் குடிமக்களை இனிது பாதுகாத்து வரவும், இவ்வாறு மிகவும் அமைதியாகவும் ஒழுங்காகவும் பண்டைத் தமிழ் மக்கள் வாழ்க்கை இனிது நடைபெறலாயிற்று. கல்வி வல்ல புலவர்களை இல்லாத நாடும் அரசுங் கானகத்தை யும் அதில் உலவுங் கோளரியையுமே ஒக்கும். அறியாமை இருளை அகற்றி அறிவொளி பரப்பி அன்பையும் அறத்தையும் இன்பத்தையும் பெருகச் செய்யும் புலவர் குழுவினையுடைய நாடே விண்ணவர் உறையும் பொன் நாட்டினை யொப்பதாகும். பிறப்பளவில் உயர்வு தாழ்வு பாராட்டும் பேதமைச் செயலை அறவே ஒழித்திடுமின்கள். அந்தக் காலத்தில் பொருள் மிகுதியாகத் தந்து என் கொள்கை களை மாற்றிக் கொள்ளும்படி நேயர்களிலே பலர் என்னை வேண்டினார்கள். பட்டங்களும் பதவியும் தந்து உதவுவதாகச் சொன்னார்கள். அதென்னவோ அவற்றி லெல்லாம் எனக்கு விருப்பமில்லை! இப்பொழுதும் பட்டம் பதவி பெற வேண்டும் என்ற விருப்பம் எனக்கில்லை. யான் அறிந்த உண்மையை எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். தொண்டின் வாயிலாக என் உயிரைத் தூய்மை செய்து கொள்ள விரும்புகிறேன். அங்ஙனமே செய்து வருகிறேன். கனவிலும் நினைவிலும் தமிழையும் சைவத்தையும் எண்ணி வருகிறேன். இன்னும் யான் இப்படியே எண்ணி வர இறைவன் அருள் செய்வானாக. ஆசிரியர் சோமசுந்தர நாயகர் ஒரு பெரிய வேதாந்தி. அவருடைய பேருதவியால்தான் நான் தமிழையும், வடமொழி யையும் ஆராய்ச்சி செய்ய முடிந்தது. அவர் செய்த நன்றியை நான் எக்காலத்திலும் மறக்க முடியாது. துயில் நீங்கி எழுந்த வுடன் என் ஆசிரியரின் நிழலுருவப் படத்திற்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். அன்றாடம் என் ஆசிரியருக்கு வணக்கம் செலுத்துவதில் நான் தவறுவதில்லை! நம் மக்கள் முன்னேற்றத்திற்குஞ் சிவபிரான் திருவடிக்கும் நாம் இயற்றுந் தொண்டு அவ்வுண்மையே நோக்கியதாய் இருக்க வேண்டுமே யல்லாமல், ஆரவாரமான பட்டங்கள் சூட்டிக் கொள்வதற்கென்று நடைபெறல் ஆகாது. காசையே பெரிதாக எண்ணி வயிறு கழுவி மாண்டு போகும் ஆட்களில் யான் ஒருவன் அல்லன். நோன்பியற்றும் அறையில் இரவிவர்மரைப் போன்ற ஓவிய ஆசிரியர்களால் வரையப்பட்டத் தேவவடிவங்களும், முனிவர்கள், சமய குரவர்கள், அடியவர்கள், புலவர்கள், அரசரின் உயர்ந்தோர்களின் வடிவங்களுந் திருத்தமாய் அமைந்த ஓவியங்களையே தெரிந்தெடுத்து, அவற்றின் தலைப்புறத்தை முன் சாய்த்துச் சுவர்களிற் சூழ நிறுத்துக. அவ்வறை அமைதியான இனிய மணம் நிறைந்து கமழ்வதாய் இருத்தல் வேண்டும். அகில், சந்தனம், கோட்டம், துருக்கம், தகரம், பச்சைக் கருப்பூரம், புனுகுநெய் முதலான மணப் பண்டங்கள் கலந்த கூட்டுகள் புகைத்தலாலும், மருகு, மருக்கொழுந்து, விலாமிச்சை, வெட்டிவேர் முதலான பூடுகளையும், மகிழ் மல்லிகை, பிச்சி, செங்கழுநீர், சண்பகம், அல்லி, குவளை, தாமரை முதலான பூக்களையும் அவ்வறையுள் வைத்து வழிபடும் இறைவன் திருவுருவத்திற் நாடோறும் அணிதலாலும் அவ்விடம் என்றும் மணங் கமழ்வதாய் இருக்கும். மனமொழி மெய்களான் யான் இதுகாறும் எவர்க்குந் தீது செய்ததின்மையான் பிறர் செய்த தீமைகளையும் விரைவில் மறந்து விடுதலே என் இயற்கை. கற்பொழுக்க மாட்சி வாய்ந்த இல்வாழ்க்கையின் சிறந்த பயனாவது நன்மக்களைப் பெற்று அவர்களைப் பல நலங்களும் வாய்ந்தவராக்கி அவர் தமக்கும் பிறருக்கும் பயன் பயன்பட் டொழுகச் செய்தலாம். ஆறறிவுடைய மக்கட் பிறவியெடுத்த உயிர்கள் தாம் பெற்ற இவ் அரிய பிறவியிலேயே விரைந்து தூயராய் இறைவன் திருவருளின்பத்தைப் பெறுதற்கு இன்றியமையாது செயற் பாலன; தம் மன மொழி மெய்கள் ஒன்றினொன்று முரணாமல் தமக்கும் பிறர்க்கும் பிறவுயிர்க்கும் நலம் பயப்பனவற்றையே ஒருமுகமாய் நாடி நிற்குமாறு பழகுதலும், துன்பத்திற் கிடனின்றி இன்பத்தையே ஓயாது தருங் கல்வி கேள்விகளிலும், தவ முயற்சியிலுந் தமது அறிவை நிலைப்பித்தலும், இறைவன்றன் பேரருட்டிறத்தை நினைந்து நினைந்துருகுதலும் ஆமென்பதூஉந் தமிழ்ப் பேரறிஞர் கண்டறிந்த தாகும். யாம் எழுதும் நூல் ஒவ்வொன்றும் பன்னாளும் பல முறையும் ஆய்ந்தாய்ந்து எழுதப்படுவது. யாம் எழுதுவன எமதுளத்திற்கு இனிமை தரும் வரையில், எமதறிவிற்குப் பொருத்தமாகக் காணப்படும் வரையில் அவற்றைப் பன்முறையும் நினைந்து நினைந்து விரையாமல் மெல்லென எழுதுதலே எமக்கு வேரூன்றிய இயற்கையாய் விட்டது. ஆடவரும் மகளிரும் முதுமை எய்தாமல் நீண்ட காலம் இளமைச் செவ்வியுடன் இனிது வாழ்தற்கு, அவர் தம்மில் எஞ்ஞான்றும் அன்பினால் அகங்கெழுமிக் குளிர்ந்த முகனும், இழைந்த சொல்லுங் குழைந்த நடையும் வாய்ந்து மாறின்றி ஒழுகுதலே யாம் என்பது போதரும். விழுமிய தமிழ்ப் பழைய நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே, செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமதிளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று. எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டில் பெரும்பாலும் நிரம்பிய தென்னலாம். எவரோடு எக்காலத்து எத்துணைச் சிறந்த பொருளைப் பற்றியாம் உரையாடிக் கொண்டிருப்பினும் அவ்வவ் வேளைக் கடமைகளைச் செய்தற்குரிய காலம் அணுகுகையில் அவை களைச் செய்தற்கு நீ அழைக்கலாம் என்று எம் மனைவியார்க்கு அவ்வுரிமையினை வழங்கினோம். பழந்தமிழ் நூல்களில் செல்வர்கள் தங்கள் செல்வத்தை 32 வகையான அறக் கட்டளைகளுக்கு வரையாது வாரி வழங்கினர் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வறக் கட்டளைகளால் தென்னகத்தின் பல பகுதிகளில் பல நூறாயிரக்கணக்கான பொன் பெறுமானமுள்ளனவாய், வீறார்ந்த கலைத்திறனோடு கட்டப்பட்ட பல கோயில்களை அடைந்துள்ள நாம் அச்செல்வர்களது எல்லையில்லாப் பெருந் தன்மைக்கு நன்றி காட்டக் கடமைப் பட்டிருக்கிறோம். தமது வாழ்க்கைச் செலவிற்கும், மணச் சடங்கு பிணச் சடங்கு கட்கும் கடன் வாங்கியாகிலும் மிகுதியாகச் செலவழிக் கின்றார்கள். அவையெல்லாம் பெருஞ் செலவாக அவர் களுக்குத் தோன்றவில்லை. எப்போதோ அருமையாக வாங்கும் இரண்டொரு நூலுக்காகுஞ் செலவையே பெரிதாக நினக் கிறார்கள். இப்படி யிருந்தால் நம் தமிழ்நாடு எக் காலத்தில் முன்னேற்ற மடையுமோ தெரியவில்லை. இறைவன் அருள் செய்க! காலங்கடோறுந் தொடர்ந்து நிகழும் மாறுதல்களை நன்காராய்ந்து பார்த்து, அவற்றிற்கேற்ப நமது வாழ்க்கையின் பழைய நிலைகளை அறவே யொழித்தோ அல்லதவற்றுட் சீர்திருத்தற் பாலனவற்றைச் சீர்திருத்தியோ ஒழுகினாலன்றி மக்கள் வாழ்க்கை இனிது நடவாது. அன்பும் அருளும் இரக்கமும் ஓங்குக! இன்பமும் மகிழ்ச்சியும் எங்கும் தங்குக!! அடிப்படைக் கொள்கைகள் மக்கள் முதன் முதலில் தோன்றிய காலத்தில் பேசப்பட்ட மொழி தமிழே. தமிழ் மொழியே வடமொழியினும், உலக மொழிகளினும் மாண்புடையது. தமிழ்மொழிதான் இலக்கண வரம்புடைய செம்மையுடையது. தமிழர் நாகரிகம் ஆரிய நாகரிகத்தினும் முந்தியதும் மேம்பட்டதுமாகும். சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங்களைப் போற்றியது. சாதி வேறுபாடு, சமய வேறுபாடு இன வேறுபாடு கருதாமல் பழக வேண்டுமென அறிவுறுத்தியது. பிறப்பால் உயர்வு தாழ்வு கூறுவது தவறு எனச் சுட்டிக் காட்டியது. தனித்தமிழ் இயக்கங் கண்டது. தமிழர்களைச் ‘சூத்திரர்கள்’ எனக் கூறியதைக் கண்டித்து ஒழித்தது. தமிழர் மதம் சிவநெறியும் திருமால்நெறியுமே என ஆராய்ந்து காட்டியது. ‘சைவத்தின் மேற்சமயம் வேறில்லை, அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் வேறில்லை’ என்பதை விளக்கியது. மூவர் அருளிய தேவாரங்களைப் பயிலுமாறு வற்புறுத்தியது. திருக் கோயில்களிலும், இல்லச் சடங்குகளிலும் தமிழ் மந்திரங்களை ஓத வேண்டு மென்றது. திருவள்ளுவர் ஆண்டு கண்டது - திருவள்ளுவர் திருக்குறளைப் பயிலுமாறு வற்புறுத்தியது. பலி விலக்கு, ஊன் விலக்கு, கள் விலக்குகளை வற்புறுத்தியது. நோயின்றி வாழும் முறைகளை விளக்கியது. நாடோறும் இல்லத்தில் வழிபாடு செய்யும் முறையினை வகுத்துக் காட்டியது. போலி நூல்கள் எழுதிப் பொருளீட்ட விரும்பாதது. போலித் தொல்கதைகள் (புராணங்கள்) இவையெனச் சுட்டிக் காட்டிக் கருத்தமைந்த நல்ல தொல்கதைகள் சிலவற்றைத் தழுவிக் கொண்டது. அரிய நூல்கள் பலவற்றைத் தொகுத்து நூலகம் அமைக்க வழி காட்டியது. சொற்பொழிவாளர்கட்குக் கைம்மாறு கொடுப்பது முறையாகும் என்பதற்கு வழிகாட்டியது. புலவர்களின் மதிப்பை உயர்த்தியது. தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்தற்கு வழிகாட்டியது. திருக்கோவில்கட்குச் சென்று வழிபாடு செய்தல், தேவாரம், திருவாசகங்களைப் பண்ணோடு பாடுதல் உய்திபெறுதற்கு வழியாகும் எனக் காட்டியது. திருமணச் சடங்கினைத் தமிழ் மந்திரம் ஓதித் தாமே நடாத்திக் காட்டியது. இறையுண்மை, இறைவழிபாடு, திருக்கோயில் வழிபாடு ஆகியவை பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் பொருத்தமானதே என்பதை இறை மறுப்பாளரும் ஏற்கும் வண்ணம் பல நூல்கள் எழுதி நிலைநாட்டியது. - வ. சுப்பையா, சை. சி. நூற்பதிப்புக் கழகம், சென்னை - 1.